கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசக சுவாமிகள்
அருளிச்செய்த
திருவாசகம் – திருவெம்பாவை
கதிர்மணி விளக்கம்
என்னும் பேருரை
மகாமகோபாத்தியாய முதுபெரும்புலவர்
சைவசித்தாந்த வித்தகர் பண்டிதமணி
மு. கதிரேசச்செட்டியார்
இயற்றியது.
பண்டிதமணியின் வரலாறு
பண்டிதமணி மு . கதிரேசச்செட்டியார் அவர்கள் தலைசிறந்த தமிழ் மணி. நகரத்தார் மரபில் தோன்றிய பெருமணி . புலவர்க்கெல்லாம் புலவராய் விளங்கிய அறிவு மணி. இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியருள் ஒப்பற்ற புகழ்மணி.
பண்டிதமணி மகிபாலன்பட்டியில் 16-10-1881 ல் பிறந்தனர். கல்வியில் ஆராக்காதல் கொண்டு தமது சொந்த முயற்சியால் கணக்கற்ற நூல்களைத் தாமே கற்றனர். தென்மொழி, வடமொழியாகிய மொழிகளில் கற்றுத்துறை போகிய காரணத்தால் அறிஞரின் அன்பையும் மதிப்பையும் பெற்றனர். எம் சபையினரால் பண்டிதமணி என்ற பட்டத்தையும், புலவர் பெருமக்களால் முதுபெரும் புலவர் என்ற பட்டத்தையும் அரசினரால் மகாமகோபாத்தியாயர் என்ற அரிய பட்டத்தையும் பெற்றனர்.
இவர்கள் பண்டையத் தமிழ்ச் சங்கம் போல ஒரு சங்கம் அமைத்துத் தமிழும், சைவமும், நலனும், வளனும் பெற்று ஓங்க அவாவினர். அவ் விருப்பமே மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை தோன்ற வித்தாயிற்று . இன்று இச்சபை நாளும் வளர்ந்து, தனித் தமிழ்ப் புலவர் கல்லூரியாம் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி முதலாய உறுப்புக்களோடு சிறந்து பண்டிதமணி அவர்களின் பெரும் நினைவுச்சின்னமாக நிலவுகிறது .
இச்சபையின் வாயிலாகவே, பண்டிதமணியின் நூல்கள் முதன் முதலில் வெளிவந்தன. சபையின் வளர்ச்சியிலும் , வாழ்விலும் பண்டிதமணி ஊன்றிய பற்றும் , உறுதியான அன்பும் கொண்டு ஒல்லும் வகையெல்லாம் உதவினர். ஆதலின் சன்மார்க்கசபையார் , தம் அன்பையும் நன்றியையும் காட்டும் முகத்தான் அன்னாருக்கு மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதஐயர் அவர்கள் தலைமையில் பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கினர். இச்சிறப்புப்பெயரே பின்னர் கதிரேசனாரின் இயற்பெயரினும் மிகுதியாக வழங்கிற்று .
இவர்கள் தம் நுண்ணிய மதியால் நூல்கள் சிலவற்றிற்கு உரை வகுத்தனர் . வடமொழியினின்றும் சில பெரும் நூல்களைத் தமிழாக்கம் செய்தனர். சமயத்துறையின் தெளிந்த அறிவால் தேர்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினர் . இலக்கியங்களைச் சுவைபடவும் , நகைச்சுவை ததும்பவும் சொற்பெருக்காற்றுவதில் இவர்களுக்கு ஈடு இவர்களேயாவர். இவர்கள் ஏறாத மேடையோ, தலைமை வகிக்காத மாநாடுகளோ அந்நாளில் இல்லை எனலாம் .
இவர்களால் , திருவாசகத்தின் பகுதிகளாகிய திருச்சதகம் , நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்குப் பேருரையும், , மண்ணியல் சிறு தேர் , சுக்கிர நீதி , சுலோசனை, உதயனசரிதம் , கௌடிலீயம் , மாலதீ மாதவம், பிரதாபருத்திரீயம் ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும், உரைநடைக்கோவை, சமயக்கட்டுரைகள் , நாட்டுக்கோட்டை நகரத்தாரின் சீர்திருத்தம், சுவாமிநாத விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய பல பனுவல்களும் , தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்தன .
பரந்த புகழும் , செறிந்த அறிவும் கொண்டு விளங்கிய பண்டிதமணியவர்களை , அண்ணாமலையரசர் விரும்பி அழைத்துத் தமது பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கட்டிலில் அமர்த்தி அக்கழகத்திற்குப் பெருமை சேர்த்தனர்.
பண்டிதமணியவர்கள் சங்கப் புலவர்கள் போல செம்மாப்பும் , கீர்த்தியும் , செல்வாக்கும் கொண்டு பெருவாழ்வு வாழ்ந்தனர் . ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் இடையறாது தமிழ்ப்பணி புரிந்த “கதிர்மணி” 24-10-53ல் திடீரென ஒளிக்கற்றைகளைச் சுருக்கி மறைவதாயிற்று . இறைவனை எந்நாளும் வழுத்திய நெஞ்சும் , திருவாசக உரையை அயராது எழுதிய திருக்கைகளும் இவ்வுலகில் ஓய்வு பெற்றுச் சென்று சிவன் திருவடிக்கீழ் உய்தி பெற்றன.
“ சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்,
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லாரும் ஏத்தப் பணிந்து”
—————————–
சிவமயம்
திருவெம்பாவை
நூல்முகம்
தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் அவர்கள்
இயக்குநர், ஆராய்ச்சித்துறை , அழகப்பா கல்லூரி.
இறைவனோடு பாடலால் நேராகப்பேசும் பேறு பெற்றவர்களுள் மணிவாசகப்பெருமானை நிகர்த்தார் எவருமிலர். தன்னை அடியார்க்குத் தந்து அடியாரைத் தான் கொண்டதில் சிவபெருமானைவிடத் தானே சதுரப்பாடு உடையவர் என்று மணிவாசகர் வழுத்துவது முகமன் . மணிவாசகரை ஆட்கொண்டு , திருவாசகம் என்ற எய்ப்பில் வைப்பைப் பெறும் பேறு பெற்ற சிவபெருமானே சதுரப்பாடுடையார் என்பது தேற்றம் . திருவாசகத்தைப் போன்ற ஒரு நுலை யாரும் பெற முடியுமா ? “பாவெனப்படுவது உன் பாட்டு “ என்று மணிவாசகரைப்பார்த்து , சிவப்பிரகாசர் கூறுவது முழு உண்மை. திருவாசகத்தைப் போற்றாத புலவர் இலர் . அதற்குள் நுழைந்தால் அளவு கடக்கும் .
திருவாசகத்திற்கு ஓர் பேருரை இன்றியமையாதது. “திருவாசகத்திற்கு உரை காணக்கூடாது “ என்று சிலர் சொல்லுவர் . எனினும் ஏறத்தாழ எழுபது ஆண்டுகட்கு முன்னரேயே திருவாசகத்திற்கு உரை காணப்பெற்று அச்சாகி இருக்கின்றது . சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுதல் வேண்டும் என்பதே திருவாசக ஆசிரியர் கருத்து . எனவே உரை காண்டல் நூல் ஆசிரியர் கருத்துக்கு மாறுபட்டதன்று .
திருவாசகத்திற்கு விரிவுரை காணும் பணியை முதலில் மேற்கொண்டவர் மறைமலை அடிகள் . திருவாசகத்தின் முதல் நான்கு பெரிய பாடல்கட்கும் விரிவுரை எழுதி அடிகள் வெளியிட்டார். ஐந்தாவது பகுதியாகிய திருச்சதகம் நூறு பாடல்களுக்கும் , ஆறாவது பிரிவாகிய நீத்தல் விண்ணப்பம் ஐம்பது பாடல்களுக்கும் , ஏழாவது திருவெம்பாவை இருபது பாடல்கட்கும் பேருரை செய்து , மகாமகோபாத்தியாய-முதுபெரும்புலவர்- சைவசித்தாந்த வித்தகர் – பண்டிதமணி- மு. கதிரேசச் செட்டியார் வெளியிட்டார். அப்பேருரையின் மூன்றாவது பகுதியாகிய திருவெம்பாவையின் பதிப்பு இப்போது வெளிவருகின்றது .
கதிரேசனாரின் திருவாசக உரை விரிந்த பேருரையாகும் . இவ்வுரைக்கு , “கதிர்மணி விளக்கப் பேருரை “ என்று உரை ஆசிரியரே பெயர் கொடுத்திருக்கின்றார் . ஒளிமிக்க திருவாசக மணியை விளக்கிக்காட்டும் பெரிய உரை என்றும் கதிரேசனார் விளக்கிய பேர் உரை என்றும் அமையும் .
திருவாசகத்தின் பகுதியாகிய இத் திருவெம்பாவை , நங்கைமார் பலர் கூறுந்துறையான் அமைந்த கற்பனைக்களஞ்சியம் . திருவெம்பாவை இருபது பாடல்கள் கொண்டது . இவ் விருபது பாடல்களின் விரிவுரையே இந்நூல், உரை ஆசிரியர் தம் நுண்ணறிவிற்கேற்ப உரை கண்ட திட்பத்தை உரையினுள் ஆங்காங்குக் காணலாம். அதற்குள் நுழைந்து மதிப்பிடப் புகுந்தால் நூல்முகமும் , ஒர் பேருரை ஆகிவிடும் என்று அஞ்சி அப்பணியை யான் மேற்கொண்டேன் அல்லேன்.
திருவெம்பாவை , யாப்பு வகையில் பார்க்குங்கால் வெண்தளையால் வந்த எட்டு அடிக் கொச்சக் கலிப்பா ஆம் . இதனைப் பேராசிரியர் ஒப்புக்கொண்டதாக , திருவெம்பாவைக்குப் பேருரை கண்ட பண்டிதமணியே கூறுகின்றார் . எனினும் எட்டடியாகப் பதிப்பிக்காமல் நாலடிப்பாடல் என்று கொள்ளுமாப்போல் , அடிமடக்கித் தாமும் பதித்திருப்பது , முன்னையோர் முறையைப் பின்பற்றி , என்று அவர் இயம்புகிறார் இது உரை ஆசிரியரின் பழமைப்பற்றைக் காட்டுகின்றது .
கதிர்மணி விளக்கப் பேருரை தந்த இருமொழிப் புலமைக் கதிரேசனாருக்குத் தமிழ்நாடு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது . இவ்வுரையின் சிறப்பைப்பற்றி, மாசற்ற உள்ளம் படைத்த கவிமணி தேசிக விநாயகனார் பாராட்டிச் சொல்லிய சில பாடல்களை ஈண்டுக் காண்போம் .
“வையகம் போற்றுதிரு வாசகத்தின் உட்பொருளைக்
கையிற் கனியாகக் காட்டினனால் – செய்யதமிழ்ப்
பேரா சிரியர் பெருமான் கதிரேசன்
ஆராய்ந்து முற்றும் அறிந்து “
வாசகம் எல்லாம் மணிவா சகமாமோ?
காசெல்லாம் காணும்பொற் காசாமோ? – பேசுலகில்
மன்னுஉரை எல்லாம் மகிபால மாநகரான்
சொன்ன உரைக்கு ஈடாமோ சொல்? “
என்று இயம்பிய கவிமணியுடன் சேர்ந்து கதிர்மணி விளக்கப் பேருரையை நானும் பாராட்டுகின்றேன் . பண்டிதமணியோடு நேரில் அவ்வளவு நெருங்கிப்பழகாத கவிமணி , கதிர்மணி விளக்கப் பேருரையைப் படித்து , பண்டிதமணிபால் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார் என்பதை , பண்டிதமணி கதிரேசனார் இவ்வுலக வாழ்வு நீத்தபோது , கவிமணி பாடிய பின்வரும் ஓர் அரிய வெண்பா எடுத்துக்காட்டும் .
“என்று வருவான் எமனென்று எதிர்நோக்கி
நின்று தளர்கின்றேன் நித்தலுமே – மன்றில்
நடங்கண்ட ஈசன் நடராசன் பாதத்து
இடங்கண்டு வைநீ எனக்கு .”
இந்த இணையற்ற பாட்டு , பண்டிதமணி இறைவன் திருவடி நிழலை எய்தினார் என்ற கவிமணியின் நம்பிக்கையையும் , உயிருக்கும் உடலுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் தாங்க முடியாத தமது ஆற்றாமையையும் தெள்ளெனக் காட்டுகின்றது .
“ கல்லைப் பிசைந்து கனியாக்க வல்லான் எம்
தில்லைப் பெருமான் திருவருளால் – நல்லஒரு
வாடா விளக்காக வாழ்க மணிவிளக்கம்
நீடாழி சூழும் நிலத்து .”
என, கவிமணியைப் போலவே கதிர்மணி விளக்கத்தை நானும் வாழ்த்துகின்றேன் .
ராய. சொ.
கரைக்குடி
26-08-64
——————————————–
கணபதி துணை
பதிப்புரை
“பாட்டுக் குருகும் பரமன் திருவருளை
வேட்டுப் புகழ்ந்துருகும் மெய்யன்பர் – பாட்டின்
பொருளுணர்ந்து கூறப் புகலருமவ் வண்ணல்
திருவடியை நெஞ்சமே செர்.”
தமிழ் மொழி மாண்பையும் சைவ சமய உண்மைகளையும் அழுந்தியுணர்ந்து பொதுவாக இவ்வுலகத்திற்கும் , சிறப்பாகத் தமிழ் நாட்டிற்கும் சிறந்த பயன் விளையும் வண்ணம் திருவாசகம் அருளிச் செய்த அருள் வள்ளளாகிய மாணிக்கவாசக சுவாமிகளின் பெருமை இவ்வுலகம் அறிந்ததொன்று . அவர்கள் சிவானுபவத்தில் தலைநின்று கல்லும் கரையும் வண்ணம் திருவாய் மலர்ந்தருளிய இனிய திருவாசகப் பாட்டுக்கள் ஓதுவார், கேட்பார் எல்லோரையும் கரையிலா இன்பக் கடலுள் திளைப்பித்து இம்மை, மறுமை, வீடு ஆகிய மும்மை நலங்களையும் விளைக்கும் இயல்பின; இசை நலத்திற்கேற்ற இனிமை மிக்க சொற்றொடர்களும் பொருணுட்பங்களும் அமையப்பெற்றன. நவிறோறும் நூனயம், புதியன புதியனவாகத் தோற்றிப் பரவசப்படுத்தும் பான்மைய. இத்தகைய இன்பப் பாட்டுக்களாலாகிய திருவாசகத்தை யான் பண்டை நல்வினை வயத்தால் பலகாலம் ஆராய்ந்து பயின்று வருங்கால் அதன் கட் கண்ட அரியவுண்மைகளை இயன்றளவு சொற்பொழிவு முகமாகவும் கட்டுரை வடிவிலும் வெளிப்படுத்தியதுண்டு . பின் அன்பர்கள் குறிப்பின் வண்ணம் கதிர்மணி விளக்கம் என்னும் பெயரால் திருச்சதகம் , நீத்தல் விண்ணப்பம் என்னும் பகுதிகளுக்கு உரை எழுதி வெளியிட்டேன் . மேன்மேலும் அறிவுடையார் ஆதரவு ஊக்கமுறுத்தி வந்ததால் இப்பொழுது திருவெம்பாவைக்கு உரை எழுதி வெளியிடலானேன் .
இவ்வுரையை எழுதிமுடித்து அச்சிட எண்ணியிருக்கும் பொழுது அன்பு முறையில் என் உடல் நலம் வினாதற்கு இங்கு வந்த கொத்தமங்கலம் என் நண்பர் திருவாளர் சி. ராம. மு. லெ. இலக்குமணச் செட்டியார் அவர்கள் இதன் வெளியீட்டிற்கு வேண்டும் பொருட் செலவைத் தாமே செய்வதாகக் கூறி உதவினார்கள் . அவர்கள் கல்வி கேள்விகளில் ஆர்வமும் , கடவுட்பத்தி முதலிய சைவ ஒழுக்கமும், அறிவுடையோர் குழுவில் கூடி மகிழும் பெருமையும் உடையவர்கள். எனக்கு நெடுநாட் பழக்கமுடைய நண்பர் . கற்றோரை மதித்துப் பெருமைப்படுத்தும் குணமுடைய அவர்கள் செய்த இந்த நல்லுதவி என்றும் நினைவுகூறத்தக்கது . அவர்கள் இன்னும் பல்லாண்டு சிவநெறி நின்று , அறம்பல புரிந்து , உடல் நலமும், உள நலமும் பெற்று வாழும் வண்ணம் இறையருளை வேண்டுகின்றேன் .
என் இனிய நண்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழாசிரியர் வித்துவான் திரு. க. வெள்ளைவாரணனார் அவர்கள் சிறந்த முகவுரை எழுதி உதவினர். இவ்வுரைநூலை அச்சிடுங்கால் பிழை நேராவண்ணம் ஆராய்ந்து திருத்தி உதவியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழாசிரியரும் என்பால் என்றும் பிறழாத மெய்யன்புடையாருமாகிய வித்துவான் திரு. மு . அருணாசலம் பிள்ளையவர்கள் ஆவர் . அன்புரிமைபற்றி உதவிபுரிந்த இவர்கள் எல்லோருக்கும் என் நன்றியறிவைப் புலப்படுத்திக்கொள்கிறேன் .
இவ்வரிய பணியை நிறைவேற்றியருளிய ஆண்டவன் திருவருளையும் , சிறியேன் நினைவிற்றோன்றி பொருளுண்மை தெளிவித்த அடிகளின் அருட் பெருக்கையும் நினைந்து நினைந்து இன்புறுகின்றேன் .
மு. கதிரேசன்
மகிபாலன்பட்டி,
18 – 01 – 1953
குறிப்பு – பாவைப் பாட்டும் , அம்மானைப் பாட்டும் நான்கு அடியினகந்து பத்தடியளவும் வரும் கொச்சகமாகும் என்று பேராசிரியர் [பக்கம் -4] கூறியபடி இத்திருவெம்பாவைப்பாட்டு எட்டு அடியான் வந்த கொச்சகமாகும் . ஆயினும் முன்னையோர் பதிப்பித்த முறையைத் தழுவி ஈண்டுப் பதிப்பிக்கலாயிற்று.
குன்றக்குடி திருவண்ணாமலையாதீனம்
மகாசந்நிதானம்
அருட்டிரு. தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமசாரிய
சுவாமிகள் வழங்கிய
வாழ்த்துரை
திருவாசகம் தமிழகத்தின் தவநூல் ; ஞானப் பனுவல் ; பத்திப்பெருநூல் ; தத்துவக் கருவூலம் ; உணர்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த உயர்ஞான மொழிகள் ; அறிவாற் சிவனேயாய மணிவாசகரின் மணிமொழிகள் ; காதலால் கசிந்து கண்ணீர் மல்கிய வாதவூரரின் வண்மைத் தமிழ்; ஆணவமல வெப்பத்தைத் தணிவிக்கும் தண்ணருள் நிறைந்த திருமொழி ; பிறவிப் பெருநோய் தீர்க்கும் பெருமருந்து .
துணையின்றி அறியமுடியாத பசு அறிவாலும் பாச அறிவாலும் முதல்வனை அறிய முடியாது . இவ்விரு அறிவாலும் அறியப்படாத முதல்வனை அம்முதல்வனுடைய திருவடிஞானத்தால் உயிராகிய தன்னறிவின் கண்ணே ஆராய்ந்து அறிதல் வேண்டும் . அதாவது , அவன் திருவடி ஞானத்தால் அவனை அறிதல் வேண்டும் என்பதாகும் . இப்படி ஆராய்ந்து அறிந்த ஞானச் செல்வர் மணிவாசகர் ; சித்தம் சிவமேயாயவர் ; காணும் கரணங்களெல்லாம் சிவகரணமேயாயவர் ; எங்கும் சிவமேயாய காட்சியில் திளைத்த திருவருட் செல்வர். மணிவாசகரின் மணிமொழிகள் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கும் தகையன; எழுமைக்கும் இறவாத இன்ப உணர்ச்சியை ஊட்டுவன.
திருவாசகத்துள் திருவெம்பாவை இன்பப்பெருக்கை இனிதூட்டும் பாடல்களைக்கொண்ட பகுதி . பாச இருள் நீக்கி, நீங்காத பேரருளைத் தந்து தலையளி செய்யும் சிவனது பேரருளை வியந்த பகுதி. “எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க” என்ற உறுதிமொழியைக் கொள்க என்று உயிர்களுக்கு உணர்த்தும் திருப்பாடல் திருவெம்பாவையிலே அமைந்துள்ளது. அருமையில் எளிய அழகுடன் பல்பொருள் செறிவுற்றுச் சிறந்தினிது விளங்கும் திருவாசகத்தைப் பொருளுணர்ந்து அனுபவித்தல் பெரும் பயன் தரும் . அத்தகு அனுபவத்திற்கு வழிசெய்து கொடுக்கின்ற சிவபுண்ணியச் செயலை நமது பண்டிதமணி சைவசித்தாந்த வித்தகர் அவர்கள் செய்து வருகின்றார்கள். அவர்களுடைய நுண்மாண் நுழைபுலம் வியந்து பாராட்டுதற்குரியது . நுணுகிய நிலையில் உரைகாணும் அவர்களது திறனை இக்கதிர்மணி விளக்கத்தில் பரக்கக் காணலாம் . மெய்கண்ட சாத்திரங்களின் அடிப்படையிலே நின்று மாணிக்கவாசகரிடத்தும் அவர்தம் திருநூலிடத்தும் அளவுகடந்த பத்திநிறைந்த உள்ளத்துடன் உரையை எழுதி வருகின்றார்கள்.
“ஓத வுலவா ஒரு தோழந் தொண்டருளன்” என்ற பகுதிக்குக்
கோடற் பகுதியில் கொண்டவுரை கொள்ளத்தக்கது . அதாவது ஒப்பற்ற மிகுதியான தொண்டரையுடையான் எனக்கூறுவது . மற்றும் ,
“ பைங்குவளைக் கார் மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலங்கழுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த”
என்ற பகுதியின் உரை உணர்ந்து இன்புறத்தக்கது . “இப்பகுதிகள் இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளிப் பக்குவமுள்ள உயிர்களுக்குச் செய்யும் தீக்கை முறைகளையும் குறிப்பன” என்று கூறி , பைங்குவளைக்கார்மலர் நயனதீக்கையையும் , செங்கமலப்பைம்போது மானசிக தீக்கையையும் அங்கங்குருகினம் பரிசதீக்கையையும் அரவம் வாசிகதீக்கையையும் குறிக்கும் எனச் சாத்திர நுட்பங்களுடன் எடுத்துக்காட்டியிருப்பது அவர்களுடைய சாத்திர நூற் பயிற்சிக்கும் பெரும் புலமைக்கும் எடுத்துக்காட்டு. “வேத விழுப் பொருள்” “விண்ணுக்கு ஒரு மருந்து” போன்ற சில சொற்றொடர்கள் பண்டிதமணியவர்களின் புலமைத் திறத்தால் அரும் பெரும் தொடர்களாகக் காட்சியளிக்கின்றன.
மனங்கரைத்து மலங்கெடுக்கும் மணிவாசகத்திற்கு மாண்பொருளுரை கண்டு வழங்கும் பண்டிதமணியவர்களுக்குத் தமிழகத்தின் கைம்மாறு யாது ? படித்துப்பயன் பெறுவதுதான் அவர்கள் விரும்பும் கைம்மாறு . தமிழகம் தக்கவாறு பயன் கொண்டு பண்டிதமணியவர்களை வாழ்த்தும் என்று நம்புகின்றோம். கருத்தறிந்து முடிக்கின்ற கண்ணுதற் பெருமானின் திருவருள், கதிர்மணி விளக்கப் பேருரை முழுவதையும் தமிழகம் பெறச்சுரந்து, பண்டிதமணியவர்களைத் தமைப்போலவே இன்பப்பேறுகள் பலவற்றுடன் மண்மீது நிலை பெறுத்துக என்று இறைஞ்சுகின்றோம் ; வாழ்த்தி வணங்குகின்றோம்.
நமது கதிர்மணி விளக்கப் பேருரையைச் சைவத் தமிழ் வளர்க்கும் தொண்டர் குலத்தைச் சார்ந்த நமது கலைத்தந்தை திரு. கருமுத்து . தியாகராசச் செட்டியார் அவர்களுக்கு உரிமைப்படுத்தியிருப்பது பண்டிதமணியவர்களுடைய உளப் பண்பிற்கு எடுத்துக்காட்டு.
தமிழ்க்குடியின் தனிப்பெருநூலும் நமது உயிர் நூலுமாகிய திருவாசகத்திற்கு நவில்தொறும் நன்னயம் பயக்கும் பேருரை தந்துதவுகின்ற சைவ சித்தாந்த வித்தகர் அவர்களுக்கு நமது நெஞ்சங் கலந்த வாழ்த்து .
வாழ்க மணிவாசகரின் புகழ் ! வளர்க நல்லறம் !
வாழ்க பண்டிதமணி ! வளர்க கதிர்மணி விளக்கம் .
முகவுரை
திரு. க . வெள்ளைவாரணனார்
தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
இன்பம் பெருக எழிற்றிருவெம் பாவைக்கு
நன்புலவர் போற்றுமுரை நன்கமைத்தான் – அன்பால்
மதிசேரும் பண்டிதநன் மாமணி யென்றேத்துங்
கதிரேசன் செந்தமிழோர் கண்
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையானாகிய இறைவனது திருவருள் பெற்ற செம்புலச்செல்வர் திருவாதவூரடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகம் , திருச்சிற்றம்பலக்கோவை யென்னும் இரண்டனுள் கோவைத் திருவாசகத்திற்குப் பேராசிரியர் திட்பம் நுட்பஞ்செறிய அழகியதோர் உரை வகுத்துள்ளார். அவரது உரை முறையைத் தழுவி அன்பு நெறிக்குச் சிறந்த இலக்கியமாகத் திகழும் திருவாசகத்திற்கும் அரியதோருரை புலத்துறை முற்றிய பெரியாரொருவரால் இயற்றப் பெறுதல் வேண்டுமென நெடுங்காலமாகத் தமிழ் மக்கள் விரும்பி வந்தார்கள். அங்ஙனம் இயற்றப்பெறும் உரை தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றோர்க்கேயன்றி மற்றையோர்க்கும் பயன்படும் வண்ணம் எளிமையும் இனிமையும் உடையதாதல் வேண்டும் என்பது தமிழன்பர்களது பெருவேட்கையாக இருந்து வருகிறது .
தமிழரது நற்றவப் பயனாக இப்பெருவேட்கையினை நிறைவேற்றுதற்கு முன்வந்த புலமைச் செல்வர் நமது பேராசிரியப் பெருந்தகை மகாமகோபாத்தியாய முதுபெரும்புலவர் சைவசித்தாந்த வித்தகர் பண்டிதமணி திரு. மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் ஆவர் . செந்தமிழும் ஆரியமுமாகிய இருமொழிகளிலும் நிரம்பிய புலமையுடையராய்க் காவியச்சுவை நலங்களை நுகர்ந்து தாம் இன்புற்றும் அச்சுவை நலங்களை நல்லோர் குழீஇய பேரவைகளிலே இனிமையும் தெளிவும் பொருந்த எடுத்துரைத்துப் பிறரை இன்புறுத்தியும் தமிழ்நாடெங்குஞ் சென்று தமிழ் வளர்க்கும் பேராசிரியராகிய நம் பண்டிதமணியவர்கள் திருவாசகம் என்னும் அருளாரமுதப் பெருங்கடலில் திளைத்துமுழுகி அதனகத்து அமைந்த அரும் பெறல் நன்மணிகளை வாரி வழங்குபவர்கள். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து அரும் பொருள்களைக் கேட்போர் மகிழச் சுவைபெற விரித்துரைக்கும் மதிநலம் வாய்ந்த பண்டிதமணியவர்கள் வாயிலாகத் திருவாசகம் முழுவதற்கும் விரிவுரையொன்று எழுதப் பெறுதல் வேண்டுமென்பது தமிழ் மக்களது பெரு விருப்பமாகும். இவ்விருப்பத்தை நிறைவேற்றக் கருதிய நம் பண்டிதமணியவர்கள் தமது முதுமைத் தளர்ச்சியை ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் திருவாசகத்திற்குக் கதிர்மணி விளக்கம் என்னும் பேருரையினை யெழுதிவருகின்றமை தமிழ் மக்களது நற்பேறேயாகும் .
பண்டிதமணியவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள திருச்சதகவுரையும் , நீத்தல் விண்ணப்பவுரையும் புலவர் பாராட்டும் அருமையும் பொது மக்களனைவரும் விரும்பிப் பயிலும் எளிமையும் ஒருங்கமைந்து அருமையில் எளிய அழகுடையனவாய்ப் போற்றிப் பயிலப் பெற்றுவருதலை யாவரும் உணர்வர். இவ்வுரையினைத் தொடர்ந்து திருவெம்பாவைக்குரிய விரிவுரையும் இப்பொழுது வெளியிடப் பெறுகின்றது . திருவெம்பாவையின் வரலாற்றையும் தைந்நீராடல் மார்கழி நீராடல் பற்றிய செய்திகளையும் உரைமுகத்தே பண்டிதமணி அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள் .
திருச்சதகத்திற் பொதுவாகக் கூறப்பட்ட பத்திவைராக்கிய விசித்திரங்களுள் வைராக்கியத்தின் சிறப்பியல்பினை நீத்தல் விண்ணப்பத்திலும் பத்தியின் விளைவிற்குத் துணைபுரியும் உமையம்மையின் பேருபகாரச்செயலை இத்திருவெம்பாவையிலும் அடிகள் விளக்கியருள்கின்றார். இவ்வியைபினைப் புலப்படுத்தி நம் பண்டிதமணியவர்கள் இத்திருவெம்பாவையுரையினைத் தொடங்குகின்றார்கள். இச்சிறப்பினையுற்று நோக்குவோர் பரிமேலழகரது உரைத்திறம் இவர்கள்பால் அமைந்திருத்தலை நன்குணர்வர்
பண்டைக்காலத்தில் வாழ்ந்த சைவ வைணவக் கன்னிப்பெண்கள் மழைவளங்குறித்தும் சிறந்த கணவரைப் பெறுதற் பொருட்டும் மார்கழித்திங்கள் வைகறையில் நீராடிப் பராசத்தி யாகிய உமையம்மையாரை வழிபட்டு நோன்பு மேற்கொண்டொழுகினர் என்னும் உண்மையை விளக்குமுகமாக இத்திருவெம்பாவைக்குரிய “சத்தியை வியந்தது” என்னும் உள்ளுரைப் பொருளைப் புலப்படுத்திய சிறப்பு நம் பண்டிதமணியவர்களுக்கேயுரியதாகும். அறிவனூற் பொருளும் உலகநூல் வழக்கும் என இருபொருளும் அமையப்பாடிய திருவாதவூரடிகளது உளக்கருத்தைத் தெளிவாக விளக்கும் நிலையில் இத்திருவெம்பாவையுரை யெழுதப்பெற்றுள்ளமை வியந்து போற்றத்தக்கதாகும் .
ஐந்தாண்டு முதல் பன்னீராண்டுத் தொடக்கம் வரை ஆண்டு வகையால் வேறுபட்ட கன்னிமைப் பருவத்து மகளிர் எண்மரும் பாவை நோன்பினை மேற்கொள்ளுதற்குரியரெனவும் , பன்னீராண்டுத் தொடக்கத்தினராய பெண்கள் தாமே துயிலுணர்ந்தெழுந்து தம்மை யொத்த பருவத்தினளான ஒருத்தியை யெழுப்பினரெனவும் , இம்முறையே பதினொன்று, பத்து , ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து என்னும் வயதினராகிய மகளிர் எழுப்பப்பட்டனரெனவும் திருவெம்பாவையில் ஒன்று முதல் எட்டுவரையுள்ள பாடல்களுக்குப் பண்டிதமணியவர்கள் கூறிய விளக்கம் வியந்து பாராட்டத்தக்கதாகும் . இவ்வாறு திருவெம்பாவைப் பாடல்கள் இருபதினையும் வகைப்படுத்திக்கொண்டு இவர்கள் கூறும் பொருளும் , அப்பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாடப்பெறுதற்குரிய இயைபினைப் புலப்படுத்தும் முறையும் , பாடல்தோறும் கூறப்படும் சொல்நயங்களும் இலக்கியச்சுவை நலங்கள்யுணர்வாருக்கு இனிய நல்விருந்தாக அமைந்துள்ளது.
“வாட்டடங்கண்” எனக் கண்ணுக்கு அடைமொழி கூறியது , வைகறைப்பொழுதில் ஒளியுடைமையும் அகற்சியும் இயல்பின் அமையுமாறு விழிக்கத்தக்க கண்கள் , எதிர்மறையான இருளுடைமையும் சுருக்கமும் அமைய மூடப்பட்டுக் கிடத்தல் தக்கதன்று என்னுங் குறிப்புத்தோன்ற நின்றது “ எனவும் , மாயாகாரியமாகிய உலகமெல்லாம் தோன்றி யொடுங்குதற்குத் தான் நிலைக்களனாதலன்றித் தனக்குத் தோற்றமும் இறுதியும் இல்லாதவன் இறைவன் என்பார் “ஆதியும் அந்தமும் இல்லா என்றார்” எனவும் , இறைவன் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலிய அண்டவெளியாகவும் உடம்பொடு கூடிய உயிரறிவோடு உடனாய்ப் பிண்டவொளியாகவும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் பேரொளிப்பிழம்பாகிய அகண்ட வொளியாகவும் திகழவும் மாயாகாரியமாகிய உலகப்பார்வையுடைய ஆன்மாக்களால் உணர்தற்கு அரியனாவன் என்பது தோன்ற “அரும்பெருஞ்சோதி” என்றார் எனவும் “யாம் என்றது , மன மொழி மெய்களுக்கு எட்டாத இறைவன் திருப்புகழை யுணர்ந்து பாடுதற்குத்தகுதியற்ற மானுடச்சிறுமியராகிய யாங்கள் என்பது பட நின்றது” எனவும் முதலாந் திருப்பாடலில் கூறப்படும் விளக்கம் திருக்கோவையார்க்குப் பேராசிரியர் கூறும் உரைத்திறத்தை நினைவுபடுத்துகின்றது . இவ்வாறே பாடல் தோறும் பண்டிதமணியவர்கள் கூறும் விளக்கவுரைப்பகுதிகளும் சொல் நயமும் “சத்தியை வியந்தது” என்னும் உள்ளுரைப்பொருளின் தொடர்பாகக் கூறும் மெய்ந்நூற் கருத்துகளும் மீண்டும் மீண்டும் படித்து இன்புறுதற்குரியனவாம் .
அவ்வப் பருவத்து மகளிர் உளநிலைக்கேற்ப அவர்கள் ஆண்டவன்பாற் கொள்ளவேண்டிய அன்பினைப் புலப்படுத்தி அவர் தம் உரையாடற் பொருளை விரித்துரைக்கும் முறையில் இவ்வுரை அமைந்துள்ளது . இவ்வுரையாசிரியர் ஒவ்வொரு பாடலிலும் அதனைக் கூறினோர் கேட்டோர் ஆகியவர்களின் மனநிலையினையும் பிறசூழல் நிலைகளையும் பாட்டின்கண் அமைந்த சொற்குறிப்பின் துணை கொண்டு உலகியல் நிலைக்கேற்ப விரித்துரைக்குந் திறம் வியந்து போற்றுதற்குரியது.
இறைவன் செய்யும் ஐந்தொழில்களைக் குறித்துப் பன்னிரண்டாம் பாடலுரையிலும் இருபதாம் பாடலுரையிலும் இவ்வாசிரியர் கூறும் விளக்கம் உளங்கொளத் தக்கதாகும். சைவ சித்தாந்த சமயத்தினர் கூறும் தீக்கை வகைகளுள் நயனத்தீக்கை மானததீக்கை , பரிச தீக்கை , வாசிக தீக்கை என்பவை பற்றிய குறிப்புக்கள் “பைங்குவளைக் கார் மலரால்” எனத் தொடங்கும் பாடலில் அமைந்துள்ளனவாக நம் பண்டிதமணியவர்கள் உய்த்துணர்ந்து விளக்கிய நயம் நுண்ணறிவுடையோர் வியந்து பாராட்டத்தக்கதொன்றாம். மூன்றாந் திருப்பாடலில் “முத்தன்ன வெண்ணகையாய் “ எனப் பல்லாகிய பொருளுக்கு அடைமொழி புணர்த்தும் , நான்காந் திருப்பாடலில் “ஒண்ணித்தில நகையாய்” எனப் பல்லுக்கு உவமையாய் வந்த நித்திலத்திற்கு அடைமொழி புணர்த்தும் கூறியதற்கு இவர்கள் கூறும் நயம் பெரிதும் சுவைபயப்பதாம். “எழுப்பியவர் பேச்சு எழுப்பப்பட்டவளுக்குக் கடுமொழியாக இருந்தமையால் அவள் “என் தோழிமாராகிய நும்முள் இனிமையாகப் பேசுவாரும் உளரே. அன்னார் இக்குழுவில் இலரோ” என்பாள் “வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ” என்றாள் என நான்காந்திருப்பாடலிற் கூறிய நயம் , உரையாடலில் மகளிர்க்குரிய கூர்த்த நுண்மதியைப் புலப்படுத்துகின்றது .
“முன்னிக் கடலை” யெனத் தொடங்குந்திருப்பாட்டில் “கேவல நிலையிற் கிடக்கும் உயிர்த்தொகுதிகளையுடைமையாகக் கொண்ட நிலையில் அன்னை, “உடையாள்” எனவும் , பின் சகல நிலையில் பிறப்பில் உழலும் நமக்குத் தனுகரண முதலியவற்றைத் தந்து சிறிது அளவு விளங்கச்செய்து ஆட்கொள்ளுந் தகுதியளித்தலின் அந்நிலை நோக்கி “எம்மையாளுடையாள்” எனவும் , பின் சுத்த நிலையில் பஞ்சமலங்களும் நீங்கிச் சிவத்தோடு கூடி இன்புறுதற்கு உதவிபுரியும் இயல்பு நோக்கித் தலைவியாயினாள் என்பார் “எம்பிராட்டி” எனவும் சிவசத்தி கூறப்பட்டாள்” என விளக்குவர் உரையாசிரியர் . இப்பாடலின் உரையில் கேவல சகல சுத்தம் என்னும் மூன்று நிலைகளிலும் சிவசத்தி உயிர்களுக்குத் துணைசெய்து அன்னையாய் விளங்கும் திறத்திற்குக் “காரிட்ட ஆணவக் கருவறையில்” எனத் தொடங்குந் தாயுமானார் திருப்பாடலை மேற்கோளாக எடுத்துக்காட்டி விளக்கியமுறை சைவசித்தாந்த நுண்பொருளை யெளிதில் உளங்கொளச் செய்வதாகும் .
