பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 7

 நாடகவியல் – ஐந்தாம் அங்கம்

(ஒளியறிவாளர் வருகின்றனர்)

 

ஒளியறிவாளர் — (பரபரப்புடன் சுற்றி வந்து) ஓ! ஓ! விரைவுறுக; புரோகிதர் எங்குச் சென்றனர்? அமாத்தியர் யாண்டேகினர்? அரசிளங்குமர், சுயம்பூதேவரது வழிபாட்டி லியைதரு மனத்தராய்க் காலந்தாழ்க்கின்றனர். பட்டாபிடேக நல்வேளை மிக்க அணிமைத்தாகலின் அவ்வரசிளங்குமரரை யழைத்து வருக.

 

பின்னங்கத்தின் கதை, முன்னங்

கத்தின் கதையைத் தொடர்ந்து

வருதலின் இஃது அங்காவதரணம் ஆம்.

(ஆராய்ச்சியுடனும் வியப்புடனும்)

 

ஓ! காகதிக்குலத்தின் கீர்த்தி உலகைக் கடந்து இலங்குகின்றது; ஏனெனில்:-

 

குலதெய்வமாகிய சுயம்பூதேவர் எதனை யுபதேசித்தருளினரோ; இவ்வேந்தரது வீரத்தாற் றோல்வியெய்திய அரசர்குழாம் எதனைச் சித்தஞ் செய்கின்றனரோ; நிலவலையம் எதனை விரும்புகின்றதோ; அத்தகைய வீரருத்திரன் வடிவையுடைய திருமாலின் பட்டாபிடேக மங்கலச் செயற்குறித்து எல்லாமக்களும் இன்புறுகின்றனர்.                                   (க)

 

சுயம்பூதேவரின் உபதேசமும்

அரசர் வெற்றி முதலியனவும்

பீசத்துடன் கூடிய முகசந்தி

முதலியனவும் ஆகிய இவற்

றை சிறப்புப்பயனாக அமையும்

பட்டாபிடேகத்தின் பொருட்

டாக்கிக் கூறலான் இது

நிருவகணசந்தியாம்.

(மலர்ச்சியுடன்)

உண்மையாகவே யிது பொழுது.

 

சிவபிரானார் வியாபகராயினும்[1] கனவிற் றெரிவிக்கப்பட்ட கட்டளையையும் அங்ஙனமே மேற்கொண்டொழுகுங் குலமணியைப் பாராட்டுமிவர்க்கு விளைந்தவா நந்தம் உள்ளடங்கிற்றில்லை.                                         (உ)

 

முகசந்தியிற் சிறந்த கனவுபதேச

வடிவாகிய பீசத்தை மீண்டு மியைத்

தலான் இது சந்தியாம்.

(சிறிது உரத்த குரலில்)

 

ஐம்பெரும்பூதக்குழு[2] யாவும் மங்கலத்தைத் தெரிவிக்கின்றன. கடவுளர் நன்னலந்தருகின்றனர். அந்தணரின் ஆசிமொழிகள், நலந்தர நிறைந்து மிளிர்கின்றன. கோட்குழு உச்ச நிலை[3] யெய்தின. குறித்த நல் வேளையும்[4] சுபக்கோள்களாற் சிறப்புறுகின்றது. நாண்மீன்கள்[5] நன்னரே புரிகின்றன. எழுதரு பிற நிமித்தங்களும்[6] நன்மையைத் தருகின்றன.                               (ங)

 

ஆதலின் அரசிளங்குமரரை யழைத்துவருதற்கு யாமே முயல்வோம்.

 

நிகழ்ச்சி வினையைத் தேடலான்

இது விபோதம்.

 

(விரைந்து நடந்து எதிரே பார்த்து மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும்)

 

ஓ! பிரதாபருத்திரர் வந்துவிட்டாரே.

மங்கலப் பனுவலை[7] ஒலிதரக் கூறு மந்தணர்களும், பராக்குக்[8] கூறலிற்றலைப் பட்ட பல வேந்தரும், கவரி முதலிய கருவிகளைக் கரத்திலேந்திய மந்திரி புதல்வரும், திசைவெற்றியைப் புகழ்ந்து பாடுஞ் சிறந்த வந்திகளும், நீராசனஞ்[9] செய்ய முயலுங் குலமகளிரும் முறையே சூழ்தரவிருக்கின்றார்.

 

அதனால் யாமுங் கொலு மண்டபத்தற்கே சென்று வேண்டுவன செய்வோம்.

(என்று சுற்றி வருகின்றனர்).

 

(அதன்பின் குறித்த வண்ணம் பிரதாபருத்திரனும் மந்திரிமாரும் வருகின்றனர்)

 

மந்திரிமார் — (பணிவுடன் முன்னின்று) காகதிக்குலதிலகமே! இங்கண் வருக; இங்கண் வருக. அரசியற்றிருமகளின் அந்தப்புரச் சிறப்பில்லம் இஃதே. பெருமான் இதன்கட் புகுதல் வேண்டும்.

 

முடிசூடலாஞ் செயலை ஊக்கி

விடலான் இது கிரதனம்.

 

ஒளிநூலார் — (சிறிது உரத்த குரலில்) ஓ! ஓ! குல அமைச்சர்களே!

 

எந்த நல்வேளையில்[10] மன்னர் மன்னராகிய கணபதிப் பேரரசர் மாட்சிமிக்க மகுடாபிடேகத்தை யெய்தி எல்லாப் புரவலரும் தன் பாலடங்கப்புரந்தனரோ; அத்தகைய வெற்றி தரும் நல்வேளை, மங்களவளத்திற்குறையுளாய் வந்துற்றதாகலின், கருத்துடன் இருமின்; தக்கபொருள்களைத் தேடுமின்; தெய்வங்களை வழிபடுமின்.[11]

 

அநுபவித்த செய்தியை ஒளிநூலார்

வெளிப்படுத்திக் கூறலான் இது நிருணயம்.

 

ஏவலன் — (செவியுற்று) நல்வேலையணிமையுற்றும் பேரமைச்சர் ஏன் காலந்தாழ்க்கின்றனர்?

 

மந்திரிமார் — (அணிமைக்கணெய்தி) எம்பெருமானே! தந்தையாரது ஆணையை மறந்திரோ? சிற்றரசரின் விண்ணப்பத்தைச் செவியுற்கு இஃது அமயமன்று; பட்டாபிடேக மகாமண்டபத்தின் கண்ணே இவர்க்கு நல்லருள்புரிதல் தக்கதாகும்.

 

பிரதாப — தந்தையாரது கட்டளையைச் சிரமேற்கொண்டேன்; ஆனால், பின்னர்ச் செயற்பாலனதும்மாற் கூறப்படவில்லை.

 

நிகழ்ச்சிக் கேற்ப ஒருவர்க்

கொருவர் உரையாடலான்

இது பரிபாடணம்.

 

புரோகிதர் — (பணிவுடனும் பரபரப்புடனும் அருகெய்தி) பட்டாபிடேகத்திற்குரிய வேடமணிந்த பிரதாபருத்திரன், தமனிய வேதிகையில் ஏறல் வேண்டும்; தேவரீர்! பேரரசரது தொடர்புமுறை பற்றி நிலவலயம், தங்களது புயமுடியில் நிலவி நிற்பதாக.

 

பிரதாப — அங்ஙனமேயாக; (என்று வேதியில் ஏறுகின்றான்.)

 

அரசர்கள் — (வணக்கமுடன் மங்கலவேதியைச் சூழ்ந்து) காகதிக் குல வேந்தன் திகழ்க; திகழ்க.

 

இது அரசரது வழிபாடாகும்

பிரசாதம்.

 

ஏவலன் — (பார்த்து மகிழ்ச்சியுடனும் ஆசையுடனும்) உதயவரைப் பொற்சாரலைக்கதிரவன் போலும், மேருவரைப் பொற்றடத்தைப் புரந்தரன் போலும்; புள்ளரசரைத் திருமால் போலும் பிரதாபருத்திரன், தமனிய வேதியை யேறலுற்றான்.

 

மந்திரிமார் — காகதிவேந்தே! இப்பத்திராதனத்தின் கண்ணமர்க; இப்புரோகிதர்கள் பட்டாபிடேகஞ் செய்தற் பொருட்டு புனித நீர் நிரம்பிய பொற்குடங்களைக் கையிலேந்தி நிற்கின்றனர்.

 

பிரதாப — அங்ஙனமேயாக. (என்று சுயம்பூதேவரையும் காகதிக்குல முதியோர்களையும் வணக்கஞ் செய்து சிங்காதனத்திலமர்கின்றான்.)

 

புரோகிதர் — (வேதமந்திரங்களானறுமணமூட்டிய நீர் நிரம்பிய பொற்குடங்களை, அமைச்சர் கரங்களிலும் அளித்து அன்புடன்) பிரதாபருத்திர வேந்தே! காகதிக்குலத்திற்கேற்ற பெற்றி மக்களை யின்புறுத்தி மதிமீன்கணிலவுங் காறும் நிலமகளைப் புரத்தி.                                                   (சா)

 

இங்ஙனம் ஆசி கூறு மொலியென அமைவதூஉம், கைப்பிடி மங்கலத்தில் விரைந்து விழைவுறும் அரசியற்றிருவின் சிலம்பொலியாற் பாராட்டப்பட்டதூஉம், சுயம்பூதேவரது மகிழ்ச்சிப் பெருநகையாற் பெருமிதமெய்தியதூஉம், காகதிக்குல நலச்செய்திக்கு முரசாயதூஉம், புவிப் பொறையை நெடிதுநாட்டாங்கி வருந்திய அரவரசு முதலியோரின் உவகைப் பெருநகையை நிகர்த்ததூஉம், அறத்தாபனத்தின் மங்கலப்பறையொலியென்ன வினியதூஉம் மகாபிடேக நல்வேளையைக் கூறுவதூஉம் ஆகிய வெற்றிப் பொன்மணியொலியைச் செவியுற்ற வண்ணமாய்ப் பிரதாபருத்திரனை விரைந்து புனித நீராட்டுகின்றனர்.

 

விரும்பிய பொருளைப் பெறலா

குமிஃது ஆநந்தம்.

 

கீழ்பாற் பாடகர் — (மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் உரத்த குரலில்) ஓ! மக்களே! மங்கலச் செய்தியாகும் அமுதத்தை செவிகளாகும் அங்கைகளான் அள்ளிப்பருகுமின்; காகதிவீரருத்திரவேந்தர்க்குப் பட்டாபிடேக மகோற்சவம் நடைபெற்றது; இற்றைஞான்று கலியுகம், கிருதயுகமாக்கப்பட்டது. நிலமகள் நல்லரசெய்தினள். விண்ணவர் நிறைவுறு மவியுணவருந்தினர். இது காலை நீவிரும் நற்பேறெய்தினீர்.

 

மேல்பான் மங்கல பாடகர் — சிறப்புறு வீரருத்திர வேந்தர் ஆணை செலுத்தற்குச் சிங்காதனத்தேறி யிருக்குங்கால், அவரது ஆணை சிற்றரசரது மௌலிகளை விரும்பியாங்கு ஏறுகின்றது. புகழும் வீரமும் வரம்பிலவாய் உலக மூன்றினையும் விரைந்தடைகின்றன. பகையரசர்களும் விந்தியமலைத் தடங்களை விரைந்தேறுகின்றனர்.                                                    (அ)

 

தென்பால் மங்கலபாடகர் — காகதிவீரருத்திரக் கொற்றவன், புயத்தாற் பூவலயத்தைப் புறந்தருங்கால், ஆதிசேடன், பாடுகின்ற தன் மனைவியரைச் சிரமசைத்துப் பாராட்டுகின்றான். கூர்மராசன், மார்பகத்தைக் காண்பித்தலான் இலக்குமியை இதுபொழுது இன்புறுத்துகின்றான். மாதிர வேழங்களும் பிடிகளைப் பின்றொடர்ந்து சேரலான் பிரிவான்வருந்து மவற்றின் றுயரை விலக்குகின்றன. (கூ)

 

வடபால் மங்கலபாடகர் — குலவரைகளின் பிரத்தங்களினும்[12], திசையானைகளின் பெருத்த மத்தகங்களினும், அரவரசின் ஆயிரம் முடிகளினும் கூர்மராசனது கருப்பரத்தினும்[13] உயர்வலியெய்தியதும், உலகிற் சிறப்புற்றதுமாகிய வீரருத்திரன் வாகுவில், இதுகாலை நிலமாது நன்னிலையெய்தினள்.                  (க0)

 

எல்லோருடைய துயரை

நீத்தலான் இது சமயம்.

 

மந்திரிமார் — ஓகோ! காகதிக்குலத்தின் பெருமை என்னே! இதுபொழுது,

 

பிரதாபருத்திரனுடைய பட்டாபிடேக நீர்த்துளிகள், வணக்கஞ் செய்தற்குக் குனிதருமரசரின் சிரங்களில் வீழ்தர, அவற்றான் அவ்வரசர்க்குத் தந்தந் நிலையிற்[14] பட்டாபிடேகஞ் செய்யப்பட்டவாறாம்.                                (கக)

 

புரோகிதர் — காகதிக் குலச் செம்மலே! அரசியற்றிருமகளின் மணமாலை யொப்ப இதனைத் தலையணியாக் கொள்க; (என்று பட்டத்தைக்[15] கட்டுகின்றனர்).

 

எல்லவரும் — (மிக்க மகிழ்ச்சியுடன்) எங்களுக்கு விருப்பமே! எங்களுக்கு விருப்பமே!

 

நிகழுஞ் செயலை யுறுதிப்

படுத்தலான் இது கிருதி.

 மந்திரிமார் — (எல்லாப்புறமும் பார்த்து) ஓ! யார், யார் இங்கே; கொற்ற வெண்குடையையும் இரண்டு கவரிகளையும் கொணர்க.

 

(தலைவாயில் காவலன் வந்து)

 

வாயில் காவலன் — பேரமைச்சரின் கட்டளைப்படியே. (என்று சென்று அவற்றைக் கொணர்கின்றான்)

(பக்கலிற் சூழ்தருமரசர்கள் அணிமைக்கணெய்தி அவற்றை விருப்புடன் வாங்கித் தக்கன செய்கின்றனர்.)

 

புரோகிதர் — (மிக்க மகிழ்ச்சியுடன்) பேரரசர் பலர்[16], செவிப்புலனாகின்றனர்; இத்தகைய வீரச்செயலற்ற அவர்களாற் பயன் யாது? எல்லா மக்களும் இன்புறற்குரிய இத்தகைய வீரப்பெருமையுடைய ஓரரசன், நிலவுலகில் யாவனுளன்? திருவளர் வீரருத்திரவேந்தரோ இளமை[17] விளையாட்டே போற்றிசை வெற்றியுடையாரும், மூவுலகிற்கும் இன்பந்தருமியல்புடையாரும், புரவலர் யாரும் ஏவலராகப்[18] பெற்றவரும் ஆவர்.                                          (கஉ)

 

எல்லாவற்றானும் மேம்பாடுடைமை

யைக் கூறுமுகமாக நிகழுஞ்செ

யலைப் பாராட்டலான் இஃது ஆபாடணம்.

 

எந்தக் குடை அரசியல் விளக்கத்திற்கு அடையாளமோ; எதன் நிழலான் இத்தரை, தாபத்தைத் தவிர்த்ததோ; அத்தகைய குடையால் வீரருத்திரன் வனப்பெய்துங்கால் நண்பர் முத்தக் குடையுடையாரும்[19], நட்பிலார், அஃதில்லருமாயினர்.       (கங)

 

அரசியலையெய்தற் கேதுவாகிய

சிவிகை தாங்கி நிற்றலாகுஞ் செயலைத்

தெரிவித்தலான் இது பூருவபாவம்.

 

மந்திரிமார் — (பணிவுடன் அருகெய்தி) பெரும! காகதித் திருவின் கேள்வ! நின்னால் நற்றலைவனையெய்திய மக்கள் எல்லவரும் நல்லரசராகிய தங்களைக் காணவிரும்புகின்றனர்; ஆதலின் தேவரீர் இது பொழுது பேரவைக் களத்தை யணிப்படுத்தல் வேண்டும்.

 

புரோகிதர் — பட்டாபிடேகத்திற்குப் பின்னர் குடிகளின் இல்லச் செய்தியை ஆராய்தல், காகதிக்குல வேந்தர்க்கியல்பே.

 

அரசன்— அறந்தெரிவார் கட்டளைப்படியே! (என்று எழுகின்றான்)

 

காகதிக்குலக்கிழவோர் — (பரபரப்புடன் உரத்த குரலில்) விளக்கமுறு வீரமாகும் விளக்காற்றிசை வெளிகட்கு ஆலத்தி செய்து பிரதாபருத்திரற்கு, அரசர்கள் தம் முடி மணி விளக்காற் செய்த நீராசனத்தை தாமரை விழித்தையலார் செய்க. (கச)

 

அரசர்கள் — (சிறத்திற்கரங்குவித்து) ஓகோ! யாம் கண்படைத்தமை, பயனுடைத்தாயிற்று; அதனாலன்றே, இத்தகைய இன்பத்தையனுபவிக்கின்றோம்.

 

ஏனெனில்,

 

மதிமுகம்படைத்த[20] இரவுகள், விளங்கு முடுகணங்களாற் கோத்திரத்தரசாகிய[21] மேருவைப்போல, தெலுங்கு நகரணங்குகள் விளக்கொளிகளான் வீரருத்திரனை ஆலத்தி செய்கின்றனர்.

(எல்லவரும் வாழ்த்துரை கூறுகின்றனர்)

 

மந்திரிமார் — பேரரசரே! காகதிவேந்தே! சிங்காதனம்[22] சித்தஞ் செய்யப்பட்டுள்ளது; எப்புறத்து மணிப்படுத்திய இக்கொலுக்கூடத்தை உரிமையாட்சி புரிதல் வேண்டும்.

 

வாயில்காவலன் — (பரபரப்புடன் முன்னின்று) இங்கண் வருக; இங்கண் வருக;

 

(அரசர் பெருமையுடன் சுற்றி வந்து கொலுக்கூடத்திலிருக்கும் அரியணைக்கண் அமர்கின்றார்)

 

வாயில் காவலன் — (அமயத்திற்கேற்பச் சுற்றி வந்து வணங்கும் அரசர்களைப் பொற்பிரம்பினாற் சுட்டி) கலிங்க நாட்டரச! இங்கண் இரு. கொங்கணத் தலைவ! விலகி நில். அங்கவேந்தனே! மருங்கெய்துக. மாலவ மன்னனே! தன் இறைப் பொருளை மெல்லன அளிக்க. பாண்டிய வேந்தே! முன்னிருத்தி. சேவணக்கொற்றவ! பின்னிருத்தி. இது பொழுது பெருமானாகிய காகதிவீரருத்திரவேந்தர் உங்கள் எல்லவரையும் முறையே காட்சி கொடுத்தருள்வார்.

 

(அரசர் வணங்கித் தக்கவாறு அமர்கின்றனர்.)

 

புரோகிதர் — காகதிக்குலத்தவதரித்த மாட்சிமிக்க உவணக்கொடியோனாகிய தங்களுக்கு மங்கலமுண்டாக; நற்புதல்வனைப் பெற்ற காகதிக்குலத்தினால் இதுகாலை யுலகமூன்றும் நற்றலைவனையெய்தின.

 

மக்கட்டலைவ! தீயவரையொறுத்தருளுந் தாங்கள் புறந்தருங்கால் இந் நிலவுலகிற்கு நெடிதமைந்த நடு நிலைமை[23] பொருளுடைமையை யெய்தியது.(கஎ)

 

அரசன் — (பணிவுடன்) காகதி வேந்தர்க்கு வீரம் வளர்கின்றதென்பது, சுயம்பூதேவரது அருட்குத் துணை நிற்கும் தம்மாசிமொழிகளின் பயனேயாம்.

 

மந்திரிமார் — பிரதாபருத்திரவேந்தனே! காகதிக்குலவேந்தரிரல்லவருடைய ஆகூழ்வளங்கள், அக்குலத்துதித்த தங்கள் வடிவினவாய்ப் பரிணமிக்கின்றன. (கஅ)

 

புரோகிதர் — காகதிவேந்தரின் புண்ணிய பரிபாக மாத்திரையிலன்றி, அஃதெல்லா மக்களுடையதும் ஆம்; என்பதும் அமையும்.

 

(வாயில் காவலன் வந்து)

 

வாயில் காவலன் — தேவரீர்! எல்லாமக்களும் சாதிப் பெரியாரை முன்னிட்டு, தலைவாயிலிற் காத்திருக்கின்றனர்.

 

மந்திரிமார் — விரைவிற் புகவிடு.

 

வாயில் காவலன் — அமைச்சரின் கட்டளைப்படியே. (என்று வெளிச்சென்று அவர்களுடன் மீண்டு வருகின்றான்) (அதன்பின் சாதிப்பெரியார் வருகின்றனர்).

 

சாதிப்பெரியார் (மகிழ்ச்சியுடன் அரசனைப் பார்த்து) இப்பிரதாபருத்திரன் மணமகன்; இந்நிலமகள் மணமகள்; இம்மணமக்களை யியைத்தவர் சுயம்பூ தேவராகலின், இவ்வியைபு தக்க மாண்புடையதேயாம்.                              (ககூ)

 

இது, சுயம்பூதேவர் தாமேயியைப்

பவராக அமைய, அதனால் வியப்

பெய்தலான் உபகூகனம்.

(பணிவுடன் அணுகி)

 

எம்பெருமானே! நிலமகள் கேள்வ! பிரதாபருத்திரனே!

 

ஆசிப்பயன் யாவும் விரிந்துறையுமோர் உறையுளாகிய தங்களுக்கு எம்முடைய ஆசிகளாற் பெறக்கடவ பயன் யாது? அன்றேல், உலகிறைவனாகிய சுயம்பூதேவன்பால் யாங்கூறும் ஆசிமொழிகளென்ன அமையுமென்பதில் வியப்பென்னை? அக்கணபதிப்பேரரசரும் தாங்களும் ஒத்தவர்கள். மலைமகள் மணாளனும் திருமகள் செல்வனும், இப்பொறையினையும் புகழினைப்புரக்குந் தங்களையும் மதிகதிர்வதியுங் காறுங் காத்தருளல் வேண்டும்.           (உ0)

 

மந்திரிமார் — எம்பெருமானே! இவர்கள் சுயம்பூதேவரின் அடியார்கள்.

 

(அரசன் அன்புடன் வணக்கஞ் செய்கின்றான்).

 

மற்றையோர்[24] — (மிக்க மக்ழ்ச்சியுடன் முன்னின்று) பேரரசரே! காகதிவேந்தரே! வியக்கத்தக்க[25] அவ்வச்செயல்களானும் தன்றிறல்களானும் எவர், குலதெய்வமும் உலகைப் பாலிப்பவரும் ஆகிய சுயம்பூதேவர்க்கு இரண்டாமவராய்[26] விளக்கமுற்றனரோ; அத்தகைய தேவராகிய கணபேச்சுரன்[27], குலமணியும் பேரப்பிள்ளையுமாகிய[28] தங்களுடைய அரசியற்றிருவை, அருண்மிக்குடையராய் அடிதொறும் பெரிதும் வளம்பெற நிறுவுக.                        (உக)

 

புரோகிதர் — அரசரே! இவர்கள் கணபதீச்சுரரின் பண்டிதர்கள்.

 

அரசன் — (அன்புடன் வணக்கஞ் செய்கின்றான்)

 

ஏனையோர் — (பணிவுடனும் மகிழ்ச்சியுடனும்) எம்பெருமானே! திரிலிங்கதேய வேந்தனே! எந்த மூன்று சிவலிங்கங்களான் இத்தேயம் திரிலிங்கம் என்னும் பெயராற் பெரும்புகழெய்துகின்றதோ; எந்த விலங்கங்களுக்கு காகதிவேந்தரது புகழ்வளங்கள் கைலயங்கிரியாக அமைகின்றனவோ; அத்தகைய சீரிசைலம்[29], காளேச்சுரம், திராட்சாராமம் என்னும் மூவிடங்களிலும் மிளிர்தரும் அத்தேவர்கள் அருள்பெருக்குமினியராய்த் தங்கள் நலத்திற்கே நாடோறும் விழிப்புற்றிருப்பாராக. (உஉ)

 

புரோகிதர் — (மலர்ச்சியுடன்) அரசரே! இவர்கள் ஏகசிலைபதியில் வாழுஞ் சீரிய மறையோராவர்.

 

(அரசன் முறையே வணக்கஞ் செய்கின்றான்)

 

மந்திரிமார் — ஆசிமொழி புகலுமுறை நல்லதே! (என்று எல்லவரையும் அமரச் செய்கின்றனர்)

 

புரோகிதர் — (மலர்ச்சியுடன்) வேந்தே! ஏகசிலைக்கிழவோய்! செங்கதிரைச் சார்ந்ததும், தண் கதிரைச் சார்ந்ததுமாக நிருமிக்கப்பட்ட இருகுலங்களும், காகதிக்குலம் குண நலன்களான் விளக்கமுறுங்கால், சிறப்பிலவாயின; தங்கள் வீரமும் புகழும் கதிர் மதியென்னத் திகழ, தங்களது அருட்பேறெய்திய அக்குலத்தரசர் நிலைபேறுற்றுழி அக்குலங்கள், மீண்டும் நன்னிலையவாயின.(உங)

 

(அரசன் எல்லவரையும் பார்க்கின்றான்)

(புரோகிதர் முறையே எல்லோரையும் அமரச் செய்கின்றனர்)

 

குடிகள் — பிரதாபருத்திரப்பேரரசர், வெற்றிபெருக; வெற்றிபெருக.

அரசர் பலர் இருக்க; குணநிறைவற்ற அவராற் பயன் யாது? கதிரவன் குலத்தணிகலனாயிலங்குமிராமனைப்பற்றிப் பலகாலுஞ் செவியுறுகின்றேமாயினும் அவரை யாம், கண்டிலேம்; அதனானே வருந்திய யாங்கள், வீரருத்திர வேந்தே! அவ்விராமபிரானாரது பிறிதொரு அவதாரமாக விளங்கும் தங்களைப் பார்த்து அவ்வருத்தம் நீங்கியராய் இங்ஙனம் சீரிய நற்பேறு பெறுகின்றோம்.   (உச)

 

மந்திரிமார் — பெருமானே! இதுபொழுது நகரத்து மக்கட்டொகுதியை தக்கவாறு நன்கொடையளித்து இன்புறுத்தல் வேண்டும்.

 

அரசன் — (மகிழ்ச்சிமிக்க வண்மையுடன்) ஆணைப்பயன்களுக்கோர்[30] இருப்பிடமாகிய அரசன் என்னுமிச் சொல்லே என்பாலதாக; அவ்வரசியல் வளங்களான் விளையும் பயனுகர்ச்சியோ, நம்மெல்லோர்க்கும் பொதுவாயதன்றே. (உரு)

 

எல்லவரும் — (மகிழ்ச்சியுடன்) காகதிக்குல திலகமாய் விளங்குந் தங்களுக்கு இங்ஙனம் அருணிகழ்ச்சி தக்கதே!

 

அரசன் — பகவானாகிய[31] சுயம்பூதேவர் அருள்புரிக.;

(என்று புரோகிதரால் வார்க்கப்படும் பொற்குட நீர்த்தாரையை முன்னிட்டு, அன்புடனும் நன்மதிப்புடனும்[32] மருத நிலத்தூர்களை எல்லாப் போகங்களுடனும் மறையவர்க்களிக்கின்றான்).

(பிறநகர் மக்களுக்கும் உரிய வெகுமதியளிக்கின்றான்.)

 

அரசர்கள் — (விரும்பிய பெறும் விருப்புடனெழுந்து பெருவிலையுள்ள கயம் துரகம் தேர் அணிகலன் முதலிய சீரிய இறைப்பொருளை யிடத்திற்கேற்ப முன்வைத்துக் கூப்பிய கையினராய்) பெருமானே! காகதிப்பேரரசே!

 

உலகம் புரத்தலை விரதமொன்றாக்கொண்ட தங்கள்பால், “காத்தருளல்வேண்டும்” எனல் கூறியது கூறலேயாம். உலகிற்கொரு தலைவனாகிய தங்கள்பால், “யாம் அடிமைகள்” என்று கூறல், கொண்டது கோடலேயாம். அலகிலாவுலகை யணிவயிற்றடக்கிய அரியினவதாரமாகிய தம்பால், “தம் வயிற்றிலிருக்கை யெய்தினேம்”, என்று கூறலும் வெள்ளைப்[33] பொருளதேயாம்; ஆதலின், தக்கதோர் விண்ணப்பத்தைத் தம்பால் யாங்கனந் தெரிவிப்போம்.                  (உகா)

 

(அரசன் அருளுடன் அமைச்சரைப் பார்க்கின்றான்)

 

மந்திரிமார் — பெருமானே! இவர்கள், மதி கதிர் மரபினைச் சார்ந்த அரசர்கள்; இவர்கள் சீரிய வெகுமதியினை யெய்தற்குரியாராவர்; ஆதலின், இவர்களைத் தத்தம் நிலையில் நிறுவி ஆண்டுச் செல்வித்தல் வேண்டும்.

 

அரசன் — அங்ஙனமே; (என்று அரசர்களை முறையே வெகுமதித்து நாட்டையெய்தற்குக் கட்டளையிடுகின்றனர்.)

 

(அரசர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வணக்கஞ் செய்து காகதிவேந்தரது அருணோக்கத்தானே பிரயாணமங்கலத்தைச் செய்து திசைமுடிவுகாறுஞ் செல்லுமவராணையைத் துணைக்கொண்டு சென்றார்கள்).

 

குடிகள் — பேரரசர், காகதிக்குலவேந்தர்கள் புறந்தருமுறையைப் பெரிதும் பின்பற்றியொழுகல் வேண்டும். (என்று சென்றனர்)

 

புரோகிதர் — (வியப்புடனும் நினைவுடனும்) இவருடைய மலரடிகளின் குறியீடுகள், அரசர் வந்தடிவணங்கு நிலையை யறிவிக்கின்றன; வரையாக அமைந்த தனுவச்சிரம் இவற்றுடன் கூடிய கரங்கள், நிலமகளின் கைப்பிடி மங்கலத்தைப் புகல்கின்றன. சரற்காலத்துக் கமலமென்ன அழகிய கண்கள், திருமாலின் அவதாரத்தைத் தெற்றென வுரைக்கின்றன. ஆதலான் இதுபொழுது, முன்னர்க்கூறிய சித்தபுருடரது கூற்றைக் கண்கூடாகக் காண்கின்றேம்.      (உஎ)

 

அரசன் — (பணிவுடனும் நாணத்துடனும்)    சுயம்பூதேவரின் உறுப்புக்களுள் ஒரு கூறாகும் மறையவராகிய தங்களருளாற் பெறற்கரியது யாது?

 

புரோகிதர் — (அன்புடன்) காகதிக்குலத்தின் றொடர்பினால் தூய்மையாகிய தங்கள் வழிபாட்டினால், சுயம்பூநாதர் அருள்பலபுரியச் சித்தராய் மிக்க மகிழ்வெய்தியுள்ளார்; அவர் மீண்டும் நின்பால் எதனையருளிடல் வேண்டும்.

 

இது சொற்றொடர்ப் பொருளை

முடித்து வைப்பதாகும் சங்காரம்.

 

அரசன் — (வணக்கத்துடனும் அன்புடனும்) காகதிக்குலத்தவரின் அரசியற் பொறையில் சுயம்பூதேவர் கருத்துடையரே. ஆயினும் இஃதிருக்க.

 

நிலவலயம், நிறைவுறு பைங்கூழ் உடையதாக. அந்தணர்கள், நிறைவுறு விருப்புடையராக. அரசர்கள், அறத்தாறொழுகுமுளத்தினராக. எல்லா மக்களும் எவ்வ நீங்கி இன்புற்று வாழ்க.                                      (உஅ)

 

இது மங்கலம் கூறலாகும்

                                  பிரசத்தி.

(என்று எல்லவரும் சென்றனர்)

நாடகவியலில் “பிரதாபருத்திரன் பட்டாபிடேகம்” என்னும் ஐந்தாம் அங்கம் முற்றிற்று.

இங்ஙனம் உறுப்புக்களுடன் கூடிய நாடகம் எடுத்துக்காட்டப்பட்டது.

 

 

வித்தியாநாதனியற்றிய

“பிரதாபருத்திரன் புகழணி”

என்னும் அணியிலக்கணத்

தில் நாடகவியல்

முற்றிற்று.

[1] வியாபகர் — சிவபிரானார், எல்லாவுலகங்களையும் தன்னுள்ளடக்கி சிறப்புற்று நிற்பவர்; எனினும் இது காலை யவர்க்கு விளைந்த உள்ள மகிழ்ச்சி அவர் பாலும் அடங்கிற்றில்லையென அம்மகிழ்ச்சியின் பெருமிதம் உயர்வு நவிற்சியாற் கூறப்பட்டது.

[2] ஐம்பெரும்பூதம் — நிலம் முதலியன; அவற்றினியல்பு மாறுபடாமையே உலகிற்கு நலந்தரும் என்ப.

[3] உச்சநிலை — மேடம், இடபம் மகரம் கன்னி கர்க்கடகம் மீனம் துலாம் என்னுமிந்த விராசிகள் சூரியன் முதலாக் கோள்களுக்கு முறையே உச்ச வீடுகளாம்.

[4] நல்வேளை — நல்வேளைக்குரிய இலக்கினத்திற்கு ஏற்படும் இராசி, ஹோரை திரேகாணம் நவாமிசம் துவாதசாமிசம் திரிம்சாமிசம் என்னுமிந்த சட்வருக்கத்திலும் சுபக்கோள்களின் இயைபு இருப்பின் அந் நல்வேளை, சுபக்கோள்களாற் சிறப்புற்று நற்பயனளிக்கும் என்பதாம்; இதனை யொளி நூலார் முகூர்த்தம் என்ப.

[5] நாண்மீன்கள் — அச்சுவினி முதலிய இருபத்தேழு நாட்களை.

[6] பிறநிமித்தங்கள் — திசை தெளிவுறல், வேள்வித்தீ வலம் வருதன் முதலியன.

[7] மங்கலப்பனுவல் — இது மறையின் ஓர் பகுதி; இதனைப் படிப்போர்க்கும் படிப்பிப்போர்க்கும் இது மங்கலத்தையளிப்பது; இதனை மறையவர் மாங்கலிய சூக்தமென்ப.

[8] பராக்கு — அரசர் முன்னிலையிற் கூறும் மரியாதைச் சொல்; இதனைக் கூறுவார் வந்திகள் ஆவர்; அத்தகைய வந்தியாம் நிலையில் பிற அரசர் ஆயினர் எனக் கூறுமாற்றாற் பிரதாபருத்திரனது மேன்மை புலப்படுத்தவாறு.

[9] நீராசனம் — கண்ணூறு வாராது கழிக்கும் ஓர் வகைச் சடங்கு; இது முன்னர் விரித்துக் கூறப்பட்டுள்ளது.

[10] எந்த நல்வேளையில் — இதனால், இத்தகைய நல்வேளை நலம்பயக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தற்கு முன்னையநுபவத்தை யெடுத்துக் காட்டினான் என்க.

[11] தெய்வங்களை வழிபடுமின் — ஈண்டு தெய்வவழிபாடு தென்புலத்தார் முதலியோரது வழிபாட்டிற்கும் உவலக்கணம். அங்ஙனம் விருத்தவ சிட்டரும்

ஆசிமொழியுரைப்பித்த பின்னர், தெய்வம், தென்புலத்தார், படைக்கலம் சிங்காதனம் அந்தணர் என்னும் இவர்களைச் சந்தணம் முதலியவற்றா லருச்சித்தல் வேண்டும்; என்று கூறுவர்.

[12] பிரத்தம் — மலைமேல் அகன்ற இடம்.

[13] கருப்பரம் — தலையோடு — ஈண்டு அதை நிகர்த்த ஆமை முதுகையுணர்த்தும்.

[14] இதனால், சரணெய்திய அரசர்கள் இப்பட்டாபிடேக மகோற்சவத்தில் தத்தம் அரசியலை யெய்தினர் என்பது கருத்து.

[15] பட்டம் — அரசர், மக்கள் இவர்களின் நலத்திற்கும், நாட்டு வளத்திற்கும் பொன்னாலியன்ற மங்கலப்பட்டம், ஒன்பதங்குல நீட்சியும் இடையில் எட்டங்குலமும் இருமருங்கிலும் நான்கங்குலமும் உள்ள அகற்சியும் அமைந்து ஐந்நுதியுடையவாய் ஆக்கப்படல் வேண்டுமென்பது இதன் இலக்கணம் ஆம்; அத்தகைய பட்டத்தை, “வெளியதுடீஇ வெண்பூச்சூடிச் சிங்காதனத்திற் கிழக்கு முகமாயமர்ந்த அரசனது சிரத்திற் சூட்டவேண்டும்” என்று சிட்டமிருதி கூறும்.

[16] பேரரசர் பலர் — இது நளன் நகுடன் முதலியோரை.

[17] இன்பந்தருமியல்புடையார் — “போரிற் புறங்கொடாமையும், மக்களையின்புறப்புரத்தலும், அந்தணரை வழிபடலும், அரசர்க்கு மிக்க நலம் பயப்பனவாம்” என்றும் மனுவின் கூற்று ஈண்டு கருதற்பாலது.

[18] ஏவலராகப் பெற்றவரும் — இதனால் இவ்வேந்தன் தண்டோபாயமின்றிப் பிறவுபாயங்களாற் பகையரசரை வென்றான் என்பதும்,

“இங்கணம் வெல்லுறுமரசர்க்குப் பகைவராவாரனைவரையும், அவ்வரசன் சாமம் முதலிய உபாயச் செயலானே வயப்படுத்தல் வேண்டும்” என்னும் மனுநீதிவழா அதவன் என்பதும் புலப்படும்.

[19] முத்தக் குடை — நல்முத்துக்களாற் செய்யப்பட்ட குடையையும் குடையின் நீங்கிய நிலைமையையும் உணர்த்தும்.

[20] மதிமுகம் படைத்த தெலுங்கு நகரணங்குகளெனவும் இயைக்க.

[21] கோத்திரத்தரசு — இது வீரருத்திரற்கும் பொருந்தும். கோத்திரம் — ஈண்டு குலவரையையும் குலத்தையும் உணர்த்தும்.

[22] சிங்காதனம் — இதனிலக்கணம் மானசோல்லாசத்திற் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது; சீரிய செம்பொன்னால் அரதனங்களிலங்கச் செய்யப்பட்டதும், மேற்புறத்திற் படிகச் சிங்கங்களெட்டும், அடிப்புறத்திற் கனகவேதிகள் மூன்றும் அமைக்கப்பட்டுள்ளதுமாய்க் கொலுக்கூடத்தின்கண் வைத்திருக்கும் ஆதனத்தை அரசர்கட்குரிய சீரிய சிங்காதனம் என்ப.

[23] நடு நிலைமை — மேலுலகிற்கும் கீழுலகிற்கும் இடைக்கணிருத்தலான் இது காறும் நடு நிலைமையெய்திய நிலவுலகம், இதுகாலை ஒருதலைச் சார்பின்றி யமைதலான் அந்நடுநிலைமை இக்கருத்தே பற்றிப் பொருளுடைத்தாயிற்றென்பதாம்.

[24] மற்றையோர் — பிரதாபருத்திரற்குப் பாட்டனாராகிய கணபதிப் பேரரசர், தன் பெயரையொப்ப சிவபிரானார்க்கும் கணபேச்சுவரன் எனப் பெயரிட்டுப் பிரதிட்டை செய்து குலதெய்வமாகிய சுயம்பூதேவர்க்குப் போல இச்சிவபிரானுக்கும் ஆலயப்பணி முதலியன செய்து அங்கட் பல பண்டிதரையும் நிலைப் படுத்தினார். இங்கட் கூறப்பட்ட மற்றையோர் என்பார் அப்பண்டிதரேயாவர்.

[25] வியக்கத்தக்க அவ்வச்செயல் — இது அடியவர் விருப்பங்களை யவர் விரும்பியாங்கு நிறைவேற்றலை.

[26] இரண்டாமவராய் — ஈண்டு இஃது ஒப்புப்பொருளது.

[27] கணபேச்சுரன் — ஈண்டு கணபதிப் பேரரசரையும் அவரால் பிரதிட்டை செய்யப்பட்ட சிவபிரானையுமுணர்த்தும்.

[28] பேரப்பிள்ளை — சிவபிரானுக்கும் அரசர்க்கும் அபேதத் தன்மையை யுபசரித்துக் கூறியிருத்தலான் அவ்விருபேர்க்கும் பேரப்பிள்ளையென்பது தோன்ற இங்ஙனங் கூறினான் என்க.

[29] சீரிசைலம் முதலிய மூன்றும் தெலுங்கு தேயத்தில் உள்ள சிறந்த சிவத்தலங்கள்; அவற்றுள் திராட்சாராமம் என்பது “தக்கனுக்கு உய்யானமாக அமைந்தமையான் திராட்சாராமம் எனக் கூறப்படும்” என்று கந்தபுராணம் வீமேச்சுரகண்டம் கூறுகின்றது. ஆராமம் — உய்யானம்.

[30] ஆணை — இது பிரபுசத்தியை உணர்த்தும்; ஒறுத்தற்கும் அருளற்கும் உரியவாற்றலாம். அத்தகையவாணையின் பயன்களாகிய அருளன் முதலியவற்றிற்கு அரசன் நிலைக்களன் என்பது கருத்து. அங்ஙனமே மானசோல்லாசத்திலும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“அருளல் ஒறுத்தல் கொடுத்தல் பெறுதல் முயறல் ஒழிதல் பிடித்தல் விடுதல் என்னுமிச்செயல்களில் தானே வலியனாகுமவன் அரசனாவான்; அவனது ஆணையும் தடைப்படாவாம்”

ஆணை மாத்திரையிற் சிறப்புரிமையும் பயனுகர்ச்சியிற் பொது உரிமையும் இவ்வரசன்பாலமையும் என்பதாம்.

[31] இத்தொடர் — “சிவபிரான் பிரீதியின் பொருட்டு பத்தி நிறைந்த உள்ளத்தோடு அந்தணர்பால் அளிக்கப் படுந் தானம் மங்கலந் தரும் விமலம் என்னும் பெயரியதாம்” என்னும் வியாதமிருதியை நினைவுறுத்தும்.

[32] அன்புடனும் நன்மதிப்புடனும் — இத்தானம் சாத்துவிக தானம் என்பதாம். அங்ஙனமே;

“நல்லிடத்தில் நல்லதோரமயத்தில் நல்லோரிடத்தில், கொடையைக் கடைமையெனக் கருதி கைம்மாறு கருதாது செய்யப்படுந் தானம் சாத்துவிகமெனக் கூறப்படும்” என்று வியாதமிருதி கூறும்.

[33] வெள்ளைப் பொருளது — ஆழமான கருத்தில் பொருளையுடையது; ஒளிமிகுமிடத்தில் நடுவணிருக்குங் குடத்தை, நன்குணர்ந்தார் மாட்டு “இது குடம்” எனக் கூறல் போல்வதாம்.

பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 6

 நாடகவியல் – நான்காம் அங்கம்

 

(செவிலித் தாயுஞ் சேடியும் வருகின்றனர்)

 

செவிலி — (சினமுடன்) ஏடி! பட்டாபிடேக மகோற்சவத்திற் பல காரியங்களான் அரண்மனை குழப்பமெய்தியிருக்குங்காலும், இரவெலாம் யாவனோடியைந்து கழித்தாய்? இத்தகைய பெருவிலையுடைய அணிகலன்களை எங்கட் கவர்ந்தனை? இழிந்த நீயிதனை யறிந்திலையா? பிரதாபருத்திரன் மாதிரமனைத்தையும் வென்று நாற்கடல் புடைசூழ் நானிலந்தனிலுள்ள சிற்றரசர் சூழ்தர, நகரை யெய்தினன். குலதெய்வத்தின் அருளானும், பேரரசரின் ஆணையானும், புரோகிதரின் உடன்பாட்டினாலும், அமைச்சரின் தொடர்பானும், மக்களின் ஆகூழானும், நிலமகளின் றவச்சிறப்பானும், நம் போலிய பணியாளரது நல்வினைப் பரிபாகத்தானும் இளவரசர், மகுடாபிடேகத்திற்கு ஒருப்பட்டார். இங்ஙனம் மகோற்சவத்திலீடுபட்ட என்னைத் தனியாளாக விடுத்து எவ்வாறு சென்றனை?

 

இதனால், வெகுளிவயத்தாற் பிராத்

தித் துணிவை வெளிப்படுத்துமுகமாக

பீசத்தை யாராய்தலான் விமருசசந்தி.

சேமயின்பாலமைந்த குற்றத்தை

வெளிப்படுத்திக் கூறலான் இஃது

அபவாதம் என்னும் பெயரிய உறுப்பாம்.

 

சேடி — பெருமாட்டீ! குற்றத்தைப் பொருத்தருள்க; (என்று காலில் வீழ்கின்றாள்)

 

செவிலி — (புருவ நெறித்தலுடன்) இழிதகவி! அரவின் கடி விடத்தை சேலையின் தலைப்பாற்றுடைத் தென்ன, வணக்கஞ் செய்து இத்தகைய குற்றத்தை மாற்றுகின்றாய்.

 

இது சினந்து கூறலாகுஞ்

சம்பேடம்.

 

சேடி — தாங்கள் இத்தகைய இயல்புடையரே! ஆதலின் நிமித்தமின்றிச் சினமுறுந் தங்களை யான் ஒத்து நடத்தற்குப் போதியளல்லள்.

செவிலி — (சினமுடன்றலையையசைத்து) தீயொழுக்கமுள்ள கொடியவளே! காதையும் மூக்கையும் அறுத்து உன்னைக் கட்டிச் சிறைக் கூடத்திற்கு ஆளாக்குவேன். (என்று கைக்கட்டையவிநயிக்கின்றாள்).

 

இது பிணிப்பு வடிவாகிய வித்திரவம்.

 

சேடி — (அச்சத்தான் மெய்நடுக்கமுற்று) பெருமாட்டீ! புகலற்றவளும் குற்றமற்றவளுமாகிய இவ்வேழையைக் காத்தருள்க; காத்தருள்க. தங்கள் உடன்பிறந்தாள் இடும்பன் கோட்டத்திற்கேகுங்கால் என்னை வற்புறுத்தி யழைத்துச் சென்றாள்; ஊறுபடுத்துந் தெய்வத்தை

உயர்நலப்படுத்தற்கே யான் அங்கட் காலந்தாழ்த்தேன்.

 

செவிலி — (சினமுடன் உங்காரஞ் செய்து) இத்தகைய அரண்மனைப் பெருவிழாவை விடுத்துப் பேறிலளாகிய நீ, இடும்பாலயத்தின் பெருங்கற்களில் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ளுகின்றாய்?

 

இது கடவுளரை யிகழ்ந்துரைத்

தல் வடிவாகிய திரவம்.

 

சேடீ — பெருமாட்டீ! தாழ்வினைப் பொருத்தருள்க; தங்களாற் செயக்கடவ மங்கல வழிபாடுகளை யானே விரைவிற் செய்து முடிப்பேன். (என்று உடல் வீழ வணங்குகின்றாள்).

 

செவிலி — (கருணையுடன்) ஏடீ! எழுக; எழுக;

 

இது, விரோதம் ஒழிந்த நிலையாகுஞ் சத்தி.

 

சேடீ — (மகிழ்ச்சியுடன்) (எழுந்து) (கைலாகையளித்து) பெருமாட்டீ! இங்கு வருக; இங்கு வருக;

 

செவிலி — (சிறிது நடந்து எதிரே பார்த்து) இக்கடைகாவலன்[1], பரபரப்புடன் வெளிச்செல்லுகின்றானே; அதனால் பட்டாபிடேக நல்வேளையணித்துள்ளது போலும்; ஆதலால் மங்கலநீராசன[2] தீபமுறையை முடித்தற்கு உட்புகுவோம். (என்று சென்றனர்).

 

பிரவேசகம்.

 

(அதன்பின் வாயில் காவலன் வருகின்றான்)

 

வாயில்காவலன் — (செருக்குடன் நடந்து வாயிலிற் குழுமிய அரசரது பேரிரைச்சலைப் பொறாது பொற்பிரம்பை உயர்த்தி அவமதிப்புடன்)

ஓ! ஓ! வேந்தர்களே! கேளுங்கள்; இறைப் பொருளாகக் கொடுக்கப்பட்ட இவ்வேழக்குழுவின் உரத்த பிளிறொலியால் பொழுதறி மணியொலி செவிக்கேறுறவில்லையாகலின், அதனை நகர்ப்புறத்தமைக்க; தேர்ப்படை குதிரைப்படை யென்னுமிவற்றின் நெருக்கத்தான் நகரமக்கள், சென்றுவரற்கியலவில்லை யாகலின் அவற்றை நெடுந்தொலையில் நிறுத்துக. (க)

 

இது அதட்டியச்சுறுத்த

லாகுந் தியுதி

 

(சிறிது உரத்த குரலில்)

 

ஓ! ஓ! குலவழி வந்த பேரமைச்சர்களே! சிறப்புறும் அதிகாரிகளே! பணியாளர்களே! நகரமக்களே! எல்லவருங் கேளுங்கள். இஃது உருத்திரதேவரது ஆணை; என்னையெனில்:-

 

காகதிக் குலத்திற் பிறந்த முன்னையரசர்களாற் பாலிக்கப்பட்டு, மாநுட சம்புவாகிய கணபதி வேந்தராற் சிறப்பெய்தி, என்புயத்திலினிதிருந்து குலவரையிருக்கையை யறவே மறந்த நில மாது, இது காலை வீரருத்திரனுடைய புயங்களில் அசையா நிலையையடைக.                                                      (உ)

 

தன்குலத்துதித்தாரைப் புகழ்ந்து

கூறலான் இது பெரியாரைப்

புகழ்தலாகும் பிரசங்கம்.

 

(மீண்டும் செருக்குடன் சுற்றி வந்து)

 

அதிகாரிகளே! இப்பொழுது எச்செயற் புரியத் தொடங்குகின்றீர்கள்? சுயம்பூ தேவரது பூசனைச் செயல் தொடங்கப்பட்டதோ? நகர்த் தெய்வங்கட்கு பலிகள் அளிக்கப்பட்டனவா? வருணப் பெரியார் யாவரும் அருச்சிக்கப்பட்டனரா? பட்டாபிடேக வேதி யலங்கரிக்கப்பட்டுள்ளதா? பொற்குடங்களிற் புண்ணியப் புனல்கள் பூரிக்கப்பட்டனவா? பட்டாபிடேகத்திற்குரிய கருவிகள் அவ்வேதியினருகிற் சேர்க்கப்பட்டனவா? ஒளிநூலறிஞர், மங்கல நல்வேளையில் கருத்துடனமைகின்றனரா? தெலுங்கு நகர்ப் பெண்டிரும் தம்மையணிப்படுத்தினரா? இது பொழுது பிரதாபருத்திரர், நிலமகளின் கைப்பிடி மங்கலத்திற்குரிய மங்கல வேடம் புனைந்து காகதிவேந்தரின் அரசியற்றிருமகளந்தர்ப்புரத்தில் இருக்கின்றார்; ஆதலிற் செய்வன விரைந்து செய்க.

 

(பிறிதிடஞ் சென்று புருவநெறித்துப்பார்த்து)

 

என்னே! அரசர்கள் ஓய்வதில்லை.

(சிறிது அணிமைக்கணெய்தி)

 

ஓ! ஓ! அரசர்களே! இடத்திற்கேற்ப அமைக; இறைப் பொருட் குழுவைச் சித்தஞ் செய்க; எனது பிரம்புத் தடி வீணிரைச்சலைப் பொறாது.

 

இஃது அவமதிப்பாகுஞ் சலனம்

 

(நாற்புரமும் பார்த்து மிக்கச் செருக்குடன்)

 

ஓகோ! உலகைத் துரும்பெனக் கருதும் அரசரது மட்டடங்காப் பேரொலியைத் தடைப்படுத்திய எனது பெருமை யென்னே! அன்றேல், காகதிவேந்தரைச் சார்ந்த கடைகாவலர் அரசரைத் தடைப்படுத்தலை இளமைமுதற் பயின்றவரேயாவர்.

 

தனது திறலை வெளிப்படுத்த

லாகும் இது வியவசாயம்.

(மற்றொரு வாயில் காவலன் திரையை நீக்கிக் கொண்டு வருகின்றான்)

 

வாயில் காவலன் — (மறுப்புடன்) அடா! அமயமறியாதவன் யாவன் அரசரைத் தடைப்படுத்தினான்? பெருவிழாக்காண விரும்பும் எல்லவரும் உட்செல்லுங்கள்.

 

முதலாமவன் — (சினமுடன்) காகதிகுலத்திற் பழமையான கடைகாவலனாகிய என்னையா அமயம் அறியாதவன் என்று கூறுகின்றாய்?

 

இரண்டாமவன் — நீயாவனாயினும் அமைக; அரசர்களை உட்புகுவித்தல் வேண்டுமென்பது பேரரசரது கட்டளை.

 

இது கடைகாவலொருவர்க்

கொருவர் சினமுற்றுக் கூற

லாகும் விரோதம்.

 

முதலாமவன் — இவனுடன் வீண் கலகத்தாற் பயனென்? அரசரில்லத்தின் புறந்திண்ணையின் நடுவணமர்ந்து புரோகிதராற் பாராட்டப்படும் இளவரசரது பக்கலே சேருகின்றேன். (என்று சுற்றி வருகின்றான்)

 

இரண்டாமவன் — யானும் குறித்த செயலைச் செய்கின்றேன். (என்று சுற்றி வருகின்றான்)

 

(அதன்பின் குறித்த நிலையில் பிரதாபருத்திரன் புரோகிதர் அமாத்தியர் வருகின்றனர்.)

 

புரோகிதர் — காகதிக்குலத்திலகமே! இளவரசராகிய தாங்கள், பத்துத்திசைகளையும் விளையாட்டாகவே வென்றீர் என்னுமிதனால், இந்த யாம் கூறிய ஆசிமொழி யாவும் இதுபொழுது உண்மையாயின. மேலும்.

