மாலதீமாதவம் – ஆறாம் அங்கம்

ஆறாம் அங்கம்

(கபாலகுண்டலை பிரவேசிக்கிறாள்)

கபாலகுண்டலை – அடா! பாவி! தீயோய்! மாலதியினிமித்தம்[1] என்னுடைய ஆசிரியரைக் கொலை செய்த கொடிய மாதவ! அவ்வமயம், உன்னையானிரக்கமின்றி யடித்தும் பெண்ணென்று என்னைப் பொருட்படுத்தாதிகழ்ந்தனை;

(சினக்குறிப்புடன்)

ஆதலின் கபாலகுண்டலைக்கு விளைந்த சினத்தின் பயனை நிச்சயமாக நீயனுபவிப்பாய்.

(1) அரவத்தை[2]க் கொன்ற ஒருவனுக்கு அவனிடத்தில் எப்பொழுதும் நிலைபெற்ற பகைமையுடையதும், கூரிய திற்றிப்பற்களின் நுதிகளையுடையதும், விடத்தைக் கக்குதலாலச்சுறுத்துவதுமாகிய பெண்ணரவம், கடித்தற்கு விழிப்புடனிருக்கும்பொழுது இன்ப நுகர்ச்சி யாங்ஙனம் அமையும்.

(வேடசாலையில்)

(2) ஓ! அரசர்களே![3] அணித்து நிகழுமுறவினரது வருகை விரைவுறுத்துகின்றதாகலின், செயற்குரிய செயல்களிற் பெரியோர்களின் கட்டளைப்படி நடக்கக் கடவீர்; மறையவரும், செவிக்கினியதாயாசிமொழி கூறல் வேண்டும்; ஆடல், பாடல், வாச்சியமுதலியனவும், பலபாடைச் சொற்களோடமைந்தனவாய் மங்கலத்தின் பொருட்டு நிகழவேண்டும்.

அங்ஙனம், உறவினர் வரும் முன்னரே குழந்தை மாலதியும் இடையூறின்றி மங்கலம் இனிது நிறைவேறுதற் பொருட்டு நகர்க் கடவுட்கோயிலுக்குப் போதல் வேண்டுமென்றும், மற்றும் மணமகனுடன் வருஞ் சுற்றத்தாரனைவரையும் ஆடையாபரணாதியவணிகலன்களை யளித்து வெகுமத்தல் வேண்டுமென்றும், காமந்தகிப்பெரியார் கட்டளையிடுகின்றனர்[4].

கபாலகுண்டலை – ஆகுக; மாலதியின் மணவினையில் விரைந்து முற்படும் பணியாளர் நிறைந்த இவ்விடத்திருந்து விலகி, மாதவனுக்குத் தீங்கிழைத்தற்[5] குறித்து மிகமுயல்கின்றேன்;

(என்று சென்றனள்)

(சுத்தவிட்கம்பம்)

கலகஞ்சன் – (பிரவேசித்து) நகர்க்கடவுட் கோயிலின் கெற்பக்கிரகத்துண் மகரந்தனுடனிருக்கும் மாதவன், “இவ்வாலயத்தை நோக்கி மாலதி வருகின்றனளா? அன்றேல், வரவில்லையா?” என்பதையறிந்துவாவென்று கட்டளையிட்டனர்; ஆதலின், அவள் வருஞ் செய்தியைத் தெரிவித்து இவரையின்புறுத்துவேன்.

(மாதவனும் மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)

மாதவன் – (3) காமந்தகிப்பெரியாரின் சூழ்ச்சி, எற்கு மணவினையாற்றுக; அன்றேல் மாறுபடுநிலை யெய்துக; அவ்வளவில் மாலதியின் முதற்பார்வை நாண் முதலாய் விரிவெய்தியதும், மீண்டும் அம்மான்விழியாளின் அன்பு நிறைந்த விலாசங்களான் மிகுந்தெழு மேன்மையை யெய்தியதுமாகிய காமவேட்கைப் பிணிப்பிற்கு இப்பொழுது முற்றிலும் முடிவு[6] நிகழும்.

மகரந்தன் – காமந்தகிப் பெரியாரின் பேரறிவாற்றல் யாங்ஙனம் மாறுபடும்.

கலகஞ்சன் – (அணுகி) தலைவ! சிறப்புற்றுத் திகழ்கின்றீர். மாலதி, இங்ஙனமே நாடி வரத் தொடங்கினள்.

மாதவன் – உண்மையா?

மகரந்தன் – என்னை? நம்பிக்கையின்றி வினாவுகின்றாய்? வரத்தொடங்கினளென்னு மாத்திரையிலமையாது நமதருகிலும் வந்தனள். அங்ஙனமே!

(4) காற்றினாலலைவுறும் முகிற்குழுவினொலியொப்ப ஆர்ப்பரித்தொலிக்கும் பல மங்கல முழவின் விளைந்த பேரொலி, வேற்றொலியைக் கேட்க வொண்ணாது நமது செவிவலியை நொடிப்பொழுதிற் றடைப்படுத்துகின்றது.

ஆதலின் வருக; சாளரத்தின் வாயிலாகக் காண்போம்.

(அங்ஙனமே பார்க்கின்றனர்)

கலகஞ்சன் – தலைவ! பார்க்கவேண்டும்; இம்மங்கல வெண்குடைகள் உயரப்பறக்கு மன்னப்பறவைகளொப்பக் கவினுறுங் கவரிகளினது காற்றினாற் றுகிற்கொடிப் பந்திகளசைய அதனால் அலை நிரம்பிய வானவெளியாகுமோடையில் அடர்ந்துயர்ந்தலர்த வெண்டாமரையின் றோற்றத்தைக் கொண்டனவாய் காணப்படுகின்றன. விலாசமுடன் வெற்றிலைகளையுட்கொள்ள, அவை கதுப்புக்களினிறைதலான், எழுத்துக்கட் குளறுபட்டினிமையாக மங்கலப்பண் பாடுவாரும், இரத்தினங்களிழைக்கப்பட்ட பலவணிகலன்களை யணிதலான், அவற்றின் ஒளிக்கற்றை வானத்திற்பரவ, அதனால் அவ்வானத்தை யிந்திரன் தனுவின் ஒளி நிரம்பியதுபோற் செய்வாருமாகிய வாரநாரிக்குழாமமர்ந்து, பொற்சதங்கைகள் கணகணவென்றொலிக்க வரும் பிடிக்களிறுகளும் காணப்படுகின்றன.

(மாதவனும் மகரந்தனும் ஆவலுடன் பார்க்கின்றனர்)

மகரந்தன் – அமைச்சர் பூரிவசுவின் செல்வங்கள் விரும்பத்தக்கன. அங்ஙனமே;

(5) மேலெழுந்தொளிரு மணிக்கதிர்க்கற்றையால் எங்கும் நிறைவுறுந்திசைகள், பறக்கு மூர்க்குருவிகளின் சிறையொலி கலந்திலங்கச் சிறை விரித்தாடும் மயில்களின் றோகைக்கண்களான் மருங்குகளிற் சூழப்பட்டனபோலும்[7], நன்கு விளங்கும் வானவில்லையுடையன போலும், சித்திரம் வரைந்து சீனத்துகிற் கொடிகளான் மறைக்கப்பட்டன போலும் காணப்படுகின்றன.

கலகஞ்சன் – என்னே விரைந்து வரும் பல பணியாளர், தங்கம் வெள்ளி யிவற்றினீரிற் றோய்க்கப்பட்டு விளங்கும் கொடிப்பிரம்புகளாற் கோடு வரைந்து, இதன்மேல் வரலாகாதெனக் கட்டளையிட அதற்கடங்கிய மக்களனைவரும் வெளிப்புறத்தே வதிகின்றனர். மாலைச் செம்மையாலிலங்கும் விண்மீன்களையுடைய மாலைப்பொழுதுபோல் முகத்தில் விளங்குஞ் சிந்தூரச் சித்திரங்களின் ஒளிவிரவும் முத்துமாலையணிந்த பெண்யானை மீதமர்ந்து அதனையணிபெறச் செய்பவளும் ஆவலின் மலர்ந்த விழிகளையுடைய மக்களனைவரானும் காண்டற்கினிய வனப்புடையளும் ஆகிய இம்மாலதி, மிக வெளுத்து மிகவிளைத்து மிருக்குமுடலொளியினால் உய்த்துணரக்கிடக்குங் காமவேட்கையுடையளாதலின் முதற்பிறைத் தோற்றமெய்தினளாய் இக்குழாத்தினின்றும் சிறிது விலகி வேற்றிடம் சென்றனள்.

மகரந்தன் – நண்ப! காண்க;

(6) சிறப்புறுமித்தலைவி, வெளிறுபட்டிளைத்த வுறுப்புக்களாற் கவினுறுங் கலன்களையுடையளாய் மங்கலவிழாவினாற் றேசுறுநிலை யெய்தினளாயினும், மலர்களாற் புறத்தே வனப்பையும், புழுக்களாலகத்தே வாட்டத்தையுமெய்திய விளங்கொடிபோல அடிதொறும் வளர்ந்தோங்கு மனப்பிணியை அவ்வுறுப்புக்களானே வெளிப்படுத்துகின்றாள்.

மாதவன் – என்னே! பெண்யானை அமர்த்தப்பட்டதே!

மகரந்தன் – (களிப்புடன்) என்னே! இரங்கிக்காமந்தகி, இலவங்கிகை இவர்களுடன் இங்கண் வரத் தொடங்கினளே!

(காமந்தகி, மாலதி, இலவங்கிகை இவர்கள் வருகின்றனர்)

காமந்தகி – (களிப்புடன்[8] திரும்பி)

(7) பிரமன், மனமார்ந்த மணவினைப் பொருட்டு நமக்கு மங்கலத்தை நல்குக; மணமக்களின் சேர்க்கைக்கேற்பச் சிறப்புறுவனப்புடை பக்குவமதனைத் தேவருமியற்றுக; எனதன்புடைமைக்குரிய நண்பரின் மக்களது சேர்க்கையால் யானும் நற்பேறு பெறுக; இம்முயற்சி யாவும் பயனுடையனவாய் மங்கலம் பயப்பனவாகுக.

மாலதி – (தனக்குள்) மரணமாந்துறக்க மெய்தற்குரிய வழியை யெத்தகைய வுபாயத்தாலிது பொழுது நாடுவேன்; நல்வினைப்பயன் குன்றுமேற்கு இறத்தல் விரும்பப்படினும், அது கிடைத்தற்கரிதாயது[9].

இலவங்கிகை – இவ்வன்புடைத்தோழி காதலனது நலம் பயக்கும் பிரிவினால் மிக்க வருந்துகின்றாள்.

(சேடியொருவள் ஆபரணப்பேழையைக் கையிலேந்திப் பிரவேசிக்கிறாள்.)

சேடி – பெரியோய்! கடவுட் சன்னிதியில் அரசனாலனுப்பப்பட்ட இவ்வணிகலன்களால் மாலதியை யணிப்படுத்தல் வேண்டுமென்று அமாத்தியர் தெரிவிக்கிறார்.

காமந்தகி – அக்கடவுட் சன்னிதி தக்க மங்கலம் பயப்பதேயாம்; அவற்றை யிங்கட் காட்டுக.

சேடி – இவ்விரண்டும் வெண்பட்டு வத்திரங்கள்; இது மேல்வண்ண வத்திரம்; இவை உறுப்புக்களெல்லாவற்றிற்குமுரிய ஆபரணக் கோர்வைகள். இவை முத்துமாலைகள்; இது சந்தணம்; இது வெண்மலர்முடிமாலை;

(என்று காட்டுகிறாள்)

காமந்தகி – (மறைவில்) இவற்றையணிந்த குழந்தை மகரந்தனை யாவரும் காண்பர்[10].

(அவற்றை வாங்கி வெளியீடாக)

அங்ஙனமே செய்வோமென அமாத்தியரிடம் தெரிவிப்பாயாக.

(சேடி சென்றனள்)

காமந்தகி – இலவங்கிகே! குழந்தை மாலதியுடன் நீ கோயிலுட்புகுதி.

இலவங்கிகை – தாங்கள் எங்ஙனம் செல்லக் கருதுகின்றீர்கள்?

காமந்தகி – யானும், தனித்திருந்து இவ்வணிகளின் மேன்மையைச் சாத்திரமுறையானே ஆராய்ந்தறிகின்றேன்.

(என்று சென்றனள்)

மாலதி – (தனக்குள்) இலவங்கிகை யொருவளே யிங்கண் எஞ்சியுள்ளாள்[11].

(வெளியீடாக) இது கோயிலின் வாயில்; அன்புடைத்தோழீ இதனுட் புகுதி.

(கோயிலுட் பிரவேசிக்கின்றனர்)

மகரந்தன் – இத்தம்பத்தின் மறைவிலிருந்து இவளைப் பார்ப்போம்.

(இருவரும் அங்ஙனமே பார்க்கின்றனர்)

இலவங்கிகை – இது குங்குமம், இவை மலர்மாலைகள்.

மாலதி – இவற்றாற் பயன் என்னை[12]?

இலவங்கிகை – தோழீ! இக்கைப்பிடி மங்கலத் தொடக்கத்தில் நலன் மிக்க வளர்தற்பொருட்டு, “கடவுட்பூசனையாற்றுக,” என்று நின் அன்னையா லனுப்பப்பட்டனை.

மாலதி – (தனக்குள்) கொடுஞ் செயற்புரியுமூழ்வினையின் றீச்செயலினது பக்குவ நிலையாகுந் துயரத்தாற் புண்படுமனத்தையுடையளும், உயிர்நிலையழிதலாற் றாங்கொணாதவளும், நல்வினை குன்றியவளுமாகிய வென்னை, மீண்டுமிப்பொழுது ஏன் வருத்துகின்றனை?

இலவங்கிகை – தோழீ! எதைக் கூற விரும்புகின்றனை?

மாலதீ – கிடைத்தற்கரியதிற்[13] பெரிதும் முயலுமொருவன் தனது விருப்பத்திற்கூழ்வினை யூறாயமையுமெனில், அங்ஙனம் சிந்தனை செய்தலென்னை?

மகரந்தன் – அன்ப! செவியுற்றனையா?

மாதவன் – அவளது சொற்கள், என்னைப் பற்றியனவென்பதற்குப் போதிய சான்றிலாமையின் மனங்களிப்புறவில்லை.

மாலதீ – அன்புடைத்தோழீ! இலவங்கிகே! நீயே யெற்குண்மைச் சகோதரி; உனதன்பிற்குரிய தோழியாகிய யான், துணையற்று இறக்குந் தருவாயிலிருப்பவளாய், பிறந்த நாண் முதல், இடையறாது வேறூன்றித் திளைத்த நம்பிக்கைக்கேற்ப, நின்னைக் கட்டியணைத்து வேண்டுகின்றேன்; யான் உன்னாற் பின்பற்றத்தக்காளாயின் என்னை மனமார நினைத்து[14] மாதவனது ஊழ்வினைத் திருவாம் மங்கலம் நிறைந்த மரைமலரனைய திருமுகம், உவகைப் பெருக்கொழுக அதனை நீ காணல் வேண்டும்.

(என்றழுகிறாள்)

மாதவன் – அன்ப! மகரந்த!

(8) வாட்டமுறுமுயிர்[15] மலரையலர்த்துவனவும், மனநிறைவுறுத்திப்[16] பொறியனைத்தையும்[17] மயக்குவனவும், பேரின்பம் பயப்பனவும்[18]

இதயத்திற்[19] கின்றியமையாத இரசாயனங்களுமாகிய சொல்லமுதங்கள்[20], திருவருட்செயலான் என்னாலு[21]மெய்தப்பட்டன.

மாலதி – எற்குயிரளித்த காதலன் “யானிறந்துபட்டேன்” எனச் செவியுற்று வருந்துமவனது சீரியவுடலஞ் சிதைவுருவண்ணமும், வானுலகெய்தியவெற்குறித்து அக்காதலன் பிற்காலத்தில் என்னை நினைந்தழிந்து வாழ்க்கையை வறிதே கழிக்கா வண்ணமும்[22], அவற்கு நீ துணைபுரிதல் வேண்டும்; அங்ஙனம் செய்குவையேல், அம்மட்டில் நினதன்புடைத் தோழி மாலதியின் விருப்பம் நிறைவுறுவதொன்றாம்.

மகரந்தன் – என்னே[23]! மிகு துன்பமே நிகழ்ந்தது.

மாதவன் – (9) வெறுப்பெய்தியும் சிந்தை நடுக்குறும் மான்விழியணங்கினது, இரக்கமிக்கதும், இன்பமிக்கதும், உருக்கத்தானும் மயக்கத்தானும் நிகழ்ந்ததுமாகிய புலம்பலைச் செவியேற்று, கலக்கத்தானிகழுந் துயர்த்துன்பத்தையும் சிறப்புறுமின்பத்தையு மெய்துகின்றேன்.

இலவங்கிகை – அடி நினது அமங்கலமொழிக; இனிப்பிறிதொன்றையும் கேள்வியுறேன்;

மாலதி – தோழீ! மாலதியினுயிரே நும்மனோர்க்கு விரும்பத்தக்கதேயன்றி மாலதியாகான்.

இலவங்கிகை – தோழீ! இஃதென்னையென்று[24] கூறினாய்?

மாலதி – நம்பிக்கை விளைக்குஞ் சொற்கட்டால் என்னை உயிர்ப்பித்து அதனால் யான் மிக்க அருவருக்கத்தக்க[25] துன்பத்தை யனுபவித்தற்குரியளாயினேன்; இப்பொழுதோ, எனது விருப்பமிவ்வளவே; எனதுயிர் பிறர் வயத்ததாக[26], அதனால் எனதுயிரைக் காத்த அக்காதலற்குக் குற்றமிழைத்த இவ்வுயிரை விடுத்து அக்குற்றனீங்கி நன்னிலையுறுவேன்; அன்புடைத்தோழீ! குறித்த இச்செயலில்[27] நீயிடர்ப்படுத்தாதொழிக.

(என்று காலில் விழுகின்றாள்)

மகரந்தன் – இஃதன்பின் முடிபான வரம்பாம்.

(இலவங்கிகை மாதவனைக் குறிப்பினழைக்கின்றாள்[28])

மகரந்தன் – நண்ப! இலவங்கிகை யினிருக்கையிலமர்க.

மாதவன் – நடுக்க முதலிய காதற் பெருமிதத்தாற் றன்வயமொழிந்துளேன்.

மகரந்தன் – அணித்துவருமேன்மைகட்கு இஃதியல்பே!

(மாதவன் தன் விருப்பிற்குத் தக இலவங்கிகை யினிருக்கையிலமர்கின்றான்.)

மாலதீ – தோழீ! எனது விருப்பிற்குடன்பட்டு[29] அருள்புரிக.

மாதவன் – (10) நேரியல்பினளே[30]! வன்செயல் விருப்பை வலிந்தே தவிர்க்க; கதலித் தொடையாய்! எண்ணாமுயற்சியை[31] இக்கணத்தொழிக்க; உனது இனிமையற்ற[32] பிரிவுத்துன்பத்தை யெனது மனம், தாங்கற்கியலாதாகும்.

மாலதீ – மாலதியின் றலைவணக்கம். உன்னாற் றடைப்படுத்தத் தகாதது.

மாதவன் – (11) தீராத பிரிவுத் துன்புறுத்துஞ் செயற்புரியணங்கே! என்னை யான் புகல்வேன்? சிறப்புறுந் தலைவி! என்னை வலிந்தணைத்து[33] உனது விருப்பிற்கேற்பன செய்க.

மாலதீ – (களிப்புடன்) என்னே! அருள்புரிந்தனளா? (எழுந்து) இப்பொழுதே உன்னைத் தழுவுகின்றேன்; கண்ணீர்ப்பெருக்கால் அன்புடைத் தோழியின் காட்சி தெள்ளிதிற் புலனாகவில்லை; (அணைந்து களிப்புடன்) தோழீ! உனது உடற்பரிசம், முதிர்ந்த தாமரைப்பூந்தாதனைய மயிர்க்குழற்சியுடையதாய் யாவருடையதேயோ[34] வென்ன இப்பொழுது என்னையின்புறுத்துகின்றது. (கண்ணீருடன்) சிரமேற் கரங்கூப்பி யெனது மொழிகளை யவர்பாற்[35] றெரிவிப்பாயாக.

“நல்வினை குன்றிய யான், எனது விருப்பிற்கியைய, அலர்தரு தாமரை மலரது வனப்பைக் கவர் மதிமுகமுடை நின்றிருக்காட்சியால் கண்களி விழாவை யெய்தப் பெற்றிலேன்; ஆதலின் வறிதேகழியும் விருப்பங்களான் இடையறாது மலிந்து விலக்கற்கரிய துயர்ப் பெருக்குற்று நைந்தழிந்த மனத்தைத் தாங்கியுள்ளேன். நாடோறும், முற்றிலுந்தாங்கொணாத் துயரத்தானெட்டுயிர்ப்புறும் பாங்கியர் சூழ்தர, உடற்பிணியாவுமனுபவித்தே கழிக்கப்பட்டன. எறிநிலவு, இளங்காற்று முதலிய பொல்லாத் தொடர்களும் வருந்தியே கடத்தப்பட்டன. இதுபொழுதோவெனில், ஆசையற்றவளாயினேன்”, என்று. அன்புடைத்தோழீ! உன்னாலும் யான் எப்பொழுதும் நினைக்கத்தக்கவள்; மாதவனது திருக்கரத்தாற் றொடுக்கப்பட்டு வனப்புறுமிவ்வகுள மாலையும், மாலதியெனவே கருதத்தக்கதாய் நாளுமுனது கண்டத்தணிதற்குரியது.

(என்று தனது கண்டத்தினின்று மகிழ்மாலையையெடுத்து மாதவன் கண்டத்திலணிந்த அக்கணமே[36] பின்சென்று அச்சத்தையும் மெய்நடுக்கத்தையும் நடிக்கின்றாள்)

மாதவன் – என்னே! (மறைவில்)

(12) இவள் என்னை வலிந்தணைக்குங்கால், பூமொட்டனைய, தனங்கட் பருத்திருத்தலின், அவையுரத்தினன்கிணைந்து பிதுக்கமுற, அதனாற் கருப்பூரமணிமாலை, வெண்சந்து, மதிமணிப்பெருக்கு, தாமரைத்தண்டு, தாமரைநூல், பச்சைக்கருப்பூர முதலிய நளிரிரும் பொருட்குழுவை யொருமிக்கக்கலந்து, அவற்றால் எனது மெய்யில் இவளாற்[37] பூசப்பட்டவன்போலாயினேன்.

மாலதி – அந்தோ! இலவங்கிகையால் யான் வஞ்சிக்கப்பட்டேன்.

மாதவன் – அடி! மாலதி! தனது மனப்பிணியொன்றையே தெரிவிக்கின்றாயன்றிப் பிறரது விதனத்தை யறிகின்றாயில்லை; அதனால் இங்ஙனம் இகழ்கின்றனை.

(13) மிகைபடுமுடல வேட்கையாம் வெப்புநோய் பொருந்தியும், தோற்றத்தானிகழுமுனது கலவியாலதனை விலக்கியும், என்பாலன்புற்றனை யெனுமுணர்வினாலுயிரினைத் தாங்கியும், யானுமன்னாட்களைக் கடத்தினனன்றோ?

இலவங்கிகை – தோழீ! தக்கவாறு இவராலிகழப்பட்டனை?

கலகஞ்சன் – அந்தோ! இச்சேர்க்கை யன்புமிக்கொழுகுமழகுடைத்து.

மகரந்தன் – திருவளர்செல்வி! இஃதுண்மையாம்.

(14) நீ, தன்னிடத் தன்புடையளென்னு மொன்றையே கடைப்பிடித்திம்மாதவன், வருந்தியமுயிரை நிலைப்படுத்தி யித்துணை நாட்களையுங் கடத்தியுள்ளான்; இஃதுண்மையேயாதலின் இவன், நினது பொற்றொடியணியுங் கைப்பிடியாகு மருட்பேறெய்தி யகமகிழ்க; நமது இன்ப நுகர்ச்சியும் நெடிது நாணிலவிப்பயன்பெறுக.

இலவங்கிகை – பெருந்தகைப் பெரும! தாங்கள் இவளது மனத்தை வலிந்து பற்றுங்காலும் தடைப்படுத்தாத இவள், கைப்பிடிக்குமிதுபொழுது தடைப்படுத்துவளோ[38]?

மாலதீ – என்னே! மோசம்; கன்னியர்க்கு முரண்பாடான எதனையோ[39] கூறுகின்றாய்.

காமந்தகி – (பிரவேசித்து) அச்சுறும் புதல்வி[40]! என்னையிது?

(மாலதி நடுக்குற்றவளாய்க் காமந்தகியைத் தழுவுகிறாள்)

காமந்தகி – (மாலதியின் மோவாயினை நிமிர்த்து) குழந்தாய்!

(15) முன்னர்க் கண்ணிணைந்த நோக்கமும், பின்னர் மனத்திற்குப் பிறிதொரு பற்றுக்கோடின்மையும், பிறகு உடன்மெலிவும் முறையே உன்பாலெவற்கும், எவர்பாலுனக்கும் நிகழ்ந்தனவோ; அத்தகைய இவ்வாலிபன் உனது காதற்கிழவன்; இச்சு முகன் முன்னரிருந்துழி அறிவின்மையை[41] விடுத்தொழிக; அதனால் விதியின் றிறலும்[42] விளக்கமுறுக; காமனது விருப்பமும் நிறைவுறுக.

இலவங்கிகை – பெரியோய்! இம்மாதவன் கிருட்டினசதுர்தசியிரவில் முதுகாட்டிலலைந்து மகாமாமிசத்தை விலைப்படுத்தலாகும் விரதத்தை முடிக்கும் கொடிய பெருமுயற்ச்சியுடையானும்[43], விறன்மிகுகோரகண்டனது புயவலியைத் துணித்தவனுமாகிய கொடுஞ்செயற்புரிவோனாதலின், எனதன்புடைத் தோழி மிக நடுக்கமெய்துகின்றாள்.

காமந்தகீ இலவங்கிகே பெருமைவாய்ந்த காதற்பற்றையும், பெருமைசாலுதவியையு மெடுத்துரைத்தற் தக்கதேயாம்.

மாலதீ – ஆ! தந்தையே! ஆ! அன்னையே[44]!

காமந்தகீ – குழந்தாய்! மாதவ!

மாதவன் – பணித்தருள்க;

காமந்தகீ – மக்கட்டலைவரனைவரது முடிமாலையின் வழிந்தொழுகுமரந்த மணங்கமழுஞ் சரணங்களையுடைய[45] அமாத்தியபூரிவசுவின் மணியனையவொரு மகளாம்[46] இம்மாலதி ஒத்த புணர்ப்பில் விருப்புறும் விதியானும், காமனாலும் என்னாலும்[47] நின்பொருட்டளிக்கப்படுகிறாள் (என்று கண்ணீர் சொரிகிறாள்).

மகரந்தன் – பெருந்தகைப்பெரியோரினது அருட்பேறு பயனுடைத்து.

மாதவன் – பெரியோரது முகம் கண்ணீரை மிகச் சொரிகின்றது; என்னையது?

காமந்தகீ – (சீலை முந்தியாற் கண்களைத் துடைத்து) குழந்தாய்! மங்கலவுரை சில கூற விரும்புகின்றேன்.

மாதவன் – அவை யாவை?

காமந்தகி – தெரிவிக்கிறேன்.

மாதவன் – கட்டளையிடுக.

காமந்தகீ – (16) நும் போல்வாரது அன்பு, கனிவாலழகெய்து மியல்பினது. யானும் அவ்வவ் வேதுக்களான் உன்னாற் பெருமைப்படுத்தத் தக்கவள்; ஆதலின், அப்பனே! என்னிற் பிரிவெய்தியுமிச் சுமுகியின்பாற் பிணிப்புறுங் காதலா மருள்வழி வழாது நீ யென்று மிருத்தல் வேண்டும்.

(என்று காலில் விழக் கருதுகின்றாள்)

மாதவன் – என்னே! அன்பின் மிகுதியால் இன்னிகழ்ச்சி வரையறை மீருகின்றது.

மகரந்தன் – பெரியோய்!

(17) சிறப்புறு பெருங்குடிச் செனித்தவள் என்னும், கட்பொறி நுகருங் கழிபேருவகையளிப்பவள் என்னும் பெட்புறுனட்பைப் பெரிதும் படைத்தவளென்னும் நற்குண[48] மிலங்குனங்கையா மென்னு மிவ்வேதுக்களொவ்வொன்றும், இம்மாதவனை வயப்படுத்துஞ் சீரிய கருவியாமாகலின், இதற்கு மேலுந் தாங்களிங்ஙன மிறைஞ்சிடி லென்னையான் புகல்வேன்.

காமந்தகீ – குழந்தாய்! மாதவ!

மாதவன் – பணித்தருள்க.

காமந்தகீ – இவளையேற்றுக்கோடி.

மாதவன் – பெற்றுக்கொள்ளுகின்றேன்.

காமந்தகீ – குழந்தாய்! மாதவ! மதலாய்! மாலதி!

மாதவன் – கட்டளையிடல் வேண்டும்.

மாலதி – பெரியோய்! பணித்தருள்க.

காமந்தகீ – (18) அன்பனும், நண்பனும், சூழ்தருஞ்சுற்றமும், போற்றற்குரிய பொருட்களும், பொருட்பண்டாரமும், உயிருமென்னுமிவை, காதலிக்குக் காதலரும் காதலற்குக் காதலியுமாமென்னுமிவ்வுண்மை, சிறுவராகிய உங்களுக் கெஞ்ஞான்றும் நினைவிலிருத்தல் வேண்டும்.

மகரந்தன் – ஆம்

இலவங்கிகை – தாங்கள் பணித்தவாறேயிது.

காமந்தகீ – குழந்தாய்! மகரந்த! மாலதியினது மணவினைக்குரிய இவ்வணிகலன்களை யணிந்து நீ, மங்கலமெய்தற் பொருட்டு முயல்க.

(என்று நகைப்பெட்டியை யளிக்கிறாள்)

மகரந்தன் – தாங்கள் பணித்த வண்னம் இவற்றை யிவ்வண்ணத் திரைச் சீலையின் மறைவிலணிவேன். (அங்ஙனமே அணிகின்றான்).

மாதவன் – பெரியோய்! என்றுணைவனுக்கு இஃதெளிதெனினும், செயற்கரியதும், அல்லல்[49] மிக்க விளைப்பதுமாம்.

காமந்தகீ – யானிருக்குங்காற் சிந்தனை யுனக்கெற்றிற்கு.

மாதவன் – தஞ்சூழ்ச்சியைத் தாமேயறிவீர்.

மகரந்தன் – (புன்முறுவலுடன் வருகிறான்)

(எல்லவரும் வியப்புடனும் ஆவலுடனும் பார்க்கின்றனர்)

மாதவன் – (மகரந்தனை வலிந்து தழுவி) பெரியோய்! நன்தனன், நல்வினைபுரிந்தவனே! ஏனெனில், எனதன்பிற்குரிய இத்தகைய நண்பனைச் சிறுபொழுதேனுமவன், மனத்தாற் காதலிப்பன்[50].

காமந்தகீ – மைந்தீர்! மாலதீ மாதவர்களே! மணவினைப்பொருட்டு இங்ஙனமிருந்து வெளிப்போந்து இம்மரக்கும்பல் வழியே செல்லுங்கள்; அங்கண் ஓடையினது பின்மருங்கிற் பூம்பொழிலொன்று திகழ்கின்றது. அங்ஙனமே கடிமணத்திற்குரிய பொருள் யாவும் அவலோகிதையான் மீண்டும் நிரப்பப்பட்டுள்ளன.

(19) ஆழ நிகழுங் காமவேட்கையான் முதிர்ந்த கேரளமகளிரது கன்னமன்ன வெளிறிய வெற்றிலைகளையுடைய தாம்பூலவல்லிகளாற் கட்டப்பட்டு, பழங்கணிறைதலாற் றாழ்ந்திலங்குங் கமுகையுடையனவும், இலந்தைக்கனியை அயிலும்புள்ளினம், இன்னிசைபாட அவ்வினிமை பொருந்தியனவும், இளங்கால்வீசு மாதுளை வேலியிலங்குவனவுமாகிய அவ்வுய்யானமருங்குகள், உங்கட்கின்பத்தை விளைப்பனவாம்.

ஆதலின் அங்ஙனமே, மதயந்திகை, மகரந்தன் இவர்வருமளவும், நீவிர் வதிந்திருத்தல் வேண்டும்.

மாதவன் – (களிப்புடன்) மாலதியின் மங்கலச்செல்வம், மங்கலமொன்றைத்[51] தலையணியாக்கொண்டு, மேனிகழ்வுறுக.

கலகஞ்சன் – இஃதும் நமக்கு இன்மிக்கதாகும்.

காமந்தகீ – இதிலுனக்கையமுளதோ?

இலவங்கிகை – அன்புமிக்கதோழீ! நீயிதனைச் செவியுற்றனையா?

காமந்தகீ – குழந்தாய்! மகரந்த! நலனுறுமிலவங்கிகே! நாம் இங்ஙனமிருந்து செலற்குரியவிடத்திற்குச் செல்வோம்.

மாலதீ – தோழீ! நீயுஞ்செல்லவேண்டுமோ?

இலவங்கிகை – (நகைத்து[52]) இப்பொழுது நாங்கள் செல்லவேண்டும்.

(என்று காமந்தகி, இலவங்கிகை, மகரந்தன் இவர்கள் சென்றனர்.)

மாதவன் – (20) வெப்பத்தால்[53] வெதும்பிய வேழம், முட்பொருந்துந் தண்டுடன் கூடியதும், ஓடையிலுறைவதுமாகிய நளிரிருஞ் சேயிதழ்த் தாமரைமலரைத் தனாது கரத்தாற் பற்றியாங்கு, காமப்பிணியாம் வெப்பினானைந்த யானும், முற்றிலும் புளகமாம் முட்கணிரம்பிய வாகுவாம் நாளமுடையதும், வேன நீரானனைந்த விரற்களா மிதழ்களையுடையதும், வனப்புறு செம்மையுற்றதுமாகிய இவளது கமலக் கரத்தை யிதுபொழுது பற்றுகின்றேன்.

(எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவம் என்னும் நாடகத்திலாறாம் அங்கம் முற்றிற்று.


[1] மாலதீநிமித்தம் – இதனால், மாலதியைக் காத்தற் பொருட்டு மாதவன், கபாலகுண்டலையினாசிரியனாகிய அகோரகண்டனைச் சங்கரித்தானாதலின், மீண்டும் மாலதியைக் கவர்ந்து அவனுக்குத் தீங்கிழைத்தல் வேண்டுமென்னும் கபாலகுண்டலையின் கருத்துப் புலனாகும்.

[2] இக்காட்சியணி – அகோரகண்டனது கொலைநிகழ்ச்சியால் மாலதியின் பிரிவாந் துன்பம் மாதவனுக்கு நிகழுமென்பதை வலியுறுத்தும்.

[3] அரசர்களே! என்னுமிவ்விளி, பதுமாவதிப்பதியின் அரசனது ஆணையை மேற்கொண்டுத் தொண்டாற்றும் சிற்றரசர்களை யுணர்த்தும்.

[4] கட்டளை – இது, காமந்தகியின் சூழ்ச்சியாற் கோயிற்கட் காத்திருக்கும் மாதவனது களவு மணவினைக்கின்றியமையாதது.

[5] தீங்கிழைத்தலாவது – இங்கட் பணியாளர் நிறைந்திருத்தலான், மாலதியைக் கவர்ந்து மாதவனுக்குத் தீங்கிழைத்தலமையாதெனக் கருதி மறைவிற் சென்று கவர்தலே தகுதியென்று சென்றனள் என்பது கருத்து.

[6] முடிவு – காமந்தகியின் சூழ்ச்சியான் மாதவனுக்கும் மாலதிக்கும் மணவினை நிறைவுற, அதனால் வேட்கை, பயனுடைத்தாய் நன்முடிவுறுமென்பதும், மணம் நிறைவுறாதெனில், மாதவன் தனதுயிரை நீக்குமுகத்தான் அது பயனற்றதாய் தீயமுடிவெய்துமென்பதும் தோன்ற முற்றிலும் முடிவு நிகழுமென்றார்.

[7] இச்சுலோகத்திற் கூறப்பட்ட உவமைகளாற் பூரிவசு, உலகில் யாவரினும் மேம்பட்ட செல்வப் பெருக்குடையரென்பது விளங்கும்.

[8] களிப்புடன் – தனாது சூழ்ச்சி, பயன்பெறுங்காலம் அணுகியதென்பது களிப்பினிமித்தம்.

[9] மனம் பொருந்தா மணமகற்கு வாழ்க்கைப்படுதலினும், மரணமெய்தலே தகுதியென்பது மாலதியின் கருத்தாயினும், உறவோருடன் வதிதலான் அத்தகைய துர்மரணமும் எய்தற்கரியதாயதென்பது கருத்து; இதனால், உயிரைத் துறந்தேனும் நந்தனனுக்கு வாழ்க்கைப்பட மனமொவ்வாமையும், மாதவனுக்கு வாழ்க்கைப்பட மனமிசைந்ததையும் விளங்குவதாம்.

[10] இதனால் – இவ்வணிகலன்களான் மகரந்தனுக்கு மாலதியின் வேடம் புனைவித்து நந்தனனது மந்திரம் சேர்ப்பித்து அவனை வஞ்சித்து மணம்புரிவித்த சூட்சியாகும் மேல்வரும் காதை, குறிப்பாலுணர்த்தப்பட்டது.

[11] இலவங்கிகையொருவளே யெஞ்சியுள்ளாலாதலின், இவளை யெவ்வாற்றானும் வஞ்சித்துத் தான் மரணமெய்தலெளிதென்பது மாலதியின் கருத்து.

[12] இறத்தலைக் கோருமிவட்கு இவற்றால் யாது பயன் என்பதும், கடவுள் வழிபாடு செய்தலான் இது பொழுது பயன் சிறிதுமிலதென்பதும் மாலதியின் கருத்து.

[13] காதற் கொழுநனாகிய மாதவனது புணர்ச்சி விருப்பம், கிடைத்தற்கரியதாக, இறத்தலே மாலதிக்கு வேண்டற்பாலது; அவ்விறத்தலும் ஊழ்வலியாற் பெறற்கரிதாமாதலின், இங்குச் சிந்திக்க வேண்டுவதென்னை யென்பது கருத்து.

[14] மனமார நினைத்து – மாலதியை நினைக்கு மிலவங்கிகை மாலதியேயாமாதலின், இந்நிலையில் இவள் மாதவனது மதிவதனத்தைப் பார்த்துழி, அவன் மாலதியாற் காணப்பட்டவன் என்ன, இன்பப்பெருக்கெய்துவான் என்பது கருத்து; இதனால் மாலதிக்கு மாதவனிடத்துக் காதற் பற்று வேறூன்றியதென்பதும் அவன் காதலனாக் கிடைக்கப் பெறாமையின் இவள் உயிர்துறத்தலுறுதியென்பதும் பெறப்பட்டனவாம்.

[15] காதலி, கிடைத்தலரிதெனக் கருதி வாட்டமுறுமென்பது கருத்து.

[16] மன நிறைவு – மாலதியைப் பலகாலும் பார்த்தகாலையும், இதுபொழுது நிகழ்ந்த மன நிறைவின்மையின், இங்ஙனம் கூறப்பட்டது.

[17] ஓசை – செவிப்பொறிக்குரிய புலன் எனினும் பொறியனைத்தையு மெனக் கூறினமை, சிருங்கார ரசத்தின் சாத்துவிக நிலையான பிரளயத்தை யுணர்த்தும்; பொறிமயக்கத்தைப் பிரளயமென்ப.

[18] பேரின்பம் – அதனை யநுபவித்தாலன்றி யெவ்வாற்றானு மெடுத்துக்காட்ட வியலாமையின் பேரின்பமென்று கூறினர். இதனால் இல்லின்பத்தை வரையறைவழாதுறில் பேரின்பத்தைப் பயக்குமென்பது உணர்த்தப்பட்டது.

[19] காமநோயினுலர்ந்த சத்ததாதுக்களையுடைய மனத்திற்கு அவற்றை யுறுதிப்படுத்தும் நன்மருந்தென்பது கருத்து.; இரசமற்ற சத்த தாதுக்களுக்கு அதனை யளிக்குமொரு மருந்தை யிரசாயனம் என்ப.

[20] சொல்லமுதம் –  சொல்லாகும் அமுதம் என விரியுமுருவகமாம்; நீர், தேவருணவு, முத்தி, உயிர்தருமருந்து என்னுமிப்பொருள் பற்றி அடைமொழிகள் முறையே அமைக்கப்பட்டுள்ளன.

[21] உம்மை – இங்ஙனமிவளுரைத்தற்குரிய நல்வினைப்பயனுக்குத் தகுதியற்ற என்னாலுமெய்தப்பட்டன என்னுஞ் சிறப்புப் பொருளை யுணர்த்தும்.

[22] இத்தொடருக்கு, காதலனைப் பெறவியலாமையின் மாலதி உயிர் துறப்பதுபோல, காதலியைப் பெறவியலாமையின் மாதவனுமுயிர் நீங்குமெனச் சங்கித்த மாலதி தானிறந்தும் தன் காதலன் இன்புற்று வாழ்ந்திருக்கக் கோரினள் என்பது கருத்து; இதனால் கற்பணிபூண்ட தலைசிறந்த தலைவியின் மன நிலை யுணர்த்தப்பட்டது.

[23] இவ்வதிசயவிரக்கச் சொல் – மாதவன்பால் மிகுந்தெழுமன்பின் காரணமாக இன்பத்தையும், மாலதியின் மரணங் காரணமாகத் துன்பத்தையு முணர்த்தும்.

[24] மாலதியினுயிர் விரும்பப்படின் மாலதியும் விரும்பப்பட்டவளேயாதலின், மாலதியின் கூற்றுப் பொருந்தாப் பொருளுடைத்தாதலின் இங்ஙனம் வினாவினானென்க.

[25] அருவருக்கத்தக்க துன்பமென்பது – நன்தனனுக்கு வாழ்க்கைப்படுஞ் செயலையுணர்த்தும்; இதனால் மாலதி மிகு துன்பமெய்தியும் உயிருடனிருப்பின் அஃதொன்றே போதும் என்று பாங்கியர் கருத்தேயன்றி அவள் துன்புற்றிருப்பதில் அவர்க்கு நோக்கமில்லையென்னும் மாலதியின் மொழிக்குப் பொருள் கூறப்பட்டது.

[26] உயிர் பிறர் வயத்ததாக – அகோரகண்டனது வாள் வீழ்ச்சியினின்றும் மாலதியினுயிரை மாதவன் காத்தலான் இவளது உயிர் அவன் வயத்ததாம். அங்ஙனமாகாது நன்தனன் வயத்ததாதலின் இவளுடைய உயிர் மாதவனுக்குக் குற்றமிழைத்ததென்பது குறிப்பிடப்பட்டது.

[27] குறித்த இச்செயல் என்பது உயிர் நீத்தலையுணர்த்தும்.

[28] குறிப்பு – இங்ஙனம் செய்வதென்று முன்னரே சங்கேதம் செய்துகொண்டு கம்பத்தின் மறைவிற் காத்திருக்கும் மாதவனை யழைத்தனள் என்பது குறிப்பு.

[29] விருப்பம் – ஈண்டு மாலதியின் மரணத்தையுணர்த்தும்.

[30] இது முதல் இரண்டு சுலோகங்கள் இலவங்கிகையின் இருக்கையிலிருக்கும் மாதவன் கூற்றாகலின் பிராகிருதம் சமிஸ்கிருதம் இருபாடைகளுக்கும் பொதுவாய சொற்களான் இருவரது கருத்தும் தோன்றக் கூறப்பட்டனவாம்.

[31] எண்ணாமுயற்சி – இது, ஆய்ந்தறியாது இறத்தற்கு முற்படு முயற்சியை யுணர்த்தும்.

[32] இனிமையற்ற – இவ்வடைமொழி, இறத்தலுறுதியாகலின் எதிர்காலப் புணர்ச்சியின்மையை யுணர்த்தும்.

[33] வலிந்தணைத்து – தீராத்துன்பந்தருமிறத்தலில் உடன்பட்டு விடைகூற வியலாமையின், வலிந்தணைத்தலால் இவளுக்கு உண்மை விளங்குமென்றோர்ந்து இங்ஙனம் கூறப்பட்டது. இதனால் இலவங்கிகை கருத்தும் மாதவன் கருத்தும் ஒன்றுபடத் தோன்றுவதாம்.

[34] யாவருடையதோ – என்பது தழுவுதலினிகழ்ந்த இன்பநுகர்ச்சியால் காதலனது நினைவு நிகழ்ந்தமையையுணர்த்தும்.

[35] இச்சுட்டு – காதலன் பெயரைக் கூறலாகாமையான்.

[36] மாதவனையிலவங்கிகை யெனக் கருதி யவனது கண்டத்தில் மாலையை யணிந்த அக்கணத்தில் மாலையிலங்கு மார்பு விரிந்திருத்தலானும், அதிற் றனங்களின்மையானும், இவன் இலவங்கிகையில்லை யென்றும், பிறிதொருவரானுமிங்கண் வரக்கூடாமையின் காமந்தகியின் சூழ்ச்சியால் வந்த மாதவனேயென்றுமறிந்தும், அறியாமற் கூறியவற்றை நினைந்தும் அச்சமுற்று நடுங்கினாளென்பது, நடுக்கநடிப்பாற் குறிப்பிடப்பட்டது.

[37] இதனாற் காதலி, தானே வலிந்தணைந்தின்பந்தரற்குவமைக் கூறவொண்ணாதென, அவ்வின்பத்தைத் தற்குறிப்பேற்றத்தாற் கூறினார் என்க.

[38] இதனால் – பொழுதெலாம் மாதவனையே நினைக்குமியல்பினளாய இவள் அவனது கைப்பிடியை மனம் விழைந்தேற்பள் என்பது குறிப்பிடப்பட்டது.

[39] எதனையோ – இது, பெற்றோர் மனமார்ந்து உடன்படாத மாலதியின் மண வினையை யுணர்த்தும்.

[40] புதல்வி – என்றமை, மாலதிக்குக் காமந்தகி, தாயனையளாதலின்; இவட்கு அச்சுறுமென விசேடித்தமை – அத்தகைய யான் குலக்கன்னியர்க்கு முரண்படுமொன்றை யியற்றுவனோ? என்றும் திருவருட்பாங்கா லமயம் நேர்ந்துழி விரைவிற் பயனெய்தாதொழிந்து காலந்தாழ்த்தலடாதாதலின் மாதவன் கரத்தை யாய்வின்றி விரைந்தே பற்றுக; என்னும் காமந்தகியினுட்கருத்தை யுணர்த்தும்.

[41] அறிவின்மை – இதனால், காமாவத்தை பத்துள் காட்சிமுதல், நாணமின்மையீறாக ஏழு அவத்தைகள் இவளாற்றுய்க்கப்பட்டனவென்பதும், மாதவன் முன்னிருந்தும் இவள் அவற்கு வாழ்க்கைப்படத் தாழ்க்குமேல் எஞ்சிய காமவெறி, மயக்கம், மரணமென்னுமிவற்றையுமெய்துவது உறுதியென்பதும், மணவினைக்குரிய இக்கணத்தைக் கைவிடில் மீண்டுமவனைக் காண்டலரிதென்பதும் அதனால் காலந்தாழ்த்தற்குச் சிறிதுமிது தருணமில்லையென்பதும் போதரும்.

[42] விதியின் றிறல் – சீரிய குணநலமிக்க மணமக்களைப் படைக்குந்திறல்; அது நும்மிருபேரையும் பொருந்தப் புணர்த்துமாற்றால் விளக்கமுறுமென்பது கருத்து.

[43] பெருமுயற்சியுடையான் – இதனால், மாலதி அச்சமுறற்கு நிமித்தங்கூற, அம்மாதவனை யிகழ்ந்து கூறுமாற்றால் மாதவன் இவளிடத்துப் பேரன்பு கொண்டுத் தகுதியில் செயலும் புரிந்தனன் என்றும் கொடிய பாசண்டனாலிவட்கு நிகழ்ந்த மரணத்துன்பத்தையும் போக்கியருள்புரிந்தானென்றும் நிந்தராத்துதியே செய்யப்பட்டது.

[44] இங்ஙனம் பெற்றோரை விளித்தல் – பெற்றோரது மனம் பொருந்தா மணவினைக்குடன்படுதலான் மீண்டுமவர் முகத்தைப் பார்ப்பதில் நாணமிகுதியை யுணர்த்தும்.

[45] இவ்வடைமொழி – அவரது செல்வப்பெருக்கையும் பெருந்தன்மையையுமுணர்த்தும்.

[46] மணியனையவொருமகள் – என்பது மாலதியின் சீரிய நற்குணங்களையும், பெற்றோர்க்கு மிவள்பாற்பொருந்துமன்பின் மிகுதியையும் உணர்த்தும்.

[47] படைப்புழிப்பிரமனாலும், காமற்பொழிலிற் காட்சிநிகழ்ந்துழிக் காமனாலும், முன்னரே மாதவனுக்களிக்கப்பட்ட மாலதி, சூழ்ச்சியாற் காமந்தகியாலும் இதுபொழுது அளிக்கப்பட்டாள் என்னுமிக்கருத்து உம்மையாலுணர்த்தப்பட்டது.

[48] நற்குணம் – இஃதின்றேல் ஒன்றுமமையாதெனுஞ் சிறப்புத் தோன்ற, முதற்கட் குலத்தையும், கடைக்கட் குணத்தையுங் கூறியுள்ளார். இதனாற், “குலத்தளவேயாகுங்குணம்” என்பது புலனாம்.

[49] அல்லல் – இது, அங்ஙனம் அரசனிவளைக் காண்பனேல் மகரந்தனுக்குத் துன்பம் விளைவது உறுதியென்பதை யுணர்த்தும்.

[50] மனத்தாற் காதலிப்பன் – என்றமை, அவனது காதல், பயன்பெறாமை கருதி.

[51] மங்கலமொன்றை யென்பது, மகரந்தனது மணவினையை; அது நிகழ்ந்தமேல், தனது மணத்தைக் கோரினமை நட்பின் மிகுதி கருதி.

[52] நகைத்தல் – இது, எல்லவருஞ் செல்ல, மணமக்களிரும் மகிழ்ந்தினிதிருக்குமதனைக் கருதிப் பரிகசித்தலையுணர்த்தும்.

[53] இச்சுலோகத்தில், மாதவனுக்கு வேழத்தையும், மாலதிக்கு ஓடையையும், கரத்திற்குக் கமலத்தையும், விரற்களுக்கு இதழையும், நாளத்திற்கு வாகுவையும், முட்களுக்கு மயிர்க்குச்சையும், நீரினுக்கு வியர்வையையும், காமநோய்க்கு வெப்பத்தையும் உவமையாக்கிக் கூறப்பட்டிருத்தலான் இது பூரண உவமையணியாம்.

மாலதீமாதவம் – ஏழாம் அங்கம்

ஏழாம் அங்கம்

(புத்தரக்கிதை[1] பிரவேசிக்கிறாள்)

புத்தரக்கிதை – ஆனந்தம்! பிறர் அறியாவண்னம் நன்கமைந்த மாலதியின் வேட வனப்பினால் நன்தனன் வஞ்சிக்கப்பட்டு, அவனாற் செய்யப்படுங் கைப்பிடிமங்கலமுடைய மகரந்தன், காமந்தகிப் பெரியாரினது சூழ்ச்சியனமைவால் அமாத்தியபூரிவசுவினது இல்லத்தில் இதுபொழுது இன்புற[2]க்காக்கப்பட்டான். இதுகாலை, யாம் நன்தனன் மந்திரமெய்தியுள்ளேம்; காமந்தகிப்பெரியாரும் நன்தனன்பால் விடைபெற்றுத் தனது இருக்கையெய்தினள்; புதுமனை, மனைபுகுவிழா நிமித்தம் தகுதியில் காலத்துஞ் செய்யப்படு நிலவுவிழாவினாற் பணியாளரனைவரும் பிறச் செயலிற் கருத்திலராயமைவராதலின் இம்மாலைப்பொழுதும் நமது முயற்சியைத் திருவுடைத்தாக்கும்[3]. விரைவுறுத்துங் காமவேட்கை பொருந்து மணமகனாகிய நந்தனன், இவளைத் தன்பாற் காதற்படுத்தற்கு அடிவீழ்ந்திறைஞ்சியும், பயன்படாதொழியவே மீண்டும் வலாற்காரத்தான் வலிந்து பற்ற முயன்றனனாய், மகரந்தனாற்[4] கடுஞ்சொற்கூறி மறுக்கப்பட்டான். அவனும் வெட்கம், வெகுளியிவற்றின் வெறியினால் சொற்கள் தளர்வுற, கண்கணீர்சொரிதர, முகம் துடிதுடிக்க, “இவள், இக்கன்னிப்பருவத்தினும் கற்பணியொன்றிலாவரையின் மகளாதலின், இவளாற் பயன் சிறிதுமெற்கில்லையென்று, இதுபொழுது ஆணையுடன் அறிக்கையிட்டுத் தனது இருக்கையில்லத்திருந்து வெளிப்போந்தான்; ஆதலின் இந்நிகழ்ச்சியின்[5] வாயிலாக மதயந்திகையை அழைத்து வந்து மகரந்தனுடன் சேர்ப்பிக்கின்றேன்.

(என்று சென்றனள்)

(பிரவேசகம்)

(இலவங்கிகையும், படுத்திருக்கு நிலையில் மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)

மகரந்தன் – இலவங்கிகே! புத்தரக்கிதைபாற் கலந்த காமந்தகியாரது சூழ்ச்சி வெற்றி பெறுமோ?

இலவங்கிகை – பெருந்தகைப் பெருமானார்க்கு இதில் என்ன ஐயுறவு நிகழ்ந்தது? மிகைபடக்கூறிலென்? இந்நூபுரத்தினோசை செவிக்கேறுதலான் புத்தரக்கிதை அக்காரணம்[6] பற்றி மதயந்திகையை அழைத்து வருகிறாளெனக் கருதுகின்றேன்; ஆதலின் மேற்சீலையான் முகத்தை மறைத்துத் துயிலுனிலையிலிருத்தி.

(மகரந்தன் அங்ஙனமே செய்கிறான்)

(மதயந்திகையும் புத்தரக்கிதையும் பிரவேசிக்கின்றனர்)

மதயந்திகை – தோழீ! மாலதியாலென் சகோதரன் உண்மையில் வெகுண்டனன்

புத்தரக்கிதை – ஆம்.

மதயந்திகை – என்னே! பெருமோசம்; வருக; பிணக்கியன் மாலதியை ஒறுப்போம்.

(என்று செல்கின்றனர்)

புத்தரக்கிதை – இஃதிருக்கையில்லம்.

(இருவரும் உள்ளே செல்லுகின்றனர்)

மதயந்திகை – தோழீ! இலவங்கிகே! நினதன்புடைத் தோழி துயிலுகின்றாளெனக் கருதுகின்றேன்.

இலவங்கிகை – தோழீ! இவளை விழிப்புறுத்த வேண்டாம்; இவள் நெடிது நேரம் மனக்கலக்கமுற்றனளாய், இதுபொழுது சிறிது துயிலுகின்றாள் போலும்; ஆதலின் இப்பாயலின் பக்கல் அமர்க.

மதயந்திகை – பிணக்கியல்பினளான இம்மாலதி ஏன் மனக்கலக்கமெய்தினள்.

இலவங்கிகை – புதுமணப்பெண்ணை மனப்பற்றுடையாளாக்குந்[7] தந்திரமறிந்தவனும், பேரழகனும், கலவியின் காலமறிந்தவனும், இன்சொற்கூறுமியல்பினனும் வெகுளியற்றவனுமாகிய உன்னுடன் பிறந்தானைக் கணவனாப் பெற்று எனதன்பின் மிக்க தோழி ஏன் மன வருந்தாள்?

மதயந்திகை – பார்; புத்தரக்கிதே! எதிர்மறையாக நாமே யிகழப்பட்டோம்.

புத்தரக்கிதை – எதிரிடைபோற் றோன்றினும், உண்மையில் எதிரிடையில்லை.

மதயந்திகைஎங்ஙனம்?

புத்தரக்கிதை – அடிவீழ்ந்திறைஞ்சிய ஆண்மகன், அவமதிக்கப்பட்டான் என்பதில் நாணத்தின் குற்றமேயாதலின் இவள் இகழ்தற்குரியள்[8] ஆகாள்; புதுமணப்பெண்ணைத் தன்வயப்படுத்தற்குப் பொருந்தாப் பரபரப்பானும், வலாற்காரத்தானும், தன்பெருமையிழந்த வுன்னுடன் பிறந்தானாற் செவியுறத்தகாப் புன்மொழிகளும் கூறப்பட்டன; ஆதலின், குற்றமிழைத்த யாமே எள்ளற்குரியாரெனத் தோன்றுகின்றது. மேலும், “புதுமணப் பெண்கள் பூவியல்பினராதலின்[9] மென்றொடக்கமுடையாராவர், இவரது மனப்பான்மையறியாதவர்களும், இவருடன் பழகாதவர்களுமாகிய ஆடவர்களான் வலிந்து பற்றப்படுவாராயின், அவர்கள் அவ்வாடவர்களது சேர்க்கையை வெறுப்பர்.” இங்ஙனமன்றே காமநூலாசிரியர் கூறுகின்றனர்.

இலவங்கிகை – இல்லந்தொறும் ஆடவர், குலமகளிரை மணக்கின்றனர். ஒருவரும் நாணணி பூண்டவரும், குற்றமின்மடமையுடையாருமாகிய குலக்கன்னியரைத் “தாமே தலைவராவம்[10]” என்னுங் காரணம்பற்றிச் சொற்கனலாற் சுடுவதில்லை; இதயத்திலம்பு பாயந்தன்ன அப்பரிபவங்கள், இறக்கும்வரை மறக்கத் தகாவாறு நிலைப்பட்டுத் தாங்கற்கியலாவாய் வேற்றில் வதிதலில் வெறுப்பியற்றுவனவாம்; ஆதலினன்றே பெண்மகப்பேற்றைச் சுற்றத்தார் அருவருக்கின்றனர்.

மதயந்திகை – புத்தரக்கிதே! அன்புடைத்தோழி இலவங்கிகை மிக்கவாட்டமெய்தினள். என் சகோதரன் சொல்லொணாவண்ணம் மிகப்பெருஞ் சொற்குற்றமிழைத்தனன்.

புத்தரக்கிதை – .ஆம்! “இவள் இக்கன்னிப்பருவத்தினும் கற்பணியொன்றிலாவரையின் மகளாதலின் இவளாற் பயன் சிறிதுமெற்கில்லையென்று ஆணையுடன் அறிக்கையிட்டுத் தனதிருக்கையில்லத்திருந்து வெளிப்போந்தான்”, என்று யானும் கேள்வியுற்றேன்.

மதயந்திகை – (செவிகளை மூடி) அந்தோ! முறையின்மை! என்னே! மோசம்! தோழீ! இலவங்கிகே! இப்பொழுது உனது முகத்தைக் காணக்கூடவில்லை; ஆயினும், தோழியெனும் உரிமைபற்றிச் சில கூறுவேன்.

இலவங்கிகை – இவள் உன்வயத்தவள். வேண்டுவன கூறுக.

மதயந்திகை – என்னுடைய துணைவன்பால் தீயொழுக்கமும், சிறுமையும் நிலைப்படுக. இத்தகையனாயினும் இவனை யிதுபொழுது கணவன் என்று நீவிர் கருத்துட்கொள்ள வேண்டும். புன்சொற்களோடியைந்த இவ்விகழ்ச்சியின் அடியை அறிய மாட்டீர்.

இலவங்கிகை – இல்லாததொன்றை யாங்ஙனம் அறிவோம்.

மதயந்திகை – “பெருந்தகைப் பெருமகனாகிய மாதவன்பால் மாலதி, காட்சியளவிற் காதல் கொண்டவள்” என்னுமிவ்வுண்மை உலகில் யாவரானுமறியப்பட்டதே; அஃதே[11] யிகழ்ச்சியினிமித்தமாக நிலவுகின்றது. ஆதலின் அன்புடைத்தோழீ! கணவனென்றெண்ணாது நிகழுமிகழ்ச்சியாவும் இவளது இதயத்திருந்திரியுமாறு செய்க; அன்றேல், பெருமோசம் விளையுமென்றும், வேற்றிடத்தமைந்த இத்தகைய காதற்பற்றினால் உடன்படு செயலிலாக் கொடிய குலக்கன்னியர்பால் ஆடவர் மனம் மிக வருந்தும் என்றும் அறிக; இதை மதயந்திகை கூறினள் என்று கூறலாகாது.

இலவங்கிகை – அடி! பொருத்தமிலா உழக வழக்கில் மயக்கமுற்றியவளே! போ; உன்னுடன் யான் பேசவில்லை.

மதயந்திகை – தோழீ! சினத்தைத் தவிர்த்து மனந்தெளிந்து கூறுக; அன்றேல் நீங்கள் விளக்கமாய்க் கூறல் வேண்டாம்; ஆயினும், “மாதவனொருவனையே உயிரெனக்கொண்டவள் மாலதியென்னுமிவ்வுண்மையை யாமறிவேம். மாலதி, மாதவன் இவர்களுடைய சரீரம், முதிர்ந்த தாழையினது உண்மருங்கன்ன விளங்குமுறுப்புக்களின் மென்மையால் வனப்பின்மிக்கு, மாதவன் றனது கரத்தாற் றொடுத்த மகிழணியலைக் கண்டத்தணியுமாத்திரையில்[12] உயிர் மருந்தாக் கொண்டு, வைகறைமதிய மண்டலம் போல வெளுத்திளைத்தழகிய தோற்றமெய்திக் காமநோய்ப்பட்டதென்று யாவராலாராய்ந்தறியப்படவில்லை. மேலும் அந்நாளில், மலர்நிறைப்பொழின் மருங்கில் விளங்குந் தெருத்தொடக்கச் சந்திப்பில் இவர்களது கண்ணிணைந்த பார்வைகள், மோகலீலையுடன் மிகுந்தெழு பேராவலான் விரிந்த கடைவிழியிற் சுழல்வுற்றுத் திகழும் மசிருணம், முக்குதம் என்னும் பார்வையாற் கருவிழியழகுற, அங்கட் செழித்தோங்கு மனங்கனாங் காதற்குரவரது காமக்கலைப் போதனையால் அவ்வுணர்வும், இனிமையு மெழிலுறப் பொருந்தியவாய் என்னாலுய்த்துணரப்பட்டனவன்றோ? மேலும், என் உடன்பிறந்தாற்கு மாலதி அளிக்கப்பட்ட செய்தியைச் செவியுற்ற அக்கணத்தே விரைந்தெழு துயராற் கறுத்து வாடிய மேனியுடைய இவர்களது மனம் பற்றிழந்தாங்குக் காணப்படவில்லையோ? அன்றியும் பிறிதொன்றை யான் மறப்பனோ?

இலவங்கிகை – இதுபொழுது பிறிதொன்றையும் இன்னதெனக் கூறுக.

மதயந்திகை – அஃதென்னையெனில்: எற்குயிரளித்த பெருமகன் மயக்கந்தெளிந்து நினைவுறுங்கால், அத்தகைய நற்செய்தியைத் தெரிவிக்கும் மாலதிக்கு மாதவன், காமந்தகியினது பொருணிறைந்த சொற்பொழிவாற்றூண்டப்பட்டு அவனாற் றனது மனமும் உயிரும் பரிசிலானிலையில் அவள் தானே பற்றிக்கோடற்குரியவாய் அளிக்கப்பட்டன; இலவங்கிகே! அதுகுறித்து “எனதன்புடைத் தோழிக்கு இது விரும்பப்பட்ட அருட்பேறு” என்று நீயும் புனைந்துரைத்தனை.

இலவங்கிகை – தோழீ! உனக்குயிரளித்த அத்தகவுடையோன் யாவன் என்று யான் மறந்தனள் போலும்[13]?

மதயந்திகை – தோழீ! அந்நாளில் யான், விகாரமான கொடும்புலியின் பாய்ச்சற்கிலக்காய்ப் புகலற்றிருந்துழி, எழுவனைய பெரும்புயத்தவனும், ஏதுவிற் சுற்றமுமாகிய எப்பெருமகன் அத்தறுவாயிலருகெய்தி யின்புறுத்தி உலகிற்குளுயரிய பொருளாம் உடலத்தைக் கொடுத்தும், என்னைத் தற்காத்தனனோ; கருணை நிரம்பு மெவன், என் பொருட்டும், திடமுறப்பருத்துயர்ந்தகன்ற மார்பில், இடியேறெனுந்தகைய எல்லாவுகிர்களும் பதியுமடியினைக் கொண்டும், அங்கட்பெருகுமுதிரத்தாற் கண்டத்தணியல் நனைய, அதனாற் செம்பருத்தி மலர்மாலையணிந்தன்ன தோற்றமுடையனாய் அக்கொடும்புலியரக்கனைக் கொன்றனனோ; அவனேயென நினைக.

இலவங்கிகை – ஓ! மகரந்தனா?

மதயந்திகை – (களிப்புடன்[14]) தோழீ! என்ன கூறுகின்றாய்?

இலவங்கிகை – யான் கூறுகின்றேன், மகரந்தன் என்று.

(புன்னகையுடன் இவளது உடலைத் தழுவி)

(1) நீ கூறியாங்கு யாம் அமைவோம்; நின்னொருவளைக் குறித்து என்னை யான் நிகழ்த்துவேன்; அயலாற்பாற் காதற்பற்றெனுங் குற்றமற்றவளும், காமனியலறியாதவளும், குலக்கன்னியுமாகிய இந்த நீ, வார்த்தையளவிற் றன்செயலற்றனளாய் ஏன் கடம்பனைய[15]வுடம் பெய்துகின்றனை?

மதயந்திகை – (நாணமுடன்) தோழீ! என்னையேன் எள்ளி யிகழ்கின்றனை? யான் கூறுமாறு கேள்; காலன் வாய்ப்பட்டுழலுமெனதுயிரைத் தன்னுயிரையுங் கருதாது முயன்று வலாற்காரத்தான் மீட்டிப் பேருதவி புரியுமத்தகைய பெரியோனது சொல்லளவிற் பெயரைக் கோடலும், நினைவு கூரலும் என்னையின்புறுத்துகின்றன. அங்ஙனமே, ஆழப் பதிந்த பேருகிரடியான் விளைந்த வேதனையாற் கலக்கமுறுமேனியின் வழிந்தொழுகு வியர்வையுடையானும், மயக்கத்தாற் குவிந்த குவளைவிழியானும், தரையிலூன்றிய வாளினாற் றாங்கப்பட்ட வுடலையுடையானுமாகிய அப்பெருந்தகைப் பெருமகன் இம்மதயந்திகைப் பொருட்டே பெருமைசாலுயிரையும் வெறுத்தனனாய், உன்னாலுங்காணப்பட்டனன் அன்றோ?

(வியர்வை முதலிய காதற்குறியை நடிக்கின்றாள்)

புத்தரக்கிதை – (இவளது உடலைத் தடவி) உடனலங்குன்றியவளே! உரையினாற் பயன் ஏதுமிலது; மகரந்தனைப் புணர விருப்பத்தை நினது யாக்கையே வெளியாக்கியது.

மதயந்திகை – (நாணமுடன்) தோழீ! போ;போ; உடன்வதியும் மாலதியானே யானுமிதிற்றுணிந்தேன்.

இலவங்கிகை – தோழீ! மதயந்திகே! யாமும் அறியவேண்டுவன அறிந்தேம். ஆதலின் மனம் தெளிக[16]; உனது உள்ளக்கிடக்கையை மறைத்தற்குரிய வஞ்சனைச் செயலையொழிக்க; வருக; மிகுநம்பிக்கையுடன் அளவளாவிப்பேசி யின்புற்றிருப்போம்.

புத்தரக்கிதை – தோழீ! இலவங்கிகை நன்மையே கூறுகின்றாள்.

மதயந்திகை – இதுபொழுது பாங்கியருரைப்படியே செய்வேன்.

இலவங்கிகை – இங்ஙனமாயின் கூறுக; நீ யிந்நாட்களை யெவ்வாறு கடத்துகின்றனை?

மதயந்திகை – அன்புடைத்தோழீ! துன்புறுஞ் செய்தி கேள்; புத்தரக்கிதைக்கு விளைந்த ஒருதலையன்பி[17]னம்பிக்கையால், காண்டற்கு முன்னரே அப்பெருமகன்பாலெனது மனம், இடையறா உவகையானும் வேட்கையானும் இன்புற்றிருந்தது. பின்னர், நல்வினையீட்டிய காட்சியு நெடிதுநேர்பட நிகழுஞ்ச்சோர்வும், துயரும் வெப்பும் விலக்கற்கரியவாய் ஒருமித்து எனது மனத்தைப் புண்படுத்த, அதனால் யான் உயிர்நசையற்றிருந்தேன். காமக்கனலும் உறுப்புக்கடோறுமுள்ளுற வளர்ந்து தாங்கற்கரிய கொடியதாம் அழற்சியைப் புதியதோர்வண்ணமிழைப்ப பாங்கியரனைவரும் வருந்துவாராயினர். “காதலன் கிடைத்தற்குரியன்”, என்னும் நம்பிக்கையிகந்த மாத்திரையில் எய்தற்கெளிய இறப்பின்பமும், புத்தரக்கிதையின் எதிர்மறைமொழிகளாற் கிட்டாதொழியவே, வளர்தருங் காமவேட்கையா னடுக்கமெய்தினளாய் மீண்டுனிலவுலகிற்புக்கு மாளாத் துயரத்தையனுபவிக்கின்றேன். சங்கற்பத்தா னினைவிலும் கனவிலும் காதலானும் காமவெறியானும் மயக்கமெய்தினளாய் அக்காதலனைக் காண்கின்றேன். அன்புடைத்தோழீ! அங்ஙனமே பார்த்துழி, கடைவிழி சிவந்து மிகுந்தெழுவியப்பின் விரிந்தலங்குமிருவிழிகளும் துடிதுடிப்ப, அவை நாணத்துடனசைவுறுந் தாமரைமலரின் றோற்றமுடையனவாக, அத்தோற்றத்தால் அக்காதலன் மதுமதம் பயிலுமியல்பினனாய் என்னைச் சிறுபொழுது கூர்ந்து நோக்குவான். மேலும், செங்கமலத்தாதயின்று சேய குரலமைந்த அன்னப்பறவைபோல அவ்வாண்மகன், செருக்காற் குளறுபடுமின் சொற்களாற் காதலி! மதயந்திகே! என்று என்னைக் கூவியழைத்து இன்னுரை சில செவிகணிறைவுற நிகழ்த்துவான். பின்னர் யான், நாணத்தானடுக்கமுற்றனளாயினும் மனவன்மை யாலவ்வுரைகளைக் கோடாது வேற்றிடஞ் செல்லுங்கால் மேற்சீலையின் முன்றானையைப்பற்றி யென்னையிகழ்ந்து தலைவனென அச்சுறுத்துவான். அக்கணத்தின் முதிர்ந்த தாமரைத் தண்டனைய கைகளான் விம்முறு முலைகளும் வெளிப்படாவண்ணம் கட்டியணைத்து விட்டிடுமளவில், யான் ஒருபுறமாக விரைந்தோட, கலிக்குமேகலை கழன்று கனத்த துடையிற் சிக்குண்டு நடை விசையைத் தணிப்புறுத்த, அக்காதலன், வசைமொழி கூறுவேனாயினும், சினத்தாற் பிணக்குறுமெனது மனத்தைப் பல்லாற்றானும் முயன்று இணக்கமுறச் செய்வன். இன்பனீர்[18] நிறைந்து வழிந்தொழுகு நயனங்களான் எனது உள்ளக்கிடக்கையை முற்றிலுமுணர்ந்து இன்னுரைகளாற் பரிகசித்து யான் தன் செயலற்றிருக்குமாறு முன்னிலும் வலிந்து என்னையிறுகக் கட்டியணைப்பன். அன்புடைத்தோழீ! அங்ஙனம் அணைத்துழி, புலியினது கூரிய உகிர்களுரத்திற் பாய்ந்த அவ்வடுக்களே அத்திறலை யுணர்த்துஞ் சீரிய தகுதிச் சீட்டென அமையும் அம்மார்பில் யான் புல்லுதற்குரிய வலியற்றவளாயினேன். அக்கணம், பரபரப்பிற் சிரமசைதர, அலைவுறு னறுங்குழலைக் கரத்தாலொருமித்து உயர்த்திப்பிடித்து எனது சலிப்பிலா முகத்துடன் தனது வதன கமலத்தையும் நன்கிணைத்து அத்தகைய முகத்தின் வனப்பை முழுதுற நோக்குவன். இடக்கண்டத்தின் முத்தமளித்தும், இதழாரமுதை யின்புறப்பருகியும் எனதுடலை விதிர்ப்பொடு பொடிப்புறச் செய்வன். அன்றியும், களிப்பும், சினமும் மிக்கக் கலந்து இன்பத்துன்பங்களை யிதயத்திற்களிப்ப, அதனாற் பெருமயக்கெய்திச் செய்வகையறியாச் சிந்தையளாகுமென்னை என் காதலன், கலவிக்குரிய பெருமுயற்சியுடையனாய் என்னை என்னையோ இரந்து நிற்பன்; இங்ஙனமே அன்புடைத் தோழீ! யான் கண்கூடாக முற்றிலுந் திளைத்துக் கடிதே விழிப்புற மீண்டும், நல்வினை குன்றினளாய் இன்னிலவுலகைப் பாழ்படு மடவியென்னப் பார்க்கின்றேன்.

இலவங்கிகை – தோழி! மதயந்திகே! விளக்கமுறக்கூறுக; அவ்வமயத்தில் நீ கனாக்கலவி யின்பந்துய்க்குங்கால், மயூரபஞ்சனையிற்[19] சுரோனித மிழிதர அதை நட்பின் மிக்க புத்தரக்கிதை, கூர்ந்து நோக்கிப் புன்முறுவலுடன் உன்னை எள்ளி நகைக்க, அந்நிகழ்ச்சியைப் பாங்கியரறியாவண்னம் மறைத்தனையன்றோ?

மதயந்திகை – அடி! பொருத்தமிலா திகழுமியல்பினளே! போ!

புத்தரக்கிதை – தோழி! மதயந்திகே! இம்மாலதிப்பாங்கியே[20] இத்தகைய செய்தியையறிவள்.