நீராடப்போந்த கன்னியருள் ஒருத்தி , உலகியலை மறந்து மன மொழி மெய்கள் இறைவன்பால் ஈடுபட்டுத் தன் வயமிழந்து நிற்கும் தலையன்பினளாகிய மற்றொருத்தியின் இயல்பை ஏனைப் பெண்கள் உணரும் வண்ணம் எடுத்துரைப்பது “ஓரொருகால்” எனத் தொடங்குந் திருப்பாட்டாகும் . இதன்கண் “இவள் இறைவன் திருவடி முதலியவற்றின் உறுப்பழகை அகக்கண்ணாற் கண்டு கண்ணீரில் ஆடினாள். அத்தகுதி நமக்கு இன்றெனினும் அவ்வுறுப்புக்களை உவமைமுகமாகக் காட்டும் அழகிய தோற்றமுடைய மலர்களைப் புறக்கண்ணாற் கண்டு நாம் தண்ணீரிலேனும் ஆடுவோமாக என்பாள் “ஏருருவப் பூம் புனல் பாய்ந்தாடு” என்றாள்” என இவ்வுரையாசிரியர் கூறும் விளக்கம் படிப்போர் உள்ளத்தையுருக்குவதாகும் .
இவ்வுரை உரிய இடங்களில் சைவத் திருமுறைகளையும் சித்தாந்த நூல்களையும் மேற்கோளாகக்காட்டி அவற்றின் நுண் பொருளையும் வகுத்துணர்கின்றது . இஃது அந்நூல்களைக் கற்பதில் பேரீடுபாட்டினை விளைப்பதாகும் . இன்றியமையாத இடங்களிற் பொருள் விளக்கத்தை யுட்கொண்டு காட்டப்பெறும் இலக்கணக்குறிப்புகள் பாட்டின் பொருளுணர்ச்சிக்குத் துணை செய்வனவாக உள்ளன. பொருட்டெளியும் சொல் வரையறையும் நவில்தொறும் சுவைமிகப் பயக்கும் நூல் நயமும் ஒருங்கமைந்த கதிர்மணி விளக்கமென்னும் இப்பேருரை சைவசித்தாந்த நூற்பொருளை ஒரு நாடகக் கதை யுருவில் வைத்து விளக்கும் இலக்கியமாக மிளிர்கின்றது . புலமைக் கருவூலமாகத் திகழும் இப்பேருரையை யியற்றி யுதவிய பண்டிதமணியவர்களிடத்து மாணவனாகப் பயிலும் வாய்ப்பளித்த திருவருளை உளமார இறைஞ்சிப் போற்றுகின்றேன். ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கும் திருவாசகத்திற்குப் பேருரை காணும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள மகாமகோபாத்தியாய பண்டிதமணியவர்கள் உளநலமும் உடல் நலமும் ஒருங்குபெற்று இத்திருவாசகப் பேருரையை நிறைவு செய்தருள்வார்களாக எனத் தில்லையம்பலவன் திருவடிகளை இறைஞ்சிப் போற்றுகின்றேன்.
மண்ணுலக மெல்லாம் மழையாற் குளிர்கவென
அண்ணா மலையான் அடியிறைஞ்சிப் – பெண்ணினல்லார்
மார்கழிநீ ராடல் வழுத்துதிரு வெம்பாவைச்
சீருரைத்தார் வாழ்வார் சிறந்து.
————————————–
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
திருவெம்பாவை
வரலாறு
தெய்வத்தன்மை வாய்ந்த “எம்பாவாய்” என்னுந்தொடர் மொழியை யீற்றிலுடைமையால் இருபது திருப்பாட்டுகள் அமைந்த இப்பகுதி திருவெம்பாவை என்னும் பெயருடையதாயிற்று. திரு வென்பது தெய்வத் தன்மை யென்னும் பொருளுடைய மங்கல அடைமொழியாகும் . திருவம்மானை முதலிய மற்றைப் பகுதிகளுக்கும் இஃதொக்கும் . மாணிக்கவாசக அடிகள், சிவபெருமான் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பல தலங்களுக்குஞ் சென்று திருவண்ணாமலையையடைந்து அங்கே தங்கியிருக்குங்கால் , முன்பனிப் பருவத்தொடக்கமாகிய மார்கழித்திங்கள் வந்தது . அப்பொழுது , மணஞ்செய்யப்படாத பெண்கள் பலர் திருவாதிரைக்கு முன் பத்து நாட்டொடங்கி அதிகாலையாகிய வைகறைப் பொழுதில் துயிலுணர்ந்தெழுந்து , ஒருத்தியும் பலருமாக இல்லங்கடோறும் சென்று தம் தோழிகளையும் துயிலுணர்த்தி யெழுப்பியதையும் , அவ்வெல்லோரும் ஒருங்கு சேர்ந்து சிவபெருமான் திருப்புகழை வாயாரப்பாடிக்கொண்டு நீர் நிலைக்குச் சென்று நீராடியதையும் , உலகன்னையாகிய பார்வதி தேவியின் திருவுருவைத் தூய ஈர நுண்மணலாற் சமைத்து வழிபட்டுப் பொதுவுஞ் சிறப்புமாகிய பயன் வேண்டியதையும் நேரிற் கண்டு , அப்பெண்கள் புகன்றதாகப் பாடியருளியது இத்திருவெம்பாவையாகும் , இவ்வுண்மையை,
மாதர்கொண் மாத ரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரை முன்னீ ரைந்தே யாகிய தினங்க ளெல்லாம்
மேதகு மனைக டோறும் அழைத்திருள் விடிவ தான
போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வார்”
எனவும்,
“அன்னவ ரியல்பு கண்டார் ஆங்கவர் புகன்ற தாக
மன்னிய திருவெம் பாவை வாசகம் பேசி” எனவும்
திருவாதவூரடிகள் புராணங் கூறுமாற்றானறிக . இங்ஙனம் உலகியல் நிகழ்ச்சியாகிய மகளிர் விளையாட்டு முதலிய செயல்களில் வைத்து அவர்தங் கூற்றாக அடிகள் அருளிச் செய்த திருவாசகப் பகுதிகள் திருவம்மானை முதலிய பலவாகும் .
இத் திருவெம்பாவை திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டதெனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணமும் திருவண்ணாமலையில் அருளிச்செய்யப்பட்டதெனத் திருவாதவூரடிகள் புராணமும் கூறுகின்றன. இவ்விரண்டினுள் பின்னதே வலியுடைய தென்பதற்கு அகச்சான்றுகளுஞ் சிலவுள.
“அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர்
மாலறியா நான்முகனுங் காணா மலையினை”
என வெளிப்படையாகவும்,
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை
பாதாள மேழினுங்கீழ்ச் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே”
எனக் குறிப்பாகவும் புலப்பட ஓதியருளிய திருவாக்குகளே சான்றாவனவாம் .
வாதவூரடிகள் புராணத்தில் நீராடியதுவரை கூறப்பட்டதேயன்றிப் பார்வதி வழிபாடு கூறப்பட்டிலதேயெனின் , அதற்கு விடை பின்வருவனவற்றால் அறியலாம்.
பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் சைவ வைணவக் கன்னிப் பெண்கள் மழைவளங் குறித்தும் , சிறந்த கணவரைப் பெறுதற் பொருட்டும் மார்கழித்திங்களில் வைகறையில் நீராடிப் , பராசத்தியாகிய கௌரியை வழிபட்டு , நோன்பு மேற்கொண்டொழுகினரென்பது . அடிகளருளிய இத்திருவெம்பாவையாலும் திருமால் பத்தியிற் சிறந்த ஆண்டாள் அருளிய திருப்பாவையாலும் அறியத்தக்கது.
இந் நோன்பிற்கு நூற்பிரமாணம் இன்றெனவும் ஆன்றோராசாரமே பிரமாணமெனவுங் கூறுப. ஆயினும் , பாகவத புராணத்தில் கண்ணனை மணவாளனாகப் பெற விரும்பிய ஆயர்குலக் கன்னியர் , இந் நோன்பை மேற்கொண்டு மார்கழித்திங்களில் வைகறையில் நீராடிப் பார்வதிதேவியை வழிபட்டன ரென்னும் செய்தி கூறப்பட்டுள்ளது . இதனை,
“இன்ன தண்பனிப் பருவநல் லிளநறா வொழுகும்
கன்னி யந்துழாய்க் கண்ணனெங் கணவனா கென்ன
அன்ன மென்னடை யாயர்தங் கன்னியர் நோற்றார்
மன்னு வெம்பனி மால்வரைக் கன்னியைத் தொழுதே”
எனவும் ,
பனிநி லாக்கதிர் பரப்பிய முத்தவெண் மணலால்
பனிவ ரைக்கொடி திருவுருட் பாற்பட வகுத்துப்
பனிம லர்த்தொடை சூடியும் பரவியு நோற்றுப்
பனியி றப்பினிற் படர்புன லாடுவான் படர்ந்தார்”
எனவுங் கூறிய செய்யுட்களாலறிக.
இச்செய்யுட்களில் “பனிமால்வரைக் கன்னி “ யெனவும் , “பனிவரைக்கொடி” யெனவும் கூறியது , பார்வதிதேவியை யென்பது வெளிப்படையாகும் . நல்ல மணாளனை யடைதற்குக் கௌரி நோன்பே சிறந்ததெனக் கொண்டு வைணவப் பெண்கள் நோற்றனரென்றால், சைவப் பெண்கள் இந் நோன்பை மேற்கோடல் மிகவும் பொருத்தமாமென்பது நன்கு விளங்கும் . இங்கே பாவையென்றது , பார்வதி யுருவமாக மணலாற் சமைத்த தெய்வப் படிவத்தை யென்பது கருதத்தக்கது. அதனாலே இது பாவை நோன்பாயிற்றென்க . “சத்தியை வியந்தது” என இப்பகுதிக்கு உள்ளுரைப்பொருள் குறித்திருத்தலும் இதனை வலியுறுத்துவதாகும். சத்தி என்றது , இங்கே பார்வதி தேவியை யெனக் கொள்ளல்வேண்டும் .
இத் திருவெம்பாவையைப் போன்ற பிரபந்தங்களைப் “பாவைப்பாட்டு” என்று முன்னோர் வழங்கினரென்பது “சிறுபான்மை பாவைப் பாட்டும் அம்மானைப் பாட்டும் முதலாயின நான்கு அடியினிகந்து வருவனவாயின “ எனவும் , “சிற்றெல்லையாகிய பத்தடியளவும் பாவைப்பாடலும் அம்மானைப்பாடலும் போலும் தரவுகொச்சகம் வரும் “ எனவும் பேராசிரியர் கூறுமாற்றானறியலாம் . யாப்பருங்கலவிருத்தி 93-ஆம் சூத்திரவுரையில் ,
“கோழியுங் கூவின குக்கில் அழைத்தன
தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
கூழை நனையக் குடைந்துங்குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”
என்னும் பாட்டொன்று அவிநயனார் காட்டிய பாட்டென்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது .
பண்டைக் காலத்துத் தமிழ் நாட்டில் கன்னிப்பெண்கள் தைந்நீராடலைப் பற்றிக் கலித்தொகை , ஐங்குறுநூறு , நற்றிணை , பரிபாடல் முதலிய சங்கச் செய்யுட்களில் விளக்கமாகக் காணலாம் . மார்கழித்திங்கள் திருவாதிரையில் தொடங்கும் நீராடல் பூர்ணிமாந்த முறைப்படி தைத் திங்களிலும் தொடர்ந்து நடைபெறுமாதலின் , மார்கழி நீராடலும் தைந்நீராடலும் ஒன்றென்ப . ஆயினும் , திருவாதவூரடிகள் புராணத்துக் கூறப்பட்டபடி மார்கழி நீராடல் திருவாதிரைக்குப் பத்து நாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில் முடிவுபெறுமென்பதும் , தைந் நீராடல் மார்கழித்திருவாதிரையில் தொடங்கி நடைபெறுமென்பதும் இங்கே கண்ட வேறுபாடாகும் , நூற் பிரமாண முள்ளனவும் இல்லனவுமாய் மக்கள் வழக்க வொழுக்கங்களிற் காணப்படும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள், இங்ஙனம் காலாந்தரத்திற் சிறிது சிறிது வேறுபாடெய்தல் இயல்பே . இதற்கு மற்றொரு சான்றும் ஈண்டுக் கருதத்தக்கது . பிங்கலந்தையில் ஐந்து முதல் ஒன்பது ஆண்டு வரையுள்ள சிறு கன்னிப் பெண்களே பனிநீர் தோய்தற்கும் பாவையாடற்கும் உரியர் என்று கூறப்பட்டுள்ளது . சங்ககாலத்துச் சான்றோர் பாடல்களிலும் இவ்விதி தழுவப்பட்டிருத்தல் அறியலாம் . அங்ஙனமாகவும் திருவெம்பாவையிலும் , திருப்பாவையிலும் முறையே
“கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க”
புற்றர வல்குற் புனமயிலே போதராய்” என்பன
முதலிய குறிப்புக்களுண்மையால் , ஒன்பதாண்டுக்கு மேற்பட்ட கன்னிப்பெண்களும் இந் நீராடலிற் கலந்துகொண்டனரென்பது புலனாம் .
இனி, இம்மார்கழி நீராடலால் விரும்பப்பட்ட பயன் பொதுவும் சிறப்புமாக இருவகைப்படும் என்பர் . பொதுப்பயன் நாடு செழிக்க மழை பெய்தல் . இதனைப் பதினாறாம் திருப்பாட்டில் பராசத்தியைப் பாராட்டி மழையை முன்னிலைப்படுத்தி ,
“முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்”
என்று கூறியிருத்தலானறியலாம். தைந் நீராடல் பற்றிக்கூறிய பரிபாடலில் “வெம்பாதாக வியனில் வரைப்பென” [ இப் பெருநிலம் மழையால் வெம்மை நீங்கப் பெற்றுக் குளிர்வதாக ] என்று கூறியிறுத்தலும் இதனை வலியுறுத்தும். சிறப்புப்பயன் கன்னியர் சிறந்த கணவரைப் பெறுதல் . இதனை,
“உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவார்” எனவும் ,
“எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க “ எனவுங்
கூறியிருத்தலான் அறியலாம் . இங்ஙனம் உலகியலில் வைத்துச் சைவ சமய வுண்மைகள் பலவற்றையும் புலப்படுத்து அடிகளால் அருளிச் செய்யப்பட்டது இத் திருவெம்பாவை யென்பது தெளிவாம் .
சத்தியை வியந்தது
திருவெம்பாவையின் உள்ளுறைப் பொருளாகக் குறிக்கப்பட்டது . சத்தியை வியந்தது என்பது . சத்தி யென்றது பராசத்தியாகிய உமையம்மையை . அம்மையப்பனாகிய இறைவனை அடைதற்குரிய நெறிகள் பலவற்றுள்ளுஞ் சிறந்தது அன்பு நெறி . அந்நெறியொழுகத் தலைப்படுவாரெல்லோரும் முதலில் அம்மையை வழிபட்டு அவள் மூலம் அப்பனையடைதல் வேண்டுமென்பது பெரியோர் கண்டவுண்மை . கடவுட் பத்தியாகிய பேரன்புண்டாதற்கு, அருள்வடிவினளாகிய இறைவியின் வழிபாடு முதலில் வேண்டத்தக்கதென்ப . “ஆங்கவனருளாற் பத்திநன்குண்டாம்” என்பது வாயுசங்கிதை. ஈண்டு அருளென்றது சத்தியை . “அருளது சத்தியாகும் அரன்றனக்கு” என்பது சிவ ஞான சித்தி. இறைவியுடனாக இறைவனை உள்ளத்தமைத்து வழிபடும் சிவாநுபவப் பெருஞ்செல்வரே நம் அடிகள் . இவ்வுண்மையை ,
“உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியே னடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேனுன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் “
என்று கூறிய அடிகள் திருவாக்கான் உணர்க . அருட்குணமிக்க இறைவனைத் தலைவனாகவும் , அன்பு முதிர்ந்த உயிரைத் தலைவியாகவும் கொண்டு , உலகியலிற் காணப்படும் தலைமக்களுடைய காதல் ஒழுக்கத்தை யேறிட்டு ஞானானுபவப் பொருள் தோன்றச் சமயக்குரவர் ஆழ்வார் முதலியோர் பாடலருளிச் செய்திருத்தலைப் பரக்கக் காணலாம் . “முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்” என்னுந் தமிழ் மறைப் பாடலிறுதியில் “ தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே “ என்று கூறப்பட்டுள்ளது . இங்கே நங்கை என்பது பக்குவமுள்ள உயிரையும் தலைவன் என்பது இறைவனையுங் குறித்து நிற்றலறிக . இம்முறையில் அடிகள் தம்மைத் தலைமகளாகவும் , இறைவனைத் தலைமகனாகவும் கொண்டு திருவாசகத்தில் பல திருப்பாட்டுக்கள் அருளிச் செய்துள்ளார் . அம்முறையின் தொடக்கம் இத்திருவெம்பாவையே யாகும் . இதன் பின்வரும் திருவம்மானை முதலிய பல பகுதிகளும் இக் குறிப்பினவாம் .
இத் திருவெம்பாவையில் , ஆன்மநாயகனாகிய இறைவனை யடைதற்குரிய பக்குவமுதிர்ந்த உயிர்களையே கன்னிப்பெண்களாகவும் , ஆணவமலவிருளிற் பிணிப் புண்டிருத்தலையே உறங்கிக் கிடத்தலாகவும் , மலவாற்றலொழியப்பெறும் நிலையே துயில் நீத்தெழும் நிலையாகவும் , மலபரிபாகமுடையவுயிர்கள் அஃதில்லாத வுயிர்களை யுணர்த்தி அன்புநெறிப்படுத்து இறையருளிற்றோய்வித்தற்கு அழைத்தலையே நீராட அழைத்ததாகவும் அமைத்துக்கொண்டு இஃது அருளிச் செய்யப்பட்டதென்க இந் நுண்பொருள் ,
“மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள்
செலமுழுக வருகவெனச் செப்பல்திரு வெம்பாவாய்”
என்னும் திருவாசக வுண்மையில் தெளிவிக்கப்பட்டிருத்தல் அறிக. பரமான்மாவாகிய இறைவனைத் தலைமகனாகப் பெற்று மணந்து , பேரின்பவாழ்க்கையிற்றலைப்படுதற்கு விரும்பும் கன்னிப்பெண்களுள் தம்மையும் ஒருத்தியாக அடிகள் கொண்டு கூறியபடியாம் .
பராசத்தியாகிய அம்மையின் பெருமை இத்திருவெம்பாவையில் ,
“எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்குமடு” எனவும்
“பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி” எனவும் ,
முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
யென்னப் பொழியாய் மழை “ எனவும் போந்த
திருப்பாடற் பகுதிகளில் வெளிப்படையாகவும் மற்றைத் திருப்பாட்டுக்களிற் குறிப்பாகவும் பாராட்டப்பட்டிருத்தல் காண்க . இவ்வுண்மை அவ்வப்பாடல்களின் இறுதியில் விளக்கிக்கூறப்படும் .
இனி , இத்திருவெம்பாவைக்குத் தத்துவப்பொருள் கூறும் ஒரு சாரார் இத் திருவெம்பாவையில் முதல் எட்டுத் திருப்பாட்டுக்கள்வரை ஒவ்வொரு திருப்பாட்டிலும் ஒவ்வொரு பெண்ணே யெழுப்பப்பட்டனராக, அவ்வெண்மரோடு முதலில் யெழுப்பிய ஒருத்தியையுஞ் சேர்த்துக்கணக்கிட ஒன்பதின்மராதலின் அவ்வொன்பதின்மரும் நவசத்திகளாவரெனவும், மனோன்மணி, சருவபூததமணி, பலப்பிரமதனி, பலவிகரணி , கலவிகரணி , காளி, இரெளத்திரி, சேட்டை , வாமை என்னும் அவ் வொன்பது சத்திகளும் உலகப் படைப்பு நிமித்தம் முறையே முன்னது பின்னதைப் பிரேரித் துணர்த்திய குறிப்பே முதல் எட்டுத் திருப்பாட்டுக்களில் உள்ளதெனவும் , இச்சத்திகளின் இயக்கத்தால் மாயை காரியப்பட்டுப் பிருதிவி முடிவான பிரபஞ்சகாரியம் நடைபெறுதலையே இத் திருவெம்பாவை குறிப்பிற் புலப்படுத்துமெனவும் , இது குறித்தே சத்தியை வியந்தது என்னும் உள்ளுரை குறிக்கப்பட்டதெனவும் கூறுவர் . பிரபஞ்ச சிருட்டிக்குறிப்பை இங்கே புலப்படவைத்தற்கு உரிய காரணம் இன்னதென்று யாரும் விளக்கினாரல்லர் . அங்ஙனமாயின் ஈண்டு இயைபுடைய வேறுகருத்து என்னையெனிற் கூறுதும்.
தமிழ் நாட்டில் பெண்களுக்கு ஐந்து முதல் ஏழாண்டு வரை பேதைப் பருவமென்றும் , எட்டு முதல் பதினோராண்டு வரை பொதும்பைப் பருவமென்றும் , பன்னிரண்டாம் ஆண்டு மங்கைப் பருவத் தொடக்கம் என்றும் தமிழ் நூலார் கூறுவர் . ஐந்தாண்டுக்கு முற்பட்ட காலம் குழந்தைப் பருவமாதலின் அது பெண்மைப் பருவத்துள் வைத்துக் கணக்கிடப்படவில்லை . ஆகவே ஐந்து முதல் பன்னீராண்டுத் தொடக்கம் வரை கன்னிமைக்குரிய காலமென்பது தெளிவாம் , தமிழ் அகப்பொருணூலாரும் பதினோராண்டும் பத்துத் திங்களும் கழிந்தபின்றை மணப்பருவம் கொண்டமை ஈண்டுக் கருதத்தக்கது . ஆகவே ஐந்து முதல் பன்னிரண்டுவரை ஆண்டுகள் எட்டாகும் . இதனாற் கன்னியர் ஐந்தாண்டு முதல் பன்னீராண்டுத் தொடக்கம்வரை ஆண்டு வகையால் எண்வகைப் படுவரென்பது விளங்கும் . ஈண்டுப் பாவை நோன்பு மேற்கொண்டவர் இவ்வெண்வகையினரே. முதலில் பன்னிராண்டுத் தொடக்கமுடைய பெரிய கன்னிப்பெண்கள் சிலர் தாமே விடியுமுன் துயில் நீத்தெழுந்து உடல் தூய்மை செய்துகொண்டு இறைவன் புகழைப்பாடிக்கொண்டு தம்மோடொத்த பருவத்தினளான பன்னீராண்டுத் தொடக்கப்பருவத்து ஒரு பெண்ணை யெழுப்பினர் எனவும் , பின்னர் முறையே பதினொன்று பத்து ஒன்பது எட்டு ஏழு ஆறு ஐந்து ஆண்டுகளான பொதும்பைப் பருவத்தினரையும் பேதைப் பருவத்தினரையும் எழுப்பினரெனவும் கொள்ளல் வேண்டும் .
ஆகவே ஒன்று முதல் எட்டுத் திருப்பாட்டுக்களிலும் ஒவ்வொரு பருவத்துப் பெண்களே எழுப்பப்பட்டனர் எனக்கொள்ளுதல் பொருந்தும் . ஆண்டில் மூத்த , பெரிய பெண்கள் விடிதற்குச் சில நாழிகை முன்னரே துயில் நீத்தெழுந்தனரென்பதும் ஆண்டில் இளைய , சிறு பெண்கள் நாழிகை ஆக ஆக எழுப்பப்பட்டனரென்பதும் பொருத்தமாகும் . மேலும் , முதற்றிருப்பாட்டில் “ஈதேயெந் தோழி பரிசு “ என்றமையால் அவள் யெழுப்பியவர் பருவத்தோடொத்த பருவத்தினள் ஆவாளென்பதும் , இரண்டு மூன்று நான்காம் திருப்பாட்டுக்களில் எழுப்பப்பட்டார் மாற்றங் கூறினர் என்று கூறப்பட்டிருத்தலானும் அத் திருப்பாட்டுக்களிலும் ஐந்தாந் திருப்பாட்டிலும் அன்னார் அறிவும் அறியாமையும் பொருந்தியவராகப் புலப்படுக்கப்பட்டிருத்தலானும் அவர் பெதும்பைப் பருவத்தினர் ஆவரென்பதும் , ஆறு ஏழு எட்டாம் திருப்பாட்டுக்களில் எழுப்பப்பட்டவர் மாற்றங்கூறாமையானும் , எழுப்பியவர் “மானே” யெனவும் “அன்னே” யெனவும் விளித்தலானும் , ஏழாம் திருப்பாட்டில் பருவத்தாற் பேதையேயன்றி இறை புகழில் ஈடுபடாத “வன்னெஞ்சப் பேதையர்போல் வாளாகிடத்தியால்” என்று கூறப்பட்டிருத்தலானும் அவர் பேதைப் பருவத்தினராவ ரென்பதும் குறிப்பிற் புலப்பட வைத்தவாறறிக . மேலும் எட்டாந் திருப்பாட்டில் எழுப்பப்பட்டவள் ஐந்தாண்டுச் சிறுமியாதலின் அவளை எழுப்புங்கால் “கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்” என்று வைகறைப் பொழுதின் இறுதிப்பகுதி குறிக்கப்பட்டிருத்தலும் கருதத்தக்கது . ஈண்டு ஐந்து முதல் பன்னீராண்டுத் தொடக்கம் வரை எழுப்பப்பட்டவர் ஒவ்வொருவரெனக் கூறப்பட்டிருப்பினும் உபலக்கணத்தாற் பலராக் கொள்ளல் வேண்டும் . பின்னர் எல்லோரும் ஒருங்கே கூடி இறைவனை முன்னிலைப்படுத்துப் புகழ்ந்து பாடி நீராடினரென்பது கூறப்பட்டுள்ளது . இடையிடையே உமாதேவியைப் புகழ்ந்து பாராட்டி யிருத்தல் காணப்படுதலின் சக்தி வழிபாடு செய்தமையும் பெறப்பட்டவாறறிக .
ஐந்து முதல் பன்னிரண்டு ஆண்டுப் பருவத்தினர் சிறுமியராக இருத்தலின், வைகறையில் அன்னார் எழுந்து நீர்த்துறை சென்று நீராடற்கு எங்ஙனந்துணிவர் என்று சிலர் ஐயுறக்கூடும் . இவ்விளம் பெண்கள் நீராடச்செல்லுங்கால், தாய்மாரும் உடன் செல்லுவர் எனவும், தாயருகே நின்று நீராடுதலின் இஃது அம்பாவாடலாகுமெனவும் பரிபாடல் கூறும். “ அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர் “ என்பது பரிபாடல் [11—81] ஆதலின் இந் நோன்பிற்குரியார் கன்னியராயினும் , அவரைப் பாதுகாக்கும் நிமித்தம் அன்னார் தாய்மாரும் உடன் சென்று துணைபுரிவரென்பது வெளியாதலின் சிறுமியர் துணிவிற்குத் தடையின்றென்பது புலனாகும் .
திருச்சதகத்திற் பொதுவாகக் கூறப்பட்ட பத்தி வைராக்கிய விசித்திரங்களுள், வைராக்கியத்தின் சிறப்பியல்பு நீத்தல் விண்ணப்பத்தில் தெளிவிக்கப்பட்டது. ஏனைப் பத்தியின் சிறப்பியல்பு கூறத்தொடங்கி அப் பத்தியின் விளைவிற்குத் துணைபுரியும் உமையம்மையின் பேருபகாரச் செயல் இதன்கட் பாராட்டப்படுகின்றது . இதனால் நீத்தல் விண்ணப்பத்திற்கும் இதற்கும் உள்ள இயைபு புலனாதல் அறிக.
—————————————-
திருவெம்பாவை
வெண்டளையான் வந்த இயற்றரவிணைக்
கொச்சகக் கலிப்பா
திருச்சிறம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாளென் னேயென்னே
யீதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
கருத்துரை;- இதன் முன்னர்க் கூறப்பட்ட நீத்தல் விண்ணப்பத்தின் இறுதித்திருப்பாட்டில் வைதல் வாழ்த்துதலாகிய இருதிறத்தானும் தாம் கூறும் பாராட்டுக்களால் நிகழுங் குற்றத்தைப் பொருத்தருள வேண்டுமென்று ஆண்டவனை நோக்கி விண்ணப்பஞ் செய்துகொண்ட அடிகள், திருவெம்பாவையின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்கண் முதலும் ஈறுமில்லாத அரிய பேரொளிப் பிழம்பாகவுள்ள இறைவனது இயல்பு வரையறை செய்து பாராட்டுதற்கு அரிய தொன்றென்பதும் , அதனால் அக்குற்றம் பொறுக்கத்தக்கதென்பதும் , இயன்றாங்குச் செய்யப்படும் வாழ்த்து , வாழ்த்துவோரையும் கேட்போரையும் இறையன்பிலீடுபடுத்தும் இயல்பின தென்பதும் , அதனால் அஃது உயிர்த்தொகுதிகளால் மேற்கொள்ளத்தக்கதென்பதும் ஆகிய இவை குறிப்பாகவும் வெளிப்படையாகவும் புலப்பட அருளிச் செய்கின்றார்.
பதவுரை :- வாள்தடம் கண் மாதே = ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய நங்காய்
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை :- தொடக்கமும் இறுதியும் இல்லாத அரிய பெரிய ஒளிப்பிழம்பாகவுள்ள இறைவனை
யாம் பாடக்கேட்டேயும் :- யாங்கள் புகழ்ந்து பாடக்கேட்டுக்கொண்டும்
வளருதியோ :- துயில்கின்றாயோ,
நின்செவிதான் வன்செவியோ :- அல்லது நின் செவிகள் தாம் செவிட்டுச்செவிகளோ
வீதிவாய் :- தெருவில் ,
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் :- சிவபெருமானுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளையாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று ,
கேட்டலுமே :- கேட்கப்பட்ட அளவிலே, [ சிவபக்தி மிக்க இவள் ]
போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு :- மலர் நிறைந்த படுகையிடத்து நின்றும் புரண்டு எழுந்து ,
விம்மி விம்மி மெய்மறந்து :- [ பத்தி மிகுதியால் ] தேம்பித் தேம்பியழுது பின் தன் வயமிழந்து,
ஏதேனும் ஆகாள் இங்ஙன் கிடந்தாள் :- வேறு எச் செயற்கும் ஆளாகாமல் இவ்வாறு கிடந்தாள். [இவள் செயல் அவ்வாறாக]
எந்தோழி பரிசு ஈதே :- எங்கள் தோழியாகிய நின் தன்மை இத்தகையதாகவுள்ளது ,
என்னே என்னே :- ஈதென்ன வியப்பு வியப்பு என்பது .
விளக்கவுரை :- பாவை நோன்பு மேற்கொண்ட கன்னியருள், வைகறையில் தாமே துயிலுணர்ந்தெழுந்து உடற்றூய்மை செய்துகொண்டு நீராடப் போதுவார் சிலர் , அந்நோன்பு மேற்கொண்டு நீராடுதற்கு உடன் வருவதாக முன்னே நாளிற்கூறி உரிய நேரத்தில் எழாமல் உறங்கும் ஒருத்தியைத் துயிலுணர்த்துமுகமாக அருளிச்செய்யப்பட்டது இத் திருப்பாட்டு . “வாட்டடங்கண்” எனக் கண்ணுக்கு அடைமொழி கூறியது , வைகறைப் பொழுதில் ஒளியுடைமையும் அகற்சியும் இயல்பின் அமையுமாறு விழிக்கத்தக்க கண்கள் , எதிர்மறையான இருளுடைமையும் சுருக்கமும் அமைய மூடப்பட்டுக்கிடத்தல் தக்கதன்று என்னும் குறிப்புத்தோன்ற நின்றது விழிப்பு நிலையில் ஒளியுடைமையும் அகன்றிருத்தலும் , துயிலும் நிலையில் ஒளியின்மையும் சுருங்கியிருத்தலும் கண்களுக்கு உளவென்பது எளிதினறியத்தக்கது . ஆதி — தொடக்கம் ; ஈண்டுத் தோற்றமென்னும் பொருட்டு . மாயா காரியமாகிய உலகமெல்லாம் தோன்றி யொடுங்குதற்குத் தான் நிலைக்களனாதலன்றித் தனக்குத் தோற்றமும் இறுதியும் இல்லாதவன் இறைவன் என்பார் , “ஆதியும் அந்தமும் இல்லா “ என்றார் திருச்சதகத்தில் ,
“ போற்றியெவ் வுயிர்க்குந் தோற்ற மாகிநீ தோற்ற மில்லாய்
போற்றியெல் லாவு யிர்க்கும் ஈறாயீ றின்மை யானாய் “ என்று
அடிகள் அருளிச் செய்திருத்தலும் காண்க. இங்ஙனம் ஆதியும் அந்தமுமில்லாப் பரம்பொருளை மெய்யுணர்வுடையார் பேரொளிப் பிழம்பாக வுணர்ந்து அநுபவித்தன ரென்ப . ஒளி நிலையைத் திருமூலர் அண்டவொளி, பிண்டவொளி, அகண்டவொளியென மூவகைப் படுத்துக்கூறுவர். அண்டவொளி ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியவற்றிலுள்ளது. பிண்டவொளி உடம்போடு கூடிய வுயிரறிவிலுள்ளது. அகண்டவொளி ஞானமயமாகிய இறைவன்பாலுள்ளது . “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் “ என்று தாயுமானவர் கூறியதுங் காண்க . ஒற்றுமை நயத்தால் அகண்டவொளியாகவே இறைவனைக் குறிக்கொண்டு பரஞ்சோதியெனவும் பெருஞ்சோதியெனவும் , பேரொளிப்பிழம்பு எனவும் பெரியோர் வழங்குவர். இங்ஙனம் இறைவன் பேரொளிப்பிழம்பாகத் திகழவும் ,மாயாகாரியமாகிய உலகப் பார்வையுடைய ஆன்மாக்கள் உணர்தற்கு அரியனாவன் என்பது தோன்ற , “அரும்பெரும் சோதியை “என்றார் , அருமை – பாசஞான பசு ஞானங்களாகிய வாக்கு மனங்களுக்கு எட்டாத தன்மை ; பதிஞானமாகிய அனுபவ வுணர்வுக்கே புலப்படும் இயல்பினன் என்பதாம் . “வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே “ என்னும் சிவஞானபோதக் கருத்தும் ஈண்டு அறியத்தக்கது . மனவாக்கினிற்றட்டாமல் நின்றதெது “ என்பதும் இக் குறிப்பினதே . அரும் பெருஞ்சோதியாக விளங்கும் இறையியல்பைக் குறித்துச் சிவானந்தலகரி யென்னும் வடமொழி நூலில் சங்கராசாரிய சுவாமிகள் கூறிய ஒரு சுலோகக் கருத்து இங்கே ஒப்பு நோக்கி யின்புறத்தக்கது .
அதன் மொழி பெயர்ப்பு வருமாறு :- பசுபதியாகிய இறைவ ! தாமரை நாயகனாகிய ஒரு சூரியன் விண் மண் முழுதும் நிறைந்த பெரிய இருட்குழுவை யோட்டிக் காண்பார் கண்களுக்கும் புலனாகின்றான் ; நீ கோடி சூரியவொளி யுடையவனாக இருந்தும் , கண்களுக்கும் புலனாகாமையோடு சிறிய என் அகவிருளையும் போக்குகின்றாயல்லை . என் அகவிருள் நின்னால் ஒழிக்க இயலாத அத்துணை வலியை எங்ஙனம் உடையதாகும்? ஆதலின் அஞ்ஞானம் முழுதையும் ஒழித்துக் காட்சி தந்தருளுவாயாக “ என்பது
இனி , திருமாலும் பிரமனும் அடியும் தேடியறிய இயலாதபடி பேரொளிப்பிழம்பாக இறைவன் நின்ற வரலாறு திருவண்ணாமலையில் நிகழ்ந்ததெனப் புராணம் கூறுமாதலின் , அவ்வுண்மையை “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி “யென்னும் தொடர் குறிப்பிற் புலப்படுத்து நிற்றலும் அறிக . யாம் என்றது, மனமொழிகளுக்கு எட்டாத இறைவன் திருப்புகழையுணர்ந்து பாடுதற்குத் தகுதியற்ற மானுடச் சிறுமியராகிய யாங்கள் என்பது படநின்றது . பாடுதற்குத் தகுதியில்லே மாயினும் , “பத்திவலையிற் படுவோன் “என்பது கேட்டிருக்கின்றோமாதலின் ,அன்பினாற் பாடலானே மென்பார் , “யாம்பாட” எனவும் , நீயும் வைகறையில் விழித்தெழுந்து எங்களுடன் கூடி இறைவன் திருப்புகழைப் பாடவேண்டியது கடமையாகவும் , அதனைச் செய்யாமையோடு , யாங்கள் நின் வாயிலில் வந்து பாடுதலைக் கேட்டுக்கொண்டும் , விழித்தெழாது பொய்யுறக்கங் கொள்ளுகின்றனையோ என்பார் , “ கேட்டேயும் வளருதியோ” எனவுங் கூறினாரென்க . கேட்டேயும் என்புழி ஏகாரம் இசை நிறை . கேட்டும் என்றபடி . வளர்தல் – கண் வளர்தல் ; துயிலுதல் “ ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்தது “ என்புழி அப்பொருட்டாதல் அறிக . இனி , “மாதே” யென விழித்து வாட்டடங்கண் வளருதியோ வெனக் கோடலுமாம் . வன்செவி — தனக்குரிய ஓசையாகிய புலனைப் பற்றுதற்குரிய உணர்ச்சியற்ற செவி . பொய் யுறக்க மின்றேல் கேட்டற்குரிய நின் செவிகள் தாம் செவிடோ வென்றாரென்பது.
