ஒன்பதாம் அங்கம்
(சௌதாமினி[1] பிரவேசிக்கிறாள்)
சௌதாமினி – இந்த யான், அந்த[2] சௌதாமினியே! பெருமைவாய்ந்த[3] சிரீபருப்பதத்தினின்றும் வெளிப்போந்து பதுமாவதிப்பதியை யெய்தினேன்; அங்கண், “மாலதியிற்பிரிந்த மாதவன், அவளுடனிருந்தின்பந்திளைத்த விடங்களை அவடன்பிரிவாற்றாமையாற் காண்டற்கியலானாய், தனதிருக்கையை விடுத்துத் தன்றுணைக் குழூவுச் சூழ்தரப் பிருகத்துரோணியென்னும் யாறுபாய்க் குறிஞ்சி நிலத்துட் புக்கனன்”, என்றிதுபொழுதே கேள்வியுற்றேனாதலின் அவனது பாங்கர் சென்றடைவேன். ஓ! அவ்வளவு விசையில் யான் எழும்பலுற்றேனா? நகர், நாடு, காடு, மலை, நதியாவும் கண்களுக்கு நன்கு புலனாகின்றனவே! (பின்புறம் நோக்கி) நல்லது! நல்லது!
(1) உயரிய மேன்மாடங்கள், ஆலயக்கோபுரங்கள், மேல்வீடுகள் இவையுராய்ந்து, பிளவுற்று வீழ்ந்தவானமென்னத்[4] திகழுந் தெண்ணீர்ப்பரப்புறுஞ் சிந்துநதி, பாராநதி, என்னும் யாறுகட்சூழ்தர, பதுமாவதிப்பதி விளங்குகின்றது. மேலும்,
(2) அந்த இந்த இலவணா நதி, அழகிய தரங்கங்களையுடைய தாய் நாட்டு நலத்திற்கே விளக்கமுறுகின்றது. இந்நதியை அணித்துள்ள அடவிகள், கார்காலத்தில் சூனிறையானினம் விரும்பி மேய்தற்குரிய புற்கணிறைந்தனவாய் விளங்குகின்றன.
(வேற்றிடத்தைப் பார்த்து)
தெய்வத்தன்மை வாய்ந்த அந்த இந்தச்சிந்து நதியின் நீர்வீழ்ச்சி, தரையைப் பாதலம் மட்டும் பறிக்கின்றது.
(3) இந்நீர்வீழ்ச்சியினெழுகின்ற பேரொலி, மழைமுகின்முழக்கென்ன விளங்கி மருங்குள மலைமுழைக்குட்புக்கெதிரொலித்தலால், கயமுகக் கடவுட் கண்டத்தொலியை மானுகின்றது.
இக்காடுமலையகலிடங்கள், சந்தணம், ஆச்சா, சரளம், பாதிரி யென்னுமித் தருக்கணிறைந்து, கூவிளங்கனி மணங்கமழ்வனவாய், தழைவுறுங்கடம்பு, நாவல் இவற்றால் இருணிறைந்த மலைக்குகையினும், கொடிவீட்டினும் புக்கொலிக்குங் கோதாவிரி நதி பாயும் விசாலமருங்கினையுடைய தென்னடவிச் சைலங்களை நினைவுறுத்துகின்றன. வானவராற் றாபனஞ் செய்யப்பட்டுச் “சுவர்ணவிந்து” என்னுந் திருநாமஞ் சிறக்க விளங்கும் உமாபதியாரும், மதுமதி, சிந்துவென்னும் யாறுகளின் சங்கமத்தைத் தூய்மைப்படுத்தி யிங்கணெழுந்தருளுகின்றார்.
(4) “புவனம் படைக்கும் புங்கவ! போற்றி
அவற்றிற் கருண்மறையுறைவே! போற்றி
மதிக்கலையணியும் மௌலியாய்! போற்றி
மதனற்சுட்ட நுதற்கணாய்! போற்றி
முழுமுதற்குருவே முதல்வனே போற்றி”
(செலவை நடித்து)
(5) நீருண்ட மேகங்களாற் கருத்துயர்ந்த மலைச்சாரலையுடையதும், களித்தகவு மயூரங்களின் கேகா நாதங்களையுடையதும், பறவைகள், பாதபங்களிற் கூடுகளைமுடைய அவற்றாற் காண்டற்கினியதுமாகிய பிருகதச்சுமாவென்னு மிப்பருப்பதம், கண்ணிற்குக் களிப்பையளிக்கின்றது.
(6) இங்கண், முழையுறை காளைப்பருவக்கரடிகள், இறைச்சிகளை யுமிழ்ந்துமிழ்ந்து புசிக்குங்கால் அவ்வுமிழொலி, எதிரொலியாற் பருமிதமெய்துகின்றது. வேழங்கள், ஆனைவணங்கித் தருக்களை முறித்தெறிய அவற்றிற் பெருகிய பான்மணம், தண்மையுந்துவரும் இனிமையோடியைந்து பரந்து கமழ்கின்றது.
(வானத்தை நோக்கி)
என்னே! நண்பகல் நண்ணியதே! ஏனெனில் இதுபொழுது,
(7) குருட்டுநாரைகள், கும்மட்டிச்செடியை விட்டுத் தளிர் நிறைந்திலங்கும் பச்சிலை மரத்தையடைகின்றது. பூர்ணிகையென்னும் பறவைகள், நதிக்கரையில் வளர்தருங் காயாமலர்க் கொத்துக்களைப் புசித்துத் தண்ணீர் பருகச் செல்லுகின்றன. பரதம் என்னும் பறவைகள், தினிசமரத்தின் அடிமருங்குப் பொந்திற்புக்கு வசிக்கின்றன. கொடியிற் கட்டிய கூடுகளிலிருந்து கூவுங் கபோதங்களின் ஒலியை அனுசரித்துக் குக்குபங்கள் கூவுகின்றன.
நிற்க:- மாதவனையும் மகரந்தனையுந் தேடி, தொடங்கிய செயலைச் செய்து முடிப்பேன்.
(சென்றனள்)
(விட்கம்பம்)
(மாதவனும் மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)
மாதவன் – (வருத்தமுடன் நெட்டுயிர்த்து)
(8) இத்தகைய இடும்பை நிகழ்ந்துழி யிவ்விதயம், மாலதி கிடைத்தற்குரியளென்னும் நம்பிக்கையை நாடவில்லை. அன்றியும், ஆசையற்றதாக அந்நம்பிக்கையை யிழந்தொழியாது, மயக்கமாகும் பேரிருளிற் புக்குழலுகின்றது. இந்தயாம்[5] ஊழ்வினைக்கொடுமையாற் செய்வகையறியா விலங்கினம்போல அத்துன்பத்திற் புக்குழலுகின்றோம்.
மாதவன் – ஆ! காதலி! மாலதி! எங்குச் சென்றனை? உண்மையை அறியொணாவண்ணம் வியக்கத்தக்கவாறு என்னே! விரைவிலழிவெய்தினையே! அடி! அருளிலாதவளே! அருள்புரிக; என்னை யின்புறுத்துக.
(9) மாதவனைக் காதலனாகக் கொண்ட மாலதி! என்பால் வைத்த காதற்பற்றை யிழந்தனையோ? பொற்றொடியணிந்து வனப்புறுமுனது கரம், மணப்பெருவிழாவே வடிவெடுத்தாங்கு எவனை முன்னரின்புறுத்தியதோ; அடி கண்ணே![6] அம்மாதவனேயான்.
