சுக்கிர  நீதி

சுக்கிர  நீதி

மகா  மகோபாத்தியாய  முதுபெரும்  புலவர்

சைவசித்தாந்த  வித்தகர்

பண்டிதமணி

மு .  கதிரேசச்  செட்டியார்

மொழிபெயர்த்  தியற்றியது 

முகவுரை

என்னிற்  பிரியா  தெனதுள்ளத்  தாமரையின்

மன்னித்  திகழ்களிற்று  மாமுகத்தெம்  —  முன்னவனைப்

பெற்றே  னவனடியே  பேணினே  னாதலினால்

எற்றே  செயற்கரிய  தெற்கு .

அமிழ்தினு மினிய  தமிழ்மொழியை அணிசெய்து  நிற்கும்  நூல்கள்  முதனூல்  வழிநூல்  என  இருதிறத்து ளடங்குவனவாம்  .  வழி நூல், தொகுத்தல்  விரித்தல்  தொகைவிரி  மொழிபெயர்த் ததர்ப்பட  யாத்தல் என  நான் கு  வகைப்படுமென்ப.  இவற்றுள்  இறுதியதாகிய  மொழிபெயர்த் ததர்ப்பட  யாத்தலென்பது  வேற்றுமொழியிலுள்ள  பொருளை  அது  கிடந்தவாற்றானே  தமிழ் நூலாகச் செய்வதாம் . மொழி பெயர்த்த லென்றதனானே  பொருள்  பிறழாமைச்  செய்யவேண்டுமென்பது  போதரும் . தமிழ் மொழியின் ஆக்கங்கருதிய  ஆசிரியர்  அதற்கு   வேற்றுமொழிப்  பொருளைத்  தமிழில்  மொழி பெயர்த் துரைத்தலையும்  ஒன்றாக  எண்ணி  அதனை  வழியின்  வகை யுட்படுத்துரைப்பாராயின் , இம் மொழிபெயர்ப்பின்  இன்றியமையா மையைப்  பற்றிப்  பிற கூறவேண்டுவதென் ? மொழிபெயர்க்கப்படும்  நூல்  பெயர்த்துரைக்கப்படும்  மொழிக் கண்ணுள்ள  குறையை  நிரப்புவதாக  இருத்தல் வேண்டும் . அதுவே  அதன்  பயனாகும். ஆன்றோரருளிய  நூல்கள்  அறம்  பொருளின்பம்  வீடுகளை  நுதலுந்திறத்தான்  நான்கு  வகையினவாம் . இவ்வுறுதிப்  பயன்க ளெல்லாவற்றையும்  ஒருங்கே  கூறுவனவும், தனித்தனி எடுத்து  விளக்குவனவுமாக   நூல்கள்  பல  திறப்படும் . தனித்தனியே  கூறும்  பகுதியில்   பொருளைப் பற்றித்  தனியே  கூறுந்  தமிழ்நூல்  இற்றை ஞான்று  அரிதாமென்பதைப்  புலமுடையார்  யாவரும்  உணர்வர் .  திருக்குறண்  முதலிய  நீதி  நூல்களுட்  பொருட்பகுதி  கூறப்பட்டிருப் பினும்   பொருளையே  சிறப்பாக  விதந்தெடுத்துக்   கூறுந்  தனி  நூலிற் போல  அதன்கண்  விளக்கமாகக்  காண்டற் கியலாது . பொருணூல்  தனியே  தமிழில்  இல்லாத  இக் குறையை  நிரப்ப  எண்ணிய  பொழுது  வடமொழிக்கணுள்ள  பொருணூல்கள்  நினைவிற்றோன்றின . வடமொழிக்கட்  பொருணூலியற்றினார்  வியாழன் , வெள்ளி , சாணக்கியன்  முதலியோராவர் . அவர்  இயற்றிய  நூல்களுள் , பாரு கற்பத்தியம் , ஒளசநசம் , கெளடிலீயம்  என்னும்  இம்மூன்றும்  சிறந்தனவாக  ஆன்றோரான்  மேற்கொள்ளப்பட்டன.  இவற்றுள்  ஒளசநசம் என்பது  சுக்கிரனால்  இயற்றப்பட்டது .  அது  விரிந்து பரந்த  நூலாதலின்  அதன்  சுருக்கமாகத்  தொகுக்கப்பட்டது  சுக்கிரநீதி யாகும்  ஆகவே , கருத்து  வகையில்  ஒளசநசத்தின் சாரமாக  இஃது  அமைந்துள்ள தென்பது போதரும் . அதுபற்றியே  இதற்குச்  சுக்கிரநீதி சாரம்  என்னும்  பெயரும்  நிலவுவதாகும் . பொருணூலியற்றிய  ஆசிரியர்களுள்ளே   சுக்கிரர்  தலைவராக  மதிக்கப்பட்டனர்  என்பதைக்  கெளடிலீயமென்னும்  பொருணூற்றொடக்கத்தில்  “சுக்கிரற்கும்  பிருகற்பதிக்கும்  வணக்கம் “ என்று  அதன்  ஆசிரியராகிய  சாணக்கியரும் , “வெள்ளியும்  பொன்னும்  என்போர்  விதிமுறை”  என்று  கம்ப  நாடரும்  முறைப்படுத்து  முதற்கட்  கூறுமாற்றான்  நன்குணர்தல்  கூடும் .

       இந்  நீதிநூல்  அறநூல்களுக்கு  மாறுபடாமல்  இயற்றப்பட்ட  பொருணூலாகும் .  பொருளும்  இன்பமும்  அறத்திற்கு  மாறுபடலாகா தென்பது  பெரியார்  துணிபு . இவ்வாசிரியரும் இதனை  வற்புறுத்திக்  கூறியுள்ளார் . இவ்வுண்மையை   4 – ஆம்  அத்,  5 ஆம்  பிர  44 . 274  ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . அறம்  பொருளின்பங்களுள்  நடுவணதெய்த  இருதலையுமெய்துமாதலின் , பொருள் , வாழ்க்கைக்கு  இன்றியமையாத தொன்றென்பது  போதரும் . இவ்வுண்மையை , இவ் வாசிரியர்  , “மனிதன்  பொருட்கு  அடிமையாவான்; பொருள் எவர்க்கும்  அடிமையாகாது .  ஆதலின்  மனிதன்  எப்பொழுதும் சோர்வின்றிப்  பொருளீட்ட  முயலவேண்டும் . அப்பொருளால்  அறமும்  இன்பமும்  வீடும்  மனிதர்க்குண்டாவனவாம் . “  என்று  விளக்கிக்  கூறுவர் .  இது  பற்றியே  இன்னோரன்ன  பொருணூல்கள்  தேவாசுரர்களின்  ஆசிரியர்முகமாக  இவ்வுலகத்திற்கு  வெளிப்பட்டன .  “வேதம் அறநூல் களுக்கு  முரணாமல்  அரசனது செங்கோன்முறை  முதலியவற்றை  வரையறுத்துக்   கூறுவதும் , பொருளீட்டுதற்குரிய  சிறந்த  உபாயங்களை  விளக்கிக்  காட்டுவதும்  பொருணூலென்று  கூறப்படும்”  என்று  இவ்வாசிரியர்  கூறிய  இலக்கண  முறைப்படியே  இஃது  இயற்றப்பட்டதென்பது  இதனை  யாராய்வர்க்கெல்லாம்  புலனாம் . இதன்கண்  அரசனுங்  குடிமக்களும்  மேற்கொள்ள  வேண்டிய  ஒழுக்கவகைகள்  விரிவாகக்  காணப்படுகின்றன . “அரசன் குடிகளிடத்தினின்றும்  தனக்குரிய  அரசிறையாகிய  வேதனத்தைப்  பெறுதலால்  அக் குடிகளுக்கு  ஏவலாளந்  தன்மையை  எய்தப் பெற்றவனாவான் “  எனவும் , “பூமரத்தை  வளர்த்து  மலர்  பறித்து மாலைகட்டிப்  பயன்  பெறுபவனை  யொப்பக்  குடிபுறந்தந்து  அவர்பால்  அரசிறை  பெறவேண்டும் “  எனவும், “அங்ஙனமன்றி  அம்மரத்தை  எரித்துக்  கரி  செய்து  பயன்  பெறுதல்  போலக்  குடிகளைக்  கெடுத்துச்  சிறுபயன்  கோடலாகாது .” எனவுங்  கூறப்பட்டுள்ளன .  இதனால்  அரசன்  அரசியலை  மேற்கொள்வது தன்பயன்  குறித்தன்றென்பதும் , குடிகளின்  நலங்குறித்தேயா மென்பதும்  நன்கு வற்புறுத்தப்பட்டன . குடிமக்கள்  மேற்கொள்ளத்தக்க  ஒழுக்கவகைகள் இதன்மூன்றாம்  அத்தியாயத்தில்  தெளிவாகவும்  விளக்கமாகவும்  கூறப்பட்டுள்ளன.

         சுக்கிரர்  அசுரகுருவாதலின்  அசுரர்களின்  வழக்க  ஒழுக்கங் களை  உற்றுணர்ந்து  அவர்  ஏற்றுக்கொள்ளத்தக்க  முறையில்  இவ்வரசிய னூலைத் திறம்பட  ஆக்கியருளினர் . கட்காமஞ்  சூது  முதலிய  விதனங்களெல்லாம்  அறவே  நீக்கப்பட வேண்டியவை  என்பதை  ஆங்காங்கே  இவ்வாசிரியர்  வற்புறுத்துக்  கூறுகின்றாரா யினும் , ஓரோவிடங்களில்  அவற்றை அளவோடு  மேற்கொள்வதால்  விளையும்  நலங்கள்   இன்னவென்றுங்  கூறுகின்றார் . அங்ஙனங்  கூறுதற்குக்  காரணம்  கள்ளுண்டலில்  வேட்கைமிக்க  அசுரர்கள்  உளங்கொளும் வகை இதமாக உபதேசிக்க  வேண்டுமென்னும்  எண்ணமேயாம் . இதனை  முதல் அத்தியாயம் –109—116 ஆம்  சுலோகங்களிற்  காண்க . “சிறிதளவு  உண்ணப்படும்  கள்  மதி  நுட்பத்தையும் , தூய  அறிவையும், அஞ்சாமையையும்  , மனவுறுதியையும்  தருவதாகும் “ என்பது  முதலிய  இந்நூற் கருத்துக்  களை  யுட்கொண்டே  , கலித்தொகை  என்னும்  சிறந்த  சங்க இலக்கியத்தில் , அதன்  ஆசிரியர்  “நறவினை  வரைந்தார்க்கும்  வரையார்க்கு  மவையெடுத், தறவினை யின்புறூஉம்  அந்தண ரிருவ ரும் “  மருதக்கலி – 36  என்று  கூறினர் . ஈண்டு  நறவினை  வரைந்தார் . தேவரும் , அதனை  வரையார்  அசுரருமாவர் . அவ்விரு திறத்தார்க்கும்  வரைதலும்  வரையாமையுமாகிய  அவ்விரண்டினையுங்  கைக்கொண்டு  அறத்தொழிலாக  இன்புறுத்திய  அந்தணரிருவர்  வியாழனும்  வெள்ளியு மாவர் . விலக்கத்தக்கதொன்று   அறமாதல்  உலகத்துப்  பலரான்  மேற்கொள்ளப்பட்டமையான்  ஆம்  என்பது  இவ்வாசிரியர்  துணிபாகும் . இதனை , “எச்செயல்  பலராலும்  பாராட்டப்படுகின்றதோ அஃது  அறமாகும் .  எச்செயல்  பலராலும்  பழிக்கப்படுகின்றதோ  அது  மறமாகும் .  ஆராய்ந்து  துணிதற்கரிய  அறத்தினியல்பை  எவரும்  அறிதற்கு  ஆற்றலுடையரல்லர் “  என்று  இவ்வாசிரியர் கூறுமாற்றான் அறியலாம் . விலக்கற்பாலன ஒரு  காரணம் பற்றி விதியாகக்  கூறப்படினும் , அங்ஙனங்  கூறும் ஆசிரியரின் உட்கோளை  யுணர்ந்தே  விதிவிலக்குக்களைத்  துணிதல்  வேண்டும் . இவ்வாசிரியர்  வேட்டையாடல் , கள்ளுண்டல் முதலியவற்றை  ஏற்றுக்கொள்வார்  நிலை  பற்றி  ஓரோவிடங்களிற்  சிறுபான்மை  விதிபோலக்  கூறியுள்ளாரேனும்  , “எப்பொழுதும்  புழு, எறும்பு முதலிய  சிற்றுயிர்களையும்  தன்னைப்  போற்  பார்த்தல்  வேண்டும் “ எனவும், “அரசர்களுக்கு  வேட்டை யாடலுஞ்  சூதாடலுங்  கட்குடித்தலுமாகிய  இவை  வெறுக்கற்பாலனவாம் . இம்மூன்றானும்  முறையே  பாண்டுவும் , நளனும், யாதவர்களும்  துன்ப மெய்தினர்,”  எனவும்  பலவிடங்களில்   உயிர்க்குறுகண்  செய்தல் , கள்ளுண்டல்  முதலியவற்றால் விளையுந்  தீமைகளை  எடுத்துக்காட்டி  அவை  அறவே  விலக்கத்தக்கன  என்று  வற்புறுத்துக் கூறுகின்றமையான் , இவர்  உட்கிடை  இன்னதென்பது நன்கு  வெளியாம் . சீவதயை  முதலிய  உயர்குணங்களைச்  சிறந்த  பிறபயன்  நோக்கிக்  கேட்போரை  ஏற்றுக்கொள்ளச்செய்தல் இவ்வாசிரியர்க்கு  இயல்பாம் . இத்திறன்  அரசியனூல் இயற்றும்ஆசிரியர்க்கு  இன்றியமையாத தொன்றே . அரசர்  பொதுவாகப்  பிறரைத்  தம்  வயப்படுத்தாளுதலில்   அவாவுடையராதலும் , அதற்குரிய  உபாயத்தை  ஆராய்தலும்  அவர்க்கு  இயல்பே . அந்நிலை நோக்கி இவ்வாசிரியர் “பிறரை  வயப்படுத்தற்கு  உயிர்களிடத்து  அருளும் , நட்புரிமையும் , கொடையும் , இன்சொல்லுமாகிய  இவைகளை  யொப்ப  மற்றொன்று இம் மூன்றுலகத்திலும்  இன்றாம் . “    என்று , தம்  உட்கிடையாகிய  உயர்ந்த  ஒழுக்கங்களை அவர்  விரைந்து  ஏற்றுக்கொள்ளும்  வண்ணம்  உபாயமாக  வெளியிடுகின்றார் . இதனால் ஒரு  பெருங்குழு வினர்  அடிபட்டு  மேற்கொண்ட  சில  ஒழுக்கங்கள்  விலக்கத்  தக்கவெனினும்  அவ்விலக்கினை  அவர்  ஏற்றுக்கொள்ளுமாற்றான் நயம்பட  உரைத்தல் நலமென்பது போதரும் . வேதநடை போல  அறநூல்களுட்  கூறப்படுவதன்றித்  தாமேயறிந்து  செய்யுந்தன்மைத் தாகிய  ஒப்புரவு என்னும்  உலகநடையை  இவ்வாசிரியர்  உடன்படுகின்றார் . காலவேற்றுமையால் உலகம்  நடைபெறும் நிலையை நுனித்துணர்ந்து செய்வன தவிர்வன மேற்கொள்ளவேண்டு மென்பதை வற்புறுத்துகின்றார் . உலகியலுணர்ச்சி  கைவரப் பெறுதற்கு  இவ்வுலகத்தையே  ஆசிரியனாகக்  கொள்ளவேண்டு மென்பதை ,”அறிவுடையோர்க்கு எல்லாச் செயல்களிலும்  உலகமே  ஆசிரியனாகும் ; ஆதலின் , பகுத்துணருமறிஞன்  உலகியலுணர்தற்  பொருட்டு  அவ்வுலகத்தையே  பின்பற்றல்  வேண்டும் “  என்பதனால்  விளக்கியுள்ளார் . பொருளுணர்ச்சியின்றி  வேதங்களை  அத்தியயனஞ்  செய்பவர்க்கு  உலகியலறிவு  இருப்பதில்லை  யென்பதை  இக்காலத்திற்  கண்கூடாகக்  கான்கின்றோம் . இவ்வுண்மையை  இவ்வாசிரியர்  “வேதாநுவாக படனப்  பயிற்சியான்  மழுங்கிய அறிவு மற்றை உலகியல் வழக்குகளிற் றிறனுடைய தாகாது” என்று  வெளிப்படுத்துகின்றார் . இங்ஙனங்  கூறியது  வேதபடன  முடையார்  எல்லா முணர்ந்தேமென்று  செருக்குற  லாகா  தென்பதையும் , வேதபடனத்தினுஞ்  சிறப்பாக   உலகிய லுணர்ச்சி  கைவரப்  பெறவேண்டுமென்பதையும்  வற்புறுத்தற்   பொருட்டேயாம் .  

             திருக்குறட்  கருத்துக்களும் , பரிமேலழகர்  உரைக்கருத்துக்க ளும்  இதன்கட்  பலவிடத்துங்  காணலாம் .  இந்நூற்கருத்துக்கள் திருக்குறளாசிரியர்க்குத்  துணையாகவுள்ளனவென்று  பரிமேலழகர்  கூறுவர் . இதனை , “தேவர்க்கும்  அசுரர்க்கும்  அமைச்சுப்  பூண்ட   வியாழ  வெள்ளிகளது துணிபு  தொகுத்துப்  பின்  நீதி  நூலுடையார்  கூறியவாறு  கூறுகின்றமையின்  “  என  அவர்  கூறுமாற்றானுணர்க . பிறாண்டும்  இக்கொள்கை  துணியப்படும் . துணிபு  தொகுத்துக்  கூறப்பட்டபின்  நீதிநூல்  இச்சுக்கிரநீதி ,  கெளடிலீயம் , காமாந்தக  நீதி  என்னும்  இவைகளாக  இருக்கலாமென்று  ஊகித்தற்கு  இடனுண்டு .  காலம்  பற்றி  முன்னாகப்  பின்னாகத்  தோன்றினும்  திருக்குறள் முதலிய  தமிழ்  நூல்களிற்  சுருக்கமாகக்  காணப்படும்  பொருள்களை  விளக்கமாக  வுணர்ந்துகோடற்கும் , அவற்றிற்  காணப்படாத  புதிய  பொருள்களைக்  கண்டு  மேற்கோடற்கும்  , இது  தக்க  கருவியாதலை  யுணர்ந்து  தமிழகத்தார்  இன்புறுவரென்னும்  பணிவுடையேன் .  

           இன்னும்  இதன்கட்  காலமுணர்த்தும்  பொறியாகிய  நாழிகை  வட்டில் , நீர்ப்பொறி , இசைப்பொறி (Gramophone} , காற்றியக்கும் பொறி (Electric Fan) , கம்பிவழிச் செய்தி யனுப்புங்கருவி (Telegraph) , நீராவியால் இயக்கப்படும் பொறிகள் (Train),  முதலிய  இக்காலத்துக்  காணப்படும் அரிய இயந்திரத்  தொழில்களைப்  பற்றியுங்  கூறப்பட்டுள்ளன . சில  செயல்களுக்கு  உவமை  கூறுங்கால்  செய்வினைக்கேற்றபடி  கூறியிருத்தல்  வியக்கத்தக்கதே .  நடைவழி ( Road ) ஆமை  முதுகு போல் இருக்க வேண்டுமென்கின்றார் . “புதல்வர்ப்  பேற்றை  விரும்பும்  பெண்மக்கள்  வயிரமணியை  அணிதலாகாது “ என்று  கூறுகின்றனர் . இன்னோரன்ன  புதிய  செய்திகள்  பல  இதன்கட்  டிகழ்ந்து இன்புறுத்துகின்றன .

             இன்னும்  இந்நூல்  நுதலிய  பொருள்களும் , இதன் அமைப்பின்  மாண்பும்  என்  அரிய  நண்பர்களாகிய  திருவாளர்  அட்வொகேட் கா . சுப்பிரமணியப் பிள்ளை  M. A ., M . L . அவர்களாலும் , திருவாளர்  ஹைகோட்டு  வக்கீல்  ச .  சோமசுந்தர பாரதியார் M.A., B L., அவர்களாலும்  எழுதப்பட்டு  இதனுடன்  சேர்க்கப்பெற்றிருக்கும்  ஆராய்ச்சி  மதிப்புரைகளால்  நன்கு  விளங்குமாதலின்   யான்  இங்கு  விரித்துக்  கூறத் துணிந்திலேன் . அவ் ஆராய்ச்சி  மதிப்புரைகளை  ஆராய்ந்து  படிப்பார்க்கு  இந்நூல்  நலங்கள்  உள்ளத்திற்  பதிந்து இன்புறுத்துமென்னும்  துணிவுடையேன் .

               இனி , இந் நீதி நூல்  பெரும்பான்மை  அரசியலைப்பற்றியும் , சிறுபான்மை  மக்களின்  வருணாசிரம  தருமங்களைப்  பற்றியும் கூறுவதாகும் . இது  பிறப்புப்  பற்றி  மக்களுக்குச்  சிறப்பு  இழிவு  கூறும் நூல்கள்  போலாது , “பிறப்பொக்கும்  எல்லா வுயிர்க்குஞ்  சிறப்பொவ்வா,  செய்தொழில்  வேற்றுமையான்.”   “பெருமைக்கு  மேனைச்  சிறுமைக்குந்  தத்தங் , கருமமே  கட்டளைக்  கல் .”   என்று  பொய்யில்  புலவர் தம்  பொருளுரையாகிய  திருக்குறளிற்  கூறியாங்குக்  குணஞ்  செயல்களாலும்  அறிவினாலுமே  மக்கள்  மாட்சியுடையராவர்  என்னும்  உயரிய  நோக்கத்தை  உட்கோளாக  உடையதாகும். இவ்வுண்மையை  “அறிவுடையார்பால்  அந்தணர்   “மாணொளியுளது”  எனவும், “இவ்வுலகத்தில்  அந்தணராதலும் , வணிகராதலும்  சூத்திரராதலும்  மிலேச்சரராதலும் பிறப்பினாலில்லை; குணஞ்  செயல்களாலேயே   வேறுபடுக்கப்பட்டனர்.”  எனவும் , “சாதியினாலும்  தாய் தந்தையராலும் பிராமணத் தன்மை  எய்தற்பாலதன்று.”   எனவுங்  கூறுமாற்றானறிக .  இக்கருத்தைப்  பிறாண்டும்  ஆங்காங்குப்  புலப்படுத்தியுள்ளார். ஆயினும்  பிறப்புப்பற்றிச்  சிறப்பு  இழிவு  கூறுதலையும்  அறவே  விலக்கினா ரல்லர்  ;  அதுவும்  மக்கட்  பகுதியினரின்   ஏற்றத்  தாழ்விற்கு  ஒருவாறாக  ஏதுவாதல் பற்றி , பிறப்பொன்றையே  கடைப்பிடித்துப்  பெருமை  சிறுமை  கருதி  நீதி  வழங்கல்  தக்கதன்றாகலின் , அம்முறையை  இவ்வாசிரியர்  மேற்கொண்டிலர் .  ஆயினும்  இந்நூலிற்  சிலவிடங்களிற்  பிறப்புப் பற்றிய  சிறப்பு இழிவுகள் கடுமையாகவும்  வற்புறுத்தப்பட்டுள்ளன . அத்துணைக்  கடுமை  இவ்வாசிரியர்  கொள்கைக்கு  ஏற்றதன்றாகலின்  அங்ஙனங்  கூறிய  சில  சுலோகங்கள் பிற்காலத்தவரால்  இடைச்செருகப்பட்டனவாக இருத்தல் கூடுமென்று  எண்ணுதற்கிடனுண்டு .  இக்கருத்து  நிலையுறுதற்குத்  தக்கசான்று  இந்நூலின்கண்ணே  காணப்படுகின்றது . இந் நீதிநூல்  இரண்டாயிரத்திருநூறு  சுலோகங்களாணக்கப்பட்டதென்று  இதன்  சுலோகத்திற்  கூறப்பட்டுள்ளது . இதற்கு  மாறாக  இற்றை ஞான்றுள்ள  இந்நூற் சுவடியில்  இரண்டாயிரத்தைஞ் ஞூற்றறுபது  சுலோகங்களுக்குமேல்  உள்ளன . இத்துணையென்று  அறுதியிட்டுரைக்கப்பட்டன  போக  எஞ்சிய  மேற்பட்ட  சுலோகங்கள்  நாளடைவிற்  புதியனவாக  எழுதிச்சேர்க்கப்பட்டிருக்கலாம் . அப்புதியன  இன்னவென்று  பகுத்துணர்தல்  அரிதாகலின்  , இருந்தபடியே  எல்லாச் சுலோகங்களும் மொழிபெயர்க்கப்பட்டன. இம்மிகுதியே  இந்நீதி  நூலாசிரியர்  கொள்கைக்கு  மாறுபாடான  கருத்துடையவாக  நினைக்கத்தக்கனவாம் .

          இத்தகைய  சிறந்த  பொருணூலாகிய  சுக்கிரநீதியைத்  தமிழில்  மொழிபெயர்க்க  எண்ணி , மேலைச்சிவபுரிச்  சன்மார்க்க  சபைத்  தலைவராக  இருந்து  சிவபதம்  எய்திய  திருவாளர்  வ. பழ . சா . அண்ணாமலைச்  செட்டியாரவர்களிடம்  தெரிவித்தேன் . அவர்கள்  இச்செயலை  மனமுவந்து  உடன்பட்டுச்  சிறிதுங் காலந் தாழ்த்தாமல் வடமொழியிற்  சாகித்திய  சிரோமணி  வகுப்பிற்  தேர்ச்சி  பெற்ற  தின்னியம்  பிரம்மஸ்ரீ  டி . எஸ் . சுப்பிரமணிய  சாஸ்திரிகளை  எனக்கு  உதவியாக இருந்து வரும்படி செய்தனர் .  சன்மார்க்கசபை  வெளியீடுகளில்  ஒன்றாக  இஃது  என்றும் நின்று  விளங்கும்  வண்ணம்  மொழி  பெயர்த்தியற்றலானேன் . இதனை  மொழிபெயர்க்குங்கால்  முதனூற்  பிரதியாகப்  பெற்றது பண்டித குலபதி ஜீவானந்த வித்தியாசாகரர்  பி . ஏ ., அவர்கள் உரையோடு  கல்கற்றா நகரத்தில் அச்சிடப்பட்டதாகும் . அது மூலத்திற்  சிலவும் உரையிற்  பலவுமாகிய  பிழைகளையுடையதாகும் . பிழைபட்ட  பகுதிகளைக்  கூடியவரை  முன்பின்  ஆராய்ச்சிகளாலும்  பிற  நூல்களின்  உதவியாலுஞ்  செப்பஞ்  செய்துகொண்டு  மொழிபெயர்க்கலானேன் . அங்ஙனஞ்  செய்தும் முற்காலத்திருந்து இக்காலத்து வழக்கொழிந்த  சில  செய்திகளின்  உண்மை  காண்டற்கரிதாயிற்று . அவ்விடங்களில்  என்  மொழி பெயர்ப்புத் தவறியிருத்தலியல்பே . அதுபற்றிப்  பெரியார்  வெறாது பொறுத்தருள்வரென்பது என்றுணிவு . மூலத்தில்  விளக்கமாக இல்லாதவைகளுக்குச்  சுலோக  எண்ணிட்டுக்  கீழே  குறிப்பு  எழுதி விளக்கியிருக்கின்றேன் .  ஒத்த  கருத்துக்களையுடைய  திருக்குறட்  செய்யுட்களும் , பரிமேலழகர்  உரைப்பகுதிகளும், பிறவும்  ஆங்காங்கு  எடுத்துக்  காட்டப்பட்டுள்ளன . மொழிபெயர்ப்பிலுள்ள   சில  சங்கேதச் சொற்களும்  குறியீடுகளும்  அரும்பதங்களும் வடமொழிக்கண்  எவ்வாறுள்ளனவென்று  படிப்போர்  அறிந்து  கொள்ளுதற்கு  உபயோகப்படும்  வண்ணம்  இறுதியில் அரும்பத முதலியவற்றின் அகராதியை எழுதிச் சேர்த்திருக்கிறேன் . அவ்வகராதி வடசொற்களா கவே  வடவெழுத்து வரிசையாகக்  காட்டப்பட்டது  அச்சொல்லுருவந்  தெரிதற் பொருட்டேயாம் . 

              இவ்வரிய  செயலில்  எத்துணையுந்  தகுதியற்ற  யான்  முயன்றிரத்தலைக்  கண்டு  நேரிலுங்  கடித  வாயிலாகவும்  வேண்டுவன  கூறி  யூக்கி யுதவியவர்கள் மஹா மஹோபாத்தியாய  தாக்ஷிணாத்ய  கலாநிதி  பிரம்மஸ்ரீ வே . சாமிநாதையரவர்கள் .  ஸ்ரீமத்  ஐயரவர்களும் , சேது  ஸமஸ்தான  மஹாவித்வான்  ஸ்ரீ  உப. வே . ரா . இராகவையங்காரவர்களும்  இந்நூற்குச்  சிறந்த  சிறப்புப்  பாயிரச்  செய்யுட்களை  யுதவிப்  பெருமைப்படுத்தினர் .  இந்நூலின்  நுண்பொருள்களைப்  படிப்பார் உணர்ந்து  இன்புறும்  வண்ணம்  ஆராய்ச்சியுரையெழுதி யுதவ வேண்டுமென்று விரும்பியபடி  என்  நண்பர்களும் ஆங்கிலத்திலும் தமிழிலும்  சிறந்த  பயிற்சியுடையவர் களுமாகிய  சென்னைச்  சட்டக்  கலாசாலைப்  பேராசிரியர்  அட்வொகேட் திருவாளர்  கா . சுப்பிரமணியப்பிள்ளை M.A., M .L ., அவர்களும் , மதுரை ஹைகோர்ட்டு  வக்கீல் , திருவாளர் ச.  சோமசுந்தர  பாரதியார் M.A ., B. L. அவர்களும்  இந்நூல்  முற்றும் பார்வையிட்டுத்  தம்  மதிவலியால்  நுனித்துணர்ந்து இதற்குச்  சிறந்த  ஆராய்ச்சி  மதிப்புரை  வரைந்துதவினார்கள் . மற்றும்  வடமொழியிலும்  ஆங்கிலத்திலும்  தமிழிலுஞ் சிறந்த  பல  பெரியார் இந்நூலைப் பார்வையிட்டுத்  தம்  கருத்துறு பொருள்களைத்  தெரிவித்துக்காட்டி  அபிப்பிராய  பத்திரங்களுதவினர் . இவர்களெல்லோரும்  என்  சிறு  பணியை  இங்ஙனம்  பெருமைப்ப டுத்தியதற்குக்  காரணம்  இன்னோரன்ன  தம் மொழி வளர்ச்சியிற்  பணி  செய்யவேண்டுமென்னும்  நல்லுணர்ச்சியும் , எம்மாட்டுள்ள  உண்மையன்புமேயாகும் .  வினையாளை  வேலை  முடிவிற்  பாராட்டி  இன்புறுத்தும் இயல்புவாய்ந்த  இப்பெரியாரெல்லோர்க்கும்  என்  உளமார்ந்த  வணக்கத்தைச்  செய்தலோடு இவர்கள் நன்றியை என்றும் மறவாக் கடப்பாடுமுடையேன் .

                இந்நூல்  மொழிபெயர்ப்புத்  தொடக்கமுதல் முடியும்வரை  என்னுடனிருந்து துணைபுரிந்தவர் தின்னியம் சிரோமணி  பிரம்ம ஸ்ரீ    T. S. சுப்பிரமணிய சாஸ்திரிகளாவர்.  இவர்கள் வடமொழியிற்  சிறந்த அறிவு  படைத்திருத்தலோடு  தமிழிலும்  வேண்டிய  அளவிற்  பயிற்சி பெற்றிருத்தல்  எனக்கு  மிகவும் உதவியாயிற்று . இன்னோரன்ன  பண்டிதர்களே மொழிபெயர்ப்புச் செயற்கு மிகவும் தகுதியுடையராவர். இவர்கள் உதவி  மிகவும் பாராட்டற்பாலது .  

                  சென்னை அடையாற்றுக்  காலேஜ்  தலைமைத்  தமிழ்ப்  பண்டிதரும் , என்  இனிய  நண்பருமாகிய  பிரம்மஸ்ரீ  பண்டித அ . கோபாலையரவர்கள்  என்  வேண்டுகோட்கு  இணங்கி  இதன்  அச்சு வேலையில் எனக்குச்  சிறிதும் சிரமம்  உண்டாகாவாறு  சலியா  முயற்சி மேற்கொண்டு , எழுத்துப்பிழை  முதலியன  நேராமல்  உற்றுநோக்கி உதவி புரிந்தமைக்கு என்றும் அவர்கள் நன்றியை நினைவுகூறுங்  கடப்பாடுடையேன் . இந்நூல்  அச்சு வனப்புற  வமைந்ததற்கு இவர்கள் உதவியே  காரணமாகும் .  

                     இம்மொழி  பெயர்ப்புத்  துறையில் யான்  தலைப்பட்டுப்  பணி  செய்தற்கு முக்கிய  காரணம்  மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையாரின் தூண்டுதலேயாகும் . இச்சபை  புதுக்கோட்டை  ஆட்சியுட் பட்ட   மேலைச் சிவபுரிக்கணுள்ளது .  இது  தோன்றி  இற்றைக்குப்  பதினேழு  ஆண்டுகளாயின . இது  தன்  பாலப்பருவமாகிய  மூன்றாம்  ஆண்டில்  முதற்றலைவராகிய  திருவாளர் வ . பழ . சா . பழனியப்ப செட்டியாரவர்களையும் , இளமைப்  பருவமாகிய  பதினைந்தாம்  ஆண்டில்  இரண்டாந்தலைவரும்  முதற்றலைவரின் இளைய  சகோதரருமாகிய  திருவாளர்  அண்ணாமலைச் செட்டியாரவர் களையும் பிரிந்துளதாயினும் , இவ்யெளவன  பருவத்தில் தன்னைப் பாதுகாக்கும் அறிவும் ஆற்றலும் பருவமுங்  குணங்களும் நிரம்பப்பெற்றவரும் , முதற்றலைவரின்  பிரதம குமாரருமாகிய  திருவாளர்  வ . பழ . சா .  சாமிநாதன்  செட்டியாரவர்களைத்  தலைவராகப்  கிடைக்கப்பெற்று, நாணாளும்  தன்  நோக்கங்களை இனிது  நிறைவேற்றித்  திகழ்கின்றது . என்பால்  உண்மையன்புமிக்க  சபைத் தலைவராகிய  திரு.  சாமிநாதன் செட்டியார் யான்  செய்து வந்த இத்தமிழ்ப்பணியை அடுத்தடுத்துக்  கண்டு  தாம்  இன்புறுத லோடு  என்னையும்  இத்துறையில் மேன்மேலும் ஊக்கியின்புறுத்தி வந்தனர் . சன்மார்க்க சபையின்  புகழ்  என்றும் நின்று நிலவுதற்கு இப்புத்தக வெளியீடு ஏற்றதாகும் என்னும்  உண்மையை இவர்கள் நன் குணர்ந்தவர்கள் . அருமை யறியாரகத்து  எத்துணைச்  சிறந்த  காரியமும் பயனுடையதாகத் தோன்றாது .  அருமையுணர்வாரகத்துச் சிறிய நற்செயலும் பெரும் பயனுடையதாகத் திகழும் . அருமை யுணர்ந்தின்புறூஉம்  சிறந்த  குணத்தை இச்சபைத்  தலைவர்பாற்  கண்டு  உவகையுற்று வருகின்றேன் . ஆரிய  மொழிக்கணுள்ள  வேதம், உபநிடதம் , சிவாகம  முதலிய  உயரிய  நூல்களை யெல்லாம் தக்க  பண்டிதர்களைக் கொண்டு  மொழிபெயர்த்துச் சன்மார்க்க சபை வெளியீடாக அடுத்தடுத்து வெளிப்படுத்த வேண்டுமென்னும் அவா இவர்கள்பால்  மிக்குள்ளது . இச்சிறந்த  எண்ணங்களுக்கு மற்றையோரும் உதவியதால் அன்றித் தடைசெய்யாதிருத்தலாகிய  இவற்றுளொன்று செய்வாராயின் திருவருட்பாங்கால் , தமிழ் மொழி  இந்நலங்களைப் பெற்றுப் பீடுற்று விளங்குவதாகும் .  இச் சன்மார்க்க சபை தான்றோன்றிய சிலவாண்டுகளுள்ளே  பல மாணாக்கர்களுக்குச்  சிறந்த தமிழ்க்  கல்வியை யூட்டியும் , அறிவுடைப் பெரியார் உபந்நியாசங்களால்  தமிழகத்தை யின்புறுத்தியும் , இன்னோரன்ன  நூல் வெளியீடுகளைச் செய்தும் தமிழ் நலம் வளர்க்குந்  தகைமை பாராட்டற்பாலதே . இந்நூல் சன்மார்க்க சபையின் வெளியீடாக வருதல் அதன்  பெருமைக்கு ஏற்றதே . சபைக்குத்  தக வமைந்த தலைவரும் , அவர்தம் அருமைச் சகோதரர்களும் , மற்றைச்  சபையின்  நிருவாகர்களும் இந்நூல்  வெளியீட்டிற்  காட்டும் சிரத்தையை மிகவும் பாராட்டுகின்றேன் .  ஒரு தமிழ் நிலையம் சிறந்த புகழையும் , புண்ணியத்தையும் பெறவேண்டுமாயின் அதற்குப்  புதிய  பல  நூலுரைகளின் வெளியீடே  சிறந்த  கருவியாகும் . இந்நற்செயலில் தமிழ் நாட்டுச் செல்வர்களும் , தமிழ்  வடமொழி  ஆங்கிலம்  வல்ல  புலவர்களும், தமிழ்ச்சங்கங்களும்  தலைப்பட்டுப்  பெருமை பெறவும் , அச்செல்வரும் , புலவரும் , சங்கங்களும்  புலமை , செல்வம் , சோர்வின்மை முதலிய  நலங்களைப் பெற்றுத்  திகழவும் எல்லாம் வல்ல சிவபிரான்றிருவருள் புரிவாராக.

                   ஒன்றுக்கும்  பற்றாத  சிறியேனை இவ்வரிய செயலிற் புகுத்தி நிறைவேற்றியருளிய  திருவருளை நெஞ்சார  வாழ்த்துகின்றேன் .

செய்வினைக்கட்  குற்றந்  தெரிந்து பொறுத்தருளன்

மையில் புலமுடையார் மாண்பாகுஞ் – செய்தி

பெறுதி யெனக்கிடைக்கப் பெற்றே  னதனால்

உறுதி பெரிதுடையே னூங்கு.

உள்ளக் கமலத் தொருவன் றிருவடியைக்

கொள்ளக்  குறையுங்  குறைகளெலாம்  —  வெள்ளி

புலத்திற் றிகழும் பொருணூல் தமிழி

னலத்திற் கியைதருமா னன்று .

மகிபாலன்பட்டி .                                               இங்ஙனம்

 30 – 05 – 1926                                                      மு . கதிரேசன்

சிறப்புப்பாயிரம்

சிதம்பரம் ஸ்ரீ மீனாக்ஷி தமிழ்க் காலேஜ் பிரின்ஸிபாலாகிய

உத்தமதானபுரம்

மஹா  மஹோ பாத்தியாய  தாக்ஷிணாத்ய  கலாநிதி

பிரம்மஸ்ரீ  வே . சாமிநாதையரவர்கள்

இயற்றியது

நேரிசை யாசிரியப்பா

பூமலி  நான்முகப்  புத்தேள் படைத்த

மாமலி  புவியுறு  மக்கட்  கெல்லாம்

உறுதியா  மறமுதற்  பெறுதியீங்  கிவையென

மனுமுதற்  பெரியோர்  முனநவில்  நூல்களுள்

மழைக்கோ  டன்னுடை  மாணவர்க்  கருளிய

அரச  நீதிமுன்  னாகிய  வெல்லாந்

தொகுக்கப்  பெற்ற  சுக்கிர  நீதியாம் 

வடநூற்  பொருளை  மாண்புறத்  தமிழிற்

றேனெனப்  பாலெனத்  தேன்விராய்  பாலெனக்

கழிபெருஞ்  சுவைத்தா  மொழிபெயர்த் திட்டே

அரும்பொருள்  விளக்கமு  மவணவண்  அமைத்தே

பொருணயங்  கண்ட  புலவர்க  ளிந்நூல் 

பாட  சாலயிற்  பயிலுமா  ணவர்க்கு

நல்லறி  வதனை  நல்கு  மெனவும்

இக்கா  லத்திற்  கேற்புற  விலகு

வசன  நடையா  வாய்ந்ததிஃ  தெனவும்

சொன்னயம்  பொருணயந்  தொகுமிதி   லெனவும்

முப்பால்  முதலா  வெப்பா  னூலினும் 

உள்ள வைய  மொழிந்தே  மெனவும்

காணாப்  பலபொருள்  கண்டே  மெனவும்

நகரத்  தார்புரி  நல்லற  மெனவும்

தந்த  மனத்திற்  கொத்தது  புகன்று

பலபட  விழைந்துபாராட்டும்  வண்ணம்

எழுதா  வெழுத்தி  லியைவித்  தளித்தனன்

அன்னவன்  யாரெனிற்  பன்னுது  முன்னுவோர்

ஆசகற்  றுறுமணி  வாசகப்  பெருமான்

எழிற்சிவ  லோக   மெனவெடுத்  தியம்புஞ்

சேண்டிகழ்  பெருமைப்  பாண்டிநன்  னாட்டிற்

சிவபுண்  ணியமே  செய்துசெய்  தோங்கும்

மங்கல  மிகுதன  வைசியர்  மரபிற்

பொங்கர  வேணிச்  சங்கர  னென்றும்

இன்பான்  மேவிய  வொன்பான்  கோயிலுட்

செயிரவந்  தீர்க்கும்  வயிரவன்  கோயிற்

குரிய   தாகிய  பெரிய  வகுப்பிற்  

சீருடைச்  சிறுகுளத்  தூருடை  யான்குலத்

துண்மையு  மன்பு  முறுசிவ  பத்தியும்

வண்மையுந்  தண்மையு  மற்றும்  வாய்ந்த

முத்துக்  கருப்ப  முகில்புரி  தவத்தால்

உதித்த  செல்வன்  கதித்த  வறத்தின்

மேலன்  புறுநர்  மிகுத்துள  வளமகி

பாலன்மா  நகரைப்  பதியாக்  கொண்டோன்

நன்னயச்  சுகுணச்  சின்னய  வேளைப்

பின்னவ  னாக்கொள்  பெரும்பாக்  கியவான்

செந்தமிழ்க்  கணியாந்  திருவள்  ளுவர்முதல்

முந்தமை  நூல்களு  மொழியவற்  றுரைகளும்

நன்றாய்ந்  தறிந்த  குன்றா  வுணர்ச்சியன்

விழைவட  மொழியிலும்  வேண்டுவ  பயின்றோன்

வடமொழி  வாணருந்  தென்மொழி  வாணரும்

ஆங்கிலப்  பயிற்சியி  லோங்கிய  நிபுணரும்

வேட்டுப்  பலமுறை  கேட்டுச்  சிரகர

கம்பிதஞ்  செய்திடக்  கவின்பிர  சங்கம்

பரிதரு  திறலினன்  புலவர்க்  கருந்துணை

கத்திய  நடையொடு  பத்திய  நடையினூல்

அழகுற  வியற்றப்  பழகிய  குருசில்

தமிழ்மொழி  நாளுந்  தழைத்திட  வெண்ணி

அன்பரைக்  கொண்டே  யின்புற  வவணவண் 

பாட  சாலைகள்  பலவமைந்  தவற்றைப் 

பாலனஞ்  செயப்புரி  சீலம  துடையோன்

அவமகன்  மேலைச்  சிவபுரி  யவைக்கண்

இவையும்பிறவு  மியலபா  வமைந்தமை

கண்டித  மணிபல  பண்டித  ரளித்த

பண்டித  மணியென்னும்  பட்டம்  பெற்றோன்

சிவனடி  யவரைச்  சிவனென  மதிக்கும்

மாசிலாப்  புகழ்க்கதி  ரேசன்

என்னும்  பெயர்கொண் டிலங்குசீ  ரியனே.

&&&&&&&&&&&&&

ஆராய்ச்சி  மதிப்புரை

சென்னை  நியாய  கலாசாலைப்  பேராசிரியர்

திருவாளர்  கா.  சுப்பிரமணிய பிள்ளை  M . A., M.L.,

அட்வொகேட்  அவர்கள்  எழுதியது .

               சுக்கிர நீதி  யென்னும்  இவ்வரியநூல்  அரசியற்குரிய  நன்முறைகள்  யாவற்றையும்  விளக்குவான்  இரண்டாயிரத்  திருநூறு  சுலோகங்களால்  அமையப்பெற்றுள்ளதோர்  வடநூலின்  மொழி பெயர்ப்பாகும் . “மூன்றுலகங்களிலும்  இந்  நீதி  நூலுக்  கொப்பான  நூல்  வேறில்லை” யென்று  இதன்  நான்காவது  அத்தியாயத்தின் முடிவில்  கூறியதொரு  புறமிருப்ப, தற்காலத்திலே   சாணக்கியருடைய  அர்த்த  சாத்திரத்தையும்  அதன்  சுருக்கமாகிய  காமாந்தக  நீதி  என்னும்  நூலையும்  இதனோடு  ஒத்துப்பார்த்த  வங்காளக்  கலை  நிபுணராகிய  பினாய்க்குமார  சர்க்கார்  எம் . ஏ . என்பார் , அவற்றினும்  இதுவே  மிகவும்  விரிவாகவும்  விளக்கமாகவும்  இந்திய  அரசியல்  நாகரிகத்தைக் கூறும்  பெருநூலென்று  மொழிந்தமை  உற்று  நோக்கத்தக்கது .  அவர்  இந்நூலைப்  பல்லாற்றாலும்  வகுத்து வகுத்து ஆய்ந்து  கண்ட  முடிபுகளை ஆங்கிலத்தில் “சுக்கிரநீதித் தோற்றுவாய்”  அல்லது  “இந்திய  சமுதாய  வாழ்க்கை யடிப்படை”  என்னும்  நூலில்  வெளியிட்டுள்ளார் .  அதனுட்  போந்த  பல  காரணங்களால்   சுக்கிரநீதி  என்பது  கீழை  இந்திய  நாட்டில்  ஒரு   தக்க  அறிஞரால்  செம்மையாய்  அரசியல்  இவ்வாறிருத்தல்  வேண்டுமென்று  தனதுள்ள  விலாசத்திற்  கண்ட  முறையில்  எழுதப்பெற்ற  நூலென்று  ஊகிக்கப்படுகின்றது .

            ஆதியில்  கிரேக்க  நாட்டில்  பிளேட்டோ  என்னும்  பேரறிஞரும்  சுமார் ஐந்நூறு  ஆண்டுகட்குள்ளாக  ஆங்கில  நாட்டின்  மூர், ஆரிங்டன்  என்னும்  இருபெரும்  புலவரும்  இதுபோன்ற  நூல்கள்  இயற்றியுள்ளார்கள் . இந்  நூல்  எழுதிய  காலம்  வங்காளத்தில்  பாலர்  என்னும்  அரசரும் , தென்னாட்டில்  இராஜராஜன்   முதலிய  சோழரும்  அரசாண்ட  காலம்  என்பது  பல  குறிப்புக் களால்  அறியக்  கிடக்கின்றது .  அக்காலம்  பத்தாவது  அல்லது  பதினோராவது  நூற்றாண்டு ஆகும் . கி.பி . எண்ணூறு  முதல்  ஆயிரத்திருநூறுவரை  உள்ள காலப்பகுதியே  வங்காளத்தில்  தந்திர  நூல்  காலம்  எனப்படும் .  இத்தந்திரநூற்  காலத்திலேதான் அகத்திய  மதம்  என்னும்  நூலுள்  நவக்கிரகம்  அல்லது  ஒன்பது  கோள்களைத்  திருத்தி செய்தற்பொருட்டு  நவமணிகளைப்  பயன்படுத்த  வேண்டுமென்ற  குறிப்பும்  காணப்படுகிறது . பத்தாவது  நூற்றாண்டில்  எழுந்த  விஷ்ணு  தருமோத்தர  புராணம் என்பதனுள்  நவமணிகளே  மகாரத்தினங்கள்  என்று  கூறப்பட்டிருக்கின்றன . அக்காலத்தில்  ஸ்ரீபதி என்னும்  வானநூல்  வல்லவரால்  இயற்றப்பட்ட  ஜோதிஸ்  ரத்தினமாலா  என்னும்  நூலுள்  நவமணிகளைக்  கோள்களுக்கு  உகந்தனவாகக்  கூறிய  வண்ணமே  சுக்கிர நீதியுள்ளும்  கூறப்படுகின்றது . இத்தந்திரநூற்  காலத்திற்கு  முன்புள்ள  நூல்களுள்  வராகமிகிரருடைய  பிருகத்சம்ஹிதாவில் இருபத்திரண்டுக்கு  மேற்பட்ட  மணிகள்  குறிக்கப்பட்டிருப்பினும், அவற்றுள்  ஐந்தே  விதந்தோதப் பட்டன. தந்திர  நூற்காலத்திற்றான்  ஒன்பது  மணிகள்  ஒன்பது  கோள்கட்குச்  சிறந்தன  என்ற  கருத்து  நிலைபெற்றது . அங்ஙனம்  நிலைபெற்ற  கருத்தே சுக்கிரநீதியுட்  காணப்படுதலின்  அஃது  அக்காலத்ததென்பது  ஊகிக்கப்படும் . இன்னும்   அக்காலத்திற்றான்  திருமால் , சிவபிரான் , கணபதி , சூரியன் , அம்பிகை  என்னும்  ஐந்து  தெய்வங்களையும் ஒருங்கு  வழிபடும்  தந்திர  வழக்கம்  வடநாட்டில் ஏற்பட்டதென்று  தந்திரதத்துவம் என்னும்  நூலின்  முகவுரையிற்  கூறிய  காரணங்களால்  தெரியக்  கிடக்கின்றது . ( இத்  தந்திர  தத்துவத்தின் ஆங்கிலமொழிபெயர்ப்பு  ஸர்  ஜான்  உட்ராவ்  என்னும்  கல்கத்தா  ஹைகோர்ட்டு  நீதிபதியால்  வெளியிடப்பட்டுள்ளது. )  அவ்வழிபாட்டு  முறையே  சுக்கிரநீதி  நாலாவது  பிரகரணத்துள்  63 வது  சுலோகத்தில் கூறப்பட்டது  காண்க . சாணக்கியரது  அர்த்த  சாத்திரத்தில் நகரத்தினடுவே  அபராஜிதர், அப்பிரதிகதர் , ஜயந்தர் , வைஜயந்தர் , சிவன் , வைசிரவணன் , அசுவினிதேவர் என்னும்  இவர்கட்குக்  கோயிலும்  , மதுகிரகமும்  (கள் வீடும்)  இருத்தல்  வேண்டுமென்று கூறப்பட்டிருத்தல்   காண்க .  இதனாலும்  சுக்கிர நீதி தந்திரநூற்  காலத்தென்பது  தெளியப்படும் . மேலும்  அக்காலத்திலே  சோழரது ஆட்சி  இமயமலையடி  வரையில் பரவியிருந்ததாகவும் , திருக்குறள்  முதலிய  தமிழ்நூல்களின்  விழுமிய  கொள்கைகளும் , தமிழ் நாட்டு  மருத்துவ  நூலிற்  கூறப்படும்  உலோக  நீற்று  முறைகளும்  வடநாடெங்கும்  பரவியதாகவும்  தெரிகின்றோம் . இந்நாட்டில்  ஆங்கிலக்  கருத்துக்கள்  ஆங்கில  அரசாட்சி  காரணமாக  நிலவுவதொப்பத்   தமிழரசரது  ஆட்சி  வடநாட்டில்  நிலைபெற்றிருந்த  காலத்தில்  தமிழ்நூற்  கருத்துக்களும் ஆண்டு  நிலவியிருத்தல்  இயல்பே . அக்காலத்து  எழுந்த  வங்கநாட்டுத்  தந்திரங்களிலே  விரிந்த  நோக்கங்கள்  தோன்றித்  திகழ்ந்தனவென்றும் , அக் கருத்துக்கள், வைதிகக்  கிரியா  நூலுட்  காணப்படும்  ஒடுங்கிய கருத்துக்களுக்கு முரணானவை என்றும்  ஆனரபிள்  ஸர்  ஜான்  உட்ராவ்  மேற்கூறிய  தந்திர தத்துவம் என்னும்  நூலின்  முகவுரையுட்  கூறியுள்ளார் . சுக்கிர நீதியுள் தமிழ்நாட்டு உயரிய கருத்துக்கள் காணப்படுதற்கு  உதாரணம்  வருமாறு : “பிறப்பொக்குமெல்லா வுயிர்க்குஞ்  சிறப்பொவ்வா  , செய்தொழில்  வேற்றுமையான்” என்ற  திருக்குறளின் கருத்தே, சுக்கிரநீதியுள் முதலத்தியாயத்து  38 ,39  வது  சுலோகங்களில்  காணப்படுகின்றது . அவை  வருமாறு –“இவ்வுலகத்து  அந்தணராதலும் அரசராதலும்  வணிகராதலும்  சூத்திரராதலும்  மிலேச்சரராதலும் பிறப்பினால்  இல்லை ;  குணஞ்செயல்களாலே  வேறுபடுத்தப்பட்டனர்.” “பிரமனிடத்துத்  தோன்றியது பற்றி  எல்லோரும்  எங்ஙனம்  பிராமணராவர் ?  சாதியினாலும்  தாய்த்  தந்தையராலும்  பிராமணத் தன்மை எய்தற்பாலதன்று”   இவ்வாறே  இந் நூலுட்போந்த  ஊழைப்  பற்றிய  கொள்கையும்  திருக்குறட்  கருத்தோடு  பெரிதும் ஒற்றுமையுடையதே . அரச  அங்கங்களைப்  பற்றிச்  சுக்கிரநீதி  பகர்வது திருக்குறட் கருத்தே .  அதன்  முதல்  அத்தியாயம்  61 வது சுலோகத்தில் திருவள்ளுவ  நாயனார் கூறிய  ஆறு  அங்கங்களோடு  அரசையும்  சேர்த்து  அரசியற்குரிய  அங்கங்கள் ஏழென்று  சுட்டப்பட்டது . சாணக்கியரும்  இவ்வாறே  சொற்றனர் .  

               சுக்கிரநீதியையும்  திருக்குறளையும்  ஒப்பிட்டுப்பார்ப்போர்   திருக்குறள்  கி. பி . இரண்டாவது  நூற்றாண்டுக்கு முந்தைய  நூலென்றும் , சுக்கிரநீதி  கி.பி. பத்தாவது  நூற்றாண்டில்  எழுந்த  நூலென்றும்  அறிந்து கொள்ளற்பாலர் .தென்னாட்டுக்  கருத்தைப்  பெரிதும்  தழுவிக்  கூறும்  காரணத்தினாலே   சுக்கிரநீதி  என்னும்  நூல்  அப்  பெயர்த்தாயிற்றுப்  போலும் .  

             சிறந்த  அரசநீதிகளைத்  தொகுத்துரைப்பான்  புகுந்த  ஆரிய  ஆசிரியர் தமது  நூலைத்  தேவகுருவின்  பெயரால்  வியாழநீதி  என்னாது அசுரகுருவின்  பெயரால்  சுக்கிர நீதி  என்றது  உற்றுநோக்கத்தக்கது .  அசுரருள்  தலையாயவன்  சூரபன்மன் .  அவன்  ஆண்ட  இடம்  தென்கடலிடை   நிவந்த வீரமகேந்திரம் . அவனது  குருவின்  பெயரே  சுக்கிரர் .  இதனாலும்  சுக்கிரநீதிக்  கருத்துக்கள்  தென்னாட்டுக்  கருத்துக்கள்  எனபது  ஒருவாறு  ஊகிக்கப்படும் .  

             திருக்குறள் சுருக்கமாகக்கூறிய  உண்மைகளுக்குச்  சுக்கிரநீதியுள்   விளக்கமாகிய  உதாரணங்கள்  கிடைக்கின்றன . அரண்  அதிகாரத்துள் “உயர்வகலந்  திண்மை  யருமையிந்  நான்கின் , அமைவர  ணென்றுரைக்கு  நூல் “  என்றதன்  விளக்கத்தைச் சுக்கிரநீதி  முதல்  அத்தியாயம்  238 ஆவது   சுலோகத்துட்  காண்க. “எல்லாப்பொருளு முடைத்தா” யென்றதற்கேற்ப , எல்லாவகைப்  பொறிகளும் , எல்லாவகைப்  படைகட்கும்  இருப்பிடமும் , எல்லாப் பொருள்கட்கும்  பண்டசாலையும்  அரணுள்  அமைத்தல்  வேண்டுமென்று   சுக்கிரநீதியார்  கூறுவாராயினார் . முதல் அத்தியாயம்  248  முதல்  258  வரை  காண்க .  

                அரசற்குக்  கண்ணோட்டம்  வேண்டுமென்பது  “ஒறுத்தாற்றும்  பண்பினார் கண்ணுங்கண்ணோடிப்  ,பொறுத்தாற்றும் பண்பே  தலை”   என்பதனாற்  பெறப்படும் . இப் பொருளுண்மையை  உட்கொண்டு  சுக்கிரநீதியாம்  நாடிழந்த  பகைவர்க்கு  வாழ்க்கை  நிமித்தம்  பொருளுதவும்  முறைகளை  நாலாவது  அத்தியாயம்   ஏழாம்  பிரகரணத்துள் 397  முதல்  401  வரை  உள்ள  சுலோகங்களால்  விளக்கியுள்ளார் .   

                இவ்வாறே  பல  பகுதியுள்ளும்  கண்டுகொள்க . சிலவிடங்களில்  இரு நூற்  கருத்துக்களுக்கும்  ஒரு  சிறிது  வேறுபாடு  காணப்படும் . இறைமாட்சி யுள்  “அஞ்சாமை  யீகை  யறிவூக்க  மிந்நான்கும் , எஞ்சாமை  வேந்தற் கியல்பு.”  “கொடையளி  செங்கோல் குடியோம்ப  னான்கு முடையானாம்  வேந்தர்க்கொளி.”  என்ற  குறட்கருத்துக்களை முதல்  அத்தியாயம்  124 ஆவது  சுலோகத்திலும்  பிறாண்டும்  அமைத்திருத்தல்  காண்க . இச்சுலோகத்துள்  தீயோரை  ஒறுத்தலாகிய  செங்கோன்மையும் , குடியோம்புதலும் , ஈகையும்  கூறப்பட்டன . அளி  என்பது  பகைவர்க்கிரங்குதல் ; அது மேற்சுட்டினாம் .  ஊக்கமென்றதனையே  பொருளீட்டுவதாகச்  சுலோகம்  மொழிகின்றது . அறிவு  என்பதனைக்  குணங்  குற்றங்களை  யறிதல்  என்னும்  பொருட்டாகக்  கொண்டு  பல  சுலோகங்களடங்கிய   ஓர்  பிரிவாக  வகுத்தனர்  நீதி  நூலார்  .  அஞ்சாமை என்பதனையே  பகைவரைத்  தொலைத்தலும் , மேன்மேலும்  நிலப்பகுதி கோடலுமாகிய  இரு  செயல்களாக  அவர்  கூறிப்  போந்தனர் .  கொடை  யென்பதனை  அவர்  வேள்வியாகக்  கருதினார் போலும் .  இறை மாட்சியுள்  வேள்வி  அரசன்  கடமையாகக்  கூறப்படவில்லை .  ஆனால்  சுக்கிரநீதியுள்   இராஜசூயம் முதலிய  வேள்விகளை  வேட்டல் அரசனுடைய  தொழில்களுள் ஒன்றாக  வைத்து எண்ணப்பட்டது .  (வறியவர்க்குக்  கொடுத்தல்  ஈகை ; தக்கார்க் கீதல்  கொடை  என்ப. )

               அரசன்  கடுஞ்சொல்லனாயிருத்தல்  கூடாதென்று  சுக்கிரநீதி  நன்கு தெரிவிக்கின்றது . காட்சிக்கு  எளியனாதல்  வேண்டுமென்று   அது  குறிப்பதாகத்   தெரியவில்லை .  இவ்விரண்டும்  ஒருங்கே  இறைமாட்சியுள்  கூறப்பட்டது  காண்க. “காட்சிக்கெளியன்  கடுஞ்சொல்லனல்லனேல் , மீக்கூறு  மன்ன  னிலம். “  பிறவும்  அன்ன  இதனால்  திருக்குறட்  பொருட்பாலினை  ஆராய்தற்குத்  தக்கதோர் கருவி  நூலாகச்  சுக்கிரநீதி  அமைகின்றதென்பதனைத்  தமிழறிஞ ருணர்ந்து அதனைப் பாராட்டுவாராக .  

             இனிச்  சுக்கிரநீதியுட்  போந்த  பொருள்களை ஒருவாறு தொகுத்துச்  சுட்டுதும் . இந்நூல்  ஐந்து  அத்தியாயமுடையது . முதல்  அத்தியாயத்தின்  ஒரு  பகுதியுள் நீதிநூலறிவு  பொதுவாக  மக்களது  ஒழுக்கங்கள்  நிலைபெறுவதற்கும் , சிறப்பாக  அரசியன்முறை  தழைப்பதற்கும்  இன்றியமையாத தென்பதும் , ஊழ்  முயற்சி  யென்னும்  இரண்டனுள்  முயற்சியையே  சிறப்பாகக்  கைக்கொள்ள  வேண்டுமென்பதும், அரசிற்குரிய  அங்கங்களின்ன  வென்பதும் , அரசனானவன்   அயன்  இந்திரன்  வாயு  இயமன்  ஞாயிறு  தீ  வருணன்  மதி  நிதிக்  கிழவன்  என்பாருடைய  கூறுகளையுடையான்  என்ற  கொள்கையின்  விளக்கமும் , குடிகளுக்குதவுமுகத்தால்  அவன்  அவர்கட்குத்  தந்தை  தாய்  ஆசிரியன்  உடன்பிறந்தார்  உறவினன்  குபேரன்  இயமன்  என்னும்  எழுவரைப்  போல்வா னென்பதும்  அரசர்க்கு  ஐம்பொறியடக்கத்தின்   இன்றியமையாமையும்   இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறுமாகியவற்றால்  பெருந்தீங்கு  விளையு மென்பதும் , அரசனுடைய  அறிவும்  செயலும்  இனையவென்பதும் , குடிகளைத்  துன்புறுத்தாமல்  இறைகொள்ளும்  தன்மைக்கும்  வருவாயின்  அளவிற்கும்  அதிகார  அளவிற்கும்  ஏற்ப  அரசர்  பலவகைப்படுவரென்பதும்  கூறப்பட்டன .  

              பின்னர்  நிலத்தின்  அளவுவகைகள்  கூறப்பட்டுள்ளன . கிராமமென்பது  ஒரு குரோச  அளவுற்றதும்   ஆயிரங்கருடம்  அளவுள்ள  வெண்பொற்காசுகள்  அரசிறையாகப்  பெறத்தக்கதும்  ஆம்  என்றும் , ஒரு குரோசம் 5000 முழம்  ஆகுமென்றும் விளக்கப்பட்டன . இதனால்  ஆதியில்  எவ்வளவு  அளவுள்ள   இடத்தைக்  கிராம  மென்றார்கள்  என்பது  தெரியும் . அங்குலம் , கோல் , நிவர்த்தனம் , பரிவர்த்தன,  புயம்  முதலியவைகளுக்கு  இலக்கணம்  செவ்வையாகக்  கூறப்பட்டுள்ளது .  இவை  தமிழிலே   கணித  நூலினும் , சோதிடப்பகுதியான  இரேகை  நூலினும்   விரிவாக  விளக்கப்பட்டுள்ளன .

                பின்னர்  அரச  நகர்  அமைப்பும் , அரண் அமைப்பும் , அரசவீதியமைப்பும்  மிகவும்  அழகாக  நவிலப்பட்டுள்ளன . இப்பகுதி  சிலப்பதிகாரம்  முதலிய  சங்க  நூல்களில்  காவிரிப்பூம்பட்டினம்  மதுரை  முதலிய  நகர்கட்குக்  கூறிய  வனப்பை  நினைவூட்டுகின்றது .  அறச்சாலைகள்  வழிச்செல்வோர்க்கே  ஆதியில்  அமைந்ததாகவும்  , புதிதாக  வருபவரை நன்கு  உசாவி   அவருக்குத்  தங்குமிடங்களை  அதிகாரிகள்  உதவினதாகவும்  270  முதல்  274  வரையுள்ள  சுலோகங்களால்  அறிகின்றோம் . தற்காலத்தில்  புது நகர்  அமைப்பினைப்  பற்றி  ஆங்கிலவாணர்  கூறும்  முறைகளும்  இப் பகுதியோடு  ஒத்துப்  பார்க்கத்தக்கன .  

                  பின்னர்  அரசர்கள்  நாடோறும்  நேரத்தைப்  பலபடப்  பகுதி  செய்து  ஒவ்வொரு  பொழுதிலும்  செய்யவேண்டிய  கடமைகளையும்  , குடிகளது  நன்மையின்  பொருட்டு   அவர்கள்  விதிக்க  வேண்டிய  கட்டளைகளையும் , அவ்விதிகளை  யாவர்க்கும்  வெளிப்படுத்து  முறையினையும் , போர்புரிதல் , வேட்டை,  விளையாடல், ஒற்றாடல் முதலியவற்றின்  இயல்புகளையும்  கற்பார்க்கு  இன்பந்தரும்  வண்ணம் விளக்கியிருத்தல்  காண்க .   

                 நஞ்சுகலந்த  உணவைச்  சோதிக்கும்  உபாயம்  பிறவுயிர்க்கு  இறுதி செய்யாத  நலமான  முறையிற்  சுட்டப்பட்டது . நச்சுணவைக்  கண்டவுடன் அன்னம் , வண்டு , மயில்  முதலியவைகள் இன்ன  இன்ன  செயல்களைக்  காட்டும்  என்று  அறிவுறுத்தினமை  காண்க .  இந்நூல்  விழுமிய  நோக்க  முடையதாகலின்  வேட்டையாடல்  பிறவுயிர்க்குத்  துன்பம்  விளைத்தல் பற்றி  நல்ல தன்றெனக்  கூறுகின்றது. அரசியற்குரியாரைத்   தெரிந்தெடுத்தலும் , அரசவையமைப்பும் , அரசுரிமை  யடையாளங்களைக்  காத்தலும்  செவ்வையாகக்  கூறப்பட்டுள்ளன . குடிகளுக்கு  எல்லாவிதக்  கல்விகளையும்  பயிற்று வித்தல்  வேண்டுமென்ற  கருத்தும் , நெடுந்தூரத்திலுள்ள  செய்திகளை  விரைவில்  அறிந்துகொள்ள  வேண்டுமென்ற  கருத்தும் , அரசன்  உவகையும்  சுறுசுறுப்பும்  படைக்கலப்  பயிற்சியும்  உடையனாதல்  வேண்டுமென்ற  கொள்கையும்  பாராட்டத்தக்கன . அரசிலக் கணங்களில்லாத  அரசன்  புலவர்களால்  நாயோடொப்ப  வைத்து  எண்ணப்படுவானென்றுங்  கூறப்பட்டது . அரசன்  கற்புடைய  இல்லாளோடு  இன்புறுதலின்றிப்  பிறன்மனை  நயத்தல்  கூடாதென்பதும் , அவன்  நிலைகுலைதல்  பற்களும் , மயிர்களும், உகிர்களும் தமக்குரிய  இடம்விட்டுப்  பெயர்தலை  யொக்கும்  என்ற  கருத்தும்  உற்று நோக்கத்தக்கன . “தலையி னிழிந்த  மயிரனையர்  மாந்தர், நிலையனிழீந்தக்  கடை “  என்பது  திருக்குறள் . “ஊழின்  வலியால்  தன் முயற்சியனைத்திற்கும்  பயன்  காணாதவழி  ஒருவன்  தவஞ் செய்து மேலுலக மெய்தக்கடவன்”  என்று  கூறும் பகுதி பண்டைத்  தமிழரசருட்  சிறந்த  வீரர்  தமது  முயற்சி  கடைபோகா  வழி  வடக்கிருந்த  வழக்கத்தை  நினைப்பூட்டுகின்றது .  

               இனி , இரண்டாம்  அத்தியாயத்துள் அரசனக்கு  நன்னட்பினா லாந்  நன்மையும் , தீநட்பினாலாந்  தீமையும்  முதற்கட்  கூறப்பட்டன . இளவரசிற்குரியா ரின்னாரென்பதும் , அவர் கடமையும் , அரசன்  அவரையும்  மற்றை ஞாதிகளையும்  நடத்தும்  முறையும்  விளக்கப் பட்டன. “ இதனை  யிதனாலிவன்  முடிக்கு மென்றாய்ந்  ததனை யவன்கண் விடல்”   என்ற  திருக்குறளாற்  பெறப்படும்  கருத்துக்கள னைத்தும்   இந்நூலுள்  அமைச்சர், புரோகிதர் ,  பிரதிநிதி, நீதிபதி , யானைப்பாகன் , படைத்தலைவர் , சத்திரத்தலைவர் , பரீக்கைத்  தலைவர் , தண்டத்தலைவர் முதலியோரதிலக்கணங்களையும், அவரை  ஆய்ந்தமைக்கு  முறைகளையும்  கூறும்  பகுதியுள்  விரிவாகக்  காணப்படும் .  அமாத்தியன் , அமைச்சன் , மந்திரி  முதலியோர்களுக்கு வெவ்வேறு  கடமைகள்  இதனுட்  கூறப்பட்டன . இப்பகுதி  அக்காலத்து  அரசமைப்பில்  இத்துணை  அதிகாரிகளும்  தொழிலாளர்களும்  இருந்தனரென்று  அறிதற்குப்  பெரிதும்  பயன்படுகின்றது . அக்காலத்தில்  உரிமைகளைப்  பாதுகாக்க  ஆவணங்க ளெழுதப்பட்டனவென்றும் , அவைகள்  ஆஞ்ஞாபத்திரம்  பிரஞ்ஞாபனபத்திரம்  சாசனப்பத்திரம்  பிரசாத  பத்திரம்  முதலிய  பலவகைப்பட்டு  வழங்கினவென்றும் , அரசனுக்குரிய  வரவு  செலவு  கணக்குகள்  எழுதி  வைக்கும்  முறை  இன்னவென்றும் , அரசன்  முதலிய  அதிகாரிகள்  பத்திரங்களை  ஒப்பிட்டுக்  கையெழுத்திடுமுறை  இன்னவென்றும் , இவ்வத்தியாயம்  விதந்தோதுகின்றது . எண்ணலளவைக்  குறியீடுகளும்  , சாந்திரம்  செளரம்  சாவனம்  என்னும்  காலவளவைகளும் , மாதச்சம்பளங்கொடுத்தல்  கடன் கொடுத்தல் நாட்கூலி  கொடுத்தல்  முதலியவற்றிற்கு  முறையே  வெவ்வேறு  காலவளவைகள்  பயன்பட்டன வென்பதும்  இவ்வத்தியாயத்துள்  விளக்கப்பட்டன .

               இனி, மூன்றாம்  அத்தியாயத்துள்  எல்லார்க்குமுரிய  ஒழுக்க முறைகள்  விரிவாகக்  கூறப்பட்டுள்ளன . கல்வியினாலும்  வீரத்தாலும்  பொருளாலும்  உயர்குடிப்பிறப்பாலும்  வலிமையாலும்  மானத்தாலும்  ஒருபொழுதும்  செருக்குறலாகா  தென்றும் , அங்ஙனம்  செருக்குறுவார்க்  கின்ன  தீமை  விளையுமென்றும் , கல்வி  முதலியவற்றின்  பயன்  இன்னவென்றும் கூறும்  பகுதி  மிகவும்  அழகுற  அமைந்துள்ளது . குடிகள்  தமது  வாழ்க்கையை  நயம்  பெற  நடத்திக்  கொள்வதற்கு  இவ்வத்தியாயத்துட்  கண்ட  விதிகளைக்  கற்றல்  இன்றியமையாதது . உலக  வாழ்க்கையில்  உடல்  நலமும்  ஒற்றுமையும்  எய்துதற்குரிய  பல  நற்பழக்கங்கள் இதன்கண்  விதந்தோதப்பட்டன . திருவள்ளுவர்  பொதுவாகக்  கூறிய  உண்மைகளின்  நயம்  இவ்வத்தியாயத்திற்  கூறிய  சிறப்பு  விதிகளால்  நன்கு விளங்கும் .  தமிழில்  ஆசாரக்கோவை   முதலியவற்றுள்ளும் , சைவ  சமய  நெறி  முதலிய  நூல்களிலும்  கூறப்படும்  ஒழுக்க  விதிகள்  இவற்றோடு  ஒத்துப் பார்க்கத்தக்கன .

        இனி , நான்காம்  அத்தியாயம்  முதற்பிரகரணத்துள்  , இயற்கை  நண்பர் , செயற்கை  நண்பர் , இயற்கைப் பகைவர் , செயற்கைப் பகைவர்  என்னும்  இவர்களினிலக்கணமும் , இவர்கள்  மாட்டுச்  சாம பேத தான தண்டங்களை  மேற்கொள்ளு  முறையும்  கூறப்பட்டன.  பின்னர் , தண்டத்தின்  வகையும்  பயனும்  கூறும்  பகுதியுள்  அக்காலத்துத்  தண்டோபாயங்கள்  சிறைப்படுத்தல்   அடித்தல்  அபராதப்பணம்  விதித்தல்  கடுமொழி  கூறல் மானக்கேடு  செய்தல்  உறுப்புக் குறைத்தல்  கொலைபுரிதல்  என்பனவாமென்றறிகின்றோம் . “கடிதோச்சி  மெல்ல  வெறிக” வென்பதன்  கருத்தும்  ஆண்டு  விளக்கப்  பட்டுள்ளது . அரசன்  உள்ளத்தே  யிரக்கமும் , புறத்தே  வன்கண்மையுமுடையனாய்த்  தன்  குடிகளைப்  பொறுத்தல்  வேண்டு மென்றது காண்க . குணத்தாலும்  குலத்தாலும்  பொருளாலும்  வேறுபடுவார்க்கு  வேறுவேறு  தண்டங்கள்  அக்காலத்து  விதிக்கப்பட்டன வென்றறிகின்றோம் . உயிர்களைக்  கொலை  செய்தலாகாதென்று  வேதங்கள்  வற்புறுத்திக் கூறுகின்றன  வென்னும்  , 93 வது  சுலோகத்தில்  உயிர்க்கொலை  என்பதற்கு  மக்கட்கொலை என்றாதல், வேள்வி யொழிந்த  பிறவிடத்துக்  கொலையென்றாதல்  பொருள்  கொள்ளவண்டும் . வேதங்கள்  என்பதற்கு  உயர்ந்த  நூல்களென்ற  பொருளே  கொள்ளற்பாலது .  

          இரண்டாம்  பிரகரணத்துள் , கருவூலம்  அமைக்கின்ற  முறையும், கருவூலப்  பொருளைப்  பயன்படுத்து  முறையும் , சற்பாத்திரமாவார்  இன்னாரென்பதும் , அசற்பாத்திரமாவார்  இன்னாரென்பதும் , பொருளைச்  சேர்க்குமுறை  பற்றி  அரசர்  தலையாயார்  இடையாயார்  கடையாயார்  எனப்படுவரென்பதும் , தானியங்களைத்  தொகுத்து  வைக்குமுறையும்  முதற்கட்  கூறப்பட்டன . பின்னர்  நவமணிகளின்  இலக்கணம்  கூறுமிடத்து  ஆசிரியர்  வயிரமே  எல்லாவற்றிற்கும்  சிறந்ததென்றார் . முத்துக்கள்  தோன்றுமிடமும்  அவற்றைச்  சோதிக்கு  முறையும்  இதனுள்  இனிது  கூறியுள்ளார் . இரத்தினங்களுக்குரிய  நிறுத்தலளவைகளும்  விரித்தோதப்பட்டன . பின் , பொன்  முதலிய  உலோகங்களைச்  சோதித்து  அவற்றிற்கு  விலை  ஏற்படுத்து  முறையும்  இப்பிரகரணத்துள்  கூறப்பட்டுள்ளது .

               மூன்றாம்  பிரகரணத்துள்  பிரமனால்  தொழில்  பற்றிச்  சாதிகள்  வகுக்கப்பட்டன வென்பதும் , இழிதொழில்  காரணமாகச்  சாதிக்குப்  பங்கமேற்படுமென்பதும் , நான்கு  வருணத்தாற்க்குரிய  தொழில்கள்  இன்னவென்பதும் விளக்கிய  பின்னர் , வேதமுதலிய  முப்பத்திரண்டு  வித்தைகளினியல்பும் , தொழிற்றிறனமைந்த  அறுபத்துநான்கு  கலைகளினியல்பும்  இப்பிரகரணத்துள்  கூறப்பட்டுள்ளன . வித்தையென்பது  ஆங்கிலத்தில்  ( Science ) சயின்ஸ்  என்னும்  சொற்பொருளை  ஒருவாறு  விளக்குவதாகவும் , கலை  என்பது ( Art )  ஆர்ட்  என்னும்  சொல்லின்  பொருளை  விளக்குவதாகவும்  தோன்றுகின்றது . வித்தையென்பது அறிவுநூலாகவும் , கலையென்பது  செயற்கை  நூலாகவும் கொள்வது  இழுக்காகாது . இங்கு  கூறப்பட்ட  கலைகள்  பிழைப்பின்  பொருட்டுச்  செய்யப்படும்  பலவகைத்  தொழில்களைக்  குறிப்பனவேயன்றி  அனற்கட்டு  புனற்கட்டு  முதலியனவாகக்  கூறப்படும்  அதிசயக்  கலைகளல்லவா  மென்றுணர்க.

                இனி , நான்காம்  அத்தியாயம்   நான்காம்  பிரகரணத்துள்  நால்வகை  ஆச்சிரமங்கட்குரிய  விதிகள்  சுருக்கமாகக்  கூறப்பட்டுள்ளன . மகளிர் , சூத்திர ரென்பாரது  கடமை  விதந்தோதப்பட்டன .  யவன   ரென்பார்  நால்வகை  வருணத்தாரின்  வேறாய்ந்  தமக்கென  வேறு  மத நூல்களும்   நீதி நூல்களுமுடைய ரென்பது  குறிக்கப்பட்டது . இவர்கள்  வடதிசை  மேற்றிசைகளில்  இருப்பதாகத்  தெரிந்தமையின்  இந்திய நாட்டுக்கப்பாலுள்ள  பாரசீகர்,  கிரேக்கர் , துலுக்கர்  முதலியோரை  யவனரென்ற  சொல்  சுட்டிய தென்றுணர்க.  “சிறப்புப்  பிறப்பாலன்று;  குணத்தாலாம் “  என்றதற்கும்  இதனுள்  உதாரணங்கள்  கூறப்பட்டன . சிற்பி  முதலிய  தொழிலாளரைக்  காக்க வேண்டுமென்று , கூறியவிடத்துக்  கட்கடை  ஊருக்கு  வெளியே  இருக்க வேண்டுமென்றும் , எம்மனிதனும்  பகற்காலத்தில்  கட்குடித்தலாகதென்றும் விதிக்கப்பட்டது . பின்னர் , பொழில்களமைக்கு  முறை  கூறியாங்கே  திருக்கோயிலமைக்கு  முறையும் , சாத்துவிகம் , இராசதம் , தாமதம்  எனப்படும்  தெய்வத்  திருவுருவங்களமைக்கு  முறையும், அவற்றினளவும்  விதந்தோதப்  பட்டன . தெய்வங்களுக்கு  ஊர்திகளியற்று  முறையும்  சுருக்கமாக  கூறப்பட்டது . ஆகமத்திற்  கூறியபடி  அமைக்கப்பெற்ற  திருவுருவங்க ளெல்லாம்  அழகுடையனவேயாம் . அங்ஙனம்  அமைக்கப்படாதன வெல்லாம்  அழகில்லாதனவாகுமென்றமையால்  இப்பகுதி  ஆகமத்தைப்  பெரிதும்  தழுவி  நிற்கின்றது .  

              இனி , ஐந்தாம்  பிரகரணத்துள்  வழக்காராயு முறையும் , நியாயமன்றமைக்கு  முறையும் , நியாய  மன்றத்தினங்களும் , வழக்குத்  தீர்த்தற்குரிய  விவாதங்களும்  , நீதிமன்றத்திற்கு  அழைக்கப்படத்தக்கவரும்   தகாதவரும் , பிணைவாங்கு  முறையும் ,  முறையீடு  எதிர்வாத  மென்பவற்றினிலக்கணமும் , ஆட்சி  ஆவணம்  சாட்சி  என்னும்  சாதனங்களினியல்பும் , வழக்குத்  தீர்ப்பு  முறைகளும், உலோகங்களை  வஞ்சிப்போர்க்கிடுந்  தண்ட  முறைகளும் , பிறவும்  ஓதப்பட்டமையால்  அக்காலத்துச்  சட்ட  ஆராய்ச்சிக்கு  இப்பகுதி  பெரிதும்  பயன்படுவதாகும் .  

              ஆறாம்  பிரகரணத்துள்  “மணிநீரு  மண்ணு   மலயு  மணிநிழற், காடுமுடைய  தரண் .”  என்பதன்  விரிவுரை  காணப்படுகின்றது .

              ஏழாம்  பிரகரணத்துள்  படையியல்பு  கூறுமிடத்து  அதன்  பலவகைகளும்   இனிது  விளக்கப்பட்டன . தேர் , யானை , குதிரை  இவற்றிலக்கணங்களும் , குதிரைகளின்  நடை  வகைகளும் , குதிரை  எருது  ஒட்டக  முதலியவற்றின்  ஆயுள் வரையறையும்  யானை  முதலியவற்றை  அடக்கிக்  காக்கும் முறையும் , போர்க்குரிய  ஆயுதங்களும் , ஆயுதங்களுட்  சிறப்பாகப்  பீரங்கி போன்ற  நெருப்புப் பொறிகளும்  விவரமாக   விளக்கப்பட்டுள்ளன . அம்பு  முதலியவற்றாற்  செய்யப்படும்  போர்  தெய்விகமென்றும் , துப்பாக்கி  முதலிய  பொறிகளாற்  செய்யப்படும் போர்  ஆசுரமென்றும் , வாள்  முதலிய  கைப்படைகளாலும்  யாக்கை  யுறுப்புக்களாலும்  செய்யப்படும்  போர்  மானவமென்றுங்  கூறியது  காண்க . இதனால்  தற்காலத்தில்  ஐரோப்பியர்  செய்யும்  போர்  ஆசுரமாதல்  தெளிக . போர்  புரியச்  செல்லும்  அரசன்  வினைவலியும்  தன்  வலியும்  மாற்றான்வலியும்  துணை வலியும்  ஆய்ந்து  செல்லல்  வேண்டுமென்று  கூறியது  மிகவும்  பாராட்டத்தக்கது . ஏழாம்  பிரகரணத்தோடு  நான்காம் அத்தியாயம்  முடிவு  பெறுகிறது .

       இனி , ஐந்தாம்  அத்தியாயத்துள்  அரசர்  வெற்றியின்  பொருட்டுக்  கைக்கொள்ள  வேண்டும் பல  உபாயங்களும்  தெளிவாக ஓதப்பெற்றன .  

        இந் நீதி  நூன்  மொழிபெயர்ப்பு  பொதுக்கொள்கைகளை  மாத்திரங்கூறும்  திருவள்ளுவர்  முதலிய  பெரு  நூலாராய்ச்சிக்குப்  பெரிதும்  துணைபுரிவதைத்  தமிழறிஞர்  நன் குணர்ந்து, இதனைப் போற்றுதல் வேண்டும் . இந்நூன்  மூலம்  எத்துணை  நயமுடைத்தோ  அத்துணை நயமுடைத்து  இம்மொழிபெயர்ப்புமெனக்  கொள்க. உரைநடையில்  மொழிபெயர்ப்பு  வடிவிலுள்ள  நூல்களனைத்திற்கும்  இதுவே  தலைமணி  நூலாக  விளங்குகின்றது . ஆசிரியர்  சிவஞான  சுவாமிகளது  மொழிபெயர்ப்பு  நூல்கள்  தமிழிலே  ஏற்பட்ட  காலத்திற்குப்பின்  இச்  “சுக்கிரநீதி”  மொழிபெயர்ப்பே  மிகவும்  போற்றத்தக்கதாக  அமைந்துள்ளது . இதற்குக்  காரணம்  இதன்  ஆசிரியராகிய  பண்டிதமணி  மு . கதிரேசச்  செட்டியாரவர்களது  இணையற்ற  தென்மொழி  வடமொழித்  தேர்ச்சியேயாம் . இக்காலத்தில்  இவரைப் போல இரு மொழியிலும்  நுண்மாணுழைபுல முள்ள  கலைஞரைக்  காண்டல்  அரிது .  தமிழில்  இன்னும்  மொழிபெயர்ப்பு  இயற்றக்  கருதுபவர்கள்  இவ்வாசிரியரையே  தங்கட்குத்  தக்கதோர்  வழிகாட்டியாகக்  கருதற்பாலர் . சுக்கிரநீதியை  மொழிபெயர்த்ததைப் போலவே  வடமொழியிலுள்ள  வேதம்  உபநிடதம்   ஆகமம்  முதலிய  அரிய  நூல்களைத்  தமிழிலே  யாத்தற் பொருட்டு   இந்  நல்லாசிரியர்க்குத்  தக்க  ஊக்கமும்  உதவியு  மளித்தல்  தமது  தாய்மொழிக்கட்  பற்றுடையராய்  அதனை  வளர்க்கும்  உண்மை  நோக்கமுடைய  பெருஞ்  செல்வவான்கட்கும்   பிற  அறிஞர்க்கும்  ஒரு  தலையாய  கடமையாகும் .  தமிழறிந்தார்  யாவரும்  இப் புத்தகத்தை  வாங்கிக் கற்பார்களாயின்   இவ்வாசிரியரது  சிறந்த  அறிவாற்றலின்  பயனைத்  துய்த்தின்புறுவது  திண்ணம் . தமிழுலகத்திற்கு  இத்தகைய  பெருநன்மையினை  மேன்மேலும்  புரிந்து கொண்டிருக்கும்  பொருட்டு  எல்லாம்  வல்ல  இறைவன்  இவ்வாசிரியர்க்குக்  குன்றாத  ஊக்கமும்  திண்ணிய  நல்லுடலும்  நீண்ட  ஆயிளும்  தக்க  துணை வலியும்  நிலைபெற்ற  பெருஞ்  செல்வமும்  செவ்விதின்  அருளும்  வன்ணம்  திருவருளை  வேண்டுகின்றேன் .

         *********************************

உள்ளுறை   விளக்கம்

முதல்  அத்தியாயம்

  1. நீதிநூன்  மாட்சி     
  2. அரசர்க்கு  நீதி  நூலறிவா னுண்டாம்  பயன்
  3. அரசன்  காலத்துக்குக்  காரணம்
  4. அறத்தின்  மாட்சி
  5. அரசர்  சாத்துவிக  முதலிய  குணங்களான் மூவகைப்படுவர்
  6. கன்மமே  எல்லாவற்றிற்குங்  காரணம்
  7. அரசியற்குரிய  ஏழு  அங்கங்கள்
  8. அரசன்  கடவுட்  கூறுடையனாதல்
  9. குடிகளை  யின்புறுத்தும் அரசனுக்குரிய  எழுவகைக்  குணங்கள் 
  10. பொறியடக்கத்தின்  இன்றியமையாமை
  11. சூது  முதலிய  விதனங்கள்
  12. அரசனுடைய  எண்வகைத்  தொழில்கள்
  13. அரசனுடைய  குணங்குற்றங்கள்
  14. அறிவுநூல்  முதலியவற்றின்  இலக்கணங்கள்
  15. நல்லார்  இணக்கம்
  16. இன்சொற் கூறல்
  17. அரசர்களைப் பற்றிய  வகைகள் 
  18. நிலத்தின்  அளவு  வகைகள்
  19. இராசதானி  யமைத்தல்
  20. தனித்தனி  இல்லம்  அமைத்தல்
  21. அரண் அமைத்தல்
  22. இராசவீதி  யமைத்தல்
  23. வழிச்செல்வோர்  தங்குதற்குரிய  அறச்சாலை   யமைத்தல்
  24. அரசன்  முகூர்த்தந்தோறுஞ்  செய்யவேண்டிய  அவசிய  நித்திய  கன்மங்கள்
  25. யாமங்காப்போர்  செய்யவேண்டுவன
  26. குடிகளுக்கு  அரசன்  இடுங்  கட்டளைகள்
  27. அரசன்  செய்யவேண்டியவை
  28. நஞ்சு  முதலியவை  கலந்த  உணவைச்  சோதித்தல்
  29. வேட்டை  விளையாடல்  முதலியன
  30. ஒற்றாடல்
  31. அரசர்  குலத்தில்  அரசிற்குரியவனைத்  துணிதல்
  32. சுற்றத்தார்  முதலியோர்பால்  அரசன்  இடுங் காரியங்கள் 
  33. அரசவை  அமைப்பு
  34. அரசுரிமை  அடையாளங்களைக்  காத்தல்
  35. யாண்டுதோறும்  நாட்டைச்  சுற்றிப்பார்த்தல்

இரண்டாம்  அத்தியாயம்          

       1 அரசனுக்கு  நற்றுணையானாம்  சிறப்பு

        2 அரசனுக்குத்  தீந்துணையானாங்  கேடு

        3 இளவரசுக்குரியார்

        4 ஒழுக்கக்கேடுடைய  புதல்வர்  முதலியோரை  நடத்துமுறை

        5 இளவரசர்  கடமை

        6 அமைச்சர்  முதலியோரை  ஆராய்ந்தமைத்தல்

        7 புரோகிதன் முதலியோரின்  சிறப்பு முறை

        8 புரோகிதன் முதலியோர்களின் இலக்கணங்களும்              காரியங்களும்

        9 மற்றை  அதிகாரிகளின்  இலக்கணங்களும்  காரியங்களும்

       10 யானைப்பாகன் முதலியோரின்  இலக்கணங்களும்  காரியங்களும் 

        11 படைத்தலைவர்  முதலியோ ரிலக்கணம்    

         12 கருவூலத்  தலைவன்  முதலியோ ரிலக்கணம்

         13 அரசன்  திருமுன்  அரசியல்  வினைசெய்வார்  ஒழுகுமுறை

         14 எழுதப்படும்  பத்திரங்களின்  வகைகள்

         15 அரசனுக்குரிய  வரவு  செலவு  முதலியன

         16 அரசன் முதலியோர்  கையெழுத்திடுமுறையும் , கணித பத்திரம்  எழுது முறையும்

         17 அளவைகள்

         18 கால  அளவை

         19 வேதன  விளக்கம்

         20 அரசன்   வினைசெய்வாரை  இன்புறுத்துமுறை

மூன்றாம்  அத்தியாயம்    

1 எல்லோர்க்கும்  உரிய  நல்லொழுக்கங்கள்

2 பிறநாட்டுச்  செலவு , அரசவை  புகுதல் , நூலாராய்ச்சி  முதலியன

3 உலகத்தைத்  தன்வயப்படுத்தும்  வழி

4 மகளிர்பால்  இயற்கையாக  நிகழும்  பிழைகள் 

5 மகட்கொடை  முறை

6 கல்வி செல்வங்களை யடையும்  வழி

7 தந்தை வழிப் பொருளைக் கூறுசெய்யு முறை

8 கொடை மாட்சி

9 குணஞ்  செயல்களின்  நன்மை  தீமைகள்

10 நல்லொழுக்க  மிக்க  அந்தணர்  பெருமை

11 தொழில்களின்  தலைமை  முதலியவைகள்

12 அறிவின்  மாட்சி

நான்காம்  அத்தியாயம்          

முதற் பிரகரணம் (பகுதி)   

1 நட்டார் பகைவர் இலக்கணங்கள்

2 சாம  முதலிய  உபாயங்களை  மேற்கொள்ளுமுறை

3 தண்டத்தின்  வகையும்  பயனும்

4 குற்றங்களும்  அவற்றிற்குரிய  தண்டங்களும்

இரண்டாம்பிரகரணம்

1 கருவூலம் அமைக்கு முறை

2 தானியங்களைத்  தொகுத்து வைக்கு முறை

3 நவமணிகளின்  ஆராய்ச்சி

4 அரதனங்களின்  விலையளவு

5 பொன்  முதலிய  உலோகங்களின்  விலை

6 பசு  முதலியவற்றின்  விலையளவு

7 இறைப்பொருள்  கொள்ளுமுறை

மூன்றாம்  பிரகரணம்

1 சாதி  ஆராய்ச்சி

2 அந்தணர் முதலியோர்  தொழில்கள்

3 வேத  முதலியவற்றின் வகைகள்

4 முப்பத்திரண்டு  வித்தைகளின்  இலக்கணங்கள்

5 அறுபத்து நான்கு கலைகள்

நான்காம்  பிரகரணம்

1 நால்வகை  ஆச்சிரமங்கள் 

2 மகளிர்   ஒழுக்கமுறை

3 சூத்திரர்களின்  ஒழுக்கவகைகள்

4 யவனர்களின் ஒழுக்கவகைகள்

5 சிறப்புப்  பிறப்பாலன்று ;  குணத்தாலாம்

6 சிற்பி  முதலிய  தொழிலாளரைக்  காத்தல்

7 மரங்களை  யுண்டாக்கி  வளர்க்கும்  முறை

8 மரங்களைப்  பயன் விளைக்கச்  செய்யுமுறை

9 காட்டு  மரங்களை   யுண்டாக்கு  முறை

10 கிணறு  வெட்டல்  அணை கட்டல்  முதலியன

11 திருக்கோயில்  முதலியன  அமைத்தல்

12 தெய்வத்  திருவுருவங்கள் இயற்று முறை

13 தெய்வ  ஊர்திகள்  இயற்று முறை

14 கணபதியின் திருவுரு  வமைக்கு  முறை

15 சத்தியுருவம்  பாலதெய்வப்  படிவங்கள்  அமைக்கு  முறை

16 ஏழு தாலமுதலிய  அளவில்  தெய்வப்படிவங்கள்  அமைக்கு முறை

ஐந்தாம்  பிரகரணம்

1 அரசன்  நீதியியல்பு  அறிதல்

2 நியாயமன்றம் அமைக்கு  முறை

3 நியாயமன்றத்தின்  பத்து  அங்கங்கள்

4 வழக்காராயு  முறைகள்

5 சலங்கள்

6 விவாதத்  தானங்கள்

7 அரசனது  ஆணைமேற்கொண்டு  தடுத்தல்

8 நீதிமன்றத்திற்கு  அழைக்கப்படுபவரும்  அழைக்கப்படாதவரும்

9 பிணை  வாங்குமுறை

10 பக்க  நிரூபண முதலியன

11 எதிர்மொழியின்  ( உத்திரத்தின் )  வகைகள்

12 சாதனங்களின்  இயல்பு

13 இலிகித  வகைகள்

14 சான்று  கூறுவோர் இயல்பு

15 சான்று  கொள்ளுமுறை

16 நெடுங்கால  அநுபவப்  பொருள்களின்  நிலைமை

17 தெய்விக  சாதன  வகைகள்

18 வழக்குகளின்  தீர்ப்பு  வகைகள்

19 அதிகார  உரிமை  ஆராய்ச்சி

20 கூடிவினை  செய்தல்

21 உலோகங்களை வஞ்சிப்போர்க்கு  இடும்  தண்ட  முறை

ஆறாம்  பிரகரணம்

1 அரணியல்

ஏழாம்  பிரகரணம்

1 படையியல்

2 நால்வகைப்  படைகளின் அளவு வகைகள்

3 அரசர்க்குரிய செலவு  வகைகள்

4 தேர் யானைகளின் வகைகள்

5 யானைகளின் அளவு வகைகள்

6 குதிரைகளின் அளவு இலக்கண முதலியன

7 குதிரைக்கு வேண்டுவன செய்து நடத்து முறை

8 குதிரைகளின் அறுவகை நடைகள்

9 எருது ஒட்டகங்களின் இலக்கணம்

10 மனிதர்க்கும் யானைகளுக்கும் உரிய வாணாள் வரையறை

11 குதிரை , எருது , ஒட்டகங்களின் ஆயுள் வரையறை

12 யானை முதலியவற்றை  யடக்கிக் காக்கு முறை

13 போர் வென்றிகொள்ளு முறை

14 போர்க்குரிய நாளிகக் கருவிகள்

15 நெருப்புப்பொடி யுண்டாக்கு  முறை

16 மற்றை விடுபடை  விடாப்படைகளின்  வகைகள்

17 போரில் விருப்பமுள்ள அரசர்க்குக் காலம் இடமுதலியன அறியும்வகை

18 சந்தி விக்கிரக முதலிய அறுவகைக் குணங்கள்

19 போர் குறித்துச் செல்லுதலின் வகைகள்

20 படை வகுப்புக்களும் அவற்றின் செயல்களும்

21 பகைவரை முற்றுகையிட்டுத்  தடைசெய்தல்

22 போரிற்  சாம முதலிய உபாயங்களை மேற்கோடல்

23 போரிற்  புறங்கொடாமை

24 அம்பு வாள் முதலியவற்றாற் செய்யப்படும் போர்ச் செயலின் வகைகள்

25 மற்போரும் அதன் வகைகளும்

26 போர்ச் செயற்குரிய நியமங்கள்

27 போர்க் களத்திற் கொல்லத்தகாதவர்

28 பகைவரை வென்றிகொள்ளு முறை

29 அமைச்சர் கழக முறை

30 படைவீரர்க்குப் பண்ட முதலியன வமைக்குமுறை

31 படைவீரர்க்குக் கட்டளையிடு முறை

32 படைவீரரின் வேதன முறை

33 நாடிழந்த பகைவர்க்கு வாழ்க்கை நிமித்தம் உதவும் பொருள் வகைகள்

34  யாமிகர்களை அமைக்கு முறை

35  அரசன் அறத்தின் வழுவாது நின்று குடிகளை இன்புறுத்தல்

36  இந் நீதிநூன் மாட்சி

ஐந்தாம்  அத்தியாயம்

1 கிலநீதி

கணபதி துணை

சுக்கிர  நீதி

முதல் அத்தியாயம்

( அரசியற்  காரிய  நிரூபணம்)

1. நீதிநூன்  மாட்சி

     சுக்கிராசாரியார்  எல்லாவுலகங்களுக்கும் தலைவரும் , படைத்தல், காத்தல்  அழித்தலைச்  செய்பவரும் ஆகிய  கடவுளை வணங்கி வழிபட்டு , தம்மையடைந்து முறைப்படி வணங்கி வாழ்த்தி வழிபட்டுக் கேட்ட அசுரர்களுக்கு  நீதிகளின்  சாரத்தைக்  கூறுகின்றார் .

     பகவானாகிய  பிரமதேவர் நூறு இலக்கம் சுலோக அளவுள்ள நீதி நூலை உலகம் நலமடைதற் பொருட்டுக் கூறினார்.

     பின்னர் , வசிட்டர் முதலிய எம்மனோரால் , சில்  வாழ் நாளையுடைய அரசர் முதலியோர்  பொருட்டு , நலம் பெருக அந்நீதி நூலின் சாரம் சுருக்கிப் பொருந்துமாற்றா னமைத்துத் தொகுக்கப்பட்டது .                                                                                       1 -3

   ஒரு சில பொருள்களைத் தனித்தனியெடுத்துச் சிறப்பித்துக் கூறும் பிற நூல்கள் பலவுள . இந் நீதி நூல் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததும் , உலக  நிலையை வரம்புட்படுத்துவதும் , அறம் பொருள் இன்பங்களை யுணர்த்துவதும் , வீட்டின்பத்தை யருளுமென்று கருதப்படுவதுமாக இருத்தலின் , இதனை அரசர்கள் எப்பொழுதும் முயற்சி மேற்கொண்டு  பயிலல் வேண்டும் .                                      4—5

அரசர் முதலியோர் , நீதிநூலறிவாற் பகைவரை வெல்பவராவர் ; மக்களுக்கு இன்பம் விளைவிப்பவராவர் ; நல்ல நீதி நுட்பங்களை   எப்பொழுதும் நுனித்துணர்பவராவர் .                                                    6

   இலக்கண நூலுணர்ச்சியின்றியுஞ் சொற்பொருள்களினறிவும் , தருக்க நூலுணர்ச்சியின்றியும் மாயாகாரியப் பொருள்களினறிவும் , மீமாஞ்சை நூலுணர்ச்சியின்றியும்  நித்தியகன்மங்களின் நியம உணர்வும் , வேதாந்த உணர்ச்சியின்றியும் யாக்கை நிலையாமை யுணர்வும் உண்டாதல்  கூடும் .                                                                                        7—8

( மாயாகாரியப்  பொருள்கள்  —  நிலம் நீர்  முதலியன )

   அந் நூல்கள் , தத்தங் கொள்கைகளை நன்கு அறிவிப்பனவாக வுள்ளன . அவ்வக்கொள்கைகளின் ஒழுகு மக்கள் , அவ்வந் நூல்களை  எப்பொழுதும்  மேற்கொள்வர் .  உலகியலுணர்ந்து  ஒழுகுவோர்க்கு, இந்நீதிநூலா னுண்டாம்  நுண்ணுனர்வு , அந்நூல்களான் எங்ஙன முண்டாகும் ?                                                                                                  9—10

(அந்நூல்கள் — இலக்கணம்  தருக்க  முதலியவை )

மக்களுக்கு உணவின்றி உடல் நிலையாவாறு போல , நீதிநூலானன்றி எல்லாவுலகங்களின் ஒழுக்கங்களும் நிலைபெறா .                                 11

2 . அரசர்க்கு  நீதிநூலறிவா னுண்டாம்  பயன்

   நீதிநூல்  எல்லோர்க்கும் விரும்பியதை நிறைவேற்றுவதாகும் ; யாவரானும் ஏற்றுக்கொள்ளற் பாலதாகும் ; அரசன்  யாவர்க்கும்  இறைவனாதலின் , அவனுக்கு  இன்றியமையாது பயன்படுவதாகும் . 12

   மாறுபட்ட வுண்டியை உண்பார்க்கு  நோயுண்டாதல் போல நீதியில்லாத அரசனுக்கு  அப்பொழுது சில பகைவரும் , நாளடைவிற்  சில பகைவரும்  தோன்றுவர் . மாறுபாடில்லா வுணவை யுண்பாரிடத்து நோயின்றாதல் போல , நீதியுடையார்க்கு  அப்பொழுதும் நாளடைவிலும்  பகைவ ரிலராவர் .                                                                 13

   அரசனுக்கு  எப்பொழுதும்  நன்மக்களைக்  காத்தலும் , கொடியவர்களை  யொறுத்தலும்  சிறந்த  அறங்களாகும். இவ்விரண்டும்  நீதியுணர்வின்றி  உண்டாகா .                                            14

   அரசனுக்கு  நீதியின்மையே  பிறர்  புகுதற்கு  வழியாகும் ; எப்பொழுதும்  அச்சந்தருவதாகும் ; பகைவர்க்கு  ஆக்கந்தருவதாகும்  ; தன்  ஆற்றற்குப்  பெரிதும்  அழிவு செய்வதாகும் .                                      15

(பிறர்புகுதல்  —  பகைவர்  எளிதிற் புகுந்து கேடு  செய்தல் )

   நீதியை  யிகந்து  தன்  விருப்பின்படி  செல்கின்ற  அரசன்  துன்புறுவான் . நீதியில்லாத  அவ்வரசன்மாட்டு அணுகி  வினை  செய்வோன் , வாட்படையின்  கூரிய  நுனியை நாவால்  நக்குபவனாவான் .                                                                                               16  

   நீதியுடைய  அரசனை யாவரும்  போற்றுவர் ; அல்லாதவனை  யாரும்  போற்றார் . எவன்மாட்டு  நீதியும் பலமும்  உள்ளனவோ , அவன்பால்  திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள் .                                                  17

( திருமகள் பல்லாற்றானும்  வந்தெய்தல் —  பகைவர் தருந்திறை , அரசிறை , சுங்க முதலியவற்றாற்  பொருள்வரல் )

   அரசன்  தன்  நாட்டிலுள்ளாரனைவரும் , ஏவப்படாமலே  நல்லன  புரியும்படி  நீதியைத்  தன்  நலங்குறித்து  மேற்கொள்ளற் பாலன் .      18

   அரசனுக்கு நீதி  தவறுதலான்  எப்பொழுதும்  தன்  நாடு  வேறுபடும் ;  பலம் வேறுபடும் ; அமைச்சர்  முதலியோரும்  வேறுபடுவர் .  இங்ஙனமாதல்  அவன்  ஆளுந்திற னிலனாதலை வெளிப்படுத்துவதாகும் .                                     19

   அரசன்  தவவன்மையால்  ஒளியை யடைகின்றான் . மக்களை  நன்னெறிப்படுத்துபவனும் , காப்பவனும் , இன்பம் பயப்பவனும் ஆகிய அவ்வரசன், தன் முன்னைத் தவவலியானும் ,  நீதி  யாராய்ச்சியானும் , இவ்வுலகத்தைத்  தாங்குகின்றான் .                         20

3 . அரசன் காலத்துக்குக்  காரணம்

     மழை, குளிர், வெயில், நாள், கோள்  முதலியவற்றின்  நியமங்களாலும் , அவற்றின் இயற்கைகளாலும்  உலகத்திற்கு ஒத்தனவும்  ஒவ்வாதனவும் , மிக்கனவும் , குறைந்தனவுமாகிய  அரசனுடைய  ஆசாரங்களாலும் , காலமானது  வேறுபடுகின்றது . 21

(மழை , குளிர் , வெயில், இம் மூன்றுட்  பெரும்பொழுது ஆறும்  அடங்குவனவாம் .

இவற்றால்  வேறுபடுதல் – ஆண்டு , அயனம் , இருது , மாதம் , பக்கம் , நாள் , இரவு , பகல்  முதலியவாதல் , அரசனுடைய ஆசாரங்களுள்  உலகிற்கு  ஒத்தன – குடிகளின் விருப்பத்திற்கியைந்தன ;  ஒவ்வாதன – விருப்பத்திற்கியை யாதன  . மிக்கன  — வேண்டும் அளவின் மிக்கன . குறைந்தன – வேண்டுமளவிற்  குறைந்தன . இவற்றாற் காலம் வேறுபடுதல் – இவ் வாசாரங்களாலுண்டாம்  நன்மை  தீமைகளைக்  காலத்தின் மேல்  ஏறிட்டு இன்புறுதலும்  பற்றியாம் . அரசனுடைய  ஒழுக்கங்களுங்  காலவேற்றுமைக்குக்  காரணமாகு மென்பது கருத்து )

     அரசன் , ஆசாரங்களை  நடத்துபவனாவான் . அரசனொழுக்கமே  காலத்துக்குக்  காரணமாகும் . காலமே ஒழுக்கங்களை வரையறுப்ப தாயின் , காரியத்தைச் செய்பவர்பால் எங்ஙனம் வினைப்பயன்  நிலைபெறும் ?                                                                                                  22

(காலமே எல்லாவற்றையும் நடத்துவதாயின் கருத்தாவுக்குச்  சுதந்திரம்  இன்றாம் ; இன்றாகவே அவனுக்கு  வினைப்பயனுகர்தல் கூடாததாக  முடியுமாதலின் , அரசனே ஒழுக்கங்களை  நடத்துபவனாவானென்பது பொருந்தும் .)

4 . அறத்தின்  மாட்சி

      மக்கள், அரசன் ஒறுத்தற்கஞ்சித்  தங்  கடமைகளிற்  பற்றுடையவர் களாகின்றார்கள் . இவ்வுலகத்தில் தன் கடமையிற்  பற்றுடையவனே ஒளியுடையவனாகின்றான் .                                                                             23

       ஒருவனுக்குத்  தன்  கடமையே  பெருந்தவமாகும் . ஆதலின் , தன்  கடமையைச்  செய்தலினன்றி  நலம்  உண்டாகாது . இடைவிடாது தம் கடமையாகிய  தவத்தைச் செழிக்கச் செய்கின்றவர்க்குத்  தேவர்கள்  ஏவலாளராவரெனின்  , இந்நிலத்து மக்கள் எங்ஙனமாவர் ?                    24

         அரசன்  குலவழியாக  முடிசூட்டப்பட்டு  வந்தவனாயினும் , அஃதின்றி  வந்தவனாயினும்  , அறிவினாலும் , பலத்தினாலும் , வீரத்தாலும்  அரசியலை  யடைந்துளானாயின் ,  அவன்  தன்    கடமையிற் பற்றுடையவனாய்க்  குற்றமிலானாய்ச் செங்கோலனாய்  எல்லோரையும் நீதிமுறையாற்  காத்து , மிகவும் அஞ்சத்தக்க  செவ்விய  தண்டங்களான் மக்களை எப்பொழுதுந்  தத்தங்  கடமைகளிற் பற்றுடையவர்களாக  இருக்கும்படி செய்தல் வேண்டும் . இன்றேல் , அவன்  ஒளி குன்றும் .                                                                                           27

( குலவழியாக  முடி சூட்டப்பட்டுவருதல்  —  முன்னை  அரசனால்  அபிடேகஞ்  செய்யப்பட்டு வருதல் )

     எப்பொழுதும் நுண்ணறிவாற்  காரியம்  புரியும்  அரசனுக்குச் சுருங்கிய செல்வமும்  பெரும்  செல்வமாக  வளரும் . வீரம் , நீதி , பலம் , பொருள்  என்னும்  இவற்றால்  விலங்கினங்களும்  தன் வயத்தனவாகும் .            28

5 . அரசர் சாத்துவிக  முதலிய  குணங்களான் மூவகைப்படுவர்

தவம் , சாத்விகம் , இராசதம் ,  தாமதம்  என்று  மூவகைப்படும் . இவற்றுள் ஒன்றனை மிகுதியாகச்  செய்தவன்  அத்  தவப்பயனை யுடைய  அரசனாகின்றான் .                                                                               29

தன்  கடமையிற்  பற்றும்  , குடிகளைக் காத்தலும்  , எல்லா  வேள்விகளையும்  வேட்டலும்  , பகைவர்களையும்  நன்நெறிப் படுத்தலும் , கொடைக்குணமும்  , பொறுமையும் , ஆண்மையும், புலன்களிற்   பற்றின்மையும் , காம  முதலியன  வின்மையும்  எவன்பாலுள்ளனவோ  அவன் சாத்துவிக அரசனாவான் ; இறுதியில் வீட்டின்பம் எய்துவான்.                                                                                       31

(முதலியன வென்பதால்  காமமொழிந்த ஏனைவிதனங்களையுங் கொள்க )

     முற்கூறிய  அறங்களின்  எதிர்மறைக்குணஞ் செயல்களையுடை யவனும் , அருளற்றவனும் , களித்து  மயங்குபவனும்  பிறரைத்  துன்புறுத்துபவனும் , பொய்யனுமாகிய  அரசன்  தாமத  அரசனாவான். அவன் இறுதியில்  நகரத்துக்காளாவான் ,                        32

     இடம்பனும்  , உலோபியும்  புலனுகர்ச்சியிற்  பற்றுடையவனும் , வஞ்சகனும் , தூர்த்தனும் , மனம் வாக்குக் காயங்களால் வேறுபட்டவனும் , கலகப்பிரியனும் , இழிந்தோர்க்கு அன்பனும் ,தன்  மனம்  சென்றவழி  நடக்கின்றவனும் , நீதியில்லாதவனும் , தீவினையாளனுமாகிய  தாழ்ந்த  அரசன்   இராசத அரசனாவான் . அவன்  இறுதியில்  விலங்கின்  கதியையும் , நிலையியற்  பொருட்டன்மையையும்  எய்துவான் .                                                           33

      சாத்துவிக  குணமும்  தாமதகுணமுந்  தம்முளொத்துநிற்பின்  மக்கட்பிறப்புண்டாகும் , மனிதன்  எதனைப் பற்றி யொழுகுகின்றானோ  ஊழ்வலியால்  அதற்குத்  தக  ஆகின்றான் .   34                                             

( 36 . மனிதப்பிறப்பு சத்துவ  தமோ  குணங்களின் கலப்பாலுண்டா வதாகும் . இப்பிறப்புடைய  ஒருவன் , முக்குணங்களுள்  எதனை எதனை  மிகுதியாக  அடைகின்றானோ , அவ்வக்குணத்திற்குரிய  தன்மையை எய்துவானாதலின் , 35 – ஆம்  சுலோகத்திற் கூறப்பட்டபடி  மனிதப்பிறப்புடைய  அரசன் , தேவ இராக்கத  மனிதத்  தன்மைகளைக்  குணவயத்தாலெய்துவானென்றது இதனோடு முரணாமையுணர்க .)

6  . கன்மமே  எல்லாவற்றிற்குங்  காரணம்

     இவ் வுலகவாழ்க்கையில்   நற்பிறப்புக்குந்  தீயபிறப்பிற்குங்  கன்மமே  காரணமாகும் . முற்பிறப்பிற்  செய்யப்பட்டதுங்  கன்மமே  . ஒரு  கணமேனுஞ்  செயலின்றி யிருப்பவன்  யாவன்?                         37

     இவ்வுலகத்தில் அந்தணராதலும் , அரசராதலும்  , வணிகராதலும்   சூத்திரராதலும் , மிலேச்சராதலும்  பிறப்பினாலில்லை ; குணஞ்  செயல்களாலேயே  வேறுபடுக்கப்பட்டனர் .                                           38

( இக் கருத்தை “பிறப்பொக்கு மெல்லா  வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா , செய்தொழில் வேற்றுமையான் “  “பெருமைக்கு  மேனைச்  சிறுமைக்குந்  தத்தங்  கருமமே  கட்டளைக் கல் “   என்னுந்  திருக்குறள்களிலுங்  காண்க . )

     பிரமனிடத்துத்  தோன்றியது  பற்றி  எல்லோரும்  எங்ஙனம்  பிராமணராவர் ?  சாதியினாலும்  தாய்  தந்தையாராலும்  பிராமணத் தன்மை   எய்தற்பாலதன்று .                                                                             39

     ஞானம்  கன்மம்  தவம்  முதலிய  குணஞ்  செயல்கள் , கடவுள்  வழிபாட்டிற்  பற்று , பொறிகளை  வெல்லல் , அருள் , அடக்கம்  என்னுமிவைகளை  யுடையவனை  அந்தணனாகப்  பிரமன்  இயற்றினான் .                                                                                                         40

     உலகத்தைக்  காப்பதிற்றிறமையும் , வலிமையும் , இந்திரியங்களினடக்கமும் , வீரமும் , தீயவர்களை  யொறுக்குஞ் சீலமும்  உடையவனே  அரசனாவான் .                                                           41

     எப்பொழுதும் பொருள்களைக்  கொள்ளல்  விற்றல்  இவைகளிற்  றிறமையும்  பண்டமாற்று  முதலிய  வாணிகத்  தொழில் களால்  வாழ் தலும் , பசுவோம்பலும் , உழவு செய்தலுமுடையவர்கள்  இந்நிலத்தில்  வைசியர்களாகப்  புகழ்ந்துரைக்கப்படுவர் .                                               42

     இருபிறப்பாளர்களிடத்து வணக்கமும் , அவர்களுக்கு  ஏவற்றொழில்  செய்தலிற்  பற்றும் , வலிமையும் , நல்லொழுக்கமும் , இந்திரியங் களைத்  தம்  வயப்படுத்தலும் , கலப்பை  விறகு  புல்  என்னும்  இவற்றைச்  சுமத்தலாகிய  சிறு  தொழில்  புரிதலும்  உடையவர்கள்  சூத்திரர்  எனப்படுவர் .                                                                                        43

     தத்தங்  கடமையைச்  செய்யாதொழிதலும் , அருளின்மையும் , பிறர்க்குத்  துன்பஞ் செய்தலும் , வெகுளி மேற்கோடலும் , எப்பொழுதும்  தீய செயலே  இயற்கையாதலும் , பகுப்புணர்வின் மையும் ஆகிய  இவைகளையுடையார்  மிலேச்ச ரெனப்படுவார் . 44

     மக்களுக்கு முன்னைச்  செய்த   வினைப்பயனை  நுகர்தற்குத்  தக்கதாகவே  அறிவுண்டாகும் . இன்றேல் , நல்வினை  தீவினைகளின்   முற்படுதற்கு  ஆற்றலின்றாம் .                                                                   45

( முன்னை  வினை  நிகழ்ச்சியை  யொத்தே  ஒருவன்  அறிவு இம்மையில்  நல்வினை தீவினைகளிற் செல்லுமென்பது  கருத்து . “தவமுந் தவம்  உடையார்க்கு  ஆகும்  அவம்  அதனை அஃது இலார் மேற்கொள்வது “ என்னுந்  திருக்குறள் ஈண்டு  நினைக்கத்தக்கது . )

     வினைப்பயன்  விளைதல்  எங்ஙனமோ  அங்ஙனமே  ஒருவனுக்கு  அறிவுண்டாம் . ஊழ்வலி  எவ்வளவினுள்ளதோ   அவ்வளவாகவே  துணைக்கருவிகள் கிடைக்கும் .                                                                 46

     நன்று  தீதனைத்தும்  முன்னை  வினைப்படியே  உண்டாகுமென்று  துணியப்படுமாயின் , தக்கவின்ன   தகாதன வின்னவென்றுணர்த்தும்  முதுமொழிகள் பயனில்லனவாக ஒழியும் .                                             47

     யாவரானும்  போற்றப்படும்  ஒழுக்கமும்  அறிவும் உடைய  பெரியார் , முயற்சியை  ஊழினும்  பெரிதாகக்  கருதுவர் .. முயற்சியைச் செய்தற்கு ஆற்றலில்லாத  பேடியனையார், முன்னை  வினைப்பயனைக்  கூட்டுவிக்கும்  ஊழையே  கடைப்பிடிப்பர்.       48

     எல்லாம்  ஊழைப்பற்றியும்  முயற்சியைப்  பற்றியு முண்டாவனவாம் . தொடங்கப்படும்   வினைக்குப்  பயன்  விளைத்தற்குரிய  சாதனம்  முன்னைப்  பிறப்புகளிற்  செய்த வினைப்பயனாகிய  ஊழும் , இப்பொழுது மேற்கொண்ட  முயற்சி யுமென  இரு வகைப்படும் .                                                                           49

( இக்கருத்து  மிகப்  பாராட்டற்பாலது )                                                                          

     என்றும்  வலியவன், எளியவனுக்கு  ( அவன்  நட்டோனாயின்) நன்றும் , ( பகைவனாயின்)  தீதுஞ்  செய்பவனாவான் . அங்ஙனஞ்  செய்தற்குக்  காரணம் .  அவன் (தன்மாட்டும்  பிறனிடத்துமுள்ள) வலிமை  யெளிமைகளை  ஆராய்ந்தறியும் அறிவும் , அதனால்  விளையும் பயனுமுடையனாதல் . இன்றேல் , அங்ஙனம்  நன்று  தீது  செய்தற்குரியனாகான் .                                                                                   50

     பயன்  எய்துதற்குக்  காரணம்  காட்சியிற்  காணப்படுவதன்று முற்செய்வினையே காரணமாகும் .  இன்றேல்   பயன்  எய்துதல் இன்றாமென்பது  துணியப்படும் .                                                                 51

( இன்றேல்  —  முற்செய்வினை யின்றேல் )                                                          

     மக்களுக்குச்  சிறு  முயற்சியாற்  பெரும்பயன்  விளைகின்றது : அதற்குக்  காரணம்  முற்செய்  வினையேயாகும் . சிலர்  முற்செய் வினையும்  இம்மையிற்  செய்யப்படும்  முயற்சியுங்கூட  அப்பெரும் பயனை விளைவிக்கு மென்ப .                                                                         52

     சிலர் , மக்களுக்கு  இம்மையிற்  செய்யப்படு  முயற்சிகளாலேயே (எல்லாவற்றையுஞ்  செய்து முடிக்கும் ) திறமையுண்டாகுமென்ப . நெய் தோய்ந்ததிரியைப்  பற்றி  நிற்கும்  விளக்கைக்  காற்று  அவித்து விடாது காத்தல் முயற்சியினாலேயே யாகும் .                                            53

     ஒருதலையாக  வரற்பாலனவற்றைத்  தடுத்தற்கியலாது . ஆயினும் , ஒருவன்  தனக்குள்ள  அறிவின்  வன்மைக்குத்  தக்கவாறு பகை  நோய்முதலிய  தீங்குகளைப்  போக்கமுயல்வதே  நன்றாகும் .               54

     ஆதலின் , அரசன்  தனக்கு  வரும்  நலந்தீங்காகிய  பயன்கள்  , சிறுமை  நடுத்தரம்  பெருமையுடையனவாக  இருத்தலான், அவற்றிற் கியைய  ஊழையும்  மூவகைப்படுத்துணர்தல்  வேண்டும் .                    55

     இராவணனுக்கு  ஒரு ( அனுமான் )  குரங்கினால்  வனம்  அழிதலாகிய  தீங்கும் , வீடுமன்  முதலியோர்க்கு  ஒரு  (அருச்சுனன் ) மனிதனால்  நிரை  மீட்டலாகிய  தீங்கும்  ஏற்பட்டன  வென்று அறிதல் வேண்டும் .                                                                                                               56     

     இராமனுக்கும் , அருச்சுனனுக்கும்  நலம்  பயப்பதிற்  காலம்  துணை செய்ததென்பது நன்கு  வெளியாம் .  ஊழ்  நல்லதாங்கால்  சிறு  முயற்சியும்  நற்பயனை விளைவிக்கும் .                                                       57

     ஊழ்  தீயதாங்கால்  பெரிய  நற்செயலுந்  தீயபயனை  விளைவிக்கும் . மகாபலியும் , அரிச்சந்திரனும் கொடையினாலேயே  துன்பமுற்றனர் .                                                                                                     58

(57 – 58 . இச்சுலோகங்களின்  கருத்தை “நல்லவை யெல்லாஅந் தீயவாந்  தீயவு, நல்லவாஞ்  செல்வஞ்  செயற்கு “  என்னுந்  திருக்குறளிற்  காண்க. மகாபலி திருமாலுக்கும் , அரிச்சந்திரன் விசுவாமித்திர  முனிவர்க்குஞ்  செய்த தானங்களாற் பெரிதுந்  துன்புற்றனரென்பது பிரசித்தம் )                                                                                                    

     நற்செயலால்  இன்பமும்  , தீச்செயலாற்  றுன்பமும்  உண்டாம் . ஆதலின் , அறநூல்  வாயிலாக  நல்லனவிவை  தீயனவிவை  யென வுணர்ந்து , தீயனவற்றை  யொழித்து நல்லனவற்றையே  மேற்கொள்ளல் வேண்டும் .                                                                                 59

     அரசன்  காலத்திற்குக்  காரணமாதலால் , நற்செயல்  தீச்செயல் களுக்கும் அவனே  காரணமாவான் . ஆதலின் , அவன்  தன்  அரசியற்  காரியமுகமான  முயற்சியாலும்  , ஒறுத்தலாலும்  மக்களைத்  தத்தங் கடமைகளில்  நிலைப்படுத்தல்  வேண்டும்.                                                  60

7 . அரசியற்குரிய  ஏழு  அங்கங்கள்

     அரசியல் , அரசு அமைச்சு, நட்பு , பொருள்,  நாடு , மதில் , படை  என்னும்  ஏழு  உறுப்புகளையுடைத்து .  அவற்றுள்  அரசு தலையாக  மதிக்கப்படுவதாகும் .                                                                                         61

( இச் சுலோகத்தின்படி “படை குடி கூழமைச்சு நட்பரணாறும்  உடையான ரசருள் ஏறு “  என்னுந்  திருக்குறள்  அமைந்திருத்தல்  காண்க . பொருள்  நாடு  என்பன இக் குறளிற்  கூழ்  குடி  என்று  கூறப்பட்டன . இவ்வுண்மையைப்  பரிமேலழகர்  இதற்கெழுதிய  உரையானுணர்க.  ஈண்டு  அரசியலின் உறுப்புக்களாகக்  கூறப்பட்ட  ஏழனுள்  அரசும்  ஒன்றாம் . திருக்குறளில்  அரசனுடைய உறுப்புக்களாக மற்றை ஆறுங் கூறப்பட்டன . )

     அமைச்சுக்  கண்ணாகவும் , நட்புச்   செவியாகவும் , பொருள்  முகமாகவும் , படை  மனமாகவும் , மதில்  கையாகவும் , நாடு  காலாகவும்  இவ்வாறு  அரசியல்  உறுப்புக்கள்  எண்ணப்படு                     வனவாம் .                                                                                                              62

     எப்பொழுதும் நலங்களைத்  தருவனவும் , தம்மொடு நன்கு  பொருந்திய அரசர்களைப் பெருமைப்படுத்துவனவுமாகிய   இவ்வங்கங்களின் குணங்களை முறையே கூறுவேன் .                          63

     பெரியோர்களைப்பற்றி  யொழுகுகின்றவனும்  கடலைச்  சந்திரன்  மகிழ்விப்பது  போல  மக்கள் கண்களுக்கு இன்பஞ் செய்கின்றவனு மாகிய  அரசன், இவ்வுலக  நலம் வளர்தற்குக்  காரணமாகின்றான் . 64

     அரசன்  காரியங்களைச்  செவ்வையாகச்  செய்திலனாயின் , அவன்  கீழ்  வாழுங்  குடிகள் , கடலில்  மீகாமனில்லாத  மரக்கலம்  போலக்  கேட்டினை யெய்துவர் .                                                                                      65

( மீகாமன் —  மாலுமி )

     இந்நிலத்தில் , குடிகள்  அரசனையின்றித்  தத்தங்  கடமைகளில்   நிலைபெறுவாரல்லர் . அரசனும்  குடிகளையன்றி  விளக்கமுறான் .  66

     அரசன்  செங்கோலனாயின் , தன்னையும்  குடிகளையும்  அறம்  பொருள்  இன்பங்களோடு   பொருந்தச் செய்வான் .  அன்றிக்  கொடுங்கோலனாயின்  , உறுதியாகத்  தனக்குங்  குடிகளுக்கும்  அழிவு  செய்பவனாவான் .                                                                                               67

     யுதிட்டிரன்  ( இந்நிலத்தில் )  துவைதவன மென்னுங்  காட்டிலிருந்து அறம்  புரிந்தமையால் , துறக்கவின்பத்தை  யடைந்தான் . நகுடன்   (துறக்கமுற்றும் ) மறம் புரிந்தமையால் , இரசாதலத்தை  யெய்தினான் .

( யுதிட்டிரன்  —  தருமபுத்திரன் .  நகுடன்  இந்திரலோகத்தையடைந்தும்  இந்திராணி யின்பால்  வைத்த  காமத்தால் , தன்னைச்  சுமந்து செல்லும்  முனிவரைக்  கடிந்து ஏவ , அதனால்  வெகுண்ட  அகத்தியர் , “மலைப்பாம்பாகுக”  எனச் சபித்தனர் . அச் சாபம்  பெற்று  அவன்  மேலுலகத்தினின்று  மிழிந்து பாதாலத்தை யெய்தினான் . )

     வேனன்  என்னும்  அரசன்  அதருமத்தை மேற்கொண்டமையால்  அழிவெய்தினான் .  பிருது  என்னும்  அரசன்  தருமத்தை மேற்கொண்டமையால்  ஆக்கமெய்தினான் . ஆதலின் , அரசன் அறத்தின்  வழியே பொருளீட்ட  முயலல் வேண்டும் .                              69

( வேனன் — சுவாயம்புவின்  வம்மிசத்து அங்கனுக்குக் கனிதையிடம் பிறந்தவன் . தீயொழுக்கமுடையவனாய்  இருடிகளாற்  சபிக்கப்பட்டு  அழிவெய்தினான் .                                                                                                   பிருது —  அவ்வேனனுடைய  புதல்வன் . இவன் அறவழிச் செங்கோல்  செலுத்தியவன் . சனற்குமாரரால்  உபதேசிக்கப்பட்டவன் . இவன்  காலத்தில் ஒருமுறை வற்கடம்  வந்து  அதனாற் பூமி  புற்பூண்டின்றி வறிதாயிற்று . அது கண்ட  இவன் இந் நிலமகளை யழிக்க  ஆயுதத்தோடு  எழுந்தான் . நிலமகள்  அஞ்சித்  தான்  ஒரு  பசுவாகிச்  சுவாயம்பு மனுவைக் கன்றாகக் கொண்டு  வெளிப்பட்டுச் சராசரங்களுக்கு  உணவூட்டி  இவன்  கோபத்தை ஆற்றினாள் . இதனால் , இப்பிருது தரும மேற்கொண்டு உலகத்தைக்  காத்து ஆக்கமெய்தியது புலப்படும். )

8 . அரசன்  கடவுட் கூறுடையனாதல்

     அறத்திற் பற்றுடைய  அரசன்  கடவுட்கூறனாவான் . அங்ஙனமல்லாதவனும் , குடிகளுக்குத்  துன்பஞ் செய்பவனுமாகிய  அரசன்  இராக்கதக்   கூறுடையனாவான் .                                             70

(கடவுட் கூறு —  தெய்வாமிசம் )                                             

     எல்லாவுலகங்களும்  அரசனின்றி அச்சத்தால்  எப்பக்கங்களிலும்  சிதறுண்டிருக்குங்கால் , அவ்வெல்லாவற்றையுங்  காத்தற்பொருட்டுப்  பிரமதேவன்  இந்திரனும் , வாயுவும் , இமயனும் , சூரியனும் , அக்கினியும் , வருணனும் , சந்திரனும் , குபேரனுமாகிய  இவர்களுடைய  அழிவில்லாத  கூறுகளைக்  கொண்டு  அரசனைப் படைத்தான் .                                                                                                   71 – 72

( இந்திரன்முதலிய தேவர்களின் கூறுகளையுடையனாய்ப்  பிறப்பவனே  அரசனாவானென்பது  கருத்து )

     இந்திரன்  தன்  தவவன்மையால் இயங்கியல் நிலையியற்  பொருள்களுக்குத்  தலைவனாய்த்  தனக்குரிய  பாகத்தை யேற்றுக் காத்தல் போல , அரசனும்  அங்ஙனமாய்த்  தனக்குரிய ஆறில் ஒரு கூற்றைப்  பெற்றுக்  குடிகளைப் புரப்பதில்  திறமையுடைய             னாவான்.                                                                                                         73                                                                                                                                     

( இயங்கியற் பொருள்  —  சங்கமம் .  நிலையியற் பொருள் —  தாவரம் . இந்திரனுக்குரிய  பாகமாவது  இவ்வுலகில்  அவனைக் குறித்து  வேள்வியிற் கொடுக்கப்படும் அவிப்பாகமாகும் . )

     வாயு  மணத்தைப்  பரப்புவனாவான் . அங்ஙனமே  அரசன்  தீயவைகளை யொழித்து நல்ல  செய்கைகளைச்  செய்விப்பவ னாவான் . சூரியன்  இருளையோட்டி  ஒளி  செய்தல்போல  அரசன்  அதருமத்தைப்  போக்கித்  தருமத்தில் நிலைப்படுத்துபவனாவான் .  74

( வாயு  நறுநாற்றம்  தீநாற்றமாகிய  இவைகளை வெளிப்படுத்தித்  தீநாற்றத்தில் வெறுப்பும்  நறுநாற்றத்தில்  விருப்பமுறச்  செய்தல் போல , அரசன்  நல்லன  தீயனவற்றை மக்களுக்கு  அறிவித்துத்  தீயனவொழித்து நல்லன மேற்கொள்ளச் செய்பவனாதலின்  இவ்வாறு  கூறப்பட்டது )

     இயமன்  தண்டஞ் செய்வோனாதலின்  தீயன  புரிவோரை யொறுக்கும்  அரசன் அவ்வியமன் கூறாவான் . அக்கினி  தூய்மை யுடையவனாய்த்  தேவர்க்குரிய  எல்லா  அவிப்பாகங்களையும் நுகர்தல் போல, அரசன்  தூயனாய்  எல்லோரையுங்  காத்தற்  பொருட்டு  அவர்  மாட்டுப்பெறத்தக்க  கடமையை அனுபவிப்பவனாவான் .                                                                                      75

(அக்கினி  பிற தேவர்களுக்குரிய  அவிகளெல்லாவற்றையுஞ்  சுவைத்துப் பின் அவரவர்க்குக்  கொடுத்தல்போல , அரசனும்  மற்றைக்  குடிகளுக்குரிய  நுகர்  பொருள்கள்ளெல்லாவற்றினும்  கூறுகொண்டு  , பின் அவரர்பாற்  சேர்ப்பிப்பனென்பது  கருத்து )

     வருணன்  எல்லாவுலகங்களையும்   நீர்ச்சுவையால்  வளர்த்தல்  போல , அரசன்  தன்  பொருள்களால்  வளர்ப்பவனாவான் . சந்திரன்  தன்  கிரணங்களால்  மகிழ்விப்பதுபோல, அரசன்  தன்  நற்குண  நற்செயல்களால்  மகிழ்விப்பவனாவான் .                                                     76

     குபேரன்  நிதிகளைப்  பேணுவதில்  திறனுடையனாதல் போல  அரசன்  பொருட்பெருக்கைக்  காப்பதில்  திறனுடையனாவான். சந்திரன் தன்  கலைக்கூற்றி லொன்று  குறையினும் நிறைமதி யாதல்  கூடாதவாறுபோல , வேந்தன்  இவ்வெல்லாக்  கூறுகளும் நிரம்பப்  பெற்றாலன்றி விளக்கமுறான் .                                                                         77

9 . குடிகளை  யின்புறுத்தும் அரசனுக்குரிய எழுவகைக்  குணங்கள்

     தந்தை,  தாய்,  ஆசிரியன், உடன்பிறந்தான் , சுற்றம் ,குபேரன் , இயமன்  இவ்வெழுவரின்  குணங்களை யென்றுமுடையவனே  அரசனாவான் . அவையில்லாதவன்  அரசனாகான் .                              78

     அரசன்  தன்  குடிகளுக்குத்  தந்தையைப் போல  நற்குணங்களைப்  பயிற்றுவதிற் பற்றுடையனாகின்றான் . தாயைப்போலக்  குடிமக்களை  வளர்த்து அவர்கள்  புரியுங்  குற்றங்களைப் பொறுக்கின்றான் .         79

     ஆசிரியன்  மாணாக்கர்களுக்கு  நல்ல  கல்வியைப் பயில்வித்து இதோபதேசஞ்  செய்தல்போல , அரசன்  தன்  குடிகளுக்குக்  கல்வியைக்  கொடுத்து  நன்நெறியைப்  போதிப்பவனாகின்றான் .  உடன்  பிறந்தான்  தந்தையின்  பொருளினின்று   அறநூல்  விதிப்படி  மற்றைச் சோதரர்க்கு  உத்தாரக்கூறிடல்  போல , அரசன்  குடிகளுக்கு  அவ்வாறு  செய்பவனாகின்றான் .                                                                 80

( உத்தாரம் —  எடுகூறு  —  பாகநிருணயம் – இதன்  விரிவை  மனுதரும  சாத்திரம்  9 ஆம்  அத்தியாயத்திற் காண்க .)  

     அரசன்  நண்பனைப்   போலத்  தன்னையும் , பெண்களையும் , பொருள்களையும் , மறைபொருள்களையும்  பாதுகாத்தலாற்  சுற்றமாகின்றான் . பொருளைப்  பிறர்க்குக்  கொடுப்பதாற்  குபேரனும் முறைப்படி  தண்டஞ்செய்வதால் , இயமனும்  ஆகின்றான் .                 81

(இக் கருத்து “உடுக்கையிழந்தவன்  கைபோல வாங்கே  யிடுக்கண்  களைவதா நட்பு”  என்னுந் திருக்குறளை  நினைப்பூட்டுவதாகும் .)

     செல்வச்  சிறப்புமிக்க  சீரிய  அரசனிடத்து இக்குணங்கள்  தங்கியிருக்கும் . ஆதலின் , அரசனால்  ஒரு பொழுதும் இவ்வேழு குணங்களும்  விடற்பாலனவல்ல .                                                                  82

     எவன்  வலியனாயிருந்தே குடிகள் செய்யுங்  குற்றத்தைப்  பொறுக்கின்றானோ, அத்தகைய  அரசன் குடிகளை  யடக்கி யாள்வதிற் றிறனுடையவனாவன் . பிற  எல்லா  நற்குணங்களும் அமையப்பெற்றவனாயினும் , பொறுமையில்லாத  அரசன்  சிறப்புறான் .                                                                                                          83

     எவ்வரசன்  தன்னைப்  பற்றிப்  பிறர்கூறும் பழிப்புரையைப்  பொறுத்துக்கொண்டு , தன்பாலுள்ள தீயகுணங்களை  யொழித்து, எப்பொழுதுங்  கொடையாலும் , பெருமைப்படுத்தலாலும் , ஆதரவாலும்  தன்கீழ்  வாழுங்  குடிகளை  மகிழ்வுறுத்தி , பொறியடக்கமும் , வீரமும் , படைக்கலத்திறனும் , பகைவரை  வெல்லுதலும் , அறநூல்வழி  யொழுகுதலும் , ஆராய்ந்தறிதலும் , அறிவும் , மெய்யுணர்தலும் , கயவர்களோடு கலவாமையும் ,நெடிது சூழ்ந்துணர்தலும் , பெரியோரைப் பின்பற்றுதலும் , நடுவுநிலை மையும் , புலவர்களோடு  அளவளாவுதலுமாகிய  இவ்வெல்லா வற்றையு முடையவனாயிருக்கின்றானோ  அவனைக்  கடவுட்கூறனாய்  அவதரித்தவனென்று  அறிதல்  வேண்டும் .    86

     இவற்றிற்கு  மாறுபட்ட  குணஞ் செயல்களையுடைய  அரசன்  இராக்கதக்கூறு  உடையனாவன் . அவனே  நரகம்  எய்துவோனாவான் . எவ்வரசன்  எக்கூற்றை யுடையவனோ  அவனைச்  சார்ந்த பரிவாரங்களும் அங்ஙனமே யாவர் .                                                   87

     அரசன்  தன்  துணைவர்  புரியுங்  காரியங்களை  நோக்கி , அவர்கள்  ஊழ்  நல்லதாக விருப்பின் , அவற்றை யேற்று மகிழ்ச்சி யடைகின் றான் .  அன்றி அவ்வூழ்  தீயதாகவிருப்பின் , அவர்தம் செயல்களை  யேற்றுக்  கோடலும் , அதனால்  மகிழ்வடைதலும் இலனாகின்றான் . 88

     செய்வினைப்  பயன்கள்  சாந்தியில்வழி மனிதர்களால்  ஒருதலையாக  நுகரற்பாலனவே . சாந்தி  செய்யப்படுமாயின் , அங்ஙனம் நுகரற்பாலன வல்ல .                                                                       89

( ஒருவன் தான்  செய்த தீவினையின் பயனைக் கடவுளர்க்குச்  செய்யும்  பூசைகளாற் பரிகாரிக்கலாமென்பது  கருத்து )

     மருந்தினால்  நோய்  நீங்கப்பெற்றவன்  இன்ப நுகர்தற்கு உரிமையுடையனாதல் போலச்  சாந்தியாற்  றீவினைப்பயனீங்கப்  பெற்ற  அரசன்  இன்பம்  எய்துவன் . துன்பத்திற்கு ஏது வின்னதென்று ணர்ந்து   வைத்தும் , அதனைச்  செய்தற்கு முயல்பவன்  யாவன் ?  (ஒருவனுமிலன்  என்பதாம் )                                                                               90

( அதனை —  அத்துன்ப காரணத்தை )

     நல்வினைப்  பயனில்  மனம்  இன்புறும் ; தீவினைப்பயனில்  எவர்க்கும்  மனம்  இன்புறுவதில்லை . நன்று  தீதுகளைத் தெள்ளிதிற் புலப்படுத்தும்  அறநூல்களைப்  பார்த்து  ஒழுகல்  வேண்டும் .               91

     நீதி  வழங்குதற்கு  விநயங்  காரணமாகும் . நூல்களின்  உண்மைப்  பொருட்டுணிவால்  உண்டாகும் விநயத்திற்குப்  பொறியடக்கங்  காரணமாகும் . அப்பொறிகளை யடக்கியாளும் ஆற்றலுடையவன் நூல்களின்  உண்மைப்  பொருள்களை யறிபவனாவன் .                         92

     அரசன்  முதலில்  தான்  பணிவுடையனாய் , அதன்பின்  முறையே  புதல்வரையும் , அமைச்சரையும் , மற்ற  வினைசெய்வாரையும் , குடிகளையும்  பணிவுடையவர்களாகப்  பயிற்றுவித்தல்  வேண்டும் .  93

     வேந்தன் ( தான்  ஒழுகிக்  காட்டாது ) பிறர்க்குபதேசிக்குமளவில்  திறனுடையனாக  விருத்தல் கூடாது .  அங்ஙனம்  பிறர்க்கு உபதேசிக்குங்  குணம்  படைத்தும் , ஓரோவமயத்திற் குடிபுரந்தருதலில்  தவறுடையனாதலுங்  கூடும்.                                                                             94

( புரந்தரல் —  காத்தல் .  ஈண்டு “ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந்  தானடங்காப்,  பேதையிற் பேதையாரில்”  என்னுந்  திருக்குறள் நினைவுகூறுதற்பாலது .)

     குடிகளை  தீயகுணங்களை  யுடையவர்களாயினும் , தமக்கு  ஓர்   அரசனையின்றி  இருக்கமாட்டார்கள் . இந்திராணி  என்பாள்  என்றுந்  தலைவனை  யுடையவளாக விருத்தல்  போல , குடிகளும் என்றும் அரசனை  யுடையவர்களாகவே  இருப்பார்கள் .                                          95

     எவ்வரசனுக்கு  அடக்கமில்லாத  அமைச்சரும் , வணக்கமில்லாத  தாயத்தாரும் ,கொடியவராகிய  புதல்வர்  முதலியோரும்  உள்ளாரோ , அவ்வரசனது அரசுரிமை திருவிழந்ததாகும் .                                                96

     என்றுந்  தன்பால்  அன்பு  பூண்டொழுகும்  அமைச்சர் முதலியோரை  யுடையவனும் , குடிகளைப்  புரப்பதில்  விசேடப்  பற்றுடையவனும் , வணக்கமுடையவனுமாகிய  அரசன்  மிக்கசெல்வத்தை  அனுபவிப்பவனாவான் .                                                                                       97                                                                                       

10 . பொறியடக்கத்தின்  இன்றியமையாமை

     புலன்களாகிய  பெருங்காட்டில்  ஓடித் திரிவனவும் , அடக்க வொண்ணாதனவுமாகிய  பொறிகளென்னும்  யானைகளை , அறிவென்னுந்  தோட்டியால் அடக்கி  வயப்படுத்தல்  வேண்டும் .          98       

( இச் சுலோகத்தின்  கருத்து “உரனென்னுந்  தோட்டியா னோரைந்துங்  காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து “  என்னுந்  திருக்குறளை நினைவுறுத்துகின்றது )

     மனம்  புலன்கலாகிய  நுகர்பொருள்களில்  வைத்த  பேரவாவினாற்  பொறிகளைச்  செலுத்துகின்றது . ஆதலின்

, பெரிதுமுயன்று அம் மனத்தை  யடக்கல்  வேண்டும் . மனம்  அடங்கிற்  பொறியடக்க முடையனாவன் .                                                                                                   99

     ஒரு மனத்தை  யடக்கி  யாள்வதில்  ஆற்றலில்லாத  அரசன்  கடல்  சூழ்ந்த இந் நிலவுலகத்தை  எங்ஙனம்  தன்  வயப்படுத்தி  ஆளக்கடவன் ?                                                                                                      100

     வினைமுடிவிற்  றுன்பம்  விளைவிப்பனவும் , தோற்ற மாத்திரத்தில்  மனத்தைக்  கவர்வனவுமாகிய  புலன்களின் வயப்பட்ட  மனத்தையுடைய  அரசன் ( புலன்களின் வயப்பட்டுக் கட்டுண்ணும்) யானையைப்  போற்  பிறரால்  அகப்படுத்தப்படுவன்.                            101

     ஓசை , ஊறு , ஒளி , சுவை , நாற்றம்  எனப்  புலன்கள் ஐந்துள . இவற்றுள் ஒவ்வொன்றே  அழிவெய்துதற்குப்  போதியதாகும்              102

( ஓசை முதலிய ஐம்புலனுகர்ச்சியா  லழிவெய்து முயிர்களைப்  பின்வரும்  ஐந்து  சுலோகங்களிலும் முறையே  காண்க )

     தூய்மையும்  தருப்பைப்புன்  முளை யுணவும் , நெடுந்தூரம் ஓடுதலில் வன்மையும்  உடைய  மான்கள்  வேடனது  உரத்த இசைப்பாட்டினால்  மயங்கித்  தமக்கு  அழிவினைத் தேடுகின்றன . 103

( இஃது ஓசையா லழிவெய்தும்  உயிரைக் குறிப்பதாகும் )

     பெரிய மலைச் சிகரம் போன்ற உருவமுடையதும் , விளையாட்டால்  மரங்களை வேறுடன் பிடுங்குவதும் ஆகிய  யானை,  பெண்  யானையின் ஊற்றின்பத்தால் மயங்கிக்  கட்டுண்டு  அகப்படுத்தப்படுகின்றது .                                                                               104

( இஃது ஊற்றின்பத்தா லழிவெய்தும்  உயிரைக்  குறிப்பதாகும் )

     நெய்யினால்  எரியும்  விளக்கின்  சுடரைப்  பார்ப்பதனால்  மயக்க முற்ற கண்களையுடைய விட்டில் , அம்மயக்கத்தால் விரைந்து அவ்விளக்கில்  வீழ்ந்து இறக்கின்றது .                                                           105

(இஃது ஒளியாலழிவெய்தும்  உயிரைக்  குறிப்பதாகும்)

     ஆழமாகிய  நீரில்  முழுகித்  திரியும் மீன் , செம்படவனுக்குச் சேய்மையிலிருந்தும்  அவனால்  இடப்படும் தூண்டிலின்கண்  உள்ள  ஊனையுண்டு  அழிவெய்துகின்றது .                                                            106

(இது சுவையா லழிவெய்தும்  உயிரைக் குறிப்பதாகும் )

     வண்டு  பூவிதழ்களைக்  கடித்து  உதிர்க்குந்  திறமையும் , வெளிச் செல்லுதற்குரிய  இறகுகளின் துணையும் உடையதாயிருந்தும் , மணத்தின்  மயக்கத்தால் தாமரைப்  பூவினுட் படுகின்றது .                107

(இது  நாற்றத்தால் மயக்கும்  உயிரைக்  குறிப்பதாகும்)

     தனித்தனியே  கேடு  விளைக்கும் நஞ்சையொத்த புலன்கள் ஐந்தும் ஒன்றுசேரின்  யாதுதான்  செய்யா ? தின்ணமாக  அழிவு   செய்வனவாம்.                                                                                                      108

11 . சூது  முதலிய  விதனங்கள்      

(விதனங்களை    “வேட்டங்  கடுஞ்சொன்  மிகுதண்டஞ் சூதுபொரு ளீட்டங்கட்   காமமோடேழு”  என்பதனான்  அறிக )

     சூதாடலும் , பெண்விளைச்சும் , கட்குடித்தலுமாகிய இம் மூன்றும்  பலவகைத்  துன்பங்களை விளைவிப்பனவாதலின் , மேற்கொள்ளத் தகாதவைகளாம் . இம்மூன்றும் பொருந்துமாற்றான் அளவோடு செய்யப்படின் முறையே பொருளையும் , மகப் பேற்றையும் , அறிவையுந்  தருவனவாம் .                                                                             109

     நளன் தருமபுத்திரன் முதலியோர் சூதாடலைக்  கபடமின்றி மேற்கொண்டமையால் , நாடு  முதலியன இழந்து துன்பமுற்றனர் . ஆதலின் , அவ்வுபாயத்தை யறிந்தவர்க்குக்  கபடத்தோடு கூடிய  சூதே பொருளைத் தருவதில் வலியுடையதாகும் .                                                110

(நளனும் , தருமபுத்திரன்  முதலியோரும் , வஞ்சகமின்றிச் சூதாடலை மேற்கொண்டமையால் முறையே வஞ்சகராகிய புட்கரனாலும்  துரியோதனாதிகளாலும்  நாடு  முதலியன கவரப்பட்டு வருந்தினரென்பது பிரசித்தம் )

     பெண்களின் பெயரைக் கூறுமளவில் அதுவே இன்பம் விளைவித்து மனத்தை விகாரப்படுத்துவதாகும் . அங்ஙனமாயின, இன்ப  விளையாட்டான்  மகிழ்வுறுத்தும் புருவங்களையுடைய அம்மகளிரின் காட்சி  யாதுதான்  செய்யாது ?                                                                      111

     மறைவில்  தன்  உள்ளக்  கருத்தை வெளிப்படுத்துவதிற்  றிறமை வாய்ந்தவளும் , மெல்லிய  குரலாற் றடைப்பட்டு  பேசுகின்றவளும் , சிவந்த  கடைக்கண்களையுடைய வளுமாகிய  பெண்மகட்கு ஆடவருள்  வயப்படாதவன்  யாவன் ?                                                           112

     பெண்பாலார் பொறிகளை வென்ற முனிவரர்  மனத்தையும் நிச்சயமாகக்  காமுறச் செய்வரெனின் , வேறு கூறற்பாலது யாதுளது? பொறிவழி யுள்ளம் போக்குவார் நிலை யாதாய்   முடியும் ?                  113

     அங்ஙனம் எப்பொழுதும் மகளிர்பால்  அவா  மேற்கொண்டொழுகிய  இந்திரன் , தண்டகன் , நகுடன் , இராவணன்  முதலிய இப்பலரும் கேடெய்தித்  துன்பமுற்றனர் .                                                                          114                                                                 

( இந்திரன் அகலியையோடு கரவிற்  புணர்ந்தமையால்  கெளதம முனிவராற் சபிக்கப்பட்டுத் துன்பமுற்றான் . தண்டகன்  என்னும்  அரசன்  பார்க்கவரது  ஆச்சிரமத்திலிருந்த அவர்  புதல்வியாகிய அரசையை வலிந்து பற்றினமை காரணமாக  , அப்பார்க் கவர் சாபமிட , அதனால்  அவன்  நாடு  எரிந்து சாம்பராயிற்று.  அவனும்  புதல்வர் முதலியோரோடு  மரணம் எய்தினன் . நகுடனும்  இராவணனும்  முறையே இந்திராணியையும்  சானகியையும்  காமுற்றுக்  கேடெய்தினர்)

     காமம்  ஒன்றையே  பற்றி  யொழுகாத  ஆண்மகனுக்கே  கற்புடையாள்  என்றும்  இன்பந்தருபவளாவள் . அத்தகையாளையன்றி  மனைவாழ்க்கையிற்  றுணைசெய்பவள்  வேறொருத்தியுமிலள் .      115

     கள்ளை மிகுதியாகக்  குடிப்பவனுக்கு அறிவு கெடும் .  சிறிதளவு உண்ணப்படும்  மதிநுட்பத்தையும் , தூய அறிவையும் அஞ்சாமையையும் , மனவுறுதியையும் தருவதாகும் . இன்றேல்,  இவ்வெல்லாவற்றையும் அழிப்பதாகும்.  காமமும்  வெகுளியும்  மிக்க  மதத்தினைச்  செய்வனவாதலின் , விதிப்படி வேண்டிய அளவு கொள்ளற்பாலனவாம் .                                                                           116 , 117

     அரசன் மக்களைப்  பெற்று  வளர்ப்பதற்குக்  காமத்தையும் , வெற்றி  விருப்பத்தாற்  பகைவரை  யடக்குதற்கு  வெகுளியையும், படைகளைக்  காத்தற்குப்  பேரவாவையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .

     பிறர்மனை  நயத்தலிற்  காமமும் , பிறர்  பொருள்  கவர்வதிற்  பேரவாவும் , தங்கீழ்  வாழுங்  குடிகளை  யொறுப்பதில் வெகுளியும் , அரசர்கள்  என்றும்  மேற்கொள்ளற்பாலன வல்ல                                   119

     பிறர்மனை   நயத்தலையுடையானை  இல்வாழ்வானெனவும் , தன்  கீழ்  வாழுங்குடிகளை  அலைப்பானை  வீரனெனவும், பிறர்  பொருளைக்  கவர்ந்து  தொகுத்தவனைப்  பொருளுடையானெனவுங்  கூறுதல் பொருந்தாது .                                                                                     120

     தேவர்கள்  காத்தற்றொழிலை  மேற்கொள்ளாத  அரசனையும் , தவஞ்செய்தலில்லாத  அந்தணனையும் , ஈதலில்லாத  பொருளுடை யானையுங்  கீழ்வீழ்த்தி  யழிப்பர்.                                                               121

     தலைவனாதலும் , கொடையாளியாதலும் , பொருளுடையனா தலுமாகிய  இவை  நல்வினைப்  பயன்களாம் .  ஏவலாளனாதலும் , இரப்போனாதலும் , வறியவனாதலுமாகிய  இவை  தீவினைப்  பயன்களாம் .                                                                                                       122

     ஆதலின் , அரசன்  நீதி நூல்களை  யாராய்ந்து , தன்னை  நன்னெறிப் படுத்தி , இம்மை  மறுமைகளில்   இன்பம்  விளைத்தற்குரிய  தன்  அரசியற்றொழிலை  விதிப்படி  செய்தல்  வேண்டும் .                             123

12 . அரசனுடைய  எண்வகைத்  தொழில்கள்

     தீயோரை  யொறுத்தலும் , ஈதலும் , குடிகளைக்  காத்தலும் , இராசசூய  முதலிய  வேள்விகளை  வேட்டலும் , அறநெறி  பிறழாது  பொருளீட்டலும் , பிற  அரசர்களைத்  திறைதரச் செய்தலும் , பகைவரைத்  தொலைத்தலும் , மேன்மேலும்  நிலப்பகுதி  கோடலுமாகிய  இவ் வெட்டும்  அரசர்க்குரிய  தொழில்களாம் . 124 –125

( திறை – சிற்றரசர்  பெருநிலவேந்தர்க்குக்   கொடுக்குங்  கப்பம் )

     தம்  படைகளைப்  பெருக்காதவரும் , பிறவேந்தர்களைத்  திறை  செலுத்தச்  செய்யாதவரும் , குடிகளை  நன்கு  ஓம்பாதவருமாகிய  அரசர்கள் பேடியை  யொப்பர்.                                                                    126

13 . அரசனுடைய  குணங்குற்றங்கள்

     குடிகள்  தன்றொழிலைப்  பழித்துத்  தன்னை  வெறுக்க  ஒழுகுவோனும் , அறிவுடையோராலும்  பொருளுடையோராலும்  விலக்கப்படுபவனுமாகிய  அரசன்  மிக  இழிந்தவனாவான்            127

     நடரும் , இசைபாடுவோரும்,  வரைவின் மகளிரும் , மல்லரும் , அலிகளும் , தாழ்குலத்தோருமாகிய  இவர்களிடத்து  மிக்கபற்று  வைத்தொழுகும்  அரசன் , யாவராலும்  பழிக்கப்பட்டுப்  பகைவர்  முகத்தில்  இருப்பவனாவான் .                                                                     128

( பகைவர்  முகத்திலிருத்தல் – அவர் வெல்லுதற்கெளியனாதல் )

     எப்பொழுதும்  நல்லறிவுடையோரை  வெறுத்தும் , தீயவர்களோடு  கூடி  மகிழ்ந்தும்  தன்பாலுள்ள  தீயகுணங்களை  யறியாமலும்  ஒழுகுகின்ற  அரசன் , தனக்குத்  தானே அழிவு  செய்பவனாவான்.  129

     பிறர்  பொருளைக்  கவர்பவனும் , குடிகளுக்குத்  துன்பம்  இழைப்பவனும் , கொடிய  தண்டம்  விதிப்பவனுமாகிய  அரசன்   தன்  தீயகுணங்களைக்  குடிகள்பாற்கேட்டு , அதனால்  அக்குடிகளைத்  தீங்கு  செய்தவர்களாக  எப்பொழுது  எண்ணுகின்றானோ , அப்பொழுதே  உலகம்  கலக்கமுற்று  வேறுபடும் . ஆதலின் , அவன்  அங்ஙனம் உலகம்  கலக்கமுற்று  வேறுபடுதற்குரிய  தன்  ஒழுக்கத்தை, நன்குணர்ந்த அமைச்சர்  முதலியோர்க்கு  மறைவிற் கண்டு  சொல்லும்  ஒற்றர்களால்  அறிவித்து , அவ்வமைச்சர்  முதலியோருள்  யாவர்  பழித்துரைக்கின்றனர் . யாவர்  எக்கருத்தாற்  புகழ்ந்துரைக்கின்றன  ரென்பதும், தன்  தீய   குணங்களையும் நற்குணங்களையு  முணர்ந்து  யார்யார்  தன்மாட்டு  எத்தகைய  விருப்பு  வெறுப்புடையவர்களாக  இருக்கின்றனரென்பதும் ஆகிய  எல்லாவற்றையும்  அவ்வொற்றர்கள் மறைவிற்கண்டு  கூறக்கேட்டும், அவற்றை  உலகத்தாரால்  எப்பொழுதும்  உணர்ந்தும் , நல்ல  புகழ்  என்றும்  நிலைபெறுதற்  பொருட்டுத்  தன்பாலமைந்த  தீய  குணங்களை  யொழித்தல்  வேண்டும். அதுபற்றித்   தன்  குடிகளை  அவமதித்தல்  கூடாது .”வேந்த ! நின்னை  உலகம்  பழிக்கின்றது” என்று  ஒற்றர்கள்  சொல்லக்  கேட்ட  அளவில்  தன்  தீய  இயற்கையால்  வெகுளி  மேற்கொள்ளுவானாயின் , அவன்  தன்  தீய  குணங்களை   மறைப்பவனாவான் .  இராமபிரானாற்  கற்பிற்  சிறந்த  சீதை , உலகம்  கூறும்  பழிச்சொற் காரணமாக  விலக்கப்பட்டாள் .  அவ்விராமபிரான்  மிக்க  பலசாலியாகவிருந்தும்  அப்பழிச் சொல்லை  வெளிப்படுத்திய  வண்ணானை  ஒரு  சிறிதுந்  தண்டித்திலன் .  அவ்வரசர்  பெருமானாகிய  இராமன்  உலகியலறிவோடு  தத்துவஞானமுடையவ னாதலின், அவ்வண்ணானுக்கு  அபயம்  அருளினான் .

( ஒரு  வண்ணான்  வேற்றிடஞ்  சென்று  வந்த  தன்  மனைவியை  நோக்கி, “ இராவணனாற்  கவரப்பட்டு  மீண்டு  வந்த  சீதையை  யேற்றுக்கொண்ட  இராமன்  யான்  அல்லன் ; ஆதலின்  நின்னை  ஏற்றுக்  கொள்ளேன் “  என்று  கூறிய  சீதாபவாதத்தை  மறைவிற்  கண்டு  கூறும்  ஒற்றன்  முகமாகக்  கேட்ட  இராமபிரான், அதுபற்றி  அவ்வண்ணானைச்  சினவாது , சீதாபிராட்டியாரை  மீண்டும்  வனத்தை  யடைவித்தாரென்பது  புராண கதை.)

     அரசனது  பெருங்குற்றத்தையும்  அவன்  முன்னிலையிற்  கூறுதற்கு  உலகம்  அஞ்சும் . திருமால்  முதலிய  தேவர்களெல்லோரும்  புகழ்ச்சியில்  விருப்பமுடையவர்களென்று  வேதங்  கூறும் .  அங்ஙனமாயின்  , மனிதர்களைப்  பற்றிக்  கூறுவதென்? இதனால், என்றும்  ஒருவர்க்குப்  பிறர்கூறும்  பழிப்பினாற்  கோபமுண்டாகு மென்பது  போதரும்.  ஆதலின் , அரசன்  என்றும்  பகுத்துணர்ந்து  தண்டிப்பவனாகவும் , மிக்க  பொறுமையுடையவனாகவும்  குடிகளை  இன்புறுத்துபவனாகவும்  இருத்தல்  வேண்டும் .                                 137-138

     இளமையும் , வாழ்க்கையும் , மனமும் , உடலொளியும் , திருவும் , தலைவனாந்தன்மையுமாகிய  இவ்வாறும்  நிலையுடையனவல்ல  வென்றுணர்ந்து  அறத்திற்  பற்றுடையனாதல்  வேண்டும் .                   139

( சாயை {மூலத்தின்  மாயா} என்பது  ஈண்டு  உடலின்  ஒளியை  உணர்த்திற்று.)

     அரசன்பால்  கொடையின்மையும், பிறரை  அவமதித்தலும் , கபடமும் , வன்சொல்லும் , மிகப்  பெருந்தண்டமும்  அமைந்திருப்பின்  அவனைக்  குடிகள்  ஒழித்துவிடுவர் .                                                           140

     மாறுபட்ட  இக்குணங்களால்  அரசனைக்  குடிமக்கள்  பரம்பரையாக  வெறுப்பர் . தீயகுணம்  ஒன்றே  மிக்க  பழியை  யுண்டாக்குமாயின்  அக்குணம்  பலவாக  அமையின்  யாது  செய்யா?

( இச்சுலோகத்தில்  முற்பாதிக்கு  “முன்னர்க்  கூறிய  தீய  குணங்களுக்கு  மாறுபட்ட  கொடை  முதலிய  நற்குணங்களால்  அரசனைக்  குடிகள்  பரம்பரையாகப்  போற்றுபவராவர் “ என்று  வேறு  விதமாகவும்  பொருள்  கூறலாம் . )

     அரசர்களுக்கு  வேட்டையாடலும் , சூதாடலும் , கட்குடித்தலுமாகிய  இவை  வெறுக்கற்பாலனவாம் . இம்மூன்றானும்  முறையே  பாண்டுவும் , நளனும் , யாதவர்களும்  துன்பமெய்தினர் .                   142

( பாண்டு  வேட்டையாடுங்கால் , மானுருக்கொண்டு  புணர்ந்து  இன்பம்  நுகர்ந்த  கிந்தம முனிவரையும் , அவர்  மனைவியையும்  அம்பெய்து  வீழ்த்தான் . அப்பொழுது அம்முனிவர்  பாண்டுவை  நோக்கி , “நீயும்  நின்  மனைவியோடு  கூடி  இன்பந்துய்க்குங்கால்  உயிர்  நீக்கக் கடவை “  என்று  சபித்தனர் . நளன்  சூதாடி  நாடு  நகரங்களை யிழந்து, நடுநிசியிற்  காட்டிற்  றன்  மனைவியையும்  பிரிந்து  துன்புற்றான்.  யாதவர் – கண்ணன்  குலத்தவர் , இவர்கள்  ஒன்று  கூடித்  தவஞ்  செய்யும்  முனிவரைப்  பரிகசித்தமையால், அம்முனிவர்  சபித்தனர். அச்சாபப்  பயனாக  இவருள்  ஒருவன்  வயிற்றினின்று  இருப்புலக்கை யொன்று  பிறந்தது . அதனை அராவிக்  கடலில்  எறியும்படி  கண்ணன்  கூற  அங்ஙனமே  செய்யப்பட்ட  அவ்விருப்புத் துகள் , சம்பங்கோரைகளாக  முளைத்தன.  பின்னொரு  சமயம்  கடற்கரைக்கு  விளையாடச்  சென்ற  இவ் யாதவரனைவரும் , நிரம்பக்  கள்ளுண்டு  களித்துத்  தம்முட்  கலாம்விளைத்து , அங்கு  முளைத்திருந்த  கோரைப் புற்களைப்  பிடுங்கி  அடித்துக்கொண்டு  மாண்டனர் . )

அரசன் காமம், வெகுளி, மோகம், உலோபம், மானம், மதம் என்னும் இவ்வறுவகைக் குற்றங்களையும் களைதல் வேண்டும். இவை  அங்ஙனம்  களையப்படின்  அவன்  இன்பம்  நுகர்பவனாவான் .

( இவ்வறுவகைக்  குற்றங்களுள் , மோகத்தை  உவகை யெனவும் , உலோபத்தைக்  கடும்பற்றுள்ள  மெனவும்  பரிமேலழகர்  கூறுவர் . {திருக்குறள் , 44  ஆம்  அதிகார அவதாரிகை}.  இவற்றை  முறையே  சிறுமை , சினம் , மாணாவுவகை , இவறல் , மானம்,  செருக்கு  என்று  திருவள்ளுவர்  கூறுவர் . { திருக்குறள் , 44  ஆம்  அதி – 1, 2  செ .})

     காமத்தால்  தண்டகனென்னும்  அரசனும் , கோபத்தாற் சனமே  சயனும் , உலோபத்தால்  அயிலனென்னும்  இராசவிருடியும் , மோகத்தால்  வாதாபி  என்னும்  அசுரனும் , மானத்தாற்  புலத்திய  குமாரனாகிய  இராவணனும் , மதத்தினால்  தம்போற்பவனென்னும்  அரசனும்  அழிவெய்தினர்                                                                     144-145

( தண்டகன் – இக்ஷுவாகுவின்  புதல்வன். இவன்  விந்தியத்திற்கும்  சைவலத்திற்கும்  இடையேயுள்ள  நாட்டை யாண்டவன் . சுக்கிரரின்  புதல்வியாகிய  அரசையை  வலிதிற்  புணர்ந்த  காரணத்தால்  அச்சுக்கிரரார்  சபிக்கப்பட்டுத்  தன்  நாட்டில்  மண்மாரி  பொழியத்  தானும்  அழிவெய்தினான் .  உலோபம் – ஈண்டுப்  பிறர்  பொருளைப்  பெறுதற்கண்  உண்டாம்  பேரவா. அயிலன்  –  இளையின்  புதல்வன்  , அம்பிகையின்  தவவனத்தை  யறியாமல்  அடைந்த  வைவசுவத  மனுவின்  புதல்வருள்  ஒருவன் , இளையெனும்  பெயர்  மடவரலாயி னன். அவ் இளையின்பால்  சந்திரன்  புதல்வனாகிய  புதனுக்குப்  பிறந்த  புரூரவா  என்பவனே  அயிலனாவான் . இவன்  பொருளாசை  மேற்கொண்டு , சனற்குமாரர்  முதலிய  பெரியோர்களின்  உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல்  , அந்தணர்களுடைய  இரத்தின  முதலிய  பொருள்களையெல்லாங் கவர்ந்து கொண்டு , அது  காரணமாக  முனிவராற்  சபிக்கப்பட்டு  அழிவெய்தினான் . வாதாபி – அசமுகியின்பால்  துருவாசகருக்குப்  பிறந்த  ஓர்  அசுரன் . இவனை  ஆடாக்கி  இவன்  சகோதரன்  முனிவர்  பலர்க்கு  விருந்திடுதலும்  , இவன்  அம்  முனிவர்  வயிற்றைக்  கிழித்து  வெளிவருதலும்  வழக்கம் . அம்முறையே  அகத்திய  முனிவர்க்கு  விருந்திட  , அவரால்  உண்டு  சீரணிக்கப்பட்டான் . மானமாவது , கருதியது  செய்யத்  தகாததா யினும்  அதனை  முடித்தேவிடுந்  தீயகுணம்  . இதனால்  இராவணன்  அழிவெய்தினானென்பது வெளிப்படை . தம்போற்பவன் –  இவன்  செல்வ முதலியவற்றாற்  களித்து  நாராயணராற்  பங்கமடைந்தவன் . )

     ஆண்மையிற்  சிறந்த  பரசுராமனும் , செல்வப்பெருமை மிக்க  அம்பரீடனும்  இவ்வாறுவகைப்  பகைகளையுந்  துறந்து  நெடுங்காலம்  இந்நில வுலகத்தை ஆட்சி  செய்தனர் .                                                    146

( பரசுராமர் —  இவர்  சமதக்கினி  புதல்வர் ; திருமாலின்  அம்மிசாவ தாரம் , சிவபிரானை  நோக்கித்  தவம்புரிந்து  பரசு  பெற்றவர் . வீரத்தாலும் , தவத்தாலும்  சிறந்தவர் . இவர் ஒரு காரணத்தால் சூரிய வம்சத்து அரசர்களை யழித்துப் பூமியை யாண்டு  பின்  காசிபருக்குத்  தானஞ்செய்தனர் . அம்பரீடன் – இவன்  சூரிய  வம்மிசத்து  நாபகன்  புதல்வன் . திருமால்  பத்தியிற்  சிறந்தவன் . திருமாலின்  ஆழிப்படை  யுதவியால்  துருவாசரும்  தன்பால்  அடைக்கலமெய்தப்பெற்றவன் . )

     அரசன்  முயற்சியாற்  பொறியடக்கமுடையனாகவும் ; இந்நிலவுலகத்தில்  நல்லறிவுடையார்  ஒழுகிய  நெறிநின்று , அறம் பொருள்களை  வளர்த்துப்  பெரியோர்களிடத்து  வணக்கமுடையனா கவும்  இருத்தல்  வேண்டும் .                                                                           147

     ஆசிரியனையடுத்தல்,  நூலுணர்ச்சி  யெய்தற்  பொருட்டாம் . அந்நூலுணர்வு , பணிவுடைமை  மேற்கொள்ளுதற்பொருட்டாம் . இங்ஙனம்  கல்வி  பணிவுடைமையாகிய  இரண்டனையுடைய  அரசன்  பெரியோர்களின்  அன்பிற்கு  உரியனாவன் .                                           148

எவ்வரசன்  தீயொழுக்க முடையவர்களால்  ஏவப்பட்டுத்  தகாத  செயல்களிற்புகாமலும் , வேதமும் , அறநூலும் , உலகியலுமாகிய  இவைகளின்  முகமாக  நெஞ்சத்தான்  நன்கு ஆராய்ந்து  துணியப்பட்ட  அறமெனப்  பெயரிய  நற்செயலை  முயன்று  கடைப்பிடித்தும் , கொள்வனவுங்  கொடுப்பனவுமாகிய  கூறுகளில்  திறமை  பூண்டும்  ஒழுகுகின்றானோ  அவன்  பண்டிதனாவான் .                                    149-150

( கொள்வனவாகிய  கூறுகள் – பிற  அரசர்  தரும்  திறை , குடியிறை , சுங்க  முதலியன . கொடுப்பனவாகிய  கூறுகள் – குடிமக்களின்  நலங் குறித்துக்  கல்வி  உழவுத்தொழில்  வாணிக முதலியவற்றிற்கு  உதவி  புரிதல் .)

     பொறியடக்கமுடையவனாய்  நீதி  நூல்  வழியொழுகும்  அரசனுக்குச்  செல்வம்  வளரும் .  அங்ஙனம்  அவன்  புகழ்  விட்புலத்தையுந்  தொட்டு  நிற்கும் .                                                             151

14 .அறிவுநூல்  முதலியவற்றின்  இலக்கணங்கள்

     ஆன்வீட்சிகி , திரையீ , வார்த்தை , தண்டநீதி  ஆகிய  பழமையான  இந்நான்கு  வித்தைகளையும்  அரசன்  எப்பொழுதும்  பயிலவேண்டும் .

( ஆன்வீக்ஷிகீ – வேதங்கள்  பயின்ற  பின்னர்  ஆராய்தற்குரியது.  திரையீ – மும்மறை.  தண்டநீதி – செங்கோன் முறை.)

     ஆன்வீட்சிகியில் , நுனித்துணரப்படும் வேதாந்த  முதலிய  அறிவுநூல்கள்  விரித்து  விளக்கப்பட்டன.  திரையீயினுள்  தருமமும் , அதருமமும் , விருப்பும் , வெறுப்புமாகிய  இவை  விளக்கப்பட்டன . 153

     வார்த்தை  என்பதனுள்  பொருளீட்டு  நெறியும் , அதன்  இடையூற்றையொழிக்கு முறையும்  விரித்துரைக்கப்பட்டுள்ளன . தண்ட நீதியில்  நீதி  அநீதிகளை  யுணர்ந்து  செய்வனசெய்தல்  கூறப்பட்டுள்ளது . இவ்வித்தைகளில்  அந்தணர்  முதலியோரின்  குலவொழுக்கங்களும் , பிரமசரிய  முதலிய  ஆச்சிரம  ஒழுக்கங்களும்  விரித்துரைக்கப்பட்டன .                                                                                 154

     நான்கு  வேதங்களும் , அவற்றின்  அங்கமாகவுள்ள  நூல்களும் , மீமாஞ்சையும் , விரிந்த  தருக்க  நூல்களும் , மனுமுதலிய  அறநூல்களும்  , புராணங்களுமாகிய  இவ்வெல்லாம்  திரையீ  யென்று  கூறப்படும் .                                                                                                        155

     வட்டித் தொழில் , உழவுத்தொழில் , பண்டமாற்று , பசுவோம்பல்  முதலியவை  வார்த்தை யென்று  சொல்லப்படும். இவ்வார்த்தையை யுடைய  நல்லோர்க்கு  வாழ்க்கையிற்  சிறிதும்  அச்சமின்று .             156

( “உழவு  பசுக்காவல்  வாணிகம்  என்னும்   வார்த்தையுமாம்” என்பர்  பரிமேலழகர் [[திருக்குறள் . 512 – உரை]] )

     தீயோரை  யொறுத்தலே  தண்டமாகும் . அதனைச்  செய்யும்  அரசன்  அதனால் (காரிய  காரண  அபேதத்தால் ) தண்டம்  என்று கூறப்படுவன. அவ்வரசனது  நீதியே  தண்ட  நீதி  என்பதாம் . நன்று  தீது  துணிதற்குரிய  கருவி  நீதி  யெனப்படும் .                                                 157

( தண்டம் – செங்கோல்.)

     அறிவுநூற்பயிற்சியால்  ஆன்மஞானமும் , அதனால்  இன்பத்  துன்பங்களின்  ஒழிவும்  உண்டாம் . விதிப்படி  வேத  முதலியவற்றின்  நெறியொழுகுவோன்  இம்மை  மறுமை  இன்பங்களை  யெய்துவான்.