வளருதியோ , வன்செவியோ என்னும் ஈரிடத்தும் ஓகாரம் எதிர்மறை ; உறக்கமுமன்று ; செவிடுமன்று என்பதை யுணர்த்தி நின்றது . யாம் பாடக்கேட்டுத் துயிலுணர்ந்தும் , விழித்தெழாமைக்குக் காரணம் நீராட வருதலில் விருப்ப மின்மையே யாமென்று கருதினாரென்பது .
இனி , ஆண்டவனிடத்து அப் பெண்ணுக்குள்ள அன்பின் குறையை அவள் உணருமாறு அவளோடொத்த மற்றொரு பெண்ணின் பேரன்பை யெடுத்துக்காட்டி யுணர்த்துவராயினர் . அப்பேரன்பினளாகக் கருதப்படும் பெண்ணைக் குறிப்பிட்டு , “இவளைத் துயிலுணர்ந்த முன்னர்ச் சென்றோம் ; செல்லுங்கால் இவள் இல்லத்தை யணுகுதற்கு முன் தெருவில் யாம் கூடி அரும் பெருஞ் சோதியைப் பாடத் தொடங்குதற்குக் காப்பாக அப்பெருமான் திருவடிகளை வாழ்த்தத் தொடங்கினோம் “ என்பார், ”மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி” யென்றார் என்க. மாதேவன் என்பதும் பேரொளிப் பிழம்பாக வுள்ளவன் என்னும் பொருளுடைய தாயினும் , “ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ் சோதி” என்பது இறைவனுடைய சொரூபலக்கணம் எனப்படுஞ் சிறப்பியல்பு பற்றியும் , மாதேவன் என்பது தடத்த லக்கணம் எனப்படும் பொதுவியல்பு பற்றியும் கூறப்பட்டன வென்பது கருதத்தக்கது*, அரும்பெருஞ் சோதியைப் பாடுதற்கு அப் பெருமான் திருவடிகளே காப்பாகத் தக்கனவென்பது கருத்து ஆன்றோர் நூன்முகத்துக் கூறப்படும் கடவுள் வாழ்த்தாகிய மங்கல வாழ்த்து , வாழ்த்தும் வணக்கமும் பொருளியல்புரைத்தலும் என மூவகைப்படுமென்ப .
——————————————————————————————————*பாசஞான பசுஞானங்களால் அறியப்படாமல் பதி ஞானத்தால் அறியப்படும் சிவசத்தாதல் இறைவனுக்குச் சொரூபலக்கண மெனப்படும் சிறப்பியல்பும், சத்தியுடன் கூடி உலகெலாமாகி வேறாயுடனுமாய் நின்று படைப்பு முதலிய அருட் செயல்களைப் புரியும் பதியாதல் தடத்த லக்கணமெனப்படும் பொதுவியல்புமாகும். இவற்றை முறையே சிவஞானபோதம் ஆறாம் மற்றும் இரண்டாம் சூத்திரத்தாலும் உணர்க.
——————————————————————————————————
அதற்கிணங்க இப் பெண்கள் தாம் பாடத் தொடங்குதற்குக் காப்பாகக் கூறியதும் வாழ்த்தின் பாற் படுதலறியத்தக்கது . தெருவினின்று யாங்கள் மெல்ல வாழ்த்திய வாழ்த்தொலி சென்று கேட்கப்பட்ட அளவில் என்பார் , வீதிவாய் வாழ்த்திய வாழ்த்தொலி போய்க் கேட்டலும் என்றார் . கேட்டல்—கேட்கப்படுதல் , அமளி—படுக்கை . படுக்கை வன்மையுடையதாக இருப்பின் , அஃது உறக்கத்திற்கு இடையூறாக இடையிடையே விழிப்புண்டாதற்கு ஏதுவாதலுங் கூடும் . இவள் படுக்கை யன்னதன்று ; மிக மெல்லிய பூவிதழ்களால் அமைந்த தென்பார் , “போதாரமளி” எனவும் , அது நன்கு துயிலுதற்கு ஏற்றதாக இருந்தும் வாழ்த்தொலி கேட்டதும் துயிலுணர்ந்தெழுந்தது , இவள் பத்திமையைப் புலப்படுத்துமென்பார் , “அமளியின்மேல் நின்றும் புரண்டு” எனவுங்கூறினர். புரளுதல் – விழிப்புண்டாதற்குத் தொடங்கும் முதற் செயல் . அஃது ஈண்டு இலக்கணச் சொல்லாக நின்று எழுதலைக் குறிக்கும் . எழுந்து , “முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள்” என்றபடி வாழ்த்தொலியைக் கேட்டதும் , அன்பின் மிகுதியால் கண்ணீர் வடியத் தேம்பித் தேம்பி யழலானாள் என்பார் , “விம்மி விம்மி “ யெனவும் , அந்நிலையின் முதிர்ச்சியில் தன்வய மிழந்தனள் என்பார் , “மெய்ம்மறந்து “ எனவும் , மெய்ம்மறந்த நிலையில் உலகியற் செயல்களுள் எதன்கண்ணும் தலைப்படாளாய் இறைவன் திருவடிகளிலுறைத்துக் கிடந்தாள் என்பார் , “ஏதேனுமாகாள் கிடந்தாள்” எனவுங்கூறினர் . ஆகாள் என்பது முற்றெச்சம். இவ்வநுபவம் ,
“முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே “
ஏன்னும் தமிழ்மறைக்கு இலக்காக வுள்ளதென்பது உணர்ந்தின் புறத்தக்கது. “ இங்ஙன்” என்பது இவ்வாறு என்னும் பொருட்டு . இப்பெண்ணை யெழுப்ப இவள் இல்லத்திற்குச் செல்லுதற்கு முன்னரே தெருவில் யாங்கூடிக் கடவுள் வாழ்த்தைக் கூறினேமாக , அம் மெல்லிய வொலியை இவள் கேட்டதும் துயில்நீத்தெழுந்து பத்தியால் உருகி மெய்ம்மறந்து கிடந்தாள் ; இவள் இயல்பு இங்ஙனமாக , எம் தோழியாகிய நின் தன்மை , யாங்கள் நின் இல்லத்து வாயிற்படியில் வந்து உரத்த குரலில் பாடியதைக் கேட்டும் எழாமல் , பொய்யுறக்கங் கொள்ளுதலாகிய இத் தன்மையாகவுள்ளதே ! ஈதென்ன பெருவியப்பு என்பார் , “ஈதேயெந்தோழி பரிசு என்னே யென்னே” யென்றனர் . பரிசு – தன்மை . இறைவன் திருவடியை வாழ்த்திக்கொண்டு சென்ற பெண்கள் வாழ்த்தொலி கேட்ட அளவில் , பத்திவயப்பட்டு உருகி மெய்ம்மறந்து கிடந்தாளை அவள் இல்லத்திற்கண்டு அவளையும் உடனழைத்துக்கொண்டு சென்றனராதலின் , அவளைச் சுட்டி இவள் என்னாது “ஏதேனும் ஆகாள் இங்ஙன் கிடந்தாள்” என்று கூறி முடித்தனர் . தம் குழுவிற் கூடியிருத்தலின் , சுட்டுப்பெயராகிய எழுவாயின்றிச் சுட்டிக் கூறிப்பயனிலையளவில் அவள் செயல் கூறப்பட்டதென்க . இவள் என்னும் சுட்டுப் பெயர் ஈண்டுத் தோன்றா எழுவாயாகும் .
திருப்பாட்டுக்களின் ஈறுதோறும் வரும் “ஏலோரெம்பாவாய்” என்னுந் தொடற்கு எங்கள் பெண்ணே யாங் கூறுவதை யேற்றுக்கொள் ; ஆராய்ந்துபார் என்று பொருள்கூறி எழுப்பப்படுபவள் மேலேற்றி விளியாகவும் ஏவலாகவும் கூறுதல் ஈண்டும் , இன்னுஞ்சில திருப்பாட்டுக்களில் கன்னி யொருத்தியை முன்னிலைப்படுத்திக்கூறும் இடங்களிலும் பொருந்தும் . ஆயினும் , எல்லாத் திருப்பாட்டுக்களிலும் பொருள் முடிபோடு இயைவதன்று . கன்னிப்பெண்களைத் தனித்தனியாகவன்றிக் குழுவாக முன்னிலைப்படுத்தும் , இறைவனையும் மழையையும் முன்னிலைப்படுத்தும் கூறப்பட்டிருத்தலின் பொருள் முடிவும் அவற்றோடியைய ஆங்காங்கு வேறாகக் கொள்ளல் வேண்டும் . ஆதலின் , இறுதிதோறுமுள்ள “ஏலோரெம்பாவாய்” என்புழி ஏழும் ஓரும் அசையெனவும் , எம்பாவாய் என்பது நோன்பிற்கு அதிட்டான தெய்வமாகிய பார்வதி தேவியை அடிக்கடி நினைவு கூர்தற்குரிய நன்மொழி யெனவுங் கொள்ளல் வேண்டும், சிலப்பதிகாரம் 29 – வது வாழ்த்துக்காதையில் “வீங்குநீர் வேலி” என்பது முதலியவற்றின் ஈற்றில் “பாடேலோர் அம்மானை “ என்புழி, ” ஏலும் ஓரும் அசை” என்று அரும்பதவுரையாசிரியர் கூறியிருத்தலும் அறிக. மகளிர் மேற்கொண்ட நோன்பு பாவை நோன்பு ஆதலின் அதற்கேற்ப அப்பெயராலே யொருவரை யொருவர் விளிகொள்ளலானாரென்பதும் ஆம் . பெண்கள் விளையாட்டு நிகழ்ச்சியில் தம் இயற்பெயரைவிட்டு விளையாட்டிற்குரிய பெயரையிட்டு வழங்குதலை உலகியலிற் காணலாம். திருவம்மானை முதலிய வற்றிலும் இவ்வாறு வழங்கப்பட்டிருத்தல் காண்க. ஆகவே ஏலோரெம்பாவாயென்பது , இனிய ஓசையுடையதாய் மேற்கொண்ட நோன்பிற்குரிய தெய்வ மந்திமாக விளங்கும் அடிநிறைவென்பது புலனாம். எல்லாத் திருப்பாட்டுக்களுக்கும் இஃதொக்கும் . இத் திருப்பாட்டில் கூறப்பட்ட முத்திறத்துக் கன்னியருள் , வாழ்த்தொலி கேட்ட துணையானே மெய்ம்மறந்து கிடந்தவள் தலையன்பினளென்பதும் , இறைவனைப் பாடித் துயிலுணர்த்த முற்பட்டவர் இடையன்பினரென்பதும் துயிலுணர்த்தியும் படுக்கையினின்று எழாமற் கிடந்தவள் கடையன்பினள் என்பதும் புலப்படலால் தலை யிடை கடையாய முத்திறத்துப் பக்குவமடைய உயிர்களின் இயல்பு இதனால் தெளிவிக்கப்பட்டபடியாம் .
இதன்கண் “ மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்து” என்றதனால் சத்தியை வியந்தது என்னும் உள்ளுரை குறிப்பிற் புலப்பட வைத்தவாறாம் . என்னை ? இறவன் திருவடி இறையருளாகிய சிவசத்தியைக் குறிக்குமாதலின் , திருவடி வாழ்த்துச் சத்தியை வாழ்த்தியதாகு மென்பது . சிவசத்தியாகிய பராசத்தியை அருளுருவினளெனச் சைவ நூல் கூறும் . “அருளது சத்தியாகும் அரன்றனக்கு” என்பது சிவஞானசித்தி. இறைவன் திருவடியை இறயருளாகிய சிவசத்தியென்று சிவஞானபோத மாபாடியங் கூறும் . இதனைச் சிவஞானபோதம் ஆறாம் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில் “எண்ணிய சத்தன்றசத்தன்றாம்” என்னும் திருவெண்பாவின் “அறிவறியாமெய்சிவன் தாளாம் “ என்னும் ஈற்றடியானும் , அதற்கு “அறிவினாலறியப்படாத மெய்ப்பொருள்……அநுபவமாத்திரையில் கோசரிப்பதென்று ஓதப்படும் சிவன்தாளாம் “ எனவும் , “பெயர் நிலைக் கிளவியின் அஅகு நவும் “ என்றது ஒத்தாகலின் , சிவன்தாள் எனச் சிவசத்தியின் மேல் வைத்து உயர்த்துக்கூறினர். “இறைவனார் கமலபாதம் என்பதும் அது “ எனவுங் கூறிய மாபாடிய வுரையானும் உணர்க . வரும் திருப்பாட்டுக்களுள் இறைவன் திருவடிக் குறிப்புப் பற்றி உள்ளுறை கூறப்படும் இடங்களுக்கும் இஃது ஒக்குமென்பது .
பாடல் 2
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
யேசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் , மற்றமனங்கழிய நின்ற இறைவன் திருவடியை வரையறைப் படுத்துக் கூறல் இயலாத தொன்றாயினும், இயன்றாங்கு வாழ்த்துதல் வாழ்த்து வோரையும் கேட்போரையும் இறையன்பில் ஈடுபடுத்தும் ஆதலின், அஃது உயிர்களால் மேற்கொள்ளத்தக்கது என்பது புலப்படக்கூறியருளிய அடிகள் , இத்திருப்பாட்டில் அதற்கு ஏதுவாக அத் திருவடியின் அருமையிலெளிய அழகை யருளிச் செய்கின்றார் . “விண்ணோர்களேத்துதற்குக் கூசுமலர்ப்பாதம் “ என்றதனால் அருமையும் “தந்தருள வந்தருளும் “ என்றதனால் எளிமையும் புலப்பட வைத்தவாறறிக .
பதவுரை:- நேர் இழையாய் = தகுதியான அணிகலன்களையுடைய பெண்ணே,
நாம் பேசும்போது எப்போதும் = நாம் உரையாடும் பொழுதெல்லாம்,
இரா பகல் பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் = இரவும் பகலும் என் அன்பு மேலான ஒளிப்பிழம்பாக உள்ள இறைவன் பொருட்டே நிகழும் என்று கூறுவாய்,
இப்போது ஆர் அமளிக்கு நேசமும் வைத்தனையோ ;-
இப்பொழுது மலர் நிறைந்த இப் படுக்கையின் பொருட்டும் அன்பு வைத்தனையோ (என்று இவ்வாறு துயிலுணர்த்த வந்த பெண்கள் கூறக்கேட்ட அப்பெண் கூறுவாள் )
நேரிழையீர் :- தகுதியான அணிகலன்களையுடையாய்
சீசி இவையும் சிலவோ ;- சீச்சீ நும் வாக்கில் இங்ஙனம் எள்ளிக் கூறுஞ்சில சொற்களும் சில வுள்ளனவோ,
விளையாடி ஏசும் இடம் ஈதோ :- விளையாட்டு முகமாகப் பழித்துரைத்தற்கு உரிய காலமும் இதுவா? (என்று கூறக்கேட்ட அம்மகளிர் கூறுகின்றார்கள்),
விண்ணோர்கள் ஏத்துதற்குத் தந்தருளக் கூசு மலர்ப்பாதம் :-
தேவர்கள் புகழ்ந்து பாராட்டுதற்பொருட்டுத் தருதற்கு நாணும் மலர் போன்ற திருவடிகளை
தந்தருள வந்தருளும் தேசன் :- எளியேம் பொருட்டுத் தருதற்கு இந் நிலவுலகத்தில் எழுந்தருளி வந்த ஞானாசிரியனும்,
சிவலோகன் :- சிவலோக நாயகனும்,
தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு :- தில்லைத்தலத்தின் கண் உள்ள திருச்சிற்றம்பலத்தின் கண்ணே ஈசனும் ஆகிய பெருமான் பொருட்டுச் செய்யப்படும் ,
அன்பு ஆர் யாம் ஆர் :- அன்பு எத்தகையது ; யாம் எத்தகையோம் ? என்பது .
விளக்கவுரை:- முன்னர்த் துயிலுணர்ந்து வந்தவரும் , உணர்த்தப்பட்டு எழுந்தவளும் ஆகிய பெண்கள் எல்லோரும் ஒருங்குகூடி மற்றொரு கன்னியின் இல்லத்தைச் சார்ந்து அவளியல்பு கூறி யெழுப்புகின்றனர் , இவ்வாறே எட்டாந் திருப்பாட்டு வரை எழுப்பப்பட்டவர் இறுதியில் எழுந்து எழுப்பியவரோடு கூடிப் பிரிதோர் இல்லத்தைச் சார்ந்து மற்றொரு கன்னியை எழுப்பியதாகக் கொள்ளல் வேண்டும். நேரிழை = தகுதியான அணிகலன், ஈண்டுத் தகுதி கன்னிமைக்குரியதாகும் . இது நேரிழையீர் என்பதற்கும் ஒக்கும். பேசும்போது என்பது உரையாடும் ஒரு காலத்தையும், எப்போதும் என்பது, எத்தனை முறை யுரையாட வாய்ப்பினும் அப்பொழுதெல்லாம் என அக்காலப் பன்மையையும் குறிப்பினவாம் . எப்போதும் என்புழி உம்மை விகாரத்தாற்றொக்கது. பாசம் = பத்தி , உடலோம் புதற் பொருட்டு உறங்குதற்குரிய இரவிலும் உண்டல் முதலிய செயல்களுக்குரிய பகலிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இறைவனை நினைந்து பத்தி செய்தலே கடமையாக மேற்கொள்ளப்பட்டது என்பது தோன்ற நாள் முழுது மென்னாது இராப்பகலென்றனர். இராப்பகல் என்புழி எண்ணுமைகள் தொக்கு நின்றனர் . பகல் முழுதும் உழைத்து இரவில் அவ் வுழைப்பினாலுண்டாகிய இளைப்பை யொழித்தற்குத் துயிலுதல் இயல்பாகவும் அவ்விரவிலும் இளைப்பாறுதலின்றி உழைக்கலானேன் என்னுங் கருத்துத் தோன்ற, இராப்பகலாக வுழைத்தேன் என்று உலகியலிற் கூறுதல் போல. அன்பு வழிபாடு செய்தற்குரிய பகலிலன்றி இளைப்பாறுதலுக் குரிய இரவிலும் பத்திமையுடையேன் என்று கூறுவாய் என்பார் . பகலும் இரவும் என்னாது “இராப்பக” லென இரவை முற்கூறினர். அமளிக்கே என்புழி ஏகாரத்தைப்பிரித்துப் பரஞ்சோதிக்கு என்பதனோடு கூட்டுக ; இறைவனுக்கன்றி வேறு எப்பொருளிலும் பற்றில்லையென்பது தோன்ற நிற்றலின் ஈண்டு ஏகாரம் தேற்றப்பொருட்டு என்பாய் – என்று கூறுவாய். என்பாய் என்பதற்கு எலும்பாகக் கரையுமாறு எனப்பொருள் கூறுவாருமுளர். முன்னும் பின்னும் உள்ள சொற்களால் பொருட்டொடர்பு சிறவாமையின் அது பொருளன்று இப்போதரமளி என்புழி இகரச்சுட்டு அணிமையையுணர்த்து மாதலின் துயிலெழுப்ப வந்தவர் எழுப்பப்படுபவளின் அருகில் நின்று கூறினரென்பது புலனாகும். போது – மலர் , போதாரமளியென்றது. நேசம் வைத்தற்கு ஏதுக் கூறியபடியாம் . நேசமும் என்புழி உம்மையைப் பிரித்து அமளிக்கு என்பதனோடு இயைக்க. இறைவனிடத்தன்றிப் படுக்கைக்கும் பத்தி பூண்டனையோ என்பது பெறப்படுதலின் உம்மை ஈண்டு எச்சப்பொருட்டாம்.
பாசம் பரஞ்சோதிக்கு எனச் சொல்லளவிற் கூறிச் செயலளவில் படுக்கைக்கண்ணே வைக்கப்பட்டது போலும் என்பார் “என்பாய்” எனவும் “வைத்தனையோ” எனவுங் கூறினரென்க இஃது “அறங்கூறான் அல்ல செயினும் “ என்பது போல நின்றது .
அறமென்று சொல்லுவதுஞ் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும் “ என்பது அத்தொடரின் பொருள் . வைத்தனையோ என்புழி ஓகாரம் வினாப் பொருட்டு. துயிலுணர்த்திய காலம் இரவின் இறுதியும் பகலின் தொடக்கமுமாகிய வைகறைப் பொழுதாகலானும் அஃது இரவும் பகலுமாகிய காலக் கூறு இரண்டையும் பற்றி நிற்றலானும், இறைவனை நினைந்து பத்தி செய்தற்குரிய இந்நேரத்தில் துயில் நீத்தெழாத நீ “இராப் பகல் பாசம் பரஞ்சோதிக்கு “ என்று கூறியது எத்துணை யுண்மையாகுமென்று கூறி நகையாடியபடியாம். “வைகறைத் துயிலெழு” என்பதற்கு மாறுபட அக்காலத்து உறங்குதல் இரவும் பகலும் தூங்கியதாகுமென்பது கருத்து .
இவ்வாறு எழுப்பிய பெண்கள் கூறக்கேட்டுத் துயிலுணர்ந்து எழுந்தவள் கூறுகின்றாள். தோழிகாள்! நும் செயல் இகழத்தக்கது என்பாள் “சீசி” எனவும் , இறைவன் திருப்புகழைப் பாடுதற்குரிய தூய்மையுள்ள நும் வாயில் இங்ஙனம் எள்ளிக் கூறுதலாகிய இழிசொற்களும் உள்ளனவோ வென்பாள் “இவையுஞ்சிலவோ” எனவும் கூறினள் . இவையும் என்புழி உம்மை இழிவு சிறப்பு . “அமளிக்கு நேசமும் வைத்தனையோ” என்னும் வினாவால் வைத்திருக்கமாட்டா யென்பது எம் உட்கோளாகும் . ஆதலின் இவ்வாறு வினாவியது இகழ்ந்துரைத்தலாகாது ; விளையாட்டாகக் கூறியதாகும் என்றார்க்கு விடையாக “விளையாடியேசுமிடம் ஈதோ” என்றாளென்க. இடம் ஈண்டுக்காலத்தின் மேற்று . ஆண்டவன் திருப்புகழைப்பாடி உள்ளமுருக வேண்டிய இவ்வமயத்தில் ஒருவரையொருவர் இகழ்ந்து கூறி விளையாடுதல் தக்கதன்று என்பது கருத்து. இனி “நாம் பேசும்போது எப்போது “ என்பதற்கு நாம் பாராட்டிப்பேசுங்காலம் அதற்குரிய வைகறைப் பொழுதன்றி வேறு எப்பொழுதாகும் எனக்கூறினார் எனக்கொண்டு அதற்கு மாற்றமாக நீயிர் விளையாடி எள்ளிக் கூறுங்காலம் இதுதானா என்றாளெனக் கூறினுமாம் . இங்ஙனம் எழுப்பப்பட்டவள் கூறினாளாக , அதற்கு மாற்றமாக எழுப்பிய கன்னியர் பின்னுங் கூறுகின்றனர் . “விண்ணோர்கள் ஏத்துதற்குத் தந்தருளக் கூசுமலர்ப்பாதம் “ எனத் தந்தருள வென்பதையீண்டும் இயைக்க . கூசுதல் = நாணுதல் , அஃது ஈண்டுத் திருவுள்ளம் உடன் படாமையைக் குறிக்கும் . “பொக்க மிக்கவர் பூவு நீருங்கண்டு, நக்கு நிற்பன் அவர்தமை நாணியே” என்புழி நாணுதல் அப் பொருட்டாதலறிக. தேவர்கள் புண்ணியப் பயனுகர்வோர் ஆயினும் “வாழ்த்துவதும் வானவர்கள்தாம் வாழ்வான்” என்றபடி அவர் ஏத்துதல் மேன் மேலும் தம் போகநுகர்ச்சி கருதி யென்பது வெளிப்படுதலின் அவர்க்குத் தன் திருவடியைத் தந்தருள இறைவனுக்குத் திருவுள்ளமின்றென்பது கருத்து . நல்வினைப் பயனால் உயர்ந்த தேவர்கள் தன் அணிமையில் வந்து பல்கால் வேண்டவும் அவர்க்குத் தந்தருள உடன்படாத தன் திருவடிகளை, நல்வினை தீவினைப்பயன் இரண்டனாலும் பிணிப்புண்ட மக்கட் பிறப்புடைய சிருமியராகிய நம் பொருட்டு எளிமையில் தந்தருள நாம் இருக்கும் இடத்தில் வந்து காட்சியளிக்கும் வண்மைக் குணமிக்க ஒளிப்பிழம்பாகவுள்ளவன் என்பார். “விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளுந் தேசன்” என்றார் . தேவர்கள் சென்று பாராட்டியும் பெறுதற்கரிய தன் திருவடிகளை மானுடப்பெண்கள் எழுதிற்பெற இறைவன் வந்தருளினான் என்னும் சிறந்த இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே இராமலிங்க அடிகள்,
ஒருமுடி மேற்பிறை வைத்தோய் அயனரி யொண்மறைதம்
பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
மருமுடி யூரன் தலமேன் மறுப்பவும் வந்ததவன்
திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் றிருவடிக்கே
என்று விளக்கிக் கூறியுள்ளார் .
தேசன் என்பது ஒளிப்பிழம்பாக வுள்ளவன் என்னும் பொருளுடையதாகலின் , இறைவனது சொரூப இலக்கணம் பற்றியும் , சிவலோகன் என்பது தடத்த இலக்கணம் பற்றியும் கூறப்பட்டனவாம் . ஒளிமயமான நிலையும் சிவலோக நாதனாம் நிலையும் நாம் சென்று காண்டற்கு அரியனவாமென்று திருவுளங் கொண்டு இந்நிலவுலகில் தில்லை நகர்க்கண் திருச்சிற்றம்பலம் என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளிக் காட்சிதரும் பெருமான் என்பார் “தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்து ளீசன்“ என்றார் . இங்ஙனம் அருமையிலெளிய அழகு படைத்த சிவபெருமான் பொருட்டு மேற்கொள்ளத்தக்க அன்பு எத்துணை யுயர்ந்தது என்பார் “ஈசனாற்கு அன்பு ஆர் “ எனவும் , அவ்வன்பை மேற்கொள்ளுதற்குரிய அடிமைகளாகிய நாம் எத்தகையோம் (எள்ளி நகையாடும் இயல்பினம் அல்லேம்) என்பார் “யாம் ஆர்“ எனவுங் கூறின ரென்க. அன்பார் என்புழி ஆர் அஃறிணைக்கண் வந்தது . திணை வழுவமைதியாகும் . இனி அன்பார் யாம் ஆர் என்பதற்கு அன்பு நிறைந்த யாம் ஆர் எனக்கொண்டு பொருள் கூறலுமாம் . எழுப்பப்பட்ட பெண் “சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி யேசுமிட மீதோ” என்றதற்கு விடையாக எழுப்பிய கன்னியர் இவ்வாறு கூறினர் என்பது வெறுக்கத்தக்க இழிமொழிகளைக் கூறும் இயல்பு இறை யன்பலீடுபட்ட நம்மனோர் பால் எங்ஙனம் உண்டாம் ? உண்டாகாதென்பதாம் . “ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய, வழுக்கியும் வாயாற் சொலல் “ என்னும் பொருளுரையும் ஈண்டு நினைக்கத்தக்கது.
ஆண்டவனிடத்து எனக்கு அன்புண்டு என்று ஒருவன் வாயளவிற் கூறுதலினும் செயலளவில் மேற்கோடலே சிறந்ததென்பதும் , இறை வழிபாடு செய்தற்குரிய காலத்தை அது செய்யாமல் வேறு நிகழ்ச்சிகளால் கழித்தல் கூடாதென்பதும் , தேவர்க்கும் அரிய இறைவன் அன்பிற்கு எளியனாவன் என்பதும், இறையன்பி லீடுபட்டு ஒழுகுவோர் நிலை என்றும் இழிந்த தாகாதென்பதும் பிறவும் இத் திருப்பாட்டால் புலப்படுக்கப்பட்ட படியாம் ,
இதன்கண் “விண்ணோர்களேத்துதற்குக் கூசுமலர்ப் பாதம் “ என்று திருவடிச் சிறப்புக் கூறப்பட்டது, சத்தியை வியந்ததாகும் . இது பற்றிய விளக்கத்தை முன்னைத் திருப்பாட்டிற் காண்க.
———————————————————-
பாடல் 3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தனா னந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்
கருத்துரை:- முன்னைத் திருப்பாட்டில் இறைவனது அருமையில் எளிய அழகைப் புலப்படுத்தருளிய அடிகள், இத்திருப்பாட்டில் அவ்வருமையில் எளிமை அன்பு செய்வார்க்குப்பயன் படுமுறையைப் புலப்படுத்தத் தொடங்கி முதலில் மொழியால் பாராட்டுதற்குரிய எளிமையை அருளிச் செய்கின்றார்.
பதவுரை:- முத்து அன்ன வெள் நகையாய் = முத்தைப் போன்ற வெள்ளிய பற்களையுடைய பெண்ணே,
முன் :- முன்னைக் காலத்தில்
முன் எழுந்து எதிர் வந்து :- எங்களுக்கு முன்னரே அமளியினின்றும் துயில் நீத்து எழுந்து எம் எதிரே வந்து ,
என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று :- எனக்குத் தந்தை ; இன்ப வடிவினன் ; அழிவற்ற கடவுள் என்று .
அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் :- வாயூறியினிக்கப் பாராட்டியே பேசுவாய் ,
வந்து உன் கடை திறவாய் :- இப்பொழுது எழுந்து வந்து உன் அமளியறையின் வாயிலையாதல் திறக்கின்றாயில்லை, ஈதென்ன? (என்று இவ்வாறு எழுப்பவந்த பெண்கள் கூறக்கேட்ட அப்பெண் எழுந்து வந்து கூறுவாள்)
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர் :- நீவிர் ஆண்டவனிடத்துப் பேரன்புடையீர் ; இறைவனுக்குப் பழமையான அடிமையுடையீர் ; எனக்குத் தோழமையுடையீர் ( அத்தகைய நீவிர் )
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ :-
புதிய தொண்டுடையேம் ஆகிய எம் குற்றத்தை நீக்கி அடிமை கொண்டால் அது தீங்காகுமா? (என்று இவ்வாறு எழுப்பப்பட்டவள் கூறக்கேட்ட எழுப்பிய பெண்கள் கூறுவார்கள்);
நின் அன்புடைமை எதுஓ:- உனது அன்புடைமை வேறெவ் வகையினதோ,
எல்லோம் அறியோமோ :- அதனை யாமெல்லாம் அறிய மாட்டேமா
நம் சிவனை சித்தம் அழகியார் பாடாரோ :- நம் சிவபெருமானைத் தூய
நன்னெஞ்சுடையார் புகழ்ந்து பாடாமலிருப்பாரோ,
எமக்கு இத்தனையும் வேண்டும் :- நின்னையழைக்க வந்த எங்களுக்கு இவ்வளவும் வேண்டியதே என்பது
விளக்கவுரை :- எழுப்பப்படும் பெண் முன்னைக் காலங்களில் தன்னைப் பிறர் எழுப்புதற்கு முன்னரே துயில் நீத்தெழுந்து பல் விளக்கி உடலைத் தூய்மை செய்து கொண்டு திருநீறணிந்து வெளிப்படுவாள் என்னுங் குறிப்புத் தோன்ற “முத்தன்ன வெண்ணகையாய் “ என்று விளித்தனர் . நகை = பல் . உவமையாகிய முத்துக்கு அடையின்றிப் பொருளாகிய நகைக்கு அடையாகப் பொதுத்தன்மையாகிய வெண்மை புணர்க்கப்பட்டது அறிக . பல்லின் தூய்மை கூறவே உபலக்கணத்தால் ஏனை உடற்பகுதிகளின் தூய்மையும் திருநீறணிந்தமையும் கொள்ளப்படுமென்பது . முன் என்பது காலத்தைக்குறிக்கும் . அது கடந்த ஆண்டு மார்கழித்திங்களின் மேலது . அதனை மீண்டும் ஒரு முறையோதி யாம் எழுதற்கு முன்னரே யெனவும் கொள்ளல் வேண்டும் . வந்து எதிரெழுந்து என்பது , எழுந்து எதிர் வந்தென மாற்றியுரைக்கப்பட்டது யாங்கள் இறைவன் புகழைப் பாடிக்கொண்டு நின் இல்லத்தின் வாயிலை அடைதற்கு முன்னரே நீ வாயிலைக் கடந்து திருவீதிக்கண் வந்து எதிர்ப்படுவை யென்பார் “எதிர் வந்து “ என்றனறென்க . வரும்பொழுதே இறைவன் புகழையும் நினக்கு இனியனாதலையும் உளங்கனிந்து வாயில் நீரூறக் கேட்போர் செவிக்கு இனிமையுண்டாகப் பாடிக்கொண்டு வருவாய் என்பார் . “என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் “ என்றனர் .
எல்லா வுயிர்களுக்கும் தந்தையாகவுள்ள இறைவனைக்குறித்து அவன் அன்பர் பலர் ஒருங்கு கூடிப் பேசுங்கால் நம் அத்தன் என்று உளப்படுத்துக் கூறுதலே இயைபுடையதாகும் . இத்திருப்பாட்டில் எழுப்பிய பெண்கள் “நம் சிவனை” என்று பின்னர்க் கூறுதலும் உணர்க. அங்ஙனமாகவும், என் அத்தன் என்று எழுப்பப்பட்டவள் கூற்றாகக் கொண்டு எழுப்பியவர் கூறியது . தம்மினும் சிறப்புரிமை அவளுக்கு உண்டென்பது புலப்படவைத்தற்கென்க . சார்ந்தார்க்கு அழிவிலாப் பேரின்பத்தை அருளும் இன்பவடிவின நாதலின் இறைவனை “ஆனந்தன்” என்றாளென்பது. இறைவன் இன்பவடிவினனாக இருந்தே இன்பத்தை அருள்பவன் என்னும் உண்மையை “ஆனந்தத் தேன் சொரியுங் குனிப்புடையான் “ எனவும் , இன்பமா கடலே” எனவும் எழுந்த திருவாக்குகளான் அறியலாம் . தந்தையின் செல்வம் மக்கட்குரியதென்பது உலகியலிற் கண்டது. அவ்வாறே இறைவனது பேரானந்தப் பெருஞ்செல்வப் பேற்றுக்கு உரிமை தனக்கு உண்டென்பது புலப்பட அத்தன் என்பதற்கு அடுத்து “ஆனந்தன் “ என்றாளென்பது . “அமுதன்” என்றது அழிவில்லாதவன் என்னும் பொருட்டு , உலகியற் பொருள்களால் எய்தும் இன்பம் அழிவுடையதாலின் அன்னவியல்பிற்றன்று இவ்வின்பம் ; என்றும் அழியா இயல்பிற்று என்பது தோன்ற அடுத்து “அமுதன்“ என்றாள் என்பது . “உவப்பிலாவானந்தமாய தேனினைச் சொரிந்து” என்றதனால் இவ்வுண்மை புலனாயவாறறிக .
இங்ஙனம் “என் அத்தன் ஆனந்தன் அமுதன் “ என்று கூறத் தொடங்கும் பொழுதே அச் சொற்களின் இனிமையால் வாயில் நீரூறப் பொருளின் இனிமையால் உளம் இனிக்கப் பாராட்டுவாய் என்பார் “அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்” என்றனர் . “அள்ளூறித்தித்திக்க” என்பதைக் கேட்போர் மேலும் ஏற்றியுரைக்க. இனிய சுவைப் பொருளை நினைப்பினும் காண்பினும் கேட்பினும் வாயில் நீரூறி உள்ளம் இனிக்கும் என்பது உலகியலிலும் கண்டது . அது பேரின்பப் பொருளாகவுள்ள இறையனுபவத்தில் இன்னுஞ் சிறப்பாகத் தோன்றுமென்பது,
“நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும்
அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங்
குனிப்புடையான் “
என்னுந் திருவாக்கான் உணரத்தக்கது இங்ஙனம் முன்னைக் காலத்தில் மார்கழி நீராடுதற்கு யாங்கள் எழுதற்கு முன்னரே துயில் நீத்தெழுந்து உடற்றூய்மை செய்துகொண்டு எம் எதிரே வெளிப்போந்து இறைவன் திருப்புகழை வாயார உளம் இனிக்கப் பாடிக்கொண்டுவரும் இயல்புடைய நீ , இன்று யாம் எழுந்து நின் அமளியறையின் அணிமையில் வந்து எழுப்பவும் எழாமலும் வாயிற்கதவைத் திறவாமலும் இருக்கின்றாய் ஈதென்னை ? என்பார் “தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்” என்றனர் . இவ்வாறு தன்குறை கூறக்கேட்ட பெண் எழுந்து வந்து வாயிலைத் திறந்து எழுப்பிய பெண்களை நோக்கிக் கூறுகின்றாள். பத்துடையீர் என்பது முதலாகப் பொல்லாதோ என்பது வரை அவள் கூற்றாம் என்பது . பத்து = பத்தி “பத்திலனேனும் “ என்புழி அப்பொருட்டாதல் காண்க . இனித் தொண்டர்க்குரிய பத்துச் செயல்களும் உடையீர் என்பதுமாம் . “பத்துக்கொலாம் அடியார் செய்கைதானே” என்பது தமிழ்மறை . இறைவனுக்குத் தொண்டு பூண்டு ஒழுகும் பரம்பரைக் குடியிற் பிறந்தாரும் ஒருபிறப்பில் நெடுநாள் தொண்டு செய்வாரும் பழைய வடியாராவர். ஈசன் என்பது இடைநிலை விளக்காக நின்று ஈரிடத்தும் இயையும். பாங்குடையீர் என்பது எனக்குத் தோழமையுடையீர் என்பதாம் . இம்மூன்று விளிகளும் பின்வரும் வேண்டுகோட் பயனுக்கு ஏதுவாதல் உணர்க . நீவிரோ பழவடியீர்; யானோ புத்தடியேன். எனக்குத் தோழமையுடைய யீராதலின் என்பாலுள்ள பத்தின்மையாகிய குற்றத்தை யொழித்தற்குக் கடமையுடையீர் என்பது தோன்ற “புன்மை தீர்த்து” என்றாளென்க “ஆழிவி னவைனீக்கி யாறுய்த்தல்” என்றபடி நட்டார்க்குற்ற நவையொழித்தல் கடனாமென்பது . “பத்துடையீரீசன் பழவடியீர்” என்பது ஆட்கொள்ளுதற்குரிய தகுதியைக் குறிக்கும். எனக்குத் தோழமை யுடையீராகவும் என் புன்மை தீர்த்து, ஈசன் பழவடியீராகவும் பத்துடையீராகவும் இருத்தலின் புத்தடியேனாகிய என்னை ஆட்கொள்ளுதற்குரியராகவும் , அது செய்யாமை யென்னையோ? தகுதியைப் பயன்படுத்தல் தக்கதாகவும் என்னளவில் செய்தல் தீங்கு என்று ஒழிக்கப்பட்டதோ என்பாள் “பொல்லாதோ” என்றாள் என்பது . ஈண்டுப் புத்தடியோம் எனப் பன்மை கூறியது , தன்னைப்போன்றார் பலரையும் உளப்படுத்தற்கென்க.
