மாலதீமாதவம் – ஐந்தாம் அங்கம்

ஐந்தாம் அங்கம்

(கபாலகுண்டலை[1] அச்சுறுத்துவதும் தேசுற்றதுமாகிய வேடம்பூண்டு ஆகாயமார்க்கமாகப் பிரவேசிக்கின்றாள்)

கபாலகுண்டலை – ஆறின்[2] மிகுந்த பத்து நரம்புகளானாய வட்டவடிவமான வுடற்கூற்றினடுவில் ஒளிர்வுறும் ஆன்ம வத்துவும், அவ்வான்மாவை யுணர்வாருள்ளத்திற் றன்படிவம் திடம்படவமைத்து அவர்க்குச் சித்தியளிப்பவரும் பிறழ்ந்தலையாமனத்தரான சாதகரால்[3] தேடப்படுகின்றவரும், சத்திதேவி[4]யராற் சூழப்பட்டவருமாகிய சத்தினாதன்[5] சிறப்புறத் திகழ்கின்றனர். (1)

இப்பொழுது இந்த யான், எப்பொழுதும் ஆறங்கக் குழு[6]வினிடையில் நிலைப்படுத்தப்பட்டு இதய கமலத்திலொளிர்தரும் ஆன்மாவைச் சிவ வடிவாகப் பார்ப்பவளாய், வாயுவை அவ்வவ்விடங்களில் இலயப்படுத்தி[7], யதனாற் துடித்தன் முதலியன[8] முறையானே உலகிற்கு முதற்கருவிகளான அழிவிலா ஐம்பெரும்பூதங்களையும் வலிந்திழுத்தலான் வானச் செலவில் வருத்தமற்றவளாய் வானிடை யெதிர்வரும் வான்முகிற் பிளந்திங்கு வந்தோன். (2)

மேலெழுந்தலையுங் கபாலங்களாற் றொடுக்கப்பட்ட அம்மாலையில் அவைகள் ஒன்றோடொன்று உராய்தலாற் கீழ்மேலான சதங்கைகள் ஒலிப்ப, வானவெளியிற் செல்லும் விசையானது, என்பானிறைந்திலங்கும் பேராற்றலை வெளிப்படுத்துகின்றது (3)

அப்படியே!

சடைக்கற்றையானது, வலிந்து கட்டப்பட்டிருப்பினும், எப்புறத்துஞ் சிதறி மிகவும் அலைவுறுகின்றது. சூலத்திற் கட்டப்பட்ட பெருமணியானது அலைவுற்றுத் தொடரொலியுடனீண்டு இனியதாய் ஒலிக்கின்றது. அசைவுறுங் கபாலங்களின் புழைகளிற் புக்கு ஒலிக்கும் பெருவிசைக்காற்று, சதங்கைளிடையறாதொலிக்க வேதுவாக, மேற்றுகிற் கொடியை அசைக்கின்றது. (4)

(சென்று பார்த்து)

பழமையான வேப்ப நெய்யிலூறவைத்து அந் நெய்யினால் வறுக்கப்படும் உள்ளி மணம் நாறும், ஈம விறகின்றூமங்களான் அதன் கீழுய்த்துணரப்படும் சுடலையினருகிலிக்காளிகோயில் விளங்குகின்றது. மந்திரஞ் செபித்தலைப் பூர்த்தி செய்யுமெனது மந்திரக்குரவர் அகோரகண்டருடைய கட்டளைப்படி யிக்காளி கோயிலில் இப்பொழுது யான் கடவுள் வழிபாட்டிற்குரிய திரவியங்களை முற்றிலுமிங்குச் சேர்பித்தல் வேண்டும். “குழந்தாய் கபாலகுண்டலே இம்மந்திரஞ் சித்தியாமேல் கராளை யென்னுமிக்காளிதேவிக்குப் பெண்மணியொருவளைப் பலியிடல் வேண்டும்; அப்பெண்மணியும் இப்பதிக்கண்ணே வதிகின்றனளாமென்று புலப்படுகின்றது”, என்று எனதாசிரியர் என்பால் முன்னர்க் கூறியுள்ளார்.

(வியப்புடன் நோக்கி)

இவன் யாவன்? ஆண்மையும்[9], இனிமையும்[10] ஆர்ந்திலங்கு மெய்யனாய்ச் சரிந்த கூந்தலைச் சடைமுடியாவுயர்த்திக்கட்டி யொள்வாளேந்தி யிச்சுடலையில் வருகின்றான்; எந்த இவன்,

(5) குவளை மலரிதழனைய கரியமேனியனெனினும், வேட்கையானொளி மழுங்குமுறுப்பினைத் தாங்கி, வனப்புறுமச்சிலாக்கானடை கொண்டு, மதி  நிகர்வதனம் மாணொளி பரப்ப இங்குக் காணப்படுகின்றானோ[11]? எந்த இவனது இடக்கரம், உதிரப்பெருக்கொழுகு நரமாமிசம் நிரம்பியுள்ளதாய் வீரச் செயலை வெளிப்படுத்துகின்றதோ? அத்தகைய இவன், காமந்தகியின் தோழனது புதல்வன் மாதவனே! மகாமாமிசத்தை விலைப்படுத்துகின்றான். இதனால் எற்கென்னை? யானும் எனது விருப்பத்தை[12] நாடுவேன். மாலைப்பொழுதும் பெரிதுங் கழிந்தது. அங்ஙனமே.

வானமருங்குகள், பச்சிலைப் பூங்கொத்துப் பந்தியன்ன இருட்பிழம்புகளான் மறைக்கப்படுகின்றன. தரையும், கரைபுரண்டு கலங்கி வரும் புதுமழை நீரில் மூழ்குவது போல அவ்விருளின் மறைகின்றது. இரவு, அதன் றொடக்கத்திலும், சுழற்காற்றின் விசையாற் பலபுறத்தும் படர்ந்து சூழ்ந்து அடர்ந்து புகைநிறம் பொருந்துந் தனது கருமையை அடவிகளிலடர்ப்புறுத்துகின்றது.

