ஆறாம் அங்கம்
(கபாலகுண்டலை பிரவேசிக்கிறாள்)
கபாலகுண்டலை – அடா! பாவி! தீயோய்! மாலதியினிமித்தம்[1] என்னுடைய ஆசிரியரைக் கொலை செய்த கொடிய மாதவ! அவ்வமயம், உன்னையானிரக்கமின்றி யடித்தும் பெண்ணென்று என்னைப் பொருட்படுத்தாதிகழ்ந்தனை;
(சினக்குறிப்புடன்)
ஆதலின் கபாலகுண்டலைக்கு விளைந்த சினத்தின் பயனை நிச்சயமாக நீயனுபவிப்பாய்.
(1) அரவத்தை[2]க் கொன்ற ஒருவனுக்கு அவனிடத்தில் எப்பொழுதும் நிலைபெற்ற பகைமையுடையதும், கூரிய திற்றிப்பற்களின் நுதிகளையுடையதும், விடத்தைக் கக்குதலாலச்சுறுத்துவதுமாகிய பெண்ணரவம், கடித்தற்கு விழிப்புடனிருக்கும்பொழுது இன்ப நுகர்ச்சி யாங்ஙனம் அமையும்.
(வேடசாலையில்)
(2) ஓ! அரசர்களே![3] அணித்து நிகழுமுறவினரது வருகை விரைவுறுத்துகின்றதாகலின், செயற்குரிய செயல்களிற் பெரியோர்களின் கட்டளைப்படி நடக்கக் கடவீர்; மறையவரும், செவிக்கினியதாயாசிமொழி கூறல் வேண்டும்; ஆடல், பாடல், வாச்சியமுதலியனவும், பலபாடைச் சொற்களோடமைந்தனவாய் மங்கலத்தின் பொருட்டு நிகழவேண்டும்.
அங்ஙனம், உறவினர் வரும் முன்னரே குழந்தை மாலதியும் இடையூறின்றி மங்கலம் இனிது நிறைவேறுதற் பொருட்டு நகர்க் கடவுட்கோயிலுக்குப் போதல் வேண்டுமென்றும், மற்றும் மணமகனுடன் வருஞ் சுற்றத்தாரனைவரையும் ஆடையாபரணாதியவணிகலன்களை யளித்து வெகுமத்தல் வேண்டுமென்றும், காமந்தகிப்பெரியார் கட்டளையிடுகின்றனர்[4].
கபாலகுண்டலை – ஆகுக; மாலதியின் மணவினையில் விரைந்து முற்படும் பணியாளர் நிறைந்த இவ்விடத்திருந்து விலகி, மாதவனுக்குத் தீங்கிழைத்தற்[5] குறித்து மிகமுயல்கின்றேன்;
(என்று சென்றனள்)
(சுத்தவிட்கம்பம்)
கலகஞ்சன் – (பிரவேசித்து) நகர்க்கடவுட் கோயிலின் கெற்பக்கிரகத்துண் மகரந்தனுடனிருக்கும் மாதவன், “இவ்வாலயத்தை நோக்கி மாலதி வருகின்றனளா? அன்றேல், வரவில்லையா?” என்பதையறிந்துவாவென்று கட்டளையிட்டனர்; ஆதலின், அவள் வருஞ் செய்தியைத் தெரிவித்து இவரையின்புறுத்துவேன்.
(மாதவனும் மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)
மாதவன் – (3) காமந்தகிப்பெரியாரின் சூழ்ச்சி, எற்கு மணவினையாற்றுக; அன்றேல் மாறுபடுநிலை யெய்துக; அவ்வளவில் மாலதியின் முதற்பார்வை நாண் முதலாய் விரிவெய்தியதும், மீண்டும் அம்மான்விழியாளின் அன்பு நிறைந்த விலாசங்களான் மிகுந்தெழு மேன்மையை யெய்தியதுமாகிய காமவேட்கைப் பிணிப்பிற்கு இப்பொழுது முற்றிலும் முடிவு[6] நிகழும்.
மகரந்தன் – காமந்தகிப் பெரியாரின் பேரறிவாற்றல் யாங்ஙனம் மாறுபடும்.
கலகஞ்சன் – (அணுகி) தலைவ! சிறப்புற்றுத் திகழ்கின்றீர். மாலதி, இங்ஙனமே நாடி வரத் தொடங்கினள்.
மாதவன் – உண்மையா?
மகரந்தன் – என்னை? நம்பிக்கையின்றி வினாவுகின்றாய்? வரத்தொடங்கினளென்னு மாத்திரையிலமையாது நமதருகிலும் வந்தனள். அங்ஙனமே!
(4) காற்றினாலலைவுறும் முகிற்குழுவினொலியொப்ப ஆர்ப்பரித்தொலிக்கும் பல மங்கல முழவின் விளைந்த பேரொலி, வேற்றொலியைக் கேட்க வொண்ணாது நமது செவிவலியை நொடிப்பொழுதிற் றடைப்படுத்துகின்றது.
ஆதலின் வருக; சாளரத்தின் வாயிலாகக் காண்போம்.
(அங்ஙனமே பார்க்கின்றனர்)
கலகஞ்சன் – தலைவ! பார்க்கவேண்டும்; இம்மங்கல வெண்குடைகள் உயரப்பறக்கு மன்னப்பறவைகளொப்பக் கவினுறுங் கவரிகளினது காற்றினாற் றுகிற்கொடிப் பந்திகளசைய அதனால் அலை நிரம்பிய வானவெளியாகுமோடையில் அடர்ந்துயர்ந்தலர்த வெண்டாமரையின் றோற்றத்தைக் கொண்டனவாய் காணப்படுகின்றன. விலாசமுடன் வெற்றிலைகளையுட்கொள்ள, அவை கதுப்புக்களினிறைதலான், எழுத்துக்கட் குளறுபட்டினிமையாக மங்கலப்பண் பாடுவாரும், இரத்தினங்களிழைக்கப்பட்ட பலவணிகலன்களை யணிதலான், அவற்றின் ஒளிக்கற்றை வானத்திற்பரவ, அதனால் அவ்வானத்தை யிந்திரன் தனுவின் ஒளி நிரம்பியதுபோற் செய்வாருமாகிய வாரநாரிக்குழாமமர்ந்து, பொற்சதங்கைகள் கணகணவென்றொலிக்க வரும் பிடிக்களிறுகளும் காணப்படுகின்றன.
