கடைச்சங்க நிலைகுலைவு

கடைச்சங்க நிலைகுலைவு*

அல்லது

இடைக்காடர் வரலாறு

ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசனார்

தொடக்கம்:- திருவருள் துணையாக மூன்றாம் முறையாகக் கூட்டப்பெற்ற இச்சங்கம் இக்காலத்து சிறந்து விளங்கும் மதுரை நகரில் தோற்றமுற்றது. அதனை முதன்முதல் தொடக்கி நிலை நாட்டியவன் முடத்திருமாறன் என்னும் பாண்டியன். அவன் இடைச் சங்கம் நிலைகுலைவுற்ற இறுதிக்காலத்து விளங்கிய பேரரசன்: அவனே அக்காலம் பாண்டிய நாடனைத்தையும் அரசு செலுத்திச் சிறப்புற்றிருந்தான். அவன் கூட்டிய சங்கத்தைக் கடைச்சங்கமென்பர் – பிற்காலத்தவர்.

அக்கடைச்சங்கத்தினைப் பற்றி இறையனார் கலவியல் உரைக்காரர் கூறுமாறு:-

I. “இனிக் கடைச்சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தார் சிறுமேதாவியாரும்,[1] சேந்தன்பூதனாரும்,[2] அறிவுடையரனாரும்,[3] பெருங்குன்றூர்க்கிழாரும்,[4] இளந்திருமாறனும்,[5] மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும்,[6] மருதனிள நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதிமர் (49) என்ப.

பிறிதோர் சாரார் கூறுமாறு:-

I.

1  பருங்கடைச் சங்கமிருந்தோர் யாரெனில்

    சிறுமே தாவியார், சேந்தம் பூதனார்

    அறிவுடையரனார், பெருங்குன்றூர் கிழார்,

    பாடல் சான்ற இளந்திருமாறன்,

5   கூடல் ஆசிரியர் நல்லந்துவனார்

    பரவு தமிழ் மதுரை மருதனிள நாகர்,

    அவிர் கணக்காயர் நவில் நக்கீரர்

    கீரங்கொற்றர் கிளர் தேனூர் கிழார்

    ஒருங்கலை மணலூராசிரியர்

10  நல்லூர்ப் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர்,

    செல்லூராசிரியர் முண்டப் பெருங்குமரர்

    முசிறியாசிரியர் நீலகண்டனார்,

    அசைவிரி குன்றத் தாசிரியரன்றி

    நாத்தலங் கணிக்குஞ் சீத்தலைச் சாத்தர்

15  முப்பால் உணரும் உப்பூரி குடி கிழார்

    உருத்திரசன்மர் மருத்துவராகிய

    நாம நாற்கலைத் தாமோதரனார்

    மாதவனனாரொடு ஓதும் இளநாகர்

    கடியுங் காமப் படியங் கொற்றனார்

20  அருஞ் செயிலூர் வாழ் பெருஞ் சுவனாருடன்

    புவிபுகழ் புலமைக் கபில, பரணர்,

    இன்னாத் தடித்த நன்னாகர், அன்றியும்

    ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்துக்கு

    உரையிடை யிட்ட விரகர் கல்லாடர்

25   பேர் மூலமுணரும் மாமூலர், தம்மொடு

    விச்சை கற்றிடு நச்சென்னையார், முதல்

    தேனூர் றெடுப்பச் செந்தமிழ் பகர்ந்தோர்

    நானூற்றுவர் முதல் நாற்பத்தொன்பதின்மர்;

II.

“பீடுபெற உலகிற் பாடிய செய்யுள்

முத்தொள் ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை,

அகநா னூறு புற னூறு

குறுந்தொகை சிற்றிசை பேரிசை வரியொடு

அறம்புகல் பதிற்றுப்பத்து ஐம்பதோடிருபான்

பெரும் பரிபாடலும், குறுங்கலி நூற்றைம்

பது, முதலாகிய நவையறுங்கலைகள்.”

III.

“அக்காலத்து அவர்க்கு அகத்தியம் அதனொடு

மிக்காம் இலக்கணம் விளங்கு தொல்காப்பியம்,

எண்ணூர் கேள்வியர் இருந்ததாயிரத்துத்

தொளாயிரத்தைம்பது வருடமென்ப”.

IV.

“இடர்ப்படாதிவர்களைச் சங்கம் இரீஇயினார்

முடத்திரு மாறன் முதலா உக்கிரப்

பெருவழுதி ஈறாப் பிறங்கு பாண்டியர்கள்

நரபதிகளாகும் நாற்பத்தொன்பதின்மர்

இவருட் கவியரங் கேறினார் மூவர்.

புவியிற் சங்கம் புகழ் வட மதுரை” என்பது.

கடைச்சங்க அமைப்பு

ஒரு சாரார் கூறுமாறு:-

கடைச்சங்க உறுப்பினர் 49 பெயர்களாகும். அவருள் சிறுமேதாவியார் முதலிய எண்மர் உட்கழக உறுப்பினர். சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது (1850) வருடம் நடைபெற்றது. அதனை அத்துணை காலம் ஆதரித்தவர் நாற்பத்தொன்பது பாண்டியர்; அவருள் மூவர் கவியரங்கேறினார் என்பது.

அரசஞ் சண்முகனார் கூறுமாறு:-

I. ஒரு தலைமுறைக்குச் சிறிது ஏறக்குறைய முப்பத்தெட்டியாண்டாகப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மர் காலம் வரை ஆயிரத்து எண்ணூற்றைம்பதிற்றியாண்டு அச்சங்கம் நிலைபெற்றது என்பதூஉம்.

II. தலைமுறைக்கு ஒருவராகப் பாண்டியர்க்குப் பக்கத் துணையாக இருந்து சங்கம் நடாத்தினமையிற் சங்கமிருந்தார் நாற்பத்தொன்பதின்மர் ஆயினர் என்பதூஉம்.

III. ஏனைச் சங்கத்துப் புலவரினும் மிக அருகிக் காணப்பட்டாராகலின் அச்சங்கம் போல யாண்டிற்கு ஒருவர் கவியரங்கேறித் தலைவர் ஆகாமல் சில காலம் ஐந்து யாண்டிற்கு ஒருவரும் பின்னர் நான்கு யாண்டிற்கு ஒருவரும் ஆகத் தலைமை பெற்றமையாற் பாடினோர் நானூற்று நாற்பத்தொன்பதிமர் ஆயினர் என்பதூஉம் விளங்கும் என்பது.

பாண்டியன் மதிவாணன்

இனி இக் கல்விக் கழகத்தை நன்கு பேணிப் போற்றிய பாண்டியர்களுள் மூவர் புலத்துறை முற்றியவராய்க் கவியரங்கேறியுள்ளார் என்பது மேற்காட்டப்பட்டது. அத்தகைய மூவருள் மதிவாணன் என்பான் ஒரு பெருவேந்தன்; முத்தமிழும் நன்கு கற்றவன்; நாடக இயலில் கைபோயவன். ஆகவே தன் காலத்துக்கு முன் உள்ள பேரறிஞர் இயற்றிய நாடக இலக்கணத்தின் பகுதியாக உள்ள வசைக் கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து இயன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்ற நூல் ஒன்றினை இயற்றிக் கவியரங்கேற்றினான்.