(என்று சென்றனர்)

சுத்தவிட்கம்பம்

(குறித்த நிலையில் மாதவன் பிரவேசிக்கிறான்)

மாதவன் – (விருப்பமுடன்) பிரேமை[13] நிறைந்தனவும், பிரயணத்தைப் பற்றினவாய் அதன் பயிற்சியால் வேறூன்றிய அநுராக எழுச்சியையுடையனவும், இயல்பான இனிமை பொருந்தியனவுமாகிய செங்கணாளின் அவ்வவ் வேட்கைச் செயல்கள் என்பானிகழவேண்டும். இங்ஙனம் விரும்பி வேண்டப்படுமப்பொழுதே அவைகளில், உட்கரணமொடுங்கி, யதனால் புறக்கருவிகளின் செயலுந் தடைப்பட அது மகிழ்  நிறைவுறுகின்றது[14].(7)

மேலும்,

அன்புடைக்காதலி, எனது கண்டமூலத்திற் றனது முகத்தையணைத்து, நெகிழப்புனைந்த மகிழமாலை யிடையறாதிலங்கு மிருதனங்களானு மென்னை யவளிருகத்தழுவ, அவளது உறுப்பு வினிமயத்தை[15] யானெய்துவனோ? (8)

அன்றேல், இவ்வுறுப்பு வினிமயமெய்தற்கரியதாதலின், பிறிதொன்றனையே கோருவேன்;

எந்த வதனத்தைப் பார்த்துழி விளைந்த இன்பங்கள் யாவும் ஒருமித்து மனத்திற் பெருமிதத்தைச் செய்கின்றனவோ; அங்ஙனமே, கட்பொறி நுகருங்கழிபேருவகையும், அம்முகத்தை மீண்டுங் காணவேண்டுமென்று அவாவை விளைக்கின்றதோ? எந்தமுகம், இளம்பிறைக்கலைக்[16] குழுவின் மிகுந்தெழுஞ் சாரங்களாற் படைக்கப்பட்டதோ; அம்மாலதியினது அத்தகைய மதனமங்கலமந்திரமா[17] யிலங்கும் முகத்தை மீண்டுங் காண விரும்புகின்றேன். (9)

இதுகாலைக் காணப்படுந்தோற்றம், மெய்மையாகாது; என்னுமிவ்வளவே, உண்மைக் காட்சியினும் சிறிது வேறுபாடுளது.

முதிர்ந்தழுந்திய[18] முன்னையனுபத்தினின்றும் உண்டாகிய நினைவுத் தொடர்பினது இடையறா விளக்கத்தான் விரிவெய்தி, அதனில் வேறுபட்ட பிறவுணர்ச்சிகளாற் றடைப்படுத்தற்கியலாது பெருகும் காதலி நினைவாகும் அறிவெழுச்சியின் றொடர்பானது.[19]

அந்தக்கரண[20] விருத்திக்குச் சாரூப்பியம்[21] உண்மையான் இப்பொழுது எனது ஆன்மாவை அவளது வடிவு போலவே[22] செய்கின்றது.

அவ்வன்புடைக்[23] காதலி, நமது மனத்தில், இலயித்தவள் போலும், எதிருருவடைந்தவள் போலும், வரையப்பட்டவள் போலவும், சிற்பமுறையால் வகுக்கப்பட்ட உருவினள் போலும், இழைக்கப்பட்டவள் போலும், கலவைச் சுண்ணத்தாற் கட்டப்பட்டவள் போலும், உள்ளே புதைக்கப்பட்டவள் போலும், காமனது ஐங்கணைகளானும் தமருறப் பிணைக்கப்பட்டவள் போலும், சிந்தனைப் பெருக்கமாம் நூற்பெருங்கற்றையால் நெருக்குற நெய்யப்பட்டவள் போலுமிணைந்தனள். (10)

(வேடசாலையிற் கலகலவொலி யெழுகின்றது)

மாதவன் – என்னே! இப்பொழுது இங்குமங்குமலைந்து திரிகின்ற பேய்கணிறைந்த சுடலைக்கு, அச்சுறுத்துந்தன்மை.

இவ்விடத்தில்.

சிதைத்தீயின் மருங்குவரைப் படர்ந்து நெருங்கித் திரண்டு இருத்தலின் அச்சத்தை விளைக்கும் இருளானது, தன் கருமையின் பருமிதத்தால் அச்சுடலைத் தீயை மிக விளக்குகின்றது. கடபூதனை முதலிய பேய்கள், கொழுத்தனவாய் ஒன்று சேர்ந்து விரைந்து ஆடற்புரிந்து கோலாகலமாகப் பேரொலியைச் செய்கின்றன. (11)

ஆதலின் இவைகளை உரக்க அழைப்பேன்;

ஓ! ஓ! சுடலையிலிருக்குங் கடபூதனைகளே!

கணைகளாற் சுத்திசெய்யப்படாதாய் நீங்கள் கோடற்குரியதும், பிணி முதலியனவின்றிப் புசித்தற்கினியதும், பெண்பாலரினுஞ் சிறந்த ஆடவர் உறுப்புக்களாற் செய்யப்பட்டுச் சுவைபொருந்தியதுமாகிய மகாமாமிசம்,[24] உண்மையில் விலைப்படுத்தப்படுகின்றது. விரைந்து பெறுக; என்று. (12)

(வேடசாலையில் மீண்டும் கலகல வொலியெழுகின்றது)

என்னே! யான் கூவியழைத்த அக்கணமே இப்பேய்கள், ஒருமித்து ஆர்ப்பரித்து வருங்கால், சுடலையின் எல்லாப்பாகமும் அதிர்ப்புறுவது போலாகிறது. ஆச்சரியம்.

காணத்தக்கதும் காணத்தகாததும் இணைத்து நீண்டதுமாகிய உடலையுடையனவும், இங்குமங்கும் அலைகின்றனவுமாகிய கொள்ளிவாய்ப்பேய்களுடைய முகங்கள், காதளவு நீண்ட பிளவுறுங் கடைவாய்களை விரித்தலான் விளங்கும் நெருப்பையுடையனவாய், கூரிய திற்றிப்பற்களினிறைந்தனவாய், மின்னற்குழுவுக்கு நிகரான உரோமம், கண், புருவம், மீசை யிவற்றையுடைய வாய், வானவெளி யினிறைவுறுகின்றன. (13)

மேலும்,

பேரீச்சமரத்தளவாகக் கணுக்கால்களை யுடையதும், கரியதோலான் மறைக்கப்பட்டு எப்புறத்தும் பரவிய நரப்பு முடிகணிறைந்த என்புக்கூடுகளையும் முதிர்ந்த உடலெலும்பையுமுடையதுமாகிய இப்பூதனைப்பேய்க்குழாம், மிக்க ஆவலுடன் ஒருமித்து நரமாமிசத்தைப் புசிக்குங்கால், பிதிர்ந்து வீழ்ந்த அவ்விறைச்சிக் கண்டங்களாற் சுற்றிலும் சிறிது கரகரச் சத்தமுடன் ஊளையிடுஞ் சென்னாய்களுக்கு உணவு கொடுத்து அவற்றை வளர்ப்பதாய்க் காணப்படுகின்றது.

(எப்புறமும் பார்த்துச் சிரித்து)

என்னே! இப்பேய்களின் நிலைமை.

