மாலதீமாதவம் – நான்காம் அங்கம்

நான்காம் அங்கம்

(மதயந்திகை, மாலதியிவர்களான் முறையே கைலாகு கொடுக்கப்பட்டவரும் மயக்கமுற்றவருமாகிய மகரந்தன் மாதவன் இவர்களும் பரபரப்படைந்தவர்களான காமந்தகீ, புத்தரக்கிதை, இலவங்கிகை யிவர்களும் பிரவேசிக்கின்றனர்.)

மதயந்திகை – பெரியோய்! அருள்புரிக; இம்மதயந்திகை யினிமித்தந் துன்புற்று ஐயுறத்தகும் பிழைப்புடையனாய் இரங்கற்குரிய இப்பெருமகனைக் காத்தருள வேண்டும்.

மற்றவர் – அந்தோ! கொடுமை! நம்மாலிப்பொழுது இங்குக்காண்டற்பாலதாய், யாது நேருமோ!

காமந்தகீ – (கமண்டலு நீராற்றெளித்து) அடீ! நீவிர், சேலை முன்றானையாலிவனை வீசுங்கள்.

(மாலதி முதலியோர் அங்ஙனமே வீசுகின்றனர்)

மகரந்தன் – (கனைதீர்ந்து கண்விழித்து) நண்ப! மிகவும் நடுக்கமுறுகின்றனை; என்னையிது? அன்ப! யானிடர்ப்பாடின்றிச் சுகமேயிருக்கின்றேன்.

மதயந்திகை – ஆனந்தம்! மகரந்தனாகுங் கலைநிறைமதியம்[1] இப்பொழுது உதயமாயினான்.

மாலதீ – (மாதவனது நெற்றியிற் கரத்தை வைத்து[2]) பெருந்தகைப்பெரும! திருவருட்பாங்கால் திகழ்வுறுகின்றீர்; யான் கூறுவேன்; இப்பெருமகன் மயக்கந்தீர்ந்து நினைவெய்தினன்.

மாதவன் – அன்ப! வீரச் செயலோய்! வருக; வருக; (எனத் தழுவுகின்றான்).

காமந்தகீ – (இருவரையும் உச்சிமுகர்ந்து) ஆனந்தம்! குழந்தைகள் பிழைக்கப்பெற்றேன்.

மற்றவர் – நமக்கும் இன்பம் விளைந்தது.

(எல்லவருங் களிப்பை நடிக்கின்றனர்)

புத்தரக்கிதை – (மதயந்திகையினருகில்) தோழீ! மதயந்திகே! இவனே; அவன்.[3]

மதயந்திகை – தோழீ! யானுமறிந்தேன்; இவன், மாதவன்; இவனும் அவன்[4] என்று.

புத்தரக்கிதை – யான் மெய்யுரைத்தவள் ஆயினேனா?

மதயந்திகை – நும்போல்வார் எம்போன்றவரிடத்து அன்பொன்றனையே மேற்கொண்டவராகார்; தோழீ! மாலதியும், இப்பெரியோனிடத்துக் காதற்பெருக்கை யெய்தியுள்ளாளென்னும் வார்த்தையும் பொருத்தமே[5].

(என்று மகரந்தனையே யாவலுடன் பார்க்கிறாள்.)

காமந்தகீ – (தனக்குள்) மதயந்திகை, மகரந்தன் இவ்விருவர்க்கும் நிகழ்ந்த இக்காட்சி, திருவருட்செயலான் அழகுற்று உறுதிப்பாடெய்தியது[6]; (வெளியாக) மதலாய்! மகரந்த! நீண்ட ஆயுளைப் பெறுக; மதயந்திகையின் உயிரைக் காத்தற் பொருட்டுத் திருவருள், எங்கிருந்துன்னை யிங்குக் கூட்டி வைத்தது?