(மாதவனும் மகரந்தனும் ஆவலுடன் பார்க்கின்றனர்)
மகரந்தன் – அமைச்சர் பூரிவசுவின் செல்வங்கள் விரும்பத்தக்கன. அங்ஙனமே;
(5) மேலெழுந்தொளிரு மணிக்கதிர்க்கற்றையால் எங்கும் நிறைவுறுந்திசைகள், பறக்கு மூர்க்குருவிகளின் சிறையொலி கலந்திலங்கச் சிறை விரித்தாடும் மயில்களின் றோகைக்கண்களான் மருங்குகளிற் சூழப்பட்டனபோலும்[7], நன்கு விளங்கும் வானவில்லையுடையன போலும், சித்திரம் வரைந்து சீனத்துகிற் கொடிகளான் மறைக்கப்பட்டன போலும் காணப்படுகின்றன.
கலகஞ்சன் – என்னே விரைந்து வரும் பல பணியாளர், தங்கம் வெள்ளி யிவற்றினீரிற் றோய்க்கப்பட்டு விளங்கும் கொடிப்பிரம்புகளாற் கோடு வரைந்து, இதன்மேல் வரலாகாதெனக் கட்டளையிட அதற்கடங்கிய மக்களனைவரும் வெளிப்புறத்தே வதிகின்றனர். மாலைச் செம்மையாலிலங்கும் விண்மீன்களையுடைய மாலைப்பொழுதுபோல் முகத்தில் விளங்குஞ் சிந்தூரச் சித்திரங்களின் ஒளிவிரவும் முத்துமாலையணிந்த பெண்யானை மீதமர்ந்து அதனையணிபெறச் செய்பவளும் ஆவலின் மலர்ந்த விழிகளையுடைய மக்களனைவரானும் காண்டற்கினிய வனப்புடையளும் ஆகிய இம்மாலதி, மிக வெளுத்து மிகவிளைத்து மிருக்குமுடலொளியினால் உய்த்துணரக்கிடக்குங் காமவேட்கையுடையளாதலின் முதற்பிறைத் தோற்றமெய்தினளாய் இக்குழாத்தினின்றும் சிறிது விலகி வேற்றிடம் சென்றனள்.
மகரந்தன் – நண்ப! காண்க;
(6) சிறப்புறுமித்தலைவி, வெளிறுபட்டிளைத்த வுறுப்புக்களாற் கவினுறுங் கலன்களையுடையளாய் மங்கலவிழாவினாற் றேசுறுநிலை யெய்தினளாயினும், மலர்களாற் புறத்தே வனப்பையும், புழுக்களாலகத்தே வாட்டத்தையுமெய்திய விளங்கொடிபோல அடிதொறும் வளர்ந்தோங்கு மனப்பிணியை அவ்வுறுப்புக்களானே வெளிப்படுத்துகின்றாள்.
மாதவன் – என்னே! பெண்யானை அமர்த்தப்பட்டதே!
மகரந்தன் – (களிப்புடன்) என்னே! இரங்கிக்காமந்தகி, இலவங்கிகை இவர்களுடன் இங்கண் வரத் தொடங்கினளே!
(காமந்தகி, மாலதி, இலவங்கிகை இவர்கள் வருகின்றனர்)
காமந்தகி – (களிப்புடன்[8] திரும்பி)
(7) பிரமன், மனமார்ந்த மணவினைப் பொருட்டு நமக்கு மங்கலத்தை நல்குக; மணமக்களின் சேர்க்கைக்கேற்பச் சிறப்புறுவனப்புடை பக்குவமதனைத் தேவருமியற்றுக; எனதன்புடைமைக்குரிய நண்பரின் மக்களது சேர்க்கையால் யானும் நற்பேறு பெறுக; இம்முயற்சி யாவும் பயனுடையனவாய் மங்கலம் பயப்பனவாகுக.
மாலதி – (தனக்குள்) மரணமாந்துறக்க மெய்தற்குரிய வழியை யெத்தகைய வுபாயத்தாலிது பொழுது நாடுவேன்; நல்வினைப்பயன் குன்றுமேற்கு இறத்தல் விரும்பப்படினும், அது கிடைத்தற்கரிதாயது[9].
இலவங்கிகை – இவ்வன்புடைத்தோழி காதலனது நலம் பயக்கும் பிரிவினால் மிக்க வருந்துகின்றாள்.
(சேடியொருவள் ஆபரணப்பேழையைக் கையிலேந்திப் பிரவேசிக்கிறாள்.)
சேடி – பெரியோய்! கடவுட் சன்னிதியில் அரசனாலனுப்பப்பட்ட இவ்வணிகலன்களால் மாலதியை யணிப்படுத்தல் வேண்டுமென்று அமாத்தியர் தெரிவிக்கிறார்.
காமந்தகி – அக்கடவுட் சன்னிதி தக்க மங்கலம் பயப்பதேயாம்; அவற்றை யிங்கட் காட்டுக.
சேடி – இவ்விரண்டும் வெண்பட்டு வத்திரங்கள்; இது மேல்வண்ண வத்திரம்; இவை உறுப்புக்களெல்லாவற்றிற்குமுரிய ஆபரணக் கோர்வைகள். இவை முத்துமாலைகள்; இது சந்தணம்; இது வெண்மலர்முடிமாலை;
(என்று காட்டுகிறாள்)
காமந்தகி – (மறைவில்) இவற்றையணிந்த குழந்தை மகரந்தனை யாவரும் காண்பர்[10].
(அவற்றை வாங்கி வெளியீடாக)
அங்ஙனமே செய்வோமென அமாத்தியரிடம் தெரிவிப்பாயாக.
(சேடி சென்றனள்)
காமந்தகி – இலவங்கிகே! குழந்தை மாலதியுடன் நீ கோயிலுட்புகுதி.
இலவங்கிகை – தாங்கள் எங்ஙனம் செல்லக் கருதுகின்றீர்கள்?
காமந்தகி – யானும், தனித்திருந்து இவ்வணிகளின் மேன்மையைச் சாத்திரமுறையானே ஆராய்ந்தறிகின்றேன்.
(என்று சென்றனள்)
மாலதி – (தனக்குள்) இலவங்கிகை யொருவளே யிங்கண் எஞ்சியுள்ளாள்[11].
(வெளியீடாக) இது கோயிலின் வாயில்; அன்புடைத்தோழீ இதனுட் புகுதி.
(கோயிலுட் பிரவேசிக்கின்றனர்)
மகரந்தன் – இத்தம்பத்தின் மறைவிலிருந்து இவளைப் பார்ப்போம்.
(இருவரும் அங்ஙனமே பார்க்கின்றனர்)
இலவங்கிகை – இது குங்குமம், இவை மலர்மாலைகள்.