     எல்லா  வுயிர்களுக்கும்  அருட்குணமே  சிறந்த  அறமாகும் . ஆதலின், அரசன்  அவ்வருளினாலேயே  எளியோரைக்  காத்தல்  வேண்டும் .   159

     அரசன்  தனக்கு  இன்பம்  விழைந்து  அதனிமித்தம்  எளியோரைத்  துன்புறுத்தலாகாது. துன்புறுத்துவானாயின் , துன்புறூஉம்  எளியோன்  தன்  இறப்பால்  அவ்வரசனை  யழிப்பவனாவன் .                                    160

15 . நல்லார் இணக்கம்

நல்லோன்  அறமும்  இன்பமுமாகிய  இவற்றின்  பொருட்டு  நன்மக்களோடு  பழகுதல்  வேண்டும் . நன்மக்களாற்  சூழப்படுவோன்  மிக்க  விளக்கமெய்துவான் .                                                                          161

     தண்கதிர்ச்  செல்வனாகிய  சந்திரன்  புதிய  குவளை  மலர்களை  யலர்த்தி ஓடையை  விளங்கச்  செய்தல்போல் , நல்லோர்  தம்  உயர்ந்த  செயற்களாற்  றம்மை  அடுப்பவர்களின்  மனத்தை  இன்புறச்செய்வர்.

     முதிர்வேனிற்  காலத்துக்  கதிரவன்  கிரணங்களால்  வெதும்புவதும் , மிக்க  அச்சத்தை  விளைவிப்பதும், அணுகவொண்ணாததுமாகிய  பாலை  நிலத்தைப்  போல , மிக்க  கேட்டினை விளைவிக்கும்  தீயோர்  கூட்டுறவை  யொழித்தல்  வேண்டும் .                                                     163

     தீயோர்கள்  சேர்க்கையிலும் , மூச்சுக்  காற்றுக்களால்  வெளிப்படும்  தீயின்  புகையினாற்  கருதிய  செவ்வியநிறம்  வாய்ந்த  முகங்களையு டைய  நச்சுப்பாம்புகளோடு  பழகுதல்  நன்றாம் .                                 164

     நலத்தை  விரும்புவோன்  யாவராலும்  மதிக்கப்படும்  நல்லோர்க்குச்  செய்யும்  வணக்கத்திலும்  விசேடமாகத்  தீயோர்க்குச்  செய்தல்   வேண்டும் .                                                                                                          165

( தீயோர்களை  இன்சொற்களால்  மகிழ்வித்து  விலக்கல்  வேண்டுமென்பது கருத்து .)

16 . இன்சொற் கூறல்

     இன்சொற்களால்  எப்பொழுதும்  உலகத்தை  மகிழ்வித்தல் வேண்டும்.  கடுஞ்சொற்  கூறுவோன்  கொடையாளனாயினும்  உயிர்களை  வெறுக்கச்  செய்பவனாவன் .                                                 166

     நல்லறிவுடையோன்  தான்  பிறராற்  றுன்புறுத்தப்படினும் , அவரை  நோக்கி  நெஞ்சத்தைப்  பிளப்பதுபோல்  மிக்க  வெதுப்பஞ்  செய்யும்  கடுஞ்சொற்களைக்  கூறலாகாது .                                                                  167

     மயில்  தனக்கு  இயற்கையாக  வாய்ந்த  கேகை  யென்னும்  இனிய  ஒலியையே  யாண்டுஞ்  செய்தல்போல , நல்லோர்  நட்டோரிடத்தும்  பகைவரிடத்தும்   என்றும்  விரும்பத்தக்க  இன்சொற்களையே  கூறுவர்.                                                                                                                   168

     களிப்பு  மிக்க  அன்னம் , குயில் , மயில்  என்பவற்றின்  ஒலி யினுஞ்  சிறக்கப்  புலவர்கள்  கூறும்  இன்சொற்கள்  நன்கு  பிறர்  மனத்தைக்  கவர்வனவாம் .                                                                                                 169

     பிறரை  மகிழ்வித்துப்  பெருமைப்படுத்துவதில்  விருப்பமும்  இன்சொற்கூறுதலும்  உடையார் , மனிதவுடலைப்  பெற்றும் , யாவரானும்  பாராட்டப்படும்  இயல்பு  வாய்ந்த  பெருஞ்  செல்வர்களாகிய  தேவராவர் .                                                                  170                                                                                                   

( இக்கருத்தை  “வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையுந்  தெய்வத்துள்  வைக்கப்படும் “ என்னுந்  திருக்குறளிலுங்  காண்க )

     பிறரை  வயப்படுத்துதற்கு  உயிர்களிடத்து  அருளும் , நட்புரிமையும்  கொடையும்  இன்சொல்லுமாகிய  இவைகளை யொப்ப  மற்றொன்று  இம்மூன்றுலகத்திலு மின்றாம் .                                                                     171

     அரசன்  கடவுளுண்மையை  மேற்கோடலாற்  றூய்மை யுடையனாய்க்  கடவுளை  யென்றும்  வழிபடல்  வேண்டும் . கடவுளை   யொப்ப  இருமுது  குரவர்  முதலியோரையும் , தன்னையொப்பச்  சுற்றத்தார்  நட்டோர்  முதலியோரையும் , வைத்துப்  பேணல்  வேண்டுமென்பது  மறையின்  றுணிபாம் .                                              172

     அரசன்  வேதவேதாங்கங்களை  யுணர்ந்தவர்களாற்  சூழப்பட்டுப்  பெரியோர்களையும்  குரவர்களையும்  வணக்கத்தினாலும் , தனக்கு  நலம்  உண்டாதற்பொருட்டுத்  தேவர்களை  நற் கருமத்தாலும்  அனு கூலர்களாகச்  செய்துகோடல்  வேண்டும் .                                             173

     நண்பரையும்  சுற்றத்தாரையும்  நல்லெண்ணத்தாலும் , மகளிரை  அன்பினாலும் , ஏவலாளரை  விசேட  உபகாரத்தாலும் , மற்றை  மக்களைக்  கண்ணோட்டத்தாலும்  வயப்படுத்தலாம் .                      174

    வலிமையும் , மதிநுட்பமும் , வீரமும் , வேண்டிய அளவு  மேற்கொள்ளும்  பராக்கிரமமுடைய  அரசன்  பெருநிலவேந்தனாய்ச்  செல்வம்  நிறைந்த  இந்நிலவுலகத்தை  அனுபவிப்பவனாவன் .      175

     பராக்கிரமும்,  வலிமையும் , மதிநுட்பமும் , வீரமுமாகிய  இவைகளே  சிறந்த  குணங்களாம் . இவைகள்  வாய்க்கப்  பெறாமல்  இவற்றிற்கு  வேறான  குணங்கள்  அமையப்பெற்ற  அரசன்  மிக்க  பொருளுடைய னாயினும் , நிலப்பகுதியின்  ஒரு  சிறு  கூற்றையும்  அனுபவிப்பா னல்லன் . அதுவன்றி , விரைந்து  இராச்சியத்தினின்றும்  நழுவிடுவான். அரசர்கட்குரிய  வலிமை  முதலிய  இக்குணங்களாலேயே  சிற்றரசனும்  தவறாத  ஆணையும்  ஒளியும்  உடையனாய்  அக்குணங்களமையப்  பெறாத  பெரும்பொருள்  படைத்த  வேந்தனினும்  சிறப்புற  விளங்குவான் . மற்றைச்  சாமானிய  மக்கள்  நிலத்தை யடக்கியாள் வதிற்  றிறமையற்றவராவர்.                                                                    176-178

     இவ்வுலகம்  எல்லாப் பொருட்கும் இருப்பிடமாதலின் , இதன்  பொருட்டே  தேவதானவர்களின்  போர்  நிகழ்ந்தது . அரசர்கள்  இந்நிலத்தின்  பொருட்டே  தம்  உயிரையும்  விடத்துணிகின்றனர்.  179

     எவ்வரசன்  தன்  அனுபவத்தின்  பொருட்டுப்  பொருளையும்   உயிர்வாழ்தலையும்  பேணி , நிலத்தைக்  காவாதொழிகின்றானோ , அவ்வரசனுக்கு  அப்பொருளானும் , உயிர்வாழ்தலாலும்  வரக்கடவதாகிய  பயன்  யாது?                                                                     180

     ஒருவனுக்கு  மேன்மேலும்  வருவாயின்றேல் , இருப்புப்பொருள்  விரும்பியவாறு  மிகுதியாகச்  செலவு  செய்தற்குப்  போதியதாகாது . உண்மையாகவே  குபேரனுக்கும்  அவ்வாறாம் .                                      181

     இத்தகைய  குணங்கள்  வாய்க்கப்  பெற்ற  அரசனே  பாராட்டப்படு வான் . அரசர்  குலத்திற்  பிறந்ததனால்மட்டிற்  பாராட்டப்படுவா னல்லன் . வலிமை , வீரம் , பராக்கிரம  முதலிய  குணங்களாலுண்டாம்  பெருமை  குலப்பிறப்பாற்  பெறத்தக்கதன்று .                                           182

17 . அரசர்களைப்  பற்றிய  வகைகள்

     குடிகளைத்  துன்புறுத்தாமல்  ஒவ்வோராண்டிலும்  ஓர்  இலக்கம்  கருடம்  என்னும்  அளவுள்ள வெண்பொற்  காசுகளை  யுறுதியான  வருவாயாகவுடைய  அரசன்  சாமந்தன் என்று  சொல்லப்படுவான் . அக் காசு  ஓர்  இலக்கத்திற்கு  மேல்  மூன்றிலக்கம்  அளவு  யாண்டு  தோறும்  வருவாயாகவுடையவன்  நிருபன்  என்று  கூறப்படுவான் . அதற்குமேல்  அக்காசு  பத்திலக்கம்  வரை  யாண்டுதோறும்  வருவாயாக  வுடையவன்  மாண்டலிகன்  என்று  கூறப்படுவான் .183-184

( கருடம் – இது வடமொழியில் ‘ கர்க்ஷம்’  எனப்படும் ; பத்து மாட  அளவினது. மாடம் ஒன்று . பத்துக்  குன்றிமணி  எடை  கொண்டதாகும் . இதனை  2 ஆம்  அத்தியாயம்  385  ஆம்  சுலோகத்திற்  காண்க . வெண்பொன் – வெள்ளி . )

     பத்தின் மேல்  இருபது இலக்கம்  வரை அக்காசு  யாண்டுதோறும்   வருவாயாகவுடையவன்  அரசன்  எனப்படுவான் . இருபதின்  மேல்  ஐம்பது  இலக்கம்  வரை  யாண்டு  தோறும்  வருவாயாகவுள்ளவன்  பேரரசன்  என்று  கூறப்படுவான் .                                                                  185

     ஐம்பது  இலக்கமுதல்  ஒரு கோடிவரை  வருவாயாகவுடையவன்  சுராட்டு  எனப்படுவான் .  ஒரு  கோடி முதல்  பத்துக்கோடிவரை  வருவாயாகவுடையவன்  சம்மிராட்டு  என்று  சொல்லப்படுவான் .  பத்துக்கோடி  முதல்  ஐம்பது  கோடிவரை  வருவாயாகவுள்ளவன்  விராட்டு  எனப்படுவான் . அதற்குமேல்  ஏழு  தீவங்களையுமுடைய  நிலமுழுதையும்  தன்வயப்படுத்தாள்பவன்  சார்வபெளமன்  என்னும்  சக்கரவர்த்தியாவன் .                                                                          186 -187

     தனக்குரிய  அரசிறையாகிய  வேதனத்தைப்  பெறுதலாற்  குடிகளின்  ஏவலாளாந் தன்மையெய்திய  அரசன் , எப்பொழுதும்   குடிகளைக்  காத்தலாற்  றலைவனாகப்  பிரமனாற்  செய்யப்பட்டான் .

( குடிகளையோம்புதலே  அரசன்  கடமையாதலின் , அது குறித்துக்  குடிகள்பாற்  பெறும்  இறை  அவனுக்கு   வேதனமாம் என்பதும் , ஏவலாளாந்தன்மை யுடையானென்பதுங்  கருத்து .)

     இவ்வுலகில்  வேதனத்தினிமித்தம்  காத்தற்றொழிலை  மேற்கொண்டு  சாமந்தன்  முதலியவர்களை  யொப்ப  அரசியற் றொழில்  புரியும்  அதிகாரிகள் , முறைப்படி  அரசனுக்குரிய  இறைப்பொருள்களைக்  கொள்வோராய்ச் , சாமந்தன்  முதலிய  பெயர்களையும்  உடையராவர் .                                                                  189

( சாமந்தன்  என்னும்  பெயர் , ஓர்  அரசன்கீழ்  வேதனம்  பெற்று  அவ்வரசனுக்குரிய  கூறுகளையும்  இறைப்பொருள்களையும்  குடிக ளிடத்தினின்றும்  வாங்கி  அரசனுக்குச்  செலுத்தும்  அதிகாரிகளுட்  சிலர்க்கும்  பொருந்துவதாகும் .  அவ்வதிகாரிகள்  முற்கூறிய  சாமந்த  அரசனுக்குரிய  வருவாயளவு  பொருள்களை  வரவு செலவு  செய்பவராக  இருக்கவேண்டுமென்பது  கருத்து . )

     சாமந்தன் முதலிய  நிலைகளினின்றும்  பிறழ்ந்தவர்களாயினும் , பேரரசன்  முதலியோரால்  அவ்வந்  நிலைக்குத்தக  வேதனந்தந்து  காக்கப்படுவோர்  ஈன  சாமந்தன்  முதலிய  பெயர்களையுடை யவராவர் .                                                                                                             190

     நூறு  சிற்றூர் (கிராமங்)  களுக்குத்  தலைவனாகவுள்ளவனும்  சாமந்தன்  என்னும்  பெயரையுடையவனாவான் . அரசனால்  நூறு  சிற்றூர்களுக்கு  அதிபதியாக  நியமிக்கப்படுபவன்  அநுசாமந்தனாவான் .                                                                                        191

( அநுசாமந்தனாவான் –  அரசனிடத்தினின்று  வேதனம்  பெற்று  நூறு  கிராமங்களுக்கு  அதிகாரியாயினான் . )

     பத்து  சிற்றூர்களுக்கு  அதிபதியாக  நியமிக்கப்படுபவன்  நாயகன்  என்று  சொல்லப்படுவான் .  பதினாயிரம்  ஊர்களின்  அரசிறைப் பொருள்களைக்  கொண்டு  சேர்ப்பவன்  திக்குப்பாலன்   எனவும்  சுராட்டு  எனவுங்கூறப்படுவான் .                                                                    192

18 . நிலத்தின்  அளவு  வகைகள்

     ஒரு  குரோச  அளவுள்ளதும் , ஆயிரங்கருட அளவுள்ள  வெண் பொற்  காசுகள்  அரசிறையாகப்  பெறத்தக்கதும் கிராமமென்று  சொல்லப்படும் .  அக்கிராமத்தின்  அரைக்கூறு  பல்லி  எனவும் , அதனின்  அரைக்கூறு  கும்பம்  எனவுங்  கூறப்படும் .                       193                         

     ஐயாயிர  முழம்  ஒரு  குரோசமாகுமென்று  பிரசாபதியினாலும் , நாலாயிரமுழம்  ஒரு  குரோசமாகுமென்று  மனுவினாலுஞ் சொல்லப்பட்டன .

பிரசாபதி – பிரமன் .)

     பிரமாவின்   கொள்கைப்படி  இரண்டரைக்கோடி  முழங்களாதல்  இரண்டாயிரத்தைஞ்ஞூறு  சதுர  நிவர்த்தனங்களாதல்   ஒரு  குரோசத்தின்  சதுர  அளவாகும் .                                                                  195

( இதன்  முற்சுலோகத்தில் பிரமன் கொள்கைப்படி  ஐயாயிர முழம் ஒரு குரோசமாகுமென்றமையால் , அவ்வையாயிரத்தைச்  சதுர  அளவில்  வைத்துப்  பெருக்க  இரண்டரைக்கோடி  முழமாதலும் , நிவர்த்தனம்  ஒன்றுக்கு  முழம்  நூறாதலின் , அந்நூற்றைச்  சதுர  அளவிற்  பெருக்க  அந்நிவர்த்தனம்  ஒன்றுக்கு  முழம்  பதினாயிரமாதலும் , அப்பதினா யிரத்தை   இரண்டாயிரத் தைஞ்நூற்றாற்  பெருக்க  முற்குறித்த  இரண்டரைக் கோடி  முழம்  பொருத்தமாதலுங்  காண்க . முதனூலா சிரியர்  சதுர  அளவுள்ள  நிலத்தைக்  கேத்திரம்  என்ப . முழத்தின்  அளவையும் , நிவர்த்தன அளவையும்  197 , 200 , 202  – ஆம்  சுலோகங்களிற்  காண்க )

     நடுவிரலின்  நடுவண்  உள்ள  இரண்டு  கணுக்களின்  நடுப்பாக  நீளம்  அங்குலமென்று  கூறப்படும் . யவமென்னும்  தானியத்தின்  நடுப்பாகம்  எட்டுக்கொண்ட  நீளமும்  அதன்  ஐந்து  கொண்ட  அகலமும்  ஓர்  அங்குலமாகும் .                                                                       196

(அங்குலத்துக்குக்  கூறிய  அகலம்  அளவையிற்  பயன்படுவதன்று . சிற்பத்துக்கிது  கருவியாதலின் , செய்கையாங்கால்  பயன்படவுங்  கூடும் . “நூறுமுழநீள அகலத்தின்  ஓரில்லம்  அமைக்க” என்று  சுருக்கிக்  கூறுங்கால்  , யவம்  எட்டுக்கொண்ட  அங்குலம்  இருபத்து நான்கு ஒரு முழமாக  நீளத்திலும், யவம் ஐந்து கொண்ட அங்குலம் இருபத்தி நான்கு முழமாக அகத்திலும்  அளப்பிற்கிழமேல்  நீண்டும்  தென்வடல்  குறுகியும்  இருக்கும் . )

     அவ்வங்குலம்  இருபத்துநான் கு  கொண்டது  ஒரு  முழமாகும் என்று  பிரசாபதியால்  எண்ணப்பட்டது . நில அளவையில்  இம்முழ அளவே  சிறந்ததாகும் . இஃதன்றி  மற்றை  முழ அளவுகள்  தாழ்ந்தனவாக  எண்ணப்பட்டன .                                                                                                 197

     நான்கு  முழங் கொண்டது  ஒரு  கோல் எனவும் , ஐந்து  முழங்  கொண்டது  இலகு  எனவும்  கூறப்படும் . அக்கோலுக்குரிய  அங்குலம்  ஒன்று , ஐந்து  யவதானியத்தின்  நடு  அளவு  அறுநூறு  கொண்டது  ஒரு  கோலாகுமென்பது  மனுவின்  கருத்தாகும் .                                               198

( கோலை  முதனூலார்  தண்டமென்ப .)

     யவதானியத்தின்  நடுப்பாகம்  எழுநூற்றறுபத்தெட்டுக்  கொண்டது  ஒரு  கோலாகுமென்பது  பிரசாபதியின்  கருத்து . யவதானியத்தின்  நடு  அளவு  அறுநூறு  கொண்டது ஒரு  கோலாகுமென்பது  மனுவின்  கருத்தாகும் .                                                                                                          199

( பிரசாபதி கருத்தின்படி  யவம்  எட்டுக்  கொண்டது  ஓர்  அங்குலமும், அவ்வங்குலம்  இருபத்து  நான்கு  கொண்டது  ஒரு  முழமுமாகுங்கால் , அம்முழம்  நான்கு  கொண்ட  கோல்  ஒன்றுக்கு  யவதானியம்  எழுநூற்றறுபத்தெட்டு  ஆதல்  காண்க . மனுவின் கொள்கைப்படி  யவம்  ஐந்து  கொண்டது  ஓர்  அங்குலமும் , அவ்வங்குலம்  இருபத்து நான்கு  கொண்டது  ஒரு  முழமுமாகுங்கால் , அம்முழம்  ஐந்து  கொண்ட  கோல்  ஒன்றுக்கு  யவதானியம்  அறுநூறாதல்  காண்க . இதனால்  ஐந்து  முழங்  கொண்டது  ஒரு  கோலாகுமென்பது  மனுவின்  கொள்கை  யென்று  புலப்படுகின்றது . )

     மனு  பிரசாபதி  இவ்விருவர்களின்  கொள்கைப்படி  இருபத்தைந்து  கோல்கள்  கொண்டது  நிவர்த்தனமென்று  கூறப்படும் . மனுவின்  கொள்கைப்படி  மூவாயிரம்  அங்குலங்களாதல் , பதினையாயிரம்  யவதானியத்தின்  அளவாதல் , நூற்றிருபத்தைந்து , முழமாதல்  ஒரு  நிவர்த்தனமாகும் .                                                                                             200

( மனுவின்  கொள்கைப்படி  கோல்  ஒன்றுக்கு  முழம்  ஐந்தாகக்  கோல்    இருபத்தைந்திற்கு  முழம்  நூற்றிருபத்தைந்தாதலும் , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  நூற்றிருபதாகக்  கோல்  இருபத்தைந்திற்கு  அங்குலம்  மூவாயிரமாதலும் , அங்குலம்  ஒன்றிற்கு  யவதானியம்  ஐந்தாகப்  பதினையாயிரமாதலுங்  காண்க .)

     பிரசாபதியின்  கொள்கைப்படி  பத்தொன்பதினாயிரத்து   இரு  நூறு  யவதானியத்தின்  அளவாதல் , இரண்டாயிரத்து  நானூறு அங்குலங்களாதல் , நூறு  முழமாதல்  ஒரு  நிவர்த்தனமாகும் .             202

( பிரசாபதி  கொள்கைப்படி  கோல்  ஒன்றிற்கு  முழம்  நான்காகக்  கோல்  இருபத்தைந்திற்கு  முழம்  நூறாதலும் , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  தொண்ணூற்றாறாகக் கோல்  இருபத்தைந்திற்கு  அங்குலம்  இரண்டாயிரத்து  நானூறாதலும் , அங்குலம்  ஒன்றிற்கு  யவதானியம்  எட்டாகப்  பத்தொன்பதினாயிரத்து  இருநூறாதலுங்  காண்க . )

     பிரசாபதி  மனு  இவ்விருவர்களின்  கொள்கைகளின்படி  அறு  நூற்றிருபத்தைந்து  கோலாதல் , இருபத்தைந்து  நிவர்த்தனங்களாதல்  கொண்டது  பரிவர்த்தனமென்று  கூறப்படும் .                                          203

     மனுவின்  கொள்கைப்படி  எழுபத்தையாயிரம்  அங்குலமும் , பிரசாபதியின் கொள்கைப்படி  அறுபதினாயிரம்  அங்குலமும்  கொண்டது  பரிவர்த்தனமாகும் .                                                                    204

( மனுவின்  கொள்கைப்படி  ஐந்து  முழங்கொண்ட  கோல்  அறுநூற்றிருபத்தைந்திற்கு , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  நூற்றிருபதாக  அங்குலம்  எழுபத்தையாயிரமாதல்  காண்க . பிரசாபதியின்  கொள்கைப்படி  முழம்  நான்கு  கொண்ட  கோல்  அற்நூற்றிருபத்தைந்திற்கு , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  தொண்ணூற்றாறாக  அறுபதினாயிரமாகும் .)  

     மனுவின்  கொள்கைப்படி  மூவாயிரத்து  நூற்றிருபத்தைந்து  முழமாதல் , முந்நூற்  றெழுபத்தையாயிரத்து  யவதானியத்தின்  அளவாதல்  பரிவர்த்தனமாகும் .                                                          205-206

( மனுவின்  கொள்கைப்படி  கோல்  அறநூற்றிருபத்தைந்திற்குக்  , கோல்  ஒன்றிற்கு  முழம்  ஒன்றிற்கு  ஐந்தாக  முழம்  மூவாயிரத்து  நூற்றிருபத்தைந்தாலும் , முழம்  ஒன்றிற்கு  யவம்  முந்நூற்றெழுபத் தையாயிரமாதலுங்  காண்க . பிரசாபதியின்  கொள்கைப்படி  கோல்  அறுநூற்றிருபத்தைஞ்நூறாதலும் , முழம்  ஒன்றிற்கு  யவம்  நூற்றுத் தொண்ணூற்றிரண்டாக  யவம்  நானூற்றெண்பதினாயிர  மாதலுங்  காண்க . )       

     மனுவைப்  பின்பற்றி  யொழுகும்  வேறு  சிலர்  முப்பத்திரண்டு  நிவர்த்தனங்களாதல் , நாலாயிர  முழங்களாதல் ,எண்ணூறு  கோல்களாதல்  ஒரு  பரிவர்த்தனமாகுமென்று  கூறுவர் .                207

( இதன் கட்  கூறிய  பரிவர்த்தன  அளவு  நன்றாகும் . )          

     அப்பரிவர்த்தன  அளவுவிடயத்தில்  , இருபத்தைந்து  கோல்கள்  கொண்டது  ஒரு  புயமாகும் .  அப்புயத்தின்  சதுர அளவு  பதினாயிர  முழங்களாகும் .                                                                                             208

( இதன்  முற்சுலோகத்தில்  பரிவர்த்தனமாகிய  பேரளவிற்கு  அங்கமாக  முழம்  கோல்  நிவர்த்தனங்கள்  கூறப்பட்டன . இதன்கண் , அப்பேரளவிற்கு  அங்கமாகப் ‘புயம்’  என்பதொன்றைப்  புதிதாகக்  கூறுகின்றார் . பெயரளவில்  வேறுபட்டிருப்பினும் , எண்ணில்  நிவர்த்தனமும்  புயமும்  ஒன்றாகும் . கோல்  ஒன்றுக்கு  முழம்  நான்காகக் கோல்  இருபத்தைந்திற்கு  முழம்  நூறாகும் . அந்நூற்றைச்  சதுர  அளவிற்  பெருக்க  முழம்  பதினாயிரமாதல்  காண்க .

பிரசாபதி                                    மனு                                               அளவு

யவம்-8                                          யவம்-5                                          அங்குலம்-1

அங்குலம்-24                                அங்குலம்-24                                முழம்-1

முழம்-4                                          முழம்-5                                         கோல்-1

கோல்-25                                       கோல்-25                                       நிவர்த்தனம்-1

நிவர்த்தனம்-25                           நிவர்த்தனம்-25                          பரிவர்த்தனம்-1

முழம்-5000                                    முழம்-5000                                   குரோசம்-1

     நான்கு  புயங்கனின்  அளவுள்ளது  உழவுநிலப்  பரிவர்த்தனமென்று  கூறப்படும் . அரசன்  நிலப்பரப்பை எப்பொழுதும்  பிரசாபதியின்  அளவுப்படி  அளத்தல்  வேண்டும் . தனக்குக்  கேடுவிளையுங்கால்  மனுவின்  அளவை  மேற்கொள்ளல்  வேண்டும் . வேறுவிதமாக  அளத்தல்  கூடாது . பேராசையால்  நில அளவை  வேறுபடுத்துக்  குடிகளைத்  துன்புறுத்தும்  அரசன்  தன்  குலத்தோடு  கேடெய்துவான் .

( கேடு  விளையுங்கால்  மனுவின்  அளவைக் கொள்ளவேண்டுமென்பது  அவ்வளவின்  குறைவு  பற்றிப்  போலும் . )

     அரசன்  இரண்டங்குல  அளவுள்ள  நிலத்தையேனும்  பிறர்  பொருட்டுக்  கொடுத்தலாகாது .  அன்றிக்  கொடுக்க  நேர்ந்தால் , பெறுவோன்  வாழ்நாள்  அளவுஞ்  சீவித்தற்  பொருட்டுத்  தன்  உரிமையை  விட்டுக்கொடுக்கலாம் .                                                       211

     நற்குணமுள்ள  அரசன்  தேவாலயங்  கட்டுதற்பொருட்டு  எப்பொழுதும்  நிலங்கொடுத்தல்  வேண்டும் . அங்ஙனமே  இல்லறத்  தொழுதுவோரை  யாராய்ந்து  அவர்  வீடு  கட்டுதற்  பொருட்டேனும் , ஆராமம் [பூந்தோட்டம்] அமைத்தற்பொருட்டேனும்  நிலங்கொடுத்தல்  வேண்டும் .                                                                                                         212

19 . இராசதானி யமைத்தல்

     பலவகை  மரங்கொடிகள் அடர்ந்ததும் , விலங்கினம்  பறவைத்  தொகுதிகளையுடையதும் , மிக  நிரம்பிய  நீர்வளத்தையும்  தானியங்களையுமுடையதும், எப்பொழுதும் புல்  விறகுகள்  எளிதிற்  பெறத்தக்கதும் , கடல்வரை  தோணிகளால்  சென்று வருதற்குரிய  சாதனங்கள்  அமைந்ததும் , மிக்க  அணிமையில்  மலையினை யுடையதுமாகிய அழகிய  சமநிலத்தில்  இராசதானித்  தலைநகர்  அமைத்தல்  வேண்டும் .                                                                             213-214

     நிறைமதியின்  அரைக்கூறு , வட்டம் , சதுரம்  என்னுமிவற்றுள்  ஒன்றன்  வடிவமைந்து  எழில்  வாய்ந்ததாகவும் , அரணும்  அகழியும்  கிராம  முதலிய  பகுதிகளும்  இடையிடையே   மன்றங்களுமாகிய  இவற்றையுடையதாகவும் , கிணறு  ஓடை  ஊருணி  முதலிய  நீர்  நிலைகளும்  நாற்புறமும்  பெருவாயில்களும்  அழகிய  தெருக்களும்  உபவன  வரிசைகளும்  உறுதியான  தேவாலயங்களும்  மடங்களும்  வழிச்செல்வோர்  தங்குமிடங்களுமாகிய  இவற்றால்  விளங்குவதாகவும்  இராசதானித்  தலைநகரை  யமைத்து , அதன்கண்  அரசன்  எப்பொழுதும்  காவலையுடையனாய்ப்  புதல்வர்  முதலியவர்களோடு  கூடியிருந்து  வாழ்தல்  வேண்டும் .                  215-217

     அத்தலைநகரில்  அமைக்கப்படும்  அரண்மனை  நடுவண்  அத்தாணி  மண்டபத்தையுடையதாகவும், பசு , குதிரை , யானை  என்பவற்றின்  சாலைகள்  அமையப்பெற்று  அழகிய  வாவி  கிணறு  நீர்ப்பொறி  முதலியவற்றால்  நன்கு  திகழ்வதாகவும், எப்புறத்தும்  ஒத்த  அளவினவாகிய  பக்கங்களையுடையதாகவும் , தென்பாலுயர்ந்து வடபால்  தாழ்ந்ததாகவும் , ஒன்றுக்கொன்று  எதிர்முகமாகவமைந்த  நான்கு  பெரிய  அறைகளையுடைய  இல்லமல்லாத  மற்றைச்  சாலைகள்  பலபக்கங்களையுடையனவாக  விருப்பின்  பெரும்பாலும்  நலமில்லாதனவாமாதலின்  அச்சாலைகட்கின்றி  ஒற்றைப்படையான  பலபக்கங்கள் அமையப்பெற்றதாகவும் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலங்களைத்  தாங்கி  நிற்கும்  வீரர்களாற்  காக்கப்படும்  மதிற்சுவர்களையும்  சிறந்த  நாளிக  முதலிய  எந்திரப்படைகளை யுமுடையதாகவும் , மூன்று  கட்டுக்களோடு  கூடியதாகவும் , நாற்புறத்தும்  நன்கு  அலங்கரிக்கப்பட்ட  நான்கு  வாயில்களையுடையதாகவும், அம்பு  வாள்  முதலிய  படைக்கலங்களைத்  தாங்கி  நிற்கும்  யாமங்காப்போர்  நால்வராதல்  ஐவராதல்  அறுவராதல் மாற்றுமுறைப்படி  பகலிலும்  இரவிலும்  ஒவ்வொரு  கட்டிலும்  நின்று  என்றுங்  காக்கப்படுவதாகவும், பல்வகை  உருவமைந்த  இல்லங்கள்  காழகவில்லங்கள்  மேன்மாளிகைகள்  என்பவற்றோடு  கூடியதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                218-222

( காழகவில்லம் – ஆடையானமைந்த  வீடு .)

20. தனித்தனி  இல்லம்  அமைத்தல்

         ஆடை  முதலியன  ஒலித்தல்  நீராடல்  வேள்வி  முதலிய  தேவகாரியஞ்  செய்தல்  உண்டல்  அடுதல்  என்னும்  இவற்றிற்குரிய  இல்லங்களைக்  கீழ்பால்  அமைத்தல்  வேண்டும் .                                223

     துயிலல்  விளையாடல்  குடித்தல்  அழுதல்  தானியம்  வைத்தல்  திரிகை  முதலியன  வமைத்தல்  பணிப்பெண்கள்  ஏவலாளர்  இருத்தல்  மலமூத்திரம்  விடுதல் என்னுமிவற்றிற்குரிய  இல்லங்களை  முறைப்படி  தென்பால்  அமைத்தல்  வேண்டும் . பசுநிரை , மான் , ஒட்டகம் , யானை  என்னுமிவற்றின் பொருட்டுத்  தனித்தனிக்  கிருகங்கள்  மேல்பால்  அமைத்தல்  வேண்டும் .                               224-225

     தேர் , குதிரை , அம்பு , வாள்  முதலிய  படைக் கலங்களாகிய  இவற்றிற்கும் , உடற்பயிற்சி  செய்தற்கும் , யாமிகர்  இருத்தற்கும் , ஆடை , பொன் , பொருள்களைக்  காத்தற்கும் , கல்விப்பயிற்சி செய் தற்குமுரிய  இல்லங்களைக்  காவல்  நன்குடையனவாகவும்  அழகமைந்தனவாகவும்  வடபால்  அமைத்தல்  வேண்டும் . அன்றி , அரசன்   தன்  நலத்திற்குரியவாறு  இங்குக்கூறிய  இல்லங்களை அமைத்துக்கோடலும்  பொருந்தும் .                                                     226-227

     நீதிமன்றம்  சிற்பசாலை  யென்னுமிவற்றை  அரண்மனையின்  வடபால்  அமைத்தல்  வேண்டும் . அவ்வில்லங்களிலெடுக்குஞ்  சுவர், அவ்வில்லங்களின்  அகலத்தில்  ஐந்திலொருகூறு  மிகுதியான  உயரமுடையதாக  இருத்தல்  வேண்டும் .                                               228

( ஓர்  அறையின்  அகலம்  ஐந்து  முழமாயிருக்குமாயின்  அவ்வறையில்  எடுக்கப்படும்  சுவர்  அவ்வறையின்  அகலத்தின்  ஐந்திலொரு  கூறான  ஒரு  முழங்கூட்டி  ஆறு  முழ உயரமாக  எடுக்கப்படவேண்டுமென்பது  கருத்து . )

     அச்சுவரின்  அகலம் , அவ்வக் கோட்டங்களின்    அகலத்தில் ஆறில்  ஒருகூறு  அளவுடையதாக  விருத்தல் வேண்டும் . யாண்டும்  ஒரு  மேற்றளத்தினையுடைய  இல்லத்திற்கு  இவ்வுயர்ச்சியின் அளவே  சிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.                                                                229

( இவ்வுயர்ச்சியின்  அளவென்றது  முற்சுலோகத்திற்  கூறப்பட்ட  வுயரத்தை  மேற்றளம் – இட்டிகையும்  சுண்ணாம்புஞ்  சேர்த்துப்  படுத்த  இல்லத்தின்  மேற்பரப்பு  இதனை  முதனூல் ‘பூமிகை’  என்று  கூறும் . )  

     தூண்களானாதல்  சுவர்களானாதல்  வேறுபடுத்து  இல்லப்பகுதி களை  யமைத்தல்  வேண்டும் . அவ்வில்லம்  மூன்று  கோட்டங்களை    யுடையதாகவாதல் , ஏழு  கோட்டங்களை  யுடையதாகவாதல்  அமைக்கப்பட்டு , வாயிலின்பொருட்டு  எண் கூறாகப்  பகுக்கப்படல்  வேண்டும் .   நாற்புறங்களிலும்  வாயிலின்  கூறாகவுள்ள  நடுப்பாகம்  இரண்டிரண்டாக  நிருமிக்கப்படுமாயின் , அவை  மக்களுக்குப்  பொருட்பேறு  புதல்வர்ப்பேறுகளைப்  பயப்பனவாம் .               230-231

( கோட்டம் – இல்லத்தின்  நடுப்பாகம் ; அறை . பின்வரும்  இடங்களிலும்  இவ்வாறே  கொள்க . ஒரு  கோட்டத்தின்  ஒவ்வொரு  பக்கத்தையும்  இரண்டிரண்டு  கூறாக்க  எண் கூறாகும் . வாயிலின்  கூறாகவுள்ள  நடுப்பாகம்  இரண்டு  என்றது , இரண்டு  கூறுபடுத்தப்பட்ட  ஒரு  பக்கத்தின்  நடுவினின்று  வாயிலினிமித்தம்  இருமருங்குங்  கொள்ளப்பட்ட  இரண்டு  கூறுகளை ; நாற்புறமு நோக்கி  இரண்டிரண்டாக  என்று  கூறப்பட்டது . நாற்புறத்திலும்  நான்கு  வாயில்கள்  அமைக்க  வேண்டுமென்பதும்  , ஒவ்வொரு  பக்கத்திலும்  நடுவிடம்  தொடங்கி  இருமருங்கும் ஒத்த  அளவு  கொண்டு  வாயில்  அமைக்க வேண்டுமென்பதும்  கருத்து . )  

     அங்ஙனம்  பிரிக்கப்பட்ட  கூறுகளிலேயே  வாயில்கள்  அமைத்தல்  வேண்டும் . வேறு  ஓரிடத்தில்  ஒருபொழுதும்  அமைத்தல்  கூடாது . அங்ஙனமே  அப்பகுதிகளில்  இன்பநுகர்தற்கு  வேண்டுமளவிற்  சாளரங்களை  வெவ்வேறாக  அமைத்தல்  வேண்டும் .                     232

     ஓரில்லத்தின்  வாயில் , மற்றோரில்லத்தின்  வாயிலோடு  எதிர்ப்பட்டதாகவும் , அங்ஙனமே  மற்றொரு  வீட்டின்  கோணத்தாலும், தூணினாலும், வழிப்பீடத்தாலும் , கிணற்றினாலும்  தடைப் படும்படியாகவும்  அமைத்தலகாது .                                                       233                                                                                        

( கோணம் – கோடி,  வழிப்பீடம் –  வழிச்செல்வோர்  இளைப்பாறி  யிருத்தற்  பொருட்டு  வழிக்கட்  சுமைதாங்கியோடு  நிழன்மரத்தடி யிலமைக்கப்படும்  பீடம் . தெருக்களில்  சிறிய  தெய்வங்களை  வழிபடுதற் பொருட்டு  அமைக்கப்படுவதுமாம் . இவற்றிற்கெதிராக  ஓரில்லத்திற்கு  வாயில்  அமைத்தலாகாதென்பது  கருத்து . )       

     அரசர்குலம், தேவகுலம்  இவற்றின் வாயில்களுக்கு  எதிரேயுள்ள  வழி  தடைப்படலாகாது. அக்கோயிற்றளம்  அதன்  உயரத்தின்  நான்கிலொரு  கூறு  உயரமுடையதாக  வமைத்தல்  வேண்டும் .         234

( அரசகுலம் – அரண்மனை . தேவகுலம் – திருக்கோயில் , இவற்றின்  வாயில்களுக்கெதிரே  பிற  இல்லமுதலியன  இருத்தலாகாதென்பது  கருத்து . )   

     வேறு  சிலர்  அவ்வரசகுல  தேவகுலங்களின்  தளம்  அவற்றின்  உயரத்திற்  பாதியளவுடையதாக  அமைத்தல் வேண்டுமென்பர் . ஓரில்லத்தின்  சாளரம்  மற்றோரில்லத்தின்  சாளரத்திற்கு  எதிர்முகமாக  இருக்கும்படி  யமைதல்  கூடாது .                                     235

     சுடுமண்களாலாகிய  மேன்மூடல்  அமைக்குங்கால் ,அதன்பால்  விழும்  நீர்  தடையின்றிக்  கீழ்ச்செல்லுமாறு  அவ்வில்லத்தினது  அகலத்து  அளவின்  அரைக்கூறு  நடு  உயர்ந்திருத்தல்  வேண்டும் . அம் மேன்மூடல்  அவ்வுயரத்திற்  குறைவாகவும்  பள்ளமாகவும்  இருத்தலாகாது . அங்ஙனமே  இல்லத்தின்  உட்பரப்பும்  வலியற்றதாகவும்  தாழ்வாகவும்  இருத்தலாகாது .                                   236

( சுடுமண் – ஈண்டு  ஓடு . மேன்மூடல் – அவ்வோடுகளால் மேலிடத்தை  வேய்ந்து  மறைத்தல் ; இதனை  மதனூல்  ‘சதி’  என்று  கூறும் . அரைக்கூறு  நடு உயர்ந்திருத்தலாவது – ஓரில்லத்தின்  அகலம்  ஐந்து  முழமாயின்  அவ்வில்லத்திலெடுக்கப்படும்  சுவரின்  மேலிடத்தினின்று  முகட்டின்  நடு  இரண்டரை  முழம்  உயர்ந்திருத்தல்

21 .  அரண்  அமைத்தல்   

     மதிற்சுவரின்  அடிப்படை , அதன்  உயரத்தின்  சம  அளவாதல் , பாதி  அளவாதல் , மூன்றிலொரு கூறாதல் இருத்தல் வேண்டும் . அதன்  அகலம் , உயரத்தின்  பாதியளவு  இருத்தல்  வேண்டும்.  அதன்  உயரம்  கள்வராற் கடக்க  முடியாவண்ணம்  வேண்டிய  அளவு  உயர்ந்திருத்தல்  வேண்டும் .                                                                                                           238

     அம்மதிலை , யாமங்காப்போரால்  எப்பொழுதுங்  காக்கப்படுவதாகவும் , நெருப்பிறைக்கும்  பொறி  முதலியன , வன்மைமிக்க காவலாளர்க்குரிய  பல  இருப்பிடங்கள் , அழகிய  சாளர  வரிசைகள்  இவற்றையுடையதாகவும் , பகைவர்  மதில்களிலும்  உயர்ந்ததாகவும் , அணிமையில்  மலையில்லாததாகவும்  அமைத்தல்  வேண்டும் .                                                                                                             239

( யாமங்காப்போரை – 290 –ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க .)        

     அம்மதிலின்  வெளிப்புறத்தே அகழியமைத்தல்  வேண்டும் . அஃது  ஆழத்தின்  அளவிலும்  இருமடங்கு  அகலமுடையதாகவும் , மிக்க  அணிமையில்  மதில்  இல்லாததாகவும் , அழகிய  நீர்ப் பெருக்கினை யுடையதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                       240

     போர் செய்தற்குரிய  கருவிகளின்  றொகுதியும் , போர்த்திறன் வாய்ந்த  நல்ல  வீரர்களுமின்றி  அரசன்  அரணுள்  இருத்தல்  நலந்தருவதன்று ;  சிறைப்பட்டிருப்பதாகும் .                                            241

     அரசன்  அத்தாணி  மண்டபத்தை  அழகியதாகவும் , நன்கு  காக்கப்படுவதாகவும் , மூன்று கோட்டம்   ஐந்து கோட்டம்  ஏழு  கோட்டங்களாகப்  பிரிக்கப்பட்டதாகவும் , தென்வடல்  அகன்ற தாகவும், கீழ்மேல்  நீண்டதாகவும் , அன்றி  அகற்சியினும்  இரு  மடங்காதல்  மும்மடங்காதல்  நீண்டதாகவும் , தான்  விரும்பிய  வண்ணம்  ஒன்று  அல்லது  இரண்டு  மூன்று  மேற்றளங்களை யுடையதாகவும் , காழகவில்லம்  மேன்மாளிகைகளோடு  கூடிய  தாகவும் , ஒவ்வொரு  கோட்டமும்  நாற்புறத்துஞ்  சாளரங்களால்  விளங்குவதாகவும்  அமைத்தல்  வேண்டும் . நடுக் கோட்டத்தின்  அகலம் , பக்கத்துக்  கோட்டங்களிலும்  இருமடங்கு  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் .                                                                                242-245

( ஒன்று  அல்லது  இரண்டு  மூன்று  மேற்றளங்களென்பன  பொதுவாக  அப்பரப்புக்களை  யுணர்த்தும் , மேன்மாளிகைகளென்பன . அத்தளப் பரப்புக்களில்  செய்யப்படும்  கிருகவிசேடங்களையுணர்த்தும் .

அத்தாணி  மண்டபத்தின்  நடு  அறையில்  எடுக்கப்படும்  சுவர்  அதன்  அகலத்தின்  அளவோடு  ஐந்திலொரு  கூறு  மிகுதியான  உயரமுடைய தாகவிருத்தல்  வேண்டுமென்பதாம் . அகலம்  பத்து  முழமாயின் , சுவரின்  உயரம்  பன்னிரண்டு  முழமாகும் . )       

     நடுக்கோட்டத்தின்  உயரம் , அதன்  அகலத்தின்  ஐந்திலொருகூறு  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் . அவ்வுயரம்  அகலத்தின்  அளவோடு  ஒத்ததாகவேனும் , அகலத்தின்  ஐந்திலொருகூறு  மிகுதியாக  வேனும்  அமைத்தல்  வேண்டுமென்று  வேறு  சிலர்  கூறுவர் .                             246

     கோட்டங்களுக்கு  மேற்றளத்தினையாதல் , மேன்மூடலையாதல்  செய்வித்தல் வேண்டும் . இருமருங்குமுள்ள  கோட்டங்கள் , தனித்தனி  இரண்டிரண்டு  மேற்றளங்களையுடையனவாக  எடுக்கப்படுமாயின் , நடுக்கோட்டம்  ஒரே  மேற்றளத்தை  யுடையதாக  இருத்தல்  வேண்டும்.

( மேற்றளத்தையும்  மேன்மூடலையும்  முறையே  229-236  ஆம்  சுலோகக்  குறிப்புக்களிற்  காண்க . பக்கத்துக்  கோட்டங்கள்  இரண்டு  தளங்களையுடையவாக  எடுக்கப்படுமாயின்  நடுகோட்டம்  ஒரே  தளமாக  இருக்க  வேண்டுமென்றது, அதன்  அகற்சிக்குத்  தக்க  உயரம்  வேண்டுமென்பது  குறித்தாம் .  நடுக்கோட்டத்தின்  அகலம்  பக்கத்துக்  கோட்டங்களிலும்  இருமடங்கு  மிகுதியாக  இருக்கவேண்டு மென்று  245 ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்டது . )   

     இன்னும்  அவ்வரசமன்றத்தை , தூண்களின்  நடுவண்  அமைந்த  தனிமையான  ஓர்  அழகிய  கோட்டத்தினையுடையதாகவும் , போக்குவரத்திற்குரிய  நான்கு  அழகிய  வாயில்களையுடையதாகவும்  நீரை  மேல்நோக்கிச்  செலுத்தி  வீழ்த்தும்  பொறிகள் , இனிய  இசையை  வெளிப்படுத்தும்  பொறிகள் , போதிய  அளவு  வாயுவை  இயங்கச்  செய்யும்  பொறிகள் , காலமுணர்த்தும்  பொறிகள்  ஆகிய  இவற்றையுடையதாகவும் , நல்ல  கண்ணாடிகளும்  பிரதிமைகளும்  வைக்கப்பட்டதாகவும் , சூழ்தற்கும்  காரியங்களைச்  செய்தற்குமுரிய தாகவும்   அமைத்தல்  வேண்டும்  .  அங்ஙனமே  அரண்மனையினின் றும் நூறு  முழ  அளவு  நிலத்திற்கு  அப்பால்  அமைச்சர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் , மன்றக்  குழுவினர்க்கும் , மற்றை  அரசியல்  அதிகாரிகளுக்கும்  உரிய  இவ்வில்லங்களைத்  தனித்தனியாக  அமைத்தல்  வேண்டும் .                                                                             248-251

( மன்றக் குழுவினர் – அரசன்  பக்கலிருந்து  காரியங்களை  யாராய்ததற்குத்  துணை  செய்பவர் . )                                                                                                                         

     அறிஞனாகிய  அரசன்  முதலில்  அரண்மனைக்கு  அணிமையில்  வடபால்  இருநூறு  முழ  அளவு  நிலத்திற்கு  அப்பால்  எப்பொழுதும்  படைவீரர்கள்  இருத்தற்குரிய  சாலைகளையும் , அவற்றின்  புறத்தே  நான்கு  திக்கினும்  சூழ  முறையே  குடிமக்களுக்குப்  பொருட்சிறப் பானும்  குலச்சிறப்பானும்  வரிசைப்படுத்திய  இல்லங்களையும்  அமைத்தல்  வேண்டும் ,                                                                            252-253

     முதலிற்  குடிமக்களுள்  தலைவர்களுக்கும் , பின்னர்  அவர்க்கு  அடுத்த  நிலையிலுள்ளவர்க்கும் , அதன்பின்  அரசியல்  வினை  செய்வார்க்கும் , அதன்பின் படைத்தலைவர்களுக்கும் , அதன்பின்  காலாட்படைகளுக்கும் , அதன்பின்  குதிரைகளோடு  கூடிய  வீரர்களுக்கும்  அதன்பின்  யானைகளோடு  கூடிய  வீரர்களுக்கும், அதன்பின்  பெரிய  நாளிக  யந்திரமென்னும்  பொறிப்படையாளர் களுக்கும் ,  அதன்பின்  தனக்குரிய  குதிரைக் கூட்டங்களுக்கும் , அதன்பின்  தன்காவலாளர்களுக்கும் , அதன்பின்  காட்டு  வாழ்க்கையுடை யார்க்கும்  தன்  நகரத்தில்  முறைப்படி  அழகிய  இல்லங்களை  அமைத்தல்  வேண்டும் .                             254-256                                                                                  

( நாளிகயந்திரம் –  நெருப்போடு  இருப்புத்  திரளைகளைச்  செலுத்தும்  அகன்ற  வாயினையுடைய  போர்க்கருவி . இதனைப்  பீரங்கியென  இக்காலத்தில்  வழங்குப .)

     அதன்பின்  வழிச்செல்வோர்  தங்குதற்பொருட்டு  நல்ல  நீர்  நிலங்களையும் , காவலையுமுடைய  இருப்பிடங்களை  யமைத்தல்  வேண்டும் . இன்னும்  நகரத்திலும் கிராமத்திலும்  வரிசையாக  ஒத்த  குலத்தவர்களின்  வீடுகளைக்  கிழக்குமுகமாகவேனும்  வடக்கு  முகமாகவேனும்  சேர்ந்திருக்கும்படி  அமைத்தல்  வேண்டும் .  அங்ஙனமே  கடைத்தெருவில்  ஓரினப்பட்ட  விலைப்பொருள்களை யுடைய  கடைகளை  முறைப்படி  யமைத்தல்  வேண்டும் .      257-258

     இன்னும்  இராசவீதியின் இருபக்கங்களிலும் முறைப்படி பெருஞ்  செல்வர் முதலியோர்களை நிலைப்படுத்தல்  வேண்டும் . அரசன்  இங்ஙனமே  பட்டினத்தையும்  சிற்றூரையும்  அமைத்தல்  வேண்டும் . 259

22 . இராசவீதி யமைத்தல்

     அரண்மனையின்  நாற்புறத்தும்  இராசவீதிகளை  யமைத்தல்  வேண்டும் . முப்பது  முழ  அளவு  அகன்ற  இராசவீதி  தலையாயதாகும். 260

     இருபது  முழ  அளவு  அகலம்  இடையாயதாகும் . பதினைந்து  முழ  அளவு  அகலம்  கடையாயதாகும் . அங்ஙனமே  பட்டினங்களிலும்   சிற்றூர்களிலுமுள்ள  கடைவீதிகளையும்  அமைத்தல்  வேண்டும் . 261

      சிற்றூர்களிலும்  நகரங்களிலும்  மூன்று  முழ  அளவு  அகலமுள்ளது  நடைவழி  யெனவும் , ஐந்து  முழ  அளவு  அகலமுள்ளது  வீதியெனவும் , பத்து  முழ  அளவு  அகலமுள்ளது  மார்க்கமெனவுங்  கூறப்படும் .     262

     அரசன்  கிராமத்தின்  நடுவணின்று  கிழக்கு  மேற்குத்  தெற்கு  வடக்குகளைக்  கண்டு  அவ்வழிகளை  யமைத்தல்  வேண்டும் . அங்ஙனமே  பட்டினத்தை  நோக்கி  அழகிய  பல  இராசவீதிகளை  யமைத்தல்  வேண்டும் .                                                                                     263

     இராசதானித்  தலைநகரில்  ஐந்துமுழ  அகலமுள்ள  வீதியையும், மூன்று  முழ  அகலமுள்ள  நடைவழியையும்  அமைத்தலாகாது . ஆறு  யோசனை  தூரம்  அகன்ற  காட்டின்  புறத்தே  தலையாய  இராசமார்க்கத்தை  யமைத்தல்  வேண்டும் .                                             264

( நான்கு  குரோசங்கொண்டது  ஒரு  யோசனை . தலையாய  இராசமார்க்கம் – முப்பது  முழ அளவு  அகலமுடையது .)

     அக்காட்டின்  நடுப்பாகத்தில்  இடையாய  இராசமார்க்கத்தையும் , அவற்றின்  நடுவிற்  கடையாய  இராசமார்க்கத்தையும்  அமைத்தல்  வேண்டும் . ஒவ்வொரு  கிராமத்திற்கும்  பத்து  முழ  அளவுள்ள  மார்க்கம்  எப்பொழுதும்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .              265

( அவற்றின்  நடுவில்  –  தலையாயதும்  இடையாயதுமாகிய  இராசமார்க்கங்களின்  இடையிடையே . )

     கிராமத்தில்  வாழும்  மனிதர்கள்  போக்குவரவிற்குரிய  வழியிடத்தை  ஆமை  முதுகு  போல்  நடுவிடம்  உயர்த்தியும் , இருமருங்கும்  அழகிய  வரம்பெடுத்தும்  அமைத்தல்  வேண்டும் .  அதன்  இருமருங்கும்  நீர்வீழ்ந் தோடுதற்குரிய  வாய்க்கால்வழி  ஏற்படுத்தல்  வேண்டும் .                                                                                   266

     எல்லா  இல்லத்து  முகங்களும்  இராசவீதியின்பால்  இருத்தல்  வேண்டும் . ஒவ்வொரு  வீட்டின்  பின்புறத்திலும்  மலங்கழித்தற்குரிய  இடத்தையும் , சிறுவழியையும்  அமைத்தல்  வேண்டும் .                     267

     ஒவ்வொரு  தெருவின்  இருபக்கங்களிலும்  வரிசையாக  இல்லங்களை  யமைத்தல்  வேண்டும் . குற்றமிழைத்துச்  சிறைப்பட்டாரைக்  கொண்டாதல் , கிராமத்துக்  குடிகளைக்  கொண்டாதல்  ஒவ்வோராண்டும்  வழிகளைச்  சுண்ணாம்புக்  கற்களால்  இறுகுறப்படுத்தல்  வேண்டும் .                                               268

23 . வழிச்செல்வோர்  தங்குதற்குரிய  அறச்சாலை  யமைத்தல்

     அரசன்  ஒவ்வொரு  கிராமத்திலுமேனும் , அன்றி  இரண்டு  கிராமங்களுக்கு  இடையிலேனும்  வழிச்செல்வோர்  தங்கும்  அறச்சாலை  அமைத்தல்  வேண்டும் . அஃது  எப்பொழுதும்  அலகிடன்  முதலியவற்றால்  தூயதாகவும் , கிராமத்  தலைவர்களால்  நன்கு  காக்கப்படுவதாகவும்  இருத்தல்  வேண்டும் . எப்பொழுதும்  அச்சாலைத்  தலைவன்  அங்கு  வருவாரைப்  பின்வருமாறு  தனித்தனி  வினவுதல்  வேண்டும் .                                                                                     270

     “வழிச்செல்வோய் !  எவ்விடத்தினின்று  எதற்காக  வந்தாய்  ?  எங்குச்  செல்கின்றாய் ? துணையோடு  வந்தனையா ?  அன்றித்  தனிமையாக  வந்தனையா ? ஆயுதம்  இருக்கின்றதா ? ஊர்தி  யுண்டா?  நின்  சாதி  குலம்  யாவை ?  பெயர்  யாது ? நின்  நீண்டநாள்  வாழ்கை  யாண்டுள்ளது ? உண்மையாகச்  சொல் “  என்றிவ்வாறு  கேட்டு  எல்லாவற்றையும்  எழுதிக்கொள்ளல்  வேண்டும் . மாலைப்  பொழுதில்   அவன்  வைத்திருக்கும்  ஆயுதத்தை  வாங்கிக்கொண்டு , “சாவதான  மனமுடையனாய்  உறங்குக “  என்று  அவனுக்குத்  தெரிவித்தல்  வேண்டும் . அதன் பின்  அங்கிருக்கும்  வழிச்செல் வோரை  எண்ணிக்கொண்டு  அவ்வறச்சாலையின்  வாயிற்கதவை  யடைத்து  யாமங்காப்பவர்களைக்  கொண்டு  நன்கு  காத்தல்  வேண்டும் . காலையிற்  கதவைத்  திறந்து , அவர்களை  எழுப்பி , அவரவர்க்குரிய  ஆயுதங்களைக்  கொடுத்து , எண்ணிக்  கணக்கிட்டு  வெளிப்போம்படி  செய்தல்  வேண்டும் . கிராமத்தில்  உள்ளார்  எப்பொழுதும்  வழிச்செல்பவர்களுக்குத்  தம்  கிராம  எல்லைவரை  உடன்  சென்று  துணை  செய்தல்  வேண்டும்                                                         271-274

24 . அரசன்  முகூர்த்தந்தோறுஞ்  செய்ய  வேண்டிய

அவசிய  நித்திய   கன்மங்காள்

     அரசன்  தலைநகரிலிருந்து  நாடோறுஞ்  செய்ய  வேண்டிய  கடமைகளை  முறைப்படி  செய்தல்  வேண்டும் .                                  275

     அரசன்  இரவின்  கடையாமத்திலெழுந்து , [1,2]  இரண்டு  முகூர்த்த  நேரம்வரை  வரவு  செலவு  நிமித்தம்  துணியப்பட்ட  பொருளின்  அளவு  எவ்வளவு  எனவும் , கருவூலத்துள்ள பொருளிற் செலவு எவ்வளவாயிற்று எனவும், வழங்குதற்பொருட்டு   முத்திரையிடப்பட்ட  பொருளின்  வரவு  செலவுகளில்  எஞ்சியது   எவ்வளவு  எனவுமாராய்ந்து , அவற்றைக்  காட்சி  அளவையானும்  எழுத்து  மூலமாகவும்  அறிந்து , இப்பொழுது  நேரும்  செலவு  எவ்வளவாகு மென்பதையு  மாராய்ந்து , அதற்குத்  தக்க  அளவு  பொருளைக்  கருவூலத்தினின்றும்  வெளிப்படுத்து  வைத்தல்  வேண்டும் .                                                                           276-278

( முகூர்த்தம் – ஈண்டு  இரண்டு  நாழிகையாகக்  கணக்கிடப்பட்டுள்ளது.  இது  முதல்  284  வரையுள்ள  சுலோகங்களில்  ஒரு  நாளை  முப்பது  முகூர்த்தங்களாகக்  கூறிட்டு , ஒவ்வொரு  முகூர்த்தத்திலும்  அரசன்  செய்யவேண்டிய  காரியங்கள்  இன்னஇன்ன வென்று  விளக்கிக்  கூறப்படுகின்றன . )

     வரவு  செலவுகளைத்  திட்டஞ்செய்த  பின்னர் , [3] ஒரு  முகூர்த்த  நேரம்  வரை  மலமூத்திரங்கழித்து  நீராடல்  வேண்டும் . அதன்பின்  சந்தியாவந்தனம்,  புராணபடனம் , தானம்  இவைகளின்  பொருட்டு     [4,5] இரண்டு  முகூர்த்த  நேரஞ்  செலவிடல்  வேண்டும் .  அதன்பின் , காலை [9]  ஒரு  முகூர்த்த  நேரத்தை  எருது  குதிரை  முதலிய  ஊர்திகளில்  ஏறிச்  செல்லன்  முதலிய  உடற்  பயிற்சியாற்  போக்கல்  வேண்டும் .                                                                                                       279

     அதன்பின் , அறிவுமிக்க  அரசன்  தன்னையடுத்துப்  பிழைப்பவர் களுக்குப்  பரிசில்  ஈதலால் [ 7 ] ஒரு  முகூர்த்தப்  பொழுதையும் , அதன்பின்  தானியம் , ஆடை , பொன் , இரத்தினம் , படை , நிலம்  இவற்றின்  அளவு  முதலியவைகளை  நன்றாக  ஆராய்ந்து , அமைச்சனைக்  கொண்டு  எழுதிக்  கணக்கிட்டு  அவற்றின்  வரவு  செலவுகளைக்  காண்டலால் [ 8 , 9 , 10 , 11 ]   நான்கு  முகூர்த்தங்களை யும், அதன்பின்  கவலையற்ற  மனத்தினனாய்  விருந்து , ஒக்கல்  சூழ  விருந்து  உணவு  செய்தலால்  [12 ] ஒரு  முகூர்த்தப்  பொழுதையுங்  கழித்தல்  வேண்டும் .                                                                          280-281

     அதன்பின் , பழையனவும்  புதியனவுமாகிய  பொருள்களை  நேரிற் காண்டலால் [ 13 ] ஒரு  முகூர்த்தப் பொழுதையும் , அதன்பின் , தன்னால்  நியமிக்கப்பட்ட   நியாயாதிபதிகள்  தெரிவித்துக்கொள்ளும் வழக்காராய்ச்சியால் [ 14, 15 ] இரண்டு  முகூர்த்தங்களையும் , அதன்பின்  வேட்டையாடல்களால்  [ 16, 17 ] இரண்டு  முகூர்த்தங்களை யும் , அதன்பின்  படைகளை  அணிவகுத்துக்  காண்டலால்  [18] ஒரு  முகூர்த்தத்தையும்  அதன்பின்  மாலைக்கால  சந்தியாவந்தனத்தால் [19] ஒருமுகூர்த்தத்தையும் , அதன்பின்  இராவுணவு  செய்தலால் [20] ஒரு  முகூர்த்தத்தையும், அதன்பின்  மறைவிற்  கண்டு  ஒற்றர்கள்  மூலமாகச்  கேட்குஞ்  செய்திகளால்  [ 21, 22]  இரண்டு  முகூர்த்தங் களையும் , அதன்பின்  உறங்குதலால்  [ 23, 30 ] எட்டு  முகூர்த்தங்களை யும்  கழித்தல்  வேண்டும் .                                                                     282-284

     இவ்வாறு  காலங்கழிக்கும்  அரசனுக்கு  நலம்  உண்டாகும் . முற்கூறியாங்கு  முப்பது  முகூர்த்தகால  அளவால் , இன்ன  காலத்தில்  இன்னது  இன்னது  செய்தல்  வேண்டுமென்று  பகலையும்  இரவையும்  பிரித்து , அவ்வச்  செயல்களால்  அவ்வக்காலத்தைப்  போக்குதல்  வேண்டும் . பெண்களோடு  கூடிக்காமவின்ப  நுகர்ந்து , கட்குடித்தும் , பயனின்றிக்  காலத்தைக்  கழித்தல்  கூடாது.  எக்காலத்தில்  எக்காரி யத்தைச்  செய்தல்  தகுதியோ , அக்காலத்திலேயே  அச்செயலை ஐயமின்றி  விரைந்து  செய்தல்  வேண்டும் . இங்ஙனஞ்  செய்யின் , உரிய  காலத்திற்  குடிகளைக்  காத்தற்குத்  தக்கவாறு  மழை  பெய்யும். இன்றேற்  குடிகளுக்குக்  கேடுவிளைக்கத்தக்க  மிகுபெயல் , பெயலின்மைகளுண்டாவனவாம் . நீதியின்  சிறப்பையும்  அநீதியின்  தாழ்வையும்  அறிந்த  அரசன் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலங் களில்  வல்ல  சிறந்த  யாமங்காப்போர் , நால்வர் , ஐவர் , அன்றி  அறுவர்களால்  எப்பொழுதும்  எல்லாக்  காரிய  நிலையங்களையும்  எப்பக்கத்துங்  காத்தல்  வேண்டும் .                                                      285-288

     அவ்வக்  காரியாலயங்களில்  நாடோறும்  நிகழுங்  காரியங்களைத்  தலைமை  யெழுத்தாளர்களிடம்  கேட்க  வேண்டும் . நாடோறும்  யாமங்  காப்பவர்களை  மாற்றி மாற்றி  நியமித்தல்  வேண்டும் .   289

25 . யாமங்காப்போர்  செய்ய  வேண்டுவன  

( யாமங்காப்போர் – நகரங்களையும்  இல்லங்களையும்  நாடோறும்  யாமம்  யாமமாக  வகுத்துக்  கொண்டு  காவல்  புரிபவர் . இவரை  முதனூல்  “யாமிகர்”  என்று  கூறும் . இவர்களை  மாற்றியமைக்கு  முறையை , 4-ஆம்  அத்  7- ஆம்  பிரகரணம் 403-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க )

          யாமங்காப்போர்  எப்பொழுதும்  இல்லறவாழ்க்கையுடையாரின்  வரிசையாகவுள்ள  இல்லங்களின்  எதிரில்  நின்று  வாயில்களைக்  காவல்  செய்தல்  வேண்டும் . இல்லறத்தார்  உதவும்  வேதனங்களாற்  பரிபாலிக்கப்படும்  அவ்யாமங்காப்பவர்கள்  முகமாக  அவ்வில்லறத் தார்களைப்  பற்றிய  செய்திகள்  அரசன்  கேட்டறிதல்  வேண்டும் .   290

     கிராமத்தினின்றும்  வெளிச்செல்வோரும்  கிராமத்தின்  உட்புகுவோ ருமாகிய  இவர்களை  நன்றாக  முயன்று  சோதித்தபின்  பிணை கொடுக்கச்செய்து  வெளிப்புறத்தும்  உட்புறத்தும்  விடல்  வேண்டும்  . எல்லோராலும்  போற்றப்படும்  நல்லொழுக்கமுடைய  பெரியாரைச்  சோதிக்காமலே  விடல்  வேண்டும் .                                                             291

இரவில்  கள்வரையும் , பிறர்மனை  அரையாமத்திற்கொருமுறை  யாமங்காப்போர்  சுற்றிப்பார்த்து  என்றும்  காவல்  செய்தல்  வேண்டும்.

26.  குடிகளுக்கு  அரசன்  இடுங்  கட்டளை   

     அரசன்  குடிகளின்  பொருட்டுப்  பின்வருங்  கட்டளைகளை  என்றுஞ்  செய்தல்  வேண்டும் . “நம்  நாட்டில்  வாழுங்  குடிமக்கள்  தம்  ஏவலர்  தம்முதவி  பெறுவோர் , இல்லாள் , புதல்வர் , மாணாக்கர்  இவர்களிடத்துக்  கடுஞ்சொற்  கூறுதலையும் , கடுந்தண்டமிடுதலை யும்  மேற்கொள்ளலாகாது ; துலை  முதலிய  நிறுத்தலளவைகள் , முத்திரைக்காசுகள்,  மரத்தினின்றும்  வடித்தெடுக்கும்  பெருங்காய  முதலியவைகள் , ஒத்தமாற்றுக்களை யுடைய  பொன்  வெள்ளி  முதலியன , நெய் , தேன் , பால் , இறைச்சி , மா , என்னும்  இவை  முதலியவற்றில்  வஞ்சகம்  செய்தல்  கூடாது ; வலிந்து  பத்திரமெழுதுத லையும், கைக்கூலி  வாங்குதலையும் , தம்  தலைவர்களுக்கு வஞ்சகமிழைத்தலையும்  ஒழித்தல்  வேண்டும் ; தீயொழுக்கமுடையார் கள்வர் , பிறர்மனை  நயப்போர், நம்மிடத்து  வெறுப்புடையோர் , நம்பகைவர் , மறைவிற்  றீங்கிழைக்கும்  மற்றை  மனிதர்களாகிய  இவர்களை  ஒருவரும்  துணை  செய்து  காத்தலாகாது . தாய் , தந்தை, ஆசிரியர்  முதலியோர் , புலவர்கள்  நல்லொழுக்கத்திற்  பற்றுடை யாராகிய இவர்களை  அவமதித்துப்  பரிகசித்தல்  கூடாது . கணவன், மனைவி , தலைவன் , ஏவலாளன் , அண்ணன்  தம்பி , ஆசிரியன்  மாணாக்கன் , தந்தை  மகன்  ஆகிய  இவர்களுக்குள்  மனவேற்றுமை யுண்டாக்குதல்   கூடாது . ஊருணி, கிணறு , பூஞ்சோலை, எல்லைநிலம் அறச்சாலை , திருக்கோயில் , நடைவழி  ஆகிய  இவற்றிற்கும் , உறுப்பறைகள் , உறுப்புவலியற்றோர்  ஆகிய  இவர்களுக்கும்  கேடு  விளைத்தல்  கூடாது . பணயம்  வைத்துச்  சூதாடல் , கட்குடித்தல் , வேட்டையாடல் , ஆயுதந்தரித்தல் , பசு , யானை , குதிரை  ஒட்டகம், எருமை , ஆளடிமை , நில  முதலிய  நிலையிற்  பொருள்கள் , வெள்ளி , பொன் , இரத்தினம் , மயக்கமுண்டாக்கும்  பொருள்கள் , நஞ்சு  என்னுமிவற்றை  விலைகொடுத்துக்  கொள்ளல் , விற்றல் , கள் வடித்திறக்குதல் , கிரயபத்திரம் , தானபத்திரம்,  கடன்பத்திரம்  மருத்துவஞ்  செய்தல்  ஆகிய  இவற்றை  நம் [அரசன்] அனுமதியின்றி  யாருஞ்  செய்தலாகாது . செய்யாதவன்  மேற்  பெரும்பாவச்  செயலை  ஏறிடல் , புதை  பொருள்  கொள்ளுதல் , புதிய  சமாசம்  உண்டு  பண்ணுதல் , அரசியைபின்றித்  துணியப்படாத  பொருளைத்  துணிதல், சாதியைக்  குற்றம்  கூறிப்  பழித்தல் , தலைவனற்ற  பொருளையும்  களவுப்  பொருளையுங்  கொள்ளுதல் , மறைவுச்  செய்திகளை  வெளிப்படுத்தல் , அரசனுடைய  தீயகுணங்களை  வெளிப்படுத்திப்  பேசுதல்  ஆகிய  இவற்றை  ஒருபொழுதுங்  குடிமக்கள்  செய்தலாகாது . தம்  கடமையை  விட்டொழிதல் , பொய்கூறல் , பிறர்மனை  நயத்தல் , பொய்ச்சான்று  கூறல் , பொய்ப்  பத்திர  மெழுதல் , மறைவிற்பொருள்பெறுதல் , துணியப்பட்ட  அளவிற்கு  மேற்  குடிகளிடத்து  இறைப்பொருள்  வாங்குதல் , களவாடல் , வலிந்து  பற்றுதல் , தலைவனுக்குத்  தீங்கிழைத்தலாகிய  இவற்றை  மனத்தாலும்  நினைத்தல்கூடாது . வேதனத்தாலும் , சுங்கப் பொருளாலும் , வட்டித்  தொழிலாலும் , இறுமாப்பாலும் , ஆற்றலாலும் , வஞ்சகத்தாலும் , ஒருபொழுதும்  எவர்க்கும்  துன்பஞ்  செய்தலாகாது. நீட்டலளவையும் , நிறுத்தலளவையும் , முகத்தலளவையுமாகிய  இவற்றின்  கருவிகளை  அரசியன்  முத்திரையிட்டு  உபயோகித்தல்  வேண்டும் . எல்லாக்  குடிமக்களும்  நற்குணங்களை  யீட்டுதலிற்  றிறமையுடையராயிருத்தல்  வேண்டும் . வலிந்து  செய்தன்  முதலிய  கடுஞ்  செயல்கள்  வெளிப்பட்டுழி   அவற்றைச்  செய்த  ஆததாயியைப்  பிடித்திழுத்து , அரசன்  பக்கல்  சேர்த்தல்  வேண்டும் ; எவர்களால்  அறங்  கருதி  எருது  முதலியன  விடப்பட்டனவோ , அவர்களே  அவற்றைக்  கட்டிக்காத்தல்  வேண்டும் ; இங்குக்  கூறப்பட்ட  என்  கட்டளைகளைக்  கேட்டும்  எவர்கள்  மாறாக  நடக்கின்றார்களோ  அத்தகைய  கொடியவர்களைப்  பெருந்தண்டத்தால்  ஒறுத்திடுவேன்  “  என்றிவ்வாறு  அரசன்  குடிமக்களுக்கு  நாடோறும்  பறைசாற்றி  அறிவித்தல்  வேண்டும் .                                                                         293-312

( மறைவிற்  பொருள்  பெறுதல் – ஒருவனிடத்தினின்றும்  அவனைச்  சார்ந்தாரறியாமலிருக்கும்  வண்ணம்  அவன்  பொருளைக்  கொள்ளுதல் .

ஆததாயிகள் – தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார் , கருவியிற் கொல்வார் , கள்வர் , பிறர்  நிலங்கவர்வார் , பிறனில்விழைவாரென  அறுவகைப் படுவர் . மூன்றாம்  அத்தியாயம் 41 ஆம் சுலோகத்திற்  காண்க )

27 . அரசன்  செய்ய  வேண்டியவை     

     அரசன்  நாற்சந்திதோறும்  தன்  கட்டளைகளை யாவருங்  காண  எழுதிவைத்தல்  வேண்டும் . தீயவர்களிடத்தும்  பகைவர்பாலும்  எப்பொழுதும்  தண்டோபாயத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .   313

( இக் கருத்தை  “ஒல்லும்  வாயெல்லாம்  வினை  நன்றே  யொல்லாக்காற் , செல்லும்  வாய்  நோக்கிச்  செயல் “  என்னுந்  திருக்குறளிலுங்  காண்க . வினை – ஈண்டுத்  தண்டோபாயம் . )

     அரசன்  நீதிமுறைப்படி  குடிகளைப்  புரத்தல்  வேண்டும் ; வழிச்செல்வோர்  நலங்குறித்து  வழியிடங்களைக் காத்தல்  வேண்டும் .

                                                                                                                           314         

     வழிச்செல்வோரைத்  துன்புறுத்துபவர்  யாவராயினும்  அவர்களை  முயன்று  கண்டுபிடித்துக்  கொல்லல்  வேண்டும் .  அரசன்  தனக்குரிய  ஆண்டு  வருவாயில்  மூன்று  கூறு  படைகளைக்காத்தற்கும் , அரைக்கூறு  தானத்திற்கும் , அரைக்கூறு  அரசியற்றொழில்புரியும்  மற்றவர்களுக்கும் , அரைக்கூறு  தன்  வாழ்க்கைக்கும்  செலவிட்டு , எஞ்சிய  ஒரு  கூறைத்  தன்  கருவூலத்து  வைப்பு  நிதியிற்  சேர்த்தல்  வேண்டும் .                                                                                                     315-316

( இச்சுலோகங்களுக்கு  உரைவரைந்தாரொருவர்  ஆண்டு  வருவாயை  எண்கூறுபடுத்துப்  படைகளைக்  காத்தற்கு  மூன்றும் , மற்றவகை  ஐந்திற்கு  ஐந்து  கூறுமாகக்  கணக்கிட்டுக்  கூறினர் . ‘ அவர்  அர்த்தாம்சம் ‘  என்பதற்கு , வருவாயிற்  பாதியில்  நான்கிலொரு   கூறு  எனக்  கூறினர் . அவ்வாறு  கூறுதற்குச்  சொற்பொருள்  இடந்தராமையானும் , 317-ஆம்  சுலோகத்தில்  வருவாயை  ஆறு  கூறிடல்  வேண்டுமென்று  நூலாசிரியரே  கூறுதலானும் , கருவூலத்தில்  சேர்க்கப்படுவதை  “அர்த்தாம்சம்”  என்று  கூறாமையானும்  அவ்வுரை  பொருந்தவில்லையென்று  தோன்றினமையால் , முன்பின்  இயைபு  நோக்கி  வேறுவிதமாகப்  பொருந்துமாறு  இவை  மொழிபெயர்க்கப்  பட்டன . பிறாண்டும்  இங்ஙனமே  உரைவரைந்தாரின்  பிறழ்ச்சியை  யறிந்து  முன்பின் இயைபு  நோக்கி  மொழிபெயர்க்கப்பட்ட  சுலோகங்கள்  பலவுள . )

     இங்குக்  கூறப்பட்ட  வண்ணம்  வருவாயை  ஆறு  கூறிட்டு  யாண்டுதோறும்  செலவிடல்  வேண்டும் . முற்கூறிய  சாமந்தன்  முதலியோர்களுக்கும்  இந்நியமம்  பொருந்துவதாகும் . அச்சாமந்தன்  முதலியோரிற்  றாழ்ந்தவர்களுக்கு  இந்நியமம்  ஒரோவமயம்  பொருந் தாததாகவுங்  கூடும் .                                                                                         317

     அரசன் , தன் நாடு , புகழ் , புகழ்விளைக்குங்காரியம் , பொருள் , குணம்  என்னுமிவற்றைக்  காப்பதிலும் , வேற்றுநாட்டைக்  கவர்வதிலும்  முயற்சியுடையனாதல்  வேண்டும் . அங்ஙனங்  கவர்ந்த  வேற்று  நாட்டை  நன்கு  பாதுகாப்பதிலும் , மேன்மேலும்  வேற்றுநாடு  கொள்வதிலும்  எப்பொழுதும்  தளர்தலில்லா  முயற்சியை  மேற்கொள்ளக்  கடவன் .                                                                        318

     அரசன்  எப்பொழுதும்  செளரியம் , புலமை , சொல்வன்மை , வண்மை, ஆற்றல் , பராக்கிரமம் , இடையறவில்லாமுயற்சி  ஆகிய  இவற்றை  ஒழித்தல்  கூடாது .                                                                  319

     எவன்  போரில்  தன்  உடற்  பொருட்டாதல் , தன்றலைவன்  பொருட்டாதல்  உயிர்க்கு  அஞ்சுதலையொழித்து , மனத்தளர்வின்றிப் போர்  செய்கின்றானோ  அவனே  சூரனாவான் .                               320

     எவன்  காய்தல் , உவத்தலின்றிச்  சிறுவன்  கூறியதெனினும்  பொருளுரையை  முயன்று  கொண்டு  அதன்கண்  உள்ள  தருமத்தின்  உண்மையை  உள்ளவாறு  அறிகின்றானோ  அவனே  பண்டிதனாவான்.                                                                                          321

     அரசனுடைய  தீயகுணங்களை  அவன்  முன்னிலையிற்  கலக்கமின்றி  எடுத்துச்  சொல்லுதலையும் , அத்  தீயகுணங்களை  நற்குணங்களோடொப்பவைத்து  ஒருபொழுதும்  பாராட்டாமையை யுமுடையவனே  சொலல்  வல்லனாவான் .                                             322

     எவனுக்கு  மனைவி , மக்கள் , பொருள் முதலிய  யாவுங்  கொடைக்குரியவாக வுள்ளனவோ , எவன்  சற்பாத்திரத்திற்குத் தன்னையும்  வழங்குகின்றானோ  அவனே  வள்ளலாவான் .            323

     ஒருவன்  செயற்பாலதை  உறுதியாகத்  திறமையுடன்  செய்தற்குத்  துணைநிற்கும்  குணமே  ஆற்றலாகும் .                                                    324

     வேற்றரசர்  முதலியவர்களை  ஏவலாளரையொப்பச்  செய்து  கோடற்குத்  துணையாக  நிற்குங்  குணமே  பராக்கிரமமாகும் .       324

     போர்  செய்தற்கு  அனுகூலமாக  நிற்பது  முயற்சியாகும் .              325

28 . நஞ்சு  முதலியவை  கலந்த  உணவைச்  சோதித்தல்

     உணவில்  நஞ்சு  கலந்திருக்குங்கொல்  என்னும்  அச்சத்தாற்  குரங்கு  கோழி  முதலியவைகளாற்  சோதித்து  ஆராய்ந்தபின்  அறுவகைச்  சுவையோடுங்  கூடிய  அவ்வுணவை  எப்பொழுதும்  உண்ணல்  வேண்டும் . சோதனை  வருமாறு :-  நஞ்சு  கலந்த  அன்னத்தைக்  கண்ட  அளவிலேயே  அன்னப்பறவை  தடுமாறி  விழும் ; வண்டுகள்  குழறி  ஒலிக்கும் ; மயில்கள்  நிலைபிறழ்ந்து  துள்ளி  ஆடும் ; கோழிகள்  விரைந்து  கத்தும் ; அன்றிற்புள்  மயக்கமெய்தும் ; குரங்கு  மலங்கழிக்கும்  ; காடைப்பறவை  மயிர்  சிலிர்க்கும் ; நாகணவாய்ப்புள்  எதிரெடுக்கும்  ; ஆதலின் , இவற்றால்  உணவுப்பொருள்களைச்  சோதித்து  ஆராய்தல்  வேண்டும் . இரண்டு  சுவை  மூன்று  சுவைகளோடு  மாத்திரங்கூடிய  உணவையும் , வேண்டிய அளவின் மிகுதல் குறைதற் சுவையுள்ள உணவையும், காழ்ப்பு , இனிப்பு , உவர்ப்பு , இம்மூன்றும்  ஒருங்குசேரக்  கலந்த  உணவையும்  உண்ணலாகாது . யாரேனும்  ஒன்றை  அறிவிப்பின்  அதனை  அமைச்சர்களோடிருந்து கேட்டல்  வேண்டும் .                                 326-329

( அறுசுவையாவன – தித்திப்பு , புளிப்பு , உவர்ப்பு , துவர்ப்பு , காழ்ப்பு , கைப்பு  என்பன . )

(எதிரெடுத்தல் – வாந்தி  பண்ணுதல் .)

29 . வேட்டை  விளையாடல்  முதலியன

     அரசன்  பூஞ்சோலை  முதலிய  இன்ப  நிலங்களில்  மற்றை  அரச  குமாரர்கள் , மகளிர் , ஆடுவோர் , பாடுவோர் , வைதாளிகர் , இந்திரசால  விச்சை  செய்வோராகிய  இவர்களோடு  கூடி  உரிய  காலங்களில்  விழிப்புடையனாகிய  விளையாடல்  வேண்டும் .      330

     நாடோறும்  காலை  மாலைகளில்  , யானை , குதிரை , தேர்   இவைகளிலேறிச்  செல்லுதலைப்  பழகல்  வேண்டும் . காலாட்படைகளை  அணிவகுத்துப்  பழகும்படி  பயிற்றுதலும் , பயிற்றுவித்தலுஞ்  செய்தல்  வேண்டும் .                                                  331

     வேட்டையாடுதலால்  எப்பொழுதும்  தறுகண்மை , குறிவைத் தெய்யுந்தறமை , அஞ்சாமை , அம்பு  வாள்  முதலியவற்றை  விரைந்து  செலுத்தலாகிய  இக்குணம்  செயல்கள்  பெருக்கம்  அடைவனவாம். இவை  வேட்டையாடலால்  விளையும் நலங்கள்  போற்றோன்றுவன ; ஆயினும் , அதனால்  விளையும்  பிறவுயிர்க்குத்  துன்பஞ்  செய்தலாகிய  தீவினையொன்றே  மிகப்பெரிதாகும் . ( ஆதலின்  வேட்டையாடல்  செய்யாதிருத்தலே  நன்றென்பது  கருத்து . )           333

30. ஒற்றாடல்

     அரசன்  அம்பு  வாள் முதலிய  படைப்பயிற்சியில்  திறமையையும்  சோர்வில்லாமனத்தினையும்  உடையனாகி , தனக்குக்  கேடுவிளை யுங்  காலத்தில் , குடிகளுடையவும் , அரசியற்றொழில்  புரிவோருடையவும் , அமைச்சர்  முதலிய  தலைவர்களுடையவுமாகிய  உள்ளக்  குறிப்புக்களையும் , செயல்களையும் , பகைவர்  படைவீரர்  நீதிபதிகள் , சுற்றத்தார்  உவளகத்து மகளிராகிய  இவர்களின்  எண்ணங்களையும்  மறைவிற்  கண்டுகூறும்  ஒற்றர்கள்  முகமாக  நாடோறும்  இரவில்  முயன்று  கேட்டல்  வேண்டும் . அக்கேட்டவற்றை  நன்றாக  எழுதிக்கொள்ளவும்  வேண்டும் .                                         334-336

( கேடுவிளையுங்  காலத்திற்  கேட்டலென்பது ,”கேட்டினுமுண்டோ ருறுதி  கிளைஞரை , நீட்டியளப்பதோர்  கோல்” , என்னுந்  திருக்குறளை  ஒத்திருத்தல்  காண்க . )

     மறைவிற்  கண்டுகூறும்  ஒற்றன்  பொய்  கூறுபவனாயின்,   அவனைத்  தக்கவாறு  ஒறுத்தல்  வேண்டும் . அங்ஙனம்  செய்யாத  அரசன்  குடிமக்களின்  உயிரையும்  பொருளையும்  கவரும்  ‘மிலேச்சன்’  என்று  கூறப்படுவான் .                                                           337

     பிரமசாரி , வானப்பிரத்தன் , சந்நியாசி , போலிச்சித்தன்  ஆகிய  இவர்களின்  வேடத்தைத்  தாங்கித்  திரியும் ஒற்றர்களின்  நிலையை  அரசன்  காட்சியளவையானும்  மறைவானுஞ்  சோதித்தறிதல் வேண்டும் .                                                                                                            338

( மறைவானறிதல் – ஓர்  ஒற்றனை  மற்றோர்  ஒற்றனைக்  கொண்டு  சோதித்தல்.)

     அங்ஙனஞ்  சோதித்தறியாத  அரசன்  உண்மையறிதல்  இலனாவன் ; உண்மைச்செய்தியும்  வாராது ; அவன்  மாட்டுப்  பொய்  கூறுதலில்  அவர்  சிறிதும்  அச்சங்கொள்ளார். அமைச்சர்  முதலியோரும்  மற்றை  அரசியற்றொழில்  புரிவோரும்  தீங்கு  செய்யா  வண்ணம்  ஒற்றனை  நன்கு  காத்தல்  வேண்டும் .                                                                     339

( ஒற்றன் , அமைச்சர்  முதலியோர்களின்  நிலையையும்  உணர்ந்து  அரசனுக்குத்  தெரிவிப்பானாதலானும் , அது  குறித்து  அமைச்சர்  முதலியோர்  அவ்வொற்றனுக்குத்  தீங்கிழைக்க  எண்ணவுங்  கூடுமாதலானும் , அத்தீங்கு  வாராவண்ணம்  அரசன்  காக்கவேண்டும்  கரத்து . )

31 . அரசர்  குலத்தில்  அரசிற்குரியவனைத்  துணிதல்

     எப்பொழுதும்  ஆளப்படும்  நாட்டை  ஒரு  தலைவனுடையதாகவே  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் . பல  தலைவர்களையுடையதாகச்  செய்தலாகாது .                                                                                                    340

     அரசன்  ஒருபொழுதும்  தன்  நாட்டைத்  தலைவன்  இல்லாததாகச்  செய்தலாகாது . அரசர்  குலத்தில்  ஆண்மக்கள்  பலர்  இருப்பார்களாயின் , அவருள்  ஆண்டினாலும்  அறிவினாலும்  முதிர்ந்தவனே  அரசனாவான் . மற்றையோர்  அவனுக்குக்  காரியத்துணைவர்களாய் , எல்லாத்  துணைவர்களினுஞ்  சிறந்தோராய் , அவ்வரசன்  நலம்  வளர்தற்கு  வேண்டுவன  புரிபவராவர்.                                                                                                341-342

     மூத்தவனும்  செவிடு , தொழுநோய் , ஊமை , குருடு , அலித்தன்மை இவைகளுள்  ஒன்றையுடையனாயிருப்பின் , அவன்  அரசனாதற்குத்  தகுதியில்லாதவனாவான். அங்ஙனமே  அவன்  உடன்  பிறந்தாகும்  புதல்வர்களும்  முற்கூறிய  குற்றமுடையராயிருப்பின் , அரசிற்குரியராகார் .                                                                                        343

     மூத்தவன்  இல்லையாயின்  இளையோர்  அரசெய்தற்குரிய  ராவராதலின் , அரசனுக்குத்  தம்பியும்  தமையன்  புதல்வனும்  முற்கூறிய  குற்றமிலராயின்  அரசிற்குரியராவர் . உடன்பிறந்தார்  முதலியவர்களோடு  ஒன்றுபட்டு  வாழ்தல்  அரசனுக்கு  மிக்க  நலம்  பயப்பதாகும் .                                                                                                       344

     உடன்பிறந்தார்  முதலியவர்களோடு  வேறுபடுதல்  தன்  நாட்டிற்கும்  குலத்திற்கும்  அழிவு  செய்யுமாதலின் , அரசன்  தடையின்றிச்  செல்லும்  ஆணையுடையனாய்த்  தன்  உடன்  பிறந்தார் முதலியவர்களை  வெண்கொற்றக்குடை  அரியணை  முதலியவைக ளால்  மகிழ்வித்தல்  வேண்டும் . தன்னைப்போல்  அவர்களும்  வாழ்க்கையின்ப முடையவர்களாகும்படி  செய்தல்  வேண்டும் .         345

( அரியணை  முதலியன  உதவல் – தன்  நாட்டினுள்  அடங்கிய  சிறு  பகுதிகளுக்குத்  தலைவராம்படி  செய்தல் .)

     பிரிக்கப்படுதலாற்  சுருங்கிய  நாட்டைப்  பகைவர்  கவர்ந்து  கொள்ள  விரும்புவராதலின்  அரசர்களுக்கு  நாட்டின்  பிரிவால்  நலமுண்டாகாது .                                                                                                 346

32 . சுற்றத்தார்  முதலியோர்பால்  அரசன்  இடுங்  காரியங்கள் 

          அரசன்  உடன்பிறந்தார்  முதலியவர்களுக்கு  இராச்சியத்தின்  நான்கிலொரு  கூறு  உதவி , நாட்டைச்  சுற்றிலும்  இருக்கச்செய்தல் வேண்டும் . அன்றி  அவரைத்  தன்  நாட்டின்  நாற்புறத்துமுள்ள  சிறிய  நாடுகளுக்குத்  தலைவராக்கல்  வேண்டும் . இன்றேல் , பசு , யானை , குதிரை , ஒட்டகம்  பொருட்கருவூலம்  இவைகளின்  அதிகாரச்செயலில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . தாயையாதல் , அன்றித்  தாயை யொத்த  மற்றொருத்தியையாதல்  அடுக்களையில்  தலைமையாக  நியமித்தல்  வேண்டும் .                                                                             347-348

     அரசன்  தன்  சுற்றத்தார்களையும் , மைத்துனர்களையும்  எப்பொழுதும்  படைத்தலைமை  அதிகாரத்தில்  நியமித்தல்  வேண்டும். குரவர்களையும்  நண்பர்களையும்  தன்பாலுள்ள  குற்றங்களை  யறிந்து  எடுத்துக்காட்டும்  தொழிலில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                       349

     பெண்பாலாரை  ஆடை , அணிகலன் , பாத்திரம்  என்னுமிவற்றை  நன்கு  பார்த்துக்கொள்ளும்படி  செய்தல்  வேண்டும் . தான்  எல்லாவற் றையும்  ஆராய்ந்துகொண்டு , முறைப்படி  அவற்றில்  தன்  அடையாள  முத்திரை  இடல்  வேண்டும் .                                                                         350

33 .  அரசவை  அமைப்பு 

     இரவிலேனும்  பகலிலேனும்  தூய்மை  செய்யப்பட்டதும்  வேற்று  மனிதர்  இல்லாததுமாகிய  இல்லத்தின்  உள்ளாதல் , காட்டிலாதல்  அமைச்சர்களோடு  கூடியிருந்து  வரக்கடவ  காரியத்தைச்  சூழ்தல்  வேண்டும் .                                                                                                            351

( இது  மறைவிற்  சூழ்தல் )

     அரச  மன்றத்திருந்து  நட்டார் , உடன்  பிறந்தார், புதல்வர் , சுற்றத்தார் , படைத்தலைவர் , நீதியதிபர்  இவர்களோடு  கூடி  அரசியற்  காரியங்களை  என்றுஞ்  சூழ்தல்  வேண்டும் .                                            352

( இது  வெளிப்படையிற்  சூழ்தல் )

     அத்தாணி  மண்டபத்தில்  மேற்பாதியின்  நடுவண்  அரசனுக்குரிய  அரியணை  யிருத்தல்  வேண்டும் . அதற்குத்  தென்பாலிற்  சிலரும்  வடபாலிற்  சிலரும்  இருத்தல்   வேண்டும் . மற்றையோர்  படித்துக்  கோட்டங்களில்  இருத்தல்  வேண்டும் .                                                        353

( இதனால்  அத்தாணிமண்டபம்  கிழக்குமுகமுடையதாக  இருத்தல்  வேண்டுமென்பது  போதரும் . )

      புதல்வர் , பெயரர் , உடன்பிறந்தார் , மருகர் , தெளகித்திரராகிய  இவர்கள்  தன்  பின்புறத்தில்  வலப்பக்கம்  தொடங்கி  இடப்பக்கமாக  முறையே  இருத்தல்  வேண்டும் .                                                                    354

( மருகர் – சகோதரிகளின்  புதல்வர் . தெளகித்திரர் – மகள்  வயிற்றிற்  பிறந்த  ஆண்மக்கள்  )

     தன்  தந்தையுடன்  பிறந்தார் , தன்குலத்துப்பெரியார் , நீதியதிபர் , படைத்தலைவர்  ஆகிய  இவர்கள்  முறையே  ஒருவர்க்கொருவர்  கீழ்பாலாகத்  தன்  முன்னிலையில்  வலப்பக்கத்தில்  தனித்  தனி   இருக்கையில்  இருத்தல்  வேண்டும் .                                                         355

     தாய்வழிப்பாட்டன் , அக்குலத்துப்  பெரியார் , அமைச்சர் , சுற்றத்தார் , மாமன்மார் , மைத்துனன்மார் , மற்றை  அரசியற்றொழில்  புரிவோர்  ஆகிய  இவர்கள்  முறையே  ஒருவர்க்கொருவர்  கீழ்பாலாகத்  தன்  முன்னிலையில்  இடப்பக்கத்தில்  தனித்தனி  இருக்கையில்  இருத்தல்  வேண்டும் .                                                                                       356

    மருமகன்  இடப்பக்கத்தும் , உடன்பிறந்தாள்  கணவன்  வலப்பக்கத்தும் இருத்தல்  வேண்டும் . தன்னையொத்த  இன்னுயிர்  நண்பன்  மிக்க  அணிமையிலாவது , தன்  இருக்கையின்  பாதியிலாவது  உடனிருத்தல்  வேண்டும் .                                                  357

( மருமகன் – புதல்வியின்  கணவன் . )

     தத்தபுத்திரன்  முதலியோர் , தெளகித்திரர்  மருகர்  இவர்கட்குரிய  இடத்தில்  இருத்தல்  வேண்டும் . அங்ஙனமாயின் , மருகரும்  தெளகித்திரரும்   புதல்வன்  முதலியோர்க்குரிய  இடத்தையடைதல்  வேண்டும் .                                                                                                            358

( முதலியோர்  என்றதனால்  ஒளரசன்  அல்லாத  மற்றைக்  கிருத்திரிமன்  முதலிய  புதல்வரையுங்  கொள்ளல்  வேண்டும் . புதல்வன்  என்றது  ஈண்டு  ஒளரச  புத்திரனை .  ஒளரச  புத்திரன்  இல்லாத  அரசனுக்கே  தத்தபுத்திரன்  முதலியோர்  இருப்பாராதலின் , அந்த  தத்தபுத்திரன்  முதலியோர் , தெளகித்திரர் , மருகர்  இவர்க்குரிய  விடங்களையடையுங்கால் , அத்  தெளகித்திரர் , மருகரும்  புதல்வர்க்கும்  பெயரர்க்குமுரிய  விடங்களிலிருத்தல்  வேண்டுமென்பது   கருத்து . புதல்வரை  ஒளரசன் , ஷேத்திரஜன் , தத்தன் , கிருத்திரிமன் , கூடோற்பன்னன் , அபவித்தன்  எனவும் , கானீனன் , சகோடன் , கிரீதன் , பெளனர்ப்பவன் , சுயந்தத்தன் , செளத்திரன்  எனவும்  பன்னிரண்டு  வகைப்படுத்து  மனு  கூறுவர் . அவர்  தம்  இலக்கணங்களை  மனுதரும சூத்திரம் 9-ஆம்  அத்தியாயம்  169  முதல்  179 – வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க . )  

     தந்தையும்  ஆசிரியனும்  இருபக்கத்து  முற்கூற்றில்  அரசனிருக்கையோடு  ஒத்த  இருக்கையிலாவது , அன்றி  அதனினுஞ்  சிறந்த  இருக்கையிலாவது  இருத்தல்  வேண்டும் . எழுத்தாளரனை வரும் அமைச்சர்களின்  பின்புறத்தே  நிற்றல்  வேண்டும் .                   359

     ஏவலாளரனைவரும்  முற்கூறப்பட்ட  எல்லோர்க்கும்  பின்புறத்தே  நிற்றல்  வேண்டும் . காரியத்தை  முன்னிட்டு  வருவோருடைய  வரவையும்  வணக்கத்தையும்  தெரிவிப்பவரும் , பொற்றடி  தாங்கு கின்றவருமாகிய  இரண்டு  சேவர்கள்  பக்கத்தில்  நிற்றல்  வேண்டும் .

34 . அரசுரிமை  அடையாளங்களைக்  காத்தல்  

     அம்பு  முதலிய  படைக்கலப்பயிற்சியிற்  றிறமைவாய்ந்த  அரசன்  அரசனுக்குரிய  சிறப்படையாளங்களையுடையனாய்ச்  சிறந்த  அணிகலன்களையணிந்து , அழகிய  கவசம்  தரித்து , நல்லாடைகளை  யுடுத்து , முடிசூடி , உறையின்  உருவிய  வாளேந்தி , எப்பொழுதுஞ்  சுருசுருப்பான  மனமுடையனாய்த்  தன்  அரசிருக்கையில்  உவகையோடு  வீற்றிருத்தல்  வேண்டும் .                                                  361

     ‘ நீயே  எல்லோரினுஞ்  சிறந்த  வள்ளலும்  சூரனும்  அறமுடை யோனும்  ஆகின்றாய் ‘  என்று  புனைந்து  கூறுவார்  சொற்களைக்  கேட்டலாகாது .  அரசியற்  காரியஞ்  சூழுங்கால் , அதனைக் கேட்போர்  வஞ்சகர்களாயிருப்பின்  அவர்களையும் , தன் [அரசன்] பாலுள்ள  பிரியத்தாலும்  பொருட்பற்றாலும் , அச்சத்தாலுங்  கழறிக்கூறாது  ஊமைபோல்  வாய்வாளாதிருக்கும்  அமைச்சர்களையும் , அரசன்  அவ்வரசியற்காரிய  நிறைவேற்றத்தில்  துணை  செய்பவர்களாக  ஏற்றுக்கொள்ளலாகாது .                                                                            362-363

( இதன்கண்  “கேட்போர்”  என்பதற்குப்  பிறர்  கூறுங்  காரியங்களைக்  கேட்பவர்களெனவும் , பிரியம் , பொருட்பற்று , அச்சம்  இவை  காரணமாக  அமைச்சர்கள்  ஊமைபோல்  வாய்வாளாதிருத்தல்  அரசன்பாற்  காரியங்கருதி  வருவோர்களைக்  குறித்தாம்  எனவும்  உரைவரைந்தாரொருவர்  கூறினார் . அரசியற்  காரியஞ்  சூழ்தலே  ஈண்டு  எடுத்துக்  கொள்ளப்பட்டதாகலானும் , “ராஜக்ஞ”  என்னுஞ்  சொல்லை  அவ்வுரையாளர்  ஒழித்துப்  பொருள்  கொண்டமையானும்  அச்சொல்லை  இயைத்துப்  பொருள்கொள்ளுங்கால்  அவர்  கருத்துப்  பொருந்தாமையானும்  வேறுவிதம்  பொருள்  கொண்டு  மொழி பெயர்க்கப்பட்டது .  கழறிக்கூறல் –  அரசன்  நெறி  பிறழுங்கால்  இடித்துக்கூறல் )

     ஒரு  காரியத்தைத்  துணிவதிற்  காரணத்தோடுகூடிய  அமைச்சர்களின்  கருத்துக்களைத்  தனித்தனி  எழுதிக்கொண்டு ,அவற்றைத்  தன்  கருத்தோடு  இயைத்துச்  சூழ்தல்  வேண்டும் . பலருக்கும் உடன்பாடாயதைச் செய்தல் வேண்டும்.        364

     அறிவு  மிக்க  அரசன்  காரியஞ்  செய்தற்குரிய  ஆற்றல்  வாய்ந்த  யானை , குதிரை , தேர் , பசு , முதலியவைகளையும் , வினை  செய்வாரையும் , ஏவலாளரையும்,  பயன்படும்  மற்றைப்பொருள்  களையும் , காலாட்  படைகளையும் , அறிந்து , நாடோறும்  முயன்று  நன்கு  காத்தல்  வேண்டும் . மிகவும்  ஆற்றலில்லாத  அவ்யானை  முதலியவற்றையும் , வினைசெய்வார்  முதலியோரையும்  அறிந்து  விலக்கல்  வேண்டும் .                                                                                         366

( ஆற்றல்  வாய்ந்த  என்னும்  விசேடணத்தை  வினைசெய்வார் முதலியோர்க்கும்,  பொருள்  படைகளுக்குங்  கொள்ளல்  வேண்டும் . விலக்கல்  வேண்டும்  என்பதற்கு  ஈண்டு  உரிய  செயல்களில்  நியமித்தலாகாதென்பது  கருத்து . “கார்யக்ஷமாந்”  என்ற  பாடம்  இங்குக்  கொள்ளப்பட்டது . )

     பதினாயிரங்  குரோசத்திற்கு  அப்பாலுள்ள  செய்தியை  ஒரே  தினத்தில்  வரச்செய்தல்  வேண்டும் . குடிமக்களை  வேதனமுதவி  எல்லாவித்தைகளையும்   கலைகளையும்  பயிலும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                                     367

( இது  மின்சாரவாற்றலாற்  கம்பி  வழியாகவும்  விண்வழியாகவும்  செய்திகளைப்  போக்குவரவு  செய்தற்குரிய  இக்காலத்துப்  புதிய  கருவிகளை   [Telegraph ] நினைவுறுத்தும் . )

     அவருட்  கல்வி  நிரம்பப்  பெற்றவர்களை  நன்றாகத்  தெரிந்தெடுத்து  அக்கல்வி  சம்பந்தமான  காரியங்களிற்  கணக்காயர்  முதலியோராக  நியமித்தல்  வேண்டும் . அவருள்  வித்தைகளிலும்   கலைகளிலும்  தேர்ந்தவர்களை  யாராய்ந்தறிந்து  அவருக்கு  யாண்டுதோறும்  பரிசில்  கொடுத்துச்  சிறப்பித்தல்  வேண்டும் .     368

( கணக்காயர் – உபாத்தியாயர் .)

     அரசன்  எப்பொழுதும்  வித்தைகளையும் , கலைகளையும்  வளர்த்தல்  வேண்டும் . அச்சந்தரும்  வேடத்தையும் , வணக்கத்தையும் , நீதியின்  திறமையையும் , படைப்  பயிற்சியையுமுடைய  வீரர்கள் , கையில்  உறையொருவிய  வாட்படையைத்  தாங்கி  முன்னும்  பின்னும்  அணிமையிற்  சூழ்ந்து  செல்லத் , தான்  யானைமீதிவர்ந்து , குடிகளை  இன்புறுத்தற்  பொருட்டுத்  தன்  நகரத்தில்  நாடோறுஞ்  சுற்றிவரல்  வேண்டும் .                                                                              369-370

( வித்தை – வேதசாத்திர  அறநூல்  புராணமுதலியன  . கலை – நாட்டியம்  சிற்பம்  முதலிய  அறுபத்துநான்குமாம் . இவற்றின்  விரிவை  4-ஆம்  அத்தியாயம் 67-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . சுற்றிவரல் – உலாப்  போதல் . )

     அரசனுக்குரிய  ஊர்தியில்  ஏறியிருக்கும்  நாயும்  அரசனை  யொத்ததாக  ஏன்  ஆகாது ? [ பற்றுக்கோட்டின் சிறப்பால்  அரசனுக்கொப்பாகவே  மதிக்கப்படும்.]  அங்ஙனமே  முடி , குடை , ஊர்தி , அணிகலன் , பரிசன  முதலிய  அரசிலக்கணங்களில்லாத  அரசனும் , புலவர்களால்  உண்மையாகவே  நாயோடொப்ப  வைத்து  எண்ணப்படுவான் .                                                                                            371

( அரசனுக்குரிய  ஊர்தியில்  இருத்தலால்  நாயும்  அரசனுக்கொப்பாக  மதிக்கப்படுமெனவும் , முடி  குடை  முதலிய  அரசிலக்கணங்களில்லா மையால்  அரசனும்  நாய்க்கு  ஒப்பாக  மதிக்கப்படுவானெனவும்  கூறியவாறாம் . இதனால்  அரசன்  என்றும்  அரசியல்  அடையாளங் களை யுடையவனாய்ப்  பரிசனங்கள்  சூழத்  தனக்குரிய  ஊர்தியில்  இவர்ந்து  செல்லவேண்டுமென்பது  போதரும் . )

     ஆதலின்  அரசன் , தன்னொடொத்த  குணஞ்  செயல்கள்  வாய்க்கப்பெற்ற  தன்  சுற்றத்தார் , நண்பர் , தன்மாட்டு  அன்புடைய  மற்றையார்  ஆகிய  இவர்களோடு  நகரத்தில்  உலாவச்  செல்லல்  வேண்டும் . ஒரு  பொழுதும்  தாழ்ந்தவர்கள்  சூழச்  செல்லலாகாது . 372

     எப்பொழுதும்  பொய்யொழுக்கமுடையாரை  இழிந்தாரெனவும் உண்மை  யொழுக்கமுடையாரை  உயர்ந்தாரெனவும்  முறையே  கொள்ளல்  வேண்டும் . இழிந்தார்  நல்லோரினுஞ்  சிறப்ப  மென்மைக் குணத்தை  நன்கு   வெளிப்படுத்திக்   காட்டுவர் .                           373

( பொய்யொழுக்கமுடையார் , தம்மை  நல்லோரையொப்ப  மதிக்கும்  வண்ணம்  தம்பால்  உயர்ந்த  குணங்கள்  இருப்பனவாக  உலகத்துக்கு  வெளிப்படுத்திக்  காட்டுவர் ; அது  பற்றி  அவரை  உயர்ந்தவராக  மதிக்கலாகாதென்பது  கருத்து )

 35. யாண்டுதோறும்  நாட்டைச்  சுற்றிப்  பார்த்தல்

     அரசன்  ஆண்டுதோறும்  சிற்றூர்களையும் , பட்டினங்களையும், நாடுகளையும் நன்றாகத்  தானே  நேரிற்  பார்த்தும் , தன்னால்  நியமனம்  பெற்ற  அதிகாரிகளால்  குடிகளுள்  யாவர்  இன்புறுத்தப்  பட்டனர் ; யாவர்  துன்புறுத்தப்பட்டனரென்று  அன்னார்  நிலைகளை  நேரிற்  கண்டும் , அந்நிகழ்ச்சிகளை  உண்மையாக  வுணர்ந்து  உள்ளத்தமைத்துக்  கொள்ளல்  வேண்டும் . அதிகாரிகள்  பக்கலின்றிக்  குடிகள்பால்  நன்னோக்கமுடையனாதல்  வேண்டும் .                    374-375

     குடிகள்  பலராற்  குற்றங்கூறி  வெறுக்கப்படும்  அதிகாரியை  அரசன்  விலக்கிவிடல்  வேண்டும் . ஒருமுறை  நீதிநெறியிற்  றவறிய  அமைச்சனைக்  கண்டுபிடித்துத்  தனிமையிற்  றண்டித்தல்  வேண்டும்.  மீண்டும்  மீண்டுங்  குற்றம்புரியும்  அமைச்சனை  வெளிப்படையாகத்  தண்டித்து  விலக்கிவிடல்  வேண்டும் . அறவழி  பிழைத்தொழுகும்  மற்றைச்  சிற்றரசர்களுடைய  அரசியலையும் , பிற  பொருள்  முதலியவைகளையும்  அரசன்  கவர்ந்து  கொள்ளலாம் .                376-377

     தோற்ற  அரசர்களுடைய  நாட்டில்  எப்பொழுதும்  நீதிமன்றம்  அமைத்தல்  வேண்டும் . எல்லாப்பொருளையும்  இழந்து  தோல்வி  யெய்தினார்க்கு  அவரவர்  நிலைமைக்குத்  தக்கவாறு  வேதனங் கொடுத்து  உதவல்  வேண்டும் .                                                                 378

     தன்மாட்டுப்  பேரன்பும் , கட்டழகும் , அழகிய  ஆடையும்  இன்சொல்லும் , உயர்ந்த  அணிகலன்களும் , சிறந்த  கற்பொழுக்க முமாகிய  இவற்றையுடைய  இல்லாளோடு  கூடி  இன்புறல்  வேண்டும்

     இரண்டு  யாமம்  வரை  சயனிப்போன்  மிக்க  நலத்தை  யடைவான்.  தன்  நிலையினின்றும்  நீங்கலாகாது . நீதியினாற்  பகைவர்  கூட்டத்தை  வெல்லல்  வேண்டும் .                                                               380

     பற்களும்  மயிர்களும்  உகிர்களும்  தமக்குரிய  இடங்களினின்றும்  இழிந்தக்கால்  விளக்கம்  எய்தா . அங்ஙனமே  அரசனும்  தன்னிலையி னின்றும்  இழிந்தக்கால்  விளக்கமுறான் .  அரசன்  கடக்கமுடியாத  கேடு  நேர்ந்துழி , மலையரண்  வாய்ந்த  இடத்தையடைதல்  வேண்டும்.

( இக்கருத்தை , “ தலையி னிழிந்த மயிரனையர்  மாந்தர் , நிலையினிழிந்தக் கடை “  என்னுந்  திருக்குறளிற்  காண்க .  உகிர் – நகம் .) 

     அம்  மலையரணுள்  இருந்து , கள்வர்  தொழில்  மேற்கொண்டு , மீண்டும்  தன்  நாட்டைப்  பெறல்  வேண்டும் . அங்ஙனம்  கள்வர்  தொழில்  மேற்கொண்டுள்ள  அரசன் , விவாகம்  தானம்  வேள்வி  இவைகளின்  பொருட்டு  வைக்கப்பட்டனவல்லாத  பிறர்   பொருள்களில்  எட்டிலொரு  கூறு  அவர்  உணவிற்கு  விட்டு  எஞ்சிய வற்றையும் , கயவர்களுடைய  பொருள்   முழுதையும்  எவ்வாற்றானும்  கவர்ந்து  கொள்ளலாம் . எப்பொழுதும்  ஒரே  இடத்தில்  இருத்தலாகாது எவனிடத்தும்  நம்பிக்கை  வைத்தலாகாது .                                        382-383

( கள்வர்  தொழில்  மேற்கோடலாவது – பகைவர்  கைப்பற்றிய  நாட்டை  மீண்டும்  பெறுதற்குப்  பிறர்  காணாதவாறு  வேண்டியவை  செய்தல் . பிறர்பொருள் – நல்லோர்பொருள் .)

     எப்பொழுதும்  விழிப்புடையனா யிருத்தல்  வேண்டும் . தன்  உயிருக்கு  அழிவை  நினைத்தலாகாது . தறுகட்செயலும் , இடையறா  முயற்சியும்  தான்  மேற்கொண்ட  கள்வர்  தொழிலில்  வன்கண்மையும்  பிறர்மனை   நயவாமையும் , குலகன்னிகளை  வலிந்து  பற்றாமையுமாகிய  இக்குணஞ்  செயல்களை  யுடையவனாயிருத்தல்  வேண்டும். தன்  நியமனம்  பெற்ற  அதிகாரிகள் , புதல்வர்களைப்  போல்  பரிபாலிக்கப்  பட்டவராயினும், ஒரோவமயம்  பகைமை  யெய்தவுங்  கூடும் .                              385-385                                                                                                       

     முயற்சிக்குப்  பயனின்றாதல்  ஊழ்வலியானாம் . அதுபற்றி  முயற்சி  குற்றமுடையதாகாது . தன்முயற்சி  யனைத்தும்  எவ்வாற்றானும் பயனின்றிக்  கழிதலைக்  காணின் , எஞ்சிய  வாழ்நாளில்  தவஞ்செய்து  மேலுலகம்  எய்தக்கடவன்.                                                  386

( இக்கருத்தை,”பொறியின்மை  யார்க்கும்  பழியன்  றறிவறிந், தாள்வினையின்மை  பழி “  என்னும்  திருக்குறளிற்  காண்க .)

     அரசர்க்குரிய  காரியங்கள்  ஈண்டுச்  சுருக்கிக்  கூறப்பட்டன . இவற்றின்  விரிவை , இந்நூலின்  மிச்சிராத்தியாயமாகிய  நான்காம் அத்தியாயத்திற்  கூறுவேன் . அரசியற்  காரியங்களை  நிரூபித்துக் காட்டும்  முதல்  அத்தியாயம்  இவ்வளவிற்  கூறப்பட்டது .                    387

( நான்காம்  அத்தியாயம் , ஏழு  பிரகரணங்களை  யுடையதாய்ப்  பலவகை அரசியற்  காரியங்களையுங்  கூறுதலால்  அது  மிச்சிராத்தியாயம்  என்று  கூறப்பட்டது . )

சுக்கிர நீதியில்

“அரசியற்  காரிய  நிரூபணம்”  என்னும்

முதல்  அத்தியாயம்  முற்றிற்று .

                            ********************************************************

இரண்டாம்  அத்தியாயம் 

( இளவரசன்  முதலியோர்  இலக்கணங்களுங்  காரியங்களும் )    

  1. அரசனுக்கு  நற்றுணையானாம்  சிறப்பு   

     மிகச்  சிறிய  காரியமெனினும்  அதனைத்  துணையின்றி  ஒருவன்  செய்ய  முடியாது . அங்ஙனமாயின்  மிகப்  பெரிய  அரசியற்  காரியத்தைப்  பற்றிக்  கூறற்பாலது  யாதுளது ?                                       1

     அரசன்  எல்லாவிச்சைகளிலுந்  திறமையும்  நல்ல  சூழ்ச்சியறிவு  முடையனாயிருப்பினும் , அமைச்சர்களின்றித்  தானொருவனாகவே  தனித்திருந்து  சூழ்ச்சிப்பொருளைப்  பற்றி  ஆராய்தல்  கூடாது .        2

     சிறந்த  அறிவுள்ள  அரசன் , புரோகிதர் , அமைச்சர்  முதலிய  பிரகிருதிகள்  மன்றக்குழுவினர்  மற்றை  அதிகாரிகள்  அவைக்களத் துள்ளாராகிய  இவர்களுடைய  நல்ல  கொள்கைகளிலேயே  எப்பொழுதும்  நிற்றல்  வேண்டும் . தன்  கருத்தின்   வழி  ஒருபொழுதும்  ஒழுகுதல்  கூடாது .                                                                                                3

( மன்றக்குழுவினர் ; 1 ஆம்  அத்தியாயம்  251-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க)

     அரசன்  தன்  கருத்தின்  வழி  ஒழுகுவானாயின்  தன்  நாட்டினராலும்  பிரகிருதிகளாலும்  அப்பொழுதே  வேறுபடுக்கப்படுவான் ; அதனால்  அவன்  துன்பத்திற்கே  யாளாவான் .                                                                4

     பெரியோருடைய  உபதேச  மொழிகளாலும் , அனுபவங்களாலும் , ஆகமங்களாலும் , அநுமானத்தாலும்  ஒவ்வொரு  மனிதனிடத்தும்  அறிவு  விளக்கம்  வெவ்வேறு  இயற்கையுடையதாகக்  காணப்படும் . ஒப்புமைகளாலும் , ஆராய்ச்சியில்லாத  செயல்களாலும் , வஞ்சகங் களாலும் , ஆற்றல்களாலும் , உண்டாகும்  மனிதரின்  வழக்க  ஒழுக்கங்களின்  பற்பல  வேறுபாடும் , பெருமை  சிறுமைகளானும்  ஏற்றத்தாழ்வும்  காட்சியளவையாலறியப்படும் .                                      5-6

( இவ்விரண்டு  சுலோகங்களாலும்  முறையே  மனிதர்களின்  அறிவு  விளக்கமும்  வழக்க  ஒழுக்கங்களும்  பல்வேறு   வகையினவா மென்பது  போதரும் . )

     அவ்வெல்லாவற்றையும்  ஒரு  மனிதன்  தனிமையாக  அறிந்து  கொள்ளல்  இயலாததாகலின் , அரசன்  தன்  அரசியல்  வளர்ச்சி யெய்தற்பொருட்டுத்  தக்க  துணைவர்களை  ஆராய்ந்து  அமைத்துக்கொள்ளல்  வேண்டும் . அத்  துணைவராவார் , நற்குடிப்பிறப்பு , சிறந்த  குணவொழுக்கங்கள் , வீரம் , தலைவனிடத் தன்பு, இன்சொற்கூறல் , இதோபதேசஞ்  செய்தல் , துன்பம்  பொறுத்தல் , எப்பொழுதும்  அறத்திற்  பற்றுடைமை, தீநெறிக்கட்  செல்லும்  அரசனையும்  அறிவினாற்  றாங்கும்  ஆற்றல் , தூய்மை, அழுக்காறின்மை , காமமின்மை , வெகுளியின்மை , உலோபமின்மை , மடியின்மையாகிய  இவைகளை  யுடையராவார் .                                 7-9

                    2 . அரசனுக்குத்  தீத்துணையானாங்  கேடு

     அரசன்  தீயதுணையால்  தன்  கடமைகளையும்  அரசியலையும்  இழந்து  விடுவான் . திதிபுதல்வர்களாகிய  அசுரர்கள்  தீய  துணைவராலும்  தீச்செயல்களாலும்  அழிவெய்தினர் .                            10

     துரியோதனன்  முதலிய  அரசர்கள்  வீரமும்  ஆற்றலும்  மிகவுடையராயிருந்தும் , தீயதுணைவர்களாற்  கேடெய்தினர் . ஆதலின்  அரசன்  “யானே  எல்லாவற்றையும்  அறிந்துள்ளேன் “  என்னுஞ்  செருக்கொழிந்து  நல்ல  துணைவர்களையுடையனா யிருத்தல்  வேண்டும் .                                                                                          11

( தீயதுணைவர்கள் – சகுனி  முதலியோர் .)

3 . இளவரசுக்குரியார்

     இளவரசனும்  அமைச்சர்களும்  அரசனுக்கு , முறையே  வலம்  இடமாகிய  பக்கங்களிலுள்ள  தோள்களும் , கண்களும் , செவிகளுமாக   எண்ணப்படுவர் .                                                                                                 12                                                                                          

( இளவரசன்   அரசனுக்கு  வலப்பக்கத்துள்ள  தோளும் , கண்ணும் , செவியுமாவன்  எனவும் , அமைச்சர்  இடப்பக்கத்துள்ள  தோளும் , கண்ணும் , செவியுமாவர்  எனவும்  கொள்க . )

     அவ்விளவரசனையும்  அமைச்சரையு   மில்லாத  அரசன்  தோள், செவி, கண்  இவையில்லாதவனாவான் . ஆதலின் , அவ்விரு  பகுதியினரையும்  ஆராய்ந்தமைத்தல்  வேண்டும் . இன்றேற்  பெருங்கேடு  விளையும் .                                                                                     13

     எல்லா  அரசியற்காரியங்களையும்  எப்பொழுதும்  மடியின்றிச்  செய்தற்குரிய  ஆற்றலுடையனாய்த்  தன்  தருமபத்தினியிடம்  பிறந்த  ஒளரசபுத்திரனை  இளவரசனாகச்  செய்தல்  வேண்டும் .                       14

( ஒளரசபுத்திரன் – ஒருவனுக்கு  விதிப்படி  மணந்த  மனைவியிடத்துப்  பிறந்த  மகன் .)

     இன்றேல்  அத்தகைய  ஆற்றல்  வாய்ந்த  தன்  தம்பியையாதல் , ஆண்டினால்  தனக்கு  இளைய  சிறிய  தந்தையையாதல் , தன்  தமையன்  மகனையாதல் , தத்தபுத்திரனையாதல் , அபிமான  புத்திரனையாதல்  இளவரசுக்குரியனாகச்  செய்யலாம் .                       15

( தத்தபுத்திரன் – புத்திரனில்லாமல்  வருந்தும்  ஒருவனுக்குத்  தாய் தந்தை யிருவராலும்  மனமுவந்து  கொடுக்கப்பட்ட  புதல்வன் . அபிமான  புத்திரன் –  புதல்வனில்லாத  ஒருவன்  பிறராற்  பெறாமல் , தானே  அன்பினால்  வைத்து  வளர்க்கப்படுவன . இவனைக்  கிருத்திம புத்திரன்  என்று  மனு  கூறுவர் . [ மநு. அத் . 9 . 4-16-6]  )

     இங்குக்  கூறப்பட்டவர்களும்  இல்லையாயின் , தெளகித்திரனை யாதல் , தனக்குப்  பிரியமான  மற்றொருவனையாதல்  நியமனஞ்  செய்யலாம் .  தனக்கு  நலமுண்டாதற்பொருட்டு  இவ்விளவரசர்களுக்கு  மனத்தாலுங்  கேடு  நினைத்தலாகாது .            16

( தெளகித்திரன் – புதல்வியின்  மகன் .)

     தங்கடமையிற்  பற்றும் , வீரமும் , அன்பும் , நீதியுமுடைய  இராசகுமாரர்கள் இளைஞராக  விருப்பினும் , அன்னாரை  மிக்க  முயற்சியோடு  எப்பொழுதுங்  காத்தல்  வேண்டும் .                                 17

     அவ்  விளவரசர்  காக்கப்பட்டிருப்பினும் , அரசன்பால்  எங்ஙன மாயினும்  புரைநெறி  கண்டு  அவனையழிக்கும்  இயல்புடைய ராவரெனினும் ,  காக்கப்பட்டிலரேல் , அரசன்  செல்வங்களில்  வேட்கையுடையராய் , அவனை  யழித்துவிடக்  கருதுவரென்பது  கூறாமலேயமையும் .                                                                                           18

( புரைநெறி – பிழைவழி .)

     தோட்டியால்  அடக்கவொண்ணாதனவும் , மதக்களிப்புமிக்கனவு   மாகிய  களிறுகளை  யொத்த  அரசிளங்குமரர் , சிங்கம்  யானையைக்  கொல்லுதல்  போலத்  தம்மைக்  காக்கும்  அரசனை  விரைந்து  கொல்லும்  இயல்பினராவர் .                                                                             19

     அவ்  வரசிளங்குமரர் , தந்தைமாரையும்  உடன்பிறந்தாரையுங்   கொல்லத்துணிவரெனின் , மற்றையோரைப்  பற்றிச்  சொல்லவேண்டுவதென் ?  அறிவில்லாத  பாலனும்  தலைமையை  விரும்புவானாயின்  , காளைப்  பருவமுடையாரைப்  பற்றிக்  கூறற் பாலது  யாதுளது ?                                                                                                 20

     அரசன்  எப்பொழுதும்  தானே தன்  அன்பிற்குரிய  வினை செய்வோர்களால்  அவ்வரசிளங்குமரர்  மனக்கருத்துக்களைத்  திறமையானறிந்து , இடையறாமல்  அவரைத்  தன்  அணிமையில்   வைத்துக்  காக்கக்  கடவன் .                                                                               21

     அரசன்  அமைச்சர்  முதலியவர்களைக் கொண்டு ,தன்  புதல்வர்களை  நல்ல  நீதி  நூல்களிலும்  வில்வித்தைகளிலும்  திறமையும் , எப்பொழுதும்  இடுக்கணழியாமையும், சொல்லானும்  தண்டத்தானும் , ஒறுத்தலில்  அனுபவமும் , வீரத்தோடு  போருஞற்றுவதிற்  பற்றும் , எல்லாக்  கலைகளிலும்  வித்தைகளிலுந்  தேர்ச்சியும் , காரியத்திற்  சுறுசுறுப்பும் , நல்ல  வணக்கமுமாகிய  இவற்றை யுடையராயிருக்கும்படி  செய்வித்தல்  வேண்டும் .            22-23

( இடுக்கணழியாமை – துன்பம்  வந்துழி  மனங் கலங்காமை . கலைகள்- ஓவியம்  சிற்பம்  முதலியன . வித்தைகள் – வேதவேதாங்க முதலியன . )

     அரசன்  தன்  புதல்வர்களை  நல்ல  ஆடை  அணிகலன்களால் அணிசெய்து , அழகிய  விளையாட்டுப்  பொருள்களால்  மகிழ்வித்து இருக்கையீதல்   முதலியவைகளாற்  சிறப்பித்து , இனிய  உண்டிகளால்  வளர்த்து , இளவரசுக்குரியவர்களாகச்  செய்து  அப்பதவியில்  முடிசூட்டல்  வேண்டும் . பயிற்சி  செய்விக்கப்படாத  புதல்வர்களுடைய  குலம்  விரைந்து  அழிவெய்தும் .                                                                  24-25

    4 . ஒழுக்கக்கேடுடைய  புதல்வர்  முதலியோரை  நடத்துமுறை

     இராசகுமாரன்  மிக்க  தீயொழுக்கமுடையனாயினும் , அவனை  விலக்குதல்  கூடாது . அங்ஙனம்  விலக்கப்படின் , அதனாற்  றுன்புற்ற  அவன் , பகைவரைச்  சார்ந்து  தந்தையைக்  கொல்லத்  துணிவான் .  26

     காம  முதலிய  தீயொழுக்கம்  மேற்கொண்டிருக்கும்  புதல்வனை , அவ்வொழுக்கமுடைய  பிறரைக்  கொண்டு  துன்புறுத்தல்  வேண்டும் . மதச்செருக்கு  மிக்க  யானைப்  போற்  கட்டுக்கடங்காப்  புதல்வனை , இதத்தால்  அடக்கி  வயப்படுத்தல்  வேண்டும் .                                           27

( பிறரைக்கொண்டு  துன்புறுத்தலாவது  – அத்தீயொழுக்கமுடையார்  தம்  குழுவில்  இவனைப்  பெருமைப்படுத்தவாறு  செய்தல் .)

     மற்றைஞாதிகள்  தீயொழுக்கமுடையராயிருப்பின் , அவர்களை  முயன்று  புலி  முதலியவைகளாலும் , பகைவர்களாலும் , வஞ்சகச் செயல்களாலும்  நாட்டின்  நலங்குறித்துக்  கொன்றுவிடலாம் .              28

     அங்ஙனங்  கொலை  செய்தொழிக்காவிட்டால் , அத்தாயத்தார்  அரசனுக்குங்  குடிகளுக்குங்  கேடு  சூழ்பவராவர் . ஆதலின் , ஞாதிகள் தம்  சிறந்த  குணங்களால்  வேந்தனை  எப்பொழுதும்  மகிழ்வித்தல்  வேண்டும் . இன்றேல்  அவர்கள்  அரசன்பாற்  பெறும்  உதவியினின்றும்  உயிர்  வாழ்க்கையினின்றும்  விலக்கப்படுபவராவர் .                             29

     வேந்தன் , சபிண்டகரல்லாத  வேற்றுக்குடியிற்  பிறந்த  தத்தபுத்தி ரன்   முதலியவர்களைத்  தன்  புதல்வர்களாக  நெஞ்சத்தாலும்  நினைத்தலாகாது ; அவர்கள்  பொருள்மிக்க  மனிதனை  நோக்கித்  தத்தகத்  தன்மையை  விரும்புவராதலின் .                                                31

( சபிண்டகன் – ஏழுதலைமுறைக்  குட்பட்ட  சந்ததியிற்  றோன்றினவன் தத்தகத்தன்மை – தத்தபுத்திரனாந்தன்மை  . அதனைப்பொருள்  கருதி  விரும்புவாரைப்  புதல்வராகக்  கோடல்  நலமின்  றென்பது  கருத்து . )

     மனிதர்க்கு  ஆண்மகனை  யொப்பப்  பெண்மகளும்  தம்  ஒவ்வோருறுப்புக்களினின்றும்  தோன்றுகின்றாளாதலின் , தம்  குலத்திற்  பிறந்த  பெண்களுடைய  புதல்வர்,  முற்கூறிய  மற்றைத்  தத்த  புத்திரர்களினுஞ்  சிறந்தவராவர் .                                                      32

     ஆதலின் , பிண்டதானத்தில்  புத்திரனுக்கும்  தெளகித்திரனுக்கும்  பேதமின்றாம் . அரசன் , அத்தெளகித்திரனும்  இல்லையாயின் , நிலத்தையுங்  குடிகளையுங்  காத்தற்பொருட்டுத்  தத்தபுத்திரனைப்  பேணல்  வேண்டும் .                                                                                           33

( பிண்டம் – பிதிர்க்களை  நோக்கியிடும்  சோற்றுத்திரளை.)

     வேந்தன்  மிக்க  பொருளுடையனாயின் , குடிகளைக்  காத்தற்பொருட்டு  மற்றொருவனுக்குப்  பிறந்த   மகனைத்  தன்  மகனாக  எண்ணி , அத்  தத்தபுத்திரனுக்கு  எல்லாவற்றையுங்  கொடுத்தல்  வேண்டும் . பொருளிலனாயின்  அங்ஙனஞ்  செய்தல்  வேண்டா .                                                                                                               34

     இவ்வுலகத்திற்  பொருளைத் [தத்த  புத்திரர்க்கேனுங்  காத்து  வைப்பதன்றி ]  தானம்  தேவ  காரியம்  இவற்றிற்கு  உபயோகப்படுத்த எண்ணினார் . இதன்கண்  வியப்பு  யாதுளது ? ஒருவன்  இளவரசனாகியும்  வேறுபாடு  எய்தல்  தக்கதன்று .                                 35

     வேந்தன்  தன்  தந்தை ,  குரு , தமையன் , தம்பி , தமக்கை , தங்கை, தன்மாட்டன்புடைய  மற்றை  நண்பராகிய  இவர்களுள் , எவர்க்கேனும்  தன்  பெருஞ்  செல்வத்தைக்  கொடுத்தலாகாது .                                        36

( பெருஞ்  செல்வத்தைக்  கொடுத்துவிடிற்  பின்  அப்பொருட்குறைவால்  தலைமையின்  சிறப்புக்  குன்றிவிடுமென்பது  கருத்து . )

5 . இளவரசர்  கடமை

     இராச  குமாரர்  நாட்டிலுள்ள உயர்குடிக்கட்  பிறந்தாரை   அவமதித் தலுமாகாது ; துன்புறுத்தலுமாகாது .  பெருஞ்  செல்வத்தை  யெய்தினும்  தந்தையின்  ஆணைவழி  ஒழுகல்  வெண்டும் .                                        37

     புதல்வனுக்குத்  தந்தையின்  ஆணையே  சிறந்த  அணியென்று  கூறப்படும் . ஆகலானன்றே , [ தந்தையின்  சொற்படி ]  பரசுராமன்  தாயைக்  கொன்றான் . இராமன்  வனத்தை  யடைந்தான் .                  38

     பரசுராமன்  இராமனாகிய  இவ்விருவரும் , தந்தையர்  வன்மையால்  முறையே  தாயையும்  அரசியலையும்  மீண்டும்  எய்தப்பெற்றனர் . ஒன்னார்த்  தெறலும்  உவந்தாரை  ஆக்கலுமாகிய  ஆற்றல் மிக்க  தந்தையினது  ஆணை  மிகச்  சிறந்ததாகும் .                                            39

( தெறல் – சபித்தல் , ஆக்கல் – அநுக்கிரகித்தல் , பரசுராமர் , தம்  தாய்  இரேணுகை  நெஞ்சத்தாற்  பரபுருடனை  நினைந்த  குற்றத்திற்குக்  கழுவாயாக  அவளைக்கொன்றுவிடும்  வண்ணம்  தந்தை  சமதக்கினி  முனிவர்  இட்ட  கட்டளையைத்  தன்  உடன்பிறந்தார்  மறுத்துவிட , தாம்  நிறைவேற்றினர் , பின்  தந்தையை  வேண்டித்  தாயை  உயிர்ப்பித்தனர் . இராமபிரான் , தந்தை  சொல்  ஏற்று  நாட்டைத்  துறந்து  காடெய்திப்  பின்  மீண்டும்  அரசியலை  யெய்தினர் . )

     தன்னுடன்  பிறந்தாரெல்லாரிடத்தும் , தன்  செல்வப்  பெருக்கையாதல்  அதிகாரத்தையாதல்  காட்டலாகாது . தாய பாகத்திற்குரிய  தருமபுத்திரன்  முதலியோர்களை  அவமதித்தமையால்  துரியோதனன்  அழிவெய்தினான் .                        40

( பாண்டவர்க்குத்  தாயபாகங்  கொடுக்க  மறுத்தமையால்  துரியோதனன்  கேடெய்தினானென்பது  பிரசித்தம் . )

     இந்நிலவுலகத்தில் , இராசகுமாரர்  சிலர்  உயர்ந்த  நிலைமை  யெய்தியும் , தந்தையின்  ஆணையைக்  கடந்தமையால் , அந்நிலையினின்றும் இழிந்து  அடிமை  போலாயினர் . இந்நிகழ்ச்சிக்கு  யயாதியின்  புதல்வர்களும்  விசுவாமித்திர  முனிவரின்  புதல்வர்களும்  எடுத்துக்காட்டாவர் . ஆதலின் , புதல்வர்  மன  மொழி   மெய்களால்  எப்பொழுதும்  தந்தையின்பால்  வணங்கி  யொழுகுவதிர்  பற்றுடையராயிருத்தல்  வேண்டும் .                                                          41-42

( யயாதியின்  புதல்வன்  –  யது , துருவசு , திருகியு , அனு , பூரு , என்னும்  ஐவராவர் . யயாதி  சுக்கிரரால்  முதுமைத்  துன்பம்  எய்தச்  சபிக்கப்பட்டுப்  பின்  அதனை  ஏற்று  இளமை  தரும்படி  தன்  புதல்வர்களைத்  தனித்தனி  வேண்ட , இவர்களுள் , பூரு  வொழிந்த  மற்றை  நால்வரும்  மறுத்து  விட்டனர் . அதனால்  அந்நான்கு  புதல்வர்களும் , இராச்சிய  சுகமிழந்து  பாவிகளாய்ப்  பலவகைத்  துன்பங்களையும்  அடையுமாறு  அவ் யயாதியாற்  சபிக்கப்பட்டனர். அம்பரீடன்  நரமேத  யாகஞ்  செய்யத்  தொடங்கி  விசுவாமித்திரரின்  மருமகனும்  இருசிகன்  புதல்வனுமாகிய  சுனச்சேவனை  விலைக்கு  வாங்கிச்  செல்லுங்கால் , அச்  சுனச்சேபன்  விசுவாமித்திரரிடம்  குறை யிரப்ப , அவர்  அவனுக்குப்  பிரதியாகப்  போம்படி  தம்புதல்வர்  நால்வர்க்குங்  கட்டளையிட்டும், அப்புதல்வர்  உடம்படாமையால் , அவர்களெல்லோரையும்  வேடராகும்படி  சபித்தனர் . )

     புதல்வன்  எச்செயல்  தந்தைக்கு  மகிழ்ச்சிதரத்தக்கதோ  அச்செயலையே  உறுதியாகச்  செய்தல்  வேண்டும் . எச்செயல்  தந்தைக்குச்  சிறிதேனும்  வருத்தந்தரத்தக்கதோ , அதனைச்  செய்தலாகாது .                                                                                            43

     தந்தை  எவன்பால்  அன்புபூண்டுளானோ , அவனிடத்துத்  தானும்  அன்புடையனா  யொழுகுதல்  வேண்டும் . தந்தை  எவன்பால்  வெறுப்பு  மேற்கொண்டுளானோ   அவனைத்  தானும்  வெறுத்தொதுக்கல்  வேண்டும் .                                                                                                        44

     தந்தைக்கு  உடன்பாடில்லாததும்  முரணாகவுள்ளதுமாகிய  காரியத்தைத்  தான்  மேற்கொள்ளலாகாது . மறைவிற்  கண்டு  கூறும்  ஒற்றர் , சூசகராகிய  இவர்களுடைய  பிழைச்  சொற்களால் , தந்தை  மாறுபாட்டறிவுடையனாங்கால் , அமைச்சர்  முதலியோர்களின்  கருத்துக்கியைந்ததை  ஆராய்ந்து  செய்து , பின்னர்த்  தனிமையில்  வைத்துத்  தந்தையை  யறிவுறுத்து  மகிழ்வித்தல்  வேண்டும் . அங்ஙனம்  செய்தும்  தந்தை  மகிழ்ந்திலனாயின் , அச்சூசகர்களை  எப்பொழுதும்  பெருந்தண்டத்தால்  ஒறுத்தல்  வேண்டும் .               45-46

( சூசகர் – பிறர்  குற்றத்தை  யாராய்ந்து  அரசனுக்கு  அறிவிப்போர்  4-ஆம்  அத் . 5 – ஆம்  பிரகரணம் , 72-ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     இளவரசன்  எப்பொழுதும்  அமைச்சர்  முதலிய  தலைமை  யதிகாரிகளின்  வஞ்ச  மனத்தை  யறிந்து  கொள்ளல்  வேண்டும் ; நாடோறும்  காலையில் , தந்தை  தாய்  ஆசிரியனாகிய  இவர்களை  வணங்கி , பின்னர்த்  தன்னால்  எவ்வெக்காரியஞ்  செய்யப்பட்டனவோ  அவற்றை நாடோறும்  அரசனுக்கு  அறிவித்தல்  வேண்டும் . இங்ஙனம்  குடும்ப  விரோதமின்றிக்  குடும்பத்தில்  இருத்தல்  வேண்டும் .      47-48

     வள்ளன்மையும் , வாய்மையும்  வாய்ந்த  இளவரசன் , கல்வி , செயல்  குணம்  இவற்றாற்  குடிகளை  இன்புறுத்தி , எல்லா  மக்களையும்  மகிழ்வித்து , எளிதில்  தன்வயப்படுத்துக்கொள்ளல்  வேண்டும் .        49

     அரசிளங்குமரன்  முற்பக்கத்துத்  திங்களஞ்செல்வனைப்  போல்  நாணாளும்  மெல்லமெல்ல  வளர்ச்சியெய்தல்  வேண்டும் . அவன்  பகைமையின்றி  அரசியலை  யெய்தினானாயினும் , தக்க  துணைவர்களையும்  அமைச்சர்களையும்  முடையனாயிருத்தல்  வேண்டும் . இங்ஙனம்  ஒழுகுவோன்  நெடுங்காலம்  இந்நிலவுலகத்தை  யனுபவிப்பான் . இளவரசனுக்கு  நலம்  பயக்குங்  காரியங்கள்  இங்குச்  சுருக்கமாகக்  கூறப்பட்டன .                                                                     50-51

( வளர்ச்சி – ஈண்டு  நற்குணம்  நற்செயல்  அதிகாரங்களின்  பெருக்கம்)

(சாதியையுங்  குலத்தையுமாத்திரம்  ஆராய்தலாகா  தென்றதனால்  குணஞ்செயல்களையே  முக்கியமாகச்  சோதித்தறிய  வேண்டுமென்பது  போதரும் . )

6 . அமைச்சர்  முதலியோரை  ஆராய்ந்தமைத்தல்

     இனி  அமைச்சர்  முதலியவர்களின்  செயல்களும்,  இயற்கையின்  வன்மை  மென்மைகள் , சிறந்த  எடுத்துக்காட்டாக  எண்ணப்படுந் தன்மை , குலநலம் , சொல்வன்மையாகிய  இவை  முதலியவற்றோடு  கூடிய  அவர்தம்  இலக்கணங்களும்  சுருக்கிக்  கூறப்படும் .                52

     சோதனை  செய்வோர்  பொன்னை  உருவாக்கி  ஆராய்வர். அங்ஙனமே  அமைச்சர்  முதலியோரைச்  செயல் , உடன்பழகுதல் , குணம்  ஒழுக்கம் , குலப்பிறப்பு  முதலியவற்றால்  எப்பொழுதும்  ஆராய்ந்து  தெளிதல்  வேண்டும் . தெளிந்தபின்  நம்புதற்குரியாரை  நம்புதல்  வேண்டும். சாதியையும்  குலத்தையும்  மாத்திரம்  ஆராய்தலாகாது .                                                                                            53-54

     ஒருவனுடைய  செயல்  ஒழுக்கம்  அறிவு  முதலிய  குணங்களாகிய  இவைகளே  பாராட்டப்படுவனவாம் .  உயர்ந்த  சாதியுடைமை  நற்குடிப்பிறப்பு  ஆகிய  இவற்றால்  மாத்திரம்  ஒருவன்  சிறப்படைய மாட்டான் . விவாகத்திலும் உணவிலுமே  என்றும்  சாதி  குலங்களை  ஆராய்தல்   வேண்டும் .                                                                                   55

     அமைச்சர்  முதலிய  அரசியற்றொழில்  புரிவோர்க்குரிய  இலக்கணங்களாவன :  உண்மையுரைத்தல் , உயர்குணமுடைமை , புகழுடைமை , உயர்குடிப்பிறப்பு , பொருளுடைமை , நல்லொழுக்கம் , நற்செயல் , மடியின்மை , தங்காரியத்திற்குரிய  முயற்சியினும்  நான்கு    மடங்கு  மிகுதியான  மனமொழி  மெய்  முயற்சிகளால்  தலைவன்  காரியத்தைச்  செய்தல் , வேதனத்தளவின்  மகிழ்தல் , இன்சொற்கூறல்,  காரியத்திறமை , தூய்மை , அசைவின்மை , பிறர்க்குதவிசெய்தலில்  விருப்பு , பிறர்க்குக்  கேடு  விளைவித்தலில்  வெறுப்பு , தலைவனுக்குக்  குற்றமிழைத்தோன்  தந்தையாயினும்  மகனாயினும்  அவனை  வெளிப்படுத்திக்  காட்டல் , தலைவன்  நெறி  பிழைத்தொழுகு வானாயின்  அவனை  மிக  முயன்று தடுத்து  நன்நெறிக்கட்  செல்லும்  வண்ணம்  அறிவுறுத்தல் , அவன்  சொல்லைத்  தடுத்துரையாமை ,  அவன்பாலுள்ள  குறைகளை  வெளிப்படுத்தாமை , நற்செயற்கண்  விரைதல் , தீச்செயற்கண்  தாழ்த்தல் , தலைவனுடைய  மனைவி மக்கள்  நண்பராகிய  இவர்கள்பால்  ஒருபொழுதும்  புரைகாணாமை, தலைவனிடத்துப்போல  அவன்  மனைவி  மக்கள்  சுற்றத்தாரிடத்தும்  மதிப்பு  மேற்கோடல் , தற்புகழ்ச்சியின்மை , பிறரை  அவமதிக்கவிரும் பாமை , அழுக்காறின்மை , பிறர்பழி  தூற்றாமை , பிறர்  அதிகாரத்தை  விரும்பாமை , அவாவின்மை , எப்பொழுதும்  மலர்ச்சியுடைமை , தலை வனாற் றரப்பட்ட   ஆடை  அணிகலன்களைத்   தரித்து  எப்பொழுதும்  அவன்  முன்னிருத்தல் , வேதனத்திற்கு  ஒப்பச்   செலவிடல் , பொறியடக்கம் , அருளுடைமை , அஞ்சாமை , தலைவனது  தகுதியில்லாச் செயலைத்  தனிமையில்  எடுத்துக்காட்டி  யறிவுறுத்தல்  ஆகிய  இக்குணஞ் செயல்களாம்  இவற்றையுடையார்                    சிறந்தவராவர் .                                                                                               56-64

இங்குக்  கூறப்பட்ட  குணஞ்செயல்களுக்கு  மாறான  குணஞ்செயல் களையுடைய அமைச்சர்  முதலியோர்  பழிக்கப்படுவர் . வேதனம்  பெற்று  அரசியற்றொழில்  புரிவோருள்  மிகக்  குறைந்த  வேதனம்  பெறுவோர் , அடிக்கடி  குற்றம்  புரிந்து  தண்டத்தாற்  றுன்புறுத்தப் பட்டார் ,  வஞ்சகர் , அச்சமுடையார் , பிறர்பொருளில்  அவாவுடையார் , தலைவன்  முன்னிலையிற்  புகழ்ந்துரைப்போர் , கள்ளுண்டு  களிப்போர் , காமம்  வேட்டையாடல்  முதலிய  குற்றமுடையார் , நோய்கோட்பட்டார் , கைக்கூலி  விருப்பமுடையார் , சூதாடுவார் , மறுமை  முதலியன  இல்லையென்பார் , பிறரை   அவமதிப்பார் , கடுஞ்  சொற்களாற்  பிறர்  நெஞ்சைப்  பிளப்பார் , பகைவனுடைய  நண்பர், பகைவனுடைய  சேவகர் , முன்னைப்  பகைமைத்  தொடர்ச்சியுடை யார் , சினமுடையார் , ஆராயாது  காரியம்  புரிவார் , அறமில்லார் , ஆகிய  இவர்கள்  நல்ல  சேவகர்களாகமாட்டார்கள் . அமைச்சர்  முதலியோரிலக்கணங்களின்  நன்றுதீதுகள்  சுருக்கமாக  இங்குக்  கூறப்பட்டன .                                                                                                65-68

( மிகக்  குறைந்த  வேதனம்  பெறுவோர்  கைக்கூலி  பெற  விரும்புவராதலின் , அவரை  உயர்ந்த  காரிய  நிருவாகங்களில்  நியமிக்க லாகாதென்பது கருத்து . )

7 . புரோகிதன்  முதலியோரின்  சிறப்பு  முறை

இனி, புரோகிதன்  முதலியோரின்  இலக்கணங்கள்  சுருக்கிக் கூறப்படும் . புரோகிதன் , பிரதிநிதி , பிரதானன் , சசிவன் , மந்திரி , நீதியதிபன் , பண்டிதன் , சுமந்திரன் , அமாத்தியன் , தூதன்  ஆகிய  இப்பதின்மரும்  அரசனுடைய  பிரகிருதிகளாவார் .                          69-70

( பிரகிருதிகள் – அரசனிடத்து  வேதனம்  பெற்று  அரசியற்றொழில்  புரிவோருள்  தலைவராவார் . இவரைப்  “பகுதிகள்”  என்பர்  திருக்குறள்  ஆசிரியர் .)

     தூதனை  இறுதியாகவுடைய  புரோகிதன்  முதலிய  பதின்மரும்  கீழுள்ளார்க்குரிய  அளவினின்றும்  மேலுள்ளார்  முறையே  பத்திலொருகூறு  மிகுதியான  வேதனம்  பெறுபவராவர் . அரசன்  எப்பொழுதும்  சுமந்திரன் , பண்டிதன் , மந்திரி , பிரதானன் , சசிவன் , அமாத்தியன் , நீதியதிபன் , பிரதிநிதியாகிய  இவ்வெட்டுப்  பிரகிருதிகளை  யுடையனாவானென்றும்  சில  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                                           71-72

( புரோகிதன்  முதலிய  பதின்மரும்  முறையே  பத்திலொருகூறு  அதிக  வேதனம்  பெறுதலாவது : தூதனது  வேதனத்தினின்றும்  அமாத்தியனது  வேதனம்  பத்திலொருகூறு  மிகுதியாக   விருத்தல்  வேண்டும் . அமாத்தியனது  வேதனத்தினின்றும்  சுமந்திரனது  வேதனம்  பத்திலொருகூறு மிகுதியாகவிருத்தல் வேண்டும். இங்ஙனமே மற்றவர்க்கும் முறையே பத்திலொருகூறு விழுக்காடு  கணக்கிட்டுக்கொள்க . அஃதாவது , தூதனுக்கு  நூறு  பொன்  வேதனமாயின் , அமாத்தியனுக்கு  நூற்றுப்பத்துப்  பொன்  வேதனமாதல்  வேண்டும் . பிறவும்  இவ்வாறு  உணர்க.)

     அக்கொள்கைப்படி  அரசனுடைய  பிரகிருதிகளாகிய  இவ்வெண்மரும் , எப்பொழுதும்  ஒத்த  அளவினையுடைய  வேதனம்  பெறுபவராவர் . பிறருடைய  இங்கிதம்  ஆகாரங்களின்  உண்மையை  யறியுந்  திறன்  வாய்ந்த  தூதன் , அரசனுக்கும்  பிரகிருதிகளுக்கும்  உடனிருந்து  துணைசெய்பவனாவானென்று  கருதப்படுவான் .         73

( இங்கிதம் – குறிப்பால்  நிகழும்  உறுப்பின்றொழில்  . ஆகாரம் – குறிப்பின்றி  நிகழும்  வேறுபாடு . இச்சுலோகங்களின்  கருத்துக்கள்  வேறு  சிலர்  கொள்கையாகக்  கூறப்பட்டவாதலின்  பிரகிருதிகள்  பதின்மர்  என்பதனோடு  முரணாமை யுணர்க . )

புரோகிதன்  அரசனது  நாட்டை  இடையூறணுகா வண்ணம்  தாங்குவோனாதலின் , பிரதிநிதி  முதலிய  எல்லோரினும்  சிறந்தவனாய் , முதற்கண்  வைத்து  எண்ணப்படுவான் . அவனுக்குப்பின்  பிரதிநிதியும் , அவனுக்குப்பின்  பிரதானும் , அவனுக்குப்பின்  சசிவனும் , அவனுக்குப்பின்  மந்திரியும் , அவனுக்குப்பின்  நீதியதிபனும் , அவனுக்குப்பின்  பண்டிதனும் , அவனுக்குப்பின்  சுமந்திரனும் , அவனுக்குப்பின்  அமாத்தியனும் , அவனுக்குப்பின்  தூதனுமாகிய  இவர்  முறைப்படுத்திக்  கூறப்படுவர் . இவர்கள்  பின்னுள்ளவரை  நோக்கமுன்னுள்ளவர்  முறையே பதவியிற்  சிறந்தவராவர் .                                                                                                 74-77

            8 . புரோகிதன்  முதலியோர்களின்  இலக்கணங்களும் காரியங்களும்

     மந்திரானுட்டானம்  புரிதல் , வேதங்களெல்லாவற்றையும்  ஓதி யுணர்தல் , கன்மங்களை  விரைந்து  செய்யும்  ஆற்றல் , பொறியடக்கம் , சினமின்மை , உலோப  மோகங்களின்மை, வேதங்  கங்களான  ஆறு  சாத்திரங்களையும்  அங்கங்களோடுங்  கூடிய  தநு  வேதத்தையும்  அறநூலையும்  பொருணூலையும்  பயின்றறிதல் , தன்  சினத்திற்கு  அஞ்சி  அரசனும்  தரும  நீதிகளிற்  பற்றுடையனாம்படி  செய்தல் , நிதி  நூற்பயிற்சி , அம்பு  வாள் முதலிய  படைக்கலங்களைப் பற்றிய  நூற்பயிற்சி , படைகளை  அணிவகுக்குந்  திறமை , சாபானுக்கிரகவன்மை  ஆகிய  இவ்வெல்லாம்  அமையப்  பெற்றவன் புரோகிதனாவான் . அவனே  ஆசிரியனுமாவான் .                               77-80

     முற் கூறப்பட்ட  பிரகிருதிகளின்  நல்ல  சூழ்ச்சி  யின்றேல் , அரசியல்  நிச்சயமாக  அழிவெய்தும் . அரசன்  தீநெறிக்கட்  சேறலில்  தடையுமின்றாம் . ஆதலின்  அப்பிரகிருதிகள்  நல்ல  சூழ்ச்சியறிவு  உடையவர்களாக  இருத்தல்  வேண்டும் .                                                     81

     அரசன்  அஞ்சி  நடத்தற்குரிய  தகுதியில்லாத  புரோகிதன்  முதலியவர்களால்  அரசியல்  எங்ஙனம்  வளர்ச்சி  யடையும் ! அத்தகைய  பிரகிருதிகள் , ஆடை  அணிகலன்கள்  முதலியவைகளால்  அணிசெய்யப்பட்ட  மகளிரை  யொப்பர் .                                                   82

     நாடு , குடி , படை , பொருள் , நல்ல  அரசியல்  ஆகிய  இவை  வளர்ச்சியெய்தற்கும் , பகை  கெடுதற்குமுரிய  சூழ்ச்சி  அமையப்பெறாத  அமைச்சர்  முதலியவர்களால்  வரக்கடவ  பயன்  யாதுளது?                                                                                                                83

     செய்யத்தக்கன  இன்ன  தகாதன  இன்னவென்று  நன்றாக  அழுந்தி  ஆராயும்  அறிவுடையோன்  பிரதிநிதியென்று  சொல்லப்படுவான் . அரசியற்  காரியம்  எல்லாவற்றையும்  பார்ப்போன்  பிரதானனாவான் . போர்க்குரிய  படையியல்பு  அறிந்தோன்  சசிவனாவான் .                     84

     நீதிநூல்  ஆராய்ச்சியிலும் , அதன்வழி  யொழுகுதலிலும்  திறமை  வாய்ந்தவன்  மந்திரியாவான் . அறத்தின்  உண்மையை  யறிந்தவன்  பண்டிதனாவான் . எப்பொழுதும்  உலகியலையும் , நூன்  முறையையும் , நீதியையும்  அறிந்தவன்  நீதிபதி  யாவான் .                85

     காலம் , இடங்களை  நன்றாக  அறிபவன்  அமாத்தியன்  என்று  கூறப்படுவான் . பொருளின்  வரவு  செலவுத்  தொழிலில்  நல்ல  பயிற்சியுடையவன்  சுமந்திரனாவான் .                                                       86

     பிறருடைய  இங்கிதம்  ஆகாரம்  செயல்களையறிதல் , மறதியின்மை , காலம்  இடம்  அறிந்து  செயல் , சந்தி  விக்கிரக  முதலிய  ஆறு  குணங்களையுமாராய்ந்தறிதல் , சொல்வன்மை  அஞ்சாமையாகிய  இவற்றையுடையோன்  தூதன்  என்று  கூறப்படுவான் .                                                                                                   87

    பிரதிநிதி , ஒரு செயல்  தீயதெனினும் , அது  தாழ்த்தலின்றி  எவ்வமயஞ்  செய்தற்குரிமையுடையதோ  அவ்வமயம்  அதனையும்  ஒரு  செயல்  நல்லதெனினும் , அஃது  எவ்வமயம்  செய்தற்குரிமையில்லாததோ  அவ்வமயம்  அதனையும் , தகுதி  தகுதியின்மை  நோக்கி  அரசனுக்கு  அறிவித்தல் , தான்  செய்தல்  செய்வித்தல் , அறிவியாதிருத்தல் , செய்யாதிருத்தலாகிய  இவற்றை  எப்பொழுதும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                               88

( செய்தற்குரியமையுடையதனைத்  தகுதி  நோக்கியறிவித்தல்  செய்தல்  செய்வித்தல்  வேண்டுமெனவும் , செய்தற்குரித்தல்லாததனைத்  தகுதியின்மை  நோக்கி  அறிவியாதிருத்தல்  செய்யாதிருத்தல்  வேண்டுமெனவும்  இயைத்துப்  பொருள்  கொள்க.  ஒரு  செயல்  தீதெனினும் , வேண்டுங்காலத்திற்  செய்ய  வேண்டுமென்பதுங்  கூறப்பட்டன . தான்  செய்யக்  கருதாததொன்றைப்  பிறர்  செய்யும் வண்ணம்  உடன்படானென்பது  எளிதிற்  கிடைத்தலின் , செய்யாதிருத்தல்  ஈண்டுக்  கூறப்பட்டிலது .)

     பிரதானன் , எல்லோருடைய  அரசியற்  றொழில்களுக்குள்  யாது  யாது  உண்மையாக  வுள்ளது , யாது  யாது  பொய்மையா  வுள்ளது  என்று  துணிதற்குரியவாறு  அவற்றை  ஆராய்தல்  வேண்டும் .            89

      சசிவன் , யானை , குதிரை , தேர் , காலாட்படை , வன்மை  மிக்க  ஒட்டகம் , எருது ஆகிய  இவற்றினுள்ளும்  பல்வேறு  வகைப்பட்ட  ஆயுதக்  கூட்டங்களினுள்ளும்  காரியத்திற்குத்  தகுதிவாய்ந்தன , அத் தகுதியில்லாதன  பழையன  புதியன  எவ்வளவுள்ளன  வென்பதையும், வாத்தியங்களின்  மொழிகளாற்  குறிக்கப்படும்  சங்கேதங்களாற்  படைகளை  அணிவகுக்கும்  திறன்  வாய்ந்தோர் , கிழக்கு , மேற்கு  முதலிய  எப்பக்கத்தும்  வினைகுறித்துச்  செல்வோர் , அரசியலடையாளமுள்ள  அம்பு  வாள்  முதலிய  படைக்கலங்களைத்  தாங்கி  நிற்போர் , கடை , இடை , தலையாகிய  வினைகளைப்  புரியும்  ஏவலாளர் , குதிரை  வீரர்  ஆகிய  இவர்களுள்  காரியத்திற்குத்  தகுதி  வாய்ந்தோர் , அத்தகுதி  யில்லாதார், பழையர் , புதியர் , எத்துணையர்  உள்ளார்  என்பதையும் , வாள்  முதலிய  கைப்படைகள்  இருப்புக்  கோளங்கள் , நெருப்புப்பொடிகள் முதலிய  போர்க்குரிய  பண்டங்கள்  எவ்வளவுள்ளன  வென்பதையும்  நன்றாக  ஆராய்ந்து  அவற்றைப் பற்றிய  காரியங்களை  அரசனுக்கு  அவ்வப்போது  விளக்கமாக  அறிவித்தல்  வேண்டும் .                                                                                90-94

     மந்திரி , சாமம் , தானம் , பேதம் , தண்டம்  என்னுமிவற்றை  எவர்பால்  எப்பொழுது  எவ்வாறு  செய்தல்  வேண்டுமென்பதும் , அவற்றால்  வரும்  பயன்   மிகுதி  நடுத்தரம்  குறைவு  என்னுமிவற்றுள்  எவ்வளவாமென்பதும்  ஆகிய  இவ்வெல்லாவற்றையும்  நன்றாக  ஆராய்ந்து  துணிந்து  வேந்தனுக்கு  அறிவித்தல்  வேண்டும் .              95

( இவ்வுபாயங்களைப்  பரிமேலழகர்  தான  சாம  பேத  தண்டமென்று  முறைப்படுத்தி  அவற்றை  முறையே  கொடுத்தல் , இன்சொற்சொல்லல் , வேறுபடுத்தல் , ஒறுத்தல்  என்று  கூறுவர் [ 467 – திருக்குறள்] )

     நீதிபதி , நீதிமன்றத்தின்கண்  எப்பொழுதும்  உரிய  அவையோர்  சூழவிருந்து  கற்பிக்கப்பட்டனவும் , உண்மையாக  நிகழ்ந்தனவுமாகிய  மக்களைப்  பற்றிய  வழக்குகளைப்  பொய்யாயினவும்  உண்மையாயினவுமாகிய  சான்று  இலிகிதம்  அநுபவம்  என்னும்  மாநுடசாதனங்களாலும் , நெருப்பு  முதலிய  தெய்வீக  சாதனங்களாலும் , ஆராய்ந்து , எவ்வழக்குகளில்  எச்சாதனங்கள்  சிறப்புடையன  வென்பதையும்  அறிந்து , பொருந்துமாற்றானும்  காட்சி  அனுமான  உபமான  அளவைகளானும் , உலகியலறிவானும் , நீதி நூலறிவானும், பலர்க்கும்  ஒப்ப  முடிந்தவைகளை  நன்கு  துணிந்து  அரசனுக்கு  அறிவித்தல்  வேண்டும் .                                                96-98                                                                      

( மாநுட  தெய்விக  சாதனங்களை  4-ஆம்  அத்தியாயம்  5-ஆம்  பிரகரணம்  164-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க ,)

     பண்டிதன் , பண்டை  அறங்களுள்  , எவை  மக்களால்  நிகழ்காலத்திற்குரியனவாக  மேற்கொள்ளப்பட்டன  வென்பதும் , எவ்வறங்கள்  நூல்களிற்  கூறப்பட்டும்  இப்பொழுது  மக்களுக்கு  ஒவ்வாதனவென்பதும் , எவ்வறங்கள்  நூல்களுக்கு  ஒவ்வாதனவாகியும்  மக்களான்  மேற்கொள்ளப்பட்டன  வென்பதுமாகிய  இவற்றை   நன்றாக  ஆராய்ந்து , இம்மையினும் , மறுமையினும்  நலம்  பயக்கும்  அறங்களை  அரசனுக்கு  உணர்த்தல்  வேண்டும் .                               99-100

     சுமந்திரன் , புன்  முதலிய  அசையாப்  பொருள்களிலும் , பசு  முதலிய  அசையும்  பொருள்களிலும்  இவ்வளவு  இவ்வாண்டில்  தொகுத்துச்  சேர்க்கப்பட்டனவெனவும் , செலவாயின்  இவ்வளவெனவும் , எஞ்சியவை  இவ்வளவிருக்கின்றன வெனவும்  அரசனுக்கு  விளங்க  தெரிவித்தல்  வேண்டும் .                                         101

( புன்  முதலிய  அசையாப்பொருள் – புறத்தே  காழ்ப்புடையனவாகிய  தெங்கு  பனை  முதலியனவாம் .  அகத்தே  காழ்ப்புடையன  மா , பலா , முதலிய  மரங்களாம் . இதனை  “புறக்காழனவே  புல்லென  மொழிப , அகக்காழனவே  மரனென  மொழிப “  என்னும்  தொல்காப்பியச்  சூத்திரத்தானு  முணர்க .  அசையாப்பொருள் – தாவரம் . அசைபொருள் – சங்கமம் . )

     அமாத்தியன் , நாட்டில் , நகரம்  சிற்றூர்  காடு  இவை  எவ்வளவு  விருக்கின்றன  வென்பதும் , யார்  யாரால்  எவ்வளவுள்ளன  வென்பதும்,  உழவு  செய்யப்படாத  நிலம்  எத்துணையவென்பதும் , ஆண்டுதோறும்  சுங்கம்  தண்டம்  முதலியவற்றாற்  கிடைக்கும்  பொருள்  எவ்வளவென்பதும் , உழவு  முதலியன  செய்யப்படாமல்  நிலத்தினின்றும்  உண்டாய  விளைபொருள்  எவ்வளவென்பதும் , காட்டி னின்றுங்கிடைத்த  பொருள்  எவ்வளவென்பதும் , சுரங்கத்தினின்று  முண்டாய  பொருளும்  உரியவரின்னாரெனத்  துணிதற்கியலாமல்  நிலத்தினின்றும்  எடுக்கப்பட்ட  பொருளும்  எவ்வளவென்பதும் , உரியாரில்லாத  பொருளும்  தீயோரை  இழப்பித்தலால்  அடையப்பட்ட  பொருளும்  கள்வர்பாற்  கொண்ட  பொருளும்  எவ்வளவென்பதும்  ஆகிய  இவ்வெல்லாவற்றையும்  நன்றாக  ஆராய்ந்து  துணிந்து  அளவிட்டு  வேந்தன்பால்  அறிவித்தல்  வேண்டும் .                                                                                                      102-105

     புரோகிதன்  முதலிய  பிரகிருதிகள்  பதின்மரின்  இலக்கமுஞ்  செயலுஞ்  சுருக்கிக்கூறப்பட்டன . அரசன்  அவ்வக்காரியங்களைப்  பார்ப்போரால்  நேராகவும்  அவர்களின்  எழுத்து  மூலமாகவும்  எல்லாவற்றையும்  அறிந்து  கொள்ளல்  வேண்டும் .                               106

     ஒருவன்  மற்றொரு  தொழிலையும்  அதற்குரியான்  பிறிதொரு  செயலையும்  பார்க்கும்படி  இவ்வாறு  இப்பிரகிருதிகளை  மாற்றி  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                   107

( பிரகிருதிகளை  மாற்றி  நியமித்தலாவது – சிலவாண்டுகளுக்கொருமுறை  சுமந்திரனை  அமாத்தியத்  தொழிலிலும்  அமாத்தியனைச்  சுமந்திரத்  தொழிலிலுமாக  இங்ஙனம்  ஏனையோரையும்  மாற்றி  நியமனஞ்  செய்தல் )

     இவ்வதிகாரிகளை , அரசன்  தன்னினுஞ்  சிறந்த  செல்வாக்குடைய வர்களாக  இருக்கும்படி  ஒருபொழுதுஞ்  செய்தலாகாது . இப்பிரகிருதி கள்  பதின்மரையும்  தம்முள்  ஒத்த  ஆற்றலுடையராயிருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                     108

9 . மற்றை  அதிகாரிகளின் இலக்கணங்களுங்  காரியங்களும்

இலக்கணங்களுங்  காரியங்களும்

     ஓர்  அதிகாரச்  செயலில்  எப்பொழுதும்  மூவரை  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . அவருள் , ஒருவன்  மிகச்  சிறந்தவனாகவும்  உயர்ந்த  அறிவுள்ளவனாகவும்  இருத்தல்  வேண்டும் .                   109                                      

     அச்செயலில்  துணைவராக  இருவர்  இருத்தல்  வேண்டும் . மூன்று  ஐந்து  ஏழு  பத்து  ஆண்டுகளுக்கு  ஒரு  முறையாதல்  அத்துணைவரை  மாற்றி  நியமித்தல்  வேண்டும் .                                                                     110

( முதனூலில் “தரிசகர்” என்பது  துணைவர்  என  மொழிப்  பெயர்க்கப்பட்டது . தரிசகர் – காரியதரிசிகளாக  விருந்து  துணை  செய்வோர் .[ Secretaries ] )

     அவ்விரு  துணைவரின்  செயலையும்  திறனையும்  நோக்கி , அவரை  அங்ஙனம்  மாற்றி  நியமித்தல்  வேண்டும் . அரசன்  என்றும்  எத்தகைய  ஒருவனையும்  ஓர்  அதிகாரத்திலேயே  நெடுநாள்  வைத்தலாகாது .                                                                                                 111

     ஒருவன்  எவ்வதிகாரத்திற்குரிய  ஆற்றல்  அமைந்துள்ளானென்று  கண்டு , அவ்வதிகாரத்தில்  அவனை  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . நெடுநாள்  அதிகாரத்திற்  களித்து  மயங்காதவன்  யாவன் ?  [ எல்லோரும்  மயங்குவராதலின்  ஒரே  அதிகாரத்தில்  யாரையும்  நெடுநாள்  இருக்கச்  செய்தலாகாதென்பதாம். ]                                     112

      ஆதலின் , ஓர்  அதிகாரத்திற்  சிலவாண்டு  இருந்தவனைக்  காரியத்திறன்  நோக்கி  அச்செயலினின்றும்  மாற்றி  வேறொரு  செயலில்  நியமித்தல்  வேண்டும் .  அங்ஙனம்  மாற்றி  நியமிக்குங்கால்  மாற்றப்படுஞ்  செயலில்  திறன்  வாய்ந்தவனும்  அத்தகைய  பதவியிலிருக்கின்றவனுமாகிய  மற்றொருவனை  நியமித்தல்  வேண்டும் . முன்னை  வினை  புரிவோன்  மகன் , தந்தையை  யொத்த  குணஞ்  செயல்களை யுடையனாயின் , அவனை  அவ்வினைக்கண்  நியமனஞ்  செய்யலாம் .                                                                             113-114

     புதிய  வினைவலானொருவன் , எவ்வெச்சிறந்த  பதவிகளுக்கு  எவ்வெப்பொழுது  தகுதியுடைய  னாகின்றானோ  அவ்வப்பதவிகளில்,   அவன்  முறையே  மேலும்மேலும்  நியமிக்கற்பாலன் . இறுதியில்  அவனைப்  பிரகிருதிகளுள்  ஒருவனாகச்  செய்தல்  வேண்டும் .          115

     அதிகாரச்செயல்களின்  மிகுதி  நோக்கித்  தக்கவாறு  துணைவர்  பலரை  நியமிக்கலாம் . அன்றித்  துணைவரில்லாமலே  காரியங்களைத்  திறமையுடன்  செய்யும்  அதிகாரியைத்  தனிமையாகவும்  நியமிக்கலாம் .                                                                  116

                          10 . யானைப்பாகன்  முதலியோரின் இலக்கணங்களுங்  காரியங்களும்

     இங்குக்  கூறப்பட்டவர்களையன்றி  மற்றை  வினைத்திறன்  வாய்ந்த  எல்லோரையும்  யானை , குதிரை , தேர் , காலாட்படை , பசு , ஒட்டகம் , மற்றை  விலங்கினம் , பறவைக்கூட்டம் , பொன் , அரதனம் , வெள்ளி , ஆடையாகிய  இவற்றிற்கும் , தானியம் , அடுக்களை , ஆடற்  பூஞ்சோலை , மேன்மாளிகையோடு கூடிய  இல்லங்கள் , பலவகைப்  பண்டங்கள் , திருக்கோயிற்  பூசை , தானம்  ஆகிய  இவற்றிற்கும்  தனித்தனி  அதிபராகவும் , கள்வர்  முதலிய  தீயோரைத்  தண்டிக்கும்  அதிபராகவும் , சிற்றூர்த்  தலைவராகவும் , இறைப்பொருள்  கொள்ளு வோராகவும் , எழுத்தாளராகவும் , சுங்கம்  வாங்குவோ ராகவும் , வாயில்  காப்போராகவும் , அவரவர்  தகுதிக்கேற்ப  அவ்வச்  செயல்களில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . தீயோரைத்  தண்டிக்கும்  அதிபர்  முதலிய  ஆறுவகையினரையும் , கிராமங்க டோறும்  நகரங்கடோறும் நியமனஞ்  செய்தல்  வேண்டும் . 117-121                                          

( அடுக்களை – பாகசாலை . சுரங்கம்: 273-ஆம் சுலோகக் குறிப்பிற் காண்க. பொருள் – பொற்காசு , வெண்பொற்காசு  முதலியன. )

     அரசன்,  தவம்புரிவார் , கொடைக்குணம் வாய்ந்தார் , வேதம்  அறநூல்வல்லார் , பெளராணிகர் , வியாகரண  முதலிய  நூல்களை  யுணர்ந்தார் , ஒளிநூல்வல்லார் , மாந்திரிகர் , மருத்துநூல் வல்லார் , கன்ம  காண்டமுணர்ந்தார் , சைவாகம  முணர்ந்தார் , மற்றை  நற்குணமுடையார் , பெரியார் , மதிநுட்பம்  வாய்ந்தார் ,பொறிபுலன் களை  வென்றார் ஆகிய  இவ்வெல்லோரையும்  தானங்களாலும் , சிறப்புக்களாலும் , நன்றாகப்  பெருமைப்படுத்தித் , திங்கள்  வேதனம்  உதவிப்  பரிபாலித்தல்  வேண்டும் . இன்றேல்  அரசன்  அரசியல்  பிறழ்ந்து  பழியும்  எய்துவான் .                                                                122-124

( ஒளிநூல் – சோதிட  நூல் )

பலர்  கூடி  முடிக்கத்  தக்க  காரியங்களை யுணர்ந்து , அவ்வக்காரி யங்களிற்  றிறமை  வாய்ந்த  முற்கூறப்பட்ட  அதிகாரிகளை , அவற்றின்  அதிபராக  நியமித்தல்  வேண்டும் .                                          125

     மந்திரத்தன்மை  யில்லாத  எழுத்தும் , மருந்தாந்தன்மை யில்லாத  வேரும் , ஒன்றிற்கும்  தகுதியில்லாத  மனிதனும்  இல்லை . ஆயினும் , தகுதி  யுணர்ந்து  கூட்டிப்  பயன்படுத்துவோனே  அரியன் .                  126

( பயன்படுத்தும்  அறிவுடையானானால்  எல்லாவெழுத்துக்களும்  மந்திரங்களாம் எனவும், எல்லா  வேர்களும்  மருந்துகளாம் எனவும் , எல்லா  மனிதரும்  காரியம்  புரியும்  தகுதியுடையராவர்  எனவுங் கூறியவாறு . ) 

     யானைகளின்  பிரபத்திர  முதலிய  சாதி வேறுபாடும் , அவற்றைப்  பழக்குமுறையும் , காக்குமுறையும், நாவின்  அடி  நுனி  நகம்  இவற்றால்  அவற்றின்  குணங்களும் , நடையின்  இயல்பும் , ஏறு  முறைமையும் , நோய்களும் , அவற்றைத்  தணிக்கும் மருந்துமுறையுமாகிய  இவற்றை  நன்கறிந்த வனையே  யானைக்காப்பில்  நியமித்தல்   வேண்டும் . அத்தகைய  யானைப்பாகனே  யானைகளின்  மனத்தை  வயப்படுத்து   பவனாவான்                                                                                                   127-128

     குதிரைகளின்  உள்ளக்  கருத்துகளையும்  சாதி  நிறம்  சுழிகளால்  அவற்றின்  குணங்களையும் , நடை , பயிற்றுமுறை , வன்மை , தகுதி , அளவு , பாரம்  இழுக்கும்  ஆற்றல் , பற்களின்  இயல்பு , ஆண்டினளவு , நோய்நிலை , அது  தீர்க்குமருந்துமுறை , நலம்  தீங்குணர்ந்து  உணவு  கொடுக்கு  முறையாகிய  இவற்றையும்  அறிந்து , படைகளை  அணிவகுக்குந்  திறனோடு  சிறந்த  அறிவும்  வீரமும்  வாய்க்கப்  பெற்றவனையே , குதிரைத் தலைவனாக  நியமித்தல்  வேண்டும் .  130

     அக்  குதிரைத்  தலைவனுக்குரிய  குணங்களும் , சுமந்து  செல்லுங்  குதிரையின்  ஆற்றல் , தேரின்  வண்மை , தேர்ச் செலவு , தேர்ச்சுழற்சி , மாறுதல்  இவைகளைப்  பற்றிய  அறிவும் , அம்பு , வாள் முதலியன  தாங்கி  எதிர்க்கும்  பகைவர்  தன்  தேர்க்கண்  உள்ள  தலைவனைக்  குறிவைத்தெய்யுங்கால்  அதனைத்  தேர்ச்செலவால்  விலக்குத்  திறனும் , பகைவர்  குதிரையோடு  கலங்குங்கால்  தன்  குதிரைகளைக்  காக்கும் மறிவுமாகிய  இவற்றையுடையவன்  தேர்ப்பாகனாவான் . 132

     தறுகண் , படைகளை  அணிவகுக்குமறிவு , குதிரைகளின்  செலவைப்  பற்றிய  அறிவு , மதிநுட்பம் , அம்பு  வாள்  முதலியவற்றாற் போர்  புரியுந்  திறமையாகிய  இவற்றையுடையார்  குதிரை  வீரராவார் .                                                                                                         133

     சக்கிரதம் , இரேசிதம் , வற்கிதம் , தெளரிதம் , ஆப்புலுதம் , துரம் , மந்தம் , குடிலம் , சருப்பணம் , பரிவருத்தனம் , ஆற்கந்திதம்  என்னும்  இப்பதினொருவகைப்படுங்   குதிரை   நடைகளை  யறிந்து , அக்குதிரைகளின்  ஆற்றலுக்குத்  தக்கவாறு  அவற்றை  நன்றாகப்  பயிற்றுவோன்  குதிரைப்பயிற்சி  செய்பவனாவான் .                      134-135

( சக்கிரிதம் – வட்டமாகச்  சுழன்று  செல்லல் . இரேகிதம் – சிறிது  துள்ளித்  துள்ளித்  தொடர்ந்து  நடத்தல் . வற்கிதம் – அசைந்து  செல்லல். தெளரிதம் –  கால்களை  வளையாமல்  விரைந்து  அழகாகச்  செல்லல் . இதனை  4-ஆம்  அத்தியாயம்  7-ஆம்  பிரகரணம்  148-ஆம்  சுலோகத்தில்  தெளரீதகம்  என்பர் . ஆப்புதலுதம் – நான்கு  கால்களாலும்  துள்ளிச்செல்லல் . துரம் – விரைந்தோடல். மந்தம் – மெல்லிய நடை.  குடிலம் – வளைந்து  செல்லல் . பரிவருத்தனம் – பின்பாற்  செல்லல் . ஆற்கந்திதம் – முன்னோக்கிச்  செல்லல் . இங்குக்  குதிரை  நடை பதினொருவகையாகக்  கூறப்பட்டன . 4-ஆம் அத்தியாயம் 7-ஆம் பிரகரணம் 144-ஆம் சுலோகத்தில், ஆறுவகைப்படுமென்று கூறுவர்; இப் பதினொருவகையும் அவ் வறுவகையில் அடங்கும் போலும்.)

