கடைச்சங்க நிலைகுலைவு

கடைச்சங்க நிலைகுலைவு*

அல்லது

இடைக்காடர் வரலாறு

ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசனார்

தொடக்கம்:- திருவருள் துணையாக மூன்றாம் முறையாகக் கூட்டப்பெற்ற இச்சங்கம் இக்காலத்து சிறந்து விளங்கும் மதுரை நகரில் தோற்றமுற்றது. அதனை முதன்முதல் தொடக்கி நிலை நாட்டியவன் முடத்திருமாறன் என்னும் பாண்டியன். அவன் இடைச் சங்கம் நிலைகுலைவுற்ற இறுதிக்காலத்து விளங்கிய பேரரசன்: அவனே அக்காலம் பாண்டிய நாடனைத்தையும் அரசு செலுத்திச் சிறப்புற்றிருந்தான். அவன் கூட்டிய சங்கத்தைக் கடைச்சங்கமென்பர் – பிற்காலத்தவர்.

அக்கடைச்சங்கத்தினைப் பற்றி இறையனார் கலவியல் உரைக்காரர் கூறுமாறு:-

I. “இனிக் கடைச்சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தார் சிறுமேதாவியாரும்,[1] சேந்தன்பூதனாரும்,[2] அறிவுடையரனாரும்,[3] பெருங்குன்றூர்க்கிழாரும்,[4] இளந்திருமாறனும்,[5] மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும்,[6] மருதனிள நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதிமர் (49) என்ப.

பிறிதோர் சாரார் கூறுமாறு:-

I.

1  பருங்கடைச் சங்கமிருந்தோர் யாரெனில்

    சிறுமே தாவியார், சேந்தம் பூதனார்

    அறிவுடையரனார், பெருங்குன்றூர் கிழார்,

    பாடல் சான்ற இளந்திருமாறன்,

5   கூடல் ஆசிரியர் நல்லந்துவனார்

    பரவு தமிழ் மதுரை மருதனிள நாகர்,

    அவிர் கணக்காயர் நவில் நக்கீரர்

    கீரங்கொற்றர் கிளர் தேனூர் கிழார்

    ஒருங்கலை மணலூராசிரியர்

10  நல்லூர்ப் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர்,

    செல்லூராசிரியர் முண்டப் பெருங்குமரர்

    முசிறியாசிரியர் நீலகண்டனார்,

    அசைவிரி குன்றத் தாசிரியரன்றி

    நாத்தலங் கணிக்குஞ் சீத்தலைச் சாத்தர்

15  முப்பால் உணரும் உப்பூரி குடி கிழார்

    உருத்திரசன்மர் மருத்துவராகிய

    நாம நாற்கலைத் தாமோதரனார்

    மாதவனனாரொடு ஓதும் இளநாகர்

    கடியுங் காமப் படியங் கொற்றனார்

20  அருஞ் செயிலூர் வாழ் பெருஞ் சுவனாருடன்

    புவிபுகழ் புலமைக் கபில, பரணர்,

    இன்னாத் தடித்த நன்னாகர், அன்றியும்

    ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்துக்கு

    உரையிடை யிட்ட விரகர் கல்லாடர்

25   பேர் மூலமுணரும் மாமூலர், தம்மொடு

    விச்சை கற்றிடு நச்சென்னையார், முதல்

    தேனூர் றெடுப்பச் செந்தமிழ் பகர்ந்தோர்

    நானூற்றுவர் முதல் நாற்பத்தொன்பதின்மர்;

II.

“பீடுபெற உலகிற் பாடிய செய்யுள்

முத்தொள் ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை,

அகநா னூறு புற னூறு

குறுந்தொகை சிற்றிசை பேரிசை வரியொடு

அறம்புகல் பதிற்றுப்பத்து ஐம்பதோடிருபான்

பெரும் பரிபாடலும், குறுங்கலி நூற்றைம்

பது, முதலாகிய நவையறுங்கலைகள்.”

III.

“அக்காலத்து அவர்க்கு அகத்தியம் அதனொடு

மிக்காம் இலக்கணம் விளங்கு தொல்காப்பியம்,

எண்ணூர் கேள்வியர் இருந்ததாயிரத்துத்

தொளாயிரத்தைம்பது வருடமென்ப”.

IV.

“இடர்ப்படாதிவர்களைச் சங்கம் இரீஇயினார்

முடத்திரு மாறன் முதலா உக்கிரப்

பெருவழுதி ஈறாப் பிறங்கு பாண்டியர்கள்

நரபதிகளாகும் நாற்பத்தொன்பதின்மர்

இவருட் கவியரங் கேறினார் மூவர்.

புவியிற் சங்கம் புகழ் வட மதுரை” என்பது.

கடைச்சங்க அமைப்பு

ஒரு சாரார் கூறுமாறு:-

கடைச்சங்க உறுப்பினர் 49 பெயர்களாகும். அவருள் சிறுமேதாவியார் முதலிய எண்மர் உட்கழக உறுப்பினர். சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது (1850) வருடம் நடைபெற்றது. அதனை அத்துணை காலம் ஆதரித்தவர் நாற்பத்தொன்பது பாண்டியர்; அவருள் மூவர் கவியரங்கேறினார் என்பது.

அரசஞ் சண்முகனார் கூறுமாறு:-

I. ஒரு தலைமுறைக்குச் சிறிது ஏறக்குறைய முப்பத்தெட்டியாண்டாகப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மர் காலம் வரை ஆயிரத்து எண்ணூற்றைம்பதிற்றியாண்டு அச்சங்கம் நிலைபெற்றது என்பதூஉம்.

II. தலைமுறைக்கு ஒருவராகப் பாண்டியர்க்குப் பக்கத் துணையாக இருந்து சங்கம் நடாத்தினமையிற் சங்கமிருந்தார் நாற்பத்தொன்பதின்மர் ஆயினர் என்பதூஉம்.

III. ஏனைச் சங்கத்துப் புலவரினும் மிக அருகிக் காணப்பட்டாராகலின் அச்சங்கம் போல யாண்டிற்கு ஒருவர் கவியரங்கேறித் தலைவர் ஆகாமல் சில காலம் ஐந்து யாண்டிற்கு ஒருவரும் பின்னர் நான்கு யாண்டிற்கு ஒருவரும் ஆகத் தலைமை பெற்றமையாற் பாடினோர் நானூற்று நாற்பத்தொன்பதிமர் ஆயினர் என்பதூஉம் விளங்கும் என்பது.

பாண்டியன் மதிவாணன்

இனி இக் கல்விக் கழகத்தை நன்கு பேணிப் போற்றிய பாண்டியர்களுள் மூவர் புலத்துறை முற்றியவராய்க் கவியரங்கேறியுள்ளார் என்பது மேற்காட்டப்பட்டது. அத்தகைய மூவருள் மதிவாணன் என்பான் ஒரு பெருவேந்தன்; முத்தமிழும் நன்கு கற்றவன்; நாடக இயலில் கைபோயவன். ஆகவே தன் காலத்துக்கு முன் உள்ள பேரறிஞர் இயற்றிய நாடக இலக்கணத்தின் பகுதியாக உள்ள வசைக் கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து இயன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்ற நூல் ஒன்றினை இயற்றிக் கவியரங்கேற்றினான்.

வங்கிய சேகர பாண்டியன்

இப்பெயர் பெற்ற பாண்டியன் கடைச்சங்கம் இரீஇய பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவனாக எண்ணப்படுவான்; இவன் ஆட்சிக்காலத்தினைச் சிறிது முன் ஒட்டி ஓர் பஞ்சம் பாண்டிய நாட்டில் நிகழ்ந்தது. பன்னிரண்டுயாண்டு மழையின்றி அந்நாடு மிகவும் வருந்தியது. உணவுப் பொருள் இன்றிப் பசி கடுகிக் குடிகள் நலிவுற்றனர். பல உயிர்கள் மடிந்தன. அரசன் பெரிதும் தயங்கிப் புலவர்களையெல்லாம் கூவி “வம்மின் யான் உங்களைப் புரந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கு அறிந்தவாறு புக்கு நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின்” என்றான். மணிமேகலை நூலாசிரியரும் இப்பஞ்சத்தினையும் அதன் கொடுமையினையும்

“பன்னீராண்டு பாண்டி நன்னாடு

மன்னுயிர் மடிய மழை வளமிழந்து”

(மணி: 14ஆம் காதை 55.56)

எனக் கூறியுள்ளார்.

அப் பன்னிரண்டாண்டும் சங்கப்புலவர் கூடலில் இலராயினர். பாண்டிய அரசன் கட்டளைப்படி அவனை விடுத்து அன்னோர் புறநாடு போதந்தார்; அவருள் ஒரு சாரார் சேரநாடு அடைந்து அங்குள்ள ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் ஓர் வேளிர் தலைவனைச் சார்ந்து அவன்பெரிதும் பேண வாழ்ந்து வந்தனர்.

சில ஆண்டு கழிந்ததும் பாண்டிய அரசன் புலவர்களின் பிரிவால் வருந்தி மிகவும் மனம் தளர்ந்து அவர்களின் வளப்பம் இருக்கை முதலியன தூதல் மூலம் உசாவினான். உயிரோடிருக்கும் எஞ்சிய தமிழ்ப் புலவர்க்குத் திருமுகம் அனுப்பினான். புலவர்கள் வற்கடக் கொடுமையினையும், தாங்கள் அஃது அறியாது ஆலஞ்சேரிமயிந்தன் பால் வாழ்ந்து செவ்வனே இருத்தலையும், அம்மயிந்தனின் பெருமை வள்ளற் றன்மைகளையும் பற்றிப் பாண்டிய அரையற்கு ஓலைத் தூக்கு ஒன்று எழுதி அனுப்பி வைத்தனர். அன்னோர் எழுதிய தூக்கில் பொறித்தது வருமாறு:-

காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி

வேலையுங் குளனும் வெடிபடச் சுவறி

விழித்தவிழி யெல்லாம் வேற்று விழியாகித்

தந்தையை மக்கண் முகம் பாராமே

5. வெந்த சரகம் வெவ்வே றருந்திக்

குணமுள தனையுங் கொடுத்து வாழ்ந்த

கணவனை மகளிர் கண்பாராமே

யறவுரை யின்றி மறவுரை பெருகி

யுறை மறந் தொழிந்த வூழி காலத்திற்

10. றாயில் லவர்க்குத் தாயே யாகவுந்

தந்தையில் லவர்க்குத் தந்தையே யாகவு

மிந்த ஞாலத் திடுக்கண் தீர

வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன்

நீலஞ் சேரு நெடுமால் போல்வன்

15. [7]ஆலஞ் சேரி மயிந்த னென்பான்

(ஊருண் கேணி நீரோ ரொப்பான்)

தன்குறை சொல்லான் பிறர்பழியுரையான்

மறந்தும் பொய்யான் வாய்மையுங்குன்றான்

இறந்து போகா தெம்மையுங் காத்தான்

வருந்த வேண்டா வழுதி!

20. யிருந்தனெ மிருந்தென மிடர் கெடுத் தின்னே

(தமிழ் நாவலர் சரிதை)

என்பது.

இவ்வாறு பன்னிரண்டு யாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. அரசன் நாடு நாடாயினமையால் தமிழ் நூல் வல்ல புலவர்களைத் தேடிக் கொணர்க என்று பல்லிடமும் ஆட்களையனுப்பி, அத்தகைய புலவரை ஒருங்கு கூட்டினான். தமிழ்ச் சங்கத்தைப் பழையபடி உருவாக்கினான். சங்கத்தார் உறைய மதுரையின் வடமேற்றிசையில் தமிழ்க் கழக மண்டபம் ஒன்று நிருமித்தான். அம் மண்டபம் தேவ குலத்தை அடுத்திருந்தது. நீராழி அதன் உட்புறம் அமைந்துள்ளது. அப்பாண்டியனே பின்னும், சங்கப்புலவர் புலமையியல் நன்கு மதிக்கப்படுமாறு சங்கப் பலகை ஒன்றை அமைப்பித்தான். அப்பலகை இறைவன் அருளால் பெறப்பட்டதாம். தெய்வத்தன்மை வாய்ந்தது என்பர் ஒரு சாரார். பொறி-கிறிகளின் நுட்பம் சிறக்க அமைந்துள்ளது என்பர் பிறிதோர் சாரார். அப்பலகை ஒரு முழ அளவினதென்பர் ஒரு சாரார். ஒருச் சாண் அளவினதென்பர் பிறிதொர் சாரார். அதற்கு முத்தாழி என்றும் கடிஞை என்றும் பெயர் வழங்கப்படும். கல்லினால் ஆக்கப்பட்ட பெரும் பரப்புள்ள பலகையாதலின் கன்மாப்பலகை என்றும் ஒரு சாரார் கூறுப. பிறிதோர் சாரார் மகிமை வாய்ந்த பெரிய பலகை என்ற பொருளில் கனமாப்பலகை என்பர். மற்றோர் சாரார் கன்மா – மாமரத்தில் ஒரு வகை; வைரமிக்குள்ளது; அதனால் இயற்றப்பட்ட பெருந்தட்டு என்பர்; கல்மூங்கில் – என முற்றிய மூங்கிலில் வைரம் பாய்ந்ததைக் கூறுவது போன்ற வழக்கு என்பாரும் அவரே.

சங்கப்பலகை

இப்பலகை பிச்சா பாத்திர வடிவாய் (கடிஞை) மூன்று பகுதியதாய் விளங்கிற்று. இஃது “இறைவன் தன் திருக்கரத்தில் அடியவர்க்கு அருளுமாறு கொண்டுள்ள திரு ஓடு ஒப்ப விளங்கியது” என்பர் சைவர். அதில் மூன்று தட்டு உண்டு. அம்முத்தட்டும் முறையே தலைத்தட்டு, இடைத்தட்டு, கடைத்தட்டு எனப் பெயர் பெறும். ஒவ்வோர் தட்டுக்கும் மும்மூன்று கண்ணாறுகள் உண்டு. அக்கண்ணாறுகள் எடுப்பு எனப் பெயர் உற்றவை. புலவர் அறுவர் ஒருங்கு இருக்கத்தக்கதாய் அமையப்பட்ட ஒரு எடுப்பில் ஆறு இருக்கைகள் உண்டு. ஒவ்வோர் இருக்கைக்கும் ஒவ்வோர் புலவர் வீற்றிருப்பர்.. அங்ஙனம் ஆறு புலவர் சேர்ந்திருக்கும் ஓர் எடுப்பின் பின்புறமாக ஒலி எழுத்தாளர் பலர் (shorthand writers) மறைந்திருப்பர். இவ்வாறே ஒவ்வோர் தட்டிலும் புலவரும் மறைந்துள்ள ஒலியெழுத்தாளரும் இருப்பார்கள். ஒலி எழுத்தாளர் ஒளிந்து இருப்பதைச் சங்க மண்டபம் நோக்கி வருவார் அறியார். அவ்வாறு அவர் இருக்கையானது பின் அணியாகத் தாழவில் மறைத்து அமைக்கப்படிருந்தது. கழக மண்டபத்தின் நடுவுள்ள நீராழி மண்டபத்தில் இம்முத்தட்டுகளையும் இயக்கவல்ல உட்பொறியாத்த பலகை ஒன்றிருந்தது. அதுவே இறைவனால் அளிக்கப்பட்டதென்பர் ஒரு சாரார். சங்கம் காண வருவார் வலமாகச் சென்று அங்குள்ள புலவரையும் நூனிலையத்தையும் சொற் கிழத்தியின் உலைவிலா உருவத்தையும், நீராழியின் தோற்றத்தையும் சுற்றினோக்கித் திரும்புவர். (அஃதாவது இடது கைப்புற வழியாய்ப் போய் வலது கைப்புற வழியாய்த் திரும்புதல்) ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு எடுப்பின் பக்கமாக கற்படிக்கட்டுகள் அமைந்திருந்தன. (அக்கடிக மண்டப விளக்கத்தின் படம் ஒன்று இத்துடன் கோக்கப்பட்டிருப்பதை நோக்க).

பொருள் இலக்கணம்

இத்தகைய மண்டபத்தே இப் பெற்றித்தாய இருக்கையினைக் கையாண்ட புலவர் நுண்ணறிவுடையராயிருந்தார். எனினும் தமிழ் மொழிக்கு இன்றியமையாத பொருள் இலக்கணத்தில் (தமிழ் ஆராய்ச்சிக்குப் போதிய) புலமை நிரம்பியுள்ளவர் அருகிக் காணப்பட்டனர். அதன் காரணம், பன்னீரியாண்டு நிகழ்ந்த பெரும் பஞ்சத்தில் ******  புலமை வாய்ந்த பலர் ஆண்டாண்டு சிதறியும் மடிந்தும் போயினமையே என்ப. அகப்பொருள் இலக்கணம் காணற்கும் அருமையாக இருந்தது. அஃதில்லாக்குறை தமிழ் ஆராய்ச்சியினை முட்டுப்படுத்தியது. சங்கத்தினைப் பேணிப் போற்றிய பாண்டியனும் இஃதறிந்து பெரிதும் கவலுற்றான். புலவரும் இயற்றுவதி யாது என அறியாது சோம்பியிருந்தனர். அந்நிலையில் இறையனார் (மதுரை பெருமானடிகள்) திருவுளங் கொண்டு தாமாகவே தம் பெயரால் “இறையனார் களவியல்” என்ற அகப்பொருள் இலக்கண நூல் ஒன்றினை அறுபது சூத்திரத்தால் யாத்தருளினார். அது வெளிப்போந்த வரலாறு பின்வருமாறு:-

இறையனார் அகப்பொருள் வரலாறு

மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான் ‘என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று: அது தானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்” என்று இவ்வறுபது சூத்திரத்தையும் செய்து மூன்று செப்பிதழ் அகத்தெழுதிப் பீடத்தின் கீழ் இட்டான்.

“இட்ட பிற்றை ஞாண்று தேவர்குலம் வழிபடுவான் தேவர் கோட்டத்தை எங்கும் துடைத்து, நீர் தெளித்துப் பூ விட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென்றும் அலகிடாதான் அன்று தெய்வத் தவக்குறிப்பினான் அலகிடுவன் என்று உள்ளங்குளிர அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக் கொண்டு போந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று.”

“காட்டப் பார்ப்பான் சிந்திப்பான்: ‘அரசன் பொருள் அதிகாரமின்மையிற் கவல்கின்றான் என்பது பட்டுச் செல்லா நின்றதுணர்ந்து நம் பெருமான் அருளிச் செய்தானாகும்’ என்று தம் அகம் புகாதே கோயில் தலைக் கடைச் சென்று நின்று கடைக்காப்பார்க்கு உணர்த்தக், கடைக்காப்பார் அரசர்க்கு உணர்த்த, அரசன் புகுதருக என்று பார்ப்பானைக் கூவச், சென்று புக்குக் காட்டக் கொண்டு நோக்கி ‘இது பொருளதிகாரம்! நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது’ என்று அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று சங்கத்தாரை கூவுவித்து ‘நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்த பொருளதிகாரம்! இதனைக் கொண்டு போய்ப் பொருள் காண்மின் என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப் பலகை ஏறியிருந்து ஆராய்வுழி எல்லாருந் தாந்தாம் உரைத்த உரையே நன்றென்று சில நாளெல்லாஞ்ச் சென்றன”.

இறையனார் அகப்பொருள் உரை வரலாறு

“செல்லவே நாம் இங்ஙனம் எத்துணை உரைப்பினும் ஒருதலைப்படாது நாம் அரசுனுழைச் சென்று நமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டுமெனக் கொண்டு போந்து, அவனால் பொருளெனப் பட்டது பொருளாய், அன்றெனப்பட்டது அன்றாய் ஒழியக் காண்டும் என, எல்லாரும் ஒருப்பட்டு அரசனுழச் சென்றார். செல்ல அரசனும் எதிர் எழுந்து சென்று ‘என்னை! நூற்குப் பொருள் கண்டீரோ’ என ‘அது காணுமாறு எமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டு’ மெனப் போமின்! நுமக்கோர் காரணிகளை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின்மர் ஆயிற்று. நுமக்கு நிகர் ஆவர் ஒருவர் இம்மையின் இன்றே’ என்று அரசன் சொல்லப், போந்து பின்னையும் கன்மாப் பலகை ஏறியிருந்து ‘அரசனும் இது சொல்லினான் யாங்காரணிகளைப் பெறும் ஆறு என்னை கொல் என்று சிந்தித்திருப்புழிச் சூத்திரம் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக் கடவுளன்றே! அவனையே காரணிகனைத்தால் வேண்டும் என்று சென்று வரங்கிடத்தும்’ என்று சென்று வரங்கிடப்ப இடையரமத்து.

உருத்திரசன்மன்

“இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான் பைங்கண்ணன்: புன்மயிரன்: ஐயாட்டைப் பிராயத்தினன்: ஒரு மூங்கைப்பிள்ளை: உளன்: அவனை அன்னன் என்று இகழாது கொண்டு போந்து ஆசனமேல் இரீஇக் கீழ் இருந்து சூத்திரப் பொருள் உரைத்தால் கண்ணீர் வார்த்து மெய்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும்: அவன் குமாரதெய்வம்: அங்கோர் சாபத்தினால் தோன்றினான்” என முக்கால் இசைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்று.”

நக்கீரர் உரை

“ஆக எழுந்திருந்து தேவர் குலத்தை வலங் கொண்டு போந்து உப்பூரி குடி கிழாருழைச் சங்கமெல்லாம் சென்று இவ்வார்த்தை எல்லாம் சொல்லி ‘ஐயனாவான் உருத்திரசன் மனைத்தரல் வேண்டும்” என்று வேண்டிக் கொடுபோந்து வெளியது உடீஇ வெண்பூச்சூட்டி வெண்சாந்து அணிந்து கன்மாப்பலகை ஏற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டு வாளாயிருந்து மதுரை மருதன் இளநாகனார் உரைத்தவிடத்து ஒரோவழிக் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தோறும் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்.”

“இருப்ப ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு என்றார்” (இறை. களவி. பாயிர உரை)

சண்பகபாண்டியன்

இவ்வாறு தமிழ்ச்சங்கமானது பொருள் இலக்கணம் பெற்றுப் பல ஆண்டுகளாகத் தமிழ் ஆராய்ந்து வருங்காலை வங்கிய சேகரன் கால்வழியில் வந்த சண்பகபாண்டியன் என்பான் அரசாட்சியடைந்து செங்கோல் செலுத்தி வந்தான் (இவன் வங்கிய சூடாமணி என்றும் அழைக்கப்படுவான்) அக்காலத்து ஒரு நாள் மாலை தன் பட்டமகிஷியுடன் அரண்மனை மேன்மாடத்துத் தென்றல் வீசும் சீர்மை நோக்கி உலவி வருங்கால் நறுமணம் ஒன்று (அவன்) நுகர நேர்ந்தான். அந்நறுமணம் தென்றலால் உந்தப்பட்டு வந்ததெனினும் அவன் தன் அருகே தன் பெருங்கோமகள் அன்றிப் பிறர் இல்லாமையின், அக்கோமகள் கூந்தலினின்றும் வருகின்றது என அறிந்தனன். அப்பொழுதைக்கு அவள் தன் கூந்தலில் பூ ஒன்றும் அணிந்திராமையாலும், விரத ஒழுங்கினைக் கைக்கொண்டு சின்னாள் அவள் நறும்பூ முடியாதிருந்தமையாலும், அரசன் தான் நுகர்ந்த நறுமணம் அவள் கூந்தலினின்றும் இயற்கையாகவே உண்டாயது என யூகித்துச் செயற்கையால் உண்டாயது அன்று எனத் தெளிந்தான். தெளிந்த அரசன் பெரிதும் இறும்பூதெய்தி, “என் மனக் கோளை உள்ளது உள்ளவாறு கண்டு இனிய கவி ஒன்று இயற்றி உரைப்பார் எவரேயாயினும் அவர்க்கு ‘ஆயிரம் பசும்பொன் பரிசாக அளிப்பல்’ என்று நகரில் முரசு அறைவிக்கச் செய்து சங்கமண்டபத்தில் ஆயிரம் பசும்பொன் முடித்த கிழி ஒன்றைத் தூக்கினன். எண்ணிறந்த புலவரும் – அவர் ஒப்பாரும் – பிறரும் தத்தமக்குத் தோன்றியவாறு கவி இயற்றி அரசர்க்குக் காட்டினர். அக்கவிகள் அரசன் உள்ளக் கருத்தினுக்கு ஏலாவாயின. அக்கிழியும் பல திங்கள் கட்டியபடியே தூங்கிற்று.

தருமி – இறையனார்

அந்நாள் அம்மதுரையம்பதியில் வாழும் மறையவர் குலத்து உதித்த தருமி என்னும் பெயருடையான் ஒருவன் – தாய்தந்தையர் இல்லாதான் – பெரிதும் நல்குரவுடையான். சிவ வழிபாடுடையான்: மறந்தும் புறந்தொழா மாண்புடையான். சிவபெருமானை வணங்கித் தன் குறைவினை வெளியிட்டுத் தான் அப்பெருநிதி பெறுமாறு அரசன் கருத்துக்கேற்ற கவி ஒன்று இயற்றித் தருக என வேண்டினான்.

அப்பெருமானும் அவன் வேண்டுகோட்கு இணங்கி அரையன் உள்ளக்கிடக்கையை ஞான சமாதியால் அறிந்து அடியிற் கண்ட அருஞ் செய்யுள் ஒன்றினை யாத்தளித்தனன்.

அக் கவி வருமாறு:-

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சரைத் தும்பி!

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே” என்பது.

இதன் பொருள்:- பூந்தாது தேரும் வாழ்க்கையினையும், அழகிய சிறகுகளையுமுடைய வண்டே! (என்னிடம் வைத்த) விருப்பத்தினால் சொல்லாது (உண்மையாகக்) கண்டதையே சொல்: நீ அறியும் புஷ்பங்களுக்குள், பழக்கம் மிக்க நட்பையும் மயிலின் சாயலையும் நெருங்கிய பல்லையும் உடைய (இவ்) அரிவை (ப் பருவமுடைய பெண்) கூந்தலைக் காட்டிலும் மணமுடைய பூக்கள் உண்டோ? என்பது.

இக் கவியைத் தருமி பெற்றுக்கொண்டு சங்கப் புலவர் பலரிடமும் காட்ட அன்னோர் பொறாமையால் ஒன்றுங் கூறாது அவன் கொடுத்தபடி அவனிடமே திருப்பினர். அவன் நேரே அரையானிடஞ் சென்று அதனைக் காட்டினான். அரசன் உள்ளக் களிப்புடன் பேருவுவகை பூத்து, இக்கவி ஆக்கினான் யாவனே எனினும் ஆகுக. அவன் பொற்கிழி பெற்றுக் கொள்வானாக எனச் சங்கமண்டபத்துக்கு அவனைப் போக்கினன். தருமி  ஆங்குச் சென்று சித்திரத் தூணத்தின்பால் கட்டிதூக்கிய அப்பொற்கிழியை அவிழ்த்து எடுக்கப் போந்தான்.

அந்நிலையில் அருகே சங்கப்பலகையில் வீற்றிருந்த நக்கீரன் – “வேதியனே! அக் கிழியை நீ தொடாதை. உனக்கு இக்கவி எழுதியளித்த புலவனைக் கூட்டி வருக. இக்கவியிற் குற்றமுண்டு” என்றான். தருமி மனமழுங்கி இறைவன் பாலேகி ஓலமிட இறையனார் புலவனாகி நக்கீரனுடன் வாது புரிந்தருள வந்தார்.

நக்கீரன் ஒடுக்கம் நடுக்கமின்றித் தன் உட்கோளை நிறுவினன். இறுதியில் இறையனார் “ஞானப் பூங்கோதை” கூந்தற்காயினும் இயற்கை மணம் உளதன்றோ என, அவன் அதனையும் மறுக்க, இறையனார் வெகுண்டு நெற்றிக் கண்ணால் அவனை வெதுப்பினார். அத்துடன்

(உத்தம ஜாதிப் பெண்களுக்கு)

“வளந்தரும் மடம் நாண் முன்னா வரும் குணம் நித்தமாயே

உளங்கவர் வாசம் தேசு உரியன: நித்தமாகும்”

என்று தம் கோளையும் நாட்டினார்.

இறுதியில் தருமி பொற்கிழி பெற்றான். கீரனும் அல்லல் உற்று இறைவன் அருள் பெற்று உயர்ந்தான். அகத்தியனார் அக்கீரனுக்கே அதுவரை புலனாகாதிருந்த அரிய இலக்கணங்களை இறைவன் கட்டளைப்படி வரன்முறையாக உபதேசித்தனர். கீரனும் அவற்றைக் கற்று புலத்துறையில் தெளிந்தோனாயினன்.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

இவ்வாறு சங்கம் பல ஆண்டு வளர்ந்து வருகையில் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அரையனாயினான். இவன் கானப் பேர் எயில் – (காளையார் கோவில்) கடந்த உக்கிரப்பெருவழுதி எனப்படுவான்[8]. இவன் அகநானூறு என்ற நெடுந்தொகையினைத் தொகுக்கும்படி செய்தான். அத்தொகையினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மனார். இவ்வரசன் காலத்திலேயே பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு என்பவைகளும் தொகுக்கப்பட்டன. சங்கப்புலவர்களால் மதிப்பிடப்பட்ட திருக்குறளுக்குச் சாற்றுகவி அளித்தவனும் இவனே என்ப. இவன் காலத்திலே கடைச்சங்கம் நிலைகுலைந்ததாம்.

கடைச்சங்க நிலைகுலைவு

முடத்திருமாறன் கால முதல் பல பாண்டியர் தலைமுறையாக இவ்வுக்கிரப் பெருவழுதி காலம் வரை மேலையில் உயர்ந்து ஓங்கி நடைபெற்று வளர்ந்த இத்தமிழ்ச் சங்கம் இவ்வரையன் காலத்து நிலை தளரலாயிற்று. இதன் காரணம் சங்கப் புலவர் செய்வினையேயாகும். அன்னோர் இறைவன் கவிக்கே குறை கூறி வாதாடியுள்ளேம் என்றும், பாண்டிய அரசர் பெருஞ்சுட்டு மிக்கு வாய்த்துள்ளோம் என்றும், தம்மை ஒப்பாரும் மிக்காருமாய பிறர் இம்மையில் இலராயினார் என்றும் பலவாறாக எண்ணி அடலேறு அனைய செருக்கில் ஆழ்ந்துவிட்டனர்.

அங்ஙனம் ஆழ்ந்தவர் அரசவை நாடிப் பரிந்து பாடிவரும் பிற புலவரைப் புறக்கணித்து வந்தனர். பாடி அரங்கு ஏற்ற வருபவர் கவிகளை ஒலியெழுத்தாளர் துணையால் பாடிடுவர் பாடி முடிக்கு முன்னர் எழுதுவித்துக் கூட்டி ஏடு ஒன்று உருப்படுத்தி “இப்பாட்டுக்களை முன்னரே யாம் கேள்விப்பட்டுள்ளோம். இவை பழம் பாட்டுக்களேயாகும்” என்று தாம் எழுதுவித்த புதிய சுவடியை அவிழ்த்துக் காட்டுவர்; காட்டவே ஏனையர் மனம் அழுங்கி, அரசனிடம் பரிசிலும் பெறாமையால் வயிறு எரிந்து, காடு மலை கடந்து வந்தும் ஒன்றும் பெறாது ஏங்கிச் செல்லும் தம் விதியினை வெறுத்து இச்சங்கம் குலைய வசை பாடிப்போவர்.

அரையனிடம் பாடிப் பரிசில் பெறுபவர் அரிதாகி வந்தனர். அங்ஙனம் பெறாது வெறுங்கையாளராய் வெறுக்கை பெறாது அல்லற்பட்டு ஆற்றாமே தாம் வந்தவழி மீண்டேகுபவர் திறனும், அன்னோர் வயிறெரிந்து கூறிய கூற்றும், கடைச்சங்க நிலைகுலைவுக்குக் காரண வித்துகள் ஆயின.

இந் நிலையில் சமயவாதிகள் பலர் ஒன்றுகூடி சங்கமண்டபத்திற்குத் தெற்கே ஓர் பட்டி மண்டபம் நிறுவி சமய நூல் ஆராய்ந்து வந்தனர். அன்னோருள் ஒருசாரார் தமிழ் மொழியின் பெற்றி அறியாது சமய நூல் பல்கிக் கிடக்கும் வடமொழியே மதிக்கத்தக்கதென்றும் தமிழ் மொழிப் பொருள் நன்மையற்றதென்றும், பிறவும் பேசித் தமிழைக் குறை கூறி வந்தனர்.

இதனை வாதிக்க ஒரு நாள் நக்கீரர் ஆண்டுச்சென்றார். பிறர் பட்டிமண்டப வாயிலைச் சாத்தி அவரை உட்புகாவாறு செய்தனர். அன்னோர் செயலைக் கண்டு நக்கீரர் வெகுண்டு அவருள் தலைவனாக உள்ள வேள் என்னும் பட்டம் பெற்ற குயக்கொண்டான் என்பவனை ஓர் அங்கத வெண்பாப் பாடி அவன் சாகுமாறு செய்தார். அப்பாட்டு வருமாறு:

“முரணில் பொதியில் முதற் புத்தேழுள் வாழி

பரண கபிலரும் வாழி – யரணிலா

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்

ஆனந்தஞ் சேர்க சுவாகா” என்பது.

பின்னர் சான்றோர் பலர் கூடி நக்கீரர் வெகுளியை அமர்த்திக் குறையிரந்து அவனைப் பிழைப்பூட்ட வேண்டினர். நக்கீரரும் மனோ சாந்தமுற்றவராய்

“ஆரியம் நன்று தமிழ் தீதென உரைத்த

காரியத்தால் காலக் கோட்பட்டானைச் – சீரிய

வந்தண் பொதியில் அகத்தியனா ராணையினாற்

செந்தமிழே தீர்க்க சுவாகா”

என்ற வெண்பா அருளினார். அவன் பிழைத்து எழுந்தான். நக்கீரர் இவ்வாறு செய்த அருஞ்செயல் ஏற்கனவே செருக்கில் அமிழ்ந்துள்ள தமிழ்ச் சங்கப் புலவர்க்குக் கொழுக் கொம்பாகி விளங்கியது.

புலவர் எத்துணையோர் எப்பெற்றியினராயவரினும் அன்னோர் மதிப்பிழந்தே செல்வாராயினர். அரையன் இஃதறிந்தும் யாது சொல்வதென அறியாதிருந்தான்.

சங்க நிலைகுலைவு

தமிழ்ச் சங்கம் வந்து வறிதே பெயரும் புலவர் அல்லற்பட்டு ஆற்றாது அழுங்கிச் சென்ற நிலையும் அவர் சேர்ந்து கூறிய செய்யுளும் ஊசிமுறி ஒன்பத்தாறு என்ற நூலில் காணப்படுகின்றன. சங்கப்பாட்டு என்ற பெயருடைய நூலும் இதுவே. ஆறைப்போயிலான் என்பவர் அதன் உரை ஆசிரியர். அவர் கூறுமாறு:

“பொதியத்து அமர்ந்த மலையமாதவன் அடி போற்றி. நக்கீரன் உள்ளிட்டோர் நாற்பத்தொன்பதின்மர் கூடலில் சங்கம் பரித்து வருநாளில் புத்தியலாப் புகுந்தோர் (புதிதாக்க் கழக உறுப்பினராகி வந்தவர்) ஏனையருடன் கூடிச் செருக்குற்று அறை போய் அடிப்பட்ட ஒலி எழுத்தாளரை (experts in shorthand) பழுக்கச் செய்து (மிகவும் அதிகப்படுத்தி) பாடி அரங்கேற்ற வருநர் பாடல் ஏறாவாறு கன்மாப்பலகை ஏறித் தோற்பித்துப் “பழம் பாட்டு” என ஏடவிழ்த்துக் காட்டி அவர் உள்ள மாழ்கச் செய்விக்க வேத்தூணியோர் (அரசவை நாடி உண்ணும் பரிசிற் புலவர்) அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வாரச் சொன்ன பாட்டு:-

ஓதி என மாறி உயர் போங்கும் பெட்பணா அய்

ஓதியும் தேரையும் போல் ஓர்துறையின்று ஆஅதி

நடை மயிலால் நாடி நமரொழியச் சேர்வாகு

இடையாற் கடையால் இழி.

(ஊசிமுறி பாயிரம் உரை) என்பது.

இதன் பொருள்: ஓந்தியைப் போல (வேளைக்கு ஒவ்வோர் விதமாக) மாறி, உயர்ச்சி மிக்கு விரும்பிய சங்கப் பலகையே (நீ) ஓந்தியைப் போலவும் தேரையைப் போலவும் ஒருவயப்படாது (அலை வழிவு) ஆகுக: (யாவர்களால் இவ்வழிவு நிலை அடைவாய் என்றால்) ஔவையாராலும் நம்மைப் போன்றவர் அன்றி (நின்னிடம்) தேடி அடையவரும் இடைக்காடராலும் திருவள்ளுவராலுமே” என்பது.

ஓதி – ஓந்தி; அணாய் – சங்கப்பலகை; விளி.  நடைமயில் – ஔவை. சேர்வு – தொழிற்பெயர்; ஆ முதனிலையாகக் கொள்வர் இவ்வாசிரியன்பின். ஈண்டு ஆகு கொள்க. இடை – இடைக்காடன்; கடை – திருவள்ளுவன். (ஆறைப்பொயிலான் குறிப்புரை [ஊசிமுறி பாயிரம்] காட்டியது.)

மூவர் வரவு

இந் நிலையில் பரிசிற் புலவர் படும் பாடு சான்றோர் காதினை எட்டி அன்னோரையும் மன வருந்தச் செய்த்து. இறுதியில் அன்னோர் ஆதரணைப் பெற்று, இறைவன் திருவருள் செயலை முன்னிட்டு இடைக்காடனார் ஔவையாரும், திருவள்ளுவரும், சங்கப் புலவர் கர்வத்தினை ஒடுக்கிச் சங்கப் பலகையினைக் குலைக்க மதுரைக்குப் போதந்தார். அவர் சங்கம் குலைக்க வந்த காலம் ஆனித் திங்கள் என்பர் (ஆறைப்பொயிலான்) ஊசிமுறி உரையாசிரியர்.

திருவள்ளுவரும் சங்கத்தாரும்

அக்காலத்து திருவள்ளுவர் ஔவையாருடன் முதலில் சங்க மண்டபம் சேர்ந்தார். “அவரை அச்சங்கத்திலுள்ள புலவர்கள் நீர் எந்த ஊர் என்று கேட்கத் திருவள்ளுவர் –

“எந்தவூ ரென்றீரிருந்தவூர் நீர் கேளீர்

அந்த ஊர்ச் செய்தியறியீரோ – அந்தவூர்

முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்

அப்பாழும் பாழா யறும்” (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைக் கூறியருளினார்.

அது கேட்ட புலவர்கள் இவர் ஞானி என்றனர். அதற்கு விடையாக வள்ளுவர்:

“ஞானவா னென்றீ ரென்னை நாதவிந்துவுங் கடந்து

கானிலை வரையுஞ் சுட்டுக் கடுவெளி பரமானந்தந்

தானெனு மறிவு தானுந் தவிந்து தன் வசமுங் கெட்டு

மோனமுங் கடந்திட் டப்பால் முடிந்தவர் ஞானியாவார்.”

என்னும் பாடலைக் கூறியருளினார்.

உடனே புலவர்கள் இவரை ஐயர் என்றனர். அதற்கு விடையாக வள்ளுவர்:

“ஐயரென்றுரைக்க நாயேற் கடுக்குமோ வருளிலான் மா

உய்யமும் மலங்களைதிட் டுயிர் பர வெளியிலாக்கிப்

பொய்யொடு களவு மற்றைய புலன்களை யொடுக்கு வானின்

வெய்யவன் மதியம் போல விரவுவ னாய ராவார்”

என்னும் பாடலைக் கூறலும் புலவர்கள் கேட்டு மிக மகிழ்ச்சியுற்று இரும் என்று உபசரித்தனர்.

அதற்கு உத்தரமாக:

“இரு மென உரைத்தீ ரென்னை யேற்குமோ வேழை யேற்குத்

தரும் பொரு ளுணர்ந்து சைவ சமையமு மளைந்து நீங்கி

மருடரு வினையும் போக்கி மாசிலா வுண்மை ஞானம்

பெருகின ரிருப்ப ரீது பெறாதவ ரிருப்பரோதான்”

என்னும் பாடலை வள்ளுவ நுண்ணுணர்ச்சியாலே கூறியதைக் கேட்டுப் புலவர்கள் போம் என்று சொல்லினர்.

அதற்கு அத்தியற்புதமாக வள்ளுவர்:-

போமென வுரைத்தீரென்னைப் பொறியொடு புலன்களைந்து

மாமெனு மசபை யோடு மங்ஙனே நிறுத்திக் கொண்டே

யேமமும் யாம மற்றே யிரவொடு பகலு மற்றுச்

சோமனார் பதியை விட்டுத் துறந்தவர் போவரன்றே”.

என்னும் பாடலைக் கூறியருளினார்.

பின்னும் புலவர்கள் “நில்லும்” எனச் சொல்லினர்.

அதற்கு விடையாக –

“நில்லு மென்று ரைத்தீ ரென்னை நேசபா சங்களைந்து

புல்லறி விடும் பாங் காரம் புலை கொலை களவு மற்றுச்

சொல்லிய வுண்மை ஞானச் சுழுமுனை முடிவின் மீதே

யெல்லையுங் கடந்திட் டப்பர லேகமானவர் கணிற்பார்”.

என்னும் பாடலை வள்ளுவர் கூறினார். (செந்தமி 7 vol. 373, 74)

ஔவையாரும் சங்கத்தாரும்

இவற்றால் புலவர்கள் ஒன்றும் வள்ளுவரிடம் பேச அறியாது திகைத்து அவருடன் வந்த ஔவையரை நோக்கினார். ஔவையார் புலவர்களை நோக்கித் தம்முடைய ஐந்து விரல்களையும் குவித்தும் மூடியும் கொஞ்சம் திறந்தும் சுட்டு விரல் ஒன்றை மாத்திரம் நீட்டியும் ஐந்து விரல்களையும் அகலத் திறந்தும் இவ்வாறான சில குறிகளைக் காட்டி, “இவற்றிற்குப் பொருள் என்னை?” என்று வினவினர். அவர்கள் அவர் கருத்து அறியாதவர்களாய் ஒரு பெண்ணின் நிலையை வர்ணித்து ஒரு வெண்பாச் சொல்லினர்[9]. அது கேட்ட ஔவையார், “நீங்கள் சொல்லியது தவறு” என்று அவர்கள் மனம் புழுங்கி வெட்கம் அடையும்படி –

“ஐயமிடுமின் அறனெறியைக் கைப்பிடியின்

இவ்வளவே னும்மன்னம் இட்டுண்மின் – தெய்வம்

ஒருவனே என்றும் உணரவல் லீரேல்

அருவினை களைந்தும் அறும்.”