அன்ப! மகரந்த! அத்தகைய அன்பின் நிகழ்ச்சி உலகிற் கிடைத்தற்கரியது.
(10) கணந்தொறுங் கொடுமைத்தாய் இடையறாது வருத்துங் காமநோயை, சேயிதழ் மலர்களன்ன மெலிந்த உறுப்புக்களான் அவள் பொறுத்தனள். மேலும், “யான் கிடைத்தற்கரியன்” என்னுமாத்திரையில் உயிரையுந் துரும்பெனக் கருதிய தனை விடுத்தற்குந் துணிந்தனள். இதனிற் பிறிதியம்புமாறென்னை? இரு முதுகுரவரையுங் கடந்து கைப்பிடிமங்கலத்தை இவள் நிறைவேற்றினாள். (மேலும்)
(11) மணவினைக்கு முன்னர், இவள் நந்தனற்கு வாழ்க்கைப்படுஞ் செய்தி நிகழவே, என்பால் நம்பிக்கை யிகந்த மாத்திரையில் உயிநிலையுலைந்துழி நிகழுமின்னலெய்தி யாங்கு கலக்கமுறுங் கரணங்களையுடையளாய், தனதன்பின் வழிவரும் ஆழ்ந்த கருத்தை, அந்நிலையினும் அலமரந்து விரித்து விளக்கினாள். இந்நிகழ்ச்சியைக் கண்ட அளவில் யானும், இடும்பையினலைவுறும் இதயத்தனாயினேன் என்னுமிவ்வுண்மையை நீயும் நினைக்கின்றனையா?
(மனவருத்தமுடன்) அடா! ஆ! என்னே! வியப்பு!
(12) ஆழவருந்துமிதயம், வெடிப்புறுகின்றதெனினும், அஃதிருகண்டமாகப் பிளவுபடவில்லை. கலக்கமெய்திய காயம், மயக்கமெய்துகின்றதெனினும் உணர்ச்சியை நீக்கிற்றில்லை. உள்ளெரிவு மெய்யினை யெரிக்கின்றதெனினும், முற்றிலுஞ் சாம்பராக்கிற்றில்லை. உயிர்நிலை குலைக்குமூழ்வினை, துன்புறுத்துகின்றதெனினும், உயிரை வேறறக்களைகின்றதில்லை.
மகரந்தன் – விதியன்ன கொடிய பரிதியும், தடையின்றியெரிக்கின்றான். உனதுடனிலையும் இத்தன்மைத்து. ஆதலின், இம்மரைமலரோடையின் மருங்கிற் சிறுபொழுதமர்க; இங்ஙனமன்றே!
(13) தண்டுயர்ந்தன்றலர்ந்த மலர் நிறைந்த தாமரையோடையில், வழிந்தொழுகு மரந்தமணங்கலந்து வீசுமிக்காற்று, அங்கணலைவுறுந்திரைகளின் றிவலைகளாற் குளிர்ந்து உன்னை உயிர்ப்பிக்கும்.
(சுற்றி வந்தமர்கின்றனர்)
மகரந்தன் – (தனக்குள்) நிற்க:- இங்ஙனம் இவனைப் பிறிதொன்றில் இழுப்பேன். (வெளியீடாக) நண்ப! மாதவ!
(14) இவ்வோடையில் களித்தின்னிசை பாடும் அன்னப்பறவைகளின் சிறைகளானடிக்கபட்டு அலைவுறும் பருத்த தண்டுடைக் கமலங்களையுடையனவும், அகலாவனப்புடையனவுமாகிய சிலபகுதிகளை, கண்ணீர் விழுந்தெழுமிடையிற் காண்டி.
(மாதவன் மிக்க வருத்தமுடன் எழுகின்றான்)
மகரந்தன் – என்னே! எனதுரையை மேற்கொள்ளாமல், மனமழிந்த நிலையில் வேற்றிடஞ் செல்ல முற்பட்டான். (பெருமூச்செரிந்தெழுந்து) நண்ப! மனந்தெளிக; பார்க்க.
(15) கொடிவீடு மல்கும் நதியினது தெண்ணீர், நீர்வஞ்சிமலர்களான் மணங்கமழ்கின்றது. மருங்குகளிற் காட்டுமுல்லையரும்புகள், அலர்தருகின்றன. மலைச்சாரலை யெய்திய மழைமுகில், மலர்தரு மல்லிகை விளங்கு முன்புறங்களில், மயினடம் பயிறலிற் காழக இல்லமாய் அமைகின்றது. மேலும்,
(16) இம்மலைவெளிகள், முகைவிரிந்தலர்ந்து வனப்புமிக்கக் கடம்பினை யுடையனவாயும், திசைகள் கருமுகிற் குழுவாற் கரியனவாயுமிலங்குகின்றன. நதிப்புனல் பாயுஞ் சதுப்பு நிலங்கள், முளைத்தெழு முனையின் அழகுறுந்தாழை யுடையனவாய் அமைகின்றன. இவ்வனபந்தியும், ஆம்பியும், வெள்ளலொத்தியும் மலர்ந்து மணங்கமழ்கின்றது.
மாதவன் – அன்ப! பார்க்கின்றேன்! ஆயினும், இதுபொழுது காடுமலையிடங்கள், காண்டற்கியலா வனப்பெய்துகின்றன. முற்றும் உணர்ந்த நீ, இவையெற்குத் துன்புறுத்துவனவென்றோர்ந்தும், இவற்றைத் தெரிவித்ததென்னை? (கண்ணீருடன்) அன்றேல், எனதூழ்வினையன்றிப் பிறிதென்னை?
(17) மலர்தருமருதம், ஆச்சா இவற்றின் நறுமணங் கமழுங் கீழ்ப்பெருங்காற்றின் விசையால் அலைவுறுமுகிற்படலம், இந்திரநீலமணியின் பிளவென்ன விளங்கவும், புதுமழையாற் பூழிமணங்கமழவும் நிகழுமிந்நாட்கள், வெப்பநீர் தணியவும், வேட்கை நீர் அரும்பவும் வனப்பெய்தி வந்தடைந்தன.
ஆ! காதலி! மாலதி!
(18) இதுபொழுது யான், இத்திசைகளையெங்ஙனம் காணமாட்டுவேன். இவற்றில் பசிய பச்சிலைத் தருவன்ன நீனிற முகில்கள், அடர்ந்து சூழ்தருகின்றன. குளிர்காற்று, புதுமழைத் திவலைகளைத் தூற்றிவீசுகின்றது. வானவில், வளைந்திலங்குகின்றது. களிப்புறு நீலகண்டப்பறவைகள், காமப்போரியற்றி யகவுகின்றன.
(நெட்டுயிர்த்துத் துன்ப நுகர்ச்சியை நடிக்கிறான்)
மகரந்தன் – நண்பனது நிலைமாற்றம், சொல்லொணாவண்ணம் மிகக்கொடியதாய் அமைந்தது. (கண்ணீருடன்) வச்சிரத்துருவினனாய யான், உண்மையறிந்திலனாய்[7] இவனையின்புறுத்தற்கு இங்ஙனம் முற்பட்டேன். (நெட்டுயிர்த்து) எவ்வாற்றானும் இவனையிவனை யின்புறுத்துமாறின்மையான், “மாதவன் பிழைப்புறும்” என்னும் நம்பிக்கை முற்றிலும் முடிவுற்றது போலாம். (அச்சமுடன் பார்த்து) ஓ! இவன் மயக்கமெய்தினனே! ஆ! தோழீ! மாலதி! உன்னை வெறுத்தென்னை? அருளிலி[8]யாயினை.
