பத்தாம் அங்கம்
(காமந்தகி, மதயந்திகை, இலவங்கிகை, யிவர்கள் பிரவேசிக்கின்றனர்)
காமந்தகீ – (துயர்க்கண்ணீருடன்) ஆ! குழந்தாய்! மாலதி! எனதங்கத்தணியே! எங்ஙனமிருக்கின்றனை? எற்குமறுமொழியளிக்க.
(1) பிறவிமுதல் கணந்தொறும் வனப்பு வளமிக்கவாய அந்தந்த உனது (விநயம் முதலிய) செயல்களையும், இனிமைமிக்க இன்னுரைகளையும் நினைக்க, அவை உடலையெரித்து, உட்கரணத்தையும் பிளக்கின்றன.
மேலும் மதலாய்!
(2) நீ யிளமைப்பருவத்தளாய்[1] இருக்குங்கால் உனது வதனகமலம், வரையறையின்றி யெழுகின்ற அழுகை, முறுவல் இவற்றையுடையதும், பூடுமாட்டனைய கூரிய சிலபற்களின் நுதிகள், வனப்புற்று விளங்குவதும், தழுதழுத்தினிய மழலை மொழியுடையதுமாகு மந்நிலையினை, இதுபொழுது யான் நினைவுறுகின்றேன்.
மற்றையிருவரும் – (கண்ணீருடன்) ஆ! அன்புடைத்தோழீ! தெளிந்தமதிமுகச் சுந்தரி! எங்குச் சென்றனை? நீ தனித்திருந்துடல் வருந்துமாறு உன்னை வந்தடைந்த தீயூழ் வினைப்பயன் என்னையோ? ஆ! பெருந்தகைப்பெரும! மாதவ! உனக்கிவ்வுயிருலகம், பெருவிழா நிகழ்ந்த அக்கணமே முடிவெய்தியாங்குகாழிந்தது.
காமந்தகீ – (மிகவருத்தமுடன்) ஆ! குழந்தைகளே!
(3) உங்களது அராகப்பற்றையுடைய[2] இத்தழுவல், ஆவல்மிக்கதெனினும்[3] ஊழ்வினையாகுஞ் சூழல்காற்று, இலவலிக்கொடி[4], இலவங்கத்தரு[5] இவற்றின் அணைவினையொப்பப்[6] பிறித்தெறிந்தது.
இலவங்கிகை – (பரிதவிப்புடன்) வச்சிரத்துருக்கொண்ட மனமே! ஆசையழிந்து முற்றிலும் என்னை வதைக்கின்றாய்.
(என்று நெஞ்சையடித்துக்கொண்டு விழுகிறாள்)
மதயந்திகை – தோழீ! இலவங்கிகே! நான் சொல்லுவேன்; சிறுபொழுதேனு மிளைப்பாறுக.
இலவங்கிகை – மதயந்திகே! என்செய்வேன்; எனது மனம், வச்சித்தாற் கட்டப்பட்டாங்கு உறுதிப்பாடெய்தி யென்னை விடுகின்றதில்லை.
காமந்தகீ – குழந்தாய்! மாலதி! நீ பிறந்த நாண்முதலாய் உனக்கு இலவங்கிகை அன்பிற்குரியை; ஆதலின், உயிர்துறக்கத்துணியுமிவட்கு ஏன் அருள்புரிகின்றாயில்லை. இவளோ;
(4) நேயமிக்காள்[7] எனினும் கண்கவரொளியினையுடைய[8] உன்னால் விடுக்கப்பட்டுச் சுடர்ச்சிகையிகந்த திரிபோலக் கறுத்து[9] வாடிய முகத்தினளாய் விளக்கமுறவில்லை.
மங்கலப் பெண்ணே! என்னே நீ, காமந்தகியைக் கைவிட்டனை? ஏடி! அருளிலி! உனது உறுப்புக்கள், என் சீவரத்தானையின் வெப்பத்தினாலன்றே வளர்ந்தன.
(5) தந்தப்பதுமைபோற் சுமுகியான நீ, பாற்குடிப்பருவங் கடந்த நாண்முதலாய், ஆடற்பயிற்சியும், பின்னர்க் கல்விப்பயிற்சியும் செய்விக்கப்பட்டு வளர்க்கப்பட்டனை; அன்றியும், யானே உன்னை உலகிற் சிறந்த குணநலம் படைத்த மணமகன்பால் நிலைப்படுத்தினேன். ஆதலின் அன்றே! தாயினுஞ்சிறந்த அன்பினை யென்பால் நீயுங்கொண்டனை; உனக்கும் அது பொருத்தமே.
(மனத்தளர்வுடன்) ஆ! மதிமுகத்தவளே! இதுபொழுது ஆசையற்றவளாயினேன்.