 

காகதிவேந்தரது குலம் மூவுலகிலும் சிறப்புறும் புகழை யிதுகாலையெய்தியது; நிலமகளும், இதுபொழுது நல்லரசுடையளாயினள்; எல்லா மக்களும் இடையூறொழிந்தனர்.                                                     (ங)

எதிர்கால நலத்தைப் பெற்றாங்கு

கூறலான் இது பிரரோசனை.

 

மந்திரிமார் — காகதிக்குல வாழ்க்கையையெய்தி அதிபதிகளாய் விளங்கும் யாமும், கதிர்மதிகளின் குல அமைச்சரது பெருமையை இது வேளை புறக்கணித்தேம்.  (சா)

 

நிகழ்ச்சிக்கேற்பப் புகழ்ந்து

கூறலான் இது விசலனம்.

புரோகிதர் — அரசிளங்குமர! இப்பட்டாபிடேகக் கருவிகள் யாவுஞ் சித்தஞ் செய்யப்பட்டன. காகதிவேந்தர் முறையே அமர்ந்த சிங்காதனம்[3], தங்கள் ஏற்றத்தை யெதிர்பார்க்கின்றது; ஆதலிற் பேரரசர், சுயம்பூ தேவரது அருள் கொண்டளிக்கு மாணையைப் பாலித்தல் வேண்டும்.

 

இது செயலை மேற் கோடலா

கும் ஆதானம்.

 

பிரதாப — ஆயின், குலதெய்வமாகிய சுயம்பூதேவரை வணக்கஞ் செய்து தந்தையாராணையைத் தாங்கி நிற்க விரும்புகின்றேன்.

 

புரோகிதர் — காகதிக்குலவிளக்காகிய தங்களுக்கு இவ்வொழுக்கம் தக்கதேயாம்; ஆனால் பட்டாபிடேகத்திற்குரிய நல்வேளை அணிமைத்தாகலின், அரசிளங்குமரன் செய்வன விரைந்தே செய்துவரல் வேண்டும். யாமும் இனிச் செயற்பாலதாகிய எஞ்சிய செயலை ஆராய்வேம்.

 

பிரதாப — காகதிக்குலத்தைத் தன்வயப்படுத்துந் தங்கள் கட்டளைப்படியே.

(என்றெழுந்து முறையே சுற்றி வந்து எல்லவருஞ் சென்றனர்.)

 

நாடகவியலில் “விரைவுறு பெருவிழா” என்னும் நான்காம் அங்கம் முற்றிற்று.

 

 

[1] கடைகாவலன் — வாயில் காப்பவன்; இவனது வருகைக்குமுன் கூறிய கதைப்பகுதிகள் நடந்தனவாம்; இனிவருங் கதையாம்.

[2] நீராசனம் — தலைவற்குக் கண்ணேறு வாராது வயதிற் பெரிய மங்கலப் பெண்டிராற் செயப்படுமோர் சடங்கு; அது, அகன்றதோர் பாண்டத்திற் செந்நீரிட்டு நடுவண் ஆவினெய் வார்த்த மாவிளக்கேற்றி அதனைக் கையிலேந்தித் தலைவனைச் சுற்றி வருதல்.

[3] சிங்காதனம் — அரசனமர்ந்து செங்கோலோச்சும் இருக்கை; இதனிலக்கணத்தை வாத்து நூலுணர்வார் இங்ஙனங் கூறுவர்.

“ஆறங்குல முயர்ச்சியும், பதினாறு அங்குல மகற்சியும், இருபத்துநான்கு அங்குல நீட்சியும் அமைதர கமலக் குறியிட்டுப் பான்மரத்திலழகுபடச் செய்யப்படும் ஆதனம்; இது அபிடேக வினையிற் பயன்படுவதாம்; இதனைப் பத்திராதனம் என்றுங் கூறுப”

இதனைச் சிங்காதனம் என வசிட்டமுனி முதலியோர் கூறுவர்.

பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 5

நாடகவியல் – மூன்றாம் அங்கம்

(அதன்பின் தூதுவர் இருவர் நிருபத்தைக் கையிலேந்திய வண்ணம் வருகின்றனர்)

முன்னையங்கத்தின் முடிவில் வந்த

பாத்திரமாகிய அந்தணனாற் குறிப்

பிடப்பட்ட பாத்திரங்கள், அடுத்

த இவ்வங்கத் தொடக்கத்தில் வருதலான்

இஃது அங்காசியம் என்பதாம்.

 

முதலாமவன் — (நினைப்புடனும் வியப்புடனும்) ஓகோ! பிரதாபருத்திரனுடைய வீரத்தின் பெருமை. இவரது வெற்றிச் செலவின் பரபரப்பானே இருதிறத்து[1] ஏந்தல்களின் கடகங்களும்[2] கலக்கமெய்தின.

 

இரண்டாமவன் — நண்ப! கூறுவதென்னை?

 

காகதிக்குலவிளக்காயிலங்குமிவர், தான் றிருமாலின் அவதாரமே யாவர்; சுயம்பூதேவரது அருளும் இவர்க்கு வச்சிரகவசமாக[3] அமைகின்றது.          (க)

 

சுயம்பூதேவரது அருள்வடிவாகிய

பீசத்தைத் தேடலான் இது கருப்

ப சந்தி.

 

முதலாமவன் — (வழி நடந்த அயர்வை அவிநயித்து) (எதிரே பார்த்து) தெலுங்கு நாட்டை வந்தெய்தினோம். (நகர்க்குட் புகுதலை நடித்து எல்லாப்புறத்தும் பார்த்து) ஓகோ! உருத்திரவேந்தனது வள்ளண்மை அளவு கடந்திலங்குகின்றது; ஏனெனில், இத்துயிலெடைபாடுவோர்[4] போகாவனீ முதலிய இனிய பிரபந்தங்களை நாற்புறத்துமிருந்து வல்லிசையாற் படித்து இயற்கை வனப்பையுடைய திசைகளையும் எதிரொலியாற் படிப்பிக்கின்றனர்போல காணப்படுகின்றனர்.

 

இரண்டாமவன் — (நன்கு பார்த்து நினைவுடனும் வியப்புடனும் மறைத்து) நண்ப! பார்க்க, பார்க்க.

 

அரசர்கள் மாகத[5] வேடத்தை நன்கு தாங்கித் தாம் மறைந்துளார் எனினும், கொடி நேமி முதலிய இலச்சினைகளையுடைய முன்கைகளானும், விரிவெய்திய மார்பகங்களானும், மனிதர்[6] மாத்திரையிலெய்தற்கரிய உருட்சி, உயர்ச்சி யிவற்றை யெய்திய உறுப்புக்களானும், அரசராந்தன்மையை யுணர்த்தும் இன்னோரன்ன விளக்கமாகிய பிறகுறிகளானும் இவர் அரசர் எனத் தெரிவிக்கப்படுகின்றனர்.                                               (உ)

 

முதலாமவன் — பிரதாபருத்திரனது போரிற் புறங்கொடுத்து வந்த இவ்வேந்தர், மார்பகத்திற் பன்றிக் குறியுடையராய் உயிரைக் காத்தற்கு இம்முறையே பற்றி காகதிப்பேரரசர்பால் அருளைப் பெறுதற்கு முயலுகின்றனர் என்று கருதுகின்றேன்.

 

நிகழ்ச்சிக்கேற்ப பகையரசர்

வஞ்சனைச் செயலைச் செய்த

லான் இஃது அபூதாகரணம்.

தூதுவர், அவ்வக்குறிகளான்

அரசர் என்று ஊகித்தலான்

அனுமானமும் ஆம்.

 

இரண்டாமவன் — ஓகோ! நகரமக்கள் போர் செலவுச் செய்தியைக் கேட்டற்கு மிக்க அவாவுறுகின்றனர்; இம்மக்கள் அச்செய்தியை அடிதொறும் வினாவியவண்னம் நம்மைப் பின்றொடருகின்றனர். ஆதலின் அன்பனே! பிரதாபருத்திரனுடைய புயங்களின் வீரச்செய்கையை வெளிப்படுத்துக.

 

முதலாமவன் — (சிறிது உரத்த குரலில்) ஓகோ! காகதிக் குலத்தின் புகழ்க்குக் காமதேனுவாகிய இனிய வார்த்தையைக் கேளுங்கள்.

 

வென்றிசேர் காகதிவீரருத்திரவேந்தன், எல்லாத் திசைகளையும் வென்றனன்; அரசரும் இறைப்பொருளை யளித்தனர்; இந்நிலமும் இவரையன்றிப் பிற வீர்ரிலவாகியது; இவரது புயவலியை மலைகள், தம்பால் விரைந்தேறும் பகை மனையின் மேகலையொலி நிரம்பிய முழைமுகங்களான் விளக்கமாகக் கூறுகின்றன.                                                       (ங)

 

இஃது உண்மையைக் கூற

லாகும் மார்க்கம்.

 

இரண்டாமவன் — நண்ப! காகதியப் பேரரசர் இந்நாட்களில் புரோகிதரும் அமைச்சரும் சூழ்தர எப்பொழுதும் அரசிளங்குமரனது வெற்றியைக் கோரிய வண்ணம் பகல்களைக் கடத்துகின்றனர்.

 

முதலாமவன் — நண்ப! உண்மையே கூறினை.

 

இரண்டாமவன் — (எதிரே பார்த்து மகிழ்ச்சியுடன்) அமைச்சருடைய புதல்வன் நம்முடைய சொற்களைச் செவியுற்றுப் பேரரசர்க்குத் தெரிவித்தற் பொருட்டு மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும் அரசர் மனைக்குட் போகின்றார்கொல்; ஆதலின் யாமும் வாயில்வழியிலிருந்து காகதி வேந்தரது அமயத்தை யெதிர்பார்ப்போம்.

 

(என்று சுற்றி வருகின்றனர்)

ஆராய்ச்சியைக் கூறலான்

இஃது உருவம்.

 

(அதன்பின் அமைச்சர் புதல்வன் வருகின்றான்)

 

மந்திரிமகன் — (மகிழ்ச்சியுடன்) என்னே! எனது பேறுடைமை; இத்தகைய பெருவிழாவைத் தெரிவிப்பவனாயினேன்; செவிக்கினிய அமுதப் பெருக்குடைய சொற்களை யான் றெரிவிக்க, அச்சொற்களாற் காகதிவேந்தர் சுயம்பூதேவரது அருளைக் கனவிற் கண்டகாலத்தினும் மிக்க மகிழ்ச்சியை யெய்துவார்.

 

இது மேம்பாடுற்ற சொல்வடி

வாகும் உதாகரணம்.

 

(எதிரே பார்த்து)

பேரரசர், புரோகிதரும் அமைச்சரும் மற்றும் ஏவலருஞ் சூழ்தர பேரவைக் களத்திலிருக்கின்றார்.

 

(என்று சுற்றி வருகின்றான்)

(அதன்பின் குறித்த வண்ணம் அரசன் மந்திரிமார் புரோகிதர் வருகின்றனர்)

 

அரசர் — (ஆராய்ச்சியுடனும் வியப்புடனும்)(அமாத்தியரைக் குறித்து)

ஓ! நம்மை நினைந்து இவ்வமைச்சரை நம்பால் விடுத்துத் தானே வெல்லும் விருப்பினனாய்ச் சென்றான்; அதனால் குழந்தை வீரருத்திரன் இளமைப் பருவத்திலும் தக்கதே புரிந்தனன்.

 

மந்திரிமார் — (வெகுமதிப்புடன்) பேரரசரே! இவ்வரசிளங்குமரன் தங்கள் புதல்வரன்றே.

புரோகிதர் — வெற்றிச் செலவு தொடங்கி யிரவு பகலாக மங்கல நிமித்தங்கள் விளங்குகின்றன; அதனால் அரசிளங்குமரர், திசைகள் எல்லாவற்றையும் வென்றார்.

 

அரசர் — தங்களுடைய வாழ்த்துரைகளே காகதிக்குலத்திற்கு நலங்களை விளைக்கின்றன.

 

ஏவலன் — உலகிற்கொரு மங்கலமாய் விளங்கும் பிரதாபருத்திரர் இக்காகதிக் குலத்திலவதரித்தாராதலின், எல்லா வகைப் புண்ணியத்தானும் இக்குலம் நிறைவெய்தியதேயாம்.

 

அரசர் — (ஆவலுடன்) குழந்தையின் வெற்றிச் செலவைச் செவியுறலாகும் பெருவிழா ஏன் காலந்தாழ்க்கின்றது.

 

மந்திரிமகன் — (பணிவுடனும் பரபரப்புடனும் அணுகி வணக்கஞ் செய்து) தேவ! இடையுலகிற்கிறைவ! வெற்றிச்செலவின் செய்தியைக் கொணர்ந்த தூதுவர், இளவரசராலனுப்பப்பட்டுத் தலைவாயிற்கண் அமர்ந்திருக்கின்றனர்.

 

இது சிந்திக்கப்படும் பொருள்

கிடைத்தலாகுங்கிரமம்.

(எல்லவரும் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர்.)

 

மந்திரிமார் — நல்லோய்! விரைவிற் புகவிடு.

 

மந்திரிமகன் — மந்திரிமார் கட்டளைப்படியே.

(என்று வெளிச்சென்று அவருடன் மீண்டும் வருகின்றான்)

 

புருடர் — (வணங்கி, அணிமைக்கணெய்தி) தேவ! உலகெலாம் வெல்லுறும் புதல்வனால் திகழ்கின்றீர்கள். இளமைப்பருவத்திலும் பிரதாபருத்திரரது வீரம் காளைப்பருவத்தினராகிய காகதிவேந்தரின் வீரத்தையும் கடந்திலங்குகின்றதாகலின், இவரது புயவலி, அளவிடப்படாத பெருமையுடையதென்பது உறுதியே.

 

அரசர் — (மிக்க மகிழ்ச்சியுடன் அமைச்சரைப் பார்த்து) நினைத்துழி விருப்பமே வடிவெடுத்து வந்தென இவர்க்கு பெருவிலைப் பரிசிலையளித்தி; அதனால் இருமடங்காய மகிழ்ச்சியையுடைய இத்தூதுவர் வாயிலாகக் குழந்தையினுடைய வெற்றித் திருவின் றிருமணச்செய்தியைச் செவியுறூஉம் பெருவிழாவினாற் செவிப்புலனைப் பயனுறச் செய்வேம்.

 

மந்திரிமார் — அரசரது கட்டளைப்படியே; (என்று பொற்பண்டாரியின் வாயிலாக  அங்ஙனம் செய்கின்றனர்)

 

சாமம் தானம் இவற்றைச்

செய்தலாகுமிது சங்கிரகம்.

 

புருடர்கள் — (வணக்கஞ் செய்து பரிசிலைப் பெற்றுக் கொண்டு அதனைத் தலையில் வைத்துப் பேரரசரது அருட்கொடையைப் பாராட்டுகின்றனர்).

 

மந்திரிமார் — நல்லீர்! இவணெய்தி இளவரசரது வீரத்தாற் பெருமிதமெய்திய வெற்றி விளையாடல்களை வேத்தவைக்குச் செவியணியாக்குதி.

 

புருடர் — பேரரசர், கருத்துடன் செவியுறல் வேண்டும்.

 

முதலாமவன் — தேவ! தேவரீரது அருளானும், பரிநீராசனத்தாற்[7] கொழுந்து விட்டெரியும் அங்கியின் வெற்றிக் கொடையானும் இருமடங்காகி மட்டங்காவீரத்தையுடைய பிரதாபருத்திரன் புறப்படுங்கால்:-

 

போர்ச்செலவின் றொடக்கத்தில் ‘யான் முன்’ என முற்பட்டு வெளிப்படும் படைகளின் ஆரவாரத்தால் பொடிபடும் பூமியின் பூழித்திரன், மிக்கெழுந்து வானிடைப் பரவுகின்றன; பரவவே, வேறற்குரிய வெல்லாத் திசைகளும் தம் விபுத்தன்மையை[8] உள்ளே மறைத்துக்கொண்டு வெருவுற்று யாண்டோ சென்றாங்குப் புலனாகவேயில்லை.                                     (ச)

 

பின்னும்,

 

செருக்கு மிக்க போர்ச்செலவான் நாற்புறமும் அதன் பொறையைத் தாங்கற்கியலாத ஆதிசேடனுடைய முடியாவும் வளைதருங்கால், மா திரத் தலைவரனைவரும் அச்செலவொலியைச் செவியுற்று, இது படைகளின் ஆரவாரம் அன்று; கரைகடந்த நாற்கடலின் கலகலவொலியாம். இது போர்ப்பறை முழக்கன்று; கண்ணுதற் கடவுள் கற்பமுடிவின் முழக்கு முடுக்கையொலியாம், என்று வியப்பையும்[9] அச்சத்தையு மெய்தினர்.                        (ரு)

 

 

புரோகிதர் — ஓகோ! படைத்தலைவரின் தடைப்படாத வீரம்.

 

இரண்டாமவன் — பின்னர் இளவரசரது ஆணையால் படைகள், முதலிற் கீழ்த்திசையை நோக்கிச் சென்றன. அங்ஙனஞ் செல்லுங்கால்.

 

செங்கதிர்ச் செல்வன், தேரூர்ந்தெதிர்ச் செல்லும் என்னை இவ்வீரருத்திரன் நோக்கிய வழி அதனைப் பொறான்; என்று கருதி படைப்பூழியில் மறைந்தொழிந்தான்.                                                 (கா)

 

மந்திரிமார் — பின்னும் பின்னும்.

 

இரண்டாமவன் — பின்னர்ப் படைத் தலைவரானே கீழ்த்திசையிலிருக்கும் அற்ப அரசரை வென்று எவ்வாற்றானுந் தடைப்படாத செருக்குமிக்க அப்பெரும்படை செல்லுங்கால்:-

 

விளக்கமிக்க வீரத்தையுடையாரும், மதமெய்திய வேழப்படை, போர்ப்பறை யிவற்றின் ஆரவாரத்தான் மனவலியெய்தியவருமாகிய களிங்கதேயத்தரசர் போர்க்குச் சித்தமாயினார்.                                           (எ)

 

அவர்களோடு தெலுங்குப் படைத் தலைவர்க்கு வீரப்பொருளாகிய பெரும்போர் நிகழ்ந்தது. நிகழவே,

 

வீரருத்திரரது வாட்படை, இறைச்சியைப் புசித்து களிற்றின் கதுப்பிற் பெருகுமரத் தமாகிய கட்பெருக்கைப் பருகி, மூளையிற் பொருந்து மென்புக்களால் திற்றிப்பற்களைப் படைத்து செருக்குடன் அரசருடலைத் துணித்து, நரப்பு மாலையணிந்து மக்களையச்சுறுத்தி பைரவனுருக்[10] கொடு கொடிய வாய் செருக்கள மாகுங் காளிதேவியர்க்குக் களிங்கராற் பலிவினையாற்றியது.

 

புரோகிதர் — மாறுவேடத்தான் மறைவெய்திய காகதித் திருமாலும், தனது பெருமையைச் சிறிது வெளிப்படுத்தினர் போலும்.

 

மந்திரிமார் — (பெருமகிழ்ச்சியுடனும் வியப்புடனும்) ஓகோ! பிரதாபருத்திரன்பாற் பொருந்திய வீரமிகை யென்னே!

 

ஏவலன் — இது தக்கதே! பேரரசராகிய உருத்திரவேந்தர்க்குப் புதல்வராம் நிலையிற் செயக் கடவதும், காகதிக்குலக்குமரர்க்குத் தக்கதும் குலதெய்வமாகிய சுயம்பூதேவரது அருண்மேன்மைக்குப் பொருந்தியதும் ஆகிய செயல் யாதோ அஃதன்றே இளவரசராற் செய்யப்பட்டது.

 

அரசர் — (மகிழ்ச்சியான் விளைந்த சொற்றளர்ச்சியுடன்) மேலும், மேலும்

 

முதலாமவன் — பின்னர் சமர்வேளையில் பகைவரின் சிரங்கள் அறுபட்டு மீமிசை  கிளம்புங்கால் அவற்றைக் கண்ட கதிரவன், இராகுவெனும் அச்சத்தான் வருந்தினான்; வருந்தவே அக்கதிரவற்கு அபயமளிக்கும் படைத்துகள், அச்சிரங்களை மறைத்து இருளைச் செய்தது.

 

அன்றியும் அதுகாலை அலைதருங்கொடியனைய வாட்படையான் மதவேழ மத்தகம் பிளவுறுங்கால் அதனின்று மேற்சிதறும் நன்முத்தங்களாகும் விண்மீன்குழு அவணெய்திய தெய்வமகளிரின் முகமதியத்தைச் சூழ்தரும்.     (கூ)

 

பின்னர் இளவரசரது ஆணையால்,

 

கீழ்த்திசை வெளியின் வெற்றியாற் புகழப்படும் வீரத்தையுடையவரும், குண கடற்கரைக்கண் வெற்றிக் கொடியை நாட்டியவரும் விளக்கமிக்க விறலுடையவரும் ஆகிய தெலுங்குப் படைத்தலைவர், வேந்தரது புயவலியைக் கடற்கரைக் கானனவாசிகன் புகழ்ந்து பாட அதனைச் செவியுற்றவண்ணமாய்த் தென்றிசையெய்தினர்.                                                    (க0)

 

அங்கண்,

 

உலோபாமுத்திரைக்கேள்வனாகிய அகத்திய முனிவரர் அணிமைக்கணிருப்பினும்[11] இவ் யாறுகளின் நீர், மிகுந்த படைப்பூழியாற் கலக்கமெய்துகின்றது; என்றாங்கு துகிற்கொடிகள்[12] தென்றல் வீசிய சிகையுடையவாய் எள்ளாற் பாட்டுடன் விண்ணிடை யடிதொறும் மிக ஆடற்புரிகின்றன.                         (கக)

 

பின்னர் தென்னவன் முதலிய தென்றிசையரசர்கள் சரண்புக, அவர்களைக் காகதிவீரருத்திரவேந்து, தன் படைத்தலைவரையொப்ப வெகுமதித்து அவர்களுடன் மேற்றிசை நோக்கிச் சேறலானான்.

 

மந்திரிமார் — பாண்டிய மன்னர் அமர்க்குமுன்னரே அரசரது அடியிணைக்கணெய்தி, தன்னலங் கருதித் தக்கதே செய்தனர். மேலும்; மேலும்.

 

இரண்டாமவன் — அங்கணும்,

 

மேனாட்டரசர்களைச் சார்ந்தனவும், பொறைமிகையான் நடுக்கமுறுந் தண்டங்களையுடையனவுமாகிய கொடிமரங்களில், கழுகுக்குழு தன் சிறைகளை வீசியடித்து, வலிய அலகினால் அக்கொடிகளின் துகில்களைப் பற்றிச் சிதைத்து அவற்றில் அமர்ந்தனவென்னு மிஃதே வெற்றியை விரும்பும் ஆந்திரப் படை வீரர்க்கு கலுழன்படையாய் அமைந்தது; பிறிதொரு போரெனில் தமது வலியுறும் புயத்தின் தினவு கழிக்குமோர் செயலாம்.                             (கஉ)

 

பின்னர்:-

வீரருத்திரன் இவ்வண்னம் மேற்றிசையை வென்று பகை மனைவியரின் கண்ணீரான் நிறைவுற்ற நருமதையாற்றைக் கயங்களை யணையாக் கொண்டு கடந்து, வடதிசையை வேறற்குச் சென்றனன்.                           (கங)

 

அங்கண், அங்கம் வங்கம் கலிங்கம் மாலவம் என்னுமிவை முதலிய தேயத்தரசர் யாவருங் குழுமி, போர்க்கு ஆயத்தராய் முன்னர் வந்து தோன்றினர்.

 

மந்திரிமார் — ஓகோ! வடநாட்டரசர்க்கு என்னே! தன்னிலையறியாமை; பிரதாபருத்திரற்கும் பகைவருளரோ?

 

அரசன் — மேலும், மேலும்;

 

முதலாமவன் — பின்னர், படைகளுடன் வரும் அரசர்குழாத்தை நோக்கி நம் படைத்தலைவர், செருக்குடன் பின்வருமாறு கூறினர்.

 

அடே! அடே! கூர்ச்சர தேயத்தரசனே! சமரிற் சிதைவுற்றனை; இலம்பாக ஏன் நடுக்கமுறுகின்றனை? வங்கமன்னனே! வீணே துடிக்கின்றதென்னை? கொங்கண நாட்டரசனே! தாணைப்பூழியாற் குருடனாயிணையன்றே; ஊண நாட்டிறைவ! உனதுயிர்க்காவலிற் பற்றுடையனாயிருத்தி; மகாராட்டிரனே! நாடிழந்தனை; இந்த யாம் போர் வீரர்; என்று தெலுங்குதேயத்தரசருடைய படைவீரர், பகைவரை யெள்ளி யிகழ்கின்றனர்.

 

 

இது சினமுற்றுக் கூறலாகுந்

தோடகம்.

 

ஏவலன் — நன்று; நன்று; படைத்தலைவரின் சொன்னடை; இவ்வண்ணம் கூறி மீண்டும் அவர் என் செயத் தொடங்கினர்.

 

முதலாமவன் — கூறுவதென்னை? படைத்தலைவரின் வீரம் ஒப்பற்றது.

 

தெலுங்கு வீரரது சுழல் தருவாட்படையின் தாரைநீரில்[13] மூழ்கிப் பொன்னகரெய்தும் புரவலரை யணிமைக்கணோக்கிய சுரநதி, மக்கள், தெய்வத்தன்மையெய்தற்குக் காரணம் யான், என்னும் தன் செருக்கை[14]யறவே யொழித்ததாகலின், அத்தெய்வ நதியே அங்கணிகழ்ந்த போர்ச் செய்தியை முற்றிலும் அறியும்.           (கரு)

 

பின்னரும் அங்கண் மறைந்தொழிந்து பகையரசரைத் தேடவிரும்பிய படைவீரர், அவ்வந்நாட்டிற்குரிய வேடம்பாடை முதலியவற்றை வெளிப்படுத்தி யெப்புறத்துஞ் சுற்றித் திரிந்தனர்; திரிந்து அவர்களை உயிருடன்[15] பிடித்து இளவரசரது பக்கலை யடைவித்தனர்.

 

மந்திரிமார் — படைவீரரின் முயற்சி சாலச் சிறந்ததே.

 

நிகழ்ச்சிக்கேற்ற பெற்றி

வஞ்சித்தலான் இஃது அதிபலம்.

 

அரசன் — மேலும், மேலும்;

 

இரண்டாமவன் — பின்னர், ஏனைய அரசரும் தன் பணியாளரிடத்து[16] நம்பிக்கையிலராய், பிரதாபருத்திரருடைய இணையடிகளையே சரணெய்தினர்.

 

ஏவலன் — ஓகோ! அரசர், போர்க்கஞ்சியவாறென்னே!

அச்சத்தை[17] வெளிப்படுத்த

லான் இஃது உத்துவேகம்

 

முதலாமவன் — அச்சமென்று கூறுமவ்வளவிலமையுமோ?

 

சோழர் புறங்கொடுத்தோடிக் கலக்கமெய்தினர்; காச்சுமீரர், வீரச் செயலற்றனர்; தூணர், செல்வமிழந்தனர்; இலம்பாகர், அச்சத்தால் உடல் நடுக்கமெய்தினர்; வங்கதேயத்தவர் உறுப்பிலராயினர்; நேபாளர், அரசியற்றலில் விதனமெய்தினர்; சிங்கரும் விரைவு தணிவெய்தினர்.                                    (கசா)

 

மேலும்,

 

காம்போசர், காசினியாசை யெழிந்தனர்; சேவணர் விரணமெய்தினர். கௌடர், உடற்பீடையெய்தினர்; கொங்கணர், குலவரைக் குகையெய்தினர்; இலாடர், உடல் முறிவெய்தினர்; சிங்களர் அஞ்சிக் கலங்கினர்; கருணாடர், மெய்ந் நடுக்கமெய்தினர்; மாளவர் மடியாளராயினர்.                           (கஎ)

 

மேலும்,

 

போசர், பயனில் படையுடையராயினர்; கேரளர், மனையிற் பிரிந்தார்; பாண்டியர், விறலொழிந்தனர்; கூர்ச்சரர், நாணத்தான் மனமாழ்கினர்; பாஞ்சாலர், வணங்கி அச்சக்குறிப்பை வெளியிட்டனர். கீகடர், இன்னுரையியம்பினர்[18]; காம்பிலியர், சிற்றூர் எய்தினர்; கலிங்கரும் புகழ் ஒழிந்தனர்.                          (கஅ)

 

(எல்லவரும் பெருமகிழ்ச்சியை

அவிநயம் செய்கின்றனர்.)

 

ஏவலன் — (வியப்புடன்) ஓகோ! பிரதாபருத்திரனுடைய வீரச் செயல்கள், மூவுலகையும் கடந்திலங்குகின்றன.

 

அரசன் — (மகிழ்ச்சியுடன்) உலகிற்கொரு வீரனாகிய குழந்தை, காகதிக்குலத்திற்கு மிகு புகழை விளைவித்தான்.

 

புரோகிதர் — காகதிக்குல தெய்வங்களின் அருட்பேறு அடிமுதலிறுதிகாறும் பயனெய்தியது.

 

அரசன் — மேலும், மேலும்;

 

முதலாமவன் — பின்னர், எல்லாத் திசைகளையும் வென்றமையான், விளக்கமிக்க விறலுடையவரும், உலகிற்கொரு வீரருமாகிய வீரருத்திர வேந்தர், எல்லா அரசருடைய அவ்வவ் விறைப்பொருளைப் பெற்றும், நிறைவுறு படைகளுடன் வந்துடன்படும் அரசர்குழு, தம்படையிற் சேர்தர அதனால் கடலெனத் திகழும் படையுடன் திரும்பியுள்ளார்.

 

மந்திரிமார் — (மகிழ்ச்சியுடன்) அரசிளங்குமரர் இது காலை யாண்டுள்ளார்?

 

இரண்டாமவன் — இது காலை காகதிவீரன், அரசர்குழு ஏவலராய் அமைய, படைத் தலைவரிற் பலரையும் நகர்க்குப் போக்கிச் சில படைகளே சூழ்தர, வேட்டையிலவாவுடையராய், கோதாவிரியின் மருங்கடவிக்கண் விரும்பியாங்கு ஆடற்புரிகின்றார்.

 

மந்திரிமார் — (ஆராய்ச்சியுடன்) பேரரசரே! தாமே நிலவுலகைப் புரக்க, அரசிளங் குமரர் தான் இளவரசையே உடன்படுகின்றார்.

 

இது பிராத்திநசை.

திசைவெற்றியால் அரசர்கதை

நெடிது தொடர்ந்தமையாற் பதா

கை விளக்கப்பட்டது.

 

அரசர் — ஆனால், தாங்களே குழந்தையைத் தாழ்வின்றியழைத்து வந்து அவனைப் பட்டாபிடேகத்திற்கு ஒருப்படுத்தல் வேண்டும்.

 

மந்திரிமார் — அரசர் கட்டளைப்படியே. (என்று போகின்றனர்) (வேடசாலையில் பரபரப்புடன்) ஓ! ஓ! நகரமக்களே விரைவில் அகல விலகுங்கள்.

 

கதுப்பினின்றொழுகு மதநீர்ப்பெருக்கையுடைய பட்டத்து யானை[19], மிக விரைந்து வலத்தாற்றறியை முறித்து சங்கிலியை அறுத்து, பாகன் அங்குசத்தான் வெட்டியும் அதனை மதியாது உதறி அப்பாகனையும் விரைந்து வீழ்த்தி, ஆவணத்தையலைத்து, பிறகரிபரிகளையோட்டி மக்கட் குழாத்தை வெருட்டி நகரைப் பலபுரத்தும் இங்ஙனம் கலக்குகின்றது.                     (கசா)

 

இது ஐயம் அச்சம் இவற்

றின் வடிவாகிய சம்பிரமம்.

 

அரசன் — (செவியுற்று முறுவலுடன்) பட்டத்து யானை நகரைக் கலக்குகின்றதா?

 

புருடன் — பேரரசரே! இது காலை வீரருத்திரவேந்தர், இறைப்பொருளாகப் பெற்ற வேழங்கள் நகர்க்குட் புகுங்கால் அவற்றின் மதநீர்க்காற்றை நுகர்ந்த பட்டத்து யானை, கனன்று கட்டுத்தறியை முறித்தது.

 

புரோகிதர் — கயமுகக்கடவுள், தந்தையராகிய சுயம்பூதேவரால் உபதேசம் செய்யப்பட்ட பிரதாபருத்திரனது பட்டாபிடேகத்தை இடையூறின்றி யினிது நிறைவுறுத்தற்கு பட்டத்து யானையின் உருக்கொடு வருகின்றார்.

 

கருப்பசந்தியில் பீசத்தை

வெளிப்படுத்தலான் இஃது ஆட்சேபம்.[20]

 

அரசர் — (மகிழ்ச்சியுடன்) ஆனால் யாமும் உய்யான வாயிலாக மேன்மாடத்தையெய்திப் பட்டத்துக் களிற்றைக் காண்பேம். (என்று எழுந்து சுற்றி வந்து எல்லவரும் சென்றனர்)

 

நாடகவியலில் ‘வீரருத்திரன் வெற்றி’ யென்னும் மூன்றாம் அங்கம் முற்றிற்று.

[1] இருதிறத்து ஏந்தல் — ஈண்டு அரசர்களையும் மலைகளையும் உணர்த்தும்.

[2] கடகங்கள் — ஈண்டு நாட்டையும் மலைப்பக்கத்தையும் உணர்த்தும்.

[3] வச்சிரகவசம் — வச்சிரத்தானியன்ற சட்டையென்பது பொருள்; வச்சிரம் வலிய பொருளாதலின் உடற்குச் சிறிதும் தீமைவாராதென்பது கருத்து.

[4] இத்தொடரால் இவ்வரசன் சிறந்த வள்ளலென்பதும் இத்தகைய வள்ளலே பாட்டுடைத் தலைவராவர் என்பதும் புலனாம்.

[5] மாகதர் — அரசரைச் சார்ந்து அவரது புகழைப் பாடும் ஓர் வகுப்பினர்.

[6] மனிதராம் நிலையளவிலெய்தற்கரிய என்றமையான் இவற்றை யரசர்களே யெய்தற்குரியர் என்பது கருத்து.

[7] பரிநீராசனம் —  நீராசனம் என்பது நாட்டு நலங்குறித்துச் சரற்காலத்திற் செய்யக் கடவ சாந்திகருமங்களில் ஒன்று; அது கரிகளை முன்னிட்டுச் செய்வதூஉம், பரிகளை முன்னிட்டுச் செய்வதூஉம் என இரு வகைத்து; அங்ஙனமே சௌனகரானுங் கூறப்பட்டுள்ளது;

‘அரசன் ஐப்பிசியிலாதல் கார்த்திகையிலாதல் பூருவ பக்க நவமி திதியில் நலங்குறித்து கரி நீராசனத்தைச் செய்தல் வேண்டும்; அங்ஙனமே ஐப்பசித் திங்களில் பரிநலங்குறித்துப் பரிநீராசனஞ் செய்தல் வேண்டும்’ என்று.

[8] விபுத்தன்மை — ஈண்டு வியாபகத்தன்மையையும் அரசராந்தன்மையையும் உணர்த்தும்.

[9] நாற்கடலின் பேரொலியையும் உடுக்கையொலியையும் நிகர்த்தவொலியைக் கேட்டவரில்லை யாதலின் வியப்பும் அச்சமும் உண்டாயிற்றென்பதாம். இதனால் திசைத் தலைவரே அஞ்சினர் என்றால் ஏனைய அரசர்களைப்பற்றிக் கூற வேண்டா என்பது கருத்தாபத்தியாற் புலனாம்.

[10] பைரவசமயத்தவர், கட்குடித்தன் முதலிய செயற்புரிந்து காளிதேவிக்கு நரபலி கொடுத்தல் அவர் மரபாகலின், அங்ஙனமே இவ்வாட்படையாகும் பைரவசமயியும் சமர்க்களத் தேவிக்கு களிங்க தேயத்தரசரை பலியளித்ததென்பது கருத்து.

[11] உம்மை, அகத்திய நாள் உதயமெய்துங்கால் ஆற்று நீர் தெளி தரல் இயல்பு; அங்ஙனம் ஈண்டு அம்முனி அணிமைக்கணிருப்பினும் அது தெளியவில்லை யென்னும் எதிர்மறைப்  பொருளையுணர்த்தும்.

[12] இத்தொடர் — உலகிலொருவன், வல்லானொருவனை வெல்லுறில், அவன் மேனிலத்திருந்து எள்ளி நகைத்து தலைவிரித்தாடல் இயல்பென்பதையுணர்த்தும்; இக்கருத்தை சிகை, எள்ளல், விண் என்னுஞ் சொற்கள் புலப்படுத்தும்.

[13] தாரை — ஈண்டு வாணுதியையும், நீர்ப்பெருக்கத்தையும் உணர்த்தும்; கங்கையாற்றி லுடனீத்தவர் தெய்வத்தன்மையுறுவர், என்பது நூல் வழக்கு.

[14] தன் செருக்கையறவேயொழித்த தாகலின், இதனால், அப்பெருஞ் செருவிடைப் பலர் உடனீத்து வீரச்சுவர்க்கம் எய்தினர் என்பது போதரும்..

[15] உயிருடன் — இதனால் அஞ்சிய பகைவரை வதை புரியவில்லை யென்பது பெற்றாம். “இருக்கை யெய்தியவன், பேடி, கும்பிட்டுவணங்குபவன், அஞ்சியவன், புறங்கொடுத்தோடியவன் என்னுமிவர்களை அறத்தாறு கருதுமொருவீரன் கோறலாகாது” என்னும் மனுநூல் இங்கண் உணரற்பாலது.

[16] தன் பணியாளரிடத்தும் நம்பிக்கையின்மை, மாறுவேடம் பூண்ட படைவீரர், பல அரசரைக் கைப்பற்றியமையானாம்.

[17] அச்சத்தை — இது பகைவர்க்கு விளைந்த அச்சத்தை.

[18] இன்னுரையியம்பலாவது — ஈண்டு ‘யான் எளியன்; என்னைக் காத்தருளல் வேண்டும்’ என்னும் இன்னோரன்ன எளிய சொற்களைக் கூறல்.

[19] பட்டத்து யானை — இந்த யானை கணபதியென்னும் பெயரியதாம்.

[20] பீசப்பொருளாகிய பட்டாபிடேகத்திற்கு இடையூறின்றி யென்றமையான், கயமுகக்கடவுளின் அருள்வடிவாகும் உபாயத்தைச் சிந்தித்தலான் இஃது ஆட்சேபம் என்னும் கருப்பசந்தியினுறுப்பாம்.

பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 4

இரண்டாம் அங்கம்

(வேடசாலையில்)

ஐயன் இங்கு வரவேண்டும்; இங்கு வரவேண்டும்;

(கிழக்கஞ்சுகி வருகின்றான்)

கஞ்சுகி[1] — (மகிழ்ச்சியுடன்) முன்னரே காளைப் பருவத்தைக் கடந்தும், நற்பயனெய்திய[2] இந்த நரையுடன் திரி தருகின்றேன். நெடிது நாள் நிலைப்பெய்திய இந்நரையால் பிரதாபருத்திரனது பட்டாபிடேகமாகிய பெருவிழாவை யனுபவிக்கின்றேன்.

நண்பகலை[3] வன்னித்தலாற் றடைப்

பட்ட கதைப் பொருளை மீண்டும் ஆ

ராய்தலான் இது பிந்து.

இன்னும்,

உரை  நடை செயல் என்னுமிவற்றால் பதந்தொறும்[4] நழுவி விழுகின்ற என்னைப் பார்த்து எம்பெருமானாகிய உருத்திரவேந்தர் சிறித்தவண்ணமிருக்கின்றார்.  (க)

 

(ஆராய்ச்சியுடனும் வியப்புடனும்)

 

காகதி வேந்தருடைய அரசியற்றிருமகள், முதல்[5] இல்லத்தின் சாளரங்கள் வழியாக இளவரசரின் இல்லத்தை யிது பொழுது மெல்ல நோக்குகின்றாள்.             (உ)

 

அரசியற்றிருமகள் பிரதாபருத்திரனை

விரும்பியமையான் இது விலாசம்.

(எதிரே பார்த்து) அரசிளங்குமரனுடைய ஏவலனாகிய தாரகன் எற்குறித்தே பரபரப்புடன் வருகின்றானே.

தாரகன் — (வந்து) ஐயரே! வணக்கஞ் செய்கின்றேன்.

கஞ்சுகி — நல்லோய்! மங்கலமெய்துக, அரசிளங்குமரரது வெற்றிச்சிலவை, உருத்திரதேவர் ஒருப்பட்டனரோ?

தாரகன் — மனம் வருந்தியே ஒருப்பட்டார்.

கஞ்சுகி — உருத்திரவேந்தர், வெற்றிச்செலவிற்குரிய கருவிகளை சித்தஞ் செய்யுங்கால், அரசிளங்குமரன், அவரது சரணத்தில் வணங்கி இச்செயலினின்றும் அவரைத் தடுத்துத் தானே செலற்கெழுகின்றனர்; என்னுமிஃது அவ்வரசிளங்குமரனது பெயர்க்குப்[6] பொருத்தமே.

தாரகன் — இளவரசர், போர்ப்பயிற்சியில்லாதவர்; திசை வெற்றியோ செயற்கரிய செயலாகும்; யாது நேருமோ

கஞ்சுகி — நல்லோய்! சுயம்பூ தேவருடைய அருட்செயல்கள் தடைப்படாதனவன்றே; எண்ணரிய மாட்சிமிக்க வீரருத்திரனும் திருமாலின் அவதாரமன்றோ?

 

கண்டொழிந்த பீசத்தைப்[7] பின்பற்ற

லாகு மிது பரிசருப்பம்.

இங்கண், கனவுச்செய்தியை வெளிப்படுத்

தலாற் காண்டற்குரியதும், திசைவெற்றிச்

செலவின் முயற்சியாற் காண்டற்கரியது

மாகிய பீசத்தைத் தோற்றுவித்தலான்

உற்பேதமென்னுமிது பிரதிமுகசந்தி.

 

தாரகன் — இஃதுண்மையே! அவரது பெருமை, தெய்வத்தன்மையதே.

கஞ்சுகி — அரசிளங்குமரர் எங்கிருக்கின்றார்.

தாரகன் — காகதிக் குல தெய்வமாகிய துர்கையம்மையை வழிபடுமுகமாக வெற்றிச்செலவின் மங்கலச் செயலையாற்றி, அனுமான்மலைச்சாரலின் வெளி உய்யானத்திற் பாடி வீடமைத்துக் கொண்டு அங்கண் அமைச்சர்சூழ்தர இளவரசர் இருக்கின்றார். யான் அங்குச் செல்ல விடை தருக.

கஞ்சுகி — நல்லோய்! செல்லுக; யானும் அரண்மனைக்குச் செல்லுகின்றேன்.

(முறையே சுற்றி வந்து சென்றனர்)

இது சூளிகை

பிரவேசகம்

(அதன்பின், பிரதாபருத்திரன் மந்திரிமார் ஏவலன் ஆகிய இவர்கள் வருகின்றனர்)

 

பிரதாபருத்திரன் — குலத்திற்குரிய பற்றுக்கோடாகுந் தந்தையாரைச் சமநிலைக்குரியராக்கும் அரசியலான் என்?[8] அன்றியும் இதிற் பல பெருங்குற்றங்கள்[9] உள்ளனவாகப் பெரியோர் கூறுகின்றனர்; இவ்வற நெறியும் இப்பொழுது[10] சிதைக்கப்பட்டுள்ளது. இதிற்றடைப்படாமல் நடந்து செல்ல யாவரே வல்லார்; ஆதலின் இளமைப் பருவத்தில் இன்புற்று விளையாடும் எனக்கு இளவரசும்[11] விரும்பற்பாலதின்று.                                   (ங)

 

அதனால் யாம், பேரரசருடைய தாழனைய புயங்களாற்[12] பகை நீங்கிய திசைவெளிகளில் வெற்றிச் செலவென்னும் பொழுது கழிக்கும் விளையாட்டினால் இன்புறுகின்றோம்.

அரசியலில் விருப்பமின்மயைக்

கூறலான் இது விதூதம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமர! பேரரசர் எவ்வாற்றானுஞ் சிறந்த காகதிக் குலத்தின் ஊழ்வினைப்பயனால் துரந்தரனாகிய நின்னையெய்தி நெடிது  நாட்டாங்கிய சுமையைத் தளர்த்தற்குத் துணிகின்றனர்; புதல்வன் அரசியலைத் தாங்கற்குரியனாங் கால், தந்தை தவநிலை யெய்த விருப்புடையனாதல் காகதி வேந்தர்க்கியல்பான ஒழுக்கமே; குலதெய்வமாகிய சுயம்பூ தேவராலும் இங்ஙனமே உபதேசிக்கப்பட்டது. இருமுதுகுரவரது[13] மாட்சிமிக்க ஆணையைக் கடத்தல், அரசிளங்குமரற்கு தக்கதன்று; கலியுகத்தின் குற்றத்தாற் சிதைவுற்ற அறநெறியை நிலைப்படுத்தற்கும், தாங்கற்கரிய புவிப்பொறையைத் தாங்கி நிற்றற்கும், அவதரித்த காகதித் திருமாலாகிய தாங்கள், அரசியலை மறுத்தல் பொருத்தமன்று.

 

பிரதாப — (உடன்பாடுடன்)

 

சுயம்புதேவர், தந்தையர், என்னும் தேவமனிதராகிய இவ்விருவரும் எற் கிறைவராவர்; அவ்விருவருள், ஒருவர் அரசராக, யான் முற்றிலும் இளவரசனாகவே அமைவேன்.                                             (ச)

 

மந்திரிமார் — அரசிளங்குமர! சுயம்பூதேவராகிய பேரரசர்பால் உண்டாகும் இவ்வணக்கம், காகதிவேந்தர் எல்லவர்க்கும் பொதுவான இயல்பாம்.

 

(நிகழுஞ் செயலைப் பற்றிய வெறுப்பை யொழித்தலான் இது சமம் ஆம்).

 

ஏவலன் — காகதிகுலக் கிழவரும் பூசனைக்குரியருமாகிய சுயம்புதேவர் புவிப்பொறையைத் தாங்குக; அரசிளங்குமரனோ என்னில் அரசியற்றிருமகளை மடிக்கணேற்றியமைக்க.

 

பிரதாப — (புன்முறுவலுடன் ஏவலனைப் பார்க்கின்றான்)

 

இது பரிகாச வார்த்தையாகிய நரும.

 

ஏவலன் — மேதினி நெடிது பயனுடைத்தாயிற்று. குலவரைக்குடுமிகளின் வலமிக்ககன்ற பாறையில் வசித்தலான் வருந்திய உறுப்புக்களையுடைய இந் நிலமகள், பிரதாபருத்திரனது வாகுவில் வசித்தின்புறுக.                    (ரு)

 

அரிச்சந்திரனது புயத்திலும் இராமனது வாகுவிலும் இவ்வையம் இன்புற்றிருந்தாங்கு, காகதித் திருவின் கேள்வனது கைத்தலத்தினும் இருந்தின்புற்று மகிழ்க.                                                    (கா)

 

பிரதாப — (கைத்துடிப்புடன்[14] கீழ்நோக்கியவண்ணம் நிற்கின்றான்)

 

ஏவலன் சொற்களானிகழ்ந்த

இன்பமாகுமிது நருமத்தியுதி

 

மந்திரிமார் — அரசிளங்குமர! காகதித் திருமாலாகிய தங்களை மணத்தற்கு விரும்பும் அரசியற்றிருமகள், காலத்தாழ்வைப் பொறாள்.

 

ஏவலன் — இளவரசனாகிய தலைவன்பால் கலைமகட்கு நிகழுங் காதற் செயலை மிகுதியுங் கண்ட நிலமகளும் திருமகளும் காலத்தாழ்வை யெங்ஙனம் பொறுப்பர். (எ)

 

மந்திரிமார் — இவ்வண்ணமே.

அரசியற்றிருமகள் தனது மிகுவனப்பாற் பேரவைக் களத்தை யலங்கரித்து ஆர்வமிக்குடையளாய் இதுபொழுது இளவரசரது கூட்டத்தை யெதிர்[15]பார்க்கின்றாள். (அ)

 

மந்திரிமார்களுடையவும் ஏவலனு

டையவும் சொற்றொடர்களாற்பீ

சத்தின் அவாமிகையை வெளிப்

படுத்தலான் இது பிரகமம்.

 

ஏவலன் — இப்பெருவிழா, திசைவெற்றிச் செலவினாற் றடைப்படுத்தப்பட்டதோ?

 

நிகழுஞ் செயல் திசை வெற்றிச்செலவினாற் றாழ்த்தலான் இது நிரோதம்.

 

மந்திரிமார் — (அவமதிப்புடன்) தெலுங்குத் தானைத் தலைவர், ஏன் காலந்தாழ்க்கின்றனர்? அன்றேல், அவரால் என்? யாமோ, மந்திரிப்படையுடையராகுமாத்திரையில் அல்லேம்; அமர்க்கணுஞற்றும் வெற்றிச் செயலாற் றலைவரை யின்புறுத்துமாற்றலுடையேமும் ஆவேம்.[16]

இது கடுஞ் சொல் வடிவாகிய

வச்சிரம் ஆம்.

 

(வந்து) வாயில்காவலன் — வெற்றிபெறுக; இளவரசர் வெற்றிபெறுக. இத்தானைத் தலைவர், நால்வகைப் படைகளைச் சித்தஞ் செய்துகொண்டு வாயில் நிலவெளிக்கணிருக்கின்றனர்.

 

மந்திரிமார் — ஓ! விரைவில் வரச் செய்க.

 

வாயில்காவலன் — அங்ஙனமே. (என்று சென்று தானைத் தலைவருடன் மீண்டும் வருகின்றான்)

 

படைத்தலைவர் — (முறையே வணக்கஞ் செய்து) பெருமானே! காகதிகுலதிலகமே! சருவதோமுகாடம்பரத்தையுடைய[17] வாகினிகன்[18] வீரக்கடலாகிய[19] தங்களை வந்தடைந்தனவே; ஆதலின், அருள்புரியுமியல்புடைக் கடைவிழியால் நோக்குக.

 

இது கோருதல் வடிவாகிய பரியுபாசனம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமர! அப்படியானால் பகைவரை நூறும் வாரணத்திலேறியமர்க; இடைவிடாது எதிரிகளைப் புடைக்கும் படைகளைப் பார்க்க. படைத்தலைவர் எல்லாப்பகைவிடங்களையும் வேறற்குரிய போர்ச் செலவை நிகழ்த்துக.[20]

 

பிரதாப — அமைச்சர் விரும்பிய வண்ணமே.

(என்று மதவேழத்திலேறுதலை யவிநயிக்கின்றான்)

 

மந்திரிமார் — கரங்களின்[21] தேசுமிகையால்[22] எல்லாத் திசைகளையுந் தன்வயப்படுத்தற்குக் கதிரவன் உதயகிரியிலேறியாங்கு வீரருத்திரன் வேழத்திலேறுகின்றான்.                                               (கூ)

 

நிகழ்ச்சிக்கேற்ப அவாமிகக்

கூறலாகுமிது புட்பம் ஆம்.

 

(எல்லவரும் இளங்கோக்களிற்றை முன்னிட்டுக் குழுமி மெல்லெனச் சுற்றி வருகின்றனர்.)

 

படைத்தலைவர் — (உற்சாகத்துடன் வணக்கஞ் செய்து) பெருமானே! இங்கட்பார்வையை யளிக்க.

 

விரைந்து செல்லுகின்ற காலாட்படையின் காலடியாற் பொடியாகிப் பூமியினின்றும் மேற்கிளம்பும் பூழித்திரளாகும் முகிற்குழுவினிடையில் மின்னியொளிர்தரும் வாட்படையாகும் மின்னலான் மிக்க விளக்கமுறுவனவும், இரணபேரியின் முழக்கமாகிய இடியொலியாற் றிசை வெளியாவும் படபடவென்றொலிக்கவும், கரிகளின் கபோலதலத்தின் வழிந்தொழுகு மதநீராகும் மாரி நீரையுடையவுமாய்த் தானைகள், கார்கால வனப்பைச் செய்கின்றன.                          (க0)

 

(வேறிடத்திற் பார்த்து)

 

அச்சுறுத்தும் படைகள், மாதிரங்களை வேறற்குப் பரபரப்புடன் செல்லுங்கால், இந்திரன்றிசையை வெல்லுதற்கு முயன்றனவும், துணைவலியாற் பெருமிதமெய்தியவும், நெடும்பகையுடையவும் ஆகியவரைகளென்ன வேழங்கள் செல்லுகின்றன. செல்லவே, ஆதிசேடனுடைய முடிகள் பொறை மிகையான் ஒருபுறந் தாழ்ந்து மற்றொருபுறம் நிமிர்ந்து சுருங்கியமைகின்றன.           (கக)

 

ஏவலன் — (பார்த்து வியப்புடன்) தெலுங்கு வீரரது ஊக்கம் மிகப் பெரிதன்றே.

 

இருப்புலக்கையை வீசியச்சுறுத்துவாரும், அடிதொறுந் தூக்கி வீசிய வாட்படையுடையாரும், விரும்பியாங்கெறிந்த முசண்டியுடையாரும், விரைந்திழுக்கப்பட்டொலிக்கும் வில்லினையுடையாரும், சுழற்றி வெருவுறுத்தும் கதையினையுடையாரும், முற்றும் பாயும் இறுகம்பு உடையாரும், ஒளிவிளக்கும் பட்டசமுடையாருமாகிய தெலுங்குத் தானைவீரர், உருவெடுத்து வந்த உருத்திரகணங்கள்போல விளையாடுகின்றனர்.

 

மந்திரிமார் — ஓகோ! தெலுங்கரசருடைய குதிரைப் பெருக்கம்.