(19) முன்னர் மாதவனைக் காதலித்துச் சுற்றத்தாரையுந் துறந்த நீ, இவனை மணத்தற்கேவன் செயற் புரிந்தனை. அங்ஙனமாக, தோழீ! குறைசிறிதில்லா இக்குலமகனிடத்துக் கருணையிகந்த முறைமையீதென்னை?
ஓ! இதுபொழுது முயிர்த்திலனே! அந்தோ! பறிகொடுத்தேன்.
(9) அம்மம்ம! இதயம் பிளவுறுகின்றது; தேகக் கட்டுச்சிதைவுறுகின்றது; உலகம் பாழ்படுகின்றது; உள்ளம் அவியாச்சுடருடன் எரிதருகின்றது; உயிர்களுக்குயிராய ஆன்மா, வருந்திக்கலக்கமெய்திக் காரிருளின் மூழ்கியாங்கு அமைகின்றது; பெருமயக்கம் பொறிநுகர்ச்சியைத் தடைப்படுத்துகின்றது. நல்வினை குன்றிய யான் என் செய்வேன்.
அந்தோ! கொடிது; கொடிது;
(21) உறவினர்க்குழு மனமகிழ்நிலவு விழாவும், மாலதியின் நாட்டங்கட்கினிய மதியமும், மகரந்தனையின்புறுத்துவானும், நிலவுலகத்திலகமுமாகிய அந்த இவன், இதுபொழுது அழிவெய்துகின்றான்.
ஆ! அன்ப! மாதவ!
(22) உன்னை வலிந்தணைத்துழி உறுப்புக்களிற் சந்தணச் சேறாகவும், பார்த்துழி நயனங்களிற் சரற்கால நிலவாகவும், நினைத்துழி மனத்திற் பேருவகையாகவும், எற்கு நீ அமைந்தனை; எனதுயிரேயனைய[9] பேரழகு வாய்ந்த அத்தகைய உன்னை, எதிர்பாராத நிலையிற் கவர்ந்தேகுங் காலனால் யானுங் கொல்லப்பட்டேன்.
(மாதவனுடலைத் தடவி)
(23) கருணையற்றவனே! முறுவலான் மலரும் விழியினால் என்னைக் காண்க; கொடியோய்! என்பால் ஒரு சொல்லையேனும் கூறுக. மரந்தனை அன்பனாகவுடைய மாதவ! என்னை, மனமுவந்துடன்திரி தோழனாக ஏன் கருதுகின்றாயில்லை.
(மாதவன் உணர்வெய்துகின்றான்)
மகரந்தன் – (நெட்டுயிர்ப்புடன்) அன்று தேய்த்த நீலமணியன்ன ஒளிமிக்கு வனப்பெய்திய மழைமுகில், மழைத்துளி தெளித்து எனதன்பிற்குரிய நண்பனை பிழைப்புறுத்துகின்றது; ஆனந்தம்! பிழைத்தனனே!
மாதவன் – இவ்வனத்தில் காதலியின்பால் யாவனைத் தூதுவிடுப்பேன்.
(24) கனிநிறைந்து கருத்த நாவற்புதர்களிற்றடைப்படுதலால் அலைகளடங்கிவரும் நதியினது வடபான் மலைமுடியை, பந்திபந்தியாய் நெருங்கி வளர்ந்து முதிர்ந்த பச்சிலைமரம்போற் கரிய புதிய புயல் வந்தடைகின்றது.
(பரபரப்புடன் எழுந்து மேனோக்கிக் கைகூப்பினனாய்)
(25) காட்சிக்கினியனே! நினதன்பிற்குரிய காதலியாகும் மின்னல், உன்னைத் தழுவுகின்றது[10]. அன்பின்மிக்க சாதகப்புட்கள், நின்னையே நோக்கி வந்தடைகின்றன[11]. கீட்டிசைக்காற்றும், நன்கு வீசி உன்னையின்புறுத்துகின்றது. இந்திரனது வில்லாகு மொளிவீசுமணிகலனை யெப்புறத்தும் தரிப்போய்! நின்பால் என் விருப்பைத் தெரிவிக்கின்றேன்.
(கேள்வியை நடித்து) ஓ! இம்முகில், எதிரொலி நிறைந்த கந்தரங்களிலிருந்தகவும் நிமிர்ந்த கந்தரங்களையுடைய மயில்களினது, இனிய குரலுடன் இயைந்த உங்காரவொலியால் என்னையனுமதிக்கின்றது. யான் எனது விருப்பத்தைக் கோருவேன். முகிற்பகவனே!
(26) உலகில் உலவு நீ! என் காதலி மாலதியைத் திருவருட்பாங்காற் காணுவையேல், முதலில்[12] அவளையின்புறுத்திய பின்னரே மாதவனது நிலைமையைத் தெரிவித்தல் வேண்டும்; அங்ஙனம் கூறும் உன்னால் ஆசாபாசம் அறுபடாதிருத்தல்[13] வேண்டும். அவ்வாசாபாசம் ஒன்றே அவ்விசாலவிழியாளது உயிரை முயன்று பாலிக்கின்றது.
(மகிழ்ச்சியுடன்) ஓ! செல்லத்தொடங்கினனே! ஆதலின், இனிப்பிறிதோரிடஞ் செல்வேன்.
(என்று நடக்கின்றான்)
மகரந்தன் – (மனவருத்தமுடன்) காமநோயாகுமுபராகம்[14] மாதவனது வதனமதியைத் துன்புறுத்துகின்றது. ஆ! தாதையே![15] ஆ! அன்னையே! ஆ! காமந்தகிப்பெரியோய்! என்னைக் காத்தருளவேண்டும். மாதவனது நிலையைக் காணல் வேண்டும்.
மாதவன் – பெருமோசம் விளைந்தது.
(27) அன்றலர்ந்த வெள்ளொத்தி மலர்களிற் காந்தியும், மான்களிற் கண்களும், கயங்களில் நடையும், கொடிகளில் மேனியின் மென்மையும் அமைய இக்காட்டில் என் மனைவி, இவைகளாற் கொலையுண்டுபகுக்கப்பட்டாள்[16]; என்னுமிஃதுண்மையே! ஆ! காதலி! மாலதி!
மகரந்தன் – (28) நண்பனும் குணங்கட்குறையுளும், உயிர்த்தலைவனும்[17], பூழியாடன் முதலாய்க் கேண்மை மிக்கவனுமாகிய இம்மாதவன், காதலியின் பிரிவான் விளைந்த மனப்பிணியாகும் நோயினால் வருந்துங்கால், கொடியமனமே! நீ, இருகண்டமாகப் பிளவுற்று ஏன் அழிவெய்தவில்லை.
மாதவன் – உலகிற் பிரமனது படைப்பமைப்பு ஒருபொருட்கண் பிறிதொருபொருட் செயல் எளிதில்[18] விளங்கி நிற்குமியல்பினது. இது நிற்க:- (உரத்த குரலில்) ஓ! இந்த யான்! (வணங்கி) காடுமலையிவற்றில்வாழுமுயிர்களே! உங்கள்பால் தெரிவிக்கின்றேன்; நீவிர், யானுரைக்கும் இதைச் சிறிது செவியேற்று எற்கருள்புரிக.
(29) வனத்துளுறையும் நீவிர், உறுப்பெலாமியலழகு பொருந்துங்குலக்கன்னியைக் கண்டீரோ? அன்றேல், இவட்கு நேர்ந்ததென்னை யென்பதையேனுமறிவிரோ? அன்பரீர்! அவளது வயதுநிலையைக் கூறுவேன் கேண்மின்; மதனன்[19], அவளது மனத்தில் பெருமைசால் நினைவைப்புரிவானும், உடலில் இனிமையைத் தருவானுமாய் நிலவுகின்றான். அந்தோ! கொடுமை!
