மாலதீமாதவம் – ஏழாம் அங்கம்

ஏழாம் அங்கம்

(புத்தரக்கிதை[1] பிரவேசிக்கிறாள்)

புத்தரக்கிதை – ஆனந்தம்! பிறர் அறியாவண்னம் நன்கமைந்த மாலதியின் வேட வனப்பினால் நன்தனன் வஞ்சிக்கப்பட்டு, அவனாற் செய்யப்படுங் கைப்பிடிமங்கலமுடைய மகரந்தன், காமந்தகிப் பெரியாரினது சூழ்ச்சியனமைவால் அமாத்தியபூரிவசுவினது இல்லத்தில் இதுபொழுது இன்புற[2]க்காக்கப்பட்டான். இதுகாலை, யாம் நன்தனன் மந்திரமெய்தியுள்ளேம்; காமந்தகிப்பெரியாரும் நன்தனன்பால் விடைபெற்றுத் தனது இருக்கையெய்தினள்; புதுமனை, மனைபுகுவிழா நிமித்தம் தகுதியில் காலத்துஞ் செய்யப்படு நிலவுவிழாவினாற் பணியாளரனைவரும் பிறச் செயலிற் கருத்திலராயமைவராதலின் இம்மாலைப்பொழுதும் நமது முயற்சியைத் திருவுடைத்தாக்கும்[3]. விரைவுறுத்துங் காமவேட்கை பொருந்து மணமகனாகிய நந்தனன், இவளைத் தன்பாற் காதற்படுத்தற்கு அடிவீழ்ந்திறைஞ்சியும், பயன்படாதொழியவே மீண்டும் வலாற்காரத்தான் வலிந்து பற்ற முயன்றனனாய், மகரந்தனாற்[4] கடுஞ்சொற்கூறி மறுக்கப்பட்டான். அவனும் வெட்கம், வெகுளியிவற்றின் வெறியினால் சொற்கள் தளர்வுற, கண்கணீர்சொரிதர, முகம் துடிதுடிக்க, “இவள், இக்கன்னிப்பருவத்தினும் கற்பணியொன்றிலாவரையின் மகளாதலின், இவளாற் பயன் சிறிதுமெற்கில்லையென்று, இதுபொழுது ஆணையுடன் அறிக்கையிட்டுத் தனது இருக்கையில்லத்திருந்து வெளிப்போந்தான்; ஆதலின் இந்நிகழ்ச்சியின்[5] வாயிலாக மதயந்திகையை அழைத்து வந்து மகரந்தனுடன் சேர்ப்பிக்கின்றேன்.

(என்று சென்றனள்)

(பிரவேசகம்)

(இலவங்கிகையும், படுத்திருக்கு நிலையில் மகரந்தனும் பிரவேசிக்கின்றனர்)

மகரந்தன் – இலவங்கிகே! புத்தரக்கிதைபாற் கலந்த காமந்தகியாரது சூழ்ச்சி வெற்றி பெறுமோ?

இலவங்கிகை – பெருந்தகைப் பெருமானார்க்கு இதில் என்ன ஐயுறவு நிகழ்ந்தது? மிகைபடக்கூறிலென்? இந்நூபுரத்தினோசை செவிக்கேறுதலான் புத்தரக்கிதை அக்காரணம்[6] பற்றி மதயந்திகையை அழைத்து வருகிறாளெனக் கருதுகின்றேன்; ஆதலின் மேற்சீலையான் முகத்தை மறைத்துத் துயிலுனிலையிலிருத்தி.

(மகரந்தன் அங்ஙனமே செய்கிறான்)

(மதயந்திகையும் புத்தரக்கிதையும் பிரவேசிக்கின்றனர்)

மதயந்திகை – தோழீ! மாலதியாலென் சகோதரன் உண்மையில் வெகுண்டனன்

புத்தரக்கிதை – ஆம்.

மதயந்திகை – என்னே! பெருமோசம்; வருக; பிணக்கியன் மாலதியை ஒறுப்போம்.

(என்று செல்கின்றனர்)

புத்தரக்கிதை – இஃதிருக்கையில்லம்.

(இருவரும் உள்ளே செல்லுகின்றனர்)

மதயந்திகை – தோழீ! இலவங்கிகே! நினதன்புடைத் தோழி துயிலுகின்றாளெனக் கருதுகின்றேன்.

இலவங்கிகை – தோழீ! இவளை விழிப்புறுத்த வேண்டாம்; இவள் நெடிது நேரம் மனக்கலக்கமுற்றனளாய், இதுபொழுது சிறிது துயிலுகின்றாள் போலும்; ஆதலின் இப்பாயலின் பக்கல் அமர்க.

மதயந்திகை – பிணக்கியல்பினளான இம்மாலதி ஏன் மனக்கலக்கமெய்தினள்.