இவ்வாறு எழுப்பப்பட்டவள் கூறக்கேட்ட எழுப்பிய பெண்கள் கூறுவர். தோழி! முன்னை நாளில் நின் பத்திமை எம்மினும் பன்மடங்கு முற்பட்டு நிகழ்வதுண்டு. இப்பொழுதோ பிற்பட்டதாக மேற்கொள்ளுகின்றாய் ; ஆதலின் நின் அன்புடைமையின் இயல்புதான் யாதாங்கொல் என்பார் “எத்தோ நின் அன்புடைமை” எனவும் , நின் மெய்யன்பின் பெருமையை யாமெல்லாம் அறிந்துளேமென்பது தோன்ற “எல்லோமறியோமோ “ எனவுங் கூறினறென்பது . நெஞ்சிற்கு அழகு தூய்மை யாதலின் தூய நெஞ்சுடையார் “சித்தமழகியார் “ என்னப்பட்டனர் . மனந் தூயராய்ப் பத்தி நெறியிற்றலைப்பட்டார் உரிய காலத்தில் இறைவன் புகழைப் பாடாமலிரார். நின் அன்புடைமையோ சிறந்தது . இந்நிலையில் எம்மினு முற்பட்டு இறைவன் புகழ் பாடவேண்டிய நீ அது செய்யாமை குறித்தும் தோழமையுரிமை கொண்டும் நின்னை மொழியளவில் குறை கூறலானேம் என்னுங் குறிப்புப் புலப்பட “சித்தமழகியார் பாடாரோ நஞ்சிவனை” யென்றனரென்பது . பத்திமையில் எம்மினுஞ் சிறந்த நின்னைத் தோழமையுரிமை பற்றிக்கூறிய சிறு குறை காரணமாக “பத்துடையீரீசன் பழவடியீர் பாங்குடையீர்” முதலிய சொற்களாற் குறிப்பில் பரிகசித்தனை ; அன்பு நெறியில் வழுவிய எமக்கு இப்பரிகாசச் சொற்கள் எல்லாம் பொருத்தமானவைகளே என்பார் “இத்தனையும் வேண்டும் எமக்கு” என்றாரென்பது .
“ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயார் சொலல்” என்னும்
பொருளுரைப்படி நல்லன மொழியும் நாநலமுடையார் எக்காரணத்தாலும் தீயன மொழிதலாகதென்பது இத் திருப்பாட்டற் புலப்படுக்கப்பட்ட படியாம்.
இதன்கண் “அத்தன் ஆனந்தன் “ என்புழி அன்னையுடனாய அத்தன் என்பது பெறப்படும் . “அன்னையு மத்தனுமாவாயழல்வணா நீயலையோ” என்னும் தமிழ் மறையும் கருதத்தக்கது . இதனால் சத்தியை வியந்தது குறிப்பிற் பெறப்படும் . தாயுமானவர் என்னும் திருப்பெயரும் இக் குறிப்பினதே.
——————————————
பாடல் 4 .
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியா ரெல்லாம் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்
கருத்துரை:- முன்னைத் திருப்பாட்டில் இறைவனது அருமையில் எளிய அழகிலே மொழியாற் பாராட்டுதற்குரிய எளிமையைப் பெண்மக்கள் மொழி மூலம் புலப்பட அருளிச் செய்த அடிகள், இத்திருப்பாட்டில் நெஞ்சத்தால் நினைந்து உருகுதலாகிய எளிமையை அவ்வாறே அருளிச் செய்கின்றார்.
பதவுரை:-
ஒள் நித்திலம் நகையாய் = ஒளி பொருந்திய முத்துப்போன்ற பற்களையுடைய பெண்ணே,
இன்னம் புலர்ந்தின்றோ = இன்னும் விடியவில்லையா, (எழுப்பவந்த பெண்கள் இவ்வாறு கூறக்கேட்டு எழுப்பப்பட்டவள் படுக்கையிற் கிடந்தவாறே மாற்றம் உரைக்கின்றாள்)
வண்ணம் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ = அழகிய கிளியினது மொழி போன்ற மொழியினையுடைய பெண்கள் எல்லாரும் இங்கு வந்தனரா?; (என்று இவ்வாறு கூறக்கேட்டு எழுப்பவந்தவர் பின்வருமாறு கூறுவாராயினர்)
உள்ளவா எண்ணிக்கொடு சொல்லுகோம் = வந்தாரைக் கணக்கிட்டு உள்ளவாறு எண்ணித் தெரிவிப்போம் ,
அவ் அளவும் = கணக்கிட்டுத் தெரிவிக்கும் அத்துணை நேரமளவும் ,
கண்ணைத் துயின்று = நின்கண்களைத் துயில் வித்து ,
காலத்தை அவமே போக்காது = இறைவன் புகழைப் பாடுதற்குரிய காலத்தை வீணாகக் கழியாமல் ,
விண்ணுக்கு ஒரு மருந்தை = தேவர்களுக்கு ஒப்பற்ற அமிழ்தமாக உள்ளவனும் , வேத விழுப்பொருளை மறையாகமங்களின் சிறந்த பொருளாக உள்ளவனும் ,
கண்ணுக்கு இனியானை = காண்பவர்கள் கண்களுக்கு இனிய காட்சியளிப்பவனும் ஆகிய சிவபெருமானை,
பாடி = புகழ்ந்து பாடி ,
உள்ளம் நின்று உள் நெக்கு கசிந்து உருக = நெஞ்சம் அசைவற்று நிற்ப உள்ளே நெகிழ்ந்து கசிந்து உருகுவாயாக (என்று இவ்வாறு எழுப்பிய பெண்கள் கூறக்கேட்டும் எழுப்பப்பட்டவள் படுக்கையினின்றும் எழாமல் துயிலும் நிலையில் கிடத்தலைக் கண்டு பின்னருங் கூறுவர்)
யாம் மாட்டோம் = வந்தாரைக் கணக்கிட்டு எண்ணிக் கூறுவதற்கு யாம் இசையோம் ,
நீயே வந்து = நீயே எழுந்து வந்து ,
எண்ணி குறையில் துயில் = கணக்கிட்டெண்ணிக் குறைவு காணப்படுமாயின் மீண்டும் துயில்வாயாக என்பது.
விளக்கவுரை :- மிக்க தூக்கமுடையாளாய்த் தன்னை மறந்து படுக்கையிற் கிடக்கும் ஒருத்தியை , எழுப்ப வந்த பெண்கள் பார்க்குங்கால் , அவள் வாயைச் சிறிது திறந்து பற்கள் வெளிப்படக்கிடந்த நிலையைக்கண்டு “ஒண்ணித்திலநகையாய்” என்று விளித்தனர் என்க . இதன் முன்னைத் திருப்பாட்டில் கூறப்பட்ட பெண்ணை விளிக்குங்கால் , அவள் பண்டை நிகழ்ச்சியைக் குறிக்கொண்டு , பல்விளக்கி நீராடி உடற்றூய்மையுடையளாம் இயல்பு குறித்து உவமைக்கு அடையின்றிப் பொருளுக்கு அடைபுணர்ந்து “முத்தன்ன வெண்ணகையாய்” என்று விளித்தனர் . இதன்கண் பல்லின் இயற்கை நிறம் காணப்பட்டமையால் பல் விளக்குதல் முதலிய தூய்மை யின்மை தோன்ற உவமைக்கு ஒளியுடைமையாகிய அடையைக் கூறிப் பொருளுக்கு ஏதும் அடைபுணர்க்காமற் கூறி விளித்தனர் என்க.
புலர்தல் – விடிதல் . இன்னும் விடியவில்லையோ என்ற குறிப்பு இருணீங்கி விடியும் நிலையிலும் மிக்க உறக்கத்திற் கிடைத்தலைப் புலப்படுப்பதாகும் . புலர்ந்ததின்று என்பது விகாரத்தால் புலர்ந்தின்று என்றாயிற்று. ஓகாரம் வினாப்பொருட்டு; எதிர்மறையுமாம். இவ்வாறு கூறிய அளவில் படுக்கையிற் கிடந்தவள் எழாமல் கிடந்தவாறே வந்தவர்களை நோக்கி என்னை எழுப்ப இத்துணைப்பேர் வருவோமென்று சொன்னீர்களே அத்துணைப் பெண்களும் வந்துவிட்டார்களோ என்பாள் “எல்லாரும் வந்தாரோ” என்றாள் என்க . இவ்வினா மீண்டும் துயிலுதலின் விருப்பத்தைப் புலப்படுத்துவதாகும் . எழுப்பியவர் பேச்சு எழுப்பப்பட்டவளுக்குக் கடுமொழியாக இருந்தமையால் அவள் “என் தோழிமாராகிய நும்முள் இனிமையாகப் பேசுவாரு முளரே அன்னார் இக்குழுவில் இலரோ” என்பாள் “வண்ணக்கிளிமொழியார் “ என்றாள் என்பது . வண்ணம் மகளிர்க்கும் பொருந்துவதாகும் . அழகுடையவர் என்றது , “இலங்கெழிலளவு குணமெனவுரைப்பர் “ என்றபடி நற்குணங்களையும் புலப்படுத்துங் குறிப்பாகும் . ஆகவே நற்குணங்களும் இனியன மொழிதலுமுடையார் இக்கூட்டத்திற் கலந்திலர் என்பது வினாவின் குறிப்பாகும் . இவ்வாறு வினவிய பெண்ணின் இயல்பு உணர்ந்து அவளுக்குத் தக்கவாறு எழுப்பியவர் விடை கூறுவாராயினர் . யாம் முதலில் எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டு பின்னர் நினக்குத் தெரிவிப்போம் என்பார் “எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம்” என்றனர். .
“ கொண்டு “ என்னும் துணைவினை “கொடு” என்றாயிற்று. வரவேண்டியவரெல்லோரும் குறைவற வந்தனர் ஆயினும் வரையறுத்து வினவும் நினக்கு விடையிறுக்க எண்ணிக்கொண்டு தெரிவிப்பதே நலம் என்று அவர் கருதினர் என்பது வந்தவர் தம்மவரை எண்ணிக் கணக்கிட்டாலும் சொல்லுதலில் தவறின்றாமோ என்னும் ஐயந்தோன்று மாதலின், அதனைப் பரிகரிக்க உள்ளவா சொல்லுகோம் என்றனர் என்க ., “உள்ளவாறு “ என்பது விகாரத்தால் உள்ளவா என்றாயிற்று . எண்ணிக்கணக்கிட்டுச் சொல்லும் அத்துணைக்காலம் வரையும் நீ பொய்யுறக்கங்கொண்டு இறைவன் புகழ் பாடுதற்குரிய இவ் அருமைக் காலத்தைப் பயனின்றிக் கழித்தல் ஆகாதென்பார் , “அவ்வுளவுங் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காது “ என்றனர் என்பது . “கண்ணைத்துயின்று என்புழித்துயில்வித்து எனப் பிறவினையாகக்கோடல் வேண்டும் . பொய்யுறக்கங் கொண்டு என்பது கருத்து.
அவம் – வீண். “போக்காதே” என்புழி ஏகாரம் அசை . போக்காது என்னும் எச்சம் “கசிந்துருக” என்பதைக்கொண்டு முடியும் . அக்காலத்தை வீணாக்காமல் செய்யத்தக்கன என்னை யென்பதற்கு விடையாக இறைவனைப் பாடியுருக வேண்டுமென்றனர்.
“ விண்” ஆகு பெயர் . பாற்கடலில் தோன்றிய அமுதம் தன்னை உண்டார்க்குச் சிற்றின்பத்தை விளைவிப்பதோடு இறப்பைத் தடை செய்யும் ஆற்றலின்மையும் உடையது . இறைவனாகிய அமிர்தம் பேரின்பம் விளைத்தலோடு மரணமிலாப் பெருவாழ்வில் வாழச்செய்யும் இயல்புடையது. அதனால் “விண்ணுக்கு ஒரு மருந்து” என்றார் . மேலும் பாற்கடலில் தோன்றிய அமிழ்தம் நஞ்சுடன் தோன்றிற்றாக, அந்நஞ்சை அதன் குணம் வெளிப்படாவாறு தன்னுளடக்கி இன்பம் செய்யும் அமிழ்தமாக இறைவன் விளங்குதலின் “ஒரு மருந்து” என்றார் எனினுமாம். “அடியாராம் இமையவர்தங் கூட்டமுய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே” என்பர் சேக்கிழார். மறைகளின் இதயத்தானத்தில் விளங்கும் மந்திரப் பொருளாவான் இறைவனே யென்பது புலப்பட “வேதவிழுப்பொருளை” யென்றார்.
“மும்மறையுள் நடுமறையின் முனிவிலெழு காண்டத்தில்
செம்மைதரு நடுக்காண்டஞ் சேர்ந்தவெழு சங்கிதையில்
அம்மநடுச் சங்கிதையின் ஆதியீ றொழித்துநடுப்
பொம்மலுற அமர்மனுவின் பொருளாவான் எவன்மைந்த”
என்பதனாலும் இவ்வுண்மை தெளிக. இச்செய்யுளில் மனுமந்திரம் ; சிவாயநம; என்பது . ஈண்டு வேதமென்றது சிவாகமங்களையும் குறிக்கும். “யாம் வேத சிவாகமங்களுக்கு வேறுபாடு கண்டிலம் ; வேதமே சிவாகமம்” என்னும் பெரியார் உரையானுமுணர்க. வேதங்களில் சிறப்பிடங்களிலும் சிவாகமங்களில் யாண்டும் சிவபரத்துவம் கூறியிருத்தல் தெளிவாம் .
விண்ணுக்கு ஒரு மருந்தாகவுள்ள இறைவன் மண்ணுலகத்தவர்க்கு அபர ஞானமாகிய நூலறிவானும் பரஞானமாகிய அநுபவ அறிவானும் உணரத்தக்கவன் என்பது புலப்பட “வேத விழுப்பொருளை” என்பதை அடுத்து “கண்ணுக் கினியானை” என்றனர் என்க. கண் அகக்கண்ணும் புறக்கண்ணுமாகும் . இறைவன் திருவுருவத்தைப் புறக்கண்ணாகிய முகக்கண்ணாற் காண்டலினும் அகக்கண்ணாற் காண்டல் சிறந்தது என்ப. “முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்திற் கண்கொண்டு காண்பதே யானந்தம்” என்பது திருமந்திரம் . அகப்புறக் காட்சிகளுக்கு இனியனாதல் அன்பானினை வாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு தோன்றுதலானும் மக்களுருவில் ஞானாசிரியனாக எழுந்தருளிக் காட்சியளித்தலானுமாம் . வேத விழுப்பொருள் என்பது அபார ஞானத்தால் உணரத்தக்கவன் என்பதையும் கண்ணுக்கினியான் என்பது பரஞானத்தால் உணரத்தக்கவன் என்பதையும் புலப்படுப்பனவாம் . வேத விழுப்பொருளை என்பதற்கேற்ப அப்பெருமானை என்ற முதலிய புகழ்ப்பாடல்களால் பாடவேண்டுமெனவும் , கண்ணுக் கினியானை என்றதற்கேற்ப, கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக வேண்டுமெனவும் கூறப்பட்டன. உள்ளம் நின்று உள்நெக்கு கசிந்து உருகவென்று இயைத்துப் பொருள் கொள்க. உள்ளம் அலையாமல் நிற்ப இறைவனை நினைந்து உள்ளே நெகிழ்ந்து கசிந்து உருகவேண்டும் என்பது கருத்து . நிற்பவென்பது நின்று எனத் திரிந்து நின்றது.
முதலில் உள்ளம் புறச்செயல்களைப் பற்றாமல் அசைவற்று நிற்றல் வேண்டுமென்பதும், பின் இறையுருவில் ஈடுபட்டு உட்கசிவுண்டாக நெகிழ்ந்து உருகவேண்டும் என்பதும் புலனாயவாறு அறிக . உருகுக என்பது உருக என்றாயிற்று. உருகு என்னும் பகுதியில் வியங்கோளீறாகிய அகரம் தனக்குப் பற்றுக்கோடாகிய மொய்யைவிட்டு இயைந்து உருக வென்றாயிற்றென்பது அகரம் வியங்கோளீறாக வரும் என்பதைத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்து வினையியல் 29 -ஆம் சூத்திர உரையில் “எழுத்தோத்தினுள் ‘ ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்’ (எழு-210) (என அகரவீற்றுள் எடுத்தலாற் பொருந்திய மெய்யூர்ந்து அகர வீறாக வருதலும் “ என்று சேனாவரையர் கூறிய வுரையானும் , தொல்காப்பியப் பொருளதிகாரத்து, “அவளறிவுறுத்துப் பின்வர வென்றலும் “ (தொல் – பொருள் சூ. 114) என்னும் சூத்திரப் பகுதியிலுள்ள “பின்வர” என்றதற்குப் “பின்னர் வருக “ என்று நச்சினார்க்கினியர் கூறியவுரையானும் அறிக.
இவ்வாறு எழுப்பிய பெண்கள் கூறக் கேட்டும் எழுப்பப்பட்டவள் படுக்கையினின்றும் எழாமல் கிடத்தலைக் கண்டு , முன்னர்க்கூறியபடி வந்தவர்கள் யெண்ணிக்கணக்கிடும் வேலையை யாங்கள் செய்யமாட்டோம் என்பார் “யாமாட்டோம்” என்றனர் . இறைவன் புகழ்பாடும் இக்காலத்தில் யாம் கணக்கிடும் வேலையில் தலைப்படுங்கால் அத்துணை நேரமும் வீணாகாமல் நீ உறக்கத்தினின்று எழுந்து இறைவன் புகழைப்பாடி உருகவேண்டும் என்று கூறினாராக , கிடந்தவள் அவ்வாறு செய்யாமல் மீண்டும் உறங்கும் நிலையிற் கிடத்தலை அறிந்து இந்நற்காலத்தை யாமும் வீணாக்குதல் கூடாதென்று கருதி யாம் எண்ணும் வேலையைச் செய்ய மாட்டோம் , நீ இறை புகழ் பாடாவிட்டாலும் எண்ணிக் கணக்கிடும் வேலையையாவது செய்யவேண்டும் என்பார் “யாமாட்டோம் நீயே வந்து எண்ணி” எனவும்; எண்ணுங்கால் வரவேண்டிய பெண்களுள் குறைவு நேருமாயின் பின் நீ விரும்பியபடியே உறங்கலாமென்பார் , “குறையில் துயில்” எனவுங் கூறினர் . குறை நேர்ந்தால் மீண்டும் உறங்குவாயாக வென்று கூறிய நயம் உணர்ந்து இன்புறத்தக்கது.
இனி, இத் திருப்பாட்டிற்கு எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் ; அத்துணைக்காலம் வரை சிவபெருமானைப் பாடி உள்ளம் கசிந்துருக எமக்கு இயலாதாகும் . ஆதலின் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காமல் நீயே எழுந்து வந்து எண்ணிக் குறையில் துயில் , என இயைத்துப் பொருள் கோடலும் ஒன்று . இவ்வாறு கொள்ளுங்கால் உருக என்பது எச்சமாய் நின்று யாம்மாட்டோம் என்பதைக் கொண்டு முடியும் .
இதன்கண் “கண்ணுக் கினியானை “ என்றதனால் இறைவனுக்குத் திருமேனி யுண்டென்பது புலப்படுக்கப் படுதலின் , அத் திருவுருவுக்கு இடனாகிய சத்தியை வியந்தது பெறப்படும் . “ காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால்” என்பது சிவஞானசத்தி .
பாடல் 5.
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோல மிடினும் உணரா யுணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்
கருத்துரை:- முன்னைத் திருப்பாட்டில் இறைவனது அருமையில் எளிய அழகில் , நெஞ்சத்தால் நினைந்து உருகுதலாகிய எளிமையைப் பெண்மக்கள் வாயிலாகப் புலப்படுத்திருளிய அடிகள் , இத்திருப்பாட்டில் அப் பெருமான் திருமேனியில் தம் கண்கள் ஈடுபட்டு இன்புறும் எளிமையை அவ்வாறே அருளிச்செய்தனர்.
பதவுரை: – மால் அறியா நான்முகனும் காணா மலையினை =
திருமாலால் அறியப்படாத அடியினையும் பிரமனால் காணப்படாத முடியினையுமுடைய மலையுருவாய் நின்ற இறைவனை ,
நாம் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே = நாம் உணர்வோம் என்று இவ்வாறு உளவாகிய பொய்களையே,
ஊறு பால் தேன்போல் பேசும் வாய் படிறீ = சுரக்கின்ற பாலையும் தேனையும் போல் இனிமை தோன்றப் பேசும் வாயினையுடைய வஞ்சகி,
கடை திறவாய் = கடைவாயிலைத் திறப்பாயாக,
ஞாலமே விண்ணே பிறவே அறிவு அரியான் = நிலவுலகத்துள்ளார் வானுலகத்துள்ளார் பிறவுலகத்துள்ளார் ஆகிய யாரானும் அறிதற்கரிய அப்பெருமானுடைய,
கோலமும் = திருவுருவத்தையும் .
நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடி = எளியேமாகிய நம்மையும் ஆளாகக் கொண்டருளிச் சீராட்டும் அருட் குணத்தையும் புகழ்ந்து பாடி.
சிவனே சிவனே என்று ஓலம் இடினும் = சிவபெருமானே சிவபெருமானே யென்று ஓலமிட்டுக் கூவியும் ,
உணராய் உணராய் = அறிந்திலை; துயில் நீத் தெழுந்தாயும் இல்லை,
ஏலம் குழலி பரிசு = மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய நின் தன்மை என்னே! என்பது .
விளக்கவுரை :- “பாதாள மேழினுங்கீழ்ச் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே”
என்னும்படி ஒளிமலையாக வெளிப்பட்ட இறைவனுடைய அடியையும் முடியையும் முறையே திருமால் விலங்குருக்கொண்டு நிலம் அகழ்ந்தும், நான்முகன் பறவையுருக்கொண்டு விண்ணிற் பறந்து சென்றும் அறிய வியலாமல் வலியிழந்து நின்றனரென்பது புராணக்கதை. இந் நிகழ்ச்சி திருவண்ணாமலையைப் பற்றியதென்ப இஃது இறைவனது பரம்பொருட்டன்மையைப் புலப்படுப்பதாகும் . இனி மயக்கவுணர்வுடையோரால் அறியப்படாதவன் என்பதும் , மனத்தை ஒருமுகப்படுத்தாமல் பல முகமாகச் செலவிடுவோரால் காணப்படாதவன் என்பதும் ஆகிய குறிப்புப் பொருள் தோன்ற . “மாலறியா நான்முகனுங்காணா மலையினை” யென்றாரெனினுமாம். . மலையாக வெளிப்பட்டும் அறிந்திலர் என்பது ஒரு நயம் .
தேவருட் சிறந்த திருமால் பிரமன் இவர்களால் அறிய இயலாத இறைவனை நாம் அறிவோமென்று எழுப்பப்பட்டவள் கூறியது, விளையாட்டாகக் கூறிய பொய்யுரையாகும். இன்னோரன்ன பொய்யுரைகளை அவள் பேசும்போது சொற்கள் இனியனவாக இருந்தன வென்பார், “பாலூரு தேன்வாய் “ என்றனர் . ஊறுதலைப் பாலுக்கு ஏற்றுக . “போலறிவோம்” என்புழியுள்ள “போல்” என்பதை “பாலூறு தேன் “ என்பதனோடு இயைத்துத் தேன்போல் பேசும் வாய் எனக்கொண்டு பொருள் கொள்க ; அன்றி ஆண்டுப்போல் என்பதை அசையாக்கி, ஈண்டுப் போல் என்னும் உவமவுருவை விரித்துக் கோடலுமாம். சொல்லில் இனிமையும் பொருளில் பொய்மையுந் தோன்றக் கூறுதல் வஞ்சகர் இயல்பாதலின் , “படிறீ” என விளிக்கப்பட்டாள் என்பது . இறைவனை நாம் அறிவோம் என்று வாயளவில் பொய்யுரை கூறிவிட்டு இறைவன் புகழ் பாடுதற்குரிய இக்காலத்தில் யாம் வந்து அழைக்கவும் எழாமல் துயில்கின்றனை; இனியாவது உன் கட்கடையைத் திறந்து பார்த்து வாயிற்கடையினையாவது திறப்பாயாக வென்பார் “கடைதிறவாய்” என்றனர் .
அவனருளே கண்ணாகக் காணினல்லால் இந்நிலவுலகத்தவர் ஆயினும் விண்ணுலகத்தவராயினும் ஏனையுலகங்களில் உள்ளவராயினும் யாம் காண்போம் என்று தம் வன்மையால் முயலின் காண்டற்கு அரியனாவான் என்பது தோன்ற “ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான்” என்றனர் . ஏகாரங்கள் எண்ணுப்பொருளன . அப்பெருமான் மாட்டு அன்பு செய்தற்கு உரிய சாதனம் அவன் திருமேனியைக்கண்டு இன்புறுதலும் அவன் அளப்பரும் அருட்குணத்தில் ஈடுபடுதலுமாம் என்பார், “கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டுஞ்சீலமும் பாடி “ என்றார். இறைவனுக்குத் திருமேனி உருவம் அருவம் அருவுருவம் என முத்திறப்படும் என்ப. இதனை
“உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது
திருமேனி யுபயம் பெற்றோஞ் செப்பிய மூன்று நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவுதானே”
என்னும் சிவஞானத்தித் திருவிருத்தத்தாலும் உணர்க. இம்மூன்றனுள் உருவ வழிபாடே நமக்கு இயைந்த தென்பார், “கோலமும்” எனவும் , அப் பெருமானுடைய அளப்பரும் அருட்குணங்களுள் பெண்மக்களாகிய நம்மை அடிமைகொண்டு நம் குற்றத்தை யொழித்துச் சீராட்டுங் குணமே நம் அநுபவத்தால் அறியத்தக்க தென்பார் “நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் “ எனவுங் கூறினர் என்க. முதலில் கண்களுக்கு இனிய திருமேனியின் பொலிவில் இன்புறுதலும் , பின் கரணங்களுக்கு இனிய அருட் குணங்களில் ஈடுபடுதலும் இறைவனது அருமையில் எளிய அழகின் பயனாக நிகழும் என்பது கருத்து.
இவ்வாறு அப் பெருமானுடைய திருக்கோலத்தையும் அருட் செயலாகிய சீலத்தையும் புகழ்ந்து பாடிச் சிவபெருமானே சிவபெருமானே எம்மைக் காத்தருள்க என்று அபயம் வேண்டுங் குறிப்பு மொழியாற் கூவி யழைத்தும் என்பார், “ சிவனே சிவனே யென்றோலமிடினும் “ என்றனர் . ஓலம் = அபயம் வேண்டிக் கூவும் குறிப்பு மொழி . யாம் சிவபெருமானை வேண்டி ஓலமிட்டுக் கூவியும் அறிந்திலை என்பார் “உணராய்” எனவும் ; இறைவன் திருப்பெயர்ப் பெருமையை யுணராமையாகிய அவ்வளவினன்றி எங்கள் பேரொலி கேட்டும் துயில் நீத்தனையோ வெனின் அதுவுமின்றென்பார் பின்னும் “உணராய்காண்” எனவுங்கூறினர் .
காண் = முன்னிலையசை . ஏலம் = மயிர்ச்சாந்து ; கூந்தற்கிடும் வாசனைச் சாந்து . இஃது அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டு கிடத்தற்கு உபலக்கணம் . கூந்தற்கு மயிர்ச்சாந்து பூசுதல் முதலியவற்றால் தன்னை அலங்கரித்துக் கொண்டு தூங்குகின்ற நின் தன்மை யிருந்தவாறு என்னேயென்பார் “ஏலக்குழலி பரிசு” என்றனர் . யாரானும் காண்டற்கரிய இறைவன் நமக்கு இரங்கி எழுந்தருளியிருக்கும் திருமேனியை அலங்கரித்துக் கண்குளிர மனங்குளிரக் கண்டு இன்புறாமல் புழுக்கூடாகிய இவ்வுடலை யலங்கரித்து இன்புறும் நின் நிலை இரங்கத்தக்கது என்னுங் கருத்தால் “ஏலக்குழலி” எனச் சுட்டுவாராயினர் .
இதன்கண் “ ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான்” என்றதனால் இறைவனது சொரூபநிலையும் , “கோலம்” என்றதனால் தடத்த நிலையும் பெறப்படுதலின் , அக்கோலங்கோடற்கு இடனாகிய சத்தியை வியந்தது குறிப்பிற் புலனாதல் அறிக . சிவன் உருக்கோடற்குச் சத்தி காரணம் யென்பதை “காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால் “ என்னுஞ் சிவநெறிப் பனுவலானுந் தெளிக.
பாடல் 6.
மானே நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே யறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே யுருகாய் உனக்கே யுறுமெமக்கும்
ஏனோர்க்குந் தலைகோனைப் பாடேலோ ரெம்பாவாய் .
கருத்துரை:- முன்னைத் திருப்பாட்டுக்களில் இறைவனது அருமையில் எளிய அழகில் , முறையே மொழி மனம் செயல்களுக்கு எளியனாதலைப் புலப்படுத்திருளிய அடிகள், இத்திருப்பாட்டில் அப்பெருமான் முக்கரணங்களாலும் தன்னை எளிமையில் வழிபாடு செய்யும் மெய்யன்பரை வலிய வந்து அடிமை கொண்டு அன்னார்க்குத்தலையளி புரிவன் என்பதைப் புலப்படுத்தருளுகின்றார்.
பதவுரை:- மானே நீ நென்னல் = மருண்ட நோக்கத்தால் மான் போன்றவளே நீ நேற்று ,
நாளை நானே வந்து உங்களை எழுப்புவன் = நாளை நீயிர் எழுதற்கு முன்னரே யானே எழுந்து வந்து உம்மை எழுப்புவேன் ,
என்றலுமே = என்று சொன்ன அளவிலே (போய் விட்டாய் ),
நாணாமே போன திசை பகராய் = அவ்வாறு நாணமின்றிப் போன திசையைச் சொல்லுவாயாக,
இன்னம் புலர்ந்தின்றோ = இன்னும் இருள் விடியலில்லையா?,
வானே நிலனே பிறவே அறிவரியான் = வானுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் பிறவுலகத்தினரும் ஆகிய எவரானும் அறிதற்கு அரியவனாகிய சிவபெருமான் .
தானே வந்து = தானே வலிய நம்பால் வந்து ,
தலையளித்து எம்மை ஆட்கொண்டருளும் = தலையளிசெய்து நம்மை அடிமை கொண்டருளுதற்குரிய,
வான்வார் கழல் பாடி வந்தோர்க்கு = அழகிய நெடிய வீரக் கழலணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்தவர்களாகிய எம்பொருட்டு
உன் வாய் திறவாய் = உன் வாயைத் திறக்கின்றாயல்லை ,
ஊன் உருகாய் = உடல் உருகப் பெறுகின்றாயுமல்லை ,
உனக்கே உறும் = இந்நிலை உனக்கே பொருந்துவதாகும் ,
எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப்பாடு = எங்களுக்கும் மற்றெல்லோர்க்கும் தலைவனாகிய அப்பெருமானைப் பாடுவாயாக என்பது .
விளக்கவுரை :- மான் – உவம ஆகு பெயர்; பெண்ணை யுணர்த்திற்று . கன்னியரெல்லோரும் முன்னை நாளில் ஒருங்கே கூடிப் பாவை நோன்பு குறித்து விடியுமுன் நீராடப்போதல் பற்றிச் சூழ்ந்த பொழுது இப்பொழுது எழுப்பப்படும் பெண் யானே விடியுமுன் எழுந்து வந்து நும் எல்லோரையும் எழுப்புவேன் என்று சொல்லிவிட்டுப்போய்ப் பின் அதனை மறந்து மற்றெல்லோரும் தன் கடைவாயிலில் வந்து இறைவன் புகழ் பாடுதலைப் படுக்கையிற் கிடந்தவாறே அறிந்து நாணத்தால் அஞ்சி நோக்கினளாதலின், அக்குறிப்பறிந்த மகளிர் மருட்சி நோக்குக் குறித்து, “மானே” யென்று அழைப்பாராயினர் . சமணர் வஞ்சகச் சூழ்ச்சியால் மனம் வருந்தியிருந்த மங்கையர்க்கரசியாரை நோக்கி அக்குறிப்பை யுணர்ந்த திருஞானசம்பந்தர் “மானி னேர்விழிமாதராய்” என்று அழைத்ததும் ஈண்டுக் கருதத்தக்கது . நென்னல் – நேற்று. அஃது , “என்றலுமே” என்பதோடு இயையும் . ஐ – சாரியை. நாளை நானே வந்து எனக்கூட்டுக. எழுப்புவன் என்று சொல்லிய பின் , அச்சொல்லும் நீயும் போனதிசை எம்மால் அறிய முடியவில்லை யென்றது , சொன்னபின் இந்நிகழ்ச்சியிற் சிறிதும் ஈடுபட்டிலை யென்பது பற்றி . இறைவன் புகழ் பாடி இறைவியின் நோன்பிற் கலந்துகொள்ள முதலில் வருவதாகச் சொல்லியபடி நடந்து கொள்வது இன்றியமையாததாகவும் அதனைப் புறக்கணித்து மறந்துவிட்டனையென்பார் “நாணமே போனதிசை பகராய்” என்றனர் . “என்றலும் நாணமே” என்பதும் பாடம் . இப்பொழுது நின்பக்கலில் வந்து இறைவன் புகழைப்பாடியும் எழவில்லை . இந் நிகழ்ச்சியில் இத்துணைப் புறக்கணிப்பிருப்பினும், இயல்பாகத் துயில் நீத்தெழ வேண்டிய காலம் வந்தும் உணர்ந்திலை யென்பார் “இன்னம் புலர்ந்தின்றோ” என்றனர் .
இதன் முன்னைத் திருப்பாட்டில் “ஞாலமே விண்ணே பிறவேயறிவரியான்” எனவும், இத்திருப்பாட்டில் “வானே நிலனே பிறவே யறிவரியான்” எனவும் கூறியவற்றின் பொருளொன்றேயாயினும், அத் திருப்பாட்டில் இறைவன் திருமேனி தரித்துக்கொண்டு எழுந்தருளிக் காட்சியளித்து இன்புறுத்தியதற்கு இடனாதல் பற்றி ஞாலத்தை முதற்கண்ணும், இத்திருப்பாட்டில் வானுலகத்திற்கும் அப்பாலுள்ள சிவலோகத்திலிருந்து வானுலகத்துள்ள தேவர்க்கும் அரியனாய் ஏழைகளாகிய தம்மை யாட்கொள்ள வருதற்கு வான்வழி இடனாதல் பற்றி வானை முதற்கண்ணும் கூறினாரென்பது . எங்கும் நிறைபொருளாகிய இறைவனுக்கு ஓரிடமும் அவ்விடம் பெயர்ந்து பிறிதோரிடத்தை அடைதலுமாகிய நிகழ்ச்சிகள் புராண முதலியவற்றிற் கேட்கப்பட்டமையாலும் , பத்திமை மிகுதியாலும் அக்கன்னியரால் மேற்கொள்ளப்பட்டன வென்பது.
அரியதவம் புரிந்து அறிதற்கரிய இறைவனை அடைதற்குரிய தவ வன்மை இல்லாத நம்மாட்டுப் பேரருள் காரணமாகத் தானே வந்ததோடு சிறந்த கருணைக்கு நம்மை இடனாக்கி ஆளாக ஏற்றுக்கொண்டருளினன் என்பார், “தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் “ எனவும், அங்ஙனம் நம்மை ஆட்கொண்டருளுதற்குரிய சிறந்த கருவி அப்பெருமான் திருவடியே யென்பார் “ஆட்கொண்டருளும்……கழல்” எனவுங் கூறினர். அவ்விறைவன் திருவடி தம் நெஞ்சத்தைக் கவர்ந்தது பற்றியும் தமக்குக் கேடு வாராது பாதுகாப்பது பற்றியும் முறையே அழகும் வீரமும் அமைந்தன வென்பது தோன்ற “வான்வார்கழல்” என்றனர் . வான் – அழகு . கழல் – ஆகுபெயர் உலகியற் செய்தி குறித்து நின்னோடு பேச வந்தேமாயின் , நீ பொருட்படுத்தாமல் ஏதும் பேசாதிருக்கலாம்; எல்லாம் வல்ல ஆண்டவன் எளியேமாகிய நம் பொருட்டு இரக்கமுற்று வலிய வந்து ஆட்கொண்ட திறத்தைக் குறித்து அப்பெருமான் புகழை மனங்குளிர்ந்து பாடிவந்த எம்மோடு பேசுவதற்கு வாய் திறவாமலிருத்தல் தக்கதோ என்பார், “ கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்” என்றனர் . திறவாய் என்பது திறவாமலிருக்கின்றாய் என்னும் பொருட்டு . ஒருவாறு இறைபுகழைக்கேட்டு மெளன நிலையில் நினைந்து மனம் உருகுதலால் பேச நாவெழா மலிருக்கின்றனையோ வென்றால் , “பத்தியால் நெஞ்சுருகப் பெற்றார்க்கு உடலுருகிக் கண்ணீரும் வெளிப்படுமாதலின் , அவ்வாறில்லாமையால் அதுவுமில்லை யென்பார், “ஊனேயுருகாய்” என்றனர் . இறைவனை நெஞ்சம் நினைந்துருகுங்கால் உடலுங் குழைந்துருகுமென்பதை, “புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென், என்பெலா முருக்கி “ யென அடிகள் பிறிதோரிடத்துத் தம் அநுபவநிலை கூறியதனால் அறிக.