(30) நடம்பயிலு நிமித்தம் தோகையை விரித்த மயூரம், எனது வார்த்தையைக் கேகாநாதங்களாற் றடுக்கின்றது. சகோரம், காமமதத்தாற் கண்சுழல்வுற உள்ளுவகையாற் றன் காதலியைப் பின்றொடருகின்றது. கருமுகக் குரங்கும், பெண்குரங்கின் கதுப்பை மலர்ப்பராகத்தாற் சித்திரிக்கின்றது. யாரையிரப்பேன்; யாண்டும் எனதிரத்தல், பயனற்றதாய் ஒழிகின்றதே!
(31) இந்தச் செங்குரங்கும், உதட்டின் செம்மையாற் சிவந்த பல்வரிசைகளையுடையதும், செருகம்புல் மலர்போற் சிவந்த கன்னங்களையுடையதும், முதிர்ந்து வெடித்த சேயமாதுளையின் ஒளிவீசுவதுமாகிய பெண்குரங்கின் முகத்தை நிமிர்த்து அதில் முத்தமளிக்கின்றது.
இந்த வேழம், கான்மரத்தடியிற் கழுத்தையமைத்து இளைப்பாறுகின்றது; இதன்பாலும் இரத்தற்கிடனிலதே!
(32) பிறிதொரு காட்டுவேழம், நமைப்பினால் அரும்பிய நயனங்களையுடைய பிடியானையை, கோட்டினுதியாற் சொறிந்தும், முறையே அசைக்கப்படுங் காதுகளின் காற்றால் இன்புறுத்தி வீசியும், ஆனைவணங்கிமரத்தின் இளந்தளிர்களை யுண்டெஞ்சிய கண்டங்களை அதற்கூட்டியுண்பித்தும் இச்செயல்களாற் காதலியைக் காதற்படுத்துஞ் செயற்றிறனைப் பயிலுகின்றது.
(வேற்றிடத்திற் பார்த்து) இவ்வேழமோ!
(33) தன்னுயிரனைய பிடியானையின் பிரிவாற் கலக்கமெய்தி, மழைமுகின் முழங்கியும் மெல்லிய பிளிறொலியை உள்ளுற நிகழ்த்தவில்லை; அணித்துள்ள ஓடையினும் தாமரைத் தண்டைப்பறித்துப் புசிக்கவில்லை. மதநீரின்மையான் வாடிய வண்டினம் வாய்வாளாது புறஞ்செல அதனால், வனப்பழிந்த வதனத்தொடு வருந்துகின்றது.
இத்துயரம்[20] வேண்டாம். (மகிழ்ச்சியுடன்) பிறிதொரு மதங்கொண்ட வேழக்குழுவின் வேந்து, அன்றலர்ந்த அடப்பமலரொப்ப மோப்பிற்கினிய நறுமணம்மிக்கு, கதுப்பின் வழிந்தொழுகு மதநீர்ப்பெருக்கினாற் குழைசேறாய கரைகளையுடையதும், தாமரைமலர்களைப் பிடுங்கியெறியச் சிதறியவிதழ், தாது, கிழங்கு, முளையிவற்றையுடையதும், பனைமடலனைய காதுகள் இடையறாதசைய அதனாற் சிதைவுற்றுத் தெரிக்கும் அலைத்திவலைகளால் அச்சுறும் அன்றில், வெண்ணாரையென்னும் பறவைகளையுடையதுமாகிய ஓடையைக் கலக்கி, பிடியானை மிக்க மகிழ்வுடன் கேழ்க்கக் கம்பீரமாகக் கர்ச்சித்து விளையாடுகின்றது.
நிற்க:- இதனோடு பேசுகின்றேன்; மாட்சிமிக்க வேழத்தலைவ! நீ, புகழத்தகுங் காளைப் பருவத்தை யெய்தப்பெற்றவன்; காதலியைப் பின்பற்றி வயப்படுத்துந்திறலும் உன்பால் அமைகின்றது.
(நிந்தையுடன்)
(34) விளையாட்டாகத் தாமரைத் தண்டைப்பிடுங்கி யூட்டியபின்னர், விரிந்தலர்ந்த தாமரைமலரின் மணங்கமழும் நீரை வாய்மடுத்து அவ்வாய்நீரைப் பிடியானைக்கு அளிக்கின்றாய்; பின்னும் துதிக்கையால் நிரைமுகந்து அத்திவலைபடிய அதன்மேல் இரைக்கின்றாய்; என்னுமிவை விரும்பற்பாலன. புணர்ந்தின்பந்திளைத்து முடிந்துழி அப்புணர்ச்சியின் சோர்வுதீர, வளைவிலாத் தண்டுடைத்தாமரை மலராகுங்குடையினை, அன்புமீக்கொடுபிடிக்கின்றாயில்லை[21];
என்னே! மறுமொழி கூறாது என்னை மதிக்காமற் செல்லுகின்றது.
அந்தோ! மகரந்தனுடனுரையாடலொப்ப, வனத்துறையுமிவ்வேழத்துடன் பேசுகின்றேன். ஆதலின் மதியீனன் ஆயினேன். ஓ! அன்பின்மிக்க நண்ப! மகரந்த!
(35) இவ்வண்ணம் யான் தனித்திருந்துயிர்த்தலாகும் துயரமும், வறிதே நிகழும் அனுபவத்தால் பொருளின் வனப்பும், பயனற்றனவாம். நீயும் அவளும் இல்லாத நாள் அழிவெய்துக; உங்களிடத்திலன்றிப் பிற அற்பர்பால் நிகழுமகிழ்ச்சியும், கானனீரொப்பவ றிதேயாம்.
மகரந்தன் – ஓ! இவன் வெறிமயக்கில் மூழ்கியும் எற்குறித்த ஒருசில குறிப்பினால் இவனது இயலன்பின் சாரமே[22] மேழெழுகின்றதாகலின், என்னையணித்திருப்பவனாகவே கருதுகின்றான். (முன்னின்று) நல்குன்றிய அந்த மகரந்தன் உனது பக்கலிலேயே இதோ இருக்கின்றான்.
மாதவன் – ஓ! அன்புடைத்தோழ! என்னை வலிந்தணைத்தின்புறுத்துக; காதலி மாலதியைக் குறித்து ஆசையற்றவனாயினேன்.
மகரந்தன் – எனதுயிர்க்கரசை இக்கணத்தே (அணைத்து) இன்புறுத்துகின்றேன்; (பார்த்துத் துக்கமுடன்) அந்தோ! என்னைத் தழுவ விருப்பம் நிகழ்ந்த அப்பொழுதே மயக்கமெய்தினனே! இனி யான் உயிர்த்திருத்தல் வேண்டாம். இனி என் நண்பன் முற்றிலும் இலன் என்று துணியற்பாலதே பொருத்தம்.
ஆ! அன்ப!
(36) அன்பின் காரணமாகக் கொதிப்பெய்தியதும், காரணமின்றியே உன்னைக் குறித்து நடுக்கமெய்திப் பல துன்பங்களை யெண்ணுவதுமாகிய எனது மனம், நீ மயக்கமெய்திய இந்நிலையில் அச்செயல் யாவுமொழியக் கேடுற்றது.