     குதிரைக்குரிய  பணியில்  திறமையும் , கல்லணை  முதலியன  அமைத்து  அணிசெய்யுமறிவும் , வலிய  உடலும் , வீரமும்  உடையானைக்  குதிரைக்குரிய  வேலையாளாகச்   செய்தல்  வேண்டும் .                                                                                                             136

( கல்லணை – குதிரை  மேலிடுந்  தவிசு . )

11 . படைத்தலைவர்  முதலியோரிலக்கணம்

     வெற்றியை  விரும்பும்  அரசன் , செய்யத்தக்கன  இன்ன  தகாதன  இன்னவென்று  பகுத்துணரும்  அறிவும் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்  பயிற்சியும் , படைகளை  அணிவகுத்தல்  முதலியவற்றிற்  றிறமையும் , பகைவரைப்  பணியச்செய்யும்  வன்மையும் , பாலப்  பருவமின்மையும் , காளைப்பருவம்  எய்துதலும் , தறுகண்மையும் , அடக்கமும் , வன்மைமிக்க  உடலும் , தம்  கடமையிற்  பற்றும் , எப்பொழுதும்  தம்  தலைவர்பால்  அன்பும் , பகைவர்பால்  வெறுப்பும்  ஆகிய  இக்குணஞ்  செயல்  வாய்ந்தோர்  சூத்திரராயினும் , அரச  குலத்தவராயினும் , வணிகராயினும் , மிலேச்சராயினும் , பிரசாதிக்  கலப்பிற்  பிறந்தவராயினும்  அவர்களைப்  படைத்  தலைவராகவும்  காலாட்படைகளாகவும்  செய்தல்  வேண்டும் .                                 137-139

     ஐந்து  அல்லது  ஆறு  காலாட்களுக்குத்  தலைவன்  பத்திபாலன்  என்று  கூறப்படுவான், முப்பது  காலாட்களுக்குத்  தலைவன்  கெளன்மிகனாவான் .                                                                                     140

     நூறு  காலாட்களுக்குத்  தலைவன்  சதானிகனாவான் . அவனோடு  சிறந்த  அநுசதிகன் , சேனானி , எழுத்தாளனாகிய  இவரும்  அந்நூறு  காலாட்களைக்  குறித்துத்  தலைவராவர் . அங்ஙனமே  சாகச்சிரிக னையும்  பெருமை  மிக்க  ஆயுதிகனையும்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                                     141-142

( அநுசதிகன் , சேனானி , எழுத்தாளன்  என்னும்  இம் மூவரும்  சதானிகனுக்கு  உடனிருந்து  துணை செய்பவராவர் . ஆதலின் , அவரும்  தலைவரென்று  கூறப்பட்டனர் . சாகச்சிரிகன்  –  ஆயிரங்காலாட் படைகளுக்குத்  தலைவன் ; சகச்சிரம் – ஆயிரம் . ஆயுதிகன் – பதினாயிரங்  காலாட்படைகளுக்குத்  தலைவன் ; ஆயுதம் – பதினாயிரம் .)

     காலையிலும்  மாலையிலும்  படைகளை  அணிவகுத்துப்  பழக்குதலும் , அங்ஙனமே  நன்கு  போர்  புரிதற்குரிய  முன்  ஏற்பாடுகளை  யறிதலும்  சதானிகன்  காரியங்களாம் .                        143

     அத்தகைய  செயல்களை  மேற்கொண்டு , சதானிகற்குத்  துணை  செய்பவன்  அநுசதிகனாவான் . போர்க்குரிய  கருவிகளையும் , பொருள்களையும் , போர்  செய்தற்குத்  தகுதியான  போர்  வீரர்களை யும்  அறிதலும்  யாமங்காப்போரை  நியமித்து , அவர்  செய்யுங்  காரியங்களைக்  கட்டளை  யிடுதலும் , சேனானியின்  தொழில்களாம் . அவ்  யாமங்காப்போரை  , அவர்தம்  செயலின்  மாற்றி  யமைத்தல்  பத்திபாலன்  தொழிலாம் .                                                                         144-145

( யாமங்காப்போர் – இரவிலும்  பகலிலும்  நகரைக்  காவல்  புரிவோர் . இவர்  செயன்முறைகளை  4-ஆம்  அத்தியாயம்  7-ஆம்  பிரகரணம்  402-முதல் 409-வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க .)

     யாமங்காப்போர் , தம்  செயலில்  விழிப்புடையராயிருத்தலைக்  கெளன்மிகன்  அறிதல்  வேண்டும் .                                                         146

     எழுத்தாளன் , படைவீரர் , எவ்வளவுள்ளார் ? அவர்  பெற்ற  வேதனம்  எவ்வளவு?  அவருள்  பழையராய்  வலியிழந்தவர்  யாவர்?  வேற்றிடங்களில்  யாண்டு  எத்துணையோர்  சென்றிருக்கின்றனர் ?   என்னுமிவற்றைக்  கணக்கிட்டறிதல்  வேண்டும் . இருபது  யானை களுக்கும்  இருபது  குதிரைகளுக்கும்  தலைவன்  நாயகனென்னும்  பெயரையுடையவன் .                                                                                     147

     இங்குக்கூறப்பட்ட  பத்திபாலன்   முதலிய  பெயருடையாரை  அவரவர்க்குரிய  அடையாளப்  பொருள்களால்  அடையாளமிட்டு  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                  148

     வெள்ளாடு , செம்மறியாடு , பசு , எருமை , மான் , மற்றை  விலங்கினமாகிய  இவற்றிற்கு  அதிபராக , அவை  பெருக்கமடைதற்குத்  தக்கவாறு  உணவு  முதலியன  ஈந்து  காக்கும்  திறமையும் , அவற்றின்பால்  நெருங்கிய  நட்புரிமையுமுடையோரை  நியமித்தல்  வேண்டும் . அங்ஙனமே  அத்தகைய  குணஞ்  செயல்  வாய்ந்தோரை , யானை  ஒட்டக  முதலியவற்றிற்குத்  தலைவராகவும் , அவற்றின்  பணியாளராகவும்  நியமித்தல்  வேண்டும் .                        149

     சிச்சிலி  முதலிய  பறவைகளைப்  போர்ச் செயலில்  உதவி  செய்யும்  வண்ணம்  பயிற்றுந்  திறமையுடையாரையும்  , உணவு  முதலியன  உதவி  வளர்ப்பாரையும் , கிளி  முதலியவற்றிற்கு  நன்றாக  மொழி  பயிற்றுவோரையும் , பருந்து  முதலியவற்றிற்கு  வீழ்ச்சி  யறிவிப் போரையும் , அவ்வவற்றின்  உள்ளக்  கருத்துக்களை  எப்பொழுதும்  நன்றாக  அறியுந்திறன்  வாய்ந்தவர்களாக  ஆராய்ந்து , அவ்வச்  செயல்களில்  நியமித்தல்  வேண்டும் .                                                         150

12 . கருவூலத்  தலைவன்  முதலியோ ரிலக்கணம்

     அரதனங்கள் , பொன் , வெள்ளி , முத்திரைக்காசு  என்னும்  இவற்றை  அவற்றின்  அளவு , வடிவம் , ஒளி , நிறம் , சாதி , ஒப்புமைகளால்  விலைமதித்தறிபவன்  அவற்றின்  அதிபனாவான் .                                  151

     வணக்கமுடைமை , பொருளுடைமை , உலகியலறிவு , உயிரைப் போற்   பொருளைக்  கருதுதல் , ஈகையின்மையாகிய  இவை  வாய்க்கப்பெற்றவனே  பொருட்  கருவூலத்தின்  தலைவனாவான் .  152

     நாட்டின்  வேறுபாடு , சாதி  வேறுபாடு , பருமை , நுண்மை , வன்மை , மென்மையாகிய  இவற்றால்  பட்டு  முதலிய  ஆடைகளின்  அளவையும்  விலையையும்  நன்கறிபவன்  ஆடையதிபவனாவான் . 153

( நாடு – நெய்தவிடம் . சாதி – பட்டுப்பருத்திகளின்  வகைகள் . பருமை  முதலிய  நான்கும்  இழையின்  குணங்கள் . )

     குடில்  குப்பாயம்  கூத்தரங்கம்  என்னும்  இவை  முதலியவற்றை  அளவுணர்ந்து  செய்தலையும் , தைத்தற்றொழிலின்  திறமையால்  அமளி  விதான  முதலியவற்றை  அமைத்தலையும் , வண்ணமிடு தலையும் , ஆடை  முதலியன  சீர்படுத்துதலையும்  செவ்வையாக  அறிபவன்  அவ்விதான  முதலியவற்றின்  அதிபனாவான் .        154-155

( குடில் – ஓலை  முதலியவற்றான்  வேயப்படும்  சிற்றில்லம் .    குப்பாயம் – சட்டை . அமளி – படுக்கை . விதானம் – மேற்கட்டி. வண்ணமிடுதல்  – செம்மை  முதலிய  நிறங்களுண்டாகத்  தீற்றுதல் .)

     நெல்  முதலிய  தானியங்களின்  சாதி , அளவு , விலை , உறுதி , கூறு , கொள்ளுமுறை , தூற்றித்  தூய்மையாக்குமுறை  இவற்றை  யறிபவன்  தானியங்களுக்கு  அதிபனாவான் .                                                                156

     கழுவப்பட்டதும் , கழுவப்படாததுமாகிய  பொருள்களின்  சிறந்த  பக்குவத்தையும் , அறுவகைச்   சுவைகளின்  கலப்பு  வேறுபாட்டையும், உணவுப்பொருள்களின்  குணங்களையும்  நன்கறிந்து , மடைத்தொழிலில் திறன்  வாய்ந்தவன்  அத்தொழிற் றலைவனாவான்.

( கழுவுதல் – தூய்மை  செய்தல் . மடைத்தொழில் – உணவாக்குந்தொழில் .)

     மரஞ்செடிகளுக்கு  மண்ணிடல்  நீர்பாய்ச்சன்  முதலியவற்றால்  மலர்  பழம்  இவை  மிகுதற்குரிய  சாதனங்களையும் , புதியனவாக  உண்டாக்குதலையும் , தூய்மைப்படுத்துதலையும்  காலந்தோறுஞ்  செய்யுமறிவும் , புழு  முதலியவைகளான்  உண்டாகும்  நோயைப்  போக்கு  மருந்தறியும்  திறமையும்  உடையவன்  ஆடற்  பூஞ்சோலையின்  தலைவனாவான்.                                                             158

     திருக்கோயில் , அரண்மனை , அகழி , மதில் , பிரதிமை , இயந்திரங்கள் , அணைக்கட்டு , வாவி , கிணறு , தடாகம் , புட்கரிணி , குண்டம்  நீர்  முதலியவற்றை  மேனோக்கிச்செலுத்தும்  பொறி  முதலியனவாகிய  இவற்றைச்  சிறந்த  சிற்பநூன்  முறைப்படி  நன்றாகவும்  அழகாகவும்  அமைக்கும்  அறிவுடையவனே  இல்ல  முதலியவற்றின்  அதிபனாவான் .                                                          159-161

( இருபது  முழ  நீள  அகலங்களையுடையது  புட்கரிணி  எனவும் , நாற்பத்தைந்து  முழ  நீள  அகலங்களையுடையது  தடாக மெனவுங்  கூறப்படும் . குண்டம்  என்பது  நீர்நிலை  விசேடங்களுள்  ஒன்றாகும் .)

     வேந்தனுடைய  காரியங்கட்கு  வேண்டுவனவாகிய  உபகரணப்  பொருள்களை  உண்மையாக  அறிந்து  அவ்வக்  காலத்திற்  சேர்த்து  வைப்பவன்  உபகரணப்  பொருள்  அதிபனாவான் .                                162

     தன்  கடமை  வழி  யொழுகுதலிற்  பற்றும் , கடவுளுக்குச்  செய்யும்  தொண்டில்  அன்பும் , அவாவின்மையும்  உடையவனைக்  கடவுட்  பூசைத்  தலைவனாக  நியமித்தல்  வேண்டும் .                                          163

     கொடைக்குணம் , அவாவின்மை , பிறர்  குணமறிதல் , மடியின்மை , அருள் , இன்சொல் , தானத்திற்குத்  தகுதியுடையாரையறிதல் , வணக்கம் , இரப்போர்  முகம்  ஒருபொழுதும்  வேறுபடச்செய்யாமை , தான்  கவர்ந்து  கொள்ளாமை  யாகிய  இக்குணஞ்  செயல்களை  என்று  முடையவன்  தானாதிகாரி   யாவான் .                                   164-165

     எல்லாச்  சாதியாரிடத்துமுள்ள  கடன்கோடன்  முதலிய  வழக்குகளை  யறிதல் , புலமை , ஒழுக்கம் , அன்பு , அருள்  முதலிய  உயர்குணங்கள் , பகைவரையும்  நட்டாரையும்  ஒப்ப  மதித்தல் , அறமுணர்தல் , உண்மையுரைத்தல் , மடியின்மை , சினமின்மை , காமமின்மை , உலோபமின்மை , இன்சொற்  கூறலாகிய  இக் குணஞ்  செயல்களையும் , அவைக் களத்திற்குத்  தகுதியையும் , யாண்டு  முதிர்ச்சியையுமுடைய  பெரியார் , அரசவைக்கண்  வீற்றிருந்து  அரசியற்  காரியஞ்  சூழ்வோராவர் .                                                       166-167

     மன்னுயிரனைத்தையும்  தன்னுயிர்  போல்  எண்ணல்  , அவாவின்மை,  எப்பொழுதும்  விருந்தோம்பல் , கொடைக்குணம்  ஆகிய  இவற்றை யுடையோன் சத்திரத்  தலைவனாவான் .              168                                                

( சத்திரம் [சத்ரம்] என்னுஞ்சொல்  பலநாள்  முயன்று  செய்யப்படும்  வேள்வியையுமுணர்த்தும் . ஈண்டு , அவ்வேள்வித்  தலைமைக்குரிய  சிறப்பிலக்கணங்கள்  கூறப்படாமையால் , இச்சொற்கு  அன்னசாலையென்று  பொருள்  கொள்ளல்  வேண்டும் . )

     பிறர்க்குதவி  புரியும்  விருப்பம் , பிறர்பழி  தூற்றாமை , அழுக்காறின்மை , பிறர்  குணங்கோடல் , பிறர்  குணமறிந்து   மகிழ்தலாகிய  இவற்றையுடையான்  பரீக்கைத்  தலைவனாவான் .  169

( பிறர்   குணங்கோடல்  என்றமையால் , குற்றம்  அறிந்து  விலக்கல்  எளிதிற்  புலப்படும் . )

     குடிகள்  அழிவெய்தாவாறு  தண்டம்  விதித்தல் , மிக்கவன்  கண்  இன்மை ,  மிக்க  இரக்கமின்மையாகிய  இவற்றையுடையான்  கள்வர்  முதலியோரை  ஒறுக்கும்  தண்டத்  தலைவனாவான் .                           170

     துன்புறுத்தும்  கள்வராலும்  தீயொழுக்கமுடைய  அதிகாரிகளாலும்  இடுக்கண்  விளையாவண்ணம் , குடிகளைத்  தாய்  தந்தையரை  யொப்பப்  பாதுகாக்கும்  திறன்வாய்ந்தோன்  கிராமத்  தலைவனாவான் .                                                                                               171

     மரஞ்செடிகளை  முயன்று  வேண்டுவன  ஊட்டி  நன்கு  வளர்த்து அவற்றினின்றும்  மலர்பழ  முதலியவற்றைக்  கொள்ளுந்  தாட்டேத் தலைவனைப்  போலக்   குடிகளுக்கு  வேண்டுவன  உதவி , நலஞ்  செய்து ,  அவர்பாற்  குடியிறை  கொள்ளுவோன்  இறைப்  பொருட்டலைவனாவான் .                                                                                 172

     கணக்கின்  திறமை , நாடு மொழி  இவற்றின்  வேறுபாடறிதல் , ஐயந்தோன்றாவாறு  மறைபொருளின்றி  விளக்கமாக  எழுது  முறையாகிய  இவற்றையுடையான்  எழுத்தாளனாவான் .                    173

     அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்  பயிற்சியில்  திறமையும் , உடல்  வன்மையும் , மடியின்மையும் , வணக்கமு முடையனாய் [ ப்பிறரை ]த்  தகுதி  நோக்கி  யழைப்போன்  வாயில்  காப்போனாவான் .                174

     வாணிகம்  புரிவோரின்  மூலப்பொருட்குக்  கேடு  பயவா  வண்ணம்  அவர்  பெறும்  ஊதியத்தில்  அரசனுக்குரிய  கூறுகொள்ளுவோன்  சுங்கம்  வாங்குவோனாவான் .                                                                        175

     மந்திரசெபம் , பட்டினியிருத்தல் , விரதங்காத்தல் , மற்றை  நாட்கடன் , தியானம் , பொறிவென்றி , பொறுமை , அவாவின்மையாகிய  இவற்றை  எப்பொழுதும்  பேணிச்  செய்பவன்  தவஞ்செய்வோனாவான் .                                                                                  176

     மனைவி  மக்கள்  பொருட்டு  ஒரு  சிறிதுஞ்  சேர்த்துவையாமல்  எல்லாப்பொருள்களையும்  இரப்போர்க்கு  ஈயுங்  குணம்  வாய்ந்தோன்  கொடையாளி  யாவான் .                                                                                   177

( இச்  சுலோகத்திற்கு  ‘தன்  பொருளையும்’ மனைவி  மக்கள்  முதலியோரையும்  இரப்போர்க்கு  ஈதலும்  , பிறரிடத்தினின்றும்  ஒரு  சிறிதுங்  கொள்ளாமையும்  உடையான்  கொடையாளியாவான்  என்றும்  பொருள்  கொள்ளலாம் . )

     வேதம் , அறநூல் , புராணம் , இவற்றைப்  பயிலுதலிலும்    பயில்வித்தலிலும்  திறமை  வாய்ந்து , அப்பயிற்சியால்  விளக்கமுறுவோர்  வேதமுணர்ந்தோராவர் .                                              178

     காப்பிய  நூல்களில்  திறமையும் , இசைப்பயிற்சியும் , இனிய  குரலும் , உலகத்தோற்ற  முதலிய  புராண  இலக்கணங்கள்  ஐந்தையுமுணர்தலுமாகிய  இவற்றையுடையார்  பெளராணிகராவர்

( புராண  இலக்கணம்  ஐந்தாவன : உலகத்  தோற்றம் , ஒடுக்கம் , முனிவர்  அரசர்களின்  மரபு , அம் மரபின்  பின்வரலாறு , மனுவந்தரம்  என்பனவாம் . )

     மீமாஞ்சை  தருக்கம்  வேதாந்தம்  வியாகரண  முதலிய  நூல்களிற்  சிறந்த  அறிவும் , உய்த்துணர்வும் , பிறரை  உண்மையாகப்  பயிற்றும்  திறமையுமாகிய  இவற்றை  யுடையான்  அங்கநூல்  வல்லோனாவான் .

     சங்கிதை  ஓரை  கணிதம்  என்னும்  மூன்றனையும்  உண்மையாக  வுணர்ந்து  முக்காலமும்  அறியும்  திறன்  வாய்ந்தோன்  ஒளிநூல்  வல்லோனாவான் .                                                                                             181

(எண்ணூல் – கணிதநூல் . ஒளிநூல் – சோதிடநூல் .)

     மூலமந்திர முறையாக  மந்திரங்களின்  நலந்தீங்குகளையறிந்து , அம்மந்திரங்களைச்  செவ்விதிற்  பயின்று , தெய்வசித்தி  வாய்க்கப்  பெற்றோன்  மாந்திரிகனாவான் .                                                                182                                                        

காரணங்களாலும் , குறிகளாலும் , மருந்துகளாலும் , நோய்களின்  உண்மை  துணிந்து , அவற்றுள்  தீர்க்கத்தக்கன  இன்ன  தீர்க்கத்தகாதன  இன்னவென்றுணர்ந்து  மருத்துவஞ்  செய்யத்  தொடங்குவோன்  மருத்துவனாவான் .                                                          183

( காரணம் – ஒத்ததல்லாத  உண்டி  வேறுபாடு  முதலியன. குறி – நோயால்  உறுப்புக்களில்  நிகழும்  மாறுபாடு . )

     வேதம் , அறநூல்  ஆகமபுராண  முதலியவைகளிற்  கூறப்பட்ட  மந்திரங்களைப்  பயின்று , அவற்றாற்  கடவுள்  வழிபாடு  புரிதல்  நலம்  பயப்பதென்றெண்ணி , அதனைச்  செய்ய  முயல்பவன்  தாந்திரிகனாவான் .                                                                                           184

     உண்மையுரைத்தல் , ஒப்பனை  கோடல் , இன் சொற் கூறல் , நற்குடிப்பிறப்பு , நல்லுருவாகிய  இவற்றையுடைய  அலிகளை  எப்பொழுதும்  உவளகக்  காவலாளராக  நியமித்தல்  வேண்டும் .      185

( ஒப்பனை கோடல் – அலங்கரித்துக்கொள்ளுதல் . உவளகம் – அந்தப்புரம் . )

     தம்  தலைவனிடத்து  அன்பு , பிறர்பாற்  சாராமை , கடமை  மேற்கோடல் , உடல்  வன்மை , பாலப் பருவமின்மை , காளைப்பருவம் , பணி  செய்யுமுறையறிதல் , இழிசெயல்  எவையாயினும்  அவற்றைச்  செய்யும்  மனஒருப்பாடு  ஆகிய  இவற்றையுடையராய் , எப்பொழுதும்  அரசன்  கட்டளைகளை   நிறைவேற்றுவோரே  அரசனுக்குரிய  ஏவலாளராவர் .                                                                                              186-187

( இழிசெயலைச்செய்தல் – அரசனுக்குரிய  ஏவலாளருள்  ஒருவன் , தன்னிற்  றாழ்ந்தான்  செய்யும்  பணிகளைத்  தான்  செய்தல் .)

     பகைவர் , குடிமக்கள் , வினை செய்வார்  ஆகிய  இவர்களின்  செய்திகளைத்  திறமையாக  வுணர்ந்து , அங்ஙனம்  உண்மையாகக்  கண்டுணர்ந்தவைகளை  அரசனுக்கு  மறைவில்  அறிவிப்போர்  ஒற்றராவர் .                                                                                                         188

( இக்கருத்தை “ வினை  செய்வார்  தஞ்சுற்றம்  வேண்டா  தாரென்றாங்  கனைவரையு  மாராய்வ தொற்று”  என்னுந்  திருக்குறலிலுங்  காண்க .)

     வணக்க முதலியவற்றில்  நல்ல  பயிற்சி பெற்று , அரசன்  பக்கல்  வருவோர்க்கு  வணங்கு  முறையையும் , இருத்தற்குரிய  விடத்தையும்  அறிவுப்போரைப்  பொற்றடி  பிரப்பங்கோல்  இவை  தாங்கி  நிற்கச்  செய்தல்  வேண்டும் .                                                                                          189

     மிடற்றினும்  யாழ்  முதலியவற்றின்  நரம்புகளிலும்  தோன்றும்  ஏழு  சுரங்களையும்  இடவேறுபாடறிந்து  வெளிப்படுத்தல் , சேர்க்கப்படுவனவும்  பிரிக்கப்படுவனவுமாகிய  சுரங்களை  நன்றாக  அறிதல் , பண்ணமைய  இன்னிசை  பொருந்தத்  தாளத்துடனாதல்  அன்றி  அவற்றோடு  ஆடலோடாதல்  பாடுதலாகிய  இவை  வாய்க்கப்  பெற்றோன்  இசைபாடுவோர்  தலைவனாவான் .                              190-191

     அரசன்  தன்  மன  மகிழ்தற்பொருட்டு , முற்கூறிய  ஆடல்  பாடல்களாகிய  இசைப்பயிற்சியின்  திறமை , நாணமின்மை , காதற்  கிழமையைப்  புலப்படுத்துங்  குறிப்பு , இன்பச்சுவையின்  உண்மை யுணர்ச்சி , அழகமைந்த  உடல் , பிறர்  மனத்தைக் கவரும்  ஆற்றல் , புத்திளம்பருவம் , உயர்ந்து  திரண்ட  தனங்கள் , அழகிய  புன்முறுவலோடுங்  கூடிய  பார்வை  ஆகிய  இந்நலங்களமைந்த  விலைமகளிரை  வேண்டுவன  உதவிக்  காத்தல்  வேண்டும் . அங்ஙனமே  மனத்தை  இன்புறுத்துவனவாகிய  வியக்கத்தக்க   செயல்களைப்  புரிவதிற்  றிறன்  வாய்ந்த  பிறரையும் , நல்ல  ஏவலாளரையும்  காத்தல்  வேண்டும் .                                                   192-193

     துயிலெடை  பாடுவோர் , சிறந்த  கவிகள் , பிரப்பங்கோல்  தடி  தாங்கி  நிற்குங்  காவலாளர் , சிற்பிகள் , இன்பநூல்  வல்லார் எப்பொழுதும்  பிறர்க்குதவி  செய்வோர், பிறர்  குற்றங்களை  வெளிப்படுத்தி  அதனால்  நகைச்சுவை  விளைவிப்போர் , பலவகை  வேடந்தாங்கி  ஆடல்  செய்வோர் , ஆடற்   பூஞ்சோலை  செயற்கையிற்  காட்டும்  ஒப்பனைச்  சோலை , அரண்  இவற்றை  யுண்டாக்குவோர் , மகாநாளிகமென்னும்  பொறியினின்று  நெருப்புமயமான  திரளைகளாற்  குறிவைத்தெய்து  பகைவரைத்  தொலைப்போர் , சிறு  பொறிப்படை  நெருப்புண்டாக்குந்  துகள்  அம்பு  திறளை வாள்  ஆகிய  இவற்றையாக்குவோர் , வேறுபல  பொறிப்படைகள்  விடுபடை  விடாப்படைகள் வில்  அம்பறாத்தூணியாகிய  இவை  முதலியவற்றைச்  செய்வோர் , பொன்  அரதனங்களால்  அணிகலன்  செய்யும்  பொற்கொல்லர் , தேரியற்றுவோர் , கற்பணி  செய்வோர் , கரும்பொற்கொல்லர் , வண்ணம்  பூசுவோர் , குயவர் , கன்னார் , தச்சர்  நடைவழி யாக்குவோர் , மயிர்  விளைஞர் , வண்ணார் , விறகு  வெட்டுவோர் , மலமூத்திர  முதலியன  வெளிப்படுத்துவோர் , செய்தி தாங்கிப் போக்குவரவு புரிவோர், துன்னகாரர், அரசியல்  அடையாளப்  பொருள்களை  முன்னிற்றாங்குவோர் , படைகளை  யணிவகுப்போர் , போர்முரசு  படகம்  இரலை  சங்கு  வேய்ங்குழல்  முதலிய  இயங்களின்  ஒலிகளாற்  பகைவரை  எதிர்த்துச்  சேறல் , அவர்  பானின்று  திரும்பி  வருதல் , அவரோடு  பொருதன்  முதலிய  செயல்களை  யறிவிப்போர் , தோணி  இயக்குவோர் , மண்தோண்டுவோர் , வேடர் , குறவர் , சுமையெடுப்போர் , ஆயுதங்களைத்  தீட்டிக்  கூர்மைப்படுத்துவோர் , நீரெடுப்போர் , தானியம்  எடுப்போர் ,  பண்டமாற்றுத்  தொழில்  புரிவோர் , வரைவின்  மகளிர் , இசைக்கருவியாலும்  மகளிராலும்  சீவிக்கும்  நடர்  முதலியோர், நெய்தற்றொழில்  செய்வோர் , பறவைகளாற்  சீவிப்போர் , ஓவியம்  வரைவோர் , தோற்றுன்னர் , இல்லங்களை  யலகிடுவோர் , பாத்திரம்  தானியம்  ஆடை  இவற்றைத்  தூய்மை  செய்வோர் , அமளிவிதானம்  விரிப்பு  இவற்றை  யுண்டாக்குவோர் , அரசன்  ஆணையை  நடத்துவோர் , வியர்தோன்றாதவாறு  நறுமணப்புகை  யுண்டாக்கும்  பொருள்  செய்வோர் , அடைப்பை  யேந்துவோர், இழிதொழில்  புரிவோர் , சிறு  தொழில்  புரிவோராகிய  இவ்வெல்லோரையும்  அரசன்  அவ்வக்  காரியங்களுக்கேற்ப  நியமித்தல்  வேண்டும் .                   194-204

( துயிலெடை பாடுவோர் – வைதாளிகர் : வைகறைப்  பொழுதில்  அரசனைத்  துயிலெழுப்பப்  பாடுவோர் .

அரண் – நீர் , நிலம் , மலை ,காடு  இவைகளாற்  செய்யப்படும் தலைநகர்க்  காப்பு.

திரளை – திரண்ட  வடிவமுள்ள  கோளம் , குண்டு ,

மகாநாளிகம் – இது  பீரங்கியாகும் .

நெருப்பு  உண்டாக்குந்  துகள் – வெடிமருந்து .

மயிர்  வினைஞர் – நாவிதர் .

துன்னகாரர் – தையற்காரர் .

இரலை- ஊதிடு  கொம்பு .

இயம்  – வாத்தியப்பொது .

தோற்றுன்னர் – சக்கிலியர் .

அலகிடல் –துடைப்பத்தால்  இடத்தை  விளக்கல் .

வியர்தோன்றாமை – வெப்பமின்மையானாம் .

வினைசெய்வார் – வேதனம்  பெற்றுக்  காரியம்  புரிவோர் .)

வாய்மை  கூறல்  பிறர்க்குதவி புரிதலாகிய  இவ்விரண்டுஞ்  சிறந்த  அறங்களாகக்  கூறப்படும் . ஆதலின்  அரசன் , இவ்விரண்டினையு முடைய  வினைசெய்வாரை  என்றுங் காத்தல்  வேண்டும் .             205

     எல்லாத்  தீவினைகளினுஞ்  சிறந்தது  பிறர்க்குத்  துன்பஞ்  செய்தலாகும் . அதனினுஞ்  சிறந்தது  பொய்  கூறுதலாம் . ஆதலின்  அரசன்   இவ்விரண்டினையுமுடைய  வினைசெய்வாரை  ஒழித்துவிடல்  வேண்டும் .                                                                                                        206

     எவ்வமயம் , எக்காரியம்  செய்தற்கும்  சொல்லுதற்கும்  தகுதியுடையதோ , அவ்வமயம்  அதனை  அரசனுக்கு  அறிவித்துச்  சொல்லியுஞ்  செய்தும்  விரைந்து  முடிக்கும்  சிறந்த  வினை  செய்வான்  மிகவும்  பாராட்டப்படுபவனாவான் .                                  207

 13 . அரசன்  திருமுன்  அரசியல்  வினைசெய்வார்  ஒழுகுமுறை  

     அரசியல்வினை  செய்வான் , இரவிற்  கடையாமத்தில்  துயில்  நீத்தெழுந்து , இல்லத்திற்  செயற்பாலனவற்றை  யாராய்ந்து , பின்  மலமூத்திரம்  ஒழித்துத்  திருமாலை  நினைந்து  நீராடி , அதன்பின்  மூன்று  நாழிகையளவிற்  காலைக்கடனை  முடித்து  விட்டுத்  தன்  காரியாலயத்தை  யடைந்து  செய்யத்  தக்கன  தகாதனவற்றை  யாராய்தல்  வேண்டும் .                                                                             208-209

     வாயில்காப்போன் , அரசன்  கட்டளை  பெறாமல்  அரண்மனையினுட்  புகுவோனை  உறுதியாகத்  தடுத்துவிடல்  வேண்டும் . பின்னர்ச்  சொல்ல  வேண்டிய  காரியத்தை  அரசனுக்கு  அறிவித்து  அரசன்  அனுமதி  பெற்று  அவனை  உட்புகும்படி  விடல்  வேண்டும் .                                                                                                          210

     கையிற்  கோல்  தாங்கி  நிற்கும்  வாயில்காப்போன்  அரசவை  நடு வண்  அடைந்தோரைக்  கண்டு , முறைப்படி  அவர்  வணக்கங்களை  அரசனுக்கு  அறிவித்துப்  பின்னர்  அன்னாரிருத்தற்குரிய  இடங்களையுங்  குறிப்பிடல்  வேண்டும் .                                                   211

     அதன்பின்  அங்குச்செல்வோன்  அரண்மனையை  யடைந்து  கட்டளை  மேற்கொண்டு  அரசன்  திருமுன்  எய்தல்  வேண்டும் . எய்தி , மற்றொரு  திருமாலைப்போல்  வீற்றிருக்கின்ற  வேந்தனை  முறைப்படி  வணங்கி , அருட்குணமும்  பிறருள்ளக்  குறிப்பு  உணருந்திறனும்  வாய்ந்த  அம்மன்னவனது  இருக்கையின்  பாதியில்  பார்வையைச்  செலுத்தல்  வேண்டும் . மற்றொப்புறத்தினும்  பார்த்தலாகாது .                                                                                          212-213

( இருக்கையின்  பாதியிற்  பார்வையைச்  செலுத்தல் – அரசியற்கையை  முகங்கவிழ்ந்து  அவ்விருக்கையின்  கீழ்ப்  பாதியில்  நாட்டத்தைச்  செலுத்திப்  பணிவு  தோன்ற  நிற்றல். )

     வணக்க  முதலியன  நன்கு  பயின்ற  அவன் , உயிர்க்கும்  பொருட்கும்  தலைவனும்  பிரபுவுமாகிய  வேந்தனை  எரிகின்ற  நெருப்பைப்  போலவும் , சினமிக்க  பாம்பைப்  போலவுங்  கருதி , அவன்  பக்கல்  அணுக  வேண்டும் .                                                            214

( இக்கருத்து , “அகலா  தணுகாது  தீக்காய்வார்  போல்க , இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் “  என்னுந்  திருக்குறளிற்  புலப்படல்  காண்க . )

     எப்பொழுதும்  வேந்தனை   முயன்று  உபசரித்தல்  வேண்டும் . “யான்  தன்வயத்தனாவேன்”  என்று  கருதலாகாது . வேந்தன்  கொள்கையை  உறுதிப்படுத்தி  அவற்கு  நலந்தருஞ்  சொற்களைக்  கூறல்  வேண்டும் . நன்கு  ஆராய்ந்து  துணியப்பட்ட  பொருளை  வேந்தன்  ஆணை  வழிநின்று  மொழிய  வேண்டும் .                              215

     மனத்திற்கு  உவகைதரும்  விளையாட்டுக்  கூட்டங்களில்  ஒருவர்க்கொருவர்  வழக்கு  நேர்ந்துழி  அவ்வழக்கின்  முடிவை  அறிந்துளானாயினும் , தன்  தலைவன்  தீர்மானித்த  கொள்கையை  எதிர்த்து  ஒன்றுங்   கூறலாகாது .                                                                   216

     அரசனால்  அழைக்கப்பட்டோன் , எப்பொழுதும்  பணிவு  மிக்க  வேடமுடையனாய்ச்  சென்று  கைகூப்பி  நிற்றல்  வேண்டும் . தன்  உடலின்  முன்பாகத்தை  ஆடையான்  மறைத்து , வணக்கமுடையனாய், முதலில்  அம்மன்னவன்  மொழியைக்கேட்டு , அவன்  கட்டளையை  ஏற்றுப்  பின்னர்  மீண்டும்  வணங்கித்  தன்  காரியங்களைத்  தெரிவித்துக்  கொள்ளல்  வேண்டும் . அவ்வேந்தன் தன்  பக்கங்களிலாதல்  முற்பக்கத்தாதல்  { அவன்  கட்டளை  கடவாமைப்  பொருட்டு  இருக்கையைக்  கையாற்  றொடல்  வேண்டுமென்பது  கருத்து }                                                                   217-218                                                                                          

     பெருநகை  புரிதல் , இருமுதல் , உமிழ்தல், துரும்பு  கிள்ளன்  முதலிய  வீண்  செயல் , ஆவித்தல் , உடம்பு  முறித்தல் , கணுக்களை  நொடித்தலாகிய  இவற்றை  ஒழித்தல்  வேண்டும் .                                  219

( ஆவித்தல் – கொட்டாவி  விடுதல் . உடம்பு  முறித்தல் – உடம்பை  ஒலியுண்டாம்படி  இயக்கல் )

 அரசன்  கட்டளையிட்டருளிய  இடத்தை  யடைந்து  மகிழ்ச்சி யுடையனாயிருத்தல்  வேண்டும் . அனுபவ   முதிர்ச்சியும்  சிறந்த  அறிவுமுடையனாயினும் , அரசன்  முன்னிலையில்  இறுமாப்பை  யொழித்தல்  வேண்டும் .                                                                                 220

( அரசன்  கட்டளையிட்ட  இடமென்றது – அவன்  இருமருங்கும்  முன்னிலையுமல்லாத  இடமாகும் . 218 – ஆம்  சுலோகத்தில்  அரசன்  பக்கங்களிலும்  முற்பக்கத்திலும்  அவன்  கட்டளையிடினும்  இருத்தலாகா தென்றமையான் )

     நலத்தை  விரும்புவோன் , தன்  தலைவனுக்குக்  கேடு  நேருங்காலத்திலும் , அவன்  நெறிபிறழ்ந்து  செல்லும்  பொழுதும் , காரியத்திற்குரிய  அமயங்  கடக்குங்காலங்களிலும் , அவனால்  வினாவப்படாமலே  நயம்  பயக்குஞ்  சொற்களைக்  கூறலாம் .      221

     மகிழ்ச்சி  செய்வனவும் , உண்மையானவும் , நெறி  பிறழாதனவும் ,  அறம்  பொருள்  பயப்பனவுமாகிய  சொற்களைக்  கூறல் வேண்டும் . அளவைகளான்  இயன்ற  சொற்களால்  வேந்தற்கு  இதம்  பயப்பனவற்றை  யறிவித்தல்  வேண்டும் .                                                222

மற்றை  அரசர்களின்  புகழையாதல் , நீதியின்  பயனையாதல்  எடுத்துரைத்தல்  வேண்டும் . இன்னும் , “வேந்தர்   பெரும! நீயே  வள்ளலும் , அறவோனும் , வீரனும் , நீதியாளனுமாகின்றாய் . ஒருபொழுதும்  நின் நெஞ்சத்தில்  அநீதி  இருப்பதின்று “  எனவும் , அநீதியால்  இழிவெய்திய  அரசன்  இன்னார்  இன்னா  ரெனவும்  அவன்  முன்னிலையில்  என்றுங்  கூறல்  வேண்டும் .                                      223-224

( “வேந்தர்   பெருமை ……………இருப்பதின்று” என்னும்  பாராட்டுரைகள் வஞ்சத்தாற்   கூறப்படுவனவல்ல . அரசன்  நல்வழிப்படுத்தற்  பொருட்டாம் ; பின்  அநீதியால்  இழிவெய்திய  அரசரை  எடுத்துக்  காட்டுதலின் . )

     அரசரெல்லோரினும்  நீயே  உயர்ந்தவனென்று  சிறப்பித்துரைத்த லாகாது . காலம்  இடங்களை  யுணர்ந்து , உரிய  காலத்திலும் உரியவிடத்திலும்  பிறர்  காரியத்தைச்  செய்து  முடித்தல்  வேண்டும்.

     பிறர்  காரியத்திற்குக்  கேடு  விளையாவண்ணம்  அரசன்பால்  என்றும்  பேசுதல்  வேண்டும் . குடிகளின்  காரியத்தைக்  குறித்து  அரசன்  பற்றில்லாதவனாக  இருக்கும்  வண்ணம்  செய்தலாகாது .   226

     சிறந்த  அறிவுடையான் , பசிப்  பிணியாற்  பற்றப்பட்டுக்  கட்டையைப்  போல்  உலர்ந்து  வற்றினானாயினும் , கேடு  பயக்குந்  தொழிலை  ஒரு  பொழுதும்  விரும்பலாகாது .                                           227

     எவன்  எச்செயலில்  நியமிக்கப்பட்டானோ  அவன்  அச்செயலில்  மிகவும்  பற்றுடையனாக  விருத்தல்  வேண்டும் . பிறனொருவனது  அதிகாரத்தை  விரும்புதலாகாது . அங்ஙனமே  யார்  மாட்டும்  அழுக்காறு  கொள்ளலுமாகாது .                                                                  228

     எவன்மாட்டுங்  குறை  கண்டு  வெளிப்படுத்தலாகாது . அக்குறையைத்  தன்  ஆற்றலாற்  போக்கி  நிறைவித்தல்  வேண்டும் . எப்பொழுதும்  பிறர்க்குதவி  செய்தலினுஞ்  சிறந்ததாக  நட்புரிமையை  யுண்டாக்குவது  வேறொன்றுமின்று .                                                         229

     ஒருவனுக்கு  ‘நின்  காரியத்தைச்  செய்து  தருவேன்”  என்று  உறுதி  கூறி  அதனைச்  செய்யாமல்  தாழ்த்தலாகாது .  ஆற்றலுடையனாயின்  விரைந்து  முடித்தல்    வேண்டும் . அவர்  மேற்கொண்டு  நெடுநாட்  காத்திருக்குமாறு  செய்தலாகாது .                                                                230

     தன்  தலைவனுடைய  இரகசியச்  செயலையும்  சூழ்ச்சியையும்  வெளிப்படுத்தலாகாது .  அவற்குப்  பகைமையினையும்  கேட்டினையும்  நெஞ்சத்தால்  நினைத்தலுங்  கூடாது .                            231

     ‘ அரசன்  எனக்கு  உரிமை  நண்பனாவான் ‘  என்று  உறுதியாக  நினைத்துக்  கொள்ளலாகாது .  வேந்தன்  விருப்பத்திற்குரிய  மகளிர் , தீயொழுக்கமுடையார் , விலக்கப்பட்டார் , பகைவராகிய  இவர்களோடு  கலத்தலையும் , கலந்து  பேசுதலையும் , கலந்து  காரியஞ்  செய்தலையும்  ஒழித்து  விடல்  வேண்டும் . அரசனுடைய  வேடத்தினையும்  மொழியினையும்  பிறர்  நகையாடுமாறு  ஒத்துக்காட்டலாகாது .                                                                                232-233

(ஒத்துக்காட்டல் – பரிகாசஞ்  செய்தல் )

     ஒருவன்  தான்  நிறைந்த  செல்வமும்  பேரறிவுமுடையனா யிருப்பினும் , அரசன்  குணங்களை  அவமதிக்க  விரும்புதலாகாது . நற்செயல்  நல்லுணர்ச்சியுடையனாய்த்  தன்  தலைவனுடைய  விருப்பு  வெறுப்புக்களையும் , இங்கிதம்  ஆகாரம்  செயல்களால்  அவன்  உள்ளக்  கருத்தையும்  அறிந்து  கொள்ளல்  வேண்டும் .                        234

     தன் மாட்டுப்  பற்றில்லாத  அரசனை  விட்டுப்  பற்றுமிக்க  வேந்தன்பால்  இருத்தல்  வேண்டும் . பற்றில்லாத  அரசன் , தனக்குக்  கேட்டினையும்  தன்  பகைவனுக்கு  நலத்தையும்  விளைவிப்பவனாவான் .                                                                             235-236

     அவாவை  மிக  வளர்வித்தும்  பயன்  விளையாவாறு  வஞ்சித்தல் , சினமில்லாதவனாயும்  அஃதுடையான்  போலாதல், அருண்  முகங்காட்டியும்  பயன்  செய்யாதொழிதல் , இறுமாப்பு  மிக்க  சொற்களைக்  கூறுதல் , வாழ்க்கைத்  தொழிற்குக்  கேடு  விளைவித்தல் , தன்  குணங்கள்  பாராட்டப்படுங்காலத்தும்  முகம்  வேறுபடத்தோன்றல் , அதனோடு  வேற்றிடத்திற்  செய்யப்படும்  மற்றொரு  செயலில்  நோக்கத்தைச்  செலுத்தலாகிய  இவை  பற்றில்லாத  அரசனுக்குரிய  இலக்கணங்களாம் .                           237-238

இனி ,பற்றுமிக்க  வேந்தன்  இலக்கணங்  கூறப்படும் . தன்பால்  வருவோனைப்  பார்த்ததளவில்  மலர்ச்சி  யுடையனாதல் , அவன்  கூருஞ்சொற்களை  அன்போடு  கேட்டல் , நல  முதலியன வினாவல்  இருக்கையீதல் , அவனுக்குத்  தனிமையிற்  காட்சி  கொடுத்தல் , தனிமையில்  அவனை  ஐயுறாமை , அவன்  செய்திகளைக்  கேட்டு  முகமலர்ச்சியுடையனாய்த்  தோன்றல் , அவன்பாலுள்ள  வேறு சில  செயல்கள்  தனக்குப்  பிரியமில்லாதனவாயினும்  அவற்றை  மகிழ்ந்து  ஏற்றுக்கொள்ளல் , அவன்  தரும்  கையுறை  சிறுவிலையுடைய  தெனினும்  அவற்றைப்பெறுதல் , வேறுபல  நிகழ்ச்சிகளுக்கிடையில்  மலர்ந்த   முகமுடையனாய்  அவனை  நினைந்து  பாராட்டல்  ஆகிய  இவை  பற்றுமிக்க  அரசனிலக்கணங்களாம் . இவ்விலக்கணம்  வாய்ந்த  அரசன்பால்  வினைசெய்தலே  தக்கதாம் .                   229-243

     அவ்வரசியல்  வினைசெய்வான் , அரசன்  உதவிய  ஆடை, அணி  முதலிய  அரசியல்  அடையாளப்  பொருள்களை  எப்பொழுதும்  அணிந்து  கொள்ளல்  வேண்டும் . தன்  அதிகாரச்செயலில் உள்ள  குறைவுமிகுதிகளை  எப்பொழுதும்  தலைவற்கு  அறிவித்தல்  வேண்டும் . தலைவனைப்பற்றிய  செய்திகளைப்  பாராட்டல்  வேண்டும் . அவன்  கூறுஞ்  சொற்களைக்  கேட்க வேண்டும் .          244

     ஒற்றராலும்  சூசகராலும்  நேர்ந்த   பிழையால்  அரசன்  மாறுபட்டுப்  பேசுவானாயின் , அச்சொல்லை  வாய்வாளாமை  மேற்கொண்டு  கேட்க  வேண்டும் . ஆனால்  அச்சொல்லை  உண்மையைப்போல்  ஏற்று  உடன்படலாகாது .                                                                                245

( சூசகர் – இவரை  45-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க)

     பற்றுமிக்க  வேந்தன்  கேடெய்தி யிருப்பின் , அவனை  ஒருபொழுதும்  விலக்கலாகாது . ஒருவன்  அன்போடளித்த  சோற்றை  ஒரு  பொழுது  உண்ணினும்  , அது  குறித்து  அவன்  நலத்தை  என்றும்  நினைத்தல்  வேண்டும் . அங்ஙனமாயின்  தன்னை  முழுதுங்  காக்கும்  தலைவனுக்கு  யாதுதான்  செய்யத்  தகாதது ?                                  246-247

     தலைவனுக்குத்  தக்க  காலத்தில்  மிகுதியான  பணியைச்  செய்தலால் , தாழ்ந்தவனும்  உயர்ந்தவனாவான் ; பணியியற்றுவதில்  மடி  முதலியன  மேற்கோடலான்  உயர்ந்தவனும்  தாழ்ந்தவனாவான் .

     எப்பொழுதும்  பணி  செய்வதிற்  பற்றுடைய  வினை  செய்வான் , வேந்தன்  அன்பிற்குரியனாவான் .  அவன்  தன்  அதிகாரத்திற்குரிய  காரியங்களை  விரைந்து  செய்தலால்  அரசன்  மனம்  இன்புறும் .  249

     வினைசெய்வான் , தன்நிலைக்குத்  தகாத  இழிந்த  செயலை  ஆராயாமற்  செய்தலாகாது . அரசனும்  அவனை  அங்ஙனஞ்  செய்யும்  வண்ணம்  கட்டளையிடலாகாது . அவ்வழி  தொழில்  செய்தற்குரிய  பணியாளில்லாதிருப்பின் , அவ்வமயம்  செய்தற்குரிய  அவ்விழிதொழிலை  உயர்ந்தவனும்  அரசன்  பொருட்டுச்  செய்யக்கடவன் . எக்காரியத்தில்   அரசன்  பிரியமுடையனாயிருக் கின்றானோ  அச்செயலைத்  தனக்கு  விருப்பமில்லாததாக  எண்ணலாகாது . தன்  அதிகாரத்தின்  பெருமையை  ஒரு பொழுதும்   வெளிபடுத்தலாகாது .                                                                               250-252

     அரசனால்  அதிகாரம்  பெற்று  வினைசெய்வார் , தத்தம்  அதிகாரங்களைக்  காத்தற்பொருட்டுத்  தம்முள்  ஒருவர்க்கொருவர்  அழுக்காறெய்தலாகாது .  ஒருபொழுதும் மனம்  வேறுபடுதலுமாகாது .

     எந்நாட்டில்  வினைசெய்வார்  குழுவும்  வேந்தனுமாகிய  இருதிறத்தாரும்  தம்முள்  அன்பு  பூண்டு  நல்லொழுக்க  முடையராய்  இருக்கின்றார்களோ , அந்நாட்டில்  திருமகள்  அளவிலளாய்ச்  செழித்து  வளர்ந்து  துணை  நிற்பவளாவாள் .                                                            254

     ஒருவன் , மற்றொருவன்  அதிகாரத்தில்  நிகழ்ந்த  பிழையை  அறிந்துளனாயினும் , அதனை   அரசனுக்கு  உரைத்தலாகாது . அரசனும்  வினைசெய்வான்  ஒருவன்  முகமாக  மற்றொரு  வினைசெய்வான்  செயலை  ஒருபொழுதும்  கேட்டலாகாது .               255

     அரசனுக்கு  நல்லன  இன்ன  தீயன  இன்னவென்ற  அறிவியாத  அதிகாரிகள் , வினைசெய்வார்  தன்மையை  மேற்கொண்டு  மறைந்தொழுகும்  பகைவராவர் .                                                                  256

     அமைச்சர்  முகமாக  நல்லன  தீயனவற்றைக்  கேட்டுணராத  அரசன்  அரசுருவமாக  நின்று  குடிகளின்  பொருள்களைக்  கவர்ந்து  கொள்ளுங்  கள்வனாவான் .                                                                             257

     அரசிளங்குமரர்களால்  அரசியற்  செய்திகளைப்  பற்றி  நன்கு  வினாவப்பட்ட  அமைச்சர்கள்,  அது  குறித்து  அவர்களோடு  பகைமை  மேற்கொள்ளுவாராயின்  அவ்வமைச்சர்  மறைந்தொழுகுங்  கள்வராவார் .                                                                                                        258

     அரசிளங்குமரர்  சிறுவராயினும்  அவரை  அமைச்சர்கள்  சிறுமையாக  எண்ணலாகாது . எப்பொழுதும்  அழகிய  பன்மைச்  சொற்களால்  அவரை  விழிப்புடன்  பெருமைப்படுத்தழைத்தல்  வேண்டும் .                                                                                                             259

     அவ்விளவரசனின்  தீயசெயல்களை  ஒருபொழுதும்  அரசனுக்கு  அறிவித்தலாகாது . மகளிர்பாலும்  புதல்வர்மாட்டும்  உள்ள  மையற்  பற்று  மிக்க  வலியுடையதாகும் . ஆதலின்  அவ்விருவரையும்  பற்றிப்  பழித்துரைத்தல் , உரைப்போனது  நலத்திற்குக்  கேடு  விளைவிப்பதாகும் .                                                                                            260

அரசியல்  வினைசெய்வான் , மிகவும்  இன்றியமையாததும்  உயிர்  வாழ்க்கையில்  ஐயமுறச்  செய்வதுமாகிய  ஒரு  சிறந்த  காரியத்தை  “யான்  உறுதியாகச்  செய்து  முடிப்பேன் “  எனவும் ,  “கட்டளை  தருக “  எனவும்  அரசன்  முன்னிலையிற்  சூளுற்றறிவித்து, விரைந்து  தன்  ஆற்றற்கு  ஏற்றவாறு  அதனைச்  செய்ய  முயலல்  வேண்டும் .            261

( உயிர்வாழ்க்கையில்  ஐயமுறச்  செய்தலாவது – தொடங்கப்பட்ட  காரியம்  நிறைவேறுவதற்குள் , தொடங்கினவன்  உயிர்  நீங்கிவிடுங்கொலோவென்று  ஐயமுறுத்துவது,   சூளுறல் – சபதஞ்  செய்தல் )

     அரசியல்  வினைசெய்வான் , தன்  குடும்பத்தைக்  காக்கும்  நிமித்தம்  ஓர்  அரிய  பெரிய  காரியத்தில்  அரசன்  பொருட்டுத்  தன்  உயிரையுங்  கொடுத்துவிடலாம் . குடும்பத்தைக்  காக்கும்  நிமித்தம்  இன்றேல் , ஒரோவமயம்  அங்ஙனம்  உயிரைக்  கொடுத்தல்  வேண்டுமென்பது  அவசியமின்று .                                                                262

     அரசியல்  வினை  செய்வாரெல்லோரும்  காரணங்காட்டி  அரசன்  பாற் பொருள்  கொள்ளுவோராவர் . அரசனும்  சில  காரணத்தால்  அவ்வினை  செய்வார்  உயிரைக்  கொள்பவனாவான் . அரசன்  போர்ச்செயன்  முதலிய  மிகப்  பெருங்  காரியம்  நேர்ந்துழி , வேதனங்களால்  அவ்வினை  செய்வார்  உயிர்களைக்  கொள்ளலாம் . அவ்வினை  செய்வாரும்  வேதனமுகமாகவே  அரசன்  பொருளைக்  கொள்ளல்  வேண்டும் . வேற்று  வழியிற்  கொள்ளலாகாது . அவ்வரசனும்  வினைசெய்வாரும்  இங்குக்  கூறிய  முறைமையின்  அன்றி , வேற்று  முறைமையால்  உயிரையும்  பொருளையும்  கொள்வாராயின் , தமக்குத்தாமே  அழிவு  செய்பவராவர் .             263-265

     அமைச்சர்  முதலியோரால்  அரசன்  எப்பொழுதும்  தலைமையாக  மதிக்கப்படுபவனாவன் . அரசனுக்கு  அடுத்தபடியாக  வைத்து  இளவரசன்  மதிக்கப்படுவான் . அவனுக்கு  அடுத்தபடியாக  அமைச்சனை  இறுதியாகவுடைய  ஒன்பதின்மரும்  மற்றை  வினை  செய்வாரான்  மதிக்கப்படுவர் . அவர்க்கு  அடுத்தபடியாக  வைத்து  மற்றை  அரசியற்றொழில்  புரிவார்  மதிக்கப்படுவர் . ஆயுதிகன்  மந்திரியையொப்ப  மதிக்கப்படுவான் . அவனுக்கு  அடுத்தபடியாகச்  சாகச்சிரிகன்  மதிக்கப்படுவான் .                                                              266

( ஆயுதிகன் – சாகச்சிரிகன்  இவ்விருவரிலக்கணங்களை  இவ்வத்தியாயத்து  142 –ஆம்  சுலோகக்குறிப்பிற்  காண்க .)

      அரசனோடு  கூடி  விளையாடலாகாது . அங்ஙனம்  விளையாட  நேரின்  வேந்தனைச்  சிறப்பித்தல்  வேண்டும் . அரசனுடைய  மனைவி புதல்வி  இவர்களை  அமைச்சர்  அவமதித் தெண்ணலாகாது .         267

( சிறப்பித்தலாவது : வியையாட்டில்  வேந்தன்  தோல்வியுறும்படி  செய்யாமை . )

அரசியல்  வினை  செய்வார் , அரசனுடைய  சுற்றத்தாரையும்  நண்பர்களையும் அவரவர்  தகுதிக்குத்  தக்கவாறு  பெருமைப்படுத்தல்  வேண்டும் . வேந்தன்  அழைப்பின் , பெரிய  காரியம்  பலவிருப்பினும்  அவற்றை விட்டு  விரைந்து  போதல்  வேண்டும்.                                   268                                       

     நன்றாகச்  சூழ்ந்து  துணியப்பட்ட  அரசியற்  காரியத்தை  நெருங்கிய  நண்பனுக்குங்  கூறலாகாது . வேதனத்தையன்றி  வேந்தன்  பொருளில்  தமக்குத்  தரப்படாத  தொன்றை  விரும்புதலாகாது .       269

     அரசன்  கட்டளையின்றித்  தாம்  மேற்கொண்ட  காரியத்தை  நிறைவேற்றுதற்கிடையில் , அக்காரியத்திற்குரிய  வேதனத்தைப் பெற  விரும்பலாகாது . பொருட்கண்ணுள்ள  அவாவினால்  எவனுடைய  நற்செயற்குங்  கேடிழைக்கலாகாது .                                                             270

     அரசியல்  வினைசெய்வான்  தன்  மனைவியையும் , மக்களையும் , பொருளையும் , உயிரையும் , இழக்க  நேரினும்  தக்க  காலத்தில்  அரசனை நன்கு  காத்தல்  வேண்டும் . கைக்கூலி  வாங்குதலை  அறவே  யொழித்தல்  வேண்டும் . வேந்தனை  மாறுபடப்  போதித்தலாகாது .  271

     முறைகடந்து  தண்டித்தலையும்  எப்பொழுதும்  கடுந்தண்டம்  இழைத்தலையு முடைய  அரசனைத்  தனியிடத்திருத்தி , அரசியல்  அழியாமைப்  பொருட்டு  நன்கு  இடித்துக்கூறல்  வேண்டும் .               272         

     புதிய  இறைப்பொருள்  சுங்கம்  விதித்தலால் , குடிகள்  வேந்தனிடத்து  மிக்க  நடுக்கங்கொள்வாராதலின் , அங்ஙனம்  குடிகளுக்குத்  தீங்குபயக்குமுகமாக  அரசனுக்கு  நலம்  பயக்குங்  காரியத்தைச்  செய்தலாகாது .                                                                       273

( இறைப்பொருள் – குடிகளின்  வருவாயில்  அரசனுக்குரிய  ஆறிலொரு  கூறு  முதலியன  .  சுங்கம் – மரக்கலத்திலும் , வண்டியிலும்  வரும்  பண்டங்கட்கு  வாங்கும்  இறை . வாணிகம் – புரிவார்க்கு  அதனாற்  கிடைக்கும்  ஊதியத்தில்  அவ்வரசனுக்குரிய  இறைக்கூறுமாம் . )

     வேந்தன்  உயர்குலத்  துதித்தோனாயினும் , குணம்  நீதி  பலம் இவற்றில்  வெறுப்புள்ளவனாகவும்  அறமில்லாதவனாகவும்  இருப்பானாயின் , நாட்டிற்கு  அழிவு  செய்யும்  அவ்வேந்தனை  யொழித்து  விடலாம் .                                                                                     274                                                                                          

     புரோகிதன் , பிரதிநிதி  முதலிய  தலைமையதிகாரிகளின் உடன்பாடு  பெற்று , அவ்வேந்தன்  வழித்தோன்றிய  நற்குணமிக்கா னொருவனை  அரசியலைக்  காத்தற்பொருட்டு  அவ்வேந்தன்  பதவியில்  வைத்து  முடிசூட்டல்  வேண்டும் .                                              275

     விடுபடையாளன், அரசன்பால்  நின்று  ஒர்  அம்பு  வீழ்தற்குரிய  சேய்மையிடத்து  வெளிப்புறத்தே  எப்பொழுதும்  நிற்றல்  வேண்டும் . வாள்  முதலிய  விடாப்படையுடையான் , பத்து  முழ  அளவுள்ள  தூரத்தில்  நிற்றல்  வேண்டும் . அரசன்  அன்பிற்குரியார்  அவன்  கட்டளையிட்ட  இடத்திலும் , அமைச்சரும் , எழுத்தாளரும்  ஐந்து  முழ  அளவுள்ள  தூரத்திலும்  எப்பொழுதும்  இருத்தல் வேண்டும் . அரசன்  படைத்தலைவரோடன்றித்  தானே  ஆயுதங்களைத்  தாங்கி  அரசவைக்கட்  புகுதலாகாது .                                                                  276-277

( முழம்  என்னும்  நீட்டலளவையை  முதல்  அத்தியாயம்  197-ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     புரோகிதன்  எல்லாரினும்  மிகச்  சிறந்தவனாவான் . படைத்தலைவன்  அவனுக்கு  அடுத்துச்  சிறந்தவனாக  எண்ணப்படுவான் . நண்பரும்  உறவினரும்  தம்முள்  ஒப்பாவார் . அமைச்சர்  தலையாயராக  நினைக்கப்படுவர் .                                     278

     மற்றை  அரசியல்  வினைசெய்யும்  அதிகாரிகள்  இடையாயராவர் . தரிசகரும்  எழுத்தாளரும்  கடையாயராவர் . வேதனம்  பெற்றுப்  பணிபுரியும்  ஏவலாளர்  மிகவும்  கடையாயராக  அறியப்படுவர் . இழிதொழில்புரிவோர்  அவ்வேலாளரினும்  தாழ்ந்தவராக  அறியப்படுவர் . இழிதொழில்  புரிவோர்  அவ்வேவலாளரினும்  தாழ்ந்தவராக  எண்ணப்படுவர் .                                                                  279

     அரசன்  புரோகிதன்  முதலியோர்க்கு , முறையே  இருக்கையினின்றெழுதல் , எதிர்செல்லல் , சிறந்த  இருக்கையில்  இருக்கச்செய்தல் , நலமுசாவல் , புன்முறுவலோடு  பார்த்தலாகிய  இச்சிறப்புக்களைச்  செய்தல்  வேண்டும் . மற்றை  அரசியற்றொழில்  புரிவார்  முதலியோர்க்கு , அத்தாணி  மண்டபத்து  இருக்கையிலிருந்த வண்ணமே  மடிமையின்றி  அன்போடு  கூடிய  பார்வையைச்  செய்தல்  வேண்டும் .                                                                                                 280 -261

     அரசன்  புலவர்பாற்  கூதிர்  காலத்துத்  திங்கள்  போலவும் , பகைவர்பால்  முதிர்வேனிற்  காலத்துத்  கதிரவன்  போலவும்  குடிகள்பால்  இளவேனிற்  காலத்துக்  கதிரவன்  போலவும் , இங்ஙனம் முத்திறத்தார்  மாட்டும்  இம்மூன்று  தன்மைகளையுமுடையனாதல்  வேண்டும் .                                                                                                             282

( அரசன்  சரற்காலத்துச்  சந்திரனைப்போற்  புலவரிடத்து  மிகவும்  தட்பமுடையனாகவும், கடும்  வெயிற்காலத்துச்  சூரியனைப்  போற்  பகைவர்பால்  மிகவும்  வெப்பமுடையனாகவும் , இளவெயிற்காலத்துச்  சூரியனைப்போற்  குடிகள்  மாட்டு  ஒத்த  தட்ப  வெப்பங்களை யுடையனாகவும்  இருத்தல்  வேண்டுமென்பது   கருத்து . )

     அரசன் , அந்தணர் , அரசர்  வணிகர்  ஆகிய  இவ்விருபிறப்பாளரிடத்தன்றி  ஏனையோரிடத்து  எளிமையை  மேற்கொள்ளலாகாது . அங்ஙனம்  மேற்கொள்ளின் , அவ்விழிந்தோர், பாகர் யானையை  யடக்கி  வயப்படுத்தல்போல்  அவ்வரசனையும்  வயப்படுத்து  அவமதிப்பர் .                                                                           283

     அரசன், தன்  கீழ்ப்பட்ட  வினைசெய்வாரோடு  விளையாடுதலையும்  எள்ளி  நகையாடுதலையும்  மேற்கொள்ளலாகாது . அங்ஙனம்  விளையாடலும்  நகையாடலும்  அரசனுக்கு  எப்பொழுதும்  அவமதிப்பையும்  அச்சத்தையும்  உண்டாக்குவனவாம் .                    284

     உடன்  விளையாடுவோராகிய  அவ்வினை  செய்வாரனைவரும்  தம்  காரியத்திற்  பற்றுடையராய்  அதனையே  சிறந்ததாக  ஏற்றுக்கொள்ளும்படி  செய்து  தம்  காரியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளுதற்பொருட்டு  அரசனைத்  தனித்தனியே  சூழ்ந்து  கொள்வர் .

     எள்ளிநகையாடல் , மிக்க  பொறுமை , விளையாடலாகிய  இவற்றால்  அரசனுக்கு  உண்டாம்  தீங்குகளாவன : அங்ஙனம்  விளையாடும்  வினைசெய்வார்  வேந்தன்  சொல்லை  விவாதித்தொழித்தல் , பழித்துரைத்தல் , கடத்தல் , வேந்தர்குரிய  நுகர்ப்பொருள்களை  அவன்  உடன்பாடின்றி  நுகர்தல் , தம்  நிலைக்குத்  தக   ஒழுகாமை , அரசன்  சூழ்ச்சிச்  செய்திகளையும்  கூடாவொழுக்கத்தையும்  வெளிப்படுத்தல் , அரசனுக்குரிய  வேடம்  பூணல் , எப்பொழுதும்  அரசனை  வஞ்சித்தல் , அரசன்  பொருட்டு  மகளிரைத்  திட்டஞ்  செய்தல் , அரசன்  சினமுடையனாங்கால்  அவன்  முன்னின்று  நகைத்தல் , நாணின்றிப்பேசுதல் , சிறிது  பொழுதில்  அரசனைக்  கீழ்ப்படியச் செய்தல் , அவன்  ஆணையைக்  கடத்தல் , தகாத  செயல்களிலும்  அஞ்சாமை  ஆகிய  இவைகளாம் .        286 – 289

14 . எழுதப்படும்  பத்திரங்களின்  வகைகள்

     வினை செய்வான்  எப்பொழுதும்  அரசனது  எழுத்து  மூலமான  கட்டளையின்றி  ஒரு  காரியத்தையுஞ்  செய்தலாகாது . அரசனும்  காரியஞ்  சிறிதெனினும்  பெரிதெனினும்  எழுத்தான்  அன்றிக்  கட்டளையிடலாகாது.                                                                                       290

     எல்லா  மனிதர்க்கும்  மயக்கம்  இயற்கையாதலின் , எழுதப்படும்  பத்திரமே  சிறந்த  பிரமாணமாகும் . அப்பத்திரத்தாலன்றிக்  கட்டளையிடும்  அரசனும் , அஃதின்றி  அரசியற்றொழில்  புரியும்  வினை  செய்வானுமாகிய  இவ்விருவரும்  எப்பொழுதும்  கள்வராவர். அரசனது  அடையாளமிடப்பட்ட  பத்திரமே  அரசனாகும் , அரசன்  அரசனல்லன் .                                                                                               291 -292

( எழுத்தினாலேயே  அரசியற்காரியம்  அனைத்தும்  செய்யப்படுதலின்  இவ்வாறு  கூறப்பட்டது .)

அரசியன்  முத்திரையிட்டு  அரசனால்   எழுதப்படும்   பத்திரமே  மிகச்சிறந்த  தலையாயதாகும் . அம்முத்திரையின்றி  அவனால்  எழுதப்படுவது  தலையாயதாகும் . அமைச்சர்  முதலியோரால்  எழுதப்படுவது  இடையாயதாகும் . நகரத்து  மக்களால் எழுதப்படுவது  கடையாயதாகும் . இவ்வெல்லாம்  காரிய  நிறைவேற்றத்திற்கு  உரிய  துணைகளாம் .                                                                                                     293

     அரசனால்  நியமனஞ்  செய்யப்பட்டுத்  தத்தமக்குரியவாகிய  அவ்வத்  தொழில்களை  மேற்கொண்டிருக்கும்  அமைச்சரோடு  கூடிய  இளவரசன்  முதலாயினர் , தாம்  புரிந்த  செயன்  முறைகள்   வரையப்பட்ட  நாட்குறிப்புகளையும்  , திங்கட்  குறிப்புகளையும்  ஆண்டுக்குறிப்புகளையும் , பலவாண்டுக்  குறிப்புகளையும்  முறையே  அரசனுக்கு  நன்கு  அறிவித்தல்  வேண்டும் .                                 294 – 295

     காலம்  கடப்பின்  மக்களுக்கு  மறதியும்  மயக்கமும்  உண்டாகுமாதலின் , வினை  செய்வார் , அரசன்  முதலியோர்  அடையாளமிட்டருளிய  பத்திரங்களைப்  பற்றிய  ஞாபகக்  குறிப்பைப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                 296

     முற்காலத்தில்  பிரமன்  , செய்த  காரியங்களை நினைவு  கூர்தற்பொருட்டு  முயன்று  சொற்களுக்குரிய  எழுத்து  ஒலிகளால்  நன்கு  அடையாளஞ் செய்யப்பட்ட  பத்திரத்தை  அமைத்து  வைத்தனன் .                                                                                                       297

     செயன்முறைப்  பத்திரம்  எனவும்  வரவு  செலவுப்  பத்திரம்  எனவும் , பத்திரம்  இருவகைப்படும்  . வழக்க  ஒழுக்கங்களின்  வேறுபாட்டால்  அவ்விரண்டும்  இன்னும்  பலவகைப்படுவனவாம் .                                298

     உண்மையாகக்  கூறப்பட்ட  விவாத  விடயத்தையும் , பிரதிவாதியின்  எதிர்வாதமாகிய  உத்தரத்தையும் ,  ஆராய்ந்து  துணிந்த  தீர்மானத்தையுமுடையது  வெற்றிப்பத்திரம் (சய  பத்திரம்)  என்று  கூறப்படும் .                                                                                              299

( இது  நீதிபதியால்  வாதி  பிரதிவாதிகளின்  வழக்குகளை  யாராய்ந்து  முடிவு  செய்யப்படும்  விடயத்தைக்  குறிக்கும்  பத்திரமாகும் . )

     சாமந்தர்க்கும் , நாடுகாவலன்  முதலிய  அரசியல்  வினை  செய்வார்க்கும்  அன்னார்  செய்ய  வேண்டிய  காரியங்களைப்  பற்றிக்  கட்டளையிடும்  பத்திரம்  ஆஞ்ஞா  பத்திரம்  என்று  கூறப்படும் .        300

     வேள்வி  செய்வோர், புரோகிதர் , ஆசிரியர் , மற்றைப்  பெரியோராகிய  இவர்கள்பால்  வணக்கத்தோடு  தெரிவித்துக்கொள்ளுங்  காரியம்  வரையப்படும்  பத்திரம்  பிரஞ்ஞாபன  பத்திரம்  என்று  கூறப்படும் .                                               301

( பிரஞ்ஞாபனம் – வணக்கத்தோடு  அறிவித்துக்கொள்ளல் )

     “நீவிர்  எல்லீரும்  எனது  ஆணைவழி  நின்று  உறுதியாகச்  செயற்பாலவற்றைக்  கேண்மின்” என்றிவ்வாறு  கூறி  அரசன்  தன்  கையெழுத்தோடு  காலத்தையுங்  குறிப்பிட்டு  எழுதி  வெளிப்படுத்தும்  பத்திரம்  சாசன  பத்திரம்  என்று  கூறப்படும் .                                        302

( சாசனம் – கட்டளை .)

     அரசன்  ஒருவன்  செய்த  பணியானதால்  வீரச்  செயன்  முதலிய  வற்றானாதல்  மகிழ்ச்சியுடையனாய் , அவனுக்கு  அவற்றின்  அறிகுறியாக  வழங்கும்  நில  முதலியவற்றைக்  குறிப்பிடும்  பத்திரம்  பிரசாத  பத்திரமாகும் .                                                                                     303

     ஒருவனுக்கு  “நீ  இப்பொருளை  அனுபவித்துக்  கொள்” என்று  அப்பொருளைப்பற்றி  எழுதிக்கொடுக்கப்படும்  பத்திரம்  போகபத்திர மாகும் . இவனுக்கு  இவ்வளவு  இறைப்பொருள்  என்று  குறிப்பிட்டு  எழுதிக்  கொடுக்கப்படும்  பத்திரம்  கரதபத்திரமாகும் . கையுறையாகக்  கொடுக்கப்படும்  பொருளைப்  பற்றியது  உபாயன  பத்திரமாகும் . இப்பொருள்  ஒருவன்  அன்றி  இருவர்  மூவர்  மக்களால்  அனுபவிக்கற்பாலது  என்று  அளவிட்டு  எழுதிக்கொடுக்கப்படும்  பத்திரம்  புருடாவதிக  பத்திரமாகும் . காலத்தைக்  குறிப்பிட்டு  எழுதிக்  கொடுக்கும்  பத்திரம்  காலாவதிக  பத்திரமாகும் .                                  304

( கரதம் – அரசிறை  கொடுத்தல் . புருடாவதிகம் – புருடரின்  அளவை  அறுதியிடுவது . காலாவதிகம் – காலத்தின்  அளவை  அறுதியிடுவது . )

     உடன்பிறந்தார்  முதலியோர்  மன ஒற்றுமையோடு  தம்  குடும் பத்துப்  பொருளைக்  கூறிட்டுக்  கொண்டு  அது  பற்றித்  தம்முள்  எழுதிக்  கொள்ளப்படுவது  பாக  பத்திரமாகும் .                                      305

     இல்லம்  நில  முதலியவற்றை  இடையூறின்றியும்  பொய்யுரையின்றியும்  வெளிப்படையாகவும் , ஒருவனுக்கு  நன்கொடையாக  உதவி  எழுதிக்  கொடுக்கப்படுவது  தான  பத்திரமாகும் .                                                                                                      306

        இல்லம்  நில  முதலியவற்றை  அவற்றிற்குத்  தக்க அளவுள்ள  விலைப்பொருள்  பெற்றுக்கொண்டு  விற்று  எழுதிக்கொடுக்கப் படுவது  கிரய  பத்திரமாகும்.                                                                          307                                                                                             

     இயங்கியற்  பொருள்  நிலையியற்  பொருள்களை  ஈடாக  வைத்துப் பாதுகாத்து  அனுபவித்தலாகிய  செயலைக்  குறிப்பிட்டு  எழுதிக்  கொடுக்கப்படுவது  சாதி  பத்திரமாகும் .                                                   308

(சாதி  பத்திரம் – இஃது  ஒற்றிப்  பத்திரமாகும் . )     

     சிற்றூர்களும் , பெரிய  நாடும்  ஒருங்கு  கூடித்  தம்முள்  ஒற்றுமை  குறித்தெழுதிக்  கொள்ளும்  பத்திரம்  சத்திய  லேக்கியம்  என்று  கூறப்படும் . அரசர்கள்  தம்முட்  பகைமையின்றி  அரசியலறங்களைப்  பேணுதற்பொருட்டு  எழுதிக்கொள்ளும்  பத்திரம்  சம்விற்பத்திரமாகும்.                                                                                        309

     வட்டி  கொடுப்பதாகப்  பொருள்  பெற்றுக்கொண்டு  நல்ல  சான்றுகளோடு  எழுதிக்கொடுக்கப்படுவது  கடன்  பத்திரமென்று  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                 310

     ஒருவனைப்பற்றிய  பழி , ஆதாரமின்மையால்  விலக்கப்பட்டுழிச்  சான்றுகளோடு  எழுதிக்  கொடுக்கப்படுவதும் , கழுவாய்  செய்யப்படுங்கால்  சான்றுகளோடு  எழுதிக் கொடுக்கப்படுவதும்  சுத்தி  பத்திரம்  என்று  அறிவுடையோராற்  கூறப்படும் .                       311

( கழுவாய்- பிராயச்சித்தம் )         

     வாணிகம்  புரியும்  முயற்சியுடையார் , தத்தம்  பங்குப்  பொருள்களைத்  தொழிற்பொருட்டு  ஒன்று  கூட்டிச்  சேர்த்து , அது  குறித்து  எழுதிக்கொள்ளும்  பத்திரம்  சாமயிக  பத்திரமென்று  கூறப்படும் .                                                                                                           312

     நீதிமன்றத்தவர்  , அமைச்சர் , முதலிய  பிரகிருதிகள் , மற்றை  அரசியல்  அதிகாரிகள் , வழக்கறிஞர்  முதலிய  அவைக் களத்துள்ளோராகிய  இவர்களால்  எழுதப்படாமல் , வாதி  பிரதிவாதிகள்  தம்முள்  உடன்பட்டு  எழுதிக்கொள்வது  சம்மதி  பத்திரமென்று  அறியப்படும் .                                                                        313

     ஆண்டான்  அடிமை  என்னும்  இவ்விருவருடைய  தன்மைகளையும்  புலப்படுத்துதற்  பொருட்டு , “திரு”, “மங்கலம்”  என்றெழுதப்படுஞ்  சொற்களோடு  கூடித்  திகழ்வதும் , தடை  விடைகளையுடையதும் , ஐயமொழிப்பதும் , வெளிப்படையான  பொருளையுடையதும் , விளக்கமான  எழுத்துக்களையுஞ்  சொற்களையுமுடையதும் , மற்றை  யோரினின்று  வேறுபடுத்துச்  சிறப்பின்  உணருமாறு  ஆண்டான்  அடிமை  இவ்விருதிறத்தினரின்  தந்தை  முதலியோரின்  பெயர்களையுடையதும் , ஒருமை  இருமை  பன்மை  மொழிகளால்  தகுதிக்குத்  தக்கவாறு  பாராட்டப்படுவதும் , ஆண்டு  திங்கள்  பக்கம்  நாள்  பெயர்  சாதி  முதலியன  குறிக்கப்படுவதும் , காரியத்தைப்  பலப்படுத்துவதும் , இயைபுடையதும் , அடிமையின்  வணக்கத்தையும்  தலைவன்  வாழ்த்தினையுமுடையதும் , தலைவனையும்  பணியாளனையும்  அவன்  வினையையுங்  குறிப்பிட்டு  அத்தலைவனும்  பணியாளனும்  தம்முள்  எழுதிக்  கொள்வதுமாகிய  பத்திரம்  மங்கல  பத்திரமென்று  கூறப்படும் .                                  314-317

( மங்கலபத்திரம் – இதனை  ஷேம பத்திரம்  என்று  கூறுவர் )

     முற்கூறிய  குணங்கள்  வாய்ந்ததும் , ஒருவன்  தனக்குப்  பிறர்  செய்த  தீங்கை  விளக்கமாக  அறிவிப்பதுமாகிய  பத்திரம்  அபியோக  பத்திரமெனவும் , துன்பநிலை  யுணர்த்தும்  பத்திரமெனவுங்  கூறப்படும் .                                                                                                          318

( அபியோகபத்திரம் – இதனைப்  பாஷாபத்திரம்  என்று  கூறுவர் )

     இதுகாறும் , காரிய  நிகழ்ச்சிகளைப்  பற்றிய  பத்திர  வகைகளின்  இலக்கணங்கள்  சுருக்கிக்  கூறப்பட்டன . இனி , வரவு  செலவு  எச்சங்களை  அறிவிக்கும்  ஆயவிய  பத்திர  வகைகள்  சுருக்கிக்  கூறப்படும் .

15 . அரசனுக்குரிய  வரவு  செலவு  முதலியன

     அவ் வரவு  செலவுப் பத்திரம் , வியாப்பிய  வியாபக  வேறுபாட்டாலும் , தனித்தனி  சிறந்த  குறியீடுகளாலும் , உண்மையான  விலை  அளவு  முதலியனவற்றாலும்  பல்வேறு  வகைப்படும் .                                                                                          320

( இங்குக்  கூறிய  வியாப்பியம்  வரவு  செலவுகளின்  சிறு  பிரிவுகளையும்  குறைவையும் , வியாபகம்  பெரும்பிரிவுகளையும்  மிகுதியையும்  உணர்த்துவனவாம் . பின்  வரும்  சுலோகங்களிலுள்ள  வியாப்பிய  வியாபகங்களுக்கும்  இங்ஙனமே  ஏற்ற  பெற்றி பொருள்  கொள்க . வியாப்பிய  வியாபகங்கள்  இன்னவென்பதைப்  பின்வரும்  374-ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     யாண்டுதோறும்  திங்கடோறும்  நாடோறும்  தனக்குரியனவாக  வரும்  பொன் , பசு , நெல் , முதிரை முதலிய  பொருள்கள்  வரவு [ஆயம் ] என்னும்  பெயரினவாம் . பிறர்க்குரியனவாகச்  செய்யப்படும்  அப்பொன்  முதலியன  செலவு [வியம் ] என்னும்  பெயரினவாம் .   321

( முதிரை – துவரை , பயிறு  முதலியன .)

     வரவு , புதியதெனவும்  பழையதெனவும்  இருவகைப்படும்  அவற்றுட்  பழையது  சஞ்சிதம்  என்னும்  பெயரினைவுடையதாம் . செலவு  நுகரப்படுவதெனவும்  பொருண்மாற்றெனவும்  இருவகைப்படும் . 322

     சஞ்சிதப்  பொருள்  வரவு  பிறர்க்குரியதெனத்  துணியப்  பட்டதும் , இன்னார்க்குரியதெனத்  துணியப்பட்டதும் , தனக்குரியதெனத்  துணியப்பட்டதும்  என  மூன்று  வகைப்படும்.                                          323

     அவற்றுள் , பிறர்க்குரியதெனத்  துணியப்பட்ட  வரவுப் பொருள்  ஒளபநிதிகம்  யாசிதகம்  ஒளத்தமர்ணிகம்  என  மூவகைப்படும் .    324

( ஒளபநிதிகம் – உபநிதியாக  வைக்கப்பட்டது . ஒளத்தமர்ணிகம் – கடனாக  வாங்கியது . உத்தமர்ணன் –  கடன்  கொடுப்பவன் . )

     நல்லோரால்  நம்பி  அடைக்கலமாக  வைக்கப்பட்ட  பொருள்  ஒளபநிதிகமாகும் . வட்டி  முதலியன  வின்றிக்  கொடுப்பதாகப்  பிறர்பால்  வேண்டிப்  பெற்ற  பொருளும் , அங்ஙனம்  பெற்ற  பிறர் அணிகலன்  முதலியனவும்  யாசிதகமென்று   கூறப்படும் .                 325

     வட்டியோடு  தருவதாகப்  பேசிக்  கடனாக  வாங்கிய  பொருள்  ஒளத்தமர்ணிகமாகும் .  வழி  முதலியவற்றிற்  கண்டெடுக்கப்பட்ட  பொருள்  முதலியன  இன்னார்க்குரியவெனத்   துணியப்படாதனவாகும் .                                                                                326

     தனக்குரியதெனத்  துணியப்பட்ட  பொருள்  இயல்பினாயது  மிகுதி  என  இருவகைப்படும்.                                                                                       327

     தாயப்  பொருளினின்றும் , தன்றொழின்  முயற்சியினின்றும் , நாடோறும்  திங்கடோறும்  ஆண்டுதோறும்  உறுதியாகக்  கிடைத்து  வரும்  ஊதியம்  இயல்பினாயது  என்று  கூறப்படும் . தாயப்பொருளும்  தானத்தாற்  கிடைக்கும்  பொருளும்  இயல்பினாம்  பொருள்களுள்  மிகச்  சிறந்தனவாகும் .                                                                                     328

     கொண்டுவிற்றலின்  ஊதியமாகக்  கிடைக்கும்  பொருளும் , வட்டியாற்  கிடைக்கும்  பொருளும் , வேள்வி  செய்வித்தன்  முதலியவற்றாற்  பெறும்  பொருளும் , பரிசிலாக வந்த பொருளும், வேதனமாகப் பெறும் பொருளும், போரில்  வெல்லுதன்  முதலியவற்றால்  அடைந்த  பொருளும் , தனக்குரியவெனத்  துணியப்பட்ட  பொருள்  வகையில்  மிகுதியின்பாற்படுவனவாம் . இவையல்லாத  பிறவெல்லாம்  இயல்பியனாய  தன்பாற்     படுவனவாம் .                                                                                               329 -330

     தனக்குரியனவாய  எல்லாச்  சஞ்சிதப்  பொருளும்  முன்னை  ஆண்டின்  எஞ்சியதெனவும் , நிகழும்  ஆண்டின்  உண்டாயதெனவும்  இருவகைப்படும் .                                                                                               331

     மிகுதி  இயல்பினாயது  என்னும்  இருவகைத்தாய  அப்பொருள்  பார்த்திவம்  அதனின்  வேறு  எனப்  பின்னரும்  இருவகைப்படும் . நிலப்  பகுதிகளினின்று  உண்டாகும்  ஊதியம்  பார்த்திவமென்று  கூறப்படும் .                                                                                                          332

     அப்  பார்த்திவப்  பொருள்  இயற்கையாகப்  பெய்யு  மழைநீர்  முதலியவற்றாலும்  செயற்கையாக  அமைக்கப்படும்  ஏரி  குள  முதலியவற்றின்  நீராலும் , நாடு  நகரம்  சிற்றூர்களாலும் , தனித்தனி  நிலப்  பகுதிகளாலும்  பல்வேறு  வகைப்படும் . இன்னும்  அது , மிகுதி  நடுத்தரம்  சுருக்கமாகிய  பயங்களாலும் பல  பிரிவுகளை  யுடையதாகும் .                                                                                                     333

     அப்  பார்த்திவத்தின்  வேறான  வரவு  வாணிகம்  புரிவோர்பாற்  பெறும்  சுங்கங்களாலும் , தண்டங்களாலும் , சுரங்கங்களாலும் , அரசிறைகளாலும் , வாடகைகளாலும் , காணிக்கை  முதலியவற்றாலும்  எய்துவதாகுமென்று  அதனை  யறிந்த  எழுத்தாளர்கள்  கூறுவர் .                                                                                334

     எதனை  முன்னிட்டு  வரவு  நேர்ந்துள்ளதோ  செலவும்  அதனை  முன்னிட்டதாக  இருத்தல்  வேண்டும் . அச்செலவும்  வரவைப்  போல  வியாப்பிய  வியாபகங்களை  யுடையதாகுமென்று  கூறப்படும் .      335

( அரசனுக்கு  எவ்வெத்துறைகளினின்றும்  வருவாய்  உண்டாகுமோ , அவ்வத்துறைகளைப்  பற்றிய  செலவும்  இவ்வளவென்று  ஆங்காங்குக்  குறிப்பிட்டு  எழுதவேண்டுமென்பது  கருத்து . உதாரணம் – உழவு  நிலங்களுக்கு  நீர்  விடுத்தற்பொருட்டுக்  கொள்ளும்  இறைப்பொருள்  இவ்வளவெனவும் , அதுபற்றிய  செலவு  இவ்வளவெனவும்  எழுதி , எஞ்சிய  வரவு  செலவு  அறிதல்  வேண்டும்  இங்ஙனமே  வழி  நடை  [road]  முதலியவைகளைப்  பற்றிய  வரவு  செலவுகளையுமுணர்க .)

     அச்செலவு  தன்பான்  மீண்டு  வருவதெனவும் , தன்  உரிமை யொழி வதெனவும்  இருவகைப்படும் . அவற்றுள் , நிதியாக  வைக்கப்பட்ட  பொருளும் , உபநிதியாகச்  செய்யப்பட்ட  பொருளும் , பண்டமாற்றுப்  பொருளும் , வட்டியோடாயினும்  அஃதின்றியாயினுமுள்ள  ஆதமர்ணிகப்  பொருளும்  ஆகிய  இவை  மீண்டும்  வருவதன்  பாற்படுவனவாம் .                                                                                               336

( ஆதமர்ணிகம் – அதமர்ணனுக்குக்  கொடுக்கப்படுவது . அதமர்ணன் – கடன்  வாங்குவோன் . நிதி  உபநிதி  முதலியவற்றைப்  பின்வரும்  சுலோகங்களிற்  காண்க . )

     நிதியாவது , நிலத்திற்றோண்டிப்  புதைத்து  வைக்கப்பட்டதாகும் . உபநிதியாவது , மற்றொருவன்பால்  நம்பி  அடைக்கலமாக  வைக்கப்பட்டதாகும் . பண்டமாற்றுவது , ஒரு  பொருளைப்  பெறுதற்கு  விலையாகக்  கொடுக்கப்படும்  பிரிதொரு  பொருளாகும் .                  337

     ஆதமர்ணிகமாவது , வட்டியுடனாதல்  அஃதின்றியாதல்  பெற்றுக்  கொள்வதாகக்  கொடுக்கப்பட்ட  பொருளாகும் . வட்டியோடு  பெறுவதாகக்  கொடுக்கப்பட்ட  பொருள்  கடன்  என்று  கூறப்படும் . வட்டியின்றிப்  பெறுவதாகக்  கொடுக்கப்பட்ட  பொருள்  யாசிதகமாகும் .                                                                                                   338

     தன்னுரிமை  யொழிவதாகிய  செலவு  இம்மையது , மறுமையது  என  இருவகைப்படும் .                                                                                       339                                                                             

     அவற்றுள் , இம்மைச்செலவு  பிரதிதானம் , பரிசில் , வேதனம் , போக்கியமென  நான்கு  வகைப்படும் . மறுமைச்செலவு  அளவின்றிப்  பல்வேறு  வகைப்படும் .                                                                                    340

     இவையன்றி  மற்றைச்  செலவனைத்தும்  எப்பொழுதும்  மீண்டுவருவதன்  பாற்படுவனவாம் . பிரதிதானமாவது  ஒன்றற்கு  விலையாகக்  கொடுக்கப்படும்  பொருளாகும் .                                       341

( இங்குக்கூறிய  பிரதிதானத்திற்கும், 337-ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்ட  பண்டமாற்றிற்கும்  வேறுபாடுண்டு . பண்டமாற்று – பண்டங்களுள்  ஒன்றைக்  கொடுத்து  மற்றொன்றை  வாங்குதல், அது  கொடுக்கப்பட்ட  அளவு  வேறு  வடிவத்தோடு  தன்பான்  மீண்டுவருதலால்  மீண்டு  வருவதன்பாற்  பாடுவதாயிற்று . பிரதிதானம்  ஒரு பண்டத்தின்  விலையாகக்  கொடுக்கப்படும்  பொருளாதலாலும் , கொடுக்கப்படுவது  பண்டமின்றாதலாலும் , அது  மீண்டுவராமையாலும் , தன்னுரிமை  யொழிவதன்பாற்  படுவதாயிற்று . )

     பரிசிலாவது  பணிசெய்தல்  குறித்தும்  வீரமுதலியன  குறித்தும்  ஒருவனுக்கு  உவகையோடு  கொடுக்கப்படுவதாகும் . கூலியாகக்  கொடுக்கப்படுவது  வேதனமென்று  கூறப்படும் .                                    342

( முதலியனவென்றதால் , பல்வகைக்  கல்விகளையும்  ஓவியஞ்  சிற்ப  முதலிய  கலைகளையுங்  கொள்க .)

     நெல்  முதிரை  முதலிய  தானியங்கள் , ஆடை , இல்லம் , பூஞ்சோலை , பசு , யானை  தேர் , கல்வி , அரசியல் , பொருள்  ஆகிய  இவை  முதலியவற்றை  ஈட்டுதற்பொருட்டும்  காத்தற்பொருட்டும் , செலவு  செய்யப்படும்  பொருள்  உபபோக்கிய  மென்று  கூறப்படும் .

     அரசன்  தன்  நுகர்ச்சியின்  நிமித்தம்  பொன்  அரதனம்  வெள்ளி  பொற்காசு  என்னுமிவற்றிற்கும் , தேர் , குதிரை , பசு , யானை , ஒட்டகம் வெள்ளாடு , செம்மறியாடு  என்னுமிவற்றிற்கும் , இயம்  அம்பு  வாள்  முதலிய  படைக்  கலங்கள்  ஆடை  தானியம்  மற்றைப்  பண்டங்களா கிய  இவற்றிற்கும்  சூழ்ச்சி  சிற்பம்  நாட்டியம் மருத்துவம்  விலங்கு  பறவை  அடிசிலாகிய  இவற்றிற்கும் , தனித்தனியே  சாலைகள்  அமைத்தல்  வேண்டும் . அச்சாலைகளின்  பொருட்டுச்  செய்யப்படும்  செலவு  போக்கியமென்று  கூறப்படும் .                                            344-345

     மறுமைச்செலவு , செபம்  ஓமம்,  அருச்சனை,  தானம்  என  நான்கு  வகைப்படும் .                                                                                                345 இ

     விசேட  வரவின்  நிமித்தம்  செய்யப்படுஞ்  செலவு  புனர்யாதம்  நிவிர்த்தம்  எனவும் , விசேடச்  செலவினாலுண்டாகும்  வரவு  ஆர்வத்தகம்  நிவர்த்தி எனவும் தனித்தனி இரண்டு வகைப்படும் . 346

     எழுத்தாளன்  ஆவர்த்தகம்  ஒழிந்த  வரவு  செலவுகளை  எழுதி  வைத்தல்  வேண்டும் .                                                                                      347

     நம்பிக்கையுள்ள  எழுத்தாளன் , விற்றல் , கடன்  கொடுத்தன்   முதலிய  பிற  எல்லா  நிகழ்ச்சிகளிலும்  தானே   எழுதிக்  கொண்டு  பொருளைக்  கொடுத்தலும் , பொருளை  பெற்றுக்கொண்டு  எழுதிக்  கோடலும்  செய்தல்  வேண்டும் .                                                                   348

     இவ்வாறு  வரவு  செலவுகளை  எழுதி  வைத்தலால்  அவை  கூடுதல்  குறைதலில்லாதனவாகும் .                                                                              349

     இங்குக்  கூறியனவல்லாத  மற்றை  வரவு  செலவுகள்  தனித்தனிக்  காரணங்களாலும் , காட்சி  முதலிய  அளவைகளாலும் , இயைபுகளாலும் , காரிய  உறுப்புக்களாலும் , வியாப்பிய  வியாபகங்களாலும்  நீட்டல்  எண்ணல்  எடுத்தல்  முகத்தலாகிய  அளவைகளாலும்  பல்வேறு  வகைப்படுவனவாம்.                                  350

     அளவை  முதலியன  அறிந்தோர்க்கு  வழங்குதற்பொருட்டுச்  சிலவிடத்து  எண்ணலளவையும் , சிலவிடத்து  நீட்டலளவையும்,  சிலவிடத்து எடுத்தலளவையும் , சிலவிடத்து  முகத்தலளவையும்  சிலவிடத்து  எண்ணன்  முதலிய  எல்லா  அளவைகளும்  உடன்  பாடாவனவாம் .                                                                                                  351

     அங்குலம்  முழம்  முதலிய  அளவை  நீட்டலளவையாகும் . துலையளவை  எடுத்தலளவையாகும் . படி  முதலிய  பாத்திரங்களின்  அளவை  முகத்தலளவையாகும் . ஒன்று  இரண்டு  முதலிய  எண்கள்  எண்ணலளவையாகும் . இவ்வளவை  எவ்விடத்து  எவ்வாறு  வழங்கப்படுமோ , அவ்விடத்து  அவ்வாறு  வழங்கும்  வண்ணம்  அரசன்  செய்தல்  வேண்டும் .                                                                                 352 – 353

( துலை – தராசு .)

     உலகத்தில்  வழங்குதற்பொருட்டு  அரசியன்  முத்திரையிடப்பட்ட  பொன்  வெள்ளி  செம்பு  முதலிய  காசுகள்  மக்களால்  வழங்கற்பாலனவாம் . பலகறைமுதல்  இரத்தினம்  இறுதியாக  வுள்ளன வெல்லாம்  திரவியம்  என்று  கூறப்படும் . பசு , தானியம் , ஆடை  முதல்  புல்  இறுதியாக  வுள்ளனவெல்லாம்  தனம்  என்னும்  பெயரினவாம் .                                                                                                     354

( பலகறை – சோகி . திரவியத்தைப்  பொருளெனவும் , தனத்தைச்  செல்வமெனவுங்  கூறுதல்  பொருந்தும் . )

     வழங்குதற்பொருட்டுத்  துணிவு  செய்யப்பட்ட  பொன்  முதலியன  விலைத்  தன்மையை  யெய்தும் .                                                                   355

( பொன்  முதலியன , ஈண்டு  அரசியன்  முத்திரையிடப்பட்ட  காசுகளைக்  குறிப்பனவாம் . அவை  ஒரு  பண்டத்தை  விலைக்குக்  கொள்ளுங்கால்  கொடுக்கப்படுமாதலின்  விலைத்தன்மையை  யெய்தும்  என்றார் . )

     இந்நிலத்திற்  காரண  முதலியவற்றின்  கூட்டுறவால்  பொருள்கள்  உண்டாகின்றன . ஒரு  பொருளை  ஆக்குதற்கு  நேருஞ்  செலவே  அப்பொருளின்  விலையாகும் .                                                                      356

( ஒரு   பண்டத்தை  உண்டாக்கல் , கொணர்தல் , பாதுகாத்தன்  முதலியவற்றால்  ஏற்படும்  பொருட்செலவே  அதன்  விலையாகு மென்பதாம் . )

     பொருள்களின்  விலை , அவற்றின்  எய்தற்கெளிமை  யருமைகளாலும்  குணமின்மையாலும் , அஃதுடைமையானும்  வேண்டியாங்குக்  குறைவு  மிகுதிகளை  யுடையதாகும் .                      357

     அரசன்  இரத்தினங்களுக்கும் , பொன்  வெள்ளி  முதலியவற்றிற்கும்  யாண்டும்  விலையைக்  குறைவாக  அமைத்தலாகாது . இவ்விரத்தினம்  பொன்  முதலியவற்றிற்கு  விலைக்குறைவு  வேந்தன்  பிழையாலுண் டாவதாகும் .                                                                                                         358

   16 . அரசன்  முதலியோர்  கையெழுத்திடு  முறையும்  கணித   பத்திரம்  எழுதும்  முறையும்

     வியாப்பிய  வியாபகமான  விடயங்களைப்  பற்றி  யெழுதுங் கால், எழுதப்படும்  நீண்ட  பத்திரத்தை  நான்கு  கூறிட்டு , அவற்றுள்  முறையே  முக்காற்கூறு , அரைக்கூறு , காற்கூறுகள்  நிரம்பவும் , நடுவிடத்தைப்  பொருந்திக்  குறுக்காகவும்  இருக்கும்  வண்ணம்  சொற்களைப்  பத்திபட  எழுதல்  வேண்டும் .                                            359

( இது  முதல்  361-  வரையுள்ள  சுலோகங்களிற்  பண்டைக்  காலத்துக்  கணக்குப்  பத்திரம்  எழுதுமுறைகள்  கூறப்படுகின்றன . ஈண்டுப்  பத்திரமென்றது  ஓலையை . முக்காற்கூறு  என்றது  அவ்வோலையின்  நீளத்தை  நான்கு  கூறிட்டு  இடப்புறத்தாதல்  வலப்புறத்தாதல்  காற்கூறொழித்து  எஞ்சியதை . அரைக்கூறு  என்றது  இடப்புறத்தும்  வலப்புறத்தும்  காற்  காற்  கூறொழித்து  எஞ்சிய  நடுப்பாகத்தை . காற்கூறென்றது  அங்ஙனமே  இருபுறத்தும்  காலே  அரைக்கால்  காலே  அரைக்காற்  கூறொழித்து  எஞ்சிய  நடுப்பாகத்தை . நடுவிடத்தைப்  பொருந்தி  என்பது , அவ்வோலையின்  மேலுங்கீழுஞ்  சிறிதிடம்  விட்டு எழுதவேண்டுமென்பதையும் ,  குறுக்காக  வென்பது , வேறு  சில  மொழியாளர்  போல்  பத்திரத்தின்  கீழ்த்தொடங்கி  மேலாக  வாதல் மேற்றொடங்கி  நீண்ட  வயமாக  எழுதவேண்டுமென்பதையும்  புலப்படுத்துவனவாம் .)

     அம்மூவகைச்  சொன்னிரைகளுள் , இடப்புறத்தில்  நடுவிடம்  பொருந்த  முக்காற்பங்கு  நிரம்புமாறு  எழுதப்படுஞ்  சொற்பத்தி  சிறந்ததாகும் . வலப்புறத்தின்  முக்காற்பங்கு  நிரம்புமாறு  எழுதப்படுஞ் சொற்பத்தி  மேலதனை  நோக்கச்  சிறிது  தாழ்ந்ததாகும். அரைக்கூறு நிரம்ப எழுதப்படுவது அதனிற் சிறிது தாழ்ந்ததாகும்.  காற்கூறு  நிரம்ப  எழுதப்படுவது  அதனிற்  சிறிது  குறைந்ததாக  மதிக்கப்படும் .                                                                                                360

( ஈண்டு  நடுவிடம்  பொருந்த  என்பதற்கு  மேலுரைத்  தாங்குப்  பொருள்  கொள்க .)

     அழகிய  இடை  வெளிகளமைய  எழுதப்படும்  ஒத்த  சொற்களிலுள்ள  எழுத்துகள் , வடிவத்தால்  வேறுபடாதனவாகவும் ஒத்த  அளவினவாகவும்  இருத்தல்  வேண்டும் . அப்பத்திரத்தின்  தொடக்கத்திலும்  இறுதியிலுங்  குறிக்கப்படுங்  காரியங்கள்  எப்பொழுதும்  ஒத்தனவாக  விருத்தல்  வேண்டும் .                               361

( காரியங்கள்  ஒத்தனவாக  இருத்தல் – ஒரு  விடயத்தைப்பற்றி  யெழுதப்படும்  பத்திரத்திற்  பிறவிடயங்கள் கலவாவண்ணஞ்  செய்தல் )

     அரசன்  தன்பால்  வரும்  பத்திரத்தைப்  பார்த்து  ஆராய்ந்து , அதன்கண்  எழுதப்பட்ட  பொருட்கேற்ப  விரும்பிய  வண்ணம்  தன்  கையெழுத்தடையாளத்தைச்  செய்தல்  வேண்டும் .                             362

( அரசன்  விருப்பின்  வண்ணம்  பத்திரத்தின்  தகுதிகேற்பச்  சுருக்கமாகவும்  விளக்கமாகவுங்  கையெழுத்திடலாமென்பது  கருத்து .)

     மந்திரி , நீதிபதி , பண்டிதன் , தூதனாகிய  இவர்கள்  அரசன்  காண்டற்பொருட்டு , “எம்  அதிகாரத்திற்கு  முரணாததாகும்  இப்பத்திரம் “  என்று  அதன்கண் முதலில்  எழுதல்  வேண்டும் .          363

     அமைச்சன் , “இது  நன்றாக  எழுதப்பட்டுள்ளது .”  என்று  முதலில்  எழுதல்  வேண்டும் . அதன்பின்  சுமந்திரன் , “இது  நன்றாக  ஆராய்ந்து  பார்க்கப்பட்டது “ என்று  எழுதல்  வேண்டும் .                                           364

     பிரதானன் ,  “இஃது  உண்மைப்  பொருளுடையதாகும்” என்று  தானே  எழுதல்  வேண்டும் . அதன்பின்  பிரதிநிதி ,  “இஃது  அரசனால்  ஏற்றுக்கொள்ளத்  தகுதியுடையதாகும் “ என்று  எழுதல்  வேண்டும் .  365

     இளவரசன், “இஃது  ஏற்றுக்  கொள்ளற்பாலதாகும் “  என்று  எழுதல்  வேண்டும் . புரோகிதன் ,  “இப்பத்திரம்  எனக்குடன்பாடாகும் “என்று  எழுதல்  வேண்டும் .                                                                                             366

     இங்ஙனம்  மந்திரி  முதலியோர்  எழுதிப்  பத்திரத்தின்  இறுதியில்  தந்தமுத்திரைகளால்  அடையாளமிடல்  வேண்டும் . அதன்பின்  அரசன்  “இஃது  ஏற்றுக்கொள்ளப்பட்டது “என்று  எழுதித்  தன்  பெயரடையாள  முத்திரையையிடல்  வேண்டும் .                                                                     367

     இளவரசன்  முதலியோர் , தமக்குப்  பிறகாரியங்களில்  மனம்  பற்றி  நிற்பது  குறித்துத்  தம்மால்  அப்பத்திரம்  நன்கு  படித்துப்பார்க்க கூடவில்லையாயின் , அப்பொழுது  அவர்கள்  “இன்னானால்  நன்கு  ஆராய்ந்து  பார்க்கப்பட்டது”  என்று  எழுதல்  வேண்டும் .                    368

     மந்திரி  முதலிய  எல்லோரும்  தத்த  முத்திரைகளோடு  எழுதிய  பின்னர் , அரசன்  அப்பத்திரத்தை  நன்கு  படித்துப்பார்ப்பதற்கு  அவகாசமில்லாதிருப்பின்  , மந்திரி  முதலியோரிடத்துள்ள  நம்பிக்கையால் , தாழ்த்தலின்றிப்  “பார்க்கப்பட்டது” என்று  எழுதல்   வேண்டும் .                                                                                                             369

     முதற்கண்  வரவை  நன்றாக  எழுதிப்  பின்னர்  நேர்ந்த  வண்ணஞ்  செலவையும்  எழுதல்  வேண்டும் . பத்திரத்தின்  இடப்பக்கத்தில்  வரவையும்  வலப்பக்கத்திற்  செலவையும்  வரைதல்   வேண்டும் .    370

( இது முதல்  383 –ஆம்  சுலோகம்  வரை  செலவுக்  கணக்குகளைப்  பத்திரங்களில்  எழுதும்  முறையைப் பற்றிக்  கூறுகின்றார் . இம்முறைகளுட்  சில  இக்காலத்திற்கு  ஒத்தனவாகவும்  சில  ஒவ்வாதனவாகவும்  உள்ளனவாதலின் , ஒவ்வாதனவாக  இங்குக்  கூறப்பட்ட  பண்டைக்  காலத்து  முறைகள்  சில  செவ்வித்திற்  புலப்பட்டில. ) 

     எப்பத்திரத்தில்  எழுதப்படும்  இரண்டு  விடயங்கள்  வியாப்பிய  வியாபகங்களாகவாதல்  ஆதார  ஆதேயங்களாகவாதலுள்ளனவோ , அப்பத்திரத்தில்  அவற்றை  முறையே  இடப்பக்கத்து  மேலிடத்திற்  குறிப்பிடல்  வேண்டும் . அவ்  வெண்  காலநியமத்தைப்  பற்றியதாகும் .

     அப்பத்திரத்தில்  வியாபகப்  பொருளை  இடப்பக்கத்துக்  கீழ்க்  கீழ்  முறையே  எழுதல்  வேண்டும் . வியாப்பியப்பொருள்களின்  விலை  அளவு  முதலியவற்றை அவ்வியாப்பியத்திற்குரிய   பத்தியில்  வரைதல்  வேண்டும் .                                                                                                          372

( 371-372  கீழ்க் கீழ்  முறையே  எழுதல் :  370-ஆம்  சுலோகத்தில்  வரவு  இடப்புறத்திற்  குறிப்பிடவேண்டுமென்று  கூறியபடி , இயங்கும்  வியாபக  வியாப்பியங்களையும்  ஆதார  ஆதேயங்களையும்  இடப்புறத்தில்  வரைதல்  வேண்டுமென்று  குறிப்பிடுவதால்  இச்சுலோகங்களிரண்டிலுமுள்ள  வியாபக  வியாப்பியங்களும்  ஆதார  ஆதேயங்களும்  வரவைப்  பற்றினவாகத்  தோன்றுகின்றன . )

     எப்பத்திரத்தில்  வியாப்பிய  வியாபகங்களான  பொருள்கள்  மிகுதியான  எண்களை  யுடையனவாக வுள்ளனவோ , ஆண்டு  மேலிடத்துள்ள  அவற்றின்  எண்களைக்  கீழ்ப்  பத்தியில்  அமைத்தல்  வேண்டும் .                                                                                                        373

     மிகுதியைப்   பற்றி  நிற்பது  வியாபகமாகும் . குறைவைப்  பற்றி  நிற்பது  வியாப்பியமாகும் . உறுப்புக்கள்  வியாப்பியமெனவும்  உறுப்பிகள்  வியாபகமெனவுங்  கூறப்படுவனவாம் .                          374

( இதன் கண்  வியாபக  வியாப்பியங்கள்  இன்னவென்று  கூறப்பட்டன .)

     ஒத்த  சாதிப்  பொருள்களைக்  குறிப்பிடுங்கால் , ஓரிடத்திலேயே  தொகுத்தெழுதல்  வேண்டும் . மற்றைப்  பல்வேறு  சாதிப்பொருள் களைக்  குறிப்பிடுங்கால் , நேர்ந்தவாறே  முதலிறுதிகளிலும்  தொகுத்தும்  எழுதலாம் .                                                                               375

      யாண்டுப்  பொருள்களும்  நிலங்களும்  மிகுதியாகவுள்ளனவோ  ஆண்டு  வரவு  செலவுகளை  எப்பொழுதுங்  காலந்தாழ்த்தலின்றி  எழுதல்  வேண்டும் .                                                                                          376

     நிலங்களைப்  பற்றிய  குறிப்பு  விளக்கம்  ஒன்றாகும் . அதனின்  வேறாகப்  பொருட்குழுவைப்  பற்றிய  குறிப்பு  விளக்கம்  மற்றொன்றாகும் . முற்கூறியவற்றுள்  மிகப்  பெரியதாகவுள்ள  வரவு  செலவுப்  பத்திரம்  விசிட்டம்  என்னும்  பெயரினை  யுடையதாகும் . 377

( நிலத்தைப்  பற்றிய  குறிப்பு  விளக்கம் , பல்வேறு  நிலப்பகுதிகளை  எல்லை  காட்டி  விளக்குவதாம் . பொருட்குழுவைப் பற்றிய  குறிப்பு  விளக்கம் , மணி பொன்  நெல் முதலிய  பொருள்களைப்  பற்றியதாகும். )

     வரவு  எவ்வளவு?  செலவு  எவ்வளவு ? எப்பொருளின்  எஞ்சியது எவ்வளவுள்ளது ? என்னும்  இவற்றைப்பற்றிய  தெளிவுணர்ச்சி விசிட்டம்  எனப்  பெயரிய  பத்திரங்களா  லுண்டாவதாகும் .           378                       

     முதலில்  வரவு  செலவுகளை  நேர்ந்தவண்ணம்  வரைந்து , அதன்பின்  அவற்றின்  எண்களைக்  குறித்தல்  வேண்டும் . மிகுதியான  பொருளையும்  நிலத்தையும்  பற்றி  எழுதுங்கால் , அவற்றிற்குத்  தக்கவாறு  விளக்கக்  குறிப்புகளோடு  எழுதல்  வேண்டும் .                   379

     மற்றை  வரவு  செலவுகளைப்  பற்றிய அறிவு , முறையே  அவ்வவற்றைக்  குறிப்பிடும்  பத்திரங்களாலுண்டாவதாகும் . மிகப்  பெரிய  நிலத்தின்  வரவு  செலவைப்பற்றிய  விசேட  அறிவு, அந்  நிலப்பகுதியைப்  பற்றிய  ஆராய்ச்சியாலுண்டாகும்.                           380

     பொருளளவிற்கு  நில அளவு சுருங்கியும்  நில  அளவிற்குப் பொருளளவு  சுருங்கியும்  இருப்பதுண்டு . எழுதுங்கால்  மக்கள்  விருப்பின்  வண்ணம்  திதி  முதலியன  குறிக்கப்பட்டுப்  “பிறர்க்குரியதெனத்  துணியப்பட்டது”  முதலிய  வரவைப்  பற்றி  நிற்கும்  பத்திரங்களும் , அங்ஙனமே  திதி  முதலியன வரையப்பட்டு  “மீண்டு  வருவது”  முதலிய  பிறரைச்  சார்ந்து  நிற்கும்  செலவைப்  பற்றிய  பத்திரங்களும் பிறர்  கையெழுத்தை  யிறுதியிலுடையனவாய்  விசிட்ட  மென்னும்  பெயரினவாய் , முடிவில்  வியாபக  எண்களை  யுடையனவாம் .                                                                                          381-382

( சுருங்கிய  நிலப்  பகுதியில்  அதனளவின் மிகுதியாகப்  பொருளுண்டாதலும் , விரிந்த  நிலப்  பகுதியில்  அதனளவிற்  குறைவாகப்  பொருளுண்டாதலும்   இயல்பாமென்பது  கருத்து . திதி  முதலியன  குறிக்கப்படுதல்  பிறர்க்குரியதெனத்  துணியப்பட்டது  முதலிய  வரவுகளுக்கும் , மீண்டும்  வருவது  முதலிய  செலவுகளுக்கும்  உரிய  கொடுக்கல்  வாங்கற்  காலத்தை  உணர்த்துதற்கென  வுணர்க . பிறர்க்குரியதெனத்  துணியப்பட்டது  முதலிய  வரவை  324-ஆம்  சுலோகத்திலும் , மீண்டு  வருவது  முதலிய  செலவை  336-ஆம்  சுலோகத்திலும்  காண்க . பிறர் – பெற்றுக்கொள்வோரும்  மீண்டு  தருவோருமாவர் .)

     முதலிற்  பிரமாணபலத்தை  இச்சையினாற்  பெருக்கி , அதன்  பின்  அவ்வெண்ணைப்  பிரமாணத்தால்  வகுக்க  வேண்டும் . அங்ஙனம்  வகுக்கப்படுங்காற்  கிடைக்கும்  வகுப்புத்தான  எண்  மனிதர்க்கு  இச்சாபலமாகும் .                                                                                              383

( இது  திரைராசிக  விதியினால்  வரவு  செலவு  கணக்குகளை  யறியு முறையைக்  கூறுகின்றது . திரைராசிகமாவது – இச்சை , பிரமாணம் , பிரமாண  பலம்  என்னும்  மூன்றனையும்  கொண்டு  முடிவது . பத்துப்  பெயர்க்குக்  கூலி  பதினைந்து  வெண்பொற்காசுகளானால் , பதினெட்டுப்  பெயர்க்கு  எவ்வளவாம் ? என்புழிப்  பதினெட்டு  என்னும்  எண்  இச்சையாகும் .  பத்தென்னும்  எண்  பிரமாணமாகும்.  பதினைந்து  என்னும்  எண்  பிரமாண  பலமாகும் . பிரமாண  பலமாகிய  15-ஐ  இச்சையாகிய  18-ஆற்  பெருக்க  270  ஆகும்  . அதனைப்  பிரமாணமாகிய  10-ஆல்  வகுக்க  அவ்வகுப்புத்தான  எண்  27-ஆகும் . இவ்விருபத்தேழே  இச்சாபலமாகும் . ஆகவே  இச்சுலோகத்திற்  கூறியது  10-பெயர்க்கு  15-  என்றால்  18 – பெயர்க்கு  27-ஆகுமென்று  அறிதலேயாகும் . இங்ஙனமே  வரவினுங்  கணக்கிட்டுக்கொள்க .)

     இது காறும்  எல்லோர்க்கும்  நினைவுகூர்தற்கு  ஏதுவாக  எண்   முதலியன  வரையு  முறைகள்  சுருக்கிக்  கூறப்பட்டன .                    384

17 . அளவைகள்

     குன்றி , மாடம் , கருடம் , பதார்த்தம் , பிரத்தம்  ஆகிய  இவை  முறையே  ஒன்றினொன்று  பதின்மடங்கு  அளவு  மேம்பாடுடையனவாம் . பிரத்தம்  ஐந்து  கொண்டது  ஆடகமாகும் . 365

( குன்றி  பத்துக் கொண்டது  மாடம் ; மாடம்  பத்துக்கொண்டது  கருடம் ; கருடம்  பத்துக்  கொண்டது  பதார்த்தம் ; பதார்த்தம்  பத்துக்  கொண்டது பிரத்தமாகும் . பிரத்தமென்பது  இக்காலத்து  வழங்கும்  வெண்பொற்காசு [ரூபாய்] நூறு  கொண்ட  எடையென்று  தோன்றுகின்றது . அங்ஙனமாயின் , அது  முகத்தலளவையில் ஏறக்குறைய  ஒரு  படியாகும். )

     ஆடகம்  எட்டுக் கொண்டது  அருமணமெனவும் , அருமணம்  இருபது  கொண்டது  காரிகை  யெனவுங்  கூறப்படும் . நாடுகடோறும்  இவ்வளவை  வேறுபட்டனவாகும் .                                                                386

     ஐந்தங்குல  ஆழமும்  நான்கங்குல  அகலமும்  உள்ள  பாத்திரம்  முகத்தலளவையிற்  காற்பிரத்த  மாகுமென்று  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                                                 387

( காற்பிரத்தம் – காற்படி .)

     மேலிடத்துள்ள  எண்ணலளவைக்குறி , குறிப்பிட்ட  அளவேயாகும் . அதன்  கீழாக  இடப்புறத்து  வரையப்படும்  எண்குறி , முன்னதிற்  பத்து  மடங்கு  மிகுதியுடையதாகும் . இங்ஙனம்  பின்னரும்  இடப்படும்  எண்குறிகள் , முறையே  ஒன்றை  நோக்க  மற்றது  பதின்மடங்கு  மிகுதி யுடையதாகப்  பரார்த்தம்  இறுதியாகக்  கூறப்படுவனவாம் . 388

     காலத்திற்கு  எல்லையின்றாதலின் , பரார்த்தத்திற்கு  மேலும்  எண்ணலளவைக்  குறியிட்டாளக்  கூடவில்லை . பிரமதேவனுக்கு  வாழ்நாள்  இரண்டு  பரார்த்த  அளவாகுமென்று  அறிவுடையோர்  கூறுவோர் .                                                                                                           389

( பரார்த்தத்திற்கு  மேல்  எண்ணலளவைக்  குறியின்மையால்  இரண்டு பரார்த்தம்  என்று  கூறப்பட்டது .)

     ஒன்று , பத்து , நூறு , ஆயிரம் , பதினாயிரம் , இலக்கம் , [நியுதம்] பத்திலக்கம் , [பிரயுதம்]  கோடி , பத்துக்கோடி , [அர்ப்புதம்]  நூறு கோடி, [அப்ஜம்]  ஆயிரங்கோடி , [கர்வம்] பதினாயிரங்கோடி, [நிகர்வம்] இலக்கங்கோடி, [பதுமம்]  பத்திலக்கங்கோடி , [சங்கம்]  நூறிலக்கங்கோடி , [அப்தி]  மத்தியம் , அந்தம் , பரார்த்தம்  என்னுமிவை  எண்ணலளவைக்  குறியீடுகளாம் .                                    390

18 . கால   அளவைகள்

     காலத்தின்  அளவு  சாந்திரம் , செளரவம் , சாவனம் , என   மூன்று  வகைப்படும் . திங்கள்  வேதனங்கள்  கொடுக்குங்காற்  செளரமானத்தையும் , கடன்கோடல்  கடன்கொடுத்தன்  முதலியவற்றிற்  சாந்திரமானத்தையும் , நாட்பணி  செய்வோர்க்குக்  கூலிகொடுக்குங்காற்  சாவனமானத்தையும்  அவ்வக்கால  இறுதியில்  வைத்து  எப்பொழுதும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                391

( சாத்திரம் – பூருவ  பக்கத்துப்  பிரதமை  தொடங்கி  அமாவாசை  இறுதியாக  வுள்ள  காலம் . செளரம் – சூரியன்  ஓர்  இராசியிற்  புகுதல்  தொடங்கி  மற்றோர்  இராசியிற்  பிரவேசிக்கும்  வரையுள்ள  காலம் . சாவனம் – சூரியன்றோன்றி  மறையும்  வரையுள்ள  காலம் . )

19 . வேதன  விளக்கம்

     வேதனம்  காரியமானம் , காலமானம் , காரிய காலமானம்  என  மூவகைப்படும். இம்மூன்றனுட்  பேசிக்  கொள்ளப்பட்டதொன்றின்படி  அது  கொடுக்கற்பாலது .                                                                               392

     ஒருவன்  மற்றொருவனை  நோக்கி , “ நீ  இச்சுமையைச்  சுமந்து  கொண்டு  இன்ன  இடத்தில்  வைத்தல்  வேண்டும் ; அதற்காக  யான்  இவ்வளவு  கூலி  தருவல் “  என்றிவ்வாறு  பேசிக்  கொள்ளப்படுவது  காரியமானம்  என  அக்கூலியை  யறுதியிடுவோர்  கூறுவர் .           393

     ஆண்டுதோறுமாதல் , திங்கடோறுமாதல் , நாடோறுமாதல்  “இவ்வளவு  வேதனம்  நினக்கு  யான்  தருவேன்”  என்று  பேசிக்கொள்ளப்படுவது   காலமானமாகும் .                                          395

     கூலி  கொடாமையும் , அதனை  உரிய  காலத்துக்  கொடாது  தாழ்த்தலுஞ்  செய்தலாகாது . ஒருவன் , தன்னால் , அவசியம்  காக்கப்படுபவராகிய  தாய்  தந்தை  முதலிய  சுற்றத்தாரோடு  பிறரையும்  உதவிக்  காத்தற்குத்  தக்கவாறு  பெறும்  வேதனம்  தலையாயதாகும் . அவசியம்  காக்கப்படுபவராகிய  தாய்  தந்தை  முதலியோரை  ஓம்புதற்கும் , தனக்கு  வேண்டிய  உண்டி  உடுக்கைகளுக்கும்  போதிய  அளவு  பெறும்  வேதனம்  இடையாயதாகும் . தற்காப்பளவிற்  பெறும்  வேதனம்  கடையாயதாகும் .                                                                                       396-397

     அரசன் , தன்  பணியாளன்  எத்துணை  எத்துணைக்  குணமிக்கானோ  அத்துணை  அத்துணை  அவனுக்குத்  தன்  நலங்  குறித்து  வேதனம்  உயர்த்திக்  கொடுத்தல்  வேண்டும் .                        398

     பணியாளனொருவன் , அவன்  தாய்  தந்தை  முதலியோரைக்  காத்தல்  இன்றியமையாக்  கடனாக  விருப்பின் , அப்பணியாளனுக்கு  அதற்குத்தக்கவாறு  வேதனங்கொடுத்து  உதவல்  வேண்டும் .             399

     மிகச்சிறு  வேதனம்  பெறும்  பணியாளர்  தலைவன்  காரியத்தை  யொத்துப்  பிறர்க்கு  வினைபுரிதல் , அவன்பாற்  புரைவழி  கண்டு  செல்லவெண்ணுதல் , அவன்  பொருளைக் கவர்தல் , குடிகளைத்  துன்புறுத்தலாகிய  இவற்றை  மேற்கொள்வராதலின் , அன்னார்  அரசனாற்றானே  யாக்கிக்  கொள்ளப்பட்ட  பகைவராவர் .                  400

     இழிகுலத்தார்க்கு  உண்டியுடுக்கைகளுக்கு  வேண்டிய  அளவிற்  கூலி  கொடுக்க  வேண்டும் . அங்ஙனமின்றி , அவ்வளவின்  மிகுதியாகக்  கொடுத்தலாற்  புலாலுண்ணும்  அவ்விழிகுலத்தாரைக்  காக்குந்  தலைவன்  அன்னார்  பாவப்பயனை  எய்துபவனாவான் .   401

     அந்தணனாற்  கவரப்பட்ட  பொருள்  அப்பொருளுடையானுக்கு  மறுமை  நலம்  தருவதாகும் . இழிந்தோன்  பொருட்டுக்  கொடுக்கப்பட்ட  பொருள்  அப்பொருளுடையானை  நரகத்தில்  வீழ்த்துவதாகும் .                                                                                                 402

     வினைசெய்வார்  சீக்கிரன் , மத்தியன் , மந்தன்  என  மூவகைப்படுவர் . அவர்க்குக்  கொடுக்கப்படும்  வேதனமும்  முறையே  தலை , இடை , கடை என  மூவகையாகக்  கூறப்படும் .                          403

     இரவும்  பகலும்  பணிசெய்யும்   ஏவலாளர்க்கு , அவர்தம்  வீட்டுக்  காரியநிமித்தம்  பகலில்  ஒரு  யாமமும் , இரவில்  மூன்று  யாமங்களும்  ஒழிவு  கிடைக்கும்படி  நாடோறும்  விடல்  வேண்டும் . பகலின்  மாத்திரம்  ஏவற்றொழில்  செய்வோர்க்கு , வீட்டுக்காரிய  நிமித்தம்  அரையாமம்  அவகாசங்கொடுத்தல்  வேண்டும் .                                   404

     அரசன்  , மணமுதலிய  விழாக்காலங்களல்லாத  மற்றை  நாட்களில், முற்கூறிய  வினைசெய்வாரைக்  கொண்டு  காரியஞ்  செய்வித்தல்   வேண்டும் . விழாக்காலங்களுள்ளும் , தென்புலத்தார்  கடன்  இறுக்கும்  நாளினன்றி  மற்றைக்  காலங்களில்  இன்றியமையாது  செயற்பாலதாகிய  காரியத்தைச்  செய்வித்துக்  கொள்ளலாம் .        405

( அரசன்  தன்பால்  என்றும்  வினைசெய்வோரையே  விழாக் காலங்களிலும்  வினைசெய்யும்படியும்  ஏவலாகாதென்பதும் , விழாக்  காலங்களுக்கெனப்  புதிய  பணியாளரை  நியமிக்க  வேண்டுமென்பதும் , அவசியமாயின்  பிதிர்க்கடன்   அல்லாத  மற்றைக்  காரியங்களில்  பழைய  பணியாளரையும்  நியமிக்கலாமென்பதும் , பிதிர்க்கடன்  இறுக்குங்கால்  அங்ஙனஞ்  செய்யலாகாதென்பதுங்  கூறியவாறு . )

     வினை  செய்வானொருவன்  சில  திங்கள்  வரை  நோய்  கோட்பட்டிருப்பின்  அவனுக்கு  முக்காற்பங்கு  வேதனமும் , ஓர்  யாண்டுவரை  நோய்  கோட்பட்டிருப்பின்  மூன்று  திங்கள்  வேதனமுங்  கொடுத்தல்  வேண்டும் . ஐந்து  யாண்டு  தொழில்  செய்தோன்  நோய்  கோட்படின் , அவனுக்கு  அந்நோயின்  கால  அளவிற்குத்  தக்கவாறு  வேதனம்  குறைத்துங்  கூட்டியும்  கொடுக்கலாம் .                                  406

     ஒருவன்  நெடுங்காலம்  நோய்   கோட்பட்டிருப்பானாயின் , அவனுக்கு  ஆறு  திங்கள்  வேதனங்கொடுத்தல்  வேண்டும்.  அதற்கு  மேற்கொடுத்தலாகாது  . ஒரு  வாரம்  நோய் கோட்பட்டிருப்போனுக்குச்  சிறிதும்  வேதனம்  பிடித்தலாகாது .                                                              407

     ஒருவன்  ஓர்  யாண்டுவரை  நோய்  கோட்பட்டிருப்பானாயின் , அவனுக்குப்  பிரதிநிதியாக  அவன்பானின்றே  மற்றொருவனை  ஏற்றுக்  கொள்ளலாம் . அங்ஙனம்  நோய்கோட்பட்டிருக்கும்  வினைவலான் , குணங்களாற்  சிறந்துளானாயின் , அவனுக்கு  அரக்கூறு  வேதனம்  ஏற்படுத்தல்  வேண்டும் .                                          408

     அரசன்  வினைசெய்வார்க்கு  வேலை  கொள்ளாமல்  ஓர் யாண்டிற்  பதினைந்து  நாட்களுக்குரிய  வேதனங்   கொடுத்தல்  வேண்டும் .     409

     வினை  செய்வானோருவன்  நாற்பது  யாண்டுகள்  வரை  அரசனுக்குத்  தொழில்  செய்திருப்பானாயின் , அதன்பின்  அவனுக்கு  அவன்  வாழ்நாள்காறும்  அரசன்  [ வேலை  கொள்ளாமலே  அரைக்கூறு  வேதனம் ]  உதவிவரல்  வேண்டும் . அவன்   மகன்  தொழில்  செய்யும்  ஆற்றலில்லாதவனாக  விருப்பின்  வாழ்நாள் வரையும் , ஆற்றலுடையனாயிற்  பாலப்பருவம்  நீங்குங்காறும் , அவனுக்கு  அவன்  தந்தையின்  வேதனத்தின்  பாதியிற்  பாதியாகிய  காற்கூறு  வேதனம்  உதவல்  வேண்டும் . அவன்  மனைவி  நல்ல  கற்புடையளாயின்  அவட்கு  வாழ்நாள்வரையும் , அவன்   மகள்  கன்னிகையாயின்  அவட்குக்  கன்னிப்பருவம்  நீங்கும்  வரையும் , அக்காற்கூறு  வேதனம்  உதவல்  வேண்டும் . அரசன்  இங்ஙனம்  உதவல்  தன்நலம்  வளர்தற்  பொருட்டாம் .                                         410-411

     யாண்டுதோறும்  வினைசெய்வோர்க்கு  அவன்  வேதனத்தில்  எட்டில்  ஒரு  கூறு  பரிசிலாக  உதவல்  வேண்டும் . அவன்  மிகுதியான  காரியங்களை  விரைவிற்  செய்து  முடிப்பானாயின் , அக்காரிய  முடித்தற்குச்  செலவாகும்  பொருளில்  எட்டில்  ஒரு  கூறு  அவனுக்குப்  பரிசிலாக  உதவல்  வேண்டும் .                                                                  412

( எட்டிலொரு  கூறு  என்றது , ஓராண்டிற்குரிய  வேதனத்தில்  எட்டிலொரு  பாகத்தை )

     எவன்  தன்  தலைவன்  காரியத்தின்  பொருட்டு  உயிர்  நீங்கப்பெற்றானோ , அவன்  வேதனத்தை  அவன்  மகன்  பாலப்பருவம்  நீங்கும்வரை  முழுதும்  அடைதற்குரியனாவான் . பாலப்பருவங்  கடந்தபின்  அப் புதல்வன்  தகுதி  நோக்கி  வேதனங்கொடுத்தல்  வேண்டும் .                                                                                                          413

     வினை  செய்வானது  வேதனத்தில்  ஆறிலொரு  கூறாதல் , நான் கிலொரு  கூறாதல்  பிடித்துப்  பாதுகாத்தல்  வேண்டும் . இரண்டு  அல்லது  மூன்று  யாண்டுகளின்  பின்னர்  அத்தொகையின்  பாதியையாதல் , முழுதையுமாதல்  அவனுக்குக்  கொடுத்துவிடல்  வேண்டும் .                                                                                                             414

20 . அரசன்  வினைசெய்வாரை  இன்புறுத்து முறை

     அரசன்  கடுஞ்சொற்களாலும் , வேதனத்தைக்  குறைத்தலாலும் , கொடுந்தண்டத்தாலும் , மானத்திற்குக்  கேடிழைத்தலாலும், வினைசெய்வானை  எப்பொழுதும்  பகைவனாம்  வண்ணம்  பயிற்றுபவனாகின்றான் .                                                                                 415

     வேதனம்  குறையாது  கொடுத்தலால்  மகிழ்ச்சியும் , மானத்தாற்  சிறப்பும் , இன்சொற்களாற்  சாந்தமும்  எய்தற்பெற்ற  வினைவலார்   தம்  தலைவனை  விட்டொழியார் .                                                                 416

     கடையாயர்  பொருளையே விரும்புவர் . இடையாயர்  பொருளையும்  மானத்தையும்   விரும்புவர் . தலையாயர்  மானத்தையே  விரும்புவர் . மானமே  பெரியோர்க்குப்  பொருளாகும் .                                                 417

     அரசன்  தன்பால்  வினை  செய்வோரையும் , தன்கீழ்  வாழுங்  குடிகளையும்  அவரவர்  தகுதிக்கேற்பச்  சிலரை  ஏதாவது  சிறிது  கொடுத்தலாலும் , வேறு  சிலரை  அதனினுஞ்  சிறிது  மிகுதியாகக்  கொடுத்தலாலும் , மற்றுஞ்  சிலரை  மலர்ந்த  பார்வையாலும் , சிலரைப்  புன்முறுவலாலும் , இன்சொற்களாலும் , நிறைந்த  உண்டிகளாலும் ,  அழகிய  ஆடைகளாலும் , தாம்பூலம்  ஈதலாலும் , பொருள் கொடுத்தலாலும், சிலரை  நலம்  வினாவலாலும் , அதிகாரக்  கொடையினாலும் , யானை  குதிரை  முதலிய  ஊர்தி  கொடுத்தலாலும் , தக்க  அணிகலன்  முதலியன  ஈதலாலும் , குடை  கவரி  விளக்கு  முதலியன  கொடுத்தலாலும் , பிழை  பொறுத்தலாலும் , பெரியோரை  வணங்குதலாலும் , பெருமைப்படுத்தலாலும் , உடன்  செல்லுதலாலும் , பூசித்தலாலும் , நூலாராய்ச்சியறிவினாலும் , விருப்பமிக்க  முயற்சியாலும், அடக்கத்தாலும் , அன்பினாலும் , அருகிருத்தலாலும் , தன்  இருக்கையிற்  பாதி   ஈதலாலும் , தன்  இருக்கை  முழுதும்  ஈதலாலும் , புகழ்ந்துரைத்தலாலும் , செய்ந்நன்றி  யறிந்து  பாராட்டுதலாலும்  இன்புறுத்தல்  வேண்டும் .          418-422                               

( வணங்குதல்  முதலியனவாக  இங்குக்  கூறப்பட்டனவெல்லாம்  குரவர்  நட்டோர்  முதலிய  பெரியோர்களைக்  குறித்துச்  செய்யப்படுவனவாம்  ஈண்டுக்  கூறிய  குடை  கவரிகள்    அரசனுக்குரிய  சிறந்த  அடையாளங்களல்லாதன .)

     அரசன்  தன்  வினைசெய்வாருள்  இன்னார்  இன்னகாரியத்தில்  நியமிக்கப் பட்டிருக்கின்றனரென்று   அன்னாரைத்  தெரிந்து  கொள்ளுதற்பொருட்டு , அவர்  தகுதிகேற்ப  இரும்பு , செம்பு , பித்தளை, வெள்ளி , பொன் , இரத்தினமாகிய  இவற்றாற்  செய்யப்பட்ட  தன்  முத்திரையோடுங்  கூடிய  காரிய  அடையாளப்  பொருள்களால்  இலச்சினையிடல்  வேண்டும் .                                                                         423

     ( காரிய  அடையாளம் – அதிகாரச்செயலைக்குறிப்பது ,  இலச்சினை – அடையாளம் )

அரசன்  தன்வினை  செய்வாரைச்  சேய்மையினின்று  உணர்ந்து  கொள்ளுதற்  பொருட்டு  ஆடைகளாலும்  தலைச்சாத்துக்களாலும் , இயக்கங்களின்  வேறுபாட்டாலும் , ஊர்திகளின்  வேறுபாட்டாலும்  தனித்தனி  சிறப்படையாளமுடையோராகச்  செய்தல்  வேண்டும் . தனக்குரிய  குடை , கவரி  முதலிய  சிறந்த  அடையாளங்களை  எவர்க்குங்  கொடுத்தலாகாது ,                                                               424-425

( இயம் –  வாத்தியம் )

     புரோகிதன்  முதலாகக்  கூறப்பட்ட  பிரகிருதிகள்  பதின்மரும்  அந்தணராக  இருத்தல்  வேண்டும் , அவரில்லையாயின் , அரசர்  குலத்தவராக  இருத்தல்  வேண்டும் . அவரும்  இல்லையாயின்  , வணிகர்களாக  இருத்தல்  வேண்டும் . சூத்திரர்கள்  குணமிக்கோரா யினும்  அன்னாரை  அப் பதவியில்  அரசன்  நியமித்தலாகாது .  426-427

     மன்னர்  குலத்தவனை  அரசிறைப்பொருள்  வாங்குவோனாகவும் , தண்டத்  தலைவனாகவும்  நியமித்தல்  வேண்டும் . அந்தணனைக்  கிராமத்  தலைவனாகவும் , காரியத்தனாகவும் , எழுத்தாளனாகவும்  நியமித்தல்  வேண்டும் .                                                                                     428

( காரியத்தன் – கணக்கு  வேலை  பார்ப்போன் . ”காரியத்தனை  எழுத்தாளனாகவும் “  எனவும்  பொருள்  கொள்ளலாம் . அங்ஙனம்  கொள்ளுங்கால் ‘காரியத்தன்’  என்பது  ஒரு  சாதியைக்குறிப்பதாகும் . அச்சாதி  இக்காலத்தில்  வடநாட்டிலுள்ளது . )

     வைசியனைப்  பண்டமாற்று  முதலியவற்றின்  சுங்கங்  கொள்பவனாகவும் , சூத்திரனை  வாயில்  காப்போனாகவும்  நியமிக்கலாம். அரசர்  குலத்தவனைப்  படைத்  தலைவனாக  நியமித்தல்  வேண்டும் . அவன்  இல்லையாயின்  அந்தணனை  அப்பதவியில்  நியமிக்கலாம் .                                                                       429

     வைசியனையும் , சூத்திரனையும் , அச்சமுடையானையும்  படைத்தலைவராக்கலாகாது . எல்லாச்  சாதிகளிலும்  வீரமிக்கவனே  படைத்  தலைவனாக  நியமிக்கத்  தக்கவனாவான் .                              430

     சங்கர  சாதிகளோடு   கூடிய  நால்வகைச்  சாதி  மக்களுக்கும் , படைத்தலைமை  ஏற்றலாகிய  இக்கடமை  தூய்மையுடையதன்று . அரசன்  எக்குலத்தவனோ  அக்குலம்  நலம்  எய்துவதாகும் .                431

( படைத்தலைமை  ஏற்றர்  வீரர்க்குரியதாயினும்  , அதனாற்  கொலைத்தொழிலாகிய  பெரும் பாவம்  நேர்தலால்  அது  தூய்மையுடையதாகாதென்பது  கருத்து . )

    எவ்வரசன்பால்  செய்ந்நன்றி  மறத்தல் , நற்பணி  கண்டு  மகிழாமை  பிற  நிகழ்ச்சிகளுக்கிடையில்  நினைவுகூராமை , ஐயுறல் , பயனின்றிப்  பேசுதல் , கலக்கமுற்றுப்  பிறரைத்  துன்புறுத்தலாகிய  இவை  யுள்ளனவோ  அவ்வரசனை  வினைசெய்வார்  விட்டொழிதல்  வேண்டும் .                                                                                                            432

     இளவரசன்  முதலியோரின்  இலக்கணங்களுங்  காரியங்களும்  சுருக்கமாக இங்குக்  கூறப்பட்டன .                                                                433

சுக்கிரநீதியில்

“இளவரசன்  முதலியோரின்  இலக்கணம் “ என்னும்  இரண்டாம்

அத்தியாயம்  முற்றிற்று

  •    *       *       *       *

மூன்றாம்  அத்தியாயம்

(அரசனுக்கும்  குடிகளுக்கும்  உரிய  பொதுநீதிகள் )

1 . எல்லோர்க்கும்  உரிய  நல்லொழுக்கங்கள்

     இனி  அரசன்  குடிகள்  முதலிய  எல்லோர்க்கும்  பொதுவான  நீதிகள்  கூறப்படும் . எல்லா  உயிர்த்  தொகுதிகளின்  காரிய  முயற்சிகளனைத்தும்  இன்பத்தின்  பொருட்டே  உள்ளனவாம்                1

     அறமின்றி  இன்பம்  உண்டாகாது . ஆதலின் , மனிதன்  அறத்திற்  பற்றுடையனாக  விருத்தல்  வேண்டும் . அறம்  பொருள்  இன்பங்கள்  இல்லாத  காரியத்தைத்  தொடங்கலாகாது . அவற்றோடு  முரணாது  நடுநிலையுடையனாய்  எல்லாக்  காரியங்களிலும்  அடிதோறும்  பின்றொடர்ந்து  செல்லல்  வேண்டும் .                                                              2

( அடிதோறும்  தொடர்தல் – முரணின்மையையும்  நடுவு  நிலைமையையும்  இடையறாது  மேற்கொள்ளல்.)

     ஒவ்வொருவனும்  குறைந்த  அளவினையுடைய  மயிர் , நக , மீசைகளையும் , கழுவுதலாற்  றூயனவாகிய  காலடிகளையும் , அழுக்குக்களை  வெளிப்படுத்தும்  இருவகைப்  பொறிவாயில்களையும் , நீராடும்  நியமத்தையும்  நறுமணக்  கலவை  பூசுதலையும் , நல்லாடை  யுடுத்தலையும் , இறுமாப்பின்றி  விளங்கும்   தோற்றத்தினையும்  உடையனாய் , மணி , மந்திரசித்தி , உயர்ந்த  மருந்து  ஆகிய  இவற்றை  எப்பொழுதும்  வைத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                           3

( “குறைந்த  அளவினையுடைய”  என்னும்  விசேடணத்தை  நகம்  மீசைகளுக்கும்,  “கழுவுதலாற்  றூயனவாகிய”  என்னும்  விசேடணத்தை  இருவகைப்  பொறிவாயில்களுக்கும்  கொள்க . இருவகைப்  பொறிவாயில்கள்  –  ஞானேந்திரிய  கன்மேந்திரிய  துவாரங்கள் . மயிர்  நகம்  மீசைகளை  மிகுதியாக  வளரவிடாமல்  அடிக்கடி  களைய  வேண்டுமெனவும் , கால்களையும்  பொறிவாயில்களையும்  அடிக்கடி  நீராற்  கழுவவேண்டுமெனவும்  கூறியவாறு)

     வெளிச்செல்லுங்கால்  குடை  செருப்புக்களையுடையனாய்  ஒரு  நுகத்தடியளவு  நீளம்  நிலத்தில் கண்  செலுத்தி  நடத்தல் வேண்டும் . இரவிலும்,  தீயகாரியம்  நேர்ந்தவிடத்தும் , தடியையும்  தலைச்சாத்தினையுமுடையனாய்த்  துணையாட்களுடன்  போதல்  வேண்டும் .                                                                                                                 4

( மிகுதூரப்  பார்வையாற்  கால்  தடுமாறும் . ஆதலின் , நுகத்தடியளவிற்  கண்  செலுத்திச்  செல்லல்  வேண்டுமென்றனர் . தீய காரியம் – உயிர்  பொருள்  முதலியவற்றிற்கு  அழிவு  பயக்கும்  வினை  . தலைச்சாத்து – தலைப்பாகு .)

     ஒரு  காரியத்தில்  விரைந்து நிற்குங்கால் , பிறிதொரு  காரியத்திற்  புகுதலாகாது . விரைந்து  வரும்  பொருள்களை  வலிமையாற்  றடுத்தலாகாது . பகைவரைப்  பொருந்தாது  தூர  விலகி  நல்ல  நண்பர்களை  யடுத்து  அவர்பால்  அன்பு   மேற்கொண்டொழுகல்  வேண்டும் .                                                                                                             5

( மூலத்திலுள்ள   “வேகிதன்”  என்பதற்கு  விரிவுடையான்  என்பது  பொருள் . ஆதலின்  மல  மூத்திரங்களை  விரைந்து  வெளிப்படுத்தும்  நிலையிலுள்ளவன் . அவற்றை  யடக்கிக்கொண்டு  பிற  காரியத்திற்  புகுதலாகாதென்று  பொருள்  கொள்ளுதலும்  பொருந்தும் . விரைந்து  வரும்  பொருள் – ஒருவன்  எதிரில்  வரும்  விலங்கு  முதலிய  இயங்கியற்  பொருளும் , பிறரால்  எறியப்பட்டு  வரும்  கல்  முதலிய  நிலையியற்  பொருளுமாம் . அவை  வேகமாக  வருங்கால் அவற்றிற்கெதிரே  செல்லலாகாதென்பது  கருத்து. )

     உயிர்க்கொலை , களவு , நெறிதவறிய  காமம் , குறளை , கடுஞ்சொல், பொய் , அறம்  பொருள்  இன்பங்களின்  வேறுபட்டுப்  பிறர்  மனத்தைக்  கலக்கும்  பயனில்சொல் , அடக்கமின்மை , நாத்திகம் , மாறுபட்டுணர்தல்  ஆகிய  மனமொழி  மெய்களால் நிகழும்  இப்பத்துத்  தீவினைகளையும்  ஒழித்தல்  வேண்டும் .            6

( இப்  பத்துத்  தீவினைகளுள்  கொலை , களவு , காயம் , இம்மூன்றும்  உடலால் நிகழ்வனவாம் ; குறளை , கடுஞ்சொல், பொய் , பயனில் சொல், இந் நான்கும்  மொழியால்  நிகழ்வனவாம் ; மற்றைய   மூன்றும்  மனத்தால்  நிகழ்வனவாம் . அடக்கமின்மையால்  விருப்பமும் , தான்  விரும்பின  பொறாமையால்  வெகுளியும்  உண்டாம் . வெகுளி  நிகழுங்கால் , கடவுளும்  அறமும்  மறுமையின்பம்   முதலியனவும்  இல்லையென்னும்  நாத்திகக் கொள்கை  தோன்றுமாதலின்  “நாத்திகம்”  என்பது  வெகுளியைப்  புலப்படுத்துவதாகும் . மாறுபட்டுணர்தல் – மயக்கம் . இங்ஙனம்  மன மொழி  மெய்களால்  நிகழும்  தீவினைகளை  மணிமேகலை  நூலாசிரியர் “தீவினையென்ப  தியாதென  வினவின் ,  ஆய்தொடி  நல்லாய்  ஆங்கது  கேளாய் , கொலையே  களவே  காமத்  தீவிழை , வுலையா  வுடம்பிற்  றோன்றுவ  மூன்றும் , பொய்யே  குறளை  கடுஞ்சொற்  பயனில்  சொல்லெனச்  சொல்லிற்  றோன்றுவ  நான்கும் , வெஃகல்  வெகுளல்  பொல்லாக்  காட்சி யென்றுள்ளந்தன்னிலுருப்பன  மூன்றுமெனப்  பத்துவகையால்”  என்றிங்ஙனங்  கூறி  விளக்கியுள்ளார் . [ மணிமே 30-ஆம்  காதை,   64-72]

     மனிதன்  ஓரறச்  செயலைச்  செய்யத்  தன்  ஆற்றலால்  முயன்றும்  அது  நிறைவேறப்  பெற்றிலனாயினும் , அவன்  அவ்வறப்  பயனாகிய  புண்ணியத்தை  உறுதியாக  அடைவான்.  இதன்கட்  சிறிதும்  ஐயமின்று .                                                                                                                7

(இச்  சுலோகத்தின்  நுண்பொருள்  “அறஞ்செய  விரும்பு”  என்னும்  ஒளவை  முதுமொழியிற்  புலப்படுத்தல்  காண்க . ஈண்டுச்  “செய்”  என்னாது  “செயவிரும்பு”  என்றது  உய்த்துணரர்பாலதாகும் . )

     ஒருவன்  தீவினையை  நெஞ்சத்தால்  நினைத்தாலும் , செயலிற்  காட்ட  விரும்புதலுமாகா.  அங்ஙனம்  நினைப்பினும்  விரும்பினும்  அதன்  பயனை  அவன்  எய்துவான்  என்று  அறநூலுணர்ந்தோர்  கூறுவர் .                                                                                                                   8

( தீவினையை  ஒருவன்  செய்தலேயன்றி , நினைப்பினும்  செய்ய விரும்பினும்  அதன்  பயனை  அவன்  அநுபவிப்பான்  என்பது  கருத்து .)

     வாழ்க்கைக்குரிய  தொழில்  அற்றார்க்கும் , நோய்  கோட்பட்டார்க்கும் , துன்பமுடையார்க்கும்  தன்  ஆற்றற்கியைந்தவாறு  துணை  நின்று  உபகரித்தல்  வேண்டும் . எப்பொழுதும்  புழு , எறும்பு  முதலிய  சிற்றுயிர்களையும்  தன்னைப் போற்  பார்த்தல்  வேண்டும் .                                                                               9

     தனக்குத்  தீங்கிழைக்கும்  பகைவனுக்கும்  உதவி  செய்யுங்  குணத்தையும் , தனக்கு  வரும்  வாழ்விலுந்  தாழ்விலும்  ஒரு  நிலைப்பட்ட  மனத்தினையும்  உடையனாக  விருத்தல்  வேண்டும். மற்றொருவனுக்கு  நேரும்  பயன்  கண்டு  அழுக்காறு  கொள்ளலாகாது; அப்பயன்  விளைதற்கு  முன்னாகவுள்ள  ஏதுவிற்  பொறாமை  கொள்ளல்  வேண்டும் .                                                                                        10

     ஒருவன்  மற்றொருவன்  மாட்டு  இறுமாப்பின்றி   முற்படப்  பேசுதல் , முகமலர்ச்சி , நல்லொழுக்கம் , அருட்குணம்  ஆகிய  இவற்றையுடை யனாய் , உரிய  காலத்தில்  நலம்  பயப்பனவும்  அளவுட்பட்டனவும் , இயைபுடையனவும் , இனிமையாயினவுமாகிய  சொற்களைக்  கூறுதல்  வேண்டும் .                                                                                           11

( முற்படப்பேசுதல் – பிறரோடு  உரையாட  நேருங்கால்  தன்  பெருமை  குறித்து  அவர்  பேசுங்காறுந்  தாழ்க்காது  முன்  மொழிதல் .)

     ஒருவனுக்குத்  தன்னளவில்  இன்பம்  நுகர்தலும் ,எல்லோரிடத்திலும்  நம்பிக்கையை  மேற்கொள்ளுதலும்,  எல்லோரையும்  ஐயமுறுதலுங்  கூடாவாம் .                                                                                                            12

     இன்னான்  எனக்குப்  பகைவனாவான்  என்றாவது , இன்னானுக்கு  யான்  பகைவனாவேன்  என்றாவது  வெளிப்படுத்தலாகாது . தன் றலைவனால்  தனக்கு  நேர்ந்த  அவமானத்தையும் , அவன்  தன்பால்  அன்பில்லாதிருத்தலையும்  வெளிப்படுத்தலாகாது .                                 13

     பிறரை  இன்புறுத்தும்  அறிஞன், பிறர்  எண்ணங்களை யுணர்ந்து  யார்  எவ்வாற்றான்  மகிழ்ச்சி  யடைவரோ  அவரை  அவ்வாற்றானே  பின்பற்றி  மகிழ்வித்தல்  வேண்டும் .                                                         14

     கண்  முதலிய  பொறிகளை  அவ்வப்  புலனுகர்ச்சியிற்  செல்ல  வொட்டாது  அறவே  தடுத்தலுங்  கூடாது , கலக்கஞ்  செய்யும்  இயல்பினவாகிய  அப் பொறிகள்  மனத்தை  வலிந்து  தன்வயப்  படுத்துமாதலின் , அவற்றை  அந்நுகர்ச்சியில்  மிகவும்  ஈடுபடும்படி  செய்தலுமாகாது .                                                                                              15

( பொறிகளைப்  புலன்களிற்  செல்லவொட்டாமல்  அறவே  தடுத்தலும் , மிகுதியாகச்  செல்லவிடுதலும்  ஆகாவென்பது  கருத்து .)

     மான் , யானை , விட்டில் , வண்டு , மீன் ,ஆகிய  இவ்வைந்தும்  முறையே  ஓசை , ஊறு , ஒளி , நாற்றம் , சுவை  ஆகிய  இப் புலங்களாற்  கேடெய்துவனவாம் .                                                                                           16

( மான்  முதலிய  இவ்வைந்தும்  புலன்களாற்  கேடெய்துதலை  முதல்  அத்தியாயம்  102 – முதல் 107  வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க .)

     இவ் வைம்புலன்களுள்ளும் , அழகிற்  சிறந்த  மகளிற்பால்  நுகரும்  ஊற்றின்பம்   முனிவரது  மனத்தையும்  ஈர்ப்பதாகும் . ஆதலின்  களித்து  மயங்குதலின்றித்  தக்க  அளவு  புலன்களை  நுகர்தல்  வேண்டும் .                                                                                                              17

     தாயுடனாதல் , தங்கை  தமக்கை  மாரோடாதல் , மகளோடாதல் , ஒருவருமில்லாத  இடத்தில்  தனித்துறைதலாகாது . தனக்குரிய  மனைவியையும்  பிறர் மனைவியையும் அழைக்குங்கால் , இயைபின்வண்ணம்  முறையே  “சுபேக”  எனவும் , “பகினி”  எனவுஞ்  சொல்லியும்  ஆறுதலளித்தும்  அழைத்தல்  வேண்டும் .                          18                                                                                  

( தன்  மனைவியை  அழைக்குங்கால்  “சுபேக”  யெனக்  கூறி  யழைத்தல்  வேண்டும் . பிறர்  மனைவியை  அழைக்குங்கால்  “பகினி”  என  ஆறுதலளித்து  அழைத்தல்  வேண்டும் . பகினி – உடன்பிறந்தாள் . சுபகா – பாக்கியவதி .)

     பெண்கள்  பிற   ஆடவரோடு  உடனுறைதலையும் , அவரோடு  உரையாடுதலையும்  வெளிப்படையாகவுஞ்  செய்தலாகாது . அங்ஙனமே  ஒரு  கணப்  பொழுதேனும்  சுதந்திரத்தன்மை  மேற்கொள்ளுதலும் , பிறரில்லத்  திருத்தலுமாகாவாம் .                          19

 ( வெளிப்படையாகவும்  என்றதனால்  தனிமையில்  அறவே  கூடாதென்பது  எளிதிற்  புலப்படும் .)

     பெண்பாலர்க்கு  அவர்தம்  கணவர் , தந்தையர் , அரசன் , புதல்வர் , மாமன்மார் , உறவினர் , ஆகிய  இவர்கள்  வீட்டுக்காரியங்கள்  செய்யாமலிருக்குமாறு  ஒரு  கணப்  பொழுதேனும்  அவகாசங்  கொடுத்தலாகாது .                                                                                            20

     மகளிர்  தம்  கணவர்  கொடிய  தன்மையுடையராகவும் , அலிகளாகவும் , தண்டஞ்  செய்வோர்களாகவும் , பற்றில்லாதவராகவும்  நீண்ட  காலம்  பிரிந்து  வேறிடத்து  வாழ்பவராகவும் , மிக்க  வறுமையாளராகவும் , நோயாளராகவும் , எப்பொழுதும்  பிற  மகளிரிடத்துப்  பற்றுடையராகவும்  இருக்கக்  காண்பாராயின் , அவர்பாற்  பற்றற்றிறுப்பர்; அன்றி , அக்கணவரை  யொழித்துப்  பிற  ஆடவரை  விரும்பி  யடைபவராவர் . ஆதலின் , மனிதர்கள்  இங்குக்  கூறிய  கொடுந்தன்மை  முதலிய  தீய  குணங்களை  முயன்று  ஒழித்துப்  பெண்   மக்களைக்  காத்தல்  வேண்டும் .                            21-22

     ஆடவர் , தம்  பெண்டிரையும் , மக்களையும்  உண்டி  உடுக்கை  அணிகலன்களாலும் , அன்பினாலும் , இன்சொற்களாலும் மகிழ்வித்து மிகவும்  தம்பக்கலில்  வைத்துத்  தம்  மாலியன்றவரை  காத்தல்  வேண்டும் .                                                                                                              23

     தெருவிலுள்ள  கடவுட்டன்மை  வாய்ந்த  மரங்கள் , கொடி , மரம் , இழிபிறப்புயிர்த்  தொகுதி  ஆகிய  இவற்றின்  நிழலையும் , தாய்  தந்தை  ஆசிரியன்  முதலிய  பெரியோர்களின்  நிழலையும்  சாம்பல் , உமி , தூயனவல்லாப் பொருள்கள் , கற்றுண்டு , ஓடு  வழிபாட்டிற்குரிய  பொருள்கள் , நீராடுமிடம்  ஆகிய  இவற்றையும்  மிதித்துச்  செல்லலாகாது .                                                                                                    24

( கடவுட்டன்மை  வாய்ந்த  மரங்கள் – சுற்றிலும்  திண்ணை  கட்டப்பட்டு  வழிபடுதற் பொருட்டுப்  பிரதிட்டை  செய்து  அமைக்கப்பெற்ற  அரசு  முதலியனவாம் . தூயனவல்லாப் பொருள்கள் —  எலும்பு , மலம் , எச்சில்  முதலியன . )

     கைகளால்  ஆறு  முதலியவற்றில்  நீந்திச்  செல்லலாகாது . மறைந் திருக்கும்  நெருப்பிற்கு  நேராகச்  செல்லலாகாது . கடக்கும்  ஆற்றிலில்  ஐயமுறுதற்குரிய  தோணியிலும் , தாங்கும்  வன்மையில்  ஐயமுறுதற்குரிய  மரத்திலும் , அடங்காக்குணம்  வாய்ந்த  குதிரை  முதலிய  ஊர்திகளிலும்  ஏரலாகாது ,                                                            25

     மூக்கை  மிகுதியாக  வருடுதலும் , நிலத்தைக்  காரணமின்றிக்  கீறுதலும் , இரண்டு  கைகளையுஞ்  சேர்த்துக்  கொண்டு  தலையைச்  சொறிதலுங்  கூடாவாம் .                                                                                   26

     உறுப்புக்களை  மாறுபட  இயக்கலாகாது . ஒன்றைப்பெற  வேண்டுமென்னும்  அவாவை  நெடிது  மேற்கொண்டிருத்தலாகாது . மன மொழி மெய்கட்குத்  துன்பம்  நேருமுன்னரே  அவற்றின்  செயல்களை  யொடுக்கிவிடல்  வேண்டும் .                                                 27

( மனமொழி மெய்களின்  செயல்கள்  அளவின்  மேற்படுமாயின்  அவற்றிற்குத்  துன்பமுண்டாமாதலின் , அச்  செயல்களை  அளவோடு  செய்ய  வேண்டுமென்பது கருத்து .)

     முழந்தாளை  நெடுநேரம்  உயர்த்து  வைத்தலாகாது . இரவில்  மரங்களினடியிலும் , இல்லத்து  முற்றங்களிலும் , சிறு  தெய்வ நிலையங்களிலும் , நாற்றெருக்  கூடுமிடங்களிலும் , திருக்கோயில்களிலும்  இருத்தலாகாது .                                                       28

( இரவில்  என்பதைப்  பின்னுள்ளவற்றிற்குங்  கூட்டிக்கொள்க .)

     பாழுங்  காட்டினையும் , பாழும்  இல்லத்தினையும் , சுடலையையும்  பகலிலும்  அடைதலாகாது . கதிரவனை  உற்றுப்  பார்த்தலும்  சுமையைத்  தலையாற்  சுமத்தலுங்  கூடாவாம் .                                        29

( பகலினும்  என்றமையால்  இரவில்  அடைதலாகாதென்பது  எளிதிற்  புலப்படும்  மிகு   சுமையைத்  தலையாற்  சுமப்பின்  கழுத்து  நரம்பு  முதலிய  உறுப்புக்கள்  பிறழ்ந்து  துன்புறுத்துமென்பது  கருத்து . )

     நுண்ணிய  பொருளையும் , மிக்க  ஒளியுடைப்  பொருளையும் , தூயனவல்லாப்  பொருள்களையும் , வெறுப்புண்டாக்கும்  பொருளையும்  எப்பொழுதுங்  காண்டலாகாது .                                         30

     சந்தியா  காலங்களில்  உணவு  கொள்ளல் , பெண்புணர்ச்சி, உறங்குதல் , படித்தல் , ஆராய்தல் , கட்குடித்தல் , கள்விற்றல் ,  கள்ளிறக்கல் , கொடுத்தல் , வாங்குதல்  ஆகிய  இவற்றைச்  செய்தலாகாது .                                                                                                       31

( முதனூலிலுள்ள  ‘சம்நாதம்’  என்பது  “கள்ளிறக்கல்”  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . “வில்லில்  அம்பு  பூட்டி  எய்தல் “  என்றும்  பொருள்  கொள்ளலாம் .)

     அறிவுடையார்க்கு  எல்லாச்  செயல்களிலும்  உலகமே  ஆசிரியனாகும் .  ஆதலின்  பகுத்துணரும்  அறிஞன், உலகியல்  உணர்தற்  பொருட்டு  அவ்வுலகத்தையே  பின்பற்றல்  வேண்டும் .   32

( உலகம்  என்பது  ஈண்டு  உயர்ந்தார்  மேலதாம் . இச்  சுலோகத்தின்  கருத்து, திருக்குறள், “ஒப்புரவறிதல்”  என்னும்  அதிகாரத்தின்  பொருளை  நினைவுறுத்துவதாகும் . )

     இராச  தருமம் , தேயதருமம் , குலதருமம், ஞாதிதருமம் , ஆன்றோர் தருமம்   ஆகிய  இவற்றைப்  பழித்தலாகாது . தான்  ஆற்றலுடையனாயினும்  உலகியலாசாரத்தைக்  கடக்க  மனத்தாலும் எண்ணலாகாது .                                                                                                    33

( இங்குக்  கூறப்பட்ட  தருமங்களில்  விதிவிலக்கிறந்தன  சிலவுள வெனினும் , அவை   தேயம்  குலம்  முதலியவற்றின்  வேறுபாடு  பற்றிப்  போற்றற்பாலவாம்  என்பது  கருத்து .)

      ஒருவன்  தான்  செய்த  தகுதியில்லாத  செயலையும் , கூறிய   தகுதியில்லாத  சொல்லையும்  முறையே  தன்  ஆற்றலாலும் , ஏதுவினாலும்  நிலைப்படுத்த  முயலலாகாது .                                             34

     ஒருவன்  எதிரில்  அவன்  தீய  குணங்களை  எடுத்துரைப்பார்  மிகச்  சிலரே  யாவர் . ஆதலின் , அறிவுடையான் , உலகியலாலும்  நூலுணர்ச்சியாலும்  மெய்ம்மை  பொய்ம்மைகளை  யறிந்து, விலக்கற்பாலனவற்றை விலக்கல்  வேண்டும் . நீதியல்லாத தொன்றை  நீதியையொப்ப  நெஞ்சத்தாலும்  எண்ணலாகாது .                                    35

     “இம்மனிதன்  ஆயிரங்  குற்றங்களை யுடையனாக  இருக்கின்றான் . யான்  செய்யும்  ஒரு  குற்றத்தால்  வரக்கடவதென் ?”   என்று  கருதி  ஒருவன்  சிறிதும்  பாவ  கன்மத்தைச்   செய்ய  எண்ணலாகாது ; என்ன? நீர்த்திவலைகள்  பல  வீழின்  குடமும்  நிறையுமாகலான் .                      36

     ஒருவன்  “இப்பொழுது  யான் எத்தகைய நிலைமையிலிருந்து பகல்  இரவுகளைப்  போக்குகின்றேன் “  என்றிவ்வாறு  நாடோறும் இடை விடாது  எண்ணுவானாயின்  அவன்  துன்பம்  எய்துவானல்லன்.          37

( ஒருவன் , தன்  வாழ்நாள்  எவ்வாறு  கழிகின்றது  என்று  நாடோறும்  தான்  செய்த  நன்று  தீதுகளை  யாராய்வானாயின் , அப்பொழுது  அவனுக்குத்  தீயனவொழித்து  நல்லன  புரிதற்கு  விருப்பம்  நிகழுமாதலின்  இவ்வாறு  கூறப்பட்டது . )

     அறிவுமிக்க  மனிதன் , வேதம்  அறநூல்  புராணங்களிலுள்ள  துதி  அருத்தவாதங்களையும் , அன்மொழித்தொகை  முதலிய  சொல்லியைபுகளாலும்  விசேட  ஊகங்களாலும்  ஏது  முதலியவைகளாலும்  தான்  விரும்பிய  கொள்கையை  நிலைப்படுத்துதலையும்  ஒழித்து , முயன்று  சாரமான  பாகத்தைக்  கண்டு , ஆன்றோர் மேற்கொண்டொழுகும்  அறவினைகளைச்  செய்தல்  வேண்டும் ; என்னை? அறத்தினுண்மை  யறிதற்கரியதாகலின் .                                                                         38-39

( துதி – மந்திரம் . அருத்தவாதம் – புனைந்துரை .)

அரசன் , தன்  நண்பர்  புதல்வர்  குரவர்  என்னுமிவர்கள்  மறநெறி  யொழுகுவாராயின்  அவர்களையும் , கள்வனையும் , ஆததாயிகளையும் , தன்னாட்டில்  வைத்துக்கொள்ளலும்  அவரைக்  காத்தலுஞ்  செய்தலாகாது .                                                                             40

     இல்ல  முதலியவற்றில்  நெருப்பிடுவாரும் , நஞ்சிடுவாரும் , ஆயுத  முதலியவற்றாற்  கொலை  புரிவாரும் , பிறர்  பொருளை  அறவே  கவர்வாரும் , பிறர்  நிலத்தை   யபகரிப்பாரும் , பிறர்மனைநயப்பாரும்  ஆகிய  இவ்வறுவரும்  ஆததாயிகள்  ஆவர் .                                              41

( இவரைப்  பற்றிப்  பரிமேலழகர்  பின்வருமாறு  கூறுவர் : “கொடியவர்   என்றது- தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார், சுருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார்  என்றிவர்  முதலாயினாரை . இவரை  வடநூலார்  ஆததாயிகளென்ப “ [குறள், 550-உரை] )

     அறிவுமிக்க  மனிதன்  தன்  மனைவி , குழந்தை , வேலையாள்  ஆகிய  இவர்களையும் , நோய் , பசு , பொருள் , கல்விப்பயிற்சி, பெரியார்  வணக்கம்  ஆகிய  இவற்றையும்  ஒரு  கணப்  பொழுதேனும்  பொருட்படுத்தாமலிருத்தலாகாது .                                                                 42

     எந் நாட்டில்  ஒருவனுக்கு  அரசனும் , பெரும்  பொருளாளரும் , அந்தணரும் , மருத்துவரும்  ஆகிய  இவர்கள்  பகைமை யுடையராயிருக்கின்றனரோ , எந் நாட்டின்  இயல்பும்  ஒழுக்க  வழக்கங்களும்  அவனுக்கு  மாறுபட்டிருக்கின்றனவோ , அந் நாட்டில்  அவன்  ஒரு  நாளேனும்  இருத்தலாகாது .                                                      43

     எந் நாட்டில்  அலிகளும் , பெண்களும் , சிறுவரும் , சினமிக்காரும் , அறிவில்லாரும் , பகுப்புணர்ச்சியில்லாரும்  ஆகிய  இவர்கள்  அதிகாரிகளாக  இருக்கின்றனரோ , அந் நாட்டில்  ஒரு  நாளேனும்  வாழ்தலாகாது .                                                                                                      44

     எந் நாட்டில்  அரசன்  விவேகமற்றவனாகவும் , அரசவைக்கண்ணுள்ளார்  ஒருதலைச்  சார்புள்ளவராகவும் , புலவர்கள்  நல்லொழுக்கமில்லாதவராகவும் , சான்று  கூறுவார்  பொய்யராகவும்  உள்ளாரோ ; தீயோர்க்கும் , பெண்களுக்கும் , இழிந்தோர்க்கும்  செல்வாக்குண்டோ ; அந் நாட்டில்  ஒருவன் , பொருள் , மானம் , இருப்பு , வாழ்க்கை  ஆகிய  இவற்றுள்  ஒன்றனையும்  விரும்பலாகாது .        45-46

     தாய்  சிறு  பருவத்திற்  காத்திலளாயினும் , தந்தை  நன்றாகக்  கல்விப் பயிற்சி  செய்வித்திலனாயினும் , அரசன்  பொருளைக்  கவர்ந்து  கொள்ளுவானாயினும் , இந்  நிகழ்ச்சிகளில்  வருந்துவதாற்  பயனென் ?                                                                                                               47

     ஒருவன் , தன்  நண்பர்  உறவினர்  அரசன்   ஆகிய  இவர்களிடத்துச்  செவ்வையாக  ஒழுகவும்  அவர்  சினங்கொள்ளுவராயினும் , தன்  இல்லம்  தீயினாலும்  இடியினாலும்  அழியுமாயினும் , இந் நிகழ்ச்சிகளில்  வருந்துவதாற்  பயனென்?                                                   48

     பெரியோர்களுடைய  சொற்களைப்  பொருட்படுத்தாமற்  செருக்கினாற்  செய்யப்படுங்  காரியம் , தனக்குக்  கேடுபயக்கும் பயனை  விளைவிக்குமாயின் , அது  குறித்து  வருந்துவதிற் பயனென்?

     அரசனையும் , கடவுளரையும் , குரவர்களையும் , அக்கினியையும் , தவஞ்செய்வாரையும் , அறத்தின்  முதிர்ந்தாரையும் , அறிவின்  முதிர்ந்தாரையும்  வியப்புமிக்க  மனமுடையனாய்  நன்கு  வழிபடல்  வேண்டும் .                                                                                                               50

     தாய் , தந்தை , குரு , தலைவன் , உடன்பிறந்தார் , புதல்வர் , நண்பர்  ஆகிய  இவர்களிடத்து  ஒரு  பொழுதுஞ்  சிறிதும்  நெஞ்சத்தாலும்  மாறுபடலாகாது . அவர்க்குத்  தீங்கிழைத்தலுமாகாது .                             51

     தன்  சுற்றத்தாரோடு  பகைகொள்ளலாகாது . வலியவனுக்கு  மானக்கேடு  செய்ய  விரும்பலாகாது . பெண்கள் , சிறுவர் , கிழவர் , அறிவிலார்  ஆகிய  இவர்களோடு  கலகஞ்  செய்தலாகாது .                    52

     சுவை  மிக்க  பொருளைத்  தனியனாக  இருந்து  உண்ணுதலும் , செயற்பாலனவற்றைத்  தனிமையாக  இருந்து  ஆராய்தலும்  தனியனாக  வழி  நடத்தலும் , பலர்  உறங்குங்கால்  அவர்களுக்கிடையில்  தனியனாக  விழித்திருத்தலுமாகாவாம் .          53

     பிறர்  கடமையைத்  தான்  மேற்கொள்ளலாகாது . ஒரு  பொழுதும்  பிறர்க்குத்  தீங்கு  செய்தலாகாது . எவ்விடத்தும்  இழிந்த  குணஞ்  செயல்களையுடைய  தீயவர்களோடும்  பெண்களோடும்  ஒரே  இருக்கையில்  உடனிருத்தலாகாது .                                                                54

     இந்  நிலவுலகத்திற்  செல்வத்தை  விரும்பும்  மனிதன் , துயில் , மனத்தளர்ச்சி , அச்சம் , சினம் , மடிமை , காலந்தாழ்த்தல்  ஆகிய  இவ்வறுவகைக்  குற்றங்களையும்  ஒழித்தல்  வேண்டும் . இன்றேல்  இக்குற்றங்கள்  காரியங்களுக்கு  இடையூறு  விளைவிப்பனவாம் . இதன்கண்  ஐயமின்று .                                                                                        55

     உபாயஞானம் , காரியத்தைக்  கூட்டி  முடிக்குந்  திறமை , உண்மையுணர்ச்சி , புதிது  புதிதாகப்  பொருள்களை  யாராய்ந்து  காணும்  அறிவு , எப்பொழுதும்  தன்  கடமையிற்  பற்று , பிறர்மனை  நயவாமை , சொல்வன்மை , நுண்ணுணர்வு , இன்சொல் , தட்டின்றி  நிரல்படப்  பேசல்  ஆகிய  இவற்றை  என்றும்  உடையனாக  இருத்தல்  வேண்டும் .                                                                                                            56

( புதிதுபுதிதாகப்  பொருளை  ஆராய்ந்து  காணும்  அறிவை  “பிரதிபை”  என்ப .)