இவ்வாறு நாளைவந்துங்களை நானே எழுப்புவன் என்ற சொல்லைக் கடிதின் மறத்தலும் , இறைவன் புகழ்பாடி வந்த எம்மைப் புறக்கணித்து வாய்திறந்து பேசாமலிருத்தலும் , நெஞ்சம் உருகி உடல் குழையாமலிருத்தலும் ஆகிய இந்நிலை அன்புடையார் பிறரிடத்துக் காண்டற்கரியது ; நினக்கே பொருந்துவதாகும் என்பார், “உனக்கே யுறும் “ என்றனர் . ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம் . இனியாவது படுக்கையினின்றும் எழுந்து நமக்கும் பிறர்க்கும் தலைவனாகிய இறைவனை எம்மோடு சேர்ந்து பாடுவாயாக என்பார், “எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப்பாடு” என்றனர் . தங்கோன் என்பது தலைவன் என்னும் பொருட்டு பாடுக என்புழி வியங்கோளீறு தொக்கது ; பின்வருவனவற்றிற்கும் ஒக்கும் .
இதன்கண் “வான்வார்கழல்பாடி “ என்றதனால் திருவடியாற் குறிக்கப்படும் சத்தியை வியந்தது பெறப்படும் . “ஆதியும் அந்தமும் “ என்னும் திருப்பாட்டின் இறுதியில் இதனைப்பற்றிய குறிப்பைக் காண்க .
பாடல் 7.
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை யென்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ
வன்னெ ஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்
கருத்துரை:- முன்னைத் திருப்பாட்டில் மெய்யன்புடையார் செய்யும் எளிய வழிபாட்டிற்கிரங்கி வலிய வந்து தலையளிபுரியும் இறைவன் இயல்பைப் புலப்படுத்தருளிய அடிகள், இத்திருப்பாட்டில் அப்பெருமான்மாட்டுச் செய்யப்படும் தலையன்பின் திறத்தை வெளிப்படுத்து அருளுகின்றார் .
பதவுரை:- அன்னே = தாயே,
இவையும் சிலவோ = நின் செயல்களுள் இவைகளும் சிலவுளவோ.
பல அமரர் உன்னற்கு அரியான் = பல தேவர்களாலும் நினைத்தற்கும் அரியவனும் ,
ஒருவன் = ஒப்பற்றவனும் ,
இரும் சீரான் = மிக்க பெருமையுடையவனும் ஆகிய இறைவனைப் பற்றிய,
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய்திறப்பாய் =
எக்காளம் சங்கு முதலியவற்றின் ஒலிகளைக்கேட்ட அளவில் சிவ சிவ வென்றே சொல்லி வாயைத்திறப்பாய் ,
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய் =
தென்னவனே என்று பிறர் சொல்லும்முன் அனலிடைப் பட்ட மெழுகுபோல் உருகுவாய் ,(இப்பொழுதோ)
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லோரும் வெவ்வேறாய்ச் சொன்னோம் கேள் =
எனக்குத் தந்தை எனக்கு அரசன் இனிய அழிழ்தம் என்று யாமெல்லோரும் தனித் தனியாகவும் கூறினோம் அவற்றைக் கேட்பாய்,
இன்னம் துயிலுதியோ =
கேட்டும் இன்னும் உறங்குகின்றாயோ?,
வல் நெஞ்சம் பேதையர்போல் வாளா கிடத்தி =
இறைவன் பொருட்டுக் குழைதலில்லாத நெஞ்சம் படைத்த அறிவிலார் போலச் சும்மா கிடக்கின்றாய்
துயிலின் பரிசு என்னே =
உறக்கத்தின் தன்மைதான் எத்தகையது? என்பது.
விளக்கவுரை :- எழுப்பியவர் ஆண்டால் மூத்தவராகவும் எழுப்பப்பட்டவள் இளையவளாகவும் குறிக்கப்படுதலின் “அன்னே” எனச் செல்வ மொழியால் அழைப்பார் ஆயினர் . “இவையுஞ் சிலவோ” என்புழி “இவை” யென்பது அன்பினால் இறைவனிடத்து ஈடுபடுதலும் அன்பிலள்போலக் கிடத்தலுமாகிய ஒன்றுக்கு ஒன்று முரணான செயல்களைச் சுட்டும் . இப்படியும் சில செயல்கள் நின்பாலுள்ளனவோ என்பது குறிப்பு . “பல அமரரும் “ என்புழி முற்றும்மையும் உன்னற்கும் என்புழி எச்சவும்மையும் செய்யுள் விகாரத்தாற்றொக்கன. நினைப்பிற்கு அரியனாங்கால் சார்தற்கு அரியன் என்பது கூறாமலே தெளியப்படும் . “ஓப்புடையனல்லன் ஒருவமனில்லி” யாதலின் ஒருவன் என்றார். நல்வினைப் பயனே துய்க்கும் தேவர் பலர்க்கும் நினைத்தற்கு அரியனாதலும், ஈடும் எடுப்புமில்லாமையும் பெருமைக்குரிய குணங்களாயினும் அத்துணைப் பெரியோன் நம்மைப் போன்ற எளியவர்க்கிரங்கி யாட்கொள்ளும் அருஞ்செயலுடைமையால், மிக்க பெருமையுடையான் என்பது தோன்ற “இருஞ்சீரான்” என்றார் , பிறராற் செய்தற்கரிய செயலைச் செய்தல் பெருமைக்குணத்தின் இயல்பென்பது உணரத்தக்கது.
சின்னங்கள் என்ற பன்மையால் இறைவன் எழுச்சியை நினைப்பூட்டும் எக்காளத்தோடு சங்கு முதலியனவுங் கொள்ளப்படும் . இம் மங்கல வொலியைக் கேட்ட அளவில் சிவ சிவ என்னும் மகாமந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வாய் திறக்கும் இயல்பினை யென்பார் , “சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்” என்றனர் . இனி சின்னங்கள் – அடையாளப் பொருள்களெனவும் , கேட்டடல் இலக்கணையாற் காண்டலை யுணர்த்து மெனவுங் கொண்டு திருநீறு கண்மணி புனைந்த சிவனடியாரைக் கண்ட அளவில் சிவனெனவே கூறுவாயெனக் கோடலுமாம்.
தென்னன் – பாண்டியன் . வழுதி மருமகனாகி மீனநோக்கின் , மடவரலை மணந்துலக முழுதாண்ட “ சுந்தரனாதலின் இறைவனைத் தென்னன் எனப் பலவிடத்துங் கூறுவர் . எந்நாட்டவர்க்கும் இறைவனாயினும் நேரில் ஆட்சி புரிந்த சிறப்புரிமை தோன்றத் தென்னாடுடைய சிவன் எனக்கூறியதும் ஈண்டு உணரத்தக்கது . இறைவன் இறைவி முருகன் இம்மூவரும் அரசு புரிந்த பெருமை இப்பாண்டி நாட்டிற்கேயுரியது என்பதை ,
“உலகம் யாவையும் ஈன்றவன் உம்பரு ளுயர்ந்த
திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று
தலைவ ரான்முறை செய்தநா டிஃதன்றிச் சலதி
சுலவு பாரினுண்டாகுமோ துறக்கத்து மஃதே”
என்பதனாலும் அறிக. எக்காரணத்தை முன்னிட்டாவது தென்னன் என்று பிறர் கூறக் கேட்ட அளவில் அச்சொல் முடிதற்குமுன் தீயிடைப்பட்ட மெழுகு போல உருகும் இயல்பினை யென்பார் , ”தென்னா வென்னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்” என்றனர் . வாச்சிய ஒலி கேட்ட துணையானே சிவநாமங் கூறுதலும், சிவநாமங்கேட்ட துணையானே நெஞ்சம் உருகுதலும் உடைய நீ இப்பொழுது யாம் உளங்கனிந்து அன்பு உரைகள் பல பகர்ந்தும், துயில் நீத்தெழாமலிருப்பது என்னையோ என்றனரென்பது . யாங்கள் ஒருங்கே சேர்ந்தும் இறைபுகழைப் பாடினோம் . கூட்டொலி நின் செவிக்குத் தெளிவாகக் கேட்கப்படாமலிருத்தல் கூடுமோ என்னும் ஐயத்தால் பின்னர்த் தனித்தனியாகவும் “என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்” வெவ்வேறாய்ப் பாடலானோம் எனவும் , வந்தவர்களாகிய யாங்கள் கூறிய இந்நல்லுரைகளைக் கேட்பாயாக என்பார், “சொன்னோங் கேள் “ எனவுங் கூறினர் என்க. என்னானை – என் தந்தை “என்” என்பதன்பின் “ஆன்” சாரியை. ஐ – தந்தை . எனக்குச் சிறப்புரிமைப் பாதுகாப்பு நோக்கத் தந்தையாவானெனவும் . பொதுவாட்சி நோக்க எனக்கு அரசனாவானெனவும் இன்புறுத்தலின் அமுதாவானெனவும் கூறினரென்பது. தனித்தனிக் கூற்றாதல் பற்றி என் தந்தை என் அரையன் என ஒருமையாகக் கூறப்பட்டனவென்க.
இவ்வினிய மொழிகளை நின் அருகில் வந்து கூறக்கேட்டும் இன்னும் உறங்குகின்றாயோ என்பார் , “இன்னந் துயிலுதியோ” என்றனர் நீ பருவத்தாற் பேதையேயல்லது அறிவின்மையாற் பேதையல்லை ; அங்ஙனமிருந்தும் மனம் உருகத்தக்க இறைபுகழைப் பாடக்கேட்டும் வலிய நெஞ்சு படைத்த அறிவிலிகளைப் போல வாய் பேசாமற் கிடக்கின்றாயே ஈதென்னையென்பார் “வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்” என்றனர் . இறைவன் புகழுரை கேட்ட அளவிலே ஈடுபட்டுக் குழையும் உள்ளமுடைய நீ இங்ஙனம் உருக்கம் சிறிதுமின்றி உறக்கத்தில் ஆழ்ந்து கிடத்தலை நினையுங்கால் உறக்கத்தின் இயல்பு மிகவலியது போலும் என்பார் “என்னே துயிலின் பரிசு “ என்றனர் . “யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் “ என்று பெரியோர் கூறியது உலகியலில் உயிர் போகு பொது நெறி பற்றியதாகலின் , நின்னைப்போன்ற இறையன்பிலீடுபட்டாரைப் பற்றியதன்று என்பதாம் .
இதன்கண் “தென்னா வென்னாமுன்னந் தீ சேர் மெழுகொப்பாய் “ என்றதனால் சிறந்த பத்திக்கு ஏதுவாகிய தென்னன் என்னுஞ் சொல் மீன நோக்கின் மடவரலை மணந்து பெற்றது என்பது பெறப்படுதலின் , சத்தியை வியந்தது புலனாயவாறறிக.
பாடல் 8.
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ
வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற வொருவனை
யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்
கருத்துரை:- முன்னைத் திருப்பாட்டில் இறைவன்பாற் செய்யப்படும் தலையன்பின் திறத்தைப் புலப்படுத்தருளிய அடிகள், இத் திருப்பாட்டில் அங்ஙனம் தலையன்பு செய்தற்கேற்ற அவ் இறைவனது நிகரற்ற பெருமையையும் தலைமையையும் அருளிச் செய்கின்றார் .
பதவுரை:- கோழி சிலம்ப எங்கும் குருகு சிலம்பும் =
கோழி கூவ எங்கும் பறவைகள் ஒலி செய்யும் .
ஏழில் இயம்ப வெண்மை சங்கு எங்கும் இயம்பும் =
நாகசுரம் வாசிக்குமாறு வெள்ளிய சங்கங்கள் யாண்டும் ஒலிக்கும் ,
கேழ் இல் பரம்சோதி =
ஒப்பற்ற பரம்பொருளாகிய ஒளியுருவினனுடைய ,
கேழ் இல் பரம் கருணை =
ஒப்பற்ற மேலான கருணை முதலிய ,
கேழ் இல் விழுப்பொருள்கள் =
ஒப்பற்ற சிறந்த பொருள்கள் அமைந்த புகழ்ப் பாடல்களை,
பாடினோம் , கேட்டிலையோ =
நீ கேட்டாயல்லையோ,
வாழி =
வாழ்வாயாக,
ஈது என்ன உறக்கமோ =
ஈது எத்தகைய தூக்கமோ
வாய் திறவாய் =
நின் வாயைத் திறக்கின்றாயல்லை ,
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ =
அருட்கடலாகிய சிவபெருமான் மாட்டு அன்பு செய்யும் நெறியும் இம்முறைதானோ, (இனியாவது)
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை =
பேரூழியின் இறுதியில் தலைவனாய்த் தான் ஒருவனே அழிவில்லாமல் நின்றவனும் ,
ஏழை பங்காளனையே =
அம்மையை ஒரு கூற்றிலுடையவனும் ஆகிய பெருமானையே ,
பாடு = பாடுவாயாக என்பது .
விளக்கவுரை :- கோழி – சேவல் . இருள்புலர் காலத்தை யறிவிப்பது சேவல் கூவுதல். சிலம்புதல் – ஒலித்தல் . கோழி கூவியவுடன் காக்கை முதலிய பறவைகள் விழித்தெழுந்து ஒலிப்பனவாம் . குருகு – பறவைப்பொது . ஏழில் – ஏழிசைகளுக்கும் இடனாயது; நாகசுரம் என்னும் துளைக்கருவி . திருக்கோயில்களில் அதிகாலையில் முதலில் சங்கு முழக்கஞ் செய்யப்படும். அவ்வொலி கேட்ட துணையானே நாகசுரம் வாசித்தல் முறையாதலின் , “ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்” என்றனர். “ஏழிலியம்ப” என்புழி இயம்ப வென்பது காரியப் பொருளில் வந்த வினையெச்சம் . எங்கும் என்பது ஈரிடத்தும் முறையே நாளா பக்கங்களையும் திருக்கோயில்களையும் உணர்த்தும் . சிலம்புதலும் இயம்புதலும் விடியலைக் குறிப்பனவாம் , கேழ் – ஒப்பு , கேழில் என்றது ஈடும் எடுப்பும் இல்லாத என்றபடி . இது பின்வருவனவற்றிற்கும் ஒக்கும் . மாயாகாரியமாகிய ஒளியனீக்குதற்கு , “பரஞ்சோதி” என்னப்பட்டது. இறைவனை ஒளியுருவமாகப் பெரியோர் கூறுதலைப் பலவிடத்துங் காணலாம்.
இறைவனது அளப்பரும் பேரருட் குணத்தைக் “கேழில்” பரங்கருணை” யென்றனர் . விழுப்பொருள்கள் என்றது சிறந்த பொருளமைந்த புகழ்ப்பாடல்களை யுணர்த்தும் . இறைவன் புகழே பொருள்சேர் புகழ் எனப்படும் . ஏனையோரைப் பற்றினவெல்லாம் அன்னவாகா என்பது. இதனை , “இருள்சே ரிரு வினையுஞ் சேரா விறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு “ என்புழி “இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் , அவை முற்றுமுடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது “ என்று பரிமேலழகர் கூறிய வுரையானு முணர்க. ஒப்பற்ற இறைவனது சிறந்த கருணை முதலிய பொருளமைந்த புகழ்ப் பாடலை யாம் பாட நீ கேட்டனை யென்பார், “யாம்பாடக் கேட்டிலையோ” என்றனர். கேட்டிலையோ என்புழி ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு . அங்ஙனம் கேட்டும் வாளாவிருக்கும் நீ எத்தகைய தீங்கும் வாழக்கடவையென வாழ்த்துவார் , “வாழி” யென்றனர் . இவள் பேதைப் பருவத்துச் சிறுமியாதலின் அவள் பாலுள்ள அன்பினால் ஆண்டின் முதிர்ந்த பெண்கள் இவ்வாறு கூறுவாராயினர் என்பது கருத்து .
யாம்பாடிய பாடலோ இறைவன் பொருள்சேர் புகழமைந்த பாடல்; பாடின காலமோ இருள்புலர் காலை; இடமோ நின்பக்கல். அப்பாடலைக்கேட்டும் கண் திறந்தாயே யன்றி வாயைத் திறந்து எம்மோடு சேர்ந்து பாடினாயல்லை ; இங்ஙனம் கண் திறந்தும் வாய் திறவாமலிருக்கும் இந் நிலையும் நின் தூக்கத்தின் ஒருவகை கொலோ என்பார். “ஈதென்ன வுறக்கமோ வாய் திறவாய்” என்றனரென்பது. வாய்திறவா யென்றதனாலும் , என்ன வுறக்கமோ என்றதனாலும் கண் திறத்தல் பெறப்பட்டது . மேலும் , அருட்பெருங் கடலாகிய இறைவன்பால் நினக்குள்ள அன்பு நெறியும் இங்ஙனம் யாம் இறை புகழ்பாடுதலாகிய இந் நிலையிலும் நீ வாய் திறவாமை விருத்தலாகிய இம்முறைதானோ வென்பார், “ஆழியானன்புடைமை யாமாறுமிவ்வாறோ” என்றனர் . அடியார் ஆண்டவனிடத்து வைக்கும் காதல் அன்பும் , ஆண்டவன் எல்லாவுயிர்கள் மாட்டுஞ் செலுத்தும் கருணை அருளுமாகும் . இங்கே “ஆழியானன்புடைமை” என்புழி அடிமையின் அன்பு குறிக்கப்பட்டமையின் அதற்கேற்ப ஆண்டவன் திருவருளை யியைத்து அருளாழியெனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.
“பரங்கருணைத்தடங்கடலை” என்பது அடிகள் திருவாக்கு . அருட்பெருங்கடலாகிய இறைவன் பால் வைக்கும் அன்பு தலையன்பாதல் வேண்டுமென்பது கருத்து . இனி, ஆழியான் – திருமாலெனக்கொண்டு , திருமால் இறைவனிடத்தே அன்பு செய்யும் நெறியும் இவ்வாறு கொல் எனப் பொருள்கூறி , அறிதுயில் மேற்கொண்டு , நீயும் அன்பு செய்கின்றனை போலும் என்பது கருத்தாகக் கோடலும் ஒன்று . மகாசங்காரகாலமாகிய பேரூழியின் இறுதியில் மாயாகாரியமாகிய எல்லாம் அழிந்து ஒடுங்கியபின், சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அழியாப் பொருளாக நிலைபெற்றுப் பின்னரும் படைப்பாதி தொழில் செய்தற்கு நாத தத்துவத்தை யெழுப்பி நிற்பன் என்னும் உண்மை தோன்ற , “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை “ என்றார்.
“ஓதத் தொலிமடங்கி யூருண்டேறி
யொத்துலக மெல்லாம் ஒடுங்கியபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே “ என்னும்
தமிழ் மறையானும் இவ்வுண்மை தெளிக . இத்துணை உயரிய பரம்பொருளாகவுள்ள பெருமான் ஏழையேமாகிய நம்பொருட்டு அம்மையொரு கூறனாகத் திருமேனி கொண்டெழுந்தருளிப் பாதுகாக்கும் இயல்பினன் என்னும் பொருடோன்ற “ஏழை பங்காளன்” என்று கூறினர் . ஏழை – பெண் ; உமையம்மை . ஏகாரம் – பிரிநிலை . நம்மாற் பாடப்படுபவர் மற்றைத் தேவரல்லர் என்னும் பொருள் தோன்ற நிற்றலின் தேற்றமுமாம் .
இதன்கண் “ஏழைபங்காளனையே பாடு “ என்றமையால் சத்தியை வியந்தது கூறப்பட்டமையறிக.
பாடல் 9 .
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியானே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெங்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே யெமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் அடியார் தலையன்பு செய்தற்கு ஏற்ற இறைவனுடைய அளப்பரும் பெருமையையும் தலைமையையும் அருளிச் செய்த அடிகள் , அவற்றுள் எல்லாவற்றையும் தன்னுளடக்கிநிற்கும் காலத்தாலும் இடத்தாலும் அளப்பரிய பெருமையின் இயல்பைக் கூறுவான் தொடங்கி இத்திருப்பாட்டில் காலத்தால் அளவிடற்கரிய முதன்மையைப் புலப்படுத்தருளுகின்றார் .
பதவுரை :- முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே =
முற்பட்டவனாகிய பழைய பொருள்கள் எல்லாவற்றிற்கும் முற்பட்ட பழைய பொருளாகவுள்ளவனே,
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே =
பிற்பட்டனவாகிய புதிய பொருள்கள் எல்லாவற்றிற்கும் மீண்டும் அப்புதுப் பொருட்டன்மை வுடையவனே,
உன்னை பிரான் ஆகப் பெற்ற உன் சீர் அடியோம் =
உன்னை ஆண்டவனாகக் கிடைக்கப்பெற்றமையால் உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள்,
உன் அடியார் தாள் பணிவோம் =
நின் அடியாருடைய திருவடிகளை வணங்குவோம் ,
ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் =
அங்ஙனமே நின் அடியார்க்கே உரிமையுடையவர்கள் ஆவோம் ,
அன்னவரே எம் கணவர் ஆவார்=
அவ்வடியார்களே எங்களுக்குக் கணவராவார் ,
அவர் உகந்து சொன்ன பரிசே =
அவ்வடியார் மனமுவந்து இட்ட கட்டளைப் படியே ,
தொழும்பாய் பணி செய்வோம் =
அவர்க்கு அடிமையாய் நின்று ஏவல் கேட்போம் ,
எங்கோன் எமக்கு இன்னவகையே நல்குதியேல் =
எங்கள் பிரானாகிய நீ எங்களுக்கு இங்ஙனமே அருள்புரிவையாயின் ,
என்ன குறையும் இலோம் =
எத்தகைய குறைபாடும் இல்லாதவராவோம் என்பது .
விளக்கவுரை :- இதன்கண் எழுப்பியவரும் எழுப்பப்பட்டவரும் ஆகிய கன்னிப் பெண்கள் எல்லோரும் ஒருங்கே கூடி இறைவனை முன்னிலைப்படுத்துப் புகழ்ந்து பாடிப் பயன் வேண்டுதல் கூறப்படுகின்றது. முன்பின் பழமை புதுமை என்னும் இவ்வழக்குகள் காலதத்துவத்தின் பின் தோன்றியவை . இறைவன் அக்காலத்தத்துவத்திற்கும் அப்பாற்பட்ட பொருள் . ஆயினும் , காலதத்துவத்தின் பிற்பட்ட பொருள்களில் வைத்தே முதலில் மக்களாராய்ச்சி நிகழ்வது இயல்பாதலின் முன்னைப் பழம் பொருள் என்பது கால தத்துவத்துளடங்கிய முற்பட்ட பழைய பொருள் களைக் குறிக்கும் . இதுகாறும் வெளிப்பட்ட மாயாகாரியமாகிய விசித்திரப் பொருள்கள் எல்லாவற்றிற்கும் முற்பட்ட பழைய பொருளாவானும் அவ்விறைவனே : இதுகாறும் வெளிப்படாத புதிய பொருள்களெவற்றிற்கும் புதிய பொருளாக ஒன்று தோன்றுமாயின் , அப்பொருளில் அமைந்துள்ள புதுமைத் தன்மையுடையானும் அப்பெருமானே யென்பார் ,
“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போர்த்துமப் பெற்றியனே”
என்றார் . பெற்றியன் – புதுமைத் தன்மையுடையவன் . “உலகெலாமாகி வேறாயுடனுமாய் “ நின்ற இறையிலக்கணத்துள் உலகெலாமாகி நின்ற நிலை பற்றியே சிற்றறிவினராகிய மக்களுக்கு ஆராய்ச்சி நிகழ்வது இயல்பாதலின் அம் முறைபற்றிக் கூறப்பட்டது இது வென்க. பழமையென ஒன்று துணியப்படுமாயின் அதற்கும் பழமையாய் , புதுமையென ஒன்று தோன்றுமாயின் அதற்கும் புதுமையாயுள்ள பொருள் இறைவனே என்பது கருத்து.
“வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த
போதக் காட்சிக்குங் காணலன் புதியரிற் புதியன்
மூதக் கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவாய்
ஆதிக் காதியா யுயிர்க்குயி ராய்நின்ற வமலன் “
என்று கூறியதும் இக்கருத்துப் பற்றியே யென்க.
இனி, இறைவன் தனக்குப் பின்றோன்றிய யாக்கையுடையாரனைவரும் மூப்பவும் , தான் நிலைபெற்ற இளமைத்தன்மையுடையனாயிருத்தலின் புதுமைத் தன்மையுடையன் எனவும் , எல்லாயாக்கைக்கு முன்னே தனது இச்சையாற் கொள்ளப்பட்ட திருமேனியை யுடையனாதலின் பழம் பொருளாதலும் உடையான் எனக் கருத்துக் கோடலும் ஒன்று . பழமையைப் பெருமையென்று கருதுவார்க்குப் பழமையாற் பரம்பொருளாதலும் , பழமையிற்குறை கருதிப் புதுமையை விரும்புவார்க்குப் புதுமையிற் புதுப் பொருளாதலும் உடைய நின்னை ஆண்டவனாய்ப் பெற்றமையால் அறிவிற் சிறியேமாயினும் நின் அடிமையிற் சிறந்தவராயினே மென்பார் , “உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்“ என்றனர். “பெற்ற” என்னும் எச்சம் காரணப்பொருட்டு . இறைவ! நினக்கு அன்பு செய்து நின் அடிமைப் பேறு பெற்றதன் பயனாக நின் அடியவராகிய மெய்யன்பர்களின் திருவடியை வணங்கப்பெற்றே மென்பார் , “உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் “ என்றனரென்க. . சிறந்த மெய்யடியாரை வணங்கும் பேறு, இறை வணக்கத்தின் பயனாக நிகழக்கூடுமென்பதைத் திருஞானசம்பந்தர் திருக்காளத்தி இறைவனை வணங்கியபின் அதன் பயன் கைவரப் பெற்றது போலக் கண்ணப்ப நாயனார் திருவுருவைக் கண்டு வணங்கப்பெற்றனர் என்பதனாலறியலாம் . இதனை ,
“ வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்கண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்”
எனவும் , அதற்கு ஏதுவாக,
உள்ளத்திற் றெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் முடன்கண்ட விருப்பம் “
எனவும் சேக்கிழார் கூறியவற்றானுணர்க .
சிவனடியாரை வணங்குதலேயன்றி எம் உடல் பொருள் ஆவி மூன்றையும் அவர்க்கே யுரிமைப்படுத்தலும் செய்வோமென்பார் , “ஆங்கவர்க்கே பாங்காவோம் “ என்றனர். தாள் பணிதல் சாதனமும் பாங்காதல் சாத்தியமுமாம் . ஈண்டுச் சாதனம் வேற்றுமையிலும் சாத்தியம் ஒற்றுமையிலும் வைத்து உணரத்தக்கன. ஞானானுபவ நிலையில் உடல் பொருளாவிகளை ஆசிரியன் பால் ஒப்புவித்து ஞானானுபவ இன்பம் பெற விழையும் மாணவர் போல , உலகியல் நிலையில் தம் உடல் பொருளாவிகளைச் சிவனடியார்பால் ஒப்புவித்து இன்பம் பெற விழையும் கன்னிப் பெண்கள் அதற்கேதுவாக அவ்வடியாரையே தமக்குக் கணவராக வேண்டுவராய், “ அன்னவரே யெங்கணவ ராவார் “ என்றனர் . தலைவர் அடிமைக்குக் கட்டளையிடுதல் அதிகார முறையிலும் விருப்பின்றியும் நிகழ்தல் கூடும்; அங்ஙனம் இல்லாமல் உள்ள மகிழ்ந்து இடும் கட்டளையாதல் வேண்டுமென்பார் , “அவருகந்து சொன்ன பரிசே” எனவும் , பொருண் முதலிய காரணம் பற்றியும் பணி செய்தல் கூடுமாதலின் , அதனை விலக்குதற்குத் “தொழும்பாய்ப் பணி செய்வோம் “ எனவும் கூறினர் . “பரிசே” என்புழி ஏகாரம் தேற்றப்பொருட்டு. தொழும்பு என்பது கடமையாக மேற்கொள்ளும் அடிமைத்தன்மை . அங்ஙனமாயின் , கணவராகப் பெற்றும் பணிசெய்தலால் பெறும்பயன் இன்னதென வேண்டப்பட்டிலதேயெனின் ,
என்கடன் பணிசெய்து கிடப்பதே
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்”
என்னும் தமிழ்மறைப்படி அது செய்தல் இறைவன் கடமையாதலின் கூறப்பட்டிலதென்க . மேலும் ,
“அன்பர்பணி செய்யவென்னை யாளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந் தெய்தும் “
என்று பெரியார் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது. எங்கள் ஆண்டவனாகிய நீ இங்கே யாம் தெரிவித்துக்கொண்ட முறைப்படி எமக்கு அருள் செய்வையாயின் , யாங்கள் ஏதும் குறையிலராய் இனிது வாழ்வோம் என்று கூறினாரென்பது .
இதன்கட் கூறப்பட்டபடி இறைவன் முன்னைப் பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளாகவும் , பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுப்பொருளாகவும் வெளிப்படுதல் சத்தியோடு கூடிய வழியல்லது நிகழாமையின் சத்தியை வியந்தது புலப்படுக்கப்பட்டவாறறிக.
பாடல் 10.
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத வுலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தான் றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆராயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் காலத்தாலும் இடத்தாலும் அளவிடற்கரிய இறைவன் பெருமையுள் காலத்தால் அளவிடற்கரிய முதன்மையைப் புலப்படுத்தருளிய அடிகள் , இத் திருப்பாட்டில் இடத்தால் அளவிடற்கரிய தலைமையை அருளிச்செய்கின்றார் .
பதவுரை :- பாதமலர் = இறைவன் திருவடிமலர் ,
பாதாளம் ஏழினும் கீழ் சொல்கழிவு = கீழுலகம் ஏழிற்கும் கீழாகச் சொல்லில் அடங்காத நிலையினது ,
போது ஆர் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே =
மலர்கள் நிறைந்து அணிசெய்யப்பட்ட திருமுடியும் எல்லாப் பொருள்களின் முடிவாக வுள்ளது ,
பேதை ஒருபால் = பெண் ஒரு கூற்றிலுள்ளான் ,
திருமேனி ஓன்று அல்லன் = ஒருவகைப்பட்ட திருமேனியை யுடையானல்லன் ,
தொண்டர் = தன் அடியார்க்கு ,
வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் =
மறை முதலாக விண்ணுலகத்தினரும் மண்ணுலகத்தினரும் புகழ்ந்து பாராட்டினாலும் ,
ஓத உலவா ஒரு தோழன் உளன் =
புகழ்ச்சி முற்றுப்பெறாத ஒப்பற்ற தோழனாகவுள்ளான் ,
அரன் தன்கோயில் =
அத்தகைய சிவபெருமானுடைய திருக்கோயிலிலுள்ள ,
கோது இல் குலத்து பிணாப்பிள்ளைகாள் =
குற்றமற்ற நலத்தினையுடைய பெண் மக்களே,
அவன் ஊர் ஏது அவன் பேர் ஏது =
அப்பெருமானுக்கு ஊர் யாது ? அவன் பெயர் யாது ?,
உற்றார் ஆர் அயலார் ஆர் =
அவனுக்கு உறவினர் ஆவார் யாவர் ? அயலார் யாவர்?
அவனைப் பாடும் பரிசு ஏது =
அவ்விறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மை யாது?, என்பதாம் .
விளக்கவுரை : – ஒருங்கு சேர்ந்த கன்னிப் பெண்களனைவரும் , அதிகாலையில் சிவபெருமானுடைய திருக்கோயிற்பணி புரிந்து கொண்டிருக்கும் பெண்மக்களை விளித்து இறைவன்பால் தம்மினும் அவர்க்குள்ள அணுக்கங்கருதிப் பாடுதற்குரிய சில செய்திகளை வினவுகின்றனர் .
திருமாலும் பிரமனும் தனித்தனியே யாம் பிரமம் என்று செருக்குற்ற ஞான்று , மலையுருக்கொண்டு வளர்ந்த சிவபெருமானுடைய அடி முடிகளைக் காணுமாறு பணிக்கப் பட்டனராக; அவ்விருவரும் முறையே பன்றியுருவையும் அன்னப்பறவை யுருவையும் கொண்டு அகழ்ந்தும் பறந்தும் அடிமுடிகளைக் காணமுடியாமல் செருக்கடங்கினரென்னும் புராண கதையையுட் கொண்டு கூறுகின்றார் . இறைவன் திருவடி மலர் பாதாளத்தின் கீழ் உள்ளது என்று கூறுதலே யமைவுடையதாக வும் “ பாதாளம் ஏழினுங்கீழ்” என்றது இவ்வண்டத்தின் கீழுலகம் ஏழென்று கூறப்பட்டிருத்தலின் , அத்துணையும் சொல்லால் அளவிடுதற்கு உரியதென்னும் கருத்துப்பற்றியாம் . கீழேழுலகங் கட்கும் கீழ் என்றால் கீழ் யாண்டுளது எனின், அந்நிலை சொற்களால் அளவிடுதற்கு இயலாதென்னும் பொருடோன்ற “சொற்கழிவு” என்றனர் .
இறைவன் திருமுடி மிக மேலோங்கிய நிலையினதாயினும் மெய்யன்பர் சாத்தும் மலர்க்கு எளிவரும் இயல்பிற்று என்னும் குறிப்புப்புலப்பட, ”போதார் புனைமுடியும் “ என்று கூறப்பட்டது. அஃது எல்லாப் பொருள்களின் முடிவாகவுள்ளது என்றது சொற்களாலறிதற்குரிய பொருள்களின் எல்லையைக் கடந்த நிலையிலுள்ளது என்பது குறித்து . சொல்லளவைக் கடந்தது திருவடியெனவும் பொருளளவைக் கடந்தது திருமுடியெனவுங் கூறியது , சொல் ஆதாரமாகக் கீழ் நின்று தாங்குவதும் , பொருள் ஆதேயமாக மேல் நின்று தாங்கப்படுவதுமாகிய இயைபு பற்றியென்க . திருமேனியின் ஒரு கூற்றில் அம்மையுள்ளாள் ஆதலின் “பேதையொருபால்” எனவும், அதனால் இறைவன் திருமேனி ஆணுரு அல்லது பெண்ணுருவென்னும் இரண்டனுள் ஒன்றாக அமையாமல் “திருமேனியொன்றல்லன்” எனவும் கூறப்பட்டன . அம்மையையொரு கூற்றிலுடைய பரம்பொருளை ஒருவனென்றாதல் ஒருத்தியென்றாதல் கூறுதற்கு இயலாமையாற் போலும் ஒருவர் என்னும் சொல் வழங்கலாயிற்றென்பர் பெரியார் .
“பாட்டான் மறைபுகழும் “ என்றபடி மறை , உண்மையுருவாய இறைவன் புகழ்மாலையாக அமைந்தது . அப்புகழ் மாலையாகிய மறைப் பாடல்களைப் பாடி இன்புறுவார் தேவரும் மக்களுமேயாவர் . அங்ஙனம் மறைகளும் அவற்றை எடுத்தியம்பிப் பொருள் விளக்கும் தேவரும் மக்களும் எத்துணைக்காலம் புகழினும் அப்புகழுரைகளால் அளவிட்டு உரைக்க முடியாத பெருமை வாய்ந்தவன் இறைவன் . அத்துணைப் பெரியோன் தன் தொண்டர்க்குச் சிறந்த நண்பனாவான் என்பார் ,”ஓதவுலவா ஒரு தோழந் தொண்டருளன்“ என்றார். “தொண்டருளன் “ என்புழி நான்கனுருபை விரித்து , தொண்டர்க்கு எனக்கொண்டு ஒரு தோழன் என்பதனை அதனோடியைத் துரைத்துக்கொள்க . இனி , “ஒரு தோழந் தொண்டருளன்” எனப் பாடங்கொண்டு , ஒப்பற்ற மிகுதியான தொண்டரையுடையான் எனக் கோடலும் ஒன்று . தோழம் – பேரெண் “ஒருதோழந்தேவர் விண்ணிற் பொலிய“ என்பது தமிழ் மறை. சிவபெருமான் திருக்கோயிலிற் பணிபுரியும் பேறு பெற்ற பெண்மக்களை நோக்கி , “அரன்றன் கோயிற்பிணாப்பிள்ளைகாள்” என்றனர், பிணா – பெண். பிள்ளை, மக்கள் என்னும் பொருட்டு . அப்பெண்மக்கள் ஊனடைந்த உடம்பின் பிறவி தானடைந்த வுறுதியைத் திருக்கோயிலிலே தொண்டு செய்யும் பேற்றினால் பெற்றமை குறித்து “கோதில் குலத்து” என்றனர் . குலம் – நன்மை .
சிவத் தொண்டு ஒன்றே குற்றமற்ற நலம் பயப்பது. அந்நலத்தை யெளிமையிற் பெற்றிருத்தல் குறித்து அவ்வாறு கூறப்பட்டனர் அப்பெண்களுக்கு இறைவன் பாலுள்ள அணுக்கங்குறித்து அவரை வினவலாயினர் . திருக்கோயிற் பணிபுரிவார் ஆண் பெண் இருபாலாருமுளர் அவருள் பெண்மக்களை விளித்து வினாவ முற்பட்டதற்குக் காரணம் தம் பெண்மைக்கு ஒத்த தோழமை குறித்தென்க . ஊர் என்பது பூகோளத்தில் ஒரு சிறு கூற்றிலமைந்த சிறு கிராமமாகும் . இறைவன் அடியும் முடியும் கீழ் மேல் எல்லைகளைக்கடந்துள்ளன . அத்துணைப்பெரிய பொருளில் அடங்கிய ஒரு சிறு கூறாகிய இடத்தில் அவன் எவ்வாறு அடங்குவான் என்பார்,” ஏதவனூர்” என்றனர் . பெயர் திருமேனி குறித்து இடப்படுவது . அவன் திருமேனியோ ஆணுமல்ல பெண்ணுமல்ல அங்ஙனமாயின் எப்பெயரால் குறிப்பிடலாமென்பர் “ ஏதவன்பேர் “ என்றனர் .