மாலதி – இவற்றாற் பயன் என்னை[12]?
இலவங்கிகை – தோழீ! இக்கைப்பிடி மங்கலத் தொடக்கத்தில் நலன் மிக்க வளர்தற்பொருட்டு, “கடவுட்பூசனையாற்றுக,” என்று நின் அன்னையா லனுப்பப்பட்டனை.
மாலதி – (தனக்குள்) கொடுஞ் செயற்புரியுமூழ்வினையின் றீச்செயலினது பக்குவ நிலையாகுந் துயரத்தாற் புண்படுமனத்தையுடையளும், உயிர்நிலையழிதலாற் றாங்கொணாதவளும், நல்வினை குன்றியவளுமாகிய வென்னை, மீண்டுமிப்பொழுது ஏன் வருத்துகின்றனை?
இலவங்கிகை – தோழீ! எதைக் கூற விரும்புகின்றனை?
மாலதீ – கிடைத்தற்கரியதிற்[13] பெரிதும் முயலுமொருவன் தனது விருப்பத்திற்கூழ்வினை யூறாயமையுமெனில், அங்ஙனம் சிந்தனை செய்தலென்னை?
மகரந்தன் – அன்ப! செவியுற்றனையா?
மாதவன் – அவளது சொற்கள், என்னைப் பற்றியனவென்பதற்குப் போதிய சான்றிலாமையின் மனங்களிப்புறவில்லை.
மாலதீ – அன்புடைத்தோழீ! இலவங்கிகே! நீயே யெற்குண்மைச் சகோதரி; உனதன்பிற்குரிய தோழியாகிய யான், துணையற்று இறக்குந் தருவாயிலிருப்பவளாய், பிறந்த நாண் முதல், இடையறாது வேறூன்றித் திளைத்த நம்பிக்கைக்கேற்ப, நின்னைக் கட்டியணைத்து வேண்டுகின்றேன்; யான் உன்னாற் பின்பற்றத்தக்காளாயின் என்னை மனமார நினைத்து[14] மாதவனது ஊழ்வினைத் திருவாம் மங்கலம் நிறைந்த மரைமலரனைய திருமுகம், உவகைப் பெருக்கொழுக அதனை நீ காணல் வேண்டும்.
(என்றழுகிறாள்)
மாதவன் – அன்ப! மகரந்த!
(8) வாட்டமுறுமுயிர்[15] மலரையலர்த்துவனவும், மனநிறைவுறுத்திப்[16] பொறியனைத்தையும்[17] மயக்குவனவும், பேரின்பம் பயப்பனவும்[18]
இதயத்திற்[19] கின்றியமையாத இரசாயனங்களுமாகிய சொல்லமுதங்கள்[20], திருவருட்செயலான் என்னாலு[21]மெய்தப்பட்டன.
மாலதி – எற்குயிரளித்த காதலன் “யானிறந்துபட்டேன்” எனச் செவியுற்று வருந்துமவனது சீரியவுடலஞ் சிதைவுருவண்ணமும், வானுலகெய்தியவெற்குறித்து அக்காதலன் பிற்காலத்தில் என்னை நினைந்தழிந்து வாழ்க்கையை வறிதே கழிக்கா வண்ணமும்[22], அவற்கு நீ துணைபுரிதல் வேண்டும்; அங்ஙனம் செய்குவையேல், அம்மட்டில் நினதன்புடைத் தோழி மாலதியின் விருப்பம் நிறைவுறுவதொன்றாம்.
மகரந்தன் – என்னே[23]! மிகு துன்பமே நிகழ்ந்தது.
மாதவன் – (9) வெறுப்பெய்தியும் சிந்தை நடுக்குறும் மான்விழியணங்கினது, இரக்கமிக்கதும், இன்பமிக்கதும், உருக்கத்தானும் மயக்கத்தானும் நிகழ்ந்ததுமாகிய புலம்பலைச் செவியேற்று, கலக்கத்தானிகழுந் துயர்த்துன்பத்தையும் சிறப்புறுமின்பத்தையு மெய்துகின்றேன்.
இலவங்கிகை – அடி நினது அமங்கலமொழிக; இனிப்பிறிதொன்றையும் கேள்வியுறேன்;
மாலதி – தோழீ! மாலதியினுயிரே நும்மனோர்க்கு விரும்பத்தக்கதேயன்றி மாலதியாகான்.
இலவங்கிகை – தோழீ! இஃதென்னையென்று[24] கூறினாய்?
மாலதி – நம்பிக்கை விளைக்குஞ் சொற்கட்டால் என்னை உயிர்ப்பித்து அதனால் யான் மிக்க அருவருக்கத்தக்க[25] துன்பத்தை யனுபவித்தற்குரியளாயினேன்; இப்பொழுதோ, எனது விருப்பமிவ்வளவே; எனதுயிர் பிறர் வயத்ததாக[26], அதனால் எனதுயிரைக் காத்த அக்காதலற்குக் குற்றமிழைத்த இவ்வுயிரை விடுத்து அக்குற்றனீங்கி நன்னிலையுறுவேன்; அன்புடைத்தோழீ! குறித்த இச்செயலில்[27] நீயிடர்ப்படுத்தாதொழிக.
(என்று காலில் விழுகின்றாள்)
மகரந்தன் – இஃதன்பின் முடிபான வரம்பாம்.
(இலவங்கிகை மாதவனைக் குறிப்பினழைக்கின்றாள்[28])
மகரந்தன் – நண்ப! இலவங்கிகை யினிருக்கையிலமர்க.
மாதவன் – நடுக்க முதலிய காதற் பெருமிதத்தாற் றன்வயமொழிந்துளேன்.
மகரந்தன் – அணித்துவருமேன்மைகட்கு இஃதியல்பே!
(மாதவன் தன் விருப்பிற்குத் தக இலவங்கிகை யினிருக்கையிலமர்கின்றான்.)
மாலதீ – தோழீ! எனது விருப்பிற்குடன்பட்டு[29] அருள்புரிக.
மாதவன் – (10) நேரியல்பினளே[30]! வன்செயல் விருப்பை வலிந்தே தவிர்க்க; கதலித் தொடையாய்! எண்ணாமுயற்சியை[31] இக்கணத்தொழிக்க; உனது இனிமையற்ற[32] பிரிவுத்துன்பத்தை யெனது மனம், தாங்கற்கியலாதாகும்.
மாலதீ – மாலதியின் றலைவணக்கம். உன்னாற் றடைப்படுத்தத் தகாதது.