மிகச் சிதைவுற்றுலர்ந்த வுடலையுடைய பேய்கள், விரிந்தசையும் நாவினாற் கொடியதும், துரவு போன்றதுமான வாயினை விரித்தலான், அரவங்கள் ஊர்தலின் அச்சுறத்தகும் புழைகளையுடைய கரிந்த பழமையான சந்தணத் தருக்களின் றோற்றத்தை யெய்துகின்றன. (15)

(சென்று பார்த்து)

அந்தோ! எதிர்மருங்கில் மிக்க அருவருப்புக் காணப்படுகின்றது.

புல்லியதோர் பிசாசம், முதலில் தோலை உரித்துரித்து, பிறகு சதைக்கொழுப்பு மிகுந்தனவும், புயம், இடையின் முன்புறம், பின்புறம் முதலிய உறுப்புக்களில் எளிதிற் கிடைத்தற்குரியனவும், தாங்கொணாத் துர்நாற்றமுடையனவுமாகிய இறைச்சிகளைப் புசித்து, உயிர், நரம்பு, குடல், கண் இவற்றைப் பறித்து அருகிருக்கும் என்புக்கூட்டினின்றும் உள்ளும்புறத்தும் இருக்குமிறைச்சியை, பற்களை யிளித்துக்கொண்டு பரபரப்பின்றித் தின்கின்றது. (16)

மேலும்,

இப்பிணம் தின்னும் பேய்கள், மிகுவெப்பத்தானீர்வடியு மென்புக்களை யுடையனவும், கொதிப்பினால் வழிந்தொழுகு மூனீரையுடையனவுமாகிய சவ உடலங்கள், மிகப்புகைவனவாயினும், பெரிய சிதைகளினின்று மவற்றையிழுத்தும், மிக நைந்தொழுகு மாமிசங்களையுடையதும், அசைந்து இருபுறச் சந்தியினின்றும் நழுவியருகில் விழுந்ததுமாகிய கணுக்கான் முடிப்பை யிழுத்து அதிலிருந்து பெருகும் ஊனீர்ப்பெருக்கைப் பருகுகின்றன. (17)

(நகைத்து) என்னே! பேய்களுக்கு மாலைப்பொழுதிலுண்டாகும் பெருங்களிப்பு;

நரம்புக்களாற் கட்டப்பட்ட மங்கல கங்கணங்களை யுடையனவும், பிணப் பெண்களுடைய கரங்களாகும் தாமரைமலர்களையே விளங்குமுடியணிமாலையாக் கொண்டனவும், உதிரச் சேற்றைக் குங்குமத்திலகமாக அணிந்தனவுமாகிய இப்பேய்ப்பெண்கள், பிணங்களின் இதயமாகுங் கமலங்களை மாலையாக விரைந்தணிந்து, தன் காதலருடன் கூடி, என்புக்களினிரசமாகுங் கள்ளைக் கபாலங்களாகும் பாத்திரங்களான் மிகக்களிப்புற்றனவாய்ப் பருகுகின்றன. (18)

(சென்று மீண்டும் “கணைகளாற் சுத்திசெய்யப்படாததாய்” என்ற 12ஆம் சுலோகத்தைப் படித்து)

என்னே! மிகுந்த அச்சத்தை விளைக்குமுருவ முதலியவற்றையுடைய பேய்கள் யாவும் விரைவிற் சென்றனவே! அந்தோ இப்பேய்கள் யாவும் வலியற்றன.

(மனவருத்தமுடன்)[25]

இச்சுடலையினிறுதிகாறும் தேடப்பட்டது அங்ஙனமே முற்புறத்தில்,

ஒலிக்குங் கொடிக்குடிசைகளில் இருக்குங் கூகைக்குழுவின் பேரொலியுடனியைந்து ஊளையிடும் நரிகளினது கொடிய பேரிரைச்சலாற் பயங்கரமான தடங்களோடு கூடியதும், உண்மருங்கிற் சிதறிவீழ்ந்த என்புக்கூடுகளின் கபாலங்களிற் புக்குத் தடைப்பட்டுப் பருமிதங்கொண்டுக் கரைகடக்கும் நீர்ப்பெருக்கின் பேரொலி முழக்கொடு கூடியதுமாகிய நதி, சுடலையின் முடிவிற் காணப்படுகின்றது.

(வேடசாலையில்)

ஆ! அருளிலாத் தந்தையே! இப்பொழுது, தமதரசனது விருப்பத்தை நிறைவேற்றுதற்குரிய கருவியாகிய இவ்வுயிர் அழிவெய்துகின்றது.

மாதவன் – (கருத்துடன் செவியேற்று) அச்சத்தானடுக்குறுஞ் சக்கிரவாகத்தினது ஒலிபோல மெலிந்தினிய இக்குரலானது மனத்தைக் கவர்வதாய் முன்னறியப்பட்டது போலச் செவிகளோடுத் தருக்கமெய்துகின்றது[26]. இந்நாதத்தைக் கேட்டமேல், மனம், உட்பிளந்து சுழல்வுறுகின்றது. ஒவ்வோருறுப்பும் கலக்கமுறுகின்றது. மெய்தம்பித்து, நடையைத் தடைப்படுத்துகின்றது; என்னே! இவ்விரக்கவொலியினெழுச்சி; என்னேயிது![27] (20)

இவ்விரக்கவொலி, கராளையின் கோயிலினின்றும் எழுவதாக அறியப்படுகின்றது; ஆதலின், அக்கோயில் இத்தகைய கொடுஞ்செயல்களுக்கு நிலைக்களனேயாம். (21)

ஆகுக; காண்பேன்[28] (என்று செல்கின்றான்).

(பிறகு காளிபூஜையில் முயன்ற கபாலகுண்டலையும், அகோரகண்டனும், கொலைக்குறியிடப்பட்ட மாலதியும் பிரவேசிக்கின்றனர்)

மாலதீ – ஆ! அருளிலாத் தந்தையே! இப்பொழுது தமது அரசனது விருப்பத்தை நிறைவேற்றுதற்குரிய கருவியாகிய இவ்வுயிர் அழிவெய்துகின்றது; ஆ அன்னையே! விலக்கற்கரிய விதியின் கொடுமையால் மனமழிந்தனை; ஆ! காமந்தகிப் பெரியோய்! மாலதியாமுயிருடையாளே! எற்கு மங்கல மியற்று மொன்றனையே தற்பயனென்றச் செயலும் புரியுமியல்பினளே! என்பாலன்பின் காரணமாக மிகு துயரமெய்துகின்றீர்; ஆ, அன்புடைத்தோழீ இலவங்கிகே! யான் உனக்குக் கனவின் மாத்திரையிற் காண்டற்குரியளாயினேன்!

மாதவன் – அந்தோ! இப்பொழுது எனதையுறவு நீங்கியதே; உயிருடன் இவளையான் காப்பனேல் பிறவியின்பயனை யெய்துவேன்.