 

கதிரவன் குதிரையைச் சிரத்திலடித்தற்கென்ன முன்னங்கால்களை மேலே தூக்கி பின்னங்கால்களான் பரபரப்பாற் கீண்டிய தரையைத் தகர்த்து, வீசுகின்ற வால்களால் பகைப்பரிகளின் மனவலியையொழித்து இத்துரகங்கள், ஆடல் நடையானே துலங்கு மைந்தாரையின்[23] விரிவுடையனவாய்ச் செல்லுகின்றன.(கங)

 

(பார்த்து) ஓகோ! தேர்ப்படையின் ஊக்கம், பகைப்படையின் மனவலியைச் சிதைக்கின்றது.

அங்ஙனமே.

 

விரைவொடு நெருங்கிச் சுழல்வுறுந் தங்கநேமியாற் பொடிபடும் பூதலப் பூழிவானிடைப் பறக்க, அப்பூழித்திரளாகும் புயலான் கதிரவன் றேரைப் பொறாமையான் விரைந்து மறைத்த தேர்கள், இடையறாதொலிக்கும் அச்சினையுடையவாய் முழக்கஞ் செய்கின்றன.                 (கச)

 

பிரதாப — (எல்லாப் புறத்தும் பார்த்து மகிழ்ச்சியுடன்) படைகள், நிறைவுற்ற சாதனங்களையுடையனவே.

 

படைவளங்கள், பிளிறிடுங் கயங்கணிரம்பியவும், கனைக்குங் குதிரைகணிறைந்தனவும், ஒலிக்குந் தேரையுடையவும் சங்கநாதஞ் செய்யும் வீரர்களையுடையவுமாய்த் திகழ்கின்றன.                               (கரு)

 

மந்திரிமார் — இளவேந்தனைக்[24] கண்டு படைக்கடல் கரைகடந்து பொங்குகின்றது.

 

இக்காகதிக்குலக்கடல் பலபுறத்தானும் விரைந்து வருகின்ற பலவேந்தலின்[25] வாகினிகளை விரும்பியவண்ணம் உட்கொள்ளப்போகின்றது.[26]            (ககா)

 

படைத்தலைவர் — மந்திரிமார் கட்டளைப்படியே; (என்று வணக்கமுடன்) வெற்றிச் செலவில் விருப்புடைய தானைகள் இளவரசரின் ஆணயை இது பொழுது எதிபார்க்கின்றன.

 

பிரதாப — (அருள் கூர்ந்து அமைச்சரைப் பார்க்கின்றான்)

 

மந்திரிமார் — (ஊக்கமுடன்) படைகள் கீழ்த்திசையை நோக்கிச் செல்க.

 

படைத்தலைவர் — அமைச்சரது கட்டளைப்படியே (என்று செலவை நடித்து நாற்புறமும் பார்த்து மகிழ்ச்சியுடனும் வியப்புடனும்)

 

உதவிபுரியுங் காற்றால் அலைதரு துகிற்றானைகளையுடைய விருதுக்கொடிகள், குணதிசையை யெதிர்த்தற்கு முயலுகின்றன போல       (கஎ)

 

(எல்லவரும் நன்னிமித்தத்தைப் பாராட்டுகின்றனர்)

 

வெற்றிச் செலவிற்கேற்ப

நிமித்த நலனைக் கூறலான்

இஃது உபநியாசம்.

 

பிரதாப (எதிரே பார்த்து) மங்கள அரிசியைப் பொற்பாத்திரத்தில் வைத்து அதனைக் கையிலேந்தி சிறந்தவோர் அந்தணர் வந்தெய்தினரே.

 

அந்தணர் — (வந்து பணிவுடன் முன்னிலையில் நின்று நலங்கூறுமுகமாக வலக்கரத்தைத் தூக்கி) வீரருத்திரன் வெற்றி பெறுக; வெற்றி பெறுக; அரசிளங்குமர! சுயம்பூதேவரது மகோற்சவம் முதலிய கழிந்தபின்னர் மறையவர் நலங் கூறியளித்த மங்கல அரிசிகளை, காகதிப் பேரரசர் அனுப்பியுள்ளார்.

 

பிரதாப — (வணக்கமுடனும் உள்ளன்புடனும் அவ்வட்சதைகளை வாங்கித் தனது சிரத்திலும் யானை மத்தகத்திலும் வைத்து) இறைவனாகிய சுயம்பூதேவன்பால் அமைந்த நமது மெய்ப்பத்திக்கொடியும் முற்றிலும் பழுத்தது; அரசர்களின் முடிகளுக்கு மணியணியாகிய தந்தையாரணையும் அருணிரம்பியுள்ளது; அந்தணரின் ஆசிமொழிகள், மந்திரமணங்கமழ்கின்றன; நாட்டுமக்களின் விருப்பங்கள், நாடோறும் வெற்றியை நாடுகின்றன; ஆதலால் இத்திசைகள் எளிதில் வேறற்குரியவாம்.                                       (கஎ)

 

அந்தணர் அரசர் முதலியோரை

வன்னித்திருத்தலான் இது

வருணசங்காரம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமரனாகிய தங்களுடைய தாழனைய புயங்களின் வீரம் இயல்பாகவே தடைப்படாதாகலின் வெற்றிச் செலவிற்கு இத்துணை யாரவாரம் எற்றிற்கு?

 

ஏவலன் — அரசிளங்குமரனது சிரத்தில் இம்மங்கல அரிசிகள், வெற்றித் திருவின் கைப்பிடி மங்கலத் தமயத்தில் அளிக்கப்பட்டன போலக் காணப்படுகின்றன.

 

அந்தணர் — அரசிளங்குமர! அவ்வத்திசை வெற்றிச் செய்திகளைத் தூதுவர் முகமாக அடிதொறும் அனுப்ப வேண்டுமென்பது பேரரசரது கட்டளை.

 

பிரதாப — தந்தையரது கட்டளையைத் தலையாற்றாங்கினேன். (மந்திரிமாரைக் குறித்து) உங்களிற் சிலர்[27], காகதி வேந்தரின் பக்கலெய்துக; சிலர், வெற்றிச் செலவில் ஊக்கமுடையராய் முயன்று செல்லக.

 

மந்திரிமார் — (வணக்கமுடன்) அரசிளங்குமரன் கட்டளைப்படியே.

 

அந்தணர் — அரசிளங்குமரன் வெற்றிபெறுக; அவ்வெற்றிச்செலவின் வழிகள் அரசிளங்குமரற்கு மங்கலத்தையளிக்க.

 

பிரதாப — (வணக்கமுடன்) பெரியீர்! கட்டளையளிக்க; யாமும் இவணிருந்து செல்லுகின்றோம்.

என்று முறையே சுற்றி வந்து

எல்லவரும் சென்றனர்.

 

நாடகவியலில், ‘வெற்றிச்செலவின் விலாசம்’ என்னும் இரண்டாம் அங்கம் முற்றிற்று.

 

[1] கஞ்சுகி — மெய்க்காப்பாளன்

[2] நரை நற்பயனெய்தியமை, பிரதாபருத்திரனது பட்டாபிடேக மகோற்சவத்தைக் காண்டலானாம்.

[3] நண்பகலை வண்ணித்தல் முதலங்கத்திறுதியில் வன்னித்திருத்தலைக் கொண்டு கூறினான் என்க.

[4] பதந்தொறும் — இது சொற்கடோறும் கணப்பொழுதுதொறும் என்னும் இருபொருள்களையுமுணர்த்தும்.

[5] முதல் இல்லம் — இது பிரதாபருத்திரன் தந்தையாகிய உருத்திரவேந்தரது இல்லத்தை.

[6] வீரருத்திரன் என்பது இவனது பெயராகலின் தந்தையரைத் தடுத்துத் தான் வெற்றிச் செலவிற்குத் தலைப்படல் இவனது வீரத்திற்குப் பொருத்தம் என்பதாம்.

[7] பிரதாபருத்திரனது பட்டாபிடேகம் பீசம் ஆம்.

[8] தந்தையார் இவ்வரசையெற்களிப்பின் தவத்தை மேற்கொள்ளுவராகலின், அத்தந்தையரது பிரிவையளிக்கு மிவ்வரசியலான் என்ன பயன் என்பது கருத்து.

[9] குற்றங்கள் — மனக்கவலை மகிழ்ச்சியின்மை மதம் அராகம் பொறையின்மை செருக்கு எச்செயலிலும் நடுக்கம் முதலிய பல குற்றங்கள் நிரம்பியுள்ளது அரசியல்; எனப் பாரதம் சாந்திபருவங் கூறும்.

[10] இப்பொழுது — இது கலியுகத்தையுணர்த்தும். இந்த யுகத்தில் அறநெறி கால்மாத்திரையில் எஞ்சியுள்ளதென்பது கருத்து.

[11] பொறுப்பற்ற இளவரசே வேண்டற்பாலதின்றெனில் பேரரசைப் பற்றிக் கூறவேண்டியதில்லை யென்பது அருத்தாபத்தியாற் பெறப்பட்டதாம்.

[12] புயங்களாற் பகை நீங்கிய இங்ஙனங் கூறல், வெற்றிச் செலவான் இனித் தனக்கு வருத்தமில்லை யென்னும் வணக்க ஒழுக்கத்தைப் புலப்படுத்துவதாம்.

[13] இருமுதுகுரவர் — ஈண்டு தந்தையாகிய உருத்திரதேவரையும், குலதெய்வமாகிய சுயம்பூதேவரையும் உணர்த்தும்.

[14] கைத்துடிப்புடன் — ஈண்டு வலக்கைத்துடிப்பை. ஆடவரது வலக்கை துடித்தல் ஆடவர்க்கு மங்கல நிமித்தம் என்ப.

[15] இச்சுலோகத்தால், அரசியற்றிருமகளாகுந்தலைவி, வாசகசச்சிகை யென்னும் வகுப்பினள் என்பது புலனாம்.

[16] இதனால் மந்திரிமார் ஆலோசனை கூறுமவ்வன்வினமையாராய் வீரச் செயற்கு முற்படலான் வெற்றிச்செலவு இனிது நிறைவுறுமென்பதும், அதனால் தானைத் தலைவரைச் சிறிதுமதியாமற் கூறினர் என்பதும் புலனாம்.

[17] சருவதோமுகாடம்பரம் — ஈண்டு நீரின் ஆரவாரத்தையும் எவ்வாற்றானுஞ் சீரிய வீரவாதத்தையும் உணர்த்தும்.

[18] வாகினிகன் — ஈண்டு படைகளையும் யாறுகளையும் உணர்த்தும்.

[19] வீரக்கடல் — பிரதாபருத்திரனை வீரக்கடலாக உருவகஞ் செய்தமையான் அவ்வுருவகத்திற்கேற்ப சருவதோமுகம், வாகினி யென்னுஞ் சொற்களான் நீர், யாறு என்னும் பொருள்கள் குறிப்பிற் புலப்படுத்தவாறு.

[20]  நிகழ்த்துக — இத்தொடரால், போரின்றி யதன் செலவுத் தொடக்கத்திலேயே படைத்தலைவன் பகைவரையும் அவரது நாடுகளையும் தன் வயப்படுத்துமாற்றலையுடையவர் என்பது போதரும்.

[21] கரங்கள் — ஈண்டு கைகளையும் கதிர்களையும் உணர்த்தும்.

[22] தேசு — ஈண்டு வலியையும் ஒளியையும் உணர்த்தும்; இதனால் கதிரவன் உதித்து கதிரொளியால் எல்லாத் திசைகளையும் ஒளிமயமாக்கித் தன்வயப்படுத்தல் போல வீரருத்திரனும் தனது புயவலியால் துணையின்றித் திசையெல்லாவற்றையும் தன்வயமாக்குவன் என்பதாம்.

[23] ஐந்தாரைகள் — ஐந்து வகைக் குதிரை நடைகள். அவை ஆற்கந்திதம், தௌரிதகம், இரேசிதகம், வற்கிதம், புலுதம், என்பனவாம்.

[24] இளவேந்தன் — ஈண்டு இளவரசரையும் வாலசந்திரனையும் உணர்த்தும்.

[25] பலவேந்தல் — ஈண்டு பல அரசரையும் மலைகளையும் உணர்த்தும்.

[26] உட்கொள்ளுதல், தன்வயப்படுத்தலையும் தன்னகப்படுத்தலையும் உணர்த்தும்.

[27] இத்தொடரால், வெற்றிச்செலவில் விருப்புற்று உடன் வந்த அமைச்சரிற் சிலரைத் தந்தையர்பாற் போக்கியமை அவர்பாலுள்ள பத்திமிகையானும் தனது ஒப்பற்ற வீரத்தானுமாம். சிலரை உடன் வர ஒருப்படமை அரசியல்முறை பற்றியான் என்க.

பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 3

(குறித்த வேடத்துடன் அரசனும் கவரிவீசுமவளும் வருகின்றனர்)

 

அரசன் — (மகிழ்ச்சியுடனும் வியப்புடனும்) ஓ!ஓ! சிவபிரானுடைய அருட்பெருக்கம்,

 

குலதெய்வமாகிய சுயம்பூதேவர் தாமே வலிய வந்து செயக்கடவதை யுபதேசித்தாராகலின், இக்காகதிக்குலம், மதிகதிர் இவர்களது பெருமைவாய்ந்த குலத்தையும் வெல்லுகின்றது; நிலமகளும், இத்தகைய எங்கள்பாற் பொருந்தி கற்பணியையெய்துகின்றாள். பிரமன் தனது வாகுவிற்[1] பிறந்த வகுப்பினரை, இதுபொழுது எங்களாற் பேறெய்தினராகக் கருதுகின்றான். (உஉ)

 

புரோகிதர் — பேரரசரே! அத்தகைய மாட்சிமிக்க சுயம்பூ தேவரது இதோபதேசத்தைப் பெறற்குத் தம் போன்றாரே மிக்கத் தகுதி வாய்ந்தவர்; அன்றேல், இஃதென்ன புதுமையா? மக்கட் கிதோபதேசம் செய்யும் உரிமை, தந்தையின் பாலதே; இவ்வுண்மை யுணர்வார் இங்ஙனமன்றே கூறுகின்றனர்.

 

உமையெனக் குறிக்கப்பட்ட அவளே சோமை[2] யென்னும் புகழ்ப் பெயரையெய்தினள். உண்மையாகவே உம்முடைய அன்னையார் சிவையும், தந்தையர் பிரமத கணங்கட்குத் தலைவனாகிய கணபதித்[3] தேவனும் ஆவர் என்று.                           (உங)

 

மந்திரிமார் — இஃதிங்ஙனமே; அன்றேல் இறைவனருளையின்றிப் பெண்பாலார்க்கு, எவ்வாற்றானும் தடைப்படாத அரசுரிமை — யாங்ஙனம் அமையும்? இங்ஙனம் மாநுட சம்புவாகிய கணபதி மகாராசன் தனது உள்ளத்தின் அநுபவத்திற்கேற்ப[4] மகளை மகன் என்றே வழங்கி வந்தான். அதனைப் பின்பற்றியே உருத்திரன்[5] எனப் பெயரிட்டனன்.

 

புரோகிதர் — (பேராவலுடன்) தேவன் கனவில் உபதேசஞ் செய்ததியாது?

 

அரசன் — (அன்புடன்) இப்பொழுது கூறுகின்றேன்.

 

ஒரு நாள் மங்கலம் பொருந்திய கங்குற்பொழுதில் முறுவலித்த முகமும், மங்கையோடியைந்த மெய்யும், நுதற்கண்ணும், முடியில் மதியும் நதியும் பொருந்தி, என்முன் தோன்றிய ஏதோ ஒன்றைப் பார்த்து, ‘இவர் சுயம்பூ தேவனே’ என்று விரைந்தெழுந்தேன்.                                                      (உச)

பின்னர்க் கனவிலேயே;

 

அவரை மெய்யாரப்படிந்து மங்கலவுரைகளால் நாவாரப்புகழ்ந்து காகதிக்குல தெய்வமாகிய அவர்க்கு அரதனவாதனத்தை யளித்தேன்.                                (உரு)

 

கவரிவீசுமவள் — ஓ! அரசரது மனத்தோற்றம்; கனவிலுங் குலதெய்வ வழிபாடே நிகழ்கின்றது.

 

புரோகிதர் — கூறுவதென்னை? காகதிக் குலவேந்தர், சுயம்பூதேவர்பால் மிகுபத்தியுடையரன்றே! பின்னருங் கூறுக.

 

அரசன் — பாயலின் றலைப்புறத்தமைத்த பூரண[6] கும்பத்தினீரால் என்னுடைய குலதெய்வத்திற்குப் பாத்திய நீரையளித்து விளக்கமிக்க மணிகளான்[7] அத்தெய்வத்தையருச்சித்தேன்.                                  (உசா)

 

பின்னரும்,

கைகளைக் கூப்பித் தலைவணங்கிய என்னைச் சுயம்பூதேவர், அபயமளிக்கவல்ல கரத்தால் வருடி உமாதேவியாராற் பாராட்டப்பட்ட ஓர்வார்த்தையைப் புன்முறுவல் விளங்கக் கூறினார்.                                              (உஎ)

 

என்னையெனில்,

இடையுலகின் அளவின்மிக்க பாக்கியங்களானும், நிலமகளின் குற்றமற்ற தவ விசேடங்களானும், மக்களுடைய நல்வினைப் பயன்களானும் நல்லொழுக்கங்களானும், இப்பிரதாபருத்திரன் இங்கண்[8] அவதரித்தான்.     (உஅ)

குழந்தாய்! காகதிக்குலவிளக்கே!

எனது ஆணையான் முன்னரே மகனாகக் கொண்ட மகண்மகன், இப்புவிப்பொறையைத் தாங்கற்குரியனாகலின் இதனை இவன்பால் அளித்தி யென்று.                                                      (உகூ)

 

புரோகிதர் (மகிழ்ச்சியுடன்[9]) அரசரே! காகதீய குலத்திற்கு நலம்புரியவல்ல சிவபெருமான் இங்ஙனங் காட்சியளித்துபதேசித்தருளினர்; தங்களது விருப்பமும் இஃதே; இப்பெருவிழா, மக்களையும் இன்புறுத்துவதொன்றாம்; முன்னரே இளவரசெய்திய பிரதாபருத்திரனது புயமுடியில், கடல்புடைசூழ்ந்த காசினியும் அமைக. மேலும்; மேலும்;

பயனைத் துணிந்து கூறலான் இது யுத்தியாம்.

 

அரசன் — நிலமகளும் அச்சொற்களைக் கேட்டு மட்டங்கா மகிழ்ச்சியின் மலர்ந்த விழிகளையுடையளாய் சிவபிரானாரது பக்கலிற் காணப்பட்டாள்.

கவரிவீசு — வேந்தனது உள்ளத்தைப் பின்பற்றும் நிலமகட்கு மகிழ்ச்சியுண்டாதல், சாலப் பொருத்தமே.

சுயம்பூதேவருடைய சொற்களைக் கேட்டு நிலமகள் இன்பமெய்தலான் இது பிராத்தியாம்.

அரசன் — காகதிக்குலநலங்களுக்குத் தேவரே, அடியீடெனத் துணிந்து அவரது கட்டளையை யான் சிரமேற்கொண்டேன்; தேவரும் அருண்மிக்கொழுகக் காட்சியளித்து மறைவெய்தினர்.

நிலத்தையடைதற்குக் காரண

மாகிய பீசத்தைச் சுயம்பூதேவன்

உபதேசிக்க, அவ்வுபதேசத்தைப்

பெறலான் இது சமாதானம்.

 

மந்திரிமார் — கனவுச் செய்தி, உலகிற்கெல்லாம் இன்பத்தை விளைவிப்பதாம்; ஆனால், காகதிக்குல முதுவேந்தர்க்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றும் அரசர், நகர்க்கண் வசித்தற்கினி விரும்பார் என்பதும், அங்ஙனமே, காகதிகுலவீரனாகிய வீரருத்திரனது, உலகத்தைப் புரக்கவல்ல தாழனையவாகுவில் அரசியற்சும்மை யமைகின்ற தென்பதும் ஆகிய இச்செய்திகளால் நமது உள்ளம் துன்ப இன்பங்களின் எல்லையைத் தொடுகின்றது.

 

இன்பத்துன்பங்கட்கு ஏது

வாகுமிது விதானம்

 

கவரிவீசு — ஆச்சரியம்! ஆச்சரியம்!

மலைமகள் கொழுநன் குல அமைச்சர் மூலமாகவே இங்ஙனம் உபதேசித்தருளினார்.

 

இது பீசத்தைப் பற்றிய வியப்பாகிய பரிபாவனை.

 

அரசன் — (மிக்க மகிழ்ச்சியுடன்) (மந்திரிகளைக் குறித்து)

காகதிக்குல நலமாகுங் கற்பகக் கொடிக்கு முனையாகிய சுயம்பூதேவரது இவ்வருட்பேற்றை, எல்லவருங் கேட்டின்புறுமாறு செய்க.

 

பீசத்தை வெளிப்படுத்தலான்

இது உற்பேதம்.

 

மந்திரிமார் — காகதீயப் பேரரசரது கட்டளைப்படியே.

 

அரசர் — இப்பொழுது செயக்கடவ செயல் யாது?

 

புரோகிதர் — வேந்தரீர்! பிரதாபருத்திரற்குப் பட்டாபிடேகஞ் செய்தற்குரிய பொருள்களைச் சித்தஞ் செய்தலையன்றிப் பிறிதொரு செயல் ஏது?

 

பீசத்திற்கேற்ப ஊக்கி

விடுதலாகும் இது பேதம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமரன், திசைவெற்றிச் செலவாற்றன்வயத்தாராகிய அரசர் குழாத்தினாற் கொணரப்படும் புண்ணி நீராற் சுயம்பூதேவரது அருட்பேறாக வெளிப்படுக்கப்பட்ட பட்டாபிடேகத்தை அநுபவித்தல் வேண்டும்.

 

புரோகிதர் — மந்திரிமார் தக்கதே கூறினர்.

 

அரசன் — அப்படியாயின், வெற்றிச்செலவிற்குச் சாதனமாகிய அறுவகைப் படைகளையும் சித்தஞ் செய்க; யானுஞ் சித்தமாகின்றேன்:

இது, தொடக்கம்; இது பீசத்திற்கேற்ற

தொடக்கமாகிய கரணம்.

தொடக்கம் பீசம் இவற்றின் இயைபினை

யுடையதும், உறுப்புக்களோடு கூடிய

தும் ஆகிய முகசந்தியாம்.

 

(வேடசாலையில்)

 

வைதாளிகர் — நண்பகலைச் சார்ந்த சந்தி, அரசரது நலத்திற்கே அமைக; இப்பொழுது.

 

உமது தேசுக்குழு[10], சக்கிரவாடமலை முழைக்கணுறு மிருட்குழாத்தினிறுமாப்பைப் போக்கி, எத்துணைப்புவனங்களைக் கடந்து விளையாடுகின்றதென்று, காண்டற்கு விருப்புடையன் போல இப்பகலவன், தன்செயல்[11] வருத்த  நீங்கி முழு ஒளியுடன் வானத்துச்சியையேறுகின்றான்.                               (ங0)

இன்னும், மலயவரைக்கட்சந்தணத்தருக்களிற் படர்ந்த கொடிவீடுகளில்[12] விளையாடுகின்ற நாககன்னியர் சரற்கால மதிக்கதிர்க் கற்றையின் ஒளியையுடையவாகிய உம்முடைய குணங்களைப் பாடுகின்றனர். பாடுங்கால் கூறப்படும் அவ்வவ்வெழுத்துக்கடோறும் வழிந்தொழுகும் புத்தமுதைப் பருகி, காற்றைப் பருகுமியல்பாற் றமக்கு விளைந்த அவகீர்த்தியை நீக்குகின்றனர். (ஙக)

இப்பொழுதோ;

கதிரவனுடைய கிரணங்கள்[13] யசுர்வேத நறுமணம் மிக்கவாக, அந்நறுமணத்தை நுகர்ந்த எல்லாச் சீலர்களும், நண்பகலிற் செயக்கடவ செயற்புரிய முயலுகின்றனர். (ஙஉ)

அரசன் (செவியுற்று எல்லவரையுங்குறித்து) நீங்கள், விரும்பியாங்கு செய்தற்கு முயலுக; யானும் அரண்மனையுட் செல்லுகின்றேன் (என்று முறையே எழுந்து சுற்றி வந்து எல்லவரும் சென்றனர்)

மங்கலக் கனவு என்னும் முதலங்கம் முற்றிற்று.

 

[1] வாகுவிற் பிறந்த வகுப்பினரை – இது சத்திரியரை

[2] சோமை — சா+உமா — என்னும் வடமொழிச் சொற்கள் குணசந்தியாற் சோமையென்றாயின. சோமையென்னுமிச்சொல் அவள் உமையென்னும் பொருள் பற்றி உருத்திர தேவியின் அன்னையர்க்குப் பெயராயிற்றென்பதாம்.

[3] கணபதி — தந்தையார் பெயர்; இது கணங்களுக்குப் பதியென்னும் பொருள்பற்றி சிவபிரான் எனப் பொருள்படும்; எனவே உருத்திரதேவருக்குச் சிவையும் சிவனும் தாய்தந்தையரென்பது பெற்றாம்.

[4] உள்ளத்தின் அநுபவம் — இது தன் மகள் பின்னர் மாட்சிமிக்க அரசுரிமைக்குரியவளாவள் என்னும் உள்ளத்தே நிகழும் தோற்றம்.

[5] உருத்திரன் — மேற்கூறிய தோற்றத்திற்கேற்ப ஆண்பால் விகுதியேற்றி உருத்திரன் என வழங்கி வந்தான். பகைவரை அழுங்கச் செய்யும் ஆற்றலுடையவன் என்பது இப்பெயரின் பொருள்.

[6] படுக்கையின் றலைப்புறத்தில் பூரணகும்பம் வைத்து கருடமந்திரங்களான் இரட்சை செய்து கொண்டு இரவிற் படுத்துறங்கவேண்டுமென்பது மிருதிரத்தினாவளியின் கருத்து.

[7] செம்பொன்மலர், வெண்பொன்மலர் மணிமலர் முதலியவற்றாற் சிவபிரானை யருச்சித்தோர், பெரும்பேரரசராவர்; என்று புட்பசாரசுதாநிதி கூறும்.

[8] இதனால், பிரதாபருத்திரன் அரசனாதற்குரியன் என்பதும், இவன் மக்களையின்புறப் புரக்குங்கால் குடிவளம் கூழ்வளம் முதலியன செழித்தோங்குமென்பதும் பெற்றாம்.

[9] மகிழ்ச்சி, தென்புலத்தார், தெய்வம், அந்தணர், பசுக்கள், துறவிகள் என்னும் இவர் கனவிற்றோன்றிக் கூறுவன யாவும், அவர் கூறியாங்கே பயனளிக்கும் என்னும் பிருகற்பதி கருத்தையுணர்ந்த புரோகிதர் மகிழ்ச்சியெய்தினர்; என்பதாம்.

[10] தேசு — ஈண்டு வீரத்தையும் ஒளியையும் உணர்த்தும்.

[11] இருளை நீக்கல் பகலவன் செயல், அச்செயலை இவ்வரசனது வீரமாகும் வெய்யவன், புரிகின்றதால் பகலவற்கு அச்செயல் வருத்தம் நீங்கிற்றென்பதாம்.

[12] ஆற்றுமணல், கடற்கரை, காடு, உய்யானம், மலை கொடிவீடு, தளிர்ப்படுக்கை யென்னுமிவை, பகல் விளையாட்டிற்குரிய விடங்களாம்; கொடிவீட்டிலமர்ந்து பாடுகின்றனர் என்று கூறுமாற்றால் நண்பகற் பொழுதென்பது போதரும்.

[13] கதிரவன், காலைப்பொழுதில், இருக்குவேதவடிவினனாகவும், நண்பகலில் யசுர்வேத வடிவினனாகவும், மாலைப்பொழுதிற் சாமவேதவடிவினனாகவும் அமைகின்றான் என்பது மறைமுடிவின் கருத்து.

பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 2

இங்கண் உறுப்புக்களுடன் கூடிய நாடகம் எடுத்துக்காட்டப்படுகின்றது.[1]

 

இருமருங்கிலும் மேரு இமயம் என்னும் பருப்பதங்களும் திருமால் இந்திரன் முதலிய தேவர்களும் முன்மருங்கிற் கமலத்தோனும்,[2] பின்மருங்கில் மேனையாதிய[3] கற்பிற் சிறந்த மாதருஞ் சூழ்தர மங்கலம்[4] பொருந்திய மணவறையை யெய்தி ஒருவரையொருவர் அண்மியமர்ந்த[5] சிவை சிவன் இவரது மணவினைக்காலத்து நிகழுங் கடைக்கணித்தல்[6] உங்களைக் காப்பதாக.                                                          (க)

இந்நாந்திச் செய்யுள் இருபஃதிரு சொற்களையுடையது; இதில் மணவினைக்கு முற்பட்டிருக்கும் இறைவன் இறைவி யிவரது வன்னனையால் அரசர் யாவருஞ் சூழ் தரவிருக்கும் பிரதாபருத்திரன், காகதிவேந்தரது அரசியற்றிருவை யெய்தலாகிய நாடகத்தின் கருப்பொருள் பொருளாற்றலாற் சிறிது தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்புரக்கவல்லாளும், திருமாலினாகத்தொளிருமலங்கலைத் தனதில்லத் தோரணமாகக் கொண்டவளுமாகிய செங்கமலச்செல்வி, சித்தியை யளிக்க.                          (உ)

இந்நாந்திச் செய்யுளும், பிரதாபருத்திரற்கும் அரசியற்றிருமகட்கும் பொருந்திய மங்கலவினையாகும் பட்டாபிடேகத்தைக் குறிப்பாணுர்த்துவதாம்.

நாந்தியின் முடிவில்[7]

சூத்திரதாரன்[8]—(எல்லாப்புறமும் பார்த்து மகிழ்ச்சியுடன்[9]) ஓ! அரங்கமங்கல வினையெங்கும் செய்யப்பட்டதே; அங்ஙனமே.

முரசங்கள்[10] ஒலியினிமையை யெங்கும் வெளிப்படுத்துகின்றன. இந்த வீணகளும்[11] இசைநூன் மருமங்களைப் புலப்படுத்துகின்றன.                                 (ங)

இஃதரங்கவழிபாடாம்[12].

(மகிழ்ச்சியுடன்)

ஏந்தல்புதல்வியும்[13] மாதேவரும்[14] எவற்குத் தாய் தந்தையரெனப் பிரசித்தமோ; அத்தேவன்[15] நரகுஞ்சரவடிவினழகுடையனாய்[16] உங்கட்கு மங்கலத்தை நல்குக.              (ச)

நலமிகப்புரியுங் காலவயத்தாற் றிசைவெளிகள், மூங்கிற்குழு நீங்கியவாயின. ஏனெனில்;

தெளிவுற்ற சரற்கால நிகழ்ச்சி வேந்தனாலும்[17] அன்னப்பறவைகளானும் அழகெய்தி மித்திரமண்டலம்[18] விளங்க வானாற்றை[19]யணிப்படுத்துகின்றது.                   (ரு)

காப்பியக் கருப்பொருளையுணர்த்துமிரண்டு செய்யுட்களாற் பருவகாலத்தைப் புகழுமுகமாக வடமொழி பேசுமியல்புடைத் தலைப்பாத்திரங்களாற் கூறற்குரிய பாரதீவிருத்தி யிங்குக் கூறப்பட்டது.

(அவைக்கு எதிர்முகமாக அருகிற் சென்று வணக்கமுடன் கைகளைக்கூப்பி)

ஓ! ஓ! இடையுலகிற்குப் பழுத்த ஆகூழும், ஏகசிலைப்பதியின் நல்வினைக்குழுவும், காகதிவேந்தர்க்குக் குலதெய்வமுமாகிய சுயம்பு தேவரது இடையறாப் பெருவிழாக்குறித்து

வந்தெய்திய  பேரறிஞீர்! ‘கலாருணவம்’[20] என்னும் நாட்டியாசிரியரின் புதல்வனும் அவிநயங்கட்குக் கண்ணடியுமாகிய எனக்கு, ‘யாம் விரும்பிய காட்சிநூலை யவிநயஞ் செய்க’ என்று கட்டளையளித்து நல்லருள் புரிக. (ஆகாயத்திற் செவிகொடுத்து)

என்ன கூறுகின்றீர்கள்? சுயம்பு தேவரது விருப்பிற்கு நாளுமுரியதாய் உலகிற்கு நலந்தரும் பொருள் எந்த நாடகத்தில் உள்ளதோ; அத்தகைய நாடகம், எங்களுடைய செவிகள் நாட்டங்கள் என்னுமிவற்றின் வழிகளால் நெறி நான்கு[21] கூடுமிடமாய்த்தோற்றுக. (கா)

என்றா கூறுகின்றீர்கள்

(மகிழ்ச்சியுடன்) பிரதாபருத்திரனுடைய சரிதத்தைப் பற்றிய காட்சி நூல் அவையினரது மனத்தில் மிளிர்தருகின்றதாகலின், ஓ அநுகூலதெய்வம் யாவற்றையும் நன்கிணைத்தது; ஏனெனில்:-

அவைக்களம், சுயம்பூதேவனைச் சார்ந்தது; பிரதாபருத்திரனுடைய குணங்கள் பெருமதிப்புடையன; யானும் நாட்டிய வேதத்தின் கரையினைக் கண்டவன்; அக்கவியினுடைய பனுவல்களும் அமுதத்தைப் பெருக்குவனவாம்.[22]

இது புகழ்ந்து கூறலாற் றன்வயப்படுத்தல்[23] வடிவாகும் பாரதீவிருத்தியினுறுப்பாகிய பிரரோசனையாம்.

(ஆராய்ச்சியுடன்) இசைச்சாரிகையாம்[24] என் மனைவியேன் காலந்தாழ்க்கின்றாள்?

நபீ- (புகுந்து) (முன்னே பார்த்து) ஆசையுடன்

அவைக்களத்து நடம்பயிலும் கலைமகளின் சிலம்பொலியோ இங்குக்கேட்கப்படுகின்றது? ஆம் அறிந்தேன்; நாடகத்தொடக்கத்தில் முழங்கப்படும் முரசொலியும் இசையொலியும் கேழ்க்கப்படுகின்றன.                                                        (அ)

இது ஒப்புமையாற் பலபொருளைச் சேர்த்தலாகிய திரிகதம் என்னும் பிரத்தாவனையினுறுப்பாம்.[25]

(அணிமைக்கணெய்தி) ஐயரே! இதோ இருக்கின்றேன். செயக்கடவபணியென்னென்று கட்டளை செய்யுங்கள்.

சூத்தி — காதலீ!

இவ்வரங்க இற்கணிருந்து துருவை[26]யென்னும் பாடலைக் குயிற்குரலையொப்ப இனிமையாகப் பாடுவேன் என்றும், காண்டற்கினிய இலிலதம்[27] முதலிய உறுப்பவிநயங்களான் மகளிராடலை[28] யினிது புரிவேன் என்றும், அரங்கமங்கலச் செயலை யழகுறச் செய்வேன் என்றும் என்பால் முன்னமேயுரைத்தனை; நுண்ணறிவுடையாய்! இதுபொழுது உன்னால் அஃ தங்ஙனமே செய்யப்பட்டதன்றே.[29]  (கூ)

இஃது இன்சொற்களையொத்தவன் சொற்களாற் பழித்துரைதலாகுஞ் சலம் என்பதாம்.

நபீ — (அச்சத்துடன்) கூத்துப்பொருள்களைக் குறைவறச் சேகரித்தற் பொருட்டுக் காலந்தாழ்த்துள்ளேன்; இப்பொழுது அப்பொருள்கள் சித்தஞ் செய்யப்பட்டன; எந்தக் காட்சி நூலை நடித்தற்குத் தொடங்கவேண்டும்.

சூத் — ஏடீ! இதனையே நடித்தல் வேண்டும்.

(என்று கடிதத்தைக் கொடுக்கின்றான்)

நபீ — வாங்கிப்படிக்கின்றாள்.

வீரம் அறன் என்னுமிச்சொற்களுடைய பரியாயச்[30] சொற்களுக்கு விளிவேற்றுமை யெவ்வாறாம்? ஆசிமொழியான் வரக்கடவ பயன் யாது[31]? வித்யாநாதனியற்றிய[32] நூல் யாது?(க0)

(குறுநகையுடன்) அறிஞர் கூற்று மிக்க மறைபொருளவாகத் தோற்றுகின்றதே; இவற்றிற்கு விடை யெத்தகைத்தென்று ஐயரே ஆராய்ந்து கூறவேண்டும்.

சூத் — ஏடி! இது மிக வெளிப்படை; பிரதாபருத்திரன் திருமணம் என்று தெரிகின்றதே.

மறைபொருளாதலின் இது நாளிகை யென்பதாம்.

நபீ — என்னே! இந்நாடகம் நூற்றலைவனது பெயர்ச்சேர்க்கையால் இனியவாகின்றது; ஐய! அவ்வரசனது பெயரில் பிரதாப என்னுஞ் சொல் முதற்கண் அமைதரற்கு நிமித்தம் யாதென வினாவுகின்றேன்.

சூத் — காதலீ! கேழ்க்க;

புவியிற் கதிரவன் என உதித்த அக்கட்டழகனைக் கண்ணுற்றுக் காகதிவேந்தர் பிரதாபருத்திரன் என அவற்குப் பெயரிட்டனர். (கக)

மற்றும்.

உலகிற்கொரு வீரனாகிய திருவின் கேள்வன், இவனுருக்கொடு காகதிக்குலத்தில் அவதரித்தான் எனக் கருதி வீரருத்திரன் என வழங்குகின்றனர்.                  (கஉ)

நபீ — உலகத்து மக்கள் தம்மிரு செவிகளுஞ் செய்த நல்வினைப் பயனால் இவருடைய இரண்டு பெயர்களையுஞ் செவியுறுகின்றனர். உலகிற்கொரு மங்கலமாகிய காகதிப்புரவலன் சரிதத்தை யாம் அவிநயித்தலான் நெடுங்காலமாகக் கூத்துக்கலையைப் பயின்று வந்தமையும் பயனுடைத்தாயிற்று.

தமது கூத்துப்பயிற்சியைப் புகழ்ந்து

கூறுமுகமாக நிகழுஞ் செயலைப்பற்

றிக்கூறலான் இஃது இரண்டாம்

பேதமாகிய அவலகிதம் ஆம்.

சூத் — ஓ! ஆயுணிறைந்தவனே! உனது அறிவாற்றலான் இக்கூற்று நிகழ்ந்தது; இங்ஙனமே புலவர் பெருமக்களுடைய வினாவிடைச் சொற்பொழிவும் மிளிர்தருகின்றது; எங்ஙனமெனில்:-

உலகோர் செவிகட்குப் பாக்கியம் யாது? அடிதொறும் மங்கலச் செய்தியைக் கேட்டலேயாம்; அம்மங்கலச் செய்தியாவது யாது? வீரக்குறியுறும் வீரருத்திரனது வியப்புறுஞ் சரித்திரமேயாம்.                                                            (கங)

இது வினாவிடை வடிவாகிய உற்காத்தியகம் ஆம்.

நபீ — ஐயர் கூறும் மாற்றத்தான் யாவும் பொருந்துகின்றன.

சூத் — விதர்ப்ப கவியின் கூற்றைப் பற்றிய[33] இயல்பான் நூலழகு சிறந்தன்ன எனது இந்நாட்டிய வளமும் மனைவியாகிய உன்னால் மிகு வனப்பெய்திச் சிறக்கின்றது. (கச)

இஃது ஒருவர்க்கொருவர் புகழ்ந்து கூறலாகும் பிரபஞ்சமாம்.

நபீ — இத்தகைய நற்குணங்களாற் பெருமதிப்பெய்திய பிரதாபருத்திரனது சரித்திரத்தை முயன்றியற்றிய அக்கவிக்குக் கலைமகளின் அருட்பேறு நிறைந்திலங்குகின்றது.

சூத் — காதலீ! உண்மையே! இக்கவி, கலைமகள் இவரது உரையாடல் இஃதன்றே;

எங்ஙனமெனில்:-

அன்னாய்![34] கலைமகளே! மதலாய்! என்னை? உனது அருளை வேண்டுகின்றேன்.

இப்பொழுது நிகழுஞ் செயலென்னை? காகதி வீரருத்திரவேந்தனைப் புகழ்ந்து பாடுதற்கு நா முயலுகின்றது. அறிந்தேன்; சடைமுடிக்கடவுள் மாலைப்பொழுதில் நடமிடுங்கால் அலைவுற்றுப் பெருமிதமெய்தும் முடியணிக்கங்கையை நிகர்த்த சொற்பெருக்கங்கள் நின்பால் நிலவி நின்றாடற் புரிக[35].                                 (கரு)

இஃது, ஒருவர்க்கொருவர் உரையாடல் வடிவாகிய வாக்கேளியாம்.

நபீ — இத்தகைய அரசனது சரிதத்தை அவிநயித்தற்குத் தக்க நாட்டியத்திறல், நம்பால் உண்டோ இன்றோ என்னும் அச்சத்தால் எனது நெஞ்சம் நடுக்கமுறுகின்றது.

சூத் — (சிறிது பொறாமையுடன்)

ஆ! யாது புகன்றனை? என்னுடைய கூத்துக் கலைக்கருவிகள் மாசுபடாவன்றோ? ஆனால், நின்பால் தக்கதாக அமையும் பாடல் எத்தகைத்து?

நபீ — இசைநலச் சுவைக்கடல் பொங்குகின்றது; ஆதலின் ஐயர், கருத்தெனு மரக்கலத்தில்[36] ஏறவேண்டும்.

ஒருவர்க்கொருவர் மிகைபடக் கூறலான் இஃது அதிபலம் ஆம்.

சூத் — யான் மிக்கக் கருத்துடையனே; இதோ தொடங்கப்படுகின்றது துருவை.

நடியாற் பாடக்கடவது துருவையென்னும்

பாடலைப் பாடுவதாக உறுதி கூறல்,

பரபரப்பிற் கூறியதாகலின் இது கண்டம் ஆம்.

 

நபீ — (புன்னகையுடன்) ஐயர், துருவையைப் பாடுகின்றார்களா?

சூத் — ஆ! என்ன அரைக்கூற்றனவையிலேயே ‘ஆகும்[37] நாட்டியவித்தை’, யென்னும் எஞ்சிய சொல்லைப் பரபரப்பால் இவன் அறிந்தான் இல்லை.

 

இது கூறியதை மாறுபடக்கூற

லாகும் அவசியந் திதம் ஆம்.

 

காதலீ! துருவையைப் பாடற்கு உனது மனம் உண்மையாகவே விரும்புகின்றதாகலின், அப்பாடலைத் தொடங்குக.

நபீ (அங்ஙனமே செய்கின்றாள்)

இவ்வரசியற் றிருவும், ஓடையும், புவனவெளியை[38] வெளிறுபடுத்தி குவலய[39] வனப்பை மிகுவித்து விளக்கமிக்கவாய் வேந்தனை[40]யணிப்படுத்துகின்றன.          (கசா)

சூத் — (கேட்டு இன்பச்சுவை மயக்கத்துடன்) செவிப்புலன்கட்கே அமுதமாரி பொழியும் துருவையைத் தளராதிறுகத்தழுவி, எழுத்துக்கடோறும் அமுதத்தைப் பெருகச் செய்து எல்லா உறுப்புக்களிலும் இயைத்துக் கொள்வேன்.   (கஎ)

 

சுவைவயத்தாற் பொருத்தமில் பொ

ருளைக் கூறுவதாகுமிஃது அசத்

பிரலாபம் ஆம்.

நபீ — (பரிகாசத்துடன்) மெல்லியதன்றேயிது; அருளின்றி ஐயர் வலிந்தணைப்பின் அதனையிது தாங்கற்கியலாது.

இது நகைவிளைக்குஞ் சொல்

லாகிய வியாகாரம் ஆம்.

 

சூத் — (நாணத்துடன்)

எந்தப் புலவர்கள், சுவை நுகர்ச்சியால் இன்புற்று மயக்கமுறுகின்றனரோ; அவர்களே உலகில் அழுந்தியறியு மாற்றலுடையாராய் இரசிகரென வழங்கப்படுகின்றனர்.     (கஅ)

குற்றத்தைக் குணமாகக்

கூறலான் இது மிருதவம்.

நபீ — ஐயர், மேற் செயற்பாலனவற்றைக் கூறல் வேண்டும்.

சூத் — இப்பொழுது அவைத் தலைவராகிய சுயம்பூதேவரைப் போற்றி செய்கின்றேன்.

உறுப்பெல்லாவற்றிலும் விளங்குஞ் சருவமங்களையால்[41] வனப்பெய்திய வடிவுடையனும், உலகிற்கெல்லாம் அருள் சுரந்தளிப்பவனுமாகிய உருத்திரனுடைய மகிமை விளக்கமுறுகின்றது.                                                  (ககூ)

(வேடசாலையில்)

ஓ! உண்மை; உண்மை;

இந்த உருத்திரன்[42] எல்லா உறுப்புக்களிலும் விளங்கு மங்கல குணங்களான் வனப்புறு வடிவுடையனேயாவன்; என்று.

சூத் — (மகிழ்ச்சியுடன்) திறலமைந்த இசைபாடுவோர் நமது சொற்றொடரை முன்னிட்டு நிகழ்ச்சிக்கேற்ப அதனையே தொடங்கினரே; ஏனெனில், காகதிவேந்தருடைய குணங்களைப் புகழ்ந்து கூற முயலும் வைதாளிகருடைய[43] சொற்கள் போல கூறப்படுகின்றன.

இது, கதையின் முன்னுரையும்

குணத்தை வன்னித்தலாற்

பிரவருத்தகமும் ஆம்.

(முன்னே பார்த்து) ஓ! இத்துயிலெடை பாடுவோர் இவ்வழியே நோக்கி வருகின்றனர்.

இந்த என்னுஞ் சுட்டுச் சொல்

லாற் கூறியிருத்தலான் இது

பிரயோகாதிசயம் என்னும்

பிரத்தாவனையுறுப்பாம்.

ஆதலின் வருக; யாமும் செயக்கடவ வினைக்குச் சித்தமாவோம்.

(என்று போகின்றனர்)

எல்லா வுறுப்புக்களோடுங்

கூடிய முன்னுரை முற்றிற்று.

 

(காம்பிலியன் கலூதகன் என்னும் வைதாளிகர் வருகின்றனர்[44])

 

முதலாம் அவன் — (மகிழ்ச்சியுடன்)

மூவுலகினுஞ் சிறந்த புண்ணியப்பேற்றையுடைய காகதிக்குலத்தில் எவர் உதித்தனரோ; தேவர்க்குத்[45] தேவனாய் பகவானாய் விளங்குஞ் சுயம்பூதேவன், எல்லா நலங்களையும் எப்பொழுதும் எவர்க்கு அளிக்கின்றனரோ; எவருடைய ஆணை, எல்லா அரசர்களுடைய முடிமணிப்பந்தியுடனாடல் தர தோழியாக[46] அமைகின்றதோ; அத்தகைய வீரருத்திரவேந்தன், அரசர்க்கொரு முடியாய் குணப்பெருமகனாய் விளக்கமுறுகின்றான்.            (உ0)

‘சுயம்பூ தேவன் நலம் கொடுத்த’

லாகும் பீசத்தையமைத்துக்

கூறலான் இஃது உபட்சேபம்

என்னும் உறுப்பாம்.

இரண்டாமவன் — நண்ப! கூறுவதென்னை?

முந்தைநாட்[47] கைலயங்கிரியில் நாரியோர் பாகனாய் விளங்கிய உருத்திரதேவனே, இதுபொழுது காகதிவேந்தரது குலத்தில் எல்லாப்பாகமும் நாரியாய் விளக்கமுறுகின்றான்; அவ்வுருத்திரனது  நேரிலாக் கண்பார்வை[48] மாத்திரையில் பகைப்புரங்கள்[49] சாம்பராயின; என்னுமிது பொருத்தம்[50]; இப்பொழுது நஞ்சு, கட்கத்திற் றாங்கப்படுகின்றதென்னுமிது வியப்பாம்[51].                                                                 (உக)

முதலாமவன் — நண்ப! நன்கு பொருந்தக் கூறினை; அன்றேல் இப்பேரரசருடைய கனவில் குலகுருவை யொத்த சுயம்பூதேவன், நலம்பயக்குமத்தகைய காரிகையை இவர்க்கு யாங்ஙனம் உபதேசித்தருளுவர்.

சுயம்பூதேவருடைய அருள்வடிவாகிய

பீசத்தைப் பரப்புதலால் இது பரிகரம் ஆம்.

இரண்டாமவன் — (ஆராய்ந்து வியப்புடன்)

நண்ப! அரசியல் இரகசியத்தை யெவ்வாறு அறிந்தாய்?

முதலாமவன் — தோழ! இச்செய்தி யார்க்குத் தெரியாதது; மகோர்ச்சவத்தைத் தெரிவிக்கும் உருத்திரதேவியாரால், குலதெய்வம் கனவில் உபதேசித்தருளிய அருள் விசேடங்கள் நகரெங்கணும் வெளியிடப்படுகின்றனவே.

குலதெய்வத்தின் அருள்வடிவாகிய பீசம்

வெளிப்படுக்கப்பட்டுச் சித்திபெறலால்

இது பரிநியாசம் ஆம்.

இரண்டாமவன் — ஓகோ! தேவன் இடையறாது அருள் புரிகின்றனர்; அதனால் காகதீயவழித்தோன்றற்கு நலங்கள் மேன்மேலும் வந்தெய்துகின்றன.

பீசம் நலமெய்துகின்றதென்

னுங்குணத்தை வெளிப்படுத்

தலால் இது விலோபனம்.

ஆதலின், பூவுலகிற்கு இந்திரனாய் விளங்கும் சலமார்த்திகண்டன் என்னும் இவ்வரசனைப் புகழ்ந்து பாடுதற்கு இப்பெருவிழாவிலேயே நல்ல அமயம் நமக்கு வாய்த்தது; வருக; அரண்மனைக்கேகுவோம்.

முதலாமவன் — அரசன், பெரியோராகிய புரோகிதர்களும், சீரிய மந்திரிமார்களும் சூழ்தர மங்கலக்கனவை யாராய்ந்த வண்ணம் உட்புறத்துச் சபா மண்டபத்தின்கண் வீற்றிருக்கின்றார். யாமும் இங்கிருந்து சென்று புகழ்ந்து பாடும் அமயத்தை எதிர்பார்ப்போம். (என்று சுற்றி வந்து சென்றனர்)

இது சுத்தவிட்கம்பம்

 

[1] எடுத்துக்காட்டப்படுகின்றது — பெயர்க்குறிப்பு இலக்கணம் என்னுமிவற்றைக் கூறுமாத்திரையில் காட்சி நூல்களை உள்ளவாறுணர்தற்கியலாவாகலானும், இவ்வெடுத்துக்காட்டொன்றான் மற்றைய காட்சி நூல் யாவும் எடுத்துக்காட்டியவாறாகுமாகலானுமாம்.

[2] கமலத்தோன் — மணவினையைச் செய்துவைத்தற்கமைந்த புரோகிதன் ஆம்.

[3] மேனை — இவள் பனிவரையின் மனைவி; உமாதேவியாரை வளர்த்த அன்னையும் ஆவள்.

[4] மங்கலம் பொருந்திய — உலகிற்குச் சிறந்த மங்கலத்தை யளித்தலானும், விசித்திரமாயணிப்படுத்திய மேற்கட்டுக்க்களானும் பொன்மணித்தோரணங்களின் அலங்காரத்தானும் மணவரை, சிறப்பெய்தியதாகலின் இவ்வடைமொழி கூறப்பட்டது.

[5] அண்மியமர்தலாவது — மணமக்கள், தம்மிருவருடலும் உராய அமர்தல்.

[6] கடைக்கணித்தல் — மணமக்கள் ஒருவரையொருவர் கடைக் கண்ணாற் பார்த்துக் கோடல்; நாணெய்திய உமாதேவியாரைக் கடைக் கணித்த சிவபெருமான் திருத்தியெய்திலனாக, அங்கனமே உமாதேவியாரும் ஆம் என்பது கருத்து.

[7] முதற்சூத்திரதாரன் — நாந்தி கூறிச் சென்ற பின்னர் என்பது கருத்து.

[8] சூத்திரதாரன் — இவன் நடன் எனப் பெயரிய இரண்டாமவன்; அரங்கத்தில் வந்து என்னுமிச்சொல்லை இயைக்க

[9] மகிழ்ச்சியுடன் — இவனது கருத்தைக் குறிப்பான் உணர்ந்து நாடகவியன்முறை யுணர்வோர் வாச்சியவகைகளைச் சித்தஞ் செய்தனர் என்பது மகிழ்ச்சியினிமித்தம்.

[10] இக்குறியுள்ள — முரசங்கள் வீணைகள் என்பன. முறையே அவற்றையடிப்போரையும் யாழ் பாணரையும் இலக்கணையாலுணர்த்தும்.

[11] இக்குறியுள்ள — முரசங்கள் வீணைகள் என்பன. முறையே அவற்றையடிப்போரையும் யாழ் பாணரையும் இலக்கணையாலுணர்த்தும்.

[12] முன்னர்க்கூறியுள்ள மூவகையரங்க வழிபாடுகளுள் இஃது இரண்டாம் வழிபாடாகும்.

[13] ஏந்தல்புதல்வி — மலைமகளாகிய உமாதேவியாரையும் அரசன்மகளாகிய மும்மடாம்பிகையையும் உணர்த்தும்.

[14] மாதேவர் — சிவபிரானையும், இப்பெயருடைய பிரதாபருத்திரனது தந்தையாரையும் உணர்த்தும்.

[15] தேவன் — அரசனையும் கடவுளையும் உணர்த்தும்.

[16] நரகுஞ்சரவடிவென்பது — வேழமுகக்கடவுளையும் உடல்வன்மைமிக்க பிரதாபருத்திரனையுமுணர்த்தும். இங்கண் உரிய பொருள் வருமாறு:-

உமாதேவியார்க்கும் சிவபிரானார்க்கும் முதற்புதல்வரும், வேழமுகமும் மனிதவுடலும் பொருந்தியவரும் ஆகிய விநாயகக் கடவுள் மங்கலத்தையருளிடல் வேண்டுமென்பதாம்.