இலவங்கிகை – புதுமணப்பெண்ணை மனப்பற்றுடையாளாக்குந்[7] தந்திரமறிந்தவனும், பேரழகனும், கலவியின் காலமறிந்தவனும், இன்சொற்கூறுமியல்பினனும் வெகுளியற்றவனுமாகிய உன்னுடன் பிறந்தானைக் கணவனாப் பெற்று எனதன்பின் மிக்க தோழி ஏன் மன வருந்தாள்?

மதயந்திகை – பார்; புத்தரக்கிதே! எதிர்மறையாக நாமே யிகழப்பட்டோம்.

புத்தரக்கிதை – எதிரிடைபோற் றோன்றினும், உண்மையில் எதிரிடையில்லை.

மதயந்திகைஎங்ஙனம்?

புத்தரக்கிதை – அடிவீழ்ந்திறைஞ்சிய ஆண்மகன், அவமதிக்கப்பட்டான் என்பதில் நாணத்தின் குற்றமேயாதலின் இவள் இகழ்தற்குரியள்[8] ஆகாள்; புதுமணப்பெண்ணைத் தன்வயப்படுத்தற்குப் பொருந்தாப் பரபரப்பானும், வலாற்காரத்தானும், தன்பெருமையிழந்த வுன்னுடன் பிறந்தானாற் செவியுறத்தகாப் புன்மொழிகளும் கூறப்பட்டன; ஆதலின், குற்றமிழைத்த யாமே எள்ளற்குரியாரெனத் தோன்றுகின்றது. மேலும், “புதுமணப் பெண்கள் பூவியல்பினராதலின்[9] மென்றொடக்கமுடையாராவர், இவரது மனப்பான்மையறியாதவர்களும், இவருடன் பழகாதவர்களுமாகிய ஆடவர்களான் வலிந்து பற்றப்படுவாராயின், அவர்கள் அவ்வாடவர்களது சேர்க்கையை வெறுப்பர்.” இங்ஙனமன்றே காமநூலாசிரியர் கூறுகின்றனர்.

இலவங்கிகை – இல்லந்தொறும் ஆடவர், குலமகளிரை மணக்கின்றனர். ஒருவரும் நாணணி பூண்டவரும், குற்றமின்மடமையுடையாருமாகிய குலக்கன்னியரைத் “தாமே தலைவராவம்[10]” என்னுங் காரணம்பற்றிச் சொற்கனலாற் சுடுவதில்லை; இதயத்திலம்பு பாயந்தன்ன அப்பரிபவங்கள், இறக்கும்வரை மறக்கத் தகாவாறு நிலைப்பட்டுத் தாங்கற்கியலாவாய் வேற்றில் வதிதலில் வெறுப்பியற்றுவனவாம்; ஆதலினன்றே பெண்மகப்பேற்றைச் சுற்றத்தார் அருவருக்கின்றனர்.

மதயந்திகை – புத்தரக்கிதே! அன்புடைத்தோழி இலவங்கிகை மிக்கவாட்டமெய்தினள். என் சகோதரன் சொல்லொணாவண்ணம் மிகப்பெருஞ் சொற்குற்றமிழைத்தனன்.

புத்தரக்கிதை – .ஆம்! “இவள் இக்கன்னிப்பருவத்தினும் கற்பணியொன்றிலாவரையின் மகளாதலின் இவளாற் பயன் சிறிதுமெற்கில்லையென்று ஆணையுடன் அறிக்கையிட்டுத் தனதிருக்கையில்லத்திருந்து வெளிப்போந்தான்”, என்று யானும் கேள்வியுற்றேன்.

மதயந்திகை – (செவிகளை மூடி) அந்தோ! முறையின்மை! என்னே! மோசம்! தோழீ! இலவங்கிகே! இப்பொழுது உனது முகத்தைக் காணக்கூடவில்லை; ஆயினும், தோழியெனும் உரிமைபற்றிச் சில கூறுவேன்.

இலவங்கிகை – இவள் உன்வயத்தவள். வேண்டுவன கூறுக.

மதயந்திகை – என்னுடைய துணைவன்பால் தீயொழுக்கமும், சிறுமையும் நிலைப்படுக. இத்தகையனாயினும் இவனை யிதுபொழுது கணவன் என்று நீவிர் கருத்துட்கொள்ள வேண்டும். புன்சொற்களோடியைந்த இவ்விகழ்ச்சியின் அடியை அறிய மாட்டீர்.

இலவங்கிகை – இல்லாததொன்றை யாங்ஙனம் அறிவோம்.

