பண்டிதமணி வாழ்க்கை வரலாறு

பண்டிதமணி

(வாழ்க்கை வரலாறு)

எழுதியது

பெருமழைப் புலவர்

திரு பொ. வே. சோமசுந்தரனார்

(வெளியீடு: 1954)

தோற்றுவாய்

பண்டைக்காலத்தே நம் செந்தமிழ்நாட்டில் சமண புத்த சமயங்கள் மிகவும் செல்வாக்கடைந்து, சைவ வைணவ சமயங்கள் பெரிதும் வீழ்ச்சியடைந்தன என்றும், அக்காலத்தே இறைவன் திருவருளாலே திருநாவுக்கரசர் முதலிய சைவசமய குரவர்களும், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும் தமிழகத்தே தோன்றி, வீழ்ச்சியுற்ற சைவ வைணவ சமயங்களின் சிறப்புகளைப் பல்லாற்றானும் மக்கட்கு தெரியக்காட்டி அச்சமயங்கள் தழைத்தோங்குமாறு செய்தருளினர் என்றும் வரலாற்று நூல்கள் விளம்புகின்றன.

மக்கள் வாழ்க்கைக்குப் பெருமை தருவனவற்றுள் தலைசிறந்தவை சமயமும், மொழியும் எனலாம். இவ்விரண்டுமே விலங்கியல் வாழ்க்கையினின்றும் வேறு பிரித்து மக்களை உயர்திணை என்று கூறுதற்குரிய சிறப்பை நல்கி, மக்கள் வாழ்க்கையின் சீரிய பயனை எய்துவிக்கும் தெய்வீகக் கருவிகளாம். ஆதலால் இவற்றை நன்கு பேணிக்கொள்ளுதல் ஒவ்வொரு மனிதனுக்கும் முதற்கடமையாகும்.

சமயமும் மொழியின் உதவியின்றேல் வீழ்ச்சியுறும்; ஆதலின் சமயத்தினும் மொழியே சிறப்புடைக் கருவி எனலாம். இச்சிறப்புணர்ந்து போற்றும் நாடு பெரிதும் முன்னேற்றமடையும். இதைப் போற்றாத நாடு பெரிதும் வீழ்ச்சியுற்றுத் தன் ஒன்னார்க்கு அடிமைபுகும் என்பது உறுதி.

பண்டு, சைவ வைணவ சமயங்கள் வீழ்ச்சியடைந்தனவே யல்லாமல், நம் தாய்மொழி வீழ்ச்சியடைந்ததில்லை. கி. பி. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நம் நாட்டின்கண் ஒற்றுமை உணர்ச்சி குன்றி, மக்கள் தம்முட்கலகம் விளைத்துக்கொண்டு, வெள்ளையர்க்கு அடிமையாயினர். அயலோர் ஆட்சியில் நம் தமிழகமட்டும் அன்று; நம் இந்திய நாடே அடங்கிக் கிடந்தது.

இக்காரணத்தால் நாட்டில் அறியாமைப் பேரிருள் மிகுந்து, மக்கள் தந் தாய்மொழியின் அருமை பெருமைகளை உணர்ந்து போற்றும் மதுகையில்லாதவராய்த் தம் பெருமை குன்றி வீழ்ச்சியடைந்தனர். அரசியலார் மொழியாகிய ஆங்கிலமொழிக்கே பெருஞ்சிறப்பளிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கே ஊதியம் வழங்கப்பட்டது. ஒரோவழித் தந்தாய்மொழிப் பற்றுடையராய் அதனைப் பயின்ற அறிஞரைப் போற்றுவார் யாருமிலர். பண்டு உலகெலாம் புகழ்வீசித்திகழ்ந்த நந்தமிழன்னை, தன்னைப் போற்றுவார் இல்லாத ஏழையாய் ஒடுங்கினாள். அவள் பழம்பெருஞ் செல்வமாகிய இலக்கியக் கருவூலங்கள் எல்லாம் அழி நிலை எய்திக் குறைந்தும் மறைந்தும் போயின. இதற்கு முன்னர் என்றும் கண்டறியாத வீழ்ச்சியை நம் தமிழன்னை எய்தினாள்.

பண்டு மெய்ந்நெறியாளர்களாகிய சமயங்கள் வீழ்ச்சியுற்ற போது, நாயனார்களும் ஆழ்வார்களும் தோன்றியதே போன்று மக்கட்கு உறுதிபயப்பதாகிய மொழி வீழ்ச்சியுற்ற அப்பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நம் தமிழகத்தே பற்பல இடங்களினும் பற்பல பெரியோர்கள் தோன்றலாயினர். நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் தோற்றுவித்துச் சைவ வைணவ சமயங்களை நிலைநிறுத்திய இறைவனே இப்பொழுதும் நமது தெய்வத் தமிழை நிலைநிறுத்தத் திருவுளங்கொண்டு, இவ்விருட்காலத்தே அறிவொளிமிக்க இப்பெரியோர்களைத் தோற்றுவித்தனனாதல் வேண்டும். இவர்கள் தாம் தோன்றியிலரேல் நம் ஒப்பற்ற சிந்தாமணியையும், சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும், இன்னோரன்ன அறிவுக் கருவூலங்கள் பிறவற்றையும் இழந்து யாம் வறியராய்க் கிடப்பது திண்ணம்.

வீழ்ச்சியுற்ற நந்தமிழ்மொழியை மீண்டும் வாழ்விப்பதே தம் பிறப்பின் குறிக்கோளாகக்கொண்டு முயன்று, தாங்கருதியபடியே தமிழ்மகளைப் பெருவாழ்வுறுத்திய இப்பெரியோர்களில் தலைசிறந்த சிலரை மட்டும் கூறுகின்றேன். உயர்திரு மறைமலையடிகளார் அவர்கள், மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், திரு வி. கலியாணசுந்தரமுதலியார் அவர்கள், திரு நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், திரு நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி திரு மு. கதிரேச் செட்டியார் அவர்கள், திரு ரா. இராகவையங்கார் அவர்கள், திருவாளர் ரா. பி. சேதுப்பிள்ளை யவர்கள் ஆகிய இவர்களும், இவர்கள் தொண்டிற்கு உறுதுணையாய் நின்ற வேறு சிலரும் ஆவர்.

பண்டு சமய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் செய்ந்நன்றியறியும் நம்முன்னோர்கள் உருவச்சிலை செய்து திருக்கோயில்களில் அமைத்துத் தெய்வமாகப் போற்றி வருவாராயினர் அல்லரோ? அங்ஙனமே, இப்பெரியோர்களை யாமும் உருவச்சிலை எடுத்துத் தெய்வமாகப் போற்றுதல்வேண்டும். அங்ஙனம் செய்வது நமக்கே ஆக்கஞ்செய்து கொள்ளுமொரு நற்செயலாகும். எனவே மேற்கூறிய பெரியார்களுள் மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்களின் வரலாறும் சிறப்பும் விளக்கும் பொருட்டே இந் நூல் எழுந்ததென்க.

  1. நாடும் ஊரும்

“வடவேங்கடத் தெங்குமரி யாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தே” சேர சோழ பாண்டிய நாடுகளாகிய முத்தமிழ்நாட்டில் நம் பண்டிதமணியவர்கள் பாண்டி நாட்டில் தோன்றியவராவர். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிவளர்ச்சியின் பொருட்டுச் சங்கம் வைத்தும், நல்லிசைப் புலவர்கட்குச் சிறந்த பரிசில்கள் அளித்தும், பத்துப்பாட்டாதிய இலக்கியச் செல்வங்களைத் தொகுத்தும், தொல்காப்பிய முதலிய இயனூல்களைத் தோற்றுவித்தும், இன்ன பிற பணிகளாலே தமிழாக்கங் கண்ட நாடு அச்செந்தமிழ்ப் பாண்டிநாடன்றோ! தமிழ்மொழி, மூன்று தமிழ் நாட்டிற்கும் பொதுவாயினும், அதன் வளர்ச்சியிற் பெரிதும் முயன்றமை கருதி அம்மொழியைக் “கூடற்றமிழ்”  என ஆன்றோர் அழைப்பதும் உண்டு.

பாண்டி நாட்டின் கண் உள்ள உட்பகுதிகளாகிய சிறிய நாடுகளில் பூங்குன்ற நாடு என்றோர் நாடுளது. இது இருபத்து நான்கு பற்றுக்களைத் (பட்டிகள் அல்லது கிராமங்கள்) தன்னகத்தே கொண்டது. அவ்விருபத்து நான்கு பட்டிகளுக்கும் தலைமையிடமாய்த் திகழ்வது மகிபாலன்பட்டி என்னும் திருநிறைமூதூர். இம்மூதூரே நம் பண்டிதமணியவர்களை ஈன்றளித்த பெருமையுடையதாகும்.

பூங்குன்ற நாடு என்னும் இனிய சொற்கேட்டவுடன் தமிழுணர்ந்த பெரியோர்கள் உளத்தே கணியன் பூங்குன்றனார் என்னும் பண்டைநாள் நல்லிசைப் புலவர் ஒருவருடைய திருப்பெயர் நினைவில் எழா நிற்கும். புறநானூறு என்னுந் தொகைநூலின்கண், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்கும் ஒப்பற்ற பாடலை யாத்தவர் கணியன் பூங்குன்றனாரேயாவர். இப் பழம்புலவரும் இவ்வூரிலே தோன்றினவர் என்று அறிஞர் கருதுகின்றார்கள். மகிபாலன்பட்டியிலே உள்ள ஒரு திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் அம்மையின் பெயர் பூங்குன்ற நாயகி என்றே இன்றும் வழங்குகின்றது. அச்சிறு நாடும் இன்றும் பூங்குன்ற நாடென்றே வழங்கப்படுகின்றது.

புறநானூற்றின்கண்ணுள்ள நானூறு பாடல்களுள்ளும் தலைசிறந்த பாடலாகத் திகழ்வது கணியன் பூங்குன்றனார் பாடல் என்பது மிகையாகாது. ஞானத் தெளிவுடைய அப்பாடல் கடல் போன்ற ஆழமுடையது. அதனைப் பாடிய புலவரும் திறவோர் காட்சியில் முழுதும் தெளிந்து மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலராய்ச் சிறியோரை இகழ்தல் அதனினும் இலராய், வாழ்க்கை இனிதென மகிழ்தலும், இன்னாதென்று முனிதலும் இலராய் அமைந்து வாழும் சீவன்முத்தராகத் திகழ்கின்றனர். இத்தகைய ஞானத் தெளிவுமிக்க புலவரைத் தோற்றுவித்தற்குரிய சிறப்பு அந்நாட்டிற்கு – அவ்வூர்க்கு – உளது போலும். ஏனெனில் நம் பண்டிதமணியவர்களும் எவ்வாற்றானும் அக்கணியன் பூங்குன்றனாரையே ஒத்திருக்கின்றார். கணியன் பூங்குன்றனார்க்கும் “யாதும் ஊர்; யாவரும் கேளிர்.” நம் பண்டிதமணியார்க்கும் “யாதும் ஊர் யாவரும் கேளிர்”. அவ்வழகிய பனுவலிற் காணப்படும் ஏனைய சிறப்புகள் எல்லாம் நம் பண்டிதமணியும் உடையர்.

மகிபாலன்பட்டி இயற்கை காட்சியில் மிகவும் அழகான ஊராகும். தெளிந்த நீரையுடைய ஏரிகளும், ஆழ்ந்த குளங்களும், நெடிய கால்வாய்களும், அடர்ந்த மரச்சோலைகளும், ஊரைச் சூழ்ந்த குறுங்காடுகளும் ஆண்டுள்ளன. அழகுணர்ச்சியுடைய கலைஞர்கள் ஆர்வத்துடன் வாழ்தற்கேற்ற ஊராகும் அது.

அவ்வூரின்கண் தனவணிகர் பெருங்குடிகள் பலவுள்ளன. அந்நாட்டிலே பெருநிதிக் கிழவராகவும், செல்வாக்குடையவர்களாகவும், அயல் நாடுகளிலே சென்று மிகவும் பொருளீட்டும் தொழிலில் வல்லுநராகவும் உள்ளவர்கள் தனவணிகர்களே ஆவார். ஆதலால் அந்நாட்டினைத் தனவணிக நாடென்றே வழங்குகின்றனர்.

2. இருமுது குரவர்கள்

மகிபாலன்பட்டியிலுள்ள தனவணிகர் பெருங்குடியில் ஒரு குடிக்கண் நம் பண்டிதமணியார் தோன்றினார். தந்தையார் பெயர் முத்துக்கருப்பன் செட்டியார் என்ப. தாயார் பெயர் சிகப்பி ஆச்சி என்பது. தாயாதி வகையாலே தனவணிகக் குடிகள் பலவகைப்படும். அவற்றுள் முத்துக்கருப்பன் செட்டியார் குடி வயிரவன் கோயில் கேரளசிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டியத்திலே சிறு குளத்தூருடையார் குடி என்ப. முத்துக்கருப்பன் செட்டியார் இயற்கையிலே கடவுளன்பு மிக்கவர். எளியோரிடத்து இரக்கமுடையவர். இவர் நம் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானை வழிபடு கடவுளாகக் கொண்டு அன்புடன் போற்றிவந்தார். இவர்க்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்த சிகப்பியாச்சியாரும் குலமகளிர்க்குரிய நற்குணங்களும் நற்செயல்களும் நிரம்பப் பெற்றவர்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும். (குறள் – 114)

என்பது பொய்யில் புலவன் பொருளுரை. “இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் தன்மை அவரவருடைய நன்மக்களது உண்மையானும், இன்மையானும் அறியப்படும்,” என்பது இத்திருக்குறளின் பொருளாம். இக்குறளின் கருத்துப்படி, முத்துக்கருப்பன் செட்டியாரும், சிகப்பியாச்சியும் நடுவுநிலைமை திறம்பாத சான்றோராதல் ஒருதலை. தம் தந்தைக்கு “இவன்றந்தை என்னோற்றான் கொல் என்னும் சொல்லை,” அளித்த நம் பண்டிதமணியவர்களை மகனாகப் பெற்ற இவர்கள் பற்பல பிறவிகளினும் சிறந்த நோன்புகளை ஆற்றிய நல்லோராக இருந்திருத்தல் வேண்டும் அன்றோ?

அன்பு கெழுமிய இக்காதலரின் இனிய வாழ்க்கையின் பயனாக நம் பண்டிதமணியவர்கள் கி. பி. 1881-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினாறாம் நாளுக்குச் சரியான, விசுயாண்டு புரட்டாசித் திங்கள் இரண்டாநாள் வெள்ளிக்கிழமை திருவாதிரை விண்மீன் நிலவிய நன்னாளிலே செந்தமிழும் சைவமும் திகழ்ந்தோங்கத் தோன்றினர்.

வரலாற்று நூலின் ஏடுகளிலே பதிவாதற்குரிய இந்நாள் ஒரு சிறந்த நன்னாளாகும். அன்று இத்தமிழுலகத்திலே சிறந்த நன்னிமித்தங்கள் பல தோன்றியிருத்தல் கூடும். தமிழ் கற்றோருடைய உள்ளங்களிலே தம்மையறியாமலே உவகை தோன்றியிருத்தல் கூடும். கருமுகில்கள் வானின்கட் குழுமி மெல்லெனத் துளித்திருத்தல் கூடும். ஏனெனில், உலகிற் சிறந்த நன்மை தோன்றுங்கால் நன்னிமித்தங்கள் தோன்றும் என்பது நம் முன்னையோர் கண்ட உண்மையாமன்றோ?

நம் பண்டிதமணியின் தந்தையார் தங்குலத்தினர் வழக்கப்படியே திரைகடலோடியும் திரவியந்தேடுவதில் குன்றாத ஊக்கமுடையவர். இவர் செந்தமிழ்க் கணித அறிவில் மேம்பாடுடையவராக விளங்கினர் என்ப. இவர் பொருளீட்டல் நிமித்தம் இலங்கையில் இருக்கும்பொழுது, அத்தீவகத்தே கதிர்காமம் என்னும் திருப்பதியில் திருக்கோயில் கொண்டருளிய கதிரேசப் பெருமானிடத்துப் பத்திமை பூண்டு அடிக்கடி சென்று வழிபடுவர் என்ப. ஒருகால், நம் பண்டிதமணியவர்கட்குக் கதிரேசன் என்னும் அழகிய திருப்பெயரை இடுதற்குத் தூண்டியது அக்கதிர்காமத்து முருகப் பெருமான் திருவருளே ஆதலும் கூடும் என ஊகித்தற்கு இடனுண்டு.

பெரும்பாலும் இருண்டு கிடக்கும் செந்தமிழ் வானத்தே திகழொளி விரித்து அறியாமை இருள் அகல நீக்கும் செங்கதிர் ஆகும் தந்திருத்தகு மகவு, என்னும் உண்மையை அத்தாய் தந்தையர் அன்று அறிந்திடுதற்கு நியாயமில்லை எனினும் நம் பண்டிதமணியவர்கட்குக் தந் தாய் தந்தையர் இட்ட பெயரும் காரணங் கருதிய சிறப்புப் பெயர் போன்றே இயற்கையில் அமைவதாயிற்று.  நம் பண்டிதமணியவர்கட்குத் தம்பியரும் இருவர் தோன்றினர்.

பண்டிதமணியவர்கள் தந் தாயாராச்சியின் பேரன்புடைமையைப் பாராட்டிப் பிற்றைநாள் பன்முறையும் கூறக்கேட்டுள்ளோம். தம் மகன் சிறந்த செல்வந்தனாவதை விடச் சிறந்த புலவனாதலையே அவர் பெரிதும் விரும்புவாராம். இவ்வருங்குணம் கல்வி தேய்ந்தொழிந்த அந்த நாளிலே பெண்பாலாராகிய ஆச்சியார்க்கிருந்தது வியத்தகு நிக்ழ்ச்சியே யாகும். ஆச்சியாருடைய அன்பைப் போற்று முறையில் நம் பண்டிதமணியார் பிற்றை நாளில் அவர்களைப் பாடிய அன்புப் பாடல் ஒன்றுளது. அவ்வொரு பாடலே ஆச்சியாரின் பெருமையை நன்கு விளக்கும். அது வருமாறு:

“என்னையீன் றெடுத்தென் உடல்நலம் பேணி

இருந்தமிழ்ப் புலவர்தங் குழுவில்

துன்னியான் இருப்பக் கண்டுளம் மகிழ்ந்து

சொலற்கரும் உதவிகள் புரிந்து

முன்னையான் செய்த நல்வினைப் பேற்றின்

முதிர்ச்சியால் நெடிதுநாட் புரந்த

அன்னையின் அருளை நினைவுறீஇ யுருகற்

கமையடை யாளம் தாமால்”

இச்செய்யுட்கு அவர்களே தந்த விளக்கம் வருமாறு:

“அறிவு வளர்தற்கு இடனாகவுள்ள என் உடலை நன்கு பேணி வளர்த்து, எனக்கு உறுதுணையாம்படி அவ்வப்பொழுது கிடைத்த அறிவுடையார் பலரையும் உபசரித்து, யான் கலைநலம் பெறுதற்குப் பெரிதுந் துணையாக இருந்தவர்களும், புலவர் குழுவிற் சிறியேனும் ஒருவனாக இருக்கும் நிலைகண்டு உளமகிழ்ந்து நீண்ட நாளாக என்னைப் பாதுகாத்து வந்தவர்களும், ஆகிய என் இனிய அன்னையார் அவர்களின் அருட்பெருக்கை உன்னியுன்னி உருகுதற்கு அடையாளமாக அவ்வருட்கு இதனை உரிமைப் படுத்துகின்றேன்”, என்பதாம்.