மாதவன் – (11) தீராத பிரிவுத் துன்புறுத்துஞ் செயற்புரியணங்கே! என்னை யான் புகல்வேன்? சிறப்புறுந் தலைவி! என்னை வலிந்தணைத்து[33] உனது விருப்பிற்கேற்பன செய்க.
மாலதீ – (களிப்புடன்) என்னே! அருள்புரிந்தனளா? (எழுந்து) இப்பொழுதே உன்னைத் தழுவுகின்றேன்; கண்ணீர்ப்பெருக்கால் அன்புடைத் தோழியின் காட்சி தெள்ளிதிற் புலனாகவில்லை; (அணைந்து களிப்புடன்) தோழீ! உனது உடற்பரிசம், முதிர்ந்த தாமரைப்பூந்தாதனைய மயிர்க்குழற்சியுடையதாய் யாவருடையதேயோ[34] வென்ன இப்பொழுது என்னையின்புறுத்துகின்றது. (கண்ணீருடன்) சிரமேற் கரங்கூப்பி யெனது மொழிகளை யவர்பாற்[35] றெரிவிப்பாயாக.
“நல்வினை குன்றிய யான், எனது விருப்பிற்கியைய, அலர்தரு தாமரை மலரது வனப்பைக் கவர் மதிமுகமுடை நின்றிருக்காட்சியால் கண்களி விழாவை யெய்தப் பெற்றிலேன்; ஆதலின் வறிதேகழியும் விருப்பங்களான் இடையறாது மலிந்து விலக்கற்கரிய துயர்ப் பெருக்குற்று நைந்தழிந்த மனத்தைத் தாங்கியுள்ளேன். நாடோறும், முற்றிலுந்தாங்கொணாத் துயரத்தானெட்டுயிர்ப்புறும் பாங்கியர் சூழ்தர, உடற்பிணியாவுமனுபவித்தே கழிக்கப்பட்டன. எறிநிலவு, இளங்காற்று முதலிய பொல்லாத் தொடர்களும் வருந்தியே கடத்தப்பட்டன. இதுபொழுதோவெனில், ஆசையற்றவளாயினேன்”, என்று. அன்புடைத்தோழீ! உன்னாலும் யான் எப்பொழுதும் நினைக்கத்தக்கவள்; மாதவனது திருக்கரத்தாற் றொடுக்கப்பட்டு வனப்புறுமிவ்வகுள மாலையும், மாலதியெனவே கருதத்தக்கதாய் நாளுமுனது கண்டத்தணிதற்குரியது.
(என்று தனது கண்டத்தினின்று மகிழ்மாலையையெடுத்து மாதவன் கண்டத்திலணிந்த அக்கணமே[36] பின்சென்று அச்சத்தையும் மெய்நடுக்கத்தையும் நடிக்கின்றாள்)
மாதவன் – என்னே! (மறைவில்)
(12) இவள் என்னை வலிந்தணைக்குங்கால், பூமொட்டனைய, தனங்கட் பருத்திருத்தலின், அவையுரத்தினன்கிணைந்து பிதுக்கமுற, அதனாற் கருப்பூரமணிமாலை, வெண்சந்து, மதிமணிப்பெருக்கு, தாமரைத்தண்டு, தாமரைநூல், பச்சைக்கருப்பூர முதலிய நளிரிரும் பொருட்குழுவை யொருமிக்கக்கலந்து, அவற்றால் எனது மெய்யில் இவளாற்[37] பூசப்பட்டவன்போலாயினேன்.
மாலதி – அந்தோ! இலவங்கிகையால் யான் வஞ்சிக்கப்பட்டேன்.
மாதவன் – அடி! மாலதி! தனது மனப்பிணியொன்றையே தெரிவிக்கின்றாயன்றிப் பிறரது விதனத்தை யறிகின்றாயில்லை; அதனால் இங்ஙனம் இகழ்கின்றனை.
(13) மிகைபடுமுடல வேட்கையாம் வெப்புநோய் பொருந்தியும், தோற்றத்தானிகழுமுனது கலவியாலதனை விலக்கியும், என்பாலன்புற்றனை யெனுமுணர்வினாலுயிரினைத் தாங்கியும், யானுமன்னாட்களைக் கடத்தினனன்றோ?
இலவங்கிகை – தோழீ! தக்கவாறு இவராலிகழப்பட்டனை?
கலகஞ்சன் – அந்தோ! இச்சேர்க்கை யன்புமிக்கொழுகுமழகுடைத்து.
மகரந்தன் – திருவளர்செல்வி! இஃதுண்மையாம்.
(14) நீ, தன்னிடத் தன்புடையளென்னு மொன்றையே கடைப்பிடித்திம்மாதவன், வருந்தியமுயிரை நிலைப்படுத்தி யித்துணை நாட்களையுங் கடத்தியுள்ளான்; இஃதுண்மையேயாதலின் இவன், நினது பொற்றொடியணியுங் கைப்பிடியாகு மருட்பேறெய்தி யகமகிழ்க; நமது இன்ப நுகர்ச்சியும் நெடிது நாணிலவிப்பயன்பெறுக.
இலவங்கிகை – பெருந்தகைப் பெரும! தாங்கள் இவளது மனத்தை வலிந்து பற்றுங்காலும் தடைப்படுத்தாத இவள், கைப்பிடிக்குமிதுபொழுது தடைப்படுத்துவளோ[38]?
மாலதீ – என்னே! மோசம்; கன்னியர்க்கு முரண்பாடான எதனையோ[39] கூறுகின்றாய்.
காமந்தகி – (பிரவேசித்து) அச்சுறும் புதல்வி[40]! என்னையிது?
(மாலதி நடுக்குற்றவளாய்க் காமந்தகியைத் தழுவுகிறாள்)
காமந்தகி – (மாலதியின் மோவாயினை நிமிர்த்து) குழந்தாய்!
(15) முன்னர்க் கண்ணிணைந்த நோக்கமும், பின்னர் மனத்திற்குப் பிறிதொரு பற்றுக்கோடின்மையும், பிறகு உடன்மெலிவும் முறையே உன்பாலெவற்கும், எவர்பாலுனக்கும் நிகழ்ந்தனவோ; அத்தகைய இவ்வாலிபன் உனது காதற்கிழவன்; இச்சு முகன் முன்னரிருந்துழி அறிவின்மையை[41] விடுத்தொழிக; அதனால் விதியின் றிறலும்[42] விளக்கமுறுக; காமனது விருப்பமும் நிறைவுறுக.