மதயந்திகை – “பெருந்தகைப் பெருமகனாகிய மாதவன்பால் மாலதி, காட்சியளவிற் காதல் கொண்டவள்” என்னுமிவ்வுண்மை உலகில் யாவரானுமறியப்பட்டதே; அஃதே[11] யிகழ்ச்சியினிமித்தமாக நிலவுகின்றது. ஆதலின் அன்புடைத்தோழீ! கணவனென்றெண்ணாது நிகழுமிகழ்ச்சியாவும் இவளது இதயத்திருந்திரியுமாறு செய்க; அன்றேல், பெருமோசம் விளையுமென்றும், வேற்றிடத்தமைந்த இத்தகைய காதற்பற்றினால் உடன்படு செயலிலாக் கொடிய குலக்கன்னியர்பால் ஆடவர் மனம் மிக வருந்தும் என்றும் அறிக; இதை மதயந்திகை கூறினள் என்று கூறலாகாது.

இலவங்கிகை – அடி! பொருத்தமிலா உழக வழக்கில் மயக்கமுற்றியவளே! போ; உன்னுடன் யான் பேசவில்லை.

மதயந்திகை – தோழீ! சினத்தைத் தவிர்த்து மனந்தெளிந்து கூறுக; அன்றேல் நீங்கள் விளக்கமாய்க் கூறல் வேண்டாம்; ஆயினும், “மாதவனொருவனையே உயிரெனக்கொண்டவள் மாலதியென்னுமிவ்வுண்மையை யாமறிவேம். மாலதி, மாதவன் இவர்களுடைய சரீரம், முதிர்ந்த தாழையினது உண்மருங்கன்ன விளங்குமுறுப்புக்களின் மென்மையால் வனப்பின்மிக்கு, மாதவன் றனது கரத்தாற் றொடுத்த மகிழணியலைக் கண்டத்தணியுமாத்திரையில்[12] உயிர் மருந்தாக் கொண்டு, வைகறைமதிய மண்டலம் போல வெளுத்திளைத்தழகிய தோற்றமெய்திக் காமநோய்ப்பட்டதென்று யாவராலாராய்ந்தறியப்படவில்லை. மேலும் அந்நாளில், மலர்நிறைப்பொழின் மருங்கில் விளங்குந் தெருத்தொடக்கச் சந்திப்பில் இவர்களது கண்ணிணைந்த பார்வைகள், மோகலீலையுடன் மிகுந்தெழு பேராவலான் விரிந்த கடைவிழியிற் சுழல்வுற்றுத் திகழும் மசிருணம், முக்குதம் என்னும் பார்வையாற் கருவிழியழகுற, அங்கட் செழித்தோங்கு மனங்கனாங் காதற்குரவரது காமக்கலைப் போதனையால் அவ்வுணர்வும், இனிமையு மெழிலுறப் பொருந்தியவாய் என்னாலுய்த்துணரப்பட்டனவன்றோ? மேலும், என் உடன்பிறந்தாற்கு மாலதி அளிக்கப்பட்ட செய்தியைச் செவியுற்ற அக்கணத்தே விரைந்தெழு துயராற் கறுத்து வாடிய மேனியுடைய இவர்களது மனம் பற்றிழந்தாங்குக் காணப்படவில்லையோ? அன்றியும் பிறிதொன்றை யான் மறப்பனோ?

இலவங்கிகை – இதுபொழுது பிறிதொன்றையும் இன்னதெனக் கூறுக.

மதயந்திகை – அஃதென்னையெனில்: எற்குயிரளித்த பெருமகன் மயக்கந்தெளிந்து நினைவுறுங்கால், அத்தகைய நற்செய்தியைத் தெரிவிக்கும் மாலதிக்கு மாதவன், காமந்தகியினது பொருணிறைந்த சொற்பொழிவாற்றூண்டப்பட்டு அவனாற் றனது மனமும் உயிரும் பரிசிலானிலையில் அவள் தானே பற்றிக்கோடற்குரியவாய் அளிக்கப்பட்டன; இலவங்கிகே! அதுகுறித்து “எனதன்புடைத் தோழிக்கு இது விரும்பப்பட்ட அருட்பேறு” என்று நீயும் புனைந்துரைத்தனை.

இலவங்கிகை – தோழீ! உனக்குயிரளித்த அத்தகவுடையோன் யாவன் என்று யான் மறந்தனள் போலும்[13]?

மதயந்திகை – தோழீ! அந்நாளில் யான், விகாரமான கொடும்புலியின் பாய்ச்சற்கிலக்காய்ப் புகலற்றிருந்துழி, எழுவனைய பெரும்புயத்தவனும், ஏதுவிற் சுற்றமுமாகிய எப்பெருமகன் அத்தறுவாயிலருகெய்தி யின்புறுத்தி உலகிற்குளுயரிய பொருளாம் உடலத்தைக் கொடுத்தும், என்னைத் தற்காத்தனனோ; கருணை நிரம்பு மெவன், என் பொருட்டும், திடமுறப்பருத்துயர்ந்தகன்ற மார்பில், இடியேறெனுந்தகைய எல்லாவுகிர்களும் பதியுமடியினைக் கொண்டும், அங்கட்பெருகுமுதிரத்தாற் கண்டத்தணியல் நனைய, அதனாற் செம்பருத்தி மலர்மாலையணிந்தன்ன தோற்றமுடையனாய் அக்கொடும்புலியரக்கனைக் கொன்றனனோ; அவனேயென நினைக.