மகரந்தன் – இப்பொழுது பதியிலுலவுமொரு செய்தியைச் செவியுற்று, அச்செய்தியால் மாதவன் மனம் மிக வருந்துமென்றதனையோ சிந்தித்து, காமனுய்யானச் செய்தியாவும் அவலோகிதைபாற் றெளிந்து, இங்ஙனமே விரைந்து வருகலுற்றேன். அங்ஙனம் வந்துழி வேங்கையாற் றுன்புறும் இவ்வுயர்குடி மங்கையின் பாங்கரெய்தினேன்.

(மாலதியும் மாதவனும் ஆராய்கின்றனர்[7])

காமந்தகீ – (தனக்குள்) இச்செய்தி[8], மாலதியின் மணவினையைப்பற்றியதாதல் வேண்டும்; (வெளியீடாக) குழந்தாய் மாதவ! ஆனந்தம்! மாலதியாலின்புற்றனையாதலின், அவட்கு நன்கொடை யளித்தற்குத் தருணமிஃதே.[9]

மாதவன் – பெரியோய்! இம்மாலதி,

(1) வேங்கையாற் புண்படுத்தப்பட்ட நண்பனது மயக்கத்தாற் றியக்கமுறுமென்னை, யருள்கூர்ந்து பிணியற்றவனாகச் செய்தனள்; ஆதலின், இவள் எனது இதயத்தையும்[10], உயிரையும் பரிசிலாம் நிலையில் வலிந்து பற்றி இயைவன செய்தற்குரியவளாகுவள்.

இலவங்கிகை – நமதன்புடைத் தோழியால் இவ்வருட்பேரு விரும்பப்பட்டதே!

மதயந்திகை – (தனக்குள்) இவ்வாண்மகன், ஆராய்ந்தறிந்து அழகுபொருந்த விடையிறுத்தற்குத் தெரிந்தவன்.

மாலதீ – மகரந்தன், நகரிற் கேள்வியுற்ற வருத்த நிமித்தம் யாதாகுமோ?

(பிரவேசித்து)

புருடன் – குழந்தாய் மதயந்திகே! உனது மூத்த சகோதரன் அமாத்திய நந்தனன் கட்டளையிடுகின்றனர்; “இப்பொழுது பெருமைசாலரசன், நம்மில்லத்திற்கெய்தி, பூரிவசுவின்பால் விசுவாசத்தையும், நம்பாலருட்பெருக்கையும் வெளிப்படுத்தித் தாமே மாலதியையெற்களித்தனர்; ஆதலின் வருக; அவ்வருட்பேற்றைப் பெற்றின்புறுவோம்” என்று.

மகரந்தன் – இஃதே! அச்செய்தி.

(மாலதியும் மாதவனும் துயரத்தை நடிக்கின்றனர்.)

மதயந்திகை – (களிப்புடன் மாலதியைத் தழுவி) தோழீ மாலதீ! நீ யொருபதியில் வதிதலாற் பூழியாடன் முதலாய் எற்கு அன்புடைத்தோழியும் சகோதரியுமாயினை; இது பொழுதில் நம்மில்லத்திற்கே அணிகலனாயினை.

காமந்தகீ – குழந்தாய் மதயந்திகே! நின் சகோதரனுக்கு மாலதி கிடைத்தமையாற் பெருமை யெய்துகின்றனை.[11]

மதயந்திகை – யாவும் தங்களாசி யருளானே; தோழி இலவங்கிகே! நீவிர்[12] எமக்குக் கிடைத்தமையின் எமது விருப்பங்கள் யாவும் நிறைவேறின.

இலவங்கிகை – எம்மாலும் இவ்வுரை[13] கூறத்தக்கது.

மதயந்திகை – தோழீ புத்தரக்கிதே! வருக; இப்பெருவிழாவிற் கலந்தின்புறுவோம்.