“இருந்தமிழ்ப் புலவர் தங்குழுவில் துன்னியான் இருப்பக் கண்டுளம் மகிழ்ந்தார்,” எனத் தம்மன்னையாரின் அருங்குணத்தை இப்புலவர் பெருமான் பெரிதும் பாராட்டுகின்றார் “எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய்” என்பது பொய்படுமாறு எண்ணிலாக் கல்வியையே இப் பெரியார் விரும்புதல் பெரிதும் பாராட்டத்தக்கதே. இத்தகைய அன்னையை, அன்னையாய் எய்திப் பிறத்தற்குப் பண்டைப் பிறப்பில் தாம் எண்ணிலாப் புண்ணியமே இயற்றி யிருத்தல் வேண்டும் என்று இயம்பி ஆராமை கொள்கின்றார் செய்ந்நன்றி போற்றும் இப்புலவர் பெருமான். பண்டிதமணியாரை மகனாகப் பெற “இவ்வாச்சியார் என்னோற்றனரோ!” என்று உலகம் வியக்கின்றது. இவரை அன்னையாகப் பெற “யான் என்னோற்றனனோ” என்று பண்டிதமணியார் வியக்கின்றார். இருவழியும் புண்ணியம் புண்ணியத்தை எய்துதல் இயல்புதானே!

  • கல்வி

நிலநலம் முளையானே அறிந்துகொண்டோம். இனி, மேலே செல்வோம்.  ஙங்கதிரேசனாரை அக்காலத்தார் வழக்கம் போன்றே பெற்றோர்கள் அவ்வூரிலுள்ள திண்ணைப் பள்ளியில் ஓர் ஆசிரியர்பால் நன்னாளில் சுவடி தூக்கி ஓம்படை செய்தனர். அக்காலத்தே தொடக்கப்பள்ளியும், இறுதிக் கல்லூரியும் எல்லாம் அவ்வொரு திண்ணைப் பள்ளிக்கூடத்தே அடங்கிவிடும். தனவணிகர் நாட்டில் அவர்கள் குலத்தொழிலுக்கு எழுத்தைக் காட்டிலும் எண்களே இன்றியமையாதன. ஆதலின், அந்நாட்டில் திண்ணைப் பள்ளிகளில் கணிதமே சிறப்பாகக் கற்பிக்கப்படும். பெருக்கல் வாய்பாட்டிற் றொடங்கி எண்சுவடியிலே அக் கணித அறிவு முற்றுப் பெறுவதாம். சிறப்பில் பாடமாகிய எழுத்திற்கு, வேழமுகம், உலகநீதி, ஆத்திச்சூடி முதலியன பாடமாக வைக்கப்படும். எண்சுவடிப் பயிற்சிக்கு இடையே இவற்றை விரும்புவோர் கற்கலாம்; விரும்பாதவர் விட்டுவிடலாம்.

மகாமகோபாத்தியாய முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் என்னும் இப்புலவர் பெருமான், கல்வி பயின்ற ஒரே கல்லூரி மகிபாலன்பட்டியிலுள்ள அத்திண்ணைப் பள்ளியே ஆகும். அப்பள்ளியிலும் அப் பெரியார் பயின்ற காலம் ஒரோ ஒராண்டெல்லையுட்பட்டதேயாம். ஆயின், இத்துணைப் பெரிய கலைவாணராக அவர் ஆயது எப்படி?

இந் நிகழ்ச்சி பெரிதும் வியக்கத் தகுந்ததொரு நிகழ்ச்சியன்று. ஏனெனில் பண்டைக் காலமாகிய வரலாறறிந்த காலந்தொட்டு இற்றை நாள்வரை மிகப் பெரிய பல்கலைக் கழகங்களாதல் கல்லூரிகளாதல் உலகம் போற்றும் கலைவாணரைத் தம் முயற்சியால் பயிற்றி அளித்ததில்லை. மக்கள் வழக்கற்ற காட்டினூடே திரிந்த வான்மீகியும் உவச்சர் சிறுகுடிலிற் றோன்றிய கம்பநாடனும், ஐந்தாண்டுகாறும் மூங்கையாயிருந்த குமரகுருபர அடிகளாரும், கலைக்கடலாகிய இராமலிங்க அடிகளாரும், உலக மகாகவியாகிய இரவீந்திரநாத தாகூரும், வரகவி சுப்பிரமணிய பாரதியாரும் எந்தக் கல்லூரியில்? எத்தனை யாண்டுகள் பயின்றனர்? இவர்கட்கு ஆசிரியர் யார்?

எம்மன்னை கலைச்செல்வியே, இத்தகைய பெரியோர் அனைவருக்கும் நல்லாசிரியை. இவ்வாசிரியைதானும் அம்மாணவர் உள்ளமாகிய தூய வெண்டாமரையில் வீற்றிருந்தே தன் அருளாகிய ஒப்பற்ற கலையை உணர்த்தியருளினாள். இவள் திருவருளுக்கு ஆளாகின் “கல்லும் கவி சொல்லும்” என்ப.

கலைச்செல்வியின் திருவருளுக்கு ஆளாதல் தற்செயலாய் நிகழுமொரு அதிட்ட வலியன்று; நல்வினை தீவினைகளின் பயனுமன்று, நல்வினை தீவினைகளின் பயனோடொத்து இயங்கும் இயல்பினள் திருமகளேயன்றிக் கலைமகள் அல்லள். திருமகள்போலத் தகுதியில்லார்க்கும் அருள் சுரத்தலும், அருளப்பெற்றாரை மீண்டும் வறுமைப் பேரிருளிற்றள்ளிச் சினத்தலும் நங் கலைமகள்பாற் காணப்படாத பண்புகளாம். தகுதியுடைமை கண்டே அருள் சுரந்தளிப்பாள். ஒருமுறை நம் கலைத் தெய்வத்தாற் கடைக்கணிக்கப்பட்டார் பின்னொரு காலமும் அவள் அருள் நிழலை ஒருவ அவள் உடன்படாள். இவ்வுலகில் இம்மை வாழ்க்கை தொடங்கி, வீட்டின்பம் எய்துங்காறும் உள்ளத்திருந்து உயர உயர அழைத்தேகுவது நம் கலைத்தெய்வத்தி னியல்பாம்.

சமய உணர்ச்சியாதல், கலையுணர்ச்சியாதல் ஒருவற்கு ஒரு பிறப்பிலே எய்திவிடத்தகும் எளிமையுடையனவல்ல. எத்தனையோ பல பிறப்புக்களிலே அடிபட்டுப் படிப்படியாய் முதிர்வன இத் தெய்வீக உணர்ச்சிகள். முதிர்ந்த இறையன்பைச் சேக்கிழாரடிகள் வழியன்பு என்றோதுவர். பற்பல பிறப்புக்களிலே முயன்றுதான் கலைச்செல்வராதல் கூடும் என்பதை நம் தெய்வ வள்ளுவனாரும்,

“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து”

(குறள் – 398 )

என்னும் அருமைத் திருக்குறளானே ஒப்புவர். இதனாலன்றோ “ “சாந்துணையும் கற்க”, என, அப் பெரியார் அறிவுறுப்பாராயினர்.

எனவே, நம் பண்டிதமணியார் பண்டும் பண்டும் பற்பல பிறப்புக்களிலே கலைமகளை வழிபட்டுத் தம் திருவுள்ளத்தை அத் தெய்வத்தின் திருக்கோயிலாக்கி வைத்தனர். அவர் பிறந்தபொழுதே கலைக் கருவூலமாகிய ஒரு சிறந்த திருவுள்ளத்தைத் தம்முடன் கொணர்ந்தார். மாறிப் பிறக்குமொரு நிகழ்ச்சியாலே மறவியின்பாற்பட்ட எழுத்துருவங்களை அவர்க்கு நினைவூட்ட ஒரு திண்ணைப் பள்ளியின் எளிய ஆசிரியனே அமையும். தம் கலைக்கருவூலத் திருவுள்ளத்தை மீண்டும் திறந்து நுகர்தற்கு எழுத்தறிதல் திறவுகோல் ஆகும். இத் திறவுகோலையே அவர் அத் திண்ணைப் பள்ளியிற் பெற்றனர். இனி, அவர் தாமே தம்முள்ளத் தமைந்த கலைச்செல்வத்தை உணர்ந்து கொள்வார்.

திரு. முத்துக்கருப்பன் செட்டியார் அவர்கட்குத் தம் மகனார் உலகம் போற்றும் உயர்மொழிப் புலவர் என்பது அச் சிறு பருவத்தே அறியக் கூடாததொன்றன்றோ. ஆதலின், தம்மயலிலுள்ள தங்குலத்தினர் போன்று திரைகடலோடியும் திரவியந்தேடிப் பெரும் பொருளீட்டிப் பெருவாழ்வு வாழ்தல் வேண்டும் என எண்ணினராய் அத்தொழில் செய்தற்குத் தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்க்குத் தம் மகனாரை உய்த்தனர்.

இராமன் செல்லுமிடமெல்லாம் அயோத்தி என்பதுபோல, நம் கதிரேசனார் செல்லுமிடமெல்லாம் கல்லூரிகளேயாகும். தோன்றி அழியும் செல்வப் பொருளீட்டுதலில் அவர் நெஞ்சம் படர்ந்திலது. தந்தையாரின் அன்புக் கட்டளையும் மேற்கொள்ளுதற்குரியது; விண்ணளாவிய மலைகளானும், பளிங்கெனத் தெளிந்த நீரருவிகளானும், மனிதர் வழக்கற்ற கானகங்களானும், கடல்சூழ் இலங்கை ஆற்றவும் அழகுடைத்தென்ப; அது காணவும் வேண்டும். எனவே, திருத்தேடுவார் போன்று நம் கதிரேசனாரும் அவ்விளம் பருவத்தே எழிலுடை இலங்கைத் தீவகம் சேர்ந்தனர்.

“யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும் பொழுதுதான், திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திச்சூடி உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டன. ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோ ஒரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடே ஒருசில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன்; உள்ளனவாயின் அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சிற்சில பிள்ளைத் தமிழ் இவைகளே அவ்விளம் பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத்தோடே ஓதினேன். அப்பெருநூல்களும் தஞ்செய்யுட் பொருளை இளைஞனாகிய எனக்கு உலோவாது அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், – ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் – பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாக பொருள் புலப்படலாயின. மேலும் என் இளம்பருவத்து நண்பருக்கும், அயலுள்ளார்க்கும் அவற்றின் பொருளை எடுத்துச் சொல்லுதலும் உண்டு. நான் இவற்றை அயலார்க்குச் சொல்லுங்கால் அவர்கள் நீ யாரிடம் பாடம் கேட்டாய்? எங்கே படித்தாய்? என்று என்னை அடிக்கடி வினவுவதுண்டு. இங்ஙனம் வினவுவார்க்கு மறுமொழி கூற என்னால் இயல்வதில்லை. யான் ஒருவரிடமும் பாடங்கேட்காமலே இவற்றைத் தெரிந்து சொல்கிறேன் என்றாலோ, அவர்கள் அக்கூற்றை நம்புதலும் அரிது அன்றோ?

இவைகள் பண்டிதமணி அவர்களே கூறியவை. பண்டிதமணி யவர்கள் திண்ணைப் பள்ளிக்கூடப் பயிற்சி முடிந்தவுடனேயே தந்தையாரால் இலங்கைக்குச் செலுத்தப்பட்டார். முதன்முதலாக “நம் கதிரேசனை யான் இலங்கைக்கு அனுப்ப எண்ணுகின்றேன் என்று என் அன்னையார்க்கு என் தந்தையார் அறிவித்ததைக் கேட்ட போது என் சிறு உள்ளம் என்னுள்ளே குதூகலித்தது. அன்னையார் மறுத்துவிடுவாரோ என்றஞ்சினேன். ஒருவாறு அன்னையாரும் ஒப்புக்கொண்டனர். இலங்கைத் தீவகம் பேரழகு வாய்ந்ததென்றும், மிகப்பெரிய காடுகளும் மலைகளும் ஆங்குள்ளன என்றும், அக்காடுகளிலே புலி கரடி யானை முதலியன திரியும் என்றும், கலத்தின் கண் ஏறியே இலங்கைக்குப் போதல் வேண்டும் என்று பிறர் சொல்ல யான் கேள்விப்பட்டிருந்தேன் அல்லனோ? இவற்றை எல்லாம் நேரிற் காண்பது எவ்வளவு இன்பமாக இருக்கும். இவ்வாசை என் உள்ளத்தே பொங்கிக் கிளர்ச்சி செய்தது. பொருளீட்ட வேண்டும் என்பதிலோ ஒரு சிறிதும் என் உள்ளம் பொருந்திற்றில்லை,” என்று பண்டிதமணியவர்கள் கூறியுள்ளார்கள்.

“இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.”

(குறள் – 374)

என்பது  தமிழ்மறை. “உலகத்து ஊழினால் ஆய இயற்கை இரண்டுகூறு; ஆதலால், செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு” என்பது இதன் பொருள். “அறிவுடையர் ஆதற்கு ஆகும் ஊழ், செல்வமுடையராதற்கு ஆகாது; செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது” என்பது இதன் கருத்து. இயற்கையிலேயே பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை நம் பண்டிதமணியார் உளத்தைத் தூண்டியதில்லை. கலைச்செல்வத்தைத் தேடித் தேடி தமதாக்குதலிலேயே பண்டிதமணியார் ஒரு பேராசைக் காரராகவே இருந்தார். ஆதலின், இலங்கைத் தீவகத்துப் பொருளீட்டுந் தொழிலிலே ஈடுபட்டிருந்தபோதும், அவர் உள்ளம் கலைச்செல்வத்தையே நாடுவதாயிற்று. அக்காலத்தே திருத்தொண்டர் புராணம் கம்பராமாயணம் முதலிய இலக்கியங்களை இடையறாது பயின்றார். இவ்விலக்கியங்களேயன்றி இவற்றிற்குக் கருவி நூல்களாகிய இயனூல்களும் வேறு உள்ளன என்பதும் கேள்விவாயிலாய் அறிந்தனர். அவ்வியல் நூல்களை ஓதி யுணர்தல் வேண்டும். “அவை எங்கே கிடைக்கும்?”

இவ்வாறு நம் கதிரேசனார் கலையார்வ மிக்கு நின்ற காலம் அவர்க்குப் பதினான்காண்டகவை இளம்பருவமே யாகும். அவ்வகவையில், நம் கதிரேசனார் திடீரெனத் தம் தந்தையாரை இழக்க நேர்ந்தது. அன்புடைத் தந்தையாரின் பிரிவாலே மனம் நொந்து அரற்றினார். இக்காரணத்தாலே அவர் இலங்கையை விட்டுத் தம் தாய் நாடாகிய தமிழகத்திற்கு வரவேண்டியதாயிற்று. தம்மூராகிய மகிபாலன்பட்டிக்கு வந்து, அன்னையாரை வணங்கி அவர் வாழ்த்தும் பெற்றார். இப்பொழுது குடும்பத்தலைவராகிவிட்ட கதிரேசனார் அந்நாள் தொடங்கித் தாம்பிறந்த பொன்னாட்டிலேயே, தம் அன்புடைத் தாயோடே அன்பு கெழும அமர்ந்து, தம்தெய்வத் தாயாகிய தமிழன்னை வழிபாட்டிலே பெரிதும் ஈடுபடுவாராயினர்.

“செய்யுளின் அழகிலே, அது தரும் இன்பத்திலே ஈடுபட்டே யான் கலைகளைப் பயின்றேன் அல்லது, பொருட்பேறடைதற்குக் கல்வி ஒரு சாதனம் ஆம் என்று கருதியாதல், புகழ் பெற வேண்டுமென்றோ யான் கலை பயின்றேனில்லை” என்று நம் புலவர் பெருமான் பல விடங்களிலே கூறியுள்ளனர். மேலும் தமிழ்மொழிப் பயிற்சியாலே அக் காலத்தே ஒரு சிறிதும் பொருளீட்ட இயலாது. தமிழ் கற்றவர்களைப் புகழ்வாரும் அக்காலத்து அரியர். நம் பண்டிதமணியவர்கள் குடும்பம், தனவணிகக் குடும்பங்களில் தலைசிறந்த பொருட்பேறு மிக்க குடும்பம் அன்றெனினும், பொருட்பேறில்லாத சிறு குடும்பமும் அன்று. மகிபாலன்பட்டியில் வழிவழியாக அக் குடும்பத்திற்குப் போதிய விளை நிலங்கள் உள்ளன. பாட்டனார், தந்தையார் ஈட்டிய செல்வமும் உளது. இவற்றிற்கு மேலாக, நம் பண்டிதமணியார்க்கும், அவருடைய அறிவுமிக்க அன்னையார்க்கும் “தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழும்” அமைதியுள்ளமாகிய பொன்செய்யும் மருந்தும் கைவயமிருந்தது. அதனால், கணவனாரை இழந்த சிகப்பியாச்சியார் தம் அன்புடைய மூத்த மகனார் பொருள்தேடி உழலவேண்டா; தம்மோடிருப்பதே சாலும் எனக் கருதினர். நம் பண்டிதமணியாரோ பொய்ப் பொருளீட்டுதலிலே உவர்ப்பும், மெய்ப்பொருள் நாட்டமும் உடையவர்.

  • கலை நண்பர்கள்

“பொன்னுந் துகிரும் முத்து மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து

அருவிலை நன்கல மமைக்குங் காலை

ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர்

சான்றோர் பால ராப

சாலார் சாலார் பாலரா குபவே”

(புறம் – 218)

என்பது கண்ணகனார் என்னும் நல்லிசைப் புலவர் பாட்டு. பொன்னும் பவளமும் முத்தும், நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும், ஒன்றற்கொன்று இடை நிலம்படச் சேய்மையிற் றோன்றினும், கோவை பொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்தே ஓரிடத்துத் தோன்றினாற்போல, எப்பொழுதும் பெரியோர்கள் பெரியோர் பக்கத்தராவர்; சிறியோர் சிறியோர் பக்கத்திலே சேர்வர் என்பது அழகிய இப்பனுவலின் பொருள்.

இவ்வினிய பாடலிற் கூறியபடி, தம்மூரின்கண் தமதில்லத்திருந்து கலை பயிலத் தொடங்கிய நம் மணியின்பால் “பொன்னுந் துகிரும் முத்தும்” போல்வராகிய சான்றோர் சிலர் வந்து அவர்தம் இனிய நட்புரிமையைப் பெற்றனர். இவ்வாற்றால் மகிபாலன்பட்டியில் நம் பண்டிதமணியவர்களின் இல்லம் கலைமகள் கோயிலாகத் திகழ்ந்தது. நம் பண்டிதமணியவர்கள் இல்லத்திற்கு அடிக்கடி வருகின்ற அறிஞர்களுக்கு, அன்போடே உணவளித்து ஆச்சியாரவர்கள் ஆதரித்து வந்தனர். நம் பண்டிதமணியவர்களும், அவர்கட்கு இயன்ற அளவு பொருளுதவியும் செய்து வந்தனர். சில அறிஞர்கள் பற்பல நாட்கள் நம் பண்டிதமணியோடே உடனுறைவதுமுண்டு. இவ்வாற்றால், அக்காலத்தே தொடங்கி நம் பண்டிதமணி யவர்கள் புலவர்களைப் போற்றும் புரவலராகவும் ஆயினர். புலவர்களைப் புரக்குந் தொழிலை அவர்கள் எப்பொழுதும் ஒல்லும் வகையாற் செய்தே வந்துள்ளார்கள். இன்றும் நம் பண்டிதமணி யவர்களின் உதவியாலே உயர் நிலை அடைந்த புலவர்கள் நந்தமிழ் நாட்டிற் பற்பலர் உளர்.