மயக்கமற்ற நிலையில் அத்தகைய உன்னுடனிருந்து இன்பந்துய்த்துக் கடத்திய அக்காலங்கள் நலமாயினவன்றே! இதுபொழுதோ:-
(37) நீ செல்லுமிக்கணத்தில் எனதுடல், சுமையாகவும், உயிர் வைரமுனையாகவும், திசைகள் பாழ்படுவனவாகவும், பொறிகள் பயனற்றனவாகவும், காலம் கொடிதாகவும், உயிருலகம் எங்கும் ஒளியற்றதாகவும், எனக்குத்தோன்றுகின்றன.
(ஆலோசித்து)
மாதவனது மரணத்தைக் காண்டற்கு யான் உயிருடனிருப்பனோ? இம்மலைமுடியிலேறிப் பாடலாவதி நதியில் விழுந்து மாதவற்கு முன்னரே யானிறப்பேன். (துக்கத்துடன் திரும்பிப்பார்த்து) அந்தோ!
(38) மாலதியினது, புதுமையான காதற்பெருக்கால் விளைந்த விலாசங்களாற் கலக்கமெய்திய கண்கள், வியப்பின்மிக்கவாய் முன்னர் எதனைக் கண்டின்புற்றனவோ; அத்தகைய கருங்குவளை மலரனைய காந்தியுடையிம்மேனியை வலிந்து பற்றியணைத்தும் எனக்கும் இதில் திருத்தியுண்டாகவில்லை.
என்னே! என்னே! உடலமென்றில் இத்துணைக் குணங்களின் சேர்க்கை எங்ஙனம் அமைந்ததோ? தோழ! மாதவ!
(39) மாசறு மதியம், கலைகணிறைவுறுமன்றே இராகுவின் வதனத்தை யெய்தியது, மழைமுகில், வந்து குழுமிய அக்கணமே, பெருங்காற்றின் விசையாற் சிதைவுற்றது. சீரிய தருவும், பழந்தரு பருவம் வந்துற்றபொழுதே காட்டுத்தீயாற் கரிந்தொழிந்தது. நீயும் உலகிற்குச் சிரோமணியாகும் நிலையினை யெய்திய அப்பொழுதே காலன் வயத்தனாயினை.
ஆதலின் இந்நிலையெய்திய நண்பனையுந் தழுவுகின்றேன். இவனும் இதுபொழுது இப்பொருளையே கோரியுள்ளான். (தழுவி) ஓ! அன்பனே! கலைநிறை மதியமே! குணக்குன்றமே! ஆ! மாலதியே[23] வலிந்துபற்றுமுயிர்க்காதல! ஆ! காமந்தகி, மகரந்தன் இவர்களையின்புறுத்துவோய்! மாதவ! உனது வாழ்க்கையின் முடிவு நிலையில் நீ கோரிய பொருள், இந்த மகரந்தனது கிடைத்தற்கரிய தழுவலேயாம். அன்பனே! இனிச்சிறுபொழுதும் மகரந்தன் பிழைத்திருப்பன் என்று கருதவேண்டாம். ஏனெனில்:-
(40) நீ பிறந்த நாண்முதலாய் என் உடனிருந்தமையின் கைத்தாயின் றன்னியத்தைக் கலந்தே பருகினை. தாமரைச்சுமுகனே! அங்ஙனமாக, உறவினர்க்குழு வழங்கு மெண்ணீரையும் தனியனாய் பருகுவை யென்பது தக்கதன்று.
(துக்கமுடன் இவனை விடுத்துச் சுற்றி நடந்து)
இங்கட் கீழ் மருங்கிற் பாடலாவதி நதி பாய்கின்றது. தெய்வப்புனலே!
(41) எனது அன்பிற்குரிய நண்பற்குப் பிறவி வாய்க்கு மவ்விடத்திலேயே யான் பிறத்தல் வேண்டும்; மீண்டுமவற்கே உடன் செலுந்துணைவனாதலும் வேண்டும்.
(என்று விழுதற்கு விரும்புகின்றான்)
சௌதாமினி – (விரைவில் வந்து தடுத்து) குழந்தாய்! கொடுஞ்செயலொழிக்க.
மகரந்தன் – (பார்த்து) தாயே[24]! தாங்கள் யார்? எற்றிற்கு என்னைத் தடைப்படுத்தியுள்ளீர்.
சௌதாமினி – ஆயுணிறைந்தவனே! நீ மகரந்தனா?
மகரந்தன் – விடுத்தருள்க; யான் அந்த நல்வினை குன்றியவனே.
சௌதாமினி – குழந்தாய்! யான் யோகினிப்பெண்ணாவேன்; என்பால் மாலதியின் அடையாளமும் இருக்கின்றது. (மகிழமாலையைக் காட்டுகிறாள்)
மகரந்தன் – (பெருமூச்சுடனும் துயரத்துடனும்) மாலதி பிழைத்திருக்கின்றனளா?
சௌதாமினி – ஆம்; குழந்தாய்! மாதவற்கு விளைந்த கேடென்னை? நீ கொடுஞ்செயற்புரிய முயல்கின்றனையாதலின் அதனைக் கண்ட யான் நடுக்கமுறுகின்றேன்[25].
மகரந்தன் – பெரியோய்! அவனை மயக்கமெய்திய நிலையிலேயே வெறுப்பினால் விடுத்து இவணெய்தினேன்; ஆதலின் வருக; விரைவிலின்புறுத்துவோம்[26].
(விரைந்து செல்லுகின்றனர்)
மகரந்தன் – (பார்த்து) ஆனந்தம்! நண்பன் நினைவுற்றனனே!
சௌதாமினி – இருவரது உடலமைப்பும் மாலதி தெரிவித்தாங்கு அமைகின்றது.
மாதவன் – (களைதீர்ந்து) ஆயே! யாவரோ என்னை விழிப்புறுத்தியுள்ளார். (ஆலோசித்து) யான் கருதுவேன்; என்னிலை கருதாது புரியுமிச்செயல், மழைத்துளி தூற்றுமிக்காற்றினதேயாகும். மாட்சிமிக்கக்கீட்டிசைக் கெண்டலே!
(42) நிருண்டமுகிலையலைக்க. சாதகப்புட்களையின்புறுத்துக; மயூரங்களைக் கேகாநாதம் அகவச் செய்க; தாழைகளையடெர்த்துக; மனையிற்பிரிந்தோன் மயக்கமெய்தி, அப்பிரிவாற்றாமையாகும் பிணியைத் தணிக்குமேல்வையில், அருளிலீர்! மீண்டுமவற்கு நினைவெனு நீழலை நிகழ்வித்து என் செயக்கருதுகின்றீர்[27]?
மகரந்தன் – மன்பதைக்குயிராய இம்மாருதம், நலனே புரிந்தது. இன்னும்,
(43) இக்கார்க்கால், தாழைமணங்கமழ்ந்தும், மாநகர்ப் பிரவிடை மகளிரது திரிதரு சுரிகுழற் கொடியினையலைத்தலே தலைக்கீடாக அவர்மிக நுகர்ந்தும், அன்றியும், அடப்பமுகையலர்த்தி யப்பராகந்தோயுமறுகாலினம் ஞிமிர அவ்வொலி நிறைந்தும் வீசுதலான் தலைமகட்பிரிந்தாரைத் தன்வயப்படுத்துகின்றது.
மாதவன் – மாருதத்தேவே! அங்ஙனமாயினும்[28] நின்னையே வேண்டுவன் யான்.