இலவங்கிகை – பெரியோய்! இம்மாதவன் கிருட்டினசதுர்தசியிரவில் முதுகாட்டிலலைந்து மகாமாமிசத்தை விலைப்படுத்தலாகும் விரதத்தை முடிக்கும் கொடிய பெருமுயற்ச்சியுடையானும்[43], விறன்மிகுகோரகண்டனது புயவலியைத் துணித்தவனுமாகிய கொடுஞ்செயற்புரிவோனாதலின், எனதன்புடைத் தோழி மிக நடுக்கமெய்துகின்றாள்.
காமந்தகீ – இலவங்கிகே பெருமைவாய்ந்த காதற்பற்றையும், பெருமைசாலுதவியையு மெடுத்துரைத்தற் தக்கதேயாம்.
மாலதீ – ஆ! தந்தையே! ஆ! அன்னையே[44]!
காமந்தகீ – குழந்தாய்! மாதவ!
மாதவன் – பணித்தருள்க;
காமந்தகீ – மக்கட்டலைவரனைவரது முடிமாலையின் வழிந்தொழுகுமரந்த மணங்கமழுஞ் சரணங்களையுடைய[45] அமாத்தியபூரிவசுவின் மணியனையவொரு மகளாம்[46] இம்மாலதி ஒத்த புணர்ப்பில் விருப்புறும் விதியானும், காமனாலும் என்னாலும்[47] நின்பொருட்டளிக்கப்படுகிறாள் (என்று கண்ணீர் சொரிகிறாள்).
மகரந்தன் – பெருந்தகைப்பெரியோரினது அருட்பேறு பயனுடைத்து.
மாதவன் – பெரியோரது முகம் கண்ணீரை மிகச் சொரிகின்றது; என்னையது?
காமந்தகீ – (சீலை முந்தியாற் கண்களைத் துடைத்து) குழந்தாய்! மங்கலவுரை சில கூற விரும்புகின்றேன்.
மாதவன் – அவை யாவை?
காமந்தகி – தெரிவிக்கிறேன்.
மாதவன் – கட்டளையிடுக.
காமந்தகீ – (16) நும் போல்வாரது அன்பு, கனிவாலழகெய்து மியல்பினது. யானும் அவ்வவ் வேதுக்களான் உன்னாற் பெருமைப்படுத்தத் தக்கவள்; ஆதலின், அப்பனே! என்னிற் பிரிவெய்தியுமிச் சுமுகியின்பாற் பிணிப்புறுங் காதலா மருள்வழி வழாது நீ யென்று மிருத்தல் வேண்டும்.
(என்று காலில் விழக் கருதுகின்றாள்)
மாதவன் – என்னே! அன்பின் மிகுதியால் இன்னிகழ்ச்சி வரையறை மீருகின்றது.
மகரந்தன் – பெரியோய்!
(17) சிறப்புறு பெருங்குடிச் செனித்தவள் என்னும், கட்பொறி நுகருங் கழிபேருவகையளிப்பவள் என்னும் பெட்புறுனட்பைப் பெரிதும் படைத்தவளென்னும் நற்குண[48] மிலங்குனங்கையா மென்னு மிவ்வேதுக்களொவ்வொன்றும், இம்மாதவனை வயப்படுத்துஞ் சீரிய கருவியாமாகலின், இதற்கு மேலுந் தாங்களிங்ஙன மிறைஞ்சிடி லென்னையான் புகல்வேன்.
காமந்தகீ – குழந்தாய்! மாதவ!
மாதவன் – பணித்தருள்க.
காமந்தகீ – இவளையேற்றுக்கோடி.
மாதவன் – பெற்றுக்கொள்ளுகின்றேன்.
காமந்தகீ – குழந்தாய்! மாதவ! மதலாய்! மாலதி!
மாதவன் – கட்டளையிடல் வேண்டும்.
மாலதி – பெரியோய்! பணித்தருள்க.
காமந்தகீ – (18) அன்பனும், நண்பனும், சூழ்தருஞ்சுற்றமும், போற்றற்குரிய பொருட்களும், பொருட்பண்டாரமும், உயிருமென்னுமிவை, காதலிக்குக் காதலரும் காதலற்குக் காதலியுமாமென்னுமிவ்வுண்மை, சிறுவராகிய உங்களுக் கெஞ்ஞான்றும் நினைவிலிருத்தல் வேண்டும்.
மகரந்தன் – ஆம்
இலவங்கிகை – தாங்கள் பணித்தவாறேயிது.
காமந்தகீ – குழந்தாய்! மகரந்த! மாலதியினது மணவினைக்குரிய இவ்வணிகலன்களை யணிந்து நீ, மங்கலமெய்தற் பொருட்டு முயல்க.
(என்று நகைப்பெட்டியை யளிக்கிறாள்)
மகரந்தன் – தாங்கள் பணித்த வண்னம் இவற்றை யிவ்வண்ணத் திரைச் சீலையின் மறைவிலணிவேன். (அங்ஙனமே அணிகின்றான்).
மாதவன் – பெரியோய்! என்றுணைவனுக்கு இஃதெளிதெனினும், செயற்கரியதும், அல்லல்[49] மிக்க விளைப்பதுமாம்.
காமந்தகீ – யானிருக்குங்காற் சிந்தனை யுனக்கெற்றிற்கு.
மாதவன் – தஞ்சூழ்ச்சியைத் தாமேயறிவீர்.
மகரந்தன் – (புன்முறுவலுடன் வருகிறான்)
(எல்லவரும் வியப்புடனும் ஆவலுடனும் பார்க்கின்றனர்)
மாதவன் – (மகரந்தனை வலிந்து தழுவி) பெரியோய்! நன்தனன், நல்வினைபுரிந்தவனே! ஏனெனில், எனதன்பிற்குரிய இத்தகைய நண்பனைச் சிறுபொழுதேனுமவன், மனத்தாற் காதலிப்பன்[50].
காமந்தகீ – மைந்தீர்! மாலதீ மாதவர்களே! மணவினைப்பொருட்டு இங்ஙனமிருந்து வெளிப்போந்து இம்மரக்கும்பல் வழியே செல்லுங்கள்; அங்கண் ஓடையினது பின்மருங்கிற் பூம்பொழிலொன்று திகழ்கின்றது. அங்ஙனமே கடிமணத்திற்குரிய பொருள் யாவும் அவலோகிதையான் மீண்டும் நிரப்பப்பட்டுள்ளன.
(19) ஆழ நிகழுங் காமவேட்கையான் முதிர்ந்த கேரளமகளிரது கன்னமன்ன வெளிறிய வெற்றிலைகளையுடைய தாம்பூலவல்லிகளாற் கட்டப்பட்டு, பழங்கணிறைதலாற் றாழ்ந்திலங்குங் கமுகையுடையனவும், இலந்தைக்கனியை அயிலும்புள்ளினம், இன்னிசைபாட அவ்வினிமை பொருந்தியனவும், இளங்கால்வீசு மாதுளை வேலியிலங்குவனவுமாகிய அவ்வுய்யானமருங்குகள், உங்கட்கின்பத்தை விளைப்பனவாம்.