     எப்பொழுதும்  ஒரு  பொருளை  விரைவின்றி  விளக்கமாகக்  கேட்டல்  வேண்டும் . கேட்டதனை  விரைந்து  தெளிதல்  வேண்டும் . அங்ஙனந்  தெளிந்தபின்  அதனைச்  செய்கையின்  மேற்கொள்ளல்   வேண்டும் . ஒருபொழுதும்  தான்  விரும்பியவாறு  ஒழுகலாகாது ,                              57

     விலைக்கு   வாங்கல்  விற்றல்களிற்  பேரவாவினையும் , தன்  எளிமையையும்  வெளிப்படுத்தலாகாது . பிறர்  இல்லத்தில்  அவர்  அறியப்படாத  நிலையிலும் , காரியமின்றியும்  புகுதலாகாது .             58

( வாங்குதலிற்  பேரவா – ஒரு  பண்டத்தை  விலைக்குக்  கொள்ளுங்கால்  அதனை  அவ்விலையளவின்  மிகுதியாகக்  கொள்ள  விரும்புதல் . விற்றலிற்  பேரவா – அங்ஙனங்  கொண்ட  பண்டத்தை  விற்குங்கால்  அதனை  விலையளவிற்  குறையக்  கொடுக்க  விரும்புதல் .)

     ஒருவன்  வினவாதிருக்க  அவன்பால்  தன்  வீட்டுக்  காரியங்களைப்  பற்றிச்  சொல்லலாகாது . காரிய  நிறை வேற்றத்திற்றுணையாவனவும் சிலவகை  யெழுத்திற்  பல்வகைப்  பொருளைச்   செறித்துக்  காட்டுவனவுமாகிய  சொற்களால்  உரையாடல்  வேண்டும் .                 59

     தனக்கு  அனுபவமில்லாத  பொருளைப்  பற்றித்  தன்  கருத்து இன்னதென்று  வெளியிடலாகாது . பிறர் கருத்தை  நன்றாக வுணர்ந்து  அவர் எளிதில் விளங்கிக்  கொள்ளுமாறு விடை கூறுதல் வேண்டும்.    60

( அநுபவம் – அழுந்தியறிதல் . இச் சுலோகத்தின்  பிற்கூறு  “எண்பொருளவாகச்  செலச் சொல்லித்  தான்  பிறர்வாய் , நுண்பொருள்  காண்பதறிவு “  என்னுந்  திருக்குறட்பொருளை  நினைவுறுத்தல்  காண்க . )

     கணவன்  மனைவி , தந்தை  மகன்  இவர்  தம்முட்  கலகம்  நேர்ந்துழி  அதன்கட்  சான்று  கூறலாகாது . தன்  காரியச்  சூழ்ச்சிகளை  மறைத்துப்  பேணல்  வேண்டும் . தன்பால்  அடைக்கலம்  புகுந்தானை  விலக்கலாகாது .                                                                                                    61

     தன்  ஆற்றற்  கியைந்தவாறு  காரியங்களைச்  செய்ய  விரும்புதல்  வேண்டும் . அங்ஙனஞ்  செய்யுங்கால்  இடையூறு  கண்டு  கலங்கலாகாது . எவர்க்கும்  உயிர்நிலைக்கு  ஊறு  செய்தலும், பழமொழி  பகர்தலுங்  கூடாவாம் .                                             62

     பிறர்க்கு  எளிமை , நாண் , அருவருப்பு  முதலியவற்றை  யுண்டாக்குஞ்  சொற்களையும் , பொருளில்லாத  மொழியையும்  ஒரு  சிறிதுங்  கூறலாகாது .                                                                                         63

     அறத்தின்பாற்  பட்டதொரு  காரியம்  உலகத்தாராற்  பழிக்கப்படுமாயின் , அஃது  உம்பருலகின்பம்  தாராது . [ஆதலின்  அதனைச்  செய்யலாகாதென்பது  கருத்து .] ஒரு  பொழுதும்  எவன்   சொற்களையும்  தன்னுடைய  ஏதுக்களால்  அழித்தலாகாது .                64

( ஒரு  காலத்தில்  அக்  காலவியல்பு  நோக்கி  அறநூலில்  விதிக்கப்பட்டதொரு  காரியம்  பின்னொரு  காலத்தில்  உலகத்தாற்  பழிக்கப்படுமாயின் , அதனை  அறநூலில்  விதித்தது  பற்றி  மேற்கொள்ளாமல் , உலகம்  பழித்தது  பற்றி  விலக்கல்  வேண்டுமென்பது  கருத்து . தன்னுடைய  ஏதுக்களால்  அழித்தலாவது – பேசுவோன்  சொற்களையும்  பிறபெரியோர்  மொழி  நூன்முறைகளையும்  ஏதுக்களாக  எடுத்துக்காட்டாது  தன்  கருத்திற்  றோன்றியவற்றையே  ஏதுவாகக்  காட்டி  விலக்கல் .)

     நன்றாக  ஆராய்ந்து  விடைகூறல்   வேண்டும் . ஒரு பொழுதும்  விரைந்து  கூறலாகாது . பகைவனாயினும்  அவன் பாட்டுள்ள  குணங்களைக்  கொள்ளுதலும் , குருவாயினும்  அவன்பாலுள்ள  குற்றங்களைத்  தள்ளுதலும்   வேண்டும் .                                                     65

     உயர்வாகிய  இன்பநிலையும் , இழிவாகிய  துன்பநிலையும்  ஒருவன்பால்  நித்தியமாக  விருப்பனவல்ல . எஞ்ஞான்றும்  முற்பிறப்பிற்  செய்த  வினைவயத்தாற்  பொருளுடையனாதலும் , அஃதிலனாதலுங்  கூடும் . ஆதலின்  எல்லா  வுயிர்களிடத்தும்  அன்புரிமையை  விலக்கலாகாது .                                                            66-67

     எக்காலத்தும்  நெடிது  ஆராய்ந்து  செய்தலையும் , இடையறாத  அறிவு  விளக்கத்தையும்  உடையனாதல்   வேண்டும் . ஆராயாது  செய்தலையும் , சோம்பலையும் , காலந்தாழ்த்தலையும்  ஒரு  பொழுதும்  மேற்கொள்ளலாகாது .                                                                68

     செய்தற்கரிய  காரியத்தை  அறிந்து  விரைந்து  செய்யமுயல்பவன் , முதலில்  நெடிதாராய்ந்து  உணர்தல்  வேண்டும் . அங்ஙனம்  உணர்ந்து  செய்வான்  அக்காரியத்தால்  நலம்  எய்துவான் .                                      69

     இடயறாத  அறிவு  விளக்கமுடையான்,  நேர்ந்த  ஒரு காரியத்தை  நெடிதாராயாமல் விரைந்து  செய்ய  முயல்வானாயின், அக்காரியங் கைவரப்  பெறுதல் அதன் பெருமையாலும்  தன்  மனத் தளர்ச்சியாலும் [சித்தியாங்கொல் என்னும்] ஐயத்தின்பாற்படுவதாகும்.                        70

     எவன் , சோம்பலுடையனாய்  உரிய  காலத்திற்  செயற்பாலவற் றைச்  செய்ய  முயன்றிலனோ , அவனுக்கு  எச்செயலினுஞ்  சித்தியின்றாம் . குலத்தோடும்  அழிவெய்துவான் .                                 71

     எவன் , பயனை  யறியாமல்  வினையின்கண்  முயல்கின்றானோ , பகுப்புணர்வில்லாத  அவன் , அவ்  வினையினானாதல்  அதன்   பயனானாதல்  துன்பத்தை  யடைவான் .                                                    72

( அவ்வினையினாற்  றுன்பமுறுதல் – அதனைக்கொண்டு  முடித்தற்குரிய  பொருள்   ஆற்றல்  முதலியன  வின்மையாலும் , அதன்  பயனாற்  றுன்பமுறுதல்  விரும்பியதற்கு  மறுதலையாகிய  பயன்  விளைதலாலுமாம் . )

     காலந்தாழ்த்துச்செய்யும்  இயல்புடையவன் , மிகுதியான  கால  அளவிற்  சிறிய  கன்மத்தைச்  செய்து  முடிப்பான் .  அச்  சிறு  செயலால்  விளையும்  சுருங்கிய  பயனாற்  றுன்பமும்  எய்துவான் . ஆதலின்  அவற்றை  நெடிதாராய்ந்து  செய்யும்  பகுப்புணர்வுடையனா தல்  வேண்டும் .                                                                                                  73

( அவற்றையென்றது  காலம்  கன்மம்  பயன்களை )

     ஆராயாது  செய்யும்  வினை , ஒரோவமயம்  நற்பயனையும்  விளைவிக்கும் . நன்கு  ஆராய்ந்து  செய்யப்படும்  வினை  ஒரோவமயம்  பயனின்றியும்  ஒழியும் . அங்ஙனமாயினும் , ஆராயாது  செய்யும்  வினை  தன்  விருப்பத்திற்கு  மறுதலைப்  பயனை  விளைவிக்குமாதலின்  அதனைச்  செய்ய  எண்ணுதலாகாது . செய்யத்தகாத  செயலினின்றும்  ஒரோவமயம்  தான்  விரும்பிய  பயன்  விளையுமாயினும்  அதனைச்   செய்தலாகாது . நற்செயலினின்றும்  தான்  விரும்பியதல்லாத  பயன்  விளையுமாயினும் , அது , செய்யத்தகாத  செயலைச்  செய்யும்  வண்ணம்  தூண்டுவதாக  மேற்கொள்ளலாகாது .                                                                                  74-76

( நன்கு  ஆராய்ந்து  செய்யப்படும்  வினை  ஒரோவமயம்  பயனின்றி  யொழியினும்   தீய  பயனைப்  பயவாதென்பது  கருத்து .

 நற்செயலினின்றும்  வேண்டாப்பயன்  விளைதல் , காகதாலீயம்  போல  ஒரோவமயம்  பிற  காரணங்களானாம் ; அதுபற்றி  அந்  நற்செயலை  வெறுக்கலாகாதென்பது  கருத்து .)

     வேலைக்காரன் , உடன்பிறந்தார் , புதல்வர் , மனைவி  ஆகிய  இவர்களாற்  செய்யப்படாத  காரியத்தை  நண்பர்கள்  ஐயுறவின்றிச்  செய்பவராவர் .                                                                                                    77

( இதனால்  நட்பின்  சிறப்புக்  கூறப்பட்டது .)

     ஒருவன்  நட்புரிமையை  உண்மையாக  அறியாமல்  நல்ல  நண்பன்  என்று  கருதி  அவன்மாட்டு  ஒரு  காரியத்தை  வைக்கும்  அறிவிலான்  அக்காரியம்  அழிவெய்தக்கண்டு  வருந்துவான் .                                     78

( இச்  சுலோகத்தால்  நட்பை  யாராய்ந்து   கொள்ள வேண்டுமென்பது  புலப்படும் .)

     எந்த  மனிதனுடைய  உள்ளக்  கிடக்கையையும்  உள்ளவாறறிய  முடியாது . ஆதலின் , நல்ல  நண்பனை  யடைதற்பொருட்டு  மிகவும்  முயலவேண்டும் . மனிதர்களுக்கு  நல்ல  நண்பரைப்  பெறுதலே  எப்பேறுகளிலுஞ்  சிறந்ததாகும் .                                                               79

     அரசன் , தான்  நம்புதற்குரிய  புதல்வர் , உடன்பிறந்தார் , மனைவி , அமைச்சர் , மற்றை  வினைசெய்வார்  என்னும்  இவருள்  எவர்பாலும்  எப்பொழுதும்  மிகவும்  நம்பிக்கை  கொள்ளலாகாது .                         80

     உலகத்து  மக்கள்  எல்லோர்க்கும்  பொருள்  விருப்பம் , பெண் விருப்பம் , அரசியல்  விருப்பம்  ஆகிய  இவை  மிக்கிருத்தல்  இயல்பாம். ஆதலின் , காட்சி  முதலிய  அளவைகளாற்றுணியப் பட்டவனும்  , நன்கு  பழகினவனும் , தனக்கு  நலத்தை  விரும்புகின்றவனும்  ஆகிய  ஒருவனை  ஆராய்ந்து  நம்புதல்  வேண்டும் .                                                                                                            81

( நம்புதற்குரிய  என்னும்  விசேடணத்தை  உடன்பிறந்தார்  முதலியோர்க்குங்  கொள்க . )

     தன்னைப்போல்  தன்  நண்பனையும்  நம்பிப்  பின்னர்  அவன்  செயல்களைப்  பற்றி  மறைவிடத்திலிருந்து  தானே  ஆராய்தல்  வேண்டும் . அங்ஙனம்  ஆராய்ந்து  நம்பப்பட்டோன்  கூறுஞ்  சொற்களை  ஐயுற்று  அவை  கேடுபயப்பனவாகவும் , மாறுபட்டனவாகவும்  கொண்டு  தருக்கித்து  எண்ணலாகாது .            82

     தனக்குரிய  கடமையிலும்  நீதியிலும்  திறமை  வாய்ந்த  ஒருவன் , தன்னால் , நம்பப்பட்டோன்  தன்  காரியத்தின்  அறுபத்து  நான்கில்  ஒரு  கூற்றிற்குக்  கேடு  செய்வானாயின் , அதுபற்றி  அவனை  வெறாது  பொறுத்தலோடு , அவன்பால்  வைத்த  நட்புரிமையையும்  காத்தல்  வேண்டும் .                                                                                                              83

     நன்கு  போற்றற்பாலராகிய  பெரியாரை  எப்பொழுதுங்  கொடையாலும் , பெருமைப்படுத்தலாலும் , பனிசெய்தலாலும்  போற்றி  யொழுகல்  வேண்டும் .                                                                       84

     கொடுந்  தண்டமிடுதலையும் , வன்சொல்  வழங்குதலையும்  ஒரு  பொழுதும்  மேற்கொள்ளலாகாது . வன்சொற்  கூறல் , கொடுந்தண்டமிடுதல்  ஆகிய  இவற்றால்  தன்  மனைவி  மக்களும்  வெறுப் பெய்துவர் .                                                                                              85

     புல்  முதலியன  கொடுத்தாலும் , இன்சொற்களாலும்  பசு  முதலியனவும்  அடங்கிய  வயப்பட்டொழுகுவனவாம் .                            86

     கல்வியினாலும் , வீரத்தாலும் , பொருளாலும் , உயர்குடிப் பிறப்பாலும் , வலிமையாலும்  மானத்தாலும்  ஒரு பொழுதுஞ்  செருக்குறலாகாது .                                                                                               87

( இதன்கட்  கூறிய  கல்விச்  செருக்கு  முதலியவற்றாலாம் குற்றங்களையும் , அச் செருக்கின்  வழி  அக் கல்வி  முதலியவற்றாலாம்  பயன்களையும்  அடுத்துவரும்  சுலோக  முதல்  முறைப்படுத்துக்  கூறுதல்  காண்க . மானமாவது -நிலையிற்றாழாமையும்  தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர்  வாழாமையுமாம்.)

     கல்விச்  செருக்குள்ளவன் , தனக்குத்  தோன்றிய  ஏதுக்களைக்  கொண்டு , தன்னாற்  போற்றப்படும்  பெரியோர்களின்  உபதேச  மொழிகளை  நன்கு  அறிந்து  கொள்வானல்லன் . தன் கொள்கை கேடுபயப்பதெனினும்  அதனை  உண்மைப்  பொருளை   யொப்பக்  கருதுவன் .                                                                                                              88

( பெரியாருபதேசங்களைத்  தனக்குத்  தோன்றிய  மாறுபட்ட  ஏதுக்களால்  விலக்கி  விடுவானென்பது  கருத்து .)

     பெரியார்  மேற்கொண்ட  நெறியைத்  தன்  வலிமையால்  விலக்கி  வீரத்தாற்  செருக்குற்ற  ஒருவன் , படைகளின்  அணிவகுப்பு  முதலிய  போர்த்  திறமையை  மேற்கொள்ளா  தொழித்துக்  கைப்படை  தாங்கி  விரைந்து  போர்  செய்து  தன்  உயிரைப்  போக்கிக்  கொள்வான் .      89

     பொருட்  செருக்குள்ள  மனிதன் , ஆடு  தன்  மூத்திரத்தால்  தன்  முகத்தை  நனைத்துக்கொண்டு  அம்மூத்திர  நாற்றத்தையு முணராமை  போலப்  பழியின்  மூழ்கி  அப்  பழியையும்  அறிவானல்லன் .                                                                                                   90

     உயர்குடிப்பிறப்பாற்  செருக்குற்றவன் , குணஞ்  செயல்களாற்   றன்னினுஞ்  சிறந்த  பிறரெல்லோரையும்  அவமதிப்பான் ; செய்யத்தகாத  காரியத்தில்  தன்  அறிவை  நன்கு  செலுத்துவான் .  91

     வலிமையாற்  செருக்குற்றவன் , விரைந்து  போர்  செய்தலில்  மனத்தைச்  செலுத்துவான் . இன்றேல் , மற்றை  மக்களையும் , பசு  முதலிய  உயிர்களையும்  தன்  வலிமையாற்  றுன்புறுத்துவான் .        92

     மானத்தாற்  செருக்குற்றவன் , எல்லா  வுலகத்தையும்  துரும்பை  யொப்ப  எண்ணுவான் ; உயர்ந்த  விலைமதிப்புள்ள  இருக்கையில்  இருத்தற்குத்  தான்  தகுதியில்லாதவனாயினும் , மற்றை  எல்லோரினும்  மிகுதியாக  அதனைப்  பெற  விரும்புவான் .                   93

     இங்ஙனங்  கூறிய  கல்வி  முதலியவை  பொல்லார்க்கு  வாய்ப்பின் , செருக்கை  யுண்டாக்குவனவாம் ; நல்லார்க்கு  வாய்ப்பின்  , பணிவு  முதலிய  உயர்குணங்களை  உண்டாக்குவனவாம் .                                  94

     கல்வியின்  பயன்  அறிவும் , பணிவுமாம் . செல்வத்தின்  பயன்  கொடையும்  வேள்வியுமாம் . வலிமையின்  பயன்  பெரியாரைக்  காத்தல்  என்று  கூறப்படும் .                                                                              95

     வீரத்தின்  பயன்  பகைவரை  வணங்கலும் , அவர்பால்  அரசிறை  பெறுதலுமாம் . உயர்குடிப்பிறப்பின்  பயன்  சமமும்  தமமும்  நேர்மையுமாம் . மானத்தின்  பயன்  பிறரெல்லோரையும்  தன்னை  யொப்பக்  கருதலாம் .                                                                                         96

( சமம் – மன முதலிய  அகக்  கரணங்களை  யடக்கல் .  தமம் – பொறிகளைப்  புலன்களிற்  செல்லவிடாமல்  றடுத்தல் .  தன்னை  யொப்பக்  கருதலாவது – பிறரைத்  தன்னிலும்  இழிந்தவராகக்  கருதாமல்  மேம்பட  நினைத்தல் . )

     காரியத்திற்  கண்ணுடையான்  தன்  பெருமையைப்  பொருட்படுத்தாமல் , தாழ்ந்த  குலத்தவன்  பானின்றும்  சிறந்த  கல்வியையும் , மந்திரங்களையும் , மருந்தையும் , அழகுநிறைந்த  பெண்ணையும்   மிகமுயன்று  பெற்றுக்  கொள்ளலாம் .                          97

     கைவிட்டுப்  போன  பொருளைப்  பற்றிச்  சிந்தித்தலாகாது . வரக்கடவ  பொருளைக்  கொள்ளல்  வேண்டும் . குழந்தைகளையும் , பெண்களையும் மிகுதியாகப்  பாராட்டுதலும் , மிகுதியாக  அடித்துத்  துன்புறுத்தலுங்  கூடாவாம் . அவ்விருவரையும்  முறையே  கல்விப்  பயிற்சியிலும்  வீட்டு  வேலையிலும்  சேர்ப்பித்தல்  வேண்டும் .            98

     பிறர்  பொருள்  சிறிதாயினும்  அவராற்  கொடுக்கப்படாமல்  தானே  கவர்ந்து  கொள்ளலாகாது . எவனுடைய  பாவத்தையுஞ்  சிறிதும்  பேசுதலாகாது . பெண்களைப்  பழித்தலாகாது .                                          99

     பொய்ச்சான்று  கூறலாகாது . உண்மைச்சான்றை  மாறுபடக்  கூறலாகாது . உயிர்  போகுந்தறுவாயிலும் , மிகப்  பெருங்  காரியத்தைக்  கடைபோக்குங்  காலத்தும்  பொய்  கூறலாம் .           100

( உயிர்  போகும்  நிலையிலும்  மிகப்  பெரிய  காரிய  நிறைவேற்றத்திலும்  பொய்   கூறலாமாயினும் ,  அப்பொய்யால்  இந்நன்மைகளே யன்றிப்  பிறர்  யார்க்குந்  தீங்கு  விளைத்தலாகாதென்பது  கருத்து . இதனைப் “பொய்ம்மையும்  வாய்மையிடத்த  புரைதீர்ந்த , நன்மை  பயக்குமெனின்”  என்னுந்  திருக்குறளானு முணர்க .)

     மகட்கொடுப்போன்பாற்  பொருளில்லாதவனையும் , கள்வன்  பாற்  பொருளுடைய  மனிதனையும் , கொலை  செய்ய  விரும்புவோன்  பால்  மறைந்திருக்கும்  மனிதனையும் , அறிந்திருந்தாலுங்  காட்டிக்  கொடுத்தலாகாது .                                                                                            101

( பொருளில்லாதவனைக்  காட்டலாகாதென்பது – பெண்   கொடுப்போனிடத்து , அவனாற்  கருதப்பட்ட  மணமகன்  பொருளில்லாதவன்  என்று  தனக்குத்  தெரிந்திருப்பினும் , அதனை  வெளிப்படுத்தாமையாம் .)

     கணவன் , மனைவி , தாய் , தந்தை , தமையன் , தம்பி , தலைவன் , ஏவலாளன் , தங்கை , தமக்கை , நண்பர் , ஆசிரியன் , மாணாக்கன்  ஆகிய  இவர்களுக்குள்  மனவேற்றுமை  யுண்டாம்  வண்ணம்  செய்யலாகாது .                                                                                                   102

( தாய்  தந்தையார்க்கு  மனவேற்றுமை  செய்யலாகாதென்பது  புதல்வனை  நோக்கிக்  கூறியதாகும் .   அது  பிறனொருவன்  செயலாயின்  “கணவன்  மனைவி “  என்பதனுள்  அடங்கும் . ஆனால்  பிறவெல்லாம்  மற்றொருவன்  செயலாகக்  கூறி  இவ்வொன்றை  மாத்திரம்  புதல்வன்  செயலாகக்  கூறுதல்  பொருத்தமாகத்  தோன்றவில்லை . ஆதலின் , தாய்  தந்தை  என்புழிப்  புதல்வனைக்  குறித்துக்  கூறியதாகக்  கொண்டு , தாய்  தந்தையர்க்கும்  மகனுக்கும்  மனவேற்றுமை  யுண்டாக்கலாகாதென்பது  கருத்தாகக்  கொள்ளுதல்  பொருத்தமாகத்  தோன்றுகிறது .)

     இருவர்  பேசிக்  கொண்டிருக்கும்பொழுதும் , கூடியிருக்குங்காலும் , அவர்தம்  நடுவண்  செல்லலாகாது . நண்பர் , உடன்பிறந்தார் , சுற்றத்தார் , ஆகிய  இவர்களை  எப்பொழுதும்  தன்னைப்போற்  கருதி  உபசரித்தல்  வேண்டும் .                                                                                   103

     தன்  இல்லத்திற்கு  வந்தோன்   தாழ்ந்தவனாயினும் , அவனைத்  தகுதிக்குத்  தக்கவாறு  அவனது  நலத்தை  வினவுதலாலும் , நீர்முதலியன  கொடுத்தலாலும் , பொருட்கொடையாலும்  தன்னால்  இயன்றவரை  எப்பொழுதுஞ்  சிறப்பித்தல்  வேண்டும் .                       104

     புதல்வரை  யுடையான்  ஒருவன் , புத்திரவதியான  தன்  மகளையும் , கணவரோட  கூடியிருக்குந்  தங்கை  தமக்கைமார்களையும்  எப்பொழுதும்  தன்  இல்லத்தில்  வைத்துக்  கொள்ளலாகாது . அவ்விரு  பகுதியினரும்  சார்பற்றவராக  விருப்பின்  அவர்களைப்  பரிபாலித்தல்  வேண்டும் .                                                                                                            105

(  அவர்களைத்  தன்  இல்லத்தில்  வைத்துக்கொள்ளுவானாயின்  அவர்க்கும்  தன்  மருகியர்க்குங்  கலகம்  விளையுமென்பது  கருத்து . சார்பற்ற  அவரைக்  காக்குங்காலும்  தன்  இல்லத்தில்  வைத்துக்  காக்க  வேண்டுமென்று  கூறாமையும்  அது  நோக்கியேயாம் . )

     பாம்பு , நெருப்பு , நோய்  ஆகிய இவற்றையும் , தீயவன் , அரசன்  மருமகன் , உடன்  பிறந்தாள் , மகன்  பகைவன்  ஆகிய  இவர்களையும்  முறையே  சிறியனவென்றும் , சிறியவரென்றுங்  கருதிப்  பழகுங்காற்  பொருட்படுத்தாமல்  இருத்தலாகாது .                                                           106

     கொடுந்தன்மை  குறித்துப்  பாம்பையும் , சுட்டெரிக்குந்  தன்மை  குறித்து  நெருப்பையும் , தீய  இயற்கை  குறித்துத்  தீயோனையும் , தலைமை  குறித்து  அரசனையும் , மகட்குத்   துன்பம்  நேருமென்னும்  அச்சங்காரணமாக  மருமகனையும் , தன்  முற்றோன்றிய  பிதிர்களுக்குப்  பிண்டங்கொடுத்தல்  பற்றி  உடன்  பிறந்தாள்  மகனையும் , மிகுதல்  குறித்து  நோயையும் , அச்சம்  நோக்கிப்  பகைவனையும்  பொருட்படுத்தல்  வேண்டும் .                                         107

( பொருட்படுத்தல்  வேண்டுமென்பதற்கு , அரசன்  மருமகன்  உடன்பிறந்தாள்  மகன் என்னும்  இவரைக்  குறித்து  விழிப்புடையனாய்ச்  சிறப்பிக்க  வேண்டுமெனவும் , பாம்பு  நெருப்பு  நோய்  என்னும்  இவற்றை  குறித்தும் , தீயவன்  பகைவன்  என்னும்  இவரைக்  குறித்தும்  முறையே  அவற்றாலும் , அவராலும்  நேரும்   தீங்குகளைச்  சோர்விலனாய்  நின்று  ஒழித்தல்  வேண்டுமெனவும்  பொருள்  கொள்க . )

     கடன்  எச்சமும் , நோய்  எச்சமும் , பகை  எச்சமும்  வைத்துக் கொள்ளலாகாது . இரப்போர்  முதலியோர்  இரவுவரை  கூறி  வேண்டுங்கால் , அவர்க்கு  வன்சொற்களால்   விடை  கூறலாகாது. ஆற்றலுடையனாயின் , அவ்விரப்போர்க்கு  வேண்டுவன  செய்தலும் , இன்றேல்  செய்வித்தலும்  வேண்டும் .                                                    108

( எச்சம் – குறை , சேடம் .)

     வள்ளல் , அறவோர் , வீரர்   ஆகிய  இவர்களைப்  பற்றிய  புகழ்  மொழிகளை  எப்பொழுதும்  முயன்று  கேட்டல்  வேண்டும் . இவர்கள் பாற்  புரைவழி  காண்டலாகாது .                                                                109

( புரைவழி – குற்றங்காணும்  நெறி .)

     மனிதன் , உரிய  காலத்தில்  நலம்பயப்பதும்  அளவுபட்டதுமாகிய  உண்டியையும் , சிற்றின்ப  நுகர்ச்சியையும் , கடவுள்  முதலியோர்க்கு  நிவேதித்து  எஞ்சியதுண்டலையும் , நல்லுறக்கத்தையும் , எளிமையின்மையையும் , தூய்மையையும்  எப்பொழுதும்  உடையனாயிருத்தல்  வேண்டும் .                                                                110

( நலம் பயத்தலையும் , அளவுட்படுதலையும்  சிற்றின்ப  நுகர்ச்சிக்குங் கொள்க .)

     எப்பொழுதும்  மக்கள்  இயக்கமில்லாத  இடத்திலேயே  சிற்றின்ப நுகர்தலையும் , உணவுட்கொள்ளுதலையும் , மல மூத்திரம்  ஒழித்தலையும்  செய்தல்  வேண்டும் . இடைவிடாது  முயற்சியுடையனாகவும் , வண்மை  நலம்  உண்டாதற்  பொருட்டு  உடற் பயிற்சியுடையனாகவும்  இருத்தல்  வேண்டும் .                         111                      

     சோற்றைப்  பழித்தலாகாது . உடல்  நலமுடையனாயிருக்குங்கால் , பிறர்  அன்போடளிக்கும்  நிமந்திரண  உணவு  முதலிய  உண்டிகளை  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் . அறுவகைச்சுவையுடன்  கூடியதும் , இனிப்புச்சுவை  மிக்கதும்  ஆகிய  உணவையே  சிறந்ததாக  அறிதல்  வேண்டும் .                                                                                                           112

( நிமந்திரண  உணவு – சிராத்தத்திற்  பிதிர்  தேவதைகளைக்  குறித்துக்  கொடுக்கப்படுவதாகும் . அது  பலவகைப்  பொருளாலும்  ஆக்கப்பட்டு  மிகுதியாக  இருக்குமாதலின் , அதனை  உண்ணுங்கால்  உடல்நலம்  இருக்கவேண்டுமென்பது  இன்றியமையாததே . இனி , மூலத்திலுள்ள  “பிரீதி  போஜநம்”  என்னும்  சொற்கு  பிறர்  அன்போடு  செய்யும்  விருந்துணவு  என்று  பொருள்  கோடலும்  பொருந்தும் .)

     தன்  மனைவியோடு  கூடி  இன்பம்  நுகர்தல்  வேண்டும் . விலைமாதரோடு  ஒருபொழுதுங்  கூடலாகாது . திறமை  மிக்காரோடு  மற்போர்  செய்தலும் , வணக்க  முதலியவற்றால்  உடற் பயிற்சி  செய்தலுஞ்  சிறந்தனவாம் ,                                                                        113

( வணக்கம் – சூரிய  நமஸ்காரம்  முதலியன .)

     இரவில்  முதல்  யாமத்தையும் , கடை யாமத்தையும் ஒழித்து  இடைநின்ற இரண்டு  யமங்களிலும் துயில்  கொள்ளல்  சிறந்ததாகும் . வறியவரையும் , குருடரையும் , முடவரையும் , செவிடரையும்  ஒரு  பொழுதும்  எள்ளி  நகையாடலாகாது .                                                     114

     செய்யத் தகாத  காரியத்தில்  அறிவைச்  செலுத்தலாகாது. காரிய   நிறைவேற்றத்திற்  கண்ணுடையான் , தன்  பெருமையை  விட்டு  முயற்சியினாலும் , வலிமையினாலும் , அறிவினாலும் , அஞ்சாமையினாலும் , பராக்கிரமத்தினாலும் , நேர்மையினாலும்  தான்  மேற்கொண்ட  காரியத்தைச்  சுறுசுறுப்போடு  விரைந்து  முடித்தல்  வேண்டும் .                                                                                                           115

     ஒரு  கலகம்  பொருட்பேற்றைத்  தருவதாயின் , அதனை  மேற்கொள்ளுதல்  நன்றாம் . இன்றேல் , அக் கலகம்  வாழ்நாளையும், பொருளையும் , நட்பையும் , புகழையும் , பிற  நலங்களையுங்  கொடுப்பதாகும் .                                                                                               116

( “பொருள்  வருவாயுளதாயின்  கலகத்தை மேற்கொள்ளலாம் “  என்னும்  இஃது  ஏற்புழிக்கோடலால்  அரசனுக்கு  உரியதாகக்  கருதப்படுவதாகும் . அரசன்  அங்ஙனம்  கலகம்  விளைத்தலும்  மற்றைப்  பகை  அரசரோடன்றிக்  குடிகளோடு  அன்றென்பதும்  ஈண்டுக்  கருதற்பாலது . )

     எவனிடத்தும்  வருத்தம்  விளைவிக்குஞ்  சொற்களைக்  கூறுதலும் , எவன்பாலுங்  குற்றநெறி  காண்டலுங்  கூடாவாம் . ஒரு  பொழுதும்  பெரியோர்களுடையவும் , அரசனுடையவுமாகிய  ஆணைகளைக்  கடத்தலாகாது .                                                                                                   117

     இழிந்த  காரியத்தில்  ஏவுவோன்  குருவாயினும் , அவனை  அது    தீதென்று  அறிவுறுத்தல்  வேண்டும் . நல்ல  காரியத்தை  அறிவிப்போன்  தாழ்ந்தவனாயினும் , அவன்  மொழியைக்  கடத்தலாகாது .                                                                                                    118

     ஒருவன் , இளம்பருவத்தளாகிய  தன்  மனைவியைத்  தான்  காவாது, சுதந்திரமுடையவளாக   விட்டுப்  போதலாகாது . பெண்கள்  பொதுவாகக்  கேட்டிற்குக்  காரணமாவர் . அங்ஙனமாயின் , அயலாரோடு  கூடியிருக்கும்  இளம்  பெண்களைப்  பற்றிக்  கூறற்பாலதென் ?                                                                                                119

     மதத்தை  விளைவிக்கும்  பொருள்களாற்  களித்து  மயங்குதலும் , கெட்ட  புதல்வனிடத்து  மகன்மை  அபிமானம்  மேற்கொண்டு  மயங்குதலும்  ஆகா .                                                                                          120

     கற்பிற்  சிறந்த  மனைவி , மாற்றாந்தாய் , தாய் , மருகி , மணஞ்செய்யப்படாத  மகன் , தந்தை ஆகிய  இவர்களையும் , கணவனும்  புதல்வனும்  இல்லாத  கைம்மை  நோன்பினராகிய  மகள் , தமக்கை , தங்கை , மாமி , தமயன் , தம்பிமார்களின்  மனைவியர் , தந்தையுடன்  பிறந்தவள் , தாயுடன்  பிறந்தவள் ஆகிய  இவர்களையும் , சந்ததியில்லாதவராகிய  தாய்வழிப்பாட்டன் , குரு , மாமன் , அம்மான் , ஆகிய  இவர்களையும், தந்தை  யில்லாதவரும், சிறுவருமாகிய  தெளகித்திரன் , தம்பி , உடன்  பிறந்தாள் புதல்வன் , ஆகிய  இவர்களையும்  இயன்றவரை  முயன்று  அவசியம்  பரிபாலித்தல்  வேண்டும் .                                                                                                   121-123

 ( மாற்றாந்தாய் – தாயல்லாத, தந்தையின்  மற்றொரு  மனைவி . “கற்பிற்சிறந்த”  என்பது  மனைவி  முதலிய  நால்வரையும் ,  “கணவனும்  புதல்வனுமில்லாத கைம்மை  நோன்பினர் “  என்பது  மகள்  முதலிய  எல்லோரையும் , “சந்ததி  இல்லாதவர்”  என்பது  தாய்வழிப்பாட்டன்  முதலிய  எல்லோரையும் , “தந்தையில்லாதவரும்  சிறுவருமாகிய “  என்பது   தெளகித்திரன்  முதலிய  எல்லோரையும்  பற்றி  நிற்கும்  அடைமொழிகளாம் . )

     செல்வம்  இல்லாதபொழுதும்  முற்கூறப்பட்டாரைக்  காத்தல்  வேண்டும் . செல்வம்  நிறைந்திருக்குமாயின்  தன்பால்  அன்புமிக்க  தந்தை  குலத்தவரையும் , தாய்  குலத்தவரையும்  மனைவி  பிறந்த  குலத்தவரையும் , அடிமையாள் , அடிமைப்பெண் , வேலைக்காரர்  ஆகிய  இவர்களையும்  காத்தல்  வேண்டும் .

     உறுப்பறைகளையும் , துறவிகளையும்  வறியவரையும் , சார்பில்லாதவரையும்   காத்தல்  வேண்டும் .                                           125

( உறுப்பறைகள் – அங்கவீனர்கள்.)

     எவன்  தன்  குடும்பத்தைக்  காப்பதில்  முயற்சியில்லாதவனாக இருக்கின்றானோ  அவனுக்குக்  கல்வி  முதலிய  பிற  குணங்களாலாகும்  பயன்  யாது ? அவன்  உயிரோடு  கூடிநின்றே  இறந்தவனாவான் .                                                                                            126

     எவன்  தன்  குடும்பத்தைத்  தாங்காமலும் , பகைவரை  யழிக்காமலும் , உள்ள பொருளைக்  காவாமலும்   இருக்கின்றானோ  அவனுக்கு  உயிர்  வாழ்க்கையாலாகும்  பயன்  யாது ?                          127

     எப்பொழுதும்  பெண்களால்  வயப்படுத்தப்பட்டவனும் , கடனாளியும் , மிக்க  வறுமையாளனும் , இரப்பவனும் , இழிகுணத்தவனும் , இழிந்த  பொருள்  வருவாயுள்ளவனும்  ஆகிய  இவர்கள்  உயிர்  வாழ்க்கையோடு  கூடியிருந்தும்  இறந்தவராவர் .128

( இச்  சுலோகத்தில்  அறவே  பொருளில்லாதவனைத்  தரித்திரன்  என்று  கூறியபடியால்  “அர்த்தஹீநன்”  என்பது  இழிந்த  பொருள்  வருவாயையுடையவன்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . எப்பொழுதும்  என்பதனை  எல்லாவற்றிற்கும்  அடையாகக்  கொள்க .)

     ஒருவன்  தன்  வாழ்நாளின்  அளவு , பொருள்நிலை , இல்லத்தில்  நிகழும்  பிழை , மந்திரம் , பெண்புணர்ச்சி , மருந்து , கொடை , மானம் , அவமானம்  ஆகிய  இவ்வொன்பதையும்  வெளிப்படுத்தலாகாது .  129

2 . பிறநாட்டுச்  செலவு , அரசவை  புகுதல், நூலாராய்ச்சி  முதலியன

     பிற  தேய  யாத்திரை , அரசவை  புகுதல் , பல  நூல்களை யாராய்தல், பொருட்பெண்டிர்  முதலியோரைக்  காண்டல் , புலவரோடு  நட்புக்  கொள்ளல்  ஆகிய  இவற்றை  மடியின்றிச்  செய்தல்  வேண்டும் .

(பொருட்பெண்டிர்  முதலியோரைக்  காண்டல் – அவர்   இயல்பை  ஒரு  பயன்  குறித்து  ஆராய்தல்  அப்  பயனைப்  பின்வரும்  136 –ஆம்  சுலோகத்திற்   காண்க)

     ஒருவன்  பிற  தேய   யாத்திரையால் , பலவகைப்பட்ட  வழக்க ஒழுக்கங்களையும் , பொருள்களையும் , விலங்கு  முதலியவற்றையும்,  மனிதர்களையும் , மலைகளையும்  காட்சியளவையில்  வைத்து  நன்கு அறிந்து  கொள்ளலாம் .                                                                                     131

( பலவகைப்பட்ட  என்பது  பின்னுள்ள எல்லாவற்றிற்கும்  அடையாகும் . இச் சுலோகக்  கருத்து : “மண்மிசைக்  கிடந்தன  மலையுங்  கானமும் , நண்ணுதற்கரியன  நாடும்  பொய்கையும் , கண்மனங்  குளிர்ப்பன வாறுங்  காண்பதற் , கெண்ணமொன்றுளதெனக்  கிலங்கு  பூணினாய்”  “ஊற்றுநீர்க்  கூவலுள்  உறையும்  மீனனார் . வேற்று  நாட்டதன்  சுவை  விடுத்தன்  மேயினார்”  என்னும்  சீவகச்  சிந்தாமணிச்  செய்யுட்களை  நினைவுறுத்துகின்றது .)

     ஒருவனுக்கு  அரச  மன்றம்  புகுதலால் , அரசியற்  காரியம்  புரியும்  அமைச்சன்  முதலியோர்  எத்தகையர் ? நியாய  அநியாயங்கள்  எத்தகையன ?  பொய்கூறுவார்  யார்? உண்மை  மொழிவார்  யாவர்?  நியாய  நூன்முறை  உலகியல்களின்படி  நடைபெறும்  கடன் கோடல்  முதலிய  வழக்குகளின்  நிலைமைகள்  எத்தகையன ?  என்னும்  இன்னோரன்ன  ஆராய்ச்சியறிவு  உண்டாகும் .                               132-133

     பல  நூல்களின்  உண்மை  யாராய்ச்சிகளால்  அறங்களின்  உண்மையைக்  காண்டலும் , செருக்கின்மையும்  உண்டாவனவாம் . ஒரு  நூலை   மாத்திரம்  பயின்றவன் , காரியங்களின்  உண்மையைத்  துணிந்தறியான் .                                                                                             134

     பல  நூல்களை  யாராய்ந்தறிபவன் , மிக்க  உலகிய லுண்மைகளை யறியுந் திறனுடையனாவான். ஆதலின்  அறிவுடையான்  சோம்பலின்றி  எப்பொழுதும்  பலவகைப்பட்ட  நூல்களையும்  பயிலல்  வேண்டும் .                                                                                                           135

     விலைமகள் , ஒரு  மனிதனுடைய  பொருளைக்  கவர்ந்துகொண்டும்  அவன்  வயப்படமாட்டாள் . அங்ஙனந்  தான்  வயப்படாமலிருந்தும் , அம்மனிதனைத்  தன்  வயப்படுத்துவதில்  திறனுடையளாவள் , அதுபோல , ஒருவன்  தான்  யார்க்கும்  வயப்படாமல்  இவ்வுலகத்தைத்  தன்  வயமாம்  வண்ணஞ்  செய்தல்  வேண்டும் .                                       136

     புலவர்  பழக்கத்தால்  வேதம் , அறநூல் , புராணம்  முதலியவற்றின்  பொருளுணர்ச்சியும்  சிறந்த  மதி  நுட்பமும்  உண்டாம் .                       137

     ஒருவன் , கடவுளர்  பிதிரர்  விருந்தினர்  ஆகிய  இவர்க்கு  அன்னங்  கொடாமல்  ஒரு  பொழுதும்  தான்  உண்ணலாகாது . எவன்  அறியாமையால்  தன்பொருட்டு  அடிசில்  ஆக்குகின்றானோ  அவன்  பின்னர்  நரகத்திற்கு  ஆளாதற்  பொருட்டு   உயிர்  வாழ்பவனாவன். 138

( இக்கருத்து  “தமக்கென  றுலையேற்றார்”  என்னும்  நீதிச்  செய்யுளை  நினைவூட்டுவதாகும்.)

     தாய்  தந்தை  ஆசிரியன்  முதலிய  குரவர்களுக்கும் , வலியவர்க்கும் , நோயாளர்க்கும்  பிணஞ்  சுமந்து  வருவார்க்கும் , அரசர்க்கும் , பெரியார்க்கும் , தவஞ்  செய்வார்க்கும் , ஊர்தி  முதலியவற்றில்  ஏறி  வருவார்க்கும்  வழிவிட்டு  விலகல்  வேண்டும் .                                          139

     வண்டிக்கு  ஐந்து  முழ  தூரமும் , குதிரைக்குப்   பத்து  முழ  தூரமும் , யானைக்கு  நூறு  முழ  தூரமும் , எருதுக்குப்  பத்து  முழ  தூரமும்  விலகிச்செல்லல்  வேண்டும் .                                                                          140

     கொம்புகளையுடைய   எருது  முதலியன  , நகங்களையுடைய  புலி  முதலியன , வளைந்த  பற்களையுடைய  பன்றி  முதலியன,  வெள்ள மிக்க  ஆறு  முதலியன  ஆகிய  இவற்றின்  பக்கலிலும்,  தீயோர்பாலும்,  பெண்களிடத்தும்  நம்பிக்கை  வைத்தலாகாது .                                       141

     தின்றுகொண்டு  வழி  நடத்தலும் , சிரித்துக்கொண்டு  பேசுதலும் , சென்றதற் கிரங்கலும் , தான்  செய்த  காரியத்தை  வெளிப்படுத்திக்  கூறுதலுங்  கூடாவாம் .                                                                                      142

     தன்னால்  ஐயுறப்பட்டோன்  பக்கல்  இருத்தலையும் , இழிந்தவரிடத்து  வேலை  செய்தலையும்  ஒழித்து  விடல்  வேண்டும் . எவருடைய  பேச்சையும்  மறைந்து  கொண்டு  எப்பொழுதுங்  கேட்டலாகாது .                                                                                                  143

  பெரியோர்கள்  தன்னோடு  கலந்து  செய்ய  உடன்படாத  காரியத்தைத்  தானே  அவரோடு  கலந்து  செய்ய  விரும்பலாகாது ; என்னை? தேவர்கள்  ஏற்றுக்  கொள்ளாதிருப்பவும்  அவரோடு  கூடி  அமிர்தம்  உண்டமையால்  இராகுவின்  தலை  அறுக்கப்               பட்டதாகலின்                                                                                                    144                                                                                                                                          

     நல்லோரான்  மேற்கொள்ளப்படாததொரு  காரியத்தை  ஒரு  பெரியான் செய்வானாயின் , அவனுக்கு   அஃது  அணிகலனாகும்; என்னை?   பிறரெல்லோர்க்கும்  மரணத்தை  விளைவிக்கும்  நஞ்சு  சிவபிரானுக்கு  அணிசெய்து  திகழ்தலின் .                                                145

( மேற்கண்ட  இரு  சுலோகங்களாலும் முறையே  பெரியோர்  அனுமதியின்றி  இழிந்தவன்  ஒரு  காரியத்தைச்  செய்வானாயின் , அது  நல்லதாயினும் , அவனுக்குத்  தீங்கு  பயக்குமென்பதும் , செய்யத்  தகாததொன்றைப்  பெரியோன்  செய்வானாயின் அவனுக்கு  அஃது  அழகு  செய்யுமென்பதும்  புலப்படுதல் காண்க . )

     தவ  வன்மையால்  ஒளிமிக்க  பெரியான் , பாவமற்ற  நெருப்பைப்போல்  எல்லாவற்றையும்  அழிக்கும்  ஆற்றலுடையனாவான். குரு , அரசன் , சிறப்புமிக்கான்  ஆகிய  இவர்களின்  எதிரில்  நிற்றலாகாது .                                                            146

( தவ  வன்மையுடையார்  வெகுளி,  நெருப்பைப்  போல்  அழிக்கும்  ஆற்றலுடையதாகுமென்பது  கருத்து . “குணமென்னுங்  குன்றேறி  நின்றார்  வெகுளி  கணமேயுங்  காத்தலரிது”  என்னுந்  திருக்குறளிலும்  இக்கருத்து  வந்திருத்தல்  காண்க . அருத் தாபத்தியால்  அருளும்  ஆற்றலுமுடையனாவான்  என்பதும் , ஆற்றலுடையனாவான்  என்றமையால்  நேர்ந்தவிடத்தன்றி  எஞ்ஞான்றும்  அவன்  அவ்வழித்  தற்றொழிலை  மேற்கொள்ளுவானல்லன்  என்பதும்  போதரும் . )

     அரசன்  நமக்கு  நண்பனாவனென்று  கருதித்  தன்  மனம்  விரும்பியவாறு  காரியஞ்  செய்யலாகாது . அறிவிலார்க்குத்  தலைமைத்  தன்மையும்  அடிமைத்தன்மையும்  ஈதலும் , பெரியவர்களோடு  பகைத்தலும் , அற்ப  அறிவினால்  இறுமாந்திருப்பவனை  மகிழ்வித்தலும்  விரும்பத் தகாதனவாம் .   147

     அறிவுடையான்  தான்  செய்ய  நேர்ந்துள்ள  மிகவும்  இன்றியமையாத  காரியத்தையும் , அங்ஙனமல்லாத  காரியத்தையும்  முறையே  முன்னும்  பின்னும்  விரைந்துந்  தாழ்ந்துஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                                           148

(இன்றியமையாத  காரியத்தை  விரைந்து  முற்படச்செய்ய  வேண்டுமெனவும் , அங்ஙனமல்லாத  காரியத்தைத்  தாழ்த்துப்  பிற்படச்செய்ய வேண்டுமெனவும்  கூறியவாறாம் .)

     கெளதம  புத்திரரான  சதானந்தர் , செய்யத்தகாத  காரியமாகிய  தாய்க்கொலையில் , தந்தையின்  கட்டளை  பெற்றுங்  காலந்தாழ்த்தலை  மேற்கொண்டனர் . அக்காலத்  தாழ்வு  மிகவும்  பாராட்டப்படுவதாயிற்று.                                                                                149

( கெளதமர்  தம்  மனைவியாகிய  அகலியை  தேவேந்திரனோடு  காமவின்பந்துய்த்தமை  பற்றி  அவளைக்  கொன்றுவிடும்படி  தம்  புதல்வராகிய  சதானந்தர்க்குக்  கட்டளையிட்டனர் . அவர்  செய்யத்தகாத  அத்தாய்க்கொலையில்  மனங்கவன்று  காலந்தாழ்ந்தனர் . அதன்பின்  கெளதமர்  சினந்தணிந்து  கொலை  செய்விக்காது  சபித்தனர் . இச்செய்தியால்  அக்காரியத்தில்  காலந்தாழ்த்தல்  நன்மை  பயக்குமென்பது  போதரும் . )

3 . உலகத்தைத்  தன் வயப்படுத்தும்  வழி

     ஒருவன்  எப்பொழுதும்  அன்பினாலும் , அருகிருத்தலாலும் ,  புகழ்ந்து கூறுதலாலும் , வணக்கத்தாலும் , பணிசெய்தலாலும் , திறமையாலும் , இசை  முதலிய  பல்வகைக்  கலைகளாலும் , கதைகளாலும், ஞானோபதேசத்தாலும், ஆதரவாலும், நேர்மையாலும், வீரத்தாலும் , கொடையாலும் , கல்வியாலும் , இருக்கையினின் றெழுதலாலும் , எதிர்செல்லுதலாலும் , இன்பம்  விளைவிக்கும்  புன்முறுவலோடு  கூடிய  இன்சொற்களாலும்  , உதவி  புரிதலாலும்  நல்ல  உள்ளப்  பண்பாலும்  உலகத்து  மக்களைத்  தன்  வயப்படுத்துக்   கொள்ளல்  வேண்டும்.                                                                  150-151                                                                                                                                                                                                           

     பிறரை  வசீகரித்தற்குரிய  அன்பு  முதலிய  இவ்வுபாயங்கள் , தீயவர்பாற்  பயன்  செய்யாதனவாம் ; அறிவுடையான்  அத்தீயவர்  சேர்க்கையை  ஒழித்துவிடல் வேண்டும் . தான்  ஆற்றலுடையனாயின்  தண்டோபாயங்களாலும் , வஞ்சகவுருவமான  முற்கூறிய  அன்பு  முதலிய  உபாயங்களாலும்  அத்தீயோரை  வெல்லல்  வேண்டும் .      152

     வியாகரண முதலிய  ஆறு  அங்கங்களோடு  கூடிய  வேதம்  அற நூல்  புராணங்களையும்  , பல்வகைக்  கலைகளோடுங்  கூடிய  தநுவேத  முதலிய  உபவேதங்களையும்  இடையறாது  பயிலுதல்  மனிதர்க்கு  நலம்  பயப்பதாகும் .                                                                                           153

( பல்வகைக்  கலைகளாவன – ஓவியம் , சிற்பம்  முதலியன )

     மனிதர்க்கு  வேட்டையாடல் , சூதாடல் , பெண்புணர்ச்சி , கட்குடித்தல்  ஆகிய  இவை  எப்பொழுதும்  மேற்கொள்ளப்படுமாயின், துன்பம்  பயப்பனவாம் . ஆதலின் , இந்நான்கனையும்  என்றும்  மேற்கொள்ளாமல்  ஒரோவமயம்  பொருந்துமாற்றாற்   சிறிதளவு  மேற்கொள்ளலாம் .                                                                                           154

     எவன்மாட்டும்  வஞ்சகமாகப்  பேசுதலும் , எவனுக்கேனும்  வாழ்க்கைக்  கேடு  விளைத்தலுமாகா . பிறர்க்குப்  பொல்லாங்கு  செய்தலை  ஒரு  பொழுதும்  நெஞ்சத்தாலும்  நினைத்தலாகாது .      155

     ஒருவன் , தனக்கு  நிகழ்கால  எதிர்காலங்களில்  உறுதியான இன்பத்தை விளைவிப்பதும் , தான் இறந்தபின்  தனக்கு  விட்புல  வாழ்க்கையைத்  தருவதும் , நிலையான  நல்ல புகழை யுண்டாக்கு வதுமாகிய  காரியத்தைத்  தெரிந்து  செய்தல் வேண்டும் .                   156                                                                                                                                                                                                                                                                                                                                            

     கவலையுடையான் , உள்ளநோயாலும்  உடல்நோயாலும்  பற்றப்பட்டான் . சோரநாயகன் , கள்வன் , வலியவனோடு  பகைத்தவன் , காமுகன் , பொருளிற்  பேரவாவுடையான் , இழிந்த  துணைவனை  யுடையான் , உள்ளம்  வேறுபட்டொழுகும்  அமைச்சரையும்  நண்பரையும்  குடிகளையுமுடைய  இழிந்த  அரசன்  ஆகிய  இவர்களுக்கு  விழிப்பின்றி  உறக்கம்  நேராது . ஆதலின் , மனிதன்  இன்னோரன்ன  தீங்குகள் அணுகாவண்ணம் , நன்கு  ஆராய்ந்து  இன்பம்  நெடிது   நிலைக்குமாறு  துயிறற்குரிய  காரியத்தைச்  செய்தல்  வேண்டும் .                                                      157-158

     அரசனுடையனவும் , பிற  சான்றோருடையவும்  ஆகிய  வழக்க  ஒழுக்கங்களை  ஒத்து  நடித்துக்  காட்டலாகாது . ஒருவன்  பாம்பும் , புலியும் , கள்வரும்  எதிரே வருங்கால்  தடுத்தற்குத்  தனியே  செல்லலாகாது .                                                                                                    159

( ஒத்து  நடித்துக்  காட்டுதல் , பிறர்க்கு  நகைச்சுவை யுண்டாக்குதற்  பொருட்டாம் .)

     தன்னைக்  கொல்ல  விரும்புவோனாகவும் , ஆததாயியாகவும் இருப்பவன்  குருவாயினும்  அவனைக் கொன்றுவிடலாம் . கலகம்  நேர்ந்துழி  ஒரு  பக்கச்  சார்புடையனாதலாகாது . பலர்க்குத்  தலைவனாக  இருப்பவனைக்  காத்தல்  வேண்டும் .                                160

     தந்தை  தாய்  முதலிய  குரவர்கள் , அரசன்  இவர்கள்  முன்னர்  உயர்ந்த  இருக்கையில்  இருத்தலாகாது . அங்ஙனமே  இருக்கையிலேற்றிய  காலை  யுடையனாய் , அவர்தம்  சொற்களைத்  தருக்க  ஏதுக்களான்  மறுத்து  விகாரப்படுத்தலுமாகாது .                      161

     உயர்ந்த  மனிதன் , செயற்பாலனவற்றையும் , செய்தவற்றையும்  பற்றி  வெளிப்படுத்துக்  கூறமாட்டான் . இழிந்த  மனிதன் , செய்யத்தக்கன  இன்னவென்று  ஒருசிறிதும்  அறியான் ; செய்ததையே  அறிபவனாவன் .                                                                                                 162

4 . மகளிர்பால்  இயற்கையாக  நிகழும்  பிழைகள்

     ஒருவன்  தன்றாய் , மருகி , உடன்  பிறந்தாருடைய  மனைவியர்  , தன்னுடைய  மற்றொரு  மனைவி  ஆகிய  இவர்களைப்  பற்றித்  தன்  மனைவி  குற்றங்  கூறுவாளாயின் , அதனைத்  தான்  நேரிற்  கண்டாலன்றி  உண்மையென  எண்ணலாகாது .                                     163

     பொய்யுரை  மொழிதல் , ஆராயாது  வலிந்து  செய்தல் , வஞ்சகம் , அறிவின்மை , பேராசை , தூய்மையின்மை , இரக்கமின்மை, செருக்கு , ஆகிய  இவ்வெட்டும்  மகளிர்பால்  இயற்கையாக  உள்ள  பிழைகளாகும் .                                                                                                   164

     தன்  புதல்வனைப்  பதினாறு  யாண்டுகளின்  பின்னரும் , மகளைப்  பன்னிரண்டு  யாண்டுகளின்  பின்னரும்  அடித்தொறுத்தலாகாது . மருமகள்  முதலியோரைக்  கொடுஞ்  சொற்களாற்  றுன்புறுத்தலாகாது.                                                                                           165

     தெளகித்திரர்களையும் , தங்கை , தமக்கைமாருடைய  புதல்வர்களையும் , உடன்  பிறந்தாரையும்  தன்  புதல்வரினுஞ்  சிறப்பாகவும் , உடன்  பிறந்தார்  மனைவிமாரையும்  மருகியையுங்  தங்கை , தமக்கை  மாரையும்  தன்  புதல்வியினும்  சிறப்பாகவும்  காத்தல்  வேண்டும் .                                                                                           166

     ஒரு  தலைவன் , தன்  குடும்பத்தை  யோம்புதற் பொருட்டுப்  பொருள்  ஈட்டுதலிலும் , அதனைக்  காத்தலிலும் , இடையறாது  முயற்சியுடையனாயிருத்தல்  வேண்டும் . என்னை?  அத்தலைவன்  அல்லாத  மற்றையோர்  அப்பொருளைக்  கவருங்  கள்வரை  யொப்பாவராதலின் .                                                                                          167

     மகளிர்பாற்  பொய்மை , பகுத்தாராயாச்  செய்கை , அறிவின்மை, மிக்க  காமம்  ஆகிய  இவையுள்ளனவாதலின் , காமவின்பங் குறித்தன்றி  அம்மகளிரோடு  ஒரே  படுக்கையில்  துயிலலாகாது .     168

5 . மகட் கொடை முறை

     பொருள் , குலம் , ஒழுக்கம் , உருவம் , கல்வி , வலிமை , யாண்டு  ஆகிய  இவற்றின்  ஒப்பு நோக்கி   ஒருவனுக்கு  மகட்கொடுத்தல்  வேண்டும். அங்ஙனங்கொள்ளுவோன்  தலையாயோனாயின்  அவன்பால்  தனது  நட்புரிமையைச்  செய்தல்  வேண்டும் .            169

     ஒருவன்,  தன்  மகளை  மனைவியாக  விரும்பும்  மணவாளன்  இளமை , கல்வி , உருவம் , இவற்றை  யுடையனாயிருப்பின்  அவன்  வறியனாயினும்  அவனை  யழைத்து  மகட்கொடுத்தல் வேண்டும். உருவ  மாத்திரத்தாலும் , பருவ  மாத்திரத்தாலும் , பொருள்  மாத்திரத்தாலும்  பெண்  கொடுத்தலாகாது .                                       170

     முதலில்  குலத்தையும் , அதன்பின்  கல்வியையும் , அதன்பின்  பருவத்தையும் , அதன்பின்  ஒழுக்கத்தையும்,  அதன்பின்  பொருளையும்,  அதன்பின்  உருவத்தையும்,  அதன்பின்  இடத்தையும்  ஆராய்ந்தறிந்து  மணஞ்  செய்து  கொடுத்தல்  வேண்டும் .               171

     பெண்  உருவத்தை விரும்புவள் . தாய்  செல்வத்தையும் , தந்தை  கல்வியையும் , சுற்றத்தார்  குலத்தையும்  விரும்புவர் , மற்றையோர்  இனிய  அறுசுவைமிக்க  நல்ல   உணவை  விரும்புவர் .                      172

     தனக்கு  ஒத்த  இருடி  கோத்திரம்  இல்லாதவளும் , உடன்பிறந்த  ஆண்மக்களை  யுடையவளும் , நற்குலத்தி லுதித்தவளும் , தாய்  தந்தைவழிக்  குற்றமில்லாதவளும்  ஆகிய  பெண்மக்களை  இல்லறக்  கிழத்தியாக  அடைதல் வேண்டும் .                                                            173

6 . கல்வி  செல்வங்களை  யடையும்  வழி

     கணந்தோறுஞ்  சிறிது சிறிதாகக்  கல்வியையும், பொருளையும்  ஈட்டல்  வேண்டும். அங்ஙனங்  கல்வியையும்  பொருளையும்  ஈட்ட   விரும்புவோனால்  எப்பொழுதும்  அக்கணப் பொழுதும், அக்கல்வி  செல்வங்களின் சிற்றளவும் பொருட்படுத்தாமல் விடற்பாலனவல்ல. 174                                                                                       

( கல்வியையும்  செல்வத்தையும்  சிறிது  சிறிதாக  ஈட்டுதலில்  வெறுப்புறலாகாது  என்பது  கருத்து . )

     நல்ல   மனைவி,  மக்கள் , நண்பர்  ஆகிய  இவர்  பொருட்டும் , தானஞ்  செய்தற்  பொருட்டும் , இடையறாது  பொருளீட்டல்  நலமாகும் . இம்  மனைவி  மக்கள்  முதலியோர்  பொருட்டன்றிப்  பொருளாலும் , பணியாளர்களாலும் , வரக்கடவதாகிய  பயன்  யாதுளது?                    175

     எதிர்காலத்தில்  தனக்கு  வரக்கடவ  காரியங்களை  நிறைவேற்றுதற்குத்  தக்க  அளவு  பொருளை  முயன்று   காத்தல்  வேண்டும் . கல்வி  செல்வங்களை  யீட்டுங்கால் , “யான்  நூறு  யாண்டு  வாழ்ந்திருப்பேன் ; பொருட்  பெருக்கான்  மகிழ்ச்சி  யெய்துவேன் “  என்றிவ்வாறு  நினைவு  மேற்கொண்டு , இருபத்தைந்து  யாண்டு  வரையேனும் , அன்றி  அவ்வளவிற்  பாதியாகிய பன்னிரண்டரை  யாண்டுவரையேனும் , அவ்வளவிற்  பாதியாகிற  ஆறேகால்  யாண்டு  வரையேனும் , கல்வி  முதலியவற்றையும் , பொருளையும் , இடைவிடாது  ஈட்டித்  தொகுத்து  வைத்தல்  வேண்டும் .                  176-177

( ஒருவன்  கல்விச்  செல்வங்களை  ஈட்டுங்கால்  தன்  வாழ்நாள் நெடிதிருப்பதாகக்  கருதி  முயலவேண்டுமென்பதும் , அங்ஙனமின்றி  வாழ்நாளின்  குறுமை  கருதப்படுமாயின்  ஈட்டு  முயற்சி  தளர்ந்து  பயன்  செய்யாதென்பதுங்  கருதற்பாலன .)

     கல்விப்  பொருளொன்றே  எப்பொருளினு  மிகச்சிறந்ததாகும் , மற்றைப்பொருளெல்லாம்  அக்கல்வியை  மூலமாகக்  கொண்டு  உண்டாவனவாம் . அக்கல்விப்பொருள் , என்றுந்  தானத்தால்  வளர்ச்சி  யெய்துவதாகும் ; உடையார்க்குச்  சுமையுமாகாது ; பிறராற்  கவரப்படுவது மன்று .                                                                                      178

     ஒருவன்  நிறைந்த  பொருளுடையனா  யிருக்குங்காறும் , அவனை  யெல்லோருங்  கொண்டாடுவர் . பொருள்  ஒழிந்து  வறியனாயிருப்பின் நற்குணமுடையனாயினும் அவனை அவன் மனைவி, மக்கள் , முதலியோரும்  வெறுத்து  நீக்குவர் . இதனாற்  குடும்ப  வாழ்க்கைக்குப்  பொருளே இன்றியமையாச் சிறப்புடையதாகக் கருதப்படுவதாகும் . ஆதலின் மனிதரனைவரும் , உபாயங்களாலும் , துணிவுச் செயல்  களாலும்  அப்பொருளை  யடைவதற்கு  முயல  வேண்டும்.        179-180

     உயர்ந்த  குணமிக்க  மக்களும் , பொருளுடையாரது  வீட்டு  வாயிலில்  ஏவலாளரை  யொப்ப  நிற்கின்றனராதலின் , நல்ல  கல்வியினாலும் , உயர்ந்த  தொண்டுகளாலும் , வீரத்தாலும் , வட்டி  ஊதியத்தாலும் , வாணிகத்தாலும் , ஓவியம் , சிற்பம் , முதலிய  கலைகளாலும் , தானம்  பெறுதலாலும் , பிற  எத்தகைய  தொழில்களாலும்  நிறைந்த  பொருளை யுடையனாயிருக்கும்  வண்ணம்  முயன்றொழுகல்  வேண்டும் .                                            181-182

     பொருளுடையான்  குற்றங்களும்  குணங்களைப்  போலாகின்றன . பொருளில்லாதவன்  குணங்களுங்  குற்றங்களைப்  போலாகின்றன . ஆதலின் , பொருளற்ற  வறிய  மனிதன்  பிறரெல்லாராலும்  பழிக்கப்  படுவனாகின்றான் .                                                                                        183

     ஆற்றொணா  வறுமையை யடைந்தோருட்  சிலர்  மரணமெய்தினர்.  சிலர்  அயல்நாட்டை  யடைந்தனர் . வேறு  சிலர்  மலைக்கண்  எய்தினர் . மற்றுஞ்  சிலர்  தற்கொலையை  மேற்கொண்டனர் .           184

     பொருள் நிமித்தஞ்  சிலர்  அறிவு  மயக்க மெய்தினர் . வேறு  சிலர்  பகைவர்  வயப்பட்டனர் . மற்றுஞ்  சிலர்  பகைவரின்  ஏவலாளராயினர்

     ஒருவன் , தன்  பொருள்  இன்ன  இடத்தில்  இவ்வளவு  சேர்த்து  வைக்கப்பட்டிருக்கின்ற தென்பதைத்  தன்  மனைவி , மக்கள் , நண்பர்  ஆகிய  இவர்கள்  அறியாமலிருக்கும்  வண்ணம்  கடன்  கொடுத்து  எழுதிவாங்கும்  பத்திரங்களால்  அப்பொருளைப்  பேணிக்  காத்தல்  வேண்டும் .                                                                                                             186

( ஒருவனுக்குரிய  பொருள்  அவன்  மனைவி  முதலியோரால்  அறியப்படுமாயின்  அவர்   செலவிடக்  கருதுவராதலின்  அதனை  மேன்மேலும்   வளர்த்துக்  காத்தற்கியலாதென்பது  கருத்து . )

     கொடுக்கல்  வாங்கல்  செய்வோர்க்கு  எழுத்து  மூலமான  பத்திரங்களையன்றி  நினைவுறுத்துவது  வேறொன்று  மின்று . ஆதலின்  அப்  பத்திரமின்றி  அறிவுடையான்  ஒரு  பொழுதுங்  கொடுக்கல்  வாங்கல்  செய்தலாகாது .                                                       187

     ஒருவன் , தான்  திரட்டிச் சேர்த்த  பொருளை  உலோப  குணமில்லாதவன்பாலும் , பொருளாளன்பாலும் , வேந்தன்பாலும் , நம்பிக்கையுள்ளவன்பாலும் , பொறுமை  முதலிய  குணங்களாற்  சிறந்தவன்பாலும் , பத்திரமெழுதி  வாங்கிக்கொண்டு  வைத்துப்   போற்றல்  வெண்டும் .                                                                                       188

     ஒருவன்  மற்றொருவனுக்கு  நட்புரிமை  பற்றி  எப்பொழுதும்  வட்டியின்றி  யாசிதப் பொருள்  கொடுத்தல்  வேண்டும் . அந்  நண்பன்பால்  மிகுபொருள்  அங்ஙனம்  கொடுத்து  வைக்கப்பட்டிருக்குமாயின்  அவை  கேடில்லாதனவாம் .                      189

( யாசிதம் – இதனை  2-ஆம்  அத்தியாயம்  325 –ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     கடன்  கொள்ளுவோன்  வட்டியோடு  கொடுக்கல்  வாங்கல்  செய்தற்கு  ஆற்றலுடையனாதலை யறிந்து , எப்பொழுதும்  ஈடு குறித்தாதல்  பிணையினானாதல்  தக்க  சான்றுகளோடு  பத்திரம்  எழுதி  வாங்கிக்கொண்டு  , அப் பொருள்  மீண்டும்  வருங்கால் , எளிதாகவிருக்கும்  வண்ணம்  அளவின்  தகுதிநோக்கிப்  பொருள்  கொடுத்தல்  வேண்டும் . வட்டி  ஊதியத்தின்  பேராசையால் “எங்ஙனமாயினுமாக”  என்று  கருதிக்  கொடுத்தலாகாது . அங்ஙனங்  கொடுப்பின்  முதற்  பொருட்குக்  கேடுண்டாம் .                                190-191

 (ஈடு – பந்தகம் . இது  கொடுக்கப்படும்  கடன்  தொகைக்குத்  தகுதியான  நில  முதலிய  அடைமானமாகும் .)

      உண்டி  கொள்ளுங்காலும் , கடன்  கொடுத்தல்  முதலிய  வாணிகச்  செயல்களிலும்  நாணை  யொழித்த  மனிதன்  நலமுடையனாவான் . பொருளைக்கொடுத்தல்  நம்புரிமையை  உண்டாக்கும் . அது  கொடாமை  பகைமையை  உண்டாக்கும் .                                                192

( முதனூலிலுள்ள  “வியவஹாரம்”  என்ற  சொல்  கடன்  கொடுத்தல்  முதலிய  வாணிகச்செயல்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது ; உண்டியோடு  உடனெண்ணப்பட்டமையால்  சிற்றின்ப  நுகர்ச்சி  எனவும்  பொருள்  கொள்ளலாம். )

     மனிதன்  தன்னுள்ளத்தில்  வள்ளன்மையையும் , வெளியில்  ஈகையின்மையையும்  மேற்கொண்டு , உரிய   காலத்திற்  றகுதியான  செலவைச்  செய்தல்  வேண்டும் . உரியதல்லாத  காலமும் , தகுதியின்மையும்  நேர்ந்துழிச்  செலவிடலாகாது .                                  193

     மனிதன்  தன்  நன்மனைவி , புதல்வர் , நட்பாளர் ,ஆகிய  இவர்களைத்  தன்னாலியன்றவாறு   பொருள்  முதலியவற்றார்  காத்தல்  வேண்டும் . தன்  உடல்  அழியின்  அது  மீண்டும்  வாராமையானும் , தான்  உயிரோடு  கூடியிருப்பின்  பலவகை  நலங்களைக்  கண்டு  இன்புறக்  கூடுமாதலானும் , மனைவி  முதலியோர்  மீண்டும்  மீண்டும்   பெறற்பாலராதலானும்  அவ்வெல்லோரானுந்  தான்  காக்கப்படல்  வேண்டும் .                          194

7 . தந்தைவழிப்  பொருளைக்  கூறுசெய்யுமுறை

     நலத்தை  விரும்பும்  தந்தை , மனைவிமாரோடு  கூடி , வாழ்க்கையை  நடத்தும்  ஆற்றல்  வாய்ந்த  புதல்வர்களுக்கு , விரைந்து  தன்  பொருளைக்  கூறிட்டுக்  கொடுத்து , அவரைப்  பிரித்து  வைத்தல்  வேண்டும் .                                                                                        195

     மனைவிமாரோடு  கூடி  வாழ்க்கையை  நடத்துந்  திறன்  வாய்ந்த  தமையன்  தம்பிமார் , ஒரு  வயிற்றிற்  பிறந்தவராயினும், அவர்  தம்முட்  பிரிந்து  வாழ்தல்  நன்று . இன்றேற்  பெரும்பாலும்  அப்பிரிவின்மை   கேடு  விளைவிப்பதாகும் .                                            196                                                                      

( பிரிந்து  வாழ்தல்  –  தந்தைவழிப்பொருளை  முறைப்படி  கூறு  செய்து  கொண்டு  தனித்தனியே  குடும்ப  வாழ்க்கை  நடாத்தல் . இன்றேற்  கலகம்  விளையுமென்பது  கருத்து . )

     ஒரு  மனிதனுடைய  மனைவியர்  இருவர்  ஓரிடத்திற்  கூடி  இரார் . பொலி  எருதுகள்  இரண்டு  ஓரிடத்தில்   கூடி  இரா . அங்ஙனமாயின்  பெண்கள்  பலர்  தம்முட்  கூடி  வாழ்தலும் , எருதுகள்  பல  தம்முட்  கூடியிருத்தலும்  எங்ஙனம்  கூடும் ?                                                             197

இச் சுலோகப்பொருள், இதன்  முன்னுள்ள  சுலோகப்  பொருட்கு  ஏதுவாய்  நின்று  அப் பொருளை  வலியுறுத்தல்  காண்க.  இச்சுலோகத்தின் பிற்பாதிக்கு  “பசுக்கள்  பல  ஓரிடத்திற்  கூடிவாழும் ; மனிதர்  இருவர்  அங்ஙனம்  வாழ  ஒருப்படார்”  என்று  பொருள்  கோடலும்  பொருந்தும் . ) 

          ஒரு  குடும்பத்தலைவன் , வட்டி  ஊதியங்  கருதிப்  பிறர்பாற்  கடனாகக்  கொடுத்து  வைத்த  பொருளையும் , அங்ஙனமே  பிறர்பாற்  கடனாகக்  கொண்ட  பொருளையும்,  அவன்  புதல்வர்  கூறிட்டுக்  கொள்ளலாகாது .                                                                                                198

     ஒருவன் , எவனோடு  சிறந்த  நட்புரிமையைப்  பெற  விரும்புகின்றானோ  அவனுடைய  பொருளைப்  பெற  அவாவுதலும் , அவனது  மறைவிடத்தில்  அவன்  அறியாமற்  செல்லுதலும் , அவன்  மனைவியோடு  தனிமையில்  உரையாடுதலுங்  கூடாவாம் .  [அங்ஙனஞ்  செய்யின்   நட்புக்  கெடுமென்பது  கருத்து. ] இன்னும்  அவன்பாற்  குறையேறிட்டுக்  காண்டலும் , அவனுக்கு  எதிர்மறை யாகப்  பேசுதலும், அவன்  காரியத்திற்குத்  துணை  செய்யாமையும்  அவனுக்குத்  தீங்கு  நேர்ந்துழிப்  புறக்கணித்தலுமாகாவாம் .      199-200

     ஒருவன் , தன்  நண்பன்பால்  வட்டியுடனாதல் , அஃதில்லாமலாதல் , கடன்  வாங்கிய  பொருளைத்  திரும்பிக்  கொடுக்குங்கால் , இருவருடைய  நட்புரிமைக்குங்  கேடு  பயவாவண்ணஞ்  சான்றுகள்  இல்லாமலும் , கடன்  பத்திரத்தின்  பின்புறத்தில்  எழுதாமலும் , கடன்  கொண்டு  கொடுப்பதுபோல்  இல்லாமலும்  எளிதிற்   கொடுத்துவிடல்  வேண்டும் .                                                                                                      201-202

( உண்மையாக  ஆராய்ந்து  செய்த  நட்புரிமையுடையார்  தம்முட்  கடன்  கொண்டு  கொடுக்குங்கால் , சான்று  முதலியன  இல்லாமல்  நம்பிக்கை  மேற்கொண்டு  ஒழுகவேண்டுமென்பதும் , இன்றேல்  அந்  நட்புரிமைக்கு  இழுக்குண்டாமென்பதும்  தோன்றுதல்  காண்க .)

     தன்  குணங்களாலும் , தந்தை  தாயாரின்  குணங்களாலும்  பெருமையுடையவன்  உத்தமோத்தமனாவான் . தன் குணங்களான் மாத்திரம் பெருமையுடையான் தலையாவான். தன்  தந்தை  குணங்களான  மாத்திரம்  பெருமையுடையான்  இடையாவான் . தாய்  குணங்களான்  மாத்திரம்  பெருமையுடையான்  கடையாவான் . உடன்  பிறந்தாரின்  குணங்களான்  மாத்திரம்  பெருமையுடையான்  கடையிற்  கடையாவான் . தன்  மகள் , மனைவி , உடன் பிறந்த  பெண்மக்கள் , ஆகிய  இவர்களாற்  பெருமையுடைய  மனிதன்  மிக  இழிந்தவனாகக்  கருதப்படுவான் .                                                       203-204

8 . கொடை மாட்சி

     அறிவுடையான் , பொருள்  மிகவுடையனாய்த்  தன்னாற்  காக்கப்  படுங்  குழுவை  நன்கு  காத்தல்  வேண்டும் . பிறர்க்குச்  சிறிதேனும்  ஈயாமல்  ஒரு  நாளையேனும்  வறிதாகக்  கழித்தலாகாது .              205

     “யான்  கூற்றுவன்  வாயில்  இருக்கின்றேன் ; என்  வாழ்நாள்  ஒரு  கணமேனும்  நிலையுறுதல்  உடைத்தன்று ; தானம்  தருமம் இவை  களையன்றி  மறுமையில்  எனக்குத்  துணையாவன  பிறவில்லை; இவ்  வுலகம்  கொடைக்குணம்  வாய்ந்தோரைப்  பற்றி நிலைபெறுவதாகும். அக்குணம்  இல்லாத  தீயோரைப்  பற்றி  நிலைபெறுவதன்று “  என்றிவ்வாறு  எண்ணித்  தான்  விரும்பியவாறு  ஒல்லும்  வகையால்  தான  தருமங்களை  நன்கு  செய்தல்  வேண்டும் .                              206-207

     கொடையாற்  பகைவரும்  நண்பராவரெனின்  மற்றையோரைப்  பற்றிக்  கூறவேண்டுவதேன் ?                                                                        208

     கடவுளர்க்கும் , வேள்விக்கும் , அந்தணர்க்கும் , பசுவோம்பற்கும்  கொடுக்கப்படும்  பொருள்  மறுமையின்பம்  பயப்பதாகும் . அது [சம்வித்தத்தம்] அறிவுடைக் கொடையென்று  கூறப்படும் .                    209

     வந்தியர் , மாகதர்  மல்லர்  முதலியோர்க்கும் , ஆடல்  பாடல்களுக்கும்  கொடுக்கப்படும்  பொருள் [பாரிதோஷிகம்] பரிசிற்  கொடையாகும் . புகழ்ப்பயன்  கருதிக்  கொடுக்கப்படும்  பொருள் [சிரீதத்தம்] செல்வக்  கொடையென்று  கூறப்படும் .                                210

( வத்தியர் – புகழ்வோர். மாகதர் – இருந்தேத்துவர் . மல்லர் – மற்போருஞற்றுவோர் .)

     நண்பர் , சம்பந்திமார் , உறவினர் , ஆகிய  இவர்களிடத்தும், விவாக  முதலிய  காரியங்களிலும் , ஆன்றோராசாரப்படி  உபாயனமாகக்  கொடுக்கப்படும்  பொருள் [லஜ்ஜா தத்தம்] நாண் கொடை யென்று கூறப்படும் .                                                                                                           211

(உபாயனம் – பெரியோரைக்  காணும்பொழுதும்  நற்காரியங்களிலும்  மகிழ்ச்சியுண்டாதற்பொருட்டுக்  கொடுக்கப்படும்  உபகாரப்பொருள் . இதனைச்  சேதுபுராணம்- சேதுப்படலம் 90-ஆம்  செய்யுளிற்  காண்க .)

     அரசனுக்கும் , வலியவர்க்கும் , காரியம்  நிறைவேறுதற்பொருட்டு  அக்காரியத்திற்குக்  கேடு  விளைப்போர்க்கும்  கொடுக்கப்படும்  பொருளும் , கொடாதிருப்பிற்  பாவம்  நேரிடுமென்னும்  அச்சங் காரணமாகக்  கொடுக்கப்படும்  பொருளும்  [பய தத்தம்] அச்சக்கொடை  என்று  கூறப்படும் .                                                              212

     மக்களுக்குத்  துன்பம்  விளைவிக்குந்  தீய  விலங்குகளுக்கும்  பிறர்  மனைவியரைப்  புணர்தற்பொருட்டுங்  கொடுக்கப்படும்  பொருளும் , சூது  முதலியவற்றால்  இழந்த  பொருளும் , கற்வராற்  கவரப்பட்ட  பொருளும் [பாப தத்தம்] தீவினைக்கொடை யென்று கூறப்படும். 213

     எத்தெய்வத்தை  வழிபடுகின்றானோ  அத்தெய்வத்தை  மற்றைத்  தெய்வங்களிலும்  மிகச்  சிறந்ததாகப்  பாராட்டிக்  கூறல்  வேண்டும் . அத்தெய்வத்திற்குக்  குறை  கருதலாகாது . அத்தெய்வத்தின்  பொருட்டு  மகிழ்ச்சியோடு  வணக்கஞ்  செய்தல்   வேண்டும் .          214

     கொடை , நேர்மை ஆகிய  இவ்விரண்டுமன்றிப்  பிறரைத்  தன்வயப்படுத்தும்  உபாயம்  மற்றொன்று  இந்நிலவுலகத்தில்  இன்று . இதனாலன்றே , கொடையாற்  குறைந்தவனும் , மீண்டும்  மீண்டும்  வளர்ச்சி  யெய்தும்  இயல்பினனுமாகிய  திங்களஞ்  செல்வன் , கோட்ட முடையோனாயினும்  நலமுடையவனாகவே  கருதப்படுகின்றான் . 215

( கொடையாற்  குறைதல் – தேவர்கள்  தன்  கலைகளை  உண்ணக்கொடுத்தலாற்  குறைதல் . கோட்டம் – வளைவு .) 

      நட்பினையாதல் , பகையினையாதல்  ஆராய்ந்து   தெளிந்துகொள்ளல்  வேண்டும் . அங்ஙனங்  கொண்டபின்  பிறழ்தலும்  நட்டோர்க்குத்  தீங்கு  செய்தலும் , பகைவர்க்கு  உதவி  செய்தலுங்  கூடாவாம் . அங்ஙனஞ்  செய்யின்  அவ்விருதிறத்தாருந்  துன்பம்  விளைவிப்பவராவர் .                                                                                          216

     மிக்க  வன்கண்மை , மிக்க  வஞ்சகம் , மிக்க  எளிமை , மிகைபடப்  பேசல், ஒரு  காரியத்தின்  மிகுபற்று , கடுஞ்சினம்  ஆகிய   இவற்றை  மேற்கொள்ளலாகாது .                                                                                      217

     எல்லாம்  அளவின்  மிகுதல்  அழிவிற்குக்  காரணமாகும் , ஆதலின் , எவற்றினும்  மிகையாதலை  யொழித்துவிடல்  வேண்டும் . மனிதர்  மிக்க  வன் கண்மை  கண்டுழி  நடுக்கமெய்துவர் ; தகுதி  நோக்கியும்  பொருளைச்  செலவிடாது  திரட்டி  வைக்கும்  விருப்பங்கண்டுழி  மிகவும்  பழித்துரைப்பர் .                                                                                 218

     மிக்க  எளிமை  கண்டுழிப்  பொருட்படுத்தெண்ணார் . மிகைபடப்  பேசுதலான்  மானக்கேடும் , மிக்க  கொடையால்  வறுமையும் , மிக்க  உலோபத்தால்  இகழ்ச்சியும்  உண்டாவனவாம் .                                      219

     கடுஞ்சினத்தான்  மனிதர்க்கு  அறிவின்மை  யுண்டாம் . ஆசார மின்மையால்  அறத்திற்குக்  கேடும் , அளவின்மிக்க  ஆசாரத்தால்  மூர்க்கத்தன்மையும்  உண்டாவனவாம் .                                                      220

( மூர்க்கத்தன்மை – அறிவின்மை .)

     அறிவுமிக்க  மனிதன் , “யானே  எல்லோரினும்  மேம்பட்டவன்”  என்றும் , “யானே  எல்லோரினுஞ்  சிறந்த  அறிவுள்ளவன் “  என்றும் , “அறத்தின்  உண்மை  இதுதான் “  என்றுங்  கருதலாகாது .                221

( பல்வகை  அறப்பகுதிகளை  யாராய்ந்து  அவற்றுள்  ஒன்று  மற்றொன்றோடு  முரணாமல்  இயைத்து  உண்மை  துணிதல்  மிக  அரிதாகலின் , அறிவுடையோன்  அறத்தின்  உண்மை  இதுதான்  என்று  ஆராய்ச்சியின்றி  எளிதில்  துணிந்துவிடலாகாதென்பது  கருத்து . )

     கடல்  நீரில்  வாழும்  திமி  எனப்  பெயரிய  பெரிய  மீனை   விழுங்குவது  திமிங்கிலமாகும் ; அத்  திமிங்கிலத்தையும்  விழுங்கும்  திமிங்கிலகில  மென்னும்  மீனும்  உள்ளது ; அதனையும்  விழுங்கும்  இராகவம் எனப் பெயரிய ஒரு பிராணியு முள்ளது. அதனையும் விழுங்கும் மற்றொரு  பெரிய  பிராணியும்  இருக்கின்றது  என்னு மிவ்வுண்மையை  யுணர்ந்து  எப்பொழுதும்  நினைவுகூர்தல்  வேண்டும் .                                                                                                        222

( இதனால் , ஒருவன்  எவ்வெத்துறைகளிற்  சிறந்துளானாயினும்  அவ்வத்துறைகளில்  தன்னினுஞ்  சிறந்தார்  இருப்பரென்னும்  உண்மையையுணர்ந்து  அடங்கி  நடத்தல்  வேண்டும்  என்பது  புலப்படும் .)

     ஒருவன்  கடவுளர்க்கும் , பசுக்களுக்கும் , அந்தணர்களுக்குந்  தலைவனாயிருக்குந்  தன்மையை  விரும்பலாகாது . அங்ஙனம்  விரும்புவானாயின் , அஃது  அவன்  குலமுழுதுங்  கெடுத்து  மிக்க  துன்பம்  விளைவிப்பதாகும் .                                                                           223

( பசுக்களுக்குத்  தலைவனாயிருக்குந்  தன்மையை  விரும்பலாகாதென்றது , பசுவின்   உடம்பு  முழுதிலும்  தேவர்கள்  வாழ்கின்றனரென்று  முதுநூல்  கூறுகின்றமையால் , அப்பசுவை  வைத்திருப்போன்  அதனை   வேண்டுவன  உதவிக்காத்து , அதன்  பயனைப்  பெற  வேண்டுமேயன்றித்  தனக்கு  அடிமைப்பட்டதாகக்  கருதித்  தான்   நினைத்தவாறெல்லாம்  வருத்தலாகாதென்பது  பற்றியாம் .)

     அக்கடவுளர்  முதலியோர்பால்  முறையே  எப்பொழுதும்  பத்தி  பூண்டொழுகல் , பூசித்தல் , பணிவிடை  செய்தல்  ஆகிய  இவற்றை  விரும்பல்  வேண்டும் . எவர்மாட்டு  எத்தகைய  பிரமதேசசு  நிலை  பெற்றிருக்கின்ற தென்பது  அறியக்கூடாததொன்றாகும் .                   224

( கடவுளர்பால்  பத்தி  செய்தலும் , பசுக்களைப்  பூசித்தலும் , அந்தணர்க்குப்  பணிவிடை  செய்தலும்  வேண்டுமென்பதாம் . அறியக்கூடாததொன்றென்பது  , ஆராய்ந்தறிந்து  செய்தலின்  அருமையையும் , ஆராய்ச்சியின்றியே  இவ்வொழுக்கங்களை  மேற்கொள்ள வேண்டுமென்பதையும் , அங்ஙன  மேற்கொள்ளின்  அத்  தேசசு  யாண்டேனும்  ஓரிடத்திலிருந்து  நலஞ்   செய்தல்  கூடுமென்பதையும்  புலப்படுத்தி  நிற்பதாம் . )

     இளம்  பெண்ணையும் , பொருளையும் , சுவடியையும் , பிறர்  ஆட்சியில்  வைத்தலாகாது . அங்ஙனம்  வைக்கப்பட்டுத்  தெய்வவயத்தான்  மீண்டெய்துங்கால்  முறையே  இளம்  பெண்  கற்பிழந்தும் , பொருள்  கேடுற்றும் , சுவடி  கசக்குண்டும்  வரும் . 225

     அறிவுடையான்  சிறு  காரணத்தை  முன்னிட்டுப்  பெரும்  பொருளைச்  செலவிடலாகாது . ஒரு  பொழுதும்  அபிமானத்தாற்  பெரும்பொருளை  செலவிட்டுச்  சிறிய  காரியத்தை  நிறைவேற்ற  முயலலாகாது .                                                                                                226

(ஒத்ததன்மை-முறையே  நன்மையாகவும் , தீமையாகவும்  கொள்ளப்பட்டமையாலாகிய  வேற்றுமையின்மை )

     பெரும்பொருள்  செலவாகிவிடுமென்னும்  அச்சத்தால்  நல்ல  புகழை  எப்பொழுதும்  இழந்துவிடலாகாது . படைவீரர்  தகாத  சொற்களைக்  கூறின் , அது  குறித்துப்  பொறாமை  மேற்கொண்டு அவர்மாட்டுச்  சினங்  கொள்ளலாகாது .                                                 227

     அறிவுடையான் , தன்  நண்பனுக்கு  நாண்  விளைப்பதும் , வேறுபாடுண்டாகுவதும் , மனத்தைத்  துன்புறுத்துவதும்  ஆகிய  சொல்லை  விளையாட்டு  நிமித்தமாகவும்  ஒரு  சிறிதும்  கூறலாகாது .

     எவன்பால்  நன்மொழியும் , தீ மொழியும்  , பயனின்றி  ஒத்ததன்மை  யெய்துவனவோ , அவன்பால்  அறிவுடையான்  செவிடனிடத்து  இசை  பாடுவோனைப்  போல  ஒன்றும்  பேசலாகாது .                                       229

     தன்  நண்பன்  கள்  காம  முதலிய  தீய  ஒழுக்கங்களிற்  றலைப்படின் , அவனை  அவற்றினின்றுந்  தன்னாலியன்றவரை  இதங்கூறி  மீட்டல்  வேண்டும் . அங்ஙனம்  மீட்க  முயன்றிலனேல்  அவனை  அறிவுடையார்  இரக்கமற்றவனென்று  எண்ணுவர் .             230

     உடன்பிறந்தார்  முதலிய  சுற்றத்தினர் , தம்முண்  மன  வேற்றுமை  யடைந்திருக்குங்கால் , அவர்தம்  நண்பர்  எவ்வாற்றாலும்  ஒருதலைச்  சார்பின்றி  நடுநிலையை  மேற்கொள்ளல்  வேண்டும் . இன்றேல்  அவரை யறிவுடையார்  நட்புரிமையுடையவராக  மதியார் .                 231                    

     மக்கண்மனம் , தன்பாலழுந்திய  கடுஞ்  சொல்லாகிய  அம்பின்  கூறிய  நுனியைப்  பிடுங்கியெடுக்கும்  ஆற்றலுடையதன்றாதலின்,  பிறந்த  நாட்டொட்டுப்  பயிலப்பட்டதும் , கொடையினாலும் , பிற  சிறப்புக்களாலும்  காக்கப்பட்டதும் , ஆகிய  நட்புரிமையை  யுடையார், கடுஞ்சொற்  கூறுதலான் , அப்பொழுதே  அந்நிலை  மாறிப்  பகைமை  யெய்துவர் .                                                                                                          232

( தன்பால் – மனத்தின்பால் .)

     ஒருவன் , தன்னாற்றலினும்  மேம்பட்ட  ஆற்றலுடையவனாகத்  தன்  பகைவன்  இருக்குங்காறும்  அவனைத் தன் றோளினாற்  றாங்கல்  வேண்டும் . அப்பகைவன்  ஆற்றற்கு  அழிவு  நேரக்கண்டவிடத்துக்  கல்லிற்  குடத்தை  மோதித்  தகர்த்தல்போல்  அப்பொழுதே  அவனைத்  தொலைத்துவிடல்  வேண்டும் .                                                                      233

9 . குணஞ்  செயல்களின்  நன்மை  தீமைகள்

     ஒருவனுக்கு  நன்மக்கட்டன்மையாகிய  குணமே  சிறந்த  அணிகலனாகும் . மற்றை  அணிகலன்களும் , அரசியலும் ஆண்மையும் , கல்வியும் , பொருளும்  அத்துணைச்  சிறந்த  அணிகலன்களாகா .                                                                                          234

( நன்மக்கட்டன்மை – இதனை “ஸெளஜந்யம்”  என்று  முதனூல்  கூறும் .)

     குதிரைக்கு  விரைந்து  செல்லுதலும் , எருதுக்குச்  சுமை  தாங்கலும் , பசுக்களுக்கு  மிக்க  பால்வளமும் , இரத்தினத்திற்கு  ஒளியும் , அரசர்க்குப்  பொறுமையும் , விலைமகட்குக்  காமக்குறிப்பும்   அதனைப்  புலப்படுத்தும்  இன்பச்செயலும் , இசை  பாடுவார்க்கு  இனிய  குரலும் , பொருளுடையார்க்குக்  கொடைக்குணமும் , போர்  வீரர்க்குப்  பராக்கிரமும் , தவஞ்செய்வார்க்குப்  பொறி  யடக்கமும் , புலவர்க்குச்  சொல்லாற்றலும் , அவைக்களத்  திருப்போர்க்கு  ஓராங்  கூறாமையும் , சான்று  கூறுவார்க்கு  உண்மை  யுரைத்தலும் , ஏவலாளர்க்குத்  தம்  தலைவன்பாற்  சிறப்பன்பும் , அமைச்சர்க்கு  நலந்தரு  சொற்  கூறலும் , அறிவிலார்க்கு  வாய்வாளாதிருத்தலும் , பெண்களுக்குக்  கற்புடைமையும்  சிறந்த  அணிகலன்களாம் . இங்குக்கூறிய  குதிரை  முதலிய வற்றிற்கும்  அரசன்  முதலியோர்க்குங்  கூறப்பட்ட  குணஞ் செயல்கள்  மாறுபட்டிருப்பின் , அவை  அவற்றிற்கும்  அவர்க்கும்  நலனழிக்கும்  பெரிய  விகாரப்  பணிகளாகும் .                                                                                            235-238

     ஒரு  தலைவனுடைய  இல்லம் , பல  குடும்பங்களாலும் , விளக்குகளாலும் , பசுக்களாலும் , அழகிய  குழந்தைகளாலும்  எப்பொழுதும்  விளக்க  முறுவதாகும்  . பல  தலைவர்களையுடைய  இல்லம்  அங்ஙனம்  விளங்குவதின்று .                                                       239

     ஆற்றலுடையான்  பொல்லாங்கு  புரியும்  உயிர்களைப்  பொருட்படுத்தாமலிருத்தலாகாது . அவ்வுயிர்களைக்  கண்ட  அக்கணத்தே  கொன்றுவிடல்  வேண்டும் .                                                 240

     பிற  நற்குணங்களெல்லாம்  நிரம்பிய  ஒருவனிடத்துக்  குறளை  கூறல் , கொடுந்தன்மை , கனவு , அழுக்காறு , மிக்க  உலோபத்தன்மை , பொய்மை , காரியக்கேடு  விளைவிக்குந்  தன்மை , சோம்பல்  ஆகிய  இவற்றுள்  ஒன்றிருப்பினும்  அஃது  அவன்  நற்குணங்களனைத்தையும்  மறைத்துத்  தானே  முன்னின்று  மிக்க   தீங்கை  விளைவிக்கும் .      241

     ஒருவன்  பாலப்பருவத்தில்  தாயை  இழத்தலும் , காளைப்பருவத்தில்  காதலியை  இழத்தலும் , முதுமைப்பருவத்தில்  புதல்வரையும்  பொருளையு  மிழத்தலும்  அவனுடைய  பெரிய  தீவினைப்  பயன்களாம் .                                                                                   242

( பாலப்பருவம்  காளைப்பருவம்  முதுமைப்பருவங்களில்,  முறையே  தாயையும், மனைவியையும் , புதல்வரையும் , பொருளையும்  இழத்தலால் , வளர்க்கப்படுதலும்  இன்ப  நுகர்ச்சியும்  உற்றிடத்துதவலும்  இல்லாமல்  கவர்ச்சி  யெய்தநேருமாதலின் , அவை  பெரிய  தீவினைப்  பயன்களாம்  என்றார் . )

     பொருளுடையார்க்குப்  புதல்வர்ப்  பேறின்மையும் , வறியவர்க்கு  அறிவில்லாத்  தன்மையும் , பெண்களுக்கு  ஆடவர்  அலியாயிருத்தலும் விரும்பிய  பொருள்  கைகூடாமையும்  நலஞ்  செய்வன வல்லவாம் . 243

     ஒருவனுக்குத்  தன்  புதல்வன்  அறிவிலனாகவிருத்தல் , புதல்வி  அறிவிலளாகவிருத்தல் , மனைவி  மிக்க  சினமுடையவளாகவிருத்தல் , வறுமை , இழிந்தோரிடத்துப்  பணிசெய்தல் , என்றுங்  கடனாளியாயிருத்தல்  ஆகிய  இவ்வாறும்  நலந்தருவனவல்லவாம் . 244

     பிறர்க்குக்  கல்வி  பயிற்றுதலிலும் , தான்  கல்வி  பயிலுதலிலும் , தேவர்களிடத்தும் , குரவர்பாலும் , அந்தணரிடத்தும் , ஓவியஞ்  சிற்பம்  முதலிய  கலைகண்மாட்டும் , இசையின்   கண்ணும் , பணி செய்தலிலும் , காவிய  முதலியவற்றினும்  எவன்  மனம் இன்புறு தலில்லையோ  அவன்  துறவியாக , அன்றிக்  கயவனாக , அன்றி  மனித  வுருவந்  தாங்கிய  விலங்காக  இருத்தல்  வேண்டும்.         245-246

( குரவர் ஈண்டுத் துறவியை  நோக்க  ஞானாசிரியனல்லாத  வித்தியாகுரு , கிரியாகுரு , தந்தை , தாய்  முதலியோராவர் . துறவியின் மனம்  கல்வியி லின்புறாமையை  “கற்றாரை  யான்  வேண்டேன்  கற்பனவு  மினியமையும் “  “கல்வியென்னும்  பல்கடற்பிழைத்தும்”  என்னுந்  திருவாக்குக்களானறிக . அவர்  மனம்  தேவர்களிடத்து  இன்புறாமை – இந்திரன்  முதலிய  இறையவர்  பதங்களை  விரும்பாமை . அந்தணர்,  ஈண்டு  வருணத்தைக்  குறிப்பதாகும் . அவரிடத்தின்புறாமை – பற்றறத்   துறந்தார்க்கு  வருண  வேறுபாடு  பற்றிய  உணர்வின்மையானாம் . தவம் , ஈண்டு  அணிமா  முதலிய  எண்வகைச்  சித்திகளையும்  அளிக்கவல்லது . அதன்கண்  மனம்  இன்புறாமை  முற்றத்  துறந்தார்க்கு  இயல்பாகும் . )

     பிறர்  ஆக்கங்கண்டு  பொறாமையும் , பிறரிடத்துப்  புரைவழி  காண்டலும் , பிறர்   பழி  தூற்றலும் , பிறர்க்கின்னா  செய்யுங்  குணமும் , மலர்ந்த  முகமும் , இருண்ட  அகமும்  உடையவன்  கயவனென்று  கூறப்படுவான் .                                                         247                                                                                              

     பிரமாண்டத்திற்  றோன்றியுள்ள  எல்லாப்பொருள்களும்  பேரவாமிக்க  ஒருவனது  விருப்பத்தை   நிறைவிக்கச்  சிறிதும்  போதியன  வாகாவாம் .                                                                             248

     அவா  மிக்குடையான்  செய்யத்தகாத  காரியத்தைச்  செய்வான் ; பிறரையும்  அத்தகாத  காரியத்தைச்  செய்யும்படி  போதிப்பான் ; அத்தகாத  செயலை  நோக்கி  மகிழ்ச்சியும்  அடைவான் .               249

     படிற்றொழுக்க முடையார்  எப்பொழுதும்  பிறர்க்கு  உபதேசிக்குங்கால்  மிகவும்  நல்லவராக  இருப்பர் . பின்னர்  அவர்கள்  தம்பொருட்டு  நேர்ந்துழிச்  செய்யத் தகாத  காரியங்களெல்லாவற்றையும்  தானே  துணிந்து  செய்வர் .            250

( படிறு – வஞ்சகம் .)

     தந்தை  தாயார்  ஆணைவழி  நிற்பவனும் , அவர்க்குப்  பணிவிடை  செய்வதிற்  சோம்பலில்லாதவனும் , அவரை  நிழல்போற்  பிரியாது  எப்பொழுதும்  பின்றொடர்ந்து  செல்பவனும் , பொருள்  வருவாயில்  முயல்பவனும் , எல்லாக்  கலைகளிலுந்  திறமை  வாய்ந்தவனும்  ஆகிய  புதல்வன் , அவ்விரு  முதுகுரவர்க்குப்  பெரிதும்  இன்பஞ்  செய்பவனாவன் . இங்குக்  கூறியவற்றின்  மாறுபட்ட  தீய  குணங்களையும் , பொருட்கு  அழிவு  செய்தலையும்  உடைய  புதல்வன்  தந்தை  தாயார்க்கு  என்றுந்  துன்பஞ் செய்பவனாவன் .             251-252

     கணவன்பால்  எப்பொழுதும்  உண்மைக் காதலையும் , வீட்டுக்  காரியங்களில்  திறமையையும் , புதல்வரைப்  பெறுதலையும் , சிறந்த  கற்பொழுக்கத்தையும் , நல்ல  யெளவனத்தையும்  உடைய  பெண்  தன்  தலைவனுக்கு  இன்பஞ்  செய்பவளாவள் .                                      253

     தன்  மக்களைப்  போற்றி  வளர்ப்பவளும் , அம்மக்கள்  செய்யுங்  குற்றங்களைப்  பொறுத்துக் கொள்பவளும்  ஆகிய  தாய்  எப்பொழுதும்  மக்களை  இன்புறுத்துபவளாவள் . இவற்றின்  மாறுபட்ட  குணங்களையுடைய  கற்பொழுக்கிறந்த  தாய் , தன்  மக்களுக்கு  எப்பொழுதும்  மிக்க  துன்பந்  தருபவளாவள் .                                         254

     புதல்வனுடைய  கல்வி  வளர்ச்சியின்  பொருட்டும் , அவன்  வாழ்க்கையின்  பொருட்டும்  முயற்சியை  மேற்கொள்ளுபவனும் , எப்பொழுதும்  புதல்வனை  நல்லன  கூறி  நன்னெறிப்படுத்துபவனும் , கடன்  எச்சமில்லாதவனும்  ஆகிய  தந்தை  புதல்வனுக்கு  இன்பஞ்  செய்பவனாவன் .                                                                                                255

     எப்பொழுதுந்  துணை  செய்தல் , எவன்மாட்டும்  மாறுபடப்  பேசாமை , உண்மையானவும்  நலம்பயப்பனவுமாகிய  சொற்களைக்  கூறுதல்  ஆகிய  இவற்றை யுடையோனே , நட்புரிமையை  யெய்துபவனும் , அதனைப்  பிறர்க்குக்  கொடுப்பவனும் , அதனைப்  பிறர்பானின்றும்  பெறுபவனும்  ஆவன் .                                                    256

     கீழ்மக்களோடு  நெருங்கிப்  பழகுதலும் , பிறர்  இல்லத்திற்கு  எப்பொழுதுஞ்   செல்லுதலும் , சாதியிலுங்  குழுவிலும்  மாறுபட  ஒழுகுதலும்  வறுமையையும்  மானக்கேட்டையும்  விளைவிப்பனவாம் .

( சாதியில்  மாறுபட  ஒழுகல் – அவ்வச்சாதிகளில்  விதித்த  நியமங்களில்  தப்புதல் . குழுவில்  மாறுபட  ஒழுகல் – இன்ன  இன்ன  நியமங்களின்படி  ஒழுகல்  வேண்டுமென்று  தீர்மானித்த  கூட்டத்தில்  இசைந்து  சேர்ந்த  ஒருவன்  இடைக்கண்  அந்  நியமம்  தவறி  நடத்தல் . )

     வேந்தனையடுத்துப்  பணிசெய்தல்  பற்றிப்  பிறரை  மதியாது செருக்குறுதல்  நலம்  விளைப்பதன்று . அங்ஙனமே  புலி , நெருப்பு பாம்பு , மற்றைத்துன்பம்  விளைவிக்கும்  உயிர்கள்  ஆகிய  இவற்றோடு  நெருங்கிப்  பழகுதலும் நலந்தருவதன்றாம் . அரசன்  எவற்குத்தான்  நட்பாளனாவன் ?   புலி  முதலியனவும்  எவற்கு  நட்புரிமையுடையனவாம்? [அரசனும்  ஒருவன்  வயப்படான் ; புலி  முதலியனவும்  ஒருவன்  வயப்படா  என்றபடி.]                                            258

நட்டோர்  தம்முள்  மனவருத்தம்  நேர்தலும் , எப்பொழுதும்  பகைவர்க்கு  மேம்பாடுறுதலும் , புலவர்  மாட்டு  வறுமையும் , வறுமைக்காலத்துப்  புதல்வர்  பலரைப்  பெறுதலும் , பொருளுடையார்  குணமுடையார்  மருத்துவர்  அரசன்  இவர்களில்லாத  நீர்வளமற்ற  இடத்தில்  என்றும்  வாழ்தலும் , தாய்  தந்தையர்க்குப்  பெண்  மகவு  ஒன்றே  பிறத்தலும் , இறத்தலும்  துன்பந்  தருவனவாம் .                 259-260

( அரசன்  என்பது  ஈண்டு  அரசனையும் , அரசியற்றொழில்  புரியும்  மற்றை  அதிகாரிகளையும் , அரசாட்சியையும்  புலப்படுத்துவதாகும் .)

     தலைவன் , தான்  சிறந்த  அழகும் , நிறைந்த  பொருளும்  , புலமையும் , மிக்க  வலிமையும்  உடையனாயினும்  பெண்கள்  விரும்பியவண்ணம்  தன்  காதற்  கிழமையைப்  புலப்படுத்திலனேல் , அவன்  அப்பெண்களுக்கு   இன்பம்  விளைவிப்பவனாகான் .               261

     தலைவன் , பெண்கள்  விரும்பியவாறு  தன்  காதற்  கிழமையைப்  புலப்படுத்தியொழுகுவானாயின் , மடித்தல்  முதலியவற்றிற்   றாங்குதலாலும் , சீராட்டலாலும்  குழந்தைகள்  ஒருவனுக்கு  வயப்படுதல்  போல்  அவனுக்கு  அப் பெண்கள்  வயப்படுவர் .             262

     அறிவுமிக்க  மனிதன் , ஒரு  காரியத்தைச்  செய்யுங்கால்  அதற்குத்  துணையாக  வேண்டுவனவற்றையும் , அதற்குரிய  செலவையும் , அதனாலுண்டாகும்  பயனையும்  நன்கு  துணிந்து  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் . அங்ஙனமாராயாது  ஒரு  சிறு  காரியத்தையும்  ஒரு  பொழுதுஞ்  செய்தலாகாது .                                                                  263

     அறிவுடையான் , மிகுந்த  செலவிற்  குறைந்த  ஊதியந்   தரத்தக்க  காரியத்தைச்  செய்தற்கு  விரும்பலாகாது . முயற்சியுடையார்  குறைந்த  செலவில்  மிகுந்த  ஊதியந்  தரத்தக்க  காரியத்தைச்  செய்தல்  வேண்டும் . எப்பொழுதும்  விலைப்  பண்டங்களின்  அளவினையும்  விலையையும்  உண்மையாக  விசாரித்தறிதல் வேண்டும் .                                                                                                         264

     ஒருவன்  தவஞ்செய்தலிலும் , தன்  மனைவியின்பால்  இன்பம்  நுகர்தலிலும் , உழவுத்தொழில்  செய்வதிலும் , ஆலய  வழிபாடு  முதலிய  பணிகளிலும் , உணவு  செய்வதிலும் , மற்றை  நுகர் பொருள்களிலும்  தனக்குப்  பிரதிநிதியாக  மற்றொருவனை  நியமனஞ்  செய்தல்  தக்கதன்று . இவையல்லாத  பிற  காரியங்களில்  அப் பிரதிநிதி  நியமனம்  எப்பொழுதும்  பொருந்துவதாகும் .    265                   

     இனிய  உணவை  உண்ண  விரும்புவோனும். மறைந்தொழுகுங்  காமுகனும் , கள்வனும் , எப்பொழுதும்  மக்கள்  வழங்குதலில்லாத  இடத்தை  விரும்புவர் . வலிமை  மிக்க  பகைவரை  யுடையான்  துணையையும் , விலைமகள்  பொருண்மிக்காரின்  நட்புரிமையையும், இழிந்த  அரசன்  வஞ்சகத்தையும் , இழிந்த  ஏவலாளன்  தலைவன்  பொருளையும் , அறிவுடையான்  உண்மைப் பொருளையும் , தேவர்கள்  வழிபட்டுச்  சீவிப்போன்  இடம்பம் , தவம் , நெருப்பு  , ஆகிய  இவற்றையும்  விரும்புவர் .                                                                        266-267

 ( தேவர்களை  வழிபட்டுச்  சீவிப்போன் – வேள்வி  முதலியன   செய்வித்துப்  பொருள்  பெறுவோன் . ) 

     கற்புடையவள்  தன்  கணவனையும் , அஃதில்லாதவள்  சோர  நாயகனையும் , நோய்  கோட்பட்டான்  மருத்துவனையும் , விலைப் பண்டமுடையான்  விலையளவின்  மிகுதியையும் , இரப்பவன்  வள்ளன்மை யுடையானையும் , அச்சமுடையான்  காப்பவனையும் , தீயவன்  பிழைநெறியையும்  விரும்பித்  தேடுவர் .                                   268

     அறிவிலான் , கொடுந்தன்மையையும் , கலகத்தையும் , மிகுதுயிலையும் , களிப்பு  மயக்கந்  தரும்  பொருளை  உண்ணுதலையுமுடையனாய் , வீண்  செயலையும் , தன்  விருப்பத்திற்குக்  கேடு  விளைக்குங்  காரியத்தையுஞ்  செய்வான் . 269

10 . நல்லொழுக்க  மிக்க  அந்தணர்  பெருமை

     அரசரைப்பற்றிய  மாணொளி  தமோகுணத்தை  மிகுதியாக வுடையது . அந்தணரைப்  பற்றிய  மாணொளி  சத்துவகுணத்தை  மிகுதியாக வுடையது . இவரை யல்லாத  மற்றையோரைப்  பற்றி  நிற்கும்  மாணொளி  இராசதகுணத்தை  மிகுதியாக வுடையது . இம்மூவகை  மாணொளிகளுள்  சத்துவ  குணத்தை  மிகுதியாக வுடையதே  சிறந்ததாகும் .                                                                          270

( மாணொளி – தேசசு.)

     அந்தணன்  தனக்குரிய  ஒழுக்கங்களால்  மற்றை  எல்லோரினுஞ்  சிறந்தவனாவான் . அவ்வந்தணனது  மாணொளியிற்  சிறிது  குறைந்த  மாணொளிகள்  அரசர்  முதலியோரிடத்து  உள்ளனவாம் .              271

     அந்தணனொருவன்  தன்  கடமையிற்  பிறழாதொழுகுதலைக்   கண்டுழி  அரசர்  முதலிய  பிறரெல்லோரும்  அச்சமெய்துவர். அவ்வந்தணன்  பிறப்பொழுக்கங்  குன்றுவானாயின்  பிறர்  அங்ஙனம்  அஞ்சுவாரல்லர்  . ஆதலின் , அந்தணன்  தன்  ஒழுக்கத்தை  நன்கு  போற்றல்  வேண்டும் .                                                                                   272

11 . தொழில்களின்  தலைமை  முதலியவைகள்

          வாழ்க்கைக்குரிய  தொழில்களுள் , யாது  ஒருவன்  கடமைக்குக்  கேடு  விளைக்காததோ  அதுவே  சிறந்ததாகும் . தன்   குடும்பத்தை  எல்லா  வழியாலுங்  காத்தற்கு  எவ்விடம்  தகுதி  வாய்ந்துள்ளதோ  அவ்விடமே  சிறந்ததாகும் .                                                                           273

     ஆற்றுநீரைத்  தாயகமாகவுடைய  உழவுத்  தொழிலே  தலையாய  தொழிலாகக்  கருதப்படும். பண்டமாற்று  முதலிய  வாணிகத்  தொழில்  இடையாயதாம் . பிறர்  ஏவின்  செய்யுஞ்  சூத்திரர்  தொழில்  கடையாயதாம் .                                                                                              274                                                                           

     இரத்தற்றொழில்  கடையிற்  கடையாயதாம் . துறவொழுக்கமுடை யார்க்கு  அவ்  விரத்தற்றொழில்   தலையாயதாக  எண்ணப்படும் . ஒரோவமயம்  அறநெறி  யொழுகும்  அரசன்பால்  அவன்  ஏவின்  செய்தலும்  தலையாய  தொழிலாம் .                                                          275

     வேள்வித்தொழில்  செய்யும்  அத்துவரியு முதலியோராக  இருந்து  அவ்வேள்வி  வினைகளைச்  செய்து  அதன்கட்  பெறும்  வேதனம்  எங்ஙனம்  பெரும்  பொருளாகும் ? வாணிகத்தான்  ஈட்டும்  பொருளும்  பெரும்  பொருளாதற்குப்   போதியதாக  எங்ஙனம்  ஆகும் .                  276

( அத்துவரியு – வேள்வி  வினை  இயற்றுவோருள்  ஒருவன் . )

     இராசசேவை  யின்றி  மிகுபொருள்  உண்டாகாது . இராச  சேவையும்  செவ்விதிற்  செய்தல்  மிக  அரியதாகும் . அஃது  அறிவின்றிறம்  வாய்ந்தவர்களுக்கன்றி  மற்றையோர்க்குச்  செய்ய  இயலாததாகும் . அவ்விராச சேவை  வாளின்  கூர்மை  போல்வது ; ஆதலின் , அறிவிலாரால்  எப்பொழுதுஞ்  செய்தற்கு  இயலாததொன்றாம் .        277

12 . அறிவின்  மாட்சி

     பாம்பு  பிடிப்பவன்  பாம்பை  மந்திரவன்மையால்  தன் வயப்படுத்துதல்  போல் , அமைச்சனும்  மந்திரவன்மையால்  அரசனைத்  தன்  வயப்படுத்துவான் . அறிவுடையார்  அரசன்பாற்  பெரிதும்  அஞ்சி  யொழுகல்  வேண்டும் .                                                   278

( மந்திரவன்மைகளுட்  பின்னது  சூழ்ச்சித்திறன் .)

     அறிவுடையார்பால்  அந்தணர்  மாணொளியும் , அரசன்பால்  அரசர்  மாணொளியும்  உள்ளனவாம் . அறிவுடையான்  சேய்மைக்கண்  இருந்தும்  எப்பொழுதும்  அணிமையிலேயே   இருப்பவனாவான் . அவன்  தன்னறிவாகிய  கயிறுகளால்  அரசனைப்  பிணித்து  ஈர்த்தலும் ஆட்டுவித்தலுஞ்  செய்வான் . துணை  செய்யும்  விதம்  இன்னதென்றுணராத  அறிவிலான்  அணிமையிலிருந்துஞ்  சேய்மைக்கண்  இருப்பவனாவான் .                                                     279-280

( அறிவுடையார்  எவ்  வருணத்தவராயினும்  அவர்பாற்  பிரமதேசசு  நிலைபெறுமெனவும் , வேந்தன்  எவ்வருணத்தவனாயினும்  அவன்பால்  க்ஷத்திரிய  தேசசு  நிலைபெறுமெனவுங்  கொள்க . அரசனுக்குச்  சேய்மைக்கண்  எனவும்  அரசனுக்கு  அணிமையில்  எனவுமியைக்க .)

     வேதாநுவாக  படனப் பயிற்சியான  மழுங்கிய  அறிவு  மற்றை  உலகில்  வழக்குக்களில்  திறனுடையதாகாது . ஆதலின்  எவ்வறிவு  வேத நுவாக படனப் பயிற்சியான்  மழுக்க  மெய்தியுள்ளதோ  அவ்வறிவு  யாண்டுஞ்  செல்லாதென்பது  போதரும் .                       281                                               

( அநுவகம் – வேதத்திலுள்ள  சிறு  பிரிவுகள் . வேதாத்தியயனம் மாத்திரம்  உள்ளார்  உலகியலை  நன்கு  அறியாரென்பதாம் .)

     ஒருவனுக்கு  முதலில்  வறுமையும்  பின்னர்ச்  செல்வமும்  நேர்தலும்,  அங்ஙனமே  முதலிற்  கால்நடையிற்  செல்லவும் , பின்னர்  ஊர்திகளிலிவர்ந்து  செல்லவும்  நேர்தலும்  சிறப்புடன்  இன்பந்தருவனவாம் . இங்குக்கூறியவற்றின்  மாறாக  முதலிற்  செல்வமும்   ஊர்தியிற்  செலவும்  நேர்தலும் , பின்னர்  வறுமையும்  கால்நடைச்  செலவும்  சேர்தலும்  துன்பம்  பயப்பனவாம் .                  282

     ஒருவன் , பிறந்தவுடன்  இறந்துபோம்  புதல்வரைப்  பெறுதலினும்  எப்பொழுதும்  புதல்வர்  பேறில்லாதவனாதலும் , பொல்லாத  ஊர்திகளில்  ஏறிச்  செல்லுதலினும்  கால்நடையிற்  செல்லுதலும் , ஒருவனோடு  பகை  கொள்ளுதலிலும்  நடுநிலை  மேற்கொள்ளுதலும்  சிறந்தனவாம் .                                                                                                 283

     ஒருவன் , தான்  நடந்து  செல்லுதற்பொருட்டு  எல்லா  இடத்தையும்   துணி  முதலியவற்றான்  மறைப்பதினும் , செருப்பினால்  தன்  கால்களைக்  காத்தல்  சிறந்ததாகும் . சிற்றறிவாற்  செருக்குறுதலினும்  அறிவின்றியிருத்தல்  சிறந்ததாகக்   கருதப்படும் .                              284                            

     பிறரில்லத்தின்  வாழ்தனினுங்,  காட்டில்  வாழ்தல்  சிறந்ததாகும் . பொல்லாத  மனைவியோடு  கூடி    இல்லறத்தில்  வாழ்தலினும்  துறவு  மேற்கொள்ளுதல் , அன்றி  இறந்துவிடுதல்  சிறந்தனவாம் .                285

     நாய்களின்  புணர்ச்சியும் , கடன்  வாங்குதலும் , கருப்பமுண்டாக் கலும் , ஒரு  காரியத்திற் றலைமை  ஏற்றலும் , கயவரோடு  நட்புக்கொள்ளலும் , நலமில்லுணவும்  தொடக்கத்திலின்பத்தையும்  இறுதியிற்  றுன்பத்தையுஞ்  செய்வனவாம் .                                              286

     இழிந்த  அமைச்சரால்  அரசனும் , இழிந்த  மருத்துவரால்  நோயாளியும் , இழிந்த  அரசாற்  குடிமக்களும் , இழிந்த  அறிவால்  அஃதுடையானும்  எப்பொழுதும்  குறைவெய்துவர் . இழிந்த  புதல்வனால்  அவன்  பிறந்த  குலமுங்  குறைவெய்தும் .                        287

     யானை , குதிரை, எருது , கிளி என்னுமிவை  தம்மைப்பயிற்றுவோன்  குணங்களைப்பற்றி  நிற்பனவாம் . அங்ஙனமே  பாலரும்  பெண்களும்  தம்மைப்  பயிற்றுவோரின்  குணங்களைப்  பற்றி  நிற்பர் .                   288

     அமய  மறிந்து  பேசுதலால்  வெற்றியுண்டாம் . அழகிய  ஆடைகளாற்  காண்டன்  மாத்திரத்தில்  அழகுண்டாம் . கல்வியால்  அவைக்களத்திற்  பெருமை யுண்டாம் . ஒருவன்  அதிகாரியாயிருக்குமளவில்  இம்மூன்று முண்டாம் .                               289

     இல்லறவாழ்க்கை யுடையார்க்கு  நல்ல  மனைவியும், நன்மக்களும் , சிறந்த  கல்வியும் , சிறந்த  பொருளும் , நண்பரும் , நல்ல  பணிசெய்வானும் , பணிப்பெண்ணும் , நோய்  முதலியன  இல்லாத  உடலும் , அழகிய  இல்லமும் , நல்ல  அரசனும்   வாய்த்தல்  அவர்  நலத்திற்குரியதாம் . இங்குக்கூறப்பட்ட  மனைவி  முதலியோரும் , கல்வி  முதலியனவும்  மாறுபட்டிருப்பின்  அஃது   அவர்க்குக்  கேடு  விளைவிப்பதாகும் .                                                                                           290

     யாண்டு  முதிர்ச்சியும் , நற்குணங்களும் , நம்பிக்கையும் , நல்லொழுக்கமும்  வாய்ந்த  பெண்களையாதல் , ஆண்மக்களையாதல்  அலிகளையாதல்  உவளகத்திலிருக்கும்  வண்ணம்  நியமனஞ்  செய்தல்   வேண்டும் . இளமைமிக்க  ஆண்மகன் , தனக்குரிய  நண்பனாயினும்  அவனை  அங்ஙனம்  உவளகத்திலிருக்க  நியமனஞ்  செய்தலாகாது .                                                                                               291

( உவளகம் – அந்தப்புரம் . ) 

     இன்ன  காலத்தில்  இன்னது  செய்வதென்று  காலத்தை  வரையறைப்படுத்திக்  காரியம்  புரிதல்  வேண்டும் . அங்ஙனம்  காலவரையறை  செய்யாமல்  ஒன்றுஞ்  செய்தலாகாது . பசு  முதலியவைகளைத்  தன்னைப்போல்  ஓம்புதல்  வேண்டும் . மனிதன்  அறம்  பொருளீட்டுதற்குத்  தன்னையும் , உண்டியமைத்தற்குத்  தாயையும் , தன்னை   நன்னெறியிற்  பயிற்றுதற்கு  ஆசிரியனையும்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                  292

( அறம் பொருளீட்டுவதற்குத்  தன்னை  நியமனஞ்  செய்தலாவது – – தன் மனத்தை அவ்வறம் பொருளீட்டத்தில் விருப்பமுறச் செய்தல். )

     மனிதன் , நியமமின்றித்  தன்  மகளிர்  உறையும்  உவளகத்திற்கு  அடுத்தடுத்துச்  செல்லல்  வேண்டும் .                                                        293

( அடுத்தடுத்து   உவளகத்திற்  செல்லவேண்டுமென்பது – அங்கு  உறையும்  மகளிர்  கற்பொழுக்கம்  மாசுபடாமைப்  பொருட்டும் , அம்மகளிர்  மன  ஒற்றுமையோடு  கூடியிறுத்தற்  பொருட்டுமாம் .)

     மனிதர்க்கு  அயலிடஞ்  செல்லுங்கால் , புதல்வரை யில்லாத  மனைவியும் , சிறந்த  ஊர்தியும் , சுமை  தாங்குவோனும் , நல்ல  காவலாளும் , பிறர்  துன்பங்களை  நீக்குதற்குரிய  கல்வியும் , சோம்பலில்லாத  பணியாளும்  வாய்த்தல்  எப்பொழுதும்  நலந்தருவதாகும் .                                                                                             294

    ஒருவன்,  ஆற்றலுடையனாயினும்  அவன்  ஒருபொழுதும்  மக்கள்  வழங்கும்  வழியில்  தடை  செய்து  இருத்தலாகாது . நல்ல  ஊர்தியாயினும்  அதன்கண்  ஏறி  அரசன்  கடைத்  தெருவிற்  செல்லலாகாது .                                                                                                   295

( அரசன்  கடைத்தெருவிற்  செல்லின்  வாணிகம்  புரிவோர்க்கு  எழுந்து  உபசரித்தல்  முதலியவற்றால்  வாணிகத்திற்கு  இடையூறு  நேருமென்பது  கருத்து . பொல்லாத  வூர்தியிற்  செல்லின் , அதுவே  வழிக்கண்  வரும்  மக்களுக்குத்   துன்பம்  விளைக்குமாதலின் , “நல்ல வூர்தியாயினும்”  என்றார் . )

     வழிச்செல்வோன்  எப்பொழுதுந்  துணையோடு  செல்லல் வேண்டும் துணையின்றிப்போதல்  கூடாது . அவன்  தங்குங்கால்  அணிமையில்  நல்ல  வழியையும் , நீர்வளத்தையும் , அச்சமின்மையையும்  உடைய  கிராமத்தில்  இருத்தல்  வேண்டும் . அத்தகைய தல்லாத  வழியிலும் , காட்டிலுந்  தங்கியிருந்து  இளைப்பாறுதல்  கூடாது .                               296

     மிகுநடை , உணவின்மை , மிக்க  பெண்  புணர்ச்சி , மிக்க  வேலை செய்து  அலுத்தல்  ஆகிய  இவை  எல்லோர்க்கும்  விரைந்து  பெருங்  கிழத்  தன்மையை  உண்டாக்குவனவாம் .                                           297-298

     பல்வகைக்  கல்விகளிலும் , ஒவியம் , சிற்பம்  முதலிய  பல்வகைக்  கலைகளிலும்  மிகப்பயின்று  இளைத்தலும்  கிழத்  தன்மையை உண்டாக்குவதாம் .                                                                                            299

     எவன்  உலகத்தவரின்  தீய  குணங்களை  நற்குணங்களாக  ஏறிட்டுப்  பாராட்டுகின்றானோ , அவன்  மக்கள்  அன்பிற்குரியனாவன்.  எவன்  குணமிகுதியைப்  புகழ்ந்து  பாராட்டுகின்றானோ  அவன்  எங்ஙனம்  உலகத்தவர்க்கு  நண்பனாகாமல்  இருப்பான்?                                                                         300

     ஒருவனது  உண்மையான  தீய  குணத்தை  எடுத்துச்  சொல்லுபவன்  அவனுக்கு  அன்பனாயினும்  அவனால்  வெறுக்கப்படுபவனாவன் . அங்ஙனமாயின் , ஒருவனது  நற்குணத்தைத்  தீய  குணமாக  ஏறிட்டுத்  தூற்றுவோன்  எங்ஙனம்  அவன்  அன்பிற் குரியனாவன்? [சிறிதும்  ஆகான்  என்றபடி.]                                                                                               301

     கடவுளரும்  குணம்  பாராட்டலால்  விரைந்து  ஒருவன் வயமாவர் . அங்ஙனமாயின் , மக்களைப்  பற்றிக்  கூறவேண்டியதென்?  எவனும் ஒருவன்  முன்னிலையில்  அவன்  தீய  குணங்களை  எடுத்துக் கூற மாட்டான் . ஆதலின் , ஒருவன் தன்பாலுள்ள தீய குணங்களை உலகிய லாலும் , நூலுணர்ச்சியாலும்  தானே  ஆராய்ந்தறியக்  கடவன்.   302-303                                                                                                                                                                                                           

     தன்  தீயகுணங்களைப்  பிறர்  சொல்லக்கேட்ட  அளவில்  மகிழ்ச்சியடைதலையும்  அதுபற்றிச்  சினங் கொள்ளாமையையும் , தன்  பிழைகளை  நன்றாக  அறிந்துகொள்வதில்  முயற்சியையும் , பிறர்வாய்க்  கேட்டவுடன்  அப்பிழைகளை  ஒழித்தலையும் , எப்பொழுதும்  தன்  குணங்களைப்  பிறர்  சொல்லக்கேட்ட  அளவில்  செருக்குறாமற்  சமநிலை  எய்துதலையும் , “யானே  தீய  குணங்களுக்கெல்லாம்  உறைவிடமாவேன்; என்மாட்டு  எங்ஙனம்  நற்குணங்கள்  நிலைபெறும்?  என்பாலே  அறியாமைக்  குணமுளதாம்“  என்றிவ்வாறு  எண்ணுதலையுமுடையான் , எல்லோரினும்  உயர்ந்தோனாவான் . அவனே  பெரியான்  . தேவர்களும்  அவன்  கலைகளின்  ஒரு  சிறு  கூற்றையும்  எய்துவாரல்லர் .                     304-306

     நல்லோர்க்குச்  செய்யும்  உதவி  சிறிதெனினும்  என்றும்  பெரியதாகும் . தீயோன்  தனக்குப்  பிறர்  செய்த  உதவி  பெரிதெனினும்  அதனைக்  கடுகளவினுஞ்  சிறியதாக  எண்ணுவான் .

( இச்சுலோகத்தின்  முற்பகுதி , “தினைத்துணை  நன்றி  செயினும்  பனைத்  துணையாக் கொள்வர் பயன்றெரிவார்”  என்னுந்  திருக்குறட்  கருத்தை  ஒத்திருத்தல் காண்க.)

     நல்லோன்  பொறுமையுடையானை  ஆற்றலுடையவனாக  எண்ணுவான் . தீயோன்  அவனை  ஆற்றலில்லாதவனாக எண்ணுவான்.  ஆதலின் , நல்லோன்  கூறுங்  கடுஞ்சொற்களையும்  பொறுத்தல்  நன்றாம் . தீயோன்  கூறுங்  கடுஞ்சொற்களை  அங்ஙனம்  பொறுத்துக்  கொள்ளலாகாது .                                                                                             308  

( நல்லோனும்  தீயோனும்  தாம்  கூறும்  கடுஞ்சொற்களைப்  பொறுத்தல்  பற்றி, ஒருவனை  முறையே  ஆற்றலில்லாதவனாகவும்  ஆற்றலுடையவனாகவும்  எண்ணார்  என்பது  கருத்து. )                                                                                     

     எவரோடுங்  கலகம்  விளைக்கத்தக்க  விளையாடல்களைச்  செய்தலாகாது . ஒருவனை  நோக்கி “நின்  மனைவி  கற்பில்லாதவள்”   என்று  விளையாட்டிலுங்  கூறலாகாது .                                                     309

     எவர்மாட்டும்  நட்புரிமை  பற்றியும்  கடுஞ்சொற்கள்  கூறத்தகாதனவாம் . உண்மை  நண்பன்பால்  இரகசியச்  செய்தியையும்  மறைத்தலாகாது . அந்  நண்பனது  இரகசியச்  செய்தியைச்  சிறிதும்  வெளிப்படுத்தலுங்  கூடாது .                              310

     நட்டோனொருவன்  பின்னர்ப்  பகைவனாயினும் , முன்னர்  நண்பனாயிருக்குங் காலத்தில்  அவனாற்  சொல்லப்பட்டனவும் , அன்றி  அவன்பால்  தன்னாலறியப்பட்டனவும்  ஆகிய  பொல்லாங்குகளை  ஒருபொழுதும்  எவ்வாற்றானும்  வெளிப்படுத்திக்  கூறலாகாது .                                                                                                        311

     ஒருவன்  தற்காப்புச்   செய்து  கொண்டு  பகைவரோடு  எதிர்க்க  முயலல்  வேண்டும் . அங்ஙனமே  எதிர்வினையுஞ்  செய்தல்  வேண்டும்.                                                                                                            312

( எதிர்வினை – ஒருவன்  செய்த  காரியத்திற்கு  மாறாகச்  செய்யப்படும் செயல்.)

     வலியவருடைய  மாறுபட்ட  ஒழுக்கம்  உண்மையாயினும்  அதனைக்கூறலாகாது . ஒரோவமயம்  அது  காணப்பட்டதாயினும்  காணாதவன்போலவும் , கேட்கப்பட்டதாயினும்  கேளாதவன்  போலவும்  இருத்தல்  வேண்டும் .                                                                    313

( இச்சுலோகத்தின்  முற்பகுதிக்கு “மிக்க  விபரீதச்  செயலொன்று  நிகழ்ந்தது  உண்மையாயினும்  அதனைக்  கூறலாகாது “  என்று  பொருள்  கோடலும்  பொருந்தும் .)

     மனிதன்  தனக்குக்  கேடுநேர்ந்த  காலத்தில்  ஊமனாகவும் , குருடனாகவும் , செவிடனாகவும், முடவனாகவும்  இருத்தல்  வேண்டும் . இன்றேல்  உலகியலினின்றும்  விலக்குண்டவனாவான் ; துன்பமெய்துவான் .                                                                                         314

( இதனால்  ஒருவன் , தனக்குக்  கேடு  நேர்ந்துழிப்  பிறரைப்  பற்றி  மிகுதியாகப்  பேசுதலும் , அத்தகைய  சொற்களைக்  கேட்டலும் , பிறரைக்  காண்டலும் , பிறவிடங்கட்குச்  செல்லுதலுங்  கூடாவென்பதும் , அங்ஙனம்  பேசுதன்   முதலியவற்றை  மேற்கொள்ளின்  உலகத்தவரால்  இழிக்கப்பட்டுத்  துன்புறுவன்  என்பதும்  புலப்படுதல்  காண்க .)

     அறிவின்  முதிர்ந்த  பெரியார்க்கு  மாறுபடாத  சொற்களைக்  கூறல்  வேண்டும் . எப்பொழுதும்  சிறார்களையொப்பப்  பேசுதலாகாது . பிறர்  இல்லத்துட்  புகுந்தவன்  அவர்தம்  மனைவியரைப்  பார்த்தலாகாது . 315

     வறியவனிடத்தினின்றும்  அவன்  உடன்படாத  தலைமைத்  தன்மையை  எக்காரியத்திலுங்  கவர்ந்து  கொள்ளலாகாது . தன்  சிறுவர்க்கும்  பிறர்  சிறார்க்கும்  விளையாட்டுக்  கலகம்  நேர்ந்துழித்  தன்   சிறுவரை  அறிவுறுத்து  ஒறுத்தல்  வேண்டும் . பிறர்  சிறுவர்  குற்ற மிழைத்தவராயினும்  அவரை  அங்ஙனஞ்  செய்தலாகாது .     316

( வறியவன் , தன்  சீவனநிமித்தம்  ஒரு  காரியத்திற்  றலைப்பட்டிருக்குங்கால் , அவன்  அநுமதி  பெறாமல்  மற்றொருவன்  அக்காரியத்  தலைமையை  அபகரித்தலாகாதென்பது  கருத்து .)    

மறநெறியிற் பற்று , நீதி பிழைத்தல் , நிலையில்லாத மனம் , பிறர் பொருளை வலிந்து பற்றுதல், கொடுந் தண்டமிடுதல் ஆகிய இவற்றையுடையானது கிராமத்தில் வாழ்தலை யொழித்து யாதாயினும் மற்றோரூரில் வாழ்தல் வேண்டும்.                                    317

     ஒருவன்  வழக்காளி  எதிர்  வழக்காளியாகிய  இருவருடைய  கருத்துகளையும்  உண்மையாக  உணர்ந்துளானாயினும் , அரசனாலாதல் ,  மற்றை  அதிகாரிகளாலாதல்  கேட்டுக்  கொள்ளப்படாமல்  தானே  அவர்  வழக்கின்  இயல்பைப்  பற்றி  ஒன்றுங் கூறலாகாது ; என்னை? அங்ஙனங்  கூறின்  அவ்வழக்கில்  தோல்வி  யெய்தினோன்  தனக்குப்  பகைவனாவனாதலின் .       318                                                                             

     பிறன்  ஒருவனுடைய  வழக்கை  ஏற்றுக்கொண்டு  மற்றெவனோடுங்  கலகஞ்  செய்தலாகாது . கூட்டங்கூட்டமாகத்  திரண்டு  அரசியற்  சூழ்ச்சியைப்  பற்றி  ஆராய்தலாகாது .                   319

     சோதிடத்தைப் பற்றியும் , அறத்தின்  உண்மையைப்  பற்றியும் , நீதியைக்  குறித்தும் , தண்டத்தைக்  குறித்தும் , மருத்துவத்தைப்  பற்றியும் , கழுவாயைப்  பற்றியும்  அவ்வந்  நூல்களைப்  பயின்றுணராத  ஒருவன்  ஒன்றுங்  கூறலாகாது .                                    320

( கழுவாய் – பிராயச்சித்தம்)

     பிறர்  வயப்பட்டிருத்தலினும்  மேலான   துன்பமுமில்லை ; தன்  வயப்பட்டிருத்தலினும்  மேலான  இன்பமுமில்லை . தன்  நாட்டில்  வாழ்பவனும் , தன்  வயத்தனாயிருப்பவனும் , இல்லற  வாழ்க்கை யுடையவனும் , எப்பொழுதும்  இன்பம்  எய்துவர் .                                 321                                     

     புதியனவும்  பழையனவுமாகிய  மக்கள்  வழக்க  ஒழுக்கங்களை  அறிந்தவர்களுடைய  அறிவினால்  கணந்தோறும்  புதியபுதிய  வழக்க  ஒழுக்கங்கள்  உண்டாகின்றன . ஆதலின்  அவற்றை  முற்றும்  ஆராய்ந்து  பெரும்பாலும்  அறுதியிட்டுக்  கூற  இயலாது . காட்சியளவையானும் , வழியளவையானும் , உவமை யளவையானும் , பெரியோரருளிய  நூலளவையானும்  அவ்வழக்க  ஒழுக்கங்களின்  இயல்பை   அறிந்து  கொள்ளல்  வேண்டும் .                                    322-323

( வழியளவை- அநுமானப் பிரமாணம் )

     அரசனுக்கும்  நாட்டில்  வாழும்  மக்களுக்கும்  இதுகாறும்  பொதுவாகச்  சுருக்கிக்  கூறப்பட்ட  இந்  நீதிநூல்  அன்னார்  நலத்திற்குரியதாகும்.; இதன்கட்  சிறப்பாகக்  கூறப்பட்டவை  அரசற்குரியவாம்   என்று  கருதற்பாலன .                                               324

சுக்கிர நீதியில்

“அரசனுக்கும் குடிகளுக்கும் உரிய பொது  நீதிகள்” என்னும்  மூன்றாம்

அத்தியாயம்  முற்றிற்று .

                   ********************************************************************

நான்காம்  அத்தியாயம்

முதற்  பிரகரணம்

(நண்பர்  முதலியோர்  இலக்கணங்கள்)

1. நட்டார்  பகைவர்  இலக்கணங்கள்

     இனிப்  பலவகைப்  பொருள்களைப்  பற்றிய  மிச்சிராத்தியாயத் திலுள்ள  முதற்பிரகணத்தைச்  சுருக்கிக்  கூறுவேன் . அவற்றுள் , முதலில்  நட்டோர்  முதலியோரின்  இலக்கணங்களைச்  சுருக்கமாகக்  கேட்பீர்களாக .                                                                                                       1

( கேட்பீர்களாக  வென  அரசர்களை  முன்னிலைப்படுத்திச்  சுக்கிராசிரியர்  கூறினாரென வுணர்க. )

     உபகாரணத்தால்  நட்டோரும் , அபகாரத்தாற்  பகைவரும்  செய்பவன் , செய்விப்பவன் , உடன்படுவோர், துணையாளனெனத்  தனித்தனி    நான்கு  வகைப்படுவர் .                                                               2

     எப்பொழுதும்  பிறர்  துன்பங்  கண்டுழி  மனமுருகுதல் , பிறர்க்கு  விருப்பமான  பொருளைக்  கூட்டுவிக்கு  முயற்சி,  வேண்டிக்  கோடலின்றிப்  பிறர்க்குபகரித்தல் , உரிய  காலத்தில்  தம்  நட்டோற்கும்  அவன்  மனைவிக்கும்  பொருட்கும்  மற்றை  மறைபொருள்களுக்கும்  புகலிடமாதலாகிய  இந் நான் கிலக்கணங்  களையுமுடையார்  தலையாய  நண்பரென்று  கூறப்படுவர் . மற்றையோர்  இவற்றுள்  முதலிற்  கூறிய  மூன்றிலக்கணங்களை யுடையாரெனவும் , முதல்  இரண்டிலக்கணங்களை  யுடையாரெனவும், ஓரிலக்கணமுடையாரெனவும்  பலதிறப்படுவர் .                                    3-4

( பொருளும்  மறைபொருளும்  அந்நட்டோனுடையனவாம் . மறைபொருள் – இரகசியவிடயம் . மனமுருகுதல்  கூட்டுவிக்கு  முயற்சி  பிறர்க்கு  பகரித்தலாகிய  இம் மூன்றனையுமுடையாரெனவும் , மனமுருகுதல்  கூட்டுவிக்கு  முயற்சி  ஆகிய  இவ்விரண்டினையுமுடையாரெனவும் , மனமுருகுதன்  மாத்திர  முடையாரெனவும்  பின்னையோர்  மூவகைப்படுவர்  என்பதாம் .)

     ஒரு  பொருளைப்பற்றி  இது  பிறர்க்கின்றி  எனக்குரியதென்று  இருவர்  தனித்தனியே  தம்முண்  மாறுபட்டு  விரும்புதலும் , பிறர்  விரும்பும்  பொருட்குக்  கேடு செய்தலுமாகிய  இவ்விரண்டும்  பகைமையின்  இலக்கணங்களாம் .                                                               5

     “உடன்பிறந்தான்  இல்லையாயின்  தந்தையின்  பொருண்  முழுதும்  எனக்கே  உரியதாகும் “  எனவும் , “இவ்வுடன் பிறந்தானுக் குரிமையாதல்  கூடாது “  எனவும் , “இவ்வுடன்  பிறந்தான்  என்  வயப்பட்டிருத்தல்  வேண்டும் “  எனவும் , “இவ்வெல்லாப் பொருள்களையும்  பிறர்க்கின்றி  யானே  நுகர்வல்”  எனவும்  இருவர்  தனித்தனி  மாறுபட்டு  எண்ணுவாராயின் , அவர்  தம்முட்  பெரும்  பகைவராவர் .  வெறுப்பவன்  வெறுக்கப்படுபவன்  ஆகிய  இவ்விருவரும்  ஒருவர்க்கொருவர் பகைவரென்னும்  பெயரை யுடையராவர் .                                                                                                   6-7

( இல்லையாயின்  என்னும்  இதனால்  உடன்பிறந்தான்  இருத்தல்  உணரப்படும் .)

     வீரம், முயற்சியின்  எழுச்சி , வலிமை , நீதியாகிய  இவற்றை யுடையார்  மாட்டு  எப்பொழுதும்  உட்பகை  யுடையராய்க்  காலத்தை  எதிர்பார்த்திருக்கும்  அரசனைவரும் , நட்புரிமை யுடையரா யிருப்பரென்னும்  இதன்கண்  வியக்கற்பாலது  யாதுளது ?அவ் வேந்தரரெல்லோரும்  அரசியல்  விருப்பம்  உள்ளாரே  யாவர் . அரசனுக்கு  எவனும்  நண்பனாகான் . அரசனும்  எவனுக்கும்  நண்பனாகான் .                                                                                               8-9

( உட்பகையுடையராய்க்  காலங்  கருதியிருத்தலின்  நண்பராவர் , என்பதில்  வியப்பின்றென்பதும் , வேந்தன்  காலம்  நேர்ந்துழி  நட்புரிமையைப்  பொருட்படுத்தானென்பதும்  புலப்படுதல்  காண்க .)

     அரசனுங்  குடிமக்களும்  பெரும்பாலும்  தம்முட்  காரியம் கருதியே நட்புரிமை யுடையராயிருப்பர் . ஒருவனுக்குச்  சிலர்  இயற்கையாகவே  நண்பராவர் . சிலர்  இயற்கையாகவே  பகைவராவர் .                            10

( இயற்கை  நண்பரையும்  இயற்கைப்  பகைவரையும்  பின்வருஞ்  சுலோகங்களிற்  காண்க .)

     ஒருவனுக்கு  அவன்  தாய் , தாயின்  குலத்தவர் , தந்தை , தந்தையின்  தந்தைதாயர் , தந்தையின்  சிறிய  தந்தை , பெரிய  தந்தையர் , தன்  புதல்வி , தன்  மனைவி , மனைவி  பிறந்த  குலத்தவர் , தன்  தந்தையின்  உடன்  பிறந்தாள் , தாயின்   உடன்  பிறந்தாள் , தன்னுடன்  பிறந்த  தங்கை , தமக்கையர் , அவர்தம்  பெண்மக்கள் , அவர்  பின்வழித்  தோன்றல்கள், அரசன் , குரு , ஆகிய  இவர்கள்  இயற்கையான  நண்பராவர் .                                                                                                      11-12

( முதனூலில்  சந்ததி  என்றது  பின்வழித்  தோன்றல்கள்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . அதற்குப்  புதல்வன்  என்றும்  பொருள்  கொள்ளலாம் . 14-ஆம்  சுலோகத்தில்  நல்ல  புதல்வனையும் , 17-ஆம்  சுலோகத்தில்  தீய  புதல்வனையும்  விதந்து  கூறினமையால்  ஈண்டுப்  பொதுவாகப்  புதல்வனென்று  கூறுதலும்  பொருந்தும் .)

     கல்வியுடைமை , வீரம் , திறமை , வன்மை , அஞ்சாமை யாகிய  இவ்வைந்தும்  ஒருவனுக்கு  இயற்கையாக வுள்ள  நட்புரிமைக்  குணங்களாம் . இவற்றானே  யறிவுடையார்  வாழ்க்கை யுடையராகின்றனர் .                                                                                          13

     தாய்  தந்தையாரின்  ஆணைவழி  கடவாது  ஒழுகும்  மகனே  பொருளொடு  பொருந்தும்  பெயரை யுடையனாவன் . நற்குணமிக்க  புதல்வன்  ஒருவனே  சிறந்தவனாவன் . குணமிலிகளாகிய  புதல்வர்  நூற்றுக்கணக்காகவிருப்பினும்  அவரால்  வரக்கடவ   தாம்  பயன்  யாது ?                                                                                                                      14

( மகன்மைப்  பொருட்குரியனாவான்  என்பதாம் .)

     பிறரைத்  துன்புறுத்துதலையும்  தீயொழுக்கத்தையும்  கடன்  கோடலையுமுடைய  தந்தை, கற்பிழந்த  தாய் , கற்பிழந்த  மனைவி , தன்  தமையன்  தம்பிமார் , சிற்றப்பன்  பெரியப்பன்மார் ,  அவர் தம்  மனைவியர் , அவர்தம்  புதல்வர்கள் , மருகி , மாமி , மாற்றவள் , நாத்தூணங்கை , கொழுந்தன்மார்  மனைவியர் , அறிவில்லாத  புதல்வன் , இழிந்த  மருத்துவன் , மனைவியைக்  காவாத  கணவன் , சினமிக்க  தலைவன் , சினமிக்க  குடிமக்கள் , ஈகையில்லாத   பொருளாளன்  ஆகிய  இவர்கள்  இயற்கையாகவே  பகைவராவர் .15-17

( மருகி  முதலிய  ஐவரும்  ஒரு  பெண்பாலைக்  குறித்து  அவட்குப்  பகைவராவரெனவும் , மனைவியைக் காவாத கணவன் மனைவிக்குப் பகைவனாவானெனவும், சினமிக்க  தலைவன்  ஏவலாளர்க்குப்  பகைவனாவானெனவும் , சினமிக்க  குடிகள்  அரசனுக்கு  பகைவராவரெனவும்  கொள்க . மாற்றவள் – கணவனுடைய   மற்றொரு  மனைவி . நாத்தூணங்கை – கணவனுடன்  பிறந்தவள் . )

     தீயவற்கு  அரசனும் , கற்பொழுக்கமில்லாத  பெண்களுக்குக்  கற்புடையாரும் , கீழ்மக்களுக்கு  நல்லோரும் , அறிவிலார்க்கு  நற்பொருளை யறிவிப்போரும்  பகைவராவர் .                                          18

     அறிவிலார்க்குச்  செய்யும்  உபதேசம்  அவர்தம்  சினத்தை  வளர்த்தலே  யன்றி  அடக்கத்தை யுண்டுபண்ண  மாட்டாது.  பாம்புகளுக்கு  அருத்தும்  பால்  அவற்றின்  நஞ்சைப்  பெருக்குதலேயன்றி   அமிருதத்தை யுண்டாக்காது .                                  19

     ஓரரசனுக்கு  நாற்புறத்தும்   யாண்டுஞ்  சூழ்ந்திருப்போரும்  குறைந்த  வலிமையும்  பகைமையு  முடையாருமாகிய   மற்றை  அரசர்களுள் , மிக  அணிமையிலிருப்போரும் , அவர்க்கு அப்பாலி  ருப்போரும், அவர்க்கு  அப்பாலிருப்போரும் முறையே  இயற்கையான  பகைவராகவும் , நொதுமலராகவும் , நண்பராகவும்  இருப்பர் . அன்றி  நாற்புறத்தும்  அணிமையிலிருப்போர் , அதற்கப்பாலிருப்போர் , அதற்கப்பாலிருப்போராகிய  அரசர்கள்   முறையே  பகைவராகவும் , நண்பராகவும் , நொதுமலராகவும் , இருப்பாரெனக்  கோடலும்  பொருந்தும் . அங்ஙனமே  தன்னால்  துன்புறுத்தப்பட்டுத்  தனக்கு  மிகவும்  அணிமையிலிருக்கின்ற  ஏவலாளரும்  அமைச்சர்  முதலியோரும்  பகைவராக  அறியப்படுவர் .                                   20-22

(நொதுமலர் – விருப்பு  வெறுப்பின்றி  நடுநிலை   மேற்கொண்டிருப்போர். ஓரரசனுக்கு  அண்மையிலுள்ள  மற்றோரரசன்  வலிகுறைந்தவனாக விருப்பின்  அவன்  தான்  நினைத்தவண்ணம் ஒன்றுஞ்  செய்யமுடியாமையாற்  பகைவனாவானென்பது  கருத்து .)

     ஆற்றல்  குறைந்த  நண்பனையும்  ஆற்றல்  மிக்க  நண்பனையும்  முறையே  உயர்த்தியுந்  தாழ்த்தியும்  நடத்தல்  வேண்டும் .                 23

2. சாம  முதலிய  உபாயங்களை  மேற்கொள்ளு  முறை

     சாம  தான  பேத  தண்டங்கள்  என்னும்  நால்வகை  உபாயங்களாலும்  இப்  பகைவரெல்லோரையும்  வேறுபடுத்தலும் , வசீகரித்தலும் , துன்புறுத்தலும் , அழித்தலும்  செய்யலாம் .               24

     ஒருவன்  உபாயத்தால்  பாம்பு  யானை  சிங்கம்  ஆகிய  இவற்றை  வயப்படுத்துதல்  போலத்  தக்க  உபாயங்களால்  நண்பரையும்  பகைவரையும்  வசீகரித்துத்  தன்வயப்படுத்தல்  வேண்டும் . உபாயத்தினாலேயே  இந்  நிலவுலகத்துள்ளார்  அடைதற்கரிய  துறக்கத்தை  யடைகின்றனர் ; பிளத்தற்கரிய  வயிரத்தைப்  பிளக்கின்றனர் .                                                                                       25-26

     சாம  தான  பேத  தண்டங்களாகிய  இந்  நான்கு  உபாயங்களையும்  நண்பர் , சம்பந்திமார் , பெண்கள் , புதல்வர் , குடிமக்கள் , பகைவராகிய  இவர்கள்  மாட்டுத்  தனித்தனி  பொருந்துமாற்றான்  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .                                                             27

( பொருந்துமாறு – யுக்தி .)

     ஒழுக்கம் , பருவம் , கல்வி , குலம் , பழக்கம் , வாழ்க்கைத்தொழில் , ஆகிய  இவற்றை  நேர்மையாக  வுடையார்  தம்முட்  கூடுங்கால்  நட்புண்டாமாயின் , அவர்  தம்முள்  ஒருவன்  மற்றொருவனை  நோக்கி  “எனக்கு  நின்னையொத்த  நண்பன் , வேறொருவனாம்  இலன் “  என்று  இவ்வாறு  கூறுதல்  நட்புப்  பற்றிய  சாமம்  என்னும்  உபாயமாகும் .  அத்தகைய  நண்பன்பால்  “என்னுடைய  வாழ்க்கைக்குரிய  எல்லாப்  பொருள்களும்  நின்னுடையவே  யாகும் “  என்று  கூறுதல்  நட்புப்  பற்றிய   தானம்  என்னும்  உபாயமாகும் .                                           28-29

     ஒரு  நண்பன்  பாற்  பிற  நண்பர்களின்  நற்குணங்களை  ஒருவன்  பாராட்டிப்  பேசுவானாயின் , அஃது  அந்நண்பனது  மனத்தை  வேறுபடுத்துமாதலின்  நட்புப்  பற்றிய  பேதம்  என்று  கூறப்படும் . ஒருவன்  தன்  நண்பனை  நோக்கி “நீ  இத்தகையனாயின்  யான்  நின்னோடு  நட்புக்  கொள்ளேன்”  என்றிவ்வாறு  கூறுதல்  நட்புப்  பற்றிய  தண்டம்  என்று  கூறப்படும் .                                                        30

     எவன்  பிறர்க்கு  நன்மை  செய்யாமலும்  பிறர்க்கு  வரும்  தீமையைப்  பொருட்படுத்தாமலும்  இருக்கின்றானோ  அவன்  நொதுமலனாவான் . அந்  நொதுமலனும்  இன்சொற்  கூறுதலாகிய  சாமோ  பயத்தால்  நன்கு  வசீகரிக்கத்தக்க  பகைவனாகான்  கொல்?  [பகைவனாவானென்றபடி ]                                                                            31

( நொதுமலனைத்  தன்  வயப்படுத்துக்  கோடற்கு  உபாயங்  கூறியவாறு )

     ஒருவன்  தன்  பகைவனை  நோக்கி, “ நீயும்  யானும்  ஒருவர்க்கொருவர்  கேடு  செய்ய  எண்ணுதலாகாது ; துணை  செய்பவராதல்  வேண்டும் “  என்றிவ்வாறு  கூறுதல்  பகைமை  பற்றிய  சாமமென்னும்  உபாயமாகும் .                                                                      32

     ஒருவன்  தனக்குரிய  பகைவர்  பலருள் , வலிமை  மிக்க  பகைவனை  ஆண்டுதோறும்  இவ்வளவென்றளவிடப்பட்ட  அரசிறைப்பொருள்  கொடுத்தும்  சிற்றூர்  பல  ஈந்தும்  மகிழ்வித்தல்  பகைமை  பற்றிய  தானம்  என்று  கூறப்படும் .                                                                             33

     பகைவர்க்குத்  துணையாகவுள்ள  பொருள்  முதலிய  கருவிகளுக்குக்  குறைவு  செய்தலும் , அப்பகைவரினுஞ்  சிறந்த  வலியுடையாரைச்  சார்ந்திருத்தலும் , அப்பகைவரிற் றாழ்ந்தாரை   வலியுடையராகச்  செய்தலும்   பகைமை  பற்றிய  பேதம்  என்று  கூறப்படும் .                                                                                                         34

பகைவரைக்  கள்வராற்  றுன்புறுத்தலும் , அப்  பகைவருடைய  பொருள்  தானியங்களைக்  கெடுத்தலும் , அவர்பாற்  புரைநெறி  கண்டு  அது  காரணமாக  அவரினுஞ்  சிறந்த  வலியுடையரால்  நீதி முறை  பற்றி  அச்சுறுத்தலும் , போர்த்தொழில்  நேர்ந்துழிப்  புறமுதுகிடாத  வீரர்களால்  நடுக்கஞ்  செய்தலும்  பகைமை  பற்றிய  தண்டம்  என்று  கூறப்படும் .                                                                            35

     இச்  சாம  முதலிய  உபாயங்கள்  வினை  வேறுபாடு  குறித்து  அவரவர்  தகுதிக்குத்  தக்கவாறு  செய்யப்படுதலின், பல்வறு  வகைப் படுவனவாம் .                                                                                                          36

     நீதியுணர்ந்து  நிலம்  புரக்கும்  வேந்தன்  இச்  சாம  முதலிய  எல்லா  உபாயங்களாலும்  தன்  நண்பர் , பகைவர் , நொதுமலராகிய  இவர்கள் தன்னிலும்  மிக்க  வலியுடையரா  யில்லாதவாறு  செய்தல்  வேண்டும்.

     முதலிற்  சாமோபாயமே  சிறந்ததாகும் . அதனாற்  காரியம்  முடிந்திலதாயின்  பின்  தானோபாயத்தையும் , அதனாலும்  முடிந்திலதாயின், பின்னர்  எவ்வாற்றானும்  பேதோபாயத்தையும் , அதனாலும்  இயன்றிலதாயின்  உயிர்க்கு  இறுதி  நேர்ந்துழிப்  பகைவர்பால்  தண்டோபாயத்தையும்  மேற்கொள்ளல்  வேண்டும் . 38

     பகைவன்  பேராற்றலுடையனாயின்  அவன்பாற்  சாம  தான  உபாயங்களையும் , தன்னின்  மிக்க  வன்மையுடையனாயின்  அவன்  மாட்டுச்  சாம பேத  உபாயங்களையும் , தனக்கு  ஒத்த  பகைவனாயின்  அவன்பால்  பேத  தண்ட  உபாயங்களையும் , தன்னிற்  றாழ்ந்தோனாயின்  அவன்பால்  தண்டோபயத்தையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                               39

     நண்பன்பாற்  சாம  தான  உபாயங்களே  செயற்பாலனவாம் . ஒரு  பொழுதும்  பேத  தண்ட  உபாயங்கள்  மேற்கொள்ளற்பாலனவல்ல . 40

     பகைவருடைய  குடிகளை  வேறுபடுத்தி  அவரைத்  துன்புறுத்தல்  ஒருவனுக்கு  வெற்றி  தருவதாகும் . பகைவரால்  துன்புறுத்தப்பட்ட  நற்குண  மிக்கோரைச்  சாம  தான  உபாயங்களால்  தன்வயப்படுத்திக் கொள்ளல்  வேண்டும் . தீயோரைத்  தன்  நாட்டினின்றும்  வெளிப்படுத்தல்  எப்பொழுதும்  நலம்  பயப்பதாகும் .                            41

     எப்பொழுதும்  முயற்சி  மேற்கொண்டு  சாம  தான  உபாயங்களால்  தன்  குடிகளைக்  காத்தல்  வேண்டும் . பேதோபாயத்தையும்  தண்டோபாயத்தையும்  அவர்பொருட்டு  மேற்கொள்ளலாகாது .        42        

     தன்  கீழ்  வாழுங்குடிகள்  மாட்டுத்  தண்டோபாயமும்  பேதோபாயமுஞ்  செய்யப்படுமாயின்  தன்  அரசியற்கு  அழிவுண்டாம். ஆதலின் , தன்  குடிகள்  மிக்க  எளிமையுடையராகவும் , மிக்க  வலிமையுடையராகவும் இல்லாமலிருக்கும்  வண்ணம்  அவரை  எப்பொழுதுங்  காத்தல்  வேண்டும் .                                                                43

     உயிர்த்தொகுதிகள்  தீய  ஒழுக்கங்களினின்று  மீளுதலும்  அடங்கி  நடத்தலும்  தண்டோபாயத்தினாலேயாம் . ஆதலின் எவ்வுபாயத்தினாலே  உயிர்த்  தொகுதிகள்  நன்கு  அடக்கப்படுகின் றனவோ , அதுவே  தண்டோபாய மென்று  கூறப்படும் .                           44

3. தண்டத்தின்  வகையும்  பயனும்

     கடுஞ்சொற் கூறி  விலக்கல் , மானக்கேடு  செய்தல் , உணவின்றி  இருக்கச்செய்தல் , தளையிட்டுச்  சிறைப்படுத்தல் , அடித்தல் , பொருள்  கவர்தல் , நகரத்தினின்றும்  வெளிப்படுத்தல் , உடலில்  என்றும்  நிலைத்திருக்கும்  அடயாளமிடுதல் , மாறுபட  மழித்தல் , கழுதை  முதலிய  தீய  ஊர்திகளிலேற்றிப்  போக்கல் , கை  கால்  முதலிய  உறுப்புக்களைக்  குறைத்தல் , கொலைபுரிதல் ,  பொருதல்  ஆகிய இவைகளெல்லாம்  தண்டோபாயத்தின்  வகைகளாகக்  கூறப்படுவனவாம் .                                                                                         45-47

     தண்டோபாயத்தாற்  குடிகள்  அறத்திற்  பற்றுடையராவார் ; எளியவரைத்  துன்புறுத்துதலையும்  பொய்  கூறுதலையும்  மேற்கொள்ளார் . இன்னும்  அவ்வச்சத்தானே  வன்கண்ணர்  அருளுடையராவர் ; தீயவர்  தீங்கினை  யொழிப்பர் ; பசுக்கள்  வயப்படுவனவாம் ; கள்வர்  சேய்மைக்கண்  ஓடுவர் ; குறளை  கூறுவோர்  வாய்வாளாதிருப்பர்; ஆததாயிகள்  அச்சமெய்துவர்; அரசிறை  கொடாதவர்  அவ்  விறைப்பொருளைக்  கொடுப்பர் ; மற்றையோர்  மிகவும்  நடுங்குவர் . ஆதலின் , அரசன்  அறத்தைக்  காத்தற்  பொருட்டு  எப்பொழுதுந்  தண்டத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                        48-50

     செய்யத்தக்கன  வின்ன  தகாதன  வின்ன  வென்று  அறியாமற்  செருக்குற்று  நெறிபிழைத்  தொழுகுவோன்  குருவாயினும்  அவனுக்குத்  தண்டம்  செயற்பாலதாம் .                                                        51

     அரசர்களுக்குத்  தண்டத்தோடுங்  கூடிய  நீதியினாலேயே , எல்லாக்  காரியங்களும்  நிறைவேறுகின்றன . ஆதலின் , அறங்கள்  எல்லாவற்றிற்கும்  தண்டமே  சிறந்த  புகலிடமாக  எண்ணப்படும் .    52

     வேதத்திற்  கூறியபடி  வேள்வியிற்  பசுக்கொலை  புரிதல்  கொலைத்  துன்பம்  ஆகாதவாறுபோல , தீயவர்களைத்  தண்டத்தால்  ஒறுத்தல்  துன்பஞ்  செய்ததாகா தென்பதாம் .                                                                53

     ஒறுத்தற்குரிய  குற்றமுடையாரை  ஒறாமல்  விடுதலும் , ஒறுத்தற்குரிய  குற்றமில்லாதவரை  ஒறுத்தலும் , அளவின்  மிக  ஒறுத்தலு முடைய  வேந்தனை  விட்டு  அறிவுடையார்  விலகுவர் . அவ்  வேந்தன்  தீவினையாளனுமாவன் .                                                                 54

     மக்கள்  தானதருமங்களிற்  பற்றுடைய ராதற்  பொருட்டுச்  சிறு  கொடையாற்  பெரும்  பயன்  விளயுமென்று  முனிவரால்  அறநூல்  களிற்  கூறப்பட்டது . அங்ஙனமே  உலகத்துள்ள  மக்கள்  அச்சமுற்று  நன்னெறிக்கண்  ஒழுகுதற்பொருட்டு  நூன்முறைப்படி  தண்டஞ்  செய்தலாற்  பெரும்பயன்  விளையுமென்பதுங்  கூறப்பட்டுள்ளது .    55

     பரிமேத  முதலிய  வேள்விகளானாலும்  புண்ணியம்   தோத்திர  பாடங்களான்  எங்ஙனமுண்டாம்? பொறுமையினாலுண்டாம்  புண்ணியம்  தண்டமிடுதலா லெங்ஙன முண்டாம்? [[உண்டாகாதென்றபடி. ]                                                                                     56

     தன் கீழ்  வாழுங்  குடிகளைத்  தண்டித்தலால்  அரசனுக்கு  எங்ஙனம்  நலமுண்டாகும் .? அக் குடிகளைத்  தண்டித்தலால்  அரசனுடைய  புகழ் , பொருள் , புண்ணியமாகிய  இவைகளுக்கு  அழிவுண்டாம் .                   57

     கிருதயுகத்தில்  அறம்  நிறைவுற்றிருந்தமையால் , அரசனுக்குத்  தண்டம்  அறவே  வேண்டாததாயிற்று . திரேதாயுகத்தில்  குடிகள்  காற்கூறு  அதன்ம முடையராயிருந்தமையால் , அரசன்  தண்டத்தை  முற்றும்  மேற்கொள்ளவேண்டியதாயிற்று . துவாபர யுகத்தில்  அரைக்கூறு  அறமுடைமையான் , முக்காற்கூறு  தண்டம்  விதிக்கப்பட்டுள்ளது . கலியுகத்தில்  அரசன்  முறை  பிறழ்ந்து  ஒழுகுதலானும் , அதனாற்  குடிகள்  பொருளற்று வறியவரா யிருத்தலானும்  அரைக்கூறு  தண்டம்  விதிக்கப்பட்டுள்ளது .       58-59

( அறம்  முக்காற்கூறு  நிலைபெறும்  இரண்டாம்  யுகத்தில்  மக்கள்  தீங்கு  செய்தல்  பெரிதுந்  தவறுடைத்தாதலின்  அது  நோக்கி  முழுத்  தண்டம்  விதிக்கப்பட்டுள்ளது . மூன்றாம்  நான்காம்  யுகங்களிலும்  இக் கருத்துப்  பற்றியே  முக்காற்கூறு  அரைக்கூறு  தண்டங்கள்  விதிக்கப்பட்டன வென்பதும்  உய்த்துணரற்பாற்றாம் . )

   உலகத்து  மக்களை  அறத்தினும்,  மறத்தினும்  ஆணையிட்டு  நடத்துபவன்  அரசனாதலின் , அவனே  கிருதயுக  முதலிய  யுகங்களையும்  நடத்துபவனாவான்.  ஆதலின்,  தீங்கு  நிகழ்தற்குக்  காரணம்  யுகங்களின்  குற்றமுமன்று ; குடிகளின்  குற்றமுமன்று ; அரசனது  குற்றமேயாம் .                                                                                 60

     எச்செயல்  கண்டு  அரசன்  மகிழ்ச்சி  யெய்துகின்றானோ, அச்செயலையே  அவாவினாலும்  அச்சத்தினாலும்  குடிகள்  மேற்கொண்டொழுகுவர் . அங்ஙனமாயின் , அரசன்  ஆணையிட்டுரைத்த  தொன்றைக்   குடிகள்  எங்ஙனம்  மேற்கொள்ளாதிருப்பர் ?                                                                                  61

     எந் நாட்டில்  அரசன்  அறமுடையனாக வுள்ளானோ  அந் நாட்டிற்   குடிகளும்  அறமுடையராவர்  . எந் நாட்டில்  அரசன்  பெருந்  தீவினையாளனாக  வுள்ளானோ , அந்  நாட்டிற்  குடிகளும்  தீவினையாளராவர் .                                                                                           62

     அரசன்  அறமுடையோனல்லாக்கால்  மழை  உரிய  காலத்திற்  பெய்யாது . நிலம்  பெரும்  பயன்  விளைக்காது ; அரசியற்குக்  குறைவும் , பகைவர்க்கு  ஆக்கமும் , பொருட்கு  அழிவும்  உண்டாவனவாம் .                                                                                                 63

     அரசன்  கட்குடித்தலால்  இழிந்தவனாகான் ; மகளிர்  காமத்தாலும்  கடுஞ்சினத்தாலும்  இழிவுடையோனாவான் . கடுஞ்சினமுடைய  வேந்தன்  குடிகளை  மிகவுந்  துன்புறுத்துபவனாவான் . மகளிர்பாற் காமமுடைய  அரசன் , கலப்புச்  சாதிகளை யுண்டு  பண்ணுதலால்  அந்தணர்  முதலிய  சாதிகளைக்  கெடுப்பவனாவான் . கட்குடிப்போன்  தான்  ஒருவனே  அறிவொழுக்கங்களிற்  பிறழ்வன் . [ குடிகளைப்  பிறழ்விப்பானல்லன். ] காமம் , வெகுளி , இவ்விரண்டும்  அறிவை  மயக்கும்  பொருள்களெல்லாவற்றுள்ளும்  மிகவுஞ்  சிறந்தனவாம் . [ஆதலின்  கள்ளினுங்  கொடியன  காமம்  , வெகுளிகள்  என்பது  போதரும் .]                                                                                                          64-65

     அரசன்  மிக்க  உலோபத்தாற்  குடிகளின்  பொருளையும்  உயிரையும்  கவர்பவனாவான் .  ஆதலின் , வேந்தன்  காமம் , வெகுளி , உலோபமாகிய  இம்மூன்றனையும்  ஒழித்துத்  தண்டத்தைத்  தாங்குவோனாக  இருத்தல்  வேண்டும் .                                                         66

( உலோபம் – ஈண்டுப்  பிறர் பொருட்கட்  செல்லும்  பேரவா .)

     அரசன்  உள்ளத்தே  இரக்கமும்  புறத்தே  வன்கண்மையுமுடைய னாய்த்  தன்  குடிகளை  ஒறுத்தல்  வேண்டும் . இயற்கையாகவே  உயிர்களுக்குத்  தீங்கு  செய்வோரைக்  குறித்து  அரசன்  மிகக்  கொடுந்  தண்டம்  செய்பவனையொப்ப  இருத்தல்  வேண்டும் .                             67

     இயற்கையாகவே  குறளை  கூறுவோரால்  அரசியற்கு  என்றுங்  கேடு  விளைவதாகும் . ஆதலின் , அரசன்  குறளை  கூறுவோரால்  அறிவிக்கப்படினும் , செய்யத்தக்க  காரியங்களை  முயன்று  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .                                                                     68

     தலையாய  அரசன்  தன்னுடையனவும்  குடிகளுடையனவுமாகிய  குற்றங்களைக்  காண்பவனாவான் . ஆதலின்  அவ்வரசன்  முதலிற் றன்னையும் , அதன்பின்  அமைச்சர்  முதலிய  வினை செய்வாரையும் , அதன்பின்  குடிகளையும்  நன்கு  அடக்கி  ஆளுதல்  வேண்டும் .            69

4. குற்றங்களும்  அவற்றிற்குரிய  தண்டங்களும்

     உடலைப்  பற்றியதும் , மொழியைப்  பற்றியதும் , மனத்தைப்  பற்றியதும் , சேர்க்கையானாவதும்  எனக்  குற்றம்  நான்கு  வகைப்படும் . அஃது  அறிந்து  செய்தல்,  அறியாது  செய்தல்  எனப்  பின்னும்  இரண்டு  வகைப்படும் .                                                                    70

அக்குற்றம்  செய்விக்கப்படுவது , உடன்பட்டு  மகிழ்வது  என  மீண்டும்  இருவகையாகவும் , ஒருமுறை   செய்யப்படுவது , பன்முறை செய்யப்படுவது , செயற்கையிற்  செய்யப்படுவது , இயற்கையிற்  செய்யப்படுவது எனப் பின்னரும் நான்கு வகையாகவும் கூறப்படும். 71

     கண்  முகம்  முதலியவற்றின்  விகாரத்  தோற்றங்களான்  மனத்தின்கண்  நிகழும்  குற்றத்தையும், செயலால்  உடலின்கண்  நிகழுங்  குற்றத்தையும் , கடுஞ்சொற்களாற்  சொல்லின்கண்  நிகழுங்குற்றத்தையும் , உடன்  பழகுவோரால்  சேர்க்கையால்  நேருங்  குற்றத்தையும்  உணர்ந்து , அவற்றின்  வன்மை  மென்மைகளைச்  சீர்தூக்கி , நிகழ்ந்தனவும்  நிகழ்வனவுமாகிய  தீவினைகளுக்குத்  தாக்கவாறு  தண்டம்  செய்தல்  வேண்டும் .                                             72-73

     தலையாயோன்  கடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  பிரதம  சாகச  தண்டத்திற் குரியனாவன்  . அன்றி  முதலில் , “இத் தீச்செயல்  நீ  செய்ததன்றே ; இங்ஙனஞ்  செய்தல்  அறமாகுங்கொல்? “  என்று  வினவி  ஒறுத்துரைத்தற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  முற்கூறியாங்குப்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னரும்  அக்குற்றத்தையே  செய்வானாயின்  குற்றத்திற்குத்  தக்கவாறு  அப்  பிரதம சாகசத்தின்  இரு  மடங்கு  மும்மடங்கு  தண்டங்களுக்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                      74

( சாகசமென்பது  ஈண்டுத்  தண்டப்பணத்தின்  அளவைக்  குறிப்பதாகும் . இது  பிரதமசாகசமெனவும் , மத்திமசாகசமெனவும் , உத்தமசாகசமெனவும் , மூன்று  வகைப்படும் . இவற்றின்  பண  அளவு  முதலியவற்றை  இப்  பிரகரணத்தின்  116-ஆம்   சுலோகம்  முதலியவற்றிற்  காண்க . முதநூலில்  இதுமுதல்  87-ஆம்  சுலோகம்  வரை  குற்றங்களையும் அவற்றிற்குரிய தண்டங்களையும் “ஸாஹூம்” என்னும் ஒரு சொல்லாற்  குறிப்பிடுவர் . ”அன்றி”  எனத்   தொடங்கிக்  கூறுவன  கொள்கை  வேறுபாடாகும் . இங்ஙனமே  பின்னரும்  இவ்வாறு  “அன்றி”  எனத்  தொடங்கிக்  கூறப்படுவனவெல்லாவற் றையுங்  கொள்க .)