என்னும் வெண்பாவால் தாம் கருதிய பொருளை வெளியிட்டார் [அவ்வையார் 1919 அனவரத நாயகம் பிள்ளையவர்கள் பதிப்பு, பக்கம் 34]

இவ்வாற்றால் புலவர் தலைகவிழ்ந்து ஒன்றும் பேசாது தமிழ்க் கழக மண்டபம் விட்டு அகன்றனர்.

மறுநாள் இடைக்காடர், ஔவையாரையும் திருவள்ளுவரையும் கூட்டிக்கொண்டு சங்கமண்டபம் வந்தார். அவர் சென்ற ஆற்றினையும் அங்கு நிகழ்ந்தவற்றையும் ஆறைப்போயிலான் கூறுமாறு:-

அண்ணாந்து ஏகிய சங்கத்தினர் அவ்வாண்டு ஆணித் திங்கள் வள்ளுவனாலும், ஔவையாலும் வீறிழிந்து தாழப் பிற்றைநாள் அவ்விருவரையும் கூட்டிப் பலகை குலை(வி)த்து மூழ்குவிக்க அதனுழைப்போந்த இடைக்காடன் மாட்டு

அது சங்கப்பலகை வீற்றிருந்தான் போக்கியான் “நீயிர் யாரேயோ என்றாற்கு இவன் (இடைக்காடன்) சொற்ற பாட்டு[10]:-

“இடைக்காட்டுறைவேன் யிரியோ ஒஒஒ றீ இஇஇ

படக்கைப் பறியோலை தட்டி – இடைக்காடன்

வந்தோம் சிறுபல கைத் தாலிப் பெருக்கெண்ணித்

தொந் தொந் தோந் தொந்தொன் தோந்தோம்”

                                  (ஊசிமுறி 1)

இப்பாட்டின் கருத்து:

இரியோ ஒஒஒறீஇஇஇ என்று ஒலி செய்து கையிலுள்ள பறியோலைத் தட்டுபவன். இடைக்காட்டில் உறைவேன். பெயர் இடைக்காடன்: சங்கப்பலகை குலைவிக்க வந்தேன் தொம் தொம் தோம் தொம் தொம் தோம் தொம் என்பது.

இவ்வாறு ஒலிக்குறிப்பைக் காட்டியது, மறைந்திருக்கும் ஒலி எழுத்தாளர் எழுத்தாணியால் ஓலைமுறியில் எழுதமுடியாவாறு செய்வதற்கேயாம்.

இங்ஙனம் மறுமொழி கூறியவுடனே தமிழ்ச் சங்கப் பலகை போக்கியானைக் கீழே தள்ளி இடக் குறுக்கம் செய்து கொண்டது.

உடனே அடுத்துள்ள பெருந்தேவன் “இடையனேயோ! புத்தி பிடரியேயோ” என முனுமுனுப்ப இடைக்காடன்

ஆம் ஆம் யாற்றங்கரையிலிருந்த ஓர் மாமரத்தில் ஓர் காக்கையானதிருந்து க்ஃக்ஃக்ஃஃ என்று கரைந்தது – அதை என் மகன் வையக்கோன் த் த் த் த் த் த் என்று எய்யும் அம்பு இல்லாமல் எய்தான் என்ற கருத்தடங்கிய ஓர் செய்யுளைக் கூறினான்.

சங்கப்பலகை அப்புலவனையும் கீழே தள்ளி இடங்குறுகிக் கொண்டது.

கொண்டதும் மலாடன் என்னும் ஓர் புலவன் இடைக்காடரை நோக்கி “ நீ ஓரான்” எனக் கைக்குறி காட்டினான்.

இவர் “எங்கும் உள்ள இறைவன் என்னிடமும் அமர்ந்துள்ளான். த் த் தொத் தொத் த் த் தொத் தொத் என்று கேலி செய்து கண்ணடிக்க வேண்டாம். சங்கப் பலகையை எஃகெஃகெஃகெஃகெஃகெஃ என வாட்டிக் குறுக்கி வைப்பேன் என்றார்.

அவனும் அப்படியே விழச் சங்கப் பலகை குறுகிவிட, நாகன் தேவன் என்னும் புலவன் தலையாடிக் கொண்டு – “பாடும் பாட்டடிப்போம்” என்று கூறினான். இடைக்காடனார் தம் தொந்தி வயிற்றைத் தடவி ஏப்பமிட்டுக் கொண்டு நாக்கு உதப்பி –

“பாட்டுக்கு பாட்டடிப்பாயோ? உன் பாட்டியைத் தூக்கி என் கஞ்சிக் கலயத்துள்ளே டு எவ்வ்வ் எவ்வ் என்று போட்டு ஓவ்வ்வ்வ் ஓவ்வ்வ்வ் ஓவ்வ்வ்வ் என்று உறிஞ்சிடுவேன் பார்” என்ற கருத்துள்ள செய்யுள் ஒன்றைக் கூறினார்.

அவனும் கீழே விழ பலகை குறுகி ஒட்டியது. அடுத்து நத்தத்தன் என்னும் புலவன் சங்கப்பலகை ஏறி – உழையனையும் தன்னையும் பின்னோனையும் தொட்டு ஏக்கழுத்தஞ் செய்து நோக்கினான்.

அதற்கு இடைக்காடர்:

“ஓரு கல்லெறிந்தால் கா கா கா கா க் காக் காக் காக் கா கா என்று சப்தமிட்டுக் கொண்டு ஆயிரம் காக்கை பறந்து விடும். அவனும் இவனும் உவனும் கூடினாலும் பகை வெல்லாது” என்ற கருத்துடைய செய்யுள் ஒன்றைச் செப்பினார். இதைக் கேட்டதும் பலகை அவனையும் கீழே தள்ளித் தன் அளவிற் குறுகியது.

மேல் கல்லாடன் வந்தமர்ந்து “நால் விரல் மேல் பெருவிரல் வைத்து நெற்றி தொட்டு ஈர்ப்ப இடைக்காடர்.

“பூளைப் பஞ்சைப் போல பூ உ உ உ உ உ உ உ திச் சூளைச் சாம்பலைப் பூசுபவரே! உம்மறைச் சொல் நம்மிடம் செல்லாது: என் மனம் கொண்டாலன்றி உம் மந்திரம் பயன்படாது என்ற கருத்துள்ள பா ஒன்று கூறினார்.

இவ்வளவில் ஓராறு எடுப்பாயுள்ள சங்கப் புலவரிருக்கை குலைந்து ஒழிந்தது. மறைவேயிருந்த ஒலி எழுத்தாளர் அடுத்த எடுப்புக்குள் ஓடி மறைந்தார்கள். இடைக்காடர் மேல் எடுப்புக்குச் சென்றார்.

அவ்வெடுப்பில் (ஈராறெடுப்பில்) உள்ள பலகையில் மாமூலன் என்னும் புலவன் இருந்தான். அவன் இவரைக் கண்டதும் பேச வாயெடுத்தான். நாமகள் வாயடைத்தாள். உடனே மனம் உழைந்து சில குறிகளை இவரிடம் மெதுவாய்க் காட்டிப் பேசினான்.

இடைக்காடர் “இ ல் ல் ல் ல் ல் ல் ல் ல் என்று ஒலிக்கும் ஏரல் என்ற ஜலசரம்; கறிஞ்சான் என்ற மரவண்டு இ ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் என்று ஒலிக்கும். ஒய்ய் ஒய்ய்ய்ய்ய் என மொய்த்தும் ஓதப்படுவதை அறிபவரே! பையக் குளர வேண்டாம். பாய்ந்தோடிப்போம்” என்ற கருத்தடங்கிய செய்யுளைக் கூறினார்.

இடைக்காடர் இங்ஙனம் செவிப்புலனாகும் அணுத்திரள் ஒலியை வரிவடிவில் எழுதவொண்ணாதவாறு பலவாறாகப் பாடவே, ஒலியெழுத்தாளர் இவர் உரைப்பதை எழுத இயலாமல் தட்டழிந்து தடங்கெட்டு ஆண்டாண்டுள்ள பிறபிற எடுப்பில் மறைந்து பதுங்கிச் சென்றார்கள்.

ஒவ்வொரு புலவரும் வினவிய தொடைக்கெல்லாம் இடைக்காடர்  விடையிறுத்த அளவிலே, சங்கப்ப பலகையும் தொடர்ந்து தொடர்ந்து தன் அளவில் குறுகிக் கொண்டே வந்தது. அப்பலகை மேல் வீற்றிருந்த புலவரும் அமர இடமின்றி முறை முறையே தவறித் தவறிக் கீழ் இழிந்து போயினர்.

இவ்வாறே முத்தட்டு அமைந்த சங்கப் பலகையுள், ஒவ்வோரிருக்கையுங் குலைந்து, ஒவ்வோர் எடுப்பும் ஒடுங்கி, இரு தட்டும் சாய்ந்து விடவே சொச்சமுற்ற மூன்றாம் தட்டுள் முதல் எடுப்பு ஒழிய ஏனையவும் வெற்றிடமாகி புலவர் இன்றிக் கிடந்தன. கர்வபங்கமுறாது எஞ்சிய சங்கப் புலவர் சிலர் உரையாமே உரையாமே பறையாமே ஓடோடி வெளிப்போந்தார். இரண்டொருவர் இடைக்காடரை வஞ்சனை செய்து சங்க மண்டபம் விட்டு வெளியோட்டப் பலமாய் கைகளைச் செய்தனர். வேண்டிய அளவு மறைவிடமிருந்து பொற்காசு வாரி இறைத்தனர். காதற் பரத்தையரை விட்டு வலிதிற் பற்றி காடர் உள்ளக் கருத்துத் திரும்புமாறு செய்தனர்.

ஒன்றினாலும் அவரைத் திருப்பக் கூட வில்லை. எத்தகைய மாயமாலங்கள் இயற்றினும் இடைக்காடரோ ஒன்றுக்கும் மனம் மயங்கிலர்.

மும்மத வேழம் ஒன்றை விட்டு அவரை மாய்க்க வழி தேடினார்கள். இவரைக் கண்டதும் அது வீறிழிந்து ஓலமிட்டு ஓடியது. மந்திரதந்திர ஒட்டிய வகைகளைப் பிரயோகித்தனர். அவைகளால் இயற்றிய அப்புலவர்களே துன்பமுற்றனர். கிள்ளை ஒன்றால் கேலி செய்வித்தார். இடைக்காடனார் அதனைப் பொருட்படுத்தாது, அது கூட்டைவிட்டுப் பறந்தோடச் செய்தார். அத்துடன் வெற்றிடமாய சங்கப்பலகை ஒவ்வொன்றையும் தொட்டுக் குலையும்படி செய்து வந்தார். பின்னர் அதன் அட்டவணையைக் கைப்பற்றிச் சுற்றி வலம் வந்து, அஃது அமைந்துள்ள சூக்கும இயலை அறிந்தார்.

இறுதியில் “வல்லே தொல்லையொடு” சங்க அணை இறுகப் பற்றி (தேவகுலத்தோர் பொய்கையுள்) நீராழியுள் அஃது அமிழும்படி பாடினார். அது வருமாறு:-

“கத்திரி கெல்லெஃகங் கண்கூடாக் கண்ட்த்தைக்

கத்திரிப்பா டொட்டுங் கதையாமா __ளித்துலைக்கே

வஞ்சியான் பொய்யா மொழியான் வருமளவைத்

தஞ்சின்றி நீரமிழ்ந்து தாழ்” என்பது.

இதன் கருத்து:- கத்திரி என்ற செடியைக் கெல்ல அளித்த ஓர் இரும்பாயுதத்தைத் தன் கழுத்தை வெட்டுதற்குச் செலுத்தியது போல் ஆயிற்று (புலவர்களின் கவித்திறத்தை ஆய்ந்துணர்வதற்கு அளிக்கப்பட்ட இச்சங்கப்பலகையைத் தகாத வழியே செலுத்தினார்கள் சங்கப்புலவர்கள்). ஆகவே வஞ்சி நகர் பொய்யாமொழி என்ற பெருந்தகையார் இனி உலகில் தோன்றுமளவும் சங்கப்பலகையே நீ இந்த நீராழியுள் அமிழ்ந்து வாழ்க என்பது.

இங்ஙனம் சங்கப் பலகையைக் குலைத்து அதன் அடிமூலத்தை நீராழியுள் அமிழ்த்திய இடைக்காடர் வினாயமூர்த்தியை வாழ்த்தினார்.

அவ்வாழ்த்து வருமாறு:-

“ஓதிலென் ஓதா விடிலென்னை நால்வாய!

மோதகமே நாம் படைக்கின் முன்னாவாய் – ஆதன்

அறிஞரெனத் தேராரை யற்றொழியக் காட்டுஞ்

சிறிய பெரிய வாழ் தே எத்து”

இதன் கருத்து: நால்வாயனே! சிறிய உருவினால் பேர் அருள் புரிபவனே! உன்னை தியானித்தால் – (சஞ்சலத்தால் போதப்படுகின்ற மனதில் உன்னை உருவாக்கிக் கொண்டால்) நீ வெளிப்படுவாய்: அறிவில்லாதவன் என்றும் அறிஞன் என்றும் அறியாத சங்கத்தவரை கர்வபங்கம் செய்து ஒடுக்க வழிகாட்டியவனே! நீ வாழ்க என்பது.

“மோதகம் நாம் படைக்கின்” – என்றதற்கு ஓருரையாசிரியர், “மோதகம் என்ற உணவை உன்முன் படைத்துவிட்டால்” என்று உரை கூறியுள்ளார்.

இந்நிலையில் கடைச்சங்கப் புலவராகவும், அவர் காலத்தினை ஒட்டியவராகவும் உள்ள தமிழ்ப்புலவர்களுள் ஐஞ்ஞூற்று முப்பத்துமூவர் பெயர் இக்காலம் காணப்படுகின்றன.

முச்சங்க வரலாறு இவ்வளவில் எழுதப்பட்டு முடிவாயிற்று. இதில் எவ்வாற்றானும் ஆதாரமற்ற கதைகளும், இடக்கரடக்கர் எனக் கருதிய சொற்பொருள் கட்டுரைகளும் ஒழிக்கப்பட்டுள்ளன.

********************


* This copyright is reserved to the author. இது “தமிழ்ச்சங்கப் புலவர் வரலாறு” (Tamil Men of Letters) என்ற நூலின் முன்னுரையாக எழுதிய “சங்க வரலாற்றின்” ஒரு பகுதியாம். ஆராய்ச்சியும் இத்துடன் அடுத்து வரும்.

[1] அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் (449) என்ப.

[2] அவர்களாற் பாடப்பட்டன:- நெடுந்தொகை நானூறும் (அகநானூறு), குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது (150) கலியும் (கலித்தொகை), எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும் சிற்றிசையும், பேரிசையும் என்னும் இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமுமென்ப.

[3] அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்ப.

[4] அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் (49) என்ப.

[5] அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப.

[6] அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது உத்தரமதுரை என்ப என்பது.

[7] இவ்விரண்டடிகள் தொல். அகத்தி.சூ. நச். உரைமேற்கோள்.

[8] வேங்கை மார்பன் என்பவன் கானப் பேரெயிலின் தலைவன். பெரிய காட்டால் அரணாகச் சூழப் பெற்றிருந்தமையின், அவன் ஊர் கானப் பேரெயில் எனப்பட்டது. அத்தலைவனை வென்று புகழ் பெற்றமையின் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனவும் கூறப்பட்டான்.

[9] அவ்வெண்பா தனிப்பாடற்றிரட்டில் வந்துள்ளது:-

“இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு நல்ல இளமுலையாள் – இவ்வளவால்

நைந்த விடையின் நலமேவு மன்மதன்றன்

ஐந்து கணையால் வாடினள்.”

[10] இப்பாட்டின் குறிப்பாக உரைகாரர் காட்டியவற்றுள் சில “காடன் வந்தோம் தன்மை பன்மை மயக்கம்” இடவமைதி “பன்மைக்காகு மிடனுமாருண்டே” (தொல். சொல்.) என்பது பற்றி….தாலிப்பெருக்கு – மங்கலச்சொல். குலைவுகாட்டியது. ஈற்றடி இவன் குறிப்பு வழங்குமொழி – தட்டி “ஒன்றுபோற் காட்டி” – (திருக்குறள்) எனப் பெயராய் நின்றது.

ஊசிமுறி நூலறிமுகம்

ஊசிமுறி ஒன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

இடைக்காடன் பாடியது

ஆறைப் பொயிலான் உரை

நூலறிமுகம்:

‘ ஊசிமுறி ’ என்னும் சொல்லை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஊசிமுறி என்னும் சொல்லுக்கு இணையதளத்தில் விக்கிப்பீடியாவில் நாம் காண்பது :

“ ஊசிமுறி என்பது ஒரு தொகைச் சொல். ஊசியும் முறியும் என்பது இதன் விரி. ஊசி என்பது எழுத்தாணி. முறி என்பது எழுதும் ஓலை. ஒரு பாடலை எழுதும்போது அது முடிவதற்குள் இடையிலே ஊசி முறிந்து போன பாடல் ஒன்றுக்கு  ஊசிமுறி  என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. “ என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

சங்க காலத்துப் புலவர் பெருமக்களுள் ஒருவர் இடைக்காடர். இடைக்காடு என்னும் இடத்தைச் சேர்ந்தவர். { திருவண்ணாமலைச் சித்தர் இடைக்காடர் என்பவர் வேறு } சங்கத் தொகை நூல்களில் இவர் பாடியதாக பத்துப் பாடல்கள் கிடைக்கப் பெருகின்றன அவை : அகநானூற்றில் 6 பாடல்களும் {139, 194, 274, 284, 304, 374 } குறுந்தொகையில் ஒரு பாடலும் { 351 } நற்றிணையில் இரண்டு பாடல்களும் { 142, 316 } புறநானூற்றில் ஒரு பாடலும் { 42 } ஆகும். இவை தவிர “ ஊசிமுறி யொன்பத்தாறு “ என்ற நூலையும் யெழுதியுள்ளார். ஒன்பத்தாறு என்பது 9 x 6 = 54 பாடல்களைக் கொண்டது.   

இந்த 54 பாடல்களையும் ஓராறெடுப்பு, ஈராறெடுப்பு, மூவாறெடுப்பு என ஒன்பத்தாறெடுப்பு வரை ஒவ்வொரு எடுப்புக்கும் ஆறு ஆறு பாடல்களாகப் பகுத்திருக்கிறார் இடைக்காடர். எடுப்பு என்பது ஆறு பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பு என்பதை நம் பண்டிதமணி யவர்கள் எழுதிய “ இடைக்காடர் வரலாறு “ என்கிற நீண்ட நெடிய கட்டுரையின் மூலம் தெரியவருகிறது.

தனிப்பாடற்றிரட்டு என்னும் நூலில் “ கம்பர் தனிப்பாடல் “ என்ற பக்கத்தில்

56 – 60 என்கிற பாடல் தொகுப்பில் 60 வது பாடலாக :

“ இடைக்காடர் பாடிய ஊசிமுறி

            ஆற்றங் கரையினருகி ருக்கு மாமரத்திற்

            காக்கை யிருந்து வெனக்காக்கைதனை

            எய்யக் கோலில்லாமல் . . . . என்றானே

            வையக் கோனாரின் மகன் “  —

என்றிருக்கிறது. ஊசிமுறி என்ற நூலைப் பற்றி நமக்குக் கிடைக்கக்கூடிய செய்தி இது மட்டுமே. முழுமையான ஊசிமுறி நூல் கிடைக்கவில்லை என் கிற நிலையில், நம் பண்டிதமணியவர்களுக்கு ஊசிமுறி யொன்பத்தாறு “ என்ற இந் நூல் “ ஆறைப் பொயிலான் “ என்பவர் உரையுடன் ஓலைச் சுவடி வடிவில் கிடைத்திருக்கிறது. அதனைப் பதிப்பிக்கும் பொருட்டு ஏட்டிலிருந்து காகிதத்தில் படி யெடுத்துப் பிறகு அப் படியுளுள்ள சொற்களை ஆராய்ந்தறிந்து நெறிப்படுத்தி யெழுதியும் இருக்கிறார்.

இதில் பாயிரமாக ஒரு வெண்பா நீங்கலாகப் பதினெட்டுப் பாடல்கள் கொண்ட மூவாரறெடுப்பு வரை நெறிப்படுத்தி யெழுதியிருக்கிறார்கள். ஏனைப் பகுதிகள் ஏட்டுச் சுவடிப் படியாகவே இருக்கிறது. ஏதோ ஓர் காரணத்தால் அப் பணி முற்றுப்பெறவில்லை. ஊசிமுறி யொன்பத்தாறு நூல் வடிவம் பெற்று அச்சில் வராமைக்கு தமிழ் மாந்தரின் தவக்குறைவே என்றுதான் சொல்லவேண்டும்.

மேலும் 54 பாடல்களில் 22 பாடல்களுக்கு மட்டுமே மூலமும் உரையும் கிடைக்கப்பெறுகின்றன. ஏனையப் பாடல்களும் உரையும் முழுமையாகக் கிடைக்கவில்லை யென்பதை ஏட்டுப்படியை முழுமையாக நோக்கும் போது தெரியவருகிறது. கிடைக்கப் பெறாத அப் பகுதிகள் கரையான் அரித்தோ அல்லது வேறு வகையிலோ சிதிலமடைந்திருக்கக் கூடும்.

ஏட்டிலிருந்து அச்சுப்பதிப்பது என்பது அவ்வளவு எளிய செயலன்று.

ஓலைச்சுவடிகள் சிதைந்த நிலையில் பிரித்தவுடன் “ பொல பொல “ வென்று

உதிர்ந்து கொட்டும். கட்டை அவிழ்க்கும் போது கட்டுக் கயிற்றோடு பிய்த்துக்கொண்டு வரும் ஏடுகள் பல.  ஏட்டைப் புரட்டினால் நூல்கள் ஒடிந்து கீழே உதிரும். ஒட்டிக்கொண்டுள்ள இரண்டு ஏடுகளைப் பிரிக்க முயன்றால் இரண்டும் கிழிந்து போகும். இத்தனை அவதிகளையும் பட்டு நூலை முறைப் படுத்திப் பார்க்கும் போது பக்க எண்கள் இல்லாமல் ஏடு முன்னும் பின்னுமாக இருக்கும். ஒரு பக்கத்தில் அல்லது ஓலையின் கடைசி யெழுத்தை வைத்துக் கொண்டு அடுத்த ஓலையின் முதல் யெழுத்தையும் வைத்துக்கொண்டு இதற்கடுத்து இதுதானா என்று ஆராய்ந்து உறுதி கொண்டு இணைக்க வேண்டும். இவ்வாறு கடினப்பட்டுத்தான் பழந்தமிழ் நூல்களைப் பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்தார் என்று முக்தா சீனிவாசன் பதிவு செய்துள்ளார்.

பதிப்புப் பணியில் ஏற்படும் சிக்கல்களை டாக்டர் உ வே சா அவர்கள் தாம் யெழுதிய “ என் சரிதம் “ என்கிற தன் வரலாற்று நூலில் கீழுள்ளவாறு யெழுதி நமக்கு அறிவிக்கின்றார் :

  “ மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு இரா.  “ர” கரத்துக்கும்  “ற” கரத்துக்கும், காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் , சாபமாகத் தோற்றும்.  ஓரிடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையினை நான் சாடு என்றே பல காலம் எண்ணியிருந்தேன். தரனென்பதைத் தானென்றே நினைத்தேன். குருதி யென்பதைக் குந்தி யென்றெண்ணித் தடுமாறினேன். உரை இது , மூலம் இது , மேற்கோள் இது என்ற வேறூபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. “

     இவ்வாறு பதிப்புப் பணியில் ஏற்படும் சிக்கல்கள் நம் பண்டிதமணியவர் களுக்கும் ஏற்ப்பட்டிருக்கக்கூடும். இருந்தும் அவர்கள் ஏட்டுப் படியிலிருந்து பத்தொன்பது பாடல்களையும் அத்துடன் கூடிய உரையையும் நெறிப்படுத்தி யெழுதியிருக்கிறார்கள்.

ஊசிமுறியில் உள்ள பாடல்களுக்கு உரையாசிரியர் ஆறைப் பொயிலான் உரையெழுதும் போது  பாடல்களுக்குப் பொருள் சொல்லாது இலக்கணம் மட்டுமே எழுதிச்  செல்கிறார், சில சொற்களுக்கு மட்டும் பொருளுரைக்கிறார். எனவே இதனை ஓர் இலக்கண நூல் என்றே சொல்லலாம். உரையில் வரும் சொற்களுக்கு ஆங்காங்கே பண்டிதமணியவர்கள் அடிக்குறிப்பு யெழுதியுள்ளார் {உ.ம்}  ஓராறேடுப்பில் முதற்பாடலில் வரும் “ பறியோலை தட்டி “ என்பதற்கு ஆறைப் பொயிலான் உரை யெழுதும்போது “ தட்டி “ – “ஓன்றுபோற்காட்டி” யெனெ யெழுதுவார். அதற்குப் பண்டிதமணியவர்கள் :

  நாளென வொன்று போற் காட்டி யுயிரிரும்

   வாள துணர்வார்ப் பெரின் “ இக் குறளில் வரும் “காட்டி” என்னும் சொல்லை எச்சமாகக்கொண்டு பரிமேலழகர் உரை கூறியுள்ளார். அவர் பாடந் தர உரையுள் இக் கருத்து வெளிப்படுவதையும், அதனை மறுத்து அவர் உரைப்பதையும் காண்க.

ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி

  பன்மைக் காகு மிடனுமா ருண்டே

என்று அடிக்குறிப்பு யெழுதுகிறார்.

மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்” என்னும் தலைப்பில் புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் ஒரு பட்டியலைத் திரட்டித் தந்துள்ளார்கள் { இணைய தளம் விக்கிப்பீடியாவில் காண்க.} அதில் இடைக்காடர் பாடிய “ ஊசிமுறி “ யும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஓலைச்சுவடியிலிருந்து காகிதத்தில் கையெழுத்துப் படியாக்கி அவற்றில் காணப்படும் பாட வேறுபாடுகளையும் பல சங்கப்பாடல்கள் வழி ஒப்பிட்டு உண்மை வடிவம் கண்டு பொருளுணர்ந்து நெறிப்படுத்தி யெழுதிய பண்டிதமணியவர்களின் உழைப்பு வீணாகாமல் ஏடு பெயர்த்தெழுதியதை அப்படியே கணினியில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

தற்காலத் தமிழறிஞர்கள் யாரேனும் பண்டிதமணியவர்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்து “ஊசிமுறி”யில் உள்ள அனைத்துப் பாடல்களுக்கும் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தகுந்த பொருள் கூறுவார்களேயானால் அவர்களின் அச் சிறந்த பணியைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பாராட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஊசிமுறி ஒன்பத்தாறு

ஊசிமுறி ஒன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

இடைக்காடன் பாடியது

ஆறைப்பொயிலான் உரை

தேனறா மகிழ்த் தொடையலு மௌலியுந் திருக்கிளர் குழைக்காதுங்

கானறா மலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயு

மோனமாகிய வடிவமு மார் பமு முத்திரைத் திருக்கையும்

ஞானதேசிகன் சரண : தா மரையுமென் னயனம் விட்டகலாவே.

திருஞானமுத்திரை துணை

நாவுண்டு நீயுண்டு நாமந் தரித்தோதப்

பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ – தேமுண்டு

வண்டுறங்குஞ் சோலை மதிளரங்கத் தெப்போழ்து

முண்டுறங்கு வானொருவனுண்டு

             – ஆறைப்பொயிலான் வாழ்த்து

திருஞானமுத்திரை துணை

ஊசிமுறி யொன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

ஆறைப்பொயிலான் உறை

பொதியத்தமர்ந்த மலையமாதவன் அடிபோற்றி நக்கீரனுள்ளிட்டோர் நாற்பத்தொன்பதின்மர் கூடலிற் சங்கம் பரித்து வரு நாளிற், புத்தியலாப் புகுந்தோர் ஏனையருடன் கூடிச் செருக்குற்று, அறைபோயடிப்பட்ட ஒலியெழுத்தாளரைப் பழுக்கச் செய்து, பாடியரங்கேற்ற வருநர் பாடல் ஏளுவாறு, கன்மாப்பலகையேறித் தோற்பித்துப், பழம்பாட்டென ஏடவிழித்துக்காட்டி, அவருள்ள மாழ்கச் செய்விக்க வேத்தூணியோர் அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வாரச் சொற்ற பாட்டு :-

வேத்தூணியோர் – அரசவை நாடியுண்ணும் பரிசிற் புலவர்.

1. ஓதியென மாறி யுயர்போங்கும் பெட்பணாஅ

யோதியுந் தேரையும் போ லோர்துறையின் – றுஅதி.

நடைமயிலா னாடி நமரொழியச் சேர்வா

கிடையாற் கடையா லிழி.

ஓதி – ஓந்தி. அணாஅய் – சங்கப்பலகை: விளி. நடைமயில் – ஔவை. சேர்வு – தொழிற்பெயர். ‘ஆ’முதனிலையா(க)க் கொள்வர் இவ்வாசிரியர்: ஈண்டு ‘ஆகு’ கொள்க. இடை – இடைக்காடன். கடை – திருவள்ளுவன்.

தலைத்தட்டு -.- [ஓராறெடுப்பு

அண்ணாந்தேகிய சங்கத்தினர் அவ்வியாண்டு ஆனித்திங்கள் வள்ளுவனாலும் ஔவையாலும் வீறு இழிந்து தாழப் பிற்றை நாள் அவ்விருவரையும் கூட்டிப் பலகை குலைவித்து மூழ்குவிப்பான், வேண்டியதனுழைப் போந்தான் இடைக்காடன் மாட்டு வீற்றிருந்தான் போக்கியான் “நீயிர் யா[வ]ரேயோ” என்றாற்கு இவன் சொற்ற பாட்டு:-

2. இடைக்காட் டுறைவெ னி(ய்) ரியோஒஒஒ றீஇஇஇ படைக்கைப் பறியோலை தட்டி:- இடைக்காடன் வந்தோஞ் சிறுபலகைத் தாலிப் பெருக்கெண்ணித்தொந்தொந்தோந் தொந்தொந்தோந் தோம்.

“இய்ரியோ” – இடையன் கூப்பீடு: ஒலி சுட்டியது: ஒகரம் மூன்றும் இகரம் மூன்றும் அளபெடை. “பறியோலை” – அவற்குரியது. “தட்டி” – ஒன்றுபோற் காட்டி[1]” [திருக்குறள் – நிலையாமை ] எனப் பெயராய் நின்றது. “காடன் வந்தோம்” தன்மைப்பன்மை மயக்கம் இடவமைதி.[2] “பன்மைக் காகு மிடனுமா ருண்டே” [தொல்.சொல் – எச்சவியல்] என்பது பற்றி: ஏனையரைக் கூட்டிக் கூறியதூ உமாம். “தாலிப்பெருக்கு” – மங்கலச் சொல்: குலைவு காடியது. ஈற்றடி இவன் குறிப்பு வழங்குமொழி.

3. பலகை அவனைத் தள்ளி இடக்குறுக்கஞ்செய்ய அடுத்துள்ள பெருந்தேவன் “இடையனேயோ, புத்தி பிடரியேயோ” என முறுமுறுப்பச் சொன்ன பாட்டு:-

யாற்றங் கரையி னருகிருக்கு மாமரத்திற்

காக்கை யிருந்து கஃஃகஃஃகெனக் – காக்கைதனை

யெய்யக்கோ லில்லாமை த்த்த்த்த்தெனவெய்தான்

வையக்கோ னானென் மகன்.

கஃஃ மிடற்றொலி காட்ட. தகரமெய் ஆறும் நாக்குட் கொட்ட. ஒலியெழுத்தாளர் எழுத்தாணியூசியால் முறியில் எடுப்பியாவாறு இங்ஙனம் பாடுகின்றான் ஆசிரியன். மேல்வருவனவும் இது. [2]

4. பலகை அவனையும் அங்ஙனமாக்க இடப்பக்கமுள்ள மலாடன் – மற்றையான், “நீ ஓரான்” எனக் கைக்குறி காட்டியவளவை பாடியது:-

எங்குமுளோ | னிங்ங்ங்குண்டு. | த்த்தொத்தொத் | த்தொதென்னுங்ங்ங்கி நையாடிக் கண்கொட்டல்:- பங்ங்ங்கிட்டெஃகெக்கெஃ | கெஃகெஃகெஃ | கெஃகென வாட்டி யஃகிவரச் செய்வே னதை.

“த்தொத்” – இதழ்குவித்துக் கூற. “என் நுங்கு” – என் = வினா. நையாடி இக்காலத்து நையாண்டி என வழங்கும். “கொட்டல்” – எதிர்மறை முற்று. பின்னடியில் உள்ளது உள்ளிழுப்பு. “அதை” பலகையைச் சுட்டியது. அஃது ஆளாவட்டத்திற் றன்பழைய அளவிற் குறுக்கஞ் செய்யலை இப்பாட்டாற் காட்டினான்.                                                 

5. மறுத்து அவன் வீழ, நாகன்றேவன் தலையாட்டிப் போந்தான் – “பாடும் பாட்டடிப்போம்” என்றாற்குக் காடன் வயிறுதைஇ ஏப்பமிட்டு நாக்குதப்பிச் சொன்ன பாட்டு:-

“பாட்டுக்குப் பாட்டு: நும்பாட்டடியைத் தூக்கி யெம் மீட்டுக் கலையத்து ளேஎவ்வ்வ்வென – போஒட்ட்ட்டோவ்வ்வ்வ் வோவ்வ்வ்வ் வோவ்வ்வ் வுறிஞ்சிடுவா மூவ்வ்வ்வ் வென்றொரு மூச்சு.

“பாட்டுக்குப் பாட்டு” – வினா. “ஈட்டுக்கலையம்” – காணத்தைத் துவைத்து ஆக்கிய வுணவு சிரட்டை யுண்மூடியாவிட்டு மேலிருப்பதைக் குறித்தது.

“ஏவ்” – புளியேப்பக்காரன் புறமிட்டாற் போற் கூறுக. ஓவ் என்ற மூன்றாமடி ஒலியுயிர்ப்பீடு. பின்னையது உள்ளிழுப்பு. மூன்றாமடியுள் முதலிரு சீரும் நான்கன்றலைச் சீரும் ஐந்து மாத்திரையாகக் கூற. “ஊவ்” நன்கு குவித்திழுக்க. ஒருமூச்சாய் உறிஞ்சிடுவாமென்க.

6. பெயர்த்து நத்தத்தன் வட்டியேறியான், கைகாட்டி “உழையனையுந் தன்னையும் பின்னோனையும் தொட்டு ஏக் கழுத்தம் செய்து நோக்கினார்க்குச் சொன்ன பாட்டு:-

[3]அஅவனு மிவனு முஉவனுங் கூஉடி

லெஎவனை வெல்லா ரிகலென்பி – ரொஒஒரு

கல்லெறியிற் காகாகா காக்காக்காக் காவென்

செல்லுமே யாயிரங்காக் கை

குறிற் சுட்டு மூன்றும் வினாவும் ஒருமையெண்ணும் அளபெடுப்பு. மூன்றாமடி ஒலி காக்கையின் குரல்: உரப்பிக் கூற. எனவென்னெச்சம் என் என நின்றது. மேல் வருவனவற்றிற்கும் முன்னதற்கும் இஃது ஒக்கும்.  

7. தொடர்ந்து அவன் வீழ்வாக அடுத்துக் கல்லாடன் வந்தமர்ந்து நால்விரன் மேற்பெருவிரல் வைத்து நெற்றி தொட்டீர்ப்பப் பாடியது:-

பூளைப்பஞ் சொப்ப்ப்ப்ப்ப்பூ உஉஉஉஉ | உஉஉதிச்

சூளைச்சாம் பற்பூசுஞ் சொல்வலீர் – கூஉழ்ழ்ழ்ழ்ப்

பப்பன்று நாஅம்ம் பயன்மனமேற் றாலன்றி

யொப்பாது நும்மறைச்சொல் லுண்ம்ம்

உகரத்திற் கெட்டும் ழகரமெய் க்கு நான்கும் கூட்ட பூஉதிச் சாம்பலென்க. பெயரொட்டுப் பண்புத்தொகை. மூன்றாமடியுட் கண்டது கொள்வோன் மனனுணர்வின்றி மறைமொழி பயன் கொடாதென்பது அற்றேல் தொல்காப்பிய காக்கைபாடினியர் ஒருவன் தாழவும் வாழவும் முறையே கூறினாரால் எனின் அவை அவர் மறைக் கூற்றான் வந்தவல்ல. அன்னோர் சொல் பழுதாகா நிலைமையுடைமையான் நேர்ந்தவை என்க. பப்பு – பருப்பு. பயல் – பையல மருஉ. மறைச்சொல் – மந்திரமொழி. செய்யுளியலுடையார் கூறியது நோக்கி உணர்க. உண்ம்ம் – உள்ளும் – இடைக்குறைத்திரிபளபெடை.

ஓராறெடுப்பு முற்றிற்று.

ஈராறெடுப்பு

8. மேல் அவனும் அங்ஙனமாக மாமூலன் வந்து வாயெடுப்ப நாமகள் வாயடைப்ப அவன் மனமுளைந்து சிலகுறி காட்டிச் சேற எண்ணி உழையரொடு பையப் பேசப் பாடியது.

இல்ல்ல்ல்ல் ல்ல்ல்ல்ல் ல்ல்ல் | லெனுமேர

லிஞ்ஞ்ஞ்ஞ்ஞ் ஞ்ஞ்ஞ்ஞ்ஞ் ஞ்ஞ்ஞ் ஞெனுங் கறிஞ்சா

னெய்ய்ய்ய் | ய்ய்ய்ய் | யென : மொய்க்கு | மோத்தறிவீர் |

பெய்யக் குளளுதிர் பாய்ம்.

முதல் இரண்டடி பதின்மூன்று மாத்திரையளபெடுத்தன: அதற்கேற்றமாக் கொள்ள வோத்தில்லாமையின். “ஏரல்” – நத்தையில் ஓர்வகை. “கறிஞ்சான்” – ஓர்மரவண்டின் பெயர் வகை. மூன்றமடியுள் எட்டுமாத்திரை அளபெடை. “பாயும் பலகை விட்டு பாய்ந்தோடிப்போம்: திரிந்து நின்றது ஓசை நோக்கி.

9. பின்னர் வந்த நக்கீரன் அடடா எனப் பலகையினின்றுங் கையை மார்பின் புறமாக மடக்கி முன்னீட்டி வலிப்பப் பாடியது:-

ஏலேஎஎ | லய்யாஅஅ வேலேஎஎ லய்யாஅஅ

வேலேஎ | லெனக் கூறி யீழ் பரவ | —ரோஒஒஒல

மிட்டாழும் நாவாய்க் கயிறிசுப்ப ரித்திறமே.

யோஒஒஒஒ வுன்குலமஃ தோர்.

“அடடா” என்றற் கொருவாறு ஏலேயென இழித்து விளித்தவாறுந்தோன்றிற்று. அவன் குலவியல்பற்றி இவ்வாறிக் குறியிட்டொலி காட்டினான் ஆசிரியன் என்றறிக. ஈழ் – மது: புலைத்திறனுமாம்.                               [அ]

10. அடுத்துவருங் கபிலன் “ஏனையே | இத்துணை வம்பு: சும்மேபோம்” என்றாற்குப் பாடியது :-

போம் போம் போம் போம் போம் போ மென்றீராற் புன்பறைகள்

பும் பும் பும்  பும் பும் மெனப் பூரீக்ச் – சாங்ங்ங்ங்ங்

கா[ல் ந]மக் கீ | தன்று கடிதே பிறப்போரும்

வாலறிந்து நூலறியும் வாண்ம்ம்.

பும் என்ற ஒலிக்குறிப்பைந்தும் பறையொலி. தனிச்சீர் ஙகரவொற்றைந்து. ஈதன்று உகரக்குறுக்கம்: அலகுவிலக்க. வாண்ம்ம் – வாழ் – பகுதி. “கிளந்தவல்ல செய்யுளுட்டிரிநவும்” [தொல் – எழுத் – குற்றிய. எயஅ] என்பதாலமைக்க.

“நிலமிசை | வாண | ரலமர | றீர” [புறம் – 43] என்பதும் அது. “பிறப்போரும்” என்றமை பக்கல் நின்ற ஔவை துணைவராயினமை நோக்கி.     

11. அவனும் முன்னிலை யேயாகப் பரணன் வந்து “ஈண்டுள்ளார் புலவரல்லரோ? மதித்துரையாடும்” என்றாற்குச் சொற்றது :-

என்பக்க னிற்போ னிரும்புலவ னியாமதியேம்

புன் புலவீர் நும்மை. புலையரே | — யன்பின்றி

யேமாற்ற | விர்க் கிர்க் கிர்க் | கிர்க்கிர்க்கிர் | கென்றெழுதல்

காமாட்டிப் பையா அற்பாற் காட்டு.

“என்பக்கல் நிற்போன்” – வள்ளுவன். புலையர் – ஈண்டுக் குலஞ் சுட்டாது ஈரமின்மை குறித்து நின்றார்க்காயிற்று. “இர்க்” ஆறும் எழுத்தாணி ஊசிமுறிபாற் பூட்டி எழுத நேரும் ஒலி. காமாட்டி – இழிசினர்மொழி. மதிப்பிறக்கிக் கூறியதூஉமாம்: ஒன்றும் பற்றா விடரும் தூர்த்தரும் வேழம்பரும் நடரும் இம்மொழியான் அழைக்கப்படுதல் உண்மையாகவும். அன்னோர்பாற் காட்டென்றலின்.                               

12. பின்னர் அரிசில்கிழான் “நில்லாதேயும்: உட்காரும் கட்டவிழ்க்காதேயும்” எனக் கூறியாற்குப் பாடியது :-

கட்டவிழ்த் தேற்றைக் கழனியேர்ப் பூண்மாட்டி

யட்டியுற | நின்றல்க் லக் | லக்லக் லக் | லக்கென

னெட்டித் தழுநீரிர் | நீரிவ | ணில்லாதி

ருட்காரு மெட்டிப்போ யோர்ந்து.