(44) மலர்தரு கடம்புக்குழுப்புழுதியோடு எனதுயிரைக் காதலியினிருக்கையைச் சேர்ப்பிக்க; அன்றேல், அவளது உடலுறைந்து நளிரிரும் ஒன்றையேனும் என்பாலீட்டுக; தாமே[29] தமியேன் சரண்.
(கைகூப்பி வணங்குகின்றான்)
சௌதாமினி – அடையாளத்தையளித்தற்குச் சாலச்சிறந்த[30] அமயமிஃதன்றோ? (அஞ்சலியில் மகழணியலை அளிக்கிறாள்).
மாதவன் – (கருத்துடனும்[31], மகிழ்வுடனும், வியப்புடனும்) என்னே! காதலியின் கொங்கைகளின் கொம்மையாற் கட்டவிழ்ந்த இம்மகிழ்மாலை, காமவேட்கோட்டத்தின் முற்றத்திலங்கு மகிழ்த்தருவின் மலர்களான், யான் றொடுத்ததன்றோ? (நன்கு நோக்கி) ஐயப்பாடென்னை? ஏனெனில், இம்மாலையினது அந்த இந்தப்பகுதி;
(45) மதிமயக்குமதியனைய அவளது முகத்தழகை யாழ நோக்கி, அங்கண் ஒளிர்தருங் காமவிலாசங்களான் என்பால் விரைந்தெழுங் காமவேட்கையை மறைத்தற்பொருட்டே தொடுக்கப்படுமதில் மலர்கள் மாறுகொள அமைந்திருப்பினும், இலவங்கிகைக்குக் கழிபேருவகையை விளைத்தது.
(களிப்புடனும் வெறியுடனும் எழுந்து)
சினமுடையாய்! மாலதி! இவண் காண்பேன். (சினத்துடன் போல) அடி! என்னிலையறியாதவளே!
(46) மெல்லிநல்லாளே! உயிர்போகின்றது; இதயம் தெறிக்கின்றது; உறுப்புக்கள் எரிதருகின்றன; இருள் எப்புறமுஞ் சூழ்தருகின்றது; இதுவேளை (என்னைக் காத்தற்கு) விரைந்து முற்படல் வேண்டுமேயன்றிப் பரிகசித்தல் அடாதாகலின், (உனது வடிவத்தைத் தோற்றுவித்து)க் கண்களுக்குக் களிப்பையளிக்க; என்பாற் கருணையிலியாகாதொழிக.
(எப்புறமும் பார்த்து வெறுப்புடன்) மாலதி இங்கண் இருப்பளென்பது எங்ஙனம்? (மகிழமாலையைச் சுட்டி) ஆ! காதலியின் அன்பிற்குரியாய்! பரமோபகாரியாயினை.
(47) அன்புடைத் தோழீ! தடைப்படாது பெருகித் தாங்கற்கியலாக் காமவெறியின் கொடுமைகள், மயக்கமுற்றிய விதனத்தான் மிக்கவாய் நிகழுமத்தறுவாயில் உனது புணர்ச்சி, அக்குவளைவிழியணங்கினது சீரிய உயிர்க்காவலாய் அமைவதாகலின் அது, யான் அவளை அணைத்தலை[32] நிகர்த்ததாகும்.
(துயருடன் பெருமூச்செறிந்து)
(48) என்னுடையதும், மான்விழியாளுடையதுமாகிய கண்டத்தில் இன்புறுத்துவனவும், காமநோயை வளர்ப்பனவும், அவ்வப்பொழுது ஆழநிகழுங் காதற்பற்றுடையனவும், அன்பிற்குறையுளுமாகிய உனது அப்போக்குவரவுகளை, அந்தோ! யான் நினைக்கின்றேன்.
(இதயத்தில் வைத்தவண்ணம் மயக்கமெய்துகிறான்)
மகரந்தன் – (அணுகி) அன்பனே! களைதீர்க;
மாதவன் – (களைதீர்ந்து) மகரந்த! நீ பார்க்கவில்லையா? மாலதியின் அன்புருவான இம்மாலை திடீரென்று எங்ஙனமிருந்தோ என் கரத்திற் கிட்டியது. இஃதென்னை[33]யென்று கருதுகின்றாய்?
மகரந்தன் – இப்பெரியோரான யோகினியே[34] மாலதியின் இவ்வடையாளத்தை யிங்குக் கொணர்ந்தவள்.
மாதவன் – (துயருடன் கைகளைக்கூப்பி) பெரியோய்! அருள்புரிக; கூறுக; பிழைத்திருக்கின்றனளா[35]? என்னுடைய அந்தக்காதலி?
சௌதாமினி – குழந்தாய்! இளைப்பாறுக; பிழைத்திருக்கின்றாள்[36] அந்த மங்கலமடவரல்.
மாதவனும் மகரந்தனும் – (பெருமூச்செறிந்து) பெரியீர்! இங்ஙனமாயின், இச்செய்தி[37] யென்னையென்று கூறுக.
சௌதாமினி – முன்னர்க் காளிகோட்டத்தில் வாட்கையனாகிய அகோரகண்டனைச் சங்கரித்தாயன்றே.
மாதவன் – (வருத்தமுடன்) பெரியோய்! ஒழிக! செய்தியை உணர்ந்தேன்.
மகரந்தன் – அன்ப! என்னை?
மாதவன் – பிறிதென்னை; காபாலகுண்டலையின் விருப்பம்[38] நிறைவுற்றது.
மகரந்தன் – பெரியீர்! இங்ஙனமோ!
சௌதாமினி – குழந்தை கூறியாங்கே அது.
மகரந்தன் – ஆ! அந்தோ!
(49) சரற்கால[39] நிலவு, ஆம்பலோடையோடியையுமேல், அதன் வனப்பு, வளர்தரற்பொருட்டு நலன்பயப்பதொன்றாம்; அதுநிற்க; அகாலமேகக்குழு, இதனைப் பிரித்ததென்பது, என்னையூழ்வினையோ?
மாதவன் – ஆ! காதலி! மாலதி! அந்தோ! மிகக் கொடுமையை யெய்தினை.
(50) தாமரைச் சுமுகியே! கபாலகுண்டலைபற்றிய அப்பொழுது நீ, கேதுவாற் றீண்டப்பட்ட மதிக்கலைபோல, என்னிலையெய்தினையோ? அறிவிற் சிறந்த கபாலகுண்டலே!
(51) மாலதியின் உறுப்பமைப்பைக் கண்ட அப்பொழுதே, அஃதுனக்கு விரும்பற்பாலதாகும்; ஆதலின், அரக்கியாந்தன்மையை அடையாதொழிக; மங்களமே தழைக்க; நறுமணங்கமழும் மலர்க்குத் தலையணியாதலே இயல்பன்றி, முசலதால் அவற்றைப் புடைத்தன் முறையன்று.
சௌதாமினி – குழந்தாய்! வருத்தம் தவிர்க்க;
(52) யான் அவண் அவட்கு இடையூறாய் அமையாதிருப்பின், அருட்சிறிதுமில்லா அவள் கொடுஞ்செயற் புரிந்தே தீருவாள்.
இருவரும் – (வணங்கி), பெரியீர்! அருண்மிகப் புரிந்தீர்! எங்கட்கித்தகைய சுற்றமாய் அமைந்த தாங்கள் யாவரென்று தெரிவித்தல் வேண்டும்.