“சிவபிரான் மதவேழவடிவினராய் வனத்திடைச்

சுற்றிவருங்கால் அவரைக் கண்ட உமாதேவியார்,

தானும்பிடிவேழவடிவுடையளாய் மனமுவந்துகா

தலனைக் கூடினள்; கூடவே அங்கட்கரிமுகக்கடவுள்

தோன்றினார்” என்னுங் கந்தபுராணம் ஈண்டுக் கருதற்பாலது.

இங்கட் சொல்லாற்றலாற் போதரும் கருப்பொருட்குறிப்பு வருமாறு:- நூற்றலைவனாகிய பிரதாபருத்திரற்கு ஏந்தல் புதல்வி அன்னை; மாதேவர் தந்தையென்றமையான் இவ்விரண்டு சொற்களின் ஆற்றலான் மும்மடாம்பிகை தாயர் என்பதும், தந்தையார் மாதேவரெனும் பெயருடையாரென்பதும் புலனாம்; நரகுஞ்சரவடிவினழகுடையனாய் — குஞ்சாரமென்ற சொல் மேன்மைப்பொருளையுணர்த்த, அதனால் மக்களுட் சிறந்த பேரழகு வாய்ந்த வடிவுடையன் இத்தலைவன் என்பதும் நளன் நகுடன் திலீபன் இவரை யொத்தவன் என்பதும் விளங்கும். தேவன் என்னுஞ் சொல்லும், இவ்வரசனையே உணர்த்தும். அத்தகைய அரசன் தலைவனாக அவன், மக்கள் எல்லோர்க்கும் நன்மையே நாடிச் செய்வன் என்பது கருப்பொருளாம்.

[17] வேந்தன் — ஈண்டு சந்திரனையும் அரசனையுமுணர்த்தும்.

[18] மித்திரமண்டலம் — ஈண்டு சூரியன் மண்டலத்தையும் நட்டோர் குழுவையும் உணர்த்தும்.

[19] வானாறு — ஆகாய மார்க்கத்தையும் நல்லொழுக்கத்தையும் உணர்த்தும் வான் பெருமை யெய்திய. ஆறு — ஒழுக்கம்.

[20] கலாருணவம் — கலைக்கடல் என்னும் பொருள்பற்றி நாட்டியாசிரியர் ஒருவர்க்கு அமைந்த காரணப்பெயர்.

[21] நெறி நான்கு கூடுமிடம் — செவிகளாற் கேட்டதற்குரிய வாசிகாபி நயமாகிய நூல் நயமும் இசைநயமும், கண்களாற் காண்டதற்குரிய பிற மூன்று அபிநயங்களாகிய வேடம் ஆடல் முதலியனவும் நிறைந்ததென்பதாம்; இதனால் இந்நாடகம் செவிப்புலனையும் கட்புலனையும் ஒருங்கே யின்புறுத்துமென்பது பற்றி நெறி நான்கு கூடுமிடம் என்றான் என்க.

[22] இச்சுலோகம்வரை சூத்திரதாரன் மகிழ்ச்சியுடன் கூறிய சொற்கள்; அறியுந்திறலமைந்த அவையும், அந்த அவைக்களத்தை அவிநயத்து இன்புறுத்தற்குரிய கதையும், அக்கதையை நடித்தற்குரிய திறலமைந்த நடனும், அந்நடற்கேற்ற கவியின் இனிய பனுவல்களும் ஆகிய இவற்றை யெல்லாம் ஒருங்கே சேர்த்தமைத்த நல்லூழ்வினைப்பயனே மகிழ்ச்சியில் நிமித்தமாம்.

[23] தன்வயப்படுத்தல் — இது அவையினரை; காப்பியத்தையும், அவையோரையும், தன்னையும் சூத்திரதாரன் புகழ்ந்து கூறல் அவையினரைத் தன்வயப்படுத்தலினிமித்தம்.

[24] இசைச்சாரிகை — இசைக்குச் சாரிகையென விரியும் நாகணவாய்ப்புள்ளனைய இனிய குரலமைந்தவள் என்பதாம்.

[25] பிரத்தாவனையினுறுப்பாம் என்றமையான் இது முன்னரங்கத்தின் உறுப்பன்றென்பது போதரும்.

[26] துருவை — கீத உறுப்புக்களுளொன்று.

[27] இலலிதம் — உறுப்பவிநயங்களுள் ஒன்று;

[28] மகளிராடல் — இதனை யிலாசியம் என்ப.

[29] தேற்றம் — இது கூறிய வண்ணஞ் செய்யாத நடியைப் பழித்துரைத்தவாறு.

[30] ஒரு பொருளைக் குறிக்கும் மறுசொல்; வீரத்தின் பரியாய விளி பிரதாப என்பதும் அறன்றன் பிரியாய விளி உருத்திர, என்பதும் ஆம்.

[31] பயன்யாது — திருமணம்

[32] இயற்றியது — பிரதாபருத்திரன் புகழணியென்னுங் காட்சிநூல்.

[33] விதர்ப்பகவியின் கூற்றைப் பற்றிய — இவ்வடைமொழி, வைதர்ப்பீ இரீதியை யுணர்த்தும். இது விதர்ப்ப கவியால் விரும்பப்பட்டதொன்றாகலின் இப்பெயர்த்தாயிற்று.

[34] அன்னாய்! மதலாய்! என்னுமிவ்விரண்டு விளிகளானும், இக்கவிக்கு நாமகளிடத்துப் பொருந்திய மெய்ப்பத்திமிகையும், அந்நாமகட்கு இக்கவியாற் பொருந்திய அருண்மிகு நோக்கமும் குறிப்பிற் புலப்படுத்தவாறு.

[35] இதனால் இக்கவியினுடைய சொற்பெருக்கங்கள், தடைப்படுத்தற்கரிய கங்கையாற் றொழுக்கென்னத் தெளிவுற்று ஆழமுடையவாய்த் திகழும் என்பது கருத்து.

[36] இசைநலச்சுவையைக் கடலெனக் கூறியமையால், கருத்தை அதனைக் கடக்கும் கருவியாகிய மரக்கலமாகக் கூறினார்; இதனால் தன் இசைநலத்தைக் கருத்தோடு கேட்டாலன்றி அது விளங்குவதரிதெனத் தற்பெருமையை நபீ, புலப்படுத்தவாறு.

[37] தொடங்கப்படுகின்றது துருவையாகும் நாட்டியவித்தையெனக் கூட்டிக் கொள்க.

[38] புவனம் — ஈண்டு உலகங்களையும் தண்ணீரையும் உணர்த்தும்.

[39] குவலயம் — ஈண்டு பூமியையும் கருங்குவளை மலரையும் உணர்த்தும்.

[40] வேந்தன் — ஈண்டு அரசனையும் சந்திரனையும் உணர்த்தும். இதனால் இந்நாடகம் நிறுவிய காலம் சரற்காலமென்பது புலனாம்.

[41] இச்சுலோகத்திற் கூறிய, சருவமங்களை உருத்திரன் என்னுஞ் சொற்களால், வீரருத்திர வேந்தன், எல்லா மங்கலங்களும் நிறைந்தவன் என்னும் பொருள் குறிப்பிற் புலனாகின்றது.

[42] இது, பிரதாபருத்திரனை.

[43] வைதாளிகர் — துயிலெடை பாடுவோர். இவரிலக்கணம் பாவப்பிரகாசத்தில் அந்தந்த யாமங்கட்கேற்ற இராகங்களானும் அவ்வக்காலத்திற்குரிய பாடல்களானும் தாளமின்றித் துரித கதியிற் பாடுவோன்; விதானம் — தாளமின்மை; அங்ஙனம் தாளமின்றிப் பாடுவோன், வைதாளிகன் ஆம்.

[44] நடந்தனவும் நடப்பனவுமாகிய கதைகளைத் தெரிவித்தற் பொருட்டு இடைப்பாத்திரத்தானிகழுஞ் சுத்தவிட்கம்பத்தை அமைக்கின்றார்; இங்கண், சுயம்பூதேவன் கனவில் உபதேசித்தருளியவரை நடந்த கதையாம்.

[45] இச்சொற்றடாற் கூறப்படும் பொருள் பீசம் ஆம்.

[46] இதனால் எல்லா அரசரும் இவ்வேந்தனது ஆணையைச் சிரமேற்கொள்ளுகின்றனர் என்பது கருத்து.

[47] “முன்னொரு காலத்தில், கணபதியென்னும் பெயர் படைத்த அரசனொருவன், காகதிகுலத்திலவதரித்தான்; அவ்வேந்தன், ஆண்மகவின்றிப் பெண்மகவே யெய்தப்பெற்றவன்; அவன் ஒருகாற் றெய்வச்செயலான் மேலுலகெய்த, அவனது மனைவியாகிய உருத்திரதேவியென்பாள் அற நெறி வழா அது பல ஆண்டுகள் செங்கோலோச்சிக் கிழமையெய்தினள்; எய்தவே, அவள் பிரதாபருத்திரன் என்னும் மகன்மகற்கு, இவ்வரசை முடி சூட்டினாள்” என்னுமிச் சரிதத்தைக் கருத்துட் கொண்டு இச்செய்யுள் கூறப்பட்டதாம்.

[48] நேரிலாக் கண்பார்வை — இது நுதற்கண் பார்வையையும், சினத்தாற் கொடிய பார்வையையும் உணர்த்தும்.

[49] பகைப்புரங்கள் — பகைவராகிய முப்புரங்களையும் பகையரசருடைய நகரங்களையும் உணர்த்தும்.

[50] பொருத்தம் — அவதார வேறுபாட்டினால் வடிவம் வேறுபட்டிருப்பினும் அவ்வுருத்திரன்பால் ஆண்மை வேறுபடாமை வியப்பன்று என்பதாம்.

[51] வியப்பு — கைலயங்கிரியிலிருக்கும் உருத்திரற்கு நஞ்சு கண்டத்திலும், காகதிகுல உருத்திரற்கு நஞ்சு கட்கத்திலுமாக அமைகின்றதென்னுமிஃதொன்றே மிக்க வியப்பென்பது கருத்து.

பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 1

பிரதாபருத்திரீயம்

நாடகவியல்

 

கூத்துச் சிறப்புடைய பிரபந்தங்கள் விளக்கப்படுகின்றன.

கூத்தின் இலக்கணங் கூறப்படுகின்றது.

 

விறலவிநயம்[1] உறுப்பவிநயம்[2] என்னும் இவை முதலிய[3] நால்வகை விநயங்களான், தீரோதாத்தன் முதலிய தலைவரது அவத்தைகளை நடித்து அவ்வண்ணமாய் நிற்றல் சுவையினைப்[4] பற்றிய நாட்டியம்[5] என்பதாம்.                                         (க)

பொருளை[6]ப்பற்றியதோ என்னில் நிருத்தியம்[7] என்பதாம். தாளம்[8] இலயம்[9] இவற்றைப்பற்றியது நிருத்தம்[10] என்பதாம்.

இவ்வோத்து முறை, தசரூபகத்தின்கட் கூறப்பட்டதாம். நிருத்தம், நிருத்தியம் என்னுமிவை நாடகம் முதலியவற்றிற்குறுப்பாகலான்[11] அவற்றினிலக்கணம் இவ்வியலின்கட் கூறப்பட்டது. அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“அவ்விரண்டும் இனியது வலியது என்னும் வேறுபாட்டினால் இலாசியம்[12] தாண்டவம் என்னும் இருவகையவாய் நாடகாதிகட்குதவுவனவாம்”.

அத்தகைய நாட்டியத்தாற் பத்துவகைக் காட்சிநூல்கள் நிகழ்கின்றன.

“நாடகம் பிரகரணம் பாணம் பிரகசனம்இடிமம் வியாயோகம் சமவாகாரம் வீதி

அங்கம் ஈகாமிருகம் என்னும் பத்துமாம்” என்று

நாட்டியத்தைப்பற்றியமையால் வேறுபாடில்லையென்னுஞ் சங்கை பொருத்தமன்று; கதை, தலைவன், சுவையென்னுமிவையன்றே அக்காட்சி நூல்களை வேறுபடுத்துகின்றன. (உ)

பிரக்கியாதம் உற்பாத்தியம் மிசிரம் எனக்கதை[13] முத்திறத்து. அங்ஙனமே தசரூபகத்திற் கூறப்பட்டுள்ளது.

“பிரக்கியாதம் உற்பாத்தியம் மிசிரம் என்னும் வேறுபாட்டினால் அக்கதை, மூவகைத்தாகக் கொள்ளற்பாலது” என்று.

பழங்கதையினடியாக வந்தது பிரக்கியாதமும்[14] கவியாற்கற்பிக்கப்பட்டது உற்பாத்தியமும்[15], சேர்வையால் நிகழ்ந்தது மிசிரமும்[16] என்னும் இவை முதலிய கதை வேறுபாட்டினாலும் தலைவரது வேறுபாட்டினாலும் காட்சி நூல்கள் ஒன்றற்கொன்று வேறுபட்டனவாம். அங்ஙனமே:-

நாடகத்தில் கதை பிரக்கியாதம்; தலைவன் தீரோதாத்தன்; உவகைச்சுவை பெருமிதச்சுவை யென்னுமிரண்டனுள் ஒன்று சிறந்தது. பிற சுவைகட்கு உறுப்பாந்தன்மையால் உடனிகழ்ச்சியும் ஆம். பிரகரணத்தில், கதை உற்பாத்தியம்; தலைவன் தீரசாந்தன்; உவகைச்சுவைக்கே சிறப்புடைமை. பாணத்தில், கதை உற்பாத்தியம்; தலைவன் காமவிடன்; உவகை பெருமிதம் என்னுமிவற்றின் றேற்றத்தளவையில் இனிமை. பிரகசனத்தில், கதை உற்பாத்தியம்; பாசண்டன் முதலியோர் தலைவர்கள்; நகைச்சுவை சிறந்தது. டிமத்தில் கதை பிரக்கியாதம்; கந்தருவன் பிசாசம் முதலிய தீரோத்தத்தலைவர் பதினறுவராவர். வெகுளிச்சுவை சிறந்தது. பெருமிதம் உவகை யிவற்றிற்கு உடனிகழ்ச்சியும் ஆம். வியாயோகத்தில், கதை பிரக்கியாதம்; தலைவன் தீரோத்ததன்; பெருமிதச்சுவை சிறந்தது. சமவாகாரத்தில், தேவர் அசுரர் முதலிய பன்னிருவர் தலைவர்; பெருமிதம் சிறந்தது. உற்பாத்தியமாதல் பிரக்கியாதமாதல் கதையாம். வீதியில் கதை உற்பாத்தியம். தலைவன் தீரோத்ததன்; உவகைச்சுவை தோற்றத்தளவையிற் சிறந்தது. அங்கத்தில் கதை பிரக்கியாதம்; தலைவன் கீழ்மகன்; அழுகைச் சுவை சிறந்தது. ஈகாமிருகத்தில் கதை மிசிரம். தீரோத்ததன் தலைவன்; உவகைச்சுவைக்குப் போலியாந்தன்மையும் ஆம்.

இனி அக்காட்சி நூற்களது கருவிப்பொருள்கள் விளக்கப்படுகின்றன. அவற்றுள் சந்திகன் ஐந்து; அங்ஙனமே தசரூபகத்திலும் கூறப்பட்டுள்ளது.

“முகம் பிரதிமுகம் கருப்பம் விமருசம் நிருவகணம்” என்று.

சிறப்புப்பயனுடன்[17] கூடிய கதைப்பகுதிகட்கு, பிறிதொருபயனுடைய இயைபு சந்தியென்பதாம். அவற்றுள் தொடக்கம் பீறம் இவற்றின் இயைபு முகசந்தி; முயற்சி, பிந்து, இவற்றினியைபு பிரதிமுகசந்தி; பிராத்திநசை பதாகை இவற்றினியைபு கருப்பசந்தி; பிராத்தித்துணிபு பிரகரீ யிவற்றினியைபு விமருசசந்தி; பயனெய்தல் காரியம் இவற்றினியைபு நிருவகணசந்தி; அங்ஙனமே தசரூபகத்திலும் கூறப்பட்டுள்ளது.

“பயனெய்தற்கேதுவாகிய பீறம் பிந்து பதாகை பிரகரீ காரியம் என்னுமிவ்வைந்தும் தொடக்கம் முயற்சி பிராத்திநசை பிராத்தித்துணிபு பயனெய்தல் என்னும் அவத்தை ஐந்தோடியைய, முறையே முகம் முதலிய ஐந்து சந்திகள் நிகழ்கின்றன” என்று.

 

இனி, தொடக்கம் முதலியவற்றிற்கு இலக்கணம் கூறப்படுகின்றது.

பயனைப்[18] பெரிதும் பெறற்கு நிகழும் அவா[19] மாத்திரையில் அது தொடக்கம்[20] ஆம்.                        (ங)

பயன்பேறில்[21] வழிமிக விரைந்தாற்றுஞ் செயல், முயற்சியென்பதாம். (ஙஇ)

உபாயம்[22] அபாயசங்கை யென்னுமிவைகளானிகழுஞ் செயனிகழ்ச்சி பிராத்திநசை யென்பதாம். (ச)

கேடில்[23] வழி நிகழுஞ் செயற்றுணிபு பிராத்தித்துணிபு ஆம். எல்லாப்பயனும்[24] இனிது வந்தெய்தல் பயனெய்தல் எனக் கூறப்படும். (ரு)

இனி பீசம் முதலிய ஐந்தும் விளக்கப்படுகின்றன.

சிற்றளவினதாகக் குறிக்கப்பட்டுப் பின்னர்ப் பலவாக விரியுமியல்பினதாய்ப் பயன்கட்கேதுவாகுமதைப் பீசம்[25] என்ப. உள்ளடங்கிய பிற பயன்களால் அழிவு[26] நிகழ்ந்துழி அவ்வழிவு நிகழாமைக்கேதுவைப் பிந்து என்ப.              (கா)

விரித்துரைத்தற்குரிய[27] கதையினுக் குறுப்பாய் நெடுந்தொடர்புடைய கதை, பதாகை யென்பதாம்.

சிறு தொடர்புடையதாய்ச் சிறப்புறும் பயனைத் தாங்கி நிற்பது பிரகரிகையாம்[28]. (எ)

இனி முகசந்தியின் இலக்கணம் கூறப்படுகின்றது.

பலதிறப்பட்ட பயன்கட்கும்[29] சுவைக்கும் ஏதுவாகிய பீசத்தின் உற்பத்தியே முகசந்தியாம்; இம்முகசந்திக்கு பீசம் தொடக்கம் இவற்றின் இயைபாற் பன்னிரு உறுப்புக்கள் நிகழ்கின்றன.                                                  (அ)

பீசம் தொடக்கம் இவற்றிற்கேற்ப முகசந்தியின் உறுப்புக்கள் கொள்ளற்பாலன.

உபட்சேபம் பரிகரம் பரிநியாசம் விலோபநம் யுத்தி பிராத்தி சமாதானம் விதானம் பரிபாவனை உற்பேதம் பேதம் கரணம் எனக் காரணப்பெயரான[30]மைந்த உறுப்புக்கள் நிறுத்தமுறையானே அமைத்தல் வேண்டும்.                           (கூ)

முறையேயிவற்றினிலக்கணம் கூறப்படுகின்றது;

பீசத்தின் வைப்பு உபட்சேபம். பீசத்தை வளர்த்தல் பரிகரம். பீசத்தின் சித்தி பரிநியாசம். பீசத்தின் குணங்களை வன்னித்தல் விலோபனம்.

பீசத்திற்கு அநுகூலமாகப் பொருந்தும் பயனைத் துணிதல் யுத்தி. பீசத்தின் இன்பநுகர்ச்சி பிராத்தி. பீசத்தின் வெளித்தோற்றம் சமாதானம். பீசத்தின் இன்பத்துன்பங்கட்கேது விதானம். பீசத்தைப்பற்றி வியப்பெய்தல் பரிபாவனை. மறைவெய்திய பீசத்தை வெளிப்படுத்தல் உற்பேதம். பீசத்திற்குறியவற்றைத் தூண்டுதல் பேதம். பீசத்திற்குரியதாகிய செயலைத் தொடங்குதல் கரணம். இவை முகசந்தியினுடைய பன்னிரு உறுப்புக்கள்.

இவற்றுள் உபட்சேபம் பரிகரம் பரிநியாசம் யுத்தி உற்பேதம் சமாதானம் என்னும் இவை இன்றியமையாவாம்.

பிரதிமுகசந்தி

காண்டற்குரியதும்[31] காண்டற்கரியதும் ஆகிய பீசத்தின் வெளியீடு பிரதிமுகம் எனப்படும்; இப்பிரதிமுகத்திற்கு பிந்து, முயற்சி யிவற்றினியியைபாற் பதின்மூன்று உறுப்புக்கள் நிகழ்கின்றன.                                       (க0)

பிந்து முயற்சி யிவற்றிற்கேற்ப, பிரதிமுகசந்தியின் உறுப்புக்கள் கொள்ளற்பாலன.

விலாசம் பரிசருப்பம் விதூதம் சமம் நரும நருமத்தியுதி பிரகமனம் விரோதம் பரியுபாசனம் வச்சிரம் புட்பம் உபநியாசம் வருணசங்காரம் என்னும் இவையாம். (கக)

இவற்றின் இலக்கணம் வருமாறு ;-

கூடலைப்பற்றிய விருப்பம் விலாசம். தோன்றிமறைந்த பொருளைப் பின்பற்றல் பரிசருப்பம். விருப்பில் பொருளாற் கலக்கமெய்தல் விதூதம். வெறுப்பின் ஒழிவு சமம். பரிகாசவார்த்தை  நரும. ஆசையின் மலர்ச்சியால் நிகழும் உள்ள நெகிழ்ச்சி, நருமத்தியுதி. அடுத்தடுத்துக் கூறுஞ் சொற்றொடர்களால் ஆசை வித்தினை வெளிப்படுத்தல் பிரகமனம். நலமெய்தலைக் கபடமாகத் தடுத்தல் விரோதம். உறவினரின் இன்பமொழி பரியுபாசனம். பெரியோரது கடுஞ்சொல் வச்சிரம். ஆசையை வெளிப்படுத்துஞ் சீரிய சொல் புட்பம். ஆசைக்கேதுவாகிய வாக்கியங்களையமைத்தல் உபநியாசம். நான்கு வருணத்தவரை வன்னித்தல் வருணசங்காரம்.

இவற்றுள் பரிசருப்பம் பிரகமனம் வச்சிரம் உபநியாசம் புட்பம் என்னும் இவை இன்றியமையாவாம்.

கருப்பசந்தி

தோன்றிமறைந்த பீசத்தை மீண்டும் மீண்டும் தேடுதல் கருப்பசந்தியாம்;[32] பிராத்திநசை பதாகை இவற்றிற்கேற்ப இக்கருப்பசந்திக்கும் உறுப்புக்களைக் கற்பித்தல் வேண்டும்.                                              (கஉ)

பதாகை பிராத்திநசை யிவற்றிற்கேற்பக் கருப்பசந்தியினுடைய உறுப்புக்கள், கொள்ளற்பாலன.

அபூதாகரணம் மார்க்கம் உருவம் உதாகரணம் கிரமம் சங்கிரகம் அநுமானம் தோடகம் அதிபெலம் உத்துவேகம் சம்பிரமம் ஆட்சேபம் என்னுமிப்பன்னிரு உறுப்புக்களும் முறையே நிகழ்வனவாம்.                             (கங)

இவற்றின் இலக்கணங் கூறப்படுகிறது.

அமயத்திற்கேற்ப கபடத்தை மேற்கோடல் அபூதாகரணம். உண்மைப்பொருளை யுரைத்தல் மார்க்கம். ஊகத்தை வெளிப்படுக்கும் வாக்கியம் உருவம். நிகழும் மேன்மையைக் கூறல் உதாகரணம். எண்ணிய பொருளையெய்தல் கிரமம். அமயத்திற்கேற்ப சாமம் தானம் இவற்றைக் கூறல் சங்கிரகம். குறியாலுய்த்துணரல் அநுமானம். சினத்தாற் கொடுஞ்சொற்கூறல் தோடகம். உறவினர் போலமைந்து பிறரை வஞ்சித்தல் அதிபெலம். தீங்கிழைப்பவரால் உண்டாகும் அச்சம் உத்துவேகம். ஐயமும் அச்சமும் சம்பிரமம். விரும்பியபொருளை யெய்தற்குரிய வழியை நாடுதல் ஆட்சேபம்.

இவற்றுள் அபூதாகரணம் மார்க்கம் தோடகம் அதிபலம் ஆட்சேபம் என்னும் இவை யிறியமையாவாம்.

 

விமருசசந்தி

கருப்பசந்தியிற் சிறப்பெய்திய பீசப்பொருளை யாதாமொரு[33] ஏதுவாலாராய்தல் விமருச சந்தியென்று கூறப்படும். இங்கட் பிராத்தித்துணிபு பிரகரீ இவற்றினியைபால் பதின்மூன்று உறுப்புக்கள் நிகழ்கின்றன.    (கச)

பிராத்தித்துணிபு பிரகரீ யிவற்றினியைபிற்கேற்ப விமருச சந்தியின் உறுப்புக்கள் கொள்ளற்பாலன.

விமருச சந்தியில் அபவாதம் சம்பேடம் வித்திரவம் திரவம் சத்தி தியுதி பிரசங்கம் சலனம் வியவசாயம் நிரோதனம் பிரரோசனம் விசலனம் ஆதானம் என்னும் உறுப்புக்கள் பதின்மூன்றாம்.                                      (கரு)

இவற்றின் இலக்கணம் கூறப்படுகின்றது.

குற்றத்தை வெளிப்படுத்தல் அபவாதம். சினமுற்றுரைத்தல் சம்பேடம். கொலை சிறைப்படுத்தன் முதலியன வித்திரவம். பெரியோரை யிகழ்ந்துரைத்தல் திரவம். பகைமையொழிதல் சத்தி. அச்சுறுத்தல் ஒறுத்தல் என்னுமிவை தியுதி. குலமுறை கிளத்தல் பிரசங்கம். அவமதித்தல் சலனம். தன்றிறலைப் புகழ்ந்து கூறல் வியவசாயம். சினமுற்று ஒருவரையொருவர் இகழ்ந்துரைத்தல் நிரோதனம். எதிர்கால நலத்தைச் சித்தித்ததாகக் கூறுதல் பிரரோசனம். தற்பெருமையை வெளியிடல் விசலனம். செயலை மேற்கோடல் ஆதானம்.

 

நிருவகணசந்தி

பீசத்துடன் கூடிய முகசந்தி முதலிய பொருள்கள் அவ்வவற்றிற்குரிய இடங்களிற் கூறப்பட்டனவாய் எந்தச் சந்தியிற் சிறப்புறும்[34] பயனோடியைகின்றனவோ; அது நிருவகணசந்தியாம்; அந்நிருவகணசந்திக்கு பயன்பெறுதல் காரியம் இவற்றின் இயைபிற்கேற்ப பதினான்கு உறுப்புக்கள் நிகழ்கின்றன.                    (ககா)

பயன்பெறுதல் காரியம் இவற்றின் இயைபிற்கேற்ப நிருவகணசந்திக்கு பதினாnன்கு உறுப்புக்கள் விரித்துரைக்கற்பாலன.

சந்தி விபோதம் கிரதனம் நிருணயம் பரிபாடணம் பிரசாதம் ஆநந்தம் சமயம் கிருதி ஆபாடணம் உபகூகனம் பூருவபாவம் சங்காரம் பிரசித்தி என்னும்மிப்பதினான்கும் உறுப்புக்களாம்.                 (கஎ. கஅ)

இவற்றின் இலக்கணங் கூறப்படுகின்றது.

பீசத்தை மீண்டும் இயத்தல் சந்தி. பயனைத் தேடுதல் விபோதம். பயனை யெடுத்துரைத்தல் கிரதனம். பீசத்திற்கேற்ற செய்தியை வெளியிடல் நிருணயம். ஒருவர்க்கொருவர் உரையாடல் பரிபாடணம். பணிந்துரைத்தல் பிரசாதம். விரும்பிய பொருளைக் கோடல் ஆநந்தம். துன்பமொழிதல் சமயம். கிடைத்த பொருளை நிலைப்படுத்தல் கிருதி. எய்திய பயனைப் பாராட்டிக் கூறல் ஆபாடணம். வியக்கத்தக்க பொருளை யெய்தல் உபகூகனம். நற்பயனைக் கண்ணுறல் பூருவபாவம். செயற்பயனைச் சுருங்கச் சொல்லல் சங்காரம். மங்கலங்கூறல் பிரசத்தி.

இங்ஙனம் அறுபத்து நான்கு உறுப்புக்களை யெய்திய ஐந்து சந்திகள் விரித்து விளக்கப்பட்டன. இவ்வுறுப்புக்களுக்கு[35] அறுவகைப் பயன்கள் நிகழ்கின்றன. அவை:-

கூறவேண்டிய பொருளைக் கூறல், மறைத்தற்குரிய பொருளை மறைத்தல், வெளிப்பொருளை வெளிப்படுத்தல் அவிநயத்தாலின்பநிறைவு, மகிழ்வுறுத்தல் காதைவித்தாரம் என்பனவாம்.

அவற்றுள் கதை, சூச்சியம்[36] அசூச்சியம் என இருதிறத்து. அசூச்சியமும்[37] திருசியம் சிராவியம் என இருதிறத்து. அவற்றுள் சூச்சியத்தைப் புலப்படுத்து முறை ஐவகையாம். அங்ஙனமே தசரூபகத்திற் கூறப்பட்டது.

“விட்கம்பம் சூளிகை அங்காசியம் அங்காவதரணம் பிரவேசகம் என்னுமிவற்றான் சூச்சியப்பொருளைப் புலப்படுத்தல் வேண்டும்” என்று.

இவற்றின் இலக்கணம் கூறப்படுகின்றது.

நடந்தனவும் நடப்பனவும் ஆகிய கதைப்பகுதிகளை இடைப்பாத்திரங்களின்[38] வாயிலாகச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் விட்கம்பம்[39] ஆம். (ககூஇ)

அது சுத்தம்[40] கலவையென இருவகைத்து. அவற்றுட் சுத்தம் தனித்த வடமொழியானமைந்தது; கலவை, வடமொழியும் பாகதமொழியும் விரவி வர அமைந்தது.

சூளிகை

திரைக்குளிருப்போர் பொருளையறிவித்தல் சூளிகை.    (உ0)

வேடசாலையின் உட்புறத்திருக்கும் பாத்திரங்களாற் கதைப்பொருள் தெரிவிக்கப்படுவது சூளிகையென்பதாம்.

அங்காசியம்

அங்கத்தின் முடிவில் அமையும் பாத்திரங்களான் அடுத்த அங்கத்தின் பொருளைத் தெரிவித்தல் அங்காசியம் என்பதாம்.                          (உ0இ)

முன்னைய[41] அங்கத்தின் முடிவிற் பேசுகின்ற பாத்திரங்களான் பின்வரும் அங்கத்தின் பொருள் தெரிவிக்கப்படுமாயின் அது அங்காசியம் ஆம்.

பிரவேசகம்

நடந்தனவும் நடப்பனவுமாகிய கதைப்பகுதிகளைக் கடைப்பாத்திரங்கள்[42] வாயிலாகச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் பிரவேசகம் ஆம்; அதனை முதலங்கத்திற் கூறலாகாது.                                         (உகஇ)

அங்காவதாரம்

பின்னங்கப் பொருள் முன்னங்கப் பொருளோடியைந்து அறிவிக்கப்படாத[43] பாத்திரங்களையுடையதாய் அமையுமது அங்காவதாரம் என்று கூறப்படும். (உஉஇ)

இவற்றால்[44] சூச்சியப்பொருளைத் தெரிவித்து, காட்சிப்பொருளை யங்கத்தாற் றெரிவித்தல் வேண்டும்.                                          (உங)

 

அங்கவிலக்கணங் கூறப்படுகின்றது.

தலைவனுடைய சரிதங்கள், காண்டற்குரியவாய் அவற்றைப் புலப்படுத்துவதும், பிந்துவை[45] வெளிப்படுத்தற்குக் கூறுபாடெய்தியதும், பற்பல பயன்களையுடைய காதையமைப்பு சுவை யிவற்றிற்கு நிலைக்களனுமாகியது அங்கம்[46] என்பதாம்.

ஆமுகம்[47] விளக்கப்படுகின்றது.

நடி மாரிடன் விதூடகன் என்னுமிவர்களுள் ஒருவருடன் சூத்திரதாரன்[48], தன்செயலைப்பற்றியும்[49] நிகழவிருக்குஞ்[50] செயலைப்பற்றியும் இன்பமொழியாலுரையாடல், ஆமுகம் அல்லது பிரத்தாவனை ஆம்; அதற்கு கதோற்காதம் பிரவர்த்தகம் பிரயோகாதிசயம் என மூன்று உறுப்புக்கள் உள்ளன. (உரு.உ)

இவ்வுறுப்புக்களது இலக்கணங் கூறப்படும்.

பாத்திரம், சூத்திரதாரனுடைய சொற்றொடரையாதல் அதன் பொருளையாதல் தன் செய்திக்கு நேராய ஒன்றை மேற்கொண்டு அரங்கமேடையிற் புகுமேல், அந்நிகழ்ச்சி கதோற்காதம் ஆம்; அஃது இருவகைப்படும்.[51]                (உஎ)

நிகழும் பருவகாலத்தின் குணங்களை வன்னித்தலான் அறிவிக்கப்பட்ட பாத்திரம் தானே அரங்கமேடையுட் புகுதல் பிரவர்த்தகம் ஆம். (உஅ)

சூத்திரதாரனால் ‘இவன்’ என்னுஞ் சுட்டுச் சொல்லைக் கூறி அறிவிக்கப்பட்ட பாத்திரம், அரங்கமேடையுட் புகுதல் பிரயோகாதிசயம் ஆம். (உகா)

வீதியின் உறுப்புக்களே ஆமுகத்திற்கும் உறுப்புக்களாகலான்[52] அவற்றைப் பொதுவகையாலீண்டுக் கூறுகின்றார்.                       (உஙஇ)

உற்காத்தியகம் அவலகிதம் பிரபஞ்சம் திரிகதம் சலம் வாக்கேளி அதிபலம் கண்டம் அவசியந்திதம் நாளீகம் அசத்பிரலாபம் வியவகாரம் மிருதவம் என்னுமிப் பதின்மூன்றுமாம்.                                                   (ங0.ஙக)

இவற்றின் இலக்கணம் கூறப்படுகின்றது.

உற்காத்தியகம் — மறைபொருளவாகிய சொற்களால் உரையாடல் வடிவினதும், வினாவிடை வடிவினதும் என இருதிறத்து.

அவலகிதமும் இருவகைப்படும்.

“ஒரு செயலில் முற்படுதலாற் பிறிதொரு

செயல் சித்திப்பதும், ஒரு செயலின்றொ

டர்பாற் பிறிதொரு செயல் நிகழ்வதும் என

அவலகிதம் இருதிறப்பட்டதாம்.

யாதாமொரு செயல் தலைக்கீடாகப் பிறிதொரு செயலை முயன்று புரிதலும், வேறொரு செயனிகழ்ச்சியால் விரும்பிய செயல் சித்தியாதலும் அவலகிதம்.

தோடமுள்ள[53] வார்த்தைகளால் ஒருவரையொருவர் துதிசெய்தல் பிரபஞ்சம். முன்னரங்கத்தினது உறுப்பும் பிரத்தாவனையினது உறுப்பும் எனத் திரிகதம் இருவகைத்து. முன்னரங்கத்தில் நடன் முதலியோரது[54] வார்த்தை; ஈண்டோ[55] எனில் ஒற்றுமையாற்[56] பலபொருட்சேர்க்கை திரிகதம் ஆம். இன்சொற்களை யொத்தவன் சொற்களாற் பழித்துரைத்தல் சலம். அவாய்[57] நிலையாகிய சொற்றொடரை அங்ஙனமே ஒழித்து விடுதலும், வினாவிடை வடிவினதுமாக வாக்கேளி யிருவகைத்து. ஒருவர்க்கொருவர் உரையாடுங்கால் அழுக்காறெய்திக்[58] கூறுஞ் சொற்றொடரின் மிகை, அதிபெலம். நிகழ்ச்சிக்கு முரண்பட ஆராயாது கூறல், கண்டம்[59] சுவை வயத்தாற் கூறியவற்றிற்கு வேற்றுரையுரைத்தல் அவசியந்திதம். பரிகாசத்துடனமைந்து பொருண் மறைவுடைய விடுகதை நாளிகை. இயைபிலாப்[60] பொருணிரம்பிய வார்த்தை அசத்பிரலாபம். பிறிதொரு பயனைக் குறித்து நகைவிளைக்குஞ் சொல்லைக் கூறல் வியாகாரம். குற்றத்தைக்[61] குணமென வெளிப்படுத்தல் மிரு தவம். இவற்றுள் பிரத்தாவனையில் அமைவிற்கேற்ப சிலவற்றை[62] யெடுத்தாளல் வேண்டும்.

பத்துக்காட்சி நூல்களின் இலக்கணங் கூறப்படுகின்றது.

உறுப்புக்களுடன் கூடிய முகம் பிரதிமுகம் கருப்பம் விமருசம் நிருவகணம் என்னுஞ் சந்திகளும், ஆதிகாரிகம் என்னும் கதையும், பெருமிதம் உவகையென்னு மிவற்றுளொருசுவைக்குச் சிறப்பும்,[63] பிரக்கியாதன் என்னுந் தலைவனும் பொருந்தி பிறகாட்சி நூற்களுக்குப் பகுதியாய்[64] அமையும் நூல் முதலில் நாடகம் என்று கூறப்படும்.                                         (ஙஉ.ஙங)

நாந்தியின்[65] இலக்கணம் கூறப்படுகின்றது.

எண் சொற்களானாதல், பன்னிரு சொற்களானாதல், பதினெண் சொற்களானாதல் இருபஃதிரு சொற்களானாதல் அமைந்து, காப்பியத்துள்ளுறை பொருளைச் சொற்களானாதல் பொருளானாதல் சிறிதறிவிப்பது நாந்தீஆம்.          (ஙச)

நாடகம் முதலிய காட்சி நூற்களின் றொடக்கத்தில் அமைக்கப்படுஞ் சுலோகம்[66] நாந்தீயென்று கூறப்படுகின்றது; அந்நாந்தி, வேணீசங்காரத்தில் எண்சொற்களானும், அநருக்கராகவத்தில் பன்னிருசொற்களானும், பாலராமாயணத்தில் இருபஃதிரு சொற்களானும் அமைந்ததாம். நாந்தியிற் கூறப்படுமிச் சொன்னியமத்தைச்[67] சிலர் உடன்பட்டிலர். நாந்திக்குப் பின்னர் அரங்கத்துட்புகும் சூத்திரதாரன், முன்னர் அரங்கவழிபாடியற்றிப்[68] பாரதீவிருத்தியை யெய்திய சுலோகங்களாற் காப்பியப்பொருளை யறிவித்தல் வேண்டும். அங்ஙனமே தசரூபகமும் கூறும்.

“காப்பியப் பொருளை யறிவிக்குமினிய சுலோகங்களால் அரங்கத்தை யணிப்படுத்தி, பருவகாலமொன்றைப்[69] பற்றிய பாரதீ விருத்தியைக் கோடல் வேண்டும்” என்று.

நாடகத்திற்கே இது சிறப்பிலக்கணம்[70] ஆம்.

 

பிரகரணம்

உற்பாத்தியமென்னுங் கதையமைந்தும் தீரசாந்தனைச்[71] சிறப்புறுந் தலைவனாக உடையதும் நாடகத்தை யொப்ப[72] எஞ்சிய உறுப்புக்களையுடையதும் ஆகியது பிரகரணம்[73] ஆம்.                                              (ஙரு)

 

பாணம்

பாரதீவிருத்தி நிரம்பியதும் சொல்வன்மைமிக்க விடனால் வீரம் எழில் இவற்றைப் புகழ்ந்து கூறி பெருமிதம் உவகை யென்னும்மிச்சுவைகளைத் தோற்றுவித்து உற்பாத்தியமாகிய கதையால் விடனுடைய[74] சரிதம் வன்னிக்கப்படுவதும், அங்கமொன்றுடையதும் முகசந்தி நிருவகணசந்தி யிவற்றையுடையதுமாகும் நூல் பாணம்[75] என்னப்படும்.                                      (ஙகா.ஙஎ)

 

பிரகசனம்

நகைச்சுவையைச் சிறப்பாகக் கொண்டு பாணம் போல சந்தியும் சந்தியங்கமும் வன்னிக்கப்படும் நூல் பிரகசனம்[76] என்பதாம்.                     (ஙஅ)

அப்பிரகசனம், சுத்தம் விகிருதம் சங்கீருணம் என மூவகைத்து; அவற்றுள்

சுத்தம்:- பாசண்டர்[77] அந்தணர் முதலியோரும்[78] சேடீ சேடன் இவர்களும் நிறைந்து வேடம் பாடை[79]யிவற்றுடன் நகைவிளைக்குஞ் சொற்கணிரம்பிய நூல் சுத்தமாம்.                                (ஙசு)

விகிருதம்:- காமுகாதியருடன் அவரது சொற்கள் வேடங்கள் இவற்றுடனும், பேடி காவற்காரன் தவசி யிவர்களுடனும் நகைச்சுவையை விளைக்கும் அபிநயங்கணிரம்பிய நூல் விகிருதம் ஆம்.                             (ச0)

சங்கீருணம்:- வீதியின் உறுப்புக்கள் விரவியதும், தூர்த்தர்கள்[80] நிரம்பியதுமாகிய நூல் சங்கீருணம் எனப்படும்.

 

இடிமம்

பிரக்யாதம்[81] என்னுங் கதையும் கைசிகி நீங்கிய ஏனைய விருத்திகளும், தேவர் கந்தருவர் இயக்கர் அரக்கர் நாகர் பூதர் பிரேதம் பேய் முதலிய தீரோத்தர்களாகிய பதினாறு தலைவர்களும் நகை[82] உவகையென்னு மிச்சுவை நீங்கிய வெகுளிச் சிறப்புடைய பிற சுவைகளும், நான்கு அங்கங்களும், விமருச சந்தி நீங்கிய நான்கு சந்திகளும் மாயை[83] இந்திரசாலம்[84] போர் சூரியசந்திரகிரகணம் முதலியனவும்[85] பொருந்தி எஞ்சியயாவும் நாடகம் போலமையு நூல் இடிமம் என்று கூறப்படும். (சஉ. சங. சச)

 

வியாயோகம்

பிரக்கியாதம் என்னும் கதையும் தீரோத்தத் தலைவனும் கருப்பம் விமருசம் என்னுமிச்சந்திகள் நீங்கிய பிறசந்திகளும் இடிமம்[86] போலச் சுவை நிறைவும்[87] பொருந்தி ஒரு நாளில் அவிநயத்திற்குரியதாய் பெரும்போரைப்பற்றிய[88] நூல் வியாயோகம்[89] எனக் கூறப்படும்.   (சரு)

 

சமவகாரம்

நாடகம் போல ஆமுகம் விமருசம் நீங்கிய சந்திகளும் தனிப்பயனையுடைய[90] தேவர், அசுரர், முதலிய பன்னிரு தலைவரும் பெருமிதஞ் சிறக்கப் பிறசுவைகளும் மூன்று அங்கங்களும்[91] பொருந்தி, இயல்பு[92] ஊழ் பகை யென்னுமிவற்றானேருந் தீங்குகளும், நகர்முற்றுகை போர் நெருப்பு என்னும் இவையாதிய நிமித்தமாக நேரும் மூவகை வித்திரவங்களும்[93] அறம் பொருள் இன்பங்களைப் பற்றிய உவகையியல்புக்கள்[94] மூன்றும் அங்கம் மூன்றிலும் முறையே[95] அமைந்து, முதலங்கத்தில் மூன்று யாமங்களில் நிகழும் கதையும், இரண்டாம் அங்கத்தில் ஒரு யாமத்தில் நிகழும் கதையும் மூன்றாம் அங்கத்தில் யாமத்தின் பாதியில் நிகழுங்கதையும் அமைந்து வீதியங்கஞ் சிலவற்றுடன் கூடியது சமவகாரம்[96] என்பதாம். (சகா. சஎ. சஅ. சகூ)

 

வீதி

பாணம்போல உறுப்புக்களின் அமைவும் கைசிகி விருத்தியும் பொருந்தி, உவகைச்சுவை நிறைவுற அதனையறிவித்து[97] உற்காத்தியகம் முதலிய உறுப்புக்களுக்கு வீதிபோல[98] விளங்குமது வீதியெனக் கூறப்படும்.        (ரு0)

 

அங்கம்

பிரக்கியாதம்[99] என்னும் கதையும் அழுகைச்சுவைக்குச் சிறப்பும், மகளிர் விளையாட்டும் சொற்போரும் கீழ்மக்களாகிய தலைவரும் பொருந்தி, சந்தி விருத்தி முதலியன பாணத்திற்குப் போல அமைவது அங்கம் ஆம்; இதற்கு உத்சிருட்டம் என்று பிறிதொரு பெயரும் உண்டு.

 

ஈகாமிருகம்

கலவைக்கதையும் நான்கு அங்கங்களும் மூன்று[100] சந்திகளும் பொருந்தி, தெய்வப்பெண்ணைக் கைப்பற்ற விரும்புங் காமுகராகி மனிதனும் தேவனுமாகிய இருவர், தீரோத்தத்தன்மை வாய்ந்த தலைவனும் எதிர்த்தலைவனுமாக அமைந்து, போலிச்சுவையினையுடைய[101] அவரிருவர்க்கும் ஒருவருக்கொருவர் கொலை[102] நீங்கிய போரும் எங்கட் கூறப்படுகின்றதோ அந்நூல் ஈகாமிருகம்[103] என்று கூறப்படும்.

தசரூபகம் என்னும் நூலைப்பின்பற்றியே இவ்விலக்கணம்[104] கூறப்பட்டுள்ளது.

 

காட்சி நூல்களின் இலக்கணம் முற்றிற்று.

 

[1] விறலவிநயம் — பிறர் எய்திய இன்பத் துன்பங்களை யெண்ணிய வழி தன்மயமாகும் அந்தக்கரணத்தையுடைமையை விறல் என்ப; அதனால் நிகழும் அசைவற  நிற்றன் முதலிய விகாரங்களும் விறலாம்; அதன் அவிநயம்—இமைப்பில் நாட்டமுடைமை முதலியவாம்; இதனைச் சத்துவம் என்ப வடநூலார்

[2] உறுப்பவிநயம் — உறுப்புக்கள், கை கால் முதலியன; அவற்றின் செயலாகிய பதாகை முதலியவாம்; பதாகை கூத்தினிகழும் உறுப்புச் செயலின் ஓர் விகற்பம்.

[3] முதலிய என்றமையான், வாசிகாவிநயம் ஆகாரியகாவிநயம் என்னும் இரண்டுங் கொள்ளற்பாலன. அவற்றுள் வாசிகாவிநயம் — நாவாற் கூறற்குரிய காப்பியம் நாடகம் முதலிய நூல் வாசிகம் என்பதாம். அதன் அவிநயமாவது அக்காப்பிய நாடகங்களின் உள்ளுறை பொருளைக் கூறுங்கால், அவ்வச்சுவைக்கேற்றபெற்றி, மோகனம் முகாரி முதலிய இராகங்களை யாலத்தியெடுத்தலாம்; ஆகாரியகாவிநயம் — நடிக்கப்புகும் பாத்திரங்கட்குரிய வேடம்; அதற்குரிய அணிகலன் இவற்றைப் புனைந்து கோடலாம்.

[4] சுவையினைப்பற்றிய — இது, கூறப்புகும் முறைபற்றி ‘வாக்கியத்தின் திரண்ட பொருளாயமையுஞ் சுவையினைப்பற்றிய’ எனப் பொருள்படுமாகலின் இங்கட் கூறப்படுவது வாக்கியப்பொருளின் அவிநயம் என்று அறியற்பாலது.

[5] நாட்டியம் —‘ சிற்றசைவு’ என்னும் பொருளுடைய ‘நட’ என்னும் வினைப்பகுதியினடியாகப் பிறந்த சொல்லாகலின், சிற்றசைவானிகழும் அவிநயம் நாட்டியம் என்பதாம்; இதனால் இப்பொருட்கேற்ப விறலவிநயமே நாடகத்தின்கட் பெரிதும் நிகழுமெனப் புலப்படுத்தவாறு.

[6] பொருளைப்பற்றியதோ என்னில் — இது, சொற்பொருளாவமையுஞ் சுவைப்பொருளைப்பற்றியதெனப் பொருள்படும்; ஆகலின் இங்கட் சொற்பொருளின் அவிநயம் காண்டற்குரியது. சுவைப்பொருளை வடநூலார் ஆலம்பனவிபாவம் என்ப. இது நாட்டியத்தின் வேறுபட்டதென அறிவித்தற்கே ‘என்னில்’ எனக் கூறினான் என்க.

[7] நிருத்தியம் — இது, ‘உறுப்பசைத்தல்’ என்னும் பொருளையுடைய ‘நிருதி’ என்னும் வினைப்பகுதியினடியாகப் பிறந்த சொல்; இதனால் உறுப்புக்களை மிக்க அசைத்து நடிக்கும் உறுப்பவிநயம் இதன்கட் பெரிதும் அமைதல் வேண்டும் என்பதாம்; சுவைப்பொருளைப்பற்றியும் உறுப்பவிநயம் நிரம்பியும் உள்ள நிருத்தியம் என்னுமிக்கூத்தை ‘மார்க்கம்’ எனக் கூறுப.

[8] தாளம்—இசையை அளவு படுக்குங் கால வேறுபாடாம்; அத்தாளம், சச்சற்புடம் ஆதியாய் ஐவகைத்து.

[9] இலயம் — தாளங்களின் இடைநிகழுங்காலத்தை ‘இலயம்’ என்ப; அது விளம்பம், மத்திமம், துரிதம் என முத்திறத்து.

[10] நிருத்தம் — தாளம் இலயம் என்னுமிரண்டையும் பற்றி  நிகழுமிது தேசிகம் என்னும் பெயர்த்தாம்.

[11] உறுப்பாகலான் — சிலவிடத்து உள்ளடங்கிய சொற்பொருளவிநயத்தானும், நாடகவனப்பிற்கேதுவாகலானும் நாடகத்தில் இவையிரண்டும் பயன்படுதலான் உறுப்பெனக் கூறப்பட்டது.

[12] நிருத்தியம் இனிய சுவைப்பொருளைப் பற்றியதாகலின் இதனை இலாசியம் என்றும், நிருத்தம் வலியதானத்தைப் பற்றியதாகலின் இதனைத் தாண்டவம் என்றும் கொள்ளவேண்டும்.

[13] கதை — இதனை இதிவிருத்தம் என்றுங்கூறுப. அங்ஙனமே பாவப்பிரகாசத்திலும் கூறப்பட்டுள்ளது.

“கவிகளானிருமிக்கப்பட்ட பிரபந்தத்தின் வடிவமே இதிவிருத்தமென நாட்டியாவிநயமுணர்ந்தோர் கூறுவர்” அது ஆதிகாரிகம் பிராசங்கிகம் என இருவகைத்து; அவற்றுள் ஆதிகாரிகம்:- அதிகாரம் பயனுரிமை அதனையுடையவன் அதிகாரி — தலைவன்; அத்தலைவனைப் பற்றியது ஆதிகாரிகம் ஆம்; இதனால் இக்கதை, இராமாயணப் பெருங்காப்பியத்தில் சீதை இராமன் இவரது சரிதம்போல சிறப்புடைத்தென்பது புலனாம். பிராசங்கிகம்:- பிரசங்கம் — தொடர்பு; அதைப்பற்றி நிகழ்ந்தது ஆம்; அப்பிராசங்கிகம், பதாகை பிரகரீ என இருவகைத்து; அவற்றுள், பதாகை சுக்கிரீவன் முதலினோரது சரிதம்போல நெடுந்தொடர்புடையது. பிரகரீ — சடாயூ சபரீ முதலினோரது சரிதம்போல சிறுதொடர்புடையது. இங்ஙனம் ஒருபடித்தாகிய ஆதிகாரிகமும் இருபடித்தாகிய பிராசங்கிகமும் என்னும் முத்திறத்த கதைகளும் முன்னரே பெற்றாமெனக் கொண்டு மீண்டும் முத்திறத்தெனக் கூறினான் என்க.

[14] பிரக்கியாதம் — மகாவீரசரிதம் முதலியன.

[15] உற்பாத்தியம் — மாலதீமாதவம் முதலியன.

[16] மிசிரம் — உத்தரராமசரிதம் முதலியன.

இத்தகைய மூவகைக்கதைகளும் ஆதிகாரிகம் பதாகை பிரகரீ என்னுமிவற்றால் தனித்தனி மும்மூன்றாக அக்கதைகள் ஒன்பது வகையவாம்; அவைதாம், தேவரைப்பற்றியவும் மக்களைப்பற்றியவும் இருபேரைப்பற்றியவும் என மீண்டும் முத்திறத்தவாக்கொள்வேமெனில் வேறு பல வேறுபாடுகளையும்  நிகழ்த்தல் எளிதேயாம்; ஆயினும் அவை இலக்கியவாயிலாக உணரற்பாலனவென விரிவஞ்சியிங்குக்கூறப்பட்டில.

[17] பயன் — ஈண்டு திரிவருக்கவடிவினதாம். அத்திரிவருக்கமாவது அறம் பொருள் இன்பம் என்னும் இம்மூன்றன் குழு; இம்மூன்றனுள் ஒன்றைச் சிறப்பாக உடையதுதென்பதாம்.

[18] பயனை — திரிவருக்கமாகிய அறம் பொருளின்பங்களை. இதனால் விளையும் பயன் அற்பமில்லையென்பது போதரும்.

[19] அவா — காலத்தாழ்வைப் பொறாது ஆசைப்பெருக்கம். இதனால், தலைவன் பயனெய்தற்கியற்றுஞ் செயல் இயல்பானமையு நிலையினின்றுஞ் சிறிது மேம்பாடெய்து நிலை தொடக்கம் என்பது பெற்றாம்

[20]தொடக்கம் முதலிய எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டுக்கள் பின்வரும் நாடகத்தின்கட் கூறப்படுமாகலின் இங்கண் இலக்கணமொன்றே கூறப்படுகின்றது.