வங்கிய சேகர பாண்டியன்

இப்பெயர் பெற்ற பாண்டியன் கடைச்சங்கம் இரீஇய பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவனாக எண்ணப்படுவான்; இவன் ஆட்சிக்காலத்தினைச் சிறிது முன் ஒட்டி ஓர் பஞ்சம் பாண்டிய நாட்டில் நிகழ்ந்தது. பன்னிரண்டுயாண்டு மழையின்றி அந்நாடு மிகவும் வருந்தியது. உணவுப் பொருள் இன்றிப் பசி கடுகிக் குடிகள் நலிவுற்றனர். பல உயிர்கள் மடிந்தன. அரசன் பெரிதும் தயங்கிப் புலவர்களையெல்லாம் கூவி “வம்மின் யான் உங்களைப் புரந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கு அறிந்தவாறு புக்கு நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின்” என்றான். மணிமேகலை நூலாசிரியரும் இப்பஞ்சத்தினையும் அதன் கொடுமையினையும்

“பன்னீராண்டு பாண்டி நன்னாடு

மன்னுயிர் மடிய மழை வளமிழந்து”

(மணி: 14ஆம் காதை 55.56)

எனக் கூறியுள்ளார்.

அப் பன்னிரண்டாண்டும் சங்கப்புலவர் கூடலில் இலராயினர். பாண்டிய அரசன் கட்டளைப்படி அவனை விடுத்து அன்னோர் புறநாடு போதந்தார்; அவருள் ஒரு சாரார் சேரநாடு அடைந்து அங்குள்ள ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் ஓர் வேளிர் தலைவனைச் சார்ந்து அவன்பெரிதும் பேண வாழ்ந்து வந்தனர்.

சில ஆண்டு கழிந்ததும் பாண்டிய அரசன் புலவர்களின் பிரிவால் வருந்தி மிகவும் மனம் தளர்ந்து அவர்களின் வளப்பம் இருக்கை முதலியன தூதல் மூலம் உசாவினான். உயிரோடிருக்கும் எஞ்சிய தமிழ்ப் புலவர்க்குத் திருமுகம் அனுப்பினான். புலவர்கள் வற்கடக் கொடுமையினையும், தாங்கள் அஃது அறியாது ஆலஞ்சேரிமயிந்தன் பால் வாழ்ந்து செவ்வனே இருத்தலையும், அம்மயிந்தனின் பெருமை வள்ளற் றன்மைகளையும் பற்றிப் பாண்டிய அரையற்கு ஓலைத் தூக்கு ஒன்று எழுதி அனுப்பி வைத்தனர். அன்னோர் எழுதிய தூக்கில் பொறித்தது வருமாறு:-

காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி

வேலையுங் குளனும் வெடிபடச் சுவறி

விழித்தவிழி யெல்லாம் வேற்று விழியாகித்

தந்தையை மக்கண் முகம் பாராமே

5. வெந்த சரகம் வெவ்வே றருந்திக்

குணமுள தனையுங் கொடுத்து வாழ்ந்த

கணவனை மகளிர் கண்பாராமே

யறவுரை யின்றி மறவுரை பெருகி

யுறை மறந் தொழிந்த வூழி காலத்திற்

10. றாயில் லவர்க்குத் தாயே யாகவுந்

தந்தையில் லவர்க்குத் தந்தையே யாகவு

மிந்த ஞாலத் திடுக்கண் தீர

வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன்

நீலஞ் சேரு நெடுமால் போல்வன்

15. [7]ஆலஞ் சேரி மயிந்த னென்பான்

(ஊருண் கேணி நீரோ ரொப்பான்)

தன்குறை சொல்லான் பிறர்பழியுரையான்

மறந்தும் பொய்யான் வாய்மையுங்குன்றான்

இறந்து போகா தெம்மையுங் காத்தான்

வருந்த வேண்டா வழுதி!

20. யிருந்தனெ மிருந்தென மிடர் கெடுத் தின்னே

(தமிழ் நாவலர் சரிதை)

என்பது.

இவ்வாறு பன்னிரண்டு யாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. அரசன் நாடு நாடாயினமையால் தமிழ் நூல் வல்ல புலவர்களைத் தேடிக் கொணர்க என்று பல்லிடமும் ஆட்களையனுப்பி, அத்தகைய புலவரை ஒருங்கு கூட்டினான். தமிழ்ச் சங்கத்தைப் பழையபடி உருவாக்கினான். சங்கத்தார் உறைய மதுரையின் வடமேற்றிசையில் தமிழ்க் கழக மண்டபம் ஒன்று நிருமித்தான். அம் மண்டபம் தேவ குலத்தை அடுத்திருந்தது. நீராழி அதன் உட்புறம் அமைந்துள்ளது. அப்பாண்டியனே பின்னும், சங்கப்புலவர் புலமையியல் நன்கு மதிக்கப்படுமாறு சங்கப் பலகை ஒன்றை அமைப்பித்தான். அப்பலகை இறைவன் அருளால் பெறப்பட்டதாம். தெய்வத்தன்மை வாய்ந்தது என்பர் ஒரு சாரார். பொறி-கிறிகளின் நுட்பம் சிறக்க அமைந்துள்ளது என்பர் பிறிதோர் சாரார். அப்பலகை ஒரு முழ அளவினதென்பர் ஒரு சாரார். ஒருச் சாண் அளவினதென்பர் பிறிதொர் சாரார். அதற்கு முத்தாழி என்றும் கடிஞை என்றும் பெயர் வழங்கப்படும். கல்லினால் ஆக்கப்பட்ட பெரும் பரப்புள்ள பலகையாதலின் கன்மாப்பலகை என்றும் ஒரு சாரார் கூறுப. பிறிதோர் சாரார் மகிமை வாய்ந்த பெரிய பலகை என்ற பொருளில் கனமாப்பலகை என்பர். மற்றோர் சாரார் கன்மா – மாமரத்தில் ஒரு வகை; வைரமிக்குள்ளது; அதனால் இயற்றப்பட்ட பெருந்தட்டு என்பர்; கல்மூங்கில் – என முற்றிய மூங்கிலில் வைரம் பாய்ந்ததைக் கூறுவது போன்ற வழக்கு என்பாரும் அவரே.

சங்கப்பலகை

இப்பலகை பிச்சா பாத்திர வடிவாய் (கடிஞை) மூன்று பகுதியதாய் விளங்கிற்று. இஃது “இறைவன் தன் திருக்கரத்தில் அடியவர்க்கு அருளுமாறு கொண்டுள்ள திரு ஓடு ஒப்ப விளங்கியது” என்பர் சைவர். அதில் மூன்று தட்டு உண்டு. அம்முத்தட்டும் முறையே தலைத்தட்டு, இடைத்தட்டு, கடைத்தட்டு எனப் பெயர் பெறும். ஒவ்வோர் தட்டுக்கும் மும்மூன்று கண்ணாறுகள் உண்டு. அக்கண்ணாறுகள் எடுப்பு எனப் பெயர் உற்றவை. புலவர் அறுவர் ஒருங்கு இருக்கத்தக்கதாய் அமையப்பட்ட ஒரு எடுப்பில் ஆறு இருக்கைகள் உண்டு. ஒவ்வோர் இருக்கைக்கும் ஒவ்வோர் புலவர் வீற்றிருப்பர்.. அங்ஙனம் ஆறு புலவர் சேர்ந்திருக்கும் ஓர் எடுப்பின் பின்புறமாக ஒலி எழுத்தாளர் பலர் (shorthand writers) மறைந்திருப்பர். இவ்வாறே ஒவ்வோர் தட்டிலும் புலவரும் மறைந்துள்ள ஒலியெழுத்தாளரும் இருப்பார்கள். ஒலி எழுத்தாளர் ஒளிந்து இருப்பதைச் சங்க மண்டபம் நோக்கி வருவார் அறியார். அவ்வாறு அவர் இருக்கையானது பின் அணியாகத் தாழவில் மறைத்து அமைக்கப்படிருந்தது. கழக மண்டபத்தின் நடுவுள்ள நீராழி மண்டபத்தில் இம்முத்தட்டுகளையும் இயக்கவல்ல உட்பொறியாத்த பலகை ஒன்றிருந்தது. அதுவே இறைவனால் அளிக்கப்பட்டதென்பர் ஒரு சாரார். சங்கம் காண வருவார் வலமாகச் சென்று அங்குள்ள புலவரையும் நூனிலையத்தையும் சொற் கிழத்தியின் உலைவிலா உருவத்தையும், நீராழியின் தோற்றத்தையும் சுற்றினோக்கித் திரும்புவர். (அஃதாவது இடது கைப்புற வழியாய்ப் போய் வலது கைப்புற வழியாய்த் திரும்புதல்) ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு எடுப்பின் பக்கமாக கற்படிக்கட்டுகள் அமைந்திருந்தன. (அக்கடிக மண்டப விளக்கத்தின் படம் ஒன்று இத்துடன் கோக்கப்பட்டிருப்பதை நோக்க).