ஏற்றை – காளை. ஆற்றலொடு புணர்ந்தவற்றிற்கெல்லாம் ஏற்றைக்கிளவியுரித்து”[4] என்றமையாற் கொள்க: இரண்டன்றொகை விரிக்க. அதனை ஓட்டுவோர் வாயொலிக் குறிப்பு “அல்கல்க்” என்பது: வலப்புறம் நுனி நாவொட்டி யுயிர்க்க. ஒலி ஆறு. நெட்டித் தழு நீரீர் என்றார் உழுவித்துண்ணும் வேளாளர் குலமெனினும் பொதுமை நோக்கி. நீரிர் – விளி. நீர் – தன்மை.                                                   [யக]

13. தொடர்ந்து மருத்துவன் தாமோதரன் எழுந்து சங்கங்குலையினும் ஒளிபோகாது என்னப் பாடியது:-

சங்கஞ் சுட் டொண்ணொளிபார் தாமோ தரவோடு

பங்கிட் டொழியுமியல் பார்த்தறிக —வங்ங்ங்கம்

நீறி லுயர்தங்கம் நீராடி னூறிழைக்குங்

கூறிற் குயக்குலச் சேய் கூறு.

சங்கம் – சங்குவளை: மணியாக் கட்டுப்படாது கவசத்துண்ணின்றும் பிளந்து புகைந்தோடும் இயல்புடைத்தென வங்கத்தியல்பு கூறியவாறு. வங்கம் – ஈயவிரசம்: வெண்பொன் அன்று. ஊறு – கொடுமை. குயக்குலம் – குலஞ்சுட்டியது. குயக்குலஞ் சேய் எனப்பாடங் கொள்வார் குயக்குலன் என்பான் சேய் என்ப.                                            

ஈராறெடுப்பு முற்றிற்று

மூவாறெடுப்பு

14. வீணை அவனையும் வீழ்த்திச் சுருங் கமுறையே சீத்தலை சாத்தன் ஏறித் தன் தலை காட்டி[5] உரம் தட்டி அமரச் சொற்றது:-

மார்பு தட்டும் பாஅல்ல் வணிக விருங்குரீஇ(க்)

கீர்ந்து கீஇஇஇஇஇஇக் கெக்கரிக்குஞ் –சோஒஒர்ந்து

போகே எ | றினையழியும் போ ஒதி புனங் கொல்லை

வேங் கையும் | வீட்டு மரும்பு.

பால்வணிகன் – வாணியவகுப்புளொன்று. குரீஇ – குருவி: அதனோசை கூட்டியொலிக்க. ஈகாரவளபெடைஆறு. “வேங்கை மலரத்தினைமுற்றும்” என்றல் காலநோக்கிய வழக்கு. அரும்பு வீட்டும் என மாற்றுக. வீட்டும் – மலரும்

15. பின்னர் வந்த கோதமன் “அத்துனை வல்லிரேயோ எங்கள் நாற்பத்தொன்பதிமரைவிட” என்றற்குக் கொட்டம் அடங்கப் பாடியது :-

ஓரொற்றாற் கீழ்வீடு மோத்துணராப் பார்ப்பானே[ய்]

போஒஒஒ யோஒஒஒ போஒஒஒ யோஒஒஒ

சோஒஒஒ காஅப்பா காஅஅஅ தேஎஎஎ

நோஒ மறையை நுவல்.

முதலடி பார்ப்பான் மெய்யாற்றல் கூறியவாறு. “ஏலாதான் பார்ப்பான்” [நான்மணி.] என்றார் பிறரும். ஒகரம் சீர் ஒன்றுக்கு மூன்றாக வளபெடுத்தது. நொ சோகாப் பாகாதே போ என்க. மறையைநுவல் பிறிதோர் தொடர். நொ – குற்றெழுத்தளபெடை.                                        

16. சிறுகருந்தும்பியான் “குலத்துக் குத்தக் ககோலம் வேண்டாமா” என்றாற்குப் பாடியது :-

கள்ளெங்குண் டங்ங்கேய் கருந்தும்பி பாய்ந்தூதுந்

தொள்ளை | வடித்த துணைக்காதா – சொள்ளைச்

சிறகடித்தோ ரீயார் சிவனார் தலையிற்

பறத்தலென் பாழ்மதியா பார்.

“தொள்ளைவடித்ததுணைக்காது” என்றது ஈழநாட்டுச் சான்றோராகலின் அவன் வடிவங்குறிப்பது. துணை – இரண்டு துளையெனவுங்கூறுப. ஈயார் – ஈ – திணைவழுவமைதி. அதனிழிவு நோக்கிச் சொள்ளைச் சிறகடித்தென்றார். தலையிலும் என்றது [ம்மை] தொக்கது. என் – வினா. பார் – அசை.

17. வெள்ளி வீதியார் வந்து பெரியோரே | முன்னிறையருள் கூட்டுவிக்க நாங்கள் இயைந்தோம் அல்லமோ என்றாற்குப் பாடியது:-

அம்ம்ம்ம்ம் மண்ண்ண்ண்ண் ணீஇஇஇஇ யிங்கறைவ

தெம்ம்ம்ம்ம் போல்ல்ல்ல்ல் வார்க்க்க் கியைபன்று

வம்ம்ம்ம் பணியார் வளைக்குழலி போம்ம்ம்ம்நுந்

தங்ங்ங்ங்ங் கொண் கரழைத் தார்.

ஈரடி, மகர ணகர லகர மெய்கள் அவ்வைந்தாவந்தன. நீ அளபெடை நான்கு. பின்னடிக் ககர மகர வொற்றுக்களுமது. ஙகர மெய்யைந்து. குழலி – விளி. அம்மணி குழலி நீ இங்கறைவது எம்போல் போல்வார்க் கியைபன்று நுங்கன வரழைத் தாராகப் போமென்றார் என்க.                          

18. அடுத்துக் கீரந்தையான் உறுத்தெழச் சொற்றது :-

காட்டேல் வணிக காளையார் சோர்ந்தீர்க்கு

மோட்டைச்செக் குர்ர்ர்ர்ர் ருர் ரென்னப் – போ | ஒட்ட்ட்ட்ட

காட்டி வெளித்தள்ளக் கண்பிழிவைக் காட்டிடேன்

மூட்டுக மூக்கணைப்பா மூறு

காளையார் – எருது : வழுவமைதி. ரகரமெய் ஆறு.

போட்ட – பெயர், அளபெடை நான்கு, பலவின் விகுதி வினையணைந்தது, உள்ளிட்டபொருள். கண் – ஆகுபெயர்: பழஞ்சீரை. உறுத்தெழுந்தோன் வாணியனாக அவன் குலத்தொழில் கூறிப் பஞ்சுப்பழன்சீரையான் எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயல் கூறினர். மூக்கணைப்பா – மூக்கணாங்கயிறு: நாலன் தொகை, ஈற்றிற்றொக்க் வுகரக் குறுக்கம் போந்தது செய்யுள் விகாரம்; மூறுக்கு மூட்டுக என்க. மூறு – எருது. ஆறையார் இக்காலத்துங் கூறுப. ஆறை – கொற்கையடுத்தவோரூர்.                                

19. செல்லூர்க் கொடுஞ் செங்கண்ணன் முனைந்து எதிர்ந்து கனைத்து வந்தமரப்பாடியது:-

கொக்கோஒஒ | கோஒஒஒஒ | கொக்கோஒஒ | கோஒஒஒஒ | கொக்கொக்கொக் | கென்னக் | குரலெழுப்புங் கோஒஒழிஇ – விக்கிக்

கனைத்தெழுந்து கால்போகக் காலன் வரும்போழ்

முனைந்தெதிர் காட்டேன் முறுக்கு.

ஐந்து சீரிரண்டாமடியுட் கொண்டார். “ஐஞ்சீரடியுமுளவென மொழிப” [தொல். செய்யு.]

வைகறை யெழுந்த கோழி யெழுப்புங் குரலியல் கூறி நோக்க. பின்னடியுள் ஐயப்பகுதி கடைக்காலத்தெழுந்து மேனோக்கி வளி ஈர்ப்ப வெழலைக் காலன் வாயாக் கூறியவாறு காண்க. போழ் – பொழுது. முனைந்தெதிர் – ஏவன்முற்று.

மூவாறெடுப்பு முற்றிற்று

தலைத்தட்டுலைவு கோப்பாடு


[1] “நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வால துணர்வார்ப் பெறின்” – இக்குறளில் வரும் “காட்டி” என்னும் சொல்லை எச்சமாகக் கொண்டு பரிமேலழகர் உரை கூறியுள்ளார். அவர் பாடாந்தர உரையுள் இக்கருத்து வெளிப்படுவதையும், அதனை மறுத்து அவர் உரைப்பதையும் காண்க.

[2] “ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே”

[3] இதன் முதலிரண்டடிகள் யா. காரிகையில் குணசாகரரால் உரைமேற்கோளாக எடுத்தாளப்பட்டுன. யா. விரு. அசையோத்து. எ. மேற்கோள்.

[4] தொல். மரபி.

[5] “வள்ளுவன் முப்பாலாற் – றலைக்குத்து தீர்வு சாத்தற்கு” என்ற [திருவள். மருத்துவன் தாமோதரன் வாக்கை ஈண்டு நோக்கிக் கொள்க.

மாலதீமாதவம் – முதல் அங்கம்

மாலதீமாதவம்

பிரகரணம்[1]

முதல் அங்கம்

(5/11/1931)

முடியின் அணிகலனாயிலங்குங் கபாலங்களி[2]னிறைந்து ஒழுகுங் கங்கை நீரையுடையனவும், மின்னலை நிகர்த்த நெற்றிக்கணங்கியின் சுவாலைகளுடன் கலந்து செவ்விய காந்தி பொருந்தியனவும், சிறிதலர்ந்த தாழைமடலோ! என ஐயுறத்தக்க இளம்பிறையமைந்தனவும், கொடிபோன்ற அரவங்களாகிற கொண்டைமாலைகளாற் கட்டப்பட்டனவுமாகிய பசுபதியினுடைய சடைகள்[3] உம்மைக் காக்கவேண்டும். (1)

சிவபெருமான் தாண்டவம் புரியுங்கால் நந்தி தேவனால் முழக்கப்பட முரசொலியால் அழைக்கப்பட்டு வரும் குமரக்கடவுளது மயிலைக்கண்டச்சத்தால், தனதுடலைச் சுருக்கிக்கொண்டு, கயமுகக் கடவுளது நாசிப்புழையில் அவருடைய அரவம் களிப்புடன்[4] நுழைய, கன்னங்களினின்றும் பறந்த வண்டினங்களின் ஒலியால் திசைமுழங்கப் பிளிறொலியுடன் கூடிய அவரது முகத்தின் அசைவுகள்[5] உங்களை என்றும் காக்கவேண்டும். (2)

பிரமனது[6] கபாலங்களிற் புகுந்து தடைப்படுதலாற் பெருக்கமடைகின்றனவும், பல்வரிசைகளுட் புகுந்து சுழலுதலாற் கலகலவென வொலிக்கின்றனவும், கண்மூக்குச் செவிகளாகுஞ் சிறுபுழைகளுட் புகுதலாற் குமிழி செய்தொலிக்கின்றனவும் கன்னத்தில் அடிபடுதலாற் சிதறிய திவலைகளையுடையனவுமாகிய ஈசனுடைய வேணியணி கங்கையின் அலைகள் உங்களைக் காத்தல் வேண்டும். (3)

எந்தக்கண்ணினுடைய இமைகளின் செம்மைக்கு, மின்னற்குழு யாவும் ஒருசிறிதளவா அமையுமோ, சிறிது திறந்திருக்கும் எந்த அழற்கண்ணில் காலனாகிற இயமானன், உலகமனைத்தையும் ஓமஞ் செய்பவனாவனோ, அத்தகைய, சுவாலைகளான் மிகவுமெரிக்கப்பட்டு சடைமதியினின்றொழுகும் அமுதப்பெறுக்காற் சிறிது “சீத்” எனவொலிக்கும் கடைவிழியுடையதும் காமனையெரித்ததுமாகிய புராரியினுடைய நுதற்கண் உங்களைக் காத்தல் வேண்டும். (4)

நாந்தி[7]யின் முடிவில்

சூத்திரதாரன்[8] – போதும், போதும். உலகமனைத்துக்கும் விளக்கனைய கதிரவன் முற்றிலும் உதயமாயினான். ஆதலின் அவனைப் புகழ்ந்து வணங்குவேன். (வணங்கி) உலகையே தனதுருவமாகக் கொண்ட தேவனே! நீர் மங்கலவொளிகளுக்கு நிலைக்களனாகிறீர். எல்லா நன்மைகளையும் பயக்கும் நற்றிருவை யென்பால் நிலைப்படுத்தியருளவேண்டும். உலகபதியான பகவனே! உன்னை வணங்கியவென் தீவினையனைத்தயும் விலக்கி, மங்கலத் தொடர்புடை மங்கலங்களைத் தந்தருள வேண்டும். (5)

வேடசாலை[9]யை எதிர்நோக்கி

மாரிட[10]! அரங்கமங்கலங்கள் சீர்பெறச் செய்யப்பட்டுள்ளன. காலப்பிரியநாதனாகிய[11] சிவபெருமான் பவனி விழாக் காரணமாக மக்கள் பலதிசையானும் வந்து குழுமியுள்ளார். பரத நூல் வல்லுனராகிய நமது நடிகர் அதனைப் பொருட்படுத்தாதிருத்தலென்னை? இதுபொழுது “நீ புதியதொரு நாடகத்தை நடித்து எங்களையின்புறுத்துக” என அறிஞரவையினாற் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆதலின் அவராற் குறிக்கப்பட்ட குணங்கள் நிறைந்த ஒரு சரிதத்தை நடித்து அவரை யின்புறுத்துவோமாக.

நடன் – (பிரவேசித்து) பாவ[12]! பல்கலையுணர்ந்த பெருமைசாலாரிய[13] மறையவர் எடுத்துக் கூறும் அக்குணங்கள் யாவை?

சூத்திர – பெரும்பாலுமறிதற்கரிய[14] இரசங்களுடைய பிரயோகங்களும் இயற்கையன்பினால் அழகு பொருந்திய செயல்களும், பெருந்தன்மையும்[15], நன்கு பொருந்திய காமசூத்திரமும்[16], வியக்கத்தக்க காதையமைப்பும்[17], சொல்திறனும், ஆகிய இவை அவர் கூறுங் குணங்களாம். (6)

நடன் – பாவ! அத்தகைய குணங்கள் நிரைந்த நாடகம் புலப்படுவதரிதாகலின் அஃது எங்ஙனமுளது?

சூத்திர – (ஆலோசித்து) நினைவு கூரப்பட்டது; தக்கண தேயத்தில் பதுமபுரமென்னும் பதியுளது. அதில் தித்திரசாகையினரும்[18], பந்திபாவனரும்[19], காசியபருடைய கோத்திரவழி வந்தாரும், ஐந்தங்கி[20]வழிபடுவாரும், சோமரசம்[21] பருகுவாரும், அநுட்டானவொழுக்கமுள்ளாரும் உதும்பரமென்னும் பெரியகுலத்தாரும் ஆன்மஞானிகளுமாகிய சில மறையவர் உளர்.

அத்தகைய சுரோத்திரியர்களான[22] அவர் ஐயமற உண்மைப்பொருள் தெளிதற்பொருட்டே எஞ்ஞான்றும் நிலைத்த கல்வியிற் கேள்விமுயலுகின்றனர். இட்டம்[23], பூர்த்தம்[24], இவற்றைச் செயற்கருதியே பொருளையும், மகவு கருதி மனையையும், தவங்கருதி ஆயுளையும் பெறவிரும்புகின்றனர். (7)

அக்குடியிற் பிறந்த பெருமைசால்பட்ட கோபாலனுடைய பேரனும், தூய புகழ் படைத்த நீலகண்டர், சாதுகருணியென்னு மிருமுது குரவர்க்குமுதித்த நற்புதல்வரும், இலக்கணம், மீமாஞ்சை, தருக்க முதலிய நூல்களையுணர்ந்தவரும், சிரீகண்டரெனு மியற்பெயரியராய்ப் பவபூதி[25]யெனப் புகழ்படைத்தவருமாகிய தனிக் கவியொருவர், முற்கூறியாங்கு குணநல நிரம்பியதாய்த் தாமியற்றிய நாடகத்தை நம் போலிய நடிகர் பாலியற்கையன்பு கொண்டு நம்பாலிட்டனர்.

எந்த நாடகத்தில் இவ்வுரை நடை மிளற்கின்றதோ!

(8) “இந்த நமது நாடகத்தையிகழ்ந்து[26] பேசுமொருசிலர் அறியும் பொருள் யாதெனவுரைத்தலரிது; ஆதலின், அவர் பொருட்டு எனது முயற்சி பொருந்தாது. இவ்விரு நிலத்தின்கண் முடிவற்ற காலத்தில், என்னை நிகர்த்த ஓரரும்பெரும்புலவர் ஒரோவிடத்துண்டாதல் கூடும்.”

ஆதலின், “அந்நாடகத்தை நடித்தற் பொருட்டு வாச்சியங்களுடன் கூடிய ஆடல்பாடல்களிலும், வேடம் பூட்டலிலும், நீவிர் ஊக்கமுறல் வேண்டும்” என இசைபாடுவோரிடம் கூறுவாயாக. ஆக்கியோன் பெருமையைத் தாமே வருமாறு கூறியுள்ளார்.

தகைமைசேர் “ஞானநிதி”[27]யென்னும் எனதாசிரியர், அவர்தம் அறிவின் றிறனால் அப்பெயர் காரணப்பெயராவமையப்பெற்றாரெனின், அவருடைய குணங்களைப் புகழ்தலால் அவரது மாணவனாகிய இவனது குணங்களும் வெளிப்படும். (9)

மேலும்; “வேதம், உபநிடதம்[28], சாங்கியம்[29], யோகம்[30] ஆகிய இவற்றின் பயிற்சியால் அறிவு நிரைந்தவன்” எனப்புகழ்ந்து கூறுவது பயனற்றதாகும்; ஏனெனில் அவையிந்நாடகவியலுக்கு யாதொரு பயனும் பயக்கமாட்டா. கொண்ட பொருளை யுணர்த்துந் திறனும், ஓசையுடைமையும்[31], ஆழமுடைமை[32]யும், சொற்களுக்கு அமையுமாயின், அவ்வமைப்பே கலைவன்மை[33]க்கும் கவிவன்மைக்குந் தோற்றுவாயாகும். (10)

நடன் – வேடவுறுப்புக்களியாவுந் தன்னடிகர்களுக்குத் தம்மால் நன்கு பயில்விக்கப்பட்டுள்ளன. புத்த மதத்தைச் சார்ந்து துறவறம் பூண்ட கிழமைப்பருவத்தளான காமந்தகியின் முதல் வேடப்பகுதியைத் தாங்களே பயின்றவர். யானுமவன்தன் மாணவியாகிய அவலோகிதையின் வேடத்தைப் பயின்றவன்.

சூத்திர – அதனால் என்னை?

நடன் – இந்நாடகத்தின் றலைவனும், மாலதியின் மணாளனுமாகிய மாதவனது வேடத்தைப் புனைதல் யாங்ஙனம் அமையுமென்பது எனது ஐயப்பாடு.

சூத்திர – கலகஞ்சன், மகரந்தன், இவர் பிரவேசிக்கும் அமையமே மாதவனது பிரவேசமாதலின், இங்கு அதைச் சிந்தித்தல் வேண்டாம். ஆதலின் யாவும் நன்கு அமைக்கப்பட்டுள்ளனவேயாம்.

நடன் – ஆயின், அந்நூலை நடித்து இவ்வவையினரை யின்புறுத்துவோமாக.

சூத்திர – ஆம் அங்ஙனமே செய்வோம். இதுபொழுதே யான் காமந்தியாயினேன்.

நடன் – அங்ஙனமே யானுமவலோகிதை.

என்றுரையாடிச் சென்றனர்.

பிரத்தாபனை[34]

உட்புகுதலை நடித்து காஷாயச் சீலையுடுத்திய வேடம் பூண்டு இருக்கை நிலையிற் பிரவேசிக்கின்றனர்.

காம – குழந்தாய்! அவலோகிதையே!!

அவ – பெரியோய்! கட்டளையிடல் வேண்டும்.

காம – மங்கலனிறைந்தவரும்[35], பூரிவசு[36], தேவராதன்[37] இவர்களது மக்களும் ஆகிய மாலதீ[38]மாதவற்கு விரும்பத்தக்க[39] திருமணவினை யாங்ஙனங் கூடும்.

(களிப்புடனிடக்கண் துடித்தலை நடித்து)

எனதுள்ளக் கிடக்கையினுண்மையையறிந்து எதிர்கால நலத்தை  வெளியிடுவது போன்ற கண் வாமமாயினும்[40], தாட்சிண்யத்தையடைகிறது.[41] (11)

அவ – பெரியோய்! தங்களுடைய இம்மனக்கவலை மிகையே!! இது விந்தையினும் விந்தை; சீரசீவரத்தை[42] யுடுத்துமியல்புடையாரும், ஐயமேற்றுண்டு[43] வாழ்வாருமாகிய துறவுநிலையிலுள்ள தங்களையும், அமைச்சர் பூரிவசு, இத்தகைய துன்பந்தருஞ் செயல்களில் நியமனஞ் செய்கிறார். தாங்களும் இன்னிலையிடரை[44] வலிந்திருக்கும் நன்முயற்சிகளையுமிவண்பாற் படுத்துகின்றீர்கள்.

காம – இங்ஙனங் கூறலாகாது. பூரிவசு என்னுமப்பெரியார், செயற்குரிய விடயத்தில்[45] என்னை நியமித்தானென்பது; நட்பின் பயனும், அன்பின் பிழம்புமாகும். ஆதலின், நம்மித்திரன் பெறவிரும்புமது, எனதுயிரானும் அல்லது அதனிற் சிறந்த தவத்தானும், அவர்கைவரப்பெற்றிடின் அதுவே எற்குச் சிறந்த செயற்பயனாம்.[46] (12)

இதனை நீ யறிந்திலையோ! கல்விபயிலும் பொருட்டுப் பலவிடத்தும் எங்கட்குடனிருக்கை நிகழ்ந்த அக்காலம், நமது சௌதாமினியின் முன்னிலையில், பூரிவசுதேவராதன் இவர்களுக்கு “நம்மால் மக்களின் றிருமணத்தொடர்பு கட்டாயஞ் செய்யத்தக்கது” என ஓர் உறுதிப்பாட்டை யானே செய்வித்தேன். அது கருதியன்றே இப்பொழுது விதர்ப்ப நாட்டரசனது மந்திரியான தேவராதன் தன் மகன் மாதவனை யான்வீட்சிகீயைப்[47] பயிலுதற்பொருட்டு குண்டின நகரத்தினின்றும் பதுமாவதிப்பதிக்கு அநுப்பியப் பிரதிக்கினையை நிறைவேற்றினான். ஆதலின்

(13) மக்கள் மணவினைகுறித்த இவ்வுடன்பாடும் அன்பிற்சிறந்த நண்பனாகிய பூரிவசுவுக்கு நினைவுறுத்தப்பட்டதுடன், அவரையூக்கற்[48] பொருட்டும், தன்மைந்தனும் உலகில் ஒப்புயுர்வற்ற குண நலனிறைந்தவன் எனவும், வெளியாக்கப்பட்டான்.

அவ – அமாத்தியன், மாலதியை மாதவனுக்கு ஏன் தானே மணஞ் செய்வித்தல் கூடாது? எது கருதியிக்களவு மணத்திற்றங்களைத் தலைப்படுத்துகின்றார்?

காம – அரசனுடைய காமத்துணைவனாகிய நன்தனன் என்பான் அவ்வரசன் மூலமாக மாலதியை மணக்க விரும்பி யவளைக் கோறுகின்றான்; அதனை வாய்மொழியாக மறுத்திடின் அரசன் சினமுறும். ஆதலின் இவ்வுபாயம்[49] நலம் பயப்பதாகும். (14)

அவ – என்னே! என்னே!! அமாத்தியர் மாதவனது பெயரையு மறிந்திலராய் அவனிடத்து விருப்பமற்றவராகவே காணப்படுகிறார்.

காம – குழந்தாய்! அது பாசாங்கடியாகும்[50]. அங்ஙனமே, மாதவனும் மாலதியும், வாலிபராதலின்[51] வெளிப்போந்த மெய்ப்பாட்டுக் குறியினராயினும் தங்கள் மனப்பான்மையைப் பெரிதும் மறைத்தல் வேண்டும். (15)

இக்குழந்தைகளின் காதற் செய்தியை உலகமறியும்; அதனால்[52], அரசனையும் நந்தனனையும் வஞ்சித்து நாம் நலம் பெறுதலெளிதே.(16)

பார்! அறிந்த ஒருவன்[53] பிறிதொரு செயலில் முயன்றவன் போல எவ்வாற்றானுந்[54] திறலமைந்து அழகு பொருந்தப் பேசுமியல்பினனாய், பிறராலூகித்துணரத்தக்க மிக நுண்ணிய தன் செயல்களையு மவரறியாவண்ணம் மறைத்து, யாவரையுந் தந்திரத்தான் வஞ்சித்து, நடுவன் போலக் காணப்பட்டுத் தனது பொருளைச் சாதித்துக் கொள்வானும், அவண் மோன நிலையை யெய்துவானுமாவன். (17)

அவ – தங்கள் கட்டளைப்படியானும் அந்தந்த முறை[55]யாகக் கூறிப் பூரிவசு மந்திரத்தை யணித்துள்ள[56] இராச வீதியில் மாதவனை நடமாடச் செய்தேன்.

காம – மாலதியினது செவிலித் தாயின் புதல்வி[57]யான இலவங்கிகையினால் மேல்வருஞ் செய்தி யெற்குக் கூறப்பட்டது.

“அருகிலிருக்குமிராச வீதியில் அடிக்கடி நடமாட்டஞ் செய்யும் மாதவனை, மாலதி தனதில்லத்தின் மேன்மாடத்தமைத்திருக்குஞ் சாலேகத்தின் வாயிலாகப் புதிய மன்மதனை[58] நோக்கும் இரதிதேவி போல அவனைப் பலகாலும் கண்டு வேட்கைப்பெருக்குண்டு[59] அதனால் நைந்துருகும் மெல்லிய தன் அவயவங்களுடன் வருந்துகின்றாள் என்று. (18)

அவ – உண்மையே! அதுபற்றியே, காமநோயைத் தணித்தற்பொருட்டு மாலதியாலெழுதப்பட்ட மாதவனது வடிவத்தை, யிலவங்கிகை யிப்பொழுதே மந்தாரிகையினிடம் கொடுத்தனள்.

காம – (ஆலோசனை செய்து) நன்கு செய்தனள் இலவங்கிகை! மாதவனது அடிமையாகிய கலகஞ்சன் புத்தராலயத் தாதியாகிய மந்தாரிகையை மணக்க விரும்புகின்றான். ஆதலின் இங்ஙனஞ் செய்யின், மாலதியின் றிருமணமினிது நிறைவேறுதற் கேதுவாக இப்படிவம் மாதவன்பாற் சேரும்; என்பது அவள் கருத்து.

அவ – மாதவனுக்குப் பேரவா விளைவித்துக் காமவிழா நிகழும் பூந்தோட்டத்திற்கு இன்று காலைப்பொழுதிலவனை யனுப்பியுள்ளேன். அங்ஙனம் மாலதியுஞ் செல்லுவாள். ஆதலின் அங்கு ஒருவர்க்கொருவர் காட்சியும் நேரும்.

காம – நல்லது குழந்தாய்! நல்லது!! யான் விரும்பத்தக்க இப்பெருமுயற்சியால் எனது முதன் மாணவி சௌதாமினியை நினைவுறுத்துகின்றாய்.

அவ – பெரியோய்! அச்சௌதாமினி வியக்கத்தக்க பல மந்திர சித்தி பெற்றவளாய், இதுபொழுது சிரீபரூப்பதத்தில் காபாலிக விரதத்தை யநுட்டிக்கின்றாள்.

காம – இச்செய்தி யெங்ஙனம் நீயறிந்தனை?

அவ – இந்நகரத்தின் முதுகாட்டிற்கருகில் கராளை யென்னுங் காளி கோயில் உளது.

காம – ஆம் அக்காளி தேவீ உயிர் பெலியில் விருப்பமுள்ளவள் எனப் பிடிவாதிகளின் வழக்குமுளது.

அவ – அந்தச் சிரீபரூப்பதத்திலிருந்து வந்து இதற்குச் சமீபித்திருக்கும் அம்முது காட்டிற்றங்கி தலையோடுகளைத் தரித்துக் கொண்டு மந்திரசித்தி செய்யும் அகோரகண்டன் என்பவனுடைய சிறந்த மாணவியாகிய கபாலகுண்டலை யென்பாள், மாலைப்பொழுது தோரும் இங்கு வருவாள். அவள் கூற இதனை யான் அறிந்தேன்.

காம – இவையாவுஞ் சௌதாமினி யானிகழ்ந்தனவென ஊகித்துணரக்கிடக்கின்றன.

அவ – இவனைக் குறித்துப் பேசியது போதும். பெரியோய்! மாதவனைப் பிரியாது உடனிருக்கும் வாலிப நண்பனாகிய மகரந்தனும், நந்தனனுடைய சகோதரி மதயந்திகையை மணப்பானாயின்; அதுவும் மாதவனுக்கு இரண்டாவது விருப்பம் நிறைவேறியதாகும்.

காம – அதிலும் எனதன்பிற்குரிய தோழி புத்தரக்கிதை முன்னரே யென்னால் நியமனஞ் செய்யப்பட்டுள்ளாள்.

அவ – அறிவிற் சிற பெரியோய்! நன்கு செய்தமைத்தீர்கள்.

காம – இனி எழுக; மாதவன் செய்தியைச் சென்றறிந்து மாலதியையே காணுவம்.

(என எழுகின்றனர்)

காம – (ஆலோசித்து) மாலதியோ பிறர் அறிதற்கரிய ஆழ்ந்த கருத்துடையவள். ஆதலின் இதிற் சிறந்த தூதையமைத்து இம்முயற்சியைச் சிறப்புறச் செய்தல் வேண்டும். முற்றிலும் மங்கலனிறைந்த மாலதி நற்குடிப் பிறந்த தன் காதலனை, யாம்பலை யின்புறச் செய்யும் சரற்கால நிலவுபோல இன்புறுத்துக. காளைப்பருவ மெய்து மவனும்[60] நற்பேறு பெறுக. இருவர்க்கும் ஒத்த குணங்களைப் படைக்கும் திறலமைந்த பிரமனது சிறப்புறுஞ் செயலும் நற்பயன் பெற்று யாவரானும் புகழத்தக்கதாகுக. (19)

(எனச் சென்றனர்)

விட்கம்பம்[61]

(கலகஞ்சன் ஓவியத்தைக் கையிலேந்திக்கொண்டு பிரவேசிக்கிறான்)

கலகஞ்சன் – காமனைப் பழிக்கும் கட்டழகினால் மாலதியின் மனப்பான்மையைக் கவர்ந்த மாதவனை யெங்குக் காணலாம்; (சிறிது சென்று) வாட்டமடைந்துள் ளேனாதலின், இப்பூம்பொழிலிற் சிறிது இளைப்பாறிய பின்னர் மகரந்தன் றுணைவனாகிய மாதவனைக் காண்பேன்.

(பொழிலுட்புக்கு உட்காருகிறான்)

(மகரந்தன் பிரவேசிக்கிறான்)

மகரந்தன் – மாதவன் காமற் பொழிற்குச் சென்றனன் என்று அவலோகிதை கூறினள்; ஆகுக; யானு மங்ஙனமே செல்வேன். (நடந்து நோக்கி) நந்துணைவன் இங்ஙனமே வருகின்றான். (கூர்ந்து நோக்கி)

(20) இவனிடத்து, நடை மந்தமாகவும் கண் சூனியமாகவும்[62] யாக்கை செம்மையற்றும்[63] நெட்டுயிர்ப்பமைந்து[64] மிருத்தற்குக் காரணம் யாதாயிருத்தல் கூடும்? இஃதன்றி வேறென்னை? உலகிற் காமனாணை யுலவுகின்றது; காளைப்பருவமுங் காமக்கவலையை விளைக்கின்றது; இயற்கையழகும் மனக்கவர்ச்சியும் பொருந்திய பொருள்களும்[65] மனவலியைக் கெடுக்கின்றன.

(இங்ஙனங் குறித்த நிலையின் மாதவன் வருகிறான்)

(21) மாதவன் – மதியன்னவழகொழுகு முகத்தவளை நெடிது நோக்கி, யெனது மனம், வெட்கத்தை விடுத்து விநயத்தைத் தடுத்து, தன்வலியைக் களைந்து முதற்கட் பார்வையிலேயே, தக்கவின்ன தகாதனவின்ன, என்னும் உணர்வற்றுக் கூற வொண்ணாது மாறுபடுகின்றது.

 (22) விந்தை! அவள் முன்னிலையில், எந்த எனது மனம், ஒப்புயர்வற்ற வடிவழகைக் காண்டலின் உண்டாம் மகிழ்ச்சியால் வியந்தசைவற்றதும், இதனிலும் அறிதற்குரிய பொருள் பிறிதொன்றுமில்லை யென்றே கருதுவதும், அமுதக் கடலின் மூழ்கியாங்கு, களிப்பெய்திப் பிற செயலற்றதும் ஆயினதோ! அம்மனமே, அவள் இல்லாதொழிந்துழியழற்சுட்டாங்கு வருந்துகின்றது.

மகரந்தன் – (மாதவன் பக்கலணுகி) நண்ப! மாதவ! நண்பகல் வருத்துகின்றது; ஆதலின் இவண் வருக; இப்பொழிலிற் சிறிது நேரம் அமர்வோம். (இருவரும் செல்லுகின்றனர்)

கலகஞ்சன் – மாதவனும், அவர்க்குத் துணைவரான மகரந்தனும் இப்பொழிற் கணிகலனாயிங்ஙனமே யிலங்குகின்றனரா? காமவேட்கையான் வருந்தும் மாலதியை யின்புறுத்து மிவர்படிவத்தை யிவர்க்குக் காட்டுவேன்; அன்றேல், இவரிளைப்பாறிச் சுகமுறுக; பிறகு காட்டுவேன்.

மகரந்தன் – அப்பொழுதலர்ந்த மலரிதழ்களின், துவர்த்துக்[66] குளிர்ந்த நறுமணங் கமழு மிச்சோலையிற் சாம்பேயத் தருவினடியிலமர்வோம்.

(இருவரும் அங்ஙனமே யிருக்கின்றனர்)

மகரந்தன் – அன்ப! மாதவ! நகரமகளிர் யாவரானும் நிகழ்த்தப்பட்ட விழாக்காணும் பொருட்டு அழகிய காமற்பொழிற் சென்றுவந்த வுன்னை, அயலானைப் போலவே யான் கருதினேன்; அங்குக் காமற்கணைக்கு நீ யிலக்காயினையோ?

(மாதவன் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறான்)

மகரந்தன் – (நகைத்து) செவ்விய மரைமலரனைய நினது வதனத்தை, யேன் குனித்து நிற்கின்றனை? பார்.

(23) உலகம் படைத்த பிரமனிடத்தும், சிவபெருமானிடத்தும், மயக்கமுற்றிய ஏனைய உயிர்களிடத்தும், ஒத்த செயலமைந்த அச்சித்தசன் பெருமைப் பிரசித்தமே; ஆதலின், நாணத்தாற் றன்னுள்ளக் கிடக்கையை மறைக்க முயலுதல் வேண்டாம்.

மாதவன் – அன்ப! உன்னிடங் கூறத் தகாததென்னே? கேள்; யான் அவலோகிதையால் ஆவலுற்றுக் காமற்கோயிலெய்தினேன். அங்குத் தேமணங்கமழ்தலின், வந்து கூடும் வண்டினங்களான் மொய்க்கப்பட்ட அரும்புகளையே யலங்காரமாகவுடையதும் அக்கோயிலின் வெளிப்புறத்தில் அழகுற விளங்குவதுமாகிய இளம் மகிழ்த்தருவின் பாத்தியின் பக்கத்தில் அமர்ந்தேன்; அங்கு நெருங்கி வீழ்ந்த மலர்களை இயல்பானெடுத்துத் தொடுத்தற்கு முயன்றேன். அவ்வமயம், வாலைப்பருவத்திற்குரியதாய் அழகுபடச் சிறந்திலங்கும் வேடத்தைப் பூண்டிருத்தலான், உய்த்துணரத் தகுங் குமரியாந்தன்மையுடையவளும், பெருமை சாலியல்புடையவளும் ஆகிய ஒரு மடந்தை, திறமை வாய்ந்த சேடியருடன் அக்கோயிலினின்றும் வெளிப்போந்து, மூவுலகையும் வென்ற காமதேவனது வெற்றிக்கொடியே வடிவெடுத்து வருவது போல எனதிருக்கையே நோக்கி வருவாளாயினள்.

(24) அவள், இலாவண்ணிய நிலைக்களத்திற்கு அதிகார தேவதையும், அழகின் குழுவுக்கு உறைவிடமும் ஆவள். நண்ப! அவளைப் படைத்தலிற் காமன் கருத்தாவும், சந்திரகலையுந் தாமரைத் தண்டும் நிலவும் கரணமுமாக அமைவனவாம்.

மேலும், அவளது அன்புடைமைக்குரியாரும், பூக்கொய்தற் கேளியில் விருப்பமுடையாருமாகிய சேடியரான், வேண்டப்பட்டு, அவள் அம்மகிழயே நாடிவந்தனள். நல்வினைப் பயனெய்து மொருவனைக் குறித்து நாளடைவில் வேறூன்றிய காமவேட்கையை யான் அவளிடத்துக் கண்டேன். ஏனெனில்;

(25) இம்மாலதி யினுடலம், தேம்பிய தாமரைத் தண்டென வாடியது; சூழ்தரும் பாங்கியின் பரிவுறூஉஞ் சொற்களானீராடன் முதலிய செயல்களில் இவள் வருந்தியே முற்படுகின்றாள்; அன்றிறுத்த கரிக்கோடெண்ணக் கவினுறுங்கபோலம், மறுவிலா மதியினெழினலத்தை யெய்தியது. அவயவங்கள் நீரைப் பிறிந்த தாமரைத் தண்டு போல வாடியமையும், சேடிகளது இன்சொற்களான் ஒவ்வொரு செயலையும் அவள் தளர்ந்து புரிதலும், அன்றிருத்த யானைமருப்பென வெளிறிய கபோலம் மறுவிலா[67] மதியினொளியை வீசுதலுமாகிய இவை, அவளது காமவேட்கையை அறிவுறுத்தா நிற்கும். யான், அவளைக் கண்டது முதல் அமுத மை தீட்டுந் தூலிகை போல அவள் எனது கண்களுக்கு எல்லையற்ற இன்பத்தை விளைத்து இரும்பைக் காந்தம் போல என்னுள்ளத்தைக் கவர்ந்து கொள்ளை கொண்டாள். மிகைபடக் கூறிடிற் பயன் யாது?

(26) எனது மனம், காமநோய்ப்பெருக் கெய்தியதன் பயனாக யான் உயிர் நீத்தற் பொருட்டே! காரணத்தை யாராய்ந்தறியாது, அவளைப் பின்பற்றி நிற்கின்றது; எல்லாம் வல்ல ஊழ்வினையே உயிர்களுக்கு நல்லவை, அல்லவை யிவற்றை யளித்தற்கு வலிதாகலின் யான் எய்தும் பயன் யாதோ அறியகில்லேன்.

மகரந்தன் – இயனட்பும்[68], செயனட்பும் எதிர்மறைப் பண்புகளாகலின், இவை யோரிடத்துப் பொருந்தா; பார்.

(27) அறிதற்கரிய மிக  நுண்ணிய ஒரு ஏது, பொருள்களை ஒன்றுக்கொன்று சேர்த்தமைக்கின்றது. உலகில், பகலவன் றோன்ற மரைமலரலர்தலும், தண் கதிர்ச் செல்வன் விண்கணுதிக்கச் சந்திரகாந்தந்தாரை நீருகுத்தலும் இயல்பன்றோ? இனிப்பின்னுங் கூறுவாயாக.

மாதவன் – பின்னர் அவ்வமயம்,

(28) புருவனெரிதர, அவனேயிவனென்று நினைவு கூரறிவு[69]டையார் போல என்னை நோக்கியவளது காமக்கலை பயிலுந் தோழியராற் புன்முறுவலமுதொழுக ஒருவர்க்கொருவரே கடைக்கணிக்கப்பட்டனர்.

மகரந்தன் – (தனக்குள்) முன் றுய்க்கப் பெறாததொன்றில் நினைவு கூரறிவு யாங்ஙனம் அமையும்?

மாதவன் – பிறகு, அத்தோழிமார் கைகளைத் தூக்கிக் கொட்டி யார்ப்பரித்துழி, வளையலசைந்தொலிப்பவும், அச்சுறுமன்னப்பெடை நடைபயிலக் கலகலவென்னக் குலவு சிலம்பொலி கலந்திலங்கு மேகலைமணி யொலிப்பவும், இலீலையுடன்[70] றிரும்பிக் கோமகளே! நல்வினைப் பயனெய்தினராயினோம். யாவளுக்கோ! யாவனோ! ஒரு மணமகன் இங்கண் வதிந்துள்ளான்; என்று எற்குறித்து விரற்சுட்டிக் கூறினர்.

மகரந்தன் – அந்தோ! வேறூன்றிய முதற்காதலின் வெளியீடு.

கலகஞ்சன் – இவரைக் குறித்துக் கூறும் அம்மகளிருரை, பேரழகு பெரிதும் வாய்ந்துளது.

மகரந்தன் – பிறவும் கூறுவாயாக.

மாதவன் – (29) இதற்கிடையில் சொல்லொணா வியப்புடையனவும், நன்கு விளங்கும் விப்பிரமங்களை[71]யுடையனவும், மிக மலிந்த சாத்துவிகச்[72] செயல்களையுடையனவும், மனவுறுதியைக் கெடுப்பனவும், வென்றிசேரியல்புடையனவும், ஆகிய காமனையாசிரியனாகக் கொண்ட சிலகுறிகள் அவ்விசால விழியாளிடத்துக் காணப்பட்டன. மேலும்,

(30) அசைவற்று விரிந்தனவும், விளங்கும் புருவங்களை யுடையனவும், காதனிறைந்து குவிந்தனவும் கடைவிழி விரிந்தனவும், யானவளை நோக்குழிச் சிறிது கடைகுவிந்தனவும், ஆகிய அம்மடவரலின் பார்வைகளுக்கு யான் பல்வேறு பாத்திரனாக[73] ஆயினேன்.

