எட்டாம் அங்கம்
(அவலோகிதை பிரவேசிக்கிறாள்)
அவலோகிதை – நந்தனனது இல்லத்திருந்து தனதிருக்கை யெய்திய காமந்தகிப் பெரியாரைக் கண்டு வணங்கினேன். இனி, இதுபொழுது மாலதி மாதவன் இவர்களது பக்கலெய்துவேன்; (சென்று) அந்தம்! இவர், முதிர்வேனிற்பருவத்தின் மாலை நீராடியராய் அவ்வோடையின்றடத்திலங்கு கற்பாறையின் மீதமர்ந்திருக்கின்றனர்; யானும் அங்குச் செல்லுகின்றேன். (சென்றனள்) (பிரவேசகம்)
(அவலோகிதையும், அமர்ந்த நிலையில் மாலதியும், மாதவனும் பிரவேசிக்கின்றனர்)
மாதவன் – (களிப்புடன்) காமற்குச் சீரிய நண்பனாகிய நள்ளிரவின் வணப்பவனப்பு வளர்தருகின்றது. அங்ஙனமே;
(1) முதிர்ந்துலர்ந்த பனையோலைபோல வெளிறுபடுமிந்துவின் நிலவொளி, காற்றின்விசையால் வானிடை நிறைந்து படர்வுறுந் தாழைமலர்ப்பராகத்தின் றோற்றமுடையதாய்க் கீட்டிசையினிருட் குழாத்தை யொழிக்கின்றது.
(தனக்குள்) பிணக்கியன் மாலதியை எவ்வண்ணமிணக்குவேன்; ஆகுக; இங்ஙனம் செய்வேன்[1].
(வெளியீடாக) அன்புடைக்காதலி! மாலதி! வெப்பநோயினை[2] நீக்கற் பொருட்டு, இதுபொழுதே மாலைநீராடலானளிர்மிகு நின்பாற் சில தெரிவிக்கின்றேன்; அங்ஙனம் தெரிவிக்குமென்னை மாறுபடக்கருதுவையோ[3]?
(2) நங்கையே! நினது நறுங்குழனீர்த்திவலைகள், வழிந்தொழியாமுன்னரும், பூமொட்டனைய தனங்களினிடைவழி உலர்ந்தொழியாமுன்னரும், பூங்கொம்பனைய மேனியிற் பரவி நெருங்கிய புளகம், மறைவுறாமுன்னரும், ஒருமுறையேனும் என்னையிறுகத்தழுவியருள்புரிக[4].
அடி! அருளிலாமாலதி[5]!
(3) அச்சத்தான் விளைந்த வியர்வை நீரரும்பியவாகு, தண்கதிர்தோய நீருகுக்கும் மதிமணியாரத்தின் றோற்றமுடையதாய் என்னை உயிர்ப்பித்தற்கென அமையுமாதலின், அவ்வாகுவால் எனது கண்டத்திலிறுகத்தழுவுக.
அன்றேல், இது கிடைத்தற்கரியது; எனினும் உனது சொற்களிற் சில பகுதிகளையேனும், செவியுறற்கு யான் றகுதியற்றவனாயமைந்தமை யாது காரணம் பற்றியோ?
(4) தென்றலானும், மதிக்கதிர்கற்றையானும் நின்னைப் பெறற்கே நெடிது வருந்தும் எனது உடலத்தை மீண்டும் வலிந்தணைத்து இன்புறுத்தவில்லை. களிப்புறுங் குயிற்கூவுமின்னிசையாற் றுன்புறுஞ் செவிகள், இன்னிசையாளே! நினதினிய சொல்லமுதையேனும் பருகியின்புறுக.
அவலோகிதை – அடி! பயன்பெறாதொழியுமியல்பினளே! மாதவன், சிறுபொழுதேனுங் காண்டற்கரியனாக, மனம் வருந்தும் நீ, “காதலன் காழந்தாழ்க்கின்றான்; அவரையான் எத்துணைக்காலங்கடந்து காண்பேன். அச்சமிக்குடைய யான், இமைப்பெனு மிடையூறொன்றிலா விழிகளாற் கண்டு, அவருடனுரையாடுவனோ? இருமடங்காக இறுகத்தழுவலான் அவரையின்புறுத்துவனோ?” என்று என்முன் கூறுகின்றனை. அங்ஙனம் தழுவற்கு அமயம் இஃதே.
(மாலதி அவளைப் பொறாமையுடன்[6] பார்க்கிறாள்)
மாதவன் – (மறைவில்) என்னே! காமந்தகிப்பெரியாரின் றலைமாணவிக்கு, இனிமையும் பெருமையுமிலங்கு நன்மொழிகளைப் பகரும் பயிற்சி; (வெளியீடாக) அன்புடைக் காதலி! அவலோகிதை, உண்மையுரைக்கின்றனளா[7]?