(என்று எழுகின்றனர்)

இலவங்கிகை – (காமந்தகியை யணித்து) பெரியோய்! மதயந்திகை, மகரந்தன் இவரது இயைந்த பார்வைகள், இதயத்தினிறைந்து வழிந்தொழு வியப்பானுங் களிப்பானுங் கவினுறச் சுழல்வனவாய், தங்காதற் குறிப்பை மறைத்தற் பொருட்டு அவரால் நிலைப்படுத்தப்பட்டும், அலர்ந்த கருநெய்தலனைய ஒளிமிகப் பொருந்திக் கடைவிழியழகுற்று மிருத்தலான், இவர் சங்கற்பத்தானிகழும் புணர்ச்சியின்ப நுகர்ச்சியை யெய்துகின்றார்களென்று கருதுகிறேன்.

காமந்தகீ – (நகைத்து) இவர் ஒருவர்க்கொருவர் மனத்தோற்றத்தானிகழ்ந்த கலவி மயக்கமெய்துகின்றனர். அங்ஙனமே;

(2) சிறிது குறுக்காக அசைதலான் வக்கிரித்தும், பக்கத்தில் முக்காற்பாகம் குவிந்ததும், வெளிப்படையான காதலால் அசைவற்று அன்பு மீக்கொண்டதும், சிறிது வளைந்த புருவங்களையுடையதும், உள்ளுவகை நுகர்ச்சியாற் கலங்கியதும், இமையாது சரிந்த இமைகளையுடையதும் ஆகிய ஆகேகரம்[14] என்னுமிப்பார்வையே யிவர்களது சங்கற்பப் புணர்ச்சியை விளக்கமாகத் தெரிவிக்கின்றது.

புருடன் – குழந்தாய் மதயந்திகே! இவணிவண் வருக.

மதயந்திகை – தோழீ புத்தரக்கிதே! எற்கு உயிரணித்த இத்தாமரைக் கண்ணனை மீண்டும் யான் காண்பனோ?

புத்தரக்கிதை – திருவருட் கூட்டிவைக்குமேல் கூடும்;

(என்று சென்றனர்)

மாதவன் – (மறைவாக)

(3) மாலதி கிட்டுவாளென்னுமாசாபாசம் அறுபடுமியல்புடைத் தாமரைநூல் போல அறுபட்டொழிக; தாங்கரும் அகப்பிணியும், புறப்பிணியும், எல்லையில்லனவாய் இக்கணமேயெழுந்து பரவுக. மிகுந்தெழு வெறுப்பும் என்னிடத் திடர்ப்பாடின்றி நிலைப்படுக; ஊழ்வினை வலியதாகுக; காமனுஞ் செய்வினை செய்க. அன்றேல்;

(4) ஒத்த அன்புடையளாய்ப் பெறலருமொருவளைக் கோரும் எந்தனுக்கு ஊழ்வினை யிடர்ப்பாடியற்றலான் இத்தகைய மாறுபட்ட நிலையுண்டாதல் தகுதியே; ஆயினும், என்னில் வேறுபட்ட இவன்பாற்றான் அளிக்கப்படுஞ் செய்தியையிவள் கேட்ட அப்பொழுதே யிவளது வதனம், வைகறை மதியமன்ன ஒளி மழுங்கி, யென்னை யுள்ளுறச் சுடுகின்றது.

காமந்தகீ – (தனக்குள்) சிறுவனும் சிறுமியுமாகிய மாதவனும் மாலதியும் இவ்வாறு என்னை வருத்துகின்றனர். இம்மாலதி ஆசையற்று உயிர்த்திருக்கிறாள் என்பது அருமை. (வெளியீடாக) ஆயுள் நிறைவுடைய[15] குழந்தாய் மாதவ! உன்னை யான் வினாவுகின்றேன்.[16] பூரிவசுவே மாலதியை அளிப்பர் என்று கருதுகின்றனையா?

மாதவன் – (வெட்கமுடன்) இல்லை; இல்லை;[17]

காமந்தகீ பூரிவசுவும் முன்னிலமைக்குச்[18] சிறிதுங் குறைந்திலன்.

மகரந்தன் – மாலதி முன்னரே கொடுக்கப்பட்டாள்[19]; என்று ஐயுறப்படுகின்றது.