சௌதாமினி – இதனையறிவீர்; (எழுந்து) இந்தயான் இதுபொழுது,
(53) நல்லொழுக்கம், தவம், தந்திரம், மந்திரம், யோகம் இவற்றின் பயிற்சியால் விளைந்த “ஆகரூஷணீ[40]”, என்னுஞ்சித்தியை உங்களது மங்கலத்தின் பொருட்டுச் செய்கிறேன். (மாதவனோடு வெளிப்போந்தனள்)
மகரந்தன் – ஆச்சரியம்.
(54) இருள், மின்னல் இவற்றின் கலப்பென்ன அச்சுறுத்திக்கண் செயலை யொழித்து நிகழ்ந்த அப்பொழுதே அடங்கியது.
(பார்த்து அச்சத்துடன்[41])
ஓ! நந்துணைவனைக் கண்டிலேன்; இஃதென்னை? (ஆலோசித்து) பிறிதென்னை? இந்த யோகினிப் பெண் தன் யோகமாட்சிமையால் எச்செயலும் புரிய வலியளாகின்றாள்.
(ஐயத்துடன்)
இந்நிகழ்ச்கியால் என்ன அனத்தம் விளையுமோவென்று செய்வகையறியாச் சிந்தையன் ஆகின்றேன்; பின்னும்,
(55) மிக்கவியப்புடையதும், முன்செய்தியை மறவாததும், மிகுந்தெழுந்த புதிய அச்சத்தால் வெப்புற்று வெதும்பியதும் அமயமொன்றில் மயக்கத்தின் நீக்கத்தையும் வீக்கத்தையுமுடையதும், ஆகிய எனது மனம், இன்பத்துன்பங்களின் சேர்க்கையை யெய்துகின்றது.[42]
ஆதலின் இக்கான்முடிவில் நங்குழுவினருடன் புக்குவருங் காமந்தகிப் பெரியாற்[43]பாற் சென்று, நிகழ்ந்த இச்செய்தியைக் கூறுவேன்.
(எல்லவரும் சென்றனர்)
பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீமாதவம்” என்னும் நாடகத்தில் ஒன்பதாம் அங்கம் முற்றிற்று.
[1] சௌதாமினி – கபாலகுண்டலை கவர்ந்து வந்த மாலதியை வலிந்து பற்றி, இடும்பையொன்றிலாத் தன்னிருக்கையிற் பதனமாயமைத்தும், “மாலதியழிவெய்தினள்”, எனக் கருது மாதவனும் அழிவுறல் உறுதியென்றோர்ந்தும், அம்மாதவன் அழிவுறாவண்ணம் அவனை உயிர்ப்பித்தற்பொருட்டும், மாலதி பிழைத்திருக்கிறாள்; விரைவில் வருவாள், என அறிவுறுத்தற்பொருட்டும், அவளது கண்டத்தணியலாகும் மகிழணியலைக் கையிலேந்தியளாய் மாதவனது இருக்கையே நாடிவருகிறாள் என்பது அங்கத் தொடக்கமாம்.
[2] அந்த – இச்சுட்டு, இச்சௌதாமினி, அறுகுணச்செல்வியாகிய காமந்தகியார்பால் யோகசாத்திரம் பயின்று இத்தகைய மேனிலையெய்தியமையான், காமந்தகியாராற் காத்தற்குரிய இம்மணமக்களை, இவளும் அந்நன்றி பாராட்டிக் காத்தல் வேண்டுமென்னுங் கடமையை உணர்த்தும்.
[3] பெருமைவாய்ந்த – இவ்வடைமொழி, அம்மலைக்குப் பல மந்திரசித்திகளை யளிக்குந் தன்மையுண்மையான்.
[4] வானமென்ன – இவ்வுவமை, நீனிறத்தவானத்தையுணர்த்தும். விபுவாந்தன்மைத்தையோ வென்னில், பிளவுற்று வீழ்தரப் பொருந்தாதாகலின்.
[5] இந்தயாம் – இச்சுட்டு, தலைவனுடைய அறிவு, ஆண்மை, ஊக்கம் முதலியவற்றை யுணர்த்தும்.
[6] இச்சுட்டு – மாலதியைப் பெறற்கே மகாமாமிசத்தை விலைப்படுத்தன் முதலிய செயலையும் புரிந்து இவளது அன்பிற்குறையுளாகும் இம்மாதவனை மாலதி தாமே வலிந்தணைத்தமையை யுணர்த்தும்.
[7] உண்மை – வனவளப்பங்கள், பிரிந்தோர்க்குக் காமவேட்கையை மிகைப்படுத்துவனவாம் என்பதே உண்மை; அதனையறியாது மகரந்தன், அவற்றைத் தெரிவித்தனன் என்பதாம்.
[8] அருளிலி – உன்னைக் காதலியாக்கோடற்கே மகாமாமிசத்தை விலைப்படுத்தன் முதலிய கொடுஞ்செயற்புரியுமவன், நீ அகோரகண்டனால் மரணத்துன்பமெய்தி வருந்துங்கால் திருவருட்பாங்காலங்கட்டோன்றி அத்துன்பத்தைத் தவிர்த்தாங்கு இதுகாலை நீயுமிவன் முன்றோன்றி இவனதுயிரைப் பாலிக்காதொழிகின்றனை; ஆதலின் அருளிலியாமென்பதாம்.
[9] உயிரேயனைய – இவ்வெடுத்துக்காட்டு, மாதவனுயிர்த்திராதவழி மகரந்தன் பிழைத்திருத்தல் அமையாதென்பதையும், அவன்பால் அன்பின் மிகுதியையும் உணர்த்தும்.
[10] உன்னைத் தழுவுகின்றது – என் காதலி, என்னிற்பிரிந்தாங்கு உன்னையகலாதவுன் காதலி, உடனிருந்து தழுவுகின்றாளெனப் புயலைப் புகழ்ந்துரைத்தான் என்பதாம்.
[11] வந்தடைகின்றன – என்னுடைய நண்பர்களைப்போல் உன் நண்பர்கள் உன்னைவிட்டகலவில்லை; இதனால் இவன் நண்பனாகிய மகரந்தன் உடனிருந்தும், காமவேட்கையின் வெறியினால் அதனையுணராது இங்ஙனம் கூறினான் என்பதாம்.
[12] முதலில் – மாருதி சீதையை யின்புறுத்தியாங்கு இன்சொற் கூறி அவளைத் தேறுதற்படுத்தியபின்னரே என்னிலையைக் கூறல் வேண்டும்; அன்றேல், அவள் இறந்துபடுவள் என்பதாம்.
[13] – என்னிலையை முதலிற் கூறுவையேல், “இந்நிலையிலிருக்குமிவன் உயிர்துறத்தலுறுதியேயாதலின், இனிக்கிடைத்தற்கரியனென்றோர்ந்து அவளது ஆசாபாசம் அறுபடுமாதலின் அங்ஙனங் கூறலாகாதென்பதாம்.
[14] உபராகம் – சூரியசந்திரகிரகணம்.
[15] தந்தை தாயரையும், காமந்தகியாரையும் இதுபொழுது நினைத்தல் மாதவனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தவிர்த்தற்பொருட்டு; துன்பம் நேர்ந்துழி தந்தை முதலினோரை நினைத்தன் மக்களின் இயல்பாதலின்.
[16] – பிரிந்தோர், காதலியின் உறுப்புவமப்பொருள்களைக் காணுங்கால், அப்பொருள்கள் பிரிவாற்றாமையின் வருந்துமவர்க்குக் “காதலியழிவெய்தினள்” என்னும் அன்பின் வழிவந்த தற்குறிப்பை விளைவிக்கும் என்பதே இச்சுலோகத்தின் கருத்து.