காபாலிகர் – காலடி நடையின் பெருமையால் மிகவும் அழுந்திய தரையைத் தாங்கவியலாது கூர்மத்தின் முதுகென்பு வளைதர அதனால் உலக நிலையை நெகிழ்த்துவதும், அழ்ந்த பிலத்தை நிகர்த்த கன்னக்குழிகளில் உட்கொள்ளப்பட்ட எழுகடலுடையதும், களிப்புறும் நீலகண்டன் மன்றுள் விளங்குவதுமாகிய உனது நடனத்தை வணங்குகின்றேம். (22)

மேலும்,

(தண்டகம்)

அசைகின்ற கரியுரிவையாகு முத்தரீயத்தின் முன்றானையிலிருக்கும் உகிர்கள் உராய்தலாற் கீறப்பட்ட இந்துவினின்றும் வழிந்தொழும் அமுதப்பெருக்காற் பிழைப்புறும் கபாலங்களின் மாலை பெருநகை புரிய, அதனால் அச்சுறும் பூதகணங்களாற் புகழப்பட்டதும், சீறுகின்ற கருநாகங்களாகும் தோள்வளைகளின் பிணிப்புக்கள் நெறுக்குறவதனால் விரிந்து விளங்கும் படங்களின் அடிப்புறமான கண்டத்தினின்றும் வெளிவரும் விடச்சுவாலைகளால் வெருவுறுத்துவனவும், விரிக்கப்பட்டனவுமாகிய கரக்குழாத்தினால் பலபுறத்துமெறியப்பட்ட மலைகளையுடையதும்,

எரிதருமங்கியாற் பொன்னிறமாகிய கண்ணொளிக்கற்றையாற் பயங்கரமான சிரத்தை வட்டமாகச்சுற்ற, அச்சுழல்வாகும், கொள்ளிச்சுழலிற் பொருந்திய திசை முடிவுகளையுடையதும், உயர்த்தப்பட்ட சூலத்தின் முடியிற்கட்டப்பட்ட துகிற்கொடியினசைவால் வீழ்த்தப்பட்ட விண்மீன்களையுடையதும், களிப்புறுங் கடபூதனை முதலிய மதித்த வேதாளங்களின் தாளங்களாற் செவிபடுங் கௌரிதேவி கலங்கித் தன் கணவனை வலிந்திறுகத்தழுவ, அதனால் மகிழ்வுறு மனத்தனாய முக்கண்ணனைக் களிப்புறுத்துவதுமாகிய தங்களது திருநடனம், தேவி! துன்பம் தவிர்த்து எங்கட்கின்பத்தை யளித்தருளல்வேண்டும். (23)

(என்று நடிக்கின்றனர்)

மாதவன் – என்னே! எள்ளற்குரிய கருத்தின்மை[29]. செஞ்சாந்து பூசப்பட்டவளும், செவ்வலங்கலும் செந்துகிலுமணிந்தவளும், வசுப்போன்ற[30] பூரிவசுவின் புதல்வியுமாகிய அத்தகைய இவள், செந்நாய்களின் பாற்பட்டுழலும் பெண்மான் போல கொலைத்தொழிற் புரியும் பாசண்டக் கீழ்மகன்வயத்தளாகி நடுக்குற்றனளாய் இறக்குந் தருவாயிலிருக்கிறாள்; அந்தோ! எனதாசையைச் சுடல்வேண்டும்[31]; கொடுமையினுங் கொடுமையே நிகழ்ந்தது. என்னே! கருணையில் விதியின் செயல். (24)

கபாலகுண்டலை – மங்கலமங்கையே[32]! இப்பொழுது கொடிய காலன் உன்னை விரைவுறுத்துகின்றான்; ஆதலின் உனக்கு உயிர்த்துணைவனாகுமொருனை யீண்டு நினைக; (241/2)

மாலதீ – ஆ! இறைவ! மாதவ! யான் வானுலகெய்தினும், தங்களால் நினைக்கத்தக்கவள்; அருமைக் காதலனாகிய தாங்கள் நினைக்கு மாற்றால் யானிறந்துமிறவா நிலையெய்துவேன்.

கபாலகுண்டலை – என்னே![33] இரங்கற்குரிய இவள் மாதவன்பாற் காதற்பெருக்குடையவளா?

அகோரகண்டன் – (வாளை உயர்த்தி) பகவதி! சாமுண்டி! மந்திரப்பயிற்சியின் றொடக்கத்தில் வேண்டப்பட்டு நிறைவேற்றப்படும் பலிப்பூசையை யேற்கவேண்டும்; (25)

மாதவன் – (விரைந்து சென்று வாளை மணிக்கரத்தாற் பற்றியெறிந்து) அடா! துட்டப்பயலே! கெட்ட காபாலிக! செல்லுதி! நீயே திருப்பிக் கொல்லப்பட்டனை.

மாலதி – (பரபரப்புடன் பார்த்து) காத்தருள வேண்டும்; பெருந்தகைப்பெரும! (என்று மாதவனைத் தழுவினள்).

மாதவன் – நல்வினையுடையாளே! அஞ்சற்க! இறக்கும் அமயத்தும் ஐயுறவைத் துறந்து புலம்புங்கால் தடைப்படாதிலங்கு முனதன்பிற்குரிய துணைவனாகுமிவன் நினது முன்னணியிலே வதிகின்றான்; ஆதலின், பெண்ணே! நடுக்குறல் வேண்டா; கொடுஞ்செயற்புரியுமிவனே யெதிர்மறையாப்பயக்குந் தீவினைக் கொடும்பயனை இங்கண் இப்பொழுதே யனுபவிப்பான். (26)

அகோரகண்டன் – நமக்கு இடையூறாக வந்த இத்தீயோன் யாவன்?

கபாலகுண்டலை – பெரியோய்! காமந்தகியின் நண்பனது புதல்வனும், மகாமாமிசத்தை விலைப்படுத்தியவனும், இவளது அன்பிற்கு நிலைக்களனுமாகிய அந்த மாதவனே யிவன்.

மாதவன் – (கண்ணீருடன்) நல்வினைப்பயனுடையாளே! நீ இத்தகைய துன்பமெய்தியவாறென்னை?

மாலதி – பெருந்தகைப் பெரும! யான் ஒன்றுமறிகிலேன்; எனினும், மேன்மாடத்தே துயின்றேன்; இங்கண் விழித்தேன்; என்னுமிவ்வளவேயறிவேன். இங்குத் தாங்கள் வந்தவாறென்னையோ?