பொருள் இலக்கணம்

இத்தகைய மண்டபத்தே இப் பெற்றித்தாய இருக்கையினைக் கையாண்ட புலவர் நுண்ணறிவுடையராயிருந்தார். எனினும் தமிழ் மொழிக்கு இன்றியமையாத பொருள் இலக்கணத்தில் (தமிழ் ஆராய்ச்சிக்குப் போதிய) புலமை நிரம்பியுள்ளவர் அருகிக் காணப்பட்டனர். அதன் காரணம், பன்னீரியாண்டு நிகழ்ந்த பெரும் பஞ்சத்தில் ******  புலமை வாய்ந்த பலர் ஆண்டாண்டு சிதறியும் மடிந்தும் போயினமையே என்ப. அகப்பொருள் இலக்கணம் காணற்கும் அருமையாக இருந்தது. அஃதில்லாக்குறை தமிழ் ஆராய்ச்சியினை முட்டுப்படுத்தியது. சங்கத்தினைப் பேணிப் போற்றிய பாண்டியனும் இஃதறிந்து பெரிதும் கவலுற்றான். புலவரும் இயற்றுவதி யாது என அறியாது சோம்பியிருந்தனர். அந்நிலையில் இறையனார் (மதுரை பெருமானடிகள்) திருவுளங் கொண்டு தாமாகவே தம் பெயரால் “இறையனார் களவியல்” என்ற அகப்பொருள் இலக்கண நூல் ஒன்றினை அறுபது சூத்திரத்தால் யாத்தருளினார். அது வெளிப்போந்த வரலாறு பின்வருமாறு:-

இறையனார் அகப்பொருள் வரலாறு

மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான் ‘என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று: அது தானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்” என்று இவ்வறுபது சூத்திரத்தையும் செய்து மூன்று செப்பிதழ் அகத்தெழுதிப் பீடத்தின் கீழ் இட்டான்.

“இட்ட பிற்றை ஞாண்று தேவர்குலம் வழிபடுவான் தேவர் கோட்டத்தை எங்கும் துடைத்து, நீர் தெளித்துப் பூ விட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென்றும் அலகிடாதான் அன்று தெய்வத் தவக்குறிப்பினான் அலகிடுவன் என்று உள்ளங்குளிர அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக் கொண்டு போந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று.”

“காட்டப் பார்ப்பான் சிந்திப்பான்: ‘அரசன் பொருள் அதிகாரமின்மையிற் கவல்கின்றான் என்பது பட்டுச் செல்லா நின்றதுணர்ந்து நம் பெருமான் அருளிச் செய்தானாகும்’ என்று தம் அகம் புகாதே கோயில் தலைக் கடைச் சென்று நின்று கடைக்காப்பார்க்கு உணர்த்தக், கடைக்காப்பார் அரசர்க்கு உணர்த்த, அரசன் புகுதருக என்று பார்ப்பானைக் கூவச், சென்று புக்குக் காட்டக் கொண்டு நோக்கி ‘இது பொருளதிகாரம்! நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது’ என்று அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று சங்கத்தாரை கூவுவித்து ‘நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்த பொருளதிகாரம்! இதனைக் கொண்டு போய்ப் பொருள் காண்மின் என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப் பலகை ஏறியிருந்து ஆராய்வுழி எல்லாருந் தாந்தாம் உரைத்த உரையே நன்றென்று சில நாளெல்லாஞ்ச் சென்றன”.

இறையனார் அகப்பொருள் உரை வரலாறு

“செல்லவே நாம் இங்ஙனம் எத்துணை உரைப்பினும் ஒருதலைப்படாது நாம் அரசுனுழைச் சென்று நமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டுமெனக் கொண்டு போந்து, அவனால் பொருளெனப் பட்டது பொருளாய், அன்றெனப்பட்டது அன்றாய் ஒழியக் காண்டும் என, எல்லாரும் ஒருப்பட்டு அரசனுழச் சென்றார். செல்ல அரசனும் எதிர் எழுந்து சென்று ‘என்னை! நூற்குப் பொருள் கண்டீரோ’ என ‘அது காணுமாறு எமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டு’ மெனப் போமின்! நுமக்கோர் காரணிகளை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின்மர் ஆயிற்று. நுமக்கு நிகர் ஆவர் ஒருவர் இம்மையின் இன்றே’ என்று அரசன் சொல்லப், போந்து பின்னையும் கன்மாப் பலகை ஏறியிருந்து ‘அரசனும் இது சொல்லினான் யாங்காரணிகளைப் பெறும் ஆறு என்னை கொல் என்று சிந்தித்திருப்புழிச் சூத்திரம் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக் கடவுளன்றே! அவனையே காரணிகனைத்தால் வேண்டும் என்று சென்று வரங்கிடத்தும்’ என்று சென்று வரங்கிடப்ப இடையரமத்து.

உருத்திரசன்மன்

“இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான் பைங்கண்ணன்: புன்மயிரன்: ஐயாட்டைப் பிராயத்தினன்: ஒரு மூங்கைப்பிள்ளை: உளன்: அவனை அன்னன் என்று இகழாது கொண்டு போந்து ஆசனமேல் இரீஇக் கீழ் இருந்து சூத்திரப் பொருள் உரைத்தால் கண்ணீர் வார்த்து மெய்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும்: அவன் குமாரதெய்வம்: அங்கோர் சாபத்தினால் தோன்றினான்” என முக்கால் இசைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்று.”

நக்கீரர் உரை

“ஆக எழுந்திருந்து தேவர் குலத்தை வலங் கொண்டு போந்து உப்பூரி குடி கிழாருழைச் சங்கமெல்லாம் சென்று இவ்வார்த்தை எல்லாம் சொல்லி ‘ஐயனாவான் உருத்திரசன் மனைத்தரல் வேண்டும்” என்று வேண்டிக் கொடுபோந்து வெளியது உடீஇ வெண்பூச்சூட்டி வெண்சாந்து அணிந்து கன்மாப்பலகை ஏற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டு வாளாயிருந்து மதுரை மருதன் இளநாகனார் உரைத்தவிடத்து ஒரோவழிக் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தோறும் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்.”