“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க் காயிரம்
திருநாமம் பாடிநாத் தெள்ளேணங் கொட்டாமோ”
என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருந்தலும் உணர்க. உலகப் பொருணுகர்ச்சியிலீடுபடாமல் இறைபணி புரிதலே கடமையெனவுணர்ந்து ஒழுகும் தொண்டர்க்குச் சிறந்த நண்பனாதலேயன்றி வேறு உறவு பகை நொதுமல் இல்லாதவன் என்பார் “ஆருற்றார் ஆரயலார் “ என்றனர் . வேதங்களும் விண்ணவரும் மக்களும் எத்துணைக்காலம் புகழ்ந்து பாடினாலும் ஓதவுலவாப் பெருமை யுடையானைப் பெண் மக்களாகிய யாம் பாடுதல் எவ்வாறு என்பார், “ஏதவனைப் பாடும் பரிசு “ என்றனர் . இங்ஙனம் இப்பாடலின் மூன்றடிகளாலும் கூறப்பட்ட இறைவன் பெருமைகளை ஏதுவாக்கி ஈற்றடிக்குப் பொருள் கூறுதலே சிறப்புடைத்து என்பது .
இதன்கண் “பேதையொருபால் திருமேனி யொன்றல்லன்” என்பதனால் அம்மையின் பெருமை வெளிப்படுதலின் சத்தியை வியந்தது பெறப்பட்டவாறறிக .
பாடல் 11.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குன்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ யாட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய்.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டுக்களில் காலத்தாலும் இடத்தாலும் அளவிடற்கரிய இறைவன் பெருமையை அருளிச் செய்த அடிகள் , இத்திருப்பாட்டில் அத்துணைப்பெரியோன் , காலம் இடங்களினுட்பட்ட சிறியனவாகிய (மக்கள்) உயிர்களையாட்கொண்டருளுதல் கருணை காரணமாக உண்டாகிய அவன் விளையாட்டாகும் என்பதை அருளிச் செய்கின்றார் .
பதவுரை :- ஆர் அழல்போல் செய்யா = செறிந்த தீயையொத்த செம்மை நிறம் உடையவனே ,
வெண்மை நீறாடி = வெள்ளிய திருநீற்றை நிறைய அணிந்தவனே ,
செல்வா = வீட்டுத் திருவினையுடையாய் ,
சிறு மருங்குல் மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா =
சிறிய இடையையும் மை தீட்டப் பெற்ற அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே ,
ஐயா = எங்கள் தலைவனே,
மொய் ஆர் தடம் பொய்கைபுக்கு = வண்டுகள் நிறைந்த அகன்ற திருக்குளத்தில் புகுந்து ,
முகேர் என்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி =
முகேர் என்று ஒலியுண்டாகும்படி கையினால் இறைத்து முழுகி நின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி ,
வழி அடியோம் வாழ்ந்தோம் = வழி வழி அடிமைகளாகிய யாங்கள் நல்வாழ்வு எய்தினோம் ,
ஐ ஆம் நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் = ஆண்டவனாகிய நீ உயிர்களை அடிமைகொண்டு காத்தருளும் திருவிளையாட்டினால் ,
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்த்தொழிந்தோம் =
உய்தி பெறுவார் உய்யும் வகைகள் எல்லாவற்றானும் பிழைத்துவிட்டோம் ,
எய்யாமல் எமை காப்பாய் = இனி, யாம் இளைத்து விடாதபடி எம்மைக் காத்தருள்வாயாக என்பது.
விளக்கவுரை:- இனி அக்கன்னிப்பெண்களெல்லோறும் ஒருங்கு சேர்ந்து நீராடத்தொடங்கி இறைவனை முன்னிலைப்படுத்துத் தமக்கு காப்பு வேண்டுகின்றனர் .
செம்மை வெண்மையிரண்டும் முறையே இராசதம் சாத்துவிகம் என்னும் குணங்களைக் குறிப்பாலுணர்த்துவனவாதலின் அக்குணங்களில் நின்று படைத்தல் காத்தல்களைச் செய்பவனும் நீறுடைமையால் ஒடுக்கத்திற்குரிய தலைவனும் சிவபெருமானே யென்பார், ”ஆரழல் போற் செய்யா வெண்ணீறாடி“ என்றனர் . “முக்குணங்களின் மூவரைத் தோற்றி மூவர்க்கு முத்தொழில் வகுத்தருளி , அக்குணங்களுக்கதீதமாய் நிறைவாய் ……..நின்றனை” என்று சிவஞான முனிவர் கூறிய கருத்தும் ஈண்டு நோக்கத்தக்கது . செல்வம் – வீட்டுத்திரு; மோஷ ஐசுவரியம் என்பர் வடநூலார்.
இஃது யோகியாயிருந்துயிர்க்கு யோகத்தைப் புரிபவன் என்னும் குறிப்பையும் “மையார் தடங்கண் மடந்தை மணவாளா” என்றது யோகியாயிருந்துயிர்க்குப் போகத்தைப் புரிபவன் என்னும் குறிப்பையும் புலப்படுத்துநிற்பன. இங்ஙனம் படைப்பு முதலிய தொழிற்றலைவனும் போக மோக்க காரகனும் ஆகிய பெருந்தலைவனாகிய நீயே எளியேமாகிய எமக்கும் தலைவனாயினையென்னும் உவகை பற்றி “ஐயா” என்றனர் , மொய் – வண்டு . மொய்த்தற்றொழில் பற்றி வண்டு மொய் என்னும் பெயருடைத் தாயிற்று . பொய்கை அகன்று என்றும் நீரறா வளமுடமையால் தாமரை குவளை முதலியன செழித்துப்படர்ந்து பூத்திருந்தமையின் அம்மலர்களிலுள்ள தேனை நுகரும் பொருட்டு வண்டுகள் நிறைந்திருத்தல் பற்றி “மொய்யார் தடம் பொய்கை “ என்றனர். பனிப்பருவத் தொடக்கமாதலின் மலர்கள் வாட்டம் அடைந்தில வென்பது கருத்து . “முகேர் “ என்பது கையால் நீரைக் குடையுங்கால் உண்டாம் ஒலிக்குறிப்பு. மொய்யார் தடம் பொய்கை யாதலின் மலரிதழ் வண்டுகள் முழுகும் இடத்தைவிட்டு ஒதுங்குதற் பொருட்டும் , நீர் விளையாட்டு நிகழ்ச்சி பற்றியும் முழுகுதற்குமுன் கையினால் நீரைத் தட்டி இறைத்தல் பற்றி “கையாற்குடைந்து” எனவும் , பின் முழுகி நீராடினோம் என்பது குறித்து :குடைந்து” எனவும் கூறினர் .
வாழையடி வாழையெனச் சிவத்தொண்டு செய்து வந்த மரபில் தோன்றிய அடிமைகளாகிய யாம் என்பார் , “வழியடியோம்” என்றனர் . நீராடுங்கால் எல்லோரும் சேர்ந்து இறைவன் திருவடிகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே ஆடினரென்பது. “வாழ்ந்தோம்” என்றது கருதியபடி மார்கழி நீராடற்கு உரிய நேரத்தில் எழுந்து வாயார இறை புகழ் பாடி நீராடக்கிடைத்த பேறு பற்றிய உவகை மொழியாகும். தொடங்கிய காரியத்தின் பயன் பின் விளைவாயினும் அக்காரியம் கைகூடுதலும் மக்களுக்கு மகிழ்ச்சி விளைக்கு மென்பது உலகியலிற் காணப்படுவது . காண் – முன்னிலையசை.
பொதுவாக மக்கள் தேவர் முதலிய பல்லுயிர்களையும் பக்குவம் நோக்கி அடிமை கொண்டு அருள்புரியும் நின் திருவிளையாட்டில் என்பார், “நீ யாட்கொண்டருளும் விளையாட்டின் “ என்றார் . உயிர்களைப் படைத்தும் காத்தும் ஒடுக்கியும் மறைத்தும் அருளுதல் இறைவனுக்கு ஒருவிளையாட்டுப்போலும் எளிமையிற் செய்யப்படுஞ்செயல் என்பார் “விளையாட்டின்“ என்றாரென்பது. இக்கருத்தை “ஒரு சாரார் , “ ஐயா நீ யாட்கொண்டருளும் விளையாட்டின்“…… என்பது முதலிய திருவாக்குக்கள் பற்றி விளையாட்டென்றது , ஐங்கலப் பாரஞ் சுமத்தல் சாத்தனுக்கு விளையாட்டென்பது போல அத்துணை யெளிதிற் செய்யப்படுதலை நோக்கியேயாகலின் அக்கருத்தும் , உயிர்கட்குப் பெத்தகாலத்துச் சுவர்க்காதி போகமும் பத முத்திகளும் முத்தி காலத்து வீடுபேறும் கொடுத்தற் பயத்ததென்பர் “ என்னும் சிவஞான சித்தி யுரையானும் தெளிக.
இடையறவின்றிப் பெய்யும் மழைநீரை மேட்டு நிலம் வறிதே கழிப்பப் பள்ளிநிலம் தாங்கிப்பயன் விளைத்தல் போல ஆண்டவன் திருவிளையாட்டாற் பெய்யும் அருளமுதத்தைத் தூய்மை பெறாத உள்ளத்தினர் விட்டொழிக்க மெய்யன்பினால் தூய்மை பெற்ற நன்னெஞ்சினோர் பெற்றுப் பயன்பெறுவர் ஆதலின் , அம்முறையில் இறையருளை வேட்டு நிற்போரே உய்வார்களாவர் . உய்யும் வகை பாசப் பிணிப்பை யொழித்துத் திருவருட்பேற்றைப் பெறுதற்குரிய சிவத்தொண்டு முதலிய தவநெறிகளாம் . அந்நெறிகளையே சாதனமாக மேற்கொண்டு உய்திபெற்றுள்ளோம் என்பார் “உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்” என்றனர் . உய்ந்தொழிதல் என்புழி ஒழிதல் துணைவினையாகும் ; துணிதற் பொருட்டு . “வழியடியோம் வாழ்ந்தோம் “ என்று முன்னர்க் கூறியது நீராடத் தொடங்கியது நிறைவேறியமையால் உண்டாம் உவகை பற்றி. உய்ந்தொழிந்தோம் என்று பின்னர்க்கூறியது இறைவன் திருவருட்பேற்றிற்கு இலக்காயது பற்றி.
ஆண்டவனே ! இதுகாறும் எல்லாவகையாலும் நின் தொண்டில் நழுவாமல் ஈடுபட்டுப் பிழைத்தோம் . இனி நின் திருவருட் பேற்றினாலாம் பயனையெய்துதற்கு யாம் சலித்தொழியாமல் கடைபோக எம்மைக் காத்தருள வேண்டுமென்பார் “எய்யாமற் காப்பாயெமை” என்று கூறினரென்பதாம் .
இதன்கண் “சிறு மருங்குன் மையார்தடங்கண் மடந்தை மணவாளா” என்றதனால் சத்தியை வியந்தது பெறப்பட்டவாறறிக.
பாடல் 12.
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தனிவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழன்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி யிருஞ்சுனைநீர் ஆடேலோ ரெம்பாவாய்.
கருத்துரை :– முன்னைத் திருப்பாட்டில் மக்களை ஆட்கொண்டருளுதல் இறைவனுக்குத் திருவிளையாட்டாகும் என்பதை அருளிச் செய்த அடிகள் , இத் திருப்பாட்டில் மக்களேயன்றி விண்ணுலகம் மண்ணுலகம் முதலிய எல்லாவுலகங்களையும் படைத்தல் முதலிய தொழிற்படுத்தலும் இறையருள் விளையாட்டே யென்பதைப் புலப்படுத்தருளுகின்றார்.
பதவுரை :- ஆர்த்த பிறவித் துயர்கெட =
நம்மை அநாதியே கட்டிய பிறவித்துன்பம் ஒழியும்படி ,
நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன் = நாம் உவகையால் ஆரவாரித்து முழுகும் தூய நீரையுடையவனும் ,
நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன் = நல்ல தில்லைநகரின்கண் உள்ள ஞானவெளியில் அனலையேந்தி ஆடுகின்ற அருட்கூத்துடையவனும் ,
இக்குவலயமும் வானும் எல்லோமும் = இந் நிலவுலகத்தையும் விண்ணுலகத்தையும் நம் எல்லோரையும் ,
படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடி = ஆக்கியும் அளித்தும் ஒடுக்கியும் விளையாடுகின்றவனும் ஆகிய சிவபெருமானது ,
வார்த்தையும் பேசி = திருப்புகழையும் பாடிக்கொண்டு ,
வளை சிலம்ப = கை வளையல் ஒலிக்கவும் ,
வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய = (இடையில்) நீண்ட மேகலை முதலிய அணிகலன்கள் ஆரவாரித் தொலிசெய்யவும் ,
அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப = அழகிய கூந்தலின் மேல் வண்டுகள் எழுந்து முழங்கவும் ,
பூ திகழும் பொய்கை குடைந்து = மலர்கள் விளங்குகின்ற திருக்குளத்தில் முழுகி ,
உடையான் பொன்பாதம் ஏத்தி = எல்லாமுடைய இறைவனது பொன்போன்ற திருவடிகளைப் புகழ்ந்து பாராட்டி,
இரும் சுனை நீர் ஆடு = பெரிய சுனை நீரிலும் முழுகுவோமாக என்பது .
விளக்கவுரை :- இது, நீராடும் நிகழ்ச்சியில் இறைவன் புகழைப் பாடி யாடுதல் கூறுகின்றது . உயிர் இருவினைப் பாசங்களாலும் மும்மலக் கல்லொடு பிணிக்கப்பட்டுப் பிறவிப் பெருங்கடலுள் வீழ்த்தப்படுதலின் “ஆர்த்த பிறவி “ எனவும் , பிறவி , வினைப்பயனை நுகர்ந்து கழிப்பதற்கு ஏதுவாதல் பற்றி நலம் பயப்பதாயினும் தீவினைப்பயனை நுகருங்கால் உயிர் துன்புறுதலின் “பிறவித்துயர் “ எனவும் , அத்துன்பமாகிய வெப்பம் ஒழிய முழுகுதற்குரிய தூய தண்ணிய நீரையுடையான் இறைவனென்பார் “துயர்கெட நாம் ஆர்த்தாடுந்தீர்த்தன் “ எனவுங் கூறினர் . ஆர்த்தல் , பிறவித் துயரொழிவிற்குரிய சாதனப்பேறு குறித்து உண்டாகிய உவகையானாயது.
கடலொடு காவிரி கலக்குமிடத்தில் அவ்விரு வகை நீரிலும் தோய்வாரைக்குறித்து . “தீதுநீங்கக் கடலாடியும் , மாசுபோகப் புனல்படிந்தும் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது. அகக்குற்றம் நீங்கக் கடலாடினவர் கடலாடுதலாலுண்டாம் புறக்குற்றமும் நீங்கக் காவிரிப்புனலிலும் தோய்ந்தனரென்னும் அது. வினையொழியப் பிறவிப்பெருங்கடலுள் மூழ்கினார் அப்பிறவித் துயரும் ஒழிய நல்ல தூயநீரிலும் ஆடினர் என்னும் இக்கருத்தைக் குறிப்பிற் புலப்படுத்து நிற்றலறிக. இனி “ஆர்த்தாடுந் தீர்த்தன்” என்பதற்கு ஆரவாரித்து இன்பக்கூத்தாடுதற்கு ஏதுவாகிய கடவுள் எனப் பொருள்கோடலும் ஆம் . ஞானவெளியை யுடைமையால் , “நற்றில்லை” யென்னப்பட்டது . திருச்சிற்றம்பலம் – நுண்ணிய ஞானப்பரவெளி தூலவுடலுடைய மக்களுக்கேற்பத் தூலவெளியில் இனிது நீராடுதற்குத் தண்ணிய நறுநீரையுதவிய அருளாளன் , தான் சூக்கும வெளியில் வெய்ய தீயை யேந்தி ஆடினன் என்னும் இதனால் , வார்ந்த நஞ்சயின்று வானோர்க்க முதமீந்த அப்பெருமானது வண்மைக்குணம் ஈண்டும் புலனாயவாறறிக . தீ ஞானத்தைக் குறிப்பது. அதனை யேந்திக் கூத்தாடியது ஞானத்தால் தன்னைக் காண விழைவார்க்குக் காட்சியளிப்பவன் என்பதைக் குறிப்பதாகும் . கூத்து அருட்செயல் ஐந்தையும் புலப்படுத்து நிகழ்வது .
“இவ்வானும்” என்புழிச் சுட்டை அணிமையிலுள்ள குவலயத்திற் கேற்றுக , நுண்ணிய ஞானப் பரவெளியில் நெருப்பை யேந்திக் கூத்தாடுதலே யன்றி இந் நிலவுலகத்தினரையும் வானுலகத்தவரையும் நம் எல்லோரையும் ஆக்கியும் அளித்தும் மறைத்தும் விளையாடுபவன் என்பார் “இவ்வானுங் குவலயமு மெல்லோமும் காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி “ என்றார்: காணப்படாத பொருள்களைப் படைத்துக்காட்டலும், காட்டியவற்றைச் சிலநேரம் நிலைபெறச் செய்தலும், பின் மறையச் செய்தலும் இந்திரசாலவித்தை யென்ப. அவ்வித்தைகாட்டி விளையாடுதல்போல , மருட்கேவல நிலையிலுள்ள வுயிர்களை உடல் முதலியன படைத்து வெளிப்படச்செய்தலும், வினையளவு வரையறுக்கப்பட்ட காலம் வரை அவற்றை நிலைபெறுத்தலும் , பின் ஒடுக்கி மறைத்தலும் ஆகிய உலக முத்தொழிற்படுத்தல் இறைவனுக்கு விளையாட்டாம் என்பது கருத்து .
படைத்தும் காத்தும் எனற்பாலது செய்யுள்நோக்கி மாறி நின்றது. விளையாடி யென்பது பெயர் ; “மதி மயங்கி “ என்பதுபோல. “இவ்வானுங் குவலயமும் “ என்புழிக் கூறுகின்ற பெண்கள் குவலயத்து ளடங்கினராகவும் “எல்லோமும்” என்று தம்மைப் பிரித்துக் கூறியது தம்மாற் சுட்டியுணரப்படும் பிரபஞ்சத்தினின்று தாம் வேறல்லர் என்பது குறித்து. விளையாடி வார்த்தையும் என்புழி ஆறனுருபு தொக்கது . நீராடுதற்கு முன்னும் பின்னுமன்றி நீராடுதல் நிகழுங்காலும் இறைபுகழ் பாடப்பட்டதென்பார் “வார்த்தையும் பேசி “ என்றார் . நீராடுங்கால் கையால் நீரைத்தட்டியிறைத்தலும் , நீர்நிலையில் அங்கும் இங்கும் சேறலும் , முழுகுதலும் ஆகிய செயல்கள் நிகழுமாதலின், அம் மூன்றும் புலப்பட முறையே “வளை சிலம்ப, வார்கலைகளார்ப் பரவஞ்செய்ய , அணிகுழன் மேல் வண்டார்ப்ப” என்றார் . கலைகள் மேகலை முதலிய அணிகள். கூந்தலின் மேலணிந்த மலர்களிலுள்ள தேனை நுகரும் வண்டுகள் தலைமுழுகுங்கால் எழுந்து ஆர்த்தன வென்பது கருத்து . பூத்திகழும் பொய்கை யென்றது அம்மலர் விளக்கத்தில் ஈடுபட்ட மகளிர் அப் பொய்கையினின்றும் பிறிதொரு நீர்நிலைக்கு மாறுதலின் அருமை புலப்படுக்கப் பட்டபடியாம் .
பொய்கை நீராடியதும் அடுத்துள்ள சுனைநீராடுதற்குத் தொடங்கும் பெண்கள் சுனையாடுதற்கண் இடையூறணுகாமைப் பொருட்டு இறைவன் திருவடியை மீண்டும் வேண்டினரென்பார் “பொய்கை குடைந்துடையான் பொற்பாத மேத்தி “ என்றனர் . பெண்கள் பலர் ஆடுதற்கு அகன்ற சுனையே பொருந்துமாதலின் “இருஞ்சுனைநீர்” என்றனர் . “ஆடுக” என்புழி வியங்கோளீறு தொக்கது . ஆடுவோமாக என்றவாறு . பேசி, சிலம்ப, அரவஞ்செய்ய, ஆர்ப்ப , குடைந்து , ஏத்தி, ஆடுக என வினைமுடிபு கொள்க.
இதன்கண் “உடையான் பொற்பாதம் ஏத்தி “ யென்றதனால் திருவடியாற் குறிக்கப்படும் சத்தியை வியந்தது புலனாயவாறறிக.
பாடல் 13.
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன் றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் எல்லாவுலகங்களையும் முத்தொழிற்படுத்தலும் இறையருள் விளையாட்டேயென அருளிய அடிகள், இத் திருப்பாட்டில் அப்பெருமானை யடைதற்குத் தூய அன்பு நெறியால் தகுதி வாய்ந்த உயிர்கள் தாமும் விளையாட்டுப் போன்ற செயல்களால் இறையருட்கு இலக்காகி இன்புறலாம் என்னும் உண்மையைக் குறிப்பிற் புலப்படுத்தருளிச் செய்கின்றார் . பாசப்பிணிப்பை யொழித்தற்குரிய நயனதீக்கை முதலிய சாதனங்களே இங்கே நுண்ணிதின் அறியப்படும் குறிப்புகளாம் .
பதவுரை :- பசுமை குவளைக் கருமை மலரால் =
குளிர்ந்த குவளைகளின் கரிய மலர்களையுடைமையாலும் ,
செம்மை கமலம் பசுமை போதால் = செந்தாமரையின் அழகிய மலர்களையுடைமையாலும் ,
அம் கம் குருகு இனத்தால் = அழகிய நீர்வாழ் பறவைகளையுடைமையாலும்,
பின்னும் அரவத்தால் = பின்னியெழும் அலையொலிகளை யுடைமையாலும்,
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் =
(மடுநீராகிய) தம்மிடத்து அழுக்கைக் கழுவக்கருதுவார் வந்தடைதலினாலும் ,
எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்று இசைந்த பொங்கும் மடுவில் =
எங்கள் இறைவியையும் எம் இறைவனையும் ஒத்துப் பொருந்திய நீர் நிறைந்த பொய்கையில் ,
பாய்ந்து பாய்ந்து புக = தாவித் தாவிப் புகுதலால் ,
நம் சங்கம் சிலம்ப = நம் கைவளையல் ஒலிக்கவும் ,
சிலம்பு கலந்து ஆர்ப்ப = சிலம்புகள் அவ்வொலியோடு கலந்து ஒலிக்கவும்,
கொங்கைகள் பொங்க = நகில்கள் குலுங்கவும் ,
குடையும் புனல்பொங்க = நீராடுதற்குரிய நீர் மேலெழவும் ,
பங்கயப் பூ புனல் பாய்ந்து ஆடு = தாமரை மலர்களால் பொலிந்து விளங்கும் பொய்கையில் குதித்து நீராடுவோமாக என்பது .
விளக்கவுரை :- இதுவும் அது . (நீராடும் நிகழ்ச்சியில் இறைவன் மாண்பு கூறியாடுதலைக் கூறுகின்றது) பொய்கை இறைவியும் இறைவனும் இயைந்து விளங்குதல்போல விளங்குதற்கு ஏது பைங்குவளைக் கார் மலர் முதலியனவாம் . கார் மலர் செம்போது என்புழிக் கருமையும் செம்மையும் இனம் விளங்குதற்கு வந்த அடைமொழிகளாம் . அம்மையையும் செந்தாமரை மலர் தீவண்ணனாகிய அப்பனையும் குறிப்பன . குவளையின் முதலுக்கும் தாமரையின் சினைக்கும் பசுமையடை புணர்த்தது, “அருளதுசத்தியாகும் “ என்றபடி இறைவி அருள்வடிவினள் என்பதையும் , இறைவன் அதனையுடையவனென்பதையும் குறிப்பிற் புலப்படுத்தற்கென்க.
அங்கம் – உறுப்பு ; கை,. குருகு – வளையல் . அங்கம் குருகு இனம் என்பது, கையில் வளையல் குழுவையுடைய இறைவியையும் , பின்னும் அரவம் என்பது , பின்னிக்கிடக்கின்ற பாம்பணிகளையுடைய இறைவனையும் குறிப்பனவாம் . வடமொழி மதம் பற்றித் தம் என நீர் பன்மையாகக் கூறப்பட்டது . ஈண்டுத்தங்கண் அம்மையப்பராகிய தம்மிடத்து என்றபடி.
இனி, தங்கள் மலங்கழுவுவார் எனப் பதப்பிரிவு கொண்டு தம்முடைய அழுக்கைப் போக்குவார் எனப் பொருள் கோடலுமாம். மலம் – ஆணவ முதலியன . மலங்கழுவுவார் வந்து சார்தல் – பாசப்பிணிப்பைப் போக்குவார் வந்து அடைதல் . இஃது இருவர்க்குமாம். இவ்வேதுக்களால் இறைவியும் இறைவனும் இயைந்ததுபோற் காணப்படும் பொய்கை யென்றபடி . இனி இவ்வேதுக்கள் சைவசித்தாந்த முறைப்படி ஆணவ முதலிய பாசங்களை யொழிப்பதற்கு இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளிப் பக்குவமுள்ள உயிர்களுக்குச் செய்யும் தீக்கைக்கிரியைகளையும் குறிப்பனவாம் . சிவநெறித் தீக்கைகள் பலதிறப்படும் . அவற்றுள் உபலக்கணமாகச் சில தீக்கைக் குறிப்புக்கள் ஈண்டுள்ளன.
பைங்குவளைக் கார்மலர் என்பது நயனதீக்கையைக் குறிக்கும். நயனத்தீக்கையாவது மாந்திரிகள் பாம்பினாற் கடிக்கப்பட்டவனைக் கருடபாவனையாலே பார்த்து நஞ்சையொழித்தல் போல ஆசிரியன் திருநோக்கத்தால் பாசத்தையொழித்தலாகும். கண்ணப்பநாயனாரை ஆண்டவன் ஆட்கொண்டதும் இந்நெறியே. இவ்வுண்மையை, “கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலியாரே” என்னும் அருளுரையானும் , “அங்கணர் கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கமெய்தி “ எனவும், “முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள்நோக்கின் “ எனவும் சேக்கிழார் கூறுமாற்றானும் தெளிக.
செங்கமலப் பைம்போது என்றது, மானசீக தீக்கையைக் குறிக்கும். மானசீக தீக்கையாவது பாவனையினால் ஆசிரியன் மாணவனது இதயக்கமலத்தில் புகுந்து அவன் அறிவை வாங்கித் தன் இதயக்கமலத்தில் கலந்ததாகக்கொண்டு பின் அவன்பால் நிலைப்படுத்தலாம் . இஃது ஆமை தன் சினையை நினைத்த அளவிற் காப்பதுபோலப் பாவனையினாற் காப்பதாம். ஈண்டுத் தாமரைமலர் ஆசிரியனுடைய இதயக்கமலத்தைக் குறித்தல் அறிக.
அங்கங்குரு கினம் என்பது பரிசதீக்கையைக் குறிப்பதாகும் . பரிசதீக்கையாவது பறவை தனது சினையைச் சிறகால் தழுவிக்காத்தல்போல ஆசிரியன் தன் கையினால் மாணவனது தலைமுதல் எங்கும் பரிசித்துப் பாசத்தை யொழித்துக் காத்தலாம் . இதனைச் சிவஹஸ்த மஸ்தகசையோகம் என்ப. குருகு – கோழி முதலிய பறவையைக் குறிக்கும். அங்கம் – சிறகு . இனம் – குஞ்சு . ஆகவே பறவைகள் சிறகாற் பார்ப்பைத் தழுவுதல்போல்வ தென்பது குறிப்பு .
அரவம் – ஒலி ; இது வாசிகதீக்கையைக் குறிக்கும். வாசிகமாவது திருவைந்தெழுத்தை உபதேசித்து நலம்புரிதல் , இங்ஙனம் மனம் வாக்குக் காயம் கண் முதலியவற்றாலாம் தீக்கையால் பாசத்தை யொழிப்பவராகிய பக்குவமுள்ளவுயிர்கள் அம்மையப்பவராகிய தம்மிடத்து வந்து சேர்தலினால் என உமையொருபாகற்குக் கொள்ளல் வேண்டும் . இவ்வேதுக்களால் எங்கள் பெருமாட்டியாகிய அம்மையையும் எங்கள் பெருமானாகிய அப்பனையும் போல் இயைந்த பொய்கையென்றார் . ஈண்டு அம்மையை முற்கூறியது, மெய்யருளாம் தாயுடன் சென்று தந்தையையடைய வேண்டுமென்னும் நுண்பொருள் புலப்படவென்க. பொங்குதல் – நீர்மிகுதல், “புகப் பாய்ந்து பாய்ந்து” என்பதை பாய்ந்து பாய்ந்து புக எனக் கொள்ளல்வேண்டும் . புக என்னும் எச்சம் காரணப்பொருட்டு , சங்கம் ஆகுபெயரால் வளையலையுணர்த்தும் . சிலம்பொலி வளையல்களின் ஒலியோடு கலந்தொலிக்கவென்பது, பொய்கைக் கரையாகிய நிலத்தினின்றும் தாவிப் புகுதலால் கைவளையல்களோடு காற்சிலம்புகள் ஒலிசெய்தனவென்பது கருத்து. “கொங்கைகள் பொங்க “ என்புழிப் பொங்குதல் இலக்கணையால் குலுங்குதலையுணர்த்தும் . “குடையும் புனல் பொங்க” என்றதனால் மகளிர் நெருங்கிப் பாய்ந்தாட நீர் அளவின்மிக்கு மேலெழுந்ததென்பது போதரும் தாமரைமலர்களாற் பொலிவுபெற்று விளங்கும் என்றது இருள் புலர்காலத்தைக் குறிப்பது . பாய்ந்து பாய்ந்து புக சிலம்ப ஆர்ப்ப பொங்க பொங்க பாய்ந்தாடுக என வினை முடிவு கொள்க.
இதன்கண் “எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்குமடு “ என்றதனால் சத்தியை வியந்தது புலப்படுக்கப்பட்டபடியாம் .
பாடல் 14.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச்
சேரதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் தூய அன்புளதேல் விளையாட்டுப்போன்ற செயல்களும் இறைவனையடைதற்கு ஏதுவாம் என்னும் நுண்பொருளைக் குறிப்பிற் புலப்படுத்த அடிகள் , இத்திருப்பாட்டில் அச்செயல்களும் இறைவனுடைய பெருமைக் குணங்களுக்கு மாறுபடாமலிருக்க வேண்டும் என்னும் குறிக்கோளைப் புலப்படுத்து அருளிச்செய்கின்றார் .
பதவுரை:- காது ஆர் குழை ஆட = காதிலணிந்த தோடு அசைய ,
பூண் பசுமை கலன் ஆட = உடம்பிலணிந்த பிற அழகிய அணிகலங்கள் அசைய,
குழல் கோதை ஆட = கூந்தலில் அணிந்த மாலைகள் அசைய,
வண்டின் குழாம் ஆட = வண்டுக்கூட்டம் எழுந்து சுழல ,
சீதம் புனல் ஆடி = குளிர்ந்த நீரில் முழுகி,
சிற்றம்பலம் பாடி = பின் ஞானசபையைப் புகழ்ந்து பாடி
வேதப்பொருள்பாடி = மறைப் பொருளமைந்த புகழ்பாடலைப்பாடி ,
அப்பொருள் ஆமா[று] பாடி = இறைவன் அப்பொருளாக விளங்குதலைப்பாடி
சோதி திறம் பாடி = ஒளி வடிவாகவுள்ள அப்பெருமான் பெருமையைப் பாராட்டிப் பாடி
சூழ்கொன்றத்தார் பாடி = சுற்றியணிந்த கொன்றைமலர் மாலையைப் புகழ்ந்து பாடி
ஆதி திறம் பாடி = அப்பெருமான் எப்பொருட்கும் முதலான முறையைப் பாடி
அந்தம் ஆமா[று] பாடி = எவற்றிற்கும் ஈறானதன்மையையும் பாடி
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளைதன் பாத்திறம் பாடியாடு =
வேறுபடுத்து நம்மைப் பாதுகாத்து ஆட்கொண்ட வளையலை அணிந்த கைகளையுடைய உமையம்மையின் திருவடி மாண்பைப் பாடி நீராடுவோமாக என்பது .
விளக்கவுரை :- இதுவும் அது . (நீராடுங்கால் இறைபுகழ் பாடுதலையும் நிகழும் செயல்களையும் கூறுகின்றது.) மகளிர் நிலத்தினின்றும் நீர்நிலையிற் புகுந்து நீராடுமுறையில் நிகழ்வனவற்றை முறையே குறிப்பிடுகிறார் . முதலில் நீராடுதற்கு ஏற்ற முறையில் எழுந்து நின்று நீரிற் பாயத்தொடங்கியவுடன் காதுகளில் அணிந்த தோடுகள் அசைந்தன வென்பார் “காதார் குழையாட” எனவும் , நிலத்தினின்று நீர்நிலைக்கு விரைந்து செல்லுங்கால் உடம்பில் அணிந்த ஏனை அணிகலன்கள் ஒலித்தனவென்பார் “பைம்பூண்கலனாட” எனவும் , நீருட் புகுந்து நீராடத் தொடங்குங்கால் கூந்தலிலணிந்த மலர் மாலைகள் அசைந்தனவென்பார்.
“கோதை குழலாட” எனவும், நீருள் முழுகத் தொடங்குங்கால் கூந்தலிலணிந்த மலர் மாலைகளில் உள்ள தேனை நுகரும் வண்டினங்கள் எழுந்து ஆரவாரித்தனவென்பார் “வண்டின்குழா மாட” எனவும், முறைப்படுத்துக் கூறினர். இங்ஙனம் நிகழாநிற்க , குளிர்ந்த நீர் நிலையில் நீராடினர் என்பார், “சீதப்புனலாடி” என்றனர் . பொய்கை நீர் இயல்பாகவே குளிர்ந்ததாயினும் சீதப்புனல் என்றது , பனிப்பருவத்து வைகறைப் பொழுதில் மிக்க குளிர்ச்சியுடைமை பற்றி , சீதப்புனலாடிப் பாடியாடுக என்றமையால் நீர் விளையாட்டு நிகழ்ச்சியில் இறைவனையும் இறைவியையும் புகழ்ந்து பாராட்டிப் பாடினரென்பது . அங்ஙனம் புகழ்ந்து பாடத்தொடங்குங்கால் முதலில் “சிற்றம்பலம் பாடி” என்றார் . “சிற்றம்பலம் நுண்ணிய ஞானப்பரவெளி . ஆவின் உடல்முழுதும் நிறைந்த பால் , கன்றின் பொருட்டுச் சுரந்து வெளிப்படுதற்குச் சுரக்கும் உறுப்பு இடனாயவாறு போல, எங்கும் நிறைந்த இறைவிளக்கம் அன்பர் பொருட்டுப் புலப்படுதற்கு இடங்கூறியபடியாம்.
“வேதப்பொருள்பாடி” என்றது மறைப்பொருளை இசைத்தமிழாக இயைத்துப்பாடியமைபற்றி. இசையின் தோற்றத்திற்குச் சாமவேதம் இடனென்ப வடமொழிவாணர். அப்பொருள் ஆமா என்புழி ஆமாறு என்பதன் ஈறுதொக்கது. சாமவேத சம்பந்தமான கேநோபநிடதத்தில் , பிரமப்பொருள் தாம்தாம் என்று கருதிய தேவர்கள் செருக்கடங்கப் பிரம்ம ஓர் இயக்கவுருக்கொண்டு வந்ததென்றும் , அவ்வியக்கனால் இடப்பட்ட ஒரு சிறு துரும்பை எரிக்கமுயன்று அக்கினிதேவனும் , அசைக்க முயன்று வாயுதேவனும் இயலாதொழிய, இந்திரன் சென்று இவ்வியக்கன் யாராக இருக்கலாமென்று திகைப்புற்றிருக்கும் நிலையில் இயக்கன் மறைந்து விட்டான் என்றும், அவ்வமயம் விண்ணில் இமவான் புதல்வியாகிய உமை தோன்றி “இவ்வியக்கன் பிரமம்“ என்று தெளிவித்தாளென்றும் கூறப்பட்டுள்ளன. இதுபோன்ற குறிப்புக்களே வேதப்பொருளென்றதனாற் பெறப்படும் “அப்பொருள் ஆமாறு பாடி” என்றது.
பரமசிவன் அப்பொருளாகியவிதத்தைப் பாராட்டி யென்றபடி . கேநோபநிடதக் குறிப்பில் வெளிப்படையாகச் சிவபெருமான் பரம்பொருளாவான் என்பது கூறப்பட்டிலது . இவ்வியக்கன் பிரமம் என்று உணர்த்திய சத்தி சிவசத்தியாதலின், அச் சத்திக்குரிய சிவபெருமானே பிரமம் ஆவான் என்பது போதரும். இத்தெளிபொருளையே அப்பொருளாமாறு என்பதனாற் புலப்பட வைத்தாரென்பது . இறை விளக்கத்திற்கும் பெருமை புலப்படற்கும் உரிய இடங்களாகிய சிற்றம்பலத்தையும் மறைப்பொருளையும் பாடிப் பின் மெய்யன்பர் பொருட்டுத் திருமேனிகொண்டருளும் நிலையைப் பாடத்தொடங்குகின்றார்.