     தலையாயோன்  இடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  மத்திம சாகச  தண்டத்திற்  குரியனாவன் , அன்றி , முதலில்  இகழ்ந்துரைத்தலாகிய  சொல்லளவுத்  தண்டத்திற்கும் , அதன்பின்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும் அக்குற்றத்தைச் செய்வானாயின்  முற்கூறியாங்கு  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னருஞ்  செய்வானாயின்  குற்றத்தின்  மிகுதிக்கேற்ப  மிக்க  தண்டத்திற்கும்  உரியனாவான்  என்பதுமாம்.                                 76

     தலையாயோன்  தலையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  உத்தம  சாகச  தண்டத்திற்குரியனாவன் . அன்றி , முதலில்  பிரதம   சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  உத்தம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  அவ்  வுத்தம  சாகச  தண்டத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , சிறைப்படற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                                                     77-78

     அறிந்து  செய்யும்  மனிதக்கொலை யல்லாத  பிற  குற்றங்களுக்கே  இங்குக்  கூறிய  பிரதம  சாகச  முதலிய  தண்டங்கள்  விதிக்கப்பட்டுள்ளன .                                                                                          79

     இப்  பிரகணத்திற்  கூறப்படும்  தலையாய  தன்மை  இடையாய  தன்மை  கடையாய  தன்மைகள்  முக்கியமாகக்  குணத்தாலும்  குலத்தாலும்  பொருளாலுமாம் .                                                                      80

     இடையாயோன்  கடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  பிரதம  சாகச  தண்டத்திற் குரியனாவான் . அன்றி  முறையே  இகழ்ந்துரைத்தலாகிய  சொல்லளவுத்  தண்டத்திற்கும் , அரைக்கூறு  தண்டத்திற்கும் , முழுத்தண்டத்திற்கும் , பின்னரும்  அக்  குற்றத்தையே  செய்வானாயின்  குற்றத்திற்குத்  தக்கவாறு  பிரதம  சாகசத்தின்  இருமடங்கு  மும்மடங்கு  தண்டங்களுக்கும் , அதன்பின்  சிறைப்படற்கும் , இழிதொழில்  புரிதற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                                                                                           81

     இடையாயோன்  இடையாய  குற்றம்  புரிவானாயின் , மத்திம  சாகச  தண்டத்திற்குரியனாவான் . அன்றி , முதலிற்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னருஞ்  செய்வானாயின்  அம் மத்திம  சாகச  தண்டத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , அடித்தொறுத்தல் , விலங்கிடல் , உடலின்கண்  என்றும்  நிலைத்திருக்கும்  குற்ற  அடையாளமிட்டு  நகரத்தினின்றும்  வெளிப்படுத்தலாகிய  தண்டங்களுக்கும்  உரியனாவான்   என்பதுமாம் .                                      82

     இடையாயோன்  தலையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  உத்தம  சாகச  தண்டத்திற்குரியனாவான் . அன்றி , முதலில்  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  உத்தம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  அவ்வுத்தம  சாகச  தண்டத்தின்  இரு  மடங்கு  மும்மடங்கு  மிக்க  தண்டங்களுக்கும் , அதன்பின்  வாழ்நாள்காறும்  தளைபூண்டு  சிறைப்படற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                      83

     கடையாயோன்  கடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  பிரதம  சாகச  தண்டத்திற் குரியனாவான் . அன்றி , முதலில்  அப் பிரதம  சாகச  தண்டத்தின்   அரைக்கூறு  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்குப்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் ,          அதன்பின்னரும்  அக்  குற்றத்தைச்  செய்வானாயின்  அப்  பிரதம  சாகசத்தின்  இருமடங்கு  மும்மடங்கு  மிக்க  தண்டங்களுக்கும்  தளைபூண்டு  சிறைப்படற்கும்  உரியனாவான் என்பதுமாம் .                84

     கடையாயோன்  இடையாய  குற்றம்   புரிவானாயின் , அவன்  மத்திம  சாகச  தண்டத்திற்குரியனாவான் . அன்றி , முதலில்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  அம்  மத்திம  சாகசத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , சிறைப்பட்டு  நாடோறும்  தெருவலகிடன்  முதலிய  இழிதொழில்  புரிதற்கு  முரியனாவான்  என்பதுமாம் .                                                                          85

     கடையாயோன்  தலையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  உத்தம  சாகச  தண்டத்திற் குரியனாவான் . அன்றி , முதலில்  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  உத்தம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைப்  புரிவானாயின்  அவ்வுத்தம  சாகசத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , வாழ்நாள் காறும்  தலை பூண்டு  சிறைப்பட்டு  இழிதொழில்களையே  செய்தற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                             86-87

     ஒருவன்  பொருட்  செருக்கால்  தீங்கு  புரிவானாயின் , முதன்முறை  அவன்  பொருளினின்றும்  காற்கூறு  கோடலும் , இரண்டாமுறை  அரைக்கூறு  பொருள்  கோடலும் , மூன்றாம்  முறை  அவன்  பொருள்  முழுதுங்  கோடலும்  அவனுக்குச்  செய்யுந்  தண்டங்களாம் . அதன்மேலுங்  குற்றம்  புரிவானாயின்  அவனை  வாழ்நாள்காறும்  விலங்கிட்டு  ஒறுத்தல்  வேண்டும் .                                                                88

     வலிய  துணையுடைமையானாதல் , கல்விச்  செருக்கானாதல் , உடல்  வலிமையானாதல்  தீங்கு  புரிவாரை , எப்பொழுதும்  விலங்கிட்டுச்  சிறைப்படுத்தியும்  அடித்தும்  தண்டித்தல்  வேண்டும். 89

     ஒருவன்  தன்  மனைவி , புதல்வர் , உடன்பிறந்த  பெண்கள் , மாணாக்கர் , ஏவலாளர் , மருமகள் , தம்பி  ஆகிய  இவர்கள்  குற்றம்  செய்யின் , அவர்களைச்  சிறிய  கயிற்றினாலும்  சிறு  மூங்கிற்  கோலாலும் , அவர்தம்  உடலின்  பிற்புறத்தில்  அடிக்கலாம் . ஒரு  பொழுதும்  தலைக்கண்  அடித்தலாகாது . இங்ஙனமின்றி  வேறுவிதமாக  அடிப்பானாயின்  அவன்  கள்வனை  யொப்ப  அரச  தண்டத்திற் குரியனாவான் .                                                                        90-91

     குற்றம்  புரிவாரை  ஒரு  திங்களாதல் , மூன்று  திங்களாதல் , ஆறு  திங்களாதல் , ஓராண்டாதல்  வாழ்நாள்  மாறுகாதல்  விலங்கிட்டுச்  சிறைக்கோட்டம்  புகுவித்து  இழிதொழில்  செய்யும்படி  தண்டிக்கலாம் . இவருள்  எவனும்  கொலைத்  தண்டத்திற்குரியனா கான் .                                                                                                                 92

     உயிர்களைக்  கொலை  செய்தலாகாதென்று  வேதங்கள்  வற்புறுத்திக்  கூறுகின்றன . ஆதலின் , அரசன்  எவ்வாற்றானுமுயன்று  கொலைத்  தண்டத்தை  ஒழித்தல்  வேண்டும் .                                      93

( ஈண்டுக்  கொலைத்  தண்டத்தை  ஒழித்தல்  வேண்டுமென்பது  அறிந்து  செய்த  மனிதக்  கொலை  யல்லாத  பிற  குற்றங்களுக்கென வுணர்க . இதனை  79-ஆம்  சுலோகக்கருத்தானும் , 47-ஆம்  சுலோகத்தில்  தண்ட  பேதங்களுள்  ஒன்றாகக்  கொலையையுங்  கூறினமையாலும்  உய்த்துணர்க . ) 

     குடிகள்  குற்றம்   புரிவாராயின்  அவரை  அரசன்  சிறைப்படுத்தியும்  விலங்கிட்டும்  அடித்தும்  ஒறுத்தல்  வேண்டும் . உலோபத்தால்  அவர்தம்  பொருளைக்  கொள்ளுதலாகிய  தண்டம்  செய்து  துன்புறுத்தலாகாது .                                                                                           94

     ஒருவன்  குற்றம்  புரிவானாயின் , அவனுக்குத்  துணைசெய்யாத  அவன்  தந்தை  முதலியோர்  அக்  குற்றம்  குறித்துத்  தண்டிக்கற்பாலரல்லர் . இங்குக் கூறிய தண்ட  ஒழுங்குகள்  பொறுமைமிக்க  அரசனாற்  கொள்ளற் பாலனவாம் .                              95

     எப்பொழுது  அரசன்  குடிகள்  செய்யுங்  குற்றங்களைப்  பொறுத்துக்  கொள்ளாமல்  அவர்க்குக்  கடுந்  தண்டமிடுதலையும் , அவர்  தம்  பொருளைக்  கவர்தலையும்  மேற்கொள்ளுகின்றானோ , அப்பொழுது  அக்குடிகள்  அரசன்பாற்  பற்றொழிந்து  கலக்கமெய்துவர் ; அவ்வரசனுடைய  பகைவராலும்  வேறுபடுக்கப்படுவர் .                      96                                                                                    

     ஆதலின் , அரசன்  நன்கு  ஆராய்ந்து  தண்டிப்பவனாகவும் , பொறுமையாளனாகவும் , குடிகளால்  விரும்பப்படுவனாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                           97

     கட்குடிப்போன் , சூதாடுவோன் , கள்வன் , பிறன் மனை நயப்போன் , கடுஞ்சினமுடையான் , உயிர்களைத்  துன்புறுத்துவோன் , வருணாச்சிரம தருமங்களை யிழந்தோன், நாத்திகன் , கீழ்மகன் , பிறர்பாற்  பொய்ப்பழி  சுமத்துவோன் , குறளை  கூறுவோன் , பெரியோரையும்  கடவுளரையும்  பழித்துரைப்போன், பொய்பேசுவோன், அடைக்கலப்  பொருளைக்  கவர்வோன் , மற்றொருவன்  பிழைப்பிற்குக்  கேடு  செய்வோன் , பிறர்  செல்வ  முதலியன  கண்டு  பொறாதவன் , கைக்கூலி  பெறுதலில்  அவாவுடையான் , தகாதன  செய்வோன் , மந்திராலோசனைகளுக்கும்  காரியங்களுக்குங்  கேடு  விளைவிப்போன் , வெறுக்கத்தக்க  சொற்களைப்  பேசுவோன் , கடுஞ்  சொற்  கூறுவோன் , நீர்நிலைகளுக்கும்  பூஞ்சோலைகளுக்குங்  கேடு  செய்வோன் , வீண்குறி  சொல்லுவோன் , அரசனுடைய  பகைவன் , இழிந்த  அமைச்சன் , வஞ்சகச்  செயல்களை  யறிந்து  செய்வோன் , இழிந்த  மருத்துவன் , அமங்கல  சீலன் , தூய்மையில்லாதவன் , வழிகளைத்  தடை  செய்வோன் , பொய்ச்சான்று  கூறுவோன் , செருக்குமிக்க  வேடமுடையோன் , தலைவனுக்குத்  தீங்கு  புரிவோன் , பொருளை  மிகுதியாகச்  செலவு  செய்வோன் , இல்ல  முதலியவற்றில்  தீயிடுவோன் , நஞ்சிடுவோன் , விலைமகளிர்பால்  மிக்க  விருப்புடையோன் , கடுந்தண்டமிடும்  அரசியல்   வினை  செய்வோன் , மன்றோரஞ்  சொல்லுவோன் , வலிந்து  பொய்ப்பத்திரம்  எழுதி  வாங்குவோன் , நடுநிலை  பிறழ்ந்தோன் , கலகப்பிரியன் , போரில்  விருப்பற்ற  படை  வீரன் , அறிந்திருந்தும்  சான்று  கூற  ஒருப்படாதவன் தந்தை  தாய்  கற்புடை  மனைவி  நண்பனாகிய  இவர்க்குத்  தீங்கு  செய்வோன் , அழுக்காறுடையான் , தன்  தலைவருடைய  பகைவரை  யடுப்போன் , பிறர்க்கு  உயிர்நிலை  வேறுபடத்தக்க  செயலைப்  புரிவோன் , வஞ்சகன் , தன்  சுற்றத்தாரை  வெறுப்போன் , மறைந்து  தொழில்  செய்வோன் , அறத்திற்குக்  கேடு  விளைவிப்போன் , கிராமங்களைத்  துன்புறுத்துவோன் , தன்  குடும்பத்தைக்  காவாமல்  எப்பொழுதுந்  தவத்திலுங்  கல்வியிலும்  பற்று வைத் தொழுகுவோன் , புல்  விறகு  முதலியன  கொண்டு  பிழைத்தற்கு  ஆற்றலிருந்தும்  இரந்துண்போன் , பெண்ணை  விற்றுப்  பணம்  வாங்குவோன் , குடும்ப  வாழ்க்கையிற்  குறை  செய்வோன் , அறமில்லோன் , உட்பகையுடையோன் , அரசனுக்கு  வரும்  தீங்கைப்  புறக்கணிப்போன் , கற்பொழுக்கமில்லாத  பெண் , கணவனுக்கும்  புதல்வர்க்கும்  அழிவு  செய்பவள் , தன்  விருப்பின்படி  நடப்பவள் , பெரியோராற்  பழிக்கப்பட்டவள் , வீட்டுக்  காரியங்களைச்  செய்யாது  ஒழிந்தவள் , எப்பொழுதும்  தீயொழுக்கமுடையவள் , மருகியிடத்து  அன்பில்லாதவன்   ஆகிய  இயற்கையாகவே  பொல்லாங்குமிக்க  இவர்களை , அரசன்  அறிந்து  தன்னாட்டினின்றும்  வெளிப்படுத்திவிடல்  வேண்டும் .                                                           98-107

     முற்கூறிய  கட்குடிப்போன்  முதலிய  இவர்களை  அயற்றீவுகளிலிருக்கும்படி  செய்தல்  வேண்டும் ; அன்றிச்  சிறைக்கோட்டத்துட்  புகுத்தி  விலங்கிட்டு  இழிந்த  உணவைக்  குறைந்த  அளவிற்  கொடுத்து  உண்பித்துத்  தெருவலகிடன்  முதலிய  இழிதொழில்களைப்  புரியும்படி  நியமித்தலும்  பொருந்தும் .            108

     அரசன்  முற்கூறிய  கட்குடித்தல்  முதலிய  குற்றம்  புரிந்து  சிறைப்பட்டாரை  அவர்தம்  சாதிக்குத்  தக்கவாறு  சிறைக்கூடத்திற் றொழில்  செய்யும்படி  நியமித்தல்  வேண்டும் .                                         109

     அரசன்  இத்தகைய  தீயவர்களையும் , அவர்தம்  கூட்டுறவால்  தீங்கெய்தினோரையும்  தண்டித்து  எப்பொழுதும்  அவரை  நன்னெறிக்கண்  ஒழுகுமாறு  பயிற்றல்  வேண்டும் .                               110

     பகைவரின்  சூழ்ச்சியால்  அரசனுக்கும் , நாட்டிலுள்ள  குடிகளுக்கும், அமைச்சர்  முதலிய  அரசியல்  வினைசெய்வார்க்கும்  மாறுபாட்டுத்  தன்மையை  விரும்புவோரை , அரசன்  விரைந்து  அழித்துவிடல்   வேண்டும் .                                                                                                           111

     அரசன் , ஒரு  குழுவினர்  தீங்குபுரிவாராயின் , அக்குழுவினரை  ஒரே  காலத்தில்  ஒருங்கு  அழித்துவிட  விரும்பலாகாது . ஒரு  குழந்தை  பாலுண்ணுங்கால்  தனத்தை  ஒவ்வொன்றாகப்  பற்றி  உண்ணுதல்  போல , அரசனும்  அத்தீயோரை  முறையே  ஒவ்வொருவராகப்  பற்றி  அழித்துவிடக்  கடவன் .                                                                                    112

     எப்பொழுது  அரசன்  அறநெறி  பிறழ்ந்து  ஒழுகுகின்றானோ , அப்பொழுது  குடிகள் , மிக்க  வலிமை  வாய்ந்து  அறநெறிக்கண்  ஒழுகும்  பகையரசனைச்  சார்ந்து , அச்சார்பினால்  தம்  அரசனை  என்றும்  அச்சுறுத்தக்  கடவர் .                                                                         113

     அரசன்  அறமுடையனா  யிருக்குங்காறும்  அரசனாகவே  வாழ்வான். அன்றி  அறநெறி  பிறழ்ந்து  ஒழுகுவானாயின் , உலகமுங்  கேடெய்தும்;  அவ்வரசனும்  விரைந்தழிவெய்துவான் .                            114

     எவன்  தன்  தந்தை  தாய்  மனைவியாகிய  இவர்களைக்  காவாமல்  விட்டுத்  தன்  விருப்பின்  வண்ணம்  திரிகின்றானோ , அவனைக்  கால் விலங்குகளாற்  பிணித்துத்  தெருவலகிடன்  முதலிய  தொழில்களில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . அவனுக்குரிய  கூலியிற்  பாதியை  முயன்று  பிடித்து  அவன்  தந்தை  முதலியோர்  பொருட்டு  அரசன்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                    115

     ஆயிரம்  பணங்  கொண்டது  உத்தம  சாகச  மென்னுந்  தண்டமாகும் . அரசின்  முத்திரை  யிடப்பட்டதும்  பத்து  மாட  எடை  கொண்டதுமாகிய   செம்பு  பணம்  என்னும்  பெயருடைய தாகும் . அப் பணம்  ஒன்று  நூற்றைம்பது  பலகறைகளின்  விலையாகவும்  அது  காருடாபணம்  என்னும்  பெயருடையதாகவும்  அறியப்படும் .           116

     அவ்வுத்தமசாகசத்தின்   பாதியாகிய  ஐந்நூறு  பணம்  மத்திம  சாகச மெனவு, அம் மத்திம  சாகசத்தின்  பாதியாகிய  இருநூற்றைம்பது  பணம்  பிரதம  சாகச மெனவும்  முறையே  பெயர்  பெறும் . கடையாய  குற்றத்திற்குப்  பிரதம  சாகச  தண்டம்  உரியதாகும் . அங்ஙனமே  மற்றையவற்றிற்கும்  கொள்ளப்படும் . 117

( மேற் கூறப்பட்ட  இரு  சுலோகங்களிலுந்  தண்டப்  பணங்களின்  அளவுகளை  மநுஸ்மிருதி  8-ஆம்  அத்தியாயம்  138-ஆம்  சுலோகத்திலுங்  காண்க . அச்சுலோக  மொழிபெயர்ப்பு  வருமாறு ; “இருநூற்றைம்பது  பணம்  பிரதம  சாகச மெனவும், ஐந்நூறு  பணம்  மத்திம  சாகச மெனவும் , ஆயிரம்  பணம்  உத்தம  சாகச மெனவும்  எண்ணப்பட்டன . )

     இடையாய  குற்றத்திற்கு  மத்திம  சாகச  தண்டத்தையும் , தலையாய  குற்றத்திற்கு  உத்தம  சாகச  தண்டத்தையும் , அரசன்  மேற்கொள்ளல்  வேண்டும் . மிச்சிரமென்னும்  இந்  நான்காம் அத்தியாயத்திலுள்ள  முதற்  பிரகரணமாகிய  இதன் கண்  நட்டார்  பகைவர்  நொதுமலராகிய  இவர்கள்பாற்  சாம  தான  பேத  தண்டோ பாயங்களை மேற்கொள்ளு முறை இத்துணையுங்  கூறப்பட்டதாம் . 118                                                                                              

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

“நண்பர்  முதலியோரின்  இலக்கணங்கள் “  என்னும்

முதற்  பிரகரணம்  முற்றிற்று.

                            &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரண்டாம்  பிரகரணம் 

(கோச  நிரூபணம்)

1 . கருவூலம்  அமைக்கும்  முறை

     இனி, மிச்சிரமென்னும்  இந்நான்காம்  அத்தியாயத்திற்  கருவூலத்தைப்  பற்றிய  இரண்டாம்  பிரகரணத்தைக்  கூறுவேன் . ஒரு  சில  பொருள்களின்  கூட்டமே  கருவூலமாகும் . அது  தனித்தனியாக  எண்ணுங்கால்  பல்வேறு  வகைத்தாம் .                                                         1

     அரசன்  எவ்வழியாலேனும்  பொருளையீட்டல்  வேண்டும் . அங்ஙனம்  ஈட்டிய  பொருளால்  தன்  நாட்டினையும் , படைகளையும் , வேள்வி , வினை  முதலியவற்றையும்  காத்தல்  வேண்டும் .                      2

     படைகளையும் , குடிகளையும் , வேள்வி  முதலியவற்றையும்  காத்தற்  பொருட்டுச்  சேர்க்கப்படுங்  கருவூலமே  அரசனுக்கு  இம்மை  மறுமைகளில்  இன்பம்  விளைவிப்பதாகும் . இங்ஙனமல்லாது  சேர்க்கப்படுங்  கருவூலம்  துன்பந்  தருவதாகும் .                                         3

     தன்  மனைவி  மக்கள்  பொருட்டும் , தான்  இன்பம்  நுகர்தற்பொருட்டுமே  கருவூலம்  சேர்க்கப்படுமாயின் , அது  மறுமைக்கண்  நலந்தருவதன்று ; நரகத்திற்கும்  உரியதாகுமென்று  அறியப்படும் .                                                                                                           4

     ஒருவன்  மற்றொருவனிடத்தினின்றும்  நியாயமின்றிப்  பொருளை  யீட்டுவானாயின் , அவன்  அங்ஙனம்  ஈட்டப்பட்டோனது  பாவத்தை யடைவான் . சற்பாத்திரமாயினாரிடத்தினின்றும்  வாங்கப்பட்டதும்  அவர்  பொருட்டுக்  கொடுக்கப்பட்டதுமாகிய  பொருளே  வளர்ச்சி  யெய்துவதாகும் .                                                                                                    5

     பொருளை  அறத்தாறீட்டி  அவ்வழியே  செலவிடுவோனே  சற்பாத்திரமாவான் . அங்ஙனமின்றித்  தீயவழியான்  ஈட்டி  அவ்வழியே  செலவிடுவோன்  அபாத்திரமாவான் . அரசன்  அபாத்திரமாவானது  பொருள்  முழுதையுங்  கவர்ந்து  கொள்ளலாம் . அதனால்  அவன்  குற்றமுடையனாகான் .                                                                                       6

     அரசன்  மறநெறிக்கண்  ஒழுகுவோனிடத்தினின்றும்  அவன்  பொருளை  எல்லாவழியாலுங்  கவர்ந்து  கொள்ளலாம் . அங்ஙனமே  பகைவர்  நாட்டினின்றும்  அவர்தம்  பொருளையும்  வஞ்சத்தாலும் , வலிமையாலும் , களவுத்தொழிலாலும்  கவர்ந்து  கொள்ளலாம் .           7

     எவ்வரசன்  நீதிமுறையைக்  கைவிட்டுத்  தன்   குடிகளைத்  துன்புறுத்தி , அவர்தம்  பொருளைக்  கவர்கின்றானோ , அவனுடைய  அப்பொருள்  அவன்  இராச்சியத்தோடு  பகைவர்வயமாய்   விடும் .      8

     அரசன்  தனக்குத்  துன்பம்  நேராத  காலத்தில்  தண்டவருவாயையும் நிலக்கூற்றின்  வருவாயையும் , சுங்க  வருவாயையும்  மிகைப்படுத்தி  அப்பொருள்களாலும் , புண்ணியத்தலம்  தேவாலயங்களின்  காணிக்கைப்  பொருள்களாலும்  தன்  கருவூலத்தை  நிறைக்க  எண்ணலாகாது .                                                                                                       9

( துன்பம்  நேர்ந்துழி  அப்பொருள்களாற்  கருவூலத்தை  நிறைக்கலாமென்பது  கருத்து .)

     பகைவரை  யழித்தற்  பொருட்டுப்  படைகளைப்  பெருக்கிக்  காக்க  முயலுங்கால் , குடிகளிடத்தினின்றும்  தண்டம் , சுங்கம் , முதலிய  இறைப்  பொருள்களை  மிகைப்படுத்தி  வாங்கலாம் .                              10

     அரசன்  தனக்குத்  துன்பம்  நேர்ந்துழித்  தன்  குடிகளுட்  பொருள்  மிக்காரிடத்தினின்றும்  வட்டி   தருவதாகக்  கூறி   அவர்  தம்  பொருளைப்  பெற்றுக்  கொள்ளலாம் . பின்னர்  அத்துன்பம்  தீர்ந்துழி  அப்பொருளை  வட்டியோடு  அவ்வுரியாரிடத்துக்  கொடுத்து விடல் வேண்டும் .                                                                                                              11

     அரசன்  இங்ஙனம்  பொருள்  கொண்டு  படைகளைக்  காத்திலனேல், மிகப் பெருந்  தண்டத்தையுடைய  பகைவனால்  தானுங்  கேடெய்துவன் ; குடிகளும்  அரசியலும்  கருவூலமும்  அழிவெய்துவனவாம் . சுரதன்  முதலிய  அரசர்களும்  இங்ஙனமே  தம்  படைகளைக்  காவாது  மிகப்  பெருந்  தண்டத்தையுடைய  பகைவரால்  அழிவெய்தினர் .                                                                                                    12

( சுரதன் – அழகிய  தேரையுடையவன் ; இவன்  சூரிய  வமிசத்து  அரசருள்  ஒருவன். )

     அரசன்  தண்டவருவாய் , நிலக்  கூற்றுவருவாய் , சுங்கவருவாய் , ஆகிய  இவைகள்  இல்லாமலே  இருபது  யாண்டுவரை  தன்  படைகளயும்  குடிகளையும்  நன்கு  காத்தற்குத்  தக்க  பொருட்  கருவூலத்தைச்  சேர்த்து  வைத்தல் வேண்டும் .                                           13

     கருவூலம்  படைகளை  மூலமாக  வுடைத்தாம் ; படைகளும்  கருவூலத்தை  மூலமாக  வுடையனவாம் . படைகளை  நன்கு  காத்தலாற்  கருவூலம்  அரசியலாகிய  இவற்றிற்கும்  ஆக்கமும் , பகைவர்க்கு  அழிவும்  உண்டாம் ; தன்  குடிகளை  நன்கு  காத்தலால்  அம் மூன்றனோடு  மறுமையின்பமும்  உண்டாகும் .                      14-15

( கருவூலமும்   படையும்  ஒன்றுக்கொன்று  துணையாகுமாதலின்  இவ்வாறு  கூறினார் . படைகளைக்  காத்தலாற்  பொருள்  அரசியல்களின்  ஆக்கமும்  பகைவரின்  அழிவும்  உண்டாம் . எனவே  இம்மையின்பமும் , குடிகளைக்  காத்தலான்  அறமுண்டாதலின்  அதனோடு  மறுமையின்பமும்  உண்டாமென்பது  கருத்து . )

     வேள்வியின் பொருட்டுப்  பொருளும் , இம்மையின்பம் , மறுமையின்பம் , வாழ்நாள்  வளர்ச்சியாகிய  இவற்றின்  பொருட்டு  வேள்வியும்  உண்டாயினவாம் . பகைவரின்மை , படை , பொருளாகிய  இம்  மூன்றும்  அரசியல்  வளர்ச்சிக்கு  உரியனவாம் .                              16

( ஒருவன்  பொருள்  படைத்தல் , வேள்வி  முதலிய  நற்  கருமங்களினிமித்தமா மென்பது  கருத்து . வேள்வி – ஐம் பெருவேள்வி  முதலியன . இவற்றை  வடநூலார்  பஞ்சமகா யாகம்  என்ப . அவை :  பிரம யாகம் , தேவ யாகம் , மானுட யாகம் , பிதிர் யாகம் , பூத யாகம்  என்பனவாம் . அவற்றுள் , பிரம யாகம்-வேதமோதல் , தேவ யாகம்- ஓமம் வளர்த்தல் , மானுட யாகம் – விருந்தோம்பல் , பிதிர் யாகம் – நீர்க்கடனாற்றல் , பூத யாகம் – பலியீதல் .)

     பொறுமை  மிக்க  அரசனுக்கு  நீதியின்  திறமையாற்  பகைவரின்மை , படை , பொருளாகிய  இம் மூன்றும்  வளர்ச்சி  யெய்துவனவாம் . ஆதலின் , அவன்  தன்  அறிவின்  வன்மை  மிகுதிக்குத்  தக்கவாறு  அவற்றின்  பொருட்டு  முயலுதல்  வேண்டும்.17

     பூஞ்செடிகளை   நன்கு  வளர்த்து  அவற்றினின்றுங்  கிடைக்கும்  மலர்களைப்  பறித்து  மாலை  கட்டுவோனை  யொப்பத்  தன்  குடிகளை  யோம்பி  அவரிடத்தினின்றுங்  கிடைக்கும்  இறைப்பொருளாலும் , பகைவரை  வணங்கி  அவர் தருந்  திறைப்பொருளாலும்  தன்  கருவூலத்தை  நிறைக்கும்  வேந்தன்  தலையாய  அரசனாவான் . வாணிகத்  தொழிலாற்றான் கருவூலத்தை  நிறைவிப்பவன்  இடையாய  அரசனாவான் . பிறர்க்கு  வினை  செய்தலாலும் , தண்டத்தாலும் , புண்ணியத்தாலும் , திருக்கோயிற்  காணிக்கைகளாலும்  கிடைக்கும்  பொருளாற்  கருவூலத்தை  நிறைவிப்பவன்  கடையாய  அரசனாவான் .                                        18-19

     அரசன்  சுருங்கிய  பொருளுடையாரும்  நடுத்தரமான  பொருளுடையாருமாகிய  குடிகளை  வேதன  முதலியன  கொடுத்து  எப்பொழுதுங்  காத்தல்  வேண்டும் . பெரும்பொருள்  படைத்த  தலையாய  குடிகளைத்  தலைமை  அதிகாரிகளைப்  போலப்  பிரதிநிதிகளாக்கிக்  காத்தல்  வேண்டும் .                                                20

     சிறந்த  பொருள்மிக்க  செல்வர்கள்  அரசர்க்குக்  குறைந்தவருமாகார் ; அரசரினு மிக்காருமாகார் . [ அரசரோ டொப்பாவரென்றபடி. ]                                                                                     21

     குடும்பக்காப்பின்  பொருட்டுப்  பன்னீராண்டுச்  செலவிற்கு  வேண்டிய  அளவு  நிறைத்து  வைக்கப்பட்ட  பொருள்  கடையாய  தாகும் . பதினாறு  யாண்டுச்  செலவிற்கு  வேண்டிய  அளவு  நிறைத்து  வைக்கப்பட்ட  பொருள்  இடையாயதாகும் . முப்பது  யாண்டுச்  செலவிற்கு  வேண்டிய  அளவு  நிறைத்து  வைக்கப்பட்ட  பொருள்  தலையாயதாக  எண்ணப்படும் . அரசன்  தனக்கு  இடுக்கண்  நேர்ந்தவிடத்து  முற்கூறிய  பொருளாளர்பால்  அவர்  தகுதிக்கேற்பத்  தன்  பொருளை  வைத்துக்  காத்தல்  வேண்டும் .                                   22-23

( முற்கூறிய  பொருளாளர்  21-ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்டவர் .)

     வணிகர்கள்  ஓரோவமயம்  ஊதியங்  கருதாமல்  பண்டங்களின்  மூலவிலை  யளவிற்  கொள்ளல்  விற்றலைச்  செய்வர் . ஒரோவமயம்  விலையுயர்ந்திருக்குங்காற்  பண்டங்களை  விற்றலும் , விலை  குறைந்திருக்குங்காற்  பண்டங்களைக்  கொள்ளுதலுஞ்  செய்வர்.  24

     வாணிகத்தின்  பொருட்டு  வணிகற்களாற்  றொகுத்து  வைக்கப்படும்  பண்டங்களை  அரசன்  ஒரு  பொழுதும்  பொருள்  கொடுத்தன்றிக் கொள்ளலாகாது ; பொருளின்றி  வலிந்து  கவர்ந்து  கொள்ளுவானாயின் , அவன்  குடிகளாகிய  அவ்வணிகர்களின்  மனக் கலக்கம்,  அவ்வரசனைக்  குலத்தோடு  அழித்துவிடும் .                       25

2. தானியங்களைத்  தொகுத்து  வைக்கும்  முறை

     அரசன்  தன்  நலத்திற்  பொருட்டும் , தன்  நாட்டைக்  காத்தற்  பொருட்டும்  மூன்று  யாண்டுவரை  செலவிடுதற்குப்  போதிய  அளவு  தானியங்களை  உரிய  காலங்களிற்  சேர்த்துத்  தொகுத்து  வைத்தல் வேண்டும் ; செல்வமிக்கார்  அம் மூன்று  யாண்டினும் மிக்க  காலத்திற்கு  வேண்டிய  அளவு  தானியங்களைச்  சேர்த்து  வைத்தலும்  நன்றென்ப .                                                                                                            26

     பருமை, ஒளி, உலர்ச்சி , மணம் , நிறம் , சுவை , நெடுநாட் கெடாதிருத்தல்  ஆகிய  இவற்றையுடைய  உயர்ந்தசாதிப்  புதிய  தானியங்கள்  மிக்க  விலையுடையன  வெனினும் , அவற்றை  நன்கு  ஆராய்ந்து  பார்த்து  மிகுதியாக  வாங்கி  வைத்துக்  காத்தல்  வேண்டும் . இக்குணங்களில்லாத  தானியங்கள்  குறைந்த  விலைக்குக்  கிடைப்பன  வெனினும்  அவற்றைக்  கொள்ளலாகாது .                           27

     நஞ்சு ,நெருப்பு , பனி , கீட  மாகிய  இவற்றாற்  பற்றப்பட்ட  தானியங்களை  வாங்கி  வைத்தலாகாது . உள்ளீடற்ற  தானியங்களைச்  சேர்த்து  வைக்காது  செலவு  செய்துவிடல்  வேண்டும் .                                                                                                              28

     அரசன்   செலவிடப்படும்  தானியத்தின்  அளவைப்  பார்த்து  அவ்வளவின்  ஒத்த  அளவு  புதிய  தானியங்களை  ஆண்டுதோறும்  நன்கு  முயன்று  வாங்கிச்  சேர்த்து  வைத்தல்  வேண்டும் .                       29

     தானியம் , சுரங்கத்தினின்றும்  எடுக்கப்படும்  பொன்  முதலியன புல்  விறகு  முதலியன , எந்திரம்  விடுபடை  விடாப்படை  நெருப்புத்துகள்  பாண்ட  முதலியன , ஆடையாகிய  இவற்றின்  கருவியாக  உபயோகப்படுவனவற்றையும் , காரியமாக  உபயோகப் படுவனவற்றையும்  எப்பொழுதும்  தொகுத்து  வைத்தல்  வேண்டும் . அங்ஙனம்  தொகுத்து  வைத்தல்  காரிய  சித்தியை  யளிப்பதாகும்.

( 30-31. ஓஷதி  என்று  மூலத்திலுள்ளது .  ஓஷதி – ஒரு முறை காய்த்து அழியும்  செடி முதலியன . அதன்கண்  விளையும்  தானியங்களுக்காம்  என  மொழிபெயர்க்கப்பட்டது . அது  நோய் தணிக்கும்  மருந்துக்குமாம். கருவியாக  உபயோகப்படுவன – எந்திரம்  படைக் கல  முதலியன . காரியமாக  உபயோகப்படுவன – தானியம்  ஆடை  முதலியன .)

     ஈட்டப்பட்ட  பொருள்  முதலியவற்றை  முயன்று  நன்கு  காத்தல்   வேண்டும் . பொருளை  யீட்டுங்கால்  உண்டாந்  துன்பம்  பெரிதாம் .; அதனைக்  காக்குங்கால்  உண்டாந்  துன்பம்  அவ் வீட்டற்றுன்பத்தினும்  நான்கு  மடங்கு  மிக்கதாகும் . பொருள்  காக்கப்படாது  ஒரு கணப்பொழுதேனும்  புறக்கணிக்கப்படுமாயின் , அது  விரைந்து  அழிவெய்துவதாகும் .                                                                                  32-33

     ஈட்டப்பட்ட  பொருளின்  இழப்பால்  ஈட்டினவர்க்கு  எத்துணைத்  துன்ப முண்டாமோ  அத்துணைத் துன்பம்  அவன்  மனைவி  மக்கட்கும்  உண்டாகாது . அங்ஙனமாயின்  மற்றையோர்க்கு  அதனால்  எங்ஙனம்  துன்ப  முண்டாம் .                                                                                               34

( பொருளை  ஈட்டினவர்க்கே  அதன்  இழப்பால்  பெருந்துன்பமுண்டா மென்று  கூறிய  இதனால் , அப்பொருளை  ஈட்டினவனே  நன்கு  காக்கவேண்டுமென்று  வற்புறுத்தியவாறாம் .  )           

     ஒருவன்  தன்  காரியத்திற்  சோம்பலுடையனாக  இருக்குங்கால்  அவனைச்  சார்ந்த  மற்றையோர்  எங்ஙனம்  சோம்பலின்றி  இருப்பர்? [அவரும்  சோம்பலுடையராவரென்றபடி ] எவன்  தன்  காரியத்திற்  சோம்பலின்றி  விழிப்புடையனாக  விருக்கின்றானோ , அவனைப்  பற்றி  நிற்கும்  துணைவரும்  அவனை  யொப்பக்  காரியத்திற்  கண்ணுடையராகவே  இருப்பர் .                                                                   35

     எவன்  பொருளை  யீட்டு முறை  தெரிந்தும் , அங்ஙனம்  ஈட்டப்பட்ட  பொருளை  நன்கு  போற்றுமுறை  தெரியாதிருக்கின்றானோ , அவனு டைய  பொருளீட்டும்  உழைப்புப்  பயனின்றிக்  கழிதலால் , அவனினுஞ்  சிறந்த  முழுமகன்  பிறனொருவனும்   இலன் .                  36

(முழுமகன் – அறிவிலான் .)    

     ஒரே  அதிகாரத்தில்  இருவரை  அதிகாரிகளாக  நியமிப்பவனும் , உயிரோடிருக்கும்  இரண்டு  மனைவிமாரை  யுடையவனும் , யாவர்மாட்டும்  நம்பிக்கை  வைத்தொழுகுவோனும் , மிக்க  பொருட்  பற்றுடையோனும் , மடியாளனும் , பெண்வழிச்  சார்ந்தோனும் , கள்வர், பிறர்மனை  நயப்போர்,  ஆததாயிகள்  என்னும்  இப்  பெருந்தீவினையாளரைக்  குறித்துச்  சான்று  வினவுவோனும்  ஆகிய  இவரெல்லோரும்  அறிவிலராவர் .                                                              37-38

     பொருளைப்  போற்றுங்கால்  உலோபியைப்போல்  இருந்து  போற்றல்  வேண்டும் ; அதனைப்  பிறர்க்குக்  கொடுக்குங்கால்  பற்றற்றவனைப்போல்  இருந்து  கொடுத்தல்  வேண்டும் . ஈரிடத்தும்  இங்ஙனமின்றி  மாறுபட்டு  ஒழுகுவானாயின் , அவன்  பொருட்கேடெய்துதலோடு  அறிவின்மைக்கும்  ஆளாவான் .                   39

3. நவமணிகளின்  ஆராய்ச்சி

     அரசன்  பண்டங்களின்   இயல்பைத்  தானே  உண்மையாக  ஆராய்ந்தறிவதில்  எப்பொழுதும் முயற்சியுடையனாக  இருத்தல்  வேண்டும் . இரத்தின  முதலியவைகளை  அவ்வாராய்ச்சியாளரோடு  கூடித்  தானே  நன்கு  ஆராய்ந்து  பார்த்து  வாங்கிப்  போற்றல்  வேண்டும் .                                                                                                               40

     வயிரம் , முத்து , பவளம் , கோமேதகம் , இந்திர நீலம் , வைடூரியம் புட்பராகம் , மரகதம் , மாணிக்கம் , இவ்வொன்பதையும் , சிறந்த  இரத்தினங்களென்று  அறிவுடையோர்  கூறுவர் .                                       41

     இந்திர  கோபத்தைப்  போற்  செந்நிற  வொளியினையுடைய  மாணிக்கம்  கதிரவற்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . செம்மை  பொன்மை  வெண்மை  கருமையாகிய  இந்நிற  வொளிகளையுடைய முத்துக்கள்  திங்களஞ்  செல்வற்கு  மகிழ்ச்சி  தருவனவாம் .                                       

( இந்திரகோபம் – கார்காலத்துண்டாகுஞ்  செந்நிறப்  பூச்சி . இதனைத்  தம்பலப் பூச்சியென்ப .)

     பொன்மையும்  செம்மையும்  கலந்த  ஒளியோடு  கூடிய  சிறந்த  பவழம்  செவ்வாய்க்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . மயில் , காடை , இவற்றின்  இறகு  போன்ற  பசுமை  நிற  வொளியினையுடைய  மரகதம்  புதனுக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் .                                             43

      பொன்னைப்போல்  ஒளிசெய்கின்ற   மஞ்சள்  நிறத்தினையுடைய  புட்பராகம்  வியாழனுக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . விண்மீனைப்போல் மிகவும்  சிறந்த  வெண்ணிற  ஒளியினையுடைய  வயிரம்  வெள்ளிக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் .                                                                                    44

( வெள்ளி – சுக்கிரன் ,)

     நெருங்கிய  சூற்கொண்ட  மேகத்தைப்  போன்ற  கரிய  ஒளி யினையுடைய  இந்திரநீலம்  சனிக்கு  மகிழ்ச்சி   தருவதாகும் . சிறிது  பொன்மையுஞ்  செம்மையுங்  கலந்த  ஒளியினையுடைய  கோமேதகம்  இராகுவுக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . பூனையின்  கண்ணைப்  போன்ற  நிறத்தினையும்  அசைகின்ற  நூல்  போன்ற  ஒளியினையுடைய  வைடூரியம்  கேதுவுக்கு  மகிழ்ச்சி   தருவதாகும் .                                45-46

     இந்  நவமணிகளுள்  வயிரமே  எல்லாவற்றினுஞ்  சிறந்ததாகும் ; கோமேதகமும்  பவழமும்  எல்லாவற்றினும்  தாழ்ந்தனவாகும் . மரகதமும் , மாணிக்கமும் , முத்தும்  தலையாய  மணிகளாம் . இந்திர  நீலமும் , புட்பராகமும் , வைடூரியமும்  இடையாய  மணிகளாகும்.   47

     பாம்பின்  பாலுள்ள  மணி  மிக்க  பேரொளியுள்ளது ; எல்லா  மணிகளினுஞ்  சிறந்தது , அது  கிடைத்தற்  கரியதாகும் .                      48

     உள்  வெடிப்பில்லாததும் , நல்ல  நிறமுடையதும் , கீற்று புள்ளி  இவை  இல்லாததும்  அழகிய  கோணங்களையுடையதும், உயர்ந்த  ஒளியுடையதும்  ஆகிய  மணியினையே  சிறந்ததென்று  இரத்தின  இயல்பு  ஆராயும்   அறிஞர்  பாராட்டுவர் .                                                   49

     அம் மணிகள்  சருக்கராபம் , சிபிடம் , தளாபம் , வருத்துலம் , என  நான்கு  வகைப்படும் , அம்  மணிகளினின்றுந்  தோன்றும்  நிறவொளிகள்  வெண்மையும் , செம்மையும் , பொன்மையும்  கருமையுமாம் .                                                                                                    50

( இச்  சுலோகத்தின்  பிற்பாதியில்  பொதுவாக  மணிகளின்  நிறவொளிகள்  கூறப்பட்டமையால்  முற்பாதியிலுள்ள  சருக்கராப  முதலிய  நான்கும்  அம்மணிகளின்  வடிவங்களைக்  குறிப்பனவாகக்  கொள்ளல்  வேண்டும் . இவற்றுள்  சருக்கராபம்  என்பது  சுக்கான்  கல்லை  உபமானமாகவுடையது  என்று  பொருள்படும் . ஆதலின் , அது  பருமையுஞ்  சிறுமையுங்  கலந்த  நேரிதல்லாத  வடிவத்தை  யுடைய தாகும் .  சிபிடம்  என்பது  அவலை  யுணர்த்தும் . ஆதலின்  அஃது  அவலை  யொப்பத்  தகட்டு  வடிவினை யுடையதாகும் .  தளாபம்  என்பதில்  தளம்  நீண்ட  பொருளை  யுணர்த்துமாதலின் , அதனை  உபமானமாக  உடையது  தளாபமாகும் . ஆகவே  அது  நீட்டியான  வடிவத்தையுடையதாகும் . வருத்துலம்  என்பது  உருண்டை  வடிவத்தை  யுணர்த்தும் . இவற்றுள்  முன்னதனை  நோக்கப்  பின்னது  சிறந்ததாக  முறையே  மதிக்கப்படுமென்று  57-ஆம்  சுலோகத்திற்  கூறுதலும்  இவ்  வடிவங்களின்  இழிவு  சிறப்புக்களை  நோக்கியாமென்பது புலப்படும் . )

     உரிய நிறத்தினையும் , உரிய ஒளியினையும் முடையதாய்க்   குற்ற மற்ற அரதனம் , தன்னை அணிவோர்க்குச் செல்வம், வன்மை, புகழ், வாழ்நாள் ஆகிய இவற்றை  வளர்ப்பதாகும் . இங்ஙனமல்லாத                      இரத்தினம் முற்கூறிய செல்வ முதலியவற்றை அழித்துவிடுவதாகும். 51                                                                                          

     ஒளியால்  நிறமும்  நிறத்தால்  ஒளியும்  விளங்குவனவாம் .               52

     செந்தாமரை  மலரைப்  போன்ற  ஒளியினையுடைய  பதுமராகம்  மாணிக்கத்தின்  வகைகளுள்  ஒன்றாகும் . புதல்வர்ப்  பேற்றை  விரும்பும்  பெண்மக்கள்  ஒருபொழுதும்  வயிரமணியை யணிதலாகாது .                                                                                                    53

     முத்தும் பவழமும் அணியப்படுமாயின்  அவற்றின்  ஒளி, உருவம், நிறம் , முதலியன நாட் செல்லச் செல்லக்  குறைந்துவிடுவனவாம் . 53இ

     குற்ற மற்ற  அரதனம்  எடைமிகுதி, ஒளி, நிறம் , அகற்சி , தோன்றுமிடம் , உருவம் , ஆகிய  இவற்றால்  மிக்க  விலையுள்ளதாகும். முத்துப்  பவழங் களல்லாத  மற்றை  அரதனங்கள்  இரும்பினாலும்  கல்லினாலும்  பெரும்பாலுங்  கீறவியலாதனவாமென்று  இரத்தின  ஆராய்ச்சி யறிவுடையோர்  கூறுவர் .                                                    54-55                  

4 . அரதனங்களின்  விலை  யளவு

     எடை  குறைந்த  பெரிய  இரத்தினம்  மிகுந்த  விலையுடையதாகும் . எடை  மிக்க சிறிய  அரதனம்  நல்ல குணமுடைய  தெனினும்  குறைந்த  விலையுடையதாகும் .                                                                                          56

    சருக்கராபமணி  கடையாய  விலையினையும் , சிபிடமணி  இடையாய  விலையினையும் , தளாபமணி  தலையாய  விலையினையும்  உடையனவாக  மதிக்கப்படும் . வருத்துல  வடிவினதாகிய  மணி , கொள்வோன்  விற்போனாகிய  இருவரது  விருப்பின்  வண்ணம்  விலை  மதிக்கப்படுவதாகும் .                               57

     முத்துப்  பவழங்களல்லாத  மற்றை  அரதனங்கள்  கால நீட்சியால்  முதுமையினை  யெய்தா . அரசன்  நெறி  பிழைத்தொழுகுதலால் , அரதனங்களின்  விலை  அளவிற்  குறைந்தும்  அளவின்  மிக்கும்  ஏற்படும் .                                                                                                                 58

     மீன் , பாம்பு , சங்கு , பன்றி , மூங்கில் , மேகம் , சிப்பி  ஆகிய  இவற்றினின்றும்  முத்துகள்  உண்டாவனவாம் . இவற்றுட்  சிப்பியினின்றும்  உண்டாகும்  முத்துக்களே  மிகுதியாகும் .                  59

     சிப்பியினின் றெடுக்கப்படும்  முத்துகள்  கருமை , வெண்மை , பொன்மை  கலந்த  செம்மை  ஆகிய  இந்நிறங்களையும், இரண்டு  நான்கு  ஏழு  கஞ்சுகங்களானாதல் , மூன்று  ஐந்து  ஏழு  கஞ்சுகங்க ளானாதல்  மூடப்படுதலையும்  உடையனவாம் . அவற்றுள் , முன்னுள்ளதனை  நோக்கப்  பின்னுள்ளது  ஒன்றுக்கொன்று  சிறப்புடையதாகும் .                                                                                            60

( கஞ்சுகம் – சட்டை . சட்டையிட்டது  போல  ஒன்றன்மேலொன்றாகச்  சூழ்ந்திருப்பது . )

     கருமை , வெண்மை , பொன்மை  கலந்த  செம்மை  ஆகிய  இந் நிறங்களையுடைய  அச்சிப்பி  முத்துக்கள் , காலநீட்சி  பற்றி  ஒளி உருவ  முதலியவற்றின்  தேய்வுகளை  முறையே  எய்துவனவாம் . அம்  முத்திறத்து  முத்துக்களையும்  முறையே  இளம்  பருவத்தது, நடுப்  பருவத்தது , முதிர் பருவத்தது  என  அறிவுடையோர்  கூறுவர் .          61

( முறையே  எய்துதல்  – அம்  மூன்றுட் கரியது  முன்னரும் , வெளியது  அதன்பின்னரும் , பின்னது  அதன்  பின்னருமாக  ஒளி  உருத் தேய்வெய்தல் . )

     அச் சிப்பிமுத்தே  துளையிடுதற் குரியதாகும் . மற்றவை  அங்ஙனம்  ஆகா . சிங்கள  தீபத்தில்  வாழும்  மனிதர் , அவ்வுண்மையான  சிப்பி  முத்துக்களை  யொப்பச்  செயற்கை  முத்துக்களைச்  செய்வர் .           62

     அவற்றுள் , ஐயமொழிந்து  உண்மையானது  இன்னதென்று  தெளிதற்  பொருட்டு  அம் முத்தை நன்கு சோதித்தல் வேண்டும் . உப்பும்  எண்ணெயுங்  கலந்த  வெந்நீரில்  அதனை  ஓரிரவு  முழுதும்  வைத்துப்  பின்னர்  எடுத்து , நெற்களோடு  சேர்த்துத்  தேய்த்தல்  வேண்டும் . அங்ஙனம்  தேய்த்துப்  பார்க்குங்கால் , அது  நிறவேற்றுமை  யெய்தாது  சிறந்த  ஒளியொடு  பொருந்தியிருக்குமாயின் , அதனை  இயற்கையான  சிப்பி  முத்தென்றும் , ஒளி  சிறிது  குறைந்து  காணப்படுமாயின் , அதனைச்  செயற்கை  முத்தென்றும்  அறிதல்  வேண்டும் .                                                                                                         63-64

     கோமேதக  மல்லாத  மற்றை  அரதனங்கள்  துலையால்  நிறுத்து  மதிக்கப்படும் விலையுடையனவாகும்.                                                        65

     நிறுத்தலளவையுள்  குமை  இருபது  கொண்ட  எடை  ஓர்  இரத்தியாகும் ; அவ் எடை முத்து அல்லாத மற்றை அரதனங்களுக்கு  உரியதாகும் . குன்றி  நான்கு  கொண்ட  எடை  மூன்று  இரத்தினங்களாகும் . அவ் எடை  முத்துக் குரியதாகும் . அவ் இரத்திகள்   இருபத்து நான்கு  கொண்ட  எடை  இடங்கம்  என்று  கூறப்படும் . இவ் எடை  பவழமல்லாத  மற்றை  அரதனங்களுக்காம் . இடங்கம்  நான்கு  கொண்ட  எடை  ஒரு  தோலாவாகும் ; இவ் எடை  எப்பொழுதும்  பொன்னுக்கும்  பவழத்திற்கும்  உரியதாகும் .                                        66-67

( குமை – க்ஷூமா . இரத்தி – ரக்தி . குன்று – கிருஷ்ணலகம் . இடங்கம் – டங்கம் .

குமை  20          —   இரத்தி-1

இரத்தி  3           — குன்றி 4

இரத்தி  24         — இடங்கம் -1

இடங்கம் 4        — தோலா -1

இவ்வளவின்படி  இடங்கம் -1 க்கு  இக்காலத்து  வழங்கும்  வராகனெடை  ஒன்றாகும் . அங்ஙனமாயின்  ஒரு  தோலா  நான்கு  வராகனெடையாகும்.; அஃது  ஒன்றேகால்  உரூபாய்  எடையாகும் . நிறுத்தலளவையுட்  குமை  மிகக்  குறந்த  அளவாதலின் , அது  முத்துப்  பவழங்க ளல்லாத  மற்றை  அரதனங்  களுக்காம் . எனவே , முத்திற்கு  இரத்தியளவும்  குன்றியளவு முரிய வென்பது  போதரும். )

     ஓர்   இரத்தி யளவு  எடையுள்ள  நன்கு  அகன்ற  தளாபம்  என்னும்  ஒரு  வயிரமணியின்  விலை  ஐந்து  பொன்களாகும் .                            68

( எண்பது  இரத்தி  கொண்டது  ஒரு  பொன்  ஆகும்  என்று  70-ஆம்  சுலோகத்திற்  கூறுவர் . ஆதலின்  வயிரமணியின்  நிறை ஒன்றுக்குப்   பொன்  நானூறு  மடங்கு  விலையென்பதும்  அஃது  ஓரிரத்தியளவுள்ள ஒரு  மணிக்கென்பதும்  உணர்க . )

     தளாப  வயிரமணி  இரத்தியாலும்  அகற்சியாலும்  சிறந்திருப்பின் , அதற்கு  விலை  முன்னையினும்  ஐந்து  மடங்கு  அதிகமாகும் . இரத்தியும் , அகற்சியுமாகிய  இவை  எவ்வளவெவ்வளவு  குறைவாக வுள்ளனவோ , அவ்வள வவ்வளவிற்குத்  தக  விலையுங்    குறைவாக  மதிக்கப்படும் .                                                                                                   69

( ஒரு  வயிரமணி  தளம் , அகற்சி , எடை  என்னும்  இவ்வெல்லா வற்றாலும்  மிகச்சிறந்ததாக  இருப்பின் , அஃது  இரத்தி  ஒன்றுக்கு  ஐந்து  முதல்  இருபத்தைந்து  பொன்கள் வரை  விலை  மதிக்கப்படுவதாகு மென்பதாம் . இது  விலையின்  மேலெல்லையாகும்.)

      அரதனங்களின்  நிறுத்தலளவையில்  எட்டு  இரத்தி  கொண்டது  ஒரு  மாடமாகும் . பத்து  மாடங்கள்  கொண்டது  ஒரு  பொன்னாகும் . எண்பது   கருட  அளவுள்ள  வெள்ளி  ஐந்து  பொன்களின்  விலையாகும்.                                                                                                    70

( இரண்டாம்  அத்தியாயம்  385-ஆம்  சுலோகத்தில்  குன்றி  பத்துக்கொண்டது  மாடம்  எனவும் , மாடம்  பத்துக் கொண்டது  கருடமெனவும்  கூறப்பட்டன. குன்றி  பத்துக்கு  இரத்தி 7 இ  ஆகும். இங்கு  எட்டென்று  கூறப்பட்டுள்ளது . ஐந்து  பொன்களின்  விலை 80- கருட  வெள்ளி  யாகுங்கால்  ஒரு  பொன்னுக்கு  16-கருடம்  முறைப்படி  ஒரு  வராகனெடை  தங்கத்தின்  விலை  ஐந்து  உரூபாயாகவும்  ஒரு  பவுன்  விலை  பதினொரு  உரூபாயாகவும்  அறியப்படும்.)

     வயிரமணி  மிக்க  பருமையுடையதாக  இருப்பின்  அதற்கு  விலை வருக்க இரத்தியைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளல் வேண்டும் . சிபிட வயிரமணியின் விலை உயர்ந்த மணியின் விலையில் மூன்றிலொரு  கூறு குறைந்ததாக மதிக்கப்படும் .                                                                  71

( வருக்கமாவது ஒத்த எண்களின் பெருக்கத்திற் கண்ட  தொகையாகும் அவை 4-க்கு 4-16. 5-க்கு 5-25 என இவ்வாறு பெருக்குதலாற்  கிடைக்கும்  எண்களாகும்.  பின் வரும் சுலோகத்தில் ஓர் இரத்திக்கு இரண்டு கொண்ட வயிரமணிக்கு விலை குறைவாகக்  கூறுதலால் , இங்குக் கூறிய விலை தனி மணிக்கென்றுணர்க . உயர்ந்தமணியின் விலையை முக்கூறுபடுத்து ஒரு கூறு தள்ளி இரு கூறு இதன் விலையாகுமென்பதாம் . )

     சருக்கராப வயிரமணியின் விலை உயர்ந்த மணியினது விலையின் அரைக் கூறாகும் . ஓர் இரத்திக்கு இரண்டு விகிதங்கொண்ட வயிரமணியின் விலை முற்கூறியவற்றின் பாதியளவாக எண்ணப்படும் .                                                                                                      72

( அரைக் கூறாதல் ஓர் இரத்தியளவுள்ள ஒரு மணிக்கென்பதும் , பாதியளவாதல் ஒருமணி ஓர் இரத்தியாகுங்கால் அதற்குள்ள விலையிற் பாதியளவு விலை இரண்டு மணி கொண்ட ஓர் இரத்திக்கு என்பதும் உணர்க . இவ்வாறே தலை  இடை  கடை  யாய  மணிகளின் விலையளவையுங்  கணக்கிட்டுக்  கொள்ளல் வேண்டும் . )

     ஓர்  இரத்தி  நிறைக்கு  வயிரமணி  பலவாக  இருப்பின்  காற்கூறு  விலையாகும் . அங்ஙனமே  இடையாய  மணி  கடையாய  மணிகளுக்குமாம் .                                                                                          72இ

( இரண்டின்மேற்  பலமணிகள்  கொண்ட  ஓர்  இரத்திக்கு  விலை  ஓர்  இரத்தியளவுள்ள  ஒரு  மணியின்  விலையிற்  காற்கூறாமென்பதும் , இடையாய  கடையாய  மணிகளும்  ஓர்  இரத்திக்குப்   பலவாக  இருப்பின் , அவ்வவற்றின்  தனிமணியின்  விலையிற்  காற்  காற்  கூறாகு மென்பதும்  உணர்க . )

     வயிரமணிகள் [ எடைமிக்கனவாகவிருப்பின் ] அவற்றின்  வருக்க இரத்திகளைப் பதினாறு  கூறுபடுத்து  ஒன்பது  கூறுகளைத்  தனியே  பிரித்து  வைத்து , எஞ்சிய   ஏழு கூறுகளோடு  ஐந்து  கூறு  சேர்த்து  அப் பன்னிரண்டு கூறுகளையும்  முப்பதால்  வகுத்து அவ் வகுப்பினின்றுங் கிடைக்கும் தான எண்ணையும், மீண்டும்  அப்பன்னிரண்டு  கூறுகளைப்  பதினாறு  கூறுபடுத்து  ஒரு  கூறெடுத்து  அதனையும் , முன் பிரித்து வைத்த ஒன்பது கூறுகளோடு  சேர்த்துக்  கூடிய  இரத்திகளுக்கு  அம் மணிகள்  குணம்மிக்கனவாயின்  தலையாய  விலையையும் , குணம் குறைந்தனவாயின்  அரைக்கூறு  விலையையும்  ஏற்படுத்தல்  வேண்டும் .                                           73-74

( ஈண்டு “வயிரமணிகள்”  எனப்  பன்மையாகக்  கூறியது – தளாபம், சிபிடம் , சருக்கராபம்  என்னும்  அம்  மணிகளின்  வகைகளை  நோக்கி  என்க . ஆதலின்  விலையின் துணிபு தனிமணிக்கென்பது  போதரும் . ஈண்டுக்கூறிய  கணிதப்படி  உதாரணமாக  எட்டு  இரத்தி  எடையுள்ள  ஒரு  வயிரமணியின்  விலை  வருமாறு :  8-க்கு  8=64-வருக்க  இத்திகளாகும் . இவ் 64-ஐ பதினாறு  கூறுபடுத்துங்கால்  கூறு  ஒன்றுக்கு 4-ஆக 9- கூறுகளுக்கு 36-ஆகும் . எஞ்சிய 7 – கூறுகளோடு 5-கூறு சேர்த்துக் கூடிய 12 –கூறுகளுக்கும்   உயரிதொகை 48 –ஆகும். அவ் 48ஐ -30ஆல்  வகுக்க  வகுப்புத்  தான  எண்  ஒன்றரையே யிரண்டுமா  ஆகும் மீண்டும் அவ் 48-ஐ  பதினாறு  கூறுபடுத்து  ஒரு  கூறெடுக்க 3-ஆகும் . இவ்விரண்டு  தொகைகளையும்  முன்பிரித்துத்  தனிப்படுத்திய 9-கூறுகளுக்குரிய 36-ஓடு  சேர்க்க  நாற்பதரையே யிரண்டுமா  ஆகும் . ஆகவே  ஓர் இரத்திக்கு 68-ஆம் சுலோகத்தின்படி  விலை ஐந்து பொன்னாக  நாற்பதரையே யிரண்டுமாவுக்கு  விலை  இருநூற்று  மூன்று  பொன்களாகும். இவ்விலை தளாபத்திற்காகும். சிபிடம், சருக்கராபங்களுக்கு 71,72 ஆம்  சுலோகங்களிற்  கூறியபடி  முறையே  இவ்விலையில்  மூன்றில்  இரண்டு  கூறும்  அரைக்கூறுமாகக்  கொள்ளல் வேண்டும் . இம் முத்திற  மணிகளும்  குணங்குறைந்தனவாக  இருப்பின்  அவ்வவற்றிற்கு  குறிப்பிட்ட  விலைகளில்  அரைக்கூறு வரை தகுதி நோக்கிக்  குறைத்துக்கொள்ளல்  வேண்டும் . பின்  வரும்  77-ஆம்  சுலோகத்தில் நூற்றுக்கு  மேற்பட்ட  வருக்க  இரத்திகளுக்கு  100க்கு  20- விகிதங்  கழித்து எஞ்சிய வற்றிற்கு  விலை  ஏற்படுத்த  வேண்டுமென்று  கூறுதலால்  ஈண்டுக் கூறியது  நூற்றுக்குட்பட்ட  வருக்க இரத்திகளுக்கென்று  கொள்ளல்  வேண்டும் .)

     முத்துக்களுக்கு , தலை  இடை  கடைத்  தரங்களை  யுணர்ந்து  அவற்றிற்குத்  தக்கவாறு  விலை  ஏற்படுத்தல்  வேண்டும் .                75

     ஒரு முத்தின் வருக்க இரத்தி ஆயிரத்திற்கு  மேற்படுமாயின்  நூற்றுக்குப்  பதினெட்டேமுக்கால்  விகிதங் கழித்து எஞ்சிய இரத்திகளுக்கு  விலை  ஏற்படுத்தல்  வேண்டும் .                                      76

( முதனூலிற்  கழிக்கப்படும்  எண்  “கலாதிரிசதகம்” என்று  கூறப்பட்டுள்ளது . திரிசதகம் – முந்நூறு . கலை – பதினெட்டே முக்காலாதல்  காண்க . வருக்கம்  இன்னதென்பதை  71-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க . ஒரு  முத்தின்  இரத்தியை வருக்கமாகப்  பெருக்கிப்  பார்க்குங்கால் அப்பெருக்க எண் ஆயிரத்திற்கு  மேற்படுமாயின் , நூற்றுக்குப்  பதினெட்டேமுக்கால்  விகிதங்கழித்து , எஞ்சிய  வருக்க இரத்திகளுக்கு  விலை  ஏற்படுத்தல்  வேண்டுமென்பது கருத்து . ஒரு  முத்து 40-இரத்தி  கொண்டதாக  இருப்பின் , வருக்க இரத்தி 40-க்கு 40 = 1600 ஆகும் . நூற்றுக்குப்  பதினெட்டேமுக்கால்  விகிதமாக  300 கழிக்க  எஞ்சிய  வருக்க  இரத்தி 1300 ஆகும் . இதற்கு  விலை  ஏற்படுத்தலாவது , 85-ஆம்  சுலோகத்திற்  கூறியபடி  ஓர் இரத்திக்கு  விலை  ஒரு பொன்னாக  பொன் 1300-ஆகுமென்று  அறிதல். ஆகவே  ஒரு  முத்து  ஓர் இரத்தி எடையுள்ளதாக  இருப்பின்  விலை  ஒரு  பொன்னாகுமெனவும் , நாற்பது  இரத்தி  எடையுள்ளதாக  இருப்பன்  விலை  நாற்பது  பொன்னாகுமென்று  கொள்ளாமல், வருக்க இரத்தி  விலைப்படி 1300- பொன்னாகுமெனவுங்  கொள்ளல்  வேண்டும் . வருக்க  இரத்தி  கூறுமிடங்களிலெல்லாம்  ஒரு  மணிக்கெனக்  கொள்ளல்  வேண்டும் . தனி  முத்தின்  எடை  அதிகமாகவாக  விலையும்  அதிகமாகுமென்பது  கருதி  இங்ஙனம்  வருக்க  இரத்தியளவு  கூறப்பட்டது . )

     ஒரு  முத்தின்  வருக்க  இரத்தி  நூற்றுக்கு  மேற்படுமாயின்  நூற்றுக்கு  இருபது  விகிதங்  கழித்து  எஞ்சிய  இரத்திகளுக்கு  விலை யேற்படுத்தல்  வேண்டும் .                                                                       76இ

( ஒரு  முத்து  இருபது  இரத்தி  எடையுள்ளதாக  இருப்பின்  வருக்க  இரத்தி 20-க்கு  20 = 400-ஆகும் . 100-க்கு  20 விகிதமாக  80- கழிக்க  எஞ்சியவை  320-ஆகும் . இதற்கு  விலை  முற்சுலோகக்  குறிப்பிற்  காட்டியபடி  320- பொன்களாகும். )

     நன்கு  அகன்ற  தளாபம்  என்னும்  ஒரு  வயிரமணியின்  வருக்க இரத்தி  நூற்றிற்கு  மேற்படுமாயின் , நூற்றிற்கு இருபது  விகிதங்  கழித்து  எஞ்சியவற்றிற்கு  விலையேற்படுத்தல்  வேண்டும் . அங்ஙனமே  அகன்ற  சிபிட  வடிவினதாகிய  ஒரு  வயிரமணிக்கும்  வருக்க  இரத்தி  நூற்றுக்கு  மேற்படுமாயின் , நூற்றுக்கு  இருபது  விகிதங்கழித்து  எஞ்சியவற்றிற்கு  விலையேற்படுத்தல்  வேண்டும்.77

( சிறந்த  வயிரமணி  ஒன்று  இருபது இரத்தி  எடையுள்ளதாக இருப்பின் வருக்க இருத்தி 20-க்கு  20-400-ஆகும் . அவற்றில்  100-க்கு  20 – விகிதமாக  80 –கழிக்க  எஞ்சியவை  320-இரத்திகளாகும் . ஆகவே  68-ஆம்  சுலோகத்திற்  கூறியபடி  ஓர் இரத்திக்கு  ஐந்து  பொன்  விலையாக  வைத்து  320- இரத்திகளுக்கு  1600-பொன் விலையெனக்  கொள்ளல்  வேண்டும் . இதனால்  ஓர்  இரத்தி  எடையுள்ள  சிறந்த  வயிரமணி  ஒன்று  ஐந்து  பொன்  விலையாகுமாயின்  20-இரத்தி  எடையுள்ள  அத்தகைய  மணியின்  விலை 20-க்கு  5-100-பொன்னென்று  கொள்ளாமல் , வருக்க இரத்தி  விலைப்படி  1600-பொன்னாகுமென்று கொள்ளல்  வேண்டுமென்பது  கூறியவாறாம் . இங்ஙனமே  சிபிடமணிக்கும் , சருக்கராபமணிக்கும்  அவ்வவற்றிற்குக்  கூறிய  வருக்க இரத்திகளின்  கழிவுகளை யறிந்து  கழித்து,  எஞ்சியவற்றிற்கு  அவ்வவற்றிற்குக்  கூறிய  விலையளவுகளின்படி  கணக்கிட்டு  அறிந்து  கொள்க.  ஈண்டும்  முற்கூறியவாறே  வயிரமணியின்  எடை  அதிகமாகவாக  விலையும்  அதிகமாகுமென்பது  கருதி , இங்ஙனம்  வருக்க  இரத்தியளவு கூறப்பட்டதாக  அறிதல்  வேண்டும் . வருக்க  இரத்தியளவு  வயிரத்திற்கும்  முத்திற்குங்  கூறப்பட்டது . மற்றை  அரதனங்களுக்கு  வருக்க  அளவு  இந்  நூலிற்  கூறப்பட்டிலது .)

     சருக்கராபம்  என்னும்  ஒரு  வயிரமணியின் வருக்க இரத்தி  நூற்றுக்கு  மேற்படுமாயின் , நூற்றுக்கு  ஐம்பது  விகிதமாதல், நாற்பது  விகிதமாதல்  கழித்து , எஞ்சியவற்றிற்கு விலையேற்படுத்தல்  வேண்டும் .                                                                                                           78

     எப்பொழுதும்  கரும்புள்ளி  செம்புள்ளிகளையுடைய  அரதனங்களை  அணிந்துகொள்ளலாகாது .                                               79

     ஓர்  இரத்தி  நிறையுள்ள  மரகதம் , மாணிக்கம் , ஆகிய  இவை  சிறந்தனவாக  இருப்பின் , அவற்றின்  விலை  தனித்தனி  ஒரு  பொன்னாகும் . ஒன்றுக்கு  மேல்  இரத்தி  எவ்வளவுள்ளவோ  அவ்வளவிற்குத்  தக்கவாறு  விலையும்  மிகுதியாகும் .                       80

     ஓர்  இரத்தி  நிறையுள்ள  புட்பராகம் , நீலம் , அசைகின்ற  மூன்று  இழைகளையுடைய  வைடூரியம்  ஆகிய  இவற்றின்  சிறந்த  விலை  தனித்தனி  அரைப்  பொன்னாகும் .                                                            81

     ஒரு  தோலா  நிறையுள்ள  பவழத்தின்  விலை  அரைப் பொன்னாகும் . கோமேதகம்  நிறுத்தலளவைக்குத்  தகுதி யுடைத்தன்றாதலின்  மிகச்   சிறிய  விலையுடையதாகும் .                 82

     வயிரமல்லாத  மற்றை  அரதனங்கள்  மிகச்  சிறியனவாக இருப்பின்  அவற்றின்  விலை  எண்ணலளவையானாகும். மிக்க  அழகு வாய்ந்தனவும் , சிறந்த  குணங்களால்  விளங்குவனவும் , கிடைத்தற்கரியனவுமாகிய  அரதனங்களின்  விலை  அளவையைப்  பற்றியதன்று ; விற்போர்  வாங்குவோர்களின்  விருப்பத்தைப்  பற்றியதாகும் .                                                                                                     83

     தனி  முத்தின்  விலையாவது , அம்  முத்தின்  வருக்க  இரத்தியைப்  பதின்மூன்றே  முக்காலாற்  பெருக்கி  இருபத்து  நான்கில்  வகுக்க  அவ்வகுப்பால்  எய்தப்படும்  எண்  எவ்வளவோ  அவ்வளவு  பொன்னாகும் .                                                                                                    84

( உதாரணமாக  எட்டு  இரத்தி  நிறையுள்ள  ஒரு  முத்தின்  விலை  வருமாறு :  வருக்க  இருத்தி 8-க்கு  8=64 – ஆகும் . அவ் 64-ஐ  பதின்மூன்றேமுக்காலாற்  பெருக்க  880-ஆகும் . அவ்வெண்ணை  24-இல்  வகுக்க  கிடைக்கும்  வகுப்புத்தான  எண்  சிறிது  கூறிய  36இ-ஆகும் . ஆகவே ,சிறந்த  குணமுள்ள  ஒரு  முத்து  8- இரத்தி  நிறையுள்ளதாக  இருப்பின் , அதன் விலை  பின்வருஞ்  சுலோகத்திற்  கூறியபடி  இரத்தி  ஒன்றுக்கு  ஒரு  பொன்னாக  வருக்க  இரத்தியில்  வகுப்புத்தான  எண்  36இ-க்குப்  பொன்  36இ-ஆகும் . ஒரு  முத்து  ஓர்  இரத்தி  எடையுள்ளதாயின் , ஒரு  பொன்  விலையாகும் . எட்டு  இரத்தி  எடையுள்ளதாயின் , எட்டுப்  பொன்னென்று  கொள்ளாமல் , இச் சுலோகப்படி  36இ- பொன்னாகு மென்று  கொள்ளல்  வேண்டும் . முத்தின்  விலையைப்பற்றி  76-ஆம்  சுலோகத்திற்  கூறியது , வருக்க  இரத்தி  ஆயிரத்து  மேற்பட்டதற்கெனவும் ,அதற்கு  அடுத்துக்  கூறியது , வருக்க  இரத்தி  நூற்றுக்குமேல்  ஆயிரத்துக்   குட்பட்டதற்கெனவும் , ஈண்டுக்  கூறியது  வருக்க  இரத்தி  நூற்றுக்குட்பட்டதற்கெனவும்  பகுத்துணர்ந்து  கொள்ளல்  வேண்டும் .)

     தலையாய  முத்து  ஓர்  இரத்தி  எடைக்கு  ஒரு  பொன்  விலையாகும். இடையாய  கடையாய  முத்துக்களின்  விலை  அவ்வவற்றின்  குணங்களுக்குத்  தக்கவாறாம் .                                                                 85

     முத்துக்கள்  செம்மை , பொன்மை , வெண்மை  நிறங்களை யுடையனவாய்  வருத்துலமாக  விருப்பின்  அவை  தலையாகவும் , தளாபம்  இடையாகவும் , சிபிடமும்  சருக்கராபமும்   கடையாகவும்  மதிக்கப்படுவனவாம் .                                                                                   86

( இதுகாறுங்  கூறப்பட்ட  நவமணிகளின்  இயல்பு  விலை  முதலியவற்றின்  சுருக்கம்  வருமாறு :

1 . வயிரமணி  எல்லா  அரதனங்களினுஞ்  சிறந்தது .

                               மற்ற  மணிகளுள்,

தலை                         இடை                         கடை

2 முத்து                        5 நீலம்                       8 கோமேதகம்

3 மரகதம்                    6 புட்பராகம்            9 பவழம்

4 மாணிக்கம்            8 வைடூரியம்

இவற்றின்  எடையும்  விலையும்

நவமணி                          எடை                          விலை

1 வயிரம்                          1-இரத்தி                   5-பொன்

2 முத்து                                ,,                                1- பொன்

3 மரகதம்                            ,,                                 ,,

4 மாணிக்கம்                     ,,                                 ,,

5 நீலம்                                   ,,                                இ-பொன்

6. புட்பராகம்                       ,,                                 ,,

7. வைடூரியம்                     ,,                                  ,,

8. பவழம்                          1-தோலா                   இ-பொன்

9.கோமேதகம்                 எடையில்லை        குறைந்தவிலை

1-முதல் 8-வரையுள்ள  மணிகளின்  விலை  ஓரிரத்தி  எடையுள்ள  ஒரு  மாணிக்கமாகும் . ஓரிரத்திக்கு  மேற்பட்ட  எடையுள்ளனவும் , குறைந்த  எடையுள்ளனவுமாகிய  மணிகளின்  விலைகளை  ஆங்காங்குணர்க . 70-ஆம்  சுலோகப்படி  ஒரு  பொன்  இக்காலத்து  வழக்கப்படி  மூன்றே  காலே யரைக்கால்  வராகனெடை [ 1இ-பவுன்] ஆகும்.  )

5 . பொன்  முதலிய  உலோகங்களின்  விலை

     அரதனங்களில்  இயற்கையாகவே  குற்றங்கள்  உள்ளன. உலோகங்களிற்  செயற்கைக்  குற்றங்கள்  இருக்கும் . ஆதலின்  அறிவுடையான்  அவ்வுலோகங்களை  நன்கு  சோதித்து  ஆராய்ந்து  அவற்றிற்கு  விலை  ஏற்படுத்தல்  வேண்டும் .                                            87

     பொன் , வெள்ளி , செம்பு , வெள்ளீயம் , காரீயம் , நாகம் , இரும்பு  ஆகிய  இவ்வேழும்  சுரங்கங்களினின்றும்  எடுக்கப்படும்  இயற்கை  உலோகங்களாகும் . மற்றவை  இவற்றின்  கலப்பானுண்டாகிய  செயற்கை  உலோகங்களாம் .                                                                      88

     இவற்றுட்  பின்னதனை  நோக்க  முன்னது  சிறந்ததாக  முறையே  அறிதல்  வேண்டும் . பொன்  இவ்வெல்லாவற்றிலும்  மிகச்  சிறந்ததாகும் . வெள்ளீயம்,  செம்பு  ஆகிய  இவற்றின்  கலப்பானுண்டாவது  வெண்கலமாகும் . செம்பு , நாகம்  ஆகிய  இவற்றின்  கலப்பானுண்டாவது  பித்தளையாகும் .                               89

     மற்றை  உலோகங்களோடு  நிறையளவில்  ஒத்திருக்கும்  பொன்  உருவத்தால்  அவற்றிலுஞ்  சிறியதாக  இருக்கும் . பொன்னோடு  ஒத்த நிறையுள்ள  மற்றை  உலோகங்கள்  உருவத்தாற்  பொன்னினும்  பருமை யுடையனவாகும் .                                                                              90

     ஒத்த  சாதி  உலோகங்களுள்  ஒரு  நிறையுள்ள  இரண்டு  துண்டுகளை  ஒரே  துவாரத்திற்  சிறிய  கம்பியாக  இழுப்பின், குற்ற மற்ற  உலோகத்தின்  கம்பி  முன்னை  நிறையளவோடு  ஒத்திருக்கும் .

( பொன்  வெள்ளி  முதலியவற்றுட்  குற்றமுடையது  இது , குற்றமில்லாதது  இது  என்று  அறிதற்கு  உபாயங்  கூறியவாறு , சம  நிறையாகவுள்ள  ஒரு  சாதி  உலோகத்துண்டுகள்  இரண்டைத்  தனித்தனி  சிறு  கம்பிகளாக  ஒரே  துவாரத்தில்   இழுத்துப் பின்னர்  நிறுத்துப் பார்க்குங்கால் , குற்றமில்லாதது  முன்னை  நிறையோடு  ஒத்தும் , குற்றமுடையது  முன்னை  நிறையில்  குறைந்துங்  காணப்படுமென்பது   கருத்து . உலோகங்களுட்  கலப்புடையது  இது,  கலப்பில்லாதது  இது  என்று  ஆராய்தற்கு , அவ்விரண்டு  தர  உலோகங்களையும்  ஒரே  துவாரத்திற்  கம்பிகளாக  இழுத்து  அக்  கம்பிகளை  ஒத்த  நீளத்தில்  துண்டித்து  நிறுத்தல்  வேண்டும் ; அங்ஙனம்  நிறுத்துப்  பார்க்குங்காற்  கலப்புடையது  எடையிற்  குறைந்தும் , கலப்பில்லாதது  எடையிற்  கூடியும்  இருக்கும்  என்று  கூறுதலும்  ஒன்று . )

     எந்திரம் , விடுபடை , விடாப்படையாகிய  இவ்வடிவங்களையுடைய  இரும்பு  மிகப்  பெரு விலை யுடையதாகும் . ஒரு மடங்கு பொன்னுக்குப் பதினாறு மடங்கு வெள்ளி விலையாகும் .                                                  92

( 70-ஆம்  சுலோகத்தில் 5-பொன்னுக்கு 80- கருட அளவு வெள்ளி விலையாகுமென்று கூறப்பட்டுள்ளது . ஒரு கருட நிறையும் , ஒரு பொன்னின் அளவும் சிறிது ஏறக் குறைய ஒத்த அளவினவாதலின்  5-க்கு  80-ஐ வகுக்க  ஒன்றுக்குப்  பதினாறாதல்  காண்க . )

     ஒரு  மடங்கு  நிறையுள்ள  வெள்ளிக்கு  எண்பது  மடங்கு  நிறையுள்ள  செம்பு  பெரும்பாலும்  விலையாக  மதிக்கப்படும்.  ஒரு  மடங்கு  நிறையுள்ள  செம்பிற்கு  ஒன்றரை  மடங்கு  நிறையுள்ள  வெள்ளீயம்  விலையாகும் . அங்ஙனமே , ஒரு  மடங்கு  நிறையுள்ள  செம்பிற்கு  இரண்டு  மடங்கு  நிறையுள்ள  காரீயமும் , மூன்று  மடங்கு  நிறையுள்ள  நாகமும் , ஆறு  மடங்கு  நிறையுள்ள  இரும்பும்  விலையாகும் . முற்காலத்தில்  ஏற்படுத்தப்பட்ட  விலையளவின்படி  இவ் விலைகள்  தனித்தனி  இங்குக்  கூறப்பட்டன .                         93-94

( ஈண்டு  வெள்ளிக்குக்  கூறப்பட்ட  செம்பின்  விலையளவு  முதலியன  இக்கால  நாணய  முறைக்கும்  விலைக்கும்  பொருத்தமுடையனவாகத்  தோன்றவில்லை. அக்காலத்தின்  விலை  நிலைமை  இவ்வாறு  போலும் . )

6 . பசு  முதலியவற்றின்  விலையளவு

     அழகிய  கொம்புகளையுடையதும் , நல்ல  நிறம்  வாய்ந்ததும் , எளிதிற்  பால்  கறக்கற்பாலதும் , மிகுதியான  பாலையுடையதும் , அழகிய  இளங்கன்றையுடையதும் , உடல்  சிறிதாயினும்  பெரிதாயினும்  இளம்பருவமுடையதும்  ஆகிய  பசு  மிகுதியான  விலை யுடையதாகும் .                                                                                      95

     பொன்  நிறம்  வாய்ந்த  இளங்கன்றையும்  நல்ல  பாலையுமுடைய  பசுவின்  விலை ஒரு  பலம்  வெள்ளியாகும் . வெள்ளாட்டின்  விலை  அப் பசுவின்  விலையிற்  பாதியாகிய  அரைப்பல  வெள்ளியாகும் . செம்மறியாட்டின்  விலை  அவ்வெள்ளாட்டின்  விலையிற்  பாதியாகிய  காற்பல  வெள்ளியாகும் .                                                                                  96

( ஒரு  பலமாவது  நான்கு  கருடமாதல் , அன்றி  நான்கு  தோலாவாதல்  கொண்ட  எடையாகும் . இவ் அளவு  இக்கால  வழக்கிற்குச்  சிறிது  மாறுபட்டுள்ளது . )

     உடல்  வன்மை  மிக்கதும் , போர்க்குணம்  வாய்ந்ததுமாகிய  செம்மறியாட்டுக்  கடாவின்  விலை  ஒரு  பலம்  வெள்ளியாகும் . பசுக்களின்  உயர்ந்த  விலை  எட்டு  அல்லது  பத்துப்பலம்  வெள்ளியாகும் .                                                                                                     97

     செம்மறியாட்டிற்கும்  வெள்ளாட்டிற்கும்   உயர்ந்த  விலை  ஒருபலம்  வெள்ளியாகும் . எருமைக்குப்  பசுவின்  விலையோடு  ஒத்த  அளவினதாதல் , அன்றி  ஒன்றரை  மடங்காதல் , உயர்ந்த  விலையாகும்.

     அழகிய  கொம்புகளையும் , நல்ல  நிறத்தையும் , உடல்வன்மையினையும் , சுமக்குமாற்றலையும் , விரைந்து  செல்லுதலையும் , எட்டுத்  தால  அளவு  உயரத்தினையு முடைய  எருதின்  விலை  அறுபது   பலம்  வெள்ளியாகும் . ..                                     99

( தாலம் – பிடி  மூன்று  கொண்டதாகும் , இதனை  இவ்வத்தியாயம்  4-ஆம்  பிரகரணம்  82- ஆம்  சுலோகத்திற்  காண்க . )

     எருமைக்கடாவின்  உயர்ந்த  விலை   ஏழு  அல்லது  எட்டுப்  பலம்  வெள்ளியாகும் . யானை , குதிரை  இவற்றின்  உயர்ந்த  விலை  இரண்டாயிரம் , மூவாயிரம் , அல்லது  நாலாயிரம்  பலம்  வெள்ளியாகும் .                                                                                                   100

( பின்னுள்ள  102-104-ஆம்  சுலோகங்களில்  முறையே  சிறந்த  குதிரைக்கும் , சிறந்த  யானைக்குங்  கூறிய  விலையளவை நோக்க, இங்குக்  கூறிய  யானை , குதிரைகளின்  விலைகளுள்  இரண்டாயிரம்  பலம்  வெள்ளியே  பொருத்தமாகத்  தோன்றுகின்றது . அதன்மேல்  மூவாயிரம்  நாலாயிரம்  பலங்  கூறியது  மிகச்   சிறந்த  யானை   குதிரைகளுக்கு  விலையளவின்  முடிந்த வெல்லையை  வரையறுத்தற் பொருட்டாம் . இரண்டாயிரம்  பலம்  வெள்ளி  எண்ணாயிரங்  கருடங்களாகும் . கருடம்  ஒன்றுக்கு  இக்கால  நாணய  முறைப்படி  உரூபாய்  ஒன்றாகும் . )

     ஒட்டகத்தின்  உயர்ந்த  விலை  எருமைக்கடாவின்  விலையோடு  ஒத்ததாகக்  கூறப்படும் .                                                                                    101

     ஒரு  நாளில்  நூறுயோசனை  தூரம்  செல்லும்  ஆற்றல்  வாய்ந்த  குதிரை  தலையாயதாகும் . அதன்  உயர்ந்த  விலை  ஐந்நூறு  பொன்களாம் .                                                                                                      102

( பொன்  ஒன்றுக்குக்  கருடம்  பதினாறாகுமென்று  70-ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்டது . ஆதலின் , 500-பொன்களுக்கு  8000-கருட  அளவு  வெள்ளியாகும் .)

     ஒரு  நாளில்  முப்பது  யோசனை  தூரம்  செல்லும்  வன்மை  வாய்ந்த  ஒட்டகம்  சிறந்ததாகும் . அதன்  விலை  நூறு  பலம்  வெள்ளியாகும் . 103

     வன்மையாலும் , உயரத்தாலும் , போர்ச்செயலாலும் , மதச்செருக்காலும் , தனக்கு  நிகரில்லாத  சிறந்த  யானையின்  விலை  இரண்டாயிரம்  நிட்கங்களாகும் .                                                                   104

( யானையின்  விலையளவில்  இருபது  இரத்தியளவு  எடை  கொண்டது  ஒரு  நிட்கமாகுமென்று  அடுத்த  சுலோகத்திற்  கூறுவராதலின் , இரண்டாயிரம்  நிட்கங்களுக்கு  நாற்பதினாயிரம்  இரத்திகளாகும் . 80-இரத்தி  கொண்டது  ஒரு  பொன்னாகுமென்று  70-ஆம்  சுலோகத்திற்  கூறினமையின் , நாற்பதினாயிரம்  இரத்திகளுக்கு  ஐந்நூறு  பொன்களாகும்  . ஆகவே , 500- பொன்களுக்கு  8000-கருட  அளவுள்ள  வெள்ளி  விலையாதலறிக .)

     யானையின்  விலையளவில்  ஐந்து  இரத்தி யளவு  கொண்டது  மாடம்  எனவும் , அம்மாடம்  நான்கு  கொண்ட  அளவுள்ள  பொன்  நிட்கமெனவுங்  கூறப்படும் .                                                                             105

( இங்குக்  கூறப்பட்ட  நிட்கம்  ஒன்றுக்குப்   பொன்  வராகனெடை 6-ல்   5-பங்கு  [ சற்றேறக்குறைய  முக்காலே  வீசங்  கால்வீசம் ] ஆகும் .)

     இந்  நிலவுலகத்தில்  ஒப்பற்ற  பொருள்களெல்லாம்  மிகச்  சிறந்தனவாகும் . ஆதலின் , காலம்  இடங்களை  நோக்கி  அவற்றிற்கு  ஒத்தவாறு  அச்சிறந்த  பொருள்களுக்கு  விலையேற்படுத்தல்  வேண்டும் .                                                                                                             106

     குணமில்லாதனவும்   காரியத்திற்கு  உபயோகப்படாதனவுமாகிய  பொருள்களுக்கு  விலையில்லை . அறிவுடையார்  எல்லாப்  பொருள்களுக்கும்  விலை  யேற்படுத்துங்கால் , உலகியலை யுணர்ந்து  அதற்கு  ஒத்தவாறு  அப்  பொருட்குழு   வனைத்தையும் , தலை  இடை  கடைத் தரங்களாக  எப்பொழுதும்  பகுத்துணர்ந்து  செய்தல்  வேண்டும் .                                                                                                          107

7 . இறைப்பொருள்  கொள்ளு  முறை

     பண்டங்களை   விற்போர்  கொள்ளுவோராகிய  இவர்களிடத்தினின்றும்  அரசனுக்குக்  கிடைக்கும்  இறைப்பொருள்  சுங்க மென்று  கூறப்படும் . அச் சுங்கங்  கொள்ளுதற்குரிய  விடங்கள், அதற்கென்று  வரையறுக்கப்பட்ட  எல்லைகளும்  கடைத்  தெருக்களுமாம் .                                                                                               108

( சுங்கம், கற்கம், உல்குபொருள்  என்பன  ஒரு பொருட்  சொற்கள் . “சுங்கம் –  கலத்தினுங்  காலினும்  வரும்  பண்டங்கட்கிறையாயது”   என்பர்  பரிமேலழகர். [திருக்குறள்  76-ஆம்  , அதி , 6-வது  செய்யுளுரை]  கலம் – கப்பல் , கால் – வண்டி , ஆட்சுமை , இறை –வரி. )

     அரசன், எல்லாப்பண்டங்கட்கும்  ஒருமுறை   முயன்று  சுங்கங்  கொள்ளக்கடவன் . அவன்  ஒருபொழுதும்  தன்னாட்டில்  வஞ்ச  மேற்கொண்டு  அடிக்கடி  சுங்கங்  கொள்ளுதலாகாது .                          109

     அரசன், பண்டங்களை  விற்போர்  அல்லது கொள்ளு வோரிடத்தினின்றும் , விலையளவிற்கு  மாறுபாடுண்டாகாவண்ணம், ஊதியத்தில்  முப்பத்திரண்டிலொரு கூறாதல், இருபதிலொரு  கூறாதல் பதினாறிலொரு  கூறாதல்  இறை  கொள்ளுதல்  வேண்டும் .         110                                                                               

( இவ்விறை  விகற்பங்கள்  பொருள்நிலை , காலநிலை , ஊதிய  நிலைகளைப்  பற்றினவாகும் . )

பண்டங்களை  விற்போன்  முதலுக்குக்  குறையவாதல் , ஒத்த  அளவானாதல்   விற்பானாயின்  அவனிடத்தினின்றும்  அரசன் சுங்கங்கொள்ளுதலாகாது. அவனிடத்தினின்றும் விலைக்கு  வாங்குவோன்பால் , ஊதியத்தை  அளவிட்டுக்  கண்டு அதற்குத் தக்கவாறு  எப்பொழுதும்  சுங்கங்  கொள்ளுதல்  வேண்டும்.          111

     எப்பொழுதும்  இறைப்பொருளை  விரும்புகின்ற  அரசன்  முதலில்  மிகுபயன் , நடுத்தரப்பயன் , குறைந்த  பயன்களை  விளைவிக்கும்  நிலங்களை  அளவையான்  அளவிட்டறிந்து  பின்னர்  அவற்றின்  நிலைமைக்குத்  தக்கவாறு  இறையளவைத்  திட்டஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                                         112

     உழவுத்தொழில்  புரிவோர்க்குக்  குறை  நேராமலிருக்குமாறு  அவர்பானின்றும் , அரசன்  மாலை கட்டுவோனை  யொப்ப  இறைப்பொருள்  கொள்ளல்  வேண்டும் ; கரி  செய்து  விற்பனை யொப்ப  இறை  கோடலாகாது .                                                                  113

     மிகுதி  நடுத்தரம்  சுருக்கமாக  பயன்களை  விளைவிக்கும்  இயல்புகளால்   நிலங்களின்  ஏற்றத்  தாழ்வுகளை  ஆராய்ந்துணர்ந்து , அவற்றிற்குத்  தக்கவாறு  செலவிட்டு  உழவுத்தொழில்  புரிவோர்க்கு , அரசற்கு  இறுக்கும்  இறை  முதலிய  செலவுகளின்  இருமடங்கு  வருவாய்  கிடைக்குமாயின் , அப் பயிர்வினை  சிறந்ததாகும் . அதனிற்  குறையுமாயின் , அவர்க்கு  அது துன்பந்தருவதாகும் .                        114

     அரசன்  எப்பொழுதும்  தடாகம் , வாவி , கிணறு ஆகிய  இவற்றின்  நீர்  பாய்ந்து  விளையும்  நிலவருவாயில்  மூன்றிலொரு  கூறும் , மழை நீரால்  விளையும்  நிலத்தின்  வருவாயில்  நான்கிலொரு  கூறும் , ஆற்றுநீர்  பாய்ந்து  விளயும்  நிலவருவாயிற்  பாதியும் , களர்  நிலத்தின்  வருவாயிலும்  , கள்  முதலியன  நிறைந்த  நிலத்தின்  வருவாயிலும்  ஆரிலொரு  கூறும்  இறையாகக்   கொள்ளுதல்  வேண்டும் .                                                                                                    115-116

( பூந்தோட்டத்துள்ள  மரம்  செடி  கொடிகளுக்குக்  கேடு  விளைக்காது, அவற்றினின்றும்  உண்டாம்  மலர்களை  யெடுத்து  மாலை  கட்டிப்  பயன்  பெறுபவனை  யொப்ப , அரசன்  குடிகளுக்குக்  கேடு  விளைவிக்காது அவர்பானின்றும்  இறைகோடல்  வேண்டுமென்பதும் , மரங்களால்  விளையும்  பயனை  நோக்காது  அம் மரங்களையே  சுட்டுக்  கரியாக்கி  அதனாற்  பயன்  கொள்ளுபவனை  யொப்ப , அரசன்  குடிகளால்  வரும்  இறைப்  பொருளை  நோக்காது  அக் குடிகளையே  கெடுத்துப்  பயன்பெற  நினைத்தலாகா தென்பதும்  கூறியவாறாம் . )

     உழவுத்தொழில்  செய்வோருள் , எவன்  நூறு  கருட  அளவுள்ள  வெண்பொற்காசுகளை  அரசற்கு  இறையாகக்  கொடுக்கின்றானோ , அவனுக்கு  அரசன்  இருபதிலொரு  கூறு  தள்ளிவிடல்  வேண்டும் .    117

( நூற்றுக்கு  இருபதிலொரு   கூறு  ஐந்தாகும் . இங்ஙனமின்றி  நூற்றுக்கு  இருபது  கூறு  தள்ளிவிட   வேண்டுமென்றுங்  கூறுப .)

     நிலவறையில்  எடுக்கப்படும்  அரதனம்  உலோகம்  முதலிய வற்றினின்றும்  செலவு  போக  எஞ்சிய  வருவாயிற்  பொன்னிற்  பாதியும் , வெள்ளியில்  மூன்றிலொரு  கூறும் , செம்பில்  நான்கிலொரு  கூறும் , இரும்பு  வெள்ளீயம்  காரியமாகிய  இவற்றில்  ஆறிலொரு  கூறும் , அரதனங்களிற்  பாதியும்  உப்பிற்  பாதியும்  அரசன்  இறையாகக்  கொள்ளக்கடவன் .                                                                    118

(நிலவறை – சுரங்கம் .)

     அரசன்,  உழவர்  முதலிய  வினைஞரிடத்தினின்றும்  இறை  கொள்ளுங்கால் , அவர்தம்  ஊதிய  மிகுதி  நோக்கி  அதற்குத்தக  அவ்விறைப்பொருளை  மூன்று  முறையாகவாதல் , ஐந்து  முறையாகவாதல் , ஏழு  முறையாகவாதல், பத்து  முறையாகவாதல்  கொள்ளக்கடவன் .                                                                                            119

அரசன் , புல் , விறகு  முதலியன  கொண்டு  விற்போனிடத்தினின்றும்  இருபதிலொரு  கூறும் , வெள்ளாடு , செம்மறியாடு , பசு , எருமை , குதிரை  ஆகிய  இவற்றின்  பெருக்கத்தினின்றும்   எட்டிலொரு   கூறும் , எருமை , வெள்ளாடு , செம்மறியாடு , பசு , ஆகிய  இவற்றின்  பால்  வருவாயினின்றும்  பதினாறிலொரு  கூறும்  கொள்ளக் கடவன் .     120

காருகத்தொழில்  சிற்பத்தொழில்  செய்வோரிடத்தினின்றும்  பதினைந்து  நாட்களுக்கொருமுறை  ஒரு  நாள்  வேலையைக்  கூலி யின்றிச்  செய்வித்துக்கொள்ளல்  வேண்டும் . அதுவே  அவர்பாற்  கொள்ளும்  இறையாகும் . அரசியல்  வளர்ச்சி  குறித்துத்  தடாகம்  வாவி  செயற்கையாறு  ஆகிய  இவற்றையும் , இன்னும்  இவை  போன்ற  பல  காரியங்களையும்  செய்வாராயின்  அவரிடத்தினின்றும், புதிய  நிலங்களைத்  திருத்தஞ்  செய்து  உழுவோரிடத்தினின்றும் அவர்கள்  அக்காரியங்களினிமித்தம்  செலவிட்ட  பொருட்கு  இருமடங்கு  வருவாய்  பெறுங்காறும்  அரசன்  இறைப்பொருள்  கொள்ளலாகாது .                                                                                    121-122

( காருகத்தொழில் – பருத்தி  நூல்  அமைத்து  ஆடையாக்கலும்  சுமத்தலும், அகழ்தலுமாம் – [ சிலப் 5 -17.உரை ]  சிற்பம் – தச்சுக்  கொற்றொழில்  ஓவியத்  தொழின்  முதலியன )

     நில  வருவாயின்  கூறு , வேதனம் , சுங்கம் , வட்டி , கைக்கூலி  , அரசிறையாகிய  இவ்வனைத்தையும்  அவ்வப்பொழுதே  வாங்குதல்  வேண்டும் . காலந்  தாழ்த்தலாகாது .                                                       123

( காலந்தாழ்த்தாமல்  வாங்கவேண்டுமென  இங்குக்  கூறியவற்றுள்  நில  வருவாயின்  கூறு  சுங்கம் , அரசிறை  என்னுமிவை  அரசனுக்கும் , வேதனம்  கைக்கூலி  வட்டி  என்னுமிவை  மற்றையோர்க்குங்  கொள்க. கைக்கூலி  வாங்கலாகாதென்று  பலவிடத்துங்  கூறியிருக்கின்றார் ; அதனால்  விளையும்  பாவப்பயனை  நோக்காது  வாங்கத்  துணிவார்க்குக்  கூறியதிது . )

     அரசன்  உழவுத்தொழில்   புரிவோர்க்குத்   தனித்தனியே  தன்  கையெழுத்து  முத்திரையிடப்பட்ட  பாக  பத்திரங்  கொடுத்தல்  வேண்டும் . அன்றி , ஒரு  கிராமப்  பகுதியில்  தனக்குக்  கிடைக்கவேண்டிய  இறைக்கூற்றை  இவ்வளவென்று  துணிந்து , அதனைக்  கொள்ளும்  உரிமையை  ஒரு  பெருஞ்  செல்வன்பாற்  கொடுத்து , அவனிடத்தினின்றும்  முதலில்  அவ்  விறைப்  பொருட்கு  ஒத்த பிணையையாதல் , அதற்கு  ஒத்த  பொருளையாதல்  பெற்றுக்கொள்ளல்  வேண்டும் . அதன்பின் , அவ்  விறைப்பொருளைத்  திங்கட் கொருமுறையாதல்  இரண்டு  திங்கட்கொரு முறையாதல்  ஈவு  முறையாகப்  பெற்றுக்  கொள்ளல்  வேண்டும் .                               124-125

( பாகப்பத்திரம்- ஆண்டு  இறையளவைக்  குறிப்பிடுவதாகும் .)

     அரசன்  ஒரு  கிராமத்தினின்றும்  தனக்குக்  கிடைக்கும்  இறையில்  பதினாறிலொரு கூறாதல் , பன்னிரெண்டிலொரு கூறாதல் , பத்திலொரு  கூறாதல் , எட்டிலொரு  கூறாதல் , ஆறிலொரு  கூறாதல்  கொடுத்து  அக்  கிராமத்திற்குத்  தலைமை  அதிகாரிகள்  முதலியோரை  நியமித்தல்  வேண்டும் .                                                     126

     குடிகள்  தன்  குடும்பத்தின்  பொருட்டுக்  கொள்ளும்  பசு  முதலியவற்றின்  பாலினின்றும்  அரசன்  இறை  கொள்ளலாகாது . ஆடை  தானியங்களைத்  தம்  உபயோகத்தின்  பொருட்டு  விலை  கொடுத்து  வாங்குவோரிடத்திலும்  இறை  கோடலாகாது .                   127

     அரசன்  வட்டித்தொழில்  செய்வோரிடத்தினின்றும்  வட்டி  ஊதியத்தில்  முப்பத்திரண்டில்  ஒரு  கூறு  இறை  கொள்ளக்கடவன் . உழவு  நிலத்திற்  கொப்ப  இல்லம்  தோட்டம்  முதலியவற்றிற்கு  ஆதாராமாகிய  நிலத்தினின்றும்  இறை  கொள்ளுதல்   வேண்டும் . 128

( உழவு  நிலத்தினின்றும்  கொள்ளும்  இறை  யளவுகளை  115-116-ஆம்  சுலோகங்களிற்  காண்க .)

 (நிலையியல் – தாவரம் . இயங்கியல் – சங்கமம் .)

ஆவ்வுழவு  நிலத்திற்  கொப்பவே  வாணிகம்  புரிவோரிடத்தினின்றும்  அவர்தம்  வாணிகச்  சாலையுள்ள  நிலத்திற்குஞ்  சுங்கங்  கொள்ளல்  வேண்டும் . வழிச்  செல்வோரிடத்தினின்றும்  அவ்வழியைத்  திருத்தஞ்  செய்து  காத்தற்பொருட்டுச்  சுங்கம்  வாங்குதல்  வேண்டும் .            129

     அரசன்  குடிகள்  எல்லோரிடத்தினின்றும்  தனக்குக்  கிடைக்க வேண்டிய  இறைக்  கூற்றைப்  பெற்று  நுகர்ந்து  கொண்டு , அக்குடிகளின்  பாதுகாப்பில்  தொண்டனைப்போல்  இருத்தல்  வேண்டும் . இங்ஙனம்  கருவூலப் பிரகரணம்  சுருக்கமாகக்  கூறப்பட்டது .

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்,

“கோச  நிரூபணம்”  என்னும்

இரண்டாம்  பிரகரணம்  முற்றிற்று

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மூன்றாம்  பிரகரணம்

( வித்தியா  கலா  நிரூபணம் )

1 . சாதி  ஆராய்ச்சி

     இனி, மிச்சிர  மென்னும்  இந்  நான்காம்  அத்தியாயத்தில்  நாட்டைப்பற்றிய  மூன்றாம்  பிரகரணத்தைச்  சுருக்கிக்  கூறுவேன் . மரம்  மலை  முதலிய  நிலையிற்  பொருள்களும் , மக்கள்  பசு  முதலிய  இயங்கியற்  பொருள்களும்  இங்கு  நாடு  என்னுஞ்  சொல்லாற்  கூறப்படும் .                                                                                                               1

( நிலையியல் – தாவரம் . இயங்கியல் – சங்கமம். )

     ஓரரசனுக்கு  எத்துணை  நிலவெல்லை  அவன்  ஆட்சிவயப்பட்டி ருக்கின்றதோ அத்துணை  நிலப்பரப்பு  அவ்வரசனுக்குரிய  நாடாகும். 2

     பெரும்பொருள்  படைத்தல்  மற்றை  எல்லாச்  சிறப்புக்களினும்  நூறுமடங்கு  மிக்கதாகும் . அதனினும்  மிகச்  சிறந்தது  இறைமைத்  தன்மையாகும் . இவ்விரண்டும்  குறுகிய  தவத்தின்  பயனாகா [ மிகப் பெரிய தவங்களின்  பயனாகும் .)                                                                      3

     அவ்விறைமைத்  தன்மை யுடையானே  இந்  நிலவுலகத்தில்  தேவனாக  விளங்குவான் . அத்  தன்மையில்லாத  பிறர்  அங்ஙனங்  கருதப்படுவாரல்லர் .                                                                                              4

     உலகத்து  மக்கள் , எவ்வரசனைப்  பற்றி  நிற்கின்றனரோ  அவ்வரசனை  யொப்பவே  தாமும்  ஒழுகுவர் . ஆதலின் , அந்நாட்டினராற்  செய்யப்படும்  நல்வினைப்  பயனையும்  தீவினைப்பயனையும்  அவ்வரசன்  நன்கு  நுகர்பவனாவான் .                 5

     எவ்வரசனது  நாட்டில்  மக்கள்  தத்தங்  கடமைகளிற்  பற்றுடையராக  ஒழுகுகின்றனரோ  அவ்வரசனே  அறத்தையும்  நீதியையும்  உடையனாவான் . நெடுங்காலம்  நிலைபெறும்  புகழையும்  எய்துவான் .                                                                                        6

     இந்  நிலவுலகத்தில்  எவனுடைய  புகழ்  எத்துணைக் காலம்  நிலைபெற்று  விளங்குமோ  அத்துணைக் காலம்  அவன்  விண்ணுலகத்தில்  இன்பம்  நுகர்ந்து  கொண்டிருப்பான் .                         7

     ஒருவனுக்குப்  பழியே  நரகமாகும் . அப்பழியை யன்றி  மறுமை யுலகத்தில்  நரகமென்பதொன்றில்லை . இம்மையில்  மனிதவுடலல்லாத  மற்றை  உடல்களெல்லாம்  நரகங்களேயாம் .          8

     மனக்கவலை , உடற்பிணியாகிய  இவ்   விரண்டனையும்  பெருந்தீவினைப்  பயனாக  அறிதல்  வேண்டும் . ஆதலின் , அரசன்  தான்  அறத்தில்  நிலையுடையனாயிருந்து  குடிகளையும்  அறத்தில்  நிலைப்படுத்தல்  வேண்டும் . அங்ஙனஞ்  செய்தலாற்  குடிகள்  அறநெறி  நின்று  உலகத்திற்கு  எடுத்துக்காட்டாக  விளங்கும்  அவ்வரசனைப்  பின்பற்றுவர் .                                                                           9                                                                                                         

     அரசன் , தன்  நாட்டின்  நலங்குறித்து  என்றும்  நிலையாகவுள்ள  தேயதருமம் , சாதி தருமம் , குல தரும மாகிய  இவற்றையும் , முனிவராற்  கூறப்பட்ட  பழைய  புதிய  அறங்களையும் , முயற்சியுடையனாய்  நன்கு  ஆராய்ந்தறிந்து  காக்கக்கடவன் . அவன்   இங்ஙனம்  அவ்வறங்களைக்  காத்து  நிலைப்படுத்தலால்  திருவையும்  புகழையுஞ்  சிறப்புற  எய்துவான் .                                                           10-11

( சாதி  அந்தணர்  முதலிய  வருணங்களையும் , குலம்  ஒவ்வொரு  வருணத்துள்ளும்  உள்ள  குடியையும்  உணர்த்துவனவாம் .)

     முற்காலத்திற்  பிரமனால்   தொழில்களைப்  பற்றிய  சாதிகள்  அந்தணர்  முதலிய  நான்காக  வேறுபடுக்கப்பட்டன . கலப்பில்லாத  அச்சாதிகளாலும் , அநுலோமர்  பிரதிலோமர் முதலிய  கலப்புச்  சாதிகளாலும்  சாதிகள்  அளவில்லாதனவாகும் . அவை  இத்துணையவென்று  வரையறுத்துக்  கூறப்படுவன வல்ல .              12                                                         

     பிறப்பினால்  மக்களுக்குச்  சாதிவேறுபாட்டைக்  கருதினவர்களே  அவர்தம்  பெயர்  வேறுபாட்டையும்  தொழில்  வேறுபாட்டையும்  அறிந்தோராவர் . சாதியின்  வகைகளைச்  சுருக்கிக்  கூறுங்கால்  அவை  கருப்பையிற் றோன்றுவன. முட்டையிற்  றோன்றுவன, வியர்வையிற் றோன்றுவன , வித்திற் றோன்றுவன  என  நான்கு வகைப்படும் .                                                                                                     13

( வேறுபாடு  கருதினவர்  மனு  முதலிய  பெரியோராவர் . பெயர்  வேறுபாடும்  தொழில்  வேறுபாடும்  மக்கட்  சாதியினர்க்கன்றி  மற்றைப்   புள்  விலங்கு  முதலியவற்றிற்கு  இல்லை யென்பது  கருத்து . கருப்பையிற் றோன்றுவன  முதலியவற்றை  முறையே  சராயுசம் , அண்டசம் , சுவேதசம் , உற்பிச்சம்  என்ப  வடநூலார்.)

     பிறப்பினால்  உயர்ந்தானொருவன்  இழிந்தவர்களின்  கூட்டுறவால்  இழிந்த  வருணத்தவனாவான் . பிறப்பினால்  இழிந்தானொருவன்  சேர்க்கையால்  உயர்ந்த  வருணத்தவனாகமாட்டான் . மக்களுக்கு  உயர்ந்த  தன்மையும்  இழிந்ததன்மையும்  காலநிலைக்கேற்றவாறு  அவர்தம்  செய்தொழில்  வேற்றுமையாலும்  குணங்களாலும்  உண்டாவனவாம் . வித்தைகள் , கலைகள் , ஆகிய  இவற்றைப்  பற்றி  நிற்போர்க்கு  அவற்றின்  பெயராலும்  சாதி  கூறப்படும் .                  14-15

( உயர்ந்த  வருணத்திற்  பிறந்தானொருவன்  ஒழுக்கக்கேடுடையனாயின்  இழிந்த  வருணத்தவனாவானென்பதும் , இழிந்த  வருணத்திற்  பிறந்தானொ ருவன்  நல்லொழுக்கமுடையனாயின்  அவ் வருணத்திலேயே  உயர்ந்த  குலனுடையனாதலன்றி  உயர்ந்த  வருணத்தவனாகா  னென்பதும்  கருத்து . இக்கருத்துக்களை  “ஒழுக்கமுடைமை  குடிமை  யிழுக்கம்” , அதற்குப்  பரிமேலழகர்  கூறிய  விசேட  உரையானு  முணர்க .  வருணம் – அந்தணர்  முதலிய  சாதி . குலம் – ஒவ்வொரு  சாதியுலுமுள்ள  உயர்குடி .)

2. அந்தணர்  முதலியோரின்  தொழில்கள்

     அந்தணர் , அரசர் , வணிகராகிய  இருபிறப்பாளர்  மூவர்க்கும்  பொதுவாகிய  தொழில்கள் – வேள்வி  செய்தல் , வேதமோதல் , ஈதல்  ஆகிய  இம் மூன்றுமாம் . அந்தணர்க்கு  மாத்திரம்  சிறப்பாகவுள்ள  தொழில்கள் –  ஏற்றல் , ஓதுவித்தல், வேட்பித்தல்  ஆகிய   இம் மூன்றுமாம் .                                                                                                      16

     அரசர்க்கு  மாத்திரம்  சிறப்பாகவுள்ள  தொழில்கள் – நல்லோரைக்  காத்தல் , தீயோரை  யொறுத்தல் , தமக்குரிய  இறைக்கூறு  கொள்ளல்  ஆகிய  இம்  மூன்றுமாம் . வணிகர்க்கு  மாத்திரம்  சிறப்பாகவுள்ள  தொழில்கள் –  உழவு , பசுக்  காத்தல் , வாணிகம்  புரிதல்  ஆகிய   இம்  மூன்றுமாம் .                                                                                                        17

     சூத்திரர்  முதலியோர்க்குரிய  தொழில்கள் – ஈதல் , பணி  செய்தல், சிறுதொழில்   புரிதல்  முதலியனவாம் .                                                       18

     அந்தணர்  முதலிய  எல்லோர்க்கும்  தத்தங்  குடும்பத்தைத்  தாங்குதற்  பொருட்டுப்  பல்வகைத்  தொழில்  வேறுபாட்டால்  ஏற்படுஞ்  சீவனோபாயம்  பழிக்கப்படுவதன்று . அந்தணர்  முதலியோர்க்கு  உழவுத்  தொழில்  உழவுக்  கருவியாகிய  கலப்பையின்  வேறுபாடு  பற்றி  மனு  முதலியோராற்  கூறப்பட்டுள்ளது .                                                                                               19

     அந்தணர்க்குப்  பதினாறு  எருதுகளையுடைய  ஏரும் , அரசர்க்குப்  பன்னிரண்டு  எருதுகளையுடைய  ஏரும் , வணிகர்க்கு  எட்டு  எருதுகளையுடைய  ஏரும் , சூத்திரர்களுக்கு  நான்கு  எருதுகளையுடைய  ஏரும் , அவரிற்றாழ்ந்த  பிறர்க்கு  இரண்டு  எருதுகளையுடைய  ஏரும்  உரியனவாம் . அவை  நிலங்களின்  மென்மை  நோக்கிக்  கொள்ளப்படுவனவாம் .                                         20

( இதன்கட்  கூறிய  ஓரளவு  நிலங்களின்  மென்மை  நோக்கிக்  கொள்ளப்படுமென்றமையால் , நிலங்கள்  வன்மையாக  விருப்பின்  கூறிய  அளவின்  மேற்பட்டுமிருக்கலா மென்பது  கருத்து . )

     ஐய  மேற்றுண்டு  வாழ்தல்  அந்தணர்க்கன்றிப்  பிறர்க்கு   மிகவும்  இழிவு  தருவதாகும் .                                                                                         21

(ஐயம் –பிச்சை )

     இருபிறப்பாளர்  மூவரும்  பலவகையாக  விதிக்கப்பட்ட  சிறந்த  தவங்களையும் , விரதங்களையும்  முடையராய் , உபநிடதங்களோடு  கூடிய  எல்லா  வேதங்களையும்  அறியக்கடவர் .                                    22

     எவன் , கல்விப்பயிற்சியுங்   கலையறிவு  முடையவனோ  அவனே  எல்லோர்க்கும்  ஆசிரியனாவான் . அங்ஙனம்  பயின்ற  றியாதவன்  சாதியான்  மாத்திரம்  ஆசிரியனாந்  தகுதியுடையனாகான் .              23

3. வேத  முதலியவற்றின்  வகைகள்

     வித்தைகளும்  கலைகளும்  எல்லையில்லாதனவாம் . அவை  இத்துணையவென்று  அளவிட்டுரைக்கற்பாலன வல்ல ; அவற்றுள்  வித்தைகள்  முப்பத்திரண்டும் , கலைகள்  அறுபத்து  நான்கும்   சிறந்தனவாக  எண்ணப்படும் .                                                                      24

      எக்  காரியம்  சொல்லளவான்  முற்றும்  நன்கு  நிறைவேற்றத்தக்கதோ  அது  வித்தை  என்னும்  பெயராற்  கூறப்படும் . எக் காரியம்  பேசும்  ஆற்றலில்லாத  ஊமனாலுஞ்  செய்தற்குத்  தக்கதாக வுள்ளதோ  அது  கலை  என்னும்  பெயராற்  கூறப்படும் .                                                                                                           25

( சொற்களால்  வியவரிக்கத் தக்கது  வித்தை  என்றமையால்  வேதம்  முதலியன  அதன்பாற்படும் . ஊமனாலுஞ்  செயற்பாலது  கலை  என்றமையால்  நாட்டியம்  முதலியன  அதன்பாற் படும் . இதனால்  வித்தைக்கும்   கலைக்கும்  உரிய  இலக்கணங்கள்  கூறப்பட்டன .)

     வித்தை  கலை  ஆகிய  இவற்றின்   பொதுவிலக்கணங்கள்  சுருக்கமாகக்  கூறப்பட்டன . இனிச்  சிறப்பிலக்கணங்கள்  தனித்தனியே  கூறப்படும் . இவற்றின்  பெயர்கள்  தனித்தனியாக வுள்ளன .                                                                                                                26

     இருக்கு , யசுர் , சாமம் , அதருவம்  என  வேதங்கள்  நான்காம்.  அவற்றிற்கு  முறையே   ஆயுர்வேதம் , தநுர்வேதம் , காந்தருவவேதம் , தந்திரங்கள்  என்னும்  நான்கும்  உபவேதங்களாகக்  கூறப்பட்டன .  27

( மூலத்தில்  அதருவ  வேதத்தின்  உபவேதம்  தந்திரம்  என்று  கூறப்பட்டுள்ளது . பிற  நூல்களிலெல்லாம்  இஃது  அருத்தவேதமென்று  காணப்படுகிறது . )

     சிக்கை , வியாகரணம் , கற்பம் , நிருத்தம் , சோதிடம் , சந்தசு என்னும்  இவை  ஆறும்  வேதங்களின்  அங்கங்களாகக்  கூறப்பட்டன .

     மீமாஞ்சை, தருக்கம் , சாங்கியம் , வேதாந்தம் , யோகம் , இதிகாசங்கள் , புராணங்கள் , அறநூல்கள் , நாத்திகம் , அருத்த நூல் , காம நூல் , சிற்பம் , அலங்காரம் , காப்பியங்கள் , தேயமொழி , அமயச் சொல் , யவன மதம் , ஒப்புரவறங்கள்  ஆகிய  இப் பதினெட்டும் , முற்கூறிய  வேதோபவேதங்கள்  எட்டும் , வேதாங்கங்கள்  ஆறும் , ஆக  இம்  முப்பத்திரண்டும்  வித்தைகளென்னும்  பெயராற்   கூறப்படுவனவாம் .                                                                                      29-30

( சிற்பம்  கலைகளுள்ளுங்  கூறப்படும் . அது  செயற்படுங்காற்  கலையாகும் . அதன்முறை  நூல்வாயிலாகக்  கற்கப்படுங்கால்  வித்தையின்பாற் படும் .  யவன மதம் – யவன  தேயத்தாரது  மத நூல் .  ஒப்புரவு – நூல்களானன்றி  உலக  நடையறிந்து  செல்தல் . அது  தேயங்கடோறும்  வெவ்வேறு  வகைப்பட்டு  நிகழ்வதாம். )

4. முப்பத்திரண்டு  வித்தைகளின்  இலக்கணங்கள்

     இருக்கு  முதலியவற்றிலுள்ள  மந்திரங்களுக்கும் பிராம்  மணங்களுக்கும்  வேதம்  என்னும்  பெயர்  கூறப்பட்டுள்ளது .       31

( வேதங்களெல்லாம்  மந்திரம்  பிராம்மணம் , என்னும்  இரண்டு  பிரிவினுள்  அடங்கும்  என்பது  கருத்து . )

     தேவர்களுக்கு  உவகை  தரத்தக்க  செபம், ஒமம் , அருச்சனை , ஆகிய  இவை  வேதத்தின்  எப்பாகங்களின்  உச்சரிப்பாற்  செய்யப்படுகின்றனவோ  அப்பாகங்கள்  மந்திரம்  என்று  கூறப்படும் . அம் மந்திரங்களின்  உட்கருத்துக்களையும் , அவற்றை  உபயோகப்படுத்தும்  முறைகளையும்  எடுத்துரைக்கும்  பாகங்கள்   பிராம்மணம்  என்று  கூறப்படும் .                                                                   32

( விதி , அருத்தவாதம் , அநுவாதம்  ஆகிய  இம்  மூன்றும்  பிராம்மணம்  என்று  கூறப்படும் . இப்பிராம்மணம்  இதிகாசம் , புராணம் , வித்தை , உபநிடதங்கள் , சுலோகங்கள் , சூத்திரங்கள் , வியாக்கியானங்கள் , அநு வியாக்கியானங்கள்  என  எட்டு  வகைப்படும் . )

     காற்கூறாகிய  பாதங்களாகவும்  அரைக்கூறாகவும்  படிக்கப்படும் இருக்கு  வடிவமாகிய  மந்திரங்களையும் , ஓமத்தை  நிறைவேற்றுதற் குரிய  மந்திரங்களையும்,  அழகிய  கதைகளையும்  உடையது  யாது? அஃது  இருக்குவேதமென்று  கூறப்படும் .                                                      33

( இருக்கு  வேதத்திலுள்ள  பாடல்கள்  காற்கூறாகவும், அரைக்கூறாகவும் , முற்றுமாகவும்  படிக்கப்படுதல்  அத்தியயனக்  கிரமத்தில்  ஆன்றோரான்  மேற்கொள்ளப்பட்டுள்ளது .)

     எதன்கண்  ஒன்றோடொன்று  இணைத்துப்  படிக்கப்படும்  மந்திரங்கள்  உள்ளனவோ ; விருத்த  கீதங்கள்  இல்லையோ ; அத்து வரியு என்னும் வேள்வி வினைஞனுக்குரிய  கன்மங்கள்  கூறப்பட்டுள்ளனவோ , மந்திர  பிராம்மணங்கள்  மும்முறை  படிக்கப்பட்டுள்ளனவோ  அது  யசுர்வேதமென்று  கூறப்படும் .      34

( இனைத்துப் படிக்கப்படுதலைச்  சங்கிதை  என்று  கூறுப )

     வேள்வியிற்  கூறப்படும்  சத்திர  வாக்கியங்களுக்கு  உற்கீதம்  விதிக்கப்பட்டிருப்பது  சாமவேத மென்று  கூறப்படும் .                      35

( சத்திரம் – சஸ்திரம் . சத்திர  வாக்கியங்கள் – சுரங்களின்றித்  தண்டாகாரமாகவுள்ள  வாக்கியங்கள் . உற்கீதம் – சாமவேதத்திற்  பாடப்படும்  இசை .)

     உபாசிக்கப்படும்  தேவர்களின்  உபாசனை  முறையைப்  புலப்படுத்தும்  வேதம்  அதருவாங்கிரசு  என்னும்  பெயருடையதாகும். இங்ஙனம்  நான்கு  வேதங்களின்  இலக்கணங்கள்  சுருக்கிக்  கூறப்பட்டன .                                                                                                     36

     ஒருவன்  எதனை  யறிந்து  ஒழுகுதலால்  வாழ்நாள்  மிகப்  பெறுகின்றானோ ; எதன்  அறிவால்  நோயின்  நிலையும்  அது  தணிக்கும்  மருந்தின்  நிலையும்  நன்குணர்ந்து , அவ் வுணர்ச்சி  காரணமாக  வாழ்நாளின்  அளவை  அறிகின்றானோ ; அஃது  இருக்கு   வேதத்தின்  உபவேதமாகிய  ஆயுர்வேத மென்னும் பெயரினை யுடையதாகும் .                                                                                                   37

     எதன்  அறிவாற்  போர்ச்  செயலிலும் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்   பயிற்சியிலும் , நால்வகைப்  படைகளின்  அணிவகுப்பிலும்  திறமையுண்டாகுமோ  அது  யசுர்வேதத்தின்  உபவேதமாகிய  தநுர்வேதமென்று  கூறப்படும் .                                     38

     உதாத்த  முதலிய  வேறுபாடுகளை யுடையனவும் , கண்டத்தினின்றுங்  கருவியினின்றுந்  தோன்றுவனவும் , தாளங்களையுடையனவும்  ஆகிய  எழுவகைச்  சுரங்களோடு  கூடிய  இசையினது  சிறப்பறிவு  எதனால்  உண்டாகின்றதோ  அது  சாமவேதத்தின்  உப வேதமாகிய  காந்தருவவேதமாகும் .                    39

     உபாசித்தற்குரிய  பலவகை  மந்திரங்களின்  உபசங்காரத்தோடுங்  கூடிய  அறுவகைப்  பிரயோகங்களும் , அவற்றின்  தரும  நியமங்களோடும் , சிறந்த  வேறுபாடுகளோடும் , எதன்கட்  கூறப்பட்டுள்ளனவோ  அதுவே  அதருவ வேதத்தின்   உபவேத மாகிய  தந்திரமென்று  கூறப்படும் .                                                                             40

( அறுவகைப் பிரயோகங்களாவன :  சாந்தி, வசீகரணம், தம்பனம்,  வித்துவேடணம், உச்சாடனம், மாரணம்,என்பனவாம் . )

     உதாத்த  முதலிய  சுரங்களாலும் , கால  அளவையாலும் , கண்டம் , நா  முதலிய  இடங்களாலும் , அங்காத்தன்  முதலிய  முயற்சிகளாலும் , உச்சரிப்பு  முதலியவற்றாலும்  எழுத்துக்களின்  பாடமுறையைப்  பயிற்றுவது  சிக்கை  என்று  கூறப்படும் .                                                    41

( அங்காத்தல் – வாயைத்திறத்தல் . உதாத்தம் , அநுதாத்தம்  சுவரிதம்  என்னும்  இவற்றை  முறையே  எடுத்தல் , படுத்தல் , நலிதல் , என்று  தமிழியனூல்  கூறும் .)

     பிராம்மண  பாகங்களால்  விநியோகங்  கூறப்படாமல்  எஞ்சிய  வேத  மந்திரங்களுக்கு  வேள்வி வினையிற்  பிரயோக  முறைகளைக்  கூறுவது  சிரெளத  கற்பமாகும் . வேள்வினையல்லாத  மற்றைக்  கன்மங்களில்  அவ்  வேத  மந்திரங்களுக்குப்  பிரயோக  முறைகளைக்  கூறுவது  சுமார்த்த  கற்பமாகும் .                                                                  42

( வேதங்களிற்  கூறப்பட்ட    மந்திரங்களின்  விநியோகமுறைகள்  பெரும்பாலும்  வேதப்பிராம்மணங்களாலேயே  கூறப்பட்டன. அங்ஙனங்  கூறப்படாமல்  எஞ்சிய  மந்திரங்களுள்  வேள்வி  வினைக்  குரியனவற்றைக்  கூறுவது  சிரெளத  கற்பமெனவும் , வேள்வியல்லாத  மற்றைக்  கன்மங்களுக்குக்  குரியவற்றைக்  கூறுவது  சுமார்த்த  கற்பமெனவுமுணர்க . )

      பிரத்தியயங்கள் , தாதுக்கள் , சந்திகள் , சமாசங்கள் , இலிங்கங்களாகிய  இவற்றாற்  சொற்களைத்  தூய்மைப்படுத்துக்  கூறுவது  வியாகரணமாகும் .                                                                            43

( பிரத்தியயம் – வேற்றுமையுருபு  வினையுருபு  சாரியை  முதலியன . தாது – பெயர்  வினைகளின்  முதனிலை . சந்தி – உயிர்  மெய்  முதலியவற்றின்  புணர்ச்சி .  சமாசம் – வேற்றுமைத்தொகை  முதலிய  தொகைநிலைகள் . இலிங்கம் – ஆண் , பெண்  நபுஞ்சகங்களாம் .)

     பிரகிருதி  பிரத்தியய  முதலியவற்றாற்  பதங்களைத்  தெளிவுறுத்திக்  கூறுவதும் , சொற்றொடர்களின்  பொருள்களை  ஒன்றுபடுத்திச்  சுருக்கிக்  கூறுவதும்  நிருத்தம்  என்று  கூறப்படும் . அது  வேதங்களின்  சொற்பொருள்களை  நன்கு  விளக்கிக்  கூறுதலால்  வேதபுருடனது  செவியுறுப்பாகும் .                                                                   44

( பிரகிருதி- பகுதி ; முதனிலை . வேதபுருடனுக்கு  சந்தசு  பாதங்களும் , கற்பம்  கைகளும் , நிருத்தம்  காதுகளும் , சிக்கை  நாசியும் , சோதிடம்  கண்களும் , வியாகரணம்  முகமுமாம் என்று கூறுப .  இதனை,”  கற்பங்  கைசந்தங்காலெண்கண் , டெற்ற நிருத்தஞ்  செவிசிக்  கைமூக் , குற்ற வியாகரணமுகம்  பெற்றுச் , சார்பிற்றோன்றா வாரண வேதம்”  என்பதனானு முணர்க . [ மணிமேகலை 27. 100 – 103 ] )

     எதன்கண்  நாள்  கோள்களின்  கதிகளாலும் , சங்கிதைகளாலும், ஓரைகளாலும் , கணிதங்களாலும்  தனித்தனியே  கால  அளவு  உணர்த்தப்பட்டுள்ளதோ  அது  சோதிடமாகும் .                                      45

( சோதிடநூல்  சங்கிதைக்  கந்தம் [ 1 ஆம்  ஹிதாஸ்கந்தம் ]  ஓரைக்கந்தம்  [ஹொராஸ்கந்தம் ] கணிதக்கந்தம் [ கணிதஸ்கந்தம் ] என  மூன்று  வகைப்படும் . சங்கிதைக்  கந்தத்தில்  உலகத்து  மக்களுடையவும் , விலங்கு  மழை  முதலிய  எல்லாப்  பொருள்களுடையவுமாகிய  ஆக்கக்  கேடுகளும் , ஓரைக்  கந்தத்தில்  சாதகம்  பிரசினம்  முகூர்த்தங்களும் , கணிதக்  கந்தத்தில்  கோளம  கணிதங்களும்  கூறப்பட்டுள்ளன. சங்கிதையும்  ஓரையும்  பலன்  கூறுமியல்பால்  ஒக்குமாயினும்  சங்கிதை  தொகுதியாகவும் , ஓரை  பகுதியாகவும் , பலன்களைக்  கூறுமென்பது  பற்றி  வேறுபடுக்கப்பட் டன . நாள் – நக்ஷத்திரம்  . கோள் – கிரகம் .)

     மகண  முதலிய  எண்வகைக்  கணங்கள் , குரு , இலகு ஆகிய  இவ்  அளவுகளால்  எதன்கட்  பாட்டிலக்கணம்  கூறப்பட்டுள்ளதோ  அது  வேதபுருடனின்  பாத  வடிவமாகிய  சந்தக  ஆகும் .                                 46

( கணங்கள்  ம, ய , ர , l , த , ஜ , ஷ, ந , என  எண் வகைப்படும் . குரு  இரண்டு  மாத்திரையுடையது . நெடிலும் , இணையெழுத்தின்  முன்னுள்ள  குறிலும் , அநுசுவாரத்தையும்  விசர்க்கத்தையும்  இறுதியினுடைய  எழுத்துக்களும்  குரு  என்று  கூறப்படும் . இலகு – ஒரு  மாத்திரையுடையது ; குறில் , வடமொழிச் செய்யுட்கள்  எழுத்துக்களைப்பற்றினவும் , மாத்திரைகளைப்பற்றினவும்  என  இருவகைப்படும் . மகண  முதலியவற்றால்  எழுத்தளவும் , குரு  இலக்குக்களால்  மாத்திரையளவும்  எண்ணப்படும் . )

     கன்மங்களின்  விதிவேறுபாட்டால் வேத  வாக்கியங்களுக்கு  எதன் கட்  பொருட்டுணிவு  செய்யப்பட்டுள்ளதோ , அது  மீமாஞ்சை யென்று  கூறப்படும் . காட்சி  முதலிய  அளவைகளால்  உண்மை  இன்மைப்  பதார்த்தங்களை  யாராய்ந்து  தெளிவுறுத்தும்  நியாயமும் , அங்ஙனமே  தெளிவுறுத்தும்  கணாதன்  முதலியோர்  மதமும்  தருக்கம்  என்று  கூறப்படும் .                                                                     47-48

( நியாயத்திற்குக்  கௌதம  முனிவரும் , வைசேடிகத்திற்குக்  கணாத  முனிவரும்  ஆசிரியராவர் .)

     புருட  தத்துவம்  ஒன்றும் , மூலப்பகுதி  முதலிய  தத்துவங்கள்  எட்டும் , மனம்  முதலிய  விகாரதத்துவங்கள்  பதினாறும்  ஆகிய  தத்துவங்கள்  இருபத்தைந்தும்  பிறவும்  எண்ணப்பட்டுக்  கூடியிருப்பது  சாங்கியம்  என்று  கூறப்படும் .                                           49

( மூலப்பகுதி  முதலிய  தத்துவங்கள்  எட்டாவன : மூலப்பகுதியும் , அதன் கட்டோன்றிய  மானும் , அதன் கட் டோன்றிய  அகங்காரமும் , அதன் கட்  டோன்றிய  தன்மாத்திரைகள்  ஐந்துமாம் . மனம்  முதலிய  தத்துவங்கள்  பதினாறாவன : மனமும் , ஞானேந்திரங்கள் ஐந்தும் , கன்மேந்திரம்  ஐந்தும்  பூதங்கள்  ஐந்துமாம் , மான் – மஹாந் ; அது  மகத்தத்துவம் . அதனைச்  சாங்கிய  நூலார்  புத்தி  என்பர் . தன்மாத்திரைகளைந்தாவன : சுவையும் , ஒளியும் , ஊறும் , ஒசையும் , நாற்றமுமாம் . மற்றவை  வெளிப்படை . இன்னும்  இவற்றின்  இயல்புகளை , “சுவையொளி யூறோசை  நாற்றமென்றைந்தின் , வகைதெரிவான் கட்டே யுலகு “   என்னும்  திருக்குறட்குப்  பரிமேலழகர்  எழுதிய  வுரையானு முணர்க .)

     ஏகமாகவும் , அத்துவிதீயமாகவும்  பிரமப்பொருள்  ஒன்றுள்ளது; அஃது  ஈண்டுப்  பலவாக  இல்லை ; அதனை யல்லாத  பிறவெல்லாம்  அறியாமையால்  உண்மையைப் போல்  விளங்கும்  பொய்ப்  பொருள்களாம்  என்று  வேதாந்திகளின்  மதம், அதுவே  வேதாந்தமென்று  கூறப்படும் .                                                                   50

( அத்துவிதீயம் – இரண்டற்றது )

     தியான  சமாதிகளாலே  பிராண  வாயுவை   யடக்கலும் , அதனாற்  சித்த  விருத்தியைப்  பொறிவழியே  புலன்களிற்   செல்லவொட்டாது  தடுத்தலும்  எதன்கண்   விளக்கப்பட்டுள்ளனவோ,  அது  யோகநூலென் றறியற்பாலது .                                                                                                   51

     ஓரரசனது  ஒழுகலாறு  முதலியவற்றைத்  தலைக்கீடாகக்  கொண்டு  அதனாற்  பண்டை  நிகழ்ச்சிகளை  எடுத்துக் கூறுவது  இதிகாசமாகும். அதுவே  புராவிருத்த மென்றுங்  கூறப்படும்.                                             52

( தலைக்கீடு – வியாஜம். புராவிருத்தம் – பண்டை  நிகழ்ச்சி .)

     உலகத்தோற்றம் , ஒடுக்கம் , முனிவர்  அரசர்   மரபு , அவர்தம்  சரிதம் , மனுவந்தரங்கள்  ஆகிய  இவற்றை  விளக்குவது  புராணமென்று  கூறப்படும் .                                                                            53

     வேதங்களுக்கு  மாறுபாடில்லாத  வருணாச்சிரம  தருமங்களை  நினைப்பூட்டுவதும் , பொருணூற்  பகுதிகளைக்  கூறுவதும்  அறநூலென்று  கூறப்படும் .                                                                               54

( அறநூல் – ஸ்மிருதி )

     உலகத்துப் பொருள்களின்  தோற்றக்  கேடுகள்  இயற்கையாக  நிகழ்வனவெனவும் , அவற்றிற்கு  ஒரு  கருத்தா  வேண்டாமையின்  கடவுள்  இல்லை யெனவும் , அக் கடவுள்  முதலிய  பொருள்களைப்  பற்றிக்  கூறும்  வேதனங்கள்  பிரமாணமாகா  வெனவும்  துணிந்து , யுத்தி  வன்மையைக்  கடைப்பிடித்து   நிகழ்வது  நாத்திகமாகும் .        55

     வேதம்,  அறநூல்களுக்கு  முரணாமல்  அரசனது  செங்கோன்முறை  முதலியவற்றை  வரையறுத்துக்  கூறுவதும் , பொருளீட்டுதற்குரிய  சிறந்த  உபாயங்களை  விளக்கிக்  காட்டுவதும்  பொருணூலென்று  கூறப்படும் .                                                                                                          56

     உயர் சாதி  முதலிய  சாதிவேறுபாட்டாலும் , குணஞ்செயல்களைப்  பற்றிய  அநுகூலன்  முதலிய  பெயர்வேறுபாட்டாலும்  தலைவரின்  இலக்கணங்களையும் ; பதுமினி  முதலிய  சாதி  வேறுபாட்டாலும் , குணஞ்  செயல்களைப்  பற்றிய  சுவீயை  முதலிய  பெயர்  வேறுபாட்டாலும்  தலைவியர்  இலக்கணங்களையும் ; அவ்விருதிறத்தாரின்  காதற்குறிப்பு  முதலியவற்றின்  இலக்கணங்களையும்  விளக்கிக்  கூறுவது  இன்பநூலாகும் .                57

( தலைவர் , சாதி வகையால்  முயல் , மான் , குதிரை , யானை  யாகிய  இந்நான்கு  திறத்தினராவரெனவும் , குணஞ்செயல்களால்  அநுகூலன்  தட்சிணன் , திருட்டன் , சடன் என  நான்கு  வகைப்படுவரெனவும் , தலைவியர் , சாதி  வகையால்  பதுமினி , சங்கினி , சித்திரிணி , அத்தினி  என  நான்கு  வகைப்படுவரெனவும் , குணஞ்  செயல்களால்  சுவகீயை , பரகீயை , சாமானியை  யென  மூன்று  வகைப்படுவரெனவும்  அறிக . இவற்றின்  விரிவுகளும் , தலைவர்  தலைவியரின்  காதற்  குறிப்பு  நிகழும்  முறைகளும்  பிறவும்  காமநூல்களில்  விளக்கிக்  கூறப்பட்டுள்ளன . )

     தேவாலயங்கள் , அரண்மனைகள் , பிரதிமைகள் , ஆடற்  பூஞ்  சோலைகள் , இல்லங்கள் , வாவிகள்  ஆகிய  இவை முதலியவற்றை  நன்கு  இயற்றும்  முறைகள் எதன்கண் விளக்கிக் கூறப்பட்டுள்ளனவோ  அதுவே  சிற்பநூலா குமென்று  பெரியோர்  கூறுவர் .                           58                                                                                                              

     ஒப்புக்  குறைவு  மிகுதிகளாலும் , பொதுத்தன்மை  முதலிய  வேறுபாடுகளாலும் , பொருள்களின்  ஒன்றுக்கொன்றுள்ள  குணங்களைப்  பற்றிய  அணிகள்  எதன்கண்  வருணித்துக்   கூறப்பட்டுள்ளனவோ  அஃது  அணி நூலாகும்.                                          59

( ஒப்புக் குறைவு  மிகுதிகள்  உருவக  முதலிய  அணிகளிலும் , பொதுத்தன்மை  முதலியன  உவமை  முதலிய  அணிகளிலும்  காணப்படும் . எல்லா  அணிகளும்  உவமையை  மூலமாக வுடையனவாகும் . )

     ஒன்பான்  சுவைகளையும்  உவமை  முதலிய  அணிகளையும்  உடையவாய்க்  குற்றமற்று  விளங்குஞ்  சொற்பொருள்களே  காப்பிய மென்று  கூறப்படும் . அது  செய்யுணடை, உரைநடை  முதலிய  வேறுபாடுகளை  யுடையதாய் , இவ்வுலகத்திலில்லாத  வியப்பு  மிக்க  இன்பத்தின்  காரணமாகும் .                                                                              60

( ஒன்பான்  சுவைகளாவன : காமம் , நகை , கருணை , வீரம் , உருத்திரம் , அச்சம்,  இழிப்பு , வியப்பு , சாந்த  மென்பனவாம். )

     நிகண்டுகளுடையவும் , மற்றை நூல்களை யவுமாகிய  சங்கே  தங்களாலன்றி  உலகத்து  மக்கள்  வழக்கின்  சங்கேத  ஆற்றலாற்  பொருளை  எளிதிலுணர்த்துவதும் , உலகியற்  காரியங்களுக்குத்  துணை  செய்வதுமாகிய  சொற்றிறள்  தேயமொழியாகும் .                  61

( சங்கேதமாவது – இச்சொல்லால்  இப்பொருள்  உணரற் பாலது  என்றாதல் , இச் சொல்  இப்பொருளை  யுணர்த்துக  என்றால்  இங்ஙனம்  சொற்கண்  உள்ள பொருளை  அறிவிக்கும்  ஓர்  ஆற்றலாகும் . இதனைச்  சமயவாற்றல்  எனவுங்  கூறுப . சொற்கள்  இயற்சொல் , திரிசொல் , முதலியவாகப்  பலதிறப்படும் . அவற்றுள், திரிசொற்கள்  நிகண்டுகளாலும்  மற்றை  நூல்களாலும்  அரிதுணர்  பொருளனவாய்  உணரப்படுவனவாம் .  ஆதலின் , அந்நூல்களானன்றி  உலக  வழக்கிற்  பொருளுணர்த்தும்  இயற்சொற்களின்  கூட்டமே  ஈண்டுத்  தேயமொழி  யென்று  கூறப்பட்டதாகும் . உலகியற்  காரியங்களுக்கு  இயற்சொற்கள்  துணையாதலையும் , திரிசொற்கள்  அங்ஙனமாகாமையையும்  அநுபவத்திற்  காண்க . )

     அவ்வக்  காலத்திற் கேற்பக்  கூறப்படுஞ்  சொல்  அமயச்  சொல்லாகும் .                                                                                                         62

( அமய மறிந்து  கூறப்படுஞ்  சொல்  அரிதாதலின் , அதுவும்  வித்தைகளுள்  ஒன்றாயிற்று . )

     எப்பொழுதுங்  காணப்படாத  கடவுள்  இவ்  வுலகிற்குக்  காரணமாக  உண்டு  எனவும் , தருமா தருமங்கள்  வேதம்  அறநூல்களின்  பிரமாணமில்லாமலே  உள்ளன  எனவும்  கூறுவது  யவனமத  நூலாகும் அவ் யவன மதத்தில்   வேத  முதலியவற்றிற்கு  முரணாக வுள்ள தருமங்களுங்  காணப்படும் .                                                                             63

     ஒவ்வொரு   தேயத்திலும்  ஒவ்வொரு  குலத்திலுமுள்ள  மக்களால் , எப்பொழுதும்  வேதமூலமாக  வுள்ளனவும்  அஃதில்லாதனவுமாக  மேற்கொள்ளப்பட்ட  ஒழுக்கங்கள்  யாவை ?  அவை  ஒப்புரவறங்களாம் .                                                                                              64

( ஒப்புரவு – உலகநடை  . இதனைப் பரிமேலழகர்  “உலகநடை  வேதநடை  போல  அறநூல்களுட்  கூறப்படுவதன்றித்  தாமே  அறிந்து  செய்யுந்   தன்மைத்து “  என்பர் . [ திருக்குறள் – 22-ஆம்  அதி . அவதாரிகை ] . )

     இதுகாறும் , வித்தைகளின்  இலக்கணங்கள்  தனித்தனி  நன்கு  விளக்கிக்  கூறப்பட்டன . கலைகளுக்குத்  தனியே  பெயரும்  இலக்கணங்களும்  ஈண்டில்லை . தனித்தனியே  பல்வேறு  வகைப்பட்ட  தொழில்களாற்  கலையின்  வேறுபாடுகள்  உண்டாயின . எவ்வெக்  கலைகளை  யார்  யார்  மேற்கொண்டு  ஒழுகுகின்றனரோ அவ்வக்  கலைகளின்  பெயரால்  அவரவர்  சாதி  கூறப்படும் .                         65-66

5. அறுபத்து  நான்கு  கலைகள்

     உள்ளக்  குறிப்புக்களையும் , அவற்றை  வெளிப்படுத்தற்குரிய  கண்  முதலிய  உறுப்புத்  தொழில்களையு முடைய  ஆடல் (1)  ஒரு  கலையாக  எண்ணப்படும் . [ இது நாட்டியமாகும். ] பல வகை  இசைக்  கருவிகளைச்  செய்வதிலும்  அவற்றை  வாசித்தலிலு முள்ள  அறிவு (2) ஒரு  கலையாகும் .                                                                                               67

     ஆடவர்  மகளிராகிய  இரு  திறத்தினர்க்கும்  ஆடை  அணிகலன்களால்  அழகு  மிக  ஒப்பனை  செய்தல் (3) ஒரு   கலையாகும் . பலவகை  உருவங்களைத்  தோற்றுவிக்கும்  செயற்கண்  உள்ள  அறிவு (4) ஒரு  கலையாகும் .                                                               68

( ஒப்பனை  செய்தல் – அலங்கரித்தல் . உருவங்களைத்தோற்றுவித்தல் – வேடங்  காட்டி  நடிப்பித்தல் ; இந்திரசால  முதலியனவுமாம் . )

     அமளி யமைத்தல் , கம்பலம் விரித்தல் , மலர்  முதலியன  கட்டுதல்  ஆகிய   இவை (5) ஒரு  கலையாகும் . சூது  முதலிய  பல  வகை விளை யாட்டுக்களால்  உலகத்தை  மகிழ்வித்தல் (6) ஒரு  கலையாகும் .       69

( அமளி – படுக்கை .)

     பலவகை  இருக்கைகளாலும் , புணர்ச்சிகளாலும் ,  சுரதத்தை யறிதல் (7) ஒரு  கலையாகும் . இவ்வெழுவகைக்  கலைகளும்  காந்தருவ  வேதத்தில்  நன்கு  கூறப்பட்டனவாம் .                                     70

( சுரதம் – ஆடவரும்  மகளிருங்  கூடிப்  புரியும்  இன்ப  விளையாடல் .)

     மலர்களிலுள்ள  தேன்களானாம்  குடிநீர் முதலியவற்றையும் , கள்  முதலியவற்றையும்  உண்டாக்கல் (8) ஒரு  கலையாகும் . உடலில்  தைத்த  அம்பு  முதலியவற்றை  வருத்தமுறாது மெல்ல  வெளிப்படுத்துதலிலும் , நரம்புக்  கொப்புளங்கள்  அறுத்து  ஆற்றுதலிலும்  உள்ள  அறிவு  (9) ஒரு  கலையாகும் .                              71

     பெருங்காய  முதலிய  மணப்  பொருள்கள் , உப்பு  முதலிய  சுவைப்  பொருள்கள்  ஆகிய  இவற்றின்  சேர்க்கையால்  சோறு  கறி  முதலியன வாக்கல் (10) ஒரு   கலையாகும் . மர  முதலியவற்றின்  பழ  முதலியன  உண்டாகச்  செய்தலும்  அவற்றைக்  காத்தன்  முதலிய  செயல்களும் (11)  ஒரு  கலையாகும் .                                                                                       72

( பழ  முதலியன  உண்டாக்கலை  இவ்வத்தியாயம் 4- ஆம்  பிரகரணம்  51, 52 ,53- ஆம்  சுலோகங்களிற்  காண்க.)

     மலைக் கற்களையும்  பொன்  முதலிய  உலோகங்களையும்  பிளத்தலும் , அவற்றை  நீராக்கலும் (12) ஒரு  கலையாகும் . கருப்பஞ்சாற்றினாற்  பாகு , வெல்லம் , சருக்கரை  முதலியன  செய்யுமறிவு (13) ஒரு  கலையாகும் .                                                              73

     பொன்  முதலிய  உலோகங்களையும்  மூலிகைகளையும்  ஒன்றோடொன்று  சேர்க்குமறிவு (14 ) ஒரு  கலையாகும்.  கலப்பாகவுள்ள  பொன் , வெள்ளி  முதலிய  உலோகங்களைத்  தனித்தனியே   பிரித்தெடுக்கும்  செயல் (15)  ஒரு  கலையாகும் .   74

     உலோக  முதலியவற்றின்  கலப்பைப்  புதிய  முறையில்  ஆராய்ந்தறிதல் (16) ஒரு  கலையாகும் . உப்பு  முதலியவற்றை  ஆக்கலும் , அவற்றைப்  பிற  பொருள்களினின்றும்  வெளிப்படுத்தலும் (17) ஒரு  கலையாகும் . இப்பத்துக் கலைகளும்  ஆயுர்வேதத்தின்பாற்  படுவனவாம் .                                                                                                    75

     அடி  முதலியவற்றின்  வைப்புமுறைகளை  மேற்கொண்டு  வாள்  முதலிய  படைகளாற்  குறிவைத்தெறிதல் (18) ஒரு  கலையாகும் . உறுப்புச்  சந்திகளிற்  றாக்குதல் , பிடித்திழுத்தன்  முதலிய  செயல்  வேறுபாடுகளாற்  செய்யப்படும்  மற்போர் (19) ஒரு  கலையாகும் . 76

     மற்போர்  செய்யும்  வீரர்களின்  கைப்போர் , வாள்  முதலிய  படைகளின்றி  வீரன்  மடக்கிய  கைகளாற்  செயற்பாலதாம் . அம் மற்போரில்  இறந்த  வீரனுக்கு  இம்மையிற்  புகழும்  மறுமையில்  இன்பமும்  உண்டாகா .                                                                                    77

     பகைவனுடைய  ஆற்றலும்  செருக்கும்  அழியுங்காறுஞ் செய்யப்  படும்  மற்போர்  ஒருவனுக்கு  மிக்க  புகழை  விளைப்பதாகும் . அம் மற்போரை  உயிர்க்கு  அழிவுண்டாம்  வண்ணஞ்  செய்தலாகாது .  78

     ஒருவன்  தன்  செயல்  எதிர்ச்செயல்களாலும் , மிக்க  அச்சத்தை  விளைவிக்கும்  பல்வகைக்  கைவினைகளாலும் , பகைவனை  வீழ்த்தி  மேலேறுதலாலும் , விரல்  மடக்கிக்  குத்துதலாலும் , பகைவன்  சோர்ந்திருக்குங்கால்  அவனைப்  பிசைதலாலும்  செய்யும்  மற்போர்  நிபீடனம்  என்றறியற்பாலது . அந் நிபீடத்தினின்றும்  விடுதி  பெறுதல்  பிரதிக்கிரியை   என்று  கூறப்படும் .                                                            79

     ஓரிடத்தைக்  குறிவைத்து  எந்திரம்  அம்பு  முதலியவற்றை  அங்குச்  செலுத்தல் (20)  ஒரு  கலையாகும் . போர்ப்  பறை  முதலியவற்றின்  குறிப்புகளாற்  படைகளின்  அணிவகுப்பு  முதலியன  செய்தல் (21) ஒரு   கலையாகும் .                                                                                               80

     யானை , குதிரை , தேர்  இவற்றின்  கதி  விசேடங்களாற்  போரிற்  கலத்தல் (22)  ஒரு  கலையாகும் . இவ் வைந்து  கலைகளும்  தநுர்  வேதத்தின்கண்  உள்ளனவாம் .                                                                       81

     பலவகை  இருக்கைகளாலும்  முத்திரைகளாலும்   தெய்வங்களை  மகிழ்வித்தல் (23)  ஒரு  கலையாகும் . தேர்  செலுத்துந்திறமையும்  , யானை,  குதிரைகளுக்கு  நடை  கற்பிக்குந்  தொழிலும்  (24)  ஒரு  கலையாகும் .                                                                                                     82

( இருக்கைகளாலும்  முத்திரைகளாலும் , மகிழ்வித்தலாவது : தெய்வத்  திருவுருங்களை  நிற்றல் , இருத்தன்  முதலிய  நிலைகளில்  வைத்து  அலங்கரித்துக்  கைமுத்திரை  காட்டி  உவகையுறுத்தல் . இக்கலை  தந்திரமென்னும்  உபவேதத்தின்பாற்  படுமென்று  உய்த்துணரற்பாற்று . இதன்பின்னுள்ள  24-ஆம்  கலைமுதற்  கூறப்படும்  மற்றைக்  கலைகளெல்லாம்  உபவேதங்களைச்  சாராமல்  பொதுவாக  மக்களுக்குரியனவாம் . )

     மண் , மரம் , கல் , பொன் , வெள்ளி  , முதலிய  உலோகங்களாகிய  இந்  நால்வகைப்  பொருள்களாலும்  தனித்தனியே    பாண்டம்  முதலியன  அழகுறச்  செய்தல் ( 25 , 26 , 27 , 28 ) நான்கு  கலைகளாகும் . ஓவியம்  முதலியன  வரைதல் (29)   ஒரு  கலையாகும் .                        83

     ஊருணி  வாவி  மேன்மாளிகை யமைத்தலும் , நிலத்தை  மேடு  பள்ளமின்றிச்  சமனாக்கலும், (30) ஒரு  கலையாகும் . நாழிகை  வட்டின்  முதலிய  பலவகை  எந்திரங்களையும் , வாச்சியக் கருவிகளையும்  செய்தல் (31)  ஒரு  கலையாகும் .                                                                  84

( 67-ஆம்  சுலோகத்திற்  கூறிய  இசைக்கருவிகள்  நாட்டியத்திற்குரியனவாகும். ஈண்டுக்கூறிய  வாச்சியக்  கருவிகள்  பிறவாம் . நாழிகை  வட்டில் – கடிகாயந்திரம் .)

     மிகுதி   குறைவு  சமனாகிய  அளவுகளாற்  சேர்க்கப்பட்ட  பல  வகை  வண்ணப்  பொருள்களால்  ஆடை  முதலியவற்றிற்கு  நிறம்  தீற்றல் (32)  ஒரு  கலையாகும் . நீர்  நெருப்புக்  காற்றுக்களின்  சேர்க்கையாலும் , அவற்றைத்  தடைப்படுத்திச்  செலுத்தலாலும்  செய்யப்படும்  எந்திரத்தொழில் (33)  ஒரு  கலையாகும் .                                                    85

( இத்தொழில்  இக்காலத்தில்  நீராவியால்  புகைவண்டி  முதலியவற்றைச்  செலுத்தும்  வினையை  நினைவுறுத்துவதாகும் . )

     தோணி , தேர்  முதலியன  செய்யும்  அறிவு (34)  ஒரு  கலையாகும் . நூல்  நூற்றல் , கயிறு  முறுக்கல்  முதலியன  செய்யும்  அறிவு (35)  ஒரு  கலையாகும் .                                                                                                     86

     பலவகை  நூல்களின்  இயைபால்  ஆடை  நெய்தல் (36) ஒரு  கலையாகும் . அரதனங்களைச்  சாணை  தீர்தல் , துவாரமிடல் , முதலிய  செய்தற்கண்  உள்ள  அறிவின்  ஏற்றத்தாழ்வு (37)  ஒரு  கலையாகும் .                                                                                                      87

     பொன்  முதலிய  உலோகங்களின்  உண்மை  நிலைமை ஆராய்ந் தறிதல் (38) ஒரு  கலையாகும் . செயற்கைப் பொன் , செயற்கை  அரதனங்களைச்  செய்யும்  அறிவு (39)  ஒரு  கலையாகும் .                88

     பொன்  முதலியவற்றால்  அணிகலன்கள்  செய்தல் (40)  ஒரு  கலையாகும் . உருக்கிய  பொன்  முதலியவற்றால்  மற்றை உலோகப்  பொருள்களுக்குப்  பூச்சிடல் (41)  ஒரு  கலையாகும் . தோல்களுக்கு  மென்மை  முதலிய  பதனிடல்  (42)  ஒரு  கலையாகும் .                       89

     பசு  முதலியவற்றின்  உடல்களினின்றும்  தோலுரித்தெடுத்தல் (43)  ஒரு  கலையாகும் . பசு  முதலியவற்றினின்றும்  பால்  கறத்தன்  முதல்  நெய்யுருக்குதல்வரை யுள்ள  செயல்களின்  அறிவு (44)  ஒரு  கலையாகும் .                                                                                                      90

     குப்பாயம்  முதலியன  தைத்தற்கண்  உள்ள  அறிவு (45)  ஒரு  கலையாகும் . நீரிற்  கை  முதலியவற்றால்  நீந்திக்  கடத்தல் (46)   ஒரு  கலையாகும் .                                                                                                      91

இல்லத்தின்கண்  உள்ள  பாண்டம்  முதலியவற்றைத்  தூய்மையுற  விளக்கும்  அறிவு (47)  ஒரு  கலையாகும் . ஆடைகளை யொலித்தல் (48)  ஒரு  கலையாகும் . மயிர்  களைதல்  (49) ஒரு  கலையாகும் .                  92

( ஒலித்தல் – அழுக்ககற்றல் .)

     எள்  இறைச்சி  இவற்றினின்றும்  நெய்  வெளிப்படுத்தல் (50)  ஒரு  கலையாகும் . கலப்பை  முதலியவற்றான் உழுதல் (51) ஒரு கலையாகும். மர முதலியவற்றில் ஏறுதல் (52) ஒரு கலையாகும்.       93   

     ஒருவற்கு  மன  முவக்கப்  பணிவிடை  செய்தற்கண்  உள்ள  அறிவு (53)  ஒரு  கலையாகும் . மூங்கில் , புல் , முதலியவற்றாற்  பெட்டி  முதலியன  செய்தற்கண்  உள்ள  அறிவு (54)  ஒரு  கலையாகும் .          94

     காசபாத்திரம்  முதலியன  செய்தற்கண்  உள்ள  அறிவு (55)  ஒரு  கலையாகும் . நீர் கொணர்தல் , நீர்  தெளித்தல்  முதலியன (56)  ஒரு  கலையாகும் .                                                                                                         95

( காசபாத்திரம்  –  கண்ணாடி  செய்யும்  ஒளிமிக்க  ஒருவகை   மண்ணாற்  செய்யப்படுவது . இது  பீங்கான்  பாத்திரமென்றுங்  கூறப்படும் . )

     இரும்பினால்  அம்பு  வாள்  முதலிய  ஆயுதங்கள்  செய்யும்  அறிவு (57) ஒரு  கலையாகும் . யானை ,  குதிரை ,  எருது ,  ஒட்டகம்  ஆகிய  இவற்றின்  பிடர்க்கண்  இடும்  தவிசு  முதலியன  அமைக்கும்  அறிவு (58)  ஒரு  கலையாகும் .                                                                                        96

     குழந்தைகளை  வளர்த்தலும்  தாங்குதலும் , குழந்தைகளோடு  விளையாடுதலும் (59) ஒரு  கலையாகும் . ஒருவன்  குற்றஞ்  செய்யின்  அவனை  அதற்குத்தக  ஒறுத்தல்  (60)  ஒரு  கலையாகும் .                       97

     பலதேயங்களிலும்  வழங்கும்  எழுத்துக்களை  நன்கு  எழுதப்பழகும்  அறிவு (61)  ஒரு  கலையாகும் . வெற்றிலை  பாக்கு  முதலியவற்றைச்  சித்தப்படுத்தல்  பேணுதல்  முதலியன (62) ஒரு  கலையாகும் .             98

     இக் கலைகளைக்  கொள்ளுதற்கண்  விரைவுத்தன்மையும்   கொடுத்தற்கண்  தாழ்த்தற் றன்மையும்  ஆகிய  இரு  குணங்களையும்  மேற்கொள்ளல்  வேண்டும் . இவ்விரு  குணங்களும்  (63-64)  இருகலைகளாகக்  கூறப்படும் .                                                                        99

     இங்ஙனம்  அறுபத்து  நான்கு  கலைகளும்  சுருக்கமாகக்  காட்டப்பட்டன . இக்கலைகளுள்  எதனை  யெத்தனை  எவனெவன்  திறமையோடு  மேற்கொண்டுள்ளானோ  அதனையதனை  அவனவன்  செவ்விதிற்  செய்யுந்  திறனுடையனாதல்  வேண்டும் .                            100

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்,

நாட்டைப்பற்றிய  முதலாவதாகிய

“வித்தியா  கலா  நிரூபணம்”  என்னும்

மூன்றாம்  பிரகரணம்  முற்றிற்று .   

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நான்காம்  பிரகரணம்

(உலக  தரும  நிரூபணம்)

1 . நால்வகை  ஆச்சிரமங்கள்

     அந்தணர்க்கு  முறையே  பிரமசரியம் , காருகத்தம் , வானப்பிரத்தம் , சந்நியாசம்  என்னும்  இந்  நால்வகை  நிலைகளும்  எப்பொழுதும்  உரியனவாம்  . மற்றை  அரசர் , வணிகர் , வேளாளர்  ஆகிய  மூவர்க்கும்  இறுதியதாகிய  சந்நியாச  மல்லாத  மற்றைய  மூவகை  நிலைகளும்  தனித்தனி  உரியனவாம் .                                                       1

     கல்விப் பயிற்சி  செய்தற்பொருட்டு   ஓது  நிலையும் , பிற  நிலைகளை யுடையாரெல்லோரையுங்  காத்தற்பொருட்டு  இன்னிலையும் , பொறிகளை யடக்கி  யாளுதற்  பொருட்டுக்  காடுறை  நிலையும் , வீட்டின்பந்துய்த்தற் பொருட்டுத்  துறவுநிலையும்  மேற்கொள்ளற்பாலனவாம் .                                                                               2

( ஓதுநிலை – பிரமசரிய . இன்னிலை – இல் நிலை ; காருகத்தம் . காடுறை நிலை – வானப்பிரத்தம் . துறவு நிலை – சந்நியாசம் . இவற்றைத்  தமிழ்  நூலார்  இல்லறம்  துறவறம்  என்னும்  இரண்டனுள்  அடக்குவர் . காருகத்திற்கு  முன்னர்க்  கல்வியின்  பொருட்டு  மேற்கொள்ளப்படுதலின்  பிரமசரியம்  இல்லறத்துள்ளும்,  போக நிமித்தமின்றிப்  பணிவிடைப்பொருட்டு  மனைவியோடுடனுறைதலின்  வானப்பிரத்தம்  துறவறத்துள்ளும்  அடங்கும் . )

     அந்தணர்  முதலிய  வருண  ஒழுக்கங்களையும் , பிரமசரிய  முதலிய  ஆச்சிரம  ஒழுக்கங்களையும்  பிழைத்தொழுகுவாரை  அரசன்  தண்டிக்கக்  கடவன் .                                                                           3

( பிழைத்தொழுதல் – தவறி நடத்தல் .)

     அரசன் , தத்தங்  குல  தருமங்களிற்  பிறழ்ந்தொழுகுங்  குடிகளைப்  புறக்கணித்தும் , அவரைத்  தண்டோபாயத்தால்  ஒறுத்தல்  செய்யாமலும்  இருப்பின் , உயர்குலங்கள்  இழிகுலத்தன்மையையும், இழிகுலங்கள் உயர்குலத்தன்மையையும்  எய்துவனவாம் . (எல்லோரும் தத்தம்  விருப்பின்வண்ணம்  ஒழுகுவர்  என்றபடி. )                                   4                                                                                                          

2 . மகளிர்  ஒழுக்கமுறை

     பெண்களும் , சூத்திரர்களும்  தம்  தலைவர்  பணியின்றிச்  செபம், தவம் , புண்ணிய  தல  யாத்திரை , துறவு பூணல் , மந்திர  சாதனம் , கடவுட்பூசை  யாகிய  இவற்றைச்  செய்தலாகாது . பெண்களுக்கு  அவரவர்  தலைவர்  பணியன்றி  அறம்  பொருள்  இன்பங்ளைப்  பயக்கும்  துணையாவது  வேறொன்று மின்று .                                           5

     பெண்மக்கள்  தன்  தலைவன்  துயில்  நீத்தெழுதற்கு  முன்னரே  அமளியினின்றெழுந்து , உடலைத்  தூய்மை  செய்து  கொண்டு , படுக்கையைப்  பிறிதோரிடத்தில்  எடுத்து  வைத்துப்  பின்னர்  அலகிடலாலும் , மெழுகிடலாலும்  இல்லத்தைத்  தூய்மை  செய்து , வேள்வி  முதலியவற்றிற்குரிய  பாத்திரங்களை  நெருப்பையும் , புல் லையு முடையதும்  வீட்டை  யடுத்துள்ளது மாகிய  நிலத்தில்  வைத்து  அழுக்ககற்றித்  துலக்கல்  வேண்டும் . அப்  பாத்திரங்கள்  எண்ணெய்  படிந்தனவாக  விருப்பின் , பின்னரும்  அவற்றை  வெந்நீராற்  கழுவி  உரிய  இடத்தில்  வைத்து  ஈரமுலரச்  செய்து  மீண்டும்  அவற்றில்  நீரை  நிறைத்துத்  தக்க  இடத்தில்  வைத்துக்  காத்தல்  வேண்டும் .                6-8

( அலகிடல் – துடைப்பத்தால்  இடத்தை  விளக்கல். )

     அடுக்களையிலுள்ள    பாத்திரங்க ளெல்லாவற்றையும்  இல்லத்தின்   வெளிப்புறத்தே  வைத்து , மண்   முதலியவற்றால்  தேய்த்து  அழுக்ககற்றிக்  கழுவல் வேண்டும் . பின்னர் அடுப்பை  மெழுகி  அதன்கண்  விறகிட்டுத்   தீ  மூட்டல்  வேண்டும் .                                      9

      இங்ஙனம்  முற்பகலிற்  செயற்பாலனவாகிய  செயல்களைச்  செய்து  முடித்த   அப்பெண், உபயோகத்திற்குரிய  பாத்திரங்களையும் , இரசம் , சோறு , மற்றை  உணவு  வகைகள்  ஆகிய  இவற்றிற்குரிய  பொருள்களையும்  மறவாமல்  திட்டஞ் செய்துவைத்து  மாமன் , மாமி  இருவரையும்  வணங்கல்  வேண்டும் .                                                           10

  அம்  மாமன்  மாமியாராதல் , தன்  தலைவனாதல் , தந்தை  தாயாராதல் , உடன்  பிறந்தாராதல் , அம்மான்  முதலிய  உறவினராதல்  மனமுவந்தளிக்கும்  ஆடையையும் , அரதனப்பணி  முதலிய  அணிகலன்களையும்  ஏற்று  அணிந்து கொள்ளல்  வேண்டும் .             11

( அரதனப்பணி – இரத்தினாபரணம் .)

     இல்லக் கிழத்தியாவாள் – மனம்  மொழி  செயல்களில்  தூய்மையும்  உடற்றூய்மையு முடையளாகவும் , தலைவன்  கட்டளைப்படி  ஒழுகுபவளாகவும் , அவனை  நிழல்போல்  என்றும்  பிரியாதிருப்பவ ளாகவும், அவற்கு  நலந்தரு  செயல்களில்  தோழி  போலவும் , ஏவற்றொழில்  செய்வதிற்  பணிப்பெண்  போலவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                               12

     அதன்பின்  அப்  பெண்மகள்  அடிசில்  ஆக்கித்  தன்  தலைவற்கு  அறிவித்து , வைச்சுவதேவ  பலி   கொடுத்து , எஞ்சிய  உணவை  முதற்கண்  உண்ணுதற்குரிய  மாமன்  மாமி  முதலியோரையும்  தன்  கணவனையும்  உண்பித்தல்  வேண்டும் . அதன்பின்  அக்  கணவன்  உடன்பாடு  பெற்று  எஞ்சிய  சோறு  முதலியவற்றைத்   தான்  உண்ணல்  வேண்டும் . தன்  குடும்ப  வாழ்க்கைக்குரிய  வரவு  செலவுகளை  யாராயு முகமாகப்  பிற்பகலைக்  கழித்தல்  வேண்டும் .

( வைச்சுதேவ பலியாவது  :  இருபிறப்பாளர்  நாடோறும்  இறுக்கப்படும்  ஐம்பெரும்  கேள்விகளுள்  ஒன்றாகிய  தேவ  யாகத்தின்பாற்  படும் ; அக்கினி  முதலியோரைக்  குறித்து  அவ்வக் கினியாற்  செய்யப்படும்  ஓம  காரியமாகும் .)

     கற்பிற்  சிறந்த  அப் பெண்மகள்  இங்ஙனமே  நாடோறும்  காலையிலும்  மாலையிலும்  இல்லத்தைத்  தூய்மை  செய்து  அடிசிலாக்கித்  தன்  தலைவனையும்  ஏவலாளரையும்  உண்பித்தல்  வேண்டும் .                                                                                                            15

     அதன்பின்  அளவின்மிகாத  உணவைத்  தான்  உட்கொண்டு , இல்லறமுறைக்குரிய  மற்றைக்  காரியங்களையுஞ்   செய்து  முடித்துப்  படுக்கை  விரித்துத்  தன்  தலைவன்  துயில்  செய்தற்குரிய  பணிகளை  இயற்றல்  வேண்டும் .                                                                                           16

( இதன்கண்  கூறப்பட்ட  உணவு  இரா  வுணவாகும் .)

     தலைவன்  உறங்கியபின்  அப்படுக்கையை  யடைந்து , ஆடை  நீங்கப்பெறுதல்  மெய்ம்மறத்தல் , அவாமிகுதி  யாகிய  இவை  யில்லாமற்  பொறிகளை  யடக்கிக்  கொண்டு  , அத் தலைவனை  நெஞ்சத்துளிருத்தித்  துயில்  செய்தல்  வேண்டும் .                                     17

     பெண்மகள்  இரைந்துபேசுதல் , கடுஞ்சொற்  கூறல் , பலமுறை  கூவியழைத்தல் , இன்னாச்சொற்கூறல் , எவரோடாயினும்  கலகம்  விளைத்தல் , பயனில்  சொற்கூறல்  ஆகிய  இவை  இல்லாதவளாக  இருத்தல்  வேண்டும் .                                                                                          18

      கற்பிற்  சிறந்த  பெண்  தன்  தலைவனுடைய  பொருட்கு  அழிவு  செய்யும்  இயல்பினளாகவும் , அறம்  பொருள்   ஈட்டுதற்கண்  மாறுபட்டு   ஒழுகுபவளாகவும்  இருத்தலாகாது . இன்னும்  அவள் , ஆராயாது  பேசுதல் , இறுமாந்து பேசுதல் , சினந்து  கூறல் , அழுக்காறுற்றுப்  பேசுதல் , மிகவும்  பழிக்கப்படுவனவாகிய  குறளை  கூறல் , பிறரைத்  துன்புறுத்தல் , விடயங்களின்  மிகுபற்று , அகங்காரம் செருக்கு , கடவுளும்  இம்மை  மறுமை  முதலியனவும்  இல்லை யென்னுங்  கொள்கை , வலாற்காரம் , களவு , இடம்பம்  ஆகிய  இக் குற்றங்களையும்  ஒழித்தல்  வேண்டும் .                                                   19-20

( அகங்காரமும்  செருக்கும்  ஈண்டு  முறையே  மாண்பு  நீங்கிய  மானமும்  மதமுமாம் . )

     தனக்குரிய  சிறந்த  தெய்வமாகிய  கணவற்கு  இவ்வாறு  பணி  செய்து  நல்லொழுக்கம்  நிரம்பப்  பெற்ற  அப் பெண்மகள் , இம்மையில்  நல்ல  புகழையும் , மறுமையில்  தன்  தலைவன்  இருக்கும்  உலகத்தை   யெய்தி அவனோடு  உடனுறைதலாகிய  வாழ்க்கையையும்  அடைவாள்  .                                                                      21

     இதுகாறும்  மகளிர்க்குரிய  நித்யகன்ம  ஒழுக்கங்கள்  கூறப்பட்டன . இனி, நைமித்திய கன்மங்கள்  கூறப்படும் . ஒரு  பெண்  இருது வுடைய ளாகி  வீட்டுக்கு  விலக்கானால்  முற்கூறிய  எப்பணியையுஞ்  செய்தலாகாது .                                                                                                       22

     இருதுவான  அப்பெண்  ஒரே  ஆடை  யுடையளாய் , உடல்  மெலிவுற்று , அச்சமேற்கொண்டு  , நீராடுதலையும்  அலங்கரித்துக் கொள்ளுதலையும்  ஒழித்து , நாணுடையளாய் , எவராலும்  பார்க்கப்படாதவாறு  , விரைந்து  ஓர்  அறைவீட்டினுள்  புகுந்து  இருத்தல்  வேண்டும் .                                                                                          23

( உடல் மெலிவுறுதல்  –  இருது காலத்தில்  உண்டி  சுருக்கலானாம் .  மகளிர்க்குரிய  நால்வகைக்  குணங்களுள்  நாணும் , அச்சமும்  இருதுகாலத்தில்  விசேடமாக  மேற்கொள்ளப்பட  வேண்டுமென்பது  கருத்து .)