ஆதலின் அங்ஙனமே, மதயந்திகை, மகரந்தன் இவர்வருமளவும், நீவிர் வதிந்திருத்தல் வேண்டும்.
மாதவன் – (களிப்புடன்) மாலதியின் மங்கலச்செல்வம், மங்கலமொன்றைத்[51] தலையணியாக்கொண்டு, மேனிகழ்வுறுக.
கலகஞ்சன் – இஃதும் நமக்கு இன்மிக்கதாகும்.
காமந்தகீ – இதிலுனக்கையமுளதோ?
இலவங்கிகை – அன்புமிக்கதோழீ! நீயிதனைச் செவியுற்றனையா?
காமந்தகீ – குழந்தாய்! மகரந்த! நலனுறுமிலவங்கிகே! நாம் இங்ஙனமிருந்து செலற்குரியவிடத்திற்குச் செல்வோம்.
மாலதீ – தோழீ! நீயுஞ்செல்லவேண்டுமோ?
இலவங்கிகை – (நகைத்து[52]) இப்பொழுது நாங்கள் செல்லவேண்டும்.
(என்று காமந்தகி, இலவங்கிகை, மகரந்தன் இவர்கள் சென்றனர்.)
மாதவன் – (20) வெப்பத்தால்[53] வெதும்பிய வேழம், முட்பொருந்துந் தண்டுடன் கூடியதும், ஓடையிலுறைவதுமாகிய நளிரிருஞ் சேயிதழ்த் தாமரைமலரைத் தனாது கரத்தாற் பற்றியாங்கு, காமப்பிணியாம் வெப்பினானைந்த யானும், முற்றிலும் புளகமாம் முட்கணிரம்பிய வாகுவாம் நாளமுடையதும், வேன நீரானனைந்த விரற்களா மிதழ்களையுடையதும், வனப்புறு செம்மையுற்றதுமாகிய இவளது கமலக் கரத்தை யிதுபொழுது பற்றுகின்றேன்.
(எல்லவரும் சென்றனர்)
பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவம் என்னும் நாடகத்திலாறாம் அங்கம் முற்றிற்று.
[1] மாலதீநிமித்தம் – இதனால், மாலதியைக் காத்தற் பொருட்டு மாதவன், கபாலகுண்டலையினாசிரியனாகிய அகோரகண்டனைச் சங்கரித்தானாதலின், மீண்டும் மாலதியைக் கவர்ந்து அவனுக்குத் தீங்கிழைத்தல் வேண்டுமென்னும் கபாலகுண்டலையின் கருத்துப் புலனாகும்.
[2] இக்காட்சியணி – அகோரகண்டனது கொலைநிகழ்ச்சியால் மாலதியின் பிரிவாந் துன்பம் மாதவனுக்கு நிகழுமென்பதை வலியுறுத்தும்.
[3] அரசர்களே! என்னுமிவ்விளி, பதுமாவதிப்பதியின் அரசனது ஆணையை மேற்கொண்டுத் தொண்டாற்றும் சிற்றரசர்களை யுணர்த்தும்.
[4] கட்டளை – இது, காமந்தகியின் சூழ்ச்சியாற் கோயிற்கட் காத்திருக்கும் மாதவனது களவு மணவினைக்கின்றியமையாதது.
[5] தீங்கிழைத்தலாவது – இங்கட் பணியாளர் நிறைந்திருத்தலான், மாலதியைக் கவர்ந்து மாதவனுக்குத் தீங்கிழைத்தலமையாதெனக் கருதி மறைவிற் சென்று கவர்தலே தகுதியென்று சென்றனள் என்பது கருத்து.
[6] முடிவு – காமந்தகியின் சூழ்ச்சியான் மாதவனுக்கும் மாலதிக்கும் மணவினை நிறைவுற, அதனால் வேட்கை, பயனுடைத்தாய் நன்முடிவுறுமென்பதும், மணம் நிறைவுறாதெனில், மாதவன் தனதுயிரை நீக்குமுகத்தான் அது பயனற்றதாய் தீயமுடிவெய்துமென்பதும் தோன்ற முற்றிலும் முடிவு நிகழுமென்றார்.
[7] இச்சுலோகத்திற் கூறப்பட்ட உவமைகளாற் பூரிவசு, உலகில் யாவரினும் மேம்பட்ட செல்வப் பெருக்குடையரென்பது விளங்கும்.
[8] களிப்புடன் – தனாது சூழ்ச்சி, பயன்பெறுங்காலம் அணுகியதென்பது களிப்பினிமித்தம்.
[9] மனம் பொருந்தா மணமகற்கு வாழ்க்கைப்படுதலினும், மரணமெய்தலே தகுதியென்பது மாலதியின் கருத்தாயினும், உறவோருடன் வதிதலான் அத்தகைய துர்மரணமும் எய்தற்கரியதாயதென்பது கருத்து; இதனால், உயிரைத் துறந்தேனும் நந்தனனுக்கு வாழ்க்கைப்பட மனமொவ்வாமையும், மாதவனுக்கு வாழ்க்கைப்பட மனமிசைந்ததையும் விளங்குவதாம்.
[10] இதனால் – இவ்வணிகலன்களான் மகரந்தனுக்கு மாலதியின் வேடம் புனைவித்து நந்தனனது மந்திரம் சேர்ப்பித்து அவனை வஞ்சித்து மணம்புரிவித்த சூட்சியாகும் மேல்வரும் காதை, குறிப்பாலுணர்த்தப்பட்டது.
[11] இலவங்கிகையொருவளே யெஞ்சியுள்ளாலாதலின், இவளை யெவ்வாற்றானும் வஞ்சித்துத் தான் மரணமெய்தலெளிதென்பது மாலதியின் கருத்து.
[12] இறத்தலைக் கோருமிவட்கு இவற்றால் யாது பயன் என்பதும், கடவுள் வழிபாடு செய்தலான் இது பொழுது பயன் சிறிதுமிலதென்பதும் மாலதியின் கருத்து.
[13] காதற் கொழுநனாகிய மாதவனது புணர்ச்சி விருப்பம், கிடைத்தற்கரியதாக, இறத்தலே மாலதிக்கு வேண்டற்பாலது; அவ்விறத்தலும் ஊழ்வலியாற் பெறற்கரிதாமாதலின், இங்குச் சிந்திக்க வேண்டுவதென்னை யென்பது கருத்து.