காமந்தகீ – அச்செய்தியை[20] யானுமறிவேன்; நன்தனற் குறித்து மாலதியைக் கோருமரசர்க்குத் “தங்கன்னியர்க்குத் தாமேயுடமையாளர்” என்று பூரிவசு விடைபகர்ந்ததும் வெள்ளிடைமலை.

மகரந்தன் – இஃதுள்ளது.

காமந்தகீ – மேலுமித்தருணமே அரசன் தானே மாலதியை நன்தனற்கு அளித்தானென்று புருடனாலுந் தெரிவிக்கப்பட்டது. ஆதலின் குழந்தாய் இல்லற வழக்குக்களும்[21], மக்களின் சொற்களைப் பற்றுக்கோடாகவுடையன; நல்வினைத் தீவினைகட்கு ஏதுக்களான வரையறைகளும் முற்றிலும் அம்மக்களது சொற்களின் வயத்தனவாம்; ஆதலின் பூரிவசுவின் அவ்வுரை பொய்யுரையேயாகும்; மாலதியும் அப்பேரரசனது சொந்தப்புதல்வியாகாள். கன்னியரை மணம் புரிவித்தலில் அரசர்களே சான்றாகும்; என்றிங்ஙனம் அறனூற் கடைப்பாடுமிலது; ஆதலின், யான் கூறுமிதுவே நிலைபெறுவதாம். எவ்வாற்றானும் எந்தனைப் பற்றற்றவளாக் கருதுகின்றனையா? பார்.

(5) இவளிடத்தும் உன்னிடத்தும் நிகழுமென்று எண்ணத்தகும் எத்தீமையும் பகைவரிடத்தும் நிகழவேண்டாம்[22]; ஆதலின் உங்கள் மணவினைப்பொருட்டு உயிரினைவிட்டும் யான் முற்றிலும் முயல்வேன்.

மகரந்தன் – தங்களால் யாவும் நன்கு பொருத்தமுறக் கூறப்படுகின்றன; மேலும்

(6) பெரியோய்! தமக்குச் சொந்தமான இந்தக் குழந்தைகளிடத்தமையும் அருளும், அன்பும், தங்களது இல்லறப்பற்றற்ற மனத்தையும் நெகிழ்த்துகின்றனாதலின், துறவு நிலையொழுக்கங்களுக்கு முரண்பட்ட முயற்சியும் தங்களான் மேற்கொள்ளப்பட்டது. இதற்குமேல் அவரவர் ஊழ்வினையே வலியதாகும்.

(வேடசாலையில்)

காமந்தகிப் பெரியோய்! மாலதியை அழைத்துக்கொண்டு விரைந்து வருக; என நந்தலைவி கட்டளையிடுகின்றார்கள்.

காமந்தகீ – குழந்தாய்! எழுக! எழுக!

(எல்லவரும் எழுந்து செல்லுகின்றனர்)

(மாலதியும் மாதவனும் வருத்தமுடனும் காதற்பற்றுடனும் ஒருவர்பாலொருவர் பார்க்கின்றனர்.)

மாதவன் – மாதவனுக்கு மாலதியுடன் கூடிவாழுமுலக வாழ்க்கை இவ்வளவின் முடிந்ததால் இது மிகு துன்பமே பயக்கும். அம்ம! என்னே! வியப்பு!

(7) ஊழ்வினை, நண்பன்போல முதலில் ஒருபடித்தான உதவியை[23] வெளிப்படுத்தி யின்பந்தருமியல்பினதாய்ப் பின்னர் திடீரென முரண்பட்டுக் கொடியதாகி மனப்பிணியையே யெஞ்சியதாகச் செய்கின்றது.

மாலதீ – (மறைவாக) பெருந்தகைப் பெரும! கண்ணிற்களிதருவோய்[24]! இவ்வளவிற் காணப்பட்டீர்.

இலவங்கிகை – அந்தோ! கொடிது! அமாத்தியரால் நந்தோழியினுடலம் ஐயுறவெய்தியது[25].