மாதவன் (நாணமுடன்)[34] அச்சுறும் பாவாய் உனது கமலக் கரத்தைப் பிடித்து பிறவியைப் பயனுடைத்தாக்குவான் கருதி யான் கொண்ட பெருமுயற்சி யாவும் வறிதே கழிய, மகாமாமிசத்தை விலைப்படுத்தற் பொருட்டுச் சுடலைக்கண் திரிந்துழி உனது ஓலஒலியைச் செவியேற்று இங்கண் வந்தேன். (27)

மாலதி – (திரும்பி) என்னே! எற்பொருட்டேயிவர், தன்னுயிரையும் வெறுத்து அலைகின்றனரோ?

மாதவன் – அடா! என்னே வியப்பு! இந்நிகழ்ச்சி காகதாளீயமேயாம்[35]; இப்பொழுதோ! திருவருட்பாங்கா விவணெய்தி, இக்கள்வனது வாள்வீட்சியினலக்கைத் தவிர்த்து, இராகுவின் வாயிற்புக்குழலும் மதிக்கலையனைய காதலியை வலிந்து பற்றிய வெனது மனம், விதனத்தாற் கலக்கமுறுகின்றது; இரக்கத்தால் நெகிழ்கின்றது; வியப்பினால் அலைப்புறுகின்றது; சினத்தால் எரிதருகின்றது; மகிழ்ச்சியின் மலர்கின்றது; என்னே! இம்மனநிலை[36]. (28)

அகோரகண்டன் – அடா! பார்ப்பனப்பயலே! “வேங்கை கவர்ந்த பெண்மானுக்கு ஆண் மானருளும்” என்னும் வழக்கால், உயிர்ப்பலிக்குறைவிடமாகுமிக்காளி கோயிலிலிருப்பவனும், கொலைவிருப்புறுவானுமாகிய எந்தனுக்கு இலக்காயினை; தீயோய்! அத்தகைய யான், உனது புயத்தை வாளாற் றுணித்து அக்கவந்தப்புழையினின்றும் உதிரம் பெருக்கொழுக உன்னையே முதலிற்[37] பலிகொடுத்து உலகன்னையாகுமிக்காளி தேவியைத் திருத்தி செய்வேன். (29)

மாதவன் – அடாதீய! மறையொழுங்கைக் கெடுக்கும் பறைய! இல்வாழ்க்கையைச்[38] சாரமற்றதும் மூவுலகை நற்பொருளிலாததும், பூவுலகை ஒளியற்றதும், உற்றாரை யிறப்பெய்தவும், காமனைய கங்காரமற்றவனும், மக்கள் கண் படைத்தமையைப் பயனற்றதும், உலகத்தை முதிர்ந்த அடவியுமாகச் செய்தற்கு ஏன் முயன்றனை? (30)

மேலும், அடா! தீய!

அன்பார்ந்த பாங்கியரோடு ஆடலுடனமைந்த பரிகாசப்போரில் அன்பின் நிகழ்ந்த மெல்லிய வாகைப் பூவினடிகளானும் மிகவருந்து மவ்வுடலத்தில், அவளைக் கோறற்பொருட்டு வாளை வீழ்த்தும் உனது சிரத்தில் இக்கரம், அகால அசனிபோல வீழ்க. (31)

அகோரகண்டன் – ஆ! கொடியோய்! அடி; அடி; இதுபொழுதே இறந்தொழிகுவை;

மாலதீ – தலைவ! வலாற்காரமுடைய வீர! அருள்புரிக! கொடுநசை பொருந்துமிவன் கொடியவன்; என்னைக் காத்தருளல் வேண்டும். பொல்லாங்கைத் தருமிப்போர்ச் செயலினின்றும் ஒழிக.

கபாலகுண்டலை – கருத்துடனிருந்து இக்கொடியனைக் கோறல் வேண்டும்.

மாதவனும் அகோரகண்டனும் – (முறையே மாலதியையும் கபாலகுண்டலையையுங் குறித்து) அச்சுறுமியல்பினளே! மனத்திற்றிடம் பெருக; இப்பாவி வதைக்கப்பட்டான்; யானைகளின் மலைமுடியனைய மத்தகங்களைப் பிளக்கத் தகும் குலிசம் போன்ற முன்கால்களையுடைய சீயத்திற்கு, மானினத்தைப் பற்றியடிக்குங்கால் தவறுதல் யாங்ஙனம் நேரும்; அத்தவறுகள் எப்பொழுதேனும் யாவரானும் அநுபவிக்கப்படுமோ? (32)

(வேடசாலையிற் கலகலவொலியெழுகின்றது)

ஓ!ஓ! மாலதியைத் தேடுமவர்களே! அமாத்திய பூரிவசுவைத் தேருதற்படுத்தத் தடையிலாது செல்லும் சீரிய அறிவையே கூரிய கண்ணாக் கொண்ட காமந்தகிப் பெரியோர் கட்டளையிடுகின்றனர்.

“காளிகோயிலை நெருங்கிச் சூழ்ந்துகொள்ளுதல் வேண்டும். இச்செயல், கொடிய இவ்வகோரகண்டனாலன்றிப் பிறிதொருவனாற் செயற்பாலதன்று; இச்செயற்பயனும், கராளையின் காணிக்கையேயன்றிப் பிறிதொன்றும் புலனாகவில்லை” என்று.

கபாலகுண்டலை – பெரியோய்! தேடுமவர்களால் நாம் சூழப்பட்டுத் தடைப் படுத்தப்பட்டோம்.

அகோரகண்டன் – இதுபொழுதே, நமதாண்மையை வெளிப்படுத்தற்குரிய சிறந்த தருணம்.

மாலதி – ஆ! தந்தையே! ஆ! காமந்தகிப்பெரியோய்!

மாதவன் – ஆகுக, சுற்றத்தார்பால் இவனையிருத்தி, அவர் முன்னணியிலேயே[39] இவனைச் சங்கரிக்கின்றேன்.

(மாலதியை வேற்றிடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றான்)

(மாதவனும் அகோரகண்டனும் ஒருவர்க்கொருவரைக் குறித்து)

ஆ! அடா! தீய!

உறுதியான என்பு முடிப்புக்களை வெட்டுங்கால், கணகணவெனவொலிப்பதும், வலிய நரம்புக்களை வெட்டுங்கால் விசை தணிவுறுவதுமாகிய எனது வாள், சதைமிகுந்த புறங்களில் சேற்றிற் பாய்வதுபோலத் தடைப்படாது பாய்ந்து, அக்கணமே உனது உறுப்புக்களைத் தனித்தனியே கண்டம் கண்டமாக்கி யவற்றை வீசியிறைத்திடுக.

(என்று எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட “மாலதீமாதவம்”, என்னும் நாடகத்தின் ஐந்தாம் அங்கம் முற்றிற்று.


[1] கபாலகுண்டலை – தலையோடுகளே காதணியாக அமையப்பெற்றவள் என்னும்பொருள் பற்றி யிப்பெயர், இவட்க்குக் காரண இடுகுறியாவமைந்தது.