“இருப்ப ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு என்றார்” (இறை. களவி. பாயிர உரை)

சண்பகபாண்டியன்

இவ்வாறு தமிழ்ச்சங்கமானது பொருள் இலக்கணம் பெற்றுப் பல ஆண்டுகளாகத் தமிழ் ஆராய்ந்து வருங்காலை வங்கிய சேகரன் கால்வழியில் வந்த சண்பகபாண்டியன் என்பான் அரசாட்சியடைந்து செங்கோல் செலுத்தி வந்தான் (இவன் வங்கிய சூடாமணி என்றும் அழைக்கப்படுவான்) அக்காலத்து ஒரு நாள் மாலை தன் பட்டமகிஷியுடன் அரண்மனை மேன்மாடத்துத் தென்றல் வீசும் சீர்மை நோக்கி உலவி வருங்கால் நறுமணம் ஒன்று (அவன்) நுகர நேர்ந்தான். அந்நறுமணம் தென்றலால் உந்தப்பட்டு வந்ததெனினும் அவன் தன் அருகே தன் பெருங்கோமகள் அன்றிப் பிறர் இல்லாமையின், அக்கோமகள் கூந்தலினின்றும் வருகின்றது என அறிந்தனன். அப்பொழுதைக்கு அவள் தன் கூந்தலில் பூ ஒன்றும் அணிந்திராமையாலும், விரத ஒழுங்கினைக் கைக்கொண்டு சின்னாள் அவள் நறும்பூ முடியாதிருந்தமையாலும், அரசன் தான் நுகர்ந்த நறுமணம் அவள் கூந்தலினின்றும் இயற்கையாகவே உண்டாயது என யூகித்துச் செயற்கையால் உண்டாயது அன்று எனத் தெளிந்தான். தெளிந்த அரசன் பெரிதும் இறும்பூதெய்தி, “என் மனக் கோளை உள்ளது உள்ளவாறு கண்டு இனிய கவி ஒன்று இயற்றி உரைப்பார் எவரேயாயினும் அவர்க்கு ‘ஆயிரம் பசும்பொன் பரிசாக அளிப்பல்’ என்று நகரில் முரசு அறைவிக்கச் செய்து சங்கமண்டபத்தில் ஆயிரம் பசும்பொன் முடித்த கிழி ஒன்றைத் தூக்கினன். எண்ணிறந்த புலவரும் – அவர் ஒப்பாரும் – பிறரும் தத்தமக்குத் தோன்றியவாறு கவி இயற்றி அரசர்க்குக் காட்டினர். அக்கவிகள் அரசன் உள்ளக் கருத்தினுக்கு ஏலாவாயின. அக்கிழியும் பல திங்கள் கட்டியபடியே தூங்கிற்று.

தருமி – இறையனார்

அந்நாள் அம்மதுரையம்பதியில் வாழும் மறையவர் குலத்து உதித்த தருமி என்னும் பெயருடையான் ஒருவன் – தாய்தந்தையர் இல்லாதான் – பெரிதும் நல்குரவுடையான். சிவ வழிபாடுடையான்: மறந்தும் புறந்தொழா மாண்புடையான். சிவபெருமானை வணங்கித் தன் குறைவினை வெளியிட்டுத் தான் அப்பெருநிதி பெறுமாறு அரசன் கருத்துக்கேற்ற கவி ஒன்று இயற்றித் தருக என வேண்டினான்.

அப்பெருமானும் அவன் வேண்டுகோட்கு இணங்கி அரையன் உள்ளக்கிடக்கையை ஞான சமாதியால் அறிந்து அடியிற் கண்ட அருஞ் செய்யுள் ஒன்றினை யாத்தளித்தனன்.

அக் கவி வருமாறு:-

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சரைத் தும்பி!

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே” என்பது.

இதன் பொருள்:- பூந்தாது தேரும் வாழ்க்கையினையும், அழகிய சிறகுகளையுமுடைய வண்டே! (என்னிடம் வைத்த) விருப்பத்தினால் சொல்லாது (உண்மையாகக்) கண்டதையே சொல்: நீ அறியும் புஷ்பங்களுக்குள், பழக்கம் மிக்க நட்பையும் மயிலின் சாயலையும் நெருங்கிய பல்லையும் உடைய (இவ்) அரிவை (ப் பருவமுடைய பெண்) கூந்தலைக் காட்டிலும் மணமுடைய பூக்கள் உண்டோ? என்பது.

இக் கவியைத் தருமி பெற்றுக்கொண்டு சங்கப் புலவர் பலரிடமும் காட்ட அன்னோர் பொறாமையால் ஒன்றுங் கூறாது அவன் கொடுத்தபடி அவனிடமே திருப்பினர். அவன் நேரே அரையானிடஞ் சென்று அதனைக் காட்டினான். அரசன் உள்ளக் களிப்புடன் பேருவுவகை பூத்து, இக்கவி ஆக்கினான் யாவனே எனினும் ஆகுக. அவன் பொற்கிழி பெற்றுக் கொள்வானாக எனச் சங்கமண்டபத்துக்கு அவனைப் போக்கினன். தருமி  ஆங்குச் சென்று சித்திரத் தூணத்தின்பால் கட்டிதூக்கிய அப்பொற்கிழியை அவிழ்த்து எடுக்கப் போந்தான்.

அந்நிலையில் அருகே சங்கப்பலகையில் வீற்றிருந்த நக்கீரன் – “வேதியனே! அக் கிழியை நீ தொடாதை. உனக்கு இக்கவி எழுதியளித்த புலவனைக் கூட்டி வருக. இக்கவியிற் குற்றமுண்டு” என்றான். தருமி மனமழுங்கி இறைவன் பாலேகி ஓலமிட இறையனார் புலவனாகி நக்கீரனுடன் வாது புரிந்தருள வந்தார்.

நக்கீரன் ஒடுக்கம் நடுக்கமின்றித் தன் உட்கோளை நிறுவினன். இறுதியில் இறையனார் “ஞானப் பூங்கோதை” கூந்தற்காயினும் இயற்கை மணம் உளதன்றோ என, அவன் அதனையும் மறுக்க, இறையனார் வெகுண்டு நெற்றிக் கண்ணால் அவனை வெதுப்பினார். அத்துடன்

(உத்தம ஜாதிப் பெண்களுக்கு)

“வளந்தரும் மடம் நாண் முன்னா வரும் குணம் நித்தமாயே

உளங்கவர் வாசம் தேசு உரியன: நித்தமாகும்”

என்று தம் கோளையும் நாட்டினார்.

இறுதியில் தருமி பொற்கிழி பெற்றான். கீரனும் அல்லல் உற்று இறைவன் அருள் பெற்று உயர்ந்தான். அகத்தியனார் அக்கீரனுக்கே அதுவரை புலனாகாதிருந்த அரிய இலக்கணங்களை இறைவன் கட்டளைப்படி வரன்முறையாக உபதேசித்தனர். கீரனும் அவற்றைக் கற்று புலத்துறையில் தெளிந்தோனாயினன்.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

இவ்வாறு சங்கம் பல ஆண்டு வளர்ந்து வருகையில் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அரையனாயினான். இவன் கானப் பேர் எயில் – (காளையார் கோவில்) கடந்த உக்கிரப்பெருவழுதி எனப்படுவான்[8]. இவன் அகநானூறு என்ற நெடுந்தொகையினைத் தொகுக்கும்படி செய்தான். அத்தொகையினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மனார். இவ்வரசன் காலத்திலேயே பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு என்பவைகளும் தொகுக்கப்பட்டன. சங்கப்புலவர்களால் மதிப்பிடப்பட்ட திருக்குறளுக்குச் சாற்றுகவி அளித்தவனும் இவனே என்ப. இவன் காலத்திலே கடைச்சங்கம் நிலைகுலைந்ததாம்.