[21] பயன் பேறில் வழி அப்பயன்களைப் பெறுவதற்குரிய உபாயங்களை மிக விரைந்தாற்றுஞ் செயலென்பது கருத்து.

[22] உபாயம் — பயனெய்தற்குரிய சாதனம்; அபாயசங்கை—கேடு  நிகழுமோ என்னும் ஐயம்; இவையிரண்டும் பொருந்தலாற் பயன் பேறு துணியப்படா நிலை பிரத்திநசையென்பதாம்.

[23] இடையூறியற்றும் எதிரிகள் விலகிய வழி பயன் வந்தெய்துமென்னும் மனத்துணிவு பிராத்தித்துணிவு என்பதாம்.

[24] எல்லாப்பயனும் — அறவே ஊறுஒழிதலாற் பயனெய்தல் ஒருதலையென்பது கருத்து.

[25] பீசம் — ஈண்டு விதைபோன்ற விதையெனக்கொள்ளல் வேண்டும். அவ்விதை முதலிற் சிற்றளவிற் காணப்பட்டுப் பின்னர் அடிமரம் சினை இலை முதலிய பலவாகவிரிதல் போல, இந்த பீசமும், தலைவன், துணைத்தலைவன், எதிர்த்தலைவன் என்னும் வேறுபாடுகளான் விரிவெய்தி அறம் பொருளின்பங்கட்கேதுவாய் நிற்கும் என்பதாம்; அப்பீசமும் தன்வயத்த சித்தியுடைத் தலைவன் பால் அத்தலைவனது உற்சாகவடிவினதும், அமைச்சர் வயத்த சித்தியுடைத் தலைவன் பால் அவ்வமைச்சரது உற்சாகவடிவினதும், இருசித்தியுடைத் தலைவன் பால் இருபேரது உற்சாகவடிவினதும் ஆம் என அறியற்பாலது. இங்கண், வேட்பிப் போனது செயல் இயமானற்கே பயனை விளைத்தல் போல அமைச்சரது உற்சாகமும் தலைவற்கே பயன் விளைக்கும் என்பதாம்.

[26] அழிவு — ஈண்டுச் சந்தர்ப்பவன்மையாற் சிறப்புப் பயனுடைய அழிவையுணர்த்தும். அப்பயன் அழிவுறாமைக் கேதுவே பிந்து என்பதாம்; தைலவிந்து நீரிற் பரந்து நிற்பது போல பயனழிவுறாமைக்கு அவ்வேது விரிந்து நிற்குமென்பது கருத்து.

[27] விரித்துரைத்தற்குரிய கதையினும் குறுப்பாய் என்னும்மிவ்வடைமொழி, இராமன் முதலிய தலைவரது செயல்வடிவாகிப் பயன் கருதி நிகழ்ந்தமையாற் சிறப்பெய்திய கதைக்கு உறுப்பாதலையுணர்த்தும்; அவ்வுறுப்பாகிய கதை — சுக்கிரீவன் முதலிய துணைத்தலைவரது செயல் வடிவினதாம்.

[28] பிரகரிகை — சிறு குவியல்; அது மலர்க்குவியல் என்பதாம்; அம்மலர்க்குவியல், தனக்கொரு வனப்பின்றிப் பிறவற்றை யழகுபடுத்தல் போல, பருவச்சிறப்பு சடாயுச் செய்தி முதலிய கதைப்பகுதிகளாகிய பிரகரிகையும் தனக்கொரு பயனுமின்றிச் சிறப்புறுங்கதைக்கே பயன் விளைக்குமென்பது கருத்து.

[29] பயன்கள் — ஈண்டு அறம்பொருள் இன்பங்களை யன்றிப் பிறவற்றை; அதனால் திரிவருக்கங்களாகிய பயனற்ற பிரகசனம் முதலியவற்றில் பீசம், சுவைத்தோற்றத் தளவையில் ஏதுவாம் என்பது புலனாம்.

[30] காரணப்பெயர் — இதனால் அவ்வவ்வுறுப்பின் பெயரையுணர்த்துஞ் சொற்களின் பொருளால் அவற்றின் இலக்கணம் விளங்குமென்பதுபற்றி தனிப்பட்ட இலக்கணம் கூறவேண்டாவென்பது போதரும்.

[31] காண்டற்கரியதும் — சிறப்புறும் பயனுக்குதவியாக அங்கந்தொறும் கூறும் பல பயன்களுள் வெளிப்பட்டுத் தோன்றுஞ் சில பயன்கள் காண்டற்குரியனவும் அங்ஙனம் வெளிப்படாத சில பயன்கள் காண்டற்கரியனவும் ஆம் என்று ஒருசாரார் கூறுவர்.

[32] கருப்பசந்தி — பிரதிமுகசந்தியில் தோன்றிமறைந்த பொருளாகிய பீசம் கெட்டொழியுமோவென்னும் ஐயத்தான் மீண்டும் மீண்டும் அதனைத் தேடுதலாம்; இங்கண் பதாகை விகற்பமாகலான் அஃதில் வழி யந்நிலையில் பீசம் பிந்து இவற்றுள் ஒன்றைப் பிராத்திநசையோடியைத்துக் கோடல் வேண்டும் என்னும் இக்கருத்தை, கோகலர் என்னும் அணிநூலாசிரியர் கூறுவர்.

[33] யாதாமொரு ஏதுவால் — வெகுளி விதனம் என்னும் இவை முதலியவற்றுள் யாதாமொன்று ஏதுவாகுமென்பதாம்; இவ்வேதுவால் நிகழ்ந்ததும், கருப்பசந்தியில் வெளிப்போந்த பீசப்பொருளைப் பற்றியதும் பயன் பேறு மாத்திரையிலெஞ்சியதுமாகிய ஆராய்ச்சித் துணிபு கருப்பசந்தியாம் என்பது இதனாற் போதரும்.

[34] சிறப்புறும்பயன் — எப்பயனைப்பற்றிக் காப்பியம் நிகழ்ந்ததோ அப்பயன் என்பதாம்.

[35] உறுப்புக்களுக்கு — உபட்சேபம் முதலிய அறுபத்து நான்கு உறுப்புக்களுக்கும் யாண்டு காரிய காரண இயைபு நிகழ்கின்றதோ ஆண்டு நிறுத்தமுறை கோடற்பாலது; அவ்வியைபில்வழி அம்முறை கோடற்பாலதின்று. பொருளுண்மையை ஆராய்தலில் நிறுத்தமுறையைக் கோடற்கு காரணமின்மையானும் இலக்கியங்களில் அம்முறை காணப்படாமையானுமாம். அங்ஙனமே கூறப்பட்டுள்ளது. “கதை தலைவன் சுவை யென்னுமிவை முதலவற்றிற்கேற்ப உறுப்புக்களை இயைத்தல் வேண்டும்; இங்கண் அவ்வுறுப்புக்களை நிறுத்தமுறையானே யியைத்தல் வேண்டற்பாலதின்று” என்று. அவ்வுறுப்புக்களைச் சிறப்புறுங் கதையோடியைத்தலே தக்கதெனக் கூறுமாலெனின் அற்றன்று; மாறுபட இயைத்துக்கூறினும் குற்றமின்மையான். அங்ஙனமே நாடகப் பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது:- “உபட்சேபம் முதலிய உறுப்புக்களைச் சிறப்புக்கதையைப் பற்றியாதல் தொடர்புக்கதையைப் பற்றியாதல் இடம் பொருட்கேற்ற பெற்றி வனப்புறும் வண்ணம் நூல்களில் அமைத்தல் வேண்டும்” என்று.

[36] சூச்சியம் — வார்த்தையளவிற் றெரிவித்தற்குரிய கதை; அது சுவையற்றதும் தகுதியற்றதும் ஆம்.

[37] அசூச்சியம் — காண்டற்குரியதும் கேடற்குரியதும் ஆகிய கதையை; அவற்றுள் காண்டற்குரியது, இனிமை பெருமை சுவை குறிப்பு என்னுமிவை நிரம்பியிருக்கும் கதையாம். கேட்டற்குரியது, யாவரானுங் கேட்டற்குரியதும் அங்ஙனம் கேழ்க்கத் தகாததும் என இருவகைத்து. அங்ஙனம் கேழ்க்கத் தகாதது என்றமையாற் குறித்த சில பாத்திரங்கள் கேட்டற்குரியல்லர் என்பது போதரும்; இதனை, சநாந்திகம் என்றும் அபவாரிதகம் என்றுங் கூறுப.

[38] பாத்திரங்கள் — ஈண்டு, நாடகத்தில் அவிநயஞ் செய்தற்குரிய தலைவன் றலைவி முதலியோரது வேடத்தைப் புனைந்து கொள்வோராவர்; அப்பாத்திரங்கள் தலையிடை கடை யென முத்திறத்தவாம்.

[39] விட்கம்பம் — “முதலங்கத்தில் முன்னுரை கூறிய பின்னர் இதனையமைத்தல் வேண்டும்” என்பது போஜராஜனது கருத்து; பின்வரும் அங்கங்களின் இடையில் அமைத்தல் வேண்டும் என்பது ஏனையோர் கருத்து.

[40] சுத்தம் — ஒரு இடைப் பாத்திரத்தானிகழ்வதும் பல இடைப்பாத்திரங்களானிகழ்வதுமென இருவகைத்து; கடையிடைப்பாத்திரங்களானிகழுங் கலவையோ, ஒரு படித்தேயாம்; இதனால் விட்கம்பத்தில் தலைப்பாத்திரங்களாகிய தலைவன் றலைவிமார்க்குப் பிரவேசம் இல்லையென்பது பெற்றாம்.

[41] முன்னைய அங்கத்தின் — இது, முதற்கண் அணிமையிலுறும் அங்கத்தையுணர்த்தும்; “யாதாமொரு முன்னைய அங்கத்தின் முடிவிலமையும் பாத்திரங்கள்” என்னும் ஐயப்பொருள் நிகழலாகாதென்பான் முன்னைய அங்கத்து முடிவில் என்றான்.

[42] கடைப்பாத்திரங்கள் — சேடன் சேடீ முதலியோர்; ஒருபாத்திரமாதல் இருபாத்திரங்களாதல் பலபாத்திரங்களாதல் இடைப்பாத்திரங்களோடியைபின்றிப் பேசுவது, பிரவேசகம் ஆம்.

[43] அறிவிக்கப்படாத — முன்னங்கத்தில் வெளிப்போந்த பாத்திரங்களே பின்னங்கத்திலும் தொடர்ந்து வருதலான் அறிவிக்கப்படாத பாத்திரமெனக்கூறினான் என்க; இதனால் இது விட்கம்பம் முதலியனவின்றி நிகழும் என்பது பெற்றாம்.

[44] இவற்றால் — விட்கம்பம் முதலியவற்றால்..

[45] பிந்து — இஃது அழிவெய்தற்குரிய பீசத்தை அழிவுறாவண்ணம் பல ஏதுக்களைப் பரவச் செய்வது; அத்தகைய பிந்துவை வெளிப்படுத்தற்குக் கூறுபாடெய்தியதென்றமையான் அங்கந்தொறும் பீசத்தின் நன்னிலையைப் புலப்படுத்தல் வேண்டும் என்பதாம்.

[46] அங்கம் — இதிற் றொலைவழி கொலை போர் நாடு நகர் முதலியவற்றின் குழப்பம் தடைப்படுத்தல் உணவு நீராடல் புணர்ச்சி நறுமணப்பூச்சு ஆடையுடுத்தல் என்னுமிவற்றைக் காட்சியளவையிற் காட்டலாகாது; தலைவனது ஒரு பகற் செய்தியைக் கூறுவது; விதூடகன் முதலிய மூன்று நான்கு பாத்திரங்களானும் நிகழ்வது ஆம். எல்லாப் பாத்திரங்களின் நீக்கம் அங்கத்தின் முடிவும் ஆம் என்னுமிது முன்னையணி நூலாசிரியர் கருத்திற்கேற்ப ஈண்டும் அதனிலக்கணம் கொள்ளற்பாலது.

[47] இனி, காப்பியப் பொருளை முற்றுந் தெரிவிக்கும் பாரதீ விருத்தி, விளக்கற்பாலது; அப்பாரதீவிருத்திக்கு, ஆமுகம் பிரரோசனை வீதி பிரகசனம் என்னும் உறுப்புக்கணான்காம்; அவற்றுள் வீதி பிரகசனம் இவ்விரண்டையும் நூற்றொடக்கத்தின்கண் மிகுதியும் எடுத்தாளாமையாற் கூறியும் கூறப்படாத அளவில் அமைதலானும், பத்துவகை யுரூபகங்களுள் இவை சிறப்புவகையாகக் கூறப்பட்டிருத்தலானும், அவ்வுரூபகங்களின் இலக்கணத்தை விளக்குங்கால் இவற்றின் இலக்கணமும் கூறப்படுமென இங்கட் கூறாது விடுத்தார். பிரரோசனைக்கோ என்னில் சிற்றிலக்கணமாகலின் நாடக எடுத்துக்காட்டிற் கூறுமவ்வளவில் அஃதமையுமென்று கூறாது விடுத்து ஆமுகத்தைக் கூறுகின்றார்; எனினும், பிரரோசனை — காப்பியம் கவி நடிகர் என்னுமிவர்களைச் சூத்திரதாரன் புகழ்ந்துரைக்குமாற்றால் அவையினரைத் தன் வயப்படுத்தி நடிக்கப்புகும் நாடகத்திலவர்க்குப் பேரவாவிளைக்குஞ் செயலாம்; என்னுமிக்குறிப்பு சந்தர்ப்பத்தை நோக்கி இங்கண் வரையப்பட்டது.

[48] சூத்திரதாரன் — நாடகத்திற்குச் சூத்திரதாரர் இருவர் உளர்; ஒருவன் முன்னரங்க வழிபாடாகிய நாந்தியென்னும் மங்கலம் பாடுவோன்; மற்றவன், நடத்தாபகன் என்னும் பிறிதொரு பெயரையும் எய்தி முதற்சூத்திரதாரனையொத்த குணம் உருவம் இவற்றையுடையனாய் பிரத்தாவனையை நடாத்துவோனாவன்; அதனை நடாத்துங்கால், நடிப்பது கடவுட் கதையாயின் அச்சூத்திரதாரன் கடவுள் வடிவினனாகவும், மக்கட்கதையாயின் மனிதவடிவினனாகவும், கலவைக்கதையாயின் அவ்விருவருள் ஒருவரின் வடிவினனாகவும் தோன்றி கதை முதலியவற்றைத் தெரிவித்தல் வேண்டும். காப்பியத் தலைவன் கவியிவரது குணங்களை விதந்து கூறியும், கதைப்பொருளைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தும், அரங்கத்தையணிப்படுத்துந் திறலமைந்தவன், சூத்திரதாரன் என்று கூறப்படும் என்று பாவப்பிரகாசநூல் கூறும். நபீ — சூத்திரதாரனுடைய மனைவி; இவள், நரப்பு கருவி முதலிய நால்வகை வாச்சிய வேறுபாடுகளையுணர்ந்தும், அக்கலைகளிற் சிறந்தும், அவிநயங்களை யுணர்ந்தும், எல்லாப்பாடைகளையும் பேசுந்திறலமைந்தும், செயற்குரிய வினைகளில் நடனைப் பின்பற்றியும் இருப்பவள் ஆம். மாரிடன் — இவனைப் பாரிபாருசுவகன் என்றுங் கூறுவர்; பலசுவைகட்கு நிலைக்களனாகிய குறிப்பைக் கூத்தர் அவிநயஞ் செய்யுங்கால், மருங்கிருந்து அதனைச் செம்மைப்படுத்துமியல்பினன் ஆவன். விதூடகன் — அமையத்திற்கேற்ப நுண்ணிய அறிவுடையனும், தலைவன் இன்பமெய்தற்குரிய நால்வகைப் பிரயோகங்களை யுணர்ந்தவனும், வேதங்களைக் கற்றுணர்ந்தவனும், நகைவிளைக்கும் இன்பமொழி கூறுவானுமாவன்.

[49] தன் செயல் — இது, அவையோர் விரும்பிய நாடகத்தை நடித்து, அவர்களை யின்புறுத்தலாகுஞ் செயலையுணர்த்தும்.

[50] நிகழவிருக்குஞ் செயல் — இது, காப்பியப்பொருள்வடிவாகிய கதை பீசம் முகம் பாத்திரம் என்னும் இந் நான்கையுமுணர்த்தும்.

[51] இருவகைப்படும் — சொற்றொடரை மேற்கோடலானும், அதன்பொருளை மேற்கோடலானுமாம்.

[52] உறுப்புக்களாகலான் — இவ்வேது வீதி ஆமுகம் என்னுமிரண்டிற்கும் உறுப்பு வேறுபாடின்மையான் ஈண்டுக்கூறல் முரண்படாவென்பதை யுணர்த்தும்; இங்ஙனமாயின் வீதி ஆமுகம் என்னும் உறுப்பிகட்குப் பெயரளவில் வேறுபாட்டைக் கொள்வேமெனின்; அற்றன்று. வீதிக்கு, கதோற்காதம் முதலிய சிறப்புறுப்புக்களின்மையும், சூத்திரதாரன் முதலியோரது சேர்க்கையின்மையும், உற்காத்தியகம் முதலிய எல்லா உறுப்புக்களின் இன்றியமையாமையும் அமைகின்றன; ஆமுகத்திற்கோ எனின் இவை யாவும் வேறுபட்டனவாமாகலின் வீதியும் ஆமுகமும் வேறுபட்டனவென்பது கருத்து.

[53] தோடங்கள் — பிறன்மனைவிழைதன் முதலியன; அத்தகைய தோடங்கள் நிரைந்த சொற்களால் ஒருவரையொருவர் துதி செய்து நகையை விளைத்தல் பிரபஞ்சம் என்பதாம்.

[54] முதலியோர் — இது மாரிடன் சூத்திரதாரன் இவர்களை. முன்னரங்கத்தில் இம்மூவரும் கூடிப்பேசுதல் திரிகதம் ஆம்.

[55] ஈண்டு — இது பிரத்தாவனையென்னும் ஆமுகத்தையுணர்த்தும்.

[56] ஒற்றுமை — ஈண்டு ஒலிகளின் ஒற்றுமையை உணர்த்தும்.

[57] அவாய்நிலை — பொருண் முடிவுறாது எஞ்சி நிற்பது. இதனை வடநூலார் ஆகாங்கிஷை என்ப.

[58] அழுக்காறெய்தல் — தத்தம் திறமையை வெளிப்படுத்தற் பொருட்டாம்.

[59] கண்டம் — பொருண் மாற்றத்தால் சந்தர்ப்பத்திற்கேற்படி பொருந்தக் கூறல் என்று தசரூபகம் கூறும்.

[60] இயைபிலாப்பொருள் — ஈண்டு இயைபின்மை, சுவை கனவு உன்மாதம் இளமை என்னுமிவை முதலியவற்றைப் பற்றி நிகழ்வதெனக் கொள்க; இதனால் இதுமாறுகொளக்கூறல் என்னும் குற்றமாகாதென்பதாம்.

[61] இது எதிர்மறைப் பொருளாகிய குணத்தைக் குற்றமாக வெளிப்படுத்தற்கும் உபலக்கணம் ஆம்.

[62] சிலவற்றை—இதனால் பிரத்தாவனையில் இவ்வுறுப்புக்களை நிறுத்த முறையானே முற்றுங் கூறவேண்டா என்பது போதரும்.

[63] சிறப்பு — பெருமிதம் உவகை யென்னுமிவற்றுள் ஒரு சுவைக்குச் சிறப்பு என்றமையான் இவற்றுள் ஒன்று உறுப்பியாகவும் பிறசுவைகள் உறுப்புக்களாகவும் அமைவனவாம்.

[64] பகுதி — ஈண்டு — இங்ஙனம் செய்யக்கடவது என்று எல்லா உறுப்புக்களுடன் சிறப்பு முறையானே எதற்கு விதி நிகழ்கின்றதோ, அது பகுதியாம். எல்லா உறுப்புக்களையும் விதிமுகத்தாற் கூறாதவழி பிறாண்டு விதிக்கப்பட்ட உறுப்புக்களைக் கூறவிரும்புங்கால் “அது போல இது செய்யக்கடவது” என்னும் அதிதேசத்தால் எதற்கு விதிக்கப்படாத உறுப்புக்கள் கூறப்படுகின்றனவோ, அது விகுதியாம்; இம்முறையே பற்றி இவ்வுழியும் ஐந்து சந்திகள் உறுப்புக்கள் முதலிய யாவற்றையும் விதி முகத்தாற் கூறி நாடக நூலை அமைத்தலான் அதிதேசத்தாற் சித்திக்கும் உறுப்புக்களையுடைமையால் விகுதிகளாகும் பிரகரணம் முதலியவற்றிற்கு நாடகம் பகுதியென்பது புலனாம்; இது பற்றியே ஆசிரியர் நாடக இலக்கணத்தை முதற்கட் கூறினர் என்க. அதிதேசம் — ஒப்புமை காட்டியுணர்த்துவது.

[65] நாந்தீ — நாடகத் தொடக்கத்தில் அஃதிடையூறின்றியினிது நிறைவுறற் பொருட்டுச் செய்யப்படும் அரங்கவழிபாடு, முன்னரங்கமென்பதாம்; அத்தகைய முன்னரங்கத்திற்கு பிரத்தியாகாரம் முதல இருபஃதிரு உறுப்புக்கள் உள்ளனவெனினும் அவற்றுள் நாந்தியின்றியமையாத உறுப்பாமாகலின் ஊறொழிவுறற்கு அதனை முதற்கட் செய்தல் வேண்டுமென்பதாம்; அதுபற்றியே அதனிலக்கணங் கூறப்பட்டதென்பதாம்.

[66] சுலோகம் — அந்நாந்திச்சுலோகம், சந்திரன் பெயர் அமைந்தும், மங்களப்பொருளவாகிய சொற்கள் பெரிதும் மலிதரவிளங்கியும், வாழ்த்து, வணக்கம், கதைத் தொடக்கம் என்னுமிவற்றுள் ஒன்றைப் பற்றியுமிருத்தல் வேண்டும் என்னுமிவ்விலக்கணமும் ஈண்டு உணரற்பாலது.

[67] சொன்னியமம் — இது இத்துணைச் சொற்கள் இருத்தல் வேண்டுமென்னுங் கட்டுப்பாடு.

[68] அரங்கவழிபாடு — நாந்தி கூறிய முதற் சூத்திரதாரன் சென்றபின்னர், அவ்வரங்கத்துட் புகுந்த இரண்டாமவனாற் செய்யப்படுவது; அதன் முறைவருமாறு:- அரங்கத்தலைவன் அமர்ந்திருக்குங்கால் திரைநீக்கப்பட அங்கண் வெளிப்போந்த பாத்திரங்கள், புட்பாஞ்சலிகளையிறைத்து அவ்வரங்கத்தை யணிப்படுத்தி, ஆடல் பாடல் வாச்சியம் என்னும் இவற்றை ஒருங்கமைத்தாதல், பாடல் வாச்சியம் என்னுமிரண்டையமைத்தாதல், மூன்றையுந் தனித்தனி புரிந்தாதல் அவ்வரங்கமாந்தெய்வத்தை வழிபடுதல், அவ்வரங்கத்துட் புகுந்தாரனைவரும் தொன்று தொட்டுச் செய்து முறையாமெனச் சங்கீதரத்தினாகரம் கூறும்.

[69] பருவகாலமொன்றை — நாடகத் தொடக்கத்திற் பாரதீவிருத்தியானமைந்த செய்யுளாற் பருவங்களாறனுள் ஒன்றைப் பற்றிப் பாடல் வேண்டுமென்பதாம்.

[70] இங்கட் கூறிய இலக்கணத்தோடு, நாடகம், ஐந்து அங்கங்கட்குக் குறைவுறாதும், பத்து அங்கங்கட்கு மிகாதும் செயற்பாலதென்னு மிஃதும் ஈண்டு அறியற்பாலது.

[71] இவ்வடைமொழி, அத்தலைவன், அமாத்தியன் அந்தணன் வைசியன் இம்மூவருள் ஒருவனும், அறம்பொருலின்பப் பற்றுடையனுமாதல் வேண்டும்; அவன்றனது பயனுகர்ச்சி, பலவிடையூறுகளாற்றடைப்பட அவை நீங்கிய வழியதனை யெய்துபவனுமாவன்; என்னுமிப்பொருளையுமுணர்த்தும். மேலும் இப்பிரகரணத்திற் றலைவி, குலமகளாதல் விலைமகளாதல் இருவருமாதல் அமைதரவேண்டும் அதற்கேற்ப விப்பிரகரணமும் மூவகைத்தாம்; இருவரும் பொருந்திய மூன்றாமதிற் சிறப்பு வகையாற் காமுகர் நிறைந்திருத்தல் வேண்டும் என்பதும் இதற்கிலக்கணம் ஆம்.

[72] நாடகத்தையொப்ப — இஃது ஒப்புமை காட்டி யுணர்த்தலான் அதிதேசம் ஆம்; இங்ஙனமே மேல் வருவனவற்றிற்கும் அமைவிற்கேற்றபெற்றி பகுதி விகுதிகள் உய்த்துணரற்பாலன. இதனால் பகுதியாகிய நாடகத்திற்குப் பிரகரணம் விகுதியென்பது போதரும்.

[73] பிரகரணம் — மிகையாக்கலென்பது இதன்பொருள்; இதற்குச் சந்தி ஆமுகம் பிரவேசகம் சுவை யென்னும் இவை முதலியவற்றைப் பிற விகுதிநூல்களினும் மிகைபடச் செய்தலான் இஃது இப்பெயர்த்தாயிற்று.

[74] விடனுடைய சரிதம் — இது, சூதன் முதலியோர்க்கும் அவரது சரிதங்கட்கும் உபலக்கணம் ஆம். விடன் தன் செய்திகளையாதல் பிறன்செய்திகளையாதல் உரைத்தல் வேண்டுமென்பதும் இங்கட் கொள்ளற்பாலது. அன்றியும் ஒரே பாத்திரத்தின் பிரவேசத்தானிகழுமிப்பாணத்தில், வானுரை செயற்பாலது; அதாவது, பிறிதொருவனுடன் உரையாடி மறுமொழி கூறியாங்கு வானத்தை நோக்கி “என்ன கூறுகின்றனை? இங்ஙனமா கூறுகின்றனை? யென மற்றவன் கூற்றையநுவதித்து அவற்கு மறுமொழி கூறுமுகமாகத் தொடங்கிய விடயத்தையெடுத்துக் கூறலேயாம்; இதனை வடநூலார் “ஆகாச பாடிதம்” என்ப.

[75] பாணம் — விடனொருவன் தன் கதையையாதல் பிறன் கதையையாதல் பணிக்கின்றான் என்னும் பொருள் பற்றி இது பாணம் என்னும் பெயர்த்தாயிற்று.

[76] பிரகசனம் — பெருநகையென்பது பொருள்; பெருநகைவிளைக்குஞ் சொற்கள், இந்நூலிற் பெரிதும் விரவியிருத்தலால் இஃது இப்பெயர்த்தாயிற்று.

[77] பாசண்டர் — பௌத்தராதியர்

[78] முதலியோரென்றமையான் வைசியர் முதலியோருமாம்.

[79] அவரவர்க்குரிய வேடம் பாடையென்பது கருத்து.

[80] தூர்த்தர்கள் — கள்வர் சூதர் முதலினோர்.

[81] பிரக்கியாதம் — முப்புரமெரித்த காதை முதலியன.

[82] நகை உவகை யென்னுமிச்சுவை நீங்கிய என்றமையான் சமநிலைக்குத் தோற்றுவாயேயின்றென்பது கருத்து.

[83] மாயை — முன்னர் இயற்கையானமைந்த உருவொன்றிலாப்பொருளை நல்லுருவுடைத்தெனத்  தொற்றுவித்தலும் ஒன்றைப் பிறிதொன்றாக்கலும் ஆம்.

[84] இந்திரசாலம் — காட்சியளவையைக் கடந்த பொருட்கு இடத்தைப்பற்றியும் காலத்தைப்பற்றியும் நிகழும் அதிருசியத்தன்மையைப் போக்கி மந்திரம் மருந்து முதலியவற்றால் அதனைக் காட்சிக்குரியவாகச் செய்தல் இந்திரசாலம் என்பதாம்.

[85] முதலியனவும் — இதனால் விண்வீழ்கொள்ளி இடியேறு முதலியன கொள்ளற்பாலன.

[86] இடிமம் — இது ‘டிம’ என்னுங் கூட்டப்பொருன வினைப்பகுதியினடியாகப் பிறந்த சொல்லாகலின் பதினாறுவராகிய தலைவரது கூட்டத்தாற் சிறப்பெய்துமிந்நூல் இடிமம் என்னும் பெயர்த்தாயிற்று.

[87] என்றமையான் — நகை உவகை சமநிலை யென்னுமிச்சுவை கணீங்கிய பிற அறுசுவைகளும் இங்கட் கொள்ளற்பாலன.

[88] பெரும்போரைப்பற்றிய — மகளிர் நிமித்தமாக நிகழாத போரை; அது, மழுவாளிவெற்றி முதலியன.

[89] வியாயோகம் — வி.ஆ. — என்னும் அடையுருபோடியைந்த ‘யுஜ்’ என்னும் வினைப்பகுதினடியாகப் பிறந்த சொல்; இது பலர் குழுமி வினை செயமுற்படலையுணர்த்தும்; இதனால் இப்பெயரிய  நூலை பலர் குழுமி நடித்துக் காட்டுவர் என்பது போதரும்.

[90] தனிப்பயனை — செயலொன்றிற் றலைப்படும் பல தலைவர்க்கு அதனால் விளையும் பயன் அவரவர் விரும்பியாங்கு வெவ்வேறென்பதாம். அங்ஙனமே பாற்கடலைக் கடைய முற்பட்ட பலதேவர்களும் அமுதம் இலக்குமி கௌத்துபம் முதலிய பயன்களைத் தனித்தனியெய்தியமை காண்க.

[91] மூன்று அங்கங்கள் — முதல் அங்கத்தில் முகசந்தியும் பிரதி முகசந்தியும், இரண்டாம் அங்கத்தில் கருப்பசந்தியும் மூன்றாம் அங்கத்தில் நிருவகணசந்தியும் அமைக்கப்படல் வேண்டும் என்பதாம்.

[92] கொடிய விலங்கினத்தானிகழுந்தீங்கு இயல்பாம்.

[93] மூவகைவித்திரவம் — அஞ்சிவிரைந்தோடல்; அது நகர் முற்றுகை போர் இவற்றானும் நெருப்பானும் கொடிய விலங்கினத்தானும் நேர்வதாமென மூவகைத்தாம்.

[94] உவகைமூன்று. விரதம் முதலியவற்றானிகழும் உவகை அறஉவகையென்றும், அரசியன் முதலிய பொருட்பற்றானிகழும் உவகை பொருளுவகையென்றும், பிறன்மனை விழைதல் கட்குடி முதலியவற்றானிகழ்வது இன்பஉவகையென்றும் மூன்றாம்.

[95] முறையே — முதல் அங்கத்தில் மூன்று கபடங்களும், இரண்டாம் அங்கத்தில் மூவகைத் துன்பங்களும், மூன்றாம் அங்கத்தில் மூவகையியல்புக்களும் கூறல் வேண்டும்.

[96] சமவகாரம் — சம் அவ. என்னும் அடையுருபோடியைந்து ‘இறைத்தல்’ என்னும் பொருளதாகிய * என்னும் வினைப்பகுதியனடியாகப் பிறந்த சொல்; பலபுறத்தும் விடயங்களைச் சிதறிய நிலையில் அமைத்திருத்தலான் இந்நூல் இப்பெயர்த்தாயிற்று.

[97] மிக்க அறிவித்து என்றமையான் பிற சுவைகள் சிறுபான்மை தெரிவிக்கற்பாலனவென்பது போதரும்.

[98] வீதிபோல — இவ்வுவமை, உற்காத்தியகம் முதலிய உறுப்புக்களை வரிசையாக அமைத்தல் வேண்டும் என்பதை உணர்த்தும்; மேலும் வீதியென்னுமிந்நூலில் பாத்திரமொன்றையாதல் இரண்டு பாத்திரங்களையாதல் அமைத்தல் வேண்டும் என்பதும் மகளிர் கூத்தின் பத்து உறுப்புக்களையும் இங்கண் அமைத்தல் வேண்டும் என்பதும், காதனிரம்பிய பொதுமகளையாதல் பிறன்மனையையாதல் தலைவியாக்கல் வேண்டுமென்பதும் கொள்ளற்பாலன. இதனால் குலமகள், இந்நூற்குத் தலைவியாகாள் என்பது புலனாம்.

[99] பிரக்கியாதமாதல், உற்பாத்தியமாதல் கதையமையுமென ஒருசாராசிரியர் கூறுவர்.

[100] மூன்றுசந்திகள் — கருப்பசந்தியும் விமருசசந்தியும் நீங்கிய மூன்று சந்திகள் என்பதாம்.

[101] போலிச்சுவை — சிறிதுங் காதற் பற்றில்லாத தலைவியைத் தலைவன் காதலித்தலாற் போலிச்சுவையென்று கூறப்பட்டது.

[102] கொலை நீங்கிய போர் — இது ஆட்டுச்சண்டை போல பயனற்றதென்பது கருத்து; இதனால் போர்ச்செயலினது பயன் கொலையென்பதாம்.

[103] ஈகாமிருகம் — பெறற்கரிய பெட்டையை விரும்பும் விலங்கினம் போல, தலைவனும் பெறற்கரிய தலைவியை விரும்புகின்றானாதலின் இந்நூல், மிருகம்போல விரும்புகின்றான் என்னும் பொருள் பற்றி இப்பெயர்த்தாயிற்று.

[104] இவ்விலக்கணம் — இது பத்துக்காட்சி நூற்களின் இலக்கணத்தை யென்பதாம்.

 

பிரதாபருத்திரீயம் – காப்பியவியல்

பிரதாபருத்திரீயம்

காப்பியவியல்

 

இனிக் காப்பியவிலக்கணங்[1] கூறப்படுகின்றது.

 

  1. குணம், அணியிவையமைந்து குற்ற நீங்கிய சொற்பொருள்கள் காப்பியம் ஆம்; அக்காப்பியம் சீரியலமையாச் சொற்குழுவடிவினதும், பாடல்வடிவினதும், இருவடிவினதுமாம் மூவகைத்தெனக் காப்பியமுணர்ந்தோர் கூறுவர்.

 

குற்றமற்றனவும்[2] குணம் அணியிவற்றுடன் கூடியனவுமாகிய சொற்பொருட்கள்              காப்பியம்” என்பது காப்பியத்தின் பொதுவிலக்கணமாம்.

 

  1. சொற்பொருட்கள், வடிவெனக்கூறப்பட்டுள்ளன. குறிப்பு நிறைவு உயிராம். அங்கண் உவமை முதலவணிகள் அணியலாதிய வணிகலன்போல்வனவாம்.

 

  1. அங்கண் சிலேடை முதலிய குணங்கள் வீரமாதிய போல நிற்பன. தன்னை[3] மேன்மைப்படுத்தும் இயல்புகள் சுபாவம் போல்வனவாம்.

 

  1. செயற்கையானுறும் வனப்பையெய்திய அமைப்புகள் நிலைமைபோல்வன. சொல்லடக்கு[4] முறையான் விளையும் ஓய்வெனுங் கிடக்கை படுக்கை போல்வதாம்.

 

  1. சுவைநுகர்ச்சிக்குரிய பேதங்களாகிய பாகங்கள் பக்குவம் போல அமைவன. காப்பியச்செல்வத்தின் இத்தகைய கருவிப்பொருள்கள், மக்கள் நலம்பெறற்குரிய கருவிகள்போல விளக்கமிக்கவாம்.

 

வாசகம், இலட்சகம், வியஞ்சகம் என சொற்கள் முத்திறத்தனவாம். வாச்சியம், இலட்சியம், வியங்கியம் எனப் பொருட்களும் முத்திறத்தனவாம். இதனை தாற்பரியார்த்தம் என்ப வடநூலார். கருத்துப்பொருளும் வியங்கியப் பொருளேயாம்; அது தனிப்பட்டதன்று.

 

அபிதை, இலக்கனை, வியஞ்சனை யெனச் சொல்லமைப்புகள் முத்திறத்தனவாம். கௌணவிருத்தியும் இலக்கனையின் ஒரு கூறேயாகும்; பொருளின் இயைபு[5] தடைப்படுதலை மூலமாகவுடைமையான்.

எங்ஙனமெனில்:-

அங்கிமாணவன் என்புழி நெருப்போடொப்பெய்திய மாணவன் என்னும் பொருளறிவு வேண்டற்பாலது. அங்ஙனமே கங்கையிற்சேரி யென்புழிக் கங்கைச்சார்புடைய தீரம் என்னும் பொருளறிவு வேண்டற்பாலது. இங்கட்கங்கையின் சார்பை உபலக்கணம்மாக்கொள்வேமெனின்[6], சேரிக்கணெய்துந்தூய்மை முதலாயின பெறாவாம். ஆகலின் இலக்கனை, ஒப்புநிமித்தமும் தொடர்புநிமித்தமும் என இரு திறத்ததாம். தொடர்பு நிமித்த இலக்கனை விட்ட இலக்கனை விடாத இலக்கனையென இருவகைத்தாம். ஒப்புநிமித்த இலக்கனை சாரோப இலக்கனை[7] சாத்யவசாய இலக்கனையென[8] இருதிறத்து. இங்ஙனம் இலக்கனை நான்கு திறத்தாம். அமைவை[9]யெய்தியமையாற் சுவைநிலையைத் தெரிவிக்கும் அமைப்புக்கள் கைசிகி, ஆரபடி, சாத்துவதீ, பாரதீ யென்னும் நான்குமாம். அங்ஙனமே தசரூபகத்திற் கூறப்பட்டுள்ளது.

 

“kaisikiகைசிகி, ஆரபடி, சாத்வதி, பாரதி யென்னும் இந்நான்கு அமைப்புக்களும் சுவைநிலையைத் தெரிவிப்பனவென்றுணரற்பாலனவாம்”

 

இதனாற் சொற்பொருளமைதியும் சுவையை வெளிப்படுத்துமென்பது புலனாம். சுவைக்குத் தகாத சொற்புணர்த்தல் குற்றமெனக்கூறப்பட்டது. வைதர்ப்பீ முதலியன இயல்பினது வேறுபாடுகளேயன்றி அமைப்பிற்குட்பட்டனவாகா.

 

அவற்றுள் சங்கேதப்[10]பொருளைப்பற்றிய சொற்செயல் அபிதையென்பதாம்; அவ்வபிதை உரூடி[11] யௌகிகம்[12] என இருதிறத்தவாம்.

உரூடி யெவ்வாறெனில்:-

 

  1. மக்களினது விளங்குந் தவமேம்பாடுகளானும் நிலமகளாகுந் தலைவியினது நலமிக்க வொழுக்கங்களானும் இவ்வுலகினது நிறைவுறுபாக்கியங்களானும் வீரருத்திரவேந்தன் அரசியலைத் தரிக்கின்றான்.

 

இங்கண் எல்லாச் சொற்களும் இடுகுறிச்சொற்களாம்.

 

யௌகிகம் எவ்வாறெனில்:

 

  1. வீரருத்திரன் என்னும் அரசன் எல்லாமக்களையும் இன்புறுத்துங்கால் நிலமகள், வசுமதி[13] இரத்தினகருப்பை[14] நிலை[15] யென்னுமிப்பெயர்களைக் காரணப் பெயராகக் கொண்டனள்.

 

இங்கண் வசுமதி இரத்தினகருப்பை என்னும் இவை முதலிய சொற்கள் பகுபதங்களாம்.

 

உரிய பொருள் தடைப்படுதலான் அவ்வுரியபொருளைப்பற்றியதில் ஆரோபிக்கப்படுஞ் சொற்செயல் இலக்கணையாம். அவற்றுள் விட்ட இலக்கணை யெவ்வாறெனில்:-

 

  1. வென்றிசேர் காகதிவேந்தனது படகவொலியைக் கேட்டுப் பகைநாடுகள் எல்லாப்புறத்தும் மிக்கக்கதறுகின்றன.

இங்கண் நாடுகள் கதறுகின்றன என்னும் உரிய பொருட்குப் பொருந்தாமை காண்க; அறிவில் பொருட்கு அலறுந்தன்மையின்மையான்.

விடாத இலக்கணை யெவ்வாறெனில்:-

  1. தலைவனாகிய காகதிவேந்தனது பாதபடியை மௌலிகள், விளக்கமுறு மரதனக் கதிர்க்கற்றைகளான் எப்பொழுதும் அணிப்படுத்துகின்றன.

இங்கண் மௌலிகள் என்னுஞ் சொல் அணிப்படுத்தற்பொருட்டு அம்மௌலிகளைத் தாங்கிய அரசர்களைக் குறிக்கின்றது.

சாரோப இலக்கணை யெவ்வாறெனில்:-

  1. மந்தரகிரியின் அடிக்கணுறும்பச்சைக் கற்பாறை யுராய்தலான் கரியவுருவாகிய எது திங்களஞ் செல்வன்பாற் றெரிகின்றதோ! அதனை மான் எனக் கூறுகின்றனர். இங்கண் யானோ, வீரருத்திரனது திருப்புகழாற் றோல்வியெய்திய அத்திங்கள், அவ்வரசனது கொடியாகிய வராகத்தை[16] மார்பகத்திற்றாங்கி யெழுதருகின்றான் எனக் கருதுகின்றேன்.

இங்கண் மதிக்களங்கமாகிய குரங்கத்தில் வராகமாந்தன்மை யாரோபிக்கப்படுகின்றது.

 

உவமேயத்தையும் உவமானத்தையுங்கூறி அவற்றின் வேறுபாடின்மை உய்த்துணரவைத்தல்[17] ஆரோபம் ஆம்.

உவமேயத்தைக் கூறாது உவமானத்தோடு வேறுபாடின்மையை உய்த்துணரவைத்தல் அத்யவசாயம்[18] ஆம்.

சாத்யவசாயவிலக்கணை யெவ்வாறெனில்:-

  1. காகதீய குலக்கடலின் இத்திங்களஞ்செல்வன் தோன்றினான். எழுதருமவன் குவலய[19]மலர்ச்சியைச் செய்தனன்.

 

இங்கண் வீரருத்திரன் மதியமாக அத்தியவசாயஞ் செய்யப்பட்டான். காகதீய குலக்கடல் என்புழியாரோபம் ஆம்.

இனி வியஞ்சனாவிருத்தி.

சொற்களினது பொருள்கள் பொருந்தி நிற்குங்கால், வாக்கியப்பொருளை யணிப்படுத்தற்பொருட்டு வேறுபட்ட பொருளைப்பற்றிய சொற்செயல் வியஞ்சனாவிருத்தியாம்.

அந்த வியஞ்சனாவிருத்தி சொல்லாற்றன்மூலம், பொருளாற்றன்மூலம், சொற்பொருளாற்றன்மூலம் என மூவகைத்தாம்.

அவற்றுள்

சொல்லாற்றன்மூலம் எவ்வாறெனில்:

  1. காகதிவேந்தனது வாகினிகள் எப்புறமும் சுழன்று பகைப்படைக்கடலை எழுதருகபந்தங்களான் நிரப்புகின்றன.

இங்கண் வாகினி கபந்தம் என்னுஞ் சொற்கள், இடம் பொருள் முதலியவற்றால் படை உடற்குறை யென்னும் பொருளவாயினும் சொல்லாற்றன் மூலமாக நதி, நீர் என்னும் பொருளறிவு நிகழ்தலான் அது வியஞ்சனா விருத்தியாம்.

இடம்பற்றிய பொருளின் முடிந்த அபிதாவிருத்திக்கு அவ்விடத்தைப்பற்றாத பொருளைத் தெரிவித்தற்கு ஆற்றல் இன்று. வாக்கியம் பொருளழகை எய்தற்பொருட்டுக் கூறுவார்க்கு இடத்தைப் பற்றாத பொருளினும் விருப்பமுண்மையானும் சொல்லையன்றிப் பிறவிடத்து அஃதறியப்படாமையானும் சொற்கே வியஞ்சனை யென்னும் பெயரிய பிறிதொரு செயல் கற்பிக்கப்படுகின்றது. இங்கண் இலக்கணையும் பொருந்தாது; பொருண்முடிபு தடைப்படாமையான். இங்கண் இரு செயல்களாற் பொருளைத் தெரிவிக்குங்கால் வாக்கிய பேதமும் இன்று; இலௌகிக வாக்கியங்கள் ஆக்கியோன் கருத்திற்கதீனமாகலான்.

பொருளாற்றன்மூல வியஞ்சனாவிருத்தி யெவ்வாறெனில்:-

  1. அரசர்கள், காகதிவேந்தற்கும் நிலமகட்கும் நிகழ்ந்த கைப்பிடி மங்கலத்தைச் செவியுற்றுக் கவிழ்த்த முகத்தினராய் பெருவிறலாற் பாதபடியைக் கீறினர்.

இங்கண் அரசர்கள் துயரெய்தினர் என்பது பொருளாற்றலாற் குறிப்பிடப்படுகின்றது.

பொருளாற்றன் மூலவியஞ்சனாவிருத்தியில் அனுமானசங்கை நிகழுமெனின் வியங்கியம்[20] வியஞ்சகம் இவற்றிற்கு உடனிகழ்ச்சியின்மையானும் கவிழ்ந்த[21] முகத்தினராந்தன்மையாதிய காரியத்திற்குப் பல காரணங்களுண்மையானும் அச்சங்கை நிகழாதென்பதாம். நியத காரணத்[22]தோற்றம் கூறும் விருப்பத்தாற்[23] கவரப்பட்ட சொற்களானேயாம். மேலும் ஒரோவொரு வியஞ்சகத்தான் நிகழும் அவ்வச்செயலறிவு கூறும் விருப்பிற்கேற்ப பல குறிப்புப் பொருட்களின்[24] றோற்றமுடையவாகலின் அனுமானமுறைக்கு முரண்பட்டதாம். அபிதாவிருத்தியும் இன்று. சங்கேதப்பொருளே அவ்வபிதாவிருத்திக்குப் பொருந்தியதாம். என்னும் இவ்வளவும் அறியற்பாலன.

சொற்பொருளாற்றன் மூலம் எவ்வாறெனில்:-

  1. பகைப்புரங்களை[25] வென்றவனும் வடிவிற் சருவமங்களம்[26] பொருந்தியவனும் இராசமௌளியுமாகிய[27] இவ்வீரருத்திரன், புவிக்கிறைவனாய் விளங்குகின்றான்.

 

 

இங்கண் பகைப்புரங்களை வென்றவன் என்பது பொருளாற்றன் மூலமும், சருவமங்களம் பொருந்தியவன் இராசமௌளி யென்பன சொல்லாற்றன் மூலமும் என சொற்பொருள் ஆற்றன் மூலம் ஆம். இங்கட் பிரதாபருத்திரற்கும் சங்கரற்கும் உவமையணி குறிப்பிடப்படுகின்றது.

 

இனிக் கைசிகி முதலியவற்றின் இலக்கணம் விளக்கப்படுகின்றது.

 

  1. இனிமைமிக்க சொற்களாற் பொருளமைப்பைக் கைசிகியென்ப. வன்மைமிகாச்சொற்களாற் பொருளமைப்பை ஆரபபீவிருத்தியென்ப.

 

  1. சிறிதளவு மெல்லெழுத்துக்களாற் பொருளமைப்பை, பாரதீவிருத்தியென்ப. சிறிதளவு வல்லெழுத்துக்களாற் பொருளமைப்பை, சாத்துவதீவிருத்தியென்ப.

 

அவற்றுள்

 

  1. உவகை அழுகையென்னுமிருசுவைகளும் இனிமை மிக்கவாம். வெகுளியும் இளிவரலும் வன்மைமிக்க சுவைகளாம்.

 

  1. நகை சமநிலை மருட்கை யென்னுமிவை அற்ப இனிமையவாம். பெருமிதம் அச்சமென்னுமிச்சுவைகள் அற்பவன்மையவாம்.

உவகை அழுகையென்னுமிச்சுவைகளை இனிமைமிக்க சொற்றொடரான் வன்னித்தல் கைசிகீவிருத்தியாம். வெகுளி இளிவரலிவற்றை வன்மைமிக்க சொற்றொடரான் வன்னித்தல் ஆரபபீ விருத்தியாம். இனிமைமிகா நகை சமநிலை மருட்கை யென்னுமிவற்றை அற்பமென்றொடரான் வன்னித்தல் பாரதீவிருத்தியாம். வன்மைமிகாப் பெருமிதம் அச்சம் இவற்றை வன்மைமிகாச்சொற்றொடரான் வன்னித்தல் சாத்துவதீவிருத்தியாம்.

கைசிகீவிருத்தி யெங்ஙனமெனில்:-

  1. காமனது விலாசங்களை வென்றவனும்[28] காகதிமரபிற்கு மதியமுமாகிய வேந்தனை யங்கனைகள், இமைப்பறக்காணவிரும்புங்கால், அவரது கடைவிழிகள் வானத்திற் குவளையலங்கலாற் கரிய தோரண வனப்பைச் செய்தன.

 

ஆரபபீவிருத்தி யெவ்வாறெனில்:-

 

  1. “சலமார்த்திகண்டன்”[29] என்னும் பெயரிய அரசனது வெகுளி நெருப்பு வாட்படையடியாலறுக்கப்பட்ட பகைமுடியின் வழிந்தொழுகு மரத்தச்சுடர்களானும், வன்படையுராய்தலான் மிகுந்தெழு தீப்பொறிக்குவியலானும், உதிரந்தோய்ந்த தசை என்புக்கண்டம் இவையாகும் எரிதரும் பெருந்தணல்களானும், மிக்கக் கொடுமையாக அமைகின்றது.

 

பாரதீவிருத்தியெவ்வாறெனில்:-

 

  1. மாண்புறுமுயர்வும்[30] மாட்சிமிக்க இக்காம்பீரியமும் விறல் புகழ் இவற்றினொழுங்கும் வாகுவின் கீர்த்தியும் கூறற்கரியவாய் வேறுபட்டு விளங்குகின்றனவாகலின், வீரருத்திரனைச் சார்ந்தவெல்லாம் புதியனவென்றே அறிகின்றேன். அவ்வேந்தனைப் படைத்தலிற் கருவிப்பொருள்கள், எத்துணையவாக எத்தகையவாக யாண்டே நான்முகனாலீட்டப்பட்டில.

 

சாத்துவதீவிருத்தியெவ்வாறெனில்:-

  1. பாரெலாம்[31] பரவு விறலுடை வீரருத்திரனது போர்ச்செலவின் முழங்குமுழவொலியை, பகையரசர் நெடுந்தூரத்திருந்து செவியுற்று நிறைவுறுங்காது நோயாற் கலக்கமெய்தியராய் மலைகளில் ஏறி அடர்ந்த அடவியிற் புக்கோடுங்கால், அங்கண் முண்மரங்கள் கூரிய முட்களால் அவரது கேசங்களைப் பற்றியிழுக்க தம்பகைவேந்தன் என்னும் எண்ணத்தால் “விடவேண்டும்; காத்தருளவேண்டும்” என்று அம்மரங்களை யிரந்து வேண்டுகின்றனர்.

 

  1. எல்லாச்சுவைகட்கும் பொதுவாகிய இடையாரபபீ இடைக்கைசிகி யென்னும்மிவ்விரண்டு விருத்திகளும் கூறப்பட்டுள்ளன.

 

23½ இனிய பொருளமைப்பிலும் வன்மை மிகாச் சொற்கட்டுடையது இடைக்கைசிகியாம்.

 

இனிமைமிக்க உவகை அழுகையென்னு மிச்சுவைகட்கு அற்பவன் சொற்கட்டுடைமை குற்றமாகாதென்பதாம். ஆயின் மிக்கவன் சொற்புணர்த்தல் விரும்பற்பாலதன்று; முரண்படுமெழுத்துக்களாற்[32] குற்றம் நிகழுமாகலின்.

 

  1. வன்பொருளமைப்பிலும் மென்மைமிகாச் சொற்கட்டுடையது, இடையாரபபீயென்பதாம்.

 

வன்மைமிக்க வெகுளி இளிவரல் என்னுமிச்சுவைகட்கு, அற்ப இன்சொற்கட்டுடைமை குற்றமாகாதென்பதாம்; இனிமைமிக்க சொற்கட்டுடைமையோ முரண்பட்டதாம்.

 

இடைக்கைசிகி யெவ்வாறெனில்:-

 

 

 

  1. காகதிவேந்தனே! தம்பகைவருடைய[33] மனைவியர் “மகோற்சவம் அணித்து நிகழவிருக்குங்கால் அவ்விழாவை விடுத்து இவணிருந்து[34] அயல்நாட்டை ஏன் எய்தல் வேண்டும்? நம்மைப் பிரித்துவைக்க எத்தீயூழ் விரும்புகின்றது?[35] அக்கொடிய செயலை யிகழ்தல் வேண்டும்” என்றிங்ஙனம் தங்காதலரது வழிச்செலவைக் கனவிற்றடைப்படுத்தியராய்ப் பின்னர் விழிப்பெய்தி மயக்கமெய்துகின்றனர்.[36]

 

இடையாரபபீ எவ்வாறெனில்:-

 

  1. தெலுங்குதேயத்தரசனது போர்வீரர்கள், போர்க்களத்தைச் சிதைவுற்ற மாமிசம் எலும்பு இவற்றையுடையதும் ஓடுகின்ற அரத்த நதியுடையதும் ஊனீராற் சேறுடையதுமாகச் செய்கின்றனர்.

 

இங்ஙனம் பிற சுவைகட்கும் எடுத்துக்காட்டுக்கள் உணரற்பாலன.

 

வைதர்ப்பீ முதலியவியல்புக்கள் பொருட் சிறப்பைப் பற்றாது[37] சொற்றொடரினது வன்மைமென்மைகளையே பற்றி நிற்றலான் கைசிகி முதலிய விருத்திகளின் வேறுபட்டனவாம்.

 

சொற்றொடரினது மிகுமென்மையாவது:- இயைபற்ற மெல்லெழுத்துக்களானாகிய சொற்கட்டுடைமையாம்.

