திருவாசகம்

திருச்சிற்றம்பலம்

திருவாசகம்

திருச்சதகம்

 

மகாமகோபாத்யாய, முதுபெரும்புலவர்பண்டிதமணி

மு. கதிரேசச்செட்டியார்  இயற்றிய

    திர்ணி  விக்ம்

      உரைத்  தொடக்கம்    

              

                    

                           அருளுரு வாய யானை முகத்தெம்

                           பெருமுதற் கடவுளின் திருவடி போற்றுதும்

                           வாதவூரடிகள் மலர்வாய்த் தோன்றிய

                          திருவாசக மெனுந் தேனின்

                         இன்சுவை உலகுணர்ந்து இன்புறற் பொருட்டே.

 

திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய செய்யுள் நூல் என்னும் பொருளையுடையதாகும். இது, திருவென்னும் அடையடுத்த வாசகம் என்னும் முதற் கருவியின் பெயர். அதன் காரியமாகிய செய்யுட்கு ஆயினமையின், கருவி ஆகுபெயராம் என்ப. சிவஞான முனிவரர் பிறர் கொள்கையை மறுக்குங்கால் ஆகுபெயர் என்பதை உடன்பட்டுப்பின் “உண்மையான் நோக்குவார்க்கு அன்மொழித் தொகையாகுமன்றி, ஆகு பெயராகாமையுணர்க”எனவுங் கூறியுள்ளர். திரு என்பது தெய்வத்தன்மை, அழகு என்னும் பொருளுடையதாகும். “திரு கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” என்று பேராசிரியர் உரை கூறினாராயினும், ஈண்டுத் தெய்வத்தன்மை என்று கொள்ளுதல் சிறப்புடைத்தாம், வாசகம் – சொல். இத்திருவாசகத் திருப்பாட்டுக்கள் தெய்வ நலங்கனிந்த சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்தவை; இனிமை எளிமை ஆழமுடைமை யென்னுங் குணங்கள் தம்பால் அமையப்பெற்றவை; மெய்யன்புடன் ஓதுவார் கேட்பார் உணர்வார் எல்லோரையும் மிக்க பேரின்பத்தில் திளைப்பித்துப் பரவசப்படுத்தும் இயல்பின; அநுபவ உண்மைகளைத் தெளிவுண்டாம்படி விளக்குவன. இத்திருவாசகத்தின் அருமை பெருமைகள் அளப்பரியனவாம். இதனைப் பற்றித் தனித்து ஓர் உரைநடை நூல் எழுத எண்ணியிருக்கின்றோம் ஆதலின், ஈண்டு இம்மட்டில் அமைகின்றாம்.

 

திருச்சதகம்

திருச்சதகம் என்பது தெய்வத் தன்மை வாய்ந்த நூறு திருப்பாட்டுக்களைத் தன் அகத்துக் கொண்ட ஒரு பகுதி என்னும் பொருளதாம். சதம் என்னும் வட சொற்கு நூறு என்பது பொருள். அந் நூறு எண்களையுடைய திருப் பாட்டுக்களைத் தன்னகத்துக் கொண்டது என்னும் பொருளில், ஓர் இடைச்சொற் புணர்ந்து, சதகம் என்றயிற்று. ஒரு பாட்டின் ஈற்றில் உள்ள சொற்றொடர், சொல், எழுத்து என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடுதல் அந்தாதித் தொடர் எனப்படும். இவ் வந்தாதித் தொடராகவே இந்நூறு திருப்பாட்டுக்களும் அருளிச் செய்யப்பட்டன. “மெய்தான் அரும்பி” என முதல் திருப்பாட்டின் முதலடி தொடங்கப்பட்டு, “மெய்யர் மெய்யனே” என நூறாம் திருப்பாட்டின் இறுதி முடிக்கப்பட்டமை அறிக.

 

பத்தி வைராக்கிய விசித்திரம்

பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் இத் தொடர் இத் திருச்சதகம் முழுதும் நுதலிய பொருளைப் பற்றியதாகும். இங்ஙனமே பதிகந்தோறும் (சிவபுராண முதலிய நான்கு திருப்பாட்டுக்களையும் திருச்சதகம், நீத்தல் விண்ணப்ப முதலிய பத்துக்கு மேற்பட்ட பல திருப்பாட்டுக்களையுடைய பகுதிகளையும் தனித் தனியே பதிகம் என்று கூறுதல் முன்னையோர் வழக்கு.) அவ்வப் பதிகத்தின் திரண்ட கருத்துக்களையும் கூர்ந்து ஆராய்ந்து பண்டைப் பெரியார் ஒருவர் தலைப்புக் குறிப்பிட்டுள்ளார். இத்தொடர், பத்தி வைராக்கியங்களின் வியக்கத்தக்க பல்வேறு தன்மை யென்னும் பொருளுடையதாகும். பத்தி – இறைவனைக் குறித்து மெய்யடியார் உள்ளத்தில் நிகழும் பேரன்பு. வைராக்கியம் – பற்று அறுதி. விசித்திரம் – வியக்கத்தக்க பல்வேறு தன்மை. ஆளுடைய அடிகள் திருவாசகத்தின் முதல் திருப்பாட்டில் சிவபெருமானது அநாதி முறைமையான பழமையையும், இரண்டாம் திருப்பாட்டில் அப்பெருமானது திருவருட் புகழ்ச்சி முறைமையையும், மூன்றாம் திருப்பாட்டில் அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாய் நிற்கும் இயல்பையும் அருளிச் செய்துள்ளார். திருப்பாட்டுக்களாலும் இறைவன் இயல்புகளை விளக்கிக் கூறிப் பின் நான்காம் திருப்பாட்டில், உயிர்கள் வினைக்கு ஈடாக மாயையினின்றும் உடல் முதலியன பெற்றுப் பிறக்குமாறும், பிறவும் உணர்த்தியருளினர். அதன் பின் அங்ஙனம் தோன்றிய உயிர்கள் தம் இயல்பையும், தம்மையுடைய இறைவன் இயல்பையும், தம்மைப் பிணித்திருக்கும் கட்டின் இயல்பையும் நூன் முகமாகவும், ஞானாசிரியன் உபதேசமுகமாகவும் தெளிந்து, ஆண்டவன் திருவருட்பேற்றிற்கு ஆளாதலை விரும்பி அதற்குச் சாதனமாகிய மெய்யன்பையும், பற்று அறுதியையும் மேற்கொள்ளல் வேண்டும் என்பதை, இத் திருச்சதகத்தில் அருளிச்செய்வார் ஆயினர். ஆண்டவனை அடைதற்குரிய நெறிகள் பலவற்றுள்ளும் சிறந்தது அன்பு நெறியாகும். “முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்தி நெறி யறிவித்து” என்று கூறியிருத்தலின், அந் நெறியையே அடிகள் சிறந்ததாகக் கொண்டு கடைப்பிடித்துள்ளார் என்பது தெளிவாம். ஆண்டவனைக் குறித்து அடியார் மேற்கொள்ளும் மெய்யன்பே ஈண்டுப் பத்தியென்று கூறப்படும். ஆண்டவனிடத்துப் பத்தியுண்டாகுமாயின்; இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்றுக்களுக்கு ஒழிவுண்டாம். உடல் முதலியவற்றின் நிலையாமையுணர்ந்து அவற்றைப் பற்றி உண்டாய அவாக்களைக் களைதற்கும், இறைவன் திருவடி கூடுதற்கும் மெய்யன்பே சிறந்த சாதனமாகும். அன்பின் இயல்பு பல திறப்படும். அன்பினால் விளையும் செயல்கள் விதிமுறை பற்றியும், விதிமுறையைக் கடந்தும் காணப்படுவனவாம். கண்ணப்ப நாயனார் வரலாறே அதற்குச் சான்றாகும். பற்றறுதியை வைராக்கியமென்று கூறுவர். உலகப் பற்றொழிவும் பலதிறப்படும். செல்வம் இருந்து நீங்கினமை, உற்றார் பெற்றார் முதலியோரால் வெறுக்கப்படுதல் முதலிய காரணங்களாலும், உலகியற் பொருள்களின் நிலையாமையுணர்ச்சி முதலியவற்றாலும் பற்றறுதியுண்டாம் என்ப. இவ்வியல்புகளைக் குறித்தே வியக்கத்தக்க பல்வேறு தன்மை என்னும் பொருள்படப் பத்தி வைராக்கிய விசித்திரம் என்றாயிற்றென்பது. இத்திருச்சதகம் பத்துப் பத்துத் திருப்பாட்டுக்களையுடைய பத்துப் பகுதிகளைத் தன்னுட் கொண்டது. இப் பகுதிகள் பதிகம் என்று கூறப்பட்டிலவாயினும், தெய்வத்தைப் பற்றிப் பெரும்பாலும் பத்துப் பாட்டுக்களாகப் பாடப்படும் பகுதியைப் பதிகம் என்று கூறும் வழக்கு உண்மையான் பதிகம் என்றே ஈண்டு எடுத்து ஆளலானேம். இப்பத்துப் பதிகங்களிலும் பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருள் விரவியுள்ளதாயினும், ஒவ்வொரு பதிகத்திலும் மெய்யுணர்தல் முதலியனவாகப் பதிகம் நுதலிய பொருள்களும் தனித் தனியாக வுள்ளன. அவற்றை அவ்வப் பதிகத்தின் தலைப்பிற் காணலாம்.

திருப்பெருந்துறைப் புராணத்தில் காணப்படுவனவாகக் குறிக்கப்பட்டுள்ள திருவாசக வுண்மையில், இத்திருச்சதகம் நுதலிய பொருள் பற்றிச் “சத்திய ஞானந்தரு தேசிகர் மோகம் சதகமாம்” என்று கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் திருப்பெருந்துறையிற் குருந்த மரத்து நீழலில் ஞானா சிரியனாக எழுந்தருளித் தமக்கு ஞானோபதேசம் செய்து மறைந்த பொழுது, அடிகள் அப்பெருமானது பிறிவாற்றாத நிலையில் இஃது அருளிச் செய்யப்பட்டது ஆதலின் “உண்மை ஞானமாகிய மெய்யுணர்வைத் தமக்குக் கருணையுடன் அருளிய ஞானாசிரியன்பால் உள்ள வரம் பிகந்த காதல் என்னும் கருப்பொருளையுடையது, இத் திருச்சதகம்” என்று கூறியதும் பொருத்தமே.

 

மெய்யுணர்தல்

 

மெய்யுணர்தல் என்பது பொய்ப் பொருளாகிய உடல் முதலியவற்றின் நிலையாமை கண்டு நீங்கி, மெய்ப் பொருளாகிய கடவுளை அநுபவ வாயிலாக உணர்தல் என்னும் பொருளுடையதாகும். இனி இறை உயிர் கட்டு என்னும் பொருள்களின் இயல்பை விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல் எனினும் ஆம். பொய்யில் புலவர் திருக்குறளில் துறவற இயலில் வீடு பயக்கும் உணர்வாகிய ஞானத்தை, நிலையாமை துறவு மெய்யுணர்தல் அவாவறுத்தல் என்னும் நான்கு அதிகாரத்துள் அடக்கிக் கூறியுள்ளார். அவற்றுள் மூன்றாவதாகிய மெய்யுணர்தல் என்பதற்குப் “பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல்; இதனை வடநூலார் தத்துவ ஞானமென்ப” என்று பரிமேலழகர் உரை கூறினர். இறைவன் திருப்புகழ்களைப் பலபடக் கூறித் தம் வேண்டுகோளைப் புலப்படுத்துமுகமாக அடிகள் இப் பதிகத் திருப்பாட்டுக்களிற் புலப்படுக்கப்பட்ட பொருள் இதுவாம் என்பது. உலகம் யாக்கை இளமை செல்வம் முதலியவற்றின் நிலையாமையைப் பேச்சு அளவின் அன்றி உண்மையின் உணர்தல் வேண்டும். இவ்வுணர்ச்சி முதிர முதிர, அழிவின்றி என்றும் நிலையுதலையுடைய பொருள் யாதாகுமென்னும் ஆராய்ச்சியில் தலைப்படல் கூடும். இவ் வாராய்ச்சிக்குச் சிவாகமங்களையும், ஆகம முடிபுகளாகிய சைவ சித்தாந்த நூல்களையும் கருவியாகக் கொண்டு நேர்மையான முறையில் அவற்றின் பொருள்களை அறிதல் நன்றாம். அங்ஙனம் அறிந்த பெரியவர்களோடு அடுத்தடுத்துப் பழகித் தெளிதலும் இன்றியமையாதது. இம்முறையில் ஒழுகின் மெய்ப் பொருளாகிய கடவுளுண்மையைப் பற்றிய தெளிவுண்டாம் என்பது. அடிகள் இவ்வாறு ஒழுகி உணர்ந்தவர் என்பதை,

பற்பல பொருளா யுள்ள பாசமும் அதனை மேவி
உற்பவ பேதமான உடம்புயி ரோடுங்கு மாறும்
அற்புத புத்தி முத்தி யளித்தரு ளாலே மேலாம்
தற்பர னடாத்து மாறும் உணர்ந்தனர் சைவ நூலில்

என்று வரலாற்று நூலாசிரியர் கூறியமையானும் அறியலாம். அடிகள் அமைச்சராய் அரசியல் அதிகாரம் செல்வம் முதலிய இம்மைக்குரிய வெல்லாம் நிரம்பப் பெற்றவராயினும், சமயத் துறையில் சிறு பருவ முதலே தலைப்பட்டிருந்தமையின், பொய்ப்பொருள் கடிந்து மெய்ப்பொருள் தெளிதற்குரிய ஞானமும், மெய்ப்பொருளாகிய ஆண்டவனிடத்துப் பேரன்பும் உடையராய்க் “கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகுமா போல்” அகத்தே கடவுளுணர்ச்சியும் புறத்தே உலகியற் கடமையும் உடையராயினர் என்பது. அகமும் புறமும் வேறு படல் ஒழுக்க நெறிக்குப் பொருந்துமா எனின், உலகியலில் அது கருதத் தக்கதன்றி ஞானம் கைவரப் பெற்றாரைக் குறித்து நினைக்கத்தக்க தன்றாகலின் ஈண்டுப் பொருந்து மென்க. அடிகள் அருளிச்செய்த திருப்பாட்டுக்களின் முகமாகக் கண்ட மெய்யுணர்தல் என்னும் இஃது, இத் திருச்சதகத்தின் உட் பகுதிகளாகிய பதிகம் பத்துனுள் முதற் பதிகம் நுதலிய பொருளாகும். புகழ் மாலையாகிய இப் பதிகத் திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பதிகம் நுதலிய பொருளும் சதகம் நுதலிய பொருளும் புலனாதலை உய்த்துணர்ந்து கொள்ளல் வேண்டும். பதிகம் நுதலிய பொருள் ஒவ்வொரு திருப்பாட்டின் இறுதியிலும், சதகம் நுதலிய பொருள் முதல் திருப்பாட்டு இறுதித் திருப்பாட்டுக்களின் இறுதியிலும், இடையிடையேயும் காட்டப்படும்.

 

உரை முறை

 

இனி ஒவ்வொரு திருப்பாட்டிற்கும் கருத்துரைத்தல், கண்ணழித்தல் பொழிப்புத் திரட்டல் அகலங்கூறல் என்னும் நான்கு வகையாகக் கொண்டு உரை விளக்கம் செய்யப்படும். அவற்றுள் கருத்துரைத்தலாவது, திருப்பாட்டை அடுத்து அதன் திரண்ட கருத்தையும் முன்னைத் திருப்பாட்டோடு உள்ள இயைபையும் சுருக்கிக் கூறுதலாகும். கண்ணழித்தல் என்பது, பதப்பொருள் சொல்லுதல், பொழிப்புத் திரட்டல் என்பது, மூல பாடத்தின் பதங்களை விட்டு அவற்றிற்குச் சொல்லிய பொருள்களைத் திரட்டிக் காட்டுதல். இவ்விரண்டு வகையும் பதப்பொருள் கூறுமுகமாக அமையும் ஆதலின், விரிவஞ்சிப் பொழிப்புத் திரட்டுதலைத் தனியே கூறினேம் அல்லேம். அகலங் கூறலாவது, திருப்பாட்டின் பொருளைத் தூய்மை செய்தற்கு வினா விடை உள்ளுறுத்தும், ஆற்றன் முதலியவற்றாலும் குறிப்பாலும் சொற்களின் அமைந்து கிடக்கும் பொருள் நயங்களை விளக்கியும், இன்றியமையாத இடங்களில் மேற்கோள் காட்டியும் விளக்கிக் கூறுதலாகும். இம்மூன்றும் முறையே கருத்துரை, பதவுரை, விளக்கவுரை என உரிய இடங்களில் எடுத்தாளப்படும்.

—————————–

தி ரு ச் ச த க ம்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

1. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை
யாயென்னைக் கண்டுகொள்ளே.

கருத்துரை: பத்தி வைராக்கியங்களில் மன மொழி மெய்கள் மூன்றும் ஈடுபடல் வேண்டும். இறைவனை மெய்ப் பொருளென உணர்ந்து மனத்தால் நினைந்தும், மொழியாற் பாராட்டியும், மெய்யால் வணங்கியும் அன்பு செய்தல் பத்தியாம். உலக வாழக்கையைப் பொய்யென உணர்ந்து, அம் முக்கரணங்களாலும் வெறுத்துவிடல் வைராக்கியமாகும். ஆகவே, ஆளுடைய அடிகள் முதலிற் பத்திநிலையைப் புலப்படுத்துவாராய்த் தம் மன மொழி மெய்கள் ஆகிய முக்கரணங்களும் இறைவன் வயப்பட்ட செய்தியை இம் முதல் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.

பதவுரை: என் மெய்தான் அரும்பி – என் உடல் புளகித்து, விதிர் விதிர்த்து – மிக நடுங்கி, உன் விரையார் கழற்கு – நின் மணம் பொருந்திய திருவடி மலரைக் குறித்து, கை தான் தலை வைத்து – கைகளைத் தலைமேற் குவித்து, கண் நீர் ததும்பி – கண்களில் நீர் நிரம்பி வழிந்து, உள்ளம் வெதும்பிப் பொய் தான் தவிர்ந்து – மனம் வெதும்பிப் பொய்மை நீங்கப்பெற்று, உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் – நினக்கு வணக்கம் வெல்க வெல்க வணக்கம் என்று கூறும், கை தான் நெகிழ விடேன் – ஒழுக்கத்தைத் தளரவிடேன், உடையாய் – எல்லாம் உடைய ஆண்டவனே, என்னைக் கண்டுகொள் – எளியேனாகிய என் இயல்பைக் கண்டு அடிமையாக ஏற்றுக்கொள்வாயாக என்பது.

விளக்கவுரை: அரும்புதல் – முகிழ்த்தல்; மயிர் சிலிர்த்தல். விதிர் விதிர்த்தல் – மிக நடுங்குதல். தமக்கு இனிய தலைவனை நினைந்த துணையானே உண்டாம் அன்பு மேலீட்டால் மயிர் சிலிர்த்தலும் நடுங்குதலும் அடிகளுக்கு நிகழ்ந்தன வென்பது. அன்பிற்கு இடனாகிய பொருளை நினைந்த அளவில் இன்பவுணர்ச்சி யுண்டாதலும், அதன்சத்துவமாக உடம்பில் மயிர் சிலிர்த்தலும், அந் நினைவின் முதிர்ச்சியில் நடுக்கம் உண்டாதலும் இயல்பாதலின், “மெய்தானரும்பி விதிர் விதிர்த்து” என்றார். அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகிய மெய்ப்பாடுகளுள் நடுக்கமும் ஒன்றாகும். அஃது அன்பும் அச்சமும் காரணமாக நிகழும் என்ப. ஈண்டு அன்பு காரணமாகும். இம் மெய்ப்பாடுகள் காமம் பற்றியும் நிகழுமாதலின், அதனை விலக்குதற்கு, “உன் விரையார் கழற்கு” என்றார். விரையென்னும் அடையால் திருவடி மலர் என்பது பெற்றாம். திருக்கோவையில், “வெற்றியார் கழல்” என்று கூறப்பட்ட இடத்து, “இறைவன் திருவடிகள் எல்லாப்பொருள்களையும் கடந்து நின்றனவாயினும், அன்பர்க்கு அணியவாய், அவரிட்ட நறுமலரான் வெறி கமழும் என்பது போதர, ‘வெறியார் கழல்’ என்றார்” என்று பேராசிரியர் கூறியதற்கேற்பத் திருவடிகளுக்கு ஏற்றிக் கூறுதலுமாம். கண்ணீர் ததும்புதல், உள்ளம் உருகிய நிலையில் நிகழ்வதாகலின், பின் வரும் உள்ளத்தை ஒட்டிக் கூறப்பட்டது. “வெதும்பல்”, உருகுதல் என்னும் பொருட்டு.
பொய்மை – மாயா காரியமாகிய பொய்ப்பொருள் மெய்யென்றுணரும் மயக்க வுணர்வு. இதனை, “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருள்” என்பர் திருவள்ளுவர். இது நீங்கினாலன்றிச் சிவக்காட்சி யெய்தல் அரிதாகலின், “பொய் தவிர்ந்து” என்றார். “போற்றி“, ஈண்டு வணக்கத்தைக் குறிக்கும். இனி வணக்கம் கூறுதல் நாவளவின் இருத்தல் ஆகாதென்பார், “பொய் தவிர்ந்து” என்றாரெனினுமாம். “சய சய” வென்பது வெல்க வெல்க என்று வாழ்த்தியபடியாம். இறைவன் வெற்றிக்கு வாழ்த்தாக அங்ஙனங் கூறியது, அடிகள் மேற்கொண்ட சிவநெறியில் வெற்றி குறித்தாம்.

“வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்” என்பதும் ஈண்டு நினைக்கத் தக்கது. இறைவனைக் குறித்து வாழ்த்துதல் வணங்குதல் என்னும் இரண்டனுள்ளும் வணக்கமே அடியார்க்குச் சிறந்ததென்பது தோன்ற, “சய சய” என்பதன் முன்னும் பின்னும் வணக்கப்பொருள் குறிக்கும் போற்றி கூறப்பட்டது. கை – ஒழுக்கம். “கையொன்றறிகல்லாய்” என்ற இடத்து, கை யென்பது இப்பொருட்டாதல் அறிக. நெகிழ விடுதல் – சிறிது தளர்த்தல். இத்துணையும் மனம் மொழி மெய்கள் இறைவன் வயப்பட்டமை கூறியபடியாம். “உள்ளம் வெதும்பி, பொய் தவிர்த்து” என்றமையால் மனமும், “போற்றி சய சய போற்றி” என்றமையால் மொழியும், மெய்யரும்புதல் முதல் கண்ணீர் ததும்புதல் ஈறாக உள்ள செயல்களால் மெய்யும் இறைவன் வயப்பட்டன என்பது கருத்து.

 

அடிகள் தம் ஒழுக்கத்தின் சோர்வின்மையை உயிர்க்குயிராக விளங்கும் இறைவன் அறிய மேற்கொண்டமை தோன்ற “என்னைக் கண்டு” எனவும், முக்கரணமும் இறைவன் வயப்பட்ட இந்நிலையே ஆட்கொள்ளுதற் கேற்றதென்பார் “கண்டுகொள்” எனவும் அருளிச் செய்தனர். “கண்டு கொள்ளல்” என்பது உலகவழக்கில் ஒரு சொன்னீர்மைத்தாய், பெரியோன் ஒருவனைச் சிறியவன் காண்டலில் வழங்கப்படுவது. இங்கே அடிகள் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகலின் அங்ஙனங் கோடல், ஆண்டான் அடிமைகளின் பெருமைக்கு இழுக்காமென்க. இத் திருச்சதகத்தின் முதல் திருப்பாட்டால் அடிகள் தம் இயல்பு கூறினாராயினும், அடிகளின் அன்பு வடிவத்தை நம்மனோர் நெஞ்சக்கிழியின் ஓவியமாகப் பொறித்து நினைவுகூர்தற்கு இத் திருப்பாட்டு மிகவும் பொருந்தியதென்பது அறிந்து இன்புறத்தக்கது. வடமொழியார் இத்தகைய திருப்பாட்டுக்களைத் தியானசுலோகம் என்ப. அடிகளின் மனம் மொழி மெய்கள் இறைவயப்பட்ட நிலையைக் குறிக்கும் இத் திருப்பாடற் கருத்தே இத் திருச்சதகத்தின் இறுதித் திருப்பாட்டிலும் தெளிவாக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது.

 

“தான்” நான்கும் அசைகள். ஈண்டுள்ள வினையெச்சங்களுள், அரும்பி, விதிர் விதிர்த்து, ததும்பி, வெதும்பி என்பன சினைவினைகள்; ஏனைய முதல்வினைகள். சினை வினைகள் எல்லாம், “அம்முக் கிளவியுஞ் சினை வினை தோன்றிற், சினையொடு முடியா முதலொடு முடியினும், வினையோ ரனைய வென்மனார் புலவர்” என்னும் விதிப்படி, “என்னும்” என்ற முதல் வினையைக் கொண்டு முடிந்தன. “உன்னை” என்பதில் நான்கனுருபில் இரண்டாவது மயங்கிற்று.

இதன்கண், மெய் அரும்புதல் முதலியவாகக் கூறப்பட்ட கரணங்களின் செயல்களால் பத்தியும், “பொய் தவிர்த்து” என்றதனால் வைராக்கியமும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், பொய் தவிர்த்து முக்கரணமும் ஆண்டவனைப்பற்றி நிகழ்தலே மெய்யொழுக்கமாகும் என்னும் உண்மை பெறப்படுதலின், மெய்யுணர்தலாகிய பதிகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

 

2. கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல்
லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே
யிருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்
லாதெங்கள் உத்தமனே.

கருத்துரை: அடிகள் தம் மனம் மொழி மெய்கள் இறைவன் வயப்பட்ட செய்தியை முதல் திருப்பாட்டில் வெளிப்படுத்தி, அக்கரணங்கள் பிறர் வயப்படா என்பதை இத் திருப்பாட்டில் புலப்படுத்து அருளுகின்றார்.

பதவுரை: எங்கள் உத்தமனே இறைவா – அடியேமாகிய எங்கள் தலைவனே இறைவனே, புரந்தரன் மால் அயன் வாழ்வும் கொள்ளேன் – இந்திரன் திருமால் பிரமன் என்னும் இவர்தம் வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ளேன், குடி கெடினும் — குடிப்பிறப்பிற்குரிய பெருமை கெட நேரினும், நினது அடியாரோடு அல்லால் நள்ளேன் — உன்னுடைய அடியாரோடல்லாமல் பிறரோடு நட்புக்கொள்ளேன், திருவருளாலே இருக்கப்பெறின் — நின் திருவருளாலே இருக்க நேரின், நரகம் புகினும் எள்ளேன் — நரகத்தின் கண்ணே செல்லினும் அதனை இகழ்ந்து பேசேன், உன்னையல்லாது பிற தெய்வம் உள்ளேன் — உன்னை அல்லாமல் வேறு தேவர்களை மனத்தாலும் நினையேன், என்பது.

விளக்கவுரை: திருமால் பிரமன் வாழ்க்கைகளிலும் இந்திரன் வாழ்வு இன்ப நுகர்ச்சிக்குச் சிறந்ததாகலின் அது முற்கூறப்பட்டது. புரந்தரன் முதலியோர் தம் வாழ்க்கை நலங்களை வலிந்து தர முற்பட்டாலும் விரும்பேன் என்பது தோன்றக் “கொள்ளேன்” என்றார். “கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர், கொள்ளே னென்றல் அதனினும் உயர்ந்தன்று” என்று உலகியல் பற்றிக் கூறிய புறப்பாட்டின் கருத்தும் ஈண்டு நினைக்கத்தக்கது. “குடி” ஆகுபெயர். குடிப்பிறப்புப் பெருமை கெட நேருங்கால், தாங்குவோர் யாவராயினும், அவரை நட்புக்கோடல் அப் பயன்கருதித் தகுமாயினும். அங்ஙனம் நட்புக் கொள்ளப்பட்டார் நின் அடியரல்லராயின், அவர் நட்புத் திருவருட்கு விலக்காக நின்று குடிப்பிறப்புக்கு வரும் கேட்டினும் மிக்க கேடுவிளைக்கும் என்பது கருதிக், “குடிகெடினும் நள்ளேன்” என்றார். அடியார் உறவு அக்குடிப் பெருமையினும் சிறந்த பேறு அளிப்பதாகலின், அவ்வுறவையே வேண்டுவேன் என்பதை வலியுறுத்தற் பொருட்டு, “அடியாரொடல்லால் நள்ளேன்” என எதிர்மறை முகத்தாற் கூறினார். திருவருட் பேறுடையார் நரகம் புகுதல் எக்காலத்தும் இன்றென்பது தோன்றப் “புகினும்” என்றார். உம்மை, புகுதலின்மையை விளக்கி நின்றது. ஒரோவழிப் புகநேரினும், ஆண்டிருத்தல் திருவருட்கு உடன்பாடாயின் அவ்விருப்பையும் இகழ்ந்து கூறேன் என்றார். உயர்வு இழிபு நோக்காது யாங்குறினும் இறையருளில் தலைப்படுதல் ஒன்றையே குறிக்கோளாக உடைமையின். “திருவருளாலே” என்புழி, ஏகாரம் தேற்றப் பொருளது; வேறு நலம் பயக்கும் காரணம் யாதாயினும் இழிவாகக் கருதுவேன் என்பது தோன்ற நின்றமையின் “பிரிநிலை” யெனலுமாம். “எங்கள்” என்றது மற்றை யடியாரையும் உள்ளிட்டு.

பிற தேவர்களுக்கு இல்லாத பரம்பொருள் தன்னை சிவபெருமானுக்கு உண்மை கருதி, “உத்தமனே”, “இறைவா” எனவும், புரந்தரன் முதலியோர்க்கு அத் தன்மை இன்மை கருதி, அன்னாரைப் “பிற தெய்வம்” எனவும் கூறினர். உத்தமன் என்றதனால் தலைமைத் தன்மையும், இறைவன் என்றதனால் எங்கும் நிறைந்த முழுமுதல் தன்மையும் ஆகிய பரம்பொருட்டன்மை பெறப்படும். தெய்வம் என்றது சாமானிய தேவரைக் குறிக்கும். பிறரெல்லாம் விரும்பும் விண்ணுலக வாழ்க்கையும் மண்ணுலக வாழ்க்கையும் எத்துணைச் சிறந்தனவாயினும், அவற்றை வேண்டேன் என்பார், முறையே “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” எனவும், “குடி கெடினும் நள்ளேன் நினதடியா ரொடல்லால்” எனவும், பிறர் விரும்பாத கீழுலக வாழ்க்கை வேண்டாத தொன்றாயினும், ஆண்டிருத்தல் திருவருட்கு உடன்பாடாயின் வேண்டுவேன் என்பார் “நரகம் புகினும் எள்ளேன்” எனவும் கூறினர். அடியாரோடு கொள்ளும் நட்புத் திருவருட் பேற்றிற்கு ஏதுவாகலின், அது மண்ணுலக வாழ்க்கையைக் குறித்த தாகாமை உணர்க. அடிகள் “சிவபிரானையன்றி வேறு தேவரைப் பரம்பொருளாகச் சிறிதும் நினைந்திலேன் என்பார், “உள்ளேன் பிற தெய்வம்” என்றார். “மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது” என்று பிறிதோரிடத்துக் கூறியதுங் காண்க.

உள்ளுதல் மனத்தின் செயலாதலின், “உள்ளேன்” என்றதனால் மனமும் இகழ்ந்து கூறுதல் வாக்கின் செயலாதலின், “எள்ளேன்” என்றதனால் மொழியும், வாழ்க்கை நலம் பொறி நுகர்ச்சியாலும், நட்புக்கோடல் புணர்ச்சி பழகுதலாலும் ஆவன் ஆதலின், “கொள்ளேன்” “நள்ளேன்” என்றமையால் மெய்யும் ஆகிய முக்கரணங்களும் பிறர் வயப்பட்டில அறிக. “வாழ்வும்” என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.

இதன்கண், “நினதடியா ரொடல்லால் நள்ளேன்” என்றாதனால் பத்தியும், “கொள்ளேன்” “உள்ளேன்” என்பனவற்றால் வைராக்கியமும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், “உன்னை யல்லாது பிற தெய்வம் உள்ளேன்” என்றதனால் மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

 

3. உத்தமன் அத்தன் உடையான்
அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன்
என்ன மனைநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊரூர் திரிந்துஎவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ்
ஞான்றுகொல் சாவதுவே

கருத்துரை: தன் மனம் முதலியன பிறர் வயப்படாமல் சிவபிரான் ஒருவனையே பற்றி நிற்கும் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், அங்ஙனம் நிகழும் தம் நினைவு சொற்செயல்கள் உலகத்தவர்க்கு மாறுபாடாகத் தோன்றினும் அந்நிலை மகிழ்ந்து ஏற்கத்தக்கது என்பதை இத் திருப்பாட்டிற் கூறுகின்றார்.

பதவுரை: உத்தமன் அத்தன் உடையான் — தலையாயவனும் தந்தையும் உடையானும் ஆகிய இறைவனுடைய, அடியே நினைந்து உருகி — திருவடியே இடையறாது எண்ணி உள்ளம் உருகி, இவன் மால் என்ன — இவன் மயக்கமுற்றான் எனப் பிறர் கருதும்படி, மத்த மனத்தொடு — களிப்பேறிய நெஞ்சத்தோடு, ஊர் ஊர் திரிந்து — பல ஊர்களிலும் போக்கு வரவு செய்து, மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட — என் உள்ளக்கருத்திற் பொருந்தின பொருந்தின செய்திகளை யான் பேச, எவரும் —இந்த நிலையைக் கண்டார் எல்லோரும் , தம் தம் மனத்தன பேச — தங்கள் தங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்திச் சொல்ல, சாவது எஞ்ஞான்று — இவ்வுலக வாழ்க்கையினின்றும் ஒழிவடைவது எப்பொழுது? என்பது.

விளக்கவுரை: நினைந்து உருகி என்னத் திரிந்து சொல்லிடப் பேசச் சாதல் எஞ்ஞான்று என முடிக்க. ஏகாரங்கள் இரண்டனுள், முன்னது பிரிநிலையும், பின்னது ஈற்றசையுமாம். “கொல்” அசை நிலை.

உலகத்து அறிவுடைப் பொருள்களை நோக்க, இறைவன் ஆண்டான் எனவும் அவை அடிமை எனவும், அறிவில் பொருள்களை நோக்க, அவன் உடையான் எனவும் அவை உடைமை எனவுங் கூறுப. இம்முறையில் அறிவுடைப் பொருள்களை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் என்பது போதர உத்தமன் எனவும், அறிவின் பொருள்களை உடைமையாகக் கொள்ளும் இயல்பினன் என்பது போதர உடையான் எனவும் கூறினர். ஓர் அரசன் புதல்வன் வேடர் சூழலிற் பட்டுத் தன் இயல்பை அறியாமல் வளர்ந்தானாக, நல்லூழ் வயத்தால், “நீ வேட்டுவன் மகனல்லை; உண்மையில் என் புதல்வனாவாய்” என அறிவித்து, அவ்வரசர் அப் புதல்வற்குத் தன் அரசுரிமைச் செல்வத்தை நல்குதல் போல, அடிகள் ஐம்புலமாகிய வேடர் சூழலிற் பட்டுத் தம் இயல்பு அறியாமல் இருந்த நிலையில், கட்டறுக்கும் பருவம் உற்றமையால், “நீ புலனுகர் இன்பம் பெறுதற்கு உரியை அல்லை; உண்மையில் பேரின்பம் நுகர்தற்குரிய என் புதல்வனாவாய்” என மெய்யுணர்வால் அறிவித்து, இறைவன் தன் பேரின்பப் பெருஞ் செல்வத்தை அருளிக் காத்தமை தோன்ற, “அத்தன்” என்றார். ஆண்டவன் திருவருளை நினைத்தற்கு அவன் திருவடியே அன்றி வேறு பற்றுக்கோடு இன்மையால், “அடியே நினைந்து” எனவும், அந்நினைவின் முதிர்ச்சி தோன்ற, “உருகி” எனவும் கூறினர்.

அடிகள் தம் புறச்செயலைக் கண்ட பிறர், உண்மை யுணராமல் பித்துப்பிடித்து மயங்கினர் என்று கருதும்படி, பல ஊர்களிலும் சிவதரிசன நிமித்தம் போக்குவரவு செய்து, சிவானந்தத் தேறலை மிகுதியாக உண்டு, அக் களிப்பினால் உலகியலை மறந்து தம் உள்ளக் கருத்திற்குப் பொருந்தின பொருந்தினவாகிய மெய்யன்பு மயமான சொற்களைத் தாம் பேசவேண்டும் என்பார், “மாலிவன் என்ன மத்த மனத்தொடு ஊரூர் திரிந்து மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட” எனவும், அடிகள் அங்ஙனம் உலகியலை நோக்காமல், இறையருள் வயப்பட்டுத் தம் அநுபவத்திற் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துக் கூறும் மொழிகளைக் கேட்பார் எல்லோரும் தத்தம் உள்ளங்களில் நல்லனவாகவும் தீயனவாகவும் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துக் கூறினும் கூறுக என்பார், “எவரும் தத்தம் மனத்தன பேச” எனவும் கூறினர். அடிகள் அருட்செயலைக் கண்டாருள் ஒரு சாரார், அவர் தம் மெய்யன்பின் இயல்பை உய்த்துணர்ந்து, அவ்வுணர்ச்சியால் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துப் பாராட்டிப் புகழ்ந்து கூறுவர் என்பதும், பிறிதொரு சாரார் உண்மை யுணராமல், புறச்செயலைக் கண்டு, அக் காட்சி காரணமாகத் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்து இகழ்ந்து கூறுவர் என்பதும், “எவரும் தத்தம் மனத்தன பேச” என்னுந் தொடரிற் குறிப்பிற் புலனாதலறிக. புகழ்ந்து கூறுதலையும் இகழ்ந்து கூறுதலையும் குறித்து மனத்தனவெனப் பன்மையாற் கூறினர் என்பது. இங்ஙனம் தம்மைப் புகழ்வாரும் இகழ்வாரும் முறையே நல்வினை தீவினைகளை ஏற்றுக்கொள்ள, அதன் முகமாகத் தமக்கு வினையொழிவு உண்டாக வேண்டுமென்பது அடிகள் கருத்தன்று. “கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றி” என்றபடி, ஆண்டவன் அருளினால் வினை ஒழிதல் வேண்டும் என்பதே குறிக்கோள். ஆயினும் ஞானநிலை யுடைய பெரியோன்பால் அமைந்து கிடைக்கும் ஆகாமிய கன்மமாகிய நல்வினை தீவினைகள், முறையே அப் பெரியோனைப் புகழ்வார்பாலும் இகழ்வார்பாலும் அடைய, அவற்கு அவ்வினை யொழிவுண்டாம் என்பது அறிவியல் நூலிற் கண்டதாகலின், அம்முறையாலும் அடிகளின் உண்மை அன்பைக் கண்டு புகழ்ந்து கூறுவார், ஆகாமிய கன்மத்துள் நல்வினைப் பகுதியையும், புறச்செயலைக் கண்டு எள்ளிக் கூறுவார் தீவினைப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள, வினையொழிவுண்டாம் என்பதும் ஈண்டுக் கருதத் தக்கது. “சாதல்” — ஈண்டுக் கட்டறுத்து உலக வாழ்வினின்றும் ஒழிவு பெருதலைக் குறிக்கும். அடிகள் “சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப, நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாகக்” கொண்டு, உலக வாழ்க்கையினின்றும் ஒழிவு பெறுதல் எப்பொழுது வாய்க்குமோ என்பார், “எஞ்ஞான்று கொல் சாவதுவே” என்றார்.

இத் திருப்பாட்டில், “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பதும், “தத்தம் மனத்தன பேச” என்பதும் ஆகிய இரண்டனையும் பிறர் கூற்றுக்களாகக் கொண்டு, முறையே உள்ளூராரும் அயலூராரும் அடிகளைக்கண்டு கூறியனவாகப் பலரும் உரை கூறியுள்ளார். உள்ளூரார் அயலூரார் கூற்றுக்களை நினைந்து அடிகள் கூறினாரென்றதில் ஒரு பொருட்சிறப்பின்மையையும், பின்னர் “எவரும் தத்தமனத்தன பேச” என்றதனால், முன்னர் “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பது அடிகள் கூற்றென்பது தானே பெறப்படுதலையும் அவர் உணர்ந்திலர். அதனால் அஃது உடையன்றென்பது தெளிக.
இதன்கண், உலகத்தவர் புகழ்தலினும் இகழ்தலினும் விருப்பு வெருப்புக் கொள்ளாமல், திருவருள் ஒன்றிலே தோய்ந்து நிற்றல் மெய்யுணர்வின் பயனாம் என்பது பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

 

4. சாவமுன் னாள்தக்கன் வேள்வித்
தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாயென் றவிதா
இடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடும்
எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன
பாவந் திரிதவரே.

கருத்துரை: தம் மனம் முதலியன பிறர் வயப்படாமல் சிவபிரானையே பற்றி நிற்கும் என முன்னர்க் கூறிய அடிகள், அங்ஙனம் பிற தேவர் வயப்படாமைக்குத் தாம் அறிந்த காரணத்தை இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.

பதவுரை: முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று — முன் ஒரு காலத்தில் தக்கன் என்பான் இயற்றிய வேள்வியில் அவியாகப் பெய்த ஆட்டுக்கடாவின் இறைச்சியைத் தின்றும், நஞ்சம் சாவ அஞ்சி — திருப்பாற்கடலில் எழுந்த பெரு நஞ்சைக் கண்டு சாதற்கு அஞ்சியும், எந்தாய் ஆ! ஆ! என்று அவிதா இடும் நம்மவர் அவரே — எங்கள் தந்தையே ஆ! ஆ! என் செய்வோம்! என்று கதறித் துன்ப முறையீடு செய்யும் நம்மனோராகிய அத் தேவர்களே, எம்பிரானொடு மூவர் என்று எண்ணி — எம்பெருமானாகிய சிவ பரம்பொருளொடு தம்மையும் சேர்த்து மூவராவோம் என்று நினைத்து, விண் ஆண்டு — விண்ணுலகத்தில் ஒரு கூறு ஆட்சி புரிந்து, மண்மேல் தேவர் என்று இறுமாந்து திரிந்தவர் — நிலவுலகத்தில் யாம் முதற்கடவுள் ஆவேம் என்று செருக்கித் திரிந்தவர், என்ன பாவம் — இஃதென்ன தீவினைப் பயன் இருந்தவாறு! என்பது.

