பண்டிதமணியாரின் தமிழ்க் கொள்கைகள்

டாக்டர்  வ.  சுப.  மாணிக்கம்

தமிழ்ப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

 

நாமே நம் தாயை மறந்திருப்போமாயின்

நமக்கு நினைவுறுத்துவார் யார்            —— பண்டிதமணி

 

என் ஆசிரியப்பெருமகன் பண்டிதமணியவர்கள், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் பெரும்புலவர்களுள் ஒரு முதுபெரும் புலவர் ஆவார். அவர் தமிழ் வளர்ச்சிக்கு அரை நூற்றாண்டுக் காலம் ஆற்றிய தொண்டு முறைகள் அவருக்கே உரியவை. தம் ஊனக் கால் பாராது, இளமை முதல் விழுத்தண்டு ஊன்றிப் பட்டி, பட்டணம் எல்லாம் சென்று, வானம் பொய்ப்பினும் தமிழ் பொய்யா இலக்கியமாரி பொழிந்தவர். வடமொழிப்புலமை செவ்வானம் பெற்றிருந்தும், கலப்புத் தமிழின்றித் தம் சமயக் கட்டுரைகளைக்கூட இயல்பான தமிழில் எழுதி உரைநடை வளப்படுத்தியவர். பிற்காலக் காப்பிய நூல்களில் பெரும்பயிற்சி பெற்றிருந்தும் சங்கத்தமிழே தமிழெனப் போற்றியவர். சைவப்பற்றும், தமிழ்ப்பற்றும் குறைவற நிரம்பியிருந்தும் ஏனை மதங்களையும் மொழிகளையும் பொது  நோக்காகப் போற்றியவர். யாது இழப்பு எதிர்ப்பு நேரினும், தமிழுக்கு, அதுவும் மரபான நல்ல தமிழுக்குப் பதவித் தமிழனே இழிவு கூறினாலும், எவ்வளவு பெரிய மேடைகளிலும் கண்ணெதிரே இடித்துரைத்து முழங்கியவர். வித்தகம் பேசிக் கொன்னே காலங்கழிக்கும் உலகோர் நடுவண் வாழ்ந்திருந்தும், அயல்மொழிப் பெருநூல்களை மொழிபெயர்த்துத் தமிழாரப்பணி செய்தவர். புலவரெலாம் தமிழிலக்கியங்களைச் சக்கையெனச் சவட்டிக்கொண்டிருந்த நிலையில் இன்கரும்பென இலக்கியச் சாறு பிழிந்து, சுவை ததும்பத் தமிழமுதை உலகம் உண்ணச் செய்தவர். அதனால் தமிழ் நயத் தந்தை  என்ற முதற் புகழாரத்துக்கு உரியவர்.

 

       “ பள்ளிப்படிப்பறியான் பைந்தமிழும் ஆரியமும்

        தெள்ளிச் சுவைதேரும் செந்நாவான்

என்று பாராட்டினார் கவிமணி.

பண்டிதமணி வடமொழியிலும் தமிழே போன்ற புலமையினர் என்பது நாடறிந்த செய்தி. மண்ணியல் சிறுதேர், சுக்கிர நீதி, பொருள் நூல் என்பவை அவர் தம் வடமொழிபெயர்ப்பு நூல்கள், அதனால் இந்திய அரசு  மகாமகோபாத்தியாய  என்ற கல்விப்பட்டத்தை அவர்க்கு வழங்கிற்று. தமிழுக்கும் வடமொழிக்கும் ஒருசார் வழிவழி கடும்பகையும் உண்டு என்பதனை வரலாறு காட்டும். இவை இன்றும் நிலவி வருகின்றன. தமிழர்களில் தமிழே கற்றவர்கள் உணர்ச்சியும், வடமொழியே கற்றவர்கள் உணர்ச்சியும், இரு மொழியும் நிகராகவோ கூடுதல் குறைவாகவோ கற்றவர்கள் உணர்ச்சியும் பலதிறப்படுகின்றன. இந்நிலையில் இருமொழிப்புலமை வாய்ந்த பண்டிதமணியாரின் மொழிக்கோட்பாடுகளை அவர் வழியினர் அறிந்துகொள்வது நல்லது.