[2] ஆறின்மிகுந்த பத்து நரம்புகள் – என்பது பதினாறு நரம்புக்களை; அவை உடற்கு இன்றியாதனவாகிய, இடை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, அத்திசிங்குவை, பூடை, வசுவசை, அலம்புசை, குகூ, சங்கினீ, தாலுசிங்குவை, சிங்குவை, விசயை, காமதை, அமிருதை, பகுளை யென்பனவாம்; இவைகளின் குழுவே, அலகிலா நுண்ணிய நரம்புக் கற்றையாற் சூழப்பட்டு உதிரம் முதலிய சத்த தாதுக்கள் நிறைந்து, துவக்கினால் மறைக்கப்பட்டு, பிண்டமென்று வழங்கப்படும் மெய்யாகின்றது என்று யோக நூல் கூறும். ஒருசாரார் ஆறின் மிகுந்த என்பதற்கு மூலாதாரமாதிய வாதாரங்களாறினும் சிறந்த ஏழாம் ஆதாரமென்று பொருள் கூறுவாறுமுளர்.

[3] சாதகர் – மந்திரசித்தி செய்வோர்.

[4] சத்திகள் – ஈண்டு அறிவு, விருப்பு, செயலென்னும் மூவகைச் சத்திகளையும், பிராம்மீ, மாகேச்சுரீ, கௌமாரீ, வைட்ணவீ, வாராகீ, மாகேந்திரீ, சாமுண்டி, சண்டி யென்னுஞ் சத்திதேவிமார் எண்மரையு முணர்த்தும்.

[5] சத்தி நாதன் – இவர், காபாலிகம் என்னும் ஒருசார் சைவசமயத்தவரது வழிபடு கடவுள். இவரைப் போற்றுமாற்றால் காபாலகுண்டலையும் அவடன் ஆசிரியரும் அச்சமயத்தைச் சார்ந்தவரென்பது போதரும்.

[6] ஆறு அங்கங்கள் – இதயம், சிரம், சிகை, கவசம், நேத்திரம், அத்திரம் என்பனவாம்; மந்திரம் போற்றுமொருவன் தொடக்கத்திற் றன்னை அம்மந்திரத்ததிதேவதையாகப் பாவித்துக் கோடன் மந்திரநூண் மரபு; இதனை வடநூலார் அங்கநியாசம் என்று கூறுப.

[7] இலயப்படுத்தலாவது – மேலிழுக்கப்பட்ட வாயுவை வான் செலவிற்கேதுவாக அவ்வந்நாடிகளிற் நிலைபெற நிறுத்தலாமென்பது யோக நூன்முறைகளால் விளங்கும்.

[8] துடித்தன் முதலியன – துடித்தல், நலிதல், படுத்தல் என்பனவாம்; இவை ஐம்பெரும்பூதங்களையும் வலிந்திழுத்தற்குக் கருவிகளாம் என்ப.

[9] ஆண்மை – இன்பம், துன்பம், சினம், அச்சம், இவை நிகழ்ந்துழி மனமாற்றமற்றிருத்தலாம்.

[10] இனிமை – துன்புறுனிலையிலும் அன்பருக்குவந்து தவலாம்; இவ்விருபண்பானும், மாதவன் துன்பத்திற்காட்பட்டு வருந்தும் அமயத்தினும், ஆபத்தின் வழிப்பட்டுழலும் அன்பிற்குரிய மாலதியை அவ்வாபத்தினின்றும் காத்து அவளை யின்புறுத்தினன் என்னுமேல் வரும் காதை வியங்கியமாக இங்குக் குறிப்பிடப்பட்டது.

[11] இவ்வளவிற் கூறுமாற்றால், மாதவன் இம்முதுகாட்டினுட் புகுதற்குத் தகுதியற்றவன் எனவுணர்த்திப் பின்னிரண்டடியில் மகாமாமிச்தை விலைப்படுத்து நிலையைக் கூறலான் எவ்வாற்றானும் கோரிய பொருளைக் கொண்டேதீருமிவனது வீரச் செயலுங் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

[12] விருப்பம் – தனதாசிரியன் கட்டளைப்படி பெண்மணியான மாலதியை காளிபாற் பலியிடற்குக் கொணர்தலே இவளது விருப்பென்பது கருத்து; அதற்குத் தக, கங்குற் பொழுதும் வந்ததெனக் கூறப்பட்டது.

[13] பிரேமை – சிருங்கார ரசத்தின் பிழம்பே இரதியாம்; அதன் மிகைபடு நிலையே பிரேமையாம் என்ப; பிரேமை, மானம், பிரணயம், சினேகம், இராகம், அநுராகம், என்னுமாறும் அவ்விரத நிலையின் பேதங்களாம். அதுபற்றியே அகப்பொருளிலக்கண நூலாகும். “இரதிபிரேமையானரும்பி, மானத்தாற்றளிர்த்து, பிரணயத்தான் முகிழ்த்து, சினேகத்தான் மலர்ந்து, இராகத்தாற் பழுத்து, அநுராகத்தாற்றுய்க்கப்படுகின்றது”, என்று கூறுவர். அறுவகைத்தாய இவற்றை முதனூலாசிரியர் இவ்விரண்டாகக் கொண்டு பிரேமை, பிரணயம், அநுராகம், என மும்மைத்தாகக் கூறியுள்ளார். அவற்றினிலக்கணம் வருமாறு:

பிரேமை – இருவர் மனமொருமித்து வேறூன்றிப் பிணிப்புடையதாய் ஒருபடித்தாக நிலைப்பட்டு நிற்பதாம்;

பிரணயம் – இவரது பிரேமையே, அகம்புறமொத்து ஒருவர்க்கொருவர் உபசரித்தலான் மேலெழுந்து நிற்கு நிலை;

அநுராகம் – இடம், பொருள், காலமுதலியவற்றான் மனத்தில் மிகுந்தெழும் பிரணயமே யநுராகமாம்; அது மாஞ்சிட்டராகம், நீலிராகம், குசும்பராகமென மூவகைத்தாம்; அவற்றுள் தலை, யிடை, கடை முறையானே மாஞ்சிட்டமே தலையாதலின் அதனையே யீண்டுக் கூறினர் என்க. விரிவஞ்சி விடுத்தேம்.

[14] கருவிகரணங்களின் ஒடுக்கம், மூர்ச்சையானும் அமையுமாதலின், அதனை மறுத்தற்கு, மகிழ் நிறைவுறுகின்றது; எனக் கூறப்பட்டது.

[15] உறுப்புவினிமயம் – இவனது உடலையவள் வயமாக்கலும், அவளுடலை யிவன் வயமாக்கிக் கோடலுமாம் வினிமயம் – பண்டமாற்று.