இலவங்கிகை – ஓ! மகரந்தனா?

மதயந்திகை – (களிப்புடன்[14]) தோழீ! என்ன கூறுகின்றாய்?

இலவங்கிகை – யான் கூறுகின்றேன், மகரந்தன் என்று.

(புன்னகையுடன் இவளது உடலைத் தழுவி)

(1) நீ கூறியாங்கு யாம் அமைவோம்; நின்னொருவளைக் குறித்து என்னை யான் நிகழ்த்துவேன்; அயலாற்பாற் காதற்பற்றெனுங் குற்றமற்றவளும், காமனியலறியாதவளும், குலக்கன்னியுமாகிய இந்த நீ, வார்த்தையளவிற் றன்செயலற்றனளாய் ஏன் கடம்பனைய[15]வுடம் பெய்துகின்றனை?

மதயந்திகை – (நாணமுடன்) தோழீ! என்னையேன் எள்ளி யிகழ்கின்றனை? யான் கூறுமாறு கேள்; காலன் வாய்ப்பட்டுழலுமெனதுயிரைத் தன்னுயிரையுங் கருதாது முயன்று வலாற்காரத்தான் மீட்டிப் பேருதவி புரியுமத்தகைய பெரியோனது சொல்லளவிற் பெயரைக் கோடலும், நினைவு கூரலும் என்னையின்புறுத்துகின்றன. அங்ஙனமே, ஆழப் பதிந்த பேருகிரடியான் விளைந்த வேதனையாற் கலக்கமுறுமேனியின் வழிந்தொழுகு வியர்வையுடையானும், மயக்கத்தாற் குவிந்த குவளைவிழியானும், தரையிலூன்றிய வாளினாற் றாங்கப்பட்ட வுடலையுடையானுமாகிய அப்பெருந்தகைப் பெருமகன் இம்மதயந்திகைப் பொருட்டே பெருமைசாலுயிரையும் வெறுத்தனனாய், உன்னாலுங்காணப்பட்டனன் அன்றோ?

(வியர்வை முதலிய காதற்குறியை நடிக்கின்றாள்)

புத்தரக்கிதை – (இவளது உடலைத் தடவி) உடனலங்குன்றியவளே! உரையினாற் பயன் ஏதுமிலது; மகரந்தனைப் புணர விருப்பத்தை நினது யாக்கையே வெளியாக்கியது.

மதயந்திகை – (நாணமுடன்) தோழீ! போ;போ; உடன்வதியும் மாலதியானே யானுமிதிற்றுணிந்தேன்.

இலவங்கிகை – தோழீ! மதயந்திகே! யாமும் அறியவேண்டுவன அறிந்தேம். ஆதலின் மனம் தெளிக[16]; உனது உள்ளக்கிடக்கையை மறைத்தற்குரிய வஞ்சனைச் செயலையொழிக்க; வருக; மிகுநம்பிக்கையுடன் அளவளாவிப்பேசி யின்புற்றிருப்போம்.

புத்தரக்கிதை – தோழீ! இலவங்கிகை நன்மையே கூறுகின்றாள்.

மதயந்திகை – இதுபொழுது பாங்கியருரைப்படியே செய்வேன்.

இலவங்கிகை – இங்ஙனமாயின் கூறுக; நீ யிந்நாட்களை யெவ்வாறு கடத்துகின்றனை?