[17] உயிர்த்தலைவன் – இது, மாதவனையன்றி மகரந்தனது உயிர் நிலைத்திராமையை உணர்த்தும்.
[18] எளிதில் – மாலதியிறந்தனள் என்னும் மயக்கம் விலகி மாதவனுக்கிடையில் நிகழும் உண்மையுணர்வையுணர்த்தும்.
[19] மதனன் – இத்தொடரால், மாலதியின் யௌவனப்பருவம் குறிப்பிடப்பட்டது. மனக்கினிய மணமகனைக் கூடல்வேண்டுமென்னும் பெருமைசால் நினைவும், உடலுறுப்புக்களின் வனப்புறும் அமைப்பும் அப்பருவத்தின் இயல்புகளாம்.
[20] இவ்வேழமும், தன்னைப்போலப் பிரிவாற்றாமையால் வருந்துகின்றதாகலின் துயர்ப்படும்மிதனைக் கண்ணுறல் தக்கதன்றென்பதாம்.
[21] குடைபிடித்தன் முதலிய செயலான் காதலியின் மெய்வருத்தம் தீரும் என்பதாம்; அங்ஙனம் செய்யாமை, ஆடவற்குத் தக்கதன்றென்பது கருத்து.
[22] இயலன்பின் சாரம் – இது நண்பனது நினைவை விளைவித்தற்குரிய வித்தனையதாம்.
[23] மாலதியே – இது முதலாய விளி – மாதவனது மரணத்துன்பத்திற்கு இவன்பால் மாலதி வைத்த காதற்பற்றே காரணமாம் என்பதை உணர்த்தும்.
[24] தாயே – நடை, உடை, இன்சொல்யாவும் காமந்தகியாரைப்போல இவட்கும் ஒத்திருத்தலான் தாயே என விளித்தமையாம்.
[25] நடுக்கம் – இம்மணமக்களையியைவிக்க முயலுமெனது பெருமுயற்சி, பயனற்றதாகுமென்னும் அச்சத்தால்.
[26] விரைவில் – மாலதி உயிர்த்திருக்க, இதனையறியாத மாதவனது மரணத்துன்பத்தைத் தவிர்த்தற்பொருட்டு.
[27] இச்செயலின்பயன், யான் இறத்தலையன்றிப் பிறிதன்றென்பதும், அங்ஙனம் செயற்புரிதல், தற்பயனோக்கியோ; பிறர்பயன்கருதியோ? என்பதாம்.
[28] அங்ஙனமாயினும் – எத்தகைய செயற்புரிந்தாலும் என்பதாம்.
[29] தாமே – வனத்திடையெற்கு இவ்வருட்பேறளிக்கத் தம்மையன்றிப் புகலொருவருமிலர் என்பதாம்.
[30] சாலச்சிறந்த – வாயுதேவனை வணங்கிக்கோரலான் அத்தேவனே யதனையளித்தாங்கு இவ்வாயிலாகத் தானளித்தல் நலமென்பதாம்.
[31] கருத்துடனும், முன்னர்க் காமவேட்கோட்டத்தில் மாதவனை இலவங்கிகையென்று கருதி மாலதியால் இவனது கண்டத்திலளிக்கப்பட்ட இம்மாலை அவளை யிவன்பாலியைவித்தின்புறுத்தியதுபோல இதுபொழுதும் இவ்வனத்திலுஞ்சேர்க்குமோ? என்பதாம். மகிழ்வுடன் அவளுடைய உறுப்புக்களின் பரிசமெய்தி இவனுடலுறைதலின்; வியப்புடன் – மாலதி காண்டற்கியலாளாக, அவளணிந்து அணிந்த அணியல் மாத்திரம், இங்கட்போந்தவாறென்னையென்னும் வியப்பென்பதாம்.
[32] அணைத்தலை – மாலதி, துயருறும்பொழுது அத்துயரை நீக்கி உயிரைக் காத்த இம்மாலை, அவளைப்பிரிந்தமேல் அவளுயிர்த்திருத்தலரிதெனக் கருது மாதவனுக்கு மனவருத்தம் மிகுந்ததாம் என்பது கருத்து.
[33] என்னை? – மாலதி, உயிருடனிருப்பின் அவள் இம்மாலையைக் கைவிடாள்; இதுபொழுது மாலை பிரிந்துளதாகலின், இம்மட்டில் அவளது உயிர்வாழ்கையில் ஐயுற்று இவ்வினா நிகழ்ந்ததென்பது கருத்து.
[34] யோகினி – இவ்வடைமொழி, காமந்திகியாரையொப்ப இவளும் நம்பால் அன்புமிக்கு நலம் விளைவிப்பவளென்னும் கருத்தையுணர்த்துவதால், இது மாலதியினுயிரில் மாதவற்கு விளைந்த ஐயத்தை விலக்குவதாம்.
[35] இவ்வினைச்சொல் – மாதவனது மனவருத்தத்தையும், களிப்பையும், காதலையுங் காரணமாகக் கொண்டு முதலில் நிகழ்ந்ததாம்.
[36] இவ்வினைச்சொல் – மாதவனது துயரைப் போக்கியவனை யின்புறுத்தற்பொருட்டும், எழுவாய் செவிக்கேறிய மாத்திரையில் பயனிலை யெவ்வாருமோ என நிகழுமையத்தை விலக்கற்பொருட்டும் முதல் நிகழ்ந்ததாம்.
[37] இச்செய்தி – மாலதி எங்கிருக்கிறாள் என்பதும் இவ்வணியல் கிடைத்தவாறென்னை யென்பதுமாம்.
[38] “கபாலகுண்டலைக்கு விளைந்த சினத்தின் பயனை நீயனுபவிப்பதுறுதியே” என்று மாதவனைக் குறித்துக் கபாலகுண்டலை கூறிய வண்ணமே மாலதியைப் பிரித்து இருவரையுந் துன்புறுத்த வேண்டுமென்பதே அவள் விருப்பமென்பதை, மாதவன் உணர்ந்து கூறுகிறான் என்பதாம்.
[39] இச்சுலோகத்தில் சரற்கால நிலவு, ஆம்பலோடை, அகாலமேகம் என்னும் உபமானங்களுக்கு முறையே மாலதி, மாதவன், கபாலகுண்டலை என்னும் உபமேயங்களை ஊகித்துப் பொருள் கோடல் வேண்டும்.
[40] ஆகரூஷணீ – எவரையும் தன்வயமாக்குந்திறல்; இது யோகப்பயிற்சியால் பெறற்குரியது.
[41] அச்சத்துடன் – ஒருக்கால் கபாலகுண்டலையால் தூண்டப்பட்டு இவள் மாதவனைச் சிரீபருப்பதத்திற்குக் கொடுபோயிருப்பளோ என்னும் ஐயப்பாடே அச்ச நிமித்தமாம்
[42] இந்நிகழ்ச்சியால் வியப்பும், மாலதியின் றீவினை நினைவும், மாதவற்கும் இடும்பை நிகழுமோ வென்னும் ஐயத்தால் அச்சமும் சௌதாமினியின் சொல்வன்மையால் மகிழ்வும் அடுக்குமுறையில் விளைந்தனவென்பது புலனாம்.
[43] காமந்தகிப்பெரியார்பால் – இவர், மக்களறிவைக் கடந்த செயலையுமறியுமாற்றலும், இத்தகைய வியப்பின்மிக்க அபூர்வமான விஷயங்களைக் கண்டறியுந்திறலும் அமைந்தவர்களாகலின், இந்நிகழ்ச்சியையும் இவற்பாற் றெரிவித்தலே தகுதியென்பதாம்.