(மாலதி சிரத்தை அசைக்கிறாள்)[8]
மாதவன் – எற்கு விடைகூறாதொழிவையேல், இலவங்கிகை, அவலோகிதை யிவர்களது உயிரானே ஆணையிடப்பட்டுள்ளாய்[9].
மாலதி – யான் எதையுமறிகிலேன்.
மாதவன் – என்னே! துணிபொருள்[10] எழிலிலாச் சொற்களின் வனப்பு; (கூர்ந்து நோக்கி) அவலோகிதே! இஃதென்னை[11]?
(5) மான்விழியாளின் மாசறு கபோலம், கண்ணீராற் கழுவப்படுகின்றது. அக்கபோலத்தில், வாய் நிறைவுற மடுத்தற்குரிய மிகுவனப்பமுதைப் பருக விருப்பமுள்ளவன் போல இம்மதியம், தனது தாமரைத் தண்டனைய கரத்தை[12] விரித்தனனாய் விளங்குகின்றான்.
அவலோகிதை – தோழீ! ஏன் இதுபொழுது கண்ணீர் வடித்துக் கலங்கி வருந்துகின்றனை?
மாலதீ – தோழீ! எத்துணைக்காலம்[13] இலவங்கிகையருகிலாத் துயரை யனுபவித்தல் வேண்டும்? அவளது செய்தியுங்கிடைத்தற்கரிதாயது.
மாதவன் – அவலோகிதே! இஃதென்னை[14]?
அவலோகிதை – தங்களது சொற்பொழிவானே இவள் இலவங்கிகையை நினைவுகூர்ந்து, அவளது செய்திபெறும் நிமித்தம் வருந்துகின்றாள்.
மாதவன் – நந்தனனது இல்லத்திற்கு மறைவிற் சென்று அங்கட் செய்தியை யறிந்துவாவென்று இதுபொழுதே கலகஞ்சனை யான் விடுத்துள்ளேன். (ஐயுறவுடன்) அவலோகிதே! மதயந்திகையைக் குறித்த புத்தரக்கிதையினது பெருமுயற்சி நற்பயனெய்துமோ?
அவலோகிதை – பெரியோய்! வேங்கையின் உகிர்களான் அணிபெற்றிலங்கும் மகரந்தனது மயக்கந்தெளியு நிலையைத் தெரிவிக்கும் மாலதிக்கு, காமந்தகிப்பெரியோராற் றூண்டப்பட்ட நீ, உனதுயிரும் மனமும் பரிசிலாமாறு அவற்றை முன்னரே அளித்தனை. இதுபொழுது பெருமைசால் மதயந்திகைப் பேறுஞ் சிறந்திலங்குகின்றது; இதற்கெப்பொருட்[15] பரிசிலாகுமோ?
மாதவன் – வினாதற்குரியதொன்றையே வினவினாய்; (உரத்தை நோக்கி) காமனுய்யானத் தணிகலனாயிலங்கும் மகிழ்தருவின் மலரலங்கல், மாலதியின் முதற்கட்[16] காட்சியினது முயல்விற்குரிய சான்றாக இங்கண் இலங்குகின்றது.
(6) என்னாற் றொடுக்கப்பட்டதென்றாதல், உயிர்த்தோழி யிலவங்கிகையின் கரத்தாலளிக்கப்பட்டதென்றாதல் இம்மாலையை மாலதி, பூ மொட்டனைய குசகலசங்கட் பருத்துயர்ந்து விளங்கும் மார்பகத்தணிந்து இதனைப் பாராட்டினள்; நந்தனனற்குத் தான் மணம்புரிவிக்கப்படுஞ் செய்தி நிகழவே, எற்குறித்துக் கருத்தொழிந்தனளாய் என்னை யிலவங்கிகையென்று கருதி உரிமைப்பொருள் யாவையுங் கொடுத்தாங்கு எற்பொருட்டே அம்மாலையை அளித்தனள்.
அவலோகிதை – தோழீ! மாலதி இம்மகிழ்மாலை, உனது விருப்பிற்கினியதன்றோ? அந்த இம்மாலை பிறர்கரத்தையெய்தும்[17].
மாலதி – அன்புடைத்தோழி விருப்பத்தையே போதிக்கின்றாள்; அவலோகிதே! நீயே இவ்விரண்டையும்[18] கூறுகின்றாய்.
அவலோகிதை – என்னே! காலடி ஓசைபோலக் கேழ்க்கப்படுகின்றதே.
மாதவன் – (வேடசாலையை நோக்கி) கலகஞ்சன் சென்று வந்தனனே!
மாலதி – ஆனந்தம்! மதயந்திகையின் இலாபத்தாற்[19] றிகழ்வுறுகின்றீர்.
மாதவன் – (களிப்புடன் வலிந்தணைத்து) இது நமக்கு விரும்பத்தக்கதே
(என்று மகிழணியலை மாலதியின் கண்டத்திலணிகிறான்)
அவலோகிதை – காமந்தகிப் பெரியாரின் சூழ்ச்சியமைவு, புத்தரக்கிதை யானிறைவுற்றது..