மதயந்திகை – இவ்வண்ணம் மாலதியை யிகழாதே.

புத்தரக்கிதை – தோழீ! மதயந்திகே! என்பாலுனக்கு நம்பிக்கை யிருக்குமாயின், இதுபொழுதொன்று வினாவுகின்றேன்.

மதயந்திகை – இவள் அன்புரிமையைக் கடந்து உனக்குக் குற்றமிழைப்பளோ? ஏன் இவ்வண்னம் கூறுகின்றனை?

புத்தரக்கிதை – மகரந்தன், மீண்டும் எங்ஙனமேனும் உனது கண்களுக்கிலக்காவனேல் அப்பொழுது உன்னாற் செய்யக்கடவதியாது?

மதயந்திகை – உறுப்புக்களொவ்வொன்றினும் சலனமின்றி நாடுமியல்புடை நாட்டங்களை, நெடிது இன்புறுத்துவேன்.

புத்தரக்கிதை – அம்மகரந்தன் காமனால் வற்புறுத்தப்பட்டு, மாதவன் காமற்பயக்கு முருக்குமணியைக் கைப்பற்றியாங்கு, காதல்விளைக்குமுன்னை வலிந்துபற்றி யில்லக்கிழத்தியாக்குமேல், அங்கட் கொள்கையுனக்கென்னை?

மதயந்திகை – (நெட்டுயிர்த்து) இங்ஙனம் நிகழுமோ? இவ்வுரையளவில் என்னையேன் தேறுதற்படுத்துகின்றாய்?

புத்தரக்கிதை – தோழீ! விளக்கமாகக் கூறுக.

இலவங்கிகை – தோழீ! இவளது மனவுறுதியைத் தெரிவிக்கும் நெட்டுயிர்ப்பே,[21] விடைபகர்ந்ததாதலின், மகரந்தனை யிங்குச் சேர்ப்பித்தற்குரிய வழியினைத் தேடுக.

மதயந்திகைதோழீ!தன்னுடலையடகிட்டுக் காலன் வாயினின்றுமவனே வலிந்து பற்றியதும், அவற்கேவயத்ததாய் அடிமைப்பட்டதுமாகிய எனதுடற்கு யானுரியளாவனோ?

இலவங்கிகை – ஆழமுடைமைக்குத் தக்கவாறு அறைந்தனை.

புத்தரக்கிதை – இக்கூற்று நினைவிலிருக்குமோ?

மதயந்திகை – என்னே! இரண்டாம் யாமக்கூறைத் தெரிவிக்கும் முழவும் முழங்குகின்றதே; ஆதலின், விரைந்து சென்று வற்புறுத்தியாதல், அடிவீழ்ந்திரந்தாதல் நன்தனனை மாலதியின்பால் நேர்படச் செய்வேன். (என்று எழ விரும்புகின்றாள்)

(மகரந்தன் முகத்தைத் திறந்து அவளைக் கையிற் பற்றுகின்றான்)

மதயந்திகை – தோழீ! மாலதீ! விழிப்புற்றனையா? (உற்று நோக்கிக் களிப்புடனும் அச்சத்துடனும்[22]) என்னே! இது வேறுபாடாய் இலங்குகின்றது

மகரந்தன் – (2) கதலித்தொடையாளே! கலக்கமொழிக்க; உனது சிற்றிடை, நடுக்குறுந்தனங்களின் மாறுபடுநிலையைத் தாங்கற்கியலாதாகும். இங்ஙனம் நினதுரையானே வெளிப்படுக்கப்பட்ட அன்புருவாமருட்பேறுடையிவன், சங்கற்பப் புணர்ச்சி நுகர்ச்சியிற் பழகிய ஊழியனேயாம்.

புத்தரக்கிதை – (மதயந்திகையின் முகத்தை உயர்த்தி)

(3) மதயந்திகே! விருப்பம் பலவற்றானும் நீ முன்னர் எவனை வரித்தனையோ அவனே உனதன்பிற்குறையுளா இங்கண் வதிகின்றான். அமாத்திய நந்தனனது இம்மந்திரத்திற் பணியாளரனைவரும் இந்நிகழ்ச்சியைக் கருதிலராய் உறங்குகின்றனர். நாம் வெளிப்போந்துழி நகர்க்காவலரும் நம்மையறியாவண்ணம் இருளும் அடர்ந்திருக்கின்றது; ஆதலின், செய்நன்றி[23]யறிந்தே மணவினைப்புரிக; மணம்புரிந்த மேற் சிலம்பின் மணிகட் புலம்பாவண்ணம் அவற்றை உயர்த்திப் பிணித்துச் செல்லுவோம்; வருக.

மதயந்திகை – தோழீ! புத்தரக்கிதே! நாம் எங்குச் சேறல் வேண்டும்?

புத்தரக்கிதை – மாலதி யெங்குச் சென்றனளோ; அங்ஙனமே.

மதயந்திகை – என்னே! மாலதி தன் பிடிவாதத்தை நிறைவேறப்பெற்றனளா?

புத்தரக்கிதை – ஆம்; பிறிதொன்றையும் யான் உனக்குக் கூறுவேன்.

“தன்னுடலையடகிட்டுக் காலன் வாயினின்றும் அவனே வலிந்து பற்றியதும், அவற்கே வயத்ததாய் அடிமைப்பட்டதுமாகிய எனதுடற்கு யானுரியளாவனோ”

என்று நீ கூறியாங்கு நிற்க.

மதயந்திகை – (கண்களிற் களிநீர்[24] சொரிகிறாள்)

புத்தரக்கிதை – பெருந்தகைப் பெரும! எனதன்புடைத் தோழி களி நீருகுத்தலான் தன்னை நின்பாற் றானேயளித்தனள்.

மகரந்தன் – (4) கருணையாற் சுமுகன் கயற்கொடித்தேவனால், நண்பனது மணவினையுடன் என்றிருமணமும் நிறைவுற்றனவென்னு மிவ்வளவில் யானிதுபொழுது விறன்மிகு வெற்றி பெற்றேன்; பெறலருங் காதலிப் பேற்றினும் பெறற்குரிய பிறவென்னை? எனது பயன்பெறு காளைப் பருவத்திற்கும், இந்நாள் நன்னாளாகும்; ஆதலின் இப்பாரிச வாயிலாகச் செல்லுவோம். (மெல்லென நடக்கின்றனர்)

என்னே! நள்ளிரவினடமாட்ட மின்மையாற் கோப்பெருந்தெரு, புறஞ் செலற்குதவியா மிகுவனப்பெய்துகின்றது இப்பொழுதோ;

(5) மாளிகைகளினுடைய மேன்மாடங்களின் கொடுங்கைகளில் அமைக்கப்பட்ட பெரிய சாளரங்களிற்புக்கு வெளிப்போந்த மந்தமாருதம், மோப்பிற்கினிய சுரை மணம்விரவிக் கமழ்தலானும், நிரைமலரங்கலின் விரையான்மிக்கதாய் மிகப்பொதுளிய கருப்பூரவாசனை வீசுதலானும், ஆடவர்களது தம் மனத்திற்கினிய மடவரற்கலவியை வெளிப்படுத்துகின்றது.

(என்று எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவம் என்னும் நாடகத்தில் ஏழாம் அங்கம் முற்றிற்று


[1] புத்தரக்கிதை – “மகரந்தன், மதயந்திகை யிவரது மணவினையில் என்னால் முன்னரே புத்தரக்கிதை நியமனஞ் செய்யப்பட்டுள்ளாள்”, என்று காமந்தகியாற் குறிப்பிடப்பட்டவாறு புத்தரக்கிதையின் சூழ்ச்சியான் இவரது மணவினையைக் கூறுவான்றொடங்குகின்றார்.

[2] இன்புற – “மாலதி நகர்க் கடவுட் பூசனையாற்றி வந்தனள்” என்னும் வார்த்தையை நிறுவி மாலதிக்குரிய வுபசாரங்களையே யிவற்கியற்றி யொருவரானு மறிதற் கியலாதும், அரசனைச் சார்ந்தோராற் றுன்புறாதும் மகரந்தன், சூழ்ச்சியினமைவாற் காக்கப்பட்டான் என்பது கருத்து; இதனால், வேடமாலதிக்கும் நன்தனனுக்கும் மணவினை நிகழ்ந்ததென்பது கூறப்பட்டது.

[3] திருவுடைத்தாக்கும் – புதுமனைப்புகுவிழா நிகழுங்காலம் மாலைப்பொழுதாதலின் பணியாளரனைவரும் பிறிதொன்றையுங்கருதாது அவ்விழாவில் விரைந்து முற்படுவாராக, இதுகாலை மதயந்திகையை மகரந்தனுடன் சேர்த்தற்குரிய காலமாதலின் புத்தரக்கிதையின் முயற்சி நற்பயனுடைத்தாகுமென்பது கருத்து.

[4] மகரந்தனால் – இது, கபடமாலதியையுணர்த்தும்.

[5] இந்நிகழ்ச்சியின் வாயிலாக – சகோதரன்பாற் பிணக்கமுற்ற மாலதியின் இணக்கத்தை நிமித்தமாக்கொண்டு மதயந்திகையை மகரந்தனிடஞ் சேர்ப்பித்தலையுணர்த்தும்.

[6] அக்காரணம் – என்பது கபடமாலதியை இணக்கமுறச் செய்தலை.

[7] நன்தனன் குறித்து இங்குக் கூறப்பட்ட அடைமொழியாவும் எதிர்மறைப் பொருளிலமைந்து அவ்வப்பண்புக்கள் அவள்பாலமையாமையையுணர்த்தும்; அதனால் மாலதி மனவருத்தமுறற் சாலப் பொருந்துமென்பது போதரும்.

[8] இகழ்தற்குரியளாகாள் – இதனால் மாலதி, தன்னை மதியாமை நாணத்தின் குற்றமென்றறியாத நன்தனன், காமவயத்தனாய்க் கண் தெரியாது அவளை வலாற்காரத்தாற் புணர முற்பட்டானாதலின், இவனே இகழ்தற்குரியன் என்பது விளங்கும்.

[9] பூவியல்பினர் – வாடாநிலையின் மலர்களைக் கோடலான், அவை நறுமணம் அகலாவாய் இன்பந்தருமன்றி வலிந்து பற்றிடில் மணங்குன்று மாத்திரையிலன்றி அனுபவத்திற்குரியனவாகா; அங்ஙனமே மெல்லியலாரும் ஆம் என்பது கருத்து.

[10] தலைவன் – இது காதலியைத் தலைவியென்று கருதாமையையுணர்த்தும்.

[11] அஃதே – அவ்வுலகவார்த்தையே ஒருவர்பாலொருவர் இகழ்தற்கு நிமித்தம் என்க.

[12] கண்டத்தணியுமாத்திரையில் – மகிழணியல் உயிர்மருந்தாந்தன்மை இருபேர்க்கும் ஒக்கும்.

[13] மறந்தனள் போலும் – இங்ஙனம் கூறினமை, மதயந்திகையைச் சொல்விக்கு மரத்திரையின் மறைவிற் படுத்திருக்கும் மகரந்தனுக்கு, அவளது அவாமிகுதியை யறிவித்தற் பொருட்டு.

[14] களிப்புடன் – மீண்டுங் காதலன் பெயரைச் செவியுறலே களிப்பினிமித்தம்.

[15] கடம்பனைய – இவ்வுவமை காமவேட்கையானிகழ்ந்த புளகத்தையுணர்த்தும்; இதனால் வாலைப்பருவத்தினும் வாலிபனொருவன்பால் மயக்கமுற்றிய தன்னிலையுணராது, பிறரையிகழ்தலடாது; என்பதை மதயந்திகைக்கு வலியுறுத்தும். கடம்பு – அடப்பமலர்.

[16] மனம் தெளிக – தெளிந்து வஞ்சனையொழித்து உண்மையைக் கூறுவையேல், உனது விருப்பனிறைவுறத் தகுஞ் செயற்புரியமுயலுவேன் என்பது கருத்து.

[17] புத்தரக்கிதைக்கு விளைந்த ஒருதலையன்பு – மதயந்திகை, மகரந்தன் இவ்விருவர்பால் விளைந்த அன்பை; “புத்தரக்கிதை, தகுதியில்வழி யன்புடையளாகாள்” என்பது மதயந்திகையினம்பிக்கை; ஒருதலையன்பைப் பட்சபாதமென்ப.

[18] இன்பனீர் – இது, சினம் சொல்லளவிலன்றி உள்ளங் கவர்ந்தெழுந்தோங்காமையை உணர்த்தும்.

[19] மயூரபஞ்சனை – மயில்வடிவினதாய் அமைக்கப்பட்ட பஞ்சுமெத்தை.

[20] இம்மாலதிப்பாங்கியே – இதனால், நீ யெங்ஙனம் மகரந்தனை யன்றிப் பிறரை மணப்பதில்லையென்று முறுதிகொண்டனையோ; அங்ஙனமே மாலதியும் மாதவனையன்றிப் பிறரை மணக்க விரும்பாள் என்னுமிவ்வுண்மை மதயந்திகைக்கு வலியுறுத்தப்பட்டது.

[21] நெட்டுயிர்த்தல் – இது, மகரந்தன் தானே வலிந்து பற்றிக் கோடலில் இவளது உடன்பாட்டை யுணர்த்தும்

[22] களிப்புடனும் அச்சத்துடனும் – மகரந்தனை மணாளனாக்கோடலிற் களிப்பும், அவன் பக்கலிருந்தும் இவ்வுண்மையறியாது பலபடக் கூறிய நிலையில் அச்சமும் நிகழ்ந்தனவென்பது கருத்து.

[23] செய்நன்றி – இது வேங்கையை வென்று மதயந்திகைக்கு உயிரளித்த பேருதவியை உணர்த்தும்.

[24] களி நீர் – இது, களவு மணத்தில் உடன்பாடெய்தும் மதயந்திகையின் மன நிலையை உணர்த்தும்.

மாலதீமாதவம் – எட்டாம் அங்கம்

எட்டாம் அங்கம்

(அவலோகிதை பிரவேசிக்கிறாள்)

அவலோகிதை – நந்தனனது இல்லத்திருந்து தனதிருக்கை யெய்திய காமந்தகிப் பெரியாரைக் கண்டு வணங்கினேன். இனி, இதுபொழுது மாலதி மாதவன் இவர்களது பக்கலெய்துவேன்; (சென்று) அந்தம்! இவர், முதிர்வேனிற்பருவத்தின் மாலை நீராடியராய் அவ்வோடையின்றடத்திலங்கு கற்பாறையின் மீதமர்ந்திருக்கின்றனர்; யானும் அங்குச் செல்லுகின்றேன். (சென்றனள்) (பிரவேசகம்)

(அவலோகிதையும், அமர்ந்த நிலையில் மாலதியும், மாதவனும் பிரவேசிக்கின்றனர்)

மாதவன் – (களிப்புடன்) காமற்குச் சீரிய நண்பனாகிய நள்ளிரவின் வணப்பவனப்பு வளர்தருகின்றது. அங்ஙனமே;

(1) முதிர்ந்துலர்ந்த பனையோலைபோல வெளிறுபடுமிந்துவின் நிலவொளி, காற்றின்விசையால் வானிடை நிறைந்து படர்வுறுந் தாழைமலர்ப்பராகத்தின் றோற்றமுடையதாய்க் கீட்டிசையினிருட் குழாத்தை யொழிக்கின்றது.

(தனக்குள்) பிணக்கியன் மாலதியை எவ்வண்ணமிணக்குவேன்; ஆகுக; இங்ஙனம் செய்வேன்[1].

(வெளியீடாக) அன்புடைக்காதலி! மாலதி! வெப்பநோயினை[2] நீக்கற் பொருட்டு, இதுபொழுதே மாலைநீராடலானளிர்மிகு நின்பாற் சில தெரிவிக்கின்றேன்; அங்ஙனம் தெரிவிக்குமென்னை மாறுபடக்கருதுவையோ[3]?

(2) நங்கையே! நினது நறுங்குழனீர்த்திவலைகள், வழிந்தொழியாமுன்னரும், பூமொட்டனைய தனங்களினிடைவழி உலர்ந்தொழியாமுன்னரும், பூங்கொம்பனைய மேனியிற் பரவி நெருங்கிய புளகம், மறைவுறாமுன்னரும், ஒருமுறையேனும் என்னையிறுகத்தழுவியருள்புரிக[4].

அடி! அருளிலாமாலதி[5]!

(3) அச்சத்தான் விளைந்த வியர்வை நீரரும்பியவாகு, தண்கதிர்தோய நீருகுக்கும் மதிமணியாரத்தின் றோற்றமுடையதாய் என்னை உயிர்ப்பித்தற்கென அமையுமாதலின், அவ்வாகுவால் எனது கண்டத்திலிறுகத்தழுவுக.

அன்றேல், இது கிடைத்தற்கரியது; எனினும் உனது சொற்களிற் சில பகுதிகளையேனும், செவியுறற்கு யான் றகுதியற்றவனாயமைந்தமை யாது காரணம் பற்றியோ?

(4) தென்றலானும், மதிக்கதிர்கற்றையானும் நின்னைப் பெறற்கே நெடிது வருந்தும் எனது உடலத்தை மீண்டும் வலிந்தணைத்து இன்புறுத்தவில்லை. களிப்புறுங் குயிற்கூவுமின்னிசையாற் றுன்புறுஞ் செவிகள், இன்னிசையாளே! நினதினிய சொல்லமுதையேனும் பருகியின்புறுக.

அவலோகிதை – அடி! பயன்பெறாதொழியுமியல்பினளே! மாதவன், சிறுபொழுதேனுங் காண்டற்கரியனாக, மனம் வருந்தும் நீ, “காதலன் காழந்தாழ்க்கின்றான்; அவரையான் எத்துணைக்காலங்கடந்து காண்பேன். அச்சமிக்குடைய யான், இமைப்பெனு மிடையூறொன்றிலா விழிகளாற் கண்டு, அவருடனுரையாடுவனோ? இருமடங்காக இறுகத்தழுவலான் அவரையின்புறுத்துவனோ?” என்று என்முன் கூறுகின்றனை. அங்ஙனம் தழுவற்கு அமயம் இஃதே.

(மாலதி அவளைப் பொறாமையுடன்[6] பார்க்கிறாள்)

மாதவன் – (மறைவில்) என்னே! காமந்தகிப்பெரியாரின் றலைமாணவிக்கு, இனிமையும் பெருமையுமிலங்கு நன்மொழிகளைப் பகரும் பயிற்சி; (வெளியீடாக) அன்புடைக் காதலி! அவலோகிதை, உண்மையுரைக்கின்றனளா[7]?

(மாலதி சிரத்தை அசைக்கிறாள்)[8]

மாதவன் – எற்கு விடைகூறாதொழிவையேல், இலவங்கிகை, அவலோகிதை யிவர்களது உயிரானே ஆணையிடப்பட்டுள்ளாய்[9].

மாலதி – யான் எதையுமறிகிலேன்.

மாதவன் – என்னே! துணிபொருள்[10] எழிலிலாச் சொற்களின் வனப்பு; (கூர்ந்து நோக்கி) அவலோகிதே! இஃதென்னை[11]?

(5) மான்விழியாளின் மாசறு கபோலம், கண்ணீராற் கழுவப்படுகின்றது. அக்கபோலத்தில், வாய் நிறைவுற மடுத்தற்குரிய மிகுவனப்பமுதைப் பருக விருப்பமுள்ளவன் போல இம்மதியம், தனது தாமரைத் தண்டனைய கரத்தை[12] விரித்தனனாய் விளங்குகின்றான்.

அவலோகிதை – தோழீ! ஏன் இதுபொழுது கண்ணீர் வடித்துக் கலங்கி வருந்துகின்றனை?

மாலதீ – தோழீ! எத்துணைக்காலம்[13] இலவங்கிகையருகிலாத் துயரை யனுபவித்தல் வேண்டும்? அவளது செய்தியுங்கிடைத்தற்கரிதாயது.

மாதவன் – அவலோகிதே! இஃதென்னை[14]?

அவலோகிதை – தங்களது சொற்பொழிவானே இவள் இலவங்கிகையை நினைவுகூர்ந்து, அவளது செய்திபெறும் நிமித்தம் வருந்துகின்றாள்.

மாதவன் – நந்தனனது இல்லத்திற்கு மறைவிற் சென்று அங்கட் செய்தியை யறிந்துவாவென்று இதுபொழுதே கலகஞ்சனை யான் விடுத்துள்ளேன். (ஐயுறவுடன்) அவலோகிதே! மதயந்திகையைக் குறித்த புத்தரக்கிதையினது பெருமுயற்சி நற்பயனெய்துமோ?

அவலோகிதை – பெரியோய்! வேங்கையின் உகிர்களான் அணிபெற்றிலங்கும் மகரந்தனது மயக்கந்தெளியு நிலையைத் தெரிவிக்கும் மாலதிக்கு, காமந்தகிப்பெரியோராற் றூண்டப்பட்ட நீ, உனதுயிரும் மனமும் பரிசிலாமாறு அவற்றை முன்னரே அளித்தனை. இதுபொழுது பெருமைசால் மதயந்திகைப் பேறுஞ் சிறந்திலங்குகின்றது; இதற்கெப்பொருட்[15] பரிசிலாகுமோ?

மாதவன் – வினாதற்குரியதொன்றையே வினவினாய்; (உரத்தை நோக்கி) காமனுய்யானத் தணிகலனாயிலங்கும் மகிழ்தருவின் மலரலங்கல், மாலதியின் முதற்கட்[16] காட்சியினது முயல்விற்குரிய சான்றாக இங்கண் இலங்குகின்றது.

(6) என்னாற் றொடுக்கப்பட்டதென்றாதல், உயிர்த்தோழி யிலவங்கிகையின் கரத்தாலளிக்கப்பட்டதென்றாதல் இம்மாலையை மாலதி, பூ மொட்டனைய குசகலசங்கட் பருத்துயர்ந்து விளங்கும் மார்பகத்தணிந்து இதனைப் பாராட்டினள்; நந்தனனற்குத் தான் மணம்புரிவிக்கப்படுஞ் செய்தி நிகழவே, எற்குறித்துக் கருத்தொழிந்தனளாய் என்னை யிலவங்கிகையென்று கருதி உரிமைப்பொருள் யாவையுங் கொடுத்தாங்கு எற்பொருட்டே அம்மாலையை அளித்தனள்.

அவலோகிதை – தோழீ! மாலதி இம்மகிழ்மாலை, உனது விருப்பிற்கினியதன்றோ? அந்த இம்மாலை பிறர்கரத்தையெய்தும்[17].

மாலதி – அன்புடைத்தோழி விருப்பத்தையே போதிக்கின்றாள்; அவலோகிதே! நீயே இவ்விரண்டையும்[18] கூறுகின்றாய்.

அவலோகிதை – என்னே! காலடி ஓசைபோலக் கேழ்க்கப்படுகின்றதே.

மாதவன் – (வேடசாலையை நோக்கி) கலகஞ்சன் சென்று வந்தனனே!

மாலதி – ஆனந்தம்! மதயந்திகையின் இலாபத்தாற்[19] றிகழ்வுறுகின்றீர்.

மாதவன் – (களிப்புடன் வலிந்தணைத்து) இது நமக்கு விரும்பத்தக்கதே

(என்று மகிழணியலை மாலதியின் கண்டத்திலணிகிறான்)

அவலோகிதை – காமந்தகிப் பெரியாரின் சூழ்ச்சியமைவு, புத்தரக்கிதை யானிறைவுற்றது..

மாலதி – வருகின்ற அன்புடைத்தோழி இலவங்கிகையை யானும் பார்க்கின்றேன்.

(என்று எழுகின்றாள்)

(கலகஞ்சன், புத்தரக்கிதை, இலவங்கிகை, மதயந்திகை யிவர்கள்  கலக்கமுற்றனராய் பிரவேசிக்கின்றனர்)

எல்லவரும் – பெரியோய்! காத்தருள வேண்டும்; மகரந்தன் நடுவழியில் நகர்க்காவலராற் றடுக்கப்பட்டான். அத்தறுவாயிலருகெய்திய கலகஞ்சனோடு நாங்கள் இங்கு அனுப்பப்பட்டோம்.

கலகஞ்சன் – நாங்கள் இங்கனோக்கி வருங்கால், பேரொலியைக் கேள்வியுற்றோம்; அதனால் வேற்றுப்பகைப்படையும் அங்கண் வந்தெய்தியதெனக் கருதுகின்றோம்.

மாலதியும் அவலோகிதையும் – என்னே! மோசம்! இன்பமும் துன்பமும் உடனிகழ்ந்தனவே!

மாதவன் – தோழீ! மதயந்திகே! நல்வரவோ! நமதில்லத்திற்கு நீயருட்புரிந்தனை. நீங்கள் கவலையற்றிருங்கள்; என்னுடைய நண்பன் தமியனாயினும் பலருடனும் போராடலென்பது, அவ்வீரனுக்கு எளியதொன்றாம்.

(7) கொண்டதைக் கோடற்குரிய கொடுஞ்செயற்கண் ஒப்பற்ற வெற்றிமுறையைப் பயிறலில் விருப்புற்றதும், வெடிப்புறுங் கன்னப்புழையினின்றிழிதருந் தானநீரானனைவுறுமுகத்துவேழத்தின் மத்தகத்தைப் பிளத்தலில் விறன்மிக்கதுமாகிய அத்தகைய தனது கரமே, அரியினுக்கரிய துணையென[20] அமையும்.

ஆயினும் யானும் வென்றிசேர்தூய்மையான் விளங்கும் நண்பனையணித்துத் துணைபுரிவேன்.

(கடிதினடந்து, கலகஞ்சனுடன் வெளிப்போந்தனன்)

அவலோகிதை முதலியோர் – மனவன்மைப் பெரிதும் படைத்த இவர், பகைவராற் றுன்புறாது மீண்டு வருவரோ?

மாலதி – தோழி! புத்தரக்கிதே! அவலோகிதே! நீங்கள் விரைந்து சென்று இந்நிகழ்ச்சியைக் காமந்தகிப் பெரியார்பாற் றெரிவியுங்கள். தோழி! இலவங்கிகே! நீயுங்கடிதேகி, தங்களான் மீண்டும் யாம் அருட்பெறத்தக்கவாறு விழிப்புடன் போராடல் வேண்டுமெனக் காதலன்பாற் றெரிவி.

(மாலதி, மதயந்திகை யிவர்களையன்றி மற்றைய யாவருஞ் சென்றனர்)

மாலதி – அந்தோ! கொடுமை! பாங்கியர் சென்றுவர, இத்துணை நேரம் கழிந்தொழியுமென யான் அறியேன்; ஆகுக; அன்புடைத் தோழியிலவங்கிகை வரும் வழியை நோக்கி நிற்பேன்; (நடக்கிறாள்) (ஐயுறவுடன்) என்னே! எனது வலக்கண் என்னையின்னற்படுத்தற்கே துடிக்கின்றது. (பிறகு கபாலகுண்டலை வருகிறாள்)

கபாலகுண்டலை – ஆ! பாவி! நிற்க.

மாலதி – (கண்ணீருடன்) ஆ! காதல! (என்று சொற்றடைப்படுதலை[21] நடிக்கிறாள்)

கபாலகுண்டலை – (வெகுளி நகையுடன்) அடி! காதலனைக் கூவியழைத்திடு; அழைத்திடு!

(8) துறவியைக் கொன்ற[22]வுன் கணவன், எங்ஙனஞ் சென்றனன்? கன்னியைக் கெடுத்தொழியுமிக்காதலன், உன்னைக்காக்க; பருந்தின் வீழ்ச்சியாற் பயமுறும் பறவையன்னவுன்னை, யான் கவர்ந்துளேனென்பதை நீ காண்கிலையோ?

இவளைச் சிரீபருப்பதத்திற்குக் கொடுபோய், கணுக்கடோறும் எட்டுணை[23]யாவெட்டி மாரண ஓமம்[24] செய்வேன்.

(என்று மாலதியைக் கவர்ந்து[25] சென்றனள்)

மதயந்திகை – யானும் மாலதியையே பின்றொடர்கின்றேன்; (சென்று) தோழி! மாலதி!

இலவங்கிகை – (பிரவேசித்து) தோழி! மதயந்திகே! யான் இலவங்கிகையன்றோ?

மதயந்திகை – அடி! அப்பெருமகன் மாதவனைப் பார்த்தனையா?

இலவங்கிகை – இல்லை; இல்லை; அவன், உய்யான வேலியைக் கடந்துசென்ற மாத்திரையிற் பேரொலியைச் செவியுற்றுச் சினமொழி சிலவற்றைக் கூறி, தனது துடையைக் கரத்தாலடித்து விரைந்தோடிப் பகைப்படையுட் புகுந்தனன். பின்னர் நல்வினை குன்றிய யான், மீண்டுமிவண் எய்தினேன். அன்றியும் குணநலத்தின் மனமுவக்கும் மக்களது இல்லந்தொறும், ஆ! பெருந்தகைப்பெரும மாதவ! ஆ! வலாற்காரச் செயலுடை மகரந்த! என்னும் இரங்கற் சொற்களையும் செவியுற்றேன். அரசனும், அமைச்சர்களின் புதல்விகள் வஞ்சிக்கப்பட்ட செய்தியையறிந்து மனம் பொறாது சினமுடையனாய், அக்கணமே, விறன்மிக்க பல காலாட்படைகளை விரைந்தனுப்பி நிகழ்ந்தனவற்றை, நிலவொளி திகழும் மேன்மாடத்திருந்து பார்க்கிறானென்றும் அம்மக்கள் கூறுகின்றனர்.

மதயந்திகை – அந்தோ! நல்வினைகுன்றிய யான் கெட்டொழிந்தேன்.

இலவங்கிகை – தோழீ! மாலதி, எங்ஙனமிருக்கின்றாள்?

மதயந்திகை – தோழீ! அவள், முன்னரே நீ வரும் வழியினைக் காண்டற்குச் சென்றனள். பின்னர் யான் அவளைக் கண்டிலேன்[26]; ஒருக்கால், இவ்வுய்யானப் புதர்க்குட் புக்கிருத்தலுங்கூடும்.

இலவங்கிகை – தோழீ! விரைவிற் றேடுவோம்; எனதன்பிற்குரிய தோழி, அச்சமிக்காளாதலின், அவள் இவ்வுய்யானத் திருக்குமிவ்வேளையில் தன்னைத் தாங்கற்கியலாள்[27].

இலவங்கிகையும் மதயந்திகையும் – (கடிதில் நடந்து) தோழீ! மாலதி! தோழிமாலதியென்று யான்[28] அழைக்கின்றேன்.

கலகஞ்சன் – (களிப்புடன் பிரவேசித்து) நல்லூழ்வலியால் யான் போர்வழியினின்று மீண்டு வாழிபெற்றுய்ந்தனன். ஆனந்தம்! அடர்ந்துயர்ந்தசையும் மாசறு வாணூதியில், எதிருருக்கொடு விளங்கும் மதிக்கதிர்க் கற்றைபோலப் பிஞ்சர நிறத்ததாய்[29] கொடுந்தோற்றமுடையதும், வாருணிமதம் நிரம்பிய வலராமன், தனது பெருவலிப் புயத்தாற் பற்றி யெளிதில் வீசிய உழுபடையாற் பெருக்கெடுத்து மிக்கக் கலங்கிய யமுனை யாறை நிகர்த்ததுமாகிய, அப்பகைப்படைக்குழாத்துள், போர்முனையில் அருட்சிறிதுமில்லாக் களிப்பெய்திய[30] மகரந்தன், தடைப்படாது துள்ளிக்குதித்து அதனை வெருட்டியோட்ட, அத்தானை யிவனைத் தடைப்படுத்தற்கியலாதாய்ப் புறங்கொடுத்தோடுங்கால் எழுகின்ற பேரொலி, வானவெளியாவும் நிறைவுறுமந்நிகழ்ச்சியை யிதுபொழுதும் காண்கின்றேன். மாதவனது, வச்சிரத்தா லியைவுறும் என்பனைய புயவலியாற் போர்வீரர் சிதைவுற்றுச் சமர்விருப்பிலராய் விரைந்தோட, அவரது கைப்படை பலவற்றையும் கடிதிற் பற்றி, அவற்றால் எஞ்சிய பகைத்தானையனைத்தையும் கணத்தொழித்துழி யிவனுலவிவரும் வழியில் எவரும் இன்மையால் அத்தகைய கொடுஞ்செயலை யொழித்து வாளாநிற்குமத்தலைவன் மாதவனை யிது பொழுது மனமார நினைக்கின்றேன். என்னே! அரசற்கு நற்குணப்பற்று; இது காலையின்நிருபன், மேன்மாடத்திருந்து இறங்கினனாய்ப் பணியாளரின் வாயிலாக இவ்வீரற்கு இணக்கமொழி கூறி நிகழ்ந்த பகைமையைப் பரிகரித்தான். மாதவன், மகரந்தன், இவரது சாந்திரசம் நிரம்பிய மதிமுக நோக்கி அடிதொறும் மலர்ந்திலங்குமினிய விழியுடையனாய், இக்கலகஞ்சன் வாயிலாக இவரது குலமுறை தெரிந்து அச்சிறப்புறுங் குலமுதுகுரவரையுஞ் சாலப்புகழ்ந்து போற்றினான். பொறாமை, வெகுளி யிவற்றாற் கறுத்து வாடிய முகத்தையுடைய நந்தனனையும், நாணத்தான் மழுங்கிய வதனத்தையுடைய பூரிவசுவையும் நோக்கி, அவ்வரசன், “புதிய காளைப் பருவத்தால் விளக்கமுறுவாரும், சீரியமனவலிமிக்காரும், உலகிற்கு அணிகலனாயமைவாருமாகிய மணமக்களான், நுமக்கிதுபொழுது மனக்களிப்பன்றோ?, என்னும் இன்னுரைகளான் இன்புறுத்தி உள்வீடெய்தினன். மாதவனும், மகரந்தனும் இங்ஙனமே வருகின்றனர், என்னுமிச்செய்தியை, யானுங் காமந்தகிப்பெரியார்பாற் தெரிவிப்பேன்.

(என்று சென்றனன்)

(பிறகு, மாதவனும், மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)

மாதவன் – என்னே! அன்பனுக்கு இயற்கையானமைந்து நிலைப்பட்ட வீரம், மக்களனைவரையுங் கடந்து சிறக்கின்றது.

(9) முதலில் வீர்ர்களைப் பின்றொடர்ந்து என்புமுடிப்புக்கட் பொடிபடக் கரத்தாற் பற்றியடித்தும், அவரது கைப்படைகளை விரைந்து முறித்தும் வீரச் செயற்புரியு நண்பனுடைய முன்புறத்திருமருங்கினும் சிதைவுற்றலையு மென்புக்களையுடைய போர்க்கடலினது மார்க்கம், தம்பித்து நிற்குங் காலாட்படைப்பந்தியாற் பயங்கரமாக இருந்தது.

அன்ப! இது பின்னிரங்கற்குரிய இடன் பார்.

(10) கங்குற்களி விழாவில் வலிந்தணைத்தின்பந்தரும் மாதர்கள் பருகியெஞ்சியதும், மதிக்கதிர் தோய்ந்து குளிர்ந்ததுமாகிய மதுவினை, எவர் இதுபொழுதே பருகினரோ; அவர்களே, நினது தாட்பாளனைய கரத்தின் வீரச் செயலான் முறிந்த என்புக்களையுடைய தம்முறுப்புக்களான், இன்னிலைவாழ்க்கையைப் பெரிதுஞ் சாரமற்றதாகவும், விரைவினழிவெய்து மியல்பினதாகவும் இக்கணத்தே தெரிவிக்கின்றனர்.

இவ்வரசனது அன்புடைமை எண்ணற்பாலதே; ஏனெனில், குற்றமிழைத்த நமக்கும் அக்குற்றத்தை யெண்ணாது அவ்வரசன் வழிபாடியற்றி மகிழ்வுற்றனன். இனிவருக; இதுகாலை, மதயந்திகையைக் கவர்ந்து மணந்த செய்தியைக் கலகஞ்சன் மாலதி முன்னர் விரித்துரைக்க அதனைக் கேட்டின்புறுவோம்.

(எதிரில் நோக்கி)

என்னே! இவ்விடங்கள் பாழடைந்தனபோலக் காணப்படுகின்றனவே.

மகரந்தன் – நமது சமர்ச்சங்கடத்தாற் சஞ்சலமுற்றுத் தாமின்புறற்கே, இங்குமங்கு முலாவித்திரிவாராய் இங்ஙனமே யிருப்பரென, உறுதியாகக் கருதுகிறேன்.

மாதவன் – அன்ப! இந்நிகழ்ச்சியைக்[31] குறித்து நீ கூறுங்கால்,

(11) மாலதியினது புன்முறுவலோடியைந்தசையுங் கடைக்கண்களாற் பார்க்கப்பட்டுத் துன்பமெய்தியதும், நாணமிக்கதும், அசைவிலா நயனங்களையுடையதுமாகிய தனது வதன கமலத்தை மதயந்திகை குனித்து நிற்பள்.

இதுதான் அவ்வுய்யானத் தடம்.

(இலவங்கிகையும் மதயந்திகையும் வருகின்றனர்)

இருவரும் – தோழீ! மாலதீ! (தற்செயலானோக்கிக் களிப்புடன்) என்னே! அப்பெருந்தகைய வீரர் மீண்டுங் காணப்படுகின்றனரே.

மாதவனும், மகரந்தனும் – மாதரீர்! மாலதி, எங்குச் சென்றனள்?

இருவரும் – மாலதி, எங்ஙனம் சென்றனளோ; யாம் அறிகிலேம். நல்வினை குன்றிய நாங்கள், உங்களது அடியொலியான் மாலதியே வருகின்றாளென மயக்கமெய்தினராய் வஞ்சிக்கப்பட்டோம்.

மாதவன் – மாதரீர்! எனது மனம், சொல்லொணாவண்ணம் ஆயிரங் கண்டமாகப் பிளவுபடுகின்றது. ஆதலின் தெளிதரக் கூறுக.

(12) குவளைவிழியாளைக் குறித்து அனிட்டத்தையே[32] கருதும் எனது மனம், இடையறாத நடுக்கத்தை யெய்துகின்றது; இவ்விடக்கண்ணும், தீமையை விளைத்தற்கே துடிக்கின்றது; உங்களது மொழிகளும், கொடியனவாகலின் அந்தோ! யான் கெட்டொழிந்தேன்[33].

மதயந்திகை – தாங்கள் இங்ஙனமிருந்து வெளிப்போந்துழி, மாலதி தங்களை விழிப்புறுத்து நிமித்தம் தம்பால் இலவங்கிகையை விடுத்தும், காமந்தகிப் பெரியார்பால் இந்நிகழ்ச்சியைத் தெரிவித்தற் பொருட்டு, புத்தரக்கிதையையும், அவலோகிதையையும் அக்காமந்தகி யாரிடத்துப் போக்கியும், பின்னர் அவள் மனம் வருந்தியளாய் இலவங்கிகை வரும் வழியைக் காண்டற்கு முன்னே சென்றனள்; யானும் பின்னே தொடர்ந்து சென்றேன்; ஆயினும் அவளைக் காண்கிலேன். பிறகு நாங்கள் இத்தளிர்ச்சோலைகளிற் றேடி வருங்கால் உங்களையும் கண்டோம்.

மாதவன் – ஆ! காதலி! மாலதி!

(13) சினமுடையாளே! மறைந்திருக்குமிப் பரிகாசச் செயலை யொழிக்க; யான் உன்பால் மிக்க வேட்கையுடையனாய் எண்ணா அமங்கலங்களை[34]யே எண்ணுகின்றேன். எனது உள்ளக்கிடக்கையை அறியவிரும்புவையேல், அஃதுன்னால் முன்னர்[35] அறியப்பட்டதே. ஆகலின், உனது இன்சொற்களை யெற்களிக்க; எனது மனம், உள்ளுறக் கலக்கமுற்று மயக்கமெய்துகின்றது. இந்நிலையில், நீ அருளிலியா அமைகின்றனை.

இருவரும் – ஆ! அன்புமிக்க தோழீ! நீ யெங்ஙனஞ் சென்றனை.

மகரந்தன் – அன்ப! என்னையென்றியாது என்னே வருந்துகின்றனை?

மாதவன் – நண்ப! அன்புமீக்கொடு துயர்ப்படும் அவளது அச்சுருஞ்செயலை[36], நீயுமறிந்திலையோ?

மகரந்தன் – இஃதுண்மையே! ஆயினும் காமந்தகிப் பெரியாரின் அடிபணிய அவள் சென்றிருப்பள்; என்று கருதுகின்றேன்.

இருவரும் – இவ்வண்ணமும் நிகழலாம்.

மாதவன் – அங்ஙனமே ஆகுக. (என்று செல்கிறான்)

மகரந்தன் (தனக்குள்)

(14) அத்தோழி மாலதி, காமந்தகிப்பெரியாரது இல்லத்தையெய்தி, உயிருடன் மீண்டுவருவளோ? அவண் எய்தாதொழிந்து, எங்ஙனமேனுஞ் சென்றனளோ? என்னுமையத்தால் நைந்து அழுங்குகின்றேன்; ஏனெனில், சுற்றத்தார், நண்பன், காதலி, இவரடியாக வந்த இன்பம், சௌதாமினி[37]யின் விளக்கம்போல முற்றிலும் நிலையற்றதாகும்.

(எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீ மாதவம்” என்னும் நாடகத்தில் எட்டாம் அங்கம் முற்றிற்று.


[1] ஆகுக; இங்ஙனம் செய்வேன் – இது, நாணத்தாற் பிணக்கியல்பினளன்ன மாலதியை, இணக்கமுறச் செயலின் உபாய அறிவை யுணர்த்தும். இதனால் அவ்வுபாயமும் கன்னியர் உடனலங்கருதியே கலவியைக் கோரல் வேண்டுமென்னும் காமநூல் கருத்து புலனாம்.

[2] வெப்பநோய் நீக்கற்பொருட்டு – இதனால், கலவியிற் கருத்தின்மையும், காமநோய்ப்பட்டு வருந்தும் உடற்பிணி நீக்கமும் உணர்த்தப்பட்டன. இது மாலைநீராடற்கும் நிமித்தமாம்.

[3] மாறுபடக்கருதுவையோ – முன்னர் முதுகாட்டில் யான் உன்னை யின்புறுத்தியாங்கு இதுபொழுது நீ, என்னையின்புறுத்தல் வேண்டும்; இதனையன்றி மாறுபடக் கருதலடாது என்பது கருத்து.

[4] தழுவியருள்புரிக – இது மாலதியின் மனத்தைத் தன்பாலிணக்கமுறச் செயலை யுணர்த்தும்.

[5] அருளிலாமாலதி – இது மாலதிக்குச் சினம் விளைத்தலையுணர்த்தும். இவ்வளவிற் காதலன்பாற் காதலி, காமுறும் என்னும் காம நூலுண்மை புலனாம்; அங்ஙனமே வாற்சியாயனரும்:- மகளிரது மனத்தைத் தன்வயப்படுத்த முயலுமொருவன், சூழ்ச்சியாலவரைத் தெளிவித்தல் வேண்டும். அங்ஙனமாயின், அவர், காதற்பற்றையும் மனத்தெளிவையும் எய்துவர். ஆடவரும் கன்னியர்பான் மிகைபடுங்கூடலானும், மிகைபடுமூடலானும் பயனெய்தாராதலின், நடுநிலையிலிருந்தே தற்பயனை நிறைவேற்றிக்கோடல் வேண்டும். இன்புறுத்தியாதல், சினமுறுத்தியாதல், நம்பிக்கைப்படுத்தியாதல் அவரைத் தன்வயப்படுத்தல் வேண்டும். “இக்கன்னி, நாணமிக்கவள்” என்று தன்வயப்படுத்த முயலாதொழியுமொருவன், அக்கன்னியால், உள்ளக்கிடக்கையுணராத பசுவெனவே எள்ளப்படுவன்.

[6] பொறாமை – மறைவிற் கூறியவற்றைக் காதலன்முன் வெளிப்படுத்தலே, பொறாமையினிமித்தம்.

[7] உண்மையே உரைக்கின்றனளா? இவ்வினாவிற்கு விடைபகராளாயின், அம்மட்டில் இதில் உடன்பாடெய்தியவளாம்; என்பதும், மறுமொழி கூறுமாயின், மாதவன், இவளது இன்சொற்களைக் கேட்டலாகும் பேறுபெற்றவனாம் என்பதும் கருத்து; இதனால், இன்னுரையியம்பவைத்தலென்னும் வாற்சியாயனர் கூற்று இங்குக் குறிப்பிடப்பட்டது.

[8] சிரத்தை அசைக்கிறாள் – அவலோகிதை கூறியாங்கு தான் கூறவில்லையென்பதை வெளியிடற் பொருட்டு. இதனால், மகளிரை வினாவி வற்புறுத்தி யியம்பவைக்குங்கால், அவர் சிரமசைத்தலானே விடைபகருவர் என்னும் மாதரியல்பு உணர்த்தப்பட்டது.

[9] ஆணை – யிதனால், உன்னுயிர்த்தோழியராகும் இவர்களதாணையைக் கடத்தலான் நேரும் தோடமே எனதுரையைக் கடத்தலானும் நிகழும் என்பதாம்.

[10] துணிபொருளெழிலிலாச் சொற்கள் – என்பது பொருட்டெளிவு இல்லாத சொற்களை; இங்ஙனங்கூறல், முதற்கலவியிற்கூட நாணுறும் மாதரியல்பினையுணர்த்தும்.

[11] இஃதென்னை – இன்பந்திளைக்குந்தறுவாயிற் கண்ணீருகுத்தலடாதாதலின், இவ்வினா நிகழ்ந்தது; உயிர்ப்பாங்கியாகுமவலோகிதை யிவளது அந்தரங்கத்தை யறிவளாதலின், இவன்பாலிதனை வினாவினன் என்பது கருத்து.

[12] இச்சுலோகத்திற்கு இது கருத்து; கபோலமொன்றை யொருகரத்தமைத்துக் குனித்திருந்துழி, அக்கபோலம் கண்ணீர்பெருகி நனைய, அவளது முகத்தழகமுதினைக் கரத்தால் அள்ளிப்பருகுவான் என்ன அங்கண் மதிக்கரம் படிந்திலங்கியதாம். கரம் – கதிர்.

[13] எத்துணைக்காலம் – இத்தொடற்கு காதற் பற்றான் விளைந்த கண்ணீர்ப்பெருக்காகுஞ் சாத்துவிகநிலையை, பாங்கியின் பிரிவாற்றாமையைக் கூறி மறைத்தனள் என்பது கருத்து.

[14] இஃதென்னை – அவலோகிதை யொன்றை வினாவ மாலதி மாறுபட மொழியளித்தமை, மாதவனது வினாவினிமித்தம்.

[15] அவலோகிதையினது இச்சொற்களுக்கு, காமந்தகியினது சூழ்ச்சியால் மதயந்திகையின் மணவினை நிறைவுற்றதென்பது கருத்து.

[16] முதற்கட் காட்சி முயல்விற்கு – இவ்வணியல் மாலதியின் காட்சியிற் சாட்சியாக அமைந்ததாதலின் எனதுயிரினும் உயர்ந்த இது இன்பச் செய்தி கூறுவார்க்குப் பரிசிலாக அளித்தற்குரியதென்பது கருத்து.

[17] பிறர்கரத்தையெய்தும் – இதனால், நீயே விருப்பத்தைத் தெரிவிப்பவளாய் இவ்வணியலைப் பெருகவென்பது கருத்து.

[18] இரண்டையும் – அம்மாலை, மாலதியின் விருப்பிற்கினியதென்பதையும், பிறர்கரத்தை யெய்துமென்பதையுமாம்.

[19] மதயந்திகையின் இலாபத்தால் – இவ்வுரையே மாலதி, பரிசில் எய்தற்குரிய இன்னுரையாம்.

[20] துணையென – இவ்வெடுத்துக்காட்டு, மகரந்தன் பகைவரை வேறற்குரிய விறன் மிக்கவன் என்பதையுணர்த்தும்.

[21] சொற்றடைப்படுதல் – ஈண்டு இஃது அச்சமென்னுஞ் சுவையை வெளிப்படுக்குஞ் சாத்துவிக நிலையாம்.

[22] துறவியைக் கொன்ற – இவ்வடைமொழியான், மாதவனது திறலின்மையும், கபாலகுண்டலையின் றிறலுண்மையும் அவள் கருத்திற்கியைய வெளிப்படும்.

[23] எட்டுணை – இது கொலைகளுட் கொடிய சித்திரவதத்தை; இதனால் இவளுடைய கணவனுக்குத் திறலமையுமேல் இவளைக்காக்க; என்பது கபாலகுண்டலையின் கருத்து.

[24] மாரண ஓமம் – இது பிறர்க்குத் துன்பமிழைக்கும் வேள்வி; இதனை ஆபிசாரம் என்ப.

[25] கவர்ந்து – உடன்வரும் மதயந்திகை யறியாவண்னம் மாயையின் வலியாற் கவர்ந்து சென்றனளென்பது கருத்து. இது இலவங்கிகை, மதயந்திகை, யிவரது மேல்வருஞ் சம்பாஷணையால் விளங்குவதாம்.

[26] கண்டிலேன் – இதனால், கபாலகுண்டலை மாலதியை மாயையாற் கவர்ந்தனளென்பது புலனாம்.

[27] தன்னைத் தாங்கற்கியலாள் – என்பது காமவேட்கையின் மிகுதி கருதி.

[28] யான் – இத்தன்மையிடம் இவ்வனத்திடை தீங்கிழைத்தற்குப் பிறர் யாவரேனும் அழைப்பரென்னும் மாலதியின் ஐயத்தை நீக்கி அவளை யின்புறுத்தலையுணர்த்தும்.

[29] பிஞ்சர நிறம் – கருமையும் செம்மையும் கலந்த நிறத்தை

[30] அருட்சிறிது மிலாது களிப்பெய்திய – இவ்வடைமொழி போர்முனையில் வீர்ர்களுக்கமையுமிலக்கணத்தை யுணர்த்தும்.

[31] இந்நிகழ்ச்சி – இது, மகரந்தன் மதயந்திகையைக் கவர்ந்து மணந்தமையையும், அவன் போரில் வெற்றிபெற்றமையையும், இவர்பால் அரசன் அன்பு பாராட்டியமையையும் உணர்த்தும்.

[32] அனிட்டத்தையே – இது, “அன்பின் மிகுதி அடிதொறும் அனிட்டத்தைக் கருதும்” என்னும் நீதியை வெளிப்படுக்கும்; அனிட்டம் – கேடு.

[33] கெட்டொழிந்தேன் – இவ்வினைக்குக் காரணம், விதி.

[34] எண்ணா அமங்கலம் – இது மரணத்தை. இவ்வழிக் கபாலகுண்டலையின் நினைவு நிகழ்ந்தமையின் அவளான் மாலதிக்கு மரணம் நேர்ந்திருக்குமென்பது மாதவன் கருத்து.

[35] முன்னர் – மாதவன் மகாமாமிசத்தை விலைப்படுக்குங்கால் அவனது உள்ளக்கிடக்கையை இவள் அறிந்தவள் என்பது புலனாம்.

[36] அச்சுருஞ்செயலை – இது நந்தனனுக்கு வாழ்க்கைப்படுதலை வெறுத்தும், மாதவனிற் பிரிந்தமையைக் குறித்தும், இவள் உயிர் துறத்தற்குந் துணிந்து நிற்றலையுணர்த்தும்.

[37] சௌதாமினி – மின்;  இச்சொல் மாலதிக்குக் கபாலகுண்டலையான் விளைந்த தீங்கு, சௌதாமினியென்னும் பெயரமைந்த யோகினியால் விலகி, அவள் மாதவனோடியைந்து இன்புறுவள்; என்னும் பின்வரும் காதையை உணர்த்தும்.

மாலதீமாதவம் – ஒன்பதாம் அங்கம்

ஒன்பதாம் அங்கம்

(சௌதாமினி[1] பிரவேசிக்கிறாள்)

சௌதாமினி – இந்த யான், அந்த[2] சௌதாமினியே! பெருமைவாய்ந்த[3] சிரீபருப்பதத்தினின்றும் வெளிப்போந்து பதுமாவதிப்பதியை யெய்தினேன்; அங்கண், “மாலதியிற்பிரிந்த மாதவன், அவளுடனிருந்தின்பந்திளைத்த விடங்களை அவடன்பிரிவாற்றாமையாற் காண்டற்கியலானாய், தனதிருக்கையை விடுத்துத் தன்றுணைக் குழூவுச் சூழ்தரப் பிருகத்துரோணியென்னும் யாறுபாய்க் குறிஞ்சி நிலத்துட் புக்கனன்”, என்றிதுபொழுதே கேள்வியுற்றேனாதலின் அவனது பாங்கர் சென்றடைவேன். ஓ! அவ்வளவு விசையில் யான் எழும்பலுற்றேனா? நகர், நாடு, காடு, மலை, நதியாவும் கண்களுக்கு நன்கு புலனாகின்றனவே! (பின்புறம் நோக்கி) நல்லது! நல்லது!

(1) உயரிய மேன்மாடங்கள், ஆலயக்கோபுரங்கள், மேல்வீடுகள் இவையுராய்ந்து, பிளவுற்று வீழ்ந்தவானமென்னத்[4] திகழுந் தெண்ணீர்ப்பரப்புறுஞ் சிந்துநதி, பாராநதி, என்னும் யாறுகட்சூழ்தர, பதுமாவதிப்பதி விளங்குகின்றது. மேலும்,

(2) அந்த இந்த இலவணா நதி, அழகிய தரங்கங்களையுடைய தாய் நாட்டு நலத்திற்கே விளக்கமுறுகின்றது. இந்நதியை அணித்துள்ள அடவிகள், கார்காலத்தில் சூனிறையானினம் விரும்பி மேய்தற்குரிய புற்கணிறைந்தனவாய் விளங்குகின்றன.

(வேற்றிடத்தைப் பார்த்து)

தெய்வத்தன்மை வாய்ந்த அந்த இந்தச்சிந்து நதியின் நீர்வீழ்ச்சி, தரையைப் பாதலம் மட்டும் பறிக்கின்றது.

(3) இந்நீர்வீழ்ச்சியினெழுகின்ற பேரொலி, மழைமுகின்முழக்கென்ன விளங்கி மருங்குள மலைமுழைக்குட்புக்கெதிரொலித்தலால், கயமுகக் கடவுட் கண்டத்தொலியை மானுகின்றது.

இக்காடுமலையகலிடங்கள், சந்தணம், ஆச்சா, சரளம், பாதிரி யென்னுமித் தருக்கணிறைந்து, கூவிளங்கனி மணங்கமழ்வனவாய், தழைவுறுங்கடம்பு, நாவல் இவற்றால் இருணிறைந்த மலைக்குகையினும், கொடிவீட்டினும் புக்கொலிக்குங் கோதாவிரி நதி பாயும் விசாலமருங்கினையுடைய தென்னடவிச் சைலங்களை நினைவுறுத்துகின்றன. வானவராற் றாபனஞ் செய்யப்பட்டுச் “சுவர்ணவிந்து” என்னுந் திருநாமஞ் சிறக்க விளங்கும் உமாபதியாரும், மதுமதி, சிந்துவென்னும் யாறுகளின் சங்கமத்தைத் தூய்மைப்படுத்தி யிங்கணெழுந்தருளுகின்றார்.

(4) “புவனம் படைக்கும் புங்கவ! போற்றி

அவற்றிற் கருண்மறையுறைவே! போற்றி

மதிக்கலையணியும் மௌலியாய்! போற்றி

மதனற்சுட்ட நுதற்கணாய்! போற்றி

முழுமுதற்குருவே முதல்வனே போற்றி”

(செலவை நடித்து)

(5) நீருண்ட மேகங்களாற் கருத்துயர்ந்த மலைச்சாரலையுடையதும், களித்தகவு மயூரங்களின் கேகா நாதங்களையுடையதும், பறவைகள், பாதபங்களிற் கூடுகளைமுடைய அவற்றாற் காண்டற்கினியதுமாகிய பிருகதச்சுமாவென்னு மிப்பருப்பதம், கண்ணிற்குக் களிப்பையளிக்கின்றது.

(6) இங்கண், முழையுறை காளைப்பருவக்கரடிகள், இறைச்சிகளை யுமிழ்ந்துமிழ்ந்து புசிக்குங்கால் அவ்வுமிழொலி, எதிரொலியாற் பருமிதமெய்துகின்றது. வேழங்கள், ஆனைவணங்கித் தருக்களை முறித்தெறிய அவற்றிற் பெருகிய பான்மணம், தண்மையுந்துவரும் இனிமையோடியைந்து பரந்து கமழ்கின்றது.

(வானத்தை நோக்கி)

 என்னே! நண்பகல் நண்ணியதே! ஏனெனில் இதுபொழுது,

(7) குருட்டுநாரைகள், கும்மட்டிச்செடியை விட்டுத் தளிர் நிறைந்திலங்கும் பச்சிலை மரத்தையடைகின்றது. பூர்ணிகையென்னும் பறவைகள், நதிக்கரையில் வளர்தருங் காயாமலர்க் கொத்துக்களைப் புசித்துத் தண்ணீர் பருகச் செல்லுகின்றன. பரதம் என்னும் பறவைகள், தினிசமரத்தின் அடிமருங்குப் பொந்திற்புக்கு வசிக்கின்றன. கொடியிற் கட்டிய கூடுகளிலிருந்து கூவுங் கபோதங்களின் ஒலியை அனுசரித்துக் குக்குபங்கள் கூவுகின்றன.

நிற்க:- மாதவனையும் மகரந்தனையுந் தேடி, தொடங்கிய செயலைச் செய்து முடிப்பேன்.

(சென்றனள்)

(விட்கம்பம்)

(மாதவனும் மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)

மாதவன் – (வருத்தமுடன் நெட்டுயிர்த்து)

(8) இத்தகைய இடும்பை நிகழ்ந்துழி யிவ்விதயம், மாலதி கிடைத்தற்குரியளென்னும் நம்பிக்கையை நாடவில்லை. அன்றியும், ஆசையற்றதாக அந்நம்பிக்கையை யிழந்தொழியாது, மயக்கமாகும் பேரிருளிற் புக்குழலுகின்றது. இந்தயாம்[5] ஊழ்வினைக்கொடுமையாற் செய்வகையறியா விலங்கினம்போல அத்துன்பத்திற் புக்குழலுகின்றோம்.

மாதவன் – ஆ! காதலி! மாலதி! எங்குச் சென்றனை? உண்மையை அறியொணாவண்ணம் வியக்கத்தக்கவாறு என்னே! விரைவிலழிவெய்தினையே! அடி! அருளிலாதவளே! அருள்புரிக; என்னை யின்புறுத்துக.

(9) மாதவனைக் காதலனாகக் கொண்ட மாலதி! என்பால் வைத்த காதற்பற்றை யிழந்தனையோ? பொற்றொடியணிந்து வனப்புறுமுனது கரம், மணப்பெருவிழாவே வடிவெடுத்தாங்கு எவனை முன்னரின்புறுத்தியதோ; அடி கண்ணே![6] அம்மாதவனேயான்.

அன்ப! மகரந்த! அத்தகைய அன்பின் நிகழ்ச்சி உலகிற் கிடைத்தற்கரியது.

(10) கணந்தொறுங் கொடுமைத்தாய் இடையறாது வருத்துங் காமநோயை, சேயிதழ் மலர்களன்ன மெலிந்த உறுப்புக்களான் அவள் பொறுத்தனள். மேலும், “யான் கிடைத்தற்கரியன்” என்னுமாத்திரையில் உயிரையுந் துரும்பெனக் கருதிய தனை விடுத்தற்குந் துணிந்தனள். இதனிற் பிறிதியம்புமாறென்னை? இரு முதுகுரவரையுங் கடந்து கைப்பிடிமங்கலத்தை இவள் நிறைவேற்றினாள். (மேலும்)

(11) மணவினைக்கு முன்னர், இவள் நந்தனற்கு வாழ்க்கைப்படுஞ் செய்தி நிகழவே, என்பால் நம்பிக்கை யிகந்த மாத்திரையில் உயிநிலையுலைந்துழி நிகழுமின்னலெய்தி யாங்கு கலக்கமுறுங் கரணங்களையுடையளாய், தனதன்பின் வழிவரும் ஆழ்ந்த கருத்தை, அந்நிலையினும் அலமரந்து விரித்து விளக்கினாள். இந்நிகழ்ச்சியைக் கண்ட அளவில் யானும், இடும்பையினலைவுறும் இதயத்தனாயினேன் என்னுமிவ்வுண்மையை நீயும் நினைக்கின்றனையா?

(மனவருத்தமுடன்) அடா! ஆ! என்னே! வியப்பு!

(12) ஆழவருந்துமிதயம், வெடிப்புறுகின்றதெனினும், அஃதிருகண்டமாகப் பிளவுபடவில்லை. கலக்கமெய்திய காயம், மயக்கமெய்துகின்றதெனினும் உணர்ச்சியை நீக்கிற்றில்லை. உள்ளெரிவு மெய்யினை யெரிக்கின்றதெனினும், முற்றிலுஞ் சாம்பராக்கிற்றில்லை. உயிர்நிலை குலைக்குமூழ்வினை, துன்புறுத்துகின்றதெனினும், உயிரை வேறறக்களைகின்றதில்லை.

மகரந்தன் – விதியன்ன கொடிய பரிதியும், தடையின்றியெரிக்கின்றான். உனதுடனிலையும் இத்தன்மைத்து. ஆதலின், இம்மரைமலரோடையின் மருங்கிற் சிறுபொழுதமர்க; இங்ஙனமன்றே!

(13) தண்டுயர்ந்தன்றலர்ந்த மலர் நிறைந்த தாமரையோடையில், வழிந்தொழுகு மரந்தமணங்கலந்து வீசுமிக்காற்று, அங்கணலைவுறுந்திரைகளின் றிவலைகளாற் குளிர்ந்து உன்னை உயிர்ப்பிக்கும்.

(சுற்றி வந்தமர்கின்றனர்)

மகரந்தன் – (தனக்குள்) நிற்க:- இங்ஙனம் இவனைப் பிறிதொன்றில் இழுப்பேன். (வெளியீடாக) நண்ப! மாதவ!

(14) இவ்வோடையில் களித்தின்னிசை பாடும் அன்னப்பறவைகளின் சிறைகளானடிக்கபட்டு அலைவுறும் பருத்த தண்டுடைக் கமலங்களையுடையனவும், அகலாவனப்புடையனவுமாகிய சிலபகுதிகளை, கண்ணீர் விழுந்தெழுமிடையிற் காண்டி.

(மாதவன் மிக்க வருத்தமுடன் எழுகின்றான்)

மகரந்தன் – என்னே! எனதுரையை மேற்கொள்ளாமல், மனமழிந்த நிலையில் வேற்றிடஞ் செல்ல முற்பட்டான். (பெருமூச்செரிந்தெழுந்து) நண்ப! மனந்தெளிக; பார்க்க.

(15) கொடிவீடு மல்கும் நதியினது தெண்ணீர், நீர்வஞ்சிமலர்களான் மணங்கமழ்கின்றது. மருங்குகளிற் காட்டுமுல்லையரும்புகள், அலர்தருகின்றன. மலைச்சாரலை யெய்திய மழைமுகில், மலர்தரு மல்லிகை விளங்கு முன்புறங்களில், மயினடம் பயிறலிற் காழக இல்லமாய் அமைகின்றது. மேலும்,

(16) இம்மலைவெளிகள், முகைவிரிந்தலர்ந்து வனப்புமிக்கக் கடம்பினை யுடையனவாயும், திசைகள் கருமுகிற் குழுவாற் கரியனவாயுமிலங்குகின்றன. நதிப்புனல் பாயுஞ் சதுப்பு நிலங்கள், முளைத்தெழு முனையின் அழகுறுந்தாழை யுடையனவாய் அமைகின்றன. இவ்வனபந்தியும், ஆம்பியும், வெள்ளலொத்தியும் மலர்ந்து மணங்கமழ்கின்றது.

மாதவன் – அன்ப! பார்க்கின்றேன்! ஆயினும், இதுபொழுது காடுமலையிடங்கள், காண்டற்கியலா வனப்பெய்துகின்றன. முற்றும் உணர்ந்த நீ, இவையெற்குத் துன்புறுத்துவனவென்றோர்ந்தும், இவற்றைத் தெரிவித்ததென்னை? (கண்ணீருடன்) அன்றேல், எனதூழ்வினையன்றிப் பிறிதென்னை?

(17) மலர்தருமருதம், ஆச்சா இவற்றின் நறுமணங் கமழுங் கீழ்ப்பெருங்காற்றின் விசையால் அலைவுறுமுகிற்படலம், இந்திரநீலமணியின் பிளவென்ன விளங்கவும், புதுமழையாற் பூழிமணங்கமழவும் நிகழுமிந்நாட்கள், வெப்பநீர் தணியவும், வேட்கை நீர் அரும்பவும் வனப்பெய்தி வந்தடைந்தன.

ஆ! காதலி! மாலதி!

(18) இதுபொழுது யான், இத்திசைகளையெங்ஙனம் காணமாட்டுவேன். இவற்றில் பசிய பச்சிலைத் தருவன்ன நீனிற முகில்கள், அடர்ந்து சூழ்தருகின்றன. குளிர்காற்று, புதுமழைத் திவலைகளைத் தூற்றிவீசுகின்றது. வானவில், வளைந்திலங்குகின்றது. களிப்புறு நீலகண்டப்பறவைகள், காமப்போரியற்றி யகவுகின்றன.

(நெட்டுயிர்த்துத் துன்ப நுகர்ச்சியை நடிக்கிறான்)

மகரந்தன் – நண்பனது நிலைமாற்றம், சொல்லொணாவண்ணம் மிகக்கொடியதாய் அமைந்தது. (கண்ணீருடன்) வச்சிரத்துருவினனாய யான், உண்மையறிந்திலனாய்[7] இவனையின்புறுத்தற்கு இங்ஙனம் முற்பட்டேன். (நெட்டுயிர்த்து) எவ்வாற்றானும் இவனையிவனை யின்புறுத்துமாறின்மையான், “மாதவன் பிழைப்புறும்” என்னும் நம்பிக்கை முற்றிலும் முடிவுற்றது போலாம். (அச்சமுடன் பார்த்து) ஓ! இவன் மயக்கமெய்தினனே! ஆ! தோழீ! மாலதி! உன்னை வெறுத்தென்னை? அருளிலி[8]யாயினை.

(19) முன்னர் மாதவனைக் காதலித்துச் சுற்றத்தாரையுந் துறந்த நீ, இவனை மணத்தற்கேவன் செயற் புரிந்தனை. அங்ஙனமாக, தோழீ! குறைசிறிதில்லா இக்குலமகனிடத்துக் கருணையிகந்த முறைமையீதென்னை?

ஓ! இதுபொழுது முயிர்த்திலனே! அந்தோ! பறிகொடுத்தேன்.

(9) அம்மம்ம! இதயம் பிளவுறுகின்றது; தேகக் கட்டுச்சிதைவுறுகின்றது; உலகம் பாழ்படுகின்றது; உள்ளம் அவியாச்சுடருடன் எரிதருகின்றது; உயிர்களுக்குயிராய ஆன்மா, வருந்திக்கலக்கமெய்திக் காரிருளின் மூழ்கியாங்கு அமைகின்றது; பெருமயக்கம் பொறிநுகர்ச்சியைத் தடைப்படுத்துகின்றது. நல்வினை குன்றிய யான் என் செய்வேன்.

அந்தோ! கொடிது; கொடிது;

(21) உறவினர்க்குழு மனமகிழ்நிலவு விழாவும், மாலதியின் நாட்டங்கட்கினிய மதியமும், மகரந்தனையின்புறுத்துவானும், நிலவுலகத்திலகமுமாகிய அந்த இவன், இதுபொழுது அழிவெய்துகின்றான்.

ஆ! அன்ப! மாதவ!

(22) உன்னை வலிந்தணைத்துழி உறுப்புக்களிற் சந்தணச் சேறாகவும், பார்த்துழி நயனங்களிற் சரற்கால நிலவாகவும், நினைத்துழி மனத்திற் பேருவகையாகவும், எற்கு நீ அமைந்தனை; எனதுயிரேயனைய[9] பேரழகு வாய்ந்த அத்தகைய உன்னை, எதிர்பாராத நிலையிற் கவர்ந்தேகுங் காலனால் யானுங் கொல்லப்பட்டேன்.

(மாதவனுடலைத் தடவி)

(23) கருணையற்றவனே! முறுவலான் மலரும் விழியினால் என்னைக் காண்க; கொடியோய்! என்பால் ஒரு சொல்லையேனும் கூறுக. மரந்தனை அன்பனாகவுடைய மாதவ! என்னை, மனமுவந்துடன்திரி தோழனாக ஏன் கருதுகின்றாயில்லை.

(மாதவன் உணர்வெய்துகின்றான்)

மகரந்தன் – (நெட்டுயிர்ப்புடன்) அன்று தேய்த்த நீலமணியன்ன ஒளிமிக்கு வனப்பெய்திய மழைமுகில், மழைத்துளி தெளித்து எனதன்பிற்குரிய நண்பனை பிழைப்புறுத்துகின்றது; ஆனந்தம்! பிழைத்தனனே!

மாதவன் – இவ்வனத்தில் காதலியின்பால் யாவனைத் தூதுவிடுப்பேன்.

(24) கனிநிறைந்து கருத்த நாவற்புதர்களிற்றடைப்படுதலால் அலைகளடங்கிவரும் நதியினது வடபான் மலைமுடியை, பந்திபந்தியாய் நெருங்கி வளர்ந்து முதிர்ந்த பச்சிலைமரம்போற் கரிய புதிய புயல் வந்தடைகின்றது.

(பரபரப்புடன் எழுந்து மேனோக்கிக் கைகூப்பினனாய்)

(25) காட்சிக்கினியனே! நினதன்பிற்குரிய காதலியாகும் மின்னல், உன்னைத் தழுவுகின்றது[10]. அன்பின்மிக்க சாதகப்புட்கள், நின்னையே நோக்கி வந்தடைகின்றன[11]. கீட்டிசைக்காற்றும், நன்கு வீசி உன்னையின்புறுத்துகின்றது. இந்திரனது வில்லாகு மொளிவீசுமணிகலனை யெப்புறத்தும் தரிப்போய்! நின்பால் என் விருப்பைத் தெரிவிக்கின்றேன்.

(கேள்வியை நடித்து) ஓ! இம்முகில், எதிரொலி நிறைந்த கந்தரங்களிலிருந்தகவும் நிமிர்ந்த கந்தரங்களையுடைய மயில்களினது, இனிய குரலுடன் இயைந்த உங்காரவொலியால் என்னையனுமதிக்கின்றது. யான் எனது விருப்பத்தைக் கோருவேன். முகிற்பகவனே!

(26) உலகில் உலவு நீ! என் காதலி மாலதியைத் திருவருட்பாங்காற் காணுவையேல், முதலில்[12] அவளையின்புறுத்திய பின்னரே மாதவனது நிலைமையைத் தெரிவித்தல் வேண்டும்; அங்ஙனம் கூறும் உன்னால் ஆசாபாசம் அறுபடாதிருத்தல்[13] வேண்டும். அவ்வாசாபாசம் ஒன்றே அவ்விசாலவிழியாளது உயிரை முயன்று பாலிக்கின்றது.

(மகிழ்ச்சியுடன்) ஓ! செல்லத்தொடங்கினனே! ஆதலின், இனிப்பிறிதோரிடஞ் செல்வேன்.

(என்று நடக்கின்றான்)

மகரந்தன் – (மனவருத்தமுடன்) காமநோயாகுமுபராகம்[14] மாதவனது வதனமதியைத் துன்புறுத்துகின்றது. ஆ! தாதையே![15] ஆ! அன்னையே! ஆ! காமந்தகிப்பெரியோய்! என்னைக் காத்தருளவேண்டும். மாதவனது நிலையைக் காணல் வேண்டும்.

மாதவன் – பெருமோசம் விளைந்தது.

(27) அன்றலர்ந்த வெள்ளொத்தி மலர்களிற் காந்தியும், மான்களிற் கண்களும், கயங்களில் நடையும், கொடிகளில் மேனியின் மென்மையும் அமைய இக்காட்டில் என் மனைவி, இவைகளாற் கொலையுண்டுபகுக்கப்பட்டாள்[16]; என்னுமிஃதுண்மையே! ஆ! காதலி! மாலதி!

மகரந்தன் – (28) நண்பனும் குணங்கட்குறையுளும், உயிர்த்தலைவனும்[17], பூழியாடன் முதலாய்க் கேண்மை மிக்கவனுமாகிய இம்மாதவன், காதலியின் பிரிவான் விளைந்த மனப்பிணியாகும் நோயினால் வருந்துங்கால், கொடியமனமே! நீ, இருகண்டமாகப் பிளவுற்று ஏன் அழிவெய்தவில்லை.

மாதவன் – உலகிற் பிரமனது படைப்பமைப்பு ஒருபொருட்கண் பிறிதொருபொருட் செயல் எளிதில்[18] விளங்கி நிற்குமியல்பினது. இது நிற்க:- (உரத்த குரலில்) ஓ! இந்த யான்! (வணங்கி) காடுமலையிவற்றில்வாழுமுயிர்களே! உங்கள்பால் தெரிவிக்கின்றேன்; நீவிர், யானுரைக்கும் இதைச் சிறிது செவியேற்று எற்கருள்புரிக.

(29) வனத்துளுறையும் நீவிர், உறுப்பெலாமியலழகு பொருந்துங்குலக்கன்னியைக் கண்டீரோ? அன்றேல், இவட்கு நேர்ந்ததென்னை யென்பதையேனுமறிவிரோ? அன்பரீர்! அவளது வயதுநிலையைக் கூறுவேன் கேண்மின்; மதனன்[19], அவளது மனத்தில் பெருமைசால் நினைவைப்புரிவானும், உடலில் இனிமையைத் தருவானுமாய் நிலவுகின்றான். அந்தோ! கொடுமை!

(30) நடம்பயிலு நிமித்தம் தோகையை விரித்த மயூரம், எனது வார்த்தையைக் கேகாநாதங்களாற் றடுக்கின்றது. சகோரம், காமமதத்தாற் கண்சுழல்வுற உள்ளுவகையாற் றன் காதலியைப் பின்றொடருகின்றது. கருமுகக் குரங்கும், பெண்குரங்கின் கதுப்பை மலர்ப்பராகத்தாற் சித்திரிக்கின்றது. யாரையிரப்பேன்; யாண்டும் எனதிரத்தல், பயனற்றதாய் ஒழிகின்றதே!