மாலதீ – பிழைப்பு[26] நசையாங்கனியும் இப்பொழுது பழுத்தது; தந்தையின் வன் கண்மையால் அவரிடத்துக் காபாலிகர் செயலும் நிலைப்பட்டது. தீய ஊழ்வினையின் கொடுஞ் செயலும் நிறைவேறியது; ஆதலின் நல்வினை குன்றிய யான் யாவரைக் கடிந்துகொள்வேன்; புகலற்ற யான் யாவரையடைக்கலமாவேன்.

இலவங்கிகை – தோழீ! இவணிவன் வருக;

(செல்லுகின்றனள்)

மாதவன் – (தனக்குள்) காமந்தகீ, இயல்பான அன்பின் மாத்திரையில் அச்சுற்றுக் கூறுமிவை யென்னை யின்புறுத்தற் பொருட்டேயாம். (வருத்தமுடன்) அந்தோ! மாலதிப் புணர்ச்சியாகும் இம்மைப்பயனற்றவனாயினேன். இனிச் செய்வதியாது? (ஆராய்ந்து) மகாமாமிசத்தை[27] விலைப்படுத்தலினன்றி வேறுபாயமொன்றனையு மறிந்திலேன். (வெளியீடாக) அன்ப! மகரந்த! நீ மதயந்திகையைக் காதலிக்கின்றனையா?

மகரந்தன் – ஆம்

(8) புலியாற் புடைப்புண்டு உதிரம் பெருக்குறுமென்னை, மதயந்திகை பார்த்து மேற்சேலை நழுவினமையுங் கருதாது வெருவுறுமோராண்டு மானிளங்கன்று போலச் சுழல்வுறு விழியினளாய் அமுதப்பெருக்கிற்றோய்ந்தன்ன வுறுப்புக்களானிறுகத் தழுவினள்; என்னுமிஃதொன்றே யென்மனத்தைப் புண்படுத்துகின்றது.

மாதவன் – புத்தரக்கிதையின்[28] அன்புடைத் தோழியான அவள் கிடைத்தற்கரியளல்லள்; மேலும்

(9) மதயந்திகை, கொடும்புலியால் இறக்குந் தருவாயில் அதனைக் கொன்று, அவளைப்பாலித்த உனது புணர்ச்சியை அவளடைந்தும், பிறரை யாங்ஙனமவள் விரும்புவள்; அங்ஙனமே! அந் நளின நாட்டத்தவளது விழிகளின் செயலும் உன்பாலமைந்த அன்பை விளக்கி அழகு பொருந்த நெடிது அசைவற்றுமிருந்தது. எழுக! வரதை, சிந்துவென்னும் நதிகளின் சங்கமத்தின் மூழ்கி நகர்க்குளேகுவோம்.

(எழுந்து செல்கின்றனர்)

மகரந்தன் – அப்பெருயாறுகள் கூடுமிடமிக்ஃதே;

(10) முழுகிய அப்பொழுதே வெளிப்போந்தாரும் வத்திரங்களில் நீர்மிகுந்தொழுகலான் அச்சேலைகள் உறுப்புக்களிற் படிந்து அவ்வுறுப்புக்களின் மேடுபள்ளங்கள் விளக்கமுறுவாகும், பொற்குடம் போலழகுற்றுப் பருத்துயர்ந்த தனங்களிற் கரங்களை மாறுபடக் குறுக நெறுக்கியமைத்தவருமாகிய மானகர் மகளிரனைவரும் குழுமிய தடமுடையதாய் இச்சங்கமம் காணப்படுகின்றது.

(எல்லவருஞ் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் நான்காம் அங்கம் முற்றிற்று.


[1] மகரந்தனைக் கலைநிறை மதியமாக உருவகப்படுத்தினமை மதயந்திகையின் மனதைக் களிப்புறுத்து மிவன்பானிகழ்ந்த அவளது காதற் பெருக்கையுணர்த்தும்.

