உரைநடைக்  கோவை

             உரைநடைக்  கோவை  

                    (  இலக்கியக் கட்டுரைகள் )

ஆசிரியர்

மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்

பண்டிதமணி

மு . கதிரேசச்  செட்டியார்

                                                      பொருளடக்கம்

  1. தமிழும்  தமிழ்ப்  பணியும்
  2. தமிழ்ப்  புலமை
  3. நம்  பண்டைய  நீதி   நூலாசிரியர்
  4. மாணிக்கவாசகர்
  5. சங்க  காலத்து  அங்கதம்
  6. காதற்கடிதங்கள்
  7. குறுந்தொகை
  8. மணிமேகலை

              தமிழும்   தமிழ்ப்   பணியும்

( கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்துப்  பதினாங்காம்  ஆண்டு  விழாத் தலைமைப் பேருரை )

இமிழ்கடல்  வரைப்பில்   இனிமை  சான்ற

தமிழ்மொழி  பேணுந்  தகைசால்  ஐயன்மீர் ! அன்னைமீர் !  

           செந்தமிழ்த்  தெய்வச்  சீர்நலம்  போற்றுதலே  தன்  முழு  நோக்கமாக  மேற்கொண்டு  திருவருட்பாங்கால்  தோன்றிய  இக்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின்  பதினான் காம்  ஆண்டுத்  திருவிழாவில்  யான்  தலைமை பெறத்  தந்தது  , சிறியேன்  மாட்டு  இச்சங்கத்தார்  வைத்துள்ள  பேரன்பின்  பெருமையையே  விளக்குவதாகும் . இதுகாறும்  நிகழ்ந்த  ஆண்டு  விழாக்களில்  தலைமை  பூண்டோர்  புலவர் , புரவலர் , அமைச்சர் . பொருளாளர்  என்னும்   தகுதியினராவர்.  இன்ன  தகுதியுள்  ஒன்றேனும்  வாய்க்கப்பெறாத  யான் , இவர்தம்  நிரலில்வைத்  தெண்ணப்படும்  பேறு  பெற்றமைக்குக்  காரணம் , அந்  நிரலில்  அன்பரும் அமைகவென  இச்சங்கத்தார்  கருதியதென்றே  எண்ணுகின்றேன் .

           இச்சங்கத்தார்  என்னை  உறுப்பினனாகக்  கொண்டு   சில  ஆண்டுகளாக  நடைபெற்ற  ஆண்டு  விழாக்களில்  அழைத்து  இம்  மன்றத்தில்  விரிவுரை  நடத்துவித்துச்  சிறப்பித்து  வந்தனர் .  அம்  மட்டில்  அமையாது  இற்றை  ஞான்று  தலைமையளித்துஞ்  சிறப்பிக்க  மேற்கொண்ட  அன்புடைமையை  என்னென்பேன் !  இந்நன்றி  எஞ்ஞான்றும்  மறப்பேனல்லேன் .

                                      1 .  தாய்மொழிக்   கல்வி

அன்பர்களே !

             ஒருமைக்கட்  பயிற்சியால்  எழுமைக்கண்ணும்   தொடரும்  இயல்பினதாகிய  கல்வியே  மக்களை  மக்கட்டன்மை  யுடையா ராக்கும்  என்பது  பெரியார்  துணிபு . எந் நிலத்தில் எக்  குடிக்குட்  பிறந்தாராயினும்  கல்வியுடையாரையே  உலகம்  போற்றும் என்பது  கண்கூடாக  அறியப்பட்ட தொன்று .  இத்தகைய  விழுப்பஞ்  சான்ற  கல்வியை  , எந் நிலத்தில் எம் மொழி  வழங்கப்படுகின்றதோ  அந் நிலத்தில் வாழும்  மக்கள்  அம்மொழி  மூலமாகவே  முதற்கட்  பயிலவேண்டும் .  அதுவே  அந் நிலத்து மக்கட்குத்  தாய்மொழியாகும் .  ஒரு குழந்தை  பிறந்து மொழி  பயிலுங்கால்  அதன்  தாயால் முதற்கண்  பயிற்றப்படும் மொழி யாது? அதுவே  தாய்மொழி  என்று கோடல்  பொருந்தும் .  அன்னை வாயிலாகக்  கேட்டு  மழலை  மொழிந்து தேறிய  பின்னரே  அக் குழந்தை அப்பனாலும்  ஆசிரியனாலும்  வரிவடிவிற்  பயிற்றப்பட்டு  அறிவு  விரிவெய்தப்  பெறும் .  ஒருவன்  இறைவனை  அடைந்து  பேரின்ப  நுகர்ச்சியில்  தலைப்பட  விழையுங்கால் ,  அங்கும்  அருளுருவாகிய  தாயே  முதற்கண்   இவனைப்  பண்படுத்தி அப்பனாகிய இறைவனை அறிவித்து அவன்பால்  உய்ப்பவனாவள் . இதனை , “மெய்யருளாம்  தாயுடன்  சென்று பின் தந்தையைக்  கூடிப் பின் தாயை  மறந்து , ஏயுமதே  நிட்டை”  என்னும்  முற்றத் துறந்த முனிவர் பெருமானாகிய   பட்டினத்து  அடிகள் அருண்மொழியாலும்  உணர்க .  தாய்  வழியாகத்  தந்தைக்கு  ஆளாதலை  யுணர்ந்தே , முதற்கண்  தாயைக் குறிப்பிட்டு  மணிவாசகப் பெருந்தகையாரும் “அம்மையே  அப்பா  ஒப்பிலா  மணியே”  என்று  திருவாய் மலர்ந்தருளினார் .  இத் தமிழ் நிலத்து மக்களாகிய நம்மனோர்க்கு நம் அன்னையரால் முதற்கட் பாலொடு  குழைத்து அன்போடளாவி  ஊட்டிய  அருமை மொழி அந்தமிழிலின்பம்  ஆர்தரப் புரியும் செந்தமிழ் மொழியே யாமன்றோ ! அன்னையர் அருளொடு சுரக்கும் இனிய பாலை உண்ணுங்  குழவிப்பருவத்தில் ,  அவராற்  பயிற்றப்பட்டுப் பயிலும் சிறப்புப்  பற்றியன்றே  இம்மொழி,  “பால்வாய்ப்  பசுந்தமிழ்”  என்று  பாராட்டப்படுகின்றது .  மழவிளம்  பருவத்திற்  பயிற்றப்படுதல் குறித்தே இதனைப் “பசுந்தமிழ்”  என்றார் போலும் . இயற்கையும் அன்னதே .இதனால் , நம் உடல்  பாலுண்டு  வளரும்  பருவந்தொட்டே , உடற்கண்  உறையும் உயிர் , தன் குணமாகிய  அறிவைச்  செந் தமிழ்த் தெய்வ மொழிப் பயிற்சி வாயிலாக  வளர்த்துத்  திகழும் உண்மை நமக்குப்  புலனாகின்றது . அறியாப்பருவத்தினும்  நம் உயிர்க்கு உறுதுணையாக  நின்று அறிவுச் செல்வத்தை வளர்வித்து உதவி வரும் தமிழ் மொழியின் பழமையையும், சிறப்பையும் என்னென்று  கூறுவேன் ! அவை வரையறுத்துக்  கூறுதற்கு  இயலாதன வெனினும் , அறிந்தாங்கு  ஒரு சிறிது கூறத்தொடங்குகிறேன் .

                                   2 . தமிழ்  மொழியின்  தொன்மை

          பல்லாயிரம்  ஆண்டுகட்கு  முன்னர்த்  தோன்றி  இற்றை ஞான்று  நம் கைவரப்பெற்ற  தமிழ்  நூல்கள் எல்லாவற்றிலும்   காலத்தானும் , சிறப்பானும்  முற்பட்டு  விளங்குவது  ஒல்காப்  பெரும்புகழ்த் தொல்காப்பியம்  என்னுந்  தலையாய  இயல்  நூலே  யாகும் .  இது  கூடலின்கட்  பண்டு  நிலவிய  முச்சங்கத்துள் , தலைச்சங்க காலத்தில் தோன்றியதென்பது யாவரும்  உணர்வர் .  இந் நூலின்கண்  தமிழ் வரம்பு கண்ட தண்டமிழ் முனிவராகிய தொல்காப்பியர் , வடநூலார்  நான்கென  வகுத்த உறுதிப் பயன்களை  அகம் , புறமென  இரு பிரிவினுள்  அடக்கி , மக்கள் இம்மைப்பயனாக  நுகர்தற்பாலதாய  இன்ப நிலையை அகத்தினும் , மறுமைக்குரியதாக  எய்தற்  பாலதாகிய  அறநிலையினையும் , அதற்குக்  கருவியாகிய  பொருள்  நிலையையும்  இம்  மூன்றன்  நிலையாமையையும்  உணர்ந்து ஒருவித அடைதற்  பாலதாகிய  அந்தமிலின்பத்தமிழில்  வீடாகிய  உறுதி பயக்கும்  வாயிலையும் புறத்தினும் ஒழுங்குற   வகுத்து விளக்கியுள்ளார் .  

        இங்ஙனம் மக்கள் ஒழுகலாற்றைத்  திறம்பட  நுனித்துணர்ந்து  பலபட  விரித்துரைத்தலோடு  மற்றை  உயிர்த்  தொகுதிகளின்  இயற்கைகளையும் , நிலையியற்  பொருளிய  மரம்  முதலியவற்றின்  இயல்புகளையும் , நிலப்பகுதிகளின்  பான்மைகளையும் , மற்றை  இயற்கைப்  பொருள்களின்  தன்மைகளையும் ஆராய்ந்துணர் வார்க்குப்  புலப்படும்படி  கூறியிருக்கும்  திட்பநுட்பம் , வேறு எம் மொழி இயல் நூலார்க்கும் இயலாத தொன்றாம் . ஒரு மொழிக்கு இலக்கணம் காணப்புகும் ஆசிரியர்  அம்மொழிக்கண் உள்ள “எழுத்து” “சொல்” என்னும்  இவற்றையே  ஆராய்ந்து தூய்மைப்படுத்துவர் . இவ் வியல்பு பிறமொழி இயனூலார்  யாவர்க்கும் ஒத்ததாகும் . நம் செந்தமிழ்த் தெய்வ மொழியின் இயன் முதனூல்  ஆசிரியரே  மொழியாளர் எல்லோர்க்கும்  பொதுவாகிய எழுத்து , சொற்களின்  ஆராய்ச்சிகளோடு  அமையாது .  சொல்  கருவியாக  உணரப்படும்  பொருளாராய்ச்சியிற்  பெரிதும்  தலைப்பட்ட  அப்பொருளைக்  கூரறிவாளர்  எத்துணைப்  பாகுபாடு  செய்து  உணர  விரும்புவாரோ அத்துணைப்  பகுப்புக்களும்  அமைய  மக்களின்  ஒழுகலாற்றையும்  பிற  இயங்கியல்  நிலையிற்  பொருள்களின்  தன்மைகளையும்  தெள்ளத் தெளிய   விளக்கியுள்ளார் .  

            இப்  பொருளதிகாரத்திற்  கண்ட  கந்தழி முதலிய  சொற்களை  ஆராய்வோமாயின்   அந்நூற்  காலத்துத்  தமிழரின்  கடவுட் கொள்கை  நன்கு  புலப்படும் .  ஒரு  பற்றுக்   கோடின்றி  அருவாகித்  தானே  நிற்குந்  தத்துவங்கடந்த  பொருளாக்  கடவுளைத்  தமிழர்  ஆராய்ந்து  தெளிந்துள்ளாரென்பது  அதனாற்  புலனாம் .  தொல்காப்பியர்  தமிழ் நிலத்தார்  ஒழுக்கங்கண்டு   நூல்  செய்யுங்  காலத்துத்  தமிழர்  நிலை இத்துணை மேம்பாடுற்றிருக்குமாயின்   அதற்கு முன் எத்தனையோ  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்னரே  தமிழர்  தத்துவ  ஆராய்ச்சியில்   தலைப்பட்டிருத்தல்  வேண்டும் . நாள்  வினைகளைச்  செவ்விதின்  இறுக்கப்  பணிக்கும்  அற  நூல்களின்  வழியொழுகிப்  பண்படுத் தப்பட்ட  உள்ள நிலையுடையாரன்றே  முடிவில் தத்துவ ஆராய்ச்சியில் தலைப்படுவர் ?  அங்ஙனம் தலைப்படுவாரும்  கடவுட்குப்  பல்வகைப்  பொருந்தா  இலக்கணங்களைக் கண்டு ஒருவரோடொருவர் தம்முண்  முரண்படுவர் .  அம்முரண்பாடறுத்துக்  கடவுட்  பொருளின்  தூய  இயல் நிலையை  உள்ளவாறுணர்வார்  மிகவும் அரியர் .  இவ் வரிய உணர்ச்சியைத்  தமிழர்  எத்தணையோ  ஆயிரம்  ஆண்டுகட்கு  முன்னரே  எளிதிற்  கைவரப்  பெற்று  ஒழுகினரென்பது  அத்  தொல்காப்பிய  முதுநூலிற்  கண்ட  உண்மைத்  தெளிவாகும் .  இதனால் , தமிழின்  பழமை  காலத்தான்  அறுதியிட்டு ரைத்தல்  அரிதென்பது போதரும் . புதிய முறையில் ஆராய்ச்சி  செய்வாருள்  நுண்மாணுழைபுல  மிக்கார் சிலருக்கும் இஃது  உடன்பாடேயாகும் .  

             தொன்மை  வரலாற்று  முறையில்  நோக்கினும்  இதன்  பழமை  புலனாகும் .  ஒரு  பற்றுக் கோடின்றி   அருவாகித்   தானே  நிற்கும்  தத்துவங்  கடந்த  பழம்   பொருளாகிய  இறைவன் , மக்கள்  ஆண்  பெண்களாக இயைந்து  இன்ப  நுகர்ச்சியில்  தலைப்படும்  பொருட்டு  அருள்வழி  உருக் கொண்டு  பொற்கோட்டிமயத்தின்  கண்  மலைமகளை  வேட்டஞான்று , அமரர்  முதலியோர்  அனைவரும்  ஆங்கு   ஒருங்கு  தொக்காராகத்  தென்பால்  உயர்ந்து வடபால்  தாழ்ந்தமையின்  ,  அது  கண்டு  அப்பெரியோன் , நிலப்பரப்பின்  சமநிலை  குறித்துக்  குறுமுனியை  நொக்கிப்  பொதியிற்கு  ஏகென, அம்முனிவர் பெருமான்  முழுமுதற்பிரானை  வணங்கி , “ஐயனே ! தெற்கணுள்ளார்  தமிழ்  மொழி  வல்லாரென்றே . அவருவப்ப  யான்  அம்  மொழிப்  பயிற்சியிற்  பீடு  பெறுதல் எங்ஙனம் ?”  என  வேண்ட , இறைவன்  அதுகாலைக்  குடமுனிக்குத்  தமிழறிவுறுத்தா ரென்பது  கந்தபுராணக்கதை .  இப்புராண  வரலாற்றை  நம்புவார்க்குத்  தமிழின் தொன்மையைப்  பற்றி விரித்துரைத்தல்  மிகையே .

                            3.       தமிழ்  மொழியின்  சிறப்பு

          இனி , இங்ஙனம்  தொன்மையான  மாண்பு  மிக்க  இம் மொழியின்  சிறப்பைப்  பற்றிச்  சிறிது  ஆராய்வோம் . ஒரு  மொழிக்குச்  சிறப்பு   அதன்கண்  அமைந்துள்ள   சிறந்த  இலக்கியம் , இலக்கணம் , சமயம்  முதலியவை  பற்றிய  நூற்பரப்புக்களானும் , பிரிதொன்றன்  சார்பு  வேண்டாது  புலவர்  கருதும்  எத்தகைய  அரும்பொருள்களையும்  வழங்குதற்குரிய  சொற்களுடைமையானும்,  பிறவற்றானுமாம் .  இன்னோரன்ன  சிறப்புக்களில்  நம்  தமிழ்மொழி  யாதுங்  குறைவுடையதன்று .  இது  மற்றொரு மொழியினின்றும்  தோன்றியதென்றாதல்  , பிரிதொன்றன்  சார்பின்றி  நடைபெறா தென்றாதல்  கூறுவார்  உண்மை யாராய்ச்சி யிலாராவர் . ஆனால் , தொல்காப்பியர்  காலந் தொட்டே  வட சொற்களுட்  சில  தமிழில்  வழங்கலாயின .  அது பற்றித்  தொல்காப்பியரும்  ,

“வடசொற்  கிளவி  வடவெழுத்  தொரீஇ

யெழுத்தொடு  புணர்ந்த  சொல்லாகும்மே” 

எனவும் .

“சிதைந்தன  வரினும்  இயைந்தன  வரையார் “ 

எனவும், வட சொல் தமிழில்  வழங்கு முறையை  வரையறுத்துக்  கூறினர் .  வடமொழி  எந்நிலத்து மாந்தரும்   மேற்கோடற்குரிய   பொது  மொழியாக  உள்ளமையானும் , பொதுப்பொருளில்  வேண்டுமளவு கோடல்  முறையாதலானும் , கூடற்  சங்கத்துக்  குலவிய  பண்டைப்  புலவர்  பெருமக்களுட்  பலர் , வடமொழியினும்  வல்லராக  இருந்து  தமிழை  வளர்த்தமையானும்  அச்சங்க காலங்களில்  மிகச் சுருக்கமாகத்  தமிழில்  வடசொற்  கலப்பு  உண்டாயிற்று .  அங்ஙனம்  வடசொற்கள்  தமிழிற்  கலக்குங்காலும்  பொதுவெழுத்தான்   இயன்ற  சொற்களே  தூய தமிழுருவெய்திப்  பெரும்பாலும்  விரவலாயின .

           நாளடைவிற்  புலவர்  தனித்  தமிழ்ச்  சொற்களைத்  தெரிந்து வழங்கும்  மதுகை  யின்மையானும் ,ஓரோவழித்  தெரியினும்  அவற்றினும்  வடசொற் றொடை  செவிக்கு  இன்பம்  பயப்பனவாம்  என   மாறுகொள  உணர்ந்தமையானும் , தனித் தமிழ்ச் சுவை கண்டு  இன்புறும்  தலைவர்  அருகினமையானும் , வட மொழியாளர்  உவப்பத்  தமிழிற்  பாட்டு  உரை முதலியன இயற்ற வேண்டுமென்னும்  விழைவு   மேற்கொண்டமையானும் ,  பொதுவெழுத்தானும் , சிறப்பெழுத்தானும்  ஆய  வட சொற்கள்   பலவற்றைத்  தமிழில்  வரம்பின்றி   வழங்கி  வருபவராயினர் .  சுவையுடைமை  அவ்வம்  மொழிகளில்  தனித்த  நிலையிற்  காணப்படுதல்  போற்  கலப்பிற்  காணப்படுதல்  அரிது .  ஒரு மொழியிற்  செவ்வனம்  பயின்று  சுவை நிலை கண்டுணர்வார்க்கு  அதன்  தனி நிலையிற் போலப்  பிற மொழிக் கலப்பில் அத்துணை  இன்பம்  உண்டாகா தென்பது  உண்மை . அநுபவமுடையார்  எல்லோர்க்கும்  ஒத்ததாகும் . இதனால்  வட சொற்களை  நேர்ந்தவாறு தமிழில்  புகுத்தல்  முறையன்றென்பது  தெளிவாம் . ஒரு சில வட சொற் கலப்பு உண்மை பற்றித்  தமிழ் மொழியை  வடமொழியினின்றும் தொன்றியதென்றல்  பொருந்தாததொன்றாம் .  

               வடமொழிக்கும்  தமிழ்மொழிக்கும்  உள்ள  வேறுபாடு  மிகப்பலவாம் . வடமொழியில் தமிழிற் போலத்  திணை  பாலுணர்த்தும்  வினை விகுதிகள் இல்லை . “ப4வதி”  என்னும்  வினைமுற்று   “இருக்கின்றான்” “ இருக்கின்றாள்”  “இருக்கின்றது”  என  ஓர் ஈறே  நின்று  எழுவாய்க்கேற்றவாறு பொருள் உணர்த்தும் . தமிழில் வினை  முற்றுக்களின் ஈறே  திணை  பால்களை  உணர்த்தி  நிற்கும் .  பால்  வகுப்புத்  தமிழிற்  பொருளைப்  பற்றியும் , வடமொழியிற்  சொல்லைப் பற்றியும்  உள்ளது . ஆண் மகனைப் பற்றி  வருஞ்  சொற்களெல்லாம்  ஆண்  பாலாகவும் ,பெண்மளைப் பற்றி  வரு வனவெல்லாம்  பெண் பாலாகவும்  தமிழில்  உள்ளன . வடமொழியில் இவ்வரையறை  யில்லை ; மாறுபட்டு  வரும் . சொல்  நோக்கியதா கலின் , மனைவியைப் பற்றிய  “பா4ர்யை”  என்னுஞ் சொல் பெண் பாலாகவும் ,  “தா3ரம்  ஆண்  பாலாகவும் , “களத்திரம்”  என்னுஞ் சொல்  நபுஞ்சகப் பாலாகவும் வருதல்  காண்க .  வடமொழியில் ஒருமை  இருமை  பன்மைச்  சொற்கள்  உள்ளன . தமிழில்  ஒருமையல்லாதன வெல்லாம் பன்மையே . தினைப்  பாகுபாடு ,  குறிப்பு  வினைமுற்று முதலியன  தமிழுக்கே  உரியன . “முல்லையைக்  குறிஞ்சியாக்கி  மருதத்தை  முல்லையாக்கி”  என்னும்  கம்ப ராமாயணச்  செய்யுளை  வட மொழிக்கண்  மொழிபெயர்க்கப்  புக்க  வடமொழிப்புலமை  மிக்க  என்  நண்பரொருவர்  அத்  திணைப் பாகுபாடு  வடமொழிக்கண்  இல்லாமையால் , “நல்லனவற்றைத்  தீயனவாக்கியும் ,  தீயனவற்றை  நல்லனவாக்கியும்”  என்னும்  பொருள்பட   மொழிபெயர்த்துள்ளார் .  திணைப் பாகுபாடு  வடமொழிக்கண்  இல்லையாயினும்  பொருளா ராய்ச்சி  வன்மையால் , ஒருவாறு  பொருந்த  மொழிபெயர்க்கலாம் .  இயலாதென்பது  அவர் கருத்து போலும் . இன்னும்  உற்று  நோக்கு வார்க்கு  இலக்கண  அமைதியில்  வடமொழிக்கும்  தமிழ்  மொழிக்கும்  வேறுபாடு  பல  தோன்றும் .  இவ் வேறுபாடுகளைச்  சுருக்கி ,

“சாற்றிய  தெய்வப்  புலவோர்  மொழிக்குந்  தமிழ்  மொழிக்கும்

வேற்றுமை  கூறின்  திணைபால்  உணர்த்தும்  வினைபகுதி

மாற்றருந்  தெய்வ  மொழிக்கில்லை  பேர்க்கெழு  வாயுருபும்

தேற்றிய  லிங்கம்  ஒருமூன்றும்  இல்லை  செந்தமிழுக்கே”

என்று  பிரயோகவிவேக  நூலார்  கூறினார் .  வடமொழி  தென்மொழி  ஆராய்ச்சியிற்  புலமை  மிக்க  மாதவச் சிவஞான முனிவர்  இவ்வேறுபாடுகளை நன்கு  ஆராய்ந்து  தெளிவுபட  உரைத்தனர் . அவர்  கூறியன  வருமாறு :  “தமிழ்  மொழிப்  புணர்ச்சிக்கட்  படுஞ்  செய்கைகளும்  , குறியீடுகளும்  ,  வினைக்குறிப்பு , வினைத்தொகை  முதலிய  சில  சொல்லிலக்கணங்களும் , உயர்திணை  அஃறிணைப்  பாகுபாடுகளும்  ,  அவற்றின்  பகுதிகளும்  , வெண்பா  முதலிய  செயுளிலக்கணமும்  , இன்னோரன்ன  பிறவும்  வடமொழியிற்  பெறப்படாமையானும்  “  என்பனவாம் .  இவ்வாராய்ச்சியால்  தமிழ்  தனி  மொழி  என்பது  செவ்விதிற்  புலனாதல்  காண்க .

               இனி , இம்மொழிக்கணுள்ள  நூற்பரப்புக்களை  உற்று  நோக்குவோம் . கடல்கோள்  முதலியவற்றாற்  செற்றன  போக , எஞ்சிய  சங்க  நூல்கள்  பலவுள்ளன .தமிழின்  இயற்கைச்  சுவை  நலம்  ததும்பித்  திகழும்  பத்துப்பாட்டு ,  அகம் , புறம் , கலித்தொகை  முதலிய  சங்கத்துச்  சான்றோர் இலக்கியங்களும் , எம்மொழியினும்  இத்துணைத்  திட்ப  நுட்பங்களமைய  யாத்த  ஒரு  நூலும் உளதோ வென்று  ஆராய்வார்  வியப்புறும்  வண்ணம்  தமிழ் நிலத்தார் தவப்பயனாக  எழுந்த  திருக்குறளை  முதலாகவுடைய  நீதி நூல்  இலக்கியங்களும்  ,  பாடுவோர்க்கும்  கேட்போர்க்கும்  இறவன்  றிருவடிப்  பற்றை  விளைவித்து அன்புமயமாய்  நின்று  உள்ளுருகச் செய்யும்   தேவாரம் , திருவாசகம் , நாலாயிரப் பிரபந்தம்  முதலிய  அருட்பாடல்களும் , காப்பியச்சுவை  நலம்  கனிந்தொழுகும்   சிலப்பதிகாரம் ,சிந்தாமணி  முதலியனவும் , இறைவன்  றிருவருள்  நலத்தை அன்பர் அள்ளி உண்டு  இன்புற்ற  முறையையும்  ,  உலகியல்  நிலைகளை  வரம்பிட்டு  அழகு  பெற  உரைக்கும்  பெற்றியையும்   முறையே  மேற்கொண்டு வெளிப் போந்த சைவ  வைணவ  இலக்கியங் களாகிய   பெரிய  புராணம் , கம்பராமாயணம்  முதலியனவும் , சிவாநுபவச்  செல்வர்களாகிய  மெய்கண்ட தேவர்   முதலியோர்களால்  அளவை நூன்முறையில்   வைத்துப்  பொருள்  வரையறை  செய்து  அருளிச் செய்யப்பட்ட சிவஞானபோதம் ,சிவஞான சித்தி , திருமந்திரம்  முதலிய  சமய  நூல்களும்  சிவஞானமுனிவர் , குமரகுருபர அடிகள்  முதலியோர்  அருளிய  இனிய  நூற்றொகை களும் , பிறவும்  இதன்கண்  உள்ளன .

                   உருக்கரந்த  நூல்களினின்றுஞ்  சிதறுண்டு  அங்கு மிங்குங்  காணப்படும்  சில  செய்யுட்களைப்  பார்க்குங்கால் ,  முழுவுருவமுங்  கிடைக்கப் பெறாமை  தமிழரின்   தவக்  குறை யென்றே  இரங்க வேண்டியதாயிற்று .  சேர பாண்டிய  சோழர்களாகிய  மூவேந்தர் களையும்  தனித்தனியே  தொள்ளாயிரம்  வெண்பாக்களாற்   புகழ்ந்து  பாராட்டு முறையில்  அமைந்த  முத்தொள்ளாயிரச்  செய்யுட்களிற்   சிதறிக் கிடந்த  சிலவற்றைக் கண்டதும்  அந் நூன் முற்றுப் பெறாமை பற்றி  என் மனம் வருந்தியதுண்டு .   சிற்றுருவாகிய  வெண்பாவில்  உயர்ந்த  பொருளைச்  செப்பனிட்டமைத்துச்   சொல் வளமும் , பொருள் வளமுங்  கெழுமப்  பாடியிருக்கும்  வனப்புத்  தமிழ்ச்சுவை  நலம் துய்ப்பார்  யாவருள்ளத்தையுங்   கவரவல்லதாம் .  “வெண்பாவிற்  புகழேந்தி”   என்று  பாராட்டிய  புலவர்க்கும்  இம்  முத்தொள்ளாயிர  நூல்  காணப்பட்டிலதென்றே  எண்ணுகின்றேன் .  “பொருப்பிலே  பிறந்து தென்னன்  புகழிலே  கிடந்து “  என்று  தமிழ்  மடந்தையைப்  புனைந்து பாராட்டிய  புலவரும்  இதனைக்  கண்டிலர் .  தென்னன்  புகழின்  மட்டில்  அன்றி  மூவேந்தர் புகழிலும்  ஒருங்கு கிடந்தமை  இந் நூலாற்   கண்டிருப்பாராயின் , “பொருப்பிலே  பிறந்து மூவர்  புகழிலே  கிடந்து”  என்று  பாடியிருப்பர் .  இன்னும்  பூதங்களாலும்   காலதத்துவத்தாலுங்  கவரப்பட்டு  ஒழிந்த சிறந்த  நூல்களும் உரைகளும்  பலவாம் .  

             இலக்கண நூல்களுக்குள் எழுத்து  முதலிய  ஐந்து   இயல்களையும்  முற்ற  உரைப்பனவும் , அவற்றுள்  ஒன்றிரண்டே  நுதலுவனவுமாகிய   தொல்காப்பியம் ,  இறையனாரகப்  பொருள் , நன்னூல்  முதலிய  பலவுள்ளன .  இவற்றுள் தொல்காப்பியத்தின்  பெருமை  மேற்கூறப்பட்டது  கொண்டு  ஒருவாறு  உணரலாம் .  

              இனி , நூல்களின்  உண்மைக்   கருத்துக்களைத்   தம் மதி நுட்பத்தாற்  கண்டு  உரை  வரைந்த  ஆசிரியர்களின்  பெருமையை  என்னென்பேன் !  இளம்பூரணர் , பேராசிரியர் , சேனாவரையர் , நச்சினார்க்கினியர் , பரிமேலழகர் , அடியார்க்கு நல்லார்  முதலிய  ஆசிரியர்களின்  திறமையைத்  தனித்  தனி  விரிக்கப்  புகின்  மிக  விரியும் . இவரெல்லாம் , மிக விரைவாக  ஓடிச் செல்லும் ஒரு பேரியாற்றை எதிர்த்து நீந்தி அந்நீரோட்டத்தின்  வன்மையை இற்றென உணர முற்படுவார்  போலத்  தாம் உரையெழுத மேற்கொண்ட  சான்றோர்  செய்யுட்களிலுள்ள  சொற்களின்  செலவை  எதிர்த்தாராய்ந்து  உண்மைப் பொருள்  கண்டு  உலகிற்  குதவியவராவர் .

              பிற்காலத்தே  பொதியிற்  சாரலில்  தென்றமிழ்  நாடு  தவப் பயனாகத்  தோன்றிய மாதவச்  சிவஞான முனிவரின் மாட்சிமை கூறும் தரத்ததன்று . அம்முனிவர்  பெருமான்  வடமொழி  தென்  மொழிகளிலுள்ள  இலக்கியம்  இலக்கணம்  தருக்கம்  சமயம்  முதலிய   நூற்பாவைகளைத்  தேக்குற  உண்டு  நூலியற்றல் , உரை வரைதல் , பிறர்  புரைபட  யாத்த  நூலுரைகளின்  குற்றங்கண்டு  விலக்கல்  முதலிய  எல்லாக்  கல்வித்  துறைகளிலும்  ஒப்புயர்வின்றி  விளங்கிய   தமிழ்ப்பெரும்   தலைமணி யென்பதும் , சைவ சமயம் முதனூற்  பேருரையாசிரியரென்பதும்  இத்தமிழுலகம் அறிந்தனவே . அவர்கள்  வரம்பிட்டுரைத்த தொல்காப்பியர்  சூத்திர  விருத்தி  முதலியனவும்  , சிவஞான போதச் சிற்றுரை , பெருமை  முதலியனவும்  தமிழ்ப்  புலவர்களாலும்  சைவ  சமயப்  பெரு  மக்களாலும்  தலைமேற்  கொண்டு  போற்றற்பாலனவாம் .  

                இங்கு  கூறிய  நூலுரைகளின்  பெயர்களும்  சுருக்கம்  பற்றி  இவ்வாறு  கூறப்பட்டன . ஈண்டுக்  கூறப்படாத  பிற  நூலுரைகளைப்  பற்றியும் , ஆசிரியர்களைப்பற்றியும்  உள்ள  என்  மதிப்பு  ஒரு  சிறிதுங்  குறைந்ததன்று .  வாய்ப்புழி  விரித்துரைக்கும் அவாவுடையவனே .

               அகப்பொருள்  இயல்புகளை  அறத்தினின்றும்  பிறழாதெடுத்து நயம்பட  உரைக்கும்  அழகு  தமிழ் மொழிக்கே  சிறந்ததாகும் . தலைவன்  தலைவி , பாங்கன்  பாங்கி ,  செவிலி  நற்றாய்  முதலியோர்  இன்ன இன்ன இடங்களில் இவ் விவ் வண்ணம்   உரையாடக்  கடவரென்று  வரையறுத்த  முறை  பெரிதும்  இன்புறற்பாலது .  அகப்பொருள்  விரிவைத்  தமிழற்   பரக்கக்  கண்ட  ஒரு சிலர் ,  இம் மொழி காம  நிலையை  பற்றியதென்று  கூறினர் .  அவர்  கூற்று , “தோள்கண்டார்  தோளே  கண்டார்”  என்றாங்கு  அப்பகுதியில் ஈடுபட்டு  அதனின்றும்  பெயர  ஒண்ணாமை  பற்றி   எழுந்த  தொன்றாகும் .  சைவ  நூல்களை  முறைப்படுத்திய   நம்பியாண்டார்  நம்பிகள்   என்னும்புலவர்  பெருமான்  இறைவனையடைந்து பேரின்பம்  துய்த்தற்கு  வாயிலாகவுள்ள  அறிவுமொழி  இத்தமிழ்  மொழியெனக்  கண்டு  அக்காட்சியைத்  திருஞானசம்பந்த  பிள்ளையார்  பெருமை  கூறுமுகமாக ,

“ஆரதே  றுஞ்சடை  யான் அருள்  மேவ  அவனியர்க்கு

வீறதே  றுந்தமி  ழால்வழி  கண்டவன் “

என்று  வெளியிட்டருளினர் . “சிவபிரானது திருவருட் பேற்றை  யடைய  உலகத்தவர்க்குத்  தமிழால்  வழி  கண்டவர்”  என்னும்  இதனால்  இது  ஞானமொழி  என்பதில் ஒரு சிறிதும் ஐயமின்றாம் .  ஈண்டு  தமிழைச்  சுட்டுங்கால்  “வீறதேறுந்  தமிழ்”  என்றார் .  வீரு  என்னுஞ் சொல் ‘வேறொன்றற் கில்லா  அழகு’  என்னும்  பொருளதாம் .  இப்பொருள்  சீவக சிந்தாமணியில்   ‘வீறுயர்  கலச  நன்னீர்’ என்புழி  நச்சினார்க்கினியர்  கண்டதாகும் . வேற்று மொழிகட்கில்லாச்  சுருங்கச்  சொல்லல்  ,  விளங்க வைத்தல் முதலிய  அழகுகள்  இத்தமிழ் மொழிக்கண் மலிந்திருத்தலின்,இச்சொற்பொருள் நச்சினார்க்கினியர்  கண்ட  அவ்விடத்தினும்  இங்கு  மிகவும் இயைபுடைத்தென்பது நன்கு  விளங்கும் .

             இச்  செந்தமிழ்  மொழியாம்  நறுநீர்த்  தடாகத்திற்  பற்பல  கிளை  நூல்களாம் கொடி , இலை , அரும்பு .மலர்   முதலியன  கிளைத்தெழுதற்கு  முதலாகவுள்ளதும் , மொழியின்  தன்மையை வரம்பிட்டு  உரைக்கும்  இயல்  முதல்  நூலுமாகிய   தொல்காப்பியம்  என்னும்  மூலமும் , அதன்கட்டோன்றி  எழில்  பெற  விளங்குவதும் , இன்னும்  காலக்கூறு  எத்துணை  கழியினும்  உலக நிலையும்  மக்கள்  ஒழுகலாறும்  இன்ன  படியாக  இருத்தல் வேண்டு மென்று  புதிய புதிய எண்ணங்களை  மேற்கொண்டு  ஆராய்வார்க்கெல்லாம்  சிந்தாமணி போல் நீதிப் பொருள்களை வழங்குவதும் , நுண்பொருள் நறுமணம்  மிக்கதுமாகிய  பீடுசால்  திருக்குறள்  என்னும்  தாமரை  மலரும் , அம்மலர்க்கண்ணே   ததும்பி  வழிவதும் , விலை  வரம்பில்லா  மாணிக்கம்  போன்ற  சொன்  மணிகளானும்  உள்ளே  நோக்கி   உளம்  நெகிழ்ந்து ஆராய்வார்க்கு   “எனை  நான்  என்பதறியேன்”  என்றபடி அவர் தம் நிலையும் மறக்கச்செய்யும் பொருளொளிகளானும் , கல்லையுங்  கரைக்கும்  இசை நலத்தானுஞ்  சிறந்து திகழ்வதும்  படித்தல் , கேட்டல்  முகமாகத்  தன்னை யுண்பாரைத்  தான்  உண்டு  அன்புருவாக்கிச்  சிவநெறிக்கட்  செலுத்திப்  பேரின்பப்  பெருவாழ்வுறுத்துவதும்  ஆகிய  திருவாசகம் என்னும்  தேனும்  கைவரப்பெற்ற   தமிழ்ச்  செல்வர்க்கு  யாதுங்  குறையின்றெனினும் , கால வேறுபாட்டால்  உள்ள  நிலை  வேறுபட்டு அதனால்  விளையுங்  குறைகட்கு  அவர்  இடனாதல்  வருந்தத்  தக்கதே .

அக்குறைகளாவன :-

             நஞ்செந்தமிழ்த்  தெய்வ  மொழிக்கு  இயல்பின்  அமைந்த காட்சிகளை  விளக்கமாக  உணர்ந்து உலகினர்க்கும் உணர்த்தித்  தாமும்  பயன்  எய்துதலை விட்டு , இதற்கிலாதனவும்  வேண்டாதன வுமாகிய   சிலவற்றைச்  சிறப்பெனக்  கண்டு  இதற்கு ஏறிட முயன்று  இடர்ப்படுதலும்  இன்னோரன்ன பிறவுமாம் . வேற்று  மொழியாளர்   அறியாமையால்  நம்  மொழியைப்  பழித்துரைப்பாராயின்  தக்கவாறு  ஏதுக்களைக்  காட்டி  உண்மை நிலை யுரைத்து  அவரை  நன்நெறிப் படுத்த முயலல் வேண்டும் . அந்நெறிக்கு  வாராராயின்  “நெறியினீங்கி யோர் நீரல கூறினும் அறியாமை யென்றறிதல் வேண்டும் “  என்றாங்கு  அவர்  தன்மைக்கு  இரங்கி யொழிதலே  நாம்  மேற்கொள்ளற்பாலதாம்.  இங்ஙனமல்லாமல்  நாமும்  அவரியல்பைக்  கைப்பற்றி  அவர் மொழிக்குள் இல்லாத குறைகளை ஏறிட்டுப் பழித்துரைத்தல் நடுநிலை திறம்பாத் தமிழ்க் குடியிற் பிறந்த நமக்கு ஒல்லாத தொன்றாம் .  கலகம் விளைத்தலால் எய்தும் பயன் , நடுநிலை திறம்பா  நன் னெஞ்சைக் கோட்டமுறச்  செய்தலேயன்றி  வேறன்று .  மொழியள வின்றிச்  சமய  நிலையிலும்  இம் முறை  மேற்கொள்ளற் பாலதொன் றாம் . காய்தல்  உவத்தலின்றி  உண்மை நிலை கடைப்பிடித்துப்  பண்டை நிகழ்ச்சிகளை யாராய்ந்து வெளியிடும் இக்காலத்துத்  தமிழ்ப்  புலவர்களின் அருஞ்  செயல்கள் போற்றற்பாலவையாம் . புதிய  முறையிற்  கண்ட  கொள்கைகளும்  , பொருந்துவன இன்ன, பொருந்தாதன இன்னவென்று அறுதியிட்டு  வெளிப்படுத்தற்குரிய வழியைப் பின்னர்க் கூறுவேன் .  

                                4 .  தமிழ்  மொழியின்  நிலைமை

தமிழ்ச்  செல்வர்காள் !

            இது  காறுங்  கூறியவற்றால்  தமிழின் தொன்மையுஞ்  சிறப்பும் ஒருவாறு புலப்படுமேயன்றி முற்றவெடுத்து விளக்கப்பட்டனவாகா . தாலீ  புலாக  நியாயமாகச்  சுருங்கிய  நிலையிற்  சில  எடுத்துக்  காட்டப்பட்டன . இனி , இத்தகைய  மூலப் பொருளாகிய தமிழின் நிலை இக்காலத்தில் எங்ஙனம் உள்ளதென்று  ஆராயப்  புகுவோமாயின் , அது வருத்தந்  தருவதொன்றாகும் . இம்மொழியை முறையாகப்  பயில்வாருஞ்  சிலரே . பயிற்றுக்  கல்லூரிகளுஞ்  சிலவே . நம் அரசினர் மொழியாகிய ஆங்கிலத்தால் நெருக்குண்டு இது தன்னுருக்கரந்து  அங்குமிங்குஞ் சிறிது உறைவிடம் பெற்று ஒல்கியிருக்கின்றது . போற்றுவாரின்மையால்  வேற்றிடம் பெயர்தற்கும் வழியில்லை ; ஆர்வ மிக்குப் பயில முயல்வாரும் பொருள் வருவாயைக்  கருதிப் பின்வாங்கு கின்றனர் .  பொருள் வருவாயைப்  பொருட்படுத்தாத  தகுதியுடை யார்க்கு  இதன்கண்  விருப்பமுண்டாதல் அரிதாகின்றது . இளைஞர் சிலர் , காலத்தின் விரைவிற்கேற்றவாறு  ஒரு  நூலையேனும் அழுந்தியாராயாமல்  நுனிப்  புல்  மேய்ந்து இக்கால நாகரிகத்திற்கு ஒத்த வண்ணம் எங்கணும் உலாவித் திரியும் பத்திரிகைகளில் வெளிப்படுஞ் சில  கட்டுரைகளைப்  பயின்று , அம்மட்டில் தம் கல்வி முற்றியதாக நினைந்து , தாமும்  அம்முறையிற் காலங்கழிக்க எண்ணுகின்றனர் .  