[16] இளம்பிறைக்கலைக்குழு – இவளது வதனம் களங்கமின்றியினிமை பொருந்தியிருத்தலை யுணர்த்தும்.

[17] மதனமங்கலமந்திரம் – என்பது இவளது முகம், அளப்பிலா வானந்தத்திற்கேதுவாகலானும், மாசின்மை, தெளிவு முதலிய குணங்கள் பொருந்தியமையானும், அனங்கனுக்கு மங்கலமந்திரமாய், அவன் அதில் வதிந்து இம்மூவுலகையும் வென்று பெரும்புகழ் பெற்றான் என்பது கருத்து; இதனால் மாலதியின் மதிமுக வனப்பு, உயர்வு நவிற்சியாற் கூறப்பட்டது.

[18] மாதவனது மனச்செயல் வயத்தான் மாலதியினுருவெளித் தோற்றம், இடையறாதிலங்க, அவன் அவளது காட்சியை மீண்டுங்கோருமாறென்னை? என வினாவியாசங்கித்து, உருவெளித்தோற்றத்திற்கும் இவன் கோரும் உண்மைக்காட்சிக்கும் அமையும் வேறுபாடுணர்த்துவான் கூறுகின்றார், “இதுகாலைக் காணப்படும் அவளது தோற்றம்” என்று.

[19] இச்சொற்றொடர் ஸ்தாயீ பாவத்தின் இலக்கணத்தைப் புலப்படுத்தும்.

[20] அந்தக்கரணவிருத்தி – மனம் ஒரு பொருளைப் பற்றி நிகழுஞ் செயலுடையதாக, அம்மனம், அப்பொருள் வடிவாந் தன்மையெய்துமென்பது பெரியார் கண்டது. அந்தக் கரணம் – மனம். விருத்தி – பொருளைப்பற்றிச் செல்லும் அதன் செயலாம்.

[21] சாரூப்பியம் – ஒத்த உருவாந்தன்மை.

[22] வடிவுபோல – என்னு மிவ்வுவமையுருபான் முன்னர்க்கண்ட காட்சியினும் இக்காட்சிப் பொய்யாதல் பற்றி வேறுபட்டதென்பது உணர்த்தப்பட்டது.

[23] இச்சுலோகத்தில், தற்குறிப்பேற்றத்தாற் கூறுமவற்றுண் முன்னையதொவ்வொன்றிலும் பொருத்தமின்மையை யாசங்கித்துப் பொருந்துமாற்றாற் கூறி, மாதவனது விருப்பத்தை வலியுறுத்துகின்றார். இதன்கட் கூறப்படும் ஒன்பது தற்குறிப்புருபுகளின் குறிப்பு வருமாறு காண்க:-

இலயித்தவள் – மறைந்தவள்; அங்ஙனமாயின் பூழிக்கண் நீர்த்துளி போலப் படிவமே தோன்றாது மறையும்; என்னும் இயபின்மைபற்றி, எதிருருவடைந்தவன் போலுமென்றார்; இவ்வெதிருரு பொய்யுருவாயினும் மெய்யுரு இல்வழியமைவதில்லை யெனக்கருதி, காமனாகும் வரைவோனால் மனமாகும் பலகையில் நினைவாகிற தூலிகையாள் வரையப்பட்டனள். அதனால், அவள் தெள்ளிதிற் காணப்படுகிறாள் என்று; அங்ஙனமாயின், மாலதியின் படிவமே மனத்திற் பொருந்துமன்றி மாலதி பொருந்தாளென்னும் பொருந்தாமை பற்றிச் சிற்பமுறையான் வகுக்கப்பட்ட உருவினள் போலும்; காமனாகும் சிற்பி, மனமெனும் கருங்கல்லை கணைகளாகுஞ் சிற்றுளிகளான் மாலதியுருவாக்கியமைத்தானென்றார்; மனம், அணுவளவுடைத்தாதலின் அதிற் சிலைப்பதுமையமைத்தல் கூடாமை பற்றி அதனை மறுத்து, இழைக்கப்பட்டனள் போலும்; காமனாம் பொற்கொல்லன், காமவேட்கையாமனலில் உருக்கப்பட்ட மனமாகும் பொன்னில் மாலதியாகுமிரத்தினத்தை யிழைத்தானெனக் கூறினர். இவ்விழைப்பும், நாளடைவிற் பிரிவெய்து மியல்பினதாதலின், சிறப்பின்மை கருதிக் கலவைச் சுண்ணத்தாற் கட்டப்பட்டவள் போலும்; இச்சுண்ணத்தாற் கட்டப்பட்ட பொருள் உறுதிப்படுவது போல, இவள் மாதவன் மனத்திலுறுதிப்பாடெய்தினள் என்றார்; இதில் மனத்தின் மேற்சுண்ணமும் அதன்மேன் மாலதியுமாகி நேரியைபு அமையாமையாற் பொருந்தாமை கருதி உள்ளே புதைக்கப்பட்டவள் போலும்; பூமியிற்புதைக்கப்பட்ட பொருள்போல மனத்திற் புதைக்கப்பட்ட இவளும் பொறிக்குப் புலனாகாதொழியுமென்றோர்ந்து தமருறப்பிணைக்கப்பட்டவள் போலும்; காமன் தன் கணைகளான் மாலதியையும் மனத்தையும் தமரிட்டு அக்கணை கொண்டு அவள் கட்டப்பட்டாள் போலும்; மனம் வலிதாதலின் கணையாற் றமரிடப்படுதலைத் தாங்குந்தன்மையது. உறுப்புக்களில் மலர் வீட்சியையும் தாங்கொணாத அம்மெல்லியலாள் இதனைப் பொறாள்; ஆதலின் இதனையும் மறுத்துச் சிந்தனைப் பெருக்காகும் நூற்கற்றையால் மனத்தில் நெய்யப்பட்டாள். இதனால் மாலதியையே மனம் சிந்தித்தலான், அச்சிந்தனை, யிடயறாது பெருகி, அதனால் அந்தக் கரணம் அவள் வடிவுபோலப் பரிணமித்ததென்பது துணியப்பட்டது.

[24] போர் முனையிற் பகைவரது கணைகளாற் சாவெய்தாததும், உதிரப்பெருக்கொழுகலான் உலராது கசிவுள்ளதும், பெண்ணிறைச்சியில்லாததும், ஆகிய ஆடவர் மாமிசமே மகாமாமிசம் என்று காபாலிகாகமம் கூறும்.

[25] மனவருத்தம் – இங்குக் குழுமிய பேய்களில் ஒன்றேனுமிவன்பாலெய்தித் தைரியத்துடன் மகாமாமிசத்தைப் பெறாமையும், அதுவிலைப்படுத்தப்படாத நிலையில் இவனது விருப்பம் நிறைவேறுதலரிதாதலும் வருத்தநிமித்தமென்க.