மாலதி – வருகின்ற அன்புடைத்தோழி இலவங்கிகையை யானும் பார்க்கின்றேன்.
(என்று எழுகின்றாள்)
(கலகஞ்சன், புத்தரக்கிதை, இலவங்கிகை, மதயந்திகை யிவர்கள் கலக்கமுற்றனராய் பிரவேசிக்கின்றனர்)
எல்லவரும் – பெரியோய்! காத்தருள வேண்டும்; மகரந்தன் நடுவழியில் நகர்க்காவலராற் றடுக்கப்பட்டான். அத்தறுவாயிலருகெய்திய கலகஞ்சனோடு நாங்கள் இங்கு அனுப்பப்பட்டோம்.
கலகஞ்சன் – நாங்கள் இங்கனோக்கி வருங்கால், பேரொலியைக் கேள்வியுற்றோம்; அதனால் வேற்றுப்பகைப்படையும் அங்கண் வந்தெய்தியதெனக் கருதுகின்றோம்.
மாலதியும் அவலோகிதையும் – என்னே! மோசம்! இன்பமும் துன்பமும் உடனிகழ்ந்தனவே!
மாதவன் – தோழீ! மதயந்திகே! நல்வரவோ! நமதில்லத்திற்கு நீயருட்புரிந்தனை. நீங்கள் கவலையற்றிருங்கள்; என்னுடைய நண்பன் தமியனாயினும் பலருடனும் போராடலென்பது, அவ்வீரனுக்கு எளியதொன்றாம்.
(7) கொண்டதைக் கோடற்குரிய கொடுஞ்செயற்கண் ஒப்பற்ற வெற்றிமுறையைப் பயிறலில் விருப்புற்றதும், வெடிப்புறுங் கன்னப்புழையினின்றிழிதருந் தானநீரானனைவுறுமுகத்துவேழத்தின் மத்தகத்தைப் பிளத்தலில் விறன்மிக்கதுமாகிய அத்தகைய தனது கரமே, அரியினுக்கரிய துணையென[20] அமையும்.
ஆயினும் யானும் வென்றிசேர்தூய்மையான் விளங்கும் நண்பனையணித்துத் துணைபுரிவேன்.
(கடிதினடந்து, கலகஞ்சனுடன் வெளிப்போந்தனன்)
அவலோகிதை முதலியோர் – மனவன்மைப் பெரிதும் படைத்த இவர், பகைவராற் றுன்புறாது மீண்டு வருவரோ?
மாலதி – தோழி! புத்தரக்கிதே! அவலோகிதே! நீங்கள் விரைந்து சென்று இந்நிகழ்ச்சியைக் காமந்தகிப் பெரியார்பாற் றெரிவியுங்கள். தோழி! இலவங்கிகே! நீயுங்கடிதேகி, தங்களான் மீண்டும் யாம் அருட்பெறத்தக்கவாறு விழிப்புடன் போராடல் வேண்டுமெனக் காதலன்பாற் றெரிவி.
(மாலதி, மதயந்திகை யிவர்களையன்றி மற்றைய யாவருஞ் சென்றனர்)
மாலதி – அந்தோ! கொடுமை! பாங்கியர் சென்றுவர, இத்துணை நேரம் கழிந்தொழியுமென யான் அறியேன்; ஆகுக; அன்புடைத் தோழியிலவங்கிகை வரும் வழியை நோக்கி நிற்பேன்; (நடக்கிறாள்) (ஐயுறவுடன்) என்னே! எனது வலக்கண் என்னையின்னற்படுத்தற்கே துடிக்கின்றது. (பிறகு கபாலகுண்டலை வருகிறாள்)
கபாலகுண்டலை – ஆ! பாவி! நிற்க.
மாலதி – (கண்ணீருடன்) ஆ! காதல! (என்று சொற்றடைப்படுதலை[21] நடிக்கிறாள்)
கபாலகுண்டலை – (வெகுளி நகையுடன்) அடி! காதலனைக் கூவியழைத்திடு; அழைத்திடு!
(8) துறவியைக் கொன்ற[22]வுன் கணவன், எங்ஙனஞ் சென்றனன்? கன்னியைக் கெடுத்தொழியுமிக்காதலன், உன்னைக்காக்க; பருந்தின் வீழ்ச்சியாற் பயமுறும் பறவையன்னவுன்னை, யான் கவர்ந்துளேனென்பதை நீ காண்கிலையோ?
இவளைச் சிரீபருப்பதத்திற்குக் கொடுபோய், கணுக்கடோறும் எட்டுணை[23]யாவெட்டி மாரண ஓமம்[24] செய்வேன்.
(என்று மாலதியைக் கவர்ந்து[25] சென்றனள்)
மதயந்திகை – யானும் மாலதியையே பின்றொடர்கின்றேன்; (சென்று) தோழி! மாலதி!
இலவங்கிகை – (பிரவேசித்து) தோழி! மதயந்திகே! யான் இலவங்கிகையன்றோ?