பண்டிதமணி வடமொழிக்கு முதன்மை கொடுப்பவர் என்ற தவறான கருத்து ஒரு காலம் நிலவிற்று. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஒரு விழாவில், மறைமலையடிகட்கும் பண்டிதமணிக்கும் தூயதமிழ் பற்றி ஒரு சொற்போர் நடந்தது எனவும், தொன்மைத் தமிழ் நூல்களில் வடசொற் கலப்பு ஒன்றுகூட இல்லை என்று அடிகளார் ஒவ்வொரு சங்க நூலாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது, முன்னிருந்த மணியார் சில வடசொற்கள் உள என்று குறுக்கிட்டுக் கூறி வந்தனர் எனவும், அதனால் உணர்ச்சி பொங்கிய அடிகளார் பழந்தொல்காப்பியத்திலுமா வட சொல் உண்டு என்று   வினவியபோது, “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை” என்று (குஞ்சரம் — யானை) வந்திருப்பதைப் பண்டிதமணி எடுத்துக்காட்டினர் எனவும்  நடந்த ஒரு நிகழ்ச்சியை அறிகின்றோம். இச்சொற்பூசலினால் பண்டிதமணி வடமொழிச் சாய்வினர் என்பது பெறப்படுதல் யாங்ஙனம்?  பழந்தமிழ்ப் பனுவல்களில் யாதும் வடசொற் கலப்பு இல்லை என்பது அடிகளாரின் கருத்து. சிறிய அளவிலேனும் உண்டு என்பது பண்டிதமணியாரின் கருத்து. இச்சொற்பிணக்கை வரலாற்று மொழியாராச்சியாகக் கருதிக்கொள்ள வேண்டும். அவ்வளவே. தூய தமிழ் வேண்டுமா வேண்டாமா என்ற முடிவுக்கும் இந்நிகழ்வுக்கும் தொடர்பில்லை. இது பற்றிப் பண்டிதமணியிடம் மகிபாலன்பட்டியில் யான் உரையாடியகாலை, அப்பெருமகன் என்னிடம் கூறியது: “நான் தூய செந்தமிழுக்கு என்றும் ஆதரவானவன். மறைமலையடிகள் தம்  உரை நடை நூல்களில் முதலில் மிகுதியாக  வடசொற் கலந்து எழுதியவர். தூய தமிழ்க் கொள்கையைக் கடைப்பிடித்த பின் செந்தமிழுக்கு மாறியவர். நான் அப்படியில்லை. தொடக்க முதலே என் கட்டுரைகளை நல்ல தமிழில் எழுதிக்கொண்டு வருகிறேன். முதலிலிருந்து எனக்குத் தூய தமிழ்க் கொள்கையே. என் கட்டுரைகளை  நீ பார்த்திருப்பாய். இடைக்காலத்தில் இக்கொள்கைக்கு நான் வந்தவனில்லை.” இவ்வாறு காரணம்பட, அழுத்தம் பெற மொழிந்தனர். இவ்வுண்மைக்கு அவர்தம் எழுத்துக்களே கட்டளைக்கல். ஓர் எடுத்துக்காட்டு:

புலவர்களைப் பாதுகாத்து அவர் செந்நாவாற் பாராட்டப்படுதலினும் செல்வர் பெறும் பேறு வேறு யாதுளது? காலத்தாற் கவரப்பட்ட செல்வருட் புகழுடம்பு கொண்டு இன்னும் நம்மோடு அளவளாவி இன்புறுவார், புலவர் பாடும் புகழ் படைத்தாரன்றே! கற்றவர்க்கு ஈத்துவக்கும் பேறில்லாதார், செல்வம் படைத்தும் ஒளியும் புகழும் இலராய் விலங்கோடு ஒப்ப உண்டு களித்துத் துஞ்சும் இயல்பினரேயாவர். ஆதலாற் செல்வர்களே! புலவரைப் போற்றுதல் நும்மைப் போற்றுதலாகும். ஆதலின், தமிழ் நலம் கருதி இன்னோரன்ன துறையில் இறங்குமின்கள்! செல்வம் படைத்த ஞான்றே புலவர் பக்கலிருக்க விழைமின்கள்! பற்பலவாற்றானும் செலவழிக்கப்படும் நும் பொருட் கூறுகளுள் ஒன்று புலவர்க்கெனச் செய்மின்கள்! அவிச்சுவையினும் இனிய கவிச்சுவையை நுகர்மின்கள்! நும் பூதவுடல் வன்மையுற்றிருக்கும் ஞான்றே புகலுடலின் ஆக்கத்திற்கு வேண்டுவன புரிமின்கள்! அழிதன் மாலையதாகிய செல்வத்தைக் கண்டு அழியாப்புகழை வளர்த்தற்குரிய நெறியைப் பற்றுமின்கள்!”

{உரைநடைக்கோவை — இலக்கியம்}

அயல்மொழி கற்றல் தமிழர்க்குப் புதியதன்று. அதற்காக வேற்றுமொழிக் கிளவிகளைத் தன் தாய்மொழியில் கலப்பது நல்ல மொழிக்கொள்கையாகுமா? இடைக்காலத் தமிழர்கூட இத்தவற்றினை

மிகுதியும் செய்துவிடவில்லை. இக்காலத் தமிழரிடைத்தான் மொழிப்பரத்தமை அளவிறந்து காணப்படுகின்றது. இதற்குக் காரணம், ஒரு மொழியிலே நினைத்துச் சொல்லி எழுதத்தெரியாக் குறைபாடேயாகும். எழுதத்தெரிந்த சிலரும் கலப்புத் தமிழாக எழுதிவருவதற்குக் காரணம், கலப்பு, பரந்த மனத்துக்கு அடையாளம் என்று மயங்கியிருப்பது. தாம் கற்ற பல மொழிகளிற் காணப்படும் கருத்துக்களையன்றோ தமிழிற்குக் கொண்டு வர வேண்டும்? அது தமிழ் வளர்ச்சி. உரிய சொல் இருக்கவும், ஆக்கிக் கோடற்கு இடமிருப்பவும் அயற்கிளவிகளை இடைமடுத்தல் தமிழைக் கடைமடுத்தலாகும். பிறமொழி கற்றோர் தமிழை எழுதவேண்டிய முறைக்குக் கம்பரைப்போல் பண்டிதமணியும் ஒரு வழிகாட்டி.. தமிழ் நயத் தந்தையாம் பண்டிதமணி பிற சொற் கலந்த ஒரு செய்யுள் நயங்குறைந்தது என்று கருதுகிறார்: —

சுவையுடைமை அவ்வம்மொழிகளில் தனித்த நிலையிற்               காணப்படுதல்போற் கலப்பிற் காணப்படுதல் அரிது. ஒரு மொழியிற் செவ்வனம் பயின்று சுவை நிலை கண்டுணர்வார்க்கு அதன் தனிநிலையிற் போலப் பிறமொழிக்கலப்பில் அத்துணை இன்பம் உண்டாகாது.

தமிழ், வடமொழியிலிருந்து பிறந்தது எனவும், வடமொழியின்றித் தமிழ் இயங்க முடியாது எனவும் பிதற்றுவார் கொள்கையெல்லாம் பண்டிதமணிக்கு வெறுப்பானவை. “நம் தமிழ் மொழியாதும் குறைவுடையதன்று. இது மற்றொரு மொழியினின்றும் தோன்றியதென்றாதல், பிறிதொன்றன் சார்பின்றி நடைபெறாது என்றாதல் கூறுவார், உண்மையாராய்ச்சி இலராவர். ஒருசில வடசொற்கலப்பு உண்மை பற்றித் தமிழ்மொழியை வடமொழியினின்றும் தோன்றியதென்றல் பொருந்தாத ஒன்றாகும்” என்று கழறியுரைக்கும் பண்டிதமணியார் எழுத்து, தமிழர்தம் நெஞ்சக்கல்லில் பொறிக்கவேண்டிய எழுத்தாகும்.

 

ஏன் வரவர மிகுதியாக வடமொழி தமிழிற் கலந்தது என்று ஆராயத் தொடங்குகின்றார், வடமொழிப் பயிற்சிமிக்கும் நற்றமிழில் எழுதும் பண்டிதமணியார். சங்க காலத்தில் மிகச் சில சொற்களே தமிழிற் புகுந்தன. அதற்கே தொல்காப்பியர் ஒலிவரம்பு காட்டினார். வடகிளவிகள் வீரமாமுனிவர்போலத்  தமிழுருவெய்தி வழங்கின. நாளடைவில் புலவர்களுக்குத் தனித் தமிழ்ச்சொற்களைத் தெரிந்து வழங்கும் ஆற்றல் இல்லை. ஒருசிலர்க்குத் தெரிந்திருந்தாலும், வடசொற் கலப்பு செவிக்கு இன்பமென அவர்கள்  மயங்கிக் கிடந்தனர். தனித்தமிழிற் சுவை காணும் புலமை குறைந்தது. அத்தகைய புலவர் அருகினர். வடமொழியாளர் தம் மனம் உவப்ப அவர்களை உவகைப்படுத்த வேண்டித் தமிழிற் பாட்டும் உரையும் எழுதும் புது மோகம் எங்கும் பரந்தோடியது. அதனால், வடசொற்கள் அப்படி அப்படியே, அவ்வவ்வொலிப்படியே வரம்பின்றித் தமிழிற் படிந்தன என்பது, வடசொற் கலப்பு வரலாற்றுக்குப் பண்டிதமணி கூறும் காரணங்கள் ஆகும். இக்காரணங்கள் இன்றும் உளவே; மேலும் தடிக்கின்றனவே; அயற்சொற்கள் என்னும் விதைகள் விழுந்து விழுந்து தமிழ்க் கோபுரங்கள் என்னாமோ என்று நாம் அஞ்சுகின்றோம். வடசொற்களை நேர்ந்தவாறு தமிழிற் புகுத்தல் முறையன்று என்பதும், கலப்பு எளிய நடையாகாது என்பதும் பண்டிதமணியின் மொழித்துணிபு.

ஏன் தமிழ் வளர்ச்சிக்குச் செல்வர்கள் நன்கொடை செய்ய முன் வந்திலர் எனவும் ஆராயத்தொடங்குகின்றார், சன்மர்க்க சபையை நிறுவி வளர்த்த பண்டிதமணியார், பல்லாண்டுகளாக வடமொழி வேத சாத்திரப் பாடசாலைகட்கும், வடமொழிக் கல்லூரிகளுக்கும், சில்லாண்டுகளாக ஆங்கிலக் கல்லூரிகட்கும் ஏராளமான பொருளைச் சில செல்வர்கள் செலவிடுகின்றனரே; இப்பொருட்செலவுத் தொகையில் ஒரு சிறு பகுதி கொண்டு நம் அருமைத் தமிழ்த்தெய்வத்திற்குத் திருக்கோயில் அமைக்கக்கூடாதா? தமிழ்த்தெய்வத்தை வழிபடும் மாணாக்கர்களுக்குப் பெருஞ் சோற்றில்லங்கள் அமைக்கலாகாதா? இங்ஙனம் செய்யாமைக்கு ஒரு காரணம், வடமொழியாளர் செல்வாக்கு இச்செல்வர்களிடை மிகுதிப்பட்டிருப்பது என்று பண்டிதமணியார் வெளிப்படையாகக் கூறியிருக்கும் துணிவு அவர்தம் ஆழ்ந்த தமிழன்புக்கு ஒரு சான்று. இச்செல்வர்பால் சென்று, தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செலவு  செய்யுங்கள் என்று தமிழறிஞர்கள் சொல்லப்புகுந்தால், அவ்வறிஞர்தம் சொல் ஏறவில்லையே என்று பண்டிதமணி கதிரேசனார் மனம் வெதும்பி மானத்தோடு சொல்வது நினையத்தகும். அவர் சொல்லிய காரணங்கள் குறைவதற்கும் ஒழிவதற்கும் மாறாகப் புது வண்ணப்போர்வையில் வளரவல்லவோ காண்கின்றோம்? குற்றம் குணமாகவல்லவோ காட்சியளிக்கவும் பாரட்டப்படவும் காண்கின்றோம்? சில தமிழர்தம்  மனத்தில் உண்மையொளி ஏறினால் அல்லது ஏற்றினாலல்லது, கலப்புத் தமிழுக்கு மடிவில்லை, உண்மைத் தமிழுக்கு விடிவில்லை.

கம்பரின் பெருங்காப்பியத்தில் பண்டிதமணியார்க்குத் தனி ஈடுபாடு உண்டு. அக்காப்பியச் சோலையில் செவி நுகர் கனிகள் காம்புதோறும் உள என்பது அவர் தம் கருத்து. இராமாயணத்தில் அவர்க்கு இருந்த ஈடுபாடு, ஒரு காலத்துச் சில பகுதியாரிடமிருந்து எதிர்ப்பை வாங்கித் தந்தது. வடமொழிப்பற்றினர், ஆரிய நாகரிகவேட்கையினர் என்ற ஏச்சும் கிடைத்தது. பிறர் குற்றங்களை இடித்துக்காட்டி, அதனால் எதிர்ப்பில் வளர்ந்த பண்டிதமணி என்னும் அரிமா, “என் உடல் காரணமாக மற்போருக்கு அஞ்சுகிறேன்; ஆனால் எச் சொற்போருக்கும் அஞ்சேன்” என்று முழங்கிற்று. ஒரு மொழியில் தூய சொற்களால் எழுதப்பட்ட செய்யுட்களே சுவை பயப்பன என்ற பண்டிதமணியின் இலக்கியக்கோட்பாட்டை முன்னர் எடுத்துக்காட்டினேன். சங்க இலக்கியம் தூய தமிழால் ஆனது ஆதலின், அதன்கண் அவர்க்கிருந்த தனிப்பற்றுக்கு எல்லையுண்டோ ?

சங்க இலக்கியங்களுள் ஒரு சிலவற்றைத் தெளிவாகப்    பொருளுணர்ந்து படித்து அடிக்கடி பழகி வருவோமாயின், இந்நடையும்  நமக்கு எளிமையாக அமையும். எதுகை மோனை நிமித்தம்  வறிதே அடைமொழிகளைப் புணர்த்துப்  பொருட்சுருக்கமும் சொற்பெருக்கமும் அமைய யாக்கப்படும் பிற்காலத்தவர் பாடல்கள் நுண்ணறிவுடையார்க்கு இன்பஞ்செய்வனவாகா.  ஒரு சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்தோறும், நவில்தொறும் நூல் நயம்போலும்என்னும் முதுமொழிக்கிணங்க இன்பஞ்செய்வன சங்கப்பாடல்களே.”

இம்மேற்கோளால் சங்கநூல்களில் பண்டிதமணியார்க்கு இருந்த தனியன்பு வெளிப்படை. யாரொருவர் சங்க நூற் பற்றுடையவராக இருக்கின்றாரோ, அவரே நல்ல தமிழ்ப்பற்றினர் என்பது என் துணிபு.

அரசர் அண்ணமலையார்  தமிழிசைப் பேரியக்கம் தொடங்கியபோது உறுதுணையாக இருந்த தலைவர்களுள் பண்டிதமணியும் ஒருவர். இசைப்பாடல்களும் இசை நூல்களும் வெளிவரத் துணைசெய்தவர். தமிழிசையின் தொன்மையினையும் தனித்தன்மையினையும் பல மேடைகளில் எடுத்துக்காட்டி நிறுவியவர். இசைக்குரிய பாடல்கள் எம்மொழியில் இருக்கவேண்டும் என்ற வினா பொருளற்றது என்பது கதிரேசனாரின் கருத்து. மக்கட்குரிய நாட்டு மொழியிலே இருப்பதுதான் இயல்பு என்று அறிவுறுத்தும் பண்டிதமணி, தாம் ஒன்று வினவுகின்றார். இசை கேட்கும் மக்களிற் பலர் தம் தாய்மொழிப் பாடற்கருத்துக்களையே உணரும் நிலையில்லாதிருக்கும்போது, சிறிதும் பொருள் விளங்காத வேற்று மொழிப் பாடல்கள் என்ன பயன் விளைக்கும்? ஓர் இசை அரங்கிற்குச் சென்றிருந்த பண்டிதமணி, தமிழ்ப்பாடல்களில் ஏதேனும் ஒன்று பாடலாகாதா என்று வேண்டியபோது, இசையரங்கை  நடத்திய பெருமகனார் இவரை, அரங்கு மரபு அறியாதவராகக் கருதினாராம், விளங்காத பாடல்களையெல்லாம் முதலில் நெடுநேரம் பாடிவிட்டு, அவர்கள் சோர்ந்த நிலையில், விளங்கும் சில தமிழ்ப் பாடல்களை ஏனோ தானோ என்று பாடி முடிப்பதே கேவலமான அரங்கு மரபு என்று பண்டிதமணி, இசையின்பம் என்ற கட்டுரைக்கண் நகைபடக் கூறியுள்ளார்.

        “ இன்ப வுணர்ச்சி இனிய தமிழிசைக்கே

            என்பது உணர்மின் இருநிலத்தீர்

என்பது பண்டிதமணியின் ஆணை.

மேற்காட்டியவற்றிலிருந்து பண்டிதமணியின்  அசையா அதிராத் தூய தமிழ்க்கொள்கையும், தமிழுக்கே தன் அன்பினை முழுதும் வைத்த தனிப் பற்றும், சங்கத்தமிழுக்கே ஏற்றம் கொடுத்த தனி  நேர்மையும் எல்லாம் பெறப்படும். பண்டிதமணியின் மொழிக்கொள்கையை அறுதியிட்டுக் கூறப்புகின், தமிழ்ப்பற்றினர், வடமொழி மதிப்பினர் என்று முடிக்கலாம். பற்று என்பது, மொழியாயினும் சமயமாயினும் ஓரிடத்துத்தான் இருக்க முடியும் என்பதும், மற்றை மொழிகளையும் மற்றைச் சமயங்களையும் பொதுப்பார்வையாக மதிக்க வேண்டும் என்பதும் அவர் தம் நூலில் நாம் காணத்தகும் முடிபு. இதனால், பண்டிதமணி பிறர் போல் வடமொழி வெறுப்பினர் அல்லர் என்பது தெளியலாம்.  வடமொழியிலிருந்து புதிய செய்திகளையும், நாடகம், அரசியல் போன்ற புதிய துறை நூல்களையும் தமிழுக்கு வழங்கிய வடமொழி வள்ளல் அவர். காதற்கடிதங்கள் என்ற இலக்கிய கட்டுரையும், ஞானத்தின் திருவுரு என்ற சமயக்கட்டுரையும், திருவாசகக் கதிர்மணி விளக்கமும் அவர் தம் வடமொழியறிவால் புதுப் பொலிவு பெற்றுள்ளன.  மண்ணியல் சிறுதேர் என்ற அழகிய தொடர், பண்டிதமணி தமிழ்த் தெய்வத்துக்குப் படைத்தளித்த புதுக்காணிக்கை. பிற மொழி கற்ற தமிழர்க்குப் பண்டிதமணி காட்டிய எழுத்து நெறிகள் பலப்பல. மணிமிடை பவளம் அவர் நெறியன்று. தமிழ்க்கட்டுரைக்கிடையே வடமொழிச் செய்யுள் மேற்கோளாகக் காட்ட வேண்டின் அதனைத் தமிழ்ச் செய்யுளாகத் தாமே ஆக்கித்தருவது அவர் தம் எழுத்து நெறிகளில் ஒன்று.

துசியந்தனுக்குச் சகுந்தலை நங்கை வரைந்த வடமொழி காதற்கடிதத்தை,

   “ நின்னுடைய உள்ள நிலையறியேன் நின்பாலே

    மன்னுடைய வேட்கை மலிவுற்றஎன்னுறுப்பைக்

    காமன் இரவும் பகலும் கனற்றுகின்றான்

    ஏம அருளில்லா இவன்.”

என்று வெண்பாவாகப் படைத்த நெறி பின்பற்றுதற்கு உரியது.

பிற நாட்டுச் சாத்திரங்கள் நல்ல தமிழில் பெயர்த்துத் தமிழை வளப்படுத்த வேண்டும் என்பது பண்டிதமணியின் அறவுரை . வடமொழியில் உள்ள அளவை நூல்கள், சுவையாராய்ச்சி நூல்கள், பொருணூல்கள், அறிவு நூல்கள் தமிழிற்கு வருதல் வேண்டும் எனவும், இதனைச் செய்தற்கு வடமொழியொடு தமிழ் பயின்றார் பலர் வேண்டும் எனவும், வடமொழி மூல நூல்களை உள்ளவாறு மொழிபெயர்த்துக் கொண்டபின் அவற்றின் நலம் தீங்குகளை ஆராய வேண்டும் எனவும் அவர் எடுத்துரைப்பர். பண்டிதமணியின் பின்வருங்கருத்து அவர்தம் நல்லுளத்துக்கு ஒரு கரி.

 

   “எத்தனையோ ஆயிரங் காவத தூரங்களுக்கு அப்பாலுள்ள ஆங்கில தேயத்தார், தம் மொழிகளில் இவ்வரிய வேதாகம உபநிடதங்களைப் பொருட்படுத்தி மொழிபெயர்த்துப் பலவகைச் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர்தொன்று தொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டு வரும் நம் தமிழ் மொழியில் இதுகாறும் அவை வெளிவராமை ஒரு குறையேயாம். தெளிவான தமிழ் உரை நடையிற் பல்வகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவை வெளிவரல் வேண்டும்.”

 

‘தொன்று தொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டு வரும் நம் தமிழ் மொழியில்’ என்ற தொடரிலிருந்து, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவைப் பண்டிதமணி எப்படி மதிக்கிறார் என்பது வெளிப்படை.  தமிழில் இயல்பான பற்றுடைய பண்டிதமணியார்க்குப் பாரத மொழிகளில் ஒரு பெருமதிப்பு உண்டு. “நம் பரத கண்டத்து மொழிகளையெல்லாம் நிலை பிறழாது என்றும் திருந்திய முறையிற்றிகழ்தல், மூல நூல்களெல்லாம் செய்யுள்களால் ஆக்கப்பட்டமையானேயாம்” என்று இப் புலவர் பெருமகன் வடித்தெடுத்த கருத்து மொழிவளர்ச்சியுடையார்தம் சிந்தனைக்கு உரியது.  தமிழ்ப்பற்றும், தமிழ் வளர்ச்சிக்கென அயல்மொழி உறவும், தூய தமிழ்ச்சொற்களால் ஆய உரைநடையும், தூய மொழிபெயர்ப்பும், செல்வர் தம் செல்வம் தமிழுக்குப் பயன்பட வேண்டும் என்ற அறிவுரையும் மொழி பற்றிய பண்டிதமணியங்கள் ஆகும்.

 

 

  “நமக்குரிய நாட்டுமொழியைப் புறக்கணித்து வேற்று மொழியில்

        எத்துணை மேற்சென்றாலும் மொழியறிவாற் பெரும் பயன் முற்றும் 

        பெற்றதாக மாட்டாது. இந் நிலையில் நாம் இன்றியமையாது பயில

        வேண்டுவது நமக்குரிய தமிழ் மொழியேயாகும்.

 

       —— பண்டிதமணியம்

Leave a comment