[26] மகரந்தன், மதயந்திகை யிவர், முன்னர்க் கொடும்புலியாற் றுன்புற்றகாலை வருந்திய மாலதியின் இரங்கற் குரலாகிய யானே உன்னாலனுபவிக்கப்பட்டேன்; என்று செவியிடம் விவகரிப்பதுபோலிருப்பதால் தருக்கமெனக்கூறப்பட்டது; அதனால் செவிகளுக்கு இவ்வொலி முன்னரறியப்பட்டதென்பது கருத்து.

[27] இச்சுட்டு பெறற்கரிய மந்திரச் சித்தி செய்யுமொருவன், உயிர்ப்பெலியில் மிக விருப்புள்ளதும் சாதகர்களது விருப்பத்தை யளிப்பதிற் சிறந்ததுமாகிய இக்காளிதேவிக்கு, மாயையின் வலியான் மாலதியைப் பலியிட இங்குக் கொணர்ந்தனனோ; அல்லது, அக்குரளணைய பிறர் குரலாகுமோ; என்னுமிவ்வாராய்ச்சியை யுணர்த்து முகத்தான், பிறரொலியாயின் மாதவன் இத்தகைய துன்பம் எய்தற்கு ஏதுவில்லையாகலின் மாலதியின் ஒலியே யென்னும் மாதவனது துணிபையுமுணர்த்தும்.

[28] ஆகுக. காண்பேன் – என்று கூறினமை; இக்கருணவொலிக்குக் காரணம் மாலதியாயின், எனதுயிரைத் துறந்தும் அவளைக் காத்தல் வேண்டும், அம்மட்டில் இவ்வாழ்க்கைப்பயனை முற்றிலும் பெற்றவனாகுவேன்; என்னலஃதியலாதெனில் அங்ஙனமே உயிரைத் துறந்து காதலியுடன் வானுலகெய்தி யின்புறுவேன் என்னு மாதவனது கருத்தையுணர்த்தும்.

[29] கருத்தின்மை – இது, மாலதியின் பெற்றோர், காமந்தகி முதலியோர் இவர்களைச் சார்ந்தது; இக்கொலைஞனால் யாருமறியாமற் கோறற் பொருட்டு இவள் இங்குக் கொணர்விக்கப்பட்டாளாதலின், காமந்தகி முதலியோரின் கருத்தின்மை இகழ்தற்குரியதென்பது கருத்து.

[30] வசு – அட்டவசுவென்னும் கண தேவருளொருவர்.

[31] எனதாசையைச் சுடல் வேண்டும் – என்று கூறினமையான், மாலதியிறப்பது உறுதியாதலின் இவணிமித்தம் அரும்பாடுபட்டும் உயிர்த்திருக்கும் மாதவனும் உயிர்துறப்பது உறுதியாம் என்பது குறிப்பிடப்பட்டது.

[32] மங்கலமங்கையே என்பது மந்திரசித்தியாம் மங்கலத்திற்கு இவள் ஏதுவாகலின் இங்ஙனம் விளிக்கப்படினும், இவ்விளி, மாலதியின் மங்கலத்திற்கே நிமித்தமாய் இவள், கொலையென்னும் அமங்கலத்திற்குப் பாத்திரமாகாளென்பதையும், கொலைத்துன்பனீங்கி விரைவில் இன்புறுவளென்பதையும் சொற்றொடரானிகழ்ந்த நன்னிமித்தத்தாலுணர்த்தும்..

[33]  இவ்விரக்கச்சொல் – இவள் மாதவன்பாற் காதற்பற்றுள்ளவள்; அம்மாதவனும் மகாமாமிசத்தை விலைப்படுத்து நிலையில் இங்ஙனமே கபாலகுண்டலையாற் காணப்பட்டான்; அவன் இங்கண்வந்து இவளைக் காத்தல் கூடும்; அதனால் இப்பலிப்பூசனை இனிது நிறைவேறுதலரிதென்பதும் அம்மாதவனால் இவர்க்குத் தீங்குண்டாதல் உறுதியென்பதும் உணர்த்தப்பட்டன.

[34]  நாணம் – மகாமாமிசத்தை விலைப்படுத்தலாகுந் தகாத செயலைத் தான் மேற்கொண்டிருத்தலைத் தெரிவித்தலில் நாணமாம்.

[35] காகதாளீயம் – இது ஓர் நியாயம்; காகம் பனைமரத்தடியில் வந்த அக்கணம், அதன் பழம் உதிர்ந்து அக்காகத்தின் சிரத்தில் வீழ்தல்போல என்பது பொருள். இது நினையாது திடீரென நிகழுஞ்செயலைக் குறிக்கும்.

[36] என்னே என்னுமிவ்வதிசயச் சொல்லால், இந்நூல் சிருங்கார ரசத்தையே யின்றியமையாததாகக் கொண்டதாயினும், அதனை வளத்தற் பொருட்டுச் சோகம், வீரம் என்னும் இரசங்களும் அங்காங்கி யென்னுமியைபுபற்றி இதிற் கூறப்பட்டுள்ளன; இதனால் “ஒரு காப்பியத்திற்கு இன்றியமையாததாயமைக்கப்படும் இரசத்திற்கு முரண்பாடின்றி அதனை யணிப்படுத்தற்பொருட்டு பிறவற்றையும்  அமைத்துக் கூறலாம்” என்னுமிலஷண அமைதி புலனாம்.

[37] முதலில் – என்றமையால், உன்னைப்பலிகொடுத்த பிறகே இவளைப் பலி கொடுப்பேன் என்பது தொக்கு நிற்கும்.

[38] இச்சுலோகத்தில், ஒன்றை விசேடித்தற்கு எழுவகை எடுத்துக்காட்டுக்கள் கூறப்பட்டுள்ளன; இவற்றின் கருத்து ஒன்றேயெனினும் இது, அங்கமான கருணம், வீரம் முதலியவற்றால் அங்கியான சிருங்காரம் மேலிட்டு நிற்பது பற்றிக் கூறியது கூறலென்னுங் குற்றமமையாதென்னு மிலக்கணத்தை வலியுறுத்தும்; இதனால், மாதவனுக்கு மாலதியின்றி யிம்மை மறுமை யென்னுமிருமையும் கீழ்மையாமென்பது உணர்த்தப்பட்டது.ட

[39] முன்னணியிலேயே – என்னும் தேற்றம், சுற்றத்தார், இவனது வீரச் செயலை அமாத்தியபூரிவசுவுக்குத் தெரிவிப்பர்; அதனால், அவர்க்கு, மாதவனுக்கே மாலதியை மணவினையாற்றுவதில் விருப்பம் வேரூன்றும் என்பதையும் மாதவனது விருப்பமும் நிறைவுறுமென்பதையு முணர்த்தும்.

Leave a comment