(31) அலசம்[74], வலிதம், முத்தம், சினித்தம், நிட்பந்தம், மந்தம் என்னும் வடிவினவும், மீக்கூர்ந்[75] துள்ளெழும் வியப்பினால் விரிந்த[76] கருமணிகளையுடையனவும் மீதூர்ந்தியைந்த[77] இமைகளையுடையனவும் ஆகிய அவளது கடைவிழிகளால்[78] எனது மனம் வேறு பற்றுக்கோடற்றதாய்க்[79] கவரப்பட்டும்[80], புண்படுத்தப்பட்டும், பருகப்பட்டும், அழிக்கப்பட்டும் ஆயது.

எல்லாவற்றானும் என் மனதைக் கவர்ந்த அப்பெண்மணி மருங்கில், அவளது குணத்தைக் கண்ட யான் அவள் வயத்தனாயினும் அமைதியின்மையை மறைத்தற் கெண்ணி, முன்றொடங்கிய மகிழ மாலையினையே மீண்டும் மிக முயன்று தொடுத்தேன். பின்னர், வயது முதிர்ந்த ஆடவரடிமைகள் கையிற் பிரம்பேந்திப் புடைசூழ, அவள் பெண்யானை மீதமர்ந்து நகர் செலும் வழியிற் போந்தனள்.

(32) செல்லுங்கால் அடிதொறுங் கழுத்தைத் திருப்பிப்பார்த்தலாற், காம்பிழந்த கமலம் போன்ற முகத்தையுடைய அப்பெண்ணால், அவளது கடைவிழி, அமுதத்தினும், விடத்தினுங்[81] தோய்க்கப்பட்டு எனது இதயத்தில் வலிந்து பதிக்கப்பட்டது போல இருந்தது. அது தொடங்கி.

(33) இத்தன்மைத்தென அளவுபடுக்கத் தகாததும், எல்லாவுரைநடையானும்[82] குறிப்பிடத்தகாததும், இம்மையினுதுகாறுந் துய்த்தற்கரியதும், பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பெருமயக்களித்ததும் ஆகிய காமக் கவலை, யெனதுள்ளத்தைச் சடமாக்கித்[83] தாபத்தையும்[84] வளர்க்கின்றது.

மேலும்;

(34) புலன்கள் பொறிமுன்னிருப்பினும், இஃதின்னதென்று அளந்தறியக்கூடவில்லை. நன்கு அறியப்பட்ட தொன்றிலும் மாறுபட்ட தோற்றமும் எழுகின்றது. நளிரிருமோடையினும், குளிர்மிகுமிந்துவினும் வேட்கைத் தணியற்பாலதன்று. மனம், ஒரு நிலையற்றதாய் விரைந்தலைந்து எதனையோ சிந்தித்தொழிகின்றது.

கலகஞ்சன் – உறுதியாக இவர், யாவளாலேனுங் கவரப்பட்டவராதல் வேண்டும்; அங்ஙனமிவரைக் கவர்ந்தவள் மாலதியாயின் நலனே!.

மகரந்தன் – (தனக்குள்) அந்தோ! விதனம்! எனதன்பனை யிதினின்றும் யாங்ஙனந் தடைப்படுத்துவேன். அன்றேல்;

(35) காமன், உன்னகத்தே பிறந்து உன்னை மயக்கல் வேண்டாம்! உனது சீறிய அறிவும் மாசுறுங் காமக்கவலை வயத்ததாய்தல் வேண்டாம்! தெரியில்; இத்தகைய நன்மொழி யாவும் பயனற்றனவேயாம்[85]. ஏனெனில், காமனுங் காளைப்பருவமுமிவன்பாற் பெருமித வேட்கையைப் பயக்குமியல்பின.

(வெளியீடாக)

அன்ப! அம்மடவரலது குலமும் பெயரும் அறியப்பட்டனவா?

மாதவன் – கேள்! அவள் பிடிமீதமருமமயத்திலே அவளது தோழிக் குழுவினொருவளாகிய தாசியொருத்தி பின்றங்கிப் பூக்கொய்தன் முறை பற்றி எனதருகு வந்து, தலைமலரணிதலே தலைக்கீடாக என்னைக் கைகூப்பி வணங்கி, பெருந்தகைப் பெரியோய்! இத்தொடர் நற்குண மியைதலிற்[86] பொற்புறுகின்றது. நங்கோமகளிதிற்[87] பேரவாவெய்தினள். பூவிற் செயலதிற்[88] புத்துருவாகி விசித்திரமே யாதலின் மாலைச்[89] செயற்றிறன் மாணலமெய்துக; படைப்பினணியும்[90] பயன் பெறுக; என்றுங்குன்றா மன்றன்மாலையும்[91] இவளது கண்டத் தணியாம் பெருவிலை பெறுக; என்று கூறினள்.

மகரந்தன் – அவளது சொல்லமைப்பு மிக்க வியக்கத்தக்கதே.

மாதவன் – இவளது திருநாம மென்னை? இவள் எக்குடிப்பிறந்தவள்? என யானவளை வினவ, அவள் அமாத்திய பூரிவசுவின் புதல்வி, மாலதியென்னுந் திருநாமம் பூண்டவள் என்றும், தானும் அவளது அருளுடைமைக்குரிய செவிலித்தாயின் மகளான இலவங்கிகை யென்றுந் தெரிவித்தாள்.

கலகஞ்சன் – மாலதியென்றா தெரிவித்தாள்! ஆனந்தம்! மலர்க்கணைத் தேவனும், மகிழ்வுறும் நாமும் வெற்றி பெற்றோம்.

மகரந்தன் – (தனக்குள்) அமாத்திய பூரிவசுவின் புதல்வி யென்னுமாத்திரையில் இவள் வெகு மதித்தற்குரியளல்லள்; அன்றியும், மாலதி! மாலதி! யென்று காமந்தகியும் அவளை நாளும் புகழ்ந்து வாழ்த்துகின்றாள். அம்மாலதியை அரசன்றன் காமத்துணைவன் நந்தனன் பொருட்டுக் கோருகின்றான் என்ற உலக வதந்தியுஞ் செவிக்கேறுகின்றது.

(வெளியீடாக) பிறவுங் கூறுவாயாக.

மாதவன்அவள் அம்மாலையினைப் பெற விரும்பி மீண்டுங் கோரினமையின், அதையென் கண்டத் தினின்றுங் கழற்றி யவள் பொருட்டுக் கொடுத்தேன். அம்மாலை, மாலதியின் வதனத்தைக் கண்ட மேற் கைநடுக்கமுற்றுத் தொடுக்கப்பட்ட சிலபாகம், சீர்மையற்றிருப்பினும், இவள் ஆழ்ந்த நோக்கத்துடன் அத்தொங்கலை மிகப்புகழ்ந்து பெருமைசால் அருட்பேறென்ன அதனை யேற்றுக்கொண்டனள். பிறகு, எஞ்சிய விழாவை நடாத்தற் பொருட்டுக் குழுமிய பட்டணத்து மக்களின் நெருக்கடியால் அவள் என்னிற் பிரிந்த பின்னர், யான் இவணெய்தினேன்.

மகரந்தன் – அன்ப! மாலதியின் காதற்குணமும் அறியக்கிடக்கின்றமையின் இது பொருத்தமே. கபோலம் வெளிறுபடன் முதலிய எந்தக் காதற்குணங்கள் உன்னாலறியப் பட்டனவோ! அவை யாவும் நினதடியாக நிகழ்ந்தனவென்பது வெள்ளிடைமலை. முன்னர், அம்மாலதியால் யாங்ஙனம் நீ காணப்பட்டாய் என்னு மிஃதொன்றே அறியக் கூடவில்லை. ஊழ்வினைப் பயனால் நற்பிறப்பெய்தினரும் ஒரேவிடத்து மனப்பற்றுள்ளாருமாகிய அத்தகைய மகளிர், பிறிதொருவரைக் கண்ணெடுத்தும் பாரார். மேலும்;

(36) தோழிமார் ஒருவர்க்கொருவரை கடைக்கணித்து “யாவளுக்கோ யாவனோ கணவன் இங்கு வதிந்துள்ளான்” என்னு மப்பாங்கியரறிவிப்பும், உன்னிடத்திற் பொருந்திய அம்மாலதியின் முதற் காதற்குறிப்பாகும்;

மாதவன் – மற்றும் வேறென்னை!

மகரந்தன் – செவிலித்தாயின் மகள் இலவங்கிகையின் அகப்பொருட் பொருந்தியவுரையுமாம்.

கலகஞ்சன் – (நெருங்கி) இஃதும் (என்று படிவத்தைக் காண்பிக்கின்றான்)

(இரு பேரும் பார்க்கின்றனர்)

மகரந்தன் – கலகஞ்ச! மாதவனது இப்படிவம் யாவரால் வரையப்பட்டது?

கலகஞ்சன் – இவரது மனம் யாவராற் கவரப்பட்டதோ!

மகரந்தன் – இது மாலதியினால் வரையப்பட்டதா?

கலகஞ்சன் – ஆம்.

மாதவன் – நினது ஊகம்[92] தெளிவுற்றதேயாம்.

மகரந்தன் – கலகஞ்ச! உனக்கு இப்படிவம் எங்ஙனம் கிடைத்தது?

கலகஞ்சன் – எனக்கு மந்தாரிகையிடத்திருந்தும், அவளுக்கு இலவங்கிகையிடத்திருந்தும்.

மகரந்தன் – மாதவனது ஓவியத்தை மாலதி வரைந்தமை, யாது பயன் கருதியென்று, மந்தாரிகை கூறியுள்ளாளாயின் உரைத்திடுக.

கலகஞ்சன் – காமவேட்கையைத் தணித்தற் பொருட்டென்று கூறினாள்.

மகரந்தன் – அன்ப மாதவ! தெளிக;

(37) எவள் உனது கண்களுக்கு நிலவாய் அமைந்தனளோ! அவளது உறுதியான காதற்கு நற்பிறப்பெய்திய நீயும் நிலைக்களனாக ஆகிறீர். நண்ப! அவளது புணர்ச்சியில் ஊழ்வினையும், காமனும் வலிந்து முயல்கின்றனராதலின் அதிற் சிறிது மையமில்லை. உன்னை காமக் கவலைக் குட்படுத்திய அவளது வடிவழகுங் காணத்தக்கதேயாதலின், இங்ஙனமே யவள்படிவத்தையும் வரைக.

மாதவன் – அன்பன் விரும்பியவாறே செய்வேன்.

 (வரைகிறான்)

நன்ப! மகரந்த!

(38) எழுகின்ற கண்ணீர்ப்பெருக்கு எனது கண்களை அவ்வப்பொழுது மறைக்கின்றது. உடலும், அவளது உருவெளித்தோற்றத்தான் விளையுஞ் சாட்டியத் தானிலைப்படுகின்றது. எனது கரமும் யானவளைக் கருத்துட் கொள்ளுந்தொறும் வியர்த்து இடையறா நடுக்கமுற்ற விரல்களையுடைத் தாகிறது; என் செய்வேன். ஆயினும் கூர்ந்து நோக்கியே வரைவேன்.

(எனக் காலந்தாழ்த்தெழுதிக் காண்பிக்கிறான்)

மகரந்தன் – (ஓவியத்தை உற்று நோக்கி) நம்தம் நண்பனது காமவேட்கை மிகப்பொருத்தமே (ஆவலுடன்) சுருங்கிய நேரத்திலிவனாலொரு கவியும் இயற்றப்பட்டதே! (படிக்கிறான்)

(39) இயலழகு பொருந்தியனவும், பிரிந்தோரைத் தன்வயப்படுத்துவனவும், ஆகிய உவாமதி முதலிய அவ்வப் பொருள்களும், மாலதியன்றி மனங்கவரும் பிற பொருள்களும் உலகினுள்ளனவே; ஆயினும், கண்களுக்கு நிலவெனத் திகழுமிவள் எனது கட்பொறிக்குப் புலனாயினள்; என்னுமிஃதொன்றே இம்மையிலெற்குப் பெருவிழாவாகும்.

(பிரவேசித்து)

மந்தாரிகை – கலகஞ்ச! கலகஞ்ச! திருட! திருட! அடிச்சுவடிற் பிடிபட்டனை. (வெட்கி) என்னை! அப்பெரியோரும் இங்ஙனமே யுள்ளார்களா! (அவரருகிற் சென்று) வணங்குகின்றேன்.

இருவரும் – மந்தாரிகே! இவண்வருக.

மந்தாரிகை – கலகஞ்ச! ஓவியத்தைக் கொணர்க.

கலகஞ்சன் – இதனைப் பெறுக.

மந்தாரிகை – யாவரால் யாது குறித்து மாலதி யிங்கு வரையப்பட்டனள்?

கலகஞ்சன் – மாலதியால் யாவர் யாது குறித்து வரையப்பட்டனரோ; அவரால்

மந்தாரிகை – (களிப்புடன்) ஆனந்தம்! பிரமனது படைத்தற் றொழிற்றிறனும் பயனுடைத்து.[93]

மகரந்தன் – இப்படிவத்தைக் குறித்து உனது கணவன் கூறுவது உண்மையாகுமா?

மந்தாரிகை – பெரியோய்! ஆம்; அஃதுண்மையே.

மகரந்தன் – மாலதி, மாதவனை முன்னர் எவ்வழிக் கண்டனள்?

மந்தாரிகை – மேன்மாடத்திலிருந்து பார்த்தனள்; என்று இலவங்கிகை கூறுகின்றாள்.

மகரந்தன் – அமாத்தியரது இல்லத்தருகிலுள்ள தெருவிற் பலகாலும் உலாவியுள்ளோம்; ஆதலின் இது பொருந்தும்.

மந்தாரிகை – பெருந்தகைய காமதேவனது இத்திருவிளையாடலை[94] எனதன்புரிமைக்குரிய தோழி யிலவங்கிகையின்பாற் றெரிவித்தற்குத் தாங்கள் கட்டளையிடல் வேண்டும்.

மகரந்தன் – இது தக்க தருணமே; இஃதுணக்குச் செயற்குரியதேயாம்.

(மந்தாரிகை படிவத்தைப் பெற்றுச் செல்கிறாள்)

மகரந்தன் – நண்பகலும் கழிகின்றது; ஆதலின் வருக. இல்லத்திற்கே செல்வோம்.

(எழுந்து செல்கின்றனர்)

மாதவன் – இவ்வாறு யான் கருதுகிறேன்.

(40) செவ்விய நயனங்களையுடைய அம்மாலதியின் றாதியரால் காலைப்பொழுதில் அவளது கன்னங்களிற் செஞ்சாந்தினாற் றீட்டப்பட்ட அலங்காரங்கள், இப்பொழுது வியர்வைத் திவலைகளான் நனைந் தழிந்து, அவை விளக்கமற்றொழியும். மேலும்.

(41) மலர்ந்திலங்கு முகிழ் நிறைந்த குருந்தத்தினின்றிழி தரு, மரந்த மணங்கமழு மந்தமாருதமே! சிறிதியங்கு நாட்டத்தவளும், வலைந்திலங்கு மெய்யினளுமாகிய மாலதியைத் தழுவி, அங்ஙனமே எனதுறுப்புக ளொவ்வொன்றையும் தழுவுக.

மகரந்தன் – (தனக்குள்)

(42) மும்மைத்தாய தோடங்களின் மிகையான் மிகக்கொடிய கூடபாகலம்[95] என்னும் பிணியானது வேழத்தை விரைவிற் றுன்புறுத்தாங்கு, யாவரானுந் தடைப்படுத்தவியலாத காமனுஞ் சேயிளம் மேனியனாயிலங்கும் இம்மாதவனை, அந்தோ! பெரிதும் வருத்துகின்றான்.

ஆதலின் நம்மைக் காப்பவள் அப்பெருந்தகைப் பெரியாராகிய காமந்தகியே!

மாதவன் – (தனக்குள்)

(43) விரிந்தலர்ந்த சேயிதழ் பொற்கமலம் போன்றதும், என்னிற் பற்றுக்கோடுற்றுக் குறுக்கடியிற் றிரும்பு நாட்டமுள்ளதுமாகிய வதனத்தையுடைய அப்பெண்மணியை எனதருகிலும் முற்புறமும், பிற்புறமும், உட்புறமும், வெளிப்புறமும், நாற்புறமும் உருவெளித் தோற்றத்தானமைய, அவளைக் காண்கின்றேன்.

(வெளியீடாக)

அன்ப! இத்தருணம் எனது நிலைமை;

(44) என்னை வாட்டமுறச் செய்யுஞ் சொல்லணா வுடலெரிவு பரவுகின்றது. எற்குண்டாகும் மாழாத்தலும் பொறிகளின் புலனுகர்ச்சியை மறைக்கின்றது. எனது மனமும் வேட்கைப் பெருக்கெய்திக் காமக் கனலிற் கொதித்து எரிதருகின்றதாயினும், அம்மாலதியு ருவாந்தன்மை[96]யையு மெய்துகின்றது.

(என்று எல்லவரும் போந்தனர்)

பவபூதி யென்னு மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் முதல் அங்கம் முற்றிற்று.


குறிப்பு

[1] தலைவன், தலைவி, காதையமைப்பு, இவற்றை நூலாசிரியற் றன் கருத்திற்கியைய அமைத்து நூதனமாகச் செய்யப்படு நூல்; அதிற்றலைவன், அறம்பொருளின்பப்பற்றும் உபாய அறிவும் பொருந்தி, “தீரப்பிரசாந்தனு”டைய இலக்கண அமைதியில் மந்திரி, அந்தணர், வைசியர் இவருள் ஒருவனுமாதல் வேண்டும் எனப்பரத நூல் கூறும்.

[2] கபாலங்கள் – தலையோடுகள்; ஈண்டுப்பிரளயகாலங்களில் இறந்துபட்ட பிரமனாதியருடைய தலையோடுகளைக் குறிக்கும்.

[3] பசுபதியினுடைய சடைகள் பசுபதியை எழுவாயாகக் கோடாது ஆறனுருபமைத்து விசேடணமாக்கிச் சடைகளை எழுவாயாக்கினமையின் தலைவன் தான் பெற விரும்பும் பொருளைத் தன் செயலாற் பெறவியலாமையும், பிறருதவியாற் பெறலும் உணர்த்தப்பட்டது. சடைகள் எனப் பன்மையாகக் கூறினமையான் தலைவன் றலைவியொருவரே யன்றி பிறருமுளர் என்பதும், இதிற் சடைமுடி தரித்தவீசனைப் புகழ்ந்திருத்தலின் சாந்திரசம் தோற்றுவதால் இந்நூலிற்குத் தலைவனாவான் தீரப்பிரசாந்தன் என்பதும் போதரும்.

[4] களிப்புடன் – அவ்வரவம் நுழைதற்கு அங்கு புழையொன்று மின்மையின் நாசிப்புழையே எளிதிற் கிட்டியதாகலின்.

[5] விநாயகர் இடையூறுகளுக்கு இறைவனாகலின் அவர் செயல்களான அசைவுகளும் ஊறுகளைந்து பேறுவிளைக்கும் என்பது கருத்து.

[6] இது முதல் இரண்டு சுலோகங்கள் முன் உரையாசிரியராற் பொருள் கூறப்படாமையின் இவை இடையிற்ச் செறிந்தனவெனச் சிலர் கருத்து.

[7] நாந்தி – புகழ்ந்து பாடுங் கவி; இது நாடகம் இடியூறின்றியினிது நிறைவேறுதற் பொருட்டு அத்தொடக்கத்தில் இசைபாடுவோராற் பாடத்தக்கது; இது ஆசியாதல், வணக்கமாதல் அமைய வேண்டுமென்றும் எட்டுச் சொற்களாலாதல், பன்னிரண்டு சொற்களாலாதல் அமைக்க வேண்டுமென்றும், மங்கலச் சொற்களான சங்கு, சக்கிரம், சந்திரன், தாமரை, ஆம்பல், சக்கிரவாகம் முதலிய சொற்களுடன் அமைந்திருத்தல் வேண்டுமென்றும் கூறுவர். ஒருசாராசிரியர் பத நியமம் வேண்டாமென்ப; இது நந்தி தேவர்க்குப் பிரீதியாகும்.

[8] சூத்திரதாரன் – நாடகத்திற்கு இன்றியமையாத பொருள்களை மேற்கொண்டு, அதனை நடத்துபவன். சூத்திரம் – ஈண்டு நடித்தற்குரிய சரித்திரப்பொருள்.

[9] வேடசாலை – நாடகம் நடிக்குமிடம்; அஃது அவைக்களத்திற்குப்பின் திரைகளான் மறைக்கப்பட்டு வேடம் பூட்டற்குரியதாய் இசைபாடுவோரிருக்குமிடம்.

[10] மாரிடன் – தாங்குந்திறலமைந்தவன்; அவன் சூத்திரதாரனாலிடப்படுங் கட்டளையை மேற்கொண்டொழுகுதற்குரிய நடன்; இச்சொல் சூத்திரதாரனால் அவனையழைக்கப்படும் மரியாதைப் பெயருமாம்.

[11] காலப்பிரியநாதன் – மகாகாளமென்னுஞ் சேத்திரத்திற்குப் பதி; இதனால் இந்நாடகம் நிகழுமிடம் மகாகாளம் எனக் குறிப்பிடப்பட்டது.

[12] பாவ! – நடிகர்கள் சூத்திரதாரனை அழைக்கும் மரியாதைச் சொல்.

[13] ஆரியர் – பெரியோர்; குலம், ஒழுக்கம், அருளுடைமை, கொடை, அறம், வாய்மை, நன்றியறிதல், கேடு விளையாமை யென்னுமிவை பொருந்தியவர் ஆரியரெனப் பரதமுனி கூறுவர்.

[14] அறிதற்கரிய ரசங்களுடைய பிரயோகங்கள் – அங்கம், அங்கி, யென்னுமுறைபற்றி நிகழும் சிருங்காரம் முதலிய இரசங்களுடைய அபிநயங்களைக் கூரிய அறிஞரேயன்றி மற்றையோராலறிதற்கரியது;

“பத அறிவு பொருளறிவு, இம்மாத்திரையில் இரசத்தை யறிதலமையாது; நூற்பொருளுண்மை தெளிகுனர் அதனையறிவார்” எனத் துவனி நூலார் கூறுவர்.

இதனால் இந்நூல் இத்தகைய இரசங்கள் நிரைந்துள்ளதென்பது விளங்கும்.

[15] பெருந்தன்மை – ஈண்டுத்தலைவன் சிருங்கார ரசத்தைப்பற்றியவனாயினும் பிற இரசங்களையும் பற்றுதல்; இது மாகாமாமிசத்தை விலைப்படுத்தலிலும் அகோரகண்டனுடன் பேசுமிடத்தலிலும், பீபற்சம், ரௌத்திரம், இவற்றை மேற்கொண்டு, முக்கியமான சிருங்கார ரசத்தையனுபவித்தற்குரிய மாலதியைப் பெறுதல் நூலில் விளங்கும்.

[16] காமசூத்திரம் – இடையறாக்காதல்; இது வத்திரத்திற்கு நூல் முதற்காரணமாதல்போல தலைவன், தலைவி இவருடைய வேறுபாடற்ற மனவொற்றுமைக்கு இக்காதல் முதற்காரணமாதலாற் காமசூத்திரம் என்ப.

[17] வியக்கத்தக்க காதையமைப்பு – மதிவன்மையாற் புதிதாகத் தொகுத்தமைக்கப்பட்ட காதையமைப்பு.

[18] தித்திரசாகை – தித்திரியென்னுமிருடி, சிச்சிலிக்குருவியுருவெடுத்துக் கூறிய வேதமாகிய சுர்வேதம்.

[19] பந்திபாவனன் – யசுர்வேதம், சாமவேதம் இவற்றை முற்றுங்கற்ற ஒருவன் அதருவ சிரசு என்னும் வேதத்தையும் பயிலுவானாயின் அவனைப் பந்திவானன் என்ப.

[20] ஐந்தங்கி – தக்கணம், காருகபத்தியம், ஆகவநீயம், சப்பியம், ஆவசத்தியம் என ஐவகையாகும்; இவை சுவர்க்கமேதம் முதலிய வேள்விகளிற் பயன்படுவனவாம்.

[21] சோமரசம் – சோமம் – ஓர்பூடு; அதனை இன்றியமையாத கருவியாக் கொண்ட வேள்வியில் அதன் சாற்றைப்பருகல் அவ்வேள்வியின் மரபு.

[22] சுரோத்திரியர் – அங்கங்களுடன் மறைபயின்று அப்பொருளறிவும், அதற்குத் தக நல்லொழுக்கமும் உள்ளாராய் உயர்குடிப்பிறந்தோராவர்

[23] இட்டம் – தேவர்களைக் குறித்துச் செய்யும் வேள்வி முதலியன.

[24] பூர்த்தம் – பசுக்களைக் குறித்துச் செய்யப்படும் தடாக முதலிய தருமம்.

[25] பவபூதி – இவர்க்குத் தந்தையராலிடப்பட்ட பெயர் சிரீகண்டர் என்பதாம்; இவர் “தன்கணவன் றவசினிலையை யெய்தினன்; என்று முறுவல் செயுமுகத்தினையுடையபோல (பவபூதிசிதாநநௌ) ஈசனது திருநீற்றினால் வெள்ளிய முலைக் கண்களையுடைய கௌரியின் இரு கொங்கைகளை வணக்கஞ் செய்கிறேன்” என்னுஞ் சுலோகத்தை யியற்றிய பின்னரே இவர்க்கு இப்பெயர் பட்டப் பெயராயமைந்ததெனப் பலருங் கூறுவர்.

[26] இந்தச் சுலோகத்திற்கு இது உட்கருத்து:- உலகில், மனிதர் அறிவிலர், காப்பிய இரசத்திற் பற்றிலாத ஆன்மஞானிகள், காப்பியச்சுவையிற்றலைசிறந்த அறிவுடைய பெரியோர், என முத்திறத்தவராவர்; முதற்கூறியவிரு திறத்தினரும் முறையே காப்பியச் சுவையறியச் செயலற்றவரும், இதனையறிந்தும் பயன் பெறாதவருமாவராதலின், அவரிதனை யிகழ்தலியற்கையே; அவர் பொருட்டிம் முயற்சி பயன்பெறாது. மூன்றாம் திறத்தினராகிய எம்போலியோர் பொருட்டே இஃதமையுமென்பதாம்.

[27] ஞானநிதி – அறிவுக்கு நிலைக்களன் என்னும் பொருள் பற்றியிது காரணப்பெயராகும்.

[28] உபநிடதம் – வேதத்தின் உட்கருத்து.

[29] சாங்கியம் – பிரகிருதி, புருடன் முதலிய இருபத்தைந்து தத்துவங்களின் இயல்புகளை விரித்து விளக்குவது; இதனாசிரியர் கபிலராவர்.

[30] யோகம் – இயமம், நியமமுதலிய எண்வகை யோகவுறுப்புக்களை விளக்குவது; இதனாசிரியர் பதஞ்சலியாவர்.

[31] ஓசையுடைமை – மென்சொற்களாலாந்தன்மை; அது செவி, நா இவற்றிற்கு இனிமைபயப்பது.

[32] ஆழமுடைமை – வியங்கியமாக உணரத்தக்க பொருளுடைமை; வியங்கியம் – குறிப்பு.

[33] கலைவன்மை – கவிவன்மை – இவற்றை முறையே வடநூலார் பாண்டித்தியம், வைதக்தியம் என்று கூறுவர்.

[34] பிரத்தாபனை – வெளிப்படுத்தல்; நடீ, நடன், விதூடகன், பாரிபாருசுவகன், இவர்களில் ஒருவன் சூத்திரதாரனுடன் நடிக்கப்புகும் நாடகத்தைப் பற்றிய சிலவற்றைப் புகழ்ந்து பேசி யப்பொருள்களை வெளிப்படுத்தல் பிரத்தாபனையென்ப.

[35] வயது, உருவம், நல்வினை, அழகு, குலம், ஒழுக்கம் முதலிய மங்கல குணங்கள், ஒருவர்க்கொருவர் ஒப்ப நிறைந்தவர்.

[36] பூரிவசு – மிகுந்த செல்வப்பெருக்குள்ளவன்; அவற்கு உரிய மணமகனைத் தேடிக் கோடலியல்பு.

[37] தேவராதன் – தேவன் போலக் கொடுக்குமியல்புள்ளவன்; இவ்விருவர் பெயெர்க்குறிப்பும் சம்பந்தப் பொருத்தத்தை யுணர்த்தும்.

[38] மாலதீ – முல்லை; மாதவன் – வைகாசி மாதம்; இம்மலர், இம்மாதத்தில் மலர்தலான் இஃது இம்மாதத்திற்குரியதாதல் கருதி யிப்பெயரமைக்கப்பட்டது. இதனால் மாதவனுக்குரிய மனைவி மாலதியென்றும், அவளுக்குரிய கணவன் மாதவன் என்றும் யிடையருக் காதலமைந்தவரென்றும் பெறப்பட்டது.

[39] திருமணம் – பெற்றோர், சுற்றத்தார், ஏனைய பெரியோர், இவர்களுக்கு விரும்பத்தக்கதாதல் வேண்டுமென்பது கருத்து.

[40] வாமம் – ஈண்டு இடப்பக்கத்தையும், விரோதத்தையுமுணர்த்தும்.

[41] தாட்சிண்யம் – வலப்பக்கத்தையும், விரோதமின்மையையும், காரியசித்தியையுமுணர்த்தும்.

[42] சீரம் – தெருக்களிற் சிதைந்து கிடக்குங் கந்தைத்துணி. சீவரம் – நீலவண்ணப்புடவை.

[43] ஐயம் – பிச்சை; அது கலத்திலாதல், கையிலாதல், வாயிலாதல் – அளிக்கப்படும் அன்னக் கவளத்தைச் சுவைக்காது மருந்து போலுண்டு பசிப்பிணியைத் தீர்த்தலையுணர்த்தும்.

[44] இல் – நிலை – இல்லறம்; அஃதாகிய இடர் என விரியும்.

[45] பூரிவசு, தன் குமாரி மாலதியை, வாலிப நண்பனாகுந் தேவராதனுடைய புதல்வன் மாதவனுக்கு மணம்புரிவிக்க விருப்பமுடையனாய், அதற்கிடையூறாக அரசன் தங்காமத் துணைவனாகிய நந்தனன் பொருட்டுக்கோருனிலையை யோர்ந்து, அவர்க்கஞ்சி வெளிப்படையாக மணவினையாற்றவியலாது, அதை மறைவிற் செயலே செயற்குரிய விடயமாகும்; அதிற் காமந்தகியை நியமித்தான் என்பது மேல்விளங்கும்.

[46] செயற்பயன் – தவங்களானெய்தற்பாலதாகிய வீட்டின்பத்தினும், இஃதொன்றே சிறந்ததெனக் கருத்து.

[47] ஆன்வீட்சிகீ – பொருளுண்மைகளை யாராய்தற்குரிய வேதுக்களை யெடுத்துக் கூறுனூல்.

[48] ஊக்கற்பொருட்டு – ஊக்கல் – எழுப்புதல்; மாதவனது குண நலன்களைக்கண்டு, அவன் மணவினையில் பூரிவசுவுக்கு உற்சாகத்தையுண்டாக்கற் பொருட்டும், காதலி, காதலன் ஆகுமிவர்க்கும் காதற்குணத்தை யெழுப்புதற் பொருட்டுமாம்.

[49] இவ்வுபாயம் – களவு மணமாகுமுபாயம்; நண்பனது தொடர்பாகும் விருப்பமெய்துவதற்கும், அரசனது பகைமையாகும் வெறுப்பு விலகுவதற்கும் ஏதுவாகலின் நலம் பயப்பதென்றார்.

[50] பாசாங்கடி – இல்லதை உள்ளதாய்க் காட்டலும், உள்ளதை யில்லதாய்க் காட்டலுமாகிய பாவனை.

[51] வாலிபர் – ஈண்டுக் காளைப் பருவத் தொடக்கத்திலுள்ளாரையுணர்த்தும்; அப்பருவத்தினியல்புகள்:- ஒழுங்கு. ஒழுங்கின்மை, அடக்கம், இவற்றினறியாமை, காமன் ஆணைக்கு வயப்படுதல், பெரியோரையுங் கடந்து தன் விருப்பைப் பெற முற்படல் ஆகிய இவையாகலின், வெளிப்போந்த மெய்ப்பாட்டுக் குறியினர் எனக் கூறப்பட்டது. மெய்ப்பாடு – குறிப்பை வெளிப்படுக்குந் தோற்றம்.

[52] அதனால் – உலகமறிந்தமையால்; இக்களவுமணம் நிகழ்ந்த மேல், இஃது இக்கொடிய பிட்சுகியான் முடிந்ததென நந்தனனும் அரசுனுஞ் சினமுற்றாலும், “காதற்பற்றுக் காரணமாகத்தாமே வலிந்து புணர்ந்தனர்; இதனை யுலகமறியும்” எனக் கூறுமாற்றால் அவரை வஞ்சித்தலான் குற்றம் உண்டாகாதென்பது கருத்து.

[53] அறிந்த ஒருவன் – தனக்குரிய காரியங்களைப் பெறற்குத்தக்க வுபாயங்களை யறிந்தவன்.

[54] எவ்வாற்றானும் – நடையுடையுரை முதலியவற்றானும்.

[55] அந்தந்த முறை – எந்த முறையானும் மாதவனைக் கண்டு பிறர் ஐயுராதமுறை.

[56] அணித்துள்ள – என்றதனால் மாலதியின் காட்சி தெள்ளிதிற் கூடும் என்பது கருத்து.

[57] செவிலித் தாயின் புதல்வி – யென்றதனால், முலையுண்டல், புழுதியாடன் முதலியவற்றான் மிகக் கூடிப் பழகினமையின் மாலதியின் உள்ளக்கிடக்கை யாவையும் இவள் நன்குணர்ந்தவள் என்பது போதரும்.

[58] புதிய மன்மதன் – கண்ணுதற்கடவுளானெரிக்கப்பட்டு அவனருளான் மறுபிறப்பெய்தியனமையையுணர்த்தும்; அது நோக்கத்தின் ஆர்வத்தை வலியுறுத்தும்.

[59] வேட்கைப்பெருக்கு. வேட்கை – காமநோய்; இதனை உத்கண்டையென்று வடநூலார் கூறுவர். பெண்ணொருவளால் தன் பொறிகள் யாவும் இவனாலின்புறு மெனக்கருதப்படுமொருவனை யெவ்வாற்றானுந் தானடைந்தே தீருவதெனும் விருப்பமே உத்கண்டையாம்; மனத்துட் புணர்ச்சி, அத்திசை நோக்கம், அவயவவாட்டம், மனநெகிழ்ச்சி, மனோராச்சியம், முழந்தாள் கை இவற்றில் முகத்தையணைத்தல், முகம் செம்மையுறல், வியர்த்தல், சொல்தளர்ச்சி இவை யாவும் அவ்வேட்கையின் செயல்களாமென்றும் பாவப்பிரகாசிகை கூறும்.

[60] உம்மை – மாலதியும் நற்பேறு பெறலையுணர்த்தும்.

[61] விட்கம்பம் – விரிவுபடுத்தல்; இதனிலக்கணம் நடந்தனவும் நடப்பனவும் ஆகிய சரித்திர பாகங்களை விரித்து விளக்குவது என்று கூறப்படும்.

[62] கண்சூனியமாதல் – ஈண்டுத் தன்புலனைப் பற்றாதொழிதல்; இதனிலக்கணம், கருவிழி இமைகள் இவையசைவற்றும், ஒரு பொருளை முயன்று சிந்தித்தலான் புலனுகர்ச்சி யற்றும், கருமை நிறம் பெற்றும் அமைவதேயாம்.

[63] யாக்கையின் செம்மையற்ற நிலை – உறுப்புக்கள் தத்தம் தொழிலைச் செய்யத் திறலற்ற நிலை.

[64] நெட்டுயிர்ப்பு – பெருமூச்செரிதல் ; இது யாக்கை மெலுவு, துக்கம், மயக்கம் இவற்றையுணர்த்தும்; குறிப்பிட்ட இம்மூன்றும் மூன்றாங்காமாவத்தையான அநுமிருதியைக் குறிப்பனவாம். இதனிலக்கணம், நெட்டுயிர்ப்பும், மனத்துட் பல தோற்றமும், வேற்றுச் செயல் வெறுப்புமாகிய இவையாம்.

[65] பொருள்கள் – ஈண்டுக் காமவேட்கையை மிகைப்படுத்தற்குரிய பொழின்மதி முதலியன.

[66] துவர்த்தல், குளிர்தல் இவை இரசத்தின் பண்பாயினும் ஈண்டு இரசத்துடன் மணத்தையும் ஒருபொருட் படுத்தி, இவற்றை மணக்குணமாக வுபசரித்தார்.

[67] மறுவிலா மதி – முதலிரண்டடியினுங் கூறியுள்ள சரீரத் தளர்ச்சியும், செயல்களில் ஊக்கமின்மையும், காமவேட்கையானன்றிப் பிறவற்றானும் நிகழ்வுறுமாதலின் அவற்றையொழித்து மறுவிலாமதியென்னு மிவ்வுவமையான், இத்தகைய வெளிறுபடுந் தன்மை யதற்குப் பொதுவறப் பொருந்துமியல்பெனக் குறிப்பிடப்பட்டது; இதிற் சிருங்கார ரசத்தின் இன்றியமையாத முதற்பகுதிகளான அங்கத்தளர்வு முதலியனவே கூறப்பட்டிருப்பினும் இவற்றைப் பிரியாது நிகழ்வனவும், அவற்றை விரிவுபடுத்துவனவும் ஆகிய விருப்பு, வெறுப்பு முதலிய வியபிசாரி பாவங்களும், அதனைத் தூண்டுதற்குரிய காமற்பொழின் முதலிய உத்தீபன விபாவங்களும், நல்வினைப் பயன் எய்துமொருவனைப் பற்றுக்கோடாகவுடைய ஆலம்பன விபாவங்களும் ஆகிய இவற்றாற் சிறந் திலங்கு மிரதியென்று உள்ள நெகிழ்ச்சி பொருந்தும் விப்பிரலம்ப சிருங்கார ரஸம் இங்குத் துவனிக்கின்றது.

[68]  ந ட்பு – காரணமின்றி யுண்டாகும் நட்பு இயனட்பு என்றும், அதைப்பற்றி நிகழ்வது செயனட்பு எனவும் இருவகைத்தாம்; இவற்றுண் முறையே உயிருள்ளனவும் நிலைப்பதும், காரணமறைந்தொழிய தன் காரியமாகிய இதுவும் நிலையாது போம் என்றும் பாவப்பிரகாச நூல் கூறும்.

[69] நினைவு கூரறிவு – எதிரிலிருக்குமொரு பொருளைப் பார்த்துழி முன்னர்க் கண்ட பொருளினது நினைவுண்டாதலேயாம்.

[70] இலீலை – கடைக்கணித்தலான் விரும்பிய பொருளைப் பற்றுதல். அதாவது அன்பின் ஊக்கப்பட்ட மனம், இன்சொல், உறுப்பியக்கம் இவற்றால் விரும்பிய பொருளைப் பற்றுதல்; இஃதிருபாலருக்கும் பொதுவாம்.

[71] விப்பிரமம் – காதலியக்கம்; அது விரும்பிய பொருளைக் கண்டுழி உரை, செயல், மனம் இவற்றின் வேறுபாடும், அணிகலன் அணிதற்குரிய உறுப்புக்களின் வேறுபாடுமாம்; இவை, அங்க பரபரப்பினிகழ்வனவாம்.

[72] சாத்துவிகச் செயல் – அசைவற்றிருத்தல், வியர்த்தல், மயிர்சிலிர்த்தல், ஓசை மாறுதல், நடுங்குதல், நிறமாறுதல், கண்ணீருகுத்தல், மூர்ச்சித்த லென்னு மிவ்வெட்டுமாம்.

[73] பல்வேறு பாத்திரம் – பார்வை அச்சம், நாணம், வியப்பு முதலியவைகளுடன் கூடியிருத்தலின், அவ்வவற்றிற்குத்தக தனித்தனியே பல்வேறு பாத்திரமெனக் கூறினர். பாத்திரம் – தகுதி.

[74] அலசம் முதலிய ஆறும், காமவேட்கையினியைந்த பார்வையினது பேதங்களாம்; அவற்றின் இலக்கணம் பின்வருமாறு காண்க:-

அலசம் – விரும்பிய பொருளிற் பார்வையை நிலைப்படுத்திப் பின் நாணத்தாலதனைத் திருப்பிக் கோடல்.

வலிதம் – அங்ஙனந் திருப்பிய பார்வையை மீண்டுங் குறுக்காகச் செலுத்தல்.

முத்தம் – இயல்பினழகு பெற்ற அப்பார்வையாற் றனது உள்ளக்கிடக்கையைக் குறிப்பினுணர்த்தல்.

சினித்தம் – அன்புருக்கொடு காதற்பெருக்கிலியைந்திருத்தல்.

நிட்பந்தம் – விரும்பிய பொருளினன்றி, அதனுவமைப் பொருளொன்றினுங் கூடாது, அஃதொன்றிலே சலனமின்றி நிலைப்படுதல்.

மந்தம் – விரும்பிய பொருளினும் கூர்மையின்றி நிலவுதல். இவை காரிய காரணத்தான் இயைய நிறுத்த முறையானே தொகுக்கப்பட்டுள்ளன; அவ்வியைபினை விரிக்கிற் பெருதூஉம் ஆதலின் அதனை யறிஞர் உய்த்துணர்க.

[75] மீக் கூர்தல் – மிகுதல்

[76] வியப்பினால் விரிந்த விழி – வியப்பின் வயப்பட்டு, இமைப்பின்றி விரிந்திருத்தல்; இதனை விம்மித திருட்டி என்ப வடநூலார்.

[77] மீதூர்தல் – நெருங்குதல்.

[78] கடைவிழி – கண்களின் கடைப்புறத்திற் கருவிழிகளையமைத்தல்; இஃது ஈண்டு அதன் செயலாகிய பார்வையை யுணர்த்தும்.

[79] பற்றுக்கோடற்றதாய் – மனம், கடைக்கணித்தலின் வயத்ததாகலின், தற்செயற்கூடாமையானும், காத்தற்குரிய காவலன் இவளையன்றிப் பிறரின்மையானும், பிறராற்க் காக்க வியலாமையானும் இங்ஙனங் கூறினர்.

[80] கவரப்பட்டும் – கூரிய அம்பை நிகர்த்த கடைவிழி, மாதவனது மனத்தை வலிந்து பற்றிப் புண்படுத்தி, அதனால் நெக்குருகிய அம்மனத்தைப் பருகினமையும் அழித்தமையும், மாலதிப்பொருட்டு மாதவனது மனமழிந்து நிற்கு நிலையை உயர்வு நவிர்ச்சியான் உணர்த்தும்.