விளக்கவுரை: தின்றும் அஞ்சியும் என்று இடும் நம்மவர் எனவும், எண்ணி ஆண்டு என்று இறுமாந்து திரிதவர் எனவும் முடிக்க. தின்றும் அஞ்சியும் என்புழி, எண்ணும்மைகள் தொக்கு நின்றன. “அவரே” “தேவரன்றே” என்பவற்றில் உள்ள ஏகாரங்கள், முறையே பிரிநிலையும், தேற்றமுமாம். திரிதருவர் என்றது ரகர வுகரம் கெட்டு, “திரிதவர்” என்றாயிற்று. தக்கன் சாவ வேள்வித் தகர் தின்றும் என இயைத்து, “சாவ” என்பதைக் காரியப்பொருட்டாக்கலும் ஒன்று. தக்கன் என்பான் வேள்வித் தலைவனாகிய சிவபிரானை வெறுத்து, மற்றைத் தேவர்களை அழைத்து வேள்வி இயற்ற, அவ்வேள்வியிற் கிடைத்த அவியுணவை அன்னார் உண்டதே அவன் அழிவிற்குக் காரணம் ஆயிற்றென்பதாம். அவியுணவு ஏற்குந் தகுதி தமக்கு இன்று என்பதை உணராமல், ஊன்சுவையில் ஈடுபட்டு, அவ்வாட்டு இறைச்சியை உண்டனர் என்பது போதர, அவியேற்றென்னாது, “தகர் தின்று” எனவும், அங்ஙனம் தின்றற்கு முற்படும் இயல்பினர் நஞ்சத்தைக் கண்டுழிப்பின்னிட்டு நடுங்கினரென்பது தோன்ற, “நஞ்சம் அஞ்சி” எனவும் கூறினர். தகர் ஊன் தின்று என்னாது “தகர் தின்” றென்றது, “யாட்டினின் பாலென மூலமுமாம்” (ஆவின் பாலோ எனக் கருதினார்க்கு, உண்மை உணர்த்தி விலக்க, ஆட்டுப்பால் என்றனராம்; அது கேட்டவர் ஆட்டுப்பால் ஒன்றோ, அதன் மூலமும் ஆகும் என்றனராம். மூலம் ஆட்டு உடல் இறைச்சியைக் குறிப்பதாகும். — பிட்சாடனர் நவமணி மாலை, செ. 4) என்றாற் போல, அவ்விறைச்சி யுண்டலின் வேட்கை மிகுதி குறித்து நின்றது. தக்கன் சிவபிரானை வெறுத்து, அவி தர அழைக்குங்கால், “அப்பெருமான் நம் தந்தையாவரே; அவரை வெறுத்த இடத்தில் நாம் சென்று களித்தல் ஆகாதே” என்று எண்ணாமல் சென்று உண்ட தீச்செயலைக் கண்டு, வீரபத்திரர் ஒறுத்த ஞான்று, அத்துன்பம் பொறாது வருந்தினரென்பதும், அமுதம் பெறக் கடல் கடைந்துழி, நஞ்சு தோன்றிற்றாக, அதற்கு அஞ்சி, அந்நஞ்சினால் தமக்கு ஏதம் விளையாவாறு விரைந்து வெளிப்பட்டுக் காத்தருள வேண்டும் என்று கதறி முறையிட்டனரென்பதும் போதர, “எந்தாய் ஆ ஆ என்று அவிதா இடும்” எனவும், அங்ஙனம் முறையிட்டவர், பாசக் கட்டுடைய மக்களாகிய நம்மை ஒத்தவர் என்பது விளங்க, “நம்மவர் அவரே” எனவும் கூறப்பட்டன.

“ஆவா” என்பது ஆவ எனக் குறைந்து நின்றது. “அவரே” என்பதில் உள்ள ஏகாரம் உயிர்த்தன்மையரே அன்றிப் பிறரல்லர் என்பதைத் தெளிவித்தலால் தேற்றப் பொருட்டாம். “அவிதா” என்பது கேடு நேர்ந்துழிக் கூறப்படும் முறையீட்டுச் சொல். “விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்” என்று கொற்றவையைப் பரவு முகமாகச் சிவபெருமான் பெருமை கூறப்பட்டது ஈண்டு நினைக்கத்தக்கது. பிரமன் முதலிய தேவர்கள் எல்லாம் மும்மலம் உடைய சகல வருக்கத்தினராதலின், மக்கள் தன்மையராகக் கருதப்பட்டு, “நம்மவரவரே” எனப்பட்டனர்.

வேள்வியிற் பெற்ற ஆட்டிறைச்சியை உண்டற்கு முற்பட்ட தேவர்கள், நஞ்சம் வெளிப்பட்ட பொழுது அதனை அடக்கும் ஆற்றல் இல்லாமையொடு, அதற்கு அஞ்சித் தமக்கு கேடு நேராவாறு சிவபிரானைக் குறித்து, “எங்கள் தந்தையே காத்தருள்க” என முறையிட்டனர் என்னும் இதனால், அன்னார் தலைமைப் பேற்றிற்கு உரியரல்லர் என்பது வெளிப்படையாகும்.

இவ்வுண்மை யறிந்தும், பிரமன் திருமால் உருத்திரன் என்னும் முறையில் சிவபிரானை உருத்திரனாக எண்ணி, அவனோடு தம்மையும் ஒத்த நிலையில் வைத்து எண்ணுதல் அவர் தம் செருக்கைப் புலப்படுத்துவதாகும். இவ்வரிசையில் வைத்து எண்ணப்படும் உருத்திரன், அயன் மாலொடுங் கூடக் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதி புவனாந்தம் சங்கரிக்கும் குணிருத்திரனாவான். சுத்த மாயா புவனாந்தம் சங்கரிக்கும் சங்கார காரணனே பரமசிவனாவான். இதனை, “இவ்வேறுபாடுணராது மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்தெண்ணுவோரை நோக்கி, ‘நம்மவரவரே மூவரென்றே எம்பிரானோடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல், தேவரென்றே யிறுமாந்து என்ன பாவந் திரிதவரே’ என வாதவூரடிகள் இரங்கிக் கூறிய திருவாக்கும் அறிக” என்னும் சிவஞான மாபாடியத்தானும் உணர்க. “தேவரில் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர், மூவராய் நின்றதோரார்” என்று சிவஞான சித்தியும், “தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தமிக்கு மற்றை, மூவர்கோனாய் நின்ற முதல்வன்” என்று பிறிதோரிடத்து அடிகளும் கூறியவற்றானும், பரமசிவன் மூவர்க்குந் தலைவன் என்பது தெளிவாதல் உணர்க.

படைத்து அளித்து அழித்தற்குரிய மூவராலும் விண்ணுலகில் ஒவ்வொரு பகுதி ஆட்சி செய்யப்படுதலின், “விண்ணாண்டு” என்று கூறப்பட்டது. அவ்வாட்சியைத் தொழில் நிலையமாகக் கொள்ளாமல், அதுபற்றி மண்ணுலகில் தாமே பரம்பொருளெனக்கருதிச் செருக்கித் திரிதல் அறியாமையின்பாற் படும் என்பது தோன்ற, “மண்மேல் தேவரென்றே இறுமாந்து திரிதவரே” என்று கூறப்பட்டது. “தேவர்” என்பது ஈண்டு ஒருமைப் பொருட்டு. இதனைத் “தேவர்” என்றது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி; “மண்மேற் றேவரென்றே இறுமாந்து’ என்றார் பிறரும்” என்று நச்சினார்க்கினியர் கூறுதலானும் அறிக. நஞ்சுண்டு காத்த அருட்செயலைக் கண்டு வைத்தும், தம்மைப் பரம்பொருளாக எண்ணி இறுமாந்து திரியும் தேவர் நிலைமை இரங்கத்தக்க தென்பார், “என்ன பாவம்” என்று கூறினர்.

இதன்கண், சிவபெருமானை, மூவருள் ஒருவன் என்பது பொருந்தாது; அம்மூவரையும் இயக்கி ஆளும் தலைவன் என உணர்தல் வேண்டும் என்றது மெய்யுணர்தலாதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.
.

5 தவமே புரிந்திலன் தண்மலர்
இட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை
யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு எய்திற்றி
லேன்நின் திருவடிக்காம்
பவமே அருளுகண் டாய்அடி
யேற்கெம் பரம்பரனே.

 

கருத்துரை: சிவ பெருமான் அல்லாதார் பரம்பொருளாகார் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், பரம்பொருள் பரமசிவனே யென்பதை உணர்ந்தும், அப்பெருமானை யடைதற்குரிய சரியை முதலிய தவத்தை மேற்கொள்ளாமைக்கு இரங்கி, இனியேனும் அத்தவஞ் செய்தற்குரிய பிறப்பு வேண்டுமென்று இறைவனை நோக்கி இத் திருப்பாட்டிற் கூறுகின்றார்.

பதவுரை: எம் பரம்பரனே — எங்கள் மேலான பரம்பொருளே, உனக்கு அன்பர் உள் ஆம் — உன்பால் மெய்யன்பு மிக்க பெரியார் அகத்துள் உண்டாம், சிவமே பெறும் திருஎய்திற்றிலேன் — வீட்டின்பத்தையே பெறுதற்கு ஏதுவாகிய சிவஞானச் செல்வத்தை அடையப் பெற்றேன். அல்லேன்; தவம் புரிந்திலன் — தவத்தையும் செய்தேன் அல்லேன், நின் திருவடிக்குத் தண் மலர் முட்டாது இட்டு இறைஞ்சேன் — நின்னுடைய திருவடிகளுக்குக் குளிர்ந்த நறு மலர்களைக் குறைவற இட்டு வணங்கேன், அவமே பிறந்த அருவினையேன் — ஆதலின் பயனின்றிப் பிறந்த கடத்தற்கரிய தீவினையுடையேன் ஆயினேன், நின் திருவடிக்கு ஆம் பவமே அடியேற்கு அருளு — ஆதலின் இனி நின் திருவடியை அடைதற்குரிய பிறப்பையே அடியேனாகிய எனக்கு அருளிக் காத்தல் வேண்டும், என்பது.

விளக்கவுரை: அன்பர், உள்ளாம் திரு, சிவமே பெறுந்திரு என இயைக்க. திரு, ஈண்டுச் சிவஞானத்தை யுணர்த்தும்; அது சிவத்தைப் பெறுதற்கு வாயிலாதலின், சிவம் — என்று அழியாத பேரின்பம். ஞானம் மெய்யன்பின் விளைவாதலின், “அன்பர் உள்ளாந்திரு” எனவும், அது பயப்பது வீட்டின்பம் ஆதலின், “சிவமே பெறுந்திரு” எனவும் கூறப்பட்டன. ஈண்டு ஏகாரம் தேற்றப்பொருட்டு. தவம் ஈண்டுக் கிரியையையும் யோகத்தையும் குறிக்கும். அகத்தும் புறத்தும் வழிபடுதலாகிய கிரியையும், மூச்சுக்காற்றை அடக்கி, மனத்தை அசைவற நிறுத்தி, உயிர் பரத்துடன் ஒன்றுதல் என்னும் அகவழிபாடாகிய யோகமும் தட்பவெப்பங்கள் முதலியவற்றால் உடற்கு உறும் துன்பத்தைப் பொறுத்துச் செய்யத்தக்கனவாதலின், தவம் என்று கூறப்பட்டன. சிவஞான போதம் எட்டாஞ் சூத்திரவுரையில், தவம் என்பது சரியை கிரியா யோகங்களை உணர்த்தும் என்ப. “ஈண்டுத் தவம் எனப் பட்டன பிறவல்ல வென்பார், சரியை கிரியா யோகங்களை எனக் கிளந்துரைத்தார்” என்பது சிவஞான முனிவர் உரை. சரியை முதலிய மூன்றனையும் தவம் என்னுஞ் சொல் உணர்த்துமாயினும், ஈண்டுத், “தண்மல ரிட்டிறைஞ்சேன்” எனச் சரியை வேறாகக் கூறப்பட்டமையால், தவம் என்பது கிரியையையும் போகத்தையும் உணர்த்துவதாகும். மேலும், “சரியை கிரியா யோகங்களை” என்னும் மெய்கண்டார் திருவாக்கிற்கு உரை கண்ட சிவஞான முனிவர், “கிரியா யோகங்கள் என்னும் உம்மைத்தொகை வடநூன் முடிபு; கிரியா யோகம் இரண்டற்கும் தீக்கை ஒன்றென்பது தோன்ற, அவ் விரண்டனையும் தொகுத்தோதிச் சரியையைத் தமிழுக்குரிய வீற்றான் வேறு வைத்தார்” என்று கூறினர். இதனால் விசேட தீக்கை ஒன்றே கிரியை யோகங்களை மேற் கோடற்குரிய தகுதியளிக்கும் என்பது புலனாம். இந்நயம் பற்றித் தவம் என்னுஞ் சொல்லால் கிரியையையும் யோகத்தையும் கோடல் பொருந்தும் என்பதுணர்க. தவமே என்புழி, ஏகாரம் தேற்றப்பொருட்டு என்பது உபலக்கணமாக நின்று வழிபாட்டிற்குரிய ஏனைய உபகரணங்களையும் உணர்த்தும், “முட்டா” தென்பதும் உபகரணப் பொருள்களின் குறைவின்மையை வலியுறுத்துவதாகும். மலர் இட்டு இறைஞ்சுதற்குரியது திருவடியாதலின், அஃது ஈண்டுங் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது.

இறைவனை அடைதற்குச் சைவாகமங்களிற் கூறப்பட்ட நெறி நான்காகும். அவை, சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. இவை ஒன்றற்கொன்று சாதனமும் சாத்தியமுமாக, இறுதியாகிய ஞானத்தால் வீடடைதல் கூடும். “விரும்புஞ்சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும், அரும்பு மலர் காய் கனி போல் ஆகும்” என்பர் தாயுமானார். ஞானம் வீடு பயக்கும் உணர்வாதலின், வீட்டிற்கு வாயிலாகிய அதனைப் பெறுதல் இன்றியமையாததாகும். அது பெறுதற்கு அரிதாயிற்றென்பார், “சிவமே பெறுந்திரு எய்திற்றிலேன்” எனவும், அதற்குச் சாதனங்களாகவுள்ள யோகநெறி, கிரியை நெறியாகிய இவற்றையும் அடைந்திலேன் என்பார், “தவமே புரிந்திலன்” எனவும், அவ்வெல்லாவற்றிற்கும் முதற்படியாக வுள்ள சரியையிலேனும் தலைப்பட்டேனோவெனின், அதுவும் இன்றென்பார். “தண்மலரிட்டு முட்டா திறைஞ்சேன்” எனவும் கூறினர். சிறந்த இந் நால்வகை நெறியினும் தலைப்படாமையால் இப்பிறப்புப் பயனற்ற தென்பார். “அவமே பிறந்த” எனவும் இவ் அவப் பிறப்பிற்குக் காரணம், கடத்தற்கரிய என் தீவினை என்பார், “அரு வினையேன்” எனவும் கூறினர். இதுகாறும் பிறப்பறுப்பதற்குரிய நெறி கைவரப் பெற்றிலேன்; ஆதலால் மேலும் பிறப்புண்டாதல் ஒருதலை; இனிக் கிடைக்கும் பிறப்பாவது நின் திருவடியடைதற்குரிய நெறி நிற்றற்கே யன்றி வேறுபடாவாறு அருளல் வேண்டும் என்பார், “நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு” எனத் தேற்றப் பொருள் தோன்றக் கூறி வேண்டினர். ஈண்டு ஏகாரம் தேற்றப் பொருளது. கண்டாய் என்பது முன்னிலை அசை. பிறப்பு வேண்டத் தக்கதன்றெனினும், சிவ நெறி நின்று, இறைவழிபாட்டில் தலைப்படக் கிடைக்குமாயின், பெரிதும் வேண்டிப் பெறத்தக்கதென்பதை,

              குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
             பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
            இனித்தம் உடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
            மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே

என்னும் பெரியார் திருவாக்காலுந் தெளிக.

இதன்கண் சரியை முதலியவைகளே சிவபெருமானை அடைதற்குரிய நன்னெறிகளாம் என்று கூறியிருத்தலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாயவாறு அறிக.

– வளரும்

பி ர தா ப ரு த் தி ரீ ய ம்

பி ர தா ப ரு த் தி ரீ ய ம்

நூலறிமுகம்

மகாமகோபாத்யாய முதுபெரும்புலவர் பண்டிதமணி மு.கதிரேசனார் அவர்கள் தமிழ், வடமொழி நுண்கலைஞர். தாம் கற்றின்புற்ற வடமொழி நூல்களிற் சிறந்த நூல்களை மொழிபெயர்த்து, நந்தமிழர்க்கு வழங்குதல் வேண்டும் என எண்ணினார். வடமொழி அறிவால் இருமொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பண்டிதமணி நன்றாக உணர்ந்தவர்கள். மேலைச்சிவபுரி சன்மார்க்கசபையின் ஆதரவில் இவர்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. வடமொழியில் சிறந்த நாடக நூலாகிய மிருச்சகடிகம் என்னும் நூலைத் தமிழில் மண்ணியல் சிறு தேர் என்னும் பெயரானே மொழிபெயர்த்தார்கள். மேலும் கெளடில்ய அர்த்தசாஸ்திரம், சுக்கிர நீதி, சுலோசனை, உதயணசரிதம், பிரதாபருத்திரீயம், மாலதீ மாதவம் என்னும் ஏனைய நூல்களையும் பொருள் பெயராது, மிகச்சிறந்த முறையில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள்.

நம் பண்டிதமணி அவர்களின் மொழிபெயர்ப்புப் பற்றி திரு. பொ. வே. சோமசுந்தரனார் கூறும்போது :

“வட மொழியிற் சிறந்த நாடக நூலாகிய மிருச்சகடிகம் என்னும் நூலை மண்ணியல் சிறு தேர் என்னும் பெயரானே மொழிபெயர்த்தார்கள். இந்நூல் இடையிடையே செய்யுள் விரவப்பட்ட உரைநடை நூலாக வடமொழிக்கண் உள்ளது. அவ்வடமொழிக்கண் உள்ளபடியே, தமிழில் உரையை உரையாகவும், செய்யுளைச் செய்யுளாகவும் இவர்கள் மொழிபெயர்த்துள்ளனர். ஒரு மொழியிலுள்ள செய்யுளைப் பிறிதோர் மொழியில் செய்யுளாகவே மொழிபெயர்ப்பது மிகவும் செயற்கருஞ் செயலாகும். எற்றாலெனின், செய்யுள்கள் எதுகை மோனை முதலியவற்றை உடையனவன்றோ, இவ் வெதுகைக்கேனும், மோனைக்கேனும், இன்னுஞ்சீருக்கேனும், சொற்கள் தேர்ந்தமைக்குங்கால் முதனூற் செய்யுளிலில்லாத பொருளுடைய சொற்களைச் சேர்த்தல் அல்லது முதனூற் செய்யுளிலுள்ள பொருளை நழுவவிடுதல் முதலிய செயல்கள் இன்றியமையாதனவாகிவிடும்.

நம் பண்டிதமணியவர்களோ தம்முடைய ஒப்பற்ற புலமை யாற்றலாலே முதனூற் செயுட்களிலுள்ள பொருள்கள் குறையாமலும், மிகாமலும், தமிழ்ச் செய்யுளின் எதுகை மோனை சீர் முதலிய நயங்கள் குன்றாமலும், வடநூற் செய்யுட்பகுதியைச் செந்தமிழ்ச் செய்யுளாகவே மொழிபெயர்த்துள்ளார்கள். இவ் வருமையை உணர்ந்த இருமொழிப்புலவர் பலர் நம் பண்டிதமணியவர்களைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மேலும், ராமேச்சுரம் வடமொழிக் கல்லூரித் தலைவராயிருந்த சுப்பிரமணிய ஐயர் என்னும் வடமொழிவாணர், ‘வடமொழியில் தெளிவு குன்றிக்கிடக்கும் சில இடங்களில் இத் தமிழ் மொழிபெயர்ப்பு, தெளிவு மலிந்து காணப்படுகின்றது. இவ்வாற்றால் இது முதனூலினும் மேம்பாடுடையதாகக் கருதற்பாலது’ என்று புகழ்ந்துள்ளார்கள்”.

மேற்கூறிய மொழிபெயர்ப்பு நூல்களில் பிரதாபருத்திரீயம், மாலதீ மாதவம் என்னும் இரண்டு நூல்களும் அச்சேறவில்லை. இதைத்தவிர ஏனைய நூல்கள் அச்சேறி வெளிவந்துள்ளன.