கடைச்சங்க நிலைகுலைவு

முடத்திருமாறன் கால முதல் பல பாண்டியர் தலைமுறையாக இவ்வுக்கிரப் பெருவழுதி காலம் வரை மேலையில் உயர்ந்து ஓங்கி நடைபெற்று வளர்ந்த இத்தமிழ்ச் சங்கம் இவ்வரையன் காலத்து நிலை தளரலாயிற்று. இதன் காரணம் சங்கப் புலவர் செய்வினையேயாகும். அன்னோர் இறைவன் கவிக்கே குறை கூறி வாதாடியுள்ளேம் என்றும், பாண்டிய அரசர் பெருஞ்சுட்டு மிக்கு வாய்த்துள்ளோம் என்றும், தம்மை ஒப்பாரும் மிக்காருமாய பிறர் இம்மையில் இலராயினார் என்றும் பலவாறாக எண்ணி அடலேறு அனைய செருக்கில் ஆழ்ந்துவிட்டனர்.

அங்ஙனம் ஆழ்ந்தவர் அரசவை நாடிப் பரிந்து பாடிவரும் பிற புலவரைப் புறக்கணித்து வந்தனர். பாடி அரங்கு ஏற்ற வருபவர் கவிகளை ஒலியெழுத்தாளர் துணையால் பாடிடுவர் பாடி முடிக்கு முன்னர் எழுதுவித்துக் கூட்டி ஏடு ஒன்று உருப்படுத்தி “இப்பாட்டுக்களை முன்னரே யாம் கேள்விப்பட்டுள்ளோம். இவை பழம் பாட்டுக்களேயாகும்” என்று தாம் எழுதுவித்த புதிய சுவடியை அவிழ்த்துக் காட்டுவர்; காட்டவே ஏனையர் மனம் அழுங்கி, அரசனிடம் பரிசிலும் பெறாமையால் வயிறு எரிந்து, காடு மலை கடந்து வந்தும் ஒன்றும் பெறாது ஏங்கிச் செல்லும் தம் விதியினை வெறுத்து இச்சங்கம் குலைய வசை பாடிப்போவர்.

அரையனிடம் பாடிப் பரிசில் பெறுபவர் அரிதாகி வந்தனர். அங்ஙனம் பெறாது வெறுங்கையாளராய் வெறுக்கை பெறாது அல்லற்பட்டு ஆற்றாமே தாம் வந்தவழி மீண்டேகுபவர் திறனும், அன்னோர் வயிறெரிந்து கூறிய கூற்றும், கடைச்சங்க நிலைகுலைவுக்குக் காரண வித்துகள் ஆயின.

இந் நிலையில் சமயவாதிகள் பலர் ஒன்றுகூடி சங்கமண்டபத்திற்குத் தெற்கே ஓர் பட்டி மண்டபம் நிறுவி சமய நூல் ஆராய்ந்து வந்தனர். அன்னோருள் ஒருசாரார் தமிழ் மொழியின் பெற்றி அறியாது சமய நூல் பல்கிக் கிடக்கும் வடமொழியே மதிக்கத்தக்கதென்றும் தமிழ் மொழிப் பொருள் நன்மையற்றதென்றும், பிறவும் பேசித் தமிழைக் குறை கூறி வந்தனர்.

இதனை வாதிக்க ஒரு நாள் நக்கீரர் ஆண்டுச்சென்றார். பிறர் பட்டிமண்டப வாயிலைச் சாத்தி அவரை உட்புகாவாறு செய்தனர். அன்னோர் செயலைக் கண்டு நக்கீரர் வெகுண்டு அவருள் தலைவனாக உள்ள வேள் என்னும் பட்டம் பெற்ற குயக்கொண்டான் என்பவனை ஓர் அங்கத வெண்பாப் பாடி அவன் சாகுமாறு செய்தார். அப்பாட்டு வருமாறு:

“முரணில் பொதியில் முதற் புத்தேழுள் வாழி

பரண கபிலரும் வாழி – யரணிலா

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்

ஆனந்தஞ் சேர்க சுவாகா” என்பது.

பின்னர் சான்றோர் பலர் கூடி நக்கீரர் வெகுளியை அமர்த்திக் குறையிரந்து அவனைப் பிழைப்பூட்ட வேண்டினர். நக்கீரரும் மனோ சாந்தமுற்றவராய்

“ஆரியம் நன்று தமிழ் தீதென உரைத்த

காரியத்தால் காலக் கோட்பட்டானைச் – சீரிய

வந்தண் பொதியில் அகத்தியனா ராணையினாற்

செந்தமிழே தீர்க்க சுவாகா”

என்ற வெண்பா அருளினார். அவன் பிழைத்து எழுந்தான். நக்கீரர் இவ்வாறு செய்த அருஞ்செயல் ஏற்கனவே செருக்கில் அமிழ்ந்துள்ள தமிழ்ச் சங்கப் புலவர்க்குக் கொழுக் கொம்பாகி விளங்கியது.

புலவர் எத்துணையோர் எப்பெற்றியினராயவரினும் அன்னோர் மதிப்பிழந்தே செல்வாராயினர். அரையன் இஃதறிந்தும் யாது சொல்வதென அறியாதிருந்தான்.

சங்க நிலைகுலைவு

தமிழ்ச் சங்கம் வந்து வறிதே பெயரும் புலவர் அல்லற்பட்டு ஆற்றாது அழுங்கிச் சென்ற நிலையும் அவர் சேர்ந்து கூறிய செய்யுளும் ஊசிமுறி ஒன்பத்தாறு என்ற நூலில் காணப்படுகின்றன. சங்கப்பாட்டு என்ற பெயருடைய நூலும் இதுவே. ஆறைப்போயிலான் என்பவர் அதன் உரை ஆசிரியர். அவர் கூறுமாறு:

“பொதியத்து அமர்ந்த மலையமாதவன் அடி போற்றி. நக்கீரன் உள்ளிட்டோர் நாற்பத்தொன்பதின்மர் கூடலில் சங்கம் பரித்து வருநாளில் புத்தியலாப் புகுந்தோர் (புதிதாக்க் கழக உறுப்பினராகி வந்தவர்) ஏனையருடன் கூடிச் செருக்குற்று அறை போய் அடிப்பட்ட ஒலி எழுத்தாளரை (experts in shorthand) பழுக்கச் செய்து (மிகவும் அதிகப்படுத்தி) பாடி அரங்கேற்ற வருநர் பாடல் ஏறாவாறு கன்மாப்பலகை ஏறித் தோற்பித்துப் “பழம் பாட்டு” என ஏடவிழ்த்துக் காட்டி அவர் உள்ள மாழ்கச் செய்விக்க வேத்தூணியோர் (அரசவை நாடி உண்ணும் பரிசிற் புலவர்) அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வாரச் சொன்ன பாட்டு:-

ஓதி என மாறி உயர் போங்கும் பெட்பணா அய்

ஓதியும் தேரையும் போல் ஓர்துறையின்று ஆஅதி

நடை மயிலால் நாடி நமரொழியச் சேர்வாகு

இடையாற் கடையால் இழி.

(ஊசிமுறி பாயிரம் உரை) என்பது.

இதன் பொருள்: ஓந்தியைப் போல (வேளைக்கு ஒவ்வோர் விதமாக) மாறி, உயர்ச்சி மிக்கு விரும்பிய சங்கப் பலகையே (நீ) ஓந்தியைப் போலவும் தேரையைப் போலவும் ஒருவயப்படாது (அலை வழிவு) ஆகுக: (யாவர்களால் இவ்வழிவு நிலை அடைவாய் என்றால்) ஔவையாராலும் நம்மைப் போன்றவர் அன்றி (நின்னிடம்) தேடி அடையவரும் இடைக்காடராலும் திருவள்ளுவராலுமே” என்பது.