இறைவன் அன்பர் பொருட்டுக் கொள்ளும் திருமேனி முதலில் ஒளிவடிவம் என்பது பெரியோர்கண்டது. “சோதியாய்த் தோன்று முருவமே” என்னும் திருவாக்கும் ஈண்டு நினைக்கத்தக்கது . ஒரு கோடி கதிரவர் ஒருங்குதோன்றிய தொப்பப் பேரொளிப்பிழம்பாகத் திகழ்பவன் என்ப. இவ்வுண்மை கருதியே “சோதிதிறம்பாடி” என்றனர் . திறம் – வழிபடும் உயிர்களின் பக்குவத்திற்கேற்பக் கொள்ளும் திருமேனியின் வகை. தார் மாலை கண்ணியென்னும் வகையெல்லாம் இறவனுக்குக் கொன்றைமலர் ஆதலின் “சூழ்கொன்றைத் தார் பாடி” என்றனர் . மேலும் , புறத்தே ஐந்து இதழும் நடுவண் ஓங்காரவடிவமான அகவிதழும் உடைமையால் பிரணவத்தையுட்பொதிந்த திருவைந்தெழுத்தைப் புலப்படுத்து விளங்குதலின் கொன்றைமலர் இறைவர்க்கு உவந்ததாயிற்றென்ப. யாவர்க்கும் எவைக்கும் முதற்கடவுளாதல் பற்றி “ஆதி திறம் பாடி” என்றார் . “முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே” என்பது தமிழ்மறை. யாவரும் எவையும் ஒடுங்குதற்கு நிலைக்களனாதல் பற்றி “அந்தம் ஆமாறு பாடி” என்றனர் . ஆகவே எல்லாம் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் காரணனாதல் கூறப்பட்டபடியாம் . முதல் ஈறு கூறவே இடைப்பட்ட காத்தற்றொழிலும் அவன்பாலதாதல் பெறப்படுமென்பது.
“தோற்றுவித் தளித்துப் பின்னுந்
துடைத்தருள் தொழில்கள் மூன்றும்
போற்றவே யுடையன் ஈசன் “
என்னும் சிவநெறிப்பனுவலானும் தெளிக.
இறைவனுடைய அருட்செயல்கள் ஐந்தும் சிவசத்தியால் நிகழ்வன. அவற்றுள் மறைத்தலைச் செய்யும் நிலையில் அச்சத்தியைத் திரோதாயி என்று கூறுப. அஃது உயிர்களுக்கு மலபரிபாகத்தை யுண்டாக்கிப் பாசநீக்கத்தில் அருட்சத்தியாக நின்று உபகரிப்பதாகும் ; தாய் தன் மக்கள் பாற் குற்றங்கண்டவிடத்துக் குணங்கண்டு அறக்கருணை காட்டி இன்புறுத்துமாறு போல வென்பது . இக்கருத்தை உட்கொண்டே “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை” என்றார். பேதித்தல் கன்மநுகர்ச்சியில் ஈடுபடுமாறு வேறுபடுத்தல். இது மறைத்தலாகும் . பின் அக் கன்மக்கழிவில் வளர்த்தெடுத்தல் அருளலாகும். இவ்வுண்மையைச் சிவப்பிரகாசம் இரண்டாஞ் சூத்திரம் இரண்டாம் செய்யுட்கு மதுரைச் சிவப்பிரகாசர் எழுதிய விளக்கவுரையானும் உணர்க . பெய்வளை ஆகுபெயராய் உமையம்மையையுணர்த்தும். பெய்வளையெனக் கைகளைக் குறித்தது , அஞ்சற்கவென அபயமுத்திரை காட்டி ஆட்கொள்ளும் இயல்பு நோக்கி யென்க. ஆகவே இறைவனுடைய படைத்தல் முதலிய அருட்செயல்கள் ஐந்தும் புலப்படுக்கப்பட்டபடியாம். தாயின் திருவடிப்புகழ்ச்சி தந்தையின் திருவுள்ளத்தை உவப்பிக்கும் என்னும் உறுதிகொண்டு “பெய்வளைதன் பாத்திறம் பாடி” என்றனர் என்பது.
இதன்கண் “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாத்திறம்பாடி “ என்றதனால் சத்தியை வியந்தது வெளிப்பட்டு இன்புறுத்தல் அறிக.
……………………………………………………………..
பாடல் 15.
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவ ரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
யேருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
கருத்துரை:- முன்னைத் திருப்பாட்டில் மெய்யன்புடையார் விளையாட்டுப்போன்ற செயல்களும் இறைவன் பெருமைக் குணங்களுக்கு மாறுபட நிகழ்தலாகாவென்னுங் குறிக்கோளைப் புலப்படுத்தருளிய அடிகள், இத்திருப்பாட்டில் அவ்விறையருட்குணங்களில் ஈடுபட்டு அனுபவிக்குங்கால் நிகழும் மெய்ப்பாடுகளைப் புலப்படுத்தருளுகின்றார் .
பதவுரை :- வார் உருவம் பூண்முலையீர் = கச்சணிந்த அழகிய அணிகலன்புனைந்த நகில்களையுடையீர் , (சிவாநுபவ நிலையினளாகிய இப்பெண்)
ஓர் ஒருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீர் ஒருகால் வாய் ஓவாள் =
ஒவ்வோரமயத்தில் எம்பெருமானே யென்று பலமுறை கூறி நம் தலைவனாகிய சிவபெருமானுடைய புகழ்மொழிகளை ஒரு பொழுதும் வாய் ஓயாமல் பேசுவாள்,
சித்தம் களிகூர = உள்ளம் களிப்பு மிக ,
கண்நீர் ஒருகால் ஓவா நெடும்தாரை பனிப்ப = கண்களில் நீர் ஒருகாலும் வற்றாத நெடிய தாரையாகப் பொழிய ,
பார் ஒருகால் வந்தனையாள் = நிலத்தில் ஒரே முறையான வணக்கத்தை மேற்கொள்ளுவாள்,
விண்ணோரைத் தான் பணியாள் = மற்றைத் தேவரைக்குறித்து வணங்கமாட்டாள்,
பேர் அரையற்கு ஒருவர் பித்து ஆமாறும் இங்ஙனே = கடவுட்பேரரசனாகிய சிவபெருமான் பொருட்டு ஒருவர் மாலுடையராதலும் இவ்வாறுகொல்,
இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் ஒருவர் ஆர் = இம்முறையில் இவளை ஆட்கொள்ளவல்ல திறமையுடையவர் ஒருவர் யாரோ அவருடைய,
தாள் வாயார நாம் பாடி = திருவடிகளை வாய்நிறைய நாம் பாடிக்கொண்டு ,
ஏர் உருவம் பூம்புனல் பாய்ந்து ஆடு = அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் வீழ்ந்து ஆடுவோமாக என்பது.
விளக்கவுரை :- இதுவும் அது . நீராடப் போந்த கன்னியருள் ஒருத்தி , உலகியலை மறந்து மனமொழிமெய்கள் இறைவன்பால் ஈடுபட்டுத் தன் வயமிழந்துநிற்கும் தலையன்பினளாகிய மற்றொருத்தியின் இயல்பை ஏனைப் பெண்கள் உணரும் வண்ணம் காட்டுமுகமாகக் கூறியது. வாருருவப் பூண்முலையீர் என்று கன்னியருள் ஆண்டிற் பெரிய பெண்களை விளித்தது , அப்பருவத்தில் உலகியலின்பநுகர்ச்சியினும் இறையன்பில் ஈடுபடுதல் சிறந்தது என்னும் உட்கோளை யுணர்த்துற்கென்க. சிவாநுபவ நிலையில் ஈடுபட்ட இப்பெண் ஒவ்வோரமயத்தில் இறைவன் திருநாமத்தைக் கூறத்தொடங்கினால் எம் இறைவன் எம் இறைவன் என்று பலமுறை வாய் ஓயாமல் பேசுவாள் எனவும் , ஒழிவில்லாத அப்பேச்சில் இறைவனைப் பற்றிய புகழ்மொழிகள் பல அடுக்கடுக்காக வெளிப்படும் எனவும் கூறுகின்றவள் , இறைவனைச் சுட்டுங்கால் தன் கூற்றாக நம் பெருமான் எனவும் , அவள் கூற்றாக அநுவதிக்குங்கால் எம்பெருமான் எனவும் முறையே பொதுவும் சிறப்புமாகக் கூறியது, தம்மினும் அவள் பத்திமை மிகச் சிறந்ததென்பதைப் புலப்படுத்தற்கென்க .
சீரொருகால் என்புழி ஒருகாலென்பது காலத்தின் மேற்று; உம்மையை விரித்துரைக்க . பின் நீரொருகால் என்புழியும் ஈதொக்கும் . இறைவன், சித்தத்துள் தித்திக்கும் தேனாதலின் சிவானந்தமாகிய அத் தேனுகர்ச்சியிலீடுபட்டு இன்புறுதலின், “சித்தங்களிகூர” என்றார் . கூர்தல் – மிகுதல் கூர என்னும் எச்சம் காரணப்பொருட்டு. களிகூர்தலின் காரியமாகக் கண்கள் இடையறாது நீர்பொழிந்தன வென்பார், “நீர் ஒருகாலோவா நெடுந்தாரை கண்பனிப்ப” என்றார் . ஓவாமையும் நெடுமையும் முறையே இடையீடின்மையையும் மிகுதியையும் உணர்த்தி நின்றன.
கண்களினின்று நீர் தாரையாக ஒழுகப்பெற்ற நிலையில் எழுந்து , சிவபெருமானே நம் பரமபதி யென்னும் ஒரேமுறையை மேற்கொண்டு நிலத்தில் வீழ்ந்து வணங்குவாள் என்பார் “பாரொருகால் வந்தனையாள்” என்றார் . வந்தனை – வணக்கம் , ஒருகால் – ஒரே முறை ; ஒரே நியமம். இதனால் சிவபெருமானையன்றி வேறு தேவரைக்குறித்து வணங்கமாட்டாள் என்பது பெறப்படினும் மேலும் அவள் உறுதியான நிலையை வற்புறுத்துதற்கு “விண்ணோரைத் தான் பணியாள் “ என எதிர் மறை முகத்தானுங்கூறப்பட்டது . மற்றைத்தேவரை விண்ணோர் என்றது , இந்திரன் முதலிய தேவர்கள் நல்வினைப்பயனாக விண்ணுலக வாழ்க்கை பெற்றவரேயன்றி வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவனாகக் கருதத்தக்கவரல்லரென்பது குறித்து .
ஈண்டு வாயோவாள் என்றதனால் மொழியும் சித்தங் களிகூர என்றதனால் மனமும், வந்தனையாள் என்றதனால் மெய்யும் ஆகிய முக்கரணங்களும் இறைவன்பால் ஈடுபட்டமை புலப்படுக்கப்பட்டபடியாம் . மனம் ஈடுபடுதல் இல்வழி நிகழும் சொற்களும் செயல்களும் பயனிலவாய் முடியுமாதலின் , “சித்தங்களிகூர” என்பது முன்னும் பின்னும் ஏதுவாக இயையுமாறு இடைக்கட் கூறப்பட்டதென்க. வாயோவாள், களிகூர, வந்தனையாள் என்னும் மூன்றுமே முறையே வாக்கு மன மெய்களைக் குறிப்பனவாக, இடைப்பட்ட சித்தங்களிகூர என்பதனையடுத்துக் கண்பனிப்ப என்று கூறியது, உள்ளக்குழைவு புலனாயவாறு உணர்த்தற்கென்க.
“நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப்
பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும்”
என்று சேக்கிழார் கூறியதும் இங்கே நினைக்கத்தக்கது .
பேரரையன் என்றது படைப்போன் முதலிய தலைவர்க்கெல்லாம் தலைவனாக விளங்கும் கடவுட்பேரரசனாகிய சிவபெருமானை. பித்து, அஃதுடையார் மேனின்றது . மிகப்பெரிய கடவுட்பேரரசன் மாட்டு ஒரு சிறுமி மால்கோடல் பெரிதும் வியக்கத்தக்கதென்பார் “பேரரையற் கிங்ஙனே பித்தொரு வராமாறும்” என்றனர் . ஒருவர் பித்து ஆமாறும் இங்ஙனே என இயைக்க. இங்ஙனேயென்பது இத்தன்மைகொல் என வியப்புக் குறிப்புணர நின்றது. உயிர் எத்துணைத் தகுதியுடையதாயினும் , இறைவன் அருளில் வழித் தலையன்பில் தலைப்படல் கூடாதாகலின், இங்ஙனம் முதிர்ந்த பத்திமையுடையளாம் வண்ணம் இவளை ஆட்கொள்ளவல்ல சிறந்த சதுரப்பாடுடையன் சிவபெருமான் ஒருவனேயாதல் வேண்டுமென்பார் . .”ஆரொருவரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் “ என்றார் . இங்ஙனம் தலையன்பினராம் வண்ணம் நம்மையும் ஆட்கொண்டருளுமாறு அப்பெருமான் திருவடிகளை வாயாரப்பாடி நீராடுவோமாக வென்பாள் “தாள் வாயார நாம்பாடி ………புனல் பாய்ந்தாடு” என்று கூறினாளென்பது . பத்திமையிற் சிறந்த இந்நங்கை வாக்கு மனம் மெய் மூன்றானும் ஈடுபட்டாள்; இங்ஙனம் ஒருங்கு நிகழ்தல் நமக்கு அரிதாயினும் மொழிப்பணியையேனும் முந்துறச் செய்வோமாக என்பது கருத்து . இவள் இறைவன் திருவடி முதலியவற்றின் உறுப்பழகை அகக்கண்ணாற்கண்டு கண்ணீரிலாடினாள் . அத்தகுதி நமக்கு இன்றெனினும் அவ்வுறுப்புக்களை உவமைமுகமாகக் காட்டும் அழகிய தோற்றமுடைய மலர்களைப் புறக்கண்ணாற்கண்டு நாம் தண்ணீரிலேனும் ஆடுவோமாக வென்பார் “ஏருருவப் பூம் புனல் பாய்ந்தாடு “ என்றாள் என்பது .
இதன்கண் “ஆரொருவரிவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்” என இறைவன் திருவடிப்பெருமை கூறப்படுதலின் சத்தியை வியந்தது பெறப்பட்டவாறு அறிக.
பாடல் 16.
முன்னிக்கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள்
தன்னிற் பிரிவிலா வெங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் இறையருளில் ஈடுபட்டு அநுபவிக்குங்கால் நிகழும் மெய்ப்பாடுகளைப் புலப்படுத்தருளிய அடிகள், இத்திருப்பாட்டில் அவ்வநுபவப்பயனாக இறைவன் சத்திமூலமாக மெய்யன்பர்க்குச் சுரக்கும் அருட்பெருக்கை வருணித்து அருளிச் செய்கின்றார்.
பதவுரை :– மழை = முகிலே ,
கடலை முன்னிச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து =
நீ கடலைச் சார்ந்து அது குறைய நீரை முகந்து விண்ணில் எழுந்து எம்மையுடையவளாகிய உமையம்மையைப் போல நீலநிறம் பெற்று விளங்கி,
எம்மை ஆளுடையாள் இட்டு இடையின் மின்னிப் பொழிந்து =
எங்களை ஆட்கொண்டருளிய அவ்வம்மையின் சிறிய இடையைப் போல மின்னுதலைச் செய்து விளக்கமுற்று ,
எம் பிராட்டி திருவடிமேல் பொன் அம் சிலம்பின் சிலம்பி =
எங்கள் தலைவியின் திருவடிமேல் அணிந்த பொன்னாலாகிய அழகிய சிலம்பைப் போல ஒலித்து ,
திரு புருவம் என்னச் சிலை குலவி =
அவ்வம்மையின் அழகிய புருவம் போல (வான)வில் விளங்கச் செய்து,
நம் தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவு இல்லா எம் கோமான் அன்பர்க்கும் =
நம்மை அடிமையாக வுடையவளாகிய பெருமாட்டியினின்றும் பிரிதலில்லாத எம்பெருமானுடைய அன்பர்க்கும் ,
நமக்கும் = சிறியேமாகிய நமக்கும் ,
அவள் முன் முன்னி சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் =
அவ்வம்மை முற்படத் திருவுளங்கொண்டு சுரந்தருளும் இனிமைமிக்க அருட் பெருக்கைப்போலப் பொழிவாயாக என்பது.
விளக்கவுரை :- இஃது இப்பாவை நோன்பினால் விரும்பப்படும் பொதுவும் சிறப்புமாகிய பயன்களுள், நாடு செழிக்க மழை பெய்தலாகிய பொதுப்பயனைவேண்டிக் கன்னிப்பெண்கள் கூறியதாக அருளிச் செய்யப்பட்டது , “வெம்பாதாக வியினிலவரைப் பென” (இப்பெருநிலம் மழையால் வெம்மை நீங்கப் பெற்றுக் குளிர்வதாக) என்று 11 ஆம் பரிபாடலிற் கூறியதும் இவ்வுண்மையைக்குறிக்கும் . முன்னுதல் – அடைதல் சுருக்குதல் – நீரை முகந்து கடலைக் குறைத்தல்.
“ நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்”
என்புழி , தடிந்து என்பதற்குக் குறைந்து எனப் பொருள் கொண்டு “ஈண்டுக் குறைத்தலென்றது முகத்தலை ; அது “கடல் குறை படுத்தநீர் கல்குறைபட வெறித்து” என்பதனானும் அறிக” என்று பரிமேலழகர் எழுதியவுரையும் ஈண்டுக் கருதற்பாலது . நீருண்டமேகம் நீலநிறம் பெற்றுத் தோன்றுமாதலின் அஃது அம்மையின் திருவுருவம்போல விளங்கியதென்பார் “உடையாளென்னத்திகழ்ந்து“ என்றார். “நாமும் அரனுடைமை” என்றபடி எல்லாப் பொருள்களையும் உடைமையாகக் கொண்டு உடையானாக விளங்கும் இறைவனின் வேறுபாடின்மைபற்றி இறைவி உடையாள் என்னப்பட்டாள் . அடைமொழியின்றி வரும் உடையான் , உடயாள் என்னுஞ் சொற்கள் முறையே இறைவனையும் சத்தியையும் குறிப்பனவாம் .
“உடையா ளுன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி”
என்று பிறிதோறிடத்து அடிகள் கூறியிருத்தலும் உணர்க. முகில் நீருண்டு விளங்குநிலைக்குச் சத்தியின் அருள்சூற் கொண்டநிலை உவமையாயிற்று. கருக்கொண்டமுகில் மின்னலிட்டு ஒலித்தல் இயல்பு . அவற்றிற்கு முறையே அம்மையின் சிறிய இடையையும் அவள் திருவடிச்சிலம்பையும் உவமையாக்கி “எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னி” எனவும் ”எம்பிராட்டி திருவடிமேற் பொன்னஞ்சிலம்பிற் சிலம்பி “ எனவும் கூறுவராயினர்.
ஈண்டு உவமமாகக் கொள்ளப்பட்ட உலகன்னையைச் சுட்டுங்கால் “உடையாள்” எனவும் “எம்மையாளுடையாள்” எனவும் , “எம்பிராட்டி” எனவும் முறையின் கூறிய உட்கோள் என்னையெனின், கூறுதும். உயிர்த்தொகுதிகளின் நிலைகளைப் பற்றிச் சிவநெறிப்பனுவல் கூறுங்கால் அவைகள் காரணாவத்தை காரியாவத்தை யெனப் பகுத்து விரித்து விளக்கப்பட்டன. அவற்றுள் காரணாவத்தை கேவலம் சகலம் சுத்தம் என மூவகைப்படும் . அநாதிநித்தியமான உயிர் எல்லாம் ஒடுங்குங்காலத்து மாயாகாரணத்திலே யொடுங்கி, படைப்புக்காலமளவும் ஆணவமலத்தாலே மறைப்புண்டு , ஒன்றும் அறியாமற்கிடக்கும் நிலை கேவலமாகும் . படைப்புத்தொடங்கி எல்லாம் ஒடுங்குங்காலம் வரை உடல் கரணம் இடம் நுகர்வுகளைப்பெற்றுப் பிறந்திறந்துழலும் நிலை சகலமாகும் . இங்ஙனம் கேவல சகலப்பட்டுப் பிறந்திறந்து திரியும் நிலையில் திருவருளாலே ஆணவமலபாகம் வர, இருவினையொப்பும். சத்திநிபாதமும் , குருவருளும், ஞானசாதனமும், மும்மலநீக்கமும், சிற்றறிவொழிவும் பெற்று ஞானப்பெருக்கத்தால் இறைவன் திருவருளைக்கூடிப் பேரின்புறும்நிலை சுத்தமாகும் . இவ்வுண்மையை ,
“கேவலஞ் சகலஞ் சுத்த மென்றுமூன் றவத்தை யான்மா
மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம்
காவலன் கொடுத்த போது சகலனாம் மலங்க ளெல்லாம்
ஓவின போது சுத்த முடையனுற் பவந்து டைத்தே”
என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் உணரலாம் . இந்நிலைகளெல்லாம் உயிர்நலங்கருதிய இறை யருட்சத்தியால் நிகழ்வனவாம். இவ்வுண்மையை அநுபவமுடைய ஞானதேசிகராகிய தாயுமான அடிகள் கூறிய பின்வரும் செய்யுளாலும் உணர்க.
“காரிட்ட ஆணவக் கருவறையி லறிவற்ற
கண்ணிலாக் குழவி யைப்போற்
கட்டுண் டிருந்தவெமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற்கி சைந்த
பேரிட்டு மெய்யெனப் பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவினை யமுத மூட்டிப்
பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்ட மைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
டிடருற வுறுக்கி யிடர்தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்துதுயில் கொண்மி னென்று
சீரிட்ட வுலகன்னை வடிவான வெந்தையே
சித்தாந்த முத்தி முதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்த குருவே”
இதன்கண் , “காரிட்ட” என்பது முதல் “கட்டுண்டிருந்தவெமை” என்பது வரை கேவலநிலையாகவும் “வெனியில் விட்டு” என்பது முதல் “நமனைவிட்டு இடருற வுறுக்கி “ என்பதுவரை சகலநிலையாகவும் “இடர் தீர்த்து “ என்பது முதல் “சீரிட்ட” என்பது வரை சுத்தநிலையாகவும் உய்த்து உணர்ந்து கொள்ளத்தக்கன. “உலகன்னை வடிவான எந்தை” என்பது இவ்வெல்லாம் சிவசத்தியால் நிகழ்வன வென்பதைக் குறிப்பிற் புலப்படுப்பதாம்.
இம்முறையிற் கேவலநிலையிற் கிடக்கும் உயிர்த்தொகுதிகளை யுடைமையாகக் கொண்ட நிலையில் அன்னை, “உடையாள்” எனவும் , பின் சகலநிலையில் பிறப்பில் உழலும் நமக்குத் தனுகரண முதலியவற்றைத் தந்து சிறிது அறிவு விளங்கச் செய்து ஆட்கொள்ளுதற்குத் தகுதியளித்தலின் அந்நிலை நோக்கி “எம்மையாளுடையாள்” எனவும் , பின் சுத்தநிலையில் பஞ்சமலங்களும் நீங்கிச் சிவத்தோடு கூடி இன்புறுதற்கு உதவி புரியும் இயல்பு நோக்கித் தலைவியாயினாள் என்பார் “எம்பிராட்டி” எனவும் கூறப்பட்டாள் என்க. சகலநிலை கருதி “எம்மையாளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து “ என்றதும், சுத்தநிலை கருதி “எம்பிராட்டிதிருவடி” என்றதும் குறிக்கொளத்தக்கன.
கருக்கொண்ட மேகம் மேலெழுந்து மின்னிக் குமுறி வில்லிடல் இயல்பாதலின் “திருப்புருவம் என்னச் சிலைகுலவி” என்றார் . திருவென்னும் அடையால் புருவம் பிரட்டியினுடையது என்று கொள்ளல் வேண்டும் . இது முத்திநிலையிற் சேர்க்கும் நயன தீக்கையைக் குறிப்பதாகும் . அதன்மேல் மழை பொழிதற்கு அம்மையின் அருட்பொழிவை உவமம் ஆக்கிக் கூறினர், “நம்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவில்லா எங்கோமான்” என்றது இறைசெயலெல்லாம் சத்தியையின்றி யமையாமை குறிப்பிடற்கு என்க. “சத்தியுஞ் சிவமுமாய தன்மை “ என்னும் சிவஞான சித்திச்செய்யுளில் “அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம் “ என்று கூறியதும் ஈண்டு கருத த்தக்கது. “எங்கோமான் அன்பர்” என்றது, இறையருட்கு ஆளாகி மலபரிபாகம் இருவினையொப்பு முதலியன பெற்றுச் சீவன்முத்தராய்த் திகழும் பேரன்பரை. “நமக்கும்” என்றது அத்துணையன்பில்லாத எளியேமாகிய நம்மனோர்க்கும் என்றபடி. அன்பர்க்கும் நமக்கும் என்புழி உம்மைகள் எண்ணுப் பொருளன. “சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்துமென் சிந்தையுள்ளும், உறைவான்” என்புழிப்போல முறையே உயர்வு சிறப்பு இழிவுசிறப்பு உம்மைகளாகவும் கொள்ளலாம் . முன் முன்னி என இயையும். இருதிறத்தார்க்கும் முற்படத் திருவுளங்கொண்டு என்பது பொருள் . மெய்யன்பராகிய அடியாரோடு அத்துணை அன்பில்லாத நம்மையும் ஒப்பக்கருதி யென்றபடி . சுரத்தல் மேன்மேலும் பெருகுதல் ; தன் கருணை அள்ளக்குறையாமை. அம்மையின் அருட்பெருக்குப் பாசவெப்பத்தை யொழித்துத் தண்ணென்று இனிமைபயந்து நிற்றலின் “இன்னருள்” என்னப்பட்டது. “இன்னருளே என்னப் பொழியாய் “ என்புழி ஏகாரம் தேற்றப்பொருட்டு; பயன்விளைதல் நோக்கிப் பொழிய வேண்டுமென்பது. “உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை” என்றபடி, உலக நலங்குறித்துப் பொழியும் மழைக்கு உயிர் நலங்குறித்துச் சுரக்கும் அம்மையின் திருவருள் ஒப்பாயிற்றென்பது. பாவை நோன்பில் பொதுவும் சிறப்புமாகவுள்ள பயனிரண்டனுள் பொதுப்பயனாக மழை வளத்தை வேண்டியது மிகவுஞ் சிறந்தது. “நீரின்றமையாதுலகு” “மழையின்றி மாநிலத்தார்க்கில்லை” என்பன பொருளுரை .
இதன்கண் உலகத்திற்கு இன்றியமையாது வேண்டப்படும் மழைக்கு உவமையாகச் சிவசத்தியின் அருட்பெருக்கைக் கூறியிருத்தலின் “சத்தியை வியந்தது” வெளிப்படையிற் புலனாயவாறறிக.
****************************
பாடல் 17.
செங்க ணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பால்
எங்கு மிலாததோ ரின்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் மில்லங்க டோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்க ணரசை யடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் இறைவன் சத்தி மூலமாக மெய்யன்பர்க்குச் சுரக்கும் அருட்பெருக்கைப் புலப் படுத்தருளிய அடிகள், இத்திருப்பாட்டில் அவ்வருளமுதத்தால் விளையும் இன்பத்தின் அருமையைப் பாராட்டி அருளிச்செய்கின்றார்.
பதவுரை :- கொங்கு உண் கருமை குழலி = மணம் தங்கிய கரிய கூந்தலையுடைய பெண்ணே,
செங்கணவன் பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்=
திருமாலிடத்தும் , பிரமனிடத்தும், இந்திரன் முதலிய தேவர்களிடத்தும் ,
எங்கும் இல்லாதது ஓர் இன்பம் நம்பாலதாக = மற்றெவ்விடத்து உள்ளார்பாலும் இல்லாத தாகிய ஒப்பற்ற பேரின்பம் எளியேமாகிய நம்மிடத்ததாக ,
நம்தம்மைக் கோதாட்டி = நம்மை வினை மாசு களைந்து,
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி =
இந் நிலவுலகத்தில் நம் வீடுகள்தோறும் எழுந்தருளி வந்து ,
செங்கமலம் பொன்பாதம் தந்தருளும் சேவகனை =
செந்தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளை எளிமையில் தந்தருளும் வீரனை ,
அம் கண் அரசை = அழகிய அருணோக்கமுடைய இறைவனை ,
அடியோங்கட்கு அருமை அமுதை =
அடிமைகளாகிய நமக்குக் கிடைத்தற்கரிய அமுதமாக உள்ளவனை,
நங்கள் பெருமானைப் பாடி =
நம்முடைய தலைவனைப் புகழ்ந்து பாடி ,
நலம் திகழ = நம்மனோர்க்கும் நன்மை சிறக்க,
பங்கயப் பூம் புனல் பாய்ந்துஆடு =
தாமரைமலர் முதலியவற்றால் பொலிந்து விளங்கும் நீரிற்குதித்து ஆடுவோமாக என்பது .
விளக்கவுரை :- இது நீராடுங்கால் ஒருத்தியை நோக்கிக் கன்னியர் பலருங்கூறியதாக அருளிச்செய்யப்பட்டது, இப்பகுதியில் மகளிரை முன்னிலைப்படுத்திய பிற இடங்களிலெல்லாம் “வாட்டடங் கண்மாதே” (1) “நேரிழையாய் “ (2) “முத்தன்ன வெண்ணகையாய்” (3) “ஒண்ணித்திலநகையாய்” (4) “தேன்வாய்ப்படிறீ” (5) “வாருருவப்பூண்முலையீர் “ (6) என்று அவர் தம் முன்னழகு சுட்டப்பட்டன . அவ்வாறாகவும் ஈண்டு “கொங்குண் கருங்குழலி” எனப் பின்னழகைச் சுட்டிக் கூறியது, விளிக்கப்பட்டவள் இறைவனுடைய அருட்பெருக்கையும் பேருபகாரத்தையும் விளையாட்டுநிலையில் புறக்கணிப்பது போல் திரும்பி நின்றாளாக , அந்நிலையில் அவள் கூந்தலழகைப் புகழ்வது போலச் சுட்டிக்கூறி வற்புறுத்தியபடியாம் .
திருமால் , நான்முகன் , இந்திரன் முதலிய தேவர்கள் பாலும் மற்றெவ்விடத்துள்ளார் பாலும் அமையாத ஒப்பற்ற சிவானந்த மென்பார் “செங்கணவன் பால் திசைமுகன் பால் , தேவர்கள் பால் எங்குமிலாதது ஓர் இன்பம் “ என்றார் . திருமால் முதலிய தேவர்கள் சிவபுண்ணியமிகுதியால் அதிகாரநிலையங்களைப் பெற்று அம்முறையில் ஒரோவமயம் சிவபெருமான் பக்கல் அணுகும் பேறு பெற்றவராயினும் , அதிகாரச் செருக்கால் உயிர்முனைப்புடன் தத்தம் செயல்களில் தலைப்படும் இயல்புடையராதலின் இறைவனது பேரானந்தப் பெருஞ்செல்வத்தை அநுபவிக்கும் பெறலரும்பேறு பெற்றிலரென்ப . இவ்வுண்மையை ,
“இந்திரனு மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி”
என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலானும் அறிக. இங்ஙனம் இறைவன் தன் அணிமையில் இருக்கும் திருமால் முதலியோரைக் கடந்து மெய்யன்பரை ஆட்கொள்ளும் நிமித்தம் நிலவுலகத்துக்கு எழுந்தருளி வருதலால் திருமாலும் நான்முகனும் விண்ணுலகைவிட்டு நிலவுலகிற் பிறக்கும் பேறு பெற்றிலமே யென்று ஏக்கமுற்று இவ்வுலகிற் பிறக்கப் பெரிதும் விருப்புற்றனர் என்று அடிகள் அருளியிருத்தலும் ஈண்டுக் கருதத்தக்கது.
திருமால் ஓரமயம் தன் கண்ணிடந்து அருச்சித்தும் அதன் பயனாக இறைவன்பாற்பெற்றது சக்கரப்படையேயன்றிச் சிவானந்தப்பேறன்று என்பது குறித்து ஈண்டுச் “செங்கணவன்” என்றும் , பிரமன் நான்குமுகங்களாலும் மறைபாடி வழுத்தியும் பெற்றது முப்புரம் அழிப்புழி இறையவர்க்குச் சாரதியாம் அத்துணையேயன்றி வேறு இன்றென்பது தோன்றத் “திசைமுகன் “ என்றும், இந்திரன் முதலியோர் ஒளியுருவம் பெற்றும் பேரொளிப்பிழம்பாகிய இறைவனை வேண்டிப்பெற்றது நரை திரை போக்கவல்ல அமுதவுண்டியானாய சிற்றின்பமேயன்றிப் பிறிதின்றென்பது புலப்படத் “தேவர்கள் என்றும் சுட்டப்பட்டனரென்க . “எங்கும்” என்றது ஆகுபெயர்; விண்ணுலகத்தன்றிப் பிறவிடங்களிலுள்ள முனிவர் முதலியோரிடத்தும் என்றபடி. “ஓர் இன்பம்” என்றது ஈடும் எடுப்புமில்லாத நித்திய இன்பத்தை. சிறந்த தவமுதலியன செய்து தகுதிவாய்ந்தவராலும் பெறுதற்கரிய இன்பம். அத்துணைத்தகுதி ஒருசிறிதுமில்லாத ஏழைப்பெண்மக்களாகிய நம்மிடத்து நிலவென்பார் “நம்பாலதாக“ என்றனரென்க. கோதாட்டுதல் – குற்றங்களைதல். இறைவனது பேரானந்தம் நம்பால் தங்குதற்குத் தடையாகவுள்ள வினைமாசு போக்கியென்பது கருத்து . நல்லின்பமாகிய அமுது பெய்து வைத்தற்குக் கொள்கலம் தூய்மைசெய்தபடியாம். இங்கு – இந்நிலவுலகத்தில். “நாம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி” என்றதனால் திருமால் முதலிய தேவர்களெல்லாம் இறைவன் எழுந்தருளியிருக்கும் சிவலோகத்தே சென்று அவன் திருக்கோயிற்கண்ணே வழிபட முயன்று செவ்விபார்த்திருப்ப, இறைவன் அன்னார்காட்சிக்கு அரியனாய் இந்நிலவுலகத்தே போந்து மெய்யன்பர் உறையும் சிறிய குடில்கள் தோறும் வலிய எழுந்தருளி அவர்க்கு எளிமையிற் காட்சியளிக்கும் இயல்பினன் என்னும் உண்மை புலனாயவாறு அறிக .
“முந்திய முதனடு விறுதியு மானாய்
மூவரு மறிகில ரியாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
பழங்குடில் தொறுமெழுந் தருளிய பரனே”
என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலும் ஈண்டு நோக்கத்தக்கது.
ஒரு பேரரசன் தன் தலைநகரைவிட்டுப் பிறிதோரிடத்துக்கு வரனேர்ந்தால் வந்து தங்கும் நேரம் மிகச்சிறிதாயினும் அவ்விடத்தில் அலங்காரமாளிகையமைத்தல் உலகயில்பு . மேலும் அவ்வரசன் தன் மனைவியோடு வந்து தங்குவதனால் இன்னும் சிறப்பாக இடம் அமைக்கவேண்டுமென்பது கூறவேண்டா. அங்ஙனமாகவும் இங்கே இறைவன் எழுந்தருளிய இடம் குடில் எனவும் , அதுவும் பழமையானதெனவும், ஆண்டு எழுந்தருளுங்கால் உலகன்னையாகிய தேவியாரொடு எழுந்தருளினான் எனவும், கூறிய அருமை நினைந்து இன்புறத்தக்கது . நம் இல்லங்களுக்கு எழுந்தருளிய அளவிலன்றி அப்பெருமான் தன்பொன் போன்ற திருவடிகளையும் தந்தருளினான் என்று கருணைமிகுதியைப் பாராட்டினரென்பது. கோதாட்டித் திருவடியளித்தல் , வினைமாசொழித்துச் சிவஞானம் அருளிய குறிப்பைப் புலப்படுக்கும் . சேவகன் – வீரன் ; ஈண்டுக் கொடைவென்றியான் மேம்பட்டவன் என்பது . திருமால் முதலியோர்க்கும் கிடைக்காத இன்பம் ஏழைகளாகிய மக்களிடமாக அவர்தம் இல்லங்களுக்கு வலிய வந்து சிவஞானம் வழங்கிய பெருங்கொடையாளன் என்பது கருத்து. நம்பாலதாகக் கோதாட்டி எழுந்தருளித் தந்தருளும் சேவகன் என முடிக்க. இதனால் பேரின்ப விளைவிற்குக் காரணமாகச் சிவஞானம் அருளினன் என்பது புலனாம் , கண்ணுக்கு அழகு கண்ணோட்டமாதலின் அம்கண் – அருணோக்கம் என்று கூறப்பட்டது . கொடைவீரனாகிய அரசனாதலின் அவன்பால் அருட்குணம் உண்டாயிற்றென்பதும், அக்குணம் உண்மையானே அரிய அமுதமாகநின்று பயன்விளைத்தனன் என்பதும் , அப்பயனை நமக்குச் சிறப்பு முறையில் வழங்கியமையால் நம் உண்மைத்தலைவனாயினன் என்பதும் உணர்ந்து ”அங்க ணரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானை” என்றனரென்க. அத்தகைய பெருமானைப் புகழ்ந்து பாடுதலானே நம்மனோர்க்கு எல்லாநலங்களும் வெளிப்படையில் உண்டாம் என்பார், “பாடி நலந்திகழ” என்றார் . நலம் விளங்கும் வண்ணம் தாமரை மலர்களாற் பொலிவு பெற்ற நீர் நிலையில் மகிழ்ச்சி மீக்கூர்ந்து குதித்து நீராடுவோமாக என்றனர் என்பது.
இதன்கண் “ செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகன்” என்றதனால் திருவடியாற் பெறப்படும் சத்தியை வியந்தது புலனாயவாறறிக .
முதல் திருப்பாட்டின் இறுதியில் விளக்கம் காண்க .
*********************************
பாடல் 18.
அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி யாணா யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் இறைவன் திருவருளால் விளையும் இன்பத்தின் அருமையைப் பாராட்டியருளிய அடிகள், இத் திருப்பாட்டில் அவ்வின்பப் பேற்றிற்குரிய உயிரின் பக்குவநிலைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டு நின்று இறைவன் அருளும் முறையைப் புலப்படுத்தருளுகின்றார்.