மதயந்திகை – அடி! அப்பெருமகன் மாதவனைப் பார்த்தனையா?
இலவங்கிகை – இல்லை; இல்லை; அவன், உய்யான வேலியைக் கடந்துசென்ற மாத்திரையிற் பேரொலியைச் செவியுற்றுச் சினமொழி சிலவற்றைக் கூறி, தனது துடையைக் கரத்தாலடித்து விரைந்தோடிப் பகைப்படையுட் புகுந்தனன். பின்னர் நல்வினை குன்றிய யான், மீண்டுமிவண் எய்தினேன். அன்றியும் குணநலத்தின் மனமுவக்கும் மக்களது இல்லந்தொறும், ஆ! பெருந்தகைப்பெரும மாதவ! ஆ! வலாற்காரச் செயலுடை மகரந்த! என்னும் இரங்கற் சொற்களையும் செவியுற்றேன். அரசனும், அமைச்சர்களின் புதல்விகள் வஞ்சிக்கப்பட்ட செய்தியையறிந்து மனம் பொறாது சினமுடையனாய், அக்கணமே, விறன்மிக்க பல காலாட்படைகளை விரைந்தனுப்பி நிகழ்ந்தனவற்றை, நிலவொளி திகழும் மேன்மாடத்திருந்து பார்க்கிறானென்றும் அம்மக்கள் கூறுகின்றனர்.
மதயந்திகை – அந்தோ! நல்வினைகுன்றிய யான் கெட்டொழிந்தேன்.
இலவங்கிகை – தோழீ! மாலதி, எங்ஙனமிருக்கின்றாள்?
மதயந்திகை – தோழீ! அவள், முன்னரே நீ வரும் வழியினைக் காண்டற்குச் சென்றனள். பின்னர் யான் அவளைக் கண்டிலேன்[26]; ஒருக்கால், இவ்வுய்யானப் புதர்க்குட் புக்கிருத்தலுங்கூடும்.
இலவங்கிகை – தோழீ! விரைவிற் றேடுவோம்; எனதன்பிற்குரிய தோழி, அச்சமிக்காளாதலின், அவள் இவ்வுய்யானத் திருக்குமிவ்வேளையில் தன்னைத் தாங்கற்கியலாள்[27].
இலவங்கிகையும் மதயந்திகையும் – (கடிதில் நடந்து) தோழீ! மாலதி! தோழிமாலதியென்று யான்[28] அழைக்கின்றேன்.
கலகஞ்சன் – (களிப்புடன் பிரவேசித்து) நல்லூழ்வலியால் யான் போர்வழியினின்று மீண்டு வாழிபெற்றுய்ந்தனன். ஆனந்தம்! அடர்ந்துயர்ந்தசையும் மாசறு வாணூதியில், எதிருருக்கொடு விளங்கும் மதிக்கதிர்க் கற்றைபோலப் பிஞ்சர நிறத்ததாய்[29] கொடுந்தோற்றமுடையதும், வாருணிமதம் நிரம்பிய வலராமன், தனது பெருவலிப் புயத்தாற் பற்றி யெளிதில் வீசிய உழுபடையாற் பெருக்கெடுத்து மிக்கக் கலங்கிய யமுனை யாறை நிகர்த்ததுமாகிய, அப்பகைப்படைக்குழாத்துள், போர்முனையில் அருட்சிறிதுமில்லாக் களிப்பெய்திய[30] மகரந்தன், தடைப்படாது துள்ளிக்குதித்து அதனை வெருட்டியோட்ட, அத்தானை யிவனைத் தடைப்படுத்தற்கியலாதாய்ப் புறங்கொடுத்தோடுங்கால் எழுகின்ற பேரொலி, வானவெளியாவும் நிறைவுறுமந்நிகழ்ச்சியை யிதுபொழுதும் காண்கின்றேன். மாதவனது, வச்சிரத்தா லியைவுறும் என்பனைய புயவலியாற் போர்வீரர் சிதைவுற்றுச் சமர்விருப்பிலராய் விரைந்தோட, அவரது கைப்படை பலவற்றையும் கடிதிற் பற்றி, அவற்றால் எஞ்சிய பகைத்தானையனைத்தையும் கணத்தொழித்துழி யிவனுலவிவரும் வழியில் எவரும் இன்மையால் அத்தகைய கொடுஞ்செயலை யொழித்து வாளாநிற்குமத்தலைவன் மாதவனை யிது பொழுது மனமார நினைக்கின்றேன். என்னே! அரசற்கு நற்குணப்பற்று; இது காலையின்நிருபன், மேன்மாடத்திருந்து இறங்கினனாய்ப் பணியாளரின் வாயிலாக இவ்வீரற்கு இணக்கமொழி கூறி நிகழ்ந்த பகைமையைப் பரிகரித்தான். மாதவன், மகரந்தன், இவரது சாந்திரசம் நிரம்பிய மதிமுக நோக்கி அடிதொறும் மலர்ந்திலங்குமினிய விழியுடையனாய், இக்கலகஞ்சன் வாயிலாக இவரது குலமுறை தெரிந்து அச்சிறப்புறுங் குலமுதுகுரவரையுஞ் சாலப்புகழ்ந்து போற்றினான். பொறாமை, வெகுளி யிவற்றாற் கறுத்து வாடிய முகத்தையுடைய நந்தனனையும், நாணத்தான் மழுங்கிய வதனத்தையுடைய பூரிவசுவையும் நோக்கி, அவ்வரசன், “புதிய காளைப் பருவத்தால் விளக்கமுறுவாரும், சீரியமனவலிமிக்காரும், உலகிற்கு அணிகலனாயமைவாருமாகிய மணமக்களான், நுமக்கிதுபொழுது மனக்களிப்பன்றோ?, என்னும் இன்னுரைகளான் இன்புறுத்தி உள்வீடெய்தினன். மாதவனும், மகரந்தனும் இங்ஙனமே வருகின்றனர், என்னுமிச்செய்தியை, யானுங் காமந்தகிப்பெரியார்பாற் தெரிவிப்பேன்.