பிரதாபருத்திரீயம், மாலதீ மாதவம் இரண்டுமே நாடக நூல்கள்தான் என்றாலும் பிரதாபருத்திரீயம் அணியிலக்கணம் சார்ந்த, பிரதாபருத்திரன் என்னும் வேந்தனது கீர்த்தியை விளக்கமாகச் சொல்லும் நூல்.

14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தெலுங்கு தேசத்தவரான வித்யாநாதர் என்ற வடமொழிப்புலவர் வடமொழியில் எழுதிய பிரதாபருத்திர யாசோ பூஷனா என்கிற இந்நூல், அணியிலக்கணமாயினும் உலகுயர் குணத்தவராய பிரதாபருத்திரன் என்னும் வேந்தனைத் தலைவனாகக் கொண்டு, எடுத்துக்காட்டொவ்வொன்றினும் அவரது புகழையே விதந்து கூறியும் இத்தலைவன் பெயர்துலங்க இந்நூற்குப் பிரதாபருத்திரீயம் எனப் பெயர் ஈந்து மொழிபெயர்த்தனர்..

1924-இல் “சுலோசனை”, “உதயண சரிதம்” ஆகிய இரண்டு நூட்களும் சன்மார்க்கசபையால் வெளிவரப்பெற்றது. அதன் பிறகு 1926-இல் “சுக்கிர நீதி” யும், 1933-இல் “மண்ணியல் சிறு தேர்” என்கிற நூலும் வெளிவந்தது. 1934-இல் பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியரானார். எனவே இந்த இடைப்பட்டக் காலத்தில்தான் (1924 -1933) “பிரதாபருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” ஆகிய இரண்டு நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதிருந்த தமிழறிஞர்களும் பண்டிதமணியின் நண்பர்களும் அவ்விரண்டு நூல்களும் விரைவில் வெளிவர வேண்டுமென பண்டிதமணியை வலியுறுத்தினர். இவ்விரு நூல்களும் விரைவில் அச்சாகித் தமிழர்கள் கையில் தவழ வேண்டுமென்று அவர்களுடைய தலைமாணாக்கராகிய டாக்டர். வ. சு. ப. மாணிக்கம் அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

ஆனால் என்ன காரணத்தாலோ இவ்விரண்டு நூல்களும் வெளிவரவில்லை. காரணமறிந்தவர்கள் யாரும் இப்பொழுது இலர். பண்டிதமணியவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஏறத்தாழ 25, 30 ஆண்டுகள் இவ்விரண்டு நூல்களும் வெளிவராமல் கையெழுத்துப்படியாகவே பண்டிதமணியின் கையிலேயே இருந்து வந்திருக்கின்றன. இவை இரண்டில் “பிரதாபருத்திரீயம்” என்னும் இந்நூல் வெளிவராததிற்குக் காரணம் ஆராய்ந்தபோது எங்களுக்குத் தோன்றிய எண்ணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

பிரதாபருத்திரீயத்தின் முதனூலாகிய “பிரதாபருத்திர யாசோ பூஷனா” வடமொழியாலானது. இந்நூலை நாம் இணைய தளத்தில் காணலாம். ஆனால் வடமொழி எழுத்திற்குப் பதில் ஆங்கில எழுத்தில் இதனை டிரான்ஸ்லிட்டரேசன் (TRANSLITERATION) செய்திருக்கிறார்கள். இம்முதநூலொடு நம் பண்டிதமணியவர்களின் மொழிபெயர்ப்பாகிய “பிரதாபருத்திரீய”த்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது முதனூலில் உள்ள ஒரு அத்தியாயம் மட்டும் மொழிபெயர்க்கப் படாமலிருப்பது தெரியவந்தது. அந்த அத்தியாயம் இசை சம்பந்தப்பட்டது. எனவே பண்டிதமணியவர்கள் இசை நுணுக்கங்களைத் தெளிந்து பிறகு மொழிபெயர்த்து வெளியிடலா மென்றிருந்திருக்கலாம். இதைத்தவிர வேறு காரணம் ஏதும் புலப்படவில்லை.

சிலப்பதிகாரத்திற்கு மிகச் சிறந்த உரை கண்ட நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் வரலாறு கூறும்போது:
“ … நாட்டாருடைய சிறிய தந்தையார் சொக்கலிங்க நாட்டார் இசைத்துறையில் புலமை வாய்ந்தவர். நாட்டார் இவரிடத்தில் இசைப் பயிற்சி பெற்றுள்ளார். இவரிடத்தில் பெற்ற இசைப் பயிற்சி பிற்காலத்தில் சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதியபோது அரங்கேற்றுக் காதையிலுள்ள இசை நுணுக்கங்களைத் தெளிந்து எழுதுவதற்குத் துணை புரிந்துள்ளது. இதனைச் சிலப்பதிகார உரை நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் காணலாம்” என்று பா. வீரமணி கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது..

எப்படியிருந்தபோதும் பண்டிதமணி அவர்களுடைய இந்நூலினை அப்படியே வெளியிடவேண்டுமென்று நினைத்தோம். எனவே இற்றைக்கு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மொழிபெயர்த்துக் கையெழுத்துப்படியாக வைத்திருந்த “பிரதாபருத்திரீயம்” என்கிற காப்பிய அணியிலக்கண நூலை அறிஞர்பெருமக்களும், தமிழன்பர்களும் படித்து மகிழும் நிமித்தம் இன்று, இணைய தளத்தில் வெளியிடவும் கூட்டுவித்த நல்லூழை நினைந்து இன்புறுகின்றோம்..

பண்டிதமணி அவர்களின் படைப்புக்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய தமிழக அரசுக்கு எங்கள் நன்றியறிவைப் புலப்படுத்திக் கொள்வதோடு அன்னாரின் படைப்புக்கள் அனைத்தும் இணைய தளத்தில் வெளிவரவேண்டும் என்கிற எங்களின் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தலைவனியல்

  1. வித்தைகளாகும்[1] அல்லிமலர்க்கு நிலவும், சுருதி[2]முடிக்குழல்வகுப்பிற்கு நன்முத்தமணியும், கமலத்தோற்குக்காதற்கிழத்தியும், மூவுலகீன்ற அன்னையுமாகிய வாக் தெய்வத்தை வணக்கம்[3] செய்கின்றேன்; அக்கலைமகளது திருவடித்தாமரையைப்பற்றிய[4] வணக்கச் செயல்கள் நல்லோரது கலை தெரிமுறையாம்[5] விதைக்குக்கழனியும், பாநடத்திற்கோர்[6] உயிர் மருந்துமாய் அமைகின்றன.
  1. யான் முன்னையாசிரியர்களான “பாமகர்” முதலினோர்களை நன்மதிப்புடன் கைகூப்பித்தொழுது அணியிலக்கண[7] முழுப்பொருட் சுருக்கத்தை நன்கியம்புகின்றேன்.[8]
  1. “காப்பிய அணியிலக்கணச்சுருக்கம்” என்னும் இந்நூல்  பிரதாபருத்திரன் என்னும் வேந்தனது கீர்த்தியை விளக்கமாகக் கூறியமையால் அது, நெடிது பயனுடைத்தாயிற்று.[9]
  1. சுவைச்சிறப்புறுஞ்சொற்பொருட்கள்,[10] குணம், அணி, அமைப்பு[11] இயல்பு[12]மாகிய[13] இவ்வளவினமைந்த காப்பியநடை, நூற்கு நுதலிய பொருள் ஆம்.
  1. முன்னையாசிரியர், தம் நூல்களில் இக்காப்பிய நடையை நன்கு விளங்கவைத்திருப்பினும் இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டைக்[14] கைக்கொள்ளவில்லை.
  1. தூய்மைத்தாய புகழினையுடைய பெரியோரது சரித்திரம் எடுத்துக்காடற்குரியது; அத்தகைய பெரியாரொருவரையும், முன்னையாசிரியர்கள் நூற்கு அணிகலனாக்கவில்லை.[15]
  1. நூற்களும், நூலாசிரியர்களும் முறையே நின்று நிலவற்கும், இசையெய்தற்கும் எடுத்துக்காட்டாகவமைந்த தலைவனது குணங்களை விதந்து கூறல், முதற்காரணமாம்.

இராமனது குணங்களை வன்னித்தல், இராமாயணத்திற்கும் வான்மீகி முனிவர்க்கும் பெரும்புகழ் விளைத்தற் கேதுவாயமைந்ததாகலின் உத்தம புருடரை வன்னித்தலானன்றே நூனிலை நலம்பயப்பதாகும்; எங்ஙனம் வேதம், சாத்திரம், புராணம் முதலியவற்றால் நன்மை நயத்தலும், தீமை திரிதலும் அமையுமோ அங்ஙனமே, உத்தமத் தலைவனை நிலைக்களனாக்கொண்ட காப்பியத்தானுமாம்.

செய்யத்தக்கனவின்ன வென்னும் அறிவு, காப்பியத்தான் எளிதிலமையும்; பிறவற்றால் அங்ஙனம் அன்று; என்னுமிவ்வளவே மாறுபாடுளது. அங்ஙனமே!

  1. சொற்[16] சிறப்புடைமையான் அரசரை நிகர்த்த வேதத்தின்[17] மிக முயன்று அறியப்படுமொன்றிலும், பொருட்சிறப்புடைமையான் நட்டோரை நிகர்த்த பழ நூற்கிளவியின்[18] விரும்பப்படுமொன்றிலும் காதலியொக்குங்[19] கவினுறுங்காப்பியம், அறிஞர்க்கு இன்பத்தை[20] விளைவித்து நல்லனவற்றில் விருப்பையும், அல்லனவற்றில் வெறுப்பையும் அளிக்கின்றதாகலின் அதனை விரும்புகின்றேன்.[21]

ஆதலிற் காப்பியம் காண்டற்குரிய[22]பயனையும் காண்டற்கரிய பயனையும் பயத்தலான் பெரிது பயன்படுவதாம். அங்ஙனமே காப்பியப் பிரகாசத்தினும் கூறப்பட்டுள்ளது.

“காப்பியம், புகழையும்[23] பொருளையும் அளிக்கும்;

வழக்கையறிவிக்கும்; அமங்கலத்தையழிக்கும்; சிறந்த நல்லின்பத்தை

விரைந்து நயக்கும். காதலியொப்பக் கவின்மொழிக்கூறும்” என்று.

இது, பெருநூல்களிலும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

“அதை விரித்துரைக்கிற்[24] பயன் என்னை? எந்தக் காப்பியப்பனுவல்கள், மனத்தை முற்றிலுங்கவர்கின்றனவோ அவற்றால் நல்லறிவு வளர்கின்றது; புகழ் விளைகின்றது; நற்குணங்கள் விரிந்தெழுகின்றன; பெரியோர்களது சரித்திரங்களும் கேழ்க்கப்படுகின்றன.”

பெரியோரது காதையைக் கூறாதவொரு காப்பியம், விலக்கற்பாலதே; அதனடியாகவன்றே “காப்பியப்பனுவல்களை விலக்கல் வேண்டும்” என்னும் மிருதியும் விளங்குகின்றது. இவ்வொழுங்கு, காப்பியத்திற்கு மாத்திரமேயன்றிச் சாத்திரக்குழாத்திற்குமாம்; அவைதாம், சீரிய தலைவனை யெய்தியமையான் உலக நன் மதிப்பை யெய்துகின்றன.

அங்ஙனமே வைசேடிகம் முதலியனவும் கடவுளை நிலவ நிறுத்தலான் உலகம் போற்று நிலையில் அமைகின்றன. மகாபாரதம் முதலியனவும், உத்தமபுருடரை வன்னித்தலின் வயத்தனவாகலின் யாவற்றினுந் தலைசிறந்து நிற்கின்றன. விரித்துரைக்கிலென்? வேதாந்தங்களும் பிரமத்தை விரித்துரைக்கின்றமையான் மிக்கச் சிறக்கின்றன.

“பின்னர் அறத்தையறிய விரும்பு” எனத் தொடங்குஞ் சூத்திரக்காரராகிய சைமுனி முனிவரரும், புருடரைப்பற்றியதும் குணங்களுட் சிறந்ததுமாகிய அறத்தையறிய விரும்பும் வாயிலாகச் சிறந்தோர் குணத்தைப் புனைந்துரைத்தலே நூற்கு உயிரெனத் துணிந்தனர்; இப்பெருநூல் அவ்வந்நியாயங்களை விரித்து விளக்குவதொன்றாயினும், அதற்குச் சிறந்தோர் குணத்தைப் புனைந்து கூறல், பொன்மலர்க்கு நறுமணம் போலாம்; ஆதலினன்றே!

9. பெரியீர்! பிரதாபருத்திரதேவனது குணங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்ட இவ்வணியிலக்கண நூல் உங்கள் செவிக்கு இன்பத்தை விளைக்க.

10. வித்தியாநாதனது இந்நூல், “காகதீய[25] நரேந்திரன்” என்னும் (பிரதாபருத்திரன்) அரசனது புகழை யணிப்படுத்தற்குச் செய்யப்பட, அவ்வரசனது புகழாற்றானும்[26]அணிப்படுத்தப்பட்டது.

அங்ஙனமே தண்டியாசிரியரும் கூறியுள்ளார்.

“முன்னையாசிரியர்களது[27] புகழ்ப்படிவம், (கவிகளின்) பனுவற்படிமத்தையெய்தி, அவ்வரசர்கள் அருகில் இல்லாத வழியும் தான் மறைவதில்லை; (என்னுமிவ்வுண்மையை)க் காண்க என்று”

நுதலிய பொருட்பெருமையான் நூற்பெருமை கூறப்பட்டதேயாம்; அதனை முதலாசிரியராகிய பாமகர் கூறியுள்ளார்.

“புகழ்ந்து பாடப்படுந் தலைவனது மாட்சிமையாற் காப்பியச் செல்வம் கவினுறுகின்றது” என்று.

உற்படரும் விளக்கியுள்ளார்.

“காப்பியத்தினது கீர்த்தி, (பாடப்படும்) பெரியாரது சரித்திரத்தைக் காரணமாகவுடையது” என்று.

சாகித்திய மீமாஞ்சையிலும் விளக்கப்பட்டுள்ளது.

“தலைவனது குணங்களாற்[28] றொடுக்கப்பட்ட பனுவலணியல், யாண்டும் நல்லோர்க்கணிகலனாகும்” என்று.

போசராசனாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகிற் சீரிய குணங்களாற் சிறந்திலங்குந் தலைவனைப் புலவனொருவன் புகழ்ந்துரைப்பானேல் அப்புலவனது காப்பியம் அற்பமெனினும், அது கற்றோர்க்குக் காதணியாவமைகின்றது.[29]

தலைவனது உயர்குடிப்பாதிய குணங்கள்

அங்ஙனம் இவை தலைவனது குணங்களாம்:-

11. உயர்குடிப்பிறப்பு, அழகுடைமை, பெரும்பேறுடைமை, வள்ளண்மை, பெருமிதம் திறனுடைமை, அறத்தாறொழுகன் முதலியன குணங்களாம்.

12. முதனூலைப் பின்பற்றியிந்தச் சில குணங்களே கூறப்பட்டுள்ளன; பிரதாபருத்திரதேவனது குணங்களோ உரைத்தற்கரியனவாம்.

இனி நிறுத்த முறையானே இவற்றின் இலக்கணமும், எடுத்துக்காட்டும் கூறப்படுகின்றன. அவற்றுள்;

“உயர்குடிப்பெறப்பென்பது சிறப்புறுங்குலத்திற் சனித்தலாம்”

எங்ஙனமெனில்:-

13. பூவுலகினது அத்தகைய நல்வளச் செல்வத்தான் இந்திரன் முதலாய வானவர், மண்ணிடைப்போந்து கூடிக்குலாவுதற்கு விரும்பினராய்ப் பிரமனை நெடிது நாள் வேண்டினர்; வேண்டவே பிரமனும் செங்கதிர்க்குலத்தினும், தண்கதிர்க்குலத்தினுஞ் சிறந்த காகதீய மரபினைப்[30] படைத்தனர். அம்மரபில் திருவின்கேள்வன், இப்பொழுது வீரருத்திரனது யாக்கையால் விளக்கமுறுகின்றான்.

இனியழகுடைமை

“வனப்புறுமேனியுடைமையை, மேலோர் அழகுடைமையென்ப”

எங்ஙனமெனில்:-

14. முரன்பகைவற்கு முந்நீர்மகள்பால் எவன் முன்னர்த்தோன்றினனோ அவனே, மீண்டும் மாதேவர்க்குத்[31] தலைவியின்பாற் சனித்தனன்.

அங்ஙனம் இவ்வுடலுடைக்காமன், பூமடந்தையின் புண்ணியச்செல்வங்களான் தான் பிரதாபருத்திரனாக விளக்கமுறுகின்றான் என்று மான்விழியாரெலாம் மனந்துணிகின்றார்.

இனிப்பெரும்பேறுடைமை

“இருநிலத்தலைமை யிறண்டறக்கோடலே பெரும்பேறுடைமை யென்மனார் பெரியோர்”

எங்ஙனமெனில்:-

15. சிற்றரசர்கள் வழிபடவணங்குங்கால், அவரது முடிவிளங்கு மணிக்கதிர்கள் ஆலத்தியாவமையப் பெற்றதும், அரசியற்றிருவின் முதற்கட்டோற்றத்திற்குரிய[32]வழியுமாகிய அரியணைமீதிவர்ந்து, செறுநர்ச்சிறப்பை விரைந்து கடப்பனவாகிய ஒப்பற்ற வெற்றிமுறைகளான்[33]குணநிலைக்களனாகிய திருவளர் வீரருத்திரநிருபன், பூவுலகைப்புரக்கின்றான்.

இனி வள்ளண்மை

“வரையாக்கொடையை இயல்பாக்கோடலே வள்ளண்மையென்ன வழுத்துவர் புலவர்”

எங்ஙனமெனில்:-

16. குணநலத்தொழுங்கின் மேன்மையால் மாதிரத் தலைவரின் கீர்த்தியைக் கெடுக்கும் வீரருத்திரன், புலவரது[34] மணிமாடமுற்றங்களை, வேழத்தினது மதநீர்மணங்களான் எப்புறமும் கமழ்வனவாகச் செய்கின்றானாகலின் இவரை நிகர்த்த வள்ளல், மும்மையாமுலகிற் பிறிதொருவரும் இல்லை.

இனிப் பெருமிதம்

“பாரகம் விளக்கும் பண்பாம் அதனைப் பேரறிவுடையார் பெருமிதம் என்ப”

எங்ஙனமெனில்:-

17. வென்றிசேரியல்புடைக் காகதி வேந்தனது விறலெனும் வெய்யவன், பகையரசருடைய மனைவியரின் குழலிருட்கருவத்தைக் கவர்ந்து எஞ்ஞான்றும் விளக்கமுறுங்கால், முதிர்ந்தடர்ந்த இருளுடையனவும், கதிரவனைக்காணாதனவும்[35] ஆகிய சக்கிரவாட மலையின் பின்புறப்பாறைகட்கு ஒளியறிவு விளைகின்றது.

இனித் திறனுடைமை

“செயற்றகு பொருளிற் சீரிய திறலைத்

திறனுடைமையென்னச் செப்புவர்”

எங்ஙனமெனில்:-

18.  கலைமகளும், மலர்மகளும் ஒருவர்பாலொருவர் இயற்பகையமைந்தவர்[36] எனினும், எவன்பால் மிக்க நேர்மையெய்துகின்றனரோ அத்தகைய குணங்கட்கு நிலைக்களனாகிய திருவளர் வீரருத்திரவேந்தனது திறனுடைமையை வன்னித்தலரிதன்றோ; அன்றியும், திசையெல்லாம் வென்ற அவ்வேந்தன், பொருந்துபசாரங்களான்[37]மகிழுமிந்நிலமகளை அவ்வத்தகைய[38]மகிழ்விக்குஞ் செயல்களான் இவர்களோடு முரண்படாவண்ணம்[39]பாலிக்கின்றான்.

இனி அறத்தாறொழுகல்

“அறத்தே வழிப்படும் அகமுடைத்தாதலை அறத்தாறொழுகலென்மனார் அறவோர்”

எங்ஙனமெனில்:-

19. எள்ளற்பாட்டினும், தகுதியிற்சொல்லையும்,[40]கனவிலும் பிறன்மனைப் பேச்சையும், பகைவரிடத்தும் குறை நிறைத்தலையும் காகதிவேந்தன் பொறான்.

முதலியன வென்னுஞ்சொல் மிகுமகிமை கல்வித்திறம் முதலிய[41]குணங்களை யுணர்த்தும்.

“திகழுந்தெய்வத் திருவுருச்சேர்த்தியே

மிகுமகிமை யென்ன விளம்புவர் மேலோர்”.

எங்ஙனமெனில்:-

20. விண்டுவின் முதற்றாய் கௌசலையும், இரண்டாமன்னை தேவகியுமாவர்; பின்னர் பெருமை சேர் மும்மடாம்பிகை[42] யென்பாள், மூன்றாமீன்றாளாவள்; திரேதாயுகத்தில் இராமனும் துவாபர யுகத்திற் கண்ணனுமாய் அவதரித்த அவ்விண்டு, கலியிற் பூவுலகைப்புரத்தற்கு வீரருத்திரனாய்த் தோன்றி விளங்குகின்றான்.

உவணக்கொடியோனது[43] உருவுடைத் தன்மையான் மிதமகிமையிங்குக் கூறப்பட்டது.