 

மிகுவன்மையாவது:- வல்லெழுத்துக்களானாகிய கடுஞ்சொற்கட்டுடைமையாம்.

 

மெல்லெழுத்துக்கள் இயைந்திருக்குமேல், அற்பமென்மையுடைமையாம்.

 

வல்லெழுத்துக்கள் கடுஞ்சொற்கட்டிலவாயின் அற்பவன்மையுடைமையாம்.

 

இனி இயல்புக்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்.

 

இயல்பென்பது குணமியைந்த சொற்புணர்ச்சியாம்; அவ்வியல்பு, வைதர்ப்பீ கௌபீ பாஞ்சாலீயென மூவகைத்தாம்.

 

  1. வன்றொடர் கடுஞ்சொற்கள் மிக நெடுந்தொகை யென்னுமிவையற்ற இயல்பை வைதர்ப்பீ என்ப. எவ்வாறெனில்:-

 

  1. காகதிவேந்தனது நற்குணங்களை முடியணியாக்கொண்ட மாதிர மகளிர், அவ்வேந்தனது மிகு புகழாஞ் சந்தனத்தைப் பூசிக்கொள்ளுகின்றனர்.

 

  1. வள்ளண்மையான் உலகனைத்தையும் மகிழ்விப்பவனும் காகதீய மரபிற்கு மதியமுமாகிய இவ்வேந்தன் வள்ளலாக விளங்குங்கால், இவ்வந்தணர்க்குழு கற்பகத் தருவைக் கருத்திற் கோடல் காமதேனுவைக் குறித்துப்பேசுதல் ஆகிய இச்செயலில் விருப்பற்றிருந்தனர்.

 

நெடுந்தொகை கடுஞ்சொற்கள் இவற்றுடனமைந்தினியதாகு மியல்பைக் கௌபீயென்ப. எவ்வாறெனில்:-

 

  1. வலிமிக்க புயதண்டத்தாற் பகவைரைத் துணித்த தெலுங்குதேயத்தரசன், பருமைமிக்க புவிப்பொறையைத் தாங்குகின்றான்.

 

  1. தெலுங்குதேயத்தரசனது[38] கடும்போர்முகம் கைகளான் வீசிய வாட்படைகளாலறுக்கப்பட்ட பகைவரது சிரங்களில் இராகுவென்னும் மயக்கத்தான் விரைந்தோடுங் கதிரவற்கு அபயமளித்தலிற் சிறந்த தானைப்பூழியை உடையதாக அமைந்தது. அங்கண் தெய்வமகளிரது முகமதியங்கள், மதயானைகளினது மத்தகங்கள் பிளக்கப்பட்டு அவற்றிற் சிதறிய முத்தக்குவியலாகும் உடுகணங்களாற் சூழப்பட்டனவாய் விளங்கின.

 

வைதர்ப்பீ கௌபீ யென்னுமிவ்விரண்டியல்புக்களும் ஒருசேர அமையுமியல்பைப் பாஞ்சாலீயென்ப.

 

எவ்வாறெனில்;-

 

  1. வென்றிசேர் காகதிவீரருத்திர வேந்தனது போர்ச்செலவான் விளைந்த நிலப்பூழித்திரள் வானத்தில் மிக்க நிலமயக்கைச் செய்யுங்கால் ஆகாயகங்கை, இடம்படுதடங்களையுடைய புவிக்கங்கை ஆயிற்று. மிக்க மறைந்தோடும்[39] கௌதம நதி பாதாள கங்கையாக அமைகின்றது.

 

  1. சலமார்த்திகண்டமென்னும் பெயரிய வேந்தனே! உமது வாட்படையாகும் படநாகம், பகைவரது உயிர்க்காற்றான் நாளும் பெருமகிழ்ச்சியெய்துகின்ற தென்னுமிது சாலப்பொருத்தமே. ஆயினும், அந்நாகம் பகைவரது புகழாகும் பாலினைப் பருகியதனால் வெண்ணிறமுடையதும் மூவுலகிலும் நிறைந்ததுமாகிய உமது மிகுபுகழ்த்திருவாம் அமுதத்தை வளர்க்கின்றதென்னுமிது மிக்க வியப்பேயாம்[40].

 

இனிக்கிடக்கை

 

சொற்கள் ஒன்றற்கொன்று சிறந்த நட்புடையவாய் அமைதல் கிடக்கையென்று கூறப்படும்.

 

எவ்வாறெனில்:-

 

  1. காகதிமரபை யணிப்படுத்துமணியும் வரையாக் கொடைப்புகழாற் கற்பதரு மேன்மையை கடந்தவனும் ஆழ்தரு வீரமுடையவனுமாகிய இவ்வள்ளலது புகழ் சரற்கால நிலவொளியைத் தாங்கி ஏதிலேந்திழையாரது கதுப்பில் ஆழநிகழும் வெண்மைச்சும்மையைப்[41] பெரிதுந் தாங்கி நிற்கின்றது.

 

இங்கண் தொடரமைப்பு சொன்மாற்றத்தைப் பொறாமையான் சொற்பொருத்தங்கட்கேற்ற கிடைக்கையாம்.

 

இனி திராட்சை முதலிய பாகங்கள்.

 

  1. பொருளாழமுடைமை பாகமெனப்படும். அம்மனக்கினியபாகம், வெளிப்படையான உட்கருத்தையுடைய திராட்சைப்பாகம் நாரிகேளபாகம் என்னும் இருதிறத்து.

 

முறையே இலக்கணமும் எடுத்துக்காட்டும்.

 

உள்ளும்புறமும் சுவைவிளங்குமது திராட்சைப்பாகமென்று கூறப்படும்.

 

எவ்வாறெனில்:-

 

  1. வாமலோசனை காமத்தாற் சிறிது விரிந்தனவும் புன்முறுவலான் இனிய நறுமணங்கமழ்வனவும் அற்பநாண் மடியுடையனவும் அன்பு நீரலை நிரம்பினவும் பலவழிப்பட்டனவும்[42] ஆயிரங்காமன்மாரைப் படைப்பனவுமாகிய கடைவிழிகளை, வீரருத்திர வேந்தனைச் சுற்றிலும் இறைக்கின்றாள்.

உண்மறைந்த சுவையெழுச்சியினையுடைய அது

நாரிகேளபாகம் ஆம்.

 

  1. காமலீலையின்[43] விலாசங்கட்கு முன்னரங்கமாக எழுச்சிதருமியௌவனப் பருவத்தையெய்தி உருக்கொடு காமக்கிளர்ச்சியாம் நடனவித்தார வனப்பை நாணத்திரையுள் நடிப்பவளும் துடிக்கும் புருவங்களையுடையளுமாகிய இத்தலைவியினது சொல்லொணாச்சிங்கார நடனமுறை, காகதி வேந்தன்பாலமைந்த குறிப்பின்றொடர்பான் விளக்கமிக்கவாய் மிளர்கின்றது; பாங்கியரே! இதனைப் பார்க்க.

 

இங்கட்பொருள், விரைவிற்புலனாகவில்லை.

 

இங்ஙனம் விடயம் அணியிவற்றின் றோற்றத்திலும் இத்தகைய பாகங்கள் அறியற்பாலன.

 

தேன்பாகம் பாற்பாகம் முதலிய பாகவேறுபாடுகளும்[44] நிகழ்ச்சிக்கேற்ப உய்த்துணரற்பாலன.

 

இனிக்காப்பியப்பிரிவுகள்

 

குறிப்புப் பொருட்டுச் சிறப்புண்மை சிறப்பின்மை விளக்கமின்மையென்னுமிவற்றாற் காப்பியம் முத்திறத்து.

 

குறிப்புப் பொருட்குச் சிறப்புண்மையில்[45] தலைக்காப்பியம் ஆம். அக்காப்பியம் துவனியென வழங்கப்படும். சிறப்பின்மையில் இடைக்காப்பியம் ஆம். அதைச் சிறப்பின்றியமையு குறிப்பினையுடையதெனக் கூறுப. குறிப்புப்பொருட்கு விளக்கமின்மையில் கடைக்காப்பியம் ஆம். அதைச் சித்திரம் என்ப.

 

துவனி யெவ்வாறெனில்:-

 

  1. தலைவ! இப்பொழுது குலவரைகளை ஏன் குறுவரைகளாகச் செய்கின்றீர்? ஆழிகளை யேன் ஆழ்மிலவாகச் செய்கின்றீர்? திசைத்தலைவரை யேன் வறியராகச் செய்கின்றீர்? என்றிங்ஙனம் பாங்குறைவோர் அடிதொறும் கூறும் வார்த்தைகளனைத்தையும் புறக்கணித்த பதுமத்தோன், திருவளர் வீரருத்திரவேந்தனை அறநோக்கிக் குணநிலைக்களனாய்ப்படைத்தனர்.

 

இங்கண் பிரதாபருத்திரற்குக் குலவரைகளைக் கடந்த உயர்வும், ஆழ்கடலைக் கடந்த ஆழமும், மாதிரமன்னரை மீறிய தலைமையும், குறிப்பிடப்படுகின்றன. அங்ஙனம் காகதிவேந்தனது படைப்பின் பெருமை, குலவரை கடல் திசைக்காவலர் இவரது படைப்பு முயற்சியையும் கடந்து யாவற்றினும் வேறுபட்டதாம் என்பதும் குறிப்பிடப்படுகின்றது.

 

சிறப்பின்றியமையுங் குறிப்பையுடையது எவ்வாறெனில்:-

 

  1. புவியைப்புரக்கும் வீரருத்திரநிருபன், சிறப்பெய்திப்பரவும் வீரச்செல்வங்களாற் றிசைவெளியாவையுந் தன்வயமாக்கி அரியாதனத் தமருங்கால், கொலுக்கூடத்தையெய்திய வேந்தர் இக்காகதிவேந்தனது பார்வை அருள் நிறைவுறும் வண்ணம் அவ்வச் செயல்களை அவ்வண்ணம் வெளியிட்டனர்.

 

இங்கண் பட்டாபிஷேக மகோற்சவத்தையெய்திய பிரதாபருத்திரப் பேரரசரது முன்னிலையில் புகலிரந்து நிற்கும் அரசரது அத்தகைய இரங்கற்பனுவல், மீண்டும் மீண்டும் வணக்கம் முதலியன இவற்றின் குறிப்பு, அவ்வச்செயல்களை அவ்வண்ணம் வெளியிட்டனர் என்னுமிச் சொற்பொருளைக் கடவாதிருத்தலான் இது சிறப்பின்றியமையுங் குறிப்பையுடையதாம்.

 

சித்திரம், சொற்சித்திரம் பொருட்சித்திரம் சொற்பொருட்சித்திரம் என மூவகைத்து.

 

அவற்றுள் சொற்சித்திரம் எவ்வாறெனில்:-

 

  1. தலைவனியல், 64ஆம் சுலோகத்தைக் காண்க.

 

பொருட்சித்திரம் எவ்வாறெனில்:-

 

  1. தலைவனியல், 65ஆம் சுலோகத்தைக் காண்க.

 

சொற்பொருட்சித்திரம் எவ்வாறெனில்:-

 

  1. கல்விக்கடலும் உலகிற்கொருமங்கலமும் பகைநலம் வென்றவனும் புரத்தலில் உறக்கமிலனும் கொற்றக்குறியைக் கொண்டவனும் குணநிறைவுற்றவனுமாகிய பிரதாபருத்திரன்பால் புவிமகள் இல்லக்கிழத்தியென்ன இன்புறுகின்றாள்.

 

இந்தச்சுலோகத்தில் வழியெதுகை உவமை இவற்றாற் சித்திரம் ஆம்.

 

இனி ஒலிப்பொருட்பிரிவுகள் விளக்கப்படுகின்றன.

 

இலக்கணை மூலமாகிய பொருணோக்கா ஒலியும், அபிதைமூலமாகிய பிறிதொன்றை[46] நோக்கும் பொருளின் கட்டோன்று மொலியுமென முதலில் ஒலிப்பொருள் இருதிறத்து.

 

வேற்றுப்பொருளைப்[47] பற்றியதும் பொருளறவே யொழிந்ததுமென[48] இருதிறத்தாய பொருணோக்காஒலி சொற்றொடரையெய்தியதும் சொல்லையெய்தியதும் எனத் தனித்தனி யிறுதிறத்தாய் நால்வகைத்து.

 

piRithonRaiபிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் டோன்றுமொலி, அறியத்தகு[49] முறையொலியும் அறியத்தகாமுறையொலியுமென இருவகைத்து.

 

அவற்றுள், அறியத்தகுமுறையொலி, சொல்லாற்றன்மூலம் பொருளாற்றன்மூலம் சொற்பொருளாற்றன் மூலமென மூவகைத்து. அவற்றுள் பொருள்வடிவானும் அணிவடிவானுமிரு திறத்த சொல்லாற்றன்மூலம், சொற்றொடரையெய்தியதும், சொல்லையெய்தியதுமென நால்வகைத்தாம்.

 

பொருளாற்றன்மூலமாகிய அறியத்தகுமுறை யொலி, பொருட்கு[50] இயல்பானிகழுந் தன்மையுண்மையானும், கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறுந்தன்மையுண்மையானும், கவிகளாற் பிணைக்கப்பட்ட சொற்களாற் பெறுந்தன்மையுண்மையானும் முத்திறத்து; அம்முத்திறத்தவொலிகள், பொருள்வடிவானும் அணிவடிவானும் தனித்தனியிருதிறத்தவாய் அறுதிறத்து; அவ்வறுதிறத்த வொலிகள், குறிக்கப்படுந்தன்மையானும் குறிக்குந்தன்மையானும் தனித்தனி யிருதிறத்தவாய் பன்னிருதிறத்தவாம். அப்பன்னிருவகைத்த ஒலி, சந்தர்ப்பத்தையெய்தலானும் சொற்றொடரையெய்தலானும் சொல்லையெய்தலானும் தனித்தனி முத்திறத்தவாய் பொருளாற்றன் மூலமாகிய ஒலிப்பொருள், முப்பத்தாறு பேதங்களையெய்திய தொடரொலிப்[51] பொருள்களாம்.

 

சொற்பொருளாற்றன்மூலம் சொற்றொடரையெய்து மாற்றான் ஒருபடித்தே; இங்ஙனம் அறியத்தகுமுறையொலிப்பொருட்கு நாற்பத்தொரு வேறுபாடுகள்[52] உள்ளன.

 

அறியத்தகாமுறையொலி, சுவைமுதலவொலிப்பொருளாம். அது சந்தர்ப்பம் சொற்றொடர் சொல் சொல்லினொருகூறு அமைப்பு எழுத்து என்னுமிவற்றை யெய்து மாற்றான் அறுவகைத்து.

 

இங்ஙனம் பிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் புலனாகுமொலிப்பொருட்கு நாற்பத்தேழு வேறுபாடுகள் உள்ளன. இவற்றைப் பொருணோக்காவொலிப்பொருளின் வேறுபாடுகள் நான்குடன் கூட்ட ஒலிப்பொருட்கு முதலில் ஐம்பத்தொரு வேறுபாடுகள் கலப்பிலவாய் அமைவனவாம்.

 

அவ்வேறுபாடுகட்கு தனித்தனி ஒவ்வொன்றற்கு ஒவ்வொன்றோடு இயைபு நிகழ்ந்துழி முதல் வேறுபாட்டிற்கு ஐம்பத்தொரு வேறுபாடுகள் நிகழும். இரண்டாவதற்கு ஐம்பது வேறுபாடுகள்; மூன்றாவதற்கு நாற்பத்தொன்பது வேறுபாடுகள்; இம்முறை பற்றி மேன்மேலவற்றிற்கு ஒவ்வொரு வேறுபாடு நீங்கியவழி ஆயிரத்து முந்நூற்றிருபத்தாறு கலப்பு வேறுபாடுகள் நிகழ்வனவாம். பொருள்நோக்காவொலிப்பொருள்கள் பிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் புலனாகுமொலிப் பொருள்களோடியைந்துழிநிகழும் வேறுபாடுகள், பிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் புலனாகுமொலிப்பொருள்கள் பொருணோக்காவொலிப்பொருளோடியைந்துழிநிகழும் வேறுபாடுகளின் கண்ணவாய் உட்பட்டடங்குமாகலின் அவற்றின் வேறுபடா. இம்முறையேபற்றி பொருளொலிக்கு அணிஒலியினியைபு பற்றி நிகழும் வேறுபாடும், அணியொலிக்கு பொருளொலியினதியைபின் தனிப்பட்டதன்று. என்னுமிதனான் கீழ்க்கழது மேன்மேல தோடியைந்துழி ஒவ்வொறு வேறுபாட்டின் குறைவு அறியற்பாலது. அத்தகைய கலப்பொலியை மூவகைத்தாகிய[53] கலவையோடும் ஒருபடித்தாகிய சேர்வையோடும்[54] மீண்டும் தனித்தனி நால்வகைத்தாய்ப் புணர்த்தலில் ஐயாயிரத்து முன்னூற்றுநான்கு வேறுபாடுகள் நிகழ்வனவாம்.

 

“சுத்தவேறுபாடுகள் மதிக்கணைகளாம்.[55] கலப்பு வேறுபாடுகள் பருவங்கண் அங்கிமதியாம்.[56] சேர்வை கலவை யென்னுமிவற்றின் புணர்ச்சியான் நிகழ்வன கடல்வான் அங்கிவானியாம்”.[57]

 

அவற்றுள் கலப்பற்ற ஐம்பத்தொரு வேறுபாடுகளின் பெயர்கள் இங்கட் கூறப்படுகின்றன.

 

  • சொல்லையெய்தி வேற்றுப்பொருளைப்பற்றிய பொருணோக்காவொலிப்பொருள் (க)
  • சொற்றொடரையெய்தி வேற்றுப்பொருளைப் பற்றிய பொருணோக்காவொலிப்பொருள் (உ)
  • சொல்லையெய்தி யறவே ஒழிந்த பொருணோக்காவொலிப்பொருள் (ங)
  • சொற்றொடரையெய்தியறவே ஒழிந்த பொருணோக்காவொலிப்பொருள் (ச)
  • சொல்லையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறைப்பொருளொலி (ரு)
  • சொல்லையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறையணியொலி (சா)
  • சொற்றொடரையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறைப் பொருளொலி (எ)
  • சொற்றொடரையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறையணிஒலி (அ)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (கூ)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (க0)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (கக)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (கஉ)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (கங)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (கச)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (கரு)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (கசா)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (கஎ)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (கஅ)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ககூ)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (உ0)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (உக)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (உஉ)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (உங)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (உச)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (உரு)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (உசா)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (உஎ)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் அணியொலி (உஅ)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (உகூ)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (ங0)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ஙக)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (ஙஉ)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெரும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (ஙங)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (ஙச)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ஙரு)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (ஙசா)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (ஙஎ)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (ஙஅ)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ஙகூ)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (ச0)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (சக)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (சஉ)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (சங)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (சச)
  • இடனெய்தி அறியத்தகாமுறைக்குறிப்பாகிய சுவையாதியவொலி (சரு)
  • சொற்றொடரையெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (சசா)
  • சொல்லையெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (சஎ)
  • சொல்லின் ஒரு கூறெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (சஅ)
  • அமைப்பையெய்தி அறியத்தகா முறைக்குறிப்பாகிய சுவையாதியவொலி (சகூ)
  • எழுத்தையெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (ரு0)
  • சொற்றொடரையெய்தி சொற்பொருளாற்றலடியாகிய சுவையாதியவொலி (ருக)

அவற்றுள் சிலவற்றை யெடுத்துக்காட்டுவோம். வேற்றுப்பொருளை யெய்திய பொருணோக்கா ஒலிப்பொருள் எவ்வாறெனில்.

  1. எமது சிரங்களாகிய நீங்கள் உயர்வை ஏன் விரும்புகின்றீர்? என்று பிரதாபருத்திரனது பகையரசர்கள் அவ்வேந்தனை வணங்கினர்.

 

இங்கண் எமது[58] என்னுஞ் சொல் “பல்லாற்றானும் எளிமைக்கு நிலைக்களனாகிய யாம்” என்னும் பொருளினது; “இத்தகைய எங்களைச் சார்ந்தவர் நீங்கள்” என்னும் வேற்றுப்பொருளை யெய்தியமையாற் பொருணோக்காத் தன்மையாம்.

 

உரிய பொருளறவேயொழிந்த ஒலிப்பொருள் எவ்வாறெனில்:

 

  1. காகதிவேந்தனது வெண்ணிறத்த புகழ்ப்பெருக்கம், வெண்மைபூசிய விண்ணையுடையவாய் வெண்மைநிறைந்த எல்லாத்திசை முடிவுடையவாய் ஆடற்புறிகின்றது. இங்கண் வெண்மை[59] பூசிய விண்ணையுடையவாய் என்புழி அறவே பொருளொழிந்தமை காண்க; இம்முறையே பற்றி, சொற்றொடரையெய்தியமையானும் எடுத்துக்காட்டு உய்த்துணரற்பாலது.

இனி, பொருளாற்றன் மூலமாகிய பொருளாற் பொருளொலி எவ்வாறெனில்:-

 

  1. காகதிவேந்தனுடைய பகைமனைவியர், பருவங்களையின்றி வருடங்களையும் வளர்பிறைப்பக்கங்களையின்றி மாதங்களையும் இரவுகளையின்றி நாட்களையும் விரும்புகின்றனர்.

இங்கண் பருவம் முதலவற்றிற்குக் காமநோய் விளைக்குந்தன்மையுண்மையான் அவற்றின் இன்மை, பகைமனைவியரால் விரும்பப்படுகின்றதென்பது போதருகின்றது. அதனான் அவர்க்குக் காதலன் பிரிவு நிகழ்ந்ததென்னும் பொருள் குறிப்பிடப்படுகின்றது. இப்பொருளால் “பிரதாபருத்திரனுடைய எல்லாப் பகைவரும் இறந்துபட்டனர்” என்னும் ஒலிப்பொருள் உரிய பொருளினும் மேம்பாடுற்ற பொருளாம். அங்ஙனம் காதலன் பிரிவாற் கலக்கமெய்திய பகைமனைவியர் சிலவருடங்களை உயிர்த்திருக்குமெண்ணத்தால் முதலிற் பருவங்களுடைய இன்மையை விரும்புகின்றனர்; பின்னர் அவற்றையுங் கடத்தற் காற்றலராய்ச் சில மாதங்களில் உயிரைத் தரித்தற்கு முயன்று நிலவுடைப் பக்கங்களது அழிவை விரும்புகின்றனர்; பின்னர் மாதங்களையும் கழித்தற்கியலாராய்ச் சில நாட்களில் உயிர்த்திருக்கு நசையால் இரவுகளது படைப்பின்மையை விரும்புகின்றனர்; என்னும் பல பொருட்கள், காதலன் பிரிவென்னுமிப்பொருளால் ஒலிக்கின்றன.

பொருளால் அணிஒலி எவ்வாறெனில்:-

  1. காகதிவீரருத்திரனது உலகம்பரவும் மிகுபுகழைப் பார்த்து, சிவபிரான் அதிற் றங்குதற்கும் திருமகள் கொழுநன் அதிற் பள்ளிகோடற்கும் விரும்புகின்றனர்; வானுறைமுனிவரர் அதில் நீராடச் செல்லுகின்றனர்; கடல்கள் மிக்கக் கிளர்தரமுயல்கின்றன; அப்பிரமையும் நாணக்குறிப்புடன் மெள்ளெனப் பரிசித்தற்கு விரும்புகின்றது.

இங்கண் சிவபிரானார்க்குக்[60] கைலாயமயக்கமும் திருமகள் கொழுநற்குப் பாற்கடன் மயக்கமும் என்னும் மயக்கவணி ஒலிக்கின்றது. அணியாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. அமர்க்கண் பிரதாபருத்திரனது வாட்படை, அப்பொழுதே வழிந்தொழுகு மரத்தங்களாற் செந்நிறத்தவாய் காளிதேவியினது சினத்தாற் சிவந்த கடைவிழியினது பருமித்ததை யெய்தியது.

இங்கண் எய்தியதென்னும் காட்சியணியால்,[61] “எல்லாப்பகைவரும் இறைப்பொழுதிலழிவெய்தினர்” என்னும் பொருள் ஒலிக்கின்றது.

அணியாலணியொலி யெவ்வாறெனில்:-

  1. காகதீயவேந்தனது புகழ்ப்புண்டரீகம் அலர் தருங்கால், பச்சிலைத் தருவன்ன நீனிறத்தனவாம் அம்மலரில் வண்டினத்தாடலைப் புரிகின்றது.

இங்கண் புகழ் வெண்டாமரையில் வானம் வண்டினத்தாடலைப் புரிகின்றதென்னுங்காட்சியணியான் ஆதார ஆதேயங்கட்குப் பொருத்தமின்மை வடிவாகிய பெருமையணி ஒலிக்கின்றது. ஆதாரமாகும் புகழ் வெண்டாமரைக்கு இடப்பரப்பும், வானத்திற்கு வண்டினத்துவமை கூறலாற் சிறுமையும் போதுருகின்றன. இவற்றில் இயல்பானிகழும் பொருளாற்றன் மூலமுடைமையாம்.

இனி கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றன் மூலமாகிய பொருளாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. உலகிற் சிறப்பெய்தியதும் சாரணராலெப்பொழுதும் பாடப்பட்டதுமாகிய காகதிவேந்தனது புகழைக் கிரவுஞ்சமலை,[62] கந்தவேள் கணைபயிலுங்கால் அவ்வேளின் கணையான் விளைந்த புழையே தலைக்கீடாகுஞ் செவிப்புழை வழியால் அடிதொறுங் கேட்டு மிக்கவியப்பான் அசைவற்ற உடலையுடையவனாய் அமைகின்றது.

இங்கண் பிரதாபருத்திரனுடைய புகழ் நிலைத்திணைப் பொருள்கட்கும் வியப்பையளிக்கின்றதென்னும் பொருள் ஒலிக்கின்றது.

பொருளான் அணியொலி யெவ்வாறெனில்;_

  1. வீரருத்திரவேந்தனது போர்வீரர்கள் போரில் வெற்றித் திருவாலணைவுற அவர்களை முண்மரங்கள் கண்ணுற்று காட்டிற் பகைமனை[63]க்குழலைப் பற்றியிழுக்கின்றன.

இங்கண் வீரருத்திரனது வெற்றித் திருவாற்றழுவிய போர்வீரரைப் பார்த்து முண்மரங்கள் காமவேட்கையெய்தியாங்கு பகைமனைக்குழல்களைப் பற்றியிழுக்கின்றன போல; என்னுந் தற்குறிப்பேற்றவணி யொலிக்கின்றது. அணியாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. மனக்கினியகாதலன் அணிமைக்கணெய்துங்கால் மனவலி சிதைந்த மடந்தையினது நாணம், தன்னையும் அத்தலைவன் பற்றுமென்னு மச்சத்தாற்போல பாங்கியருடன் விரைந்தோடியது.

இங்கண் தற்குறிப்பேற்றத்தாற் றழுவலென்னும் பொருள் ஒலிக்கின்றது. அணியால்    அணியொலி யெவ்வாறெனில்:-

  1. காகதிவேந்தனது பகைவர், அடவிபால் அடைக்கலத்தையிரப்ப அவ்வடவி, கிளைகளது அசைவால் அப்பகைவரைக்காத்தலை உடன்படவில்லை போலாம்.

இங்கண் உடன்படவில்லைபோலாம் என்னுந் தற்குறிப்பேற்றத்தால் பிரதாபருத்திரனது பகைவரைக்காத்தற்குக் காடும் அஞ்சியது போலாம் என்னுந் தற்குறிப்பேற்றம் ஒலிக்கின்றது. கவிபிணைத்த கூறுவாரது ஆழமுடைச்சொற்களாற் பெறும் பொருளாற்றன் மூலமாகிய பொருளாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. பெருமாட்டி[64] யெத்தகையளாயினும் ஆக; மக்கட்டலைவ! மதியத்தைக் காத்தருள வேண்டும்; ஏனெனில் அம்மதியத்தை மாசுபடுத்தற்பொருட்டு அப்பெருமாட்டி, கடைவிழியாகு முற்கைக்குக் கட்டளையளித்துனள்.

இங்கண் பிரிவாற்றாது வருந்திய பெருமாட்டி நிலவைப் பொறுக்கவொண்ணாது சினத்தாலெரிதருங் கடைக்கணுற்கையான் மதியத்தை மாசுபடுத்துகின்றாள்; அம்மதியம் காத்தற்குரியவன்; என்னுமிப்பொருளால், இனி அவள் உயிரைத் தரித்தற்காற்றாளாகலின் இப்பொழுதே நீவிர் அவளைக் கூடல் வேண்டும். என்னும் பொருள் ஒலிக்கின்றது.

பொருளான் அணிக்குறிப்பு எவ்வாறெனில்:-

  1. ஓ வெளிறிய[65] எல்லா உறுப்புக்களையுடையனாய் உலாவும் நீயாவன்? யான் வீரருத்திரவேந்தனது புகழ்; உனது பக்கலில் விளங்கும் இனிய உடலுடைய இவன் யாவன்? அவ்வேந்தனது வீரம்; எற்குத்துணைவனாவன்; மறைத்தல்[66] வேண்டாம்; உங்களது உருவம் அலர்தரும் ஆம்பல்களானும், பங்கயங்களானும் விளக்கப்பட்டது; தண்கதிர்ச்செல்வ! செங்கதிர்ச்செல்வ! உங்கள்வரவு நல்லதாக; எல்லை வெற்பாகிய யான் இருள் நீக்கப்பெற்றேன்.

 

இங்கண் பிரதாபருத்திரவேந்தனது புகழ், வீரம் இவற்றிற்கு மதிகதிர் இவர்களுடைய ஒப்புமைத் தோற்றத்தான் உவமையணி யொலிக்கின்றது.

அணியாலணியொலி யெவ்வாறெனில்:-

  1. பாங்கியரே! பாருங்கள் தலைவியினது நிறைவுறுமனவலி, மிகவெழுச்சியெய்தியும் அரசன் வந்துழி நிகழ்ந்த பரபரப்பான் விளைந்த அச்சத்தை யெய்தியாங்கு விரைந்தோடுகின்றது.

இங்கண் தற்குறிப்பேற்றத்தான் காதலனது கோருதலின்றியே மங்கையின் மனம், கனிவுற்றதென்னும் பிறிதாராய்ச்சியணி ஒலிக்கின்றது.[67]

அணியாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. தலைவ! மனைவிமார் சூழ்தரவிருக்கும் உம்மைச் சேவித்தற்குரிய அமயம் கிடைக்கப்பெறாமையின், உமது கீர்த்தியைச் சேவிக்கின்றாள்போல இந்த யௌவன மடந்தை, எல்லா உறுப்புக்களும் வெளிறுபட விளங்குகின்றாள்.

இங்கண் சேவிக்கின்றாள் போல என்னுந் தற்குறிப்பேற்றத்தான் முற்றிலுங் கோடற்குரியவன் என்னும் பொருள் ஒலிக்கின்றது.

சந்தர்ப்பம் முதலியவற்றை யெய்தியமையான் எடுத்துக்காட்டுக்கள் நேர்ந்துழிக்காண்க; விரிவஞ்சியிங்குக்கூறப்பட்டில.[68]

இனிச் சொல்லாற்றன் மூலஒலிப்பொருள்; அஃதும் பொருண்மூலத்தானும் அணிமூலத்தானும் என இருதிறத்து; அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.

“அணியும் பொருளுமே[69] சொற்களான் விளங்குங்கால் அவை சிறப்பு வகையாற் சொல்லாற்றன் மூலத்தானிகழ்ந்தன வென்றறியற்பாலன” என்று.

அவற்றுள்

அணியொலி யெவ்வாறெனில்:-

  1. இவன் உண்மையாகவே வேந்தன்[70]; நீயோ சியாமை[71]; உங்களிருவர்க்கும் கூட்டம் நிகழ்ந்தது; அங்ஙனமாக, பிரதோட[72] நிகழ்ச்சி காணப்பட்டிலதே! இது மிக்க வியப்பாம்.

 

இங்கண் யௌவனப்பெண் அரசன் என்னும் பொருளைக் கூறும் சியாமை வேந்தன் என்னுஞ் சொற்களான் இரவு, மதி, இவற்றின் றோற்றத்தான் உவமையணி ஒலிக்கின்றது.

 

பொருளொலி யெவ்வாறெனில்:-

 

  1. காட்டில் வசித்து வருந்திய அரசர்களே! நண்பனாகிய யான் கூறுவதைக் கேளுங்கள்; இப்பொழுது புரவலன் றிருவடியில் வழிபாடு செய்யுங்கள்.

 

இங்கண் புரவலனடி வழிபாடென்னுஞ் சொல்லினது ஆற்றலான் ஈண்டுத் தலைவனாக் கொள்ளப்பட்ட பிரதாபருத்திரனது தோற்றம், சந்தர்ப்பத்தானிகழ்கின்றது. அதனால் பிரதாபருத்திரனது வழிபாடு செய்யக்கடவது; ஏன் காட்டிற்றங்கி வருந்துகின்றீர்? என்னும் பொருள் ஒலிக்கின்றது. சொற்பொருளாற்றன் மூலத்தொலி யெவ்வாறெனில்:-

 

  1. இவ்வேந்தன்[73] (* ) எழுவனைய வாகுவிற் பெருமித மெய்தும் அற்புதப்படையுடையவன்[74]. ஏந்தலீர்![75] எல்லவருந் தன்பக்கச்[76] செருக்கை விட்டொழியுங்கள்.

 

இங்கண் ஏந்தலீர், தன்பக்கச் செருக்கைவிட்டொழியுங்கள், இவ்வேந்தன், என்னுமிவற்றில் சொல்லாற்றன் மூலமாந்தன்மையும், எழுவனையவாகுவிற்கு பெருமிதமெய்தும் அற்புதப்படையவன் என்னுமிடத்துப் பொருளாற்றன் மூலமாந்தன்மையும் ஆம்.

 

அறியத்தகா முறைக்குறிப்பாகும் சுவையாதிய ஒலி. அங்ஙனமே சிருங்காரதிலகத்திற் கூறப்பட்டுள்ளது.

 

“சுவைக்குறிப்பு, அதன் ஆபாசம், குறிப்பினொழிபு,

என்னுமிவை முதலியனவும்[77], அறியத்தகாமு

றைக்குறிப்பும், அணிபெறற்குரியவாக[78]லான்

சுவையாதிய அணியின் வேறுபட்டனவாம்” என்று

 

சுவைக்குறிப்பு முதலியவற்றின் எடுத்துக்காட்டுக்கள், அவற்றின் இலக்கணத்தை விளக்கும் சுவையியற்கட் கூறப்படும்.

 

குறிப்புச் சிறப்பிலா எண் வகைக் காப்பியங்கள் விளக்கப்படுகின்றன.

 

குறிப்புச் சிறப்பிலாக் காப்பியம் இடைக்காப்பியம் ஆம்; அது எண்வகைத்து.

 

அங்ஙனமே காப்பியப் பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.

 

“குறிப்பு மறையாதது, பிறிதொன்றுக்கு உறுப்பாய் அமைவது,

பொருண்முடிவளிப்பது, விளக்கமற்றது, ஐயப்பட்டது, ஒத்த

சிறப்புடையது, ஓசைமாற்றத்தாற்றழுவியது, வனப்பற்றது” என்று.

 

மறைந்தகுறிப்பு(78அ)டைக்காப்பியமே மங்கையின் கொங்கைபோல இன்பம் விளைக்குமாகலான் குறிப்பு மறையாதது இடைக்காப்பியம் ஆம்.

 

எவ்வாறெனில்:-

 

  1. உமது உயர்வை வன்னிக்கப்புகின் மலைகள் தாழ்த்தப்பட்டனவாய்ச் சினக்கின்றன; ஆழமுடைமையைக் கூறுங்கால் கடல்கள் மேடாயினவாய்க் கலக்கமெய்துகின்றன; ஆகலின் உம்மைவன்னித்தற்கு அஞ்சுகின்றேன்; குணமணிக்குன்றமே! வீரருத்திரவேந்தே! யான் அகத்தியனாக உமது பக்கலில் இருப்பனேல்;[79]

இங்கண் யான் அகத்தியனாக இருப்பனேல் என்றதனான் மலை கடலிவற்றிற்கஞ்சேன் என்னுங்குறிப்பு மறையாததாம்.

பிறிதொன்றற்கு அங்கமாய் அமைவது.

சுவை முதலியவற்றிற்கு சுவை முதலியன உறுப்புக்களாய் அமையுமவையும், சிறப்பில் குறிப்புடையவாம்.

எவ்வாறெனில்:-

  1. காகதிவேந்தனாகுங் காமனால் நடுக்கமுற்ற[80] அரசர்கள், நாணம் மானம் இவையொழிந்தும் குறன்மாற்றம் வியர்வை யிவை தோன்றியும் மெய்நடுக்கம் பொறிமயக்கம் மனமயக்கம் இவற்றையெய்தியும் கண்ணீர்பெருக வருந்தியும் அச்சமகளிராற் றழுவப்பட்டாராய் மலைக்குகைகளில் மக்கள் நடமாட்டமற்ற ஒன்றை யெய்துகின்றனர்.

 

இங்கண் அச்சச்சுவைக்கு உவகைச்சுவை உறுப்பாய் அமைகின்றது.

 

பொருண் முடிவு எவ்வாறெனில்:-

 

  1. காகதிவேந்தனது கொடிய வாட்படைக்கருமுகில், தாரையால்[81] பகைவரது கொடிய வீரநெருப்பை யவிக்கின்றது.

 

இங்கண் நீர்ப்பெருக்கு குறிப்புப்பொருளாம்; வாட்படையாகுங் கருமுகில் என்னும் உரிய பொருளாகிய உருவக்தினது பொருண்முடிவைச் செய்த தென்னும்மிதனால் இது சிறப்பிலாக் குறிப்புப்பொருளையுடையது.

 

விளக்கமில் குறிப்பு எவ்வாறெனில்:-

 

  1. வீரருத்திரனது எந்தவாட்படை, பகைவரது அரத்த நதியைப்பருகி புகழ்க் கங்கையைப் படைக்கின்றதோ அத்தகைய வாட்படையின் பெருமை தடைப்படுத்தவியலாது சொல்லணாவண்ணம் நிகழ்கின்றது.

 

இங்கண் வாட்படைக்குச் சன்னுமுனிவரினும்[82] மேம்பாடு கூறியிருத்தலான் மிக்க விளக்கமில்லா வேற்றுமையணி குறிப்பிற் போதரும். ஐயப்பட்ட தெவ்வாறெனில்:

 

  1. காகதிவேந்தனது காதல் நிரம்பிய பார்வை, காதலியினது பருத்த இரண்டு தனங்களிலும் செங்குவளை மாலையென்னச் சேர்ந்தது.

 

இங்கண் இச்சொற்றொடரின் பொருண்முடிவு தழுவலின் விருப்பத்திலேயோ அல்லது தனங்களைப் பார்க்கு மவ்வளவிலேயோ என்பது ஐயம் ஆம்.

 

ஒத்தச் சிறப்புடைமை யெவ்வாறெனில்:-

 

  1. அரசர்களே! பிரதாபருத்திரனுடைய திருவடித் தாமரைகளைச் சேவியுங்கள்; இன்றேல், இவரது தெளிந்த அத்தகைய மனம் கலக்கமெய்தும்.

 

பிரதாபருத்திரனுடைய பாதசேவையைச் செய்யாதிருப்பின் அப்பொழுது நகரில் வசித்தலரிதென்னுங் குறிப்புப் பொருட்கும், வாச்சியப்பொருட்கும் சிறப்புடைமை சமம் ஆம்.

வனப்பிலாமை யெவ்வாறெனில்:-

 

  1. வேந்தனது காட்சியால் ஏக சிலைநகர மடந்தையர்க்கு விளைந்த மகிழ்ச்சியைக் கேட்டு இருமுதுகுரவர்க்கடங்கிய கன்னியின் முகம் கருத்தது.

 

இங்கண் அரசனது காட்சியான் விளைந்த மகிழ்ச்சியை உய்த்துணருமொருவளுடைய முகம் கருத்தது என்னும் உரிய பொருட்கே வனப்புடைமையாம். பெற்றோர்க்கடங்கிய யான் அரசனைப் பார்க்கச் செல்லவில்லையே! என்னும் குறிப்புப் பொருட்கு வனப்பின்மையாம்.

ஓசை மாற்றத்தால் விளையும் பொருள் வேறுபாடும் சிறப்பிலாக் குறிப்பினையுடையதே. எவ்வாறெனில்:-

  1. அன்புடைத்தோழீ! கூறுக; குணங்களின் மேன்மையை உணர்ந்த அவ்வரசன், எந்த என்னை யின்புறுத்துகின்றாரோ; அந்த என்னிலும் நிலமகள் திருமகள் நாமகள் என்னும் இவர் சிறந்தவரோ?

இங்கண் நிலமகள் என்னிற் சிறந்தவளா? என்னும் ஓசைமாற்றத்தைக் கற்பித்தலான் என்னிற் சிறந்தவன் இல்லையென்னும் பொருள் குறிப்பிற் புலனாகின்றது.

சித்திரகாப்பியம், சொல்லணி பொருளணி இவற்றின் சித்திரங்களால் பலதிறப்பட்டது; அவ்வணிகளின் விளக்கம், அணியியலின்கட் கூறப்படும்.

பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இவற்றின் விளக்கம்.

இனி பெருங்காப்பியம் முதலிய நூல்கள் கூறப்படுகின்றன.

68, 69, 70. நகர் கடல் மலை பருவகாலம் மதியெழுச்சி கதிரெழுச்சி பொழில்விளையாட்டு நீர்விளையாட்டு மதுவுண்டல் கூடல் பிரிவு மணம் மக்கட்பேறு மந்திராலோசனை சூதாடல் போர்ச்செலவு போர்புரிதல் தலைவனது வெற்றி யென்னு மிவை யெங்கண் வன்னிக்கப்படுகின்றனவோ; அது பெருங்காப்பியம் என்று கூறப்படும். இப்பதினெட்டுப்பொருள்களுட் சில குறைந்திருப்பினும், பெருங்காப்பியமென்றே கொள்ளப்படும்.

ஆக காப்பியம், கத்தியகாப்பியம் பத்தியகாப்பியம் உபயகாப்பியம் என முத்திறத்து.[83]

சீரியலற்ற சொற்குழு கத்தியம் ஆம்.[84]

70½.  நான்கு அடிகளுடன் கூடியது பத்தியம் ஆம்.

கத்தியகாப்பியம் காதம்பரீ முதலியன.

பத்தியகாப்பியம், இரகுவம்சம் முதலியன.

  1. சருக்கப்பிணிப்பற்றது, உபகாப்பியம் என்று கூறப்படும்.

சருக்கப்பிணிப்பற்றது, சூரியசதக முதலியன.

  1. கத்தியம், பத்தியம் என்னுமிவையிரண்டும் அமைந்த காப்பியத்தைச் சம்பூ எனக் கூறுப. வத்திரம் அபரவத்திரம் என்னும் விருத்தங்களும் உச்சுவாசம் எனப்பெயரிய சருக்கபேதங்களும் எங்கட் கூறப்படுகின்றனவோ; அதனை ஆக்கியாயிகை என்ப.

 

வத்திரம் அபரவத்திரம் என்னும் பெயரிய விருத்தங்கள் அமைந்தும் உச்சுவாசத்தாற் பிரிக்கப்பட்டும் உள்ள நூல்கள், ஆக்கியாயிகைகளாம்; அவை ஹருஷசரிதம் முதலியன.

சிறுபிரபந்தங்களின் விளக்கம்.

இனிச் சிறுபிரபந்தங்கள் விளக்கப்படுகின்றன.

73, 74. யாதாமொருதாளத்துடனும், கத்தியம் பத்தியம் இவற்றுடனும் கூடியதும், ஜய எனத்தொடங்கபெறுவதும், மாலினீ முதலிய விருத்தங்களானும் எதுகைகளானும் வனப்புற்றதும், எட்டு வேற்றுமைகளும் அமைந்ததுமாகிய நூல், உதாகரணம் எனப்பெயரிதாம்.

எந்த நூலில் முதற்கண் “ஜய” எனத்தொடங்கி மாலீனீ முதலிய வனப்புறும் பத்தியம் இயற்றப்படுகின்றதோ; பின்னர், தாளமுடனும் எதுகைகளுடனும் “மேலும்” எனத் தொடங்கி யொவ்வொரு வேற்றுமையில் எட்டு வாக்கியங்களும், பின்னர் வேற்றுமை யாபாசங்களும் கூறப்படுகின்றனவோ; அந்நூல் உதாகரணம் என்பதாம்.

  1. விளிவேற்றுமை நிறைந்ததும், முதற்கட்பத்தியம் அமைந்ததும், சொற்கள் அந்தாதிமுறையிலமையப்பெற்றதுமாகிய நூல் “சக்கிரவாளம்” என்பதாம்.

76, 77. எட்டுவாக்கியங்களானாதல், நான்குவாக்கியங்களானாதல் கந்தமென்னும்[85] பெயரிய கதைப்பகுதிகளமைந்தும், கந்தந்தொறும் தனித்தனி வாகியத்தினமைப்பையுடையதும், கடவுள் அரசன் இவர்களைப் பற்றியதும் எங்கணும் “தேவ” என்னுஞ் சொற்றொடக்கத்ததும், ஆகிய நூல் “போகாவளீ”[86] என்பதாம்.

  1. தலைவனது வெற்றிக்கொடி அவனது குலத்தின் வெற்றிக்குறி யிவற்றை வன்னித்தலான் விளக்கமிக்கதும், ஆரவாரமிக்க சொற்றொடரையெய்தியதுமாகிய நூலைப் “பிருதாவளீ”[87] யென்ப.

 

78½. விண்மீனது எண்ணால் அமையுஞ் சுலோகங்களுடன் கூடிய நூலைத் “தாராவளீ”[88] என்ப.

இங்ஙனம் கவிகளது சீரிய சொற்களானமையும் சிறுபிரபந்தங்கள், அமைவிற்கேற்ப உய்த்துணரற்பாலன. இனி, இவற்றின் எடுத்துக்காட்டுக்கள், விரிவஞ்சியிங்குக் கூறப்பட்டில.

 

ஸ்ரீ வித்யாநாதனியற்றிய பிரதாபருத்திரன் புகழணி யென்னும் அணியிலக்கணத்தில் காப்பியவியல் முற்றிற்று.

 

[1] காப்பியத்திற்குச் சிறப்பளிப்பவன் றலைவனாகலின் அத்தலைவனியலை முன்னர்க்கூறி, அவனாற் சிறப்புறுமியைபுபற்றிக் காப்பியவியலை அதன் பின்வைத்தான் என்க.

[2] குற்றமற்ற — காப்பியவிலக்கணங்கூறுஞ் சுலோகத்திற் கூறப்படாத “குற்றமற்ற” என்னுஞ்சொல்லை அவ்விலக்கணத்தின் பொருள் விரிக்குங்கால் முன்னர்க்கோடலென்னையோவெனின், மறந்தேனுஞ் சிறுபிழையும் நிகழலாகாதென்பதை அறிவுறுத்தற்பொருட்டு. அங்ஙனமே தண்டியாசிரியரும் கூறியுள்ளார்.

“காப்பியத்தில் நிகழுங்குறை சிறிதெனினும் அதனை மதியாதிருத்தலடாது. உடலம் மிகுவனப்புற்றதெனினும் ஒருவெண்குட்டத்தான் அதன் மாண்பு கெடுமன்றே” என்று. அங்ஙனம் கூறியிருப்பினும், “மதிக்கதிர்களில் மறுவென்ன அற்பக்குற்றம் அமிழ்ந்துபோம்” என்னுங் கூற்றோ காப்பியத்தியலன்றிப் பிறவழிக்கொள்ளற்பாலது. இவ்விலக்கணம் மம்மடாசிரியராற் கூறப்பட்டது. சாகித்திய தருப்பணமும் இரசகங்காதரமும் முறையே “சுவைநிரம்பிய சொற்றடர் காப்பியம்” “வியப்பு மகிழ்ச்சியிவற்றை விளைக்கும் பொருளை வெளிப்படுக்குஞ்சொல் காப்பியம்” என்று கூறும்.

[3] தன்னையென்பது காப்பியத்தை. சுபாவம் மக்களை மேன்மைப்படுத்துமென்பது போல இயல்பும் காப்பியத்தை மேன்மைப்படுத்துமென்பது கருத்து.

[4] சொல்லடுக்குமுறை — இது அடுக்கியமைக்கப்படுஞ் சொற்களில் ஒன்றையேனும் மாற்றியமைக்கப்பொறாத நிலையையுணர்த்தும்.

[5] பொருளின் இயைபு — ஈண்டு உரிய பொருளின் இயைபை.

[6] உபலக்கணம் — இக்கரை கடலினதின்று; கங்கையினது என்னும் தொடர்புப் பொண் மாத்திரையில் அமைவதாம்.

[7] சாரோபம், சாத்யவசாயம் இவற்றின் இலக்கணம்  நூற்கட்பின்னர் விளக்கப்படும்.

[8] சாரோபம், சாத்யவசாயம் இவற்றின் இலக்கணம்  நூற்கட்பின்னர் விளக்கப்படும்.

[9] அமைவு — சொல்லமைவு பொருளமைவு என்னுமிவற்றை; இவை சுவை நிலையைத் தெரிவிப்பனவாம்.

[10] சங்கேதப்பொருள் — இது இன்னசொற்கு இன்னபொருள் எனத்துணியப்பட்டபொருளை.

[11] உரூடி — பகுதிவிகுதிகளின் சேர்க்கையின்றி பொருளைத்தரும் ஓர்வகைச்சொல். அதனை இடுகுறியென்ப.

[12] யௌகிகம் — பகுதிவிகுதிகளின் சேர்க்கையாற் பொருளைத்தருஞ்சொல்; அதனைப் பகுபதம் என்ப.

[13] வசுமதி — பொன்னைத் தன்னகத்துடைமையான் இது பூமிக்குக் காரணப்பெயராயிற்று. வசு—பொன்.

[14] இரத்தினகருப்பை — அரதனங்களைத் தன்னுள்ளுடைமையான் இது காரணப்பெயராயிற்று.

[15] நிலை — நிலைத்திருத்தலின் இஃதும் காரணப்பெயராம். 13, 14, 15 இம்மூன்று சொற்களினது பொருட்களும் நிலமகள் பால் அமைதலின் இச்சொற்கள் அந்நிலமகட்கே காரணப்பெயர்களாய் அமைவனவாம்.

[16] வராகம் — பன்றி; அதனைக் கொடியாகவுடையவன் வீரருத்திரன் என்பதாம். உலகில் வீரனொருவனாற் றோல்வியெய்திய ஒருவன், வென்ற வீரனது அடையாளத்தைத் தாங்கி நிற்றல் மரபாகலின் இங்ஙனங் கூறினான் என்க.

[17] ஆரோபம் — ஒரு பொருளை வேறொன்றாயறிதல்.

[18] அத்தியவசாயம் — ஒருபொருட்கணியல்பாய் நிகழுந்தன்மையையொழித்துத் தான் கொண்டபொருண் மேலேற்றிக்கூறல்.

[19] குவலயம். ஈண்டு குவளை மலரையும் பூமியையும் உணர்த்தும்.

[20] அனுமானத்தில் புகைக்கும் நெருப்புக்கும் உடனிகழ்ச்சியமைவதையொப்ப வியஞ்சனாவிருத்தியில் வியங்கியம் வியஞ்சகம் இவற்றிற்கு உடனிகழ்ச்சியின்மையான் வியாத்தியின்மை யென்பதாம்.

[21] கவிழ்ந்த முகத்தினராந்தன்மை — இத்தன்மைக்கு குருவணக்கம் முதலிய பல காரணங்களுண்மையான் வியாத்தியின்மையென்பது கருத்து. புகைக்கு நெருப்பையின்றி வேறுகாரணமின்மையின் “யாண்டு புகை, ஆண்டு நெருப்பு” என்னும் வியாத்தி நிகழும்.

[22] நியத காரணம் — துணியப்பட்ட காரணம். ஈண்டு மனவருத்தத்தாற் றலை வணங்கினர் என்பது கருத்து.

[23] கூறும் விருப்பம் — இது சொல்வடிவை வெளிப்படுக்கக்கூறும் விருப்பம், சொல்லாற் பொருளை வெளிப்படுக்கக் கூறும் விருப்பம் என இருவகைத்து; இங்கண் சொல்லாற் பொருளை வெளிப்படுக்கக் கூறும் விருப்பம்ஆம். அதனாற் கவரப்பட்ட வியஞ்சகச் சொல்லான் மனவருத்தமென்னுங் காரணப் பொருள் துணியப்பட்டதாம்.

[24] பல குறிப்புப் பொருட்களின் றோற்றம்:- “அருக்கன் அத்தகிரி யெய்துகின்றான்” என்னும் வாக்கியத்தில் மாலைக்கடன் முடித்தல் விலைப்பொருளைச் சுருக்கிக்கோடல் தலைவிபாற் சேறல் என்னும் இன்னோரன்ன பல பொருள்கள் முறையே அந்தணர் வணிகர் காமுகர் முதலினோர்க்கு நிகழ்கின்றன. அங்ஙனம் “மலைநெருப்புடைத்து; புகையுடைமையான்” என்னும் அனுமானத்திற் பல பொருட்டோற்றம் நிகழ்வதில்லையாகலின் வியங்கியம் அனுமேயம் இவற்றிற்கு வேறுபாடுளது. அதனால் வியஞ்சனத்திற்கு அனுமானமாந்தன்மை முரண்பட்டதாம்.

[25] பகைப்புரங்களை வென்றவன் — ஈண்டு, திரிபுரங்களை யெரித்த முக்கட்கடவுளையும் பகைவரது நாடுகளை வென்ற வீரருத்திரனையும் உணர்த்தும் இங்கட் சொல் வேறுபாடின்மையால் இது பொருளாற்றன் மூலம் ஆம்.

[26] வடிவிற் சருவமங்களம் பொருந்தியவன் — ஈண்டு மாதிடப்பாகனாகிய சிவபெருமானையும் எல்லா நலங்களையுமெய்தும் வேந்தனையுமுணர்த்தும். சருவமங்களை — உமாதேவியார் — எல்லா நலங்கள்.