மதயந்திகை – அன்புடைத்தோழீ! துன்புறுஞ் செய்தி கேள்; புத்தரக்கிதைக்கு விளைந்த ஒருதலையன்பி[17]னம்பிக்கையால், காண்டற்கு முன்னரே அப்பெருமகன்பாலெனது மனம், இடையறா உவகையானும் வேட்கையானும் இன்புற்றிருந்தது. பின்னர், நல்வினையீட்டிய காட்சியு நெடிதுநேர்பட நிகழுஞ்ச்சோர்வும், துயரும் வெப்பும் விலக்கற்கரியவாய் ஒருமித்து எனது மனத்தைப் புண்படுத்த, அதனால் யான் உயிர்நசையற்றிருந்தேன். காமக்கனலும் உறுப்புக்கடோறுமுள்ளுற வளர்ந்து தாங்கற்கரிய கொடியதாம் அழற்சியைப் புதியதோர்வண்ணமிழைப்ப பாங்கியரனைவரும் வருந்துவாராயினர். “காதலன் கிடைத்தற்குரியன்”, என்னும் நம்பிக்கையிகந்த மாத்திரையில் எய்தற்கெளிய இறப்பின்பமும், புத்தரக்கிதையின் எதிர்மறைமொழிகளாற் கிட்டாதொழியவே, வளர்தருங் காமவேட்கையா னடுக்கமெய்தினளாய் மீண்டுனிலவுலகிற்புக்கு மாளாத் துயரத்தையனுபவிக்கின்றேன். சங்கற்பத்தா னினைவிலும் கனவிலும் காதலானும் காமவெறியானும் மயக்கமெய்தினளாய் அக்காதலனைக் காண்கின்றேன். அன்புடைத்தோழீ! அங்ஙனமே பார்த்துழி, கடைவிழி சிவந்து மிகுந்தெழுவியப்பின் விரிந்தலங்குமிருவிழிகளும் துடிதுடிப்ப, அவை நாணத்துடனசைவுறுந் தாமரைமலரின் றோற்றமுடையனவாக, அத்தோற்றத்தால் அக்காதலன் மதுமதம் பயிலுமியல்பினனாய் என்னைச் சிறுபொழுது கூர்ந்து நோக்குவான். மேலும், செங்கமலத்தாதயின்று சேய குரலமைந்த அன்னப்பறவைபோல அவ்வாண்மகன், செருக்காற் குளறுபடுமின் சொற்களாற் காதலி! மதயந்திகே! என்று என்னைக் கூவியழைத்து இன்னுரை சில செவிகணிறைவுற நிகழ்த்துவான். பின்னர் யான், நாணத்தானடுக்கமுற்றனளாயினும் மனவன்மை யாலவ்வுரைகளைக் கோடாது வேற்றிடஞ் செல்லுங்கால் மேற்சீலையின் முன்றானையைப்பற்றி யென்னையிகழ்ந்து தலைவனென அச்சுறுத்துவான். அக்கணத்தின் முதிர்ந்த தாமரைத் தண்டனைய கைகளான் விம்முறு முலைகளும் வெளிப்படாவண்ணம் கட்டியணைத்து விட்டிடுமளவில், யான் ஒருபுறமாக விரைந்தோட, கலிக்குமேகலை கழன்று கனத்த துடையிற் சிக்குண்டு நடை விசையைத் தணிப்புறுத்த, அக்காதலன், வசைமொழி கூறுவேனாயினும், சினத்தாற் பிணக்குறுமெனது மனத்தைப் பல்லாற்றானும் முயன்று இணக்கமுறச் செய்வன். இன்பனீர்[18] நிறைந்து வழிந்தொழுகு நயனங்களான் எனது உள்ளக்கிடக்கையை முற்றிலுமுணர்ந்து இன்னுரைகளாற் பரிகசித்து யான் தன் செயலற்றிருக்குமாறு முன்னிலும் வலிந்து என்னையிறுகக் கட்டியணைப்பன். அன்புடைத்தோழீ! அங்ஙனம் அணைத்துழி, புலியினது கூரிய உகிர்களுரத்திற் பாய்ந்த அவ்வடுக்களே அத்திறலை யுணர்த்துஞ் சீரிய தகுதிச் சீட்டென அமையும் அம்மார்பில் யான் புல்லுதற்குரிய வலியற்றவளாயினேன். அக்கணம், பரபரப்பிற் சிரமசைதர, அலைவுறு னறுங்குழலைக் கரத்தாலொருமித்து உயர்த்திப்பிடித்து எனது சலிப்பிலா முகத்துடன் தனது வதன கமலத்தையும் நன்கிணைத்து அத்தகைய முகத்தின் வனப்பை முழுதுற நோக்குவன். இடக்கண்டத்தின் முத்தமளித்தும், இதழாரமுதை யின்புறப்பருகியும் எனதுடலை விதிர்ப்பொடு பொடிப்புறச் செய்வன். அன்றியும், களிப்பும், சினமும் மிக்கக் கலந்து இன்பத்துன்பங்களை யிதயத்திற்களிப்ப, அதனாற் பெருமயக்கெய்திச் செய்வகையறியாச் சிந்தையளாகுமென்னை என் காதலன், கலவிக்குரிய பெருமுயற்சியுடையனாய் என்னை என்னையோ இரந்து நிற்பன்; இங்ஙனமே அன்புடைத் தோழீ! யான் கண்கூடாக முற்றிலுந் திளைத்துக் கடிதே விழிப்புற மீண்டும், நல்வினை குன்றினளாய் இன்னிலவுலகைப் பாழ்படு மடவியென்னப் பார்க்கின்றேன்.

இலவங்கிகை – தோழி! மதயந்திகே! விளக்கமுறக்கூறுக; அவ்வமயத்தில் நீ கனாக்கலவி யின்பந்துய்க்குங்கால், மயூரபஞ்சனையிற்[19] சுரோனித மிழிதர அதை நட்பின் மிக்க புத்தரக்கிதை, கூர்ந்து நோக்கிப் புன்முறுவலுடன் உன்னை எள்ளி நகைக்க, அந்நிகழ்ச்சியைப் பாங்கியரறியாவண்னம் மறைத்தனையன்றோ?