இனி கல்வித்திறம்.

“எல்லாக்கலையினுமேற்றமுடைமையே

கல்வித்திறமெனக்கழறுவர் கவிஞர்”.

எங்ஙனமெனில்:-

21. திருவளர் காகதிவேந்தன் அறுகலை[44]நூல்கட்கும் எல்லையாய் அமைந்த பேரவைகளான் கலைஞர்[45]க்குழுவை மகிழ்விப்பானும், பாட்டியற்றுரையைக் காட்டலிற் சிறந்த இன்னுரைகளான் கவிவாணர்களை[46]யின்புறுத்துவானும், இசை[47]நூன் மருமங்களை வெளிப்படுக்கும் இசைக்[48]கருவிகட்குரிய முறைகளான் யாழ்ப்பாணரை யின்புறுத்துவானுமாய் அவைக்கண் நிலவுகின்றான்.

இனித் தலைவனது குணங்களைக்[49]கூறிய பின்னர்த் தலைவனிலக்கணம் கூறப்படுகின்றது.

22.  கீர்த்தி, விறல், இவற்றால் மேம்பாடுடையனும், அறம்பொருளின்பப் பற்றுடையனும், தாங்குமாற்றலுடையனும், குணநலனிறைந்தவனுமாகுமொருவன் தலைவன்[50] எனப்படுவன்.

கீர்த்தி, விறல் இவற்றால் மேம்பாடுடைமை எங்ஙனமெனில்:-

23. காகதிவீரருத்திரனது மிகுபுகழ் மண்டிலம், அறத்தண்டத்தில் விரிந்த வெண்குடை வனப்பை மூவுலகிற்குமெய்துகின்றது; குவளையெனக்கரிய இவ்வானவெளி, இக்குடையின் நீழலென்னக் காணப்படுகின்றது; ஆகலின் அக்குடைக்கு மேல் விறலெனும் வெய்யவன், விளக்கமுறுகின்றான்; என்னு மிவ்வுண்மை யுறுதியெனக் கருதுகின்றேன்.[51]

அறம்பொருளின்பப்பற்றுடைமை எங்ஙனமெனில்:-

24.  அறம் நிறைவுறு[52]பொருள்போலும், பொருள் நிரம்பிய அறம்போலும், இன்பம் அவ்விரண்டுபோலும், அவ்விரண்டும் இன்பம் போலும், வீரருத்திரன்பால் நிலவி நின்றன.

பொறைதாங்குமாற்றலுடைமை யெங்ஙனமெனில்:

25.  காகதிவீரருத்திரக்கொற்றவன், புயத்தாற் பூவுலகைத் தாங்குங்கால், ஆதிசேடன் பாடுகின்ற[53] தன்மனைவியரைச் சிரமசைத்தலாற்[54] பாராட்டுகின்றான்; கூர்மராசன் மார்பகத்தைக்[55]காண்பித்தலான் இலக்குமியை யிது பொழுது இன்புறுத்துகின்றான். மாதிர வேழங்களும், பிடிகளைப்பின்றொடர்ந்து[56] சேறலான் பிரிவான் வருந்தும் அவற்றின்றுயரை விலக்குகின்றன.

குணநலனிறைந்தமை யெங்ஙனமெனில்:

26. காகதிவீரத்தலைவனது குணங்களை அரவம்[57]ஆயிரம் முகங்களா னுரைத்தற்கும், கதிரவன் ஆயிரம் கரங்களான்[58]வரைதற்கும், இந்திரன் ஆயிரம் கண்களாற் காண்டற்கும் அமைவரேல்,[59] அவ்வமைவு பொருத்தமுடையதாம்.

இனி தலைவரது பிரிவுகள் விளக்கப்படுகின்றன.

27.  “தீர” என்னுஞ் சொல்லை முதற்கட்கொண்ட உதாத்தன், உத்ததன், இலலிதன், சாந்தன் என்னுமிந்நால்வர் தலைவரென முன்னையாசிரியர் கூறியுள்ளார்.

எல்லாச் சுவைகட்கும் பொதுவாய[60]தலைவர், தீரோதாத்தன், தீரோத்ததன், தீரலலிதன், தீரசாந்தன் என நால்வர் ஆவர்.

இவரது இலக்கணமும், எடுத்துக்காட்டும் கூறப்படும்.

28. பெருமனவலிமை,[61]  அருளுடைமை, அழகுடைமை, தற்புகழாமை, முயற்சிதளராமை யென்னுமிவற்றையுடையனாய் பிரதாபருத்திரன் போல அமைவுறுந்தலைவன் தீரோதாத்தன் எனப்படுவன்.

எங்ஙனமெனில்:-

29. மூவுலகைக் கடந்துலவுங்கீர்த்தியாற் கவினுறுந்திருவளர் வீரருத்திரவேந்தன், அருண்மெல்லியனாகலின்,[62]முன்னின்ற[63]பகைவரைக் கொடுவாட்படையாற் சிறுபொழுதிற்[64]கோறற்கு ஐயுறுகின்றான்; மங்கலபாடகர், வீரலட்சுமியின் சேர்த்தியைப் புகழ்ந்து கூறுங்கால் புருவந் தாழ்தர நாணுறுகின்றான்;[65] இன்பம்,[66] வெகுளி, மகிழ்ச்சியிவற்றை வெளிப்படுக்குங் குறிப்புக்களை முகத்திற் சிறிதுந்தரிக்கின்றானில்லை.[67]

30.  செருக்கு, பொறாமை யிவைநிறைந்தவனும், கொடுஞ்செயற் புரியுமியல்பினனும், தற்புகழ்வோனும், வஞ்சகனும், எளிதிலெழுஞ் சினமுடையனுமாகிய தலைவன் தீரோத்ததன் என்று சொல்லப்படுவன்.

எங்ஙனமெனில்:-

31. அடா! அடா! கூர்ச்சர தேயத்தரசனே! சமரிற் சிதைவுற்றனை; இலம்பாக! ஏன் நடுக்கமுறுகின்றாய்? வங்கராசனே! வீணேதுடிக்கின்றதென்னை? கொங்கண நாட்டரசனே! தானைப்பூழியாற் குருடனாயினையன்றே! ஊணநாட்டிறைவ! உனது உயிர்க் காவலிற் பற்றுடையனாயிருத்தி; மகாராட்டிரனே! நாடிழந்தனை; இந்தயாம்,[68]போர்வீரர்; எனத்தெலுங்குதேயத்தரசருடைய[69] படைவீரர், பகைவரை யவமதிக்கின்றனர்.

இங்கட்படைவீரர்கட்குத் தீரோத்ததனாந் தன்மை யமைகின்றது.

மனங்கவலொழிந்து[70]கலைப்பற்றுடையனாய்[71]இன்பந்திளைக்குமினியன்[72]தீரலலிதன் ஆவன்.

எங்ஙனமெனில்:-

32.  வெவ்வியவீரம், தடைப்படாது நிலவுகின்றது; பகையரசர் யாவரும் வணக்கஞ்செய்தனர்; இந்நிலமகள், கற்பு[73]நிலையை யெய்துகின்றாள்; தானேதோன்றுமிச்சங்கரன், வழிபடுகடவுள்; தீரனாகுமிவ்வீரருத்திரன்,[74] இளவரசராம் நிலையிலேயே பொறை[75]யாவற்றையும் தாங்குகின்றான் என்று காகதி[76]வேந்தன் எல்லாக்கலையினும்[77]இன்புறுகின்றான்.

பகுத்துணர்வானும், சமநிலையுடையானும், தெளிதருமனத்தனும் அந்தணராதியருள்[78]ஒருவனுமாகிய தலைவன் தீரசாந்தன் எனப்படுவன்.

எங்ஙனமெனில்:-

33.  விளங்கு திருமகள் விளையாடற்கிடனாயமைந்து தனது மலர்ச்சியால் உலகனைத்தையும் மணங்கமழ்விப்பதும், வைகறைப்பொழுதில் விரிந்துலர்வதுமாகிய தாமரைத்தடாகம், அப்பொழுதெழுந்த கதிரவன் முன்னர்க் களிப்புற்றாங்கு, இந்த அறிஞர்க்குழு,[79]விளங்குநற்செல்வம் நிறைவுறற்கிடனாய் அமைந்து தமது செல்வப்பெருக்கத்தான் உலகினைப் பெரிதும் மகிழ்விப்பாரும், குற்றம்[80]நீங்கிய வழிக்கழிபேருவகையெய்துவாருமாய், மேன்மையுறு வீரருத்திர வேந்தனது முன்னிலையில் இன்புறுகின்றனர்.

இங்கண் மறையவர் தீரசாந்தராவர்.

உவகைத் தலைவரிலக்கணம் விளக்கப்படுகின்றது.

34.  இனி அநுகூலன், தட்சிணன், திருட்டன், சடன் என்னுமிந்நால்வர், உவகைச் சுவையைப்பற்றிய தலைவர் என்ப.

இவரது இலக்கணமும் எடுத்துக்காட்டும்

“தலைவியொருவட்குட்பட்டவன் அநுகூலன் ஆவன்”,

தலைமகளொருத்தி[81]பாற் காதன் மிக்கவன் அநுகூலன் என்னும் தலைவன் ஆம்.

எங்ஙனமெனில்:-

35.  தோழீ[82] “வீரருத்திரநிருபன்நிலமகள் கொழுநன்”, என யாவரும் போற்று நிலையில் அப்புவிமகள் புரிந்த தவமென்னை? அவர்க்குக் காதலியாகுமத்துணை நல்வினை யென்பால் யாண்டுளது? பெண்ணே![83] (அவரைக்காதற்படுத்துஞ் சூழ்ச்சியை) யானறிவேன்; துயரையொழிக்க; உன்னை நன்னிலையனென்னும்,[84] இரத்தினாகரமேகலையென்னும்[85] இப்பெயரைக்கொண்டு[86] அவர் முன்னர் விளக்கமாகக் கூறி உன்பால் அவரையாண்டும் காதற்பற்றுடையராகச்செய்வேன்.

இங்கண்[87] நிலை இரத்தினாகர மேகலையென்னும் புவிமகளது பெயரைக்கோடலான், தன் காதற்குணத்தை வெளிப்படுத்துகின்றாளாகலின், பிரதாபருத்திரனுக்கு நிலமகள்பாற் காதன் மிகுதியுண்டென்பது குறிப்பிடப்படுகின்றது.

“பலரிடத்தும் ஒத்த நிலையுடையனைத் தட்சிணன் என்ப”

தலைமகள் பலரிடத்தும் வேறுபாடின்றி அன்பு கொண்டு அவர்களைப் பின்பற்றுமியல்பினன் தட்சிணன் என்னுந்தலைவன் ஆவன்.

எங்ஙனமெனில்:-

36. யான் காமக்கலைக்கேளியில் ஒருதலைவியை இன்னுரையானே[88]நியமித்துள்ளேன்; கருத்தியைந்த பார்வையான்[89] உள்ளத்தையொருவட்கு வெளிப்படுத்தியுள்ளேன். பாங்கியர் கரத்தால்[90]ஒருவட்கு அலங்காரப் பொருளையனுப்பியுள்ளேன்; ஆகலின் யாண்டே செல்வேன்; என்று சிந்தித்தலானே அரசர்க்குக் கங்குற் பொழுது புலர்ந்தொழிந்தது.

அங்ஙனமே:

37.  வீரருத்திரவேந்தன்,[91] வாணியை வதனத்தானும், கமலையைக்கண்களானும், புவியைப்புயத்தானும் நேசித்தலான் இவர்பால் ஒத்த நிலையையெய்துகின்றான்.

“விளக்கமான குற்றமுடையனும், அச்சமில்லாதவனுமாகுந்தலைவன்,

திருட்டன் ஆம்”.

எங்ஙனமெனில்:-

38. உமது உறுப்புக்கள்[92] யாவும், அறசியற்றிருமகளது புணர்ச்சியைப் புலப்படுத்துவனவாய்க் காணப்படுகின்றன. அங்கண் என்பாற் கொடுமையிழைத் தலையன்றி நின்பாலொழுக்கமின்மையென்பது என்னே! உன்னைப் பலர்க்குங் காதலனாக அறிவேன்; மற்றுங்கூறவேண்டுவதென்னை? நாங்கள் எளியர்; வசுமதியெனப்பெயரிய[93]அம்மங்கைபால் நீர் அன்புமிக்கவராவீர். வறிதே கூறும் வார்த்தையாற் பயன்யாது?

“மறைவிற் றீங்கிழைப்பவனைச் சடன் என்ப.”

தலைவியான் மாத்திரம் அறியத்தகுந்தீங்கிழைப்பவன் சடன் ஆவன்.

எங்ஙனமெனில்:-

39.  கண்களாற் பார்க்கின்றாயன்றி அப்பார்வை, மனத்துடன் அமையவில்லை. வாயினாலின்சொற்களைக் கூறுகின்றாய்; அச்சொற்கள், காதற்குணத்துடன்[94]அமைந்தில. என் முன்னிலையில் மார்பகத்தை வெளிப்படுத்துகின்றாயன்றி உள்ளக்கிடக்கையை விளக்கவில்லை. காகதித்தலைவனே! அயலொருத்தியைக் கருதுமுனக்குப் புவிமகளே உயிர்க்காதலியென அறிந்துளேன்; என்னையார்பால் இவைபுறக்கணித்தலாகவே அமையுமாகலின், பயனற்ற வெளிப்பகட்டுக்கள் வேண்டா.

இங்கண், அவ்வத்தலைவனைப் பற்றிய முறையானே காகதித்தலைவர்களை யெடுத்துக்காட்டியிருத்தலான் அது, வீரருத்திரனையே[95]புகழ்ந்து கூறியதாகும்.

இத்தலைவர்க்குத் தலைவிமாரை வயப்படுத்தலில்[96]பீடமருத்தன், விடன், சேடன், விதூடகன் என்னும் பெயரையுடையார் துணைவராவர்.

அவரது இலக்கணம் விளக்கப்படுகிறது.

40.  சிறுகுறையுடையன்[97] பீடமருத்தன்; வித்தையொன்றுடையான்[98]விடனெனப்படுவன்; சேர்க்குந்திறலோன் சேடனாவன். மிகுநகை[99]வினைப்பவன் விதூடகன் என்ப.

இவர்களது எடுத்துக்காட்டு வெளிப்படை.

இனி உவகைத் தலைவிமார் எண்மர் கூறப்படுகின்றனர்

41. 42. “சுவாதீனபதிகை” (தன்வயத்து தலைவனையுடையாள்)

“வாசக சச்சிகை” (இல்லத்திருந்துழியெதிர்ப்பார்ப்பவள்)

“விரகோத்கண்டிதை” (காமநோய்ப்பட்டவள்)

“விப்பிரலப்பிதை” (வஞ்சிக்கப்பட்டவள்)

“கண்டிதை” (சீற்றமுடையவள்)

“கலகாந்தரிதை” (பிணிங்கியவள்)

“பிரோசிதபர்த்திருகை” (தலைவனிற்பிரிந்தவள்)

“அபிசாரிகை” (தொடர்ந்துசெல்பவள்)

என்னும் இவர்கள் அத்தலைவிகள்; முறையே இவரது இலக்கணம் கூறப்படுகின்றது.

“காதலனால் எஞ்ஞான்றும் இன்புறுத்தப்படுமவள், சுவாதீனபதிகையென்னப்படுவள்”

எங்ஙனமெனில்:-

43. பிரதாபருத்திர வேந்தன், பொறையெனப்பெயரிய காதலியை சிறப்புறுமவ்வப்பொருட்களான் இன்புறுத்தியவன் பான்மனப்பற்றுடையனாகின்றான்[100]

44.  காதலன் வருந்தறுவாயில் தன்னையும், தனது கூடற் கூடத்தையும் அடிதொறும் அலங்கரிக்குமொருதலைவி[101]வாசகசச்சிகையெனப்படுவள்.[102]

எங்ஙனமெனில்:-

45.  திருமகள், தனது மிகுவனப்பாற் பேரவைக்களத்தைச் செம்மைப்படுத்தி மனவெழுச்சியுடையளாய், வீரருத்திரற்கு முடி சூட்டுமமயத்தை[103]யெதிர்பார்த்தனள்.

“குற்றமற்ற தலைவன் மிக்கக்காலந்தாழ்க்குங்கால், காமநோய்பட்டுழலுமொருவள், விரகோத்கண்டிதையெனப்படுவள்”

எங்ஙனமெனில்:-

46.  பிறிதொருஐயப்பாடின்று; அத்தகைய குணமணங்கமழுவீரருத்திரன்,[104]எத்தகைய குழுவினராலோ[105]காலந்தாழ்க்குங்கால், அவர், பாங்கியரழைத்து வருதற்கு எளியரல்லர்; ஆதலின் காமவேளே! காதலனையழைத்துவருதற்குச்செல்லுதி; நின்பாற்கைகூப்பியுள்ளேன்; ஏனெனில் நினதன்புடைத்தோழனாகிய மதியம், கதிர்களை யெல்லாப்புறத்தும் அள்ளியிறைக்கின்றான்.

47.  “ஓரிடத்திற்கு வருவதாகக் குறிப்பைத் தெரிவித்துப் பின்னர்க்காதலனால் வஞ்சிக்கப்பட்டவளாய் காமநோய்ப்பட்டு வருந்துமவளை விப்பிரலப்பிதையென அறிஞர் கூறுவர்.

எங்ஙனமெனில்:-

48.  தோழீ! முன்னே[106]செல்லுக; பெரிதும் நள்ளிரவு கிட்டியதாகலின் இனிக்காதலன் வருஞ் செய்தியேது? குறியிடமே! உன்னை விட்டகல்வேன்[107]வறிதே வழிந்தொழுகும் எனது கண்ணீராற் சேறாயினை;[108] அன்றேல், அரசியற்றிருமகட்கு அன்பனும், கலைமகட்குக் காதலனும், பூமகட்குக்கொழுநனுமாகிய வீரருத்திரன்பால் நாங்கள் காதற்பற்றுடையராய்[109]அவராற் பெரிதும் வஞ்சிக்கப்பட்டோம்.

49. உயிர்க்காதலன், பிறிதோரிடத்தில் இரவைக்கழித்து வைகறைப்பொழுதில் வந்தெய்துங்கால், பரத்தையின் கலவிக்குறிப்புக்களாற் சினமுற்ற தலைவியைக் கண்டிதை யென்ப.

எங்ஙனமெனில்:-

50.  இரவு, மூன்றுயாமங்களின்[110] அளவினது; தங்கட்கு மனைவிமார் ஆயிரவர் உளர்; வழியின் அமைவால்[111]வைகறைப்பொழுதிலே[112]எனதில்லத்தையும் வந்தடைந்தீர். யான் செய்ய வேண்டுவதென்னை; கூறுக. அரசராவார் யாவரிடத்துங் கண்ணோட்டமுடையரன்றே! இங்ஙனம் தங்களை மிக்க வருத்துகின்ற[113]யான் எத்தகைய தோடங்களையெய்துவனோவெனச் சிந்திக்கின்றேன்.

51. அன்பனைச்[114]சினத்தாற் புறக்கணித்துப் பின்னர் வருந்துந் தலைவியை, கலகாந்தரிதை[115]யெனக்கலைவல்லோர் கூறுவோர்.

எங்ஙனமெனில்:-

52.  மனமே! சினத்தாற் கலக்கமுற்ற நீ அவ்வம்முறை[116] பற்றியிணக்குவிக்குந் தலைவனை யரசனென்றெண்ணாது அவமதித்தனையாகலின், அவரது பிரிவான் விளைந்த வேதனையைப் பொறுத்தி.[117]

 

காதலன் அயல்நாடு சென்றுழித் துன்புறுவாளைப் பிரோஷிதபர்த்திகை யென்ப.

எங்ஙனமெனில்:-

53. மூவுலகிலும் பரவி விளங்கும் புகழொளியினையுடைய திருவளர் வீர்ருத்திரவேந்தனைச் சேவித்தற்பொருட்டுக் காகதிநகரிற் சிற்றரசர் காத்திருக்குங்கால் அவர்களுடைய மனைவியர், தங்காதலரின் நினைவால் நெருங்கி நிலவு புளகங்களாகுங் காமன் கணைகளையுடையராய் வாயில் வழியைப் பார்த்த வண்ணமாய்ப் பகல்களையும், புலருமெனும் நசையாலிரவுகளையும் கடத்துகின்றனர்.[118]

 

“காமனாற்பிணியெய்திக் காதலனைத் தொடர்ந்து சேரமுயலுந்தலைவியை, அபிசாரிகை யென்ப”.[119]

 

54. சிற்றறிவுடையாளே! பரபரப்பு வேண்டாம்; அரசன் அன்புடையனே ஆக; காதலனைத் தொடர்ந்து[120] செல்லுமொருவளைப் பிடியானை[121]மீதிருக்குநிலையிற் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.

தலைவனைத் தன்வயப்படுத்தலில் இவர்க்குத் துணைவர்கள்.

55. பணிப்பெண், தோழி,[122] காரு,[123] செவிலிமகள், அயல்வீட்டாள், குறியுடையாள்,[124] கைத்தொழிலுடையாள்,[125] சுற்றத்தாள்[126] என்னுமிவர் தூதியராயமைந்து தலைவிக்குத் துணைவராவர் என்ப.