(என்று சென்றனன்)
(பிறகு, மாதவனும், மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)
மாதவன் – என்னே! அன்பனுக்கு இயற்கையானமைந்து நிலைப்பட்ட வீரம், மக்களனைவரையுங் கடந்து சிறக்கின்றது.
(9) முதலில் வீர்ர்களைப் பின்றொடர்ந்து என்புமுடிப்புக்கட் பொடிபடக் கரத்தாற் பற்றியடித்தும், அவரது கைப்படைகளை விரைந்து முறித்தும் வீரச் செயற்புரியு நண்பனுடைய முன்புறத்திருமருங்கினும் சிதைவுற்றலையு மென்புக்களையுடைய போர்க்கடலினது மார்க்கம், தம்பித்து நிற்குங் காலாட்படைப்பந்தியாற் பயங்கரமாக இருந்தது.
அன்ப! இது பின்னிரங்கற்குரிய இடன் பார்.
(10) கங்குற்களி விழாவில் வலிந்தணைத்தின்பந்தரும் மாதர்கள் பருகியெஞ்சியதும், மதிக்கதிர் தோய்ந்து குளிர்ந்ததுமாகிய மதுவினை, எவர் இதுபொழுதே பருகினரோ; அவர்களே, நினது தாட்பாளனைய கரத்தின் வீரச் செயலான் முறிந்த என்புக்களையுடைய தம்முறுப்புக்களான், இன்னிலைவாழ்க்கையைப் பெரிதுஞ் சாரமற்றதாகவும், விரைவினழிவெய்து மியல்பினதாகவும் இக்கணத்தே தெரிவிக்கின்றனர்.
இவ்வரசனது அன்புடைமை எண்ணற்பாலதே; ஏனெனில், குற்றமிழைத்த நமக்கும் அக்குற்றத்தை யெண்ணாது அவ்வரசன் வழிபாடியற்றி மகிழ்வுற்றனன். இனிவருக; இதுகாலை, மதயந்திகையைக் கவர்ந்து மணந்த செய்தியைக் கலகஞ்சன் மாலதி முன்னர் விரித்துரைக்க அதனைக் கேட்டின்புறுவோம்.
(எதிரில் நோக்கி)
என்னே! இவ்விடங்கள் பாழடைந்தனபோலக் காணப்படுகின்றனவே.
மகரந்தன் – நமது சமர்ச்சங்கடத்தாற் சஞ்சலமுற்றுத் தாமின்புறற்கே, இங்குமங்கு முலாவித்திரிவாராய் இங்ஙனமே யிருப்பரென, உறுதியாகக் கருதுகிறேன்.
மாதவன் – அன்ப! இந்நிகழ்ச்சியைக்[31] குறித்து நீ கூறுங்கால்,
(11) மாலதியினது புன்முறுவலோடியைந்தசையுங் கடைக்கண்களாற் பார்க்கப்பட்டுத் துன்பமெய்தியதும், நாணமிக்கதும், அசைவிலா நயனங்களையுடையதுமாகிய தனது வதன கமலத்தை மதயந்திகை குனித்து நிற்பள்.
இதுதான் அவ்வுய்யானத் தடம்.
(இலவங்கிகையும் மதயந்திகையும் வருகின்றனர்)
இருவரும் – தோழீ! மாலதீ! (தற்செயலானோக்கிக் களிப்புடன்) என்னே! அப்பெருந்தகைய வீரர் மீண்டுங் காணப்படுகின்றனரே.
மாதவனும், மகரந்தனும் – மாதரீர்! மாலதி, எங்குச் சென்றனள்?
இருவரும் – மாலதி, எங்ஙனம் சென்றனளோ; யாம் அறிகிலேம். நல்வினை குன்றிய நாங்கள், உங்களது அடியொலியான் மாலதியே வருகின்றாளென மயக்கமெய்தினராய் வஞ்சிக்கப்பட்டோம்.