          பண்டைக்காலம் போலக் கற்று  வல்ல பெரும் புலவர்கட்கு முற்றூட்டாக  நிலம் , பொருள்  முதலியன கொடுத்துப் பேணும்  புரவலரும் இலர் . ஆரவாரமின்றி அறிவு விளக்கங்  கருதிக் கல்வி பயின்று  அடக்க மேற்கொண்டொழுகுவாரைப்  பெருமைப்படுத்து வாரும்  சுருங்கினர் . போலிப்பயிற்சியும் போலியறிவும் , அடிப்போலி யறிவுடையாரைப்  பாராட்டுதலுமே  எங்ஙணும்  மல்கின .  

           ஆங்கில மொழிப் பயிற்சியால்  உயர்தரப் பட்டம்  பெற்றாருட்  சிலர்  தமிழையுங் கடைக்கணித்து  ஒரு சிறிது பயின்றதும் , வேற்று மொழியால்  தாம் எய்திய பெருமையை இதன் மூலமாக வெளிப்படுத்த எண்ணிப் பண்டையோர் சிறந்த முறையில் ஆராய்ந்தெழுதிய  நூலுரைகளைக்  குறைகூறத்  தலைப்பட்டு தம்குறையை வெளிப்படுத்துகின்றனர் .  அவர் குறை , அறிவுடையாருட்  சிலர்க்கன்றி ஏனையோர்க்கும் புலப்படாததாகலின் , அவ் வேனையோர் மலிந்த  இவ்வுலகத்தாராற்  பாராட்டப்படும்  பேறு பெற்று , மீண்டும்  மீண்டும் அவர் தம் இயற்கையை வெளிப்படுத்த முயல்கின்றனர் . ஒரு  நூலையோ  , உரையையோ  ஒருவர் மறுக்க  எண்ணுவாராயின்  , அந்நூலுரைகளின் பொருளுரைகளை ஆசிரியரின் கருத்தின் வழி முதலில்  அறிதல் வேண்டுமன்றோ ?  அங்ஙனம் அறிதலில் தம் உழைப்பைப் பயன்படுத்தாமல் மறுத்து ரைக்க விரைவார்  செயலை என்னென்பேன் ! வைரமணியின் தூய வெண்ணிற வொளியை  மஞ்சள்  நிறமென மாறுபடக்  கண்டு  அக்காட்சி  ஏதுவாக  “இது வைரமணி அன்றென ஒருவன் கூறுவானாயின்  அஃது அவன்  கண்ணின்  குற்றத்தாலாயதன்றி  வேறென்ன ?  

              சிலர் வேறு வழியில் தாம்  உயர்ந்த நிலையை அடந்திருப்பதாக எண்ணித் தமிழிலும் தம் புலமை முற்றுப் பெற்றதாக உலகங் கொள்ள விழைந்து , தமிழிற் பாட்டுப் பாட முயல்கின்றனர் .  அந்தோ ! அவர் பாட்டை நினையுங்கால்  தமிழ் மொழியாளர் செயல் இத்தகையது போலுமென்று பிறமொழியாளர் எள்ளி நகையாடற் கிலக்காகின்றதே  என்று வருந்த வேண்டியதாகின்றது . “செல்வப் புதல்வரே ஈர்ங்  கவியோ”  என்றபடி புலவர்க்குப்  புலமைப் புதல்வராகப்  பிறக்கும்  இயல்பினவாகிய  பாட்டுக்களைக்  கருக்  கொள்ளாது பொறையுயிர்க்க வெண்ணின்  எங்ஙனமாம் ?

                தமிழ்த்துறையில்  ஒரு  சிறிதும் பயிலாத  தம் பதவி மேம்பாட்டால்  ஒரோ  வமயம்  இன்னோரன்ன  அவைக்களங்களில்  தலைவராக  வீற்றிருக்கும் பேறு  பெறுங்கால் அவர்  கூறும்  உபதேசம் எத்துணைப்  பயனுடையதாகுமென்பதை  நீங்கள்  அறிவீர்கள் . அவரை  உயர் பதவிக்குக் கொண்டுவந்து மொழிப் பயிற்சியில் அவர் செலவிட்ட  காலத்தையும் , முயற்சியையும் கூறுபடுத்துக்கால்  அல்லது அரைக்காற்  கூறு  தமிழுக்கு உபயொகப் படுத்தியிருப் பாராயின் , அவர்  உபதேசங்  கொள்ளற்பாலதாகும்.  அங்ஙனமின்றி, “பண்டிதர் நடை கடினமாதலிற்  பயனுடையதன்று “  என்றின்னோ ரென்ன  உபதேசங்களைச்  செய்வரேல் அவற்றை எவ்வாறு  ஏற்றுக்கொள்ளலாம் ?

                   சிறந்த  நடையில்  எழுதுவார்  மிகச் சிலரே .  அவர்களும் இவர்  ஆரவாரத்தில்  ஈடுபட்டுத்  தம்  இயற்கையைக்  கைவிடுவாரா யின்  அந் நடை வனப்பை  யாண்டுக்  காண்போம் ?  இவ்வுபதேசகர்  கருத்துப்படி  எது  நல்ல  நடையென்று தெளியப் புகின்  அது நகை விளக்கும் .  பிற  மொழிகளிலுள்ள சொற்களை மிகுதியாகக்  கலந்து இலக்கண  வரம்பின்றி  எழுதப்படுவதே   எளிய  நடை யென்பது  அவர் கருத்து .  இந் நிலையைக்  கடைப்பிடித்துள்ளாரே  இக் காலத்துப் பலராவர் . இயல்பிற்  பரந்து கிடக்கும் இவ் வெளியே கொள்கைக்கு இவர் உபதேசமும் இன்றியமையாததுகொல் !  எளிய  நடையாவது  இலக்கணப் பிழையின்றித் திரிசொற்கள் பெரிதும்  விரவாமல் இயற்சொற்களால்  இயல்வதாகும் .  இவ்வெளிய  நடையையும் , திரிசொற்கள் பெரிதும்  விரவிய  அரிய  நடையையும் எழுதப்படும்  பொருள்களுக்கு  ஏற்றவாறு  புலவர்கள்  பகுத்துணர்ந்து மேற்கொள்ளல் வேண்டும் .  

                                  5 .  இனிச்   செய்ய   வேண்டுவன

  •  நூல்கள் , ஆராய்ச்சிகள்  முதலியன

    இனி, நம் அருந்தமிழ் நன்னிலைப்படுதற்குச்  செயற்பால  காரியங்களைச் சுருக்கிக் கூறுவேன் . உலகத்து வழங்கும் பல மொழிகளிலும் உள்ள அரிய பல கலைகளெல்லாம் தமிழ் மொழியில் வரல் வேண்டும் . ஆங்கில மொழியிலும்  வடமொழி யிலுமிருந்து  மொழி பெயர்க்க வேண்டிய சிறந்த நூல்கள்  பலவுள்ளன .  உயிர்த்தொகுதிகளைப்  பற்றினவும் மற்றை  நிலையியற்  பொருள்களைப்  பற்றினவுமாகிய  நூல்களுள் , இரசாயனம் முதலிய செயற்குப் பயன்படும் நூல்களும்  ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்படல்  வேண்டும் . மேலைத் தேயத்துப்  பண்டிதர்கள்  தம்  பேருழைப்பாற்   புதிய முறையிற்  கண்ட  சிறந்த ஆராய்ச்சி  நூல்களெல்லாம்   ஒவ்வொன்றாகத்  தமிழில்  வெளிப்படல்  வேண்டும் . இதற்கு  ஆங்கிலமும்  தமிழும்  உடன்  கற்ற  புலவர்கள்  துனை  புரிய  வேண்டும் .

            வடமொழியினின்று  மொழி  பெயர்க்க  வேண்டிய  மூல  நூல்கள்  பலவுள்ளன . பல்லாயிரம்  ஆண்டுகளாக  நம்  தேயத்தாராற் பிரமாண  நூல்களாக  மேற்கொள்ளப்பட்டு வரும்  இருக்கு  முதலிய  வேதங்களும் , அவற்றின்  முடி  பொருளாக  விளங்கும்  உபநிடதங்கள் , தமிழ்  நிலத்தார்  வாழ்க்கைக்கு  இன்றியமையாச்  சிறப்பு  நூல்களாகவுள்ள  ஆகமங்களும்  ஆகிய  இன்னொரன்ன  மூல  நூல்கள்  எத்துணை  ஆயிரம்  ஆண்டுகளாகி யும்  இன்னுந்  தமிழிற்  செவ்விய  முறையில்  மொழி  பெயர்க்கப் பட்டு  வெளிவரவில்லை . ஒரோ  விடங்களிற்  சிலர்  இவற்றை மொழி  பெய்ர்க்கத்  தலைப்பட்டுச்  செவ்விய  முறையிற்  பயன்பட  இயற்றலாற்றாது  இடைக்கண்   ஒழிந்தனர் . அவர்  அத்துணை  தானும்  முயன்றது  பற்றிப்  பாராட்டக்  கடமைப்பட்டுள்ளோம்  அவர்க்குத்  துணை  புரிவாரும்  இல்லை . எவ்வாறு  வெளிப்படுத்தி னாற்   பயன்படுமென்பதைத்  தெரிந்துகொள்ள  அவர்  முயலவுமில் லை .  எத்துணையோ  ஆயிரம்  காவத  தூரங்களுக்கு  அப்பாலுள்ள  ஆங்கில  தேயத்தார்  தம்  மொழிகளில்  இவ்வரிய  வேதாகம  உபநிடதங்களைப்   பொருட்படுத்தி  மொழி  பெயர்த்துப்  பலவகைச்  சிறந்த  ஆராய்ச்சிக்  குறிப்புகளுடன்  வெளிப்படுத்தி யிருக்கின்றனர் .  தொன்றுதொட்டு  ஒற்றுமையோடு  வழங்கப்பட்டு  வரும்  நம்  தமிழ்  மிழியில்  இதுகாறும்  அவை  வெளிவராமை  ஒரு  குறையேயாம் . தெளிவான  உரைநடையிற்  பல்வகை  ஆராய்ச்சிக்  குறிப்புகளுடன்  அவை  வெளிவரல்  வேண்டும் .  

                  மூல  நூல்கள்  உள்ளவாறு  வெளிவந்தபின்  அவற்றின்  நலந்  தீங்குகளைப்  பற்றி  ஆராய்வார்  ஆராய்க . மூலம்  மற்றும்   தமிழில்  வருவதற்குமுன் , அவற்றின்  உட் பொருள்களைப்  பற்றி  ஆங்காங்குள்ள  சிற்சில  குறிப்புக்களைக்  கொண்டு   நம்  தமிழ்  வல்லார்  ஒரு  முடிபுக்கு  வருதல்  சிறந்த  முறையன்று .

                    இன்னும் , வடமொழிக்கண்ணுள்ள  அளவை  நூல்களும் , சுவையாராய்ச்சி  நூல்களும்  ,  பெருங்காப்பியங்களை  ஆராய்தற்குக்  கருவியாகவுள்ள  நூல்களும்  , பொருணூல்களும் , அறிவு  நூல்களும் , பிறவும்  மொழிபெயர்க்கப்படல்  வேண்டும் . இச்செயற்கு  வடமொழியோடு  தமிழ்  பயின்றார்  பலர் வேண்டும் .  

                        நம்  தமிழ்மொழியின்  ஆக்கத்திற்கு  ஒரு தலையாக  வேண்டுவனவற்றுள்  இம்மொழி  பெயர்ப்புச்  செயலும்  ஒன்றாம் .  இது பற்றியே  தொல்காப்பியனாரும் 

“தொகுத்தல்  விரித்தல்  தொகைவிரி மொழி பெயர்த்

 ததர்ப்பட  யாத்தலோ  டனைமர  பினவே “

என்று  நூல்  யாப்பு  வகைகளுள்  ஒன்றாக  இம்மொழிபெயர்ப் பையும்  கூறினார் . இவ்வரிய  காரியஞ்  செய்தற்குரிய  நிலையத்தை  இன்னோரன்ன  சங்கங்களின்  உறுப்புக்களுள்  ஒன்றாகக்  கொண்டு  பலர்  கூடிச்  செய்தல்  வேண்டும் .  

               இனி , ஆராய்ச்சி  , செய்யுள் , உரை  நூல்களைப்  பற்றி  ஒரு  சிறிது கூறுவேன் . சிறந்த பண்டைத் தமிழ்  நூல்களைச்  செவ்வனம்  ஆராய்ந்து  அவற்றிற்  பொதிந்து கிடக்கும்  நுண்பொருள்களைத்  தொகுத்துப் பல  ஆராய்ச்சி  நூல்கள்  வெளிப்படுதல் வேண்டும் .

 பெரும் புலவர்களால்  அரிதில்  தேடித் தொகுத்த இரத்தினக்குவியல்  போன்ற  பழந்தமிழ்  நூல்களெல்லாம்  கிளைக்கக்  கிளைக்கப்   புதிய  புதிய  சுவை  நலன்களைத்  தேற்றி  இன்புறுத்தும்  நிலையினவாகும் . அவ்வின்பச்  சுவைகளை  அழுந்தி  ஆராய்ந்து  துய்க்கும்  புலவர்கள்  “யான்  பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம்”  என்றபடி  மற்றையோர்க்கும்  அளித்தல்  வேண்டும் .  ஒரு  மொழி யின்  சிறப்பு  ,  மதிநுட்ப  நூலோடுடைய   புலவர் பெருமக்க ளின்  ஆராய்ச்சி  யுரையால்  வெளிப்படும் .  அத்துணை  வேற்று  நெறிகளால்  ஆகாது ; இந்நெறியில்  இற்றைஞான்று  தலைப்படு வார்  சிலருளர்  எனினும் , அன்னாரை  அந்நலம்  கண்டு  போற்றுவாரின்மையால் அவ்வருஞ் செயல் நன்கு  விளக்கமுறவில்லை .

                 நம்  பண்டையோர்  போலத்  திருந்திய  முறையிற்செய்யுள்  நூல்கள்  பலவற்றை  அவ்வாற்றலுடையார்  வெளியிடல்  வேண்டும் . முன்னுள்ள  செய்யுணூல்கள்  பல இருப்ப  புதியன  வேண்டுதல் மிகையெனக்  கருதுவாருமுளர் . நம்  பரத  கண்டத்து மொழிகளெல் லாம்  நிலை  பிறழாது என்றுந் திருந்திய  முறையிற்  றிகழ்தல்   மூல நூல்களெல்லாம் செய்யுட்களால்  ஆக்கப்பட்டமை  யானேயாம் .  ஒரு செய்தியைப்  புலமுடையார்  உள்ளங்கொள்ளுங்கால்  அது  செய்யுண்  முகமாகக்  கேட்கப்படுதல் போல் வழக்குச்சொல்  முகமாகக்  கேட்கப்படுதல்  இன்பம் பயவாது ;  நீண்ட  நாள் மறவாமல்  உளங்கோடற்கும்  இயலாது . ஒரு  நிகழ்ச்சியைச்  சிறந்த  புலவன்  கூறுதல்போற்  பிறர்  கூற  அறியார் .  கூறப்படும்பொருள்  சிறந்ததாக  இருப்பினுங்  கூறுவோன்  புலவன்  அல்லனேல்  அது  பிறர்  நெஞ்சில்  தங்கி  இன்புறுத்தலாற்றாது .  அரசுரிமையும்  புலமையும்  வாய்ந்த சைவ  மன்னர்  ஒருவர்   தம்  உண்மைச்  சமயக்  கொள்கையையும்  மறந்து  வேற்றுச்சமய  நூலில்  ஈடுபட  நேர்ந்தது   செய்யுளின்பத்தினாலேயாம் . மீண்டும்  அவரை  அவர்  சமய  நிலையில்  திட்பமுறப்  பிணித்து  வயமாக்கியதும்  செய்யுளின்பமேயாம் .

கல்வியே  கற்புடைப்  பெண்டிரப்  பெண்டிட்க்குச்

செல்வப்  புதல்வரே  யீர்ங்கவியாச்  —  சொல்வளம்

மல்லல்  வெறுக்கையா  மாணவை   மண்ணுறுத்துஞ்

செல்வமும்  உண்டு  சிலர்க்கு “

என்றபடி  புலமைக்கு  மகப்பேறு  ஈர்ங்கவியாயின் , கவிபாடும்  ஆற்றலில்லாதார்  புலவ ருலகத்தில்  மக்கட்பேரில்லா  வாழ்க்கையை  உடையவராவ  ரல்லரோ !  ஆதலின் , புலமை  வாழ்க்கையிற்  சிறப்பெய்த   எண்ணுவாரெல்லாம்  செய்யுள்  பாடும்  வன்மையுடையா  ராதல்  வேண்டும் . அவ்வன்மையைப்  பயிற்சி  முகமாகப்  பெருக்கிக்  கொண்டு  சிறந்த  நூல்கள்  செய்யுள் வடிவில்  எழுத  முயலல்  வேண்டும் . 

               அதனோடு  பழைய  சிறந்த  நூல்களுள்   உரையெழுதப்  படாதவைகட்கெல்லாம்   உரை  வரைதலையும்   மேற்கொள்ளல்  வேண்டும் .  நூலாசிரியரின்   அரிய   கருத்துக்களையெல்லாம்  உரையாளர்  உதவியாலேயே  உலகம்  உணர்ந்து இன்புறுகின்றது .  பேருபகாரிகளாகிய   உரையாசிரியர்களின்  உதவி  இல்லையா யின்  பண்டை  உயர்  நூல்களாம்  கருவூலங்களில்  தொகுத்து  வைத்த  விலை வரம்பில்லாப்  பொருண்மணிக்  குவியல்களை   யாம்  எங்ஙனம்  பெறுதல்  கூடும் .?  வடமொழியில்  சூத்திரகாரரா கிய  பாணினியாரினும்  உரையாளராகிய  பதஞ்சலியார்  பெருமை  சிறந்து  விளங்குதலை  அறியாதார்  யாவர் ?   நூலாசிரியர்  உள்ளக்  கிடக்கையை  நுணுகி  ஆராய்ந்து தெளிவு  பெற  எடுத்தெழுதும்  வன்மையாளரே   உண்மை உரையாசிரியராவார் .யார்  யார்  எவ்வெத்திறத்து  நூல்களிற்  பயிற்சி  மிக்குடையாரோ  அவரவர்  அவ்வத்திறத்து  நூல்களுக்கு  உரையெழுதப்  புகல் வேண்டும் . அங்ஙனமின்றிக்  கல்லாது மேற்கொண்டொழுகல்  தவறுடைத்தாம் .  சைவ நூலில்  ஒரு  சிறிதும்  பயின்றறியாதார்  ஒருவர்  சைவத்  தலைமணியாகத்  திகழும்  திருவாசகம்  திருவிசைப்பாக்களுக்கு   முற்றும்  உரையெழுதித்  தம்  புரை  நெறியை வெளிப்படுத்தியுள்ளார் .

இத்தகையர்  தம்  தகுதிக்கு  இயலாத  வுயர்  நூல்களுக்கு  உரை  காணப் புகுந்து  உண்மைப்பொருள்  காண  இயலாமல்   இடர்ப்பட்டதோடு , மரபுக்கு  முரணாகவும்  பல  எழுதினர் .   பிழைபட்ட  எல்லாவற்றையும்  கண்டு  விளக்கல்  மிகையாதலின்  ஒன்று  காட்டுவேன் . “நானார்  என்  உள்ளமார் , ஞானங்களார்  என்னை  யாரறிவார் .  வானோர்  பிரான்  என்னை  ஆண்டிலனேல்  மதிமயங்கி  ,  ஊனா ருடைதலை மேல்  உண்பலிதேர்  அம்பலவன்”  என்னும்  திருப்பாட்டில்    ‘மதிமயங்கி’ என்பதைப்  பெயராகக்  கொண்டு  ஆறாம்  வேற்றுமை  உருபு  விரித்து  மதிமயக்கமுற்ற   பிரமனது  தலையோட்டிற்  பலி  தேரும்  அம்பலவன்  என  முடித்துக்காட்ட  அறியாமல் , அதனை  வினையெச்சமாகக் கொண்டு  மதிமயக்கத்தை  அம்பலவர்க் கேற்றினர் . இன்னோரன்ன  பலவுள .  ஒரு  புலவன்  காலக்கழிவு  நோக்காது  நெடிதாராய்ந்து  தன்  வாணாளில் ஒரு  நூற்கு  உண்மையுரை  எழுதி  முடிப்பினும்   போதியதே .   பிழைபடப்  பல  வெழுதுதலிலும்   பிழையறச்  செப்பனிட்டு  ஒன்று  எழுதுதல்   நன்றாம் .

  • புலவர் , புரவலர் , செய்யுள்  முதலியன

மொழி பெயர்த்தல்  , செய்யுள்  நூல்  யாத்தல் , பண்டை  நூல்களுக்கு  விளக்கவுரை  எழுதுதல் .  ஆராய்ச்சியுரை  வரைதல்  ஆகிய  இன்னோரன்ன  துறைகளெல்லாம்   நம்  தண்டமிழ்   வளர்ச்சியுறுதற்கு  ஏற்றனவாம் . இத் துறைகளிற்  புலவர்  பெருமக்கள்  தலைப்படுதற்குத்   தக்க  பொருள்  வருவாயிருத்தல்  இன்றியமையாத  தொன்றே . இதற்கென்  செயலாம் .? தமிழ்  நாட்டுச்  செல்வர்கள்  கடைக்கணித்தல்  வேண்டும் .  இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்  போன்ற  சங்கங்களின்  வாயிலாகச்  செல்வர்கள்  தக்கவாறு  பொருளுதவி  புரிந்து , அப் புலவர்  பெருமக்களைப்  போற்றுதல்  வேண்டும் .  பொருள்  படைத்தவர்  ஒவ்வொருவரும்  தத்தம்  பெயரால்  ஒவ்வொரு  துறைக்கும்  இத்துணைப் பொருள்  கொடுப்போமென  முன்  வந்து சங்கங்களின்  வாயிலாக  வெளியிட்டுப்  புலவரை  ஊக்குதல்  வேண்டும் .  தமிழ்  நாட்டுத்  தலை நகரங்களிற்   குணங்  குற்றங்களை  ஆராய்தற்குரிய  புலவர்  கழகங்களை  அமைத்து  அக் கழகத்தார்  நடுநிலை  திறம்பாமல்  ஆராய்ந்து  மதிப்பிடும்  நூலுரை  முதலியவற்றிற்குத்  தக்கவாறு  பொருட்  பரிசிலும்  பட்டங்களும்  வழங்கல்   வேண்டும் .இச் செயன்முறை  பெரிதும்  தமிழ்நாட்டுச்  செல்வர்களைப்  பொறுத்ததாகும் .  

                 புலவர்க்கு  வறுமை  தேர்தல்  பண்டுதொட்டு  உள்ளதே . அதற்குக்  காரணம்  அவர்  புலமைச் செல்வத்தைப்  போற்  பொருட்  செல்வத்தை  ஈட்ட  விருப்பமும் , முயற்சியும் , உபாயமும் . மேற்கொள்ளாமையேயாகும். புறநானூற்றை  ஆராய்வோமாயின் , புலவர்  வறுமைத் துன்பம்  பல  வெளியாம் .  பெருஞ்  சித்திரனார்  என்னும்  புலவர்  பெருமான்  குமண வள்ளலை  நோக்கி , “வாழு  நாளோ  டியாண்டு  பலவாக” எனத் தொடங்கிக்  கூறிய  பாட்டில் ,  தம் , தாய் , மனைவி , குழந்தைகள் , சுற்றத்தாராகிய  இவர்கள்  பசியால்  வருந்துதலைக்  கூறும்  பகுதிகள்  கன்னெஞ்சையுங்  கரைப்பன  அல்லவோ !

                ஆனால் , இவர்  வருத்தங்  கண்டு  அக்காலத்து  வள்ளல்கள்  இவர்களை  எவ்வாறு  பேணினர்  என்பதற்கு  அக் குமண  வள்ளல்  வரலாறு  ஒன்றே   போதிய  சான்றாகும் . உண்மையாகவே  தம்மைப்  பாடி  வந்த  புலவர்க்கு  உயிரையும்  வழங்க  ஒருப்பட்டவ ரல்லரோ   நம்  தமிழ்  வள்லல் !  ஆ !  ஆ !  அவர்  கொடைக் குணத்தை என்னென்று  கூறுவேன் .  உள்ள  பொருளெல்லாம்  புலவர்க்கீந்து  உடன் பிறந்தார்க்கு  அஞ்சிக்  காடுறை காலைத்  “தலை  கொடு வருவார்க்கு  ஆயிரம்  பொன்  தருவேன் “  எனப்  பறைசாற்றிய  தம்பியார்  செயலை  அன்புடையார்  சிலர்  நம்  வள்ளற்  பெருமானுக்கு  மறைவிற்  கூற ,  அது  கேட்ட ஞான்று   அவ் வள்ளலார்  முகம்  மேற்கொண்ட   மலர்ச்சி ,  அரசியல்  முடிசூடத்  தொடங்குங்கால்   மந்தரை  சூழ்ச்சியால்  வனம்  போக்க  முயன்ற  கைகேயியின்  கடுஞ் சொற்  கேட்டு ,  “அப்பொழுதலர்ந்த  செந்தாமரையினை”  வென்ற  இராமபிரான்  முகமலர்ச்சியினும்  விழுமியதன்றே !  இராமபிரானுக்கு  நாடு  நீங்குதலும் , குமண வள்ளலுக்கு  உடல்  நீங்குதலும்  அம் மலர்ச்சிக்குக்   காரணங்களான மை  ஈண்டுக்  கருதற்பாலது .  அவ்வள்ளல்  தன்  மகிழ்ச்சிக்குக்  காரணமாக்  கருதியது , “இறந்த ஞான்று  பெற்ற  தாயும்  பிணமென  வெறுக்கச்  சீயோடு  புழுவும்  மணமும்  சேரும்  இச் சென்னிக்கு  ஓராயிரம்  பொன்  விலை  மதித்தனன்  என்  அருமைத்  தம்பி “   என்பதேயாகும் . இங்ஙனம்  தம்  உயிரையும்  புலவர்  பொருட்டு  வழங்க  ஒருப்பட்ட  வள்ளல்கள்  வாழ்ந்த  காலத்துப்  புலவர்  வறுமை  நெடிது  நில்லா தொழிந்திருக்குமென்பது  கூற  வேண்டா .  புலவர்மாட்டு  வள்ளல்கள்  வைத்த  மதிப்பிற்கோர்  எல்லையில்லை.

        எத்துணை  வறுமை  நேரினும்  மதிப்பிலார்  தரும்  பரிசிலைப்  பெறுதற்கு  அக்காலத்துப் புலவர் ஒருப்படுதலும்  இல்லை .  இதனால் , வறுமை  முதலியவற்றைக்  கருதித்  தம்  தகுதியினின் றும்  இழிதலாகாதென்பதைப்  புலவர்கள்  இன்றியமையாது  போற்றிக்  கோடல் வேண்டுமென்பது  போதரும் , வருந்தியும்  தங்  கடமையைச்  செய்தல் வேண்டும் . கற்றல்  பொருள்  பெறுதற்கன்று;  அறிவைப் பெருக்கி  அதனால்  இன்பம்  நுகர்தற்கேயாம் . புலவர்  கருத்து  இவ்வாறாதல்  வேண்டும்  .புரப்பார்   கருத்துப்  பொருட்கொ டையிற்   செல்லல்  வேண்டும் .  

            புலவர்களைப்  பாதுகாத்து  அவர்  செந்நாவாற்  பாராட்டப் படுதலினும்  செல்வர்  பெறும்  பேறு  வேறு  யாதுளது ? காலத்தாற்  கவரப்பட்ட  செல்வருட்  புகழுடம்பு  கொண்டு  இன்றும் நம்மோடு  அளவளாவி  இன்புறுவார் , புலவர்  பாடும்  புகழ்  படைத்தாரன்றே ! கற்றவர்க்கு  ஈத்துவக்கும்  பேறில்லாதார்  ,  செல்வம்  படைத்தும்  ஒளியும்  புகழும்  இலராய்,  விலங்கோடு  ஒப்ப  உண்டு  களித்துத்  துஞ்சும்  இயல்பினரேயாவர் .  ஆதலாற்  செல்வர்களே  !  புலவரைப்   போற்றுதல்  நும்மைப்  போற்றுதலாகும் . ஆதலின் , தமிழ்  நலம்  கருதி  இன்னோரன்ன துறையில்  இறங்குமின்கள் . செல்வம்  படைத்த  ஞான்றே  புலவர்  பக்கலிருக்க  விழைமின்கள் !  பற்பலவாற்றானுஞ்  செலவழிக்கப்படும்  நும்பொருட்  கூறுகள் ஒன்று  புலவர்க்கெனச்  செய்மின்கள் !  அவிச்சுவையினும்  இனிய  கவிச்சுவையை   நுகர்மின்கள் !  நும்  பூதவுடல்  வன்மையுற்றி ருக்கும்   ஞான்றே  புகழுடலின்  ஆக்கத்திற்கு  வேண்டுவன  புரிமின் கள்!  அழிதன்  மாலையதாகிய  செல்வத்தைக்  கொண்டு  அழியாப்  புகழை   வளர்த்தற்குரிய   நெறியைப்  பற்றுமின்கள்  !  புகழொன்றோ ,  வலவனேவா  வானவூர்தி   யெய்துதலாகிய   பண்ணியப்  பயனும்  நுங்கட்காம் .

“அர்ச்சனை  பாட்டேயாகு  மாதலால்  மண்மேல்  நம்மைச் 

 சொற்றமிழ்  பாடுகென்றார்  தூமறை   பாடும்  வாயார் “

என்று  அருண்மொழி  தேவரும் ,

“தித்திக்கு  மணிவார்த்தை  இன்னுஞ்  சின்னாள் 

 திருச்செவியில்  அருந்தவும்” 

என்று  பரஞ்சோதி  முனிவரும்  கூறியாங்கு , மறை  பாடும்  பெரும்  புலமையும்  ,  பொன்மலை  வெள்ளி மலை களாகிய  பெரும் பொருளும் , வாய்க்கப்பெற்று   எல்லாவுயிர்க்கும்  உயிராக  விளங்கும்  பரமபதியாகிய  இறைவரே    சுந்தரமூர்த்தி  நாயனார்  மாணிக்கவாசகர்   முதலிய  அருட்புலவர்   திருப்பாடல்களைக்  கேட்க  விழைந்தன ரென்றால்  அவரால்  இயக்கமுறும்  நாம்  புலவர் பாட்டில்  அவாவுறாதிருத்தல்  எங்கனம்  அமையும் ?  

  •  சங்கங்கள் , கல்லூரிகள்  முதலியன

         இனி , இக்காலத்துத்  தமிழ்  புரப்பான்  எழுந்த  சங்கங்கள்  கல்லூரிகளைப்  பற்றிச்  சிறிது  கூறுவேன் . தமிழ்  வளர்த்தலையே  பெரு நோக்கமாகக்  கொண்டு  எழுந்த  சங்கங்கள்  பலவற்றுள்   மதுரைத்  தமிழ்ச்  சங்கமும், இக்கரந்தைத்  தமிழ்ச் சங்கமும்  ,  எம்  நகரங்களிலும்   பிறவூர்களிலுந்  தோன்றிய  சங்கங்கள் பலவற்றுட்  சிலவுமே   இயன்றவரை தம்  கடமையைப்  புரிந்து வருகின்றன . இற்றைக்கு  இருபத்து மூன்று  ஆண்டுகளுக்கு  முன்னர்   ஓர்  உத்தமரின்  தூய  எண்ணத்தில்  அரும்பி   அதன்  பயனாக  இதுகாறும்  செவ்வி  குலையாது  பாதுகாக்குந்  துணைவரைப்  பெற்று  விளங்கும்   மதுரைத்  தமிழ்ச்  சங்கம் , மாணாக்கர்  பலருக்கு  உணவு  கொடுத்துத்  தமிழ்  கற்பித்து , தேர்ச்சி  பெற்றோர்க்குத்  தகுதிப்  பத்திரமும்   ஓரளவு  பொற்  பரிசும்  உதவி , தனித்  தமிழ்க் கல்விக்கு  வரம்பிட்டு  வளர்ந்து  வரும்  செய்தி  பாராட்டத்தக்கதே . இன்னும்  அது  தன் நோக்கங்களெல்லாவற்றையும்   முற்ற  நிறைவேற்றுவதற்குப்   பொருளாளர்  உதவியை  வேண்டி  நிற்கின்றது .   

            இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின்  நிலையை  இறுதியிற்  கூறுவேன் .

            எம்மனோர்  நரங்களில்   முளைத்த  சங்கங்களிற்  பல,  சில  ஆண்டுகளாகக்  கண்  விழிப்பதும்  உறங்குவதுமாகக்  காலத்தைக்  கழிக்கின்றன .  பொருட்குறை  நேராதோயென்று  நீங்கள்  நினைக் கக்கூடும் . அன்பில்  வழிப்  பொருளிருந்தும்  அது  நற்காரியத்தில்  எங்ஙனம்  பொருந்தும் ?  எம்  தனவைசியர்  கணக்கற்ற  பொருளைப்  பல்யாண்டுகளாக  இவ்விந்திய   தேயத்திலுள்ள  சைவ  வைணவ  ஆலயங்களுக்குச்  செலவிட்டிருக்கின்றனர்  .  தெய்வ  பக்தியை  மக்களுக்கு  உண்டாக்குதற்கு  இவ்வறங்கள்  பயன்படு வன வெனினும் , அதற்கு  இன்றியமையாச்  சாதனமாகிய  கல்வியையன்றோ  முதன்மையாக  வைத்துப் போற்றல்  வேண்டும் . சில  ஆண்டுகளுக்கு  முன்வரை  வடமொழி  வேத  பாடசாலை களுக்கும் , வடமொழிக் கல்லூரிகளுக்கும்  பெருஞ்  சோற்றில்லங் களுக்கும்  பொருளை  வாரி  இறைத்து  வந்தனர் .  சின்னாளாக ஆங்கிலக்  கல்லூரிகளுக்கும்  வழங்கத்  தலைப்பட்டு  வருகின்றனர்.  இவ்விரு  திறத்திலும்  செலவிடப்பட்ட  பொருட் கூறுகளில்  ஒரு  சிறு  பகுதியேனுங்  கொண்டு  நம்  அருமைச் செந்தமிழ்த்  தெய்வத்திற்குத்  திருக்கொயில்  அமைத்திலர் . தமிழ்த் தெய்வத்தை வழிபடும்  மாணாக்கர்களுக்குப்  பெருஞ்  சோற்றில் லங்கள்  அமைத்திலர் . இக்குறையை  எடுத்து  அன்பர்கள்  பலர்  அடுத்தடுத்துக்  கூறி  வந்ததன்  பயனாக  இப்பொழுது  எம்மவர்  நகரங்கள்  சிலவற்றில்  தமிழ்த் தெய்வத்  திருக் கோயில்கள்  அமைத்து , தமிழ்ப்பிளைகளுக்கு  ஓர்  அளவு  கல்வி  கற்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர் .  அக்கல்வியும்  உயர்தர  நிலையில்  இன்னும்  பயிற்றப்படவில்லை .  

                 பல்யாண்டுகளாக  வடமொழி  வேத  சாத்திர  பாடசாலை களுக்குப்  பொருள்  செலவழித்த  முறையில்  தமிழ் மொழி வளர்ச்சி குறித்துச் செலவிடாமைக்குக்  காரணம்  இதன்  பெருமையை  அவர்களுக்கு  எடுத்துச் சொல்லுவா ரில்லாமையும் , , யாரேனும்  தமிழ்ச் சுவையுணர்ந்தார்  சொல்ல  விரும்பின்  அவர்  சொல்  மதிக்கப்படுதல்   இல்லாமையும் , வடமொழியாளர்  செல்வாக்கு  இவர்களிடை  மிகுதிப்பட் டிருந்தமையுமேயாம் .  வடமொழியாளர்  தம்  மொழியைப்  பேணுதற் பொருட்டுச்  செல்வரைத்  தூண்ட  முயல்வது  அவர்  கடமையே .  அது  பற்றித்  தமிழரைப்  புறக்கணித்  தொதுக்கும்படி  அவர்கள் உபதேசிக்கவில்லை .  நாம்  நம் தாயை  மறந்திருப்போமாயின்   நமக்கு   நினைவுறுத்துவார்   யாரே ?  

               எம்  மரபினர்  புதிய   முறையில்  எவ்வறத்தையும்  முதற்கண்  தொடங்குதல்  அரிது  .  அறிவாளரொருவர்  தொடங்கு வாராயின் , அவர்  முறையைப்  பின்பற்றி  மற்றையோரும்  அந்  நற்காரியத்திற்  சேறலிற்  பெரிதும்  விரைவு  மேற்கொள்வர் .  இந்  நற்குணம்  ஒன்று  வருங்காலத்தில்   நலமளிக்கும்  தகையது . இதற்கு  எம்மவருள்  ஒருவர்  தக்கவாறு  வழிகாட்டியுள்ளார் . அவர்கள்  ஸ்ரீ நடராசர்  திருவருட்பாங்கால்   கானாடுகாத்தானிலே  எம்  தனவைசிய  மரபிலே , சிறந்த சிவஞானச் செல்வராகவும்  அருட் கவியாகவும் , விளங்கிய  பட்டினத்து  அடிகளைக்  குல முதல்வராகக் கொண்ட   செல்வப்பெருங்குடியிலே   தோன்றிய  திருவாளர்  சர்  சா  ராம  மு  அண்ணாமலைச் செட்டியாரவர்களே  ஆவர் . இவர்கள்  சிதம்பர  தலத்தில் ஆங்கில  வடமொழிகளுக்கு  அமைந்த  பெரிய   கல்லூரிகளை  யொப்பத்  தமிழ் மொழிக்கும்  ஸ்ரீ  மீனாட்சி திருப்பெயரால்  ஒரு  கல்லூரியமைத்துப்  பாதுகாத்து வருகின்றார்கள் . இது  தொடக்கம்  ஸ்ரீ நடராசர்  திருமுன்  நேர்ந்தமையால் , இனி  நம்  தமிழ்நாடு  முழுவதும் இம்முறை  மேற்கொள்ளப்படுதற்கு  இது  நன்னிமித்த  மாகுமென்பதி  ஐயமின்று . இவர்கள்  முறையைத்  தழுவி  மற்றையோரும்  தமிழ்  நாட்டிலுள்ள  ஒவ்வொரு  பெரிய  நகரங்களிலும்   நூற்றுக்கணக் கான  மாணவர்களுக்கு  உண்டி  உடை  முதலிய  உதவிகளைச்  செய்து தமிழ்  கற்பிக்கத்  தலைப்படுவாராயின் , இந் நாடு  சில  ஆண்டுகளில்  கல்விச் செல்வர்கள்  பலரைப்   பெற்றுத்  திகழ்வதாகும் .  

               தமிழ்  கற்க  விரும்பும்  நம்  நாட்டு  ஏழைச்  சிறார்க்கு   உணவு  கொடுத்தாலன்றி  அவர்கள்  கல்வியில்  தலைப்படார் . பசிப்பிணி யென்னும்  பாவியாற்  பற்றப்பட்டார்  கல்விச்சுவையை மிசைய  எங்ஙனம்  விரும்புவார் ?  மாணவர்களுக்கு  உணவு  கொடுத்துக்  கற்பிக்கும் கல்லூரி  யமைத்தலாகிய  நல்லறம்  புரிவார் ,  உலகத்து  மக்கள்  உடல்  நலத்திற்   குரியதும் உயிர்  நலத்திற்குரியதுமாகிய  இருவகைப்  புண்ணியங்களையும்  ஒருங்கு  செய்தவராவர்  . ஓரிடத்தில் ஒரு  நூறு  சிறுவர்க்கு  உணவு  கொடுத்துக்  கற்பிக்கும்  தனித் தமிழ்க் கல்லூரி இதுகாறும்  நம்  நாட்டில்  அமைந்திலதே !  இத்தகைய  நிலையம்  ஒன்றைக்கண்டு  கண்ணுங்  கருத்தும்  குளிருங்   காலம்  என்று  வாய்க்குமோ !  வேண்டுவார்  வேண்டுவன  அருளும்  இறைவன்  நும்  செவ்விய  உள்ளத்தில்  நின்று  இவ்வரும் பெருஞ்   செயலில்  நும்மை  ஊக்கி  அருளுவாராக .  

  • சமயக்  கல்வி

    நம்  செந்தமிழ்  மொழியைச்  செவ்விதிற்  பயிற்றுங் கல்லூரிகளி  லெல்லாம்  பிற  சமயங்களோடு  முரணாமல்   நம்  சமயக்  கொள்கைகளை   மாணாக்கர்களுக்கு   எளிதிற்  புலனாகும்  வண்ணங்  கற்பித்தல்  வேண்டும் . தெய்வமணங்  கமழாத  கல்வி  சிறந்த  பயனுடையதாகாது . “கற்றறியேன்  கலை  ஞானம்  கசிந்துருகே  னாயிடினும்”  என்ற  பெரியார்  திருமொழியும்  கல்வியின்  பயன்  கடவுளை  அறிந்து  நினைந்து வழிபடச் செய்தலேயாம்   என்று  அறிவுறுக்கும் .  கடவுளியல்  முதலியனவும், வழிபடுமுறை  முதலியனவும்  சமய  நூல்களைப்  பயின்றா லொழியத்   தெரியா . எல்லாம்  வல்ல  இறைவன் , “கற்றவர்  விழுங்குங் கற்பகக்கனி”  யாதலின் , அக்   கனியின்  இயல்பு  அறிதற்குரிய  வழியைக்  கல்வியின்  தொடக்கம்  முதல்  மேற்கோடலே  நன்றாம் . இக்குறிப்பை  நம்  தமிழ்  மூதாட்டியாகிய  ஒளவையார்  சிற்றுருவிற்  பெரும்பொருள்  பொதுள  அருளிய  ஆத்திசூடி , கொன்றைவேய்ந்தோன்  முதலிய  நூல்கள்  நன்கு  வலியுறுத்துவனவாம் .  மக்கட்குரிய  பொது  வொழுக்கங்களையும்  சமயம்  பற்றிய  சிறப்பொழுக்கங்களையும் ஒருவன்  ஒருங்கு  எய்துதற்குரிய  வழி  சமய நூற்  பயிற்சியானேயாம் . ஆதலின் , நம்  சிறார்  பயிலுதற்குரிய   பாடங்களுள்   சமயக்  கொள்கைகளைப்   பற்றிய  பாடமும்  ஒன்றாம்படி  செய்தல்  தமிழ்க்  கல்லூரிகளை  நடாத்தும் தலவர்களால்  மேற்கொள்ளத்தக்கதொன்றாம் .

                            6 .  கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்

      இனி , இக்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தைப்  பற்றிச்  சில  கூற  வேண்டுவது  என்  கடமையாகவுள்ளது .  இச்சங்கம்  இறைவன்  அடிசேர்ந்த  திரு . வே . இராதாகிருட்டிண பிள்ளை  அவர்கள்  நல்லுள்ளத்திற்  பதிந்த  செழுமை  மிக்க  வித்தினின்றுங்  கிளைத்தெழுந்ததாகும் . தூய்மைமிக்க  குளத்தினின்றும்  தோன்றுவது பிற்காலத்தில்  எந் நிலையிற்   செழித்து  வளரும்  என்பதற்கு  இச்சங்கமே  சான்றாகும் . அவர்கள்  பருவுடலை  யான்  அறிவேனாயினும் , அவர்களுக்கு  முன்  தோன்றியவர்களும்  இற்றை ஞான்று   இச்சங்கத்தைக்  கண்ணுங்  கருத்துமாகப்  பாதுகாத்துவருகின்றவர்களும் , என் இனிய நண்பரும்  ஆகிய   திருவாளர்  த . வே . உமாமகேசுவரம்  பிள்ளை  யவர்களின்  உயர்ந்த  குனஞ்  செயல்களே  அவர்க்கு  இளையாரின்  நிலையையும்  இற்றென்று  கிளப்பனவாம் . அவர்  நுண்ணுடம்பை  தம்  அகக்கண்  கண்டு  களிக்கின்றது .  அந் நல்லவ ருள்ளத்திற்  பதிந்து  வெளிப்பட்ட  இக்கல்விக் கழகம்  நாடோறும்  திங்கடோறும்   ஆண்டுதோறும்  புதிய புதிய திருத்தங்களை  மேற்கொண்டு  , பற்பல  அரிய  தமிழ்ப்  பணிகளை  இயற்றி  வருகின்றது .

              இது, ‘பெத்தாச்சி புகழ் நிலையம்’  என்னும்  சுவடி  நிலையம் , கைத்தொழிற்  செந்தமிழ்க் கல்லூரி , திங்கள்  வெளியீடு  முதலியவற்றைத்  தன்  உறுப்புக்களாகக்  கொண்டு  எல்லா  நலன்களும்  ஒருங்கமைந்த தலைவரைப்  பெற்றுத் , தான்  செய்யவேண்டிய  செயல்களைச்   செவ்வன  ஆற்றி  வருகின்றது; நூற்றுக்கணக்கான   மாணவர்களுக்குத்  திருந்திய  முறையிற்  கல்வியை  ஊட்டுகின்றது . இக் கழகத்தினின்றுந்  திங்கள்  வெளியீடாகத்  தோன்றிய  தமிழ்ப்  பொழிலோ   தோன்றிய  சில  திங்களுள்  தமிழன்பர்களின்  உள்ளத்தைக்  குளிர்விக்கும்  உள்ளுறையாந்  தண்ணிய  நிழலையும்  , அரும்பொன்  மணமிக்க   வேற்று மொழி விரவாத்  தண்டமிழ்ச்  சொற்றிரளாம்  நறுமலர்த் துணர்வுகளையும்  உதவித்  தமிழ்  நிலத்தாரை  மிகவும்  இன்புறுத்தி  வருகின்றது . வேற்று மொழிப்  பயிற்சியால்  வெதும்பிய  அன்பர்கள்  இப்பொழிலை  அடைவார்களாயின்  அவ்வெப்பம்  ஒழியப்பெற்றுச்   செந்தமிழ்த்  தட்பத்தால்  இன்புறுதல் ஒருதலை .

              இன்னோரன்ன  அருஞ்  செயல்களை  மேற்கொண்ட  இச்சங்கத்தின்  வேலையோ  மிகப் பெரிது . இதற்குத்  துணைக்  கருவியாகவுள்ள  பொருள்  வருவாயோ  மிகச் சுருக்கம் .  இச்சங்கத்தின்  அருமைத் தலைவராகிய  திருவாளர்  உமா  மகேசுவரம்  பிள்ளையவர்களும் , ஏனைய  அன்பர்களும்  ஆண்டுதோறும் உதவி  வரும்  பொருளைக்  கொண்டே  இஃது  இத்துணை  அரிய  வேலை ஆற்றி வருகின்றது .  இங்ஙனம்  ஆண்டுதோறும்  பலரிடத்தினின்றும்  சிறிது  சிறிதாகத்  தொகுக்கப்படும்  பொருளைக் கொண்டு  இப்பணி  நடைபெறுதல்  ஒரு வகையில் எல்லார்  அன்பிற்கும் இது நிலைக்களனாதலைப்   புலப்படுத்துமாயினும்  , இங்ஙனமே  கடைபோக  இயற்றுதல்  அரிதாகலான்  இதற்குத் தக்க பெரும் பொருள் மூலதனமாகத்  தொகுத்தமைத்தல்  இன்றியமையாததாகும் .

              பண்டைக்காலத்துப்  பெரும்  புலவர்களையெல்லாம்  பொருட் கொடையாலும்  பிறவற்றாலும்  நம்  உயிரினுஞ்  சிறப்பப்  போற்றி  வந்த  சோழ  மன்னர்கள்  வாழ்ந்த  நாடன்றோ  இது . செந்தமிழ்க்  கல்வியைச்  சைவ  சமயத்தோடு  வழங்குதற்கு  எழுந்த  சைவ  மடங்கள்  பல  விளங்கப்  பெறுகின்றதும் இந்  நாடன்றோ!  அம் மடங்கள் பண்டு செய்த தமிழ்ப் பணிகள் அளவில்  லாதனவாகும் .  அம்மடங்களில்  விளங்கிய  சைவ  சீலர்களாகிய   அத்  துறவறச்  செல்வர்களால்  வெளிப்பட்ட  செய்யுணூல்கள்  எத்தனை  !  சிறந்த  உரை  நூல்கள்  எத்தனை ! அவர்பாற்  கசடறப்  பயின்றார்  எத்துணையர் !   அம்மடங்களுக்குத்  தலைவராக  இற்றை  ஞான்றுள்ளார்   தம்முன்னையோர்  போலத்  தாம்  தமிழ்ப்  பரிபாலனத்திற்   றலைப்பட்டு  இன்னோரன்ன  தமிழ்ச்  சங்கங்களுக்கும்  உதவி  புரியலாமே !  அவர்கள்  இதனை  உளங்  கொள்ள அவர்  உளத்துறை  தெய்வத்தை யாம்  வேண்டுதலே  யன்றி  வேறென் செய்யக்  கடவோம்  !  

          மற்றை  நாடுகள்  யானைகளையும்  முத்துக்களையு முடையனவாக , மக்கட்கு  இன்றியமையாச்  சோற்றை  மிகவுடையதன்றோ  இச் சோழ வளநாடு  ?  இச் செல்வ  நாட்டில்  அருமருந்து போல்  தோன்றிய  இச்சங்கத்தை  அடுத்த  மாணவர்க்குச்  சோறிட்டுத்  தமிழ்  கற்பித்தலன்றே  இந் நாட்டின்  பெருமைக்கு  ஏற்றதாகும் .?  இங்குள்ள  பொருளாளர்  மனங் கொள்வாராயின்   இஃது   இயலாததொன்றோ  !  பிற மொழிக்   கல்லூரிகளுக்கு  ஒரு  திங்கட்கு  எத்தனை  ஆயிரமோ  செலவாக , இச் செந்தமிழ்த்  தாயின்  திருக்கோயிலுக்குத்   திங்களொன்றிற்கு  ஓராயிரமேனும்  பயன்படுத்தல்  வேண்டாமா ?  இத்துணை  வருவாயுள்ள  மூலப் பொருள்  தொகுத்தல்  பெருங்  காரியமா ?  

தமிழ்க்கண்  அன்பு  மிக்க  திருவுடையீர் !

நம்  வாழ்நாளிற்  பற்பல  பகுதியாகச்  செலவிடப்படும்  பொருட் கூறுகள் என்று  இதற்கெனத்  தனிப்படுத்துதவ  முன்  வருவீராயின்  , இது  நிறைவேறுவதற்கு  எத்துணை  நாட்  செல்லும் ? ஆ !  எம்  நகரத்து வைசியச்  செல்வருள்ஒருவர்  மனங்கொள்வாராயின்  அவருதவியே  இதற்குக்  கண்டு  மிகுவதாமே  !  தமிழ்ச்சுவைக்கு   அவாவுற்றுச்   சுந்தரர்  மாணிக்கவாசகர்  முதலிய  அருட்பெருங்கவிகளை  இரந்த  சிவபிரானுக்குத்  திருக்கோயில்  புதுக்க  எம்மவருள்  ஒரு  குடும்பத்தார்  தனிமையிற்   பதினைந்து   நூராயிரங்களுக்குமேற்   செலவிட்டிருக்கின்றனரே  !  அத்தகையார்  அப்பெருமானுக்கு  இன்சுவை  யமுதாவது  இத்தமிழென  உணர்வரேல்  இதற்கு  ஒரு  நூராயிரம் உதவல்  பெரிதாகுமோ ?

               இச் சோழவளநாட்டில்  அளவிறந்த  நிலப் பகுதிகளையு டைய   பெருஞ் செல்வர்கள் பலர்  இருக்கின்றனரே ! வேற்று  நெறியிற்  கணக்கிறந்த  பொருள்களை  வாரியிறைக்க  மனம்  ஒருப்படும்  அவர்கள்  இன்னோரன்ன  தமிழ்ச்சங்க  வளர்ச்சிக்கு  உதவி , கிடைத்தற்கரிய  புகழையும்  புண்ணியத்தையும்  கைப்பற்ற   இதுகாறுந்  தாழ்ந்திருந்த லென்னையோ !  தினைத்  துணை  நன்றியையும்  பனைத்துணையாக  ஏற்றுக்கொண்டு  பாராட்டும்  இச்சங்கத்தின்  பயின்றரு குணத்தை  யுணர்ந்த  நீவிர் . இதற்குப்  பனைத்துணை  உதவுவீராயின்  இது  கூறும்  புகழுரை  யெல்லாம்  நும்  மேலாவாமல்லவா !   இந் நாட்டுச்  செல்வர்களாகிய  நும்மனோர்  உள்ளங்களும் எம்  தனவைசியப்  புண்ணிய  சீலர்கள்  உள்ளங்களும்  இச்சங்க  வளர்ச்சியில்  ஒன்றுபட்டுப்  பொருளுதவி  புரிந்து  மகிழப்  பெருங்கருணைத்  தடங்கடலாகிய  இறைவன்  திருவருள்  பாலிப்பாராக ! 

                                         7 .  தொகுப்பும்  வாழ்த்தும்

ஐயன்மீர் !

                    இதுகாறுங்  கூறியவற்றால்  கல்வி  மக்களுக்கு  இன்றி யமையாத  தென்பதூஉம் ,  அதனைத்  தாய்மொழி யாகிய  தமிழ்  மூலம்  பயிலல்  வேண்டுமென்பதூஉம் , தமிழின்  தொன்மையும்  சிறப்புக்களும்  தொல்காப்பிய  முதலிய  இலக்கண  நூல்களானும்  பலவகை  இலக்கிய நூல்களானும்  சமய  நூல்களானும்  விளங்குமென்பதூஉம் , தமிழ்  பிறிதொன்றினின்றும்  தோன்றாத்  தனி மொழியென்பதூஉம் ,  இதன் கணுள்ள   அகப்பொருள்  முறை  வனப்புக்கள்  சிறந்தனவென்பதூஉம், இஃது  அறிவு மொழி யென்பதூஉம் , போலி முறைகளைக்  களைந்து  இதனை  வளர்க்க  வேண்டுமென்பதூஉம் ,  வளர்த்தற்குரிய  வழிகள்  மொழி பெயர்ப்பு, ஆராய்ச்சி , செய்யுணூல் , உரைநூல் , வரைதல்  முதலியன  வென்பதூஉம் ,  அத் துரைகளில்  தலைப்படும்  புலவர்களை   பொருட்பரிசல்   பட்டங்கள்  அளித்துப்  போற்றுதல்  வேண்டுமென்பதூஉம் ,  பண்டைப் புலவர்களின்  இயல்பும்  அவர்களைப்  பாதுகாத்த  வள்ளல்களின்  இயல்பும்  இன்ன வென்பதூஉம் ,  புலவராற்  பாராட்டப்படுதல்  செல்வர்க்கு  இன்றியமையாத  தென்பதூஉம் , இக்காலத்துத்  தமிழ்  வளர்ப்பான் எழுந்த  சங்கங்களின்  இயல்பு  இன்னவென்பதூஉம் ,  பெரிய  தனித்  தமிழ்க்  கல்லூரிகள்  அமைத்து   பன்னூறு மாணவர்க்கு   உணவளித்துத்  தமிழ்  பயிற்றல்  வேண்டுமென்பதூஉம் ,  தமிழ்ப்  பலகளைக் கழகம்   ஒன்று  விரைவில்   நிலைபெறச்  செய்தல்  வேண்டுமென்பதூம் ., தமிழ்ப்  பள்ளிகளில்  மொழிப்  பயிற்சியோடு  சமய  நூற்பயிற்சியும்  மாணவர்க்கு  வேண்டுமென்பதூஉம் , இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின் மேம்பாடும்  இதற்கு  வேண்டுவனவும்  இன்னவென்பதூஉம் , தமிழ்  நாட்டுச்  செல்வர்கள்  தமிழ்  வளர்ச்சியிற்  பேரூக்கமுடையராய்   தக்கவாறு  பொருளுதவி  புரிந்து  போற்ற  வேண்டுமென்பதூஉம் ,  திருவருள்  முன்னிற்க  வென்பதூஉம் , பிறவுமாம் .

            இத்துணைக்காலம்  என்  சிற்றுரைக்குச்  செவிசாய்த்துப்  பொறுமை யணியை மேற்கொண்டு  விளங்கும்  பெரியீராகிய  நுங்கள்  நன்றியை  நினைவுட்  கொண்டு ,என்  உளமார்ந்த  வணக்கத்தை  நுமக்கு  உரிமைப்படுத்துகின்றேன் .

போற்றுந்  தமிழும்  புலவரும்  வாழ்கநலஞ் 

சாற்றுங்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்  —  ஏற்றமொடு

பல்லாண்டு  வாழ்க   அருல்  பாலித்  ததுபுரக்கும்

எல்லோரும்  வாழ்க  இனிது .

                                    &&&&&&&&&&&&&&&&&&&

                            2 .  தமிழ்ப்   புலமை

( துரையூரில்  ( 06 . 08 . 1932 ) கூடிய  திருச்சிராப்பள்ளி —  தஞ்சை மாகாணத்  தமிழ்ப்  புலவர்  மாநாட்டில்  நிகழ்த்திய  திறப்புரை )

ன்பர்களே ! 

                         இங்குத்  திறந்து  வைக்கப்  பெறுவது  தமிழ்ப்  புலவர்  மாநாடாகும் . நம்  அமிழ்தினுமினிய  தமிழ்  மொழி  பண்டைக்  காலத்தில்  இற்றை  ஞான்றினும்  எத்தணையோ  பன்மடங்கு  அகன்ற  நிலப்  பரப்பைத்  தனக்குரியதாகக்  கொண்டு  விளங்கிய தென்பதும் , குமரியொடு  வடவிமயத்தொருமொழி  வைத்துல காண்ட   சேரலாதனால் , குமரிமுனை  தொட்டு  இமயமலை வரையும்  இறை மொழியாக  வழங்கப்  பெற்ற  தென்பதும் , தொன்மையில்  தனக்கு  நிகராக  ,  இக்காலத்து  வழங்கும்  மொழிகளில்  மிகச் சிலவன்றி  இல்லை  யெனத்தக்க  நிலையில்  உள்ளதென்பதும்   நீவிர்  நன்றுணர்வீர்கள் .  ஆதலின் , இவை  பற்றி  யான்  விரித்தல்  வேண்டா  வென  நினைக்கிறேன் .

    செப்பமிக்க  இயலமைப்பும்   அவ்விலக்கணங்களுள்   வேறு  எம் மொழிக்கும்  இல்லாது தனக்கெனச்  சிறப்பு முறையின்  அமைந்த  பொருளிலக்கண  ஒழுங்கும்  , முதிர்நலச் சொற்களும் சிதைவில்  நுண் பொருள்களும்  தங்கி  நின்றொளிருஞ்   சங்க  நூற்றொகையும்  புன்னுனிப்  பனியல்  மன்னுமா  மலையுருத்  துன்னிநின்  றொளிர்தரல்  போலச்   சிற்றளவினவான  சொற்றொடர்களிற்  சிறந்தமைந்தனவாகிய  பெரும்  பொருள்கள்  தோன்றித் திகழும்  அறமுத  னுதலிய  திறமை  நூல்களும், அன்பினைத்  திணை  அகவொழுக்க  நேர்மையும் , தொடர்நிலைச்  செய்யுட்  சுவைநலக்  கனிவும் , குறிக்கோள் பற்றிய  அறிவியல்  நூல்களின்  திட்ப நுட்ப  அமைவும் , காதல்  மிக்கு  ஒதுவார்  கேட்பாரது  கல்லினும்  வலிய  உள்ள  நிலையையுங்  கரைத்து அவர்தமை  அன்புருவாக்கி   இறை  திருவருட்கு  இனிதின்  ஆளாக்கும்  இசை  நலந்  தழீஇய  அருட்  பாசுரப்  பகுதிகளும் , இன்னும்  பற்பல  துறைகளைப்  பற்றி  நின்று  திகழும்  நூற்றொகைகளும்   தன்பான்  மிளிர , இனிமையாங்  குணத்தை  இயைந்து  தட்பம்  தகவும்  ஒட்பமும்  ஒருங்கமையப்  பெற்ற , எல்லாம்  வல்ல  இறைநிலை  போல் என்றும்  நின்று  நிலவுவது  தென்றமிழ் மொழியே  ஆகும் . இத்தகைய  தனித்த  நந்தமிழின்  சால்பினைப்  பற்றிப்  பெரியோர்  பற்பலரும்  அவ்வப் போது  பல  கல்விக்  கழகங்களிற்  பேசியும்   எழுதியும்  வெளியிட்டுள்ளனர்  .  ஆதலின் , அதனையே  யானும்  ஈண்டு  விரித்துக் கூற  முற்படுதல்  வேண்டாதொன்றென  அமைகின்றேன் .  

  •  புலமையின்  குறிக்கோள்

          இனிப்  புலமையாவது  யாதென  ஆராய்தல்  இன்றி  யமையாத தாகும் .  ஒரு  நூலை  ஆசிரியர்  முகமாகக்  கற்ற அளவினானும் , இயன்முறை  தெரிக்கும்  நூற்பாக்களையும்  எடுத்துக்காட்டாஞ்  செய்யுட் பகுதிகளையும்  சொற்பொருள்  அறிந்து கொள்ளும்  அவ்வளவினானும்  புலமை நிரம்புவ தன்று . இவ்வெல்லாம்  , சிறந்த  புலமையின்  உறுப்புக்களாமன்றி  உறுப்பியாகா .  ஒன்றனை  ஊன்றிப்  படிக்குங்கால்   படிக்கப்படுஞ்  சொற்  குழுவின்றி உணரப்படும்   பொருட்கண்  உள்ளம்  உறைத்து  நிற்ப ,  சார்ந்ததன்  வண்ணமாந்  தன்மைத்தாகிய  உயிர்  , அவ்விழுமிய  பொருட்கண்  பிரிப்பின்றிக்  கலந்து  அப்பொருட்  பயனை  நுகர்தலும் ,  நுகர்ச்சிக்குப்  பின் வெளியுலகத்து  மீண்டு  நினைவு  கூர்தலும் , தீர்ந்த  உண்மைகளைக்  கடைப்பிடித்துத்  தம்  குறிக்கோளாக  ஒழுக்கியலின்  மேற்கோடலும்  மேற்காட்டிய  உறுப்புக்களோடியையுமாயின் , ஒருவாறு  புலமை  நிரம்பியதாகக்  கொள்ளலாம் .  புலமையின்   குறிக்கோள்  உலகியற் பொருள்  அளவின்  இருப்பின்  அது  சிறுமையெய்தி  மாசுடையதாகும் . அறிவை, ஒளி வலியுடைய  தாக்கி   அகலமுறச் செய்து அவ்வகன்ற   ஒளி விளக்கத்தின்  கண்ணே  முன்னர்க்  காணப்படாதனவும்  உலப்பிலா  இன்ப  விளைவிற்கேற்றன வுமாகிய  அரிய  பல  நுண்பொருளை  அகக்  கண்ணாற்  கண்டு  இன்புறுதலாகிய  வாழ்க்கையே  புலமை  வாழ்க்கை  ஆகும் .

            ஓரளவுட்பட்ட   சில  பல  நூல்களை  வினவுவார்  கருத்துக்கியைய  விடையிறுக்கு  முகமாகக்  கற்றுத்  தகுதிச்  சீட்டுப் பெரும்  அவ்வளவில் , புலமை  தன்  நிறைவை  யெய்தியதாக  எண்ணி  விடலாகாது .  பயிலுந்தோறும்  பயிலுந்தோறும்   பண்புடையாளர்  தொடர்பு  எங்ஙனம்  இனிமை  சான்று  பயன்  விளைக்குமோ , அங்ஙனமே  மீண்டும்  மீண்டும்  கற்குந்தோறும் கற்குந்தோறும்   உயரிய நூல்களின்  நுண்பொருள்  நலங்கள்   நம்  உள்ளத்தை  ஈர்த்துத்  தம்பாற்படுத்துப்  பேரின்புறுத்துவனவாம் . மிக  விரைந்தோடும்  வெள்ளப்  பெருக்கினை யுடைய  ஆற்றின்  நீர்ச் செல வாற்றலை ஒருவன்  அளக்க  நினைக்கின், அதன்கண்   அவன்  எதிரேறிச்  செல்ல  வேண்டுவதே  இன்றியமையாததாகும். அவ்வாறின்றி  அந்நீர்ச்  செலவோடியைந்து  அதனான்  ஈர்த்துச்  செல்லப்படுவானாயின்   அவ் வாற்றலின்   நிலை  இயற்றென  உணரகில்லான் . அங்ஙனமே  உயர்நிலைப்  பாவலர்  மயர்வற  ஆகிய  விழுப்பொருள்  நிறைந்த  செய்யுட்களின்  சொற்பொருளொழுக்கில் , நும்  நுண்ணறிவு  எதிரேறிச்  செல்லல் வேண்டும் . அங்ஙனஞ்  சென்று  அச் சொற் பொருள்களின்  வன்மை  வனப்புக்களை   ஆராய்ந்தளக்க  முயலின் , அச் செய்யுலாசிரியன்  ஆழ்ந்து  நினைவிற்  கண்டு  வைத்த  அரும்  பொருண்  மணிகளின்  இயலொளியை  உண்மையாகக்  கண்டு  இன்புறலாம் .  ஆராய்ந்து  தெளிவதற்கு  முன்   அச்சொற்  பொருள்  களோடு  எதிர்த்து  நிற்றலே  நன்றாம் .  

                 பொருணலத்  தெளிவின்  பின்  அச்  சொற்பொருள்  களோடு  நம்  அறிவை  இரண்டறக்  கலப்பித்து , அவற்றின்  வண்ணமாக  நின்று அசைவுறும்  நிலையெய்தி , இன்ப  வெள்ளத்துள்  திளைத்தல்  வேண்டும் . ஒரு  சிறந்த  நூலாசிரியன்  குறிக்கோள்  இன்னதெனத்  துணிந்தாலன்றி   அவன்  பலவாறு  பன்னிப்  பன்னி  உரைக்கும்  உரைப்பொருளின்  உண்மைக் கருத்து  அறியப்பட்டதாகாது .  சிறந்ததொரு  முடிபொருளைச்  செப்பனிட்டுத்  திறம்பட  உரைக்க  முற்படும்  புலவன்  , பருந்தின்  வீழ்ச்சி  போற்  சேய்மையினின்றே   முடிபொருட்குரிய  சார்வுப்  பொருள்களில்  மெல்ல  மெல்லத்  தலைப்பட்டுச்  செல்லுவன் . அச்செலவின்  நிலையை  அந் நெறி  நின்றே  உய்த்துணர்தல்  வேண்டும் .செல்வழிக்கட்  கண்டனவே   தீர்ந்த  பொருளென  எண்ணி  விடலாகாது . நூலுரையாசிரியர்களின்  கருத்துப்  படர்ச்சியில்  நம்  அறிவுத்  தொடர்ச்சி  பின்னிடுதல்  நன்றன்று  .  அயரா உழைப்பிற்கு  அகப்படாத  அரும்பொருள்  யாதுமின்று  . தொடர்  நிலைச்  செய்யுட்கலின்  உயிரனைய  சுவை நலம்  விராய  குறிப்புப்பொருளை   உனர்த்தலின்  நம்  அவா  முற்பட வேண்டும் . சுவை   நலங்  கலந்த  அத் தொனிப்  பொருள்  தங்குதற்குரிய  இனிமையாப்  பாடல்கள்  உயிரற்ற  வெற்றுடல்  போல்வனவாம் . வெற்றுடலை  அணிகலன்  புனைந்து காண்டல்  பின்னர்க்  காணலாகாத  இறுதிக்  காட்சியாக  முடியுமென்பது  அறிந்ததொன்றே ;  அங்ஙனமே  சுவைநலமளைந்த  தொனிப்பொருள்  விரவாப்  பாடல்களை  அணிநலனளவிற்  காண்டல் , மீண்டுங்  காண  வேண்டும்  என்ற  விழைவற்ற  நிலையில்  நிகழ்வதொன்றாகும் .  

              மதிவலி  மிக்க  முது  புலவனிடத்தினின்றுந் தோன்றிய  பாடல்  நங்கைக்கு  திட்ப  நுட்பம் , தெளிவு ,விளக்கம் , இனிமை  முதலிய  பண்புகளமைந்த  சொற்பொருட்குழுவே  அழகிய  உடலும் , சுவை   நலந் துறுமும்  தொனிப்  பொருளே  உயிருமாம் . இந்  நங்கைக்கு   உவமை  முதலிய  அணிகளே  அணிகலங்களாம் . அழகுக்கு  அழகு  செய்தல்  போல  வணிகள்  சேர்க்கப்படினும்  இப்பாடன்  மெல்லியற் பாவை  நல்லாளின்  இயற்கை  வனப்பு  மிக்க  நல்லுடலைச்  சார்ந்து  உவமை  முதலிய  அணிகளே  சிறந்த  அழகு  பெற்றுத்  திகழ்வனவாம் .   

             இங்ஙனம்  இயற்கை  நலம்  மிக்குச்  செயற்கை  நலனையுமேற்றுத்  திகழும்  இத்தகைய  பாடல்  நங்கையைக்  கூடி  நுகர்தற்குரிய  இளநலஞ்  சான்ற  மணமகனியல்பை  இயம்பவும்  வேண்டுங்கொல் !  அன்னான்  இலக்கிய  நூலறிவானும்  மதிநுட்பத்தானுஞ்  சிறந்து  மலர்ந்து  மணப்பருவம்  வாய்க்கப் பெற்று, கட்டழகு  வாய்ந்த  பாடல்  நங்கையைக்  காண்டலில்  காதல்  மிக்குடையனாய்  அப்பேறு  குறித்துத்  தவம்  புரிந்த  தனிப்பெருஞ்  செல்வதானல்  வேண்டும் . வேட்கை முயற்சியும்  தவப்பயனும்  ஆகூழ்  வலியும்  ஒருங்கு  கைவரப்  பெற்றாலான்றி , அப்பாடல்  நங்கையின்  பரிசுணர்தல்  அரிதாகும் .  

          இன்ன  பாடல்  நங்கையைப்  பண்புடன்  வேட்ட  காதற்  கொழுநனாங்  கலைவல  மணமகன்  ,  அந்நங்கை  நலனெலாம்  நன்னர்  நுகர்ந்து  புல  நிரம்பின்பம்   பொருந்திய  வாழ்க்கை யிற்றலைப்   படுங்கால்  அவ்விருவர்தம்  இரண்டற்ற  தன்மையி னெழுந்த  இன்ப  நிலையே  உருவெடுத்தாங்கு  மழ  விளம்பாடற்  குழவிகள்  தோன்றும்  இந்  நன்மக்கட்  பேற்றினையுடைய  நன்புல  இல்லற  வாழ்க்கையிற்  றலைப்பட்டு  நிரம்பினோரே  உண்மைப்  புலவராவார் .

          கண்  முதலிய  அறிவுக்  கருவிகளாற்   காண்டற்கியலாத  நுண்பொருள்களை  யெல்லாம்  நுண்மாணுழைபுலமாகிய  உட்கருவியாற்  செய்யுளுலகத்திற்  கண்டு  இன்புறுதல்  கூடும் . அவ்வளவின்  அமையாது  , அவ்வுட்புறக் கருவிகளுக்கும்  எட்டாது  அப்பாற்பட்ட  திருவருளாற்றலினது  சீரிய   நிலையின்  ஒரு  சிறு  கூற்றினை  யாதல்  செவ்விய  புலமை  முயற்சியின்  பயனாகிய  மெய்யுணர்விற்  கண்டு  இன்புறுதற்கு  முயல வேண்டும் . அவ்வின்பப் பேறொன்றே   நம்  புலமை  வாழ்க்கையில்  அரிதின்  முயன்று  அடைதற்பாலதாகிய  முடிந்த  பயனாகும் . முதற்கண்  மனமொழி  முதலிய  உட்புறக்கருவிகள்   செந்நிலையுறுதற் கமைந்த   விழுமிய  நூலறிவு , முடிவில்  திருவருள்  நிலையின்   தெளிவு  கைவரப்  பெறுதற்குரிய  சிறந்த  கருவியாகிய   மெய்யுணர்வைப்  பயந்து நிற்கும் . அம்மெய்யுணர்வொன்றே  தன்  பயனாகிய  உயர்வொப்பில்லாப்  பேரின்பத்தை   விளைவிப்பதாகும் .  

          உலக  வாழ்க்கை  போலப்  புலமை  வாழ்க்கையும் , இல் நிலை  , துறவு  நிலை  என  இருதிறப்பட்டு  நிகழுமாறும்  இக்குறிப்புக்களான்  உணரலாம் . கல்வியே  கற்புடை  மனைவியாகவும் ,  செல்வப் புதல்வரே  செழும்  பாடலாகவும்  , கற்றதுணர  விரித்துரைத்தலாகிய   சொல்வளனே  இந் நிலைக்கு  வேண்டிய  பொன்னிலையாகவுங்  கொண்டு இல்லறப்  புலமை  வாழ்க்கையைச்  செவ்வன்  நடாத்திய  செம்புலச்  செல்வனொருவன் , முடிவில்  மெய்யுணர்வு  கைவரப்  பெற்று  , அது  வாயிலாகத்   திருவருள்  நிலையை யுணர்ந்து , அவ்வருள்  நிலை  இன்பத்தில்  திளைப்பின் ,  அந்  நிலையே  துறவறப்  புலமை  வாழ்க்கையாகும் .  உண்மைப்  புலமையின்  சிறந்த  குறிக்கோள்   இதுவேயாகும் .   

  •  புலவரும்   புரவலரும்

         மிகச்  சிறந்த  இந் நிலைக்கு  நம்மை  ஆளாக்கும்  இப்புலமைச்  செல்வத்தை  இவ்விழுமிய  நோக்குடையாராகவே  நம்  பெரியார் மேற்கொண்டிருந்தனர் . அன்னார்  குறிக்கோள்  அன்னதாக,  அவருக்கு  இம்மை  நலம்  முட்டின்றி  நடைபெறுதற்கு  வேண்டும் . பொருள்  முதலியன  கொடுத்துப்  போற்றுதற்கு  வரையாதளிக்கும்  வள்ளன்மை  மிக்கார்  பலரை  அவ்வப்போது  திருவருளாற்றல்  உதவி  வந்தது .

           சிறந்துயர்ந்த  குறிக்கோ ளொன்றைக்  கடைப்பிடித்துத்  திருவருட்  டுணையொடு  முயல்வார்க்கு , அதனை  நிறைவேற்றி விக்கும்   இறையருள்  இடைக்கண்  வேண்டுவனவாகிய  பிறவெல்லாம்  பல்லாற்றானு முதவி  அவரைத்  தளரவிடாது  அளித்துக்  காக்கும்  என்பது  நம்  பெரியோர்  கண்ட  உண்மை . புலமையின்  குறிக்கோள்   மிகச் சிறந்துயர்ந்த  அறிவு  வளர்ச்சியான்  எய்தும்  உலப்பிலா  இன்பப்  பேறாகவும்  அதனை  மறந்து , அழிதன்  மாலையதாகிய  குறுகிய  உலக  வின்பமே  அதுவெனக்  கொள்ளப் படுமாயின் , அது  நிறைவேறுந்  துணையும்  அப் புலமை  நின்று  பின்  வளர்த்தலின்றி  ஒழியும்  இயல்பினதாகும் . அந் நிலையில்  அமைந்த  புலமையுஞ்  சிறிதேயாகும் .

            இற்றை  ஞான்று  கல்வி  பயிலும்  மாணவர்கள்  தொடக்கத்திற்  கொள்ளும்  நோக்கம் , பெரும்பாலும்  தம்  வாணாளில்  உடலோம்பலாகிய  அவ்வளவிலேயே  அமைந்துள தென்பது யாவரும்  உணர்ந்த தொன்று . இக்குறுகிய  நோக்கம்  மேற்கொண்டு  பயில்வோர்  ஒரு  வகையாகத்  தேர்வில்  வெற்றி  பெற்ற  பின்னர் ,  அக் குறுகிய  நோக்கமாகிய  பொருட் பேறு நிறைவேறுவதற்குரிய  முயற்சியிற்  றலைப்படுகின்றனரேயன்றிக்  கற்ற  கல்வியின்  விழுமிய  பயனைப்  பெருதலில்  வேட்கை யுடையராகக்  காணப்பட்டிலர் .  ஆசிரியனை  அடுத்துக்  கற்றது  அவன்தன்  புலமையளவிற்  காற் கூறாம் . அத்துணையே  யல்லது , முற்றும்  நிரம்பிய  தாகா தென்பது  நம்  பெரியோர்   கண்ட  உண்மை . காணாதனவெல்லாங்  காண்டற்கும்  , கேளாதனவெல்லாங்  கேட்டற்கும்  அறிவுலகத்து  நிகழும்  வியத்தகு  அருஞ்  செயல்களை உணர்ந்து இன்புறுதற்கும் , நிரம்பிய  புலமையே  சிறந்த  கருவியாகும் .  இவ் வுயரிய நோக்கங் களை  நிறைவேற்று வதற்குரிய  புலமையை உடலோம்பற்கு  வேண்டிய  பொருளளவிற்  பயன்படுத்த எண்ணுதல்  பொற்கொழுக் கொண்டு வரகுக்கு  உழ எண்ணுவதனோடு  ஒக்கும்  என்ப . சிறந்துயர்ந்த  நோக்கங்களை  மேற்கொண்டு  திருவருளுணர்ச்சியிற்  றலைப்படும்  புலமைச்  செல்வம்  வாய்ந்து  விளங்கிய  நம்  பண்டைத்  தமிழ்ப்  புலவர்  பெருமக்களைப்  பண்டைத்  தமிழ்  நிலவேந்தர்கள்  எத்துணைப்  பெருமை  பாராட்டிப்  போற்றி யொழுகினர் என்பதர்குப்  புறநானூறு  முதலிய  நம்  அரிய தமிழ்  நூல்களே  தக்க  சான்றாக  மிளிர்கின்றன .  

            தமிழ்  நில  மன்னர்கள்   தமிழ்ப்புலவர்களைத்  தம்  உயிரினுஞ்  சிறந்தாராக  மதித்தொழுகிய  செய்திகள்  பற்பல  உள்ளன . அம்மன்னர்க்கு  அரசியற்  சூழ்ச்சிக்குரிய  அமைச்சராகவும்  , அறிவுரை  கூறி  நன்று  தீதுணர்த்தி  நல்லாற்றின்  நிறுத்தும் ஆசிரியராகவும்  , அவர்  குடிக்கண்   உடன்றோன்றினார்  முதலியவர்பாற்  கலாம்  விளை காலை  நடுநின்று  அரிவுரை  கூறி, அதனைத் தீர்த்து   அவரை  அன்புநிலைப் படுத்தும் அகல  முதியோராகவும்  விளங்கினார்  நம்  தமிழ்ப்பெரும்  புலவரேயாவார் .  முதுமையின்  தளர்ச்சியிற்  கதுமென  நேரும்  இறப்பு  முதலியவை  பற்றிய  அச்சம்  நிகழா  வண்ணம்  உடல்,  இளமை,  பொருள்  முதலியவற்றின்  நிலையாமைகளை  நெஞ்சிற்  பதியுமாறு  எடுத்துரைத்து  மெய் யுணர்விற்   றலைப்படுத்தும்   அறவோராகவும் , காதலித்து  கைவிடப்பட்ட  கற்பரசியரை  அவர்தம்  கணவரோடியைத்து  நீதி  பல  கூறி  நெறி  பிறழா  வண்ணம்  வாழ்க்கை  நிலைப்படுத்தும்  நல்லுறவினராகவும்  விளங்கிய  பெருமை  நம்  தமிழ்ப்  புலவர்  பாலதேயாம் .தந்தை  தாயார்  முதலியோரை  இழந்து வருந்தும் இளம் பருவத்துப்  பெண்  மக்கட்கு  அத் தந்தை தாயார்  முதலிய  உறவாக  நின்று நீதி  வழாத  நிலையிற்  பாதுகாத்து  நட்புக்  கடனாற்றிய  பெரியோரும்  புலனழுக்கற்ற   நம்  தமிழ்ப்புலவர்  பெருமானே  யாவார் . புணர்ச்சி  பழகுதலின்றி   உணர்ச்சி  வாயிலாகவே  நட்பு  முதிரப்பெற்றும்   அந்நாட்டார்க்கு  இறுதி  நேர்ந்துழி  அதனைத்  தம்  உணர்ச்சிச்  சிறப்பான்  இயல்பில்  தெரிந்து  தம்  உயிரையும்  உடன்  உய்த்து  அன்புக்  கடனாற்றிய  ஆன்றவிடத்தடங்கிய  கொள்கைச்  சான்றோரும்   நம்  தமிழ்ப் புலவரே யாவர் .  

         இங்ஙனம்  அரசர்பாற்   புலவரும் , புலவர்பால்  அரசரும்  அன்பு  வழிப்பட்டு  ஒழுகிய  சிறந்த  வரலாற்றுப்  பகுதிகள்  பலவாம் . தன்னைப்பாடி  வந்த  ஒரு  புலவர்க்கு  ஏதுங்  கொடுக்கும்  நிலையில்லாத  ஒரு  வள்ளல்  ‘தலையினைக் கொண்டு போய்த்  தம்பி  கைக்  கொடுத்து  விலையினைப்  பெறுக’  எனச்  சொல்லியதும்  , அவ்வள்ளற்  பெருமான்  உள்ளமறிந்த  புலவர்  பெருமான் ‘மறப்பேனாயின்  மற்றொருவர்க்கு  இங்ஙனங்  கூறிக் கொடுக்க  நேரின்  மன்னர்  பெருமானை  இழக்க  நேருமே’  என்று  அஞ்சி , அத்தலை  தன்  உடைமை  எனவும் , அதனை ‘யான்  வேண்டுங்காற்  பெறுவே’  னெனவும் , ‘பெறுங்காறும்  யார்க்கும்  இதைக்  கொடுத்தலாகாது’  எனவுங்கூறி , அவ்வளவோடு  பகைஞனாகிய  தம்பியின்  மனத்தைக்  குழைவித்து  அன்புரிமைப் படுத்து  ஒன்றுபடச்  செய்து  இன்புற்றதும்  நினையுங்கால்  , சென்னறிப்படரும்   மன்னவருள்ளமும் , சொன்னெறிப்  புலவர்  தூய  உள்ளமும்  எத்துணைச்  சிறந்துயர்ந்த  நிலையில்  உள்ளன  என்பது  நன்கு  புலனாகும் .  இந் நிகழ்ச்சி  அறிவுடையாரகத்தை  உருக்கும்  பான்மைய தென்பதை  யாவரும்  உணர்வர் .புலனழுக்கற்ற  தூய  பெரும்  புலவர்களையும்  அருண்மிகு  நெஞ்சத்தினராகிய   புலவர்களையும்  இரு  கண்ணெனப்  பெற்றுத்  திகழ்ந்த  நம்  தமிழ்  நிலம்  இற்றை  ஞான்று  ஒற்றைக்  கன்ணிழந்து  மற்றொருகண்ணும்  ஒளி  நலங்  குன்றப்  பெற்று  ஒடுங்கிக்  கிடத்தலை  உன்னுங்கால், எத்தகைய  தமிழ்  மனிதனும்  வருந்தாமலிருக்க  முடியாது .  

            பண்டை  அரசர்பாற்  புலவர்  பெற்ற  பரிசிலை  உன்னுங்கால், அது  மிக்க  வியப்பைத்  தருவதாகும் . நூறாயிரக்கணக்கான  பொற்காசுகளையும் , முற்றூட்டாகப்  பல  நிலத் தொகுதிகளையும் , விலையுயர்ந்த  ஆடை  அணிகளன்களையும் , யானை  தேர்  முதலியவைகளையும்  வரையாது  வழங்கப்பெற்று  மகிழ்கூர்ந்த  செய்தியைப்  பண்டை  நூல்களான்  உணர்ந்தலோடு  இன்னும்  அப்பரிசில்  நிலங்களைப்  பற்றிய  ஆவணங்களானும்  அப் புலவர்  வழித்  தோன்றல்களின் ஆட்சியானும்  கண்கூடாகவுங்  காண்கின்றோம் .

         புலவர்  பாடும்  புகழுடையா ரன்றே , தானே  இயங்கும்  வானவூர்திக்கண்   இவர்ந்து  செல்லும்  நல்வினையாளர்  என  எண்ணப்பட்டனர் !  புலவராற்  பாடப் பெறுவது  ஒன்றே  தம்  வாழ்க்கையின்  பயனெனக்  கொண்டு  மகிழும்  முன்னை  வேந்தர்  நன்ன ருள்ளம்  எத்துணைச்  சிறந்த தென்பதை  விரித்துரைக்கவும்  வேண்டுங்கொல் !  “குறித்த  பகைவனை  வென்று  வெற்றி  மாலை  புனையேனாயின்  உயர்ந்த  கல்வி  கேள்விகளையுடைய  மாங்குடி  மருதன்  தலைவனாகவுள்ள  பலர்  புகழுஞ்  சிறப்பு  வாய்ந்த  புலவராற்  பாடப்  பெறாது  என்  நிலவெல்லை  நீங்குக “  என்று  சூழுரை  பகர்ந்த  தமிழ்ப் புல வேந்தன் உள்ளப்  பாங்கை  உள்ளிப் பார்மின் ! குறித்தாங்கு  இன்னது  செய்யேனாயின் , இன்ன  தீவினை  யாளனாவேன்  என்னுஞ்  சூழுரையிற்  புலவராற்  பாடப்பெறாத  தொன்று  பெருந்  தீவினைப்  பயனெனக்  கொள்ளப்படின்  அன்னார்  பாடற்பெறு  அரசர்  தம்  வாழ்க்கைக்கு  எத்துணை  விழுமியெதெனக்  கருதப்பட்டதென்பதை   உற்று  நோக்குமின்கள் !

      இத்தகைய  சிறந்த  நிலையிலிருந்த  முன்னைத்  தமிழ்ப்  புலவர்  வழித்  தோன்றல்களாகிய  இக் காலத்துப்  புலவர்   பெருமக்கள்  நிலை  சிறிது  வருந்தத்தக்கதாக உள்ளது . புலவர்க்குரிய  உயரிய  நோக்கங்களும்  வர வரக் குறுகி  வருகின்றன . அவரைப்  புரக்கும்  இயல்பினராகிய  திருவுடையார்  நிலையும்  புலமைக்கு  மதிப்பளிப்பதாக  இல்லை .  எதற்கு  எது  காரணமென்பதை  ஈண்டு  ஆராய  வேண்டா . அவரவர்  கடமையை  அறிந்து  மேற்கோடலே  சிறந்ததாகும் .  கல்வி , அறிவின்பத்தை  அளித்து வாழ்க்கையைத்  தூய்மைப்படுத்தற்குரியதாம்  என்னும்  நம்  புலமையின்  விழுமிய  நோக்கத்தைத்  தளர  விடாது  மேற்கொள்ளுவோமாயின் , நம்மை  புரத்தாற்குப்  புரவலரும்  கடவுளரும்   நம்  பக்கலில்  தாமே  அணுகித்  தம்  கடமையைப்  புரிய  முற்படுவர்  . இவ்வுண்மையை  நம்  புலவர்  பெருமக்கள்  உறுதியாகக்  கடைப்பிடித்தல்  வேண்டும்  .  

                                3  .  தவிர்தற்   குரியன

            இனிப்  பழங்கதை  பேசிக்கொண்டிருத்தலிற்  பயனின்று .  செய்வன  இன்ன , தவிர்வன  இன்ன  என்னுஞ்  சூழ்ச்சிற்  றலைப்பட்டு   நல்லன  காண்டலும்  அவற்றைத்  தாழாது  செயலின்  மேற்கொடலும்  வேண்டும் . விலக்கியன  ஒழித்தலும்  அறமென்ப வாகலின் , முதலில்  நம்  புலவர்  பெருமக்கள்  தம்  வாழ்க்கையில்  தீயகுணஞ்  செயல்கள்  நெருங்க  இடந்தராமல்  அவற்றைக்  களைதல்  வேண்டும் . தீயன  களைந்தாலன்றி  நல்லன  ஏய்தற்கு  இடனமைதல்  அரிது .   

               தவிர்வனவற்றுள்  ஒரு  சிலவற்றை  ஈங்குக்  குறிப்பிடல்  மிகையாகா  தென்றெண்ணுகிறேன் . ஒருவரை யொருவர்  புறங்கூறல் இல்லன கூறி  எள்ளி நகையாடல்  ,  தம்  அறிவினும்  மற்றைய  ரறிவு  தாழ்ந்ததென வாய்ப்பறை யறைதல் , ஆகூழால்  ஒருவர்க்குக்  கிடைக்கும்  ஊதியங்கண்டு  நெஞ்சம்  புழுங்கல் , பிறர்  அறிவிற்  கண்டுரைத்த  சுவை  நலமிக்க  சொற்பொருள்  நலங்களைக்  கேட்டுணர்ந்து  உவகை  யுறாமை  , ஒருகால்  தம்  புலமையுள்ளம்  தம்மை  அறியாது  உவகையுறத்  தொடங்கின்  ,அதனைச்  சினந்து  மேலெழ  விடாது  அடக்கிவிடுதல் , மொழியறிவுத்  துறையில்  தாம்  மேம்பட்டதாக எண்ணிக் கடவுணிலை  யுணர்ச்சியிற்  றலைப்படாதி ருத்தலே   புலமை  மாண்பெனக்  கருதல் , கடவுள் கலையுருவினன்  என்பதை  மறந்து  கல்விக்கும்  கடவுட்  கொள்கைக்கு  இயைபின்றென  எண்ணல் , “ கற்ற  கல்விக்குத்  தக  நிற்க”  என்னும்  பொருளுரையைப்  பொருட்படுத்தாமல்  கல்விக்கும்  ஒழுக்கத்திற்கும்  தொடர்பின்றெனக்  கோடல்  , இகலிலர்  எஃகுடையராய்த்  தம்மிற்  குழீஇ  இன்புறுதலை  விடுத்துப்  பல்பிறப்பினுந்  தொடர்ந்த  பகைஞர்  எனக் கொண்டு  ஒருவரை  ஒருவர்  வெறுத்தல் , தமக்கே  பிறர்  உதவி  புரியற்பாலற்  தாம்  பிறர்க்கு  ஒல்லும்  வகையானும்  உதவி  புரிய  முற்படல் , தம்  புலமை  மாண்புக்கு  ஏலாதென  நினைத்தல் , பிறர்  கூறும்  நல்லன  கொண்டு  இன்புறுதற்கு  உள்ளம்  ஒருப்படாமையோடு  அந்  நல்லனவற்றையும்  தீயனவாகத்  திரித்துக்  கூற  முற்படுதல் , உண்மை  தெளிதற்கு  நடுநின்  றாராய்ந்து  தம்கொள்கை  மறுக்கப்படுமாயின் , அதனைப்  புலமைக்கு  அழகென  ஏலாது  மறுத்தாரை  முனிந்து  வறுத்தமுறுதல்  முதலிய  இன்னோரன்ன  தீய  குணஞ்  செயல்களை  அறவே  ஒழித்தல்  நன்று .  

           பண்டைப் பிறப்பின்  தொடற்பால்  ஒரோ  வழி  அவை   முற்படினுந்  தன்  மதிவலியால்  இயன்றாங்கு  விலக்க   முயலல்  வேண்டும் .  அவ் விலக்கு  முயற்சி  பயன்பாட்டில தெனினும்  தம்பால்  நிகழ்ந்த  இவை  தீயன  என்றுணர்ந்த  அவ்வளவிற்  பயன்  உண்டென்ப  ஒரு  சாரார் .  இத்தீய  குணங்களில்  ஒரோவொன்றுடையாரும்   சிலபல  உடையாருமாகப்   பலரும்,  அறவே  இலராகச்  சிலரும்  உலகத்துக்  காணப்படுவர் . ஏதேனும்  இருப்பிற்  களைதல்  வேண்டும்  என்பதை  நினைவுறுத்தற்குக்  கூறியதேயன்றிப்  புலவரெல்லோரும்  இத்தீய  குணஞ்  செயல்கள்  உடையரெனக்  கொண்டு  கூறியதன்று  . ஒரு   பிழையுமில்லாத  தூய  தன்மை  கடவுளிடத்தன்றி  மக்களுட்  காண்டலரிது .  ஆயினும்  மக்கட்  பொதுவாக  உள்ள  பிழைகளைப்  புலமைச் சிறப்பாற்  களைதற்கு  முற்பட  வேண்டுவதே  புலமைப் பேற்றின்  கடமையாகும்.   

          ஓராராய்ச்சியில்  ஒரு  காலத்தில்  தமக்குக்  கிடைத்த  சான்றுகளைக்  கொண்டு  ஒரு  வகையாக  முடிக்கப்பட்டதொன்று , பிறிதொரு  காலத்திற்  பிற  சான்றுகளால்   தவறுடைய  தெனத்  தாமே  கண்டாதல்  பிறர்  கூறக்  கேட்டதால்  உண்மை  தெளிய வரின்  அப்பொழுது  தம்பிழைபட்ட  முன்னைக்  கொள்கையைக்  கைவிட்டு  உண்மைக்  கொள்கையைத்  தழீஇக்  கோடலே  புலமையின்  சிறப்பாகும் .  பின்னர்  எத்துணைத்  திட்ப  நுட்பமான  சான்றுகள்  கிடைப்பினும்  மாறுபட  முன்னர்க் கண்ட  முடிவினின்றும்  வேறுபடேம்  என்னுங்  கொள்கை  தவறுடையதாகும் .  உண்மைநிலை  காண்டற்குப்  பலவாறு  சூழ்ந்து  ஒரு  முடிபுக்கு  வருதலும் , பின்னர்  அது  தவறுடைத் தெனக்  கண்டவழி  அதனை  மாற்றிக் கோடலும்   நடுநிலைப்  புலமையுடையார்க்கு  இயல்பேயாம் .  

            புலவரில்  ஒரு  சிலர்  தம்மைச்  சிறந்த  ஆராய்ச்சி யாளரென  உலகம்  மதிக்கவேண்டும்  என்னும்  வேட்கையுடையராய் , பண்டை  நூலுரை   வரலாற்று  முறைகளில்  தவறில்  வழியுந்  தவறுகளை  ஏறிட்டுக்கூறி  வருகின்றனர் . அக்கூற்றுக்கள்  அவர்தம்  புலமைத்  தவறுதலையே  புலப்படுத்துவனவாம் .  அவர்  அறியாமையால்  அங்ஙனங்  கூறின் , அஃதொரு  பெருந்  தவறாகாது , அறிவுடையார்  தேற்றத்  தேறுவராகலின்.  அறிந்து  கூறுவரேல் ,அது  புலமைக்கு  இழுக்காகும். பழையன  கழிதலினும்  புதியன  புகுதலினும்  முறையே  தீமையும்  நன்மையும்  அறிந்து   கோடல்  நன்று .  கால  நிகழ்ச்சிக்கு  ஏற்பன  ஏலாதன  என்பதை  நெடிது  சூழ்ந்து  முடிவு  செய்தல்   வேண்டும் .  

            தம்  மொழிக்கு  ஏற்றங்கூற  முற்பட்டுப்  பிற  மொழிகளைப்  பழித்துரைத்தலுந்  தவறாகும் . தம்  மொழிக்கண்  இல்லாத  சிறப்பொலி  யெழுத்துக்கள்  வேற்று  மொழிக்கண்  இருத்தல்  கண்டு , ‘அவை  எதற்கு?’  என  ஒரு  புலவர்  ஒரு  பேரவையில்  எள்ளி  நகுவரேல், அவர்  புலமையி னியல்பை  எவ்வாறு  கருதலாம் !  ஒருவன்  பாலுள்ள  பொருள்  இருப்பின் , அது  பற்றி  அவன்  எள்ளப்படுதல்  யாண்டுங்  காணாததொன்று  .  ஒரு  குழுவில்  உரைக்கப்படும்  பொருளுரை  அவ்வளவினன்றிப்  பரந்த  அறிவுலகத்துக்கும்  ஏற்ப  விளங்குதலன் றோ  நலமாகும் ! 

             இன்னோரன்ன  இழுக்கு  நெறிகளில்  நம் புலமை  வாழ்க்கையை  நடத்தலாகாது  .  புனைந்து  பாடுங்கால்  , “அவர்  செய்யாதனவற்றைச்  சொல்லி  அவர்  குணங்களைக்  கூறுதலை  யறியாததாகும்  எம்மூடச்  சிறிய  செவ்விய  நா”  என்ற  புலவர்  பெருமான்  அறிவுரையை  நினையுங்கால் ,  நம்  தேனினுமினிய  செந்தமிழ்ச்  சுவையை  உணர்ந்த  நாவானது  ஒன்று  கூற  முற்படுங்கால் எவ்வளவு  நடு  நிலையுடன்  சீர்தூக்கியறியும்  உளத்தோடு  கூடியெழ வேண்டும்  என்பது  நன்கு  புலனாம் .

               கொடுக்கிலாதானைப்  பாரியே  என்று  கூறாமையும் ,  பிறர்க்கு  இன்னல்  விளைக்கும்  பொய்மொழி  புகலாமையும் , இடரினுந்  தளரினுங்  கடவுட்  கொள்கைக்கு  மாறுபடப்  பேசாமையும், நடுநிலை  மிகுந்து  நவிலாமையும் ,  பயனில்லன  பகராமையும்  ஆகிய  இன்னோரன்ன  செயல்களே  நம்  தமிழ்ச்  சுவையுணர்ந்த  நாவிற்கு  உரியனவாம்  என்பதை  உணர்ந்து  கடைப்பிடித்தல் வேண்டும் .   

                                         4  .  செயற்குரியன

    புலத்துறை  முற்றிய  நலத்  துறையும்  அன்பரீர் !

              இனி , நாம்  செயற்பாலன  இன்ன  வென்பதைப்  பற்றிச்  சிறிது  நினைவு  கூர்வோம் .  பண்டு  மிகப்  பரந்த  நிலப்  பகுதிகளைத்  தனதாகக்  கொண்டிருந்த   நம்  பால்  வாய்ப்  பசுந்தமிழ் , தன்னைப்  புரப்பார்  துணை  சுருங்கி  வந்தமயானும் ,  பிற  மொழிகள்  அம்  மொழியாளர்  பேரூக்கத்தால்  வளர்ச்சி  யெய்தித்  தன்  இடம்  சுருங்கப்பெற்றமையானும்  ,  கற்பார்  நோக்கம்  வரவரக்  குறுகி  வந்தமையானும் ,  திருவருளுணர்ச்சி  முதலிய  உயரிய  நோக்கங்கள்  சிறிது  சிறிதாகக்  கைவிடப்  பெற்று  வருகின்றமையானும் , தன்னிடத்திலுள்ள  சிறந்த  பல  முதுநூல்களைக்  கால  மாறுபாட்டால்  நீருண்ண ,  நெருப்புண்ண  ,  நிலமுண்ணக்  கொடுத்து  இழந்தமையானும்  தன்னைப்  பயில்வார்க்கு  இம்மை  இன்புதவும்  பொருட்  பேற்றுக்கு  இக்காலத்து  அரசியல்  இடந்தராமையானும் ,  பிறவற்றானும்  தன்  ஆக்கங்குன்றி  நிற்கின்றது .  

               ஒரு  நாடு  தனக்குறிய  மொழியை  ஆக்கமுற  ஓம்பிப் பாதுகாத்தலன்றித்  தான்  சிறந்த நிலை எய்துதல் அரிதாம் . மொழி வளர்ச்சி  கொண்டே  அது  வழங்கும் நாட்டின்  நலத்தையுணரலாம் .  எந்த நாடு தன் மொழிச்  சுவையை உணர்தலிற் பின்னடைகின்றதோ, அது மற்றை யெல்லா  வளங்களானும் பிற்பட்டதாகும் . ஆதலின் , தமிழ்ச் செல்வர்களும் தமிழ்ப் புலவர்களும் விழிப்புடையராய் நின்று நம் உடைமையை விளக்க முறப் பேணல் வேண்டும் .நம் மொழி வளர்ச்சியில் நாம்  செயற்பாலன பலவாகும் .  

                 முதலாவது , இற்றை நாள்  வழங்கும் நிலம் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு  சிறந்த கல்லூரி தமிழ் நாட்டின் நடுவண் நீர் நில வளங்கள் நிறைந்த அகன்ற இடத்தில் , ஆசிரியர்களும் மாணவர்களும்  ஒருங்கிருந்து , கல்வியை உயரிய நோக்கங்களோடு பயிற்றவும் பயிலவுந் தக்க  முறையில் நிலைபெறல் வேண்டும் . இம்மை நலம் பெறற்குரிய மருத்துவம் தொழிற் கல்வி முதலிய பயிற்சிகளும் உடன் நிகழ்தல் இன்றியமையாததாகும் . அக்கல்லூரியின் உறுப்புக்களாகப் பல நிலையங்கள் அமைத்து அவற்றால் தமிழுக்கு வேண்டற்பாலனவா கிய  பிற மொழி நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டும் , புதிய உண்மையாராய்ச்சிகள் செய்யப்பட்டும் , பல நூலுரைகள் வெளிவரல் வேண்டும் . தமிழ் நாடு முழுதும் இதுகாறும் நிறுவப்பட்டனவும் , இனி நிறுவப் பெறுவனவுமாகிய பல கல்வி நிலையங்களெல்லாம் அத் தமிழ்ப் பெருங் கல்லூரிக்குக் கிளைகளாக அமைதல் வேண்டும் .

                   சிறந்த  நூலுரைகளை ஆக்கிப் புலமை யரங்கேறி னார்க்குத் தகுதியான பட்டங்களும் பரிசுகளும் வழங்கி ,அவரைப் பெருமைப் படுத்தல் வேண்டும் . தமிழின் இயல்பை நன்குணராது ஆரவார நீர்மையராய்ப் போலி நூலுரைகளை வெளிப்படுத்தித் தமிழகத்திற் கும் தமிழ் மொழிக்கும் இழுக்குண்டாக்கும் போலிப் புலவர்களை அறிந்து  அறிவுறுத்தி  அவரை  நல்லியற் புலவராக்க முயலவேண்டும் .  உண்மைத்  தமிழறிஞரை ஒடுங்கியிருக்கவிடாது  சிறப்பிடனளித்து  உவகையுறுத்தல்  வேண்டும் . இயல் வரம்புடைய நம் மொழிக் கண் அவ் வரம்பிகந்து வெளிப்படும்  புலத்துறைக் கொல்லாப்  போலி நூலுரைகள் , செவ்விதின் ஆக்கப்பட்ட சீரிய நூல்களுக்குக்  களைகளாக நெருங்கிப்  படர்ந்து தீங்கு புரிகின்ற வாதலின் அக்களை கட்டல் சொல்லே ருழவராகிய  தமிழ்ப் புலவர் கடனாகும் .  அக்களை  களையப்பட்டால் அன்றி நம் செழுந்தமிழ்ப் பைங்கூல் வளர்தற்கு இடமின்றாகும் .  தீஞ்சுவை  மிக்க  திருவருட்கனியை நம்க்கு  உதவத்  தோன்றிய  செழுந்  தமிழ்ப்  பைங்கூழைப்  பல்லாற்றானும்  போற்றிக்  காத்தலன்றோ நம் நற்பயனை  நன்கு  பெற முடியும் ?

              ஆங்கிலம் , வடமொழி முதலிய வேற்று மொழிகளிலுள்ள  பல துறைப்பட்ட  அரிய நூல்களை அவ்வம் மொழியோடு  தமிழ்  கற்ற மதிநுட்பமுடைய  புலவர்களைக் கொண்டு விளக்கமான சிறந்த முறையில்  மொழிபெயர்ப்பித்து வெளிப்படுதல் வேண்டும் . இத்துறை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும்  ஏற்ற தொன்றாம் .  வேற்று மொழிகளி லுள்ள  ஒரு  திறப்பட்ட  பல  நூல்களை நன்கு  பயின்று  அவற்றின்  திரண்ட  கருத்துக்களைத்  தொகுத்துத்  தனித் தமிழ்  நூலாக  வெளிப்படுதல்  சாலச் சிறந்ததாகும் .  இத்  துறையில்  தமிழ்ப் புலவர்  முற்படுவாராயின் , ‘மேல் வகுப்புப் பயிற்சிக்குரிய பல திறம்பட்ட நூல்கள் தமிழில்  இல்லையே ‘  என்னுங்குறை  ஒழிந்துவிடும் . மொழி  பெயர்ப்பால்  ஒரு  மொழிநூல்  வளர்ச்சி  பெறுதல் , அம்  மொழிப் புலவர்  இயன்மதியற்றற்கு  அத்துணைச் சிறப்பின் றென்பது  உண்மையெனினும் , இயற்கையாகப்  பல  புதிய  சிறந்த நூல்களை மதிவலியால் ஆக்கும்  ஆற்றல் , வளர்ச்சி யெய்துங்காறும்  மொழிபெயர்புச் செயலை  மேற்கோடலால்  இழுக்கின்று  என்பது என் கருத்து . இது  கருதியே  மொழிபெயர்த்து  அர்த்தப்பட யாத்தலையும்  நூல்  யாப்பு  வகையுள்  ஒன்றெனக்  கண்டனர்  தொல்காப்பியனாரும்  என்க .

                சென்னைப்  பல்கலைக்  கழகத்தையும் , அதனினும்  தமிழ்  வளர்ச்சிக்கு  மிக  நெருங்கிய  இயைபுடைய  அண்ணாமலைப்  பல்கலைக்  கழகத்தையும் , தெய்வத்  தமிழுஞ்  சைவத்  துறையுஞ்  செழித்தோங்க எழுந்த திருவாடுதுறை , திருப்பனந்தாள் ,  தருமபுரம்  முதலிய  செல்வமலி  சைவமடங்களில்  விளங்குந்  தலைவர்களையும்  தமிழ்  நிலத்துச்  சிற்றரசர்களையும்  ,  தமிழன்பர்களாகிய  மற்றைத்  திருவுடையாரையும்  மேற்  காட்டிய  தமிழ்  வளர்ச்சிக்கு  வேண்டுவன  செய்யும்  வண்ணம்  இன்னோரன்ன  புலவர்  மாநாடுகள்  கேட்டுக்  கொள்ள வேண்டும் . சற்றுக்  காலத்தாழ்விற்  பயன்  பெறுவதாக இருப்பினும்  அது  பற்றி  வெறுத்துப்  பேசாமல்  மீண்டும்  வேண்டிக்  கோடல்  நன்றாகும் . அன்போடு  பன்னாள்  அழைத்தால்  இறைவனும்  வெளிப்பட்டு   அருளாமலிருக்க  முடியாது . ஆதலின் , சைவாதீனத்துத்  தலைவர்களையும் , அன்பர்கள்  பிறரையும்  அன்புக் கயிற்றாற்  பிணிக்க  முயல்வதே  அறிவுடைமையாகும் .  

                                          5 .  இறுவாய்

       இம்மாநாடு , புலவர்  பெருமக்கள்  வாழ்ந்த  சோழ  வளநாட்டில்  தஞ்சை  திருச்சிராப்பள்ளித்  தலை  நகர்களுக்குரியதாக  இத்துறை யூரில்   முதலில்  தொடங்கப்  பெறினும் , திருவருட்  பாங்கால்  இது வரும்  ஆண்டு  முதல்  தமிழ்  வழங்கும்  நிலங்கள்  எல்லாவற்றுக்கும்  பொதுவெனக்  கொள்ளப்பட்டு , ஒவ்வொராண்டினும்  ஒவ்வொரு  தலை  நகரினும்  கூடித்  தமிழ்  மொழிக்கும் , தமிழ்ப்  புலவர்  முதலிய  மக்களுக்கும்  நலம்  பயக்கும்  வன்ணம்  திருவருட்  டுணைகொண்டு தமிழன்பர்கள் செய்தல் வேண்டும் . செல்வரும்   புலவருமாகிய  தமிழ் மக்கள்  தம்மில்  வேறுபாடின்றி  ஒற்றுமையுடன்  ஒருங்கியைந்து  தமிழன்னையைப்  பேண  முன்வரின், அவ்வன்னை  தன்  மக்களின்  நலம்  வளர  வாழ்த்துவள்.  அன்னையர்  வெறுப்புக்கு  மக்கள்  ஆளாதல்  நலமன்று  . தமிழன்னை  தன்  மக்களாகிய  நம்மை  உளங்குளிர்ந்து  வாழ்த்துவாளாயின்  நம்  வாழ்க்கை  சிறந்த  இன்பப்  பேறுடையதாகும்  என்பதை  உறுதியாகக்  கடைப்பிடிப்பீர்களாக.

செந்தமிழ்ப்  புலவர்காள் !

            இனிப்  புலமை  வாழ்க்கைக்கு  வேண்டுவன  பலவுளவெனினும் , புலவர்  மாநாட்டைத்  திறந்து வைக்கும் ஒருவன்  கடமை  இதனினும்  நீட்டு  சேறல்  முறையன்றாதலின் , இம்  மட்டில்  அமைகின்றேன் .  நுங்  கட்டளைப்படியே   திருவருட்டுணை  கொண்டு   இம்மாநாடு   திறக்கப்பெறுகின்றது .  இதனுட்  புகுமின் !  புகுங்கால்  முதற்கண்  எல்லாம்  வல்ல  இறைவன்  திருவருளை  நெஞ்சார  நினைமின் !  தமிழ்த்  தாயை  வாழ்த்துமின் !  யான்  கூறியவற்றுட்  கொள்ளுவன  கொண்மின் ! இன்னும்  புலமை  வாழ்க்கைக்கு  வேண்டுவன  சூழ்மின்! சூழ்ச்சி  முடிவில்  துணிவு  எய்துமின்  !   அத்துணி  பொருளைத்  தாழாது  செயலின்  மேற்கொண்மின் ! நாகரிக  மிக்க  உலகங்களால்  நம்  தமிழ்ப்புலமை  பாராட்டப்பெறும்  வண்ணம்  ஒழுகுமின் !  புலமை வாழ்க்கையின்  சிறந்த நோக்கங்கள்  நிறைவேறப்பெற்று  நல்லின்பம்  யெய்துமின் ! இதுகாறும்   என்  சிற்றுரையைச் செவியேற்று  உளங்கொண்ட  நும்  பொருமைக்கு   என்  வணக்கம்  உரியதாகுக .

                         3 .  நம்  பண்டைய  நீதி  நூலாசிரியர்

                          ( திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

      மக்கள்  வாழ்க்கைக்குப்  பயன்படும்  வண்ணம்  நம்  பெரியார்  நமக்கு  உதவிய  நூல்கள்  அறம் , பொருள் , இன்பம் , வீடு  என்னும்  உறுதிப் பொருள்கள்  நான்கனையும்  பற்றியனவேயாம் . இவ் வெல்லாம்  நீதியின்மேல்  அமைவன  வெனினும் , இவற்றுள்  பொருட்பகுதியைப்  பற்றி  யெழுந்த  நூல்களையே   ‘நீதி  நூல்’  எனப்  பெரியோர் வழங்குவர் .  அப்பொருட்  பகுதியை  மாத்திரம்  சிறப்பாக  எடுத்துக் கூறிய  ஆசிரியரும்  உளர் .  அதனோடு  அற முதலிய  ஏனைய  உறுதிப்பயன்களையும்  இயைத்துக் கூறிய  ஆசிரியர்களே  பெரும்பான்மையோராவர் . இம் முறையில்  தமிழிற்  சிறந்த  நீதிகளை   வழங்கிய   வண்மையிற்  சிறந்த  பெரியார்  திருவள்ளுவரே  யாவர் . அவருக்கு  முன்னும்  பின்னும்  நீதி  நூலருளிய  ஆசிரியர்கள்  வடமொழியிலும்  தமிழிலும்  பலரிருந்தனர் .  எனினும் ,  அன்னார்  புகழொளி  யெல்லாம்  வானத்து  விளங்கும்  மீன்களாக  , வள்ளுவர்  சீர்த்தி  அப் பன்மீன்  நடுவண்  பான்மதி  போலத்  திகழ்வதாகும் . “ எல்லாப்பொருளும்  இதன்பாலுள ; இதன்பால்  இல்லாத  எப்பொருளும்  இல்லையால்”   என்றபடி  உள்ளுநர்  உள்ளும்  பொருளெல்லாம்  வள்ளுவர்  வாய்மொழியிற்  காணப்படுவனவேயாம் . தம்  தெள்ளிய கல்வியானும்  ஒள்ளிய  மதி  நுட்பத்தானும் உலகியலையும்  மக்கள்  வழக்கவொழுக்கங்களையும்  அழுந்தியறிந்து  உள்ளத்தமைத்துத்   ‘திருக்குறள்’  என்னும்  நீதிக்  களஞ்சியத்தை  உலகமுள்ளவும்  நிலைபெற  யாத்துதவிய  பெருமையே  அப்  பொய்யில்  புலவர்  புகழொளி  விஞ்சுதற்கு  ஏதுவாயிற்று .  

                திருவள்ளுவர்  எழுதிய  நூல்  ஒழுங்கிற்கும்   ஏனையோர்  நூன்  முறைக்கும்  உள்ள  வேறுபாடுகள் பலவாம் . தாம்  கூற  மேற்கொண்ட   பொருளை  நன்றாக  ஆராய்ந்து , இவ்வாறு  தெளிவுபடுத்த  வேண்டு மென்று  உள்ளத்தமைத்துப்  பின்னர்  செய்யுள்  வடிவில்  இவர்  வெளியிட்டுள்ளார் .   பெரும்பான்மையும்  கொண்ட  பொருளின்  இலக்கணம்  , அதன்  சிறப்பு , அதனாலாம்  பயன் ,  அஃதில்  வழி  வருந் தீங்கு  என்று  இன்னோரன்ன  பாகுபாடுகளை  வரையறுத்துக் கொண்டு  கூறுதல்  இவர்  இயல்பு .  எப்பொருட்கும்  வரையறையும்  தெளிவும்  இன்றி  யமையாதன .  வரையறுத்துத்  தெளிவுபடுத்தப் படாத  பொருள்கள்  மக்கள்  உளங்கோடற்கு  ஏற்றனவாக  என்பது  பெரியார்  துணிபு.

                 இத்தகைய  சிறப்பு  வாய்ந்த  திருக்குறளுக்கு  வடமொழி  தென்மொழி  களிலுள்ள  பற்பல  நீதிநூல்களையும்  நன்கு  கற்று  ஆராய்ந்த  பரிமேலழகர்  என்னும்  புலவர்  பெருமான்  இயற்றிய  உரையே  எல்லா  உரைகளினும் சிறந்ததாகப்  போற்றப்படுவது  அவ்வுரையாளர்  ஓரிடத்து , “தேவர்க்கும்  அசுரர்க்கும்  அமைச்சுப்  பூண்ட  வியாழ  வெள்ளிகளது  துணிபு  தொகுத்துப்  பின்  நீதி  நூலுடை யார்  கூறியவாறு  கூறுகின்றமையின் “   என்று  எழுதியிருத்தலால்   வடமொழியிற்  புகழ்  மிக்கவர்களான  வியாழ  வெள்ளிகளின்  நூற்  கருத்துக்கள்  நம்  வள்ளுவர்  வாய்மொழியிற்  புலப்படுகின்றன வென்பது  பரிமேலழகர்  கருத்தாம் . ஒரு  நாட்டினர்  வழக்க  வொழுக்கங்களை  உணர்ந்து  அவற்றிற்  கேற்ப  நீதிகளை  வரையறுக்கும்  ஆசிரியர்கள்  கால  இடையறவால்  சேய்மைக்கண் உள்ளாரெனினும் , பொருள்  ஒற்றுமைக்கருத்தால் அணிமையில்  உள்ளவராகவே  கருதப்படுவர் .

                வடமொழியில்  மனு  முதலிய  நூல்களில்  அறம் , பொருள் , இன்பங்கள்  விரவக்  கூறப்பட்டுள்ளன . பொருட்பகுதியாகிய   அரசியல்  முறையைத்  தனிமையில்  விளக்க  எழுந்த  நூல்களுள்,  பிருகற்பதியாகிய  வியாழ  குருவால்  தேவர்கள்  பொருட்டு  இயற்றப்பட்ட   பாற்கபத்தியமும் , உசனஸ்  என்னும்  சுக்கிராசாரி யாரால்  அசுரர்  பொருட்டு   இயற்றப்பட்ட  ஒளசநசமும்  முதலில்  நினைக்கத்தக்கனவாம் .  இவற்றின்பின்  எழுந்தன  சந்திரகுப்தன் காலத்து  அமைச்சராக  இருந்த  சாணக்கியரால்  ஆக்கப்பட்ட  கெளடலியமும் , காமாந்தகனால்  இயற்றப்பட்ட  காமாந்தக  முதலிய  னவும்  ஆம் . இவற்றுள்  இக் காலத்துச்  சட்ட  நூல்  வல்லோராற்  பெரிதும்  தழுவப்படுவது கெளடலியம்  என்னும்  நூலேயாம் . வியழனால்  ஆக்கப்பட்ட  நூலினும்  வெள்ளியாகிய  சுக்கிரரால்  ஆக்கப்பட்ட  நூல்  தென்னாட்டு  வழக்க  வொழுக்கங்  களுக்குப்  பெரிதும்  இயைபுடையதாகும் .  இவற்றின் பின் தோன்றிய  கெளடலிய  நூலின்  தொடக்கத்தில்  அதன்  ஆசிரியர்  பூர்வாசார்ய  வணக்கமாகச்  “சுக்கிர  பிரகஸ்பதிப்யாம்  நம:”  —-  சுக்கிரற்கும்  பிருகற்பதிக்கும்  வணக்கம்”  என்று  கூறியுள்ளார் .  இதனாலேயே  வெள்ளி  நூலின்  விழுப்பம்  புலப்படுவதாகும் .  பிற்காலத்துக்  கவிஞர் பெருமானாகிய  கம்பர் “வெள்ளியும்  பொன்னும்  என்பார்  விதிமுறை வகுத்த  நூலில்”   என்று  முறைப்படுத்திக்  கூறியதும்  இதனை  வலியுறுத்தும் . இங்ஙனம்  சிறந்துள  ஒளசநசத்தின்  சுருக்கமே  ‘சுக்கிரநீதி’   என்னும்  மேற்பொருள்  நூலாகும் .

                இச்  சுக்கிரநீதியைத்  தமிழ் மக்கள்  நலங்குறித்து   மொழி பெயர்த்தபொழுது  யாம்  கண்ட  புதுமைகளும் , பழமைக்குரிய  சான்றுகளும்   பலவாம் . “புதல்வர்ப் பேற்றை  விரும்பும்  பெண்  மக்கள்  வைரமணியை  அணிதலாகாது”  என்று  கூறப்பட்டுள்ளது .  கருவைத்  தடைப்படுத்தற்கு  வைரவொளி  எங்ஙனங்  காரணமாகும்  என்பதைக்  கலவை (இரசாயன)நூலார்  ஆராய்தல்  வேண்டும் . இது  போன்றன  புதியனவாம் . நீர்ப்பொறி,  இசைப்பொறி , காற்றியக்கும் பொறி ,  கம்பி வழிச் செய்தியனுப்புங்  கருவி , நீராவியால்  இயக்கப்படும்  பொறிகள்  முதலிய  இக்  காலத்துக்  காணப்படும்  இயந்திரத்  தொழில்களைப் பற்றியும்  அந்  நூலிற்  கூறப்பட்டுள்ளன . ஆனால் , இவற்றின்  அமைப்பு  முறைகள்  வேறுபட்டிருக்கலாம் .  போர்த்  தொழில்  முறைகளும் , போர்க்கருவிகளும் ,  பொறி  வழியாக  ஆயுதங்களைச்  செலுத்தும்  முறையும் , வெடி மருந்து செய்யு முறையும் ,படைகளின்  அணிவகுப்புக்களும்   பிறவும்  செவ்வையாகக்  கூறப்பட்டுள்ளன .  மக்கள்  இயங்குஞ்சாலை  ( ROAD ) ஆமை  முதுகு   போல   இருக்க  வெண்டுமென்று  குறிப்பிடப்பட்டுள்ளது . ஆமை  முதுகு  இருமருங்கும்  தாழ்ந்து  நடுவிடம்  சிறிது  உயர்ந்திருக்கும் . இது  சாலை வழியிற்  பெய்யும்  மழை  நீரால்  அச்சாலை  கெடாமல்  இருப்பதற்குக்  கருதப்பட்டதாகும் , மேலும் , இந் நூலின்கண்   அரசனியல்பு  ,  அவன்  சுற்றங்களாகிய  அமைச்சர்  முதலியோரியல்பு, வினை  செய்யும்  ஏவலரியல்பு,  கிராம  பரிபாலனம் ,  வாணிக  முறை   நியாய  மன்றங்கள், நீதிபதியின்  அதிகாரங்கள்   வழக்கின்  இயல்புகள்  முதலியன  விளக்கமாகக்  கூறப்பட்டுள்ளன .   

          கரிகாற்  சோழ  அரசனைக்  குடிமக்களுள்  ஒருவனாகச்  சிலப்பதிகாரம்  கூறும். இதனால்  அரசன்  குடி மக்களின்   உயர்ந்தனவாகத்  தன்னை எண்ணலாகாது  என்பது  புலனாகும்.  செங்கோன்மை  தவறாது  செலுத்தும்  நல்லரசற்கு  அரசியற்  காரியம்  தன்னலங்  குறித்ததாகாது ; குடிமக்கள்  நலங்குறித்ததேயாம்.  இங்கே , கோவலனைக்  குற்றமில்  வழியும்  கொலை  புரிவித்த   பாண்டியனைக்  கண்ணகியார்  வெகுள ,  அது  காரணமாகப்  பாண்டியன்  உயிரிழந்தான்  என்று  தண்டமிழ்ப்  புலவர்  சாத்தனார்   செங்குட்டுவற்குக்  கூறினாராக ,  அது  கேட்ட  செங்குட்டுவன்   பாண்டியன்  தவரின்மையையும்  அரசியல்  நடாத்தும்  சிரமத்தையும்  சாத்தனார்க்குக்  கூறுமுகமாக,

“மழைவளங்  கரப்பின்  வான்பே  ரச்சம்

 பிழையுயி  ரெய்திற்  பெரும்பே  ரச்சம் 

குடிபுர  வுண்டும்  கொடுங்கோ  லஞ்சி

மன்பதை  காக்கும்  நன்குடிப்  பிறத்தல்

துன்ப  மல்லது  தொழுதக  வில்லென”

என்று  இளங்கோவடிகள்  கூறியது  நினைந்  தின்புறத்தக்கது .  “அரசன்  குடிகளினிடத்தினின்று  தனக்குரிய   அரசிறையாகிய  வேதனத்தைப்  பெறுதலால் , அக்குடிகளுக்கு  ஏவலாளர்  தன்மையுடையவனாவான்  எனவும் , “பூமரத்தை  வளர்த்து  மலர்  பறித்து  மாலை  கட்டிப்  பயன்  பெறுபவனை  யொப்பக்  குடிகளைப்  பாதுகாத்து  அவர்பால்  அரசிறை  பெற  வேண்டும்”  எனவும்,   அங்ஙனமின்றி  அம்மரத்தை  எரித்துக்  கரி  செய்து  பயன்  பெறுதல்  போலக்  குடிகளைக்  கெடுத்துச் சிறுபயன்  கொள்ளலாகாது”  எனவும்  சுக்கிர நீதி  கூறுகின்றது . இச் செய்திகள்  மிகவும்  பாராட்டற் குரியனவாம் .  

             திருக்குறட்  பொருட்பகுதியில்  அரசர் , அமைச்சர் , படைத் தலைவர் முதலியோரின்   இலக்கணங்களாகக்  கூறப்பட்டனவும்   பிறவும்  யாண்டும்  காண்டற்கரியனவாம் . ஒற்றர்  இயல்பு  கூறுங்கால் ஒற்றும் , நீதி  நூலும்   ஆகிய  இரண்டும்  அரசர்க்கு  இரு  கண்களாகும் என்று  கூறப்பட்டுள்ளது . நாட்டின்  இலக்கணங்  கூறுங்கால் .  ஒரு  நாட்டில் , வாழ்வோர்  தேடி  வருந்தாமல்  வேண்டுவனவெல்லாம்  ஆங்கே  பெறத்தக்கதாக  இருத்தல்  வேண்டும்  என்னும்  கருத்தமைய  “நாடென்ப  நாடாவளத்தன”  என்கிறார் .  பிணியின்மையையும் , நிரம்பிய  செல்வமும் , விளைவும் , இன்பமும் , காவலும்  ஆகிய  இவ்வைந்தும்  நாட்டிற்கு  அழகு  செய்வனவெனும்  கூறப்பட்டுள்ளன . இதனால்  அரசன்  தன்  நாட்டை  இத்தகுதிகளுக்கு  உரியதாக  அமைத்துக் கொள்ள  வேண்டுமென்பது  புலனாகும் . அமைச்சரியல்பு  கூறுங்கால் , வினைத்தூய்மை  ,  வினைத்  திட்பம் , வினை  செயல்  வகை   என  மூன்றதிகாரங்கள்  காணப்படுகின்றன .  இவற்றை  ஊன்றிப்  படிப்பார்குத்  தாம்  செய்ய  வேண்டிய  காரியங்களைப்  பற்றிய  தெளிவு  கல்லெழுத்துப்  போல  நெஞ்சிற்  பதிவதாம் .  திருக்குறளே  யல்லாமல்  நாலடியார் , நான்மணிக் கடிகை , திரிகடுகம்  சிறுபஞ்சமூலம்  முதலிய  சங்கமருவிய   நீதிநூல்களும்  தமிழிற்  பலவுள .  அவையெல்லாம்  மக்கள்  ஒழுங்குமுறைகளை  வரையறுத்துத்  தெளிவுபடுத்துவனவாகும்.

               நாலடியார்  என்னும்  நூல்  கற்பார்  மனதைக்  கவரவல்லது . “ஆலும்  வேலும்  பல்லிற்குறுதி , நாலு  மிரண்டுஞ்  சொல்லிற்குறுதி “  என்னும்  பழமொழியில்  நாலென்பது  நாலடியாரையும்  இரண்டு  என்பது  ஈரடியான்  அமைந்த  திருக்குறளையுங்  குறிப்பனவாம் .  ஒருவன்  சிற்சில  செயல்களிற்  செவிடனாய்க்  குருடனாய்  ஊமை யாயிருத்தல்  வேண்டுமென   நாலடி  கூறுகின்றது . இம் முறை  வியக்கத்தக்கது . இதன்  கருத்து , பிறர்  ரகசியங்களைக்  கேட்பதிற்  செவிடனாகவும் , பிறர்  மனைவியரைக்  காம  நோக்கமாகக்  காண்பதிற்  குருடனாகவும்  பிறரைப்  பற்றிக்  காணாவிடத்துப்  புறங்  கூறுவதில்  ஊமையாகவும்  இருத்தல்  வேண்டும்  என்பதாம் . இங்ஙனம்  சாதுரியமாகக்  கூறுமியல்பு  இந் நூலிற்  பல  விடங்களிற்  காணலாம் . ஒருவன்  மற்றொருவன்பால்  இல்லாத  குணங்களைப்  புகழ்வதினும்  அவனை  வைதல்  நல்லதென்கிறார் .  கடையாயர் , இடையாயர் , தலையாயர்  ஆகிய  இம்  முத்திறத்தாரும்   அஞ்சுதற்குரியன   யாவை  என்னும்  வினாவை  எழுப்பி  விடையிருக்கு முகமாக  கடையார்  பசிக்கு  அஞ்சுவரெனவும் , இடையார்  துன்பத்திற்கு  அஞ்சுவரெனவும் ,  தலையாயர்  பழிச்  சொல்லிற்கு  அஞ்சுவரெனவும்  கூறுவர் .  குலப் பெருமை  பேசுவார்க்கு , “நல்ல  குலமென்றுந்  தீய  குலமென்றுஞ்  சொல்லள  வல்லாற்  பொருளில்லை”  என்றும் , “தவங்கல்வி  ஆள்வினை  என்றிவற்றான்  ஆகும்குலம் “  என்றுங்  கூறுவர் . இன்னோரன்ன  சிறந்த  நீதிமணிகள்  பல  ஒளிசெய்தலை  இந் நூலாகிய  பொற்பேழையிற்  பரக்கக்  காணலாம் .  

               பிற்காலத்து  ஒளவைப்  பிராட்டியார்  அருளிய  ஆத்தி சூடி , வாக்குண்டாம் , நல்வழி  முதலிய  நீதி  நூல்கள்  சிறுவரும்  உணர்ந்து  இன்புறத்தக்க  நிலையில்  அமைந்த பேரறிவாளர்க்கும்  விருந்தாக  விளங்குவன . ‘இயல்வது  கரவேல்’  என்னும்  சூத்திரம்  ஒருவன்  மனமொழி  மெய்களாற்  பிறர்க்குச்  செய்யக்கூடிய  உதவியை  ஒளித்தலாகாது  என்னும்  பொருளை  உட்கொண்ட   இப்பொருளின்  விரிவுகளுக்  கெல்லாம்  நிலைக்  களமாக  நிற்றலை  நோக்குவார்க்கு  இதன்  திட்ப  நுட்பங்கள்  இனிது  விளங்கும் .   

“சில்வகை  யெழுத்திற்  பல்வகைப்  பொருளைச்

 செவ்வன்  ஆடியிற்  செறித்தினிது  விளக்கித்

 திட்ப  நுட்பஞ்   சிறந்தன  சூத்திரம் “

 என்பதனாற்  சூத்திரத்தின்  இலக்கணத்தை  அறியலாம் .  இவ்விலக்கணத்துக்குப்  பெரிதும்  இவ்  ஆத்திசூடிச்  சூத்திரங்கள்  இயைபுடையவாக  விளங்குவன . இந் நூல்  மாபாடியம்  போன்ற   விரிவுரையே  யேற்குந்  தகுதி  வாய்ந்தது . உயர்ந்த  நீதிகலைச்  சிறுவர்  எளிதிலுணர்ந்து  கொள்ளுதற்குப்  பெரும்  புலவர்கள்  பல  நிறமாக  வகுத்து  ஆராய்ந்து உரை  காண்டற்கும்  இஃது  இலக்கியமாகத்  திகழுமாயின் , இதனை  உபகரித்த  தமிழ்ச்  செல்வியின்  அறிவின்  திட்பம்  எத்துணைச்  சிறந்ததாகும்  என்பதை  அறிவுடையார்  உணர்வாராக .

             பண்டை  நீதிநூலார்  கூடிய  வரை  முயன்று  தம்  அநுபவத்திற்  கண்ட  உண்மைகளை  நெடுங்கால  மாயினும்  சிதையாம லிருத்தற் பொருட்டுச்  சூத்திர வடிவிலும்  செய்யுள்  வடிவிலும்  யாத்துள்ளனர் .  அவை  உரைநடையில்  ஆக்கப்படாமை  குறையென்பர்  ஒரு  சாரார் .  முற்காலத்தில்  இவ்வளவு  விரிவாக  அச்சிடுதற்குரிய  கருவிகளில்லை.  கற்பவர்  நெஞ்சத்திலும்   உரைநடையிலும்  செய்யுள்  நடை  நிலைபெற்று  ஞாபகத்துக்கு  நன்கு  பயன்படும் . காலந்தோறும்  மக்கள்  வழக்கவொழுக்கங்கள்   மாறுபடுதல்  இயல்பே .  அம்  மாறுபாட்டிற்கேற்ப  நீதிகளும்  திருத்தப்படுமென்பது  சொல்லாமலே  விளங்கும் .  மகாபாரத்துக் கண்ட சில அறங்கள்  இக்காலத்துக்குப்  பொருத்தமாகக்  காணப்படா . அது  பற்றிப்  பேரறிஞராகிய   வியாச  முனிவர்  இழித்துரைக்கப்படுவாரல்லர் . ஆகவே  எத்தகைய  நீதிகளையும்  காலம்  நோக்கிக்   கொள்ளுதலும்  தள்ளுதலுஞ்  செய்தல்  வேண்டும் . “பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்”  என்பதைக்  கடைப்பிடித்து  மனம்  போனபடி  செய்யத்  துணிதல்  நன்றன்று .  இங்ஙனம்  வடமொழி  தென்மொழிகளிற்  சிறந்த  நீதி  நூல்களை  ஆக்கிய  பெரியாருடைய  இயல்புகளை  இங்கே  கூறியன  கொண்டு  தெளிந்து  கொள்க .

                                 4 .  மாணிக்கவாசகர்

                         (  திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

  செந்தமிழ்ப்  பாண்டி  வள  நாட்டிலே  ,  சைவ  மணங்கமழுந்   திருவாதவூர்  என்னும்  திரு  நகரில் , சிவ  பக்தி மிக்க  அந்தணர்  குலத்தில்  மாணிக்கவாசக  அடிகள்  தோன்றியருளினார்கள் .  இவர்களுக்குப்  பிள்ளைத்  திருப்பெயர்   திருவாதவூரர்  என்பதாம் . இவர்கள்  தோன்றியருளினமையைக்  குறித்துக்  கடவுண்  மாமுனிவர், ‘உலகில்  மாயப்  பொங்கிருளகல   எம்மையாளுடை யான்  அன்ப ரிதய தாமரைக ளெல்லாஞ்  செம்மையாய்  மலர , ஞான  தினகரர்  உதயஞ்  செய்தார்’  என்று   சிறப்பித்துப்  பாராட்டுவர் .  திருவாதவூரர்  இளம்  பருவத்திற்  கருவி  நூல்கள் , அரசியல்  நூல்கள் , சமய நூல்கள் , முதலியவற்றை  ஐயந்திரிபறக்  கற்றுத்  தெளிந்த  அறிவுடையராக  விளங்கினர் .  அக்காலத்து  மதுரையிலிருந்து  தமிழ் நாடு புரந்த  அரிமர்த்தன  பாண்டியன்,  இவர்கள்  அறிவின்  மாண்பை   யுணர்ந்து  அழைத்துத்  தன்  அரசியல்  நடாத்துதற்குரிய  அமைச்சருள்  தலைவராக்கினான் . அவர்கள்  மதிநுட்பம்   நூலோடுடையராய்  அமைச்சருள்   தலைவராக  வீற்றிருந்து  அறநிலை  பேணித்  தம்  செயலாற்று  நாளில் , “நானார் , என்னுள்ளமார் ,  ஞானங்களார்”  என்று  இன்னோரன்ன  தத்துவ  ஆராய்ச்சியில்  தலைப்பட்டு , இருவினைக் கீடாகப்  பிறந்து  இறத்துழலும்  உயிர்த்  தொகுதிகளி னியல்பும் , அவ்வுயிர்களை  வினைப்பயன்  நுகர்வித்து  அருள்புரியும்   பரங்  கருணைத்  தடங்கடலாகிய  இறைவனியல்பும் , அவ்விறைவனை  யுணர்ந்து  இன்பம்  எய்தற்குத்  தடையாகவுள்ள   பாசப் பொருள்களினியல்பும்  உள்ளவாறுணர்ந்து  தெளிவெய்தினர் .  இந்  நிலையில்  அடிகள்  “கூத்தினர்  தன்மை  வேறு , கோலம்  வேறாகுமா போல்”பாண்டியன்  இட்ட  பணியைப்  புறத்தே  மேற்கொண்டும்  அகத்தே  பற்றற்றும்  சிவபத்தியில்  ஈடுபட்டு  ஒழுகுவாராயினர் .

            அந்நாளில்  பாண்டியற்குக்  குதிரை  வாங்கப்  பொன்  கொண்டு  சென்றவர் , திருப்பெருந்துறையில்  குருந்த  மரத்து  நீழலில் , இவர்  பந்தமறும்  எல்லையது  பார்த்தினிதிருந்த  , சிவபரம்  பொருளாகிய  குருபரனைத்  தரிசித்து  உள்ளங்கரைந்து  உலகியலை  மறந்து , “உன்னடியடைந்து  நாயேன்  உறுபவம்  ஒழித்தல் வேண்டும், என்னுயிர்க்கிறைவா”  என்று  முன்னுற  வணங்கி  நின்றார் .  இவர்  அதி  தீவிர  பக்குவ  நலையைக்  கண்டு  பெருமான்  அருள்  கூர்ந்து  சிவஞான  போதமென்னுஞ் சைவத்  தலை  நூலின்  நுண் பொருளைத்  தெளிவுறுத்திய  பின் , “இருவினைப்  பாசமும்  மலக்கல்  லார்த்தலின், வருபவக்  கடலின்வீழ்  மாக்களேறிட  , அருளுமெய் யஞ்செழுத்தை  அநுபவ  நிலையில்  உபதேசித்தருளினார் . இங்ஙனம்  குருபரன்  பாலுணர்ந்த  தம் அநுபவத்தையே  ,’ நானேயோ  தவஞ்  செய்தேன்  சிவாய  நமவெனப்  பெற்றேன் “  என்று  அடிகள்  திருவாய்  மலர்ந்தருளினார் .

          இவ்வாறாகப்  பாண்டியன்  பொருட்டுக்  குதிரை  வாங்கப்    போனவர் தொன்னுறு  பரி  கொளாமல்   கோவணங்கொண்ட  செய்தியைப்  பாண்டியன்  கேட்டு , ஓலைபோக்கி , அடிகளை  அழைப்பித்துத்   துன்புறுத்தினானாக .  அடிகள்  தஞ்  செயலற்று  எல்லாம்  இறைசெயலாகக்  கண்டிருப்பவராதலின், அவ்விறை  நினைவில்  ஈடுபட்டிருந்தனர் . பின்னர் , இவர் பொருட்டு  இறைவன்  நரியைக்  குதிரைப்  பரியாக்கி  ஞாலமெல்லாம்  நிகழ்வித்தும் , மண்  சுமந்தும் , பிரம்படியுண்டும் , அடிகள் பால்  தாம்  கொண்ட  அருட்டிறத்தை  உலகுக்கு  விளக்கியருளினார் . அடிகள்  திருவரு ளமிர்தத்தை  நிறைய  வுண்டு  , சிவாநுபவச்  செல்வராக  விளங்கிய  நிலையில் , “யான்  பெற்ற  இன்பம்  பெறுக  இவ்  வையகம்”  என்ற  முதுமொழிப்படி  தம்  அருளநுபவத்தை  உலகத்துள்ள  மக்களுக் கெல்லாம்   வழங்க  ஆண்டவன்  அருள்  வழி  நினைந்து  திருவாசகம்  என்னும்  இசைப்பாடற் றொகுதியைத்  திருவாய்  மலர்ந்தருளினார் .  

            உலகப்  பற்றை  முழுதும்  துறந்த  உத்தமச்  சிவஞானச்  செல்வர், தமக்கு  இறைவன்  அருளிய  ஒப்புயர்வில்லாப்  பேரின்ப  நிலையைத்  தாம்  அநுபவித்த  அளவில்  நின்று  விடாது , உலகத்து  மக்களுக் கெல்லாம்  உபகரிக்க  நினைந்தது  பெரிதும்  பாராட்டத்தக்கது . இல்வாழ்வார்க்கு  அன்பென்னும்  அருங்குணமும்  துறவற வாழ்க்கை  யுடையார்க்கு  அருளென்னும்  பெருங்குணம்  சிறப்பாக  இருத்தல்  வேண்டும்  என்பர்  திருக்குறளாசிரியர் .  மாணிக்கவாசகப்  பெருமான்  இவ்விரு  பெருங்  குணங்களுக்கும்  நிலைக்களமாக  விளங்கிய  பெரியராவர் .

               இவர்  மேற்கொண்ட  நெறி , சரியை  கிரியை  யோகங்களுக்கு  மேலான  ஞான  நெறியாகிய  சன்மார்க்கமாகும் .  இந் நெறியில்  நின்ற  அடிகள் , காணப்படும்  இவ்வுலக  வியல்புகளைத்  தம்  கூர்த்த  மதியால்  உய்த்துணர்ந்து , பருப் பொருளாகிய  மாயா  காரியங்க ளெல்லாம் தத்தங்  கால  வெல்லையில்  அழித்தழிந்து  தேய்ந்தொழிவன  என்னும்  உண்மையையும் , இவ் வெல்லாவற்றையும்  கன்மங்களுக் கீடாகப்  படைத்தும் , காத்தும் , கரந்தும்  விளையாடும்  பேராற்றல்  வாய்ந்தது . கால  வெல்லையைக்  கடந்து  நிற்கும்  கடவுள்  ஒருவருளர்  என்பதையும் , அப்பெருமான்  சார்ந்தார்க்குத்  தண்ணிழலாய்ப்  பேரின்ப  வடிவாகத்  திகழும்  இயல்பினர் என்பதையும்  உள்ளவாறுணர்ந்து , அப்பெரும்  பெயர்க் கடவுள்  உபதேசத்தால் , தாம்  யெய்திய  பேரானந்தப்  பெருஞ்  செல்வத்தைத்  தம்  சோதரராகிய  மக்களெல்லோரும்  துய்க்க  வேண்டுமென்னும்  பேரருளுடையராய்த்   திருவாசகம்  என்னும்  தெளிதேனைப்  பொழியும்  அருண்முகி லாயினர் .   

                 திருவாசகப்  பாடல்களில்  மாணிக்க வாசக அடிகளுடைய   சிவாநுபவ  நிறைவில்  பொங்கித்  ததும்பி வெளிப்பட்ட  முது வெள்ளமெனின்  மிகையாகாது . பிற்காலத்துச்  சிவயோக  நெறி  நின்று  இறையருளநுபவத்தில்  ஈடுபட்டு   ஒழுகிய  தாயுமான அடிகள்  “என்புருகி  நெஞ்சம்  இளகிக்  கரைந்து  கரைந்து , அன்புருவாய்  நிற்க அலைந்தேன் பராபரமே “  என்று  கூறியதற்கு  இலக்கியமாகவுள்ளவர்  மாணிக்கவாசக அடிகளே.  இவர்கள்  அன்பு  நெறியை  வியந்தே  ‘வாதவூர்  ஐயன்  அன்பை  வாஞ்சிப்பதெந்நாளோ’  என்றுங்  கூறினர் .   படிப்பவர்  கேட்பவர்  உள்ளங்களைக்  கனிவிக்கும்  கவிமழை  பொழிந்த  சமீப காலத்துக்  கவிஞர்  தலைமணியாகிய  இராமலிங்க  அடிகள்   , திருவாசகத்தைப்  பன்முறை  யோதி யுணர்ந்து  பயின்றவர்  என்பது  அவர்  அநுபவப்  பாடல்களால்  அறியலாம் .  ஒரு  சிறந்த  கவியினுள்ளத்தை  மற்றொரு  கவிதான்   உனரமுடியும் .  அந்நிலையில்   திருவாசகப்  பாடல்களில்  உள்ளந் தோய்ந்து பொருள்  நயங்களில்  ஈடுபட்ட  இராமலிங்க  அடிகள் ,

“வான்கலந்த  மாணிக்க  வாசகத்தின்  வாசகத்தை

நாங்கலந்து  பாடுங்கால்  நற்கருப்பஞ்  சாற்றினிலே

தேங்கலந்து  பால்கலந்து  செழுங்கனித்தீஞ்  சுவைகலந்து

ஊன்கலந்து  உயிர்கலந்து  உவட்டாமல்  இனிப்பதுவே “

என்று  கூறினர் .  ‘நான்  கலந்து  பாடுங்கால்’  என்றது  நினைக்கத் தக்கது .  ஒரு  பெரியார்  பாடலைப்  படிப்பவர்கள்  உள்ளமும்  அப்பாடற் பொருளும்  அத்துவித  நிலையடைதல்  வேண்டும் .  அங்ஙனம்  ஒன்றுபடுதலையே  ‘நான்  கலந்து  பாடுங்கால்’  என்றனர் .  திருவாசகச்  சுவை   ‘ஊங்கலந்து  உயிர்கலந்து  இனிப்பது ‘  என்றார் .  உயிரிற்கலந்து  தன்வயமாக்குங்  கனிவு  திருவாசகத்துக்குச்  சிறப்பியல்பாகும் .  தேன்  பால்  முதலிய  உவமைகளானன்றித்  திருவாசகச்  சுவையி னியல்பை  உள்ளபடி  கூறுக  என்பார்க்கு  விடையாக ,

“காமமிகு  காதலன்றன்  கலவிதனைக்  கருதுகின்ற

ஏமமிகும்  கற்புடையாள்  இன்பினும்  இன்பாயது” 

என்று , சொல்லொணாமையைக்  குறிப்பிட்டார் . இதற்கு  மேல்  அவ்வநுபவச்  சுவையை  எடுத்துக் கூறுதற்கு  எங்ஙனம்  இயலும் !  

               திருவாசக  திருப்பாடல்களை  ஒளடவ  ராகமாகிய  மோகனத்திற்  பொருளுணர்ந்து  பாடுவாராயின் ,கல்நெஞ்சமும்  கரையும் . “திருவாசகத்துக்கு  உருகாதார்  ஒரு  வாசகத்த்துக்கும்  உருகார்”  என்னும்  மூதுரையும்  இது  பற்றி யெழுந்ததே  கவிஞர்பெருமானாகிய  சிவப்பிரகாச  அடிகள் ,

“வாதவூ  ரன்பர்  மலர்வாய்ப்  பிறந்த

திருவா  சகமிங்  கொருகா  லோதில் 

கருங்கல்  மனமுங்  கரைந்துக்  கண்கள்

தொடுமணற்  கேணியிற்  சுரந்து  நீர்  பாய

அன்ப  ராகுந  ரன்றி 

மண்பதை  யுலகில்  மற்றைய  ரிலரே “

என்று  தம்  ஆராமையை  வெளிப்படுத்தினார் . இன்பக்  கலைகளுள்  ஒன்று  இசையென்பர்  அறிவுடையோர்   அவ்விசைக்குக்  கொழுக்கொம்பு  பொல  ஆதாரமாக  நிற்பது  இசைப்பாடல்களும் , சுவை  கனிந்த  பாடல்களிலன்றி  இசையின்  பெருமையை  உணர்தல்  இயலாது . இசை  பாடுபவன்  சுவைகளை  அநுபவித்த  உட்கோளைப்  புலப்படுத்துதர்குச்  சிறந்த  பாடல்களே  பற்றுக் கோடாகும் .

“வேதத்  தொலிகொண்டு  வீணை  கேட்பார்

 வெண்காடு  மேவிய  விகிர்தனாரே “

என்னும்  தமிழ்  மறையில்  யாழிசைக்கு  வேதப் பாடல்கள்  பற்றுக்கோடாக  விளங்கின  என்பது  புலனாகும் .  தமிழ்  நாட்டில்  இசைக்  கலை  வளர்ச்சி  யடைந்த  காலம்  தேவார  திருவாசக காலம்  என்பது  யாவர்க்கும்  உடன்பாடாகும் . ‘நாளும்  இன்னிசையால்  தமிழ்பரப்பும்  ஞான சம்பந்தர்’  என்றும்,  ‘கானத்தின்  எழுபிறப்பு’  என்றும்  திருஞானசம்பந்தர்  பெருமை  கூறப்படுகிறது .  திருவாசகப்  பாடல்களின்  சொற்களையும்  எழுத்துக்களையும்  சுரநிலங்களில்  அமைத்துப்  பாடினால்  சுரங்களுக்குப்  பாடல்  அமைந்ததோ  பாடல்களுக்குச்  சுரம்  அமைந்ததோ  என்று  இசைவல்லார் பெருவியப்பெய்துவர் .  பிறவிப்  பிணிக்குச்  சார்ந்த  மருந்தாகவுள்ள  அரும்  பொருள்களைப்  பாடல்களில்  அமைத்து  இசையாகிய  அநுபானத்தோடு  ஊட்டுதற்கு  முற்பட்டவர்  மணிவாசகப்  பெருந்தகையாவர் .

              இவர்கள்  பற்பல  சிவ   தலங்களுக்குச்  சென்று , ஆங்காங்குக்  கோயில்  கொண்டு  எழுந்தருளியிருக்கும்  இறைவனை  உள்ளத்தமைத்துப்  பாடும்  முகமாகத்  தம்  அநுபவ  உணர்வை  அன்பர்களுக்குத்  தெளிவாகப்  புலப்படுத்தியுள்ளார் .  எங்கும்  நிறைந்த  பரம்பொருளைச்  சில  இடங்களில்  மாத்திரம்  உள்ளதாகக் கொண்டு  பாடியது  பொருந்துமோ  எனின் ,  ஒரு பசுவின்  உடல்  முழுதும்  பால் பரவியிருப்பினும்  , அது  தோன்றுதற்குரிய  உறுப்பினன்றிப்  பிறிதிடத்து   வெளிப்படாதவாறு  போல , மக்கள்  வழிபாட்டிற்கிரங்கி  அருள்  புரிதற்கு   அருட்குறிகளின்  முகமாக  ஆண்டவன்  வெளிப்பட்டு  அருளுவர் .  இவ்வுணர்ச்சி  மேற்கொண்டே ,

பார்பதம்  அண்டம்  அனைத்துமாய்  முளைத்துப் 

 பரந்ததோர்  படரொளிப்  பரப்பே “ 

என்னும்  திருப்பாட்டின்  இம்  முற்பகுதியில்  இறைவனுடைய  எங்குநிறை  இயல்பைக்  கூறிப்  பிற்பகுதியில்  ,

“சீருறு  சிந்தை  யெழுந்ததோர்  தேனே

 திருப்பெருந்  துறையுறை  சிவனே

என்று  தம்  அகத்தும்  சிவ  தலத்தும் வெளிப்படும்  உண்மையைப்  புலப்படுத்தியுள்ளார் . இங்கே  எங்கு  நிறை  நிலையில்  ஒளிப்பரப்பா கவும் , உள்ளத்தில்  இனிக்குந்  தேனாகவும்  ,  திருக் கோயிலில்  மங்கலகரமான  மூர்த்தியாகவும்  பெருமான்  விளங்குவர் என்னும்  பொருணயம்  நினைந்து  இன்புறத் தக்கது .

          ஆண்டவன்  அமைப்பாகிய  அன்பு , அருள் , அறிவு  முதலிய  அரிய  குணங்களில்  ஈடுபடுத லன்றி , மக்களமைப்புக்களாகிய  சாதி  குலம் , பிறப்பு , பொருள்  முதலியவை  பற்றிய  உயர்வு  தாழ்வுகளைச்  சிறிதும்  நம்  மாணிக்கவாசகனார்  கருதியவரல்லர் . இவ்வுண்மை யைப்  புலப்படுத்துதற்கே , ‘சாதி  குலம்  பிறப்பென்னுஞ்  சுழிப்பட்டுத்  தடுமாறும்   ஆதமிலி  நாயேன்”  என்று  தம்  முற்பட்ட  இயல்பையும் , ‘குலங்  களைந்தாய்  களைந்தாய்  என்னைக்  குற்றம்’  என்று  இறைவனுக்குத்  தாம்  ஆளாய  பிற்பட்ட  இயல்பையும்  கூறுவாரா யினர் . மக்களுக்குக்  குலப்பெருமை  பேசுதல்  இயல்பென்பதும் , அதனால்  உண்டாகுஞ்  செருக்கு  ஒழியின் ,  அது  மூலமாக  உண்டாகும்  எல்லாக்  குற்றங்களும்  நீங்கி  விடும்  என்பதும்  அவர்கள்  கண்ட  உண்மைகளாம் . உடல் , பொருள் , ஆவி மூன்றனையும்  இறைவனுக்குரிய  பொருள்களாகக்  கொடுத்து , அவற்றில்  ஒரு  சிறிதும்  பற்றின்றி  ஒழுகுதலை  மேற்கொண்டன ராதலின்  ஏதும்  இடர்ப்பாடு  அடைந்திலர்  என்பது  விளங்கும் .

            ஒருவன்  எவ்வெப்   பொருள்கலிற்  பற்றொழிந்திருக்கின்றானோ, அவ்வப்  பொருள்களால்  வரும்  துன்பத்திற்கு  ஆளாகான்  என்பது  பெரியவர்கள்  கண்ட  உண்மை .அடிகள்  விருப்பு  வெறுப்பற்ற  நிலையில்  நின்றார்களெனினும்  மக்கள்  பாலுள்ள  சோதர  உரிமையை  விட்டவரல்லர் . அதற்குக்  காரணம்  அன்னாரெல்லாம்   தாம்  பெற்ற  பேரின்பப்  பெருவாழ்வில்  தலைப்பட  வேண்டுமென்னும்  கருணையேயாகும் .  இவ்வருளறத்தை  மேற்கொண்டே  , ‘காலமுண்டாகவே  காதல்  செய்துய்ம்மின்’   என்றும் , ‘மூலபண்டாரம்  வழங்குகின்றான் வந்து  முந்துமினே’  என்றும் ,  ‘முழுதுலகும்  தருவான் கொடையே வந்து  முந்துமினே’  என்றும்  உலகத்தவரை  நோக்கி  அருளமுதத்தை  உடனுண்ண  அழைப்பாராயினர் . அவர்  அன்புடன்  விடுத்த  அழைப்பிற்  கிணங்கி  வாராத  மடவோரை , உலக  நிலையா மையை  யுணர்த்தி  அஞ்சுவித்தாயினும்  அழைத்து  ஊட்ட  வேண்டு மென்னும்  அருள்  நிறைவால் , ‘நிற்பார்  நிற்க  நில்லா  உலகில்  நில்லோ மினி  நாம்  செல்வோமே’  என்று  திருவாய்  மலர்ந்தருளினார்.

                 இனி , அடிகள்  உலகியலைக்  கடந்த  நிலையில்  நின்று  மறையோனாகிய  இறைவன்  அருள்  வெள்ளத்துள்  மூழ்கிப்  பேரின்ப  நிலையில்  தடைப்பட்டு  அநுபவித்த  உண்மைகளெல்லாம்  மனம்  வாக்குகளுக்கு  அடங்காதனவாகவும் ,  அவற்றைப் பதிகரணமாக  மாறப் பெற்ற  நம் உள்ளத்தால் அறுதியிட்டுத்  தெள்ளமுத உரைகளால்   அறிவிற்  சிறியாரும்  உணர்ந்து  இன்புறும்  வண்ணம்  இசையினிமை  மிக்க  பாடல்  வடிவில்  வெளிப்படுத்திய  முறை  மிகவும்  பாராட்டற் குரியது .  அம்மானை , பொற் சுண்ண  மிடித்தல் , உந்தி , சாழல் , தெள்ளேணம் , ஊசல்  முதலிய  மகளிர்  விளையாடல்களில்  , அவர்  தம்முள உரையாடு  முகமாக , அரிய  அநுபவ  உண்மைகளை  எளிய  முறையில்  தெளிவுபடுத்தியது .  அடிகள்  ஏனைய  மக்கள்பால்  வைத்த  பெருங்  கருணைக்குப்   பெரிது  சான்றாவதாம் .  குயிலை  முன்னிலைப்படுத்தி  இறைவன்  அருட்குணங்களை  இங்ஙனம்  கூவுக  எனவும்   வேண்டுகோளை  நோக்கி  இங்ஙனம்  ஊதுக  எனவும் , அருளிச்செய்த   திருப்பாடல்களை  நோக்குங்கால் , ஓசையொலி யெல்லாம்  சிவமயமாகக்  கண்டார்  என்பது  புலனாம் .  

              தாம்  அநுபவித்த  பொருட்களின்  வரையறையும் , தெளிவும் , குழைந்த  அன்பின்  கனிவும்  ததும்ப  இடையறாது  ஒழுகும்  தேனருவி  போன்ற  ஒழுக்கமிக்க  இவர்கள் பாடல்களின்  இயல்பை  நம்மனோர்  எங்ஙனம்  எடுத்துரைக்க  இயலும் !  ஆயினும்  இவற்றிற்கெல்லாம்  எடுத்துக்காட்டாக, சிறிய  வடிவிலமைந்த  ஒரு  திருப்பாடலைக்  குறிப்பிடலாம் என்று  எண்ணுகின்றேன் . அஃதாவது ,

“இன்பம்  பெருக்கி  யிருளகற்றி  யெஞ்ஞான்றும் 

 துன்பம்  தொடர்வறுத்துச்  சோதியாய் —  அன்பமைத்துச்

சீரார்  பெருந்துறையான்  என்னுடைய  சிந்தையே 

 ராகக்  கொண்டா  னுவந்த “ 

என்பதாம் .  சுவை  மிக்க  அமிர்தத்தைப்  பெய்து  வைத்தற்குரிய  கலத்தில்  அவ்வமிர்தத்திற்கு மாறுபட்ட  பொருள்  இருத்தலாகாது . இருக்குமாயின் , முதலில்  அதனை  அறவே  ஒழித்து  விட  வேண்டும் . பின்னர் , அக்கலத்தை  உரிய  கருவி  கொண்டு  அழுக்கொழித்துத்  தூய்மைப்படுத்த வேண்டும் . அதன்பின் , நல்லமிர்தத்தைப்  பெய்து  வைத்தல்  முறயாம் . இஃது  உலகியலிற்  கண்டது . இவ்வண்மையை  நினைவு  கூர்ந்த  அடிகள்  இத்திருப்பாடலில்  ஓர்  அரிய  அநுபவத்தை  வெளியிடுவராயினர் . இறைவனார்  தம்  அருளமிர்தத்தை அடிகள்  உள்ளமாகிய  கொள்  கலத்தில்  பெய்து  வைக்கத்  திருவுளங்  கொண்டு , அதன்கண் நீண்ட  காலமாக  ஈட்டப்பட்டு  நிறைத்து  வைத்த  மாயாகாரியப் பொருள்களாகிய  துன்பங்களை  அறவே  ஒழித்துப் , பின்  மயக்க  உருவமாகப்  படிந்து  கிடந்த  இருளைத்  தன்  அருட்பார்வை  யொளியாற்  போக்கிப்  பேரின்பமாகிய  அருளமிர்தத்தைப்  பெய்து  இன்புறுத்தினாரென்பதும் . அந் நிலையில் அடிகள்  உள்ள  முழுதும்  அன்பு  மயமான  குளிர்ந்த  இடமாக  அதன்கட்  பெருமாள்  வீற்றிருந்தருளினரென்பதும்  இதன்கட்  புலனாம்  படி ,  “சோதியாய்  நின்று  இருளகற்றித்  , துன்பந்  தொடர்வறுத்து இன்பம்  பெருக்கி , அன்பமைத்து  என்னுடைய  சிந்தையே  ஊராகக்  கொண்டான் “  என  நிரனிறைப்  பொருள்கோளாக   அழகு  பொருந்தத்  திருவாய்  மலர்ந்தருளினார் .

           இங்ஙனம்  மாணிக்க வாசக  அடிகள்  நம்மனோர்  உய்யும்  பொருட்டுத்  தாம்  அநுபவித்த  சிவானந்தத்  தெள்ளமுதைச்  சொல்லினிமை  பொருளினிமைகளிற்   சிறந்த  பாடல்  வடிவில்  வெளிப்படுத்தருளிய  பேருபகாரத்தை  நினைவு  கூர்தற்கு  அறிகுறியாக  நாம்  மேற்கொள்ளத்தக்கது , அப்பாடல்களை  இசை  நலம்  பொருந்த  மெய்யன்போடு  ஓதியும்  உண்மைப்பொருள்களை  உணர்ந்தும்  இன்புறுதலேயாம் .  அன்பே  சிவம்  எனும்  அரிய  பொருளுரை  மக்கள்  உள்ளத்தில்  நிலவுவதாக .

                      5 .  சங்க   காலத்து   அங்கதம்

                       (  திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

         ஆங்கில  மொழியில்    SATIRE  (செடயர்)  என்பது  தமிழில்  அங்கதம்  என்று  வழங்கப்படும் .  தமிழிற்  காலத்தால்  முற்பட்ட   தொல்காப்பியம்  என்னும்  இலக்கன  நூலில் , இவ்வங்கதம்  பற்றி  வந்த  செய்யுளின்  இலக்கணமும்  வகையும்  இன்னவென ,

“வசையொடும்  நசையொடும்  புணர்ந்தன்  றாயின்

 அங்கதச்  செய்யு  லென்மனார்  புலவர்”

“அங்கதந்தானே  அரில்தபத்  தெரியின்

 செம்பொருள்  கரந்த  தெனவிரு  வகைத்தே”

“மொழிகரந்து  சொல்லினது  பழிகரப்  பாகும் “

என்னும்  இவை  முதலிய  சூத்திரங்களால்  தெளிய  உரைக்கப்பட்டன . ஒருவனுடைய  குறையையோ  ஒரு  சமூகத்தாரின்  குறையையோ  , அன்னார்  நெஞ்சில்  உறுத்தும்  வண்ணம் வெளிப்படையாகவும்  குறிப்பாகவும்  கூறுதல்  அங்கதமாகும் .  அங்ஙனங்  கூறுங்கால்  நகைச்  சுவை  தோன்றக்  கூறுதல்  இன்புறத் தக்க  தொன்றாகும் .

             இவ் வங்கதம் , வெளிப்படையாகக்  கூறுதல் , கரந்தமொழியிற்  கூறுதல்  என  இரு  வகைப்படும்  என்பது  முதற்கூறிய  இரண்டாம்  சூத்திரத்தால்   அறியப்பட்டதொன்று .  வாய்  காவாது  சொல்லும்  வசையே  இங்குச்  செம்பொருளங்கதம்  எனப்படும்  .  இதனைச்  செவியாலநுபவிக்கப்படுஞ்  சொற்சுவை  பொருட்சுவைகளை  யுணராது  வாயால்  நுகரப்படும்  உணவின்  சுவையிலேயெ  ஈடுபடும்  மனிதர்  செத்தால்  வரும்  இழப்பும்  வாழ்ந்தால்  வரும்  பேறும்  இன்மையால்  உலகிற்கு  அவரால்  வருவது  யாது ? என்னும்  பொருள்  தோன்றக்  கூறிய ,

“செவியிற்  சுவையுணரா  வாயுணர்வின்  மாக்கள்

  அவியினும்   வாழினு  மென் ?”

 என்னுந்  திருக்குறளால்  அறியலாம் .  இங்ஙனம்  வெளிப்படையாகக்  கூறல்  நீதி  நூற்று  இயல்பாகும் .  கவிநயந்  தோன்றக்  கூறற்குக்  கரந்த  மொழியாற்  கூறலே  சிறந்ததாகும் .  இதனையே  இங்கே  குறிப்பிட்ட  இறுதிச்  சரித்திரம்  புலப்படுத்தும் .  வசைப்பொருளினைச்  செம்பொருள்  படாமலிசைப்பது   பழிகரப்பங்கத  மென்று  பெறப்பட்டமையால்   இதுவே  SATIRE  என்று  கூறுவதற்குப்  பொருத்தமாகும் . இப்பகுதிக்கும்  திருக்குறளிற்  பல  சான்றுகள்  உள்ளன . 

“தேவரனையர்  கயவர்  அவருந்தாம்

 மேவன  செய்தொழுகய  லான் “

என்னுந்  திருக்குறளில் , நெஞ்சத்து  அவல மில்லாத  வஞ்சக்கயவர்  சாதாரண  மண்ணுலக  மக்களுக்கு  ஒப்பாகார் ;  ஆனால்  அவர்கள்  உயர்ந்த  விண்ணுலகத்து  வாழும்  தேவர்க்கு  ஒப்பாவார் .  எதனாலெனின் ,  தேவர்கள்  தம்மை  நியமிப்பாரின்றி  எண்ணியவற் றைத்  தாமே  செய்தொழுகுதல்  போல , கீழ் மக்களும்  நல்லன  தீயன  ஆராயாது  தாம்  விரும்புவனவற்றை  விலக்கற்பாடின்றிச்  செய்தொழுகும்  இயல்புடைமையான்  என்று  குறிக்கப்பட்டுள்ளது .  மறைந்த  மொழிகளாற்  கயவருடைய   கயமைக்  குணங்களை   நகைச்சுவை   தோன்ற  இடித்துரைக்கும்  வள்ளுவர்  வாய்மொழியின்  மாண்பு  இங்கே  நினைக்கத்தக்கது .  

         வசை  யெடுத்துக்  கூறுங்கால்  அவ் வசையுடையயார்  அஃதொழிந்து  திருந்த வேண்டும்  என்னும்  நோக்கத்தாற்  கூறுதல்  நன்று .  அந்  நோக்க மின்றியுங்  கூறலாம் .  இவ்விலக்கண  அமைதிப்படி , சங்க  நூல்களிற்   காணப்படுங்  குறிப்புக்களை  ஆராய்தல்  இன்பம்  பயப்பதொன்று . தொகை  நூல்களிற்  சிறந்த  புறநானூறு  என்னும்  சங்கச்  செய்யுளில்  , ஒளவையார்  என்னும்  கவியரசியின்  புலமை  நலத்தைப்  பாராட்டாதாரிலர் .  தமிழ்   நாட்டு  முடியுடை  மூவேந்தராலும்   குறுநில  மன்னராலும்  போற்றப்பெற்று  வாழ்ந்த  ஒளவைப்  பெருமாட்டி  சேரர்  குலத்தவரின்  உறவினனும்  மழவர்  என்னும்  வீரர்களுக்குத்  தலைவனும்   கடை வள்ளல்களில்  ஒருவனும்  ஆகிய  அதியமான்  நெடுமானஞ்சியினிடத்துப்  பெரிதும்   அன்புடையராய்  ,  அவனால்  ஆதரிக்கப்பட்டிருக்குங்கால் ,  காஞ்சி  நகரத்திருந்த  தொண்டைமான்  என்னும்  அரசனிடம்  தூது  விடுக்கப்பட்டு   அவன்பாற்  சென்றார் . தொண்டைமான், தன்  வீரத்தையும்  படைப்பலத்தையும்  ஒளவையார்  கண்டு  விம்மிதங்  கொள்ள  வேண்டுமென்னும்   இறுமாப்புடையனாய்  ஒளவையை  நன்கு  வரவேற்றான் ;  ஆயுத  சாலையாகிய  படைக்கலக்  கொட்டிலைக்  காட்டினான் . அங்கே  வேல்  வாள்  முதலிய  படைகள்,  திரண்ட  அழகிய  கைப்பிடிகளை  யுடையனவாய்  எண்ணெய்  பூசப்பட்டு  மயிலிறகு  மாலை  முதலியன  அணியப்பட்டுக்  காவலை யுடைய  அகன்ற  அழகிய  கட்டிடத்தில்  எவரானுந்  தொடப்படாமல்  வைக்கப்  பெற்றிருத்தலைக்  கண்டு   வியந்து  கூறுவார்  போன்று   செருக்கு  மிக்க  தொண்டைமான் நெஞ்சில்  உறுத்தும்  வண்ணம்  ஓர்  அழகிய  பாடலைக்  கூறினர் .  அப்பாடற் பகுதி ,

“இவ்வே ,

 பீலி  அணிந்து  மாலை  சூட்டிக் 

கண்டிர  ணோன்காழ்  திருத்திநெய்   யணிந்து

கடியுடை  வியனக  ரவ்வே  யவ்வே 

பகைவர்க்   குத்திக்  கோடுநுதி  சிதைந்து 

கொற்றுறைக்  குற்றில   மாதோ”

என்பதாம்  . இதன்கண், அதியமான்  அடிக்கடி  அஞ்சாது  செய்யும்  போர்ச்  செயலில்  தலைப்படுவதால்  அவனுடைய  படைகள்  போரிற்  பயன்படுத்தப்பட்டுப்  பகைவரைக்  குத்தியதால்  கங்கும்  முனையும்  சிதைந்து  கொல்லனது  பணிக்   களரியாகிய  சிறிய   கொட்டிலின்  கண்  உள்ளன  என்றும் , தொண்டைமான்  அத்தகைய  போர்ச்செயலில்  தலைப்படாமல்  அஞ்சி  யொழுகும்  இயல்பினனா தலின்  அவன்  படைக்கலங்கள்  எத்தகைய  சிதைவுமின்றி  எண்ணெய்  பூசப்பட்டு  வனப்புடன்  அழகிய  மாளிகையில்  தூங்குகின்றன  என்னும்  கூறிய  அழகு  இன்புறத்தக்கது .  தொண்டைமானுடைய  ஆயிதங்களைப்  புகழ்ந்து  கூறுதற்போற்  பழித்து  அவன்  வசையைக்  குறிப்பிற்  கூறிச்  செருக்கொழியச்  செய்த  கவியரசியாரின்  திறமை  பாராட்டத்தக்கது .  

இன்னும் ,

“உவர்க்கட  லன்ன  செல்வரு  முளரே

 கிணற்றூற்  றன்ன  நீயுமா  ருளையே”

என்று  ஒரு  புலவர்  ஒரு  கொடை  வள்ளலைப்  புகழ்ந்து  கூறுமுகமாக , கொடாத  பெருஞ் செல்வரை இழித்துக் கூறினார் . சிலர்  பரந்த செல்வ முடைய ராயினும்  அச்  செல்வம்   பிறர்க்குப்  பயன்படாது   என்பது  தோன்ற , ‘உவர்க்கட லன்ன’  என்று உவமை  கூறப்பட்டது .  இது  விளக்கமாகப்  பிறிதோரிடத்துத் , 

தெண்ணீர்ப்  பரப்பின்  இமிழ்திரைப்  பெருங்கடல் 

 உண்ணா  ராகுப  நீர்வேட்டோரே

என்று  கூறப்பட்டது . செல்வப் பரப்புடையேம்  எனச்  செருக்குறுவார்க்கு  இது  சுடு  சொல்லாகும் .

            ஏனாதி  திருக்கிளி  என்பானை  மதுரைக் குமரனார்  என்னும்  புலவர் பாடிய  ஒரு  பாடலில் , அவனுடைய  பகையரசரைப்  பழித்துரைத்த  செய்தி  வியக்கத்தக்க  முறையில்  அமைந்துள்ளது .  அப்பாடல்  வருமாறு :

“நீயே , அமர்காணின்  அமர்  கடந்தவர்

 படை  விலக்கி  யெதிர்   நிற்றலின் 

வாஅள்  வாய்த்த  வடுவாழ்  யாக்கையொடு

கேள்விக்  கினியை  கட்கின்  னாயே

அவரே , நிற்காணிற்  புறங்கொடுத்தலின் 

ஊறறியா  மெய்யாக்கையொடு

கண்ணுக்  கினியர்  செவிக்கின்  னாரே

அதனால் , நீயும் ஒன்  றினியை  அவருமொன்  றினியர்

ஒவ்வா  யாவுள  மற்றே  வெல்போர்க் 

கழல்புனை  திருந்தடிக்  கடுமான்  கிள்ளி 

நின்னை  வியக்கமிவ்  வுலகம்ஃது

என்னோ  பெரும  வுரைத்திசின்  எமக்கே “

இப் பாடற் கருத்து :

           அரசே !  நீ  போரைக்  காணின் , அப்  போரை  வென்று  பகைவரது  படையை  விலக்கி  எதிர்  நிற்றலான்  , அவர்  வாட்  படையால்   வடுபட்ட  உடலுடனே  கூடியிருத்தலின்   காண்பார்  கண்ணுக்கு  அழகுடையை யல்லை ;  கேட்ட  செவிக்கு  இனியை ,  நின்  பகைவரோ , போரில்  புறமுதுகிட்டோடுதலால்   உடம்பில்  யாதொரு  வடுவுமில்லாராய்க்  கண்ணுக்கு  இனியராவர் .; கேள்விக்கு  இன்னாராகுவார் .  அதனால்   நீயும்  ஒன்று  இனியை ; அவரும்  ஒன்று  இனியர் . இங்ஙனம்  நீயும்  நின்  பகைவரும்  ஒப்புடைய ராகும்  நிலையில் , நின்னை  வியக்கும்  இவ்வுலகம்  அஃது  என்னோ  பெரும! என்பதாம் .  பகைவர்  உடம்பில்  வடுப்படாமையால்  ,  பிறர்   கேள்விக்குப்  பழி  மிக்குடையராக  வுள்ளார்  என  அவர்  வசை  ஒரு வகை  நயந்  தோன்றக்  கூறப்பட்டது . இங்கே  நீயுமொன்றினியை  யவரு  யொன்றினியர்  ‘எனத்  தோற்றோடியவரைப்  புகழ்வது  போலப்  பழித்திருக்கும்  செய்தி  வியக்கத்தக்கதொன்று .  

         இனிச்  சங்கத்துச்  சான்றோர்  நூல்களுள்  அகப் பொருள்  பற்றி  எழுந்த  பாடல்களில் , இவ்வங்கதக்  குறிப்புக்கள்  பற்பல  இடங்களில்  மிக  நயம்படக்  கூறப்பட்டுள்ளன . கற்றறிந்தாரேத்தும்   கலித்தொகை  என்னும்  நூலில்  ,  மருதத்  திணை  பற்றிய  ‘வண்டூது  சாந்தம்  வடுக்கொள  நீவிய’  என்னும்  பாடற்  பகுதி  ஈண்டுச்  சிந்தித்து  இன்புறத்தக்கது .  பரத்தைபாற்  சென்று  வந்த  தலைமகனை  அது  குறித்து  ஊடல்  மேற்கொண்ட  தலைமகள்  , “நீ  புறத்துப்  போய்க்  கண்ட  வினோதம்  என்னை ?”  என்றாளாகத்  தலைவன்  , “யாமிருவரும்  இனிமேல்  மேற்கொள்ளத்தக்க   வானப்பிரத்த  வாழ்க்கைக்கு  உதவியாயிருக்கும்  முனிவரைக் கண்டு  அவரிடத்தே  தங்கினேன்”  என்றான் . அது  கேட்ட  தலைவி , “சோலையின்  கண்ணே மலர்  சூடிய  மான்  பேட்டினை  ஒத்தவராய்க்   கடவுட் டன்மை  உள்ளவராக  உன்னாற்  கருதப்படுவார்  பலருள் , எக்கடவுளிடம்  தங்கினாய் ? “  என்று  கேட்டாள் . அவட்கு  அவன் , நம்  மண   வாழ்க்கைக்கு  நன்னாள்  வாய்ப்பச்  சொன்ன  அந்தக்  கடவுள்  காணென்று  தன்  பரத்தைமையை  மறைத்து  மீண்டுங்  கூறினானாக. அது  கேட்ட  தலைவி  , “நீ  கூறியது  எனக்கும்  ஒக்கும்”  எனத்  தனது  ஒவ்வாமைத்  தோன்றக்  கூறுவாளாய்  , “ஐய ! தலையைச்   சாய்த்து  நாத்  தடுமாற  நீ  கூறிய  சொற்களாளேயே   நீ  அகப்பட்டுக் கொண்டாய் .  நீ  கண்ட  கடவுளரியல்பை  உண்மையாக  யான்  கூறுவேன் ; அதனைக் கேட்பாயாக’  எனத்  தொடங்கி  ,

“பெறனசை  வேட்கையி  நிங்குறி  வாய்ப்பப்

பறிமுறை  நேர்ந்த  நகையராய்க்  கண்டார்க்கு

இறுமுறை செய்யும்  உருவொடு  நும்மில்

செறிமுறை  வந்த  கடவுளைக்  கண்டாயோ?”

எனவும் ,

“நறுந்தன்  தகரமும்  நாணமும்  நாறும்

நெறிந்த  குரற்கூந்தல்  நாளணிக்  கொப்ப

நோக்கிற்  பிணிகொள்ளுங்  கண்ணோடு  மேனாணி

பூப்பலி  விட்ட  கடவுளைக்  கண்டாயோ ! “

எனவும் ,

“கண்ட  கடவுள்  தம்முளு  நின்னை

வெறிகொள்  வியன்மார்பு  வேறாகச்  செய்து

குறிகொளச்  செய்தார்  யார் ….

சிறுவரைத்  தங்கின்  வெகுள்பவர்

எனவுங்  கூறினாள் . 

இப்பாடற்  பகுதியின்  பொருள்  பின்வருமாறு : 

           ‘உன்னைப்  பெற வேண்டு மென்னும்  விருப்பத்தால்   நீ  குறிப்பிட்ட  குறியிடத்தே  தம்பால்  வந்து  முளைத்த  பற்களை  யுடையவராய்க்  கண்டவர்களுக்கு  மரணத்  துன்பத்தை  யொத்த  மயக்கத்தைச்  செய்யும்   வடிவுடையராய்  நின்  இல்லிடத்தே  சேரும்  முறைமையினையுடைய   கடவுளரைக்  கண்டாயோ?’  என்பதும் , பார்வையாலே  தம்  வயப்படுத்துங்   கண்கள்  வருத்துதலால் , மணமிக்க  குளிர்ந்த  மயிர்ச் சாந்தமும்  புகழும்  மணக்கும்  கரு மணல்  போன்ற  நெருங்கிய  கூந்தலுக்கு  நாட்காலத்துச்  செய்யும்  அலங்காரத்துக்குப்  பொருந்த  முதல்  நாளே  மலர்களைத்  தூவி  வழிபடப்  பெற்ற  கடவுளைக்  கண்டாயோ?”  என்பதும் ,  “அங்ஙனம்  கண்ட  கடவுளருள்  நின் மனத்தை  வேறாகப்  பண்ணி  வானப்பிரத்த ஆச்சிரமத்தை  மேற்கொள்ளச் செய்த முனிவரர் யாவரோ? அவர்பாற்  செல்லாது  சிறிது  பொழுது  நீ  இங்கே  தங்கினும்  அவர்  வெகுள்வர் ;  ஆதலின் , அவ்விடத்தே   செல்வாயாக’   என்பதும்  ஆம் . இப்பகுதியில் , தலை மகன்  பரத்தையர்  பாலொழுகிய  தீயொழுக்கத்தைக்  கடிந்து  அவன்  திருந்தியொழுக  வேண்டுமென்னுங்  கருத்தினளாய்த்  தலைவி  குறிப்பிற்  கூறிய  வசைமொழி  புலப்படுதலின்  இதுவும்  பழி கரப்பு  அங்கதத்தின்பாற்  படுவதாகும் .

      ஐங்குறுநூறு   என்னும்  சங்கச் செய்யுளில்  உள்ளுரையாகக்  கூறப்பட்ட  பாடற்  பகுதிகளில்  ,  இச்சுடு சொல்லாகிய  அங்கதம்  பல  இடத்தும்  நகைக்  குறிப்பு  தோன்றப்  புலப்படுத்தப்பட்டுள்ளது .  பரத்தமையாகிய  புறத்தொழுக்கத்திலே  ஒழுகி  வந்த  தலைமகனை  நோக்கி ,  தோழி  தன்  விருப்பம்  இன்னதெனக்  கூறுமுகமாக  ,

“ பூத்த  கரும்பிற்  காய்த்த  நெல்லிற்

 கழனி   யூரன்  மார்பு

பழன  மாகற்க  எனவேட்  டேமே “ 

எனக்  கூறினள் . இதன்கண் ,  பூத்து  பயன்படாக்  கரும்பினையும்  காய்த்துப்  பயன்படும்  நெல்லினையும்  உடைய  ஊரன்  என்றது ,  ஈன்று  பயன்படாப்  பொதுமகளிரையும்   குழந்தை  பெற்றுப்  பயன்படும்  குல  மகளிரையும்  ஒப்பாக  நினைப்பவன்  தலைவன்  என்று  அவனுடைய  குறை  வருணனைக்  குறிப்பில்  புலப்படுக்கப் பட்டுள்ளது . இன்னும் ,

“கரும்புநடு  பாத்தியுட்  கலித்த  ஆம்பல்

 கரும்புபசி  களையும்  பெரும்புன  லூர்”

என்று  தலைவனை  அழைக்கு  முகமாகப்  ‘பரத்தையர் தங்குதற்கு உரிய  இல்லில்  யானிருந்து  விருந்தினர்  முதலியோரை  உபசரிக்கலா னேன் ‘   என்று  தலைவி  தலைவனது தீயவொழுக்கத்தைக்  கடிந்து அவள்  நெஞ்சுற  உணர்த்தியது  புலனாம் .  இங்கே  கரும்பு  நடுவதற்காக  அமைக்கப்பட்ட  பாத்தி  என்றதனால்  , தலைவனுக்கு உகந்த  விலை  மாதர்  தங்குதர்குரியது இவ்வில்லம்  என்பதும் ,  அப்பாத்தியில்  தானே  தோன்றி  வண்டுகளின்  பசியைப்  போக்கும்   ஆம்பல்  என்றதனால் ,தலைவன்  விரும்பாத  நிலைமையில் தான்  அவ்வில்லத்தின்கண்  இருந்து  இயன்றவாறு  இல்லறம்  நடத்துபவள்  என்பதும்   இவ் வருணனையில்  உள்ளுரையாகப்  புலப்படுக்கப் பட்டுள்ளன .  

             அகநானூறு  என்னும்  அழகிய  சங்க  நூலில்  மருதத் திணை  பற்றிய  செய்யுளொன்றில் , பரத்தையர்  சேரியினின்றும்  வந்த  தலைமகன்  ,  யாரையும்  அறியேனென்றானாக, அவன்  தீயவொழுக்கத்தைத்  தலைவி  பிறிதொரு  நிகழ்ச்சியால்  அவன்  மனத்திற்  பதிய  அறிவுறுத்திய  செய்தி  பின்வருமாறு :  “ஐய !  மழலை  மொழியுடைய  இளம்  புதல்வனைத்  தேர்  வழங்கு  தெருவிற்  கண்ட  ஒருத்தி ,அப் புதல்வன்  நின்  உருவோடு  ஒத்து  விளங்குதலைக்  கண்டு  விரும்பி  அங்கே  அப்பொழுது  யாரும்  இல்லாமையால்  ‘என்  கண்ணே  வருக !” என்று  கூறிப்பெரிதும்  மகிழ்ந்து  தழுவி  எடுத்துக்  கொண்டாள் .அந் நிலையில்  ,  யான்  அங்கே  சென்று  ,”குற்றமற்ற சிறியவளே !  ஏன்  மயங்குகிறாய்  ?இவனுக்கு  நீயும்  தாயே  ஆவாய் “  என்று  கூறினேனாக , அது  கேட்டு  அவள் , தாம்  செய்த  களவு  பலர்  முன்னிலையில்  வெளிப்பட  உடன்பட்டு  நின்றாரைப்  போல  நாணமுற்றுத்  தலை  கவிழ்ந்து  நின்றாள் .  அந்  நிலையில்  அவளும்   நின் மகனுக்குத்  தாயாவாளெனக்  கொண்டு  அவளை  உபசரித்தே னன்றே “  என்று  தலைமகள்  கூறியதாகும் .இதன்கண்  தலைவனது  தீயவொழுக்கத்தைத்  தலைவி  கரந்த  மொழியிற்  பெற  வைத்தது  இன்புறத்தக்கது .

                          இனிப்  பெருங்காப்பியங்கள்  ஐந்தனுள்  ஒன்றாகிய   சீவக சிந்தாமணியில்  சச்சந்தன்   என்னும்  அரசன் , விசயை  என்னும்  தன்  மனிவியின்  காதல்  வயப்பட்டு   கட்டியங்காரன்  என்னும்  அமைச்சன்பால்  அரசியலை  விட்டு  இடையறாது   போக  நுகர்ச்சியில்   தலைப்பட்டானாக  , அந்நிலையில்  அத்தீய  அமைச்சன்  அரசனைத்  தொலைத்து  நாட்டாட்சியைத்  தன்னதாக்க  முயன்று  தன்  அமைச்சர்  பலரோடு  சூழ்ந்து  ஆலோசிக்கும்  மளவில்  தருமதத்தன்  என்னும்  நல்லமைச்சன் , இது  தகாத  காரியம்  என்று  பற்பல  நீதிகளை  எடுத்துரைக்க , அவன்  உரைகளை  மறுத்து  மதனன்  என்பான்  கட்டியங்காரன்  கருத்துக்கு  ஒத்த  முறையிற்  கூறியதாகவுள்ள  செய்தி  பின்வரும்  செய்யுளிற்  காணப்படும் .

“தோளினால்  வலிய  ராகித்  தொக்கவர்  தலைகள்  பாற

 வாளினாற்  பேச  லல்லால்  வாயினாற்  பேசல்  தேற்றேன்

 காளமே  கங்கள்  சொல்லிக்  கருணையாற்  குழைக்குங்கைகள்

வாளமர்  நீந்தும்  போழ்து  வழுவழுத்  தொழியு  மென்றான் “

       இதன்கண்  பின்  இரண்டடிகளும்  இங்கே  நினைக்கத்தக்கன . “போர்ச்  செயலைப்  பற்றிய  வீரவுரைகளைக்  காளமேகம்  போல  முழங்கக்  கூறி   அச்  செயலில்  தலைப்பட  நேர்ந்த  பொழுது   அஞ்சுவார்க்குப்  பொரிக்  கறிகளோடு   சோற்றைத்  திரட்டும்  அவர்  கைகள் அப்போர்க்கடலை  நீந்துதற்கு  இயலாது   வழுவழுத்  தொழியும்  போலும் “  என்று  போர்  குறித்துப்   பின்வாங்குவோரைச்   சுடு  சொல்லார்  பழித்துக்  கூறியதும்  அங்கத்தின்பாற்  படுவதாகும் .

                                6   .   காதற்   கடிதங்கள்

                      ( திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

          காதல்  என்பது  ஆடவர்  மகளிர்  இருவரும்  உலக  வாழ்க்கையில்  அறநெறி   பிறழாதொழுகி  இன்ப  நுகர்தற்குரிய  சிறந்த  குணமாகும் .  காதல்  காமம்  என்னும்  இரண்டனுள்,  காமம்  இழிந்த  நிலையில்  நிகழ்வதென்பதும் , காதல்  உயர்ந்த  நிலையில்  நிகழ்ந்த  தன்  வயப்பட்டாரை  எத்துணை  இடையூறு  நேரினும்  பிறழவிடாது  பிணித்து  இன்பத்தினும்  துன்பத்தினும்   பகிர்ந்தநுபவிக்கச்  செய்து  நெடிது  நிலைத்திருப்பதென்பது   அறிஞர்  கண்ட  உண்மைகளாம் . ஆடவர்  மகளிர்  கூடி  நுகரும்  இன்பத்தின்  இயல்பை  விளக்க  நினைத்த பெரியார் , “எஞ்ஞான்றும்   காதலிருவர்  கருத்தொருமித்து — ஆதரவு  பட்டதே  இன்பம்”  என்று  கூறினர் .  காமம்  பற்றி  ஆடவர்  மகளிரை  முறையே  காமுகன்  காமுகதி  என்று  கூறுதலினும்  காதல்  பற்றிக்  காதலன்  காதலி  என்று  கூறுதல்  அறநிலைக்கொத்த  சிறந்த  வழக்கென்பதையுங்  காணலாம் . தமிழ் மொழியிற்  சங்க  இலக்கியங் களாக  உள்ள  அகநாநூறு  குறுந்தொகை  முதலிய  அகப்பொருட்  பகுதியை  நுதலிய  நூல்களெல்லாம்  இக் காதலியல்பை  விளக்க  எழுந்தனவாம் . அறம் பொருள்  இன்பங்களை   அகம்  புறம்  என  வகுத்த  தமிழ்  இலக்கண  நூலாசிரியர்கள் , முன்னைய  இரண்டையும்  புறமெனவும்  பின்னையதாகிய  இன்பநிலையை  அகமெனவுங்  கொண்டு  பாகுபாடு  செய்தனர் . அகப்  பொருளிற்  காதலையும்  புறப் பொருளில்  வீரத்தையுமே  சிறந்தனவாக  எடுத்து  விளக்கியதனாலும்  இக்  காதலின்  பெருமையை  உணரலாம் . ஆடவர்  மகளிர்  இருவரும்  முதலில்  வாழ்க்கை  யின்பத்தில்  தலைப்படுதற்கு  ஒருவர்  பாலொருவர்  மேற்கொள்ளுங்  காதலே  சிறந்த  கருவியாம் . முதலில்  காதல்  முகிழ்த்தற்கு  ஏதுக்கள் , உடல் வனப்பு , அன்பு , அறிவு  முதலிய  சிறந்த  குணங்கள்  என்னும்  இவை  முதலியனவாம் . சில  விடங்களிற்   காதலின்  தோற்றத்திற்குக்  காரணங்  காண்டல்  அரிதாகவும்  முடியும். இக் காதல்  வயப்பட்டார்  ஒன்று  கூடுதற்கு  நீங்காத  தடை  நேரின் , அது  காரணமாகச்  சாதலும்  அவர்  பக்கல்  இனிதாகும்  என்பது  சரித்திரங்களாற் கண்டதொன்று .  

      ஆடவர்  மகளிர்  ஒருவரை  யொருவர்  காதலித்துத்  தம்முட்  கூட்டம்  நிகழ்த்தற்கு  முன்னரும் ,  கூட்டம்   நிகழ்ந்து  எக்காரணத்தாலாவது  பிரிவு  நேர்ந்த  பின்னரும்  இக் காதற்  சிறப்பு  ,  உடல்  வேறு  உயிர்  ஒன்றெனக்  கருதத்தகும்   தொடர்புடையார்க்கன்றி  வெளிப்படுத்து  நிலையில்  உள்ளதன்று .  ஆடவர் , தம்  இன்னுயிரனைய   பாங்கர் பாலும் ,  மகளிர்  கண் போற்  சிறந்த  உயிர்த்  தோழியரிடத்துமன்றி  வெளிப்படுத்துவரல்லர் .  இதன்  இயல்பைச்   சீவக சிந்தாமணி  நூலாசிரியர் ,  ‘சென்றே  படினும்  சிறந்தார்கு  உரைக்கலாவதன்று ‘  என்றார் . இதன்  கருத்து ,  இறப்பு  நேரினும்  தாயர்  முதலியோர்க்கும்  கூறத்தக்க தொன்றன்று   என்பதாம் .  காதல்  முதிர்ந்த  இடத்துக்  காதலிக்கப்பட்டாரைப்  பெறாத  நிலையில் , காணப்படும்  வெளியெல்லாம்  அன்னார்  உருவமாகவே  காண்பர்  என்பதை  அகப்  பொருட்டுறையில்  “எதிர் பெய்து பரிதல்”  என்று  இயல்  நூலாசிரியர்  கூறுவர் . விமலை யென்னும்  ஓர்  இளநங்கை , பந்து  விளையாடி னாளாக, அப்  பந்து  புறவெளியில்  வீழ்ந்தது  கண்டு  அதனை  எடுக்கச்  சென்றவள்  சீவக  குமாரன்  என்னும்  கட்டழகனைக்  கண்டு ,

“பெண்பா  லவர்கட்  கணியாய்ப்  பிரியாத  நாணுந்

திண்பால்  நிறையுந்  திருமாமையுஞ்  சேர்ந்த  சாயல்

கண்பாற்  கவினும்  விளையுங்  கவர்ந்திட்ட  கள்வன்

மண்பா  லிழித்த மலரைங்கணை மைந்த  னென்றாள்”

           இங்ஙனக்  கருதிக்  காதல்  வயப்பட்டனளாக   அந்நிலையில்  அவளைக்  கண்ணுற்ற  சீவகனும் ,

பூவுண்ட  கண்ணாள்  புருவச்சிலை  கோலி  யெய்ய

ஏவுண்ட  நெஞ்சிற்  கிடுபுண்மருந்தி  தெங்கொ  லென்னா

மாவுண்ட  நோக்கின்  மடவாளை  மறித்து  நோக்கிக்

கோவுண்ட  வேலான்  குழைந்தாற்றல  னாயி  னானே

                இங்ஙனம்  ஆற்றலனாய்த்  தான்  கண்ட  வெளிநில   மெல்லாம்  அக்காதலின்  வடிவழகே  தன்  கட்பொறிகளுக்குப்  புலனாகக்  கண்டு ,

“பைங்கண்  மணிமகர  குண்டலமும்  பைந்தோடும் 

திங்கள்  முகத்திலங்கச்  செவ்வாய்  எயிறிலங்கக் 

கொங்குண்  குழல்தாழக்  கோட்டெருத்தஞ்  செய்தநோக்

கெங்கெங்கே   நோக்கினும்  அங்கங்கே  தோன்றுமே

என்று  காதலிற்  கனிந்து  கூறியதாக  ஆசிரியர்  கவி  வடிவில்  தீட்டிய  ஓவியம்  அறிஞருள்ளத்தைக்  கனிவிப்பதாகும் .  இதனுள்  “கோட்டெருத்தஞ்  செய்த  நோக்கு”  சாய்ந்த  கழுத்துத்  தந்த  பார்வை  என்னும்  பொருளதாகும் . அவள்  தன்னை  நோக்குங்கால்  கழத்தைச்  சிறிது  சாய்த்துப்  பார்த்ததைக்  கண்டானாகலின் , அத்  தோற்றமே  அவன்  உள்ளத்தைப்  பிணித்ததென்றார் .  இது   வியக்கத்தக்க  தொன்று .   

                பிறிதோரிடத்துக்  குணமாலை  யென்பாள் , ஒரு  பெண்கள்  திலகம் , நீராடித்  திரும்புங்கால்  ஒரு  யானையால்  தாக்கப்படும்  நிலையில்  சீவகுமாரன்  சென்று  தன்  ஆண்மையால்  அவ் யானையை  அடர்த்து விலக்கி  அவளைப்  பாதுகாத்துச்  செல்ல  விடுத்தானாக , அந் நிலையில்  இருவர்க்குங்  காதல்  ததும்பியது .

“கன்னிய  ருற்றநோய்  கண்ணனார்க்கு  மஃது

 இன்னதென்  றுரையலர்  நாணி  னாதலால்

கைக  ளாற்சொலக்  கண்களிற்  கேட்டிடும் 

மொய்கொள்  சிந்தையின்  மூங்கையு  மாயினேன் .”

என்று  அவள்   கருதுவாளாயினாள் .  மூங்கை  என்பது  ஊமையாகும் . இங்கே  ஊமையின்  இலக்கணத்தை  ஆசிரியர்  ,  “கைகளாற்  பேசக்  கண்களாற்  கேட்பது  என்றும் , உள்ளச்  செய்திகளை  வெளிப்படுத்திப்  பேச  இயலாமையால்  நினைவு  பலவாக  நிறையுமாதலின்  “மொய்கொள்  சிந்தை”  என்றுங்  கூறியது  நினைந்து  இன்புறத்தக்கது  இங்ஙனம்  குணமாலை  நினைவும்  செயலும்  காதல்  வயப்பட்டுருகும்  நிலையில் , 

“வெஞ்சின  வேழ  முண்ட  வெள்ளிலின்  வெறியமாக

நெஞ்சமும்  நிறயும்  நீல  நெடுங்கணாற்  கவர்ந்த  கள்வி

என்று  அவள்  கண்ணோக்கத்தால்  காதல்  வயப்பட்டுப்  பிரிந்த  சீவகுமாரன் , தனித்திருந்து  தன்  உள்ளத்தில்  திகழும்  அவள்  அழகிய  உருவத்தை  ஓவியத்தில்  வரைய  எண்ணினான் .  அவள்  உடலுறுப்புக்கள் ஆடையணி முதலியவற்றின் நிற வேற்றுமைகளுக்கு, அவ்வந்திறத்து   இரத்தினங்களைப்  பொடித்துக்  கரைத்துப்  பசையூட்டி  வண்ணக்  குழம்பாக்கி , அக்குழம்பில்  துகிலியைத்   தோய்த்து  ஓர்  ஆடையில்  ஓவியம்  எழுதுவானாயினான் .   அங்ஙனம்  எழுதுங்கால் , அவள்  யானைக்கு  அஞ்சி  மேற்கொண்ட  நடுக்கமும் , அந்நிலையில்  தன்னை  நோக்கிய  காதல்  நோக்கமும்  அவ்வடிவில்  ஒருங்கு  புலப்படத்  தீட்டினான்  என்று  கவி  திறம்படக்  கூறுகின்றார் .  

“கூட்டினான்  பணிபல  தெளித்துக்  கொண்டவன்

 தீட்டினான்  கிழிமிசைத்  திலக  வாணுதல்

வேட்டாமல்  களிற்றிடை  வெருவி  நின்றதோர் 

நாட்டமும்  நடுக்கமும்  நங்கை  வண்ணமே “

இப்பாட்டில்  ஒன்றுக்கொன்று  முரணாகவுள்ள  அச்சத்தையும்  காதலையும்  ஒரு  வடிவிற்  புலப்படுத்தியதாகச்  சீவகனது  ஓவியநூற்  றிறமையை  ஆசிரியர்  நன் கு  புலப்படுத்தியுள்ளார் .  இச்சித்திரத்தில்  நங்கையின்  காட்சியில்  தான்  திளைத்து  மேற்கொண்ட  காதற் பெருக்கே  இங்ஙனம்  உள்ளபடி  வரைவதற்குக்  கருவியாயிற்றென்பது  தெளியத்  தக்கது .  

       இங்ஙனம்  கண்ணனாருக்கும்  இன்னதென்று  வாக்கால்  உரைக்க  இயலாத  காதலின்  இயல்பை  ஒத்த  காதலர்  இருவர்  தம்முட்  கூடுதற்கு  முன்னும் , கூட்டத்தின்பின்  பிரிவு  நேர்ந்த இடத்தும்  பிறர்  வாயிலாகவன்றிக் கடித  மூலமாக  ஒருவருக்கொருவர்  புலப்படுத்திக் கொள்ளுதல்  முற்காலத்தும்  நிகழ்ந்ததுண்டு .  காப்பியச்சுவை  நலத்தில்  திளைத்துப்  பாடும்  கவிகள்  மூலமாகவே  அக்காதற்  கடிதங்களின்   இயல்புகளை  வெளிப்படக் காணலாம் .  காதலர்  இருவர்  கருத்தொருமித்துப்  பிறர்  அறியாதவாறு  தம்  உள்ளத்து  நினைவுகளை  மறைமுகமாக  வெளிப்படுத்துள்ளாராயினும் , அச்   செய்தியை  நம்மனோர்  அறிவிற்கு  விருந்தாக  வெளிப்படுத்து  அளித்து  இன்புறுத்தியவர்கள்  புலவர்  பெருமக்களே  யாவர் .  இங்கே  வடமொழியிற்  சிறந்த  காளிதாச  மகா கவியும்  ,  செந்தமிழ்  மொழியிற்  சிறந்த  இளங்கோவடிகள்  என்னும்  புலவர்  பெருமானும்  முறையே  தாம்  மேற்கொண்ட  “சாகுந்தலம்”  என்னும்  சுவை  மலிந்த  நாடகத்தினும்   “சிலப்பதிகாரம்” என்னும்  தீந்தமிழ்க்  காப்பியத்தினும்  காதற்  கடிதங்களை  வெளிப்படுத்தியுள்ளார் .   

         இவ்விரு  பெருங்காப்பியங்களினும் , அக்கடிதம்  எழுதினார்  இருவரும் , பெண்மக்களேயாவர் .  இருவருள்  சகுந்தலை  என்னும்  பெண்மணி , துஷய்ந்தன் என்னும்  வேந்தர்  பெருமானைக்  கானகத்திற்  கண்ட  அளவிற்  காதல்  வயப்பட்டு  அந்நிலையை  எவ்வாறு  அரசர்க்குப் புலப்படுத்தலாமென்று , ஆராய்ந்து  கொண்டிருக்குங்கால் , தன் உயிர்த் தோழியால் அறிவிக்கப்பட்டுக்  காதற்  கடிதம்  எழுதத்  தொடங்கினாள் .  இஃது  அக்  காதலிருவரும்  தம்முட்  கூட்டம்  நிகழ்த்துதற்கு  முன்  நிகழ்ந்தது .  சிலப்பதிகாரத்துக் கண்ட  மாதவி  யென்னும்  நங்கையர்  திலகம்  கோவலனோடு  கூடி  இன்புற்று  ஒரு  காரணத்தால்   அவன்   தன்னைப்  பிரிய  நேர்ந்த   பொழுது , அப் பிரிவாற்றாமையைப்  புலப்படுத்து  முகமாக  ஒரு  காதற்  கடிதம்  எழுதலாயினாள் .  இது  காதலர்  கூட்டம்  நிகழ்ந்தபின்  எழுதப்பட்டதாகும் .  அக்கடிதங்களிரண்டும்   அவ்வப்  பாத்திரங்களுக் கேற்ற   முறையில்  அமைந்துள்ளன . அக்கடிதப்  பாசுரங்களுள்  சகுந்தலை  கடிதம்  வருமாறு :  அதன்  பொழிபெயர்ப்பாவது , 

“நின்னுடைய  உள்ள  நிலையறியேன்  நின்பாலே 

  மன்னுடைய  வேட்கை  மலிவுற்ற  — –  என்னுறுப்பைக்

 காமன்  இரவும்  பகலும்  கனற்றுகின்றான்

 ஏமரு ளில்லா  யிவன் “

என்பதாம் . ‘அருளில்லாத  அரசே !  நின்பாற்  கொண்ட  வேட்கை  மிக்க  உடலுறுப்புக்களை  மன்மதன்  இரவும்  பகலும்   எரிக்கின்றான் ; இந் நிலையில்  நினது  உள்ளத்தின்  நிலை  இன்னதென்று  அறிந்திலேன்’  என்பது  இப்பாடலின்  கருத்து .  இனி  மாதவி  கோவலனுக்கு  எழுதிய  கடிதம்  வருமாறு  : 

“மன்னுயி  ரெல்லாம்  மகிழ்துணை  புணர்க்கும்

இன்னிள  வேனில்  இளவர  சாளன்

அந்திப்  போதகத்  தரும்பிடர்த்  தோன்றிய

திங்கட்  செல்வனும்  செவ்விய  நல்லன்

புணர்ந்த   மாக்கள்  பொழுதிடைப்  படுப்பினும் 

தணந்த  மாக்கல்  தந்துணை  மறப்பினும்

நறும்பூ  வாளியின்  நல்லுயிர்  கோடல்

இறும்பூ  தன்றிஃ  தறிந்தீமின் “

என்பதாம் . ‘ உலகத்திலுள்ள  உயிர்களை யெல்லாம்  தாம்  மகிழுந்  துணையோடு  புணர்விக்கும்  இனிய  இளவேனிலாகிய  வசந்தனென்பான்  இளவரசனாவான் .  ஆதலால் , ஒழுங்குபடச்  செய்யான் .  அன்றி , அந்திப் பொழுதின்  கண்ணே  அரும்புகின்ற   விரக  விதனத்தின்  மேலே  வந்து  தோன்றிய  திங்களாகிய  செல்வனும் பிறப்பினுங்  கோட்டமுடையன்  ஆதலால் , கூடினோர் இடையே  சிறிது  தாழ்ப்பினும்  பிரிந்தோர்  மறப்பினும்   மணமிக்க  பூவாளிகளால் , இன்ப  நுகரும்  அவ்வுயிரைக்  கொண்டொழிதல்  அவனுக்குப்  புதியதொரு  காரியம்  அன்று . அதனை  அறியுங்கள்  என்பது  இப்பாசுரப்பகுதியின்  கருத்தாம் .

          சகுந்தலை  எழுதிய  கடிதம்  கிளியின்  வயிறு  போன்ற  பசுமை  மிக்க  மெல்லிய  தாமரையிலை  யாகும் . அதன்கண் ,அவள்  தன்  கைந்  நகங்களையெ  எழுதுகோலாகக்  கொண்டு  எழுத்துக்களைப்  பதித்தனள் என்பர் .  தாமரையின்  மெல்லிய  இலைகளால்  அவள்  வெம்மை  தணிய  அப்பொழுது  தோழியர்  விசிறிக்  கொண்டிருந்தனராதலின் ,  அவள்  இருந்த  இடத்தில்  கிடைத்த  தாமரையிலையே  எழுதுதற்குரிய கடிதமாயிற்று .  எழுதுகோல்  தேடுதற்கு அவகாசம் இன்மையாற் கைந் நகங்களாற் பதிக்கலாயினாள் .

           மாதவி  கடிதமாகக்  கொண்டது , முதிர்ந்த  அழகிய  தாழையினது  வெள்ளிய  இதழாகும் .  மாதவி  காவிரிப்பூம்பட்டினத்து  உள்ள  ளாதலானும் , அப்பட்டினம்  கடற்கரைக்  கண்ணதாதலானும் , நெய்தல் நிலத்துக்  கருப்பொருளாகிய  தாழை  மடலைக்  கடிதமாகக்  கொண்டாள் . அம்மடல் ,  நல்ல  நிறமும்  பளபளப்பும்   நறுமணமும்  , காய்ந்துலர்ந்தாலும்  கெடாத  வன்மையும்  உடையது .  எழுதுகோல்  பித்திகைக்  கொழுமுகை  ஆணி  என்றதனால் ,  நறுமணமுள்ள  பூவரும்பின்  முனையாகும் .  மை  செம்பஞ்சின்  குழம்பாகும் . ஆகவே  வெண்ணிறமான  தாழையிதலிற்  செந்நிறமான  குழம்பில்  பூவரும்பின்  முனை  கொண்டு  எழுதப்பட்ட தென்பதும் , இக் கருவிகள்  காதற்  குறிப்பிற்  கேற்றபடி  இன்பம்  விலைவிக்கும்  பொருள்களாக  அமைந்தன  என்பதும்  புலனாம் . எழுதிய  பெண் மக்கள்  இருவருள் , சகுந்தலை  அரச  குலத்தினனால்  கைப்பற்றத்  தக்கவளாயினும்  , அந்தணர்  ஆச்சிரமத்தில்  வளர்ந்தவலாவாள் . காதற்  பயனுக்கு  அநுபவமில்லாப்  புதியவளுமாவாள் .  ஆதலின்  அவள் , மன்மதன்  பகலும்  இரவும்  சுடுகின்றான் ; நின்  கருத்தறிந்திலேன் என  வெளிப்படத்  தீட்டினாள் .  தன்  கருத்தைக்  குறிப்பாற்  புலப்படுத்தினால்  தனக்குப்  புதியவனாகிய  வேந்தன்  பொருள்  வேறு  கொண்டு  புறக்கணிக்கவுங்  கூடும்  என்னும்   ஐயத்தால் , விளக்கமாக  எழுதினா ளென்று  கொள்ளலாம் . ஒருவரையொருவர்  மன நிலை அறியாத  நிலையில்  எழுதப்படுங்  கடிதத்தில் , குறிப்பு மொழி தெளிவாகப்  பொருள்  விளக்கஞ்  செய்யாதாகலிற்  பயனின்றி  யொழியவுங்  கூடும்  ஆதலானும் ,பிறரறியாமற்  காதலிக்கப்பட்டா னொருவனே  பார்க்கக்  கூடுமென்னுந்  துணிவானும்  இங்ஙனம்  விளக்கமாக  எழுதப்பட்டுள்ளது .  முடிவாகத்  தன் வேட்கையைப்  புலப்படுத்தி  இதற்குப்  பரிகாரமாகச்  செய்ய  வேண்டிய  காரியத்தில்  நின்  கருத்து  இன்னதென்று  அறிந்திலே னென்று  சகுந்தலை  எழுதியது பொருத்தமே . தாமரையிலைக்  கடிதம்  எழுதியதும் , காதலனாகிய  வேந்தன்  தாழாது  வெளிப்பட்டானாதலால்  மிகு  விரைவில்  வாடத்தக்க  அவ் விலையின்  பயன்  வீணாகவில்லை  .

             இனி , மாதவி  கணிகையர்  குலத்தவள்; கோவலன்பால்  சிறந்த  காதற்கிழமை  பூண்டொழுகியவள் ; அவள்  கடிதம்  எழுதியது  முன்  அவனோடு  கூடி  அநுபவித்த  பின்னரேயாம் . அந் நிலையில்  அவன்  உள்ளத்தைப்  பன்னாட்  பழகி  அறிந்தவலாதலின் , தன்  கருத்தைக்  குறிப்பாகப்  புலப்படுத்தினாலும்  அவன்  அறிந்து  கொள்ளுவா னென்று  அவள்  கருதுவது  இயல்பே .  இந் நிலையில்   மன்மதன்  கொடுமை  கூறுபவளாய் , அக் காமவேள்  என்னும்  அரசற்கு  மகிழ்  துணை  புணர்க்கும்  வேனிலாளன்  இளவரசன்  ஆவானென்றும் , அவன்  கொற்றக்  குடை  திங்களாதலால்  அத்  திங்கட்  செல்வன்  பிறப்பிலே  கோட்டமுடையவன்  என்றுங்  கூறி ,இப்பரிவாரங்களை  யுடைய  காமன் ,  புணர்ந்துளோர்  ஊடல்  முதலியவற்றாற்  காலம்  நீட்டிப்பினும் ,ஓதல்  முதலியன  குறித்துப்  பிரிந்துளோர்  குறித்துக்  கூறிய  பருவம்  பொய்த்துத்  தம்  துணையை  மறப்பினும்  இன்பம்  நுகரும்  அவ்வியிரைப்  பூவாளிகளாற் கொள்ளும்  இயல்பின  னென்பது  புதிய  தொன்றன்று ; இதனை  அறிவீர்களாக “  என்று  அவள்  எழுதியது  பொருத்தமே .  உண்மைக்  காதலுடையார்  இயல்பை  உலகியல்பில்  வைத்துக்  கூறுமுகமாகத்  தன்னிலையைப்  புலப்படுத்தினாள் .  இங்கே  இளவரசனாகிய  வேனிலாளன்  துணை  புணர்ப்பவ னாதலாலும் , திங்கட்  செல்வன்  பிறப்பிலே  கோட்டமுடையவனாதலாலும்  பிரிந்திருக்கும்  தனக்கு  நலஞ்  செய்யான்  என்னுங்  கருத்துத்  தொன்றக்  கூறியது  இன்புறத்தக்க தொன்று .  மாதவி  கணிகையர்  குலத்தவளாயினும்   மிக்க  நாகரிகமும்  ஒரு  வழிப்பட்ட  காதலும்  அறிவும்  உடையவளாதலின்  இங்ஙனம்  எழுதினாள் . இவளுடைய  உயர்ந்த  நிலையைக்  காதலனாகிய  கோவலன்  பிரிவால்  உலக  வாழ்க்கையைத்  துறந்து  துறவு  நிலை  பூண்டதனாலே  அறியலாம் . இவளெழுதிய  கடிதம் , கட்டப்பட்ட மலர்  மாலையினோடியைத்து   வசந்தமாலை  என்னும்  மற்றொருத்தி  வாயிலாக  கோவலற்குச்  சில  நாழிகை கழித்துச்  சேரத்தக்க  தாகலின்  தாமரையிலை  போல்  விரைவில்  வாடும்  இயல்பினதாக  அன்றி  நெடிது  நிற்பதாகிய  தாழை  மடலாக  அமைத்தது  பொருத்தமே .  சகுந்தலை , துஷ்யந்தனுடைய  காட்சியில்  ஈடுபட்டுக்  காதலால்  வெதும்பும்  போது  அவள்  சிறுமி,  ஆதலால்  தன்   காதற்  குறிப்பை  எவ்வாறு  காதலற்குப்  புலப்படுத்துவதென்றறியா ளாய்த்  துன்புறும்  நிலையில் ,பிரியம்வதை  என்னும்  உயிர்த்தோழி  சகுந்தலையை  நோக்கித் , “தோழி ! அவ் வேந்தர்க்கு  ஒரு  காதற்  கடிதம்  எழுதுக ;அதனை  ஒரு  நறுமலர்  மாலையில்  மறைய  வைத்துத்  தேவப்  பிரசாதம்  என்று  பெயரிட்டு  அவ்வரசர் பெருமானிடம்  சேர்த்து  விடுவேன்”  என்றாள் . அதனை  மற்றொரு  தோழியாகிய  அநசூயை , “யானும்  அப்படியே  நினைக்கின்றேன்”  என்று  ஆமோதித்துப்  பேசினாள்.  அதன்மேற்  சகுந்தலை , நும் கட்டளையில்  மாறுபாடேது  என்று  உடன்பட்டுக்  காதற்  பாசுரத்தை ஆராய்ந்து  எழுதினாள் . இந் நிகழ்ச்சியில்  , அவள்  தகுதிக்கேற்பக்  கவி  கருதியது பாராட்டத்தக்கதே .  இனி , மாதவி  தன்  காதலனோடு   அநுபவித்துப்  பன்னாட்  பழகியவளாதலாலும் , தனக்கு  ஒருவர்  அறிவிக்க வேண்டுவது  இல்லையாதலாலும் , மடலவிழ் கானற்  கடல்  விளையாட்டினுள்  கோவலனூடக்  கூடாதேகிய  பின் ,  மன  வேதனை  தீரத்  தன் னில்லத்துத்  தனித்திருந்து சிறிது  நேரம்  யாழை  இசைத்துப்  புறநீர்மை  என்னும்  பண்ணை  வாசிக்குங்கால் , அவ்விசை  யின்பத்திற்  காதலன்  கூடலின்பம்  தோன்ற  மயங்கித்  தெளிவுற்றுப்  பின்னர்த் , தன்  காதலற்கு  இன்ன  விதமாகத்  தன்  கருத்தைத்  தெரிவிக்க வேண்டும்  என்பதைத்  தானே  துணிந்து  திருமுகம்  போக்கும்  செவ்வியளாய்  எழுதத்  துணிந்தாள் .

             இங்ஙனம்  மாதவியின்  இயல்பை  மனத்துட்   கொண்டு , அவள்  தகுதிக்கேற்ப  ஆசிரியர்  அவள்  காதற்  கடிதத்தை  அழகுற  முடித்தது  பெரிதும்  பாராட்டத்தக்கதே .  இவ்வாறு     காதல்  வயப்பட்டவருள் , எழுதுவோர்  எழுதப்படுவோர்  இயல்புகள் , எழுதும்  வாசகங்கள் , அவ் வாசகக்  கருத்துக்கள் , கடிதம், எழுதுகோல், மை  முதலிய  கருவிகள்  என  இவ்வெல்லாவற்றையும்  புலவர்  பெருமக்கள்  செவ்விய  முறையிற்  சிந்தித்துக்  காதல்  நறுமணங்  கமழப்  புலப்படுத்தியது போற்றத்தக்கதொன்றாம் .  

                                       7  .  குறுந்தொகை

( இது  சென்னையிற்  கூடிய  குறுந்தொகை மாநாட்டில்  நிகழ்த்திய   

                                              தலைமையுரை )     

ன்புமிக்க  ஐயன்மீர் !  அன்னைமீர் ! 

                 இக்குறுந்தொகை  மாநாட்டில்  நிகழும்  அரிய  சொற்பொழிவுகள்  எல்லாவற்றையும்  ஒழியாது  கேட்டு  மகிழும்  பேற்றுக்கு  உரிய  பதவியை  எனக்கு  அன்புடன்  அளித்த   சைவ சித்தாந்த  நூற்பதிப்புக்  கழக  அமைச்சர்க்கு  என்  நன்றியறிவை  முதலிற்  பலப்படுத்திக்  கொள்ளுகின்றேன் .

                  உலகத்துப்  பருப்  பொருள்களைக்  காண்டற்குக்  கருவியாக  மக்களுக்கு  அமைந்த  புறக்கண் போல ,புறக்காட்சிக்குப்  புலனாகாத  நுண்பொருள்களை  அறிந்து  தெளிதற்குரிய  அகக்கண்  அமைதல்  இன்றியமையாததென்பது  யாவரும்  உணர்வர் . பருப்பொருள்களைக்  காணும்  புறக்கண்ணும்  அகக்கண்ணின்  துணையின்றிப்  பொருள்களின்  இயல்புகளைப்  பகுத்துணர்வதற்கு  வலிவுடைய தாகாது . ஆகவே  புறக்கண்ணும்   அகக்கன்ணும்  மக்கட் டன்மைக்குச்  சிறப்பாக  வேண்டப்படுவதென்பதை  அறிகின்றோம் . இவ்வகக்கண்  யாதாக  இருக்கலாம்  எனின் , இதற்கு  விடையாகப்  பேரறிஞர்கள்  எல்லோருங்கூறியது  ஒன்றே  . அது  கல்வி  என்பதை ,

எண்ணென்ப  ஏனை  எழுத்தென்ப  இவ்விரண்டுங் 

 கண்ணென்ப  வாழும் உயிர்க்கு

என்பதனால்  உணரலாம் . இக்கல்வி  ஒவ்வொரு  நாட்டினர்க்கும்  அவ்வந்  நாட்டு  மொழி  வாயிலாக  இருத்தல்  வேண்டும்  என்பதும், பின்னர்  வேண்டப்படும்  வேற்றுமொழிப்பயிற்சி  அறிவாற்றற்கேற்ப  இருக்கலாம் . என்பதும்  அறிஞர்  கண்ட  முடிபுகளாம் .  நமக்குரிய   நாட்டு  மொழியைப்  புறக்கணித்து  வேற்று  மொழியில்  எத்துணை  மேற்சென்றாலும்   மொழியறிவாற்  பெறும்  பயன்  முற்றும்  பெற்றதாக மாட்டாது .  இந்நிலையில்  நாம்  இன்றியமையாது  பயில வேண்டுவது  நமக்குரிய  தமிழ்  மொழியே யாகும் . இம் மொழிக்கண்  உள்ள  இலக்கிய  நூல்களுள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை  முதலிய  சங்க இலக்கியங்கள்   காலத்தால்  முற்பட்டனவாம் . மொழி  வளமும்  பொருள்களின்  இயற்கையை  உள்ளபடி  எடுத்து  விளக்கும்  ஆற்றலும்  , உவமையழகும்  ,  ஊன்றிப்  படிப்பார்க்கு   உணர்ச்சியின்பம்  ததும்பச்  செய்யும்  இயல்பும்  ஒருங்கமைந்து   விளங்குவன  சங்க  இலக்கியங்களேயாகும் .  சில்வகை  எழுத்தானாய  செந்தமிழ்ச்  சொற்களும்    தொகை  நிலைத்  தொடர்களும்  கருதிய  பொருள்களைத்   தெளிவுறுத்துவனவாக  அப்பாடல்களிற்  பரக்கக்  காணலாம் . அகமும்  புறமுமாகிய  பொருள்களை  இயநெறியில்  திறம்பாமல்  உலகியல்  ஒழுக்கத்தொடு  இயைத்துப்  புலநெறி  வழக்கமாகப்  பாடல்  செய்யுந்  திறம்   சங்ககாலத்துப்  புலவர்களுக்கு  அமைந்தது  போலப்  பிற்காலத்தவற்பாற்  காண்டலரிதாகும் .  பாடல்களில்  அமைய  வேண்டிய  ஆழமுடைமை  இனிமை  எளிமை  என்னுங்  குணங்களுள்   ஆழமுடைமையும்   இனிமையும்  சங்க  இலக்கியங்களில்  நன்கு  அமைந்துள்ளன . என்பதை  யாவரும்  எளிதில்  உணர்வர் .  எளிமை  கால  வேறுபாட்டால்  அவ்விலக்கியங் களில்   அருமையாக  மாறுதல்  அடைந்து  உள்ளது .  அப்பாடல்கள்  தோன்றிய  காலத்து  அந்  நடை  எளிமையாக  இருக்கலாம் .  அக் காலத்துப்  பயிற்சியில்  முதிர்ந்த  செந்தமிழ்ச்  சொற்கள்  இயல்பாக  வழங்கப்பட்டிருக்கக்  கூடுமாதலின் , அப்பாடல்  நடைகளும்  அங்ஙனமே  அமைந்துள்ளன  என்ற  கோடல்  பொருந்தும்  .  இற்றை  ஞான்று  மொழி  நடையில்  முதிர்ந்த  பழஞ்  சொற்களும்  தொடர்களும்   சிறிது  சிறிதாகக்  கைவிடப்பட்டு  வந்தமையால்  முன்னைப்பாடல்  நடைகள்  இப்பொழுது  நமக்கு  எளிமையில்லாதன வாகக்  காணப்படுகின்றன .சங்க  இலக்கியங்களுள்  ஒரு சிலவற்றைத்  தெளிவாகப்  பொருள்  உணர்ந்து  படித்து  அடிக்கடி  பழகி  வருவோ மாயின்  அந் நடையும்  எளிமையாக  அமையும்  .  எதுகை  மோனை  நிமித்தம்  வறிதே  அடைமொழிகளைப்  புணர்த்துப்  பொருட்சுருக்க மும்   சொற்பெருக்கமும்  அமைய  யாக்கப்படும்  பிற்காலத்தவர்  பாடல்கள்   நுண்ணறிவுடையார்க்கு  இன்பஞ்  செய்வனவாகா .  ஒரு  சிறு  சொல்லேனும்  வறிதே  விரவாமல்  உய்த்துணருந்தோறும்  “நவில்தொறும்  நூல்  நயம்  போலும்”  என்னும்  முதுமொழிக்கிணங்க  இன்பஞ்  செய்வன  சங்கப்பாடல்களேயாகும் . இத்தகைய  பொருள்வளஞ்  சான்ற  சங்க  இலக்கியங்கள்  இடையே  சில  நூற்றாண்டுகளாகத்  தமிழ்  மக்களாற்  பயிலப்படாமலிருந்தன .  இப்பொழுது  ஒரு  சில  ஆண்டுகளாக  அத் துறையில்  விழிப்புடை யராய்ப்  பயில  முற்பட்டிருப்பது  மகிழ்ச்சி  தருவதொன்று .  இற்றை  ஞான்று  ஆடவரும்  மகளிரும்  சங்க  இலக்கியங்களைப்   படிக்கவும்  அவற்றில்  கூறப்படும்  இயற்கை  முதலிய  பொருளழகுகளை  உணர்ந்து  இன்புறவும் , பெருங்  கழகங்களில்  பலருந்  தெளிய  எடுத்துரைக்கவும்  தகுதியுடையராய்  முன்வருதல் , தமிழராக்கம்  புத்துருப் பெற்று வளர்தற்கேற்ற  சான்றாகும் . இந் நிகழ்ச்சியில்  இச் சென்னை  மாநகரம்  முற்பட்டிருப்பது  சிறப்பாக  நினைக்கத்  தக்கதொன்று  .  பத்துப்பாட்டு  மாநாடு  , கலித்தொகை  மாநாடு , சங்க  இலக்கிய  மாநாடு  என  மூன்று  பேரவைகள்  இதற்கு  முன்  நடைபெற்றன  .  இன்னும்  பல  நடைபெறுதற்குரிய  முயற்சிகள்  காணப்படுகின்றன .  இன்று  கூடிய  மாநாடு  “குறுந்தொகை”என்னும்  அரிய  நூலைப்  பற்றியதாகும் .

                 குறுந்தொகை  என்பது  சங்க  இலக்கியங்களாகிய  தொகை  நூல்கள்  எட்டனுள்  ஒன்று . இது  நல்ல  குறுந்தொகை  என்று  பாராட்டப்பட்டுள்ளது . அகப்பொருள்  நுதலிய  தொகை  நூல்களுள்  அடியளவாற்  பெற்ற  பெயர்   இதுவாகும் . நாலடிச்  சிற்றெல்லை யையும்  எட்டடிப் பேரெல்லையையும்  உடையது . அடியளவாற்  குறுகிய  தன்றிப்  பொருளளவார்  பெரியதென்றே  கூறலாம் . இதன்கண்  மேற்கொண்ட  அகத்துறைகளைத்  தெளிவு  படுத்துங்  குறிப்புக்கள்  வியத்தகு  முறையில்  அமைந்து உள்ளன .  கூறப்படும்  பொருள்கள்  வரையறையும்  தெளிவுமுடையன .  வாய்ப்  பயில்வார்க்குப்  பெரிதும்  இன்பஞ்  செய்கின்றன .  இதற்குப்  பாரதம்  பாடிய  பெருந்  தேவனார்  கடவுள்  வாழ்த்துப்  பாடியுள்ளார் . அது  முருகப்பெருமானைப்  பற்றிய  வாழ்த்தாக  இந்நூன்  முகத்தே  திலகம் போல   ஒளிர்கின்றது . அப்பாடல்  வருமாறு : 

“தாமரை  புரையுங்  காமர்  சேவடிப்

பவழத்  தன்னமேனித்   திகழொளிக்  குன்றின்

நெஞ்சுபக  எறிந்த  அஞ்சுடர்  நெடுவேற் 

சேவலங்  கொடியோன்  காப்ப

ஏம  வைகல்  எய்தின்றா  லுலகை”  

என்பதாம் . இப்பாடலின்  தூய்மையை  நன்காராய்ந்த   யாப்பருங்கலக் காரிகை  உரையாசிரியர்  எல்லாக்  குற்றமும் தீர்ந்த  செய்யுட்கு  மேற்கோளாக  இதனை  எடுத்துக்  காட்டியுள்ளார் . இதன்கண்  முருகப்பெருமானுடைய  திருவடி , நிறம் , ஒளி , ஆடை , வேல் , சேவற்கொடி  என்னும்   இவை  ஆறும்  புனைந்துரைக்கப்பட்டன  முருகவேளை  நினைக்கும்  போதே  தாமரை  மலர்  முன்னிற்பதும் , அறுவகை  வருணனையில்  உள்ளஞ்  சேரலும்  புலவர்  பெருமக்களுக்கு  இயல்பாக  நிகழத்தக்கன  .  நிவந்தோங்கு  இமயத்து  நீலப்  பைஞ்சுனையாகிய  சரவணப்  பூம்பொய்கையில்  , பதுமப்  பாயலில் , அப்பெருமான்  தோன்றியமையை  நினைவுறுவார்  உளக்  கண்ணுக்குத்  தாமரை  மலர்  எங்ஙனம்  புலனாகாதிருத்தல்  கூடும்?  “நமக்  குமாராய”  என்னும்  ஆறெழுத்தடக்கிய  அறுமறைக்  கேள்வியும்  ஆங்கமை  மூவிருமுகனும்  முறைநவின்  றொழுகலும்  மனங்  கொள்ளுவார்க்கு  அறுவகை  இயைபு  எவ்வாற்றாலும்   அப்பெருமானுக்குப்  பொருந்தியதென்று  உயர்ந்த  கவிகள்  கருதல்  இயல்பே .  இதற்கேற்ப  இக்கடவுள்  வாழ்த்து  ஆறடி  களால்   ஆக்கப் பட்டிருப்பதும்  ஈண்டு  உணர்ந்து  இன்புறத்தக்கது . இனி , முதலில்  அப்பெருமானுடைய  சிவந்த  திருவடியே  புனைந்துரைக்கப்படு கின்றது .  கடவுளரைப்  பாடுங்கால்  அன்னார்  திருவடி  நினைவே  கவிகளுக்கு  முன்னிற்பதாகும் . அதனாற்  பெறும்  பயன்  நோக்கி  அங்ஙனங்  கூறல்  மரபு . யாவர்க்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையான்  திருவடியும்  , யாவர்க்கும்  கீழாம்  அடியார்  தலையும்  ஒன்று  படுவதே   வேண்டப்படுவதாகும் .  இது  கருதியே  இறைவனொடு  இரண்டறக்  கலத்தலாகிய  வீடு  நிலைக்குத்  “நாலைப்  போல்  அடங்கிநறிறல்” என்று  சைவப்  பெரியார்  எடுத்துக்   காட்டுவர் . “தாடலை”  என்னும்  தொடரில் , தாள்  என்பதினிறுதியும் ,  தலை  என்பதன்  முதலும்  ஒன்றுபட்டுத்  “தாடலை”  என்றாயவாறு  போல , இறைவன்  நிலையில்  உயிர்நிலை  தோய்ந்த  இரண்டற்ற  நிலை  யாதலே  வீடு  என்பது  புலனாம் . இங்ஙனம்  திருவடியை  முதற்கண்  தொடங்குதலம் , அத்திருவடிக்கட்  பொருண்  முடிவு  கோடலும்  ஆகிய  மரபு  குறுந்தொகைக்கண்  அன்றி  நற்றிணை , ஐங்குறுநூறு , அகநானூறு  முதலியவற்றிலும்  முறையே  “மாநிலஞ்  சேவடியாக”  எனவும் , “ஒருவன்  இருநாள்  நிழற்கீழ்”  எனவும் , “தவில்  தாள்  நிழல்  தவிர்ந்தன்றாலுலகே”  எனவுங்  கூறிய  மறையான்  உணரலாம் . குறுந்தொகை , நற்றிணை , அகநானூறு  இம்மூன்றும்  முறையே  குறுமை , இடைநிகர் , நெடுமை  ஆகிய  அடியளவு  பற்றித்  தொகுக்கப்பட்டனவாம் . இவற்றிற்கு  முறையே  பாரதம்  பாடிய  பெருந்தேவனார்  முருகன் , சிவபிரான்  இவர்களைப்  பற்றிக்  கடவுள்  வாழ்த்துக்  கூறியுள்ளார் . இம்முறையில்  ஆசிரியர்  பிரமன் , திருமால் . சிவபிரான்  அவர்களைப்பற்றிக்  கருதியிருக்கலாம் . பிரமனைக்  கூற வேண்டிய  பகுதியில்  அப்பிரமனை  மறைப்பொருள்  வினவி  அடக்கியருளிய  ஆற்றல்  முருக  வேளுக்கு  உள்ளதாலும் , நிலக்  கிழமை  பற்றியும்  இதற்கு  முருகன்  வாழ்த்துச்  சிறந்ததென  மேற்கொண்டார்  போலும் .

               இனி , நானிலத்து  ஐந்திணை  ஒழுக்கமும்   இந் நூல்  நுதலிய  பொருளாதலின் , அப்பொருளைக்  கருக்கொண்டுள்ளது  இப்பாடலென  உணர்க . இங்ஙனம்  நூல்  நுதல் பொருளைத்  தன்னகத்தடக்கி  முதற் பாடல் புலப்படுக்குமாற்றைத்   திருக்கோவையாரில்  “திருவளர்தாமரை” என்னும்  முதற்  செய்யுட்குப்  பேராசிரியர்  செய்த  நல்லுரையானும்  உணரலாம் , இக்கடவுள்  வாழ்த்துப் பாடலில்  அக்  கருப்பொருள்  அமைந்த  முறையைச்  சற்று  ஆராயத்  தொடங்குவேன்  “தாமரை  புரையுங்  காமர்  சேவடி”  என்புழி  மருத  நிலத்துக்  கருப்பொருள்  ஆகிய  தாமரையும்  , “பவழத்  தன்ன  மேனி”  என்புழி  நெய்தல்  நிலத்துக்  கருப்பொருள்  ஆகிய  பவளமும் , “குன்றி  யேய்க்கும்  உடுக்கை”   என்புழி  முல்லைக்கு  உரியதாகக்  கருதப்படும்  குன்றிமணி  கொடியும் , “குன்றின்  நெஞ்சுபக  எறிந்த”  என்றதனால் , குறிஞ்சிக்கு  உரிய  மலையும்  புலப்படுக்கப்   பட்டுள்ளன .  பாலைக்கெனத்  தனியே  நில  மின்மையாலும்  “முல்லையுங்  குறிஞ்சியும்  முறைமையில்  திரிந்து  பாலை  என்பதோர்  படிவங்  கொள்ளும் “  ஆதலானும் , அம்முறையில்  குறிப்பாக  அந் நிலமும் புலப்படுக்கப்பட்டதென்னலாம் குன்றியையும் குன்றத்தையும் ஒரே  அடியில்  இயைய  வைத்த குறிப்பும்  இதனை  வலியுறுத்து வதாகும் . ஈண்டு , குறிஞ்சியல்லா  ஏனை  நிலங்களைக்  கருப் பொருள்களாலும்,  குறிஞ்சியை  முதற்  பொருளாலும்  பெற  வைத்தது. “சேயோன்  மேய  மைவரை  யுலகமும்”  என்றபடி  அந் நிலவுரிமை  செவ்வேட்கு  உள்ளது  கருதியே .   

         முருகவேளின்  இளமையும் , அழகும் , வீரமும்  சிறப்பு  முறையில்  கவிகளின்  உள்ளத்தைக்  கவர்வனவாம் . “தாமரை  புரையுங்  காமர்  சேவடி”  என்பதனால்  இளமைச்  செவ்வி  புலனாம்  .  தாமரை  இதழ்  போன்ற  மென்மையும் , செம்மையும்  ஈண்டு  இளமையைப்  புலப்படுப்பன . “பவழத்  தன்ன  மேனித்  திகழொளி”  என்றதனால்  திருமேனி  நிறமும்  அந் நிறத்தில்  விளங்கும்  பேரொளியும்  அழகைப்  புலப்படுப்பன.  முருகனது  ஒளியின்  பெருமையை  “முன்னே  வந்து  எதிர்  தோன்றும் முருகனோ  பெருகொளியால்”  என்னும்  பெரியார்  மொழியானும்  உணரலாம் . குன்றின  நெஞ்சு  பக எறிந்த அஞ்சுடர்  நெடுவேல்”  என்பதனால்  வீரம்  புலனாம் . உலகம்  கொடியவர்களால்  துன்புறுங்கால்  தம்  வேற்படை  கொண்டு  பகையொழித்து  இன்புறுத்தற்கு  வீரம்  இன்றியமையாதது . ஆதலின்  காத்தற்  றொழிலுக்கு  உதவியாக  வீரம்  முதற்கண்  அடுத்துக்  கூறப்பட்டது .  அளியும்  தெறலும்  அரசர்க்கு  இன்றியமையாதனவாம் . அந்நிலையில்  தெய்வ  அரசராகிய  முருக  வேட்குக்  “காப்ப”  என்றதனால்  அளியும் , “குன்றின்  நெஞ்சுபக எறிந்த:  என்றதனால்  தெறலும்  உள்ளன  என  ஆசிரியர்  பெருந்தேவனார்  புலப்படுத்துள்ளார் . முருகவேளின்  காவலிற்பட்டு  உலகம்  இன்பமயமான  நாட்களைஎய்துகின்றது  என்னும்  பொருள்  தோன்ற ,”காப்ப , ஏமவைகல்  எய்தின்றாலுலகே”  என  இவ்வாழ்த்து  முடிக்கப்பட்டது . இதனால்  மக்களுக்கு  உரிய  அன்பின்  ஐந்திணை  ஒழுக்கம்  இந்நூல்  நுதலிய  பொருளாகும்  என்பது  குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் . இவ்வாழ்த்துப்பாடலில்   மருத  நிலத்துக்  கருப்பொருள்  முதலிலும்   குறிஞ்சி  முதற்பொருள்  ஈற்றிலும்  அமைந்துள்ளன .இதனால்  “ஊடுதல்  காமத்திற் கின்பம் , அதற்கின்பம்   கூடி  முயங்கப்  பெறின்”  என்னும்  முதுமொழிப்படி  ஊடலும்  கூடலும்  முறையே  நிகழும்  இன்பவியல்பு புலப்படுக்கப்பட்டது என்பது  போதரும் . இங்ஙனம்  இக்குறுந்தொகைக்கு  அமைந்த  கடவுள்  வாழ்த்துப்  பாடல்  நுண்பொருள்  பலவற்றையும்  தன்னகத்து  அடக்கி  நுண்ணுணர்வினோர்க்கு  நவில்தொறும்  உணருந்தோறும்  முருகன்  திருவடி  இன்பம்  போன்ற  பேரின்பத்தைப்  பயத்தலால் இன்பவூற்றாகத்  திகழ்வதாகும் .

அன்பர்களே ! 

        இனி,  இந்  நூலின்  உட்பகுதியில்  நுழைந்து  பல  பொருள்  நயங்க ளைப்  பின்னே  சொற்பொழிவாற்ற  முன்வரும்  புலவர்  வாயிலாக  உணர்ந்து  இன்புறலாம் . ஆயினும் , நறுஞ்சுவைப்  பொருளை  நுகர்தற்கு  வேட்கை  விஞ்சினார் , பின்  அவர்  காலந்  தாழ்த்துத்  தரும்  வரை  காத்திருத்தற்கு  மனம்  ஒருப்பாடுவாரல்லர் .  ஏதோ  கைக்  கெட்டிய  அளவு  முந்துற  நுகர்தற்கு விரும்புதல்  இயல்பே . அம்முறையிற்  சிற்சில  பகுதிகளை  அறிவு  கருவியாக  நுகர்ந்து  இன்புறலாமென  நினைக்கின்றேன் .  இந்  நூலின்  இயல்பை  விளக்கமாகப்  பேச  நினைக்கிறேன் . இந்நூலின்  இயல்பை  விளக்கமாகப்  பேச  நினையின்  மிக  விரியும் . ஆதலின் , ஒரு  சில  நயங்கள்  மட்டில்  ஆராயலாமென  எண்னுகின்றேன் .  இவை :   1 உவமையழகு   2  . குணவருணனை  3 . தேற்றுமுறை  4 . உள்ளுறை   5 மக்கள் மனநிலை  6 .  காதலின்  இயல்பு  என்பனவாம். இவையும்  சுருங்கிய   அளவில்  முறையே  கூறப்படும் .    

1 .  உவமையழகு

          சங்க  இலக்கியங்களுட்  பெரும்பாலும்  அமைந்த  அணிகள்  தன்மை  நவிற்சியும்  உவமையுமாம் . பொருள்களைத்  தெளிவுறுத்து வது   உவமையாகும் . ஒரு  புடையொத்தல்  உவமமெனக்  கொண்டு  உள்ளத்  துணர்வுக்குக்  கொள்ளத்தக்க  அளவில்  அன்றி  உவமை  கூறுவர்  பிற்காலத்துப்  புலவர் .  சங்கப்புலவர்  காணும்  உவமைகள் , பொருளோடு  ஒத்த  தன்மையால்  நெருக்கம்  உடையனவாய்  நின்று , உணர்வுக்கு  இன்பஞ்  செய்வனவாம் . அவற்றுள் , இங்கே  ஒரு  சிலவற்றைக்  குறிப்பிடுவேன் .  மனையாளை  அஞ்சியொழுகும்  ஓராடவன்  இயல்பு, “கையுங்  காலுந்  தூக்கத் தூக்கும்  ஆடிப்  பாவை  போல , மேவன  செய்யும்  “  என்று  உவமை  கூறித்  தெளிவுறுத்தப் பட்டது .  கண்ணாடியின்  முன்னின்றார் , தம்  கையையும்  காலையுந்  தூக்குங்கால்  அக்கண்ணாடியில்  தோன்றும்  எதிருருவாகிய  பாவையும்  அங்ஙனமே  தூக்குமென்பது  எளிதிற்  காணப்படுவ தொன்று . அதனால்  “ஆட்டுவித்தால்  ஆரொருவர்  ஆடாதாரே” என்புழிப்  போல, இறைமை  தலைவி  பாலதாக, அவள்  இயக்கியாங்கு  இயங்குதல்  தெளிவுறுத்தப்பட்டது . இது  பரத்தை கூற்றாதலின்  அவள்  மனம்  வேறுபட்ட  நிலையிற்  கூறியது  பற்றித்தலைமகன்  பெருமைக்கு  இழுக்காதென்பது ஈண்டு  அறியத்தக்கது .

            பிறிதோரிடத்து , சிறிய  உயிரில்  அமைந்து  கிடக்கும்  பெரிய  காதலின்  இயல்பை  உவமிக்கக்  கருதிய  ஆசிரியர் ,  

சிறுகோட்டுப்  பெரும்பழத்  தூக்கி  யாங்கிவள்

 உயிர்  தவச்  சிறிது  காமமோ  பெரிதே “

என்கின்றார்  . வேரிற்  பழுக்கும்   பழத்தை  நீக்குதற்குக்கோடெனவும்   சிறு  பழத்தை  நீக்குவதற்குப்  பெரும்  பழமெனவுங்  கூறினர் .  மரக்  கொம்பை  மகளிர்க்கு  உவமையாக்குதல்  கவி  மரபு . இங்கே  உடலோடு  உயிர்க்குள்ள  ஒற்றுமை  கருதியும் , உயிர்  அணுவென்று  கூறப்படுதல்  பற்றியும் , தலைவியின்  இளமைச்  செவ்வி  நினைந்தும்  சிறு  கோடு  உவமையாயிற்று  . இத்தகைய  சிற்றுயிரில்  தங்கிய  வேட்கையோ  மிகப்  பெரிதென்பது  போதரவும்  , நுகருந்  தலைமக னுக்கு  அது  பேரின்பஞ்  செய்யுமென்பது  பற்றியும்  காமத்திற்குப்  பெரும்  பழம்  உவமையாயிற்று .  காமம்  நறுங்கனியாக   கூறப்படு தலை ,

“தாம்வீழ்வார்  தம்வீழப்  பெற்றவர்  பெற்றாரே

 காமத்துக்  காழில்  கனி” 

என்னுந்  திருக்குறளாலும் ,

“கன்னிமை  கனிந்து  முற்றிக்  காமுறக்  கமழுங்  காமத்

 தின்னறுங்  கனியைத்  திய்ப்பான்  எந்தலே”

என்னுஞ்  சிந்தாமணிச்  செய்யுளாலும்  உணரலாம் . காதலின்  வளர்ச்சியை  ஆடவர்  மகளிர்  பிரிவிற்  காண்டல்  போலக்  கூடற்  காலத்திற்  காண்டற்கியலாது . கூட்டத்தில்  இருவரும்  உள்ளம்  இயைந்து  இன்பம்  நுகர்வர் . அந் நிலையில்  , அவ்வின்ப நிலை ,

“மக்கட்குத்  தாய்தான்  மணாளனோ  டாடிய

சுகத்தைச்  சொல்லெனிற்  சொல்லுமா  றெங்ஙனே”

என்ற  பெரியார்  மொழிப்படி  வெளிப்படுத்துச்  சொல்லுந்தரத்தன்று . பிரிவுத்  துன்பம்  வாய்  விட்டுக்  கூறும்  இயல்பினது . இது  பற்றியே  இங்கே  தோழி   “உயிர்தவச்சிறிது  காமமோ  பெரிதே” என்றனள் .  கூடலில்  நிகழும்  இன்பத்தினும்  பிரிவின்கண்  நிகழுந்  துன்பம்  மிகப் பெரிதா மென்பதனை ,

ஏரிதலைக் கொண்ட காமத்  தின்பநீர்ப்  புள்ளி  யாற்றல்

 பிரிவிங்கட்  பிறந்த  துன்பம்  பெருங்கடலனைய  தொன்றால்”

என்னுஞ்  சிந்தாமணியாசிரியர் கூற்றாலும்  உணரலாம் . இங்கே  இன்பத்தையுந்   துபத்தையும்  நீராகக்  கொண்டு , அவ்வின்பம்  நீர்த்திவலை  யளவினதென்றும் , பிரிவுத் துன்பம்  நீர்ப்பெருக்காகிய  கடலளவினதென்றும் கூறியது  உணர்ந்து  இன்புறத்தக்கது . “காமமோ  பெரி”  தென்றதும்  பிரிந்த நிலையில்  நிகழ்வது  கருதியே  முதிர்ந்த  பெரும் பழம்  கொள்ளுவாரில்லையாயின் , தனக்கு  ஆதாரமாகிய  சிறிய  கொம்பையும்  , இறுத்துத்  தானும்  வீழும் .  அது  போலத்  தலைவியின்  காதற்  பெருங்கனியை  ,  உரிய  தலைவன் நுகர முற்பட்டிலனேல் ,  அதற்கு  ஆதாரமாகிய  தலைவியின்  சிற்றுயிரையும்  இறந்துபடச்  செய்து  தானுங்  கெடுமென்பதும்  இங்கே  உணரத்தக்கது .  

            இனி , களவொழுக்கத்தில்  தலைப்பட்டு  மீண்ட  தலை மகனது  வேறுபாடு  கண்ட  பாங்கன், அவ்வேறுபாட்டிற்குரிய  காரணத்தை  வினாவிய  பொழுது , ஓர்  இளம் பெண்ணால்  இங்ஙனம்  நேர்ந்த தென்று  தலைமகன்  கூறியதாக  ஒரு  பாடல்  உள்ளது . அது ,

“சிறுவெள்  ளரவின்  அவ்வரிக்  குருளை

கான  யானை  அணங்கி  யாஅங்கு

இளையள்  முளைவா  ளெயிற்றள்

வளையுடைக்  கயளெம்  அணங்கி  யோளே “

என்பதாம் . சிறிய  வெள்ளிய  பாம்பின்  குட்டியானது  காட்டில்  திரியும்  பெரிய  யானையை   வருத்தினாற்போல , நாணல்  முளை  போன்ற  கூறிய  பற்களையுடைய  ஓர் இள நங்கை  என்னை  வருத்தச்  செய்தாள்  என்பது  இதன்  பொருளாகும் . மிகச்  சிறிய  கோலினாற்  கொல்லத்தக்க  பாம்புக்குட்டி  மலை  போன்ற  யானையும்  வருத்துமென்பதை ,

அஞ்சனக் கோலி  நாற்றா  நாகமோ  ரருவிக்  குன்றிற்

 குஞ்சரம்  புலம்பி  வீழக்  கூர்நுதி  யெயிற்றிற் கொல்லும்”

என்னுஞ்  சிந்தாமணிச்  செய்யுளலும்  அறியலாம் . இங்கு , தலைவன்  யானையைத்  தனக்கு  உவமையாகக்  கூறியதனால் , தலைமை  யிலக்கணத்துக்குப்  பொருந்தாத  தற்புகழ்தல்  பெறப்படுகின்றதே  , அங்ஙனம்  பெற  வைகலாமோ  வெனின் , சென்றதற்கு  இரங்குகின்றானாதலின்  தற்புகழ்தல்  ஆகாதென்பது  கருத்து . இங்கே,

ஒண்ணுதற்  கோஒ  உடைந்ததே  ஞாட்பினுள்

 நண்ணாரும்  உட்குமென்  பீடு “ 

என்னுந்  திருக்குறளும்  , ‘ஞாட்பினுள்  நண்ணாரும்  உட்குமென் பீடு’  என்பதனாற்  பெறப்பட்ட  தற்புகழ்  தலைப்  பரிகரித்தற்கு  “கழித்ததற்  கிரங்கலின்   தற்புகழ்தல்  அன்றாயிற்று . என்று  கூறிய  பரிமேலழகர்  உரைப்  பகுதியும்  ஒப்பு  நோக்கி  இன்புறத்தக்கன . இங்ஙனம்  பாங்கன்  கேட்டதற்குத்  தலைமகன்  இறுத்த  விடையை  ஏற்றுக்  கொள்ளாமல் , பாங்கன் , பேராற்றல்  படைத்த  நீ  ஒரு  சிறுமகளால்    இத்தன்மையை  யாதல்  நின்  பெருமைக்கு  இழுக்காகுமென்றது  இடித்துரைத்தானாக  .  அக்  கழற்றுரையைத்  தலைமகன்  மறுத்துரைக்கு  முகமாக  ஒரு  பாடலுள்ளது . அஃது ,

“இடிக்குங் , கேளிர்  நுங்குறை  யாக

 நிறுக்க  லாறறினோ  நன்றுமற்  றில்ல

ஞாயிறு  காயும்  வெவ்வறை  மருங்கிற்

கையி  லூமன்  கண்ணிற்  காக்கும்

வெண்ணெ யுணங்கல்  போலப்

பரந்தன்  றிந்நோய்  நோன்றுகொளற்  கரிதே “

என்பது  .  இதன்கண்  ஓரழகிய  உவமை  எடுத்தாளப்பட்டுள்ளது . கதிரவனது  கடும்வெயில்  எறிக்கும்  வெப்பத்தையுடைய  பாறையின்  கண்ணே , கையில்லாத  ஊமன்  தன்  கண்னினாலே  பாதுகாக்கும்படி  வைக்கப்பட்ட  வெண்ணெய்  உருகுதல்   போல  இக்  காதல்  பரந்துள்ளது ;  பொறுத்தற்கரிதாயிற்று என்பதாம் .  ஊமன்  இலக்கணத்தைச்  சிந்தாமணியாசிடியர் ,

“கயி  னாற்சொலக்  கண்களிற்  கேட்டிடும்

மொய்கொள்  சிந்தையின்  மூங்கை” 

என்று  கூறினர் .பிறர்  கையினாற்  கூறுஞ்  செய்திகளை  ஊமன்  தன்  கண்களாற்  கேட்குமெனவும் , பேச  இயலாமையினால்  நினைத்த  கருத்துக்கள்  அளவில்லனவாக  உள்ளத்தில்  நிறைந்திருக்கு மென்பது கருதி “மொய்கொள் சிந்தையின் மூங்கை’   எனவும்  கூறினர் . இங்ஙனம்  பேச  இயலாமையோடு  கையுமில்லையானால்  வெண்ணெ  யுருகிப்  பரத்தலைக்  கண்ணினாற்  கண்டும்  பிறர்க்குத்  தெரிவிக்க  இயலாமையோடு  அவ் வெண்ணெயைப்  பெயர்த் தெடுத்துப்  பிறிதொரிடத்து  வைக்கவும்  அவ்வூமற்கு  இயலாததாம் . அது போல , இந் நோயைப்  பொறுக்கவும்  பிறர்க்கு  வெளிப்படுத்திக்  கூறி  ஆறுதலடையவும்   இயலாதவனாயினே னெனவும் , என்னை  இடித்துரைக்கும்  நண்பரே  இதனை  நும்  காரியமாக  நிறுத்தலைச்  செய்யின்  நன்றாமெனவும்  தலைமகன்  கூறினானென்பதும்  இப்பாடற்  கருத்து . இத்துணையும்  உவமை  நயங்கள்   ஒருவாறு  புலப்படுக்கப்பட்டனவாம் .

2   .  குண  வருணனை

       இனி , ஒரு  குணத்தை  யெடுத்துச்  சிறப்பித்துக்  கூறுங்கால் , அதற்குப்  பேரெல்லையாக  எம்மட்டிற்  கூறலாமோ  அத்துணையுங்  கூறி  அக்  குணத்தின்  பெருமையை  விளங்க  வைத்தலை  இந்  நூலிற்  பல  விடத்துங்  காணலாம் .  தலைமகள்  தன்  காதலனோடு  மேற்கொண்ட  நட்பைப்  பற்றிக்  கூறும்  போது , “நிலத்தினும்  பெரிதே  வானினு முயர்ந்தன்று . நீரினு மாரளவின்றே”  என்று  கூறியதாக  ஒரு  பாடற்  பகுதி  காணப்படுகிறது .  திருக்குறளிற்  பெருமைக்  கெல்லை யாக  நிலம்  வான்  கடல்கள்  கூறப்பட்டுள்ளன .  இவ்வெல்லாம்  பெருமை  யென்னும்  ஒரு  பொதுத்  தன்மை  பற்றி  வினாவிய   அநபாய  சோழ  அரசற்கு , இவை  எடுத்தாளப்பட்ட  மூன்று  திருக்குறள் களையும்  எடுத்துக் காட்டி  எழுதி  யுய்த்த  பெருமை  பற்றிச்  சேக்கிழார்  பெருமான்  திருக் கைகள் ,

மண்ணிற்  கடலின்  மலையிற்  பெரியதென

 எண்ணியெழு  திக்கொடுத்த  ஏற்றக்கை”

என்று  பாராட்டப்  பெற்றன . இங்ஙனம்  திருக்குறளில்  பெருமையொன்றே  பற்றிக்  கூறப்பட்டனவாக , இங்கே  ஒவ்வொரு  வகையினும்  வேறு  வேறு  பொதுத்  தன்மை  கண்டு  கூறியது  இன்புறத்தக்கது . சிறந்த  நட்பென்னுங்  குணம்  சுருங்கியதாக  இல்லாமற்  பரந்தும் , அப்பரப்பிற் கேற்ப  உயர்ந்தும்  அதற்கேற்ப ஆழ்ந்தும்  இருத்தல்  வேண்டும் . பிறராற்  சிதைக்க  முடியாதபடி  வேர்  ஆழ்ந்திருத்தலைப்  பிற்காலத்துப்  புலவரும் ,

“ஒருநாட்  பழகினும்   பெரியோர்  கேண்மை

இருநிலம்  பிளக்க  வேர்வீழ்க்  கும்மே”

என்று  கூறுவர் . இங்ஙனம் மூன்று  தன்மையும்  வாய்க்கப்பெற்று  எல்லாம்  வல்ல  இறைவன்  எங்கும்  நிறைந்த  நிலை  போல அகன்று  உயர்ந்து   ஆழ்ந்திருத்தற்கு  முறையே  நிலத்தையும்  விண்ணையுங்  கடலையும்  உவமையாகக்  கண்டது  பாராட்டத்தக்கதே . இம் மூன்று  தன்மைகலையும்  இறைவனுக்  குரியனவாக  ஆளுடை  அடிகள்  தம் அநுபவ  முறையிற்  கண்டு  கூறிய ,

                                        “    ……………………………………………………வேதங்கள்

ஐயா  என  ஓங்கி  ஆழ்ந்தகன்ற  நுண்ணியனே “

என்னுந்  திருவாசகப்  பகுதி  ஈண்டு  நினைந்து  இன்புறத் தக்கது .  இங்கே  நுண்மை  ஒன்று  மிகுதியாகக்  கூறப்பட்டுள்ளது . அதற்குக்  காரணம்  அணுவினும்  அணுவாய்  நிற்கும்  இறைவனிலக்கணம்  இந்  நட்புக்  குணத்திற்குப்  பொருந்தாது  என்பதே .  

3  .  தேற்று  முறை

           ஒருவர்க்கு  ஆற்றொணாத்  துயரம்  நேர்ந்தவிடத்துத்  தேற்றப்  புகுவார் , துயரமுற்றார்  உள்ளத்துட்  பதியுமாறு   ஆறுதல்  மொழி  கூற வேண்டும் . அங்ஙனங்  கூறப்படு மொழியும்  உண்மையாக  இருப்பின்  நலமாம் . இந் நிலையில்  தலைமகனுடைய  பிரிவு  கருதி  வேறுபட்ட  தலைமகளுக்குத்  தோழி  ஆறுதல்  கூறுமுகமாக  ஓர்  இனிய  பாடல்  இங்கே  காணப்படுகின்றது . அது ,

“வினையே  ஆடவர்க்  குயிரே  வானுதல்

 மனையுறை  மகளிர்க்  காடவ  ருயிரென

நமக்குரைத்  தோருந்  தாமே 

அழாஅல்  தோழி  அழுங்குவர்  செலவே “

என்பதாம். ஓரமயம்  பொருளீட்டக்  கருதிய  தலைமகன்  அச்செய்தி யை  வெளிப்படையாகக்  கூற  அஞ்சிக்  குறிப்பிற்  புலப்படுத்த  நினைத்தான் .  உண்மைக் காதலன்  எக் காரணத்தை  முன்னிட்டேனும்  தன்  உயிரனைய   காதலியைப்  பிரிய  நேரின்  அச்  செய்தியை  வெளிப்படக்  கூறினால்  அவள்  ஆற்றொணாத்  துயர  மெய்துவாளென்  றெண்ணி  முதலில்  ஒருவாறாகத்  தன்  எண்ணத்தை  அவள்  அறிந்து  கொள்ளுமாறு  குறிப்பிற்  புலப்படுத்தலும் , பின்னர்  விரைந்து  திரும்புவேன்  என்று  கூறிப்  பிரிவை  வெளிப்படுத்தலுஞ்  செய்வன்  .  இதனை.

மினிவரும்  மன்னரும்  முன்னுவ  பொன்னால்  முடியும்” 

என்று   பொதுவாக  நீதி  கூறுவான்   போன்று  பேசத்தொடங்கியதும்  தலவி  பிரிவுக்  குறிப்புணர்ந்து  அழத்தொடங்கினாள் .  என்று  கூறிய  திருக்கோவைப்  பாடலும் , அதன்பின்  ஒருவாறாகத்  தேற்றி  ‘யான்  பிரிந்து  விரைவில்  வருவேன்’  என்றானாக , அது  கேட்ட  தோழி ,  ‘பிரிந்து  போக  வல்லையாயின்  அதனை  எனக்குச்  சொல் ; அங்ஙன மின்றிப்   பிரிந்து  சென்று  விரைந்து  வருதலைச்  சொல்வையாயின்  அதனை  அப்பொழுதே  உயிர்  வாழ்வார்க்குச்  சொல்   என்றும்  கருத்துத்  தொன்ற,

“செல்லாமை  உண்டேல்  எனக்குரை  மற்றுநின்

வல்வரவு  வாழ்வார்க் குரை

என்னுந்  திருக்குறளும்  புலப்படுத்துவனவாம் .  இத்திருக்குறட்  கூற்றுத்  தோழியதாயினும்   வேறுபாடின்மை  பற்றித்  தலைவியாகக்  கொள்ளுதல்  பொருந்தும் .  இம்முறையில்  இங்கே  தன்  பிரிவைக் குறிப்பிற்  புலப்படுத்த  எண்ணிய  தலைவன்  பொதுவாக ,  “வினையே  ஆடவர்க்குயிர்”  என்றான் . இந்  நீதி  மிக  உயர்ந்தது .  தொழின்  முயற்சியின்றி  மக்கள்  வாழ்க்கை  நடைபெறுதல்   அரிதாகலின்  அஃது  ஆடவர்க்  குயிராகுமென்பது  உண்மையே .  இவ்வுயர்ந்த  குறிக்கோளைப்  பொது  நீதியாகத்  தலைவன்  கூறிய  அளவில்  அவன்  பிரியக்  கருதுகின்றான்  என்பதைக்  குறிப்பால்  அறிந்த  தலைமகள்  துயரமிக்கு  வேறுபட்டாளாக , அஃது  உணர்ந்த  தோழி  அவளை  நோக்கி ,’ஆடவர்க்கு  வினை  உயிர்  என்று  கூறிய  தலைவரே  முன்னொரு  முறை  மனையுறை  மகளிர்க்கு  ஆடவர்  உயிரென்றுங்  கூறியுள்ளார் ; கற்பரசியாகிய  நினக்கு  உயிர்  அவராக , நின்னை  விட்டு  எங்ஙனம்  பிரிந்துறைவர் ? அவர்  கொள்கைப்படி  எவ்வாற்றானும்  பிரிவாரல்லர் ;  வருந்தல்  வேண்டா  ; ஆறுதலடைக’  என்று  தேற்றுவானாயினள் .இங்ஙனம்  தேற்றும்   அறிவாற்றல் உடைய  வளாகத்  தோழியினுயர்வைப்  புலப்படுத்திய , கவியினுட்கோள்   வியத்தற்குரியது .  

4  .  உள்ளுறை

         இனி,  அகப்பொருட்  பகுதியிற்  பேசு  மக்கள் , கருத்தைக்  கருப்பொருள்  வருணனையில்  உள்ளுறை  பொருளாக  அமைத்துக்  குறிப்பிற்  புலப்படுமாறு   வலியுறுத்தலைப்  பலவிடத்துங்  காணலாம் . இவ்வழகு  மொழிக்கே  சிறந்த  தென்னலாம் . செம்பொருளினுங்  குறிப்புப்  பொருள்களே  அறிவுடையார்க்கு  இன்பஞ்  செய்வனவாம் .  தமிழ்  மொழியிலுள்ள  சங்கத்துச்  சான்றோர்  பாடல்களெல்லாம்  பெரும்பாலுங்  குறிப்புப்  பொருள்களை  உடையனவாகவே  காணப்படுவன .  இதற்கு  எடுத்துக்காட்டாக  ஒன்று  காட்டுவேன் .  தலைவியின்  இயைபு  கருதி  நள்ளிரவில்  தலைமகன்  வருதலை யறிந்த  தோழி , வழியில்  உறும்  இடையூறுகளால்  தலைவர்க்குத்  தீங்கு  நேருங்கொலோ?என்றஞ்சி  இரவில்  வருதலை  விலக்க  முற்பட்டுக்  கூறுமுகமாக  ஒரு  பாடல்  உள்ளுறை  நயந்தோன்ற  உள்ளது . அது,

கருங்கட்  டாக்கலை  பெரும்பிறி  துற்றெனக்

கைம்மை  யுய்யாக் காமர்  மந்தி

கல்லா  வன்பறழ்  கிளைமுதற்  சேர்த்தி

ஓங்குவரை  யடுக்கத்துப்  பாய்ந்துயிர்  செகுக்கும் 

சாரல்  நாட  நடுநாள் 

வாரல்  வழியோ  வருந்தும்  யாமே “

என்பதாம் .

              இதன்கண் , தலைமகனது  குறிஞ்சி  நிலத்து  வருணனையாக ,  ‘ஆண்  குரங்கு  இறந்ததாக  அதன்  பிரிவில்  கைம்மைத்  துன்பத்தை  ஆற்றாத  அதன்  பெண்  குரங்கு  தன்  இளங்குட்டியைச்  சுற்றத்திடைச்  சேர்த்து விட்டு , உயர்ந்த  மலையினின்றும்   வீழ்ந்து  உயிரை  மாய்த்துக்கொள்ளும் ‘ என்னுஞ்  செய்தி கூறப்பட்டுள்ளது . இதனால் , நின்  நிலத்துள்ள  விலங்கும்  பிரிவாற்றாது  இறந்து  படுதலை  அறிகின்றாய் ; ஆதலின்  நினக்கு  இடையூறு  நேருமேல்  தலைவி  உயிர்  வாழ்தலை  விரும்ப  மாட்டாள்  என்பது  அறிவிக்க  வேண்டிய  தொன்றன்று  என்று  தோழி  தலைமகனுக்குச்  சொல்லக்  கருதிய  செய்தி  குறிப்பிற்  புலப்படுத்தலை  அறியலாம் .

5  .  மக்கள்  மனநிலை

     இனிப்   பழங்காலத்துத்  தமிழ்  மக்கள்  மனநிலைகளை  அறிதற்குச்  சங்க  நூல்களே  சிறந்த  கருவிகளாகும் . ஒருவனும்  ஒருத்தியுந்  தம்முட்  கொண்ட  காதல்  எத்தகைய  இடையூற்றானும்  பிறழ்ச்சி  எய்துவதன்று . காதல்  வயத்தான  ஒன்று  கூடுவார்  தம்    மனத்திற்குச்  சான்றாக  வேறு  பொருள்களை  எதிர்பார்ப்பதில்லை.  அவரவர்  உள்ளங்களே  சான்றானவாம்.  களவொழுக்கத்து  நெடுங் காலம்  பயின்று  கற்பு  முறையில்  மணஞ்  செய்து  கொள்ளாதிருந்த  தலைவனியல்பைக்  குறித்துத்  தலைமகள் தோழியை  நோக்கி , “தோழி ! தலைவன்  என்னைக்  கனவில்  மணந்த  காலத்தில்  சான்றாவார்  வேறொருவருமிலர் ; தலைவர்  ஒருவரே  இருந்தனர் ; அவரே  தாம்  கூறிய  சூளுறவினின்றுந்   தப்பியொழுகுவாராயின்  யாஞ்  செய்யத்தக்கது  யாதுளது ? அவ்விடத்து  அவ்வமயம்  ஒரு நாரை  மாத்திரம்  இருந்தது  ;அதுவும்  ஓடும்  நீரில்  தானுண்ணும்  பொருட்டு  ஆரல்  மீனின்  வரவை  எதிர்பார்த்து நின்றதாகலின் , எம்  நிகழ்ச்சியைக்  கண்ணுற்றிராது ; காணாத  தொன்றைப்  பற்றிச்  சான்றாதற்குத்  தமிழ்  நிலத்துப்  புள்ளும்  ஒருப்படாது ;  வாய்மை  நெறி  யொழுகும்  இயல்பின  தாகலின் ,  என்று  தலைவி  கூறினாளாம்.  இவ்வரிய  கருத்தைப்  புலப்படுத்தும்  பாடல் :-

யாரு   மில்லைத்  தானே  கள்வன்

தானது  பொய்ப்பின்  யானெவன்  செய்கோ

நினைத்தா  ளன்ன  சிறுபசுங்  கால

ஒழுகுநீ  ராரல்  பார்க்கும்

குருகு  முண்டுதான்  மணந்த  ஞான்றே “

என்பதாம் .  இங்கே  தலைமகள் , சான்றோர்க்குத்  தகுதி  யில்லாத  அஃறிணைப்  பொருளாகிய  நாரையைக்  குறித்துக்  கூறியது  எங்ஙனம்  பொருந்தும் ? எனிற்  கூறுவேன் . தமிழ்  நிலத்துப்  பெண்மக்களுடைய  கற்பின்  பெருமை  குறித்து  அவர்  மண நிகழ்ச்சிக்கு  அஃறிணைப்  பொருள்களுள்ளும்  நிலையியற்  பொருள்களாகிய  மர  முதலிய  சான்றாகியன  நிகழ்ச்சி  , சிலப்பதிகாரத்திற்  கண்ணகி  யென்னுங்  கற்பரசி  வாயிலாக  வெளியிடப்பட்ட  ,

“வன்னி  மரமும்  மடைப்பளியுஞ்  சான்றாக

முன்னிறுத்திக்  காட்டிய  மொய்குழலாள் “

என்னுஞ்  செய்தியால்  அறிகின்றோம் .  மரமாகிய  நிலையியற்  பொருளும்  மடைப்பள்ளியாகிய   செயற்கை  பொருளுந்  தமிழ்  மகளிர்  கற்பிற்குச்  சான்றாகுமாயின் , இயங்கிற்  பொருளாகிய  நாரையைக்  குறித்தது  பொருந்தாதென்று  எங்ஙனம்  எண்ணலாம் ?  

6  .  காதலின்  இயல்பு

         உண்மைக் காதல்  வயப்பட்ட  மகளிர் , தம்  காதலர்  எக்காரணத்தாலாவது  தம்மொடு   அளவளாவுதலில்  தவிர்ந்தொழுகு வாராயினும்  அக்கணவன்மாரிடத்துள்ள   உண்மை  அன்பிற்  சிறிதுங்  குறைபாடிலராய்  ஒழுகும்  இயல்பினர்  என்பதை  இந் நூலிற்  பரக்கக்  காணலாம் . இச்செய்திக்கு  எடுத்துக்காட்டாக  ,  “குறுந்தாட்  கூதளி”  என்னுந்  தலைப்புடைய  பாடலும் , “தச்சன்  செய்த  சிறுமா  வையம்”  என்னுந்  தலைப்புடைய  பாடலும்  குறிப்பிடத்தக்கன . முறையே  அப்பாடற்  கருத்துக்கள்  வருமாறு  ; –  “ஓருயர்ந்த  மலையில்  பெரிய  தேனடையைக்  கண்ட  ஒரு  முடவன்  அதனைப்  பெருவதர்  கியலாமையால்  தன்  உள்ளங்கையைச்  சிறிய  கொள்கலமாகக்  குவித்து  அம்மலையின்  கீழிருந்தபடியே  அத்தேனிறாலைப்  பல  முறை  சுட்டித்  தன்  கையையே  நாவினாற்றுழவி  இன்புறுதல்  போலக் , காதலர்  நல்கார்  நயவாராயினும்  யான்  அவரைப்  பலமுறை  காண்டலும்  என்  உள்ளத்திற்  கினிதாகும்”  என்பதும் ,  ‘சிறு  குழந்தைகள்    நாம்  உருட்டி  விளையாடுஞ்  சிறு  வண்டியை  ஏறிச்  செலுத்தி  இன்புறாராயினும்  அவ்வண்டியை  இழுத்து  நடத்தி  அவ்வின்பத்தை  அடைதல்  போல , என்  கணவரை  மெய்யுற்று  இன்பம்  அடையப்  பெற்றேனாயினும்  அவரது  நட்பை  மேன்மேலும்  பெருக  வளர்த்து  இன்பம்  அடைந்தேன்’  என்பதும்  ஆம் . இங்கே  குறிக்கப்பட்ட  காதர்  பண்புகள்  எத்துணைச்  சிறப்புடையனவாகக்  காணப்படுகின்றன  என்பது  உணர்ந்தின்  புறத்தக்கது .   

அறிஞர்களே !

        இதுகாறுஞ்  சங்கத்துச்  சான்றோர்களின்  இலக்கியப்  பெருமையும் , அவற்றுள்  குறுந்தொகை  என்னும்  அழகிய  நூலின்  மாண்பும்  ஒருவாறு  புலப்படுத்தப்பட்டன .   இலக்கியச் சுவையே  தம்  வாழ்க்கை  நலமெனக்  கொண்டு  துய்த்தின்புறும்  உணர்வுடைப்  பெருமக்கட்கு  , இன்ப  வூற்றாகவுள்ள  இன்னோரன்ன  நூலாராய்ச் சிகள்   தேவ ரமிழ்தினுஞ்  சிறந்த  சுவை  பயப்பனவாம் .  இதுவரை  பொறுமையோடிருந்து  செவி  சாய்த்த  நும்  எல்லோருக்கும்  என்  வணக்கத்தை  உரிமைப்படுத்துகின்றேன் .  இம்மட்டில்  யாந்தரும்  சிறுசுவை  விருந்தை  நிறுத்தி  ,என்னை   அறிஞர்கள்  இந் நூன்முகமாகத்  திரட்டி  வைத்திருக்கும்  பெருவிருந்தை  நீவிர்  துய்க்குமாறு  நும்மையும் , வரையாது  வழங்குமாறு  என்  நண்பர்களாகிய  சொற்பொழிவாளர்களையும்  வேண்டுகின்றேன் .

                              தமிழ்  மொழி  நீடு   வாழ்க !

                    8.  மணிமேகலை

(25-01-1941 இல்   திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது)

          மணிமேகலை  யென்பாள், கோவலன்  என்னும்  வணிக  குமரனுக்குக்  காதற்  கணிகையாகிய  மாதவி  பெற்ற  மகளாவாள் . அவள்  வரலாறு   கூறும்  காப்பியத்திற்கும்  இதுவே  பெயராகும் . இற்றைக்கு  ஆயிரத்து  எண்ணூறு  யாண்டுகளுக்கு  முன் , சோழ   நாட்டின்  தலைநகராக  விளங்கிய  காவிரிப் பூம்பட்டினத்தின்  பெருங்குடி   மரபில்  தோன்றிய  கோவலன்  என்பான் , அரசவையில்  ஆடல்  பாடல்களில்  திறமை  பெற்று  அரங்கேறிய  நாடகக்  கணிகையாகிய  மாதவியென்பாளைக்  காதலித்து , அவளுடனுறைந் தொழுகினனாக , அவனுக்கு  அவள்  வயிற்றில்  மணிமேகலை  என்னும்  பெண்மணி  பிறந்தனள் . நிகரற்ற  அழகு  வாய்ந்த  இப்பெண்கள்  திலகம்  மங்கைப்  பருவம்  எய்திருக்கு  நாளில் , தன்  அருமைத்  தந்தையாகிய  கோவலனும் , பெற்ற  தாயினும்  உற்றதாயாக  மேற்கொண்ட  கண்ணகியும்  படாத  துன்பங்களுக்கு  ஆளாகி  இவ்வுலக  வாழ்க்கையை நீத்த  செய்தி  கேட்டுத்  திடுக்கிட்டு   இவ்வுலக  இன்பத்திற்  பற்றற்று  ஒழுகத்  தலைப்பட்டாள் .

“ஆடவர்  கண்டா  லகறலு  முண்டோ

பேடிய  ரன்றோ  பெற்றியி  னின்றிடின்”

என்று  சுதமதியாற்  பாராட்டப்பட்ட  இவள்  அழகின்  சிறப்பை  நினைந்து , இவளைத்  தகாத  ஒழுக்கத்திற்கு  ஆளாக்க  முயன்ற  இவள்  அன்னையின்  தாயாகிய  சித்திராபதி  என்பாள் , ‘பாண்மகள்  பட்டுழிப்  படூஉம்  பான்மையில் , யாழினம்  போலுமியல்பினம்’  என்றும் , ‘நறுந்தா  துண்டு  நயனில்  காலை,  வறும்பூத்  துறக்கும்  வண்டு  போல்குவம்’  என்றும்  தங்  குல  ஒழுக்கத்திற்கு  ஏற்ப  நினைந்து  ஒரு  தோழி  மூலமாக  இச்செய்தியை  மாதவிக்குத்  தெரிவித்தனள் .  அது  கேட்ட  மாதவி ,

மாபெரும்  பத்தினி  மகள்மணி  மேகலை

அருந்தவப்  படுத்த  லல்ல  தியாவதுந்

திருந்தாச்  செய்கைத்  தீந்தொழிற்  படாஅள்”

என்று  மறுத்து  உரைத்தனள் . இந்  நிலையில் , இருமுது  குரவரையும்  இழந்தமையால்  மணிமேகலைக்கு நேர்ந்த  துன்பத்தை  ஆற்றுதற்  பொருட்டுச்  சுதமதி  யென்னும்  தோழி  , ‘உபவனம்’  என்னும்  ஒரு  பூஞ் சோலைக்கு  அவளை  அழைத்துச்  சென்றாள் . இவள்  கட்டழகின்  மாண்பைக்  கேட்ட  அந் நகரத்து  அரச குமாரனாகிய  உதயகுமரன்  என்பான் , காம  பரவசனாய்  அவ்வனத்திற்  சென்று  பளிக்கறையுட்  புகுந்திருக்கும்  மணிமேகலையைப்  பற்றிப் பலவாறு  பாராட்டிச்  சுதமதியால்  தெருட்டப்பட்டு  மீண்டும்  அவளை  யடையலாம்  என்னும்  துணிவுடன்  திரும்பினான் . இந்  நிலையில்  உதயகுமரன்  காட்சியில்  மணிமேகலைக்குச்  சிறிதளவு  அவன்பால்  உள்ளஞ்  சென்றது . இதனை  அவள்  ஒளியாமல்  தோழியாகிய  சுதமதியை  நோக்கி ,

கற்புத்  தானிலள்  நற்றவ  வுணர்விலள்

வருணக்  காப்பிலள்  பொருள்விலை  யாட்டியென்

றிகழ்ந்தன  னாகி  நயந்தோ என்னாது 

புதுவோன்  பின்றைப்  போனதென்  னெஞ்சம் 

இதுவோ  அன்னாய்  காமத்  தியற்கை”

என்று  கூறிய  செய்தியாலும் , பின்னர்  உதயகுமரன்  காஞ்சனனால்  வெட்டுண்டு  இறந்த   பொழுது  மனங்கலங்கி,

            “உவவன   மருங்கில்   நின்பா  லுள்ளந்

              தவிர்விலே  னாதலின் …………………………

              …………………..நின்  இடர்வினை   யொழிக்கக்

              காயசண்  டிகைவடி  வானேன்  காதல

என்று  இரங்கிப்  புலம்பினமையாலும்  அறியலாம். இங்ஙனம்   உதய குமரனால்  இழித்து  உரைக்கப்படும்  அவள்  உள்ளம்  சிறிது  காதலித்ததற்குக்  காரணம் , பண்டைப்பிறப்புக்களில்  இவ்விருவரும்  கணவனும்  மனைவியுமாக  வாழ்ந்து  வந்த  தொடர் பென்று  ஆசிரியர்  கூறுகின்றார் . காமத்தீச்  சிறிதாகப்  பற்றினும்  பெரிதாகி  வெதுப்பும்  ஆதலின் , அத் தொடர்பினின்றும்  ஒழித்தற்கு  மணிமேகலையை  அவள் குலதெய்வமாகிய  மணிமேகலா தெய்வம்  யாரும்  அறியாதபடி  எடுத்து , இலங்கையிடூ உள்ள  மணிபல்லவம்  என்னுந்  தீவிற்குக்  கொண்டு  வந்து  புத்தபீடிகையைத்  தரிசிக்கச்  செய்தது . இச் செய்தியை  ஆசிரியர்  மணிமேகலா  தெய்வத்தின்  கூற்றாக ,

ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம்

 நீங்காத்  தன்மை  நினக்குமுண்  டாகலிற்

கந்த  சாலியின்  கழிபெரு  வித்தோர்

வெந்துரு  வெண்களர்  வீழ்வது  போன்மென

அறத்தின்  வித்தாங்  காகிய  உன்னையோர்

திறப்படற்  கேதுவாச்  சேயிழை  செய்தேன்

என்று  கூறியதனால்  அறியலாம் . இங்கே  மணிமேகலையை  நோக்கிச்  சிறந்த  மணமுள்ள   கந்தசாலி  என்னும்  நெல்  வித்தை  உவர் நிலத்தில் வீழ்ந்து வீணாக்குதல்  போல  அறத்தின்  வித்தாகிய  நின்னை  இழி காமத்துக்கு  இலக்காக்குதல் தக்கதன்று  என்றெண்ணி, அறச்செல்வி  யாக்குதற்கு  ஏற்றது செய்தேன் என்னுங்கருத்துத்  தோன்றக்  கூறியது பாராட்டத்தக்கது .

     இனி , இந்நங்கையர்  திலகம்  மணிபல்லவம்  என்னுந்  தீவில்  எதிர்ப்பட்ட  தீவதிலகை யென்பாள்   உதவியால்  கோமுகி  யென்னும்  பொய்கையினின்றும்  அமுத  சுரபி  யென்னும்  அட்சய  பாத்திரத்தைப்  பெற்றாள். இப்பேறே  மணிமேகலையின்  அறச் செயற்குச்  சிறந்த முதற்  கருவியாயிற்று .தீவதிலகை,

“குடிப்பிறப்  பழிக்கும்  விழுப்பங்  கொல்லும்

 பிடித்த  கல்விப்  பெரும்புணை  விடூஉம்

 நாணணி  களையும்  மாணெழில்  சிதைக்கும்

பூம்முலை  மாதரொடு  புறங்கடை  நிறுத்தும்

பசிப்பிணி  யென்னும்  பாவிஅது  தீர்ந்தோர்

இசைச்சொல்  அளவைக்  கென்னா  நிமிராது”

எனவும் ,

மண்டிணி  ஞாலத்து  வாழ்வோர்க்  கெல்லாம்

உண்டி  கொடுத்தோர்  உயிர்கொடுத்  தோரே “

எனவுங்கூறிய  அறவுரைகளைக்  கடைப்பிடித்து , அவ்வமுத  சுரபி யினின்றும்  அள்ள  அள்ளக்  குறையாத  உண்டியை  எளிய  மக்களுக்கு  வழங்குதலாகிய  பேரறத்தை  மேற்கொண்டொழுகு வாளாயினள் . இங்ஙனம்  புரிந்த  அறச்  செயலில் ,

ஆற்றுநர்க்  களிப்போர்  அறவிலை  பகர்வோர்

 ஆற்றா  மக்கள்  அரும்பசி  களைவோர்

மேற்றே  யுலகின்  மெய்ந்நெறி  வாழ்க்கை”

என்னும்  உண்மை இவ்வம்மையால்  மேற்கொள்ளப்பட்டது . செல்வமுடையார்க்குப்  பல்வகைச்  சுவை  நிரம்பிய  உணவுகளைப்  படைத்தல்  அறமாகாதெனவும் , அஃது  ஆரவார  நீர்மையேயாமெனவும்  உணர்ந்தமையால் , அம்முறை  கைவிடப்பட்டுக்  குருடர் , முடவர் , செவிடர் , ஆதரவில்லோர் , நோய்த்  துன்பமுடையோர்  ஆகிய  எளிய  மக்களுக்கே  இவளறம்  பயன்படுவதாயிற்று. இவ் வன்னதானமாகிய  அறம்  புரிதற்கு ஏற்ற  இடமாகக்  காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள   ‘உலக  அறவி’  என்னும்  ஊரம்பலத்தைத்  தெரிந்தடைந்தனள் .

             அங்கே  உதயகுமரன்  தன்மேற்  காதலுடையனாய்  வருதலையறிந்து  அவனால்  இடையூறு  நேரவுங்கூடுமென்று  எண்ணிக்  காயசண்டிகை  என்னும்  வித்தியாதரப்  பெண்ணின்  உருவத்தை  மேற்கொண்டு , தன்  அறச்செயலைப்  புரிவாளாயினள் .  அவ்வமயம் , காயசண்டிகையின்  கணவனாகிய  காஞ்சனன்  என்பான் , தன்  மனைவியைக்  காதலித்ததாகத்  தவறுபட  நினைந்து  உதயகுமரனை  வாளாலெறிந்து  கொன்றான் . இச்செயலை  அறிந்த  உதயகுமரன்  தந்தையாகிய  அரசன் , தன்  மகன்  கொலைப்பட்டது  குறித்துச்  சினமுடையவனாய்  மணிமேகலையைச்  சிறைப்படுத் தினான் .

              அவ்வரசன்  மனைவியாகிய  இராசமாதேவி  என்பாள் , மணிமேகலைக்கு  நலஞ்செய்வதாக  வெளிக்காட்டித்  துன்புறுத்தும்  நினைவுடையவளாய்  அவளைச்  சிறையினின்றும்  விடுத்து , மயக்கும்  மருந்தை  உணவிற்  கலந்து  ஊட்டியும் , புழுக்கறையில்  அடைத்தும் , காமுகன்  ஒருவனை  விடுத்துப்  பழியுண்டாக்க  முயன்றும்  பலவாறு  கொடுமை  செய்தனள் .  மணிமேகலை  இக்கொடுந்துன்பங்களை  யெல்லாம்  பொறுத்துக்கொண்டு , தான்  எய்திய  சில  சித்திகளால்  அவ்விடையூறுகளைக்  கடந்து   சிறிதும்  வாட்டமின்றி  இருந்தனள் .  இந் நிலை  அறிந்த  இராசமாதேவி  அச்சமுற்று , ‘மகனை  இழந்த  துன்பம் பொறுக்க லாற்றாது  இத் தீங்குகளைச்  செய்தேன் பொறுத்தருள வேண்டும் ‘  என்று  மணிமேகலையை  வேண்ட , மணிமேகலை  அவள்  துன்பத்தை  யொழிக்குமுகமாக  உண்மைப்  பொருளை  மனங்கொளத்  தெருட்டி  அருளறத்தைக்   கடைப்பிடிக்கச்  செய்தனள் .

           மகனது  இறப்பால்  துயருறும்  இராசமாதேவிக்கு  மணிமேகலை  கூறிய  பொருளுரையால்  அவளறிவு  எவ்வளவு  தெளிந்த  நிலையிலுள்ள  தென்பது  புலனாம் .

“உடற்கழு  தனையோ  உயிர்க்கழு  தனையோ

உடற்கழு  தனையேல்  உன்மகன்  றன்னை

எடுத்துப்  புறங்காட்  டிட்டனர்  யாரே?

உயிர்க்கழு  தனையேல்  உயிர்புகும்  புக்கில்

செயப்பாட்டு  வினையால்  தெரிந்துணர்  வரியது

அவ்வுயிர்க்  கன்பினை  யாயின்  ஆய்தொடி

எவ்வுயிர்க்  காயினும்  இரங்கல்  வேண்டும் “

என்பது  அப்பொருளுரையாம் . இதன்கட்  குறிக்கப்பட்ட  பொருள் , ‘உடல்  ஒழிந்ததற்கு  அழுதேனென்றால் , அவ்வுடலைச்  சுடலையில்  இடங்கொடுத்தது  யார் ? நீயன்றோ?  அன்றி, உயிர்  நீங்கியதற்கு  அழுதேனென்றால்  ,  அவ்வுயிர்  நித்தியமாகலின்   அது  செய்த  வினைவழி  ஓர்  உடல்  எடுத்திருக்கும் ;  அவ்வுடல்  இன்னதென  நம்மால்  தெரிந்துகொள்ளுதல்  அரிது .  அவ்வுயிர்க்கு  அன்பு  செய்ய  விரும்பின்  உலகத்துள்ள  எவ்வுயிர்களுக்கும்  இரங்க்கல்  வேண்டும் ;  அங்ஙனம்  இரங்குவையாயின், பலவாகிய  அவ்வுயிர்த்  தொகுதிகளுள் நின்மகன்  உயிரும்  ஒன்றாமாதலின்  அதற்கு  அன்பு  செய்தனை  யாவை ‘  என்பதாம் .இங்ஙனம்  அவள்  துயரம்  ஒழிதற்குரிய  நெறியைக்  காட்டி , அதன்முகமாக   அருளறத்தை  மேற்கொள்ளச்  செய்த  மணிமேகலையின்  தெளிந்த  நுண்ணறிவுத்  திறனும் , அருளறத்திலுள்ள  விருப்பமும்  பாராட்டத்தக்கன .  இவள் உபதேசச்  சிறப்பைக்  குறித்து , ‘மகனை  இழந்தமையால் நேர்ந்த  துயரமாகிய  நெருப்பு , மனம்  விறகாகப்  பற்றி உள்ளத்தைச்  சுடுதலின் , ஞானமாகிய  நல்ல  நீரைத்  தெளித்து  அவித்தனள் ‘  என்னும்  பொருள்  தோன்ற ,

ஞான  நன்னீர்  நன்கனந்  தெளித்துத்

தேனா  ரோதி  செவிமுதல்  வார்த்து

மகன்றுயர்  நெருப்பா   மனவிற  காக

அகஞ்சுடு  வெந்தீ  ஆயிலை  அவிப்ப “

என்று  ஆசிரியர்  பாராட்டியுள்ளார் .

            இஃதன்றி , மணிமேகலை  தன்  ஆற்றலால்  அந்  நகரத்துள்ள  சிறைச்சாலையை  அடைந்து  தண்டிக்கப்பட்டுப்  பசியால்  வாடிய  மக்களுக்கு  வேண்டுமளவு  உணவளித்தும், அவர்களுக்கு  அறிவுரை  பகர்ந்தும்  அச்சிறைச்சாலையை  அறச்சாலையாக்கிப்  பலவகை  புண்ணியச்  செயல்களும்  நடைபெறும்படி அரசனைக்கொண்டு  செய்வித்தனள் . இக்காலத்தில்  சிறைச்சாலையைச்  சீர்திருத்துவ தற்காக  முற்படும்  விருப்பமுடைய  பெரியோர்களுக்கு  இம்மணிமேகலையின்  அருஞ்செயல்  வழிகாட்டியாக  உள்ளதாகும் . தனக்குப்  பலவகைக்  கொடுஞ்  செயல்களால்  தீங்கிழைத்த  இராசமாதேவியை  வெறாது , அவள்  அறியாமையை  ஒழித்து , அவளை  நல்வழிப்படுத்திய  பேருதவியை  நினைக்குங்கால்  திருவள்ளுவ  தேவர்  அரிதினாராய்ந்து  கூறிய ,

இன்னாசெய்  தாரை  யொறுத்தல்  அவர்நாண

  நன்னயஞ்  செய்து  விடல்”

“இன்னா  செய்தார்க்கும்  இனியவே  செய்யாக்கால்

என்ன  பயத்ததோ  சால்பு

என்னுந்  திருக்குறள்கள்  நம்  நினைவின்முன்  நிற்பனவாம் . ஒருவன்  தனக்குத்   துன்பஞ்  செய்தார்க்கு  அவர்  நாணும்படி  நன்மை  செய்தலே  அவரைத்  தண்டித்ததாகும் .  என்னும்  பொருளுரை   மணிமேகலை  வாழ்க்கையில்  தலை  நின்று  விளங்குவதொன்று .  இங்ஙனம்  மணிமேகலை  தன்  வாழ்நாளிற்  பெரும்பகுதியைப்  பிறர்க்கு நலம்  செய்தலிலேயே  கழித்தனள் .  கணிகையர்  குலத்தில்  தோன்றிக்  கட்டழகும்  யெளவனமும்  வாய்க்கப்  பெற்றும் , அரச குமரனால்  பலமுறை  விரும்பப்பட்டும் , இழிதக  வாகிய  காம  நிலையில்  உள்ளத்தைச்  செல்லவிடாது , தனக்குத்  தீங்கு  செய்தார்க் கும்  நன்மையே  செய்தும் , உரிய  சமயங்களில்  அறவுரைகளைக் கொண்டு   அறிவுக்கலக்கமுற்றாரைத்  தேற்றியிம்  அருளறத்தை  வளர்த்த  பெருமை  மணிமேகலைக்கே  சிறந்ததாகும் . திருவள்ளுவர்  தவத்தின்  இலக்கணங்கூறுங்கால்,

உற்றநோய்  நோன்ற  லுயிர்க்குறுகண்  செய்யாமை

 யற்றே  தவத்திற்  குரு “

என்றனர் . தனக்கு  நேர்ந்த  பலவகைத்  துன்பங்களையும்  பொறுத்துப்  பிறவுயிர்களுக்கு  ஒரு  சிறிதும்  துன்பஞ்  செய்யாமையோடும்   நன்மையும்  புரிந்த  தவப்பெரும்  செல்வியாக   விளங்கினமையின், மணிமேகலையே  இலக்கியமாவாள் .

       இன்னும்  இவ்வம்மை , சாவக  நாடு , இலங்கை  முதலிய  அயல்  நாட்டு  யாத்திரையையும்  , வஞ்சி , காஞ்சி  முதலிய  உண்ணாட்டுச்  செலவையும்  மேற்கொண்டு  ஆங்காங்கு  பற்பல  அறங்களைப்  புரிந்தும், ஞானம்   மிக்க  தவச்  செல்வர்களிடத்தில்   தருமோபதே சங்களைப்  பெற்றும், பற்பல  சமய  உண்மைகளைக்  கேட்டும் , சிறப்பான  பெளத்த  மத  உண்மைகளை  உணர்ந்தும்  ஒழுகுவாளாயி னாள் .  அறிவு  வளர்ச்சி  யடைதற்கு  அயல்  நாட்டு  யாத்திரை  பெரிதும்  உதவியாகு மென்னும்  உண்மையையும்   இவ்வம்மை  சரிதம்  புலப்படுத்துவதாகும் .

         சமயவாதிகள்  பற்பலரை  அடுத்து  உண்மை  தெளிதற்கு  வாதித்ததும்  ,  மாறுபட்ட  கொள்கையுடையாரைத்  திருத்தியதும்  வியப்பை  அளிப்பனவாம் . ஒரு சமயம் , காட்சியளவை  ஒன்றினையே  கடைப்பிடித்து   அநுமானப்  பிரமாணத்தை  ஏற்றுக் கொள்ளாத  பூதவாதியை யடுத்து  இவ்வம்மை  தேற்றியமுறை  அரிதினும்   அரிது . அப்பூதவாதியை  நோக்கி  அம்மையார் , நின்  தந்தை  தாயார் யாவரன , அன்னாரை  அவன்  காட்டினனாக , “காட்சியளவை  ஒன்றனையே  கடைப்பிடிக்கும்  நினக்கு  இவர்  எப்படித்  தந்தை  தாயார்  ஆவர்?  காட்சியில்  வைத்து  எவ்வாறு  காண  முடியும் ?”  என  வினவ , அவன்  கலக்கமுற்றுத் , தன்  கொள்கையைக்  கடைப்பிடிக்கும்  நிமித்தம்  தந்தை  தாயாரை  ஏற்றுக்கொள்ளாது  ஒழிப்பதா?   அல்லது  அவரை  ஏற்றுக்கொள்ளு  நிமித்தம்  தன்  கொள்கையை  விட்டு  ஒழிப்பதா ?  என்னும்  ஊசலாட்டிற்கு   ஆளாயினான் . இங்ஙனம்  தந்தை  தாயாரை  விட்டொழிக்க  மனம்  வாராத  அந்நிலையில்  மணிமேகலை ,

“தந்தை  தாயரை  அனுமானத்  தாலலது

 இந்த  ஞாலத்  தெவ்வகை   யறிவாய் “

என்று  தேற்றுவாளாயினாள் .               

         இவள் , இளமை  நிலையாமை ,  யாக்கை  நிலையாமை  முதலியவற்றை  பிறர்க்கு  எடுத்துக் காட்டி  நல்வழிப்  படுத்துந்  திறமையில்   மிகச் சிறந்தவ ளென்பதற்கு   இவ்வரலாற்றுப்  பகுதியிற்   கண்ட  வேறு சில  சான்றுகளும்  உள . அவற்றுள்  முன்னர்  காம  வேட்கையிற்  சிக்குண்ட  உதயகுமரனுக்கு  இளமை  நிலையாமையை  அறிவுறுத்த  எண்ணி , அப்பொழுது அங்கே இயல்பாக  வந்த  முதிர்  பருவத்தினளாய  ஒருத்தியைக்  காட்டிப்  பண்டு  வனப்புடையனவாக  இருந்த  அவள்  உடல்  உறுப்புக்கள்   இப்போது  வன்மை  குறைந்து  அழகிழத்தலைக்  குறித்து ,

தண்ணறல்  வண்ணந்  திரிந்துவே  றாகி

 வெண்மண  லாகிய  கூந்தல்  காணாய் “ 

என்பது  முதலாக  ஏனை  யுறுப்புக்களில்   வேறுபாட்டையும்  விளக்கிக்  காட்டி  முடிவில் ,

“பூவினுஞ்  சாந்தினும்  புலால்மறைத்  தியாத்துத்  

தூசினும் மணியினும்  தொல்லோர் வகுத்த

வஞ்சந்  தெரியாய்  மன்னவன்  மகனே

 என்று  தெளிவுறுத்தியதொன்று .

             சாவக  நாட்டரசனாகிய  புண்ணியராசனைக்  கண்டு , அவன்  முற்பிறப்பில்  ஆபுத்திரனாக  இருந்து  அருளறம்  பேணிய  செயலை  எடுத்துக் காட்டி , அவனுக்கு  நேர்ந்த  மயக்கத்தைத்  தெளிவித்துத்   தருமோபதேசஞ்  செய்து  நன்னெறிப்படுத்தியது   மற்றொன்று .

             இங்ஙனம் , பல்லாற்றானும்  பலர்க்கும்  உதவி  புரிந்து  முடிவில்  வஞ்சி  நகரத்திற்  சென்று , சமய  வாதிகள்  பற்பலரொடு  வாதப் போர்  நடத்தித் , தள்ளுவன  தள்ளிக்  கொள்ளுவன  கொண்டு , காஞ்சியம் பதிக்குச்  சென்று , அறவண  அடிகளை  யடுத்துத்  தத்துவ ஞானங்  கைவரப்பெற்றுப் , பவத்திறம்  அறுகெனத்  தவச்  செயலில்  தலைப்பட்ட   மணிமேகலையின்  சிறந்த  வாழ்க்கை  வரலாறு , அறிவுடையுலகம்  நன்னெறிப்படுதற்குச்  சிறந்த  வழிகாட்டியாக  உள்ளதென்பது  தெளிவாம் .

                                            நி றை ந் த து

Leave a comment