[2] நெற்றியிற் கரத்தை வைத்தல் – கரத்தின் அமிழ்தினு மினியபரிசத்தினால் மயக்கத்தைத் தீர்த்து மாதவனை யின்புறுத்தற் பொருட்டென்க; இம்மாத்திரையில் மகளிர்க்குப் பொருந்தா அச்சமின்மை மாலதியின்பாற்படுமெனில், அற்றன்று; துன்பந் தவிர்க்கு மாற்றாற் செயப்படு மெச்செயலும் உதவியா அமையுமன்றிக் குற்றமாகாதென்பவாகலின்.

[3] தேற்றம் – புத்தரக்கிதை யமயத்திற்கேற்ப, “மகரந்தன் மதயந்திகைபாற் காதற்பற்றுள்ளவன்” என முன்னரே யவனைப் புகழ்ந்துரைத்தமையை யுணர்த்தும்.

[4] மாதவன் பெயரை மாத்திரம் குறித்து மகரந்தன் பெயரைக் கூறாது, “இவனும் அவன்” எனக் குறித்தமை, தனக்குக் காதலனாகுனிலமை கருதியென்க; இதனால் புத்தரக்கிதையாற் கூறப்பட்ட உறுப்பமைப்பு ஒத்திருத்தலானும், தனதுயிரையும் பொருட்படுத்தாது இவன் இவளது உயிரைக் காத்தற்கு முயன்று முன்னின்றமையானும், காமந்தகி முதலியோரின் வழக்குமுறையானும், “மகரந்தன் தன்பாற் காதற்பற்றுள்ளவன்”, என மதயந்திகையாலறியப்பட்டதென்பது கருத்து.

[5] வார்த்தையும் பொருத்தமே – இதனால் மதயந்திகையின் உடன்பிறந்தானாகிய நந்தனனது விருப்பம் நிறைவுறாதென்பது குறிப்பிடப்பட்டது.

[6] அழகுற்று உறுதிப்பாடெய்தியது – பரபரப்பினால் வத்திரம் நழுவ, அதனால் ஒருவர்க்கொருவர் உறுப்புக்களின் சீர்மையைத் தெளிந்துகோடலானும், அச்சமே தலக்கீடாக இறுகத்தழுவி, அப்பெருவிழாவின் றொடர்புடையராதலானும் இக்காட்சியழகுடைத்தென்பதும், விலக்கற்கரிய கொடிய விடர்ப்பாடுகளை விலக்குந் திறலமைந்த திருவருளானன்றி நஞ்செயன் முயற்சியாலிக்காட்சி யுறுதிப்படாதென்பது கூறப்பட்டது.

[7] இன்பத்துன்பங்கள் இருவர்க்கும் ஒத்தனவாதலின் இருவரும் ஆராய்கின்றனர் என்பது கருத்து.

[8] இச்செய்தி – மாலதியை நந்தனனுக்கு மணம்புரிவிக்க, அரசனால் நிச்சயிக்கப்பட்ட செய்தி.

[9] இத்தொடரால் – இங்ஙனம் தெளிந்த காமந்தகீ, இவர்களையழைத்துப் போதற்கு ஊழியர் விரைந்துவரும் முன்னரே மாலதியின் மனத்தையுறுதிப்படுத்தற் பொருட்டு மாதவன் முகத்தானேயவன் கருத்தை அவட்குத் தெளிவுறச் செய்தனள் என்பது போதரும்.

[10] இதனால் – மாதவனது மனமும் உயிரும் முன்னரே மாலதியின் வயத்தனவாய், அவளிடத்தே நிலைப்பட்டிருத்தலானும், இவற்றினுஞ் சீரிய பொருளொன்றுமில்லை யாதலானும், இவற்றைப் பரிசலாகவளித்தமையான், அவளது விருப்பிற்கேற்ப மணம் புரிந்துகோடற்கு அவாக்கொடிருக்கு நிலையுணர்த்தப்பட்டது.