(6) காரணமின்றியே முறுவல் பூத்தழகிய முகத்தையுடையனும், சிகை, நுதல் இவற்றில் தீட்டிய வெண்கடுகுத்திலதமுடையனும்[10] ஆகிய புதல்வன், உனது மடிவளர்ந்து முலையுண்ணுங்கால், (கண்டின்பமெய்தற்குரிய) பாக்கியமிகந்தயான், அத்தகைய திருக்குமரனைக் காண்கில்லேன்.
இலவங்கிகை – (கண்ணீருடன்) பெரியோய்! அருள்புரிக; உயிரைத் தரித்தற்கியலவில்லை; அந்த யான், இம்மலைமேற்பரப்பினின்றும் உடலத்தை வீழ்த்தி முடிவெய்துவேன்; மறுமையினும் அவ்வன்புடைத்தோழியை யான் பார்க்கும் வண்ணம், பெரியீர்! எற்காசி கூறல் வேண்டும்.
காமந்தகீ – ஏடி! இலவங்கிகே! குழந்தையின் பிரிவாற் காமந்தகியும் இனிப் பிழைத்திராள். நம்மிருவற்கும் வேட்கையின்[11] விளைந்த மனவருத்தம் சமநிலையதே. மேலும்.
(7) வினைகளின் வேறுபாட்டினால் சேர்க்கை[12] கிட்டாதெனில் அஃதறவே வேண்டாம். ஆயினும், உயிரினை விடுதலிற்றுயரின்மையே[13] பயனாம்.
இலவங்கிகை – தங்கள் கட்டளைப்படியே! (என்று எழுகின்றாள்)
காமந்தகீ – (கருணையுடன் பார்த்து) குழந்தாய்! மதயந்திகே!
மதயந்திகை – (இச்செயலில்) “முற்பட்டு நிற்க” என்று கட்டளையிடுகின்றீர்களா? உடன்படுகின்றேன்.
இலவங்கிகை – தோழீ! தெளிக; தன்னை உலைவுறுத்தலென்னு மிச்செயலினின்றும் ஒழிக; இவ்வாண்மகனை[14] மறத்தலுந்தக்கதன்று.
மதயந்திகை – (சினத்துடன் போல) போதி; யான் உன்வயத்தள் அல்லேன்.
காமந்தகீ – அந்தோ! இப்பேதை (இறத்தற்கும்) துணிந்தனளே!
மதயந்திகை – (தனக்குள்[15]) தலைவ! மகரந்த! தங்களை வணக்கம் செய்கின்றேன்.
இலவங்கிகை – பெரியீர்! மதுமதியின் நீர்வீட்சியாற் றூய்மைத்தாய தாழ்வரைகளையுடைய மலையினது, மேடுபள்ளமான இடம் இஃதே;
காமந்தகீ – இப்பொழுது நிகழவிருக்கும்[16] செயற்கு இடையூறு இல்லாதொழிக.
(எல்லவரும் வீழ்தர விரும்புகின்றனர்)
(வேடசாலையில்)
ஆச்சரியம்
(8) இருள், மின்னல் இவற்றின் கலப்பென்ன அச்சுறுத்திக்கண் செயலையொழித்து நிகழ்ந்த அப்பொழுதே அடங்கியது.
காமந்தகீ – (பார்த்து வியப்புடனும் மகிழ்வுடனும்) என்னே! என்னுடைய குழந்தை (மகரந்தன்) இங்கட் காணப்படுகிறான். அந்த ஈதென்னை[17]?
மகரந்தன் – (பிரவேசித்து) பிறிதென்னை? அந்த யோகினிப்பெண்[18] தனது யோகமாட்சிமையால் எச்செயலும்புரிய வலியள் ஆகின்றாள்.
(வேடசாலையில்)
ஓ! (பார்க்கும்) மக்களின் குழப்பம் மிக்கக்கொடியதாக நிகழ்கின்றது.
(9) பூரிவசு, “மாலதியழிவெய்தினள்” என்னுஞ்செய்தியறிந்து இல்லறச்[19] செயலினும், உயிரினும் பற்றற்ற மனமுடையராய் அவளழிவெய்தினமையை நிச்சயித்து அங்கியில் வீழ்தற்குச் சுவர்ணபிந்துவென்னும் (சிவாலயத்தை) யெய்துகின்றார். என்னுமிதனால் யாமும் கெட்டொழிந்தோம்.
மதயந்திகையும் இலவங்கிகையும் – மாலதி, மாதவன் இவர்களது காட்சிவிழாவும், பூரிவசுவின் மரணத்தால் பேரச்சமும் ஒருமித்து விரைந்து விளைகின்றன.
காமந்தகியும் மகரந்தனும் – ஆனந்தம்! அந்தோ! விதனம்! என்னே வியப்பு!
(10) இஃதென்னை? வாணுதிவீட்சியும்[20], சந்தணக்குழம்பின் பூச்சும் ஒருமித்து நிகழ்ந்த நிகழ்ச்சியோ? இஃதென்னை? புயலின்றியே தீப்பொறி கலந்த அமுத வருஷமோ?