மாதவன் – மாதரீர்! எனது மனம், சொல்லொணாவண்ணம் ஆயிரங் கண்டமாகப் பிளவுபடுகின்றது. ஆதலின் தெளிதரக் கூறுக.
(12) குவளைவிழியாளைக் குறித்து அனிட்டத்தையே[32] கருதும் எனது மனம், இடையறாத நடுக்கத்தை யெய்துகின்றது; இவ்விடக்கண்ணும், தீமையை விளைத்தற்கே துடிக்கின்றது; உங்களது மொழிகளும், கொடியனவாகலின் அந்தோ! யான் கெட்டொழிந்தேன்[33].
மதயந்திகை – தாங்கள் இங்ஙனமிருந்து வெளிப்போந்துழி, மாலதி தங்களை விழிப்புறுத்து நிமித்தம் தம்பால் இலவங்கிகையை விடுத்தும், காமந்தகிப் பெரியார்பால் இந்நிகழ்ச்சியைத் தெரிவித்தற் பொருட்டு, புத்தரக்கிதையையும், அவலோகிதையையும் அக்காமந்தகி யாரிடத்துப் போக்கியும், பின்னர் அவள் மனம் வருந்தியளாய் இலவங்கிகை வரும் வழியைக் காண்டற்கு முன்னே சென்றனள்; யானும் பின்னே தொடர்ந்து சென்றேன்; ஆயினும் அவளைக் காண்கிலேன். பிறகு நாங்கள் இத்தளிர்ச்சோலைகளிற் றேடி வருங்கால் உங்களையும் கண்டோம்.
மாதவன் – ஆ! காதலி! மாலதி!
(13) சினமுடையாளே! மறைந்திருக்குமிப் பரிகாசச் செயலை யொழிக்க; யான் உன்பால் மிக்க வேட்கையுடையனாய் எண்ணா அமங்கலங்களை[34]யே எண்ணுகின்றேன். எனது உள்ளக்கிடக்கையை அறியவிரும்புவையேல், அஃதுன்னால் முன்னர்[35] அறியப்பட்டதே. ஆகலின், உனது இன்சொற்களை யெற்களிக்க; எனது மனம், உள்ளுறக் கலக்கமுற்று மயக்கமெய்துகின்றது. இந்நிலையில், நீ அருளிலியா அமைகின்றனை.
இருவரும் – ஆ! அன்புமிக்க தோழீ! நீ யெங்ஙனஞ் சென்றனை.
மகரந்தன் – அன்ப! என்னையென்றியாது என்னே வருந்துகின்றனை?
மாதவன் – நண்ப! அன்புமீக்கொடு துயர்ப்படும் அவளது அச்சுருஞ்செயலை[36], நீயுமறிந்திலையோ?
மகரந்தன் – இஃதுண்மையே! ஆயினும் காமந்தகிப் பெரியாரின் அடிபணிய அவள் சென்றிருப்பள்; என்று கருதுகின்றேன்.
இருவரும் – இவ்வண்ணமும் நிகழலாம்.
மாதவன் – அங்ஙனமே ஆகுக. (என்று செல்கிறான்)
மகரந்தன் (தனக்குள்)
(14) அத்தோழி மாலதி, காமந்தகிப்பெரியாரது இல்லத்தையெய்தி, உயிருடன் மீண்டுவருவளோ? அவண் எய்தாதொழிந்து, எங்ஙனமேனுஞ் சென்றனளோ? என்னுமையத்தால் நைந்து அழுங்குகின்றேன்; ஏனெனில், சுற்றத்தார், நண்பன், காதலி, இவரடியாக வந்த இன்பம், சௌதாமினி[37]யின் விளக்கம்போல முற்றிலும் நிலையற்றதாகும்.
(எல்லவரும் சென்றனர்)
பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீ மாதவம்” என்னும் நாடகத்தில் எட்டாம் அங்கம் முற்றிற்று.
[1] ஆகுக; இங்ஙனம் செய்வேன் – இது, நாணத்தாற் பிணக்கியல்பினளன்ன மாலதியை, இணக்கமுறச் செயலின் உபாய அறிவை யுணர்த்தும். இதனால் அவ்வுபாயமும் கன்னியர் உடனலங்கருதியே கலவியைக் கோரல் வேண்டுமென்னும் காமநூல் கருத்து புலனாம்.
[2] வெப்பநோய் நீக்கற்பொருட்டு – இதனால், கலவியிற் கருத்தின்மையும், காமநோய்ப்பட்டு வருந்தும் உடற்பிணி நீக்கமும் உணர்த்தப்பட்டன. இது மாலைநீராடற்கும் நிமித்தமாம்.
[3] மாறுபடக்கருதுவையோ – முன்னர் முதுகாட்டில் யான் உன்னை யின்புறுத்தியாங்கு இதுபொழுது நீ, என்னையின்புறுத்தல் வேண்டும்; இதனையன்றி மாறுபடக் கருதலடாது என்பது கருத்து.