[81] அமுதத்தினும் விடத்தினும் – கடைக்கண் சென்றுழி, எல்லையற்ற இன்பத்தைத் தருதலானும், நாளும் உயிர்த்தற்கு ஏதுவாகலானும், அமுதத்தினும் என்றும், பிரிவாற்றாமையா னுண்டாகுந் தாங்கொணாத் துன்பத்திற்கு ஏதுவாகலான் விடத்தினும் என்று கூறினர்.

[82] எல்லாவுரை – என்பது பெயர்ச்சொல். இலக்கணைச்சொல் முதலியவற்றை யுணர்த்தும்.

[83] சடமாக்கி – இது சாட்டியமென்னுங் காமநோயின் நிலையையுணர்த்தும். இதனிலக்கணம்:- எப்பொழுது மெச்செயலினும் அறிவின்மை, விருப்பு வெறுப்புக்களையும் இன்பதுன்பங்களையுமறியாமை, வினாவிற்கு விடைகொடாமை, ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் புலனுகர்ச்சியின்மை. ஓலமிடல், காரணமிலாது உறுமுதல், உறுப்புக்கள் வாடுதல், இளைத்தல், நிறமாறுதல், நெட்டுயிர்த்தல் முதலியன நிகழ்தல் சாயதயமென்னுங் காமநோயினிலக்கணமாம்.

[84] தாபத்தையும் – இது வெப்பின் மிகுந்த சுவரம் என்னுங் காம நோயையுணர்த்தும்; இதன் இலக்கணம் அழல் நதியுழத்தலன்னத் தாங்கொணாத் தாங்கலெய்து நிலையாம்.

[85] பயனற்றனவே – கள்வராற் கவரப்பட்டுப் பொருட் சிறிதுமில்லானைக் குறித்து, இவ்வுழிக்கள்வருளர் ஆதலின் இவ்வழிச்சேறலடாத்து; என்று கூறற்போல, நீ காமற்கணைக்கிலக்காகாதொழிக; என மாதவனைக் குறித்துக் கூறலுமாம்.

[86] இத்தொடர் நற்குணமியைதலென்பது – மாலை, மெல்லிய நூல் கொண்டு தொகுக்கப்பட்டிருத்தலையும், தலைவன், தலைவி யிவர்கள் தொடர்பும், இவரது காதல் ஒழுக்க முதலிய நற்குணங்களை யமையப் பெற்றிருத்தலையு முணர்த்தும்.

[87] இதில் – என்பது இம்மாலையிலும் மாதவனை மணத்தலிலும் பேரவாவையுணர்த்தும்.

[88] பூவிற்செயல் – என்பது பூக்களானாகிய மாலையின் செயலையும், மலர்களை வில்லாகவுடைய காமனது செயலையு முணர்த்தும்; இதனால் மாலதிக்குப் பலவிதமான காமநோய்கள் நிகழ்ந்தன வென்றும் குறிப்பிடப்பட்டது.

[89] மாலைச் செயற்றிறன் – தொங்கலைச் செய்யுந் திறனையும் மாலதிக்கு மயக்கைச் செய்யுந் திறனையுமுணர்த்தும்.

[90] படைப்பின் அணி – இம்மாலையின் றொகுத் தலழகையும், பொருத்தமான மணமக்களின் சிருட்டியழகையு முணர்த்தும்.

[91] குன்றாமன்றன்மாலையென்பது – என்றுங் குன்றா நறுமணங்கமழும் மகிழமலர்களானாகிய மாலையையும், மணவினைக்குரிய மாலையையுமுணர்த்தும்; மன்றல் – நறுமணம், திருமணம்.

[92] ஊகம் – மாதவனிடத்து மாலதி காதற் பற்றுள்ளவள் என்னுமூகம்.

[93] இவ்விருவரையும் அழகுறப் படைத்தமைத்தமை, அவர் ஒருவர்க்கொருவர் காதற்பற்றை யெய்தினமையின் பயனுடைத்தாயிற்று.

[94] திருவிளையாடல் – என்பது மாதவன் மாலதியின் படிவத்தை வரைந்தமையும், இங்கு நிகழ்ந்த செய்திகளையும் உணர்த்தும்.

[95] கூடபாகலம் – வேழத்திற்கு நிகழ்கின்ற ஒருவகை நோய்; இது, வேடன், மறைவிற் சென்று விரைவின் விலங்குகளைக் கோறற்போல, பாகன் முதலியோர் அறியாவண்ணம் சென்றடைந்து யானையை விரைவிற் கொல்லுவதாம்.

[96] மாலதியு ருவாந்தன்மை – இதனால் மாதவன் மிகக் கொடிய காமவேட்கைகளுக் காட்பட்டு ழல்வானாயினும், அவன் மனம், அருமருந்தனைய மாலதியு ருவாந்தன்மை யெய்தி, யின்புற்று அவன் உயிர்த்தற் கேதுவாய தென்பது குறிப்பிடப்பட்டது.

மாலதீமாதவம் – இரண்டாம் அங்கம்

இரண்டாம் அங்கம்

(சேடிகளிருவர் பிரவேசிக்கின்றனர்)

முதலாமவள்ஏடீ சங்கீதசாலையின் உண்மருங்கில் தேவி காமந்தகீ அவலோகிதையுடன் தனித்திருந்து எதனையோ ஆலோசித்துக் கொண்டிருந்தனள்; நீயவளுடன் உரையாடியதென்னை?

இரண்டாமவள் – தோழீ! மாதவனது அன்பிற்குரிய நண்பன் மகரந்தனால் காமற்பொழிலினிகழ்ந்த செய்தியாவும் காமந்திகையின்பாற் றெரிவிக்கப்பட்டன வாதலின், அத்தேவியரால் நங்கோமகள் மாலதியைக் காண்டற் கெண்ணி யவளது நிலைமையை யறிதற்பொருட்டு அவலோகிதை யனுப்பப் பட்டாள். யானும் அம்மாலதி, இலவங்கிகையுடன் தனித்திருக்கின்றாள்; என்று கூறினேன்.

முதலாமவள்தோழீ! இலவங்கிகை மகிழ மலர்களைக் கொய்து வருவேன் என்று காமற் பொழிலிற் றங்கினளே; இப்பொழுது மீண்டும் அவள் வந்தனளா?

இரண்டாமவள்ஆம்! இலவங்கிகை வருநிலையிலேயே அவளைக் கைப்பற்றி யுடன்வருந் தாதியரையுந் தடுத்து நங் கோமகள் கோபுரவாயிற் றிண்ணையின் மார்க்கமாக மேன்மாடத்திற்கெய்தனள்.

முதலாமவள் – இஃதுறுதியே! அப்பெருந்தகைப் பெரியோனாகும் மாதவனது செய்திகளைக் கேட்டுள மகிழ்ந்தின்புறுவள்.

இரண்டாமவள் (நெட்டுயிர்த்து) இவட்கு உளமகிழ்ச்சி யாங்ஙனம்? இப்பொழுது அம்மாதவன் செய்தியை முற்றிலுமுணர்ந்து அவளது காமவேட்கை கரைகடந்ததாகும். அன்றியும், இற்றை வைகறைப்பொழுதிலேயே அரசன் அமாத்தியரிடம் நந்தனன் பொருட்டு மாலதியைக் கோர, அவரானும் இங்ஙனம் விடையிறுக்கப்பட்ட்து.

முதலாமவள்என்னென்று?

இரண்டாமவள்“தம்மைச் சார்ந்த கன்னியர்க்குத் தாமே உடைமையாளர்” என்று; ஆதலின் மாலதிக்கு அவளிறுதிகாறும் மாதவன் காதல் உண்ணச் சாவமையுமெனக் கருதுகிறேன்.

முதலாமவள் – அக்காமந்தகிப் பெரியோர் தமது பெருந்திறலை இங்ஙனம் வெளிப்படுத்துமோ?

இரண்டாமவள்அடி மாறுபட்ட தோற்றமுடையவளே! வருக.

எனச் சென்றனர்[1]

பிரவேசகம்[2]

மாலதீதோழீ! மேலும்[3], மேலும்.

இலவங்கிகை – பின்னர், அப்பெருந்தகையாரால் இம்மகிழமாலை நிற்களிக்கப்பட்டது.

(என்று கொடுக்கிறாள்)

மாலதீ – (அம்மாலையைப் பெற்றுக் களிப்புடன் உற்று நோக்கி) தோழீ! இக்கோர்வை யோர்புறத்தின் மாறுதலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

இலவங்கிகை – இங்ஙனஞ் சீர்மையின்மையில் நீயே குற்றவாளி.

மாலதீ – அஃதெங்ஙனம்.

இலவங்கிகை – பசும்புல்லனைய அப்பசிய மேனியன் உன்னிமித்தம்[4] அங்ஙனம், கைத்தடுமாற்றமெய்தினன்.

மாலதீ இலவங்கிகே! நீ என்னை யெப்பொழுது மின்புருத்து மியல்பினளாகவே காணப்படுகிறாய்.

இலவங்கிகை – இன்புறுத்துந்தன்மை யென்னிடத்தென்னை? நான் கூறுவேன்; இளங்காற்றினாலசைந் தலர்ந்த மரைமலரனையவும், முன்றொடங்கிய மகிழமாலையைத் தொகுத்தலே தலைக்கீடாகத் தனது வேட்கைக் குறியை மறைத்தற்கு மிக முயலுதலின் விரிந்தனவும் ஆகிய தனது கண்களால், மிகுந்தெழு வியப்பான் அசைவற்ற நீண்டகடைவழி நிலைப்படுத்தப்பட்டு விளங்கும் புருவங்களால் உய்த்துணரக்கிடக்குங் காமவேட்கையின் அழகு பொருந்த அவன் உன்னைக் காண, அங்ஙனமே யுன்னாலும் அவன் காணப்பட்டான்.

மாலதீ – (இலவங்கிகையைத் தழுவி[5]) ஆம்! அன்புடைத் தோழீ! சிறிது நேரம் என் முன்னே தோன்றி யென்னை வஞ்சித்த அவனது செயல்கள் இயற்கையினமைந்தனவா? அன்றேல், நீ எவ்வாறு கருதுகின்றனை?

இலவங்கிகை – (பொறாமையுடன்) நீயும் அக்கணமே யியற்கையிற்பாடலின் றியாடற்[6] புரிந்தனை.

மாலதீ – (வெட்கமுடன் நகைத்து) என்னையிது? மேலுங் கூறுக.

இலவங்கிகை – பிறகு திரும்பிவரும் விழாக் குழுவினருழம்பலின் மாதவன் மறைந்தொழிய, யான் மந்தாரிகையின் வீட்டிற்குச் சென்றேன்; விடியற்பொழுதிற் படிவத்தையும் அவன் கரத்திலிட்டேன்.

மாலதீ – எது கருதி?

இலவங்கிகைஅம்மந்தாரிகையை மாதவனது ஊழியன் கலகஞ்சன் காதலிக்கின்றான்; அவன்பால் இவள் இதனைத் தெரிவிப்பாள் என்று; அதற்கு மந்தாரிகையும் உடன்பட்டாள்;

மாலதீ – (தனக்குள் களிப்புடன்) கலகஞ்சனால் இப்படிவம் நங்காதலற்குத் தெரிவிக்கப்படும் என்பது நிச்சயம். (வெளியீடாக) தோழீ! உன் விருப்பம் யாது?

இலவங்கிகை – தானும் வருந்தி உன்னையும் வருத்தி கிடைத்தற்கரிய உன்னிடத்து விருப்பப் பிணிப்புண்டுமுழலு மனமுடைய மாதவற்குச் சிறிதளவு காமவேட்கையைத் தணிவுறுத்தும் உனது படிவ மிஃதொன்றே யெனது விருப்பம்[7].

(என ஓவியத்தைக் காட்டுகின்றாள்)

மாலதீ – (களிப்புடனும் நெட்டுயிர்ப்புடனும் நெடிது நோக்கி) அந்தோ! எனது மனம் இப்பொழுதும் இன்புறவில்லை; ஏனெனில் இப்படிவம் இன்புறுத்தற்குரிய தாயினும் என்னை வஞ்சித்தொழியுமென்றே கருதுகின்றது. என்னே! சில சொற்களும் காணப்படுகின்றனவே!

(இயலழகு பொருந்தியனவும் என்ற முதல் அங்கம் 39ஆம் சுலோகத்தின் சொற்களைப் படிக்கின்றாள்)

(களிப்புடன்) பெரியோய்! நினது செயலினும் உரையினும் இனிமை யொப்புடைத்து. காட்சியோ! அவ்வளவில் இன்புறுத்தி யஃதில்வழி மிகு துன்புறுத்துமியல்பினது. நின்னைக் காணாதவரும், கண்டுந் தம்மனத்தை யொரு  நிலைப்படுத்துவாருமாகிய மடவரல்களே! நல்வினைப்பயனெய்தினராவர்.

இலவங்கிகை – எவ்வாற்றானும் நீயின்புறுவதில்லை.

மாலதீ – அதனை நீ யெங்ஙனமறிந்தனை?

இலவங்கிகை – எவனைக் குறித்து தாதவிழ்ந்த அசோகமலர் போல வாடிய மனத்தினளாய் நீ மெலிவுறும் பிச்சிமலர்போலக் காமனாலிளைப் பெய்துகின்றனையோ; அவனும் அக்காமனால் தாங்கொணா நிலையை யெய்தியுள்ளான்.

மாலதீ – தோழீ! இப்பொழுது அப்பெரியோர் சுகம் பெறுக; எற்குத் தேறுதலமைவதரிது. (கண்ணீருகுத்து வடமொழியிற் கூறுவாள்.)

(1) மிகக் கொடிய எனது மனவேட்கை, நாடிகள் யாவற்றினுமிடையறாது பரவும் விடம் போலத் துன்புறுத்துமியல்புடைத்தாய், தூமமின்றி வீசப்படுமங்கிபோல எரி தருகின்றது. ஆதலின் அது மிகுதியான வெப்பு நோய் போல ஒவ்வொரு உறுப்புக்களையும் அகத்தும்புறத்தும் வருத்துகின்றது. இந்நோயினின்று என்னை காத்தற்கு எனதிருமுதுகுரவரும்[8] நீயும் ஆற்றகில்லீர்.

இலவங்கிகை – பெரியோரிணக்கம், காட்சியளவையில் இன்பத்தையும் அஃதில்வழித் துன்பத்தையும் அளிக்குமியல்பினது. ஆதலின் அன்புடைத் தோழீ! சாளரத்தின் வாயிலாக எவனைக் கடைக்கணித்த அளவில் உனது சரீர நிலை, உவாமதியெழுச்சியை எரிதருமழலெனக் கொண்டு கருணையிகந்த காமன் செயலினால் ஐயுறத்தகு முயிர்த்தலையுடையதாயிற்றோ அவனை யிப்பொழுது சிறப்புறக் காண்டலின் வருந்துகின்றனை யென்பதிற் கூறுவதென்னை? ஆதலின்[9], பெருமை வாய்ந்ததும் ஒத்ததும் ஆகிய காதற்பற்றுள்ள பெருந்தகைக் காதலன் புணர்ச்சியே, உலகிற்குப் புகழத்தக்கதும் கிடைத்தற்கரியதுமாகிய விருப்பின் பயனாம் என்னு மிவ்வளவே யாமறிவோம்.

மாலதீ – அடி, மாலதியின் உயிரே பெரிதென விரும்பி யடாதுரைப்பவளே[10]! செல்லுதி; (கண்ணீருகுத்து) இன்றேல்! அவனைப் பலகாலும் பார்த்து நிலைதிரிந்து பின் நிலைப்படு முறுதிப்பாடெய்து மிதயங்காரணமாக நாணம் மிகவொழிந்து தீ நெறிப்புக்குழலும் யானே யிதிற் குறைபாடுற்றவளாகுவேன்[11]; ஆயினும் அன்புடைதோழீ! (வடமொழியில்)

(2) கலை நிறை மதியம்[12] கங்குற்பொழுதெலாம் வானிடை யெரிக; காமனும் என்னைக் கடிதே சுடுக; இவர், இறத்தலையன்றி யெற்கியற்றுமாறென்னை? சிறந்த நற்றாதையும், மறுவிலா மரபுடைத்தாயரும், பழுதிலாக் குலமுமே யெற்கு விரும்பற்பாலனவன்றி இவ்வாண்மகனு மின்னுயிருமங்ஙனமின்று.

இலவங்கிகை – (தனக்குள்) இதற்குரிய உபாயம் யாதோ?

(வேடசாலையினின்றும் சிறிது வெளிவந்து)

பிரதீகாரி – காமந்தகிப்பெரியார்[13] வந்துள்ளார்.

இருவரும் – பெருமைசேர் காமந்தகியா?

பிரதீகாரிகோமகளைக் காண விரும்பி வந்தனர்.

இருவரும் – ஏன் தாமதிக்கவேண்டும்?

(பிரதீகாரி சென்றனள்) (மாலதீ படத்தை மறைக்கிறாள்)

இலவங்கிகை – (தனக்குள்) நலமே நிகழ்ந்தது.

(காமந்தகியும் அவலோகிதையும் வருகின்றனர்)

காமந்தகீ – நல்லது பூரிவசுவே! நல்லது. ”தனது கன்னிமார்க்குத் தாமேயுடைமையாளர்” என்னுமிருவகை யுலகங்கட்கும் முரண்படாமல்[14] விடையிறுக்கப்பட்டது. இப்பொழுது காமற்பொழிற் செய்தியால் திருவருட்பாங்குமுளதென, அறிகுவேன். மகிழமாலை, மாதவன் படிவம் இவற்றின் கொண்டு கொடுத்தலும் சொல்லொணா வியப்பையும் களிப்பையும் அளிக்கின்றது. ஒருவொர்க்கொருவர்பாலியைந்த காதற்பெருக்கமே மணவினைக்கட் சாலச் சிறந்த நலம் பயப்பதாம். இதனையே பிருகற்பதியும் “மனம் கண் இவை நிலைப்படும் ஒரோவழி எல்லா நலனுமினிதோங்கும்” என்றுங் கூறினர்.

அவலோகிதை – இவளே மாலதி.

காமந்தகீ – (கூர்ந்து நோக்கி)

(3) மிகவும் இளைத்த உறுப்புக்களை யுடையவளும் ஈரமுள்ள வாழையுண்மருங்க[15]ன்ன அழகுடையவளும், ஒரு கலை[16]யளவில் எஞ்சிய சந்திரனைப் போலக் கட்பொறிக்குக் கழிபேருவகையளிப்பவளும், காமனாம் தீயின் வெப்பினானைந்த உடனிலையுறுவாளுமாகிய இம்மங்கல மடவரல் நம்மனத்திற்கு இன்பத்தையும் துன்பத்தையும் ஒருசேரத்[17] தருகின்றாள். மேலும்

(4) மாசடைந்து வெளிறிய கபோலங்களையுடைய முகத்தையுடையவளாயினும் கவினுறும் பான்மை பெற்றனள். இயலழகு பொருந்துவாரிடத்து அழகுபெறப் பரவுங் காமனது செயலும் விளக்கமுறலியல்பே. மனத்தோற்றத் தானிகழ்ந்த காதலன் புணர்ச்சியை நுகர்கின்றனள். இஃதுண்மையே; ஏனெனில்,

(5) துகின்முடி நெகிழ்தலும், இதழ் துடிதுடித்தலும், வாகு சோர்வுறுதலும், மெய்வியர்த்தலும், கண்கள் மசிருணம்[18], முகுளம், ஆகேகரம், சினிக்குதம், முக்குதம் என்னும் பார்வையை யெய்தலும், மெய்நிலைப்படுதலும் பூமொட்டனைய தனங்களும் கச்சைக் கடந்து விம்முதலும், இடம்படுகன்னம் மயிர்க்குச்செரிதலும், மயக்கமும், இயக்கமும் ஆகிய இவற்றை இவள் எய்துகின்றாள்.

(காமந்தகி மாலதியின் அருகிற் செல்லுகின்றாள்)

(இலவங்கிகை மாலதியை அறிவுறுத்துகிறாள்.)

(இருவரும் இருக்கையினின்றெழுகின்றனர்)

மாலதீ – பெரியோய்! வணங்குகின்றேன்.

காமந்தகீ – நல்வினைப்பிறவியின் பயனைப் பெறுதற்கு நீ தகுதியாகுக.

இலவங்கிகை – பரிசுத்தமான இவ்வா தனத் தமர்க.

(எல்லவரும் அமர்கின்றனர்)

மாலதீ – தங்களுக்கு நலமோ?

காமந்தகீ – (நெட்டுயிர்த்து) நலம் போலும்.

இலவங்கிகை – (தனக்குள்) இது கபட நாடகத்திற்குத்[19] தொடக்கமாம். (வெளியீடாக) மிகுந்து வரும் கண்ணீர்பெருக்கை, மங்கலத்தைக் கருதி தடைப்படுத்தலான் அது கண்டத்துட்டடைப்பட்டு மெலிந்த ஒலியுடன் தங்கள் சொற்கள் தளர்ந்துள்ளன போலும்; அத்தளர்ச்சிக்குக் காரணம் யாதோ?

காமந்தகீ – சீரசீவரத்திற்குப்[20] பொருந்தாத இப்பழக்கமேயாகும்.

இலவங்கிகை – அஃதெங்ஙனம்?

காமந்தகீ – நீயு மிதனை யறிந்திலையா?

(6) காமனது கணைகள் வென்றிசேரியல்பின; என்றும் இயலழகினுக்கு நிலைக்களனாகும் இவளது உடலம், பொருத்தமிலா மணமகற்கு அளிக்கப்படுதலால் வருந்திய தனியலணியாவும் வறிதே கழியுமென்றும் மனந்தளர்ந்தேன்.

(மாலதி துக்கக்குறிப்பை நடிக்கின்றாள்)

இலவங்கிகை – இஃதுமுளது; அமாத்தியன் அரசன் சொற்களுக்கு உடன்பாடெய்தி, அவரால் நந்தனற்கு மாலதியளிக்கப்பட்டாள் என்று யாவரும் அவரை வெறுக்கின்றனர்.

மாலதீ – (தனக்குள்) என்னே! யான் எனது தந்தையால் அரசனுக்குப் பலியிடப்பட்டுள்ளேனா[21]?

காமந்தகீ – விந்தை!

(7) குணங்களை ஆராய்ந்தறியாமல் அமாத்தியனால் இஃதெங்ஙனம் தொடங்கப்பட்டது; அன்றேல்; தீயசூழ்ச்சியில் திறலமைந்த மனத்தருக்கு மகப்பேரன்பு யாங்ஙனம் கூடும்? அரசனது காமத்துணைவனாகிய நந்தனனுக்குத் தன் புதல்வியை மணம் புரிவித்தலான் அவன் தனக்கு நண்பனாகுவன் என்னுமிஃதொன்றே யவர் கருத்தாகும்.

மாலதீ – அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள்.

இலவங்கிகை – பெரியோய்! தாங்கள் தெரிவித்த வண்ணமே அது; அன்றேல், காளைப்பருவத்தையுங் கடந்த உருவிலியான அம்மணமகனிடத்தில் அமைச்சன் ஏன் ஒன்றனையும் ஆராய்ந்திலன்?

மாலதீ – (தனக்குள்) அந்தோ அழிவெய்தினேன். யான் பாக்கியமிழந்து நிகழ்வுறுங் கொடுமையா மிடி யேற்றினுக்கிலக்காயினேன்.

இலவங்கிகை – ஆதலின் அருளுக; பெரியோய் பிழைப்புறு மிறப்பெனும் இந்நிலையினின்றும் எனதன்புடைமைக்குரிய தோழியைப் பாலித்தருளல் வேண்டும்; இவள் தங்களுக்கும் புதல்வியேயாவள்.

காமந்தகீ – அடி ஒழுங்கியல்பினளே! என்னாற் செயற்பாலதென்னை? கன்னியர்க்கு அவர்தமூழ்வினையும் பெற்றோருமே பெரிதும் உரிமையுடையவராவர்.

காமந்தகீ – குசிகன் புதல்வியான சகுந்தலை துசியந்தனையும், உருப்பசியென்னு தெய்வமகளொருத்தி புரூரவனையும் விரும்பிப் புணர்ந்தனர். வாசவதத்தையும் தந்தையால் சஞ்சயன் என்னும் அரசனுக்கு மணம்புரிவிக்கப்படினும், தான் உதயனனுக்கே வாழ்க்கைப்பட்டனள் என்றும் சரித்திரமுணர்வார் சாற்றுவர்; எனினும் அவற்றை யுபதேசித்தல் தக்கதன்று.  முற்றிலும்;

(8) அமாத்தியன், அரசனுக்கு அன்பனும்[22] நண்பனுமாகிய[23] நந்தனனுக்கு தன் புதல்வியை யளித்து இன்புறுக; இவளும், தூமகேது[24] வோடியையு மாசிலாக் கலைபோலக் கொடுந்தோற்றத்திவனுடனியைக.

மாலதீ – (தனக்குள்) அந்தோ! தந்தையே! எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையால் தோல்வியுற்றீர்.

அவலோகிதை – பெரியோய்! காலங்கடக்கின்றது; அப்பெருந்தகை மாதவன் மனப்பிணியுள்ளவன் என்பதைத் தெரிவிக்கின்றேன்.

காமந்தகீ – இக்கணமே செல்வோம்; குழந்தாய் எற்குச் செலவு கொடுப்பாயாக.

இலவங்கிகை – (மாலதியையணுகி) தோழி மாலதி! இப்பொழுது இப்பெரியாரிடத்திருந்தே அப்பெருந்தகை மாதவன் செய்தியையுமுணர்வோம்.

மாலதீ – எற்கும் பேரவாவுளது.

இலவங்கிகை – தாங்களும் இங்ஙனம் அன்பு மீக்கூர்ந்த பெருமுயற்சி யெய்துமத்தகைய மாதவன் என்பார் யாவர்.

காமந்தகீ – கூறவொண்ணாத மிகவிரிந்த பெருங்கதை.

இலவங்கிகை – ஆயினும், விரித்துரைத்தருள வேண்டும்.

காமந்தகீ – கேட்பாயாக; சிறப்புறுமாடவர்க்குழுச் சிரோமணியாய்த் திகழுறுந் தேவராதன் என்னும் விதர்ப்ப நாட்டு வேந்தற்கு, அமைச்சனொருவனுளன். உலகெலாம் பரவு மூழ்வினைப் பயனுடையவனை, “இவன் யாவன்? எத்தகைத்தவன்?” என்று உடன் கல்விபயின்றமையின் உன்றந்தையே யுணகுவர். மேலும்.

(9) வெள்ளிய புகழ்களால் விளங்குந் திசை முடிவுடையாரும், மிகச் சிறந்த நல்வினைப் பயன்கட்கும், மங்கலங்கட்கும் நிலைக்களனும், எண்ணரிய பெருமை வாய்ந்தவருமாகிய அத்தகைப் பெரியார் இவ்வுலகில், எங்ஙனமேனு முதிக்கின்றனர்.

மாலதீ – (களிப்புடன்) தோழீ! நம் பெரியாராற் புகழப்படும் திருநாமத்தைப் பெறுமவரை, நம் தந்தை பலகாலும் நினைவதுண்டு.

இலவங்கிகை – தோழீ! நம் பெரியாரோடு அவ்விருவரும் ஒரே ஆசானிடத்துக் கலைபயின்றனரென அக்காலத்தவர் கூறுகின்றனர்.

காமந்தகீ – (10) விளங்கு நற்குணங்களாகுந்[25] தேசுடையழகனும், கலைசிறக்கப்பெற்றவனும், இளம்பிறையை நிகர்த்தவனும் ஆகிய இவன், இவ்வுலகில் கண்ணுடையார்க்குக் கழிபேருவகையின் காரணமாக உதயகிரியினின்றும் மதியுதித்தன்ன உதித்தனன்.

இலவங்கிகை – (திரும்பி) இவன் ஒருகால் மாதவனாகுவனோ?

காமந்தகீ – (11) கல்வியாற் கவினுறு மிவன் வாலிபனாயினும், இப்பொழுது இங்ஙனம் வந்துள்ளான். சரற் காலத்து வாமதியனைய வதனத்திவனைப்பார்த்த அளவில் இந்நகரம், மடவரல்களுடைய காதற்பற்றுடன் கலக்கமுற்ற கடைவிழிகளால் ஆம்பல்[26] நிறைந்த சாளரங்களையுடையது போலக் காணப்படுகின்றது. இங்ஙனம் தனது வாலிப நண்பனாகிய மகரந்தனுடன் ஆன்வீட்சிகீயைப் பயிலுமவனே மாதவன்.

மாலதீ – (களிப்புடனருகில்) தோழீ இலவங்கிகையே! இப்பெருமகன் பெருங்குடிப்பிறந்தவனாம். கேட்டனையா?

இலவங்கிகை – பாரிஜாதம் பாற்கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்கும்.

காமந்தகீ – காலம் மிகவும் கடந்தது. இப்பொழுது;

(12) அச்சத்தால் நடுங்குஞ் சக்கிரவாகங்கள் புணர்ச்சியனீங்கி யிளைப்பாறுதற்பொருட்டு முதற்கண் அவைகளின் துயில்நிலையை யொழிப்பதும், அரண்மனையின் மேன்மாடங்களிற்புக்கு எதிரொலித்தலின் மிகுந்ததும், ஆகிய இம்மாலைச்சங்கின் பேரொலி முழக்கம் வானிடை யுலவுகின்றது. குழந்தாய்! சுகம் பெறுக. (என எழுகின்றாள்)

மாலதீ – (திரும்பி) என்னே எனது தந்தையால் அரசனுக்குப் பெலியிடப்பட்டுள்ளேனா? அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள். (கண்ணீர் பெருக) அந்தோ தந்தையே! எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையால் தோல்வியுற்றொழிந்தீர். (களிப்புடன்) அப்பெருமகன் பெருங்குடிப்பிறந்தவனா? பாரிஜாதம் பாற்கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்குமென்று நன்கு கூறினள் இலவங்கிகை. மீண்டும் அவரை யான் பார்க்கமாட்டுவேனா?

இலவங்கிகை – ஒன்றுக்கொன்று எதிர்முகமாயமைந்த நான்குவாயில் பொருந்து மிவ்வில்லத்தின் வாயிலாகச் செல்வோம்.

காமந்தகீ – (திரும்பி) அவலோகிதே. இப்பொழுது என்னால் நடுநிலையிலிருப்பவள் போல மாலதியைக் குறித்துச் செயற்பாலதாகிய தலைத்தூதரின் செயற்பெருமை சிறிது குறைக்கப்பட்டது ஏனெனில்.

(13) பிறிதொரு மணமகன்பாற் குற்றமும் தந்தைபால் ஐயுறவும் உண்டாக்கப்பட்டது. இதிகாசங்களையும் வெளிப்படுத்தலாற் செயன்முறையுங் கூறப்பட்டது. குலத்தானும் குணத்தானும் சிறந்திலங்கும் மாதவனது பெருந்தகைமையும் முறையே புகழ்ந்து கூறப்பட்டது. ஆதலின் இனிச் செயற்குரியது புணர்ச்சியொன்றேயாகும்

(என்று எல்லவரும் போந்தனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் இரண்டாம் அங்கம் முற்றிற்று.


[1] எனச்சென்றனர் – மகரந்தன் காமந்தகிக்கு மாதவன் செய்தியைத் தெரிவித்தமை, இலவங்கிகையின் வருகை, மாலதி, இலவங்கிகை யிவர்கள் மேன்மாடத்திற் புகுந்தமை, மாலதியினிலை யறிதர்க்குக் காமந்திகையின் வருகை, அவளாற் றொடங்கப்படும் நந்தனன் செய்தி யென்னுமிவற்றைக் குறிப்பின் உணர்த்திச் சென்றனர்.

[2] பிரவேசகம் – இழிந்த வேடத்தவர்களான நடன், நடி முதலியோரான் அளவளாவிப் பேசப்படலேயன்றிப் பிறவிலக்கணம், விட்கம்பத்திற்குக் கூறியாங்கு ஒக்கும்.

[3] மேலும் மேலும் என இரட்டித்துக்கூறினமை, காமற்பொழிலிற் றங்கி மாதவன் மருங்கு சென்றமை, அகப்பொருட் பொருந்து மின் சொற்களான் மாலையைப் பெற்றமை, ஆகிய இவற்றைக் கூறு மிலவங்கியை மீண்டுமூக்கற் பொருட்டு என்க.

[4] உன்னிமித்தம் – மாதவன் மனம் மிக்க வலிதாயினும் மாலதியின் வடிவழகினால் அது கவரப்பட்டமையின், அவன் முயன்ற செயல் குறைவுபாடெய்தற்கு இம்மாலதியே யேதுவாகலின், உன்னிமித்தம் எனக்கூறி, யிதனால் மாதவனுக்கு மாலதியிடம் காதன் மிகுந்திருத்தலுங் குறிப்பிடப்பட்டது.

[5] இலவங்கிகை, மாலதியின் உள்ளக்கிடக்கையை யறிந்துரைத்தலின் மாலதிக்கு உண்டான கழிபேருவகையே யவளைத் தழுவலினிமித்தமென்க.

[6] ஆடற்குப்பாடலுறுப்பாகலின் அதற்கு அஃது இன்றியமையாதது; பாடலின்றி யாடலாவது, உறுப்புக்கள் காமன் வயத்தனவாய்த் தஞ்செயலற்று நோயின்பாற் பட்டுலைவுறுஞ் செயலேயாம். இதனால் இவர் செயல்கள் இயற்கையினன்றிக் காமவேட்கையின்பாற் பட்டனவென்பதும், ஒருவர்பாலொருவர் காதன்மேற் கொண்டுள்ளார் என்பதும் போதரும்.

[7] மாதவன் காட்சியின்றி மாலதி உயிர்த்திருக்க வியலாதவளாய், அவள் அவனது உருவத்தை வரைந்தாதல் உயிர்த்திருக்கக் கருதியாங்கு, மாதவனும் இவளுருவத்தை வரைந்தனன்; என்னுமாற்றால் இவர்கட்குண்டான காதற் பெருக்கமே இலவங்கிகையின் விருப்பமென்பது கருத்து.

[8] இருமுதுகுரவர் – தந்தை, யென்பாலன்புமிக்காரேனும், அரசன் விருப்பிற் கடைப்பாடுடையாரும், தாய், ஆண்மகவினும் பெண்மகவிலன்புடையாரேனும், கற்பின் வழிப்பட்டுத் தந்தைவயத்தருமாதலின் காவற்றிறலற்றவர் என்பதும், பூழியாடன் முதலியவற்றால் இன்பதுன்பங்களில் ஒத்தவரும், கள்ளமற்ற உள்ளம் போன்றவருமாகிய தோழிகள் தாய்தந்தையரினுஞ் சிறந்தவர்; அவருள் நீ சாலச்சிறந்தவள் எனினும் யான் தன்வயத்தளாகாமையின் அங்ஙனம் நீயும் காத்தலரிது என்பதும், எற்காக்குங் காவலன், இறந்தவரை யெழுப்பும் மருந்தனைய மாதவனேயாவன்; அவனையான் யெய்தப்பெறாதொழியின் இறத்தலேயன்றி பிறிதொன்று மெய்தற்பாலதின்று என்பதுங் கருத்து. இச்சுலோகத்தில் விடம், அங்கி, வெப்பு நோயென்னு மும்மையாமுவமையைக் கோடல் மனவேட்கையின் கொடுமையை உவமையொன்றிற் கூறவியலாதென இதனால் அதன் பெருமிதம் குறிப்பிடப்பட்டது.

[9] இத்தொடரான் மாலதியே, தான் சேர விரும்புங் காதலனை வலிந்து பற்றுவாளாயின் அவள் இன்புறுவள்; அன்றேல் துன்புற்றொழிகுவள் என்பது குறிப்பிடப்பட்டது.

[10] அடாதுரைப்பவள் – உயிர் நசையின் கன்னியர்க்குத் தகாததும், உற்றாரானும் பெற்றாரானுங் கொள்ளத்தகாததும், மரபினை மாசுபடுத்துவதுமாகிய செய்தியைக் கூறுபவள்.

[11] குறை – குலக்கன்னியரது வரையறை யிகந்து பலகாலும் மாதவனைக் காண்டலே குறையென்பது கருத்து.

[12] இச்சுலோகத்தில் – கங்குற்பொழுதெலாம் – என்பது கிருட்டினம், சுக்கிலம் என்னும் இருபக்கத்து இரவுகளிலும் காலவரையறையை நீக்கி, கலைக்குறைவின்றி மதி விளங்குதலைக் குறிக்கும். எரிக என்பது தண்கதிர்ச் செல்வனாயினும் பிரிவெய்தினோரை வெப்புறச் செயல் இவனது இயல்பெனக் குறிக்கும். இவ்வாண்மகனும் இன்னுயிரும் என்னுமிவற்றால் கன்னியர்க்குத் தன்னொழுக்கத்தைக் காத்து நன்னெறி நடத்தலே யின்றியமையாத கடமையாம் என்பதும் குறிப்பிடப்பட்டது.

[13] உபாயம் யாதென மனத்தில் ஆலோசிக்க, காமந்தகி வந்தனள் என்னும் சொல் நேர்ந்தமையின் இதற்குபாயம் அவளேயாவள் என்னும் சுப நிமித்தமும் குறிப்பிடப்பட்டது.

[14] இருவகை யுலகங்கட்கு முரண்படாமை – எனது குடியே தமக்கு அடிமையாகலின் தங்கருத்திற்கியைவன செய்க; என்னும் பொருள்படும் விடையினால் இன்பந் துய்த்தற்குரிய மண்ணுலகிற்கு முரண்படாமையும், தங்கன்னியர்க்கே யன்றிப் பிறர் கன்னியர்க்குத் தாம் உடைமையானரல்லர் என்னும் எதிர்மறைப் பொருள்படுதலான் அகந்தூய்மையமையும் வாய்மையானும், முன்னர்ச் செய்யப்பட்ட நட்புறுதிப்பாட்டின் முறிவாகுந் தோடமின்மையானும், விண்ணுலகிற்கு முரண்படாமையும் ஆம்.

[15] வாழையுண்மருங்கு – இவ்வுவமையால் மென்மை, செம்மை, வெண்மை முதலியன குறிக்கப்படுகின்றன.

[16] ஒருகலை மதி – என்பது கதிரவன் கலையில் முற்றும் கலந்து ஒளியிழந்து தோன்றாதொழியு நிலையில் இருக்கும் சுமையின் முதனாட்பிறையினை யுணர்த்தும்.

[17] தன் செயற்குக் கருவியான காமவேட்கையில் இவள் நிலைப்படுதலால் இன்பத்தையும், இத்தகைய காமநோயின் வயத்தளாய் ஒருகால் இறந்துபடுமோ என்னுமச்சத்தால் துன்பத்தையும் இவள் ஒருசேரத் தருகின்றனள் என்பது கருத்து.

[18] மசுருணம் முதல் ஐந்தும், புணர்ச்சியினிகழுங்கட்பொறிச் செயல்களது குறியீடுகளாம்; அவற்றுள், மசுருணம் – காதலினிடத்துக் காதன்மிகையால் கண் செம்மையுற்றுக் கலக்கமுறப் பார்த்தல்; முகுளம் – இன்ப நுகர்ச்சியில் இமையைக் குவித்து கருவிழியைச் சிறிது அலர்த்திப் பார்த்தல்; ஆகேகரம் – சிறிது கடைகுவிந்து குறிப்புடன் பொருந்தும் இமைத்தலுடன் கருவிழியை மிகச் சுழற்றிப் பார்த்தல்.

சினிக்குதம், முக்குதம் இவற்றின் இலக்கணம் முதலங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இச்சுலோகத்தினால் இன்ப நுகர்ச்சியையுணர்த்து முகத்தான் சம்போக சிருங்கார ரசம் குறிப்பிடப்பட்டது.

[19] கபடநாடகம் – தகுதியற்ற ஒருவனுக்கு வாழ்க்கைப் படுதலைக் கூறுமுகத்தான் அச்சத்தை விளைவித்து மாலதியின் மனத்தைக் களவு மணத்தில் முயல்வித்தலாகும் செயலாம்; அதன் றொடக்கமாவது நெட்டுயிர்த்து நலம்போலும் என்று கூறிய சொல்.

[20] சீரசீவரம் – முதலங்கத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது.

[21] ஒருவன் துர்க்கை முதலிய தெய்வங்களுக்கு ஆடுகோழி முதலியவைகளைப் பலிகொடுத்து தன் கோருதலை நிறைவேற்றிக் கொள்ளுதல் போல அமாத்தியன் செயலுமாம்.

[22] அன்பன் – உண்மையுரைப்பவனும், நேர்மையான மனப்பான்மையுள்ளவனும், உதவிபுரிபவனும், இனியவை கூறுபவனும், ஆகித் தானுமின்புறு மொருவன் அன்பன் என்றும்,

[23] நண்பன் – துக்கம், ஆபத்து, மயக்கம், செயற்குரிய காலம் கெடுதல், இவற்றில் நன்மையே நாடிச் செய்யு மொருவன் நண்பனாகும், என்றும் பரதநூல் கூறும்.

[24] தூமகேது – உற்பாதம்; இதனைக் கண்ட அளவில் தீங்கு நேருவது போல மாலதிக்குத் தீங்கு நேரும் என்றும் மதியை உவமித்தலான் அத்தீங்குங் கடிதில் நீங்கியவள் இன்புறுவாள் என்றும் குறிப்பிடப்பட்டது.

[25] இந்தச் சுலோகத்திற் கூறப்பட்ட அடைமொழிகள் மாதவனுக்கும் சந்திரனுக்கும் ஒக்கும்.

[26] ஆம்பல் – மாதவன் மதியை நிகர்த்தவன் ஆதலின் அவனைக் கண்டு மகளிரது கடைவிழியாகும் ஆம்பலும் அலர்தரலியல்பு.

மாலதீமாதவம் – மூன்றாம் அங்கம்

மூன்றாம் அங்கம்

(புத்தரக்கிதை பிரவேசிக்கின்றாள்)

புத்தரக்கிதை – (நடந்து ஆகாயத்தை நோக்கி[1]) அவலோகிதே! காமந்தகியார் எங்ஙனமிருக்கிறார் என்பதை நீ யறிகுவையோ!

அவலோகிதை – (பிரவேசித்து) புத்தரக்கிதே! என்னே மதிமயங்குகின்றனை? சின்னாட்களாக அப்பெரியார் இரந்துண்ணும் அமயத்தையும் விடுத்து மாலதிக்குத் தேருதலைச் செய்து வருகின்றனர்.

புத்தரக்கிதைஆம் நீ எங்குச் செல்லப் புறப்பட்டனை?

அவலோகிதை – “சங்கரபுரத்தைச் சார்ந்த காமற்பொழிற்குச் சென்று குன்றிப் புதரின் மருங்கிலிருக்கும் செவ்வசோகின் மறைவில் இருத்தல் வேண்டும்” என்னும் காமந்தகியின் கட்டளையை மாதவன்பாற் றெரிவித்தற்பொருட்டு அவர்களால் அனுப்பப்பட்டேன்; மாதவனும் அங்குச் சென்றனன்.