(11) இப்பொழுது (நமது) ஊழ்வினை, உயிர்மருந்து விடம், ஒளியிருள், இடி மதிக்கதிர், என்னுமிவ்விரண்டாய இவற்றின் சேர்க்கையினுடைய செயல்[21] விளங்கி நிற்கின்றது.
(வேடசாலையில்)
ஆ! தந்தையே! (இச்செயலினின்றும்) ஒழிக; தங்களது தாமரை முகத்தைத் தரிசிக்கப் பேராவலுடையேன். அருள்புரிக; என்னையெண்ணியின்புறுத்துக; பூவுலகிற்கும் வானுலகிற்கும் இடையில் மாசற்றுப் பரந்து விளங்குமோர் மங்கலவிளக்கனைய மேனியை என்னிமித்தமாக ஏன் விட்டொழிக்கின்றீர்கள். இலச்சை யிரக்கம் இவை யின்றி யான் தங்களை யிழந்தொழிந்தேன்.
காமந்தகீ – ஆ! குழந்தாய்! மாலதி!
(12) மீண்டும் மறுபிறவியை[22] யெய்தியாங்கு அரும்பாடுபட்டும் நின்னைப் பெறுவதற்குள், பிறிதோரிவ்வனத்தம்[23], மதிக்கலையை விழுங்கற்குபராகம் போல நிகழ்ந்தது.
மற்ற இருவரும் – ஆ! அன்புடைத்தோழீ!
(மயக்கமெய்திய மாலதியைத் தாங்கிய நிலையில் மாதவன் பிரவேசிக்கின்றான்)
மாதவன் – அடா! கொடுமை!
(13) இவள் பிறர்கையினின்றும்[24] திருவருட்பாங்கால் விடுபட்டனள் எனினும், (தந்தையின்றுயராலன்றே) மீண்டும் விபரீதமான ஐயப்பாட்டை[25] யெய்தினள்; மன்பதைக்கு (இன்பத்துன்பங்களேயாகும்) பயனையளித்தற்கு முற்பட்டு நிற்கும் ஊழ்வினையின் (வந்தெய்து) வாயிலை மறைத்தற்கு யாவரேவல்லார்.
மகரந்தன் – அன்பனே! அந்த யோகினிப்பெண், எங்குச் சென்றனள்.
மாதவன் – சிரீபருப்பதத்திருந்து யான் அவளுடன் கூடவே விரைவில் இவண் வந்தெய்தினேன்; காடுறை மாந்தரின் கருணமொழிகளால்[26] (அக்கணமே) மறைவுற்ற அவளை யான் காண்கில்லேன்.
காமந்தகியும் மகரந்தனும் – மாட்சிமிக்கவளே! மீண்டும் எங்களை காத்தருளவேண்டும்[27]; எக்காரணம் பற்றி மறைவுற்றனை?
மதயந்திகையும் இலவங்கிகையும் – தோழீ! மாலதீ! அடி தோழி மாலதியென்று கூறுவேன்; (நடுக்கமுடன்) பெரியோய்! காத்தருளவேண்டும்; இவளது இதயம், பிரணவாயு நெடிது தடைப்பட்டமையால் அசைவற்றிருக்கின்றது; ஆ! அமாத்திய! ஆ! அன்புடைத்தோழீ! நீவிர் இருவீரும் இறத்தற்கு ஒருவர்க்கொருவரே நிமித்தமாயினீர்.
காமந்தகீ – ஆ! குழந்தாய்! மாலதி!
மாதவன் – ஆ! காதலி! மாலதி!
மகரந்தன் – ஆ! அன்புடைத்தோழீ!
(எல்லவரும் மயக்கமெய்தி மீண்டும் நினைவை யெய்துகின்றனர்)
காமந்தகீ – என்னையிது? விறைவிற் பிளவுற்றபுயலினின்றும்[28] வழிந்தொழுகும் புனற்பெருக்கம்போல நம்மையின்புறுத்துகின்றது.
மாதவன் – (பெருமூச்சுடன்) ஓ! மாலதி, நினைவெய்தினளே! அங்ஙனமே இவளது
(15) இதயம், நீண்டுறும் உயிர்ப்பினால் அலைவுறுந் தனங்களையுடையதாகவும், கண்களும், தம்மியியற்கையிலிருத்தலான் வனப்புமிக்கவாகவும் அமைகின்றன. மேலும், வதனமும் மயக்கம் நீங்கினமையால் வைகறைப் பொழுதிற் றிருவுடனியைந்த தாமரைமலரொப்பத் தெளிவுற்று விளங்குகின்றது.
(வேடசாலையில்)
(16) அடிபணிந்த அரசனையும் நந்தனனையும் எண்ணாது அழற்குழுவில் விழுகின்ற பூரிவசு, எனது மொழியைக் கேட்ட அப்பொழுதே களிப்பையும் வியப்பையும் மிக்குடையனாய் அச்செயலினின்றும் நீங்கினன்.