இவர்களது இலக்கணமும் எடுத்துக்காட்டும் வெளிப்படையாம்.

காமநூல்களில் விளக்கமாகக் கூறப்பட்ட பத்மினீ, சித்திரிணீ முதலிய[127] வகுப்பு வேறுபாடுகளும் அறியற்பாலன.

முத்தை, மத்திமை, பிரவிடையென்னும் தலைவிமார் சுருக்கமாக முத்திறத்தவராவர்.

56.  யௌவனப்பருவத்தையெய்துகின்றவளும், நாணத்தாற் காமனை வென்றவளுமாகிய தலைவியை முத்தையென்ப.

யௌவனப்பருவத்தையெய்தியவளும், நாணம், காமம் இவற்றிற்கு இடையிலிருப்பவளும் ஆகிய தலைவியை மத்திமையென்ப.

யௌவனப்பருவம் நிரம்பியவளும் காமத்தால் நாணங்குன்றியவளுமாகிய தலைவியை பிரவிடையென்ப.

முறையே எடுத்துக்காட்டுக்கள் கூறப்படுகின்றன.

முத்தையெங்ஙனமெனில்:

57.  அறிவிலீ! மனத்திற்கும் மறைத்தற்குரிய யாவற்றையும் என்பாற் றெரிவிக்கின்றாய்; அங்ஙனமாக, யான் யாரேனுமொருவனோ? உனக்கு அன்புடைத் தோழியன்றே! (கூறற்குரியதை) மறைத்து ஏன் வருந்துகின்றாய்? வீரருத்திரவேந்தன்பால் உனக்குக்காதற்பற்றிருக்குமேல், அஃதெற்கும் விரும்பத்தக்கதே; அங்ஙனம் நிகழுமோ? என்று தோழியின்னுரையே கூறுங்கால் அம்மெல்லியலாள்[128]  நாணத்தான் மறுமொழியளித்தனள்.

மத்திமை யெங்ஙனமெனில்:

58.  காமலீலையின் விலாசங்கட்கு முன்னரங்கமாக[129] எழுச்சிதரு யௌவனப் பருவத்தையெய்தி உருக்கொடு காமக்கிளர்ச்சியாம் நடனவித்தார வனப்பை நாணத்திரையுள்[130] நடிப்பவளும், துடிக்கும் புருவங்களையுடையளுமாகிய இத்தலைவியினது சொல்லொணாச் சிங்கார நடனமுறை, காகதிவேந்தன்பாலமைந்த குறிப்பின்[131] றொடர்பான் விளக்கமிக்கவாய் மிளிர்கின்றது; பாங்கியரே! இதனைப்பார்க்க.

பிரவிடை யெங்ஙனமெனில்:

59.  இயலழகமைந்த உருத்திரவேந்தனை, காதற் குறிப்புடன்[132] காணும் மான்விழியாளது இளமைப்பருவத்தில், அப்பொழுதே பலபடவெழுந்த உறுப்பு[133] மென்செயற்பெருமையாலினியதும், சுவையினெழுச்சி[134]யானொருமித்தெழும் விறலையுடையதுமாகிய[135] மலர்க்கணைவேட்செயல்[136], விளங்குகின்றது.

தலைவியின் பிற வேறுபாடுகளையுடைய[137] எடுத்துக்காட்டுக்கள், ஏற்றபெற்றி உய்த்துணர்பாலன.

60.  சுவைமலிந்த காப்பியத்தில் அமைந்த குணம், அணியிவற்றின் பெருமிதம், கவினுறுஞ் சொற் பொருட்களோடியையுமேல் அஃது மிதயத்தையின்புறுதும். அச்சொற் பொருட்களின் விளக்கமும், சீரிய புகழ்படைத்த பெரியாரது சரித்திரத்தைப் பெரிதுந் தழுவி, அமுதப்பெருக்கின்[138] இனிமையன்ன சுவைநிரம்பியவாய்ச் சிறக்கின்றது.

இது தலைவனியற் சுருக்கச்சுலோகமாம்.

அழகுபடுத்தற்கு நிமித்தமாகிய குணம், அணியிவைகள், தகுதியான அணி—பெறற்குரிய பொருளமையுங்கால் பயனுளவாம்; எப்பொருள், அலங்காரங்கட்கு உறையுளோ, அப்பொருளே உலகவழக்கால் அணிபெறற்குரிய பொருளாமாகலின், குணம், அணியிவைகட்குக் காப்பியமே நிலைக்களன்; எனவே அக்காப்பியமே, அணிபெறற்குரிய பொருளென்பதாம். சுவைமுதலியன, அணிபெறற்குரிய பொருள்களெனக் கூறல், அணியல் சிலம்பு முதலிய அணிகலன்கட்குச் சரீரம்போலச் சிறப்புவகையான் அமைவதாம்.

சுவை முதலியவற்றிற்கு உயிராந்தன்மையுண்மையான் காப்பியமாந்தன்மையும் பொருந்தும். ஒரோவழிச்சுவைக்குச்சிறப்பும், ஒரோவழி அணிக்குச் சிறப்பும், ஒரோவழி விடயத்திற்குச் சிறப்பும் அமையும்;

சுவைக்குச் சிறப்பு எங்ஙனமெனில்:-

61.  சிறிது முளைத்த காதற்குறிப்புக்களான் வனப்புற்றதும், உடலிற் றளிர்த்த பேரழகுடையதும், முகிழ்த்த முலைகளையுடையதுமாகிய மெல்லியலாளின் இளமைப்பருவத்தில் காமன், பூப்பையும், பழத்தையும் எய்தினன்.

இக்கூற்று ஒரு தலைமகளைக் கண்டு பிரதாபருத்திரன் விருப்புற்றுக்கூறியது.

ஈண்டு உவகைச்சுவை குறிப்பிடப்படுகின்றது.

அணிக்குச் சிறப்பு எங்ஙனமெனில்:-

62. பிரதாபருத்திரனது மிகுபுகழ், திசை வெளியில் நிலவுங்காற் சக்கிரவாடமலை வெளிகள், இடையறாது நீர்ப்பெருக்கும் மதிமணிப்பாறைகளையுடையனவாய்க் காணப்படுகின்றன.

இங்கட் சக்கிரவாடமலைவெளிகளிலிருக்கும் மதிமணிப்பாறைகள், வீரருத்திரனது மிகுபுகழில் நிலவெனும் நினைவால் நீரைப்பெருக்கின; என்னும் மயக்கவணி குறிப்பிடப்பட்டது.

விடயத்திற்குச் சிறப்பு எங்ஙனமெனில்:-

63. மூவுலகினுஞ்சிறந்த காகதிக்குலத்தில் வீரருத்திரன் அவதரிக்குங்கால், சேடசயனன் பாற்கடலை விடுத்துத் தனதில்லத்தையெய்தினன்.

இங்கட் சேடசயனன், பாற்கடலைவிடுத்துத் தனதில்லத்தை யெய்தினன் என்றமையான் பாற்கடலில் விண்டு இல்லையென்று குறிப்பிடப்படுகின்றது; இதனால் புருடோத்தமன், பிரதாபருத்திரனது உருவத்தைப்பூண்டு காகதீய குலத்தில் அவதரித்தான் என்னும் விடயம் குறிப்பிடப்படுகின்றது.

இங்ஙனம் குறிப்பின்சிறப்பு முத்திறத்ததாம்.

குணம், அணியிவை காப்பியத்தையெய்தி விளக்கமுறுகின்றன. அக்காப்பியம் சொல்விளக்கத்தானும், பொருள்விளக்கத்தானும், சொற்பொருள்விளக்கத்தானும் கவிஞரிதயத்தை யின்புறுத்துகின்றது.

சொல்விளக்கமென்பது, முதிர்ந்தசொற்கட்டினது பெருமையாம்.

எந்தச் சொற்கட்டின் பெருமை ஆரபடியமைப்பிற் கூறப்படுமோ அது சொல்விளக்கம்ஆம்.

எங்ஙனமெனில்:-

64.  முயற்சிமிக்க வீரருத்திரவேந்தனது கழியன்ன வலிமிக்க வாகுவின் கேளிகன், புவியைப்புரத்தலிற் கண்ணோட்டமுடையனவும், பகையுலகைக் கலக்கலாற் காண்டற்கரிய வெற்றிமுறைகளையுடையனவும், அற்பச் சத்திரியர் பக்கத்தைக் கடிதலில் உயர்த்தி வீசிய வாட்படையுடையனவும், கெர்ச்சிக்குந் துர்ச்சனரின் செருக்கெனுஞ் சிலையைப் பிளக்குமசனியனையவுமாய் நிலவுகின்றன.

முற்றும் நிறைந்த பொருட்செறிவைப்

பொருள் விளக்கமென்ப.

எங்ஙனமெனில்:-

65.  வென்றிசேர் பிரதாபருத்திரன் வாட்படை, செருக்களத்திற் பெருமிதமெய்துங்கால் அதிற் பகையரசரது அஞ்சலிகள் எதிருருக்கொடு விளங்க, அவற்றைக் காணும் அறிவுடையார், வெற்றித்திருவீற்றிருக்குங் கமலமென்னக் கருதுகின்றனர்; யானோ, அவ்வரசர்க்குப் போர் நிகழ்ந்துழி, மீண்டும் படைத்தற்பொருட்டுப் பகைவருயிரைக்கோடற்கு அவனெய்திய விதியினது ஆதனப் பதுமமென்னக் கருதுகின்றேன்.

சொற்பொருள் விளக்கமெங்ஙனமெனில்:

66.  சலமர்த்தி கண்டமென்னும் மலைக்கரசனது போர்ச்செலவின் முயற்சியில் மலைகளின் சாரலைத் தகைவனவும், அப்பொழுதே திசைவெளிகளை நடுக்குறுத்துவனவுமாகிய களிற்றுக்கூட்டத்தின் பிளிறொலிகள், புயற்பந்தியின் ஆர்ப்பரிப்பை நிகர்க்குங்கால் அம்முயற்சி, பகைமகளிர்க்குக் காரெனும் பெருமயக்கைத் தெரிவித்து அம்மகளிரது கண்ணீரெழுச்சியாம் மிகுமழைபொழி நாளைச் செய்கின்றது.

இத்தகைய சொற்பொருள்விளக்கங்களான் காப்பியம் இனிமையுடைத்து. சொற்பொருட்களும் பெரும்புகழுடையார் சரித்திரத்தை வன்னித்தலான் கவிஞரிதயத்தை யின்புறுத்துவனவாகலின் காப்பியத்தில் தலைவற்கே சிறப்புரிமை யென்பதாம்.

67.  குலம், அதன்வழியொழுக்கம், புகழ், வீரம், கல்வி, நல்லொழுக்கமாகிய இன்னோரன்ன தலைவனது குணங்களை வன்னித்தலென்னுமஃதே பல்லோர்க்கும் ஒப்பமுடிந்த உடன்பாடாம்.

68.  அன்றேல் பகைவரது பலகுணங்களை வன்னித்து அப்பகைவனை வேறலாற்றலைவனது மேன்மையை வன்னித்தலும், ஒரோவழிச்சம்மதம் ஆம்.

முறையே எடுத்துக்காட்டுக்கள் கூறப்படுகின்றன.

69. எவன் உண்மைப்பொருளோ, அப்பரமபுருடன், காகதிவேந்தரது குலத்தில் எவனது அவதாரமோ; எவனது ஒழுக்கம், உலகிற்கு நலம் பயக்குந் தொடக்கத்ததோ; எவனது புகழ், கற்பதரு, காமதேனு, சிந்தாமணி யிவற்றைச் சிறுமைப்படுத்தியதோ; புவிப்பொறை தாங்கும் அத்தகைய திருவளர் வீரருத்திரவேந்தன் மேம்பாடுற்றிலங்குகின்றான்.

70.  எவனது வீரம், பகையரசரது மிகுசெருக்கிருளுக்கு வெய்யிலோ; எவனது தாளனைய கைகளின்றிறல், மன்றேவி யில்லத்தின் காவலோ; அத்தகைய சேவணதேயத் தரசனும் செருக்களத்தில், பெருமானாகிய வீரருத்திர நரேந்திரனது போர் முழவொலியைக்கேட்டு, நடுக்கமெய்தி யிருக்கைவிட்டோடிக் கலக்கமெய்தினன்.

இத்தகைய புனைந்துரை, ஆக்கிய தலைவன்பால் அமைவதில்லை; அத்தலைவன், உலகில் விளக்கமுறுதற்பொருட்டு குலவழக்காதியவே, பலபட வன்னித்தற்குரியன.

இயற்றலைவன்பால் இருதிறனும் அமையும்; அவனது குலவழக்காதிய, உலகில் விளக்கமுற்றமையான் கவிகள், திறலுடைப்பகைவரை வென்று கொண்முகமாக அத்தலைவனை வன்னித்தலும் அமையும்.

இங்ஙனம் தலைவன், இயற்றலைவன் ஆக்கியதலைவன் என இருதிறத்தவன் ஆம்.

அவனிலும்;

71. வெளிப்படையான பரபரப்புடைய வெகுளிச்சுவை, தீரோத்ததன்பாலும், பலகுறிப்பு ஞற்று மூவகைச்சுவையும், தீரலலிதன்பாலும், எங்ஙனம் வன்னிக்கப்படுமோ;

72.  அங்ஙனம் தீரோதாத்தன்பால் வன்னித்தலமையாது; அவனிடத்தும் சுவை நிறைவு, காரியமுகமாகப் பொருந்துமுறையுடையதாம்.

73.  அங்ஙனமே தீரோதாத்துத் தலைவன்பால் நகைச்சுவை முதலிய பிறசுவைகளையும் வன்னித்தல் முயற்சியும், நடிப்பும் குன்றியவாகும்.

தீரோதாத்தன், எல்லாத் தலைவரினுஞ் சிறந்து நிற்றலாற் காப்பியங்கள் அத்தலைவனைப்பற்றியவாயமைதன் மிகுபுகழ்க்கு நிமித்தம் ஆம்.

ஸ்ரீ வித்யாநாதனியற்றிய “பிரதாபருத்திரன் புகழணி” யென்னும் அணியிலக்கணத்திற் றலைவனியல் முற்றிற்று.

– வளரும்

 

[1] வித்தை — நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாஞ்சை, நியாயம், புராணம், அறநூல் என்னு மிவை பதினான்கும் வித்தைகளாம்.

[2] சுருதி — இச்சொல் வடமொழி மரபுபற்றிப் பெண்பாலாகலின், அச்சுருதிமகள் தன்முடியினது குழற்பகுப்பில் அணிந்து கோடற்குரிய நன்முத்தமணியென்பதாம்; இதனால் வாக்தேவதை சுருதிமுடியாகிய உபநிடதங்களாற் புகழப்பட்ட மான்மியத்தையுடையவள் என்பது போதரும்.

[3] வணக்கம் — நூற்றொடக்கத்தில், ஆசியானாதல், வணக்கத்தானாதல், பொருட்குறிப்பானாதன் மங்கலங்கூறல் வேண்டுமென்னுந் தண்டியாசிரியரின் கொள்கையைப்பின்பற்றி, இவ்வாசிரியரும் வணக்கத்தான் மங்கலமியற்றினர் என்பதாம்; இதனால் இயற்றப்படும் நூல் இடையூறின்றியினிது நிறைவுற்று நிலவுலகில் நெடிது விளங்குமென்பது புலனாம். இங்ஙனமே “நூலினது முதலிடைகடைக்கண் மங்கலமியற்றல் வேண்டும்” என்னும் மாபாடியமும் ஈண்டு உணரற்பாலது.

[4] திருவடித்தாமரை — இதனை விரிக்குங்கால், தாமரைபோன்ற திருவடி, திருவடியாகுந்தாமரை யென முறையே உவமத்தொகையும், பண்புத்தொகையும் அமையுமெனினும், வணக்கவினைக்குத் தாமரை செயப்படுபொருளாய் அமையாதாகலின் உவமத்தொகையையே யிங்குக் கோடல்வேண்டும்.

[5] கலைதெரிமுறை — கலைகளைத்தெரிவிக்கும் முறை; அதாவது காப்பியம் நாடகம் முதலியனவாம்; இவ்விதைகளை விதைத்தற்குரிய கழனி, வணக்கமென்பதாம்; இதனால் கழனியில் விதைத்த விதை முளைத்தெழுந்து பயனளித்தல்போல, கலைமகளை வணக்கஞ்செய்தியற்றிய காப்பியங்களும் இனிது நிறைவுற்று நற்பயனளிக்குமென்பதாம்.

[6] பாநடத்திற்கோர் உயிர்மருந்து — இதனால் இயற்றும் பாடலிற் செம்மையும், கவிவழக்கு வழாமையும் திகழுமென்பதாம்.

[7] அணியிலக்கணம் — இந்நூலில் அணியின் வேறுபட்ட சுவையியன் முதலிய பல்வேறு பகுதிகள் கூறப்பட்டிருப்பினும், சத்திரிந்நியாயத்தால் இந்நூல், அணியிலக்கணம் என்னும் பெயர்த்தாயிற்று. சத்திரிந்நியாயமாவது: ஒருவன் குடைபிடித்துச் செல்லுங்கால் அவனுடன் செல்லும் பலரும் கைக்குடையரல்லாரெனினும் குடையாளர் செல்லுகின்றனர் என்று கூறல் ஆம்.

[8] நன்கியம்புகின்றேன் — இதனால் தனது நூல், சுவை முதலிய எல்லாவற்றையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலான் யாவற்றுஞ் சிறந்ததென்பது குறிப்பிடப்பட்டது.

[9] பயனுடைத்தாயிற்று — இந்நூல், அணியிலக்கணமாயினும் உலகுயர் குணத்தவராய பிரதாபருத்திரனைத் தலைவனாகக்கொண்டு, எடுத்துக்காட்டொவ்வொன்றினும் அவரது புகழையே விதந்து கூறியும், இத்தலைவன் பெயர்துலங்க இந்நூற்குப்பிரதாபருத்திரீயமென்று பெயரமைத்துமிருத்தலான் மிக்கச்சிறப்புடையதாதலின், பயனுடைத்தாயிற்றென்பதாம்.

[10] சுவை — சொற்சுவை, பொருட்சுவையென்னுமிரண்டுமாம். பொருட்குறிப்பு, அணிக்குறிப்பு, சுவைக்குறிப்பு என்னும் மும்மைத்தாய குறிப்புப்பொருட்களும் காப்பியத்திற்கு உயிரென மேற்கூறுவராயினும், சுவைக்குறிப்பொன்றே தன்னளவின் முடிந்து நிற்குஞ் சிறப்புரிமைபற்றிக் காப்பியத்திற்கின்றியமையாத உயிரென்பதாம்; முன்னிரண்டற்கோ எனின், சுவைக்குறிப்பிலடங்கு மவ்வளவிற் சிறப்பின்மையானும், அஃதன்றெனினும் வெளிப்பொருளினுஞ் சிறப்புண்மைபற்றிய தனோடொப்புண்மையானும் அவற்றிற்குயிரெனும் வழக்கையுபசரித்துக் கூறினாராகலின் முரண்பாடொன்றிலதென்பது “துவனிலோசன”த்தின் உட்கருத்து.

[11] அமைப்பு — இது, பொருளமைப்பு; இதனை வடநூலார் விருத்தியென்ப.

[12] இயல்பு — இது சொற்களின் அமைப்பு; இதனை வடநூலார், இரீதியென்ப.

[13] உம்மையால் இங்குக்கூறப்படாத கிடக்கையும், பாகமுங்கொள்ளற்பாலன.

[14] இதனால், காப்பியவிலக்கணத்தை விளங்க வைத்திருப்பினும் எடுத்துக்காட்டுக்குரிய தலைவனது புகழைக் கூறாமையின் முன்னை நூல்கள் சிறந்திலவென்பதாம்.

[15] நூற்கு அணிகலனாக்கவில்லை — இதனால் முதனூலாசிரியரும் சிறந்தலரென்பது போதரும்.

[16] சொற்சிறப்புடைமையான் — அரசன், ஆணையொன்றானே மக்களையேவற்படுத்திக் குற்றங்கண்டுழிக்கடிதலொப்ப, வேதமும் விதிவிலக்குவடிவாகிய சொற்றொடரானே மக்களை நடத்தி, அவ்விதிவிலக்குகளைக்கடந்துழியவர்க்குத்தோடந் தருமாகலின், வேதம் அரசனை நிகர்த்ததென்பதாம்; அன்றியும், வேதத்தினது சுரம், எழுத்து இவற்றை மாறுபடக்கூறினும் தோடமுண்டெனில், மாறுபட அனுட்டித்தலானும், அனுட்டிக்காதுவிடுத்தலானுந்தோடமுண்டென்பது அருத்தாபத்தியாற் போதரும்; படிக்குமுறை, பயன்றருபொருளுணர்வை முடிவாகவுடையதாகலின்.