புத்தரக்கிதைஎது குறித்து மாதவன் அங்ஙனம் அனுப்பப்பட்டான்.

அவலோகிதை – இற்றை நாள் கிருட்டினசதுர்தசி[2] யென்று மாலதி தன் றாயுடன் சங்கரபுரத்திற்கேகுவாள்; அதனால் இத்தகைய மங்களங்கள் வளர்ந்தோங்குமென்றும், கடவுள் வழிபாடு காரணமாகத் தானே மலரெடுத்தலைக் குறித்து இலவங்கிகையுடன் அப்பொழிற்கே வரச் செய்வாள்; அங்கு ஒருவர்க்கொருவர் பார்வையும் நேருமென்றும் அனுப்பப்பட்டான். நீ எங்குச் செல்ல புறப்பட்டனை?

புத்தரக்கிதை சங்கரபுரத்திற்கே செல்பவளாகிய எனதன்புடைமைக்குரிய தோழி மதயந்திகையால் யானுமழைக்கப்பட்டேன்; ஆதலின் காமந்தகியாரின் சரணங்களில் வணங்கிப் பின்னர் அங்ஙனமே யானும் வருவேன்.

அவலோகிதை – காமந்தகியாற் கட்டளையிடப்பட்டு நீ முயன்ற செயலின் செய்தி என்னை?

புத்தரக்கிதையான் காமந்தகியின் கட்டளைப்படி அன்பிற்குரிய மதயந்திகையுடன் நட்புரையாடும் அமயங்களில், “இத்தகையன், அத்தகையன்” என மகரந்தனைப் புகழ்ந்து கூறி அவளுக்கும், “அவனையான் காண்பனோ” என்னும் பேராவலுண்டாகுமாறு பரோட்சத்திலும் அவனிடத்துக் காதற்பெருக்கை விளைவித்தேன்.

அவலோகிதை – நல்லது! புத்தரக்கிதே நல்லது; வா! செல்லுவோம்.

(பிரவேசகம்)

(காமந்தகி பிரவேசிக்கிறாள்)

(1) மாலதி, அத்தகைய நன்னடையின் வயத்தளாயினும்,[3] எனது உபாயத்தாற்[4] பாங்கிமாரிடத்துண்டாகும் நம்பிக்கையால்[5] தேறுதற்படுத்தற்குரிய நிலையைச் சின்னாட்களில் அடைவிக்கப்பட்டாள். இப்பொழுதும்

(2) நமது பிரிவில் மனத்துன்பத்தையும் உடனிருக்கையில் மனக்களிப்பையு மெய்துகின்றாள்; தனிமையில் என்னுடன் விளையாடுகின்றாள். எப்பொழுது மினியவை கூறியென்னை வழிபடுகின்றாள்; யான் செல்லுங்கால் என் கண்டத்திலணைந்தவளாய் என்னால் மறுதளிக்கப்பட்டு, உடன் வணங்கி உறுதிமொழி[6]களான் எனது வரவையிரந்து நிற்கின்றாள்.

இஃதும் எனது பேராசைக்குத்[7] தக்கதோர் சான்றாகும்.

(3) பிறரைக் கருத்துட் கொண்டன்ன சொற்களால்[8] விரித்து விளக்கப்பட்ட சாகுந்தள முதலிய இதிகாசங்களைச் செவியேற்று என்மடிக்கணிலைப்படுத்திய[9] உறுப்புக்களையுடையவளாய் நெடிதாராய்தலான்[10] அசைவற்றிருக்கு நிலையை யெய்துகின்றாள்.

இனிமேற் செய்யவேண்டுவன யாவும் மாதவன் முன்னிலையிற் றொடங்குவோம்.

(வேடசாலைக் கெதிரினின்று நோக்கி)

குழந்தாய் இங்கண் வருக.

(மாலதியும் இலவங்கிகையும் வருகின்றனர்.)

மாலதீ – (தனக்குள்) என்னே! எனது தந்தையால் பலியிடப்பட்டுள்ளேனா? அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள். (கண்ணீர் பெருக) அந்தோ! தந்தையே எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையாற் றோல்வியுற்றொழிந்தீர். (களிப்புடன்) அப்பெருமகன் பெருங்குடிப் பிறந்தவனா? பாரிசாதங் கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்குமென்று நன்றே கூறினள் இலவங்கிகை. மீண்டும் அவரை யான் பார்க்கமாட்டுவேனா?

இலவங்கிகை – இனிய தேனிறைப்பூங்கொத்துக்களைப் புசித்து விளையாடுங் குயிலினங்களின் பேரொலியால் அலைவுறு மாமரத்தினு நியினின்று பறந்தரற்றும் வண்டினங்கள் சண்பகத்திற் சேர, அவற்றின் நெருக்கத்தினால் விரிந்தலர்ந்த மலர்களின் மணங்கமழுவதும், சமவட்டமான அல்குற் பருமையைத் தாங்கலான் அயர்ந்த துடைப்பருமையால், மேடுபள்ளமானவிடங்களில் இடர்ப்படுமடிவைப்பினால் உண்டாகும் வியர்வைத் திவலைகளாகின்ற அமுதபிந்துக்களான் விளங்குறுமுனது அழகிய வதன மதியினுக்குச் சந்தணம் போற் குளிர்ந்ததுமாகிய இக்காமற்பொழிற்காற்று, உன்னைத் தழுவுகின்றது; ஆதலின் அன்புடைத் தோழீ! இங்ஙனம் செல்வோம்.

(என்று பூந்தோட்டத்துட் செல்லுகின்றனர்)

(மாதவன் பிரவேசிக்கிறான்)

மாதவன் – ஆனந்தம்! காமந்தகியும் நேரில் வந்தனள்; இவளும்,

(4) வெப்பத்தினால் வாடிய ஆண்மயிலினுக் கெதிரில் மழைக்கு முன்னம், அதைத் தெரிவிக்கும் மின்னலன்ன[11], காதலிக்குமுன்னரே யென்முன்றோன்றி எனது இதயத்தை யுயிர்த்திருக்கச் செய்கின்றனள்.

என்னே! இலவங்கிகையுடன் மாலதியும் வருகின்றனளே!

(5) இக்குவளைவிழி யணங்கினுடைய மறுவிலா மதிமுகமுதித்தலான், எனது மனம் சடத்தன்மையெய்தி[12], பருப்பதத்தைச் சார்ந்த சிறந்த சந்திரகாந்த மணிபோல நெக்குருகுகின்றது; இது வியப்பாம்[13]. இப்பொழுது மாலதி மிகுவனப்பெய்தியுள்ளாள்[14]. ஏனெனில்:-

(6)இவள், வாட்டமுற்ற சண்பகமாலை போன்றனவும், செயற்றிறலற்றனவும், ஆகிய உறுப்புக்களாற் காமத்தீயை யெரிதரச் செய்கின்றனள். இதயத்தைக் களிப்புறச் செய்கின்றனள். கண்ணைக் கவினுறச் செய்கின்றனள்.

மாலதீ – தோழீ! கொடிகளடர்ந்த இப்புதரில்[15] மலர்களைக் கொய்வோம்.

(7) மாதவன் – காதலியின் இனிய சொற்களை, முதன்முதலாய்ச் செவியேற்றலான் எனதுடலம் மயிர்க்கூச்செறிந்து, அதனால் யான், கார்காலத் தொடக்கத்தில் மழைத்துளி சொரிந்த அப்பொழுது முகிழ்தருங் கடம்புபோல ஆயினேன்.

இலவங்கிகை – இங்ஙனமே செய்வோம்.

(பூக்கொய்தலை நடிக்கின்றனர்)

மாதவன் – காமந்தகிப் பெரியாரின் போதனாமுறை[16], அலகிலா வியப்புடைத்து.

மாலதீ – பிறிதோரிடத்திலும் மலர்களைப் பறிக்குவோம்.

காமந்தகீ – (மாலதியைத் தழுவி) அடி மாலதீ! ஒழிக; ஒழிக; அலையுமாற்றலற்றனை?

(8) நன்னுதலாய்! உனது மெய்வருத்தம் சொற்களைத் தழுதழுக்கச்செய்கின்றது; உறுப்புக்கடோறுஞ் சென்றடைகின்றது; வியர்வை பிந்துக்களை மதிமுகத்தில் விளக்குகின்றது; கண்களை முகிழ்த்துகின்றது; ஆதலின் இது முற்றிலும், காதலன் காட்சி[17]யோடப்ப உன்பால் விளங்குகின்றது.

(மாலதி வெட்கத்தை நடிக்கிறாள்)

இலவங்கிகை – தங்கள் கட்டளை மங்கலமுடையது.

மாதவன் – இப்பரிகாச வார்த்தை மனத்தை யின்புறுத்துகின்றது.

காமந்தகி – ஆதலின், அமர்க. கூறவேண்டுவன சில கூற விரும்புகின்றேன்.

(எல்லோரும் அமர்கின்றனர்)

காமந்தகீ – (மாலதியின் மோவாயை நிமிர்த்து) திருவளர் செல்வி! இவ்வியப்பைக் கேள்[18].

மாலதீ – கருத்துடனிருக்கிறேன்.

காமந்தகீ – உன்னைப்போல எனது இரண்டாம் மனப்பிணிப்பாகிய மாதவன் என்னும் பெயரிய வாலிபன் உளன் என முன்னம் ஒருகால் சொற்றொடர்பில் யான் கூறியுள்ளேன்.

இலவங்கிகை – ஆம் நினைவு கூறுகிறோம்.

காமந்தகீ – அவன் காமற்பொழிலினிகழ்ந்த விழா நாண்முதற் றுன்புறு மனத்தினனாய் உடல் வெப்பினாற் றன்வயமற்றவன் போலக் காணப்படுகிறான். அங்ஙனமே;

(9) மதியினிடத்தாதல், அன்புடைமைக்குரியாரிடத்தாதல், இவன் மனமகிழ் வெய்தவில்லையாதலின், திறம்படு மனப்பான்மையுடையனாயினும் தாங்கொணா மனத்தாபத்தை வெளியிடுகின்றான்; தினையணைய கரிய மேனியனாயினும் மிக வெளுத்து மிகவிளைத்திருக்குமினிய வுடலைத் தாங்குகின்றான்; எனினும், மனங்கவர் வனப்புடையவனாகின்றான்[19].

இலவங்கிகை – இஃதும் அவ்வமயத்தில் “மனப்பிணியன் மாதவன்” என்று அவலோகிதையினாற் றங்களைத் துரிதப்படுத்து முகமாகக் கூறப்பட்டது.

காமந்தகீ – இவனது காமவேட்கைக்குக் காரணம் மாலதியென்று கன்ன பரம்பரையாகக் கேட்டு யானுமதனையே உறுதி செய்தேன்; ஏனெனில்,

(10) இம்மதிவதனம்[20], இம்மாதவனது[21] ஆழ்ந்த நோக்கத்திற் கிலக்காந் தன்மை யெய்தியது; இஃதுண்மையே! ஆதலின் ஆழ்ந்த கருத்துடை யிவனது மனம், திரையிலாக் கடலும் திங்களைக் கண்டமேல் அதன் நீர் போல, உற்கலிகை[22]களாற் சலித்துக் கலக்கமுறுகின்றது.

மாதவன் – என்னே! இச்சொற்பொழிவின் றூய்மை; என்னே! என்னைப் பெருமைப்படுத்தலிற் பெருமுயற்சி. அன்றேல்,

(11) சாத்திரங்களின் ஐயந்திரிபற்ற உறுதிநிலையும், இயற்கையறிவும்[23], சொல்வன்மையும், குணங்களிற்[24] பயின்ற சொற்களும், காலத்திற்கேற்ப ஒழுகலும், புத்தறிவு[25]மாகிய இக்குணங்கள், செயற்பயனைச் சுரந்தளிப்பனவாம்.

காமந்தகீ – இவன் உயிர்த்திருத்தலினடுக்கமுற்று செயற்கரிய எதனையுஞ் செய்தே தீருகின்றான்; அங்ஙனமே!

(12) முகிழ் நிறைந்து[26] குயிலினங் கூவுமினிய தேமாவிற் கண்னை நிலைப்படுத்துகின்றான். உடலை, மகிழ்மணங் கமழு மந்தமாருதத்தின்[27] வழிப்படுத்துகின்றான்; பசுமையான தாமரையிலையையே மேற்போர்வையாகக் கொண்டும் வருந்து மெய்யினனாய் இறத்தற்பொருட்டே[28] வெப்பினை விரும்பி[29]ப் பலகாலும் சந்திரன் கதிர்களை நத்திமேற்கொள்வன்.

மாலதீ – (தனக்குள்) இங்ஙனம், அவர் செயலருஞ் செயலாற்றவும் முற்படுகின்றாரா?

காமந்தகீ – இயலழகமைந்து[30] இரங்கற்குரியவிக் குமரன்[31] முன்னரொருபோழ்தும் இத்தகைய துன்பமெய்தப்பெற்றிலனாதலின், ஒருகால் இவன் உயிர் துறக்கவுங் கூடும்.

மாலதீ – தோழீ! இந் நிலவுலகிற்கணிகலனா யிலங்குமிவற்கு, என்னிமித்தம் விளைவுறுமெதனையோ[32] யான் சிந்தித்தலாற் பேய் பிடித்தாங்கு இதற்குரிய மறுமொழி யெதையுமறிந்திலேன்.

மாதவன் – ஆனந்தம். காமந்தகிப்பெரியாரால் அருள்புரியப்பெற்றேன்.

இலவங்கிகை – பெரியோய்! தாங்கள் இங்ஙனங் கூறுமாற்றால் யானுங் கூறுவேன்; எங்கள் கோமகளோ, இல்லத்திற்கணித்துள்ள தெருவிற்குச் சிறுபொழுது அலங்காரமாயிலங்கு மவனையே பலகாலுங் கண்ணாரக்கண்டு, இரவியின் கதிரோடியைந்தலர் கமலமன்ன உறுப்புக்களினொளியால் உய்த்துணரக் கிடக்கின்ற காமவேட்கையின் விதனமெய்தி வனப்புடையளாயினும், பாங்கியரை யலமரச் செய்கின்றனள். ஆடல், பாடல் இவற்றையும் விரும்பவில்லை. தளிரனைய செங்கரம் வாட்டமுற, அதிற் கபோலத்தை யமைத்தவண்ணமா யிந்நாட்களைக் கடத்துகின்றாள். மேலும், அலர்ந்த செந்தாமரையின் வழிந்தொழுகு மகரந்தமணங்கமழ்வதும், குருந்தம், மாகந்த மிவற்றின் சிறிதலர்ந்த மலர்களின் றேன்றுளிக் குவியலைக் கொணர்வதுமாய மந்திரப் பூம்பொழிலின் மந்தமாருதத்தானும் மிகநைந்துருகுவாள். மற்றும் அற்றை ஞான்று, வஞ்சத்தாலிவர் ஒருவர்பாலொருவர் கடைக்கணித்த காலை, வெப்புற்று வருந்தும் மனத்தில் விரைந்தெழுங் காமவேட்கையால் விளங்குமுறுப்புக்கள், அச்சத்தாலசைவற்றுச் செயலற்றிருந்துழி நிகழ்வனவாகிய வியர்வைப் புளக நடுக்கம் இவற்றாற் பாங்கிமாரனைவருங் களிப்பததனாது திருவிழாப் பெருமையைக் காண்டற் பொருட்டு காமற்பொழிற்கணிகலனா யுருக்கொண்டுவந்த காமதேவனேயனைய அம்மாதவனது பற்பல விலாசங்களான், விளைந்த காதற்றொடர்பாலினிது நிறைவுறும் யௌவனத் தொடக்கத்தை யுடையளாய், ஒருவர்க்கொருவரின் காட்சியின்பத்தை இவளெய்தப்பெற்றதுமுதல், முற்றிலுங் தாங்கொணாத் துயரத்தான் மிகக் கொடிய மாறுபட்ட நிலையை யநுபவித்து, உவாமதியெழுச்சியாற் சிறிது நேரத்தில் வாடிய சேயிளங் கமலமென்ன வாட்டமுறுகின்றாளாயினும், இறைப்பொழுதில் மனத்தே வலிந்து நிருமிக்கப்படுங் காதலன் புணர்ச்சியால், மிகுமழை பொழிதலானனைந்த நிலமெனத் தண்ணியளாகுவளென அறிகுவேன்; ஏனெனில், இதழ் துடிதுடித்தலால் விளங்கும் முத்தனைய பற்களின் ஒளியானன்கிலங்குவதும், இடையறாதிலகு புளகத்தாற் பருத்தகபோலத்திற் றியங்கும் மாலிநீர்ப் பெருக்குடையதும், சிறிது வளைவுற்றும் அசைவற்றுமிருத்தலின் மேனோக்குற்ற கருவிழியுடன் மசிருணம், முகுளம் என்னும் பார்வையமைந்த குவளை விழிகளையுடையதும், நிறைந்தரும்பிய வெப்புநீர்த்திவலைகட் பொலிவுறும் பிறைநுதலாற் றிகழ்வதுமாகிய வதனகமலத்தைத் தரிப்பாளாதலின், அகப்பொருட்டுறையிற் சீரிய மதிநுட்பம் வாய்ந்த பாங்கியரால் ஐயுறத்தகும் வாலைப் பருவத்தை[33]யுடையவளாகிறாள். மேலும், தடைப்படாது விளங்குந் திங்கட்கதிர்கற்றையோடியைந்து இடையறாது நீரைப்பெருக்கு மதிமணியாரமணிந்தும், மிகுந்த பச்சைக்கருப்பூரம், முற்றிலும் குளிர்ந்த சந்தனக் குழம்பு – இவை தொடர்ந்து தெளிக்கப்பட்டு அவை நிறைவுறும் வாழைக்குருத்திற் படுத்தும், காற்பிடித்தன் முதலிய தொண்டாற்றலில் விரைந்து முற்படும் பாங்கியர்க் குழுவாற் றாமரையிலையாகும் நீரினனைந்த விசிறி கொண்டு வீசப்பட்டும் உறக்கமின்றியே கங்குலைக் கடத்துகின்றாள். உறக்கின்பத்தை யொருகாலெய்தினும் காதலன்புணர்ச்சியைக் கனவிற் கண்டுழி, தளிர்க்கால் வியர்த்தலான் அலத்தகமழிதர, மிகத்துடிதுடிக்குந் துடையடிப்புறத்திற்றுகின் முடி நெகிழ் தர, கலக்கமுற்றி தயங்கரை கடந்துயிர்த்தலின் பலபலவாகப் பெருமிதங் கொண்டு புளகனிறைந்த தனங்களின் மீது நடுக்குறுங் கரத்தாற் கட்டியணைக்குவள். அங்ஙனமாக, விரைவின் விழிப்புறுமமயத்திற் றன்னமளியைக் கடைக்கணிக்க அங்குக் காதலனைக் காணாது கண்டவெலாம் பாழ்த்த அளவிற் கண்களுஞ் சோர மயக்குறுவள். அஞ்ஞான்று பரபரப்புறும் பாங்கியரின் பெருமுயற்சியால் அம்மயக்கந் தெளிதருங் காலை, நிகழ்வுறு நெட்டுயிர்த்தலான் இனிப்பிழைப்புறுமென அப்பாங்கியரிவளுயிரிலவாவுறுவர். ஆயினும் செய்வதியாதென்றறியாது இவட்கு முன்னரே தாம் உயிர் நீத்தலே சிறப்பென அதனையே வேண்டி விலக்கற்கரிய விதியின் கொடுமையை வெறுத்தலே வினையாக் கொண்டொழிவாராவர். ஆதலிற் றகையீர்! தக்கன காண்க; நிறைந்த பேரழகினமைப்பான் மிகுமென்மைத்தாய இவ்வுறுப்புக்களிற் கொடுஞ் செயற் புரியுங் காமன், எத்துணைப் பொழுதிற் காதலனை யியைவித்து இவளை யின்புறுத்துவன்? காதலன் கலவியிற் பிணங்கிய கேரளமகளிரது கபோலம்போலச் செம்மையுற்றுக் கரைகடந்த மாசறு நிலவினா லிருட்பிழம்பறவே யொழிந்தனவாகிய இவ்வந்திப் பொழுதுகளும், துலங்கு பாற்பெருக்கனைய தூய நிலவொளியினால் விளக்கமுறும் வானவெளியும், மணங்கமழ் பாதிரிமலரினைக் குடைந்து அவற்றினறுமணங்கொண்டு நிறைவுற்று மோப்பிற்கினிய தென்றல் வீசும் பத்துத் திசைகளும், பொருந்தி முதிர்ந்த கங்குற்பொழுதுகளும்[34] எனதன்புடைத் தோழிபாற் றீங்கியிழைக்காவா யாங்ஙனம் அமையும்.

காமந்தகீ – (13) இக்காதற் பிணிப்பு அவனைப்பற்றியதாமேல், துலங்கும் இஃதே சீர்மையையுணரும் பான்மையின் பயனாம் என்று எனதிதயம் இன்புறுமெனினும்[35] இவளது இக்கொடிய அவத்தையாற் றுன்புறுகின்றது.

மாதவன் – காமந்தகியின் மனக்கவலை மிகப்பொருத்தமே.

காமந்தகீ – என்னே மோசம்!

(14) இயற்கையில் இலலிதமான[36] இவளது உடலம், இயலழகையே சத்தாகவுடையதென்பதும், இவ்வைங்கணைக் கிழவனும் மிகக்கொடியனென்பதும் உண்மை; ஆகுக; இக்காலமோ வீசுகின்ற தென்றலால் அலைவுறு மாமலர்களை யுடையதாய், தண்கதிர்ச்செல்வனைத் தலையணியாக்கித் திகழ்வுறுகின்றது; அதலினிகழ்வது யாதோ?

இலவங்கிகை – பெரியோய்! பிறிதொன்றுமறிதல் வேண்டும்; இது மாதவனது உருவப்படம்; (மாலதியின் மார்ச்சேலையை விலக்கி) கண்டத்திலணியப்பட்ட இவ்வகுளமாலையும் அம்மாதவனது கரத்தாற் றொடுக்கப்பட்டதாகலின் எனதன்புடைத் தோழியை உயிர்ப்பிக்கின்றது. (என்று மகிழமாலையைக் காட்டுகிறாள்[37]).

மாதவன் – (15) தோழீ![38] வகுளமாலையே நீயே யிந்நிலவுலகில் வெற்றிபெற்றனை. ஏனெனில், நீ இவளது அன்பிற்குரியையாய்[39], முதிர்ந்த தாமரைத் தண்டின் கணுக்கள்போல வெளிறிய தனங்களின் இடம்படு மேன்மையைத் தெரிவிக்குந் துகிற்கொடியாவமைகின்றனை.

(வேடசாலையிற் கலகலவொலியெழுகின்றது)

(எல்லவருஞ் செவிகொடுக்கின்றனர்)

ஓ!ஓ! சங்கரபுரவாசி மக்களே! கொடியதோர் வேங்கை, காளைப்பருவம் நிறைந்து தாங்கொணா வியற்கைச் சினமும், அவ்வமயத்தானிகழ்ந்த சினமும் ஒருமித்து இருப்புக்கூட்டை வலிந்துடைத்துத் திறந்து வெளிவருங்கால், அதன் காற்சங்கிலி யக்கூட்டிற் சிக்குண்டு நழுவுற மகிழ்வுற்றுத் தன்வயத்ததாய்த் துள்ளிக் குதித்துத் தன் விருப்பிற்குரிய வாலதியாங் கொடுந் துகிற் கொடியை யுயர்த்திவீசிக் காண்டற்கியலாது அச்சுறத்தகும் பருத்த உடலமைப்பையுடையதாய், மடத்தனின்று வெளிப்போந்த அக்கணத்திற் பல பிராணிகளினுறுப்புக்களை யாவலுடன் புசித்து அவ்வுறுப்புக்களினிடைச் செறிந்த வலிய என்புக்களைத் திற்றிப்பற்களாற் கடித்தலான், ஈர்வாளெனக் கடகடவெனவொலிக்குமத்தகைப் பற்கணிறைந்து மலைமுழையனைய வாயினையுடையதும், விகாரமாகப் பாய்த்துழி விரனீண்ட முன்னங் கால்களான் வெருவுறுத்தி மனிதர், குதிரையிவற்றை வலிந்தடித்து அவற்றின் உதிரத்துடன் கூடிய விறைச்சிகளை வாய்மடுப்ப அவை தொண்டை நிரம்பிச் சிதறுதலாற் கரகரச் சத்தமுடன் அவ்விறைச்சிகளைப் புசிக்குங்காலை வெகுண்டு கர்ச்சிக்குமவ் வொலி நீண்டு இனிய தாயாகாய வெளியிற் பரவவும், சிலரையடித்துஞ் சிலரைப் பொடியாக்கியுஞ் சிலரைக் கண்ணாற் காண்டற்கரியராக்கியுஞ் சிலரைத் துறத்தியும், கூரிய கிர்களாகு மாயுதத்தினாற் பற்றியிழுத்துக் கோறலான் அவற்றின் உடலுறுப்புக்களினின்று பெருகுமுதிரங்களானடைவழியினைச் சேறாக்கியுங் காலனாடலைச் செய்கின்றது; ஆதலாற் றம்முயிரை யியன்றவரைக் காத்துக்கொள்க; என்று.

புத்தரக்கிதை – (பரபரப்புடன் பிரவேசித்து) காத்தருள வேண்டும். நன்தனன் சகோதரியான நமது அன்புடைத் தோழீ மதயந்திகை, இக்கொடிய புலியினால் அவளது பாங்கியரிற் சிலர் கொல்லப்பட்டும், சிலர் துறத்தப்பட்டும் போயினராதலின் தனித்திருந்து மிகத் துன்புறுகிறாள்.

மாலதீ – தோழீ இலவங்கே! இது முற்றிலும் மோசம்.

மாதவன் – புத்தரக்கிதே! இப்புலி யெங்ஙனமிருக்கிறது?

மாலதீ – (களிப்புடனும் அச்சத்துடனும்) என்னே! இவரும் இங்ஙனமேயா?

மாதவன் – (தனக்குள்) ஆனந்தம்! புண்ணியப்பேற்றைப் பெற்றவனாகுவேன்; ஏனெனில், எதிர்பார்க்கப்படாத நிலையினிகழ்ந்த எனது பார்வையால் வியப்பையும் களிப்பையு மொருங்கேயெய்திய இவளால் யான்.

(16) மலர்ந்த கண்களாகுந் தாமரைக் கயிற்றினால் இடைவிடாது கட்டப்பட்டவன்[40] போலவும், அக்கண்களான் முற்றிலும் விழுங்கப்பட்டவன் போலவும், நிறைந்த பாற்பெருக்கில் மூழ்கியவன் போலவும், அமுதமாரி பொழியுமடர்ந்த புயலான் வலிந்து நனைக்கப்பட்டவன் போலவுமாயினேன்.

புத்தரக்கிதை – பெருந்திறலோய்! இப்புலி, பொழிற்கு வெளிப்புறத் தெருவின் றொடக்கத்திலிருக்கின்றது.

மாதவன் – (பரபரப்புடன்) மிகு கவலை கொண்டுள்ளேன்.

மாலதீ – இலவங்கிகே! ஐயப்பாடே[41] நிகழ்வுறுகின்றது.

மாதவன் – (அருவருப்புடன்) அடா!

(17) இப்புலி நடந்த மார்க்கம், இடையிற் செடிகொடிகளிற் சிக்குண்டு, அறுபட்டுச் சிதறி விழுந்த நரம்புக்கற்றைகட் செறிந்ததும், பலபுறத்துஞ் சிதைந்து கிடக்குந் தலையோடுகளின் கண்டங்களையுடையதும், உதிரப்பெருக்கு மிகக் கலந்து கணுக்காலளவையிற் சேறுடையதுமாதலின் மிக நடுக்கத்தை விளைக்கின்றது. என்னே! மோசம்.

(18) நாமோ! மிகுதொலையிலிருக்கின்றோம்; அக்கன்னிகையோ, அப்புலியின் ஓரடியளவிலிருக்கின்றாள்.

எல்லவரும் – அடி, மதயந்திகே!

காமந்தகியும் மாதவனும் – (உட்கருத்துடனும்[42] களிப்புடனும்) என்னே!

மகரந்தன், அப்புலியாற் கொலையுண்டு கிடக்குமொருவனது படைக்கலத்தைக் கையிலேந்தி அக்கணமே யெங்ஙனமிருந்தோ விரைந்து வந்து இங்கணிடையில் வதிந்தனன்.

மற்றவர்கள் – நல்லது! வென்றிசேர் வீர! நல்லது!

காமந்தகியும் மாதவனும் – இவன் இப்புலியினால் மிகவலியப் புடைப்புண்டானாயினும் இவனாலது உயிர் நீத்து வீழ்ந்தது.

மற்றவர்கள் – பேரச்சம் விளைந்தது.

காமந்தகீ – (உட்கருத்துடன்) என்னே! குழந்தை மகரந்தன் புலியின் கூருகிறாற் கீறப்பட்டு உதிரம் பெருக்கெடுத்தோட வாணுதியைத் தரையிலூன்றி யசைவற்று மயக்குறு மதயந்திகையைத் தாங்கியவனாய்த் தளர்வுறுகின்றான்.

மற்றவர் – அந்தோ! விதனம்! இப்பெருமகன், புலியினாற் புண்படுத்தப்பட்டுச் சோர்வுறுகின்றான்.

மாதவன் – என்னே! மயக்கமுற்றனனா? பெரியோய்! என்னைக் காத்தருளல்[43] வேண்டும்.

காமந்தகீ – குழந்தாய்! மிகவும் நடுக்கமுறுகின்றனை; வருக; அவனைக் காண்போம்.

(எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னு மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் மூன்றாம் அங்கம் முற்றிற்று.


[1] ஆகாயத்தை நோக்கி – வேடசாலையின் வெளிமருங்கில் வராதவருடன் உரையாடுதலை “ஆகாயபாடிதம்” என்ப.

[2] கிருட்டினசதுர்தசி – அமையின் முதற்றினம்; இந்நாள், “மகாசிவராத்திரி” யென வழங்கப்படும்; இதிற் சிவபூசனை யாற்ற, இருமையின்பமும் பயக்குமென்பது சாத்திரமரபு.

[3] அத்தகைய நன்னடை பெரியோரைப் பேணலும் குலக்கன்னியர்க்குரிய அச்சம் நாணம் முதலியனவுமாம்.

[4] உபாயம் – எப்பொழுதும் அவள் பாங்கிருத்தல், அழகு பொருந்த மயிர்க்குழற்சி வகுத்தல், தனம், கன்னம், இவற்றை செஞ்சாந்தினால் சித்தரித்தல், சோழியாடல், பரிகாசம் பேசல், புதிய பொருளீதல் முதலியனவாம்.

[5] நம்பிக்கை – அச்சம், நாணம், ஐயம், இவற்றை விடுத்து தன்னுள்ளக்கிடக்கை யாவையுந் தெரிவித்தல், காமந்தகி கூறிடில் உயிரிழத்தற்குமுடன்படல் அவளை விட்டுப் பிரியாதிருத்தல் முதலிய வடிவினது.

[6] உறுதிமொழி – இப்பொழுதே விரைந்து நீர் வாராதொழிவிரேல், தன்னாசிரியரைத் தானே கொலை செய்துவளாகுவீர் என்பதும், எற்கும் தீங்கிழைத்தவளாகுவீர் என்பதுமாம்.

[7] இவள் முற்றிலும் தனது சொற்படி நடப்பள் என்னும் பேராசை.

[8] சொற்கள் – வெளித்தோற்றத்திற்குப் பிறரைக் குறிக்கு மியல்பினவாயினும், உண்மையில் மாலதியைக் குறித்தனவேயாம்.

[9] மடிக்கணிலைப்படுத்திய உறுப்புக்கள் – இதனால் யான் நின்வயத்தள். தன் கருத்திற்கியைவன செய்க; என மாலதி யிருத்தற்கும் இறத்தற்கும் காமந்தகியே நிமித்தமாதலின் இங்ஙனங் கூறப்பட்டது.

[10] சகுந்தளை தானே கணவனை வலிந்து பற்றியாங்கு மாலதியும் தானே மாதவனை மணந்து கோடல் தகுதியா? வென்பது அவளது ஆராய்ச்சி.

[11] “மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை” யாகலின் இவ்வுவமை மாலதியின் காட்சியை யுறுதிப்படுத்துகின்றது.

[12] சடத்தன்மை – ஈண்டுச் செயற்றளர்ச்சியையும், நீராகுந்தன்மையையுமுணர்த்தும்.

[13] பருப்பதத்தைச் சார்ந்த சந்திரகாந்தமணி யென்பது, மாதவனும் பருப்பதத்தை நிகர்த்த உறுதிப்பாடுடையன் எனத் தோற்றுவித்தலான் அத்தகைய அவனது மனமும் நெக்குருகுதல் வியப்பினிமித்தம்.

[14] முன்பார்த்த நிலைமையினும், இப்பொழுது காமவேட்கை நன்கு புலனாவதாலும், அதுவும் தன்பொருட்டென்று துணியப்படுவதாலும், மிகுவனப்பெய்தினள் என்று கூறப்பட்டது.

[15] சுட்டு – புதர் தாழ்திருத்தலின் கடவுள் வழிபாட்டிற்குரிய மலர்களை மாலதியே தன் கரத்தாற் கொய்தற்கு எளிதாகுமென்பதை யுணர்த்தும்.

[16] போதனாமுறை – கற்பிக்குமுறை; – இதனால் இப்பூந்தோட்டத்தில், தனித்து மலர்பறித்தலிற் பரபரப்பினால் இடைத் துகினழுவுதலையும் அறியாமல் உறுப்புக்கள் யாவும் நன்துலங்க இவள் நிற்றலான் மாதவன் மறைந்திருந்து இவளை யச்சமின்றிக் கூர்ந்து பார்த்தற்கும் அதனால் விளையுமின்ப வாரிதியில் இவன் மூழ்குதற்கும், அப்போதனாமுறையே காரணமாகலின், அலகிலா வியப்புடைத்தென்று கூறப்பட்டது.

[17] காதலன் காட்சி – ஈண்டுக் காட்சித்தொழிலில் காதலன், எழுவாயுஞ் செயப்படுபொருளுமாய் அமையும். ஆதலின், காதலனைக் காண்டலானுண்டாகுமிந் நிகழ்ச்சி யாவும் மெய்வருத்தத் தானும் நிகழ்ந்தன வென்ற பரிகாச வசனமாகும்.

எழுவாயாகக் கோடலான் மாதவனும் மாலதிக்குத் தெரியாமல் மறைவிலிருந்தே யிவளைக் காணுனிலைமையும் வியங்கியமாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சிகள் மாதவன் இவளைக் காண்டலானிகழ்ந்தனவேயன்றிப் பூக்கொய்தற் கிரமத்தானன்று. அதனால் பார்க்கும் மாதவனை யிவளறியாளாயினும், அவனது பார்வையை மேற்கொண்ட மாத்திரையில் சந்திரன் கதிர்பெருஞ் சந்திரகாந்தம்போல இவள்பால் இத்தகைய நிகழ்ச்சிகள் நேர்ந்தனவென வஞ்ச  நவிற்சியணியும் ஈண்டு குறிப்பிணுணர்த்தப்பட்டது.

மேலும், இவள் பல காவலராற் காக்கப்படினும் காமந்தகியின் உபாயமொன்றானே மாதவனது பார்வைக்கு இவள் இலக்காயினளேயன்றி இலவங்கிகையாலன்று என்றும் ஒருபொருள் துவனிக்கின்றது. மாலதி மாதவனைக் காணாவிடத்தும், அவளை மாதவன் பார்த்தளவிலே மாலதியைக் காமவேட்கைப்படுத்தும் பெருந்திறல்வாய்ந்தவன் இவன் என்றும் இதனால் துவனிக்கின்றது.

[18] திருவளர் செல்வி! இவ்வியப்பைக் கேள். இத்தொடரை, கூறப்புகும் இன்பமொழிகளுக்குத் தலைமொழியாகக் கோடல், காதலனது காமவேட்கையை காதலிபாற் கூறுந் தூதுவரின் கடமையென்னும் இன்ப நூன் மரபினையுணர்த்தும்.

[19] மனங்கவர் வனப்புடையவன் என்னுமாற்றால் மாதவனிடத்து நிகழ்ந்த இவையாவும் மாலதியின்பாற்பட்ட காமவேட்கையானன்றிப் பிணியின்பாற்பட்டனவல்ல வென்பது மாலதிக்கு அறிவுறுத்தப்பட்டது.

[20] அன்பின் மிகுந்து மாலதியின் மோவாயை யுயர்த்தினமையை யிச்சுட்டு உணர்த்தும்.

[21] இச்சுட்டு – சொல்லியைபின் அமைந்தவனையும், காமந்தகியாலறியப்பட்டுப் பிறரறியா வண்ணம் இங்கட் கொடிமறைவிலிருக்கும் அவளையுமுணர்த்தும்.

[22] உற்கலிகை – ஈண்டு, காமவேட்கைகளையும், அலைகளையுமுணர்த்தும்; இதனால் சந்திரனாலன்றிப் பிரிதொன்றானும் கடல் கலக்கமுறாவாறுபோல இம்மாலதியொருவளானே மாதவனது மனம் கலங்கியதென்பது குறிப்பிடப்பட்டது.

[23] இயற்கையறிவு – பயிலப்படாதவனாகிய மிக நுண்ணிய விடயங்களிலும் புக்கு அவற்றை யறிதற்குரியது.

[24] குணங்கள் – ஈண்டுத் தெளிவு, இனிமை முதலியன.

[25] புத்தறிவு – அவ்வப்பொழுது ஆராய்ந்து நவம் நவமாகக் கண்டுணருமாற் றலமைந்தது; இக்குணங்கணிறைந்த அக்காமந்தகிப் பெரியார்க்குச் சொற்பொழிவிற் றூய்மையமைதலில் என்னே வியப்பென்பது கருத்து.

[26] முகிழ் நிறைந்து குயிலினங் கூவும், என்னும் விசேடணத்தால் பிரிந்தோரைத் துன்புறுத்துங் காமனுக்கு இம்மொட்டுக்கள் கூரிய கணைகளாகவும், அவை பொருந்தும் மாமரஞ் சரக்கூடாகவும், அங்ஙனமிருந்து கூவுங் குயிலினம் படைகளாகவும், அவற்றின் ஒலி, யப்படையின் கோலாகலமாகவும், குறிப்பிடப்பட்டு, அப்பேரொலிச் செவிக்கேறுமிடத்தளவினும் பிரிந்தோர் சேறவொண்ணாதெனில், அதனைக் கண்ணாற் கண்டுழியவர்க்கு யாது நேருமோவென்பதும் வியங்கியத்தாற் போதரும்.

[27] மந்தமாருதம் – என்பதனாற் காமன், தென்றற் றேருடையனாதலின் பிரிந்தோர் அத்தேர்க்காலின் வழிப்பட்டு மிகத் துன்புறுவரெனக் குறிப்பிடப்பட்டது.

[28] இறத்தற்பொருட்டே என்பது, இங்குக் கூறப்பட்ட பயனிலை யொவ்வொன்றினுமியையும்.

[29] வெப்பினை விரும்பி – தாமரையிலை முதலியவற்றான் மாதவனது காம நோயினைத் தணிக்க எத்துணை மருத்துவஞ் செய்யினும், அவன் எட்டுணையுந்தணிப்பிலனாய், உயிர்த்திருத்தலில் வெருப்புற்று மிகு வெப்பமேற்கொண்டேனும் உயிர் துறப்பான் கருதி நிலவிற் காய்ந்தனன் என்பது கருத்து; இதனாற் பிரிந்தோர்க்குத் திங்களின் தண்கதிர் தீ நிகர்வனவாம் என்பதும் பெறப்பட்டது.

[30] இயலழகு – இது தலை, இடை, கடையென மூவகைத்து; அவற்றுள், தலை – மலர், தளிர் இவைபோல ஊறுபொறாதாய்க் கண்கவர் வனப்புடனிருப்பது. இத்தகைய பேரழகை மாதவன் பெற்றிருத்தலின் அவன் இரங்கற்குரியவன் என்பது கருத்து. முதனூலில், இதற்கு மூலம், “தபஸ்வீ” தவசி யென்று காணப்படுகின்றது; அதற்கு, மாலதியின் மணவினையாகும் பெரும்பயன் கருதியவளது பிரிவாற்றாமை யாலுண்டாகுங் காமநோயின் அனுபவமாகுந் தவத்தைப் புரிபவன் என்று பொருள் கூறினும் பொருந்தும்.

[31] குமரன் – இதனால், மாதவனிதுகாறும் பிறிதொரு மகளிரைப் பேணி மணந்திலன் என்பதும், நலனுறு மிருமுதுகுரவரையுடய னென்பதும் போதருகின்றது.

[32] எதனையோ – என்பது இறத்தலை யுணர்த்தும்; அங்ஙனங் கூறலமங்கலமென அதனை யொழித்து எதனையோவெனக் கூறப்பட்டது.

[33] ஐயுறத்தகும் வாலைப்பருவம் – இங்குக் கூறியுள்ள குறியீடுகள் வாலைப்பருவத்திற்குப் பொருந்தாவாகலின் பாங்கியர் ஐயப்பாடெய்தியிவள் உண்ணிகழ்ச்சியிற் காதலன் புணர்ச்சியை களிப்புடனெய்தினளெனத் துணிந்தனர் என்பது கருத்து.

[34] இங்கு கங்குற்றொடக்கத்தையும் அதன் முதிர்ச்சியான நள்ளிரவையும் கூறினமையான், இரவு பகலிரண்டினும் இவள் துன்புறுவளென்பது உணர்த்தப்பட்டது.

[35] இன்புறுமெனினும் – காமந்தகியாற் றொடங்கப்பட்ட களவு மணத்திற்கு இக்காதற் பிணிப்புக் கருவியாகலின் இன்புறலும், இவள் படும் வேட்கைத் துயரான் ஒருகால் இறந்துபடுமோவென்றஞ்சித் துன்புறலுமாம்.

[36] இலலிதம் – என்பது யௌவனத் தொடக்கத்தில் சிருங்கார ரசம் உண்டாதற்குரியவாறு மாறுபடுமுடனிலையை யுணர்த்தும்.

[37] இலவங்கிகை ஓவியத்தையும் மகிழமாலையினையும் கண்பித்தலான், மாலதியின் காதற்பெருக்கம் மாதவன்பாற் பட்டதே; இதில் ஐயுறல் வேண்டாமெனக் காமந்தகிக்கு அறிவுறுத்தி யிவளை மாதவனோடியைத்தற்குத் தக்கவுபாயத்தையும் விறைவிற்றேட வேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட்டது.