மாதவனும் மகரந்தனும் – பெரியோய்! ஆனந்தம்! (யோகமாட்சியாற்) சிறந்து விளங்குகின்றீர்.
(17) அந்த இந்த யோகினிப்பெண், மிக்கவிசையால் மழைமுகிலைப் பிளந்தே நம்மை வந்தடைகின்றாள். அவளது சொல்லமுத நீர்ப்பெருக்கம், புயற்புனற் பெருக்கையும் கடந்திலங்குகின்றது.
காமந்தகீ – நமக்கு விரும்பற்பாலதே.
மாலதீ – ஆனந்தம்! மீண்டும் வருந்தி[29] உயிர்பிழைத்தேன்.
காமந்தகீ – (ஆனந்தக்கண்னீருடன்) மகளே! வருக; வருக.
மாலதி – ஆ! என்னே! பெரியோரா?
(என்று கால்களில் விழுகின்றாள்)
காமந்தகீ – (தூக்கிக் கட்டியணைத்து உச்சிமோந்து)
(18) (நீ நெடிது நாள்) வாழ்க; உயிரே அனைய (மாதவற்கு) வாழ்க்கையை அளிக்க; உன்னுடைய தோழிமாரும் வாழ்க; மகளே! என்னையும் அன்புடைத் தோழியையும் தண்பனிக் கலவைபோற் குளிர்ந்து உறுப்புக்களாற் பிழைப்புறுத்துக[30].
மாதவன் – அன்ப! மகரந்த! இதுபொழுது மாதவனுக்கு உயிருலகம் விரும்பற்பாலதே.
மகரந்தன் – (மகிழ்வுடன்) இஃதிங்ஙனமே.
மற்றவரும் – அன்புடைத்தோழீ! கருத்தையுங்[31] கடந்த காட்சியே! எங்களைத்தழுவி யின்புறுத்துக.
மாலதி – ஆ! அன்புடைத் தோழியரே! (என்று இருவரையுந் தழுவுகின்றாள்)
காமந்தகீ – மைந்தீர்! என்னையிது?
மாதவனும் மகரந்தனும் – பெரியோய்!
(19) கபாலகுண்டலை சினமுற்றுப் புரிந்த தீச்செயலான்[32] விளைந்த ஆபத்தினின்றும், இப்பெரியோர்[33], தன்மெய்வருந்திய பெருமுயற்சியால் எங்களைக் கைதூக்கிவிட்டனர்.
காமந்தகி – என்னே! இஃது, அகோரகண்டனது கொலையால் விளைந்த செயலோ[34]?
இலவங்கிகையும் மதயந்திகையும் – இருமடங்கான கொடுமைத்தாய ஊழ்வினை, முடிவில் (நற்பயனையே அளித்து) வனப்புற்றது.
சௌதாமினி – (பிரவேசித்து) பெரியோய்! அந்த இந்தப் பழமை மாணவி, வணங்குகின்றாள்.
காமந்தகீ – ஓ! சௌதாமினி! மங்கலம் பெறுக.
மாதவனும் மகரந்தனும் – என்னே! இவள், காமந்தகிப்பெரியாரின் அன்பிற்குறையுளாயமைந்த முதன்மாணவியாகிய அந்தச் சௌதாமினியா! ஆதலினன்றே, இதுபொழுது யாவும் பொருந்துகின்றன.
காமந்தகீ – (20) வருக; வருக; பூரிவசுவிற்குயிரளித்து, அப்புண்ணியச் சுமையை தாங்குவோய்! ஆனந்தம்! நின்னைக் கண்டு நெடிது நாட் சென்றன. நட்பின் நிலைக்களனே! எனதுடல் மிக்க மகிழ்ச்சி[35] யெய்தியிருப்பினும், மீண்டும் அதனைத் தழுவியின்புறுத்துக. மேலும்,
(21) யோகவல்லுனர்களையும் கடந்த இத்தகைய செயல்களால் (யாவரும்) விரும்பற்குரிய யோகசித்திகளையுடைய நீயொருவளே, உலகிற்கு வணங்கற்குரியவள். முற்பழக்கத்தில் விதைத்த விதை[36], உனது செயலான் முளைத்தெழுந்து சிறந்த பல நற்பயனளித்து[37] விளங்குகின்றது.
மதயந்திகையும் இலவங்கிகையும் – இவள் மாட்சிமிக்க அந்தச் சௌதாமினியா?
மாலதீ – ஆம்! அவளே! “யான் காமந்தகிப் பெரியாரைச் சார்ந்தவள்” என்று என்பால் அன்புமீக்கொண்டு இவர்கள், கபாலகுண்டலையை அச்சுறுத்தி யென்னைத் தனதில்லத்திற் கழைத்துக்கொடுபோய் இளைப்பாற்றினார்கள்; அன்றியும், மகிழணியலாகும் எனதடையாளத்தைக் கையிலேந்தியளாய் இங்குற்று, உங்கள் எல்லவரையுந் தேறுதற்படுத்தினார்கள்.
மற்றையோர் – சிறிய காமந்தகியாராகிய இவரும், நம்பால் அருண்மிகப்புரிந்தனர்.
மகரந்தனும் மாதவனும் – அடா! ஓ! என்னே! வியப்பு!
(22) சிந்தாமணியென்னும் அரதனமும், (வேண்டுவாரது) நினைவெனுஞ் செயலை வேண்டுகின்றது. (மாலதியினுயிர்க்காவலாகும்) இச்செயல், யான் நினைந்திலதாய் இப்பெரியோராற் செய்யப்பட்டது. ஆதலின், இது மிக்க வியப்பென்றே கருதுகின்றேன்.
சௌதாமினி (தனக்குள்) இவர்களது அன்புமிக்க இன்சொற்கள் என்னை இலச்சைப்படுத்துகின்றன. (வெளியீடாக) பதுமாவதிப் பதியைப் பாலிக்கு நிருபன் பெருமகிழ்வெய்திய நந்தனனாற் பாராட்டப்பட்டு பூரிவசுவின் முன்னிலையில் வரைந்த இந்நிருபத்தை ஆயுணிறைந்த மாதவற்கு விடுத்துள்ளார். (கடிதத்தைக் கொடுக்கிறாள்)
காமந்தகி – (வாங்கிப் படிக்கிறாள்).
“நுமக்கு நலம் வளர்க; மன்னர் மன்னவன் கட்டளையிடுகின்றார்; என்னையெனில்
(23) சிறந்திலோங்கு சீலத்தவருள் முன்னிற்பவனும், சீர்மைத்தாய குலநலம்படைத்தவனும் விலக்கற்கரிய விதனங்களையும் வென்றவனும், மாட்சிமிக்க மருமகனுமாய்[38] விளங்கும் நின்பால், அன்புமிக்குள்ளேன்; ஆதலின் நினதன்புடைமைக்குரிய நண்பற்கு இம்மதயந்திகை காதலான் முன்னரே அளிக்கப்பட்டவள் எனினும் நின் விருப்பிற்கே[39] அவற்கு அவளையிதுபொழுது யாமும் அளிக்கின்றோம்.”
(மாதவனைக் குறித்து) குழந்தாய்! செவியுறுக.
மாதவன் – (முழுமையும்) கேள்வியுற்றேன்; இதுபொழுது முற்றிலும்[40] நற்பேறுபெற்றேன்.
மாலதி – ஆனந்தம்! இவ்வச்சமாகும்[41] கூரிய முள்ளும் இதயத்திலிருந்து நீங்கியது.
இலவங்கிகை – திருவளர் செல்வன் மாதவனது மனோரதங்கள் இப்பொழுது முற்றிலும் நிறைவேறின.
மகரந்தன் – (முன்னே பார்த்து) அவலோகிதை, புத்தரக்கிதை, கலகஞ்சன் இவர்கள், இங்கட்குழுமிய நம்மைத் தொலையிலிருந்து பார்த்துழி, அங்கட் களியாட்டுடையராய் இவ்வழிக்கே வருகின்றனர்.
(அவலோகிதையும் புத்தரக்கிதையும், கலகஞ்சனும் பிரவேசிக்கின்றனர்).
அவர்கள் – (பலவகையாகக் கூத்தாடி எல்லவரும் அணுகி, வணக்கமுடன் காமந்தகியைக் குறித்து)
பெரியோய்! செயல்நிலைக்களனே![42] சிறப்புற்றுத் திகழ்கின்றீர். (மாதவனைக் குறித்து) மகரந்தனை யின்புறுத்து மாதவ[43] முழுமதியே! மேன்மையுற்று விளங்குகின்றீர். திருவருட்பாங்காற் செழித்து வளர்கின்றீர்.
(எல்லவரும் முறுவலுடன்[44] பார்க்கின்றனர்)
இலவங்கிகை – இந்நிகழ்ச்சியில் அவளது செயலும்[45] கருதியவாறே நிறைவுற்றதாகலின், எவ்வாற்றானும் பெருவிழாவாகு மின்னாளில் அவலோகிதை, களி நடம் பயிலுகின்றாள்.
காமந்தகீ – இவ்வண்ணமே இது; மிக்க வியக்கத்தக்கதும், காதையமைப்பாற் பல்லாற்றானும் வனப்புற்று விளங்குவதுமாகிய இத்தகைய பிரகரணம்[46] எங்ஙனமேனு முளதோ?
சௌதாமினீ – அமாத்தியபூரிவசு[47], தேவராதன் இவர்களது, ஒருவர்க்கொருவருடைய மக்களின் (திருமணத்) தொடர்புருவகமான விருப்பம், நெடிது நிறைவுற்றதென்னு மிஃதொன்றே வனப்பு.