[17] வேதம் — காட்சியளவையைக்கடந்த நலம்பெறற்குரிய வுபாயமாகிய சோதிட்டோமம் முதலியவற்றையும், அங்ஙனமே தீயன தவிர்த்தற்குரிய வுபாயமான புலான் மறுத்தலையுந் தெரிவிப்பது வேதம்;

“காட்சி அனுமானம் இவற்றாலறிதற்கரிய வுபாயத்தை வேதமறிவித்தலான் வேதத்ததிற்கு வேதமாந் தன்மையுண்டு” என்ப பெரியாரும். புலாலைக் கனஞ்சமென்று வேதம் கூறுகின்றது; அது நஞ்சு தீற்றியபடையாலிறந்துபட்ட மிருகம், பறவை யிவற்றையுணர்த்தும். அவற்றையருந்தலாகாதென்பது அம்மறையின் கருத்தாம்.

[18] பழநூற்கிளவி — இது வேதம் போல அமையாது, முன்னவர் சரிதங்களே எடுத்துக்காட்டாக அவற்றைப் புகழ்ந்திகழ்ந்து கூறுமுகத்தான் விருப்பு வெறுப்புக்களை மக்களுக்களித்து நிற்பதால், நட்டோரை நிக்ர்த்ததாமாகலின் பொருட்சிறப்புடைமையான் என்றார்; நண்பர் வற்புறுத்தலின்றிப் பொருண்மேற் கண்ணுடையராகலின். பழநூற்கிளவி—இது புராணவசனத்தை.

[19] காதலியொக்கும் — காதலி, கடைக்கணித்தன் முதலிய விலாசங்களானே ஆடவரைத் தன்வயப்படுத்தி எற்கிது விரும்பற்பாலதொன்று; இதனைச் செய்க; இது வெறுக்கற்பாலதொன்று; இதனைச் செயலற்க; என உரையினாலுரையாது குறிப்பொன்றானே தன்விருப்பத்தை முற்றிலுங் கைக்கொள்ளுமாறுபோல, கவினுறுங் காப்பியமும் சொற்பொருளினுஞ் சீரிய குறிப்புப்பொருண் மாத்திரையிற் சிறந்தமையான், அவற்றைச் சிறப்பாகக் கொண்ட வேதபுராணங்களினும் வேறுபட்டு தெளிகுநர் மனத்தை மகிழ்விக்கும் குறிப்புப்பொருட்செயலானே “இராமன் முதலினோர்போல விருத்தல் வேண்டும்; இராவணாதியரைப்போலிருத்தலாகாது”, என்று மக்களைத் தக்கதிற்புகுத்தித் தகாததிற்றடுத்தலாற் காதலியொக்குங் கவினுறுங்காப்பியம் என்றார்.

[20] இன்பத்தை விளைவித்து — வேதம் அச்சுறுத்தியும், புராணம் தொடர்ந்துபற்றியும், மக்களை நல்வழிப்படுத்தும்; காப்பியமோ அங்ஙனம் அமையாது, எளிதில் இன்பத்தை விளைவித்து விரைவில் நல்வழிப்படுத்துகின்றதாகலின், இஃதவற்றினுஞ் சிறந்ததாமென்பது இதனாற்போதரும்.

[21] அதனை விரும்புகின்றேன் — இலக்கணங் கூறியதனை விரித்து விளக்க விரும்புகின்றேன்; என்பதாம். இதனால் காப்பியவிலக்கணமாகிய நுதலியபொருளும், அதனையுணருமறிவாகிய பயனும், நூற்கும் நுதலிய பொருட்கும் விளக்குவதும் விளக்கப்படுவதுமாகிய சம்பந்தமும் அறியவிரும்புவோனாகிய அதிகாரியும் என அனுபந்தங்கணான்கும் கூறப்பட்டனவாம்.

[22] இம்மை, மறுமை யெனுமிரண்டினுந் துய்க்க வரும் பயனை, காண்டற்குரிய பயன், காண்டற்கரிய பயன் எனக் கூறினார். இதனால் இத்துணைப் பயனளிக்கும் அக்காப்பியத்தைக் கோடல் வேண்டுமென்பதாம்.

[23] புகழ், பொருள், அமங்கலமழிதல், நல்லின்பமெய்தல் இவைநான்கும், ஆக்கியோன் அறிவோன் ஆகிய இருவேற்கும் உரியனவாம்; வழக்கறிதலும், கவின்மொழிக்கூற்றுமாகியவிரண்டும் அறிவோர்க்கே உரியனவாம்.

[24] இந்தச்சுலோகம் — பிரவரசேனனியற்றிய சேதுபந்த மகாகாவியத்திற் காணப்படுகின்றது.

[25] (காகதீயர்) காகதியென்னும் பெயர் அமைந்த காளிதேவி. இத்தேவி, ஏகசிலா  நகரைப் பாலிக்கும் அரசர்களுக்கு குலதெய்வமாம்; இத்தெய்வத்தை வழிபடுகடவுளாகக் கொண்டவர், காகதீயர் என்பதாம்.

[26] இதனால் காப்பியத்தாற் றலைவற்கும், தலைவனாற் காப்பியத்திற்கும் பெருமையுண்டென்பது புலனாம்.

[27] நளன், நகுடன் முதலியோர் இல்லாதவழி அவரது புகழ்ப்படிவம், அழிவுறாது நிலைப்படற்குக் கவிகளின் பனுவற்படிமத்தை யெய்தியமையே காரணமாய் நிற்றலின், நூற்பெருமையாற் றலைவனது பெருமை சிறக்குமென்பதாம்.

[28] குணங்கள் — ஈண்டு வீரம், ஒழுக்கமுதலிய குணங்களையும், மாலையைத் தொடுத்தற்குரிய நூலையுமுணர்த்தும்.

[29] இச்சுலோகத்தினால் தலைசிறந்த குணங்களையுடைய தலைவனை வன்னித்தல், காப்பியத்திற்கின்றியமையாதது என்பது புலனாம்.

[30] காகதீயமரபினை — இதனால் இம்மரபு, மற்றையெல்லாமரபுகளினுஞ் சிறந்ததென்பதும், இக்குலத்திற் றோன்றிய முன்னையரசராவார் யாவரும், பொன்னகர்ச் செல்வனாதிய புங்கவரென்பதும், அவராற் பாலிக்கப்படும் மண்ணுலகம் விண்ணுலகினுஞ் சிறந்ததென்பதும், அக்குடிப்பிறந்த வீரருத்திரன் என்னும் இந்நூற்றலைவன், திருமாலின் திருஅவதாரம் என்பதும் உணர்த்தப்பாடனவாம்; இதனால், நற்குடிப்பிறத்தலென்னுந் தலைவனிலக்கணம் கூறப்பட்டது.

[31] மாதேவர்க்குத் தலைவியின்பாற் சனித்தனன். இதனால், பிரதாபருத்திரருடைய தந்தையார் திருநாமம் மாதேவரென்பதும், அம்மாதேவர்க்குப் பட்டத்தரசியின்பாற்றோன்றியவர் இவரென்பதும், போதரும்; அன்றியும், மாதேவர்க்கு முக்கட்கடவுளுக்கு தலைவியின்பால், இறைவியாகிய மலைமகளிடத்துச் சனித்தனன் என்னும் பொருள்பற்றி அரன்மகனாகிய முருகன் என்பதும் குறிப்பிடப்பட்டது. இங்குக் காமவேளும், கந்தவேளும் தற்குறிப்பேற்றத்தானும் குறிப்பானும் கூறப்பட்டமையான் அழகுடைமை யெடுத்துக்காட்டப்பட்டதாம். முரன்பகைவன் — திருமாலை; முந்நீர்மகள் — திருமகளை.

[32] அரசன், அரியணைக்கணமர்ந்த பின்னரே ஏனைய அரசியலுறுப்புக்களாகிய குழைதருகவரி, கொற்றவெண்குடை முதலியவற்றை யெய்துகின்றானாகலின், அரியணையமர்தலை, அரசியற்றிருவின் முதற்கட்டோற்றத்திற்குரிய வழியெனக் கூறினார்.

[33] நல்லவரைக்காத்து, அல்லவரைக்கடிந்து உலகனைத்தையும் ஒருகுடைநீழலிற் காத்தலாற் பெரும்பேறுடைமை கூறப்பட்டது.

[34] புலவரது — இத்தொடரிற் கூறியுள்ள ஏதுவால், இவ்வேந்தனை வந்தடைவார் யாவரும் வேழம் வதியும் முற்றதாராகிய வேந்தராவரெனில் இவரது வள்ளண்மையைக் கூறவும் வேண்டுமோ என்பது கருத்து; இதனால் வரையாதளிக்கும் வள்ளண்மை வெளிப்படையாம்.

[35] கதிரவனைக்காணாதனவும் — இதனால் கதிரவன் கதிர் புகாதவிடங்களையும் விறலெனும் வெய்யவன் காலவரையறையின்றி விளக்குவதால் இவ்வரசனது பெருமிதம் உலகிற் சிறந்ததொன்றாம்.

[36] கலைமகளிருந்துழிக்கமலையும், அக்கமலையிருந்துழிக்கலைமகளும் சேராள்; என்பது வழக்காதலின் இயற்கையென்று கூறினார்.

[37] பொருந்துபசாரங்கள் — அவரவர் நிலைக்குத்தக்க உபசாரங்கள் என்பதாம்; உபசாரங்களின் இலக்கணத்தைப் பாவப்பிரகாச நூலாரும், “நிலைமைக்கேற்ற உபசாரம், சிறிதெனினும் அது, மகளிர்க்கு மகிழ்ச்சியையளிக்கும்; நிலைமை மீறிய உபசாரம் பெரிதெனினும், மகிழ்ச்சியைச் சிறிதுமளிக்காது. ஆடை, பரிமளப்பூச்சு, ஆபரணம், அலங்கல், பள்ளி, ஆதனம் முதலிய இவற்றுள் எவற்றில் விருப்பம் நிகழ்கின்றதோ அவற்றைத் தேசகாலத்திற்கேற்ப அன்பு கொண்டளித்தலேயாம்” என்ப.

[38] அவ்வத்தகைய — இவ்வடைமொழி சொல்லொனா நிலைமையை யுணர்த்தும்.

[39] முரண்படாவண்ணம் — திருமகள், கலைமகள், நிலமகள் இம்மூவரும் பகையுறாவண்ணம், கொடை, புலவரவையிற் கலத்தல், மக்களையின்புற புரத்தல் முதலியவற்றால் இவரைப் பாலித்தனன் என்பதாம்; இதனால், இயற்பகையமைந்த இவர்களை ஒருவர்க்கொருவர் அன்புறச் செய்து வயப்படுத்தலாற்றிறனுடைமை கூறப்பட்டதாம்.

[40] தகுதியிற்சொல்லை — வேற்றுடைமைக்கண் விருப்பு பொய்புகறன் முதலியவற்றிற்கு நிமித்தமாய சொல்லை; இதனால் பரிகாசம் முதலியவற்றினும் தகுதியிற் செயலை வெறுத்தொதுக்கும் இவ்வேந்தனது அறத்தாறொழுகலைப் புகலவும் வேண்டுமோ? என்பது புலனாம்.

[41] முதலிய என்றமையான் வணக்கமுதலிய தசரூபகத்திற் கூறிய குணங்களையும் கொள்க.

[42] மும்மடாம்பிகை — இந்நூற்றலைவனாகிய பிரதாபருத்திரனுடைய அன்னையார்.

[43] உவணக்கொடியோன் — இது திருமாலை.

[44] அறுகலைநூற்கள் — பாணிநி, சைமினி, வியாதர், கபிலர், கணாதர், அக்கபாதர் என்னும் இவ்வறுவரானுமியற்றப்பட்ட வியாகரணம், பூருவமீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை, சாங்கியம், வைசேடிகம், நியாயம் என்னும் இந்நூல்களாம்.

[45] கலைஞர் என்பது சாத்திரவல்லுநரை.

[46] கவிவாணர் — இது கவித்திறனுடையவரை.

[47] இசைநூல் — இது சங்கீத சாத்திரத்தை.

[48] இசைக்கருவிகள் — இசைபாடுவர்க்கிவை துணைநிற்பனவாம்; அவை நரப்புக்கருவி, தோற்கருவி, துளைக்கருவி, மிடற்றுக்கருவியென்னும் நான்குமாம். இவற்றை முறையே வடநூலார் ததம், ஆநத்தம், ஸூஷிரம், கனம் என்ப. அவற்றுள் நரப்புக்கருவி, வீணைமுதலியன; தோற்கருவி—தோற்களான் மூடப்பட்ட முழவு முதலியன. துளைக்கருவி—துளைகள் பொருந்தும் குழன் முதலியன. மிடற்றுக்கருவி—வெண்கல முதலிய வலியவுலோகங்களானாக்கப்பட்ட தாளம் முதலியன. மிடல்—வலி. இவை, பாடுதற்கெளிதிற்புலனாகாத தொடரொலிச்சுரங்களாகிய இசைக்கருப்பொருள்களை யினிது விளக்குமென்பது அந்நூன் மரபு. இச்சுலோகத்தா ற்றலைவன் பலகலையும் பயின்று தேர்ச்சி பெற்றமை கூறப்பட்டமையாற் கல்வித்திறம் கூறப்பட்டதாம்.

[49] குணங்கள் — வனப்பு, விலாசம், இனிமை, ஆழமுடைமை, திறமை, வீரம், உவகைக்குறி, வள்ளண்மையாகிய இவ்வெட்டும் தலைவற்கே உரியவாய் இயல்பினமையத்தகுங் குணங்களாம். இவற்றுட் சில இங்குக் கூறப்படாவாயினும், தசரூபகத்துட் கூறியிருத்தலைக்காண்க.

[50] தலைவன் — குணங்கள் யாவு மொருங்கமைவோன் முதற்றலைவனும், சில குணங்களகன்றவன் இடைத்தலைவனும், பலகுணங்களிழிந்தவன் கடைத்தலைவனுமாம்; எனத்தலைவர் முத்திறத்தவராவர்.

[51] கருதுகின்றேன் — உலகமூன்றையுங்கடந்து விளங்கும் புகழ்க்கவிகைக்கு மேல் விறல் வெய்யவன் விளங்குகின்றான்; என்னும் தற்குறிப்பேற்றத்தால், புகழ்க்குடைக்குட்பட்டிலங்குங் கதிரவன் முதலாயவொளிகட்கு, அக்குடைக்கீழ் இழைக்கப்பட்ட மணிகள்போல விளங்குந்தன்மையுண்மையும், கீர்த்தி, விறல் இவற்றிற்கு மதியினும் கதிரினும் மேம்பாடுண்மையும் குறிப்பிடப்பட்டன.

[52] நிறைவுறுபொருள்போலும் — நிறைவெனும் பண்பைப்பற்றிய உவமை, இங்குக்கூறியுள்ள அறம் பொருள் இன்பமென்னும் மூன்றனுள் ஒன்றற்கொன்று அமையும்; இங்ஙனம் கூறுமாற்றால் அறம்பொருளின்பப்பற்றுடைமை புலனாம்.

[53] பாடுகின்ற — புவிப்பொறையைக் கையாற்றாங்கித் தந்தலைவனது தலைச்சுமையை யிறக்கினமையால் காகதிவேந்தனது புகழைப்பாடுகின்றனர் என்பதாம்.

[54] சிரமசைத்தலான் — தன்றலைச்சுமையிலதாக, மனைவியர் பாடும் இசை நலங்கேட்டுச் சிரமசைத்தான் என்பது கருத்து.

[55] மார்பகத்தைக்காண்பித்தலான் — மார்பகந் தெரியாது குப்புறக்கிடந்து உலகைத் தாங்குங்கூர்மராசன், அச்செயலொழியவே மலர்மகள் அணைந்து கோடற்குரிய அம்மார்பகத்தைக்காண்பித்தனன் என்பதாம்.

[56] பின்றொடர்ந்து சேறலான் — தம்நிலைபெயராது காவல்புரிந்த திக்கயங்கள், அக்காவற்றொழிலொழியவே தம் பிடிகளைப் பின்றொடர்ந்தன வென்பது கருத்து. ஆதிசேடன், ஆதிகூர்மம், திக்கயங்கள் என்னுமிவர்களால் தாங்கற்குரிய புவிப்பொறையை இவ்வேந்தன், ஒரு கையாற்றாங்கினன் எனக்கூறுமாற்றால் பொறைதாங்குமாற்றலுடைமை புலனாம்.

[57] அரவம் — ஈண்டு, ஆதிசேடனையுணர்த்தும்.

[58] கரங்கள் — கதிரவற்குக் கதிர்களே கரங்களாகலின், அக்கதிர்களே வரைதற்குக் கருவியாகும் கரங்களாக அமையுமென்பதாம்.

[59] அமைவரேல் — இதனால் ஆதிசேடனாதியரே இவ்வேந்தனது குணங்களைக்கூறன் முதலியவற்றிற் குரியரென்பதும், அலகிலாவருங்குணங்களென்பதும் புலனாம்.

[60] எல்லாச்சுவைகட்கும் பொதுவாய தலைவர், தீரோதாத்தன் முதலிய நால்வரும் எல்லாச் சுவைகட்கும் பொதுவியல்பினராயினும், பெருமிதம், வெகுளி, உவகை, சமநிலையென்னும்மிச்சுவைகட்கு முறையே சிறப்பியல்பினராதல் இவ்வியலினிறுதிக்கட்கூறப்படுஞ் சிறப்பிலக்கணத்தாற் போதரும். இங்ஙனம் பொதுவியல்பினராய நால்வகைத் தலைவரும், உவகைச்சுவையைப்பற்றிய வழி அனுகூலன் முதலவாய வேறுபாட்டினால் ஒரோவொருதலைவனும் நன்னான்காக, அங்ஙனமாய தலைவனும் தலை, இடை, கடையென மீண்டும் தனித்தனி மும்மூன்றாக, நாற்பத்தெட்டு வேறுபாடுகளை யெய்துகின்றான். “மகாவீரசரிதமுதலிய பெருநூல்களில் ஒரு தலைவற்கே முரண்படுபலநிலை கூறியிருத்தலான் தீரோதாத்தன் முதலிய சொற்கள், கன்று, காளை முதலிய சொற்கள்போல நிலைமையைத் தெரிவிப்பனவேயன்றி மரபினைக்கூறுவனவாகா; மரபு மாறுபடாதாகலின்” என்று தசரூபகத்தில் விளக்கப்பட்டுள்ளது.

[61] பெருமனவலிமை — சினம் முதலியவற்றாற் கலக்கமுறா மனநிலை; ஆழமுடைமை, மனம்மாறுபட்டுழி அதனைக் குறிப்பால் வெளிப்படுக்காமல் மறைத்துகொள்ளுந் தன்மை. சிறப்பிலக்கணம் கூறப்போந்த ஆசிரியர், முயற்சி தளறாமை முதலிய பொதுவிலக்கணத்தைக் கூறுமாறென்னையோவெனின், இத்தலைவன்பாலிவை யின்றியமையாதனவாதல் வேண்டுமென்பதை வலியுறுத்தும்.

[62] அருண்மெல்லியன் — அருளான் மனம் மெலிந்தவனேயன்றி அச்சத்தாலன்றென்பதாம்; இதனால், அருளுடைமை பெற்றாம்.

[63] முன்னின்ற — இவ்வடைமொழி, புறங்கொடுத்தோடுவாரை விடுத்தருளுவன்; எனவே அறனுடைமை புலனாம்.

[64] சிறுபொழுதில் — இங்ஙனம் ஐயுறல், பகைவர் எஞ்சி நிற்றற்குக் காரணமாய், அதுமுறையன்றாகலின், பின்னர் அப்பகைவரைக் கொன்றேதீருவன் என்பதாம்; இதனால் முயற்சி தளராமை கூறப்பட்டது.

[65] நாணுறுகின்றான் — பிறர்தன்னைப்புகழுங்காலும் நாணுறுகின்றானெனில், தற்புகழ்ச்சிக்கிடனில்லையென்பது வெளிப்படையாமாகலின் தற்புகழாடமை யினிது விளங்கும்.

[66] இன்பம் — விரும்பிய பொருணுகர்ச்சியான் — விளையும் மகிழ்ச்சியாம். வெகுளி, குற்றங்கண்டவழி அதனைப் பொறாமையாம். மகிழ்ச்சி, விரும்பியபொருளெய்திய வழி நிகழும் மனத்தெளிவாம்.

[67] தரிக்கின்றானில்லை — இதனால் ஆழமுடைமை புலனாம். இச்சுலோகத்திற் கூறப்பட்டுள்ள முயற்சி தளறாமை, அறனுடைமை, புகழுடைமை என்னுமிவை, பொதுக்குணங்களென்பதும், அருளுடைமை முதலியன சிறப்புக் குணங்களென்பதும் உணரற்பாலன.

[68] இந்தயாம் போர்வீரர் — செருக்கு, தற்புகழ்ச்சி முதலிய குணங்களமைந்திருத்தலின் இப்படைவீரர் தீரோத்ததர் ஆவர்.

[69] தெலுங்குதேயத்தரசன் — இது வீரருத்திர வேந்தனை.

[70] மனங்கவலொழிந்து — அமைச்சர், மகன், இவர்பாலரசியலையளித்து அதனால் நேரும் கவலற்றிருத்தலையுணர்த்தும்.

[71] கலை — இசை வாச்சிய முதலிய கலைகளையுணர்த்தும்.

[72] இனியன் — காண்டற்கினிய கண்கவர்வனப்புடையன்; இதனால், இத்தலைவன் உவகை சுவைக்குச் சிறந்தவன் என்பது போதரும்.