[38] மாலையைத் தோழீயென விளித்தமை இது இயற்கையில் கண்டத்தணியாயினும், இதுபொழுது மாதவனது காதலியின் கண்டத்தணியாகி, யவன் விருப்பத்தை நிறைவேற்ற முற்பட்டு நிற்றலானென்க

[39] அன்பிற்குரியையாய் – தன்னிடத்துள்ள காதற்பெருக்கை வெளிப்படுக்கு முவகைப்பார்வைக்கு யானிலக்காகுவேனோ? இவளது புணர்ச்சியான் விளையுந் திருத்தியான் மனநிறைவுறுவேனோ? இவளது கண்டத்தைச் சிறிதளவேனு மிறுகத்தழுவலாகும் பெருவிழாவினால் எனதுயிரைப் பயன்படுத்துவேனோ? எனப் பொழுதெலாம் மாதவன் விரும்புமிவற்றைப் பெறுமுகத்தானே, இம்மாலை மாலதியாற் கூர்ந்து நோக்கப்பட்டும், அவளது கண்டத்திற்குந் தனங்களுக்கும் அணிகலனாயிலங்கியும் எனதன்புடைத் தோழி யிஃதொன்றேயென அவளாற் பாராட்டப்பட்டும் அவள்பாற் பொருந்தினமையானென்க.

[40] கட்டப்பட்டவன் – என்பது கண்கள், மாதவனைத் தொடர்ந்து பற்றலாற் கயிரனையவாம்; இவற்றாற் இவன் பிணிப்புண்டுத் தற்செயலற்றிருத்தலை யுணர்த்தும்.

[41] ஐயப்பாடு – புலியை யெதிர்த்துச் செல்லும் மாதவன் அப்புலி வாயினின்று மீண்டு வருவனோ அல்லது அதனாலடியுண்டு துன்புறுவனோ என்பதாம்.

[42] மகரந்தனாற் செய்யப்படும் மதயந்திகைனுயிர்க் காவலாகும் பேருதவி யிவ்விருவரது மணவினைக்குக் கருவியாய் நிற்குமென்பது காமந்தகியின் உட்கருத்தென்பதும் வேங்கையை வதைத்து இம்மெல்லியலாளைப் பிழைப்பித்தலான் மாதவனது களிப்பென்பதும் கருத்து.

[43] நண்பனது மயக்கத்தாற் றானும் மயக்கெய்தி யிவ்வாறு கூறினன் என்க.

மாலதீமாதவம் – நான்காம் அங்கம்

நான்காம் அங்கம்

(மதயந்திகை, மாலதியிவர்களான் முறையே கைலாகு கொடுக்கப்பட்டவரும் மயக்கமுற்றவருமாகிய மகரந்தன் மாதவன் இவர்களும் பரபரப்படைந்தவர்களான காமந்தகீ, புத்தரக்கிதை, இலவங்கிகை யிவர்களும் பிரவேசிக்கின்றனர்.)

மதயந்திகை – பெரியோய்! அருள்புரிக; இம்மதயந்திகை யினிமித்தந் துன்புற்று ஐயுறத்தகும் பிழைப்புடையனாய் இரங்கற்குரிய இப்பெருமகனைக் காத்தருள வேண்டும்.

மற்றவர் – அந்தோ! கொடுமை! நம்மாலிப்பொழுது இங்குக்காண்டற்பாலதாய், யாது நேருமோ!

காமந்தகீ – (கமண்டலு நீராற்றெளித்து) அடீ! நீவிர், சேலை முன்றானையாலிவனை வீசுங்கள்.

(மாலதி முதலியோர் அங்ஙனமே வீசுகின்றனர்)

மகரந்தன் – (கனைதீர்ந்து கண்விழித்து) நண்ப! மிகவும் நடுக்கமுறுகின்றனை; என்னையிது? அன்ப! யானிடர்ப்பாடின்றிச் சுகமேயிருக்கின்றேன்.

மதயந்திகை – ஆனந்தம்! மகரந்தனாகுங் கலைநிறைமதியம்[1] இப்பொழுது உதயமாயினான்.

மாலதீ – (மாதவனது நெற்றியிற் கரத்தை வைத்து[2]) பெருந்தகைப்பெரும! திருவருட்பாங்கால் திகழ்வுறுகின்றீர்; யான் கூறுவேன்; இப்பெருமகன் மயக்கந்தீர்ந்து நினைவெய்தினன்.

மாதவன் – அன்ப! வீரச் செயலோய்! வருக; வருக; (எனத் தழுவுகின்றான்).

காமந்தகீ – (இருவரையும் உச்சிமுகர்ந்து) ஆனந்தம்! குழந்தைகள் பிழைக்கப்பெற்றேன்.

மற்றவர் – நமக்கும் இன்பம் விளைந்தது.

(எல்லவருங் களிப்பை நடிக்கின்றனர்)

புத்தரக்கிதை – (மதயந்திகையினருகில்) தோழீ! மதயந்திகே! இவனே; அவன்.[3]

மதயந்திகை – தோழீ! யானுமறிந்தேன்; இவன், மாதவன்; இவனும் அவன்[4] என்று.

புத்தரக்கிதை – யான் மெய்யுரைத்தவள் ஆயினேனா?

மதயந்திகை – நும்போல்வார் எம்போன்றவரிடத்து அன்பொன்றனையே மேற்கொண்டவராகார்; தோழீ! மாலதியும், இப்பெரியோனிடத்துக் காதற்பெருக்கை யெய்தியுள்ளாளென்னும் வார்த்தையும் பொருத்தமே[5].

(என்று மகரந்தனையே யாவலுடன் பார்க்கிறாள்.)

காமந்தகீ – (தனக்குள்) மதயந்திகை, மகரந்தன் இவ்விருவர்க்கும் நிகழ்ந்த இக்காட்சி, திருவருட்செயலான் அழகுற்று உறுதிப்பாடெய்தியது[6]; (வெளியாக) மதலாய்! மகரந்த! நீண்ட ஆயுளைப் பெறுக; மதயந்திகையின் உயிரைக் காத்தற் பொருட்டுத் திருவருள், எங்கிருந்துன்னை யிங்குக் கூட்டி வைத்தது?

மகரந்தன் – இப்பொழுது பதியிலுலவுமொரு செய்தியைச் செவியுற்று, அச்செய்தியால் மாதவன் மனம் மிக வருந்துமென்றதனையோ சிந்தித்து, காமனுய்யானச் செய்தியாவும் அவலோகிதைபாற் றெளிந்து, இங்ஙனமே விரைந்து வருகலுற்றேன். அங்ஙனம் வந்துழி வேங்கையாற் றுன்புறும் இவ்வுயர்குடி மங்கையின் பாங்கரெய்தினேன்.

(மாலதியும் மாதவனும் ஆராய்கின்றனர்[7])

காமந்தகீ – (தனக்குள்) இச்செய்தி[8], மாலதியின் மணவினையைப்பற்றியதாதல் வேண்டும்; (வெளியீடாக) குழந்தாய் மாதவ! ஆனந்தம்! மாலதியாலின்புற்றனையாதலின், அவட்கு நன்கொடை யளித்தற்குத் தருணமிஃதே.[9]

மாதவன் – பெரியோய்! இம்மாலதி,

(1) வேங்கையாற் புண்படுத்தப்பட்ட நண்பனது மயக்கத்தாற் றியக்கமுறுமென்னை, யருள்கூர்ந்து பிணியற்றவனாகச் செய்தனள்; ஆதலின், இவள் எனது இதயத்தையும்[10], உயிரையும் பரிசிலாம் நிலையில் வலிந்து பற்றி இயைவன செய்தற்குரியவளாகுவள்.

இலவங்கிகை – நமதன்புடைத் தோழியால் இவ்வருட்பேரு விரும்பப்பட்டதே!

மதயந்திகை – (தனக்குள்) இவ்வாண்மகன், ஆராய்ந்தறிந்து அழகுபொருந்த விடையிறுத்தற்குத் தெரிந்தவன்.

மாலதீ – மகரந்தன், நகரிற் கேள்வியுற்ற வருத்த நிமித்தம் யாதாகுமோ?

(பிரவேசித்து)

புருடன் – குழந்தாய் மதயந்திகே! உனது மூத்த சகோதரன் அமாத்திய நந்தனன் கட்டளையிடுகின்றனர்; “இப்பொழுது பெருமைசாலரசன், நம்மில்லத்திற்கெய்தி, பூரிவசுவின்பால் விசுவாசத்தையும், நம்பாலருட்பெருக்கையும் வெளிப்படுத்தித் தாமே மாலதியையெற்களித்தனர்; ஆதலின் வருக; அவ்வருட்பேற்றைப் பெற்றின்புறுவோம்” என்று.

மகரந்தன் – இஃதே! அச்செய்தி.

(மாலதியும் மாதவனும் துயரத்தை நடிக்கின்றனர்.)

மதயந்திகை – (களிப்புடன் மாலதியைத் தழுவி) தோழீ மாலதீ! நீ யொருபதியில் வதிதலாற் பூழியாடன் முதலாய் எற்கு அன்புடைத்தோழியும் சகோதரியுமாயினை; இது பொழுதில் நம்மில்லத்திற்கே அணிகலனாயினை.

காமந்தகீ – குழந்தாய் மதயந்திகே! நின் சகோதரனுக்கு மாலதி கிடைத்தமையாற் பெருமை யெய்துகின்றனை.[11]

மதயந்திகை – யாவும் தங்களாசி யருளானே; தோழி இலவங்கிகே! நீவிர்[12] எமக்குக் கிடைத்தமையின் எமது விருப்பங்கள் யாவும் நிறைவேறின.

இலவங்கிகை – எம்மாலும் இவ்வுரை[13] கூறத்தக்கது.

மதயந்திகை – தோழீ புத்தரக்கிதே! வருக; இப்பெருவிழாவிற் கலந்தின்புறுவோம்.

(என்று எழுகின்றனர்)

இலவங்கிகை – (காமந்தகியை யணித்து) பெரியோய்! மதயந்திகை, மகரந்தன் இவரது இயைந்த பார்வைகள், இதயத்தினிறைந்து வழிந்தொழு வியப்பானுங் களிப்பானுங் கவினுறச் சுழல்வனவாய், தங்காதற் குறிப்பை மறைத்தற் பொருட்டு அவரால் நிலைப்படுத்தப்பட்டும், அலர்ந்த கருநெய்தலனைய ஒளிமிகப் பொருந்திக் கடைவிழியழகுற்று மிருத்தலான், இவர் சங்கற்பத்தானிகழும் புணர்ச்சியின்ப நுகர்ச்சியை யெய்துகின்றார்களென்று கருதுகிறேன்.

காமந்தகீ – (நகைத்து) இவர் ஒருவர்க்கொருவர் மனத்தோற்றத்தானிகழ்ந்த கலவி மயக்கமெய்துகின்றனர். அங்ஙனமே;

(2) சிறிது குறுக்காக அசைதலான் வக்கிரித்தும், பக்கத்தில் முக்காற்பாகம் குவிந்ததும், வெளிப்படையான காதலால் அசைவற்று அன்பு மீக்கொண்டதும், சிறிது வளைந்த புருவங்களையுடையதும், உள்ளுவகை நுகர்ச்சியாற் கலங்கியதும், இமையாது சரிந்த இமைகளையுடையதும் ஆகிய ஆகேகரம்[14] என்னுமிப்பார்வையே யிவர்களது சங்கற்பப் புணர்ச்சியை விளக்கமாகத் தெரிவிக்கின்றது.

புருடன் – குழந்தாய் மதயந்திகே! இவணிவண் வருக.

மதயந்திகை – தோழீ புத்தரக்கிதே! எற்கு உயிரணித்த இத்தாமரைக் கண்ணனை மீண்டும் யான் காண்பனோ?

புத்தரக்கிதை – திருவருட் கூட்டிவைக்குமேல் கூடும்;

(என்று சென்றனர்)

மாதவன் – (மறைவாக)

(3) மாலதி கிட்டுவாளென்னுமாசாபாசம் அறுபடுமியல்புடைத் தாமரைநூல் போல அறுபட்டொழிக; தாங்கரும் அகப்பிணியும், புறப்பிணியும், எல்லையில்லனவாய் இக்கணமேயெழுந்து பரவுக. மிகுந்தெழு வெறுப்பும் என்னிடத் திடர்ப்பாடின்றி நிலைப்படுக; ஊழ்வினை வலியதாகுக; காமனுஞ் செய்வினை செய்க. அன்றேல்;

(4) ஒத்த அன்புடையளாய்ப் பெறலருமொருவளைக் கோரும் எந்தனுக்கு ஊழ்வினை யிடர்ப்பாடியற்றலான் இத்தகைய மாறுபட்ட நிலையுண்டாதல் தகுதியே; ஆயினும், என்னில் வேறுபட்ட இவன்பாற்றான் அளிக்கப்படுஞ் செய்தியையிவள் கேட்ட அப்பொழுதே யிவளது வதனம், வைகறை மதியமன்ன ஒளி மழுங்கி, யென்னை யுள்ளுறச் சுடுகின்றது.

காமந்தகீ – (தனக்குள்) சிறுவனும் சிறுமியுமாகிய மாதவனும் மாலதியும் இவ்வாறு என்னை வருத்துகின்றனர். இம்மாலதி ஆசையற்று உயிர்த்திருக்கிறாள் என்பது அருமை. (வெளியீடாக) ஆயுள் நிறைவுடைய[15] குழந்தாய் மாதவ! உன்னை யான் வினாவுகின்றேன்.[16] பூரிவசுவே மாலதியை அளிப்பர் என்று கருதுகின்றனையா?

மாதவன் – (வெட்கமுடன்) இல்லை; இல்லை;[17]

காமந்தகீ பூரிவசுவும் முன்னிலமைக்குச்[18] சிறிதுங் குறைந்திலன்.

மகரந்தன் – மாலதி முன்னரே கொடுக்கப்பட்டாள்[19]; என்று ஐயுறப்படுகின்றது.

காமந்தகீ – அச்செய்தியை[20] யானுமறிவேன்; நன்தனற் குறித்து மாலதியைக் கோருமரசர்க்குத் “தங்கன்னியர்க்குத் தாமேயுடமையாளர்” என்று பூரிவசு விடைபகர்ந்ததும் வெள்ளிடைமலை.

மகரந்தன் – இஃதுள்ளது.

காமந்தகீ – மேலுமித்தருணமே அரசன் தானே மாலதியை நன்தனற்கு அளித்தானென்று புருடனாலுந் தெரிவிக்கப்பட்டது. ஆதலின் குழந்தாய் இல்லற வழக்குக்களும்[21], மக்களின் சொற்களைப் பற்றுக்கோடாகவுடையன; நல்வினைத் தீவினைகட்கு ஏதுக்களான வரையறைகளும் முற்றிலும் அம்மக்களது சொற்களின் வயத்தனவாம்; ஆதலின் பூரிவசுவின் அவ்வுரை பொய்யுரையேயாகும்; மாலதியும் அப்பேரரசனது சொந்தப்புதல்வியாகாள். கன்னியரை மணம் புரிவித்தலில் அரசர்களே சான்றாகும்; என்றிங்ஙனம் அறனூற் கடைப்பாடுமிலது; ஆதலின், யான் கூறுமிதுவே நிலைபெறுவதாம். எவ்வாற்றானும் எந்தனைப் பற்றற்றவளாக் கருதுகின்றனையா? பார்.

(5) இவளிடத்தும் உன்னிடத்தும் நிகழுமென்று எண்ணத்தகும் எத்தீமையும் பகைவரிடத்தும் நிகழவேண்டாம்[22]; ஆதலின் உங்கள் மணவினைப்பொருட்டு உயிரினைவிட்டும் யான் முற்றிலும் முயல்வேன்.

மகரந்தன் – தங்களால் யாவும் நன்கு பொருத்தமுறக் கூறப்படுகின்றன; மேலும்

(6) பெரியோய்! தமக்குச் சொந்தமான இந்தக் குழந்தைகளிடத்தமையும் அருளும், அன்பும், தங்களது இல்லறப்பற்றற்ற மனத்தையும் நெகிழ்த்துகின்றனாதலின், துறவு நிலையொழுக்கங்களுக்கு முரண்பட்ட முயற்சியும் தங்களான் மேற்கொள்ளப்பட்டது. இதற்குமேல் அவரவர் ஊழ்வினையே வலியதாகும்.

(வேடசாலையில்)

காமந்தகிப் பெரியோய்! மாலதியை அழைத்துக்கொண்டு விரைந்து வருக; என நந்தலைவி கட்டளையிடுகின்றார்கள்.

காமந்தகீ – குழந்தாய்! எழுக! எழுக!

(எல்லவரும் எழுந்து செல்லுகின்றனர்)

(மாலதியும் மாதவனும் வருத்தமுடனும் காதற்பற்றுடனும் ஒருவர்பாலொருவர் பார்க்கின்றனர்.)

மாதவன் – மாதவனுக்கு மாலதியுடன் கூடிவாழுமுலக வாழ்க்கை இவ்வளவின் முடிந்ததால் இது மிகு துன்பமே பயக்கும். அம்ம! என்னே! வியப்பு!

(7) ஊழ்வினை, நண்பன்போல முதலில் ஒருபடித்தான உதவியை[23] வெளிப்படுத்தி யின்பந்தருமியல்பினதாய்ப் பின்னர் திடீரென முரண்பட்டுக் கொடியதாகி மனப்பிணியையே யெஞ்சியதாகச் செய்கின்றது.

மாலதீ – (மறைவாக) பெருந்தகைப் பெரும! கண்ணிற்களிதருவோய்[24]! இவ்வளவிற் காணப்பட்டீர்.

இலவங்கிகை – அந்தோ! கொடிது! அமாத்தியரால் நந்தோழியினுடலம் ஐயுறவெய்தியது[25].

மாலதீ – பிழைப்பு[26] நசையாங்கனியும் இப்பொழுது பழுத்தது; தந்தையின் வன் கண்மையால் அவரிடத்துக் காபாலிகர் செயலும் நிலைப்பட்டது. தீய ஊழ்வினையின் கொடுஞ் செயலும் நிறைவேறியது; ஆதலின் நல்வினை குன்றிய யான் யாவரைக் கடிந்துகொள்வேன்; புகலற்ற யான் யாவரையடைக்கலமாவேன்.

இலவங்கிகை – தோழீ! இவணிவன் வருக;

(செல்லுகின்றனள்)

மாதவன் – (தனக்குள்) காமந்தகீ, இயல்பான அன்பின் மாத்திரையில் அச்சுற்றுக் கூறுமிவை யென்னை யின்புறுத்தற் பொருட்டேயாம். (வருத்தமுடன்) அந்தோ! மாலதிப் புணர்ச்சியாகும் இம்மைப்பயனற்றவனாயினேன். இனிச் செய்வதியாது? (ஆராய்ந்து) மகாமாமிசத்தை[27] விலைப்படுத்தலினன்றி வேறுபாயமொன்றனையு மறிந்திலேன். (வெளியீடாக) அன்ப! மகரந்த! நீ மதயந்திகையைக் காதலிக்கின்றனையா?

மகரந்தன் – ஆம்

(8) புலியாற் புடைப்புண்டு உதிரம் பெருக்குறுமென்னை, மதயந்திகை பார்த்து மேற்சேலை நழுவினமையுங் கருதாது வெருவுறுமோராண்டு மானிளங்கன்று போலச் சுழல்வுறு விழியினளாய் அமுதப்பெருக்கிற்றோய்ந்தன்ன வுறுப்புக்களானிறுகத் தழுவினள்; என்னுமிஃதொன்றே யென்மனத்தைப் புண்படுத்துகின்றது.

மாதவன் – புத்தரக்கிதையின்[28] அன்புடைத் தோழியான அவள் கிடைத்தற்கரியளல்லள்; மேலும்

(9) மதயந்திகை, கொடும்புலியால் இறக்குந் தருவாயில் அதனைக் கொன்று, அவளைப்பாலித்த உனது புணர்ச்சியை அவளடைந்தும், பிறரை யாங்ஙனமவள் விரும்புவள்; அங்ஙனமே! அந் நளின நாட்டத்தவளது விழிகளின் செயலும் உன்பாலமைந்த அன்பை விளக்கி அழகு பொருந்த நெடிது அசைவற்றுமிருந்தது. எழுக! வரதை, சிந்துவென்னும் நதிகளின் சங்கமத்தின் மூழ்கி நகர்க்குளேகுவோம்.

(எழுந்து செல்கின்றனர்)

மகரந்தன் – அப்பெருயாறுகள் கூடுமிடமிக்ஃதே;

(10) முழுகிய அப்பொழுதே வெளிப்போந்தாரும் வத்திரங்களில் நீர்மிகுந்தொழுகலான் அச்சேலைகள் உறுப்புக்களிற் படிந்து அவ்வுறுப்புக்களின் மேடுபள்ளங்கள் விளக்கமுறுவாகும், பொற்குடம் போலழகுற்றுப் பருத்துயர்ந்த தனங்களிற் கரங்களை மாறுபடக் குறுக நெறுக்கியமைத்தவருமாகிய மானகர் மகளிரனைவரும் குழுமிய தடமுடையதாய் இச்சங்கமம் காணப்படுகின்றது.

(எல்லவருஞ் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் நான்காம் அங்கம் முற்றிற்று.


[1] மகரந்தனைக் கலைநிறை மதியமாக உருவகப்படுத்தினமை மதயந்திகையின் மனதைக் களிப்புறுத்து மிவன்பானிகழ்ந்த அவளது காதற் பெருக்கையுணர்த்தும்.

[2] நெற்றியிற் கரத்தை வைத்தல் – கரத்தின் அமிழ்தினு மினியபரிசத்தினால் மயக்கத்தைத் தீர்த்து மாதவனை யின்புறுத்தற் பொருட்டென்க; இம்மாத்திரையில் மகளிர்க்குப் பொருந்தா அச்சமின்மை மாலதியின்பாற்படுமெனில், அற்றன்று; துன்பந் தவிர்க்கு மாற்றாற் செயப்படு மெச்செயலும் உதவியா அமையுமன்றிக் குற்றமாகாதென்பவாகலின்.

[3] தேற்றம் – புத்தரக்கிதை யமயத்திற்கேற்ப, “மகரந்தன் மதயந்திகைபாற் காதற்பற்றுள்ளவன்” என முன்னரே யவனைப் புகழ்ந்துரைத்தமையை யுணர்த்தும்.

[4] மாதவன் பெயரை மாத்திரம் குறித்து மகரந்தன் பெயரைக் கூறாது, “இவனும் அவன்” எனக் குறித்தமை, தனக்குக் காதலனாகுனிலமை கருதியென்க; இதனால் புத்தரக்கிதையாற் கூறப்பட்ட உறுப்பமைப்பு ஒத்திருத்தலானும், தனதுயிரையும் பொருட்படுத்தாது இவன் இவளது உயிரைக் காத்தற்கு முயன்று முன்னின்றமையானும், காமந்தகி முதலியோரின் வழக்குமுறையானும், “மகரந்தன் தன்பாற் காதற்பற்றுள்ளவன்”, என மதயந்திகையாலறியப்பட்டதென்பது கருத்து.

[5] வார்த்தையும் பொருத்தமே – இதனால் மதயந்திகையின் உடன்பிறந்தானாகிய நந்தனனது விருப்பம் நிறைவுறாதென்பது குறிப்பிடப்பட்டது.

[6] அழகுற்று உறுதிப்பாடெய்தியது – பரபரப்பினால் வத்திரம் நழுவ, அதனால் ஒருவர்க்கொருவர் உறுப்புக்களின் சீர்மையைத் தெளிந்துகோடலானும், அச்சமே தலக்கீடாக இறுகத்தழுவி, அப்பெருவிழாவின் றொடர்புடையராதலானும் இக்காட்சியழகுடைத்தென்பதும், விலக்கற்கரிய கொடிய விடர்ப்பாடுகளை விலக்குந் திறலமைந்த திருவருளானன்றி நஞ்செயன் முயற்சியாலிக்காட்சி யுறுதிப்படாதென்பது கூறப்பட்டது.

[7] இன்பத்துன்பங்கள் இருவர்க்கும் ஒத்தனவாதலின் இருவரும் ஆராய்கின்றனர் என்பது கருத்து.

[8] இச்செய்தி – மாலதியை நந்தனனுக்கு மணம்புரிவிக்க, அரசனால் நிச்சயிக்கப்பட்ட செய்தி.

[9] இத்தொடரால் – இங்ஙனம் தெளிந்த காமந்தகீ, இவர்களையழைத்துப் போதற்கு ஊழியர் விரைந்துவரும் முன்னரே மாலதியின் மனத்தையுறுதிப்படுத்தற் பொருட்டு மாதவன் முகத்தானேயவன் கருத்தை அவட்குத் தெளிவுறச் செய்தனள் என்பது போதரும்.

[10] இதனால் – மாதவனது மனமும் உயிரும் முன்னரே மாலதியின் வயத்தனவாய், அவளிடத்தே நிலைப்பட்டிருத்தலானும், இவற்றினுஞ் சீரிய பொருளொன்றுமில்லை யாதலானும், இவற்றைப் பரிசலாகவளித்தமையான், அவளது விருப்பிற்கேற்ப மணம் புரிந்துகோடற்கு அவாக்கொடிருக்கு நிலையுணர்த்தப்பட்டது.

[11] பெருமை யெய்துகின்றனை யென்பது, வருஞ் செய்தியைச் சிறிதேனுமுணராத மதயந்திகையை நோக்கிக் கூறிய எள்ளலுரையாம்.

[12] நீவிரெனும் முன்னிலைப் பன்மை இலவங்கிகை முதலிய தோழிகளுடன் கூடிய மாலதியையுணர்த்தும்.

[13] இச்சுட்டு – மதயந்திகைக்கு மகரந்தன் காதலனாகப் போவதால் அம்மதயந்திகையே தனது தோழியருடன் இலவங்கிகை முதலியோர்க்குக் கிடைப்பது உறுதியேயன்றி மதயந்திகை கூறியாங்கு நந்தனனுக்கும் மாலதிக்கும் மணவினை கூடாதென்பதை குறிப்பான் உணர்த்தும்.

[14] ஆகேகரம் – குவளை குவிந்து, அரைவிழி மலர்ந்து கருவிழி சுழன்று பொருந்தும் பார்வையை, ஆகேகரம் என்ப.

[15] ஆயுள் நிறைவுடைய குழந்தாய் என்று விளித்தமையான் மாதவனது மணவினையிற் காமந்தகி முயன்று முற்பட்டிருத்தலான் இவனது ஆயுளில் ஐயமில்லை யென்பது குறிப்பிடப்பட்டது.

[16] முன்னிலும் இப்பொழுது வருந்தற்குக் காரணம் யாதென்றும் பூரிவசுவே தனக்கு மாலதியை யளிப்பாரென்று துணிந்து இதுகாறு முயிர்த்திருந்தனையோவென்றும், வினாவின் கருத்து; இதனால், மாதவன் இளமைப்பருவத்திற் கியல்பான சாபலத்தினால் மாலதிபாற் காதற்பற்றுள்ளவனே யன்றித் “தன் புதல்வியைத் தருவேன் வருக”, வென்று பூரிவசுவினாலழைக்கப்பட்டு இங்கிவன் வந்தவனல்லனாதலின் இங்ஙனம் இவன் வருத்தமுற்றற் றகாதென்பது குறிப்பிடப்பட்டது.

[17] பூரிவசு, மாதவனது பெயரையு மறியாதவராதலின் இவனுக்கு மாலதியை மணம் புரிவிப்பேன் என்று இவர் யாங்ஙனம் கூறவியலும் என்பது கருத்து.

[18] முன்னிலைமை – இதனாற், பூரிவசு, தனக்கு மாலதியை அளிப்பார் என்னும் நம்பிக்கை மாதவனுக்கு முன்னரும் இல்லை; இப்பொழுதுமில்லையாதலின் மனவருத்தம் மிகைபடற்குக் காரணம் சிறிதுமில்லையென்றும், இவ்விருவர்க்கும் நிகழ்ந்த காதற்பற்றும், இவர்களிதுகாறும், இனிமேலும் உயிர்த்திருத்தற்குரியதாய்க் குறைபாடின்றி முன்போலவே நிலைப்பட்டிருக்கின்றதென்றும், இனி வருத்தமுறல் வேண்டாமென்றுங் குறிப்பிடப்பட்டது.

[19] முன்னரே கொடுக்கப்பட்டாள் – இதனால் பூரிவசு, மாதவனுக்குத் தன் புதல்வியை யளிப்பேனெனவுரைக்கவில்லை; மாதவனுமவ் வுரைநசையுடனிருக்கவுமில்லை; ஆயினும், மாலதி யிதுகாறுமொருவர்க்கும் தந்தையால் அளிக்கப்படவில்லை யென்றும், தானுமவளைப் பெறற்குத் தகுதியுள்ளவனென்றும் இவ்வளவிலவாக்கொண்ட இம்மாதவன், இப்பொழுது பூரிவசு, அரசனாற் கோரப்பட்டு நந்தனன் பொருட்டுத் தன் புதல்வியை அளித்தனன்; என்னுமிச் செய்தியைச் செவியுற்றுச் செயலற்றுத் தனது வாவழிந்து வருந்துவனாதலால் முன்பின் கால முரணைக் கருதித் தீங்கு நேருமென்பது ஐயுறவாற் குறிப்பிடப்பட்டது.

[20] மாலதியைக் கொடுத்த அரசர்க்குப் பிறர் பொருளை யொருவர்க்களிக்க வுரிமையில்லாமையானும், அங்ஙனம் உரிமையுள்ள தந்தையால், இவள் முழுமனதுடன் அளிக்கப்படாமையானும், இப்பொழுதும் முன்போலவே அவ்வாசை குன்றாதிருக்க இடனுளது. ஆதலின் இவ்வார்த்தையளவில் அச்சுறல் வேண்டாம் என்பது குறிப்பிடப்பட்டது.

[21] அரசன் நந்தனனுக்கு மாலதியைத் தானே யளித்தானாயினும், பூரிவசு கூறியுள்ள வார்த்தையால் அவரும் இம்மணவினையிலுடன்பட்டவராவரெனினும், அரசனை வஞ்சித்தற் பொருட்டே அச்சொற்கள் கூறப்பட்டனவென வெளிப்படுத்தற்கு உலகவழக்கைச் சான்றாகக் கூறி, அறனூலனைத்தும், அவற்றைக் கடைப்பிடித் தொழுகுமுலகுஞ் சொல்லளவில் அடங்குமாதலின், இவருரை அத்தன்மைத்தாகாது, இவர்தனதுட்கருத்திலங்க உரைத்தமை காண்க; எனக் காமந்தகி, அப்பூரிவசுவின் சொற்களை யெடுத்துக்காட்டி யெதிர்கால நலத்தைக் குறிப்பானுணர்த்தினாளென்பது இத்தொடரின் கருத்து.

[22] தீமைகள், பகைவர்பால் விளைக; என நினைவது உலகினியல்பாயினும், பகைவரிடத்தும் அவை விளைய வேண்டாம் என நவின்றமை, இவர்பால் விளையும் தீமையின் உயர்வு நவிற்சியாமென்பது கருத்து.

[23] உதவி – மாலதி, மாதவன்பாற் காதற்பெருக்கெய்தி அவளிடத்து விளையும் வேட்கையாவும் மாதவனது ஊழ்வினையாலியற்றப்படும் உதவியாம்.

[24] இவ்விளியானும், வினையானும், இனியானுயிர்த்திருக்க வியலாமையின் காட்சியளவிற் கட்பொறிக்கின்பத்தை யளித்து மனத்திற்குத் தாங்கொணாத் துன்பத்தையளிக்கிறீர் என்பது குறிப்பிடப்பட்டது.

[25] இத்தொடர், பெற்றோரின் பற்றுதலைக் கடந்து காமந்தகியே இப்பேரபாயத்திலிருந்து இவளைக் காத்தல் வேண்டும் என்பதை காமந்தகிக்கு அறிவுறுத்தும்.

[26] இத்தொடரால் மாதவனையும் காமந்தகியையுங் குறித்து, உங்கள் முன்னிலையில் யானித்தகைய துன்பமெய்தி வருந்துவனோ? ஆதலின் நீவிர் இதற்குத்தக முயலுதல் வேண்டுமென்பதைத் தெரிவித்தற் பொருட்டே யவர் முன்னிலையில் நாணமின்றி வாய்விட்டரற்றினாளென்பது போதரும்.

[27] இஃது ஐந்தாமங்கத்தில் விரித்து விளக்கப்படும்.

[28] புத்தரக்கிதை – காமந்தகிக்கு மனமுவந்ததோழியும், மதயந்திகைக்கு அந்தரங்கப் பாங்கியுமாகலின், உனக்கு அவளை மணம்புரிவிப்பதிற் றுணை நிற்பள்; அதனால் இவள் கிடைத்தற்கரியளல்லள் என்பது கருத்து.

மாலதீமாதவம் – ஐந்தாம் அங்கம்

ஐந்தாம் அங்கம்

(கபாலகுண்டலை[1] அச்சுறுத்துவதும் தேசுற்றதுமாகிய வேடம்பூண்டு ஆகாயமார்க்கமாகப் பிரவேசிக்கின்றாள்)

கபாலகுண்டலை – ஆறின்[2] மிகுந்த பத்து நரம்புகளானாய வட்டவடிவமான வுடற்கூற்றினடுவில் ஒளிர்வுறும் ஆன்ம வத்துவும், அவ்வான்மாவை யுணர்வாருள்ளத்திற் றன்படிவம் திடம்படவமைத்து அவர்க்குச் சித்தியளிப்பவரும் பிறழ்ந்தலையாமனத்தரான சாதகரால்[3] தேடப்படுகின்றவரும், சத்திதேவி[4]யராற் சூழப்பட்டவருமாகிய சத்தினாதன்[5] சிறப்புறத் திகழ்கின்றனர். (1)

இப்பொழுது இந்த யான், எப்பொழுதும் ஆறங்கக் குழு[6]வினிடையில் நிலைப்படுத்தப்பட்டு இதய கமலத்திலொளிர்தரும் ஆன்மாவைச் சிவ வடிவாகப் பார்ப்பவளாய், வாயுவை அவ்வவ்விடங்களில் இலயப்படுத்தி[7], யதனாற் துடித்தன் முதலியன[8] முறையானே உலகிற்கு முதற்கருவிகளான அழிவிலா ஐம்பெரும்பூதங்களையும் வலிந்திழுத்தலான் வானச் செலவில் வருத்தமற்றவளாய் வானிடை யெதிர்வரும் வான்முகிற் பிளந்திங்கு வந்தோன். (2)

மேலெழுந்தலையுங் கபாலங்களாற் றொடுக்கப்பட்ட அம்மாலையில் அவைகள் ஒன்றோடொன்று உராய்தலாற் கீழ்மேலான சதங்கைகள் ஒலிப்ப, வானவெளியிற் செல்லும் விசையானது, என்பானிறைந்திலங்கும் பேராற்றலை வெளிப்படுத்துகின்றது (3)

அப்படியே!

சடைக்கற்றையானது, வலிந்து கட்டப்பட்டிருப்பினும், எப்புறத்துஞ் சிதறி மிகவும் அலைவுறுகின்றது. சூலத்திற் கட்டப்பட்ட பெருமணியானது அலைவுற்றுத் தொடரொலியுடனீண்டு இனியதாய் ஒலிக்கின்றது. அசைவுறுங் கபாலங்களின் புழைகளிற் புக்கு ஒலிக்கும் பெருவிசைக்காற்று, சதங்கைளிடையறாதொலிக்க வேதுவாக, மேற்றுகிற் கொடியை அசைக்கின்றது. (4)

(சென்று பார்த்து)

பழமையான வேப்ப நெய்யிலூறவைத்து அந் நெய்யினால் வறுக்கப்படும் உள்ளி மணம் நாறும், ஈம விறகின்றூமங்களான் அதன் கீழுய்த்துணரப்படும் சுடலையினருகிலிக்காளிகோயில் விளங்குகின்றது. மந்திரஞ் செபித்தலைப் பூர்த்தி செய்யுமெனது மந்திரக்குரவர் அகோரகண்டருடைய கட்டளைப்படி யிக்காளி கோயிலில் இப்பொழுது யான் கடவுள் வழிபாட்டிற்குரிய திரவியங்களை முற்றிலுமிங்குச் சேர்பித்தல் வேண்டும். “குழந்தாய் கபாலகுண்டலே இம்மந்திரஞ் சித்தியாமேல் கராளை யென்னுமிக்காளிதேவிக்குப் பெண்மணியொருவளைப் பலியிடல் வேண்டும்; அப்பெண்மணியும் இப்பதிக்கண்ணே வதிகின்றனளாமென்று புலப்படுகின்றது”, என்று எனதாசிரியர் என்பால் முன்னர்க் கூறியுள்ளார்.

(வியப்புடன் நோக்கி)

இவன் யாவன்? ஆண்மையும்[9], இனிமையும்[10] ஆர்ந்திலங்கு மெய்யனாய்ச் சரிந்த கூந்தலைச் சடைமுடியாவுயர்த்திக்கட்டி யொள்வாளேந்தி யிச்சுடலையில் வருகின்றான்; எந்த இவன்,

(5) குவளை மலரிதழனைய கரியமேனியனெனினும், வேட்கையானொளி மழுங்குமுறுப்பினைத் தாங்கி, வனப்புறுமச்சிலாக்கானடை கொண்டு, மதி  நிகர்வதனம் மாணொளி பரப்ப இங்குக் காணப்படுகின்றானோ[11]? எந்த இவனது இடக்கரம், உதிரப்பெருக்கொழுகு நரமாமிசம் நிரம்பியுள்ளதாய் வீரச் செயலை வெளிப்படுத்துகின்றதோ? அத்தகைய இவன், காமந்தகியின் தோழனது புதல்வன் மாதவனே! மகாமாமிசத்தை விலைப்படுத்துகின்றான். இதனால் எற்கென்னை? யானும் எனது விருப்பத்தை[12] நாடுவேன். மாலைப்பொழுதும் பெரிதுங் கழிந்தது. அங்ஙனமே.

வானமருங்குகள், பச்சிலைப் பூங்கொத்துப் பந்தியன்ன இருட்பிழம்புகளான் மறைக்கப்படுகின்றன. தரையும், கரைபுரண்டு கலங்கி வரும் புதுமழை நீரில் மூழ்குவது போல அவ்விருளின் மறைகின்றது. இரவு, அதன் றொடக்கத்திலும், சுழற்காற்றின் விசையாற் பலபுறத்தும் படர்ந்து சூழ்ந்து அடர்ந்து புகைநிறம் பொருந்துந் தனது கருமையை அடவிகளிலடர்ப்புறுத்துகின்றது.

(என்று சென்றனர்)

சுத்தவிட்கம்பம்

(குறித்த நிலையில் மாதவன் பிரவேசிக்கிறான்)

மாதவன் – (விருப்பமுடன்) பிரேமை[13] நிறைந்தனவும், பிரயணத்தைப் பற்றினவாய் அதன் பயிற்சியால் வேறூன்றிய அநுராக எழுச்சியையுடையனவும், இயல்பான இனிமை பொருந்தியனவுமாகிய செங்கணாளின் அவ்வவ் வேட்கைச் செயல்கள் என்பானிகழவேண்டும். இங்ஙனம் விரும்பி வேண்டப்படுமப்பொழுதே அவைகளில், உட்கரணமொடுங்கி, யதனால் புறக்கருவிகளின் செயலுந் தடைப்பட அது மகிழ்  நிறைவுறுகின்றது[14].(7)

மேலும்,

அன்புடைக்காதலி, எனது கண்டமூலத்திற் றனது முகத்தையணைத்து, நெகிழப்புனைந்த மகிழமாலை யிடையறாதிலங்கு மிருதனங்களானு மென்னை யவளிருகத்தழுவ, அவளது உறுப்பு வினிமயத்தை[15] யானெய்துவனோ? (8)

அன்றேல், இவ்வுறுப்பு வினிமயமெய்தற்கரியதாதலின், பிறிதொன்றனையே கோருவேன்;

எந்த வதனத்தைப் பார்த்துழி விளைந்த இன்பங்கள் யாவும் ஒருமித்து மனத்திற் பெருமிதத்தைச் செய்கின்றனவோ; அங்ஙனமே, கட்பொறி நுகருங்கழிபேருவகையும், அம்முகத்தை மீண்டுங் காணவேண்டுமென்று அவாவை விளைக்கின்றதோ? எந்தமுகம், இளம்பிறைக்கலைக்[16] குழுவின் மிகுந்தெழுஞ் சாரங்களாற் படைக்கப்பட்டதோ; அம்மாலதியினது அத்தகைய மதனமங்கலமந்திரமா[17] யிலங்கும் முகத்தை மீண்டுங் காண விரும்புகின்றேன். (9)

இதுகாலைக் காணப்படுந்தோற்றம், மெய்மையாகாது; என்னுமிவ்வளவே, உண்மைக் காட்சியினும் சிறிது வேறுபாடுளது.

முதிர்ந்தழுந்திய[18] முன்னையனுபத்தினின்றும் உண்டாகிய நினைவுத் தொடர்பினது இடையறா விளக்கத்தான் விரிவெய்தி, அதனில் வேறுபட்ட பிறவுணர்ச்சிகளாற் றடைப்படுத்தற்கியலாது பெருகும் காதலி நினைவாகும் அறிவெழுச்சியின் றொடர்பானது.[19]

அந்தக்கரண[20] விருத்திக்குச் சாரூப்பியம்[21] உண்மையான் இப்பொழுது எனது ஆன்மாவை அவளது வடிவு போலவே[22] செய்கின்றது.

அவ்வன்புடைக்[23] காதலி, நமது மனத்தில், இலயித்தவள் போலும், எதிருருவடைந்தவள் போலும், வரையப்பட்டவள் போலவும், சிற்பமுறையால் வகுக்கப்பட்ட உருவினள் போலும், இழைக்கப்பட்டவள் போலும், கலவைச் சுண்ணத்தாற் கட்டப்பட்டவள் போலும், உள்ளே புதைக்கப்பட்டவள் போலும், காமனது ஐங்கணைகளானும் தமருறப் பிணைக்கப்பட்டவள் போலும், சிந்தனைப் பெருக்கமாம் நூற்பெருங்கற்றையால் நெருக்குற நெய்யப்பட்டவள் போலுமிணைந்தனள். (10)

(வேடசாலையிற் கலகலவொலி யெழுகின்றது)

மாதவன் – என்னே! இப்பொழுது இங்குமங்குமலைந்து திரிகின்ற பேய்கணிறைந்த சுடலைக்கு, அச்சுறுத்துந்தன்மை.