கலைப் பெரியாராகிய நம் பண்டிதமணியவர்களின் வள்ளன்மை கண்டு அவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடல் புனைந்து வந்து பரிசில் பெற்றாரும் உளர்.

“தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணாராகுப நீர்வேட்டோரே

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்

சேறொடுபட்ட சிறுமைத் தாயினும்

உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்.”

(புறம் – 204)

என்னும், கழைதின்யானையார் பாட்டிற்கு நம் பண்டிதமணியவர்களின் இல்லம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

நம் பண்டிதமணி யவர்களுடன் நட்புரிமை பூண்டொழுகிய சான்றோர்களில்—சோழவந்தான் அரசன் சண்முகனார், கந்தசாமிக் கவிராயர், சுந்தரேசுவரையர் என்னும் புலவர்கள் குறிப்பிடத்தக்கவராவர்.

சோழவந்தான் அரசன் சண்முகனார் என்பவர், பண்டைக்காலத்தில் பேராசிரியராகத் திகழ்ந்த பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார் முதலிய சான்றோர்களோடு ஒருங்குவைத்து மதிக்கத்தக்க நுண் மாணுழைபுலமுடைய சான்றோர் ஆவர். தொல்காப்பியம் முதலிய இயல் நூல்களின் நுணுக்கங்கண்டு உணர்த்துவதில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். இவரை அக்காலத்துத் தமிழுலகம் நன்கு அறிந்து போற்றவில்லை. இப்புலவர் பெருமான் வறுமையால் நலிந்தனர். நம் பண்டிதமணியார் அப் புலவர் பெருமானின் பெருமையை உணர்ந்து, இவருடைய கூட்டுறவு நம் தவத்தின் பயனாம் என மகிழ்ந்து, அப்புலவர் பெருமானுக்குப் பொருள் முதலியன நல்கிப் போற்றுவாராயினர். செய்ந்நன்றி போற்றும் அப் புலவர் பெருமானும்,

“கல்விதனம் மிக்க கதிரேச னாம்வணிகன்

வல்விதன மெற்கொழித்தான் வள்ளுவரே”

என்பன போன்ற பல பாடல்களாலே பண்டிதமணியாரை ஏத்தி வாழ்த்தினர்.

“இலக்கியங்களாகிய செய்யுள்கட்கு இயல்பாகவே யான் பொருளுணர்ந்து கொண்டேன் எனினும், இயனூலாகிய தொல்காப்பிய முதலிய நூல்களோ, சேனாவரையர் முதலியவர்களின் உரைகளோ, என் அறிவிற்கெட்டாத ஆழமுடையனவாக இருந்தன. என் அறிவிற்கியலும் துணையும், அந் நூல்களை யான் பிறர் உதவியின்றிப் படித்தேன். பற்பல செய்திகள் எனக்கு விளங்காப் பிதிராகவே இருந்தன; எண்ணிறந்த ஐயங்கள் தோன்றின. இவ் வியல் நூல்களை ஐயந்திரிபறக் கற்றாலன்றிப் புலமை நிரம்பியதாகா தெனவும் அறிந்துகொண்டேன். அந் நூலின் பெயரறிவார்கூட அக்காலத்தே அரியராயினர். அவற்றைக் கற்க ஆசிரியர் வேண்டுமே! ஆசிரியர் எங்கே கிடைப்பார்?

இவ்வாறு இயனூல் கற்ற ஆசிரியரை யான் அவாவியிருந்த காலத்தே, திருவருளின் உதவியால் சோழவந்தான் அரசன் சண்முகனாரை யான் காண நேர்ந்தது. அவருடன் அளவளாவி நட்புரிமையும் கொண்டேன். அப் புலவர் பெருமானும், யானும் ஒத்த தகுதியுடைய நட்புரிமையே கொண்டிருந்தோம் எனினும், அவர் எனக்கு ஆசிரியரே ஆவர். அவருடைய நுண்மாணுழை புலத்தையும், இயனூலறிவையும் உணர்ந்து யான் பெரிதும் வியந்தேன். இவர் என்னோடு என்னில்லத்திலேயே பற்பல செவ்விகளில் பன்னாள் உடனுறைந்து இயனூலறிவில் எனக்குள்ள குறையைப் போக்கினர். இப் புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பிய முதலிய இயல் நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின” என்று நம் பண்டிதமணியவர்களும் அப் புலவர் பெருமானால் தாம் அடைந்த நன்மையைப் போற்றிப் பலரிடத்துங் கூறியுள்ளார்கள்.

செந்தமிழ் மொழிக்கண் உள்ள, உலகநீதி முதல் தொல்காப்பியம் இறுதியாகவுள்ள எல்லா நூல்களையும் இவ்வாறு பயின்று தேர்ந்த நம் பண்டிதமணியவர்கள், தமிழ்ப்புலமை நிரம்புதற்கு வடநூற் பயிற்சி இன்றியமையாது எனக் கண்டுகொண்டனர். மேலும், ஆசிரியர் மாதவச் சிவஞான யோகிகளின் சிவஞானபோதப் பேருரை போன்ற நூல்களையும், சைவசித்தாந்த நூல்கள் பிறவற்றையும், ஐயந்திரிபற அறிதற்கும் வடமொழிப் பயிற்சி வேண்டும்; ஆதலால், வடமொழியில் வல்லுநரான தருவை நாராயண சாத்திரியார் என்பவரைத் துணையாகக்கொண்டு ஐந்தாண்டுகள் அம்மொழியிலுள்ள உயரிய காவியங்கள், நாடகங்கள் முதலிய இலக்கியங்களையும், பாணினி வியாகரண முதலிய இயனூல்களையும் இனிதே பயின்று, வடமொழி வல்லாரும் “எற்றோ இவர்க்கு யாம்” என்று வியக்குமாறு அம்மொழிப் புலமையும் நிரம்பப் பெற்றார்கள்.

நம் பண்டிதமணியவர்கள் தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் தம் இரு கண்களேபோல் எண்ணிப் போற்றியவர்கள். ஆதலால், தாமே முயன்று பயின்றிருந்தாலும், சிவஞானபோத முதலிய சைவப் பெருநூல்களையும், சிவாகம நூல்களையும், சமயத்துறை வல்ல பெரியார் துணைகொண்டு கற்றல் வேண்டும் என்று கருதினார்கள். அக்காலத்தே சைவசமயநூல் உணர்ச்சியினும், சிவபெருமானிடத்துப் பேரன்பு பூண்டு வழிபாடு செய்வதினும் சிறந்து விளங்கிய காரைக்குடி சொக்கலிங்கையா என்னும் பெரியோரை அடைந்து, அவர்கள்பால் சைவசமயப் பெருநூல்களை இரண்டாண்டு ஓதி அச்சமய நூலறிவும் ஐயந்திரிபின்றி நிரம்பப் பெற்றனர்.

இதுகாறுங் கூறியவற்றால், நம் பண்டிதமணியவர்கள் மிகப் பொறுமையுடன் நீண்டகாலம் பெருமுயற்சி செய்து, தென்மொழி, வடமொழி நூல்களையும், சமய உண்மைகளையும் அறிந்து, பெரும் புலமை எய்தினர் என்பது புலனாம். இத்தகைய முயற்சியில், அவர்கள் இருபத்தேழாம் அகவை நிரம்புங்காறும் கடைப்பிடியாக ஈடுபட்டிருந்தனர்.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்”

(குறள் – 26)

என்பது வள்ளுவர் வாக்கு. இங்ஙனம் செயற்கரிய செயல்களைப் பொறுமையோடு கடைப்பிடியாகக் கொண்டு யாதேனுமொரு துறையில் முயன்று ஆற்றியவர்களே நம்மனோரால் பெரியோர் என்று புகழ்ந்து போற்றுதற்குரியவர் ஆகின்றனர்.

  • சீர்திருத்தம்

மக்கட்கு உறுதியளிக்கும் துறைகள் பற்பல உள்ளன. அவற்றில் யாதேனுமொரு துறைபற்றிச் சீர்திருத்த முயல்வோர், முதலில் அத்துறைக்கண் தாமே நன்கு சீர்திருத்தம் அடைந்தவராதல் வேண்டும். தம்மாற் சீர்திருத்தப்படும் துறைக்குத் தாமே எடுத்துக்காட்டாகத் திகழ்தல் வேண்டும். மொழியறிவு நிரம்பப்பெறாதவன் மொழியை சீர்திருத்த முயலுதலும், ஒழுக்கநெறி நில்லாதவன் மாந்தர்க்கு ஒழுக்கநெறி காட்ட முற்படுதலும், சமயநெறி யறியாதவன் மாந்தர்தம் சமயநெறியைச் சீர்திருத்த முயலுதலும் நகைப்பிற் கிடனாகிய பயனில் செயல்களாம் அன்றோ?

நம் பண்டிதமணியவர்கள் கல்வி கேள்விகளான் நிறைந்து முதிரும் துணையும், சீர்திருத்த முற்பட்டிலர். முதற்கண், அவர் தம்மையே சீர்திருத்திக்கொண்டனர். இனி, அப்பெரியோர் உலகைச் சீர்திருத்தக் கருதியது சாண்றாண்மைக் கேற்றதொரு நன்னினைவே ஆகும். இச்சீர்திருத்தத்தை முதன் முதலாகத் தம் மூரிலேயே செய்தற்கு முற்பட்டார்.

“அறிவுடையார் எல்லா முடையா ரறிவிலார்

என்னுடைய ரேனு மிலர்”

(குறள் – 430)

என்பது வள்ளுவர் மெய்ம்மொழி. தம் நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் மக்களின் அறியாமையே ஆகும். ஆதலால், நந் தமிழ் மக்களை நிரம்பிய அறிவுடையாராக்குதல் வேண்டும். அறிவு, கல்வியாலே பெருகுவது; எனவே, நாடு முழுதும் கல்விக் கழகங்கள் நிறுவுதல் வேண்டும். இத்தொண்டே யாம் முதலில் மேற்கொள்ளற்பாலது என்று துணிந்தனர். மகிபாலன்பட்டி ஒரு சிறு கிராமம். ஆங்குள்ள சிறார்கள் பயிலுதற்குச் சிறந்த தொடக்கப்பள்ளி வேண்டும். ஆதலால், தாம் வழிபடு கடவுளாகக் கொண்ட அவ்வூர் வீரவிநாயகர் திருப்பெயராலே, ஒரு தொடக்கப் பள்ளியைத் தம்மூரின்கண் நிறுவி, அவ்வூர் மக்களைக் கல்வி பயிலும்படி செய்தனர். அத்தொடக்கப் பள்ளியில் நல்ல ஆசிரியர்களையும் தேர்ந்து அமைத்தனர். அன்று தொடங்கி, “வீர விநாயகர் கல்விக் கழகம்” என்னும் பெயரால் இன்றும் நன்னிலையில் நிகழ்ந்து வருகின்றது.

மேலைச் சிவபுரி என்னும் மூதூரில், வ. பழ. சா. பழனியப்ப செட்டியார் என்றொரு பெருநிதிக் கிழவர் வாழ்ந்து வந்தனர். இவர் திருமகள் திருவருளுக்கு உரியராயிருந்ததனோடு, கலைமகள்பாலும் பேரன்புடையோர். கற்றவர்களை உற்றவர்களாகக் கொண்டு போற்றும் இயல்புடையார். தம்மினத்தார் பொருட்டுறையிற் போலக் கல்வித் துறையினும் மேம்படவேண்டும் என்னும் அவாவுடையர். இப்பெரியார் நம் கதிரேசனாரின்ன் பேரறிவுடைமை கண்டு அவரை நன்கு மதிப்பாராயினர்; அவர்பால் பெரிதும் நட்புரிமையும் கொண்டிருந்தனர்.

6. சன்மார்க்க சபை

நம் பண்டிதமணியவர்கள், தந் நண்பரும் பெருநிதிக் கிழவரும் இயல்பிலேயே வண்மைக் குணம் நிரம்பியவருமாகிய வ. பழ. சா. பழனியப்ப செட்டியார் அவர்களிடம் தனவணிகர் அறிவு முன்னேற்றம் பெறுதற்குத் தாங்கருதியுள்ள செயலை விளக்கமாகக் கூறினர். அவரும் ஆர்வத்துடனே அச்செயலின்கண் ஒத்துழைக்க முற்பட்டனர். சங்கங்களின் வாயிலாகவே மொழி வளர்த்தல் வேண்டும் என்பது நம் பண்டிதமணியவர்களின் கொள்கையாதலால் முதன்முதலாக மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை என்றொரு கழகத்தை நிறுவ முற்பட்டனர்.

சங்கங்களின் வாயிலாக மொழிவளர்க்கும் செயல் நமக்குப் புதிதன்று; பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிவளர்க்க முற்பட்ட நம் முன்னோராகிய பாண்டிய மன்னர்களும், சங்கங்களின் வாயிலாகவன்றோ நந்தெய்வமொழியை வளர்த்தனர்.  நந்தமிழ் இன்றுஞ் சங்கத் தமிழ் என்றன்றோ கூறப்படுகின்றது. அநுபவத்திற் கண்ட நெறியே அன்றோ அந்நெறி; ஆதலால், நம் பண்டிதமணியவர்கள் தமிழ் வளர்த்தற்குச் சங்கம் காண முற்பட்டது மிகமிகப் பொருத்தமுடைய செயலே ஆகும்.

கி. பி. 1909ஆம் ஆண்டு மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை நிறுவப்பட்டது. சைவமும் தமிழும் தழைத்தோங்கப் பணிபுரிவதே அச்சபையின் நோக்கமாகும். இச்சபையின் உறுப்பாகக் “கணேசர் செந்தமிழ்க் கலாசாலை” என்றொரு கலைக்கழகமும், “ தொல்காப்பியனார் புத்தகசாலை” என்றொரு நூனிலையமும் நிறுவப்பட்டன. பன்னூறு மக்கள் குழுமியிருந்து சொற்பொழிவு கேட்டற்கு ஏற்ற இடவசதியுடையதாகவும், மாணவர்க்கு வகுப்புக்கள் நடத்துதற்கு ஏற்றதாகவும் அழகிய பெரிய கட்டிடம் ஒன்றும் எடுக்கப்பட்டது. ஒருவர்பின் ஒருவராகப் பெருநிதிக்கிழவர் பலர் சபைக்குப் பொருளுதவி செய்ய முன் வருவாராயினர். சபை தோன்றிய ஐந்தாண்டகவையில் இருபதினாயிரம் வெண் பொற் காசுகள் சபைக்கு நன் கொடையாகச் செல்வர்களால் வழங்கப்பட்டன.  

நாட்டின் பல்வேறிடங்களினும் உள்ள, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களை அடிக்கடி அழைத்து அவர்தம் அறிவுரைகளால் மக்கள் அறிவைப் பெருக்குதலும், மாணவர் பலர்க்கும் உண்டி உடை உறையுள் முதலியன வழங்கி நன்முறையிற் கல்வி பயிற்றலும், தனித்தமிழ்த் தேர்வில் சிறந்த முறையில் மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்தலும் அச் சபையின் நோக்கங்களாம்.

புதியதொன்றனைப் பெரிதும் விரும்பும் இயல்புடையவர் மக்கள்; இச்சன்மார்க்க சபையும், அதன்கண் நிகழும் நிகழ்ச்சிகளும் அந்நாட்டிற்கே புதியனவாகும். இச் சன்மார்க்க சபையே தனவணிக நாட்டில் நிறுவப்பட்ட முதற்சபை என்பது நினைவுகூரற்பாலது. நாட்டின் பல திசைகளினின்றும் புதிய புதிய புலவர் பெருமக்கள் சபையாரால் அழைக்கப்பட்டனர். அவர்தம் அறிவுரைகளைக் கேட்டற்குச் சேய்மையிலுள்ள மக்களும் திரண்டு வந்து குழுமுவாராயினர். இடையிடையே நம் பண்டிதமணியவர்களும் அறிவுரை நிகழ்த்துவார்கள். இச்சபையின் வாயிலாய்த் தம்மினத்தே அறிவொளி புகுதலை அறிந்த பலர், இத்தகைய சபைகள் தத்தம் ஊரிலும் நிறுவப்படுதல் வேண்டும் என்று அவாவினர்.

இன்று, தனவணிக நாட்டிலே பற்பல தமிழ்க்கழகங்கள் தோன்றிப் பணிபுரிந்து அறிவொளி பரப்பி வருகின்றன. இந்நன்மைக்கு முதன் முதலாக வித்திட்டவர் நம் பண்டிதமணியே ஆவார். அன்று பண்டிதமணியவர்கள் தம்முள்ளத்தே கண்டிருந்தவைகள் எல்லாம், இன்று நடைமுறையில் தோன்றி நிகழக் காண்கின்றோம். பல ஆண்டுகட்கு முன்னர் நம் பண்டிதமணியார் தங்குலப் பெரியோர்களைச் சன்மார்க்க சபையிற் கூட்டி அவர்கள் முன்னிலையிலே,

“தமிழ்க் கலாசாலைகள் ஊர்தோறும் நிறுவுதல் வேண்டும்; பத்து ஊர்களுக்கு ஒன்றாக எல்லா வசதிகளும் நிரம்பிய ஒவ்வொரு பெரிய நகரங்களினும் புலவர் பெருமக்கள் அடிக்கடி வந்து அறிவுரை வழங்குதற் கேற்றனவாகக் கழகங்கள் நிறுவுதல் வேண்டும்; எடுத்துக்காட்டாக இச்சன்மார்க்க சபையை நினைவு கூர்மின். இது நிறுவப்பட்டு இரண்டாண்டுகளே ஆயின. இவ்விரண்டாண்டினுள் பிறந்த நாள் தொடங்கி யாம் கண்டறியாத எத்தனை பெரியோர்களைக் கண்டோம்; அவர் வாயிலாக எவ்வளவு நுண்பொருள்களைக் கேட்டு அறிவுப்பெருக்கம் எய்தினோம். நம் தனவணிக நகரங்களில் இச்சன்மார்க்க சபை போன்று ஒருபது சபையேனுந் தோன்றுவன வாயின், நம் மக்கள் அறிவுச் செல்வத்தை நிரம்ப எய்தி நாரிக நிலையில் மேம்படுவாரல்லரோ! பொருளுடையார் என்று நம்மைப் பிறர் புகழ்வதினும், அறிவுடையார் என்று புகழ்வதன்றோ நமக்கு மேம்பாடு தரும்.”

என்றின்னோரன்ன பொன்னுரைகளை வழங்கி ஊக்கி வந்தனர். மேலும் இச்சபையின் வாயிலாய்த் தம்மினத்தவர்களுக்குக் கல்வித்துறை யல்லாத பிற துறைகளினும் பற்பல சீர்திருத்தங்கள் செய்து வந்தார்கள்.