[73] கற்புநிலை — இது பெண்பாலர்க்கு இன்றியமையாத அறமாகலின், இந்நிலமகளும் அவ்வறவொழுக்கம் வழாது நின்றனள் என்பதாம்; இதனால் புணரிசூல் பூவுலகனைத்தும் இவ்வேந்தனது ஒரு தனிக்குடைக்கீழ் விளங்குகின்றதென்பது போதரும்.

[74] வீரருத்திரன் — ஈண்டுமகனையுணர்த்தும்.

[75] பொறை — யென்பது ஈண்டு அரசியற்சுமையை.

[76] காகதிவேந்தன் — ஈண்டு தந்தையையுணர்த்தும்.

[77] எல்லாக்கலையினும் — இசைமுதலிய கலைகளையுணர்த்தும். இச்சுலோகத்தால், தடைப்படா வீரம் முதலிய யாவற்றானும், திருவருட்செயலானும், இளவரசர் புவிப்பொறையைத் தாங்குமாற்றானும் மனக்கவலொழிந்து இசைமுதலிய கலைகள் யாவற்றிலுமின்பமெய்துகின்றான். ஆதலின் இத்தந்தையாகிய காகதிவேந்தன் தீரலலிதன் என்பது புலனாம்.

[78] ஆதியர் என்பதால் — வணிகர், அமாத்தியர் இவர்கள் தீரசாந்தன் என்ப.

[79] அறிஞர்க்குழு — இச்சுலோகத்தினால் அந்தணர் முதலினோர்க்கு அறிவு, அடக்கம், தெளிவு முதலியன புலனாகலின் இவர் “தீரசாந்தன்” என்னும் தலைவராம்.

[80] குற்றம் — ஈண்டு வறுமையையுணர்த்தும். அதனை நீக்கியவன் வீரருத்திரவேந்தன் ஆம்.

[81] தலைமகளொருத்தி — மனைவியர் பலரிருப்பினும், ஒருவளிடத்தே அன்புமிக்கவன் என்பது இவ்வாசிரியர் கருத்து; தசரூபகாசிரியர் முதலியரோ இங்ஙனம் கருதாது, இராமன் முதலிய தலைவரைப்போல மணமகளொருவளையே மணந்து அவள்பால் அன்பு மிக்கவனே அநுகூலன் என்ப.

[82] தோழீ — இத்தொடர் தலைவியின் கூற்று.

[83] பெண்ணே — இத்தொடர், பாங்கியின் கூற்று.

[84] நன்னிலையன் — இது சீரிய நிலையுடைய தலைவியின் குணத்தையும், நிலைப்பெனும் பண்பையுடைய பூமியையும் உணர்த்தும்.

[85] இரத்தினாகரமேகலை — இது பல அரதனங்கணிறைந்த இடையணியுடைய தலைவியையும், கடலை மேகலையாகவுடைய நிலமகளையும் உணர்த்தும்.

[86] இப்பெயரைக்கொண்டு — மாற்றவள் பெயரின் ஒப்புமைகொண்டு காதலை விளைத்தல் இழிவெனினும், அங்ஙனம் செய்தேனும் தலைவனைக் காதற்படுத்துவேன் என்பதாம்.

[87] இச்சுலோகத்தால் — அரசற்கு நிலமகளிடத்துக் காதற்பற்று மிகையென்றும், மற்றவர்கள்பால் அங்ஙனம் அமையாதென்றும் புலனாவதால் இவ்வரசன், அனுகூலநாயகன் என்பது போதரும். இதனால் நிலங்காத்தலொன்றையே கடைப்பிடித்தவன் என்பதாம்.

[88] இன்னுரையானேயென்றமையாற் கலைப்பயிற்சியும், உள்ளத்தையென்றமையான் மார்பகங்காட்டலும், கரத்தால் என்றமையான் தன்வயப்படுத்தலும் விளங்க, முறையே, கலைமகள், மலர்மகள், நிலமகள் என்னும் தலைவியர் குறிப்பிடப்படுகின்றனர். இங்கட்பொழுதுபுலருமட்டுஞ் சேரிடந்துணியப்படாமையின் சிந்தித்தொழிந்தமையான் இவர்மாட்டு ஒத்தகாதலுடைமை புலனாகலின் இவனைத் தட்சிணன் என்ப.

[89] அடிக்குறிப்பு 88க்காண்க.

[90] அடிக்குறிப்பு 88க்காண்க.

[91] இச்சுலோகத்தால், தலைவிமார் மூவர்க்கும் உறுப்புக்கள் ஒவ்வொன்றையுமளித்து அவரையின்புறுத்தலான் ஒத்தகாதலனாகுமித்தலைவன், தட்சிணன் ஆவன்.

[92] உறுப்புக்கள் யாவும் — இச்சொல், உடலுறுப்புக்களையும், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் அரசியலுறுப்புக்களையுமுணர்த்தும்.

[93] வசுமதி — இது செல்வமிக்க தலைமகளையும், புவிமகளையும் உணர்த்தும்; இதனால் அரசர் செல்வப்பற்றுடையரேயன்றி காதற்பற்றுடையரல்லர் என்பது போதரும். இச்சுலோகத்தால் வேற்று மகளிரது புணர்ச்சி வெளிப்படுதலான் வெளிப்படையான குற்றமும், அச்சமின்மையும் தலைவற்குப்பொருந்துகின்றனவாகலின் இவன் திருட்டன் என்பது புலனாம்.

[94] இச்சுலோகத்தில் — தலைவியான் மாத்திரம் அறியத்தகும் காதற்பற்றின்மை முதலிய குணங்களைத் தலைவன்பாலேற்றிக் கூறியிருத்தலான் இவன் சடன்ஆம்.

[95] தேற்றம் — அவ்வத்தலைவரின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக, காகதிமரபிற்றோன்றிய முன்னோர்களை விதந்து கூறியிருத்தலான் “இந்நூற்கு வீரருத்திரனைத் தலைவனாக்கோடல் வேண்டும்” என்னும் இந்நூலாசிரியரின் உறுதியை வலியுறுத்தும். இதனால் இந்நூலில், காகதியென்னுஞ்சொல்லாற் கூறப்படும் அரசர் இம்மரபின் முன்னவர் என்பது போதரும்.

[96] உவகைத்தலைவராவார்க்குத் தலைவிமாரது கூட்டம் இன்றியமையாததாகலின் அவர்களை இயைவித்தலிற்றுணைவரை யிங்கட் கூறுகின்றார்.

[97] சிறுகுறையுடையன் — இவ்விலக்கணம், நூன்முதற்றலைவனிலும் குணத்திற்சிறிது குறைந்தவனாய் கதைத்தொடர்பானமைந்த தலைவனாவன் என்பதையுணர்த்தும். இங்ஙனமே தசரூபகாசிரியரும்: “நூன் முதற்றலைவனிற் பிரியாதுறைவோனும், அவன்பாலன்புடையனும், பேரறிவாளனும், அவனது குணங்களிற் சிறிது குறையுடையனும், நெடுந்தொடர்புடைய பிறிதொருதலைவனுமாய் விளங்குமவன், பீடமருத்தனாவன்; என்றும், இராமாயணத்திற்கூறிய சுக்கிரீவனும், மாலதீமாதவத்திற்கூறிய மகரந்தனும் போல்வார் என்றும்” கூறியுள்ளார்.

[98] வித்தையொன்றுடையான் — தலைவற்குத்துணை செயற்பாலனவாகிய இசைமுதலவித்தைகளுள், ஒன்றையறிந்தவன்; அவன், மாலதீமாதவத்திற்கூறியுள்ள கலகஞ்சனைப்போன்றவன்.

[99] உறுப்பு, உரை, வேடம், இவற்றின் வேறுபாடு முதலியவற்றான் மிகுநகைவிளைப்பவன்.

[100] இச்சுலோகத்தினால் — இத்தலைவன், தலைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதொன்றையே கடைப்பிடித்தவனாகலின் இத்தலைவி சுவாதீனபதிகையென்பதும், இத்தலைவன் அனுகூலன் என்பதும் விளங்கும்; இக்கருத்தேபற்றியிவ்வேந்தன் நிலவுலகைப்பாலிப்பதில் நாளும் விழிப்புடையன் என்பது புலனாம்.

[101] அடிதொறும் அலங்கரிக்கும் — அடிதொறும் என்பது தலைவனது மனத்தை யெவ்வாற்றானும் இன்புறுத்து முயற்சியையுணர்த்தும். அலங்கரிக்கும் என்பது அங்ஙனம் கலவிக்கூடத்தையணிபெறச்செய்து, தலைவனது வரவையெதிர்பார்த்து நிற்றலையுணர்த்தும்.

[102] வாசகசச்சிகை — இல்லத்திருந்துழி யெதிர்பார்த்து நிற்பவள்; வாசகம் — வாச என்னும் பெயரடியாகப் பிறந்த வடமொழிச்சொல். வசித்தற்குரிய இடம். அன்றியும், இச்சொற்கு வாசகம் — ஒருதலைவற்குப் பலதலைவிகளிருக்குங்கால், அத்தலைவனுடன் கூடியின்பந்திளைத்தற்குரிய முறைபற்றிவருநாள்; அந் நாளில் தன்னையும், தனதில்லத்தையும் அணிப்படுத்தித் தலைவனது வரவை யெதிர்பார்த்திருப்பவள் என்பதும் பொருளாம்; இப்பொருளே யிந்நூலாசிரியர் கொண்டதாம்.

[103]  நூலாசிரியர் கொண்டபொருட்கேற்ப “முடிசூட்டும் அமயத்தை” யெனப்பொழிதினைக் குறிப்பிடுமுகமாக எடுத்துக்காட்டுக்கூறப்பட்டது.

[104] குணமணங்கமழும் — குணங்களான் மணம்நிறைந்தவன் என்பது கருத்து; குணங்கட்குமணமுண்மை கவிசமயத்தாற் பெற்றாம்.

[105] இது, இசைபாடுவோராதியரின் குழு என்பதையும் காலந்தாழ்த்தலில் அரசன்பாற் குற்றஞ் சிறிதுமில்லையென்பதையும் உணர்த்தும்.

[106] முன்னே! — இத்தலைவி இக்குறியிடத்திற்கு வரும்பொழுது காதற்பெருக்கான் முன்வந்ததை யொப்ப, இவ்விடத்தையகன்று செல்லுங்கால் முன் செல்லமாட்டாமை கருதி யிங்ஙனம் கூறினாள் என்க.

[107] விட்டகல்வேன் — இவ்வெதிர்கால வினை, நள்ளிரவு வந்தும் காதலன் வாராமையான், இனி அவன் வாரான் எனத் துணிந்தும், இவ்விடத்தை விட்டகலப்போதற்கு இனியுங் காதலியின் மனந்தணியவில்லை யென்பதையுணர்த்தும்.

[108] கண்ணீரால் — காதலன் கலவியின்பத்தான் மெய்வருந்தி விளைந்த வியர்வைநீர், காதலைப் பயனுறச் செய்யாது காமநோயாற் கண்ணீர் விளைந்ததாகலின், அவற்றை வறிதேவழிந்தொழுகுமென இழித்துக்கூறினான் என்க. இதனால் அவ்விடனெலாம் சேறாயினவென்பதும், வாயில் வழியை வந்துவந்து நோக்கினாளென்பதும் போதரும்.

[109] காதற்பற்றுடையராய் — இது இத்தகைய வஞ்சனைச் செயலில், தலைவன் பால் ஒரு சிறிதும் தவறில்லையென்பதையும் அத்தகைய தலைவன் வைத்த எங்களது காதற்பற்றுடைமையே அச்செயலில் நிமித்தமென்பதையும் உணர்த்தும்.

[110] மூன்று யாமங்களின் — முதல் யாமத்தின் முற் கூறும், கடையாமத்தின் பிற் கூறும், மக்களின் நடமாட்டத்திற்கிடனாகலின் அவ்விரண்டு கூறுகளையு மொழித்து எஞ்சிய மூன்று யாமங்களே இரவின் அளவாகக் கூறினர் என்க.

[111] வழியின் அமைவால் — வழியிடையில் எனதில்லம் அமைந்திருத்தலின் கண்ணோட்டங்கருதியிங்கட் புகுந்தீர்; அன்றேல், புகாதொழிவீர் என்பதாம்.

[112] வைகறைப்பொழுதிலே — இது கலவிக்குறிய காலமாகாமையான் இங்கண் வந்தீரெனச் சினத்தாற் கூறினமையையுணர்த்தும்.

[113] என்னில் வேறுபட்ட பல மனைவிமாரிடம் செல்லுதற்கு இதுபொழுது யானிடையூறாக இங் கட்டங்களைத் தடைப்படுத்தி மிக்க வருந்துகின்றமை தனக்குப் பல தோடங்களை விளைக்குமெனக் கூறுமாற்றால் தனக்கு விளைந்த சினமிகுதியை வெளிப்படுத்தினாள் என்பதாகும். இதனால் இத்தலைவி சீற்றமுடையவள் ஆம்.

[114] அன்பனை — “உண்மையுரைப்பவனும், நேர்மையான காதற்பற்றுடையனும், உதவிபுரிபவனும், இன்சொற்கூறுபவனுமாய் மனங்கனிந்து காதலியைத்தானே வலிந்தடையுமொரு தலைவனை அன்பன் எனக் கூறுப.

[115] கலகாந்தரிதை — இது பிணங்கியவளை.

[116] அவ்வம்முறை — வணக்கஞ்செய்தல், வேண்டுவன அளித்தல், இன்சொற்கூறன், முதலிய முறைகளை

[117] பொறுத்தி — தானேவந்தடைந்த தலைவனைப் புறக்கணித்துப் பின் வருந்தலவமாகலின், அப்பிரிவுத்துன்பத்தைப் பொறுத்துக்கோடலே தக்கதென இத்தபத்தையிகழ்ந்து கூறுமித்தலைவி கலகாந்தரிதையாம்.

[118] கடத்துகின்றனர் — இதனால் பிரிவாற்றாமை காரணமாக விழிப்பு, கவலை முதலியவற்றான் மனைவியர் வருந்துகின்றார்களாகலின் இவர் பிரோஷிதபர்த்திகை ஆவர்.

[119] அபிசாரிகை — தொடர்ந்து சேர்பவள்; இச்சொல், காதலனைத் தானே தொடர்ந்து சேர்பவளையும், காதலன் தன்னைத் தொடர்ந்து வர, தான் அவனுடன் சேர்பவளையும் உணர்த்தும். எனவே, இவள் காதலனைத் தான் தொடர்ந்து சேருமியல்பினளும், பாங்கியர்முகமாக அவனைத் தன்பாற் சேர்ப்பிப்பவளும் என இரு திறத்தவள் ஆவள். என தசரூபகம் கூறும்.

[120] இவ்வெடுத்துக்காட்டு, காதலனைத்தொடர்ந்து செல்லுந்தலைவிக்குஆம்; இங்ஙனமே மறுதலைக்கு முய்த்துணர்க.

[121] பிடியானை — இது தலைவனைப் பின்பற்றிச் சேருந்தலைவியின் பரபரப்பை உணர்த்தும்.

[122] தோழி — காரணமின்றித் தலைவிபால் அன்பு கொண்டவள்.

[123] காரு — வண்ணாரப்பெண் முதலியோர்.

[124] குறியுடையார் — தவவேடம் முதலிய குறியுடைய துறவிகள்.

[125] கைத்தொழிலுடையார் — ஓவியம் வரைதல் முதலிய தொழிலுடையார்.

[126] சுற்றத்தாள் — மாமன்மகள் முதலியோர்.

[127] முதலிய — என்றமையான் சங்கினீ—அத்தினீ என்னும் வகுப்புக்களும் கொள்ளற்பாலன.

[128] மெல்லியலாள் — என்றமையான் யௌவனப்பருவத் தொடக்கத்தவள் என்பதும் நாணத்தான் மறுமொழியளித்தனள் என்றமையான் காமவிகாரத்தை வெளிப்படுக்காதவள் என்பதும் புலனாகலின், இத்தலைவி முத்தையென்பது போதரும்.

[129] இது நாடகத்தொடக்கத்திற் செய்யக்கடவ மங்கலச் செயலாம்; அங்ஙனமே நாடகாசிரியரும்: “நாடகத் தொடக்கத்திற்கு முன்னர், அரங்கத்தூறு அழிவுறற்பொருட்டு இசைபாடுவோரியற்றும் மங்கலச்செயலை முன்னரங்கம் என்ப. யௌவனம், எளிதிற்றோன்றுங்காமவிலாசங்கட்கு முன்னர்த் தோன்றி, அவை ஊறுபடாதிலங்க ஏதுவாய் நிற்றலின், அதனையிங்கனம் முன்னரங்கமாகவுபசரித்துக் கூறினான் என்க.

[130] இதனால், யௌவனமாகுமரங்கத்தில் நாணத்திரைக்குள் நடித்தனள் என்றமையான் இவள் காமற்கும் நாணத்திற்கும் இடையிலமைவுறும் மத்திமையென்பது புலனாம்.

[131] குறிப்பின் — உரை, உறுப்பு, சத்துவம், அபிநயம், முகச்செம்மை யிவற்றான் உட்கருத்தை வெளிப்படுக்குஞ் செயலாம்.

[132] காதற்குறிப்பு — உள்ளடங்கிய காதலை வெளிப்படுக்கும் உள்ள நெகிழ்ச்சியான் விளைந்த மனதின் விகாரமாம்; இதனை ஹேலை யென்ப வடநூலார்.

[133] இது — காது சொறிதல், நகில் நெருடன் முதலிய மென்செயல்களாம்; இதனால் காமத்தால் நாணம் குன்றிய நிலை கூறப்பட்டதாம்.

[134] சுவை — ஈண்டு உவகைச்சுவையாம்.

[135]விறல் — கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தன் முதலிய விகாரங்களை சத்துவம் என்ப வடநூலார்.

[136] இது காமனது செயலை அதாவது தலைவியைக்காதற்படுத்துஞ் செயலாம், மலர்க்கணைவேள் — காமன்.

[137] வேறுபாடுகள் — தீரைமுதலியனவாம்.

[138] இவ்வுவமை, “காப்பியஞ் சிறப்புறு தலைவனைப்பற்றி யிருத்தல் வேண்டும்” என்பதை வலியுறுத்தும்.

 

பண்டிதமணி

மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்களைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளைப்பற்றியும், படைப்புக்கள் சிலவற்றையும் இணையதளத்தில் பகிர்ந்துகொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

பண்டிதமணி அவர்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், விசு ஆண்டு புரட்டாசித் திங்கள் இரண்டாம் நாள் {16 – 10 – 1881} வெள்ளிக்கிழமையன்று பிறந்தார்.

பண்டிதமணி மிகச் சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் தாக்குண்டு அதன் காரணமாக வெளியே எங்கும் செல்ல இயலாத நிலையில் இருந்தார். கல்வி கற்கும்போது ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்கவும், மேலும் கல்வி கற்பதற்கும் அறிவிற் சிறந்த சான்றோர் அவருடைய கிராமத்தில் யாரும் இலர். வெளியூர் செல்வதற்கும் அவருடைய உடல் நிலை இடம் தரவில்லை. மேலும் அதற்குரிய வசதியும் அவரிடம் இல்லை. இருப்பினும், கல்வி கற்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் அவர் தாமே சில நூல்களை ஊன்றிப்படித்தார். இந்நிலையில் அவர் செல்வர் ஒருவரின் நட்பைப் பெற்று, அவர் உதவியுடன் ஒரு சபையை ஆரம்பித்து, அதற்குச் சன்மார்க்க சபை எனப் பெயரிட்டு, அக்காலத்தில் மிகச் சிறப்புடன் விளங்கிய தமிழ்ச் சான்றோர்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து நட்புப் பாராட்டி அவர்களைச் சொற்பொழிவாற்றச் செய்தார். இதனால் பண்டிதமணியின் புகழ் பரவியது. ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவர்க்கு மட்டுமே உரியது.
மனவுறுதியும், விடாமுயற்சியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர் நிலையை அடையமுடியும் என்பதற்குப் பண்டிதமணி கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்.
                                                          & – வளரும்

  பத்தரெலாம் பாராட்டும் பண்டித மாமணி நீ
           அத்தன் திருவடிக்கா ளாயினையோ – நித்தமவர்
  கற்றுக் களிக்கும் கதிர்மணி நல்விளக்கம்
           முற்றுப் பெறுவதன் முன்.
  வையமெலாம் போற்று திரு வாசகத்தின் மெய்ப்பொருளை
           ஐயமறக் கண்டின் றடைந்தனையோ – செய்யதமிழ்
  மன்றத் தறிஞர் மணியாய் ஒளிவீசி
           நின்ற கதிரேசா நீ.
  என்று வருவான் எமனென் றெதிர்னோக்கி
           நின்று தளர்கின்றேன் நித்தமுமே – மன்றில்
  நடங்கண்ட ஈசன் நடராசன் பாதத்
           திடங்கண்டு வைநீ எனக்கு.
  செந்தமிழ்ச் செல்வம் சிறந்து வளர்ந்துவரச்
           சிந்தைமகிழ் பன்னூல்கள் செய்தளித்து முத்துபுகழ்
  பூண்ட கதிரேசப் புலவர் பெருமானை
           யாண்டுநாம் காண்போம் இனி.
                                 —— கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை