மூன்றாம் அங்கம்
(புத்தரக்கிதை பிரவேசிக்கின்றாள்)
புத்தரக்கிதை – (நடந்து ஆகாயத்தை நோக்கி[1]) அவலோகிதே! காமந்தகியார் எங்ஙனமிருக்கிறார் என்பதை நீ யறிகுவையோ!
அவலோகிதை – (பிரவேசித்து) புத்தரக்கிதே! என்னே மதிமயங்குகின்றனை? சின்னாட்களாக அப்பெரியார் இரந்துண்ணும் அமயத்தையும் விடுத்து மாலதிக்குத் தேருதலைச் செய்து வருகின்றனர்.
புத்தரக்கிதை – ஆம் நீ எங்குச் செல்லப் புறப்பட்டனை?
அவலோகிதை – “சங்கரபுரத்தைச் சார்ந்த காமற்பொழிற்குச் சென்று குன்றிப் புதரின் மருங்கிலிருக்கும் செவ்வசோகின் மறைவில் இருத்தல் வேண்டும்” என்னும் காமந்தகியின் கட்டளையை மாதவன்பாற் றெரிவித்தற்பொருட்டு அவர்களால் அனுப்பப்பட்டேன்; மாதவனும் அங்குச் சென்றனன்.
புத்தரக்கிதை – எது குறித்து மாதவன் அங்ஙனம் அனுப்பப்பட்டான்.
அவலோகிதை – இற்றை நாள் கிருட்டினசதுர்தசி[2] யென்று மாலதி தன் றாயுடன் சங்கரபுரத்திற்கேகுவாள்; அதனால் இத்தகைய மங்களங்கள் வளர்ந்தோங்குமென்றும், கடவுள் வழிபாடு காரணமாகத் தானே மலரெடுத்தலைக் குறித்து இலவங்கிகையுடன் அப்பொழிற்கே வரச் செய்வாள்; அங்கு ஒருவர்க்கொருவர் பார்வையும் நேருமென்றும் அனுப்பப்பட்டான். நீ எங்குச் செல்ல புறப்பட்டனை?
புத்தரக்கிதை – சங்கரபுரத்திற்கே செல்பவளாகிய எனதன்புடைமைக்குரிய தோழி மதயந்திகையால் யானுமழைக்கப்பட்டேன்; ஆதலின் காமந்தகியாரின் சரணங்களில் வணங்கிப் பின்னர் அங்ஙனமே யானும் வருவேன்.
அவலோகிதை – காமந்தகியாற் கட்டளையிடப்பட்டு நீ முயன்ற செயலின் செய்தி என்னை?
புத்தரக்கிதை – யான் காமந்தகியின் கட்டளைப்படி அன்பிற்குரிய மதயந்திகையுடன் நட்புரையாடும் அமயங்களில், “இத்தகையன், அத்தகையன்” என மகரந்தனைப் புகழ்ந்து கூறி அவளுக்கும், “அவனையான் காண்பனோ” என்னும் பேராவலுண்டாகுமாறு பரோட்சத்திலும் அவனிடத்துக் காதற்பெருக்கை விளைவித்தேன்.
அவலோகிதை – நல்லது! புத்தரக்கிதே நல்லது; வா! செல்லுவோம்.
(பிரவேசகம்)
(காமந்தகி பிரவேசிக்கிறாள்)
(1) மாலதி, அத்தகைய நன்னடையின் வயத்தளாயினும்,[3] எனது உபாயத்தாற்[4] பாங்கிமாரிடத்துண்டாகும் நம்பிக்கையால்[5] தேறுதற்படுத்தற்குரிய நிலையைச் சின்னாட்களில் அடைவிக்கப்பட்டாள். இப்பொழுதும்
(2) நமது பிரிவில் மனத்துன்பத்தையும் உடனிருக்கையில் மனக்களிப்பையு மெய்துகின்றாள்; தனிமையில் என்னுடன் விளையாடுகின்றாள். எப்பொழுது மினியவை கூறியென்னை வழிபடுகின்றாள்; யான் செல்லுங்கால் என் கண்டத்திலணைந்தவளாய் என்னால் மறுதளிக்கப்பட்டு, உடன் வணங்கி உறுதிமொழி[6]களான் எனது வரவையிரந்து நிற்கின்றாள்.
இஃதும் எனது பேராசைக்குத்[7] தக்கதோர் சான்றாகும்.
(3) பிறரைக் கருத்துட் கொண்டன்ன சொற்களால்[8] விரித்து விளக்கப்பட்ட சாகுந்தள முதலிய இதிகாசங்களைச் செவியேற்று என்மடிக்கணிலைப்படுத்திய[9] உறுப்புக்களையுடையவளாய் நெடிதாராய்தலான்[10] அசைவற்றிருக்கு நிலையை யெய்துகின்றாள்.
இனிமேற் செய்யவேண்டுவன யாவும் மாதவன் முன்னிலையிற் றொடங்குவோம்.
(வேடசாலைக் கெதிரினின்று நோக்கி)
குழந்தாய் இங்கண் வருக.
(மாலதியும் இலவங்கிகையும் வருகின்றனர்.)
மாலதீ – (தனக்குள்) என்னே! எனது தந்தையால் பலியிடப்பட்டுள்ளேனா? அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள். (கண்ணீர் பெருக) அந்தோ! தந்தையே எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையாற் றோல்வியுற்றொழிந்தீர். (களிப்புடன்) அப்பெருமகன் பெருங்குடிப் பிறந்தவனா? பாரிசாதங் கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்குமென்று நன்றே கூறினள் இலவங்கிகை. மீண்டும் அவரை யான் பார்க்கமாட்டுவேனா?
இலவங்கிகை – இனிய தேனிறைப்பூங்கொத்துக்களைப் புசித்து விளையாடுங் குயிலினங்களின் பேரொலியால் அலைவுறு மாமரத்தினு நியினின்று பறந்தரற்றும் வண்டினங்கள் சண்பகத்திற் சேர, அவற்றின் நெருக்கத்தினால் விரிந்தலர்ந்த மலர்களின் மணங்கமழுவதும், சமவட்டமான அல்குற் பருமையைத் தாங்கலான் அயர்ந்த துடைப்பருமையால், மேடுபள்ளமானவிடங்களில் இடர்ப்படுமடிவைப்பினால் உண்டாகும் வியர்வைத் திவலைகளாகின்ற அமுதபிந்துக்களான் விளங்குறுமுனது அழகிய வதன மதியினுக்குச் சந்தணம் போற் குளிர்ந்ததுமாகிய இக்காமற்பொழிற்காற்று, உன்னைத் தழுவுகின்றது; ஆதலின் அன்புடைத் தோழீ! இங்ஙனம் செல்வோம்.
(என்று பூந்தோட்டத்துட் செல்லுகின்றனர்)
(மாதவன் பிரவேசிக்கிறான்)
மாதவன் – ஆனந்தம்! காமந்தகியும் நேரில் வந்தனள்; இவளும்,
(4) வெப்பத்தினால் வாடிய ஆண்மயிலினுக் கெதிரில் மழைக்கு முன்னம், அதைத் தெரிவிக்கும் மின்னலன்ன[11], காதலிக்குமுன்னரே யென்முன்றோன்றி எனது இதயத்தை யுயிர்த்திருக்கச் செய்கின்றனள்.
என்னே! இலவங்கிகையுடன் மாலதியும் வருகின்றனளே!
(5) இக்குவளைவிழி யணங்கினுடைய மறுவிலா மதிமுகமுதித்தலான், எனது மனம் சடத்தன்மையெய்தி[12], பருப்பதத்தைச் சார்ந்த சிறந்த சந்திரகாந்த மணிபோல நெக்குருகுகின்றது; இது வியப்பாம்[13]. இப்பொழுது மாலதி மிகுவனப்பெய்தியுள்ளாள்[14]. ஏனெனில்:-
(6)இவள், வாட்டமுற்ற சண்பகமாலை போன்றனவும், செயற்றிறலற்றனவும், ஆகிய உறுப்புக்களாற் காமத்தீயை யெரிதரச் செய்கின்றனள். இதயத்தைக் களிப்புறச் செய்கின்றனள். கண்ணைக் கவினுறச் செய்கின்றனள்.
மாலதீ – தோழீ! கொடிகளடர்ந்த இப்புதரில்[15] மலர்களைக் கொய்வோம்.
(7) மாதவன் – காதலியின் இனிய சொற்களை, முதன்முதலாய்ச் செவியேற்றலான் எனதுடலம் மயிர்க்கூச்செறிந்து, அதனால் யான், கார்காலத் தொடக்கத்தில் மழைத்துளி சொரிந்த அப்பொழுது முகிழ்தருங் கடம்புபோல ஆயினேன்.
இலவங்கிகை – இங்ஙனமே செய்வோம்.
(பூக்கொய்தலை நடிக்கின்றனர்)
மாதவன் – காமந்தகிப் பெரியாரின் போதனாமுறை[16], அலகிலா வியப்புடைத்து.
மாலதீ – பிறிதோரிடத்திலும் மலர்களைப் பறிக்குவோம்.
காமந்தகீ – (மாலதியைத் தழுவி) அடி மாலதீ! ஒழிக; ஒழிக; அலையுமாற்றலற்றனை?
(8) நன்னுதலாய்! உனது மெய்வருத்தம் சொற்களைத் தழுதழுக்கச்செய்கின்றது; உறுப்புக்கடோறுஞ் சென்றடைகின்றது; வியர்வை பிந்துக்களை மதிமுகத்தில் விளக்குகின்றது; கண்களை முகிழ்த்துகின்றது; ஆதலின் இது முற்றிலும், காதலன் காட்சி[17]யோடப்ப உன்பால் விளங்குகின்றது.
(மாலதி வெட்கத்தை நடிக்கிறாள்)
இலவங்கிகை – தங்கள் கட்டளை மங்கலமுடையது.
மாதவன் – இப்பரிகாச வார்த்தை மனத்தை யின்புறுத்துகின்றது.
காமந்தகி – ஆதலின், அமர்க. கூறவேண்டுவன சில கூற விரும்புகின்றேன்.
(எல்லோரும் அமர்கின்றனர்)
காமந்தகீ – (மாலதியின் மோவாயை நிமிர்த்து) திருவளர் செல்வி! இவ்வியப்பைக் கேள்[18].
மாலதீ – கருத்துடனிருக்கிறேன்.
காமந்தகீ – உன்னைப்போல எனது இரண்டாம் மனப்பிணிப்பாகிய மாதவன் என்னும் பெயரிய வாலிபன் உளன் என முன்னம் ஒருகால் சொற்றொடர்பில் யான் கூறியுள்ளேன்.
இலவங்கிகை – ஆம் நினைவு கூறுகிறோம்.
காமந்தகீ – அவன் காமற்பொழிலினிகழ்ந்த விழா நாண்முதற் றுன்புறு மனத்தினனாய் உடல் வெப்பினாற் றன்வயமற்றவன் போலக் காணப்படுகிறான். அங்ஙனமே;
(9) மதியினிடத்தாதல், அன்புடைமைக்குரியாரிடத்தாதல், இவன் மனமகிழ் வெய்தவில்லையாதலின், திறம்படு மனப்பான்மையுடையனாயினும் தாங்கொணா மனத்தாபத்தை வெளியிடுகின்றான்; தினையணைய கரிய மேனியனாயினும் மிக வெளுத்து மிகவிளைத்திருக்குமினிய வுடலைத் தாங்குகின்றான்; எனினும், மனங்கவர் வனப்புடையவனாகின்றான்[19].
இலவங்கிகை – இஃதும் அவ்வமயத்தில் “மனப்பிணியன் மாதவன்” என்று அவலோகிதையினாற் றங்களைத் துரிதப்படுத்து முகமாகக் கூறப்பட்டது.
காமந்தகீ – இவனது காமவேட்கைக்குக் காரணம் மாலதியென்று கன்ன பரம்பரையாகக் கேட்டு யானுமதனையே உறுதி செய்தேன்; ஏனெனில்,
(10) இம்மதிவதனம்[20], இம்மாதவனது[21] ஆழ்ந்த நோக்கத்திற் கிலக்காந் தன்மை யெய்தியது; இஃதுண்மையே! ஆதலின் ஆழ்ந்த கருத்துடை யிவனது மனம், திரையிலாக் கடலும் திங்களைக் கண்டமேல் அதன் நீர் போல, உற்கலிகை[22]களாற் சலித்துக் கலக்கமுறுகின்றது.
மாதவன் – என்னே! இச்சொற்பொழிவின் றூய்மை; என்னே! என்னைப் பெருமைப்படுத்தலிற் பெருமுயற்சி. அன்றேல்,
(11) சாத்திரங்களின் ஐயந்திரிபற்ற உறுதிநிலையும், இயற்கையறிவும்[23], சொல்வன்மையும், குணங்களிற்[24] பயின்ற சொற்களும், காலத்திற்கேற்ப ஒழுகலும், புத்தறிவு[25]மாகிய இக்குணங்கள், செயற்பயனைச் சுரந்தளிப்பனவாம்.
காமந்தகீ – இவன் உயிர்த்திருத்தலினடுக்கமுற்று செயற்கரிய எதனையுஞ் செய்தே தீருகின்றான்; அங்ஙனமே!
(12) முகிழ் நிறைந்து[26] குயிலினங் கூவுமினிய தேமாவிற் கண்னை நிலைப்படுத்துகின்றான். உடலை, மகிழ்மணங் கமழு மந்தமாருதத்தின்[27] வழிப்படுத்துகின்றான்; பசுமையான தாமரையிலையையே மேற்போர்வையாகக் கொண்டும் வருந்து மெய்யினனாய் இறத்தற்பொருட்டே[28] வெப்பினை விரும்பி[29]ப் பலகாலும் சந்திரன் கதிர்களை நத்திமேற்கொள்வன்.
மாலதீ – (தனக்குள்) இங்ஙனம், அவர் செயலருஞ் செயலாற்றவும் முற்படுகின்றாரா?
காமந்தகீ – இயலழகமைந்து[30] இரங்கற்குரியவிக் குமரன்[31] முன்னரொருபோழ்தும் இத்தகைய துன்பமெய்தப்பெற்றிலனாதலின், ஒருகால் இவன் உயிர் துறக்கவுங் கூடும்.
மாலதீ – தோழீ! இந் நிலவுலகிற்கணிகலனா யிலங்குமிவற்கு, என்னிமித்தம் விளைவுறுமெதனையோ[32] யான் சிந்தித்தலாற் பேய் பிடித்தாங்கு இதற்குரிய மறுமொழி யெதையுமறிந்திலேன்.
மாதவன் – ஆனந்தம். காமந்தகிப்பெரியாரால் அருள்புரியப்பெற்றேன்.
இலவங்கிகை – பெரியோய்! தாங்கள் இங்ஙனங் கூறுமாற்றால் யானுங் கூறுவேன்; எங்கள் கோமகளோ, இல்லத்திற்கணித்துள்ள தெருவிற்குச் சிறுபொழுது அலங்காரமாயிலங்கு மவனையே பலகாலுங் கண்ணாரக்கண்டு, இரவியின் கதிரோடியைந்தலர் கமலமன்ன உறுப்புக்களினொளியால் உய்த்துணரக் கிடக்கின்ற காமவேட்கையின் விதனமெய்தி வனப்புடையளாயினும், பாங்கியரை யலமரச் செய்கின்றனள். ஆடல், பாடல் இவற்றையும் விரும்பவில்லை. தளிரனைய செங்கரம் வாட்டமுற, அதிற் கபோலத்தை யமைத்தவண்ணமா யிந்நாட்களைக் கடத்துகின்றாள். மேலும், அலர்ந்த செந்தாமரையின் வழிந்தொழுகு மகரந்தமணங்கமழ்வதும், குருந்தம், மாகந்த மிவற்றின் சிறிதலர்ந்த மலர்களின் றேன்றுளிக் குவியலைக் கொணர்வதுமாய மந்திரப் பூம்பொழிலின் மந்தமாருதத்தானும் மிகநைந்துருகுவாள். மற்றும் அற்றை ஞான்று, வஞ்சத்தாலிவர் ஒருவர்பாலொருவர் கடைக்கணித்த காலை, வெப்புற்று வருந்தும் மனத்தில் விரைந்தெழுங் காமவேட்கையால் விளங்குமுறுப்புக்கள், அச்சத்தாலசைவற்றுச் செயலற்றிருந்துழி நிகழ்வனவாகிய வியர்வைப் புளக நடுக்கம் இவற்றாற் பாங்கிமாரனைவருங் களிப்பததனாது திருவிழாப் பெருமையைக் காண்டற் பொருட்டு காமற்பொழிற்கணிகலனா யுருக்கொண்டுவந்த காமதேவனேயனைய அம்மாதவனது பற்பல விலாசங்களான், விளைந்த காதற்றொடர்பாலினிது நிறைவுறும் யௌவனத் தொடக்கத்தை யுடையளாய், ஒருவர்க்கொருவரின் காட்சியின்பத்தை இவளெய்தப்பெற்றதுமுதல், முற்றிலுங் தாங்கொணாத் துயரத்தான் மிகக் கொடிய மாறுபட்ட நிலையை யநுபவித்து, உவாமதியெழுச்சியாற் சிறிது நேரத்தில் வாடிய சேயிளங் கமலமென்ன வாட்டமுறுகின்றாளாயினும், இறைப்பொழுதில் மனத்தே வலிந்து நிருமிக்கப்படுங் காதலன் புணர்ச்சியால், மிகுமழை பொழிதலானனைந்த நிலமெனத் தண்ணியளாகுவளென அறிகுவேன்; ஏனெனில், இதழ் துடிதுடித்தலால் விளங்கும் முத்தனைய பற்களின் ஒளியானன்கிலங்குவதும், இடையறாதிலகு புளகத்தாற் பருத்தகபோலத்திற் றியங்கும் மாலிநீர்ப் பெருக்குடையதும், சிறிது வளைவுற்றும் அசைவற்றுமிருத்தலின் மேனோக்குற்ற கருவிழியுடன் மசிருணம், முகுளம் என்னும் பார்வையமைந்த குவளை விழிகளையுடையதும், நிறைந்தரும்பிய வெப்புநீர்த்திவலைகட் பொலிவுறும் பிறைநுதலாற் றிகழ்வதுமாகிய வதனகமலத்தைத் தரிப்பாளாதலின், அகப்பொருட்டுறையிற் சீரிய மதிநுட்பம் வாய்ந்த பாங்கியரால் ஐயுறத்தகும் வாலைப் பருவத்தை[33]யுடையவளாகிறாள். மேலும், தடைப்படாது விளங்குந் திங்கட்கதிர்கற்றையோடியைந்து இடையறாது நீரைப்பெருக்கு மதிமணியாரமணிந்தும், மிகுந்த பச்சைக்கருப்பூரம், முற்றிலும் குளிர்ந்த சந்தனக் குழம்பு – இவை தொடர்ந்து தெளிக்கப்பட்டு அவை நிறைவுறும் வாழைக்குருத்திற் படுத்தும், காற்பிடித்தன் முதலிய தொண்டாற்றலில் விரைந்து முற்படும் பாங்கியர்க் குழுவாற் றாமரையிலையாகும் நீரினனைந்த விசிறி கொண்டு வீசப்பட்டும் உறக்கமின்றியே கங்குலைக் கடத்துகின்றாள். உறக்கின்பத்தை யொருகாலெய்தினும் காதலன்புணர்ச்சியைக் கனவிற் கண்டுழி, தளிர்க்கால் வியர்த்தலான் அலத்தகமழிதர, மிகத்துடிதுடிக்குந் துடையடிப்புறத்திற்றுகின் முடி நெகிழ் தர, கலக்கமுற்றி தயங்கரை கடந்துயிர்த்தலின் பலபலவாகப் பெருமிதங் கொண்டு புளகனிறைந்த தனங்களின் மீது நடுக்குறுங் கரத்தாற் கட்டியணைக்குவள். அங்ஙனமாக, விரைவின் விழிப்புறுமமயத்திற் றன்னமளியைக் கடைக்கணிக்க அங்குக் காதலனைக் காணாது கண்டவெலாம் பாழ்த்த அளவிற் கண்களுஞ் சோர மயக்குறுவள். அஞ்ஞான்று பரபரப்புறும் பாங்கியரின் பெருமுயற்சியால் அம்மயக்கந் தெளிதருங் காலை, நிகழ்வுறு நெட்டுயிர்த்தலான் இனிப்பிழைப்புறுமென அப்பாங்கியரிவளுயிரிலவாவுறுவர். ஆயினும் செய்வதியாதென்றறியாது இவட்கு முன்னரே தாம் உயிர் நீத்தலே சிறப்பென அதனையே வேண்டி விலக்கற்கரிய விதியின் கொடுமையை வெறுத்தலே வினையாக் கொண்டொழிவாராவர். ஆதலிற் றகையீர்! தக்கன காண்க; நிறைந்த பேரழகினமைப்பான் மிகுமென்மைத்தாய இவ்வுறுப்புக்களிற் கொடுஞ் செயற் புரியுங் காமன், எத்துணைப் பொழுதிற் காதலனை யியைவித்து இவளை யின்புறுத்துவன்? காதலன் கலவியிற் பிணங்கிய கேரளமகளிரது கபோலம்போலச் செம்மையுற்றுக் கரைகடந்த மாசறு நிலவினா லிருட்பிழம்பறவே யொழிந்தனவாகிய இவ்வந்திப் பொழுதுகளும், துலங்கு பாற்பெருக்கனைய தூய நிலவொளியினால் விளக்கமுறும் வானவெளியும், மணங்கமழ் பாதிரிமலரினைக் குடைந்து அவற்றினறுமணங்கொண்டு நிறைவுற்று மோப்பிற்கினிய தென்றல் வீசும் பத்துத் திசைகளும், பொருந்தி முதிர்ந்த கங்குற்பொழுதுகளும்[34] எனதன்புடைத் தோழிபாற் றீங்கியிழைக்காவா யாங்ஙனம் அமையும்.
காமந்தகீ – (13) இக்காதற் பிணிப்பு அவனைப்பற்றியதாமேல், துலங்கும் இஃதே சீர்மையையுணரும் பான்மையின் பயனாம் என்று எனதிதயம் இன்புறுமெனினும்[35] இவளது இக்கொடிய அவத்தையாற் றுன்புறுகின்றது.
மாதவன் – காமந்தகியின் மனக்கவலை மிகப்பொருத்தமே.
காமந்தகீ – என்னே மோசம்!
(14) இயற்கையில் இலலிதமான[36] இவளது உடலம், இயலழகையே சத்தாகவுடையதென்பதும், இவ்வைங்கணைக் கிழவனும் மிகக்கொடியனென்பதும் உண்மை; ஆகுக; இக்காலமோ வீசுகின்ற தென்றலால் அலைவுறு மாமலர்களை யுடையதாய், தண்கதிர்ச்செல்வனைத் தலையணியாக்கித் திகழ்வுறுகின்றது; அதலினிகழ்வது யாதோ?
இலவங்கிகை – பெரியோய்! பிறிதொன்றுமறிதல் வேண்டும்; இது மாதவனது உருவப்படம்; (மாலதியின் மார்ச்சேலையை விலக்கி) கண்டத்திலணியப்பட்ட இவ்வகுளமாலையும் அம்மாதவனது கரத்தாற் றொடுக்கப்பட்டதாகலின் எனதன்புடைத் தோழியை உயிர்ப்பிக்கின்றது. (என்று மகிழமாலையைக் காட்டுகிறாள்[37]).
மாதவன் – (15) தோழீ![38] வகுளமாலையே நீயே யிந்நிலவுலகில் வெற்றிபெற்றனை. ஏனெனில், நீ இவளது அன்பிற்குரியையாய்[39], முதிர்ந்த தாமரைத் தண்டின் கணுக்கள்போல வெளிறிய தனங்களின் இடம்படு மேன்மையைத் தெரிவிக்குந் துகிற்கொடியாவமைகின்றனை.
(வேடசாலையிற் கலகலவொலியெழுகின்றது)
(எல்லவருஞ் செவிகொடுக்கின்றனர்)
ஓ!ஓ! சங்கரபுரவாசி மக்களே! கொடியதோர் வேங்கை, காளைப்பருவம் நிறைந்து தாங்கொணா வியற்கைச் சினமும், அவ்வமயத்தானிகழ்ந்த சினமும் ஒருமித்து இருப்புக்கூட்டை வலிந்துடைத்துத் திறந்து வெளிவருங்கால், அதன் காற்சங்கிலி யக்கூட்டிற் சிக்குண்டு நழுவுற மகிழ்வுற்றுத் தன்வயத்ததாய்த் துள்ளிக் குதித்துத் தன் விருப்பிற்குரிய வாலதியாங் கொடுந் துகிற் கொடியை யுயர்த்திவீசிக் காண்டற்கியலாது அச்சுறத்தகும் பருத்த உடலமைப்பையுடையதாய், மடத்தனின்று வெளிப்போந்த அக்கணத்திற் பல பிராணிகளினுறுப்புக்களை யாவலுடன் புசித்து அவ்வுறுப்புக்களினிடைச் செறிந்த வலிய என்புக்களைத் திற்றிப்பற்களாற் கடித்தலான், ஈர்வாளெனக் கடகடவெனவொலிக்குமத்தகைப் பற்கணிறைந்து மலைமுழையனைய வாயினையுடையதும், விகாரமாகப் பாய்த்துழி விரனீண்ட முன்னங் கால்களான் வெருவுறுத்தி மனிதர், குதிரையிவற்றை வலிந்தடித்து அவற்றின் உதிரத்துடன் கூடிய விறைச்சிகளை வாய்மடுப்ப அவை தொண்டை நிரம்பிச் சிதறுதலாற் கரகரச் சத்தமுடன் அவ்விறைச்சிகளைப் புசிக்குங்காலை வெகுண்டு கர்ச்சிக்குமவ் வொலி நீண்டு இனிய தாயாகாய வெளியிற் பரவவும், சிலரையடித்துஞ் சிலரைப் பொடியாக்கியுஞ் சிலரைக் கண்ணாற் காண்டற்கரியராக்கியுஞ் சிலரைத் துறத்தியும், கூரிய கிர்களாகு மாயுதத்தினாற் பற்றியிழுத்துக் கோறலான் அவற்றின் உடலுறுப்புக்களினின்று பெருகுமுதிரங்களானடைவழியினைச் சேறாக்கியுங் காலனாடலைச் செய்கின்றது; ஆதலாற் றம்முயிரை யியன்றவரைக் காத்துக்கொள்க; என்று.
புத்தரக்கிதை – (பரபரப்புடன் பிரவேசித்து) காத்தருள வேண்டும். நன்தனன் சகோதரியான நமது அன்புடைத் தோழீ மதயந்திகை, இக்கொடிய புலியினால் அவளது பாங்கியரிற் சிலர் கொல்லப்பட்டும், சிலர் துறத்தப்பட்டும் போயினராதலின் தனித்திருந்து மிகத் துன்புறுகிறாள்.
மாலதீ – தோழீ இலவங்கே! இது முற்றிலும் மோசம்.
மாதவன் – புத்தரக்கிதே! இப்புலி யெங்ஙனமிருக்கிறது?
மாலதீ – (களிப்புடனும் அச்சத்துடனும்) என்னே! இவரும் இங்ஙனமேயா?
மாதவன் – (தனக்குள்) ஆனந்தம்! புண்ணியப்பேற்றைப் பெற்றவனாகுவேன்; ஏனெனில், எதிர்பார்க்கப்படாத நிலையினிகழ்ந்த எனது பார்வையால் வியப்பையும் களிப்பையு மொருங்கேயெய்திய இவளால் யான்.
(16) மலர்ந்த கண்களாகுந் தாமரைக் கயிற்றினால் இடைவிடாது கட்டப்பட்டவன்[40] போலவும், அக்கண்களான் முற்றிலும் விழுங்கப்பட்டவன் போலவும், நிறைந்த பாற்பெருக்கில் மூழ்கியவன் போலவும், அமுதமாரி பொழியுமடர்ந்த புயலான் வலிந்து நனைக்கப்பட்டவன் போலவுமாயினேன்.
புத்தரக்கிதை – பெருந்திறலோய்! இப்புலி, பொழிற்கு வெளிப்புறத் தெருவின் றொடக்கத்திலிருக்கின்றது.
மாதவன் – (பரபரப்புடன்) மிகு கவலை கொண்டுள்ளேன்.
மாலதீ – இலவங்கிகே! ஐயப்பாடே[41] நிகழ்வுறுகின்றது.
மாதவன் – (அருவருப்புடன்) அடா!
(17) இப்புலி நடந்த மார்க்கம், இடையிற் செடிகொடிகளிற் சிக்குண்டு, அறுபட்டுச் சிதறி விழுந்த நரம்புக்கற்றைகட் செறிந்ததும், பலபுறத்துஞ் சிதைந்து கிடக்குந் தலையோடுகளின் கண்டங்களையுடையதும், உதிரப்பெருக்கு மிகக் கலந்து கணுக்காலளவையிற் சேறுடையதுமாதலின் மிக நடுக்கத்தை விளைக்கின்றது. என்னே! மோசம்.
(18) நாமோ! மிகுதொலையிலிருக்கின்றோம்; அக்கன்னிகையோ, அப்புலியின் ஓரடியளவிலிருக்கின்றாள்.
எல்லவரும் – அடி, மதயந்திகே!
காமந்தகியும் மாதவனும் – (உட்கருத்துடனும்[42] களிப்புடனும்) என்னே!
மகரந்தன், அப்புலியாற் கொலையுண்டு கிடக்குமொருவனது படைக்கலத்தைக் கையிலேந்தி அக்கணமே யெங்ஙனமிருந்தோ விரைந்து வந்து இங்கணிடையில் வதிந்தனன்.
மற்றவர்கள் – நல்லது! வென்றிசேர் வீர! நல்லது!
காமந்தகியும் மாதவனும் – இவன் இப்புலியினால் மிகவலியப் புடைப்புண்டானாயினும் இவனாலது உயிர் நீத்து வீழ்ந்தது.
மற்றவர்கள் – பேரச்சம் விளைந்தது.
காமந்தகீ – (உட்கருத்துடன்) என்னே! குழந்தை மகரந்தன் புலியின் கூருகிறாற் கீறப்பட்டு உதிரம் பெருக்கெடுத்தோட வாணுதியைத் தரையிலூன்றி யசைவற்று மயக்குறு மதயந்திகையைத் தாங்கியவனாய்த் தளர்வுறுகின்றான்.
மற்றவர் – அந்தோ! விதனம்! இப்பெருமகன், புலியினாற் புண்படுத்தப்பட்டுச் சோர்வுறுகின்றான்.
மாதவன் – என்னே! மயக்கமுற்றனனா? பெரியோய்! என்னைக் காத்தருளல்[43] வேண்டும்.
காமந்தகீ – குழந்தாய்! மிகவும் நடுக்கமுறுகின்றனை; வருக; அவனைக் காண்போம்.
(எல்லவரும் சென்றனர்)
பவபூதியென்னு மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் மூன்றாம் அங்கம் முற்றிற்று.
[1] ஆகாயத்தை நோக்கி – வேடசாலையின் வெளிமருங்கில் வராதவருடன் உரையாடுதலை “ஆகாயபாடிதம்” என்ப.
[2] கிருட்டினசதுர்தசி – அமையின் முதற்றினம்; இந்நாள், “மகாசிவராத்திரி” யென வழங்கப்படும்; இதிற் சிவபூசனை யாற்ற, இருமையின்பமும் பயக்குமென்பது சாத்திரமரபு.
[3] அத்தகைய நன்னடை பெரியோரைப் பேணலும் குலக்கன்னியர்க்குரிய அச்சம் நாணம் முதலியனவுமாம்.
[4] உபாயம் – எப்பொழுதும் அவள் பாங்கிருத்தல், அழகு பொருந்த மயிர்க்குழற்சி வகுத்தல், தனம், கன்னம், இவற்றை செஞ்சாந்தினால் சித்தரித்தல், சோழியாடல், பரிகாசம் பேசல், புதிய பொருளீதல் முதலியனவாம்.
[5] நம்பிக்கை – அச்சம், நாணம், ஐயம், இவற்றை விடுத்து தன்னுள்ளக்கிடக்கை யாவையுந் தெரிவித்தல், காமந்தகி கூறிடில் உயிரிழத்தற்குமுடன்படல் அவளை விட்டுப் பிரியாதிருத்தல் முதலிய வடிவினது.
[6] உறுதிமொழி – இப்பொழுதே விரைந்து நீர் வாராதொழிவிரேல், தன்னாசிரியரைத் தானே கொலை செய்துவளாகுவீர் என்பதும், எற்கும் தீங்கிழைத்தவளாகுவீர் என்பதுமாம்.
[7] இவள் முற்றிலும் தனது சொற்படி நடப்பள் என்னும் பேராசை.
[8] சொற்கள் – வெளித்தோற்றத்திற்குப் பிறரைக் குறிக்கு மியல்பினவாயினும், உண்மையில் மாலதியைக் குறித்தனவேயாம்.
[9] மடிக்கணிலைப்படுத்திய உறுப்புக்கள் – இதனால் யான் நின்வயத்தள். தன் கருத்திற்கியைவன செய்க; என மாலதி யிருத்தற்கும் இறத்தற்கும் காமந்தகியே நிமித்தமாதலின் இங்ஙனங் கூறப்பட்டது.
[10] சகுந்தளை தானே கணவனை வலிந்து பற்றியாங்கு மாலதியும் தானே மாதவனை மணந்து கோடல் தகுதியா? வென்பது அவளது ஆராய்ச்சி.
[11] “மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை” யாகலின் இவ்வுவமை மாலதியின் காட்சியை யுறுதிப்படுத்துகின்றது.
[12] சடத்தன்மை – ஈண்டுச் செயற்றளர்ச்சியையும், நீராகுந்தன்மையையுமுணர்த்தும்.
[13] பருப்பதத்தைச் சார்ந்த சந்திரகாந்தமணி யென்பது, மாதவனும் பருப்பதத்தை நிகர்த்த உறுதிப்பாடுடையன் எனத் தோற்றுவித்தலான் அத்தகைய அவனது மனமும் நெக்குருகுதல் வியப்பினிமித்தம்.
[14] முன்பார்த்த நிலைமையினும், இப்பொழுது காமவேட்கை நன்கு புலனாவதாலும், அதுவும் தன்பொருட்டென்று துணியப்படுவதாலும், மிகுவனப்பெய்தினள் என்று கூறப்பட்டது.
[15] சுட்டு – புதர் தாழ்திருத்தலின் கடவுள் வழிபாட்டிற்குரிய மலர்களை மாலதியே தன் கரத்தாற் கொய்தற்கு எளிதாகுமென்பதை யுணர்த்தும்.
[16] போதனாமுறை – கற்பிக்குமுறை; – இதனால் இப்பூந்தோட்டத்தில், தனித்து மலர்பறித்தலிற் பரபரப்பினால் இடைத் துகினழுவுதலையும் அறியாமல் உறுப்புக்கள் யாவும் நன்துலங்க இவள் நிற்றலான் மாதவன் மறைந்திருந்து இவளை யச்சமின்றிக் கூர்ந்து பார்த்தற்கும் அதனால் விளையுமின்ப வாரிதியில் இவன் மூழ்குதற்கும், அப்போதனாமுறையே காரணமாகலின், அலகிலா வியப்புடைத்தென்று கூறப்பட்டது.
[17] காதலன் காட்சி – ஈண்டுக் காட்சித்தொழிலில் காதலன், எழுவாயுஞ் செயப்படுபொருளுமாய் அமையும். ஆதலின், காதலனைக் காண்டலானுண்டாகுமிந் நிகழ்ச்சி யாவும் மெய்வருத்தத் தானும் நிகழ்ந்தன வென்ற பரிகாச வசனமாகும்.
எழுவாயாகக் கோடலான் மாதவனும் மாலதிக்குத் தெரியாமல் மறைவிலிருந்தே யிவளைக் காணுனிலைமையும் வியங்கியமாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சிகள் மாதவன் இவளைக் காண்டலானிகழ்ந்தனவேயன்றிப் பூக்கொய்தற் கிரமத்தானன்று. அதனால் பார்க்கும் மாதவனை யிவளறியாளாயினும், அவனது பார்வையை மேற்கொண்ட மாத்திரையில் சந்திரன் கதிர்பெருஞ் சந்திரகாந்தம்போல இவள்பால் இத்தகைய நிகழ்ச்சிகள் நேர்ந்தனவென வஞ்ச நவிற்சியணியும் ஈண்டு குறிப்பிணுணர்த்தப்பட்டது.
மேலும், இவள் பல காவலராற் காக்கப்படினும் காமந்தகியின் உபாயமொன்றானே மாதவனது பார்வைக்கு இவள் இலக்காயினளேயன்றி இலவங்கிகையாலன்று என்றும் ஒருபொருள் துவனிக்கின்றது. மாலதி மாதவனைக் காணாவிடத்தும், அவளை மாதவன் பார்த்தளவிலே மாலதியைக் காமவேட்கைப்படுத்தும் பெருந்திறல்வாய்ந்தவன் இவன் என்றும் இதனால் துவனிக்கின்றது.
[18] திருவளர் செல்வி! இவ்வியப்பைக் கேள். இத்தொடரை, கூறப்புகும் இன்பமொழிகளுக்குத் தலைமொழியாகக் கோடல், காதலனது காமவேட்கையை காதலிபாற் கூறுந் தூதுவரின் கடமையென்னும் இன்ப நூன் மரபினையுணர்த்தும்.
[19] மனங்கவர் வனப்புடையவன் என்னுமாற்றால் மாதவனிடத்து நிகழ்ந்த இவையாவும் மாலதியின்பாற்பட்ட காமவேட்கையானன்றிப் பிணியின்பாற்பட்டனவல்ல வென்பது மாலதிக்கு அறிவுறுத்தப்பட்டது.
[20] அன்பின் மிகுந்து மாலதியின் மோவாயை யுயர்த்தினமையை யிச்சுட்டு உணர்த்தும்.
[21] இச்சுட்டு – சொல்லியைபின் அமைந்தவனையும், காமந்தகியாலறியப்பட்டுப் பிறரறியா வண்ணம் இங்கட் கொடிமறைவிலிருக்கும் அவளையுமுணர்த்தும்.
[22] உற்கலிகை – ஈண்டு, காமவேட்கைகளையும், அலைகளையுமுணர்த்தும்; இதனால் சந்திரனாலன்றிப் பிரிதொன்றானும் கடல் கலக்கமுறாவாறுபோல இம்மாலதியொருவளானே மாதவனது மனம் கலங்கியதென்பது குறிப்பிடப்பட்டது.
[23] இயற்கையறிவு – பயிலப்படாதவனாகிய மிக நுண்ணிய விடயங்களிலும் புக்கு அவற்றை யறிதற்குரியது.
[24] குணங்கள் – ஈண்டுத் தெளிவு, இனிமை முதலியன.
[25] புத்தறிவு – அவ்வப்பொழுது ஆராய்ந்து நவம் நவமாகக் கண்டுணருமாற் றலமைந்தது; இக்குணங்கணிறைந்த அக்காமந்தகிப் பெரியார்க்குச் சொற்பொழிவிற் றூய்மையமைதலில் என்னே வியப்பென்பது கருத்து.
[26] முகிழ் நிறைந்து குயிலினங் கூவும், என்னும் விசேடணத்தால் பிரிந்தோரைத் துன்புறுத்துங் காமனுக்கு இம்மொட்டுக்கள் கூரிய கணைகளாகவும், அவை பொருந்தும் மாமரஞ் சரக்கூடாகவும், அங்ஙனமிருந்து கூவுங் குயிலினம் படைகளாகவும், அவற்றின் ஒலி, யப்படையின் கோலாகலமாகவும், குறிப்பிடப்பட்டு, அப்பேரொலிச் செவிக்கேறுமிடத்தளவினும் பிரிந்தோர் சேறவொண்ணாதெனில், அதனைக் கண்ணாற் கண்டுழியவர்க்கு யாது நேருமோவென்பதும் வியங்கியத்தாற் போதரும்.
[27] மந்தமாருதம் – என்பதனாற் காமன், தென்றற் றேருடையனாதலின் பிரிந்தோர் அத்தேர்க்காலின் வழிப்பட்டு மிகத் துன்புறுவரெனக் குறிப்பிடப்பட்டது.
[28] இறத்தற்பொருட்டே என்பது, இங்குக் கூறப்பட்ட பயனிலை யொவ்வொன்றினுமியையும்.