[14] மனமார நினைத்து – மாலதியை நினைக்கு மிலவங்கிகை மாலதியேயாமாதலின், இந்நிலையில் இவள் மாதவனது மதிவதனத்தைப் பார்த்துழி, அவன் மாலதியாற் காணப்பட்டவன் என்ன, இன்பப்பெருக்கெய்துவான் என்பது கருத்து; இதனால் மாலதிக்கு மாதவனிடத்துக் காதற் பற்று வேறூன்றியதென்பதும் அவன் காதலனாக் கிடைக்கப் பெறாமையின் இவள் உயிர்துறத்தலுறுதியென்பதும் பெறப்பட்டனவாம்.
[15] காதலி, கிடைத்தலரிதெனக் கருதி வாட்டமுறுமென்பது கருத்து.
[16] மன நிறைவு – மாலதியைப் பலகாலும் பார்த்தகாலையும், இதுபொழுது நிகழ்ந்த மன நிறைவின்மையின், இங்ஙனம் கூறப்பட்டது.
[17] ஓசை – செவிப்பொறிக்குரிய புலன் எனினும் பொறியனைத்தையு மெனக் கூறினமை, சிருங்கார ரசத்தின் சாத்துவிக நிலையான பிரளயத்தை யுணர்த்தும்; பொறிமயக்கத்தைப் பிரளயமென்ப.
[18] பேரின்பம் – அதனை யநுபவித்தாலன்றி யெவ்வாற்றானு மெடுத்துக்காட்ட வியலாமையின் பேரின்பமென்று கூறினர். இதனால் இல்லின்பத்தை வரையறைவழாதுறில் பேரின்பத்தைப் பயக்குமென்பது உணர்த்தப்பட்டது.
[19] காமநோயினுலர்ந்த சத்ததாதுக்களையுடைய மனத்திற்கு அவற்றை யுறுதிப்படுத்தும் நன்மருந்தென்பது கருத்து.; இரசமற்ற சத்த தாதுக்களுக்கு அதனை யளிக்குமொரு மருந்தை யிரசாயனம் என்ப.
[20] சொல்லமுதம் – சொல்லாகும் அமுதம் என விரியுமுருவகமாம்; நீர், தேவருணவு, முத்தி, உயிர்தருமருந்து என்னுமிப்பொருள் பற்றி அடைமொழிகள் முறையே அமைக்கப்பட்டுள்ளன.
[21] உம்மை – இங்ஙனமிவளுரைத்தற்குரிய நல்வினைப்பயனுக்குத் தகுதியற்ற என்னாலுமெய்தப்பட்டன என்னுஞ் சிறப்புப் பொருளை யுணர்த்தும்.
[22] இத்தொடருக்கு, காதலனைப் பெறவியலாமையின் மாலதி உயிர் துறப்பதுபோல, காதலியைப் பெறவியலாமையின் மாதவனுமுயிர் நீங்குமெனச் சங்கித்த மாலதி தானிறந்தும் தன் காதலன் இன்புற்று வாழ்ந்திருக்கக் கோரினள் என்பது கருத்து; இதனால் கற்பணிபூண்ட தலைசிறந்த தலைவியின் மன நிலை யுணர்த்தப்பட்டது.
[23] இவ்வதிசயவிரக்கச் சொல் – மாதவன்பால் மிகுந்தெழுமன்பின் காரணமாக இன்பத்தையும், மாலதியின் மரணங் காரணமாகத் துன்பத்தையு முணர்த்தும்.
[24] மாலதியினுயிர் விரும்பப்படின் மாலதியும் விரும்பப்பட்டவளேயாதலின், மாலதியின் கூற்றுப் பொருந்தாப் பொருளுடைத்தாதலின் இங்ஙனம் வினாவினானென்க.
[25] அருவருக்கத்தக்க துன்பமென்பது – நன்தனனுக்கு வாழ்க்கைப்படுஞ் செயலையுணர்த்தும்; இதனால் மாலதி மிகு துன்பமெய்தியும் உயிருடனிருப்பின் அஃதொன்றே போதும் என்று பாங்கியர் கருத்தேயன்றி அவள் துன்புற்றிருப்பதில் அவர்க்கு நோக்கமில்லையென்னும் மாலதியின் மொழிக்குப் பொருள் கூறப்பட்டது.
[26] உயிர் பிறர் வயத்ததாக – அகோரகண்டனது வாள் வீழ்ச்சியினின்றும் மாலதியினுயிரை மாதவன் காத்தலான் இவளது உயிர் அவன் வயத்ததாம். அங்ஙனமாகாது நன்தனன் வயத்ததாதலின் இவளுடைய உயிர் மாதவனுக்குக் குற்றமிழைத்ததென்பது குறிப்பிடப்பட்டது.
[27] குறித்த இச்செயல் என்பது உயிர் நீத்தலையுணர்த்தும்.
[28] குறிப்பு – இங்ஙனம் செய்வதென்று முன்னரே சங்கேதம் செய்துகொண்டு கம்பத்தின் மறைவிற் காத்திருக்கும் மாதவனை யழைத்தனள் என்பது குறிப்பு.
[29] விருப்பம் – ஈண்டு மாலதியின் மரணத்தையுணர்த்தும்.
[30] இது முதல் இரண்டு சுலோகங்கள் இலவங்கிகையின் இருக்கையிலிருக்கும் மாதவன் கூற்றாகலின் பிராகிருதம் சமிஸ்கிருதம் இருபாடைகளுக்கும் பொதுவாய சொற்களான் இருவரது கருத்தும் தோன்றக் கூறப்பட்டனவாம்.
[31] எண்ணாமுயற்சி – இது, ஆய்ந்தறியாது இறத்தற்கு முற்படு முயற்சியை யுணர்த்தும்.
[32] இனிமையற்ற – இவ்வடைமொழி, இறத்தலுறுதியாகலின் எதிர்காலப் புணர்ச்சியின்மையை யுணர்த்தும்.
[33] வலிந்தணைத்து – தீராத்துன்பந்தருமிறத்தலில் உடன்பட்டு விடைகூற வியலாமையின், வலிந்தணைத்தலால் இவளுக்கு உண்மை விளங்குமென்றோர்ந்து இங்ஙனம் கூறப்பட்டது. இதனால் இலவங்கிகை கருத்தும் மாதவன் கருத்தும் ஒன்றுபடத் தோன்றுவதாம்.