ஓதி – ஓந்தி; அணாய் – சங்கப்பலகை; விளி.  நடைமயில் – ஔவை. சேர்வு – தொழிற்பெயர்; ஆ முதனிலையாகக் கொள்வர் இவ்வாசிரியன்பின். ஈண்டு ஆகு கொள்க. இடை – இடைக்காடன்; கடை – திருவள்ளுவன். (ஆறைப்பொயிலான் குறிப்புரை [ஊசிமுறி பாயிரம்] காட்டியது.)

மூவர் வரவு

இந் நிலையில் பரிசிற் புலவர் படும் பாடு சான்றோர் காதினை எட்டி அன்னோரையும் மன வருந்தச் செய்த்து. இறுதியில் அன்னோர் ஆதரணைப் பெற்று, இறைவன் திருவருள் செயலை முன்னிட்டு இடைக்காடனார் ஔவையாரும், திருவள்ளுவரும், சங்கப் புலவர் கர்வத்தினை ஒடுக்கிச் சங்கப் பலகையினைக் குலைக்க மதுரைக்குப் போதந்தார். அவர் சங்கம் குலைக்க வந்த காலம் ஆனித் திங்கள் என்பர் (ஆறைப்பொயிலான்) ஊசிமுறி உரையாசிரியர்.

திருவள்ளுவரும் சங்கத்தாரும்

அக்காலத்து திருவள்ளுவர் ஔவையாருடன் முதலில் சங்க மண்டபம் சேர்ந்தார். “அவரை அச்சங்கத்திலுள்ள புலவர்கள் நீர் எந்த ஊர் என்று கேட்கத் திருவள்ளுவர் –

“எந்தவூ ரென்றீரிருந்தவூர் நீர் கேளீர்

அந்த ஊர்ச் செய்தியறியீரோ – அந்தவூர்

முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்

அப்பாழும் பாழா யறும்” (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைக் கூறியருளினார்.

அது கேட்ட புலவர்கள் இவர் ஞானி என்றனர். அதற்கு விடையாக வள்ளுவர்:

“ஞானவா னென்றீ ரென்னை நாதவிந்துவுங் கடந்து

கானிலை வரையுஞ் சுட்டுக் கடுவெளி பரமானந்தந்

தானெனு மறிவு தானுந் தவிந்து தன் வசமுங் கெட்டு

மோனமுங் கடந்திட் டப்பால் முடிந்தவர் ஞானியாவார்.”

என்னும் பாடலைக் கூறியருளினார்.

உடனே புலவர்கள் இவரை ஐயர் என்றனர். அதற்கு விடையாக வள்ளுவர்:

“ஐயரென்றுரைக்க நாயேற் கடுக்குமோ வருளிலான் மா

உய்யமும் மலங்களைதிட் டுயிர் பர வெளியிலாக்கிப்

பொய்யொடு களவு மற்றைய புலன்களை யொடுக்கு வானின்

வெய்யவன் மதியம் போல விரவுவ னாய ராவார்”

என்னும் பாடலைக் கூறலும் புலவர்கள் கேட்டு மிக மகிழ்ச்சியுற்று இரும் என்று உபசரித்தனர்.

அதற்கு உத்தரமாக:

“இரு மென உரைத்தீ ரென்னை யேற்குமோ வேழை யேற்குத்

தரும் பொரு ளுணர்ந்து சைவ சமையமு மளைந்து நீங்கி

மருடரு வினையும் போக்கி மாசிலா வுண்மை ஞானம்

பெருகின ரிருப்ப ரீது பெறாதவ ரிருப்பரோதான்”

என்னும் பாடலை வள்ளுவ நுண்ணுணர்ச்சியாலே கூறியதைக் கேட்டுப் புலவர்கள் போம் என்று சொல்லினர்.

அதற்கு அத்தியற்புதமாக வள்ளுவர்:-

போமென வுரைத்தீரென்னைப் பொறியொடு புலன்களைந்து

மாமெனு மசபை யோடு மங்ஙனே நிறுத்திக் கொண்டே

யேமமும் யாம மற்றே யிரவொடு பகலு மற்றுச்

சோமனார் பதியை விட்டுத் துறந்தவர் போவரன்றே”.

என்னும் பாடலைக் கூறியருளினார்.

பின்னும் புலவர்கள் “நில்லும்” எனச் சொல்லினர்.

அதற்கு விடையாக –

“நில்லு மென்று ரைத்தீ ரென்னை நேசபா சங்களைந்து

புல்லறி விடும் பாங் காரம் புலை கொலை களவு மற்றுச்

சொல்லிய வுண்மை ஞானச் சுழுமுனை முடிவின் மீதே

யெல்லையுங் கடந்திட் டப்பர லேகமானவர் கணிற்பார்”.

என்னும் பாடலை வள்ளுவர் கூறினார். (செந்தமி 7 vol. 373, 74)

ஔவையாரும் சங்கத்தாரும்

இவற்றால் புலவர்கள் ஒன்றும் வள்ளுவரிடம் பேச அறியாது திகைத்து அவருடன் வந்த ஔவையரை நோக்கினார். ஔவையார் புலவர்களை நோக்கித் தம்முடைய ஐந்து விரல்களையும் குவித்தும் மூடியும் கொஞ்சம் திறந்தும் சுட்டு விரல் ஒன்றை மாத்திரம் நீட்டியும் ஐந்து விரல்களையும் அகலத் திறந்தும் இவ்வாறான சில குறிகளைக் காட்டி, “இவற்றிற்குப் பொருள் என்னை?” என்று வினவினர். அவர்கள் அவர் கருத்து அறியாதவர்களாய் ஒரு பெண்ணின் நிலையை வர்ணித்து ஒரு வெண்பாச் சொல்லினர்[9]. அது கேட்ட ஔவையார், “நீங்கள் சொல்லியது தவறு” என்று அவர்கள் மனம் புழுங்கி வெட்கம் அடையும்படி –

“ஐயமிடுமின் அறனெறியைக் கைப்பிடியின்

இவ்வளவே னும்மன்னம் இட்டுண்மின் – தெய்வம்

ஒருவனே என்றும் உணரவல் லீரேல்

அருவினை களைந்தும் அறும்.”

என்னும் வெண்பாவால் தாம் கருதிய பொருளை வெளியிட்டார் [அவ்வையார் 1919 அனவரத நாயகம் பிள்ளையவர்கள் பதிப்பு, பக்கம் 34]

இவ்வாற்றால் புலவர் தலைகவிழ்ந்து ஒன்றும் பேசாது தமிழ்க் கழக மண்டபம் விட்டு அகன்றனர்.

மறுநாள் இடைக்காடர், ஔவையாரையும் திருவள்ளுவரையும் கூட்டிக்கொண்டு சங்கமண்டபம் வந்தார். அவர் சென்ற ஆற்றினையும் அங்கு நிகழ்ந்தவற்றையும் ஆறைப்போயிலான் கூறுமாறு:-

அண்ணாந்து ஏகிய சங்கத்தினர் அவ்வாண்டு ஆணித் திங்கள் வள்ளுவனாலும், ஔவையாலும் வீறிழிந்து தாழப் பிற்றைநாள் அவ்விருவரையும் கூட்டிப் பலகை குலை(வி)த்து மூழ்குவிக்க அதனுழைப்போந்த இடைக்காடன் மாட்டு

அது சங்கப்பலகை வீற்றிருந்தான் போக்கியான் “நீயிர் யாரேயோ என்றாற்கு இவன் (இடைக்காடன்) சொற்ற பாட்டு[10]:-

“இடைக்காட்டுறைவேன் யிரியோ ஒஒஒ றீ இஇஇ

படக்கைப் பறியோலை தட்டி – இடைக்காடன்

வந்தோம் சிறுபல கைத் தாலிப் பெருக்கெண்ணித்

தொந் தொந் தோந் தொந்தொன் தோந்தோம்”

                                  (ஊசிமுறி 1)

இப்பாட்டின் கருத்து:

இரியோ ஒஒஒறீஇஇஇ என்று ஒலி செய்து கையிலுள்ள பறியோலைத் தட்டுபவன். இடைக்காட்டில் உறைவேன். பெயர் இடைக்காடன்: சங்கப்பலகை குலைவிக்க வந்தேன் தொம் தொம் தோம் தொம் தொம் தோம் தொம் என்பது.