7. மொழிபெயர்ப்பு

இங்ஙனம் கல்வித்தொண்டின் வாயிலாய்த் தந் நாட்டவர்க்கு அறிவுச் செல்வம் பெருக்கிவந்த நம் பண்டிதமணியவர்கள், மற்றோர் வகையாலேயும் மொழியாக்கத் தொண்டு இயற்றி வந்தார்கள். தாம் கற்றின்புற்ற வட நூல்களிற் சிறந்த நூல்களை மொழி பெயர்த்து, நந்தமிழர்க்கு வழங்குதல் வேண்டும் என எண்ணினர். சன்மார்க்க சபையின் ஆதரவில் இம் முயற்சியில் ஈடுபட்டனர். வடமொழியிற் சிறந்த நாடக நூலாகிய “மிருச்சகடிகம்” என்னும் நூலை “மண்ணியல் சிறு தேர்” என்னும் பெயரானே மொழிபெயர்த்தார்கள். இந் நூல் இடையிடையே செய்யுள் விரவப்பட்ட உரைநடை நூலாக வடமொழிக்கண் உள்ளது. அவ் வடமொழிக்கண் உள்ளபடியே, தமிழில் உரையை உரையாகவும், செய்யுளைச் செய்யுளாகவும் இவர்கள் மொழிபெயர்த்துள்ளனர். ஒரு மொழியிலுள்ள செய்யுளைப் பிறிதோர் மொழியில் செய்யுளாகவே மொழிபெயர்ப்பது மிகவும் செயற்கருஞ் செயலாகும். எற்றாலெனின், செய்யுள்கள் எதுகை மோனை முதலியவற்றை உடையனவன்றோ. இவ் வெதுகைக்கேனும், மோனைக்கேனும், இன்னுஞ் சீருக்கேனும், சொற்கள் தேர்ந்தமைக்குங்கால் முதனூற் செய்யுளிலில்லாத பொருளுடைய சொற்களைச் சேர்த்தல் அல்லது முதனூற் செய்யுளிலுள்ள பொருளை நழுவவிடுதல் முதலிய செயல்கள் இன்றியமையாதன வாகிவிடும்.

நம் பண்டிதமணி யவர்களோ தம்முடைய ஒப்பற்ற புலமை யாற்றலாலே முதனூற் செய்யுட்களிலுள்ள பொருள்கள் குறையாமலும், மிகாமலும் தமிழ்ச் செய்யுளின் எதுகை மோனை சீர் முதலிய நயங்கள் குன்றாமலும், வடநூற் செய்யுட் பகுதியைச் செந்தமிழ்ச் செய்யுளாகவே மொழி பெயர்த்துள்ளார்கள். இவ் வருமையை உணர்ந்த இருமொழிப் புலவர் பலர், நம் பண்டிதமணி யவர்களைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மேலும் இராமேச்சுரம் வடமொழிக் கல்லூரித் தலைவராயிருந்த சுப்பிரமணி ஐயர் என்னும் வடமொழிவாணர்,

“வடமொழியில் தெளிவு குன்றிக்கிடக்கும் சில இடங்களில் இத் தமிழ் மொழிபெயர்ப்பு, தெளிவு மலிந்து காணப்படுகின்றது. இவ்வாற்றால் இது முதனூலினும் மேம்பாடுடையதாகக் கருதற்பாலது.”

என்று புகழ்ந்துள்ளார்கள் எனின், நம் பண்டிதமணி யவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றற்குச் சான்று பிறிது கூறுவானேன்!

நம் பண்டிதமணியவர்கள், இம் மண்ணியல் சிறு தேரேயன்றி, மேலும் அவ் வடமொழிக்கண் உள்ள சிறந்த பொருணூலாகிய “சுக்கிர நீதி” யையும், “சுலோசனை”, “உதயண சரிதம்”, “பிரதாப ருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” என்னும் ஏனைய நூல்களையும் பொருள் பெயராது, நுண்ணிதின் மொழிபெயர்த் துதவியுள்ளனர். இந் நூல்களில் “பிரதாப ருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” என்னும் இரண்டு நூல்களும் இன்னும் அச்சேறவில்லை. ஏனைய அச்சேறி வெளி வந்துள்ளன. அச்சேறாதவற்றை அச்சேற்றித் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு யாம் திரு கதி. சுப்பிரமணியன் செட்டியார் அவர்களை வேண்டுகின்றோம்.

                         8. செய்யுளியற்றல்      

நம் பண்டிதமணி யவர்கள் தம் இளமைப் பருவத்தே இயற்றிய “பதிற்றுப்பத்தந்தாதி”, “சுந்தரவிநாயகர் பதிகம்”, “வீரவிநாயகர் மாலை” என்னும் சின்னஞ் சிறிய செய்யுள் நூல்களும், பிற்றை நாளில் செட்டிநாட்டரசர் சர். அண்ணாமலை வள்ளலை அவ்வப்போது பாடிய வாழ்த்தியற் செய்யுள்களும், “மண்ணியல் சிறுதேர்” என்னும் நூலின்கண் மொழிபெயர்த்தமைத்த செய்யுட்களும், வேறு சில தனிச் செய்யுள்களும், அவர்கள் சுவையுடைய செய்யுள்களை இயற்றும் ஆற்றலுடையவர்கள் என்பதனை நன்கு விளக்குகின்றன.

வீழ்ச்சியுற்ற நந்தமிழ்மொழிக்குப் புதுவாழ்வளித்தற்குச் செய்ய வேண்டிய பிற செயல்கள் அவர்கள் காலத்தைப் பெரிதும் கவர்ந்துகொண்டமையாலோ? வேறு எக்காரணத்தாலோ? இவர்கள் சிறந்த செய்யுள் நூல்கள் இயற்றுஞ் செயலில் முற்படவில்லை. தாம் முற்படாவிடினும், சிறந்த செய்யுள் நூல்களை இயற்றுதலும் நம் தமிழ் மொழிக்குச் செய்யும் சிறந்த பணியே ஆகும். ஆதலின், செய்யுள் இயற்றவல்ல தகுதியுடைய புலவர்கள் அச் செயலில் ஈடுபடுவாராக என அவ்வப்போது அறிவுறுத்தி வந்தனர்.

பிழை நிறைந்த செய்யுள்களைக் கேட்க நேர்ந்தவிடத்துப் பண்டைக்காலத்திருந்த தண்டமிழாசான் சாத்தனார் என்னும் நல்லிசைப் புலவர், எழுத்தாணியாலே தம்தலையிற் குத்திக்கொள்வாராம். அங்ஙனமே செய்யுள் இயற்றும் வன்மையில்லாதார் பிழையுடைய செய்யுள்களை இயற்றக் கண்டால், நம் பண்டிதமணியவர்கள் தலையிற் குத்திக் கொள்ளாராயினும், உளம் புண்பட்டு வருந்தாநிற்பர்:

“சிலர் வேறுவழியில், தாம் உயர்ந்த நிலை அடைந்திருப்பதாக எண்ணித் தமிழிலும் தம் புலமை முற்றுப் பெற்றதாக உலகங் கொள்ள விழைந்து, தமிழிற் பாட்டுப் பாட முயல்கின்றனர்; அந்தோ! அவர் பாட்டை நினையுங்கால் தமிழ்மொழியாளர் செயல் இத்தகையது போலும் என்று பிறமொழியாளர் எள்ளி நகையாடற் கிலக்காகின்றதே என்று வருந்த வேண்டியதாகின்றது. ‘செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா’ என்றபடி புலவர்க்குப் புலமைப் புதல்வராகப் பிறக்கும் இயல்பினவாகிய பாட்டுக்களைக் கருக் கொள்ளாது, பொறையுயிர்க்க எண்ணின் எங்ஙனமாம்”, என்பன பண்டிதமணி யவர்கள் புன்கவியாளர் செயற்கு இரங்கிக் கூறியனவாம்.

அக்காலத்தே, ஒரு போலிப் புலவர் தம்மைத் தாமே “வீமகவி” என்னும் சிறப்புப் பெயராலே சிறப்பித்துக் கொண்டு, தமிழிலக்கண இலக்கியங்களைப் பொதுமுறையானும் தாம் கல்லாதவராயிருந்தும், போலிக் கவிகளைப் பாடித் தனவணிக நாட்டிற் பொருளீட்டிப் பிழைத்து வந்தார். இப்புன்கவிஞர், தனவணிகப் பெருநிதிக் கிழார்களை அண்மி, “யாம் கலைமகள் அருளை நிரம்பப் பெற்றுள்ளேம்; யாரையேனும் சினந்து ஒருபாடல் கூறுவோமாயின் உடனே அவர் வாழ்விழந்து மாள்வது திண்ணம்! அங்ஙனமே, எமக்கு நிரம்பப் பொருள் தருவாரை, வாழ்த்திப் பாடுவோமாயின், அவர் மேலும் மேலும் நிதிப் பெருக்கமெய்தி நீண்ட வாழ்நாளும் எய்துவர்!” எனக் கூறி அச்சுறுத்தியும் அவாவுறுத்தியும் வந்தனர். வஞ்சக மறியாத செல்வர்கள், அவர் வசைபாடி தம் வாழ்வைக் கெடுப்பினும் கெடுப்பர் என்று அஞ்சி, அவர் வேண்டியாங்குப் பொருளும் வழங்குவாராயினர். அவர் நினைத்தவுடனே “குருட்டுக்கண் இருட்டுக் கஞ்சாது” என்றபடி, விரைந்து நாணமின்றிப் பாடுதலாலே, பாட்டின் இயலறியா மக்கள், அவரைக் கலைமகள் அருள் பெற்றவரே என்று நம்பினர். இவ்வாறு செல்வாக்கடைந்த அவ் வீமகவியார் தலபுராணங்கள் பாடி அரங்கேற்றவும், அப் பிழைமலிந்த நூல்களை அச்சிடவும் தொடங்கினர்.

அவ் வீமகவியார் “கீழைச்சிவல்பட்டித் தலபுராணம்” என்றொரு நூலைச் செய்யுள் வடிவில் இயற்றி அச்சேற்றி வெளியிட்டனர். மேலும், “நீதிவழி” என்றொரு (72) வெண்பாவாலாகிய நூலையும் இயற்றித் தேவகோட்டை திரு. அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியார் என்னும் பெருநிதிக் கிழவர் தலைமையில் மக்களைக் கூட்டி, அந் நூலை அரங்கேற்றலாயினர். இத்தகைய செயல்களால் வீமகவியார்க்கு நிரம்பப் பொருள் வருவாயும் உண்டு.

மக்களின் அறியாமையையும், வீமகவியாரின் வஞ்சகத்தையும் கண்டு நம் பண்டிதமணியவர்கள் மிகவும் வருந்தினர். மேலும், வீமகவியாரின் தலபுராணப் புன்கவிகளும், தம்முள்ளத்தைச் சுட்டன. வீமகவியாரின் நீதிவழி நூல் அரங்கேற்று விழாவிற்குத் திரு. அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியாரவர்கள் நம் பண்டிதமணியாரவர்கட்கும் அழைப்பு விடுத்திருந்தனராகலின், அவ் வரங்கேற்று விழாவிற்கு, நம் பண்டிதமணியவர்கள் வேறுசில அறிஞர்களோடே சென்றிருந்தார்கள்.

நூல் அரங்கேற்றுங்கால்,

“புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவும் கண்ணோடி

நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன்

பல்லாருள் நாணல் பரிந்து” (நாலடி – 155)

என்றபடி வருந்தியும் பொறுமையோடு கேட்டிருந்து, பின்னர் வீமகவியாரைத் தனியே அழைத்து, ஒரு சில அறிஞரை உடன் வைத்துக் கொண்டு அவர்தம் பாடலிலுள்ள எண்ணிறைந்த பிழைகளையும் எடுத்துக்காட்டி, இங்ஙனம் கவிபாடுதல் நம் தமிழ்மொழிக்கு இழுக்குத்தரும் செயலாகும் என்றும், தலபுராணம் பாடுதல் முதலிய தொழிலை விடுக என்றும் வேண்டினர். இவ் வேண்டுகோட்கு இணங்காமல் வீமகவியார் மேலும் தன் புன்செயலை விடாது செய்வாராதலைக் கண்டு, “கீழைச் சிவல்பட்டித் தலபுராணப் பிழைகள்” என்று ஒரு நெடிய அறிக்கையை எழுதி அச்சிட்டுத் தனவணிகர் நாடு முழுதும் பரப்பினார்கள். அதே அமயத்தில், தமிழறிஞர், இராமசாமி பிள்ளை என்பவர்கள் “வீமகவியாரின் நீதிவழிப் பிழைகள்” என்றொரு அறிக்கை வெளிப்படுத்தினர். இவற்றால், மக்கட்கு வீமகவியாரிடத்து உள்ள அச்சம் போக்கப்பட்டது; கவியாரும் பின்னர் வாளா அடங்குவாராயினர்.

பின்னர், நம் பண்டிதமணியவர்கள் செவ்வி நேர்ந்த பொழுதெல்லாம், செய்யுளியற்றுந் திறலுடையாரை அச்செயலிலே ஈடுபடும்படி தூண்டி வந்துள்ளார்கள். “நம் பரதகண்டத்து மொழிகள் எல்லாம் நிலை பிறழாது என்றுந் திருந்திய முறையில் திகழ்தற்குக் காரணம் மூல நூல்கள் எல்லாம் செய்யுட்களால் ஆக்கப்பட்டமையே”, என்றும், “ஒரு செய்தியைப் புலமுடையார் உள்ளம் கொள்ளுங்கால் அது செய்யுள் முகமாகக் கேட்கப்படுதல் போல் வழக்குச் சொல் முகமாகக் கேட்கப்படுதல் இன்பம் பயவாது”, என்றும், “அரசுரிமையும் புலமையும் வாய்ந்த சைவமன்னர் ஒருவர், தம் உண்மைச் சமயக் கொள்கையையும் மறந்து வேற்றுச் சமய நூல்களில் ஈடுபட நேர்ந்தது செய்யுளின்பத்தினாலேயாம்,” என்றும் “மீண்டும் அவரை அவர் சமய நிலையில் திட்பமுறப் பிணித்து வயமாக்கியதும் செய்யுளின்பமேயாம்,” என்றும் “கவிபாடும் ஆற்றலில்லாதார் புலவருலகத்தில் மக்கட் பேறில்லா வாழ்க்கை உடையவர் ஆவார்”, என்றும் “புலமை வாழ்க்கையிற் சிறப்பெய்த எண்ணுவாரெல்லாம் செய்யுள் பாடும் வன்மை உடையராதல் வேண்டும்,” என்றும், இன்னோரன்ன அறிவுரைகளால் புலமையாளரை நம் பண்டிதமணியவர்கள் ஊக்கிவந்தனர்.

இனி, நம் பண்டிதமணியவர்கள் பாடிய தனிச் செய்யுள்கள் பலவற்றையும் தொகுத்து, ஒரு நூலாக்குதல் தமிழுக்கு ஆக்கந்தரும் செயலாகும்.

9. கட்டுரைத் திருப்பணி

பண்டிதமணியவர்கள் அவ்வப்போது அரிய கட்டுரைகள் வரைந்து, பத்திரிகை வாயிலாய் வெளியிட்டு வந்தார்கள். அக் கட்டுரைகளைத் தேடித் தொகுத்தல் வேண்டும். ஒரு சில கட்டுரைகளை மட்டும், பண்டிதமணியவர்களே தொகுத்து உரைநடைக் கோவை என்னும் பெயரானே, இரண்டு பகுதிகளாக வெளியிட்டுள்ளார்கள். அவ் விரண்டனுள், முதற்பகுதி சமயச்சார்பான உயரிய கட்டுரைகள். இரண்டாம் பகுதி இலக்கியச் சார்பான கட்டுரைகளாம். முதற்பகுதியாகிய சமயக் கட்டுரைகளின் பெருமையை

“ஈண்டுத் தொகுக்கப்பட்ட ஐந்து கட்டுரைகளும் திருவைந் தெழுத்துப் போலப் பாராட்டத் தக்கன. அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல், முத்திப்பேறு என்பவற்றின் நுட்பங்களை விளக்குவனவா யமைந்துள்ளன. இந்நூல் சைவ உண்மையை அறிய விரும்பும் தமிழ் மாணவர்க்கு எளிதிற் பெரும் பயன் தரும் இணையற்ற அறிவுக் கருவூலமாகப் போற்றற்பாலது”, என்றும், “தற்கால உரைநடைக்குத் தக்க எடுத்துக்காட்டாக இவை மிளிர்வன”, என்றும், “நிகரற்ற ஆழ்ந்த சைவசித்தாந்த நூலாராய்ச்சித் திறனோடு இந் நூலிற் காணப்படும் நுண்பொருள்போல இதுவரை எவரும் அறிவுறுத்தக் கண்டிலம்”, என்றும், தாகூர் சட்ட விரிவுரையாளராகிய அறிஞர் பெருமான் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் வரைந்துள்ள பாராட்டுரைகள் நன்கு விளக்குவனவாம்.

பண்டிதமணியவர்கள் வரைந்துள்ள ஏனைய கட்டுரைகள் அனைத்துமே இணையற்ற அறிவுக் கருவூலங்கள் என்பது மிகையன்று.

                        10. பண்டிதமணிப் பட்டம் 

நம் பண்டிதமணியவர்களால் நிறுவப்பட்ட சன்மார்க்க சபையும் நாடோறும் தழைத்து வளர்ந்து, அந்நாட்டின்கண் அறிவு பெருக்கி வந்தது. அச்சபையினால் விளைந்த நன்மைகளை யுணர்ந்து, அந்நாட்டில் மக்கள் வேறு பல சபைகளையும் தோற்றுவித்தனர். சன்மார்க்க சபையின் ஆறாம் ஆண்டு விழா மிகமிகச் சிறப்பாக நடந்தது. அக்காலத்தே மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் அவ்வாண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். தமிழ் நாட்டின் பற்பல பகுதிகளினின்றும் வந்து புலவர் பெருமக்கள் பலர் சொற்பொழிவாற்றினர். அறிவுரைகளைக் கேட்பதற்குப் பல்லாயிரம் மக்கள் வந்து குழுமினர்.

பெரியார் உ. வே. சாமிநாதையரவர்களைத் தமிழுலகம் நன்கறியும். தமிழறியாதாரே ஐயர் அவர்களையும் அறியாதவராவார். நம் தமிழன்னை புதுவாழ்வடைதற்குத் தொண்டு பூண்டு பணிசெய்தாருள் இப்பெரியாரே முதல்வர் எனலாம். ஆங்கில மொழியாலே நெருக்குண்டு புறக்கணிக்கபட்ட நம் தமிழன்னை, பண்டைநாள் தம்தவப்புதல்வர்கள் தனக்கு அன்போடே அளித்த சிந்தாமணியும் மேகலையும் சிலம்புமாகிய ஒப்பற்ற அணிகலன்களையும் இழந்து வறியளாகும் நிலையை எய்தினள். நம் ஐயரவர்கள் தமது பேருழைப்பாலே அழிநிலையிலிருந்த அவ்வணிகலன்களை எடுத்து மாசு போக்கிப் புதுப்பித்துத் தமிழன்னைக்கு அணிவித்துப் போற்றினார்கள். அத்தகைய பெரியார் நம் பண்டிதமணியாரின் ஆழ்ந்த புலமையையும், தமிழன்னைக்கு அவர் ஆற்றி வரும் மாபெருந் தொண்டினையும், கண்டு வியந்தார்கள். அவர்களோடே நட்புரிமையும் கொண்டார்கள். சன்மார்க்க சபையில் தலைமை தாங்கி நம் கதிரேசனாரின் பெருமையை எல்லோரும் அறிய எடுத்து மொழிந்தார்கள். “பண்டிதர்கள் உலகிற் பற்பலர் இருப்பினும், அவருள் நம் கதிரேசனார் மணிபோலத் திகழ்கின்றார் ஆதலின் உங்கள் முன்னிலையிலே இக் கதிரேசனார்க்கு யாம் “பண்டிதமணி”  என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்” என்றார்கள். தலைவராற் சூட்டப்பட்ட பண்டிதமணி என்னும் பெயர் சாலப் பொருத்தமுடையதே எனப் பின் பேசிய புலவரெல்லாம் மகிழ்ச்சியுடனே வழிமொழிந்து போற்றினார்கள். அன்று தொடங்கி, நம் கதிரேசனார்க்குப் “பண்டிதமணி” என்னும் சிறப்புப் பெயர் இயற்பெயர்போல வழங்குவதாயிற்று. பண்டிதமணியின் ஒளி, தாம் பிறந்த நாடாகிய தனவணிகர் நாட்டின்கண் அடங்காமல், வடவேங்கடம் தென்குமரி யாயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் பரவித் திகழலாயிற்று.