மாலதீ – (தனக்குள்) அஃதெங்ஙனம்?
மகரந்தனும் மாதவனும் – (ஆவலுடன்) பெரியோய்! வேற்றுவகையானே செய்தி நிக்ழ்ந்தது. சொன்முறையதற்கு மாறுபட்டுளது.[48]
இலவங்கிகை – (அணுகி) செயற்பாலதென்னை?
காமந்தகீ – (தனக்குள்) மதயந்திகையின் திருமணத் தொடர்பால் நந்தனனது நிந்தையைக் கடந்து கலக்கமற்றவராயினோம். (வெளியீடாக) மைந்தீர்! வேற்றுவகையானே செய்தி நிகழவில்லை; சொன்முறையும் அதற்கு மாறுபடவில்லை. ஏனெனில், மாணவர் நிலையில் அவர்க்குள், “நம்மால் மக்களின்றிருமணத் தொடர்பு செயற்பாலது”, என்று நஞ் சௌதாமினியின் முன்னிலையில் இவ்வுடன்படிக்கை நிகழ்ந்தது. இங்ஙனஞ் செய்த சூழ்ச்சியினால்[49] தலைவனது சினம் தவிர்க்கப்பட்டது.
மாலதீ – என்னே! சூழ்ச்சி!
மகரந்தனும் மாதவனும் – ஆச்சரியம்! பெரியோர்களது சூழ்ச்சிகள் (பிறரை) வஞ்சித்து நம்பச் செய்து நன்மை பயப்பனவாய்த் தலைசிறந்து திகழ்கின்றன.
காமந்தகீ – (24) குழந்தாய்! ஆயுணிறைந்த நும்மிரு[50]வீரது மணவினை, மனவிருப்பத்தான் முன்னரே ஒப்பமுடிந்ததெனினும், இதுகாலை முந்தை நல்வினையானும் எனதரிய செயலானும், என்னுடைய மாணவிகளின் மெய்வருத்தத்தானும், முற்றிலும் பலித்தது. நினதன்பன் (மகரந்தற்கும்) அவன்றன் காதற்கிழத்தி மதயந்திகைக்கும் திறம்படு சேர்கையுஞ் சிறந்தது; இவற்றிற்கிடையூறாய்த் தோன்றிய அரசனும், நந்தனனும் நும்பால் அன்புமிக்காராயினர்; இவற்றினும் பிறிதொரு விருப்பமுளதேல், அதனையும் கூறுக.
மாதவன் – (மகிழ்ச்சியுடன்) இதனினுஞ் சிறந்த விருப்பமெற்குளதோ? ஆயினும் இதனையளித்தருள்க.
பாரதவாக்கியம்[51]:- (25) வையகம் யாவும் மங்கலமெய்துக; மன்னுயிரனைத்தும் பிறர் நலம் பேணுக; தீயவை சிதைந்தொழிக; எல்லாவுலகும் இன்புற்றிருக்க.
காமந்தகீ – இங்ஙனமே ஆக.
(எல்லவருஞ் சென்றனர்)
பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீ மாதவம்” என்னும் நாடகத்தில் பத்தாம் அங்கம் முற்றிற்று.
[1] இளமைப்பருவத்தளாய் – இச்சுலோகத்தின் கருத்து, இப்பருவமுதலே காமந்தகியார்பால் இவள் வளர்ந்தமையை உணர்த்தும்.
[2] அராகம் – ஈண்டு காதலையும், செம்மை நிறத்தையும் உணர்த்தும்.
[3] ஆவல், இது மாலதீ, மாதவன் இவர்களுடையதையும், இலவலீ, இலவங்கம் இவற்றைக் காண்பவருடையதையும் உணர்த்தும்.
[4] இலவலீ – ஓர்வகையழகிய கொடி.
[5] இலவங்கம் – ஓர்வகை மணங்கமழ் மரம்.
[6] இவ்வுவமை, யான், பொருந்து திருமணத்தைப் பூர்த்தி செய்யினும் ஊழ்வினை யூறாய் அமைந்து அதனைக் கெடுத்ததென்பதையுணர்த்தும்.
[7] நேயம் – அன்பு. எண்ணை.
[8] கண்கவரொளி – மாலதி, திரி இரண்டற்கும் பொருந்தும்.
[9] கறுத்துவாடிய முகம் – இலவங்கிகைக்கும் திரியினுக்கும் பொருந்தும்.
[10] வெண்கடுகுத்திலதம் – இது, மக்களை யெளிதில் வந்தடையும் பட்சிதோடம் முதலியவற்றை நீக்கற்பொருட்டு.
[11] வேட்கை – மாலதியைக் காண்டலில் வேட்கையும் காணாதவழி உயிரைத் துறத்தலில் வேட்கையும் ஆம். இஃதிருவோர்க்கும் ஒத்திருத்தலின் யான் ஆசி கூறல் வேண்டாம் என்பதாம்.
[12] சேர்க்கை – இது மாலதியுடன் சேருதலை; மாலதியிறந்தாளென்று இவள் கருதுகின்றாளாதலின், தானிறந்தமேல்வினை வேறுபாட்டினால் மாலதியைக் கூடுதல் அமையாதென்பதாம்.
[13] அங்ஙனமாயின் இறத்தலிற் பயன் என்னையென வாசங்கித்து, இறந்த மாலதியின் பிரிவாற்றாமையாற் படுந்துயரொழியுமாத்திரையில் பயனுடையதென்பதாம்.
[14] இவ்வாண்மகனை – இது மகரந்தனை.
[15] (தனக்குள்) பெரியோர், பக்கலில் இருக்குங்கால் அவர்கள் அறியக் காதலனை நினைந்து கூறலாகாதென்பதாம். இறக்குந்தறுவாயிற் கணவனை நினைத்தல் அவனே மறுமையினும் கணவனாதல் வேண்டும் என்பதுபற்றியாம்.
[16] நிகழுஞ்செயல் – மரணச்செயலை, ஊறு – காலந்தாழ்த்தலை.
[17] இது காமந்தகி, மகரந்தனது மகிழ்ச்சியால் விளங்கும் முகத்தைக் கண்டு, இவன் மாதவனையன்றித் தனித்து வருவதற்கும், மகிழ்வெய்தற்குங் காரணம் யாதாயிருத்தல் கூடுமென்னும் ஐயவினாவாகும்.
[18] மகரந்தன் கூறும் மறுமொழியினால் மாலதி மாதவனோடியைந்து நலமுறுதற்குத் தனது முதல் மாணவி சௌதாமினியின் மாட்சிமிக்க யோகசித்தியே காரணமென்று காமந்தகி உறுதி செய்தனள் என்பது குறிப்பின் உணர்த்தப்படும் பொருளாம். இதனால், நீர்வீட்சியில் ஒருவரும் விழுந்தொழியவில்லை யென்பதாம்.
[19] இது – இல்லறச்செயலை நடாத்தற்குரிய காணி மனை பொன் முதலிய பொருளை யுணர்த்தும்.
[20] பூரிவசுவின் அங்கிப்பிரவேசச் செய்தியைக் கேட்டல், மாலதி மாதவன் இவர்களின் காட்சி, இவைமுறையே வாணுதிவீழ்ச்சியையும் சந்தணக்குழம்பின் பூச்சையும் நிகர்வனவாம்; அங்ஙனமே, தீப்பொறிமாரியும், அமுதமாரியும் ஆம்.
[21] செயல் – ஒன்றற்கொன்று முற்றிலும் முரண்பாடெய்தியவும், இன்பத்துன்பங்கட்கேதுவாயமைவனவும், ஆய இரண்டு பொருள்களின் சேர்க்கையின் செயலை மேற்கொண்டு விளங்குவதாம்.
[22] இதனால் மாலதி, கபாலகுண்டலையான் விளைந்த ஆபத்தினீங்கினமையும், காமந்தகி, மாலதியை யெய்தினமையும் உணர்த்தப்படும். இனி பூருவபக்கத் தொடக்கத்தில் ஓர்கலையெய்திய மதியின் தோற்றமே அம்மதிக்கு மறுபிறவியெனக் கொண்டு அந்நிலையில் உபராகம் நிகழ்ந்தாங்கு மாலதிக்கும் தீங்கு நேர்ந்த்தாம் என்பதும் இல்பொருளுவமையாற் கூறப்பட்டது என்பதும் உணரற்பாலது.
[23] பிறிதோரிவ்வனத்தம் – பூரிவசு அங்கிகுளித்தலை.
[24] பிறர்கை – இது கபாலகுண்டலையின் கை.
[25] ஐயப்பாடு – ஈண்டு, மரணமெய்தற்குரிய மயக்கமுற்றிய நிலையை.
[26] கருணமொழி – பூரிவசு, அங்கிமூழ்கச் சென்றனன் என்னுஞ் செய்தியை.
[27] மாலதியின்றுன்பத்தைத் தவிர்த்த வண்னம் பூரிவசுவின் மரணத்துன்பத்தையும் இதுபொழுது தவிர்த்து மாலதியையின்புறுத்துமுகமாக எங்களைக் காத்தல் வேண்டுமென்பதாம்.
[28] பிளவுற்றபுயல் – இதனால், சௌதாமினியின் மாட்சிமிக்க யோகசத்தியால் இன்புற்ற காமந்தகி, அவ்வியப்புத் தோன்ற அகால வருஷத்தை, இன்ப நிகழ்ச்சி நிமித்தத்திற்கு உவமை கூறினள் என்பதாம்.
[29] வருந்தியும் உயிர்பிழைத்தேன் என்பது தந்தை உயிர்பிழைத்தமையான்.
[30] உறுப்புக்களாற் பிழைப்புறுதல் – என்பது உயிருறத் தழுவலை.
[31] மாலதியின் காட்சியைக் கருதுவதினும் பயனில்லையெனக் கருதியிருக்குங்கால் காட்சியளித்தாளாகலின், கருத்தையுங்கடந்த காட்சியே! யென விளிக்கப்பட்டாள்.
[32] தீச்செயல் – என்பது மாலதியைக் கவர்ந்த செயலை.
[33] இப்பெரியோர் என்பது சௌதாமினியை.
[34] மாதவன், அகோரகண்டனைச் சங்கரிக்க அவனது மாணவி கபாலகுண்டலை, மாதவற்குத் தீங்கிழைக்குமுகமாக மாலதியைக் கவர்ந்தாளாகலின், அகோரகண்டனது கொலையால் விளைந்த செயல் என்றார்.
[35] மிக்க மகிழ்ச்சி – மாலதியும் பூரிவசுவும் பிழைத்தனராகலின்.
[36] விதை – பூரிவசுவும், தேவராதனும் மாணவராயிருந்து கல்வி பயிலுங்கால், “நமக்குள் மக்கட்டிருமணஞ் செய்துகோடல் வேண்டும்”.
[37] பலநற்பயன் – மாலதி, மாதவன் இவர்களது சேர்க்கை, அதன்பயனாக பூரிவசு, மகரந்தன் முதலியோரைப் பிழைப்பித்தன் முதலியன.
[38] மருமகன் – “தங்கன்னியர்க்குத் தாமே தலைவர்” என்னும் பூரிவசுவின் கூற்றைப் பின்பற்றி மாலதியைத் தன்மகளாகக் கொண்டு அரசன் இங்ஙனம் கூறினான் என்க.
[39] நின்விருப்பிற்கே – வரிசைபல வழங்கி மணமகன் விருப்பை நிறைவேற்றன் மாமன் கடனாகலின், அஃதிவ்வளவில் அமையுமென்று மதயந்திகையை யளித்தனன் என்பது தேற்றத்தான் விளங்கும்.
[40] முற்றிலும் – நந்தனன், அரசன் முதலியோர் சினந்தவிர்த்து மனமகிழ்ந்தமையான்.
[41] இவ்வச்சம் – அரசன், நந்தனன் இவரது சினத்தால் விளைந்தது; முள்ளெனத் துன்புறுத்து மிவ்வச்சமும் அவர் விடுத்த நிருபத்தால் நீங்கியதென்பதாம்.
[42] செயல்நிலைக்களன் – மாதவனது மணவினை சூழ்ச்சியின் மிக்க இவளது செயலானே நிகழ்ந்தமையால்.
[43] மகரந்தனையின்புறுத்து மாதவன் – மாலதியைப் பிரிந்த நிலையில் மகரந்தனைத் துன்புறுத்தி, அவளோடியைந்த நிலையில் இன்புறுத்தியுள்ளான். ஆதலின், மகரந்தன், தான் மதயந்திகையை மணத்தலினும், மாதவன் மாலதியைக் கூடியின்புறலே அம்மகரந்தற்கின்பந்தருவதொன்றாம் என்பதை இவ்வடைமொழியுணர்த்தும்.
[44] முறுவலுடன் – அவலோகிதையும் கூத்தாடுவதே முறுவலில் நிமித்தம். இக்குறிப்பினை யுணர்ந்தன்றே இலவங்கிகையும் வருமாறு கூறினள்.
[45] அவளது செயல் – காமந்தகியார் கூறியுள்ள செயலையன்றிக் கூறாது செய்த சூழ்ச்சிச் செயலை.
[46] பிரகரணம் – இந்நிகழ்ச்சி போன்றதோர் நிகழ்ச்சியை; இதனால் இந்நாடகம்போல் பிறிதொரு நாடகம் கிடைத்தலரிதென்பதாம். பிரகரணம் – 10 அங்கமுள்ள நாடகம்.
[47] இவர்களது உடன்படிக்கை சௌதாமினியின் முன்னிலையில் நிகழ்ந்ததாகலின் இவள் இங்ஙனம் கூறினள்.
[48] இவர்கள் அவ்வுறுதிப்பாட்டை யறியாதவர்களாதலின் இங்ஙனங் கூறினர்.
[49] இங்ஙனஞ் சூழ்ச்சி செய்யாவிடில் தலைவற்கு விளைந்த சினத்தைத் தவிர்த்தல் அமையாதென்பதாம்; தலைவன் அரசன்.
[50] இருவீர்து – என்பது, மாலதீ மதவன் இவர்களை.
[51] பரதவாக்கியம் – இது, நடிகர்கள் நாடகத்தைச் சிறப்புற நடித்து முடித்த பின்னர், அவ்வியற் றலைவர் கூறும் வாழ்த்துரையாம்; பரதர் – நாடகாசிரியர்.
சுபம்.