(31) இந்தச் செங்குரங்கும், உதட்டின் செம்மையாற் சிவந்த பல்வரிசைகளையுடையதும், செருகம்புல் மலர்போற் சிவந்த கன்னங்களையுடையதும், முதிர்ந்து வெடித்த சேயமாதுளையின் ஒளிவீசுவதுமாகிய பெண்குரங்கின் முகத்தை நிமிர்த்து அதில் முத்தமளிக்கின்றது.

இந்த வேழம், கான்மரத்தடியிற் கழுத்தையமைத்து இளைப்பாறுகின்றது; இதன்பாலும் இரத்தற்கிடனிலதே!

(32) பிறிதொரு காட்டுவேழம், நமைப்பினால் அரும்பிய நயனங்களையுடைய பிடியானையை, கோட்டினுதியாற் சொறிந்தும், முறையே அசைக்கப்படுங் காதுகளின் காற்றால் இன்புறுத்தி வீசியும், ஆனைவணங்கிமரத்தின் இளந்தளிர்களை யுண்டெஞ்சிய கண்டங்களை அதற்கூட்டியுண்பித்தும் இச்செயல்களாற் காதலியைக் காதற்படுத்துஞ் செயற்றிறனைப் பயிலுகின்றது.

(வேற்றிடத்திற் பார்த்து) இவ்வேழமோ!

(33) தன்னுயிரனைய பிடியானையின் பிரிவாற் கலக்கமெய்தி, மழைமுகின் முழங்கியும் மெல்லிய பிளிறொலியை உள்ளுற நிகழ்த்தவில்லை; அணித்துள்ள ஓடையினும் தாமரைத் தண்டைப்பறித்துப் புசிக்கவில்லை. மதநீரின்மையான் வாடிய வண்டினம் வாய்வாளாது புறஞ்செல அதனால், வனப்பழிந்த வதனத்தொடு வருந்துகின்றது.

இத்துயரம்[20] வேண்டாம். (மகிழ்ச்சியுடன்) பிறிதொரு மதங்கொண்ட வேழக்குழுவின் வேந்து, அன்றலர்ந்த அடப்பமலரொப்ப மோப்பிற்கினிய நறுமணம்மிக்கு, கதுப்பின் வழிந்தொழுகு மதநீர்ப்பெருக்கினாற் குழைசேறாய கரைகளையுடையதும், தாமரைமலர்களைப் பிடுங்கியெறியச் சிதறியவிதழ், தாது, கிழங்கு, முளையிவற்றையுடையதும், பனைமடலனைய காதுகள் இடையறாதசைய அதனாற் சிதைவுற்றுத் தெரிக்கும் அலைத்திவலைகளால் அச்சுறும் அன்றில், வெண்ணாரையென்னும் பறவைகளையுடையதுமாகிய ஓடையைக் கலக்கி, பிடியானை மிக்க மகிழ்வுடன் கேழ்க்கக் கம்பீரமாகக் கர்ச்சித்து விளையாடுகின்றது.

நிற்க:- இதனோடு பேசுகின்றேன்; மாட்சிமிக்க வேழத்தலைவ! நீ, புகழத்தகுங் காளைப் பருவத்தை யெய்தப்பெற்றவன்; காதலியைப் பின்பற்றி வயப்படுத்துந்திறலும் உன்பால் அமைகின்றது.

(நிந்தையுடன்)

(34) விளையாட்டாகத் தாமரைத் தண்டைப்பிடுங்கி யூட்டியபின்னர், விரிந்தலர்ந்த தாமரைமலரின் மணங்கமழும் நீரை வாய்மடுத்து அவ்வாய்நீரைப் பிடியானைக்கு அளிக்கின்றாய்; பின்னும் துதிக்கையால் நிரைமுகந்து அத்திவலைபடிய அதன்மேல் இரைக்கின்றாய்; என்னுமிவை விரும்பற்பாலன. புணர்ந்தின்பந்திளைத்து முடிந்துழி அப்புணர்ச்சியின் சோர்வுதீர, வளைவிலாத் தண்டுடைத்தாமரை மலராகுங்குடையினை, அன்புமீக்கொடுபிடிக்கின்றாயில்லை[21];

என்னே! மறுமொழி கூறாது என்னை மதிக்காமற் செல்லுகின்றது.

அந்தோ! மகரந்தனுடனுரையாடலொப்ப, வனத்துறையுமிவ்வேழத்துடன் பேசுகின்றேன். ஆதலின் மதியீனன் ஆயினேன். ஓ! அன்பின்மிக்க நண்ப! மகரந்த!

(35) இவ்வண்ணம் யான் தனித்திருந்துயிர்த்தலாகும் துயரமும், வறிதே நிகழும் அனுபவத்தால் பொருளின் வனப்பும், பயனற்றனவாம். நீயும் அவளும் இல்லாத நாள் அழிவெய்துக; உங்களிடத்திலன்றிப் பிற அற்பர்பால் நிகழுமகிழ்ச்சியும், கானனீரொப்பவ றிதேயாம்.

மகரந்தன் – ஓ! இவன் வெறிமயக்கில் மூழ்கியும் எற்குறித்த ஒருசில குறிப்பினால் இவனது இயலன்பின் சாரமே[22] மேழெழுகின்றதாகலின், என்னையணித்திருப்பவனாகவே கருதுகின்றான். (முன்னின்று) நல்குன்றிய அந்த மகரந்தன் உனது பக்கலிலேயே இதோ இருக்கின்றான்.

மாதவன் – ஓ! அன்புடைத்தோழ! என்னை வலிந்தணைத்தின்புறுத்துக; காதலி மாலதியைக் குறித்து ஆசையற்றவனாயினேன்.

மகரந்தன் – எனதுயிர்க்கரசை இக்கணத்தே (அணைத்து) இன்புறுத்துகின்றேன்; (பார்த்துத் துக்கமுடன்) அந்தோ! என்னைத் தழுவ விருப்பம் நிகழ்ந்த அப்பொழுதே மயக்கமெய்தினனே! இனி யான் உயிர்த்திருத்தல் வேண்டாம். இனி என் நண்பன் முற்றிலும் இலன் என்று துணியற்பாலதே பொருத்தம்.

ஆ! அன்ப!

(36) அன்பின் காரணமாகக் கொதிப்பெய்தியதும், காரணமின்றியே உன்னைக் குறித்து நடுக்கமெய்திப் பல துன்பங்களை யெண்ணுவதுமாகிய எனது மனம், நீ மயக்கமெய்திய இந்நிலையில் அச்செயல் யாவுமொழியக் கேடுற்றது.

மயக்கமற்ற நிலையில் அத்தகைய உன்னுடனிருந்து இன்பந்துய்த்துக் கடத்திய அக்காலங்கள் நலமாயினவன்றே! இதுபொழுதோ:-

(37) நீ செல்லுமிக்கணத்தில் எனதுடல், சுமையாகவும், உயிர் வைரமுனையாகவும், திசைகள் பாழ்படுவனவாகவும், பொறிகள் பயனற்றனவாகவும், காலம் கொடிதாகவும், உயிருலகம் எங்கும் ஒளியற்றதாகவும், எனக்குத்தோன்றுகின்றன.

(ஆலோசித்து)

மாதவனது மரணத்தைக் காண்டற்கு யான் உயிருடனிருப்பனோ? இம்மலைமுடியிலேறிப் பாடலாவதி நதியில் விழுந்து மாதவற்கு முன்னரே யானிறப்பேன். (துக்கத்துடன் திரும்பிப்பார்த்து) அந்தோ!

(38) மாலதியினது, புதுமையான காதற்பெருக்கால் விளைந்த விலாசங்களாற் கலக்கமெய்திய கண்கள், வியப்பின்மிக்கவாய் முன்னர் எதனைக் கண்டின்புற்றனவோ; அத்தகைய கருங்குவளை மலரனைய காந்தியுடையிம்மேனியை வலிந்து பற்றியணைத்தும் எனக்கும் இதில் திருத்தியுண்டாகவில்லை.

என்னே! என்னே! உடலமென்றில் இத்துணைக் குணங்களின் சேர்க்கை எங்ஙனம் அமைந்ததோ? தோழ! மாதவ!

(39) மாசறு மதியம், கலைகணிறைவுறுமன்றே இராகுவின் வதனத்தை யெய்தியது, மழைமுகில், வந்து குழுமிய அக்கணமே, பெருங்காற்றின் விசையாற் சிதைவுற்றது. சீரிய தருவும், பழந்தரு பருவம் வந்துற்றபொழுதே காட்டுத்தீயாற் கரிந்தொழிந்தது. நீயும் உலகிற்குச் சிரோமணியாகும் நிலையினை யெய்திய அப்பொழுதே காலன் வயத்தனாயினை.

ஆதலின் இந்நிலையெய்திய நண்பனையுந் தழுவுகின்றேன். இவனும் இதுபொழுது இப்பொருளையே கோரியுள்ளான். (தழுவி) ஓ! அன்பனே! கலைநிறை மதியமே! குணக்குன்றமே! ஆ! மாலதியே[23] வலிந்துபற்றுமுயிர்க்காதல! ஆ! காமந்தகி, மகரந்தன் இவர்களையின்புறுத்துவோய்! மாதவ! உனது வாழ்க்கையின் முடிவு நிலையில் நீ கோரிய பொருள், இந்த மகரந்தனது கிடைத்தற்கரிய தழுவலேயாம். அன்பனே! இனிச்சிறுபொழுதும் மகரந்தன் பிழைத்திருப்பன் என்று கருதவேண்டாம். ஏனெனில்:-

(40) நீ பிறந்த நாண்முதலாய் என் உடனிருந்தமையின் கைத்தாயின் றன்னியத்தைக் கலந்தே பருகினை. தாமரைச்சுமுகனே! அங்ஙனமாக, உறவினர்க்குழு வழங்கு மெண்ணீரையும் தனியனாய் பருகுவை யென்பது தக்கதன்று.

(துக்கமுடன் இவனை விடுத்துச் சுற்றி நடந்து)

இங்கட் கீழ் மருங்கிற் பாடலாவதி நதி பாய்கின்றது. தெய்வப்புனலே!

(41) எனது அன்பிற்குரிய நண்பற்குப் பிறவி வாய்க்கு மவ்விடத்திலேயே யான் பிறத்தல் வேண்டும்; மீண்டுமவற்கே உடன் செலுந்துணைவனாதலும் வேண்டும்.

(என்று விழுதற்கு விரும்புகின்றான்)

சௌதாமினி – (விரைவில் வந்து தடுத்து) குழந்தாய்! கொடுஞ்செயலொழிக்க.

மகரந்தன் – (பார்த்து) தாயே[24]! தாங்கள் யார்? எற்றிற்கு என்னைத் தடைப்படுத்தியுள்ளீர்.

சௌதாமினி – ஆயுணிறைந்தவனே! நீ மகரந்தனா?

மகரந்தன் – விடுத்தருள்க; யான் அந்த நல்வினை குன்றியவனே.

சௌதாமினி – குழந்தாய்! யான் யோகினிப்பெண்ணாவேன்; என்பால் மாலதியின் அடையாளமும் இருக்கின்றது. (மகிழமாலையைக் காட்டுகிறாள்)

மகரந்தன் – (பெருமூச்சுடனும் துயரத்துடனும்) மாலதி பிழைத்திருக்கின்றனளா?

சௌதாமினி – ஆம்; குழந்தாய்! மாதவற்கு விளைந்த கேடென்னை? நீ கொடுஞ்செயற்புரிய முயல்கின்றனையாதலின் அதனைக் கண்ட யான் நடுக்கமுறுகின்றேன்[25].

மகரந்தன் – பெரியோய்! அவனை மயக்கமெய்திய நிலையிலேயே வெறுப்பினால் விடுத்து இவணெய்தினேன்; ஆதலின் வருக; விரைவிலின்புறுத்துவோம்[26].

(விரைந்து செல்லுகின்றனர்)

மகரந்தன் – (பார்த்து) ஆனந்தம்! நண்பன் நினைவுற்றனனே!

சௌதாமினிஇருவரது உடலமைப்பும் மாலதி தெரிவித்தாங்கு அமைகின்றது.

மாதவன் – (களைதீர்ந்து) ஆயே! யாவரோ என்னை விழிப்புறுத்தியுள்ளார். (ஆலோசித்து) யான் கருதுவேன்; என்னிலை கருதாது புரியுமிச்செயல், மழைத்துளி தூற்றுமிக்காற்றினதேயாகும். மாட்சிமிக்கக்கீட்டிசைக் கெண்டலே!

(42) நிருண்டமுகிலையலைக்க. சாதகப்புட்களையின்புறுத்துக; மயூரங்களைக் கேகாநாதம் அகவச் செய்க; தாழைகளையடெர்த்துக; மனையிற்பிரிந்தோன் மயக்கமெய்தி, அப்பிரிவாற்றாமையாகும் பிணியைத் தணிக்குமேல்வையில், அருளிலீர்! மீண்டுமவற்கு நினைவெனு நீழலை நிகழ்வித்து என் செயக்கருதுகின்றீர்[27]?

மகரந்தன் – மன்பதைக்குயிராய இம்மாருதம், நலனே புரிந்தது. இன்னும்,

(43) இக்கார்க்கால், தாழைமணங்கமழ்ந்தும், மாநகர்ப் பிரவிடை மகளிரது திரிதரு சுரிகுழற் கொடியினையலைத்தலே தலைக்கீடாக அவர்மிக நுகர்ந்தும், அன்றியும், அடப்பமுகையலர்த்தி யப்பராகந்தோயுமறுகாலினம் ஞிமிர அவ்வொலி நிறைந்தும் வீசுதலான் தலைமகட்பிரிந்தாரைத் தன்வயப்படுத்துகின்றது.

மாதவன் – மாருதத்தேவே! அங்ஙனமாயினும்[28] நின்னையே வேண்டுவன் யான்.

(44) மலர்தரு கடம்புக்குழுப்புழுதியோடு எனதுயிரைக் காதலியினிருக்கையைச் சேர்ப்பிக்க; அன்றேல், அவளது உடலுறைந்து நளிரிரும் ஒன்றையேனும் என்பாலீட்டுக; தாமே[29] தமியேன் சரண்.

(கைகூப்பி வணங்குகின்றான்)

சௌதாமினி – அடையாளத்தையளித்தற்குச் சாலச்சிறந்த[30] அமயமிஃதன்றோ? (அஞ்சலியில் மகழணியலை அளிக்கிறாள்).

மாதவன் – (கருத்துடனும்[31], மகிழ்வுடனும், வியப்புடனும்) என்னே! காதலியின் கொங்கைகளின் கொம்மையாற் கட்டவிழ்ந்த இம்மகிழ்மாலை, காமவேட்கோட்டத்தின் முற்றத்திலங்கு மகிழ்த்தருவின் மலர்களான், யான் றொடுத்ததன்றோ? (நன்கு நோக்கி) ஐயப்பாடென்னை? ஏனெனில், இம்மாலையினது அந்த இந்தப்பகுதி;

(45) மதிமயக்குமதியனைய அவளது முகத்தழகை யாழ நோக்கி, அங்கண் ஒளிர்தருங் காமவிலாசங்களான் என்பால் விரைந்தெழுங் காமவேட்கையை மறைத்தற்பொருட்டே தொடுக்கப்படுமதில் மலர்கள் மாறுகொள அமைந்திருப்பினும், இலவங்கிகைக்குக் கழிபேருவகையை விளைத்தது.

(களிப்புடனும் வெறியுடனும் எழுந்து)

சினமுடையாய்! மாலதி! இவண் காண்பேன். (சினத்துடன் போல) அடி! என்னிலையறியாதவளே!

(46) மெல்லிநல்லாளே! உயிர்போகின்றது; இதயம் தெறிக்கின்றது; உறுப்புக்கள் எரிதருகின்றன; இருள் எப்புறமுஞ் சூழ்தருகின்றது; இதுவேளை (என்னைக் காத்தற்கு) விரைந்து முற்படல் வேண்டுமேயன்றிப் பரிகசித்தல் அடாதாகலின், (உனது வடிவத்தைத் தோற்றுவித்து)க் கண்களுக்குக் களிப்பையளிக்க; என்பாற் கருணையிலியாகாதொழிக.

(எப்புறமும் பார்த்து வெறுப்புடன்) மாலதி இங்கண் இருப்பளென்பது எங்ஙனம்? (மகிழமாலையைச் சுட்டி) ஆ! காதலியின் அன்பிற்குரியாய்! பரமோபகாரியாயினை.

(47) அன்புடைத் தோழீ! தடைப்படாது பெருகித் தாங்கற்கியலாக் காமவெறியின் கொடுமைகள், மயக்கமுற்றிய விதனத்தான் மிக்கவாய் நிகழுமத்தறுவாயில் உனது புணர்ச்சி, அக்குவளைவிழியணங்கினது சீரிய உயிர்க்காவலாய் அமைவதாகலின் அது, யான் அவளை அணைத்தலை[32] நிகர்த்ததாகும்.

(துயருடன் பெருமூச்செறிந்து)

(48) என்னுடையதும், மான்விழியாளுடையதுமாகிய கண்டத்தில் இன்புறுத்துவனவும், காமநோயை வளர்ப்பனவும், அவ்வப்பொழுது ஆழநிகழுங் காதற்பற்றுடையனவும், அன்பிற்குறையுளுமாகிய உனது அப்போக்குவரவுகளை, அந்தோ! யான் நினைக்கின்றேன்.

(இதயத்தில் வைத்தவண்ணம் மயக்கமெய்துகிறான்)

மகரந்தன் – (அணுகி) அன்பனே! களைதீர்க;

மாதவன் – (களைதீர்ந்து) மகரந்த! நீ பார்க்கவில்லையா? மாலதியின் அன்புருவான இம்மாலை திடீரென்று எங்ஙனமிருந்தோ என் கரத்திற் கிட்டியது. இஃதென்னை[33]யென்று கருதுகின்றாய்?

மகரந்தன் – இப்பெரியோரான யோகினியே[34] மாலதியின் இவ்வடையாளத்தை யிங்குக் கொணர்ந்தவள்.

மாதவன் – (துயருடன் கைகளைக்கூப்பி) பெரியோய்! அருள்புரிக; கூறுக; பிழைத்திருக்கின்றனளா[35]? என்னுடைய அந்தக்காதலி?

சௌதாமினி – குழந்தாய்! இளைப்பாறுக; பிழைத்திருக்கின்றாள்[36] அந்த மங்கலமடவரல்.

மாதவனும் மகரந்தனும் – (பெருமூச்செறிந்து) பெரியீர்! இங்ஙனமாயின், இச்செய்தி[37] யென்னையென்று கூறுக.

சௌதாமினி – முன்னர்க் காளிகோட்டத்தில் வாட்கையனாகிய அகோரகண்டனைச் சங்கரித்தாயன்றே.

மாதவன் – (வருத்தமுடன்) பெரியோய்! ஒழிக! செய்தியை உணர்ந்தேன்.

மகரந்தன் – அன்ப! என்னை?

மாதவன் – பிறிதென்னை; காபாலகுண்டலையின் விருப்பம்[38] நிறைவுற்றது.

மகரந்தன் – பெரியீர்! இங்ஙனமோ!

சௌதாமினி – குழந்தை கூறியாங்கே அது.

மகரந்தன் – ஆ! அந்தோ!

(49) சரற்கால[39] நிலவு, ஆம்பலோடையோடியையுமேல், அதன் வனப்பு, வளர்தரற்பொருட்டு நலன்பயப்பதொன்றாம்; அதுநிற்க; அகாலமேகக்குழு, இதனைப் பிரித்ததென்பது, என்னையூழ்வினையோ?

மாதவன் – ஆ! காதலி! மாலதி! அந்தோ! மிகக் கொடுமையை யெய்தினை.

(50) தாமரைச் சுமுகியே! கபாலகுண்டலைபற்றிய அப்பொழுது நீ, கேதுவாற் றீண்டப்பட்ட மதிக்கலைபோல, என்னிலையெய்தினையோ? அறிவிற் சிறந்த கபாலகுண்டலே!

(51) மாலதியின் உறுப்பமைப்பைக் கண்ட அப்பொழுதே, அஃதுனக்கு விரும்பற்பாலதாகும்; ஆதலின், அரக்கியாந்தன்மையை அடையாதொழிக; மங்களமே தழைக்க; நறுமணங்கமழும் மலர்க்குத் தலையணியாதலே இயல்பன்றி, முசலதால் அவற்றைப் புடைத்தன் முறையன்று.

சௌதாமினி – குழந்தாய்! வருத்தம் தவிர்க்க;

(52) யான் அவண் அவட்கு இடையூறாய் அமையாதிருப்பின், அருட்சிறிதுமில்லா அவள் கொடுஞ்செயற் புரிந்தே தீருவாள்.

இருவரும் – (வணங்கி), பெரியீர்! அருண்மிகப் புரிந்தீர்! எங்கட்கித்தகைய சுற்றமாய் அமைந்த தாங்கள் யாவரென்று தெரிவித்தல் வேண்டும்.

சௌதாமினி – இதனையறிவீர்; (எழுந்து) இந்தயான் இதுபொழுது,

(53) நல்லொழுக்கம், தவம், தந்திரம், மந்திரம், யோகம் இவற்றின் பயிற்சியால் விளைந்த “ஆகரூஷணீ[40]”, என்னுஞ்சித்தியை உங்களது மங்கலத்தின் பொருட்டுச் செய்கிறேன். (மாதவனோடு வெளிப்போந்தனள்)

மகரந்தன் – ஆச்சரியம்.

(54) இருள், மின்னல் இவற்றின் கலப்பென்ன அச்சுறுத்திக்கண் செயலை யொழித்து நிகழ்ந்த அப்பொழுதே அடங்கியது.

(பார்த்து அச்சத்துடன்[41])

ஓ! நந்துணைவனைக் கண்டிலேன்; இஃதென்னை? (ஆலோசித்து) பிறிதென்னை? இந்த யோகினிப் பெண் தன் யோகமாட்சிமையால் எச்செயலும் புரிய வலியளாகின்றாள்.

(ஐயத்துடன்)

இந்நிகழ்ச்கியால் என்ன அனத்தம் விளையுமோவென்று செய்வகையறியாச் சிந்தையன் ஆகின்றேன்; பின்னும்,

(55) மிக்கவியப்புடையதும், முன்செய்தியை மறவாததும், மிகுந்தெழுந்த புதிய அச்சத்தால் வெப்புற்று வெதும்பியதும் அமயமொன்றில் மயக்கத்தின் நீக்கத்தையும் வீக்கத்தையுமுடையதும், ஆகிய எனது மனம், இன்பத்துன்பங்களின் சேர்க்கையை யெய்துகின்றது.[42]

ஆதலின் இக்கான்முடிவில் நங்குழுவினருடன் புக்குவருங் காமந்தகிப் பெரியாற்[43]பாற் சென்று, நிகழ்ந்த இச்செய்தியைக் கூறுவேன்.

(எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீமாதவம்” என்னும் நாடகத்தில் ஒன்பதாம் அங்கம் முற்றிற்று.


[1] சௌதாமினி – கபாலகுண்டலை கவர்ந்து வந்த மாலதியை வலிந்து பற்றி, இடும்பையொன்றிலாத் தன்னிருக்கையிற் பதனமாயமைத்தும், “மாலதியழிவெய்தினள்”, எனக் கருது மாதவனும் அழிவுறல் உறுதியென்றோர்ந்தும், அம்மாதவன் அழிவுறாவண்ணம் அவனை உயிர்ப்பித்தற்பொருட்டும், மாலதி பிழைத்திருக்கிறாள்; விரைவில் வருவாள், என அறிவுறுத்தற்பொருட்டும், அவளது கண்டத்தணியலாகும் மகிழணியலைக் கையிலேந்தியளாய் மாதவனது இருக்கையே நாடிவருகிறாள் என்பது அங்கத் தொடக்கமாம்.

[2] அந்த – இச்சுட்டு, இச்சௌதாமினி, அறுகுணச்செல்வியாகிய காமந்தகியார்பால் யோகசாத்திரம் பயின்று இத்தகைய மேனிலையெய்தியமையான், காமந்தகியாராற் காத்தற்குரிய இம்மணமக்களை, இவளும் அந்நன்றி பாராட்டிக் காத்தல் வேண்டுமென்னுங் கடமையை உணர்த்தும்.

[3] பெருமைவாய்ந்த – இவ்வடைமொழி, அம்மலைக்குப் பல மந்திரசித்திகளை யளிக்குந் தன்மையுண்மையான்.

[4] வானமென்ன – இவ்வுவமை, நீனிறத்தவானத்தையுணர்த்தும். விபுவாந்தன்மைத்தையோ வென்னில், பிளவுற்று வீழ்தரப் பொருந்தாதாகலின்.

[5] இந்தயாம் – இச்சுட்டு, தலைவனுடைய அறிவு, ஆண்மை, ஊக்கம் முதலியவற்றை யுணர்த்தும்.

[6] இச்சுட்டு – மாலதியைப் பெறற்கே மகாமாமிசத்தை விலைப்படுத்தன் முதலிய செயலையும் புரிந்து இவளது அன்பிற்குறையுளாகும் இம்மாதவனை மாலதி தாமே வலிந்தணைத்தமையை யுணர்த்தும்.

[7] உண்மை – வனவளப்பங்கள், பிரிந்தோர்க்குக் காமவேட்கையை மிகைப்படுத்துவனவாம் என்பதே உண்மை; அதனையறியாது மகரந்தன், அவற்றைத் தெரிவித்தனன் என்பதாம்.

[8] அருளிலி – உன்னைக் காதலியாக்கோடற்கே மகாமாமிசத்தை விலைப்படுத்தன் முதலிய கொடுஞ்செயற்புரியுமவன், நீ அகோரகண்டனால் மரணத்துன்பமெய்தி வருந்துங்கால் திருவருட்பாங்காலங்கட்டோன்றி அத்துன்பத்தைத் தவிர்த்தாங்கு இதுகாலை நீயுமிவன் முன்றோன்றி இவனதுயிரைப் பாலிக்காதொழிகின்றனை; ஆதலின் அருளிலியாமென்பதாம்.

[9] உயிரேயனைய – இவ்வெடுத்துக்காட்டு, மாதவனுயிர்த்திராதவழி மகரந்தன் பிழைத்திருத்தல் அமையாதென்பதையும், அவன்பால் அன்பின் மிகுதியையும் உணர்த்தும்.

[10] உன்னைத் தழுவுகின்றது – என் காதலி, என்னிற்பிரிந்தாங்கு உன்னையகலாதவுன் காதலி, உடனிருந்து தழுவுகின்றாளெனப் புயலைப் புகழ்ந்துரைத்தான் என்பதாம்.

[11] வந்தடைகின்றன – என்னுடைய நண்பர்களைப்போல் உன் நண்பர்கள் உன்னைவிட்டகலவில்லை; இதனால் இவன் நண்பனாகிய மகரந்தன் உடனிருந்தும், காமவேட்கையின் வெறியினால் அதனையுணராது இங்ஙனம் கூறினான் என்பதாம்.

[12] முதலில் – மாருதி சீதையை யின்புறுத்தியாங்கு இன்சொற் கூறி அவளைத் தேறுதற்படுத்தியபின்னரே என்னிலையைக் கூறல் வேண்டும்; அன்றேல், அவள் இறந்துபடுவள் என்பதாம்.

[13] – என்னிலையை முதலிற் கூறுவையேல், “இந்நிலையிலிருக்குமிவன் உயிர்துறத்தலுறுதியேயாதலின், இனிக்கிடைத்தற்கரியனென்றோர்ந்து அவளது ஆசாபாசம் அறுபடுமாதலின் அங்ஙனங் கூறலாகாதென்பதாம்.

[14] உபராகம் – சூரியசந்திரகிரகணம்.

[15] தந்தை தாயரையும், காமந்தகியாரையும் இதுபொழுது நினைத்தல் மாதவனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தவிர்த்தற்பொருட்டு; துன்பம் நேர்ந்துழி தந்தை முதலினோரை நினைத்தன் மக்களின் இயல்பாதலின்.

[16]  – பிரிந்தோர், காதலியின் உறுப்புவமப்பொருள்களைக் காணுங்கால், அப்பொருள்கள் பிரிவாற்றாமையின் வருந்துமவர்க்குக் “காதலியழிவெய்தினள்” என்னும் அன்பின் வழிவந்த தற்குறிப்பை விளைவிக்கும் என்பதே இச்சுலோகத்தின் கருத்து.

[17] உயிர்த்தலைவன் – இது, மாதவனையன்றி மகரந்தனது உயிர் நிலைத்திராமையை உணர்த்தும்.

[18] எளிதில் – மாலதியிறந்தனள் என்னும் மயக்கம் விலகி மாதவனுக்கிடையில் நிகழும் உண்மையுணர்வையுணர்த்தும்.

[19] மதனன் – இத்தொடரால், மாலதியின் யௌவனப்பருவம் குறிப்பிடப்பட்டது. மனக்கினிய மணமகனைக் கூடல்வேண்டுமென்னும் பெருமைசால் நினைவும், உடலுறுப்புக்களின் வனப்புறும் அமைப்பும் அப்பருவத்தின் இயல்புகளாம்.

[20] இவ்வேழமும், தன்னைப்போலப் பிரிவாற்றாமையால் வருந்துகின்றதாகலின் துயர்ப்படும்மிதனைக் கண்ணுறல் தக்கதன்றென்பதாம்.

[21] குடைபிடித்தன் முதலிய செயலான் காதலியின் மெய்வருத்தம் தீரும் என்பதாம்; அங்ஙனம் செய்யாமை, ஆடவற்குத் தக்கதன்றென்பது கருத்து.

[22] இயலன்பின் சாரம் – இது நண்பனது நினைவை விளைவித்தற்குரிய வித்தனையதாம்.

[23] மாலதியே – இது முதலாய விளி – மாதவனது மரணத்துன்பத்திற்கு இவன்பால் மாலதி வைத்த காதற்பற்றே காரணமாம் என்பதை உணர்த்தும்.

[24] தாயே – நடை, உடை, இன்சொல்யாவும் காமந்தகியாரைப்போல இவட்கும் ஒத்திருத்தலான் தாயே என விளித்தமையாம்.

[25] நடுக்கம் – இம்மணமக்களையியைவிக்க முயலுமெனது பெருமுயற்சி, பயனற்றதாகுமென்னும் அச்சத்தால்.

[26] விரைவில் – மாலதி உயிர்த்திருக்க, இதனையறியாத மாதவனது மரணத்துன்பத்தைத் தவிர்த்தற்பொருட்டு.

[27] இச்செயலின்பயன், யான் இறத்தலையன்றிப் பிறிதன்றென்பதும், அங்ஙனம் செயற்புரிதல், தற்பயனோக்கியோ; பிறர்பயன்கருதியோ? என்பதாம்.

[28] அங்ஙனமாயினும் – எத்தகைய செயற்புரிந்தாலும் என்பதாம்.

[29] தாமே – வனத்திடையெற்கு இவ்வருட்பேறளிக்கத் தம்மையன்றிப் புகலொருவருமிலர் என்பதாம்.

[30] சாலச்சிறந்த – வாயுதேவனை வணங்கிக்கோரலான் அத்தேவனே யதனையளித்தாங்கு இவ்வாயிலாகத் தானளித்தல் நலமென்பதாம்.

[31] கருத்துடனும், முன்னர்க் காமவேட்கோட்டத்தில் மாதவனை இலவங்கிகையென்று கருதி மாலதியால் இவனது கண்டத்திலளிக்கப்பட்ட இம்மாலை அவளை யிவன்பாலியைவித்தின்புறுத்தியதுபோல இதுபொழுதும் இவ்வனத்திலுஞ்சேர்க்குமோ? என்பதாம். மகிழ்வுடன் அவளுடைய உறுப்புக்களின் பரிசமெய்தி இவனுடலுறைதலின்; வியப்புடன் – மாலதி காண்டற்கியலாளாக, அவளணிந்து அணிந்த அணியல் மாத்திரம், இங்கட்போந்தவாறென்னையென்னும் வியப்பென்பதாம்.

[32] அணைத்தலை – மாலதி, துயருறும்பொழுது அத்துயரை நீக்கி உயிரைக் காத்த இம்மாலை, அவளைப்பிரிந்தமேல் அவளுயிர்த்திருத்தலரிதெனக் கருது மாதவனுக்கு மனவருத்தம் மிகுந்ததாம் என்பது கருத்து.

[33] என்னை? –  மாலதி, உயிருடனிருப்பின் அவள் இம்மாலையைக் கைவிடாள்; இதுபொழுது மாலை பிரிந்துளதாகலின், இம்மட்டில் அவளது உயிர்வாழ்கையில் ஐயுற்று இவ்வினா நிகழ்ந்ததென்பது கருத்து.

[34] யோகினி – இவ்வடைமொழி, காமந்திகியாரையொப்ப இவளும் நம்பால் அன்புமிக்கு நலம் விளைவிப்பவளென்னும் கருத்தையுணர்த்துவதால், இது மாலதியினுயிரில் மாதவற்கு விளைந்த ஐயத்தை விலக்குவதாம்.

[35] இவ்வினைச்சொல் – மாதவனது மனவருத்தத்தையும், களிப்பையும், காதலையுங் காரணமாகக் கொண்டு முதலில் நிகழ்ந்ததாம்.

[36] இவ்வினைச்சொல் – மாதவனது துயரைப் போக்கியவனை யின்புறுத்தற்பொருட்டும், எழுவாய் செவிக்கேறிய மாத்திரையில் பயனிலை யெவ்வாருமோ என நிகழுமையத்தை விலக்கற்பொருட்டும் முதல் நிகழ்ந்ததாம்.

[37] இச்செய்தி – மாலதி எங்கிருக்கிறாள் என்பதும் இவ்வணியல் கிடைத்தவாறென்னை யென்பதுமாம்.

[38] “கபாலகுண்டலைக்கு விளைந்த சினத்தின் பயனை நீயனுபவிப்பதுறுதியே” என்று மாதவனைக் குறித்துக் கபாலகுண்டலை கூறிய வண்ணமே மாலதியைப் பிரித்து இருவரையுந் துன்புறுத்த வேண்டுமென்பதே அவள் விருப்பமென்பதை, மாதவன் உணர்ந்து கூறுகிறான் என்பதாம்.

[39] இச்சுலோகத்தில் சரற்கால நிலவு, ஆம்பலோடை, அகாலமேகம் என்னும் உபமானங்களுக்கு முறையே மாலதி, மாதவன், கபாலகுண்டலை என்னும் உபமேயங்களை ஊகித்துப் பொருள் கோடல் வேண்டும்.

[40] ஆகரூஷணீ – எவரையும் தன்வயமாக்குந்திறல்; இது யோகப்பயிற்சியால் பெறற்குரியது.

[41] அச்சத்துடன் – ஒருக்கால் கபாலகுண்டலையால் தூண்டப்பட்டு இவள் மாதவனைச் சிரீபருப்பதத்திற்குக் கொடுபோயிருப்பளோ என்னும் ஐயப்பாடே அச்ச நிமித்தமாம்

[42] இந்நிகழ்ச்சியால் வியப்பும், மாலதியின் றீவினை நினைவும், மாதவற்கும் இடும்பை நிகழுமோ வென்னும் ஐயத்தால் அச்சமும் சௌதாமினியின் சொல்வன்மையால் மகிழ்வும் அடுக்குமுறையில் விளைந்தனவென்பது புலனாம்.

[43] காமந்தகிப்பெரியார்பால் – இவர், மக்களறிவைக் கடந்த செயலையுமறியுமாற்றலும், இத்தகைய வியப்பின்மிக்க அபூர்வமான விஷயங்களைக் கண்டறியுந்திறலும் அமைந்தவர்களாகலின், இந்நிகழ்ச்சியையும் இவற்பாற் றெரிவித்தலே தகுதியென்பதாம்.

மாலதீமாதவம் – பத்தாம் அங்கம்

பத்தாம் அங்கம்

(காமந்தகி, மதயந்திகை, இலவங்கிகை, யிவர்கள் பிரவேசிக்கின்றனர்)

காமந்தகீ – (துயர்க்கண்ணீருடன்) ஆ! குழந்தாய்! மாலதி! எனதங்கத்தணியே! எங்ஙனமிருக்கின்றனை? எற்குமறுமொழியளிக்க.

(1) பிறவிமுதல் கணந்தொறும் வனப்பு வளமிக்கவாய அந்தந்த உனது (விநயம் முதலிய) செயல்களையும், இனிமைமிக்க இன்னுரைகளையும் நினைக்க, அவை உடலையெரித்து, உட்கரணத்தையும் பிளக்கின்றன.

மேலும் மதலாய்!

(2) நீ யிளமைப்பருவத்தளாய்[1] இருக்குங்கால் உனது வதனகமலம், வரையறையின்றி யெழுகின்ற அழுகை, முறுவல் இவற்றையுடையதும், பூடுமாட்டனைய கூரிய சிலபற்களின் நுதிகள், வனப்புற்று விளங்குவதும், தழுதழுத்தினிய மழலை மொழியுடையதுமாகு மந்நிலையினை, இதுபொழுது யான் நினைவுறுகின்றேன்.

மற்றையிருவரும் – (கண்ணீருடன்) ஆ! அன்புடைத்தோழீ! தெளிந்தமதிமுகச் சுந்தரி! எங்குச் சென்றனை? நீ தனித்திருந்துடல் வருந்துமாறு உன்னை வந்தடைந்த தீயூழ் வினைப்பயன் என்னையோ? ஆ! பெருந்தகைப்பெரும! மாதவ! உனக்கிவ்வுயிருலகம், பெருவிழா நிகழ்ந்த அக்கணமே முடிவெய்தியாங்குகாழிந்தது.

காமந்தகீ – (மிகவருத்தமுடன்) ஆ! குழந்தைகளே!

(3) உங்களது அராகப்பற்றையுடைய[2] இத்தழுவல், ஆவல்மிக்கதெனினும்[3] ஊழ்வினையாகுஞ் சூழல்காற்று, இலவலிக்கொடி[4], இலவங்கத்தரு[5] இவற்றின் அணைவினையொப்பப்[6] பிறித்தெறிந்தது.

இலவங்கிகை – (பரிதவிப்புடன்) வச்சிரத்துருக்கொண்ட மனமே! ஆசையழிந்து முற்றிலும் என்னை வதைக்கின்றாய்.

(என்று நெஞ்சையடித்துக்கொண்டு விழுகிறாள்)

மதயந்திகை – தோழீ! இலவங்கிகே! நான் சொல்லுவேன்; சிறுபொழுதேனு மிளைப்பாறுக.

இலவங்கிகை – மதயந்திகே! என்செய்வேன்; எனது மனம், வச்சித்தாற் கட்டப்பட்டாங்கு உறுதிப்பாடெய்தி யென்னை விடுகின்றதில்லை.

காமந்தகீ – குழந்தாய்! மாலதி! நீ பிறந்த நாண்முதலாய் உனக்கு இலவங்கிகை அன்பிற்குரியை; ஆதலின், உயிர்துறக்கத்துணியுமிவட்கு ஏன் அருள்புரிகின்றாயில்லை. இவளோ;

(4) நேயமிக்காள்[7] எனினும் கண்கவரொளியினையுடைய[8] உன்னால் விடுக்கப்பட்டுச் சுடர்ச்சிகையிகந்த திரிபோலக் கறுத்து[9] வாடிய முகத்தினளாய் விளக்கமுறவில்லை.

மங்கலப் பெண்ணே! என்னே நீ, காமந்தகியைக் கைவிட்டனை? ஏடி! அருளிலி! உனது உறுப்புக்கள், என் சீவரத்தானையின் வெப்பத்தினாலன்றே வளர்ந்தன.

(5) தந்தப்பதுமைபோற் சுமுகியான நீ, பாற்குடிப்பருவங் கடந்த நாண்முதலாய், ஆடற்பயிற்சியும், பின்னர்க் கல்விப்பயிற்சியும் செய்விக்கப்பட்டு வளர்க்கப்பட்டனை; அன்றியும், யானே உன்னை உலகிற் சிறந்த குணநலம் படைத்த மணமகன்பால் நிலைப்படுத்தினேன். ஆதலின் அன்றே! தாயினுஞ்சிறந்த அன்பினை யென்பால் நீயுங்கொண்டனை; உனக்கும் அது பொருத்தமே.

(மனத்தளர்வுடன்) ஆ! மதிமுகத்தவளே! இதுபொழுது ஆசையற்றவளாயினேன்.

(6) காரணமின்றியே முறுவல் பூத்தழகிய முகத்தையுடையனும், சிகை, நுதல் இவற்றில் தீட்டிய வெண்கடுகுத்திலதமுடையனும்[10] ஆகிய புதல்வன், உனது மடிவளர்ந்து முலையுண்ணுங்கால், (கண்டின்பமெய்தற்குரிய) பாக்கியமிகந்தயான், அத்தகைய திருக்குமரனைக் காண்கில்லேன்.

இலவங்கிகை – (கண்ணீருடன்) பெரியோய்! அருள்புரிக; உயிரைத் தரித்தற்கியலவில்லை; அந்த யான், இம்மலைமேற்பரப்பினின்றும் உடலத்தை வீழ்த்தி முடிவெய்துவேன்; மறுமையினும் அவ்வன்புடைத்தோழியை யான் பார்க்கும் வண்ணம், பெரியீர்! எற்காசி கூறல் வேண்டும்.

காமந்தகீ – ஏடி! இலவங்கிகே! குழந்தையின் பிரிவாற் காமந்தகியும் இனிப் பிழைத்திராள். நம்மிருவற்கும் வேட்கையின்[11] விளைந்த மனவருத்தம் சமநிலையதே. மேலும்.

(7) வினைகளின் வேறுபாட்டினால் சேர்க்கை[12] கிட்டாதெனில் அஃதறவே வேண்டாம். ஆயினும், உயிரினை விடுதலிற்றுயரின்மையே[13] பயனாம்.

இலவங்கிகை – தங்கள் கட்டளைப்படியே! (என்று எழுகின்றாள்)

காமந்தகீ – (கருணையுடன் பார்த்து) குழந்தாய்! மதயந்திகே!

மதயந்திகை – (இச்செயலில்) “முற்பட்டு நிற்க” என்று கட்டளையிடுகின்றீர்களா? உடன்படுகின்றேன்.

இலவங்கிகை – தோழீ! தெளிக; தன்னை உலைவுறுத்தலென்னு மிச்செயலினின்றும் ஒழிக; இவ்வாண்மகனை[14] மறத்தலுந்தக்கதன்று.

மதயந்திகை – (சினத்துடன் போல) போதி; யான் உன்வயத்தள் அல்லேன்.

காமந்தகீ – அந்தோ! இப்பேதை (இறத்தற்கும்) துணிந்தனளே!

மதயந்திகை – (தனக்குள்[15]) தலைவ! மகரந்த! தங்களை வணக்கம் செய்கின்றேன்.

இலவங்கிகை – பெரியீர்! மதுமதியின் நீர்வீட்சியாற் றூய்மைத்தாய தாழ்வரைகளையுடைய மலையினது, மேடுபள்ளமான இடம் இஃதே;

காமந்தகீ – இப்பொழுது நிகழவிருக்கும்[16] செயற்கு இடையூறு இல்லாதொழிக.

(எல்லவரும் வீழ்தர விரும்புகின்றனர்)

(வேடசாலையில்)

ஆச்சரியம்

(8) இருள், மின்னல் இவற்றின் கலப்பென்ன அச்சுறுத்திக்கண் செயலையொழித்து நிகழ்ந்த அப்பொழுதே அடங்கியது.

காமந்தகீ – (பார்த்து வியப்புடனும் மகிழ்வுடனும்) என்னே! என்னுடைய குழந்தை (மகரந்தன்) இங்கட் காணப்படுகிறான். அந்த ஈதென்னை[17]?

மகரந்தன் – (பிரவேசித்து) பிறிதென்னை? அந்த யோகினிப்பெண்[18] தனது யோகமாட்சிமையால் எச்செயலும்புரிய வலியள் ஆகின்றாள்.

(வேடசாலையில்)

ஓ! (பார்க்கும்) மக்களின் குழப்பம் மிக்கக்கொடியதாக நிகழ்கின்றது.

(9) பூரிவசு, “மாலதியழிவெய்தினள்” என்னுஞ்செய்தியறிந்து இல்லறச்[19] செயலினும், உயிரினும் பற்றற்ற மனமுடையராய் அவளழிவெய்தினமையை நிச்சயித்து அங்கியில் வீழ்தற்குச் சுவர்ணபிந்துவென்னும் (சிவாலயத்தை) யெய்துகின்றார். என்னுமிதனால் யாமும் கெட்டொழிந்தோம்.

மதயந்திகையும் இலவங்கிகையும் – மாலதி, மாதவன் இவர்களது காட்சிவிழாவும், பூரிவசுவின் மரணத்தால் பேரச்சமும் ஒருமித்து விரைந்து விளைகின்றன.

காமந்தகியும் மகரந்தனும் – ஆனந்தம்! அந்தோ! விதனம்! என்னே வியப்பு!

(10) இஃதென்னை? வாணுதிவீட்சியும்[20], சந்தணக்குழம்பின் பூச்சும் ஒருமித்து நிகழ்ந்த நிகழ்ச்சியோ? இஃதென்னை? புயலின்றியே தீப்பொறி கலந்த அமுத வருஷமோ?

(11) இப்பொழுது (நமது) ஊழ்வினை, உயிர்மருந்து விடம், ஒளியிருள், இடி மதிக்கதிர், என்னுமிவ்விரண்டாய இவற்றின் சேர்க்கையினுடைய செயல்[21] விளங்கி நிற்கின்றது.

(வேடசாலையில்)

ஆ! தந்தையே! (இச்செயலினின்றும்) ஒழிக; தங்களது தாமரை முகத்தைத் தரிசிக்கப் பேராவலுடையேன். அருள்புரிக; என்னையெண்ணியின்புறுத்துக; பூவுலகிற்கும் வானுலகிற்கும் இடையில் மாசற்றுப் பரந்து விளங்குமோர் மங்கலவிளக்கனைய மேனியை என்னிமித்தமாக ஏன் விட்டொழிக்கின்றீர்கள். இலச்சை யிரக்கம் இவை யின்றி யான் தங்களை யிழந்தொழிந்தேன்.

காமந்தகீ – ஆ! குழந்தாய்! மாலதி!

(12) மீண்டும் மறுபிறவியை[22] யெய்தியாங்கு அரும்பாடுபட்டும் நின்னைப் பெறுவதற்குள், பிறிதோரிவ்வனத்தம்[23], மதிக்கலையை விழுங்கற்குபராகம் போல நிகழ்ந்தது.

மற்ற இருவரும் – ஆ! அன்புடைத்தோழீ!

(மயக்கமெய்திய மாலதியைத் தாங்கிய நிலையில் மாதவன் பிரவேசிக்கின்றான்)

மாதவன் – அடா! கொடுமை!

(13) இவள் பிறர்கையினின்றும்[24] திருவருட்பாங்கால் விடுபட்டனள் எனினும், (தந்தையின்றுயராலன்றே) மீண்டும் விபரீதமான ஐயப்பாட்டை[25] யெய்தினள்; மன்பதைக்கு (இன்பத்துன்பங்களேயாகும்) பயனையளித்தற்கு முற்பட்டு நிற்கும் ஊழ்வினையின் (வந்தெய்து) வாயிலை மறைத்தற்கு யாவரேவல்லார்.

மகரந்தன் – அன்பனே! அந்த யோகினிப்பெண், எங்குச் சென்றனள்.

மாதவன் – சிரீபருப்பதத்திருந்து யான் அவளுடன் கூடவே விரைவில் இவண் வந்தெய்தினேன்; காடுறை மாந்தரின் கருணமொழிகளால்[26] (அக்கணமே) மறைவுற்ற அவளை யான் காண்கில்லேன்.

காமந்தகியும் மகரந்தனும் – மாட்சிமிக்கவளே! மீண்டும் எங்களை காத்தருளவேண்டும்[27]; எக்காரணம் பற்றி மறைவுற்றனை?

மதயந்திகையும் இலவங்கிகையும் – தோழீ! மாலதீ! அடி தோழி மாலதியென்று கூறுவேன்; (நடுக்கமுடன்) பெரியோய்! காத்தருளவேண்டும்; இவளது இதயம், பிரணவாயு நெடிது தடைப்பட்டமையால் அசைவற்றிருக்கின்றது; ஆ! அமாத்திய! ஆ! அன்புடைத்தோழீ! நீவிர் இருவீரும் இறத்தற்கு ஒருவர்க்கொருவரே நிமித்தமாயினீர்.

காமந்தகீ – ஆ! குழந்தாய்! மாலதி!

மாதவன் – ஆ! காதலி! மாலதி!

மகரந்தன் – ஆ! அன்புடைத்தோழீ!

(எல்லவரும் மயக்கமெய்தி மீண்டும் நினைவை யெய்துகின்றனர்)

காமந்தகீ – என்னையிது? விறைவிற் பிளவுற்றபுயலினின்றும்[28] வழிந்தொழுகும் புனற்பெருக்கம்போல நம்மையின்புறுத்துகின்றது.

மாதவன் – (பெருமூச்சுடன்) ஓ! மாலதி, நினைவெய்தினளே! அங்ஙனமே இவளது

(15) இதயம், நீண்டுறும் உயிர்ப்பினால் அலைவுறுந் தனங்களையுடையதாகவும், கண்களும், தம்மியியற்கையிலிருத்தலான் வனப்புமிக்கவாகவும் அமைகின்றன. மேலும், வதனமும் மயக்கம் நீங்கினமையால் வைகறைப் பொழுதிற் றிருவுடனியைந்த தாமரைமலரொப்பத் தெளிவுற்று விளங்குகின்றது.

(வேடசாலையில்)

(16) அடிபணிந்த அரசனையும் நந்தனனையும் எண்ணாது அழற்குழுவில் விழுகின்ற பூரிவசு, எனது மொழியைக் கேட்ட அப்பொழுதே களிப்பையும் வியப்பையும் மிக்குடையனாய் அச்செயலினின்றும் நீங்கினன்.

மாதவனும் மகரந்தனும் – பெரியோய்! ஆனந்தம்! (யோகமாட்சியாற்) சிறந்து விளங்குகின்றீர்.

(17) அந்த இந்த யோகினிப்பெண், மிக்கவிசையால் மழைமுகிலைப் பிளந்தே நம்மை வந்தடைகின்றாள். அவளது சொல்லமுத நீர்ப்பெருக்கம், புயற்புனற் பெருக்கையும் கடந்திலங்குகின்றது.

காமந்தகீ – நமக்கு விரும்பற்பாலதே.

மாலதீ – ஆனந்தம்! மீண்டும் வருந்தி[29] உயிர்பிழைத்தேன்.

காமந்தகீ – (ஆனந்தக்கண்னீருடன்) மகளே! வருக; வருக.

மாலதி – ஆ! என்னே! பெரியோரா?

(என்று கால்களில் விழுகின்றாள்)

காமந்தகீ – (தூக்கிக் கட்டியணைத்து உச்சிமோந்து)

(18) (நீ நெடிது நாள்) வாழ்க; உயிரே அனைய (மாதவற்கு) வாழ்க்கையை அளிக்க; உன்னுடைய தோழிமாரும் வாழ்க; மகளே! என்னையும் அன்புடைத் தோழியையும் தண்பனிக் கலவைபோற் குளிர்ந்து உறுப்புக்களாற் பிழைப்புறுத்துக[30].

மாதவன் – அன்ப! மகரந்த! இதுபொழுது மாதவனுக்கு உயிருலகம் விரும்பற்பாலதே.

மகரந்தன் – (மகிழ்வுடன்) இஃதிங்ஙனமே.

மற்றவரும் – அன்புடைத்தோழீ! கருத்தையுங்[31] கடந்த காட்சியே! எங்களைத்தழுவி யின்புறுத்துக.

மாலதி – ஆ! அன்புடைத் தோழியரே! (என்று இருவரையுந் தழுவுகின்றாள்)

காமந்தகீ – மைந்தீர்! என்னையிது?

மாதவனும் மகரந்தனும் – பெரியோய்!

(19) கபாலகுண்டலை சினமுற்றுப் புரிந்த தீச்செயலான்[32] விளைந்த ஆபத்தினின்றும், இப்பெரியோர்[33], தன்மெய்வருந்திய பெருமுயற்சியால் எங்களைக் கைதூக்கிவிட்டனர்.

காமந்தகி – என்னே! இஃது, அகோரகண்டனது கொலையால் விளைந்த செயலோ[34]?

இலவங்கிகையும் மதயந்திகையும் – இருமடங்கான கொடுமைத்தாய ஊழ்வினை, முடிவில் (நற்பயனையே அளித்து) வனப்புற்றது.

சௌதாமினி – (பிரவேசித்து) பெரியோய்! அந்த இந்தப் பழமை மாணவி, வணங்குகின்றாள்.

காமந்தகீ – ஓ! சௌதாமினி! மங்கலம் பெறுக.

மாதவனும் மகரந்தனும் – என்னே! இவள், காமந்தகிப்பெரியாரின் அன்பிற்குறையுளாயமைந்த முதன்மாணவியாகிய அந்தச் சௌதாமினியா! ஆதலினன்றே, இதுபொழுது யாவும் பொருந்துகின்றன.

காமந்தகீ – (20) வருக; வருக; பூரிவசுவிற்குயிரளித்து, அப்புண்ணியச் சுமையை தாங்குவோய்! ஆனந்தம்! நின்னைக் கண்டு நெடிது நாட் சென்றன. நட்பின் நிலைக்களனே! எனதுடல் மிக்க மகிழ்ச்சி[35] யெய்தியிருப்பினும், மீண்டும் அதனைத் தழுவியின்புறுத்துக. மேலும்,

(21) யோகவல்லுனர்களையும் கடந்த இத்தகைய செயல்களால் (யாவரும்) விரும்பற்குரிய யோகசித்திகளையுடைய நீயொருவளே, உலகிற்கு வணங்கற்குரியவள். முற்பழக்கத்தில் விதைத்த விதை[36], உனது செயலான் முளைத்தெழுந்து சிறந்த பல நற்பயனளித்து[37] விளங்குகின்றது.

மதயந்திகையும் இலவங்கிகையும் – இவள் மாட்சிமிக்க அந்தச் சௌதாமினியா?

மாலதீ – ஆம்! அவளே! “யான் காமந்தகிப் பெரியாரைச் சார்ந்தவள்” என்று என்பால் அன்புமீக்கொண்டு இவர்கள், கபாலகுண்டலையை அச்சுறுத்தி யென்னைத் தனதில்லத்திற் கழைத்துக்கொடுபோய் இளைப்பாற்றினார்கள்; அன்றியும், மகிழணியலாகும் எனதடையாளத்தைக் கையிலேந்தியளாய் இங்குற்று, உங்கள் எல்லவரையுந் தேறுதற்படுத்தினார்கள்.

மற்றையோர் – சிறிய காமந்தகியாராகிய இவரும், நம்பால் அருண்மிகப்புரிந்தனர்.

மகரந்தனும் மாதவனும் – அடா! ஓ! என்னே! வியப்பு!

(22) சிந்தாமணியென்னும் அரதனமும், (வேண்டுவாரது) நினைவெனுஞ் செயலை வேண்டுகின்றது. (மாலதியினுயிர்க்காவலாகும்) இச்செயல், யான் நினைந்திலதாய் இப்பெரியோராற் செய்யப்பட்டது. ஆதலின், இது மிக்க வியப்பென்றே கருதுகின்றேன்.

சௌதாமினி (தனக்குள்) இவர்களது அன்புமிக்க இன்சொற்கள் என்னை இலச்சைப்படுத்துகின்றன. (வெளியீடாக) பதுமாவதிப் பதியைப் பாலிக்கு நிருபன் பெருமகிழ்வெய்திய நந்தனனாற் பாராட்டப்பட்டு பூரிவசுவின் முன்னிலையில் வரைந்த இந்நிருபத்தை ஆயுணிறைந்த மாதவற்கு விடுத்துள்ளார். (கடிதத்தைக் கொடுக்கிறாள்)

காமந்தகி – (வாங்கிப் படிக்கிறாள்).

“நுமக்கு நலம் வளர்க; மன்னர் மன்னவன் கட்டளையிடுகின்றார்; என்னையெனில்

(23) சிறந்திலோங்கு சீலத்தவருள் முன்னிற்பவனும், சீர்மைத்தாய குலநலம்படைத்தவனும் விலக்கற்கரிய விதனங்களையும் வென்றவனும், மாட்சிமிக்க மருமகனுமாய்[38] விளங்கும் நின்பால், அன்புமிக்குள்ளேன்; ஆதலின் நினதன்புடைமைக்குரிய நண்பற்கு இம்மதயந்திகை காதலான் முன்னரே அளிக்கப்பட்டவள் எனினும் நின் விருப்பிற்கே[39] அவற்கு அவளையிதுபொழுது யாமும் அளிக்கின்றோம்.”

(மாதவனைக் குறித்து) குழந்தாய்! செவியுறுக.

மாதவன் – (முழுமையும்) கேள்வியுற்றேன்; இதுபொழுது முற்றிலும்[40] நற்பேறுபெற்றேன்.

மாலதி – ஆனந்தம்! இவ்வச்சமாகும்[41] கூரிய முள்ளும் இதயத்திலிருந்து நீங்கியது.

இலவங்கிகை – திருவளர் செல்வன் மாதவனது மனோரதங்கள் இப்பொழுது முற்றிலும் நிறைவேறின.

மகரந்தன் – (முன்னே பார்த்து) அவலோகிதை, புத்தரக்கிதை, கலகஞ்சன் இவர்கள், இங்கட்குழுமிய நம்மைத் தொலையிலிருந்து பார்த்துழி, அங்கட் களியாட்டுடையராய் இவ்வழிக்கே வருகின்றனர்.

(அவலோகிதையும் புத்தரக்கிதையும், கலகஞ்சனும் பிரவேசிக்கின்றனர்).

அவர்கள் – (பலவகையாகக் கூத்தாடி எல்லவரும் அணுகி, வணக்கமுடன் காமந்தகியைக் குறித்து)

பெரியோய்! செயல்நிலைக்களனே![42] சிறப்புற்றுத் திகழ்கின்றீர். (மாதவனைக் குறித்து) மகரந்தனை யின்புறுத்து மாதவ[43] முழுமதியே! மேன்மையுற்று விளங்குகின்றீர். திருவருட்பாங்காற் செழித்து வளர்கின்றீர்.

(எல்லவரும் முறுவலுடன்[44] பார்க்கின்றனர்)

இலவங்கிகை – இந்நிகழ்ச்சியில் அவளது செயலும்[45] கருதியவாறே நிறைவுற்றதாகலின், எவ்வாற்றானும் பெருவிழாவாகு மின்னாளில் அவலோகிதை, களி நடம் பயிலுகின்றாள்.

காமந்தகீ – இவ்வண்ணமே இது; மிக்க வியக்கத்தக்கதும், காதையமைப்பாற் பல்லாற்றானும் வனப்புற்று விளங்குவதுமாகிய இத்தகைய பிரகரணம்[46] எங்ஙனமேனு முளதோ?

சௌதாமினீ – அமாத்தியபூரிவசு[47], தேவராதன் இவர்களது, ஒருவர்க்கொருவருடைய மக்களின் (திருமணத்) தொடர்புருவகமான விருப்பம், நெடிது நிறைவுற்றதென்னு மிஃதொன்றே வனப்பு.

மாலதீ – (தனக்குள்) அஃதெங்ஙனம்?

மகரந்தனும் மாதவனும் – (ஆவலுடன்) பெரியோய்! வேற்றுவகையானே செய்தி நிக்ழ்ந்தது. சொன்முறையதற்கு மாறுபட்டுளது.[48]

இலவங்கிகை – (அணுகி) செயற்பாலதென்னை?

காமந்தகீ – (தனக்குள்) மதயந்திகையின் திருமணத் தொடர்பால் நந்தனனது நிந்தையைக் கடந்து கலக்கமற்றவராயினோம். (வெளியீடாக) மைந்தீர்! வேற்றுவகையானே செய்தி நிகழவில்லை; சொன்முறையும் அதற்கு மாறுபடவில்லை. ஏனெனில், மாணவர் நிலையில் அவர்க்குள், “நம்மால் மக்களின்றிருமணத் தொடர்பு செயற்பாலது”, என்று நஞ் சௌதாமினியின் முன்னிலையில் இவ்வுடன்படிக்கை நிகழ்ந்தது. இங்ஙனஞ் செய்த சூழ்ச்சியினால்[49] தலைவனது சினம் தவிர்க்கப்பட்டது.

மாலதீ – என்னே! சூழ்ச்சி!

மகரந்தனும் மாதவனும் – ஆச்சரியம்! பெரியோர்களது சூழ்ச்சிகள் (பிறரை) வஞ்சித்து நம்பச் செய்து நன்மை பயப்பனவாய்த் தலைசிறந்து திகழ்கின்றன.

காமந்தகீ – (24) குழந்தாய்! ஆயுணிறைந்த நும்மிரு[50]வீரது மணவினை, மனவிருப்பத்தான் முன்னரே ஒப்பமுடிந்ததெனினும், இதுகாலை முந்தை நல்வினையானும் எனதரிய செயலானும், என்னுடைய மாணவிகளின் மெய்வருத்தத்தானும், முற்றிலும் பலித்தது. நினதன்பன் (மகரந்தற்கும்) அவன்றன் காதற்கிழத்தி மதயந்திகைக்கும் திறம்படு சேர்கையுஞ் சிறந்தது; இவற்றிற்கிடையூறாய்த் தோன்றிய அரசனும், நந்தனனும் நும்பால் அன்புமிக்காராயினர்; இவற்றினும் பிறிதொரு விருப்பமுளதேல், அதனையும் கூறுக.

மாதவன் – (மகிழ்ச்சியுடன்) இதனினுஞ் சிறந்த விருப்பமெற்குளதோ? ஆயினும் இதனையளித்தருள்க.

பாரதவாக்கியம்[51]:- (25) வையகம் யாவும் மங்கலமெய்துக; மன்னுயிரனைத்தும் பிறர் நலம் பேணுக; தீயவை சிதைந்தொழிக; எல்லாவுலகும் இன்புற்றிருக்க.

காமந்தகீ – இங்ஙனமே ஆக.

(எல்லவருஞ் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீ மாதவம்” என்னும் நாடகத்தில் பத்தாம் அங்கம் முற்றிற்று.


[1] இளமைப்பருவத்தளாய் – இச்சுலோகத்தின் கருத்து, இப்பருவமுதலே காமந்தகியார்பால் இவள் வளர்ந்தமையை உணர்த்தும்.

[2] அராகம் – ஈண்டு காதலையும், செம்மை நிறத்தையும் உணர்த்தும்.

[3] ஆவல், இது மாலதீ, மாதவன் இவர்களுடையதையும், இலவலீ, இலவங்கம் இவற்றைக் காண்பவருடையதையும் உணர்த்தும்.

[4] இலவலீ – ஓர்வகையழகிய கொடி.

[5] இலவங்கம் – ஓர்வகை மணங்கமழ் மரம்.

[6] இவ்வுவமை, யான், பொருந்து திருமணத்தைப் பூர்த்தி செய்யினும் ஊழ்வினை யூறாய் அமைந்து அதனைக் கெடுத்ததென்பதையுணர்த்தும்.

[7] நேயம் – அன்பு. எண்ணை.

[8] கண்கவரொளி – மாலதி, திரி இரண்டற்கும் பொருந்தும்.

[9] கறுத்துவாடிய முகம் – இலவங்கிகைக்கும் திரியினுக்கும் பொருந்தும்.

[10] வெண்கடுகுத்திலதம் – இது, மக்களை யெளிதில் வந்தடையும் பட்சிதோடம் முதலியவற்றை நீக்கற்பொருட்டு.

[11] வேட்கை – மாலதியைக் காண்டலில் வேட்கையும் காணாதவழி உயிரைத் துறத்தலில் வேட்கையும் ஆம். இஃதிருவோர்க்கும் ஒத்திருத்தலின் யான் ஆசி கூறல் வேண்டாம் என்பதாம்.

[12] சேர்க்கை – இது மாலதியுடன் சேருதலை; மாலதியிறந்தாளென்று இவள் கருதுகின்றாளாதலின், தானிறந்தமேல்வினை வேறுபாட்டினால் மாலதியைக் கூடுதல் அமையாதென்பதாம்.

[13] அங்ஙனமாயின் இறத்தலிற் பயன் என்னையென வாசங்கித்து, இறந்த மாலதியின் பிரிவாற்றாமையாற் படுந்துயரொழியுமாத்திரையில் பயனுடையதென்பதாம்.

[14] இவ்வாண்மகனை – இது மகரந்தனை.

[15] (தனக்குள்) பெரியோர், பக்கலில் இருக்குங்கால் அவர்கள் அறியக் காதலனை நினைந்து கூறலாகாதென்பதாம். இறக்குந்தறுவாயிற் கணவனை நினைத்தல் அவனே மறுமையினும் கணவனாதல் வேண்டும் என்பதுபற்றியாம்.

[16] நிகழுஞ்செயல் – மரணச்செயலை, ஊறு – காலந்தாழ்த்தலை.

[17] இது காமந்தகி, மகரந்தனது மகிழ்ச்சியால் விளங்கும் முகத்தைக் கண்டு, இவன் மாதவனையன்றித் தனித்து வருவதற்கும், மகிழ்வெய்தற்குங் காரணம் யாதாயிருத்தல் கூடுமென்னும் ஐயவினாவாகும்.

[18] மகரந்தன் கூறும் மறுமொழியினால் மாலதி மாதவனோடியைந்து நலமுறுதற்குத் தனது முதல் மாணவி சௌதாமினியின் மாட்சிமிக்க யோகசித்தியே காரணமென்று காமந்தகி உறுதி செய்தனள் என்பது குறிப்பின் உணர்த்தப்படும் பொருளாம். இதனால், நீர்வீட்சியில் ஒருவரும் விழுந்தொழியவில்லை யென்பதாம்.

[19] இது – இல்லறச்செயலை நடாத்தற்குரிய காணி மனை பொன் முதலிய பொருளை யுணர்த்தும்.

[20] பூரிவசுவின் அங்கிப்பிரவேசச் செய்தியைக் கேட்டல், மாலதி மாதவன் இவர்களின் காட்சி, இவைமுறையே வாணுதிவீழ்ச்சியையும் சந்தணக்குழம்பின் பூச்சையும் நிகர்வனவாம்; அங்ஙனமே, தீப்பொறிமாரியும், அமுதமாரியும் ஆம்.

[21] செயல் – ஒன்றற்கொன்று முற்றிலும் முரண்பாடெய்தியவும், இன்பத்துன்பங்கட்கேதுவாயமைவனவும், ஆய இரண்டு பொருள்களின் சேர்க்கையின் செயலை மேற்கொண்டு விளங்குவதாம்.

[22] இதனால் மாலதி, கபாலகுண்டலையான் விளைந்த ஆபத்தினீங்கினமையும், காமந்தகி, மாலதியை யெய்தினமையும் உணர்த்தப்படும். இனி பூருவபக்கத் தொடக்கத்தில் ஓர்கலையெய்திய மதியின் தோற்றமே அம்மதிக்கு மறுபிறவியெனக் கொண்டு அந்நிலையில் உபராகம் நிகழ்ந்தாங்கு மாலதிக்கும் தீங்கு நேர்ந்த்தாம் என்பதும் இல்பொருளுவமையாற் கூறப்பட்டது என்பதும் உணரற்பாலது.

[23] பிறிதோரிவ்வனத்தம் – பூரிவசு அங்கிகுளித்தலை.

[24] பிறர்கை – இது கபாலகுண்டலையின் கை.

[25] ஐயப்பாடு – ஈண்டு, மரணமெய்தற்குரிய மயக்கமுற்றிய நிலையை.

[26] கருணமொழி – பூரிவசு, அங்கிமூழ்கச் சென்றனன் என்னுஞ் செய்தியை.

[27] மாலதியின்றுன்பத்தைத் தவிர்த்த வண்னம் பூரிவசுவின் மரணத்துன்பத்தையும் இதுபொழுது தவிர்த்து மாலதியையின்புறுத்துமுகமாக எங்களைக் காத்தல் வேண்டுமென்பதாம்.

[28] பிளவுற்றபுயல் – இதனால், சௌதாமினியின் மாட்சிமிக்க யோகசத்தியால் இன்புற்ற காமந்தகி, அவ்வியப்புத் தோன்ற அகால வருஷத்தை, இன்ப நிகழ்ச்சி நிமித்தத்திற்கு உவமை கூறினள் என்பதாம்.

[29] வருந்தியும் உயிர்பிழைத்தேன் என்பது தந்தை உயிர்பிழைத்தமையான்.

[30] உறுப்புக்களாற் பிழைப்புறுதல் – என்பது உயிருறத் தழுவலை.

[31] மாலதியின் காட்சியைக் கருதுவதினும் பயனில்லையெனக் கருதியிருக்குங்கால் காட்சியளித்தாளாகலின், கருத்தையுங்கடந்த காட்சியே! யென விளிக்கப்பட்டாள்.

[32] தீச்செயல் – என்பது மாலதியைக் கவர்ந்த செயலை.

[33] இப்பெரியோர் என்பது சௌதாமினியை.

[34] மாதவன், அகோரகண்டனைச் சங்கரிக்க அவனது மாணவி கபாலகுண்டலை, மாதவற்குத் தீங்கிழைக்குமுகமாக மாலதியைக் கவர்ந்தாளாகலின், அகோரகண்டனது கொலையால் விளைந்த செயல் என்றார்.

[35] மிக்க மகிழ்ச்சி – மாலதியும் பூரிவசுவும் பிழைத்தனராகலின்.

[36] விதை – பூரிவசுவும், தேவராதனும் மாணவராயிருந்து கல்வி பயிலுங்கால், “நமக்குள் மக்கட்டிருமணஞ் செய்துகோடல் வேண்டும்”.

[37] பலநற்பயன் – மாலதி, மாதவன் இவர்களது சேர்க்கை, அதன்பயனாக பூரிவசு, மகரந்தன் முதலியோரைப் பிழைப்பித்தன் முதலியன.

[38] மருமகன் – “தங்கன்னியர்க்குத் தாமே தலைவர்” என்னும் பூரிவசுவின் கூற்றைப் பின்பற்றி மாலதியைத் தன்மகளாகக் கொண்டு அரசன் இங்ஙனம் கூறினான் என்க.

[39] நின்விருப்பிற்கே – வரிசைபல வழங்கி மணமகன் விருப்பை நிறைவேற்றன் மாமன் கடனாகலின், அஃதிவ்வளவில் அமையுமென்று மதயந்திகையை யளித்தனன் என்பது தேற்றத்தான் விளங்கும்.

[40] முற்றிலும் – நந்தனன், அரசன் முதலியோர் சினந்தவிர்த்து மனமகிழ்ந்தமையான்.

[41] இவ்வச்சம் – அரசன், நந்தனன் இவரது சினத்தால் விளைந்தது; முள்ளெனத் துன்புறுத்து மிவ்வச்சமும் அவர் விடுத்த நிருபத்தால் நீங்கியதென்பதாம்.

[42] செயல்நிலைக்களன் – மாதவனது மணவினை சூழ்ச்சியின் மிக்க இவளது செயலானே நிகழ்ந்தமையால்.

[43] மகரந்தனையின்புறுத்து மாதவன் – மாலதியைப் பிரிந்த நிலையில் மகரந்தனைத் துன்புறுத்தி, அவளோடியைந்த நிலையில் இன்புறுத்தியுள்ளான். ஆதலின், மகரந்தன், தான் மதயந்திகையை மணத்தலினும், மாதவன் மாலதியைக் கூடியின்புறலே அம்மகரந்தற்கின்பந்தருவதொன்றாம் என்பதை இவ்வடைமொழியுணர்த்தும்.

[44] முறுவலுடன் – அவலோகிதையும் கூத்தாடுவதே முறுவலில் நிமித்தம். இக்குறிப்பினை யுணர்ந்தன்றே இலவங்கிகையும் வருமாறு கூறினள்.

[45] அவளது செயல் – காமந்தகியார் கூறியுள்ள செயலையன்றிக் கூறாது செய்த சூழ்ச்சிச் செயலை.

[46] பிரகரணம் – இந்நிகழ்ச்சி போன்றதோர் நிகழ்ச்சியை; இதனால் இந்நாடகம்போல் பிறிதொரு நாடகம் கிடைத்தலரிதென்பதாம். பிரகரணம் – 10 அங்கமுள்ள நாடகம்.

[47] இவர்களது உடன்படிக்கை சௌதாமினியின் முன்னிலையில் நிகழ்ந்ததாகலின் இவள் இங்ஙனம் கூறினள்.

[48] இவர்கள் அவ்வுறுதிப்பாட்டை யறியாதவர்களாதலின் இங்ஙனங் கூறினர்.

[49] இங்ஙனஞ் சூழ்ச்சி செய்யாவிடில் தலைவற்கு விளைந்த சினத்தைத் தவிர்த்தல் அமையாதென்பதாம்; தலைவன் அரசன்.

[50] இருவீர்து – என்பது, மாலதீ மதவன் இவர்களை.

[51] பரதவாக்கியம் – இது, நடிகர்கள் நாடகத்தைச் சிறப்புற நடித்து முடித்த பின்னர், அவ்வியற் றலைவர் கூறும் வாழ்த்துரையாம்; பரதர் – நாடகாசிரியர்.

சுபம்.