இவ்வாறு ஒலிக்குறிப்பைக் காட்டியது, மறைந்திருக்கும் ஒலி எழுத்தாளர் எழுத்தாணியால் ஓலைமுறியில் எழுதமுடியாவாறு செய்வதற்கேயாம்.

இங்ஙனம் மறுமொழி கூறியவுடனே தமிழ்ச் சங்கப் பலகை போக்கியானைக் கீழே தள்ளி இடக் குறுக்கம் செய்து கொண்டது.

உடனே அடுத்துள்ள பெருந்தேவன் “இடையனேயோ! புத்தி பிடரியேயோ” என முனுமுனுப்ப இடைக்காடன்

ஆம் ஆம் யாற்றங்கரையிலிருந்த ஓர் மாமரத்தில் ஓர் காக்கையானதிருந்து க்ஃக்ஃக்ஃஃ என்று கரைந்தது – அதை என் மகன் வையக்கோன் த் த் த் த் த் த் என்று எய்யும் அம்பு இல்லாமல் எய்தான் என்ற கருத்தடங்கிய ஓர் செய்யுளைக் கூறினான்.

சங்கப்பலகை அப்புலவனையும் கீழே தள்ளி இடங்குறுகிக் கொண்டது.

கொண்டதும் மலாடன் என்னும் ஓர் புலவன் இடைக்காடரை நோக்கி “ நீ ஓரான்” எனக் கைக்குறி காட்டினான்.

இவர் “எங்கும் உள்ள இறைவன் என்னிடமும் அமர்ந்துள்ளான். த் த் தொத் தொத் த் த் தொத் தொத் என்று கேலி செய்து கண்ணடிக்க வேண்டாம். சங்கப் பலகையை எஃகெஃகெஃகெஃகெஃகெஃ என வாட்டிக் குறுக்கி வைப்பேன் என்றார்.

அவனும் அப்படியே விழச் சங்கப் பலகை குறுகிவிட, நாகன் தேவன் என்னும் புலவன் தலையாடிக் கொண்டு – “பாடும் பாட்டடிப்போம்” என்று கூறினான். இடைக்காடனார் தம் தொந்தி வயிற்றைத் தடவி ஏப்பமிட்டுக் கொண்டு நாக்கு உதப்பி –

“பாட்டுக்கு பாட்டடிப்பாயோ? உன் பாட்டியைத் தூக்கி என் கஞ்சிக் கலயத்துள்ளே டு எவ்வ்வ் எவ்வ் என்று போட்டு ஓவ்வ்வ்வ் ஓவ்வ்வ்வ் ஓவ்வ்வ்வ் என்று உறிஞ்சிடுவேன் பார்” என்ற கருத்துள்ள செய்யுள் ஒன்றைக் கூறினார்.

அவனும் கீழே விழ பலகை குறுகி ஒட்டியது. அடுத்து நத்தத்தன் என்னும் புலவன் சங்கப்பலகை ஏறி – உழையனையும் தன்னையும் பின்னோனையும் தொட்டு ஏக்கழுத்தஞ் செய்து நோக்கினான்.

அதற்கு இடைக்காடர்:

“ஓரு கல்லெறிந்தால் கா கா கா கா க் காக் காக் காக் கா கா என்று சப்தமிட்டுக் கொண்டு ஆயிரம் காக்கை பறந்து விடும். அவனும் இவனும் உவனும் கூடினாலும் பகை வெல்லாது” என்ற கருத்துடைய செய்யுள் ஒன்றைச் செப்பினார். இதைக் கேட்டதும் பலகை அவனையும் கீழே தள்ளித் தன் அளவிற் குறுகியது.

மேல் கல்லாடன் வந்தமர்ந்து “நால் விரல் மேல் பெருவிரல் வைத்து நெற்றி தொட்டு ஈர்ப்ப இடைக்காடர்.

“பூளைப் பஞ்சைப் போல பூ உ உ உ உ உ உ உ திச் சூளைச் சாம்பலைப் பூசுபவரே! உம்மறைச் சொல் நம்மிடம் செல்லாது: என் மனம் கொண்டாலன்றி உம் மந்திரம் பயன்படாது என்ற கருத்துள்ள பா ஒன்று கூறினார்.

இவ்வளவில் ஓராறு எடுப்பாயுள்ள சங்கப் புலவரிருக்கை குலைந்து ஒழிந்தது. மறைவேயிருந்த ஒலி எழுத்தாளர் அடுத்த எடுப்புக்குள் ஓடி மறைந்தார்கள். இடைக்காடர் மேல் எடுப்புக்குச் சென்றார்.

அவ்வெடுப்பில் (ஈராறெடுப்பில்) உள்ள பலகையில் மாமூலன் என்னும் புலவன் இருந்தான். அவன் இவரைக் கண்டதும் பேச வாயெடுத்தான். நாமகள் வாயடைத்தாள். உடனே மனம் உழைந்து சில குறிகளை இவரிடம் மெதுவாய்க் காட்டிப் பேசினான்.

இடைக்காடர் “இ ல் ல் ல் ல் ல் ல் ல் ல் என்று ஒலிக்கும் ஏரல் என்ற ஜலசரம்; கறிஞ்சான் என்ற மரவண்டு இ ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் என்று ஒலிக்கும். ஒய்ய் ஒய்ய்ய்ய்ய் என மொய்த்தும் ஓதப்படுவதை அறிபவரே! பையக் குளர வேண்டாம். பாய்ந்தோடிப்போம்” என்ற கருத்தடங்கிய செய்யுளைக் கூறினார்.

இடைக்காடர் இங்ஙனம் செவிப்புலனாகும் அணுத்திரள் ஒலியை வரிவடிவில் எழுதவொண்ணாதவாறு பலவாறாகப் பாடவே, ஒலியெழுத்தாளர் இவர் உரைப்பதை எழுத இயலாமல் தட்டழிந்து தடங்கெட்டு ஆண்டாண்டுள்ள பிறபிற எடுப்பில் மறைந்து பதுங்கிச் சென்றார்கள்.

ஒவ்வொரு புலவரும் வினவிய தொடைக்கெல்லாம் இடைக்காடர்  விடையிறுத்த அளவிலே, சங்கப்ப பலகையும் தொடர்ந்து தொடர்ந்து தன் அளவில் குறுகிக் கொண்டே வந்தது. அப்பலகை மேல் வீற்றிருந்த புலவரும் அமர இடமின்றி முறை முறையே தவறித் தவறிக் கீழ் இழிந்து போயினர்.