[11] பெருமை யெய்துகின்றனை யென்பது, வருஞ் செய்தியைச் சிறிதேனுமுணராத மதயந்திகையை நோக்கிக் கூறிய எள்ளலுரையாம்.

[12] நீவிரெனும் முன்னிலைப் பன்மை இலவங்கிகை முதலிய தோழிகளுடன் கூடிய மாலதியையுணர்த்தும்.

[13] இச்சுட்டு – மதயந்திகைக்கு மகரந்தன் காதலனாகப் போவதால் அம்மதயந்திகையே தனது தோழியருடன் இலவங்கிகை முதலியோர்க்குக் கிடைப்பது உறுதியேயன்றி மதயந்திகை கூறியாங்கு நந்தனனுக்கும் மாலதிக்கும் மணவினை கூடாதென்பதை குறிப்பான் உணர்த்தும்.

[14] ஆகேகரம் – குவளை குவிந்து, அரைவிழி மலர்ந்து கருவிழி சுழன்று பொருந்தும் பார்வையை, ஆகேகரம் என்ப.

[15] ஆயுள் நிறைவுடைய குழந்தாய் என்று விளித்தமையான் மாதவனது மணவினையிற் காமந்தகி முயன்று முற்பட்டிருத்தலான் இவனது ஆயுளில் ஐயமில்லை யென்பது குறிப்பிடப்பட்டது.

[16] முன்னிலும் இப்பொழுது வருந்தற்குக் காரணம் யாதென்றும் பூரிவசுவே தனக்கு மாலதியை யளிப்பாரென்று துணிந்து இதுகாறு முயிர்த்திருந்தனையோவென்றும், வினாவின் கருத்து; இதனால், மாதவன் இளமைப்பருவத்திற் கியல்பான சாபலத்தினால் மாலதிபாற் காதற்பற்றுள்ளவனே யன்றித் “தன் புதல்வியைத் தருவேன் வருக”, வென்று பூரிவசுவினாலழைக்கப்பட்டு இங்கிவன் வந்தவனல்லனாதலின் இங்ஙனம் இவன் வருத்தமுற்றற் றகாதென்பது குறிப்பிடப்பட்டது.

[17] பூரிவசு, மாதவனது பெயரையு மறியாதவராதலின் இவனுக்கு மாலதியை மணம் புரிவிப்பேன் என்று இவர் யாங்ஙனம் கூறவியலும் என்பது கருத்து.

[18] முன்னிலைமை – இதனாற், பூரிவசு, தனக்கு மாலதியை அளிப்பார் என்னும் நம்பிக்கை மாதவனுக்கு முன்னரும் இல்லை; இப்பொழுதுமில்லையாதலின் மனவருத்தம் மிகைபடற்குக் காரணம் சிறிதுமில்லையென்றும், இவ்விருவர்க்கும் நிகழ்ந்த காதற்பற்றும், இவர்களிதுகாறும், இனிமேலும் உயிர்த்திருத்தற்குரியதாய்க் குறைபாடின்றி முன்போலவே நிலைப்பட்டிருக்கின்றதென்றும், இனி வருத்தமுறல் வேண்டாமென்றுங் குறிப்பிடப்பட்டது.

[19] முன்னரே கொடுக்கப்பட்டாள் – இதனால் பூரிவசு, மாதவனுக்குத் தன் புதல்வியை யளிப்பேனெனவுரைக்கவில்லை; மாதவனுமவ் வுரைநசையுடனிருக்கவுமில்லை; ஆயினும், மாலதி யிதுகாறுமொருவர்க்கும் தந்தையால் அளிக்கப்படவில்லை யென்றும், தானுமவளைப் பெறற்குத் தகுதியுள்ளவனென்றும் இவ்வளவிலவாக்கொண்ட இம்மாதவன், இப்பொழுது பூரிவசு, அரசனாற் கோரப்பட்டு நந்தனன் பொருட்டுத் தன் புதல்வியை அளித்தனன்; என்னுமிச் செய்தியைச் செவியுற்றுச் செயலற்றுத் தனது வாவழிந்து வருந்துவனாதலால் முன்பின் கால முரணைக் கருதித் தீங்கு நேருமென்பது ஐயுறவாற் குறிப்பிடப்பட்டது.