பண்டிதமணியாரின் தமிழ்க் கொள்கைகள்

டாக்டர்  வ.  சுப.  மாணிக்கம்

தமிழ்ப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

 

நாமே நம் தாயை மறந்திருப்போமாயின்

நமக்கு நினைவுறுத்துவார் யார்            —— பண்டிதமணி

 

என் ஆசிரியப்பெருமகன் பண்டிதமணியவர்கள், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் பெரும்புலவர்களுள் ஒரு முதுபெரும் புலவர் ஆவார். அவர் தமிழ் வளர்ச்சிக்கு அரை நூற்றாண்டுக் காலம் ஆற்றிய தொண்டு முறைகள் அவருக்கே உரியவை. தம் ஊனக் கால் பாராது, இளமை முதல் விழுத்தண்டு ஊன்றிப் பட்டி, பட்டணம் எல்லாம் சென்று, வானம் பொய்ப்பினும் தமிழ் பொய்யா இலக்கியமாரி பொழிந்தவர். வடமொழிப்புலமை செவ்வானம் பெற்றிருந்தும், கலப்புத் தமிழின்றித் தம் சமயக் கட்டுரைகளைக்கூட இயல்பான தமிழில் எழுதி உரைநடை வளப்படுத்தியவர். பிற்காலக் காப்பிய நூல்களில் பெரும்பயிற்சி பெற்றிருந்தும் சங்கத்தமிழே தமிழெனப் போற்றியவர். சைவப்பற்றும், தமிழ்ப்பற்றும் குறைவற நிரம்பியிருந்தும் ஏனை மதங்களையும் மொழிகளையும் பொது  நோக்காகப் போற்றியவர். யாது இழப்பு எதிர்ப்பு நேரினும், தமிழுக்கு, அதுவும் மரபான நல்ல தமிழுக்குப் பதவித் தமிழனே இழிவு கூறினாலும், எவ்வளவு பெரிய மேடைகளிலும் கண்ணெதிரே இடித்துரைத்து முழங்கியவர். வித்தகம் பேசிக் கொன்னே காலங்கழிக்கும் உலகோர் நடுவண் வாழ்ந்திருந்தும், அயல்மொழிப் பெருநூல்களை மொழிபெயர்த்துத் தமிழாரப்பணி செய்தவர். புலவரெலாம் தமிழிலக்கியங்களைச் சக்கையெனச் சவட்டிக்கொண்டிருந்த நிலையில் இன்கரும்பென இலக்கியச் சாறு பிழிந்து, சுவை ததும்பத் தமிழமுதை உலகம் உண்ணச் செய்தவர். அதனால் தமிழ் நயத் தந்தை  என்ற முதற் புகழாரத்துக்கு உரியவர்.

 

       “ பள்ளிப்படிப்பறியான் பைந்தமிழும் ஆரியமும்

        தெள்ளிச் சுவைதேரும் செந்நாவான்

என்று பாராட்டினார் கவிமணி.

பண்டிதமணி வடமொழியிலும் தமிழே போன்ற புலமையினர் என்பது நாடறிந்த செய்தி. மண்ணியல் சிறுதேர், சுக்கிர நீதி, பொருள் நூல் என்பவை அவர் தம் வடமொழிபெயர்ப்பு நூல்கள், அதனால் இந்திய அரசு  மகாமகோபாத்தியாய  என்ற கல்விப்பட்டத்தை அவர்க்கு வழங்கிற்று. தமிழுக்கும் வடமொழிக்கும் ஒருசார் வழிவழி கடும்பகையும் உண்டு என்பதனை வரலாறு காட்டும். இவை இன்றும் நிலவி வருகின்றன. தமிழர்களில் தமிழே கற்றவர்கள் உணர்ச்சியும், வடமொழியே கற்றவர்கள் உணர்ச்சியும், இரு மொழியும் நிகராகவோ கூடுதல் குறைவாகவோ கற்றவர்கள் உணர்ச்சியும் பலதிறப்படுகின்றன. இந்நிலையில் இருமொழிப்புலமை வாய்ந்த பண்டிதமணியாரின் மொழிக்கோட்பாடுகளை அவர் வழியினர் அறிந்துகொள்வது நல்லது.

பண்டிதமணி வடமொழிக்கு முதன்மை கொடுப்பவர் என்ற தவறான கருத்து ஒரு காலம் நிலவிற்று. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஒரு விழாவில், மறைமலையடிகட்கும் பண்டிதமணிக்கும் தூயதமிழ் பற்றி ஒரு சொற்போர் நடந்தது எனவும், தொன்மைத் தமிழ் நூல்களில் வடசொற் கலப்பு ஒன்றுகூட இல்லை என்று அடிகளார் ஒவ்வொரு சங்க நூலாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது, முன்னிருந்த மணியார் சில வடசொற்கள் உள என்று குறுக்கிட்டுக் கூறி வந்தனர் எனவும், அதனால் உணர்ச்சி பொங்கிய அடிகளார் பழந்தொல்காப்பியத்திலுமா வட சொல் உண்டு என்று   வினவியபோது, “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை” என்று (குஞ்சரம் — யானை) வந்திருப்பதைப் பண்டிதமணி எடுத்துக்காட்டினர் எனவும்  நடந்த ஒரு நிகழ்ச்சியை அறிகின்றோம். இச்சொற்பூசலினால் பண்டிதமணி வடமொழிச் சாய்வினர் என்பது பெறப்படுதல் யாங்ஙனம்?  பழந்தமிழ்ப் பனுவல்களில் யாதும் வடசொற் கலப்பு இல்லை என்பது அடிகளாரின் கருத்து. சிறிய அளவிலேனும் உண்டு என்பது பண்டிதமணியாரின் கருத்து. இச்சொற்பிணக்கை வரலாற்று மொழியாராச்சியாகக் கருதிக்கொள்ள வேண்டும். அவ்வளவே. தூய தமிழ் வேண்டுமா வேண்டாமா என்ற முடிவுக்கும் இந்நிகழ்வுக்கும் தொடர்பில்லை. இது பற்றிப் பண்டிதமணியிடம் மகிபாலன்பட்டியில் யான் உரையாடியகாலை, அப்பெருமகன் என்னிடம் கூறியது: “நான் தூய செந்தமிழுக்கு என்றும் ஆதரவானவன். மறைமலையடிகள் தம்  உரை நடை நூல்களில் முதலில் மிகுதியாக  வடசொற் கலந்து எழுதியவர். தூய தமிழ்க் கொள்கையைக் கடைப்பிடித்த பின் செந்தமிழுக்கு மாறியவர். நான் அப்படியில்லை. தொடக்க முதலே என் கட்டுரைகளை நல்ல தமிழில் எழுதிக்கொண்டு வருகிறேன். முதலிலிருந்து எனக்குத் தூய தமிழ்க் கொள்கையே. என் கட்டுரைகளை  நீ பார்த்திருப்பாய். இடைக்காலத்தில் இக்கொள்கைக்கு நான் வந்தவனில்லை.” இவ்வாறு காரணம்பட, அழுத்தம் பெற மொழிந்தனர். இவ்வுண்மைக்கு அவர்தம் எழுத்துக்களே கட்டளைக்கல். ஓர் எடுத்துக்காட்டு:

புலவர்களைப் பாதுகாத்து அவர் செந்நாவாற் பாராட்டப்படுதலினும் செல்வர் பெறும் பேறு வேறு யாதுளது? காலத்தாற் கவரப்பட்ட செல்வருட் புகழுடம்பு கொண்டு இன்னும் நம்மோடு அளவளாவி இன்புறுவார், புலவர் பாடும் புகழ் படைத்தாரன்றே! கற்றவர்க்கு ஈத்துவக்கும் பேறில்லாதார், செல்வம் படைத்தும் ஒளியும் புகழும் இலராய் விலங்கோடு ஒப்ப உண்டு களித்துத் துஞ்சும் இயல்பினரேயாவர். ஆதலாற் செல்வர்களே! புலவரைப் போற்றுதல் நும்மைப் போற்றுதலாகும். ஆதலின், தமிழ் நலம் கருதி இன்னோரன்ன துறையில் இறங்குமின்கள்! செல்வம் படைத்த ஞான்றே புலவர் பக்கலிருக்க விழைமின்கள்! பற்பலவாற்றானும் செலவழிக்கப்படும் நும் பொருட் கூறுகளுள் ஒன்று புலவர்க்கெனச் செய்மின்கள்! அவிச்சுவையினும் இனிய கவிச்சுவையை நுகர்மின்கள்! நும் பூதவுடல் வன்மையுற்றிருக்கும் ஞான்றே புகலுடலின் ஆக்கத்திற்கு வேண்டுவன புரிமின்கள்! அழிதன் மாலையதாகிய செல்வத்தைக் கண்டு அழியாப்புகழை வளர்த்தற்குரிய நெறியைப் பற்றுமின்கள்!”

{உரைநடைக்கோவை — இலக்கியம்}

அயல்மொழி கற்றல் தமிழர்க்குப் புதியதன்று. அதற்காக வேற்றுமொழிக் கிளவிகளைத் தன் தாய்மொழியில் கலப்பது நல்ல மொழிக்கொள்கையாகுமா? இடைக்காலத் தமிழர்கூட இத்தவற்றினை

மிகுதியும் செய்துவிடவில்லை. இக்காலத் தமிழரிடைத்தான் மொழிப்பரத்தமை அளவிறந்து காணப்படுகின்றது. இதற்குக் காரணம், ஒரு மொழியிலே நினைத்துச் சொல்லி எழுதத்தெரியாக் குறைபாடேயாகும். எழுதத்தெரிந்த சிலரும் கலப்புத் தமிழாக எழுதிவருவதற்குக் காரணம், கலப்பு, பரந்த மனத்துக்கு அடையாளம் என்று மயங்கியிருப்பது. தாம் கற்ற பல மொழிகளிற் காணப்படும் கருத்துக்களையன்றோ தமிழிற்குக் கொண்டு வர வேண்டும்? அது தமிழ் வளர்ச்சி. உரிய சொல் இருக்கவும், ஆக்கிக் கோடற்கு இடமிருப்பவும் அயற்கிளவிகளை இடைமடுத்தல் தமிழைக் கடைமடுத்தலாகும். பிறமொழி கற்றோர் தமிழை எழுதவேண்டிய முறைக்குக் கம்பரைப்போல் பண்டிதமணியும் ஒரு வழிகாட்டி.. தமிழ் நயத் தந்தையாம் பண்டிதமணி பிற சொற் கலந்த ஒரு செய்யுள் நயங்குறைந்தது என்று கருதுகிறார்: —

சுவையுடைமை அவ்வம்மொழிகளில் தனித்த நிலையிற்               காணப்படுதல்போற் கலப்பிற் காணப்படுதல் அரிது. ஒரு மொழியிற் செவ்வனம் பயின்று சுவை நிலை கண்டுணர்வார்க்கு அதன் தனிநிலையிற் போலப் பிறமொழிக்கலப்பில் அத்துணை இன்பம் உண்டாகாது.

தமிழ், வடமொழியிலிருந்து பிறந்தது எனவும், வடமொழியின்றித் தமிழ் இயங்க முடியாது எனவும் பிதற்றுவார் கொள்கையெல்லாம் பண்டிதமணிக்கு வெறுப்பானவை. “நம் தமிழ் மொழியாதும் குறைவுடையதன்று. இது மற்றொரு மொழியினின்றும் தோன்றியதென்றாதல், பிறிதொன்றன் சார்பின்றி நடைபெறாது என்றாதல் கூறுவார், உண்மையாராய்ச்சி இலராவர். ஒருசில வடசொற்கலப்பு உண்மை பற்றித் தமிழ்மொழியை வடமொழியினின்றும் தோன்றியதென்றல் பொருந்தாத ஒன்றாகும்” என்று கழறியுரைக்கும் பண்டிதமணியார் எழுத்து, தமிழர்தம் நெஞ்சக்கல்லில் பொறிக்கவேண்டிய எழுத்தாகும்.

 

ஏன் வரவர மிகுதியாக வடமொழி தமிழிற் கலந்தது என்று ஆராயத் தொடங்குகின்றார், வடமொழிப் பயிற்சிமிக்கும் நற்றமிழில் எழுதும் பண்டிதமணியார். சங்க காலத்தில் மிகச் சில சொற்களே தமிழிற் புகுந்தன. அதற்கே தொல்காப்பியர் ஒலிவரம்பு காட்டினார். வடகிளவிகள் வீரமாமுனிவர்போலத்  தமிழுருவெய்தி வழங்கின. நாளடைவில் புலவர்களுக்குத் தனித் தமிழ்ச்சொற்களைத் தெரிந்து வழங்கும் ஆற்றல் இல்லை. ஒருசிலர்க்குத் தெரிந்திருந்தாலும், வடசொற் கலப்பு செவிக்கு இன்பமென அவர்கள்  மயங்கிக் கிடந்தனர். தனித்தமிழிற் சுவை காணும் புலமை குறைந்தது. அத்தகைய புலவர் அருகினர். வடமொழியாளர் தம் மனம் உவப்ப அவர்களை உவகைப்படுத்த வேண்டித் தமிழிற் பாட்டும் உரையும் எழுதும் புது மோகம் எங்கும் பரந்தோடியது. அதனால், வடசொற்கள் அப்படி அப்படியே, அவ்வவ்வொலிப்படியே வரம்பின்றித் தமிழிற் படிந்தன என்பது, வடசொற் கலப்பு வரலாற்றுக்குப் பண்டிதமணி கூறும் காரணங்கள் ஆகும். இக்காரணங்கள் இன்றும் உளவே; மேலும் தடிக்கின்றனவே; அயற்சொற்கள் என்னும் விதைகள் விழுந்து விழுந்து தமிழ்க் கோபுரங்கள் என்னாமோ என்று நாம் அஞ்சுகின்றோம். வடசொற்களை நேர்ந்தவாறு தமிழிற் புகுத்தல் முறையன்று என்பதும், கலப்பு எளிய நடையாகாது என்பதும் பண்டிதமணியின் மொழித்துணிபு.

ஏன் தமிழ் வளர்ச்சிக்குச் செல்வர்கள் நன்கொடை செய்ய முன் வந்திலர் எனவும் ஆராயத்தொடங்குகின்றார், சன்மர்க்க சபையை நிறுவி வளர்த்த பண்டிதமணியார், பல்லாண்டுகளாக வடமொழி வேத சாத்திரப் பாடசாலைகட்கும், வடமொழிக் கல்லூரிகளுக்கும், சில்லாண்டுகளாக ஆங்கிலக் கல்லூரிகட்கும் ஏராளமான பொருளைச் சில செல்வர்கள் செலவிடுகின்றனரே; இப்பொருட்செலவுத் தொகையில் ஒரு சிறு பகுதி கொண்டு நம் அருமைத் தமிழ்த்தெய்வத்திற்குத் திருக்கோயில் அமைக்கக்கூடாதா? தமிழ்த்தெய்வத்தை வழிபடும் மாணாக்கர்களுக்குப் பெருஞ் சோற்றில்லங்கள் அமைக்கலாகாதா? இங்ஙனம் செய்யாமைக்கு ஒரு காரணம், வடமொழியாளர் செல்வாக்கு இச்செல்வர்களிடை மிகுதிப்பட்டிருப்பது என்று பண்டிதமணியார் வெளிப்படையாகக் கூறியிருக்கும் துணிவு அவர்தம் ஆழ்ந்த தமிழன்புக்கு ஒரு சான்று. இச்செல்வர்பால் சென்று, தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செலவு  செய்யுங்கள் என்று தமிழறிஞர்கள் சொல்லப்புகுந்தால், அவ்வறிஞர்தம் சொல் ஏறவில்லையே என்று பண்டிதமணி கதிரேசனார் மனம் வெதும்பி மானத்தோடு சொல்வது நினையத்தகும். அவர் சொல்லிய காரணங்கள் குறைவதற்கும் ஒழிவதற்கும் மாறாகப் புது வண்ணப்போர்வையில் வளரவல்லவோ காண்கின்றோம்? குற்றம் குணமாகவல்லவோ காட்சியளிக்கவும் பாரட்டப்படவும் காண்கின்றோம்? சில தமிழர்தம்  மனத்தில் உண்மையொளி ஏறினால் அல்லது ஏற்றினாலல்லது, கலப்புத் தமிழுக்கு மடிவில்லை, உண்மைத் தமிழுக்கு விடிவில்லை.

கம்பரின் பெருங்காப்பியத்தில் பண்டிதமணியார்க்குத் தனி ஈடுபாடு உண்டு. அக்காப்பியச் சோலையில் செவி நுகர் கனிகள் காம்புதோறும் உள என்பது அவர் தம் கருத்து. இராமாயணத்தில் அவர்க்கு இருந்த ஈடுபாடு, ஒரு காலத்துச் சில பகுதியாரிடமிருந்து எதிர்ப்பை வாங்கித் தந்தது. வடமொழிப்பற்றினர், ஆரிய நாகரிகவேட்கையினர் என்ற ஏச்சும் கிடைத்தது. பிறர் குற்றங்களை இடித்துக்காட்டி, அதனால் எதிர்ப்பில் வளர்ந்த பண்டிதமணி என்னும் அரிமா, “என் உடல் காரணமாக மற்போருக்கு அஞ்சுகிறேன்; ஆனால் எச் சொற்போருக்கும் அஞ்சேன்” என்று முழங்கிற்று. ஒரு மொழியில் தூய சொற்களால் எழுதப்பட்ட செய்யுட்களே சுவை பயப்பன என்ற பண்டிதமணியின் இலக்கியக்கோட்பாட்டை முன்னர் எடுத்துக்காட்டினேன். சங்க இலக்கியம் தூய தமிழால் ஆனது ஆதலின், அதன்கண் அவர்க்கிருந்த தனிப்பற்றுக்கு எல்லையுண்டோ ?

சங்க இலக்கியங்களுள் ஒரு சிலவற்றைத் தெளிவாகப்    பொருளுணர்ந்து படித்து அடிக்கடி பழகி வருவோமாயின், இந்நடையும்  நமக்கு எளிமையாக அமையும். எதுகை மோனை நிமித்தம்  வறிதே அடைமொழிகளைப் புணர்த்துப்  பொருட்சுருக்கமும் சொற்பெருக்கமும் அமைய யாக்கப்படும் பிற்காலத்தவர் பாடல்கள் நுண்ணறிவுடையார்க்கு இன்பஞ்செய்வனவாகா.  ஒரு சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்தோறும், நவில்தொறும் நூல் நயம்போலும்என்னும் முதுமொழிக்கிணங்க இன்பஞ்செய்வன சங்கப்பாடல்களே.”

இம்மேற்கோளால் சங்கநூல்களில் பண்டிதமணியார்க்கு இருந்த தனியன்பு வெளிப்படை. யாரொருவர் சங்க நூற் பற்றுடையவராக இருக்கின்றாரோ, அவரே நல்ல தமிழ்ப்பற்றினர் என்பது என் துணிபு.

அரசர் அண்ணமலையார்  தமிழிசைப் பேரியக்கம் தொடங்கியபோது உறுதுணையாக இருந்த தலைவர்களுள் பண்டிதமணியும் ஒருவர். இசைப்பாடல்களும் இசை நூல்களும் வெளிவரத் துணைசெய்தவர். தமிழிசையின் தொன்மையினையும் தனித்தன்மையினையும் பல மேடைகளில் எடுத்துக்காட்டி நிறுவியவர். இசைக்குரிய பாடல்கள் எம்மொழியில் இருக்கவேண்டும் என்ற வினா பொருளற்றது என்பது கதிரேசனாரின் கருத்து. மக்கட்குரிய நாட்டு மொழியிலே இருப்பதுதான் இயல்பு என்று அறிவுறுத்தும் பண்டிதமணி, தாம் ஒன்று வினவுகின்றார். இசை கேட்கும் மக்களிற் பலர் தம் தாய்மொழிப் பாடற்கருத்துக்களையே உணரும் நிலையில்லாதிருக்கும்போது, சிறிதும் பொருள் விளங்காத வேற்று மொழிப் பாடல்கள் என்ன பயன் விளைக்கும்? ஓர் இசை அரங்கிற்குச் சென்றிருந்த பண்டிதமணி, தமிழ்ப்பாடல்களில் ஏதேனும் ஒன்று பாடலாகாதா என்று வேண்டியபோது, இசையரங்கை  நடத்திய பெருமகனார் இவரை, அரங்கு மரபு அறியாதவராகக் கருதினாராம், விளங்காத பாடல்களையெல்லாம் முதலில் நெடுநேரம் பாடிவிட்டு, அவர்கள் சோர்ந்த நிலையில், விளங்கும் சில தமிழ்ப் பாடல்களை ஏனோ தானோ என்று பாடி முடிப்பதே கேவலமான அரங்கு மரபு என்று பண்டிதமணி, இசையின்பம் என்ற கட்டுரைக்கண் நகைபடக் கூறியுள்ளார்.

        “ இன்ப வுணர்ச்சி இனிய தமிழிசைக்கே

            என்பது உணர்மின் இருநிலத்தீர்

என்பது பண்டிதமணியின் ஆணை.

மேற்காட்டியவற்றிலிருந்து பண்டிதமணியின்  அசையா அதிராத் தூய தமிழ்க்கொள்கையும், தமிழுக்கே தன் அன்பினை முழுதும் வைத்த தனிப் பற்றும், சங்கத்தமிழுக்கே ஏற்றம் கொடுத்த தனி  நேர்மையும் எல்லாம் பெறப்படும். பண்டிதமணியின் மொழிக்கொள்கையை அறுதியிட்டுக் கூறப்புகின், தமிழ்ப்பற்றினர், வடமொழி மதிப்பினர் என்று முடிக்கலாம். பற்று என்பது, மொழியாயினும் சமயமாயினும் ஓரிடத்துத்தான் இருக்க முடியும் என்பதும், மற்றை மொழிகளையும் மற்றைச் சமயங்களையும் பொதுப்பார்வையாக மதிக்க வேண்டும் என்பதும் அவர் தம் நூலில் நாம் காணத்தகும் முடிபு. இதனால், பண்டிதமணி பிறர் போல் வடமொழி வெறுப்பினர் அல்லர் என்பது தெளியலாம்.  வடமொழியிலிருந்து புதிய செய்திகளையும், நாடகம், அரசியல் போன்ற புதிய துறை நூல்களையும் தமிழுக்கு வழங்கிய வடமொழி வள்ளல் அவர். காதற்கடிதங்கள் என்ற இலக்கிய கட்டுரையும், ஞானத்தின் திருவுரு என்ற சமயக்கட்டுரையும், திருவாசகக் கதிர்மணி விளக்கமும் அவர் தம் வடமொழியறிவால் புதுப் பொலிவு பெற்றுள்ளன.  மண்ணியல் சிறுதேர் என்ற அழகிய தொடர், பண்டிதமணி தமிழ்த் தெய்வத்துக்குப் படைத்தளித்த புதுக்காணிக்கை. பிற மொழி கற்ற தமிழர்க்குப் பண்டிதமணி காட்டிய எழுத்து நெறிகள் பலப்பல. மணிமிடை பவளம் அவர் நெறியன்று. தமிழ்க்கட்டுரைக்கிடையே வடமொழிச் செய்யுள் மேற்கோளாகக் காட்ட வேண்டின் அதனைத் தமிழ்ச் செய்யுளாகத் தாமே ஆக்கித்தருவது அவர் தம் எழுத்து நெறிகளில் ஒன்று.

துசியந்தனுக்குச் சகுந்தலை நங்கை வரைந்த வடமொழி காதற்கடிதத்தை,

   “ நின்னுடைய உள்ள நிலையறியேன் நின்பாலே

    மன்னுடைய வேட்கை மலிவுற்றஎன்னுறுப்பைக்

    காமன் இரவும் பகலும் கனற்றுகின்றான்

    ஏம அருளில்லா இவன்.”

என்று வெண்பாவாகப் படைத்த நெறி பின்பற்றுதற்கு உரியது.

பிற நாட்டுச் சாத்திரங்கள் நல்ல தமிழில் பெயர்த்துத் தமிழை வளப்படுத்த வேண்டும் என்பது பண்டிதமணியின் அறவுரை . வடமொழியில் உள்ள அளவை நூல்கள், சுவையாராய்ச்சி நூல்கள், பொருணூல்கள், அறிவு நூல்கள் தமிழிற்கு வருதல் வேண்டும் எனவும், இதனைச் செய்தற்கு வடமொழியொடு தமிழ் பயின்றார் பலர் வேண்டும் எனவும், வடமொழி மூல நூல்களை உள்ளவாறு மொழிபெயர்த்துக் கொண்டபின் அவற்றின் நலம் தீங்குகளை ஆராய வேண்டும் எனவும் அவர் எடுத்துரைப்பர். பண்டிதமணியின் பின்வருங்கருத்து அவர்தம் நல்லுளத்துக்கு ஒரு கரி.

 

   “எத்தனையோ ஆயிரங் காவத தூரங்களுக்கு அப்பாலுள்ள ஆங்கில தேயத்தார், தம் மொழிகளில் இவ்வரிய வேதாகம உபநிடதங்களைப் பொருட்படுத்தி மொழிபெயர்த்துப் பலவகைச் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர்தொன்று தொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டு வரும் நம் தமிழ் மொழியில் இதுகாறும் அவை வெளிவராமை ஒரு குறையேயாம். தெளிவான தமிழ் உரை நடையிற் பல்வகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவை வெளிவரல் வேண்டும்.”

 

‘தொன்று தொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டு வரும் நம் தமிழ் மொழியில்’ என்ற தொடரிலிருந்து, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவைப் பண்டிதமணி எப்படி மதிக்கிறார் என்பது வெளிப்படை.  தமிழில் இயல்பான பற்றுடைய பண்டிதமணியார்க்குப் பாரத மொழிகளில் ஒரு பெருமதிப்பு உண்டு. “நம் பரத கண்டத்து மொழிகளையெல்லாம் நிலை பிறழாது என்றும் திருந்திய முறையிற்றிகழ்தல், மூல நூல்களெல்லாம் செய்யுள்களால் ஆக்கப்பட்டமையானேயாம்” என்று இப் புலவர் பெருமகன் வடித்தெடுத்த கருத்து மொழிவளர்ச்சியுடையார்தம் சிந்தனைக்கு உரியது.  தமிழ்ப்பற்றும், தமிழ் வளர்ச்சிக்கென அயல்மொழி உறவும், தூய தமிழ்ச்சொற்களால் ஆய உரைநடையும், தூய மொழிபெயர்ப்பும், செல்வர் தம் செல்வம் தமிழுக்குப் பயன்பட வேண்டும் என்ற அறிவுரையும் மொழி பற்றிய பண்டிதமணியங்கள் ஆகும்.

 

 

  “நமக்குரிய நாட்டுமொழியைப் புறக்கணித்து வேற்று மொழியில்

        எத்துணை மேற்சென்றாலும் மொழியறிவாற் பெரும் பயன் முற்றும் 

        பெற்றதாக மாட்டாது. இந் நிலையில் நாம் இன்றியமையாது பயில

        வேண்டுவது நமக்குரிய தமிழ் மொழியேயாகும்.

 

       —— பண்டிதமணியம்

உரைநடைக் கோவை

                     உரைநடைக் கோவை

                      முதற் பகுதி

                   சமயக் கட்டுரைகள்

                  மகாமகோபாத்தியாய

               முதுபெரும் புலவர்   சைவ சித்தாந்த வித்தகர்

          பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்

 

தேனினும் இனிய செந்தமிழ் மொழியின் தீஞ்சுவையில் ஈடுபட்டுப் பயின்று பல்லாண்டுகளாக யான் அறிந்துவந்த உண்மைகளை, விரும்பிய அன்பர்களின் அவைக்களங்களில் சொற்பொழிவுகளின் மூலமாகவும், கட்டுரைகளின் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளேன். அவற்றுள், மதுரைத் தமிழ்ச் சங்கம், பூவாளூர்ச் சைவ சித்தாந்த சங்கம், சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாஜம் இம் மூன்று பேரவைகளிலும் முறையே பேசிய சன்மார்க்கம், சிவபிரான் கருணையும் சீவர்கள் கடமையும்சைவசமய விளக்கம் என்னும் சொற்பொழிவுகளும், கரந்தைக் கட்டுரையில் வெளிப்படுத்திய ஞானத்தின் திருவுரு என்னுங் கட்டுரையும் புதிதாக எழுதிய அன்பின் திருவுரு என்னுங் கட்டுரையும் ஆகிய இவ்வைந்தனையும் தொகுத்து உரைநடைக் கோவை முதற்பகுதியாகவும், ஏனைய இலக்கியக் கட்டுரைகள் பலவற்றையும் தொகுத்து இரண்டாம் பகுதியாகவும் என் அன்பர்கள் விருப்பின்படி வெளியிடலானேன். …

 

 

உரிமையுரை

 

செந்தமி ழமிர்தத் திவலையும் உலகிற்

றிகழ்வட மொழிமணி சிலவும்

முந்துறப் பெறுதற் கறிவொளி யுதவி

முன்னுமென் சிறுபரு வத்தே

நந்தலில் புகழை நிறுவியெம் இறைவன்

நல்லடி யடைந்தவென் அரிய

தந்தையின் அருளை நினைவுறீஇ யுருகுந்

தன்மைக்கீ தறிகுறி யாமால்.

கற்றுவல்ல பெரியோர் அவைகளில் சிறியேனாகிய யானுங் கலந்து பயன் எய்துதற்குரிய நல்லறிவு பெறுதற்குக் காரணிகராகிய என் அரிய தந்தையார் அவர்களின் அருட்பெருக்கை நினைந்து நினைந்து உருகுதற்கு அறிகுறியாக இந்நூலை வெளியிட்டு அவ்வருட்கு இதனை உரிமைப் படுத்துகின்றேன்.

மகிபாலன்பட்டி

16 – 04 – 1941                                                                                                               மு.கதிரேசன்

 

 

                உரைநடைக் கோவை

 1.  சன்மார்க்கம்

அன்புமிக்க ஐயன்மீர் !

பரமகருணாநிதியாகிய சிவபெருமான் திருவருளால் மிக அரிதிற் கிடைக்கப்பெற்ற மக்கள் யாக்கையுடையாரெல்லாரும் தம் பிறப்பானெய் தற்பாலனவாகிய உறுதிப்பயன்களை யெய்துதற்கு இன்றியமையாச் சாதனங்களாகவுள்ளவை மொழியறிவும், சமய ஞானமுமேயாம். இவ்விரண்டனுள் மொழியறிவு சமயஞானத்தைத் தருதற்குரியதாகலின், முதலில் மொழி வளர்ச்சி கருதி அதற்கு வேண்டுவன செய்தல் அவ்வம் மொழியாளர்க்குரிய முக்கிய கடைமையாகும். இவ்வுண்மை யுணர்ந்தே  செந்தமிழ் வளங்கெழுமிய இம் மதுரை மாநகரின் கண்ணே முன்னர் முதலிடைகடை யென்னும் முச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த தெய்வப் பாண்டியர்களனைவரும் தம் எண்ணத்தின் பயனாக ஓருருக் கொண்டு தோன்றியாங்கு இராமநாதபுரத்தில் தமிழ் மக்கள் செய்த தவப்பயனாக உதித்தவர்களும், கற்றுத் துறைபோய நற்றவக் குரிசிலுமாகிய திரு.பொ.பாண்டித்துரைசாமித் தேவரவர்கள் முற் சங்கமுறை வழுவாது இச்சங்கத்தை நிறுவினார்கள்.

இனி, இச்சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவேற்றக் கொண்டாட்ட நிமித்தங்கூடிய இப் பேரவையிற் படித்தற்குரியதாக ஒரு கட்டுரை எழுதிவர வேண்டுமென்று இதன் தலைவரவர்கள், ஆணை தந்தனர். அவ்வாணை கடவாது ஈண்டுப் படித்தற்குரிய பொருள் யாதெனச் சிந்திக்கும் பொழுது, செந்தமிழ் மொழி வளர்ச்சி கருதிய கட்டுரையே யுரியதாயினும், அம்மொழியின் முதலாசிரியர் சிவபெருமானேயாதலானும், அப்பெருமானை யுணர்தற்குரிய நெறி சைவ சமயமேயாதலானும், இவ்வுண்மை தெளிந்தே இஞ்ஞான்றும் இச்சங்கத் தலைவராகிய திரு தேவரவர்கள் பல சைவப்பிரசங்கங்களால் இச்சமய வளர்ச்சியோடு மொழி வளர்ச்சியையுங் கருதி மேற்கொண்டமையானும், சைவசமயத்தைப் பற்றிய கட்டுரையொன்று எழுதிப் படித்தல் பொருத்தமாகுமென்று தோன்றியமையால் “சன்மார்க்கம்” என்னும் இப்பொருளைப்பற்றி என் சிற்றறிவிற் கெட்டியவாறு எழுதத் துணிந்தேன். இங்ஙனம் பெரியாராணை கடவாமை யொன்றே கருதிக் கூறப்படும் இப்பொருள், வேற்றுலோகக் கலப்பால் வேறுபட்ட பொன் நெருப்பைச் சார்ந்து அக்குறை யொழியப்பெற்றுத் தூய்தாதல்போல், என் அறியாமையானேர்ந்த குற்றங்களை உங்கள் அறிவொளியானொழித்து மகிழ்விக்குமென்னுந் துணிவு பெரிதுடையேன்.

ஆன்றோர்களே !

அறிவின் மிகுந்த பெரியார் வகுத்த இருதிணைப் பகுதியுள்  அஃறிணையொழித்து உயர்திணைப் பகுதியின்பாற் பட்ட உயிர்கள் மனவுணர்வுடைமையான் மேலாயவென்பது வெளியாம். அவ் வுயர்திணையுட்பட்டார் மக்கள், தேவர், நரகர் என மூவகையினராவர் என்ப இயனூலாசிரியர். இம்மூவருள்ளும் தேவர்கள் நல்வினைப்பயனொன்றே நுகர்ந்து அந் நுகர்ச்சியிறுதிக்கண் அத் தெய்வ சரீரமொழிய மீண்டு வினைக்கேற்ற புவனபோகதநுகரணங்களைக் கொள்வர். நரகர் தீவினைப் பயனொன்றே நுகர்ந்து அதனிறுதிக்கண் பிறவினைப்பயன்களைத் துய்த்தற்கு அவ் வினைக்கேற்ற யாக்கை முதலியவற்றைக் கொள்வர். தேவர்கள் நல்வினைப்பயனாகிய இன்பத்தைத் துய்க்குங்கால் அதற்கெதிராகிய துன்பம் இனைத்தென்றுணரப் பெறாராதலின், அவ்வின்பத்திலிறுமாந்து அதனையே நித்தியமென்று கருதி, அக்கருத்தாற் பல வினைகளையும் ஈட்டுவர். நரகர் தீவினைப்பயனாகிய துன்பத்தைத் துய்க்குங்கால் அதன் கண் வெறுப்புத்தோன்றி அதற்கெதிராகிய சிற்றின்பத்தில் அவா மிக்குடையராய் அதற்கு வேண்டிய செயல்களைச் செய்வர். இவ் விருதிறத்தினரும் “வினைப்போகமே யொரு தேகங் கண்டாய்” என்றபடி நல்வினை தீவினைகள் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தம்மைப் பிணிக்க அவற்றிற் கீடாகப் பல பிறப்புக்களையும் எய்துவரென்பதொருதலை. தேவருட் சிலர் வீடடைதற்குரியராயிருப்பினும் பெரும்பான்மை பற்றி இங்ஙனம் கூறப்பட்டது. இந்நிலவுலகத்துள்ள மக்கட்பிறப்பினராகிய நாமோ நல்வினை தீவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களைக் கலந்தனுபவிக்கும்படி இறைவனால் கட்டளை இடப்பட்டிருக்கின்றோம்.

நாம் துன்பத்தைத் துய்க்கும்பொழுது அதன்கண் வெறுப்புத் தோன்றி அதற்கெதிராகிய சிற்றின்பத்தை விழைகின்றோம். உடனே அத்துன்பநுகர்ச்சி நீங்க அவ்வின்பம் தலைக்கூடுகின்றது. அதனை மகிழ்ந்தனுபவிக்குங்கால் அதுவும் உடனே நீங்கப் பின்னருந் துன்பந் தொடர்கின்றது. அப்பொழுது, ஆ! சற்றுமுன்னரனுபவித்த இன்பம் எங்கே? நிலையிலதாயொழிந்ததே! அதனையே பொருளென்று நம்பியிருந்தோமே! அதனை நுகரும் பொழுது நம் பெண்டிர் மக்கள் சுற்றத்தார் நண்பர் நம்மிடத்து வைத்த அன்பு அது நீங்கியபொழுது வேறுபட்டிருக்கின்றதே! அவர்கள் அன்பு செய்தற்குரித்தாக நம்மிடத்து முன்னுள்ள செல்வம் யாண்டுச்சென்றது? ஈதென்னை மாயம்! நல்வினைப் பயனுந் தீவினைப் பயனும் அழிதன்மாலையின வாயின் அழியாது நுகர்தற்குரிய இன்பம் யாண்டுள்ளது? அதனைப் பெறுதற்கு முயறலேயன்றி வேறு முயற்சி இது பொழுது செய்தற்கு அவகாசமில்லையே! என்றின்னோரன்ன ஆராய்ச்சியுண்டாம். அவ்வாராய்ச்சியின் வாயிலாக நாம் எய்தவேண்டிய அழிவிலாப் பேரின்ப மயமான வீட்டை யெய்தலாம். அங்ஙனம் அடைதற்குக் கருவியாகவுள்ளது இம்மக்கட்பிறப்பேயாதலின், மற்றெல்லா யாக்கையிலும் பெறுதற்கரியது இம்மக்கள் யாக்கையே யென்பர் பெரியார்.

இனி, இவ்வரிய மக்கட்பிறப்புடையாரெல்லாரும் பரம்பொருளை யெய்திப் பேரின்பம் நுகர்தற்கு வாயிலாக அவ் விறைவனாற் காட்டப்பட்ட  நெறிகள், வேதாகமங்களிற் பற்பலவுள்ளன. அந் நெறிகளெல்லாம், பன்முகமாக ஒழுகிச்செல்லும் பல சிற்றாறுகளெல்லாம் ஒரு பேரியாற்றிற் கலப்ப, அஃது அவ்வெல்லாவற்றையுந் தன்னுட்கொண்டு நேரே கடலைச் சார்தல்போல, முடிவில் ஒரு பெரு நெறியைத் தலைப்பட, அந்நெறியே தன்னைச் சார்ந்தாரைப் பரம்பொருளிடத்துச் செலுத்துதற்குரியதாகும். அதுவே தன்பால் நேரிற்போந்தாரைப் பிறவழிகளிற் புகுத்தித் துன்புறுத்தாது, செல்லுந்தோறும் செல்லுந்தோறும் அளவிலா இன்பமுறுத்தி முடிவில் ஒருதலையாக வீட்டின்பத்திற்றலைப்படுத்துவதாகும். அப்பெரு நெறியே சன்மார்க்கமென்று  கூறற்குரியதாகும். சன்மார்க்கமென்னும் வட சொல்லை உண்மை நெறியெனத் தமிழிற் பெயர்க்கலாம். அவ்வுண்மை நெறியிற் சென்றாரே, அழிவின்றி எஞ்ஞான்றும் ஒரே படித்தாயும், பெறுதற்குரிய அதிகார முடையார்க்கேயன்றி யேனையோரானெய்தப்படாததாயும், சார்ந்தாரைப் பிறபொருளிடத்துச் சிறிதும் பற்றின்றியிருப்பச் செய்வதாயும் பேரின்ப மயமாயுமுள்ள உண்மை நிலையை யடைதற்குரியராவர். இனி, உண்மை நிலையை அண்முதற்குரிய நெறியே உண்மை நெறியென்று தெளிந்தமையான் முதலில் உண்மைநிலையின்னதென்று ஆராய்ந்து பின் அந் நெறியிற்படர்வேன்.

இவ் வுலகத்துத் தோன்றிய ஒருவன் சிறிது திருவருள் விளக்கம் பெற்றவுடன் சில ஆராய்ச்சியிற் றலைப்படுவன். அங்ஙனம் ஆராயப்புகும் பொழுது முதலில் நான் யார்? எனக்கு இவ்வுடல் வந்தவாறென்னை? என்னோடொத்த பிறப்புடையார் பலரும் பலவிதத் தோற்றமுடையராதற் கேதுவென்னை? நான் இன்பநுகரும் பொழுது மற்றொருவன் துன்பநுகர்கின்றனனே! ஒருவன் நீண்டநாளிருக்கின்றான்; மற்றொருவன் மிக்க இளமையில் இறக்கின்றனனே! ஒருவன் மிக்க செல்வனா யிருக்கின்றான் மற்றொருவன் மிக்க வறியனாயிருக்கின்றனனே! என்றின்னோரன்ன ஆராய்ச்சி நிகழும். இவ்வாராய்ச்சியை இடைவிடாது ஒருவன் மேற்கொண்டு, கற்றுணர்ந்த பெரியோரையடுத்து அவர்முகமாக உண்மை நூல்களைக் கேட்டுத் தெளியப் புகுவனாயின், இவ்வேறுபாட்டிற்கெல்லாங் காரணம் இருவினையாமென்பதூஉம் அவ்வினைகளிப்பிறப்பிற் செய்யப்பட்டனவோவென்று ஆராயும் பொழுது இவ்வளவு நுகர்ச்சிக்கேற்ற வினைகளையொருங்கே செய்யவில்லையென்பது அநுபவத்திற் றெரியுமாதலின், இவ்வளவுஞ் செய்தற்கு முன்னொரு பிறப்பு இன்றியமையாது இருத்தல் வேண்டுமென்பதூஉம், இங்ஙனம் முற்பிறப்பிற் செய்த வினைகளே பிற்பிறப்பிற்குக் காரணமாயின், இப்பிறப்பிற் செய்யப்பட்ட வினைகள் காரணமாக இன்னும் பலபிறவிகள் நேருமென்பதூஉம், இங்ஙன முணர்ந்து வைத்தும் பின்னரும் அவ்வினையீட்டத்தி லுள்ளஞ்சேறல் எதனாலென்பதூஉம் பிறவுமாகியவுணர்ச்சிகளுண்டாம்.. அவ்வுணர்ச்சி முதிர்வின்கண் இவற்றிற்கெல்லாங் காரணமாகிய வித்தாகவுள்ளதும், ஆன்மாக்களை யநாதியே பற்றி நிற்பதும் ஆகிய மூலமலமெனப்படும் ஆணவம் ஒன்றுண்டென்னுந் தெளிவுண்டாம். ஆகவே அவ்வாணவமாகிய வித்தினிடத்துள்ள ஆற்றல் குன்றும்படி வறுத்தாலொழிய இப்பிறவிமுளை கெடாதென்பதூஉம், அம்மலம் செம்பிற் களிம்புபோல்வதொன்றென்பதூஉம் போதரும். செம்பு தன்னைச் சார்ந்த களிம்பைத் தானே போக்குதற்குரிய ஆற்றலுடையதன்று. களிம்பும் அதனைத் தானேவிட்டு நீங்கும் இயற்கையுடையதன்று. அக்களிம்பை நீக்குதற்குரிய மருந்தொன்றும், அம்மருந்தையறிந்து சேர்த்துப் பொன்னாக்கு முறை தெரிந்த அறிஞன் ஒருவனும் வேண்டும். அது போல, அநாதியே பற்றிய ஆணவமலவாற்றல் உயிரை விட்டுத் தானே நீங்குதலுமின்று. உயிரும் அதனையொழித்தற்குரிய ஆற்றலுடையதன்று. அவ்வுயிர்க்கு மாயாமலத்தினின்றும் அஃதீட்டிய வினைக்கேற்றவுடலைக் கொடுத்துக் கன்மப்பயனை நுகர்வித்து ஒழிந்த பின்னர்த் தன் திருவடி நீழலிற்சேர்த்து வீட்டின்பத்தைத் தருதற்குரிய இறைவன் ஒருவன் வேண்டும். ஆனால், முன்னுள்ள ஆணவமலவழுக்கைப் போக்கற்குப் பின்னும் இருமலங்களைக் கருவியாகக் கோடல் பொருந்துமோவெனின், வெள்ளிய ஆடையிலுள்ள அழுக்கைப் போக்குதற்கு உவருஞ்சாணியுமாகிய வேறிரண்டு பொருள்களைச் சேர்த்து எல்லாவற்றையும் ஒருங்கே கழுவுதல் வண்ணானிடத்துக் காட்சியிற் றெரிந்திருக்கின்றே மாகலின் பொருந்துமென்க.

இனி, அம் மலவாற்றல் இறைவன் சீற்சக்தியாலொழியப்பெற்று இறைவனுடன் இரண்டறக் கலந்து சலிப்பின்றி யனுபவிக்கும் பேரின்ப நிலையே உண்மை நிலையெனப்படும். இந் நிலையிலுள்ள இறையுயிர்களின் சிறப்பு இயைபையே அத்துவித மென்ப. இங்ஙனமின்றி அத்துவிதம் என்னும் சொற்கு ஏக மென்று பொருள் கொள்ளுவாரும் உளரேயெனின், அஃது ஏகமென்னாது இரண்டற்றது என்னும் பொருள்பட அத்துவிதம் என்று உய்த்துணர வைத்தமையாற், பொருந்தாதென்க. ஒரு வண்டு தேனிறைந்த மலரில் வீழ்ந்து அம்மதுவைத் தேக்கறவுண்டு களித்து அதன்கட் டோய்ந்திருக்கும்பொழுது தான் வேறு மது வேறு என்னும் வேற்றுமையுணர்வின்றிக் கிடத்தல்போல, ஆன்மா இறைவனிடத்துப் பேரின்ப நுகர்ச்சியிற் றலைப்பட்டுத் தான் ஒரு பொருளென்னும் வேற்றுமையுணர்வின்றியொன்றுபட்டிருக்கும். அந் நிலையே அத்துவித நிலையாகும். இதனைக் கட்டு நிலையிலுள்ள நம் அனுபவத்தானு முணரலாம். எங்ஙனமெனின், இந்நிலையில்  நம்மைப் பிணித்திருக்கும் ஆணவமலத்தைப் பிரித்துணரவுங் கூடவில்லை. அங்ஙனங் கூடாமைபற்றி அம் மலம் ஆன்மாவாகிய நாமாவேமெனின், ஒவ்வோரமயம் நிகழுந்திருவருள் விளக்கத்தால் அதனாற்றல் சிறிது குன்றியபொழுது நமக்கு இறைவனைப் பற்றிய அறிவாராய்ச்சி தலைப்படக் காண்கின்றேமாகலின், நாம் அம் மலமாதலும் இல்லை. இதனால், ஆன்மா வேறு தனிப் பொருளென்பதூஉம், அம் மலம் ஒரு தனிப் பொருளென்பதூஉம் தெளிந்தும், இங்ஙனம் அறியக்கூடாமலிரண்டும் ஒன்றுபட்டிருக்கும் இந் நிலையும் ஓரத்துவித நிலையாகும். இதனை

“ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்

தாணுவினோ டத்துவிதஞ் சாருநா னெந்நாளோ”

என வரும் தாயுமான அடிகள் உபதேசத்தானுமுணர்க. இங்ஙனமாகிய ஆணவவாற்றலைக் கெடுத்து இறைவனுடனியைந்து நிற்றலையே உண்மை நிலை யென்று கூறலாம். இவ்வுண்மை நிலை யெய்திய ஆன்மா மீண்டு பிறத்தற்குக் காரணமாகிய மலத்தொடர்பின்மையால் அவ்விறைப் பொருளோடு இரண்டறக்கலந்து பேரானந்தப் பெருவாழ்விலே நிலை பெற்றிருக்கும்.

இத்துணையுங் கூறியவாற்றால், உண்மை நிலை யின்ன தென்பது ஒருவாறு தெளியப்பட்டதாகலின், இனி, அந் நிலையை யடைதற்குரிய உண்மை நெறியாகிய சன்மார்க்கம் இன்னதென்பதை யாராய்வேன். உண்மை நிலை கூறுங்காற் றெளியப்பட்ட நித்தியப் பொருள்கள் மூன்றாகும். அவை, இறை யுயிர்  கட்டு {பதி  பசு  பாசம்} என்பனவாம். அவற்றுள் கட்டு எனப்படும் பாசத்தை முற்கூறியபடி மூன்றாகவும், வேறொரு வகையா னான்காகவுங் கொள்வர். இதனை,

            “ஏக னநேக னிருள்கரும மாயை யிரண்டு”

என்பதனானுமறிக. இனி, ஈண்டுக் கூறப்பட்ட பதிப்பொருள் யாது?  அதனுண்மை எவ்வளவையாற் றெளியலாம்? என்னும் ஆராய்ச்சியிற் றொடங்கினால், முடிவில் அப்பொருள் சிவமும் அதனை முதலிலறிதற்குரிய அளவை கருதலளவையுமா மென்பது வெளியாம். அளவைகள் பலவற்றுள் காட்சி உவமான முதலிய அளவைகளாற் சிவபிரானை யறிதல் கூடாது. என்னை, அவர் மாற்ற மனங்கழிய நின்ற மறையவராகவும், எல்லாந்தாமாய் என்றும் அழிவின்றி நிறைந்த உண்மை யறிவின்ப வுருவினராயும் பதி ஞானத்தானன்றிப் பாசபசு ஞானங்களானறியப்படாதவராகியுமுள்ளாராதலின், இனி, உரையளவையாகிய வேதாகமங்கள் அப் பதியினாலருளப்பட்டன வாகலின் பிரமாணங்களாமேயெனின்; பதியுண்மை தெளிந்த பின்னன்றே பதிவாக்குப் பிரமாணமாகும். அங்ஙனந் தெளிதற்கு முன்னர் எங்ஙனம் பிரமாணமாமென்று வினாயினார்க்கு விடை கூறுதலிடர்ப்படுமாதலின், முதலிற்கருதலளவையானே இறைவனையறிதல் வேண்டும். எங்ஙனமெனின், அவயவப் பகுப்புடையனவாய்க் காரிய வடிவமாகவுள்ள பலவகையான இவ்வுலக அமைப்புக்களை நோக்கினால் இவை ஒருவனாலாக்கப்பட்டன வென்பது வெளியாகும்.

குட முதலிய காரியப் பொருள்கள் ஒரு கருத்தாவாற் செய்யப்பட்டன வென்பது காட்சியளவையிற் றெரிந்திருக்கின்றே மாகலின், குடத்தின் றோற்றத்திற்குக் குலாலன் நிமித்த காரணமும், மண் முதற் காரணமும், தண்டசக்கரங்கள் துணைக் காரணமுமாதல்போல: இவ் வுலகத் தோற்றத்துக்குச் சிவபெருமான் நிமித்த காரணமும், மாயை முதற்காரணமும், சிவசக்தி துணைக் காரணமுமாகும். இங்ஙனம் வழி அளவையால் துணியப்பட்ட கடவுள் பின்னர் நூலளவையால் நன்கு தெளியப்படுவர். நூல்களுள் முதனூல்களாகவுள்ளவை வேத சிவாகமங்களேயாம். இவற்றை யருளியவர் பரமசிவனே யாவர். இதனை, “சர்வவித்தைகளுக்கும் ஈசானர் கருத்தா” எனவும் “வேதம் பரம்பொருளினாற் சுவாசிக்கப்பட்டது” எனவும் வரும் சுருதிகளானும்,

“வெவ்வேறு வகையினவாகிய பதினெட்டு வித்தைகளுக்கும் சூலபாணியாகிய சிவபிரானே முதலாசிரியராவர்” என்னும் வாயுசங்கிதையானும் உணர்க. இவ் வேத சிவாகமங்களிரண்டும் முடிவில் ஒரு பொருளனவேயாம். ஒரு பொருளனவாக இருவிதநூல்களேன் செய்தல் வேண்டும்.? ஒன்றே போதாதோ வெனின், முன்னது உலகத்தின் மக்களறிவிற் கேற்றவாறு பல தேவர்களையும் பரம்பொருளென உபசாரமாகக் கூறித் தூலாருந்ததி நியாயமாகக் காட்டி அவரை நல்வழிப்படுத்தப் பொதுவாகவும், பின்னது மல பரிபாக மெய்திய பக்குவான்மாக்கள் பொருட்டுச் சிறப்பாகவும் அருளப்பட்டனவாம். வேதம், பொருள் பலபடத் தோன்றுஞ் சூத்திரம் போலவும், சிவாகமம் அதனை யங்ஙனமாக வொட்டாது தெளித்துரைக்கும் விரிவுரை போலவுஞ் சிவபெருமானாலருளப்பட்டன வென்பர் பெரியார். அவ்விரண்டனுட் சிவாகமம் வெளிப்படையாகச் சிவனே பரம்பொரு ளென்று கூறுதலின் அதனைவிட்டுப் பொதுவகையாகக் கூறும் வேதத்தின் அந்தரங்கத்தைச் சிறிதாராய்வேன்.

வேதத்திற் சிவபிரான், பிரமம், பசுபதி முதலிய பதங்களானும் சிவபதத்தானுங் கூறப்படுவர். கேநோபநிடதத்தில் இயக்கவுருவந் தாங்கி வந்த பரமசிவனை யறியாது மயங்கி இந்திரனை நோக்கி அப்பெருமானுடைய சக்தியும், இமவான் புதல்வியுமாகிய உமையம்மையார் “இவ்வியக்கன் பிரமம்” என்று கூறினமை தெளியப்படுத்தலானும் பிறவற்றானும் பிரமம் என்னுஞ் சொல் சிவபிரானை யுணர்த்தலறிக. பிரமபதம் சிவனை யுணர்த்தல் ஆண்டு வெளிப்படையாக வின்மையால் வேறு தெய்வத்தைக் குறிக்குங் கொலோ வென்று ஐயுறுவார்; அஃதுமையாற் கூறப்பட்டமையானும், இச்சரித்திரத்தைப் புராண வாயிலாக விளக்கிய வியாசமுனிவர் இயக்க வுருவந்தாங்கி வந்தவர் சிவபெருமானே யாவர் என்று தெளிவுற விளக்கமாகக் கூறுதலானும் மலைவின்றித் தெளிவாராக.

இனி, வேறு தேவர்களைப் பற்றியும் வேதத்தில் பிரமபதம் கேட்கப்படுகின்றதாலோ வெனின்: தேவர்களேயன்றி அன்ன முதலிய சடப்பொருள்களும் பிரம்மென்று கூறப்படுகின்றன வாதலானும், அவையெல்லாம் உலக வின்பத்தில் விருப்புற்ற ஆன்மாவை அது விரும்பிய தொன்றைப் பெரிதாகக் கூறி அவ்வளவிலிழுத்துப் பின் அதனை யுவர்ப்பித்து மேன்மேற் கொண்டு செலுத்தற்குப் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் செய்த உபாயமாதலானும் உபசாரமேயாமென்க.

அவை யுபசார மென்பதும் சிவனைப் பற்றிக் கூறியது உண்மை யென்பதும் எதனாற் பெறுதுமெனின்; எஜூர் வேதத்துள்ள சமக மந்திரங்கள் திருமால், பிரமன் முதலிய தேவர்களை அன்னத்தோடு சேர்த்து ஈயப்படும் பொருளாகக் கூறினமையானும், சிவபெருமான் ஈயுந் தாதாவாகலினவரை அங்ஙனங் கூறாமையானும், மும்மறைகளின் நடுவண் திருவைந்தெழுத்தும் அவற்றின் நடுவண் சிவசப்தமும் வேதங்களின் இருதயத்தானத்தில் விளங்குதலானும், பிறவற்றானும் பிரம விலக்கண முற்றுஞ் சிவபிரானுக்கே உரியனவாதல் தெளியலாம்.

எஜூர் வேதத்தில் “அந்நியர்களாற் சாதிக்கமுடியாத திரிபுரத்தை வெற்றிகொண்டு உலகத்தைக் காத்தமையாற் பசுபதி நீயே; யாமெல்லாம் பசுக்கள் என்று அங்கீகரித்தனர் தேவர்கள்” என்பது கேட்கப்படுதலானும், “உமாபதிக்கு வணக்கம், பசுபதிக்கு வணக்கம்” என்னுஞ் சுருதியுண்மையானும், ஏனைய தேவர்களெல்லாம் பசுக்களென்பதும், சிவபிரானொருவரே பசுபதியென்பதும் வெள்ளிடைமலைபோல் விளங்குவனவாம். இங்ஙனம் வேதாகமங்களால் துணியப்பட்ட பரம்பொருளாகிய சிவபெருமானை அநுமான வளவையானுணர்தலும், அப்பதிப்பொருளோடு பசு பாசங்களி னுண்மையைத் தெளிதலும், அத்துவித சப்தத்திலுள்ள அகரத்திற்கு இன்மை மருதலைப்  பொருள்களை யொழித்து அன்மைப் பொருள் கோடலும் பிறவுஞ் சைவ சித்தாந்தத்திலுள்ள தெளிபொருள்களாகக் காணப்படலான், சைவ சமயமே சன்மார்க்கமென்னுஞ் சொல்லாற் கூறுதற் குரிமை யுடையதாகும். வீடு என்பது எல்லாப் பொருட் பற்றுக்களையும் விடுதலே யாதலானும், அங்ஙனம் விட்டபின் மீண்டு பிறத்தலின்மை யானும், அப்பிறப்பின்மையை ஆன்மாக்களுக்குதவும் பதிக்குப் பிறப்பிறப்பின்மை இன்றியமையாதென்பது யாவரானும் அங்கீகரிக்கற்பாலதே. இவ்விலக்கணம் “எல்லார் பிறப்பு மிறப்புமியர் பாவலர்தஞ், சொல்லாலறிந்தேநஞ், சொணேசர் – இல்லிற்பிறந்த கதையுங்கேளேம், பேருலகில் வாழ்ந்துண், டிறந்தகதையுங் கேட்டிலேம்” என்னும் பிரமாணப்படி சிவபிரானிடத்தன்றிப் பிற தேவரிடத்தின்மையானும், அவரெல்லாம் பிறந்து வாழ்ந்திறந்தகதை புராணங்களிற் கேட்கப்படுதலானும், “எப்பொழுது ஆகாயத்தைத் தோலாகவுரித்து உடுக்கின்றனரோ அப்பொழுது சிவத்தையறியாது பிறவித்துன்பத்தின் முடிபெய்துவர்” என்னுஞ் சுருதியாற் சிவபிரானைச் சார்ந்தாலொழியத் துன்புஒழிவுபெற முடியாதென்று தேறப்படுதலானும் அப்பெருமானே மீண்டு வாராவழி அருள்பவனென்பது ஐயமின்றியுணரலாம்.

இனி, அச் சிவபரஞ்சுடரைப் பரம்பொருளெனத் தேற்றி, அவரைச் சார விரும்பித் தன்னையடுத்தாரை  நேரே கொண்டு செலுத்தும் உண்மை நெறி சைவ சமயமே யாதலின், அதுவே சன்மார்க்கமென்பதில் ஒரு சிறிதும் ஐயமின்று. முனிவர், சித்தர், இந்திராதிதேவர் முதலிய யாவருக்கும் இச் சைவ சித்தாந்த சன்மார்க்கமே தாயகமாக வுள்ளதாகும். இவ் வுண்மைகளை நன்கு தெளிந்த தாயுமான சுவாமிகளும்,

“அந்தோவீ ததிசயமிச் சமயம் போலின்

றறிஞரெலா நடுவறிய வணிமா வாதி

வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்

வைத்திருந்த மாதவர்க்கு மற்று மற்றும்

இந்திராதி போகநலம் பெற்ற பேர்க்கு

மிதுவன்றித் தாயகம்வேறில்லை யில்லை

சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத்

தக்கநெறி யிந்நெறியே தான்சன் மார்க்கம்”.

என்று தம் அநுபவ ஞானத்தா னாராய்ந்து கூறினர். இன்னும், இம் மார்க்கமானது பிறநெறிகளை யெல்லாந் தனக்குச் சோபானமாக ஏற்று அந் நெறிப்பட்டாரை முடிவில் தன்பாற் சேர்த்துக்கோடலானும், பிற நெறிகள் இங்ஙனமின்றி ஒன்றையொன்று வெறுத்தொதுக்குதலானும், இச் சைவ சித்தாந்த நன்மார்க்கமே சன்மார்க்கமா மென்பது கருதலாமலகமாகும். இன்னும், இச்சமயமானது பிருதிவி தத்துவமுதற் சிவதத்துவ மீறாகத் தத்துவங்கள் முப்பத்தாறெனவும், இவைகளைக் கடந்து நிற்றலாற் சிவபிரான் தத்துவாதீதராவரெனவுங் கூறுதலானும், பிறசமயங்களெல்லாம் பெரும்பாலும் இம் முப்பத்தாறனுள் ஆன்ம தத்துவம் இருபத்து நாலிலடங்கி அத் தத்துவப் பொருள்களையே  பரம்பொருளெனக் கோடலானும், அவையெல்லாம் இதனுள் வியாப்பியமாயடங்க இது வியாபகமா யொன்றினும் அடங்காமல் அவற்றையெல்லாங் கடந்து நிற்றலான் இதனையே இதீத சமயமெனவும், இந்நெறிச்சென்று பெறும் பொருளே பழம்பொருளா மெனவுந் தெளிந்த தாயுமான சுவாமிகள்,

சைவ சமயமே சமயஞ்

   சமயா தீதப் பழம்பொருளைக்

கைவந் திடவே மன்றுள்வெளி

   காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப்

பொய்வந் துழலுஞ் சமயநெறி

   புகுத வேண்டா முத்திதருந்

தெய்வ சபையைக் காண்பதற்குச்

   சேர வாருஞ் செகத்தீரே”.

என்று திருவாய் மலர்ந்தருளினர்.

இனிச் சன்மார்க்க மென்பதற்கு நல்லொழுக்கமெனப் பொருள் கொண்டு அற நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன வொழித்தலுமா மென்பது மொன்று. கடவுட் பக்தி, அடியார் பக்தி, அருள், அன்பு, பரோபகாரம், நடு நிலை, வாய்மை, கொல்லாமை, கள்ளுண்ணாமை முதலியவாகப் பலவாறு விரித்துக் கூறப்பட்ட ஒழுக்க வகைகளெல்லாம் சைவர்களின்றியமையாது மேற்கொள்ள வேண்டுமென்று சித்தாந்த நூல்கள் வற்புறுத்திக் கூறுதலானும், இவ்வொழுக்கங்களில் தவறுறுவோர்க்கு மிகுதியான தண்டங் கூறுதலானும், இவை முற்றும் இச் சமயத்து ளடங்குதலானும் இந்நெறி சன்மார்க்க மென்பதிலோர் இடர்ப்பாடு மின்று.

இனி, சன்மார்க்க மென்னுஞ் சொற்குச் சத்தையறிதற்குரிய மார்க்க மென்று பொருள் கோடலுமொன்று. சத்து என்னுஞ் சொற்குப் பொருள் சிவமென்று கூறலாம். இது, சிவமென்னும் பொருளை யெங்ஙனமுணர்த்துமெனின், “செளமிய ! இரண்டாவதற்றதாய் ஏகமாகிய சத்தே முதற்க ணிருந்தது” என்று  சாந்தோக்கிய உபநிடதமும், அதனைச் சமந்வயப்படுத்தி விளக்கமாக “நான் ஒருவனே முதற்கண் இருந்தனன்” என்று அதர்வசிரசில் உருத்திர வசனமும், “உருத்திரனாகிய சத்து” என்று தெளிவாக மகோபநிடதமும் விளக்குகின்றமையானும், இச்சுருதிகளை யாராய்ந்து சிவனுஞ் சிவனருளுஞ் சத்தாகுமென்று தெளிந்து கூறுதலானும், சைவ சித்தாந்த முதனூலாகிய  சிவஞானபோதம் ஆறாஞ் சூத்திரத்தில் “இருதிற னல்லது சிவசத்தாமென” என்று கேட்கப்படுதலானும், அதற்குச் சித்தாந்த பரமாசிரியராகிய  மெய்கண்ட தேவர் திருவாய் மலர்ந்தருளிய வார்த்திக வுரையில் “இனி இவ்விரண்டு தன்மையுமின்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவமென்றுணர்தற்பாற்று” என்று காணப்படுதலானும், இவற்றிற்குச் சித்தாந்த ஞானபாநுவாகிய மாதவச்சிவ ஞானமுனிவர், “சிவசத்து என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன்முடிவு” என்று பண்புத்தொகையாகக் கொண்டு பலவாறு விரித்து விளக்கிய மாபாடிய வசனங்களானும் சத்து என்னுஞ்சொல் சிவபெருமானையே உணர்த்துமென்பது ஐயமின்றித் தெளியலாம். இத் தெளிவினாற் சத்தென்பது சிவனை உணர்த்தலானும், சிவனைக் காட்டுமார்க்கஞ் சைவமாதலானும் சைவசமயமே சன்மார்க்கமென்பது தடையின்றித் துணியப்பட்ட தொன்றாகும்.

இனி, இச் சமயம் சன்மார்க்கமாகும் உண்மை கருதியன்றே சைவசித்தாந்த நூல்களில் வகுக்கப்பட்ட நால்வகை மார்க்கங்களுண் முடிவாகிய ஞான மார்க்கத்தைச் சன்மார்க்கமென்று கூறியதூஉமென்க. அந்நால்வகை நெறியுள், புறத் தொழின் மாத்திரையானே சிவபிரான் உருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகிய சரியை தாதமார்க்க மெனவும், புறத் தொழி லகத் தொழிலென்னும் இரண்டானும் அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகிய கிரியை சற்புத்திரமார்க்கமெனவும், அகத்தொழின் மாத்திரையானே அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகிய யோகஞ் சகமார்க்கமெனவும், புறத்தொழிலகத்தொழில் இரண்டுமின்றி அறிவுத்தொழின் மாத்திரையானே அம் மூன்று திருமேனிக்கு மேலாய் யாண்டும் அழிவின்றி உண்மையறிவின்பவுருவாய் நிறைந்து நிற்கின்ற சிவபிரானிடத்துச் செய்யும் வழிபாடாகிய ஞானம் சன்மார்க்கமெனவும், இந் நெறிகளினின்றோர்க்கு முறையே சாலோக சாமீப சாருபங்க ளாகிய அபரமுக்தியும், சாயுச்சியமாகிய பரமுக்தியுஞ் சித்திக்குமெனவுங் கூறுப சித்தாந்தப் பெரியார். இந்நால்வகை நெறிகளுள் நான்காவதாகிய சன்மார்க்கமென்னும் ஞானத்தை யெய்தியே ஒருவன் வீடு பெற வேண்டுமாயினும், அந் நெறியிற் பரம்பரையாகக் கொண்டு செலுத்தற்குக் கீழுள்ள மூன்றுஞ் சாதனமாக இருத்தலான் அவை யெல்லாம் வீட்டு நெறிகளென்றே கூறப்படுவனவாம். விழுச் சுடர்ச் செம்பொன் மேரு மால்வரையைத் தலைப்படலுறுவாராய் நாவலந்தீவிற் பாரத வருடத்தினை யெய்தி, ஆண்டு நின்று நெறி வினாயினார்க்கு அஃதறிந்துள்ளார் ஆண்டுக்காட்டிய நெறியே சென்னெறியாயினும், அந்நெறி இமயத்தை யிடையிட்டுக் கிம்புருட வருடத்திற் செலுத்த, அஃது ஏமகூடத்தை யிடையிட்டு அரிவருடத்திற் கொண்டு செலுத்த, அது நிடதத்தை யிடையிட்டு இளாவிருத வருடத்திற் கொண்டு செலுத்த, இவ்வாறு நாற்றிசையுள் யாண்டு நின்றெய்தினும் நாவலந்தீவினைத் தலைப்பட்டு இளாவிருத வருடத்திற் கொண்டு செலுத்தலும், அஃது இடையீடின்றி மேருமால்வரைக்கே கொண்டுசெலுத்துதலும் போலப் புறச் சமய அகச் சமயங்களினின்றும் மேற்சென்று சென்றேறிச் சைவத்தை யெய்தப்பெற்றோர், ஆசிரியன் காட்டுஞ் சைவாகம நெறியிற் சமயதீக்கையுற்றுச் சரியை நெறியைத் தலைப்பட்டு அது முற்றிய பின்னர் விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியைத் தலைப்பட்டு யோகநூல் கேட்டு யோகநெறியைத் தலைப்பட்டு இம்மூன்று முறையான் முற்றிய பின்னர் நிருவாணதீக்கை பெற்று ஞான நெறியைத் தலைப்பட்டு வீடுபேறடைவர். கீழுள்ள மூன்றும் ஞானத்திற்கு நிமித்தமாதலான் அவை ஒவ்வொருவரானும் இன்றியமையாது அநுட்டிக்கற்பாலனவாமென்று தெளிந்த நம் தாயுமானவடிகள்

விரும்புஞ் சரியைமுதன் மெய்ஞ்ஞான நான்கும்

அரும்புமலர் காய் கனிபோ லன்றோ பராபரமே

என்று கட்டளையிட்டருளினார்.

ஈண்டு கூறிய சன்மார்க்கத்தையே சைவபரமாசிரிய ராகிய மெய்கண்டதேவர் “நன்னெறியாகிய ஞானம்” என் வார்த்திகத்திற் கூற, அதற்கு மாபாடியம் வகுத்த மாதவச் சிவஞான யோகிகள் “நன்னெறி, சன்மார்க்கமென்பன ஒரு பொருட்கிளவி” எனவும், “நன்மையெனப்படுவன வெல்லாவற்றுள்ளுஞ் சிறந்த நன்மையெனப்படுவது வீடுபேறென்ப; அதனைத் தலைப்படுத்தற்கு ஏதுவாய்ச் சிறந்த நெறி யாகலின் ஞானம் நன்னெறி யெனப்பட்டது” எனவுங் கூறியருளினர். இதனார் சைவ சமயத்தின் அங்கங்களாக வகுத்த நால்வகை நெறியுட் சன்மார்க்கமென்பதொன்றாயினும், அச் சமயத்தைச் சார்ந்தார் எய்தற்பாலதாகிய வீட்டின்பத்தைத் தருவது அதுவேயாதலானும், அதனிடத்துச் செலுத்தற்குரிய சோபான மார்க்கங்களாக மற்ற மூன்று மிருத்தலானும் அந் நான்கனையுந் தன்னுட் பெற்ற சைவ சமயத்தைச் சன்மார்க்கமென்று கூறுதன் மிகவும் பொருத்தமாதலுணர்க. இவ்வுண்மை மேற்காட்டிய தாயுமானவடிகள் திருப்பாடலானுந் தெளியப்படும்.

தன்னைச் சார்ந்தாரைப் பசுத்துவ நீக்கிப் பதித்துவமீந்து சிவபிரானோ டிரண்டறக் கலப்பித்து அசைவறு நிலையாகிய பேரானந்தப் பெருவாழ்விற் றலைப்படுத்துவது  இச் சன்மார்க்கமேயாமென்பதை,

“பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்

கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்து

ஒசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்

றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே”

என்று திருமூலத்தேவர் திருவாய்மலர்ந்தருளிய திருமந்திரத்தா னுணர்க.

இதுகாறுங் கூறியவாற்றால், பல பிறப்பினும் மக்கட்பிறப்பே மேலாய தென்பதூஉம், அரிதிற் கிடைக்கப் பெற்ற அப் பிறப்புடையார் முடிவில் எய்தற்பாலதாகிய வீட்டின்பம் இத்தகைத் தென்பதூஉம், அதுவே உண்மை நிலையாமென்பதூஉம், அந் நிலையை யெய்தற்குரிய நெறியே சன்மார்க்கம் அல்லது உண்மைநெறி யெனப்படுமென்பதூஉம், அந்நெறியின் றன்மைகள் இன்னவென்பதூஉம், அவைமுற்றுஞ் சைவசமயத்தி லடங்கியுள்ளனவாதலின் சைவ சமயமே சன்மார்க்கமாமென்பதூஉம், சன்மார்க்க மென்பதற்கு நல்லொழுக்கமென்று  பொருள் கொள்ளினுஞ் சைவ சமயத்தை யுணர்த்துதலிற் றட்டின்றென்பதூஉம், சத்தையறிதற்குரிய மார்க்கஞ் சன்மார்க்க மென்று கொண்டு சத்துச் சிவமும் அதனையறிதற்குரிய நெறி சைவமுமாதலின், அவ் வகையானுஞ் சைவ சமயமே சன்மார்க்கமா மென்பதூஉம், இவ்வுண்மை தெளிந்தே சைவ சித்தாந்த ஆசிரியர்கள் வீட்டு நெறிகள் நான்கனுள் முடிவாகிய ஞான நெறியைச் சன்மார்க்க மென்று கூறினரென்பதூஉம், இந் நெறியே எந்நெறியினும் விழுமியதொரு நன் னெறியா மென்பதூஉம், பிறவும் விளக்கப்பட்ட பொருளாகும்.

 

********************************************************

பிரதாபருத்திரீயம் – குணங்கள்

குணங்கள் விளக்கப்படுகின்றன

((*    ) இக்குறியிடப்பட்ட அனைத்தும் தெலுங்கு மொழியில் உள்ளன. பின்னர் இவற்றையும் இங்கு தருவதற்கு முயற்ச்சிக்கிறோம்.)

 

சிலேடை (*           ) தெளிவு (*             ) சமதை (*               )

இனிமை (*           ) மென்மை (*                        ) பொருள்விளக்கம் (*                 ) ஔதாரியம் (*            ) எழில் (*             ) உயர்ச்சி (*            ) ஓசம் (*             )  நன்மொழியுடைமை (*       ) இனியவை கூறல்(*                ) வன்மை (*             ) வித்தாரம்

(*        ) சமாதி (*               ) நுண்மை (*                  ) ஆழமுடைமை (*                    ) சுருக்கம் (*                       ) பாவிகம் (*               ) நிறுத்தல் (*                  ) பிரவுடி (*          ) இரீதி (*      ) உத்தி (*         ) கதி (*         ) என்னும் இவை இருபத்து  நான்கும்  குணங்களாம்.

 

இவற்றுட் சில குற்றத்தைப் பரிகரிக்குமுமாக குணங்களாம். சில தாமே[1] காப்பியச் சிறப்பிற்கேதுவாகலான் குணங்களாம்.

 

இவற்றுள் தாமே “இனிமை மிகுதற்கேதுவாகுமவை குணங்களுண் மிகச் சிறந்தனவாம். குற்றத்தைப் பரிகரித்தற் கேதுவாகுமவைகளுக்குக் குணமாந்தன்மை யாவர்க்கும் ஒப்பமுடிந்ததின்று.

 

குற்றத்தை நீக்கியவழி குணமாந்தன்மையை விரும்புவர்க்கே மென்மை முதலாயின குணங்களாம்.

 

செவிக்குணவின்மையென்னுங் குற்றத்தை நீக்குதற்கு மென்மையும், இழிவழக்கையொழித்தற்கு எழிலும், பொருட்செறிவின்மையைப் போக்குதற்குப் பொருள் விளக்கமும். சொற்குறை சொன்மிகையென்னுமிவற்றை விலக்கற்கு நிறுத்தலும், தகுதியின்மையை நிராகரித்தற்கு உயர்ச்சியும், சந்தியின்மையை யொழித்தற்கு வன்மையும், ஏற்றமிழிவுறல் என்னுங்குற்றத்தையிரித்தற்கு இரீதியும், கிலிட்டத்தைக் கெடுத்தற்குத் தெளிவும், அமங்கலத்தை யழித்தற்கு உத்தியும், வழூவுச்சொற்புணர்த்தலை மறைத்தற்கு நன்மொழியுடைமையும், முறைமுறிவை மறுத்தற்குச் சமதையும், கொடுமையைக் கெடுத்தற்கு இனியவை கூறலுங் கொள்ளற்பாலனவாம். இங்ஙனம் நிகழ்ச்சிக்கேற்பச் சில, குற்றத்தை நீக்குமுகமாக குணங்களாம்.