[27] இராசமௌளி — ஈண்டு அன்மொழித்தொகையான் மதிமுடிக்கடவுளையும், வேற்றுமைத்தொகையான் அரசர்கட்குத் தலைவனாகிய வீரருத்திரவேந்தனையுமுணர்த்தும். இராசா — சந்திரன். அரசன். 26, 27. இச்சொற்கள் வேறுபாட்டுப்பொருளைத் தரலாற் சொல்லாற்றன் மூலம். 25. இச்சொல் வேறுபடாது பொருளைத் தரலாற் பொருளாற்றன் மூலம். ஓரிடத்திலிவ்விரண்டையுங் கூறியமையாற் சொற்பொருளாற்றன் மூலமெனக் கூறினான் என்க.

[28] காமனை வென்றவன் என்றதனால் உலகிற் சிறந்த வடிவழகு யௌவனம் முதலிய உத்தீபனவிபாவங்களானும், “வேந்தன் அங்கனைகள்” என்றதனால் ஆலம்பன விபாவங்களாகிற சுவைப்பொருள்களானும், “இமைப்பறக்காணவிரும்புங்கால்” என்றதனால் காமவேட்கை முதலிய குறிப்புக்களானும், “கடைவிழிகள்” என்றதனால் அனுபாவங்களானும், “காகதீயமரபிற்குமதியம்” என்றதனால் உயர்குடிப்பிறப்பு முதலிய நற்குணங்கள் வாய்ந்த தலைவனைப்பற்றிய உவகைச் சுவைதோன்ற மென்சொற்றொடராலமைந்திருத்தலின் இது கைசிகீவிருத்தியாம்.

[29] சலமார்த்திகண்டன்—இது இவ்வேந்தனது வீரத்தைத் தெரிவிக்கும் பட்டப்பேர். வாட்படை முதலிய சொற்களான் வெகுளிச்சுவையும், அரத்தம் தசை முதலிய சொற்களான் இளிவரற் சுவையும் தோன்ற இச்சுலோகம் வன்றொடரானமைந்திருத்தலான் இது ஆரபபீவிருத்தியாம்.

[30] இச்சுலோகம் மருட்கைச் சுவை தோன்ற அமைந்திருத்தலான் இது பாரதீவிருத்தியாம்.

[31] பாரெலாம் — இந்தச்சுலோகம், அச்சச்சுவை தோன்ற அமைந்திருத்தலான் இது சாத்துவதீவிருத்தியாம்.

[32] முரண்படுமெழுத்துக்கள் — ஈண்டு வல்லெழுத்துக்களை; அவ்வெழுதுக்களானாய தொடர், அச்சுவைகட்கு விரும்பற்பாலதன்றென்பது கருத்து.

[33] தம் — இச்சொல், பிரதாபருத்திரற்கஞ்சிய பகைவர், காதலியையும் கருதாது ஓடியமையால் அவ்வேந்தனது வீரத்தையுணர்த்தும்.

[34] இவண் — இது எல்லாச் செல்வங்களும் நிறைந்துறும் அப்பகைவரது இல்லத்தையுணர்த்தும்.

[35] எத்தீயூழ் — காதலர், காதலியைப் பிரிய மனமிலராயினும் அவரைத் தீயூழ் பிரித்ததேயென்னும் துன்பமிகுதியை யுணர்த்தும்.

[36] மயக்கமெய்துகின்றனர் — இங்கண் வன்மைமிகாச் சொற்கட்டால் உவகைச் சுவை விரவிய அழுகைச்சுவை கூறப்பட்டதாம்.

[37] பொருட்சிறப்பைப் பற்றாது வைதர்ப்பீ முதலிய வியல்புக்கள், சொல்லினிமையாதியவற்றை பற்றிய அவ்வளவின் முடிந்து நிற்பன. கைசிகி முதலிய விருத்திகளோ உவகை முதலிய சுவைகளை வெளிப்படுக்குந்தன்மையவாம் என்னும் வேறுபாடென்பதாம்.

[38] இந்தச்சுலோகத்தில் தெய்வமகளிரது முகங்களை மதியமாகவும், நன்முத்தங்களை உடுகணங்களாகவும் கூறியிருத்தலான் போர்முகத்திற்குக் கங்குற் பொழுதாந் தன்மை அறியக்கிடக்கின்றது. இது வன்றொடரானும் நெடுந்தொகையானும் கௌபீரீதியாம்.

[39] மறைந்தோடும் — பூழியாகும் நிலத்தின் கீழ் மறைந்தோடுகின்ற கௌதம நதியென்பது கருத்து.

[40] வியப்பு — கரிய கொடிய விடத்தை வளர்த்தல் பாலுண்ட நாகத்திற்கியல்பாகலின் அந்நாகம் அமுதத்தை வளர்க்கின்றதென்பது வியப்பினிமித்தம்.

[41] காகதிவேந்தற்கஞ்சிய பகையரசர், புறங்கொடுத்தோடினராகலின், அவரது மனைவியர் பிரிவாற்றாமையான் வருந்துங்கால் காமவேட்கையால் அவரது கதுப்புக்கள் வெளிறுபட்டனவென்பதாம். வென்ற வீரனது புகழை, அவ்வெண்ணிறத்தவாக வன்னித்தல் கவிமரபு.

[42] பலவழிப்பட்டனவும் — தலைவன் றலைவியை நோக்கியவழி கடைவிழியைப் பிறவழிச் செலுத்தலும், நோக்காத வழி அவனையே நோக்குவதும் எனப் பலவழிப்பட்டனவும் என்றான்.

[43] இச்சுலோகத்தின் குறிப்பைத் தலைவனியல் 58வது சுலோகத்திற் காண்க. உரையின்றிப் பொருள் புலனாகாமையின் இது நாரிகேளபாகம் ஆம்.

[44] திராட்சைப்பாகம் நாரிகேளபாகம் இவைமுறையே, பொருள் எளிதிற் புலனாகுமிடத்தும், தாழ்த்துப்புலனாகுமிடத்தும் அமைவனவாகலின் இவற்றையன்றி இடைக்கட்பொருள் புலனாகுமிடத்துப் பாகங்கள் பலவாகலின் அவற்றிற்கேற்றபெற்றி கதளீபாகம் முதலியனவும் உய்த்துணரற்பாலன.

[45] உலகில் ஒருவன் ஒருபொருளைக் காண்டற்பொருட்டு விளக்கு முதலியவற்றைக் கோடற்கு முயலுதல்போல புலவரும், குறிப்புப் பொருட்கே சொற்பொருளை வனப்புற அமைத்தற்கு முயறலானும், அக்குறிப்புப்பொருளும் இடைக்கண் ஒழிவெய்தாது கவிஞருள்ளைத்தை வலிந்து பற்றித் தன்வயமாக்கலானும் குறிப்புப்பொருள் சிறப்புடையதென்பதாம்.

[46] பிறிதொன்றை யென்பது வியங்கியப் பொருளை; அரசனருளைப் பெறுங்கருத்தால் அவ்வரசனுடைய பணியாளரைச் சேவிக்குந்தன்மை போல, வியங்கியப் பொருளைக் கருதியே கூறும் பொருள் என்பதாம்.

[47] வேற்றுப்பற்றிய பொருனோக்காஒலி எனக்கூட்டுக; இங்கட் பொருள் தடைப்படாது பொருந்துமாயினும் அவ்வளவிற்படாமையான் இது விடாத இலக்கணையடியாகப் பிறந்த ஒலிப்பொருளாம்.

[48] பொருளறவேயொழிந்த பொருணோக்காஒலியென்று கூட்டுக; இதிற் பொருள் பொருந்தாமற் றடைப்படுதலான் இதுவிட்ட இலக்கணையினடியாகப் பிறந்த ஒலிப்பொருளாம் என்னுமிப்பாகுபாடு உணரற்பாலது.

[49] அறியத்தகு முறையொலி — வியங்கியம், வியஞ்சகம் என்னுமிவற்றின் முறைகள் நன்குணரத்தகும் ஒலி என்பது பொருள்; அங்ஙனம் அறியத்தகாதது அறியத்தகாமுறையொலி யென்பதாம்.

[50] பொருட்கு — ஒலிப்பொருட்கு மூலமாகிய வியஞ்சகப்பொருட்கு என்பது பொருள். இப்பொருளுக்கு இயல்பானிகழுந்தன்மையாவது பாடல் மாத்திரையில் அமையாது உலகவழக்கிலும் பொருந்தியமையும் தன்மையாம். கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறுந்தன்மையாவது:- உலகவழக்கிலமையாப் பொருளையும் கவிகள் மதிவலியாலுய்த்துணர்ந்து கூறுந்தன்மையாம். கவிகளாற் பிணைக்கப்பட்ட சொற்களாற் பெறுந்தன்மையாவது – கவிகளெடுத்துக்கொண்ட பாத்திர வாயிலாகக் கூறுஞ்சொற்களாற் பெறுந்தன்மையாம்.

[51] தொடரொலி — மணியையடிக்குங்கால் முதற்கணெழுமொலிக்குப்பின், தொடர்ந்து நிகழுமொலி; அதனையொப்ப பொருளாற்றன் மூலமாகிய அறியத்தகு முறையொலியில் முதல் மூன்றே முப்பத்தாறு வகையவாய் வேறுபடுதலின் இவை தொடரொலிகள் என்பதாம்.

[52] அறியத்தகுமுறையொலியில் — சொல்லாற்றன்மூல வேறுபாடுகணான்கும் பொருளாற்றன்மூல வேறுபாடுகள் முப்பத்தாறும் சொற்பொருளாற்றன்மூல வேறுபாடு ஒன்றும் என நாற்பத்தொரு வேறுபாடுகளாம்.

[53] மூவகைத்தாகிய கலவை — ஐயத்திற்கிடனாந்தன்மையானும் உறுப்பு உறுப்பியென்னுமியைபானும் ஒருவியஞ்சகச் சொல்லினது சேர்க்கையானும் கலவை நிகழுமாகலின் அது முத்திறத்து. பாலும்நீரும் சேர்ந்தாற்போல விளங்காத வேறுபாடுகளையுடைய பல ஒலிப்பொருள்களது கலப்பாம்; இதனை வட நூலார் சங்கரம் என்ப.

[54] சேர்வை — எள்ளும் அரிசியும் சேர்ந்தாற்போல விளங்குகின்ற வேறுபாடுகளையுடைய பலஒலிப்பொருள்களது சேர்க்கையாம். இதற்குப் பிறிதொன்றைப் பற்றுந் தன்மையின்மையான் ஒருபடித்தெனக்கூறினான் என்க; இதனை வடநூலார் சம்சிருட்டி என்ப.

[55] மதிக்கணைகள் — ஐம்பத்தொன்று.

[56] பருவம் கண் அங்கிமதி — ஆயிரத்து முந்நூற்றிருபத்தாறு.

[57] கடல் வான் அங்கிவானி — ஐயாயிரத்து முன்னூற்று நான்கு. இவ்வெண்களை வடநூலார் “பூதசங்கியை” என்ப.

[58] எமது — இந்தச்சொல் உரிய பொருண் மாத்திரையில் இங்கண் பயன்படாமையால் எளிமைக்கு நிலைக்களனாகும் யாம் என்னும் பொருளவாய் வேற்றுப்பொருளைப்பற்றியது.

[59] வெண்மைபூசிய விண்ணையுடையவாய் — வடிவுடைப்பொருட்கட்பொருந்தும் பூச்சுவினை, வடிவிற்பொருளாகிய வான்கட்பொருந்தாதாகலின் அறவே பொருளொழிந்த நிலையில் இவ்வேந்தனது புகழால் வானவெளி விளங்கியதென்பது ஒலிக்கின்றது.

[60] சிவபிரான் முதலியோர்க்குக் கீர்த்தியில் வசிக்க விருப்பம் முதலியன நிகழ்ந்தனவென்னும் பொருளாற் கைலாயம், பாற்கடல், தேவகங்கை, மதியம், ஐராவதம் என்னும் மயக்கவடிவாய மயக்கவணி ஒலிக்கின்றது.

[61] இங்கண் வாட்படை, காளிதேவியினது கடைவிழிப் பருமிதத்தை யெய்தல் பொருந்தாமையான் பருமிதம் போன்ற பருமிதத்தை யெய்தியதென்னும் உவமையை வலிந்துபற்றிப் பொருந்தாப்பொருளைப் பொருந்தக்கூறும் காட்சியணியால் எல்லாப் பகைவரும் இறைப்பொழுதிலழிவெய்தினர் என்னும் பொருள் ஒலிக்கின்றது.

[62] கிரவுஞ்சமலையென்னுமிப்பொருளான் வேந்தனது புகழ் நிலைத்திணைபொருள்கட்கும் வியப்பையளிக்கின்றது, என்னும் பொருள் ஒலிக்கின்றது.

[63] பகைமனைவியர் அச்சத்தால் வனத்துட்புக்கோடுகின்றனர் என்னும் பொருளால் தற்குறிப்பேற்ற அணி ஒலிக்கின்றது.

[64] இந்தச்சுலோகம் — தலைவியைக் கூட வரக் காலந்தாழ்க்கும் தலைவனைக்குறித்து மதிநுட்பம் வாய்ந்த பாங்கியின் கூற்று. உற்கை — தீக்கொள்ளி.

[65] இது எல்லை வெற்பினுக்கும் புகழினுக்கும் வினாவிடை.

[66] இது எல்லை வெற்பினது தனிமையுரை.

[67] மங்கையின் மனங்கனிவுறற்குக் காதலன் கோருதல் காரணம்: அஃதின்றி மனங்கனிவுற்றதெனக் கூறியமையால் இது பிறிதாராய்ச்சியணியாம்; இதனை வடநூலார் விபாவனையென்ப.

[68] இம்மட்டிற் கூறப்பட்ட உதாகரணங்களை நன்கு உணர்ந்தார்க்குப் பிற உதாகரணங்களையறிதல் எளிதாகலின் மீண்டும் அவற்றையெடுத்துக் காட்டலான் நூல்பெருகுமன்றிப் பிறிதொரு பயனில்லையென்பதாம்.

[69] அணியும் பொருளேயாமாயினும் அணி விசித்திரப்பொருள், மற்றது சுத்தப்பொருள் என விளக்குவதற்கே இத்தேற்றம் இங்குக் கூறப்பட்டதாம்.

[70] வேந்தன் — ஈண்டு அரசனையும் சந்திரனையும் உணர்த்தும்.

[71] சியாமை — ஈண்டு யௌவனப் பெண்னையும் இரவையும் உணர்த்தும்.

[72] பிரதோடம் — ஈண்டு தோடமிகுதியையும் மாலைப்பொழுதையும் உணர்த்தும்.

[73] வேந்தன். ஈண்டு, இந்திரனையும் அரசனையும் உணர்த்தும்.

[74] ஈண்டு வாட்படையையும் வச்சிரப்படையையும் உணர்த்தும்.

[75] ஈண்டு பகையரசரையும் மலைகளையும் உணர்த்தும்.

[76] ஈண்டு சேனைகளையும் சிறைகளையும் உணர்த்தும்.

[77] முதலியன — இதனால் குறிப்பெழுச்சி, குறிப்பியைபு, குறிப்புக்கலவை யென்னுமிவை கொள்ளற்பாலன.

[78] அணிபெறற்குரியவாகலான் — இவ்வேது சுவைமுதலியன உறுப்பியாங்கால் ஒலிப்பொருண்மையையும், உறுப்பாங்கால் அணியாந்தன்மையையும் எய்துமென்னும் பொருளையுணர்த்தும்.

78அ மறைந்தகுறிப்பு — குறிப்புவிரைவிற்புலனாயின் அதற்கு மறையாத் தன்மையும், தாழ்விற்புலனாயின் விளங்காமையும், இடையிற் புலனாயின் மறைவுறுந்தன்மையும் ஆம். அவற்றுள் முதலிரண்டும் பொருந்துமேல் இடைக்காப்பியமும், கடையொன்று பொருந்துமேற் றலைக்காப்பியமும் ஆம் என்பதாம்.

[79] ஆவனேல் — அஞ்சேல் என்று முடிக்க.

[80] நடுக்கமுற்ற அரசர் மலைக்குகையை யெய்தினர். இதனால் இங்கண் அச்சச்சுவை உறுப்பியென்பதும், வியர்வை, மெய்நடுக்கம் கண்ணீரரும்பலாதிய குறிப்புக்களை அச்சமகளினது தழுவற்குக் காரணமாகக் கூறியிருத்தலான் உவகைச்சுவை, அச்சச்சுவைக்கு உறுப்பென்பதும் விளங்கும்.

[81] தாரை — ஈண்டு நீர்ப்பெருக்கத்தையும் வாணுதியையும் உணர்த்தும்; இச்சொல் அவித்தலென்னும் வினைக்குக் கருவியாய் நின்று உருவக அணியை நிலைப்படுத்திப் பொருளை முடிவுறச் செய்கின்றது; இன்றேல் இங்கண் உருவகமோ உவமையோ என்னும் ஐயம் நிகழ்ந்து பொருண்முடிவு பொருந்தாதென்பதாம்.

[82] சன்னுமுனிவரினும் — இவர் முதலிற் பருகிய கங்கையையே மீண்டும் படைத்தார்; இவ்வேந்தனது வாட்படையோ அங்ஙனமின்றி ஒன்றைப் பருகிப் பிறிதொன்றைப் படைத்ததென்னுமிதனால் “உவமானத்தினும் உவமேயம் மேம்பாடுடையதெ”ன்னு மிலக்கணமுள்ள வேற்றுமையணிதாழ்விற் புலனாகலின் இது விளக்கமில் குறிப்புடையதாம்; இவ்வணியை வடநூலாற் வியதிரேகம் என்ப.

[83] இங்கட்கூறப்பட்ட இலக்கணம் சருக்கப்பிணிப்பு நாற்பயன் தீரோதாத்தலைவன் இவற்றையுடைமைசூம் உபலக்கணம் ஆம்.

[84] சீரியலற்ற சொற்குழு — சீரிலக்கணம் பொருந்திலதெனினும் வழியெதுகை யமைந்த சொற்சுவை, பெரிதும் அமைவதே அதன் இலக்கணம் ஆம். சீர் — இதனை வடநூலார் கணம் என்ப.

[85] கந்தம் — நூலின் ஓர் பகுதி; அது கதைப் பகுதிகளின் முடிபையுணர்த்தும்.

[86] இந்நூலிற் கலவிக்குரியவாய் அமையும் உய்யானம் இளவேனில் தலைவனது குணங்கள் முதலியவற்றைப் பெரிதும் வன்னித்தல் வேண்டும்.

[87] பிருதாவளீ — இந்நூற்கு, இங்கட் கூறப்பட்ட இலக்கணத்தையன்றி போகாவளிக்குக் கூறப்பட்ட இலக்கணமும் அமைதல் வேண்டுமென்றுணர்க.

[88] தாராவளீ — தாரைகள், அசுபதி முதலாக இருபத்தேழாகலின் இருபத்தேழு பாடல்களானாக்கப்பட்ட நூல் தாராவளீ என்னும் பெயர்த்தாயிற்று. தாரை — விண்மீன்.

டாக்டர் அ. சிதம்பரநாதனார்

பண்டிதமணியின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா
நிகழ்ச்சிக்காக அறிஞர்களால் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு

டாக்டர் அ. சிதம்பரநாதனார் தம் ஆசிரியராகிய
பண்டிதமணியாரைப் பற்றி எழுதிய கட்டுரை

பண்டிதமணி கதிரேசன் செட்டியாரொடு எனக்கு ஏறத்தாழ 23 ஆண்டுகள் பழக்கம் உண்டு. அவர் 1953-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி வயது முதிர்ந்த நிலையில் மறைந்தார். அவர் 1930-இல் சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகா சமாச வெள்ளி விழாவின் போதுதான் முதன்முதலில் எனக்கு அறிமுகம் ஆயினார். அப்பொழுது பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற சமாச வெள்ளி விழாவின் கூட்டங்களுக்கு மூன்று நாட்களிலும் தலைமை தாங்கிப் பல அரும்பெறற் கருத்துக்களை அவர்கள் தெரிவித்தார்கள். நீளமான மஞ்சள் நிறக் கோட்டு அணிந்து, கழுத்தைச் சுற்றிலும் வெள்ளிய மேல் வேட்டி ஒன்றினைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, தலைப்பாகையுடன் அவர் உட்கார்ந்திருந்த காட்சி இன்னும் நினைவிற்கு வருகிறது.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் படித்தபொழுது எனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருள் ஒருவராகிய திரு. கே. எஸ். வைத்தியநாத ஐயர் அவர்களுடைய நினைவு பண்டிதமணியைக் கண்டபொழுது எனக்கு ஏற்பட்டது. காரணம் இருவரும் தூய வெள்ளாடை உடுத்தி அழகிய வெள்ளைத் தலைப்பாகை அணிந்து இருந்தார்கள் என்பது மாத்திரம் அன்றி, ஆங்கிலக் கவிதைகளை இனிமையோடு சுவைத்துப் பிறர்க்கு எடுத்து இயம்பிடும் திறன் திரு. கே. எஸ். வைத்தியநாத ஐயர் பெற்றிருந்தது போலப் பண்டிதமணியவர்கள் தமிழ்ச்செய்யுட்களைச் சுவைத்து அவற்றை எளிய தெள்ளிய நல்ல நடையில் பலர்க்கும் எடுத்து வழங்கும் ஆற்றல் படைத்திருந்தார் என்பது பச்சையப்பன் மண்டபக்கூட்டத்திற் கலந்து கொண்டவர்கள் அவர் ஆங்கிலம் அறிந்திலர் என்பதை ஊகித்திருக்கவே முடியாதபடி, அவருடைய உடையும் நடையும் சொற்பொழிவுகளும் இருந்தன. பள்ளிக்கூட வாயிலாக அல்லது கல்லூரி வாயிலாகத் தமிழ் இலக்கியம் கற்கும் வாய்ப்புப் பெற்றாரில்லையேனும் நல்லறிஞர்கள் துணைக்கொண்டு தாமே பல தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் துருவித்துருவி ஆராய்ந்து கற்ற பெருமையுடையவர் திரு. கதிரேசன் செட்டியார். ஆதலினால், அவர் இயற்றிய சொற்பெருக்குகள் அறிஞர்களையும் ஏனையோரையும் மகிழ்வித்தமை வியப்பன்று. அவர் கற்றறிந்த செய்திகள் பலவற்றையும் எழுதிக் குறிப்புப் புத்தகத்தில் வைத்துக்கொள்ளும் மரபுடையவராகக் காணப்பட்டார். மேடைகளுக்கு வரும்பொழுது அவர் கையில் இரண்டு அல்லது மூன்று குறிப்புப் புத்தகங்கள் இருக்கும். அக்குறிப்புக்களில் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, காளிதாசர் போன்ற நூல்கள் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் உண்டு. வேளை வாய்க்கும் போதெல்லம் அவ்வேடுகளைப் புரட்டிப் புரட்டித் தமது கருத்துக்களை அவர் அழகுற எடுத்தியம்பியது உண்டு. தமிழரேயன்றி ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதம் கற்றறிந்த பெரியவர்களும், மாணவர்களும் அவர்களுடைய சென்னைச் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுள் ஒருவன் நான். அப்பொழுது சென்னை அரசாங்க முஸ்லிம்கள் கல்லூரியில் நான் தமிழாசிரியனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவ்வாண்டினை ஒட்டிய ஆண்டுகளில் திரு. வி. கலியணசுந்தர முதலியார் அவர்களுடைய தொடர்பு எனக்கு ஏற்பட்டது உண்டு. அவர் இராயப்பேட்டையில் அமைத்து நடத்தி வந்த “பாலசுப்பிரமணிய பக்தசன சபை”யில் பண்டிதமணியவர்களை அழைத்துப் பெருமைப்படுத்திச் சொற்பொழிவு ஆற்றுமாறு செய்வித்தார்கள். எனவே ஜார்ஜ் டவுனிலும் இராயப்பேட்டையிலும் உள்ள தமிழ் மக்கள் சிறப்பாகப் பண்டிதமணியினுடைய அறிவுசான்ற சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார்கள்.

திருவாசகத்தில் வரும் “வெள்ளந்தாழ் விரிசடையாய்” எனத் தொடங்கும் பாட்டினையும் திரு. பண்டிதமணியவர்கள் நெக்குருகி எடுத்து விளக்கிய திறமையைக் கண்டு வியந்தவர்கள் பலர்.

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெனைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்கபொற் கிண்ண மென்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்

என்ற பகுதியை எடுத்து அவர் விளக்கிய விளக்கம் இன்னும் என் உள்ளத்தினுள் பதிந்து கிடக்கின்றது. “கடவுளே நின்னை அரியவன் என்று நான் மதிக்கவில்லை. இங்கு என்னுடன் நீ எப்பொழுதும் இருக்கின்றாய் என்வே மதிக்கிறேன்” என்ற கருத்தினைத் தெரிவிக்கக் கருதிய மாணிக்கவாசகர் நல்லதோர் உவமையை எடுத்தாண்டார் என்றும், “மழக்கை இலங்கு பொற்கிண்னம்” என்ற அவ்வுவமை சிந்திக்கத்தக்கது என்றும் அவர் அடிக்கடி எடுத்துக்காட்டியதுண்டு. குழந்தையினுடைய கையில் விளங்குகின்ற பொற்கிண்ணத்தைப் போலக் கடவுள் இருக்கின்றார் என்றால், அதன் கருத்து இன்னது என்று பெரும் பேராசிரியர் கதிரேசன் செட்டியார் விளக்கிய நயம் சிந்திக்கத்தக்கது. அழுகின்ற குழந்தை அழாமல் இருப்பதற்காக அதன் கையில் பொற்கிண்ணத்தைத் தாய் கொடுத்துவிடக், குழந்தை கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இப்படியும் அப்படியும் அசைந்து நடமாடுகின்றபொழுது பொற்கிண்ணம் கீழே விழுந்துவிட்டால் உடைந்துபோய்விடுமோ என்று அஞ்சித் தாயார் குழந்தையின் கூடவே நடந்து செல்லுகின்ற வழக்கத்தை எடுத்துக்காட்டி அவர் பொருத்தியிள்ள விதம் சிந்திக்கத்தக்கது. குழந்தை கிண்ணத்தின் பெருமையை அறியாதது போல ஆன்மாக்கள் கடவுளின் பெருமையை அறியாது இருத்தல் உண்டு என்றும், கடவுள் ஆன்மாக்களைத் திரும்பவும் பாதுகாக்கும் பொருட்டு ஆன்மா செல்லும் இடமெல்லாம் உடன் வந்து பாதுகாக்கின்றார் என்றும் அவர் அன்று காட்டிய செய்தி இன்றும் என் உள்ளத்தினின்று நீங்காது அமைந்துகிடக்கிறது. இதற்கு மாறாக மணிக்கவாசகர் தம்முடைய கையிலே உள்ள ஒரு கிண்ணத்தைப் போலத் தமது உடைமையாகக் கடவுளை மதிக்கிறார் என்று எவரேனும் அதற்குப் பொருள் செய்தால், அது பொருந்தாது என்பதைப் பண்டிதமணி அவர்கள் எடுத்துக்காட்டியதுண்டு. மழக்கை என்றபோது தம்முடைய இளைய மெல்லிய கையினை மாணிக்கவாசகர் குறித்தார் என்று கூறுவது பொருத்தமில்லை என்றும் அவர்கள் எடுத்துக்காட்டியதுண்டு.

நீத்தல் விண்ணப்பத்தில் வரும் “இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதி கண்டாய்” என்ற இடத்தில் வரும் “இருதலைக் கொள்ளி எறும்பு” என்பதற்குப் பண்டிதமணி அவர்கள் தந்த விளக்கம் நினைவுகூர்ந்து பாராட்டத்தக்கது. இரண்டு பக்கத்திலும் நெருப்பு இருக்கின்ற கொள்ளிக்கட்டையில் தாவுகின்ற எறும்பு போல ஆன்மா இருக்கிறது என்று பொதுவாகக் கூறுவது பொருந்தாது என்றும் உள்ளே புழையினையுடைய ஒரு தீக்கோலின் இரண்டு பக்கங்களிலும் தீப்பற்றிக்கொண்டு இருக்கிற பொழுது, ஓர் எறும்பு உள்ளே அகப்பட்டால் எவ்வாறு வாடி வருத்தப்படுகிறது எனக் கூறுதல் வேண்டுமென்றும் அவர் கூறிவந்தவை நினைவிற்கு வருகின்றன. இரண்டு பக்கங்களிலும் நெருப்பு உள்ள குச்சி ஒன்றின் மீது எறும்பு இருந்தால், இரண்டு பக்கத்திலும் போகமுடியாமல் தவிக்கும் என்றாலும், இரண்டு மூலைக்கும் போகாமல் நடுவிடத்தின் ஓரத்திலிருந்து எவ்வாறாவது குதித்துத் தப்பித்துக்கொள்ளுதல் முடியும், ஆனதால் இதனை விளக்கவே “கொள்ளியின் உள் எறும்பு” என மாணிக்கவாசகர் கூறினார் என அழகுபட அவர் எடுத்துக்காட்டியதை ஆராய்ச்சியாளர்கள் பலர் 1930-31 ஆம் ஆண்டுகளில் மகிழ்ந்து பாராட்டிய பாராட்டுக்கள் இன்றும் என் நினைவில் உள்ளது.

பண்டிதமணி கதிரேசன் செட்டியாரைப் பிறகு 1934–ஆம் ஆண்டில் என்னுடைய நேர்முக ஆசிரியராகப் பெறக்கூடிய வாய்ப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கிட்டிற்று. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் பேராசிரியராக இருந்த பொழுது, நான் 1933 முதல் 1935 வரை அப்பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. பட்டப்படிப்பிற்காகப் படித்துக்கொண்டிருந்த அன்று பண்டிதமணி அவர்கள் எனக்குச் சிலப்பதிகாரத்தையும், அகநானூற்றையும் சிறப்பாகக் கற்பித்தார்கள். அப்பொழுது பாடமாக இருந்த சிலப்பதிகாரப் பகுதி அடியார்க்கு நல்லார் உரையில்லாத வஞ்சிக்காண்டமேயாகும். அதற்கு அரும்பத உரையாசிரியர் உரை மாத்திரம் உள்ளது. அரிய சொற்கள் சிலவற்றின் விளக்கம் மாத்திரம் அவ்வுரையில் உண்டு. ஆனால் புகார்க்காண்டத்திற்கும் மதுரைக் காண்டத்திற்கும் உள்ள உரைகள் இரண்டு. ஒன்று அடியார்க்கு நல்லாருடைய விளக்கமான உரை, மற்றொன்று பழைய உரையாசிரியராகிய அரும்பதவுரை ஆசிரியர் உரை. அடியார்க்கு நல்லார் உரை வஞ்சிக்காண்டத்திற்குக் கிடைக்கப் பெற்றிருந்தால், எத்துணை மகிழ்ச்சியுற்றிருப்போமோ அத்துணை மகிழ்ச்சி உண்டாகும்படி பண்டிதமணி அவர்கள் வஞ்சிக்காண்டத்திற்கு உரை தந்து படிப்பித்தார்கள்.

கற்றீண்டி வந்த புதப்புனன் மற்றையார்
உற்றாடி னோந்தோழி நெஞ்சன்றே

எனவுள்ள குன்றக்குரவை அடிகளுக்கு உரைகாண இடர்ப்பட்ட அறிஞர்கள் நிரம்பியகாலத்தில், திரு. கதிரேசன் செட்டியார் அவர்கள் தக்கதோர் உரை கண்டார்கள். தோழி ஒருத்தி “தலைவனுடைய நாடு அல்லாத நாடு ஒன்றனுள் உள்ள மலையைத் தீண்டித் தண்ணீர் வந்த போது, அதனுள் நம் உறவினர் அல்லாதார் பொருத்தி நீராடினால் நம் நெஞ்சம் நடுங்கும் அன்றோ தோழி” என்றவாறு பொருத்திப் பொருள் கண்ட பெருமை பண்டிதமணியாரைச் சாரும். சிலர் மற்றையார் உற்றாடினோம் தோழி நெஞ்சன்றே என்றவாறு பிரித்துப் பொருள் கொள்ளமாட்டாது இடர்ப்பட்ட நிலையில், பண்டிதமணி அவர்கள் “உற்றாடின் நோம் தோழி நெஞ்சு” என்றவாறு பிரித்த அரும்பத உரைகாரர் உரையொடும் நூலாசிரியர் கருத்தொடும் பொருந்துமாறு பொருள் செய்தார்கள் என்பதை என் போன்ற மாணவர் சிலர் இன்றும் மீண்டும் மீண்டும் கூறி மகிழ்வது உண்டு.

செங்குட்டுவன் வடநாட்டு மன்னருடைய காவா நாவினை அடக்குவதற்காகப் போரொடு சென்ற பொழுது, அவன் முன்னரே சிவபிரானை வணங்கியுள்ள காரணத்தால் திருமால் கோயிற் சேடங்களைத் தோளில் தாங்கிச் சென்றான் என்று வருகின்ற இடத்தில், சிவனுக்குப் பெருமை கொடுத்திருப்பது காரணமாக அப்பகுதியைச் சுவைத்துச் சுவைத்துக் கற்பிக்கின்ற மரபு உடையவராகப் பெரும் பேராசிரியர் இருந்தார். அவரால் இயன்ற பொழுதெல்லாம் தேர்வுகளில் அப்பகுதியில் வினா அமைத்துவிடுவது அவருடைய மரபாக இருந்து வந்தது. வாழ்த்துக் காதையில் தேவந்தி சொல்வதாகவும் தோழி சொல்வதாகவும் வருகின்ற பகுதிகளை அவர்கள் உளம் உருகிப்படிப்பித்த நிலை என் போன்றவரால் இன்றும் உன்னத்தக்கதாக உள்ளது. இக்காதையில் ஈற்றில் வரும்:

நீணில மன்னர் நெடுவிற் பொறையன்நற்
றாடொழார் வாழ்த்தல் தமக்கரிது – சூழொளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடூழி
செங்குட் டுவன்வாழ்க வென்று

என்ற செய்யுட்கு மிகவும் பொருத்தமான உரை பண்டிதமணி அவர்கள் ஒருவராலேயே கூறப்பட்டது என்று சொல்வது புனைந்துரையாகமாட்டாது. உலகில் உள்ள ஏனைய மன்னர்கள் செங்குட்டுவனுடைய நற்றாளைத் தொழாமல் அவனை வாழ்த்துதல் அரிதென்றும், கண்ணகி ஒருத்தி மட்டும் அவ்வாறு அவன் தாளைத் தொழாமல் “வாழ்க”என்று அவனை வாழ்த்தினாள் என்றும் அவர்கள் எடுத்துக்காட்டினார்கள்.

பொதுவாக, அவர் பாடம் சொல்லும் மரபு ஆசிரியர் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதொன்றாகும். தாம் கற்பிக்க எடுத்துக் கொண்டிருக்கும் பாடப்பகுதியைக் கவனமாக வீட்டில் ஒருமுறைக்கு நான்கு முறை அவர் படித்து, ஐயம் திரிபுகள் அற அறிந்து கொண்டுதான் வகுப்பிற்கு வருவது வழக்கம். மாணவர்களுக்கு உண்டாகக் கூடிய ஐயங்கள் எவை என முன்கூட்டியே எதிர்பார்த்து, அவ்வையங்களைக் களைதற்குச் செம்மைப்படுத்திக்கொண்டு வருவது அவரது வழக்கம். அன்றியும், அவரால் எதிர்பார்க்கப்படாத பல ஐயங்களை மாணவர்கள் திடும் என எழுப்பினால் அவற்றிற்கு விடை கூறுவதில் அவர் தயங்கவே மாட்டர். எனினும் ஒரு செய்யுட்பகுதிக்குப் பொருள் கூறும் பொழுது, அதற்குரிய நேர்பொருளை உடனே தெரிவித்துவிடாமல், மற்றவர்கள் கருதக்கூடிய பொருள்களைச் சொல்லி அவை எவ்வாறு கொள்ளத்தக்கவை அல்ல என்று குறிப்பிட்டுத் தக்கவுரை காணவேண்டும் என்பதன் கண்ணே மாணவர்களுக்கு ஆர்வத்தை எழுப்பிவிட்டுப் பிறகு தக்க பொருளைத் தம் மதி நலத்தாற் கண்டு கூறும் பெற்றியுடையவர் என் ஆசிரியர் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

அவருடைய மற்றோர் இயல்பு பல சங்கச் செய்யுட்களிலிருந்து ஒத்த மேற்கோள்கள் தருதல் என்பதும், இலக்கண நயம் எடுத்துரைத்தல் என்பதும் இன்முகத்தோடு தாம் கூறக்கருதும் கருத்துக்களைக் கூறுதல் என்பதுமாம். ஒருமுறை, எங்கள் வகுப்பிற்கு வந்தபொழுது, “இவ்வகுப்பிற்கு வருதல் என்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. அதற்கு முக்கிய காரணம் திரு. அ. சிதம்பரநாதன் போன்றவர்களுடைய நுண்மாண் நுழைபுலமும் உள்ளக்கிளர்ச்சியும், மன எழுச்சியும் ஆகும்” என்று குறிப்பிட்டார்கள்.

தமிழ்ச் சிறப்பு வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் பண்டிதமணி அவர்கள் அக்காலத்தில் பேராசிரியர் நிலையில் இல்லை யெனினும், விரிவுரையாளராகத்தான் இருந்தார் எனினும், அவர்களிடத்து மிக்க பெருமதிப்பு வைத்திருந்தோம். அதற்குச் சிறந்த காரணம் ஆற்றின் ஊற்றலிலிருந்து நீர் சுரப்பது போல அவருடைய உள்ளத்திலிருந்து ஊறி ஊறி வந்த இன்னுரைகள். அவ்வமிழ்தத்தை மாந்துதற்குக் காத்திருந்த சிறப்பு வகுப்பு மாணவர்கள் பலர் இன்று கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப்பேராசிரியர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மாணவர்களோடு ஆசிரியர் என்ற முறையிலே மட்டும் பழகாமல், மாணவர்களுள் ஒருவரைப் போலத் தம்மைச் சிலவேளைகளில் அமைத்துக்கொண்டு அளவளாவுதல் உண்டு. இது மேல் நாட்டு மேலைமொழி ஆசிரியர்களின் கைவந்த திறம் என்பார்கள். அது அவ்வாசிரியர்மாட்டுக் காணப்பட்டமையின் மாணவர்களுடைய உள்ளங்கள் எல்லாம் அவர்பால் வலிய இழுக்கப்பட்டன. அக்காரணத்தால் மாணவர்களுடைய பேரன்பிற்குப் பண்டிதமணியார் உரியவர் ஆகி, மாணவர்களிடத்திலும் பேரன்பு காட்டுவாராயினர். பல் இல்லாத வாயினால் அவர்கள் சிரித்தாலும்கூட, அச்சிரிப்பிலே ஓர் அழகும் பொலிவும் இருத்தல்கண்டு மாணவர்கள் மகிழ்வது உண்டு. அவரிடம் மாணவராய் இருந்த எவரும் வாழ்க்கையில் தாமாகப் பிறகு இலக்கியச்சுவை பெற முயலாமல் இருத்தல் அரியதொன்று என்றே கூறுதல் வேண்டும்.

அவர் தண்டு ஊன்றிய கையினராய்த் தளர்ந்த நடையினராய் வகுப்பினுள் நுழைதற்குச் சிறிது நேரம் ஆகும் எனினும், மாணவர்கள் அனைவரும் அவர் வருதலைச் சாளரத்தின் வழியே அறிந்துகொண்டு முன்னரே தாமாக எழுந்து நின்று அவரை வகுப்புகளில் வரவேற்பது வழக்கம். இத்தகைய மதிப்பு மாணவரை மருட்டி உருட்டி அவரால் வாங்கிக்கொள்ளப்பட்டதொரு மதிப்பன்று; மாணவர்கள் தாமே விருப்பத்தோடு அவர் அறிவிற்கும் அன்பிற்கும் தந்த மதிப்பு என்று கூறாதிருத்தல் இயலாது. அவரிடம் பன்னிரண்டு மாதங்கள்தான் நான் படிக்கக்கூடிய வாய்ப்புப்பெற்றிருந்தேனாயினும் என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவரை என் உள்ளம் கவர்ந்த ஆசிரியராக மதிப்பேன் என்பது உறுதி.

1935-இல் நான் எம். ஏ. பட்டம் பெற்றுப் பிற்பாடு அப்பல்கலைக் கழகத்திலேயே பேரசிரியர்-நாவலர்–சோமசுந்தர பாரதியாரொடும், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரொடும் உடனுறைந்த தமிழ்த்துறையில் அவருக்கு உதவியாளனாக இருந்து பணியாற்றக்கூடிய பேறு எய்தினேன். 1946–இல் நான் அப்பல்கலைக் கழகத்துப் பேராசிரியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றத் தொடங்கிய பிற்பாடு ஓரிரண்டு மாதங்கள் பண்டிதமணி அவர்கள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக விலகிக்கொண்டார். விலகிக்கொள்வதற்கு முன்னால் என் அறைக்கு வந்து என்னிடம் அரைமணி நேரம் உரையாடி உறவுகாட்டிப் பிரியா விடைகொண்டு சென்றார். அதனை நினைக்குந்தோறும் இன்னும் என் உள்ளம் உருகுகின்றது. 1948–இல் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துணைவேந்தராகச் சில மாதங்கள் பணியாற்றுமாறு ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது பண்டிதமணியவர்கள் என்னைப் பாராட்டி வாழ்த்தியருளினார்கள். ஒரு முறை, கொப்பனாபட்டி மகளிர் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் தலைமை தாங்குவதற்கு நான் சென்ற காலை, அவர்களுடைய ஊராகிய மகிபாலன்பட்டியில் பண்டிதமணி அவர்களை அவர்களுடைய இல்லத்தின்கண்ணே கண்டு என் வணக்கத்தைத் தெரிவித்து வருவதற்கு வாய்ப்புப் பெற்றேன். அன்றும் பண்டேபோல என்பால் அன்பு காட்டி உருகிய அவர்களுடைய உள்ளமும் என் உள்ளமும் ஒன்று கலந்தன. இவ்வாறு ஆசிரியர் மாணவரிடத்துத் தொடர்பு உண்டாகுமேயானால், மாணவரும் ஆசிரியரும் உறையும் பல்கலைக்கழகங்களால் விளையவேண்டிய நற்பயன் விளைந்ததாகுமன்றோ என்று சில வேளைகளில் நான் எண்ணுவதுண்டு.

1941–இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பண்டிதமணி அவர்கள் விலகிக்கொண்டு ஊருக்குப் போதற்குமுன்னால் ஆசிரியர்கள் கூட்டம் ஒன்றில் அவர்கள் சொல்லிய சொற்களின் நயம் இன்றும் தோற்றுகிறது. “இப்பல்கலைக்கழகத்தில் நான் மூன்று துணைவேந்தர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் முறையே சர். எஸ். ஈ. அரங்கநாதன், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார், சர். கே. வி. ரெட்டி ஆகியவர். இவ்மூவரும் என்னைப் பொறுத்தவரையில் மும்மூர்த்திகள். முதலாமவர் என்னை ஆக்கினார்; இரண்டாமவர் என்னை அளித்தார்; மூன்றாமவர் காலத்தில் இப்பல்கலைக்கழகத்திலிருந்து நீங்கிப்போகிறேன்” என்றார். அன்று தம்மைச் சங்காரமூர்த்தி ஆக்கிவிட்டாரே என்று சர். கே. வி. ரெட்டியார் அவர்கள் நினைந்து நினைந்து உருகி, மீண்டும் வேலைக்கு அவரை வரவழைத்துக்கொள்ளுதற்கு முயன்றார். அம்முயற்சியின் பயனாகப் பண்டிதமணி பல்கலைக்கழக வேலைக்கு ஓராண்டு கழித்து அழைக்கப்பட்டார். அப்பொழுதுதான் அவர் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவராக இருந்தபோது கௌடிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

பண்டிதமணி அவர்கள் தமிழில் புலமையுற்றிருந்த அளவு வடமொழியிலும் சிறந்த புலமை எய்தி இருந்தமையால், அவரால் பற்பல வடமொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்டன. அவற்றுள் தலையாயதும், நல்ல தமிழ்மணம் உடையதும், மொழிபெயர்ப்பெனத் தோன்றாததும் ஆகிய “மண்ணியல் சிறுதேர்” என்னும் நாடகம் ஒன்று. மிருச்சகடிகா என்ற வடமொழி நாடகத்தைத் தமிழ்ப்படுத்தி, அரிய முகவுறையோடு அதனைத் தமிழகத்திற்கு அளித்த பெருமை பண்டிதமணியாருக்கு உரியது. சிலப்பதிகாரத்திற்கும் மண்ணியல் சிறுதேருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டுவது உண்டு. அம்மொழிபெயர்ப்பினைப் பற்றி நான் 1936–இல் “தமிழ்ப்பொழி”லில் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி மதிப்புரையைப் படித்து சுவைத்து மகழ்ந்து, என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார்கள்.

பண்டிதமணி நகைச்சுவை தோன்றப்பேசும் இயல்பினர். ஒரு நாள் ஒருவர் வீட்டில் அவர்க்குக் குடிப்பதற்குப் பால் கொடுத்தார்கள் என்றும், அதனுள் ஓர் எறும்பு விழுந்து கிடந்தது என்றும், எறும்பு கிடக்கிறது என்று கூறுவதற்குப் பதிலாகத் தாம் “பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொள்ளுகிறன்” என்று கூறினதுண்டு என்றும் அவர் என் போன்றவரிடம் சொல்லியுள்ளார்கள். ஒருநாள், பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் தலைமை தாங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் மகளிர் தங்களுக்குள்ளே ஏதேதோ பேசி ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். அதனைத் தாங்கமாட்டாத பண்டிதமணி “அவர்கள் பெண்மணிகள் அல்லவா! மணிகள் ஒலித்துக்கொண்டு தானே இருக்கும்!” என்று குறும்பாகக் கூறினார். அதனைக் கேட்டவுடன் மகளிர் பேசாமல் அடங்கிவிட்டனர்.

அவர் இன்னொரு செய்தி எங்களிடம் சொல்லுவதுண்டு. அதை ஒரு கதை போலவும், தாம் காண்பது கனவுபோலவும் கூறுவது வழக்கம். அஃதாவது, அவர் கடவுளை நோக்கி ஏதோ ஒரு வரம் வேண்டி உறங்கிக்கொண்டிருந்ததாகவும், அப்பொழுது கடவுள் அவருடைய கனவில் தோன்றி “உமக்குத் தந்தம் போம்” என்று கூறியதாகவும், மறு நாள் பார்த்தால் இருந்த பல் கூடப் போய்விட்டதாகவும் பலரும் நகைக்கும்படி கூறுவது உண்டு. தாம் பற்கள் இழந்துள்ள நிலையை வைத்து, அதை ஒரு பெருங்குறையாக மதிக்காமல், அது காரணமாகவே பிறரை மகிழ்விக்கும் பெற்றியாளராயிருந்தார் பண்டிதமணி என்பதை உற்று நோக்கினால், எவ்வளவு சிறந்த உவகையர் அவர் என்பது புலப்படும். தொல்காப்பியர் “உவகையெல்லாம் அல்லல் நீத்தனவாக இருக்க வேண்டும்” என்றார். அவர் கூறியது பிறர்க்குத் துயரம் தருவதாக இருக்கும் உவகை, தக்க உவகை என மதிக்கும் தன்மையதன்று என்பது. பண்டிதமணி பிறர்க்கு அல்லல் வாராமல், தமக்குச் சிறிது அல்லல் வந்தாலும் குற்றம் இல்லை என்று கருதி இவ்வாறு பன்முறை உடன் இருந்தவர்களுக்கு உவகை ஊட்டியது உண்டு.

திருவள்ளுவர் கூறிய ஓர் அருமையான திருக்குறளுக்கு முற்றிலும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள், “நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும், பண்புடையாளர் தொடர்பு” என்றார் திருவள்ளுவர். அவர் காலத்தில் நூல்களின் நயத்தை அறிந்து அறிந்து துய்த்தவர்கள் பலர் போலும். அதனால் அதனை உவமையில் வைத்துப் பயில்தொறும் பண்புடையாளர் நட்புப் பெருகும் என்றார். நவிலுந்தொறும் நவிலுந்தொறும் நூல், நயம் பல பயக்கும் என்பது பண்டிதமணி அவர்கள் எடுத்துக்காட்டிய நயங்களிலிருந்து விளங்கிற்று, பயிலுந்தொறும் பயிலுந்தொறும் பண்புடையாளர் தொடர்பு இனிக்கும் என்பது அவர்களுடைய தொடர்பினால் என் போன்றோர்க்கு நன்கு விளங்கிற்று. பிறர் உவக்கும்படி பிறரொடு கூடி, இவ்வறிஞர் நம்மிடமிருந்து பிரிந்து போகின்றாரே எனப் பிறர் கருதி உளம் நையும்படி பிரிந்து செல்லும் இயல்பினராகப் பண்டிதமணி அவர்கள் இருந்தார்கள். அதனால்,

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

என்ற திருக்குறளிற்கு இலக்கியமாக விளங்கியவர் அம் முதுபெரும் புலவர் என்பது விளங்கும்.

அப்பெரியாரொடு தொடர்புகொண்ட மாணவர்களும் அறிஞர்களும், பிறரும் களங்கமில் மகிழ்ச்சி கொள்ளுதற்கு உரியவராக வாழ்ந்த பெருமை பண்டிதமணி அவர்களுடையது. அவர்களது நினைவு நாட்டில் நெடுங்காலம் நிலைத்திருப்பதாகுக!

– வளரும்

திருவாசகம்

திருச்சிற்றம்பலம்

திருவாசகம்

திருச்சதகம்

 

மகாமகோபாத்யாய, முதுபெரும்புலவர்பண்டிதமணி

மு. கதிரேசச்செட்டியார்  இயற்றிய

    திர்ணி  விக்ம்

      உரைத்  தொடக்கம்    

              

                    

                           அருளுரு வாய யானை முகத்தெம்

                           பெருமுதற் கடவுளின் திருவடி போற்றுதும்

                           வாதவூரடிகள் மலர்வாய்த் தோன்றிய

                          திருவாசக மெனுந் தேனின்

                         இன்சுவை உலகுணர்ந்து இன்புறற் பொருட்டே.

 

திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய செய்யுள் நூல் என்னும் பொருளையுடையதாகும். இது, திருவென்னும் அடையடுத்த வாசகம் என்னும் முதற் கருவியின் பெயர். அதன் காரியமாகிய செய்யுட்கு ஆயினமையின், கருவி ஆகுபெயராம் என்ப. சிவஞான முனிவரர் பிறர் கொள்கையை மறுக்குங்கால் ஆகுபெயர் என்பதை உடன்பட்டுப்பின் “உண்மையான் நோக்குவார்க்கு அன்மொழித் தொகையாகுமன்றி, ஆகு பெயராகாமையுணர்க”எனவுங் கூறியுள்ளர். திரு என்பது தெய்வத்தன்மை, அழகு என்னும் பொருளுடையதாகும். “திரு கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” என்று பேராசிரியர் உரை கூறினாராயினும், ஈண்டுத் தெய்வத்தன்மை என்று கொள்ளுதல் சிறப்புடைத்தாம், வாசகம் – சொல். இத்திருவாசகத் திருப்பாட்டுக்கள் தெய்வ நலங்கனிந்த சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்தவை; இனிமை எளிமை ஆழமுடைமை யென்னுங் குணங்கள் தம்பால் அமையப்பெற்றவை; மெய்யன்புடன் ஓதுவார் கேட்பார் உணர்வார் எல்லோரையும் மிக்க பேரின்பத்தில் திளைப்பித்துப் பரவசப்படுத்தும் இயல்பின; அநுபவ உண்மைகளைத் தெளிவுண்டாம்படி விளக்குவன. இத்திருவாசகத்தின் அருமை பெருமைகள் அளப்பரியனவாம். இதனைப் பற்றித் தனித்து ஓர் உரைநடை நூல் எழுத எண்ணியிருக்கின்றோம் ஆதலின், ஈண்டு இம்மட்டில் அமைகின்றாம்.

 

திருச்சதகம்

திருச்சதகம் என்பது தெய்வத் தன்மை வாய்ந்த நூறு திருப்பாட்டுக்களைத் தன் அகத்துக் கொண்ட ஒரு பகுதி என்னும் பொருளதாம். சதம் என்னும் வட சொற்கு நூறு என்பது பொருள். அந் நூறு எண்களையுடைய திருப் பாட்டுக்களைத் தன்னகத்துக் கொண்டது என்னும் பொருளில், ஓர் இடைச்சொற் புணர்ந்து, சதகம் என்றயிற்று. ஒரு பாட்டின் ஈற்றில் உள்ள சொற்றொடர், சொல், எழுத்து என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடுதல் அந்தாதித் தொடர் எனப்படும். இவ் வந்தாதித் தொடராகவே இந்நூறு திருப்பாட்டுக்களும் அருளிச் செய்யப்பட்டன. “மெய்தான் அரும்பி” என முதல் திருப்பாட்டின் முதலடி தொடங்கப்பட்டு, “மெய்யர் மெய்யனே” என நூறாம் திருப்பாட்டின் இறுதி முடிக்கப்பட்டமை அறிக.