இவ்விடத்தில்.

சிதைத்தீயின் மருங்குவரைப் படர்ந்து நெருங்கித் திரண்டு இருத்தலின் அச்சத்தை விளைக்கும் இருளானது, தன் கருமையின் பருமிதத்தால் அச்சுடலைத் தீயை மிக விளக்குகின்றது. கடபூதனை முதலிய பேய்கள், கொழுத்தனவாய் ஒன்று சேர்ந்து விரைந்து ஆடற்புரிந்து கோலாகலமாகப் பேரொலியைச் செய்கின்றன. (11)

ஆதலின் இவைகளை உரக்க அழைப்பேன்;

ஓ! ஓ! சுடலையிலிருக்குங் கடபூதனைகளே!

கணைகளாற் சுத்திசெய்யப்படாதாய் நீங்கள் கோடற்குரியதும், பிணி முதலியனவின்றிப் புசித்தற்கினியதும், பெண்பாலரினுஞ் சிறந்த ஆடவர் உறுப்புக்களாற் செய்யப்பட்டுச் சுவைபொருந்தியதுமாகிய மகாமாமிசம்,[24] உண்மையில் விலைப்படுத்தப்படுகின்றது. விரைந்து பெறுக; என்று. (12)

(வேடசாலையில் மீண்டும் கலகல வொலியெழுகின்றது)

என்னே! யான் கூவியழைத்த அக்கணமே இப்பேய்கள், ஒருமித்து ஆர்ப்பரித்து வருங்கால், சுடலையின் எல்லாப்பாகமும் அதிர்ப்புறுவது போலாகிறது. ஆச்சரியம்.

காணத்தக்கதும் காணத்தகாததும் இணைத்து நீண்டதுமாகிய உடலையுடையனவும், இங்குமங்கும் அலைகின்றனவுமாகிய கொள்ளிவாய்ப்பேய்களுடைய முகங்கள், காதளவு நீண்ட பிளவுறுங் கடைவாய்களை விரித்தலான் விளங்கும் நெருப்பையுடையனவாய், கூரிய திற்றிப்பற்களினிறைந்தனவாய், மின்னற்குழுவுக்கு நிகரான உரோமம், கண், புருவம், மீசை யிவற்றையுடைய வாய், வானவெளி யினிறைவுறுகின்றன. (13)

மேலும்,

பேரீச்சமரத்தளவாகக் கணுக்கால்களை யுடையதும், கரியதோலான் மறைக்கப்பட்டு எப்புறத்தும் பரவிய நரப்பு முடிகணிறைந்த என்புக்கூடுகளையும் முதிர்ந்த உடலெலும்பையுமுடையதுமாகிய இப்பூதனைப்பேய்க்குழாம், மிக்க ஆவலுடன் ஒருமித்து நரமாமிசத்தைப் புசிக்குங்கால், பிதிர்ந்து வீழ்ந்த அவ்விறைச்சிக் கண்டங்களாற் சுற்றிலும் சிறிது கரகரச் சத்தமுடன் ஊளையிடுஞ் சென்னாய்களுக்கு உணவு கொடுத்து அவற்றை வளர்ப்பதாய்க் காணப்படுகின்றது.

(எப்புறமும் பார்த்துச் சிரித்து)

என்னே! இப்பேய்களின் நிலைமை.

மிகச் சிதைவுற்றுலர்ந்த வுடலையுடைய பேய்கள், விரிந்தசையும் நாவினாற் கொடியதும், துரவு போன்றதுமான வாயினை விரித்தலான், அரவங்கள் ஊர்தலின் அச்சுறத்தகும் புழைகளையுடைய கரிந்த பழமையான சந்தணத் தருக்களின் றோற்றத்தை யெய்துகின்றன. (15)

(சென்று பார்த்து)

அந்தோ! எதிர்மருங்கில் மிக்க அருவருப்புக் காணப்படுகின்றது.

புல்லியதோர் பிசாசம், முதலில் தோலை உரித்துரித்து, பிறகு சதைக்கொழுப்பு மிகுந்தனவும், புயம், இடையின் முன்புறம், பின்புறம் முதலிய உறுப்புக்களில் எளிதிற் கிடைத்தற்குரியனவும், தாங்கொணாத் துர்நாற்றமுடையனவுமாகிய இறைச்சிகளைப் புசித்து, உயிர், நரம்பு, குடல், கண் இவற்றைப் பறித்து அருகிருக்கும் என்புக்கூட்டினின்றும் உள்ளும்புறத்தும் இருக்குமிறைச்சியை, பற்களை யிளித்துக்கொண்டு பரபரப்பின்றித் தின்கின்றது. (16)

மேலும்,

இப்பிணம் தின்னும் பேய்கள், மிகுவெப்பத்தானீர்வடியு மென்புக்களை யுடையனவும், கொதிப்பினால் வழிந்தொழுகு மூனீரையுடையனவுமாகிய சவ உடலங்கள், மிகப்புகைவனவாயினும், பெரிய சிதைகளினின்று மவற்றையிழுத்தும், மிக நைந்தொழுகு மாமிசங்களையுடையதும், அசைந்து இருபுறச் சந்தியினின்றும் நழுவியருகில் விழுந்ததுமாகிய கணுக்கான் முடிப்பை யிழுத்து அதிலிருந்து பெருகும் ஊனீர்ப்பெருக்கைப் பருகுகின்றன. (17)

(நகைத்து) என்னே! பேய்களுக்கு மாலைப்பொழுதிலுண்டாகும் பெருங்களிப்பு;

நரம்புக்களாற் கட்டப்பட்ட மங்கல கங்கணங்களை யுடையனவும், பிணப் பெண்களுடைய கரங்களாகும் தாமரைமலர்களையே விளங்குமுடியணிமாலையாக் கொண்டனவும், உதிரச் சேற்றைக் குங்குமத்திலகமாக அணிந்தனவுமாகிய இப்பேய்ப்பெண்கள், பிணங்களின் இதயமாகுங் கமலங்களை மாலையாக விரைந்தணிந்து, தன் காதலருடன் கூடி, என்புக்களினிரசமாகுங் கள்ளைக் கபாலங்களாகும் பாத்திரங்களான் மிகக்களிப்புற்றனவாய்ப் பருகுகின்றன. (18)

(சென்று மீண்டும் “கணைகளாற் சுத்திசெய்யப்படாததாய்” என்ற 12ஆம் சுலோகத்தைப் படித்து)

என்னே! மிகுந்த அச்சத்தை விளைக்குமுருவ முதலியவற்றையுடைய பேய்கள் யாவும் விரைவிற் சென்றனவே! அந்தோ இப்பேய்கள் யாவும் வலியற்றன.

(மனவருத்தமுடன்)[25]

இச்சுடலையினிறுதிகாறும் தேடப்பட்டது அங்ஙனமே முற்புறத்தில்,

ஒலிக்குங் கொடிக்குடிசைகளில் இருக்குங் கூகைக்குழுவின் பேரொலியுடனியைந்து ஊளையிடும் நரிகளினது கொடிய பேரிரைச்சலாற் பயங்கரமான தடங்களோடு கூடியதும், உண்மருங்கிற் சிதறிவீழ்ந்த என்புக்கூடுகளின் கபாலங்களிற் புக்குத் தடைப்பட்டுப் பருமிதங்கொண்டுக் கரைகடக்கும் நீர்ப்பெருக்கின் பேரொலி முழக்கொடு கூடியதுமாகிய நதி, சுடலையின் முடிவிற் காணப்படுகின்றது.

(வேடசாலையில்)

ஆ! அருளிலாத் தந்தையே! இப்பொழுது, தமதரசனது விருப்பத்தை நிறைவேற்றுதற்குரிய கருவியாகிய இவ்வுயிர் அழிவெய்துகின்றது.

மாதவன் – (கருத்துடன் செவியேற்று) அச்சத்தானடுக்குறுஞ் சக்கிரவாகத்தினது ஒலிபோல மெலிந்தினிய இக்குரலானது மனத்தைக் கவர்வதாய் முன்னறியப்பட்டது போலச் செவிகளோடுத் தருக்கமெய்துகின்றது[26]. இந்நாதத்தைக் கேட்டமேல், மனம், உட்பிளந்து சுழல்வுறுகின்றது. ஒவ்வோருறுப்பும் கலக்கமுறுகின்றது. மெய்தம்பித்து, நடையைத் தடைப்படுத்துகின்றது; என்னே! இவ்விரக்கவொலியினெழுச்சி; என்னேயிது![27] (20)

இவ்விரக்கவொலி, கராளையின் கோயிலினின்றும் எழுவதாக அறியப்படுகின்றது; ஆதலின், அக்கோயில் இத்தகைய கொடுஞ்செயல்களுக்கு நிலைக்களனேயாம். (21)

ஆகுக; காண்பேன்[28] (என்று செல்கின்றான்).

(பிறகு காளிபூஜையில் முயன்ற கபாலகுண்டலையும், அகோரகண்டனும், கொலைக்குறியிடப்பட்ட மாலதியும் பிரவேசிக்கின்றனர்)

மாலதீ – ஆ! அருளிலாத் தந்தையே! இப்பொழுது தமது அரசனது விருப்பத்தை நிறைவேற்றுதற்குரிய கருவியாகிய இவ்வுயிர் அழிவெய்துகின்றது; ஆ அன்னையே! விலக்கற்கரிய விதியின் கொடுமையால் மனமழிந்தனை; ஆ! காமந்தகிப் பெரியோய்! மாலதியாமுயிருடையாளே! எற்கு மங்கல மியற்று மொன்றனையே தற்பயனென்றச் செயலும் புரியுமியல்பினளே! என்பாலன்பின் காரணமாக மிகு துயரமெய்துகின்றீர்; ஆ, அன்புடைத்தோழீ இலவங்கிகே! யான் உனக்குக் கனவின் மாத்திரையிற் காண்டற்குரியளாயினேன்!

மாதவன் – அந்தோ! இப்பொழுது எனதையுறவு நீங்கியதே; உயிருடன் இவளையான் காப்பனேல் பிறவியின்பயனை யெய்துவேன்.

காபாலிகர் – காலடி நடையின் பெருமையால் மிகவும் அழுந்திய தரையைத் தாங்கவியலாது கூர்மத்தின் முதுகென்பு வளைதர அதனால் உலக நிலையை நெகிழ்த்துவதும், அழ்ந்த பிலத்தை நிகர்த்த கன்னக்குழிகளில் உட்கொள்ளப்பட்ட எழுகடலுடையதும், களிப்புறும் நீலகண்டன் மன்றுள் விளங்குவதுமாகிய உனது நடனத்தை வணங்குகின்றேம். (22)

மேலும்,

(தண்டகம்)

அசைகின்ற கரியுரிவையாகு முத்தரீயத்தின் முன்றானையிலிருக்கும் உகிர்கள் உராய்தலாற் கீறப்பட்ட இந்துவினின்றும் வழிந்தொழும் அமுதப்பெருக்காற் பிழைப்புறும் கபாலங்களின் மாலை பெருநகை புரிய, அதனால் அச்சுறும் பூதகணங்களாற் புகழப்பட்டதும், சீறுகின்ற கருநாகங்களாகும் தோள்வளைகளின் பிணிப்புக்கள் நெறுக்குறவதனால் விரிந்து விளங்கும் படங்களின் அடிப்புறமான கண்டத்தினின்றும் வெளிவரும் விடச்சுவாலைகளால் வெருவுறுத்துவனவும், விரிக்கப்பட்டனவுமாகிய கரக்குழாத்தினால் பலபுறத்துமெறியப்பட்ட மலைகளையுடையதும்,

எரிதருமங்கியாற் பொன்னிறமாகிய கண்ணொளிக்கற்றையாற் பயங்கரமான சிரத்தை வட்டமாகச்சுற்ற, அச்சுழல்வாகும், கொள்ளிச்சுழலிற் பொருந்திய திசை முடிவுகளையுடையதும், உயர்த்தப்பட்ட சூலத்தின் முடியிற்கட்டப்பட்ட துகிற்கொடியினசைவால் வீழ்த்தப்பட்ட விண்மீன்களையுடையதும், களிப்புறுங் கடபூதனை முதலிய மதித்த வேதாளங்களின் தாளங்களாற் செவிபடுங் கௌரிதேவி கலங்கித் தன் கணவனை வலிந்திறுகத்தழுவ, அதனால் மகிழ்வுறு மனத்தனாய முக்கண்ணனைக் களிப்புறுத்துவதுமாகிய தங்களது திருநடனம், தேவி! துன்பம் தவிர்த்து எங்கட்கின்பத்தை யளித்தருளல்வேண்டும். (23)

(என்று நடிக்கின்றனர்)

மாதவன் – என்னே! எள்ளற்குரிய கருத்தின்மை[29]. செஞ்சாந்து பூசப்பட்டவளும், செவ்வலங்கலும் செந்துகிலுமணிந்தவளும், வசுப்போன்ற[30] பூரிவசுவின் புதல்வியுமாகிய அத்தகைய இவள், செந்நாய்களின் பாற்பட்டுழலும் பெண்மான் போல கொலைத்தொழிற் புரியும் பாசண்டக் கீழ்மகன்வயத்தளாகி நடுக்குற்றனளாய் இறக்குந் தருவாயிலிருக்கிறாள்; அந்தோ! எனதாசையைச் சுடல்வேண்டும்[31]; கொடுமையினுங் கொடுமையே நிகழ்ந்தது. என்னே! கருணையில் விதியின் செயல். (24)

கபாலகுண்டலை – மங்கலமங்கையே[32]! இப்பொழுது கொடிய காலன் உன்னை விரைவுறுத்துகின்றான்; ஆதலின் உனக்கு உயிர்த்துணைவனாகுமொருனை யீண்டு நினைக; (241/2)

மாலதீ – ஆ! இறைவ! மாதவ! யான் வானுலகெய்தினும், தங்களால் நினைக்கத்தக்கவள்; அருமைக் காதலனாகிய தாங்கள் நினைக்கு மாற்றால் யானிறந்துமிறவா நிலையெய்துவேன்.

கபாலகுண்டலை – என்னே![33] இரங்கற்குரிய இவள் மாதவன்பாற் காதற்பெருக்குடையவளா?

அகோரகண்டன் – (வாளை உயர்த்தி) பகவதி! சாமுண்டி! மந்திரப்பயிற்சியின் றொடக்கத்தில் வேண்டப்பட்டு நிறைவேற்றப்படும் பலிப்பூசையை யேற்கவேண்டும்; (25)

மாதவன் – (விரைந்து சென்று வாளை மணிக்கரத்தாற் பற்றியெறிந்து) அடா! துட்டப்பயலே! கெட்ட காபாலிக! செல்லுதி! நீயே திருப்பிக் கொல்லப்பட்டனை.

மாலதி – (பரபரப்புடன் பார்த்து) காத்தருள வேண்டும்; பெருந்தகைப்பெரும! (என்று மாதவனைத் தழுவினள்).

மாதவன் – நல்வினையுடையாளே! அஞ்சற்க! இறக்கும் அமயத்தும் ஐயுறவைத் துறந்து புலம்புங்கால் தடைப்படாதிலங்கு முனதன்பிற்குரிய துணைவனாகுமிவன் நினது முன்னணியிலே வதிகின்றான்; ஆதலின், பெண்ணே! நடுக்குறல் வேண்டா; கொடுஞ்செயற்புரியுமிவனே யெதிர்மறையாப்பயக்குந் தீவினைக் கொடும்பயனை இங்கண் இப்பொழுதே யனுபவிப்பான். (26)

அகோரகண்டன் – நமக்கு இடையூறாக வந்த இத்தீயோன் யாவன்?

கபாலகுண்டலை – பெரியோய்! காமந்தகியின் நண்பனது புதல்வனும், மகாமாமிசத்தை விலைப்படுத்தியவனும், இவளது அன்பிற்கு நிலைக்களனுமாகிய அந்த மாதவனே யிவன்.

மாதவன் – (கண்ணீருடன்) நல்வினைப்பயனுடையாளே! நீ இத்தகைய துன்பமெய்தியவாறென்னை?

மாலதி – பெருந்தகைப் பெரும! யான் ஒன்றுமறிகிலேன்; எனினும், மேன்மாடத்தே துயின்றேன்; இங்கண் விழித்தேன்; என்னுமிவ்வளவேயறிவேன். இங்குத் தாங்கள் வந்தவாறென்னையோ?

மாதவன் (நாணமுடன்)[34] அச்சுறும் பாவாய் உனது கமலக் கரத்தைப் பிடித்து பிறவியைப் பயனுடைத்தாக்குவான் கருதி யான் கொண்ட பெருமுயற்சி யாவும் வறிதே கழிய, மகாமாமிசத்தை விலைப்படுத்தற் பொருட்டுச் சுடலைக்கண் திரிந்துழி உனது ஓலஒலியைச் செவியேற்று இங்கண் வந்தேன். (27)

மாலதி – (திரும்பி) என்னே! எற்பொருட்டேயிவர், தன்னுயிரையும் வெறுத்து அலைகின்றனரோ?

மாதவன் – அடா! என்னே வியப்பு! இந்நிகழ்ச்சி காகதாளீயமேயாம்[35]; இப்பொழுதோ! திருவருட்பாங்கா விவணெய்தி, இக்கள்வனது வாள்வீட்சியினலக்கைத் தவிர்த்து, இராகுவின் வாயிற்புக்குழலும் மதிக்கலையனைய காதலியை வலிந்து பற்றிய வெனது மனம், விதனத்தாற் கலக்கமுறுகின்றது; இரக்கத்தால் நெகிழ்கின்றது; வியப்பினால் அலைப்புறுகின்றது; சினத்தால் எரிதருகின்றது; மகிழ்ச்சியின் மலர்கின்றது; என்னே! இம்மனநிலை[36]. (28)

அகோரகண்டன் – அடா! பார்ப்பனப்பயலே! “வேங்கை கவர்ந்த பெண்மானுக்கு ஆண் மானருளும்” என்னும் வழக்கால், உயிர்ப்பலிக்குறைவிடமாகுமிக்காளி கோயிலிலிருப்பவனும், கொலைவிருப்புறுவானுமாகிய எந்தனுக்கு இலக்காயினை; தீயோய்! அத்தகைய யான், உனது புயத்தை வாளாற் றுணித்து அக்கவந்தப்புழையினின்றும் உதிரம் பெருக்கொழுக உன்னையே முதலிற்[37] பலிகொடுத்து உலகன்னையாகுமிக்காளி தேவியைத் திருத்தி செய்வேன். (29)

மாதவன் – அடாதீய! மறையொழுங்கைக் கெடுக்கும் பறைய! இல்வாழ்க்கையைச்[38] சாரமற்றதும் மூவுலகை நற்பொருளிலாததும், பூவுலகை ஒளியற்றதும், உற்றாரை யிறப்பெய்தவும், காமனைய கங்காரமற்றவனும், மக்கள் கண் படைத்தமையைப் பயனற்றதும், உலகத்தை முதிர்ந்த அடவியுமாகச் செய்தற்கு ஏன் முயன்றனை? (30)

மேலும், அடா! தீய!

அன்பார்ந்த பாங்கியரோடு ஆடலுடனமைந்த பரிகாசப்போரில் அன்பின் நிகழ்ந்த மெல்லிய வாகைப் பூவினடிகளானும் மிகவருந்து மவ்வுடலத்தில், அவளைக் கோறற்பொருட்டு வாளை வீழ்த்தும் உனது சிரத்தில் இக்கரம், அகால அசனிபோல வீழ்க. (31)

அகோரகண்டன் – ஆ! கொடியோய்! அடி; அடி; இதுபொழுதே இறந்தொழிகுவை;

மாலதீ – தலைவ! வலாற்காரமுடைய வீர! அருள்புரிக! கொடுநசை பொருந்துமிவன் கொடியவன்; என்னைக் காத்தருளல் வேண்டும். பொல்லாங்கைத் தருமிப்போர்ச் செயலினின்றும் ஒழிக.

கபாலகுண்டலை – கருத்துடனிருந்து இக்கொடியனைக் கோறல் வேண்டும்.

மாதவனும் அகோரகண்டனும் – (முறையே மாலதியையும் கபாலகுண்டலையையுங் குறித்து) அச்சுறுமியல்பினளே! மனத்திற்றிடம் பெருக; இப்பாவி வதைக்கப்பட்டான்; யானைகளின் மலைமுடியனைய மத்தகங்களைப் பிளக்கத் தகும் குலிசம் போன்ற முன்கால்களையுடைய சீயத்திற்கு, மானினத்தைப் பற்றியடிக்குங்கால் தவறுதல் யாங்ஙனம் நேரும்; அத்தவறுகள் எப்பொழுதேனும் யாவரானும் அநுபவிக்கப்படுமோ? (32)

(வேடசாலையிற் கலகலவொலியெழுகின்றது)

ஓ!ஓ! மாலதியைத் தேடுமவர்களே! அமாத்திய பூரிவசுவைத் தேருதற்படுத்தத் தடையிலாது செல்லும் சீரிய அறிவையே கூரிய கண்ணாக் கொண்ட காமந்தகிப் பெரியோர் கட்டளையிடுகின்றனர்.

“காளிகோயிலை நெருங்கிச் சூழ்ந்துகொள்ளுதல் வேண்டும். இச்செயல், கொடிய இவ்வகோரகண்டனாலன்றிப் பிறிதொருவனாற் செயற்பாலதன்று; இச்செயற்பயனும், கராளையின் காணிக்கையேயன்றிப் பிறிதொன்றும் புலனாகவில்லை” என்று.

கபாலகுண்டலை – பெரியோய்! தேடுமவர்களால் நாம் சூழப்பட்டுத் தடைப் படுத்தப்பட்டோம்.

அகோரகண்டன் – இதுபொழுதே, நமதாண்மையை வெளிப்படுத்தற்குரிய சிறந்த தருணம்.

மாலதி – ஆ! தந்தையே! ஆ! காமந்தகிப்பெரியோய்!

மாதவன் – ஆகுக, சுற்றத்தார்பால் இவனையிருத்தி, அவர் முன்னணியிலேயே[39] இவனைச் சங்கரிக்கின்றேன்.

(மாலதியை வேற்றிடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றான்)

(மாதவனும் அகோரகண்டனும் ஒருவர்க்கொருவரைக் குறித்து)

ஆ! அடா! தீய!

உறுதியான என்பு முடிப்புக்களை வெட்டுங்கால், கணகணவெனவொலிப்பதும், வலிய நரம்புக்களை வெட்டுங்கால் விசை தணிவுறுவதுமாகிய எனது வாள், சதைமிகுந்த புறங்களில் சேற்றிற் பாய்வதுபோலத் தடைப்படாது பாய்ந்து, அக்கணமே உனது உறுப்புக்களைத் தனித்தனியே கண்டம் கண்டமாக்கி யவற்றை வீசியிறைத்திடுக.

(என்று எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீமாதவம்”, என்னும் நாடகத்தின் ஐந்தாம் அங்கம் முற்றிற்று.


[1] கபாலகுண்டலை – தலையோடுகளே காதணியாக அமையப்பெற்றவள் என்னும்பொருள் பற்றி யிப்பெயர், இவட்க்குக் காரண இடுகுறியாவமைந்தது.

[2] ஆறின்மிகுந்த பத்து நரம்புகள் – என்பது பதினாறு நரம்புக்களை; அவை உடற்கு இன்றியாதனவாகிய, இடை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, அத்திசிங்குவை, பூடை, வசுவசை, அலம்புசை, குகூ, சங்கினீ, தாலுசிங்குவை, சிங்குவை, விசயை, காமதை, அமிருதை, பகுளை யென்பனவாம்; இவைகளின் குழுவே, அலகிலா நுண்ணிய நரம்புக் கற்றையாற் சூழப்பட்டு உதிரம் முதலிய சத்த தாதுக்கள் நிறைந்து, துவக்கினால் மறைக்கப்பட்டு, பிண்டமென்று வழங்கப்படும் மெய்யாகின்றது என்று யோக நூல் கூறும். ஒருசாரார் ஆறின் மிகுந்த என்பதற்கு மூலாதாரமாதிய வாதாரங்களாறினும் சிறந்த ஏழாம் ஆதாரமென்று பொருள் கூறுவாறுமுளர்.

[3] சாதகர் – மந்திரசித்தி செய்வோர்.

[4] சத்திகள் – ஈண்டு அறிவு, விருப்பு, செயலென்னும் மூவகைச் சத்திகளையும், பிராம்மீ, மாகேச்சுரீ, கௌமாரீ, வைட்ணவீ, வாராகீ, மாகேந்திரீ, சாமுண்டி, சண்டி யென்னுஞ் சத்திதேவிமார் எண்மரையு முணர்த்தும்.

[5] சத்தி நாதன் – இவர், காபாலிகம் என்னும் ஒருசார் சைவசமயத்தவரது வழிபடு கடவுள். இவரைப் போற்றுமாற்றால் காபாலகுண்டலையும் அவடன் ஆசிரியரும் அச்சமயத்தைச் சார்ந்தவரென்பது போதரும்.

[6] ஆறு அங்கங்கள் – இதயம், சிரம், சிகை, கவசம், நேத்திரம், அத்திரம் என்பனவாம்; மந்திரம் போற்றுமொருவன் தொடக்கத்திற் றன்னை அம்மந்திரத்ததிதேவதையாகப் பாவித்துக் கோடன் மந்திரநூண் மரபு; இதனை வடநூலார் அங்கநியாசம் என்று கூறுப.

[7] இலயப்படுத்தலாவது – மேலிழுக்கப்பட்ட வாயுவை வான் செலவிற்கேதுவாக அவ்வந்நாடிகளிற் நிலைபெற நிறுத்தலாமென்பது யோக நூன்முறைகளால் விளங்கும்.

[8] துடித்தன் முதலியன – துடித்தல், நலிதல், படுத்தல் என்பனவாம்; இவை ஐம்பெரும்பூதங்களையும் வலிந்திழுத்தற்குக் கருவிகளாம் என்ப.

[9] ஆண்மை – இன்பம், துன்பம், சினம், அச்சம், இவை நிகழ்ந்துழி மனமாற்றமற்றிருத்தலாம்.

[10] இனிமை – துன்புறுனிலையிலும் அன்பருக்குவந்து தவலாம்; இவ்விருபண்பானும், மாதவன் துன்பத்திற்காட்பட்டு வருந்தும் அமயத்தினும், ஆபத்தின் வழிப்பட்டுழலும் அன்பிற்குரிய மாலதியை அவ்வாபத்தினின்றும் காத்து அவளை யின்புறுத்தினன் என்னுமேல் வரும் காதை வியங்கியமாக இங்குக் குறிப்பிடப்பட்டது.

[11] இவ்வளவிற் கூறுமாற்றால், மாதவன் இம்முதுகாட்டினுட் புகுதற்குத் தகுதியற்றவன் எனவுணர்த்திப் பின்னிரண்டடியில் மகாமாமிச்தை விலைப்படுத்து நிலையைக் கூறலான் எவ்வாற்றானும் கோரிய பொருளைக் கொண்டேதீருமிவனது வீரச் செயலுங் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

[12] விருப்பம் – தனதாசிரியன் கட்டளைப்படி பெண்மணியான மாலதியை காளிபாற் பலியிடற்குக் கொணர்தலே இவளது விருப்பென்பது கருத்து; அதற்குத் தக, கங்குற் பொழுதும் வந்ததெனக் கூறப்பட்டது.

[13] பிரேமை – சிருங்கார ரசத்தின் பிழம்பே இரதியாம்; அதன் மிகைபடு நிலையே பிரேமையாம் என்ப; பிரேமை, மானம், பிரணயம், சினேகம், இராகம், அநுராகம், என்னுமாறும் அவ்விரத நிலையின் பேதங்களாம். அதுபற்றியே அகப்பொருளிலக்கண நூலாகும். “இரதிபிரேமையானரும்பி, மானத்தாற்றளிர்த்து, பிரணயத்தான் முகிழ்த்து, சினேகத்தான் மலர்ந்து, இராகத்தாற் பழுத்து, அநுராகத்தாற்றுய்க்கப்படுகின்றது”, என்று கூறுவர். அறுவகைத்தாய இவற்றை முதனூலாசிரியர் இவ்விரண்டாகக் கொண்டு பிரேமை, பிரணயம், அநுராகம், என மும்மைத்தாகக் கூறியுள்ளார். அவற்றினிலக்கணம் வருமாறு:

பிரேமை – இருவர் மனமொருமித்து வேறூன்றிப் பிணிப்புடையதாய் ஒருபடித்தாக நிலைப்பட்டு நிற்பதாம்;

பிரணயம் – இவரது பிரேமையே, அகம்புறமொத்து ஒருவர்க்கொருவர் உபசரித்தலான் மேலெழுந்து நிற்கு நிலை;

அநுராகம் – இடம், பொருள், காலமுதலியவற்றான் மனத்தில் மிகுந்தெழும் பிரணயமே யநுராகமாம்; அது மாஞ்சிட்டராகம், நீலிராகம், குசும்பராகமென மூவகைத்தாம்; அவற்றுள் தலை, யிடை, கடை முறையானே மாஞ்சிட்டமே தலையாதலின் அதனையே யீண்டுக் கூறினர் என்க. விரிவஞ்சி விடுத்தேம்.

[14] கருவிகரணங்களின் ஒடுக்கம், மூர்ச்சையானும் அமையுமாதலின், அதனை மறுத்தற்கு, மகிழ் நிறைவுறுகின்றது; எனக் கூறப்பட்டது.

[15] உறுப்புவினிமயம் – இவனது உடலையவள் வயமாக்கலும், அவளுடலை யிவன் வயமாக்கிக் கோடலுமாம் வினிமயம் – பண்டமாற்று.

[16] இளம்பிறைக்கலைக்குழு – இவளது வதனம் களங்கமின்றியினிமை பொருந்தியிருத்தலை யுணர்த்தும்.

[17] மதனமங்கலமந்திரம் – என்பது இவளது முகம், அளப்பிலா வானந்தத்திற்கேதுவாகலானும், மாசின்மை, தெளிவு முதலிய குணங்கள் பொருந்தியமையானும், அனங்கனுக்கு மங்கலமந்திரமாய், அவன் அதில் வதிந்து இம்மூவுலகையும் வென்று பெரும்புகழ் பெற்றான் என்பது கருத்து; இதனால் மாலதியின் மதிமுக வனப்பு, உயர்வு நவிற்சியாற் கூறப்பட்டது.

[18] மாதவனது மனச்செயல் வயத்தான் மாலதியினுருவெளித் தோற்றம், இடையறாதிலங்க, அவன் அவளது காட்சியை மீண்டுங்கோருமாறென்னை? என வினாவியாசங்கித்து, உருவெளித்தோற்றத்திற்கும் இவன் கோரும் உண்மைக்காட்சிக்கும் அமையும் வேறுபாடுணர்த்துவான் கூறுகின்றார், “இதுகாலைக் காணப்படும் அவளது தோற்றம்” என்று.

[19] இச்சொற்றொடர் ஸ்தாயீ பாவத்தின் இலக்கணத்தைப் புலப்படுத்தும்.

[20] அந்தக்கரணவிருத்தி – மனம் ஒரு பொருளைப் பற்றி நிகழுஞ் செயலுடையதாக, அம்மனம், அப்பொருள் வடிவாந் தன்மையெய்துமென்பது பெரியார் கண்டது. அந்தக் கரணம் – மனம். விருத்தி – பொருளைப்பற்றிச் செல்லும் அதன் செயலாம்.

[21] சாரூப்பியம் – ஒத்த உருவாந்தன்மை.

[22] வடிவுபோல – என்னு மிவ்வுவமையுருபான் முன்னர்க்கண்ட காட்சியினும் இக்காட்சிப் பொய்யாதல் பற்றி வேறுபட்டதென்பது உணர்த்தப்பட்டது.

[23] இச்சுலோகத்தில், தற்குறிப்பேற்றத்தாற் கூறுமவற்றுண் முன்னையதொவ்வொன்றிலும் பொருத்தமின்மையை யாசங்கித்துப் பொருந்துமாற்றாற் கூறி, மாதவனது விருப்பத்தை வலியுறுத்துகின்றார். இதன்கட் கூறப்படும் ஒன்பது தற்குறிப்புருபுகளின் குறிப்பு வருமாறு காண்க:-

இலயித்தவள் – மறைந்தவள்; அங்ஙனமாயின் பூழிக்கண் நீர்த்துளி போலப் படிவமே தோன்றாது மறையும்; என்னும் இயபின்மைபற்றி, எதிருருவடைந்தவன் போலுமென்றார்; இவ்வெதிருரு பொய்யுருவாயினும் மெய்யுரு இல்வழியமைவதில்லை யெனக்கருதி, காமனாகும் வரைவோனால் மனமாகும் பலகையில் நினைவாகிற தூலிகையாள் வரையப்பட்டனள். அதனால், அவள் தெள்ளிதிற் காணப்படுகிறாள் என்று; அங்ஙனமாயின், மாலதியின் படிவமே மனத்திற் பொருந்துமன்றி மாலதி பொருந்தாளென்னும் பொருந்தாமை பற்றிச் சிற்பமுறையான் வகுக்கப்பட்ட உருவினள் போலும்; காமனாகும் சிற்பி, மனமெனும் கருங்கல்லை கணைகளாகுஞ் சிற்றுளிகளான் மாலதியுருவாக்கியமைத்தானென்றார்; மனம், அணுவளவுடைத்தாதலின் அதிற் சிலைப்பதுமையமைத்தல் கூடாமை பற்றி அதனை மறுத்து, இழைக்கப்பட்டனள் போலும்; காமனாம் பொற்கொல்லன், காமவேட்கையாமனலில் உருக்கப்பட்ட மனமாகும் பொன்னில் மாலதியாகுமிரத்தினத்தை யிழைத்தானெனக் கூறினர். இவ்விழைப்பும், நாளடைவிற் பிரிவெய்து மியல்பினதாதலின், சிறப்பின்மை கருதிக் கலவைச் சுண்ணத்தாற் கட்டப்பட்டவள் போலும்; இச்சுண்ணத்தாற் கட்டப்பட்ட பொருள் உறுதிப்படுவது போல, இவள் மாதவன் மனத்திலுறுதிப்பாடெய்தினள் என்றார்; இதில் மனத்தின் மேற்சுண்ணமும் அதன்மேன் மாலதியுமாகி நேரியைபு அமையாமையாற் பொருந்தாமை கருதி உள்ளே புதைக்கப்பட்டவள் போலும்; பூமியிற்புதைக்கப்பட்ட பொருள்போல மனத்திற் புதைக்கப்பட்ட இவளும் பொறிக்குப் புலனாகாதொழியுமென்றோர்ந்து தமருறப்பிணைக்கப்பட்டவள் போலும்; காமன் தன் கணைகளான் மாலதியையும் மனத்தையும் தமரிட்டு அக்கணை கொண்டு அவள் கட்டப்பட்டாள் போலும்; மனம் வலிதாதலின் கணையாற் றமரிடப்படுதலைத் தாங்குந்தன்மையது. உறுப்புக்களில் மலர் வீட்சியையும் தாங்கொணாத அம்மெல்லியலாள் இதனைப் பொறாள்; ஆதலின் இதனையும் மறுத்துச் சிந்தனைப் பெருக்காகும் நூற்கற்றையால் மனத்தில் நெய்யப்பட்டாள். இதனால் மாலதியையே மனம் சிந்தித்தலான், அச்சிந்தனை, யிடயறாது பெருகி, அதனால் அந்தக் கரணம் அவள் வடிவுபோலப் பரிணமித்ததென்பது துணியப்பட்டது.

[24] போர் முனையிற் பகைவரது கணைகளாற் சாவெய்தாததும், உதிரப்பெருக்கொழுகலான் உலராது கசிவுள்ளதும், பெண்ணிறைச்சியில்லாததும், ஆகிய ஆடவர் மாமிசமே மகாமாமிசம் என்று காபாலிகாகமம் கூறும்.

[25] மனவருத்தம் – இங்குக் குழுமிய பேய்களில் ஒன்றேனுமிவன்பாலெய்தித் தைரியத்துடன் மகாமாமிசத்தைப் பெறாமையும், அதுவிலைப்படுத்தப்படாத நிலையில் இவனது விருப்பம் நிறைவேறுதலரிதாதலும் வருத்தநிமித்தமென்க.

[26] மகரந்தன், மதயந்திகை யிவர், முன்னர்க் கொடும்புலியாற் றுன்புற்றகாலை வருந்திய மாலதியின் இரங்கற் குரலாகிய யானே உன்னாலனுபவிக்கப்பட்டேன்; என்று செவியிடம் விவகரிப்பதுபோலிருப்பதால் தருக்கமெனக்கூறப்பட்டது; அதனால் செவிகளுக்கு இவ்வொலி முன்னரறியப்பட்டதென்பது கருத்து.

[27] இச்சுட்டு பெறற்கரிய மந்திரச் சித்தி செய்யுமொருவன், உயிர்ப்பெலியில் மிக விருப்புள்ளதும் சாதகர்களது விருப்பத்தை யளிப்பதிற் சிறந்ததுமாகிய இக்காளிதேவிக்கு, மாயையின் வலியான் மாலதியைப் பலியிட இங்குக் கொணர்ந்தனனோ; அல்லது, அக்குரளணைய பிறர் குரலாகுமோ; என்னுமிவ்வாராய்ச்சியை யுணர்த்து முகத்தான், பிறரொலியாயின் மாதவன் இத்தகைய துன்பம் எய்தற்கு ஏதுவில்லையாகலின் மாலதியின் ஒலியே யென்னும் மாதவனது துணிபையுமுணர்த்தும்.

[28] ஆகுக. காண்பேன் – என்று கூறினமை; இக்கருணவொலிக்குக் காரணம் மாலதியாயின், எனதுயிரைத் துறந்தும் அவளைக் காத்தல் வேண்டும், அம்மட்டில் இவ்வாழ்க்கைப்பயனை முற்றிலும் பெற்றவனாகுவேன்; என்னலஃதியலாதெனில் அங்ஙனமே உயிரைத் துறந்து காதலியுடன் வானுலகெய்தி யின்புறுவேன் என்னு மாதவனது கருத்தையுணர்த்தும்.

[29] கருத்தின்மை – இது, மாலதியின் பெற்றோர், காமந்தகி முதலியோர் இவர்களைச் சார்ந்தது; இக்கொலைஞனால் யாருமறியாமற் கோறற் பொருட்டு இவள் இங்குக் கொணர்விக்கப்பட்டாளாதலின், காமந்தகி முதலியோரின் கருத்தின்மை இகழ்தற்குரியதென்பது கருத்து.

[30] வசு – அட்டவசுவென்னும் கண தேவருளொருவர்.

[31] எனதாசையைச் சுடல் வேண்டும் – என்று கூறினமையான், மாலதியிறப்பது உறுதியாதலின் இவணிமித்தம் அரும்பாடுபட்டும் உயிர்த்திருக்கும் மாதவனும் உயிர்துறப்பது உறுதியாம் என்பது குறிப்பிடப்பட்டது.

[32] மங்கலமங்கையே என்பது மந்திரசித்தியாம் மங்கலத்திற்கு இவள் ஏதுவாகலின் இங்ஙனம் விளிக்கப்படினும், இவ்விளி, மாலதியின் மங்கலத்திற்கே நிமித்தமாய் இவள், கொலையென்னும் அமங்கலத்திற்குப் பாத்திரமாகாளென்பதையும், கொலைத்துன்பனீங்கி விரைவில் இன்புறுவளென்பதையும் சொற்றொடரானிகழ்ந்த நன்னிமித்தத்தாலுணர்த்தும்..

[33]  இவ்விரக்கச்சொல் – இவள் மாதவன்பாற் காதற்பற்றுள்ளவள்; அம்மாதவனும் மகாமாமிசத்தை விலைப்படுத்து நிலையில் இங்ஙனமே கபாலகுண்டலையாற் காணப்பட்டான்; அவன் இங்கண்வந்து இவளைக் காத்தல் கூடும்; அதனால் இப்பலிப்பூசனை இனிது நிறைவேறுதலரிதென்பதும் அம்மாதவனால் இவர்க்குத் தீங்குண்டாதல் உறுதியென்பதும் உணர்த்தப்பட்டன.

[34]  நாணம் – மகாமாமிசத்தை விலைப்படுத்தலாகுந் தகாத செயலைத் தான் மேற்கொண்டிருத்தலைத் தெரிவித்தலில் நாணமாம்.

[35] காகதாளீயம் – இது ஓர் நியாயம்; காகம் பனைமரத்தடியில் வந்த அக்கணம், அதன் பழம் உதிர்ந்து அக்காகத்தின் சிரத்தில் வீழ்தல்போல என்பது பொருள். இது நினையாது திடீரென நிகழுஞ்செயலைக் குறிக்கும்.

[36] என்னே என்னுமிவ்வதிசயச் சொல்லால், இந்நூல் சிருங்கார ரசத்தையே யின்றியமையாததாகக் கொண்டதாயினும், அதனை வளத்தற் பொருட்டுச் சோகம், வீரம் என்னும் இரசங்களும் அங்காங்கி யென்னுமியைபுபற்றி இதிற் கூறப்பட்டுள்ளன; இதனால் “ஒரு காப்பியத்திற்கு இன்றியமையாததாயமைக்கப்படும் இரசத்திற்கு முரண்பாடின்றி அதனை யணிப்படுத்தற்பொருட்டு பிறவற்றையும்  அமைத்துக் கூறலாம்” என்னுமிலஷண அமைதி புலனாம்.

[37] முதலில் – என்றமையால், உன்னைப்பலிகொடுத்த பிறகே இவளைப் பலி கொடுப்பேன் என்பது தொக்கு நிற்கும்.

[38] இச்சுலோகத்தில், ஒன்றை விசேடித்தற்கு எழுவகை எடுத்துக்காட்டுக்கள் கூறப்பட்டுள்ளன; இவற்றின் கருத்து ஒன்றேயெனினும் இது, அங்கமான கருணம், வீரம் முதலியவற்றால் அங்கியான சிருங்காரம் மேலிட்டு நிற்பது பற்றிக் கூறியது கூறலென்னுங் குற்றமமையாதென்னு மிலக்கணத்தை வலியுறுத்தும்; இதனால், மாதவனுக்கு மாலதியின்றி யிம்மை மறுமை யென்னுமிருமையும் கீழ்மையாமென்பது உணர்த்தப்பட்டது.ட

[39] முன்னணியிலேயே – என்னும் தேற்றம், சுற்றத்தார், இவனது வீரச் செயலை அமாத்தியபூரிவசுவுக்குத் தெரிவிப்பர்; அதனால், அவர்க்கு, மாதவனுக்கே மாலதியை மணவினையாற்றுவதில் விருப்பம் வேரூன்றும் என்பதையும் மாதவனது விருப்பமும் நிறைவுறுமென்பதையு முணர்த்தும்.