 

இக்குணங்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்

 

சிலேடை

ஒன்றோடொன்று நன்கினைந்த சொல்

லுடைமை சிலேடையென்ப.

சொற்கள்[2] பலவியைந்து அவ்வியைபால் ஒரு சொல்லென விளங்குதல் சிலேடையாம்.

 

எவ்வாறெனில்:—

எல்லா அரசர்களின் முடிமணிக்கதிர்களால் விளக்கமுறு மிணையடியுடையாறும், யாவரானும் பாராட்டப்படும் வீரமுடையாரும், உலகினையோம்பற் குறக்கமொன்றிலாரும், உலப்பில் குணமாம் நிலவொளித்திரள் சூழ்வானவெளியும், ஒல்காச் செல்வமொருங்குடையாரும் ஆகிய இக்காகதி வீரருத்திரவேந்தரைத் துதித்தற்கு யாம், வல்லேம் அல்லேம்.

 

முதனூலில் இப்பொருளடங்கிய சுலோகத்தில் சொற்கள் பலவுளவாயினும் அச்சுலோகத்தைக் கூறுங்கால் அழகுறுமியைபால் ஒருமொழியென விளங்குதல் சிலேடையாம்.

 

தெளிவு (*                    )

வெளிப்படையான பொருடருஞ்

சொல்லுடைமை தெளிவென விளம்புவர்.

எவ்வாறெனில்:—

இப்பிரதாபருத்திரவேந்தனுடைய விழிகள், மலர்தரு தாமரை மலரென மனங்கவர் வனப்புடையவாகலின் இவன் திருவின்கேள்வனேயாவன்.

 

இங்கண் விரைவிற்[3] பொருடருஞ் சொற்கணிரம்பியமையால் இது தெளிவு ஆம்.

 

சமதை (*                       )

மாறுகோளின்றிக் கூறல்

சமதையென்பதாம்.

எவ்வாறெனில்:

கற்பகத்தரு மஞ்சரியின் நறுமணமுடையவும், அமிழ்தின் இனிமையை அவமதித்தற்குரியவும், ஆகாயகங்கையின் அலைகளை நிகர்வனவும் ஆகிய வீரருத்திரவேந்தரின் குணங்கள், உலகிற் பெரியார்க்குச் செவிக்குணவாகின்றன.

 

இங்கண் நான்கு அடிகளிலும் சமமாகக் கூறியுள்ளமையாற் சமதையாம்.

 

இனிமை (*                       )

சொற்றொடரில் நெடுந்தொகையின்றிச்

சொற்களமைவுறல் இனிமையென்றியம்புவர்.

எவ்வாறெனில்:—

காகதிவேந்தனுடைய திருப்புகழ், திசைமகளிரிடைகளில் வெண்பட்டியல்பினதும், நகிலங்களில் முத்தலங்கலின் வனப்பையுடையதும், சிரங்களிற் சாதிமலர்மாலையென்ன விளங்குவதுமாய் அமைகின்றது.

 

இத்தொடரைக் கூறுங்கால் நெடுந்தொடரின்மை விளங்குவதால் இது இனிமை.

 

மென்மை(*                            )

மெல்லெழுத்துக்கள் பெரிதும் உள்வழி

மென்மையென்று விளம்புவர்.

மென்மையென்பது அநுச்சுவாரங்களுடன்[4] மெல்லெழுத்துக்களான் யாத்தல்.

 

எவ்வாறெனில்:—

காகதிவேந்தரது நகர்க்கண், மகளிரது அளவிற் பெருமகிழ்ச்சியைப் பெருக்கும் முகமதியங்களாற் பகலிலும் நிலவு நிகழ்கின்றது.

(*

)

 

இங்கண் அநுச்சுவாரங்களுடன் மெல்லெழுத்துக்களான் யாத்தமை காண்க.

 

பொருள் விளக்கம்:— (*                        )

சொற்றொடர் நிறைவுற்று

அமைவுறல் பொருள் விளக்கம் என்ப.

எவ்வாறெனில்:—

எல்லையில் வீரத்தெழுச்சியையுடைய வீரருத்திரவேந்தன், நிலவுலகிற்குக் காவலனாயினானாகலின் இதுபொழுது, பாக்கியம் அந்நடுவுலகின் வயத்ததாயிற்று; அன்றேல் மூவுலகங்களுமே அத்தகைய நற்பேறுடையவாயின; ஏனெனில், விண்டுவின் அம்சமே காகதிக்குலத்திற்கண்கூடாயவதரித்து விரும்பியாங்கு வளர்தருகின்றது.

 

இங்கண் சொற்றொடர், பொருளை விளக்கிக் கூறலில் அவாய்[5] நிலையின்றி நிறைவுற்று  நிற்றலான் இது பொருள் விளக்கம் ஆம்.

 

எழில் (*          )

காப்பியத்தில் யாப்பின் எழிலுடைமை எழில்[6] என்ப.

எவ்வாறெனில்:—

வென்றிசேர் காகதிவீரருத்திர வேந்தனது போர்ச் செலவான் விளைந்த நிலப்பூழித்திரள் வானத்தில் மிக்க நிலமயக்கைச் செய்யுங்கால் ஆகாயகங்கை இடம்படு தடங்களையுடைய புவிக்கங்கையாயிற்று. மிக்க மறைந்தோடும் கௌதம நதி, பாதாளகங்கையாக வமைகின்றது.

 

ஔதாரியம் (*                  )

வல்லெழுத்துக்களான் யாத்தலைப்

பெரியார் ஔதாரியம் என்ப.

எவ்வாறெனில்:—

தெலுங்குப் படையாற் படைக்கப்பட்ட போர்க்களங்கள், யான்முன் யான்முன் என விரைந்து மிகுதியான விரைச்சிகளைப் புசித்து உதிரத்தை உடன்பருகுமவா மிகுந்தனவும், வலிமிக்க என்புக்களைக் கடித்தலான் விளையுங் கடகடவொலியாற் கொடியதிற்றிப் பற்களின் நுதியினையுடையவும், வேழங்களின் வழிந்தொழு மூனருவி நீர்ப்பெருக்கில் முழுகுந்திறலுடையவுமாகிய பேய்களைத் தாங்குவனவாய் அரசர்களை அச்சுறுத்துகின்றன.

உயர்ச்சி (*                        )

சிறப்புறு முரிய வேசேடணங்க

ளமைந்துழி உயர்ச்சி யென்ப.

எவ்வாறெனில்:—

உருத்திரவேந்தரின் படைகள், பிளறிடும்[7] கயங்கணிரம்பியவும், கனைக்குங் குதிரைகணிறைந்தனவும், ஒலிக்குந் தேரையுடையவும் சங்கனாதஞ் செய்யும் வீரர்களையுடையவுமாய்த் திகழ்கின்றன.

 

ஓசம் (*                 )

நெடுந்தொகையுடைமையை

ஓசம் என்ப.

எவ்வாறெனில்:—

வீரருத்திரவேந்தனைச் சார்ந்த பெரும்புலவரில்லப்பந்திகள், அடங்காத மதக்களிற்றுத் தானநீர்ப்பெருக்கு மணநசையான் மொய்க்கும் வண்டினமிழற்றும் பண்ணொலி நிரம்பிய முற்றமுடையவும், எல்லையிலோங்கிய செல்வப்பெருக்காலிணியவுமாய் நிலவுலகில் மிக்க மகிழ்கின்றன.

 

நன்மொழியுடைமை (*                          )

பெயர் வினையிவற்றின்[8] விற்பத்தி

யை நன்மொழியுடைமை யென்ப.

எவ்வாறெனில்:—

திருமகள் கேள்வன்[9] காகதிக்குலத்தில் உருத்திரவேந்தனாய் அவதரித்து திசைமண்டில முடிவுகாறும் பரவிய புகழுடையவும் சிறப்புமிகுந்தனவுமாகிய செல்வங்களான், நன்மக்களைப் பெற்ற குடிமக்களைப் புரத்தலான் மூவுலகிற்கொரு நலஞ்செயுமியல்பினனும் ஒப்பிலாவுயர் குணங்கணிறைந்தவனுமாய் பொல்லாரை யொறுத்தற்கே பூவுலகிற் பெருமைகொண்டிதுகாலை யுலவுகின்றான்.

 

இனியவைகூறல் (*                 )

முகமனுரை கூறுங்கால் விருப்பிற்குரி

ய இன்சொற்களைக் கூறுதல் இனியவை[10] கூறலாம்.

எவ்வாறெனில்:—

கண்ணோட்டம் திறலுடைமை அருளுடைமை மேன்மை ஆழமுடைமை ஆண்மை அறிவுடைமை பொருளுடைமை திருவுடைமை வள்ளன்மை தைரியம் புவிப்பொறை தாங்கும்தன்மை என்னும் இவையாவும் நின்பாலனவாகலின் திருவளர் காகதிவேந்தனே! நூறு பிரமகற்பங்கள்காறும் இந்நிலவுலகைப் பாலித்தல் வேண்டும்.

 

வன்மை (*                   )

வல்லெழுத்துக்களானாய யாப்பு, வன்மையாம்.[11]

எவ்வாறெனில்:—

முயற்சிமிக்க வீரருத்திரவேந்தனது கழியனைய வலமிக்க வாகுவின் கேளிகள், பகையுலகைக் கலக்கலாற் காண்டற்கரிய வெற்றிமுறைகளையுடையவும், அற்பச்சத்திரியர் பக்கத்தைக் கடிதலில் உயர்த்தி வீசிய வாட்படையுடையனவும் கெர்ச்சிக்குந் துர்ச்சனரின் செருக்கெனுஞ் சிலையைப் பிளக்கு மசனியனையவுமாய் நிலவுகின்றன.

 

சமாதி (*                     )

வேற்றுப் பண்பைப் பிறவழியேறிடல்

சமாதி ஆம்.

எவ்வாறெனில்:—

வீரருத்திரவேந்தனது விளக்கமிக்க மிகுபுகழ், பாற்கடல் பாற்சுகத்தை வினாவியும்[12] கயிலையங்கிரியுடன் அன்பொடு பழகியும், தெய்வ நதியினை அடிதொறும் முகமனுறையினால் இன்புறுத்தியும், மதியத்தின் முன்னிலையில் அதனை யெள்ளி நகைத்தும், பிரமனூர்தியாம் அன்னப் பறவைபால் அருள்கொடு நல்வரவு கூறியும் இம்மூவுலகிலும் சிறப்புற்றுத் திகழ்கின்றது.

 

வித்தாரம் (*                           )

கூறியபொருளைப் பூரணப்படுத்துங்

கால் விரித்துக் கூறல் வித்தாரம் ஆம்.

எவ்வாறெனில்:—

காகதிவேந்தருடைய குணங்களை அடிதொறும் துதித்தற்கும் பார்த்தற்கும் செவியுறற்கும் மிகப் பாராட்டுதற்கும் மூவுலகில் அரவினத்திறைவனொருவனே வலியனாவன்; ஏனெனில்[13], இவ்விரலோனுடைய முகங்கள் ஆயிரம், கண்களும் செவிகளும் ஈராயிரம் வியந்தசைத்தற்குச் சிரங்களும் ஆயிரம் ஆம்.

 

நிறுத்தல் (*                         )

பொருளளவைக்கேற்ற பெற்றி[14]

சொல்லுடைமை நிறுத்தல் ஆம்.

எவ்வாறெனில்:—

மாதிரமகளிர் காகதிவேந்தரின் குணங்களைக் காதணியாக் கொண்டு அவரது மிகுபுகழாகுஞ் சந்தனத்தைப் பூசிக்கொள்ளுகின்றனர்.

 

ஆழமுடைமை (*                                )

ஒலிப்பொருளுடைமையை ஆழ

முடைமை யென்ப.

எவ்வாறெனில்:—

காகதிக்குலத்தவராகிய வுருத்திர தேவருடைய வாட்படையில் நஞ்சும் கீர்த்தியில் கங்கையும் பகைபால் திசையாடையும் முகத்தில் மதியமும் காணப்படுகின்றன.

 

இங்கண் சிவபிரானுடைய கழுத்தில் நஞ்சும் முடியில் கங்கையும் இடையில் திசையாடையும் சிரத்தில் மதியமும் திகழும் என்னும் பொருள் ஒலிக்கின்றது.

 

சுருக்கம் (*                          )

பொருளைச் சுருங்கச் சொல்லி

விளங்க வைத்தல் சுருக்கம் ஆம்.

எவ்வாறெனில்:—

காகதிக்குலமொன்றுள்ளது; அதிற் பல வேந்தர் பிறந்துளார்; அவரது நல்லூழின் பரிணாமமே இவ்வீரருத்திர வேந்தன் ஆவான்.

 

இங்கண் மிக்க விரித்துக் கூறற்குரிய பொருளைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தலான் இது சுருக்கம் ஆம்.

 

 

நுண்மை (*                       )

உள்ளடங்கிய நிலையிற் பொருளைத்

தெளிவாகக் கூறுந்தன்மையமைவுறல்

நுண்மையென்று நுவலப்படும்.

எவ்வாறெனில்:—

(*                ) யென்னும் அடையுருபோடியைந்த (*                 ) என்னும் வினைப்பகுதிகள், காகதிவேந்தன்பால் எஞ்ஞான்றும் செய்வினைப் பொருளிலும் பிறர்பால் செயப்பாட்டு[15] வினைப் பொருளிலும் அமைகின்றன.

 

இங்கண், யாவர்க்குந் தலைவனாகின்றான் (*[16]                    )

தாழ்த்துகின்றான் (*                  ) அவமதிக்கின்றான் (*                   ) என்னும் இப்பொருள் உள்ளடங்கிய நிலையிற் கூறியமையான் இது நுண்மை ஆம்.

 

பிரவுடி (*                  )

சொன்முறையின் பரிபாகமே பிரவுடி

யென்ப காப்பிய முணர்வார்.

எவ்வாறெனில்:—

திருவளர் வீரவுருத்திரவேந்தன், கமலத்[17]தோற்கிரண்டாமவனும், பிறைமுடிக் கடவுட்கு ஆவிருத்தியும், திருமாலுக்கு ஆமிரேடிதமும் மேருவரைக்கு எதிருருவும் சந்திரற்குச் சாணைபிடித்த வடிவும், கன்னன் முதலியோர்க்கு மறுபிறவியும் கற்பதருவின் எல்லாவுடைமையும் காமதேநுவின் வெளிப்படு தோற்றமும் ஆவன் என்று கவிவாணர் கருதுகின்றனர்.

 

உத்தி (*              )

சிறப்புறுங்கூற்றைக் கவிஞர்

உத்தியென்றுரைப்பர்.

எவ்வாறெனில்:—

மனக்கினிய நல்லொழுக்கமுடைய வேந்தனாகிய[18] உனது கமலாசத்தியைக் கண்டுணர்ந்தேன். நீ ஒளியோனாயினும் அத்தகைய குவலயத்திருவையும் அணிப்படுத்துகின்றாய்.

 

இரீதி (ரீதி)

தொடக்கத்தைக் கடவாது நிருவகித்தல்

இரீதி யென்ப.

எவ்வாறெனில்:—

அரசன் அறுகுணங்களை[19] யெய்துகின்றான்; அறுபகைகளை யவமதிக்கின்றான்; அறுவகைச் சாத்திரங்களை யறிகின்றான்; அறுபடைகளை நோக்குகின்றான்.

 

பாவிகம் (*                   )

கருத்தியைந்த சொற்றொடரமைப்பு

பாவிகம்[20] என்று கூறப்படும்.

எவ்வாறெனில்:—

சாமீ! அப்பனே! குலமணியே! வீரவுருத்திரனே! உலகிற்கொருதலைவ! இந்தயான், மகனாகிய வுன்னால் மகப்பேறெய்தினோரது மாட்சி மிகுந்துளேன்.

 

இங்கண் அன்பு வடிவாகிய கருத்தின் வயத்தால் சாமீ அப்பனேயென்று சொற்றொடர் அமைவுற்றது.

 

கதி (*            )

ஓசையினுடைய ஆரோக அவரோகங்

களில் இனியதாதல் கதியென்பதாம்.

எவ்வாறெனில்:—

ஒப்பற்றனவும் எல்லையற்றனவும் பகலவன் கதிர்களென்னப் பெருமிதமெய்தி விளங்குவனவும் ஆகிய காகதிவேந்தனுடைய தேசுகளான் மூவுலகும் விளங்குங்கால் பகையரசருடைய மனங்கள் துன்பமென்னு மெரிதழற் பிழம்பின் சேர்க்கையை யெய்தியிருப்பினும் அவற்றில் எல்லாவிருளும் எஞ்ஞான்று மொருசேரவிருக்கின்றன.

 

இங்கண் முதனூலிற் கூறியுள்ள சுலோகத்தில் முன்னிரண்டடிகளிற் பெரிதும் நெட்டுழுத்துக்கள் விரவியிருத்தலான் ஓசையின் ஆரோகம் ஆம். பின்னிரண்டடிகளில் அவரோகம்[21] ஆம்.

 

இக்குணங்கள்[22], பொருளைப்பற்றியும் நிகழுமென்பர் ஒருசாராசிரியர். முன்னையாசிரியரின்[23] கொள்கையால் குணங்கள் சொல்லியைபைப் பற்றியதேயாம்.

 

அங்ஙனமே அலங்கார சருவசுவத்திலுங் கூறப்பட்டுள்ளது:—

சொல்லியைபின் தன்மையானும், சொற்

பொருளின் தன்மையானும், குணம் அலங்கா

ரம் என்னுமிவை நிலைபெறுவனவாம்” என்று.

 

இம்முறையே[24] பற்றி குணம் அலங்காரம் இவற்றின் வடிவின் வேறுபாடு கூறப்பட்டுள்ளது. இன்றேல்[25], இலக்கண வேறுபாடு அறிதற்கரிதாகலான்.

காப்பியத்தை யணிப்படுத்தலே குணம் அணி யிவற்றின் இலக்கணம் ஆம்.

 

அங்ஙனமே உருத்திரப்பட்டரும் கூறியுள்ளார்.

“காப்பியவனப்பிற்கேதுவாகுமது அலங்

காரமென்று கூறப்படும். குணமும் அத்த

கைத்தென அறியற்பாலது. குற்றம்

அவற்றிற்குமறுதலையாம்”, என்று.

அதனால் குணங்கள் சொல்லியைபைப்பற்றியதென்பதே தக்கதொன்றாம்.[26]

 

 

வித்யாநாதனியற்றிய “பிரதாபருத்

திரன் புகழணி” என்னும் அ

ணியிலக்கணத்தில்

குணவியல் முற்றிற்று.

[1] குற்றத்தை நீக்குதற்கு நிமித்தமாகாது, காப்பியச் சிறப்பிற்கே நிமித்தமாகும் என்பான் தாமேயென்னுந் தேற்றத்தால் விதந்து கூறினான் என்க.

[2] “சொற்கள் பலவாயினும் அவற்றினியைபு புலப்படாவண்ணம் ஒரு சொல்லென விளக்கமுற்றுழி சிலேடையென்னுஞ் சீரியகுணமாம்” என்று வாமனர் கூறுப.

[3] சேய்மைத்தாகிய பொருளையுணர்த்தும் கிலிட்டமென்னுங் குற்றத்தை, தெளிவென்னுமிக்குணம் பரிகரிக்குமென்பான் விரைவிற் பொருள்தரும் என்றான் என்க.

[4] அநுச்சுவாரம் — உயிரின் பின்வரும் மகாரவிகாரமாகிய புள்ளி; இது வடமொழியின் உயிர் வருக்கத்துப்பதினான்காம் எழுத்து.

[5] அவாய் நிலையின்றி நிறைவுற்று நிற்றலான் என்றதனால், வினைச் சொல்லின்றியவாய் நிலையாய் நிறைவுறாத உடலின்மை முதலிய குற்றங்களுக்கு மறுதலைக் காட்டுக் கூறப்பட்டதாம். “பொருட் செறிவின்மை யென்னும் குற்றத்தை மறுத்தற்குப் பொருள் விளக்கம் கொள்ளற்பாலது” என்னு முன் கூற்றுக்கிது முரணின்று; பொருட்செறிவின்மை பற்றிய இலக்கணவமைதியால் உடலின்மை முதலிய அக்குற்றங்களுக்கும் பொருட்செறிவின்மையுண்மையான். “நிகழ்ச்சிக்கேற்ற பயனில் பொருளுடைமை பொருட்செறிவின்மை” என்னும் இலக்கணமுடைய குற்றத்திற்கோ எனில் அவாய் நிலையின்றி நிறைவுற்று, இப்பொருள் விளக்கத்தின் வேறுபடாமையின் அதற்கிது மறுதலைக்காட்டின்றென்பது கண்டுணரற்பாலது.

[6] எழில் — சொற்கட்டின் வனப்பு எழில் என்பதாம். அத்தகைய எழில் இல்வழி பழமையான ஓவியம்போல காப்பியம் விளக்கமின்றியிருக்கும். அங்கனமே பெரியாரும் “சொற்கட்டின் விளக்கத்தை எழிலெனும் குணமாக குணமுணர்வார் கூறுவர். அத்தகைய எழிலின்றியமையும் கவியின் கூற்று, பழைய ஓவிய நிலையதாம்” என்று.

[7] பிளிறிடும் முதலிய விசேடணங்கள் கயம் முதலியவற்றிற்கே பொருந்துவனவாம் இதனால் விசேடணங்களை மாறுபடக் கூறிய வழி நிகழும் பொருத்தமின்மையென்னுங்க் குற்றம் பரிகரிக்கப்பட்டதாம்.

[8] விற்பத்தி — சொற்பொருளினறிவிற்குரியதாய் அவற்றை யிலக்கணவாயிலாகத் தூய்மைப் படுத்துஞ் செயல் ஆம்.

[9] முதனூலிற் கூறியுள்ள சுலோகத்தில் (*

) என்னுமிவை இலக்கண அமைதியிற் சிறந்து வனப்புறுஞ் சொற்களாம்.

நன்மொழியுடைமையென்னுமிக்குணம் வழூவுச்சொற் புணர்த்தலென்னுங் குற்றத்தை மறுத்தற்காமெனக் கூறல் தக்கதன்று. குணத்துளடங்காத வழூவுச் சொல்லின்மை யளவையில் இக்குற்றம் நீங்குமாகலான். இங்கண் அறிஞர் யாவரும் அகமகிழ்தற்குரிய நன்மொழிகளை வழங்கியிருத்தலாற் காப்பியவனப்பிற்குரிய நிமித்தமுண்மை பற்றி இதற்கே சிறப்புறு குணத்தன்மையுண்டென்பது பெற்றாம்.

[10] இது, கொடுஞ்சொற்கூறல் வடிவாகிய கொடுமைக்கு மறுதலையாம்.

[11] வன்மை — இது புணர்ச்சியின்மை யென்னுங் குற்றத்திற்கு மறுதலையாம்.

[12] சுகத்தை வினாதல் முதலிய பண்புகள் சேதன குணங்களாக அவற்றை அசேதனமாகிய மிகுபுகழ்பால் ஏறிடலான் இது சமாதியாம்

[13] துதித்தலாதிய செயல்களில் ஆதிசேடனொருவனே திறமை வாய்ந்தவன் எனப் பூர்த்தி செய்தற்கு நிமித்தம் கூறுவான் ஏனெனில் என்னும் தொடக்கத்தான் என்க.

[14] ஏற்றபெற்றி — இதனால் குறித்த பொருளை வெளியிடற்குரிய சொற்களை யேற்றத்தாழ்வின்றி நிறுத்தமைத்தல் நிறுத்தல் ஆம்.

[15] செயப்பாட்டுவினை — (*                                                  ) முறையே அகப்படுத்தப்படுகின்றான் தாழ்த்தப்படுகின்றான், அவமதிக்கப்படுகின்றான், என்னும் இவையாம்.

[16] (*          ) என்னுமிது முதலிய மூன்றும் செய்வினைகளாம்.

[17] இங்கட் கூறியுள்ள இரண்டாமவன் ஆவிருத்தி ஆமிரேடிதம் எதிருரு சாணை பிடித்த வடிவு மறுபிறவி எல்லாவுடமை வெளிப்படு தோற்றம் என்னும் இவையாவும் ஒப்புப்பொருளில் வழங்கப்பட்டுள்ளன; பிரமன் முதலியோரது ஒப்புடைமையை வீரருத்திரன்பால் சொன்முறையின் பரிபாக விசேடத்தாலேறிட்டிருத்தலான் இது பிரவுடியாம். ஆவிருத்தி — மாறிப்பிறத்தல். ஆமிரேடிதம் — கூறியது கூறல்.

[18] வேந்தன் — இங்கண் அரசனையும் சந்திரனையும் உணர்த்தும். கமலாசத்தி — இது கமலையின்பால் ஆசத்தி — கமலங்கள்பால் ஆசத்தியென விரிந்து, திருமகள்பாற் பற்றையும் தாமரைப்பற்றையுமுணர்த்தும். ஒளியோன் ஈண்டு சூரியனையும் விளக்கமிக்க வேந்தனையுமுணர்த்தும். குவலயம் — இது குவளை மலரையும் நிலமகளையுமுணர்த்தும். ஒளியோனாயினும் என்புழி உம்மை முரணை விளைவிக்கும்; அத்தகைய முரண் இங்கட்போதரும் நிலமகளென்னும் உரியபொருளான் அழிவுறுமாகலான் இது முரண் விளைந்துழிவணியாம்; இதனை வடநூலார், (*                                        ) என்ப.

[19] அறுகுணங்கள் — சந்தி — விக்கிரகம் முதலியன; அறுபகை — காமம் வெகுளி முதலியன; ஆறு சாத்திரங்கள் ஆன்மஞ்ஞானத்திற்குரிய வேதாந்த சாத்திரம் முதலியன. அறுபடை, மௌலம் ஆடவிகம் முதலியன.

[20] பாவிகம் — பாவம் (*           ) கருத்து; அக்கருத்தினியைபுடையது பாவிகம் ஆம். இங்கட் கூறியுள்ள எடுத்துக்காட்டு, மகனுடைய குணங்களைக் கண்டு பெருமகிழ்வெய்திய தந்தை, அம்மகனை நோக்கிக் கூறியதாகும்.

[21] குறில் மிக்க விரவியிருத்தலான் அவரோகம் என்பது, ஒழிபனவையாற் போதரும். இதனால் நெடில் விரவியிருத்தல் ஆரோகம் என்பதும் குறில் விரவியிருத்தல் அவரோகம் என்பதும் பெற்றாம்.

[22] இக்குணங்கள் “ஓசம் தெளவு முதலிய இக்குணங்கள், பொருளைப்பற்றிய குணங்களாம்” என்று வாமனர் கூறுப. ஒருசாராசிரியர் என்றது வாமனர் முதலினோரை.

[23] முன்னையாசிரியர் — உற்படராதிய ஆசிரியர் கருத்தைப் பின்பற்றி, அலங்கார சருவசுவத்திலுங் கூறப்பட்டுள்ளதென்று கூறிய முதனூலாசிரியர் தனது கொள்கையை வெளிப்படுத்தினாரென்பது கருத்து. சொல்லியைபைப் பற்றியதேயாம் என்னுந் தேற்றத்தால் மொழிபலவியைந்துழி யொருமொழியென்னத் தோற்றமெய்தலை யிலக்கணமாகவுடைய சிலேடையாதிய குணங்கட்குப் பொருளைப் பற்றி நிகழுந்தன்மையின்றென்பது புலப்படுத்தவாறாம்.

[24] இம்முறை — சொல்லியைபு, சொற்பொருள், என்னுமிவற்றின் வடிவாகிய பற்றுக்கோட்டின் பேத முறையானே என்பது கருத்து.

[25] இன்றேல் — பற்றுக்கோட்டின் வேறுபாடின்றேல் என்பதாம். இலக்கண வேறுபாடு — குணம் அணி யிவற்றின் இலக்கண வேறுபாடென்பது உணரற்பாலது. அங்ஙனமாயின் “காப்பியத்தை வனப்புறச் செய்வன பண்புகளாகிய குணங்களாம்; அவ்வனப்பின் மிகைக்கு ஏதுக்களோவெனில் அலங்காரங்களாம்” என்று வாமனர் அவ்விலக்கண வேறுபாட்டினைக் கூறியிருத்தல் எங்ஙனம் பொருந்துமென்று கூறுமாலெனில், அங்ஙனஞ் சாதித்தலடாது; அத்தகைய வேறுபாடு ஒவ்வாதாகலின். இஃதன்றே அவ்விலக்கணத்தினுட்கிடை; காப்பியத்திற்கு ஆன்மா இரீதியாம்; அவ்விரீதியும், குணமிக்க சொல்லமைப்பு ஆம்; அச்சொல்லமைப்பும், வைதர்ப்பி முதலிய வேறுபாட்டினான் முத்திறத்து; அவற்றுள், எல்லாக்குணங்களும் நிரம்பியது வைதர்ப்பி இரீதியாம். சில குணங்கள் அமைந்தன கௌடியும் பாஞ்சாலியும் ஆம். அங்கண் குணங்கள் யாவும் ஒருங்கமைந்து அவை காப்பிய வனப்பிற்கேதுவாகுமெனில், கௌடிபாஞ்சாலியென்னுமிவற்றில் அவ்வியாத்தியாம். சில குணங்கள் காப்பிய வனப்பிற்கேதுவாகுமெனில் மலை நெருப்புடைத்து; புகையுடைமையான் என்னுமிவை முதலிய தொடர்கள் சாத்திர நூற்களுக்குரியவாய் காப்பியத்தன்மையினீங்கியவாயினும் அவற்றில் ஓசம் தெளிவு முதலிய குணங்கள் நிகழுமாகலின் இங்கண் அதிவியாத்தியும் வினையுமாகலான் அவ்வாமனரது மதத்தில் குணங்களுக்குக் காப்பியத்தை வனப்புறுத்துந்தன்மையின்றென்பது புலனாம்.

[26] தக்கதொன்றாம் — இஃது உற்படர் முதலினோரது மதத்தைப் பின்பற்றி, சிலேடை முதலியவற்றிற்கு இனிமையுள்ளடங்காமையைக் கொண்டு கூறியது. பாமகர் முதலினோரது மதத்தால் உள்ளடங்குமாகலின், சிலேடை முதலியன சுவைப்பண்புகளாம். அலங்காரங்களோ சொற்பொருளின் பண்புகளாம் என்னுமிதனால் இலக்கண வேறுபாடு உண்டென்பது உண்மைக்கருத்து ஆம். அதனாலன்றே இவ்வாசிரியரும் காப்பியவியலிற் “சிலேடை முதலிய குணங்கள்” என்று கூறியுள்ளார்.

பிரதாபருத்திரீயம் – குற்றவியல்

குற்றவியல்

((*    ) இக்குறியிடப்பட்ட அனைத்தும் தெலுங்கு மொழியில் உள்ளன. பின்னர் இவற்றையும் இங்கு தருவதற்கு முயற்ச்சிக்கிறோம்.)

 

காப்பியத்திற்குயிரெனப்பட்ட சுவையை விளக்கிக் கூறிய பின்னர், அதனையழகுபடுத்தற்கேதுவாகிய குணங்களை[1] நன்கு உணர்த்தற்பொருட்டு, குற்றங்கள் விளக்கமாகக் கூறப்படுகின்றன.

குற்றத்தின் பொதுவிலக்கணம் வருமாறு:

குற்றம் என்பது, காப்பியம்[2] இழிவுறற்கேதுவாய் அமைவது; அது, சொல் பொருள் என்னுமிவற்றைப் பற்றி நிற்பதாம்.

காப்பியம் சொற்பொருள் வடிவினதாகலின் அஃதிழிவுறற்கேதுவாய் அமையுங் குற்      றமும், சொல்லைப்பற்றியதும் பொருளைப்பற்றியதும் என இருபடித்தாம்; அச்சொற்குற்றம்[3], சொல்லைப்பற்றியதும் சொற்றொடரைப்பற்றியதுமென இருதிறத்து.

அவற்றுள் சொற்குற்றங்கள் கூறப்படுகின்றன. வழக்கின்மை (*        ) பொருட்செறிவின்மை (*         ) அசமர்த்தம் (*            ) நின்று பயனின்மை (*              ) நேயார்த்தம் (*           ) வழூவுச்சொற்புணர்த்தல் (*                 )  மயங்கவைத்தல் (*         )                அப்பிரயோசகம் (*                ) கிலிட்டம் (*       ) மறைபொருண்மை (*            ) இழிவழக்கு (*         ) வேற்றுப்பொருண்மை (*                  ) விளக்கமின்மை (*                 ) விதிச்சிறப்பின்மை (*                  ) மறுதலைப்பொருடரல் (*                  ) அமங்கலம் (*                 ) கொடுஞ்சொற்புணர்த்தல் (*              ) என்னுமிப்பதினேழும் குற்றங்களெனக்கூறப்படும்.

 

 இவற்றின் இலக்கணம் விளக்கப்படுகின்றது

வழக்கின்மை:—

கவிகள்[4] நூல்களில் எடுத்தாளாமை

வழக்கின்மையென்று வழுத்துவர். (ஙஇ)

 

பொருட்செறிவின்மை:—

சந்தர்ப்பத்திற்குரிய பயனில் பொரு

ளுடைமை, பொருட்செறிவின்மையாம். (ச)

 

அசமர்த்தம்:—

உறுப்பாற்றன் மாத்திரையிற் சிறந்

தது, அசமர்த்தம் எனக் கூறப்படும்.  (சஇ)

 

நின்றுபயனின்மை:—

அடி நிரப்பி நிற்குமளவிலமைவுறல்,

நின்று பயனின்மையென்பதாம்.  (ரு)

 

நேயார்த்தம்:—

தன்குறியளவிலடங்கிய பொருளு

டைமை, நேயார்த்தம் எனப்படும்.  (ருஇ)

 

வழூவுச் சொற்புணர்த்தல்:—

இலக்கணவமைதியின் முரணுறக்கூறல்,

வழூவுச் சொற்புணர்த்தல் என்பதாம்.  (கா)

 

மயங்கவைத்தல்:—

ஐயப்பொருளைத் தோற்றுவித்தல்,

மயங்கவைத்தல் ஆம்.  (சாஇ)

 

அப்பிரயோசகம்;—

சிறப்பினைக் கூறாதொழிவது,

அப்பிரயோசகம் ஆம்.  (எ)

சிலிட்டம்:—

சேய்மைத்தாய பொருளுணர்வு,

கிலிட்டம் ஆம்.   (எஇ)

 

மறைபொருண்மை:—

விளக்கமில்பொருளதாச் சொல்லை வழங்

குதல், மறைபொருண்மையாம்.   (அ)

 

இழிவழக்கு:—

இழிந்தோரது வழக்களவிலமைவுறல்,

இழிவழக்கென்ப.    (அஇ)

 

வேற்றுப்பொருண்மை:—

சொல்லாற்றலின் வழீஇய பொருளு

டைமை, வேற்றுப்பொருண்மை ஆம்.  (கா)

 

விளக்கமின்மை:—

சாத்திரத்தளவில் விளக்கமிக்கது,

விளக்கமின்மையாம்.   (காஇ)

 

விதிச்சிறப்பின்மை:—

விசேடணமாயது விதிக்கப்படுமேல்,

விதிச் சிறப்பின்மையாம்.  (க0)

 

மறுதலைப்பொருடரல்:—

மாறுபட்ட பொருளுணர்வு நிகழ்ந்த

வழி, மறுதலைப் பொருடரல் என்பதாம்.  (க0இ)

 

அமங்கலம்:—

அமங்கலம் என்பது அசுபம் அருவருப்

பு நாணம் இவற்றைச் செய்யும் சொற்

புணர்த்தல் ஆம்.   (கக)

 

கொடுஞ்சொற்புணர்த்தல்:—

வல்லெழுத்துக்களானாய சொற்புனர்த்

தலை கொடுஞ் சொற்புணர்த்தல் என்ப.  (ககஇ)

 

வனத்திடைவதியும் பகைமனைவியரின் சொற்களில் குற்றங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

 

 

வழக்கின்மை எவ்வாறெனில்:—

துற்சியவனன் முதலிய எல்லாத் தெய்வதங்களும் நம்மை வனவீடுடையராகச் செய்தமையான் அத்தேவர்கள் நமக்குப் பகைவராயினார்.   (கஉஇ)

 

இங்கண் முதனூலில் தெய்வதங்கள் என்ற சொல் (*               யென்பது குற்றமில் சொல்லாம்; அது அலிப்பால் ஆம்.) என்று ஆண்பாலதாகவும் துற்சியவனன் என்னுஞ் சொல் இந்திரன் என்னும் பொருளதாகவும் கவிவாணரால்          வழங்கப்பட்டில.

 

பொருட்செறிவின்மை யெவ்வாறெனில்:—

பயனற்ற வெண்ணரையிற் பாதியாந் தோள்களையுடைய இந்த நமது இத்தகைய நிலையை யெங்கனந் தாங்குவோம். அம்மவோ! உயிர்வாழ்க்கை! அந்தோ கொடிது. (கஙஇ)

 

இங்கட் “கைகளிரண்டும் பயனற்றன”, எனக் கூற விரும்பிய வழி, “பயனற்ற எண்ணரையிற் பாதியாந் தோள்களையுடைய”, என்னுங் கூற்று, பொருட் செறிவின்மையென்னுங் குற்றமுடையதாம். இஃதே விதிச்சிறப்பின்மைக்கும் எடுத்துக்காட்டு ஆம். வாகுவிரண்டின் பயனின்மை, விதிப்பொருளாங்கால் அத்தோளிரண்டும் விசேடணமாகலான்.

 

அசமர்த்தம் எவ்வாறெனில்:—

அம்பு தரம் நான்கும் புடைசூழ் அவனியிதையகற்றி யாண்டே யேகுவேம்; வனத்திடை வசித்தலும் நம்பாற் றுன்பந் தருவதொன்றே.

 

இங்கட் புணரியென்னும் பொருளில் அம்பு தரமென்னுஞ் சொல் அசமர்த்தம் ஆம்.

நின்று பயனின்மை நேயார்த்தம்

வழூவுச் சொற்புணர்த்தல் மயங்

கவைத்தல் என்னுமிக்குற்றங்கள்

எவ்வாறெனில்:—

அத்தகைய வில்லங்களை விடுத்தன்று பொறிபிறழ்ந்த நவத்திடைப் போந்து பிழைக்கின்றோம். ஏந்தல் தங்கடகவாசம் எஞ்ஞான்று நிகழ்வதோ.   (கருஇ)

 

இங்கண் அன்று[5] என்னு மசைச்சொல், நின்று பயனின்மையென்னுங் குற்றமுடைத்தாம். பொறி பிறழ்ந்த[6] நவத்திடையென்னுங் கிளவியான் வனமெனும் பொருளறிவு தன்குறியளவிலடங்கியதாகலின் இது நேயார்த்தம் ஆம். நிகழ்வதோ, என்னுமிச் சொன்னிலையில் (*          ) என்று முதனூலிற் கொள்ளப்பட்டுள்ளது; இச்சொல் இலக்கண அமைதியில் (*      ) என்றாதல் வேண்டும். அங்ஙனமின்றிக் கூறியமையான் இது வழூவுச் சொற்புணர்த்தலாம். ஏந்தல் தங்கடகவாசம் என்பது, அரசர்தம் பதிக்கண் வாசமோ அன்றேல் பருப்பதச்சாரலில் வாசமோ என்னும் ஐயத்தான் மயங்கவைத்தல் ஆம்.

 

அப்பிரயோசகம் கிலிட்டம் என்னுமிக்குற்றங்கள் எவ்வாறெனில்:—

வச்சிரப்படையின் புடைப்பின் முன்னர் இயங்குநிலையராகிய காலூண்பகைக் கொடியோர்க்கண்ணலின் ஏதிலர்பால் என்னே! இருக்கை யெய்துகின்றோம். (ககாஇ)

 

இங்கண், காலூண் — காற்றையுண்ணும் அரவங்கள். அவற்றிற்குப்பகை — கலுழன் — அக்கலுழனைக் கொடியாகக் கொண்டோன் உபேந்திரன். அவற்கு அண்ணல் தமையனாகிய தேவேந்திரன். அவ்விந்திரற்கு ஏதிலர் பருப்பதங்கள்; என்னும் பொருளறிவு மிக்க சேய்மைத்தாகலின் இது கிலிட்டம் ஆம்.

 

பருப்பதக்கணிருக்கை, துன்புறுத்தும் என்னும் பொருள் வேண்டுழி “வச்சிரப்படையின் புடைப்பின் முன்னர் இயங்கு நிலையராகிய” என்னும் மலைக்கட் பொருந்தும் அடைமொழி சிறப்பிலதாகலின் இது, அப்பிரயோசகம் ஆம்.

 

மறைபொருண்மை இழிவழக்கு

பிறிது பொருண்மை யெவ்வாறெனில்:—

உதிரமுளரியென்ன விழியுடையாரும் யௌவனப்பருவமிக்க கல்லம் (*      ) கடித்தலம் என்னுமிவற்றையுடையாரும் ஆகிய அரசனுடைய புதல்விமார், துயர் நெருப்பால் விதத்த மனமுடையராயினர்.   (கஎஇ)

 

இங்கண் இரத்தப் பொருளிற் சிறப்புறும் “உதிரம்” என்னுஞ் சொல்லை செந்நிறப் பொருளதாக வழங்கியிருத்தலான் இது மறைபொருண்மையென்னுங் குற்றமாம். கல்லம், கடி, என்னுமிச்சொற்கள், கதுப்பு சகனம் என்னும் இப்பொருளவாகக் கூறல், இழிவழக்காம். வித்தமனமுடையார் என்பது இன்புறுமனமுடையரென்னும் பொருள்தரு மாற்றலுடையதாய் கருகிய மனமுடையர் என்னும் பொருளைத் தாராமையான் இது பிறிது பொருண்மையாம்.

 

விளக்கமின்மை யெவ்வாறெனில்:—

குலக்குரவர் கூறிய மநூபதேசங்கள் எங்கே போயின?   (கஅ)

 

இங்கண் “மநு”, என்னுஞ் சொல் மந்திரப்பொருளதாக மந்திரநூன் மரபளவிற் சிறப்புறுவதாகலின் இது விளக்கமின்மை என்னுங் குற்றமாம்.

 

மறுதலைப் பொருடரல் எவ்வாறெனில்:—

அகாரிய[7] நண்பரும் ஒழிதலையெய்தினாருமாகிய அரசர்கள், அன்னைகாதலற்குச் செய்த வழிபாடு, யாங்ஙனம் பயனற்றதாகும்.   (ககா)

 

இங்கண் அன்னை காதலன் என்னுஞ் சொல்லால் தாயினைக் காதலித்தவன் என்னும் பொருள் தோன்றுகின்றது. அகாரிய நண்பர் என்னுஞ் சொல்லால் தீவினைகளிற் பற்றுடையார் என்னும் பொருள் புலனாகின்றது. பிரிவுத்துன்பத்தைப் பற்றி வழங்கிய ஒழிதல் என்னுஞ் சொல்லால் அழிவு என்னும் பொருள் போதருகின்றது. இதனால் இது மறுதலைப் பொருடரல் என்னுங் குற்றமாம்.

அமங்கலம் நாணம் அருவருப்பு

என்னுமிவற்றைத் தோற்றுவிக்கும்

அமங்கலம் எவ்வாறெனில்

அபிப்பிரேதபதத்தில்[8] அமைவுறல் நமக்கு எப்பொழுது நிகழுமோ? பகைவர் புரியு முற் சர்க்கமொன்றானே பிழைப்புறுமிவர்க்கச் சாதனங்களும் அற்பம் ஆம். (உ0)

 

இங்கட் பிரேதபதத்திலமைவுறல் என்னுஞ் சொல்லால் பிணவுலகில் வசித்தல் என்னும் பொருள் போதரலான் இது அமங்கலம் ஆம். அற்பம் சாதனம் — என்னுமிதனால் இழிந்து ஆண் குறியென்னும் பொருள் புலனாகலின் இது நாணுறுத்துவதாம். பகைவர் புரியுமுற்சர்க்க மொன்றானே யென்புழி உற்சர்க்கமென்னுஞ் சொல்லான் அபானவாயு என்னும் பொருள் தோற்றமெய்தலான் இஃது அருவருப்பைத் தருவதாம்.

 

கொடுமை யெவ்வாறெனில்:

காட்டில் வசிக்கும் நமக்கு, (*                   ) நற்பேறுடைமை யாங்ஙனம் அமையும்.        (உ0இ)

 

இங்கண் நற்பேறுடைமை யென்னும் பொருள் பற்றி வழங்கிய (*           ) என்பது வல்லெழுத்துக்களானாகிய[9] கொடுமையாம்.

 

இனிச் சொற்றொடர் குற்றங்கள்

 

சொற்சிதைவு முறைப்பிறழ்ச்சி சந்தியின்மை கூறியது கூறல் வியாகீருணம் வாக்கிய சங்கீருணம் நிறைவின்மை இடைத்தொடருடைமை எண் வேற்றுமை பால் வேற்றுமை உவமக்குறை உவமமிகை சந்தவழு யதிவழு உடலின்மை இயல்பின்மை விசர்க்கமின்மை வேற்றிடத் தொகைநிலை உரிய கூற்றின்மை முடிந்தது கோடல் ஏற்றமிழிவுறல் சம்பந்தமின்மை சொன்மிகை முறைமுறிவு என்னுமிவ்விருபத்து  நான்கு குற்றங்களும் சொற்றொடரைப் பற்றி நிகழ்வனவாம் என்ப.  (உசஇ)

 

இவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்

 

சொற்சிதைவு:— (*                     )

சொல்லிலக்கணம் வழீஇய சொற்

றொடர், சொற்சிதைவெனச் சொல்லப்படும். (உரு)

பகைவரது சொற்றொடர் மூலமாக, எவ்வாறெனில்:—

நண்பர் கூறிய இதத்தை, அந்தோ கேட்டிலேம்; அதனாலன்றே காகதிவேந்தரை வணங்காது யாங்கெட்டொழிந்தோம்.  (உகா)

 

இங்கண் முதனூலில் (*                    [10]) என்றுள்ளதை இதத்தைக் கேட்டிலேம் என்று மொழிபெயர்த்திருக்கிறது. (*                                )

என்னுமிவ்விரண்டு சொற்களை வழங்கிக் குற்றத்தை வெளிப்படுத்தலான் சொற்றொடரே குற்றமுடைத்தன்றி. சொற்குற்றமென்னுஞ் சங்கையின்று; “ஸ0” என்னும் அடையுருபோடியைந்த “*    “ என்னும் வினைப்பகுதி ஆத்துமனேபதத்தை யெய்துங்கால் செயப்படுபொருளைக் கோடல் வேண்டா என்னுஞ் சிறப்பு விதியுண்மையான்.

 

முறைப்பிறழ்ச்சி:— (*                )

பொருளாதல் சொல்லாதல் முறைபி

றழ்ந்துழி, முறைப்பிறழ்ச்சியாம். (உகாகி)

பொருண் முறைப்பிறழ்ச்சி யெவ்வாறெனில்:—

யாம், காகதிவேந்தராகுந் தலைவர்க்குப் பரிகளையாதல் கரிகளையாதல் இறைப்பொருளாவளித்திலராய் தெய்வத்தால் வஞ்சிக்கப்பட்டோம்.   (உஎஇ)

 

இங்கட் கரிகளையாதல் பரிகளையாதல் எனக்கூறவேண்டுழி அம்முறை, பிறழ்ந்து கூறப்பட்டுள்ளது; பரிகளினுங் கரிகள் சிறப்புடையவாகலான். கரிகளையாதல் எனப்பின்னர்க் கூறியமையான் இது, பொருண்முறைப் பிறழ்ச்சியாம்.

 

சொன்முறைப்பிறழ்ச்சி யெவ்வாறெனில்:—

காகதிவேந்தரை நம்முள் ஒருவராய் அலகிடல் யாங்ஙனம் பொருந்தும்? ஏனெனில் அவருடைய கீர்த்தி பிரதாபம் என்னுமிவற்றுள் கதிர்மதியிருவரும் மூழ்கியொழிந்தனர்.   (உஅஇ)

 

இங்கட் கீர்த்திப்பிரதாபங்களில் மதிக்கதிர்கள் மறைந்தொழிந்தனர் என்னுஞ் சொன்முறை பொருந்துங்கால் அங்ஙனங் கூறப்பட்டிலது.

 

கீர்த்திப் பிரதாபங்களில் கதிர்மதிகள் மூழ்கினர் என்புழி இரு[11] குழுவியைந்துழி இயைபிற்கேற்ற பெற்றி பொருனியைபு போதருங்கால் பொருண்முறைப்[12] பிறழ்ச்சியின்றாம். ஆயின், சொல்வழக்களவில்[13] முறைப்பிறழ்ச்சியாம்.

 

 

 

சந்தியின்மை:— (*          )

சந்தி, சங்கிதை[14]யின்றியாதல் செவிக்

குணவின்றியாதல் அமைவது சந்தியின்மையாம்.

எவ்வாறெனில்:— முதனூலில்(*                                        ) என்புழி சந்தியின்மையாம். (*                                )என்புழி செவிக்குணவின்மையாம்.

 

கூறியது கூறல் (*                             )

சொல்பொருள் என்னுமிவற்றை மீண்

டுங் கூறியவழி அத்தொடர் கூறியது

கூறல் என்னுங் குற்றமுடையதாம்.

எவ்வாறெனில்:—

சிதைவுறுங் கானனஞ் செறிதரும் விந்தியவரைக்கண் கானனவாசிகளாயினோம்.

இங்கட் “கானனஞ் செறிதரும், கானனவாசிகள்” எனக் கூறியமையால் இது கூறியது கூறல் என்னுங் குற்றமாம்.

 

வியாகீருணம் (*              )

சொற்களுக்கு ஒன்றுக்கொன்று அந்நுவயம்

பரந்து கிடந்துழி வியாகீருணம் ஆம்.

எவ்வாறெனில்:—

வேந்தர்களே! இன்பமெய்தற்கு விரும்புவீராயின் காகதிவேந்தரது ஆணையையும் மார்பில் சிரத்திற் பன்றிக்குறியையும் தாங்கியவண்னம் இருங்கள்.

இங்கண், பன்றிக்குறியை மார்பிலும், ஆணையைச் சிரத்திலுந் தாங்கியென்பது அந்நுவயம்.

 

வாக்கிய சங்கீருணம்:— (*                     )

ஒரு தொடர்ச் சொற்கள், பிறிதுதொ

டர்ச் சொற்களுடன் கலத்தலை, வாக்

கியசங்கீருணம் என்ப.

 

எவ்வாறெனில்:—

இதன் எடுத்துக்காட்டு முதனூலிற் காண்க.

நிறைவின்மை — (*           )

 

வினைச்சொல்லின் அந்நுவயம்

நிறைவுறாத வழி நிறைவின்மை

யென்று கூறப்படும்.

எவ்வாறெனில்:—

நமக்கு இருக்கை மலைக்கண் அமைந்துள்ளது; காய்கிழங்குகளை யுணவாகக் கொண்டு உயிர் பிழைக்கின்றோம். விலங்கினத்தைச் சுற்றமாகவுடைய எங்களைக்கண்டு, விதி மகிழ்ச்சியுறுக.

 

இங்கண் மலைகளில் வசிப்பவரும் காய்கிழங்கருந்துவாரும் விலங்கினத்தைச் சுற்றமாகவுடையாருமாகிய எங்களைப் பார்த்து என்னும் இயைபு வேண்டற்பாலது; அது நிறைவுற்றிலது.[15]

 

இடைத்தொடருடைமை — (*                   )

இருதொடரிடைக்கண் பிறிதொருசொற்

றொடரமைவுறல், இடைத்தொடரு

டைமையென்ப.

எவ்வாறெனில்:—

தெலுங்கு நாட்டரசரது சினத்தீ, பொறுத்தற்கியலாதென்றுணர்ந்தும்,

“அன்றேல்[16] ஊழ்வினை கடத்தற்கரியது” அதில் யாம் வீழ்ந்தொழிந்தோம்.

 

இங்கண் சினத்தீ, பொறுத்தற்கியலாதென்றுணர்ந்தும் அதில் யாம் வீழ்ந்தொழிந்தோம், என்னும் இவ்விருதொடர்களினிடைக்கண், அன்றேல் ஊழ்வினை கடத்தற்கரியது, என்னும் பிறிதொரு தொடர் செருகியதாகலின், இஃது இடைத் தொடருடைமையாம்.

 

எண்வேற்றுமை   பால்வேற்றுமை

(*                          )

உவமை, வேற்றெண்[17] வேற்றுப்பால் என்

னுமிவற்றையுடைத்தாய் நிகழ்ந்துழி

அவ்வுவமை, எண்வேற்றுமை, பால்

வேற்றுமையென்னுங் குற்றமுடையதாம்.

இவ்விரண்டுமெவ்வாறெனில்:—

யாதவ வேந்தனது மனம் ஆழிகளென்ன ஆழமுடையதாயினும் தெலுங்கு நாட்டரசரது மலைமானும் படையாற் கலக்கப்பட்டது.

 

இங்கண், ஆழிகளென்ன[18] மனம் என்புழி யெண் வேற்றுமையாம். மலைமானும் படையென்புழி பால் வேற்றுமையாம்.

 

முதனூலில் (*      ) ஆண்பால் (*      ) பெண்பால்.

 

உவமமிகை — உவமக்குறை(*                 ) (*                  )

 

விசேடணங்களால்[19] உவமத்திற்கு

மிகையாதல் குறையாதல் அமைந்துழி

முறையே உவமமிகை உவமக்குறை ஆம்.

இவ்விரண்டும் முறையே எவ்வாறெனில்:—

உவமமிகை:—

மாலவவேந்தனுடைய மனைவியர் வனத்திடை வாட்டமிக்க முகத்தினராய் முதுவேனிற் காலத்தில் வாடிய தாமரை குவளை தாமரைக்கிழங்கு என்னுமிவை நிரம்பிய யாறுகள் போல விளங்கினர்.

 

இங்கண் வாட்டமிக்க முகத்தினராகிய மனைவியரின் உவமங்களாகிய யாறுகளுக்கு வாடிய தாமரை மலருடைமையே கூறற்பாலது; வாடிய குவளை தாமரைக்கிழங்கு என்னுமிவை நிரம்பிய யாறுகளென விசேடித்துக் கூறன்மிகையாம்.

உவமக்குறை யெவ்வாறெனில்:—

நகர்க்கண் அலங்கல், பூசும் பரிமளம் என்னுமிவற்றால் யாம் எங்ஙன் இனியரோ? அங்ஙனமே மலைகளும், அருவிகள் விரவியவாய் விளங்குகின்றன.

 

இங்கண் அலங்கலாம் நிலையில் அருவிகள் கூறப்பட்டுள்ளன; பூசும் பரிமளமாம் நிலையில் யாதுங் கூறப்பட்டிலது. இதனால் இஃது உவமக்குறையாம்.

 

சந்தவழு — யதிவழு

சந்தம் வேறுபட்டுழி சந்தவழுஆம்

யதிவழீஇய வழி யதிவழு[20]ஆம்.

எவ்வாறெனில்—

(*

)

இங்கண் (*               ) என்புழி மூன்றாம் எழுத்தில் யதி வழு ஆம்.

 

“                 “, என்புழி அடியிறுதிக்கணுள்ள யகரம் நெடிலின்மையாற் சந்தவழுஆம்.

 

உடலின்மை (*                    )

வினைச் சொல்லின்றியமையுஞ் சொற்

றொடர் உடலின் மையென்னுங்

குற்றமுடைத்தாம்.

எவ்வாறெனில்:—

மணிபதித்த திண்ணையில் விளையாடுமிப் பாண்டியச் சிறுவரை[21] முள்ளடர்ந்த காட்டில் இருப்பாராய்ப் (பார்க்கும்) பிரமன், அந்தோ அருளிலியன்றே.

 

இங்கண் பார்க்கும் என்னும் வினைச்சொல் இயைபுடையதாக அது கூறப்பட்டிலது. இஃதே[22] இயைபின்மையென்னும் குற்றமும் ஆம்.

 

இயல்பின்மை — (*                 )

சுவைக்குத் தகுதியில் இயல்பைக்

கூறியவழி இயல்பின்மை யென்னும்

குற்றமாம்.

எவ்வாறெனில்:—

(*

 

*)

இங்கண் அவலச்சுவைக்குத் தகுதியில்லாத எழுத்தின் ஆடம்பரம் ஆம்.

 

விசர்க்கமின்மை — (*                         )

விசர்க்கத்திற்கு ஓகாரமும்

ஓசையின்மையும் மிகைபடவ

மயுமத் தொடர் விசர்க்கமின்

மையென்னுங் குற்றமுடையதாம்.

எங்கண் விசர்க்கம் ஓகாரத்தையும் ஓசையின்மையையும் எய்துகின்றதோ, அது விசர்க்கமின்மையென்னுங் குற்றமுடையதாம்.

 

எவ்வாறெனில்:—

*

*

*

வேற்றிடத்தொகைநிலை:— (*                             )

தொகைநிலை வேண்டாதவழியதனை

யமைத்தல் வேற்றிடத் தொகைநிலை

யென்னுங் குற்றமாம்.

எவ்வாறெனில்:—

தீயகுணமுடைப் பிரமனுக்கு நம்பால் என்னே பராமுகம் என்று மிகச்சுழல்வுறு புருவத்தாற் குடில முகத்தை யுடையராயினர்.

 

இங்கண் பிரமனைச் சினந்து கூறும் அரசருடைய[23] சொற்களில் தொகைநிலை காணப்பட்டிலது. ஆனால் கவியின் கூற்றில், (*

) என்னும் தொகைநிலை காணப்படுகின்றது. இதனால் இது வேற்றிடத்தொகைநிலையாம்.

 

உரிய கூற்றின்மை — (*                                )

கூறற்குரியதொன்று கூறப்படாதவழி

உரியகூற்றின்மை யென்றுரைப்பர்.

எவ்வாறெனில்:—

கெட்ட நிலைமையை யெய்திய யாம்

உயிரை விரும்பினோம்.

இங்கண் கெட்ட நிலைமையை யெய்தியும்[24] என உம்மை கூட்டிக் கூற வேண்டுழி அவ்வும்மை கூறப்பட்டிலது.

 

முடிந்தது கோடலும்                 —                   ஏற்றமிழிவுறலும்

(                            )                       (                      )

ஒரு வாக்கியத்தை முடித்து, அதனையடை

மொழியான் மீண்டுங் கோடல் முடிந்தது

கோடல் ஆம்.

மேன்மை வழீஇய வழி அதனை ஏற்ற மிழிவுறல் எனக் கூறுப.

 

இரண்டற்கு மெடுத்துக்காட்டு எவ்வாறெனில்:—

ஓடும் மான்களையும் திரிதருங் கரிகளையும்[25] பாயும் புலிகளையுமுடைய விந்திய வனங்களில் இருக்கின்றேம் அவ்வனங்கள், கலக்கமுறுங் கரடிகளையுடையன.

 

இங்கண் விந்திய வனங்களில் இருக்கின்றேம் என்று சொற்றொடரை முடித்து, கலக்கமுறுங் கரடிகளையுடையன வென்னும் விசேடணத்தால் மீண்டுங் கோடலான் இது முடிந்தது கோடலாம். திரிதருங் கரிகளையும் பாயும் புலிகளையும் ஓடும் மான்களையும் எனக்கூறவேண்டுழி அங்ஙனங் கூறாமையான் இது ஏற்றமிழிவுறல் ஆம்.

 

சம்பந்தமின்மை — (*                                 )

விரும்பிய பொருளோடியைபில்வழி

சம்பந்தமின்மையாம்[26].

எவ்வாறெனில்:—

பாறைகள் பத்திராசனங்களும் தருக்கள் குடைகளுமாயின; யாமோ, நிலைகேடரசியற் பட்டாபிடேகத்தை யெய்தினோம்.

இங்கண் அரசியலிற்[27] பத்திராசனங்கள் பாறைகள் என்னும் இது முதலிய சம்பந்தம் கூறப்பட்டிலது.

 

சொன்மிகை (*                               )

சொற்களை மிகைபடக்கூறிய வழி

சொன்மிகை[28] ஆம்.

எவ்வாறெனில்:—

இக்கூர்ச்சரமகளிர், வனத்திடை தங்காதலரிற் பிரிவெய்தி தண்கதிர் மண்டில வடிவுருவின் முறையே வெளிறுபட்டொழிந்தனர்.

 

இங்கண் தண்கதிர் மண்டில வடிவென்னு மாத்திரையில் வெளிறுபடல் நிறைவுறுங்கால் உருவின் முறையென்பது மிகையாம்.

 

முறைமுறிவு (*                          )

தொடக்கத் துணிபு விடுபடு

மாங்கதை முறை முறிவென்ப.

எவ்வாறெனில்:—

குகைகள் இல்லங்களாயின; வேடுவர் உறவோராயினர்; விந்தியச்சாரல் நகரமாயது; யாறுகள் வாவிகளாயின. வனங்கள் உய்யானங்களாயின.

 

இங்கண் முதற்கட் பன்மையாகத் தொடங்கி  விந்தியச்சாரல் நகரமாயது என்பதை ஒருமையாகக் கூறியமையான் இது முறைமுறிவு என்பதாம்.

 

இனி, பொருட்குற்றங்கள்

 

பொருளின்மை (*             ) பயனின்மை (*        )

ஒருபொருளுடைமை (*              ) ஐயமுடைமை (*                   ) முறையின்மை (*                     ) வேறுபாடு (*           ) மிகுநவிற்சி

(*             ) கொடுமை (*                 ) சுவையின்மை (*              )

உவமக்குறை (*                     ) உவமமிகை (*                          ) ஒப்பிலுவமை (*                         ) வழக்கிலுவமை (*                  ) ஏதுவின்மை (*                   ) அணியின்மை (*                     ) அமங்கலம் (*                  ) மாறுகோள் (*            ) ஒத்துமுறைப்பிறழ்ச்சி (*                                         ) என்னுமிப்பதினெண் குற்றங்களும் பொருளைப் பற்றி நிகழ்வனவாம் என்ப.

 

இவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்

 

பொருளின்மை (*                )

சமுதாயப்பொருள்[29] இல்வழி

பொருளின்மையென்று கூறுப.

 

எவ்வாறெனில்:—

யாறுகள் ஏன் நீர் சுவறின? சோள மண்டிலத்தில் எவ்வார்த்தையுள்ளது. சேடற்கு ஆயிரம் படங்கள் உள்ளன. குலவரைகள் எத்துணைச் சுமையாம்.

இங்கண் ஒரோவொருவாக்கியப் பொருளும் புலனாகவில்லை.

 

பயனின்மை (*                     )

பாழ்படும் பயனுடையொரு பொருள்

பயனின்மையென்னுங் குற்றமுடையதாம்.

எவ்வாறெனில்:—

உங்களது குலம் கோதிலாதது; வீரம் குரை கடந்தது. புகழ் சிறப்புற்றது. அத்தகைய பாண்டியராகிய நீவிர் தெலுங்கு நாட்டரசரது பாதபடியை ஏன் வழிபடவில்லை.

 

இங்கண் பாதபடியை வழிபடல் வேண்டும் என்னும் உபதேசத்தில் குலம் கோதிலாதது என்னுமிவை முதலிய பாராட்டுரை பயனற்றது.

 

ஒரு பொருளுடைமை (*                               )

கூறிய பொருளின் வேறுபடாப் பொரு

ளுடைமை ஒரு[30] பொருளுடைமையாம்.

எவ்வாறெனில்:—

மயக்கமெய்திய பாலரைப் பார்த்து இதயம் பலபடவெடித்தது. உணர்வின்றியொழிந்த சிறுவரைக் கண்டு மனம் பலவாகப் பிளவுற்றது.

 

இங்கண் முன்பின் இருதொடரிலும் பொருள் வேறுபடாமை காண்க.

 

ஐயமுடைமை (*                           )

வாக்கியப் பொருட்கு ஐயம்

நிகழ்ந்துழி ஐயமுடைமையாம்.

எவ்வாறெனில்:—

கரிமத்தகங்கள், இளைப்பெய்திய நகிலங்களை யிதுபொழுது வெல்லுறும்; கொடிகள், மகளிருடைய வாட்டமெய்திய உடலெழில்களை யெள்ளி நகைக்கும்.

 

இங்கண் முதனூலில் (*[31]                     ) (*                       )

என்றிருத்தலான் இன்ன எழுவாய் இன்ன செயப்படுபொருள் என்பது துணியப்படாமையான் இது ஐயமுடைமையாம்.

 

முறையின்மை (*                 )

பொருள் முன்னுக்குப்பின் முரணிய

வழி முறையின்மைஆம்.

எவ்வாறெனில்:—

மடந்தையர் அங்காந்து வனத்திடையுறங்குகின்றனர்; அவ்வாயில் வீழ்தரும்புற்களான் அம்முறையில்[32] நம்மைப் பயிற்றுவாரென்னக் காணப்படுகின்றனர்.

 

இங்கண் உறக்கத்திற்குப்[33] பின்னிகழ்தற்குரிய அங்காப்பை அதற்கு முன்னிகழ்ந்ததாகக் கூறியது முறையின்மையாம்.

 

வேறுபாடு (*                    )

கூறும் பொருள்களுக்குச் சம்பந்

தமில்வழி வேறுபாடு ஆம்.

எவ்வாறெனில்:—

இலாட நாட்டினரின் நெற்றிகளில் பிரமன் நல்லெழுத்தெழுதவில்லை; அதனால் நம்முடைய குடும்பங்கள் நீரிலாவனத்தில் வருந்துகின்றனர்.

 

இங்கண் நீரிலாவனத்தில் வசித்து வருந்துவதற்கும் நெற்றிக்கண் நல்லெழுத்தின்மைக்கும் ஒருசம்பந்தமும்[34] இன்று.

 

மிகுநவிற்சி (*                   )

உலகெலாம் கடந்த நிலையிற்

கூறல் மிகு நவிற்சியாம்.

எவ்வாறெனில்:—

உலகம், ஒரு கடலாதல் வேண்டா; என்று கருதும் இலாடநாரிகள், கண்ணீரைச்[35] சுருக்கி அளவில் யாறுகளை யடவிக்கண் படைத்தனர்.

இங்கட் கண்ணீரான் உலகம் ஒரு கடல் ஆம் என்று கூறல் மிகு நவிற்சியாம்.

 

கொடுமை (*                         )

மிகக் கொடிய பொருளுடனமை

வுறல் கொடுமையென்று கூறப்படும்

எவ்வாறெனில்:—

இக்குழந்தைகளை யிக்கணமே அடவி நெருப்புக் கெரிதுரும்பாக்குக.

 

இங்கண் கனிகளையிரந்து நிற்குஞ் சிறுவரைக் குறித்துக் கூறிய கொடுஞ் சொல்லாகலான் இது கொடுமையாம்.

 

சுவையின்மை (*           )

நிகழ்ச்சிக்குப் பொருந்தாச் சுவைபடக்

கூறல் சுவையின்மையென்று சொல்லுப.

எவ்வாறெனில்:—

மதிமுகமுடையீர் அமுதம் பெருகுங் கடைக்கண்களால் எம்மைக் காண்க; வருத்தமுறல் வேண்டா; என்று கூறி, வேடுவர் சோழமகளிரைத் துன்புறுத்துகின்றனர்.

 

இங்கண் கொடிய பிரிவுத் துன்பத்தை யெய்திய மடந்தையரது புணர்ச்சியை வேடுவர் வேண்டி நிற்றல் சுவையின்மையாம்.[36]

 

உவமக்குறை (*                    )

உவமானம் அற்பமாய[37] வழி

உவமக்குறையாம்

எவ்வாறெனில்:—

மானினத்தைக் கொல்லும் நாய்களென்ன[38] நீவிர் பகைவரை வதைத்தீர். வனத்தே வசிக்கும் உமது அத்தகைய ஆண்மை இற்றைஞான்று, எங்கே சென்றது?

 

இங்கண் நாய்களென்ன நீவிர் என்பது உவமக்குறை.

 

உவமமிகை (*                    )

உவமை மிகுந்துழி உவமமிகையாம்.

எவ்வாறெனில்:—

குளக்கரையிலிருக்குமிக்கொக்கினங்கள் அசைவிலுடலுடையவாய் இருடிகளென்ன விளங்க, அவற்றையாம் இது பொழுது துன்புறுத்தினோம்.

 

இங்கண் கொக்கினங்கள் இருடிகளென்ன[39] என்பது உவமமிகை.

ஒப்பிலுவமை (*                           )

உவமை பொருந்தாதவழி

ஒப்பிலுவமை யென்பதாம்.

எவ்வாறெனில்:—

அடர்ந்தகொடிவீடுகளில் அலைதரும் அருவிப்புனலையுடைய இவ்விந்தியமலை, நுதல் விழியொளிரும் தீச்சிகையின் வீக்கமெய்திய சிவபிரானையொப்பத் திகழ்கின்றது.

 

இங்கண், கொடிவீடுகளில்[40] அலைதரும் அருவிப்புனலுடைய விந்தியமலைக்கும், நெற்றிக்கணொளிரும் நெருப்பினையுடைய சிவபிரானார்க்கும் ஒன்றற்கொன்று ஒப்பின்மையாம்.

 

வழக்கிலுவமை (*                                )

கவிகளான் வழங்கப்படாது உவமை

வந்துழி, வழக்கிலுவமை யென்னுங்

குற்றமாம்.

 

எவ்வாறெனில்:—

மகிழ்வில் மான்விழி மாதரார் மதிமுகங்கள், கண்ணீராற் கெடுங்கண்களையுடையவாய் குளிரிரும்பனிக்குத் தேம்பிதழ் குவளையை நிகர்வனவாம்.

 

இங்கண் முகங்களுக்குக் குவளைகள் உவமைகளாகக் கவியுலகிற் கூறப்பட்டில.

 

ஏதுவின்மை (*                       )

ஏதுவின்றியோர் பொருளினையியம்புதல்

ஏதுவின்மை யென்றியம்பவர் மேலோர்.

எவ்வாறெனில்:—

நன்முத்தக்குறியெய்திய[41] இவ்வழிக்கட் பின்தொடர்ந்தோடல் வறிதாயிற்று; இஃதங்கனை சென்ற நெறியின்றாகலின், அவளைத் தேடிச் சேறற்குப் பிறிது தடஞ் செல்வேன்.

இங்கண் இஃதங்கனை சென்ற நெறியின்று என்பதற்கு ஏது கூறப்பட்டிலது.

 

அணியின்மை (*                             )

அலங்காரம் இன்றி யமைவுறல்

அணியின்மையென்பதாம்.

எவ்வாறெனில்:—

பசுவின் யோநியை மோந்து உயர்த்திய முகமுடையனவும், நீண்ட ஆண்குறியுடையனவும், தொங்கியாடு மண்டத்தையுடையனவுமாகிய காளைகள், வனத்தைப் பலபுறத்துங்கலக்கின.

 

இங்கண் அணியொன்றுமிலது; சிறப்புறு விசேடணங்களின்மையான் தன்மை நவிற்சியணியும்[42] (*                          ) இன்று.

 

அமங்கலம் (*                          )

அமங்கலப் பொருளைக் கூறல்

அமங்கலம் ஆம்.

இது முன்னர் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

 

மாறுகோள் (*                       )

இடம் காலம் என்னும் இவைமுதலிய

வற்றான் முரணியவழி மாறுகோள்ஆம்.

அது பலவகைப்படும் என்ப.

எவ்வாறெனில்:—

கரைகடக்குமுவர்க்கடல் வடதிசையில் அணிமைக்கணுள்ளது.[43] மருத்தலத்தினும் கங்கையாறு நமது நீர் வேட்கையை யொழிக்கின்றது.

 

இங்கண் வடதிசையில் உவர்க்கடல் என்பது திசைமாறுகோள். மருத்தலத்துங்கங்கையென்பது இடமாறுகோள்.

காட்டெருமையின்[44] வலிய கோட்டிடைப் பிறந்த நன்முத்தங்கள், பெருவிலையவாயினும், மாதரார் முத்தணிகலன்களை யணிந்துளார்.

 

இங்கண் முத்தங்கள் எருமைக்கோட்டிடைப் பிறந்தன வென்பது உலக மாறுகோள். இங்ஙனம் பிறமாறுகோள்களையும்[45] வந்துழிக்காண்க.

 

ஓத்துமுறைப்பிறழ்ச்சி (*                              )

தகுதியில் பொருளையொரோவழி

கூறல் ஓத்துமுறைப்பிறழ்ச்சியாம்.

எவ்வாறெனில்:—

அடக்கத்தாற்[46] கல்வியும் நாணத்தால் நாரியும் காமனாற் கலவியும் கேள்வியால் அறிவும் வனத்திடை வசித்தலாற் பகைவரும் பிழைப்புறுகின்றன.

 

இங்கண் கல்வி அறிவு என்னுமிவற்றினும் நாரியும் கலவியும் இழிந்தனவாகலான் ஓத்துமுறைப்பிறழ்ச்சியாம். இங்ஙனம் பிறகுற்றங்களும் நேர்ந்துழி உய்த்துணரற்பாலன. சுவை குறிப்பு முதலியவற்றிற்கு[47] அவ்வச்சொற்கு உரிய பொருளாந்தன்மையே குற்றம் ஆம்.

 

வித்தியாநாதனாலியற்றப்பட்ட

“பிரதாபருத்திரன் புகழணி” என்னும்

அணியிலக்கணத்தில், குற்ற

வியல் முற்றிற்று.

 

[1] குணங்கள் — இது அணிகளுக்கும் உவலக்கணம் ஆம். சுவைகளை விளக்கிக் கூறிய பின்னர் அவற்றையழகுபடுத்தற் கேதுவாகிய குணம் அணியென்னுமிவை விரித்து விளக்கற்குரிய வியைபுடையவாயினும், அவற்றைத் தவிர்த்து இடையிற் குற்றவியலைக் கூறியமை அக்குணங்களை நன்கு உணர்த்தற் பொருட்டு ஓத்து முறைவைப்பென்னும் உத்தி பற்றியேயாம் என்க.

[2] காப்பியம் இழிவுறற்கேதுவாய் — சுவையையிழித்து, அதன் வாயிலாக காப்பியத்தையிழிவு படுத்தற்கேது குற்றம் என்பதாம்.

[3] சொற்குற்றம் — சுவை, விபாவம் முதலிய பொருளடியாகத் தோன்றுவதாம்; அவ்விபாவம் முதலியன சொற்றொடர் வயத்தனவாம்; அத்தொடர், சொற்றொடக்கத்தது. அதனால் சொற்கள் முதற்கண் அமைவுறுவனவாகலான் அவற்றின் குற்றங்கள் முதற்கட் கூறப்படுகின்றன.