     இன்னும்  அவள்  மெய்ம்  மறத்தலின்றி  நிலத்திற்  படுத்துறங்கல்  வேண்டும் . இவ்வாறு  மூன்று  பகல்களைக்  கழித்துப்  பின்  மூன்றா  நாள்  இரவின்  இறுதியில்  கதிரவன்  உதயமாகுங்கால்  உடுத்த  ஆடையோடு  நீராடல்  வேண்டும் .                                                                   24

     அதன்  பின்  கணவன்  முகத்தைத்  தரிசித்து  அப்  புண்ணியத்தாற்  தூய்மையுடையளாதல்  வேண்டும் . மீண்டும்  நீராடுதல்  முதலியவற்றால்  தூய்மையுடையளாய்  முன்போல  வீட்டுப்பணிகளைச்  செய்தல்  வேண்டும் .                                                   25

     இவ்வொழுக்கங்கள்  அந்தணர்  முதலிய மூன்று  வருணத்துப்   பெண்களுக்கும்  உரியனவாம் . இவற்றுட்  பெரும்பாலான  வருணத்துப்  பெண்கள்  முதலியோராலும்  மேற்கொள்ளற்பாலனவாம் . அந்  நான்காம்  வருணத்துப்  பெண்கள்  முதலியோர்,  உழவு  பண்டமாற்று  முதலிய  ஆண்மக்களின்  தொழில்களுக்குத்  துணை  செய்வதற்கும்  உரியராவர் .                                                                                                          26

    நல்ல  இசை  பாடுதலாலும் , இனிமை  மிகப்  பேசுதலாலும் , அன்பு  அளைஇய  இன்ப  விளையாடல்களாலும்  தன்  கணவன்  தனக்கு  வயமாம்வண்ணம்  செய்து  கொள்ளல்  வேண்டும் .                                27

     கணவன்  இறந்துவிடின்  தானும்  உடல்  நீத்து  அவனுடன்  செல்லல்  வேண்டும் . இன்றேல், தலைவனை   நினைவுட்கொண்டு  பிரமசரிய  ஒழுக்கமுடையளாய்ப்  பிறரில்லம்  புகாது  தன்னில்லத்தே யிருந்து , கைம்மை  நோன்பைக்  கடைப்பிடித்தொழுகல்  வேண்டும் .                 28

( இச்சுலோகக்  கருத்தைப்  பின்  வரும்  மணிமேகலைச்  செய்யுட்  பகுதியாலு முணர்க :

“ காதல ரிறப்பிற்  கனையெரி பொத்தி , யூதுலைக்  குருகினுயிர்த்  தகத் தடங்கா,  தின்னுயிரீகுவரீயாராயின் , நன்னீர்ப்  பொய்கையினளியெரி புகுவர் , நளியெரி புகாஅராயி னன்பரோ , டுடனுறை  வாழ்க்கைக்கு  நோற்றுடம் படுவர், பத்தினிப்பெண்டிர்  பரப்புநீர்  ஞாலத்து “                      ( மணிமேகலை -2-. 42-38.)  )

     தன்  கணவன்  அயலிடஞ்  சென்றிருக்குங்கால்  தான்  அலங்கரித்துக்  கொள்ளலாகாது ; கடவுள்  வழிபாட்டிலும்  கணவன்  நலத்திலும்  பற்றுடையளாக  இருத்தல்  வேண்டும் . மங்கலத்தின்  பொருட்டுச்  சில  அணிகலன்களை   மாத்திரம்  அணிந்து  கொள்ளல்  வேண்டும் .                                                                                                            29

     பெண்மகட்குக்  கணவனை  யொத்த   பற்றுக்கோடும்  இன்பப்பொருளும்  வேறில்லை . அவள்  உலகத்துள்ள  எல்லாப் பொருள்களையும்  பொருட்படுத்தா தொழித்துக்  கணவனையே  புகலிடமாக  அடைதல்  வேண்டும் . அவனே  அவளுக்கு  அவ்வெல்லாப்பொருளுமாவன் .                                                                   30

     ஒரு  பெண்ணுக்குரிய   வாழ்க்கைப்  பொருள்களின்  அவள்  தந்தை  கொடுப்பனவும் , உடன்பிறந்தார்  கொடுப்பனவும் , புதல்வர்  கொடுப்பனவும்  ஓர்  அளவுட்பட்டனவாம் . கணவன்  கொடுப்பனவே  அளவில்லாதனவாம் . அங்ஙனமாயின்  அக்கணவற்கு  வழிபாடு  செய்யாதவள்   யார்?                                                                                        31

3 . சூத்திரர்களின்  ஒழுக்க  வகைகள்

     நான்காம்  வருணத்தவராகிய  சூத்திரர்கள்   வருணத்தன்மை  யுடைமையால் , “சுவதா , சுவாகா , வெளஷ்ட்”  என்னும்  இவை  முதலியவற்றை  இறுதியில்  உடைய  வேதமந்திரங்களான்  அன்றி  “நம”  என்பதனை  இறுதியிலுடையனவும்  புராண  முதலியவற்றிற்  கூறப்பட்டனவும்  ஆகிய  மந்திரங்களான்  மாத்திரம்  தம்  வருண  தருமத்திற்குரிய  கன்மங்களைச்  செய்யக்கடவர் .                                 32

     அந்தணர்  குலத்தவனால்  மணஞ்  செய்து  கொள்ளப்பட்ட  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வன்  அவ்  வந்தணனை  யொப்பவும் , அரசர்  குலத்தவனால்   மனஞ்  செய்து  கொள்ளப்பட்ட  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வன்  அவ்வரசனை  யொப்பவும் , வணிக  குலத்தவனால்  மணஞ்  செய்து  கொள்ளப்பட்ட  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வன்  அவ்வணிகனை  யொப்பவும்  கன்மங்களைச்  செய்யக்  கடவர் .                                                           33                                                                                                

( உவமச்  சொல்லால்  இங்குக்  கூறிய  பெண்கள்   மூவரும்  அவ்வச்  சாதியினர்  அல்லர்  என்பது  போதரும் . பின்வருஞ்  சுலோகத்தில்  அந்தணர்க்கும்  அரசர்க்கும்  முறையே  வணிகப்பெண்ணிடத்தும்  சூத்திரப்பெண்ணிடத்தும்  தோன்றிய  புதல்வர்கள்  சூத்திரனையொப்பக்  கன்மஞ்  செய்பவராவரென்று  கூறப்பட்டுள்ளது . ஆதலின் , ஈண்டு  அந்தணனாற்  கொள்ளப்பட்ட  பெண்  அரசர்  குலத்தவள்  எனவும் , அரசனாற்  கொள்ளப்பட்ட  பெண்  வணிக  குலத்தவள்  எனவும் , வணிகனாற்  கொள்ளப்பட்ட பெண்  சூத்திர குலத்தவள்  எனவும்  பொருள்  கொள்ளுதல்  வேண்டும் . இவ்வாறு  பொருள் கோடலே  பின்வருஞ்  சுலோகத்தோடு  மாறுபடாமலும் , மனு  முதலிய  அறநூல்களின்  கருத்தோடு  ஒத்தும்  பொருந்துவதாகும் . அந்தணர்  முதலிய  நான்கு  வருணத்தவரும்  ஒரோவமயம்  தத்தம்  வருணத்திற்குக்  கீழ்ப்பட்ட  சாதிப்  பெண்களை  மணஞ்  செய்து  கொள்ளலாமெனினும் , தமக்கு  அப்பெண்களிடத்துப்  பிறக்கும்  புதல்வருள்  தங்  குல கன்மங்களுக்குத்  தம்மைப் போல் உரிமையுடையார்  தத்தம்  வருணத்திற்கு  அடுத்த  கீழ்வருணத்துப்  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வரேயாவர் . இதனைப்  பின்வரும்  மனுஸ்மிருதிச்  சுலோகங்களும்  வலியுறுத்துவனவாம் . அச் சுலோகங்களின்  மொழிபெயர்ப்புக்கள்  வருமாறு :  “அந்தணர்  முதலிய  இருபிறப்பாளர்  மூவர்க்கும்  அவரவர்  வருணத்திற்கு  அடுத்த  வருணத்துப் பெண்களிடத்துப்  பிறந்த  புதல்வர்கள்  தாயின்  குல  இழிவால்  தாழ்ந்தவர்களாயினும்  அவர்களைத்  தந்தையோடு  ஒத்தவர்களாகவே  பெரியோர்  கூறுவர் .”  [ மனு -10 அத். 6-4. ]  “இருபிறப்பாளர்  மூவர்க்கும்  அவர்தம்  சாதிப் பெண்களிடத்துப்  பிறக்கும்  புதல்வர்  மூவரும் , அவர்தம்  சாதிக்கு  அடுத்த  வருணத்துப்  பெண்களிடத்துப்  பிறக்கும்  புதல்வர்  மூவரும்  ஆகிய  அறுவரும்  அவர்தம்  தந்தையரையொப்பத்   துவிச  தருமமாகிய  உபநயநம்  முதலிய  கன்மங்களுக்கு  உரியராவர் . பிரதிலோமரமாகப்  பிறந்தா ரெல்லோரும்  சூத்திரர்களுக்குரிய  கன்மங்களையே  தமக்கும்  உரியவாகக்  கொள்பவராவர் . [ மனு – 10-அத்தி – 14-சு ].  )

அந்தணர்க்கும்  அரசர்க்கும்  முறையே  வணிகப்பெண்ணிடத்தும்  சூத்திரப்பெண்ணிடத்தும்  தோன்றிய  புதல்வர்கள்  சூத்திரனையொப்பக்  கன்மம்  புரிபவராவர் . தாழ்ந்த  சாதி  ஆண்மகனுக்கு  உயர்ந்த  சாதிப்  பெண்ணிடத்துப் பிறந்த  புதல்வன்  சூத்திரனினும்  இழிந்தவனாகக்  கருதப்படுவான் . அவன்  சூத்திரனுக்குரிய  மந்திரத்தினுங்  குறைந்த  நாம  மந்திரத்தால்  எப்பொழுதும்  நற்காரியங்களைச்   செய்யக்  கடவன் .                         34

( உயர்ந்த  வருணத்து  ஆண்மகனுக்குத்  தாழ்ந்த  வருணத்துப்  பெண்ணிடத்துப்  பிறந்தவர்  அநுலோமரெனவும் , தாழ்ந்த  வருணத்து    ஆண்மகனுக்கு  உயர்ந்த  வருணத்துப் பெண்ணிடத்துப்  பிறந்தவர்  பிரதிலோமரெனவுங்  கூறுப . சூத்திரனுக்குரிய  மந்திரத்தினுங்  குறைந்த  நாம   மந்திரமாவது :”நம” என்பதை  இறுதியிற்  பெறாமல்  நாம  மாத்திரையாகக்  கூறப்படுவதாகும் .

4 . யவனர்களின்  ஒழுக்க  வகைகள்

     இவ் வுலகத்தின்  ஒரு பக்கத்திற்  கலப்புச்  சாதிகளோடு  கூடிய  அந்தணர்  முதலிய  நால்வகைச்  சாதியினரும்  இருக்கின்றனர் . மற்றொரு பக்கத்தில்  யவனர்கள்  இருக்கின்றனர் . அவ் யவனர்கள்  வேத  ஒழுக்கங்களோடு  மாறுபட்ட  ஒழுக்கமுடையராய்  வடதிசை  மேற்றிசைகளில்  உள்ள  நிலப்  பரப்புக்களில்  வாழ்கின்றனர்.     35              

( வடதிசை  மேற்றிசைகளில்  என்பதனை  வடமேற்குத்  திசை  யென்றுங்  கொள்ளலாம் .)

     அவ் யவனர்க்கு  அவர்தம்  நலங்குறித்து  அவர்தம்  ஆசிரியர்களால்  யவனமத  நூல்கள் செய்யப்பட்டுள்ளன . அங்ஙனமே அவ்வாசிரியரால் அவர் மேற்கொள்ளுதற்பொருட்டு  இம்மை மறுமைகளுக்கு  மாறுபாடில்லாத  நீதி  நூல்களும்  ஆக்கப்பட்டுள்ளன .                     36

5 . சிறப்புப்  பிறப்பாலன்று : குணத்தாலாம்

     மக்களுக்குக்  குணங்களின்  சிறப்பு  இழிவுகள்  ஒரோவமயம்  விதத்தின் [ தந்தையின்]  தன்மையாலும் , ஒரோவமயம்  நிலத்தின்          [ தாயின் ]  தன்மையாலும்  உண்டாவனமாம் . ஒரோ வமயம்  வித்து நிலங்  [ தந்தை  தாயார் ] களின்  மாட்சிமையாலும்  குணங்களின்  சிறப்பு  உண்டாவதாகும் .                                                                          37

     விசுவாமித்திரர் , வசிட்டர் , மதங்கர் , நாரதர்  முதலிய  முனிவர்  எல்லோரும்  தவச்  சிறப்பாற்  பெருமை  யெய்துவோராவர் . பிறப்புப்  பற்றி  அப்பெருமை  யெய்தினாரல்லர் .                                                 38

( விசுவாமித்திரர்  முதலிய  நால்வரும்   முறையே  அரசர்  குலத்தும் , கங்கையிடத்தும் , தாழ்ந்த  குலத்தும் , பணிப்பெண்ணிடத்தும்  பிறந்து  தவவன்மையால்  முனிவர்  பெருமக்களாகச்  சிறந்து  விளங்கினோராவர் . )

     உலகத்துள்ள  சாதிகளுக்குத்   தனித்தனி  விதிக்கப்பட்டு , அவ்வச்சாதி  முன்னோரான்  மேற்கொள்ளப்பட்ட  தருமங்களையே  அவ்வச்  சாதியில்  தோன்றிய  மக்கள்  கைப்பற்றியொழுகல்  வேண்டும் . அங்ஙனமின்றித்  தம்  சாதி  தரும  நெறி  கடந்தொழுகுவோர்  அரசனால்   தண்டிக்கற்பாலராவர் . அந்தணர்  முதலிய  நால்வகை  வருணத்தினரையும்   பிரமசரிய  முதலிய  நால்வகை  நிலையினரையும்  அநுலோமர்  முதலிய  பல்வகைச்  சாதியினரையும்  வேறுபாடறிதற்குத்  தனித்தனியே  குறிகளால்        நன்கு  அடையாளமிடல்  வேண்டும் .                                                           39

6. சிற்பி  முதலிய  தொழிலாளரைக்  காத்தல்   

     அரசன் , பொன்  முதலிய  உலோகங்களால்  தொழில்  செய்வோரின்  எந்திரங்களை  யாராய்ந்து  எப்பொழுதும்  அவரைக்  காத்தல்  வேண்டும் .                                                                                                              40

     காருகர் , சிறப்பு வினைஞர்  முதலிய   குழுவினரைக்  காரியஞ்  செய்தற்கு  வேண்டியளவு  நாட்டில்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . உழவுத்  தொழிலிலும்  பணி  செய்வதிலும் , மிகுதியாக  மனிதர்களை  நியமித்தல்  வேண்டும் .                                                                                       41

( காருகர் – நெய்தற் றொழில்  செய்வோர் .)

     பொற்கொல்லர்  முதலிய  வினைஞர் , கள்வர்களுக்குத்  தந்தையராம்  நிலையிலுள்ளவராவர் . ஆதலின் , அரசன்  அன்னாரைக்  கிராமத்தினின்றும்  வெளிப்புறத்தே  தனியிடத்தில்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . அங்ஙனமே  கிராமத்தின்  வெளிப்புறத்தே  தனிமையில்  கள் விற்குமிடம்  இருத்தல்  வேண்டும் . அவ்விடத்தில்  வைத்துக்  கட்  குடிப்போரையுங்  காத்தல்  வேண்டும் .                                                         42

     நாட்டில் உள்ள எம்மனிதனும் பகற்காலத்திற் கட் குடித்தலாகாது.  43 

7 . மரங்களை  உண்டாக்கி  வளர்க்கும்  முறை

          அரசன் , கிராமங்களில்  அவற்றிற்குரியனவும் , வனங்களில்  அவற்றிற்குரியனவும்  ஆகிய  மரங்களை வைத்து  வளர்த்தல்  வேண்டும் . அவற்றுள் , தலையாய  மரங்களுக்கு  இருபது  முழ  அளவும் , இடையாய  மரங்களுக்குப்  பதினைந்து  முழ  அளவும்  கடையாய  மரங்களுக்குப் பத்து  முழ அளவும் , மிகச்சிறிய  மரங்களுக்கு  ஐந்து  முழ  அளவும்  உள்ள  நிலங்களை  இடைவெளியாக   விட்டு  வைத்தல் வேண்டும் . அம்  மரங்களை  வெள்ளாடு  செம்மறியாடு  பசு  ஆகிய  இவற்றின்  எருக்களையிட்டும் , நீர்  பாய்ச்சியும்  இறைச்சிகளை  யிட்டும்  வளர்த்தல்  வேண்டும் . 44-45

     அத்தி , அரசு , ஆல் , புளிமா [சிஞ்சம்] ,  சந்தனம் , எலுமிச்சை , வெண்கடம்பு , அசோகம் , மகிழ் , கூவிளம் , சீந்தில் , விளா , இராசாதனம் , மா , புன்னை , பூவரசு , புளி , சண்பகம் , கடம்பு , கோகாமிரம் , சரளம் , மாதுளை , கடு , பிசடம் , சிஞ்சுபம் , சிம்பு , இலந்தை , வேம்பு , நாரத்தை , பாலை , பேரீந்து , புன்கு , பேயத்தி , தமாலம் , சிம்பலளம் , மலையத்தி , வள்ளிக்கொடி , நெல்லி , கமுகு , கொம்மடிமாதுளை , இரச எலுமிச்சை , தெங்கு , வாழை , இவை  முதலிய  நல்ல  பழங்களையும்  நறுமணங்  கமழும்  மலர்களையுமுடைய  மரங்களைக்  கிராமங்களின்  அணிமையில்  வைத்து  வளர்த்தல்  வேண்டும் .     46-47

     வாழும்  இல்லத்தின்  இடப்புறத்தில்  அழகிய  ஆடற்  பூஞ்சோலை யமைத்தல்   வேண்டும் . அச் சோலைக்  கண்ணுள்ள  மரஞ் செடிகளுக்கு  முதுவேனிற்  காலத்தில்  காலை  மாலைகளிலும் ,  பனிக்காலத்தில்  ஒவ்வொரு  நாள்  இடைவிட்டும் , இளவேனிற்  காலத்திற்  பகலில்  ஐந்தாம்  முகூர்த்தமாகிய  பத்து  நாழிகைக்குள்ளும்  நீர்விடல்  வேண்டும் . மழைக்காலத்தில்  ஒருபொழுதும்  நீர்விடலாகாது .                                                                  48-50

8 . மரங்களைப்  பயன்  விளைக்கச்  செய்யுமுறை

          அம்  மரங்கள்  பயன்  தராதொழியின்  கொள்ளு , உழுந்து , பயறு , யவம் , எள்ளு  ஆகிய  இத்  தானியங்களுள்  ஒன்றை  நீர் விட்டுக்  காய்ச்சி  ஆறவைத்து , அந்நீர்  குளிர்ந்தபின்  அதனால்  அம்மரங்களை  நனைத்தல்  வேண்டும் . அங்ஙனம்  நனைத்தபின் , அம் மரங்கள்   மலர் பழம் , முதலிய பயன்களை எப்பொழுதுந்  தருவனவாம் .                       51

     மீன்  கழுவிய  நீர்  விடுதலாலும்  அம் மரங்கள்  மலர்  பழம்  முதலிய  பயன்களை  மிகுதியாகத்  தருவனவாம் .                                                       52

     மரங்களின்  அடியில்  செம்மறியாடு  வெள்ளாடுகளின்  எருப்பொடிகளையும் , யவதானியத்தின்  பொடியையும் , எள்ளினையும் , பசுவின்  இறைச்சியையும்  ஏழிரவு  இட்டு  நீர்  பெய்து  நனைத்துவரின் , அவ் வெல்லா  மரங்களும்  மலர்பழம்  முதலிய  பயன் களை  மிகுதியாகத்  தருவனவாம் .                                                                53

9. காட்டு  மரங்களை  யுண்டாக்கு  முறை

     முண் மரங்களும் , கருங்காலி  முதலிய  மற்றை  மரங்களும்  காட்டில்  இருக்கத்தக்கன வென்று  அறியற்பாலன . ஆதலின் , அம் மரங்களை  வனத்தில் உண்டாக்கி  வளர்த்தல்  வேண்டும் .                54

     கருங்காலி , மலையத்தி , தேக்கு , கோங்கு , பெருவாகை ,   வெளவுலம் , தமாலம் , ஆச்சா , வெட்பாலை , வெள்வேல் , மருது , புரசு , ஏழிலைப்பாலை , வன்னி , நந்தி , தேவதாரு , நரிமுறுக்கு , பெருங்களா , இங்குதி , பூர்ச்சம் , காஞ்சிரை , கருவேல் , ஆத்தி , குமிழ், பங்கம்பாளை, திந்துகம் , பீசகாரகம் , கடு , சே , சம்பாகம் , எருக்கு , தாமரை , அரிமேதம் மரமஞ்சள் , முள்ளிலவு , மருதோன்றி , நரவேலம் , பெருமரம், இலுப்பை  முதலிய  மரங்களும் , படர்செடி களும் , கொத்துச்  செடிகளும் , சிறு  தூறுகளும் , கொடிகளும்  ஆகிய  இவற்றுட்  கிராமத்தில்  இருத்தற் குரியவற்றைக்  கிராமத்திலும் , காட்டில்  இருத்தற்குரியவற்றைக்  காட்டிலும்  வைத்து  முயன்று  வளர்த்தல்  வேண்டும் .                                                                               55-59

10 . கிணறு  வெட்டல்  அணை கட்டல்  முதலியன

      கிணறு,  வாவி,  புட்கரிணி,  தடாகம்  ஆகிய  இவற்றை  ஆழத்தினும்  இருமடங்கு  மும்மடங்கு  மிகுதியான  அகற்சி யுடையனவாகவும் , எளிதாக  இறங்குதற்கும்  ஏறுதற்கு முரிய   படிகளை  யுடையனவாகவும்  அமைத்தல்  வேண்டும். அங்ஙனம்  அமைக்கப்படுங்  கிணறு  முதலியன , நாட்டில்  நீர்வளம்  மிகுதியாக  இருக்கும்  வண்ணம்  பலவாக விருத்தல்  வேண்டும் .                               60

( இங்குக்கூறிய  புட்கரிணி  தடாகங்களின்  அளவு  முதலியவற்றை  2-ஆம் அத்தியாயம் 159-161-ஆம்  சுலோகங்களின்  குறிப்பிற்  காண்க .  ஈண்டு  அகற்சியை  ஏற்ற  பெற்றி  கொள்க . )     

     ஆறுகளுக்கு  அழகிய  அணைகளையும் , அவ்வாற்றின்  குறுக்கே  போக்குவரவு  செய்தற்குத்  தோணி  முதலிய  நீர்  ஊர்திகளையும்  அமைத்தல்  வேண்டும் .                                                                                       61

11 .   திருக்கோயில்  முதலியன  அமைத்தல்

     எச்  சாதியினரால்  எத்  தெய்வம்  பூசிக்கப்படுகின்றதோ  அத்  தெய்வத்திற்குரிய  ஆலயத்தையும் , அத்  தெய்வ  சம்பந்தமான  வித்தைகளுக்கு  எவன்  ஆசிரியனோ  அவனுக்குரிய  ஆலயத்தையும் , அச்  சாதியினர்  வாழும்  இல்லநிரைகளின்  முன்னிடத்தில்  அமைத்தல்  வேண்டும் .                                                                                      62

கிராமத்தின்  நடுவிடத்திலாதல் , நாற்றெருக்  கூடுமிடத்திலாதல் , திருமால் , சிவபிரான் , கணபதி , சூரியன் , அம்பிகை  ஆகிய  இத்  தெய்வங்களுக்கு  முறையே   திருக்கோயில்கள்  அமைத்தல்  வேண்டும் .                                                                                                              63

    இங்ஙனம்  அமைக்கப்படும்  திருக்கோயில்கள்  மேரு  முதலிய  பதினாறு  வகைப்பட்ட  இலக்கணங்களை யுடையனவாகவும் , மிக்க  எழில்  வாய்ந்தனவாகவும் , வட்டம்  நாற்கோணம்  எந்திர  வடிவம்  என்னும்  இவற்றை  யுடையனவாகவும் , மண்டபங்களோடு  கூடினவாகவும் , திருமதில்  கோபுரம்  பரிவார  தெய்வங்களை யுடையனவாகவும் , நீட்சி  அகற்சிகளினும்  இருமடங்கு  மும்மடங்கு  மிக்க  உயரம்  வாய்ந்தனவாகவும் , உள்ளிடத்தில்  திருக்கோயிற்குத்  தக்க  அழகிய  தெய்வத்  திருவுருவங்களை யுடையனவாகவும் , நீரிற்  றோய்ந்த  அடிப்  பாகங்களை யுடையனவாகவும் , சிறந்த  ஓவியங்கள்  வரையப் பட்டனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                   64-65

( கோபுரம் – திருக்கோயிலின்  வாயிற் சிகரி .)

     ஆயிரம்  சிகரங்களையும் , நூற்றிருபத்தைந்து  மேனிலைக்  கட்டுக்களையும் , ஆயிர  முழ  அளவு  அகலத்தையும் , அவ்வளவு  உயரத்தையுங்  கொண்டு  அழகு  வாய்ந்திருப்பது  மேரு  என்னும்  பெயரினை யுடையதாகும் .                                                                                66

( மேனிலைக்கட்டு  என்பது  திருக்கோயிலின்  விமானத்தின்மேல்  அடுக்கடுக்காகக்  கட்டப்படும்  தளங்களை யுணர்த்தும் . )

     மேரு வல்லாத  பின்வரும்  மந்தர  முதலியவற்றுள்  முன்னதனை  நோக்கிப்  பின்னது  எட்டிலொரு கூறு  குறைந்த  அளவினை யுடையதாகும் .                                                                                                     67

( மேருவின்  அளவில்  எட்டிலொரு  கூறு  மந்தரம்  குறைந்ததாகும்  . அதன்  அளவில்  எட்டிலொரு  கூறு  இருக்கமாலி  குறைந்ததாகும். இங்ஙனமே  பின்  வருவனவற்றிற்கும்  அளவின் குறைவைக்  கணக்கிட்டுக்  கொள்ளல்  வேண்டும் . மந்தரம்  875  சிகரங்களையும் , 110 – மேனிலைக்  கட்டுக்களையும் , 875 – முழ  அளவு  உயர  அகலங்களையும்  உடையதாகும் . இருக்கமாலி  766 – சிகரங்களையும் , 96 – மேனிலைக்கட்டுகளையும் , 766 – முழ  அளவு  அகல  உயரங்களையும்  உடையதாகும் . பிறவும் அன்ன . )

     அப் பதினாறும்  முறையே  மேரு , மந்தரம் , இருக்கமாலி , தியுமணி , சந்திரசேகரம் , மாலியவான் , பாரியாத்திரம் , இரத்தினசிரசு , தாதுமான் , பதுமகோசம் , புட்பகாசம் , சீகரம் , சுவத்திகம் , மகாபதுமம் பதுமகூடம் , விசயம்  என்னும்  பெயர்களை யுடையனவாம் .           68-69

     அம் மேரு  முதலியவற்றிலுள்ள  மண்டபங்கள்  அவ்வவ்வற்றிற்கு  ஒப்ப  அவ்வவற்றின்  அளவில்  நான்கிலொரு  கூறு  குறைந்தனவாக  முற்பக்கத்தில்  அமைக்கப்படல்  வேண்டும் . அம்மண்டபங்களில்  தாம்  வழிபடுந்  தெய்வத்  திருவுருவங்களை  மந்திர  தியானங்களால்  பிரதிட்டை  செய்தல்  வேண்டும் .                                                                     70

12 . தெய்வத்  திருவுருவங்கள்  இயற்றும்  முறை

     வழிபடுவோர்க்குத்  தியானயோகஞ்  சித்தித்தற்பொருட்டுத்  தெய்வத்  திருவுருவ  இலக்கணங்கள்  கூறப்பட்டுள்ளன . ஆதலின் , அத்  திருவுருவங்களை  இயற்றும்  சிற்பிகள்  அத்  திருவுருவ  இலக்கணங்களை ( ஆகமங்களிற்  கூறியவாறு ) தியானிப்பதில்  மிகவும்  பற்றுடையராக  இருத்தல்  வேண்டும் . அத் தியான  நெறியான்  அன்றிக்  காட்சி  முதலிய  வேறெவ்வழியானும்  அத் திருவுருவ  இலக்கணங்களமையா  .                                                                                     71

      அத் திருவுருவம் , மணலாற்  செய்யப்படுவதும் , மாவினாற்  செய்யப்படுவதும் , ஓவியமாக  எழுதப்படுவதும் , சுதை முதலியவற்றால்  தீற்றப்படுவதும் , மண்ணாற்  செய்யப்படுவதும் , மரத்தாற்  செய்யப்படுவதும் , கல்லினா லாக்கப்படுவதும் , பொன்  முதலிய  தாதுக்களாற்  செய்யப்படுவதும்  எனப்  பலதிறப்படும் . இவற்றுள் , முறையே  முன்னதனை  நோக்கப்  பின்னது  வன்மை  மிக்கதாக  அறியற்பாலது .                                                                              72

      ஆகமங்களிற்  கூறியவண்ணம்  அவயவ  இலக்கணங்கள்  குறைவின்றி  யமைந்த  திருவுருவம்  சிறந்த  அழகுடையதாய்  வழிபடுவார்க்குப்  புண்ணியத்தைப்  பயப்பதாகும் . அத்திருவுருவம்  அவ்விலக்கணங்களிற்  குறைபாடு  உடையதாயின் , அது  வழிபடுவாரின்  வாழ்நாள் , பொருளாகிய  இவற்றைக்  குறைத்து    என்றும்   துன்பத்தை  மிகுவிப்பதாகும் .                                                      73

     நலமிக்க  தெய்வத்  திருவுருவங்கள்,  வழிபடும்  மக்கட்குத்  துறக்கவின்பந்தருவனவாம் . நலமில்லாத  அவ்வுருவங்கள்  அத்துறக்க வின்பம்  பயப்பனவல்லாம் .                                                                             74

     அத்  தெய்வத்  திருவுருவங்கள் [ ஆகமத்திற்  கூறிய ]  அளவில்  மிகினும்  குறையினும்   நலமுடையன வல்லவாம் .                                  75

     தெய்வத்  திருவுருவம்  மாறுபட்ட  இலக்கணம்  வாய்ந்ததெனினும்  அது  மக்கட்கு  நலம்  பயப்பதாகும் . மனித  உருவம்  மாறுபடாத  இலக்கணமுடையதெனினும்  அது  நலம்  பயவாததாம். [ ஆதலின்  மனித வடிவம் பிரதிட்டை  செய்து  போற்றற்குரியதன் றென்பதாம். ] 76

     தெய்வத் திருவுருவம்    சாத்துவிகம் , இராசதம் , தாமதம் என  மூன்று  வகைப்படும் . திருமால்  முதலியோரின்  திருவுருவங்களுள் , யாது  எவ்விடத்திற்குரியதோ  அதனை  அவ்விடத்தில்  வைத்து  வழிபடல்  வேண்டும் .                                                                                                               77

     எத்  திருவுருவம்  யோகமுத்திரையையும் , இயற்கைச்  சார்ந்த  நிலையையும் , அன்பர்க்கு  வேண்டுவனவும்,  அச்சமின்மையும்  அளிக்குங்  கைகளையும் , தேவேந்திரன்  முதலியோராற்  செய்யப்ப டும்  வாழ்த்து  வணக்கங்களையு முடையதாய்  விளங்குகின்றதோ  அதுவே  சாத்துவிகத்  திருவுருவம்  என்று  கூறப்படும் .                             78

      எத்  திருவுருவம்  நின்ற  நிலையினையாதல் , ஊர்தியில்  ஏறியிருக்கும்  நிலையினையாதல்  உடையதாய்ப்  பல்வகை  அணிகலன்களால்  அலங்கரிக்கப்பட்டு , அம்பு  வாள்  முதலிய  படைகளைத்  தாங்கி , அச்சமின்மையையும்  வேண்டுவனவற்றையும்  தருங்  கைகளையுடையதாய்  விளங்குகின்றதோ  அதுவே  இராசதத்  திருவுருவம்  என்று  கூறப்படும் .                                                                       79

      எத்  திருவுருவம்  அம்பு , வாள்  முதலிய  படைகளால்  அசுரர்களைக் கொல்வதாகவும் , எப்பொழுதும்  அச்சுறுத்தும்  வடிவினை யுடையதாகவும் , போர்த்தொழிலின்  மகிழ்ச்சி  மிக்கதாகவும்  விளங்குகின்றதோ அதுவே  தாமதத் திருவுருவம்  என்று  கூறப்படும். 80

      இதுகாறும்  திருமால்  முதலியோரின்  தியான  உருவம்  முதலியன  சுருக்கிக்  கூறப்பட்டன . இனி , தெய்வத்  திருவுருவங்களுடையவும்  அவற்றின்  அங்கங்களுடையவுமாகிய  அளவைகள்  நன்கு  விரித்துக்  கூறப்படும் .                                                                                                           81

     தத்தம்  கைப்பிடியின்  நான்கிலொருகூறு  அங்குலம்  என்று  கூறப்படும் . அவ்வங்குலம்  பன்னிரண்டு  கொண்டது  தாலம்  என்னும்  நீட்டலளவையாகும் .                                                                                            82

 ( தாலம்  என்பது  நீட்டப்பட்ட  அங்குட்டம்  என்னும்  பெருவிரற்கும்  நடுவிரற்கும்  இடைப்பட்ட  அளவாகம் . இது  சாண்  என்று  கூறப்படும் .)

     ஏழு  தால  அளவு  உயரமுள்ள  உருவம்  வாமனம்  எனவும் , எட்டுத் தால  அளவு  உயரமுள்ள  உருவம்  மாநுடம்  எனவும் , ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  உருவம்  தெய்விகம்  எனவும் , பத்துத்  தால  அளவு  உயரமுள்ள  உருவம்  இராக்கத மெனவுங்  கூறப்படும் .                           83

     தேய  வேறுபாட்டால்  திருவுருவங்களுக்கு  உயர  அளவு  ஏழு  தால  முதலாக  வுள்ளனவாம் . பெண்  உருவங்களுக்கு  எப்பொழுதும்  ஏழு  தால  அளவே  உயரமாகும் . திருமாலின்  வாமனவதாரத்  திருவுருவத்திற்கும்  ஏழுதால  அளவே  உயரமாகும் .                                84

     நரன் , நாராயணன் , இராமன் , நரசிங்கம்  ஆகிய    இவர்களின்  திருவுருவங்கள்  பத்துத்  தால  அளவு  உயர முடையனவாக  இருத்தல்  வேண்டும் . அங்ஙனமே   வாணசுரன் , மகாபலி , இந்திரன் , பரசுராமன் அருச்சுனன் , ஆகிய  இவர்களின்  உருவங்களும்  பத்துத்  தால  அளவு  உயர முள்ளனவாக  இருத்தல்  வேண்டும் .                                                    85

     அச்சமிக்க  சண்டிகாதேவி , வைரவன் , வேதாளம் , நரசிங்கம் , வராகம் , அயக்கீரிவன்  முதலியோரின்  திருவுருவங்கள்  பன்னிரண்டு  தால  அளவு  உயரமுள்ளனவாக  இருத்தல்  வேண்டும் . அசுரர்களின்  உருவங்களும் , பேய்  உருவங்களும் , எப்பொழுதும்  பதினாறு  தால  அளவு  உயரமுடையனவாக  இருத்தல்  வேண்டும் .                                    86

( நரசிங்க வுருவத்துக்கு  முற்சுலோகத்திற்  பத்துத்  தால  அளவுயரமும்  இதன்கண்   பன்னிரண்டு  தால  அளவுயரமும்  கூறப்பட்டமையால்  இரண்டு  அளவும்  பொருந்துமென்பது  போதரும் . )

     இரணியகசிபு , விருத்திரன் , இரணியாக்கன் , இராவணன் , கும்பகன்னன் , நமுகி , நிசும்பன் , சும்பன் , மகிடாசுரன் , இரத்த பீசன்  ஆகிய  இவ்வசுரர்  முதலியோரின்  உருவங்கள்  பதினாறு  தால  அளவு  உயரமுடையனவாக  இருத்தல்  வேண்டும் .                                                87

     பாலப்பருவத்தின்  உருவங்கள்  ஐந்து  தால  அளவு  உயர முடையனவாகவும் , குமாரப்  பருவத்தின்  உருவங்கள்  ஆறு  தால  அளவு  உயரமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                             88

     திருவுருவங்களின்  உயர  அளவுகள்  கிருதயுகத்தில்  பத்துத்  தாலமாகவும் , திரேதாயுகத்தில்  ஒன்பது  தாலமாகவும் , துவாபர யுகத்தில்  எட்டுத்  தாலமாகவும்  , கலியுகத்தில்  ஏழு  தாலமாகவும்  கூறப்பட்டுள்ளன .                                                                                                89

     ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  திருவுருவத்திற்கு  முகம்  ஒரு  தால  அளவு  உயரமுடையதாகவும் , அம்  முகத்தின்  கண்ணுள்ள  நெற்றி  நான்கங்குல  உயரமுடையதாகவும் , அதன்கீழ்  உள்ள  மூக்கும்  நான்கங்குல  உயரமுடையதாகவும்  இருத்தல்  வேண்டும் .                     90

     மூக்கின்கீழ்  அதுவரையுள்ள  அளவு   நான்கு  அங்குலமாகவும் , கழுத்தின்  உயரம்  நான்கு அங்குலமாகவும் , மார்பின்  உயர அளவு  ஒரு  தாலமாகவும்  இருத்தல்  வேண்டும்.                                                        91

( அநு – மூக்கின்  கீழிடந்  தொடங்கி  வாயின்  அடிப்பாகம்  வரையுள்ள  பாகம் .

90-94 , உருவம்  இயற்றும்  முறை :

உருப்பு                                                       உயர  அளவு

                                                    அங்                   தாலம்                 அங்குலம்

முகம்                                   நெற்றி 4                                               –

                                               மூக்கு  4                          1                    –

                                                அநு      4                                  

கழுத்து                                                                            0                   4

மார்பு                                                                               1                   0

வயிறு                                                                              1                   0

அடிவயிறு                                                                      1                   0

தொடை                                                                           2                  0

முழந்தாட்பூட்டு                                                            0                  4

கணைக்கால்                                                                2                  0

பாடு                                                                                 0                  4

                                                                                       ____________________________

                                                   ஆக  உயர  அளவு         9                      0

     மார்பின்கீழ்  ஒரு  தால  அளவு  இடம்  விட்டுக்  கொப்பூழ்  விளங்கும்படி  செய்தல்  வேண்டும் . அக்  கொப்பூழின்கீழ்  ஒரு  தால  அளவு  இடம்  விட்டு  உருவத்திற்கு  ஒத்தவாறு  ஆண்குறி  யமைத்தல்  வேண்டும் .                                                                                                               92

      தொடைகள்  இரண்டு  தால  அளவு  உயரமுடையனவாகவும் , முழந்தாட்  பூட்டுக்கள்  நான்கங்குல  உயரமுடையனவாகவும் , கணைக்கால்கள் இரண்டு தால அளவு உயரமுடையனவாகவும், அவற்றின்  பொருத்துக்களின்  கீழுள்ள  பரடுகள்  நான்கங்குல  உயரமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                         93

     இவ்வாறு  அறிவுடையோரால்  ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள   உருவம்  இயற்று  முறை  நினைக்கப்பட்டது .                                               94

     எல்லா  அளவுத்  திருவுருவங்களுக்கும்  சிகை  தொடங்கி  முடி வரையுள்ள  அளவு  மூன்றங்குலமாக  அறிதல்  வேண்டும் . இங்ஙனம்  ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  திருவுருவத்திற்குக்  கூறிய  முறைப்படி  ஏழு , எட்டு , பத்துத் , தால  உயரவளவில்  அமைக்கப்படும்  திருவுருவங்கட்குங்  கணக்கிட்டுப்  பகுத்துணர்ந்து  கொள்ளல்  வேண்டும் .                                                                                                              95

     கைகள்  விரல்  நுனிவரை  தனித்தனி  நான்கு  தால  அளவு  நீளமுடையனவாக  இருத்தல்  வேண்டும் . கழுத்திலிருந்து  முழங்கை  வரையுள்ள  அளவு  இருபது  அங்குலமாக இருத்தல்  சிறந்ததாகும் .  96

( இதுமுதல்  126-ஆம்  சுலோகம்  வரை  கூறப்படும்  உறுப்புக்களின்  அளவெல்லாம்  முற்கூறிய  ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  திருவுருவத்திற்கென்றே  அறிதல்  வேண்டும். )

     கக்கத்தின்  கீழ்  முழங்கைவரையுள்ள  அளவு  பதின்மூன்றங்கு லங்களாகவும் , முழங்கையினின்று  நடுவிரல்  நுனிவரையுள்ள கையின்   அளவு  இருபத்தெட் டங்குலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                             97

     உள்ளங்கையின்  நீள  அளவு  ஏழு  அங்குலங்களாகவும் , நடுவிரலின்  நீள  அளவு  ஐந்தங்குலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் . பெருவிரல்  மூன்றரை  அங்குல  நீளத்தையும் , இரண்டு கணுக்களையு முடையதாய்ச்  சுட்டுவிரலின்  அடிக்கணுவைப்  பொருந்தி யிருத்தல் வேண்டும் . பெருவிரல்  அல்லாத  மற்றை  விரல்களெல்லாம்  தனித்தனி  மும்மூன்று  கணுக்களை யுடையனவாக  இருத்தல்  வேண்டும் . அநாமிகை  விரலின்  நீளம்  நடுவிரல்  நீளத்தில்  அரை  அங்குலங்  குறைந்ததாகவும் , சுட்டுவிரலின் நீளம் , நடுவிரல்  நீளத்தில்  ஓர்  அங்குலங்  குறைந்ததாகவும் , கடைவிரலின்  நீளம்  அநாமிகை  விரல்  நீளத்தில்  ஓர்  அங்குலங்  குறைந்ததாகவும்   இருத்தல்  வேண்டும் .                                                                                     98-99

(அநாமிகை – கடைவிரற்கு  அடுத்த   விரல் , இதனைப்  பவித்திர  விரல்  என்றுங் கூறுப .)

     அடிகள்  தனித்தனி  பதினான்கங்குல  நீளமுடையனவாகவும்  காற்பெருவிரல்  இரண்டு  அல்லது இரண்டரை  அங்குல  நீளமுடையதாகவும் , அப்பெருவிரற்கு  அடுத்த  விரலும்  அப்பெரு  விரலை  யொப்ப  இரண்டு  அல்லது  இரண்டரை  அங்குல  நீள முடையதாகவும் , மற்றை  விரல்களெல்லாம்  தனித்தனி  ஒன்றரை  அங்குல  நீளமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                          100

     கை  கால்கள்  நரம்பு  தோன்றப்  பெறாமலும் ,  பொருத்துக்கள்  வெளிப்படையாக  இல்லாமலும்  இருத்தல்  வேண்டும் .                         101                       

     திருவுருவங்களின்  இயல்புணர்ந்தோர்  எப்பொழுதும்  அவ்வுருவங்களின்  உறுப்புக்களை  எங்ஙனம்  இருக்கவேண்டுமென்று  கூறியிருக்கின்றனரோ  அங்ஙனமே  அவ் வுறுப்புக்கள் , அவ்வவறிற்குக்  கூறிய  அளவினின்றுங்  கூடுதல்  குறைதல்  இல்லாமல்  ஒத்தனவாகவும்  அழகுமிக்கனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                             102

     அத்  திருவுருவங்களின்  உறுப்புக்களெல்லாம் , மிகப் பெரியனவாகவும் , மிகச்  சிறியனவாகவும்  இல்லாமலிருப்பின்  எல்லோருடைய  மனத்தையும்  இன்புறுத்துவனவாம் .                           103

     செய்யப்படுந்  திருவுருவங்கள்  நூறாயிரத்துள்  ஒன்றே  எல்லா  உறுப்புக்களாலும்  எல்லோருடைய  மனத்தையும்  இன்புறுத்துவதாக  அமையும் . ஆயினும் , ஆகமத்திற்  கூறிய  அளவின்படி  அமைக்கப்பட்ட  திருவுருவங்களெல்லாம்  அழகுடையனவேயாம் . அங்ஙனம்  அமைக்கப்படாத  உருவங்கள்  அழகில்லாதனவாம் .        104

ஆகம  அளவின்படி  அமைக்கப்படாத  உருவம்  அறிவுடையார்க்கு  இன்பந்  தருவதன்றாம் . எத்  திருவுருவத்தில்  எவர்  மனம்  பதிகின்றதோ  அவர்க்கு   அஃது  இன்பந்தருவதாகு மென்பது  சிலர்  கொள்கை .                                                                                                             105

     நெற்றியின்  குறுக்களவும்  புருவங்களிரண்டின்  நீளமும்  எட்டங்குலங்களாக  இருத்தல்  வேண்டும் .                                                  106

     அப்புருவங்களின்  இரேகைகள்  நடுவில்  அரையங்குல  அளவு  அகற்சியையும் , வில்லைப்போன்ற  வளைவினையும்  உடையனவாய்  நீண்டிருத்தல்  வேண்டும் . கண்கள்  தனித்தனி   மூன்றங்குல  நீட்சியும்  இரண்டங்குல  அகற்சியு முடையனவாய்  அழகுற  இருத்தல்  வேண்டும்

     அக் கண்களின்  உள்ளே  விளங்கும்  கருமணிகள்  அக் கண்  அளவின்  மூன்றிலொரு  கூறு அளவுடையனவாக  இருத்தல்  வேண்டும்.  இரண்டு  புருவங்களின்  நடுவிடம்  இரண்டங்குல  அளவினையுடையதாகவும் , மூக்கின்  அடி ஓர்   அங்குல  அளவினை  யுடையதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                      108

    மூக்கு  நுனியின்  அகலம்  ஓர்  அங்குல  அளவினை  யுடையதாகவும் , அதன்  துவாரங்கள்  இரண்டங்குல  அளவினை  யுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் . மூக்கு , கிளி மூக்கைப்   போலவும்  குமிழ  மலரைப்  போலவும்  வடிவால்  இரண்டு  வகைப்படும் . இவை  அழகுடையனவாம் .                                                                                         109

( மூக்கு  துவாரங்கள்  இரண்டங்குலம்  என்றமையால்  தனித்தனி  ஒவ்வோரங்குல மென்றறிதல்  வேண்டும் .) 

     மூக்கின்  அடிப்பக்கத்து   இருபுறமும்  மொச்சைப்  பயற்றைப்  {நிட்பாவம்} போலச்  சிறந்த  அழகுள்ளனவாகச்  செய்தல்  வேண்டும் . 

     செவிகள்  புருவங்களை யொப்ப  நான்கங்குல  நீளமுடையனவாய்  இருத்தல்  வேண்டும் . அச் செவிகளின்  அகலம் மூன்றங்குலமாகவும்  அவற்றின்  பருமை  அரையங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .    111

 மூக்குத்  துவாரங்களின்  நடுவணுள்ள  தண்டு  அரையங்குலப்  பருமையும் , ஒன்றரை  யங்குல  உயரமு முடையதாய்  வழுவழுப்பாக இருத்தல்  வேண்டும் .                                                                                        112

     கழுத்தின்  அடிப்பாகத்தினின்று  தோள்வரை  யுள்ள  அளவு  எட்டங்குலமாகவும் , மார்பின்  அகல  அளவு இரண்டு  தாலமாகவும் , தனங்களின்  நடுவிடத்தின்  அளவு  ஒரு  தாலமாகவுங்  கூறப்பட்டுள்ளன .                                                                                              113

     இரு  செவிகளுக்கும்  நடுவணுள்ள  பாகத்தின்  அளவு  பதினாறங்குலங்களாகவும் , செவிக்கும்  வாயின்  அடிப்பாகத்து  நுனிக்கும்  இடையிலுள்ள  பாகம்  எட்டங்குல  அளவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                           114

     மூக்குக்கும்  செவிக்கும்  இடைப்பட்ட  பாகங்கள்  தனித்தனி  எட்டங்குல  அளவினவாகவும் , செவிக்கும்  விழிக்கும்  இடைப்பட்ட  பாகங்கள்  தனித்தனி  நான்கங்குல  அளவினவாகவும் , வாயின்  குறுக்களவு  நான்கங்குல  அளவினதாகவும் , அதரங்கள்  தனித்தனி  அரையங்குலக்  கனம்  உள்ளனவாகவும்  இருத்தல்  வேண்டும் .         115

     தலையின்  சுற்றளவு  முப்பத்திரண்டங்குலமாகவும் , அதன்  அகல  அளவு  பத்தங்குலமாகவும் , அதன்  நீள  அளவு  பன்னிரண்டங்குல மாகவும் இருத்தல்  வேண்டும் .                                                                        116

     கழுத்தின்  அடிப்பாகத்தின்  சுற்றளவு  இருபத்திரண்டங்குலமாகவும்  மார்பின்  நடுப்பாகத்தின்  சுற்றளவு  ஐம்பத்து நான்கங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                         117

     மார்பின்  சுற்றளவு  நாற்பத்தேழங்குலமாகவும் , தனத்திலிருந்து  விலாப்பக்கம்  முடிய  உள்ள  கனம்  பன்னிரண்டங்குல  அளவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                        118

( மார்பின்  நடுப்பாகத்துச்  சுற்றளவு  முற்சுலோகத்திற்  கூறப்பட்டமையால்  இங்கு  மீண்டும்  மார்பின்  சுற்றளவு  என்றது  மார்பின்  கீழ்ப்பாகத்தைக்  குறிப்பிடுவதாகும் . )

      கடிதடத்தின்  சுற்றளவு  நாற்பத்து  நான்கங்குலமாகவும்  அதன்  உயரம்  நான்கங்குலமாகவும் , அதன்  அகலம்  ஆறங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                       119

    பெண்  தெய்வத்  திருவுருவங்களுக்குப்  பிற்பக்கத்து  நிதம்பம்  உயர்ச்சியினும்  அகற்சியினும்  முற்கூறிய  அளவின்  ஒவ்வோரங்குலம்  அதிகமாக  இருத்தல்  வேண்டும் . நடுச்சந்திக்கு  மேற்பட்ட  கையின்  அடிப்பாகமும்  நுனிப்பாகமும்  முறையே  பதினெட்டங்குலச்  சுற்றளவும்  பதினாறங்குலச்  சுற்றளவுமாக  இருத்தல்  வேண்டும் .  120

     நடுச்  சந்தியின்  கீழ்ப்பட்ட  கையின்  அடிப்பாகமும்  நுனிப்பாகமும்  முறையே  பதினான்கங்குலச்  சுற்றளவாகவும்  பத்தங்குலச்  சுற்றளவாகவும் , பாதம்  கரதலம்  இவற்றின்  அகலம்  ஐவைந்தங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                          121

      தொடையின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  முப்பத்திரண்டங்குல மாகவும் , அதன்  நுனிப்பக்கத்துச்  சுற்றளவு  பத்தொன்பதங்குல மாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                       122

      முழந்தாளின்  அடிப்பாகமும் , நுனிப்பாகமும்  முறையே  பதினாறங்குலச்  சுற்றளவாகவும்  பன்னிரண்டங்குலச்  சுற்றளவாகவும்  இருத்தல்  வேண்டும் . கைந்  நடுவிரலின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  நான்கங்குலமாகும் .                                     123

     சுட்டுவிரலின்   அடிப்பாகமும்  கடைவிரற்கு  அயல்  விரலி (அநாமிகையி) ன்  அடிப்பாகமும்  மூன்றரை  யங்குலச்  சுற்றளவின வாகும் . கடைவிரலின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  மூன்றங்குலமாகும் .

     இவ்  விரல்களின்  நுனிப்பக்கத்துச்  சுற்றளவுகள்  இவற்றின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவுகளின்  நான்கிலொரு  கூறு  குறைந்த  அளவினையுடையனவாகும் . கைப்பெருவிரல் [ அங்குட்டம் ]  நான் கங்குலச்  சுற்றளவினதாகவும் , காற்  பெருவிரல்  ஐந்தங்குலச்  சுற்றளவினதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                125

     கால்  விரல்களின்  சுற்றளவு  மூன்றங்குலமாகவும் , தனங்களின்  வட்டமும்  உந்திச்சுழியும்  முறையே  ஒன்றரை  யங்குலமாகவும்  ஓரங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                      126

     படிவங்களின்  எல்லா  அவயங்களையும்  அழகு  விளங்கும்படி  செம்மையுற  இயற்றல்  வேண்டும் . அப்படிவங்கள்  மேனோக்கிய  கண்களை  யுடையனவாகவும் , கீழ்நோக்கிய  கண்களை  யுடையனவாகவும் , மூடிய  கண்களை  யுடையனவாகவும்  இருக்கும்படி  செய்தல்  கூடாது . அச்சம்  விளைவிக்கத்தக்க  பார்வையினையுடைய  வடிவத்தை  அருள்  விளைவிக்கும்  பார்வையுடையதாகச்  செய்தலாகாது .                                                      127

     அப்படிவங்களின்  உயர  அளவில்  மூன்றிலொரு  கூறாதல்  பாதியளவாதல்  இருக்கும்படி  பீடம்  அமைத்தல்  வேண்டும்               128

     திருக்  கோயிலின்  வாயில்  அக்கோயிலின்  உள்ளிருக்குந்  திருவுருவத்தின்  அளவின்  இருமடங்காதல் , மும்மடங்காதல் , நான்கு  மடங்காதல்  மிக்கிருத்தல்  வேண்டும் . திருக்கோயிற்றளம்  ஒன்று  முதல்  நான்கு  முழம்  வரை  நிலத்தினின்றும்  உயர்ந்திருத்தல்   வேண்டும் .                                                                                                             129

     திருக்கோயிற்   சுவர்  அதன்  தளத்தினின்றும்   பத்து  முழ  அளவு  உயரமுடையதாக  இருத்தல்  வேண்டும் . அத்  திருக்கோயிலின்  மேனிலவெல்லை  அத்  திருக்கோயில்  வாயில்  அளவினும்  இருமடங்கு  உயர்ந்திருத்தல்  வேண்டும் . சிகரம்  அவ்வுயரத்தோடு  ஒத்த  அளவின தாதல் , இருமடங்கு  மும்மடங்கு  மிக்க  அளவினதாதல்  இருத்தல்  வேண்டும் .                                                                                                             130

( மேல் நில வெல்லை – மேற்றளம் .  சிகரம் – அத்தளத்தினின்றும்  எடுக்கும்  முடி . திருக்கோயிலின்  முகத்துவாரத்தில் எடுப்பது  கோபுரம்  எனவும் , உட்பக்கங்களில்  எடுப்பது  சிகரம்  எனவும்  கூறப்படும். )         

     திருக்கோயிலமைப்போர்  அஃது  ஒன்றுமுதல்  நூற்றிருபத்தைந்துவரை  மேனிலைக்கட்டுக்களுடையதாக  இருக்கும்படி தம்  ஆற்றற்கு  இயைந்தவாறு  செய்தல்  வேண்டும் . அங்ஙனம்  அமைக்கப்படும்  திருக்கோயில்  எட்டுக்கோணங்களை  யுடையதாகவேனும் , தாமரைப்பூவை யொத்த  வடிவினை  யுடையதாகவேனும் , நாற்புறத்தும்  மண்டபங்களை  யுடையதாகவேனும் , சுற்றிலும்  ஒன்றுக்கொன்று  எதிர்முகமாகவுள்ள  பலவகை  அறை  வீடுகளை யுடையதாகவேனும்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                        131

மேனிலைக்கட்டுக்களை  66-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க .)        

     ஆயிரம்  தூண்களோடு  கூடிய  திருக்கோயில்  தலையாயதெனவும் , அவற்றிற் சில  குறைந்த  தூண்களையுடைய  திருக்கோயில்  இடையாயதெனவும் , அவற்றினுஞ்  சில  குறைந்த  தூண்களையுடைய  திருக்கோயில்  கடையாய தெனவுங்  கூறப்படும் .                                    132

     பிராசாதத்திலும்  மண்டபத்திலும்  சிகரம்  எடுக்கப்படுமாயின் , அவ்விடங்களில்  தூண்களை  நிறுத்தலாகாது , சுவர்களையே  அழகும்  வலிமையும்  பொருந்த  எடுத்தல்  வேண்டும் .                                           133

( பிராசாதம் – தெய்வத்திருவுருவம்  இருக்கும்  இடம். மண்டபங்கள்  அதன்  பக்கத்துள்ளனவாகும் .)    

     பிராசதத்தின்  உள்ளிடப்பரப்பு , அதன்கண்ணுள்ள  திருவுருவத்தின்  அளவில்  அறுமடங்காதல்  எண்மடங்காதல்  மிக்கிருத்தல்  வேண்டும் . அவ்வுள்ளிடத்தின்   முற்புறம்  மிகவும்  அதிகமாக   இருத்தல்  வேண்டும்.     

     தெய்வ ஊர்தி  அத்  தெய்வத்  திருவுருவத்தின்  அளவோடு  ஒத்த  அளவினதாதல் , ஒன்றரை  மடங்கு  அல்லது  இரண்டு  மடங்கு  மிக்க  அளவினதாத லிருத்தல்  வேண்டும் . ஒரு  தெய்வத்திற்கு  உருவம்  எங்கு  விதந்து  கூறப்படவில்லையோ  அங்கு  அத்தெய்வத்திற்கு  நான்கு   கைகள்  உள்ளனவாக  அறிதல்  வேண்டும் .                                               135

( ஒரு  தெய்வத்திற்குப்  பெயர்  மாத்திரங்  கூறப்பட்டு  வடிவிலக்கணங்கூறப்படாமலிருப்பின் , அங்கு  அத்  தெய்வத்தின்  வடிவிலக்கணம்  முன்னர்க்கூறியாங்கு  இருத்தல்  வேண்டுமென்பதும்  சிறப்பாக  அறியவேண்டுவன  நான்கு  கைகள்  என்பதும்  போதரும் . )      

     எங்கு  ஒரு  தெய்வத்திற்கு  ஆயுதங்  கூறப்படவில்லையோ  அங்கு  அத்  தெய்வத்தின்  கீழ்க்கைகளில்  முறையே  அபய  வரதங்களின்  குறிகள்  இருப்பனவாக  அறிதல்  வேண்டும் . அத்தெய்வத்தின்  மேற்கைகளில்  சங்கு , சக்கரம் , அங்குசம் , பாசம் , துடி , சூலம் , கமலம்  கலசம் , சுருவம் , மோதகம் , மாதுளம்பழம் , யாழ் , மாலை , புத்தகம்  ஆகிய  இவற்றுள்  உரியவற்றை  யமைத்தல்  வேண்டும் .              136-137

( எல்லாத்   தெய்வங்களுக்கும்  கீழ்க்கைகளில்  அபய  வரதங்கள்  இருக்க  வேண்டுமெனவும் , மேற் கையில்  அவ்வத்  தெய்வங்களுக்குரிய  சிறப்புப்  பொருள்கள்  இருக்க  வேண்டுமெனவும்  உணர்க .  சுருவம் – வேள்விக்குரிய   கருவிகளில்  ஒன்று . )

     எத்  திருவுருவத்தில்  முகங்கள்  பலவாக வுள்ளனவோ  அவ்வுருவின்கண்  அம்  முகங்களை  நிரையாக  அமைத்தல்  வேண்டும். அங்ஙனம்  அமைக்குங்கால்  அம்  முகங்கள்  தனித்தனியே  கழுத்துக்களையும் , முடிகளையும் , விளக்கமான  கண்களையும் , செவிகளையும்  உடையனவாயிருத்தல்  வேண்டும் .                              138

     எத்  திருவுருவத்திற்  கைகள்  பலவாக  வுள்ளனவோ  அவ்வுருவில்  அக்  கைகள்  பலவாதல்  பற்றித்  தோள்களையும்  பலவாக  அமைத்தலாகாது .                                                                                               139

     அங்ஙனம்  மிகுதியாகவுள்ள  கைகளின்  முழங்கைக்கு  மேலுள்ள  அடிப்பாகங்கள்  சிறியனவாகவும் , தகட்டு  வடிவினவாகவும் , வலியனவாகவும் , பக்கமூலங்களை  யொப்ப  இருத்தல்  வேண்டும் .140

    பிரமனுக்கு  நான்கு  திசையினும்  முகங்கள்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                                            141

     அயக்கிரிவர் , வராகர் , கணேசர்  ஆகிய  இவர்தம்  திருவுருவங்களில்  முகங்களல்லாத  மற்றை  யுறுப்புக்களும் , நரசிங்கத்தின்  திருவுருவத்தில்  முகமும்  நகங்களுமல்லாத  மற்றையுறுப்புக்களும்  மனித  வடிவினவாகச்  செய்தல்  வேண்டும் .142

( அயக்கிரீவர்க்குக்  குதிரை  முகமும் , வராகர்க்குப்  பன்றி  முகமும் , நரசிங்கத்துக்குச்  சிங்கமுகமும் , கணேசர்க்கு  யானை  முகமும்  உள்ளனவாம் )

     ஒருவன்  தனக்குரிய  வழிபடு  கடவுளின்  திருவுருவத்தை  அதன்  பீடத்தில்  நிற்றல் , இருத்தல் , உரிய  ஊர்தியில்  ஏறியிருத்தல்  ஆகிய  இந்நிலைகளுள்  ஒன்றனை யுடையதாகவும் , முகத்தில்  மயிரும்  இமை  மூடுதலும்  இல்லாததாகவும் , என்றும்  பதினாறு  யாண்டும்  பருவத்  தோற்றமுடையதாகவும் , அழகிய  ஆடை யணிகலன்களால்  நிறைந்ததாகவும் , விளங்குகின்ற  பலவகை  வண்ணச்  செயல்களையுடையதாகவும் , ஆடைகளாற்  பாதம்வரை  மறைக்கப்பட்டதாகவும் , சிறந்த  பிற  ஒப்பனைப்  பொருள்களால்  அலங்கரிக்கப்பட்டதாகவும் , முன்னர்க்கூறிய  இலக்கணங்கள்  நிரம்பப்  பெற்றதாகவும்  அமைத்து  வைத்தல்  வேண்டும் .          143-144

     தெய்வத்  திருவுருவங்களினுறுப்புக்கள்  இங்குக்  கூறிய  அளவிற்  குறைந்தனவாகவேனும்  மிக்கனவாகவேனும்  ஒரு  பொழுதும்  இருத்தலாகாது . அளவிற்  குறைந்த  உறுப்புக்களை யுடைய  திருவுருவம்  அதனைப்  பிரதிட்டை  செய்யும்  தலைவற்கும் , அளவின்மிக்க  உறுப்புக்களையுடைய  திருவுருவம்  அதனைச்  செய்த  சிற்பிக்கும்  கேடு  விளைவிப்பனவாம் .                                                       145

     அத்  தெய்வப்படிவம்  முற்கூறிய  அளவின்  மெலிந்துருக்குமாயின்  வறுமைத்  துன்பத்தையும் , அளவிற்  பருத்திருக்குமாயின்  நோய்த்துன்பத்தையும் , என்றுந்  தருவதாகும் . உறுப்புக்களின்  சந்திகளும் , என்புகளும் , நரம்புகளும்  வெளிப்படத்  தோன்றாமல்  மறைந்திருக்குமாயின் , அவ்  வுருவம்  எப்பொழுதும்  மிக்க  நலத்தைத்  தருவதாகும் .                                                                                                        146

     நான்கு  கைகளிலும்  முறையே  வரதம் , அபயம் , தாமரை , சங்கு , ஆகிய   இந்  நான்கனையு முடைய  திருமாலின்   திருவுருவம்  சாத்து  விகமாகவும் , நான்கு  கைகளிலும்  முறையே  மான் , வாச்சியம் , அபயம் , வரதம் , ஆகிய  இந்நான்கனையு முடைய  சிவபிரானது  திரு வுருவம்  சாத்துவிகமாகும் .                                                                            147

( இங்குச்  “சோமன்” என்று  மூலத்தில்  உள்ளது . அஃது  உமையோடு  கூடினவன்  என்னும்  பொருளதாகலின்  சிவபிராணை யுணர்த்தும் . இதற்கு  உரை வரைந்தார்   ஒருவர்  சோமன்  என்பதற்குச்  சந்திரன்  என்று  பொருள்  கொண்டார் . இப்பிரகரணத்தின்  63, 157-ஆம்  சுலோகங்களில்  விதந்து  கூறுங்கால்  சந்திரவுருவம்  கூறப்படாமையாலும்  சிவபிரான்  திருவுருவம்  கூறப்பட்டமையாலும்  அவ்வுரை  பொருந்தாமை யுணர்க .  வாச்சியம் – துடி .)

     நான்கு  கைகளிலும்  வரதம் , அபயம் , தாமரை , மோதகம்  ஆகிய  இந்  நான்கனையுமுடைய  கணபதியின்  திருவுருவம்  சாத்துவிகமாகும் .                                                                                              148

     நான்கு   கைகளிலும்  முறையே  யாழ் , பழம் , அபயம் , வரதம், ஆகிய  இந்  நான்கனையுமுடைய  திருமகளின்  திருவுருவம்  சாத்துவிகமாகும் .                                                                                               149

     உபாதி  வேறுபாட்டாலும் , தத்தம்  சையோக  விபாகங்களாலும்  எழுத்துக்களின்  சேர்க்கை  நிலை  தனி நிலைகளை யறியுமாறுபோலத்  திருமால்  முதலிய  தெய்வத்  திருவுருவங்களைச்  சத்துவ  முதலிய  குணவேறுபாடுகளாலும்  சங்கு , சக்கரம் , கதை , பதமும்  முதலிய  ஆயுதங்களாலும்  தனித்தனி  அவ்வாறு  வகைப்படுமென்று  அறிதல்  வேண்டும் .                                              150-151

( உபாதி – நிமித்தம் , இதனால்  எழுத்துக்களின்  குறுமை  நெடுமை  அளபெடைகள்  உணரப்படும்  .  சையோகம் – சேர்க்கை . விபாகம்  – பிரிவு , ஒருயிரெழுத்து.   உபாதி  வேறுபாட்டால்  மூவகைப்பட்டு  அம்  மூன்றும்  மெய்யெழுத்தோடு  கூடியும்  தனித்தும்  இயங்குதலால்  இருதிறத்தனவாய்  அறு  வகைப்படும் . அங்ஙனமே  ஒரு  தெய்வத்தின்  திருவுருவம்  சத்துவம்  முதலிய  குணவேறுபாட்டால்  மூவகைப்பட்டு  அம்  மூன்றும்  ஆயுதங்களோடு  கூடியிருத்தல்  ஆயுதங்களில்லாதிருத்தல்  ஆகிய  இரு  திறத்தனவாய்  அறுவகைப்படுதல்  காண்க . )

      ஓவியத்  தெழுதப்பட்டனவும் , சுதை  முதலியவற்றால்  தீற்றப்பட்டனவும் , மணலினாலும்  மண்ணினாலும் , மாவினாலும்  ஆக்கப்பட்டனவும் , ஆகிய  இப்படிவங்களுக்கு  இங்குக்  கூறிய  இலக்கணங்கள்  அமைந்திலவாயினும் , அது  பற்றி  யாருங்  குற்றங்  கூறலாகாது . ( இப்படிவங்கள்  அமைப்போர்   மனத்திற்கு  இயைந்தவாறு  அழகு  பொருந்தச்  செய்யத்தக்கனவாம்  என்பது கருத்து .)                                                                                                                  152

     வாணலிங்கத்திலும் , இயற்கையாகத்  தானே  தோன்றிய  திருவுருவத்திலும் , சந்திரகாந்தக்  கல்லினாலும்  இரத்தினங்களாலும் ஆக்கப்பட்ட  திருவுருவங்களிலும் , கண்டக  நதியில்  தோன்றிய  திருவுருவங்களிலும்  இங்குக்  கூறிய  இலக்கண  அளவையின்  மிகுதி  குறைவால்  ஏற்படுங்  குற்றங்கள்  எவ்வாற்றானுங் கருதற் பாலனவல்ல. கல்லினாலும் , பொன்  முதலிய  உலோகங்களினாலும்  ஆக்கப்படும்  படிவங்களிலேயே  அளவையின்  மிகுதி  குறைவால்  ஏற்படுங்  குற்றங்கள்  ஆராய்தற்பாலனவாம் .                                  153             

( கண்டக நதியில்  தோன்றுவன – சாலக்கிராமம்  முதலியன . )

     சிற்பி , கிரதயுகம்  முதலிய  நான்கு  யுகங்களிலும்  முறையே  வெண்ணிறக்கல் , பொன்னிறக்கல் , சிறிது  செந்நிறமுள்ள  கல் , கரு நிறக்கல்  ஆகிய  இவற்றால்  தெய்வப்படிவங்களைச்  செய்யக்கடவன் . இவற்றை  யன்றி  மனத்திற்கியைந்தவாறு  மரம்  முதலிய  பிற  பொருள்களாலும்  அப்படிவங்களை  ஆக்கலாம்  என்பது  நூல்களிற்  கூறப்பட்டுள்ளது .                                                                                                 154

     முற்கூறிய  இலக்கணங்களோடு  கூடிய  இத்  தெய்வப் படிவங்களுள் வெண்ணிறப்படிவம்  சாத்துவிகமெனவும் , பொன்னிறப்படிவமும் , செந்நிறப்படிவமும்  இராசதமெனவும், கருநிறப்படிவம்  தாமதமெனவுங்  கொள்ளப்படும் .                                                                 155

     கிருதயுகம்  முதலிய  நான்கு  யுகங்களிலும்  முறையே  பொன்னினாலும் , வெள்ளியினாலும் , செம்பினாலும் , பித்தளையினாலும்  திருவுருவங்கள்  ஆக்கற்பாலனவாம் .                   156

     சிவ சம்பந்தமான  திருவுருவங்களை  வெண்ணிறமுடை யனவாகவும் , திருமால்  சம்பந்தமான  திருவுருவங்களைக்  கருநிற முடையனவாகவும் , சூரியன் , சத்தி , கணேசர் , ஆகிய  இவர்தம்  திருவுருவங்களைச்  செந்நிறமுடையனவாகவும்  அமைத்தல்  வேண்டும் . இவ்வெல்லாத்  திருவுருவங்களையும்  கூறிய  இலக்கணம்  வழுவாது  இரும்பு  ஈயங்களாலும்  ஆக்கலாமென்பதும்  அறிவுடையோர்    கொள்கை .                                                                          157

     தெய்வத்  திருவுருவங்கள்  சில  நாட்  பூசித்தற்குரியனவாயினும் , என்றும் நிலைப்படுத்துப் பூசித்தற்குரியனவாயினும், முற்கூறிய  இலக்கணங்கள்  அமைந்தனவாயிருக்கும்படி திருக்கோயில்  முதலியவற்றில்  தாபித்தல்  வேண்டும் . அவ்விலக்கணங்களிற்  குறைபாடுறின்  எல்லா  நலங்களையும்  அழித்துவிடுமாதலின் , அவ்விலக்கணக்  குறைவுள்ள  படிவங்களைத்  தாபித்தலாகாது .     158                                                                                               

     தெய்வப்படிவங்களுக்கு  இலக்கணம்  வகுத்தது  ஆண்டானடிமைத்  திறங்  குறித்தேயாம் .                                                                                        159

வழிபடுவோன்  வழிபடப்படும்  தெய்வத்  திருவுருவத்தை  ஆண்டானுடையதெனவும் , தான்  அடியான்  எனவும்  உணர்ந்து , அன்பு  பூண்டொழுகுதற்கே  அத்திருவுருவங்கட்கு  இலக்கணம்  வகுக்கப்பட்டன  என்பதாம் .)          

     எப்பொழுதும்  மனத்தைத்  தெய்வத்தின்பாற்  செலுத்தி  அன்பு  பூண்டொழுகும்  பூசகனது  தவவன்மையால் தெய்வப்படிவங் களிலுள்ள  குற்றங்களெல்லாம்  விரைந்து  நீங்குவனவாம் .             160                                   

( தெய்வப் படிவங்களில்  இலக்கணக் குறை  நேர்ந்திருக்குமாயின் , அதனால்  வருங்   கேடுகளைப்  பூசகன்  தன்  தவ  வன்மையால்  ஒழித்துவிடுவான்  என்பது  கருத்து . )         

13 . தெய்வ  ஊர்திகள்  இயற்று  முறை

     தெய்வத்   திருவுருவத்தின்  முற்பக்கத்துள்ள  மண்டபத்தில்  அவ்வத்  தெய்வத்திற்கு  ஊர்தியை  அமைத்தல்  வேண்டும் .   அவ்வூர்தி  வகைகளுள்  கருட  ஊர்தி  இரண்டு  கைகளையும் , அழகிய  மூக்குக்  கண்கள்  இறகுகளையும் , மனித  உடலினையும்,  மூக்குள்ள  முகத்தினையும் , கிரீடத்தையும் , கவசம்  தோள்வளைகளையும் , கூப்பிய  கைகளையும் , வணங்கிய  தலையினையும் , ஆண்டான்  திருவடித்  தாமரைகளிற்  செலுத்திய  கண்களையுமுடையதாக  இருத்தல்  வேண்டும் .                                                                                161-162

     புட்களும் , சிங்கம் , இடபம்  முதலியவைகளும்  தெய்வங்களுக்கு  ஊர்திகளாந்  தன்மையை  யெய்துங்கால் , அவை  தம்  உருவத்தோடியைந்த  பிற  உருவங்களையும்  விரும்பியவாறு  எய்துவனவாம்.  அவற்றை  அறிவுடையார்  அவற்றின்  பெயர்க்கு  இயைந்த  வடிவினையும் , அழகினையும் , சிறந்த  அலங்காரத்தையு முடையனவாய்த்  தியான நிலையில்  தெய்வத்  திருக்கோயின்  முன்மண்டபத்தில்  எப்பொழுதும்   இருக்கும்  வண்ணம்  செய்தல்  வேண்டும் .                                                                                                     163-164

     பூனையை  யொத்த  வடிவினையும் , பொன்மை  நிறத்தினையும் , கரிய  புள்ளிகளையும் , பெரிய  உடலினையு முடையதாய்ப்  பிடர்க்கண்  மயிர்  இல்லாதது  புலி  என்று  கூறப்படும் . சிறிய  இடையினையும் , பெரிய  வடிவினையும் , அகன்ற  புருவங்களையும் , அகன்ற  கதுப்புக்களையும் , அகன்று  நீண்ட  கண்களையும் , பால  உருவினையும் , பிடரி  மயிரினையும் , சிறிது  வெளுப்பான  நிறத்தினையும் , மிக்க  வன்மையினையும் , அழகினையுமுடைய தாய்க்  கரிய  புள்ளிகள்  இல்லாதது  சிங்கமாகும் .                         165-166

     புலி, சிங்கம் , இவ்விரண்டற்கும்  வேறுபாடு  பிடரி  மயிரினாலும் , கரிய  புள்ளிகளாலும்  அறியப்படும் . உருவத்தால்  வேறுபாடின்று .   167

14 . கணபதியின்  திருவுரு வமைக்கு  முறை

     யானை  முகத்தினையும் , மனிதவுடலினையும் , தொங்குகின்ற  செவிகளையும் , பருத்த  வயிற்றினையும் , அகன்று  குறுகிய  நெருங்கிப்  பருத்த  தோள்  கால்  கைகளையும் , பருத்த  துதிக்கையினையும் , முறிந்த  இடப்பக்கத்  தந்தத்தினையும்  , தனக்குரிய  விருப்பமிக்க  ஊர்தியையும் , இடப்பக்கத்தே  சிறிது  வளைந்த  துதிக்கை  நுனியினையும் , வெளிப்படாது  மறைந்த  அவயவசந்தி எலும்பு  நரம்புகளையும்  உடையதாகவும் , அளவை  இலக்கணம்  அமைந்ததாகவும் , எப்பொழுதும்  தனக்கு  முன்   பூசிக்கப்படுவது  ஒன்றின்றித்  தானே  எல்லாவற்றிற்கு  முன்னர்ப்  பூசிக்கப்படுவதாகவும் , கணபதியின்  திருவுருவத்தை  அமைத்தல்  வேண்டும் .                                                                                                 168-169

( அகன்று  குறுகி  நெருங்கிப்  பருத்தலைக்  கால்  கைகளுக்கும்  கொள்க .)

     துதிக்கை  நாலரைத்  தால  அளவு  நீளமுடையதாகவும் , தலை  பத்து அங்குல  அளவு  உயரமுடையதாகவும் , புருவங்கள்  தனித்தனி  நான் கங்குல  அளவு  நீளமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .              170

     மேலுதட்டு  ருவமாக வுள்ள  துதிக்கையின்  கூறு  மூக்காகவும் , அத்துதிக்கையின்  எஞ்சிய  பாகம்   புட்கரத்தோடு  கூடியதாகவும் , செவிகளின்  நீளம்  பத்தங்குலமாகவும் , அவற்றின்  அகற்சி  எட்டங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                  171

( புட்கரம் – துதிக்கையின்  நுனி )

  இரண்டு  செவிகளுக்கும்  நடுவணுள்ள இடம்  பதினான்கங்குலமா கவும் , அக்கணபதி  உருவத்தினது  தலையின்  சுற்றளவு  முப்பத்தாறங்குலமாகவும்  அறிதல்  வேண்டும் .                                     172

     கண்களின்  மேற்பக்கத்துச்  சுற்றளவு முப்பத்தாறங்குலமாகவும் , கண்களின்  கீழ்ப்பக்கத்துச்  சுற்றளவும்  துதிக்கையின்  அடிப்பாகத்துச்  சுற்றளவும்  தனித்தனி  இருபத்தாறங்குலமாகவும் , மற்றைக்  கைகளின்  நுனிப்பாகத்துச்  சுற்றளவும் , புட்கரத்தின்  சுற்றளவும்  தனித்தனிப்  பத்தங்குலமாகவும் , கழுத்தின்  உயரம்  மூன்றங்குலமாகவும் , கழுத்தின்  சுற்றளவு  முப்பதங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                173-174

     வயிற்றின்  சுற்றளவு  நான்கு  தாலமாகவும் , வயிற்றின்   உயரம்  ஆறங்குலம்  அல்லது  எட்டங்குலமாகவும்  சிற்பிகளாற்  செய்யப்படல்  வேண்டும் .                                                                                                             175

      தந்தத்தின்  நீளமும்  அதன்  அடிப்பாகத்தின்  சுற்றளவும்  அவ்வாறங்குலமாகவும் , கீழுதடு  ஆறங்குலமாகவும் , புட்கரம்  தாமரை  மலரோடு  கூடினதாகவும்  இருத்தல்  வேண்டும் .                    176

     தொடைகளின்  அடிப்பாகத்துச்  சுற்றளவு  முப்பத்தாறங்குலமா கவும் , அதன்  நுனிப் பாகத்தின்  சுற்றளவு  இருபத்து  மூன்றங்குலமா கவும் , முழங்காலின்  அடிப்பாகத்துச்  சுற்றளவு  இருபது  அங்குலமா கவும் , கைகளின்  அடிப்பாகத்துச்  சுற்றளவு  அவற்றின் நுனிப்பாகத்துச்  சுற்றளவிலும்  ஓரங்குலம்  ஈரங்குலம்  மிகுதியாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                  177-178

      செவிக்கும்  விழிக்கும்  நடுவிடம்  நான்கங்குலமாகவும் , இரண்டு  கண்களின்  அடி  நடு  நுனிகளின்  நடுவிடம் , முறையே  ஆறு, ஏழு , பத்து  அங்குலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் . இவ்வாறு  கணபதியின்  திருவுருவத்தின்  இலக்கணங்கள்  அறிவுடையோராற்   சிறப்பித்துக்  கூறப்பட்டன .                                                                             179

( இரண்டு  கண்களின்  அடிப்பாகங்களும்  மூக்கை யடுத்துள்ளனவாம் . நுனிப்பாகங்கள்  செவியை யடுத்துள்ளனவாம் .)

15 . சத்தியுருவம்  பால  தெய்வப்படிவங்கள் அமைக்குமுறை

          பெண்  தெய்வத்  திருவுருவத்திற்குத்  தனங்களின்  உயரமும்  அகலமும்  ஐவைந்தங்குலமாக  எண்ணப்படும் .                                    180

     பெண்  தெய்வப்  படிவத்தின்  இடையினது  சுற்றளவு  முப்பத்தெட்டங்குலமாகவும் , அப்படிவத்தின்  எல்லா  உறுப்புக்களும்  உள்பட  உயர  அளவு  ஏழு  தாலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் . 181

  ஏழு தால அளவில்  அமைந்த  அப் பெண்  தெய்வப்படிவத்திற்கு  முகம்  பன்னிரண்டங்குலமாகும். பால  தெய்வம்  முதலிய தெய்வப் படிவங்களின் உயரத்தைத்  தனித்தனியே  பகுத்தறிதல்  வேண்டும். 182

     பால  தெய்வப்  படிவத்தின்  கழுத்துக்  குறுகியும் , அதன்  தலை  பருத்தும்  இருத்தல்  வேண்டும் ; என்னை?  அப் பாலப்பருவத்தின்  பின்   கழுத்தின்  கீழ்ப்  பாகம்  எத்துணைப்  பருமை  யெய்துமோ  அத்துணைப்  பருமையைத்  தலை  யெய்தாதாகலின் .                           183

     பால  தெய்வப்  படிவத்தின்  கழுத்தின்  கீழ்  அளவு  அதன்  முகத்தின்  உயர  அளவினும்  நாலரை  மடங்கு  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் . அந்நாலரை  மடங்கு  மிகுதியில்  இருமடங்கு  ஆண்குறி  வரையிலும்  எஞ்சிய  அளவு   தொடையின்   கீழ்ப்பாகமாகவும்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                          184

( 162-184 –ஆம்  சுலோக  முதலியவற்றில்  பால  தெய்வப்  படிவங்களின்  அளவு, முகத்தைப் பற்றி  மற்றை  உறுப்புக்களுக்குக்  தறுகின்றமையால் , ஈண்டுப்  பொதுவாகத்  தனித்தனியே  பகுத்தறிதல்  வேண்டும்  என்று  கூறப்பட்டது . )

     அப்  பால  தெய்வப்  படிவத்தின்  கைகள்  முகத்தின்  உயர  அளவில்  இருமடங்காதல் , இரண்டேகால்  மடங்காதல்  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் . அப்படிவத்தின்   பருமைக்கு அளவு  நியமம்  இன்று. அழகுறச் செய்தல் வேண்டும் .                                                                         185

     பாலப் பருவம்  ஐந்து  யாண்டுகளின்  பின்னர்  மிகவும்  வளர்ச்சி  யெய்துவதாகும் . பெண்  பதினாறு  யாண்டுகளிலும் , ஆடவன்  இருபது  யாண்டுகளிலும்  எல்லா  உறுப்புக்களும்  நிரம்பப்  பெற்றவராவர் .  186

16 . ஏழு  தால முதலிய  அளவில்  தெய்வப்  படிவங்கள் அமைக்குமுறை

     தெய்வப்படிவங்கட்குப்  பாலப்  பருவங்கடந்து  யெளவன  பருவம்  நேர்ந்துழி  ஏழு  தாலம்  முதலிய  அளவில்  உருவம்  அமைத்தல்  தக்கதாகும் . சில  படிவங்கள்  பாலப்  பருவத்திலும் , சில  படிவங்கள்  யெளவனப்பருவத்திலும் , சில  படிவங்கள்  முதுமைப்பருவத்திலும்  அழகுடையனவாக  விளங்கும் .                                                                    187

     ஏழுதால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்கு  முகத்தின்  கீழுள்ள  கழுத்து  மூன்றங்குலமாகவும் , மார்பு  வயிறு  நாபியின்  கீழ்ப் பக்கத்து  அடிவயிறு  ஆகிய  இவை  தனித்தனி ஒன்பதங்குல மாகவும் , தொடை  பதினெட்டங்குலமாகவும் , முழங்காற்சந்தி  மூன்றங்குலமாகவும் , கணைக்கால்  பதினெட்டங்குலமாகவும் , பரட்டின்  கீழ்ப்பாகம்  மூன்றங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                       188-189

     எட்டுத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்குக்  கழுத்து  நான் கங்குலமாகவும்  , மார்பு  வயிறு  நாபியின்  கீழ்ப்பக்கத்திலுள்ள  அடிவயிறு  இவை தனித்தனி  பத்தங்குலமாகவும் , தொடை  இருபத்தோரங்குலமாகவும் , முழங்காற்பூட்டு  நான்கங்குலமாகவும் , கணைக்கால்  இருபத்தோரங்குலமாகவும் , பரட்டின்  கீழ்ப்பாகம்  நான் கங்குலமாகவுமிருக்க  வேண்டுமென்று  இவ்வாறு  அளவை  கூறப்பட்டுள்ளது .                                                                                        190-192

     பத்துத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்தற்கு  முகம் , மார்பு , வயிறு , நாபியின்  கீழ்ப்பக்கத்து  அடிவயிறு  ஆகிய  இவை  தனித்தனி  பதின்மூன்றங்குலமாகவும் , பரட்டின்  கீழ்ப்பாகம்  கழுத்து  முழங்காற்பூட்டு  இவை  தனித்தனி  ஐந்தங்குலமாகவும் , தொடையும்  கணைக்காலும்  தனித்தனி  இருபத்தாறங்குலமாகவும் , தலைமணி  ஓரங்குலமாகவும் , கைகள்  தனித்தனி  ஐம்பது  அங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                  193-195

     பத்துத்தால  அளவிற்  குறைந்த  படிவங்களுக்கு , குறைந்த  தாலம்  ஒன்றுக்குக்  கைகளைத்  தனித்தனி  இரண்டிரண்டு  அங்குல  விகிதங்  குறைந்து  அமைத்தல்  வேண்டும் . எல்லா  அளவிலும்  அழகு  விளங்கும்  வண்ணம்  திறனுறச்  செய்தல்  வேண்டும் .                           196

( பத்துத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்குக்  கைகள்  ஐம்பது அங்குலமாயின் , ஒன்பது  தாலத்திற்குக்  கை  நாற்பத் தெட்டங்குலமாகவும் , எட்டுத்தாலத்திற்குக்  கை  நாற்பத்தாறங்குலமாகவும் , ஏழுதாலத்திற்குக்  கை  நாற்பத்து நான்கங்குலமாகவும்  இவ்வாறு  கணக்கிட்டுக்கொள்ளல்  வேண்டும் . ஏழுதாலம் , எட்டுத்தாலம்  அளவுள்ள  படிவங்களுக்குக்  கையளவு  முன்னர்க்  கூறப்பட்டமையால்  ஈண்டிவ்வாறு  கூறப்பட்டது . )

     ஒன்பது தால  அளவுள்ள  படிவத்தை  அதற்குச்  சொல்லிய அளவினின்றும்  கூடுதல்  குறைதலாகச்  செய்தலாகாது .                     197

( ஒன்பது தால  அளவு  உயரமுள்ள  படிவத்தின்  உறுப்புக்களெல்லா வற்றிற்கும்   அளவு  மேற்கூறப்பட்டமையால்  இங்கு  அவ்வளவினின்றும்  கூடுதல்  குறைதலாகா தென்று  வற்புறுத்தப்பட்டது . )

     பத்துத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்குப்   பாதங்கள்  தனித்தனி  பதினைந்தங்குலம்   இருத்தல்  வேண்டும் . பத்துத்தால அளவிற்  குறைந்த படிவங்களுக்குக்  குறைந்த  தாலம்  ஒன்றுக்கு  ஒவ்வோரங்குலம்  விகிதம்  பாத  அளவு  குறைந்திருத்தல் வேண்டும். பத்துத்தால  அளவின்  மிகுதியான  அளவுள்ள  படிவங்களுக்கு   மிகுதியான  தாலம்  ஒன்றுக்கு  ஒவ்வோரங்குல  விகிதம்  பாத  அளவு  கூடியிருத்தல்  வேண்டும் . சிற்பஞானத்திற் சிறந்த  புலவன்  இப்படிவங்களை  முகம்  தொடங்கி  அழகுற  இயற்றல்  வேண்டும் . 198 

     நீண்ட  தொடைகளையும் , நீண்ட  கணைக்கால்களையும் , விகார  உருவத்தையும் , சினக்குறிப்பையும் , அச்சத்தை  விளைவிக்கும்  தோற்றத்தையுமுடையது  அசுரப்  படிவமாகும் . இவ்வசுரப் படிவத்திற்குக்  கூறிய  உருவம்  தோற்றம்  முதலிய  எல்லாம்  பைசாசப்  படிவத்திற்கும்  இராக்கதப்  படிவத்திற்கும்  பொருந்துவனவாம் . அன்றி  இவற்றை  மெலிந்த  வடிவினை யுடையனவாகவும்  செய்யலாம் .   199                    

     எல்லா  அளவிலும்  அமைக்கப்படும்  படிவங்கள்  எல்லாவற்றிற்கும்  கையின்  நடுவிரல்  ஐந்தங்குலத்திற்குக்  குறையாமலும்  ஆறங்குலத்திற்கு  மேற்படாமலும்  இருக்கவேண்டுமென்று  சிற்பஞானிகள்  கூறுவர் .                                                                                 200

     சிற்பஞானி  எப்பொழுதும்  பாலப்  பருவத்திற்  கியைந்ததும்  யெளவன  பருவத்திற்  கியைந்ததும்  ஆகிய  படிவங்களையே  இயற்றல்  வேண்டும் . கிழப் பருவத்திற்  கியைந்த  படிவத்தை  ஒரு  பொழுதுஞ்  செய்தலாகாது .                                                                             201

    அரசன்  தன்  நாட்டில்  எப்பொழுதும்  இத்தகைய  தெய்வத் திருவுருவங்களைப்  பிரதிட்டை  செய்வித்தல்  வேண்டும் . அத்  தெய்வங்களுக்கு  யாண்டுதோறும்  நைமித்திகமாகிய  திருவிழாக்களைச்  சிறப்புறச்  செய்தல்  வேண்டும் .                            202

     அரசன்  மேற்கூறிய  அளவிலக்கணங்களின்  வேறுபட்டனவும் , உறுப்பு  முறிந்தனவுமாகிய  படிவங்களைத்  திருக்கோயில்களில்  வைத்துப்  போற்றலாகாது . நாள் மிகுதியாற்  சிதைந்த  ஆலையங்களையும்  தெய்வப்  படிவங்களையும்  முயன்று  புதுப்பித்தல்  வேண்டும் .                                                                                  203

     அரசன்  எப்பொழுதும்  தன்  மனம்  இன்புறுதற்பொருட்டுத்  தெய்வங்களை  முன்னிட்டு  நாட்டியம்  முதலியவற்றை  நடாத்திக்  கண்டு  களித்தலாகது .                                                                                      204

     குடிகளால்  தெய்வங்களுக்குச்  செய்யப்படும்  திருவிழாக்களையும்  அரசன்  பாதுகாத்து  ஆதரித்தல்  வேண்டும் . குடிகள்  இன்புறக்கண்டு  தான்  இன்புறுதலும் , அவர்  துன்புறக்கண்டு  தான்  துன்புறுதலும்  அரசனுக்குரியனவாம்.                                                                                       205

சுக்கிர நீதி  நான்காம்  அத்தியாயத்தில்,

நாட்டைப் பற்றிய நடுவணதாகிய

“உலகதரும நிரூபணம்”  என்னும்

நான்காம்  பிரகரணம்  முற்றிற்று .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஐந்தாம்  பிரகரணம்

(இராச  தருமம்)

1 . அரசன்  நீதியியல்பு  அறிதல்

      அரசன் , குடிகளின்  வழக்குகளை  யாராய்ந்து  அறிந்து  தீயோரை  ஒறுத்தல்  வேண்டும் . தன்  கீழ்  அடங்கி  வாழும்  குடிகள்  எப்பொழுதும்   தன்  ஆணைவழி  ஒழுகுவதற்குரியராவர் .                    1

     தீயோராவார் – அரசன்  விருப்பத்திற்குக்  கேடு  விளைப்போரும் , பகைவரும் , பாவ  காரியங்களைச்  செய்யும்படி  உபதேசிப்போருமாவர் . குடிகளைக்  காத்தல்  என்பது  நியாயநெறி  பிறழாது  அவர்  விரும்பியவற்றைச்  செய்தலாகும் .                                 2

     பகைவரை  அழித்தல்  என்பது  வெறுப்பன  செய்தலினின்றும்  அவரை  ஒழிவுறச்  செய்தலாகும் . தீயோரை  ஒறுத்த லென்பது  தீயன  செய்தலினின்றும்  அவரை  ஒழிவுறச்  செய்தலாகும் .                              3

     அரசன் , எதனால்  நன்று  தீதுகளை  ஆராய்ந்தறிந்து  தன்  குடிகளை  அறத்தில்  நிலைப்படுத்துதலையும் , பிற  காரியங்களை  நன்கு   நிறைவேற்றிக்கொள்ளுதலையும்  செய்கின்றானோ  அதுவே  வியவகாரம்  என்று  கூறப்படும் .                                                                      4

( வியவகாரம்  ஈண்டு  அரசியல்  நீதியாகும் . ஒரு  பொருளைத்  தனித்தனியே  எனதென்றிருப்பார்  அதுகாரணமாகத்  தம்முள்  மாறுபட்டு  அப்பொருண்  மேற்செல்லுவதாகிய  வழக்கு  இப்பிரகரணத்தின்  68-ஆம்  சுலோகத்திற்  கூறப்படும் .)

     அரசன்  விருப்பு  வெறுப்புக்கள்  இல்லாதவனாய் , நீதிபதிகள் , அமாத்தியர் , அந்தணர்  புரோகிதர்  ஆகிய  இவர்களோடு  கூடியிருந்து  நன்கு  விழிப்புமிக்க  மனத்தினையுடையனாய்  அறநூல்களைத்  தழுவி   முறைப்படி  வழக்குகளை  ஆரய்ந்தறிதல்  வேண்டும் .                               5

      அறிவிற்  சிறந்த  அரசன் , வழக்காளிகளின்  காரியங்களைத்  தான்  தனியனாய்த்   தனியிடத்திருந்து   ஒரு பொழுதும்  ஆராய்தலும்  கேட்டலும்  கூடாவாம் . நீதிமன்றத்துள்ளாரும் , அங்ஙனமே  தனித்திருந்து  வழக்குகளை  யாராய்தலுங்  கேட்டலும்  ஆகாவாம் .      6

     நியாயம்  வழங்குவார்  ஒருதலைச்  சார்பை   மேற்கோடற்குரிய  காரணங்களாவன :  நட்பு , பொருணசை ,அச்சம் , பகைமை , வழக் காளிகளைத்  தனியிடத்திருந்து  கேட்டல்  ஆகிய  இவ்வைந்துமாம் .     7

     எவ்வரசன் , தான்மாத்திரம்  இன்புற்றிருந்து  தன்  குடிகளுக்குச்  செயற்பாலனவற்றைச்  செய்யா தொழிகின்றானோ  அவ்வரசன்  உறுதியாகக்  கொடிய  நரகத்  துன்பத்தை  அநுபவிப்பவனாவான் . இதன்கட்  சிறிதும்  ஐயமின்று .                                                                            8

   எவ்வரசன் , மயக்க வுணர்வினாற்  காரியங்களை  அறநெறி  பிறழ்ந்தவனாகச்  செய்கின்றானோ  அத்  தீய  அரசனைப்  பகைவர்  விரைந்து  தம்  வயப்படுத்திக்  கொள்வர் .                                                       9

     அரசன் , நீதிபதி  முதலியவரோடு கூடியிராமல்   தான்  தனியனாயிருந்து  வழக்காளிகளின்  சொற்களைக்  கேட்டு  ஆராய்வானாயின் , அஃது  அவற்கு  மறுமை  இன்பத்தையும்  பயவாது; பகைவருடைய  படைகளால்  அச்சத்தை  விளைவித்து  அவன்  வாழ்நாளையுங்  கெடுப்பதாகும் ; அன்றிக்  குடிகளுக்குங்  கேடு  விளைவிப்பதாகும் .                                                                                              10

     ஆதலின் , அரசன்  அறநூல்  முறையை  மேற்கொண்டு  அவ்வழியே  எல்லாக்  காரியங்களையும்  ஆராய்தல்  வேண்டும் .                                 11

     அரசன் , தான்  செய்யவேண்டிய  காரிய  முடிவுகளைத்  தானே  செய்தற்கு  இயலாதவனாக  இருப்பின் , அப்பொழுது  அவற்றைச்  செய்தற்பொருட்டு  ஓர்  அந்தணனை  நியமித்தல்  வேண்டும் . அவ் வந்தணன்  பொறியடக்கம் , உயர்குடிப்பிறப்பு , நடுவுநிலைமை , சாந்தகுணம் , அசைவின்மை, மறுமை குறித்துத் தீவினைக்கு அஞ்சுதல் , அறநிலை , முயற்சி , சினமின்மை ஆகிய  இக்குணஞ்  செயல்களை யுடையனாய்  வேதங்களின்  கரைகண்ட வனாக  இருத்தல்  வேண்டும் .                                                                                      12-13

( 12-13 . செய்யவேண்டிய  காரிய  முடிவுகள்:  வழக்காளிகள்  கூறுஞ்  சொற்களைக்  கேட்டு  ஆராய்ந்த  உண்மை  கண்டு  தீர்மானித்தல்  முதலியன . அரசன்  நீதிபதி  முதலியவரோடு  கூடியிருந்து  தீர்மானித்தல்  வேண்டும் . எக்காரியத்தை  முன்னிட்டேனும்  அவற்கு  அக்காரியங்களை  ஆராயக்  கூடவில்லையாயின் , அப்பொழுது  தனக்குப்  பிரதிநிதியாக  ஓர்  அந்தணனை நியமிக்கவேண்டுமென்பது  கருத்து . )

     வழக்காராயுங்  காரியங்களைத்  திறம்படப்புரியும்  அறிவுடை  அந்தணன்  இல்லையாயின் , அப்பொழுது  அச் செயற்கண்  அறநூலறிவிற்  சிறந்தவனாகிய  அரசர்  குலத்தவனை  யாதல்  வணிககுலத்தவனை யாதல்  நியமனஞ்  செய்யலாம் . சூத்திரனை  நியமனஞ்  செய்யாமல்  முயன்று  விலக்கல்  வேண்டும் .                        14

     அரசன்  எவ்  வருணத்திற்  றோன்றினானோ  அவ்வருணத்துள்ளாரை  எப்பொழுதும்  நியாயவிசார  காரியத்தில்  நியமித்தல்  வேண்டும் . அவ்  வருணத்திலேயே  பெரும்பாலும்  நற்குணம்  நிறைந்தோர்  உண்டாயிருப்பர் .                                                                                                  15

     வழக்கியல்பு  அறிதல் , பேரறிவுடைமை , நற்குணம் , நற்செயல் , நல்லொழுக்கம் , பகைவரையும்  நண்பரையும்   ஒப்ப  மதித்தல் , அறவுணர்ச்சி , வாய்மை  கூறல் , மடியின்மை , காமவெகுளி  உலோபங்களைக்  கடத்தல் , இன்சொற்கூறல்  ஆகிய  இக்குணஞ்  செயல்களை யுடையார்  எச்  சாதியினராயினும்  அவர்களை  அரசன்  நியாயமன்றத்தவராக  நியமித்தல்  வேண்டும் .                               16-17

     உழவர் , காருகர் , சிற்பவினைஞர் , வட்டித்தொழில்  புரிவார் , இழிந்த  சாதிக்குழுவினர் , நாட்டியம்  புரிவார் , இலிங்கிகள் , கள்வர்  ஆகிய  இவர்கள்  தம்  குழுவினர்க்குரிய  தருமமுறைப்படி  தம்  காரியங்களைத்  தாமே  தீர்மானித்துக்  கொள்ளல் வேண்டும் . அவ்வுழவர்  முதலியோர்க்குரிய  காரியங்களை  ஆராய்ந்து  தீர்மானித்தல்  பிறர்க்கு  அரிதாதலின், அரசன்  அத்தரும  இயல்புகளை   நன்கு  உணர்ந்த  அக்குழுவினராலேயே  அதனைச்  செய்வித்தல்  வேண்டும் .                                                                                                      18-19

இலிங்கி – தவவேடமுடையான் . உழவர்  முதலாக  இங்குக்  கூறப்பட்டார்  தம்  விவகாரங்களைத்   தம்  குழுவினருள்  அறிவுடைய  சிலரைக்  கொண்டு  முடிவு  செய்து கொள்ளல்  வேண்டுமென்பதும் , அவர்தம்  வழக்க  ஒழுக்கங்களை யுணர்ந்து  காரிய  நிரூபணஞ்  செய்யத்தக்க  திறமையுடையாரை  அக்குழுவினின்றும்  தெரிந்தெடுத்து  அரசன்  நியமனஞ் செய்தல்  வேண்டு மென்பதுங்  கூறப்பட்டன . )

      தனக்கு  நலத்தை  விரும்பும்  வேந்தன் , பிரமசரியம்  முதலிய  ஆச்சிரம  ஒழுக்கங்களை யுடையாரும் , காரியநிமித்தம்  தம்முன்  வழக்கிடுவாருமாகிய  இருபிறப்பாளர்  மூவர்க்குமுரிய  தருமத்தில்  மாறுபடக்  கூறலாகாது .                                                                                    20

      தவஞ்  செய்வார் , மாயை  யோகங்களை  அறிந்தார்  ஆகிய  இவர்தம்  காரியங்களை , வேதங்களை  யறிந்த  பெரியோர்களைக்  கொண்டே  செய்வித்தல்  வேண்டும் . இவர்தம்  வெகுளி  கணமேயுங்  காத்தலரிதாதலின்  அரசன்  தானே  செய்தலாகாது .                               21

( மாயை – மாயாப்பிரயோகம்  ; ஆபிசாரவேள்வி  முதலியன .)

     சிறந்த  அறிவுச்  செல்வம்  நிரம்பப்பெற்ற  அரசன் , உயர்ந்த  குடிப்பிறப்பையும் , சிறந்த  ஒழுக்கங்களையுமுடைய  குருக்கள் , ஞானாசிரியர் , தவஞ்  செய்வார்   ஆகிய  இவர்களுக்குத்  தான்  ஒன்றைக்  கட்டளையிடலாகாது .                                                                    22

( ஒன்றைச்  செய்யும்படி  அவரை  ஆணையிட்டுரைத் தலாகாது  என்பது  கருத்து.)

     காட்டில்  வாழ்வார்  அவர்  இனத்தவரோடும் , கூடி  வாணிகம்  புரிவார்  அக்  கூட்டத்தவரோடும் , போர்வீரர்  அவரினத்தவரோடும்  , கிராமத்தில்  வாழ்வார்  அவர்க்கு  இருபுறத்தும்  இருப்பவரோடுங்  கூடித்  தத்தங்   காரிய  நிருணயங்களைச்  செய்துகொள்ளல்  வேண்டும் .                                                                                                             23

( இதனாற்  பல்வேறு  வகுப்பினரும்  தத்தம்  வழக்குகளைத்  தத்தம்  வகுப்பினரைக்  கொண்டே  தீர்மானித்துக்கொள்ளல் வேண்டும்  என்பது  போதரும் . அவ்வகுப்பினரால்  தீர்மானிக்கப்படாத  காரியங்கள்  பின்னர்  அரசனால்  நியமிக்கப்பட்ட  நீதிபதி  முதலியோரால்  தீர்மானிக்கப்படும்  என்பதும்  உய்த்துணரற் பாற்றாம்.)

     யாவர்  எக்காரியத்தில்  எதன்  பொருட்டு  அரசனால்  நியமிக்கப்பட்டுள்ளாரோ  அவரே  அக்காரியத்திலுள்ள  குணங்  குற்றங்களை  ஆராய்ச்சி  செய்வோராவர் .                                                24

      யாவர்  ஏறுபோல  வழக்காகிய  சுமையைச்  சுமத்தற்கு    வலிவுடையாரோ  அத்தகைய  அறநிலை யுடையோரை  அரசன்  நன்றாக  ஆராய்ந்தெடுத்து  நீதிமன்றக்  குழுவினராக  நியமித்தல்  வேண்டும் .                                                                                                              25

2 . நியாய  மன்றம்  அமைக்கு  முறை

     உலகியல் , வேதம் , அறநூல்   ஆகிய  இவற்றிற்  சிறந்த  அறிவு  வாய்ந்த  அந்தணர்  எழுவராதல் , ஐவராதல் , மூவராதல் , எம்  மன்றத்தில்  இருக்கின்றனரோ  அம்  மன்றம்  வேள்விச்  சாலையை யொப்ப  மிக்க  தூய்மை   வாய்ந்ததாகும் .                                                  26

     அம்  மன்றத்தில் , சிறந்த  அறிவு  வாய்ந்த  வணிகர்களை  வழக்குக்  கேட்போராக  நியமித்தல்  வேண்டும் .                                                          27

( பொன்  முதலியவற்றை  நிறுத்து  ஆராய்தல்  போல  வழக்குரைப்போரின்  காரியங்களையும்  நிறுத்துணர்ந்து  ஆராய்வராதலின்  வணிகரைக்  கேட்போராக  நியமிக்க  வேண்டுமென்றார் .)

      அறநூலுணர்ந்து  அந்நூல்  நெறி  ஒழுகும்  ஒருவன்  கூறுவன  தெய்விகச்  சொல்  ஆதலால் , அவன்  அரசனால்  நியமிக்கப் பட்டவனாயினும்  நியமிக்கப்படாதவனாயினும்  வழக்கின்  சம்பந்தமாக  நியாயங்  கூறுதற்குத்  தகுதியுடைய னாவான் .           28                                    

     நியாய  மன்றத்திற்கு  ஒருவன்  சென்றால்  உண்மையையே  சொல்லுதல்  வேண்டும் . இன்றேல்  அங்குச்  செல்லலாகாது . அங்குச்  சென்றும்  உண்மை யுணர்ந்துஞ்  சொல்லாமலிருத்தலையும், மாறுபடக்  கூறுதலையுமுடைய மனிதன்  தீவினையாளனாவான்      29

( 28-29. இவ்விரண்டு  சுலோகங்களாலும்  கூறப்பட்டோர்  நியாயமன்றஞ்  சென்று  அங்கு  நிகழுங்  காரியங்களை  யாராய்ந்துணர்ந்து  உண்மை  கூறும்  பொது  மக்களாவார் . இவ்வழக்கம்  பண்டக்காலத்துள்ளது  போலும் .)

      அரசனால்  திறனுடையார்  என்று  அறியப்பட்ட  குலம் , சிரேணி , கணம்  முதலிய  நியாயத்  தீர்ப்புக்  குழுவினர்   தத்தம்  குழுவுட்பட்ட  மனிதர்களின்  கொலைகளவு  முதலியன  வல்லாத  காரியங்களை  ஆராய்ந்து  தீர்மானஞ்  செய்தற்குரியராவர் .                                               30

முதல்  விசாரகராகிய  குலக்குழுவினரால்  விசாரித்துத்  தீர்க்கமுடியாத  வழக்குகள்  சிரேணிகளாலும் , சிரேணிகளால்  விசாரித்துத்  தீர்க்கமுடியாத  வழக்குகள்  கணங்களாலும் , கணங்களால்   விசாரித்துத்  தீர்க்கமுடியாத  வழக்குகள்  அரசனால்  நியமிக்கப்பட்ட  நீதிபதி  முதலியோராலும்  விசாரித்துத்  தீர்க்கப்படுவனவாம் .                                                                                           31

( 30-31 . இவ்விரண்டு  சுலோகங்களிலும்  கூறிய  குலம் , சிரேணி , கணங்கள்  முறையே  ஒன்றற்கொன்று  உயர்ந்த  கூட்டங்களாகும் . இக்  கூட்டத்தினர்  ஓரளவு  வரையறுக்கப்பட்ட  சனங்களின்  வழக்குகளைக்  கேட்டறிந்து  தீர்க்கும்  பஞ்சாயத்தாராவர் . )

     குலம்  முதலிய  குழுவினரினும்  நியாய  மன்றத்தவர்  உயர்ந்தவராவர் . நியாய  மன்றத்தவரினும்  நீதிபதிகள்  உயர்ந்தோராவர் . தன்  கீழ்  வாழுங்  குடிகளை  அறநெறிக்கட்  செலுத்தி  மறநெறி  விலக்கி யாளும்  அரசன் , தலை யிடை  கடையாய  வழக்குகளெல்லாவற்றையும்  ஆராய்ந்து   முறை  செய்தலான்  நீதிபதி  முதலிய  எல்லோரினும்  உயர்ந்தவனாவான் . மன்னவன்  அறிவு  மற்றையோர்  அறினினும்  மேன்மேற்  சிறந்து  விளங்கும்  இயல்புடையதாகும் .                                                                                      32-33

      ஒரு  நூலை  மாத்திரங்  கற்றுணர்ந்த  மனிதன்  வழக்குகளைத்  தீர்மானிக்க  அறியான் . ஆதலின் , பல  நூல்களையுங்  கற்றுணர்ந்த  உத்தமனையே  வழக்காராயுஞ்  செயலில்  அரசன்  நியமித்தல்  வேண்டும் .                                                                                                              34

     கடவுட்டத்துவங்களை யுணர்ந்தானொருவன்  தான்  தனியாயிருந்து  எதனைக்  கூறுகின்றானோ  அதுவே  அறமாகும் .                                     35

      அரசன்  சிறந்த  நியாயமன்றத்தவரோடு  தனித்தனி  கூடியிருந்து  வழக்குகளின்  சிறுமை  பெருமைக்கேற்ப  ஒருமுறையாதல் , இருமுறையாதல் , மும்முறையாதல் , நான்கு முறையாதல்  அவ்வழக்குகளை  யாராய்ந்து  தீர்மானித்தல்  வேண்டும் .                      36

     எந்த  நீதிபதி  வாதி  பிரதிவாதிகளையும் , நியாயமன்றத்தவரையும்      எழுத்தாளரையும் , காண்போரையும் , அறவுரைகளாலின்புறுத்து கின்றானோ  அவன்  நீதிமன்றத்தைத்  தீங்கினின்றும்  விலக்குபவனாவான் .                                                                                           37

3 . நியாய  மன்றத்தின்  பத்து  அங்கங்கள் 

     அரசன் , நீதிபதி , நீதிமன்றத்தவர் , அறநூல் , கணக்காளர் , எழுத்தாளர் , பொன் , நெருப்பு , நீர் , ஏவலாளர் , ஆகிய  இப்பத்தும்  காரிய  சாதனத்துக்குரிய  அங்கங்களாம் .                                                 38

     தூய  அறிவினையுடைய  வேந்தன், எம்மன்றத்தில்  இங்குக்  கூறிய  பத்து  உறுப்புக்களையுந்  துணையாகப் பற்றி  நின்று நியாயங்களைக்  காண்கின்றானோ  அம் மன்றம்  வேள்விச்சாலையை  ஒக்கும் .      39                                                                                                                   

( பத்து   உறுப்புக்களில்  அரசனும்  ஓருறுப்பாகுமாதலின்  அரசன்  ஈண்டு  அங்கமாகவும்  அங்கியாகவும்  உள்ளான்  என்பது  அறியற்பாலது . )

     இப்பத்து  உறுப்புக்களுக்கும்  தனித்தனியே  கன்மங்கள்  உள்ளன நீதிபதி  வழக்கின்  இயல்பைக்  கூறுபவனாவான் . அரசன்  ஆணைவழி  யொழுகக்  கட்டளை யிடுபவனாவான் . நீதிமன்றத்தார்  வழக்குகளை  ஆராய்பவராவர் .                                                                                                  40

      அறநூல்கள்  வழக்குகளைத்  தீர்மானிக்கும்  முறையையும் , மந்திரமோதுதலையும் , தானத்தையும் , பொறி  முதலியன  அடக்கு தலையுங்  கூறுவனவாம் .                                                                                  41

      சூழுறவு  செய்தற்பொருட்டுப்  பொன்னும்  நெருப்பும்,  நீர் வேட்கை  தணித்தற்பொருட்டும்  கலக்கந்  தெளிவித்தற்  பொருட்டும்  நீரும்  இருத்தல்  வேண்டும் . கணக்கன்  பொருளைப்  பற்றிய  வரவு  செலவுகளையும் , எழுத்தாளன்  நியாய மன்றத்தில்  நிகழ்வனவற்றையும்  எழுதல்  வேண்டும் .                                                    42

    சொற்பொருள்களின்  உண்மை யுணர்ச்சி , கணக்காராயுந்  திறமை , தூய்மை , பல்வகை  யெழுத்துக்களின்  வேறுபாட்டை யுணரும்  அறிவு  ஆகிய  இவற்றையுடையாரைக்  கணக்காளராகவும், எழுத்தாளராகவும்  அரசன்  நியமித்தல்  வேண்டும் .                                                                     43                  

      எவ்விடத்தில்  அறிவு  நூல்களைப்  பின்பற்றிப்  பொருள்  நூல்களின்  ஆராய்ச்சி  நன்கு  நடைபெறுகின்றதோ  அவ்விடமே  அற  நிலையமாகிய  நீதிமன்றமாகும் .                                                                   44

      வழக்குகளை  யாராய்ந்து  உண்மை  காண்டலில்  விருப்பமிக்க  அரசன் , பணிவுடையனாய்ச்  சூழ்ச்சித்  திறன்  வாய்ந்த  அந்தணர்களோடும்  மந்திரிகளோடும்  நீதிமன்றத்துட்   புகுதல்  வேண்டும் .                                                                                                              45

      அரசன் , அறம்  வழங்குதற்குரிய  அரசிருக்கையில்  இருந்து  காரியங்களை  யாராய்தற்குத்  தொடங்குதல்  வேண்டும் . வாதி  பிரதிவாதிகள்பால்  நடுநிலை யுடையனாய்  அவ்விரு  வழக்காளிகளையும்  வினவுதல்  வேண்டும் .                                              46

      அரசன் , நாடோறும்  உலகியல்  நீதி  நூலாகிய  ஏதுக்களால்  சாதி , தருமம் , தேயதருமம் , சிரேணிதருமம் , குலதருமமாகிய  இவற்றை   நன்கு  ஆராய்ந்துணர்ந்து  தன்  அரசியற் றருமத்தைப்  பேணல்  வேண்டும் .                                                                                                               47

 ( சிரேணி , குலம்  என்பவற்றை  30 -31  சுலோகங்களிற்  காண்க .)

     தேயதருமம் , சாதிதருமம் , குலதருமம்  ஆகிய  இவை  பண்டு தொட்டு  எவ்வாறு  நடைபெற்று  வருகின்றனவோ  அவ்வாறே  அவற்றைப்  பாதுகாத்தல்  வேண்டும் . இன்றேல்  குடிகள்  மிகவும்  கலக்கம்  எய்துவர் .                                                                                              48

( ஈண்டுக் குலம் – குடித்தலைமை .)

     தென்னாட்டில்  வாழும்  அந்தணர்  மாமன்  மகளை  மணஞ்  செய்து  கொள்கின்றனர் . நடுநாட்டில்  வாழும்  காருகரும்  சிற்பிகளும்  பசுவின்  இறைச்சியை  உண்ணுகின்றனர் . வட  நாட்டில்  வாழும்  எல்லா  மனிதரும்  மீன்  இறைச்சியை  உண்ணுகின்றனர் . ஆங்குள்ள  பெண்கள்  வியபிசாரத்திற்  பற்றுடையராகவும் , கட்குடிப்போராகவும் , வீட்டுக்கு  விலக்காகும் [ இருது ]  நாட்களிலும்   ஆண்பாலராற்  றீண்டப் படுபவராகவும்  இருக்கின்றனர் . கச மென்னுந்  தேயத்திற்  பிறந்தோர்  உடன்பிறந்தான்  இறந்துவிடின்  அவன்  மனைவியை  மணஞ்  செய்து  கொள்கின்றனர் . இங்ஙனஞ்  செய்தலால்  அவர்க்குக்  கழுவாயாதல் , தண்டமாதல்  கிடையா .                                                                                49-51

( இம்  மூன்று  சுலோகங்களாலும்  நூன்முறைக்கு  மாறுபட்ட  தேயதருமம்  முதலியன  கூறப்பட்டன . இவற்றில்  அரசன்  தலையிடலாகாதென்பது  கருத்து . கசம்  என்னும்  நாடு  இமயமலையின்  பக்கத்தே  உள்ளது . அதன்கண்  வாழ்வார்  சிறிது  சிறிதாக  ஒழுக்கங்  குன்றப்  பெற்று  இழிந்தநிலையினை  யெய்திய  அரச  குலத்தவராவர் . )

     எவர்க்கு  எவை  பரம்பரைத்  தருமங்களாக  அவர்தம்  முன்னோர்களான்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றனவோ  அவர்க்கு அவை குற்றமுடையனவல்ல. அவற்றைப்  பிறர்  செய்தல்  குற்றமாம். 52  

     கலியுகத்திற்  செல்வமிக்கார்  பெரும்பாலும்  எப்பொழுதும்  பிறர்  மனைவியர்பாலும்  பிறர்  பொருட்கண்ணும்  பேரவாவுடையராகவும் , கட்குடித்தலில்  பற்றுடையராகவும் , சிறிது  அறிவு  படைத்த  அளவிற்  செருக்குடையராகவும் , வாமதந்திரங்களிற்  கூறப்பட்ட  கன்மங்களிற்  பற்றுடையராகவும் , வேதங்களிற்   பற்றில்லாதவராகவும்  இருப்பார்கள் . அவர்களை  அரசன்  பெருந்  தண்டத்தால்  ஒறுத்தடக்கல்  வேண்டும் .                                                                            53-54

4 . வழக்காராயு  முறைகள்

     அரசன் , நண்பகலில்  நியாய  விசாரணையையும் , முற்பகலில்  அறநூல்களின்  ஆராய்ச்சியையும்  செய்தல்  வேண்டும் . மனிதக்கொலை , களவு , பெருங்கொள்ளை , கேடு  விளைக்கும்  பிற  செயல்கள்  ஆகிய  இவை  நேர்ந்துழிக்காலை , நண்பகல் , மாலை , இரவு  என்னுங்  காலநியமங்  கருதாமல்  அப்பொழுதே  அக்காரிய  விசாரணையை  நடத்தல்  வேண்டும் .                                                       55-56

     வழக்குரைப்பான் , மந்திரிகளோடு  அறவிருக்கையிலிருக்கின்ற  அரசனைக்  கண்டு நீதிமன்றத்துட்  செல்லவேண்டும் . சென்று  அறநெறிவழுவாது தான்  தெரிவிக்கற்பாலனவற்றை  உண்மையாக  நினைவு கூர்ந்து,  விழிப்புடையனாய்   நன்கு  எழுதிக்  கைகூப்பித் தொழுது  கொண்டு , உடல்  வணக்கமுடையனாய்த்  தன்  வழக்குகளைத்  தெரிவித்துக்கொள்ளல்  வேண்டும் .                          57-58

    இங்ஙனம்  வழக்குரைப்போனை  அரசன்  அந்தணர்களோடு  உடனிருந்து  அவன்  தகுதிக்  கேற்றவாறு  பெருமைப்படுத்தி, முதலில்  இன்சொற்களால்  தேற்றிப்  பின்னர்த்  தன்  கடமையைத்  தொடங்கல்  வேண்டும் .                                                                                                              59

     அரசன்  தன்  முன்னிலையில்   வணங்கி  நிற்கின்ற  வழக்குரைப்போனை  நோக்கி  அவ்வமயத்திற்  பின்வருமாறு  வினவுதல்  வேண்டும் . “ஏ ! மானவ !  காரியம்  யாது ?  நினக்கு  வந்த  துன்பம்  என்னை?  எவ்விடத்தில்  எப்பொழுது  எக் காரணத்தால்  எத் தீயோனாற்  றுன்புறுத்தப்பட்டனை?   அஞ்சுதல்  வேண்டா; கூறுவாயாக”  என்றிவ்வாறு  வினவி , அவன்  கூறும்  உண்மையான  சொற்களை  நன்கு  கேட்டல்  வேண்டும் .                                                60-61

     அவ்  வழக்குரைப்போன்  கூறுஞ்  சொற்களை   எழுத்தாளன்  அவ்வமயம்  பிரசித்தமாக  உள்ள  எழுத்துக்களாலும்  மொழிகளாலும்  எழுதிக்  கொள்ளல்  வேண்டும் .                                                                        62

     எழுத்தாளன் , வாதி , பிரதிவாதிகளுடைய  சொற்களை  உள்ளவாறு  எழுதாமல்  வேறுபட  எழுதுவானாயின்  அவனை  அரசன்  தாழ்த்தலின்றி  விரைந்து  கள்வனை  யொப்பக்  கருதித்  தண்டித்தல்  வேண்டும் .                                                                                                               63

     நீதி மன்றத்தார்  அங்ஙனம்  பிறழ  எழுதிய  எழுத்துக்களை  ஒரு  பொழுதும்  ஏற்றுக்  கொள்ளலாகாது . இன்னும்  அவர்  வழக்குரைப் போரிடத்தினின்றும்  வலிந்து  பற்றி  எழுதி  வாங்கலுமாகாது . அங்ஙனம்  வாங்குவாராயின்  அவரையும்  அரசன்  கள்வரை யொப்பத்  தண்டித்தல்  வேண்டும் .                                                                                     64

     அரசன்  இல்லாதபொழுது  நீதிமன்றத்  தெய்தி  வழக்குரைப்போரை  நீதிபதி  முற்கூறியவாறு  வினாதல்  வேண்டும் .                                          65

     நீதிபதிக்குப் “பிராட்விவாகன்”  என்பது  பெயர் . வழக்குரைப்போரை  வினாவுதல்  பற்றி ‘பிராட்’ எனவும் , வழக்குகளை  விரித்து  விளக்கி  ஒழுங்குபடக்  கூறுதலானாதல் , அரசன்  இல்லாதபொழுது  நீதிமன்றத்தவரோடு  கூடி  நியாய  அநியாயங்களை  விசாரித்து  உணர்தலானாதல் , விசேடமாக  எடுத்துரைத்தலானாதல்  பற்றி விவாக  எனவுங்  கொண்டு  அச்  சொற்குப்  பொருளுணரப்படும் .                      66

( “பிராட்விவாக”  என்னும்  வட  சொல்  பண்புத்தொகையாகும் . முதற்கண்  உள்ள  பிராட்  என்பது  பிரச்ச  என்னும்  முதனிலையடியாகவும் , பின்னுள்ள  “விவாக”  என்பது  “வி”  என்னும்  உபசர்க்கத்தோடு  கூடிய  விவ  என்னும்  முதனிலையடியாகவும்  பிறந்தனவாம் . இச்சொற்களின்  பொருள்களே  இச்சுலோகத்தில்  விளக்கப்பட்டன . )

      நியாயமன்றத்தின்கண்  இருந்து  பிறர்க்கு  நலஞ்  செய்தல், தகுதியுடைமை , நன்மக்கட்டன்மை யாகிய  இவற்றை  யுடைய  நீதிமன்றத்தாரும்  விவாதகாரியங்களை  ஆராய்பவராவர் .                  67

     ஒருவனைப்  பிறன்  ஒருவன்  அறநூற்கும்  ஆன்றோ ராசாரத்திற்கும் மாறுபட்ட  நெறியால்  துன்புறுத்துவானாயின் , அங்ஙனந் துன்புறுத்தப்பட்டோன்  அரசன்பால்  முறையிட்டுத்  தெரிவித்துக் கொள்வது யாது – அதுவே  வழக்கு [வியவகாரம் ] என்று  கூறப்படும் .68

     அரசனாதல் , அவனைச்  சார்ந்த  அதிகாரிகளாதல்  தாமே  விவாதச்  செயல்களை  உண்டுபண்ணுதலாகாது .  அரசன்  காமம் , வெகுளி, பொருணாசை  என்னுமிவை  காரணமாக  யாரையுந்  துன்புறுத்தலாகாது . வாதி  பிரதிவாதிகளால்  தெரிவித்துக்கொள்ளப் படாத  வழக்குகளை  அரசன்  தன்  மதியால்  ஆராய்ச்சிக்கு  எடுத்துக்கொள்ளலாகாது .                                                                                 69

     அரசன் , சலங்களையும் , அபராதங்களையும் , அரசியல்  சம்பந்தமான  விவாதங்களையும்  அறிவிப்போரின்றித்  தானே  விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளல்  வேண்டும் . அன்றி , இவற்றைத்  தோபகர்  முகமாகவும்  சூசகர்  முகமாகவும் , உண்மையாகக்  கேட்டும்  ஆராய்ந்து  கொள்ளலாம் .                                                                                 70

( தோபகன் , சூசகன்  ஆகிய  இவரைப்பற்றிப்  பின்வருஞ்  சுலோகங்களிற்  காண்க . சலங்கள்  ஐம்பது  வகைப்படும் . அவற்றைப்  பின்வரும்  73-முதல்  82 வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க . அபராதம்  பத்து  வகைப்படும் . அவற்றை 83-84 ஆம்  சுலோகங்களிற்  காண்க . விவாதங்கள்  22-வகைப்படும் . அவற்றை  85-முதல்  88  வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க .)

      எவன் , அறநூல்வழி  ஒழுகுகின்றவனாய்  அரசனால்  ஏவப்படாமலே  சலம்  முதலியவைகளை  அரசற்கு  முதலில்  தெரிவிக்கின்றானோ  அவன்  தோபகன்  என்று  கூறப்படுவான் .                                                     71

( நாட்டின்கண்  நிகழும்  சலம்  முதலிய  தீங்குகளை  அரசற் குணர்த்தும்  அறவொழுக்க முடையோன்  தோபகனாவான் .)

     எவன் , பிறர்  குற்றங்களைக்  கண்டு  கூறுதற்பொருட்டு  அரசனால்  நியமிக்கப்பட்டவனாய்  அங்ஙனமே  அக் குற்றங்களை  யறிந்து  அரசற்கு  அறிவிக்கின்றானோ  அவன்  சூசகன்  என்று  கூறப்படுவான் .

5 . சலங்கள்

     [1] தெரு வழிக்குக்  கேடு  விளைத்தல் , [2] பிறரைப்  பழித்துரைத்தல் , [3] மதிற்சுவரேறிக் கடத்தல் , [4,5] தண்ணீர்ப்பந்தல், இல்லம்  இவற்றை  யழித்தல் , [6] மண்  முதலியவற்றால்  அகழியைத்  தூர்த்தல் , [7] அரசனது  தவறுதலை  வெளிப்படுத்தல் , [8 , 9 , 10 , 11] ஒருவன்  அநுமதியின்றி  அவனுடைய  இல்லம் , உவளகம் , பொருட்சாலை , அடிசிற்சாலை  ஆகிய  இவற்றுட்  புகுதல் , [12] ஒருவன்  உண்ணுங்கால்  பார்த்தல் , [13 ,14 , 15 , 16 ] இடம்  நோக்காது  விரும்பியவாறு  மலம்  மூத்திரங்களைக்  கழித்தல் , எச்சிலுமிழ்தல் , அபானவாயு  விடுதல் , [17] அரசன்  முன்னிலையில்  வீராசனமிட்டிருத்தல் , [18] அரசன்  எதிர்முகத்தைத்  தடைதடுத்தல் , [19] அரசற்குரிய  வேடத்தினுஞ்   சிறந்த  வேடந்தரித்தல் , [20] ஒருவன்  இல்லத்துள்  தடுக்கப்பட்டும்  மீறிப்புகுதல் , [21, 22]  பிறர்  இல்லத்தின்கட்  கள்ள  வழியாற்  புகுதல் , அசமயத்திற்  புகுதல் , [23 , 24 , 25 ] பிறர்  படுக்கை  இருக்கை  பாதுகைகளில்  அவர்  அநுமதியின்றிப்  படுத்தல்,  இருத்தல்,  பாதங்களாற்றீண்டல் , [26] அரசன்  படுக்கையிற்  சயனித்துக்  கொண்டிருக்குங்கால்  அருகில்  நிற்றல் , [27] தன்  அரசனுடைய  பகைவர்க்குப்  பணி செய்தல் , [28] பிறனாற்  றரப்படாத  இருக்கையைத்  தானே  பற்றிக்கொண்டு  அதன் கண்  இருத்தல் , [29, 30, 31 ] பிறர்  ஆடைகளையும் , அணிகலன்களையும், பொன்களையும்  அவரவர்  அநுமதியின்றி  உபயோகித்தல் , [32] ஒருவன்  கையிலுள்ள  தாம்பூலத்தைத்  தானே  வலிந்து  பற்றிக்கொண்டு  உபயோகித்தல் , [33] “பேசுக”  எனப்  பிறர்  வேண்டாதிருக்குங்கால்  மிகுதியாகப்  பேசுதல் , [34] தன்  அரசனைப்  பழித்துரைத்தல் , [35] அரசற்கெதிரில்  ஒற்றை  ஆடை  உடுத்துச்  செல்லல் , [36] எண்ணெய்  பூசிய  உடலுடையனாய்ச்  செல்லல் , [37]  தலைமயிரை  விரித்துக்கொண்டு  செல்லல் , [38] உடல்  முழுதையும்  மறைத்துச்  செல்லல் , [39] சித்திரம்  வரைந்த உடலொடு  சேறல் , [40]  பூமாலை  யணிந்து  செல்லல் , [41]  உடுத்த  ஆடை  அலையச்  சேறல் , [42]  தலையை  ஆடை  முதலியவற்றால்  மறைத்துச்  சேறல், [43]  பிறர்பாற்  குற்றங்காண  விரும்புதல் , [44] சூது , கள் , காமம்  முதலிய  விதனங்களில்  விருப்பம் , [45]  அரசற் கெதிரில்  ஆடையின்றிச்  செல்லல் , [46, 47, 48] அரசனுடைய  மூக்கையும்  செவிகளையும்  கண்களையும்  உற்று  நோக்கல் , [49] பற்குடைதல் , [50]  செவி , மூக்குகளைக்  குடைதல்  ஆகிய  இவ்வைம்பதும்  சலங்கள்  என்று  கூறப்படும் .                                     73-82

6 . விவாதத்  தானங்கள்

          [1]  அரசனுடைய  ஆணையைக்  கடத்தல் , [2] பெண் கொலை ,             [3]  வருணக்  கலப்பு , [4]  பிறர் மனை நயத்தல் , [5] களவு , [6] ஒரு  பெண்  தன்  தலைவனை யின்றிக்  கருப்பமுடையளாதல் , [7] கடுஞ்சொல் ,             [8]  சொல்லத்தகாதனவற்றைச்  சொல்லுதல்  முதலியன , [9] பிறரைக்   கடுமையாக  அடித்தொறுத்தல், [10] கருச்சிதைத்தல்  ஆகிய  இப்பத்தும்  அபராதங்கள்  என்று  கூறப்படும்.                                    83-84

          [1]  பிறர்க்கு  வெறுப்பு  விளைவித்தல், [2] பயிரை யழித்தல், [3] இல்லம்  முதலியவற்றில்  நெருப்பிடல் , [4] அரசற்குத்  தீங்கிழைத்தல் ,        [5]  அரச  முத்திரையை  அழித்தல் , [6] அரசனது  மறைவுச்  சூழ்ச்சியை  வெளிப்படுத்தல் , [7] சிறைப்பட்டிருப்போரை  விலங்கு  முறித்து  வெளிப்படுத்தல் , [8] உரியவன்  இல்லாத  பொருளை  விற்றல் , அதனைத்  தானஞ்  செய்தல் , அதனைக் கூறிட்டுக் கொள்ளல் , அதனைத் தண்டத்திற்குட்படுத்தல் , [9] அரசன்  ஆணை  மேற்கொண்டு  பறைசாற்றுதலை  மறைத்தல் , [10] உரியோனில்லாத  பொருளை  யழித்தல் , [11] அரசற்குக்  கிடைக்கவேண்டிய  இறைப்  பொருளைக்  கெடுத்தல் , [12] பிறர்  உறுப்புக்களை  வெட்டிக்  குறைத்தல்  என்னும்  இப்பன்னிரண்டும் ,  முற்கூறிய  அபராதம்  பத்தும் ,  ஆகிய  இருபத்திரண்டும்  அரசனால்  அறியப்படும்  விவாதத் தானங்கள்  என்று  அறிவுடையார்  கூறுவர் .                                                           85-88

( உரியவனில்லாத  பொருளை  விற்றன்  முதலிய  நான்கும்  ஒரு  பொருள்  பற்றினவாதலின்  ஒன்றன்பாற்படும்.)

     நீதிமன்றத்தில் வழக்குரைக்கும்  வாதி  கொடுந்தன்மை , கடுஞ்சொல் , அஞ்சத்தக்க  வேடம் , செருக்கு , மிகுசினம் , நீதிபதியோடு  ஒத்த  இருக்கையில்  இருத்தல் , மிக்க  இறுமாப்பு  ஆகிய  இவற்றையுடையனாயிருப்பின்  தண்டிக்கப்படுவனாவான் .             89

     வாதியால்  அரசற்குத்  தெரிவித்துக்  கொள்ளப்படுவது  ஆவேதனம்  என்னும்  பெயரையுடையதாகும் . நீதிபதி  முதலியோரிடத்துத்  தெரிவித்துக்  கொள்ளப்படுவது , எல்லாவற்றையும்  விளக்கமாகத்  தெரிவிக்கும்  “மொழி” யாகும் ;  அதுவே  பூருவபக்கமென்றுங்  கூறப்படும் . வாதியால்  வேண்டிக்கொள்ளப்பட்ட  நீதிமன்றத்தார்  அப்  பூருவபக்கத்தை  உண்மையாக  ஆராய்ந்து  அதன்  சான்றுகளிற்  குறையுள்ள தாயின்  நிறைவித்தலும் , மிகையாகவிருக்குமாயின்  விலக்குதலுஞ்  செய்தல்  வேண்டும் . அரசன்  சான்று  கூறுவாரை  வாதியாற்  குறிப்பிடச்செய்து  பின்  தனது  சிறந்த  முத்திரையால்  அடையாளமிடல்  வேண்டும் .                                                                   90-92

( மொழி – இதனைப்  பாஷை  யென்ப  முதனூலார் . முதலில்  அரசனிடத்துத்  தெரிவித்துக்கொள்ளும்  ஆவேதனத்தைப்  பற்றி விரித்து  விளக்கிக்  கூறுவது  பாஷை  அல்லது  பூர்வபக்கம்  என்று  கூறப்படு மென்பதாம் . )

     வாதியால்  அங்ஙனங்  கொணரப்பட்ட  பூருவபக்கத்தை  விருப்பம் , அச்சம் , பொருணாசை  காரணமாக  ஆராய்ந்துபாராமல்  எவ்வதிகாரிகள்  தீர்ப்புச்செய்து  விடுகின்றார்களோ  அத்தகைய  நீதிமன்றத்தார்  முதலியோரைத்  தண்டித்து  அவர்  செய்த  தவறுதலை  நினைவுறுத்தற்  பொருட்டு  அவ்வதிகாரத்தினின்றும்  அவரை  ஒழித்து விடல்  வேண்டும் .                                                                                                  93

     அரசன்  தன்பால்  வரும்  வழக்குக்களுள்  எடுத்துக்கொள்ளத்தக்கது  இன்னது  தகாதது  இன்னதென்பதை  நன்கு  ஆராய்ந்து  தக்கதாயின்  முடிவு  செய்தற்கு  எடுத்துக்கொள்ளல்  வேண்டும் . பூருவ பக்கத்தை  ஏற்றுக்கொண்ட  பின்னர்  வாதியைத்  தன்  ஆணையால்  தடைப்படுத்தல்  வேண்டும் .                                                                             94

( வாதியைத்  தடைப்படுத்தலாவது : அவனாற்  கொண்டுவரப்பட்ட  வழக்கு  ஆராய்ந்து  தீர்க்கப்படுங்காறும்  அவனைத்  தன்  ஆணக்குட்படுத்தல் . அஃது  அவன்  வழக்குப்  பொய்மை யுடைத்தாயின்  அவனை  யொறுத்தல்  குறித்தாம் . பின்  வருஞ்  சுலோக  முதலியவற்றிற்  பிரதி வாதியைத்  தடைப்படுத்தல்  கூறப்படும் . வாதி பிரதிவாதிகளிருவரும்  இங்ஙனம்  தடைப்படுத்தப்படுதலைப்  பின்வரும்  128-ஆம்  சுலோகத்தானுமுணர்க . )

7 . அரசனது  ஆணை  மேற்கொண்டு  தடுத்தல்

     வழக்குத்  தொடங்கும்  வாதி  நியாயமென்று  கூறத்தக்க  நெறியில்  நில்லாதவனும் , சொற்பிறழ்ச்சி யுடையவனுமாகிய  பிரதிவாதியை  அரசன்  வரவழைத்துக்  காணும்வரை  அரசனது ஆணை  மேற்கொண்டும்  சூளுறவு  கூறியும்  தடுத்தல்  வேண்டும் . அங்ஙனந் தடுக்குங்கால் , உண்மை யுரைத்தல் , மடியின்மை , குறிப்பறிதலாகிய  இவற்றை யுடையராய்  வன்மைமிக்க  அம்பு , வாள்  முதலிய  படைகளை  அழகுறத்  தாங்கி  நிற்கும்  சிறந்த  மனிதரைத்  துணைக்கொண்டு  செய்தல்  வேண்டும் .                                                95-96

     அரசனது  ஆணை மேற்கொண்டு  தடுத்தல்  காலம் , இடம் , தொழில், வேற்றிடம் பெயர்தல்  ஆகிய  இந்  நான்கையும்  பற்றி  நிகழ்வதால்  அது  நான்கு  வகைப்படும் . இங்ஙனந்  தடைப்படுத்தப்பட்ட  மனிதன்  அத்  தடையை  மீறலாகாது .                                                                          97

( ஒருவன்  மற்றொருவற்கு  முறைதவறித்  தீங்கு  செய்வானாயின்  செய்யப்பட்டோன்  செய்தவனை  அரசனது  ஆணைமேற்கொண்டு  தடை  செய்தலை “ஆசேதம்”  என்று  முதநூல்  கூறும் . அங்ஙனந்  தடுக்குங்கால்  கால  அளவு  குறித்தும் , இடம்  வரையறுத்தும் , தொழில்  மறுத்தும் , வேற்றிடம்  பெயர்தலை  யொழித்தும்  தடுக்கலாம்  என்பது  கருத்து . )

     ஒருவன்  பிறனொருவனை  அரசனது  ஆணை  மேற்கொண்டு  இந்திரியத்தடையாலும் , கடுஞ்சொற்களாலும் , வரம்பிகந்த  ஆணைகளாலும்  தகுதியின்றித்  தடைப்படுத்துவானாயின் , அவன்  அரசனால்  தண்டிக்கப்படுவனாவான் . இத்  தகுதியில்லாத  தடைகளை  யொழித்து  முறைப்படி  தடுப்பவன்  அங்ஙனந்  தண்டிக்கப்படுவானல்லன் .                                                                            98

( இந்திரியத்தடையாவது – மலம்  மூத்திரம்  முதலியவற்றை  யொழித்தல் கூடாதென்று  தடைப்படுத்தல் .)

     தடைப்படுத்தற்குரிய  காலத்தில்  தடைப்படுத்தப்பட்ட  ஒருவன்  அத்தடையை  மீறுவானாயின்  அவன்  தண்டத்திற்குரியனாவான் . தடை செய்வோன்  உரியதல்லாக்  காலத்தில்  அங்ஙனந்  தடை  செய்வானாயின்  அவனும்  தண்டம்  எய்துவான் .                                    99

8 . நீதிமன்றத்திற்கு  அழைக்கப்படுபவரும் அழைக்கப்படாதவரும்

     ஒருவன் , எவனைப்பற்றி  உண்மை  கண்டாதல் , ஐயத்தானாதல்  அபியோகம்  செய்துள்ளானோ  அக்குற்றவாளியை  அரசன் தன்  முத்திரையிட்ட  பத்திரத்தானாதல் , சேவகர்களானாதல் , நீதிமன்றத்திற்கு  அழைப்பித்தல்  வேண்டும் .                                      100

( அபியோகம் – ஒருவன்  தனக்குப்  பிறன்  செய்த  தீங்கை  அரசற்குத்  தெரிவித்தல் . உண்மை  ஐயங்களைப்  பின்   வருஞ்  சுலோகத்திற்  காண்க .)

     தீயவர்களின்  கூட்டுறவாலும் , முன்னைச்  செயல்களின்  அநுபவத்தாலும்  ஒருவன்  மாட்டு  ஐயத்தையும் , களவு  முதலியவற்றாற் கவர்ந்த  பொருளைக்  காட்சியளவையிற்  காண்டலால்  உண்மையையும்  அறிவுடையார்  உணர்வர் .              101

     நோயாளர் , பாலர் , வயோதிகர் , நிலைகெட்டிருப்போர் , கடக்க  முடியாத  பல்வகைச்  செயல்களில்  ஈடுபட்டிருப்போர் ,  குற்றம்  இழைத்ததாகக்  கூறப்படுங்காலத்தில்  குறித்த  இடத்தில்  இல்லாதிருப்போர் , காமம்  முதலியவற்றில்  ஈடுபட்டிருப்போர் , அரசியற்  காரியங்களையும்  திருவிழாக்  காரியங்களயும்  மேற்கொண்டிருப்போர் , கட்குடித்துக்  களித்திருப்போர் , பித்தர் , அறிவு மழுக்கமுடையோர்  , நோய்கோட்பட்ட  பணியாளர்  ஆகிய  இவர்களை  அரசன்  நீதிமன்றத்திற்கு  அழைத்தலாகாது .                  102

( இங்குக்  கூறப்பட்டோரை  இன்றியமையாத  காரியம்  நேர்ந்துழி  அழைக்கலாமென்று  பின்னர்க்  கூறுவராதலின் , ஈண்டுக்  கூறியதைப்  பொது  விதியாகக்  கொள்க . காமத்தில்  ஈடுபட்டிருப்போரை  அக்காம  இன்ப  நுகர்ச்சிக்காலத்தில்  அழைத்தலாகாதென்பது  கருத்து . )

     உற்றாரையில்லா  யுவதி , உயர்ந்த  குடிகட்  பிறந்தவள் , பிரசவித்திருப்பவள் , எல்லா  வருணத்துமுள்ள  கற்பிற்  சிறந்தார் , மணஞ் செய்யப்படாத  கன்னி , கணவன்  இன்னானென்றறியப் படாதவள்  ஆகிய  இப்பெண்களையும்  நீதிமன்றத்திற்கு  அழைத்தலாகாது .                                                                                          103

     விவாக  முயற்சியை  மேற்கொண்டிருப்பவன் , நோய்கோட்பட்டவன்  வேள்வி  வினையில்  முயன்று  கொண்டிருப்பவன் , கட்காம  முதலிய  விதனங்களில் ஈடுபட்டிருப்பவன் , பிறனொருவனால்  வழக்குத்  தொடரப்பட்டிருப்பவன் , அரசியற்  காரியத்தில்  முயற்சி  மேற்கொண்டிருப்பவன்  ஆகிய  இவர்களை  அவ்வக்  காலங்களிலும் , பசு  மேய்த்துக் கொண்டிருக்குங்கால்  இடையர்களையும் , பயிர் தொழில்  செய்து  கொண்டிருக்குங்கால்  உழவர்களையும் , சிற்பத்  தொழில்  செய்து  கொண்டிருக்குங்கால்  சிற்பிகளையும் , போர்  செய்துகொண்டிருக்குங்கால்  போர்வீரர்களையும் , பதினாறு யாண்டுகட்குட்பட்ட  இளைஞர்களையும் , தூதரையும் , தானஞ்  செய்து  கொண்டிருக்குங்கால்  அது  செய்வோரையும் , விரதமேற்  கொண்டிருப்போரையும் , நிலை  பிறழ்ந்திருப்போரையும்  யாருந்  தடைப்படுத்தலாகது ; அரசன்  இவர்களை  நீதிமன்றத்திற்  கழைத்துலுங்  கூடாது .                                                                          104-106

( இங்குத்  தடைப்படுத்தலாகாதென்பது  விதியாகவும் , நீதிமன்றத்திற் கழைத்தலாகாதென்பது  அநுவாதமாகவும்  பகுத்துணர்தல்  வேண்டும் .)  

      ஆற்றைக்  கடக்குங்காலும் , புகுதற்கரிய  காட்டிலும் , தீங்குமிக்க  இடத்திலும் , எரிகொள்ளி  வீழ்தல்  முதலிய  பொல்லாத  நிமித்தங்கள்  நிகழுங்  காலத்திலும்  ஒருவன்  மற்றொருவனால்  தடுக்கப்படுவானா யின்  அப் பிறன்  தடைக்குட்படாமல்  மீறலாம் . அதனால்  அவன்  குற்றவாளியாகான் .                                                                                        107

      அரசன்  காலம்  இடங்களையும் , காரியங்களின்  பெருமை  சிறுமை களையும்  நோக்கி , முற்கூறிய  நோயாளர்  முதலியவர்களையும்  சிவிகை  முதலியவைகளில்  ஏற்றி  மெல்ல  மெல்லக்  கொண்டுவரச்  செய்யலாம் .                                                                                                         108

( நீதிமன்றத்திற்கு  அழைக்கத்தகாதவர்களையும்  இன்றியமையாச்  சமயத்தில்  அழைக்கவேண்டுமென்பது  இதனாற்  கூறப்பட்டது . )           

     எவன்  தன்னைக்  குறித்து  வழக்குத்  தொடரப்பட்டிருத்தலையறிந்து  காட்டில்  சென்று  துறவறநிலை  முதலியவற்றை  மேற்கொண்டுள்ளா னோ  அவனையும்  இன்றியமையாப்  பெருங்காரியங்களின்  நிமித்தம்  அரசன்  சினவாது அழைப்பித்தல் வேண்டும் .                                           109

      ஒருவன்  வாதியாயினும்  பிரதிவாதியாயினும்  தான்  வழக்கில்  அறியாதவனாகவும் , பிரதி  காரியங்களில்  தலைப்பட்டவனாகவும்  இருப்பின்  அப்பொழுது  அவ்வழக்கியலுணர்ந்த  மற்றொருவனைத்  தனக்குப்  பிரதிநிதியாக  நியமனஞ்  செய்யலாம் .                                   110

( சுற்றத்தாருள்  ஒருவனாதல் , வேதனம்  பெற்று  வழக்கு  நடத்தும்  வழக்கறிஞனாதல்  பிரதிநிதியாவார் .   இதனைப்  பின்வருஞ்  சுலோகங்களாலும்  விளக்கமாகக்  காணலாம் . )        

     வழக்கு  நடத்தும்  திறனில்லாதவர்  , அறிவிலார் , பித்தர் , வயோதிகர் , பெண்கள் , பாலர் , நோயாளர்  ஆகிய  இவர்களுக்கு  இவர்தம்  சுற்றத்தாருள்  ஒருவனாதல் , இவரால்  நியமிக்கப்பட்ட  மற்றொருவனாதல்  பிரதிநிதியாக  நின்று  இவர்தம்  வழக்கு  எதிர் வழக்குகளைப்  பற்றிப்  பேசலாம் .                                                               111

      ஒருவனுக்காக  அவன்  தந்தை , தாய் , நட்டோன் , உறவினன் , உடன்பிறந்தான் , சம்பந்தி  ஆகிய  இவருள்  யாரேனும்  வழக்குக்  கொணர்வரேல்  அரசன்  அவ்வழக்கை   ஏற்று  விசாரணை  நடத்தல்  வேண்டும் .                                                                                                          112

      ஒருவன்  மற்றொருவனால்  ஏவப்பட்டு யாதாயினும்   ஒரு  காரியத்தைச்  செய்வானாயின்  , அக்காரியம்  ஏவுதற்கருத்தாவாற்  செய்யப்பட்டதாக  அறிதல்  வேண்டும் . அது  விலக்கத்  தகாததாகக்  கருதப்படுவதாகும் .                                                                                          113

      ஒருவன்  தனக்குப்  பிரதிநிதியாக  நியமிக்கப்பட்டவற்கு  வழக்கிற்குரிய  பொருளளவிற்  பதினாறில்  ஒரு  கூறாதல் , இருபதிலொரு  கூறாதல் , அதனிற்  பாதியாதல் , அப்பாதியிற்  பாதியாதல் , அதனிற்  பாதியாதல்  வேதனமாகக்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                                            114

( இருபதிலொரு  கூறுக்குப்பின் , பாதியளவாகக்  கூறப்பட்ட  மூன்றும்  முறையே  நாற்பதிலொரு  கூறு , எண்பதில்  ஒருகூறு , நூற்றறுபதிலொரு  கூறாகக்  கணக்கிட்டுக்  கொள்ளல்  வேண்டும் . இவ்வளவுகள்  வழக்குக்களின்  பெருமை  சிறுமை  நோக்கிக்  கொள்ளப்படுவனவாம் . )    

      பிரதிநிதியாகவுள்ளவன் , பல  சனங்களால்  நியமிக்கப்பட்டுக்  காரியஞ்  செய்பவனாயிருப்பினும் , அவன்  நியமனத்திற்குரிய  வழக்குப்  பொருள்  மிக  அதிகமாக  இருப்பினும் , அவற்குக்  கொடுக்கப்படும்  வேதனம்  அதற்குத்  தகக்  குறைவாகவே  இருத்தல்  வேண்டும் . அங்ஙனம்  வேதனங்  கொடுத்தற்கு  ஆற்றலில்லாதவன்  அப்பிரதிநிதிக்கு  உணவு  முதலியவற்றிற்கு  வேண்டிய  அளவாதல்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                  115

( ஒருவன்  பெரும்  பொருள்  வழக்கிற்கும் , பலராலும்  நியமிக்கப்பட்டும் , முற்கூறிய  அளவுப்படி  வேதனம்  பெறுவானாயின்  அதனாற்  பல  சனங்களுக்கும்  பொருட்குறைவு  ஏற்படும் . இது  கருதியே  அவற்கு  மிகக்  குறைவான  வேதனம்  கொடுக்க வேண்டு மென்று  கூறப்பட்டது .)          

     வழக்கியல்பு  உணர்ந்தோன் , அறநெறி  யொழுகுபவனாயின்  அவன்  பிரதிநிதியாக  நியமித்தற்குரியனாவான் . அவன்  அவ்வொழுக்கமிலானாயின்  அங்ஙனம்  நியமித்தற்குரியனாகான் . மேற்கூறிய  அளவின்  மேற்பட்ட  வேதனம்  பெறும்  பிரதிநிதியை  அரசன்  தண்டிக்கக் கடவன் .                                                                           116

    எப்பொழுதும்  அரசன் , தன்  கருத்தின் வண்ணம்  பிரதிநிதியை  நியமித்தலாகாது , [ வழக்குரைப்போரே  நியமித்தல்  வேண்டும். ]  நியமனம்  பெற்ற  பிரதிநிதி , பொருணாசையால்  அந்நியமன  காரியத்திற்கு  மாறுபடச்  செய்வானாயின்  தண்டத்திற்குரியனாவான்.

     ஒருவற்குத்  தந்தையாகவும் , உடன் பிறந்தானாகவும் , புதல்வனாகவும் , அவனால்  நியமிக்கப்பட்ட  பிரதிநிதியாகவும்  இல்லாத  பிறனொருவன் , அவன் பொருட்டு  வழக்கு  நடத்துபவனாக  முன்  வந்து  அவ்வழக்கில்  மாறுபடக்  கூறுவானாயின் , அவன்  அரசனால்  தண்டிக்கப்படுபவனாவான் .                                                    118

      அரசற்குரிய  பணிப்பெண்கள் , தாம்  விரும்பியவாறு   ஒழுகும்  பெண்கள் , பொருட்பெண்டிர் , இழிகுலத்துப்பெண்கள் , பெரும்  பாவங்களைச்  செய்து  அதனால்  விலக்குண்ட  பெண்கள்  ஆகிய  இவர்கள்  நீதிமன்றத்திற்கு  அழைக்கத்தக்கவராவர்.                             119

      வழக்கைத்  தொடங்கிய  பின்னர்  வாதி பிரதிவாதிகளாகிய  இருவரும்  இறந்துவிடுவாராயின் , அவ்  வழக்கியல்பு  உணர்ந்த  அவர்தம்  மக்கள்  அதனைத்  தொடர்ந்து  நடத்தலாம் . அவ்விருவர்க்கும்  புதல்வர்  இலரேல்  அவ்வழக்கை  ஒழித்துவிடல்  வேண்டும் .                                                                                                             120

     மனிதக்கொலை , களவு , பிறன்  இல்லாளை  வலிந்து  பற்றல் , உண்ணத் தகாதவற்றை  உண்டல் , மணஞ்  செய்யப்படாத  கன்னியைக்  கவர்ந்து  புணர்தல் , கடுஞ்சொற்  கூறி  வைதல் , கடுமையாக  அடித்தல் , வஞ்சித்தல் , அரசற்குத்  தீங்கிழைத்தல் , பெருங்கொள்ளை  முதலியனவாகிய  இந் நிகழ்ச்சி  பற்றிய  வழக்குகளில்  இவற்றைச்  செய்தானொருவன்  தனக்குப்  பிரதிநிதியாக  மற்றொருவனை  நியமித்துக்  கொடுத்தலாகாது. தானே  நீதிமன்றஞ்  சென்று  வழக்கு  நடத்தல்  வேண்டும் .          121-122

    வழக்குத்  தொடரப்பட்டானொருவன் , அவ்வழக்கில்  அரசனால்  அழைக்கப்பட்டும்  தன்  சுற்றத்தார்  துணைவலியாற்  செருக்குற்று  நீதிமன்றத்திற்கு  வராதிருப்பின்  , அவனை  அரசன்  அவ்வழக்கிற்  கூறப்பட்ட  குற்றத்தின்  பெருமை  சிறுமைக் கேற்பத்  தண்டித்தல்  வேண்டும் .                                                                                                           123

( ஒருவன்  அரசனால்  அழைக்கப்பட்டும்  நீதிமன்றத்திற்கு  வாராதிருப்பின்  அவனைப்  பற்றிக்  கொணரப்பட்ட  குற்றத்திற்குத்  தக்க  தண்டத்தை  விசாரணையின்றிச்  செய்யவேண்டுமென்பது  கருத்து .)          

9 . பிணை  வாங்கும்  முறை

      துன்புறுத்தப்பட்ட  வாதியையும் , தூதனால்  அழைக்கப்பட்டு  வந்த  பிரதிவாதியையும்  கண்டபின்  அவ்விருவர்க்கும்  தகுதியான  பிணையாட்களைப்  பற்றி  அரசன்  சிந்தித்தல்  வேண்டும் .              124

      பல  சனங்களாலும்  நம்பப்படுதல் , திறமை, ஒருவர்க்கும்  ஆட்படாமை , சிறந்த  புகழ், பெரும்பொருள் , சொல்வழி நிற்கும்  ஆற்றல்  ஆகிய  இவற்றையுடைய  தக்கானொருவன் , நீதிபதி  முதலியோரை  நோக்கி , வாதியை யாதல்  பிரதிவாதியையாதல்    குறித்து  “இவனாற்  கொடுக்கப்படாத   பொருளை  யான்  கொடுத்து  விடுவேன் ; இவனை  வேண்டுங்கால்  நுங்கள்  பக்கல்  கொணர்ந்து காட்டுவேன் ;  இவனை  ஈட்டுப் பொருள்  கொடுக்கும்படி செய்வேன்; இவனைப்  பற்றி   நீங்கள்  ஒரு  பொழுதும்  சிறிதும்  அஞ்சவேண்டுவ தின்று ; நுங்களால் ஆணையிடப்பட்டும்  இவனாற்  செய்யப்படாத  காரியத்தை  யான்  செய்வேன் ; இவன்  வாழ்க்கைப்பொருள்   நிரம்பப்  பெற்றவனாதலாலும் , சோம்பலில்லாதவனாதலாலும்  பொய் கூறத்  துணியமாட்டான் . “  என்றிவ்வாறு கூறுவானாயின் , அவனை  அவ்  வழக்கு  நிகழ்ச்சியில்  வாதிக்காதல் , பிரதிவாதிக்காதல்   பிணையாளனாக  ஏற்றுக்கொள்ளலாம் .                                            125-127

      வழக்கிற்குரிய  சாதனங்களை  யுடையவர்களும் , தம்பொருளானா தல்  பிறருதவியானாதல்  இவ்விரண்டுமின்றி  அரசன்  தரும்  வேதனத்தானாதல் , தம்மையும்  இரு  முதுகுரவர்  முதலியோரையும்  பாதுகாப்போருமாகிய  வாதி பிரதிவாதிகளைத்  தடைப்படுத்திப்  பின்னர்  அவர்தம்  சாதனங்கள்  பொய்யாங்கொலோ  என்னும்  ஐயத்தால் , உண்மையைக்  காண  விரும்பும்  அரசன் , வழக்காராயத்  தொடங்கல்  வேண்டும் .                                                                                  128

10 . பக்க  நிரூபண  முதலியன

          முதலில்  தெரிவிக்கப்படும்  மேற்கோட்  குற்றமில்லாததும் , தக்க சாதனங்களோடு  கூடியதும் , உலகியற்கு  ஒத்ததும் , ஐயமின்றித்  துணியப்பட்டதும்  ஆகிய  முறையீடு , பக்கமாகுமென்பர்  அவ்வியல்பு  உணர்ந்தோர் .                                                                                                    129

( முறையீடு – பிறரால்  நலியப்பட்டானொருவன்  அதனை  அரசற்குணர்த்தி  நீதி  செலுத்தும்  வண்ணம்  வேண்டிக்  கோடல் .)

     உரிய  பொருளை  யொழித்து  வேற்றுப்பொருளை  யறிவித்தல் , கருதிய  பொருள்  இல்லாதிருத்தல் , அளவை  நீதி  நூல்களுக்கு  ஒவ்வாமை , எழுதவேண்டிய  அளவிற்  குறைத்தெழுதல் , அவ் வளவில்  மிக்கெழுதல் , யாதாயினும்  ஒன்று  தவறிப்போதல்  ஆகிய  இவைகளே  மேற்கோண்மொழிக்  குற்றங்களாகக்  கூறப்படுவனவாம்.

( மேற்கோண்மொழிக்  குற்றங்களைப்  பாஷாதோஷம்  என்று  முதனூல்  கூறும்.)

      நிகழ்ச்சியின்மை [ அப்பிரசித்தம் ] , தனக்குக்  கேடின்மை [நிராபாதம்], பொருளின்மை [நிரர்த்தம்] , பயனின்மை [நிட்பிரயோசனம்] , இயலாமை [அசாத்தியம்] , முரண் [விருத்தம்], ஆகிய  இவை  பக்கப்  போலிகளாகும் . இவற்றை  அரசன்  ஏற்றுக்கொள்ளலாகாது .                                                                                131

( பக்கப் போலியைப்  பஷாபாஸம் என்று  முதநூல்  கூறும் .)

      உலகத்துள்ள  எவராலும்  கேட்கப்படாததும் , காணப்படாததும்  நிகழ்ச்சியின்மை [ அப்பிரசித்தம் ] என்னும்  பக்கப்  போலியாகும் . அவற்றிற்கு  உதாரணம்  முறையே  “யான்  ஊமனால்  வையப்பட்டேன்”   என்பதும், “மலடி  மகனால்  அடிக்கப்பட்டேன்”  என்பதுமாம் .                                                                                                       132

      பிரதிவாதியைப்  பற்றி  “அவன்  தன்  இல்லத்திற்  படிக்கின்றான் ; இனிய   குரலுடன்  பாடுகின்றான் ; இன்புற்று  வாழ்கின்றான் ; என்  இல்லத்திற்கு  அணிமையில்  தெருப்பக்கம்  நோக்கித்  தன்  இல்லத்திற்கு  வாயில்  அமைக்கின்றான் “  என்று  இன்னோரன்ன  நிகழ்ச்சிகளை  வாதி  தன்  பக்கத்திற்  குறிப்பிடின் , அவை  தனக்குக்  கேடின்மை  நிராபாதம்  என்னும்  பக்கப் போலிகளாகும் . அவை  பயனின்மை [ நிட்பிரயோசனம் ] என்னும்  பக்கப் போலிகளுமாகும் .

      “என்னால்  மணஞ்  செய்து  கொடுக்கப்பட்ட  என்  மகள்பால்  இம் மருகன்  இடைவிடாது  கூடி  இன்புறுகின்றான் ; அங்ஙனம்  இன்புற்றும்  கருத்தரித்திலள் ; இவள்  எக்காரணத்தால்  மலடியாயினள்? என்றிங்கனங்  கூறுதல்  இயலாமை [அசாத்தியம் ] என்னும்  பக்கப்போலியாகும் .  “உயிர்  நீங்கிய   இவன்  பேசுகின்றானில்லை  அஃது   எக்காரணத்தால்?”  என்றிங்ஙனங்  கூறுதல்  முரண்  [விருத்தம்]  என்னும்  பக்கப்போலியாகும் .                                                                     134

      “இவ்வுலகத்துள்ளார்  என்  துன்பங்கண்டு  வருந்துதலும் , என்  இன்பங்கண்டு  மகிழ்தலும்  செய்கின்றாரில்லை”  என்றிங்ஙனம்  கூறுதல்  பொருளின்மை [நிரர்த்தம்]  என்னும்  பக்கப்போலியாகும் . இது  பயனின்மை  என்னும்  பக்கப்போலியுமாம் .                                  135

      ஒரு  காரியத்தை  நீதிமன்றங்கொணர்ந்து  கேட்கச்  செய்து  பின்  விட்டொழிப்பவனும் , மாறுபடக்  கூறுவோனும் , எதிரி  பக்கத்தைக்   கடைப்பிடித்து  அதனாற்  பிறழ்ச்சி  யடைந்தோனுமாகிய  வாதிகள்  தண்டத்திற்குரியராவர் .                                                                                   136

      மேற்கோளாகக்  கொண்டுவரப்பட்ட  பூருவபக்கம்  எடுத்துக்கொள்ளத்  தக்கதா,  தகாததா  என்று  ஆராய்ந்து , எடுத்துக்கொள்ளத்  தக்கதாகத்  துணியப்பட்டபின் , அதற்குரிய  சாதனங்களால்  அதனை  வாதி  நிலைப்படுத்தல்  வேண்டும் . அதன்பின்  பிரதிவாதியை  உத்தரம்  எழுதும்படி  செய்தல்  வேண்டும் .

( பூருவபக்கமாவது : வாதி  அரசன்பால்  முதலில்  தெரிவித்த  வழக்குரையாகிய  ஆவேதனத்தைப்  பற்றிப்  பின்  நீதிமன்றத்திற்  கூறும்  விளக்கவுரையாகும் . இதனை  91-ஆம்  சுலோகத்திற்  காண்க .  உத்தரம் – பிரதிவாதி  அவ்  வழக்குரையை  மறுத்துரைத்தல் . )

      அவ் வழக்கில்  முதலில்  வாதியின்பாலும் , அதன்பின்  பிரதிவாதியின்பாலும்  கேட்கவேண்டியவற்றைக்  கேட்டல் வேண்டும் . அங்ஙனம்  அவ்விருவரையுங்  கேட்டபின் , நீதிபதி  அவ்வழக்கைப்  பற்றி  நீதிமன்றத்தார்  முதலியோர்களின்  கருத்துக்களைத்  தெரிவிக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                        138

      பிரதிவாதியால்  வாதியின்  முன்னிலையில்  வாதி  கொணர்ந்த  பூருவபக்கத்திற்கு  உத்தரம்  எழுதப்படல்  வேண்டும் . அவ்வுத்தரம்  அப்பூருவபக்கத்தை  மறுப்பதாகவும் , உறுதியுள்ளதாகவும் , ஐயமில்லாததாகவும் , தெளிவுடையதாகவும் , எளிதிற்  பொருளுணரத்  தக்கதாகவும்  இருத்தல்  வேண்டும் . இங்ஙனம்  எழுதப்படும்  உத்தரமே  குற்றமற்றதாகும் .                                                                                                139

      ஐயத்திற்கிடமானதும் , நிகழும்  விவாதத்தினின்றும்  வேறுபட்டதும் மிகச்  சுருக்கமானதும் , மிக  விரிவானதும் , பூருவபக்கத்தின்  ஏகதேசத்தைப்  பற்றியதும்  ஆகிய   உத்தரங்கள்  தக்க  உத்தரமாகா .

      அழைக்கப்பட்ட  வாதியாதல் , பிரதிவாதியாதல்  தொடங்கிய  வழக்கைப்  பற்றி  ஒன்றுஞ்  சொல்லவில்லையாயின்   தோல்வியுற்றவராய்த்  தண்டத்திற்குரியராவர் .                                       141

      பூருவபக்கம்  உண்மையாயிருக்குங்கால் , அதற்குப்  பிரதிவாதி  உத்தரங்  கொடுக்கவில்லையாயின் , அவனைச்  சாமதான  முதலிய  உபாயங்களால்  வழக்கிற்  குறிப்பிட்ட  பொருளைக்  கொடுக்கும்படி   செய்தல்  வேண்டும் .                                                                                         142

      வாதியாதல் , பிரதிவாதியாதல்  அறியாமையாலுங்  கபடத்தாலும்  தம்  பூருவபக்க  உத்தரங்களிற்  சொல்லாதொழிந்த  செய்திகளை  அவ்விருவரிடத்தும்  வினாவப்படுங்  கேள்விகளால்  அறிந்துகொள்ளல்  வேண்டும் .                                                                                                            143

11 . எதிர்மொழியின் [ உத்தரத்தின் ] வகைகள்

            உண்மை , பொய்ம்மை , பிரத்தியவற்கந்தனம் , பூருவநியாயம்  என  எதிர்மொழி  நான்கு  வகைப்படும் .                                                    144

      வாதியாற்  கூறப்பட்ட  உண்மை  மொழிகளைப்  பிரதிவாதி  உடன் படுவானாயின் , அஃது  உண்மை  உத்தர மென்றறியப்படும்.  அதனைப்  பிரதிபத்தி  என்றுங்  கூறுவர் .                                                    145

      பிரதிவாதி , வாதியாற்  கூறப்படும்  பூருவபக்க  மொழிகளைக்  கேட்டு  அவற்றைச்  சொல்லாலும்  பொருளாலும்  தடுத்துரைப்பானா யின்  அது  பொய்ம்மை  யுத்தர மென்றறியப்படும் .                               146

      “இது  முற்றும்  பொய்”  எனவும்  “இதனை யான் அறிவேனல்லேன்” எனவும் , “காரியம்  நிகழ்ந்ததாகக்  குறிப்பிட்ட  காலத்தில்  யான்  அந்நிகழ்ச்சி  இடத்தில்  இருந்ததில்லை “  எனவும், “அக்காலத்தில்  யான்  பிறந்ததே  இல்லை “  எனவும்  பிரதிவாதி  கூறும்  முறை  பற்றிப்  பொய்மை  யுத்தரம்  நான்கு  வகைப்படும் .                                             147

      வாதியா  லெழுதப்பட்ட  பூருவபக்கப்  பொருள்களைப்  பிரதிவாதி  முற்றும்  அங்கீகரித்து  அங்ஙனம்  நேர்ந்ததற்குரிய  காரணத்தைக்  கூறுதல்   பிரத்தியவற்கந்தனம்  என்னும்  உத்தரமாகும் .                      148

( இவ்வுத்தரம் , வாதியின்  வழக்கிற்  கூறப்பட்ட  பொருள்களைப்  பிரதிவாதி  உடன்பட்டு , வேறுவிதமாக  அங்ஙனம்  நேர்ந்தற்குரிய  காரணங்களைத்  தெரிவித்து , வழக்கை  விலக்கிவிடல்  வேண்டுமென்று  கூறுவதாகும் .  )

       “இவ்விடயமாக  இவனோடு  எனக்கு  முன்னரே  வழக்கு  நேர்ந்ததுண்டு ; அப்பொழுது  இவன்  தோல்வி  யெய்தினான்”   என்று  பிரதிவாதி  கூறுவானாயின் , அது  பூருவநியாய  மென்னும்  உத்தரமாகும் .                                                                                                      149

( இப்பூர்வ நியாயோத்தரம்  முன்னொரு  நீதிபதியால்  தீர்ப்புச்  செய்யப்பட்டு  அதன்  மேற்  மற்றொரு  நீதிபதியினிடத்து  அகாரணப்பட்ட  வழக்கைப்  பற்றியதாகும் . )

      “இவன்  முன்னர்   என்னால்  தோல்வியுற்றானென்பதை  வெற்றிப்  பத்திரத்தாலும் , நீதிமன்றத்தாராலும் , சான்று  கூறியவராலும்  யான்  உறுதிப்படுத்துவேன்”  என்றிங்ஙனம்  பிரதிவாதி  கூறுமுகத்தால்  பூருவ நியாய மென்னும்  உத்தரம்  மூன்றுவகைப்படும் .                      150

      வாதி பிரதிவாதிகளுடைய  பூருவபக்கமொழியையும் , உத்தரத்தையும் ஒருவர்க்கொருவர் முன்னிலையில்  வாங்கவேண்டும்.  அங்ஙனம்  வாங்காத   நீதிமன்றத்தார் , கள்வரை யொப்பத் தண்டம்  எய்துதற்குரியராவர் .                                                                                         151

( இதனால் , வாதி  தனக்குள்ள  குறையைத்  தனியே  அரசனிடம்  வந்து  தெரிவித்துக் கொள்வது  ஆவேதனம்  என்பதும் , பின்  நீதிமன்றத்தில்  பிரதிவாதி  முன்னிலையில்  அவ்  ஆவேதனத்தைப்  பற்றி  விளக்கிக்  கூறுவது  பூருவபக்கம்  என்பதும்  போதரும் . வாதி  தன்  பூருவபக்கத்தை  நீதிமன்றத்தில்  பிரதிவாதி  முன்னிலையிலும்  தெரிவிக்க  வேண்டுமென்பதாம் . )

      பூருவபக்கபத்திரமும் , உத்தரபத்திரமும் , நன்கு  ஆராயப்பட்டுக்  குற்றமில்லாதனவாயிருப்பின்  அதன்மேல்  வாதி  பிரதிவாதிகளுடைய  பத்திரம் , சான்று , ஆட்சி  முதலிய   சாதனங்களே  தீர்ப்புக்குக்  காரணங்களாகும் .                                                                                              152

( இருவருடைய  பத்திரங்களும்  குற்றமற்றனவாக  ஏற்றுக்  கொள்ளப்பட்டபின் , அவர்தம்  சான்று  முதலிய  சாதனங்களின்  வன்மை  மென்மை  நோக்கி  நீதிபதி  தீர்ப்புச்  செய்தல்  வேண்டுமென்பது  கருத்து .)

      ஒரு  வழக்கிற்குப்  பூருவபக்கம்  முதற்பாதமாகவும் , உத்தரம்  இரண்டாம்  பாதமாகவும் , சான்று  முதலிய  சாதனங்கள்  மூன்றாம்  பாதமாகவும் , தீர்ப்புச்  செய்தல்  நான்காம்  பதமாகவும்  உள்ளன .   153

      பூருவபக்கங்  காரியமெனவும் , சான்று  முதலிய  சாதனங்கள்  கிரியை  எனவும்  கூறப்படுவனவாம் . ஆதலால்  வாதி , வழக்கின்  மூன்றாம்  பாதமாகிய  கிரியையினால்  தன்  பக்கத்தை  உண்மைப்படுத்தல்  வேண்டும் .                                                                     154

      உண்மையுத்தர மில்லாத  வழக்குகளெல்லாம்  நான்கு  பாதங்களையுடையனவாகும் .                                                                        155

 ( பிரதிவாதி  வாதியின்  வழக்கை  உண்மை  யென்றுடன்பட்டு  அவன்  வேண்டுகோளை  நிறைவேற்றிவிடின் , அவ்வழக்கில்  மூன்றாம்  பாதமாகிய  கிரியையும், நான்காம்  பாதமாகிய  தீர்ப்பும்  பயனிலவாதலின்  உண்மை  உத்தரமுள்ள  அவ்வழக்கில்  எஞ்சிய  இரண்டு  பாதங்களே  உள்ளன வென்றறியப்படும் . )

      நீதிபதி  முதலியோர்  தம்பால்  வரும்  வழக்குகளை  வந்த  முறைப்படியாதல் , காரியத்தின்  பெருமை  நோக்கியாதல் , எவர்க்குத்  துன்பம்  மிகுதியாக வுள்ளன?   எக்காரியம்  மிக  அதிகமாகவுள்ளன?  என்றிவ்வாறு  பகுத்துணர்ந்தாதல், அந்தணர்  முதலிய  வருண முறை  பற்றியாதல்  முறைப்படுத்து  முதற்கட்டொடங்கி  விசாரித்தல்  வேண்டும் .                                                                                                    156-157

      நீதிமன்றத்தினர் , பிரதிவாதியினிடத்தினின்றும்  உத்தரம்  பெற்றபின் , வாதி  பிரதிவாதிகளாகிய  இருவருள்  ஒருவற்குச்  சான்று  முதலிய  சாதனங்களைப்  பற்றிச்  சிந்தித்தற்பொருட்டு  அவகாசங் கொடுத்தல்  வேண்டும் .                                                                                    158

 ( இன்ன  இன்ன  வழக்கில்  இன்னார்  இன்னார்  சான்று  முதலிய  சாதனங்காட்டல்  வேண்டுமென்று  பின்  161-ஆம்  சுலோகத்திற்  கூறுவராதலின் , அப்பொறுப்புடையாரைக்  குறித்து  ஈண்டுப்  பொதுவாகக்  கூறப்பட்டது . )

     தன்  பக்கத்தைச்   சந்தித்தற் பொருட்டு  அவகாசம்  பெற்றவன்  பத்திரம்  முதலிய  சாதனங்களால்  தான்  மேற்கொண்ட  எல்லாக்  காரியங்களையும்  உண்மையாக  உறுதிப்படுத்தல்  வேண்டும் .    159

      ஒரே வழக்கில்  சான்று  முதலிய  சாதனங்காட்டும்  பொறுப்பு , வாதி  பிரதிவாதிகளாகிய  இருவர்க்கும்  இன்று ; இவ் விருவருள்  ஒருவனே   காட்டற்பாலன் .                                                                                                  160

( இச்சுலோகத்திற்கு  இவ்வாறன்றி , “ஓரே  வழக்கில்  வாதி  பிரதிவாதிகள்  இருவரும்  காட்டும்  சான்று  முதலிய  சாதனங்களெல்லாம்  உண்மையாக  மாட்டா ; இவ் விருவருள்  ஒருவர்  காட்டும்  சாதனங்களே  உண்மையாகும் “  என்றிக் காலவியல்புக்  கேற்றவாறு  உண்மை  என்னுஞ் சொல்லை  வருவித்துப்  பொருள்  கூறுதலும்  பொருந்தும் . )

      சான்று  முதலிய  சாதனங்  காட்டும்  பொறுப்பு , பொய்ம்மை யுத்தரங்  கொடுக்கப்பட்ட  வழக்கில்  வாதியின்பாலும்  , பிரத்தியவற்கந்த னோத்தரங்  கொடுக்கப்பட்ட  வழக்கிலும்,  பூருவ  நியாயோத்தரங்  கொடுக்கப்பட்ட  வழக்கிலும்  பிரதிவாதியின் பாலும்  உள்ளதாகும் .                                                                                                      161

( இம் மூவகை  உத்தரங்களும்  இன்னவென்பதை  இப்பிரகரணத்தில்  146-முதல்  149  வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க . )

      வாதியாற்  கொண்டுவரப்பட்ட  பூருவபக்கமும்  சில  காரணங்களால்  ஒரோவமயம்  உத்தரபக்கத்  தன்மையை  யெய்துவதாகும் .                                                                                               162

( இதனால்  வாதியின்  வழக்குத்  தன்  பூருவபக்கத்தை  யொழித்து  எதிர்ப் பக்கத்தை  வலியுறுத்தல்  கூறப்பட்டது . )

12 . சாதனங்களின்  இயல்பு

     பிரதிவாதி  எதிர்மொழி  கொடுத்தபின், வாதி, தான்  மேற்கொண்ட  பூருவபக்கப்  பொருட்குரிய  சாதனங்களை  எழுதுவித்தல்  வேண்டும் . அச்சாதனம்  மானுடம் , தெய்விகம்  என  இருவகைப்படும் .                163

      அனுபவம் , இலிகிதம், சான்று  என  மாநுட  சாதனம்  மூன்று  வகைப்படும் . துலாக்கோன்  முதலியன  தெய்விக  சாதனமாகும்  . அது, நிகழ்ந்த  உண்மை  மாநுட  சாதனத்தால்  அறியப்படாதிருக்குங் கால் , அதனை யறிதற்பொருட்டு  மேற்கொள்ளற்பாலதாகும் .            164

      மாநுடசாதனமும் , தெய்விக  சாதனமும்  தனித்தனியே  தத்துவ மெனவும் , சலசாமெனவும் , இருவகைப்படும் . உண்மைப்பொருளை  நிகழ்ந்தவாறு  தெரிவிப்பது  தத்துவசாதனமாகும் . அவற்றைக்  கபட  முதலியவற்றால்  தெரிவிப்பது  சலசாதனமாகும் .                              165

( தத்துவசாதனம் – உண்மைச்சாதனம் ; சலசாதனம்- வஞ்சக சாதனம்.)

      அரசன்  பொருந்துமாற்றாலும் , வழியளவையாலும்  , சாம  முதலிய  உபாயங்களாலும்  சலம்  இன்னவென் றுணர்ந்து , அவற்றை யொழித்து , உண்மைச்  சாதனங்களால்  வழக்குகளை  என்றும்  ஆராய்தல்   வேண்டும் .                                                                                   166

( பொருந்துமாறு – யுக்தி . வழியளவை – அநுமானம் .)