[29] வெப்பினை விரும்பி – தாமரையிலை முதலியவற்றான் மாதவனது காம நோயினைத் தணிக்க எத்துணை மருத்துவஞ் செய்யினும், அவன் எட்டுணையுந்தணிப்பிலனாய், உயிர்த்திருத்தலில் வெருப்புற்று மிகு வெப்பமேற்கொண்டேனும் உயிர் துறப்பான் கருதி நிலவிற் காய்ந்தனன் என்பது கருத்து; இதனாற் பிரிந்தோர்க்குத் திங்களின் தண்கதிர் தீ நிகர்வனவாம் என்பதும் பெறப்பட்டது.
[30] இயலழகு – இது தலை, இடை, கடையென மூவகைத்து; அவற்றுள், தலை – மலர், தளிர் இவைபோல ஊறுபொறாதாய்க் கண்கவர் வனப்புடனிருப்பது. இத்தகைய பேரழகை மாதவன் பெற்றிருத்தலின் அவன் இரங்கற்குரியவன் என்பது கருத்து. முதனூலில், இதற்கு மூலம், “தபஸ்வீ” தவசி யென்று காணப்படுகின்றது; அதற்கு, மாலதியின் மணவினையாகும் பெரும்பயன் கருதியவளது பிரிவாற்றாமை யாலுண்டாகுங் காமநோயின் அனுபவமாகுந் தவத்தைப் புரிபவன் என்று பொருள் கூறினும் பொருந்தும்.
[31] குமரன் – இதனால், மாதவனிதுகாறும் பிறிதொரு மகளிரைப் பேணி மணந்திலன் என்பதும், நலனுறு மிருமுதுகுரவரையுடய னென்பதும் போதருகின்றது.
[32] எதனையோ – என்பது இறத்தலை யுணர்த்தும்; அங்ஙனங் கூறலமங்கலமென அதனை யொழித்து எதனையோவெனக் கூறப்பட்டது.
[33] ஐயுறத்தகும் வாலைப்பருவம் – இங்குக் கூறியுள்ள குறியீடுகள் வாலைப்பருவத்திற்குப் பொருந்தாவாகலின் பாங்கியர் ஐயப்பாடெய்தியிவள் உண்ணிகழ்ச்சியிற் காதலன் புணர்ச்சியை களிப்புடனெய்தினளெனத் துணிந்தனர் என்பது கருத்து.
[34] இங்கு கங்குற்றொடக்கத்தையும் அதன் முதிர்ச்சியான நள்ளிரவையும் கூறினமையான், இரவு பகலிரண்டினும் இவள் துன்புறுவளென்பது உணர்த்தப்பட்டது.
[35] இன்புறுமெனினும் – காமந்தகியாற் றொடங்கப்பட்ட களவு மணத்திற்கு இக்காதற் பிணிப்புக் கருவியாகலின் இன்புறலும், இவள் படும் வேட்கைத் துயரான் ஒருகால் இறந்துபடுமோவென்றஞ்சித் துன்புறலுமாம்.
[36] இலலிதம் – என்பது யௌவனத் தொடக்கத்தில் சிருங்கார ரசம் உண்டாதற்குரியவாறு மாறுபடுமுடனிலையை யுணர்த்தும்.
[37] இலவங்கிகை ஓவியத்தையும் மகிழமாலையினையும் கண்பித்தலான், மாலதியின் காதற்பெருக்கம் மாதவன்பாற் பட்டதே; இதில் ஐயுறல் வேண்டாமெனக் காமந்தகிக்கு அறிவுறுத்தி யிவளை மாதவனோடியைத்தற்குத் தக்கவுபாயத்தையும் விறைவிற்றேட வேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட்டது.
[38] மாலையைத் தோழீயென விளித்தமை இது இயற்கையில் கண்டத்தணியாயினும், இதுபொழுது மாதவனது காதலியின் கண்டத்தணியாகி, யவன் விருப்பத்தை நிறைவேற்ற முற்பட்டு நிற்றலானென்க
[39] அன்பிற்குரியையாய் – தன்னிடத்துள்ள காதற்பெருக்கை வெளிப்படுக்கு முவகைப்பார்வைக்கு யானிலக்காகுவேனோ? இவளது புணர்ச்சியான் விளையுந் திருத்தியான் மனநிறைவுறுவேனோ? இவளது கண்டத்தைச் சிறிதளவேனு மிறுகத்தழுவலாகும் பெருவிழாவினால் எனதுயிரைப் பயன்படுத்துவேனோ? எனப் பொழுதெலாம் மாதவன் விரும்புமிவற்றைப் பெறுமுகத்தானே, இம்மாலை மாலதியாற் கூர்ந்து நோக்கப்பட்டும், அவளது கண்டத்திற்குந் தனங்களுக்கும் அணிகலனாயிலங்கியும் எனதன்புடைத் தோழி யிஃதொன்றேயென அவளாற் பாராட்டப்பட்டும் அவள்பாற் பொருந்தினமையானென்க.
[40] கட்டப்பட்டவன் – என்பது கண்கள், மாதவனைத் தொடர்ந்து பற்றலாற் கயிரனையவாம்; இவற்றாற் இவன் பிணிப்புண்டுத் தற்செயலற்றிருத்தலை யுணர்த்தும்.
[41] ஐயப்பாடு – புலியை யெதிர்த்துச் செல்லும் மாதவன் அப்புலி வாயினின்று மீண்டு வருவனோ அல்லது அதனாலடியுண்டு துன்புறுவனோ என்பதாம்.
[42] மகரந்தனாற் செய்யப்படும் மதயந்திகைனுயிர்க் காவலாகும் பேருதவி யிவ்விருவரது மணவினைக்குக் கருவியாய் நிற்குமென்பது காமந்தகியின் உட்கருத்தென்பதும் வேங்கையை வதைத்து இம்மெல்லியலாளைப் பிழைப்பித்தலான் மாதவனது களிப்பென்பதும் கருத்து.
[43] நண்பனது மயக்கத்தாற் றானும் மயக்கெய்தி யிவ்வாறு கூறினன் என்க.