மதயந்திகை – அடி! பொருத்தமிலா திகழுமியல்பினளே! போ!

புத்தரக்கிதை – தோழி! மதயந்திகே! இம்மாலதிப்பாங்கியே[20] இத்தகைய செய்தியையறிவள்.

மதயந்திகை – இவ்வண்ணம் மாலதியை யிகழாதே.

புத்தரக்கிதை – தோழீ! மதயந்திகே! என்பாலுனக்கு நம்பிக்கை யிருக்குமாயின், இதுபொழுதொன்று வினாவுகின்றேன்.

மதயந்திகை – இவள் அன்புரிமையைக் கடந்து உனக்குக் குற்றமிழைப்பளோ? ஏன் இவ்வண்னம் கூறுகின்றனை?

புத்தரக்கிதை – மகரந்தன், மீண்டும் எங்ஙனமேனும் உனது கண்களுக்கிலக்காவனேல் அப்பொழுது உன்னாற் செய்யக்கடவதியாது?

மதயந்திகை – உறுப்புக்களொவ்வொன்றினும் சலனமின்றி நாடுமியல்புடை நாட்டங்களை, நெடிது இன்புறுத்துவேன்.

புத்தரக்கிதை – அம்மகரந்தன் காமனால் வற்புறுத்தப்பட்டு, மாதவன் காமற்பயக்கு முருக்குமணியைக் கைப்பற்றியாங்கு, காதல்விளைக்குமுன்னை வலிந்துபற்றி யில்லக்கிழத்தியாக்குமேல், அங்கட் கொள்கையுனக்கென்னை?

மதயந்திகை – (நெட்டுயிர்த்து) இங்ஙனம் நிகழுமோ? இவ்வுரையளவில் என்னையேன் தேறுதற்படுத்துகின்றாய்?

புத்தரக்கிதை – தோழீ! விளக்கமாகக் கூறுக.

இலவங்கிகை – தோழீ! இவளது மனவுறுதியைத் தெரிவிக்கும் நெட்டுயிர்ப்பே,[21] விடைபகர்ந்ததாதலின், மகரந்தனை யிங்குச் சேர்ப்பித்தற்குரிய வழியினைத் தேடுக.

மதயந்திகைதோழீ!தன்னுடலையடகிட்டுக் காலன் வாயினின்றுமவனே வலிந்து பற்றியதும், அவற்கேவயத்ததாய் அடிமைப்பட்டதுமாகிய எனதுடற்கு யானுரியளாவனோ?

இலவங்கிகை – ஆழமுடைமைக்குத் தக்கவாறு அறைந்தனை.

புத்தரக்கிதை – இக்கூற்று நினைவிலிருக்குமோ?

மதயந்திகை – என்னே! இரண்டாம் யாமக்கூறைத் தெரிவிக்கும் முழவும் முழங்குகின்றதே; ஆதலின், விரைந்து சென்று வற்புறுத்தியாதல், அடிவீழ்ந்திரந்தாதல் நன்தனனை மாலதியின்பால் நேர்படச் செய்வேன். (என்று எழ விரும்புகின்றாள்)

(மகரந்தன் முகத்தைத் திறந்து அவளைக் கையிற் பற்றுகின்றான்)

மதயந்திகை – தோழீ! மாலதீ! விழிப்புற்றனையா? (உற்று நோக்கிக் களிப்புடனும் அச்சத்துடனும்[22]) என்னே! இது வேறுபாடாய் இலங்குகின்றது

மகரந்தன் – (2) கதலித்தொடையாளே! கலக்கமொழிக்க; உனது சிற்றிடை, நடுக்குறுந்தனங்களின் மாறுபடுநிலையைத் தாங்கற்கியலாதாகும். இங்ஙனம் நினதுரையானே வெளிப்படுக்கப்பட்ட அன்புருவாமருட்பேறுடையிவன், சங்கற்பப் புணர்ச்சி நுகர்ச்சியிற் பழகிய ஊழியனேயாம்.

புத்தரக்கிதை – (மதயந்திகையின் முகத்தை உயர்த்தி)

(3) மதயந்திகே! விருப்பம் பலவற்றானும் நீ முன்னர் எவனை வரித்தனையோ அவனே உனதன்பிற்குறையுளா இங்கண் வதிகின்றான். அமாத்திய நந்தனனது இம்மந்திரத்திற் பணியாளரனைவரும் இந்நிகழ்ச்சியைக் கருதிலராய் உறங்குகின்றனர். நாம் வெளிப்போந்துழி நகர்க்காவலரும் நம்மையறியாவண்ணம் இருளும் அடர்ந்திருக்கின்றது; ஆதலின், செய்நன்றி[23]யறிந்தே மணவினைப்புரிக; மணம்புரிந்த மேற் சிலம்பின் மணிகட் புலம்பாவண்ணம் அவற்றை உயர்த்திப் பிணித்துச் செல்லுவோம்; வருக.