      அரசன்  வழக்கிற்குரிய  சாதனங்களால்  காண்டலிற்  காலந்தாழ்த்தலாகாது . அங்ஙனம்  காலந்தாழ்த்தலால்  அறக்கேடாகிய  பெருங்குற்றம்  விளையும் .                                              167

      அரசன்  வாதி  பிரதிவாதிகளின்  முன்னிலையில்  சான்று  முதலிய  சாதனங்களை யறிதல்  வேண்டும் .  அவர்கள்  கண்முன்  இல்லாமல்  அச்சாதனங்களை  ஏற்றுக்கொள்ளலாகாது .                                              168

( இப்பொருள்  பற்றிய  இப்பிரகரணத்தின்  151-ஆம்  சுலோகம்  நீதிமன்றத்தாரைப் பற்றியும் , இஃதரசனைப்  பற்றியும்  கூறப்பட்டனவாதலின்  இவ்விரண்டற்கும்  வேறுபாடுண்மை யுணர்க . )

       வாதி  பிரதிவாதிகளுடைய  சாதனங்களிலுள்ள  குற்றங்களை  விசாரகாலத்தில்  முறையே  பிரதிவாதியும்  வாதியும்  நீதிநூன்  முறையைத்  தழுவி  எடுத்துரைத்தல்  வேண்டும் . அக் குற்றங்கள் அவர் களால்  வெளிப்பட்டிலவாயின் , அக் காலத்தில்  நீதிமன்றத்தார்  நீதி  நூல்களைக்  கொண்டு  அவற்றை  வெளிப்படுத்தல்  வேண்டும்.     169

  ( வாதியின்  சாதனக்  குற்றங்களைப்  பிரதிவாதியும் , பிரதிவாதியின்  சாதனக் குற்றங்களை  வாதியும்  எடுத்துரைத்தல்  வேண்டுமென்பது  கருத்து . )

     நீதிநூன்  முறையைத்  தழுவாமல்  சாதனங்களை  நிந்திக்கும்  வாதி  தான் மேற்கொண்ட  வழக்கைத்  தவறவிட்டுத்  தண்டத்திற்கும்  உரியனாவான் . ஆதலின் தன்  சாதனங்களை  நன்றாக  ஆராய்ந்து  காரிய  நிருணயத்தில்  உபயோகப்படுத்தல்  வேண்டும் .                      170

( சாதனங்கள்  ஈண்டு  வாதியின்   வழக்குரையை   மறுத்துப்   பிரதிவாதி  தெரிவிக்கும்  உத்தரத்தைப்  பற்றினவாகும் .)

     வாதியாதல் , பிரதிவாதியாதல்  கபட சாதனங்களை  உபயோகப்படுத்துவராயின் , அவ்வழக்குகளின்  பெருமை  சிறுமைக் கேற்றவாறு  தண்டம்  எய்துவர் . பொய்ச்சான்று  கூறுவோரும்  மாறுபட்டுச்  சான்றுரைப்போரும்  அத்  தண்டத்திலும்  இருமடங்கு  தண்டம்  எய்துவர் .                                                                                             171

13 . இலிகித  வகைகள்

          இனி, உள்ளவாறு  எழுதப்படும்  இலிகிதங்களை  முறையே கூறுவேன் . பிரமனால்  முன்னிகழ்ந்தவற்றை  நினைவுகூர்தற் பொருட்டு   இலிகிதம்  நிரூபிக்கப்பட்டது .                                                  172

      பத்திரம், இராசகீயம் , இலெளகிகம்  என  இரண்டு  வகைப்படும் .  அவ்விரண்டும்  தனித்தனியே  தன்  கையாலெழுதப்படுவன , பிறர் கையா லெழுதப்படுவன  என  இவ்விரண்டு  வகைப்படும் . இன்னும்  அவை  சான்றுடையன , சான்றில்லாதன  என  இவ்விரண்டு  வகைப்படுவனவாம் . இவ்விருதிறத்துப்  பத்திரங்களும்  அவ்வத்  தேய  நிலைக்கேற்ப  எழுதி  முடிக்கப்படுவனவாம் .                                          173

( இதனால்  இங்குக்  கூறிய  பத்திரங்கள்  எட்டு  வகைப்படும் . அவை  வருமாறு :  [1] தன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றுடன்  கூடியது . [2] தன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றில்லாதது . [3]  பிறன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றுடன்  கூடியது . [4]  பிறன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றில்லாதது  ஆகிய  இந்நான்  கினையும்  இராசகீயம் , இலெளகிகம்  என்னும்  இரண்டனோடும்  உறழ எட்டாதல்  காண்க . )

     பாகம் , தானம் , விலை கொண்டு விற்றல் , விலை கொடுத்துக்  கொள்ளல் , பெறுதல்  [ ஆதானம் ] தொழில்  நடத்தல் [சம்வித்தானம்] , கடன்  ஆகிய  இக்காரணங்களால்  இலெளகிக  பத்திரம்  பின்னரும்  எழுவகைப்படும் . கட்டளையிடுதல் , அறிவித்தல் , தீர்மானித்தல்  என்னும்  இக்காரணங்களால்  இராசகீய  பத்திரம்  பின்னரும்  மூன்று  வகைப்படும் .                                                                                                   174

      சான்றுடையதும் , தாயத்தாரால்  அங்கீகரிக்கப்பட்டதும் , நன்றாக  எழுதப்பட்டதும்  ஆகிய  பாகபத்திரம்  பயன்படுவதாகும் . அங்ஙனமல்லாத  பத்திரம்  தந்தையாற்  செய்யப்பட்டதாயினும்  ஏற்றுக்கொள்ளத்தக்க தன்றாம் .                                                                   175

      நில  முதலிய  தாவரப்  பொருள்களின்  தானம் , விற்றல் , கொள்ளல்  என்னும்  இவை  பற்றிய   பத்திரங்கள்  தாயத்தாரால்  அங்கீகரிக்கப்பட்டனவாகவும் , கிராமத்  தலைவனாற்  சான்றுக்  கைச்சாத்திடப்பட்டனவாகவும்  இருப்பின்  பயன்படுவனவாம் .        176

      அரசன்  கையாலெழுதப்பட்டதும் , அவன்  முத்திரையாலடையாள மிடப்பட்டதும் , அவன்  அநுமதி  பெற்று மந்திரி  முதலிய  பிரகிருதிகளால்  முத்திரையிடப்பட்டது மாகிய  இம்  மூன்றும்  இராசகீய  பத்திரங்களாம் .                                                                             177

      பூருவபக்க  பத்திர  முதலியவற்றில்  முறையே  விளக்கி  எழுத  வேண்டியவை  : யுகம் , ஆண்டு , திங்கள் , பக்கம் , திதி , வேளை , நாடு , தலைநகர் , நகரம் , சாதி , உருவம் , வயது , விடயம் , சான்று  முதலிய  பிரமாணம் , பொருள் , அதனளவை , தன்பெயர் , அரசன் பெயர் , இருப்பிடம் , எதிர்ப்பக்கத்துப் பெயர் , எல்லோர்க்கு  முன்னோர்களின்  பெயர்கள் , நேர்ந்த  துன்பம் , அதனை  யடைந்தவன் , அதனைக்  கொடுத்தவன் , அதனைப்  பொறுத்திருந்ததற்குரிய   அடையாளங்கள்  ஆகிய  இவையும்   மற்றை  இன்றியமையாச்  செய்திகளுமாம் . 170-180

( நாடு , தலைநகர், நகரம்  இம் மூன்றற்கும்  முறையே  உதாரணம்  வருமாறு : பாண்டிய நாடு , மதுரை , ஒருவன்  வசிக்கும்  ஊர் .)

      எப்  பத்திரத்தில்  மேற்கூறியவெல்லாம்  எழுதப்படவில்லையோ  அது  குறைவுடையதாய்ப்  பிரமாணமில்லாததாகும் . எப் பத்திரம்  முறைதவறினதாகவும் , மாறுபட்ட  பொருளுடையதாகவும் , பலவகைப்பொருள்  தருவதாகவும் , பொருளில்லாததாகவும் , நீண்ட  காலத்திற்கு  முன்  எழுதப்பட்டதாகவும்  உள்ளதோ  அப்பத்திரம்  பிரமாண  சாதனமாகாது . அங்ஙனமே  அறிவில்லாதவனாலும் , பெண்களாலும்  எழுதப்பட்டனவும் , வலிந்து  பற்றி  எழுதப்பட்டனவுமாகிய  பத்திரங்களும்  பிரமாண  சாதனமாகா. 181-82

      ஒரு  வழக்கில்  உண்மைப்  பத்திரங்களாலும், உண்மைச்  சான்றுகளாலும்,  உண்மை  ஆட்சிகளாலும் , தெய்விக  சாதனங்களாலும்  தன்  பக்கத்தை உண்மைப்படுத்தும்  மனிதன்  இம்மையிலும்   மறுமையிலும்  இன்பத்தை  நுகர்பவனாவான் .         183

14 . சான்று  கூறுவோர்  இயல்பு

     உரியவரினின்றும்  வேறானவராய்க்  காரிய நிகழ்ச்சியை யறிந்தவர்  சான்று  கூறுவோராவர் . அவர்  நிகழ்ந்தது  கண்டோன் , நிகழ்ந்தது   கேட்டோன்  எனவும் , கிரதன்  அகிருதன்  எனவும்  பலவகைப்படுவர் .                                                                               184

( கிருதன் – நிகழாத  ஒன்றைக்  கூறும்படி  கற்பிக்கப்பட்டவன். அகிருதன் – அங்ஙனம்  கற்பிக்கப்படாதவன் .)

      எவன்  முன்னரே  வாதி  பிரதிவாதிகளின்  முன்னிலையில்  ஒன்றைக்  கண்டும்  கேட்டும்  அநுபவித்தவண்ணம்  மாறுபடாமற்  கூறுகின்றானோ  அவன்  சான்று  கூறுவோனாவான் .                           185

      எவனுடைய  புத்தி , நினைவு , செவி , இவைகள்  நாள்  பலவாகியும்  கேடெய்தாமல்  இருக்கின்றனவோ  அவனே  எப்பொழுதும்   சான்று  கூறுந்  தன்மைக்குத்  தகுதியுடையனாவான் .                                            186

      எவன்  உலகில்  அநுபவ  முதிர்ச்சியையும் , உண்மை  கூறுதலையுமுடையானோ  அவனுஞ்  சான்று  கூறுந்  தன்மைக்குத்  தகுதியுடையனாவான் . உபயவாதிகளாலும்  அங்கீகரிக்கப்பட்ட  ஒருவன்  அறநெறி  யுணர்ந்தவனாயிருப்பின்   அவனுஞ்  சான்று  கூறுதற்குத்  தகுதியுடையனாவான் .                                                           187

      இல்லறநிலையி லொழுகுவார் , பிறர்வயப்படாதார் , புலமை மிக்கார் , நம்  நாட்டில்  வாழ்வார் , யெளவனப்பருவ முடையார் , ஆகிய  இவர்  எல்லோரும்  சாதி  குலங்களுக்கேற்றவாறு  எல்லா  விடயத்திலும்  சான்று  கூறத்தக்கவராவர் . பெண்கள்  பொருட்டுப்  பெண்கள்  சான்று  கூறுதற்குத்  தகுதியுடையராவர் .                                                            188-189

      கொள்ளை, களவு , வலிந்து  பற்றல் , கடுஞ்சொற் கூறி வைதல் , கடுமையாக  அடித்தல் ஆகிய இவ்வெல்லாக்  காரிய நிகழ்ச்சிகளிலும்  சான்று  கூறுவாரைச்  சோதித்து   வினாவலாகாது.                              190

      சான்று  கூற  நேருங்கால்  அறிவின்மையாற்  பாலரும் , பொய்கூறும்  இயற்கையாற்  பெண்களும், தீவினைப்  பயிற்சியால்   வஞ்சகரும் , அன்புரிமையால்  உறவினரும் , பகை  களைய  வேண்டுமென்னும்  கருத்தாற்  பகைவரும், அகங்காரத்தால்  இழிந்த  சாதியினரும் , பொருணாசையாற்  றீயோரும் , தம்  சீவனத்தொழில்  வருவாய்  சுருங்கிவிடுமென்னும்  அச்சத்தாற்  பணியாளரும்  மாறுபடக்  கூறுவராதலின், இவர்கள்  சான்று  கூறுதற்குத்  தகுதி   இல்லாதவராவர் . பொருட்  சம்பந்தமுடையாரும்  , உடன்  படித்தல்  முதலிய  கல்விச்  சம்பந்தமுடையாரும் , பெண்மக்களின்  சம்பந்தமுடையாரும்  சான்று  கூறுவோராகார் .                              191-192

      சிரேணி , வருக்கம்  என்னும்  குழுவினருள்  ஒருவன்  அவரோடு  பகை  கொள்ளுவானாயின் , அவரெல்லாரும்  அவற்குப்  பகைவராதலின் , அவர்  சான்று  கூறுதற்குத்  தகுதியுடையராகார் . 193

 ( சிரேணி  வருக்கங்களைப்  பற்றி  30-31-ஆம்  சுலோகங்களிற்  காண்க .)

      வாதி  பிரதிவாதிகளின்  முன்னிலையில் வைத்துச்  சான்று  கூறுவோரை  விசாரித்தற்கண்ணும் , வழக்கு  நிகழ்ச்சியைத்  தீர்மானித்தற் கண்ணும்  அரசன்  காலந்தாழ்த்தலாகாது . அவ்  வாதி  பிரதிவாதிகளின்  கண்ணெதிரிலேயே  சாட்சி  விசாரணை  நடத்தல்  வேண்டும் . எவ்வாற்றானும்  அவர்  பார்வையிலன்றி  நடத்தலாகாது . எவன்  அரசனாற்  கட்டளையிடப்படும்  சான்று  கூறுதலை  உடன்படுகின்றானில்லையோ  அவன்  தண்டம்  எய்துவான் . 194-195

      நீதிபதியின்  முன்னிலையில்  வாதி  பிரதிவாதிகளாற் சான்று  கூறுதற் பொருட்டுக்  காட்டப்படாதவனும் , அரசனாலழைக்கப் படாதவனும் , கட்டளை  பெறாதவனுமாகிய  இவ்விழி தக்கோர்  நீதிமன்றத்தில்  தாமே  வந்து  உண்மை  கூறினும்  பொய்  கூறினும்  தண்டம்  எய்துதற்குரியராவர் .                                                        196

      சான்று  கூறுவார்  மொழிகள்  ஒருமைப்பாடின்றி  ஐயத்திற்கிடனாகுங்கால்  பலர்  கூறும்  ஒன்றுபட்ட  மொழிகளையும்,  சான்றுரைப்பார்  இருதிறத்தும்  ஒத்த  அளவினராகுங்கால் அவருட்  குணமுடையார்  மொழிகளையும்  அவர் எல்லோருங்  குணமுடையராயிருப்பின்  அவருள்  அதிக  குணம்  வாய்ந்தார்  மொழிகளையும்  எப்பொழுதும்  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் .     197

( சான்றுரைப்பார்  ஒரு  காரியத்தில்  இருதிறப்பட்டுக்  கூறுவாராயின்  ஏற்றுக்  கோடற்குரிய  உபாயங்  கூறியவாறு .)

      ஒரு  நிகழ்ச்சியைக்  கண்டு  அல்லது  கேட்டிருக்கு மொருவன் , சான்று  கூறுதற்கண்  நியமிக்கப்பட்டில னெனினும் , அவனை  அது  பற்றிக்  கேட்பின்   அவன்  கண்டதை  அல்லது  கேட்டதனை  அவ்வாறே  எடுத்துரைத்தல்  வேண்டும் .                                                                           198

      வெவ்வேறு  காலங்களிற்  சான்று  கூறுவோரால்  அறியப்பட்ட  நிகழ்ச்சிகளின்  கூறுகளைப்பற்றி  ஆராயுங்கால் , அச் சான்றாவார்  ஒவ்வொருவரையும்  தனித்தனியே  விசாரித்தல்  வேண்டும் . இவ்விடயத்தில்  இவ்விதி   தொன்றுதொட்டு  வழங்கி வருவதாகும் .  199

15 . சான்று  கொள்ளு  முறை

     சான்று  கூறுவார்  இயற்கையாகக்  கூறும்  சொற்களையே  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் . ஒரு  பொழுதும்  வலிந்து  கூறும்படி  செய்தலாகாது . அவர்  சான்று  கூறுங்கால்  மீண்டும்  மீண்டும்  அவரைப்  பலவாறு  வினாதலாகாது .                                                         200

      சான்று  கூறுவோரை  யழைத்து  அவரைச்   சூளுறவால் மிகவும்  அடக்குவித்து  வினாதல்  வேண்டும் . இன்னும்  புராணங்களிற்  கூறப்பட்ட  உண்மை மொழிதலின்  பெருமையையும் , அறத்தின்  மாட்சியையும்  எடுத்துரைத்தலானும் , பொய்  கூறுதலால்  உண்டாகும்  மிக்க  குற்றங்களை  எடுத்து  மொழிதலானும்  அவரை  மிகவும்  மெல்ல மெல்ல  அச்சுறுத்தல்  வேண்டும் .                                                201

      சான்று  கூறுவோனை  நோக்கி “எவ்விடத்தில் , எக்காலத்தில் , எக்காரணத்தால் , எங்ஙனம் , யாது நின்னாற்  காணப்பட்டது ?    யாது  கேட்கப்பட்டது ?   யாது  எழுதப்பட்டது ? யாது  எழுதுவிக்கப்பட்டது ?  அவ் வெல்லாவற்றையும்  நிகழ்ந்தவாறே  உண்மையாகக்  கூறுக “  என்றிவ்வாறு  வினாதல்  வேண்டும் .                                                       202

( இச் சுலோக முதல் 208-ஆம்  சுலோகம்  வரை  கூறப்பட்டவையெல்லாம்  நீதிமன்றத்தார்  சான்றுரைப்போனை  நோக்கி   அவன்  உண்மை  கூறுதற்பொருட்டுக்  கூறும்   நீதிமொழிகளாம் .)

      “சான்றுரைப்போன்  உண்மை  கூறுவானாயின் , இம்மையிற்  சிறந்த  புகழையும் , மறுமையுலகத்திற்  சிறந்த  இன்பங்களையும்  அடைவான் . இவ் வுண்மைமொழி    பிரமனால்  மிகவும்  பாராட்டப்பட்டுள்ளது”                                                                                  203

      சான்றுரைப்போன் , வாய்மையினாலேயே  தூய்மை யுடையனாவான் . அவற்கு  அவ்  வாய்மையினாலேயே  அறமும்  மிகுவதாகும் . ஆதலால்  எல்லா  வருணத்தின்கண்ணுமுள்ள  சான்றாவாரெல்லாரும்  வாய்மையே  மொழியக்கடவர் “                 204

      “சீவான்மாவின்  கன்மங்களுக்கு  அதன்  உள்ளிருக்கும்  இறைவனே  சான்றாவான் . அச்  சீவான்மாவிற்குப்  புகலிடமும்  அவ் விறைவனே . ஆதலின்  மனிதர்  பொருட்டு  உத்தமமான  சான்றுரைக்குத்  தன்மையை  எய்திய  நீ  பொய்க்கரி  கூறி  அதனால்  நின்னை  அவமானத்திற் குட்படுத்தலாகாது”                                                           205

      “தீங்கு புரிவானொருவன்  தன்  செயலை  யாருங்  காணமாட்டார்  என்று  எண்ணுகின்றான் . அவன்  உள்ளிருக்கும்  இறைவனும்  மற்றைத்  தேவர்களும்  அவன்  செயல்  முழுதையும்  நன்றாகப்  பார்க்கின்றனர் “.                                                                                           206

      “பல  பிறப்புக்களிற்  சிறிது  சிறிதாக  நீ  கட்டிய  புண்ணியமெல்லாம்  பொய்ச்சான்று  கூறி  எவனைத்  தோல்வியுறச் செய்கின்றாயோ  அவனைச்  சார்ந்துவிடும்  என்பதையும்  , நின்  பொய்ச் சான்றாற் றோல்வி யுற்றான்  பல பிறப்புக்களில்  செய்த  பாவம்  எல்லாம்  நின்னைச்  சார்ந்துவிடும்  என்பதையும் அறிவாயாக “  என்றிங்ஙனம்  சான்று  கூறுவோனை  நீதிமன்றத்திற்  பலர்  முன்னிலையில்  வைத்துக்  கூறவேண்டும் .                                      207-8

      அரசன்  வாதி  பிரதிவாதிகளின்  காரிய  நிகழ்ச்சிகளுக்கு  உபயோகமான  தெய்விக  இராசகீய  நிமித்தங்களைப்  பகுத்துணர்ந்து சான்று  முதலிய  சாதனங்களை  ஒழுங்குபடுத்தித்  தன்பாற்  காட்டுதற்  பொருட்டு , அவர்க்கு  அவகாசம்  கொடுத்தல்  வேண்டும்                  209

      அரசன் , வழக்குரைப்போர்பாற்  பத்திர  சாதனமில்லையாயின் , அவர்தம்  சான்றுகளாலும் , அநுபவங்களாலும்  வழக்கை  விசாரித்தல்  வேண்டும். அப் பத்திரங்களோடு  சான்றுகளும்  இல்லையாயின் , அவர்தம்  தடையில்லாத   அநுபவ  உண்மையால்  ஆராய்தல்  வேண்டும் .                                                                                                             210

      அத்  தடையில்லாத  அனுபவமும்  இல்லையாயின் , சான்றுகளாலும்  பத்திரங்களாலும்  ஆராய்தல்  வேண்டும் . அநுபவம் , இலிகிதம் , சான்று  ஆகிய  இம்  மூன்றுனுள்  ஒன்றினால்  ஆராய்தலும்  பொருந்தும் .                                                                                                          211

      அரசன்  வழக்காராயுங்கால்  வழக்குரைக்கும்  மக்கள்நிலை , அவர்  தேயநிலை , அவர்  அறநிலை  ஆகிய  இவற்றைச்  சிந்தித்தலாகாது. 212

      திறமை  மிக்க  தீயவர்  எப்பொழுதும்  பொய்ப்  பத்திரங்களை  இயற்றுவர் . ஆதலின் , பத்திரவழி  ஒன்றை  மாத்திரம்  நம்பி  ஒரு  பக்கம்  துணிதல்  தக்கதன்று .                                                                         213

      நட்பும் , பொருணசையும் , அச்சமும் , சினமும் , வஞ்சகமும்  ஆகிய  இக்  காரணங்களாற்  சான்றுரைப்போர்பால்  ஐயம்  நிகழுமாதலின் , சான்று  கூறுவோரை  மாத்திரம்  நம்பி  எப்பொழுதுங்  காரியங்களை   முடிவு  செய்தலாகாது .                                                                                      214

   அனுபவங்களில் , தலைவனுடைய  பொருளையாதல் , தலைவனையில்லாத  பொருளையாதல்  ஒருவன்  வன்மையாலும் , செருக்கினாலும் , அனுபவிக்கக்கூடும்  என்னும்  ஐயம்  நிகழுமாதலின் , அனுபவம்  ஒன்றை  மாத்திரம்  நம்பிக்  காரியங்களை  முடிவு  செய்தலாகாது .                                                                                                   215

     ஐயப்படுதற்குரிய  வழக்குகளில்  ஐயமுறுதலும் , அல்லாத  வழக்குகளில்  அங்ஙனம்  ஐயமுறாமையும்  வேண்டும் . ஐயப்படுதற்குரிய வல்லா வழக்குகளில்  ஐயமுறும்  நீதிமன்றத்தாரை  அரசன்  கள்வரை  யொப்பக்  கருதித்  தண்டித்தல்  வேண்டும் .           216

      ஐயமுறுதற்குரியவல்லா  வழக்குகளில்  ஐயமுறின் , அதனால்  அநவத்தை யென்னும்  குற்றமுண்டாம் ; உலகமும்  வேறுபாடெய்தும் ; அறமும்  நீதியும்  குறைந்துவிடும் .                                                                 217

( அநவத்தை – எல்லை யில்லாதது .)

      தானம்  கிரயம்  முதலிய  வரவோடு  கூடியதும் , பல்லாண்டுகள்  ஆனதும் , பிறரால்  தடைப்படுத்தப்படாததும் , இடையீடில்லாததும் , எதிரியின்  முன்னிலையில்  வைத்து  அநுபவிக்கப்பட்டதும்  ஆகிய  ஒரு  பொருளின்  அநுபவம்  பிரமாணமாகும் .                                          218

( அடைமொழியனைத்தும்  அநுபவத்தைப் பற்றி நிற்பனவாம் . )

      எவன் , ஒரு  பொருளின்  அநுபவ மாத்திரம்  தனக்குண்டென்று  கூறி, அதன்  வரலாற்றை  ஒரு பொழுதும்   தெரிவிக்கின்றானில்லையோ அவன்  வஞ்சகமான  அநுபவத்தைக்  கடைப்பிடித்திருத்தலால்  கள்வனென றறியப்படுவான் .                       219

      ஒரு  பொருள்  வந்த  நெறியை யுடையதாயிருப்பினும்  , அது  சிறிதேனும்  பெற்றவனால்  அனுபவிக்கப்படாமலிருப்பின்  வலியிழந்ததாகும் .                                                                                           220

16 . நெடுங்கால  அநுபவப்  பொருள்களின்  நிலைமை

     ஒரு  பொருளுடையான் , தன்  பொருளைத்  தன்  முன்னிலையில்  வைத்துப்  பிறனொருவன்  பத்தாண்டுகள்வரை  அநுபவிக்கத்  தான்  அதனைப்  பார்த்துக் கொண்டிருப்பானாயின் , அவன்  அப்பொருட்குரியவனாகான் . [ இழந்தான்  என்பதாம் ]                         221

( இங்குத்  தன்   பொருளை  யென்றது  நிலமல்லாத  பிற பொருள்களை, பின்வரும்  சுலோகத்தில்  நிலத்திற்கு  இருபது  யாண்டு  அநுபவங்  கூறப்பட்டிருத்தலின் .)   

      அரசியல்  நடைபெறுங்கால்  இவ்வுலகத்தில்  ஒருவனுடைய  நிலம்  பிறனொருவனால்  இருபது  ஆண்டுகள்  வரை  அநுபவிக்கப்பட்டிருப்பின் , அந் நிலத்திற்குரியான்  வலியுடையனாயினும்  அவற்கு  அந் நிலம்  உரியதாகாது . [ இருபது  ஆண்டுகள்  வரை  அநுபவித்தவற்கே  உரியதாம்  என்பதாம். ]        222

      ஒருவன் , தனக்குக்  கிரயம்  தானம்  முதலிய  நெறிகளால்  வாராத  பிறன்  பொருளைக்  கவர்ந்து  நூறாண்டுகள்  வரை  அனுபவித்துளானாயினும் , அது  வெளிப்படுங்கால்  அப் பாவியைக்  கள்வனை யொப்ப  அரசன்  தண்டிக்கக்  கடவன் .                                223

     ஒருவற்கு  ஒரு  பொருள்  கிரயம் , தானம்  முதலிய  நெறிகளால் வந்ததில்லை யெனினும்  , அஃது  அவனால்  ஒழிவின்றி  இடையூறில்லாமல்  அறுபதாண்டுகள்  வரை  அனுபவிக்கப்பட்டிருப் பின் , அப்பொருள்  பிறர்  எவராலும்  பெறத்  தக்கதன்றாம் .              224

( இதன்  முற்சுலோகத்திற்  கூறப்பட்ட  அநுபவம்  இடையூறும்  ஒழிவுமுடையதெனவும் , இதன் கட்  கூறப்பட்ட  அநுபவம்  அவையில்லாத  தெனவும்  பகுத்துணர்ந்து  முரணாமை  கொள்க . அன்றியும்  முன்னது  உரியாரிருப்ப  வன்மையாற்  கவர்ந்து  கொண்டு  அநுபவிக்கப்பட்ட  தெனவும் , பின்னது  உரியாரில்லாததாக  மற்றொருவனால்  தடையின்றி  அநுபவிக்கப்பட்ட  தெனவும்  கோடலும்  பொருந்தும் . )

      பந்தகப்  பொருளும் , எல்லைநிலமும் , இளைஞர்  பொருளும் , அடைக்கலமாக  வைக்கப்பட்ட  நிலையில்  இயங்கியற்  பொருள்களும்  அரசிறைப்  பொருளும் , அந்தணர்  பொருளுமாகிய  இவ்வெல்லாம்  பிறர்  அநுபவத்தால்  உரியவரிடத்தினின்றும்  விலகினவாகா .          225

( இளைஞர் – பொருளைப்  பாதுகாத்தற்குரிய  ஆண்டு  நிரம்பப்  பெறாதவர்  .  இயங்கியல் – சங்கமம் . நிலையியல் – தாவரம் .)

      ஒரு  பொருளைப்  பிறன்  அநுபவத்திற்காக  முன்னரே  நிச்சயிக்கப்பட்ட  காலங்கடந்துவிட , அதனைப்  பொருட்படுத்தாமல்  வாளாவிருக்கும்  அப்  பொருட்குரியவன்  பின்னர்  அப்பொருட்  பயனை  அடையான் .                                                                                        226

17 . தெய்விக  சாதன  வகைகள்

     இங்ஙனம்  அநுபவத்தின்  இயல்பெல்லாம்  சுருக்கிக்  கூறப்பட்டன . இனித்  தெய்விக  சாதனங்  கூறப்படும் . கடன்  கொடுத்தவன்  விழிப்பின்மை  காரணமாக  முற்  கூறப்பட்ட  பத்திரம் , சான்று , அநுபவம்  என்னும்  மூவகைச்  சாதனங்களையும்  இழந்திருக்கும்  வழக்கிலும் , பிரதிவாதி  நிகழ்ச்சிகளை  வஞ்சிக்கும்  வழக்கிலும் , பின்வரும்  மூவகைப்பட்ட   உபாயங்களையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                     227-28

      அவ்வுபாயங்களாவன : சோதனாப்  பிரதி  காலமும் , உத்திலேசமும், சபதமுமாம் , இம் மூன்றினாலும்  முறையே  உண்மையைத்  துணிதல்  வேண்டும் .                                                                                                            229

 ( உத்திலேசத்தை ,  அடுத்து  வருஞ்  சூத்திரத்திற்  காண்க . இலிகிதம்  முதலிய  சாதனங்களில்லாத  வழக்கில்  இம் மூன்று  உபாயங்களாலும்  உண்மை  ஆராய்தல்  வேண்டுமென்பது  கருத்து . இவற்றுள்  சோதனாப் பிரதி  காலமாவது : விசாரணை  நிமித்தம்  காலத்தை  மாற்றி  யமைத்தல் . அன்றி , உண்மை யறிதல்  பொருட்டு  ஒரே  விடயத்தை  மீண்டும்  மீண்டும்  பன்முறை  கூறும்படி  ஒருவனை  வினாதலுமாம் . உத்திலேசமாவது :  சாம தான  முதலிய  உபாயங்களால்  அறநெறி  பிறழாது  ஒருவனை  உண்மை  கூறச்செய்தல் .  சபதமாவது : தெய்வத்தை  முன்னிட்டுச்  சூழுறச் செய்தல் . பின்வரும்  230-231-ஆம்  சுலோகங்களில்  உத்தியினிலக்கணமும்  வகைகளும் , 232-ஆம்  சுலோகத்திற்  சோதனாப்  பிரதிகாலமும்  கூறப்பட்டுள்ளன . சபதம்  248-ஆம்  சுலோகத்தில்  காண்க . )

      நூன்முறைகளுக்கும் , ஆன்றோர்  ஆசாரங்களுக்கும்  மாறுபடாமல்  இயைக்கப்பட்டுச்  சிறந்த  தருக்கத்தோடுங்  கூடியது  உத்தியாகும் . அதுவே  தன்  காரியசித்திக்கு  உபயோகமாகும் . இங்ஙனமல்லாதது  உபயோகமாகாது .                                                                                          230

      தானம் , சாமம் , பேதம் , பொருணசை  காட்டல் , துணிந்த  பொருளினின்றும்  மனத்தை  வேறுபடுத்தல்  ஆகிய  இவ்  வைந்தும்  காரியங்களை  ஊகித்துணர்தற்குரிய  ஏதுக்களாம் .                           331

     ஒருவன்  மீண்டும்  மீண்டும்  மும்முறை  நான்குமுறை  ஐந்து  முறை  தடைபடுத்தி  வினாவப்பட்டும் , அத்  தடை  வினாக்களுக்கு  எதிர்த்து  விடை  தாரானாயின்  பின்னர்  அவனை  வாதி  விருப்பின்படி  பொருள்  கொடுக்கச்  செய்தல்  வேண்டும் .                                                                 232

( ஒரு  நிகழ்ச்சியைப்  பற்றி  மீண்டும்  மீண்டும்  பலமுறை  கேட்கப்படுந்  தடைவினாக்களுக்கு  எதிர்த்து  விடை  தாராதவன்  தோல்வி யுற்றவனாவான்  என்பது  கருத்து . )

      இங்குக்  கூறிய  உத்தி  வகைகள்  பயன்படா தொழியுமாயின் , சூளுறன்  முதலிய  தெய்விக  சாதனங்களால்  பிரதிவாதியை  உண்மை  கூறும்படி  கட்டளையிடல்  வேண்டும் .                                   233

      உண்மை யறியமுடியாத  காரியத்தில்  வாதி பிரதிவாதிகள்   இருவரும்  தத்தம்  தூய்மையைப்  புலப்படுத்துதற்பொருட்டு  மகான்களாகிய  தேவர்களால்  உபயோகப்படுத்தப்பட்டபடியால்  அவை  தெய்விக  சாதன மென்று  கூறப்படும் .                                        234

      உண்டி  முதலிய  சிறு  செயலிலும்  தம்  தூய்மையை  வெளிப்படுத்தற்பொருட்டு  வசிட்டர்  முதலிய  முனிவர்  எழுவராலும்   இத்  தெய்விக  சாதனங்கள்  மேற்கொள்ளப்பட்டன .                              235

      எவன் , தன்  பெருமையாலும் , அறிவின்  செருக்காலும்  வசிட்டர்  முதலிய  முனிவரால்  எப்பொழுதும்  மேற்கொள்ளப்பட்ட  தெய்விக  சாதனத்தைச்  செய்கின்றானில்லையோ  அம்மனிதன்  அறக்  கள்வனாவான் .                                                                                                     236

      தெய்விக  சாதனத்தைச்  செய்ய  நேர்ந்திருக்குங்கால்  எவ்வந்தணன்  அறிவின்மை  காரணமாக  அதனைச்  செய்கின்றானில்லையோ , அவனுடைய  அறம்  பொருள்களைத்  தேவர்  கவர்ந்து  கொள்வர் . இதன்கண்  ஐயமின்று .                                237

எவன் , தன்  தூய்மையை  விரும்பிச்  சோம்பலின்றித்  தெய்விக  சாதனத்தை மேற்கொள்ளுகின்றானோ  அவன்  சிறந்த  தூய்மை யுடையனாய்  இம்மையிற்  புகழையும்  மறுமையில்  துறக்கவின்பத்தையும்  அடைவான் . அங்ஙனம்  அச்  சாதனத்தை  மேற்கொள்ளானாயின்  அவ்விருமைப்   பயனையும்  எய்தான் .          238

      நெருப்பும் , நஞ்சம் , துலையும் , நீரும் , அறம்  பாவங்களும் , அரிசியும் , சூளுறவுகளும்  ஆகிய  இவை  முனிவரால்  தெய்விக  சாதன  நிருணயத்தில்  எடுத்துக்  காட்டப்பட்டுள்ளன .                         239

( இங்குக்கூறிய  நெருப்பு  முதலியவற்றைக்  கொண்டு  ஆராயு  முறைகளை  241-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . )

      முறையே  பின்னதனை  நோக்க , முன்னது  சிறந்ததாகவுள்ள  இத்  தெய்விக  சாதனங்களை , உலகம்  நம்புதற்பொருட்டுக்  காரியங்களின்  நிலைமையை  நோக்கி  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . ஆனால் , இங்குக்  கூறப்பட்ட  தெய்விகங்களெல்லாம்  சிறந்தனவென்றே  எண்ணப்படும் .                                                            240

      பழுக்கக்  காய்ச்சிய  இருப்புக்  கோளத்தைக்  கையில்  தாங்கி  ஒன்பதடி  நடத்தல்  வேண்டும் . இன்றேல்  எரிகின்ற  தழலில்   ஏழடி  தூரம்  கால்களால்  நடத்தல்  வேண்டும் . அன்றி , இரும்பினால்  உழுந்தளவினவாகச்  செய்து  கொதிக்கின்ற  எண்ணெயில்  இடப்பட்ட  உருண்டைகளைக்  கையினால்  அள்ளி  வெளிப்படுத்தல்  வேண்டும் . இன்றேல் , பழுக்கக்  காய்ச்சிய  இருப்புத்  தகட்டை  நாவினால்  நன்றாக  நக்கல்  வேண்டும் . [ இவை  நெருப்பினால்  ஆராயப்படுவனவாம் .]                                                                              241-42

      நஞ்சை  உண்ணல்  வேண்டும் . கைகளாற்  கரும்பாம்பைப்  புற்றினின்றும்  வெளியே  இழுத்தல்  வேண்டும் . [ இவை  நஞ்சால்  ஆராயப்படுவன. ]                                                                                         143

      ஒருவன்   முதலில்  தன்னை  ஒரு  துலையில்  நிறுத்தளந்து , அவ்வளவை  ஒரு  தட்டிலிட்டுப்  பின்  மற்றொரு  தட்டில்  தான்  ஏறி நின்று , முன்னையளவையிற்  குறைதல்  கூடுதல்களை  யொழித்துச்  சமனாதல்  வேண்டும் . [ இது  துலையாலாராய்யப்படுவது .]

( இதனால்  ஒருவனை  இரண்டு  முறை  நிறுத்துப்பார்க்க  வேண்டுமென்பதும் , இரண்டாமுறை  நிறுக்குங்கால்  முதலில்  நிறுத்த  அளவிற்  குறைந்தாதல்  மிக்காதல்  காணப்படுவானாயின்  அவன்  குற்றவாளியென்று  அறிய வேண்டுமென்பதும்  கூறப்பட்டன . )

     ஒருவன்  தான்  வழிபடும்  தெய்வத்திற்குச்  செய்த  திருமஞ்சன  நீரை  முதலிற்  பருகல்  வேண்டும் . அதன்பின்  அவனை  ஓரளவு  துணிவு  செய்யப்பட்ட  காலம்  வரை  நீரில்  மூழ்கி  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் [ இது நீரினா லாராயப்படுவது. ]                         245

      தரும வுருவத்தையும்  அதரும வுருவத்தையும்  கண்ணாற்  பாராமல்  தொடல்  வேண்டும் [ இஃது அறம் பாவங்களா லாராயப்படுவது. ]   246

( வெள்ளியினால்  தருமவுருவத்தையும் , இரும்பினாலாதல்  காரீயத்தாலாதல்  அதருமவுருவத்தையும்  அமைத்தல்  வேண்டும். அன்றிப்  பூர்ச்ச  இலையிலாதல்  துணியிலாதல்  தருமவுருவத்தை  வெண்ணிறமாகவும் , அதருமவுருவத்தைக்  கருநிறமாகவும்  எழுதலாம் . பின்  அவ்  வுருவங்களுக்குப்  பஞ்சகவ்வியம்  தெளித்துச்  சந்தனமிட்டு  வெண்மலரால்  தருமவுருவத்தையும் , கருமலரால்  அதருமவுருவத்தையும்  பூசித்தல்  வேண்டும் . பின்னர்  மண்ணுண்டைகளிலாதல்  சாணியுண்டைகளிலாதல்   அவ் விரண்டு  உருவங்களையும்  தனித்தனி  வைத்து  அவ்  வுண்டைகளைப்  புதிய  மட்பாண்டத்தில்  யாரும்  காணாவாறு  வைத்தல்  வேண்டும் . அம் மட்பாண்டத்தைக்  கடவுளர்  அல்லது  அந்தணர்  முன்னிலையில்  தூய்மை  செய்யப்பட்ட  இடத்தில்  வைத்து  அறக்கடவுளையும்  தேவர்களையும்  உலகபாலர்களையும்  ஆவாகனஞ்  செய்து  பூசித்துப்  பின்  அப்  பாண்டத்துள்ளிருக்கும்  உண்டைகளுள்  ஒன்றைத்  தெய்விகசாதனஞ்  செய்பவனைக்  கொண்டு  எடுப்பித்தல்  வேண்டும் . அவன்  எடுக்குங்கால்  “யான்  பாவமிலனாயின்   தருமம்  என்பாலுறுக”  என்று  பிரதிக்ஞை செய்து  எடுத்தல்  வேண்டும் . எடுக்கப்பட்டது  தரும  உருவமாயின்  அவன்  தூய்மையுடையான்  எனவும் , அதரும உருவமாயின்  தூய்மையிலான்  எனவும்  தெளிந்து  கொள்ளல்  வேண்டும் . இது  வாசஸ்பத்தியத்திற்  கண்டது .)

      கருட மென்னும்  அளவினவாகிய  அரிசிகளை  ஐயமுறாமல்  மென்றுவிடல்  வேண்டும் . [இஃது  அரிசியா லாராயப்படுவது. ]   247

( ஒருவன்  அரிசியைப்  பற்றித்  தெய்விக  சாதனஞ்  செய்ய  நேர்ந்துழி , நீதிபதி  அவன்  வழிபடும்  தெய்வம்  அல்லது  சூரியன்  இவர்கட்குத்  திருமஞ்சனஞ்  செய்த  நீரை  ஒரு  மட்பாண்டத்திற்  பெய்து , ஒரு  கருட  அளவு  எடையுள்ள  வெண்மை   நிறம்  வாய்ந்த  அரிசியை  அந்  நீரில்  முதனாள்  ஊறவைத்துப்  பூசித்தல்  வேண்டும் . முதனாள்  உணவொழித்திருந்த  அவன்  பிற்றை  நாட்  காலையில்  நீராடிச்  சூரியதேவனது  ஆலயத்தில்  கிழக்குமுகமாகவிருந்து  அவ்வரிசிகளை மென்று  பூர்ச்சம்  அல்லது  அரிசிலையில்  உமிழ்தல்  வேண்டும். மெல்லுங்கால்  அவனுக்கு  உடல்  நடுக்கமும்  வாயில்  இரத்தமும்  தோன்றி  உமிழ்நீரிலும்  இரத்தங்  காணப்படுமாயின்  அவன்  குற்றஞ்  செய்தவனாவான் . உமிழ்நீர்  அரிசியின்  நிறம்  போல்  வெண்மையாகக்  காணப்படின்  குற்றமில்லாதவனாவான் . இதுவும்  வாசஸ்பத்தியத்திற் கண்டது .)

      பெரியோராகிய குரவர்களையும் , புதல்வர்  முதலியோரின்  தலைகளையும் , பொன்  முதலியவற்றையும்  தொட்டுக்கொண்டு  விரைந்து “உண்மையாகக்  கூறுகின்றேன் “ என்று  சொல்லிச்  சூளுறவு  செய்தல்  வேண்டும் . இன்னும்  “இக்  கொடுஞ்செயலை  யான்  செய்துளேனாயின்  தீவினைக ளெல்லாவற்றையும்  அடைவேன் ; நல்வினைக ளெல்லாவற்றையும்   இழந்துவிடுவேன்”  என்று  கூறுதல்  வேண்டும் .                                                                                                        248

( குரவர்களைத்  தொட்டுச்  சூளுறவு செய்யுங்கால்  “யான்  இக்  கொடுஞ்  செயலைச்  செய்துளேனாயின்  என்  குரவர்  நரகத்தில்  வீழக்கடவர்”  எனவும்  , புதல்வர்  முதலியோர்  தலைகளையும்  பொன்  முதலியவற்றையும்  தொட்டுச்  சூளுறவு  செய்யுங்காலும் , உண்மை  கூறுங்காலும் , முறையே “என்  புதல்வர்  அழிவெய்துக”  எனவும்  “பொன்   முதலியன  கேடெய்துக”  எனவும்  “என்  வாய்மையனைத்தும்  பொய்யாக”  எனவும்  இவ்வாறு  கூறிச்  சூளுறல்  வேண்டுமென்பதாம் . )

      ஒருவன்  மற்றொருவனிடத்தினின்றும்  கவர்ந்து  கொண்ட  பொருளின்  அளவு  ஆயிரமாயின்  நெருப்பினையும் , அவ் வளவிற்  காற்கூறு  குறைந்ததாயின்  நஞ்சினையும் , மூன்றிலொரு  கூறு  குறைந்ததாயின்  துலாக் கோலினையும் , அவ் வளவிற்  பாதியாயின்  நீரினையும் , காற்கூறாயின்  அறம்பாவங்களையும் , எட்டிலொரு  கூறாயின்  அரிசிகளையும் , பதினாறிலொரு  கூறாயின்  மற்றைச்  சூளுறவுகளையும்   மேற்கொள்ளல்  வேண்டும் . இவ்வாறு  தெய்விக  சாதனங்கள்  கூறப்பட்டுள்ளன .                                                  249-250

      இங்குக்  கூறிய  பொருளின்   அளவுகள்  கடையாயார்க்குரிய னவாம் . இடையாயார்க்கு  இவ்  வளவின்  இரு  மடங்கும் , தலையாயார்க்கு  இவ் வளவின்  நான்கு  மடங்கும்  மிகுதியாக  நீதிமன்றத்தார்  ஏற்படுத்தல்  வேண்டும் .                                          251

( இதனால்  முன்னர்க் கூறிய  பொருளின்  அளவு  ஆயிரத்திற்கு  நெருப்புக் கோடல்  கடையாயார்க்கெனவும் , இரண்டாயிரத்திற்கு  நெருப்புக்  கோடல்  இடையாயார்க்கெனவும் , நாலாயிரத்திற்கு  நெருப்புக் கோடல்  தலையாயார்க்கெனவும்  கொள்ளவேண்டுமென்பது  போதரும் . இங்ஙனமே  நஞ்சு  முதலிய  சாதனங்களுக்குக்  கூறிய  பொருளளவை  இடையாயர்  தலையாயர்களுக்கு  முறையே  இருமடங்கு  நான்கு  மடங்கு  மிகுதியாகக்  கணக்கிட்டு  அறிந்துகொள்க . சிறு  தொகைநிமித்தம்  தலையாயோரை  நெருப்பில்  நடத்தல்  முதலிய  கடுஞ்சூளுறவு  புரியச்  செய்தல்  தக்கதன்று  என்பது  கருதி  இவ்வாறு  கூறப்பட்டன . )

      சிரோவர்த்தி  இல்லாதிருக்குங்கால்  தெய்விக  சாதனங்  கொடுக்கத்தக்கதன்று . தெய்விக  சாதனங்  கொடுக்குங்கால்  வாதி  சிரத்தானத்திலிருப்பதால்  அவனே  சிரோவர்த்தி  என்று  கூறப்படுவான் .                                                                                              252

     வேதங்களில்  விதிக்கப்பட்டபடி  பிரதிவாதியையே  தெய்விக  சாதனங்  கொடுக்கச்செய்தல்  வேண்டும் . வாதியை  நோக்கித்  தெய்விக  சாதனங்  கொடுக்கும்படி  யாரும்  நியமனஞ்  செய்தலாகாது.                                                                                                253

      பிரதிவாதியின்  விருப்பத்திற்கிணங்க  வாதியும்  ஒரோவமயம்  தெய்விக  சாதனஞ்  செய்தற்குரியனாவான் . அங்ஙனஞ் செய்யுங்கால்  அப் பிரதிவாதி  சிரோவர்த்தியாவான் .                                                     254

      அரசால்  ஐயமுறப்பட்டாரையும்  கள்வரால்  தம்முட்  கலந்தவரெனக்  காட்டப்பட்டாரையும்  அவர்  தம்  தூய்மையைப்  புலப்படுத்துதற் பொருட்டுச்  சிரோவர்த்தி  இல்லாமலே  தெய்விக  சாதனங்  கொடுக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                        255

      பிறர்  மனையாளோடும் , சேரத்தகாத  பெண்களோடுஞ்  சேர்ந்ததனாற்  றோன்றிய  வழக்குகளிலும் , பார்ப்பனக்கொலை  முதலிய  பெரும்பாதகங்களைப்  பற்றிய  வழக்குகளிலும்  தெய்விக  சாதனங்களை  மேற்கொண்டே  ஆராய்தல்  வேண்டும் .  மற்றைச்  சாதனங்கள் இங்குப்  பயன்படா .                                                                   256

      களவு  குறித்து  ஐயமுறப்பட்ட  மனிதற்கு , உழுந்தளவினவாகச்  செய்து  கொதிக்கின்ற  எண்ணெயிலிடப்பட்ட  இருப்பு  உருண்டைகளைக்  கையினாலள்ளுதலாகிய  தெய்விகம்  விதிக்கப்பட்டுள்ளது .                                                                                      257

      உயிர்க்கொலை  சம்பந்தமான  வழக்கில்  சான்று  முதலிய  பிற  சாதனங்களிலிருப்பினும்  , பிரதிவாதி  தெய்விக  சாதனத்தைக்  கடைப்பிடிக்க  விரும்புவானாயின் , அவ்  வழக்கில்  வேறு  சாதனங்களைப்  பற்றி  வினவலாகாது .                                                    258

      ஒரு  வழக்கில்  சான்று  முதலிய  மாநுட  சாதனங்கள்  வஞ்சமுடையன வென்று  அரசனாற்  கேட்கப்படுமாயின் , அறவிருக்கையின்கண்  வீற்றிருக்கும்  அவ்வரசன்  அவ்  வழக்கைத்  தெய்விக  சாதனத்தால்  ஆராய்தல்  வேண்டும் .                                     259

      ஒரு  கடன்பத்திரம்  நாம  கோத்திரங்களால்  உண்மைப்பத்திரத்தை  ஒப்பக்  கற்பிக்கப்பட்டிருக்குமாயின் , அப்பத்திர  மூலம்  பொருள்  பெற்றுக்கொள்ளாத  பிரதிவாதியின்  பக்கத்தைத்  தெய்விக  சாதனத்தால்  ஆராய்ந்து  நிருணயித்தல்  வேண்டும் .                           260

      எவ்  வழக்கில்  மாநுட  சாதனம்  இல்லையோ  அதன்கட்  டெய்விக  சாதனத்தைக்  கொடுக்கும்படி  செய்தல்  வேண்டும் . காட்டிலும் , மக்கள்  வழங்கா  இடத்திலும் , இரவிலும் , இல்லத்தினுள்ளும்  நிகழ்ந்த  காரியங்களையும் , கொள்ளை , பெண்களின்  ஒழுக்கக்கேடு , எல்லாப்  பொருளையும்  ஒருங்கு  மறைத்தல்  ஆகிய  இவற்றைப்பற்றிய  காரியங்களையும் , இலெளகிக   சாதனங்கள்  மிகப்  பிழைபட்டிருக்குங்  காரியங்களையும்  தெய்விக  சாதனங்களால்  ஆராய்தல்  வேண்டும் .                                                                             261-262

      பெரும்   பாதகங்களைப்  பற்றிய  வழக்குகளிலும் , அடைக்கலப்  பொருள்களைக்  கவர்ந்த  வழக்குகளிலும் , சான்றுகள்  உள்ளன வெனினும்  அரசன்  தெய்விக  சாதனங்களாற்  காரியங்களை  ஆராய்தல்  வேண்டும் .                                                                                      263

      எவ்  வழக்கில்  முதற்கட்  சான்று  கூறுவாரும் , அவர்க்குப்பின்  சான்று  கூறுவாரும் , அவர்க்குப்பின்  சான்று  கூறுவாரும்  மாறுபட்டுரைக்கின்றனரோ  அவ்  வழக்கைச்  சூளுறவுகளால்  ஆராய்ந்து  முடித்தல்  வேண்டும் .                                                                264                                                                                   

      நில  முதலிய  நிலையியற்  பொருள்களைப்  பற்றிய  வழக்கிலும் , பூகம் , சிரேணி , கணம்  என்னும்  இக்  குழுவினர்  வழக்குகளிலும் ,  தானஞ்  செய்யப்பட்டும்  பின்னர்க்  கொடுக்கப்படாத  பொருளைப்  பற்றிய  வழக்கிலும் , பணியாளர்  தலைவர்  ஆகிய  இவர்  தம்முள்  நேர்ந்த  வழக்கிலும் , விற்றல்  வாங்கல்களின்  சம்பந்தமான  வழக்கிலும் , விலைப்  பொருள்  கொடுக்கப்பட்டும்  அப்  பண்டங்  கொள்ளப்படாத  வழக்கிலும்  உள்ள  நிகழ்ச்சிகளைச்  சான்று , பத்திரம் , அநுபவம்  ஆகிய  இம்  மூன்று  சாதனங்களாலும்  ஆராய்ந்து  முடிவு  செய்தல்  வேண்டும் .                                                                    265-266

( பூகம் – ஒரு வகைச்  சாதிக்  கூட்டம் . சிரேணி , கணம்  இவைகளைப் பற்றி  30-31-ஆம்  சுலோகங்களிற்  காண்க .)

      விவாகம் , திருவிழா , சூது  ஆகிய   இவற்றைப்  பற்றிய  வழக்குக்களிற்  சான்றுகளே  ஏற்றுக்கொள்ளத்தக்க  சாதனங்களாம். தெய்விகமும்  இலிகிதமும்  சாதனங்களாகா .                                          267

      வீட்டு வாயில், தெரு, நுகர் பொருள், நீர்  வெளிப்படும்  தூம்பு, ஆகிய  இவை  முதலியவற்றைப்  பற்றிய  வழக்குகளில்   அநுபவமே சிறந்த சாதனமாகும் . தெய்விகங்களும்  சான்றுகளும் அங்ஙனமாகா.          268

      ஒருவன்  மாநுட  சாதனத்தையும்   மற்றொருவன்  தெய்விக  சாதனத்தையுங்  கூறுவாராயின் , அவ்வழக்கில்  அரசன்  மாநுட  சாதனத்தையே  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் . தெய்விக  சாதனத்தை  அங்ஙனம்  ஏற்றுக்கொள்ளலாகாது .                                                             269

      வழக்குரைக்கும்   மனிதரின்  சாதனங்களுள்  மாநுட  சாதனம்  அவ்வழக்கில்  ஏகதேசத்தைப்  பற்றியதாக  அறியப்படினும்  அதுவே  கொள்ளற்பாலதாகும் . தெய்விக  சாதனம்  முழுதும்  பற்றி  நிற்பினும்  அங்ஙனம்  கொள்ளற்பாலதன்றாம் .                                                           270

18 . வழக்குகளின்  தீர்ப்பு  வகைகள்

      காரியங்கள்  முடிவு  செய்தல்,  சான்று  முதலிய  பிரமாணங்களாலும் , தானம்  முதலிய  ஏதுக்களாலும் , வழக்க  ஒழுக்கங்களாலும் , சூளுறவாலும் , அரசன்  ஆணையாலும்  , வாதியின்  உடன்பாட்டினாலும்  ஆகும் .  ஆதலின்  இவை  பற்றி  அஃது  அறுவகைப்படும் .                                                                                               271

( தான  முதலிய  ஏதுக்களை  இப்பிரகரணத்தின்  231 –ஆம்  சுலோகத்திற் காண்க . . வழக்க ஒழுக்கங்கள் –  தேய   தருமம்  சாதி  தரும  முதலியன ; இப்பிரகரணத்தின்  49 –ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . )

      எவ்  வழக்கில்  இலிகிதமும் , அநுபவமும் , சான்றுமாகிய  இலெளகிக  சாதனங்களும் , தெய்விக  சாதனங்களும்  இல்லையோ  அதன்கண்  அரசனது  அபிப்பிராயமே  பிரமாணமாகும் .                     272

( இலெளகிக  சாதனங்கள்  இல்லாத  வழக்கில்  ஒருவன்  தெய்விக  சாதனங்களையும்  உடன்படானாயின்  , அரசனது  அபிப்பிராயத்தின்   வண்ணம்  அவ் வழக்கு  முடிக்கப்படவேண்டுமென்பதாம் . )

      இலெளகிக  தெய்விக  சாதனங்களான்  முடிவு  செய்தற்கியலாத னவும் , ஐயப்படுதற்குரியனவும்  ஆகிய  நிலவெல்லை  முதலியவற்றைப்  பற்றிய  வழக்குகள்  இறுதியில்  அரசன்  கருத்தின்  வண்ணம்  முடிக்கப்படுவனவாம் ; என்னை? அரசனே  யாவர்க்கும்  தலைவனாதலின் .                                                                                            273

      அரசனும் , ஆராயாது  தன்  விருப்பின்  வண்ணம்  காரியங்களை  முடிப்பானாயின்  பாவமுடையனாவான் .  ஆதலின் , அறநூல்களுக்கு  மாறுபாடில்லாமற்  பொருள்  நூல்களை  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .                                                                                                           274

( இதன்  முன்னுள்ள  இரண்டு  சுலோகங்களாலும்  பிறவாற்றான்  முடிக்கப்படாத  வழக்குகளெல்லாம்  இறுதியில்  அரசன்  கருத்தின்  வண்ணம்  முடிக்கப்படுமென்பது  கூறப்பட்டது . அங்ஙனமாயின்  அரசன்  ஒன்றையும்  ஆராயாது  தன்  மனத்திற் றோன்றியபடி  செய்வானாயின் , அது  தீங்காய்  முடியுமென்று  கருதி , இச் சுலோகத்தில்  அறநூல்  வழிப்  பொருணூலை  ஆராய்ந்து  செய்யவேண்டுமென்று  வலியுறுத்துக்    கூறப்பட்டது .)

      அரசன் , அமாத்தியர்  முதலியோரின்  உலோப  குணத்தால்  வழக்காராய்ச்சி  பிழை யுடையதாகும் ; அதனால் , உலகத்து  மக்கள்  அறத்தினின்றும்  பிறழ்ந்துவிடுவர் ; வஞ்சகச்  செயலிலும்  ஒழுகத்  தலைப்படுவர் .                                                                                                   275

       மிக்க  காமம் , வெகுளி , உலோபங்களால்  ஒரு  வழக்கு  நடைபெறுமாயின்  அதனாலுண்டாம்  பாவம்  கருத்தாக்களையும் , சான்று  கூறுவோரையும் , நீதிமன்றத்தவரையும் , அரசனையும்  சாரும்  ஆதலின்  அப்  பாவத்திற்குக்  காரணமான  காம  முதலிய வற்றை யொழித்து அவ் வழக்கை  நன்கு  ஆராய்தல்  வேண்டும் .                      276

( கருத்தாக்கள் – அக்  காம  முதலிய  ஏதுக்களால்  வழக்குக்  கொணரும்  வாதியும் , அவ்வேதுக்களால்  உண்மை  வழக்கை  மறுத்துரைக்கும்  பிரதிவாதியுமாவர் . நீதிமன்றத்தாரும்  அரசனும்  அவ்வழக்கை ஏற்று நடத்துதலால்  பாவப்பயனை எய்துவரென்பதாம் .

      தீயவற்றை  நல்லனவாக  அரசற்கு  எடுத்துக்காட்டும்  அமைச்சர்களும் , அங்ஙனம்  அவர்  எடுத்துக்காட்டியவற்றைப்  பகுத்துணர்ந் தாராயமல்  உண்மையாகக்  கருதி  அவர்  கருத்தின்  வழியே  காரியங்களை  முடிக்கும்  அரசனும்,  அவ்வழக்கில்  எட்டு  மடங்கு  பாவப்  பயனை  அநுபவிப்பர் .                                                       277

      அதரும  நெறியி லொழுகும்  அரசனை  இடித்துரைத்துத்  தடை  செய்யாத  அமைச்சர்  முதலியோர்  அவ்  வரசனோடு  கூடக்  கீழ்  நோக்கிய  முகமுடையராய்  நரகத்தையடைவர் .                                    278

      குற்றஞ்  செய்தார்க்கு  இடுந்  திக்காரதண்டமும்  சொற்றண்டமுமாகிய  இவ்   விரண்டனையும்  விதிக்கும்  அதிகாரம்  நீதி  மன்றத்தார்க்குரியதாம் .  பொருட்டண்முங்  கொலைத்  தண்டமுமாகிய  இவ்விரண்டனையும்  விதிக்கும்  அதிகாரம்  அரசற்குரியதாம் .                                                                                      279

( திக்காரதண்டம் – அதட்டி  ஒறுத்தல். சொற்றண்டம் – கடுஞ் சொற்களால்   ஒறுத்தல் .)

     ஒரு  வழக்கின்  தீர்ப்பையும் , அதனால்  அரசன்  இட்ட  கட்டளையையும்  எவன்  அறநெறி  பிறழ்ந்தன வென்றெண்ணுகின்றானோ  அவன்  அத்  தீர்ப்பிற்   கூறப்பட்ட  பொருளளவின்  இருமடங்கு  பொருட்டண்டம்  இறுத்து   மீண்டும்  அக்காரியத்தை  நடத்துதல்  வேண்டும் .                                              280

      சான்றுகளின்  துணை  கொண்டு  நீதிமன்றத்தாற்  செய்யப்பட்ட  தீர்ப்புக்களிற்  குற்றம்  ஏற்படுமாயின் , அவ்வழக்குகளை  மீண்டும்  விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளல்  வேண்டும் . அரசனால்  ஆராய்ந்து  தீர்க்கப்பட்ட  வழக்குகளுக்கும்  மறு விசாரணை  விதி  உண்டு .                                                                                                          281

       அமைச்சனும் , நீதிபதியும் , மற்றை  நீதிமன்றத்தாரும்  காரியங்களை  மாறுபடச் செய்து  விடுவாராயின், அரசன்  மாறுபட்ட  அக்காரியங்க ளெல்லாவற்றையும்  ஆராய்ந்து  உண்மைத்  தீர்ப்புச்  செய்தல்  வேண்டும் . அங்ஙனம்  மாறுபடத்தீர்த்த  அமைச்சன்  முதலியோர்க்கு  ஆயிரம்  பணம்  தண்டமும்  விதித்தல்  வேண்டும். 282

( முதனூலில் “ஆயிரம்”  என்று  மாத்திரம்  உள்ளது . தண்டவிதியிற்  பண  அளவு  கூறப்பட்டமையால் “ஆயிரம்  பணம் “ என்று  இங்கு  எழுதப்பட்டது . இதனை  ஆயிரம்  பொன்  என்றுங்  கொள்ளலாம் . )

      எந்த  மனிதனுந்  தண்டமின்றி  ஒரு  பொழுதும்  நன்நெறிக்கட்  செல்லமாட்டான் . ஆதலின்  நீதிமன்றத்தாரின்  தவறுகள்  வழக்குரைப்போரால்  நன்கு  எடுத்துக்காட்டப்படின் , அரசன்  அத்  தவறுகளைப்  போக்கி  உண்மையாக  நீதி  செலுத்தல்  வேண்டும் .  283

      வாதி  தான்  மேற்கொண்ட  பூருவபக்கத்தைச்  சான்று  முதலிய  சாதனங்களால்  மெய்ப்பித்தலாலும் , நீதிபதி  முதலியோரால்  உண்மை  பற்றிப்  பாராட்டப்படுதலாலும் , வெற்றித்தீர்ப்புப்  ப்த்திரம்  பெறுதலாலும் , இவ்வுலகத்தில்  அவன்  வெற்றியாளன்  என்று  கூறப்படுவான் .                                                                                                    284

      நீதிமன்றத்தார்  முதலியோரால்  ஆராய்ந்து  தீர்க்கப்பட்டதும்  பிரதிவாதியால்  ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகிய  வழக்கு  நிகழ்ச்சியைக்  கண்டு  அரசன்  அவ்வழக்கில்  வெற்றி  பெற்ற வாதிக்கு  வெற்றிப்பத்திரம்  அளித்தல்  வேண்டும் .                              285

      ஒரு  வழக்குப்  பொய்மையானதாக  இருப்பின் , அதனைக் கொணர்ந்த  வாதியை  அப்  பொய்வழக்கின்  வன்மை  மென்மைக் கேற்பப்   பல  ஆண்டுகள்  வரை  சிறைப்படுத்தல்  வேண்டும் . அவ்வழக்கிற்  குறிக்கப்பட்ட  பிரதிவாதியைக்  கெளரவப்படுத்தல்  வேண்டும் .                                                                                                           286

      எவ்வரசன்   காம  வெகுளிகளை  அடக்கி , அறநெறி நின்று  காரியங்களை  ஆராய்கின்றானோ  அவனைக்  குடிகள்  கடலை  நோக்கிச்செல்லும்  ஆறுகளைப்  போலப்  பின்பற்றி யொழுகுவர் .    267

19 . அதிகார  உரிமை  ஆராய்ச்சி

      தந்தை  தாயார்  உயிரோடிருக்குங்கால்  புதல்வன்  வயோதிகனாயினும்  அவன்  சுதந்திரமுடையனல்லன் . அத்  தந்தை  தாயாரிருவருள்ளும்  வித்துக்குச்  சிறப்புண்மை  காணப்படுதலால்  தந்தையே  சிறந்தவனாவான் .                                                                      288

      தந்தை  இல்லையாயின்  தாய்  சிறந்தவளாவாள் . தாயும்  இல்லையாயின்  தமையன்  சிறந்தவனாவான் . அத்  தமையனுக்கே  சுதந்திரத்  தன்மை யுண்டென் றெண்ணப்படும் , தமையனாந்தன்மை  குணத்தாலும்  வயதாலுமாம் . [ ஒருவன்   குணங்கள்  வாய்க்கப்  பெறாமல்  வயதான  மாத்திரம்  மூப்புடையனாயிருப்பின்  அம்மூப்புச்  சிறந்ததன்றென்பதாம் . ]                                                                                   289

      ஒருவன்  தன்  தந்தையின்  மனைவிமார்  எல்லோரிடத்திலும்  தன்னைப்  பெற்ற  தாயிடத்துப்  போல  மதிப்புவைத்து  நடந்து கொள்ளல்  வேண்டும் . தன்  பொருளைக்  கூறிட்டுத்  தனக்கு  ஒத்த  அளவுள்ள  ஒரு  கூற்றினால்  அவ்வெல்லோரையும்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                                            290

      குடிமக்கள்  எல்லோருஞ்  சுதந்திரமுடையரல்லர் ; அரசனொருவனே  சுதந்திரமுடையனாவான் . மாணாக்கர்  சுதந்திரமுடையரல்லர் ; ஆசிரியன்பாலே  சுதந்திரத்தன்மை யுள்ளதாம் .                                      291

      மருகியை  அடக்கியாளுதற்குரிய  சுதந்திரம்  மகனுக்கேயுரியதாம்  புதல்வனை  விற்றற்கண்ணும்  தானஞ்  செய்தற்கண்ணும்  தந்தைக்குச்  சுதந்திரம்  இன்றாம் .                                                                292

( தந்தை  உயிரோடிருக்குங்கால்  புதல்வனுக்குச்  சுதந்திரமில்லையென்று  288-ஆம்  சுலோகத்திற்  கூறினர் . அதனால்  மருகியை  அடக்கியாளுஞ்  சுதந்திரமும்  மகனுக்கின்றி  அத்   தந்தைக்கே யுண்டு கொல்  என்னும்  ஐயமுண்டாம் . அவ்வையத்தை யொழித்தற்கு  இச்  சுலோகங்  கூறப்பட்டது . )

     பரதந்திரர்களாக  இங்குக்  கூறப்பட்ட  எல்லோரும்  தமக்குக்  கீழ்ப்பட்டாரை  ஏவுதற்கண்ணும் , தம்  பொருளை  ஈதற்கண்ணும்  ஈயாமைக்கண்ணும்  தாமே  தலைவராதலின்  இச்செயல்களிற்  சுதந்திரமுடையராவர் .                                                                                    293

      மணி , முத்து , பவழம் , முதலிய  மற்றை  இயங்கியற்  பொருள்  எல்லாவற்றிற்கும்  தந்தையே  உரிமை யுடையனாவான் . நிலையியற்  பொருள்  எல்லாவற்றிற்கும்  தந்தையும்  பிதாமகனும்  உரிமை யுடையராகார் .                                                                                                   294

      மனைவியும் , புதல்வனும் , பணியாளனுமாகிய  இவர்  மூவரும்  பொருட்குச்  சுதந்திரமுடையரல்லர் . அவரால்  ஈட்டப்படும்  பொருண்  முழுதும்  அவர்தம்  தலைவற்குரியனவாம் .                                               295

( புதல்வனுக்குச்  சுதந்திரமின்றென்றது  ஈண்டுத்  தந்தை  உயிரோடிருக்குங்காலெனப்  பெறப்படும் . )

      களவு  முதலியவற்றால்  ஒருவனுடைய  பொருள்  மற்றொருவன்  கையிற்  காணப்படுதலின்  ஒரு  பொருள்  ஒருவன்  கையிலிருத்தல்  பற்றி  அவனே  அப்  பொருட்குரியான்  என்னும்  நியமமன்று . ஆதலின்  பொருட்குரிய  தலைமைத்  தன்மை  நீதிநூல்  முறையால்  அன்றிக்  காட்சி  அளவை  முதலிய  அநுபவங்களாற்  பொருந்துவதன்று . இன்றேல்  ஒருவன்  பொருளை  மற்றொருவன்  கவர்ந்து  கொண்டான்  என்று  கூறுதற்கு  இயலாது .                                                                     296-297

 ( இன்றேல்  என்பதற்கு  நீதிநூல்   முறைப்படி  இப்பொருட்குரியான்  இவன்  என்னும்  நியமமில்லையாயின்  என்று  பொருள்  கொள்ளவேண்டும் . ஒருவன்  கையில்  ஒரு  பொருள்  இருக்குமானால்  அங்ஙனம்  இருத்தல்  பற்றி  அப்பொருட்குரியவன்  அவன்  என்று  கொள்ளலாகாது . அஃது  அவற்கு  எவ்வாறு  வந்ததென்று  நூன்  முறையான்  ஆராயவேண்டுமென்பதாம் . )

      பொருணூல்களில்  எல்லா  வருணங்களுக்கும்  தக்கவாறு  தனித்தனியே  பொருளீட்டும்  உபாயங்கள்  விளக்கிக்  கூறப்பட்டுள்ளன . அந்  நூல்களிற்  கூறப்பட்ட  தருமங்கள்  எப்பொழுதும்  மிலேச்சரானும்  மேற்கொள்ளப்பட்டன . இப் பொருளீட்டும்  உபாயங்கள்  உலகத்து  மக்களின்  வாழ்க்கைநிலை  குறித்து  அறிவிற்  சிறந்த  பண்டை  ஆசிரியராற்  கூறப்பட்டன .        298

      ஒருவன்  பொருளைக்  கூறிட்டுக்  கொள்ளுங்கால் , அவன்  மனைவி மாரும்  புதல்வரும்  ஒத்த  அளவில்  ஒவ்வொரு  கூறும் , மணஞ்  செய்யப்படாத  கன்னி  அரைக்கூறும் , தெளகித்திரன்  காற்கூறும்  பெறுதற்குரியராவர் .                                                                                          299

      தலைவன்  இறந்து விடுவானாயின்   அவன்   புதல்வர்  முதலியோர்  முற்கூறிய  அளவின்படி  அவன்  பொருளைக்  கூறிட்டுக்  கொள்ளக்  கடவர் .                                                                                                                     300

 ( முதலியோர்  என்றதனால்  முற்  சுலோகத்திற்  கூறப்பட்ட  அவன்  மனைவியரையும் , கன்னியரையும் , தெளகித்திரனையுங்  கொள்ளல்  வேண்டும் .  முற்கூறிய  அளவு – இவன்  முற் சுலோகத்திற்   கூறப்பட்டது .)

      புதல்வன்  ஒருவனாயின்  அவன்  பொருளின்  நான்கிலொரு  கூறு  தாய்க்கும் , எட்டிலொருகூறு  உடன்  பிறந்தாளுக்கும் , பதினாறிலொரு  கூறு  உடன்பிறந்தாள்  மகனுக்கும்  கொடுத்து , எஞ்சியவற்றை  எல்லாம்  தான்  எடுத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                    301

      ஒருவனுடைய  பொருளை  அவன்  புதல்வன் , பெயரன் , மனைவி , மகள் , அவள்  மகன் , தாய்  தந்தையார்  , தமையன்  தம்பிமார் , அவர்தம்  புதல்வராகிய  இவருள் முறையே  முற்கூறப்பட்டார்   இல்லையாயின்  பிற்  கூறப்பட்டார்  எய்துதற்குரியராவர் .                 302                                                 

( புதல்வன்  இல்லையாயின்  பெயரனும், அவனும்  இல்லையாயின்  மனைவியும்  என்றிவ்வாறு  முறையே  எய்துதற்குரியராவர்  என்றறிதல்  வேண்டும் .)

      ஒரு  பெண்ணுக்குக்  கிடைத்த செளதாயிகப் பொருட்கு  அவளே  சுதந்திர முடையளாவாள் . அப்பொருள்  நிலையியற்  பொருளாயினும்  அதனை விற்றற்குந்தானஞ் செய்தற்கும் அவளுக்கு உரிமையுண்டு. 303                                                                                                                                                                                                   

( செளதாயிகம் – ஸ்த்ரீதனம்  இதனைப்  பின்வரும்  சுலோகத்திற்  காண்க .) 

      மணம்  புரியப்பட்ட  பெண்களுக்கும் , அது  செய்யப்படாத  சிறுமியர்க்கும்  கணவன்  பக்கல்  நின்றும் , தந்தை  இல்லத்தினின்றும்  தாய் , தந்தை , தமையன் , தம்பி  முதலியோராற்  கொடுக்கப்படும்  பொருள்  செளதாயிகமாகும் .                                                                        304

( கணவன்  பக்கல்  நின்றுங்  கிடைக்கும்  பொருள்  மணஞ்  செய்யப்பட்ட  பெண்ணுக்காம் . அப்பொருள்  மணம்  புரிதற்கு  முன்னரே   பெண்ணின்  தந்தைதாயரால்  வேண்டப்பட்டு  அப் பெண் கோடற்குரியவனால்  கொடுக்கப்பட்டதாகும் . )

      ஒருவன் தன்  தந்தை  முதலியோரான்   பொருட்சம்பந்தமின்றித்  தான்  தனியே  ஈட்டிய   பொருண்முழுதையும்  தன்  விருப்பின்   படியே  அநுபவிக்கலாம் . அப்பொருள்  அவன்  தமையன்  தம்பி  முதலியோராற்  கூறிட்டுக்  கொள்ளத்  தக்கதன்று .                           305                              

      ஒருவன்  பொருட்கு  நீரினாலும் , கள்வராலும் , அரசனாலும் , நெருப்பினாலும் , கேடு  நேர்ந்திருக்குங்கால் , பிறனொருவன்  தன்   வன்மையால்  அக்கேட்டை  ஒழித்து  அப்  பொருளைக்  காப்பாற்றுவானாயின்  , அவன்  அப்பொருளிற்  பத்திலொரு   கூறு  பெறுதற்குரியனாவான் .                                                                                   306

20 . கூடி  வினை  செய்தல்

      பொற் கொல்லன்  முதலிய  வினைஞர்  பலர்  ஒன்றுகூடி   அணிகலன்  முதலிய  சிற்ப  வினைகளைச்  செய்வாராயின் , அக்  காரியங்களுக்கேற்றவாறும் , அவர்தம்  தகுதிக்கேற்றவாறும் ,வேதனம்  பெறக்கடவர் .                                                                                                       307

      சிற்பவினைகளை  யாராயுந்திறனும்  , அக்கலைகளிற்  சிறந்த  அறிவும்  வாய்க்கப்  பெற்றவனைச்  சிற்பி  என்று  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                                                 308

      அரமியம் , தேவாலயம் , சிறுகுளம், மற்றை  உபகரணப்பொருள்கள்  ஆகிய  இவற்றை  ஒருங்கு  சேர்ந்து  செய்யுந்  தொழிலாளருள்  தலைவன்  இரு  மடங்கு  வேதனம்  பெறுதற்குரியனாவான் .                309

      நாட்டியம்  ஆடுவோர்  வருவாயைக்  கூறிட்டுக்  கொள்ளுமுறைமை  பெரியோராற்  பின்வருமாறு  கூறப்பட்டுள்ளது . அந்  நடருள் , தாள  வியல்பறிந்தோன்  வருவாயிற்  பாதிப்  பொருளைப்  பெறுதற்குரியனாவான் . எஞ்சிய  பாதிப்  பொருளை  மற்றைப்பாடகர்  ஒத்த  அளவாகக்  கூறிட்டுக்  கொள்ளல்  வேண்டும்                                  310

      கள்வர் அரசன் ஆணையை மேற்கொண்டு பிற நாட்டினின்றுங்  கவர்ந்த  பொருளில்  ஆறிலொரு  கூறு  அவ் வரசற்குக்  கொடுத்து விட்டு  எஞ்சிய பொருளை ஒத்த  அளவாகக்  கூறிட்டுக்கொள்ளல் வேண்டும் .                                                                                                            311                                                                                                            

( பிற நாடு – பகைவர்  நாடு .)

      மேற்கூறிய  களவுத்  தொழிலில்  தலைப்பட்டாருள்  ஒருவன்  பிறராற்  பிடிக்கப்படுவானாயின் , அவனை  விடுவித்தற்பொருட்டுக்  கொடுக்கப்படும்  பொருளை  அக்கள்வர்  எல்லாரும்  ஒத்த  அளவாகக்  கூறிட்டுக்  கொடுத்தல்  வேண்டும் .                                                              312

      பொன் , தானியம் , சுவைப்பொருண்  முதலியவற்றால்  வாணிகம்  புரிவோர்  குறைவு , சமம் , மிகுதியாகிய  தம்  மூலப்பொருள்களின்  கூறுகட்  கேற்றவாறு  ஊதியம்  பெறக்கடவர் .                                         313

      வாணிகம்  புரியுங்கால்  முன்னரே  துணியப்பட்டபடி   சமமாகவும் , குறைவாகவும் , மிகுதியாகவும்  மூலப்பொருளைக்  கூறிட்டுத்  தொகுத்தல்  வேண்டும் . அக்கூறுகட்  கேற்றவாறு  செலவையுந்  தொழிலையுஞ்  செய்தல்  வேண்டும். அதனால்  வரும்  ஊதியத்தையும்  அங்ஙனமே  கூறிட்டுக்   கொள்ளல்  வேண்டும் .                                      314

      ( மூலப்பொருள்  எவ்வாறு  கூறிடப்பட்டதோ  அவ்வாறே  தொழிலுஞ்  செலவு  ஊதியமும்  கூறிடப்படவேண்டுமென்பது  கருத்து .)

     வாணிகம்  புரிவார்க்கும்  உழவுத்  தொழில்  செய்வார்க்கும்  இவ் விதியே  பொருந்துவதாகும் .                                                                           315

      பலர்க்கும்  பொதுவான  பொருளும் , ஒருவனிடத்தினின்றும்   திருப்பிக்  கொடுப்பதாகக்  கூறி  வாங்கிய  யாசித்தப்  பொருளும் அடைக்கலப்பொருளும் , பந்தகப்பொருளும் , அடிமையும் , அவ்வடிமையின்  பொருளும் , பிறனொருவனுக்குச்  சேரவேண்டி  ஒருவன்  தன்பால்  வைத்த  பொருளும் , சிற்பவினை  செய்தற்பொருட்டுத்  தன்பாற்  பிறர்  தந்த  பொருளும் , சந்ததி  இருக்குங்கால் அக்குடும்பத்துப்  பொருளும்  ஆகிய  இவ் வொன்பது  வகைப்பட்ட  பொருள்களையும்  அறிவுடையார்  தமக்குக்  கேடு வந்த  காலத்தும்  தானஞ்  செய்தல் , விற்றன்  முதலியவற்றால் பிறர்க்குக்  கொடுத்தலாகாது .                                                                                            316

      பெறத்தகாத  பொருளைப்  பெறுபவனும் , கொடுக்கத்தகாத  பொருளைக்  கொடுப்பவனும்  ஆகிய  இருவரும்  கள்வனை  யொப்பத்  தண்டிக்கப்படுதலோடு  உத்தம சாகச தண்டத்திற்கும் உரியராவர். 317                     

( உத்தம சாகசம் –ஆயிரம்  பணம்  இறுக்கும்படி  செய்யும்  தண்டம். இதனை  இவ்  வாத்தியாயத்தின்  முதற்பிரகரணம்  116-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      உரியரல்லாதாரிடத்தினின்றும் , கள்வரிடத்தினின்றும் , பொருள்  கொள்ளுவோனும்  , பிறர்  பொருளை  மறைவில்  விற்போனும்  ஆகிய  இருவரும்  கள்வனை  யொப்ப  அரசனாற்  றண்டிக்கப்படுவர் .        318

      குற்றமில்லாதவனும் , தனக்கு  ஒரு  கேடுஞ்  செய்யாதவனுமாகிய  இயமானனைக்  காரணமின்றி  விலக்கிய  புரோகிதனும் , அங்ஙனமே  குற்றமில்லாத  புரோகிதனைக்  காரணமின்றி  விலக்கிய  இயமானனும்  ஆகிய  இருவரும்  தண்டிக்கப்படுவர் .                            319

( இயமானன் – வேள்வித் தலைவன் . புரோகிதன் – வேள்வி  வினை   செய்வோன் . இருத்துவிக்கு  என்றுங்கூறப்படுவான் . )

      வாணிகம்  புரிவோன்  தான்  விற்பதற்காகக்  கொண்ட  பண்டத்தில்  காலம் , இடம்   முதலியவற்றை  நோக்கி , அப் பண்டங்கொள்ளுதற்  பொருட்டுச்  செலவாகிய  பொருளையும்  அறிந்து , கொண்முதற் றொகையில்  முப்பத்திரண்டிலொரு  கூறாதல் , பதினாறிலொரு  கூறாதல்  ஊதியம்  ஏற்படுத்தலாம் . இவ் வளவினும்  மிகுதியாக  ஊதியங்  கொள்ளலாகாது .                                                                              320

( வாணிகத்  தொழிலிற்  கிடைக்கும்  ஊதியத்திற்  பாதிப்பொருள்  கொடுத்தவர்க்கும் , பாதி  தொழில்  செய்தவர்க்குமாம்  என்பது  கருத்து .)

      ஒருவன் , ஊதியப் பொருளிற்  பாதி  தருவதாக  உடன்படுவானாயின் , அவற்கு  மற்றொருவன்  வாணிகம்  புரிதற்  பொருட்டு  எப்பொழுதும்  வட்டியின்றி  முதற் பொருள்  கொடுத்துதவலாம் .                                                                                            321

(வாணிகத்தொழிலிற்  கிடைக்கும்  ஊதியத்திற்  பாதிப்பொருள்  கொடுத்தவற்கும் , பாதி  தொழில்  செய்தவற்குமாம்  என்பது  கருத்து .)

      ஒருவன் , தன்பாற்  கடன் கொண்டவனிடத்தினின்றும்  முதற் பொருளுக்கு  இருமடங்கு  மிகுதியாக  வட்டி  பெற்றிருப்பானாயின்  பின்னர்  அக் கடன்  கொடுத்தவற்கு  முதற்  பொருளை  மாத்திரம்  கொடுக்கும்படி  அரசன்  தீர்ப்புச்   செய்தல்  வேண்டும் . அதனின்  மிகுதியாகக்  கொடுப்பித்தலாகாது .                                                             322

      பொருளுடையார்  வட்டிக்கு  வட்டி  சேர்த்தல்  என்னும்  வஞ்சத்தாற்  குடிகளின்  பொருளைக்  கவர்ந்து  விடுவர் . ஆதலின் , அரசன்  அப்பொருளுடையாராற்  கேடெய்தாவண்ணம்  குடிகளைப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                 323

( வட்டிக்கு  வட்டி  சேர்த்தலைச்  சக்கரவிருத்தி   என்று  முதனூல்  கூறும். )

      எவன்  ஆற்றலுடையனாயிருந்தும் , பொருளுடையானிடத்தினின் றுங்  கடனாகக்  கொண்ட  பொருளை  மீண்டும்  அவற்குக்  கொடுக்கவில்லையோ  அவனை  அரசன்  சாமோபாயத்தாலும்  தண்டோபாயத்தாலும்  முறையே  இணக்கியும்   ஒறுத்தும்  கொடுக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                          324

     கடன்  கொடுத்தானொருவன்  கடன்  கொண்டவனிடத்தினின்றும்  எழுதி  வாங்கிய  கடன்பத்திரம்  தவறிவிடுமாயின்  அதனை  அவன்   அரசன்பால்  தெரிவித்துக்  கொள்ளல்  வேண்டும் . அங்ஙனந்  தெரிவிக்கப்பட்ட  அதனை  அரசன்  சான்றுகளால்  நன்கு  ஆராய்ந்தறிந்து  முன்போலக்  கடன்  கொண்டவனைப்  பத்திரம்  எழுதிக் கொடுக்கச்  செய்தல்  வேண்டும் .                                                 325

      ஒருவனாற்  கொடுக்கப்படாத  பொருளை  வலிந்து  கவர்ந்து  கொண்டவனும்  மனமொப்பிக்  கொடுத்த  பொருளை  மீண்டும்  பெற  விரும்புவோனும்  ஆகிய  இவ்விருவரும்  அறநூலுணர்ந்த  அரசனாற்  தண்டிக்கப்படுபவராவர் .                                                                                326

           எவன்  விலைப்  பண்டங்களை  வஞ்சித்து  விற்கின்றானோ அவன்  எப்பொழுதுங்  கள்வனை யொப்பத்  தண்டிக்கப்படுவான் . 327

      சிற்பிகளின்  குணஞ்  செயல்களை யறிந்து  தக்கவாறு  வேதனங்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                  328

      அரசன்  தன்  நிலத்தில்  வெள்ளி யெடுத்து விற்போனிடத்தினின்றும் நாடோறும்  அவ் வெள்ளி  விலையில்  ஐந்திலொரு  கூறாதல் , நான்கிலொரு  கூறாதல் , மூன்றிலொரு  கூறாதல் , பாதியாதல்  இறையாகப்  பெற்றுக்  கொள்ளல்  வேண்டும் . இவ்வளவின்  மிகுதியாகப்  பெறலாகாது .                                                                             329

( இது  சுரங்கப்  பொருளினின்றும்  அரசற்குக்  கிடைக்கவேண்டிய  கூறாம் .)

21 . உலோகங்களை  வஞ்சிப்போர்க்கு  இடுந்  தண்ட முறை

     கலப்பில்லாத  தூய்மை  மிக்க  பொன் நூறு  பலமாயினும்  உருக்கப்படுமாயின்  பின்னர்  எடையில்  ஒரு  சிறிதுங்  குறைவுறாது .  கலப்பில்லாத  தூய  வெள்ளி  உருக்கப்படுமாயின்  நானூற்றிலொரு  கூறும் , அத்தகைய  செம்பு  உருக்கப்படுமாயின்  நூற்றிலொரு  கூறும், வங்கமும் , ஈயமும் , சசதமும்  ஆகிய  இவை  உருக்கப்படுமாயின்  பதினாறிலொரு  கூறும் , இரும்பு  உருக்கப்படுமாயின்  எட்டிலொரு  கூறும்  எடையிற்  குறைவனவாம் . இங்குக்  கூறிய  அளவின்  மிகுதியாகக்  குறையுமாயின்  அவ்வுலோகங்களால்  வினை  செய்யுஞ்  சிற்பிகள்  அரசனாற்  றண்டிக்கப்படுவர் .                                            330-331

      நன்றாக  இயைத்துச்  செய்யும்  பணிச்  செயன்  முதலியவற்றில்  பொன்  இருநூற்றிலொரு  கூறும் , வெள்ளி  நூற்றிலொரு  கூறும்  எடை  குறையும் . அப் பொன்  வெள்ளிகளாற்  செய்யப்படும்  பணி  முதலியவற்றில்  உறுப்புக்கள்   ஒன்றோடொன்று  அழகுறச்  சேர்க்கப்படுங்கால்  அவ்வெடை  அதிகமாகும் .                                        332

( இயைத்துச்  செய்தல் – பணி  முதலியவற்றை  அராவி  மெருகிடல் . உறுப்புக்கள்  சேர்க்கப்படுங்கால்  எடை  அதிகமாதல்  பொடி வைத்து  ஊதுதலானாம் . )

      இங்குக்  கூறிய  அளவின்  மிகுதியாகக்  குறையுமாயின்  அப் பொற்கொல்லன்  பணி  செய்வதாகப் பெற்ற  பொன்னளவிற்  பதினாறிலொரு  கூறு  பொன்  தண்டம்  இறுக்கக்  கடவன் . அப்பணியில்  உறுப்புக்கள்  ஒன்றோடொன்று  சேர்க்கப்படுதலால்  மிக்க  அளவையும் , நன்றாக  இயைத்துச்  செய்தலாற்  குறைந்த  அளவையும்  ஆராய்ந்தறிந்து  கணக்கிடல்  வேண்டும் .                         333

      பொன்னாற்  செய்யப்படும்  பணிகளுள்  தலையாய  பணிக்கு  அதன்  எடையில்  முப்பதிலொரு  கூறும் , இடையாய   பணிக்கு  அதன்  எடையில்  அறுபதிலொறு கூறும் , கடையாய  பணிக்கு  அதன் எடையில்  நூற்றிருபதிலொரு  கூறுமாக  அவற்றை  இயற்றிய  பொற்கொல்லன்  கூலி  பெறக்கடவன் . கைவளைப்  பணிக்கு  அதன்  எடையில்  இருநூற்று நாற்பதி லொரு கூறும் , உருக்கிவார்த்தன்  மாத்திரஞ்  செய்யின்  அதன்  எடையில்  நானூற்றெண்பதி லொரு  கூறும்  கூலியாகும்.                                                                                         334

      வெள்ளியாற்  செய்யப்படும்  பணிகளுள்  தலையாய  பணிக்கு  அதன்  எடையிற்  பாதியும்  , இடையாய  பணிக்கு  அதன்  எடையிற்  காற்  கூறும் , கடையாய  பணிக்கு  அதன்  எடையில்   எட்டி லொரு  கூறும்  கைவளைக்கு  அதன்  எடையிற்  பதினாறி லொரு  கூறும்   கூலியாகும் .                                                                                                  335

      செம்பு , வங்கம் , சசதம் , ஆகிய  இவ்வுலோகங்களாற்  செய்யப்படும்  பாண்டம்  முதலியவற்றிற்கு  அவ்வவற்றின்  எடையிற்  காற்கூறு  கூலியாகும் . இரும்பினாற்  செய்யப்படுவனவற்றிற்கு  அவற்றின்  சிறுமை  பெருமை  நோக்கி  அவ்வெடைகளிற்  பாதியாதல்  ஒத்த  அளவாதல் , இருமடங்கு,  முதல்  எட்டு  மடங்கு வரை  மிகுதியாய்  கூலி  கொடுத்தல்  வேண்டும் .                                                                   336

( இரும்பினாற்  செய்யப்படுவனவற்றிற்கு  எட்டு  மடங்குவரை  கூலி  நியமனம் ஏற்படுத்தியது .)

      பொன்  முதலிய  உலோகங்களை  வஞ்சிக்கும்  வினைஞர்  வஞ்சிக்கப்பட்ட  அளவின்  இருமடங்கு  தண்டம் இறுக்கக்  கடவர் .  337

      உலகநடைகளால் தோன்றினவும், பண்டைக்காலத்து முனிவரால்   அறநூல்களில்  விதிக்கப்பட்டனவுமாகிய வழக்க  ஒழுக்கங்கள் பல் வேறு  வகைப்படுவன . அவை  முழுதுங்  கூறுதற்கியலாதனவாம் . 338

      நாட்டைப்பற்றிய  இவ் வைந்தாம்  பிரகரணம்  சுருக்கமாகக்  கூறப்பட்டது . இதன்கட்  கூறப்படாத  நல்லனவும் , தீயனவுமாகிய  விடயங்கள்  உலகியலாலும் , மற்றை  நீதி  நூல்களாலும்  அறிதற்பாலனவாம் .

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

நாட்டைப்  பற்றிய  இறுதியதாகிய

“இராச  தருமம்”  என்னும்

ஐந்தாம்  பிரகரணம்  முற்றிற்று .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆறாம்  பிரகரணம்

1 . அரணியல்

      இனி, அரண்களைப்  பற்றிய  ஆறாம்  பிரகரணம்  சுருக்கிக்  கூறப்படும் . பிறர்  உட்புக  இயலாதவாறு  பள்ளம் , முள் , கல்  ஆகிய  இவைகளால்  அமைக்கப்படுவது  களர்நிலவரண்  என்று  கூறப்படும் .1

( களர்நிலவரண் – நிலவரண்  வகைகளுள்  ஒன்று . இதனை  ஐரிணம்  என்று  முதனூல்  கூறும் . )

      நாற்புறமும்   மிக  அழகாகத்  தோண்டி யமைக்கப்படுவது  அகழியரணாகும் . இட்டிகைகளாலும் , கற்களாலும் , மண்ணாலும் எடுக்கப்பட்ட  சுவர்களாகிய  கோட்டை   மதிலரணாகும் .                       2

( அகழியரண் – நீர்  அரண்  வகைகளுள்  ஒன்று . இட்டிகை – செங்கல்.)

      பெரிய  முண்மரக்  கூட்டங்கள்  சூழ  அமைக்கப்படுவது  காட்டரணாகும் . நீரும் நிழலு மின்றி  நாற்புறத்துமுள்ள  மரு நிலம்  நிலவரண்  என்று  கூறப்படும் .                                                                           3

( மரு நிலம் – பாலை  நிலம் .)

     நாற்புறத்தும்  மிக்க  நீர்ப்பரப்பினை யுடையது   நீரரணாகும் . மக்கள்  வழக்கமில்லாத  இடத்தில்  நல்ல  நீரைப்  பிற்புறத்தே  கொண்டு  மிக வுயர்ந்திருப்பது  மலையரணாகும் .                                    4

     ( இதன்கட்  கூறிய  நீரரணும்  மலையரணும்  கடலாலும்  மலையாலும் இயற்கையாக  அமைவனவாதலின்  அவை  இயற்கை  யரண்களாம் . முதனூலில்  “உச்சதரம்”  என்பதனை , “உச்சகரம்”  எனப்  பாடங்கொண்டு  உயர்ந்த  இல்லங்களமையப் பெற்றிருப்பது  என்று  பொருள்கோடலும்  ஒன்று . )

     படைவகுப்பில்  தேர்ந்த  அறிவுடையோராலும்  போர்  வீரராலுஞ்  சூழப்பட்டுப்  பகைவரால்  வேறுபடுக்கப்படாதது  படையரணாகும் . துணையாக  நின்றுதவும்  வன்மைமிக்க  சுற்றத்தாரானாயது  துணையரண்  என்று  கூறப்படும் .                                                                    5

( இதன்கட்  கூறிய  இரண்டரணும்  சரப்பொருள்களாலும்  முற்கூறிய  ஏழரணும்  அசரப்பொருள்களாலும்  அமைந்தனவாம் .)

அகழரணும் , களர்நிலவரணும் , மதிலரணும் , காட்டரணும்  மருநிலவரணும் , நீரரணும் , மலையரணுமாகிய  இவ்  வெழுவகை  யரண்களும்  ஒன்றற்கொன்று  முன்னதனை  நோக்கப்  பின்னது  முறையே  சிறந்ததாக  வைத்தெண்ணப்படும் .                                            6                

( இயற்கையுஞ்  செயற்கையுமாகிய  இவ்வெழுவகை  யரண்களுள்  மதிலையே  சிறந்த  அரணெனவும் , அகழியையும்  கடலையும்  நீரரணெனவும் , களர்நிலத்தையும்  மருநிலத்தையும்  நிலவரணெனவும்  கொண்டு , மலையரண்  காட்டரண்களோடு  ஐந்தாக்கிப்  பின்னுள்ள  நீரரண்  நிலவரண்  மலையரண்  காட்டரண்  என   இயற்கையுஞ்  செயற்கையுமாக  இந்  நான்கரணுஞ்  சூழப்படுவது  சிறந்த  மதிலரணகும்  என்று கூறுவர் திருக்குறளாசிரியர் . அவர்  கருத்துப்படி  அரண்  என்னுஞ்  சொல்  மதிலையே  யுணர்த்துவதாகும் . ஏனைய  அதனைச்  சூழ்ந்திருத்தல்  பற்றி  அரணென  உபசரித்துக்  கூறப்படும் . பிறவற்றுட்  சில  இல்லாமலிருப்பினும்  மதில்  இன்றியமையாததாகலான்  அதனையே  அரணெனக்  கொண்டனர்  . இவ்வுண்மையை  “மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடையதரண் “,  “உயர்வகலந் திண்மை யருமை யிந் நான் கினமைவரணென்றுரைக்கு  நூல்”  என்னுந்  திருக்குறள்களானறிக . )

      துணையரணும்  படையரணுமாகிய  இவ்விரண்டும்  மற்றையரண்களெல்லாவற்றையும்  அலங்கரிப்பனவாம்.  என்னை ? அவ்விரண்டரண்களுமின்றி  மற்றை  யரண்கள்  அரசர்க்குப்  பயன்படாவாகலின் .                                                                                           7

     மற்றை  யரண்களெல்லாம்  படையரணைத்  துணையாக வுடைமையின்  அவ்வெல்லா வரண்களினும்  படையரணே  தலை சிறந்ததென்று  அறிவுடையார்  கூறுவர் . ஆதலின் , அப்படையரணை  எப்பொழுதும்  அரசன்  காப்பாற்றுதல்  வேண்டும் .                                 8

  எவர்க்குப்  படையரணுள்ளதோ  அவன்  வயத்ததாகும்  இந்நிலவுலகம்.  படையரணில்லாத  மற்றை  யரண்கள்  சிறைச்சாலையை யொப்பனவாம் .                                                                                                    9

( போர்  வீரரை யில்லாத  மதில்  முதலிய  மற்றை யரண்கள்  பகைவர்  பொருதற்கு  எளியனவாதலின் , அவ்வரண்களுள்  இருக்கும்  அரசன்  தற்காப்பின்றிச்  சிறைக் கோட்டத் திருப்பவனை யொப்ப னென்பது  கருத்து .)

      அரசனுக்குக்  கேடு  வந்துழி  மற்றை  யரண்களும்  அவனைப்  பாதுகாத்தற்குரிய  சிறந்த  இருப்பிடங்களாகும் .                                      10

      அரணுள்  இருக்கும்  போர்வீரன்  ஆயுதமுடையவனாக விருப்பின் , அவன்  ஒருவனே  பகைவர்  நூற்றுவரோடு  போர்  செய்தற்கு  வலியுடையனாவன் . அங்ஙனமிருக்கும்  போர்வீரர்  நூற்றுவராயின்  பகைவர்  பதினாயிரவரோடு  போர்  செய்தற்கு  வலியுடையராவர் . ஆதலின் , அரசர்  அரண்களைப்  பற்றுக்கோடாகக்  கொள்ளல்   வேண்டும் .                                                                                                              11

      மிக்க  வலி  படைத்த  படையரணுக்கு  மற்றை யரண்களில்லாத  எல்லாவிடங்களும்  அரணுடையன போலவாம் . அரசன்  போர்க்குரிய  உபகரணப்  பொருள்களாலும் , தானியங்களாலும் , வீரராலும் , அம்பு  முதலிய  ஆயுதங்களாலும் , பொருளாலும்  நிறையப்  பெற்ற  அரண்களை யுடையனாயிருத்தல்  வேண்டும்.                                             12

      அரசர்க்கு  வன்மை  மிக்க  சுற்றத்தாராகிய  துணைவலி  நிறைந்த  அரண்  மிகச்  சிறந்ததாக  எண்ணப்படும் . அத் துணைவலி  நிறைந்த  அரணால்  அரசன்  வெற்றியடைதல்  ஒருதலையாம் .                               13

      எவ் வரண்கள் துணைவலி நிறையப் பெற்றுள்ளனவோ  அவை  யெல்லாம்  மிக்க  பயனுடையனவாம் . அரண்கள்  ஒன்றுக்கொன்று  துணையாக  வமைந்திருத்தல்  அரசனுக்கு  வெற்றி    தருவதாகும் .     14

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

“அரணியல்”  என்னும்

ஆறாம்  பிரகரணம்  முற்றிற்று

##########################################################################

ஏழாம்  பிரகரணம்

1 . படையியல்

      இதுகாறும்  அரண்களைப்  பற்றிய  பிரகரணம்  சுருக்கிக்  கூறப்பட்டது . இனிப் படைகளைப் பற்றிய  ஏழாம்  பிரகரணம்  கூறப்படும். அம்பு , வாள்  முதலிய  ஆயுதங்களையுடைய  காலாள்  முதலிய  கூட்டம்  படையென்று  கூறப்படுவதாகும் .                              1

     அப் படை  தானே  செல்வது , பிறவற்றாற்  செல்வது   என  இரண்டு  வகைப்படும் . அது  பின்னரும்  தெய்விகம் , ஆசுரம் , மானவம்  என  மூன்று  வகைப்படுவதாம் . இவற்றுட்  பின்னதனை  நோக்க  முன்னது  வன்மையிற்  சிறந்ததாகும் .                                                                            2

( தானே  செல்வது –  சுவகமம் . பிறவற்றாற்   செல்வது – அந்நியகமம். )

      தானே  செல்வது  பிறிதோர்  ஊர்தி  வேண்டாது  நடப்பதாம் . பிறவற்றாற்  செல்வது  ஊர்திகளிலேரிச்  செல்வதாம் . தானே  செல்வது  காலாட்  படை யொன்றே . பிறவற்றாற்  செல்வது  தேர்ப்படையும் , குதிரைப்படையும் , யானைப் படையும்  என  மூன்று  வகைப்படும் .                                                                                                        3

      படைப்பலமின்றேல்  அரசியலும்  பொருளும்  பராக்கிரமமும்  நிலைபெறாமல்  ஒழிந்துபோம் . இழிந்த  மனிதனொருவன்  பலமுடையனாக  விருப்பின்  எல்லோரும்  அவன்  வயப்பட்டொழுகுவர். அவன்  பலமில்லாதவனாக  விருப்பின்  எல்லோரும்  பகைவராவர் . அங்ஙனமாயின்  பலமுடைய  அரசனுக்கும் , பலமில்லாத  அரசனுக்கும்  உலகத்து  மக்கள்  எல்லோரும்  முறையே  வயப்பட்டொழுகுபவராகவும்  பகைவராகவும்  எங்ஙனமாகாமலிருப்பர் ?                                                 4

( உலகத்துள்ளா ரெல்லோரும்  வலிமிக்க  அரசனுக்கு  வயப்பட்டும் , வலி  குறைந்த  அரசனுக்குப்  பகைமை  மேற்கொண்டும்  ஒழுகுவரென்பது  கருத்து .) 

     உடல்  வன்மையும் , மிக்க  வீரமும் , படை  வன்மையும் , படைக்கலப்  பயிற்சி  வன்மையும் , அறிவு வன்மையும் , ஆயுள்வன்மையு மாகிய  இவ்வாறும்  எவன்பால்  அமைந்துள்ளனவோ  அவனே  திருமால்  என்றெண்ணப்படுவான் .                                                                                   5

      பகைவர்  சிறியராயினும்  அவரைப்படைப்பலமின்றி  யாரும்  வெல்ல முடியாது . தேவரும்  அசுரரும்  மனிதரும்  படைக்கலங்களாலேயே  எப்பொழுதும்  தத்தம்  வாழ்க்கையை நடத்துபவராவர் .                                                                                                 6

      ஒருவனுக்குத்  தன்  படைப்பலமே  எப்பொழுதும்  பகைவரை  மிகவும்  தோல்வியுறச்  செய்வதாகும் . ஆதலால்  அரசன்  பகைவராற்  கெடுக்கப்படாத  படைகளை  முயற்சி  மேற்கொண்டு  போற்றல்  வேண்டும் .                                                                                                             7

      படை ,  உரிமைப்படை  துணைப்படை  யெனவும் , மூலப்படை  அமயப்படை யெனவும் , வன்படை , மென்படை  யெனவும் , பயிற்சிப்படை , பயிற்சியில்படை யெனவும் , குழுப்படை , தனிப்படை யெனவும் , கருவி பெறுபடை  தன்கருவிப்படை யெனவும் , ஊர்தி  பெறுபடை  தன்னூர்திப்படை யெனவும்  பல திறப்படும் .                     8-9

      வேதன  முதவிக்  காக்கப்படுவது  உரிமைப்  படையாகும் . ( இது  கூலிப்படை யெனவுங்  கூறப்படும் . )  நட்புரிமை  பற்றிக்  காரியத்திற்குத்  துணை  செய்வது  துணைப்படையாகும் .  பல் யாண்டுகளாகத்  தொடர்ந்து நிற்பது  மூலப்படையாகும் . (இதனைத்   தொல்படை யென்ப .) அங்ஙனமின்றிச்  சின்னாட்களிற்  சேர்க்கப்படுவது  அமையப்படையாகும் . (இது  புதுப்படையாகும் . ) 10

      போர்  செய்தற்கட்  சிறந்த  மனவெழுச்சி யுடையது  வன்படையாகும் . அங்ஙனமல்லாதது  மென்படையாகும் . படை   வகுத்துப்  போர்  செய்வதில்  திறமை  வாய்ந்தது  பயிற்சிப்படையாகும்.  அத்  திறமையில்லாதது  பயிற்சியில்   படையாகும் .                                                                                                11

      அரசனால்  நியமிக்கப்படும்  படைத்தலைவனையுடையது  குழுப் படையாகும் . அப் படைத்  தலைவனை யின்றித் தனியே  தலைமை  கொண்டு  காரியம்  புரிவது  தனிப்படையாகும் . தலைவனால்  தரப்பட்ட  அம்பு , வாள் , முதலியவற்றை யுடையது  கருவிபெறுபடையாகும் . அங்ஙனந்  தரப்படாமல்  அவற்றைத்  தானே  கொண்டு  செல்வது  தன் கருவிப்படையாகும் .                                          12

      தலைவனால்  தரப்பட்ட  ஊர்தியை யுடையது  ஊர்திபெறுபடையாகும் . அங்ஙனம்  தரப்படாமல்  தானே  ஊர்ந்து  செல்வது  தன் னூர்திப்படையாகும் . படைத்தலைவனால்  திரட்டப்பட்டு  அவன்  ஆட்சியுட்பட்டதும் , அங்ஙனம் திரட்டப்படாமல்  தானே  திரண்டு  அவன்  ஆட்சியுட்படாததுமென  அது  பின்னரும்  இரு  வகைத்தாம் . வன்மை மிகுதியால்  தம் விருப்பின்படி  யொழுகும் வேடர் முதலியோரின்  குழு  காட்டுப் படையாகும் .                                13

பகைவனால்  விலக்கப்பட்டுத்  தன்  படையுட்  புகுந்ததும் , பகைவனை  வேறுபடுத்து  அவனிடத்தினின்றும்  தன்  வயமாகச்  செய்யப்பட்டதுமாகிய  படை  பகைப்படை யாகும் . இவ்விருதிறத்துப்  பகைப்படையும்  வலிகுறைந்த  படையென்று  கூறப்படும் . ஆதலின்  அவை  துணையாவன வல்லவாம் .                                                                  14

( பகைப்படைகள்  வலியுடையனவாயினும் , ஒரோவமயம்  தீங்கு  விளைக்கவுங்  கூடுமென்னும்  ஐயத்திற்கிடனாக  விருத்தலின் , அவை  ஓரரசனுக்கு  வலிகுறைந்த  படைகளாமென்பது  கருத்து . )

     அரசன்  தன்னோடொத்த  மற்போர்த் திறன்  மிக்க  வீரர்களோடு  கூடிச்  செய்யுங்  உறுப்பியக்கங்களாலும் , பெரியோர்  வணக்கங்களாலும் , நல்லுணர்வுகளாலும் , மற்போர்  செய்தற்பொருட்டு  உடல்  வன்மையைப்  பெருக்கல்  வேண்டும் . (பெரியோரை  வணங்குதலால்  அவர்  தம்  வாழ்த்துரைகளாலும்  உருப்பியக்கங்களாலும்  வன்மை  மிகுமென்பது  கருத்து .)                    15

      அரசன்  புலி  முதலிய  கொடிய  விலங்கினங்களை  வேட்டையாடுதலாலும் , இடைவிடாது  செய்யும்  அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்  பயிற்சியாலும் , வீரர்களின்  கூட்டுறவாலும்  தன்  வீரத்தன்மையை  நன்கு  வளர்த்தல்  வேண்டும் .                                       16

      நல்ல  வேதனங்  கொடுத்தலாற்  படைப்  பலத்தையும் , தவத்தாலும்  பயிற்சியாலும்  படைக்கலவன்மையையும் , நூற்பயிற்சித்தறமை  வாய்ந்தவர்களின்  கூட்டுறவால்  அறிவு   வன்மையையும்  எப்பொழுதும்  மிகுவித்தல்  வேண்டும் .                                                         17

( தவத்தால்  படைக்கலவன்மையை  மிகுவித்தல்  மந்திர  சாதனத்தாலாம் . )

      அரசன்  இடைவிடாது  செய்யும்  நற்செயல்களால்  தன்  இராச்சியத்தைத்  தன்  குலபரம்பரையில்  நீண்ட  காலம் நிலைத்திருக்கச்  செய்தலே  ஆயுள்வன்மையாகும் . எத்துணைக் காலம் தன்  குலவழியில்  இராச்சியம்  நிலைத்திருக்கின்றதோ  அத்துணைக்  காலமே  அவ்வரசனுக்கு  வாணாளாகும் .  

2 . நால்வகைப்  படைகளின்  அளவு  வகைகள்

     அரசன்  குதிரைப்  படையளவின்  நான்கு  மடங்கு  மிகுதியாகக்  காலாட்படையையும் , குதிரைப்படையளவின்  ஐந்திலொரு கூறு எருதுகளையும் , எட்டிலொரு  கூறு  ஒட்டகங்களையும், அவ்வொட்டகங்களின்  நான்கிலொரு  கூறு  யானைகளையும் , அவ் யானைகளின்  அளவிற்  பாதி  தேர்களையும் , அத்  தேரளவின்  இரு  மடங்கு  மிகுதியான  பெரிய  நாளிகங்களையும்  எப்பொழுதும்  வைத்துப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                    19-20

( நாளிகம் – பீரங்கி .)

      அரசன்  காலாட்படைகளை  மிக்க அளவினவாகவும் , குதிரைப்படைகளை  இடைநிகராய  அளவினவாகவும் , யானைப்படைகளைச்  சிற்றளவினவாகவும் , எருது  ஒட்டகங்களை  வேண்டுமளவினவாகவும்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . யானைகளை  மிகுதியாக  வைத்துக்  கொள்ளலாகாது .                       21

      ஓராண்டிற்கு  ஓரிலக்கங்  கருட  அளவுள்ள  பொருள் வருவாயுடைய  அரசன்  ஒத்த  வயதையும் , உறுதியான  கவசத்தையும் , சிறந்த  அம்பு  வாள்  முதலியவற்றையுமுடைய   நூறு  தனிக்  காலாட்  படைகளையும், சிறிய  நாளிகங்களை யுடைய  முந்நூறு  காலாட்  படைகளையும் , எண்பது  குதிரைகளையும் , ஒரு  தேரையும் , இரண்டு  பெரிய  நாளிகப்  பொறிகளையும், பத்து  ஒட்டகங்களையும் , இரண்டு  யானைகளையும், இரண்டு   வண்டிகளையும் , பதினாறு  எருதுகளையும் , ஆறு  எழுத்தாளர்களையும் , மூன்று  மந்திரிகளையும்  நன்றாக  வைத்துப்  போற்றல்  வேண்டும் .                                                                              22-24

3 . அரசர்க்குரிய  செலவு  வகைகள்

      ஓராண்டிற்கு  ஓரிலக்கங்  கருட  அளவு  பொருள்வருவாயுள்ள  அரசன்  திங்களொன்றிற்குச்  செலவிடும்  வகையும்  அளவும்  வருமாறு:

      தன்  குடும்பத்திற்கு  வேண்டிய  பண்டங்களைத்  தொகுத்து  வைத்தற்  பொருட்டும் , ஈதற்  பொருட்டும் , தான்  இன்பம்  நுகர்தற்பொருட்டும்  அயிரத்தைந்நூறு  [ 1500 ] கருடங்களும், எழுத்தாளர்க்கு  நூறு [100]  கருடங்களும் , மந்திரிகளுக்கு  முந்நூறு [300] கருடங்களும் , மனைவி  மக்கள்  பொருட்டு  முந்நூறு  [300]  கருடங்களும் , புலவர்  பொருட்டு  இருநூறு [200] கருடங்களும், குதிரை  வீரர் , குதிரை , காலாட்படைகளின்  பொருட்டு  நாலாயிரம்  [4000]  கருடங்களும் , யானைகளும்,  ஒட்டகங்களும் , எருதுகளும்  நாளிகங்களுமாகிய  இவற்றின்  பொருட்டு  நாநூறு [400]  கருடங்களும் செலவிடல்  வேண்டும் . செலவழித் தெஞ்சிய  ஆயிரத்தைந்நூறு  [1500]  கருடங்களை  அரசன்  கருவூலத்திற்  சேமித்து  வைத்தல்  வேண்டும் .

( 25-27 . இச்சுலோகங்களில்  கூறியபடி  திங்களொன்றிற்குக்  கூடிய  செலவுகளும்  கருவூலத்தில்  தொகுத்துவைப்பதுமாக 8300 – கருடங்களாகும் . ஆகவே , ஆண்டொன்றிற்கு  99600 –கருடங்களாதல்  காண்க . முதல்  அத்தியாயம்  315-ஆம்  சுலோகத்தில்  அரசனுக்குரிய  வருவாயிற்  பாதி  நால்வகைப் போர்ப் படைகளின்  பொருட்டுச்  செலவிடல்  வேண்டுமென்று  கூறப்பட்டுள்ளது . இங்குத்  திங்களொன்றிற்கு  4400-  படைச்  செலவாகுமென்று  கூறப்பட்டுள்ளது . இவ் விரண்டளவும்  சிறிதேறக் குறையச்  சமமாதல்  காண்க . )

      படைகள்  அணிந்து  கொள்ளும்  ஆடைகளின்  பொருட்டு  ஆண்டுதோறும்  பொருள்  கொடுத்தல்  வேண்டும் .                                  28

4 . தேர்  யானைகளின்  வகைகள்

      வன்மைமிக்க  இருப்பினா லாக்கப்பட்டதும் , எளிதிற்  செல்லுதற்குரிய  உருள்களையுடையதும் , பரியங்க  இருக்கையையுடையதும் , தாமே  தூக்கி  யசைகின்ற  படிக்கட்டுக்களை யுடையதும் , நடுவணுள்ள  இருக்கையிலிருந்து  நடாத்தும்  தேர்ப்பாகனையுடையதும் , அம்பு  வாள்  முதலிய  போர்க்கருவிகள்  பொதிந்த  நடுவிடத்தையுடையதும் , விரும்பிய  வண்ணம்  நிழலைச்  செய்வதும் , அழகு  மிக்கதும் , சிறந்த  குதிரைகளை யுடையதுமாகிய  இத்தகைய  தேரை  அரசன்  எப்பொழுதும் வைத்துப்  பேணல்  வேண்டும் .                                      29-30

(பரியங்கம் – கட்டில் .)

      நீலநிறம்  வாய்ந்த   நாவினையும்  நாவின்  நுனியினையுமுடை யதும் , மாறுபட்டு  வளைந்த  தந்தத்தினையுடை யதும் , தந்தமில்லாததும் , நெடுங்காலம்  மேற்கொண்டிருக்கும்  சினத்தினை யுடையதும் , மதநீரை  மிகுதியாகப்   பெய்வதும் , முதுகை  அசைப்பதும் , பதினெட்டிற்  குறைந்த  நகங்களை யுடையதும் , மந்தகதி யினையுடையதும் , நிலத்தைத்  துடைத்துச்  செல்லும்  வாலினையுடையதும்  ஆகிய  இக் குற்றமுள்ள  யானைகள்  கேடு  செய்வனவாம் . இக்  குற்றங்களில்லாத  யானைகள்  நலஞ்செய்வனவாம் .                                                                                  31-32

      பத்ரம் , மந்திரம் , மிருகம் , மிச்சிரம்  என  யானைகள்  சாதியால்  நான்கு  வகைப்படுவனவாம் .                                                                        33

      தேன்   போன்ற  நிறம்  வாய்ந்த  தந்தங்களையும் , மிக்க  வன்மையையும் , ஒத்த  உறுப்புக்களையும் , திரண்ட  வடிவினையும், அழகிய  முகத்தினையும் , பிறவற்றினுஞ்  சிறந்த  அவயங்களையுமுடையது  பத்திரசாதி  யானையாகும் .                       34

      பருத்த  வயிற்றினையும் , சிங்கத்தின்  பார்வை  போன்ற  பார்வையினையும் , மிகப்பருத்த  தோல்  கழுத்து  துதிக்கைகளையும்  இடை நிகராய  உறுப்புக்களையும் , நீண்ட  உடலினையுமுடையது  மந்திரசாதி  யானையாகும் .                                                                            35

      சிறிய  கழுத்து  தந்தம்  செவி  துதிக்கைகளையும்  , அகன்ற  கண்களையும் , மிகக்  குறுகிய  கீழுதட்டினையும் , ஆண் குறியையும் , குறுகிய  உடலினையுமுடையது  மிருகசாதி  யானையாகும் .               36

(“ சிறிய “என்னும்  அடையைச்  செவி  துதிக்கைகளுக்கும் , “மிகக் குறுகிய” என்பதனை  ஆண்குறிக்குங்  கொள்க . )

5 . யானைகளின்  அளவு  வகைகள்

      யானையின்  அளவில்  யவதானியத்தின்  நடுப்பாகம்  எட்டுக்கொண்டது  ஓரங்குலமாகவும் , அவ்வங்குலம்  இருபத்து  நான்கு கொண்டது  ஒரு  முழமாகவும்  அறிவுடையோர்  கூறுவர் .                       38

      பத்திரமென்னும்  யானையின்  உயர  அளவு  ஏழு  முழமும் , அதன்  நீளம்  எட்டு  முழமும் , அதன்  வயிற்றின்  சுற்றளவு  பத்து  முழமும்  ஆகும் .                                                                                                                       39

      மந்திரம்  மிருகம்  என்னும்  யானைகளின்  அளவு  பத்திரசாதி  யானையின்  அளவினின்றும்  முறையே  ஒவ்வொரு  முழம்  குறைவாகும் . பத்திரம்  மந்திரம்  என்னும்  யானைகளின்  நீள  அளவு  ஒத்ததாகு மெனப்  பெரியோர்  கூறுவர் .                                                       40

               சாதி                      உயரம்                 நீளம்                சுற்றளவு

            பத்திரம்                       7                             8                             10

             மந்திரம்                      6                             8                             9

              மிருகம்                       5                             7                             8 

        அகன்ற  புருவம்  கதுப்பு   நெற்றிகளை  யுடையதும்  எப்பொழுதும்  சிறந்த  கதியினையுடையதும்  , நல்ல  இலக்கணங்களோடு  கூடியதுமாகிய  யானை  எல்லாவற்றினுஞ்  சிறந்ததாகும் .                    41

( “அகன்ற “  என்னும்  அடையைக்  கதுப்பு  நெற்றிகளுக்குங்  கொள்க .)

6  . குதிரைகளின்  அளவு  இலக்கண  முதலியன

      குதிரையின்  அளவில்  ஐந்து  யவதானியத்தில்  நடுப்பாகங்  கொண்டது  ஓரங்குலமாகத்  தனியே  கணக்கிட்டுக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                              42

      நாற்பதங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  தலையாயவற்றுள்ளும்  தலையாயதாகும் . முப்பத்தாறங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  தலையாயதாகும் . முப்பத்திரண்டங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  இடையாயதாகும் . இருபத்தெட்டங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  கடையாய  தாகும் .                             43-44

      குதிரைகளின்  முகத்தளவைக்  கொண்டு  அவற்றின்  மற்றைய  உறுப்புக்களின்  அளவுகளைக்  கணக்கிட்டறிதல்  வேண்டும் . அவற்றின்  உயர  அளவு  முற்கூறிய   முகத்தளவினும்  மும்மடங்கு  மிகுதியாகக்  கூறப்படும் .                                                                              45

      குதிரையின்  சிரோமணி  தொடங்கி  வாலின்   அடிப்பாகம்  வரையுள்ள  அதன்  நீளம் , அக் குதிரையின்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறு  கூடிய  நான்கு  மடங்கு  மிகுதியாகும் .                46

சிரோமணி – குதிரையின்  தலையிலுள்ள  ஒரு  குறி . முப்பத்தாறங்குல நீளம்  முகமுள்ள  குதிரைக்கு  அதன்  முகத்தின்  அளவை  நான்கு  மடங்காகப்  பெருக்க  144-அங்குலமாகும் . அவற்றோடு  அதன்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறாகிய  அங்குலம்  12-ஐயும்  சேர்க்க  அங்குலம்  156-ஆகும்  . இவ்வளவே  அக் குதிரையின்  நீள  அளவென்று  அறிதல்  வேண்டும் . இவ்வாறே  மற்றைக்  குதிரைகளுக்கும்  முகத்தின்  அளவைக்  கொண்டு  நீள  அளவைக்  கணக்கிட்டுக்  கொள்க . )

      குதிரையின்  வயிற்றின்  சுற்றளவு  அதன்  முகத்தளவின்  மூன்று  மடங்கு  மிகுதியும்  மூன்றங்குலமுமாகும் . இவ்வளவுகள்  பொதுவாகக்  கூறப்பட்டனவாம்.  இனி , விரிவாகச்  சிறப்பளவுகள்  கூறப்படும் .   47

      பின்வரும்  அளவுகள்  இருபத்தெட்டங்குல  நீளம்  முகமுள்ள  குதிரையைக்  குறித்துக்  கூறப்படுவனவாம் . குளம்பின்  உயரம்  மூன்றங்குலமாகவும் , அதன்மேலுள்ள  மணிக்கட்டின்  உயரம்   நான்கங்குலமாகவும்   இருத்தல்  வேண்டும் .                                             48

     மணிக்கட்டின்   மேலுள்ள  முழங்கால்  இருபத்திரண்டங்குலமாகவும்  முழங்காற்பூட்டு  மூன்றங்குலமாகவும் , தொடை  பதினான்கங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் . தொடைச் சந்தியினின்றும்  தோள்வரையுள்ள  அளவு  முப்பத்தெட்டங்குலமாகும். பின்றொடை  முகத்தின்  அளவை யொப்ப  இருபத்தெட்டங்குலமாகும் . பின்  முழந்தாள்  முகத்தளவில்  நான்கிலொரு  கூறு  குறைந்தது [ 21-அங்குலம் ] ஆகும் .                                                                                        49-50

      குதிரையின்  உயர  அளவு  இதுகாறும்  கூறப்பட்டது . இனி , அதன் நீள  அளவு  நூன்முறைப்படி  கூறப்படும் .                                                   51

      அழகுற  நீண்ட  கழுத்தின்  நீள  அளவு  முகத்தளவின்  ஆறிலொரு  கூறு  கூடிய  இருமடங்காகும் . அக் கழுத்தின்  உயரம்  முற்கூறிய  முகத்தளவிற்  காலேயரைக்காற்  கூறு  குறைந்த  அளவினதாகும் .  52

( ஆறிலொருகூறு  கூடிய  இருமடங்காவது , சிறிது  கூடிய  60இ – அங்குலமாகும் .)

      பிடரடி  தொடங்கி  அண்ட  மூலம்  வரையுள்ள  உடலின்  நீளம்  கழுத்தின்  நீள  அளவோடொப்பாகும் . அவ் வண்டமூலத்தினின்று  திரிகம்  வரையுள்ள  அளவு  முகத்தளவின்  ஆறிலொரு கூறு  கூடிய  அறைக் கூறாகும் . எஞ்சிய  பிடர்வரை யுள்ள  பாகம்  முதுகாகும் .  53

( அண்டமூலம் – ஆண்குறியின்  அடிப்பாகம் ; அஃதாவது  உடலின்  இறுதி . கழுத்தின்  நீள  அளவு  60இ – அங்குலம் . “அவ்வண்ட  மூலத்தினின்று”  என்பது  நீள  அளவு  முற்றுங்கூறப்பட்ட  உடலில்  இறுதி  தொடங்கிப்  பின்னரும்  அளவு  கூறியதாகும் . திரிகம் – முதுகின்  கடையில்  இரண்டு  தொடை  எலும்புகளும்  சேர்ந்திருக்கும்  சந்தியிடம் . ஆறிலொரு  கூறு  கூடிய  அரைக்கூறு – 18இ- அங்குலமாகும் . ஆகவே  திரிகம்  தொடங்கிப்  பிடரடி  வரையுள்ள  நீள  அளவு  42- அங்குலமாகும் . )

      வாலும்  ஆண்குறியும்  முகத்தளவிற்  பாதியளவினவாகும் . அண்டங்கள்  ஆண்குறியளவிற்  பாதி யளவினவாகும் . செவியின்   நீளம்  ஆறங்குலமாகும் . சில  குதிரைகளுக்கு  ஐந்து  அல்லது  நான்கு  அங்குல  நீளமும்  உண்டு .                                                                                  54

( முகத்தளவிற்  பாதியளவு – 41-அங்குலம் . ஆண்குறியளவிற்  பாதி யளவு  7-அங்குலம் . )

      குளம்பின்  சுற்றளவு  ஓரங்குலங்  கூடிய  முகத்தளவிற்  பாதியாகும் . மணிக்கட்டின்  சுற்றளவும்  முழங்காலின்  சுற்றளவும்  குளம்பின்  சுற்றளவிற்  பாதியாகும் .                                                                                  55

( ஓரங்குலங்  கூடிய  முகத்தளவிற்  பாதி  15-அங்குலம் . குளம்பின்  சுற்றளவிற்  பாதியளவு 7இ-அங்குலம் .)

      அழகிய  முன்றொடையின்  சுற்றளவு  பதினோரங்குலமாக   அறிவுடையோர்  கூறுவர் . பின்றொடைகளின்  அடிப்பாகத்துச் சுற்றளவு  முகத்தளவின்  ஆறிலொருகூறு  கூடிய  மூன்று  மடங்கு  மிகுதியாகும் .                                                                                                        56

( ஆறிலொருகூறு  கூடிய  மும்மடங்காவது , 88இ- அங்குலமாகும் . குதிரையின்  பின்றொடை  மூலம்  மிகப்  பருத்திருத்தல்  இயல்பே . ஆயினும்  ஒருதொடை  இவ்வளவு  அங்குலச்  சுற்றளவுடையதாக  இருக்க  மாட்டாதாகலின்  இங்குக்கூறிய  அளவு  இரண்டு  தொடைகளுக்கென்று  உய்த்துணர்தல்  வேண்டும் . அங்ஙனம்   கொள்ளுங்கால்  ஒரு  தொடையின்  சுற்றளவு  44 ¼- அங்குலமாகும் . )

      பின்புறத்துத்  தொடை  தொடங்கிக்  கால் வரை யுள்ள  பாகம்  உள்ளும்  புறம்பும்  வில்லைப்  போற்  சிறிது  வளைந்து  காணப்படும் . மணிக்கட்டிலுள்ள  மணியின்  சுற்றளவு  ஒன்பதங்குலமாகும் . பிற்புறத்து  முழந்தாள்  முதலியவற்றின்  சுற்றளவு  முற்புறத்துக்  கால்களுக்குக்  கூறியபடியாம் .                                                                        57

      இரண்டு  தொடைகளின்  நடுவிற்  பக்கமூலத்துள்ள  குறியிடம் ஓர்  அங்குல  அளவினதாகும் .                                                                                   58

      கழுத்தின்  மேற்  புறத்திற்  சிரோமணி  தொடங்கித்  தோள்வரை நீண்டிருக்கும்  சிறந்த  பிடரி  மயிர்   தோன்றுமிடம்  ஒன்றரையங்குல  அகற்சியுடையதாகும் .                                                                                        59

      அழகிய  பிடரி மயிர் ஒரு முழ அளவு நீள முடையதாய்க்  கீழ்  நோக்கித்  தொங்கல்  வேண்டும் . மிக்க  வனப்பு  வாய்ந்த வால்  மயிர்  ஒன்றரை முழமாதல்  இரண்டு  முழமாதல் நீண்டிருத்தல்  வேண்டும். 60

      செவிகளின்  நீள  அளவு ஏழு  அல்லது  எட்டு  , ஒன்பது , பத்து  அங்குலங்களாகும் . அச் செவிகளின்  அகல  அளவு  மூன்றங்குலமாதல்  நான்கங்குலமாதல்  இருத்தல்  வேண்டும் .                                                   61

செவிகளின்  நீள  அளவு  இப்  பிரகரணத்தின்  54-ஆம்  சுலோகத்தி லுங்  கூறப்பட்டது . ஆகவே  அவ்வளவு  நான்கு  அங்குலம்  முதல்  பத்தங்குலம்  வரை  இருக்கலாமென்று  புலப்படுகின்றது . )

      குதிரையின்  கழுத்துத்  திரண்டதாகவும்  தகட்டு  வடிவினதாகவும்  இல்லாமல்  மயிலின்  கழுத்துப்  போலிருத்தல்  வேண்டும் . அக் கழுத்தின்  நுனிப்  பாகத்தின்  சுற்றளவு  ஒருபிடி யளவு  கூடிய  முகத்தளவோடொத்ததாகும் .                                                                            62

( பிடியளவோடு  கூடிய  முகத்தளவாவது  34இ – அங்குலமாகும் . 4-ஆம்  பிரகரணம்  82-ஆம்  சுலோகப்படி  பிடி  ஒன்றுக்கு  அங்குலம்  4-ஆகும் . இவ்வங்குலம்  யவம் 8-கொண்டதாகலின்  4-க்கு  8-32 யவங்கள்  6இ – அங்குலங்களாகும் . முகத்தளவு  28- அங்குலம் .  ஆக, 34இ – ஆதல்  காண்க . )

      கழுத்தின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  முகத்தளவின்  இருமடங்கு  மிகுதியிற்  பத்தங்குலங்  குறைந்ததாகும் . முகத்தளவின்  மூன்றிலொரு  கூறு  குறைந்த  அளவினையுடைய  அழகிய  வயிற்றிடம்  மார்பென்று  கூறப்படும் .                                                           63

( இரு மடங்கு  மிகுதியிற்  பத்தங்குலங்  குறைந்தது  46-அங்குலம் . )

      கண்களின்  மேற்புறத்துள்ள  சுற்றளவு  எட்டங்குலங்  கூடிய  முகத்தளவோடொத்ததாகும் . மூக்கின்  மேலும்  கண்களின்  கீழுமுள்ள  முகத்தின்  சுற்றளவு  முகத்தின்  நீள  அளவில்  மூன்றிலொரு  கூறு  குறைந்ததாகும் .                                                                                                    64

( எட்டங்குலங்  கூடிய  முகத்தளவு 36-அங்குலம் . மூன்றிலொரு கூறு  குறைந்தது  18-அங்குலம் . )

      கண்களின்  அகலம்  தனித்தனி  இரண்டங்குலமாகவும்  அவற்றின்  நீளம்  தனித்தனி  மூன்றங்குலமாகவும் இருத்தல்  வேண்டும் . அன்றி  அகலம்  இரண்டரை  அங்குலமாகவும்  நீளம்  நான்கங்குலமாகவும்  இருக்கலாம் .                                                                                                           65

      இரண்டு  தொடைகளுக்கும்  நடுவணுள்ள  வெளியிடம்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறாகும் . இரண்டு  கண்  நுனிகளுக்கும்  நடுவணுள்ள  பாகமும் , இரண்டு  செவிகளுக்கும்  நடுவணுள்ள  பாகமும் , செவிக்கும்  கண்ணிற்கும்  இடைப்பட்ட  பாகமும்  தனித்தனி  முகத்தளவில்  ஐந்திலொரு  கூறாகும்.  நிலத்தில்  தோய்ந்த  இரண்டு  குளம்புகளுக்கும்  இடைப்பட்ட  வெளியளவு  செவியளவோடொக்கும் .

( மூன்றிலொருகூறு  9- அங்குலம் . ஐந்திலொருகூறு  5இ –அங்குலம்.  செவியளவை  61ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      இரண்டு  கண்மணிகளுக்கும்  நடுவணுள்ள  இடமும்,  இரண்டு  புருவங்களுக்கும்  இடைப்பட்ட  இடமும் , மூக்கிற்கும்  கண்ணிற்கும்  நடுவணுள்ள  இடமும்  பின்தொடையளவின்  மூன்றிலொரு  கூறாகும் .

( பின் தொடையளவு 50-ஆம்  சுலோகத்திற்  கூறியபடி  28-அங்குலமாகும் . அதன்  மூன்றிலொரு  கூறு  சிறிது  குறைய  9இ – அங்குலமாகும் . முன்  தொடையெனக்  கொள்ளின்  கண்களுக்கும்  அவற்றின்  நடுவிடத்திற்குங்  கூறிய  அளவோடு  பொருந்தாமையாற்  பின்தொடை யெனக்  கொள்ளப்பட்டது . )

      உதடுகளோடு  கூடிய  முகத்தின்  நுனிப்பாகம்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறாகும் . இரண்டு  மூக்குத்  துவாரங்களுக்கும்  இடைப்பட்ட  இடம்  முகத்தளவில்  ஒன்பதிலொரு  கூறாகும் .            69

( ஒன்பதிலொரு  கூறு  3-அங்குலம் . )

      குதிரை  உடலின்  பரப்பு  மனித  உடலின்  நீளத்தில்  அரைக்  கூறாகும் . திரிகத்தின்  பரப்பு  மார்பினளவோ டொத்ததாகும் . முற்புறத்துக்  கால்களின்  அடிப்பக்கத்தின்  கீழுள்ள இருதயம்  முகத்தளவில்  நான்கிலொரு  கூறாகும் .                                                       70

( மார்பின்  அளவு  18- அங்குலம் ; 63-ஆம்   சுலோகத்திற்  காண்க . நான்கிலொரு  கூறு 7-அங்குலம் .)

      இருதயத்தை  யடுத்துள்ள  முன்கால்களின்  இடைவெளி முகத்தளவின்  ஆறிலொரு  கூறாகும் . சிவுகத்தினின்றுங்  கீழுதட்டினுயரம்  ஒன்றரை  யங்குலமாகும் .                                              71

( ஆறிலொரு  கூறு  4இ-அங்குலம் .  சிவுகம் – கீழுதட்டோடு  கூடிய  வாயின்  கீழ்ப்பாகம் . )

      உயர்ந்த  கழுத்தையும்  தாழ்ந்த  முதுகினையுமுடைய  குதிரை  எப்பொழுதும்  அழகுற  விளங்குவதாகும் .                                                   72

      ஒருவன்  எவ்வுருவத்தைச்  செய்தற்கு  முயல்கின்றானோ  அவ்வுருவத்தை  எல்லாவகையாலும்  உற்று நோக்கிச்  செய்தல்  வேண்டும் . எவற்கும்  முன்னர்ப்  பார்க்கப்படாத வுருவம்  செய்தற்கு  இயலாததாகும் .                                                                                                73

      ஆதலின்  சிற்பத்  தொழில்  வல்லான்  முதற்கட்  குதிரையை  நினைவு  கூர்ந்து  பின்னர்  அதன்  உறுப்புக்களைச்  செய்யக்கடவன் .  இங்குக்கூறிய  அளவிலக்கண  முறைப்படி  குதிரைகளின்  எல்லா  உறுப்புக்களும்  இயற்றப்படுமாயின்  அது  நலஞ்  சிறத்தற்குக்  காரணமாகும் .                                                                                                    74

      மயிர்  நீங்கிய  முகமும்,  அழகும் , சோர்வின்மையும்,  உயர்ந்த  மூக்கும் , நீண்டுயர்ந்தனவாகிய  கழுத்தும்,  முகமும்,  குறுகிய  வயிறு  குளம்பு  செவிகளும் , விரைவுமிக்க  நடையும் , அன்னத்தையும்  மேகத்தையும்  ஒத்த  ஒலியும்  மிக்க  கொடுந்தன்மையின்மையும் , மிக்க  மந்தமின்மையும்,  தெய்வத்தன்மை  மிக்க  வன்மையும் , சிறந்த  ஒளியும் , நறுமணமும் , நன் நிறமும்  , நலம்  பயக்கும்  சுழிகளுமாகிய  இவற்றையுடைய  குதிரையே  காண்பவர்  மனத்தைக்  கவரும்  இயல்பினதாகும் .                                                                                            75-76

      இடமுகம்  வலமுகம்  என்னும்  வேறுபாட்டால்  இரண்டு வகைப்படும்  சுழிகளும்  பிரமரம்  என்று  கூறப்படும் . அச்சுழி   நிறைவுடையது  நிறைவில்லாதது  எனவும் , நீண்டது  குறுகியது  எனவும்  மீண்டும்  பலதிறப்படும் .                                                                   77

      பெண்  குதிரையின்பாலும்  ஆண்  குதிரையின்பாலும்  முறையே  இடமுமாகவும்  வலமுமாகவும் இருக்கும்  சுழிகள்  அவ்வவற்றிற்குக்  கூறப்பட்ட  பயன்களை  விளைவிப்பனவாம் . அவை  மாறியிருக்குமாயின்  அப்பயன்களை  விளைவிப்பனவாகா .               78

( அவ்வவற்றிற்குக்  கூறப்பட்ட  பயன்களை  80-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க .)

     அவ் விருவகைச்  சுழிகளுக்கும்  கீழ்  நோக்கிய  முகமும்  மேனோக்கிய  முகமும்  குறுக்கு  முகமும்   உள்ளனவாம் . அம்முக  வேறுபாட்டாற்  பயன்  வேறுபாடு  முண்டாகும் .                                         79

      சங்கு  சக்கரம்  கதை  பதுமம்  யாகவேதி  சுவத்திகம்  பிராசாதம்  தோரணம்  வில்  அழகிய  நிறைகுடம்  சுவத்திகமாலை  மீன்  வாள்  சீவற்சம்  ஆகிய  இவற்றின்  வடிவத்தை  யொத்து  விளங்கும்  சுழிகள்  நலம்  பயப்பனவாம் .                                                                                           80

(சுவத்திகம் – அரிசிமாவால்  முக்கோண  வடிவமாகச்  செய்யப்படும்  மங்கலப்பொருள் . பிராசாதம் – ஈண்டுக்  கோபுரத்தின்பாலதாம் .  சீவற்சம் – திருமால்  மார்பில்  பெருமை  தோன்ற  விளங்கும்  வெண்மயிராலாகிய  ஒரு  மறு . )

      மூக்கு  நுனியிலும்  நெற்றியிலும்  நெற்றியின்  மேற்புறத்தும்  கழுத்திலும்  தலையிலும்  சுழி  பொருந்திய  குதிரைகள்  மிகச்  சிறந்தனவாம் .                                                                                                  81

      மார்பிலும்  தோளிலும்  கழுத்திலும்  அரையிலும்  நாபியிலும்  வயிற்றிலும்  விலாப்பக்கங்களின்  நுனிப்  பாகத்திலும்  சுழியுள்ள  குதிரைகள்  இடையாயினவென்று  கூறப்படும் .                                    82

      நெற்றியில்  இரண்டு  சுழிகளும்  மூன்றாவதாகத்  தலையிலொரு  சுழியும்  விளங்கப்பெற்ற  குதிரை  பூரணாநந்தம்  என்னும்  பெயரினதாம் . அது   தலையாயதாம் .                                                      83

      எதன்  முதுகு  எலும்பில்   ஒரு  சுழி  தோன்றி  விளங்குகின்றதோ  அது  சூரியன்  என்னும்  பெயரினதாம் . அது  தன்னையுடையார்க்குக்  குதிரைக்  கூட்டங்களை  மேன்மேலும்  வளர்விக்கும் .                          84

      எதன்   நெற்றியில்  மூன்று  சுழிகள்  குறுக்காகத்  தோன்றி  விளங்குகின்றனவோ  அது  திரிகூடம்  என்னும்  பெயரினதாம் . அஃது  எப்பொழுதும்  தன்  தலைவற்குக்  குதிரைகளை  மிகுவிப்பதாகும் . 85

      அங்ஙனமே  மூன்று  சுழிகள்  எதன்  கழுத்தில்  தோன்றி  விளங்குகின்றனவோ  அது  குதிரைகளுட்  சிறந்ததாய்  அரண்மனையிலிருக்கத்  தகுதியுடையதாகும் .                                        86

      எதன்  கபோலங்களில்  இரட்டைச் சுழிகள் காணப்படுகின்றனவோ  அக்குதிரை  தன்னையுடையாற்குப்  புகழைப்  பெருக்குவதோடு  அவன்  அரசியலையும்  வளர்விக்கும் .                                                          87

      எதன்  இரு  கபோலங்களிலும்  ஒற்றைச் சுழி  காணப்படுகின்றதோ  அக்குதிரை  சருவநாமம்  என்னும்  பெயரினதாம் . அது  தன்  தலைவர்க்குக்  கேடு  பயப்பதாகும்.                                                               88

      எதனுடைய  வலப்  பக்கத்துக்  கபோலத்தில்  மாத்திரம்  ஒரு  சுழி  காணப்படுகின்றதோ  அது  சிவம்  என்னும்  பெயரினதாம் . அது  தன் தலைவற்குப்  பெருநலம்  பயப்பதாகும் .                                                       89

      அங்ஙனமே  இடப்பக்கத்துக்  கபோலத்தின்  மாத்திரம்  ஒரு  சுழி  யமைந்த  குதிரை  கொடுந்தன்மை  யுடையதாய்த்  தன்  தலைவன்  பொருட்குக்  கேடு  விளைவிப்பதாகும் .                                                      89இ

     குதிரையினுடைய  செவியின்  அடிப்பாகத்தில்  இரட்டைச்  சுழிகள்  காணப்படுமாயின் , அவை   இந்திராக்கம்  என்னும்  பெயரினவாய்  அரசனையும்  அரசியலையும்  வளர்விப்பனவாம் . தனங்களின்  நடுப்பாகத்தில்  இரட்டைச்  சுழிகள்  இருக்குமாயின்  அவை  விசயம்  என்னும்  பெயரினவாய்ப்  போர்  செய்யுங்  காலத்தில்  மிக்க  புகழை  விளைவிப்பனவாம் .                                                                                       90-91

      தோளின்  இருபக்கங்களிலும்  சுழிகளையுடைய  குதிரை  பதுமம்  என்னும்  பெயரினதாம் . அது  தன்  தலைவற்குப்  பதுமமென்னும்  அளவினையுடைய  பல்வகைச்  செல்வங்களையும்  தருதலோடு , இடையறா  இன்பத்தையும்  பயப்பதாம் .                                                     92

      மூக்கின்  நடுவில்  ஒரு  சுழியையாதல்  மூன்று  சுழியையாதல்  உடைய  குதிரை  பூபாலன்  என்னும்  பெயரினதாம் .  அது குதிரைகளின்  சக்கரவர்த்தி  என்றறியப்படும்.                                           93

      கழுத்திற்  பெரியதாகவும்  சிறந்ததாகவுமுள்ள  ஒற்றைச்  சுழியினையுடைய  குதிரை  சிந்தாமணி  என்னும்  பெயரினதாம் . அது  தன்  தலைவற்குக்  கருதிய  பொருள்களையும்  இன்பத்தையும்  அளிப்பதாகும் .                                                                                                      94

      நெற்றியிலும்  கழுத்திலும்  சுழிகள்  இருக்குமாயின்  அவை  கற்கம்  என்னும்  பெயரினவாய்ச்  செல்வ வளர்ச்சியையும்  புகழையும்  தருவனவாம் .                                                                                                         95

      முகத்திலும்  அடிவயிற்றிலும்  இரட்டைச்  சுழிகள்  அமையப்பெற்ற  குதிரை  விரைவில்  மரணமெய்தும் ; இன்றேல்  தன்  தலைவற்கு  அழிவு  செய்வதாகும் .                                                                                          96

    முழங்காற் பூட்டிற்  சுழிகளிருக்குமாயின்  அவை  பிரயாணத்திற்  றுன்பஞ்  செய்வனவாம் . குதிரையின்  குறியிற்  சுழியிருக்குமாயின்  அது  வெற்றித்திருவைக்  கொடுப்பதாகும் .                                                  97

      முதுகின்  கடைப்பாகமாகிய  திரிகத்திற்  சுழி யிருக்குமாயின்  அஃது  அறம்  பொருள்  இன்பங்கட்கு  அழிவு  செய்வதாகும் . வாலின்  அடிப்பாகத்திலிருக்குஞ்   சுழி  தூமகேது  என்று  சொல்லப்படும் . அது  பலவகைத்  துன்பங்களைச்  செய்வதாகும் .                                                 98

     குறி  வால்  திரிகம்  ஆகிய  மூன்றிடத்திலும்  சுழி யமையப்  பெற்ற  குதிரை  கிருதாந்தம்  என்னும்  பெயரினதாம் . அது  மிகவும்  அச்சம்  விளைவிப்பதாகும் .                                                                                               99

      குதிரையின்  விலாப்புறத்தில்  மத்தியதண்டம்  என்னும்  ஓர்  இலச்சினை  பெருவிரலளவு  நீண்டிருக்குமாயின்  மிகவுங்  கேடு  பயப்பதாகும் . அம்  மத்தியதண்டம்  பல்வகைக்  கிளைகளோடு  பிடரி  மயிரில்  தோன்றுமாயின்  அதன்  நீட்சிக்குத்  தக்கவாறு  மிக்க  துன்பம்  பயப்பதாகும் .                                                                                                      100

 ( இலச்சினை – அடையாளம் . )

      கபோலத்தின்  மேற்பாகமாகிய  அநு , கபோலம் , இருதயம் , கழுத்து, நுனி முகம் , நாபியின்  கீழுள்ள  மூத்திர  நிலயம் , அரை , நெற்றி யெலும்பு , முழங்காற்  பூட்டு , அண்டமூலம் , திமில் , நாபி , குதம்  ஆகிய  இவ்வுறுப்புக்களில்  உள்ள  சுழி  கண்ணீருதிர்க்கும்  கடுந்துன்பத்தைச்  செய்வதாகும் . வயிற்றின்  வலப்பக்கத்திலும்  வலக்காலிலுமுள்ள  சுழி  எப்பொழுதும்  தீமை  பயப்பதாகும் .           101

( இங்குக்  கூறிய  உறுப்புக்களுள்  ஒன்றாகிய  கபோலத்திலுள்ள  சுழி  தீயதென்று  கூறப்பட்டது ; மேல்  67  முதல்  89இ  வரையுள்ள  சுலோகங்களில்  கபோலச்  சுழிகளுக்கு  நல்லனவும்  தீயனவுமாகிய  பயன்கள்  கூறப்பட்டன ; இது  பொதுவும்  அவை  சிறப்புமாகிய   வேறுபாடு   பற்றி . )

      குதிரையின்  கழுத்து  நடுவிலும் , முதுகின்  நடுவிலும் , மேலுதட்டிலும் , கீழுதட்டிலும் , கண்ணிற்குஞ்  செவிக்கும்  இடையிலும், வயிற்றின்  இடப்பக்கத்திலும் , விலாப்புறங்களிலும் , தொடைகளிலும் , முற்புறத்துக்  கால்களிலும்  இரட்டைச்  சுழிகள்  இருக்குமாயின்  அவை  மிக்க  நலம்  பயப்பனவாம் .                                                                           102

      நெற்றியில்  இரண்டு  சுழிகள்  தனித்தனி  விலகியிருக்குமாயின்  அவை  சூரியன்  சந்திரன்   என்னும்  பெயரினவாய்  நற்பயனை  விளைவிக்கும் . அச்சுழிகள்  நெருங்கியிருக்குமாயின்  இடைநிகராய  பயனையும்  மிக  நெருங்கியிருக்குமாயின்  தீய  பயனையும்  விளைவிப்பனவாம் .                                                                                          103

      நெற்றியில்  மேனோக்கிய  முக முடையனவாய்  இடைவிட்டு  மூன்று  சுழிகள்  இருக்குமாயின்  அவை  நலஞ்செய்வனவாம் . அங்ஙனமே  அவ்விடத்தில்  இரண்டு  சுழிகள்  மிக  நெருங்கி யிருக்குமாயின்  தீமை  செய்வனவாம் .                                                      104

      நெற்றியில்  முக்கோண  வடிவினவாய்  மூன்று  சுழிகளிருக்குமாயின்  அவை  துன்பம்  தருவனவாம் . கழுத்தின்  நடுவில்  ஒரு  சுழியிருக்குமாயின்  அது நலம்  பயப்பதோடு  எல்லாத்  தீங்குகளையும்  போக்குவதாகும் .                                                                 105

( இங்குக் கூறியது  கழுத்தின்  நடுவிடத்திலெனவும் , 101-ஆம்  சுலோகத்திற்  கூறியது  கழுத்தில்  நடுவல்லாத  மற்றையிடங்களிலெனவும்  வேறுபாடு  உய்த்துணர்க . )

      காலில்  கீழ்  நோக்கிய  முகமுடைய  சுழியும் , நெற்றியில்  மேனோக்கிய  முகமுடைய  சுழியும்  நலஞ்  செய்வனவாம் . பல்வகைக்  கிளைகளோடு  குறுக்குமுகமாக  விளங்குஞ்  சுழி  மிக்க  தீங்கு  பயவாததாகும் .                                                                                                   106

      குறியின்  பின்பாகத்திற்  சுழியினையாதல்  தனம்  போன்ற  ஓரிலச்சினையையாதல்  உடைய  குதிரை  தீங்கு  பயப்பதாகும் . செவியின்  பக்கத்தில்  ஒற்றைச்  சுழி  யிருக்குமாயின்  அது  சிருங்கி  என்னும்  பெயரினதாய்  மிகவும்  பழிக்கப்படுவதாகும் .                        107

      கழுத்துப்பக்கங்களின்  மேற்புறத்திற்  சுழியுடையதும் , அப்  பக்கங்களின்  ஒரு  புறத்தில் “ஏகரசுமி:  என்னும்  இலச்சினை யுடையதும் , காலில்  மேனோக்கிய முகமுடைய  சுழி  பொருந்தியதும் , கட்டு  முளையைப்  பெயர்ப்பதும்  ஆகிய  இக்  குதிரைகள்  பழிக்கப்படுவனவாம் .                                                                                       108

      எதன்கண்  நன்மை  பயப்பனவும்  தீமை  பயப்பனவுமாகிய  சுழிகளுள்ளனவோ  அக் குதிரை  இடையாயதாகக்  கருதப்படும் . முகத்திலும்  நான்கு  கால்களிலும்  வெண்மை  நிறம்  வாய்ந்த  குதிரை  பஞ்சகலியாணம்  என்று  கூறப்படும்.                                                           109

     முகத்திலும்  நான்கு  கால்களிலும்  வெண்மை  நிறம்  வாய்ந்த  அக்  குதிரையே  இருதயத்திலும்  தோளிலும்  வாலிலும்  வெண்மை  நிறம்  வாய்க்கப்பெறுமாயின்  அஃது  அட்டமங்கலம்  என்று  கூறப்படும்  . உடல்  முழுதும்  ஒரே  நிறமும்  செவியில்  நீல  நிறமுமுடைய  குதிரை  சியாமகன்னம்  என்று  கூறப்படும் . அவ்  ஒரே  நிறமும்   வெண்ணிற மாக விருப்பின்  அக் குதிரை  எப்பொழுதும்  பூசிக்கத்தக்க  தூய்மையுடையதாகும் .                                                                                  110

     வைடூரிய  இரத்தினத்தைப்  போன்ற  கண்களையும் , பல்வகை  நிறத்தினையுமுடைய  குதிரை  சயமங்கலம்  என்று  கூறப்படும் . அத்தகைய  கண்களையும்  ஒரே  நிறத்தினையுமுடைய  குதிரை  அழகுடையதாக  இருக்குமாயின்  அது  பூசிக்கத்தக்கதாம் .                 111

      கருமை நிறம்  வாய்ந்த  கால்களையுடைய  குதிரையும் , ஒரு  கால்  மாத்திரம்  வெண்மை  நிறமுடைய  குதிரையும் , வெறுப்பை  விளைவிக்கும்  நிறத்தினையுடைய  குதிரையும் , சாம்பர்  நிறத்தினை யுடைய  குதிரையும் , கழுதை  நிறம்  வாய்ந்த  குதிரையும்  பழிக்கப்படுவனவாம் .                                                                                      112

      கருமை  நிறம்  வாய்ந்த  அண்ணத்தினை யுடைய  குதிரையும் , கரிய  நாவினையுடைய  குதிரையும் , கரிய  உதடுகளையுடைய  குதிரையும் , உடல்  முழுதும்   கரிய  நிறமும்   வாலில்   மாத்திரம்  வெண்ணிறமுமுடைய  குதிரையும்  விலக்கத்தக்கனவாம் .                 113

( அண்ணம் – மேல்வாய் .)

      கால்களை  உயரத்  தூக்கிச்  செல்லும்  நடையினையுடைய  குதிரையும் , யானை , புலி , மயில் , அன்னம் , சிச்சிலிப்புள் , புறா , மான்,  ஒட்டகம் , குரங்கு , எருது , ஆகிய  இவற்றின்  நடைகளைப்போன்ற  நடைகள்  வாய்ந்த  குதிரைகளும்  போற்றப்படுவனவாம் .                                                                                  114

     குதிரைப்பாகன்  மிகுதியாக  உண்டும்  மிகுதியாகக்  குடித்தும்  குதிரையை  நடத்துங்காலும்  அவனுக்குத்  துன்பஞ்  செய்யாத  அக்  குதிரையின்  நடையும்  அந்நடை  வாய்ந்த  குதிரையும்  சிறந்தனவாக  மதிக்கப்படும் .                                                                                                     115

      நெற்றியில்  வெண்ணிறம்  வாய்ந்த  திலக  இலச்சினையுடையதும்  மற்றை  உடல்  முழுதும்  வெண்மையல்லாத  நிறம்  பொருந்தியதும்  ஆகிய  குதிரை  தளபஞ்சி  என்று  கூறப்படும் . அஃது  எவன்  பாலுள்ளதோ  அவன்  பழிக்கப்படுவான் .                                                    116

(தளபஞ்சி – தன்னினத்தைக்  கெடுப்பது . )

      ஒரு  குதிரை  ஒளிமிக்க  நிறத்தினையும்  மிக்க  ஆற்றலையும்  சிறந்த  நடையினையும்  பருமையினையும்  எல்லாவுறுப்புக்களிலும்  அழகினையுமுடையதாக  இருக்குமாயின்  அது  மாறுபட்ட  நிறத்தாலுண்டாங்   குற்றங்களைப்  போக்குவதாகும் .                          117

      ஒரு  குதிரை  சுழி  முதலியவற்றாற்  குற்றமுடையதாயினும்  மிக்க  கொடுந்தன்மை  யில்லாததாயின்  அஃது  என்றும்  போற்றத்   தக்கதாம் .                                                                                                            118

      அடுத்தடுத்துச்  சுமந்து  நடக்கும்   பயிற்சியில்லாத  குதிரைகளுக்கு  மிக்க  தீங்கு  விளையும் ; மிகவும்  அதிகமாகச்  சுமந்து  நடத்தலால்  மெலிவும்  நோய்த்  தொடர்பு முண்டாம் .                                                     119

      சுமந்து  நடவாத  குதிரை  மந்த  இயல்பினதாய்  எல்லாத்  தொழில்களிலும்  விலக்கப்படுவதாகும் . வேண்டிய  அளவு  உணவு  கொடுக்கப்படாமையால்  மெலிவும் , அளவின்  மிக்க  உணவு  கொடுத்தலால்  நோயும்  குதிரைகளுக்குண்டாம் .                                   120

      குதிரை  தன்னைப்  பயிற்றுவோனுடைய  குணங்  குற்றங்களால்  எப்பொழுதும்  சிறந்த  நடையையும்  குறைந்த நடையையு  முடையதாகும் .                                                                                               121

     எவன்  முழந்தாட்  பூட்டுக்குக்   கீழே  அசைகின்ற  காலையும் , நிமிர்ந்து  நேரான  உடலையும் , அசைவற்ற  இருக்கையையும் , காலம் , இடம் , அறிந்து  செல்லுதற்குச்  சமமாகத்  தாங்கிய  கடிவாளத்தையும்  உடையனோ  அவனே  நல்ல  குதிரைப்  பாகனாவான் .                          122

      நல்ல  குதிரைப்  பாகன்  சிறந்த  குதிரையைக்  கசையினால்  மிக்க  கடுமையில்லாமல்  மெல்ல  அடித்தல்  வேண்டும் . சிறிது  கடிந்து அடிக்கவேண்டின் உறுப்புக்களில்  இடம் நோக்கி  அடிக்கக் கடவன். 123

கசை – சாட்டை .)

7 . குதிரைக்கு  வேண்டுவன  செய்து  நடத்து  முறை

      அறிவுமிக்க  குதிரைப்  பாகன்  குதிரை  கனைக்குமாயின்  அதன்  கக்கங்களிலும் , கால்  இடறி  நடக்குமாயின்  விலாப்பக்கங்களிலும் , அச்சம்  எய்துமாயின்  செவிகளின்  நடுவிலும் , வழியைவிட்டு  விலகிச்  செல்லுமாயின்  கழுத்திலும் ,  சினம்  கொள்ளுமாயின்  முற்புறத்துக்  கால்களின்  நடுவிலும் , மனக்கலக்கம்  எய்துமாயின்  வயிற்றிலும்  அடிக்கக்கடவன் . மற்றை  உறுப்பிடங்களில்  ஒரு  பொழுதும்  அடித்தலாகாது .                                                                                           124-125

( கக்கம் – முற்புறத்துக்  கால்களின்  அடிப்பாகம் .)

      அன்றிக்  கனைக்குமாயின்  தோளிலும் , இடறி  நடக்குமாயின்  அரையின்  கீழ்ப்பக்கத்திலும் , அச்சங்கொள்ளுமாயின்  மார்பிலும் , வழியை  விட்டு  விலகிச்  செல்லுமாயின்   முகத்திலும் , சினங்கொள்ளுமாயின்  வாலிலும் , மனக்கலக்கம்  எய்துமாயின்  முழங்காற்  பூட்டுக்களிலும்   அடித்தல்  வேண்டுமென்பதும்  பொருந்தும் .                                                                                                          126

      குதிரையை  உரியதல்லாத  காலத்திலும்  உரியதல்லா  வுறுப்புக்களிலும்  அடிக்கடி  அடித்தலாகாது . அங்ஙனம்  தகுதியில்லாக்  காலத்திலும்  தகுதியில்லா விடங்களிலும்  அடித்தல்  குதிரைக்குக்  குணக்கேடுகளை  யுண்டாக்குவதாகும் .                         127

      அக்  குணக்கேடுகள்  அக்குதிரை  எத்துணைநாள்  உயிரோடிருக்குமோ  அத்துணை  நாளும்  அதனைப்பற்றி  நிற்பனவாம் . கொடுங்குணம்  வாய்ந்த  குதிரையைக்  கசையினால்  அடித்து  அடக்கல்  வேண்டும் . கசையின்றிக்  குதிரையின்கண்  ஏறலாகாது .                                                                                                           128

      சிறந்த  குதிரை   பதினாறு  மாத்திரைப்பொழுதில்  நூறுவிற்கிடை  தூரம்  விரைந்து  செல்வதாகும் . அவ்வளவிற்  குறைந்த  நடையினை  யுடைய  குதிரைகள்  அந்  நடைக்  குறைவுக்    கேற்ப  இழிந்தனவாக மதிக்கப்படுவனவாம் .                                                                                      129

( மாத்திரையாவது – காலத்தின்  நுண்ணிய  ஓரளவாகும் . )

      குதிரைக்கு  நடைப்  பழக்கஞ்  செய்யுங்கால்  அதற்கு  ஆயிரம்  விற்கிடை   தூரமுள்ள  மண்டலாகாரமான  இடம்  சிறந்ததாகும் .  அதனிற்  பாதியளவுள்ள  இடம்  இடையாயதாகவும் , அப்  பாதியிற்  பாதியளவுள்ள  இடம்  கடையாயதாகவும்  எண்ணப்படும் . நூறுவிற்கடை  தூரமுள்ள  இடம்  சிறுமையாகவும் , அதனிற்  பாதியாகிய  ஐம்பது  விற்கிடை  தூரமுள்ள  இடம்  மிகச்   சிறுமையாகவுங்  கூறப்படும் .                                                            130-131

( ஒரு  விற்கிடை  நான்கு  முழமாகும் . மண்டலாகாரம் – வளைவு . அதனிற்பாதி – 500 விற்கிடை . அப்பாதியிற் பாதி  250 விற்கிடை .)      

      நாடோறும்  மண்டலாகாரமாகச்  சுற்றுதல்  ஒரு  நாளில்  நூறு  யோசனை  தூரஞ்  செல்லும்படி  குதிரைக்கு  நடைப்பயிற்சியை  மிகுவித்தல்  வேண்டும் .                                                                                  132

     முன்பனிக் காலத்திலும்   பின்பனிக்காலத்திலும்  இளவேனிற்  காலத்திலும்  காலை  மாலை  இரு  வேளைகளிலும் , முதுவேனிற்  காலத்தில்  மாலைப் பொழுதிலும்  , கூதிர்காலத்திற் காலைப்  பொழுதிலும்  குதிரைக்கு  நடைப்  பயிற்சி  செய்வித்தல்  வேண்டும். கார்  காலத்திலும் , மேடு  பள்ளம்  விரவிய  நிலங்களிலும்  சிறிதும்  நடத்துதலாகாது .                                                                      133-134

      நன்கு  நடைப்பயிற்சி  செய்வித்தலாற்  குதிரைக்கு  உதராக்கினி  பலமும்  உடல்  வன்மையும்  மிகுதலோடு  நோயின்மையும்  உண்டாம் .

      சுமையினாலும் , அதிக  வழி  நடந்தமையாலும் , இளைப்புற்ற  குதிரையை  மெல்ல  மெல்ல  நடந்து  சுற்றிவரச்செய்து , பின்னர்  ஒருவகை  எண்ணெயோடு  கலந்த  சருக்கரையையும் ,   மாவையும்  உண்பித்தல்  வேண்டும் .                                                                                 136

( “ஸ்நெஹம் “   என்று  மூலத்திலுள்ளது ,  ஒரு  வகை  எணெய்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . )

      இன்னும் , குதிரை  உண்ணுதற்பொருட்டு  உலர்ந்தனவும் , நனைந்தனவுமாகிய  கடலைகளையும் , உழுந்துகளையும் , கொள்ளுப்பயிறுகளையும்  நன்றாக  வெந்த  இறைச்சிகளையும் கொடுப்பித்தல்  வேண்டும் .                                                                            137

      குதிரையின்  உடம்பில்  எவ்வுறுப்புச்  சிதைந்திருக்கின்றதோ  அதன்கண்  அடித்தலாகாது . மிக்க  வழி நடந்து  வந்த  குதிரைக்கு  அதன்   மேலிட்ட  கல்லணையை   இறக்குதற்கு  முன்னரே  உப்போடு  கலந்த  வெல்லத்தை  உண்ணக்கொடுத்து  அதன்  வன்மையைப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                 138

( கல்லணை – குதிரை  மேலிடுந்  தவிசு  , உப்போடு  கலந்த  வெல்லத்தை  உண்ணக்கொடுக்குங்கால்  கடிவாளத்தை  முற்றும்  இறக்காமல்  வாயினின்றுஞ் சிறிது  விலக்கல்  வேண்டுமென்பது  போதரும் ;, பின் வருஞ்  சுலோகத்தில்  குதிரை  அவ் வெல்லத்தை  உண்டு  தெளிவெய்திய பின்னர்  முறையே  கல்லணையையும்  கடிவாளத்தையும்  இறக்க  வேண்டுமென்றமையின் . )

       நடந்திளைந்த  குதிரை  வெயர்  நீங்கிச்  சாந்தமுற்று  உருவம்   நன்கு  தெளிவெய்தியபின்னர்  அதன்  மேலிட்ட   கல்லணை  முதலியவற்றை  இறக்கி  அதன்பின்னர்  கடிவாளத்தையும்  யிறக்குதல் வேண்டும் .                                                                                                           139

( கடிவாளத்தை  யிறக்குதல் – குதிரை  உடலினின்றும்  வேறுபடுத்தல் .)

      பின்னர்  அக் குதிரையின்  உடம்பை  நன்றாகப்  பிசைந்து  பிடித்துப்  புழுதியினிடையே  புரளச்  செய்தல்  வேண்டும் . அதன்பின்  நீராட்டி  உணவு  கொடுத்து , நீரருத்தி  நன்கு  பாதுகாத்தல்  வேண்டும் .         140

( “ ஸ்நாநபானாவகா  ஹைஸ்ச்ச” என்று  மூலத்திலுள்ளது . இப்பாடத்திலுள்ள  “ஸ்நாந அவகாஹ”  என்னுஞ்  சொற்கள்  ஒரு  பொருளனவாதலாலும்  உணவு  கூறப்பட்டமையாலும்  “ஆகார ஸ்நாத பானாஹைஸ்ச்ச”  என்று  பாடங்கொண்டு  பொருளுரைக்கப்பட்டது .)

      கள்ளும், இறைச்சிச்  சாறுங்  குதிரைக்குரிய  எல்லாக்  குற்றங்களையும்  போக்குவனவாம் . குதிரையைப்  பரிபாலிப்போன்  அதற்குத்  தன்னாலியன்றவரை  பாலும் , நெய்யும் , நீரோடு  கலந்த  மாவும்  ஆகிய  இவற்றை  உண்ணக்  கொடுத்தல்  வேண்டும் .           141

( குற்றங்கள்  ஈண்டு  உடற்கணுண்டாம்  நோய்  முதலியன .)

     குதிரை , உணவுண்டு  நீர்  பருகிய  அப்பொழுதே   நடையிற்  செலுத்தப்படுமாயின்  அதற்குக்  காச  நோய் , சுவாசநோய்  முதலிய  பிணிகள்  உண்டாம் .                                                                                        142

      குதிரைக்குரிய உணவுப் பொருள்களில்  நவதானியமும்  கடலையும்  சிறந்தனவாகவும் , உழுந்தும்  கொள்ளும்  இடை   நிகரனவாகவும் , மசூரமும்  பயறும்  தாழ்ந்தனவாகவும்  எண்ணப்படும்.                 143

( மசூரம் – தானிய  வகைகளுள்  ஒன்று .  “மகுஷ்டகம்”  கொள்ளு   என்று  மொழிபெயர்க்கப்பட்டது .)

8 . குதிரைகளின்  அறுவகை  நடைகள்

      குதிரையின்  நடை  தாரை , ஆற்கந்திதம், இரேசிதம் , புலுதம் , தெளரீதகம் , வற்கிதம்  என  ஆறு   வகைப்படும் . இவ் வறுவகை  நடைகளுக்கும் இலக்கணங்கள்  தனித்தனியே  உள்ளன .              144

( இங்கு  ஆறுவகைப்படும்  என்று  கூறப்பட்ட   குதிரை  நடைகளை  2-ஆம்  அத்தியாயம்  134-135  ஆம்  சுலோகங்களில்  பதினோரு வகைப்படுத்துக்  கூறினர் . அம் மிகுதி     இவற்றுள்  அடங்கும்  போலும்)

      நடத்துவோன்  குதிக்காற்றாக்கால்  விரைந்து செலுத்தப்பட்டு  குதிரை  மயக்கமெய்தி  மிக  அதிக   விரைவோடு  செல்லுமாயின்  அச் செலவு  தாரை  என்னும்  நடையாகும் .                                                     145

      சிறிது   வளைந்த   கால்  நுனிகளால்  குதிரை  துள்ளித்  துள்ளிச்  செல்லுமாயின் , அச்  செலவு  ஆற்கந்திகம்  என்று  குதிரை  நடை யியலுணர்ந்தோர்  கூறுவர் .                                                                           146

      குதிரை  சிறிது  துள்ளித்  துள்ளித்  தொடர்ந்து  நடத்தல்  இரேசித  நடையாகும் . மானைப்போல்  நான்கு  கால்களாலும்  துள்ளிச்  செல்லல்  புலுதம்  என்னும்  நடையாகும் .                                                   147

குதிரை  தன்  கால்களைச்  சிறிதும்  வளையாமல்  விரைந்து  அழகாகச்  செல்லுமாயின்  அச்  செலவு  தெளரீதகம்  என்றறியப்படும் . அந்  நடை  தேரிழுக்குங்காற்  சிறந்ததாகும் .                                                                  148

      குதிரை  மயிலைப்போல்  உயரத்  தூக்கிய  கழுத்தினை           யுடையதாய்ப்  பாதி  உடலை யசைத்துக்கொண்டு  நன்றாக  வளைந்த  கால்களால்  நடக்குமாயின்  அந்  நடை  வற்கித  மென்று  கூறப்படும் .

9 . எருது  ஒட்டகங்களின்  இலக்கணம் 

      எருதின்  வயிற்றின்  சுற்றளவு  அதன்   முகத்தின்  நீள  அளவினும்  நான்கு  மடங்கு  மிகுதியாகும் . திமில்  முடியவுள்ள  அதன்  உயரம்  முகத்தளவின்  மூன்று  மடங்கு  மிகுதியாகும் . அதன்  உடலின்  நீளம்  முகத்தளவின்  மூன்றரை  மடங்கு  மிகுதியாகும் .                                   150

      ஏழு  தால  அளவு  உயரமுள்ள  எருது  பின்வருங்  குணங்களோடு  கூடியிருக்குமாயின்  போற்றத்தக்கதாம் .                                                   151

( தாலத்தின்  அளவு  இவ்  வத்தியாயம்  4-ஆம்  பிரகரணம்  82-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      நடக்குங்கால்  நின்றுவிடாததும் , மந்த  நடை யில்லாததும் , நன்றாகச்  சுமந்து  செல்வதும் , சிறந்த  உறுப்புக்களால்  அழகு  வாய்ந்ததும் , மிக்க  கொடுந்தன்மை  யில்லாததும் , அழகிய  முதுகினையுடையதும்  ஆகிய  எருது  எருதுகளுட்  சிறந்ததென்று  கூறப்படும் .                                                                                                         152

     நாளொன்றுக்கு  முப்பது  யோசனை  தூர  விழுக்காடு  சுமை  தாங்கிச்  செல்வதும் , ஒன்பது  தால  உயரமுள்ள  வலிய  உடம்பினை யுடையதும் , நல்ல  முகத்தினை யுடையதும்  ஆகிய  ஒட்டகம்  சிறந்ததாகும் .                                                                                                     153

10 . மனிதர்க்கும்  யானைகளுக்கும்  உரிய  வாணாள் வரையறை

      மனிதர்க்கும்  யானைகளுக்கும்  பரமாயுள்  நூறு  யாண்டுகளாகும் . மனிதர்க்கும்  யானைகளுக்கும்   உரிய  பாலப் பருவம்  இருபது  யாண்டுகள்  வரையாகும் .                                                                              154

     மனிதர்க்கு  யெளவனபருவம்  அறுபது  யாண்டுகள்  வரையாகு மென்றெண்ணப்படும் . யானைக்கு  யெளவன பருவம்  எண்பதாண்டுகள்  வரையாகும்.                                                                     155

11 . குதிரை , எருது , ஒட்டகங்களின்  ஆயுள்  வரையறை

      குதிரையின்  பரமாயுள்  முப்பத்துநான்கு  யாண்டுகளாகும் . எருது  ஒட்டகமாகிய  இவற்றின்  பரமாயுள்  இருபத்தைந்து  யாண்டுகளாகும் .

      குதிரை  , எருது , ஒட்டகமாகிய  இவற்றின்  பாலப்பருவம்  ஐந்து  யாண்டுகள்  வரையாகும் . இவற்றின்  யெளவன  பருவம்  பதினாறு  யாண்டுகள்  வரையாகும் . அவ்வளவின்  மேற்பட்ட  யாண்டுகள்  அவற்றிற்கு  முதுமைப்  பருவங்களாம் .                                                       157

      பற்களின்  தோற்றத்தாலும் , அவற்றின்  நிறங்களாலும்  எருது  குதிரைகளின்  ஆயுள்  அளவு  அறியப்படும் .                                              158

      குதிரைக்கு  முதலாம்  ஆண்டில்  வெண்மை  நிறம்  வாய்ந்த  ஆறு  பற்களுண்டாம் . இரண்டாம்  ஆண்டில்  கருமையுஞ்  செம்மையுங்  கலந்த  கீழ்வாய்ப்  பற்கள்  தோன்றும் .                                                       159

      மூன்றாவது  தொடங்கி  ஐந்தாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முன்வாய்ப்  பற்களிரண்டும்  கருமை  நிறம்  வாய்ந்திருக்கும் . நான் காம்  யாண்டில்  அப்பற்களின்  இருமருங்குமுள்ள   இரண்டு  பற்களும்  வீழ  அவ்விடத்தில்  மீண்டும்  இரண்டு  பற்கள்  தோன்றும் .                  160

      ஐந்தாம்  ஆண்டில்  கடைவாய்ப்  பற்களிரண்டும்  வீழ  மீண்டும்  அவ்விடத்தில்  இரண்டு  பற்கள்  தோன்றும் . நடு , அதன்  மருங்கு , கடை  ஆகிய  இம்  மூன்றிடத்தும்  உள்ள  பற்கள்  இரண்டிரண்டாக  ஆறாவது  தொடங்கி  எட்டாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  கருமை  நிறம்  எய்துவனவாம் .                                                 161

( நடுப்பற்களிரண்டும்  ஆறாம்  ஆண்டிலும்  அவற்றின்  இருமருங்குமுள்ள  பற்களிரண்டும்  ஏழாம்  ஆண்டிலும் , அவற்றின்  இருமருங்குமுள்ள  கடைப்பற்களிரண்டும்  எட்டாம்  ஆண்டிலும்  கருமை  நிறம்  எய்துமெனக்  கொள்க . இங்ஙனமே   பின்வருஞ்  சுலோகங்களிரண்டிற்கும்  பொருளியைத்துக் கொள்க . )

      அப்பற்கள்  ஒன்பதாவது  தொடங்கிப்  பதினொன்றாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  பொன்மை  நிறத்தினையும் , பன்னிரண்டாவது  தொடங்கிப்  பதினான்காவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  வெண்மை  நிறத்தினையும் , பதினைந்தாவது  தொடங்கிப்  பதினேழாவது  இறுதியாக  உள்ள  யாண்டுகளில்  முறையே  கண்ணாடி  போன்ற  ஒளியினையுமுடையனவாம் .                                                                         162

      மீண்டும்  அப்பற்கள்  பதினெட்டாவது  தொடங்கி  இருபதாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  தேன்  போன்ற  நிறத்தினையும் , இருபத்தொன்று  தொடங்கி  இருபத்து மூன்றாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  சங்கை  ஒத்த  நிறத்தினையும்  உடையனவாம் . இருபத்து நான்கு  யாண்டு  தொடங்கி  மும்மூன்று  யாண்டுகளாக  அப்பற்கள்  முறையே  வெளிவிடுதலையும் , அசைதலையும் , வீழ்தலையும்  உடையனவாகும் .