[20] மாலதியைக் கொடுத்த அரசர்க்குப் பிறர் பொருளை யொருவர்க்களிக்க வுரிமையில்லாமையானும், அங்ஙனம் உரிமையுள்ள தந்தையால், இவள் முழுமனதுடன் அளிக்கப்படாமையானும், இப்பொழுதும் முன்போலவே அவ்வாசை குன்றாதிருக்க இடனுளது. ஆதலின் இவ்வார்த்தையளவில் அச்சுறல் வேண்டாம் என்பது குறிப்பிடப்பட்டது.

[21] அரசன் நந்தனனுக்கு மாலதியைத் தானே யளித்தானாயினும், பூரிவசு கூறியுள்ள வார்த்தையால் அவரும் இம்மணவினையிலுடன்பட்டவராவரெனினும், அரசனை வஞ்சித்தற் பொருட்டே அச்சொற்கள் கூறப்பட்டனவென வெளிப்படுத்தற்கு உலகவழக்கைச் சான்றாகக் கூறி, அறனூலனைத்தும், அவற்றைக் கடைப்பிடித் தொழுகுமுலகுஞ் சொல்லளவில் அடங்குமாதலின், இவருரை அத்தன்மைத்தாகாது, இவர்தனதுட்கருத்திலங்க உரைத்தமை காண்க; எனக் காமந்தகி, அப்பூரிவசுவின் சொற்களை யெடுத்துக்காட்டி யெதிர்கால நலத்தைக் குறிப்பானுணர்த்தினாளென்பது இத்தொடரின் கருத்து.

[22] தீமைகள், பகைவர்பால் விளைக; என நினைவது உலகினியல்பாயினும், பகைவரிடத்தும் அவை விளைய வேண்டாம் என நவின்றமை, இவர்பால் விளையும் தீமையின் உயர்வு நவிற்சியாமென்பது கருத்து.

[23] உதவி – மாலதி, மாதவன்பாற் காதற்பெருக்கெய்தி அவளிடத்து விளையும் வேட்கையாவும் மாதவனது ஊழ்வினையாலியற்றப்படும் உதவியாம்.

[24] இவ்விளியானும், வினையானும், இனியானுயிர்த்திருக்க வியலாமையின் காட்சியளவிற் கட்பொறிக்கின்பத்தை யளித்து மனத்திற்குத் தாங்கொணாத் துன்பத்தையளிக்கிறீர் என்பது குறிப்பிடப்பட்டது.

[25] இத்தொடர், பெற்றோரின் பற்றுதலைக் கடந்து காமந்தகியே இப்பேரபாயத்திலிருந்து இவளைக் காத்தல் வேண்டும் என்பதை காமந்தகிக்கு அறிவுறுத்தும்.

[26] இத்தொடரால் மாதவனையும் காமந்தகியையுங் குறித்து, உங்கள் முன்னிலையில் யானித்தகைய துன்பமெய்தி வருந்துவனோ? ஆதலின் நீவிர் இதற்குத்தக முயலுதல் வேண்டுமென்பதைத் தெரிவித்தற் பொருட்டே யவர் முன்னிலையில் நாணமின்றி வாய்விட்டரற்றினாளென்பது போதரும்.

[27] இஃது ஐந்தாமங்கத்தில் விரித்து விளக்கப்படும்.

[28] புத்தரக்கிதை – காமந்தகிக்கு மனமுவந்ததோழியும், மதயந்திகைக்கு அந்தரங்கப் பாங்கியுமாகலின், உனக்கு அவளை மணம்புரிவிப்பதிற் றுணை நிற்பள்; அதனால் இவள் கிடைத்தற்கரியளல்லள் என்பது கருத்து.

Leave a comment