[4] தழுவியருள்புரிக – இது மாலதியின் மனத்தைத் தன்பாலிணக்கமுறச் செயலை யுணர்த்தும்.
[5] அருளிலாமாலதி – இது மாலதிக்குச் சினம் விளைத்தலையுணர்த்தும். இவ்வளவிற் காதலன்பாற் காதலி, காமுறும் என்னும் காம நூலுண்மை புலனாம்; அங்ஙனமே வாற்சியாயனரும்:- மகளிரது மனத்தைத் தன்வயப்படுத்த முயலுமொருவன், சூழ்ச்சியாலவரைத் தெளிவித்தல் வேண்டும். அங்ஙனமாயின், அவர், காதற்பற்றையும் மனத்தெளிவையும் எய்துவர். ஆடவரும் கன்னியர்பான் மிகைபடுங்கூடலானும், மிகைபடுமூடலானும் பயனெய்தாராதலின், நடுநிலையிலிருந்தே தற்பயனை நிறைவேற்றிக்கோடல் வேண்டும். இன்புறுத்தியாதல், சினமுறுத்தியாதல், நம்பிக்கைப்படுத்தியாதல் அவரைத் தன்வயப்படுத்தல் வேண்டும். “இக்கன்னி, நாணமிக்கவள்” என்று தன்வயப்படுத்த முயலாதொழியுமொருவன், அக்கன்னியால், உள்ளக்கிடக்கையுணராத பசுவெனவே எள்ளப்படுவன்.
[6] பொறாமை – மறைவிற் கூறியவற்றைக் காதலன்முன் வெளிப்படுத்தலே, பொறாமையினிமித்தம்.
[7] உண்மையே உரைக்கின்றனளா? இவ்வினாவிற்கு விடைபகராளாயின், அம்மட்டில் இதில் உடன்பாடெய்தியவளாம்; என்பதும், மறுமொழி கூறுமாயின், மாதவன், இவளது இன்சொற்களைக் கேட்டலாகும் பேறுபெற்றவனாம் என்பதும் கருத்து; இதனால், இன்னுரையியம்பவைத்தலென்னும் வாற்சியாயனர் கூற்று இங்குக் குறிப்பிடப்பட்டது.
[8] சிரத்தை அசைக்கிறாள் – அவலோகிதை கூறியாங்கு தான் கூறவில்லையென்பதை வெளியிடற் பொருட்டு. இதனால், மகளிரை வினாவி வற்புறுத்தி யியம்பவைக்குங்கால், அவர் சிரமசைத்தலானே விடைபகருவர் என்னும் மாதரியல்பு உணர்த்தப்பட்டது.
[9] ஆணை – யிதனால், உன்னுயிர்த்தோழியராகும் இவர்களதாணையைக் கடத்தலான் நேரும் தோடமே எனதுரையைக் கடத்தலானும் நிகழும் என்பதாம்.
[10] துணிபொருளெழிலிலாச் சொற்கள் – என்பது பொருட்டெளிவு இல்லாத சொற்களை; இங்ஙனங்கூறல், முதற்கலவியிற்கூட நாணுறும் மாதரியல்பினையுணர்த்தும்.
[11] இஃதென்னை – இன்பந்திளைக்குந்தறுவாயிற் கண்ணீருகுத்தலடாதாதலின், இவ்வினா நிகழ்ந்தது; உயிர்ப்பாங்கியாகுமவலோகிதை யிவளது அந்தரங்கத்தை யறிவளாதலின், இவன்பாலிதனை வினாவினன் என்பது கருத்து.
[12] இச்சுலோகத்திற்கு இது கருத்து; கபோலமொன்றை யொருகரத்தமைத்துக் குனித்திருந்துழி, அக்கபோலம் கண்ணீர்பெருகி நனைய, அவளது முகத்தழகமுதினைக் கரத்தால் அள்ளிப்பருகுவான் என்ன அங்கண் மதிக்கரம் படிந்திலங்கியதாம். கரம் – கதிர்.
[13] எத்துணைக்காலம் – இத்தொடற்கு காதற் பற்றான் விளைந்த கண்ணீர்ப்பெருக்காகுஞ் சாத்துவிகநிலையை, பாங்கியின் பிரிவாற்றாமையைக் கூறி மறைத்தனள் என்பது கருத்து.
[14] இஃதென்னை – அவலோகிதை யொன்றை வினாவ மாலதி மாறுபட மொழியளித்தமை, மாதவனது வினாவினிமித்தம்.
[15] அவலோகிதையினது இச்சொற்களுக்கு, காமந்தகியினது சூழ்ச்சியால் மதயந்திகையின் மணவினை நிறைவுற்றதென்பது கருத்து.