பதவுரை :- அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் =
திருவண்ணாமலையில் எழுந்தருளி யிருக்கும் இறைவனுடைய திருவடித் தாமரை மலர்களைச் சார்ந்து வணங்கும் ,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் =
தேவர்கள் முடியணிக்கண் உள்ள பலவகை மணித்தொகைகளும் பொலிவிழந்து ஒளிமழுங்கியொழிந்தமை போல,
கார் கரப்ப கண் ஆர் இரவி கதிர் வந்து =
இருள் நீங்க எங்கணும் பரவிய கதிரவன் ஒளி வெளிப்பட்டமையால்,
தாரகைகள் தண் ஆர் ஒளி மழுங்கி அகல =
விண்மீன்கள் தம் மெல்லிய ஒளி பொலிவிழந்து மழுங்கி மறைய, (இந்நிலையில்)
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒளிசேர் விண் ஆகி மண் ஆகி =
பெண்ணாகியும் ஆணாகியும் அலியாகியும் ஒளிவிளங்கும் ஆகாயமாகியும் நிலமாகியும்,
இத்தனையும் வேறு ஆகி =
இத்துணைப் பொருள்களினின்றும் வேறுபொருளாகியும் ,
கண் ஆர் அமுதமும் ஆய் =
ஞானானுபவத்திற்கு அமுதமயமாகியும் ,
நின்றான் கழல்பாடி =
நிலைபெற்று நிற்கும் சிவபெருமானுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடி ,
பெண்ணே = பெண்ணே
இப்பூம்புனல் பாய்ந்து ஆடு =
பொலிவு பெற்ற இந்நீர்நிலையிற் குதித்து ஆடுவோமாக என்பது .
விளக்கவுரை :- இது நீராடுங்கால் ஒருத்தியை நோக்கிக் கூறுமுகமாகக் கதிரவன் தோன்றிய குறிப்பைப் புலப்படுத்துக் கூறுகின்றது. திருவண்ணாமலை ஒருகாலத்து ஒளிவடிவினதாக ஓங்கி நின்றதென்ப இதனை,
“கடல் வண்ணனும் வேதக்,
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவா வணம் அழலாகிய அண்ணாமலை”
என்பர் திருஞானசம்பந்தர். இங்ஙனம் பேரொளிப்பிழம்பாகவுள்ள மலை யுருவில் விளங்கிய இறைவனுடைய திருவடிகளைச் சார்ந்து வணங்கும் தேவர்களின் தலையிலணிந்த முடிகளில் பாதிக்கப்பட்டுள்ள பலவகை இரத்தினங்களெல்லாம் அத்திருவடிப் பேரொளிமுன், தமக்குப் பொலிவுதரும் சிற்றொளிகளை யிழந்தொழிந்தது போலவென்பது உவமை. அழலுருவாய அண்ணலின் திருவடிகளை “சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன” என்று கூறும் தமிழ்மறை . அணுகிவணங்குதல் முடிமணிகளின் ஒளி அறவே மழுங்கியொழிதற்கு ஏதுவாம் என்பார், “சென்றிறைஞ்சும்” என்றார் . வீறு – பொலிவு . “சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி” என்புழி அப்பொருட்டாதல் அறிக. கன்னியர் நீராடுங்காலம் இருள்புலர் காலையாதலின், “கார்கரப்ப” என்றார். கார் ஆகுபெயர் . கரப்ப என்னும் எச்சம் காரியப்பொருட்டு. விண் மண் முதலிய எங்கனும் பரவிய கதிரவன் ஒளியென்பார். “கண்ணார் இரவிகதிர்” என்றார் . இரவிகதிர் என்றது குழவிகை என்பது போல மிகாதாயிற்று . வந்து என்னும் எச்சம் காரணப் பொருள் குறித்து நின்றது . கதிரவன் ஒளி சிறிது வெளிப்பட்ட துணையானே விண்மீன்கள் ஒளிமழுங்கி யொழிதல் கண்கூடு தண்மை ஈண்டு மென்மைப் பொருட்டு. “முயக்கிடைத் தண்வளி போழ” என்புழித் “தண்மை ஈண்டு மென்மை மேனின்றது “என்பர் பரிமேலழகர். தாம் – அசை , வல்லொளியாகிய கதிரொளிமுன் மெல்லொளியாகிய விண்மீன் ஒளிமழுங்குதல் இயல்பே. வீற்றுதலாகிய உவமவினையைப் பொருளினும் , மழுங்கி, அகல என்னும் பொருள் வினைகளை உவமையினும் இயைத்துக்கொள்க .
இந்நிகழ்ச்சி கன்னியர் நீராடத்தொடங்கி நெடுநேரமாயிற் றென்பதையும் , ஞாயிறு கதிர்பரப்பியெழும் இருள்புலர்காலம் தொடங்கிற்று என்பதையும் , விரைவில் நீராடுதலை முடித்துக்கொள்ள வேண்டு மென்பதையும் , குறிப்பிற் புலப்படுத்தவாறறிக. ஈண்டுக் கன்னிப்பெண்கள், நெடுநேரம் இறைவன் திருப்புகழைப் பாடி நீராடினராக, அந்நிலையில் கதிரவன் ஒளி தோன்றியதும் , இருள் நீங்கப்பெற்று , விண்மீன்கள் ஒளிமழுங்கி அக்கதிரொளியில் இயைந்து மறைந்தன வென்னும் இவ்வருணனையால் , இறையருட் பேற்றிற்குரிய கடவுட்பத்தியைப் பலகாலம் மேற்கொண்ட உயிர்களுக்குச் சிவஞானம் தோன்றியதும் , அவ்வுயிர்கள் பாசம் நீங்கப்பெற்று, உயிரறிவு மடங்கி இறையருள் நிறைவில் இரண்டறக் கலந்து இன்புறுவனவாம் என்னும் சைவசித்தாந்த உண்மை குறிப்பிற் புலனாதலும் உணர்க.
இனி இறைவன் உலகெலாமாகி வேறாயுடனுமாய் நின்று உயிர்களுக்கு அருளுமுறையைப் புலப்படுத்துகின்றார். உலகம் இயங்கியற் பொருட்பகுதி, நிலையியற் பொருட்பகுதியென்னும் இருதிறத்ததாம். இங்குப் “பெண்ணாகி யாணாயலியாய்” என்பது இயங்கியற் பொருட்கூற்றுக்கும், “விண்ணாகி மண்ணாகி” என்பது நிலையியற் பொருட்கூற்றுக்கும் எடுத்துக்காட்டாகும். ஏனையவற்றை உபலக்கணத்தாற் கொண்டு இவ்விருதிறத்துள் அடக்கிக் கொள்ளல் வேண்டும். இயங்கியற்பொருள் ஆண் பெண் அலி என்னும் முக்கூற்றுள் அடங்கும். உயர்திணை அஃறிணை இரண்டற்கும் ஈதொக்கும். ஆண் பெண் என்பதே முறையாயினும் ஈண்டுப் புகழ்ந்து பாடுவார் கன்னியராதலின், அவர் நிலைக்குத் தாய்மையன்பே முற்படுமென்பது குறித்து , “பெண்ணாகியாணாய்” என்று கூறப்பட்டது . “அன்னையும் அத்தனு மாவாய் “ என்பது தமிழ்மறை . இறைவன் சத்தியாய்ச் சிவமாய் வெளிப்பட்டருளியது பற்றிப் “பெண்ணாகியாணாய்” எனவும், பிரமப்பொருளாகப் பாவிக்கப்படுதலின் “அலியாய்“ எனவும், கூறுவராயினர். அலி, ஆணாகவும் பெண்ணாகவும் இல்லாமல் ஆண்மையும் பெண்மையும் திரிந்தவுருவாகும். அது பொருள்வகையால் உயர்திணையாயினும் சொல்வகையால் அஃறிணைப்பாற்படும் . வடமொழியில் பிரமம் என்னும் சொல்லும் அவ்வாறே நபுஞ்சகலிங்கமாதல் ஈண்டுக் கருதத்தக்கது .
இனி நிலையியற் பொருளுக்கு எடுத்துக்காட்டாக “விண்ணாகி மண்ணாகி” என்றார் . பூதங்களுள் ஒருகுணமுடைய விண்ணையும் ஐந்து குணங்களுடைய மண்ணையும் கூறவே , இடைப்பட்ட ஏனைய பூதங்களும் அவற்றின் கலவையாகிய மரஞ்செடி முதலியனவும் கொள்ளப்படும். ஞாயிறு திங்கள் விண்மீன் முதலிய ஒளிமண்டிலங்களுக்கெல்லாம் இடனாதல் பற்றி, “பிறங்கொளிசேர்விண்” என்னப்பட்டது மணி பொன் கல் மண் மர முதலிய பொருள்களைக்கொண்டு இறைவன் திருவுருவமைத்து வழிபடுவார்க்கு , அத்திருவுருவங்களின் முகமாகவும் இறைவன் வெளிப்பட்டு அருளுதலின், அவற்றிற்கு மூலமாகிய பூதங்களாகவும் கூறினார்.
இங்ஙனங் கூறியது உடலின் உயிர்போலக் கலப்பினால் உலகெலாமாகியென்பது புலனாதற்கு எனவும், இத்தனையும் வேறாகி என்றது, கண்ணின் அருக்கன் போலப் பொருட்டன்மையால் வேறாதல் புலப்படுதற்கு எனவும், கண்ணாரமுதமுமாய் என்றது உயிற்கு உயிராதற்றன்மையால், கண்ணொளியின் ஆன்மபோதம் போல உடனாதல் புலப்படுதற்கெனவும் கொள்ளல் வேண்டும். இஃது இறைவனுக்குத் தடத்தலக்கணமெனப்படும் பொதுவியல்பாகும் . கண் – அறிவு . ஆர்தல் – அநுபவித்தல், அமுதம் – நுகர்பொருள். உயிர்கள் வினைப்பயன்களை அநுபவிக்குங்கால் அவற்றிற்கு முன்னிலையாகிய நுகர்பொருள்களில் அவ்வுயிர்களோடு இறைவன் பிரிப்பின்றிச் சேறலே உடனாதலாகும். இப்பொருளைக் குறிப்பிற் புலப்படுத்தற்கே “கண்ணாரமுதமுமாய் நின்றான்” என்றார் . இங்ஙனம் உலகெலாமாகி வேறா யுடனுமாய் நின்று உயிர்களுக்கு உபகரித்து வரும் சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்துபாடி யென்பார் , “நின்றான் கழல்பாடி” யென்றார். இஃது ஒருத்தியை விளித்துக் கூறப்பட்டதாயினும் கதிரவன் தோன்றுதற்கு முன் நீராடுதலை முடித்துக்கொள்ளவேண்டிய நாம் கதிரொளி வெளிப்படத் தொடங்கி விட்டபடியால் இனிக் காலந்தாழ்த்தல் ஆகாது : விரைந்து நீராடுதலைச் செய்து கொள்வோமாக என்று வற்புறுத்தலின், எல்லோரையுஞ் சுட்டிக் கூறியதாகக் கொள்ளல் வேண்டும்.
இதன்கண் “நின்றான் கழல்பாடி” என்றமையால் “சத்தியை வியந்தது” புலப்படுக்கப்பட்டபடியாம். இறைவன் திருவடி சத்தியைக் குறித்து என்பதை முதல் திருப்பாட்டின் உரையிறுதியிற் காண்க .
*****************************************
பாடல் 19.
உங்கையிற் பிள்ளை யுனக்கே அடைக்கலமென
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள்பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே யெமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் இறைவன் உயிரின் பக்குவநிலைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டருளும் முறையைப் புலப்படுத்தருளிய அடிகள், இத்திருப்பாட்டில் அவ்வாறு வெளிப்பட்டு இன்புறுத்தும் இறைவனுக்கு உயிர்கள் தாம் செய்யக்கடவ அன்புப்பணிகள் நிறைவேறுதற்பொருட்டும் அவ்விறைவன் துணை இன்றியமையாதது என்பதை அருளிச்செய்கின்றார் .
பதவுரை :- எங்கள் பெருமான் = எங்கள்பெருமானே,
உம்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று = உன் கையிற் சேர்ப்பிக்கப்பெறும் இப்பெண் உனக்கே அடைக்கலப்பொருளாவாள் என்று
அங்கு அப்பழஞ்சொல் = திருமணக்காலத்தில் பண்டைக்காலமுதல் வழங்கி வரும் சொல்லை,
புதுக்கும் எம் அச்சத்தால் = புதுப்பிக்குமுகமாக எழுந்த எம் அச்சங்காரணமாக ;
உனக்கு ஒன்று உரைப்போம் கேள் = உனக்கு ஒரு விண்ணப்பம் செய்வோம் கேட்டருள்வாயாக,
எம் கொங்கை நின் அன்பரல்லார் தோள் சேரற்க =
எங்களுடைய கொங்கைகள் நின் அன்பரல்லாதார் தோள்களைத் தழுவாதொழிக,
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க = எம் கைகள் நினக்கன்றி வேறு யார்க்கும் எத்தகைய தொண்டும் செய்யாதொழிக,
எம் கண் கங்குல் பகல் மற்று ஒன்றும் காணற்க =
எம்முடைய கண்கள் இரவும் பகலும் நின்னையன்றிப் பிறிது ஒரு பொருளையும் காணாதொழிக ,
இங்கு இப்பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல் = இவ்வுலகத்தில் இவ்வாறே எங்களுக்கு எங்கள் தலைவனாகிய நீ அருள்செய்வாயாயின் ,
ஞாயிறு எங்கு எழில் எமக்கு என் =
கதிரவன் கீழ்த்திசையிலன்றி வேறு எத்திசையில் தோன்றினாலும் எமக்கு வரக்கடவதென்னை ?.(யாதும் இன்று) என்பது .
விளக்கவுரை :- உன் கை எதுகை நோக்கி உங்கை யென்றாயிற்று . இப்பழமொழி திருமணக்காலத்தில் மணமகளை மணமகன்பால் ஒப்பிடுதற்பொருட்டுப் பெற்றோர் கூறுங்கூற்றாகப் பண்டு வழங்கியது என்ப. மணமகன் கைப்பிடித்த ஞான்றே அவனுக்கு அப்பெண் உரியவளாகவும், அவளைப் பெற்றோர் தம் ஆர்வத்தால் சிறப்புமுறையிலும் பாதுகாக்கும் கடமை நின்பாலதே என வற்புறுத்துக் கூறுமுகமாக எழுந்ததாகும் இப்பழமொழி. என்னை சிறப்பு எனின் , ஒருவன் தனக்கு உரிமைப்பொருள் , தன்பால் வைக்கப்பட்ட அடைக்கலப்பொருள் என்னும் இரண்டனுள், உரிமைப்பொருளினும் பாதுகாக்கத்தக்க பெருமை அடைக்கலப்பொருட்கு உண்மையே. இவ்வாறு கருதுதல் உயர்ந்தோர் கொள்கை. கவுந்தியென்னும் தவச்செல்வியால் அடைக்கலமாக ஒப்புவிக்கப்பட்ட கண்ணகி யென்னுங் கற்பரசியை இழந்த மாதரியென்பாள் அது பொறாது தன்னுயிர் நீத்தனள் என்ப. “அடைக்கலமிழந்து உயிரிழந்த இடைக்குலமகள்” (காதை – 29) என்பது சிலப்பதிகாரம் .
அங்கு என்றது கற்பொழுக்கமாகிய திருமண நிகழ்ச்சியைக் குறிக்கும் . வதுவைச்சடங்கு நிகழ்த்தி , கொள்ளுதற்குரிய முறைமையினை யுடைய மணமகன், கொடுத்தற்குரிய முறைமையினையுடைய இருமுதுகுரவர் முதலாயினோர் கொடுப்ப மணமகளை ஏற்றுக்கொள்ளுவதே உலகியலிற் பண்டு தொட்டு வழங்கிவரும் திருமணமாகும். இதனை,
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”
என்னும் தொல்காப்பிய விதியாலும், “இவளை இன்னவாறு பாதுகாப்பாயெனவும், இவற்கு இன்னவாறே நீ குற்றேவல் செய்தொழுகெனவும்….கற்பிக்கப்படுதலில்……கற்பென்றார்” என அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய விளக்கவுரையாலும் உணரலாம். பருவமடைந்த மகளிரை உரியகாலத்தே மணஞ்செய்து கொடுத்தல் தங்கள் கடமையெனப் பெற்றோர்கள் கருதுவது இயல்பு, அம்முறையில் எம்மைப் பெற்றோரும் எம்மை மணஞ்செய்து கொடுக்குங்கால் அப்பழஞ்சொல் அவர்களாற் கூறப்படுமே யென்பார், “புதுக்கும்” எனவும், அந்நிலையில் எங்களுக்குக் கணவராக வர இருக்கின்றவர்கள் குடிப்பிறப்பு உருவம் பருவம் அறிவு திரு ஆண்மை அன்பு முதலியவற்றால் ஒத்து உலகத்தார் மதிக்கும் தகுதிகள் பலவுடையராயினும் எங்கள் பெருமானாகிய நினக்கு அன்பராம் சிறப்புடைத் தகுதியில்லாதவராயின் எங்கள் வாழ்க்கை பயனுடையதாகாதே யென்ற அச்சமே எங்கள் உள்ளத்திற் குடிகொண்டுள்ள தென்பார் “எம் அச்சத்தால் “ எனவும், இவ்வச்சங்காரணமாக நின்திருமுன் யாங்கள் கூறும் ஒருசெய்திக்குத் திருச்செவிசாய்த் தருளல்வேண்டுமென்பார் “அச்சத்தால் உனக்கொன்றுரைப் போங் கேள்” எனவும் கூறினர் என்க.
இவர்கள் கூறிய செய்திகள் பலவாகும். அவ்வாறாகவும் “ஒன்று உரைப்போம் “ என்றது, இறைவன் எளிதிற் செவியேற்றற்கென்க. மிகவும் தகுதிவாய்ந்த பெரியோனிடத்து எளியவன் ஒருவன் தன்குறை பற்றிப் பல சொல்ல முற்படுங்கால், காலச் செலவும், தன் அரிய செயற்கு இடையறவும் கருதிப் பல சொற்கேட்டலில் அப்பெரியோன் புறக்கணிக்கக் கூடுமென்று அஞ்சிக் கூறுபவன், “ஒரு வார்த்தை தெரிவித்துக்கொள்வேன்; இடந்தரல்வேண்டும்” என்று நயம்படவுரைத்துப் பின் விரைவிற் பலவற்றையுங் கூறுதலை உலகியலிற் காண்கின்றோம். அம்முறையே மேற்கொண்டே “ஒன்றுரைப்போம்” என்றனர் என்பது. விண்ணப்பம் செய்துகொள்ளுங் கன்னியர் பலராதலின் “எம்கொங்கை” என்றும், ஒவ்வொருத்திக்கும் தனித்தனியே நல்ல கணவன் வேண்டுதலின் “நின் அன்பர்” எனவும் பன்மையாகக் கூறினர் என்க. இப்பாவை நோன்பின் பயனாக விரும்பும் கணவர் சிவனிடத்து அன்புடையராக இருப்பின் , அவரோடுகூடி இல்லறம் நடாத்துங்கால் இருதிறத்தாரும் சிவத்தொண்டில் ஈடுபட்டு இன்புறலாமென்னுங் குறிக்கோளுடையராய் “நின்னன்பரல்லார் தோள் சேரற்க” என வேண்டுவாராயினர் . குறிக்கோள் அதுவென்பது அடுத்துத் தம் கைகளும் கண்களும் செயற்பாலவற்றைக் குறிப்பிடுமுகமாகவும் உணரத்தக்கது. “அவர் தோள் சேர்க” எனற்பாலதனை “அல்லார்தோள் சேரற்க” என எதிர்மறைமுகத்தாற் கூறியது அன்பரின் இன்றியமையாமையை வலியுறுத்தற்கு பின்வருவனவற்றிற்கும் ஈதொக்கும். “உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறிய திருவாக்கும் ஈண்டு நினைக்கத்தக்கது .
எம் கைகள் உனக்கல்லாமல் வேறு யார்க்கும் எப்பணியும் செய்யாதொழிக என்பதனோடு மேல் ஒன்பதாம் திருப்பாட்டில் “நின்னடியார் சொன்ன பரிசே தொழுப்பாய்ப் பணிசெய்வோம்” என்பது முரணாகாதோவெனின் , ஆகாது; என்னை? அப்பெண்கள் சிவனடியாரைச் சிவனெனக் காணும் கருத்தினராதலின் என்க . மேலும் , கற்பெனப்படுவது சொற்றிறம் பாமையாகலானும், சிவனடியார் கணவராயின் அவர் கட்டளையிடுவது சிவத்தொண்டாகவே முடியுமாகலானும் “அவர் சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்” என்று ஆண்டுக் கூறியது மிகப் பொருத்தமுடையதே. ஒன்பதாந்திருப்பாட்டிற் கூறியதையே ஈண்டும் கூறியது மிகையாகாதோ எனின், ஆகாது. என்னை? அஃது இம்மை மறுமைகளைக் குறிக்கொண்டு கூறியது. இஃது இம்மை மறுமை வீடு என்னும் மும்மைநலங்களையும் குறிக்கொண்டு கூறியது ஆதலின் என்க.
இரவும் பகலும் நின் திருவுருவத்தையே எம் கண்கள் காண வேண்டும் என்றதனால் கனவிலும் நனவிலும் நின் திருவுருவக் காட்சியே முன்னிற்க வேண்டுமென வேண்டினாரென்பது இறைவன் திருவடியைக் கனவிற் காண்டலும் சிறந்த பேறாகுமென்பதைத் திருவாசகத்தில் தோய்ந்தவுள்ளமுடைய இராமலிங்க அடிகள்,
பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கிற்
கண்ணேறு படுமென்றோ கனவி லேனுங்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ
என்று அது பெறாமைமுகமாகப் பரிந்து கூறிய அன்புரையால் அறியலாம். ஈண்டுக்கண்ணைக் குறிப்பிட்டது ஏனைப் பொறிநுகர் புலன்களும் சிவாகாரமாகவே நிகழவேண்டுமென்பது குறித்து “ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள” என்னும் அருண்மொழித்தேவர் அருளிய கருத்து இங்கே நினைக்கத்தக்கது . “எம் கொங்கை நின்னன்பரல்லார் தோள் சேரற்க” என்றதனால் இம்மைப் பயனும் , “எம் கை உனக்கல்லாதெப்பணியும் செய்யற்க” என்றதனால் மறுமைப்பயனும் , “கங்குல் பகல் எம்கண் மற்றொன்றுங் காணற்க” என்றதனால் வீட்டின்பமும் வேண்டினாரென்பது குறிப்பிற் புலப்படுமாறு அறிக .
ஆண்டவனே! இவ்வுலகத்தில் இங்ஙனம் நின்பால் அன்புடையடியவரைக் கணவராகப்பெற்று இல்லறத்தியைந்து நினக்குத் தொண்டு செய்து நின்தரிசனப் பேறெய்தி வாழும் வண்ணம் அருள்புரிவையாயின் இப்பொழுது கீழ்த்திசையில் தோன்றிய கதிரவன் வேறு எத்திசையில் தோன்றினும் எமக்கு வரக்கடவ தீங்கு யாதுமின்று என்பார், “இங்கிப் பரிசே யெமக்கெங்கோன் நல்குதியேல் , எங்கெழிலென் ஞாயிறு எமக்கு “ என்றனர் .
“என் கடன் பணிசெய்து கிடப்பதே, தன்கடன் அடியேனையுந்தாங்குதல்” என்றபடி தொண்டு செய்தல் முதலிய செயல்களெல்லாம் உயிர்களின் கடமையாகவும் பயனளித்தல் இறவன் கடமையாகவும் கூறியிருப்ப , ஈண்டு அச்செயல்களுக்கும் இறைவனைத் துணைவேண்டுதல் பொருந்துமோவெனின். வினைக்கு ஈடாகப் பயனளிக்கும் இறைவன் பக்குவமுள்ள உயிர்களுக்கு நல்வினை செய்யவும் கருணை புரிந்து பின் பயனும் அளிப்பன் என்பது சைவசித்தாந்த உண்மையாதலின் பொருந்துமென்க. இவ்வுண்மையை ”ஆங்கவனருளாற் பத்திநன் குண்டாம் பத்தியால் அவனருள் உண்டாம்“ என்னும் வாயுசங்கிதையானும் ,
“என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் “
என்னும் நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கானும் உணர்க; இதற்கு முன்னுள்ள திருப்பாட்டில் கதிரவன் தோன்றிவிட்டான், விரைவில் நீராடுதலை முடிக்கவேண்டுமென்னுங் குறிப்புத் தோன்றக் கூறிய பெண்கள், பின்னர் இறைவன் நமக்கு இவ்வாறு அருளுவானாயின் கீழ்பால் தோன்றிய இக்கதிரவன் யாண்டுத் தோன்றினாலும் நமக்காவதென் என்றனர் என்பது .
இனி இத்திருப்பாட்டிற்போந்த “உன்கையிற் பிள்ளை உனக்கேயடைக்கலம் “ என்னும் பழமொழி ஒருதாய் தன் குழந்தையைக் கையிலேந்தியிருக்குங்கால் பிறரொருவர் கூற்றாக எழுந்ததென்பாரும், பெற்றோர் தம் குழந்தையைப் பாதுகாக்கும் நிமித்தம் மற்றோர்பால் கையடைப்படுத்துநிலையிற் கூறியதாக எழுந்ததென்பாரும் உளர் .
இதன்கண், இறையன்பில் ஈடுபட்ட கன்னியர் தமக்குக் கணவராந்தன்மையுடையார் இன்ன தகுதியினராதல் வேண்டுமெனத் தம் தாயாரிடம் முறையிட்டுக்கொள்ளுதல் போன்று, தாயினுமினிய பெருமானைத் தாய்மை நிலையில் வைத்து “எம் கொங்கை நின்னன்ப ரல்லாதார் தோள் சேரற்க” என்பது முதலாகவுள்ள தம் குறிக்கோளை விண்ணப்பித்துக் கொண்டமையின் சத்தியை வியந்தது குறிப்பிற் புலனாயவாறு அறிக.
*****************************************
பாடல் 20.
போற்றி யருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியா மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
கருத்துரை :_- முன்னைத் திருப்பாட்டில் பயன் அளித்தற்கே யன்றி, அதற்கு ஏதுவாக உயிர்கள் செய்யும் அன்புப்பணிகள் நிறைவேறுதற்கும் இறையருள் இன்றியமையாதது என்னும் உண்மையைப் புலப்படுத்தருளிய அடிகள், இத்திருப்பாட்டில் உயிர்களைக்கொண்டு தனக்குத் தொண்டு செய்வித்துப் பயனளிக்குங்கடமையை இறைவன் மேற்கொண்டது . அவ் வுயிர்களுக்கு உடலைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளும் ஐந்தொழிற் குறிப்பின்பாற்பட்டு அவற்றிற்கு இனமாமென்பதை அருளிச்செய்கின்றார் .
பதவுரை :- எம்கோன் = எங்கள் தலைவனே,
போற்றி ஆதியாம் நின் பாதமலர் அருளுக = எம்மைப் பாதுகாத்து எப்பொருட்கும் முதலாகிய நின் திருவடிமலர்களை அருள்வாயாக,
போற்றி அந்தம் ஆம் நின் செம்மை தளிர்கள் அருளுக =
எம்மைப் பாதுகாத்து எப்பொருட்கும் முடிவாகிய நின் செவ்விய திருவடிகளை அருள்வாயாக ,
எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன்பாதம் போற்றி =
எல்லா உயிர்களுக்கும் தோன்றுவதற்கு ஏதுவாகிய பொன்போன்ற திருவடிகள் எம்மைக் காத்தருள்க ,
எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூ கழல்கள் போற்றி =
எல்லா உயிர்களுக்கும் நுகர்தற்குரிய காப்பாகும் அழகிய திருவடிகள் எம்மைக் காத்தருள்க
எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணையடிகள் போற்றி =
எல்லாவுயிர்களுக்கும் ஒடுக்கத்திற்கு ஏதுவாகிய இரண்டு திருவடிகளும் எம்மைக் காத்தருள்க ,
மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி = திருமாலும் நான்முகனும் காண இயலாத திருவடிகள் எம்மைக் காத்தருள்க.
யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி = நாம் எல்லாம் உய்யும் வண்ணம் அடிமை கொண்டு இன்பம் அருளும் பொன் போன்ற திருவடிகள் எம்மைக் காத்தருள்க,
யாம் ஆடும் மார்கழி நீர் போற்றி = நாம் ஆடுகின்ற இம்மார்கழி நீர் எம்மைக் காத்தருள்க என்பது .
விளக்கவுரை :- இத் திருப்பாட்டு நீராடல் நிறைவேறியதும் அதன் பயனாகப் பெண்களெல்லோரும் ஒருங்கே சேர்ந்து தம்மைப் பாதுகாக்கும்படி ஐந்தொழிற்கும் தலைவனாகிய சிவபெருமானையும், அவனைப் புகழ்ந்து பாடியாடுதற்கு வாயிலாகிய மார்கழிநீரையும் வேண்டிக்கோடலாக அருளிச்செய்யப்பட்டதாகும். இத்திருப்பாட்டில் சிவபெருமானுக்கே உரிய அருட்செயல்கள் ஐந்தும் கூறிப் புகழப்பட்டிருத்தலின் அதற்கேற்ப இதற்கு முன்னுள்ள திருப்பாட்டில் உள்ள “எங்கோன்” என்பதையே ஈண்டும் விளியாகக் கொள்ளலாயிற்று. இதன்கண் “போற்றி” என்னும் சொற்கள் எட்டு வந்துள்ளன . அவற்றுள் முதலிரண்டும் எச்சங்களாகவும், ஏனைய ஆறும் இகரவீற்று வியங்கோளாகவும் கொண்டு பொருள் கூறப்பட்டன. எச்சங்களுக்கு அருளுக என்பன முடிவாகும். எப்பொருட்கும் இறைவனுடைய திருவடியே முதலும் ஈறுமாகுமென்ப. “ஆதியும் அந்தமுமான ஐயாறன் அடித்தலமே” என்பது தமிழ்மறை. திருவடிக்கு முதன்மை கூறுங்கால் மலரெனவும், ஈறு கூறுங்கால் செந்தளிர்கள் எனவும் கூறியது, “ஒடுங்கியுளதாம்” என்னும் சைவவுண்மை புலப்படற்கென்க தளிரினின்றே மலர் தோன்றும் உண்மை கருதத் தக்கது. இறைவன் திருவடிகள் “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் , முந்திப் பொழிவன முத்திகொடுப்பன” என்றபடி உயிர்களுக்குப் போகம் வீடுகளை யருளும் இயல்பினவென்பது. ஈண்டுச் செந்தேன் என்றது போகத்தைக் குறிக்கும். முந்திப் பொழிவன என்றதனால் முத்தியளித்தல் முடிவில் என்பது பெறப்படும். பாதுகாத்தல் முறையே இம்மை மறுமைகளில் போக நுகர்ச்சிக்கும், பின் வீட்டின்பத்திற்கும் ஏதுவாகிய பொருள், அறம், ஞான ங்களுக்குத் தடைகள் நேராமைப் பொருட்டாம் . ஆதியாம் நிலையிற் போகமும், அந்தமாம் நிலையில் வீடும் வேண்டப்பட்டனவாம் .
முதலிற் கூறிய ஆதியந்தம் நான்முகன் முதலிய தேவர்களைப் படைத்துக் காத்து அழித்தலையும், பின்வரும் அடிகளிற் குறிப்பிடும் முத்தொழில்கள் அத்தேவரை அதிட்டித்து நின்று மற்றை உலகுயிர்களைப் பற்றிச் செய்தலையும் புலப்படுப்பன . இவ்வுண்மையை “முந்திய முதல் நடுவிறுதியுமானாய்” என்று அடிகள் பிறிதோறிடத்துக் கூறியமையானும் உணர்க . இங்கே “முந்திய” என்னும் அடையால் அம் முதல் நடு இறுதி பெரும் படைப்பு முதலியவற்றைக் குறிக்குமென்பதும் , பிந்திய படைப்பு முதலியனவும் உள்ளனவென்பதும் பெறப்படுமாறறிக. பிந்திய படைப்பு முதலியவற்றை இடைப்பட்ட முத்தொழில்கள் என்ப . அவற்றை அயன் முதலியோர் இறைவன் ஆணை பெற்று அவன் முன்னிலையிற் செய்வர் என்பது. இதனை “மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய வாளா, மேவண்ணல்” என்பதனாலும் அறிக.
இறைவன் திருவடி சத்தியைக் குறிக்கும் என்பது முதல் திருப்பாட்டு உரையிறுதியில் விளக்கப்பட்டுள்ளது. தீயின் சத்தியொன்றே சுடுதல் அடுதல் முதலிய தொழில் வேறுபட்டால் சுடுஞ்சத்தி அடுஞ்சத்தியெனப் பல திறப்படுமாறு போல, சிவசத்தியொன்றே காரிய வேறுபாட்டால் பரை முதலியவாய்ப் பல்வேறு வகைப்படுமென்ப. அவற்றுள், படைப்பு முதலிய தொழில்களைச் செய்வன செனனி முதலிய சத்திகளெனச் சிவாகமங்கள் கூறும். அவ்வுண்மை குறித்தே படைப்பு முதலிய அருட்செயல்கள் ஐந்திற்கும் வினை முதல் தன்மை இறைவன் திருவடி மேல் ஏற்றி ஈண்டுக் கூறப்பட்டது. எல்லாவுயிர்களும் தோன்றுதற்கு ஏதுவாகிய திருவடிகள் என்றது, படைப்புத் தொழிற்கு வினை முதலாதலைக் குறிக்கும். போகம் – வினைப்பயன்களை நுகர்தல் . அஃது ஈண்டுக் காத்தற்றொழிலைக் குறிக்கும். ஆதலின் போகம் ஆம் என்றது, காத்தற்கு வினை முதலாகிய என்றபடி. ஈறு – அழித்தல் ; ஒடுக்கம் ஆம் என்பதற்கு முன்னுரைத்தாங்கு உரைக்க. இத்துணையும் ஆக்கல் அளித்தல் அழித்தலாகிய முத்தொழில்களும் கூறப்பட்டன.
இனி மறைத்தல் அருளல் கூறப்படும். அவ்விரண்டனுள், மறைத்தலாவது உயிர்கள் தம் வினை முடியும் வரை உண்மையை யறியாமல் பயனுகர்ச்சியில் ஈடுபட்டு மயங்கச் செய்தலாதலின் , அம்மயக்கம் திருமால் பிரமன் முதலியோர்க்கும் உண்டு என்பதைப் புலப்படுத்தற்கே அவர்பாலேற்றி “போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் “ என்றார். அருளல் – கட்டொழித்து வீடுபெறச் செய்தல். அப்பேற்றுக்குத் தம்மை ஆட்கொண்ட கருணையே காரணமாகக் குறிப்பிட்டுப் “போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்” என்றனர். இவ்வருட்செயல்கள் ஐந்தும் இறைவன் உயிரின்கண் மேல் வைத்த கருணையால் நிகழ்வனவாம்.
இவற்றுள், அருளல் ஒழித்து ஒழிந்த செயல்களெல்லாம் பிறப்பிறப்புக்களிற் படுத்துத் துயருறுத்துவனவாகலின், அவற்றைச் செய்வது அருளாமாறு யாங்ஙனம் எனின் , அதற்கு விடையாகச் சிவஞான சித்தியார் என்னும் நூலில் , ஒடுக்கமாவது பிறப்பிறப்புக்களிற் சுழன்று வருந்தும் உயிர்களுக்கு இளைப்பாற்றலும், தோற்றமாவது உயிர்களின் கன்மங்கழியு முகத்தால் மலபரிபாகம் வரச்செய்தலும் , காப்பாவது கன்மங் கழியும்படி நுகர்வித்தலும், மறைப்பாவது இருவினையொப்பு வருவித்து மலங்களை முதிர்வித்தலும், அருளாவது சுட்டொழித்து இன்புறுத்தலும் ஆதலின், ஆராயுங்கால் இவ்வைந்து தொழிலும் அருட்செயலை என்னும் பொருள் தோன்ற,
“அழிப்பிளைப் பாற்ற லாக்கம் அவ்வவர் கன்மமெல்லாம்
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்மவொப்பில்
தெழித்திடல் மலங்க ளெல்லா மறைப்பருள் செய்திதானும்
பழிப்பொழி பந்தம்வீடு பார்த்திடி னருளே யெல்லாம்”
என்று கூறப்பட்டிருத்தல் அறிக.
“எக்கிர மத்தி னாலும் இறைசெய லருளே யென்றும்” என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது . சிவப்பிரகாசம் என்னும் நூலில் “ஏற்றவிவை யரனருளின்” என்னும் பதினெட்டாஞ் செய்யுள் உரையில் , சிவபெருமானே பஞ்சகிருத்தியஞ் செய்பவன் என்பதற்குப் பிரமாணமாக மதுரைச் சிவப்பிரகாசர் இத்திருப்பாட்டை யெடுத்துக்காட்டியிருத்தலும் ஈண்டு நினைவுகூறத்தக்கது.
இவ்வளவில் பெண்கள் எல்லோரும் பாவை நோன்பு குறித்து நீராடியதன் பயனாகத் தம்மைக் காத்தருளும் வண்ணம் இறைவனை வேண்டி, முடிவில் இறைவன் திருவருட் பேற்றுக்குச் சாதனமாக மேற்கொண்ட அம் மார்கழி நீராடலைக் குறித்தும் காப்பு வேண்டுவாராய் “போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்” என்று முடித்தனரென்பது .
இதன்கண் இறைவன் திருவடியைப் பலமுறை புகழ்ந்து காப்பு வேண்டியிருத்தலின் சத்தியை வியந்தது பெறப்பட்டவாறறிக .
திருவாதவூரடிகள் அருளிச்செய்த திருவாசகத் திருமறைக்கண் உள்ள திருவெம்பாவைக்குப் பாண்டிவள நாட்டில் பூங்குன்ற நாட்டுத் தலைநகராகிய மகிபாலன்பட்டி , மகாமகோபாத்தியாய முதுபெரும்புலவர் சைவசித்தாந்த வித்தகர் பண்டிதமணி மு . கதிரேசச் செட்டியார் இயற்றிய கதிர்மணி விளக்கம் என்னும் பேருரை முற்றுப்பெற்றது.