[34] யாவருடையதோ – என்பது தழுவுதலினிகழ்ந்த இன்பநுகர்ச்சியால் காதலனது நினைவு நிகழ்ந்தமையையுணர்த்தும்.
[35] இச்சுட்டு – காதலன் பெயரைக் கூறலாகாமையான்.
[36] மாதவனையிலவங்கிகை யெனக் கருதி யவனது கண்டத்தில் மாலையை யணிந்த அக்கணத்தில் மாலையிலங்கு மார்பு விரிந்திருத்தலானும், அதிற் றனங்களின்மையானும், இவன் இலவங்கிகையில்லை யென்றும், பிறிதொருவரானுமிங்கண் வரக்கூடாமையின் காமந்தகியின் சூழ்ச்சியால் வந்த மாதவனேயென்றுமறிந்தும், அறியாமற் கூறியவற்றை நினைந்தும் அச்சமுற்று நடுங்கினாளென்பது, நடுக்கநடிப்பாற் குறிப்பிடப்பட்டது.
[37] இதனாற் காதலி, தானே வலிந்தணைந்தின்பந்தரற்குவமைக் கூறவொண்ணாதென, அவ்வின்பத்தைத் தற்குறிப்பேற்றத்தாற் கூறினார் என்க.
[38] இதனால் – பொழுதெலாம் மாதவனையே நினைக்குமியல்பினளாய இவள் அவனது கைப்பிடியை மனம் விழைந்தேற்பள் என்பது குறிப்பிடப்பட்டது.
[39] எதனையோ – இது, பெற்றோர் மனமார்ந்து உடன்படாத மாலதியின் மண வினையை யுணர்த்தும்.
[40] புதல்வி – என்றமை, மாலதிக்குக் காமந்தகி, தாயனையளாதலின்; இவட்கு அச்சுறுமென விசேடித்தமை – அத்தகைய யான் குலக்கன்னியர்க்கு முரண்படுமொன்றை யியற்றுவனோ? என்றும் திருவருட்பாங்கா லமயம் நேர்ந்துழி விரைவிற் பயனெய்தாதொழிந்து காலந்தாழ்த்தலடாதாதலின் மாதவன் கரத்தை யாய்வின்றி விரைந்தே பற்றுக; என்னும் காமந்தகியினுட்கருத்தை யுணர்த்தும்.
[41] அறிவின்மை – இதனால், காமாவத்தை பத்துள் காட்சிமுதல், நாணமின்மையீறாக ஏழு அவத்தைகள் இவளாற்றுய்க்கப்பட்டனவென்பதும், மாதவன் முன்னிருந்தும் இவள் அவற்கு வாழ்க்கைப்படத் தாழ்க்குமேல் எஞ்சிய காமவெறி, மயக்கம், மரணமென்னுமிவற்றையுமெய்துவது உறுதியென்பதும், மணவினைக்குரிய இக்கணத்தைக் கைவிடில் மீண்டுமவனைக் காண்டலரிதென்பதும் அதனால் காலந்தாழ்த்தற்குச் சிறிதுமிது தருணமில்லையென்பதும் போதரும்.
[42] விதியின் றிறல் – சீரிய குணநலமிக்க மணமக்களைப் படைக்குந்திறல்; அது நும்மிருபேரையும் பொருந்தப் புணர்த்துமாற்றால் விளக்கமுறுமென்பது கருத்து.
[43] பெருமுயற்சியுடையான் – இதனால், மாலதி அச்சமுறற்கு நிமித்தங்கூற, அம்மாதவனை யிகழ்ந்து கூறுமாற்றால் மாதவன் இவளிடத்துப் பேரன்பு கொண்டுத் தகுதியில் செயலும் புரிந்தனன் என்றும் கொடிய பாசண்டனாலிவட்கு நிகழ்ந்த மரணத்துன்பத்தையும் போக்கியருள்புரிந்தானென்றும் நிந்தராத்துதியே செய்யப்பட்டது.
[44] இங்ஙனம் பெற்றோரை விளித்தல் – பெற்றோரது மனம் பொருந்தா மணவினைக்குடன்படுதலான் மீண்டுமவர் முகத்தைப் பார்ப்பதில் நாணமிகுதியை யுணர்த்தும்.
[45] இவ்வடைமொழி – அவரது செல்வப்பெருக்கையும் பெருந்தன்மையையுமுணர்த்தும்.
[46] மணியனையவொருமகள் – என்பது மாலதியின் சீரிய நற்குணங்களையும், பெற்றோர்க்கு மிவள்பாற்பொருந்துமன்பின் மிகுதியையும் உணர்த்தும்.
[47] படைப்புழிப்பிரமனாலும், காமற்பொழிலிற் காட்சிநிகழ்ந்துழிக் காமனாலும், முன்னரே மாதவனுக்களிக்கப்பட்ட மாலதி, சூழ்ச்சியாற் காமந்தகியாலும் இதுபொழுது அளிக்கப்பட்டாள் என்னுமிக்கருத்து உம்மையாலுணர்த்தப்பட்டது.
[48] நற்குணம் – இஃதின்றேல் ஒன்றுமமையாதெனுஞ் சிறப்புத் தோன்ற, முதற்கட் குலத்தையும், கடைக்கட் குணத்தையுங் கூறியுள்ளார். இதனாற், “குலத்தளவேயாகுங்குணம்” என்பது புலனாம்.
[49] அல்லல் – இது, அங்ஙனம் அரசனிவளைக் காண்பனேல் மகரந்தனுக்குத் துன்பம் விளைவது உறுதியென்பதை யுணர்த்தும்.
[50] மனத்தாற் காதலிப்பன் – என்றமை, அவனது காதல், பயன்பெறாமை கருதி.
[51] மங்கலமொன்றை யென்பது, மகரந்தனது மணவினையை; அது நிகழ்ந்தமேல், தனது மணத்தைக் கோரினமை நட்பின் மிகுதி கருதி.
[52] நகைத்தல் – இது, எல்லவருஞ் செல்ல, மணமக்களிரும் மகிழ்ந்தினிதிருக்குமதனைக் கருதிப் பரிகசித்தலையுணர்த்தும்.
[53] இச்சுலோகத்தில், மாதவனுக்கு வேழத்தையும், மாலதிக்கு ஓடையையும், கரத்திற்குக் கமலத்தையும், விரற்களுக்கு இதழையும், நாளத்திற்கு வாகுவையும், முட்களுக்கு மயிர்க்குச்சையும், நீரினுக்கு வியர்வையையும், காமநோய்க்கு வெப்பத்தையும் உவமையாக்கிக் கூறப்பட்டிருத்தலான் இது பூரண உவமையணியாம்.