மதயந்திகை – தோழீ! புத்தரக்கிதே! நாம் எங்குச் சேறல் வேண்டும்?

புத்தரக்கிதை – மாலதி யெங்குச் சென்றனளோ; அங்ஙனமே.

மதயந்திகை – என்னே! மாலதி தன் பிடிவாதத்தை நிறைவேறப்பெற்றனளா?

புத்தரக்கிதை – ஆம்; பிறிதொன்றையும் யான் உனக்குக் கூறுவேன்.

“தன்னுடலையடகிட்டுக் காலன் வாயினின்றும் அவனே வலிந்து பற்றியதும், அவற்கே வயத்ததாய் அடிமைப்பட்டதுமாகிய எனதுடற்கு யானுரியளாவனோ”

என்று நீ கூறியாங்கு நிற்க.

மதயந்திகை – (கண்களிற் களிநீர்[24] சொரிகிறாள்)

புத்தரக்கிதை – பெருந்தகைப் பெரும! எனதன்புடைத் தோழி களி நீருகுத்தலான் தன்னை நின்பாற் றானேயளித்தனள்.

மகரந்தன் – (4) கருணையாற் சுமுகன் கயற்கொடித்தேவனால், நண்பனது மணவினையுடன் என்றிருமணமும் நிறைவுற்றனவென்னு மிவ்வளவில் யானிதுபொழுது விறன்மிகு வெற்றி பெற்றேன்; பெறலருங் காதலிப் பேற்றினும் பெறற்குரிய பிறவென்னை? எனது பயன்பெறு காளைப் பருவத்திற்கும், இந்நாள் நன்னாளாகும்; ஆதலின் இப்பாரிச வாயிலாகச் செல்லுவோம். (மெல்லென நடக்கின்றனர்)

என்னே! நள்ளிரவினடமாட்ட மின்மையாற் கோப்பெருந்தெரு, புறஞ் செலற்குதவியா மிகுவனப்பெய்துகின்றது இப்பொழுதோ;

(5) மாளிகைகளினுடைய மேன்மாடங்களின் கொடுங்கைகளில் அமைக்கப்பட்ட பெரிய சாளரங்களிற்புக்கு வெளிப்போந்த மந்தமாருதம், மோப்பிற்கினிய சுரை மணம்விரவிக் கமழ்தலானும், நிரைமலரங்கலின் விரையான்மிக்கதாய் மிகப்பொதுளிய கருப்பூரவாசனை வீசுதலானும், ஆடவர்களது தம் மனத்திற்கினிய மடவரற்கலவியை வெளிப்படுத்துகின்றது.

(என்று எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவம் என்னும் நாடகத்தில் ஏழாம் அங்கம் முற்றிற்று


[1] புத்தரக்கிதை – “மகரந்தன், மதயந்திகை யிவரது மணவினையில் என்னால் முன்னரே புத்தரக்கிதை நியமனஞ் செய்யப்பட்டுள்ளாள்”, என்று காமந்தகியாற் குறிப்பிடப்பட்டவாறு புத்தரக்கிதையின் சூழ்ச்சியான் இவரது மணவினையைக் கூறுவான்றொடங்குகின்றார்.

[2] இன்புற – “மாலதி நகர்க் கடவுட் பூசனையாற்றி வந்தனள்” என்னும் வார்த்தையை நிறுவி மாலதிக்குரிய வுபசாரங்களையே யிவற்கியற்றி யொருவரானு மறிதற் கியலாதும், அரசனைச் சார்ந்தோராற் றுன்புறாதும் மகரந்தன், சூழ்ச்சியினமைவாற் காக்கப்பட்டான் என்பது கருத்து; இதனால், வேடமாலதிக்கும் நன்தனனுக்கும் மணவினை நிகழ்ந்ததென்பது கூறப்பட்டது.

[3] திருவுடைத்தாக்கும் – புதுமனைப்புகுவிழா நிகழுங்காலம் மாலைப்பொழுதாதலின் பணியாளரனைவரும் பிறிதொன்றையுங்கருதாது அவ்விழாவில் விரைந்து முற்படுவாராக, இதுகாலை மதயந்திகையை மகரந்தனுடன் சேர்த்தற்குரிய காலமாதலின் புத்தரக்கிதையின் முயற்சி நற்பயனுடைத்தாகுமென்பது கருத்து.

[4] மகரந்தனால் – இது, கபடமாலதியையுணர்த்தும்.

[5] இந்நிகழ்ச்சியின் வாயிலாக – சகோதரன்பாற் பிணக்கமுற்ற மாலதியின் இணக்கத்தை நிமித்தமாக்கொண்டு மதயந்திகையை மகரந்தனிடஞ் சேர்ப்பித்தலையுணர்த்தும்.