 

பத்தி வைராக்கிய விசித்திரம்

பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் இத் தொடர் இத் திருச்சதகம் முழுதும் நுதலிய பொருளைப் பற்றியதாகும். இங்ஙனமே பதிகந்தோறும் (சிவபுராண முதலிய நான்கு திருப்பாட்டுக்களையும் திருச்சதகம், நீத்தல் விண்ணப்ப முதலிய பத்துக்கு மேற்பட்ட பல திருப்பாட்டுக்களையுடைய பகுதிகளையும் தனித் தனியே பதிகம் என்று கூறுதல் முன்னையோர் வழக்கு.) அவ்வப் பதிகத்தின் திரண்ட கருத்துக்களையும் கூர்ந்து ஆராய்ந்து பண்டைப் பெரியார் ஒருவர் தலைப்புக் குறிப்பிட்டுள்ளார். இத்தொடர், பத்தி வைராக்கியங்களின் வியக்கத்தக்க பல்வேறு தன்மை யென்னும் பொருளுடையதாகும். பத்தி – இறைவனைக் குறித்து மெய்யடியார் உள்ளத்தில் நிகழும் பேரன்பு. வைராக்கியம் – பற்று அறுதி. விசித்திரம் – வியக்கத்தக்க பல்வேறு தன்மை. ஆளுடைய அடிகள் திருவாசகத்தின் முதல் திருப்பாட்டில் சிவபெருமானது அநாதி முறைமையான பழமையையும், இரண்டாம் திருப்பாட்டில் அப்பெருமானது திருவருட் புகழ்ச்சி முறைமையையும், மூன்றாம் திருப்பாட்டில் அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாய் நிற்கும் இயல்பையும் அருளிச் செய்துள்ளார். திருப்பாட்டுக்களாலும் இறைவன் இயல்புகளை விளக்கிக் கூறிப் பின் நான்காம் திருப்பாட்டில், உயிர்கள் வினைக்கு ஈடாக மாயையினின்றும் உடல் முதலியன பெற்றுப் பிறக்குமாறும், பிறவும் உணர்த்தியருளினர். அதன் பின் அங்ஙனம் தோன்றிய உயிர்கள் தம் இயல்பையும், தம்மையுடைய இறைவன் இயல்பையும், தம்மைப் பிணித்திருக்கும் கட்டின் இயல்பையும் நூன் முகமாகவும், ஞானாசிரியன் உபதேசமுகமாகவும் தெளிந்து, ஆண்டவன் திருவருட்பேற்றிற்கு ஆளாதலை விரும்பி அதற்குச் சாதனமாகிய மெய்யன்பையும், பற்று அறுதியையும் மேற்கொள்ளல் வேண்டும் என்பதை, இத் திருச்சதகத்தில் அருளிச்செய்வார் ஆயினர். ஆண்டவனை அடைதற்குரிய நெறிகள் பலவற்றுள்ளும் சிறந்தது அன்பு நெறியாகும். “முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்தி நெறி யறிவித்து” என்று கூறியிருத்தலின், அந் நெறியையே அடிகள் சிறந்ததாகக் கொண்டு கடைப்பிடித்துள்ளார் என்பது தெளிவாம். ஆண்டவனைக் குறித்து அடியார் மேற்கொள்ளும் மெய்யன்பே ஈண்டுப் பத்தியென்று கூறப்படும். ஆண்டவனிடத்துப் பத்தியுண்டாகுமாயின்; இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்றுக்களுக்கு ஒழிவுண்டாம். உடல் முதலியவற்றின் நிலையாமையுணர்ந்து அவற்றைப் பற்றி உண்டாய அவாக்களைக் களைதற்கும், இறைவன் திருவடி கூடுதற்கும் மெய்யன்பே சிறந்த சாதனமாகும். அன்பின் இயல்பு பல திறப்படும். அன்பினால் விளையும் செயல்கள் விதிமுறை பற்றியும், விதிமுறையைக் கடந்தும் காணப்படுவனவாம். கண்ணப்ப நாயனார் வரலாறே அதற்குச் சான்றாகும். பற்றறுதியை வைராக்கியமென்று கூறுவர். உலகப் பற்றொழிவும் பலதிறப்படும். செல்வம் இருந்து நீங்கினமை, உற்றார் பெற்றார் முதலியோரால் வெறுக்கப்படுதல் முதலிய காரணங்களாலும், உலகியற் பொருள்களின் நிலையாமையுணர்ச்சி முதலியவற்றாலும் பற்றறுதியுண்டாம் என்ப. இவ்வியல்புகளைக் குறித்தே வியக்கத்தக்க பல்வேறு தன்மை என்னும் பொருள்படப் பத்தி வைராக்கிய விசித்திரம் என்றாயிற்றென்பது. இத்திருச்சதகம் பத்துப் பத்துத் திருப்பாட்டுக்களையுடைய பத்துப் பகுதிகளைத் தன்னுட் கொண்டது. இப் பகுதிகள் பதிகம் என்று கூறப்பட்டிலவாயினும், தெய்வத்தைப் பற்றிப் பெரும்பாலும் பத்துப் பாட்டுக்களாகப் பாடப்படும் பகுதியைப் பதிகம் என்று கூறும் வழக்கு உண்மையான் பதிகம் என்றே ஈண்டு எடுத்து ஆளலானேம். இப்பத்துப் பதிகங்களிலும் பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருள் விரவியுள்ளதாயினும், ஒவ்வொரு பதிகத்திலும் மெய்யுணர்தல் முதலியனவாகப் பதிகம் நுதலிய பொருள்களும் தனித் தனியாக வுள்ளன. அவற்றை அவ்வப் பதிகத்தின் தலைப்பிற் காணலாம்.

திருப்பெருந்துறைப் புராணத்தில் காணப்படுவனவாகக் குறிக்கப்பட்டுள்ள திருவாசக வுண்மையில், இத்திருச்சதகம் நுதலிய பொருள் பற்றிச் “சத்திய ஞானந்தரு தேசிகர் மோகம் சதகமாம்” என்று கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் திருப்பெருந்துறையிற் குருந்த மரத்து நீழலில் ஞானா சிரியனாக எழுந்தருளித் தமக்கு ஞானோபதேசம் செய்து மறைந்த பொழுது, அடிகள் அப்பெருமானது பிறிவாற்றாத நிலையில் இஃது அருளிச் செய்யப்பட்டது ஆதலின் “உண்மை ஞானமாகிய மெய்யுணர்வைத் தமக்குக் கருணையுடன் அருளிய ஞானாசிரியன்பால் உள்ள வரம் பிகந்த காதல் என்னும் கருப்பொருளையுடையது, இத் திருச்சதகம்” என்று கூறியதும் பொருத்தமே.

 

மெய்யுணர்தல்

 

மெய்யுணர்தல் என்பது பொய்ப் பொருளாகிய உடல் முதலியவற்றின் நிலையாமை கண்டு நீங்கி, மெய்ப் பொருளாகிய கடவுளை அநுபவ வாயிலாக உணர்தல் என்னும் பொருளுடையதாகும். இனி இறை உயிர் கட்டு என்னும் பொருள்களின் இயல்பை விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல் எனினும் ஆம். பொய்யில் புலவர் திருக்குறளில் துறவற இயலில் வீடு பயக்கும் உணர்வாகிய ஞானத்தை, நிலையாமை துறவு மெய்யுணர்தல் அவாவறுத்தல் என்னும் நான்கு அதிகாரத்துள் அடக்கிக் கூறியுள்ளார். அவற்றுள் மூன்றாவதாகிய மெய்யுணர்தல் என்பதற்குப் “பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல்; இதனை வடநூலார் தத்துவ ஞானமென்ப” என்று பரிமேலழகர் உரை கூறினர். இறைவன் திருப்புகழ்களைப் பலபடக் கூறித் தம் வேண்டுகோளைப் புலப்படுத்துமுகமாக அடிகள் இப் பதிகத் திருப்பாட்டுக்களிற் புலப்படுக்கப்பட்ட பொருள் இதுவாம் என்பது. உலகம் யாக்கை இளமை செல்வம் முதலியவற்றின் நிலையாமையைப் பேச்சு அளவின் அன்றி உண்மையின் உணர்தல் வேண்டும். இவ்வுணர்ச்சி முதிர முதிர, அழிவின்றி என்றும் நிலையுதலையுடைய பொருள் யாதாகுமென்னும் ஆராய்ச்சியில் தலைப்படல் கூடும். இவ் வாராய்ச்சிக்குச் சிவாகமங்களையும், ஆகம முடிபுகளாகிய சைவ சித்தாந்த நூல்களையும் கருவியாகக் கொண்டு நேர்மையான முறையில் அவற்றின் பொருள்களை அறிதல் நன்றாம். அங்ஙனம் அறிந்த பெரியவர்களோடு அடுத்தடுத்துப் பழகித் தெளிதலும் இன்றியமையாதது. இம்முறையில் ஒழுகின் மெய்ப் பொருளாகிய கடவுளுண்மையைப் பற்றிய தெளிவுண்டாம் என்பது. அடிகள் இவ்வாறு ஒழுகி உணர்ந்தவர் என்பதை,

பற்பல பொருளா யுள்ள பாசமும் அதனை மேவி
உற்பவ பேதமான உடம்புயி ரோடுங்கு மாறும்
அற்புத புத்தி முத்தி யளித்தரு ளாலே மேலாம்
தற்பர னடாத்து மாறும் உணர்ந்தனர் சைவ நூலில்

என்று வரலாற்று நூலாசிரியர் கூறியமையானும் அறியலாம். அடிகள் அமைச்சராய் அரசியல் அதிகாரம் செல்வம் முதலிய இம்மைக்குரிய வெல்லாம் நிரம்பப் பெற்றவராயினும், சமயத் துறையில் சிறு பருவ முதலே தலைப்பட்டிருந்தமையின், பொய்ப்பொருள் கடிந்து மெய்ப்பொருள் தெளிதற்குரிய ஞானமும், மெய்ப்பொருளாகிய ஆண்டவனிடத்துப் பேரன்பும் உடையராய்க் “கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகுமா போல்” அகத்தே கடவுளுணர்ச்சியும் புறத்தே உலகியற் கடமையும் உடையராயினர் என்பது. அகமும் புறமும் வேறு படல் ஒழுக்க நெறிக்குப் பொருந்துமா எனின், உலகியலில் அது கருதத் தக்கதன்றி ஞானம் கைவரப் பெற்றாரைக் குறித்து நினைக்கத்தக்க தன்றாகலின் ஈண்டுப் பொருந்து மென்க. அடிகள் அருளிச்செய்த திருப்பாட்டுக்களின் முகமாகக் கண்ட மெய்யுணர்தல் என்னும் இஃது, இத் திருச்சதகத்தின் உட் பகுதிகளாகிய பதிகம் பத்துனுள் முதற் பதிகம் நுதலிய பொருளாகும். புகழ் மாலையாகிய இப் பதிகத் திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பதிகம் நுதலிய பொருளும் சதகம் நுதலிய பொருளும் புலனாதலை உய்த்துணர்ந்து கொள்ளல் வேண்டும். பதிகம் நுதலிய பொருள் ஒவ்வொரு திருப்பாட்டின் இறுதியிலும், சதகம் நுதலிய பொருள் முதல் திருப்பாட்டு இறுதித் திருப்பாட்டுக்களின் இறுதியிலும், இடையிடையேயும் காட்டப்படும்.

 

உரை முறை

 

இனி ஒவ்வொரு திருப்பாட்டிற்கும் கருத்துரைத்தல், கண்ணழித்தல் பொழிப்புத் திரட்டல் அகலங்கூறல் என்னும் நான்கு வகையாகக் கொண்டு உரை விளக்கம் செய்யப்படும். அவற்றுள் கருத்துரைத்தலாவது, திருப்பாட்டை அடுத்து அதன் திரண்ட கருத்தையும் முன்னைத் திருப்பாட்டோடு உள்ள இயைபையும் சுருக்கிக் கூறுதலாகும். கண்ணழித்தல் என்பது, பதப்பொருள் சொல்லுதல், பொழிப்புத் திரட்டல் என்பது, மூல பாடத்தின் பதங்களை விட்டு அவற்றிற்குச் சொல்லிய பொருள்களைத் திரட்டிக் காட்டுதல். இவ்விரண்டு வகையும் பதப்பொருள் கூறுமுகமாக அமையும் ஆதலின், விரிவஞ்சிப் பொழிப்புத் திரட்டுதலைத் தனியே கூறினேம் அல்லேம். அகலங் கூறலாவது, திருப்பாட்டின் பொருளைத் தூய்மை செய்தற்கு வினா விடை உள்ளுறுத்தும், ஆற்றன் முதலியவற்றாலும் குறிப்பாலும் சொற்களின் அமைந்து கிடக்கும் பொருள் நயங்களை விளக்கியும், இன்றியமையாத இடங்களில் மேற்கோள் காட்டியும் விளக்கிக் கூறுதலாகும். இம்மூன்றும் முறையே கருத்துரை, பதவுரை, விளக்கவுரை என உரிய இடங்களில் எடுத்தாளப்படும்.

—————————–

தி ரு ச் ச த க ம்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

1. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை
யாயென்னைக் கண்டுகொள்ளே.

கருத்துரை: பத்தி வைராக்கியங்களில் மன மொழி மெய்கள் மூன்றும் ஈடுபடல் வேண்டும். இறைவனை மெய்ப் பொருளென உணர்ந்து மனத்தால் நினைந்தும், மொழியாற் பாராட்டியும், மெய்யால் வணங்கியும் அன்பு செய்தல் பத்தியாம். உலக வாழக்கையைப் பொய்யென உணர்ந்து, அம் முக்கரணங்களாலும் வெறுத்துவிடல் வைராக்கியமாகும். ஆகவே, ஆளுடைய அடிகள் முதலிற் பத்திநிலையைப் புலப்படுத்துவாராய்த் தம் மன மொழி மெய்கள் ஆகிய முக்கரணங்களும் இறைவன் வயப்பட்ட செய்தியை இம் முதல் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.

பதவுரை: என் மெய்தான் அரும்பி – என் உடல் புளகித்து, விதிர் விதிர்த்து – மிக நடுங்கி, உன் விரையார் கழற்கு – நின் மணம் பொருந்திய திருவடி மலரைக் குறித்து, கை தான் தலை வைத்து – கைகளைத் தலைமேற் குவித்து, கண் நீர் ததும்பி – கண்களில் நீர் நிரம்பி வழிந்து, உள்ளம் வெதும்பிப் பொய் தான் தவிர்ந்து – மனம் வெதும்பிப் பொய்மை நீங்கப்பெற்று, உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் – நினக்கு வணக்கம் வெல்க வெல்க வணக்கம் என்று கூறும், கை தான் நெகிழ விடேன் – ஒழுக்கத்தைத் தளரவிடேன், உடையாய் – எல்லாம் உடைய ஆண்டவனே, என்னைக் கண்டுகொள் – எளியேனாகிய என் இயல்பைக் கண்டு அடிமையாக ஏற்றுக்கொள்வாயாக என்பது.

விளக்கவுரை: அரும்புதல் – முகிழ்த்தல்; மயிர் சிலிர்த்தல். விதிர் விதிர்த்தல் – மிக நடுங்குதல். தமக்கு இனிய தலைவனை நினைந்த துணையானே உண்டாம் அன்பு மேலீட்டால் மயிர் சிலிர்த்தலும் நடுங்குதலும் அடிகளுக்கு நிகழ்ந்தன வென்பது. அன்பிற்கு இடனாகிய பொருளை நினைந்த அளவில் இன்பவுணர்ச்சி யுண்டாதலும், அதன்சத்துவமாக உடம்பில் மயிர் சிலிர்த்தலும், அந் நினைவின் முதிர்ச்சியில் நடுக்கம் உண்டாதலும் இயல்பாதலின், “மெய்தானரும்பி விதிர் விதிர்த்து” என்றார். அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகிய மெய்ப்பாடுகளுள் நடுக்கமும் ஒன்றாகும். அஃது அன்பும் அச்சமும் காரணமாக நிகழும் என்ப. ஈண்டு அன்பு காரணமாகும். இம் மெய்ப்பாடுகள் காமம் பற்றியும் நிகழுமாதலின், அதனை விலக்குதற்கு, “உன் விரையார் கழற்கு” என்றார். விரையென்னும் அடையால் திருவடி மலர் என்பது பெற்றாம். திருக்கோவையில், “வெற்றியார் கழல்” என்று கூறப்பட்ட இடத்து, “இறைவன் திருவடிகள் எல்லாப்பொருள்களையும் கடந்து நின்றனவாயினும், அன்பர்க்கு அணியவாய், அவரிட்ட நறுமலரான் வெறி கமழும் என்பது போதர, ‘வெறியார் கழல்’ என்றார்” என்று பேராசிரியர் கூறியதற்கேற்பத் திருவடிகளுக்கு ஏற்றிக் கூறுதலுமாம். கண்ணீர் ததும்புதல், உள்ளம் உருகிய நிலையில் நிகழ்வதாகலின், பின் வரும் உள்ளத்தை ஒட்டிக் கூறப்பட்டது. “வெதும்பல்”, உருகுதல் என்னும் பொருட்டு.
பொய்மை – மாயா காரியமாகிய பொய்ப்பொருள் மெய்யென்றுணரும் மயக்க வுணர்வு. இதனை, “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருள்” என்பர் திருவள்ளுவர். இது நீங்கினாலன்றிச் சிவக்காட்சி யெய்தல் அரிதாகலின், “பொய் தவிர்ந்து” என்றார். “போற்றி“, ஈண்டு வணக்கத்தைக் குறிக்கும். இனி வணக்கம் கூறுதல் நாவளவின் இருத்தல் ஆகாதென்பார், “பொய் தவிர்ந்து” என்றாரெனினுமாம். “சய சய” வென்பது வெல்க வெல்க என்று வாழ்த்தியபடியாம். இறைவன் வெற்றிக்கு வாழ்த்தாக அங்ஙனங் கூறியது, அடிகள் மேற்கொண்ட சிவநெறியில் வெற்றி குறித்தாம்.

“வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்” என்பதும் ஈண்டு நினைக்கத் தக்கது. இறைவனைக் குறித்து வாழ்த்துதல் வணங்குதல் என்னும் இரண்டனுள்ளும் வணக்கமே அடியார்க்குச் சிறந்ததென்பது தோன்ற, “சய சய” என்பதன் முன்னும் பின்னும் வணக்கப்பொருள் குறிக்கும் போற்றி கூறப்பட்டது. கை – ஒழுக்கம். “கையொன்றறிகல்லாய்” என்ற இடத்து, கை யென்பது இப்பொருட்டாதல் அறிக. நெகிழ விடுதல் – சிறிது தளர்த்தல். இத்துணையும் மனம் மொழி மெய்கள் இறைவன் வயப்பட்டமை கூறியபடியாம். “உள்ளம் வெதும்பி, பொய் தவிர்த்து” என்றமையால் மனமும், “போற்றி சய சய போற்றி” என்றமையால் மொழியும், மெய்யரும்புதல் முதல் கண்ணீர் ததும்புதல் ஈறாக உள்ள செயல்களால் மெய்யும் இறைவன் வயப்பட்டன என்பது கருத்து.

 

அடிகள் தம் ஒழுக்கத்தின் சோர்வின்மையை உயிர்க்குயிராக விளங்கும் இறைவன் அறிய மேற்கொண்டமை தோன்ற “என்னைக் கண்டு” எனவும், முக்கரணமும் இறைவன் வயப்பட்ட இந்நிலையே ஆட்கொள்ளுதற் கேற்றதென்பார் “கண்டுகொள்” எனவும் அருளிச் செய்தனர். “கண்டு கொள்ளல்” என்பது உலகவழக்கில் ஒரு சொன்னீர்மைத்தாய், பெரியோன் ஒருவனைச் சிறியவன் காண்டலில் வழங்கப்படுவது. இங்கே அடிகள் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகலின் அங்ஙனங் கோடல், ஆண்டான் அடிமைகளின் பெருமைக்கு இழுக்காமென்க. இத் திருச்சதகத்தின் முதல் திருப்பாட்டால் அடிகள் தம் இயல்பு கூறினாராயினும், அடிகளின் அன்பு வடிவத்தை நம்மனோர் நெஞ்சக்கிழியின் ஓவியமாகப் பொறித்து நினைவுகூர்தற்கு இத் திருப்பாட்டு மிகவும் பொருந்தியதென்பது அறிந்து இன்புறத்தக்கது. வடமொழியார் இத்தகைய திருப்பாட்டுக்களைத் தியானசுலோகம் என்ப. அடிகளின் மனம் மொழி மெய்கள் இறைவயப்பட்ட நிலையைக் குறிக்கும் இத் திருப்பாடற் கருத்தே இத் திருச்சதகத்தின் இறுதித் திருப்பாட்டிலும் தெளிவாக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது.

 

“தான்” நான்கும் அசைகள். ஈண்டுள்ள வினையெச்சங்களுள், அரும்பி, விதிர் விதிர்த்து, ததும்பி, வெதும்பி என்பன சினைவினைகள்; ஏனைய முதல்வினைகள். சினை வினைகள் எல்லாம், “அம்முக் கிளவியுஞ் சினை வினை தோன்றிற், சினையொடு முடியா முதலொடு முடியினும், வினையோ ரனைய வென்மனார் புலவர்” என்னும் விதிப்படி, “என்னும்” என்ற முதல் வினையைக் கொண்டு முடிந்தன. “உன்னை” என்பதில் நான்கனுருபில் இரண்டாவது மயங்கிற்று.

இதன்கண், மெய் அரும்புதல் முதலியவாகக் கூறப்பட்ட கரணங்களின் செயல்களால் பத்தியும், “பொய் தவிர்த்து” என்றதனால் வைராக்கியமும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், பொய் தவிர்த்து முக்கரணமும் ஆண்டவனைப்பற்றி நிகழ்தலே மெய்யொழுக்கமாகும் என்னும் உண்மை பெறப்படுதலின், மெய்யுணர்தலாகிய பதிகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

 

2. கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல்
லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே
யிருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்
லாதெங்கள் உத்தமனே.

கருத்துரை: அடிகள் தம் மனம் மொழி மெய்கள் இறைவன் வயப்பட்ட செய்தியை முதல் திருப்பாட்டில் வெளிப்படுத்தி, அக்கரணங்கள் பிறர் வயப்படா என்பதை இத் திருப்பாட்டில் புலப்படுத்து அருளுகின்றார்.

பதவுரை: எங்கள் உத்தமனே இறைவா – அடியேமாகிய எங்கள் தலைவனே இறைவனே, புரந்தரன் மால் அயன் வாழ்வும் கொள்ளேன் – இந்திரன் திருமால் பிரமன் என்னும் இவர்தம் வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ளேன், குடி கெடினும் — குடிப்பிறப்பிற்குரிய பெருமை கெட நேரினும், நினது அடியாரோடு அல்லால் நள்ளேன் — உன்னுடைய அடியாரோடல்லாமல் பிறரோடு நட்புக்கொள்ளேன், திருவருளாலே இருக்கப்பெறின் — நின் திருவருளாலே இருக்க நேரின், நரகம் புகினும் எள்ளேன் — நரகத்தின் கண்ணே செல்லினும் அதனை இகழ்ந்து பேசேன், உன்னையல்லாது பிற தெய்வம் உள்ளேன் — உன்னை அல்லாமல் வேறு தேவர்களை மனத்தாலும் நினையேன், என்பது.

விளக்கவுரை: திருமால் பிரமன் வாழ்க்கைகளிலும் இந்திரன் வாழ்வு இன்ப நுகர்ச்சிக்குச் சிறந்ததாகலின் அது முற்கூறப்பட்டது. புரந்தரன் முதலியோர் தம் வாழ்க்கை நலங்களை வலிந்து தர முற்பட்டாலும் விரும்பேன் என்பது தோன்றக் “கொள்ளேன்” என்றார். “கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர், கொள்ளே னென்றல் அதனினும் உயர்ந்தன்று” என்று உலகியல் பற்றிக் கூறிய புறப்பாட்டின் கருத்தும் ஈண்டு நினைக்கத்தக்கது. “குடி” ஆகுபெயர். குடிப்பிறப்புப் பெருமை கெட நேருங்கால், தாங்குவோர் யாவராயினும், அவரை நட்புக்கோடல் அப் பயன்கருதித் தகுமாயினும். அங்ஙனம் நட்புக் கொள்ளப்பட்டார் நின் அடியரல்லராயின், அவர் நட்புத் திருவருட்கு விலக்காக நின்று குடிப்பிறப்புக்கு வரும் கேட்டினும் மிக்க கேடுவிளைக்கும் என்பது கருதிக், “குடிகெடினும் நள்ளேன்” என்றார். அடியார் உறவு அக்குடிப் பெருமையினும் சிறந்த பேறு அளிப்பதாகலின், அவ்வுறவையே வேண்டுவேன் என்பதை வலியுறுத்தற் பொருட்டு, “அடியாரொடல்லால் நள்ளேன்” என எதிர்மறை முகத்தாற் கூறினார். திருவருட் பேறுடையார் நரகம் புகுதல் எக்காலத்தும் இன்றென்பது தோன்றப் “புகினும்” என்றார். உம்மை, புகுதலின்மையை விளக்கி நின்றது. ஒரோவழிப் புகநேரினும், ஆண்டிருத்தல் திருவருட்கு உடன்பாடாயின் அவ்விருப்பையும் இகழ்ந்து கூறேன் என்றார். உயர்வு இழிபு நோக்காது யாங்குறினும் இறையருளில் தலைப்படுதல் ஒன்றையே குறிக்கோளாக உடைமையின். “திருவருளாலே” என்புழி, ஏகாரம் தேற்றப் பொருளது; வேறு நலம் பயக்கும் காரணம் யாதாயினும் இழிவாகக் கருதுவேன் என்பது தோன்ற நின்றமையின் “பிரிநிலை” யெனலுமாம். “எங்கள்” என்றது மற்றை யடியாரையும் உள்ளிட்டு.

பிற தேவர்களுக்கு இல்லாத பரம்பொருள் தன்னை சிவபெருமானுக்கு உண்மை கருதி, “உத்தமனே”, “இறைவா” எனவும், புரந்தரன் முதலியோர்க்கு அத் தன்மை இன்மை கருதி, அன்னாரைப் “பிற தெய்வம்” எனவும் கூறினர். உத்தமன் என்றதனால் தலைமைத் தன்மையும், இறைவன் என்றதனால் எங்கும் நிறைந்த முழுமுதல் தன்மையும் ஆகிய பரம்பொருட்டன்மை பெறப்படும். தெய்வம் என்றது சாமானிய தேவரைக் குறிக்கும். பிறரெல்லாம் விரும்பும் விண்ணுலக வாழ்க்கையும் மண்ணுலக வாழ்க்கையும் எத்துணைச் சிறந்தனவாயினும், அவற்றை வேண்டேன் என்பார், முறையே “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” எனவும், “குடி கெடினும் நள்ளேன் நினதடியா ரொடல்லால்” எனவும், பிறர் விரும்பாத கீழுலக வாழ்க்கை வேண்டாத தொன்றாயினும், ஆண்டிருத்தல் திருவருட்கு உடன்பாடாயின் வேண்டுவேன் என்பார் “நரகம் புகினும் எள்ளேன்” எனவும் கூறினர். அடியாரோடு கொள்ளும் நட்புத் திருவருட் பேற்றிற்கு ஏதுவாகலின், அது மண்ணுலக வாழ்க்கையைக் குறித்த தாகாமை உணர்க. அடிகள் “சிவபிரானையன்றி வேறு தேவரைப் பரம்பொருளாகச் சிறிதும் நினைந்திலேன் என்பார், “உள்ளேன் பிற தெய்வம்” என்றார். “மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது” என்று பிறிதோரிடத்துக் கூறியதுங் காண்க.

உள்ளுதல் மனத்தின் செயலாதலின், “உள்ளேன்” என்றதனால் மனமும் இகழ்ந்து கூறுதல் வாக்கின் செயலாதலின், “எள்ளேன்” என்றதனால் மொழியும், வாழ்க்கை நலம் பொறி நுகர்ச்சியாலும், நட்புக்கோடல் புணர்ச்சி பழகுதலாலும் ஆவன் ஆதலின், “கொள்ளேன்” “நள்ளேன்” என்றமையால் மெய்யும் ஆகிய முக்கரணங்களும் பிறர் வயப்பட்டில அறிக. “வாழ்வும்” என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.

இதன்கண், “நினதடியா ரொடல்லால் நள்ளேன்” என்றாதனால் பத்தியும், “கொள்ளேன்” “உள்ளேன்” என்பனவற்றால் வைராக்கியமும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், “உன்னை யல்லாது பிற தெய்வம் உள்ளேன்” என்றதனால் மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

 

3. உத்தமன் அத்தன் உடையான்
அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன்
என்ன மனைநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊரூர் திரிந்துஎவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ்
ஞான்றுகொல் சாவதுவே

கருத்துரை: தன் மனம் முதலியன பிறர் வயப்படாமல் சிவபிரான் ஒருவனையே பற்றி நிற்கும் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், அங்ஙனம் நிகழும் தம் நினைவு சொற்செயல்கள் உலகத்தவர்க்கு மாறுபாடாகத் தோன்றினும் அந்நிலை மகிழ்ந்து ஏற்கத்தக்கது என்பதை இத் திருப்பாட்டிற் கூறுகின்றார்.

பதவுரை: உத்தமன் அத்தன் உடையான் — தலையாயவனும் தந்தையும் உடையானும் ஆகிய இறைவனுடைய, அடியே நினைந்து உருகி — திருவடியே இடையறாது எண்ணி உள்ளம் உருகி, இவன் மால் என்ன — இவன் மயக்கமுற்றான் எனப் பிறர் கருதும்படி, மத்த மனத்தொடு — களிப்பேறிய நெஞ்சத்தோடு, ஊர் ஊர் திரிந்து — பல ஊர்களிலும் போக்கு வரவு செய்து, மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட — என் உள்ளக்கருத்திற் பொருந்தின பொருந்தின செய்திகளை யான் பேச, எவரும் —இந்த நிலையைக் கண்டார் எல்லோரும் , தம் தம் மனத்தன பேச — தங்கள் தங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்திச் சொல்ல, சாவது எஞ்ஞான்று — இவ்வுலக வாழ்க்கையினின்றும் ஒழிவடைவது எப்பொழுது? என்பது.

விளக்கவுரை: நினைந்து உருகி என்னத் திரிந்து சொல்லிடப் பேசச் சாதல் எஞ்ஞான்று என முடிக்க. ஏகாரங்கள் இரண்டனுள், முன்னது பிரிநிலையும், பின்னது ஈற்றசையுமாம். “கொல்” அசை நிலை.

உலகத்து அறிவுடைப் பொருள்களை நோக்க, இறைவன் ஆண்டான் எனவும் அவை அடிமை எனவும், அறிவில் பொருள்களை நோக்க, அவன் உடையான் எனவும் அவை உடைமை எனவுங் கூறுப. இம்முறையில் அறிவுடைப் பொருள்களை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் என்பது போதர உத்தமன் எனவும், அறிவின் பொருள்களை உடைமையாகக் கொள்ளும் இயல்பினன் என்பது போதர உடையான் எனவும் கூறினர். ஓர் அரசன் புதல்வன் வேடர் சூழலிற் பட்டுத் தன் இயல்பை அறியாமல் வளர்ந்தானாக, நல்லூழ் வயத்தால், “நீ வேட்டுவன் மகனல்லை; உண்மையில் என் புதல்வனாவாய்” என அறிவித்து, அவ்வரசர் அப் புதல்வற்குத் தன் அரசுரிமைச் செல்வத்தை நல்குதல் போல, அடிகள் ஐம்புலமாகிய வேடர் சூழலிற் பட்டுத் தம் இயல்பு அறியாமல் இருந்த நிலையில், கட்டறுக்கும் பருவம் உற்றமையால், “நீ புலனுகர் இன்பம் பெறுதற்கு உரியை அல்லை; உண்மையில் பேரின்பம் நுகர்தற்குரிய என் புதல்வனாவாய்” என மெய்யுணர்வால் அறிவித்து, இறைவன் தன் பேரின்பப் பெருஞ் செல்வத்தை அருளிக் காத்தமை தோன்ற, “அத்தன்” என்றார். ஆண்டவன் திருவருளை நினைத்தற்கு அவன் திருவடியே அன்றி வேறு பற்றுக்கோடு இன்மையால், “அடியே நினைந்து” எனவும், அந்நினைவின் முதிர்ச்சி தோன்ற, “உருகி” எனவும் கூறினர்.

அடிகள் தம் புறச்செயலைக் கண்ட பிறர், உண்மை யுணராமல் பித்துப்பிடித்து மயங்கினர் என்று கருதும்படி, பல ஊர்களிலும் சிவதரிசன நிமித்தம் போக்குவரவு செய்து, சிவானந்தத் தேறலை மிகுதியாக உண்டு, அக் களிப்பினால் உலகியலை மறந்து தம் உள்ளக் கருத்திற்குப் பொருந்தின பொருந்தினவாகிய மெய்யன்பு மயமான சொற்களைத் தாம் பேசவேண்டும் என்பார், “மாலிவன் என்ன மத்த மனத்தொடு ஊரூர் திரிந்து மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட” எனவும், அடிகள் அங்ஙனம் உலகியலை நோக்காமல், இறையருள் வயப்பட்டுத் தம் அநுபவத்திற் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துக் கூறும் மொழிகளைக் கேட்பார் எல்லோரும் தத்தம் உள்ளங்களில் நல்லனவாகவும் தீயனவாகவும் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துக் கூறினும் கூறுக என்பார், “எவரும் தத்தம் மனத்தன பேச” எனவும் கூறினர். அடிகள் அருட்செயலைக் கண்டாருள் ஒரு சாரார், அவர் தம் மெய்யன்பின் இயல்பை உய்த்துணர்ந்து, அவ்வுணர்ச்சியால் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துப் பாராட்டிப் புகழ்ந்து கூறுவர் என்பதும், பிறிதொரு சாரார் உண்மை யுணராமல், புறச்செயலைக் கண்டு, அக் காட்சி காரணமாகத் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்து இகழ்ந்து கூறுவர் என்பதும், “எவரும் தத்தம் மனத்தன பேச” என்னுந் தொடரிற் குறிப்பிற் புலனாதலறிக. புகழ்ந்து கூறுதலையும் இகழ்ந்து கூறுதலையும் குறித்து மனத்தனவெனப் பன்மையாற் கூறினர் என்பது. இங்ஙனம் தம்மைப் புகழ்வாரும் இகழ்வாரும் முறையே நல்வினை தீவினைகளை ஏற்றுக்கொள்ள, அதன் முகமாகத் தமக்கு வினையொழிவு உண்டாக வேண்டுமென்பது அடிகள் கருத்தன்று. “கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றி” என்றபடி, ஆண்டவன் அருளினால் வினை ஒழிதல் வேண்டும் என்பதே குறிக்கோள். ஆயினும் ஞானநிலை யுடைய பெரியோன்பால் அமைந்து கிடைக்கும் ஆகாமிய கன்மமாகிய நல்வினை தீவினைகள், முறையே அப் பெரியோனைப் புகழ்வார்பாலும் இகழ்வார்பாலும் அடைய, அவற்கு அவ்வினை யொழிவுண்டாம் என்பது அறிவியல் நூலிற் கண்டதாகலின், அம்முறையாலும் அடிகளின் உண்மை அன்பைக் கண்டு புகழ்ந்து கூறுவார், ஆகாமிய கன்மத்துள் நல்வினைப் பகுதியையும், புறச்செயலைக் கண்டு எள்ளிக் கூறுவார் தீவினைப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள, வினையொழிவுண்டாம் என்பதும் ஈண்டுக் கருதத் தக்கது. “சாதல்” — ஈண்டுக் கட்டறுத்து உலக வாழ்வினின்றும் ஒழிவு பெருதலைக் குறிக்கும். அடிகள் “சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப, நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாகக்” கொண்டு, உலக வாழ்க்கையினின்றும் ஒழிவு பெறுதல் எப்பொழுது வாய்க்குமோ என்பார், “எஞ்ஞான்று கொல் சாவதுவே” என்றார்.

இத் திருப்பாட்டில், “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பதும், “தத்தம் மனத்தன பேச” என்பதும் ஆகிய இரண்டனையும் பிறர் கூற்றுக்களாகக் கொண்டு, முறையே உள்ளூராரும் அயலூராரும் அடிகளைக்கண்டு கூறியனவாகப் பலரும் உரை கூறியுள்ளார். உள்ளூரார் அயலூரார் கூற்றுக்களை நினைந்து அடிகள் கூறினாரென்றதில் ஒரு பொருட்சிறப்பின்மையையும், பின்னர் “எவரும் தத்தமனத்தன பேச” என்றதனால், முன்னர் “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பது அடிகள் கூற்றென்பது தானே பெறப்படுதலையும் அவர் உணர்ந்திலர். அதனால் அஃது உடையன்றென்பது தெளிக.
இதன்கண், உலகத்தவர் புகழ்தலினும் இகழ்தலினும் விருப்பு வெருப்புக் கொள்ளாமல், திருவருள் ஒன்றிலே தோய்ந்து நிற்றல் மெய்யுணர்வின் பயனாம் என்பது பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

 

4. சாவமுன் னாள்தக்கன் வேள்வித்
தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாயென் றவிதா
இடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடும்
எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன
பாவந் திரிதவரே.

கருத்துரை: தம் மனம் முதலியன பிறர் வயப்படாமல் சிவபிரானையே பற்றி நிற்கும் என முன்னர்க் கூறிய அடிகள், அங்ஙனம் பிற தேவர் வயப்படாமைக்குத் தாம் அறிந்த காரணத்தை இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.

பதவுரை: முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று — முன் ஒரு காலத்தில் தக்கன் என்பான் இயற்றிய வேள்வியில் அவியாகப் பெய்த ஆட்டுக்கடாவின் இறைச்சியைத் தின்றும், நஞ்சம் சாவ அஞ்சி — திருப்பாற்கடலில் எழுந்த பெரு நஞ்சைக் கண்டு சாதற்கு அஞ்சியும், எந்தாய் ஆ! ஆ! என்று அவிதா இடும் நம்மவர் அவரே — எங்கள் தந்தையே ஆ! ஆ! என் செய்வோம்! என்று கதறித் துன்ப முறையீடு செய்யும் நம்மனோராகிய அத் தேவர்களே, எம்பிரானொடு மூவர் என்று எண்ணி — எம்பெருமானாகிய சிவ பரம்பொருளொடு தம்மையும் சேர்த்து மூவராவோம் என்று நினைத்து, விண் ஆண்டு — விண்ணுலகத்தில் ஒரு கூறு ஆட்சி புரிந்து, மண்மேல் தேவர் என்று இறுமாந்து திரிந்தவர் — நிலவுலகத்தில் யாம் முதற்கடவுள் ஆவேம் என்று செருக்கித் திரிந்தவர், என்ன பாவம் — இஃதென்ன தீவினைப் பயன் இருந்தவாறு! என்பது.

விளக்கவுரை: தின்றும் அஞ்சியும் என்று இடும் நம்மவர் எனவும், எண்ணி ஆண்டு என்று இறுமாந்து திரிதவர் எனவும் முடிக்க. தின்றும் அஞ்சியும் என்புழி, எண்ணும்மைகள் தொக்கு நின்றன. “அவரே” “தேவரன்றே” என்பவற்றில் உள்ள ஏகாரங்கள், முறையே பிரிநிலையும், தேற்றமுமாம். திரிதருவர் என்றது ரகர வுகரம் கெட்டு, “திரிதவர்” என்றாயிற்று. தக்கன் சாவ வேள்வித் தகர் தின்றும் என இயைத்து, “சாவ” என்பதைக் காரியப்பொருட்டாக்கலும் ஒன்று. தக்கன் என்பான் வேள்வித் தலைவனாகிய சிவபிரானை வெறுத்து, மற்றைத் தேவர்களை அழைத்து வேள்வி இயற்ற, அவ்வேள்வியிற் கிடைத்த அவியுணவை அன்னார் உண்டதே அவன் அழிவிற்குக் காரணம் ஆயிற்றென்பதாம். அவியுணவு ஏற்குந் தகுதி தமக்கு இன்று என்பதை உணராமல், ஊன்சுவையில் ஈடுபட்டு, அவ்வாட்டு இறைச்சியை உண்டனர் என்பது போதர, அவியேற்றென்னாது, “தகர் தின்று” எனவும், அங்ஙனம் தின்றற்கு முற்படும் இயல்பினர் நஞ்சத்தைக் கண்டுழிப்பின்னிட்டு நடுங்கினரென்பது தோன்ற, “நஞ்சம் அஞ்சி” எனவும் கூறினர். தகர் ஊன் தின்று என்னாது “தகர் தின்” றென்றது, “யாட்டினின் பாலென மூலமுமாம்” (ஆவின் பாலோ எனக் கருதினார்க்கு, உண்மை உணர்த்தி விலக்க, ஆட்டுப்பால் என்றனராம்; அது கேட்டவர் ஆட்டுப்பால் ஒன்றோ, அதன் மூலமும் ஆகும் என்றனராம். மூலம் ஆட்டு உடல் இறைச்சியைக் குறிப்பதாகும். — பிட்சாடனர் நவமணி மாலை, செ. 4) என்றாற் போல, அவ்விறைச்சி யுண்டலின் வேட்கை மிகுதி குறித்து நின்றது. தக்கன் சிவபிரானை வெறுத்து, அவி தர அழைக்குங்கால், “அப்பெருமான் நம் தந்தையாவரே; அவரை வெறுத்த இடத்தில் நாம் சென்று களித்தல் ஆகாதே” என்று எண்ணாமல் சென்று உண்ட தீச்செயலைக் கண்டு, வீரபத்திரர் ஒறுத்த ஞான்று, அத்துன்பம் பொறாது வருந்தினரென்பதும், அமுதம் பெறக் கடல் கடைந்துழி, நஞ்சு தோன்றிற்றாக, அதற்கு அஞ்சி, அந்நஞ்சினால் தமக்கு ஏதம் விளையாவாறு விரைந்து வெளிப்பட்டுக் காத்தருள வேண்டும் என்று கதறி முறையிட்டனரென்பதும் போதர, “எந்தாய் ஆ ஆ என்று அவிதா இடும்” எனவும், அங்ஙனம் முறையிட்டவர், பாசக் கட்டுடைய மக்களாகிய நம்மை ஒத்தவர் என்பது விளங்க, “நம்மவர் அவரே” எனவும் கூறப்பட்டன.

“ஆவா” என்பது ஆவ எனக் குறைந்து நின்றது. “அவரே” என்பதில் உள்ள ஏகாரம் உயிர்த்தன்மையரே அன்றிப் பிறரல்லர் என்பதைத் தெளிவித்தலால் தேற்றப் பொருட்டாம். “அவிதா” என்பது கேடு நேர்ந்துழிக் கூறப்படும் முறையீட்டுச் சொல். “விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்” என்று கொற்றவையைப் பரவு முகமாகச் சிவபெருமான் பெருமை கூறப்பட்டது ஈண்டு நினைக்கத்தக்கது. பிரமன் முதலிய தேவர்கள் எல்லாம் மும்மலம் உடைய சகல வருக்கத்தினராதலின், மக்கள் தன்மையராகக் கருதப்பட்டு, “நம்மவரவரே” எனப்பட்டனர்.

வேள்வியிற் பெற்ற ஆட்டிறைச்சியை உண்டற்கு முற்பட்ட தேவர்கள், நஞ்சம் வெளிப்பட்ட பொழுது அதனை அடக்கும் ஆற்றல் இல்லாமையொடு, அதற்கு அஞ்சித் தமக்கு கேடு நேராவாறு சிவபிரானைக் குறித்து, “எங்கள் தந்தையே காத்தருள்க” என முறையிட்டனர் என்னும் இதனால், அன்னார் தலைமைப் பேற்றிற்கு உரியரல்லர் என்பது வெளிப்படையாகும்.

இவ்வுண்மை யறிந்தும், பிரமன் திருமால் உருத்திரன் என்னும் முறையில் சிவபிரானை உருத்திரனாக எண்ணி, அவனோடு தம்மையும் ஒத்த நிலையில் வைத்து எண்ணுதல் அவர் தம் செருக்கைப் புலப்படுத்துவதாகும். இவ்வரிசையில் வைத்து எண்ணப்படும் உருத்திரன், அயன் மாலொடுங் கூடக் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதி புவனாந்தம் சங்கரிக்கும் குணிருத்திரனாவான். சுத்த மாயா புவனாந்தம் சங்கரிக்கும் சங்கார காரணனே பரமசிவனாவான். இதனை, “இவ்வேறுபாடுணராது மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்தெண்ணுவோரை நோக்கி, ‘நம்மவரவரே மூவரென்றே எம்பிரானோடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல், தேவரென்றே யிறுமாந்து என்ன பாவந் திரிதவரே’ என வாதவூரடிகள் இரங்கிக் கூறிய திருவாக்கும் அறிக” என்னும் சிவஞான மாபாடியத்தானும் உணர்க. “தேவரில் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர், மூவராய் நின்றதோரார்” என்று சிவஞான சித்தியும், “தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தமிக்கு மற்றை, மூவர்கோனாய் நின்ற முதல்வன்” என்று பிறிதோரிடத்து அடிகளும் கூறியவற்றானும், பரமசிவன் மூவர்க்குந் தலைவன் என்பது தெளிவாதல் உணர்க.

படைத்து அளித்து அழித்தற்குரிய மூவராலும் விண்ணுலகில் ஒவ்வொரு பகுதி ஆட்சி செய்யப்படுதலின், “விண்ணாண்டு” என்று கூறப்பட்டது. அவ்வாட்சியைத் தொழில் நிலையமாகக் கொள்ளாமல், அதுபற்றி மண்ணுலகில் தாமே பரம்பொருளெனக்கருதிச் செருக்கித் திரிதல் அறியாமையின்பாற் படும் என்பது தோன்ற, “மண்மேல் தேவரென்றே இறுமாந்து திரிதவரே” என்று கூறப்பட்டது. “தேவர்” என்பது ஈண்டு ஒருமைப் பொருட்டு. இதனைத் “தேவர்” என்றது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி; “மண்மேற் றேவரென்றே இறுமாந்து’ என்றார் பிறரும்” என்று நச்சினார்க்கினியர் கூறுதலானும் அறிக. நஞ்சுண்டு காத்த அருட்செயலைக் கண்டு வைத்தும், தம்மைப் பரம்பொருளாக எண்ணி இறுமாந்து திரியும் தேவர் நிலைமை இரங்கத்தக்க தென்பார், “என்ன பாவம்” என்று கூறினர்.

இதன்கண், சிவபெருமானை, மூவருள் ஒருவன் என்பது பொருந்தாது; அம்மூவரையும் இயக்கி ஆளும் தலைவன் என உணர்தல் வேண்டும் என்றது மெய்யுணர்தலாதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.
.

5 தவமே புரிந்திலன் தண்மலர்
இட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை
யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு எய்திற்றி
லேன்நின் திருவடிக்காம்
பவமே அருளுகண் டாய்அடி
யேற்கெம் பரம்பரனே.

 

கருத்துரை: சிவ பெருமான் அல்லாதார் பரம்பொருளாகார் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், பரம்பொருள் பரமசிவனே யென்பதை உணர்ந்தும், அப்பெருமானை யடைதற்குரிய சரியை முதலிய தவத்தை மேற்கொள்ளாமைக்கு இரங்கி, இனியேனும் அத்தவஞ் செய்தற்குரிய பிறப்பு வேண்டுமென்று இறைவனை நோக்கி இத் திருப்பாட்டிற் கூறுகின்றார்.

பதவுரை: எம் பரம்பரனே — எங்கள் மேலான பரம்பொருளே, உனக்கு அன்பர் உள் ஆம் — உன்பால் மெய்யன்பு மிக்க பெரியார் அகத்துள் உண்டாம், சிவமே பெறும் திருஎய்திற்றிலேன் — வீட்டின்பத்தையே பெறுதற்கு ஏதுவாகிய சிவஞானச் செல்வத்தை அடையப் பெற்றேன். அல்லேன்; தவம் புரிந்திலன் — தவத்தையும் செய்தேன் அல்லேன், நின் திருவடிக்குத் தண் மலர் முட்டாது இட்டு இறைஞ்சேன் — நின்னுடைய திருவடிகளுக்குக் குளிர்ந்த நறு மலர்களைக் குறைவற இட்டு வணங்கேன், அவமே பிறந்த அருவினையேன் — ஆதலின் பயனின்றிப் பிறந்த கடத்தற்கரிய தீவினையுடையேன் ஆயினேன், நின் திருவடிக்கு ஆம் பவமே அடியேற்கு அருளு — ஆதலின் இனி நின் திருவடியை அடைதற்குரிய பிறப்பையே அடியேனாகிய எனக்கு அருளிக் காத்தல் வேண்டும், என்பது.

விளக்கவுரை: அன்பர், உள்ளாம் திரு, சிவமே பெறுந்திரு என இயைக்க. திரு, ஈண்டுச் சிவஞானத்தை யுணர்த்தும்; அது சிவத்தைப் பெறுதற்கு வாயிலாதலின், சிவம் — என்று அழியாத பேரின்பம். ஞானம் மெய்யன்பின் விளைவாதலின், “அன்பர் உள்ளாந்திரு” எனவும், அது பயப்பது வீட்டின்பம் ஆதலின், “சிவமே பெறுந்திரு” எனவும் கூறப்பட்டன. ஈண்டு ஏகாரம் தேற்றப்பொருட்டு. தவம் ஈண்டுக் கிரியையையும் யோகத்தையும் குறிக்கும். அகத்தும் புறத்தும் வழிபடுதலாகிய கிரியையும், மூச்சுக்காற்றை அடக்கி, மனத்தை அசைவற நிறுத்தி, உயிர் பரத்துடன் ஒன்றுதல் என்னும் அகவழிபாடாகிய யோகமும் தட்பவெப்பங்கள் முதலியவற்றால் உடற்கு உறும் துன்பத்தைப் பொறுத்துச் செய்யத்தக்கனவாதலின், தவம் என்று கூறப்பட்டன. சிவஞான போதம் எட்டாஞ் சூத்திரவுரையில், தவம் என்பது சரியை கிரியா யோகங்களை உணர்த்தும் என்ப. “ஈண்டுத் தவம் எனப் பட்டன பிறவல்ல வென்பார், சரியை கிரியா யோகங்களை எனக் கிளந்துரைத்தார்” என்பது சிவஞான முனிவர் உரை. சரியை முதலிய மூன்றனையும் தவம் என்னுஞ் சொல் உணர்த்துமாயினும், ஈண்டுத், “தண்மல ரிட்டிறைஞ்சேன்” எனச் சரியை வேறாகக் கூறப்பட்டமையால், தவம் என்பது கிரியையையும் போகத்தையும் உணர்த்துவதாகும். மேலும், “சரியை கிரியா யோகங்களை” என்னும் மெய்கண்டார் திருவாக்கிற்கு உரை கண்ட சிவஞான முனிவர், “கிரியா யோகங்கள் என்னும் உம்மைத்தொகை வடநூன் முடிபு; கிரியா யோகம் இரண்டற்கும் தீக்கை ஒன்றென்பது தோன்ற, அவ் விரண்டனையும் தொகுத்தோதிச் சரியையைத் தமிழுக்குரிய வீற்றான் வேறு வைத்தார்” என்று கூறினர். இதனால் விசேட தீக்கை ஒன்றே கிரியை யோகங்களை மேற் கோடற்குரிய தகுதியளிக்கும் என்பது புலனாம். இந்நயம் பற்றித் தவம் என்னுஞ் சொல்லால் கிரியையையும் யோகத்தையும் கோடல் பொருந்தும் என்பதுணர்க. தவமே என்புழி, ஏகாரம் தேற்றப்பொருட்டு என்பது உபலக்கணமாக நின்று வழிபாட்டிற்குரிய ஏனைய உபகரணங்களையும் உணர்த்தும், “முட்டா” தென்பதும் உபகரணப் பொருள்களின் குறைவின்மையை வலியுறுத்துவதாகும். மலர் இட்டு இறைஞ்சுதற்குரியது திருவடியாதலின், அஃது ஈண்டுங் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது.

இறைவனை அடைதற்குச் சைவாகமங்களிற் கூறப்பட்ட நெறி நான்காகும். அவை, சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. இவை ஒன்றற்கொன்று சாதனமும் சாத்தியமுமாக, இறுதியாகிய ஞானத்தால் வீடடைதல் கூடும். “விரும்புஞ்சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும், அரும்பு மலர் காய் கனி போல் ஆகும்” என்பர் தாயுமானார். ஞானம் வீடு பயக்கும் உணர்வாதலின், வீட்டிற்கு வாயிலாகிய அதனைப் பெறுதல் இன்றியமையாததாகும். அது பெறுதற்கு அரிதாயிற்றென்பார், “சிவமே பெறுந்திரு எய்திற்றிலேன்” எனவும், அதற்குச் சாதனங்களாகவுள்ள யோகநெறி, கிரியை நெறியாகிய இவற்றையும் அடைந்திலேன் என்பார், “தவமே புரிந்திலன்” எனவும், அவ்வெல்லாவற்றிற்கும் முதற்படியாக வுள்ள சரியையிலேனும் தலைப்பட்டேனோவெனின், அதுவும் இன்றென்பார். “தண்மலரிட்டு முட்டா திறைஞ்சேன்” எனவும் கூறினர். சிறந்த இந் நால்வகை நெறியினும் தலைப்படாமையால் இப்பிறப்புப் பயனற்ற தென்பார். “அவமே பிறந்த” எனவும் இவ் அவப் பிறப்பிற்குக் காரணம், கடத்தற்கரிய என் தீவினை என்பார், “அரு வினையேன்” எனவும் கூறினர். இதுகாறும் பிறப்பறுப்பதற்குரிய நெறி கைவரப் பெற்றிலேன்; ஆதலால் மேலும் பிறப்புண்டாதல் ஒருதலை; இனிக் கிடைக்கும் பிறப்பாவது நின் திருவடியடைதற்குரிய நெறி நிற்றற்கே யன்றி வேறுபடாவாறு அருளல் வேண்டும் என்பார், “நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு” எனத் தேற்றப் பொருள் தோன்றக் கூறி வேண்டினர். ஈண்டு ஏகாரம் தேற்றப் பொருளது. கண்டாய் என்பது முன்னிலை அசை. பிறப்பு வேண்டத் தக்கதன்றெனினும், சிவ நெறி நின்று, இறைவழிபாட்டில் தலைப்படக் கிடைக்குமாயின், பெரிதும் வேண்டிப் பெறத்தக்கதென்பதை,

              குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
             பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
            இனித்தம் உடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
            மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே

என்னும் பெரியார் திருவாக்காலுந் தெளிக.

இதன்கண் சரியை முதலியவைகளே சிவபெருமானை அடைதற்குரிய நன்னெறிகளாம் என்று கூறியிருத்தலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாயவாறு அறிக.

– வளரும்