      எக்  குதிரையின்  முகநுனியில்  வளைந்த  மூன்று  இரேகைகளுள்ள னவோ  அது  நிரம்பிய  ஆயுளையுடையதாகும் . அவ்  இரேகைகள்  குறையக்குறைய  அக்குதிரையுன்  ஆயுளும்  குறைந்ததாகும் .          164

(  162-164.  அப்பற்கள்  நடு , மருங்கு , கடை களிலுள்ளவை . நடுப்பற்களிரண்டும் , அவற்றின்  இருமருங்குமுள்ள  பற்களிரண்டும் , அவற்றின்  இருமருங்குமுள்ள  கடைப்பற்களிரண்டும்  முறையே  9-10-11  ஆம்  யாண்டுகளில்  பொன்மை நிறத்தினையும் , 12-13-14  ஆம்  யாண்டுகளில்  முறையே  வெண்மை நிறத்தினையும்  15-16-17ஆம்  யாண்டுகளில்  முறையே  கண்ணாடி  போன்ற  ஒளியினையும் , 18-19-20  ஆம்  யாண்டுகளில்  முறையே  தேன்  போன்ற  நிறத்தினையும் , 21-22-23 ஆம்  யாண்டுகளில்  முறையே  சங்கை  ஒத்த  நிறத்தினையும்  எய்துவனவெனவும் , 24-25-26 ஆம்  யாண்டுகளில்  முறையே  வெளியிடுதலையும் , 27-28-29 ஆம்  யாண்டுகளில்  முறையே  அசைதலையும் , 30-31-32  ஆம்  யாண்டுகளில்  முறையே  வீழ்தலையும்  உடையனவாமெனவும்  பகுத்துணர்ந்து  கொள்க . )

     முழங்கால்களை  மேற்றூக்கியெறிதல் , உதட்டினால்  ஒலித்தல் , முதுகை யசைத்தல் , நீர்நிலையில்  நிற்றல் , நடக்குங்கால்  இடையே   நின்று விடுதல் , முதுகு  நிலத்திற்  பொருந்த   வீழ்தல் , பின்புறமாக  நடத்தல் , கால்களை  உயரத் தூக்குதல்  ஆகிய   இக்குணஞ்  செயல்களை உடைய  குதிரைகளும் , பாம்பைப் போன்ற  நாவினையுடைய  குதிரையும் , கரடியை யொத்த  நிறம்  வாய்ந்த  குதிரையும் , அச்சமிக்க  குதிரையும்  மிகவும்  பழிக்கப்படுவனவாம் . நெற்றியில்  மறுவோடு  கூடிய  திலகம்  அமையப்  பெற்ற  குதிரை  பழிக்கப்படுவதாய்த்  தன்னையுடையார்க்குக்  கேடு  விளைப்பதுமாம்

      எருதிற்கு  நான்காம்  ஆண்டில்  வெண்மை  நிறம்  வாய்ந்த  எட்டுப்  பற்கள்  நிறைந்து  தோன்றும் . அதன்  ஐந்தாம்  ஆண்டிற்  கடைப்  பக்கங்களிலுள்ள   இரண்டு  பற்களும்  வீழ  அவ்விடத்திற்  புதிய  பற்கள்  மீண்டும்  தோன்றுவனவாம் .                                                            167

      ஆறாம்  ஆண்டில்  கடைப்பற்களின்  அயற்பற்களிரண்டும் , ஏழாம்  ஆண்டில்  அவற்றின்  அயற்பற்களிரண்டும் , எட்டாம்  ஆண்டில்  நடுப்  பற்களிரண்டும்  முறையே   வீழ , அவ்விடங்களில்  மீண்டும்  புதிய  பற்கள்  தோன்றுவனவாம் .                                                                               168

      எட்டாம்  ஆண்டின்   பின்   இரண்டிரண்டு  ஆண்டுகள்  வரை  அப்  பற்கள்  முறையே  கருமை   நிறத்தினையும் , பொன்மை  நிறத்தினையும் , வெண்மை   நிறத்தினையும் , சிறிது  சிவந்த  நிறத்தினையும் , சங்கை  ஒத்த  நிறத்தினையும்  எய்தும் . அதன்பின்  அப் பற்கள்  அசைதலையும்  வீழ்தலையும்  உடையனவாம் .               169

      இங்குக்  கூறிய வண்ணமே  ஒட்டகத்திற்கும்  ஆயுள்  வரையறை  முதலியன  அறிந்துகொள்ளல்  வேண்டும்.                                                   170

12 . யானை  முதலியவற்றை  யடக்கிக்  காக்கு  முறை

      செலுத்துதற்கும்   இழுத்து  நிறுத்துதற்குமுரிய  நுனிமுகம்  பொருந்திய  தோட்டியே  யானைகளை  நடத்துதற்குத்  தக்க  கருவியாகும் . அக் கருவியால்  யானைப்பாகர்  யானைகளை  ஒறுத்து  நன்னடை  பயிற்றல்  வேண்டும் .                                                                   171

      குதிரைக் கடிவாளத்தின்  இருமருங்குமுள்ள  பன்னிரண்டங்குல  நீளம்  வாய்ந்த  மேற்பாகங்களிரண்டும் , அவற்றின்  உட்பக்கங்களிற்  பொருந்தினவும்  வன்மை  மிக்கனவுமாகிய  நிறுத்தல்  இழுத்தற்குரிய  கருவிக்  கூறுகளோடும் , கயிறு  கோத்தற்குரிய  வளையங்களோடும்  கூடினவாக  இருத்தல்  வேண்டும் . இத்தகைய  கடிவாளத்தாற்  குதிரையை  யடக்கி  வயப்படுத்தல்  வேண்டும் .                               172-173

      எருதையும்  ஒட்டகத்தையும்  மூக்குக்  கயிறுகளால்  நன்கு  அடக்கியாளல்  வேண்டும் . குதிரை , எருது , ஒட்டகம் , ஆகிய  இவற்றின்  உடம்பிலுள்ள  அழுக்கைப்  போக்குவதற்குக்  கூர்மை   மிக்க  நுனிகளையுடைய  சப்தபாலம்  என்னும்  கருவி  உரியதாகும் .           174

      மனிதரையும்  விலங்குகளையும்  எப்பொழுதும்  தகுதியான  தண்டங்களால்  அடக்கியாளல்  வேண்டும் . விசேடமாகப்    படை வீரர்களை  அடித்தொறுக்குந்  தண்டத்தாலன்றிப்  பொருட்டண்டத்தல்  அடக்கியாள  இயலாது .                                                                                   175

      எருதுகளையும்  குதிரைகளையும்  நீர்ச்  சுரப்புள்ள  நிலப்பகுதியிலும் , யானைகளையும்  ஒட்டகங்களையும்  காட்டு  நிலத்திலும்  காலாட்படைகளை  வெப்பமும்  தட்பமும்  ஒத்த  நிலப்பகுதியிலும்  வைத்துப்  போற்றல்  வேண்டும் .                               176

      அரசன்  ஒரு  யோசனை  தூரத்திற்கு  நூறு  படைவீரர்களாகத்  தன்    இராச்சிய  முழுதிலும்   படைகளை  நியமித்துக்  காத்தல்  வேண்டும்.      

      பண்டங்களைச்  சுமந்து  செல்வதில்  யானையும் , ஒட்டகமும் , எருதும் , குதிரையும்  ஆகிய  இவை  சிறந்தனவாம் . கார்காலமல்லாத மற்றைக் காலங்களில் இவ்  வெல்லாவற்றிலும் , வண்டியே  சிறந்ததாக  எண்ணப்படும் .                                                                                                  178

13 . போர்  வென்றி  கொள்ளு  முறை

      அறிவிற்  சிறந்த  அரசன் , தன்  பகைவன்  மிகச்  சிறியனாயினும்  அவனை  வெல்லுதற்கு  மிகச்  சுருங்கிய  படைப்  பலத்தைத்  துணைக்  கொண்டு   செல்லலாகாது . வன்மை  மிக்க  அமயப்படை  பெரிதெனினும்  அதனைத்  துணைக் கொண்டு  செல்லலாகாது .       179

( அமயப்படை – போர்  குறித்து  அப்பொழுது  திரட்டப்படுவது . இதனை  இப்  பிரகரணத்தின்  10-ஆம்  சுலோகத்திற்  காண்க . ) 

       போர்ப்  பயிற்சி  யில்லாத  படையும் , வன்மை யில்  படையும் , அமயப்படையும் பஞ்சுத்துய்  போல  எளியனவா  மாதலின்  அவற்றை  மதிவலி மிக்க  அரசன்  எப்பொழுதும்  போர்த்  தொழிலல்லாத  மற்றைக்  காரியங்களிற்  சேர்ப்பித்தல்  வேண்டும் .                                180

      உயிர்க்குக்  கேடுவருங்கால்  ஆற்றலில்லாத  ஒருவன்  மாறுபட்ட  செயல்களைச்  செய்தற்கு  எப்பொழுதும்  முயல்வான் . ஆற்றல்  வாய்ந்த  ஒருவன்  அங்ஙனம்  மாறுபட்ட செயல்களைச்  செய்தற்கு  முயல்வானல்லன் .                                                                                               181

( உயிர்க்குக்  கேடு  வருங்காலென்பதனை  ஆற்றல்  வாய்ந்த  ஒருவற்குங்  கூட்டிக்  கொள்க . மாறுபட்ட  செயல்கள்  யுத்த  தருமத்திற்கு  விரோதமானவை . )

      ஒருவன்  உடல்வலி  மிக்கனாயினும்  வீரம்  இல்லாதவனாக  இருப்பின்  போர்க்  களத்தில்  நிற்றற்குத்  தகுதியில்லாதவனாவான் . அங்ஙனமாயின்  ஆற்றல்  குறைந்தவனும்   வீரம்  இல்லாதவனும்  ஆகிய  ஒருவன்  பகைவரோடு  பொருதற்கு  எங்ஙனந்  தகுதியுள்ளவனாவான் ? [ ஆகான்  என்றபடி]                                             182

      நன்கு  பயிற்சி  செய்யப்பட்ட  ஒருவன்  குறைந்த  வலியுடையனாயினும்  வீரமுடையனாயிருப்பின்  பகைவரை  வெல்லுதற்குத்  தகுதியுடையனாவான் . அங்ஙனமாயின்  மிக்க  உடல்  வன்மையும் , சிறந்த  போர்ப்பயிற்சியும் , வீரமும்  வாய்ந்த  ஒருவன்  எங்ஙனம்  பகைவர்பால்  வெற்றி  கொள்ளாதிருப்பன் ? [ வெற்றி   கொள்வான்  என்றபடி ]                                                                                    183

      போர்ச்  செயலில்  மூலப்படை  தன்னுயிர்க்குக்  கேடு   நேர்ந்தவிடத்தும்  தன்  தலைவனை  விட்டொழிதற்கு  விரும்பாதாதலின்  அரசன்  நன்கு  பயிற்சி  செய்யப்பட்ட  வன்மை மிக்க  அம்  மூலப்படையின்  துணை  கொண்டு  பகைவரைக்  குறித்துப்  போர்க்களத்தை  யடைதல்  வேண்டும் .                                   184

      சொற்கடுமையாலும்  தண்டக்கடுமையாலும் , வேதனக்குறை வாலும் , அச்சத்தாலும் , எப்பொழுதும்  வேற்றிடத்திருத் தலாலும் , மிக்க  வேலைக்  களைப்பாலும்  படைவீரர்க்கு  மனவேறுபாடுண்டாகும் .    185

      ஓரரசனுடைய  படைவீரர்  மனவேறுபாடுடையராயிருப்பின்  அவரால்  அவ்வரசற்குச்  சிறிய  வெற்றியுமுண்டாகாது . ஆதலின்  பகைவர்  படைக்கு  மனவேறுபாட்டையும் , தன்  படைக்கு  மனவேறுபாடின்மையையும்  அரசன்  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .

      அரசன்  எப்பொழுதும்  தன்  பகைவரது  படைக்கு  மறைவிற்  கொடுக்கப்படும்  வஞ்சப்  பொருட்  கொடையால்  மனவேறுபாடுண்டாம்  வண்ணம்   விரைந்து  செய்தல்  வேண்டும் . 187

      வணக்கத்தாலும்  பணிவிடை  செய்தலாலும்   மிகவுஞ்  சிறந்த  ஆற்றல்  வாய்ந்த  பகைவனையும் , பெருமைப்படுத்தலாலும்  கொடையாலும்  தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்த  பகைவனையும்  தன்  மாட்டு  அன்புடையராகச்  செய்து  கொள்ளல்  வேண்டும் . போர்ச்செயல்களால்  தன்னிற்  குறைந்த  வலியினையுடைய  பகைவனையும் , நட்புரிமையால்  தன்னோடொத்த  வன்மை  வாய்ந்த  பகைவனையும்  வயப்படுத்து  வெல்லுதல்  வேண்டும் . இவ்வெல்லாப்  பகைவரையும்  பேதோபாயங்களால்  தன்வயப்படுத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                           188

      பகைவரைத்  தன்  வயப்படுத்துதற்குரிய  உபாயம்   அவர்தம்  சிறந்த   படைகளை  வேறுபடுத்தலிலும்  வேறொன்றின்று . ஒருவன்  சிறந்த  படைகளையுடையனாயிருக்குங்காறும்  அவன்  பகைவன்  நீதியுடையனாதலோடு  பெருநெருப்பிற்குக்  காற்றுத்துணைசெய்தல்  போல  அவற்கு  நண்பனாகவும்  இருந்து  துணை  செய்வான் .            189

( சிறு   நெருப்பை  அவித்தலும்  பெரு  நெருப்பை  வளர்த்தலும்  காற்றினியல்பாம் . அது போலப்  படைவலி  குறைந்த  அரசர்க்கு  ஊறு  செய்தலும் , படைவலி  மிக்க  அரசர்க்குத்  துணை   செய்தலும்  பகையரசர்க்கு  இயல்பாம்  என்பது  போதரும் . )

      பகைவரால்  விலக்கப்பட்டு  வந்த  படையைத்  தன்  படையின்  பக்கலில்  வைத்துக்கொள்ளலாகாது . தனிமையில்  வைத்துப்  பிற  செயல்களில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .  அப்படையைப்  போர்  செய்தற்பொருட்டு  நியமிக்கவேண்டுமாயின்  முதற்கண்  ஏவுதல்  வேண்டும் , நட்புப்  படையை  முற்புறத்தால் , பிற்புறத்தால் , இருமருங் குகளினாதல்  வைத்தல்  வேண்டும் .                                                          190

14 . போர்க்குரிய  நாளிகக்  கருவிகள் 

      மந்திரத்தாலும் , எந்திரத்தாலும் , நெருப்பினாலும்  வெளிப்படுத்தெறியப்படும்  படை  விடுபடை [ அஸ்திரம் ]   எனவும் , அங்ஙனமல்லாத  வாள்  குந்தம்  முதலியன  விடாப்படை [ சஸ்திரம் ] எனவும்  கூறப்படும் .                                                                                       191

      விடுபடை  நாளிகமெனவும்  மாந்திரிகமெனவும்  இரண்டு  வகைப்படும் .                                                                                                     192

     அரசன்  தன்பால்  மாந்திரிகப்படை  இல்லாதிருக்குங்கால்  வெற்றி  குறித்து  எப்பொழுதும்  வாள்  முதலிய  விடாப்படைகளோடு  நாளிகப்  படையையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                              193                                                   

     போர்க்குரிய  கருவிகளின்  வகைகளை  யுணர்ந்தோர்  அக்கருவிகளின்  குறிய  வடிவம் , நெடிய  வடிவம் , நுதிவிசேடம்  ஆகிய  இவற்றால்  விடுபடை  விடாப்படைகளுக்குப்   புதுமையாகவும்  வேறுவேறாகவும்  பெயரிட்டு  வழங்குவர் .                                                 194

( நுதி – கூரிய  நுனி .)

      பெரு  நாளிகம் , சிறு  நாளிகம்  என்னும்  வேறுபாட்டால்  நாளிகப்படை  இரண்டு   வகைப்படும் .                                                     195

      குறுக்காய்  மேனோக்கிய  துளையின்  அடியில்  உடையதும் , ஐந்து  சாண்  அளவு  நீண்ட  குழாய்த்   தண்டினையுடையதும் , அடியிலும்  நுனியிலும்  குறி  வைத்து  அடித்தற்குரிய  திலபிந்துக்களோடு  கூடியதும் , எந்திர  தாடனத்தால்  நெருப்பை  வெளிப்படுத்துவதும் , கற்பொடிகளைத்  தாங்கியிருக்குங்  கன்னமூலத்தை யுடையதும் , நல்ல  மரத்துண்டாற்  செய்யப்பட்ட  உபாங்கத்தை  அடிப்பாகமாக வுடையதும் , நடுவில்  ஓர்  அங்குல  அளவு  அகன்ற  துவாரத்தையுடையதும் , தன்னுள்ளே  நெருப்புப்  பொடி  பொதியப் பெற்றதும் , சலாகையோடு  கூடியதும் , வன்மை  மிக்கதுமாகிய  இதுவே  சிறு  நாளிகமென்று  கூறப்படும் . இதனைக்  காலாட்படைகளும்  குதிரைப்படைகளும்  தாங்கிச் செல்லல்    வேண்டும் .                                                                                              196-198                                                                                          

      (  திலபிந்து – எள்ளைப்போற்  சிறிய  புள்ளி  வடிவமாக  அமைக்கப்படுவது . )

      நாளிகக்கருவி , மேற்றகட்டின்  வன்மைக்குத்  தக்கவாறும் , துவாரத்தின்  அகற்சிக்குத்  தக்கவாறும் , நாளத்தின்  நீளத்திற்குத்  தக்கவாறும் , கோளத்தின்  பருமைக்குத்  தக்கவாறும்  தூரத்திலுள்ள  குறியைத்  தாக்குவதற்கு  குரியதாகும் .                                                  199

      அடிப்பாகத்திலுள்ள  முளையின்  சுழற்சியால்  குறியை  ஒத்துத்தாக்கும்  நிலையினையடைவதும் , மரத்தினாலாக்கப்பட்ட  அடிச்  சட்டத்தை யுடையதுமாகிய  இது  பெருநாளிகம்  என்னும்   பெயரினையுடையதாய்  வண்டிகளாற்  சுமந்து  செல்லத்  தக்கதாகும் . இது  நன்றாகப்  பிரயோகிக்கப்படுமாயின்  வெற்றியைக்   கொடுக்கும்.                                                                                                      200

15 . நெருப்புப்பொடி  யுண்டாக்கு  முறை

      சுவர்ச்சிலவணம்  ஐந்து  பலமும் , கந்தகம்  ஒரு  பலமும் , உள்ளே  புகை  தங்கும்படி  எரித்து  நன்றாகப்  பக்குவஞ்  செய்யப்பட்ட  சதுரக்கள்ளியும்  எருக்கும்  ஆகிய  இவற்றின்  தூய்மை மிக்க  கரிக்கட்டை  ஒரு பலமும்  எடுத்துப்  பொடி  செய்து  கலந்து , சதுரக்கள்ளி  எருக்கு  வெள்ளைப்பூண்டு  இவற்றின்  இரசங்களாற்  காய்ச்சுதல்  வேண்டும் . அங்ஙனங்  காய்ச்சப்பட்ட  பின்னர்  வெயிலில்  உலர்த்திப்  பின்  சருக்கரையைப்    போற்  பிசைந்து  எடுத்தல்  வேண்டும்  .  அதுவே  நெருப்புப்  பொடி  என்று  கூறப்படும் .       201-202

( சுவர்சிலவண மென்பதை  வெடியுப்பெனக்   கொள்ளல்  வேண்டும் .) 

      நாளிகக்  கருவியின்  நிமித்தஞ்  செய்யப்படும்  நெருப்புப் பொடிக்குக்  கந்தகமும்  கரித்துண்டும்  முற்கூறியபடி  ஒவ்வொரு  பலமும் , ஆறு  பலமாதல்  நான்கு  பலமாதல்  சுவர்சிலவணமும்  சேர்த்தல்  வேண்டும் .                                                                                     203

     இரும்பினாலாக்கப்பட்ட  உண்டை [குண்டு]  தன்னுள்  குளிகைகளை யுடையதாகவும்  அவற்றை  இல்லாததாகவும்  இருக்கலாம் . சிறு  நாளிகக்  கருவியினிமித்தம்  ஈயத்தானாதல்  மற்றை  உலோகங்களானாதல்  குளிகைகளை  யமைத்தல்  வேண்டும் .       204

( “சிறு  நாளிகக்கருவியின் நிமித்தம் “ என்று  பின்னர்க்  கூறப்பட்டமையால்  இரும்பினாலாக்கப்பட்ட  உண்டை  பெருநாளிகத்திற்குரியதென்பது  போதரும். )

      வன்மைமிக்க  இரும்பினானாதல்  மற்றை  உலோகங்களினானாதல்  ஆக்கப்பட்ட  நாளிகப்படை  நாடோறும்  மாசு  துடைக்கப்பட்டுத்  தூய்மையுடையதாக  இருத்தல்  வேண்டும் . அதனை  அப்  படைவீரர்  சூழ்ந்து  காத்தல்  வேண்டும் .                     205

      கரிப்பொடியும் , கந்தகமும் , சுவர்ச்சிலவணமும் , மனோசிலையும் , அரிதாரமும் , காரீயமும் , சாதிலிங்கமும் , இருப்புத்துகளும் , கருப்பூரமும் , அரக்கும் , நீலியிலைச்  சாறு , சரளமரத்துப் பிசினும்  ஆகிய  இவற்றை   ஒத்த  அளவினவாகவும் , குறைந்த  அளவினவாகவும் , மிக்க  அளவினவாகவும்  சேர்த்துப்  பலவகையான  நெருப்புப்  பொடிகளை  அவற்றின்  இயல்புணர்ந்தோர்  நிலவொளி  முதலியவற்றைப்  போல்  ஒளிவிளங்கும்படி  செய்வர் .                 206-208

( நீலி – அவுரி .)

      அந்  நெருப்புப்  பொடியின்  தீயைப்  பற்றவைத்தலாற்  சிறந்த  நாளிகக்  கருவியின்கண்  உள்ள  உண்டையைக்  குறிக்கட்  செலுத்தல்  வேண்டும் .                                                                                                          209

முதலில்  நாளிகக்  கருவியைச்  சுத்தஞ்  செய்து  அதன்பின்  அதனுள்  நெருப்புப்  பொடியை  யிட்டு  அதன்  சலாகையால்  அக்கருவியின்  நாளமூலத்திற்  படியும்வண்ணம்  இறுகுறு  இடித்துச்  செலுத்துதல்   வேண்டும் .                                                                                                            210

     அதன்பின்  அதனுட்  சிறந்த  உண்டையையும்  , கன்ன பாகத்தில்  நெருப்புப்  பொடியையும்  பெய்து , கன்னபாகத்திலிடப்பட்ட  நெருப்புப்  பொடியின்  தீயைப்  பற்றவைத்து  உள்ளிருக்குங்  கோளத்தைக்  குறியில்  வீழ்த்தல்  வேண்டும் .                                                                       211

16 . மற்றை  விடுபடை  விடாப்படைகளின்  வகைகள்

     வில்லினது  நாணிற்  பூட்டி  வெளிப்படுத்திக்  குறியை  யெய்து  வீழ்த்துதற்குரிய  அம்பு  இரண்டு   முழ     நீளமுள்ளதாக   இருத்தல்  வேண்டும் .                                                                                                       212

      பருத்த  அடிப்பாகத்தையும் , எட்டுக்  கோணங்களையும்  , தாங்குவோன்  மார்பளவு  உயரத்தையும்  உடையது  கதை  என்று  கூறப்படும் . தாங்குவோன்  உயரமளவு  நீளத்தையும் , ஒரு  முழ  அளவுள்ள  அடிப்பாகத்தையும் , இரண்டு  பக்கத்துங்  கூரிய  முகங்களையுமுடையது  பட்டீசம்  என்னும்  ஆயுதமாகும் .              213

( ஒரு முழ  அளவு  உள்ள  அடிப்பாகம்  என்றது  அவ்வாயுதத்தின்  நடுப்பாகத்தை  உணர்த்தும் ; அஃது  இருபுறமுங்  கூரிய  முகங்களையுடைமையின் , இருபுறத்து  முகங்களையுடைய  ஆயுதத்திற்கு  அம்  முகங்களை  நோக்க  அடிப்பாகம்  நடுவிடம்  என்பது  பொருந்தும் . )

      சிறிது  வளைந்ததும் , ஒரே  நுதியினையுடையது , நான்கு  அங்குல  அகற்சியுடையதும் , மயிர்  களையுங்  கத்தியின்  கூர்மை  போன்ற  கூர்மையினையும் , தாங்குவோன்  உந்திச்  சுழியளவு  உயரத்தையும் , வன்மைமிக்க  பிடியினையும் , அழகிய  சந்திரனை  ஒத்து  விளங்கும்  காந்தியினையும்  உடையது  வாள்   என்னும்  ஆயுதமாகும் .              214

      நான்கு  முழ   உயரமுள்ள  தண்டமாகிய  அடிப்பாகத்தையும் , மயிர்  களையுங்  கத்தியின்  கூர்மை  போன்ற  கூர்மை  பொருந்திய  முகத்தினையும்  உடையது  பிராசம்  என்னும்  ஆயுதமாகும் . கொழுவைப்   போன்ற  நுனியினையும் , முளை  போன்ற  அடிப்பாகத்தையும் , பத்து  முழ  உயரத்தையும்  உடையது   ஈட்டி [குந்தம்]  என்னும்  ஆயுதமாகும் .                                                                    215

      ஆறு  முழச்  சுற்றளவையும் , கூர்மை  மிக்க  நுனிப்  பாகத்தையும் , நடுவண்  அழகிய  துளையினையுமுடையது  சக்கரப்படையாகும் . மூன்று  முழ  நீளமுள்ள  தண்டத்தினையும் , மூன்று  சிகைகளையும் , இருப்புக்  கயிறுகளையும்  உடையது பாசம்  என்னும்  ஆயுதமாகும். 216

      கோதுமை  என்னுந்  தானியத்தினளவு  பருமையுள்ள  இருப்புத்  தகட்டால்  வன்மை  பொருந்த  ஆக்கப்பட்டுத்  தலைப்பாகோடு  கூடி  உடம்பின்  மேற்பாகத்திற்கு  அழகு  செய்வது  கவசமாகும் .                 217

      சிறந்த  இரும்பினாலாக்கப்பட்டுக்  கூரிய  நுனியினையும் , வன்மையினையுமுடையது  கரசம்  என்னும்  ஆயுதமாகும் .                 218

      எவன்  மிக  நிறைந்த  உபகரணப்  பொருளையும் , சந்தி  விக்கிரகம்  முதலிய  அறுவகைக்  குணங்களையும் , சூழ்ச்சியறிவையும் , பலவகைப்பட்ட  போர்க்  கருவிகளையும்  உடையானோ  அவ்வரசனே  போர்  செய்தற்கு  விரும்புதல்  வேண்டும் . இவை யில்லாமற்  போர்  செய்வானாயின்  தன்  இராச்சியத்தையுங்  கைவிட்டுத்  துன்பமும்  எய்துவான் .                                                                                                           219

      தம்முட்  பகைமையினையுடைய  இருவர்  தத்தங்  காரியங்களை  நிறைவேற்றிக்  கொள்ளுதற்பொருட்டு  மனத்  தளர்வின்றி  அம்பு , வாள் முதலியவற்றாற்  செய்யுஞ்  செயல்  போர்ச்  செயலென்று  கூறப்படும் .                                                                                                         220

      மந்திரங்களோடு  செலுத்தப்படும்  அம்பு  முதலியவற்றாற்  செய்யப்படும்  போர்  தெய்விகமெனவும் , நாளிக முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர் ஆசுரமெனவும், வாள்  முதலிய  கைப்படைகளாலும்  தோள்  முதலிய  உறுப்புக்களாலும்  செய்யப்படும்  போர்  மானவம்  எனவும்  கூறப்படும் .                          221

      அப் போர்  செய்யுங்கால்  ஒருவன்  ஒருவனோடும் , இருவர்  இருவரோடும் , பலர்  பலரோடும், ஒருவன்  பலரோடும்  எதிர்த்து  நின்று  செய்யலாம் .                                                                                                        222

17 . போரில்  விருப்பமுள்ள  அரசர்க்குக்   காலம்   இட முதலிய  அறியும்  வகை

      அரசன்  உரிய  காலத்தையும் , உரிய  இடத்தையும் , பகை வலியையும் , தன்  வலியையும்  ஆராய்ந்து , அதன்பின்  சாம  பேத  முதலிய  உபாயங்களையும் , சந்தி விக்கிரக முதலிய  அறுவகைக்  குணங்களையும் , சூழ்ச்சியையும்  அறிந்து  போரில்  விருப்பமுடையனாதல்  வேண்டும் .                                                             223

( இச்  சுலோகப்பொருள்  “ வினைவலியுந்  தன்வலியும்  மாற்றான்  வலியுந்  துணை வலியுந்  தூக்கிச்  செயல் “ என்னுந்  திருக்குறளை  நினைவுறுத்துகின்றது . )

      போர்  செய்தற்குக்  கூதிர்காலமும் , முன்பனிக்காலமும் , பின்பனிக்காலமும் , தலைசிறந்தனவாம் .  இளவேனிற்காலம்  இடை யாயதாகும் . முதுவேனிற்காலம்  கடையாயதாகும் . கார்காலத்தில்  போர்  செய்தல்  கூடாதொன்றாம் . அக்காலத்திற்  போர்  செய்ய  நேரின்  சாமோபாயத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .               224-225

      அரசன்  எக்காலத்திற்  போர்ச்  செயற்குரிய  உபகரணங்கள்  நிரம்பப்  பெறுதலையும் , மிக்க  படைப்பலத்தையும் , உள்ளக்கிளர்ச்சியையும்  , சிறந்த  நற்குணமுண்டாதலையும்  உடைய னாகின்றானோ  அக்காலமே  போர்க்குரிய  நற்காலமாகும் .             226

      அரசர்க்கு  இன்றியமையாக்  காரியநிமித்தம்  போர்  செய்ய  நேர்ந்துழிக்  காலம்  நன்றாக  இல்லையாயின் , அப்பொழுது  விசுவேசனாகிய  கடவுளை  உள்ளமாகிய  கோயிலின்கண்  அன்போடிருத்திப்  போர்  குறித்துச்  செல்லல்  வேண்டும் .                227

      பசுவிற்கும் , பத்தினிப்பெண்டிற்கும், அந்தணர்க்கும்  கேடு  நேர்ந்துழிக்   காலநியமனங்  கருதாமல்  போர்க்குச்  செல்லல்  வேண்டும் .                                                                                                         228

      அரசன்  காலத்திற்கேற்றவாறு  தன்  படைகள்  போர்ப்  பயிற்சி  செய்தற்குரிய  விடங்கள்  எந்  நிலத்திலுள்ளனவோ  அந்  நிலம்  பகைவர்க்கு  மாறுபட்டதாக  இருப்பின்   அது  தலையாயதாகும் .  229

      அந்  நிலம்  தனக்கும்  பகைவர்க்கும்  ஒத்ததாக  விருப்பின்  இடையாயதாகும்  என்று  நூற்பொருளுணர்ந்தார்  கூறுவர் .             230

      பகைவருடைய  படைவீரர்  போர்ப்பயிற்சி  செய்தற்குப்  போதிய  தகுதி  வாய்ந்ததும் , தனக்கு  மாறுபட்டதும்  ஆகிய  நிலம்  கடையாயதாகும் .                                                                                            231

      பகைவரது  படை  தன்  படையினும்  மூன்றிலொரு  கூறு  குறைந்ததாகவும் , பயிற்சி  செய்யப்பட்டதாகவும் , வலியற்றதாகவும் , புதிதாகத்  திரட்டப்பட்டதாகவும்  இருக்குமாயின்  உறுதியாகத்  தனக்கு  வெற்றி  கிடைக்கும் .                                                                       232

      புதல்வனை  யொப்பப்  பாதுகாக்கப்படுவதும் , கொடையினாலும்  மற்றைச்  சிறப்புக்களாலும்   பெருமைப்படுத்தப்பட்டதும் , போர்க்குரிய  உபகரணங்கள்  நிரம்பப்  பெற்றதும்  ஆகிய  தன்  படை  வெற்றியை  அளிப்பதாகும் .                                                                         233

18 . சந்தி  விக்கிரக  முதலிய  அறுவகைக்  குணங்கள்

      சந்தி , விக்கிரகம் , யானம் ,  ஆதனம் , சமாச்சிரயம் , துவைதீபாவம்  என்னு மிவற்றை  மந்திரத்திற்குரிய  அறுவகைக்  குணங்களாக  அறிதல்  வேண்டும் .                                                                                          234

(இவற்றை  முறையே  நட்பாக்கல் , பகையாக்கல், மேற்சேரல் , இருத்தல் , கூட்டல் , பிரித்தல்  என்று  கூறுவர்   பரிமேலழகர் [ திருக்குறள், 485-உரை ] )

      எச்  செயலால்  வன்மைமிக்க  பகைவனும்  தன்மாட்டு  நட்புரிமை  யெய்துகின்றானோ  அச்  செயல்  சந்தி  என்று  கூறப்படும் . அச்செயலை  அரசன்  முயன்று  ஆராய்ந்தறிதல்  வேண்டும் .             235

     எச்  செயலாற்  பகைவன்  துன்புறுத்தப்பட்டு  தனக்கு  வயமாகின்றானோ  அச்  செயல்  விக்கிரகமாகும் . அதனை  அரசன்  அமைச்சரோடு  சூழ்ந்து  ஆராய்தல்  வேண்டும் .                                     236

      தன்  விருப்பம்  நிறைவேறுதற் பொருட்டுப்  பகைவரை  அழித்தற்குச்  செல்லுதல்   யானமாகும் . தற்காப்பும்  பகைவர்க்குக்  கேடும்  உண்டாம்  வண்ணம்  இருத்தல்  ஆதனமாகும் .                     237

ஆற்றலில்லாத  ஒருவன்  எவராற்  காக்கப்பட்டு  வன்மையுடையனாகின்றானோ   அவரைப்  பற்றி  யொழுகுதல்  சமாச்சிரயமாகும் .  தன்  படைகளைக்  கூட்டங்கூட்டமாகப்  பிரித்து  வைத்தல்  துவை தீபாவமாகும் .                                                                    238

( முதநூலில்  உள்ள  “குல்மம்”  என்பது  கூட்டம்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது .  குல்மம்  படையின்  ஓர்  அளவக்  குறிப்பதுமாம் . 2-ஆம்  அத்தியாயம்  140-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      ஆற்றல்மிக்க  பகைவனால்  நெருக்கப்பட்டு  அவற்கு  வேறு எதிர்ச் செயல்  செய்ய  இயலாமல்  வருந்தும்  அரசன்  இடையே சில காலத்தைக்  கழித்துப்  பின்னர்ச் சந்தி  செய்ய  முயலல்  வேண்டும். 239

( இது  முதல் 249-வரை  உள்ள  சுலோகங்களில்  எவர்பால்  எவ்வமயம்  எவ்வாறு  சந்தி செய்து கொள்ளல் வேண்டும் என்பதைப் பற்றிக்  கூறுவர்)

      இச்  சந்தி யொன்றே  இன்பஞ்  செய்யுங்  கையுறையாக  எண்ணப்படும்  . அன்பில்லாதனவாகிய   பிறவெல்லாம் , கையுறையின்  பேதங்களாகும் .                                                                     240

( இதனால்  உண்மையன்போடு  செய்யப்படும்  சந்தியாகிய  கையுறையே  சிறந்ததெனவும் , அன்பில்லாதனவாகிய  பிற  கையுறைகளெல்லாம்  அத்துணைச்  சிறந்தனவல்லவெனவும்  கூறியவாறாம் .  பிற  கையுறைகளின்னவென்பதை  242-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      எதிர்த்து வரும்  பகையரசன்  ஆற்றல்  மிக்கானாயின்  கையுறை  பெறாது  திரும்புவானல்லன் . அவ் வமயம்  அக் கையுறையின்றி  வேறு  சந்தியென்பது  ஒன்று  இன்றாம் .                                                                  241

( எதிர்த்து  வருவதற்குக்  காரணம்  மண்  பெண்  பொன்  முதலியவற்றுள்  ஒன்றன்பால்  வைத்த  அவாவேயாம் .)

      பணிவிடை  செய்தற்கு  உடன்படல் , மகட்  கொடுத்தல் , நிலங் கொடுத்தல் , பொருள் கொடுத்தல்  ஆகிய  இவற்றுள்  ஒன்றைப்  பகைவனது  ஆற்றற்குத்  தக்கவாறு  கையுறையாகச்  செய்தல்  வேண்டும் .                                                                                                           242

      அரசன்  பகைவரை  வெற்றி  கொள்ளுதற்  பொருட்டு  மந்திர வன்மையால்  தன்   சாமந்த  அரசரைச்  சந்தி  செய்து  கொள்ளல்  வேண்டும் . வன்மைமிக்க  ஒருவன்  தன்னை  நெருங்கித்  தனக்குக்  கேடு  செய்யக்  கூடுமாதலின்  அவன்  இழிந்தவனாயினும்  அங்ஙனஞ்   செய்யாதவாறு   அவனோடு  சந்தி  செய்துகோடல்  நன்று .                  243

( மந்திரம் – சூழ்ச்சி .)

      நெருங்கிய  முட்கள்  சூழ்ந்த  மூங்கிற்புதர்  கூட்டமாக  விருக்குமாயின்  அதனைக்  களைதல்  இயலாத  தொன்றாம் . அங்ஙனமே  அரசனும்  அமைச்சர்  முதலிய  குழுக்களோடு  கூடியிருப்பின்  பகைவரால்  வெல்லப்படுவானல்லன் .                          244

      அரசன்  தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்த  பகைவன்  பாற்  சந்தியையும் , தன்னின்  ஒத்த  பகைவன் பால்  விக்கிரகத்தையும்  , தன்னிற்  குறைந்த  பகைவன்பால்  யானத்தையும் , நண்பரோடு  சமாச்சிரயத்தையும்  செய்துகொள்ளல்  வேண்டும் . அரண்களை  யடைந்திருத்தலாகிய  ஆதனத்தையும்  தன்  படைகளைக்  கூட்டங்கூட்டமாகப்  பிரித்து  வைத்தலாகிய  துவைதீபாவத்தையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                           245

      அறிவிற்  சிறந்த  அரசன்  தனக்குப்   பகைவர்  பலராக, அவராற்  பொதுவாக  அச்சம்  ஏற்படுமாயின்  அவருள்  ஆற்றல்  மிக்கானோடு  தக்க  காலத்திற்  சந்தி  செய்து  தன்னைப்  பாதுகாத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                          246

      தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்த  பகைவனோடு   போர்  செய்தலாகாது . மேகம்  ஒரு பொழுதும்  காற்றிற்கு   எதிர்முகமாகச்  செல்வதில்லை  என்னும்  இதுவே  அதற்கு  எடுத்துக்காட்டாகும் .        247

     தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்தவனிடத்து  வணங்கி  ஒழுகுவோனது  செல்வமும் , உரிய  காலம்  நோக்கிப்  பராக்கிரமத்தை  மேற்கொள்வோனது  செல்வமும் , மாறுபட்டொழுகாத  ஆற்றைப்  போல  என்றும்  அவரை  விட்டு  நீங்காவாம் .                                             248

      முற்காலத்தில்  ஒருவர்க்கொருவர்  கேடு  செய்வதில்லை  என்று  நியமஞ்  செய்து  கொண்டும்  விருத்திராசுரன்  இந்திரனாற்  கொல்லப்பட்டானாதலின் , அறிவிற்  சிறந்த  அரசன்  பகைவனோடு  சந்தி  செய்து  கொள்ளினும்  அவனை   முற்றும்  நம்பலாகாது .           249

     பகைவனால்  துன்புறுத்தப்பட்டுக்  கேடெய்திய  அரசன்  தனக்கு  நலத்தை  விரும்பிக்  காலமும் , இடமும் , படையும் , ஆகிய  இவற்றைத்  தக்கவாறு  அமைத்துக்கொண்டு  விக்கிரகத்தைத்    தொடங்கல்  வேண்டும் .                                                                                                            250

      அரசன்  தன்னிற்  குறைந்த  படைப் பலத்தையும் , நட்டோரையுமுடையவனும் , அரணுள்  இருப்பவனும் , கள் , காமம் , சூது  முதலிய   விதனங்களில்  மிக்க  பற்றுடையவனும் , குடிகளின்  பொருள்களைக்  கவர்ந்து  கொள்பவனும் , மனம்  மாறுபட்ட  அமைச்சர்,  படை  வீரரை யுடையவனும்  ஆகிய  பகைவரைச்  சூழ்ந்து  போர்  செய்து  அழிக்கக்  கடவன் . இதனையே  விக்கிரக மென்றறிதல்  வேண்டும் . இஃதல்லாத  பிறவெல்லாம்  கலகமென்றெண்ணப்படும் .

      மிக்க  ஆற்றல்  வாய்ந்த  சூரனாகிய  பகைவனோடு  அவனின்  மிகக்  குறைந்த  ஆற்றல்  வாய்ந்த  அரசன்  விக்கிரகத்தை  மேற்கொள்ளலாகாது ; அங்ஙனங்  கொள்ளின்  அவன்  பொருள்  எல்லாவற்றிற்கும்  அழிவுண்டாமாதலின் .                                                253

     ஒரு   பொருளை  அடைய  வேண்டுமென்று  பலர்  மேற்கொள்ளும்  அவாவே  கலகத்திற்குக்  காரணமாகும் .  ஆதலின் , அப்பொருளை  யடைதற்கு  வேறு  உபாயம்  இல்லையாயின்  விக்கிரகத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                             254

      இனி,  யானம் ஐந்து  வகைப்படுமென்று  மதிவலிமிக்கோர்  கூறுவர்.  அவையாவன :  விகிருகிய யானம் , சந்தாய யானம் , சம்பூய யானம் , பிரசங்க யானம் , உபேட்சை யானம்  என்பனவாம் .                                 255

( இது முதல்  261-வரையுள்ள  சுலோகங்களில்  யானத்தின்  வகைகளைப்  பற்றிக்  கூறுவர் .)

      ஓர்  அரசன்  தன்  படைப்  பலத்தால்  எல்லாப்  பகைவரையும்  எப்பொழுது  போரில்  வென்று  கொண்டு  செல்லுகின்றானோ   அச்செலவை  விகிருகியயானம்  என்று  யானவியல்புணர்ந்த  பெரியார்  கூறுவர் .                                                                                             256

( விகிருகியயான மென்பது  பகைவரது  படையை  போருஞற்றிச் சிறிது சிறிதாக  வென்று  மேற்சேரலாம் ,)

      தன்  நண்பர்  எல்லாரானும்  பகைவருடைய  நண்பர்  எல்லோரையும்  போரில்  தோல்வியுறச்  செய்து  தானும்  படைப்பலத்தாற்  பகைவரை  நோக்கிச்  செல்லுதலும்    விகிருகியயானம்  என்று  கூறப்படும் .                                                        257

      வேறொரு  பகைவனை  நோக்கிப்  போர்  குறித்துச்  செல்லும்  அரசன்  தன்னைப்  பின்றொடர்ந்து  வரும்  மற்றொரு  பகைவனோடு  வெற்றியையும்  பயனையும்  விரும்பிச்  சந்தி  செய்துகொண்டு  செல்வானாயின்  அச்  செலவு  சந்தாயயானம்  என்று  கூறப்படும் .  258

     ஓர்  அரசன்  வீரமும்  வன்மையுஞ்  சிறக்கப்  பெற்றுப்  போர்த்திறன்  வாய்ந்த  தன்  சாமந்த  அரசர்  பலரோடு  கூடி  ஒரு  பகைவனை  நோக்கிச்  செல்லுதல்  சம்பூயயானமாகும் .                                               259

             ஓரிடத்தை  நோக்கிப்  புறப்பட்ட  அரசன்  பிறிதோரிடத்திற்கு  வஞ்சகமாகச்  செல்லுதல்  பிரசங்கயானம்  ஆகுமென்று  அவ்வியல்புணர்ந்த  அமைச்சர்  கூறுவர் .                                                   260

     பகைவனை  நோக்கிப்  போர்  குறித்துச்  சென்ற  வன்மைமிக்க  அரசன்  தோல்வியாகிய  மாறுபட்ட  பயனை   யெய்தி  அப் பகைவனைப்  புறக்கணித்து விட்டுத்  திரும்பிப்  போதல்  உபேட்சையானம்  என்று  கூறப்படும் .                                                        261

19 . போர்  குறித்துச்  செல்லுதலின்  வகைகள்

      அரசன் இழிகுலத்துப்  பிறந்து  தீயொழுக்கமுடையனாயினும்  கொடையாளியாக விருப்பின்  அவன்பாற்  படைவீரர்  அன்புடையராவர் . ஆதலின்  தன்  படைவீரரை , மனமுவந்து  கொடுக்கும்  பரிசிலால்  மகிழ்வித்தல்  வேண்டும் . போர்  குறித்துச்  செல்லுங்கால்  படைத்தலைவன்  சிறந்த  வீரர்  பலர்  தன்னைப்  புடை  சூழ்ந்து  வரத்  தான்  படைகளின்  முன்னணியிற்  செல்லல்  வேண்டும் . நடுவில்  மகளிரும் , கருவூலமும் , அரசனும் , சிறந்த  மற்றைப்  பொருள்களும்  போதல்  வேண்டும் . அப்  படைத்தலைவன்  தன்  படைகளை  இரவும்  பகலும்  முயன்று  பாதுகாத்தல்  வேண்டும் . 262-63 

( இதுமுதல்  284-வரையுள்ள  சுலோகங்களில்  யானத்தினிமித்தம்  செய்யப்படும்  படைவகுப்பு  முதலியவற்றைக்  கூறுவர் .)

20 . படை  வகுப்புக்களும்  அவற்றின்  செயல்களும்

      ஆறும் , மலையும் , காடும் , மதிலுமாகிய  இவ்விடங்களுள்   எங்கெங்கு  அச்சந்  தோன்றுமோ  அங்கங்கு  வியூகமாகச்  செய்யப்பட்ட  படைவீரரோடு  அப்படைத்தலைவன்  போதல்  வேண்டும் .                                                                                                            264

      படைகளின்  முன்னணியில்  அச்சமுண்டாகுமாயின்  பெரிய  மகரவியூகமாதல் , இருபக்கத்தும்  இறகுகளையுடைய  சேன வியூக மாதல் , சிறந்த  வீரராலாகிய  கூரிய  முகத்தினையுடைய  சூசி வியூகமாதல்  வகுத்துச்  செல்லல்  வேண்டும் .                                        265

( சேனம் – கழுகு .  சூசி – ஊசி .)

      படைகளின்  பின்புறத்தில்  அச்சமுண்டாகுமாயின்  சகட வியூகத்தையும் , இருமருங்கிலும்  அச்சமுண்டாகுமாயின்  வச்சிர  வியூகத்தையும் , எல்லாப்பக்கங்களிலும்  அச்சமுண்டாகுமாயின்  சருவதோபத்திர வியூகம் , சக்கர வியூகம் , வியாளவியூகங்களையும்  அவ்வந்  நிலத்திற்குத்  தக்கவாறு  பகைப்  படையைப்  பிளந்து செல்லும்  வண்ணம்  அமைத்தல்   வேண்டும் .                                        266

      வாத்திய ஒலி  விசேடத்தால்  அறிவிக்கப்படும்  படை  வகுப்பியற்றுஞ்  சங்கேதங்களைத்  தன்  படைவீரரல்லாத  வேறு  ஒருவனும்  அறியாவண்ணஞ்  செய்தல்  வேண்டும் .                              267

( சங்கேதம் – குறியீடு .)

      மதிவலி  மிக்க  அரசன்  பலவகையான  படைவகுப்புக்களை  எப்பொழுதும்  செய்வித்தல்  வேண்டும் .                                                    268

      அரசன்  குதிரைகளுக்கும் , யானைகளுக்கும் , காலாட்படைகளுக்கும்  வேறு  வேறாகவுள்ள  படைவகுப்புச்  சங்கேதங்களை  உரக்க  ஒலித்துக்  கேட்டுச்  செய்தல்  வேண்டும் .   269

      படைவீரர்  வலப்புறம் , இடப்புறம் , நடு , முற்புறம்  ஆகிய  இவ்விடங்களில்  எங்கிருப்பினும்  அப் படை வகுப்புச்  சங்கேத  ஒலிகளைக்  கேட்டு  அவ்வொலிக்  குறிப்பால்  ஆணையிட்டவாறு  செய்யக்கடவர் .                                                                                                    270

      இனிச்  சங்கேதவழிச்  செய்யப்படும்  படைவகுப்புக்களின்  செயல்களாவன : திரண்டு  கூடுதல் , பரவி நிற்றல் , நாற்புறத்துஞ்  சுற்றுதல் , நெருங்குதல் , முன்போதல் , விரைந்து போதல்,   பின்னாக  நடத்தல் , வரிசையாக  எதிர்நோக்கிப் போதல் , நேராக  எழுந்து  நிற்றல் , நிலத்திற்  புரளுதல் , அட்டதளமும்  சக்கரமும்   கோளமும்  ஊசியும்  சகடமும்  அருத்தசந்திரனும்  ஆகிய  இவற்றைப்   போல்  வடிவமைந்திருத்தல் , சிற்சிலவாகப்  பிரிந்து  நிற்றல் , ஒழுங்குபட  நிரை  நிரையாகச்  செல்லல் , விடுபடை , விடாப்படைகளைக்  கையிற்றாங்குதல் , அவற்றை  உபயோகிக்கச்  சித்தஞ்  செய்தல் , குறியைத்  தாக்குதல் , விடுபடைகளை எறிதல் , கைப்படைகளால்  தாக்குதல் , அப் படைகளை  விரைந்து  சித்தஞ்  செய்தல் , குறியில்  வீழ்த்தல் , மீண்டும்  மீண்டும்  அவற்றைப்  பற்றுதல் , விடுதல் , அம்பு , வாள் , முதலியவற்றாலும்  அடிவைப்புக்களாலும் , தற்காப்புச்  செய்து  கோடல் , எதிர்த்துத் தாக்குதல் , இரண்டு  வரிசை , மூன்று  வரிசை  அல்லது    நான்கு  வரிசைகளாகச்  செல்லுதல் , முன்  நிற்றல் , திரும்பி  வருதல் , பக்கங்களிற்  செல்லுதல்  என்பனவாம் .                             271-276

      படைவகுப்பிலுள்ள  வீரன்  அம்புகளைத்  திட்டஞ்  செய்தற் பொருட்டுப்  பின்  போந்தும் , அவற்றை  விடுதற்  பொருட்டு  முன் சென்றும்  முன்னணியில்  நின்று  அவற்றை  எறிதல்  வேண்டும் .  277

      அம்பை  விடுத்த  வீரன்  நிலத்திலிருத்தல்  , அன்றி  முன்னோக்கிச்  செல்லுதல்  வேண்டும் . தன்  எதிரில்  இருக்கின்ற  பகைவனை  அணிமையிற்  சென்று  கண்டு  அவன்பால்  தன்  அம்புகளை  ஒவ்வொன்றாகவாதல் , இரண்டிரண்டாகவாதல் , கூட்டங்கூட்ட மாகவாதல்   சங்கேதத்திற்  குறிப்பிட்டவாறு  மீண்டும்  விடுதல்  வேண்டும் .                                                                                                     278

      ஆகாயத்திற்  கிரெளஞ்சப்  புட்கள்  எங்ஙனம்  வரிசை  வரிசையாகப்  பறந்து  செல்லுமோ  அங்ஙனஞ்  செல்லுமாறு , நுண்ணிய   கழுத்தினையும் , இடைநிகராய  பின்  இறகினையும் , பருத்துத்திரண்ட  இறகுகளையும்  உடையதாக  அமைக்கப்படும் படைவகுப்பு  கிரெளஞ்ச  வியூகமாகும் , இதனை  இடத்தின்  தகுதிக்கேற்றவாறு  நடத்துதல்  வேண்டும் .                                            279இ

      பெரிய  இறகுகளையும் , இடைநிகராய  கழுத்தையும் , பின்இறகையும் , முகத்திற்  கூர்மையையும்  உடையதாக  அமைக்கப்படும்  படை  வகுப்பு , சேனவியூகமாகும் .                          280

      நான்கு  கால்களையும் , நீண்டு  பருத்த  முகத்தினையும் , இரண்டு  உதடுகளையு முடையது  மகரவியூகமாகும் . கூரிய  முகத்தினையும் , ஒத்து  நீண்ட  தண்டத்தினையும்  அதன்  அடியில்  துளையினையுமுடையது  சூசிவியூகமாகும் .                                          281

      ஒரே  வழியினையும் , எட்டு  வகையான  வளைவுகளையும்  உடையதாகச்  செய்யப்படுவது  சக்கரவியூகமாகும் . நாற்புறத்தும்  எட்டு  வளைவுகளையுடையது  சருவதோபத்திர வியூகமாகும் உட்செல்லுதற்குரிய  வழியின்மையையும் , எல்லாப்பக்கத்தும்  முகங்களையும் , எட்டு  வட்டங்களையுமுடையது  கோளவியூகமாகும் . சகட  வடிவமாக  அமைக்கப்படுவது  சகடவியூகமாகும் . பாம்பு வடிவமாக  அமைக்கப்படுவது  வியாளவியூகமாகும் .                282-283

      வழியையும்  போர்க்களத்தையும்  நோக்கி  அவற்றிற்குத்  தக்கவாறு  தன்  சிறுபடை  பெரும்  படைகளை  ஒரு  வியூகமாகவும் , இரண்டு  வியூகங்களாகவும் , பல  வியூகங்களாகவும் , கலப்பு  வியூகமாகவும்  அமைத்துக் கொள்ளல்  வேண்டும் .                                                            284

21. பகைவரை  முற்றுகையிட்டுத்  தடை  செய்தல்

     எவ்விடங்களிலிருந்து  நாளிக  முதலிய  எந்திரக்  கருவிகளாற்  பகைப் படையை  அழித்தல்  கூடுமோ  அவ்விடங்களில்  அரசன்  தன்  படை  வீரரோடு  கூடியிருத்தல்  ஆதனம்  என்று  கூறப்படும் .             285

( இது முதல் நான்கு சுலோகங்களில் சந்தி முதலியவற்றுள் ஒன்றாகிய ஆதனத்தைக் கூறுவர். )

      பகைவர்  பாதுகாப்பிற்குரிய  புல்லும் , உணவும் , நீரும் , மற்றைப்  பண்டங்களும்  ஆகிய  இவ்வெல்லாவற்றையும்  உட்செல்ல  வொட்டாமல்  நாற்புறமும்  நீண்டகாலம்  முற்றுகையிட்டிருத்தலால்  முயன்று  தடுத்து  அத்  தடையால்   தானியத்  தொகுப்பும் , நட்புப்  படைகளின்  வரவும்  ஒழியப்  பெற்றதும் , புல்லும் , விறகுங்   குறைந்ததும் , பொருது  வெல்லுதற்குரிய  சனங்களையுடையதும்  ஆகிய  பகைவன்  தேயத்தைக்  காலம்  பார்த்து வென்று  தனக்குரியதாக்கிக்  கொள்ளல்  வேண்டும் .                                   286-287

      வெற்றியை  விரும்பும்  அரசனும்  அவன்  பகைவனுமாகிய  இருவரும்  போரிற்  படைப்பலம்  முதலிய  குறையப்  பெறுவாராயின்  அப்பொழுது  அவர்  தம்முட்  சந்தி  செய்து  கொண்டு  ஒற்றுமைப்பட்டிருத்தல்  சந்தாய  ஆதனம்  என்று  கூறப்படும் .        288

      ஆற்றன் மிக்க  பகைவனால்  வேரோடு  களையப்பட்டு   அப் பகைவனை  வெல்லுதற்குரிய  உபாயமும் , எதிர்ச்செயலுமற்ற  அரசன்  நற்குலப்பிறப்பும் , உண்மையும் , மிகச்  சிறந்த  வன்மையும்,  பெருந்தன்மையும்  வாய்ந்த  மற்றோரரசனைப்  புகலாக  அடைதல்  வேண்டும் .                                                                                                          289

( இதுவும்  பின்வருஞ்  சுலோகத்திற்  கூறப்படுவதும்  சந்தி  முதலியவற்றுள்  ஒன்றாகிய  சமாச்சிரயத்தின்  வகைகளாம் . )

      வெற்றியை  விரும்பும்  அரசற்குத்  துணை  செய்தற்  பொருட்டு  முன்வந்த  நண்பரும் , சம்பந்திகளும் , சுற்றத்தாரும் , வேதனம்  பெற்றுக் கொண்டதால் , வெற்றியாற்  கிடைக்கும்  பொருளைக் கூறிட்டுக்  கொள்வதென்று  உறுதி  செய்தாதல்  துணை  செய்ய  முன்  வந்த  மற்றை  அரசரும்  சமாச்சிரயமாவர்  எனப்  பெரியோர்  கூறுவர் . அரண்களும்  சமாச்சிரயம்  என்று  கூறப்படும்.                                        290

      துணியப்படாத  உபாய  காரியத்தை யுடையவனாய்த்  தனக்கு  நன்மை  பயக்குங்  காலத்தை  எதிர்பார்த்திருக்கும்  அரசன்  துவைதீபாவம்  என்னுங்  குணத்தை  மேற்கொள்ளக்கடவன் . இன்னும்  அவன்  காகநேத்திரம்  போலப்  பிறராற்  காணப்படாதவாறு  ஒரு  காரியத்தை   வெளிப்படையிற்  காட்டிப்  பிறிதொரு  காரியத்தைக்  கடைப்பிடித்தல்  வேண்டும் .                                                                            291

( துவைதீபாவம் – சந்தி  முதலிய  அறுவகைக்  குணங்களுள்  ஒன்று . அஃது  இன்னதென்பதை  238-ஆம்  சுலோகத்திற்  காண்க . ஓரரசன்  தன்  படையைச்  சிறுசிறு  குழுவாக  பிரித்துவைத்தலாகிய  துவைதீபாவத்தை  மேற்கோடல் , பகைவன்  தன்  படைச்  சிறுமை  நோக்கி  எளிதில்  வென்றுவிடலாமென்று  கருதிப்  போர்க்குரிய  அவன்  உபகரணங்களையும்  படைகளையும்  மிகுதியாக்காமை  குறித்தாம் . காகத் திருகண்ணின்  ஒன்றே  மணி  கலக்குமாதலின்  அம்மணியின்  நிலை  இன்ன  கண்ணிலுள்ளதென்று  அறிய  வாராது . அதுபோல  அரசன்  தான்  உண்மையாகக்  கடைப்பிடித்துள்ள  காரியம்  இன்னதென்று  பிறரறியாவாறு  மேற்கொள்ளவேண்டுமென்பதாம் . )

22 . போரிற்  சாம முதலிய  உபாயங்களை  மேற்கோடல்

    சிறந்த  உபாயங்களாலும் , தக்க  சூழ்ச்சிகளாலும் , இடையறா  முயற்சிகளாலும்  சிறு  மனிதர்க்கும்  காரியங்  கைகூடுமாயின்  ஓரரசற்கு  இவற்றால்  எங்ஙனங்  கைகூடாததாகும் . [  எளிதிற்  கை கூடுமென்பது  கருத்து ]                                                                                 292

      முயற்சிகளாலேயே  காரியங்கள்  நிறைவேறுவனவாம் . எண்ணங்களான்  மாத்திரம்  நிறைவேறா . உறங்குகின்ற  சிங்கத்தின்  வாயில்  யானைகள்  தாமே  சென்று  வீழா .                                            293

( சிங்கமும்  முயன்றாலொழிய  யானைகளைக்  கவர  இயலாதென்பதாம் . )

      பிளக்கவொண்ணாத  இரும்பும்  பிறிதொருபாயத்தால்  நீர்  போல்  உருகுந்  தன்மையை  யெய்துகின்றது . நெருப்பை  அவிப்பது  நீர்   என்பது  உலகப்பிரசித்தம் . அங்ஙனமாயினும்  பிறிதொருபாயத்தால்  அமைக்கப்படும்  நெருப்பினால்  அந் நீர்  சுவறிவிடுகின்றது . மதச்  செருக்குமிக்க  யானையின்  தலையிலும்  உபாயத்தினாலேயே  மனிதனுடைய  அடி  வைக்கப்படுகின்றது .                                        294-295

( நெருப்பினால்  நீர்  சுவறவேண்டுமாயின்  அந் நீருக்கு  ஆதாரமாக  இடையில்  பாண்டம்  முதலியனவமைத்தல்  ஈண்டு  உபாயமாகும் . இவ்விரண்டு  சுலோகங்களாலும்  சாம  முதலிய  உபாயங்கள்  இன்றியமையாதனவென்று  அவற்றின்  பெருமை  கூறியவாறாம் . )

      உபாயங்களுள்  பேதோபாயஞ்  சிறந்ததாகும் . சந்தி  முதலிய அறு  குணங்களுள்  சமாச்சிரயஞ்  சிறந்ததாகும் . ஆதலால்  வெற்றியை  விரும்பும்  அரசன்  எப்பொழுதும்  இவ்விரண்டினையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                             296

      அரசன்  இவ்விரண்டுமில்லாமல்  ஒரு  பொழுதும்  போர்  செய்யத்  தொடங்கலாகாது .                                                                                            297

      பகைவனுடைய  படைத் தலைவர் , அமைச்சர் , அவன்  குடிமக்கள் , பெண்கள்  என்னும்  இவரை  ஒருவொர்க்கொருவர் மனவேற்றுமை யுண்டாம்  வண்ணம்  பேதோபாயத்தைச்   செய்தல்  வேண்டும் .  298                                                                                                           

    அரசன்  தன்னுடைய  பகைவனுடையவுமாகிய  சாம  முதலிய  உபாயங்களையும் , சந்தி  முதலிய  குணங்களையும்  எப்பொழுதுஞ்  சீர்தூக்கி யறிந்து  தன்  உயிருக்காதல் , பொருள்  எல்லாவற்றிற்குமாதல்  கேடு  நேருங்கால்  போர்ச்  செயலை  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                              299

23 . போரிற்  புறங்  கொடாமை

     பெண்களுக்கும்  அந்தணர்க்கும்  இடையூறொழித்து  அருள்  செய்யுட்காலும் , அந்தணர்க்கும்  பசுக்களுக்கும்  அழிவு  நேருங்காலும்   உண்டாம்  போரில்  அரசன்  ஒருபொழுதும்  புறக்கணிப்பாளனாக  இருத்தலாகாது .                                                                                                    300

அருள்  செய்யுங்கால்  அச்  செயற்குத்  தடையாகப்  பகைவர்  செய்யுஞ்  செயல்களாற்  போருண்டாம் . அழிவு  நேர்தல்  பகைவராலாம் . அப்பொழுது  போருண்டாதல்  அவ்வழிவை  விலக்குதல்  பற்றி யாகும் . )    

      போர்  செய்து  கொண்டிருக்குங்கால்  அதனை  யொழித்து  எவன்  செல்கின்றானோ  அவன்  தேவரால்  மிகவும்  கெடுக்கப்படுவான் .   301

      குடி  புறங்காத்  தோம்பும்  அரசன்  தன்னின்  மேற்பட்டாரும் , கீழ்ப்பட்டாரும் , தன்னோடொத்தாருமாகிய  பகைவராற்  போர்  குறித்து  அழைக்கப்படின் , அரசற்குரிய  அறத்தை  நினைவுட்  கொண்டு  போர்ச்  செயலினின்றும்  திரும்பலாகாது .                            302

      பிலத்  துவாரத்திலுள்ள  பிராணிகளைப்  பாம்பு  கொன்று  விழுங்குதல்  போலப்  போர்  செய்தற்கு  அஞ்சும்  அரசனையும் , தேய  யாத்திரை யில்லாத  அந்தணனையும்  இந்  நிலமகள்  அழித்துவிடும் .

      அரசிய லறம்  பிரம்மனிடத்தினின்றும்  தோன்றினமையின்   அந்தணன்  தனக்குக்  கேடு  நேர்ந்துழி  அவ்  வரசற்குரிய  விருத்தியாற்  சீவித்தல்  உலகத்திற்  போற்றப்படுவதொன்றாம் .                                  304

      அரசற்குப்  படுக்கையில்  நிகழும்  மரணம்  பாவ  மரணமாகும் .  எவ் வரசன்  கோழையையும்  பித்தநீரையும்  கக்கிக்  கொண்டு  எளிமையுற்று , அழுது , அம்பு  வாள்  முதலியவற்றாற்  புண்படாத  உடலோடு  மரணம்  எய்துகின்றானோ  அவ்வரசனின்  அம்மரணத்தை  அறிவுடையார்  பாராட்டுவாரல்லர் .                                                      305-306

      செல்வம்  படை  முதலியவற்றாற்  செருக்குமிக்க  அரசர்க்குப்  போர்க்களத்தன்றி  இல்லத்தில்  மரணம்  நேர்தல்  எளிமையையும் . செருக்கழிவையும் , பாவத்தையுஞ்  செய்வதாதலின்  அம்மரணம்  பாராட்டப்படுவதன்றாம் .                                                                                307

      அரசர்  குலத்துப்  பிறந்தானொருவன்  தன்  சுற்றத்தார்  சூழப்  போர்க்களத்திற்  சென்று  பகைவனை  வெல்லாது  சீவித்திருப்  பானாயின் , அவன் அம்பு , வாள்  முதலியவற்றாற்  பிளந்து  கொல்லுதற்குரியனாவான் .                                                                           308                       

      போர்க்களத்தில்  ஒருவரை யொருவர்  வெல்ல வேண்டுமென்னும்  விருப்பமுடையவராய்  மிக்க  ஆற்றலோடு  புறங்கொடாமற்   போர்  செய்யும்  வீரர்  துறக்கவின்பம்  எய்துவர் .                                              309

      எவ்வீரன்  தன்  தலைவன்  பொருட்டுப்  படையின்  முன்னணியில்  நின்று  அச்சங்  காரணமாகப்  புறங்கொடாமல்  வீரத்தோடு  போர்  செய்கின்றானோ  அவன்  அழிவில்லாத  துறக்கவின்பத்தை  யெய்துவான் .                                                                                                      310

      போர்க்களத்தில்  இறந்த  வீரன்   அப் போர்ச்  செயலால்  எல்லாப்  பாவங்களையும்  நீக்கித்  தூய்மையுடையனாய்ப்  புண்ணிய வுலகத்தை  யடைவான் .  ஆதலின்  அவ் வீரனைக்  குறித்து  ஒருபொழுதும்  துன்புறலாகாது .                                                                    311

      சிறந்த  தெய்வப்  பெண்கள்  பலர்  போர்க்களத்தில்  இறந்த  வீரனைக்  குறித்து  இவன்  நம்  கணவனாவான்  என்று  அவன்பால்  மிக  விரைந்து  சென்று  அவனை யடைவர் .                                                      312

      பெருந்தவஞ்  செய்து  முனிவரரால்  அடையப்படும்  சிறந்த  பதவியைப்  போர்க்களத்திற்  பகைவரெதிர்நின்று  போர்  செய்து  இறந்த  வீரர்  எளிதில்  விரைந்து  எய்துவர் .                                                313

      எவன்  போர்க்களத்திற்  புறங்கொடாது  போர்   செய்கின்றானோ  அவற்கு  அச்  செயலே  தவமும் , புண்ணியமும் , அழிவில்லாத  அறக் கடமையும் , பிரமசரியம்  முதலிய  நால்வகை   நிலைகளாலும்  எய்தும்  பயனுமாம் .                                                                                                            314

      மூன்று  உலகத்திலும்  வீரத்திலுஞ்  சிறந்தது  வேறு  யாதும்  இன்று .  வீரனே  எல்லோரையும்  பாதுகாப்பவனாவான் . வீரன்பாலே  எல்லாப்  பொருளும்  நிலைப்படுவனவாம் .                                                                 315

      இயங்கியற்  பொருள்களுக்கு  நிலையியற்  பொருள்கள்  உணவாகும் . கோரப்  பல்லுள்ளவற்றிற்கு   அஃதில்லாதவை யுணவாம் . கையுறுப்புள்ளார்க்கு  அஃதில்லாதவை  உணவாகும் . அங்ஙனமே  வீரர்க்கு  அச்சமுடையார்  உணவாவர் .                                                       316

( இயங்கியற்பொருள் – மனிதரும்  விலங்கு  முதலியனவுமாம் . நிலையியற்பொருள்கள் – நெல்லும்  புல்லும்  முதலியன . கோரப்பல்லுள்ளன – சிங்கம், புலி முதலியன . அஃதில்லாதவை – பசு  ஆடு  முதலியன .)            

      இவ்வுலகத்தில்  யோகநெறி யொழுகுந்  துறவியும் , போர்க்களத்திற்  பகைவர்  எதிர்  நின்று  போர்  செய்து  இறந்த  வீரனும்  ஆகிய  இவ்விருவருமே  சூரிய  மண்டலத்தைப்  பிளந்து  கொண்டு  செல்பவராவர் .                                                                                                    317

      ஆற்றன்மிக்க  போர்வீரன் , போரில்  தன்னைக்  கொல்ல  முயல்வோர்,  கற்றுணர்ந்த  அந்தணராயினும்  குரவராயினும்   அவரைக் கொன்று  தன்னைக்  காத்துக்கொள்ளக் கடவன் ; இவ்வறம்  வேதத்தில்  விதிக்கப்பட்ட  தொன்றாகலின் .                                            318

      வீரன் , தனக்குப்  பகைவராற்  பெரிய  அச்சந்  தோன்றியிருக்குமா யின் , அப்பொழுது  செய்ய  வேண்டியவற்றைப்  பற்றி  அருளுடையாரும் , பாவமில்லாரும் , அறிவிற்  சிறந்தாருமாகிய  குரவர்களை  எவ்வாற்றானும்  வினாவலாகாது .[ குரவரை யடுத்து வினாவின்  அவர்  பகைவர்க்கு  எதிச்செயல்  செய்ய    உடன்படார்  என்பது  கருத்து .]                                                                                                 319

     சிறந்த  அழகு  வாய்ந்த  அரண்மனைகளிலும் , கழகங்களிலும் , உய்யான வனங்களிலும்  இருந்து  விசித்திரமான  பல   கதைகளைச்  சொல்லி  மகிழ்வுறுத்தும்  பண்டிதர்கள்  அவ்வவ்விடங்களை அலங்கரிப்பவராவர் .                                                                                      320

( இதுமுதல்  நான்கு  சுலோகங்களில்  போர்  செயலல்லாத  பிற  காரியங்களில் துணை நின்று அலங்கரிப்பவரைக் கூறியது. அவர்கள் அவர்கட்குரிய காரியங்களினன்றிப்  போர்ச்  செயற்குரிய  சூழ்ச்சித்  துணைவராகக்  கருதலாகாதென்பது  பற்றியாம் . )                      

      மக்கள்  பலர்  கூடுங்  கழகங்களிலிருந்து  வியக்கத்தக்க  பல  செயல்களைச்  செய்கின்றவர்களும் , தத்துவ  நிருணயத்திற்  போற்றத்  தக்கவர்களுமாகிய  பண்டிதர்கள்  அவ்வவ்விடங்களை  அலங்கரிப்பவராவர் .                                                                                        321

      பகைவர்பாற்   புரைவழி  காண்டலிலும் , மனிதருடைய  ஒழுக்க  வகைகளிலும்  , யானை , குதிரை  தேர்  என்னுமிவற்றை நடத்துவதிலும் , கழுதை  ஒட்டகம்  வெள்ளாடு  செம்மறியாடு  என்னுமிவற்றைப்  பழக்குவதிலும் , பசுக்களையும்  பொருள்களையும்  பாதுகாத்தலிலும் , நடைவழி யமைத்தலிலும் , சுயம்வரம்  முதலிய  காரியங்களிலும் , ஆக்கப்பட்ட  உணவிற்  குற்றம்  ஆராய்தலிலும்  திறமை  வாய்ந்த  பண்டிதர்கள்  அவ்வவ்விடங்களை  அலங்கரிப்பவராவர் .                                                                               322-323

    அரசன்  தன்  பகைவருடைய  குணங்களைப்  பாராட்டும்  பண்டிதரைப்  பொருட்படுத்தாமல்  தானே  பகைவருடைய     குணங்களை  ஆராய்ந்தறிந்து  அப் பகைவரால்  தனக்குக்  கேடு விளையுமென்னும்  ஐயந்  தோன்றின்  அவரைக்  கொல்லுதற்குரிய  நீதி  முறையைத்  தன்  படைகளுக்குக்  கட்டளையிடல்  வேண்டும் . 324

      ஆததாயிகளின்  தன்மையை  யடைந்த  அந்தணன்   சூத்திரனை  யொப்பக்  கருதப்படுவான் . ஆதலின்  ஆததாயியின்  கொலையால்  அதனைச்  செய்வார்க்கு  ஒரு  குற்றமும்  நேராது .                                  325

      வாள்  முதலிய  கருவிகளைத்  தாங்கித்  தன்னைக்  கொலை  செய்ய  முயன்றுவரும்  ஆததாயி  சிறுவனாக  விருப்பினும்  அவனைக்  கொன்று  விடலாம் . அதனால்  பாலனைக் கொன்ற  குற்றம்  உண்டாகாது . அவனைக் கொல்லாதுவிடின் அக்குற்றம்  உண்டாம்.  326

      ஓர்  அந்தணன்  போர்க்களத்தில்  அம்பு  முதலியன  தாங்கிச்  சினமுற்று  அரசர்குலத்து வீரனை யொப்பப்  புறங்கொடாமற்  போர்  செய்வானாயின் , அவனைக்  கண்டு  கொல்வதால்  கொல்வோர்க்கு  அந்தணனைக்  கொன்ற  குற்றம்  இன்றாம் . இஃது  அறநூல்களில் துணியப்பட்ட தொன்று .                                                                                   327

      எவன்  போர்ச்  செயலினின்றும்  உயிர்  வாழ்தலை  விரும்பிப்  புறங்கொடுத்து  ஓடுகின்றானோ  அவ்  இழி  தகையாளன்  உடலோடு  கூடியிருந்தும்  இறந்தவனே யாவான் , இன்னுமவன்   அந் நாட்டிலுள்ளாரிழைத்த  பாவப்  பயனையும்  அநுபவிப்பான் .              328

       எவன்  தன்  நட்டோனையும்   தலைவனையும்  போர்க்களத்தில்  விட்டுத்  தான்  மாத்திரம்  வெளிச்  செல்கின்றானோ  அவன்  இம்மையில்  எல்லோராலும்  பழிக்கப்பட்டு , மறுமையில்  நரகத்தையும்  எய்துவான் .                                                                               329

       எவன்  தன்  நண்பன்  கேடெய்திருத்தலைக்  கண்டும்  அவற்குத்  துணை செய்யாமலிருக்கின்றானோ  , அவன்   இம்மையிற்  பழியையும்  இறந்தபின்  நரகத்தையும்  அடைவான் .                            330

       எவன்  தன்னை  நம்பித்  தன்பால்  அடைக்கலமாகப்  புகுந்தவனை  விலக்குகின்றானோ  அவ்வறிவிலான்  திசைகளும்  இந்திரர்களும்  உள்ள  காலம்வரை  கொடிய  நரகத்  துன்பத்தை யனுபவிப்பான் .    331

       அந்தணர்  ஒழுக்கக்  கேட்டினையுடைய  அரசனோடு  போர்  செய்து  அவனை  அம்பு , வாள் முதலியவற்றாற்  கொன்று  அழிப்பாராயின் , அக்கொலைச் செயலால்  அவர்  பாவம்  எய்துவாரல்லர் .                                                                                                    332

       எப்பொழுது  அரசர் குலத்தவர்  வன்மையிலராய் யொழிய  உலகம்  இழிந்தவராற்  துன்புறுத்தப்படுகின்றதோ , அப்பொழுது  அங்ஙனம்  துன்புறுத்தும்  அவ்விழிந்தாரை  அந்தணர்  போர்  செய்து  விரைந்து  அழிக்கக்  கடவர் .                                                                                               333

24 . அம்பு  வாள்  முதலியவற்றாற்  செய்யப்படும் போர்ச்  செயலின்  வகைகள்

      மந்திரவன்மை   மிக்க  படைகளாற்  செய்யப்படும்  போர்  தலையாயதாகும் . நாளிகக்  கருவி  முதலியவற்றாற்  செய்யப்படும்  போர்  இடையாயதாகும் . கைகலந்து  செய்யப்படும்  மற்போர்  கடையிற் கடையாயதாகும் .                                                               334                          

      மந்திரவன்மையால்  ஏவப்படும்  பெரிய  வேற்படை  அம்பு  முதலியவற்றாற்  பகைவரை  யழித்தல்,  மாந்திரிகப்  படையாற்செய் யும்  போராகும் . அது  மற்றைப்  போர்  எல்லாவற்றினுஞ்  சிறந்ததாக  எண்ணப்படும் .                                                                                                    335

      நாளிகப்  படையின்  தண்டில்  நெருப்புப்  பொடியைச்  சேர்த்து  அதன்கண்  உள்ள  இருப்புக்  கோளத்தைக்  குறிக்கண்   வீழ்த்துதல்  நாளிகப்படைப்  போராகும் . அது  பகைவர்க்குப்  பெரிதும்  அச்சத்தை  விளைவிப்பதாகும்.                                                                                              336

      குந்தம்  முதலிய  விடாப்  படைகளின்  கூட்டத்தாற்  பகைவரை  யழித்தல்  விடாப்படை  போரென்றறியப்படும்  . அஃது  எப்பொழுதும்  நாளிகப்படை  இல்லாவிடத்து  மேற்கொள்ளத் தக்கதாகும் .               337

25 . மற்போரும்  அதன்  வகைகளும்

     பகைவருடைய  உயிர்நிலை யுறுப்புக்களையும் , உறுப்பின்  பொருத்துக்களையும்   முறையோடு  சென்றாதல் , முறை  தவறிச்  சென்றாதல்  திறமையோடு  உராய்தலாலும் , கைகளாற்  பிணித்தலாலும்  அவரைக்  கொல்லுதல் கைகலந்து  செய்யும்  மற் போராகும் .                                                                                                          338

       அக் கைப்போர்  எட்டு வகையாக  எண்ணப்படும் . அவ் வகைகள்  வருமாறு :  [1]  தன்  இடக்கையால்  பகைவன்  தலை மயிரை  இறுகுறப்  பிடித்தல் , [2]  வன்மையால்  நிலத்தில்  வீழ்த்திப்  பிசைதல் , [3] கால்களால்  தலையில்  உதைத்தல் , [4] முழங்காலால்  வயிற்றின்  மோதுதல் , [5] வில்வப் பழம் போல்  திரண்ட  கைமுட்டியாற்  கதுப்புக்களிற்  கடுமையாகக்  குத்துதல் , [6] அடிக்கடி   முழங்கைகளால்  தாக்குதல் , [7] அங்கையால்  உடம்பில்  எப்பக்கத்தும்  அறைதல் , [8] பகைவன்  சோந்திருக்குங்கால்   கபடமாக  அவனைப்  போரிற்  சுழற்றுதல்  என்பனவாம் .                                                 339-340

       இக் கைப்போர்வகை  எட்டனுள்  நான்கு  வகைகளால்  அரசர்  குலத்துப்  பிறந்தாரையும் , ஐந்து  வகைகளால்  அக் குலத்துப்  பிறந்த  இழிதகையாளரையும் , ஆறு  வகைகளால்  வணிகரையும் , ஏழு  வகைகளாற்  சூத்திரரையும் , எட்டு  வகைகளாற்  கலப்புச்  சாதியினரையும்  பொருது  அழிக்கலாம் . இவ் வெண்வகைக்  கைப்போர்களையும்  பகைவர்பாலே  உபயோகித்தல்  வேண்டும் . நட்டார்பால்  ஒரு பொழுதும்  மேற்கொள்ளலாகாது .                               341

26 . போர்ச்  செயற்குரிய  நியமங்கள்

     மனம்  மாறுபட்ட   அமைச்சரையும்  படைகளையுமுடைய  பகைவரோடு  போர்  செய்யுங்கால்  சிறியனவும்  பெரியனவுமாகிய  நாளிகப்  படைகளை  முன்னணியில்  நிறுத்தியும் , அவற்றின்  பின்புறத்தே  காலாட் படைகளையும் , இருமருங்கிலும்  யானைப்படைகளையும்  குதிரைப்படைகளையும்  நிற்கச்  செய்தும்  போர்   தொடங்கல்  வேண்டும் .                                                                    342

      படைத்தலைவர்  பகைவர்  எதிரே  சென்றாதல் , பக்கங்களில்  விலகிச்  சென்றாதல்  போர்  செய்தற்குரிய  நிலம்  தமக்கு  அநுகூலமாம்  வண்ணம்  முதலில்  தம்  படையின்  அரைக்கூறு  கொண்டு  போர்  செய்தல்  வேண்டும் .                                                        343

      அதன்பின்  அமைச்சராற்  காக்கப்படும்  படைகள்  பகையமைச்சரோடு  போர்  செய்தல்  வேண்டும் . அதன்பின்  அரசனாற்  காக்கப்படும்  படைகள்  பொருதல்  வேண்டும் . அதன்மேல்  அரசன்  தன்  உயிர்க்கு  அழிவு  நேர்வதாக விருப்பின்  பிறருதவியின்றித்  தான்  தனியே  எதிர்த்துப்  பகைவரோடு  போர்  செய்யக்  கடவன் .                                                                                                344

( 343-344 . இவ்விருசுலோகங்களாலும்  ஒர்  அரசன்  பகைவரோடு  போர்  செய்யப்  புகுங்கால்  முதலில்  படைத்  தலைவனையும்  தன்  படைகளுட்  பாதியையும்  செலுத்த  வேண்டுமென்பதும் , அப் படைத்தலைவனால்  வெற்றியின்றாயின்  அதன்பின்  தன்  அமைச்சனையும்  அவன்  கீழ்ப்பட்ட  படைகளையும்  போக்கவேண்டுமென்பதும் , அவ்வமைச்சனாலும்  பகைவரை  வெல்ல  இயன்றிலதாயின்  அதன்பின்  தன்  காவலுட்பட்ட  படைகளை  உய்த்தல்  வேண்டுமென்பதும் , அப்  படைகளுக்குங்  கேடு  நேர்ந்து  தன்னுயிர்க்கும்  அழிவு  வரக்கூடியதாக  விருப்பின்  பிறருதவியின்றித்  தான்  தனியே   பகைவரோடு  போர்  புரிய  வேண்டுமென்பதும்  போதரும் . )   

       நீண்ட  வழி நடத்தலாற்  களைத்துப் போதல் , பசி  நீர்  வேட்கை களாற்  துன்பமுறுதல்  , நோய்  வறுமை  அகாலத்திற்  பெய்யுங்  கன  மழை  என்னுமிவற்றால்  வருந்தல், கள்வராற்  பற்றப்படுதல் , சேறு  புழுதி   நீர்  என்னுமிவற்றில்   தோய்தல் , மனம்  வருந்தல் , பெருமூச்செறிதல் , உறங்குதல் , உணவுட்கொள்ளுதல்  சுருக்கமாதல் , நிலையின்றிக்  கலங்குதல் , கொடிய  நெருப்பின்  அச்சத்தால்  நடுங்குதல் , பெருமழை , பெருங்காற்றுக்களாற்  கலங்குதல்  ஆகிய  இவை  முதலியன  நேர்ந்துழி  இவ்  விதனங்களால்  தன்  படை  பற்றப்பட்டிருக்குமாயின்  அப்பொழுது  அவற்றை  அரசன்  நன்கு  பாதுகாத்தலும் , இவற்றாற்  பகைப்படை  பற்றப்பட்டிருக்குமாயின்  அப்பொழுது  அவற்றை  அழித்தலுஞ்   செய்தல்  வேண்டும் .   345-347

( நீண்ட வழி நடந்து களைத்தன்  முதலியவாக  இங்குக்கூறப்பட்ட  நிகழ்ச்சிகளைத்  தன்  படையுடைத்தாயிருக்குமாயின்  அப்பொழுது  எளிதில்  பகைவர்  வென்று  விடுவராதலின்  அரசன்  சோர்வின்றிக்  காக்க  வேண்டுமெனவும் , இன்னோரன்ன  நிகழ்ச்சிகளைப்  பகைப்  படையுடைத்தாயிருக்குமாயின்  அப்பொழுது  தான்  வெல்லுதல்  எளிதாதலின்  அவ்வமயமறிந்து அழிக்க முயல வேண்டுமெனவும்  கூறியவாறு . )

       போர்ப்படைக்குரியனவாக  இந்  நீதி  நூலில்  அறிவுடையார்  கருத்திற் கிணங்கக்  கூறப்பட்ட  இவ்விதனங்கள்  பலவற்றுள்ளும்  ஒருவர்க்கொருவர்  மனவேற்றுமை யுண்டாம்வண்ணம்  செய்தல்  சிறந்ததாகும் . இது  மிக்க பாவச்  செயலாகும்  என்பது  பிற  பண்டிதர்  கருத்து .                                                                                                               348

( மனவேற்றுமைப்படுத்தல் , ஈண்டுப்  பகைப்  படைக்கென வறிக .)

        ஓர்  அரசற்குத்  துணை  செய்தற்  பொருட்டுப்  பல்லாற்றானும்  வந்தடைந்த  நட்புப்படை  முதலியன  பகைவரான்  மனவேற்றுமை  யெய்துமாயின்  மிக்கக் கேடு  பயப்பனவாம் . அங்ஙனமாயின்  மூலப்  படையைப்  பற்றிக்  கூறவேண்டியது  யாதுளது ? [ மூலப்படை  வேறுபடுக்கப்படுமாயின்  அதனை யுடைய  அரசற்குப்  பெருங்கேடு  விளையுமென்பது  கருத்து . ]                                                                           349

       அரசன்  தன்னுடையவும் , பகைவனுடையவுமாகிய  சாம  முதலிய  உபாயங்களையும் , சந்தி  முதலிய  குணங்களையும் , மந்திர  சூழ்ச்சிகளையும்  ஆராய்ந்தறிதல்   வேண்டும் . அங்ஙனம்  அறிந்தபின்  அறநெறியான்   இயற்றும்  போர்ச்  செயல்களானாதல் , வஞ்சகமாகச்  செய்யும்  போர்ச்  செயல்களானாதல்  பகைவனை  அழிக்கக்  கடவன் .

      அரசன்  போர்  குறித்துச்  செல்லுங்கால்  போர்த்தொழில் வல்ல  தன்  படை  வீரர்க்கு  இயல்பாகக்  கொடுக்கப்படும்  வேதனத்திற்  காற்கூறு  மிகுதியாகச்  சேர்த்துக்கொடுத்து அவரை  இன்புறுத்தல்  வேண்டும் . போர்  நிழுங்கால்  தன்  உடலைக்  கவசத்தினாலும்  தோற்  பரிசையாலும்  காத்துக்கொள்ளல்  வேண்டும் .                                         351

( தோற்பரிசை – இதனைக்  கேடகமென்றுங்  கூறுப .)

       அரசன்  தன்  படைவீரர்க்குத்  தறுகண்மையை  வளர்விக்கும்  கள்  முதலியவற்றைக்  கொடுத்து  நன்றாகக்  குடிக்கச்  செய்து  மனவெழுச்சியை  யுடையராக்கி , அவருள்  மனவேற்றுமை  சிறிதும்  இல்லாத  வீரரைப்  போரில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .             352

       நாளிகக் கருவிகளாலும்  வாள்  முதலியவற்றாலும்  காலாட்படை  வீரரும் , குந்தத்தினாலும்  அம்பினாலும்  குதிரை  வீரரும் , யானை  வீரரும் , தேர்  வீரரும் பகைவரோடு  பொருது  அழித்தல்  வேண்டும் . 353

       யானை  வீரரோடு  யானை  வீரரும் , குதிரை  வீரரோடு  குதிரை  வீரரும்,  தேர் வீரரோடு  தேர் வீரரும்,  காலாட்படை  வீரரோடு  காலாட்படை  வீரரும் ,  ஒருவனோடு  ஒருவனுமாகப்  போர்  செய்தல்  வேண்டும் . வாள்  முதலிய  விடாப்  படைகளால்  விடாப்  படைகளையும் , அம்பு  முதலிய  விடுபடைகளால்  விடுபடைகளையும்  தடைப்படுத்தல்  வேண்டும் .                                                                            354

27 . போர்க்களத்திற்  கொல்லத்  தகாதவர்

      பெரியோர்  மேற்கொண்ட  யுத்த  தருமத்தை  யறிந்த  போர்  வீரன் , போக்களத்தில்  போர்க்கு  அஞ்சிப்  பிறிதோரிடத்தை  யடைந்திருப் பவனையும் , அலியையும் , கை கூப்பி  வணங்குகின்றவனையும் , தலைமயிர்  அவிழ்ந்து  சரியப்  பெற்றானையும் , நிலத்திலிருக்கின்றவனையும் , “யான்  நினக்கு  ஆளாகின்றேன் “  என்று  கூறுகின்றவனையும் , துயில்கின்றவனையும் , கவசம்  முதலியன  பூண்டு  சித்தமாக  இல்லாதவனையும் , ஆடையில்லாதவனையும் , ஆயுதமில்லாதவனையும் , போர்  செய்யாதவனையும் , போர்ச்  செயலைப்  பார்த்துக்  கொண்டிருப்பவனையும் , பிறனொருவனோடு  போர்புரிபவனையும் , நீர்  பருகுகின்றவனையும் , உணவுட்கொள்ளுகின்றவனையும் , பிற  காரியங்களில்  முயன்றிருக்கின்றவனையும் , அச்சமுடையானையும் , புறங்கொடுத்து  ஓடுகின்றவனையும்  கொல்லலாகாது .                355-357

       யாண்டு  முதிர்ந்தாரையும் , பாலரையும் , பெண்களையும் துணையில்லாத  அரசனையும்   கொல்லலாகாது . வீரர்  தம்  தகுதிக்கேற்ற  பகைவீரரோடு  பொருது , அவரை  அழித்தலால்  அறத்தினின்றும்  வழுவினவராகார் .                                                             358

       அறத்தின்  வழிச் செய்யப்படும்  போரில்  இந் நியமங்கள்  உள்ளன. வஞ்சமாகச்  செய்யப்படும்  போர்க்கு  இந்  நியமங்கள்  இல்லை . ஆற்றல்  மிக்க  பகைவனை  யழித்தற்கு  வஞ்சகமாகச்  செய்யப்படும்  போர்ச்  செயலையன்றிப்  பிறிதோருபாயம்  இன்று .                            359

       முற்காலத்தில்  இராமனாலும் , கிருட்டிணனாலும் , இந்திரன்  முதலிய  தேவராலும்  இவ்வஞ்சகப்  போரே  மேற்கொள்ளப்பட்டது . இராமனால்  வாலியும் , கிருட்டிணனால்  யவனனும் , இந்திரனால்  நமுசியும்  வஞ்சித்துக்  கொல்லப்பட்டனர் .                                               360

28 .பகைவரை  வென்றி  கொள்ளு  முறை

       மலர்ந்த  முகத்தினாலும்  இனிய  சொற்களாலும் , தன்  பிழையை  உடன்படுதலாலும் , பணி செய்தல் , ஈதல் , வணங்கல் ,புகழ்தல்  என்னுமிவற்றாலும் , பிற  உதவிகளாலும் , நல்ல  எண்ணத்தாலும் , தெய்வஞ்  சுட்டிய  சூளுறவாலும்  பகைவனைத்  தன்பால் அன்புடை  யனாகச்  செய்தல்  வேண்டும் . கத்தியின்  கூர்மை  போன்ற  மனத்தாற்  பகைவன்  புரைவழியிலுங்  குறிவைத்தல்  வேண்டும் .           361-62

       காரியத்திற்கு  அழிவு  தேடல்  அறிவிலானது  குணமாதலின்  அறிவுடையான்  அவமானத்தை  முன்னிறுத்தி  மானத்தைப் பின்  றள்ளித்  தன்  காரியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளல்  வேண்டும் . 363

( இன்றியமையாக்  காரியம்  நேர்ந்துழி  அவமானம்  நேர்தல்  இயல்பெனக் கொண்டும், மானத்தைப்  பொருட்படுத்தாமலும்  முயறல் வேண்டுமென்பது  கருத்து . ஈண்டுக் காரியம் என்றது போர்ச் செயலை. )

       அரசன்  நூறு  படைவீரர்  தன்னைச்  சூழ்ந்திருக்கத்  தான்  அரசு  கட்டிலிலிருந்து  படைவீரரின்  காரியங்களை  ஆராய்தல்  வேண்டும் . அதன்பின்  தன்  நலத்தையும் , நாட்டின்  நலத்தையும்  விரும்பும்  படைவீரரை,  நாடோறும்  படை  வகுப்பிற்குரிய  சங்கேதத்தை  யறிவிக்கும்  வாத்திய  ஒலியின்  நியமனப்படி  நடத்துவித்தல்  வேண்டும் . அங்ஙனம்  நடத்துங்கால்  தன்  படை  வீரருட்  பகைவரால்  வேறுபடுக்கப்பட்டா ருளராயின்  அவரைக்  கண்டுபிடித்துக்  கொன்றுவிடல்  வேண்டும் .                                                                      364-365

( படை  வீரரை  அரசன்  நாடோறும்  சங்கேத  ஒலிப்படி  நடத்துவித்தலால்  , அவருள்  தன்மாட்டு  அன்புடையார்  இன்னாரென்பதையும்  பகைவரால்  வேறுபடுக்கப்பட்டார்  இன்னாரென்பதையும்  அறிந்துகொள்வாரென்பது  கருத்து .)

      தன்  போர்  வீரர்  அரிய  புதிய  காரியங்களைச்  செய்வாராயின்  அவர்க்கு  அரசன்  தகுதிக் கேற்ற  வண்ணம்  பொருட்பரிசும் , முறையே  அதிகார  உயர்வும்  கொடுத்தல்  வேண்டும் .                                            366

       அரசன்  பகைவர்பால்  விரைந்து  சென்று  முதலில்  அவர்க்கு  நீர் , அன்னம் , புல்  என்னுமிவற்றைத்  தடைப்படுத்துதலால்  துன்புறுத்திப்  பின்னர்  அப்  பகைவர்க்குப்  பொருந்தாத  போர்க்களத்தில்  முயன்று  பொருது   அவரை  அழித்தல்  வேண்டும் .                                                    367

       வஞ்சகமாகச்   செய்யப்பட்ட  பொன்களை  மிகுதியாகக்  கொடுத்தலாற்  பகைப்படையை  வஞ்சித்து  வேறுபடுத்து , பகையச்சங்  காரணமாக  முன்  விழித்திருந்தமையால் உண்டாகிய களைப்பினையுடையதும் , இனி  உறுதியாகத்  தனக்கு  அழிவு  வாராதென்னும்  நம்பிக்கையால்  நன்கு  துயில்கின்றதும்  ஆகிய  அப்  பகைப்  படையை  தான்  சோர்விலனாய்  நின்று  அழித்தல்  வேண்டும். அப் பகைவற்குத்  துணை  செய்ய  வந்த  அவன்  நட்புப்  படை  முதலியன  காமம்  முதலிய  விதனங்களாற்  கலக்குண்டிருப்பின்  அவற்றை  ஒரு  பொழுதும்  அழித்தலாகாது .                                       368-369

       அரசன்  தனக்கு  மிக்க  அணிமையுளுள்ள   நாட்டினைப்  பகைவன்  கொள்ளும்  வண்ணம்  ஒரு  பொழுதும்  விடலாகாது .                             370

       அரசன்  சிறிது  நேரம்  போர்க்குச்  சித்தனாய்  நிற்கவும் , சிறிது  நேரம்  போரொழிந்து  திரும்பிடவும்  வேண்டும் . மீண்டும்  சேய்மைக் கணின்றும்  போந்து  எதிர்பாரா  நிலையில்  கள்வனைப்  போல் நாற் புறமுஞ்  சூழ்ந்து  பகைவனை  வளைத்துக்  கொள்ளல்  வேண்டும் .   371

       வீரனொருவன்  தன்  பகைவனை  வென்று  அவன்பாலுள்ள  பொன், வெள்ளி  மற்றை  உலோகங்களுள்  ஒன்றைக்  கவர்ந்து  கொண்டு  வருவானாயின் , அது  கண்டு  மகிழும்  அரசன்  அப் போர்  வீரனை  மகிழ்வுறுத்தற்  பொருட்டு  அவன்  செய்த  காரியத்திற்கு  தக்கவாறு  அப்பொருளில்  ஒரு  கூறு  கொடுத்தல்  வேண்டும் .                                372

       இங்ஙனம்  பகைவரை  வென்று  அவர்பால்  அரசிறையையாதல் , அவர்தம்  நாட்டின்  ஒரு  பகுதியையாதல் , அவர்தம்  நாடு  முழுதையுமாதல்  கொள்ளல்  வேண்டும் . அங்ஙனம்  கொண்ட  பின்னர்  அந்நாட்டில்  வாழும்  குடிகளை  இன்புறுத்தல்  வேண்டும் . 373

       அதன்பின்  தூரியம்  முதலிய  மங்கல  வாத்தியங்கள்  ஒலிக்கத்  தன்  நகரத்துட்   புக வேண்டும் .  தனக்குரியராகச்  செய்யப்பட்ட  அப் பகைவன்  நாட்டிலுள்ள  குடிமக்கள்  எல்லோரையும்  தன்  புதல்வரை  யொப்பப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                         374

29 . அமைச்சர்  கழக  முறை

       அரசன்  மற்றை  மந்திரச்  சூழ்ச்சியில்  தேயத்திற்கும் , காலத்திற்கும் , காரியத்திற்கும் ஒத்தவாறு  முதலிலும்  இடையிலும்  முடிவிலும்  அமைச்சர்  குழுவை  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . 375                   

( மற்றை  மந்திரச்  சூழ்ச்சியாவது : அரசன்   தான்  முதலிற்  கருதிய  காரியம்  முடிந்தபின்றை  மீண்டுஞ்  செயற்பாலன  வின்னவென் றறிதற்    பொருட்டு  அமைச்சர்  முதலியோரைச்  சூழ்வித்தல் . ) 

       அமைச்சர்  முதலிய  அதிகாரங்களில்  நியமனம்  பெற்றோர்  தம்  மந்திரச்  சூழ்ச்சியின்  பயன்  இன்னவாறாயிற்றெனவும் , இன்ன  உபாயத்தால்  காரியத்தை  நிறைவேற்றலாமெனவும்  இளவரசற்கு  அறிவித்தல்  வேண்டும் .                                                                               376

       அதன்பின்  இளவரசன் , அவ்வமைச்சர்  முதலியவரோடு  அவற்றை  அரசற்கு  அறிவித்தல்  வேண்டும் . அரசன்  முதலில்  இளவரசற்கும்  அதன்பின்  அவ்விளவரசன்  அரசன்  முன்னிலையில்  அமைச்சற்கும் , அவ்வமைச்சர்   தம்கீழ் வினைசெய்யும்  அதிகாரிகளுக்கும்  கட்டளையிடக்  கடவர் . புரோகிதன்  காரியங்களின்  நன்மை  தீமைகளைப்  பற்றி  அரசற்கு  உணர்த்தல்  வேண்டும் .                377-78

30 . படை வீரருக்குப்  பண்ட  முதலியன  வமைக்கு  முறை

       அரசன்  எப்பொழுதும்  கிராமத்திற்கு  வெளியிடத்திலாவது  அணிமையிலாவது  படைவீரரை  வைத்துப்  பாதுகாத்தல்  வேண்டும் . கிராமத்திலுள்ள மக்களுக்கும்  படை வீரர்க்கும்  கடன்  கொடுத்தலும்  கடன்  வாங்கலுமாகிய  வழக்கம்  இருத்தலாகாது .                                379

       படை வீரர்க்குரிய  பண்டங்களை  அவரிருக்குமிடத்தில்  தனியே  தொகுத்து  வைத்தல்  வேண்டும் . படை  வீரரை  ஓரிடத்தில்  ஓர்  யாண்டிற்கு  மேல்  ஒரு   பொழுதும்  இருக்கச்  செய்தலாகாது .           380

31 . படை  வீரர்க்குக்  கட்டளையிடு  முறை

          ஒரு  கணப்பொழுதில்  ஆயிரக்கணக்கான  படைவீரர் போர்க்குச்  சித்தமாம் வண்ணம்   பயிற்சி  செய்வித்தல்  வேண்டும் . எட்டு  நாட்கு  ஒருமுறை  தன்  படை வீரர்க்கு  அவரவர்க்கு  உரிய  நியமங்களைப்  பற்றிக்  கட்டளையிடல்  வேண்டும் .                                                               381

       அக் கட்டளைகளாவன :  “ கொடுந்தன்மை, ஆததாயியின் றன்மை, அரசியற்  காரியங்களிற்  காலந்  தாழ்த்தல் , அரசற்கு  நேரிடுங்  கேட்டைப்  புறக்கணித்தல் , தம்  கடமையை  மேற்கொள்ளாதிருத்தல் , பகைவரோடு  அளவளாவுதல்  என்னுமிவற்றை  வீரர்  எப்பொழுதும்  ஒழித்துவிடல்  வேண்டும் . என்  ஆணையின்றி  ஒரு  பொழுதும்  கிராமத்தினுட்  புகுதலாகாது . படைத்தலைவர்  முதலிய  அதிகாரிகளின்  குற்றங்களை  எனக்குத்  தெரிவித்தல்  வேண்டும் . எப்பொழுதும்  தலவன்  காரியத்தில்  எல்லோரோடும்  நட்புரிமை யுடையராயிருத்தல்  வேண்டும் . விடுபடை  விடாப் படைகளையும் , உடுக்கும்  ஆடைகளையும் , பல்வகை  உணவுகளை  யாக்குதற் குரிய  பிரத்த பரிமாண பாத்திரத்தையும் , உண்டியையும் , நீரையும்  அழுக்கின்றித்  தூய்மை யுடையனவாக  வைத்துப்  பாதுகாத்தல்  வேண்டும் . பகைவரிடத்தினின்றும்  பொருள்  பெற்றுக்  கொண்டு மனவேற்றுமை யுற்றோரை  எனக்குக்  காட்டல்  வேண்டும் . இன்னோரன்ன  என்  ஆணைகளைக்  கடந்து  ஒழுகுவோரை  இயமன்  உலகிற்குப்  போக்குவேன்”  என்பனவாம் .                                     

(“கொடுந்தன்மை” யெனத் தொடங்கி “போக்குவேன்” என்பது இறுதியாகக் கூறப்பட்டனவெல்லாம் அரசன் கட்டளைகளாம். பிரத்த பரிமாணத்தை 2-ஆம் அத்தியாயம் 385-ஆம் சுலோகத்திற் காண்க.)

       அரசன், படைவகுப்பு  முதலிய  போர்ச்  செயல்களுக்கேற்பப்  படைவீரரை  நாடோறும்  பயிற்சி  செய்வித்தல்  வேண்டும் . அங்ஙனமே  ஆறுமாதத்திற்கொருமுறை  அம்பின்  வீழ்ச்சிகளாற்  குறியை  அடிப்பிடித்தல்  வேண்டும் .                                                        387

       அரசன்  காலை  மாலை  இருபொழுதிலும்  படைவீரரின்  சாதி , உருவம் , வயது , தேயம் , கிராமம் , இருப்பிடங்களை  ஆராய்ந்து  கணக்கிடல்  வேண்டும் .                                                                                 388

32 . படைவீரரின்  வேதன  முறை

       அரசன்  தன்  போர்  வீரர்  வேதன  நிமித்தம்  வரையறுத்து  வேலை  செய்த  காலத்தையும்  , அவர்க்குக் கொடுக்கப்பட்டதும்  இனிக்  கொடுக்க  வேண்டியதுமாகிய  வேதனங்களையும்  பரிசிலாகக்  கொடுக்கப்பட்ட  பொருளையும்  இவ்வளவினவென்று  எழுதுவித்தல்  வேண்டும் . அவரிடத்தினின்றும்  வேதன  முதலிய  பெற்றுக் கொண்டதற்கு  அவர்  கைச்சாத்திட்ட  பத்திரம்  வாங்கல்  வேண்டும் . தான்  அவர்க்கு  வேதனத்தின்  அளவு  குறிக்கப்பட்ட  பத்திரங்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                  389

       போர்ப்  பயிற்சி  நன்கு  நிறைவேறப்பெற்ற  படைவீரர்  முழு வேதனமும், படைவகுப்பு  முதலிய  போர்ச்செயலில்  நியமிக்கப்பட்டுப் பயிலும்  வீரர்  பாதி  வேதனமும்  பெறுதற்குரியராவர் .               390

       குணக் கேட்டினையுடைய  படைத் தலைவனைப்  பற்றி யொழுகும்  படைவீரர் பகைவரோடு  கூடித்  தனக்கு  அழிவு  செய்வராதலின் , அரசன்  அவ்வீரருள்  யாவர்  தீய  குணங்களிற்  பற்றுடையரெனவும் , யாவர்  தன்னுடைய நற்குணங்களை  வெறுக்கின்றவரெனவும் , யாவர்  தீயகுணங்களில்  விருப்பு  வெறுப்பில்லாதவரெனவும்  ஆராய்ந்தறிந்து  அன்னாரை  யழித்துவிடல்  வேண்டும் . படைவீரர்  நற்குணமுடைய ராயினும்   எப்பொழுதும்  இன்ப  நுகர்ச்சியிற்  பற்றுடையராயிருப்பின்  அவரை  அரசன்  விலக்கிவிடல்  வேண்டும் .                                       391-392

       தூய  அந்தக்  கரணங்களை  யுடையராய்  உலகத்தாரால்  நம்பப்பட்டாரை  உவளகம்  முதலியவிடங்களில்  நியமித்தல்  வேண்டும் . அங்ஙனமே  தூய  அந்தக்  கரணங்களையும்   நம்பிக்கையையு முடையாரைப்  பொருள்  முதலிய  செலவழிக்குங்  காரியங்களில்  நியமித்தல்  வேண்டும் .                                                     393

       இன்னும் , மற்றை  அரசியற்காரியம்  எல்லாவற்றினும்  உலகத்தாரால்  நம்பப்பட்டோரையே  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . அங்ஙனமன்றி  நம்பிக்கை யில்லாதாரை  நியமனஞ்  செய்யின்  அவர்  அரசற்குப்  பழியையே  விளைவிப்பர் .                                                         394

       அரசன்  தன்  பகைவனிடத்தினின்றும்  வேறுபடுக்கப்பட்ட  அமைச்சர்  முதலிய  குழுவினரையும் , பகையரசனது  தீய  குணத்தால்  நாடோறும்  மானமிழந்து  வருந்தும்  படைத்தலைவரையும் , இன்னும்  பகைவரைச்  சார்ந்தாருள்  தன்  காரியத்திற்குத்  துணை  நிற்போரையும்  நல்ல  வேதனம்  உதவிக்   காத்தல்  வேண்டும் .          395

       அரசன்,  பொருள்  நசையாலும் , பணி  செய்யாமையாலும் , பகைவரிடத்தினின்றும்  வேறுபடுக்கப்பட்டு  வந்தார்க்கு  அரைக்கூறு  வேதனம்  கொடுத்தல்  வேண்டும் . பகைவனால்  விலக்கப்பட்டுத்  தன்பால்  வந்த  நற்குணமுடையாரை  நல்ல  வேதனங்  கொடுத்துக்  காத்தல்   வேண்டும் .                                                                                         396

33 .  நாடிழந்த  பகைவர்க்கு  வாழ்க்கை  நிமித்தம் உதவும்  பொருள்  வகைகள்

       ஓரரசன் , போரில்  வென்று  பகைவன்  நாட்டைத்  தனக்குரிமை யாக்கிக்  கொள்ளுவானாயின்  அன்று  தொட்டு  அந்நாட்டை    இழந்தவற்கு  வாழ்க்கைக்கு  வேண்டிய  அளவு  வேதனங்  கொடுத்தல் வேண்டும்.  அவன் புதல்வர்க்கு  அதனில்  அரைக்கூறு  வேதனமும், அவன்  மனைவிக்குக்  காற்கூறு  வேதனமுங்  கொடுத்தல்       வேண்டும்.                                                                                                          397                                                                                                    

       நாடிழந்த  பகைவனுடைய  புதல்வன்  முதலியோர்  நற்குணம்  நிறைந்தவராகவிருப்பின்  அவர்க்கு  அந்நாட்டிற்  காற்கூறும் , அவர்  நற்குண மிலராயின்  நாட்டின்  முப்பத்திரண்டிலொரு  கூறும்  கொடுத்தல் வேண்டும் .                                                                                    398

இதன்  முதற்  சுலோகத்திற்  பகைவனுடைய  புதல்வன்  முதலியோர்க்குக்  கொடுக்க  வேண்டிய பொருளளவைக்  கூறி , இதன்கட் கொள்கை வேறுபாட்டால்  நாட்டைக்  கூறிட்டுக்  கொடுக்கவேண்டிய  முறையைக்  கூறினர் .)

       நாடிழந்த  பகைவன்   சேர்த்து  வைத்த  கருவூலப்பொருள்களைத்  தான்  நுகர்தற்பொருட்டுக்  கவர்ந்து  கொள்ளலாம் . அப்பொருட்கு  முன்  கூறப்பட்ட  அளவிற்  பாதியளவு  வட்டி  ஏற்படுத்தல்  வேண்டும் . அம்முதற்பொருள்  இருமடங்காகும்  வரை  வட்டி  சேர்க்கலாம் . அதன்மேற்  சிறிதும்  சேர்த்தலாகாது .                                                   399-400

( முற்கூறப்பட்ட  அளவு? வட்டி  சேர்த்தல்  எதற்காக ? )

         நாடிழந்த  பகைவர்  நற்குணம்  நற்செயல்களை யுடையராயிருப் பின்  அரசன்  தன்  பெருமையை  வெளிப்படுத்துதற்  பொருட்டு  அவர்க்கு  அவர்தம்  முன்னை  நிலைகளாகிய  அரசியற் சிறப்புக்களை  யளித்துப்  பெருமைப்படுத்தல்  வேண்டும் . அவர் ஒழுக்கக்கேடுடை  யராயிருப்பின்  அவரைத்  துன்புறுத்தல்  வேண்டும்.                       401

34 . * யாமிகர்களை  அமைக்கும்  முறை

( * யாமிகராவர்  நகரங்களிலும்  இல்லங்களிலும்  நாடோறும்  யாமம்  யாமமாக  வகுத்து  நின்று  காவல்  செய்பவர் . யாமம் – 7இ  நாழிகை .)

       யாமங்காப்போரின்  அளவை  நோக்கி  அவ்வளவிற்குத்  தக்கவாறு  அவர்  பொருட்டுப்  பகலும்  இரவுமாகிய  ஒரு  நாளை  எட்டாக, அன்றிப்  பத்தாக , பன்னிரண்டாகக்  கூறுபடுத்தல்  வேண்டும் . இங்ஙனமன்றி  வேறுவிதமாகக்  கூறுபடுத்தலாகாது .                                                           402

( அவ்வளவிற்குத்  தக்கவாறென்றது  காலக்  கூறுகளை  யாமிகர்  மிகுதியாகவிருப்பின்  மிகுதியாகவும் , சுருக்கமாகவிருப்பின்  சுருக்கமாகவும்  செய்ய  வேண்டுமென்பது  கருதி . இதனால்  ஓர்  யாமம்  7இ- நாழிகையாகவும் , 6 – நாழிகையாகவும்  , 5- நாழிகையாகவும்  கொள்ளல்  வேண்டுமென்பது  போதரும் .)

       இங்ஙனஞ்  செய்யப்பட்ட  காலக் கூறுகளை  யாமிகர்  தம்  அளவிற்கேற்பப்  பணி  செய்தற்பொருட்டு  முதலில்  மேற்கொள்ளல்  வேண்டும் . அங்ஙனங்  கொள்ளுங்கால்  அவ்  யாமிகருள்  முதல்  யாமிகன்  இறுதியான  காலக்  கூற்றையும் , மற்றை  யாமிகர்  தத்தங்  கூறுகளின்   முற்பட்ட  கூறுகளையும்  எய்தக்  கடவர் .                         403

இங்குக் கூறிய  மாறுதல்  இரண்டாம்  நாட்டொடங்கி  மேற்கொள்ள வேண்டுமென்பது  கருத்து . இஃது  யாமிகர்  உடல்  நலம்  கருதிச்  செய்யப்பட்டதாகும் .பின்வரும்  406-ஆம்  சுலோகத்தில்  யாமிகர்  நால்வருக்குக்  குறையாதிருக்க வேண்டும்  என்று  கூறுவாராதலின்  அக்  குறைந்த  அளவினராகிய  நான்கு  யாமிகர்  நாளொன்றிற்குக்  குறைந்த  அளவிற்  கூறு  செய்யப்பட்ட  எட்டு  யாமங்களில்  நான்கு  நாள்வரை  பணி  செய்யு முறையை  இச்  சுலோகத்திற்  கூறியவண்ணம்  பின்வரும்  விளக்கத்திற்  காண்க :

நாள்                                                   யாமம்  எட்டு

                   1           2           3            4           5         6          7          8

1                 அ        இ         உ         எ         அ        இ        உ        எ

2                 இ         உ        எ          அ         இ        உ       எ       அ

3                 உ         எ         அ         இ         உ        எ        அ       இ

4                  எ         அ        இ         உ         எ         அ       இ        உ

ஈண்டு  அ , இ ,உ , எ  என்பன  யாமிகர்  நால்வரைக்  குறிக்கும் . )

       மீண்டும்  இங்ஙனமே  முதலாமவனிடம்  இறுதிக்  கூற்றையும் , இறுதிக்  கூற்றிலுள்ளவன்பால்  முற்கூற்றையுமாக  மாற்றியமைத்து  இங்ஙனம்  இரண்டா  நாட்டொடங்கி  இரண்டாமவன்  முதலியோரை   மாற்றி  நியமித்தல்  வேண்டும் .                                                                    404

(  இச்  சுலோகப் பொருள்  முற்சுலோகப்  பொருளையே  மீண்டும்  விளக்கிக்  கூறுவதாகத்  தோன்றுகிறது .)

ஒரு  நாளில்  நால்வர்க்கு  மேற்பட்ட  யாமிகர்களை  என்றும்  நியமித்தல்  வேண்டும் . அன்றிக்  காரியங்களின்  பெருமை  நோக்கி  அதற்கேற்ப  ஒரே  சமயத்திற்  பல  யாமிகரை  நியமித்தலும்  பொருந்தும் .                                                                                                       405                                                                                                            

       நால்வருக்குக்  குறைந்த  யாமிகர்களை ஒரு  பொழுதும்  நியமித்தலாகாது .                                                                                              406

       எல்லோருடைய  காரியங்களும்  யாமிகர்  கண்ணெதிரில்  நடைபெறுமாதலின்  அவர்  காக்க  வேண்டுவனவற்றைப்  பற்றியும் , பிறர்க்கு  அறிவுறுத்த  வேண்டுவனவற்றைப்  பற்றியும்  அவர்க்குக்  கட்டளையிடல்  வேண்டும் . அவ்  யாமிகரும்  அங்ஙனமே  அவற்றை  மேற்கொண்டு  செய்தல்  வேண்டும் .                                                            407

       யாமிகன்  ஓரளவு  வரையறுக்கப்பட்ட  பொன்  முதலியவற்றை  மரத்தினாலாக்கப்பட்ட  தன்  இருப்பிடத்தின்  நடுவண்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . தனக்குரிய  யாமத்தின்  இறுதியில்  தன்  இடத்தை   யடைந்த  மற்றொரு  யாமிகன்பால்  அப்  பொன்  முதலியவற்றின்  வரலாற்றுண்மைகளைக்  கூறி  அவற்றைக்  காட்டல்  வேண்டும் .                                                                                                           408

( ஈண்டுக் கூறிய  பொன்  முதலியன  உரியவன்  இன்னானென்று  அறியப்படாமல்  எடுக்கப்பட்டதும் , கள்வராற்  கவரப்பட்டு  வந்ததுமாம் . )

       யாமிகர்  சோர்வின்றி  யிருத்தற்பொருட்டுத்   தூரத்தினின்றும்  அவர்க்கு  அடிக்கடி  யறிவுறுத்தல்  வேண்டும் .                                          409

இதற்கு  இவ்வாறன்றி  “சனங்கள்  விழிப்புடையராயிருத்தற்  பொருட்டு  யாமிகர்  தூரத்தினின்றும்  அடிக்கடி  அவர்க்கு  அறிவுறுத்தல்  வேண்டும் “  என்றும்  பொருள்  கூறலாம் . )

35. அரசன்  அறத்தின்  வழுவாது  நின்று  குடிகளை இன்புறுத்தல்

       அரசன்  எப்பொழுது   தான்  செய்ய  வேண்டிய  அறக்கடமைகள்  எல்லாவற்றையும்  செவ்விதிற்  காக்கின்றானோ  அப்பொழுதே  அவன்  எல்லா வுலகங்களிலும்  பாராட்டப்படுபவனாவான் . அங்ஙனம்  அறங்காவல்  செய்யானாயின்  பாராட்டப்படுவானல்லன் .                  410

       இடைவிடாது  காரியம்  புரிதலும் , உறுதியாக  நல்லன கோடலும் , உறுதியாகத்  தீயன  விலக்கலும் , எவன்மாட்டு  அமைந்துள்ளனவோ  அவனே  நீண்டகாலம்  அரசியலின்பத்தை  யனுபவிப்பவனாவான் . 411                              

       நிலையில்லாத  குணஞ்  செயல்  மொழிகளையும் , நட்டோனிடத்து  எப்பொழுதும்  வஞ்சித்தொழுகுதலையும்   உடைய  அரசன்  விரைந்து  தன்  பதவியினின்றும்  இழிந்து  அழிவெய்துவான் .                                  412

       தன்  விருப்பின்  வண்ணந்  திரியும்  சிங்கத்தை  யடக்குதற்குப்  புலிகளும்  யானைகளும்  வலியுடையனவல்ல . அங்ஙனமே  தன்  விருப்பின்  வழி யொழுகும்  அரசனை யடக்குதற்கு அமைச்ச ரெல்லாரும்  வலியுடையராகார் .                                                413                                                                                         

       ஆயிரக்கணக்கான  பஞ்சுப்  பொதிகள்  யானையைத்  தடைப்படுத்தும்  ஆற்றலுடையனவாகா . அங்ஙனமே  நிறைந்த  வேதனம்  பெறும்  அமைச்சர்  முதலிய  அதிகாரிகள்  பலர்  தன்  விருப்பின்வண்ணம்  ஒழுகும்  அரசனைத்  தடைப்படுத்த  வலியிலராவர் .                                                                                                    414

       சேற்றில்  வீழ்ந்து  கிடக்கும்  ஓர்  யானையை  வெளிப்படுத்துதற்கு  மற்றொரு  வலிமிக்க  யானையே  ஆற்றலுடையதாகும் . அங்ஙனமே  நீதியினின்றும்  நழுவிய  ஓர்  அரசனை  எடுத்து  நிலைப்படுத்துதற்கு  மற்றொரு  நீதிமிக்க  அரசனே  ஆற்றலுடையனாவான் .                       415

( இதனால்  தன்  விருப்பின்  வண்ணம்  ஒழுகும்  அரசனை  நன்னெறிப் படுத்துதற்கு  அமைச்சர் முதலியோர்  வலியிரலாவர்  என்று  முன்  இரண்டு  சுலோகங்களிற்  கூறிய  பொருள்  வலியுறுத்தப்பட்டதாகும் .)

       ஆற்றன்மிக்க  அரசனிடத்து  வினைசெய்வார்  சிறியராயினும்  அவர்பால்  திருவும்  ஒளியும்  தங்குவனவாம் . ஆற்றல்  குறைந்த  அரசன்பாலும்  அவன்  அமைச்சர்  முதலியோர்பாலும்  அவை  அத்துணை  தானும்  தங்குவனவல்ல  .                                                          416

( சிறந்த  அரசனுடைய  பணியாளரிடத்திருக்கும்  திருவும்  ஒளியும்  இழிந்த  அரசன்  மாட்டும்  அவன்  அமைச்சர்  முதலியோர்  மாட்டும்  இரா வென்பது  கருத்து .)

       பல  நூல்களானாக்கப்பட்ட  ஒரு  பெருங்கயிறு  சிங்கம்  முதலிய  விலங்குகளையும்  பிணித்திழுத்தற்குரிய  வலியுடையதாகும் . அங்ஙனமே  அமைச்சர்  நட்டார்  உறவினர்  முதலிய  பலரோடும்  ஒன்றுகூடி  வாழ்தல்  அரசற்கு  மிகவும்  சிறந்த  ஆற்றலாகும் .            417

       குறைந்த  இராச்சியத்தையுடைய  அரசன்  பொல்லாத  பணியாளரை யுடையனா யிருத்தலாகாது  ; படைகளை  மிகுதியாகவுங்  வைத்துக்  கொள்ளுதலாகாது ; தன்  புதல்வர்  முதலியோரின்  நலங்  குறித்துப்  பொருட்கருவூலத்தை  எப்பொழுதும்  வளர்த்தல்  வேண்டும் .                                                                                     418

( வினைசெய்வார்  கொடியராக விருப்பின்  அவரையடக்கியாள  முடியாதென்பதும் , மிகுதியான  படைகளை  வைத்துக்  கொள்ளின்  பொருட்  செலவு  அதிகமாக  நேருமென்பதும்  கருத்து .)

       உண்டி , படுக்கை  எல்லாவற்றையும்  முறையே  பசி , உறக்கங்களுக்கு  இனியவாம்  வண்ணம்  அமைத்துக்  கொள்ளல்  வேண்டும் . இன்றேல்  விரைவில்  வறுமையாளனாவான் .                     419

       அரசன்  என்றும்  இத்தகைய  முறைமையாற்  பொருளைச்  செலவிடல்  வேண்டும் . வேற்று  வழியிற்  செலவிடலாகாது . சிறந்த  வலியையும்  அறத்தினையுமுடைய  அரசன்  தன்னிற்  குறைந்த  வலியினையுடையராய்  அறத்தையும்  நீதியையும்  இழந்த  அரசரை  எப்பொழுதும்  கள்வரை  யொப்பக்  கருதித்  தண்டித்தல்  வேண்டும் .

       எல்லா வறங்களையும்  பாதுகாத்தலாற்  சிறிய  அரசனும்  உயர்ந்த  தன்மையை யடைவான் . அவ் வறங்களை யழித்தலாற்  பெரிய  அரசனும்  இழிந்த  தன்மையை யெய்துவான் .                   421

       உலகத்து  மக்கள்  அறத்திலும்  மறத்திலும்  புகுதற்குக்  காரணம்  அரசனேயாகும் . அரசனாந்தன்மையை யடைந்தவன் யாவனாயினும்  அவனே  உலகத்தில்  மிகச்  சிறந்தவனாக  எண்ணப்படுவான் .   412

36 . இந்  நீதிநூன்  மாட்சி

       உலகத்து  மக்கள்   பொருட்டு  மனு  முதலியோரால்  ஆதரித்துக்  கூறப்பட்ட  அற  நூற்  பொருள்களைப்  பற்றியே  பிருகுவின்  புதல்வராகிய  சுக்கிரரால்  இந்  நீதி  நூலில்  இரண்டாயிரத்திருநூறு  சுலோகங்கள்  கூறப்பட்டன .                                                                       423

( இதனால்  இந்  நீதி  நூலில்  2200 –க்கு  மேற்பட்ட  சுலோகங்கள்  சுக்கிரராற்  செய்யப்பட்டனவல்லவென்பது  போதரும் .)

       சுக்கிரராற்  கூறப்பட்ட  இந்  நீதிசார்  நூலை  இடைவிடாது  ஆராயும்  அரசன்  எப்பொழுதும்  அரசியற்காரியமாகிய  சுமையைத்  தாங்குதற்கு  ஆற்றலுள்ளவனாவான் .                                                        424

       மூன்றுலகங்களிலும்   சுக்கிரரால்  அருளிச் செய்யப்பட்ட  இந்  நீதி  நூற்கு  ஒப்பான  நீதிநூல்  வேறில்லை . ஆதலாற்  சுக்கிரர்  அருளிய  நீதி  நூலே  உண்மை  நீதி நூலாகும் . மற்றை  நீதி  நூல்களெல்லாம்  உலகியலை  நடத்துவோர்க்கு  அங்ஙனம்  அல்லாதனவாம் .                425

       திறமையின்மையாலும்  பொருணாசையாலும்  இங்குக்  கூறிய  நீதிகளைக்  கடைப்பிடித்தொழுகாத  அரசர்  நல்வினைப்  பேறிலராய்  நரகத்திற்காளாவர் .

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

“படையியல்”  என்னும்

ஏழாம்  பிரகரணம்  முற்றிற்று

நான்காம்  அத்தியாயம்  முற்றிற்று.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

******************************************************************

ஐந்தாம்  அத்தியாயம்

( கிலநீதி )

       இனி , எஞ்சிய   இவ்  வத்தியாயத்தில்  இராச்சியத்தின்  ஏழு  அங்கங்களுக்கும்  மற்றை  மக்கள்  எல்லோர்க்கும்  நலம்  பயப்பனவும், முன்னை  நீதிநூல்களுக்கு  ஒத்தனவுமாகிய   எஞ்சிய  எல்லா  நீதிகளையுங்  சுருக்கிக்  கூறுவேன் .                                                              1

( கூறுவேன்  என்பது  சுக்கிராசாரியர்  கூற்று .)

       ஓர்  அரசன்   “நூறு  யாண்டுகள்  கடப்பினும்  பகைவனை  என்  வய மாக்குவேன் “ என்று  மனத்தால்  நினைந்து  பகைவனது  புரை  வழியை  ஆராய்தல்  வேண்டும் .                                                                       2

( பகைவன்  தன்னினும்  வலியனாயினும்  அச்சமுற்று  முயற்சியைக்  கைநழுவவிடாமல்  அவனை  வெல்லுதற்குரிய  காலத்தையும்  அவன்  தவறுதலையும்  எதிர்பார்த்திருத்தல்  வேண்டுமென்பது  கருத்து . )

       நல்ல  மந்திரச்  சூழ்ச்சியையும்  படைப்  பலத்தையுமுடைய  அரசன்  தன்  பகைவனை  அவன்  நாட்டிலுள்ளாரிடத்தும்  வினை செய்வாரிடத்தும்  நம்பிக்கையில்லாதவனாகவும்  , குறைந்த  படைப்  பலத்தையும்   குறுகிய  சூழ்ச்சித்  துணையையுமுடையனாகவும்  இருக்கும்  வண்ணம்  தன்  திறமையால்  தானே  செய்தல்  வேண்டும் . 3

       சோர்வின்மையையுடைய  அரசன்  பணி   செய்தலையும்  வாணிகத்  தொழிலையும்  தலைக்கீடாகக்  கொண்டு  , பகைவனது  நாட்டுட்  புகுந்து , அந் நாட்டின்  இயல்பை  யாராய்ந்து  கண்டு , பூனையைப்போலவும் , வேடனைப்போலவும் , கொக்கைப்போலவும் , தன்  இயல்பை  மறைத்து  நின்று , அப்  பகைவற்கு  அபயமளித்துக்  காம  முதலிய  விதங்களிற்  பற்று  வைத்தொழுகும்  மனத்தினையுடைய  அப்பகைவனை யழித்துவிடல்  வேண்டும் .        4-5

       பகைப்படையை யழித்தற்குரிய  ஆற்றல்  வாய்ந்த  தன்  படையையே  போர்ச்  செயலில்  நியமித்தல்  வேண்டும் . பகைவனது  நாட்டிலிருக்கும்  தன்  படையையும்  , மறைவில்  தன்பால்  வெறுப்புக்  கொண்டிருக்கும்  படையையும்  போர்த்தொழிலில்  நியமனஞ்  செய்தலாகாது .                                                                                                        6

( பகைவன்  நாட்டிலிருக்கும்  தன்  படையாவது  :  அப்பகைவன்  பகைமையின்றி  நண்பனாயிருக்குங்காலத்தில்  அவனுக்குத்  துணை  செய்தற்பொருட்டு  உதவப்பட்டதாகும் . அவனுக்கு  அப்பொழுது  அப்படை  நட்புப்படையாகும் . அது  தன்  கடமையை  நிறைவேற்றித்  திரும்புதற்குமுன்  அவன்  பகைவனாய்விடின்  அவன்  நாட்டிலிருக்கும்  அப்  படையை  அதற்குரிய  அரசன்  நம்பிப்  போர்க்கண்  ஏவுதல்  கூடாதென்பது   கருத்து .  ஏவக்கூடாமைக்குக்  காரணம்  அப்படை  பண்டு  மேற்கொண்ட  அன்பு  பிறழ்ந்திருக்குங்கொலோ வென்னும்  ஐயமாம் . )

       அரசன்  போர்  விருப்பமிக்கவனாய்  ஒன்றையும்  ஆராயாது  தன்  படையை  விரைந்து  போர்க்கணுய்த்து  அழித்துவிடலாகாது . வினை  செய்வான்  தனக்கு  அரசன்  கொடை  முதலிய  சிறப்புக்களைச்  செய்திலனெனினும்  அவ்வரசனை  விட்டு ஒழிதலாகாது . இன்னும்  அவன்  அமயத்தில்  உயிர்  வாழ்க்கை  கருதியாதல் , பொருணாசை யானாதல் , பகைவன்  பக்கல்  எய்தி  அவற்கு  வயமாதல்  கூடாது .     7

       பயிர்கள்  மேகம்  பொழியும்  நீரால்  எய்தும்  வளர்ச்சியை  ஆறு  முதலியவற்றின்  நீரால்  எங்ஙனம்  எய்தும் ?  குடிகள்  அரசன்  உதவும்  பொருளால்  எய்தும்  வளர்ச்சியை  மற்றைப்பொருளுடையார்  பொருளால்  எங்ஙனம்  எய்துவர் ? [ ஈரிடத்தும்  முறையே  எய்தாவென்பதுங்  எய்தாரென்பதும்  கருத்து .]                                           8

       அரசன்  தான்  வலிமிக்க  பெரிய  வீரனாயினும்  மென்மைத்தன் மையை  வெளிக்காட்டிப்  பகைவன்  நாட்டிற்  புகுந்து  முதலில்  அப்பகைவற்குக்  காரியத்துணைவனாகவிருத்தல்  வேண்டும் .             9

        அதன்  பின்  தான்  அங்கு  வேரூன்றப்பெற்று , வன்மையாற்  பகைவனை  வேரோடு  களைந்து , அவன்  இராச்சிய  முழுதையுங்  கவர்ந்து  கொள்ளல்  வேண்டும் . அப் பகைவன்பால்  வெறுப்பு  மிக்க  அவன்  உறவினரையும்  படைத்தலைவரையும்  அவ்விராச்சியத்தின்  சில  கூறுகளைக்  கொடுத்துத்  தன்வயப்படுத்திக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                             10

       வேரற்ற  மரத்தின்  கிளைகள் உலர்ந்து  போதல்  போல , அரசனை யில்லாத  படைத்தலைவன்  முதலியோர்  அவ் வமயத்திலும்  நாளடைவிலுமாக  அழிந்துவிடுவர் .                                                                11

       அரசியலாகிய  மரத்திற்கு  அரசன்  வேராகவும் , அமைச்சர்  பருத்த  அடிக் கிளைகளாகவும்  படைத்தலைவர்  கிளைகளாகவும் , படைவீரர்  தளிர்களாகவும் , குடிகள்  மலர்களாகவும்  கூறப்படுவர் . நிலத்தினின்றுங்  கிடைக்குங்  கூறுகள்  பழங்களாகவும் , நிலம் வித்தாகவுங்  கூறப்படுவனவாம் .                                                                   12

       பகையரசன்  தன்பால்  நம்பிக்கையுடையனாயிருப்பினும்  தான்  அவன்பால்  நம்பிக்கை  வைத்தொழுகலாகாது . அப் பகையரசனது  இல்லத்திலாதல்  அவன்  தனித்துறையும்  இடத்திலாதல்  தான்  சிறிய  துணையுடையனாய்ச்  செல்லலாகாது .                                                         13

       அரசன்  உருவத்தாலும்  வேடத்தாலும்  தன்னைப் போன்ற சிலரை  எப்பொழுதும்  தன்  பக்கலில்  வைத்துக்  கொள்ளல்  வேண்டும் . தன்  அரசிலக்கணத்திற்குரிய  அடையாளப் பொருள்களால்  தன்னைக்  காத்துக்கொள்ளல்  வேண்டும் . வேண்டுங்காலத்தில்  மற்றைச்  சாமானிய  மனிதனைப்  போலவும்  இருத்தல்  வேண்டும் .                     14

( தன்னைப்போன்ற  சிலரைத்  தன்  பக்கத்தில்  வைத்துக்கொள்ளுதல் பகைவர்  விரைந்து  தன்னை  யறிந்து கொள்ளாமைப்  பொருட்டாம் .)

       பொருட்  பெண்டிராலும், ஆடுவோராலும் , பாடுவோராலும் , பல்வகைக்  கள்ளுக்களாலும்  பகைவன்  அறிவைக்  கெடுத்து  மயக்க முறுத்தல்  வேண்டும் .                                                                                        15

       அரசன்  அழகிய  ஆடை  யணிகலன்களை  யணிந்து  கொண்டும் , மனைவி  மக்கள்  முதலிய  குடும்பத்தோடும் , தனக்குரிய  சிறந்த அடையாளங்களையுடையனாய் , அச்சமுற்று  ஒரு  பொழுதும்  போர்க் களத்தை யடைதலாகாது .                                                                                 16

       அரசன்  தான்  ஆற்றலுடையனாயிருக்குங்காறும்    தன்  பெண்டிர் , புதல்வர் , வினை  செய்வார் , பகைவர்  என்னும்  இவரிடத்தில்  ஒருகணமேனும்  சோர்வுடையனாயிருத்தலாகாது . இன்னும்  அவன்  தன்  புதல்வன்  இயற்கையில்  நற்குணமுடையனாயிருப்பினும்  அவனுக்கு  ஒருபொழுதும்  தன்  தலைமை  முழுமையும்  அளித்தலாகாது . அங்ஙனம்  தன்  தலைமை  முழுதும்  அவனுக்கு   அளிப்பின் , அது  தனக்கும்  குடிகளுக்கும்  பெருங்கேட்டையும் , அப் புதல்வனுக்கு  மிக்கச்  செருக்கையும்  உண்டாக்கும் . இதனாலன்றே  திருமால்   முதலிய  தேவரும்  தம்  மக்கட்குத்  தம்  அதிகாரத் தன்மையைக்  கொடுத்திலர் .                                                                   17-18

       அரசன்  இறந்துவிடின்  இளவரசன்  முதலியோர்  அவ்வரசுரிமைத்  தலைமையிலுள்ள  பற்றினாலும்  மனத்தினது  மிக்க  அலைவாலும்  அரசனில்லாத  அந்  நாட்டை  ஒருகணமேனும்   ஆளுதற்குத்  திறமையில்லாதவராவர் .  ஆதலின் , அரசன்  தன்  வாழ்நாளிற் சில  நாட்கள்  எஞ்சியிருக்குங் காலத்தே  நற்குணம் , நற்செய்கை  வாய்ந்த  தன்  புதல்வன்பால்  தன்  அரசுரிமைத்  தலைமையையளித்தல்  வேண்டும் .                                                                                                           19

( இதனால்  ஓர்  அரசன்  தான்  இறத்தற்குச்  சின்னாண்  முன்னரே  தன்  மகனுக்கு  இராச்சிய பட்டாபிடேகஞ்  செய்தல்  வேண்டுமென்பது   கூறப்பட்டது. )

       அப் புதல்வன்  சிறந்த  அவ்  வரசுரிமையை  யெய்திய பின்  நல்ல  நீதிமுறையாற்  குடிகளைக்  காத்தலோடு  முன்னை  அமைச்சர்  முதலியோரைத்  தந்தையை யொப்ப  மதித்துப்  பெருமைப்  படுத்தல்  வேண்டும் .                                                                                                             20

       அவ்  வமாத்தியர்  முதலியோரும்  அவ்வரசிளங்குமரன்  கட்டளையிடுங்  காரியம்  தக்கதாயின்  அதனை  முன்னையினும்  மிகுதியாக  ஏற்றுச்  செய்தல்  வேண்டும் . அக்  காரியம்  தக்கதன்றாயின்  “இதனைப் பின்னர்ச்  செய்வோம்”  என்று  கூறிக்  காலம்  தாழ்த்தலால்  ஒழித்துவிடல்  வேண்டும் .                                       21

       அவ்  வமைச்சர் முதலியோர்  பொருணசையால்  அப் புதிய  அரசனோடு  கூடி   நீதியல்லாத  வழியில்  ஒழுகலாகாது . அவர்  அங்ஙனம்  நீதியல்லாத  வழியில்  ஒழுகுவாராயின்  அவ் வரசனோடு  ஒரு  தலையாக  அழிவெய்துவர் .                                                                     22

       தன் குல பரம்பரையில்  அன்பு  வைத்தொழுகும்  வினைசெய்வாரை  வெறுத்துப்  புதியரை யடையும்  அரசன்  பகைவர் வயமாதலோடு  தன்னுயிரையும்  பொருளையும்  இழந்து விடுவான் .  23

       புதியராய்   வந்தவர்  நற்குணம்  நற்செய்கை  நிரம்பப்  பெற்றவராகவிருப்பின் , அவரைப்  பழையோரை யொப்பப்  பரிபாலித்தல்  வேண்டும் . அவர்  ஒழுக்கங்களைச்  சோதித்  தாராய்ந்தபின்  அவரைப்  பண்டை  வினைசெய்வாரோடு  காரியத்தில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                           24

       வஞ்சகர்  தம்  காரியம்  முடியுங்காறும்  மிக்க  மென்மை  வாய்ந்த  பாராட்டுரைகளாலும் , வணக்கத்தாலும் , பணி  செய்தலாலும் , கொடையாலும் , இன்சொற்களாலும் , அரசனைப் போற்றுவர் . உண்மை  கூறும்  பெரியோர்  தமக்குக்  காரியம்  இன்றெனினும் , அரசன்  முன்னிலையிலும்  அவனைக் காணாத  பொழுதிலும்  உண்மையாகவே  அங்ஙனம்  போற்றுவர் . இப் பெரியார்க்கும்   அவ்  வஞ்சகர்க்குமுள்ள  வேறுபாடு  ஆகாயத்திற்கும்  நிலத்திற்கும் முள்ள  வேறுபாடு  போலாம் .                                                                                     25-26

       பலராலும்  அறியப்பட்ட  தூர்த்தரும் ,   பிறர்  மனை  நயப்போரும்  கள்வருமாகிய  இவர்களே   வஞ்சத்திற்குப்  பிறப்பிடமாவார் . இவருள்   அவ்  வஞ்சகச்  செயலிற்  சிறந்தார்  தூர்த்தரே, பிறர்  மனை  நயப்போருங்  கள்வரும்  அத்துணைச்  சிறந்தாரல்லர் .                           27

(தூர்த்தர் – புறத்தே  பிறர்  ஐயுறாத  வேடத்தையும்  அகத்தே வஞ்சக     ஒழுக்கத்தையு முடையார் .)                             

       இவ்  வுலகத்திற்  பிறர்  மனை  நயப்போரும்  கள்வரும்  பிறர்க்குரிய  பொருள்களைக்  கவர்தலால்  பழிக்கப்படுவர் . ஆனால்  அவர்  அப்  பொருள்களைப்  பிறர்  அறியாவண்ணங்  கவர்வர் . தூர்த்தரோ , அப்  பொருள்களை  அப்பொருட்குரியார்  பார்த்துக்கொண்டிருக்கும்  பொழுதே  கவர்ந்துவிடுவர் .                                                                              28

       அத்  தூர்த்தர்  எப்பொழுதும்  நல்லனவற்றைத்  தீயன  போலவும் , தீயனவற்றை  நல்லனபோலவும்  அறிவிலார்க்குக்  காட்டி  அவரிடத்தினின்றும்  தம்  காரியத்தை  நிறைவேற்றிக்கொள்வர் .        29

       இன்னும்  அத்  தூர்த்தர்  தம்பாற்  பிறரை  மிகவும்  நம்பிக்கையடையச்  செய்து  பின்னர்  அந்  நம்பினாரை  வஞ்சித்தழித்துவிடுவர் .                                                                                       30

       வேடன்  மானை  அகப்படுத்துக்  கொலை  செய்தற்பொருட்டு  முதலில்  இனிய  கீதத்தைப்  பாடி  இன்புறுத்தல்  போல , வஞ்சகர்  எவனுக்குக்  கேடு  செய்ய  விரும்புகின்றனரோ  அவனுக்கு  முதலில்  நலத்தையே  செய்வர் .                                                                                        31

       மனிதர்  விரைந்து  பெரும்பொருள்  திரட்டுவாராயின் , அது  வஞ்சத்தாலன்றி  ஆகாததொன்றாம் . பிறர்  பொருளைக்  கவர்ந்தாலன்றி   எவனும்  விரைந்து  பெரும்  பொருளாளனாக  முடியாது . வஞ்சத்தாலன்றி  ஒருவன்  விரும்பியதை  விரும்பியவாறு  அடைய இயலாது .                                                                                                32

25-ஆவது  சுலோக  முதல்  இதுவரையுள்ள   எட்டுச்  சுலோகங்களால்  வஞ்சகரின்  குணஞ்  செயல்களும் , அவர்  பொருளீட்டு  முறையும்  விளக்கிக்  கூறப்பட்டன . அரசனும்  பிறரும்  இவ்  வஞ்சவியல்புடையார்  பொய்யொழுக்கத்தில்  நம்பிக்கை  வைத்தலாகாதென்பது  கருத்து .)

       அரசர்  பிறர்பொருளைக்  கவர்தல்  சிறந்த  தம்  கடமையாகுமென்று  கருதி , அதனால் , தம்முள்  ஒருவர்க்கொருவர்  பகைமை  மேற்கொண்டு  பெரும்போர்  விளைத்து  இறுதியில்  தம்  உயிரையும்  போக்குவர் .                                                                                    33

       பிறர் பொருளைக்  கவர்தலால்  அரசனுக்குப்  பாவமின்றெனின் கள்வனுக்கும்  அதனாற்  பாவமில்லை  யென்று  முடியும் . ஆதலின்  பற்றுக்கோட்டின்  வேறுபாட்டால்  எல்லாப்  பாவங்களும் தம்  இயல்பு  மாறி  அறவுருவமாக  நிலைபெறும் .                                                            34

(  பற்றுக்கோடு  ஈண்டு  அரசனாகும் . ஓர்  அரசன்  மற்றோரசனுடைய  நாடு, பொருள்  முதலியவற்றைக்  கவர்தல்  அரசியற்  கடமையாதலின்  அவனுக்கு  அது  பாவமாகா தென்பது  கருத்து . )

       எச்  செயல்  பலராலும்  பாராட்டப்படுகின்றதோ, அஃது  அறமாகும் . எச்  செயல்  பலராலும்  பழிக்கப்படுகின்றதோ  அது  மறமாகும் . ஆராய்ந்து  துணிதற்கரிய  அறத்தின்  இயல்பை  எவரும்  அறிதற்கு  ஆற்றலுடையரல்லர் .                                                                                           35

       இவ் வுலகத்தில்  அளவின்மிக்க  கொடையும் , தவமும் , உண்மை கூறுதலும்   ஆகிய  இவை  வறுமையைச்  செய்வனவாம் . எச்  சொல்லில்  அறம்  பொருட்  பயன்களில்லையோ  அச்  சொல்  மிகவும்  வீணான தொன்றாம் .                                                                                          36

( அளவின் மிக்க  கொடையால்  வறுமை  நேர்தல்  வெளிப்படை . தவத்தால்  வறுமையுண்டாதல்  வருவாயின்றி  உள்ள  பொருள்  வேள்வி  முதலிய  நற்காரியங்களினிமித்தம்  செலவழிக்கப்படுத்தலாம் . பொருள் வரவிற்கு  வஞ்சகம்  சாதனமாதலானும், உண்மை  கூறுதலில்  அவ் வஞ்சகம்  இன்மையாலும்  உண்மை  கூறுதலால்  வறுமை  யுண்டாம் .)

       ஒரு  மனிதன்  உரிய  காலத்தையும்  உரிய  இடத்தையும்  அறிந்து , சிறிதும்  ஐயமிலனாய் , அறத்தையாதல் , பொருளையாதல்  ஈட்டவல்லனாயின்  , அவன்  எல்லாரானும்  போற்றத் தக்கவனாவான் . எப்பொழுதும்  எக்காரியத்திலும்  ஐயத்தை  மேற்கொள்பவன்  எவராலும்  விரும்பப்படான் .                                                                              37

       மனிதன்  பொருட்கு  அடிமையாவான் . பொருள்  எவர்க்கும்  அடிமையாகாது . ஆதலின்  மனிதன்  எப்பொழுதும்  சோர்வின்றிப்  பொருளீட்ட  முயலவேண்டும் . அப்  பொருளால்  அறமும் , இன்பமும் , வீடும்  மனிதர்க்கு  உண்டாவனவாம் .                                                            38

( மனிதன்  பொருட்டு  அடிமையாதல்  அஃதில்வழி  ஒரு  காரியமும்  நடைபெறாமை பற்றியாம் . )

       கையில்  அம்பு  வாள்  முதலியன  யில்லாத  வீரமும் , மனைவியில்லாத  இல்லறமும் , ஒற்றுமையில்லாத  போரும் , அறிவாரையில்லாத  திறமையும் , நல்ல  துணைவரை யில்லாத  இடையூறும் , எப்பொழுதும்  துன்பம்  பயப்பனவாம் . கேடு  நேர்ந்துழி  நல்ல  நட்பை  யொத்த  துணை  வேறு  யாதுமின்று .                                  39

       பொருட்கூறு  செய்து  கொள்ளாத  தன்  குடும்பத்து  ஞாதிகளை  அன்புரிமையாலும் , பொருட்கூறு  செய்து  கொண்ட  ஞாதிகளைத்  திங்கள்  வேதன  முதலியன  கொடுத்தலாலும் , நட்டாரைத்  தான்  துய்க்கும்  இன்பப்  பொருள்களோடு  ஒத்த  இன்பப் பொருள்களாலும்  உண்மை  பேசுதலாலும்  மகிழ்வித்தல்  வேண்டும் .                              40                

( பொருட்கூறு  செய்துகொள்ளாத  ஞாதிகள் – அவிபத்த தனத்தினர் .)

       எவன்  அரசனையும்  தன்  சம்பந்திகளையும் , பெண்களையும் , புதல்வரையும் , நட்டாரையும் , பணியாளரையும்  மகிழ்வித்துத்  தன்  பொருளை அநுபவிக்கின்றானோ அவனே  இன்ப முடையனாவான்.  41

       அரசன்  செருக்கு , கடும்பற்றுள்ளம் , மானம் , நடுக்கம் , அச்சம் , என்னுமிவற்றை  யொழித்து , தன்  காரியத்தை  நிறை வேற்றிக் கொள்ளுதற் பொருட்டுச்  சிறந்த  வேதனத்தாலும் , அன்பினாலும் , பெருமைப்படுத்தலாலும் , அதிகார  உயர்வளித்தலாலும்  வினை  செய்வாரை  மகிழ்வித்தல்  வேண்டும் . இன்றேல்  அவர்  அவன்  காரியத்திற்கு  அநுகூலமுடையராகார் .                                                    42

       அந்தணராலும்  நெருப்பினாலும்  நீரினாலும்  உண்ணப்படும்  பொருளுடையான்  என்றும்  இன்பமுடையனாய்  மகிழ்ச்சியடைவான் . அங்ஙனம்  உண்ணப்படாத  அப்பொருளுடையான்  என்றும்  துன்பம்  எய்துவான் .                                                                                                           43

( அந்தணராலுண்ணப்படுதல் – அவர்க்கு  வேண்டுவனவற்றைத்  தானமாக  வழங்குதல்  .  நெருப்பினாலுண்ணப்படுதல் – வேள்வி  முதலியவற்றிற்  செலவிடல் .  நீரினாலுண்ணப்படுதல் – தென்புலத்தார்க்கு  நீர்க்கடனாற்றுதலும்  வழிச்  செல்வார்  பொருட்டுத்  தண்ணீர்ப்பந்தல்  அமைத்துச்  செலவிடலுமாம் . )

       செல்வக் களிப்பாற்  பிறரைக்  குறைக்க விரும்புதல்  செருக்கெனவும் , யானே  எல்லாரினும்  உயர்ந்தவனென்றெண்ணுதல், மானமெனவும் , பொருளை  விடத்தகுமிடத்து  விடாமை  கடும் பற்றுள்ளமெனவும் , தனக்குக்  கேடு  வருங்கொலோவென்று  ஐயமுறுதல்  அச்சமெனவும் , மனம்  ஒன்றினும்  நிலைபெறாது  சலித்தல்  நடுக்க மெனவுங்  கூறப்படும் .                                                      44

       ஒருவன்  தாழ்ந்தவனாயினும்  அவனுக்குச்   செய்யும்  மானக்கேடு  பெரும்பகைமையை  விளைவிப்பதாகும் . கொடையும் , நிலையின்  இழியாமையாகிய  மானமும் , வாய்மையும் ,  வீரமும் , மென்மையும்  ஒருவனுக்குச்  சிறந்த  நட்பை  விளைவிக்குங்  குணங்களாம் .               45

       அரசன்  தனக்குக்  கேடு  நேர்ந்துழி , பண்டிதரும் , குரவரும் , உடன் பிறந்தாரும் , சுற்றத்தாரும் , வினை  செய்வாரும் , தாயத்தாரும் , அமைச்சர்  முதலியோருமாகிய  இவ்வெல்லாரையும்  தன்  அத்தாணி  மண்டபத்திற்கு  வருமாறு  அழைத்து , அவரைத்  தனித்தனி  தகுதிக்கேற்றவாறு  பெருமைப்படுத்தி , வணக்கமுடையனாய் , “ஐயன்மீர் ! நீவிர்  எல்லீரும்  எனக்கு  நண்பராவீர் ; இப்பொழுது  நுங்கள்பால்  வேதனம்  பெற்றுப்  பணிசெய்யுந்  தன்மையில்லை ; நமக்கு  நேர்ந்துள்ள  கேட்டைக்  கடக்கும் வண்ணம்  பொருந்துமாற்றால்  நீங்கள்  உறுதிமொழி  கூறல்  வேண்டும் ; நும்மைப்போல்  எனக்குத்  துணை  செய்வார்  பிறர்  யாருமிலர்; ஆதலின்  நீங்கள்  பெறும்  வேதனத்தில்  மூன்றிலொரு  கூறாதல்  பாதியாதல்  உணவின்  நிமித்தம்  இப்பொழுது  பெற்றுக்கொள்ளல்  வேண்டும் . வேதனத்தின்  எஞ்சிய  கூறுகளை  இக் கேட்டினின்றும்   பிழைத்தபின்  நன்றியறிவுடையனாய்த்  தருவேன் “  என்றிங்ஙனம்  வேண்டிக்கொள்ளக்  கடவன் ..                                                                   46-48

       வினை  செய்வாருள்  எவன்  பதினாறு  யாண்டுவரை  வாழ்க்கைக்கு  வேண்டிய   பொருளை யுடையனாயிருக்கின்றானோ  அவன்  எட்டு  யாண்டுவரை  வேதனம்  பெறாமல்  தன்  தலைவன்  காரியத்தைச்  செய்தல்  வேண்டும் . அத்துணைப்பொருளில்லாதவன்  தன்  பொருணிலைக்கு  ஏற்றவாறு  ஆண்டு  வரையறை  செய்து  அங்ஙனம்  பணி  செய்தல்  வேண்டும் .                                                          49

       அறவே  பொருளில்லாதார்  அரசனிடத்தினின்றும்  உண்டியும்  உடுக்கையும்  பெற்றுக்கொள்ளல்  வேண்டும்  . வேறொன்றையும்  பெறலாகாது . ஒருவன்  தன்  அரசன்  இன்புற்றிருக்குங்கால்  அவனிடத்தினின்றும்  இன்பங்களைச்  செவ்விதின்  நுகர்ந்தும் , அவன்  துன்புற்றிருக்குங்கால்  தானும்  துன்பமுற்றிலனேல்  அவனைச்  செய்ந் நன்றி  கொன்ற  தீவினையாளனென்று  அவ்வரசனும்  மற்றைச்  செய்ந்நன்றி  யறியுந்  திறத்தினராகிய  வினை  செய்வோரும்  மிகவும்  பழித்துரைப்பர் .                                                                                                     50

(  49-50.  இவ்விரு  சுலோகங்களிலும்  கூறப்பட்டவண்ணம்  வினை  செய்வார்  நடந்து  கொள்ளுதல்  அரசனுக்குக்  கேடு நேர்ந்த காலத்தென்க .)

       தன்  தலைவனது  சோற்றை யொருமுறை யுண்டு  அவ்வளவில்  நன்றியுடையனாய்  அதன்நிமித்தம்  தன்  உயிரை  விடுபவனும் , தன்  தலைவனுக்குக்  கேடு  நேர்ந்துழி  அவனைவிட்டு  விலகாதவனுமாகிய  வினை செய்வாரே  சிறந்த  புகழுடையராவர் . அத்தகைய  வினை செய்வார்க்குக்  கேடு  நேர்ந்துழி , அவர் பொருட்டுத்  தன்  உயிரையும்  ஒழிக்கும்  தலைவனே  சிறந்தவனாவான் .                                                   51

இதனால்  அரசனும்  வினை செய்வாரும்  தம்முள்  அன்புடையராய்   ஒழுகல்  வேண்டுமென்பது  கூறப்பட்டது . )

       இந் நிலவுலகத்தில்  இராமபிரானை  யொத்த  நீதி  வாய்ந்த  அரசன்  பிறனொருவனும்  இலன் . இராமபிரானது  சிறந்த  நீதியாலன்றே  குரங்குகளும்  வினை செய்வாராயின .                                                         52

       கள்வருடைய  மனவொற்றுமையே  ஒரு  நாட்டை  யழித்தற்கு  வலியுடையதாகுமாயின் , அரசனும்  அமைச்சர்  முதலிய  வினை செய்வாரும்  ஒன்றுபட்டிருப்பின்  பகைவரை  யழித்தல்  எங்ஙனம்  எளிதாகாது? [ எளிதாகுமென்பது  கருத்து . ]                                                53

       கிருட்டிணனைப் போன்ற  வஞ்சக  நீதி  வாய்ந்த  அரசன்  வேறொருவனும்  இலன் . அக்  கிருட்டிணன்  தன்  தங்கையாகிய  சுபத்திரையை  வஞ்சகத்தாலன்றே  அருச்சுனன்பாற்  சேர்ப்பித்தான் .

       தமக்கு  நலஞ்  செய்வன  யாவை?  அவையெல்லாம்  நீதியை  யறிந்தார்க்கு  யுத்தி யாகும் .                                                                             55

( யுத்தி  – பொருந்துமாறு .)

       நொதுமலனொருவன்  முதலில்  தனக்கு  நலஞ்  செய்யும்  நட்பினையும் , அதன்பின்  உற்றவிடத்து  அறவுரை  கூறித்  தன்னை  நல்வழிப்படுத்தும்  நட்பினையும்  ஆக்கிக்கொண்டு , அந்  நட்டாரால்  தனக்கு  நலஞ்  செய்யுங்  காரியங்களை  நிறைவேற்றிக்  கொள்ளக்  கடவன் .                                                                                                                    56

( நொதுமலன் – பிறர்பால்  விருப்பு  வெறுப்பில்லாதவன் . அவன்  நட்பினை யாக்கிக் கொள்ளத் தொடங்குங்கால்  முதலில்  தன்  செயற்குத்  துணைபுரியும்  நட்பினையும் , பின்னர்த்  தனக்கு  நல்லன   கூறும்  நட்பினையும்  ஆக்கிக்கொள்ள  வேண்டுமென்பது  கருத்து . )

       ஒருவன்  தனக்கும்  தன்  நண்பனுக்கும்  அன்புண்டாம் வண்ணம்  அந் நண்பனுடைய  குணங்களைப்  பாராட்டுதலும் , அவன்  விரும்பும்  உண்டி , உடுக்கை  பொருள்களால்  அவனை  இன்புறுத்தலும்  வேண்டும் . அங்ஙனஞ்  செய்தல் தனக்குக்  காரிய  சித்தியை  அளிப்பதாகும் .                                                                                                       57

      ஒரு  பெண் மகட்கு  உரியனல்லாத  மற்றோர்  ஆடவனை  இடை  நின்று  களவிற்  புணர்ப்பிக்கும்  குட்டினிகளும் , ஓர்  ஆடவற்கு  உரியனல்லாத  ஒரு  பெண்  மகளை  அங்ஙனம்  புணர்ப்பிக்கும்  விடர்களும்  மேற்கொள்ளும்  உபாயங்கள்  தெய்வஞ்  சுட்டிய  சூளுறவும் , பொய்ம்மையான  அளவளாவுதலும் , அச்சமின்மை  காட்டி  மகிழ்வுறுதலுமாம் .                                                                                               58

 ( உரியரல்லாத  ஆண்  பெண்களை  களவிற்  புணர்ப்பிக்கும்  ஆண்மகனை  மாயி  எனவும் , பெண்மகளைக்  குட்டினி  எனவும்  வழங்குப . )

       ஒருவன்  தன்னை  வஞ்சகச்  செயலினின்றும்   வெளிப்படுத்தாமல்  மறைத்துக்கொள்வதில்  யுத்தியை யாராய்ந்து  மேற்கொண்டிலனேல் , அவன்  அறிவின்மையால்  விலங்கினும்  தாழ்ந்தவனாவான் . களவிற்  புணரும்  உரியரல்லாத்  தலைவரை  மறைப்பதில்  பெண்பாலாரும் வஞ்சத்தை  மேற்கொள்வர் .                                                                             59

( பெண்களுக்கும்  அத்  திறமையுளதெனின்  ஆண்மக்கள்பால்   அஃதில்லாமை அவர்  அறிவின்மையைப்  புலப்படுத்துவதாகும் . )

       யுத்தி பெரும்பான்மை  வஞ்சத்தாலாவதெனவும் , சிறுபான்மை  உண்மையானாவதெனவும்  இரண்டு  வகைப்படும் . எவன்  வஞ்ச  ஒழுக்கமுடையானோ  அவன்பால்  வஞ்சத்தையே  மேற்கொள்ளல்  வேண்டும் . இன்றேற் பெரியார்க்கும்   ஒழுக்கக்  கேடுண்டாம் .       60இ

       இவ்வுலகத்தில்  அறிவுடையார்  பலருளர் . ஒருவன் மாத்திரம்  அறிவுடையானல்லன் . ஆதலின்  அறிவுத்  திறன்  வாய்ந்த அம் மக்கள்  உண்மையுக்தியை  முதலில்  மேற்கொண்டு , அது பயன்  செய்யாவிடின்  அதுகண்டு  பின்னர்க்  காலம் , இடம் , பாத்திரங்களுக்குத்  தக்கவாறு  பற்பலவிதமான  நீதிகளையும்  யுத்திகளையும்  படைத்துக்  கொள்வர் .                                                   61-62

       இவ்வுலகத்தில் வஞ்சகத்  திறமை  வாய்ந்த மனிதர்  மந்திரம் , மருந்து , வெவ்வேறு  வேடம் , காலம் , சொல் , பொருள் , என்னுமிவற்றைத் தக்கவாறு  பற்றி  நின்று  வஞ்சகச்  செயல்களைத்  தோற்றுவிப்பர் .                                                                                                  63

       இவ்வுலகத்தில்  விலைப்  பொருட்குக்  கொடுக்கப்படுவனவும் , விலைப்பொருள்  கொடுத்து  வாங்கப்படுவனவும் , பரிசிலாக  உதவப்படுவனவுமாகிய  ஆடை , பாண்டம் , முதலியவற்றை  அரசியல்  அதிகாரிகளின்  முன்னிலையில்  வைத்து , அவற்றில்  தத்தம்  பெயர்களால்  நெடுநாள்  இருக்கும்  வண்ணம்  அடையாளமிடல்  வேண்டும் .                                                                                                            64

       கள்வரையும்  வஞ்சகரையும்  விலக்குதற்பொருட்டு , அவ் ஆடை  முதலிய  விலைப்பொருள்கள்  அரசியல்  அதிகாரிகளால்  அறியப்பட்டனவாக  இருத்தல்  வேண்டும் . [ இன்றேற்  களவிற்  கவர்ந்து  வஞ்சித்துக்  கொணர்ந்தும்  அப்  பொருள்களை  விற்றல்  கொள்ளுதல்  செய்வரென்பது  கருத்து .]                                                  64இ

        அரசன்  தன்பால்  வைக்கப்பட்ட  அறிவிலாருடையவும் , குருடருடையவும் , பாலருடையவுமாகிய  பொருள்களுக்குரிய  வட்டியை   எப்பொழுதும்  அவரவர்க்குக்  கொடுத்தல்  வேண்டும் .   65

       பெண்கள்  கணவற்குரியவள் , பொதுநிலையள் , பிறர்க்குரியவள்  என  மூவகைப்படுதல்  போல  வேதனம்  பெற்று  வினை  செய்வாரும்  தலையாயர் , இடையாயர் , கடையாயாரென  மூன்று  வகைப்படும் . 66

கணவற்குரியவள்  அன்பு  நிரம்பியவளாதலின்  தலையாவாள் . பொதுநிலையள்  விருப்பு  வெறுப்பில்லாதவளாதலின்  இடையாவாள் . பிறர்க்குரியவள்  தலைவன் மாட்டு அன்பிலளாதலின்  கடையாவாள் . உவமேயப்  பொருள்கள்  பின்வருஞ்  சுலோகத்தில்  விளக்கப்படுவன . )

       அவ்வினை  செய்வாருள்  எவன்  தன்  தலைவனுக்கு  அன்பு  காரணமாகப்  பணி  செய்கின்றானோ  அவன்  தலையாயோனாகவும் , எவன்  மிகுதியான  வேதனத்தைப்  பெற்றுத்  தன்  தலைவற்குப்  பணி  செய்கின்றானோ  அவன்  இடையாயோனாகவும் , எவன்  வெளிப்படையில்  தன்  தலைவன்பால்  வேதனம்  பெற்று  மறைவிற்   பிறனொருவனுக்குப்  பணி  செய்கின்றானோ  அவன்  கடையாயோனாகவும்  வைத்து  எண்ணப்படுவான் .                                67

       ஒருவன்  தனக்குத்  தீங்கு  செய்த  பிறனுக்கு  நன்மை   செய்வானாயின்  அவனே  தலையாயவனாவான் . அங்ஙனமின்றித்  தனக்கு  நன்மை  செய்தார்க்குத்  தீங்கு  செய்பவன்  கடையாயவனாவான் . [ அருத்தாபத்தியால் , நன்மை  செய்தார்க்கு  நன்மையும்  தீங்கு  செய்தார்க்குத்  தீமையும்  செய்பவன்  இடையாயவனாவானென்பது  போதரும் . ]                                           67இ

( இங்குக்  கூறிய  தலையாயவன்  இயல்பை “இன்னா  செய்தாரை யொறுத்தல்  அவர்நாண  நன்னயஞ்  செய்துவிடல் “, “இன்னா  செய்தார்க்கும்  இனியவே  செய்யாக்கால் , என்ன பயத்ததோ  சால்பு “ என்னும் திருக்குறள்களிற்  காண்க . )

       இடையாயவன்  தலைவனோடொத்த  சிறப்பை  யெய்தவிரும்புவான் . கடையாயவன்  தன்  காரியம்  முடித்துக்கொள்ளுதலிலேயே  கருத்துடையனாக விருப்பான் .           68

       உபதேசமின்றி  அளவைகளால்  எல்லாவற்றையும்  அறிந்து  கொள்ளவியலாது . அறிவுடையார்  இளமைப் பருவத்தையும்  யெளவன பருவத்தையும்  தொடங்கிய  காரியத்தை  முடித்ததற்குரியனவாக  அறிதல்  வேண்டும் . வயோதிக  பருவத்தை  அதற்குரியதாக  ஒருபொழுதும்  எண்ணலாகாது . ஆதலின் , பருவம்  நோக்கி  எளிதின்  முடித்தற்குரிய  காரியத்தை  ஆராய்ந்து  அதனைத்  தொடங்கல்  வேண்டும் .                                                                                                        69-70

       ஒரே  சமயத்திற்  பல  காரியங்களைத்  தொடங்குதல்  நலமன்று . முதலிற்  றொடங்கியதொரு  காரியம்  முடிக்கப்படும்  முன்  இடையே  மற்றொரு  காரியம்  தொடங்கப்படின்  அவ்விரண்டும்  நிறைவேறா தொழியும் . ஆதலின் , காரியம்  வல்லான்  தொடங்கிய  காரியத்தைக்  கடைபோகாமல்  இடையே  மற்றொரு  காரியத்தை  மேற்கொள்ளலாகாது . எப்பொழுதும்  எளிதில்  நிறைவேற்றுதற்குரிய  காரியத்தை  யாராய்ந்து  அதனையே  செய்தல்  வேண்டும் .        71-72

       எக் கலகம்  தன்னைச்  செய்தார்க்குப்  பொருட்பேறுண்டாக்குமோ  அக்  கலகம்  சிறந்ததாகும் . அங்ஙனம்  பொருட்பேறின்றிச்  செய்யப்படுங்  கலகம்  செய்தவனுடைய  வாணாளையும் , பொருளையும் , நட்பினையும் , புகழையும் , அறத்தையும்  என்றும்  அழிப்பதாகும் .                                                                                                     73

       அழுக்காறும் , கடும்பற்றுள்ளமும் , செருக்கும் , உவகையும் , வெகுளியும் , அச்சமும் , ஆராய்ச்சியில்லாத  துணிவுமாகிய  இவ்வேழும்  ஒருவன்  ஒரு  காரியத்தைத்  தொடங்குங்கால் , அக்  காரியத்திற்கு  இடையூறு  விளைவிக்கும்  ஏதுக்களென்று  அறிவுடையார்  கூறுவர் .                                                                                    74

       ஒருவன்  ஒரு  காரியத்தைத்  தொடங்குங்கால்  அது  பிழைபடாதிருக்கும்  வண்ணஞ்  செய்தல்  வேண்டும் . அக் காரியம்  இடையூறில்லாமற்  காலங்  கடந்து  செய்யப்படினும்  அறிவுடையோராற்  குற்றமற்றதென்று  ஏற்றுக்கொள்ளத்  தக்கதாகவிருத்தல்   வேண்டும் .                                                                       75

(  இடையூறில் வழிச்  செய்யப்படுங்  காரியம்  விரைந்து  முடிக்கற்பாலதாம் . ஆயினும் , அது  பிற  காரணங்களாற்  காலந்  தாழ்த்து  முடிக்கப்படினும் ,  அறிவுடையார்  ஏற்றுக்  கொள்ளத்  தக்கவாறு  குற்றமற்றதாக  முடியவேண்டுமென்பது  கருத்து .)

       பத்துக்  கிராமங்களுக்குத்  தலைவனும்  நூறு  படை  வீரர்க்குத்  தலைவனும்  ஏவலாளரையுடையராய்க்  குதிரையிலேறிச்  சஞ்சரிக்கலாம் . ஒரு  கிராமத்திற்குத்  தலைவனாயினாரும்  குதிரையேறிச்  செல்லலாம் .                                                                           76

       ஆயிரம்  படை  வீரர்க்குத்  தலைவனும்  நூறு  கிராமங்களுக்குத்  தலைவனும்  அம்பு  வாள்  முதலியன  தாங்கிய  பத்துப்  படைவீரர்  சூழ  ஒற்றைக்  குதிரை  பூட்டிய  தேர்  ஊர்திகளிலேறிச்  செல்லலாம் . தனிக்  குதிரையிலும்  ஏறிச்  செல்லலாம் .                                                                 77

       ஆயிரம்  கிராமங்களுக்குத்  தலைவனும்  பதினாயிரம்  படை வீரர்களுக்குத்  தலைவனும்  எப்பொழுதும்  இருபது  போர்  வீரர்  சூழ்ந்துவர  நரவாகனமாகிய  சிவிகையிலும் , ஒற்றைக்  குதிரை  பூட்டிய  தேர்களிலும் , இரட்டைக்  குதிரை  பூட்டிய  தேர்களிலும் ,  யானையிலும்  ஏறிச்  செல்லலாம் .                                                                  78

       பதினாயிரங்  கிராமங்களுக்குத்  தலைவனும்  ஐம்பதினாயிரம்  படைவீரர்க்குத்  தலைவனும்  பல  வீரர்கள்  சூழ்ந்துவர  நான்கு  குதிரைகள்  பூட்டிய  தேர்களிலும் , முற்கூறிய  எல்லா  ஊர்திகளிலும்  ஏறிச்  செல்லலாம் .                                                                                              79

       அரசன்  தன்  வினை  செய்வார்க்குத்  தலைமைத்  தன்மையின்  மிகுதி  நோக்கி  அதற்கேற்றவாறு  மிக்க  சிறப்புக்களை  ஏற்படுத்தல்  வேண்டும் . அங்ஙனமே  மிக்க  பொருளுடையார்க்கும்  கல்வியறிவு  முதலிய  குணமுடையார்க்கும்  அவரவர்  தகுதியின்  மிகுதிக் கேற்பச்  சிறப்பு  அளித்தல்   வேண்டும் .                                                                         80

       தனக்கு நலத்தை  நாடும்  அரசன்  தன்  நாட்டிலுள்ள  உயர்ந்தார்க்கு  நிலையின்  இழிதலும், இழிந்தார்க்கு  நிலையின்  உயர்தலும்  நேராமலிருக்கும் வண்ணம்  எப்பொழுதும்  செய்தல்  வேண்டும் .                                                                                                             81

       அரசன்  தன்  நாட்டில்  வாழும்  கடையாயர்  இடையாயர்  தலையாயராகிய  குடிகளுக்கும் , தன்  சுற்றத்தார்க்கும் , கிராமங்களிலும்   பட்டினங்களிலும்  இல்லம்  அமைத்துக்  கொள்ளுதற்  பொருட்டு  எப்பொழுதும்  நிலங்  கொடுத்துதவல்  வேண்டும் .              82

       அங்ஙனம்  இல்லத்திற்காகக்  கொடுக்கப்படும்  நிலத்தின்  தலையாய  அளவு  அறுபத்துநான்கு  முழ  நீளமும்  முப்பத்திரண்டு  முழ  அகலமுமாம் . இடையாய  அளவு  நாற்பத்தெட்டு  முழ  நீளமும்  இருபத்து நான்கு  முழ  அகலமுமாம் . கடையாய  அளவு  முப்பத்திரண்டு  முழ  நீளமும்  பதினாறு  முழ  அகலமுமாம் . இவ்வாறு  அளவிட்டுக்  கொடுக்கப்படும்  நிலங்கள்  அவ்வக்  குடும்பத்தினரின்  பெருக்க  சுருக்கங்களுக் கேத்தவாறும்  தகுதிக் கேற்றவாறும்  குறைவு  மிகுதியின்றி யிருத்தல்  வேண்டும் .                                                                 83

       அரசனால்   அரசியல்  அதிகாரங்களில்  நியமனம்  பெற்றவர்  கிராமத்திற்கு  வெளிப்புறத்தே  வசித்தல்  வேண்டும் . போர்  வீரருள்  ஒருவனும்  அரசியற்காரிய மில்லாதிருக்குங்கால்   கிராமத்தினுட்  புகுதலாகாது .                                                                                                         84

       போர்  வீரன்   ஓரிடத்திலும்  ஒரு  பொழுதும்  கிராமத்தில்  வாழுங்  குடிகளைத்  துன்புறுத்தலாகாது   . கிராமத்தில்  வாழுங்  குடிகளும்  அப் போர்  வீரரோடு  ஒரு  பொழுதும்  அளவளாவுதலாகாது .                          85

       அரசன்  போர்  வீரர்க்கு  அஞ்சாமையை  வளர்த்தற்குரிய  அறவுரைகளையும் , சிறந்த  இசைக்  கருவிகளையும்  ஆடல்  பாடல்களையும்  எப்பொழுதுங்  கேட்கும்படி  செய்வித்தல்  வேண்டும் .

       படை  வீரரைப்  போர்  செய்தற்கண்  அன்றிப்  பிறகாரியங்களில்  ஏவுதலாகாது .                                                                                                        87

       உண்மை  நெறியிலொழுகும்  பொருளாளர்  வாணிகத்  தொழில்  முதலியவற்றால்  மெலிவடைந்திருப்பாராயின்  அவரையும் , அங்ஙனமே  மெலிவடைந்த  பயிர்த்  தொழிலாளரையும்  அரசன்  உதவி  புரிந்து  காத்தல்  வேண்டும் .                                                               88

       படை  வீரருட்  பொருளுடையார்க்கு  அவர்  தகுதிக்கேற்றவாறு  வேதனம்  உதவல்  வேண்டும் . அவர்  அயலிடஞ்  செல்லுங்கால்  அதன்  பொருட்டுச்  செலவழிக்கப்படும்  பொருளில்  அதன்  முப்பதிலொரு   கூறு  மிகுதியாகச்  சேர்த்து  அவர்க்குக்  கொடுத்தல்  வேண்டும் .        89

       அரசன்  தனிகராகிய  அப்  படைவீரரின்  பொருளைத்  தன்  கருவூலத்தை  யொப்ப   முயன்று  காத்தல்  வேண்டும் . வஞ்சித்தொழுகும்  தனிகரிடத்தினின்றும்  அவர்  பொருள்  முழுதையும்  கவர்ந்து  கொள்ளலாம் .                                                           90

       கடன்  கொடுத்தவன்  தன்  முதலுக்கு  நான்கு  மடங்கு  மிகுதியான  வட்டியைக்  கடன்  வாங்கினவனிடத்தினின்றும்  பெற்றிருப்பானாயின் பின்  அக்  கடன்  வாங்கினவனால்  கடன்  கொடுத்தவற்கு  முதற்பொருள்  கொடுக்கத் தக்கதன்று .                                                       91

சுக்கிர நீதியில் “கிலநீதி” என்னும்

ஐந்தாம்  அத்தியாயம்  முற்றிற்று

சுக்கிரநீதி  முற்றிற்று

*************************************************

Leave a comment