[4]  நிகண்டுக்களிற் கூறப்பட்ட சொற்களாயினும் அவற்றைக் கவிவாணர் தம் நூல்களில் எடுத்தாளவில்லையாயின் அவை வழக்கில் சொற்களாம்; அச்சொற்களைப் பின்னுளோர் வழங்கலும், வழக்கின்மையென்னுங் குற்றமாம் என்க.

[5] யமகம் வேண்டுழி நின்று பயனின்மையென்னுங் குற்றம் வேண்டற்பாலதின்றென்பர் ஏமசந்திரனார்.

[6] பொறிபிறழ்ந்து நவத்திடை யென்புழி “நவ”, என்னுங்கிளவி எழுத்துப்பிறழ்ச்சியான் வனமெனும் பொருளை யிலக்கணையாற் றோற்றுவிக்கின்றது; அவ்விலக்கணையில், சொல்லாற்றல் நிமித்தம் இன்று கங்கையிற் சேரியென்புழிப்போல பயனும் இன்று. ஆயின் இது தன்குறியளவில் அடங்கி நிற்பதாம். அதனால் அங்ஙனம் ஆற்றலில் இலக்கணை கொள்ளற்பாலதின்று என்பான், தன்குறியளவிலடங்கியதாகலின் இது நேயார்த்தம் என்றான் என்க. பொறி எழுத்து.

[7] இந்தச் சுலோகத்தில் மறுதலைப் பொருடரல் என்னுங் குற்றத்தையெடுத்துக் காட்டிய சொற்களுக்கு இடனோக்கிய உரிய பொருள் வருமாறு காண்க:-

அகாரிய நண்பர் — காரியம், பயன் வடிவினது; அஃதில் வழி நன்பர் என்றதனால் பயன் கருதா நட்புடையர் என்பதாம்.

ஒழிதலை யெய்தினார் — ஒழிதல் — ஈண்டுமனையிற் பிரிதல்; அதனால் வருந்துன்பத்தை யெய்தினோர் என்பதாம்.

அன்னைகாதலன் — இது, உலகெலாம் பெற்றவோர் அன்னையாங் கௌரியின் காதலனாகிய சிவபிரானையுணர்த்தும்.

[8]அபிப்பிரேதபாதம் — விரும்பிய இடம். உற்சர்க்கம் — விடுதலை. சாதனங்கள் — துணைக்கருவிகளாகிய படை முதலியன.

[9] வல்லெழுத்துக்களானாகிய கொடுமை — மெல்லெழுத்துக்களானாகிய சொற்களே இங்கண் அவலச்சுவைக்குரியவாகலின் வல்லெழுத்துக்களானாய சொற்கள் அச்சுவைக்குப் பொருந்தாமையான் இது கொடுமையாம்.

[10] (*                  ), ஆத்துமநேபதம். “ஹிதம்” செயல்படுபொருள். இவ்வினைச்சொல் செயப்படுபொருள் குன்றிய வினையென்பது வியாகரண நூன்மரபு; அதனைக் கடந்து ஹித0 என்னுஞ் செயப்படுபொருளைக் கூறியிருத்தலான் இது சொற்சிதைவு என்னுங் குற்றமாம்.

[11] இருகுழு — கீர்த்திப்பிரதாபங்களில் என்பது ஒரு சொற்குழு; கதிர்மதிகள் என்பது மற்றொரு சொற்குழுஆம். இவ்விருகுழுவும், சிறப்புறு முறுப்புக்களையுடைய உம்மைத் தொகையாய் இயைந்துழியென்பது கருத்து.

[12] பொருண்முறைப்பிறழ்ச்சியின்று — பொருண்முறை, சொன்முறையைப் பின்பற்றுந் தகுதியுடையதாயினும் கவிவழக்காற் போதரும் உவமான உவமேயத்தன்மை வயத்தால் தொகையுள்ளடங்கிய கீர்த்தி முதலிய பொருள்களுக்கு முறை பிறழ்ந்து மியைபு நேர்ந்துழி முரணின்மையான் பொருள்முறைப் பிறழ்ச்சி யின்றென்பதாம்.

[13] சொல்வழக்களவில்:— நிரனிறை நியாயத்தைக் கடந்து நிற்றலான் என்பது கருத்து. அதாவது நிரன் முறைபிறழவைப்பதாகுஞ் செய்யுள் வழுவின் ஒன்றாகிய நிரனிறைவழுவென்ப.

“உம்மைத்தொகையில் தொகையுள்ளடங்கிய

சொற்களொரோவொன்றும் உடனிகழும்

பிறசொற்பொருட்களையும் அப்பொழு

தேகூறும்”

என்பது வார்த்திககாரரது கொள்கையாம். அன்னார் மதத்தில் கீர்த்தி யென்னுஞ் சொல், புகழ் பிரதாபங்களைக் கூறும்; அங்ஙனமே பிரதாபம் என்ற சொல்லும் இவ்விருபொருள்களையுங் கூறும். இங்ஙனமே “கதிர் மதி” என்புழியுங் காண்க. அதனால் சொற்கள் ஒன்றோடொன்று இயைந்துழி சென்முறைப்பிறழ்ச்சியின்றெனக் கூறுமாலெனில், அற்றன்று. தனித்த சொற்களுக்கு ஒரோவொரு பொருளைக் கூறுந்தன்மையுண்மையானும் தொகையுள்ளடங்கிய சொற்களுக்கும் பிறமதங்களான் அத்தன்மையுண்மையானும் எல்லாச்சொற்களுக்கும் அமையும் பொருளுணர்த்து மாற்றல் பெரிதும் இங்ஙனமே கொள்ளற்பாலது. ஈண்டும் அலௌகிகப் பொருள் பலவற்றையும் கூறுந்தன்மையைக் காரணமாகவுடைய முறைப்பிறழ்ச்சியைத் தவிர்த்து முறைபிறழாமையே விழிப்புடையதாகலின்.

[14] சங்கிதை எழுத்துக்கள் ஒன்றோடன்று நெருங்கி நிற்றல். இஃது அரைமாத்திரையின் மிகாது நிற்றலாம்.

[15] அது நிறைவுற்றிலது — காட்சிவினை, எங்களையென்னுஞ் சொற்பொருண் மூலமாக சுற்றமாகவுடையவென்னுஞ் சொல்லுடன் இயையுமேயன்றி, மலைக்கணிருக்கை காய் கிழங்கருந்தி வாழ்தல் என்னுமிவற்றுடனியைபுறாது அவ்வினைச்சொல்லின் அந்நுவயம் நிறைவுற்றதாகலின், இது நிறைவின்மையென்பதாம்.

[16] வாக்கியப்பொருளும் இருதொடரிடைக்கண்ணதாகலின் இங்கட் சொற்குற்றம் பொருட்குற்றம் என்னுமிரண்டும் நிகழுமாலெனின், அற்றன்று. வாக்கியப்பொருள் தோற்றமெய்துங்கால் வாக்கியம் அந்தரங்கமாகலான் அவ்வாக்கியத்தின் சிறப்பினைப் பற்றி இது வாக்கியதோடம் என்றே பெரிதும் அறிதல் வேண்டும். பகிரங்கத்தினும் அந்தரங்கம் வலியுடைத்தென்பது வடனூலார் வழக்கு. அற்பத்தை வேண்டி நிற்பது அந்தரங்கம். பலவற்றை வேண்டி நிற்பது பகிரங்கம் ஆம். பிறாண்டும் இங்ஙனமே உய்த்துணரற்பாலது.

[17] உவமையினுடைய எண்ணும் பாலும் உவமேயத்தின் எண் பால் என்னுமிவற்றின் வேறுபயனவாம் என்பதாம்.

[18] ஆழிகளென்ன மனம் — (*                   ) (*             ) உவமானம் ஆண்பால் (*         ) உவமேயம் அலிப்பால் இங்கட் பால் வேற்றுமையாயினும் (*                   ) (*         ) உவமேயம் அலிப்பால் (*       ) உவமானம் ஆண்பால் என்புழிப்போல அறிஞர்க்கு அருவருப்பைத் தாராமையான் இஃது எண்வேற்றுமைக்கே எடுத்துக்காட்டாகும் என்பான் ஆழிகளென்னமனம் என்புழி எண் வேற்றுமையாம் என்றான் என்க. அங்ஙனமே தண்டியாசிரியரும் கூறியுள்ளார்.

“வேற்றுப்பால் வேற்றெண் உவமக்குறை

உவமமிகை என்னுமிவை உவமையைக்

கெடுத்தற்குப் போதியவாகா; அங்கண்

அறிவுடையார்க்கருவருப்பு இன்மையான்” என்று.

[19] விசேடணங்களால் — விசேடணங்குறைந்த உவமை உவமக்குறை. விசேடனம் மிகுந்த உவமை உவமமிகை என்பதாம். அதனால் பொதுப்பண்பு மிகுந்தவழி உவமமிகையும் அது குறைந்த வழி உவமக்குறையும் ஆம் என்பது போதரும்.

[20] யதிவழு — நாவு சிறிது அடக்கப்படுவதால் யதியென்னும் பெயர்த்தாயிற்று. இது சந்தங்களில் நிகழ்வது; அச்சந்தங்களைக் கூறுங்கால் பதங்களின் முடிவில் இஃது அமைவுறல் அழகுறும். அன்றியிடைக்கண் அமையின் யதிவழுவென்பதாம். இதனை வகையுளியென்ப. “வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்” என்னும் பாட்டியற் செய்யுளாற் பிரபந்தமுதலிற் கூறுகின்ற மங்கலச்சொல்லிற் வரிற் குற்றமாம் என்பது புலனாம். இதனாற் பிறாண்டு அக்குற்றமின்றென்பது போதரும். வடமொழி அலங்காரசாத்திர மரபோ என்னில் இக்குற்றம், யாண்டும் நிகழலாகாதென்பதாம்.

[21] பாண்டியச் சிறுவரை யென்பது காட்சி வினை குறித்து செயப்படுபொருளாம். ஈண்டு அவ்வினைச் சொல்லைக் கூறாமையான் இது வினைச்சொல்லின்றியமைந்த சொற்றொடராம். “வினைச்சொல்லொன்றையுடையது வாக்கியம்” என்பது அதன் இலக்கணமாகலின் வாக்கியத்தன்மையின்மை கருதியே உடலின்மையென்னுங் குற்றமெனக் கூறினான் என்க.

[22] வினைச் சொல்லின்மையான் இயைபில்வழி இயைபின்மையென்னும் பிறிதொரு பெயரும் உண்டென்பான் இஃதே இயைபின்மையென்னும் குற்றமும் ஆம் என்றான் என்க.

[23] அரசருடைய சொற்களில் தொகைநிலை அமைவுறில் அஃது அவரது சினக்குறிப்பை புலப்படுத்தும் என்பதாம். தொகைநிலையாற் புலனாதற்குரிய சினம் கவியினடத்தில்லையாதலான் இது வேற்றிடத் தொகைநிலையென்பது கருத்து.

[24] இங்கண் உயிரை விடுத்தொழிதல் கூறற்குரிய பொருளாம்; அப்பொருளும் கெட்ட நிலைமையை யெய்தியும் என்புழி உம்மென்னுமிடைச்சொல்லாற் போதரும். அஃதின்றி அப்பொருள் தோன்றாதாகலின் இது உரிய கூற்றின்மை யென்னுங் குற்றமாம்.

[25] திரிதருங் கரிகளையும் பாயும் புலிகளையும் — புலிகளினும் கரிகள் சிறப்புடையனவாகலான் அவற்றை முதற்கட் கோடல் பொருந்தும். மான்கள் இழிபுடையவாகலான் அவற்றைப் பின்னர்க் கூறலே சாலப் பொருந்தும் அங்ஙனமின்றி முன்னர்க் கூறியமையான் இஃது ஏற்றமிழிவுறல் என்னுங் குற்றமாம்.

[26] சம்பந்தமின்மை — இதனைச் சாகித்திய தருப்பண நூலார் “                  “ என்பர். விரும்பியாங்கு சம்பந்தம் இன்றென்பது இச்சொல்லின் பொருளாம்.

[27] நிலைகேடரசியற் பட்டாபிடேகத்தை யெய்தினோம் என்புழி நிலைகேடரசியல் என்னுஞ் சொல், பண்புத் தொகையுள்ளடங்கியதாகலான் அது சிறப்பிலதாக அச்சொல்லின் பொருள் பத்திராசனம் முதலியவற்றுடன் இயைபுறாதென்பான் அரசியலிற் பத்திராசனங்கள் பாறைகள் என்றான் என்க.

[28] சொன்மிகை — இங்கட் சொற்களைக் குறைவுறக் கூறியவழி சொற்குறை யென்னுங் குற்றமென்பதூஉம் கொள்ளற்பாலது; இவற்றை முறையே மிகைபடக் கூறல் குன்றக் கூறல் என்ப.

[29] சமுதாயப் பொருள் — சமுதாயம் — குழு. சொற்களின் அளவையிற் பொருளமைவுறினும் சொற்குழுவடிவாகிய வாக்கிய நிலையிற் பொருனின்மையால் இது பொருளின்மையென்பதாம்.

[30] இதனைக் கூறியது கூறல் என்ப.

[31] வியாகரண முறையில் முதலிரண்டாம் வேற்றுமையின் ஆண்பால் இருமையுருபேறிய வழியும், பெண்பால் பன்மையுருபேறிய வழியும் வடிவில் வேற்றுமையின்மையான் எழுவாய் செயப்படுபொருள் என்னுமிவற்றைப்பற்றிய ஐயம், நிகழ்ந்ததென்பது கருத்து.

[32] அம்முறை — பகைவர்க்கஞ்சிப் புற்களைக் கடித்து மனங்கவலின்றித் தூங்குமுறையை.

[33] அங்காந்து உறங்குகின்றனர் என்புழி அங்காந்து என்னும் வினையெச்சம் இறந்தகாலத்தைக் காட்டுமாகலான், எதிர்காலத்தில் நிகழ்தற்குரிய அங்காப்பை முன்னிகழ்ந்ததாகக் கூறியது முறையின்மையாம். அங்காத்தல் உறக்கத்தின்பின் நிகழுமென்பது உலகியலாகலான் அங்காந்து உறங்குகின்றான் (*                                                  ) என்புழி அங்காத்தற்கு இறந்தகால நிகழ்ச்சியின்மையான் “            “ என்னும் இறந்தகால எச்சவிகுதி முரண்பட்டதாகும்; எனக்கடாவி யாசங்கித்து எதிர்கால வுறக்கத்தை நோக்கிய வழி இறந்தகால நிகழ்ச்சி யுண்மையான் முரண்பாடின்றென அவ்வாசங்கை மாபாடியத்திற் பரிகரிக்கப்பட்டுள்ளது; அங்ஙனமே கையடரும் உரைகண்டுள்ளார்.

“உறக்கம், அங்காப்பின் முன்னரே நிகழுமெனினும், அவ்வங்

காப்பின் பின்னரும் தொடர்ந்து நிகழுமுறக்கச் செயலை

நோக்கிய வழி அதற்கு இறந்தகால நிகழ்ச்சியுள்ளது”

என்று. இதனால் இங்கண் முன்னுக்குப்பின் முரண் என்பது எவ்வாறாமெனில், உண்மையே; அங்காத்தலின் முன்னைக்காலத்து உறக்கச் செயலை நோக்கிய வழி இக்கூற்று முன்னுக்குப்பின் முரண்படுமாகலின் இங்கண் முறையின்மையென்பது முதனூலாசிரியரின் உட்கிடை.

[34] ஒருசம்பந்தமும் இன்று — இங்கட் காரியகாரண சம்பந்தம் சிறிதும் இன்று என்பது கருத்து.

[35] கண்ணீரைச்சுருக்கி யெனத்தொடங்கிய தொடர்க்கு இது கருத்து. உலகம் ஒரு கடலாகும் என்னும் அச்சத்தால் கண்ணீரைச் சுருக்கியும் அளவில் பலயாறுகள் பெருக்கமெய்தின என்பது மிகவும் பொருத்தமில் பொருளை வெளிப்படுத்தலான் இது மிகுநவிற்சி யென்னுங் குற்றமேயன்றி உயர்வு நவிற்சியென்னும் அலங்காரம் இன்றென்பது கருத்து.

[36] சுவையின்மையாம் — வேடுவர் தகுதியில் செயற்புரிய முற்பட்டமையான் என்பது கருத்து. சுவை, கேடுறற்குத் தகுதியில் செயலையின்றிப் பிறகாரணம் இன்றென்பது துவனிநூலாசிரியரும்.

[37] அற்பமாயவழி — சாதியானும் அளவையானும் அற்பமாயவழியெனக் கூட்டியுணர்க. சாதி — ஈண்டு ஒரு நிகரனவாகிய பல பொருட்குப் பொதுவாயதோர் தன்மையை உணர்த்தும். இங்ஙனமே மேல்வரும் உவமமிகைக் கண்ணும் கொள்ளற்பாலது. ஈண்டிங்ஙனம் பொருள் கோடலான் முன்னர்ச் சொற்றொடர்க் குற்றங்களுட் கூறிய உவமக்குறை வடவம் மிகையென்னுமிவற்றின் இவை வேறுபட்டனவாம்..

[38] நாய்களென்ன நீவிர் என்புழி இவ்வுவமை சாதிக்குறை பற்றியதாம். “தீப்பொறியென்னத் திகழுஞ் செங்கதிர்” என்புழி அளவைக் குறை காண்க.

[39] இருடிகளென்ன இவ்வுவமை சாதியான் மிக்கதாம்;

“குகைவாயிலென்ன நின்குகாப்பூழிலங்க” என்புழி உவமை அளவையான் மிக்கதாம்.

இங்கண் யாண்டும் பொதுத்தன்மை பற்றி அவையினரை யின்புறுத்தற்கு ஒருபொருளைக் கூற வேண்டுழி அப்பொருளை நாய் முதலியவற்றுடன் உவமித்து இழிபொருளாக்கலான் அத்தகுதியின்மை கருதி குற்றமாம் என்பது கருத்து. அங்ஙனமே காப்பியப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“சாதி அளவை யென்னு மிவற்றைப் பற்றிக்

கூறும் உவமக்குறையாதல் உவமமிகையா

தல் அவ்வவற்றிற்கேற்ற பெற்றி, தகுதியில்

பொருளுடைமை குற்றமாம்” என்று.

[40] இங்கண் விந்தியத்திற்கும் விரூபாக்கனுக்கும் அக்குணங்களாகிய அருவி நெருப்பு என்னு

மிவற்றிற்கும் ஒப்புமை பிரசித்தியின்று; பண்பிகட்குப் பண்புவாயிலாகவும் புண்புகட்குப் பண்பிவாயிலாகவும் ஒப்புமையுண்டெனக் கூறுமாலெனில் அற்றன்று. ஒன்றையொன்று பற்றலென்னுங் குற்றம் நிகழுமாகலான்.

[41] நன்முத்தக்குறியெய்தியவழி — சிங்கம் கயங்களை வலிந்து பற்றியடிக்குங்கால் அவற்றின் மத்தகத்துறும் முத்தங்கள் அங்கட் சிதைந்து கிடக்க, அதனால் அவ்வடையாளமெய்திய வழியென்பதாம். குறி — அடையாளம். அம்முத்தங்களைக் கண்ட காதலன் இவை காதலியின் அலங்கார முத்தங்களென்று மயங்கிப் பின்னர்த் தெளிந்து அவ்வழியை விடுத்து வேற்றுவழி சென்றான் என்பது கருத்து. இங்கட் காதலி சென்றவழியைத் துணிந்து கோடற்குப் போதிய வேது கூறப்படாமையான் இஃது ஏதுவின்மையென்னுங் குற்றமாம்.

[42] தன்மை நவிற்சியுமின்று:— இதனை (*                    ) என்ப வடநூலார். வன்னிக்கப்படுபொருளின் இயல்பை யிழித்துக் கூறியமையான் அவையினர் இன்புராராகலின் தன்மை நவிற்சியுமின்றென்று கூறினான் என்க.

[43] அணிமைக்கணுள்ளது — இங்ஙனங் கூறாதொழியின் வடதிசை நூறாயிர யோசனைகளாற் சேய்மைத்தாயினும் அத்திசைக்கட் கருங்கடலமையுமாகலான் முரணின்மையென்பது கருத்து.

[44] முத்தங்கள் காட்டெருமையின் வலிய கோட்டிடைப் பிறந்தனவென்பது முரணாம். முத்துக்கள் பிறக்குமிடத்தை வருமாறு பெரியாருங் கூறுப.

“கரி இக்கு புயல் பன்றி சங்கு மீன்

அரவம் இப்பி மூங்கில் என்னுமிவற்

றில் நன்முத்துப் பிறக்குமென்பது

உலகிற் பிரசித்தமாம். ஆயினும் அவற்

றுள் இப்பியின்கட் பெரிதும் பிறக்கும்” என்று.

[45] பிறமாறுகோள் — வித்தைமாறுகோள் முதலியன.

எவ்வாறெனில்:— “அறிஞனொருவன் எப்பொழுதும் இரவில் நீராடிப் பகலெலாம் சாத்திரம் பேசுவானும் அதனைக் கேள்வியுறுவானுமாயினான்” என்புழி இரவில் நீராடல் அறநூல் விருத்தம் ஆம்.

[46] கல்வி அறிவு என்னுமிவை, அடக்கம் கேள்வியென்னுமிவற்றான் வனப்புறலாற் பல்லோரானும் கொள்ளற்பாலனவாம். நாரியும் கலவியும் நாணுடனும் காமனுடனும் அகலாவியைபுடைமையாற் இல்லோராற் கொள்ளப்பட்டு இழிந்தனவாம். வனத்திடை வசித்தலாற் பகைவரும் பிழைப்புறுகின்றனர் என்பது எல்லாவற்றினும் இழிந்தமையான் இஃது ஓரினப்பொருளை ஒரோவழிக்கூறும் ஓத்துமுறை பிறழ்ந்ததாம்.

[47] முதலிய என்றமையான் ஸ்தாயிபாவங்களும் கொள்ளற்பாலன.

பிரதாபருத்திரீயம் – சுவையியல்

எல்லாப் பிரபந்தங்கட்கும் உயிரெனப்பட்ட சுவையின் இலக்கணம் விளக்கப்படுகின்றது.

விபாவம் அநுபாவம் சாத்துவிகம் வியபிசாரி என்னுமிவை கருவியாக, அக்கருவியால் நுகரப்படும் ஸ்தாயீபாவம் சுவையென்பதாம்[1].

 

1

“விபாவம் அநுபாவம் வியபிசாரியென்னு மிவற்றினியைபாற் சுவைத் தோற்றம் ஆம்” என்பது பரத சூத்திரம்.

ஸ்தாயி பாவங்களுக்கு மகளிர் முதலிய ஆலம்பன காரணங்களோடும், உய்யானம் முதலிய வுத்தீபன காரணங்களோடும், கடைக்கணித்தன் முதலிய காரியங்களாகிய அநுபாவங்களோடும், நிருவேதம் முதலிய சககாரிகளாகிய வியபிசாரி பாவங்களோடும், முறையே பிறத்தல் பிறப்பித்தல், தோன்றல் தோற்றுவித்தல், வளர்தல் வளர்த்தல், என்னும் இயைபு நேர்ந்துழி சுவை முறையே உற்பத்தியையும் தோற்றப்படுதலையும் வளர்ச்சியையும் எய்துகின்றது. அங்ஙனமே, ஆலம்பனவுத்தீபன விபாவங்களால் இரதி முதலிய பாவங்கள், ஆக்கப்பட்டு, காரியமாகிய அநுபாவங்களாற் றோற்றமெய்தி, வியபிசாரிபாவங்களாற் பெருக்கு றீ இச்சிறப்பு வகையால் இராமன் முதலிய அநுகாரியர்பாலும், தம்மை யவ்வநு காரியராக அநுசந்தானஞ் செய்தலான் நடர்பாலும், சுவையாகத் தோற்றமெய்துவனவாம். அரவு இல்வழியும் அரவெனக்கண்ட கயிற்றின் அச்சம் விளைந்தாங்கு, சீதையைப் பற்றிய காதல் வடிவாய இராமனது இரதி, நடர்பால் இல்வழியும் அவர்மாட்டு இருப்பதே போலப் புலனாகின்றது; என்றதனால் வியஞ்சனையால் அமையும் இரதியின் விளக்கமே சுவைத்தோற்றம் எனப் பட்டலர் உல்லடர் முதலியவாசிரியர் கூறுவர்; இதனால் இவ்வாசிரியர் உற்பத்திவாதிகளாவர்.

 

அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.

 

விபாவம் அநுபாவம் சாத்துவிகம் வியபிசாரிபாவம் என்னுமிவற்றான் இனிய[2] நிலையெய்தும் ஸ்தாயீபாவம், சுவையெனப்படும்” என்று.

 

2

 

“இராமனே இவன்” “இவனே யிராமன்” என்றும், எதிர்காலத்தில் “இவன் இராமனல்லன்” எனத் தடைப்படற்குரிய நிலையில் “இராமன் இவன்” என்றும் “இவன் இராமனோ அல்லனோ” என்றும் “இராமனையொத்தவன்” என்றும் மெய்யுணர்வு பொய்யுணர்வு ஐயவுணர்வு ஒப்புணர்வு என்னுமிவற்றின் வேறுபட்ட ஓவியத்துரக நியாயத்தால் “இராமன் இவன்” என்னும் உணர்ச்சியாற் கொள்ளற்பாலனாகிய நடன்பால்,

 

“என்னுடைய வுறுப்புகளுக்கு அமுதச்சுவையின் கலவையும், கண்களுக்குக் கருப்பூரத்தானியன்றமை தீட்டுங்கருவியும், மனத்திற்கு உருவெடுத்த விருப்ப வனப்பமும் ஆகிய அந்த இந்த உயிர்க்காதலி, கண்களுக்குப் புலனாயினள்”.

“யானும், ஈண்டுத் தெய்வவயத்தால் உழிதருவிழியுடையவளிற் பிரிந்துளேன்; இடையறா தலைவுறுங்காருடைக் காலமும் வந்தெய்தியது”

 

என்னும் இவை முதலிய காப்பியங்களின் இடையறா நினைவின் ஆற்றலானும் பயிறல் பயிற்றல் என்னுமிவற்றான் செயலை முற்றுற வெளிப்படுத்தும் நடனாலேயே வெளிப்படுத்தப்பட்ட காரிய காரண சககாரிகள், கிருத்திரிமங்களாயினும் அச்சொற்களாற் கூறப்படாமல் விபாவம் முதலிய சொற்களான் வழங்கப்படுமவற்றுடன், தோன்றல் தோற்றுவித்தல் என்னுமியைபு பற்றி அநுமிக்கப்படுவனவாயினும்,

 

சுவைக்குறிப்பு

 

பொருள்வனப்பின் ஆற்றலாற் சுவைத்தற்குரிய நிலைமை நிமித்தமாக அநுமிக்கப்படும் பிறவற்றின் வேறுபட்டனவாய் ஸ்தாயியாந்தன்மைகொடு தோன்றும் இரதி முதலிய பாவங்கள் அந்நடன்பால் இன்றெனினும், அவையினரின் அறிவால் நுகரப்படுமவை சுவையாம். எவ்வாறெனில், பனிபரவுறுமோரிடத்திற் புகையின் றெனினும், அதன் றோற்றத்தாற் புகையகலா நெருப்பை யநுமித்தல் போல, இவ்விபாவம் முதலியன என்னைச் சார்ந்தனவே, என்று நடனாலேயே விளக்கப்படுவனவாய் அவன்பால் அவை இன்றெனினும், அவற்றால் அவையகலாவிரதி, அநுமிக்கப்படுகின்றது.

அநுமான வடிவம் வருமாறு:-

“இவ்விராமன், சீதையைப் பற்றிய காதலையுடையன்; சீதையாதிய விபாவ முதலியவற்றின் இயைபுடைமையான்; எது இங்ஙனம் இன்றோ; அஃது அங்ஙனமன்று; எங்ஙனம் யானோ?” என்று.

 

இரதியின் கண்கூடாய தோற்றமே இன்புறுத்துமன்றி, அநுமானம் இன்புறுத்தாதெனக் கூறுமாலெனில்; அற்றன்று. இரதி, அநுமிக்கப்படுவதாயினும், தன் வனப்பின் ஆற்றலான் சுவைத்தற்குரிய நிலைமை நிமித்தமாக அஃது அநுமிக்கப்படும் பிறவற்றின் வேறுபட்டதாகலான். அநுமிதி கணப்பொழுதிருக்குந் தன்மைத்தாகலின் சுவைக்கும் அத்தன்மை நிகழுமாலெனில், அற்றன்று; அநுமான விருப்பங்காரணமாக அநுமிதியில் சாத்தியசித்திக்குத் தடையின்மையான். அத்தகைய வநுமான விருப்பிற்காதாரமும், அவையினரையகலாது பற்றி நிற்கும் வாதனையே யாமெனக் கற்பிக்கப்படுகின்றது, என்று சங்குகர் முதலியவாசிரியர் கூறுப. இதனால் இவ்வாசிரியர் அநுமானவாதிகளாவர்.

 

3

காப்பியத்திற்கு அபிதைச் செயலென்ன, காப்பிய நாடகம் இவற்றிற்குப் பாவுகச்செயல் போசகச்செயல் என்னும் இரு செயல்கள் உள்ளன. காப்பியப் பொருளின் உணர்ச்சிக்குப் பின்னரே யவற்றுண் முதலாகிய பாவுகச் செயலான் விபாவமாதி யவற்றின் வடிவாகிய சீதையாதியவும் இராமனைச் சார்ந்த இரதியும் சீதையாந்தன்மை இராமனாந்தன்மை யென்னுமிவற்றின் இயைபு பற்றிய கூறுகளை நீக்கிப் பொதுவகையாக, மகளிர்த்தன்மையும் இரதித்தன்மையுமாம் அளவினானே நிகழ்த்தப்படுகின்றன; பொதுவாயமைந்த விபாவாதிகளாற்றுணை வலியுடைய போசகச் செயலான் இரதி நுகரப்படுகின்றது; என்று சுவை நுகர்ச்சியே சுவைத் தோற்றமாம்; எனப் பட்ட நாயகவாசிரியர் கூறுப. இதனால் இவ்வாசிரியர் நுகர்ச்சி வாதியாவார்.

 

4

 

 5

 

காப்பியத்திலும் நாடகத்திலும், கவியினாலும் நடனாலும், விபாவம் முதலியன வெளிப்படுக்கப் பட்டிருக்குங்கால், துஷியந்தன் முதலியோர்பால் சகுந்தலை முதலியோரைப்பற்றிய இரதி, வியஞ்சனைச் செயலாற் கொள்ளற்பாலதாக, பின்னர், அறிவுடைத் தன்மையான் விளக்கமிக்க பாவனை விசேடமாகிய குற்றத்தின் மிகையாற்று ஷியந்தனாந்தன்மை கற்பிக்கப்பட, அதனாற் கவர்படுந் தனது ஆன்மாவில், அஞ்ஞானத்தான் மறைவுற்ற சிப்பியில் இரசதம்போல விளைந்தனவும் கூறற்கரியவுமாகிய, அவ்வண்ணமே விளங்குஞ் சகுந்தனை முதலியோரைப் பற்றிய இரதி முதலியனவே சுவையாம், என்று நவீனர் கூறுப.

 

பாவம்[3] நிலைபெறுதலாவது ஒத்த தன்மையது (ஸஜாதீய) பிறதன்மையது (விஜாதீய) என்னுமிவற்றாற் கேடுறாது நுகர்ச்சி[4] நிறைவுறுங்காறும் நிலைத்திருத்தல்.

அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“ஒத்த தன்மையது பிறதன்மையது என்

னுமிவற்றாற் கேடுறா வடிவுடையதாய்ச்சு

வை நிலைப்படுமளவும் இருப்பது ஸ்தா

யீபாவம்” என்று கூறப்படும்.

 

உவகை[5] நகை அழுகை வெகுளி பெருமிதம் அச்சம் இளிவரல் மருட்கை சமநிலை யென்னுமிவை முன்னையாசிரியர் கூறிய சுவைகளாம்.               (க)

 

இவற்றின் ஸ்தாயீபாவங்கள்:-

 

இரதி சிரிப்பு துன்பம் சினம் உற்சாகம் பயம் இளிவு வியப்பு சமம் என்னுமிவ்வொன்பதும் முறையே உவகை முதலியவற்றிற்கு ஸ்தாயீபாவங்களாம். (உ)

 

விபாவம்:— அவற்றுள் சுவைகளைத்[6] தோற்றுவித்தற்குரிய காரணத்தை விபாவம் என்ப; அவ்விபாவம், ஆலம்பனம் உத்தீபனம் என இருதிறத்து.         (ங)

ஆலம்பன விபாவம், சுவைக்குச் சமவாயி காரணம் ஆம். உத்தீபன விபாவம் பிற காரணம் ஆம்; அவ்வுத்தீபன விபாவம் நால்வகைத்து. அங்ஙனமே சிருங்கார திலகத்திலும் கூறப்பட்டுள்ளது.

 

“சுவைப் பொருளின் குணங்களும்; அ

தன் செயலும், அதன் அலங்காரமும்,

நடு நிலைப்பொருள்களும் என, உத்

தீபன விபாவத்தின் முறை நால்வகையாம்”

 

சுவைப்பொருளின் குணங்களாவது:- உருவம் பருவம் முதலியனவாம்.

சுவைப்பொருளின் செயலாவது:- பருவத்தான் விளையும் குறிப்பும், உறுப்பவிநயமும் ஆம்.

 

அதன் அலங்காரமாவது, சிலம்பு, கைவளை, அலங்கல் முதலியனவாம்.

நடுநிலைப் பொருள்களாவது, தென்றல் மதி முதலியவாமெனக் கூறப்படும்.

 

அநுபாவம்:- காரியப்பட்டு[7] உடலின்கட்டோன்றும் கடைக்கணித்தன் முதலியன அநுபாவம் என்று கூறப்படும்.                                     (ஙஇ)

சாத்துவிகங்கள்:-

பிறர் எய்திய இன்பத்துன்பங்களைப் பாவித்தலான், அந்தக்கரணம் அவ்வண்ணமாந்தன்மை, சத்துவம் ஆம். அதனால் நிகழுஞ் செயல்கள் சாத்துவிகங்களாம்.[8]

அவை:—

தப்பித்தல் மயக்கம் மயிர்சிலிர்த்தல் வியர்த்தல் வெதும்பல் நடுக்கம் கண்ணீரரும்பல் குரற்சிதைவு என்னுமிவ்வெட்டும் சாத்துவிகங்களாம்.  (சஇ)

 

வியபிசாரிபாவங்கள்[9]:-

 

வெறுப்பு வாட்டம் ஐயம் அழுக்காறு களிப்பு (****) மெய்வருத்தம் (****) மடி எளிமை சிந்தை மயக்கம் நினைவு தைரியம் நாணம் சாபலம் மகிழ்ச்சி தடுமாற்றம் அறிவின்மை செருக்கு துன்பம் பேரவா கனவு அபசுமாரம் மிகுதூக்கம் விழிப்பு சினம் அடக்கம் கொடுமை துணிபு நோய் பித்தநோய் இறப்பு அச்சம் ஊகம் என்னுமிம்முப்பத்து மூன்றும் சுவைக்குத் துணைபுரியும் குறிப்புக்களாம். (அஇ)

 

அங்ஙனமே காப்பியப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது:-

“உலகில் இரதி முதலிய ஸ்தாயிபாவங்களுக்குக் காரணங்களும் காரியங்களும் துணைப்பொருள்களும் ஆகுமவைகளே, நாட்டியத்திலும் காப்பியத்திலும் விபாவங்கள் அநுபாவங்கள் வியபிசாரிபாவங்கள் எனக்கூறப்படுகின்றன” என்று.

 

உலகில் காரணம் காரியம் துணைப்பொருள் என்னுஞ் சொற்களாற் கூறப்படுந் தலைவன் றலைவி கடைக்கணித்தல் புருவநெறித்தல் வெறுப்பு முதலியன, காப்பியம் நாடகம் இவற்றில் விபாவம் அநுபாவம் வியபிசாரிபாவம் என்னும் சொற்களான் வழங்கப்படுகின்றன.

 

உவகை பெருமிதம் வெகுளி மருட்கை யென்னு மிச்சுவைகள், சிறப்புறுந்தலைவனையெய்தி பெருக்கமெய்துகின்றன. அதனால் உவகைச் சுவை கீழ்மகனைப் பற்றிய வழி அது போலிச் சுவையாகும் என்பதாம்.

 

அங்ஙனமே கூறப்பட்டுள்ளது:-

“காதல், தலைவன் றலைவியென்னு மிரு

வருள் ஒருவரிடத்தே பொருந்தியதும்,

கீழ்மகனையும் விலங்கினத்தையும்பற்

றியதும், தலைவி பலரைக்காதலித்த

லும் எனப்போலிச்சுவை, மூவகைத்தாம்” என்று.

 

வியபிசாரிபாவங்கள் எழுச்சி அடக்கம் என்னும் நிலைகளானும், ஒன்றற்கொன்று முரண்படுஞ் சுவையினைச் சார்ந்த வியபிசாரிபாவங்களின் பகைமையானும், இயைபால் ஒன்றற்கொன்று நெருக்கத்தானும், பலவற்றின் கலப்பானும் என நான்கு திறத்தவாம்.

அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.

குறிப்பின் அடக்கம் எழுச்சி இயைபு கல

வை என்பனவாம்.

 

————-

 

இரதி முதலிய ஸ்தாயிபாவங்களின்

இலக்கணமும் எடுத்துக்காட்டும்.

————-

 

இனி, நிறுத்தமுறையானே ஸ்தாயீபாவங்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும் கூறப்படுகின்றன. அவற்றுள்;

புணர்ச்சியைப்[10] பற்றிய ஓர்வகை

விருப்பம் இரதியாம்

எவ்வாறெனில்:-

உவகைச் சுவையொன்றுடைய காமனும், உலகின் இன்பப்பெருக்கிற்கொரு நிலைக்களனாகும் மதியமும், வனப்பிற்கோர் உறையுளாகிய வசந்தகாலமும், கண்கவர் கவினுடைப்பிறவும் அமைக; அவற்றால் என்? யாவரினுஞ் சிறந்து காமற்கும்[11] காமவிழாவாகும் காகதிவேந்தர் எற்குக் கணவன் ஆயினார்.  (கூஇ)

 

வேறுபாட்டின்[12] காட்சி முதலிய

வற்றால் விளையும் மனோவிகாரம்

நகையாம்.[13]

எவ்வாறெனில்

குழற்கற்றையைத் தாங்கி, கண்களுக்கு மைதீட்டி பொய் நகில் புனைந்து பெண் வேடமுடையராய் ஏகசிலைப்பதியில் மறைவுருக்கொண்டொழுகும் அரசரைக் காமுகவிடர்கள், ஆவணத் தடை யிரவிற் கண்ணுற்று மார்பகத்துகிலை விலக்கி நகிலை வலிந்து பற்றித் துகின்முடியை யவிழ்ப்பாராய் உண்மையுணர்ந்து கீ! கீ! கொடிதென அவரை விட்டுவிடுகின்றனர்.                             (க0இ)

 

 

உறவோரின் பிரிவு முதலியவற்றால்

அகத்திற்றோன்றும் மிகு வருத்தம்

துன்பம் ஆம்.

 

எவ்வாறெனில்

விதியே![14] நீ அருளிலியாயினை; “காட்டிலிருந்து காய் கிழங்கருந்தி உடலைத் தாங்குக” என்று எங்களையேன் தண்டித்தாய்? அவ்வத்தகைய பெருமை வாய்ந்த இல்லங்கள் எங்கே போயின? பாலை நிலம், இருக்கையாகக் கற்பிக்கப்பட்டது. ஆகா! காதலரே! பிரதாபருத்திரவேந்தனது சினத்தீயில் வீழ்ந்தொழிந்தீர்களே! என்றழும் பகைமனைவியரின் கண்ணீரால் அப்பாலை நிலம் மருத நிலமாயிற்று. (ககசி)

பகைவரிழைக்குங்[15] தீங்கினால் விளை

யும் மனக்கொதிப்பு, சினம் ஆம்.

 

எவ்வாறெனில்:

 

அடா![16] அடா! சேவண! இதற்குமுன்னிராத இப்பெருஞ்செருக்கு, உனக்கு எங்ஙன் உண்டாயிற்று? அதனாலன்றே கௌதமயாற்றினைக் கடந்தனை; அங்ஙனங் கடந்தமையால் நீ, இயமன் வாயை யெய்தியவன் ஆகின்றாய்; ‘காகதிவீரருத்ரன்’ என்னும் மிவ்வேழக்கரமந்திரம் பகையரசர்களாகிய பெரும்பூதங்களையும் கிரகங்களையும் அச்சுறுத்தி யுச்சாடனஞ் செய்யுமெனக் கேட்டிலையோ?  (க2இ)

 

உலகிற் சிறந்த செயல்களில்

தளராமுயற்சி, உற்சாகம்.

எவ்வாறெனில்

மூவுலகையு[17] மழிக்கும் விருப்பொடு கடல்கள், எல்லாப்புறத்துங் கலக்கமெய்திடினும், மலைகள் பலபுறத்தும் பெருங்கற்களை வீழ்த்துதற்குச் சித்தமாயிருப்பினும், அவற்றையும் விலக்க யாமே வலமுடையேம்; அங்ஙனமாக, இவ்வற்ப அரசரை வேறலிற் புகழெமக்கென்னை? எனக்காக காகதிவேந்தரின் படைவீரர், முழக்கஞ் செய்கின்றனர்.                                 (கஙஇ)

அச்சுறுத்துமவற்றின் காட்சி முதலிய[18]

வற்றாற் கேட்டையாசங்கித்தல்,

பயம் ஆம்.

எவ்வாறெனில்:

பாரெலாம் பரவு விறலுடைய வீரருத்திரனது போர்ச்செலவின் முழங்கு முழவொலியைப் பகையரசர் நெடுந்தூரத்திலுருந்து செவியுற்று நிறைவுறுங்காது நோயாற் கலக்கமெய்தியராய், மலைகளில் ஏறி அடர்ந்த அடவியிற் புக்கோடுங்கால், அங்கண் முண்மரங்கள், கூரிய முட்களால் அவரது குஞ்சியைப் பற்றியிழுக்க, தம் பகைவேந்தன் என்னும் எண்ணத்தால் “விடவேண்டும்; காத்தருளல் வேண்டும்” என்று அம்மரங்களை யிரந்து வேண்டுகின்றனர்.  (கசஇ)

 

பொருள்களின்[19] குற்றங் கண்ட வழி

நிகழும் அருவருப்பு, இளிவு ஆம்.

 

எவ்வாறெனில்:—

வீரருத்திரனால் நிருமிக்கப்பட்ட போர்க்களங்கள், எப்புறத்தும் ஊனீரான் மிகுதியான சேற்றில் வீழ்ந்திறந்த வேழங்களின் உடல்கள், வீக்கமெய்த, அவற்றின் பந்தியில் நரிகள் களித்துத்திரியவும், தசை ஊனீர் அரத்தம் இவை மிக்கப் பெருக்கெடுத்தோடவும், குவியலாக்கிடக்கும் என்புக்களால் பக்கவெளியாவும் மேடு பள்ளமாகவும் அமைந்து தீமணங்கமழ்வனவாய் அரசர்க்கு அச்சத்தை விளைவிக்கின்றன.                                                  (கருஇ)

 

அருமைப்பொருளைக்[20] காண்டலான் விளை

யும் மனவெழுச்சி, வியப்பு ஆம்.

 

எவ்வாறெனில்:— மாண்புறுமுயர்வும் மாட்சிமிக்கவிக்காம்பீரியமும் விறல் புகழ் இவற்றினொழுங்கும் வாகுவின் கீர்த்தியும் கூறற்கரியவாய் வேறுபட்டு விளங்குகின்றனவாகலின் வீரருத்திரனைச் சார்ந்தவெல்லாம் புதியனவென்றே

யறிகின்றேன்; அவ்வேந்தனைப் படைத்தலிற் கருவிப்பொருள்கள், எத்துணையவாக எத்தகையவாக யாண்டே நான்முகனாலீட்டப்பட்டில.            (கசாஇ)

 

விராகம் முதலியவற்றான்[21] மனத்தின் விகாரமின்மை சமம் ஆம்.

எவ்வாறெனில்:—

 

பிரமன், மிக்கவாழ்நாட்பெருமையை யெய்திப் பெற்றதென்னை? இந்திரன், பிறர் எய்தற்கரிய இரு நிதியெய்தியும் அவன் புரிந்ததென்னை? எனக்கருதி யுட்பகையொழிந்த நல்லோர் தெலுங்கு நாட்டுத் திலகமாகிய இவ்வேந்தன் உலகைப் புறந்தருமிதுபொழுது வெளிப்பகையையுமறிந்திலர்[22].           (கஎஇ)

 

உவகைச்சுவையின் ஆலம்பன விபாவம் எவ்வாறெனில்:—

 

இலாவணியத்திற்கொரு[23] விளைநிலமும் பிரமனது படைப்புத் திறனுக்கு[24] எல்லையும் உவகைப் பிணையும்[25], விலாசங்கட்கு ஆவணமும்,[26] காமன் இன்புறற்குரிய இடனும் ஆகிய சிறப்புறுமித்தருணி, மகளிர்க்கு அதிதெய்வமும்[27] ஆவள்; பிற குணங்களைக் கூறில் என்னாம்?[28] காமற்குக் காமனாய் விளங்குந் திருவளர் வீரருத்திரவேந்தன் இவளுக்குக் காதற்கிழவனாய் அமைகின்றான்.(கஅஇ)

 

உத்தீபனவிபாவம் எவ்வாறெனில்:—

மான்விழியாளின் யௌவனப்பருவம் உரம்பருத்தமையுமளவில் நவம் நவமாகிய விலாசங்களான் இவ்வுலக மூன்றையும் மையற்படுத்துகின்றது. நகிற்பருமை[29] நிறைவுறுமேல் நிகழுஞ் செய்தி யதோ கூறவேண்டுவதென்னை? மலர்க்கணைக்கழவோன் யாவற்றையும் வென்றவன் ஆவன்.          (ககூஇ)

 

அநுபாவம் எவ்வாறெனில்:—

 

வாமலோசனை, காமத்தாற் சிறிது விரிந்தனவும் புன்முறுவலான் இனிய நறுமணங் கமழ்வனவும் அற்பநாண்மடியுடையனவும் அன்பு நீரலை நிரம்பினவும் பலவழிப்பட்டனுவும் ஆயிரங்காமன்மாரைப் படைப்பனவுமாகிய கடைவிழிகளை, வீரருத்திரவேந்தனைச் சுற்றிலுமிறைக்கின்றான்.                (உ0இ)

 

விறல்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்

தம்பம்.[30]

காதல் அச்சம் இவற்றான் உண்டாம்

உறுப்பின் செயலொழிவு, தம்பம் ஆம்.

எவ்வாறெனில்:—

காகதி நாட்டு மகளிர் மன்னனாகிய மன்மதனைக் கண்ணுற்று[31] அதனாற் காமன் கணை பாய்ந்தென்ன, அசைவறுமுறுப்பினையுடையராய் நின்றனர்.    (உகஇ)

 

மயக்கம்(பிரளயம்)[32]

இன்பத்துன்பங்கள் முதலியவற்றால்

உண்டாகும் ஆழ்ந்தபொறிமயக்கம்,

மயக்கம் ஆம்.

எவ்வாறெனில்:— தோழீ இவ்வீரருத்திரவேந்தனாகுந் திங்களஞ் செல்வன், காமவேள் வடிவழகை வென்றவனேயாவன்; இவ்வரசனைப் பார்த்துப் பொறிகள் யாவும் மயங்குகின்றன[33].                                          (உஉஇ)

 

மயிர்சிலிர்த்தல். நடுக்கம்

இன்பம் முதலியவற்றின் மிகையால் விளை

யும் உரோம விகாரம், மயிர்சிலிர்த்தல்[34] ஆம்.

அராகம் சினம் அச்சம் முதலியவற்றால்

உண்டாகும் மெய்விதிர்ப்பு நடுக்கம்[35] ஆம். (உஙஇ)

 

இரண்டற்கும் எடுத்துக்காட்டு எவ்வாறெனில்:—

காதலன் றழுவ[36], அதனான் மிக்க நடுக்கமெய்திய பெண்ணொருவள், அக்காதலனது பிரிவால் இளைப்புறும் உறுப்பினையுடையளாய், புளகந்

தலைக்கீடாக உட்புகுந்த காமன் கணைகளை வெளிப்படுத்துகின்றாள்.             (உசஇ)

 

வியர்த்தல்

இன்பம் துன்பம் வெப்பம் முதலியவற்

றால் மெய்யின் நீர் வெளிப்படுதல் வி

யர்த்தல்[37] ஆம். (உரு)

எவ்வாறெனில்: —

அழகுவிழியணங்கொருத்தி, தன்காதலனாகுங் காகதிவேந்தனது நற்செய்தியைச் செவியுற்று, ஆங்குக் காமனார் அரசியலில், அபிடேகஞ் செய்யப்பட்டவள் போல, உடல் நனைவுற்றனள்.                                           (உகா)

 

வெதும்பல்

துன்பம் செருக்கு சினம் முதலியவற்[38]

றால் நிறம் மாறுபடுதல் வெதும்பலாம்.          (உகாஇ)

 

எவ்வாறெனில்:—

மன்னவ![39] தங்களுடைய மதியனைய வெளிறிய குணங்களை, இடையறாவின்றி யெண்ணுகின்ற யான் சியாமையாயினும், என்னுடைய உறுப்புக்கள் வெள்ளியவாயின.                                                    (உஎசி)

 

கண்ணீரரும்பல்

துன்பம் சினம்[40] இவற்றான் கண்க

ளில் நீர் உண்டாதல், கண்ணீரரும்

பல் ஆம்.        (உஅ)

எவ்வாறெனில்:—

வீரருத்திரவேந்தற்கஞ்சிக் கடலின் மூழ்கிய பாண்டியனைத் தேடற்கென்ன, அவன் மனைவியின் கண்ணீர்ப்பெருக்கு[41], யாறாகப் பாய்கின்றது.                (உக)

 

குரற்சிதைவு

மகிழ்ச்சி முதலியவற்றாற் குளறு

படக்கூறல், குரற்சிதைவு[42] என்பதாம்.  (உகாஇ)

எவ்வாறெனில்:—

பெண்ணொருவள், தனியிடத்திற்[43] றன் காதலனுடன் மிக்கக் குளறுபடப் பேசுங்கால், அச்சொற்களின் பொருளை யனங்கனொருவனேயறிய வல்லான்.(ங0இ)

வியபிசாரிபாவங்களாகிய வெறுப்பு முதலியவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்.

 

வெறுப்பு

துன்பம் அழுக்காறு மெய்யுணர்வு முதலிய

வற்றான் “எல்லாம் பயனற்றன” என்னும்

எண்ணம் வெறுப்பு ஆம்; அங்கண், ம

னக்கலக்கம் கண்ணீர் பெருமூச்சு எளி

மை என்னுமிவை, உண்டாகின்றன. (ஙகஇ)

எவ்வாறெனில்:—

தோழீ! கருப்பூரம் வேண்டா; கத்தூரியாற் பயன் என்? சந்தனமும் அமைக; குணங்களாற் குளிர்ந்து புகழ்மணங் கமழும் பிரதாபருத்திரனையே[44] யழைத்து வருக. (ஙஉஇ)

 

வாட்டம்

வெதும்பல் வெறுப்பு இவற்றிற்குக்கா

ரணமாகிய வலிக்குறைவு வாட்டம்[45] ஆம். (ஙங)

எவ்வாறெனில்:

எல்லாவற்றையும் நிலவுலகந் தாங்குகின்றது; அந்நிலவுலகைப் பிரதாபருத்திரனது புயம் தாங்குகின்றது.; அவ்வேந்தனை, வலியற்றவுடலையுடைய யான் உரத்தாற்றாங்கி, அதனால் ஆராய்ச்சியில்லாத[46] செயலுடையளாகின்றேன். (ஙச)

 

ஐயம்

சினம்[47] முதலியவற்றிற்குக் காரணமாய்

கேட்டின் விளைவை ஊகித்தல் ஐயம் ஆம். (ஙசஇ)

எவ்வாறெனில்:—

“பிறர்[48] அறிய வேண்டா” என்று கருதியே யான் காதலனது நட்பைக் கருத்துட் கொண்டேன்; ஆயினும், எல்லாவுறுப்புக்களினும் நிறைவுறு புளகங்களான் மக்களுக்கு அதனை வெளிப்படுத்துவேனோ?                (ஙருக)

 

அழுக்காறு

பிறரது[49] மேன்மையைப் பொறாமை

அழுக்காறென்ப.          (ஙகா)

எவ்வாறெனில்:—

குலத்தானும் குணத்தானும் வடிவானும் நிலமகள் என்னிற் சிறந்தவளோ? பிரதாபருத்திரன், அந்நிலமகளை வெகுமதிப்பானாயின் அஃது ஊழ்வினைப் பயனே யாம்.                                                               (ஙஎ)

 

களிப்பு (மதம்)

கள்[50] முதலியவற்றான் விளைந்த மயக்

கம் மகிழ்ச்சி யிவற்றின் கலவை

களிப்பு என்பதாம்.          (ஙஎஇ)

எவ்வாறெனில்:—

காதலன் நினைவு என்னும் கள்ளையுண்ட இப்பெண், உடல் கருத்துக் கண் சிவந்து பரவயப்பட்டுப் பொருந்தாப் பொருள்படுஞ் சொற்களைக் கூறுகின்றாள்; இடையறவின்றிச் சிரிக்கின்றாள்; பாருங்கள்.                      (ஙஅஇ)

 

மெய்வருத்தம் (****)

வழி நடத்தல் புணர்தல் முதலியவற்

றான் விளைந்து வியர்வையை மிகுவிக்

கும் அயர்வு, மெய்வருத்தம் ஆம்.   (ஙகூ)

எவ்வாறெனில்:—

சுந்தரி! உன்னுடைய காதலன் வருகின்ற இப்பொழுதே போக்குவரவாலயர்வெய்தியேன் வருந்துகின்றாய்? நறுமணப்பூச்சும், அழிந்தொழுகின்றது.                                                 (ச0)

 

மடி

செயக்கடவ[51] வினைகளில் முயற்சிக்

குறையே மடியெனக் கூறுப.

எவ்வாறெனில்:—

மான்விழியாளின் வீட்டு வினைச்செய்தியைப் பற்றிக் கூறல் வேண்டா; இவள் தன் உறுப்புக்களை[52] யணிப்படுத்தலினும் முயல்விலியாகின்றாள்; ஆனால் இஃதுண்மை; காதலன் வந்துழி அவன் முன்னிலையிற் செயற்பாலனவற்றைக் காமனே வலிந்து செய்விக்கின்றான்.                              (சகஇ)

 

எளிமை  

இயல்பு நீக்கம்[53] மனத்தளர்வு இவற்றான்

உண்டாகும் பெருமையின்மையை

யெளிமையென்ப.

எவ்வாறெனில்:—

தலைவனை யழைத்து வருதற்குச் சென்ற தோழி, காலந்தாழ்க்கின்றதென்னோ; காமதேவனே! நினக்கு வணக்கஞ் செய்கின்றேன்; “சிறிது தாழ்க்க”[54] எனத் திங்களஞ் செல்வற்கு நீ கட்டளையிடல் வேண்டும்.                            (சங)

 

சிந்தை

விரும்பியது[55] கிடைக்கப்பெறாமையான்

இடையறவின்றியப்பொருளையே நினைத்

தல், பாழ்மை துன்பம் இவற்

றைச் செய்யுஞ் சிந்தையாம். (சஙஇ)

எவ்வாறெனில்:—

இத்தலைவி[56], தன்னிருமுதுகுரவர், அணிமைக்கணிருப்பினும், அவர்களைப் பார்க்கின்றாளில்லை; அவர் வினாவியும், மறுமொழி கூறுகின்றாளில்லை; ஆனால் காதலனைச் சென்றியைந்த மனத்தின் செலவையே தேடுகின்றாள்.(சசஇ)

 

மயக்கம்

அச்சம் துன்பம் ஆவேசம் இடையறா

நினைவு என்னுமிவற்றான் மாழாத்தல், மயக்

கம் என்பதாம். (சரு)

எவ்வாறெனில்:—

இம்மெல்லியலாள்[57] மிக்க நீட்டித்த பகற்பொழுதை யெவ்வண்ணமோ கடத்தி பின்னர்ப் புதுவேடம் புனைந்து கொண்டு காதலன்பாற் பாங்கியரை விரைவிற் போக்கினாள்; போக்கியும் மனக்கினிய காதலன், தாழ்க்குங்கால், தண்கதிர்ச் செல்வனுடைய நீடியபாதங்களால் எல்லாவுறுப்புகளும் புடைப்புற மயக்க மெய்தினான்.                                                            (சகா)

 

நினைவு

முன்னர்த்[58] துய்த்த பொருளைப் பற்றிய

உணர்ச்சி நினைவெனப்படும். (சகாஇ)

 

எவ்வாறெனில்:—

பிரதாபருத்திரனது புயத்தின் பரிசத்தை எனது ஓருருப்பு ஒருகால் எய்த, அவ்வுலப்பிலா வூற்றின்பத்தை, எல்லா வுறுப்புகளும் எய்துகின்றனவென்றால், அவரது வாகுவில் நெடிது நிலவி நிற்கும் நிலமகள் எத்தகைய நல்வினை புரிந்தனளோ?                                                     (சஎஇ)

 

தைரியம்

 

அறிவு[59] விரும்பியது கோடல் என்னும் இவை

முதலியவற்றான் அவாவின்மை, தைரியம் ஆம்.

 

எவ்வாறெனில்:—

 

மனமே![60] மூவுலகிற்கொரு வீரனாகிய வீரருத்திரவேந்தன், நின் காதலனாக, நற்பேறு பெறுகின்றாய்; நன்று! நன்று! அதனால் உலகம் யாவையுஞ் சாரமற்றனவாகக் கருதுகின்றாய்.                                      (சகா)

 

நாணம்

 

காதல் துதி முதலியவற்றான்[61] மனத்து

நிகழும் கூச்சம் நாணம் ஆம்.  (சகாஇ)

 

எவ்வாறெனில்:—

 

பல எண்ணங்களாற்[62] பார்க்க விரும்புந் தெலுங்கு நகரங்கனைகளுடைய கண்கள், காகதிவேந்தன் காணப்படுங்கால் வீழ்தரு மிதழ்களை யுடையவாயின.      (ரு0இ)

 

சாபலம்

 

விருப்பு[63] வெருப்பு முதலியவற்றான் மனம்

ஒருவழிப்படாமை சாபலம் ஆம். (ருக)

 

எவ்வாறெனில்:—

 

இளையவளொருத்தி[64], வீரருத்திரனைப் பார்த்துச் சுழல்வுறு விழியுடையளாய்க் காமவிலாசத்தான் முறுவலித்தவண்ணம் நன்முத்தலங்கலை யணிகின்றாள்; செவியணி குவளையைத் தொடுகின்றாள்.                                           (ருஉ)

மகிழ்ச்சி

 

உற்சவம்[65] முதலியவற்றாலுண்டாம்

மனத்தெளிவு, மகிழ்ச்சி; அது, வியர்

வை கண்ணீர் நடுக்கம் இவற்றை

உண்டுபண்ணும்       (ருஉஇ)

 

எவ்வாறெனில்:—

 

நகிலங்களே![66] முன்னர்த் தாமரைமுகையே தலைக்கீடாக நீங்கள் ஓடைகளில் நின்றியற்றிய நற்றவம், இதுபொழுது பயனுடைத்தாயிற்று. அதனால், நற்பேறு பெற்றீர்கள்; ஏனெனில்; காகதிவேந்தர் மார்பகத்திற் பூசிய கத்தூரியால் இருமடங்காய நறுமணமுடைய செங்குவளையலங்கலை உங்களுக்கு அளித்தனர். (ருஙஇ)

 

தடுமாற்றம் (****)

விருப்பிற்குரியவும்[67] வெறுப்பிற்குரியவுமாகிய

வற்றை யெய்தலான் விளையும் மனப்பரபரப்

பு தடுமாற்றம் ஆம்.   (ருச)

 

எவ்வாறெனில்:—

 

காகதிவேந்தர்[68] முரசொலியைச் செவியுற்று இன்பவிளையாட்டிற்கு விரைந்து வெளியிற் போதருங்கால், நகர மடந்தையர் அவரைக் காண்டற்கு ஆவல் மிக்குடையராய் பாதி யலங்காரஞ் செய்து கொண்ட அளவில் அணிகலன்களை யிடன்மாறி யணிந்து பொன் மாடங்களின் வெளிப்புறச் சிகரங்களில் விரைந்தேறுகின்றனர்.                                                   (ருரு)

 

அறிவின்மை

 

[69]விருப்பிற்குரியவும் வெறுப்பிற்குரியவும்

ஆகிய இவற்றின் வரவால் ஒன்றும்

தோன்றாமை அறிவின்மையாம்.    (ருருஇ)

 

எவ்வாறெனில்:—

 

[70]உடல் வனப்பாற் காமனை வென்று பெரும் புகழ் படைத்த உருத்திரவேந்தனாங் காதலன், மனமுவந் தில்லம் வந்துழி தலைவி, பாங்கியர் முன்னிலையில் உள்ளுவகைவயத்தால் அக்காதலனை இன்புறுத்தற்கு முற்படுகின்றாள்; அங்ஙனமே ஒழிவையுமெய்துகின்றாள்.                          (ருகாஇ)

 

செருக்கு

 

[71]வலம் முதலியவற்றான் விளையும் தற்

பெருமை, பிறரைப் பழித்தற்கு நிமித்

தமாகிய செருக்கு ஆம்.      (ருஎ)

 

எவ்வாறெனில்:—

 

[72]வென்றிசேர் காகதிவேந்தனுடைய போர்வீரர், இத்தகைய நமக்குப் படைக்கலத்தைக் கையிற்றாங்குங் காலமேது? பகையரசராகும் மின்மினிப்புழுக்கள்பாற் பகைமை யெத்தகைத்து? என இறுமாந்து, அச்சுறுத்துங் கைவலத்தான் விலக்கற்கரிய செருக்கையுடையராய் அமர்க்களத்தில் ஆடற் புரிகின்றனர்.                                                    (ருஅ)

 

துன்பம்

 

[73]உபாயம் இன்மையான் உண்டாகிய

மனமுறிவு, துன்பம் ஆம்.   (ருஅஇ)

 

எவ்வாறெனில்:—

 

மனம்[74] எனக் கருதி அதனைத் தலைவன்பாற் போக்கினேன்; அஃது என்னை விடுத்து அவன்பால் வறிதே பதிந்தது. காமன் என்னை விடுத்துச் செல்கின்றானில்லை; தோழி! இங்கட் செயக்கடவ தென்னே?           (ருகாஇ)

 

பேரவா

 

[75]காலத்தாழ்வினைப் பொறாமையைப்

பேரவாவென்ப; அது மனவருத்தம்

பரபரப்பு முதலியவற்றைச் செய்யும். (சா0)

 

எவ்வாறெனில்:—

 

ஆந்திரத்தங்கனையார், உறுப்புகளை யலங்கரித்துப் பரபரப்புடையராய், உருத்திரவேந்தனது வருகையைப்பற்றிய காலத்தாழ்வை வருந்தியே[76] பொறுக்கின்றனர்.                           (சாக)

 

உறக்கம்

 

மனம்[77] அடங்கி நிற்றல் கனவு என்பதாம்.

எவ்வாறெனில்:—

 

இந்த மடந்தை[78] கனவிற் கண்ட காதலனைத் தழுவற்கு முயன்றனளாய், விழிகளைச் சிறிது மூடிக் கைகளை உயர்த்தி விரிக்கின்றாள்; பாருங்கள்.  (காஉ)

 

அபசுமாரம்

 

மயக்கம்[79] துன்பம் முதலியவற்றால் உண்

டாகும் வெறி, உறுப்புகளை வறுத்தும்

உணர்ச்சியின்மையாகிய அபசுமாரம் ஆம்.

 

எவ்வாறெனில்:—

 

பகைவர்குழாம்[80], கனவிற் காகதிவேந்தனைச் சினமுடையனாகக் கண்டு, ஆகா! காத்தல் வேண்டும்; என அறுகுறையாகிய சொற்களைக் கூறிப் பரபரப்புடனெழுந்து ஓடுகின்றனர்; அடவி நடுவிடைப் புரளுகின்றனர்; உறவினர், அணிமைக்

கணிருப்பினும் அவர்களை மாறிய பெயர்க்கொடு விளிக்கின்றனர். (சாச)

 

மிகுதூக்கம்

 

உறக்கமிகையே மிகுதூக்கம்[81] ஆம்.

 

எவ்வாறெனில்:—

 

காகதிவேந்தன், எல்லாவற்றையும் புறந்தருங்கால் மனங்கவலொழிந்த மாதவன் உறக்கமெய்தினான்;[82] எய்தவே பாற்கடல், அவ்வேந்தனது புகழ்மதிக்கதிராற் பொங்கிப் பெருகியும் அவரது உறக்கத்திற்குக் கேடு விளைக்கவேயில்லை. (காரு)

 

விழிப்பு

 

உணர்வினைப் பெறுதல் விழிப்பு[83] ஆம்;

அது கொட்டாவி கண்துடைத்தல்

இவற்றைச் செய்வதாம்.  (சாருஇ)

 

எவ்வாறெனில்:—

 

மன்னர் மன்னனாகிய பிரதாபருத்திரன் பகைவரைத் தகவொறுத்து உலகைப் பாலிக்குங்கால் மக்களின் செல்வ வளங்கள் பலவாகச் செழித்து விழிப்புறுகின்றன[84].

 

சினம்

 

குற்றமுடையார்பால் நிகழும் மனக்

கொதிப்பு சினம்[85] ஆம்.    (சாஎ)

 

எவ்வாறெனில்:—

 

அடே! அரசர்களே! விற்களை வளைக்க; சிரங்களை நிமிர்த்துக; தெய்வமகளிர்க்கு வீரரை வரித்தலில் யான்முன்; யான்முன்; என்னும் விரைவு நிகழ்ந்தது. எங்கள் வாட்படைகள், ஈர்த்தலாகுங் கேளியில் விரைவுறுத்துகின்றன; என்று வீரருத்திரனுடைய போர்வீர்ர், போர்முனையிற் சினத்தை வெளிப்படுத்தி முழக்கஞ்செய்கின்றனர்.                    (சாஅ)

 

அடக்கம்

 

மகிழ்ச்சி முதலியவற்றின் குறிப்புகளை

நன்கு மறைத்தல் அடக்கம்[86] ஆம். (சாஅஇ)

எவ்வாறெனில்:

 

பெண்களின் குழுவில் பிரதாபருத்திரனுடைய சரிதங்களைக் கேட்ட இப்பேதை, தலைகுனிந்து காலாற்றரையைக்[87] கீறுகின்றாள்.             (சாஇ)

 

கொடுமை

 

குற்றங்கண்ட வழிச்சினமுறல்

கொடுமையாம்[88]. அஃது உரப்ப

லாதிய புரியும்.    (எ0)

எவ்வாறெனில்:—

 

இத்தலைவி[89] விழியாகும் உற்கைகளை மதியின்பால் வீழ்த்தி அம்மதியத்தை மாசு படுத்தினள்; ஆதலின் காதலனையழைத்து வந்து இவளது பிரிவுத்துன்பத்தைப் போக்குக. (எக)

 

துணிபு

 

உண்மை[90] நெறியை யுணர்ந்து பொரு

ளைத்துணிதல் துணிபு ஆம். (எகஇ)

 

எவ்வாறெனில்:—

 

ஐயப்பாடென்னே![91] வீரருத்திர வேந்தன் மண்ணுலகிற்கு மதியமே யாவன்; ஏனெனில், அவனுடைய கரங்களின் ஊற்றின்பத்தால் உறுப்புகள், மதிமணிகளாக அமைகின்றன.                                              (எஉஇ)

 

நோய்

 

உள்ளக்கொதிப்பு அவமானம் முதலிய

வற்றால் உண்டாகும் வெப்ப நோய் முதலியன

நோய் ஆம்.

எவ்வாறெனில்:—

 

திசைகளை வென்ற பிரதாபருத்திரனுடைய பகைமனைவியரின் உடற்கண் உண்டாகிய காமநோயின் வெப்பம், பனிவரைச் சாரலிற் பனியினை யறவேயொழிக்கின்றது.  (எச)

 

பித்தநோய்

 

[92]உயர்திணை அஃறிணைப் பொருள்களிலும்

ஒருபடித்தாகிய நிலைமையுடையனாதல்

பித்தநோய் என்பதாம்.       (எசஇ)

 

எவ்வாறெனில்:—

 

பிரதாபருத்திரனது போர் முழவொலி, திசைவெளிகளிற் பரவுறுங்கால் அதனைக் கேட்டஞ்சி நடுங்கிய பகையரசர், மயக்கமெய்தி மரங்கள்பால்[93] வழியினை வினாவுகின்றனர். (எருஇ)

 

சிறப்பு

இறத்தற்குரிய முயற்சி இறப்பு[94]

எனப்படும். (எகா)

எவ்வாறெனில்:—

தலைவி, தன் காதலன் பிரிவைப் பொறாது தனதுயிரை வெறுத்து நிலவை[95] யெய்துகின்றாள்; தென்றற்கு உடலையளிக்கின்றாள்.  (எஎ)

 

இறப்பை வெளிப்படையாகக் கூறல் அமங்கலமாகலின் அவ்வண்ணம் அதனை யெடுத்துக்காட்டல் தக்கதன்று.

 

அச்சம்

 

தற்செயலான் நிகழ்ந்த ஓர் நிமித்தத்தான்

மனங்கலக்கமுறல் அச்சம் என்பதாம்.   (எஎஇ)

 

எவ்வாறெனில்:—

 

இத்தலைவி, புலவி நீட்டத்தை யெய்தியும் மிகுதியான இடியொலியைச் செவியுற்று, உடல் நடுக்கமுடையளாய், விரைந்து வந்து காதலனைத் தழீஇக்கொள்ளுகின்றனள்.  எஅஇ)

 

ஊகம்

 

ஐயத்தாற்[96] பல கற்பனைகள் நிகழ்தல்

ஊகம் என்பதாம். (எகா)

 

எவ்வாறெனில்:—

 

எனது இதயம், தலைவனுடைய உயரிய குணங்களால் அவனைப் பற்றி நிற்கின்றது; பிறிதொன்றையும்[97] நினைந்திலது; இவ்வரசன், கிடைத்தற்குரியனா? அன்றா? என்று பாங்கியருடனும்[98] ஆலோசிக்கவில்லை; அவனை அடைதற்கு எத்தகைய சூழ்ச்சியைப் புரியலாம்; மனமோ மயக்கமெய்துகின்றது.[99] அத்தகைய உள்மயக்கம் எவ்வளவினது? எத்தகைத்து? எது காறுமிருப்பது என்று அறிதற்கியலவில்லை. (அ0)

 

விறல்களும் குறிப்புகளும் பல சுவைகளுக்குப் பொதுவாகலான் ஒருவகைச் சிறப்பைக் கருதி எடுத்துக்காட்டப்பட்டில; அங்ஙனமே, உவகைச் சுவையில் எல்லாம் நிகழும். நகைச்சுவையில், வாட்டம் மெய்வருத்தம் சாபலம் மகிழ்ச்சி அடக்கம் என்னும் இவை நிகழ்வனவாம். அழுகைச்சுவையில், களிப்பு தைரியம் நாணம் மகிழ்ச்சி செருக்கு பேரவா கொடுமை இவையன்றிப் பிற நிகழ்வனவாம். வெகுளிச் சுவையில் வாட்டம் ஐயம் மடி எளிமை கலக்கம் நாணம் ஆவேசம் அறிவின்மை துன்பம் மிகுதூக்கம் உறக்கம் நோய் அடக்கம் மனநோய் பித்தநோய் சமம் அச்சம் என்னும் இவை நிகழாவாம். பெருமிதச்சுவையில், வெகுளியிற் கூறியவற்றுடன் வெறுப்பும் நிகழாவாம். அச்சச்சுவையில் அழுக்காறு களிப்பு தைரியம் நாணம் மகிழ்ச்சி செருக்கு உறக்கம் மிகுதூக்கம் சினம் அடக்கம் கொடுமை நினைவு என்னும் இவையன்றிப்பிற நிகழும். இளிவரல் மருட்கை யிவற்றில் சிந்தை அச்சம் முதலியன நிகழ்ச்சிக்கேற்ப உய்த்துணரற்பாலன.

 

உவகைச் செயல்கள் விளக்கப்படுகின்றன. பாவம் ஆவம் ஏலை இனிமை தைரியம் இலீலை விலாசம் விச்சித்தி சம்பிரமம் கிலிகிஞ்சிதம் மொட்டாயிதம் குட்டமிதம் விப்போகம் இலலிதம் குதூகலம் சகிதம் விகிருதம் ஆசம் என்னும் இவை பதினெட்டும் உவகைச் செயல்களாம்.  (அஉஇ)

 

இவற்றின் இலக்கணமும்

எடுத்துக்காட்டும்

——–

 

பாவம்:— (****)

சுவையறியுந் தகுதியுடைமை[100]

பாவம் எனக் கூறப்படும். (அங)

எவ்வாறெனில்:—

பெண்கள், இளமைப்பருவத்தில் உருத்திரவேந்தனுடைய குணங்களை மனவேறுபாடின்றிப் பாடுகின்றனர்; யௌவனப் பருவத்தில், சிறிது[101] புளகத்தை யெய்திப்பாடுகின்றனர்.                     (அச)

ஆவம்:— (ஹாவ:)

பாவம் சிறிது விகாரப்படுமாயின்

அஃது ஆவம் எனப்படும்.   (அசஇ)

எவ்வாறெனில்:—

முன்னர்க் கூறியுள்ள “சிறிது[102] புளகத்தை யெய்திப்பாடுகின்றனர்” என்பதே இதற்கும் எடுத்துக்காட்டு ஆகும்.

 

ஏலை:— (****)

பாவம் நன்கு வெளிப்படுமாயின்

அஃது ஏலையெனப்படும். (அரு)

எவ்வாறெனில்:—

பெண்ணே! யார்க்கும் வெளிப்படலாகாது; என்று காதலனை யகத்திலமைத்தனை; அத்தகைய உனது கருத்தை எல்லா உறுப்புகளிலும் பரவிய புளகங்கள் வெளிப்படுத்தின.   (அசா)

 

இனிமை:— (****)

அணிகலன் இன்மையிலும் வனப்

புடைமை இனிமையென்பதாம்.   (அசாஇ)

எவ்வாறெனில்:—

மான்விழியாள், இயல்பாகவே[103] உலகிற் சிறந்த மிகுவனப்பெய்தியவள் ஆவள். ஆனால், அணிகலன்களை யணிப்படுத்தற்கே அவற்றையணிகின்றாள் என்பது எனது கருத்து.  (சுஎஇ)

 

தைரியம்:— (****)

ஒழுக்கம் முதலியவற்றைக் கடவாமை

தைரியம் என்று கூறப்படும்.  (அஅ)

எவ்வாறெனில்:—

எத்தகைய துன்பங்கள் நேருமாயினும், குலமகளிர் வரைவு கடத்தல் தக்கதன்று; உருத்திரவேந்தனுடைய குணங்களோ மனத்தைக் கவர்கின்றன. ஈண்டுச் செயக்கடவதென்னே!                       (அகா)

 

இலீலை:— (****)

உரைநடைசெயல் இவற்றாற் காத

லனை யொத்திருத்தல் இலீலை

யென்பதாம்.        (அகாஇ)

எவ்வாறெனில்:—

பாங்கியரே! பாருங்கள்; இவ்விலக்குமியென்பாள்[104], பிரதாபருத்திரவேந்தனுடைய செயல்களைப் பின்பற்றி யொழுகுமியல்பினளாகலின் இவள், அவ்வேந்தனுடைய மனைவிமாருள் கற்புடையளாகின்றாள்.                 (கா0இ)

 

விலாசம்:— (****)

கணவனைக் கண்ட அப்பொழுதே

உண்டாகும் விகாரம் விலாசம்

என்பதாம்.  (காக)

எவ்வாறெனில்:—

இயலழகமைந்த[105] உருத்திரவேந்தனைக் காதற்குறிப்புடன் காணும் மான் விழியாளது இளமைப்பருவத்தில், அப்பொழுதே பல படவெழுந்த உறுப்பு மென் செயற் பெருமையால் இனியதும், சுவையினெழுச்சியானொருமித்தெழும் விறலையுடையதுமாகிய மலர்க்கணைவேட்செயல், விளங்குகின்றது.   (காஉ)

 

விச்சித்தி:— (****)

மிக்கக் குறைந்த அணிகளானும் மிகு

வனப்புடைமை விச்சித்தியென்பதாம் (காஉஇ)

எவ்வாறெனில்:—

தோழீ! காகதிநகர மடந்தையர்க்குப் பொதுவணிகளான்[106] உலகிற் சிறப்புறுமழகு அமைகின்றதாகலின், இவர்பால் மிகுவனப்பு, யார் பொருட்டு யாவரால் உண்டாக்கப்பட்டது. (காஙஇ)

 

விப்பிரமம்:— (****)

காதலன் வந்துழி, பரபரப்பான் அணி

கலன்களை இடம் மாறுபடவணிந்

து கோடல் விப்பிரமம் ஆம்.  (காச)

எவ்வாறெனில்:—

[107]“பகற்பொழுது சென்றது, எனப்பாங்கியின் முகமாகக் கேட்ட தலைவி, பரபரப்பாற் கைகளிற் சிலம்பையும், கால்களில் வளையலையும் அணிந்தனள்.  (காரு)

 

கிலகிஞ்சிதம்:— (****)

சினம் மகிழ்ச்சி கண்ணீர் அச்சம்

இவற்றின் கலவை கிலிகிஞ்சிதம்

என்று கூறப்படும்.  (காருஇ)

எவ்வாறெனில்:—

காகதிவேந்தன், தனியிடத்தில் மான்விழியாளின் சேலைத்தானையைப்பற்றி யிழுக்குங்கால், உடலந்துடிக்கின்றது; புருவமும் நடிக்கின்றது; சொற்களும் குளறுகின்றன.       (காசாஇ)

 

மொட்டாயிதம்:— (****)

காதலுனுடைய செய்தி முதலியவற்

றைச் செவியுறுங்கால், காதற்குறிப்

பை வெளிப்படுத்தல் மொட்டாயிதம்

என்பதாம்.        (காஎ)

எவ்வாறெனில்:—

உருத்திரவேந்தனுடைய இனிய சரிதங்களைச் செவிக்கொளுந்தலைவியின் காதற்குறிப்பு[108] உடலை மறைத்தலான் வெளிப்பட்டாங்கு, புளகங்களான் வெளிப்படவில்லையோ?  (காஅ)

 

குட்டமிதம்:— (****)

[109]புணர்ச்சியில் துன்பமுள்வழியும்

அஃது இன்பமிகையாதல், குட்ட

மிதம் என்றும் கூறப்படும்.      (காஅஇ)

எவ்வாறெனில்:—

[110]எல்லையிலின்பக்கலவியின் உண்மைச் செய்தியைப் புலப்படுத்துமுறுப்புகளான், மிக்க வியப்பெய்திய அன்புமிக்க பாங்கியைப் பார்த்து நாணமிக்க மதிமுக மடந்தை, தனது துணி செயலையும், காதலற்குக் காமத்தான் விளைந்த ஆய்வில் செயலையும் அறிந்து அப்பொழுதே மதிமுகம் குனிதர தரையினைக் கீறியவண் ணமாய் நின்றனள்.  (காகாஇ)

 

விப்போகம்:— (****)

[111]காதலன் இனியவை கூற, அவற்

றைச் சிறிது புறக்கணித்தல், விப்

போகம் ஆம். (க00)

எவ்வாறெனில்:—

[112]இல்லத்திற்றிருமகள், இடையறவின் றியாடற்புரிக; நிலமகள் புயத்திற்

றங்கி விளையாட்டை யிடைவிடாது புரிக; மேலும் கலைமகள், முகத்தில் எஞ்ஞான்றும் அமைக; அறிந்தேன்; உருத்திரவேந்தனுடைய இன்னுரை பலவற்றையும் யான் முன்னரேயறிந்துளேன். அவை வேண்டவே வேண்டா; தோழீ! காமன் கணைகளைத் தொடுத்தற்கு முயலுக.  (க0க)

 

இலலிதம்:— (****)

உறுப்புக்களின் மெல்லிய செயல்

இலலிதம் ஆம்  (க0கக)

எவ்வாறெனில்:—

[113]உருத்திரவேந்தருடைய மனைவிமார், அவரைத் தனியிடத்திருந்து இன்புறுத்தும் விலாசங்கள், விளையாட்டாக அடிவைத்து நடத்தலான் மணிச்சிலம்புகளும் இடையணி சதங்கைகளும் ஒலிக்கவும், மெல்லிய கரங்கள் அலைதர வளையல்கள் இனிமையாக ஒலிக்கவும், முறுவலாம் நிலவலையிற் றவழ்தரு சொல்லமுதையுடையவாய் அமைந்தன.  (க02இ)

 

குதூகலம்:— (****)

இனிய காட்சியில் விழைவுறல்

குதூகலம் என்று கூறப்படும்.  (க0ங)

எவ்வாறெனில்:—

தெலுங்கு நகரணங்குகள், வேழமீதிவர்ந்த வீரருத்திரனைக் காண்டற்கு விரைந்தடி நடந்து உயரிய மேன்மாடங்களிலேறுகின்றனர்.   (க0ச)

 

சகிதம்:— (****)

அச்சத்தால் விளையும் பரபரப்பு

சகிதம் ஆம்.

எவ்வாறெனில்:—

அரசன் தன் வருகையைத்[114] தலைவியறியாமலும், தோழியும் அவளையெள்ளி நகைத்தற்கே அவ்வரவினை யவட்குத் தெரிவிக்காமலும் இருக்குங்கால், தற்செயலாய் அத்தலைவி அரசனை[115] நிமிர்ந்து நோக்கி மிக்க வெருவுறீச்சுழல்வுறு விழிகளையுடையளாக, அதுகாலை யம்மெல்லியலாளின் கரைகடந்திலங்குங் காதற்பெருக்கையுடைய விலாசங்களைக்[116] கண்டு மீண்டும் அவ்வண்ணமே[117] வருதற்கு விரும்புகின்றான்.     (க0ரு)

 

விகிருதம்:— (****)

அமயத்திற்குரிய சொற்களைக்

கூறாது ஒழிதல், விகிருதம் ஆம்.  (க0ருஇ)

எவ்வாறெனில்:—

“பிரதாபருத்திரனது[118] மார்பகத்திலிருக்குஞ் செங்குவளையலங்கலை, இவற்றாற் றழீஇக்கொள்ளுக” எனக் கூறி யிரண்டு நகிலங்களிலும் தெய்யிலிடுந்தோழியைத் தலைவி, செருக்குடன் பார்க்கின்றாள்.    (க0சாஇ)

 

அசிதம்:— (****)

[119]யௌவனம் முதலிய விகாரங்க

ளுக்கியல்பாய்க் காரணமின்றி

விளையும் நகை, அசிதம் ஆம்.  (க0எ)

எவ்வாறெனில்:—

[120]மான்விழியணங்கினுடைய முறுவல், யௌவனத்திருவாற் பயில்வுற்றினியதாய் மலர் தரற்கேற்ப, பூவிலிக்கணைகளும், காதலனது ஆசையும் மலர் தருகின்றன.(க0அ)

பன்னிரு காமாவத்தைகள் கூறப்படுகின்றன.

காட்சி மனப்பற்று சங்கற்பம் புலப்பம் விழிப்பு இளைப்பு வெறுப்பு நாணமின்மை சுரம் உன்மாதம் மயக்கம் இறப்பு என்னுமிவை காமசாத்திரத்தைப் பின்பற்றிய பன்னிரு அவத்தைகளெனப்படும். (கக0)

 

சிலர் அவத்தைகள் பத்தெனக் கூறுகின்றனர்.

இவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்

 

காட்சி:— (****)

 

அன்புடன் காண்டலைக் காட்சி யென்ப (கக0இ)

எவ்வாறெனில்:—

தோழீ! இவ்வுருத்திரவேந்தன், வடிவெடுத்த மதனன் போலும், கறையிலாக் கலை நிறை மதியம் போலும் உள்ளவன்; ஆதலின் இவன், கண்களுக்கு எதிர்பாராத பெருவிழாவாயினான்[121]. (கககஇ)

 

மனப்பற்று:— (****)

காதலன்பால் மனம் நாளும் நாடி

நிற்றல் மனப்பற்றென்பதாம்.  (ககஉ)

எவ்வாறெனில்:—

எனது மனம் எப்பொழுதும் உருத்திரவேந்தரைப்பற்றி நிற்கின்றது. பாங்கியரே! ஏன் சினக்கின்றீர்கள்? [122]அம்மனத்தானும் யான் விடப்பட்டவளே; அங்ஙனமாக உங்களைப் பற்றிக் கூறுவதென்?    (ககங)

 

சங்கற்பம்:— (****)

தலைவனைப் பற்றிய விருப்பம்

சங்கற்பம் என்று கூறப்படும். (ககஙஇ)

எவ்வாறெனில்:—

[123]புன்முறுவல் உண்ணிறைந்தனவும் இனிய நேயமிக்குடையனவும் காதல் நிறைந்தனவுமாகிய உருத்திரவேந்தனுடைய பார்வைகள், எஞ்ஞான்றோ என்பால் விழும்?  (ககசஇ)

 

புலப்பம்:— (****)

காதலுடைய நற்குணங்களைப்பற்

றிய பேச்சு புலப்பம் ஆம்.  (ககரு)

எவ்வாறெனில்:—

சிறந்த மகளிர் கூட்டத்தார், வீரருத்திரவேந்தனொருவனே அத்தகைய நிபுணன்; அத்தகைய இனியன்; அத்தகைய சுபகன்[124]; அத்தகைய நல்லொழுக்கமுடையன்; என்று சொற்பொழிவியற்றுகின்றனர்.  (ககசா)

 

விழிப்பு:—(****)

உறக்கமின்மையே விழிப்பு என்பதாம்.

எவ்வாறெனில்:—

[125]பகற்பொழுதை யெவ்வண்ணமோ கடத்தியுள்ளேன்; இரவு, மதிவெயிலெறித்தலாற்றாங் கொணாவாறு நீட்டித்தது. காமனும் நிறைவுறு கணைகளையுடையனாயினான். உறக்கமும் நிருபனும் வரவில்லை. (ககஎ)

 

இளைப்பு:— (****)

உறுப்புக்களின் மெலிவு இளைப்பு ஆம்.

எவ்வாறெனில்:—

[126]மதிமுகத்தவளே! நீயிந்த ஆழியை வளையலாக்கியதென்னே! தோழீ! யானன்று; காதலனைப்பற்றிய காதற்பெருமை, அங்ஙனம் ஆக்கியுள்ளது. அக்காதலனயாவன்? நிலமகட்கென்னை மாற்றவளாக்கிய அவனே காதற்கிழவன். செருக்குடையாய்! அறிந்தேன். காகதிவேந்தர்பாற் காதற்பற்றுடையையாயினை. மங்கலமுடையாய்! அவ்வேந்தர், சியாமாங்கியும் நன்னிலையளும் மலைமுலையளுமாகிய உன்னையும் அந்நிலமகளையும், ஒருபடித்தாக இன்புறுத்துவர்.   (ககஅ)

 

வெறுப்பு:—  (****)

[127]பிறவழி விருப்பின்மை வெறுப்பு.

எவ்வாறெனில்:—

[128]சுபகனே! அத்தலைவி, விழாவிலும் விருப்பிலளாய் மதியின்படைப்பையும், தென்றலின் பெருமையையும் பழித்துரைக்கின்றாள்; தாங்கள், இங்கட் கருதுவதென்னே? (கககூ)

 

நாணமின்மை:

எவ்வாறெனில்:—

[129]காமத்த னெறி பிறழ்ந்தொழுகுமித்தலைவி, மாதராரது வரையறையைக் கடந்தும், பெற்றோரும் செவியுற்று நாணெய்திய கலவிலகும் வண்ணமும் அத்தகைய சொற்களைக் கூறுகின்றாள்.          (க20)

 

சுரம்:— (ஜர0)

உடலின் வெப்புநோய் மிகை சுரம் ஆம்.

எவ்வாறெனில்:—

உருத்திரவேந்தே! குளிர்ப்பிக்கும் உபசாரங்கள் யாவும் இத்தலைவிபாற் பயனற்றனவாக, அவள் மிக்க காமக்காய்ச்சலால் உமது காட்சியாகும் அமுதத்தை யிதுபொழுது விரும்புகின்றாள்.  (கஉக)

 

[130]உன்மாதம் மரணம் என்னுமிவை முன்னரேயெடுத்துக்காட்டப்பட்டன.

மயக்கம்:—

புறப்பொறிகள், தத்தம் புலன்க

ளைப்பற்றாமையான் மனமழிந்து நிற்

குநிலை, மயக்கம் ஆம்.  (க2கஇ)

எவ்வாறெனில்:—

[131]மான்விழியாள், அரசனை நினைந்து மனமழிந்து நின்றுழி, அவளது மனத்திலிருக்கு மவ்வரசனைப் பார்த்தற்குப் புறப்பொறிகளும் அகத்தினுட் புகுந்தன. (க22இ)

 

இனி [132]உவகைச்சுவை

 

உவகைச்சுவை, சம்போகம் விப்பிரலம்பம் என இருதிறத்து.

கூடிய தலைவன் றலைவியர்க்குச்

சம்போகமும், பிரிவெய்தினோர்க்

கு விப்பிரலம்பமும் ஆம்”,

என்று சிருங்கார திலகம் கூறும்.

சம்போகம், ஒருவரையொருவர் பார்த்தல் உரையாடல், தழுவல் முத்தமிடல் என்னும் இவையாதிய பல செயல்வடிவாய், அது முடிவற்றதாகலின் ஒருபடித்தாக எண்ணப்பட்டது.

 

எவ்வாறெனில்:—

[133]மனக்கினிய காதலனாகிய உருத்திரவேந்தன் தன் தனிமையி லணிமைக்கணெய்தி யிருக்குங்கால், துனிவயப்பாடு நீங்கியது; நாணப்[134] பெருமிதமும் நலிந்தது; அன்புடைத்தோழீ! நின்பாற் கூறத்தகாத தென்னே? உள்ளும் புறத்தும் உவகைப் பெருக்காய்க் கூறற்கரிய காமாவேசம், அவ்வேந்தனோடென்னை யிரண்டற[135] பிணைக்கின்றது. (க2ஙஇ)

 

விருப்பம் பொறாமை பிரிவு பிரவாசம் என விப்பிரலம்பம் நான்கு வகைப்படும்.

 

விருப்பம் என்பது கலவிக்கு முன்னர் நிகழுங் காதலாகும்.

 

எவ்வாறெனில்:—

[136]ஒருவர்க்கொருவர் உரையாடல் பின்னர் இன்புரை நிகழ்ச்சி ஒருபாயலெய்தல் என்னுமிவை விருப்பிற் கெட்டாதனவாம்;

அன்புடனியைந்ததும்[137] காதன் மிக்கெழுந்ததுமாகிய உருத்திரவேந்தனது பார்வையை யாதல் யான் அடையப்பெறுவனோ? (கஉசஇ)

 

பொறாமையென்பது தலைவற்குப் பிறிதொரு தலைவியின்பாற் பற்றுள்[138] வழி மனத்தே நிகழுஞ் சினக்குறிப்பாம்.

அப்பொறாமையான் விப்பிரலம்பம் எவ்வாறெனில்:—

காகதிவேந்தனது[139] கமலக்கண்ணை, உறைவிடமாகக்கொண்ட திருமகள், அவ்வேந்தன் உன்னைப் பார்ப்பதில் அழுக்காறெய்துகின்றாள்; நாவிலுறைக்கலைமகளும் உன்னுடன் உரையாடலைப் பொறுக்கின்றாளில்லை; வாகுவில் நிலவு நிலமகளும் உன்னை விளையாட்டாகப் பற்றியிழுத்தற்கு இடையூறு செய்கின்றாள். ஆதலின், சுபகனாகிய அவ்வேந்தன்பால் வஞ்சனைகள் இல்லை. ஏன் சினமுற்று வருந்துகின்றாய்?                  (கஉருஇ)

 

பிரிவென்பது கூட்டமெய்திய தலைவன் றலைவியர், [140]யாதாமொரு காரணத்தாற் பிரிவெய்தி மீண்டுங் கூடுதற்குரிய காலத்தைக் கடந்து நிற்றல் ஆம்.

 

எவ்வாறெனில்:—

உறுப்புகள் மெலிவுற்றிருக்குங்கால் அணிகலன்களை யிடம் மாறுபட அணிதலும்[141] அவை அங்கட் சிறுபொழுது விளக்கமுறுவனவாம்; ஆகலின் பாங்கியரே! அலங்காரமுறை யமைக; உருத்திரவேந்தனை யழைத்துவருக; இதனையன்றிப் பிறிது செயலென்னே!   (கஉசாஇ)

 

தலைவன் தலைவியர்க்கு நேர்படும் வேற்றிடத்திருக்கை, பிரவாசம் ஆம்.

 

எவ்வாறெனில்:—

 

உருத்திரவேந்தன், எல்லாவேந்தரானும் வழிபடற்குரியனாயிருக்க; நன்னாட்களிலும்[142] நங்கணவர் நமது அணிமைக்கணிருத்தற்கியலவிலையே யெனப்புலம்பும் களிங்கதேயத்தங்கனை களினுறுப்புகள், பிரிவுத்துன்பத்தின் வெப்பத்தான் இளைப்பையெய்துகின்றன; பகற்பொழுதும் யுகப்பொழுதாகின்றது. (கஉஎஇ)

 

———

 

போலிச்சுவை:— (ரஸாஹாஸ)

 

எவ்வாறெனில்:—

 

[143]மாளிகைகளின் உட்கொடுங்கைகளிலும், அங்கட் பறவைகளிருக்குஞ் சந்துகளிலும் ஆண்புறாவான் முத்தமிடப்பட்ட அலகுநுதியினையுடையதும், தோன்றுங் கலவியொலியாலினிய குரலுடையதுமாகிய பேடைப் புறாவைப் பார்த்த காகதிவேந்தன், புந்நகை புரிகின்றான். (கஉஅஇ)

 

குறிப்பெழுச்சி:—(****)

 

எவ்வாறெனில்:—

 

சுந்தரி! உனது மனத்தில் இருப்பவன் யாவன்? தோழீ! நின்பாற் சூளுற்றுக்கூறுவேன்; மனோபவனேயன்றிப்[144] பிறிதொருவறுமிலன்; அவற்கிங்கட்காரியமென்னை? பிறப்பிடம் என்னும் பற்றுக்கோடன்றி வேறென்னை? மற்றவன் யாவன்? அவனது எதிருருவேயாம்; மதிவலமுடையாய்! ஏமாற்று முறையையறிகின்றாய்; காமனிற் சிறப்புறுங்காதலனாகிய உருத்திரவேந்தன், நின் இதயத்திலிருக்கின்றான் என்று கூறிய அவ்வளவில் தலைவி, தலைகுனிதர நின்றனள்.  (கஉகாஇ)

 

இங்கண் இலச்சையென்னுங்

குறிப்பின் எழுச்சியாம்.

 

குறிப்படக்கம்:— (****)

 

எவ்வாறெனில்:—

நீ, திருமகள்; நின்காதலனாகிய வீரருத்திரவேந்தன், திருமாலேயாவன்; தக்க பொருத்தமுடைய நும்மிருவீரையும் படைத்தற்குக் கமலத்தோன், நீள நினைந்து முயன்றனன். ஆதலால் நீங்கள் பொய்மையாகவேனும் சிறிதுஞ் சினமுறல், தக்கதன்று; என்று கூறி வணங்கி நின்ற பாங்கியைப் பார்த்துப் பிணங்கிய தலைமகள், அப்பிணக்கம் நீங்கி மலர்தரு[145] தாமரை முகத்தினளாயினள். (கங0இ)

 

இங்கட் சினம் என்னுங் குறிப்

பின் அடக்கம் ஆம்.

 

குறிப்பியைபு:— (****)

 

எவ்வாறெனில்:—

பிரதாபருத்திரனுடைய திசைவெற்றிச்செலவு குறித்து முழக்கப்படும் போற் பறையினொலிகளானும், காதலியின் சொற்களானும்[146] போர் வீரரது உடலம் புளக கவசத்தைப்போர்த்துக் கொண்டது.  (கஙகஇ)

 

இங்கட் பெருமிதம் உவகையென்

னும் சுவைகளைப் பற்றிய மகிழ்ச்

சிகளுக்கு இயைபு ஆம்.

 

குறிப்புக்கலவை:— (****)

 

எவ்வாறெனில்:—

குலமகளிர்[147], இது பொழுது என்னைப் பழித்துரைக்க. எத்தகைய நல்லூழாற் காதலனை யெளிதிலடைவேன்? பெற்றோர்கள் இதனையேன் ஒருப்பட்டிலர்? எந்தத் தோழியை அனுப்புவேன்? இஃது உலகிற்கு விரைவில் வெளிப்படுமோ? யான் விரும்பியாங்கு என் காதலனது மடிக்கண் எப்பொழுது ஏறுவேன்? எனது மனம் எப்பொழுது உறுதிப்பாடெய்தும்? எவ்வாற்றானும் காதலரே! அடையற்பாலார்.                 (கஙஉஇ)

இங்கட் பேரவா[148] முதலிய குறிப்புக

ளின் கலவையாம்.

 

சுவைக்கலவை

உவகை அழுகை யென்னுமிவற்றின் கலவை எவ்வாறெனில்:-

காகதிவேந்தனே! தம்பகைவருடைய மனைவியர், “மகோற்சவம் அணித்து நிகழவிருக்குங்கால் அவ்விழாவை விடுத்து இவணிருந்து அயல் நாட்டை யேன் எய்தல் வேண்டும்? நம்மைப் பிரித்து வைக்க எத்தீயூழ் விரும்புகின்றது? அக்கொடிய செயலை யிகழ்தல் வேண்டும்” என்றிங்கனம் தங்காதலரது வழிச்செலவைக் கனவிற் றடைப்படுத்தியராய்ப் பின்னர் விழிப்பெய்தி மயக்கமுறுகின்றனர்.  (கூஙஙஇ)

 

வெகுளி இளிவரல் இவற்றின் கலவை

 

எவ்வாறெனில்:—

[149]வீரருத்திரனது வாட்படை இறைச்சியைப் புசித்து, களிற்றின் கதுப்பிற் பெருகு மரத்தமாகிய கட்பெருக்கைப் பருகி மூளையிற் பொருந்து மென்புக்களால் திற்றிப்பல்லைப் படைத்து செருக்குடன் அரசருடலைத் துணித்து நரப்பு மாலையையணிந்து மக்களையச்சுறுத்தி பைரவனுருக் கொடு கொடியதாய்ச் செருக்களமாகுங் காளிதேவியர்க்குக் களிங்கராற் பலிபூசனையாற்றியது. (கஙசஇ)

இங்கனம் பிறவும் வந்துழிக்காண்க.

 

இங்கட்சுவை[150] தலைவனைப் பற்றியதேயாம். கலைவல்லோனாகிய[151] நடனது செயலானும், அத்தகைய காப்பியக் கேள்வியின் வலியானும் அவையினர் அச்சுவையைக் கண்கூடாய்த் துய்ப்பரேல், அஞ்ஞான்று அச்சுவை, பிறன்கட் டோன்றியதாயினும் அதன் நன்னுகர்ச்சியாற் பிறவழி யெல்லையிலின்பவிளைவு முரண்படா.

அன்றியும்[152] மாலதி முதலிய சொற்களாற் பெண்மாத்திரை யிலுண்டாமுணர்ச்சியிலும், இராவணன் முதலிய சொற்களாற் பகைமாத்திரை

யிலுண்டாகுமுணர்ச்சியிலும் நினைவையெய்திய அவ்வப்பெண் விசேடமாகிய அநுகாரியமுகமாகச் சுவை, அவையினரைப்பற்றி நிற்பதாமென்பதூஉம் முரண்படா.

 

நடன் அவிநயத்தளவின் அமைதலான் அவன் சுவை நிலைக்குத் தக்கவன் அல்லனே யாம். “அவன் சுவை நுகர்ச்சியில் சிறந்தவன்” எனக் கொள்வேமெனில், அந்நடன் அவையினருள் ஒருவனேயாவன். அநுபாவம் முதலியவற்றை வெளிப்படுத்தலோ எனில் கோடல், கொண்டன, பயிறல் என்னுமிவற்றின் வலியானே அது பொருந்துவதாம்.

 

ஒன்றற்கொன்று மறுதலையாகிய சுவைகளும், கவிகளின் சீரிய சொல்லமைவைப்பற்றி ஓரோவழிக்கூடுதல் முரண்படா.

 

மறுதலை முறை சிருங்கார திலகத்தில் கூறப்பட்டுள்ளது.

“உவகையும் இளிவரலும், பெருமிதமும்

அச்சமும், வெகுளியும் வியப்பும், நகை

யும் அழுகையும், ஒன்றற்கொன்று

மறுதலைச்சுவையாம்” என்று.

ஒரு சுவையிலிருந்து பிறிதொரு சுவையின் தோற்றமும் விரும்பப்பட்டதாம்.

அங்ஙனமே சிருங்கார திலகத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“உவகையினின்றும் நகைதோன்றும்;

வெகுளியினின்றும் அழுகை தோன்றும்;

பெருமிதத்தினின்றும் வியப்பு தோன்றும்;

இளிவரலினின்றும் அச்சந்தோன்றும்” என்று

சிருங்கார திலகத்தில், அவ்வச்சுவைக்கேற்ற பெற்றி வியபிசாரிபாவங்கள் என்னும் குறிப்புக்களும் கூறப்பட்டுள்ளன.

ஐயம் அழுக்காறு அச்சம் வாட்டம்

நோய் சிந்தை நினைவு, தைரியம்

பேரவா வியப்பு தடுமாற்றம் நாணம்

உந்மாதம் களிப்பு துன்பம் மடி

உறக்கம் அடக்கம் சாபலம் மர

ணம் என்னும் இக்குறிப்புக்கள் கூறற்பாலன.

நகைச்சுவையில்

மெய்வருத்தம் சாபலம் உறக்கம் கனவு வாட்டம் ஐயம் அழுக்காறு அடக்கம் என்னுமிவை கூறற்பாலன.

 

அச்சச்சுவையில்

அச்சம் மரணம் எளிமை வாட்டம் என்னுமிவை கூறற்பாலன.

 

இளிவரற்சுவையில்

அபசுமாரம் துன்பம் அச்சம் நோய் மரணம் செருக்கு உற்சாகம் என்னுமிவை அறியற்பாலன.

 

வியப்புச்சுவையில்

தடுமாற்றம் மடி மயக்கம் மகிழ்ச்சி வியப்பு நினைவு என்னுமிவை கூறற்பாலன.

 

அழுகைச்சுவையில்

எளிமை சிந்தை வாட்டம் வெறுப்பு மடி நினைவு நோய் என்னுமிவை கூறற்பாலன.

 

வெகுளிச்சுவையில்

மகிழ்ச்சி அழுக்காறு செருக்கு உற்சாகம் களிப்பு சாபலம் கொடுமை யென்னுமிவை கூறற்பாலன.

 

பெருமிதச்சுவையில்

பொறாமை தெளிவு ஊகம் அறிவு தைரியம் சினம் அழுக்காறு மயக்கம் தடுமாற்றம் மகிழ்ச்சி செருக்கு களிப்பு கொடுமை யென்னுமிவை கூறற்பாலன.

 

எல்லாச் சுவைகளும் ஒரோவொன்றும் விபாவம் முதலியவற்றான் நிறைவுற்று உறுப்பாகிய பிற சுவைகளை மறைக்கின்றது. என்று.

 

பரதமுனி மரபினர் கூறிய முறையாற் சுவையொன்றேயெனினும், மகாகவிகளின் வழக்காறு[153] பற்றி சுவைக்கலவை கொள்ளற்பாலது.

 

அக்கலவையில் சுவை முதலியவற்றிற்குச் சிறப்பில் வழி சுவையுடையணி முதலியன (****) நிகழ்கின்றன.

 

ஒரு சுவைக்குறுப்பாகப் பிறிதொரு சுவையைக் கூறிய வழி சுவையுடையணியாம்.

 

குறிப்புகளைக் கூறிய வழி பிரேயோலங்காரம். (****)

 

போலிச்சுவை போலிக்குறிப்பு இவற்றைக் கூறிய வழி ஊர்ச்சசுவிதலங்காரம்.(****)

 

குறிப்படக்கத்தைக் கூறிய வழி சமாகிதாலங்காரம். (****)

அங்ஙனம் குறிப்பெழுச்சி முதலியனவும் ஆம்.

 

இஃது அலங்கார சருவசுவத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

“சுவைக்குறிப்பு அதன் போலி அதன்

அடக்கம் என்னும் இவற்றைக் கூறி

யவழி இரசவத் பிரேய ஊர்ச்

சசுவிது சமாகிதம் என்பனவாம்.

குறிப்பெழுச்சி குறிப்படக்கம்

குறிப்பினியைபு குறிப்பின் கலவை

என்னுமிவை, தனிப்பட்ட அலங்கா

ரங்களாம்” என்று.

 

இவற்றின் எடுத்துக்காட்டுகள், அணியியலின்கட் கூறப்படும்.

 

குணம்[154] அணி யிவற்றின் நிறைவான் வெளிப்பட்டு, சுவைத்தன்மையை யெய்தற்குரிய நிலையிற் றோன்றும் ஸ்தாயிபாவத்தின் இனங்கள், வேற்றுப் பொருளைப் பற்றிய நினைவை முறையே விலக்கித் தலைவன் றலைவியர்க்கு இன்பத்தையாதல் துன்பத்தையாதல் உறுதிப்படுத்துவனவாமெனினும், அவையினர்பால் எல்லையில் இன்பவடிவாய் நிறைவுறுஞ் சுவைப் பெருக்கமாகப் பரிணமிக்கின்றன.   (கஙருஇ)

 

சுவை[155], வாக்கியப் பொருளாய் விளக்கமெய்துகின்றது; இவ்விபாவம் முதலியனவோவெனில் பதப்பொருள்களாம்; அவை அச்சுவையில் உரிய ஓய்வினை யெய்துகின்றனவன்றே! ஆதலின் ஸ்தாயிபாவங்களே, தத்தம்

வளங்கள் முறையே வளரப்பெற்றுப் பின்னரே! பஞ்சிநூல் படத்தன்மையை யெய்தியாங்கு, அவை சுவைத்தன்மை யெய்துகின்றன.   (கஙசாஇ)

 

அலைகள் கடலில் விளைந்து அக்கடலிலேயே அவையொழிவெய்தியாங்கு, குறிப்புகளும்[156], விளக்கமிக்க இரதி முதலிய ஸ்தாயிபாவங்களில் அடிதொரும் விளைவெய்தி அங்ஙனமே அவ்வுருக்கொண்டொழிகின்றன. சுவை, வெறுப்பு முதலிய குறிப்புகளினுகர்ச்சியாலாக்கப்பட்டுத் தன்னளவிலறியக் கிடக்கும் பேரினிமையுடையதாய் உலகில் அநுகாரியர்பாலும் கூத்தில் அவையினர்பாலும் நிலைபெறுவதேயாம்.  (கஙஎஇ)

விதயாநாதனாலியற்றப்பட்ட “பிரதாபருத்

திரன் புகழணி, யென்னுமணியிலக்கணத்

தில் சுவையியல் முற்றிற்று.

 

 

[1] இங்ஙனம் கூறிய சுவைக்குக் கருவிகள், காப்பியத்திற் கூறப்படுஞ் சுவைப்பொருள் முதலியனவாதல், திறமைவாய்ந்த நடன் அவிநயஞ் செய்யுங்கால், அவ்வவிநயத்தைக் கண்ணுறும் அவையினராற் பாவிக்கப்படுமவையாதல் கருவிகள் என்பது கருத்து.

[2] இனிய நிலை — கறி முதலியவற்றின் சேர்க்கையாற் சோறு இனியதாதல் போல விபாவம் முதலியவற்றின் சேர்க்கையால் ஸ்தாயிபாவமும் இனிய நிலையை யெய்துகின்றதென்பதாம்.

[3] பாவம் — இஃது ஈண்டு உய்த்துணரற்பாலது;

காப்பியத்தாலாதல் அவிநயத்தாலாதல் இராமன் முதலினோரின் இன்பதுன்பங்களையறிந்த வழியவற்றின் அநுபவத்தால் விளைந்த வாதனைவடிவாய் “சம்ஸ்காரம்” என்னும் பிறிதொரு பெயரினையுடையதாய் விளங்கும் அவையினரின் மனோவிகாரம் பாவம் என்பதாம்.

அங்ஙனமே கூறப்பட்டுள்ளது:-

“இன்பத்துன்பங்கள் முதலிய குணங்க

ளான் அவையினரது மனம், அவ்வண்

ணமாதல் பாவம் ஆம்” என்று.

அந்தப்பாவம், அணிமைத்து சேய்மைத்து என இருதிறத்து; அவற்றின் அணிமைத்தென்பது, ஆடைக்கு  நூல்போலச் சுவைக்கு, வடிவளவில் விலகிய ஸ்தாயீபாவம் என்று கூறப்படும். “அந்த ஸ்தாயீபாவமே சுவை”, என விளங்க வைத்திருத்தலான். அங்ஙனமே பெரியாரும்,

எந்த பாவம், வலிந்திழுக்கப்பட்டு, சுவைத்தன்மையை

யெய்துகின்றதோ; அந்த பாவமே, ஸ்தாயீபாவம்

எனப் பரதமுனி முதலினோர் கூறுப”, என்று கூறியுள்ளார்.

சேய்மைத்தென்பது சேணியர் போல்வது; ஸ்தாயி பாவத்தான் மறைவுற்று விலக்கமெய்திய விபாவம் முதலியதாம்; அது ஸ்தாயிபாவத்தின் வாயிலாகச் சுவையினை மலர்விக்கும் எனக் கூறியிருத்தலான். இதனால் பிரமானந்தத்தை நிகர்த்த சுவையினுடைய முன்னவத்தை விசேடம், அவையினரது உள்ள நெகிழ்ச்சியாகும் உபாதியுடையதாய் ஸ்தாயீபாவம் ஆம் என்பது பெற்றாம்.

அதனாற் பெரியாரும்:-

“உவகை முதலியவற்றின் நுகர்ச்சிக்குரி

ய நிலையில் அமைவுறுந் தனது சத்துவம்

பாவம் ஆம்” என்று.

உண்மைப் பேதத்தைப் பற்றிய ஐயப்பாடில்லதூஉம், உபாதியற்றதூஉம், சன்மாத்திரையிலமைவதூஉம் ஆகிய சுவைக்கு அவத்தையினியைபு, பொருந்துமாறென்னையென ஐயுறற்பாலதின்று; “விண்ணடுவணொளிரும் தண்கதிர்ச்செல்வற்கு நீர்முதலியவுபாதியினியைபு நிமித்தமாய அலைவமைந்தாங்கு” என்னும் உத்தி கூறி விளக்கற்பாலதாகலின்.

உபாதி — தனக்குரியதன்மை வேற்றுப்பொருளை யெய்தியாங்குத் தோற்றுவிக்கும் பொருள்.

ஒத்ததன்மையது — ஒருதலைவியின்பால் ஒருதலைவன் வைத்த காதற்குணத்திற்கு, பிறிதொரு தலைவியைப் பற்றிய காதல் ஆம். பிறதன்மையது — முரண்படுமியல்புடையதென்பது கருத்து. இளிவரல் முதலியதாம். உவர்க்கடல், தன்னுட் கலந்த இனிய ஆற்று நீரையும் உவர்ப்படுத்தாங்கு தன்னைச் சார்ந்தவற்றையெல்லாம் தன்னோடொற்றுமைப்படுத்தும் ஸ்தாயீபாவம் பிறவற்றாற் சிறிதுங் கேடுறாதென்பது கருத்து.

[4] நுகர்ச்சி நிறைவுறுங்காறும் — அந்தக்கரணவிருத்தி, சுவைப்பொருளைப்பற்றிய வழி அஃது எவ்வாற்றானுங்கேடுறாது அப்பொருள்வடிவாய் நிற்றலே நுகர்ச்சியாம்; இதே ஸ்தாயீபாவம் நிலைபெறுதலின் இலக்கணம் ஆம்.

[5] உவகையொன்றே சுவையென்ப சிருங்காரப் பிரகாசநூலார். சமநிலையின்றிச்சுவை யெட்டனக் கூறுப தனிகர் முதலினோர். சமநிலையும் அன்புச்சுவையுங் கூட்டிச் சுவை பத்தென்ப பிறரும். இத்தகைய முரண்பாட்டினால் விளையுஞ் சுவையலகின் ஏற்றத்தாழ்வைப் பரிகரித்தற் பொருட்டு முன்னையாசிரியராற் கூறப்பட்ட சுவையென்றான் என்க. உறுதிப்பயன் நான்கனுள் எல்லாவுயிர்களின் நுகர்ச்சிக்கு எளிதாகிய இன்பமே யாவர்க்குமினியதாகலின், அவ்வின்பந்தருமுவகைச் சுவையை முதற்கண் வைத்தான். அதனால் நகை விளைகின்றதாகலின் அதன்பின் நகையை வைத்தான். அதன்பின் அதற்கு மறுதலையாகிய அழுகையை வைத்தான். அதன்பின் இன்பத்திற்கேதுவாய பொருட்சிறப்புடைய வெகுளியை வைத்தான். பொருளும் இன்பமும் அறத்தை யடிப்படையாக வுடையவாகலின் அறச்சிறப்பெய்திய பெருமிதத்தை யதன்பின் வைத்தான். அப்பெருமிதம், அஞ்சினோர்க்கபயமளித்தலானே சிறக்கின்றதாகலின் அதன்பின் அச்சத்தை வைத்தான். அவ்வச்சத்திற்குக் காரணமாகிய இளிவரலை யதன்பின் வைத்தான். பெருமிதங்காரணமாக வந்த இவற்றிற்குப்பின் அவ்வீரத்தின் பயனாகிய மருட்கையை வைத்தான். இங்ஙனம் முப்பொருட்குரிய சுவைகட்குப் பின்னர் வீடு பேற்றிற்குரிய சமநிலையை வைத்தான் என்க.

[6] சுவைகளை — ஈண்டு உலகிற்கியல்பாகத் தோன்றும் இரதி முதலிய ஸ்தாயிபாவங்களை; அவை, சோறு சமைகிறது என்புழிப்போல எதிர்கால நிலை கொண்டு வழங்கப்படுகின்றன. உரிய சுவைக்கு உறபத்தியின்மையான். இதனால் உலகில் தலைவன் றலைவி முதலிய ஆலம்பன காரணங்களும், குறியிடம் காலம் முதலிய உத்தீபன காரணங்களும் காப்பியம் நாடகம் இவற்றின் வாயிலாக அவையினரகத்து உருக்கொடுதோன்றி, அவராற் பாவிக்கப்படுதலான் அவர்பால் அமைந்தவாய் ஆலம்பனவிபாவம், உத்தீபனவிபாவம் எனக் கூறப்படுகின்றன; என்னுமிப்பொருள் விபாவம் என்னுஞ் சொல்லாற் போதரும்.

[7] காரியப்படுதலாவது, பிற்காலத்தில் உறுதியாக உற்பவித்தலாம்; அக்காரியத்தன்மையும், அநுபாவத்திற்குச் சுவைநோக்கி நிகழ்வதா? அன்றேல் ஸ்தாயிபாவத்தை நோக்கி நிகழ்வதா?

  1. சுவைநோக்கி நிகழ்வதின்று.

“சுவைப்பொருள் அநுபாவம் விறல் குறிப்பு என்னுமிவற்றால் இனிய நிலையெய்து ஸ்தாயிபாவம் சுவையெனப்படும்” என்புழி இவற்றாலென்னும் மூன்றனுருபு கருவிப்பொருளதாகலின், சுவைக்குக் கருவியாகிய அநுபாவம், அச்சுவைக்கு முன்னரே தோன்றுமாகலான். கருவிப்பொருளுக்கு முற்பொழுதி லின்றியமையாதிருத்தலென்னும் இலக்கணத்தையுடைய காரண விசேடத்தன்மையுண்மையான். இங்கண் மூன்றனுருபிற்குக் கருத்தா முதலிய பொருள் வேறுபாடு, கொள்ளற்பாலதின்று; கொள்வேமெனின், அநுபாவத்தைப் பற்றிச் சுவையும் சுவையினைப்பற்றிய நுபாவமும் நிகழுமென – “ஒன்றையொன்று பற்றல்” என்னுங் குற்றமாமாகலின்.

 

  1. ஸ்தாயிபாவத்தை நோக்கியும் நிகழ்வதின்று.

ஸ்தாயிபாவமே சுவையாகப் பரிணமிக்கின்றதாகலின்; அதனால் அநுபாவத்திற்குச் சுவை நோக்கிக் காரியத்தன்மையின்றெனக் கூறியாங்கு, ஸ்தாயிபவத்தை நோக்கியும் அத்தன்மையின்றாமென்பது போதரும்.

அவையினரகத்தில் நிலைப்பெய்தும் ஸ்தாயிபாவத்திற்கு முன்னரே நிகழும் மடந்தையரின் கடைக்கணித்தல் புருவநெறித்தல் முதலிய அநுபாவங்கள், அதற்குக் காரியமாகாவன்றே; ஆதலின், ஸ்தாயித்தன்மையை யெய்தற்குரிய இலௌகிக இரதி முதலியவற்றிற்குக் காரியமாகிய கடைக்கணித்தன் முதலியன, அவையினரகத்திலெதிருருப்பட்டு அவரது மனத்திலிருக்கும் இரதி முதலிய ஸ்தாயிபாவங்களை, வெளிப்படுத்துகின்றனவாகலின் அவற்றை, அநுபாவம் என்று கூறுவர் என்பதாம்.

(****) இக்குறியிடப்பட்ட அனைத்தும் தெலுங்கு மொழியில் உள்ளன. பின்னர் இவற்றையும் இங்கு தருவதற்கு முயற்ச்சிக்கிறோம்.

 

வெளிப்படுத்துகின்றதென்பது அச்சொற்கு உரியபொருளாம். அங்ஙனமே பெரியாரும்,

“புருவனெறித்தல் கடைக்கணித்தல் முதலிய

விகாரங்கள், மனத்துறும்ஸ்தாயிபாவத்

தை வெளிப்படுத்துகின்றனவாகலின்” அவை

அநுபாவம் எனக் கூறப்படும்.

என்று கூறியுள்ளார். இதனால் அநுபாவம், இலௌகிக இரதி முதலியவற்றை நோக்கிக் காரியப்படுவதாம்.

[8] சாத்துவிகங்கள் — இவற்றை விறல் என்ப. இலௌகிக இரதி முதலியவற்றை வெளிப்படுத்துமுகமாகக் காரியப்பட்டு அநுபாவத்துளடங்குமாயினும், பிராமண பரிவிராசக நியாயத்தால் வேறுபடுத்துக் கூறுவதிற் சிறப்பு நிமித்தத்தை யீண்டுக் கூறுகின்றார். பிறரெய்திய இன்பத்துன்பங்களை அவிநயாதி வாயிலாகப் பாவித்தலில் அந்தக் கரணத்தின் மிக்கவநுகூலமாந்தன்மை, சத்துவம்ஆம். அத்தகைய சத்துவத்தினின்று விளைவன சாத்துவிகங்களாம்; சத்துவமெனக் கூறத்தகுமித்தகைய அந்தக்கரணத்தால் கடைக்கணித்தன் முதலியன பாவிக்கப்படுகின்றனவாகலின், அவையநுபாவங்களே யன்றிச் சாத்துவிகங்களாகா வென்பது கருத்து. அங்ஙனம் பாவப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“பிறருடைய இன்பத்துன்பங்களைப் பாவித்த

லில் மனம், எந்த மிக்க அநுகூலத்தன்மை

யால் அவ்வண்ணமாந்தன்மையெய்து

கின்றதோ அத்தன்மை சாத்துவம்ஆம்.

அதனால் நிகழ்வனவும் சாத்துவிகங்களாம்

எனக் கூறப்படும்; இச்சாத்துவிகங்களுக்

குப் பொதுவகையாலநுபாவத்தன்மையுண்

டெனினும், இவை சத்துவத்தானிகழ்வன

வாகலான் சிறப்புவகையாலிலக்கணங்கூ

றப்பட்டது. அச்சாத்துவிகங்களும்,

தம்பம் முதலியனவாம்” என்று.

இங்கண் அவ்வண்ணமாந்தன்மை யெய்தலாவது மனம், அவ்வின்பத்துன்ப வடிவாய் நிற்றலாம். அங்ஙனமே பெரியாரும்,

“அவையினர், இராமன் முதலியோரது இன்பத்

துன்பங்களையநுபவித்தலான், அவரதும

னம் அவ்வடிவாய் நிற்றல் அவ்வண்ண

மாந்தன்மையெய்தலாம்” என்று.

இங்ஙனமாக, விபாவம் முதலியவற்றின் காட்சியான் விளைந்த அநுராகம், நிருவேதம் முதலிய மனோவிருத்திகள், விபாவம் முதலியவற்றின் தன்மயமாம் வடிவினதும் சத்துவமென்னுஞ் சொற்குப் பொருளாயதும் அவையினர் மனத்தின் மிக்கவநுகூலத்தன்மையான் விளைவுற்றதுமாகிய சிறப்பு நிமித்தத்தாற் பிறிதவத்தை யெய்தித் தம்பம் முதலிய பாவங்களாய்ச் சாத்துவிகபாவங்களாகின்றன. அவைகளும், தங்காரியங்களாகியவும் அதனால் சாத்துவிகம் என்னுஞ் சொல்லான் விளக்கற்குரியனவும் புறத்தன்மைவனவும் சடத்தன்மையும் பௌதிகத்தன்மையும் உள்ளனவும் மெய்யின்கட்டோன்றுவனவும் ஆகிய தம்பம் முதலிய அநுபாவங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. அதனால் இரதி நிருவேதம் முதலிய பாவங்களே புலப்படுத்தவாறாம் என்பது பெற்றாம். அங்ஙனமே, ஏமசந்திர ஆசிரியருங் கூறியுள்ளார்.

“புறம்பாகிய தம்பாதிகளோவெனில் உடற்கு

ணங்களாகிய அநுபாவங்களாம்; அவை

களும், அகக்கண்ணவாகிய பாவங்களைத்

தோற்றுவிப்பனவாய் உண்மைநிலையில்

இரதிநிருவேதாதியவற்றைத் தோற்று

விப்பனவாம் என்பது உறுதியாம்” என்று.

இதனால் ஸ்தாயி சஞ்சாரியென்னுமிவற்றின் குழுவே உயிரின் மனோமயநிலையையெய்தி காரணகாரிய வடிவாலிருதிறப்பட்டு அகப்புறக்கண்ணவாகிய சாத்துவிகக்குணங்களை விளைவிக்கின்றது என்பது உட்கிடையாம்.

[9] வியபிசாரிபாவம் — இச்சொல், வி அபி என்னும் அடையுருபகளோடியைந்து “நடை” யென்னும் பொருளதாகிய “அர” என்னும் வினைப்பகுதியினடியாகப்பிறந்து ஸ்தாயிபாவத்தை நன்கு வளத்தற்கே இயங்குவது என்று பொருள்படும். இங்ஙனம் இச்சொல்லின் பொருளளவில் வெறுப்பு முதலியவற்றின் பொதுவிலக்கணம் போதரும் எனக்கருதிப் பொதுவகையானும் சிறப்புவகையானும் அவற்றின் பெயர்க்குறிப்பைக் கூறுகின்றார். இதனைத் தொல்காப்பியர், குறிப்பென வழங்குப; இக்குறிப்புகள், கல்லோலம் கடலைப் பெருக்கியாங்கு இலௌகிகங்களாகிய இரதி முதலியவற்றை வளர்க்குங்கால், சககாரிகன் (ஸஹகாரி) என்னும் பெயரெய்தியவாய் காப்பியம் நாடகம் இவற்றில் வியபிசாரிபாவங்கள் என்று வழங்கப்படுகின்றன. இஃது ஈண்டு அறியற்பாலது.

செயலிலக்கணம் அமைந்து உத்தீபனவிபாவங்களாகிய பாவம் ஆவம் என்னுமிவை முதலியன உவகைச்சுவையின் காரியமாகலான் இவற்றிற்கு அநுபாவத்தன்மை போதருகின்றது. கடைக்கணித்தல் புருவநெறித்தல் முதலிய அநுபாவங்கள், காதற்பற்றை விளைவித்தலான், அவற்றிற்கு விபாவமாந்தன்மை நிகழ்கின்றது. இங்கட் கூறியுள்ள இவ்விரண்டும் அலையென அமைந்து சுவையினை வளர்த்தலான் இவை வியபிசாரிபாவமாந்தன்மையை யெய்துகின்றன. சிந்தை முதலிய வியபிசாரிபாவங்கள் யாவும் அநுராகத்திற்குக் காரியமாகலான் இவை அநுபாவங்களும் ஆம். அத்தகைய வியபிசாரிபாவங்களின் காட்சியானும் கேள்வியானும் காதற்பெருக்கம் விளைதலான் அவற்றிற்கு விபாவத்தன்மையும் விளைகின்றது. அங்ஙனமே பாவப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“விபாவம் அநுபாவமாகவும், அநுபாவம் விபா

வமாகவும், அவ்விரண்டும் வியபிசாரிபாவங்

களாகவும், அவ்வியபிசாரிபாவங்களே ஒன்

றற்கொன்று விபாவஅநுபாவங்களாகவும்

ஆம்” என்று.

அதனால் இங்கட்கூறிய விபாவம் முதலியவற்றின் வரையறை, எங்ஙன் அமையுமெனில்; உண்மையே; ஒருபடித்தாய காதல் வெளிப்படுதற்கு எவை, காரியம் காரணம் கருவியென்னு மிவைகளாக அமைகின்றனவோ; அவை அவ்வெளியீட்டைக் குறித்து அவ்வப்படியேயாம்; சிறிதுங் கலப்பென்ன்பதின்று. வேறு காதலின் வெளியீட்டைப் பற்றிய வழியாதல், ஒரே காதலை வேறுபடித்தாகக் கருதிய வழியாதல், காரியகாரண கருவித்தன்மைகள் மாறுபட்டுழிமுரண்பாடென்னே? எவ்வாறெனில், ஒருவற்கு மகனை நோக்கிய வழி தந்தையாந்தன்மையும், தந்தையை நோக்கிய வழி மகனாந்தன்மையும் அமைவது காண்க. ஆதலின் விபாவங்களும் எதிர்மறை வேறுபாடுகளாற் கற்பிக்கப்பட்ட வேற்றுவடிவுடையனவாய் அவற்றிற்குக் கலவை நிகழுமென்னும் ஐய்யத்திற்கிடன் இன்மையான் விபாவம் முதலியவற்றிற்குக் கூறிய வரையறை, சாலப்பொருந்துமென்பது போதரும்.

[10] புணர்ச்சியென்பது தலைவன் தலைவியரது ஒருவர்க்கொருவர் காட்சி தழுவல் முதலிய இன்பம் விளைக்கும் செயலாம்; அதைப்பற்றிய விருப்பமாவது மகிழ்ச்சியின் வடிவாகிய மனோவிருத்தியாம்.

[11] காமற்கும் — இச்சொற்றடராற் றன்னைக் காதலித்த காதலனைப் பெறுதற்கே விளைந்த மிகுமகிழ்ச்சியெய்திய ஆலம்பனவிபாவமாகிய தலைவியொருத்தியின் மகிழ்ச்சி வடிவாகிய இரதி, குறிப்பிற்புலப்படுத்தவாறு; இரதியும், இயல்பு முதலிய நிமித்தங்களின் வேறுபாட்டினால் எழுவகைப்படும்; அவற்றுள், காமன் மதி வசந்தன் இவற்றில் வெறுப்பானும், காதலனைப் பற்றிய விருப்பானும் இங்கட்கூறிய இரதி, செருக்கு நிமித்தமாக நிகழ்ந்ததென அறியற்பாலது. இஃதொன்றே எனது விருப்பிற்குரியது; பிறிதன்று. என்னும் நம்பிக்கையே செருக்கென்ப. பிறவேறுபாடுகளின் எடுத்துக்காட்டுகள் ‘இரசாருணவம்’ என்னும் நூல்வாயிலாகக் கண்டுணர்க

[12] வேறுபாடுகள் — தன்னுடையவாதல் பிறனுடையவாதல் வேடம் பாடை உடல் இவற்றின் வேறுபாடுகளாம்; முரண்படு வேடம் விளக்கமில் பேச்சு கூன் ஆதிய இவைகளாம். இவற்றைக் காண்டலானும் கேட்டலானும் விளையும் மனோவிகாரம் நகை யென்பதாம். அந்நகை, கண்ணீரரும்பல் முதலிய விறல்களானும் உறக்கம் மடி முதலிய குறிப்புக்களானும் வளர்ந்து தலையிடை கடையென்னும் முத்திறத்து மக்கள்பாலும் தனித்தனி இரண்டிரண்டு வகையாக அமைவதால் அறுவகைப்படும்; அவை, கண்மலர்ச்சியளவில் அமைவது ‘ஸித0’ என்றும் பற்சிறிது துலங்குமளவிலமைவது ‘ஹஸித0’ என்றும், இனிய ஓசையுடையது, ‘விஹஸித0’ எனவும், உறுப்புக்களுடன் தலையையும் அசைத்தல் ‘உதஸித0’ எனவும் கண்ணீரொழுக நகைப்பது ‘அபஹஸிதம்’ எனவும் மெய்மறந்து சிறிப்பது ‘அதிஹஸித0’ எனவும் ஆம். தலையிடை கடையென்னும் மக்கள்பால் இவ்வாறும் இவ்விரண்டாக அமைந்து தன்பாலும் பிறர்பாலுமென இருவகையவாய் அறுவகைத்தென்பது கருத்து.

“தலைமக்களுக்கு தன்னுடையவும் பிறனுடையவும் வேறுபாட்டினைக் காண்டலான் முறையே ஸிதமும் ஹஸிதமும் ஆம். இடை மக்களுக்கு விஹஸிதமும் உதஸிதமும் ஆம். கடைமக்களுக்கு சாவஹஸிதமும் சாதிஹஸிதமும் ஆம்”, என்று.

[13] இங்கட்கூறிய நகை கடைமக்கள்பாற் பொருந்தி பிறரது வேடத்தான் விளைந்ததாம். கீ, கீ என்பது கீழ்மக்களது மிகப் பெருநகையின் ஒலிக்குறிப்பாம்.

 

[14] இங்கண், நிலத்திற் புரளுதல் மார்பினையடித்தல் முதலிய அநுபாவங்களும், எளிமை மயக்கம் மனக்கலக்கம் துன்பம் என்னும் இவை முதலிய வியபிசாரி பாவங்களும் அழுகைச்சுவையை வெளிப்படுத்துகின்றன. பகைமனைவியர் வாய்விட்டழுதலாற் காதலர் பிரிவு அரசியல் அழிவு என்னுமிவற்றான் விளைந்த துன்பமிகை புலனாம்.

[15] பகைவரெனக்கூறியது பணியாளர் முதலியோர்க்கும் உவலக்கணம் ஆம். இங்கட்கூறிய சினம், குரோதம், கோபம் உரோசம் என மூவகைத்து; அவற்றுள், குரோதம் தீயவரையெய்திக் கொலை அவமதிப்பு முதலிய நிகழும் வரை நிலைத்திருப்பதாம். கோபம், சிறந்த வீரரை யெய்தி பகைவர் வேண்டிக் கொள்ளும் வரை நிலைப்பதாம். உரோசம், ஆடவர் மகளிருள் ஒருக்கொருவரைப் பற்றியதாய் ஒருவரையொருவர் இன்னுரையாலின்புறுத்தித் திருப்பும் வரை நிலைத்திருப்பதாம்.

[16] இச்சுலோகத்திற் பகைவரின் காட்சியாகும் விபாபவமும், உறுமுதல், பற்கடித்தல் முதலிய அநுபாவங்களும் செருக்கு பொறாமை முதலிய வியபிசாரிபாவங்களும் விரவிய சினம் வெகுளியாகும் என்பதாம். “காகதிவீரருத்திரன்” என்பது, மெய்நீங்கிய எழக்கரமந்திரமெனக் கொள்க.

[17] கடற்கலக்கத்தையும் மலையின் செயலையும் விலக்க யாமேவலமுடையேம் என்னுஞ் சொற்றொடக்கத்தாற் பகைவரை வேறற்குரிய உற்சாகம் புலப்படுத்தவாறு. இங்கண், தற்புகழ்ச்சி அயற்பழித்தல் முதலியன இவ்வீரர்க்கு உண்மையான் இவர் தீரோத்தத்தலைவராவர்; அத்தலைவர், பெருமிதச் சுவைக்கும் உரியராகலான். இவ்வுற்சாகமே, பிரதாபம் விநயம் முதலிய விபாவங்களானும் அருள் போர் முதலிய அநுபாவங்களானும், செருக்கு மகிழ்ச்சி முதலிய வியபிசாரிபாவங்களானும், பெருமிதச்சுவையாகின்றது; அப்பெருமிதம், கொடை போர் அறம் என்னுமிவற்றான் முத்திறத்தென்ப. அறநிலையில் அருளெனக் கொண்டு மூவகைத்தென்ப தனிகர் முதலியோர். கொடைவீரர், பலி, பரசிராமன் முதலியோர்; போர்வீரர், இராமன் முதலியோர்; அறவீரர், யுதிட்டிரர் முதலியோர்; அருள்வீரர், சீமூதவாகனன் முதலியோர். இங்கண் வியர்த்தல் கண்சிவத்தல் முதலிய அநுபாவங்கள் இல்வழி போர்ப்பெருமிதமும், அவையுள் வழி உருத்திரச்சுவையும் ஆம்.

[18] முதலியவற்றான் என்றதனான், அச்சுறுத்தும் ஒலி முதலியவற்றைக் கேட்டலான் விளையும் மனக்கலக்கமும் பயம் ஆம் என்பது போதரும். இவ்வச்சம், மகளிர் கீழ்மக்கள் இவர்பால் இயல்பானும், மேன்மக்கள்பாற் செயலானும் நிகழும் என்ப ஏமசந்திரன் முதலியோர்; சிங்கபூபாலன், எங்கணுஞ் செயலானேயாம் என மறுத்துரைத்தார். பல திறப்பட்டதென்ப பிறரும். இங்கண் பகைவரை விட்டகலாப் பயமெனும் ஸ்தாயீபாவம் புலனாம்; இது, உடல் நடுக்கம் வியர்த்தல், வெதும்பல் குரற்சிதைவு முதலிய விறல்களானும் எளிமை பரபரப்பு மயக்கம் முதலிய குறிப்புகளானும் அச்சச்சுவையாக ஆகின்றது.

[19] அரத்தம் கக்கல் முதலிய இழிபொருள்களைக் காண்டலானும் கேட்டலானும் உண்டாகும் மனக்கூச்சம் இளிவு ஆம்; இது மூக்கை மூடல் காறுதல் முதலிய அநுபாவங்களானும், பயம் நோய் முதலிய வியபிசாரிபாவங்களானும் இளிவரலாகின்றது. அது, சுவைப்பொருளின் வேறுபாட்டினால், சோபம் உத்துவேகம் என இருவகைத்து. “அரத்தம் நரம்பு முதலியவற்றைக் காண்டலானும் கேட்டலானும் உண்டாவது சோபமும், புழுகக்கல் தீமணம் மலம் என்னும் இவற்றால் விளைவது உத்துவேகமும் ஆம்” எனப் பாவப்பிரகாசம் கூறும். இங்கட்கூறிய எடுத்துக்காட்டு சோபம் ஆம்.

[20] அருமைப்பொருளென்பது — ஈண்டுத் தன்னியல்பைக் கடந்து நிற்கும் பொருளை; அதன் காட்சி முதலியவற்றால் விளையும் மனவெழுச்சி வியப்பு ஆம்; அவ்வியப்பே, தற்செயலாய்த் தன்விருப்பு நிறைவுறல், அருமைப் பொருளின் காட்சி முதலிய விபாவங்களானும், கண்மலர்ச்சி பாராட்டுரை முதலிய அநுபாவங்களானும் மகிழ்ச்சி பரபரப்பு முதலிய குறிப்புக்களானும் மருட்கைச்சுவையாகின்றது. இவ்வெடுத்துக்காட்டிற்கூறிய, “கூறற்கரியவாய் வேறுபட்டு விளங்குகின்றன” என்னுஞ் சொற்களான், வீரருத்திரன்பால் விளங்கும் ஒரோவொன்றும் அருமைப்பொருளெனப் புலனாகலின், அவ்வுயர்வு முதலியவற்றைக் காண்டலான் மருட்கைச்சுவை நிகழ்ந்ததென்பது கருத்து.

[21] முதலிய என்றமையான் இறைவனருள், நல்லாரிணக்கம் முதலியன கொள்ளற்பாலன.. விகாரம் — புலன்களைப் பற்றிய விருப்பு; அவ்விருப்பு நீங்கிய மனமுடைமை சமம் ஆம். இஃது இயமம் நியமம் முதலிய அநுபாவங்களானும் தைரியம் வெறுப்பு முதலிய குறிப்புகளானும் சமநிலைச் சுவையாகின்றது.

“சமநிலை யொழிந்த வெட்டுச் சுவைகளே கூத்திற்குரியவாம்” எனத் துணிந்து கூறியிருத்தலான் அச்சமநிலைச் சுவை வேண்டாவெனக் கூறுமாலெனில், அங்ஙனங் கூறுவாரை யிங்ஙனம் வினாதல் வேண்டும்.

  1. ஆசிரியர், சமநிலையின் ஸ்தாயிபாவத்தை விளக்கிக் கூறாமையான் அதற்குச் சுவைத்தன்மையின்றா?
  2. அன்றியதற்குப் போதிய கருவிகள் இன்மையானா?
  3. அன்றேல், சிறப்பின்மையானா?
  4. இன்றேல் இவ்வெட்டனுள் ஒன்றிலடங்குந்தன்மையானா?
  5. அல்லது உறுதிப்பயன் இன்மையானா? என்று சமநிலை, சுவையாகாதென்பதற்கு இங்கட் கூறியுள்ள ஐவகை நிமத்தங்களுக்கும் தனித்தனியே மறுப்புப் பின்வருமாறு கூறியுள்ளார்.

 

  1. வெறுப்பே (**) சமநிலைக்கு ஸ்தாயிபாவம் என்று கூறியுள்ளார். அவ்வெறுப்பும், எல்லாச்சுவைகட்கும் பொதுவாகிய வியபிசாரிபாவமாயினும், அமங்கலவடிவாயினும் சிறப்புவகையாற் சுவையொன்றைக் குறித்து ஒத்ததன்மையிற்றலை சிறந்ததும் பொதுவற நிற்பதும் ஆகிய ஸ்தாயிபாவம் ஆம்; என்று அறிவுறுத்தற்கே அவ்வாசிரியர் விளக்கிக் கூறியுள்ளார். அங்ஙனமே காப்பியப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.

 

“அமங்கல வடிவாகிய வெறுப்பு குறிப்பு

களின் முதற்கட்கூறற்குரியதன்றாயி

னும் அங்ஙனங்கூறல், அதற்குக்கு

றிப்பாந்தன்மையுண்டெனினும் ஸ்

தாயிபாவத்தன்மையை விளங்கவைத்

தற் பொருட்டென்க; அதனால், அவ்வெ

றுப்பினை ஸ்தாயிபாவமாகக்கொண்ட

சமநிலையும், ஒன்பதாம் சுவையாக

நிலவும்” என்று.

துவனியாசிரியரும் கூறியுள்ளார்.

“ஆசையழிவாகுமின்ப வளர்ச்சியை

இலக்கணமாகவுடைய சுவை, கா

ணப்படுவதொன்றே” என்று.

இதற்கு உரைகூறுமுகமாக உலோசனத்திலுங் கூறப்பட்டுள்ளது.

ஆசை — புலனுகரு விருப்பம்; அதன் அழிவு, அந்நுகர்ச்சியின் ஒழிவெய்தலாகிய வெறுப்பு; அவ்வெறுப்பே இன்பவடிவாய் ஸ்தாயிபாவமாக, அதன் வளர்ச்சி — அவ்வின்ப நுகர்ச்சியானாயது. அதனையிலக்கணமாகவுடைய சமநிலைச்சுவை, காணப்படுவதொன்றே, என்று.

வெறுப்பு, ஆசையழிவின் வடிவாகிய சமத்தின் பரியாயம் ஆம்; இன்பவடிவன்று. எனக் கூறுமாலெனில், அற்றன்று. வேதாந்திகள் கூறும் அவிச்சையின் நிவிருத்தியொப்ப இவ்வாசையழிவுக்கும் இன்பவடிவாந்தன்மையுண்மையான்.

அங்ஙனமே பெரியாரும்,

“மண்ணுலகிற்குரிய காமசுகம், விண்ணு

லகிற்குரிய நல்லின்பம் என்னுமிவை,

ஆசையழிவாகுமின்பத்திற்கு வீசமும்

ஒப்புடையவாகா” என்று.

 

  1. அதற்குப் போதிய கருவிகள் இன்மையானா? அன்று; வைராக்கியம் முதலிய கருவிகள் இதற்கு எளியவாகலின். அங்ஙனமே:— வைராக்கியம் iஇறைவனருட்பேறு முன்னைய நலங்களின் பரிபாகம் பெரியாரின் வழிபாடு, வேதாந்த விசாரம் என்னும் இவை முதலியன விபாவங்களாம். இயமம் நியமம் முதலியன அநுபாவங்களாம். உலோசனத்தில், சனகன் முதலியோர்க்குச் செங்கோன்மை முதலியனவும் சமநிலையின் அநுபாவங்களெனக் கூறப்பட்டுள்ளன. அறிவு நினைவு சிந்தை தைரியம் ஊகம் முதலியன வியபிசாரிபாவங்களாமாகலின். சுவைக்கருவிகள் விபாவம் முதலியனவென்று முன்னரே விளக்கியுள்ளோம்.
  2. சிறப்பின்மையானா? அன்று, அராகம் துவேசம் என்னும் இவற்றான் மாசுறு மனத்தினர் நுகராமை பற்றிச் சிறப்பிலதாயினும் அச்சமநிலைச் சுவையைப் பற்றற்ற பெரியார் நுகர்வராகலின்; ஒரு சிலர் கருத்தாற் சிறப்பின்மை கருதியிது சுவைத்தன்மையின் நழுவுறூஉமெனின், உவகைச்சுவையும் பற்றற்ற பெரியார் கருத்தாற் சிறப்பின்மை கருதிச் சுவைத்தன்மையின் நுழுவுறூஉமெனக் கூறல் வேண்டும்.
  3. இவ்வெட்டனுளொன்றிலடங்குந்தன்மையானா? அன்று. இஃது உவகைச் சுவையினுள் அடங்குவதின்று; இயபின்மையான்.

“கொடைப்பெருமிதம் போர்ப்பெருமிதம்

அறப்பெருமிதம் எனப் பெருமிதம் முத்

திறத்தென பிரமதேவன் கூறியுள்ளார்.”

என்று ஆசிரியராற் கூறப்பட்டுள்ளது. இச்சமநிலையும் அறச்சிறப்புடைய அறப்பெருமிதத்து ளடங்குமாலெனின், அற்றன்று. பெருமிதச்சுவையின் ஸ்தாயிபாவமாகிய உற்சாகத்திற்கு, “யான் இத்தகையன்” என்னுமித்தன்மையுண்மையாற் பெருமிதம் செருக்குவடிவாயமைவது; சமநிலை, அகங்காரம் யாவும் அடங்கிய வடிவாயமைவது. இங்ஙனமிரண்டிற்கும் மிக்க வேறுபாடுண்மையான்; ஆயின் அருட்பெருமிதத்துளடங்குமெனக் கூறுமாலெனில், அற்றன்று; அவ்வருட்பெருமிதம், இத்தன்மைத்தாமாயின், சமநிலையே பிறிதொரு பெயராற் கூறப்பட்டதாகும். அஃது இத்தன்மைத்தன்றெனில் பெருமிதப்பேதங்களுள் ஒன்றேயாம். அங்ஙனமாயினும் உள்ளடங்கு நிலையையுடன்படுவேமாயின், யாண்டும் ஒரு சுவை வழக்கு நிகழுமாகலின்.

 

  1. உறுதிப்பயன் இன்மையானா? அன்று. வீடெனப்படும் நான்காம் உறுதிப்பயன் இச்சமநிலையொன்றானே பெறக்கடவதாகலின். அங்ஙனம் பாவப்பிரகாசத்திலும் கூறப்பட்டுள்ளது. “எல்லாவகையானும் விருப்ப நிறைவெய்தியவனும், மகிழ்வுறு மனமுடையனும் ஆகிய பெரியோன், முடிவில் சமநிலைச் சுவையொன்றானே வீட்டின்பத்தை யெய்துகின்றான்.” என்று உலோசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

“வீட்டின்பத்தை பயக்கு முகமாகச்

சிறப்புறுமுறுதிப்பயனையளிக்க

வல்ல இச்சம நிலை எல்லாச்சு

வையினுஞ் சிறந்து நிலவுகின்றது” என்று.

அதனால் சுவைகள் ஒன்பதென்றே பெற்றாம்.

 

[22] இந்தச்சுலோகத்தில் கூறிய வாழ்நாட்பெருமை ஆயிரஞ் சதுர்யுகம் ஒருநாளாக இம்முறையே பற்றி  நூறுயாண்டுகள் பிரமனுக்கு ஆயுள்காலமாகலின் இங்ஙன் கூறினான் என்க. உட்பகை — காமம் வெகுளி முதலியன. வெளிப்பகை — வெப்பம் தட்பம் காற்று முதலியன. வாழ்நாட்பெருக்கம் செல்வப்பெருக்கம் என்னும் மிவ்விரண்டே யாவரானும் விரும்பற்பாலன. அவற்றையெய்தினோர்க்குள் தலைசிறந்தார் பிரமனும் இந்திரனுமேயாவர். அவரையும் துரும்பெனக் கருதுவரெனக் கூறியமையான் வைராக்கியத்தை யிலக்கணமாகவுடைய சமம் புலப்படுத்தவாறு.

[23] இலாவண்ணியம் —  நன்முத்த நடுவண் இலங்கும் ஒளிபோல உடலிற் காணப்படுமாயின் அஃது இலாவண்ணியம் ஆம். மிகுவனப்பு என்பது கருத்து; அதற்கு விளைநிலம் என்றமையான் அவ்வனப்பு ஒருபொழுதும் குறைவுறாதென்பது கருத்து.

[24] இதற்குமேல் எவ்விதம் சிருட்டிப்பதென்று மனத்தான் எண்ணித் துணிதற்கும் பிரமனால் இயலாதெனில் சிருட்டிக்க எவ்வாறு இயலுமென்பதாம்.

[25]                     “பெருமான் பணியாளன் கடன் வாங்கினோன்,

இவர்களுக்குள் வரையறை செய்தற்கு நிருமிக்

கப்படும் பிறிதொரு பெரியோன் பிணையாளன்

ஆம்”

என்று சோமேச்சுரர் கூறுவர்.

[26] ஆவணம் — விலாசங்கள் வேண்டுமாயின் இவளிடத்தே கொள்ளற்பாலனவென்பது கருத்து.

விலாசம் — காமலீலை. ஆவணம் — கடைத்தெரு.

[27] எல்லாக்குணங்களும்  நிறைந்திருத்தலான் அதிதெய்வம் எனக் கூறினான் என்க.

[28] இத்தகைய குணங்கட்குரிய கணவனை யெய்தலை யன்றிப் பிறவற்றைக் கூறலிற் பயன் என்? என்பதாம். இச்சுலோகத்திற் கூறியுள்ள இலாவண்ணியம் முதலியன சுவைப்பொருளின் (ஆலம்பன) குணங்களாய் அநுபாவங்களாயினும் சுவைப்பொருளையணிப்படுத்தற்கே யீண்டவற்றைக் கூறியிருத்தலான் சிறப்புடைமை சுவைப்பொருட்கேயன்றி இலாவண்ணியம் முதலியவற்றிற் கில்லையென்பது உணரற்பாலது.

[29] பெண்களின் யௌவனப்பருவம் உலகை மயக்கிய வண்ணமாய்த் தொடங்குகின்றது என்றால் அப்பருவம் நிறைவுற்றுத் திகழுங்கால் கூறவேண்டுவதில்லை யென்பதாம்.

[30] இன்பத்துன்பங்கள் வியப்பு முதலியவற்றான் விளைந்து அறிவின்மை அசைவின்மை முதலிய அநுபாவங்களோடு உணர்ச்சி கேடுறாத நிலையில் உண்டாகுஞ் செயலொழிவு தம்பம் என்பதாம்.

[31] கண்ணுற்று அசைவறு முறுப்பினராய் என, உணர்ச்சியுள்வழி செயலொழிவைக்கூறலான் இது காதலான் விளைந்த தம்பம் ஆம்.

[32] மயக்கம், இன்பம் மதம் ஹக்கம் அடி முதலியவற்றான் விளைந்து துன்பம் அவமானம் முதலியவற்றான் வளர்ந்து உணர்ச்சியின்றிச் செயலற்றிருத்தல் மயக்கம் என்பதாம்.

[33] இச்சுலோகம், தலைவியின் கூற்று இங்கட்கூறிய மயக்கம் இன்பத்தான் விளைந்ததாம்.

[34] மயிர்சிலிர்த்தல் — இன்பம் உற்சாகம் அச்சம் வியப்பு முதலியவற்றான் விளைந்து ஊற்றின்பம் முதலிய அநுபாவங்களான் வெளிப்படுவதாம்.

[35] நடுக்கம் — அச்சம் வெப்ப நோய் கிழமை முதலியவற்றான் உண்டாவது.

[36] இவ்வொரு சுலோகத்தான் மயிர் சிலிர்த்தல் நடுக்கம் என்னும் இரண்டற்கும் எடுத்துக்காட்டுக் கூறப்பட்டவாறாம்.

[37] வியர்த்தல் — இங்கட் கூறப்பட்டதையன்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி நாணம், அச்சம் வெகுளி முதலியவற்றானும் உண்டாகும் என்பதாம். காற்று விருப்பம் சிவிறிகோடன் முதலியன அநுபாவங்களாம்.

[38] முதலியவற்றால் என்றதனான் வெப்பம் தட்பம் அச்சம் முதலியவற்றானும் நிறம் மாறுபடும் என்பதாம். இந்நிறமாற்றத்திற்கு அநுபாவங்கள், இளைப்பு வனப்புக்கேடு முதலியனவாம்.

[39] இங்கட்கூறிய வெதும்பல், பிரிவுத்துன்பத்தான் விளைந்ததாம். சியாமை — ஈண்டுக் கரிய  நிறத்தவ ளையும் யௌவனமங்கையையும் உணர்த்தும். உறுப்புகள் வெண்ணிறமுடையவாதல் பிரிவுத்துன்பத்தானாம். நற்குணங்களை வெண்மையாக வன்னித்தல் கவிமரபு. அத்தகைய குணங்களை யிடையறாது நினைக்குந் தலைவியின் உறுப்புகளும் அவ்வண்ணமாதல் பிரமரகீட நியாயத்தானாம்..

[40] துன்பம் முதலியன — கொட்டாவி, மகிழ்ச்சி அச்சம் இவற்றிற்கும் உவலக்கணம் ஆம்.

[41] இது, துன்பத்தால் உண்டாயதாம்.

[42] இது, துன்பம் அச்சம் வெப்பநோய் முதலியவற்றானும் உண்டாகும்.

[43] தனியிடத்தில் — இது தலைவன் றலைவி யிவரது கூட்டத்தை யுணர்த்தும். மிக்கக்குளறுபடல், புணர்ச்சியின்பத்திலீடுபட்டமையானாம். இங்கண், குளறுபடுஞ் சொற்கள், காதற்பெருக்கத்தை மிக்க ஊக்கிவிடும் என்பது சிறந்த கருத்து.

[44] தேற்றம் — கருப்பூரம் முதலியவற்றினும் சிறந்த மணம் தட்பம் இவற்றைப் பிரதாபருத்திரன்பால் எய்தல் எளிதென்பதை யுணர்த்தும்.

[45] பசி நீர்வேட்கை முதலியவற்றால் உண்டாகும் வலக்குறைவு ஆம். இங்கட் கூறப்பட்ட வெறுப்பு முதலியன உடல் உரை செயல் இவற்றின் மெலிவுக்கும் உவலக்கணம் ஆம்.

[46] ஆராய்ச்சியில்லாத செயலுடையள் என்பது தலைவி தான்  மெல்லியவுடலுடையளென அறிந்திருந்தும் இச்செயலின் முயன்றமையான் இங்ஙனம் கூறினள் என்பது கருத்து.

[47] பிறரது கொடுஞ்செயலானும் தனது தீயொழுக்கத்தானும் கேட்டின் விளைவை ஊகித்தல், ஐயம் என்பதாம். முதலியவற்றிற்கு என்றமையான், வெதும்பல் குரற்சிதைவு திசை நோக்கம் முதலியன கொள்ளற்பாலன.

[48] களவொழுக்கமுள்ள மடந்தையரது மறைவுற்ற காதல் வெளிப்படுதலே, அம்மடந்தையர்க்குக் கேடு விளைவிப்பதென்பது கருத்து.

[49] இவ்வழுக்காறு செருக்கு தீக்குணம் சினம் இவற்றால் உண்டாவதாம். பழித்துரைத்தல் அவமதித்தல் புருவநெறித்தல் முதலியன அநுபாவங்களாம்.

[50] களிப்பில் சொற்றளர்வு உடற்றளர்வு சிரிப்பு அழுகை என்னும் இவை தலையிடைகடை பற்றி அநுபாவங்களாம். “காதல் மயக்கம் கலந்ததும் கட்குடியால் விளைந்ததுமாகிய களிப்பினால் உத்தமத் தலைவன் உறங்குவான்; இடைத்தலைவன், சிரித்துப்பாடுவான்; கடைத்தலைவன் வன்சொற்கூறியழுவான்” என்று சாகித்திய தருப்பணம் கூறும்.

[51] மடி, செருக்கானும் மெய்வருத்தத்தானும் உண்டாவதாம். இங்கண் கொட்டாவி படுக்கை முதலியன அநுபாவங்களாம்.

[52] தன்னுறுப்புகளை யணிப்படுத்தலென்பது, கத்தூரி முதலிய கலவையணிதல், தொய்யில் முதலியன வரைந்து கோடல், மலரலங்கலணிதல் முதலிய அலங்காரச் செயலை. காதலன் முன்னிலையிற் செயற்பாலன:— சென்றெதிர்கோடல் வலியத்தழுவல் இன்சொற்கூறன் முதலியன; அவற்றைக் காமன் வலிந்து செய்விக்கின்றான் என்பது இத்தலைவியின் காதற்பெருக்கையுணர்த்தும்.

[53] இயல்பு நீக்கமென்பது தீயூழ் முதலியவற்றிற்கும் உவலக்கணம். மனத் தளர்வு என்பது உடற்றளர்வு சொற்றளர்வு முதலிய அநுபாவங்களுக்கும் உவலக்கணம் ஆம்.

[54] ‘சிறிது தாழ்க்க’ என்னுமிக்கட்டளை திங்களஞ் செல்வன் விரைவிலுதித்தலாகா தென்பது கருதி; அவன் விரைவில் உதயமெய்திடில், காமநோய் பொறுத்தற்கியலாதென்பது கருத்து.

[55] சிந்தைக்கு நெட்டுயிர்த்தல், வெப்பநோய் முதலியன அநுபாவங்களாம்.

[56] இச்சுலோகத்தில், ‘மறுமொழி கூறுகின்றாளில்லை’ என்பது இறுவாய்க்கூறியுள்ளது, பாழ்மையையுணர்த்தும். பின்னர்க் கூறியுள்ளது, காதலன் எய்தப்பெறாமையின் அவனைப்பற்றிய சிந்தையையுணர்த்தும்.

[57] இம்மெல்லியலாள் புதுவேடம் புனைந்து கோடல், தன் வேடத்தைக் காதலன் கண்டு இன்புறற் பொருட்டு. இங்கண், நீடிய பாதங்களான் என்று கூறியமையான் “மெலியவர், வலியவராற் காலாலுதையுண்டு மயக்கமெய்துவர்” என்னும் பொருள் ஒலிக்கின்றது.

[58] நினைவுக்குப் புருவத்தை உயர்த்தல் சிரத்தையசைத்தல் என்னுமிவை அநுபாவங்களாம்.

[59] முதலிய என்றமையான் ஆற்றல் முதலியவற்றானும் தைரியம் உண்டாகும் என்பதாம்.

[60] இச்சுலோகத்தில் விரும்பிய காதலன் பேற்றினால் தைரியம் விளைந்தவாறு காண்க.

[61] முதலியன என்றமையான் ஒழுக்கக்கேட்டினாலும் நாணம் உண்டாகும் என்பதாம். இங்கண், மறைதல் வெதும்பல் தலைகவிழ்தல் முதலியன அநுபாவங்களாம்.

[62] பல எண்ணங்கள் — தடையின்றி யிமைக்காது விருப்பிற்கேற்ப காதலனைப் பார்த்து, வாழ்க்கையின் பயனையும் கண் படைத்தமைக்குரிய பேற்றையும் எய்துவோம்; என்னுமிவை முதலியவாம். “வீழ் தரு மிதழ்களையுடையவாயின”, என்றமையான் அவ்வேந்தன் காணப்படுங்கால் கண்ணிமைகள் நாணத்தாற் றாமே குவிந்தன என்பதாம். காதலனது அருள் நோக்கத்திற்குப் பின்னரே கன்னியர்க்குக் காதல்மிகுமாகலின். அந்நோக்கம் இல்வழி நாணமுண்டாயிற்றென்பது கருத்து. இதழ் — இமை.

[63] முதலிய என்றமையான் அழுக்காறானும் சாபலம் உண்டாம் எனக் கொள்க. இங்கண் அதட்டல் கொடுஞ்சொற்கூறல் விரும்பியாங்கொழுகல் என்னும் இவை முதலியன அநுபாவங்களாம்.

[64] விழிசுழல்வுறப்பார்த்தல் புன்முறுவல் செய்தல் முத்துமாலையணிதல் செவியணி குவளை மலரைத் தொடுதல் என்னும் இங்கட்கூறிய செயல் நான்கினுள் ஒன்றிலாதல் மடந்தையின் மனம் ஒருவழிப்படவில்லையெனக் கூறுமாற்றாற் காதலடியாக நிகழுஞ் சாபலம் புலப்படுத்தவாறாம்.

[65] உற்சவம் — ஈண்டு, காதலன் காதலி யிவர்களின் சேர்த்தி, மகப்பேறு முதலியவாம். வியர்த்தல் முதலியன அநுபாவங்கள்.

[66] இது, காதலன் கூட்டமெய்திய தலைவியொருத்தி தன் நகில்களை விளித்துக் கூறியது; காதலன் அளித்த கல்லார மாலையை அந்நகிலங்களெய்தப் பெற்றமையான் விளைந்த அவற்றின் நற்பேறுடைமையைக் கூறுமுகமாகத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினள் என்பதாம்.

[67] காதலன் கூட்டம் முதலியன விருப்பிற்குரியன; கொடுங்கோன்மை அதிவிருட்டி முதலியன வெறுப்பிற்குரியன. இங்கண் இன்பம் துன்பம் பரபரப்பு தம்பம் முதலியன அநுபாவங்கள்.

[68] பாதியலங்காரஞ் செய்து கோடல், ஒரு கண்ணிற்கு மைதீட்டுதல், ஒரு காலுக்கு செம்பஞ் சூட்டல் முதலியவாம்; அணிகலன்களை யிடன் மாறியணிந்து கோடல், இடையணியைக் கழுத்திலும், முத்துமாலை முதலிய கழுத்தணியை யிடையிலும், அணிந்து கோடலாம்.

[69] அறிவின்மைக்கு இமையாமை வாளாமை என்னும் இவை முதலியன அநுபாவங்களாம்.

[70] பாங்கியரணிமைக்கணிருத்தலே தலைவியின் நாணத்திற்கு நிமித்தம்; அதனால் மகிழ்ச்சியாகும் அநுபாவத்தை மறைத்துக் கொண்டாளாயினும், காதலனை யின்புறுத்தற்குரிய உபசாரங்களைச் செய்வதற்கு, விரைந்து முற்பட்டு அங்ஙனமே ஒழிவெய்துகின்றாள் என்னுமிதனால் மகிழ்ச்சியும் நாணமும், முறையே ஒருபுறம் முயற்சிக்கும், ஒருபுறம் அதன் நீக்கத்திற்கும் நிமித்தமாகலான். இவை இருபுறமும் இடர்ப்படுத்துங்கயிறு போலாயின என்பது கருத்து.

[71] முதலியவற்றான் என்றமையான் செல்வம் குலம் பேரழகு முதலியவற்றானும் ஆம். பிறரை அவமதித்தல் விலாசமாக மார்பைப் பார்த்துக் கோடல் முதலியன அநுபாவங்களாம்.

[72] இங்கட்கூறிய எடுத்துக்காட்டு வீரத்தினடியாக வந்த செருக்கைப் பற்றியதாம். படைக்கலத்தைக் கையினாற்றாங்குங் காலமேது என்றதனான் எதிர்த்துப் போர் புரிதற்குரிய பகைவர் இன்மையான் அக்காலமின்றென்பது கருத்து. தமக்குப் பகைவரும் உளர் எனக்கூறலும் நாணம் தருவதாம் என்பான் பகையரசராகுமின்மினிப் புழுக்கள்பாற் பகைமை எத்தகைத்தென்றான் என்க.

[73] முயன்ற செயன் முறிவு குற்றம் வெளிப்படல், இடையூறு விபத்து என்னும் இவைமுதலியவற்றால் விளைவது துன்பம் ஆம். இது சூழ்ச்சி தேடல் மனக்கலக்கம் மகமலர்ச்சி முதலிய அநுபாவங்களின் வேறுபாட்டினால் தலையிடைகடையென்னும் முறைபற்றி முத்திறத்தாம் எனக் கூறுவர்.

[74] இவ்வெடுத்துக்காட்டு உத்தமரைப் பற்றி நிற்கும் துன்பத்தைப் பற்றியதாம். மனம், அலிப்பாலென வழங்கப்படுவதாகலின் அஃது ஆடவரைக் கூடற்கு விரும்பாதெனக்கருதி, தலைவன்பாற் போக்கினேன் என்பது கருத்து. இங்கண், தோழீ! செயக்கடவதென்னே எனக் கூறுமாற்றான் சூழ்ச்சியைத் தேடற்குரிய சொற்றொடகத்தாற் புலனாகும் ஆராய்ச்சியால் துன்பம் குறிப்பிற் புலப்படுத்தவாறு. இதன் சூழ்ச்சி தேடல் அநுபாவம் ஆம்.

[75] விருப்பிற்குரிய பொருளின் பிரிவானும் வனப்புமிக்க பொருளைக்காணும் விருப்பத்தானும் பேரவா நிகழுமென்பதாம். மனத்தாபம் நெட்டுயிர்ப்பு உறக்கம் முதலியன அநுபாவங்களாம்.

[76] இங்கண் “வருந்தியே பொறுக்கினர்” என்றதனால் உணர்த்தப்படும் மனத்தின் ஒருவழிப்படாமை உடற்பசலை புணர்ப்பு விருப்பம் என்னும் அநுபாவங்களால் காதலனைக் காணும் விருப்பத்தைப் பற்றிய பேரவா குறிப்பிற் புலப்படுத்தவாறு.

[77] மனம் அடங்கி நிற்றலாவது புறப்பொறிகளோடியைபின்றி நிற்றல்; நினைவு நினைவின்மை உடற்பயிற்சி முதலியவற்றான் விளைந்து, கொட்டாவி கண்மூடல் முதலியவற்றான் விளக்கமுற்று மனம் அடங்கி நிற்றல், உறக்கம் என்பதாம்.

[78] கனவிற் கண்ட காதலன் என்றதனால் காதலனைப் பற்றிய இடையறா நினைவாலுண்டாகிய உறக்கம் என்பது கருத்து. “அன்பிற்குரிய பொருளை நினைந்தே உறங்கும் ஒருவற்கு அந்நினைவின் பெருக்கமே அப்பொருளின் வடிவாகப் பரிணமிக்கின்றதென்ப”, பெரியாரும்.

[79] அபசுமாரம் — தூய்மையின்மை தாதுக்களின் மாறுபாடு பேய்ப்பற்று முதலியவற்றால் உண்டாவதும் தரையில் வீழ்தல் அலைதல் தோளடித்தல் மாறுபடக்கூறல் சாற்றுவாய்நீர் நுரையிவற்றால் வெளிப்படுவதுமாகிய வெறி; இது உணர்ச்சியை முற்றிலும் கெடுப்பதாம்.

[80] பகைவர்க்கு அச்சங்காரணமாக உண்டாகிய உணர்ச்சியின்மையாகும் அபசுமாரம், எளிமை விரைந்தோடல் முதலியவற்றாற் புலனாகின்றது.

[81] மூச்சுவிடல் மூச்சுவாங்கல் அசைவின்மை கண்மூடல் முதலியன உறக்கத்தை வெளிப்படுத்தும் அநுபாவங்களாம்.

[82] காவற்சுமையைக் காகதிவேந்தன் ஏற்றுக்கொண்டமையான் மாதவன் உறக்கமெய்தினான் என்பதாம். கிளர்ந்தெழுந்த பாற்கடலும் உறக்கத்தைக் கெடுக்கவில்லையென்றதனால் மிகுதூக்கம் புலப்படுத்தவாறு.

[83] ஊறு ஓசை யிவற்றான் விளைவது; புயத்தை உயர்த்தல் விரல்களை ஒலிப்படுத்தல் கொட்டாவி கண்ணைக்கசக்குதல் முதலியவற்றான்  விளக்கமுறுவதாம்.

[84] செல்வ வளங்கள் சிறந்து விளங்குகின்றன என்னும் பொருளில் அச்செல்வங்கட்கு விழிப்புறுந் தன்மையை யேறிட்டுக் கூறியிருத்தலான் இது விழிப்பு ஆம்.

[85] குற்றமுடையாரைப் புறக்கணித்தல் பழித்துரைத்தல் முதலியவற்றால் நிகழும் மனக்கொதிப்பு சினம்; அது வியர்த்தல் சிரமசைத்தல் சூழ்ச்சி தேடல் உற்சாகம் அதட்டல் முதலியவற்றான் வெளிப்பட்டு விளங்குவதாம்.

[86] நாணம் அச்சம் முதலியவற்றான் உண்டாவது இதற்கு முறுவலின்மை மாறுபடக்கூறல் பொய்த்தைரியம் பேசாதொழிதல் முதலிய அநுபாவங்கள் உய்த்துணரற்பாலன.

[87] இங்ஙனஞ் செய்தல் தன் முகவிகாரம் வெளிப்படாமைப் பொருட்டென்க.

[88] அதட்டல் அச்சுறுத்தல் அடித்தல் பிணித்தல் முதலியன அநுபாவங்களாம்.

[89] இச்சுலோகத்தினால், தலைவியைத் துன்புறுத்திய மதியம் குற்றமுடையதாக, அம்மதியமிழைத்த குற்றத்தைப் பொறாத இவள் கடைக்கண்களாகுங் கொள்ளிகளால் மதியத்தை மாசுபடுத்தற்கு முயன்றாளாகலின், இது கொடுமையென்பது புலனாம்.

[90] நூலாராய்ச்சி ஊகம் ஐயந்தீர்த்தல் முதலியவற்றான் உண்மைப் பொருளைத் துணிதல் என்பதாம்.

[91] மதிக்கதிரின் இயைபால் சந்திரகாந்தமணி நீரைப் பெருக்குதல்போல, வீரருத்திரன் கரத்தின் இயைபானும் உறுப்புகள் நீரைப்பெருக்குவனவாகலின் இவன் மதியமெனத் துணியப்பட்டான். கரம் — ஈண்டுக்கதிர்களையும் கையினையும் உணர்த்தும்.

[92]அச்சம் சன்னிபாதநோய் கணவற்பிரிதல் பொருளழிவு முதலியவற்றான் உண்டாகும் மனமயக்கம் பித்தநோய்ஆம்; இதற்கு, சிரிப்பு இயபில்வார்த்தை ஓடுதல் அமர்தல் எழுதல் அழுதல் என்னுமிவற்றை நிமித்தமின்றிச் செய்வது அநுபாவம் ஆம்.

[93] மறுமொழியிறுத்தற்கியலா மரங்களை வினாதலான் இவ்வஃறிணைப் பொருளிடத்து அப்பொருளியல்பு கருதப்படாமையான் பித்தநோய் ஆம்.

[94] நோய் அடி இவற்றான் உடலினின்றும் மனத்தின் நீக்கம் இறப்பு ஆம். விக்கல் நெட்டுயிர்ப்பு முதலிய அநுபாவங்களாம். இறப்பை அவ்வண்ணமே எடுத்துக்காட்டல் அமங்கலமாகலின்

[95] இவ்விருசெயல்களும் பிரிவாற்றாமையான் இறத்தற்குரிய முயற்சிகளாம்.

[96] ஐயம் உவலக்கணமாக ஆராய்ச்சியானும் ஊகம் விளையும் என்பதாம். புருவ நெறித்தல் தலையசைத்தல் முதலியன ஊகத்திற்கு அநுபாவங்களாம்.

[97] மனம் காமவயத்தாதலின் காதலன் கிடைத்தற்கரியன் என்பதை நினைந்திலது என்பது கருத்து.

[98] உம்மை — பாங்கியர், அகப்பொருட்டுறையிற் கூறிய மதி நுட்பம் வாய்ந்தவர் என்பதையுணர்த்தும்.

[99] காதலனையடைதற்குரிய வுபாயத்தைத் தேடுதற்கு மனத்தெளிவு இன்றியமையாதது. அஃதின்றிக் கலக்கமெய்தலின், உபாயத்தைத் தேடுதல் அமையாதென்பது கருத்து. இங்கண் ஐயத்தாற் பல கற்பனைகள் நிகழ்ந்தமையால் இஃது ஊகம் ஆம்.

[100] தகுதியுடைமை, வாலைப்பருவ முடிவும் யௌவனத் தொடக்கமும் பொருந்திய நிலையை யெய்தல் அந்நிலையில் அந்தக் கரணம் சிறிதளவு விகாரப்படுதல் பாவம் ஆம். பாவம் — மனக்குறிப்பு என்பாரும் உளர்.

[101] சிறிது புளகம் — காண்டற்கரிய புளகத்தையுணர்த்தும்; இதனால் அந்தக்கரண வேறுபாட்டின் றொடக்கமென்பது புலனாம்.

[102] சிறிது — இச்சொல் ஈண்டு உரிய பொருளையுடையதாய், சிறிது காண்டற்குரிய புளகத்தை யுடைமையை யுணர்த்தும். இதனால் புளகம் காண்டற்கரிய நிலை பாவம் என்பதூஉம் அது காண்டற்குரிய நிலை ஆவம் என்பதூஉம் புலனாம்.

[103] இயல்பாகவே: — முயற்சியில்லாமலே யென்பதாம்; இதனால் இயல் வனப்புடையார்க்கு அலங்காரம் விரும்பற்பாலதின்றாகலின் இது மாதுரியம் என்பது கருத்து.

[104] இலக்குமி — பிரதாபருத்திரன் மனைவியருள் ஒருத்தியின் பெயர்; இது, அரசியற்றிருவையும் உணர்த்தும்; அத்திருமகளும், கொடை முதலிய செயலில் மிக்க ஒருப்பாடுடையளாய்ச் சலனமின்றி யரசன்பால் நிலைப்பெய்தினள் என்பது குறிப்பிற் புலப்படுத்தவாறு.

[105] இதன் குறிப்பு, தலைவனியல் 59ஆம் சுலோகத்தில் காண்க.

[106] பொதுவணிகன் — என்பது, அலங்கல் சந்தனம் தாம்பூலம் என்னும் இவற்றையுணர்த்தும்.

[107] இதனால், காதலன் வயத்த மனத்தினளாதலின் பகற்பொழுது சென்றதையும் அறிந்திலள் என்பது கருத்து.

[108] காதற்குறிப்பு வெளிப்படல், பாவப்பிரகாசத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

“தலைவனுடைய குணங்களைக் கணக்கிடல், விரு

பிற்கேற்பக்காதன்மிக்குக் கடைக்கணித்தல்,

மெய்ம்மயிர்பொடித்தல், குளறுபடப்பேசுதல்,

கதுப்பு வியர்த்தல், பாங்கியர்பால் காத

லுண்மையையுரைத்தல், அப்பாங்கியர்

முகமாக அத்தலைவனைக் கூடுஞ் சூழ்ச்

சியைத் தேடுதல் என்னுமிவை, தலைவ

னுடைய குணங்களைப் புகழ்ந்து கூறுங்

கால் விளையுங் காதற் குறிப்புகளாம்”.

இச்சுலோகத்தில் ஈற்றில் உள்ள ஓகாரம் காகுப்பொருளதாய் அக்குறிப்பு வெளியீட்டின் உறுதிப்பாட்டையுணர்த்தும்.

 

[109] துன்பம் — ஈண்டுக்காதலன், கலவியிற் குழலைப் பற்றுதலும் இதழைக்கடித்தலும் ஆகிய இவை முதலியவற்றால் உண்டாகும் மெய்வருத்தம்; வெளிப்படையான சினத்திற்கு நிமித்தமாமிஃது உள்வழியும் நிகழும் உள்ள நிறைந்த மகிழ்ச்சியே குட்டமிதம் ஆம்.

[110] இச்சுலோகம், இரவிற்காதலனோடு கூடியின்பந் திளைத்த தலைவி, காலையிற் பாங்கியர் முன்னிலையில் அவள் நாணிய நிலையைக் கூறுவது:— தலைவியின் இதழ் குழல் முதலியன புணர்ச்சிக்குறிப்பை வெளிப்படுத்துகின்றனவாகலின் “உண்மைச் செய்தியைப் புலப்படுத்துமுறுப்புகள்” என்று கூறினான் என்க. காமத்தான் விளைந்த ஆய்வில் செயல் எவ்வாற்றானுந் தடைப்படாத கலவிக்கு நிமித்தம் ஆம். கீறியவண்ணமாய் என்னும் நிகழ்காலத்தால் அச்செயற்கு நிமித்தமாகிய நாணத்தின் ஒழிவின்மையைப் புலப்படுத்தும். முன்னர்க் காணப்படாத கலவிக்குறிகளைக் காண்டலான் வியப்பெய்திய பாங்கியரைப் பார்த்த அப்பொழுது தலைவிக்குண்டாகிய நாணமிகையானும், முன்னர்த்துய்த்திராத இதழ்க்கடி முதலியவற்றான் விளைந்த துன்பத்தானும் மனமொன்றிய இன்பமிகையைப்புலப்படுத்தலான் இது குட்டமிதம் என்பதாம்.

[111] இனியவை — இது செருக்கு முதலியவற்றாற் காதலனைப் புறக்கணித்தற்கும் உவலக்கணம் ஆம்.

[112] இச்சுலோகம் — “அடி தலைவி! நீ யினியும் துனிமிக்களாயின், திருமகள் முதலிய தலைவிமார் பலதிறப்பட்ட வாடல்களாற் காதலியாம் நிலையினை யெய்துவர்; எய்தவே, மீண்டும் உனக்கு அந்நிலை கிடைத்தலரிது; காதனோ இயவையே கூறுகின்றான்” என்றிங்ஙனம் தலைவன் அநுப்பிய தூதி கூறுங்காற் றலைவி, செருக்காற் பிணிப்புண்ட மனத்தினளாய் இறத்தற்குந்துணிந்து காதலன் கூறிய இன்சொற்களையும் புறக்கணித்துக் கூறிய கூற்று. இதனால் இது விப்போகம் என்பதாம்.

[113] இங்கண், உருத்திரவேந்தர் தம்மனைவியரின் மணிச்சிலம்பு முதலியவற்றின் ஒலியால் கரசரணங்களின் அமைப்பையும், சொற்களுக்குப் புன்முறுவலினியைபால் இனிமையையும் கூறி உறுப்புக்களின் மென்செயலைப் புலப்படுத்தியமையான் இஃது இலலிதம் என்பதாம்.

[114] தலைவியின் பின்புறமாக மெல்லன நடந்து வருதலால் அவ்வரவை அவளறியவில்லையென்பதாம்.

[115] அமர்ந்த நிலையிலுள்ளார், நின்ற நிலையிலுள்ளாரை நிமிர்ந்து பார்த்தலியல்பு என்பது கருத்து.

[116] விலாசம் — இதன் இலக்கணமும் எடுத்துக்காட்டும். கா0, காக — இவ்விலக்கச்சுலோகத்திற் காண்க.

[117] தேற்றம் — சென்று மீண்டும் திரும்பி வருதலால் தலைவிபால் அச்சத்தானிகழும் விலாசங்களைக் கண்டு உவகை யெய்தலில் அரசனது அவாமிகையையுணர்த்தும். இதனாற் காதற்பெருவிழா யாவும் இச்சகிதத்திற்கு இறையேனும் ஒப்பாகாவென்பது கருத்து.

[118] இது, பாங்கியின் கூற்று; இக்கூற்று, தலைவியின் விருப்பிற்குரியதாயினும், சினந்தென்ன அப்பாங்கியைப் பார்க்கின்றாளன்றி அத்தலைவி நாணத்தால் எதுவுங் கூறவில்லையென்பது கருத்து. தொய்யில் — உடலிலிடும் சாந்துக்கோலம்.

[119] இதனால் இது நகைச்சுவைபோல வேடம் பாடை முதலியவற்றின் விகாரங்களால் விளையாதது என்பது கருத்து; அதனால் காரணமின்றி விளையும் நகையென்று கூறினான் என்க;

[120] காதலிக்கு யௌவனத்தான் விளைந்த அசிதம், காதலற்குக் காமத்தை ஊக்கிவிட, அதனால் அக்காமம் பெருமிதமெய்துகின்றதென்பது கருத்து.

[121] அரசர்பாற் பெருவிழாவாந்தன்மையை யேறிட்டுக்கூறலான், அவ்வரசரது காட்சியில் மிக்க ஆதரம் புலனாகின்றது.

[122] அணிமைக்கணுள்ள மனத்தானும் விடப்பட்டவள் என்னில் சேய்மைக்கணுள்ள பாங்கியரைப்பற்றிக் கூறவேண்டா என்பதாம்; இதனால் இத்தலைவி, காதலன்பாற் சிறந்த மனப்பற்றுடையளென்பதும் பாங்கியரது பழிப்புரைக்குரியளல்லள் என்பதும் புலனாம்.

[123] புன்முறுவலியைந்த பார்வைகள், கலவியிலவாமிகையைப் புலப்படுத்துவனவாம். நேயம் — புலன்களில் என்னுடையவென்னும் உரிமைபற்றி நிகழும் மனநெகிழ்ச்சி; அஃது, அச்சம், ஐயம் இவற்றின் முடிந்த வடிவாய்க் காணப்படுவது. இந்நேயத்தின் முதிர்ந்தநிலை காதல் என்பதாம்; இந்நேய முதிர்ச்சியால் நேரும் பல துன்பங்களும் மனத்தின்கண் இன்பமயமாகவே நுகரப்படுகின்றன. இதனாற் காதல், யாவற்றினுஞ் சிறந்ததென்பதும் அக்காதல் பற்றிச் சங்கற்பம் நிகழுமென்பதும் புலனாம்.

[124] “சுபகன் — மிகுவிளக்கம் பெருஞ்செல்வம் நன்றியறிதல் வனப்புடைமை இளமை மானம் நல்லொழுக்கம் சாதுரியம் நற்குடிப்பிறப்பு பகலறுக்கம் இன்சொற்கூறல் மகளிரண்முதற்குரிய நிலைமை யென்னுமிவை பொருந்தியுள்ளவன் சுபகன்” எனப் பாவப்பிரகாசம் கூறும்.

[125] பகற்பொழுதைக் கடத்தியமை காதலன் வருகையை எதிர்பார்த்தன் முதலியவற்றானாம். உறக்கமும் நிருபனும் வரவில்லையென்பது, உறக்கம் வந்துழி காதன்றேற்றமும் கலவிநுகர்ச்சியும் கனவிற் றோன்றும்; அக்கனவுப்புணர்ச்சியையும் இவ்விழிப்பு, தடைப்படுத்துகின்றதென்று இதனையிழித்துக் கூறியவாறாம்.

[126] இச்சுலோகம், பாங்கி தலவியென்னுமிருவருடைய வினாவிடை வடிவினதாகும். சியாமாங்கி நன்னிலையள் மலைமுலையள் என்னும் மூன்று அடைமொழிகளும் தலைவிக்கும் நிலமகளுக்கும் பொருந்துவனவாம். சியாமாங்கி — யௌவனப்பருவத்தால் விளக்கமுறுமுறுப்புகளை யுடையளையும் கரியமேனியுடையாளையும் உணர்த்தும்; நிலமகள் கரியமேனியுடையவள் என்பது நூன்மரபு. நன்னிலையள் — கணவனிற் பிரியாத நிலையையுடையவளையும், நிலையென்னும் பெயரையுடைய நிலமகளையும் உணர்த்தும். மலைமுலையள் — இச்சொல் மலலைபோலும் முலை, மலையாகும் முலையென உவமத்தொகையும் பண்புத்தொகையும் ஆகி இருபேரையும் உணர்த்தும்.

[127] பிறவழி — காதலனையன்றிப் பிறவழியென்பதாம்.

[128] சுபகன் என்பான் ஒருவகைத் தலைவன்; அவன், மாற்றவளுடைய உகிர் பல் முதலியவற்றின் அடையாளங்கள் இல்லானாய், தலைவிக்கு உண்டாகுஞ் செருக்கையும் பொறாமையையும் மறக்கச் செய்யும் இயல்பினன் ஆவன்; ஆதலால் இத்தலைவன்பால் வெறுப்பிற்குரிய குறியின்மையால் இவன் தலைவியின் காதற்கிழமைக்கு நிலைக்களன் என்பது போதரும்.

[129] குலமகளிர், கலவியிலன்றிப் பிறகாலங்களில் நாணுறல் வேண்டுமென்பது அம்மகளிர்க்குரிய வரையறையாம். அத்தகைய சொற்கள், “ஏன் காலந்தாழ்த்தல் வேண்டும்? முத்தமிடல் முதலிய செயல் இது போழ்தே செய்தல் வேண்டும்”, என்னுமிவை முதலியனவாம்.

[130] இவ்விரண்டு அவத்தைகளும் வியபிசாரிபாவங்களை விளக்கிக் கூறுமிடத்து விளக்கப்பட்டுள்ளன. ஸ்தாயிபாவத்திற்குத் துணையாக நிற்குங் காரணம் பற்றிக் குறிப்பாகுந்தன்மையும், சுவை நுகர்ச்சிக்கு நிமித்தமாகுங் காரணம் பற்றி அவத்தையாம் தன்மையும் இவற்றிற்கு உண்டென்பது உணரற்பாற்று.

[131] இங்கட்கூறியுள்ள மயக்கம் வியபிசாரிபாவத்துட் கூறிய மயக்கத்தையொத்திருத்தலின், உன்மாதம் முதலியவற்றிற்குப் போல எடுத்துக்காட்டுக் கூறாது முன்னர்க் கூறியதையே கொள்ளலாமாயினும் தனிப்படக் கூறியதால் இம்மயக்கம், அதனிற் சிறந்ததென்பது போதரும்.

[132] நிறுத்தமுறையானே சுவைகளை யவற்றின்பிரிவுகளுடன் இலக்கணங் கூறியெடுத்துக் காட்டி விளக்குகின்றார்.

[133] இச்சுலோகத்தில் — மனக்கினிய காதலன் என்றதனால் ஆலம்பன விபாவமும் தனிமையில் என்றதனால் உணர்த்தப்படும் உத்தீபனவிபாவமும் துனி நீக்கத்தானிகழும் மகிழ்ச்சி முதலிய குறிப்புகளும் புகலாமற் போதரும் கண்ணீரரும்பன் முதலிய விறல்களும் ஆகிய இவைகளால் நிறைவெய்திய இரதியென்னும் ஸ்தாயிபாவம் உவகைச்சுவை ஆம்.

[134] புணர்ச்சிக்காலத்தில் மகளிர்க்கு நாணமின்மை யணிகலனாகலின் நாணப்பெருமிதமும் நலிந்தது என்றான்; உம்மை மகளிர்க்கு நாணம் இயல்பு என்பதையுணர்த்தும்.

[135] இதனால் இவ்வின்பத்திற் கிணை பிறிதொன்றில்லை யென்பது போதரும்.

[136] தலைவன் றலைவி ஒருவர்க்கொருவர் முன்னர்ப் பொதுவகையிலுரையாடி மனத்தியைபு நிகழ்ந்த பின்னர் காதலியைபு பற்றிய இன்புரை நிகழ்த்தலும் பின்னர் அந்நிகழ்ச்சி காரணமாக விளைந்த அன்பின் மேலீட்டினால் ஒருபாயலெய்தி இன்புறலும் இயல்பாகலின் இங்ஙனம் அம்முறைபற்றிக் கூறினான் என்பது கருத்து. இங்கட் கூறிய ஒரோவொன்றும் கிடைத்தற்கரியதென்பான் விருப்பிற் கெட்டாதன என்றான்.

[137] அன்பென்பது ஈண்டுத் தலைவன் றலைவி யிவர்களில் ஒருவர்க்கொருவர் ஆழ்ந்தெழுந்த கருத்தின் பிணிப்பாம். அன்பு தொடங்கி காதலீறாகவுள்ள பின்வருவன, இரதியின் நிலைவேறுபாடுகளேயாம் என்று இரசாருணவம் கூறும். “அன்பு சினம் நேயம் பற்று ஆசை காதல் என்னுமிவை, முறையே முளை தளிர் முகை மலர் கனி துய்ப்புறல் என்பனவாம்”.

[138] பற்றுண்மையைக் காட்சி கேள்வி அனுமானம் என்னுமிவற்றான் றலைவி யறிந்தாள் என்பதாம். அங்ஙனமே தசரூபகமும் கூறும்.

“காதலன் வேற்றிடத்து பற்றுடையனாயவழி

தலைவி, யதனைக் கேட்டும் அனுமானித்

தும் பார்த்தும் பொறாமையான் அவளுக்கு

விளையுஞ் சினம் மானம் எனப்படும்.”

என்று. இதனால் பொறாமையால் விளையும் விப்பிரலம்பச்சுவை தலைவிக்கேயன்றித் தலைவற்கு இல்லை என்பது போதரும்.

[139] காகதிவேந்தனுடைய  கண் நா வாகு இவற்றில் விளங்கி நிற்கும் திருமகள் கலைமகள் நிலமகள் என்னுமிவர்கள் முறையே பார்த்தல் பேசுதல் விளையாட்டாகப் பற்றியிழுத்தல் என்னுமிவற்றை ஊறுபடுத்துகின்றனர். இவ்வேந்தனோ அத்தகைய வஞ்சகன் அல்லன்; அவன்பாற் சினமுறல் தக்கதன்றென்பதாம்.

[140] யாதாமொரு காரணத்தால் எனக்கூறியமையான், தலைவற்குப் பிற தலைவியின்பாற் பற்றில்வழி இப்பிரிவு நிகழ்ந்ததென்பது கருத்து. இதனால், தலைவன் றலைவியர்க்குக் காரணமின்றி நிகழும் பிரிவு விப்பிரலம்பம் என்பதாம்.

[141] மாறுபட அணிதல் — வளையலை யணிதற்குரிய முன் கைகளில் மோதிரத்தை யணிந்து கோடல்; மீண்டும் மிக்க இளைப்பால் அம்மோதிரம் அவ்விடத்தும் நிலைத்திராது நழுவுறுமென்பாள் சிறுபொழுது விளக்கமுறுவனவாம் என்றாள். இவ்வெடுத்துக்காட்டு தலைவனிற் பிரிந்த தலைவியைப்பற்றியது. இவ்வாறே தலைவியிற் பிரிந்த தலைவற்கும் உய்த்துணரற்பாலது.

[142] நன்னாட்கள் — வறியரானும் கடமையாகக்கொண்டு கொண்டாடுதற்குரிய பண்டிகைப் பெருநாள் என்பதாம்; அந்நன்னாட்களில் திரீபுருடர் பிரியாது சேர்ந்திருத்தல் இல்லற நெறியாம். இராப்பொழுது தாங்கற்கியலாதென்பான் பகற்பொழுதும் யுகப்பொழுதாகின்றது என்றார்.

[143] பறவைகள், அஃறிணையவாகலின் அவற்றின் இன்பச்சுவை, கலைத்திறன் இன்மைபற்றி விபாவம் முதலியவற்றின் நிறைவின்றி யமையப்பெறுவதால் இது போலிச் சுவையென்று அறியற்பாலது. ஒருசாரார், இது சுவையே; போலியன்றென்ப. அங்ஙனமே வித்தியாதரரும் கூறியுள்ளார்.

“விபாவம் முதலியவற்றின் நிகழ்ச்சியே சுவை நிகழ்ச்

சிக்கு நிமித்தம்; அவற்றின் அறிவு, நிமித்தம் இன்று

ஆதலால் அஃறிணை வகுப்பிற்கும் சுவையுண்டாதல்

இயல்பேயாம்”

என்று பிறபோலிச்சுவைகளின் எடுத்துக்காட்டைப் பிறாண்டுக்காண்க.

[144] மனோபவன் — மனத்தின்கட் பிறந்தவன்; எதிருருவென்பது அக்காமதேவனுடையதாய் அக்காமனை யொத்த உருத்திரவேந்தனையுணர்த்தும் பாங்கியை ஏமாற்றுவதற்கு இங்ஙனம் கூறினள் என்பதாம்.

[145] புருவ நெறித்தல் வெதும்பல் முதலிய சினக்குறிப்பின் அநுபாவங்கள், ஒழிவெய்தின என்பதாம். இதனால் சினம் அடங்கிற்றென்பது கருத்து.

[146] இன்சொற்கள் — காதல் நிறைந்து அமயத்திற்கேற்ப அடுத்தடுத்துக் கூறுஞ் சொற்களை. இங்கண் ஒன்றுக்கொன்று மறுதலையாகிய பெருமிதம் உவகை யென்னுமிவற்றைப் பற்றிய மகிழ்ச்சிகளுக்கு ஒன்றையொன்று மீறிய நிலையில் இயைபைக் கூறியிருத்தலான் குறிப்பியைபே நுகர்ச்சிக்கு நிலைக்களன் என்பதாம்.

[147] இச்சுலோகத்தில் எட்டு வாக்கியங்கள் உள்ளன. ஒரோவொருவாக்கியமும் ஒரோவொரு குறிப்பைப் புலப்படுத்துகின்றது. அது பின்வருமாறு காண்க.

  1. குலமகளிர் இதுபொழுது பழித்துரைக்க. இதுபொழுதே, தலைவனைச் சென்று கூடுதற்குரிய தருணம் என்பதாம். இதனால் சென்று கூடலாகுஞ் செயலைப் பற்றியும் மகளிர் பழித்துரைத்தலாகுங் காரணம் பற்றியும் விளையும் நாணத்தைப் புலப்படுத்தவாறு.
  2. காதலனையெளிதிலடைதற்கு எத்தகைய நல்லூழ் நிமித்தமாகுமென ஆராய்ச்சியைக் கூறலான் இங்கண் அவ்வாராய்ச்சியைப் பற்றிய ஊகம் என்னுங் குறிப்பு புலப்படுத்தவாது.
  • யான், தலைவனைச் சென்று கூடுதலை என் இருமுதுகுரவர், என்ன காரணம் பற்றியோ ஒருபட்டிலர், என இரக்கந்தோன்றக் கூறியிருத்தலான் இங்கண் எளிமை புலப்படுத்தவாறு.
  1. காதலனையழைத்து வருதற்கு எந்தத் தோழியை யனுப்புவேன் என்பதாம். அச்செயற்குரிய துணையைத் தேடுதலாகும் அநுபாவத்தாற் றொடங்கிய செயலை மேற்கோடன் மூலமாகிய துன்பம் இங்கட் புலப்படுத்தவாறு.
  2. தனாது ஒழுக்கமில் செயல் வெளிப்படுமோ என்பதாம். இஃது, அவ்வெளியீட்டின் மூலமாய்த் தனக்குக் கேடு விளையுமோவெனக் கருதும் ஐயப்பாடென்னும் குறிப்பு ஆம்.
  3. என் காதலனது மடியில் என்பதாம். இங்கட் காலத்தாழ்வினைப் பொறாமையாகும் பேரவா என்னுங் குறிப்பு புலப்படுத்தவாறு.
  • எப்பொழுது மனம் உறுதிப்பாடெய்தும். இங்ஙண் அவா வொழிவான் உண்டாகும் தைரியம் குறிக்கப்படுகின்றது.
  • காதலரே அடையற்பாலார். இதனால், தான் செயக்கடவ செயலுண்மையை உறுதி செய்து கோடலாகுந் துணிபு புலப்படுத்தவாறு.

நாணம் முதலிய குறிப்புகளெட்டனையும் ஒன்றையொன்று தடைப்படுத்து முகமாக இங்கட் புகுத்திக் கூறியிருத்தலாற் குறிப்புக் கலவையாம்.

இங்கண், நாணம் ஊகத்தானும் எளிமை துன்பத்தானும், ஐயம் அவாவினாலும் தைரியம் துணிபானும் தடைப்படுகின்றன, என்றிங்ஙனம் பாத்திய பாதகத்தன்மையான் இவ்விரண்டாகிய குறிப்புக்கலவை, துணிபையே சிறப்பாகக் கொண்டு சீரிய நுகர்ச்சிக்கிடனாகின்றது என்பது கருத்து.

[148] இங்கட் கூறிய குறிப்புகளுள், பேரவாவை முதற்கட் கூறாவிடினும் பேரவா முதலிய, என அதனைச் சிறப்பித்துக் கூறலெற்றிற்கோ? வெனின்; பிறவற்றிற்கும் இஃதுயிர் நிலையாமென்பதை வலியுறுத்தற் பொருட்டென்க. இங்கண் நாணம் முதலியன சென்று கூடற் மறுதலையாகலின் அவை பாதிக்கப்படுவனவாம்; ஊகம் முதலியன அங்ஙனமாகாமையின் அவை பாதிப்பனவாமென்பது கொள்ளற்பாற்று. “சேறளைந்து கழுவலினும் அதற்ககல நடத்தல் நலம்” என்னும் நியாயத்தினால், நாணம் முதலியவற்றைக் கூறி அவற்றைத் தடைப்படுத்தலினும், கூறாதொழிதலே நலமெனக் கூறுமாலெனில், அற்றன்று. உரிய சுவையை உறுதிப்படுத்தற்கு அதன் மறுதலைச் சுவைகளையும் உறுப்பாந் தன்மையிற் கூறுமாறென்ன, ஈண்டும் நாணம் முதலியவற்றைக் கூறல் சாலுமாகலின். அங்ஙனமே துவனியாசிரியருங் கூறுவர்.

 

“சிறப்புறுஞ் சுவையைக் கூற விரும்புங்கால்

அதன் மறுதலைச் சுவைகளை மறுக்கப்படுநிலை

யிலாதல், உறுப்பாந்தன்மையை யெய்து நிலை

யிலாதல் கூறுதல் மாறுபடா” என்று.

[149] இங்கட் கூறியுள் எடுத்துக்காட்டிரண்டிலும் அழுகையும் வெகுளியும் முடிந்து நின்று நுகர்ச்சியில் முதற்கண் நிகழ்தலான், அவற்றிற்குச் சிறப்புப் பற்றி உறுப்பியாந்தன்மையும் உவகையும் இளிவரலும் முறையே அவற்றையணிப்படுத்தலான் இவற்றிற்கு உறுப்பாந்தன்மையும் ஆம் என்று அறியற்பாலது.

அங்ஙனமே பாவப்பிரகாசத்திலுங் கூறியுள்ளார்.

“எல்லாச் சுவைகளும் காரியவயத்தால்

ஒன்றோடொன்று கலக்கின்றன; எந்

தச்சுவை, முதற்கட்சுவைக்கப்படுகின்ற

தோ, அது சிறப்புச்சுவையாம்” என்று.

உறுப்பாகிய சுவை நிறைவை யெய்துமோ? எய்தாதோ? எனில் முன்னதன்று; அணிப்படுத்தற்குரிய தன்மையால் உறுப்பாந்தன்மை கெடுமாகலின்; பின்னதன்று. சுவைத்தன்மை கெடுமாகலின். அதனாற் கலவையைக் கூறல் தக்கதன்றெனக் கூறுமாலெனில், அற்றன்று. ஒருசுவை நிறைவெய்தி யிருப்பினும், அஃது ஒரோவழி, பிறிதொரு சுவையை யணிப்படுத்தலான் அதற்கு உறுப்பாந்தன்மை யுண்டெனக் கொள்ளற்பால தாகலான்.

அங்ஙனமே அபிநவ குப்த ஆசிரியருங் கூறுவர்.:—

“தம்விபாவம் முதலிய கருவிகளோடு

தமக்குரிய நிலையில் நன்கமைந்த

பிறசுவைகளும் நிறைவெய்திய

வாய் இன்புறுத்து நிலையை (****)

யெய்துகின்றனவாம் எனினும், அந்

நிலை அவ்வளவின் முடிந்தொழி

வெய்தாது வேறுபடித்தானும்

இன்புறுத்தற்கு முயலுகின்றது” என்று.

உறுப்பு உறுப்பியாந்தன்மையில் யாண்டும் இம்முறையே கொள்ளற்பாலது.

[150] சுவை — இலௌகிகம் அலௌகிகம் என இருதிறத்து. அவற்றுண் முதற்சுவை, வாழை தேமா இவற்றின் கனிச்சுவை நுகர்ச்சியான் விளையுமின்பத்தை நிகர்த்ததாய் உலகிற் காரியப்படுவது ஆம்; இச்சுவை அவிநயித்தற்குரிய இராமன் முதலிய தலைவரையன்றி யேனையோரைப் பற்றாதென்பான் தலைவனைப் பற்றியதேயாம் என்றான்.

[151] இங்ஙனமாயின் அறிவிற் சிறந்த அவையினர், அவிநயக்காட்சியிலும் காப்பியக்கேள்வியிலும் அடி தொறு மவாவுறல், பித்தர் செயல் போல்வதாம் எனக் கடாவியாசங்கித்து இறையிறுக்குமுகமாக, கலைவல்லோனாகிய நடனது செயலானும் எனத் தொடங்கி முரண்டா என்னுமிறுவாகக் கூறினான். இதன் கருத்து வருமாறு:—

“நடன் சிற்பம் நால்வகைய விநயங்கள்

பாவம் முதலியவற்றின் வேறுபாடுகள் என்னுமிவற்றை

யறிந்தவனும், அவிநயத்திற்குரிய தலை

வரின் தாதான்மியத்தை யெய்துந் தறலு

டையனும் ஆவன்”

என்னுமிவ்விலக்கணம் பொருந்திய நடனுடைய அவிநயத்தான் அவையினர் மனம் சுவையிலீடுபடும் என்பது கருத்து. அத்தகைய — குணம் அணி யிவற்றாலினிய சுவை விளங்கிய சொற்பொருளின் இயைபுவடிவாகிய காப்பியத்தின் கேள்வியானும் அவர் மனம் அச்சுவையிலீடுபடும் என்பதுமாம். கண்கூடாய்த்துய்ப்பரேல் என்றது — தோன்றும் பொருள், தம்மைச் சார்ந்ததென்னு நிலையிற் றுய்ப்பராயின் என்பதாம். மகிழ்வுறு மகனை நோக்கிய வழி தந்தையுமின்புற்றாங்கு, அவையினர்க்கும் இன்பந்தோன்றுவதாம் என்பது கருத்து. அங்ஙனமே பாவப்பிரகாசத்திலும் கூறப்பட்டுள்ளது.

“மகிழ்ச்சியைக் கண்டவழி மகிழ்வினையும்

துன்பத்தைக் கண்டவழி துன்பத்தையும் அச்சத்

தைக் கண்டவழி அச்சத்தையுமெய்தும் ஒரு

வன் சிறந்த இரசிகன் ஆவன்” என்று.

இங்கட் கூறிய காட்சி, கேள்விக்கும் உவலக்கணம் ஆம்.

[152] அன்றியும் எனத் தொடங்கி அவையினரைப் பற்றி நிற்பதாமென்பதூஉம் முரண்படா என்னுமிறுவாகக் கூறிய தொடர், அலௌகிகச் சுவையின் நிலைக்களனை வலியுறுத்தும். அலௌகிகச்சுவை, பிரமானந்த்தத்தை நிகர்த்ததாய்க் காப்பியவாயிலாக, அறிஞர்பால் எஞ்ஞான்றும் நிலைத்திருப்பது. ஈண்டு, மாலதி இராவணன் முதலிய சொற்கள் நடன் முதலியோரின் கூற்றாகக் காப்பியத்திற் கூறிய சொற்களை; பெண்மாத்திரையில் உண்டாகும் உணர்ச்சியென்பது, மாலதி முதலிய சிறப்புணர்வின்றிப் பெண்பால் அளவில் நிகழ்வதாம். இங்ஙன் நிகழும் பொது அறிவில் நினைவெய்திய அவ்வப்பெண் விசேடமாகிய அனுகாரிய முகமாக என்றமையான் பொது அறிவு நிகழ்ந்துழிச் சிறப்பு நினைவு போதரல், அவ்விரண்டற்கும் உடனிகழுந் தன்மையுண்மையான்; என்பது உணரற்பாற்று. அங்ஙனமாயின், மாலதி முதலிய சொற்களைச் செவியுற்ற அவையினர் அவ்வச் சிறப்புப்பொருளை நீக்கித் தாங்கருதிய தலைவி முதலியோரை நினைவுறற்குச் சான்றென்னை? எனச் சங்கித்தல் தக்கதன்று; காப்பியம் முதலியவற்றில் சிறப்புப் பொருள் வேண்டற்பாலதின்றாமாகலின்; ஏனெனில், கவிஞர் பெருமக்கள் இராமன் முதலியோருடைய நிலைமகளை, வான்மீகி முதலிய முனிவரர் போல தியானக்கண்ணாற்கண்டு தனிப்பட்ட நிலையிற் கூறினாரில்லை; ஆனால் இராமன் முதலியோர்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு தன் அறிவு வன்மைக்கேற்ப, பொதுக்குணங்களே அவராற் கூறப்பட்டன. அங்ஙனமே பெரியாரும், “பொதுக்குணங்களைக் கூறலாற் சுவை உண்டாகின்றன” என்று கூறுவர். ஆனால் வான்மீகி முதலியோர், சிறப்புக் குணத்தை விலக்கி, பொதுக்குணத்தையேன் கூறவில்லை யெனவுங் கூறலடாது; சிறப்புக் குணத்தைக் கோடலானே கேட்போர்க்கின்பம் விளையுமாகலான். அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.

மண்ணாலியன்ற வேழத்துடன் வி

ளையாடும் இளைஞர் இன்புற்றாங்கு

கேட்போருஞ் சிறப்புறுங் குணத்

தாலின்புறுகின்றனர்” என்று.

அவ்வப்பெண் விசேடமாகிய என்பது தலைவனைக் கடைக்கணித்தல் முதலியவற்றிற்கும் உபலக்கணம் ஆம்; பெண்ணளவிற்சுவை, தோன்றாதாகலின். நினைவுக்கு விடயமாகிய பெண்டிரும் ஆடவரும் அமைக; அவர்களால் சுவைத்தோற்றம் யாங்ஙனம் உண்டாம்? அச்சுவைக்கும் அவையினர் நிலைக்களனாதல் யாங்ஙனம்? எனில் இஃது ஈண்டு நினைவுறற்பாலது. முதற்கண், இலௌகிகத் தலைவருடைய காதல் முதலியவற்றின் அநுமானத்தால் செம்மையுற்ற மனத்தினராகிய அவையினர் காப்பியம் முதலியவற்றின் சொற்பெருமையால் இராமன் முதலியோரை, பொதுவகையாகத் தம்மைச் சார்ந்தவர் என்னுந்தன்மைபற்றிப் பாவிக்கின்றனர்; பாவிக்கப்பட்ட அவர் அவையினரது மனத்தில் இருந்தாங்கு விளக்கமெய்துகின்றனர். ஆனால், ஆடவரும் பெண்டிரும், “சீதை இராமன் முதலியோரைத் தமக்கு காதலியும் கணவனும் ஆவர்” என்று கூறுதல் தக்கதன்று என்று கூறுமாலெனில், அற்றன்று. அவர் சனகன் தயரதன் இவர்க்கு மக்கள் என்னுஞ் சிறப்பினீக்கத்தால் அவர்கள் ஆண் பெண் மாத்திரையில் அனுவாதஞ் செய்பவரெனக் கூறியமையான். அவ்வாடவரும் பெண்டிரும், இலௌகிகரேயாவர்; அவர், காப்பியம் அவிநயம் இவற்றின் மூலமாக அவையினரால் விபாவம் முதலியவற்றை யுபகரணமாகக் கொண்டு பாவிக்கப்பட்டாராய் அவ்வவையினரின் அந்தக்கரணத்தில் மிக்க உறுதிப்பாட்டுடன் அசையா நிலையிலெதிருருக்கொண்டு அவர்பால் நிலைப் பெய்துகின்றனர். அவ்விபாவம் முதலிய யாவும், ஓவியத்துரக நியாயத்தான் மெய்யுணர்வு பொய்யுணர்வு ஐயவுணர்வு ஒப்புணர்வு என்னும் இவற்றின் வேறுபட்ட நுகர்ச்சி முதலிய இத்தகைய சொற்களுக்கு விடயமாகி வெளிப்படலான் அலௌகிகங்களேயாம். இலௌகிகமாகிய இரதி முதலியனவும் இங்ஙனமே அமைந்து சீரிய ஸ்தாயிபாவங்களாகின்றன. அவையினர் மனத்தில் எதிருருவெய்திய அலௌகிகத் தலைவரால் நிகழும் அலௌகிகச்சுவையும், அவ்வவையினர் மனத்தில் பிரதிவிம்பமெய்திய இரதி முதலிய ஸ்தாயிபாவங்களின் பரிணாமமாகலான் அலௌகிகச் சுவைக்கு அவையினரே நிலைக்களன் என்பது கருத்து. இவ்வலௌகிகச்சுவைக்குப் பிற பற்றுக்கோடும் உண்டெனக்கூறல் இயலாது; அஃதொன்றுமின்மையான்; அங்ஙனம் ஐயுறுவாரை, இங்ஙனம் வினாதல் வேண்டும். சுவைக்குப் பற்றுக்கோடு அநுகாரியனா? அநுகருத்தாவா? என்று. அநுகாரியனாயின், அவன் இறந்தகாலத்தவன் ஆதலின் பற்றுக்கோடாகான்; அநுகருத்தாவாயின், அவன் அவிநயத்தளவின் அமைதலாற் சுவைநிலைக்குத் தக்கவன் அல்லனேயாம்.

அநுகாரியன் — அவிநயப்பொருளாய்நிற்பவன். அநுகருத்தா — அவிநயஞ் செய்யும் நடன்.

[153] வழக்காறு — சுவைக்கலவையில் உறுப்பாகுஞ் சுவைக்குப் பயனெய்தற்குரிய நிலையின்மையான் சுவைத்தன்மையில் வழியும், அவ்வுறுப்புச் சுவையினையும், சுவையென்றே கவிவாணர் வழங்கியிருத்தல் ஆம்.

[154] குணம் அணி யென்னுமிவை விருத்தி இரீதி முதலியவற்றிற்கும் உவலக்கணம் ஆம். காப்பியம் அவிநயம் இவற்றில் முற்படும் அவையினர்க்குச் சுவை தோன்றுங்கால், முதலில் நடன்பால், இராமன் முதலினோரது உணர்ச்சி உறுதி படுகின்றது. பின்னர், அவையினரது மனம், அநுகாரியனது மனம் என்னுமிவ்விரண்டும், ஒன்றுபடுகின்றன. அதன்பின் அவையினரது மனம் ஆடல் பாடல் முதலிய கூத்தியலில் அழுந்துகின்றது; அதன்பின் பிறவுணர்ச்சி சிதைவுறுகின்றது; அப்பொழுது அலௌகிகச்சுவை, யோகிகளேயறியத்தகும் பிரமானந்தத்தை யொத்ததாய் தானே நுகர்ச்சிக்கிடனாகின்றது என்பான். “சுவைத்தன்மையை யெய்தற்குரிய நிலையில் தோன்றும் ஸ்தாயிபாவத்தினங்கள் வேற்றுப் பொருளைப் பற்றிய நினைவை முறையே விலக்கி”, யென்றான் என்க. இங்கட் போதரும் வேறுபாடு, இவ்வளவினதே; பிரமானந்தாநுபவத்தில், பிறவுணர்ச்சி சிறிதும் விளங்குவதன்று; சுவை நுகர்ச்சியிலோவெனில், விபாவம் முதலியவற்றின் உண்ர்ச்சியேயன்றி வேற்றுப்பொருளின் உணர்ச்சியின்றென்ப. விபாவம் முதலியவற்றின் உணர்ச்சியும் சுவைக்கண் உண்டெனில், ஈண்டு அகண்டாநந்த நுகர்ச்சி, யாங்ஙனம் பொருந்துமெனில், கூறுதும்.

“திராட்சை அதிமதுரம் பேரீச்சம்பழம்

கும்மட்டி காசத்தை யொழிக்கும் வாசகம்

என்னுமிவை சமனிடையாகக் கொண்டதும்,

கருப்பூரமணமூட்டப்பட்டதும், தூய்

மையுந் தட்பமும் வாய்க்கப்பெற்றதும்,

பஞ்சசாரம் எனப் பெயரியதுமாகிய பானகம்,

எரிவுநோய் நீர்வேட்கை என்னுமிவற்றைப்

போக்குவதாம்”

என்னுமித்தகைய பலசுவைக்கலவை வடிவாகிய பானக நியாயத்தால் ஈண்டும், விபாவம் முதலியவற்றின் கலவையால் நிகழும் இன்பமும் பிறித்தற்கியலாதாய் அகண்டமாம். ஆனந்தமூலமாகிய உவகைச் சுவை முதலியவற்றில் இன்பநுகர்ச்சி நிகழ்க; துன்பமூலமாகிய அவலச்சுவையில் அவ்வின்பநுகர்ச்சி யாங்ஙனம் கூடும்? என வாசிங்கித்து இந்நுகர்ச்சி வேறுபாடு, அநுகாரியனைப்பற்றியதேயன்றி, அவையினரைப்பற்றியதன்று என்பான், “தலைவன் றலைவியர்க்கு, இன்பத்தையாதல் துன்பத்தையாதல் உறுதிப்படுத்துவனவாமெனினும் அவையினர்பால் எல்லையில் இன்பவடிவாய்”, என்றான். ஈண்டுத் தலைவன் றலைவியர் என்றது அநுகாரியர்களை. இஃது இன்பவடிவாயின் அவலச்சுவை நிரம்பிய காப்பியத்தைச் செவிக்கொள்ளுங்கால் அவையினர்க்குக் கண்னீர் அரும்புதல் எது காரணம் பற்றியோ எனில், அது குற்றமன்று; கலவிக்காலத்தில் இதழ்க்கடியாற் பெண்டிர்க்குண்டாகுந் துன்பமும் பொய்யெனத் தோன்றியவர்க்கு இன்பமே விளைத்தூங்கு ஈண்டும் அறியற்பாலது; இன்பத்திலும் துன்பத்தையுபசரித்துக் கூறல் குட்டமிதம் என முன்னர்க் கூறியது ஈண்டு நினைவுறற்பாலது. காப்பியத்திற்கு, இயல்பான துன்பவடிவுடைமை யமையுமேல், அக்காப்பியத்தை யறிதற்கு ஒருவனும் ஒருப்படான். அதனால் அவலச்சிறப்புடைய இராமாயணம் முதலிய காப்பியங்களுக்குக் கேடு விளைந்திருக்கும். ஆதலான் அவலச்சுவையும் பிறசுவைகளை யொப்ப, இன்பந் தருவதொன்றாம். சுவை நுகர்ச்சியில் வேறுபாடு இன்மையால் அச்சுவையை ஒன்பது படித்தாகக் கூறுபடுத்தல் எற்றிற்கோ எனில்? உண்மையே; பிரமானந்தம் ஒன்றேயாயினும் மதிமணிப் படிகளொவ்வொன்றினும் எதிருருப்பட்ட மதிமண்டிலம் பலபடத் தோன்றியாங்கு அப்பிரமானந்தத்திற்கு உபாதி பேதத்தாற் பலதிறப்பட்ட தன்மையைக் கற்பித்தல் போலச் சுவை, உண்மையில் ஒன்றேயாயினும் அதனைத் தோற்றுவிக்கும் விபாவம் முதலியவற்றின் வேறுபாட்டினால் அது பலதிறப்பட்டதாம் என அறியற்பாலது.

[155] இத்தகைய சுவை காப்பியம் முதலியவற்றில் எக்காரணத்தால் தோன்றுகின்றது என்று ஆசங்கித்துக் கூறுகின்றார். “சுவை, வாக்கியப் பொருள்” என்று. கவிச்செயல் முடிவுறுங்கால் சுவையே சிறந்து நிற்பதாகலின் என்பது கருத்து. அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.

“கவியின் விருப்பம், எதற்குச் சிறப்பைக்

கற்பிக்கின்றதோ, அது வாக்கியப் பொருள்

என்று அறிஞர் துணிந்திருக்கின்றனர்”, என்று.

பதப்பொருளின் இயைபு வடிவாகிய வாக்கியப் பொருளுக்கு வாச்சியத்தன்மையும் இலட்சியத்தன்மையும் அமைவதையொப்ப இச்சுவைக்கு அவையமையா; இங்கண் அபிதாவிருத்திக்கும் இலக்கணாவிருத்திக்கும் இடன் இன்மையான். கருத்துப்பொருள் (****) குறிப்பினுள் (****) அடங்குமெனக் காப்பியவியலிற் கூறப்பட்டுள்ளது; அதனால் இங்கட் கூறிய வாக்கியப்பொருள் வியங்கியமென்றே யறியற்பாலது; சுவைக்கு வியஞ்சங்களாகிய விபாவம் முதலியன பதப்பொருள்களாம். இவற்றிற்கு அவ்வவ்வாக்கியங்களைப் பற்றி வாக்கியப் பொருட்டன்மை உள்ளது. அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.

“ஸ்தாயீபாவம், சாத்துவிகபாவம் வியபிசா

ரிபாவம் என்னுமிவை ஒரோவழி அவ்வவ்

வாக்கியங்களைப் பற்றி வாக்கியப்

பொருட்டன்மையை யெய்துகின்றன” என்று.

இங்ஙனங் கூறப்படினும் விபாவம் முதலியன, சுவையினுளடங்கித் தொழிற்படுதலால், அவற்றைக் குறித்து அவை பதப்பொருள் என வழங்கப்படுகின்றன; இதனால் சுவை, பதப்பொருள் நிலைய ஸ்தாயீபாவம் முதலியவற்றின் நிகழ்ச்சிக்குப் பின்னர் தோற்றமெய்தலான், அது வாக்கியப்பொருள் நிலையதாம்; என்பது துணியப்பட்டதாம்.

வியஞ்சனம் துவனி சருவணம் சமத்காரம் முதலிய சொற்களாற் கூறற்குரிய சுவையினைப்பற்றிய ஞானவிசேடத்திற்கு, காரகத்தன்மை ஞாபகத்தன்மை யென்னுமிவற்றின்வேறுபட்ட நிலையில் விபாவம் முதலியன உதவியாகின்றன வென்பான் உரிய ஓய்வினையெய்துகின்றன என்றான். அங்ஙனமே உலோசனத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“விபாவம் முதலியன, சுவையில் காரகங்களும்

ஞாபகங்களும் ஆகா; ஆனால் நுகர்ச்சிக்கு

அவை கருவியாம்” என்று.

அதனால் இச்சுவை, இலௌகிகம் ஆம் என்பது கருத்து.

ஸ்தாயிபாவங்களே முளைத்தல் தளர்த்தல் அரும்பல் என்னும் முறைபற்றி வளர்தருகின்றன என்பான் “முறையே வளரப்பெற்று” என்றான் என்க.

பின்னரே — விபாவம் முதலியன எதிர்ப்பட்ட பின்னர் என்பதாம்; இதனால் வியங்கியமாகிய சுவைக்கும் வியஞ்சகங்களாகிய விபாவம் முதலியவற்றிற்கும் நிகழ்ச்சியைப் பற்றிய முறைமையுண்டென்பதாம்; ஆனால் தாமரையின் இதழ் நூறில் ஊசிபாய்த்தென்ன அம்முறைமை காண்டற்கரியதென்பது புலப்படுத்தவாறு. நினைவுக்கு ஏதுவாகுமளவில் அமைந்து கிடந்த ஸ்தாயிபாவங்கள், விபாவம் முதலியவற்றின் வலியாற் சுவையாகப் பரிணமித்து சுவையென்னுஞ் சொல்லாற் கூறப்படுகின்றனவென்பான் “சுவைத்தன்மையை யெய்துகின்றன” என்றான் என்க. இதுபற்றி பஞ்சி நூல் படமாதலை யெடுத்துக்காட்டினான். அங்ஙனமே பெரியாருங் கூறியுள்ளார்.

“பஞ்சிநூல், வேமம் தறியிவற்றின்

செயலோடியைந்து படமாகப் பரிணமித்

துப்படமெனுஞ் சொற்குப் பொருளா த

லொப்ப, ஸ்தாயிபாவங்களும் விபா

வம் முதலியவற்றோடியைந்து அவை

சுவையாகப் பரிணமித்து சுவை

யென்னுஞ் சொற்குப் பொருளாகின்றன” என்று.

[156] சுவையினை வளர்க்கும் குறிப்புகளின் (****) நிலைமையைக் கூறுவான் போந்து, சுவையறிவு நிலைபடற்பொருட்டு முன்னர்க்கூறிய சுவை நிலையத்தையே மீண்டும் நினைவுறுத்துகின்றார்.

விளக்கமிக்க — விபாவம் அநுபாவம் சாத்துவிகம் என்னுமிவற்றான் இரதி முதலிய ஸ்தாயிபாவங்கள் வளமிக்கவாயின என்பது கருத்து. அவையினர்பாலும் — இவ்வலௌகிகச்சுவை அவையினரைப் பற்றியதேயன்றி அநுகாரியனைப்பற்றியதன்று என்று சார தா தாநயருங் கூறுப.

“காப்பியத்தின் செயலானும் அதன் அவிநயத்

தானும் சுவைத்தன்மையை அடைவிக்கப்

படும் ஸ்தாயிபாவம், நுகர்ச்சிக்குரிய

தாகின்றது; அச்சுவைக்கு நிலைக்களன்

அவையினரென்றே கூறப்படுகின்றது.

சுவை, நிகழ்காலத்தாதலானும், அநு

காரியராகிய இராமன் முதலியோர்

இறந்தகாலத்தவராதலானும் அவ்வ

நுகாரியருக்கு நிகழ்ச்சியின் றென்

பதாம்; கவிவாணர் கடந்த அநுகாரி

யரைப்பற்றிய இலௌகிகச்சுவை

யை உய்த்துணர்ந்து காப்பியத்தை

யாத்தனராதலின் அதன் வாயிலாக

நிகழுஞ்ச சுவை, அவையினரைப்பற்றி

நிற்பதாம்” என்று.

இது பற்றியன்றே யிந்நூலாசிரியரும், “சுவை உலகில் அநுகாரியர்பாலும் கூத்தில் அவையினர்பாலும் நிலைபெறுவதேயாம் எனத் தேற்றத்தாற் கூறினர் என்க.

அவையினர்க்குச் சுவை நிலைக்களனாந்தன்மை, ஏறிட்டுக் கூறப்பட்டதேயன்றிச் சிறப்பு வகையான் அன்று; என்பாருமுளர்; அங்ஙனமே நாகரிசூரியென்னும் பேராசிரியரும்,

சுவை, அவையினர்பால் நீக்கமின்றிப்பற்றிநிற்குந்தன்மையது எனக் கொண்டு அஃது லௌகிகம் என்று கூறப்பட்டது. உண்மையுணரப்புகின், நிறைவுற்றதும் எல்லையிலோரின்ப வடிவுற்றதும் ஈச்சுரபரியாயமும் ஆகிய சுவைக்கு, உரிய இடனைப் பற்றியவாராய்ச்சி நிகழ்வதியாங்ஙனம்? அங்ஙனமாயின் சச்சிதானந்த வடிவாகிய பிரமத்திலும் அவ்வாராய்ச்சி நிகழுமன்றே? என்னும் ஆராய்ச்சிவல்லுனராகிய முன்னையாசிரியர் நிலைக்களனின்றி நிலவுமிச்சுவை விபாவம் முதலியவற்றானே வெளிப்பட்டு அவையினரானே நுகரப்படுகின்றது; எனக் கருதி, யோகமாத்திரையிலெய்தற்குரிய வீச்சுரனை அவ்யோகி மனத்திலிருப்பவன் எனக் கூறும் வழக்காறென்ன சுவைக்கு அவையினரைப் பற்றி நிற்குந் தன்மையை ஒருப்படுகின்றனர்; என்றிவை முதலிய வுத்திகளான் விளக்கியுள்ளார்; அதனால் சுவைக்கு நிலைக்களன் இன்றென்பது துணியப்பட்டதாமாகலின், இச்சுவை பிரமானந்தமேயாமென்பது போதரும்.

இவ்விரண்டற்கும் உள்ள வேறுபாடு இவ்வளவினதே; பிரமானந்தம் யோகத்தாலெய்தற்குரியது; சுவை, விபாவம் முதலியவற்றை யிடையறவின்றிச் சிந்தித்தலாலெய்தற்குரியது என்பதாம். இதுவும் அவராலேயே கூறப்பட்டுள்ளது.

“யாண்டும் ஒருபடித்தாகிய இன்பவிளக்கம் இலௌகிகமாகிய சுகம் என்று வழங்கப்படுகின்றது; அஃது அலௌகிகங்களாகிய விபாவம் முதலியவற்றின் விளக்கத்தாற் கவிசமயமாத்திரையிற் சிறப்புறுதலைப் பின்பற்றி அலௌகிகச்சுவையெனக் கூறப்படுகின்றது. தூய்மையாகிய பல்வகை நல்வினைகளான் மாசற்றமனத்தினரும், சமம் தமம் முதலிய சாதனங்கணிறைந்தாரும், கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னுமிவற்றிற் பற்றுடையாருமாகிய சீரிய யோகிகள்பால், நிருவிகற்பசமாதியின் விளக்கத்தாற் பிரமமென்றும் பரமான்மாவென்றும் ஈச்சுரன் என்றும் சொல்லப்படுகின்றது” என்று.