[6] அக்காரணம் – என்பது கபடமாலதியை இணக்கமுறச் செய்தலை.

[7] நன்தனன் குறித்து இங்குக் கூறப்பட்ட அடைமொழியாவும் எதிர்மறைப் பொருளிலமைந்து அவ்வப்பண்புக்கள் அவள்பாலமையாமையையுணர்த்தும்; அதனால் மாலதி மனவருத்தமுறற் சாலப் பொருந்துமென்பது போதரும்.

[8] இகழ்தற்குரியளாகாள் – இதனால் மாலதி, தன்னை மதியாமை நாணத்தின் குற்றமென்றறியாத நன்தனன், காமவயத்தனாய்க் கண் தெரியாது அவளை வலாற்காரத்தாற் புணர முற்பட்டானாதலின், இவனே இகழ்தற்குரியன் என்பது விளங்கும்.

[9] பூவியல்பினர் – வாடாநிலையின் மலர்களைக் கோடலான், அவை நறுமணம் அகலாவாய் இன்பந்தருமன்றி வலிந்து பற்றிடில் மணங்குன்று மாத்திரையிலன்றி அனுபவத்திற்குரியனவாகா; அங்ஙனமே மெல்லியலாரும் ஆம் என்பது கருத்து.

[10] தலைவன் – இது காதலியைத் தலைவியென்று கருதாமையையுணர்த்தும்.

[11] அஃதே – அவ்வுலகவார்த்தையே ஒருவர்பாலொருவர் இகழ்தற்கு நிமித்தம் என்க.

[12] கண்டத்தணியுமாத்திரையில் – மகிழணியல் உயிர்மருந்தாந்தன்மை இருபேர்க்கும் ஒக்கும்.

[13] மறந்தனள் போலும் – இங்ஙனம் கூறினமை, மதயந்திகையைச் சொல்விக்கு மரத்திரையின் மறைவிற் படுத்திருக்கும் மகரந்தனுக்கு, அவளது அவாமிகுதியை யறிவித்தற் பொருட்டு.

[14] களிப்புடன் – மீண்டுங் காதலன் பெயரைச் செவியுறலே களிப்பினிமித்தம்.

[15] கடம்பனைய – இவ்வுவமை காமவேட்கையானிகழ்ந்த புளகத்தையுணர்த்தும்; இதனால் வாலைப்பருவத்தினும் வாலிபனொருவன்பால் மயக்கமுற்றிய தன்னிலையுணராது, பிறரையிகழ்தலடாது; என்பதை மதயந்திகைக்கு வலியுறுத்தும். கடம்பு – அடப்பமலர்.

[16] மனம் தெளிக – தெளிந்து வஞ்சனையொழித்து உண்மையைக் கூறுவையேல், உனது விருப்பனிறைவுறத் தகுஞ் செயற்புரியமுயலுவேன் என்பது கருத்து.

[17] புத்தரக்கிதைக்கு விளைந்த ஒருதலையன்பு – மதயந்திகை, மகரந்தன் இவ்விருவர்பால் விளைந்த அன்பை; “புத்தரக்கிதை, தகுதியில்வழி யன்புடையளாகாள்” என்பது மதயந்திகையினம்பிக்கை; ஒருதலையன்பைப் பட்சபாதமென்ப.

[18] இன்பனீர் – இது, சினம் சொல்லளவிலன்றி உள்ளங் கவர்ந்தெழுந்தோங்காமையை உணர்த்தும்.

[19] மயூரபஞ்சனை – மயில்வடிவினதாய் அமைக்கப்பட்ட பஞ்சுமெத்தை.

[20] இம்மாலதிப்பாங்கியே – இதனால், நீ யெங்ஙனம் மகரந்தனை யன்றிப் பிறரை மணப்பதில்லையென்று முறுதிகொண்டனையோ; அங்ஙனமே மாலதியும் மாதவனையன்றிப் பிறரை மணக்க விரும்பாள் என்னுமிவ்வுண்மை மதயந்திகைக்கு வலியுறுத்தப்பட்டது.

[21] நெட்டுயிர்த்தல் – இது, மகரந்தன் தானே வலிந்து பற்றிக் கோடலில் இவளது உடன்பாட்டை யுணர்த்தும்

[22] களிப்புடனும் அச்சத்துடனும் – மகரந்தனை மணாளனாக்கோடலிற் களிப்பும், அவன் பக்கலிருந்தும் இவ்வுண்மையறியாது பலபடக் கூறிய நிலையில் அச்சமும் நிகழ்ந்தனவென்பது கருத்து.

[23] செய்நன்றி – இது வேங்கையை வென்று மதயந்திகைக்கு உயிரளித்த பேருதவியை உணர்த்தும்.

[24] களி நீர் – இது, களவு மணத்தில் உடன்பாடெய்தும் மதயந்திகையின் மன நிலையை உணர்த்தும்.

Leave a comment