[16] முதற்கட் காட்சி முயல்விற்கு – இவ்வணியல் மாலதியின் காட்சியிற் சாட்சியாக அமைந்ததாதலின் எனதுயிரினும் உயர்ந்த இது இன்பச் செய்தி கூறுவார்க்குப் பரிசிலாக அளித்தற்குரியதென்பது கருத்து.
[17] பிறர்கரத்தையெய்தும் – இதனால், நீயே விருப்பத்தைத் தெரிவிப்பவளாய் இவ்வணியலைப் பெருகவென்பது கருத்து.
[18] இரண்டையும் – அம்மாலை, மாலதியின் விருப்பிற்கினியதென்பதையும், பிறர்கரத்தை யெய்துமென்பதையுமாம்.
[19] மதயந்திகையின் இலாபத்தால் – இவ்வுரையே மாலதி, பரிசில் எய்தற்குரிய இன்னுரையாம்.
[20] துணையென – இவ்வெடுத்துக்காட்டு, மகரந்தன் பகைவரை வேறற்குரிய விறன் மிக்கவன் என்பதையுணர்த்தும்.
[21] சொற்றடைப்படுதல் – ஈண்டு இஃது அச்சமென்னுஞ் சுவையை வெளிப்படுக்குஞ் சாத்துவிக நிலையாம்.
[22] துறவியைக் கொன்ற – இவ்வடைமொழியான், மாதவனது திறலின்மையும், கபாலகுண்டலையின் றிறலுண்மையும் அவள் கருத்திற்கியைய வெளிப்படும்.
[23] எட்டுணை – இது கொலைகளுட் கொடிய சித்திரவதத்தை; இதனால் இவளுடைய கணவனுக்குத் திறலமையுமேல் இவளைக்காக்க; என்பது கபாலகுண்டலையின் கருத்து.
[24] மாரண ஓமம் – இது பிறர்க்குத் துன்பமிழைக்கும் வேள்வி; இதனை ஆபிசாரம் என்ப.
[25] கவர்ந்து – உடன்வரும் மதயந்திகை யறியாவண்னம் மாயையின் வலியாற் கவர்ந்து சென்றனளென்பது கருத்து. இது இலவங்கிகை, மதயந்திகை, யிவரது மேல்வருஞ் சம்பாஷணையால் விளங்குவதாம்.
[26] கண்டிலேன் – இதனால், கபாலகுண்டலை மாலதியை மாயையாற் கவர்ந்தனளென்பது புலனாம்.
[27] தன்னைத் தாங்கற்கியலாள் – என்பது காமவேட்கையின் மிகுதி கருதி.
[28] யான் – இத்தன்மையிடம் இவ்வனத்திடை தீங்கிழைத்தற்குப் பிறர் யாவரேனும் அழைப்பரென்னும் மாலதியின் ஐயத்தை நீக்கி அவளை யின்புறுத்தலையுணர்த்தும்.
[29] பிஞ்சர நிறம் – கருமையும் செம்மையும் கலந்த நிறத்தை
[30] அருட்சிறிது மிலாது களிப்பெய்திய – இவ்வடைமொழி போர்முனையில் வீர்ர்களுக்கமையுமிலக்கணத்தை யுணர்த்தும்.
[31] இந்நிகழ்ச்சி – இது, மகரந்தன் மதயந்திகையைக் கவர்ந்து மணந்தமையையும், அவன் போரில் வெற்றிபெற்றமையையும், இவர்பால் அரசன் அன்பு பாராட்டியமையையும் உணர்த்தும்.
[32] அனிட்டத்தையே – இது, “அன்பின் மிகுதி அடிதொறும் அனிட்டத்தைக் கருதும்” என்னும் நீதியை வெளிப்படுக்கும்; அனிட்டம் – கேடு.
[33] கெட்டொழிந்தேன் – இவ்வினைக்குக் காரணம், விதி.
[34] எண்ணா அமங்கலம் – இது மரணத்தை. இவ்வழிக் கபாலகுண்டலையின் நினைவு நிகழ்ந்தமையின் அவளான் மாலதிக்கு மரணம் நேர்ந்திருக்குமென்பது மாதவன் கருத்து.
[35] முன்னர் – மாதவன் மகாமாமிசத்தை விலைப்படுக்குங்கால் அவனது உள்ளக்கிடக்கையை இவள் அறிந்தவள் என்பது புலனாம்.
[36] அச்சுருஞ்செயலை – இது நந்தனனுக்கு வாழ்க்கைப்படுதலை வெறுத்தும், மாதவனிற் பிரிந்தமையைக் குறித்தும், இவள் உயிர் துறத்தற்குந் துணிந்து நிற்றலையுணர்த்தும்.
[37] சௌதாமினி – மின்; இச்சொல் மாலதிக்குக் கபாலகுண்டலையான் விளைந்த தீங்கு, சௌதாமினியென்னும் பெயரமைந்த யோகினியால் விலகி, அவள் மாதவனோடியைந்து இன்புறுவள்; என்னும் பின்வரும் காதையை உணர்த்தும்.