இவ்வாறே முத்தட்டு அமைந்த சங்கப் பலகையுள், ஒவ்வோரிருக்கையுங் குலைந்து, ஒவ்வோர் எடுப்பும் ஒடுங்கி, இரு தட்டும் சாய்ந்து விடவே சொச்சமுற்ற மூன்றாம் தட்டுள் முதல் எடுப்பு ஒழிய ஏனையவும் வெற்றிடமாகி புலவர் இன்றிக் கிடந்தன. கர்வபங்கமுறாது எஞ்சிய சங்கப் புலவர் சிலர் உரையாமே உரையாமே பறையாமே ஓடோடி வெளிப்போந்தார். இரண்டொருவர் இடைக்காடரை வஞ்சனை செய்து சங்க மண்டபம் விட்டு வெளியோட்டப் பலமாய் கைகளைச் செய்தனர். வேண்டிய அளவு மறைவிடமிருந்து பொற்காசு வாரி இறைத்தனர். காதற் பரத்தையரை விட்டு வலிதிற் பற்றி காடர் உள்ளக் கருத்துத் திரும்புமாறு செய்தனர்.

ஒன்றினாலும் அவரைத் திருப்பக் கூட வில்லை. எத்தகைய மாயமாலங்கள் இயற்றினும் இடைக்காடரோ ஒன்றுக்கும் மனம் மயங்கிலர்.

மும்மத வேழம் ஒன்றை விட்டு அவரை மாய்க்க வழி தேடினார்கள். இவரைக் கண்டதும் அது வீறிழிந்து ஓலமிட்டு ஓடியது. மந்திரதந்திர ஒட்டிய வகைகளைப் பிரயோகித்தனர். அவைகளால் இயற்றிய அப்புலவர்களே துன்பமுற்றனர். கிள்ளை ஒன்றால் கேலி செய்வித்தார். இடைக்காடனார் அதனைப் பொருட்படுத்தாது, அது கூட்டைவிட்டுப் பறந்தோடச் செய்தார். அத்துடன் வெற்றிடமாய சங்கப்பலகை ஒவ்வொன்றையும் தொட்டுக் குலையும்படி செய்து வந்தார். பின்னர் அதன் அட்டவணையைக் கைப்பற்றிச் சுற்றி வலம் வந்து, அஃது அமைந்துள்ள சூக்கும இயலை அறிந்தார்.

இறுதியில் “வல்லே தொல்லையொடு” சங்க அணை இறுகப் பற்றி (தேவகுலத்தோர் பொய்கையுள்) நீராழியுள் அஃது அமிழும்படி பாடினார். அது வருமாறு:-

“கத்திரி கெல்லெஃகங் கண்கூடாக் கண்ட்த்தைக்

கத்திரிப்பா டொட்டுங் கதையாமா __ளித்துலைக்கே

வஞ்சியான் பொய்யா மொழியான் வருமளவைத்

தஞ்சின்றி நீரமிழ்ந்து தாழ்” என்பது.

இதன் கருத்து:- கத்திரி என்ற செடியைக் கெல்ல அளித்த ஓர் இரும்பாயுதத்தைத் தன் கழுத்தை வெட்டுதற்குச் செலுத்தியது போல் ஆயிற்று (புலவர்களின் கவித்திறத்தை ஆய்ந்துணர்வதற்கு அளிக்கப்பட்ட இச்சங்கப்பலகையைத் தகாத வழியே செலுத்தினார்கள் சங்கப்புலவர்கள்). ஆகவே வஞ்சி நகர் பொய்யாமொழி என்ற பெருந்தகையார் இனி உலகில் தோன்றுமளவும் சங்கப்பலகையே நீ இந்த நீராழியுள் அமிழ்ந்து வாழ்க என்பது.

இங்ஙனம் சங்கப் பலகையைக் குலைத்து அதன் அடிமூலத்தை நீராழியுள் அமிழ்த்திய இடைக்காடர் வினாயமூர்த்தியை வாழ்த்தினார்.

அவ்வாழ்த்து வருமாறு:-

“ஓதிலென் ஓதா விடிலென்னை நால்வாய!

மோதகமே நாம் படைக்கின் முன்னாவாய் – ஆதன்

அறிஞரெனத் தேராரை யற்றொழியக் காட்டுஞ்

சிறிய பெரிய வாழ் தே எத்து”

இதன் கருத்து: நால்வாயனே! சிறிய உருவினால் பேர் அருள் புரிபவனே! உன்னை தியானித்தால் – (சஞ்சலத்தால் போதப்படுகின்ற மனதில் உன்னை உருவாக்கிக் கொண்டால்) நீ வெளிப்படுவாய்: அறிவில்லாதவன் என்றும் அறிஞன் என்றும் அறியாத சங்கத்தவரை கர்வபங்கம் செய்து ஒடுக்க வழிகாட்டியவனே! நீ வாழ்க என்பது.

“மோதகம் நாம் படைக்கின்” – என்றதற்கு ஓருரையாசிரியர், “மோதகம் என்ற உணவை உன்முன் படைத்துவிட்டால்” என்று உரை கூறியுள்ளார்.

இந்நிலையில் கடைச்சங்கப் புலவராகவும், அவர் காலத்தினை ஒட்டியவராகவும் உள்ள தமிழ்ப்புலவர்களுள் ஐஞ்ஞூற்று முப்பத்துமூவர் பெயர் இக்காலம் காணப்படுகின்றன.

முச்சங்க வரலாறு இவ்வளவில் எழுதப்பட்டு முடிவாயிற்று. இதில் எவ்வாற்றானும் ஆதாரமற்ற கதைகளும், இடக்கரடக்கர் எனக் கருதிய சொற்பொருள் கட்டுரைகளும் ஒழிக்கப்பட்டுள்ளன.

********************


* This copyright is reserved to the author. இது “தமிழ்ச்சங்கப் புலவர் வரலாறு” (Tamil Men of Letters) என்ற நூலின் முன்னுரையாக எழுதிய “சங்க வரலாற்றின்” ஒரு பகுதியாம். ஆராய்ச்சியும் இத்துடன் அடுத்து வரும்.

[1] அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் (449) என்ப.

[2] அவர்களாற் பாடப்பட்டன:- நெடுந்தொகை நானூறும் (அகநானூறு), குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது (150) கலியும் (கலித்தொகை), எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும் சிற்றிசையும், பேரிசையும் என்னும் இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமுமென்ப.

[3] அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்ப.

[4] அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் (49) என்ப.

[5] அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப.

[6] அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது உத்தரமதுரை என்ப என்பது.

[7] இவ்விரண்டடிகள் தொல். அகத்தி.சூ. நச். உரைமேற்கோள்.

[8] வேங்கை மார்பன் என்பவன் கானப் பேரெயிலின் தலைவன். பெரிய காட்டால் அரணாகச் சூழப் பெற்றிருந்தமையின், அவன் ஊர் கானப் பேரெயில் எனப்பட்டது. அத்தலைவனை வென்று புகழ் பெற்றமையின் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனவும் கூறப்பட்டான்.

[9] அவ்வெண்பா தனிப்பாடற்றிரட்டில் வந்துள்ளது:-

“இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு நல்ல இளமுலையாள் – இவ்வளவால்

நைந்த விடையின் நலமேவு மன்மதன்றன்

ஐந்து கணையால் வாடினள்.”

[10] இப்பாட்டின் குறிப்பாக உரைகாரர் காட்டியவற்றுள் சில “காடன் வந்தோம் தன்மை பன்மை மயக்கம்” இடவமைதி “பன்மைக்காகு மிடனுமாருண்டே” (தொல். சொல்.) என்பது பற்றி….தாலிப்பெருக்கு – மங்கலச்சொல். குலைவுகாட்டியது. ஈற்றடி இவன் குறிப்பு வழங்குமொழி – தட்டி “ஒன்றுபோற் காட்டி” – (திருக்குறள்) எனப் பெயராய் நின்றது.

Leave a comment