11. நாநலம்

கலைநலம் நிரம்பிய உள்ளம் பெற்ற சான்றோருள்ளும், தாம் கற்றவற்றைப் பிறர் நன்குணருமாறு கூற வல்லார் மிகச் சிலரேயாவர். இது பற்றியே “ஆயிரத்தொன்றாம் புலவர், வார்த்தை பதினாயிரத் தொருவர்,” என்று பண்டைச் சான்றோர் கூறலாயினர். நம் வள்ளுவப் பெருந்தகையாரும், இச் சொல்வன்மையை நாநலம் எனக் கூறி, இந்நலம் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது என்பதை,

“நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத் துள்ளதூஉ மன்று.” ( குறள் – 641)

எனத் தெரித்தோதினர். கல்வி நிரம்பப் பெற்றும் சொல்வன்மையில்லாதாரை, “இணரூழ்த்தும் நாறாமலர் அனையர்” என மணமற்ற மலரோடு ஒப்பிடுவர். கற்றோர், பிறர்க்குப் பயன்பட வாழ்தலே முறையாகவும், சொல்வன்மை யின்மையால் அவ்வாறு பிறர்க்குப் பயன்பட வாழமாட்டாமையின் அவர், “கல்லாதவரிற் கடை” என்றும் வள்ளுவர் கூறியுள்ளார்.

நம் பண்டிதமணியவர்களோ வார்த்தைகூற வல்லார் பதினாயிரவருள்ளும் மிக்க ஒருவராக விளங்கினார்கள். தம்முடைய சொல்லை ஒருமுறை கேட்டோர் மீண்டும் மீண்டும் கேட்டல் வேண்டும் என்று விரும்பும்படி இனிமையாகப் பேசுவார்கள். அடிசிற்கு உப்பு அளவறிந்து இடுமாறு போலத் தம்மினிய பேச்சிடையே அளவறிந்து நகைச்சுவை கலந்து பேசுவார்கள். அவையிடையே சொற்பொழிவாற்றும் பொழுதும், தனியே ஒருவருடன் அளவளாவி பேசும்போதும் தம் முகத்தே அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழியும்படி பேசுவார்கள். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு, பொருளற்ற வெறுஞ் சொற்களை மூச்சுவிடாமல் வாரி வீசும் சொற்பொழிவாளர் பலரை யாம் கண்டிருக்கின்றோமல்லமோ! அவ்வாறன்றி, நம் பண்டிதமணியவர்கள் பேசுங்கால், புன்னகை பூத்துப் பொலிவுறும் முகத்தோடே, விரையாது மெல்லன மெல்லன விழுமிய சொற்களாலே இனிமை ததும்பப் பேசுவார்கள். நீண்ட நேரம் பேசியவிடத்தும், அவர்கள் சொற்பொழிவின்கண் பொருளற்ற சொல் ஒன்றேனும் கலக்கமாட்டாது. “வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன்தருதல்” என்னும் சொல்லுக்குரிய எல்லா குணங்களும், அவர்கள் சொற்பொழிவில் நிரம்பியிருக்கும்.

நம் பண்டிதமணியவர்கள், யாதேனுமொரு கழகத்தே சொற்பொழி வாற்றுமிடத்து, அக் கழகத்தே இவர்க்கு முன்னும் பின்னும் சொற்பொழிவாற்றும் எத்தகைய அறிஞர் பேச்சினும் தம்பேச்சு மிக்குத் தலைமைத்தன்மை யுடைத்தாதலை அவையினர் நன்கு அறிந்துகொள்ளுமாறு சொற்பொழிவாற்றுந் திறமை பெற்றிருந்தார்கள். இத்திறமை இவர்கட்கு நிரம்பிய இருமொழிப் புலமையாலே ஏற்பட்டதாகும். நம் பண்டிதமணி போன்று இருமொழியினும் நிரம்பிய புலமையுடையோர் அரியரே யன்றோ!  வடநூற் புலமை மட்டும் நிரம்பியவரும், அன்றித் தென்மொழிப் புலமை மட்டும் நிரம்பியவரும், இருமொழியும் கற்றவிடத்தும், புலமை யுள்ளம் இல்லாதவரும், ஒருமொழியைச் சிறப்பாக அறிந்து மற்றைமொழியைப் பொதுவினறிந்தாரும், என இத்திறத்த அறிஞரேயன்றோ பலராவார். ஆகவே, இத்திறத்தார்க்கு ஏலாதவாறு, இருமொழிப் புலமை முதிர்வாலே, இவர் பேசுங்கால் கம்பநாடன்பாற் கண்ட நுணுக்கத்தைக் காளிதாசனிடத்தும், காளிதாசனிடத்துக் காணப்படும் நுணுக்கத்தை இளங்கோவடிகள் பாலும், இங்ஙனமாக இரண்டு மொழிகளிலும் உள்ள நல்லிசைப் புலவர்பாற் காணப்படுபவனவற்றை இவர் ஒப்புக்காட்டிப் பேசுவார்கள். இவர்கள் பேசுங்கால் பொதுமக்கள் நிற்கச் சிறந்த அறிஞர் உலகமும், இன்பக்கடலுள் ஆழ்ந்து, “என்னே இஃதென்னே! இஃதென்னே!” என வியப்புடையராய்ப் பரவசமடையா நிற்பர்.

மேலும், நம் பண்டிதமணியவர்கள் இலக்கியங்களைப் பற்றி பேசும் பொழுது, அவ்விலக்கியங்களிலே சமயக் கருத்துக்களைக் காட்டியும், சமய நூல்களிலே இலக்கியச் சுவைகளைக் காட்டியும் பேசும் அழகு, கேட்போர்க்குப் பேரின்பம் நல்குவதாம். பண்டிதமணியவர்களின் சொற்பொழிவை ஒருமுறை கேட்டோரும், தாம் அதுகாறும் நந் தாய்மொழி கல்லாது வறிதே போக்கிய நாட்கு இரங்கி, அன்றுதொட்டுத் தமிழ் நூல்களைக் கற்க முற்படுவர். முன்னரே, தமிழ் கற்ற திருவுடையோராயின், புதிய புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்வதோடு, தாமும் அவ்வாறு நூல்களில் நுணுக்கங்காண முற்படுவர். இந் நாநலமுடைமையால், நஞ்செந்தமிழ் மொழியின் அழகினையும், பெருமையினையும் அவர்கள் நந்தமிழ் நாட்டினர் நன்கு உணருமாறு செய்தார்கள். இதனால், தமிழகத்தே அவர்கள் புகழ் நன்கு பரவிற்று. மூன்று தமிழ்நாட்டினும் உள்ள கழகங்கள் எல்லாம், அப்பெரியாரை ஆர்வத்தோடே அழைத்து அவர்கள் இனிய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தன.

12. தாய்மொழிப்பற்று

“செப்பமிக்க இயலமைப்பும் அவ்விலக்கணங்களுள் வேறு எம்மொழிக்கும் இல்லாது தனக்கெனச் சிறப்பு முறையின் அமைந்த பொருளிலக்கண ஒழுங்கும், முதிர் நலச் சொற்களும், சிதைவில் நுண்பொருள்களும், தங்கி நின்றொளிரும் சங்க நூற்றொகையும், புன்னுனிப்பனியில் மன்னுமா மலையுருத் துன்னி நின்று ஒளிர்தரல்போலச் சிற்றளவினவான சொற்றொடர்களில் சிறந்தமைந்தனவாகிய பெரும்பொருள்கள் தோன்றித் திகழும் அறமுதனுதலிய திறமை நூல்களும், அன்பினைந்திணை அக வொழுக்க நேர்மையும், தொடர்நிலைச் செய்யுட் சுவைநலக் கனிவும், குறிக்கோள் பற்றிய அறிவியல் நூல்களின் திட்ப நுட்ப அமைவும், காதல்மிக்கு ஓதுவார் கேட்பாரது கல்லினும் வலிய உள்ள நிலையையும் கரைத்து அவர் தமை அன்புருவாக்கி இறை திருவருட்கு இனிதின் ஆளாக்கும் இசைநலந் தழீஇய அருட்பாசுரப் பகுதிகளும், இன்னும் பற்பல துறைகளைப்பற்றி நின்று திகழும் நூற்றொகைகளும் தன்பான் மிளிர, இனிமையாங்குணத்தை இயைந்து தட்பமும் தகவும் ஒட்பமும் ஒருங்கமையப்பெற்று “எல்லாம் வல்ல இறைநிலைபோல் என்றும் நின்று நிலவுவது நம் தென்றமிழ் மொழியேயாம்”, என நந்தாய்மொழியின் அருமை பெருமைகளை சென்ற சென்ற இடமெலாம் எடுத்துக் கூறி, “அந்தோ தமிழ்நாட்டீர்! இருமையும் உதவவல்ல இன்னமிழ்தம் போன்ற நந்தாய்மொழியைப் பயின்று இன்பமும் பயனுறாமல், அவமே நாள் போக்குதல் அறிவேயோ!” என்றிரங்குவார்கள், நம் பண்டிதமணியவர்கள்.

“ஒரு நாடு தனக்குரிய மொழியை ஆக்கமுற ஓம்பிப் பாதுகாத்தாலன்றித் தான் சிறந்த நிலை எய்துதல் அரிதாம். மொழி வளர்ச்சி கொண்டே அது வழங்கும் நாட்டின் நலத்தை உணரலாம். எந்த நாடு தன் மொழிச் சுவையை உணர்தலிற் பின்னடைகின்றதோ, அது மற்றை எல்லா வளங்களானும் பிற்பட்டதாகும். ஆதலால், நாம் முன்னேறவேண்டுமேல், நந்தாய்மொழியை நன்கு பேணி வளர்த்துக்கோடல் நம் முதற் கடமையாகின்றது. எனவே, இனிமை மிக்க நந்தாய்மொழியை எல்லீரும் பயிலுமின்! பயிலுமின்! என அவைகளில் முழங்கினார்.

“எந்நிலத்தில் எம்மொழி வழங்குகின்றதோ அந்நிலத்துவாழும் மக்கள் அம்மொழி வாயிலாகவே முதற்கட் பயிலவேண்டும். அதுவே அந்நிலத்து மக்கட்குத் தாய்மொழியுமாகும். ஒரு குழந்தை பிறந்து மொழிபயிலுங்கால் அதன் தாயால் முதற்கண் பயிற்றப்படும் மொழி யாது? அதுவே தாய்மொழி என்று கோடல் பொருந்தும்,” என்று இனிதின் அறிவுறுத்தினர்.

“நந்தாய்மொழியாகிய தமிழ்மொழி வடமொழி முதலிய பிறமொழிக் கலப்பின்றியே இயங்கும் பெருமையுடையதாகும். இன்றிமையாத விடத்தன்றி இயன்றவரை தூய தனித்தமிழ் மொழியிலே எழுதுதலும் பேசுதலும் நந்தாய்மொழியின் இயற்கையழகை எடுத்துக்காட்டுவதாகும். ஒரு மொழியில் செவ்வனம் பயின்று சுவை நிலை கண்டுணர்வார்க்கு, அதன் தனி நிலையிற்போலப் பிறமொழி கலப்பில் அத்துணை இன்பம் உண்டாகாது என்பது உண்மை அநுபவமுடையார் எல்லார்க்கும் ஒத்ததாகும். இதனால் வடசொற்களையாதல் பிறமொழிச் சொற்களையாதல் நேர்ந்தவாறு தமிழிற் புகுத்தல் முறையன்று”, எனத் தூய தமிழ்மொழியின் அழகைப் போற்றும் முறையை நம் பண்டிதமணியவர்கள் பலர்க்கும் அறிவுறுத்திவந்தார்கள்.

பிறமொழிக் கலப்பின்றி தனித் தமிழிலேயே எழுதவும் பேசவும் வேண்டும் என்னும் இக்கொள்கையைக் கடைப்பிடியாகக் கொண்டு அவ்வழியில் தொண்டாற்றி வந்தவர்களுள் தலைசிறந்தவர் மறைமலை அடிகளார் என்னும் புலவர் பெருமானேயாவர். நம் பண்டிதமணியவர்களும் இக்கொள்கையைப் பெரிதும் வற்புறுத்தி வந்ததோடு, தம் இனிய கட்டுரைகளையும் அவ்வாறே வரைந்து வந்தார்கள். மறைமலையடிகளார் இன்றியமையாவிடத்து வடமொழியைத் தமிழில் விரவி எழுத உடன்படமாட்டார்கள். நம் பண்டிதமணியவர்கள் இன்றியமையாவிடத்து வடமொழியைச் சிறிது விரவியும் வரைவார்கள். மறைமலையடிகளாராதல் நம் பண்டிதமணியவர்களாதல் தம் இளம்பருவத்தேயே இத் தனித்தமிழ் கொள்கையைக் கண்டு கையாண்டவர்கள் அல்லர். ஆதலால், இவர்களின் இளம்பருவத்தே எழுதப்பட்ட கட்டுரைகளாதல், நூல்களாதல் பெரிதும் வடமொழி விரவப்பட்டனவாகவே உள்ளன. இவர்கள், தம் அநுபவத்தாலே நாளடைவில் தனித்தமிழின் சுவையை உணர்ந்து அந்நலத்தைக் கைக்கொள்ளும்படி மக்களைத் தூண்டிவந்தார்கள். இதன் பயனாக, இற்றை நாளில் இனிய தூய தமிழ்நடையின் சுவையுணர்ந்து எழுதுவாரும், பேசுவாரும் நந்தமிழகத்தே பலர் உளராயினர்.

நம் பண்டிதமணியவர்களின் இளம் பருவத்து உரைநடைக்கு எடுத்துக்காட்டாக ஒன்று காட்டுவல், காண்மின்:

“என்னும் உபதேசத்தால், ஓங்காரத்தினுடைய அர்த்த ரூபமாகவுள்ளது ஸ்ரீ பஞ்சாக்கரம் என்பது வெளியாகும். சிதம்பரத்திலே ஞானமயமாகிய கனகசபையிலே சிவகாமி அம்மையார் காண ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் சபாநாயகர் வடிவம் ஸ்ரீ பஞ்சாக்கர ரூபம் என்பதை உண்மை விளக்க முதலிய சித்தாந்த சாத்திரங்களால் உணர்க”, எனவரும்.

13. அரசர் நட்பு

நம் தமிழ்மொழி வீறுபெற்றுயர்ந்து இப்பரத கண்டம் முழுதும் செங்கோலோச்சி அரசமொழியாகத் திகழ்ந்த பண்டைக் காலத்திலே புலனுழுதுண்பாராகிய புலவர் பெருமக்களை, முடிவேந்தராகிய சேர சோழ பாண்டிய மன்னர்களும், குறுநில மன்னரும் நன்கு மதித்து, நிலம், பொருள் யானை தேர் அணிகலன்கள் உண்டி உடை உறையுள் முதலிய பெரும் பரிசில் வழங்கிப் போற்றி வந்தமையும், புலவர் பெருமக்களும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் கீழ்க்கணக்கும் முதலிய அரிய பெரிய இலக்கிய நூல்களையும் தொல்காப்பிய முதலிய இயல்நூல்களையும் இயற்றி, மொழியை வளம்படச் செய்து நாட்டின்கண் அறிவுச்செல்வத்தைப் பெருக்கி வந்தனர் என்பதையும் நமது பழைய இலக்கிய நூல்களானே நாம் நன்கு உணர்தல் கூடும். எண்ணமாக வுள்ள அறிஞர் கருத்துக்கள், செயலாக மலர்ந்து பயன் உடையன ஆதற்குப் பொருளின் அல்லது, பொருளாளர்களின் உதவி இன்றி அமையாததாகும். இதுபற்றியே, “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்”, என்றும் “அருள் என்னும் அன்பீன்குழவி பொருள் என்னும், செல்வச் செவிலியால் உண்டு”, என்றும் ஆன்றோர்கள் கூறுவாராயினர். அறிவுச் செல்வமுடைய மேன்மக்களும், பொருட் செல்வமுடைய மேன்மக்களும் ஒத்து இயங்கியவழியே இவ்வுலகில் மிகப் பெரிய சீர்திருத்தச் செயல்கள் நிகழ்வனவாகும். பொருளாளர் உதவியின்றேல் அறிஞர்களின் சீர்திருத்த எண்ணங்கள் நினைவுமாத்திரையாய் நின்றொழிவனவாகும். மற்று, அறிஞர்களின் உதவி பெறாதபோது பொருளாளர்களுடைய பொருள், இவ்வுலகில் நன்மையை வளர்ப்பதற்கு முரணாகப் பெரிய தீமைகளையே போற்றி வளர்ப்பதாகவும் முடியும்.

நம் பண்டிதமணியவர்கள் இளைஞராயிருந்த காலத்தேயும், தன வணிகப் பெருநிதிக் கிழவர்கள் தமக்கு இயல்பாகவுள்ள அறப்பண்பின் தூண்டுதலாலே பற்பல அறச் செயல்களைப் பெரும்பொருள் செலவிட்டு ஆற்றியே வந்தனர். இவ்விந்திய நாட்டிலுள்ள சைவ வைணவத் திருக்கோயில்களைப் புதுக்கிச் சீர்திருத்துதற்கு அம்மக்கள் எண்ணிறந்த பொருள்களைச் செலவிட்டனர். வடமொழிப் பாடசாலைகள் பற்பல நிறுவி அவற்றில் பார்ப்பனச் சிறுவர்களே பயிலவேண்டும் என வரையறை செய்தனர். அரசியற் செல்வாக்குடைய ஆங்கிலக் கல்லூரிகட்கும் பெரும்பொருள் வழங்கினர். வடமொழிக் கல்லூரிகட்கும் சத்திரங்கட்கும் பொருளை வாரி இறைத்து வந்தனர். இவையெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதுக்களேயாயினும், எல்லா நன்மைக்கும் முதற் காரணமாக அமைந்த நந் தாய்மொழியின் பொருட்டு ஒருசில உதவியேனும் அவர்கள் செய்ய முன்வரவில்லை.

இவர் “அறச்செயல் தன் தாயைப் பட்டினியாற் சாகவிட்டு செல்வமிக்க மக்கட்கு அன்னதானம் செய்யும் ஒருவனுடைய செயலையே ஒக்கும்,” என நம் பண்டிதமணியவர்கள் கூறியுள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில் தனவணிகச் செல்வப் பெருங்குடியிலே தோன்றியவர்களும், வண்மைக் குணம் நிரம்பியவர்களும், அரசியலாரால் நன்கு மதிக்கப்பட்டவருமாகிய சர். சா. ராம. மு. அண்ணாமலைச் செட்டியார் என்னும் வள்ளல் பெருமான் சிதம்பரத்திலே, ஆங்கிலம் வடமொழிகளுக்கு அமைத்த கல்லூரிகளைப் போன்று, நாட்டின் முன்னேற்றம் தாய்மொழியாகிய தமிழ்வளர்ச்சியை இன்றி அமையாதென்னும் சீரிய கொள்கையுடையவர்களாய், ஒரு சிறந்த தமிழ்க் கல்லூரியையும் நிறுவினார்கள். இவ்வள்ளலாரே முதன்முதலாகத் தமிழன்னைக்குத் திருக்கோயில் எடுத்தவர்கள் என்னலாம். இப்பெருநிதிக் கிழவர் தங்குலத்தினராகிய பண்டிதமணியவர்களின் அறிவுப் பெருமையையும், அவர்களைத் தமிழுலகம் புகழுமாற்றையும் உணர்ந்து பெருமகிழ்ச்சியுடையராய், அவர் நட்பைப் பெரிதும் விரும்பினர். நம் பண்டிதமணியவர்களும் அவர்களின் விருப்பத்தை உணர்ந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏது நம் நல்லூழே ஆதல் வேண்டும் என உள்ளுள்ளே உவந்தனர். மாசற்ற தூய உள்ளமுடைய இவ்விருவரும், நாளடைவில் உயிருறக் கலந்து ஒன்றி நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தனர். இவ்வாற்றால் பண்டைக் காலத்தே முடிமன்னர்களாற் போற்றப்பட்ட ஒரு நல்லிசைப் புலவர்க் குண்டாகிய நலனெல்லாம் நம் பண்டிதமணியும் பெற்றார்கள் என்பது மிகையாகாது. நந்தமிழன்னைக்குத் திருக்கோயில் கண்டவர்கள் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள். அத்திருக்கோயிலில் உறையும் தமிழ்த்தெய்வத்திற்குச் சுடர் விளக்கம் ஏற்றியவர்கள் மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்கள்.

நம் பண்டிதமணியவர்களிடத்துச் செட்டிநாட்டரசர் அவர்கள் கொண்டிருந்த நன்குமதிப்பையும் நட்புரிமையையும் அவ் வரசர்பெருமானே கூறிய கீழ்வரும் அன்புரைகள் நன்கு விளக்குவனவாம். அவை வருமாறு:-

“தமது கல்வியின் மேம்பாட்டினால், தமிழ்நாடு முழுதும் புகழ்பெற்று விளங்கும் பண்டிதமணியவர்களைப் பாராட்டுவது நமக்கே பெரிய சிறப்பாகும். இப் பெருங் கல்வியாளர் தமது இலக்கிய இலக்கண அறிவு, சொல்வன்மை, ஆராய்ச்சித் திறன், மொழிபெயர்க்கும் ஆற்றல், போதனாசத்தி முதலிய சிறந்த குணங்களால் பெருமை பெற்று விளங்குகிறார்கள். இவர்கள் வடமொழியிலும், தென்மொழியிலும் நல்ல அறிவு வாய்ந்திருப்பதால் இவர்களுடைய மொழித்தொண்டு மேன்மையுறுகின்றது. ஒரு மொழியிலுள்ள கருத்துக்களைச் சிதைவுறாமலும் தெளிவாகவும் வேறொரு மொழியில் விளக்கி உரைப்பது எளிதன்று. சொன்னயம் பொருணயம் பொருந்தப் பேசுவதும் எழுதுவதும் யாவருக்கும் எளிதல்ல. சன்மார்க்க சபையின் விருப்பத்திற்கிணங்கி இவ் வறிஞரால் இயற்றப்பட்டுச் சன்மார்க்க சபையால் வெளியிடப்பட்டுள்ள சுலோசனை, உதயண சரிதம், சுக்கிர நீதி, மண்ணியல் சிறுதேர் என்ற நூல்கள் இவர்களுடைய சிறந்த கல்வியறிவிற்கும் நூலியற்றும் ஆற்றலுக்கும் ஏற்ற எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன. இவைகளே யன்றி, பிரதாப ருத்திரீயம், மாலதீ மாதவம், சாகித்திய தருப்பணம் முதலிய அரிய நூல்களும் பண்டிதமணியவர்கள் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவைகள் விரைவில் அச்சிடப்பட்டுப் பலருக்கும் பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பண்டிதமணியவர்களுடைய நூல் இயற்றும் ஆற்றல் ஒருபுறமிருக்க, அவர்களுடைய சொல்வன்மை அதனினும் சிறந்து விளங்குகின்றது. நயம் மிகுந்து விளங்கும் அவர்களுடைய சொற்பொழிவுகள் அறிவைப் பெருக்கும் தன்மையனவாகவும் இருக்கின்றன. தேவாரம், திருவாசகம், திருக்குறள், இராமாயணம் முதலிய தெய்வீக நூல்களில் மிகுந்த சுவையான பகுதிகளையும் பண்டிதமணியவர்கள் கேட்பவர்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியுமாறு பரவச்செய்வதில் தளராத ஊக்கம் உடையவர்கள். மாணவர்களுக்குப் போதிப்பதன் மூலமாகவும், கற்றோர் சபையில் சொற்பொழிவுகள் இயற்றுவதன் மூலமாகவும், இவர்கள் தமிழ்நாட்டில் கல்வி பரவப் பெரிதும் உதவி வருகிறார்கள்.

“வடமொழியிலும் தென்மொழியிலும் வல்ல புலவராகவும் மாணவர்கள் மனமுவக்கப் போதிக்கும் ஆசிரியராகவும், அரிய நூல்களை இயற்றும் நூலாசிரியராகவும், அறியாமையையும் ஐயத்தையும் போக்கவல்ல சொற்பொழிவாளராகவும் பண்டிதமனியவர்கள் திகழ்கின்றார்கள்”, என்பதாம்.

இப் பாராட்டுரைகள் நம் பண்டிதமணியவர்களின் நற்பண்புகள் அனைத்தையும் அவ் வள்ளலார் உணர்ந்திருந்தார் என்பதையும் அவர்கள்பால் சிறந்த நட்புரிமை கொண்டிருந்தார் என்பதையும் நன்கு விளக்குகின்றன.

செட்டிநாட்டரசரின் நட்புரிமையால் பண்டிதமணி எய்திய சீரும் சிறப்பும் அளவிடற்பாலன அல்ல. நம் பண்டிதமணியவர்களும், அரசர் நட்பாலே தாம் எய்திய நன்மைகளைப் பற்பலவிடத்தும் வெளிப்படையாக விளம்பி மகிழ்ந்தார்கள். “யான் உயர்ந்தவன் என்று பிறர் உணரும்படி செய்த பெருமை கனம் ராசா அவர்களைச் சார்ந்தது, நிகரற்ற செல்வமும் அறிவும் ஆட்சித் திறனும் அமைந்த பெருங் கொடை வள்ளலாகிய கனம் செட்டிநாட்டு ராசா அவர்கள் தம் உள்ளத்தில் எனக்கும் ஓர் இடனளித்துச் சிறப்பித்து வரும் பெருமையே யான் அடைந்து வரும் சிறப்புக்கள் எல்லாவற்றினும் தலைசிறந்ததாகும்.”

இவ் வன்பார்ந்த பாராட்டுரைகள் நம் பண்டிதமணியவர்கள் கூறிய நன்றியுணர்ச்சி கெழுமிய நல்லுரைகளாம்.

14. இல்வாழ்க்கை

பண்டிதமணியவர்களின் உள்ளத்தை இளமையிலேயே கலைமகள் கவர்ந்து கொண்டமையானும், அவர்கள் செயற்கரிய செயலாகிய சீர்திருத்தத் துறையிலே சென்றமையாலும் நீண்டகாலம் இல்வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டார்களில்லை. பண்டைக்காலத்தே அருமறை அந்தணர் நாற்பத்தெட்டாண்டு அகவை நிரம்புந்துணையும் கல்வித்துறையில் ஈடுபட்டு அறிவுச் செல்வத்தை நிரம்ப ஈட்டிக்கொள்வர் என்றும், அவ் வகவை எய்துந்துணையும் பிரமசரிய நோன்பு கொள்வர் என்றும், பின்னரே இல்லறம் புகுவர் என்றும் நம் பண்டை நூல்கள் கூறுகின்றன.

“அறுநான் கிரட்டி இளமைநல் யாண்டு

ஆறினிற் கழிப்பிய அறநவில் கொள்கை,

…..  ……. இருபிறப் பாளர்.” (180)

எனத் திருமுருகாற்றுப் படையினும் வருதல் காண்க.

நம் பண்டிதமணியவர்கள் கலை நிரம்பும் பொருட்டு இளமை நல்யாண்டு முப்பதும் கழித்தார்கள். பிறழாத பிரமசரிய நோன்பில் உறைத்து நின்றார்கள். அவ் வகவையின் பின்னரே, திருமணம் புரிந்துகொண்டார்கள். மகிபாலன்பட்டியின் அண்மையிலுள்ள வேகுப்பட்டி என்னும் ஊரிலுள்ளதொரு ஒழுக்கம் நிறைந்த தனவணிகப் பெருங்குடியில் தோன்றிய திரு. மீனாட்சி ஆச்சியாரை நம் பண்டிதமணியவர்கள் கி. பி. 1912ம் ஆண்டு, சனவரித் திங்கள் மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து தம்மினிய வாழ்க்கைத் துணைவியாராகக் கைப்பற்றினார்கள்.

இல்வாழ்க்கையில் இருந்துகொண்டே செயற்கரிய செய்து புகழ்பெற்ற சான்றோர்களின் புகழிற் செம்பாதிக்கு மேலும் உரிமையுடையோர் அப்பெரியோரின் வாழ்க்கைத் துணைவியராக அமைந்த குலமகளிர்களே ஆவார்கள். காந்தியடிகளார்க்குக் கத்தூரியம்மையாரும், வள்ளுவனார்க்கு வாசுகியம்மையாரும் வாய்த்தாற்போன்று திரு. மீனாட்சியாச்சியார் நம் பண்டிதமணியார்க்கு வாழ்க்கைத் துணைவியராக வாய்த்தார்கள். நம் பண்டிதமணியவர்களின் புலமைச் சிறப்பை ஆச்சியாரவர்கள் நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள். ஏனைச் செல்வர் இல்லங்கட்குப் பெரும்பாலும் அவர்கள் உறவினர்களே அடிக்கடி வருவர். அவர்கள் தொகையும் மிகையாக இராது. நம் பண்டிதமணியவர்கள் இல்லத்திற்குத் தமிழ் நாட்டிற் பற்பல பகுதிகளினும் உள்ள அறிஞர் பெருமக்கள் அடிக்கடி வருவதுண்டு. அவ்வறிஞர்களும் வியக்குமாறு இன்சுவை யடிசில் சமைத்துப் பொழுதறிந்து விருந்தூட்டுவதில் நம் ஆச்சியார் மிகவும் வல்லவர்கள்.

நம் பண்டிதமணியவர்கள் இல்லத்தே எப்பொழுதும் சமையற்காரன் ஒருவன் இருந்து தொழில்செய்வன். சமையற்காரர்களை வைத்துக் கொள்ளக்கூடிய நிதிப்பெருக்கமுடையோர் மனைகளிலுள்ள மகளிர்கள், பெரும்பாலும் சமையற்றொழில் தெரியாதவர்களாகவும், தெரிந்தாலும் அத்தொழில் செய்வதில் சோம்பலுடையவர்களாகவும் இருப்பதே வழக்கம்.

தனவணிகச் செல்வக் குடும்ப மகளிர்களில் பெரும்பாலோர் மேற்கூறிய குறைபாடுடையவர்கள் என்று பண்டிதமணியவர்கள் கூறுவார்கள். மேலும் அவர்கள் இக்குறையை அகற்றவேண்டும் என்றும் பற்பல கூட்டங்களிலே கூறி வந்தனர். “இனி நம் பெண்மக்கள் பொருட்டு யாம் கருதவேண்டியவைகளும் சிலவுள்ளன; எல்லாக் கற்பிலக்கணமும் நிரம்பப்பெற்ற நம் பெண்மக்களுட் சிலர் நம் சமய முறைப்படி தம்மில்லத்தே செய்யவேண்டிய நாட்கடன்களைச் செய்தலிற் சிறிது சோம்பலுடையவராய்க் காணப்படுகின்றனர்; அதனையும் குணவகைகளின் மாறுபட்டிருப்பின் அவற்றையும் திருத்துதலும், நாட்கடன்களைக் கற்பித்து அவ்வழி நிறுத்தலும் அவரவர் கணவன்மார்களின் கடமையாகும்”, என்பது நம் பண்டிதமணியவர்கள் தம்மினத்தார் சீர்திருத்தம்பற்றிப் பேசியவற்றுள் ஒரு பகுதியாகும்.

இவ்வறிவுரைகள், மகளிர்கள் அட்டில் தொழில் வல்லராதல் வேண்டும் என்னும் அவர்கள் கருத்தைப் புலப்படுத்துகின்றனவல்லவோ!

சமயற்காரன் இருப்பினும், ஆச்சியாரவர்கள் தாமே அடுக்களையிலிருந்து அடிசில்களை நன்கு சுவையுடையனவாகவும், பதனழியாமலும் சமைப்பார்கள். அங்ஙனம் சமைத்த அடிசிலை விருந்தினர்க்கும் கணவனார்க்கும் மக்கட்கும் தம் கையாலே அன்புடன் இடுவர். சுவையுடைய அடிசில் ஆக்குவதில் ஆச்சியார் தனிச்சிறப்புடையவர். நம் பண்டிதமணியவர்களும் இன்னின்ன உணவுப் பொருளை இன்னின்ன கூட்டி இன்னின்ன பதத்திற் சமைக்க வேண்டும் என்று அடிசிற் பக்குவம் சில செவ்விகளில் கூறுவர். அவர்கள் கூறும்போதே கேட்போராகிய எம்மனோர் நாவில் நீரூறும்.

நம் பண்டிதமணியவர்கள் இல்லத்தே விருந்துண்ட அறிஞர் வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், வயிறார உண்டு மகிழ்ந்து பாராட்டிய மொழிகள் ஆச்சியாரின் அடிசிற்சிறப்பை நன்கு விளக்கும். அவர் கூறியதாவது:

“யான் சோற்றுத்துறை அடிகளில் ஒருவன்; இவருடைய அன்பு குழைந்த இன்ப விருந்துண்டு களித்து நாவில் இப்போதும் நீரூறி நிற்கின்றவர்களில் ஒருவன். மிகச்சிறந்த செல்வர்களும் அத்தகைய இனிய உணவைத் தங்கள் இல்லத்தே அமைத்துக்கொள்ள முடியாமல் விழிக்கக் கண்டிருக்கின்றேன். பண்டிதமணிக்கு அமைந்த அம்மையாரும் சுவையுலகில் வாழ்கின்றவர்கள். சுவையுலக வாழ்க்கை வாழ்வார்க்கே அனைத்தும் எளிதில் அமையும். ஆகவே, இவரிடத்தே சுவையுலக வாழ்க்கையைக் கண்கூடாகக் காணலாம். இல்வாழ்க்கையிலும் இனிமை; உடையிலும் இனிமை; ஊனிலும் இனிமை; பேச்சிலும் இனிமை; மூச்சிலும் இனிமை; எழுத்திலும் இனிமை; குழுவிலும் இனிமை; இவர் பிறரைப் புகழ்வதிலும் இனிமை; இகழ்வதிலும் இனிமை; மரத்தைப் பழத்தால் அறிக என்பர் கிறித்து; ஈதே பழம்; இனி மரத்தை அறிந்துகொள்க,” என்பதாம்.

பண்டிதமணியார்தம் பண்புடைய இல்லத்தே விருந்துண்டு களித்த அறிஞர் திரு. மீனாட்சிசுந்தரனார் அவ்வினிமையைத் தொடர்ந்து பண்டிதமணியாரின் வாழ்க்கை முழுதுமே இனிமையாதலை உணர்ந்து இன்புற்றவாறிது.

இனி, நம் பண்டிதமணியவர்கள் நம் நூல்களானே போற்றிக் கூறப்படும் இல்வாழ்க்கைக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்தார்கள் எனலாம். யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப் பழகும் பேறு பெற்றேன். என்பால் பண்டிதமணியவர்களும், திரு. ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறை கொண்டு அன்பு பூண்டொழுகினர். அண்ணாமலை நகரில் நம் பண்டிதமணியவர்கள் பேராசிரியராக இருந்த காலத்தே மாணவர் பற்பலர் பண்டிதமணியவர்களின் அன்புகெழுமிய அறிவுரைகளைக் கேட்க விரும்பி மாலைப்பொழுதினும், விடுமுறை நாட்களினும் இல்லத்திற்கு வருவார்கள். அம்மாணவர்களை நம் பண்டிதமணியாரேயன்றி, ஆச்சியாரும் மக்களை அன்போடே உபசரிக்குமாறு இன்சொற்களாலே வரவேற்று உபசரிப்பார்கள். வந்த மாணவர்கள் தத்தம் அன்புடைத் தாய்தந்தையரை அவ்விடத்தே கண்டாற்போன்றே மகிழ்வர். மாணவர்களைப் பண்டிதமணி எப்போதும் “அப்பன்” என்றே அன்பு ததும்ப அழைப்பர்.

ஆச்சியாராதல், பண்டிதமணியாராதல் தம் மக்களை இன்சொல்லாலன்றி ஒருபொழுதும் சுடுசொல்லாலே கண்டிப்பதில்லை. வீட்டுப் பணியாளரிடத்தும் மிக்க அன்புடையவர்களாகவே இருப்பர். பண்டிதமணியாரின் இல்லமே ஓர் அன்புக்கடல் என்னலாம்.

பெருந்தன்மை மிக்க பண்டிதமணியவர்கள், தம் வீட்டுக் காரியங்களை ஒருபொழுதும் எளிதென்று கருதியிராமல் சிறு காரியங்களையும் விழிப்புடன் நடத்துவார்கள். வீட்டிற்கு வேண்டிய உப்பு முதற் கருப்பூரம் இறுதியாக உள்ள எப்பொருளையும் விழிப்புடன் ஈட்டி வைத்துக் கொள்வார்கள். அவர்கள் இல்லத்தே இனிமையுடன் எளிமையும் கலந்தே இருக்கும். பொருள்களைச் சிக்கனமாகவே செலவு செய்வார்கள்.

பாமர மக்களுடனே நம் பண்டிதமணியவர்கள் கலந்து பேசும்போது அப் பாமரரோடே தாமும் ஒரு பாமரர் போலே பேசுதலைக் காணும் நமக்குப் பெரிதும் வியப்புண்டாகும். அண்ணாமலை நகரில் நம் பண்டிதமணியவர்கள் இருந்த காலத்தே, ஓர் இடைமுதுமகள் பக்கத்துக் கிராமத்திலிருந்து தயிரும் வெண்ணையும் கொணர்ந்து பண்டிதமணி இல்லத்திற்குக் கொடுத்து வந்தாள். அம்மூதாட்டி நம் பண்டிதமணியவர்களின் சிறப்பை எவ்வாறறிவாள்! அவள் பெருமைமிக்க நம் பண்டிதமணியாரை “உனக்கு எவ்வளவு வெண்ணெய் வேண்டும் நீ எனக்கு எவ்வளவு காசு தர வேண்டும்”, என்றிப்படிப் பேசும்போதெல்லாம் நீ, உனக்கு, என்னும் ஒருமை மொழியாலேயே பேசுவாள். அவள் பேசுவதை அயலில் இருந்து கேட்கும் எம்மனோர் உளத்தே “நீ, உனக்கு” என்னும் மொழிகள் சுறுக்கென்று தைக்கும். நம் பண்டிதமணியவர்களோ அங்ஙனம் பேசலாகாதென அவளை ஒருபொழுதும் திருத்த முற்பட்டிலர். அவள் வினாவிற்கெல்லாம் நம் பண்டிதமணியவர்களும் முகமலர்ந்து புன்சிரிப்புடன் “எனக்கு இவ்வளவு வெண்ணெய் வேண்டும், உனக்கு நான் இவ்வளவு காசு தரவேண்டும்,” என்று விடையிறுப்பர். அவர்கள் பேசுங்கால் ஒத்த தகுதியுடைய தமக்கையும் தம்பியும் அளவளாவுதல் போன்று நமக்குத் தோன்றும்.

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு” (குறள்: 60)

என்பது திருக்குறள். இக்குறளிற் கூறியாங்கு நற்குண நற்செயல்களையுடைய மனைவியாரை எய்தியிருந்த நம் பண்டிதமணியவர்கள், அறிவறிந்த மக்கட் பேற்றானும் சிறப்புடையராகவே திகழ்ந்தார்கள். பண்டிதமணியார்க்கு நிறைநாட் செல்வர்கள், சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியகராசன் என்னும் நான்கு ஆண்மக்களும், திருநிறை செல்வியர், மங்கயர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை என்னும் பெண்மக்கள் மூவருமாக மக்கள் எழுவர் உளர்.

இம்மக்களும்,

“செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவய லூர

மகனறிவு தந்தை யறிவு”

                    (நாலடியார் 367)

என்றபடியும், “நூலைப்போலே சீலை தாயைப் போலே பிள்ளை” என்றபடியும், தம் இருமுது குரவர்களின் பண்பெல்லாம் வாய்க்கப் பெற்றவராய் மன்னுயிர்க்கெல்லாம் இனியராய்த் திகழ்கின்றனர். இவர்களில் மூத்த சுப்பிரமணியன் செட்டியார்க்கும், கனகசபாபதிச் செட்டியார்க்கும், மங்கயர்க்கரசி யாச்சிக்கும் குழந்தைகள் உளர். இவ்வாற்றால் நம் பண்டிதமணியவர்கள் நிரம்பிய மக்களையும் பேரர்களையும் உடையராயதுடன், அவர் தம்மை அன்பு கெழும வளர்த்தின்புறும் பெரும்பேறும் உடையராயினர்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)

என்னும் அருமைத் திருக்குறட்குப் பண்டிதமணியவர்கள் இலக்கியமாக விளங்கினார்கள்.

அக்காலத்தே தமிழன்பு மிக்க திரு. வே. இராதாகிருட்டிண பிள்ளை என்பவர்கள், தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் பெயரால் ஒரு சிறந்த தமிழ்க்கழகம் நிறுவி, அதன் வாயிலாய் மொழிவளர்த்து வந்தார்கள். இராதாகிருட்டிணபிள்ளையவர்கள் கழகம் நிறுவிய ஒருசில ஆண்டெல்லையிலேயே இறைவன் திருவடி நிழலை எய்தினார்கள்; ஆதலின், அவர்கள் முன்தோன்றலாகிய திருவாளர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் அத் தமிழ்க் கழகத்தைத் தம்முயிரேபோற் போற்றி வளர்ப்பாராயினர். பிள்ளையவர்கள் நம் பண்டிதமணியவர்களின் புலமைச் செல்வத்தையும், தாய்மொழித் தொண்டின் ஆர்வத்தையும் அறிந்து அவர்களுடன் நட்புரிமை பூண்டனர்.

“தமிழவேள்” “செந்தமிழ்ப் புரவலர்” என்னும் சிறப்புப் பெயர்களாலே புலவர்கள் போற்றிப் புகழும்படி தமிழ்மொழியினிடத்தும் தமிழ்ப்புலவரிடத்தும் பேரன்புடையவரான திரு. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் பண்டிதமணியவர்களைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுள் உறுப்பினராக இருந்து தங் கழக வளர்ச்சியினும் பங்கு கொள்ள வேண்டும் என வேண்டினர். நம் பண்டிதமணியவர்களும் அதற்கிசைந்து மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபையில் தாம் கொண்டிருந்த உரிமைபோலவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின்பாலும் உரிமைபூண்டு பொருளுதவியானும் இனிய தம் சொற்பொழிவுகளானும் அச்சங்கத்தைப் புகழுறத் தம் ஆயுள்காறும் போற்றி வந்தார்கள். அச்சங்கத்தின் பதினான்காம் ஆண்டு விழாவில் நம் பண்டிதமணியவர்கள் தலைமையேற்றுத் “தமிழும் தமிழ்ப்பணியும்” என்னும் பொருள் பற்றிப் பேசிய விரிவுரை தமிழ் வளர்ச்சிக்கான பற்பல துறைகளையும் கற்றோரும் மற்றோரும் சுவைத்துச் சுவைத்து இன்புறுமாறு நுண்பொருட் செறிவுங்கொண்டு நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது.

“போற்றுந் தமிழும் புலவரும் வாழ்கநலம்

சாற்றுங் கரந்தைத் தமிழ்ச்சங்கம் – ஏற்றமொடு

பல்லாண்டு வாழ்க அருள் பாலித் ததுபுரக்கும்

எல்லோரும் வாழ்க இனிது”.

என நம் பண்டிதமணியவர்கள் தம் அருள்வாக்காலே மனமார வாழ்த்தினார்கள். அவர்கள் வாழ்த்தியவாறே அத் தமிழ்ச் சங்கம் “ஏற்றமொடு” பல்லாண்டாகத் தமிழ் வளர்த்துச் சிறந்தோங்கித் திகழ்கின்றது.

15. பேராசிரியர்

“அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்” என்றபடி நம் பண்டிதமணியவர்களைச் செட்டி நாட்டரசர் பெரிதும் விரும்பி அவர்களுடன் நட்புரிமை பூண்டனர் என்று முன்பு கூறினோம். அவ்வரசர் பெருமான் தாமெடுத்த தமிழ்த் தெய்வத் திருக்கோயிலாகிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியில் நம் பண்டிதமணியார் ஆசிரியராக அமர்ந்து பணிபுரிவது உலகெல்லாம் தமிழைப் பரப்புவதற்கு ஏதுவாகும் என்றும், மேலும் தம் பல்கலைக் கழகமும் பெரிதும் சிறப்பெய்தும் என்றும் கருதியவர்களாய்ப் பண்டிதமணியவர்களைப் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்து பணிபுரியும்படி வேண்டிக்கொண்டார்கள். அக்காலத்தே யான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தே ஒரு தமிழ் மாணவனாக இருந்தேன். பண்டிதமணியவர்கள் அரசர் வேண்டுகோட் கிணங்கிப் பல்கலைக் கழகத்திற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி பரவியபோது என் போன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர்கள் பதவியேற்பதற்கு ஒருசில கிழமைகட்கு முன்னர்ப் பல்கலைக் கழகத்தே வந்து ஒரு சொற்பொழிவாற்றியிருந்தார்கள். அவர்களுடைய ஒருநாள் ஒரு பொழுதைச் சொற்பொழிவைக் கேட்ட யாங்களும் தேனுண்ட வண்டெனக் களி துளிம்பினேம்! இனிமை மிக்க அப்புலவர் பெருமான் எமக்கு நிலைப்பான ஆசிரியர் எனக் கேட்டதும் எங்கள் மகிழ்ச்சி கடல் எனப் பெருகிற்று.

கி. பி. 1934-ம் ஆண்டில் நம் பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் ஆகிப் பணிபுரியத் தொடங்கினார்கள். பிச்சை யேற்று வயிறு வளர்க்கும் பேராசைமிக்க ஒரு ஏழைக்கு ஒரு பேரரசனுடைய தலைமைக் கருவூலத்தைத் தாழ்திறந்து “இக் கருவூலத்துக் கிடந்த பொருளெல்லாம் உன்னுடையதே” கொள்க என அவ் வரசன் வழங்கினனாக அவ் வேழை எங்ஙனம் மகிழ்வான்! அங்ஙனம் மகிழ்ந்தேம் அவர்பால் மாணவராக இருந்து அவர்தம் அறிவுரையைக் கேட்கும் பேறு பெற்ற மாணவக் குழாத்தினேம்.

நம் பண்டிதமணியவர்களிடம் மாணவராக இருந்து பயிலும் திருப் பெற்றவர்களில் ஒருவரும், தலைமாணாக்கர் இனத்தைச் சேர்ந்தவருமாகிய டாக்டர். திரு. அ. சிதம்பரநாதச் செட்டியார் எம். ஏ. அவர்கள் ஆசிரியராகிய நம் பண்டிதமணியின் நல்லாசிரியத் தன்மையைப்பற்றிக் கூறியதாவது:-

“அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏறத்தாழ இரண்டாண்டுகள் கல்வி கற்கும் பேறுபெற்ற சிலருள் யானும் ஒருவன். 1934-1935-ஆம் ஆண்டுகளில் நான் எம். ஏ. வகுப்பிற் படித்து வருங்கால் அவர்களிடம் சிலப்பதிகாரம் அகநானூறு ஆகிய உயர்ந்த இலக்கியங்களைப் பாடங் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன். அவர்கள் நடத்திய ஒவ்வொரு வகுப்பினையும் இன்று நினைத்தாலும் உள்ளத்தில் உவகையும் எழுச்சியும் உண்டாகின்றன. உரையில்லாப் பகுதியாகிய வஞ்சிக் காண்டத்திற்குத் தம்முடைய கூரிய மதியினால் அவர்கள் பொருள் கூறின திறத்தை யாங்கள் வியந்தோம். ஒப்புமைப் பகுதிகள் காட்டல், மேற்கோள் காட்டல், இலக்கண நயம் எடுத்துரைத்தல், நூனயம் நவிலுதல் ஆகிய வகையில் தம்மை ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனச் சொல்லுமாறு அவர்களுடைய வகுப்புக்கள் நடைபெறும்” என்பதாம்.

இனி, மைசூர் மகாராசா கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் திரு. S. உருத்திராபதி என்பாரும் நம் பண்டிதமணியவர்களுடைய மாணாக்கராவார். அவர் கூறியதாவது:- “சீரிய புலமையும், சொல்வன்மையும், எழுத்து வன்மையும் வடமொழி தென்மொழி இரண்டையும் ஒருங்கே ஆய்ந்த மதிவன்மையும், வாய்க்கப்பெற்ற நம் புலவர் பெருந்தகையைக் காண்பதே இன்பமாகும். அவர்கள் நய உரையைக் கேட்பது சிந்தைக்கும் செவிக்கும் ஒருங்கே இன்பம் பயப்பதாகும். அவர்கள் மாணவர் குழுவில் யான் ஒரு கடைமாணாக்கன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத் தனியொரு பெருமையும் இன்பமும் உண்டு என்பதாம்.

இவ்வண்ணம் மாணவர் எல்லோரும் மனமகிழ்ந்து இன்புறுமாறு நம் பண்டிதமணியவர்கள் நூற்றுக் கணக்கான மாணவர்கட்கு அரிய பெரிய செந்தமிழ் நூல்களையும் எண்பொருளவாகச் செலச்சொல்லி வந்தார்கள். இவர்கள்பாற் கற்ற மாணவர்கள் பலர் இன்று உலகின் பற்பல இடங்களிலே இருந்து பண்டிதமணியவர்கள்பால் தாங்கள் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படி பணிபுரிந்து வருகின்றனர்.

நம் பண்டிதமணியவர்கள் 1934-ம் ஆண்டு தொடங்கி 1937-ம் ஆண்டு முடியுந்துணையும், விரிவுரையாளராக இருந்து பணி புரிந்தார்கள். பின்னர், அப் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்ப் பேராசிரியராம் பெரும் பதவியையும் பெற்றார்கள். பண்டிதமணி அப் பதவியை ஏற்பதற்கு முன்பெல்லாம் அப் பதவிக்கு ஆங்கில அறிவு மிக்கவர்களே தகுதியானவர்கள்; அவ்வறிவு இல்லாதவர் அதனை ஏற்று நடத்த இயலாதென்னும் கொள்கை இருந்து வந்தது. ஆங்கிலத்திலே, எம். ஏ. முதலிய பட்டதாரிகளே அப்பதவியை ஏற்று நடத்தி வந்தனர். ஆங்கிலம் கல்லாத தமிழ்ப் புலவரும் அப்பதவி ஏற்கத் தகுதியுடையவர்களே என்பதை நம் பண்டிதமணியவர்கள் தமது செயலிலே உலகமறியக் காட்டுவாராயினர். இப் பதவியேற்று ஏனையோர் புகழும்படி ஒரு சிறு குறையுமின்றிப் பண்டிதமணியவர்கள் நடத்தினார்கள்.

ஆங்கில மொழியிலே மட்டும் பட்டதாரிகளாய்த் தமிழறிவு குறைந்துள்ளவர்களைவிட நம் பண்டிதமணியவர்கள் அப் பதவியில் வீற்றிருந்தது எத்துணையோ பெரிய நன்மை விளைத்தது. இதனால் தமிழ்ப்புலவர்கட்கே மதிப்புப் பெருகுவதாயிற்று எனலாம்.

இக்காலத்தே இவர்க்கு அணுக்கராயிருந்து தொண்டாற்றிய பெரியார் T. P. பழனியப்ப பிள்ளை B.O.L. அவர்கள். இவர்கள் திறமையைப் பாராட்டிக் கூறியவற்றைக் கேண்மின்:

“நந்தமிழகத்து முப்பெருங் கலைக் கழகங்களாகிய சென்னை, அண்ணாமலை, திருவாங்கூர்ப் பல்கலைக்கழகங்களில், மந்தணக் குழுவிலும் மந்திரக் குழுவிலும் பதவி பெற்று அவற்றுக்குரிய ப்ஃறலைப்பட்ட செயல்களைப் பல்லாற்றானும் நாடிச் சூழ்ந்து அந் நன்னர் நாட்டமுடைச் சூழ்ச்சித்துறை உறுப்பினர் உவக்க வினையாற்றும் திறம் எல்லாம் எளியேன் விழைவொடும் வியப்பொடும் கண்டு பாராட்டுவேன். வீறு பெறுமுறையில் வேறுபடு குழுவினுள் காரிய நெறிகளைக் கைக்கொள்ளுதற்கென நேரிய தாள்களை (Records) நிரல்படத் தொகுத்துக் கூரிய கொள்கையைக் குறிக்கொண்டு நடாத்தும் பெற்றியைக் கண்கூடாகக் கண்ட எளியேன் ஆங்கிலவாணரும் ஆபீசு முறைகளை இங்ஙனம் ஆற்றும் ஏற்றம் பெற்றுளர்கொல்! என்று கூறிக் கொண்டாடுவேன்”, என்பதாம்.

16. பதவிகள்

“ஆங்கிலவாணரும் ஆபீசு முறைகளை இங்ஙனம் ஆற்றும் ஏற்றம் பெற்றுளர்கொல்” என்று அறிஞர் எல்லாம் வியந்து பாராட்டும் திறமுடைய நம் பண்டிதமணியவர்கள், தம் இளம்பருவந்தொடங்கி இறுதிகாறும் ஏற்று நடத்திய பதவிகளும் சாலப்பலவாம். இப் புலவர் பெருமானின் வடமொழிப் புலமை கண்டு வியந்த இராமேச்சுர வடமொழிக் கல்லூரியுடையோர் இவரைத் தம் கல்லூரியின் மந்திரக்குழு உறுப்பினராக நியமித்திருந்தார்கள். இவர்களுடைய தமிழ்ப்புலமையின் தனிச் சிறப்பையுணர்ந்து நாடெங்கணும் உள்ள தமிழ்க் கழகங்களும், பல்கலைக் கழகங்களும் இவர்கள் உதவியை நாடினர். தம் இளம் பருவத்திலேயே மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஓர் உறுப்பினராய்ச் சங்கப் புலவராக விளங்கினார்கள். அச்சங்கத்தே பல்லாண்டுகள் தேர்வாளராகவும் திகழ்ந்தார்கள். இச்சங்கத்தின் மந்திரக்குழுவிலும் நிறைவேற்றுக்குழுவிலும் நீண்டகாலம் உறுப்பினராக விளங்கினார்கள். தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தே ஆயுட்கால உறுப்பினராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் திகழ்ந்தமை முன்னரே கூறியுள்ளோம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாடக்குழுவிலும், தேர்வுக்குழுவிலும், உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்தார்கள். இப் பல்கலைக்கழகப் பேரவையிலும், கலைக்குழுவிலும் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்கள்..

சென்னைப் பல்கலைக்கழகத்தில், பாடக்குழுவின் உறுப்பினராகவும், தலைவராகவும் விளங்கினார்கள்.

திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில், பாடக்குழுவின் உறுப்பினராகவும், தலைவராகவும் விளங்கினார்கள்.

யாழ்ப்பாணத்திலுள்ள கீழ்நாட்டுக் கல்விநிலையம் என்னும் கல்லூரியில் தேர்வாளராக இருந்தார்கள்.

இவற்றையன்றி இவர்கள் அவ்வப்போது சென்று எத்துணையோ பல கழகங்களில் அவைத் தலைமைதாங்கிப் பணிபுரிந்தார்கள். யாழ்ப்பாணம், கொழும்பு, மைசூர் முதலிய இடங்களுக்கும் சென்று தலைமையேற்றார்கள். இங்ஙனம் இவர்கள் தலைமை தாங்கிப் பணிபுரிந்த கழகங்களுள் சிறப்பாகக் குறிப்பிடற்பாலன, சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசத்தின் வெள்ளிவிழா, கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா, தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் பொன்விழா, துறையூர் மாநாட்டுத் திறப்பு விழா, பூவாளூர் சைவசித்தாந்த சபை விழா, சென்னைத் தமிழ்ப்புலவர் மாநாடு, குறுந்தொகை மாநாடு என்பனவாம்.

17. வினைத்திட்டம்

பெருமைமிக்க பெரும் பதவிகளை ஏற்று அவற்றில் ஒரு சிறிது தவறும் நிகழாவண்ணம் விழிப்புடன் செயல் ஆற்றுவதில் நம் பண்டிதமணியை ஒப்பார் இலர் என்றே சொல்லலாம். யாதேனுமொரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பே, அச்செயல் செய்தற்கு வேண்டிய பொருள், கருவி, காலம், வினை, இடன் என்னும் இவற்றை மயக்கமற ஆராய்ந்து தெரிந்த இனத்தொடு தேர்ந்து இருள்தீர எண்ணியே தொடங்குவார்கள்.

சென்னையிற் பல்கலைக் கழகத்தே பின்னாள் பாடத்தேர்வின் குழுவில் தலைமைதாங்கிச் செயல்புரியவேண்டுமாயின், இன்றே நினைந்து நினைந்து அச்செயற்கு வேண்டிய எல்லாத் தாள்களையும் செயலாற்றுதற்கேற்ற முறையில் நிரல்படுத்தி வைத்துக் கொள்வார்கள். அவ்விடத்தே ஐந்து நாட்கள் தங்கிச் செயலாற்ற வேண்டுமெனின், அந்நாட்களுக்கு வேண்டிய உடைகள் முதலியவற்றையும், பற்பொடி, நாவழிக்கும் பனையீர்க்கு முதலிய சிறு பொருள்களையும்கூட மறவாமல் ஒரு பேழையில் அடக்கஞ் செய்துகொள்வார்கள். ஆண்டுச்சென்று செய்யவேண்டிய செயலையும், நிரல்படுத்திக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார்கள். அத்துறையில் தமக்கு ஐயமாக ஏதேனும் உளதாயின், ஆங்கிலந்தெரிந்த தம் அருமை நண்பர்களிடத்தே ஐயந்தீர நன்கு வினாவித் தெரிந்துகொள்வார்கள். யாதேனுமொரு ஆங்கிலச் செய்தியை அது இன்றியமையாததெனக் கருதுமிடத்துத் தம் நண்பர்களைக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வைத்துக்கொள்வார்கள். தமிழில் மொழிபெயர்க்குங்கால் பி. ஏ. முதலிய பட்டம் பெற்றவர்களைக் கொண்டு மொழிபெயர்த்துக் கொள்வார்கள். பொதுவாக அனுபவ அறிவாலே தாமும் ஆங்கிலச்சொற்களுக்கு நேரிய தமிழ்ச்சொற்களைக் கண்டு மொழிபெயர்ப்போர்க்குச் சொல்லுங்கால் அவ்வாங்கிலப் பட்டதாரிகளும் அத்தகைய நேரிய தமிழ்ச்சொல்லைத் தாம் கண்டு கூறமாட்டாமைக்கு நாணுவார்கள்.

மொழிபெயர்ப்போர் யாண்டேனும் ஒருசிறு சொல்லில் தவறிவிடினும், அதனை உடனே கண்டு ஏன் அச்சொல்லை விட்டுவிட்டீர்கள் அல்லது அச்சொல்லிற்கு இத் தமிழ்ச்சொல் அன்றோ நேர்பொருளுடையது என்று அவர்களையும் தெருட்டுவார்கள். ஆதலின், ஆங்கிலப் பட்டம் பெற்றோரும் நம் பண்டிதமணியவர்களிருக்குமிடத்தே மிக விழிப்புடன் நடந்துகொள்வார்கள். இன்றேல், அவர்கள் கற்றுப் பட்டம் பெற்றுள்ள ஆங்கில அறிவிலேயே அவர்கள் மட்டமானவர்கள் என்பதை நம் பண்டிதமணியவர்கள் எடுத்துக்காட்டிவிடுவார்கள்.

மறதி என்பது நம் பண்டிதமணியவர்களிடத்தே ஒருபொழுதும் நிகழ்ந்திருக்கமாட்டாது. அங்ஙனமே சோம்பலும் அவர்கள்பால் ஏற்படுவதில்லை. பல்கலைக் கழகத்துப் பேராசிரியராக ஆற்றும் செயலும் தங்குடும்பத்தில் தம் அருமை மக்களின் ஆடைகள் தூயனவாக இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளும் செயலும் இரண்டும் அவர்கட்கு ஒருவிதத்தில் சமமான செயலே ஆகும். முன்னையது பெருஞ்செயல் என்றும் பின்னையது எளிய செயல் என்றும் கொள்ளாமல் இரண்டு செயலையும் விழிப்புடனேயே செய்வார்கள்.

பண்டிதமணியவர்கள் தாம் செயல்புரிவதற்கெனத் தம் இல்லத்தே அமைத்துக்கொண்டுள்ள அறையை எப்பொழுதும் அழகாகவும், தூய்மையாகவுமே வைத்துக் கொள்வதில் விழிப்புடன் இருப்பார்கள். இல்லத்துக் கூரையில் யாண்டேனும் ஒருசிறு சிலந்திநூல் காணப்படினும் உடனே வேலையாளை அழைத்து அதைத் துடைத்துத் தூய்மை செய்யச் சொல்வார்கள். புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருப்பார்கள். எழுதுகோல் முதலிய சிறு கருவிகளையும் அவ்வவை இருத்தற்குரிய இடத்திலேயே இருக்கும்படி வைப்பார்கள். எப்பொருளும் தூய்மையாகவும் அழகாகவுமே இருத்தல்வேண்டும்.

மாலைவேளைகளிலே, தம் மனைவி மக்களோடும் வருகின்ற விருந்தினரோடும் நகைச்சுவைபடப் பேசிக் கேட்போர்களை நகைக்கவைத்துத் தாமும் கலகலவென்று சிரிப்பார்கள்.

வேறு சிலர் போலாது நம் பண்டிதமணியவர்கள் ஒரே விதமான ஆடையையே எப்பொழுதும் உடுப்பார்கள். வெண்ணிறமான ஆடையே அவர்கள் உள்ளத்திற்கு மிகவும் பொருந்தியதாம். பலவண்ண ஆடைகளை அவர்கள் விரும்புவதே இல்லை. எப்போதாயினும் சிற்சில செவ்விகளில் அவர்கள் கோட்டும் தலைப்பாகையும் அணிவதுண்டு.

இளைஞர்களைப்போன்று அடிக்கடி முகத்தைச் சவரம் செய்வித்துக் கொள்வார்கள். புறவுடலைப்பற்றிய நாகரிகத்தில் புதுமைக்கும் புதுமையாக அவர்கள் பொலிவுற்றுத் திகழ்வார்கள்.

விசு. திருநாவுக்கரசு என்பவர் கூறியதுபோன்று நம் பண்டிதமணியவர்கள் பண்டைநாளிலிருந்த தனவணிகப் பெரியோர்கள்போல மழித்த தலையுடையவர்களா? இக்காலத்து இளைஞர்போன்று கத்தரிக்கபட்ட தலையினரா? என்று காண்டல் அரிது. இரண்டுக்கும் இடை நிகரானதொரு நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

                       18. பாட்டின்ப நுகர்ச்சி 

“தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும், மடங்கொன்று அறிவகற்றுங் கருவி” என்பது குமரகுருபர அடிகளாரின் வாக்கு. கல்வி தொடங்குங்கால் துன்பமாம் என்று இப்பெரியார் கூறுவது பொதுவியல்பு பற்றிப் போலும். உலகின்கண் பெரியோராகத் திகழ்ந்த புலவர்கள் எல்லாம் கல்வி தொடங்குங்கால் தமக்குப் பேரின்பமாய் இருந்தமை கண்டே மேலும் மேலும் அதனைத் தொடர்ந்து பயில்வாராயினர். கலைவாணராந் திருவுடையார்க்குக் கல்வி தொடங்குங்காலும் இன்பமே பயப்பதாம். “என் இளம்பருவத்தே சொற்பொருள்கள் தரும் இன்பத்தாலேயே நான் அவற்றை ஊக்கத்துடன் கற்றேன்”, என்று பண்டிதமணியவர்கள் பற்பலவிடத்தே கூறியுள்ளார்கள்.

தெய்வத் திருவருளுடையார்க்கே தீஞ்சுவைச் செய்யுள் இயற்ற இயலும் என்பர் சான்றோர். அச் செய்யுளிடத்தே உள்ள சுவை உணர்தற்கும் எம்மன்னை கலைச்செல்வியின் திருவருளே துணை செய்யல் வேண்டும். செய்யுளின் தீஞ்சுவையை உணர்தற்கு ஏதுவாவது நுண்மான் நுழைபுலம் உடைமையேயாம். “நுண்மான் நுழைபுலம் ஆவது, நுண்ணிதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு” என்பர் பரிமேலழகர். “அறிவிற்கு மாட்சியாவது பொருள்களைக் கடிதிற் காண்டலும் மறவாமையும் முதலாயின” என்று மேலும் விளக்கமும் கூறுவர். நம் பண்டிதமணியவர்களின் பெருஞ்சிறப்புக்குக் காரணமாவதும் அவர்தம் நுண்மான் நுழைபுலனுடைமையே ஆகும்.

நம் வள்ளுவப் பெருந்தகையார் தம் அருமைத் திருக்குறளின்கண் “மதிநுட்பம்” என மற்றோரிடத்தே குறிப்பிட்டதும் இந் நுண்மான் நுழைபுலத்தையேயாம். ஆண்டும் பரிமேலழகர் “அது தெய்வந் தரவேண்டுதலின் முற்கூறப்பட்டது” என அதன் சிறப்பை விளக்குகிறார்.

நம் பண்டிதமணியவர்கள் திருவாசகம் போன்ற உயரிய நூல்களில் யாதேனும் ஒன்றைப் பயிலுங்கால், அதன் ஏடுகள் விரைந்து புரளமாட்டா. நீண்ட நேரம் அவர் அந்நூலின் ஒரே பக்கத்தில் அல்லது ஒரே செய்யுளிலேயே ஆழ்ந்திருப்பர். செய்யுளை மட்டும் பயில்கின்றவர் பலர் ஒருநாழிகைப் போதில் பன்னூறு செய்யுட்களை விரைந்து ஓதுகின்றனர். இவர்கள் கலைக்கடலில் மூழ்கும் சத்தியற்ற மிதவைக் கட்டைகள் போன்று, செய்யுளின் ஓசையாகிய அலைகளாலே உந்தப்படுகின்றவர்களே யாவார்கள். நம் பண்டிதமணியவர்கள் பற்பல நாழிகைகளை ஒரே செய்யுளினும் போக்கிப் பயில்வார்கள். அவர்கள் அலைகடலின் ஆழத்தே மூழ்கிச் சென்று ஆண்டுள்ள முத்து முதலிய மணிகளை எடுத்து வருவோரைப் போன்றவர்கள்.

இயற்கையில் நுண்மாணுழைபுலம் உடைய நல்லிசைப் புலவர்களின் ஆழ்ந்த உள்ளத்திருந்தன்றோ சுவைமிக்க செய்யுட்கள் உருவாயின! அச் செய்யுட்களைப் பயில்வோர் அச் செய்யுளின் வழியே சென்று அதனை ஆக்குதற்கு முதலாக அப்புலவனுடைய உளத்தே கிடந்த நுண்கருத்துக்கள் யாவை என ஆராய்ந்து, அக்கருத்துக்களை உணரும்போதே அவற்றின் அழகாலே தம்முடைய உள்ளத்துள்ள இன்ப ஊற்றுக்கள் கண்திறக்கப்பட்டு அளவில்லாத பேரின்பத்திலே மூழ்குகின்றார்கள். உணர்ச்சி மிக்கவர்கள் ஆழ்ந்து நோக்கநோக்க அரிய பொருள்களைச் சுரந்தளிக்கும் தெய்வத்தன்மை நல்லிசைப் புலவர்களின் செய்யுட் குளதாயதோர் பண்பாகும். இப்பண்பையே கலையிற் பெரியராய கம்பநாடரும் பம்பையாற்றினது ஆழத்திற்கு,

“கீழுறக், கற்பகம் அனைய அக்கவிஞர் நாட்டிய

சொற்பொரு ளாமெனத் தோன்றல் சான்றது”

என உவமையாக எடுத்தோதினர்.

கடலென விரிந்து பரந்த நல்லிசைப் புலவர்களின் உள்ளத்தே முத்தென ஒளிரும் நுண்ணிய ஒளியுடைய கருத்துக்களைத் தம் நுண்மாண் நுழைபுலனாலே கண்டு மகிழ்தல் ஒன்றே கலைவாணர்க்குப் போதிய ஊதியமாமன்றோ! இவ்வின்பத்தே திளைத்துத் திளைத்து முதிர்ந்த உள்ளமுடையவர் நம் பண்டிதமணியவர்கள். இத்தகைய செய்யுளின்ப நுகர்ச்சியுடைய நம் பண்டிதமணியவர்கள் தம் அனுபவத்தே கண்ட புலமைவாழ்க்கையின் சிறப்பை,

“ஒரு நூலை ஆசிரியர் முகமாகக் கற்ற அளவினனானும், இயன்முறை தெரிக்கும் நூற்பாக்களையும் எடுத்துக் காட்டாம் செய்யுட் பகுதிகளையும் சொற்பொருள் அறிந்து கொள்ளும் அவ்வளவினானும், புலமை நிரம்புவதன்று. இவ்வெல்லாம் சிறந்த புலமையின் உறுப்புக்களாமன்றி உறுப்பியாகா.

“ஒன்றனை ஊன்றிப் படிக்குங்கால் படிக்கப்படும் சொற்குழுவினின்று உணரப்படும் பொருட்கண் உள்ளம் உறைத்து நிற்பச் சார்ந்ததன் வண்ணமாம் தன்மைத்தாகிய உயிர் அவ்விழுமிய பொருட்கண் பிரிப்பின்றிக் கலந்து அப்பொருட்பயனை நுகர்தலும், நுகர்ச்சிக்குப் பின் வெளியுலகத்து மீண்டு நினைவு கூர்தலும், தீர்ந்த உண்மைகளைக் கடைப்பிடித்துத் தம் குறிக்கோளாக ஒழுக்கியலின் மேற்கோடலும், மேற்காட்டிய உறுப்புக்களோடியையு மாயின், ஒருவாறு புலமை நிரம்பியதாகக் கொள்ளலாம்.

“புலமையின் குறிக்கோள் உலகியற் பொருளளவின் இருப்பின் அது சிறுமை எய்தி மாசுடையதாகும். அறிவை ஒளி வலியுடையதாக்கி அகலமுறச் செய்து, அவ்வகன்ற ஒளி விளக்கத்தின்கண்ணே முன்னர்க் காணப்படாதனவும் உலப்பிலா இன்பவிளைவிற்கு ஏற்றனவுமாகிய அரிய பல நுண்பொருள்களை அக்கண்ணாற் கண்டு இன்புறுதலாகிய வாழ்க்கையே புலமை வாழ்க்கை யாகும்”,

எனக் கூறிய மணிமொழிகளாலே ஒருவாறு அவர் தம் புலமையின்பச் சிறப்பை யாம் உணர்தல் கூடும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்றாற் போன்று அவருடைய மொழிகள் அவர் தன்மையை விளக்கிக் காட்டுகின்றன. அம்மொழிகள்போல் பிறர் மொழிகள் அவரியல்பை நமக்குத் தெற்றன விளக்கமாட்டுவனவல்ல.

யாம் கற்கவேண்டுவன செய்யுட்கள் அல்ல! அச்செயுள்ளின் வாயிலாகக் காலத்தானும் இடத்தானும் நமக்குச் சேயனாகிய தொரு நல்லிசைப்புலவனுடைய உள்ளத்தையே யாம் கற்றல்வேண்டும்! அப் புலவனுடைய கருத்தழகிலே, அவனுடைய உள்ளத்தின் பரப்பிலே, ஆழத்திலே, நுண்மையிலே, தெளிவிலே, ஒளியுடைமையிலே, அப் புலவன் உளத்தோடு ஒரே இனமான நம்முடைய உள்ளம் பரவியும், நுணுகியும், ஆழ்ந்தும், ஒளியேற்றும், தெளிந்தும், கலப்பதனையே ஈண்டுப் பண்டிதமணியவர்கள், “சார்ந்ததன் வண்ணமாந் தன்மைத்தாகிய உயிர் அவ்விழுமிய பொருட்கண் பிரிப்பின்றிக் கலந்து” என்று சுருங்கக் கூறினார்கள்.

இம் மண்ணுலகத்தே வாழ்கின்ற மனிதர்கள் வெளித்தோற்றத்திலே ஓரினத்தவராகக் காணப்படினும், அவர்தம் வாழ்க்கை வகையாலே மூன்றுவகையினராவதைக் காணாலாம். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் இவ்வைம்புலன்கள் அளிக்கும் இன்பத்தையே முறையே நாவும் கண்ணும் மெய்யும் செவியும் மூக்குமாகிய பொறிகளானே நுகர்ந்து இன்பம் அல்லது துன்பமுற்று உழல்வார் ஒரு சாரார். இத்திறத்து மாந்தர்களே உலகில் தொகையான் மிக்கவர்கள் ஆவார். இவர்களை வாழ்க்கை வகையானே விலங்கியல்புடையார் என்று விளம்பி அவ் விலங்கியலுண்மை குறிப்பால் தோன்றுமாறு “மாக்கள்” என நூல்கள் கூறுகின்றன. இனி அகக்கருவியாகிய மனனுணர்ச்சியே தம் வாழ்க்கைக் கருவியாகக்கொண்டு உலகத்தும், நூல்களிடத்தும் அழகாக மிளிர்கின்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களை நுகர்ந்து இன்புற்று வாழ்வோர் ஒரு வகையினராவார். இவர்கள் மாந்தராயினும் தேவர்களோடு ஒப்பாவார் என்னுங் கருத்தால் நம் திருவள்ளுவப் பெருந்தகையார் “அவியுணவின் ஆன்றோ டொப்பர் நிலத்து,” என்று தெரிந்தோதுவாராயினர். ஈண்டு நம் பண்டிதமணியவர்கள் “உலப்பிலா இன்பவிளைவிற் கேதுவான அரிய பல நுண் பொருள்களை அகக்கண்ணாற் கண்டு இன்புறுதலாகிய புலமை வாழ்க்கை” என்று இயம்பியதும் இவ் அமர வாழ்கையையே என்க. இனி, மூன்றாவதாகிய வாழ்க்கை மனமாற்ற பரிசுத்தநிலை எனத் தாயுமான அடிகளாற் கூறும் சீவன் முத்த வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையை உடையோர் இவ்வுலகத்திலேயே வீட்டின்பம் கைவரப்பெற்ற மேலோர்களாகலின், மானிட உருவினின்ற இறைப் பொருளே ஆவரல்லரோ. இம் முத்திறத்த வாழ்க்கையினுள்ளே எப்பொழுதும் கலையென்னும் உண்ணா அமிழ்தத்தை மனணுணர்வாலே உண்டு உலப்பிலா வாழ்வெய்தியதொரு தேவர்கள் வாழ்க்கையை நம் பண்டிதமணியவர்கள் இவ்வுலகத்தே எய்தி நின்றார்கள்.

“ஓரளவுட்பட்ட சில பல நூல்களை வினவுவார் கருத்துக்கியைய விடையிறுக்கு முகமாகக் கற்றுத் தகுதிச் சீட்டுப் பெறும் அவ்வளவில் புலமை தன்நிறைவை எய்தியதாக எண்ணிவிடலாகாது” என நம் பண்டிதமணியவர்கள் நுண்ணிதிற் கூறியுள்ளார்கள். இங்ஙனம் எண்ணும் புலவர்களே இக்காலத்து யாண்டும் காணப்படுகின்றனர். செய்யுளில் இன்புறும் மனனுணர்ச்சி இவர்கள்பால் இயற்கையில் இல்லை; ஆதலால் அவிச்சுவை ஒன்றே அறியும் மாக்களினத்தாராகிய இவர்கள் அவ் வவிச்சுவையை நிரம்பப் பெறுதற்கு இக் கல்வியை ஒரு கருவியாகக் கொண்டு வினவுவார் கருத்துக்கியைய விடையிறுப்ப தொன்றே குறிக்கொண்டு பெருநூல்களை வருந்தி வருந்திக் கற்கின்றனர். மனனுணர்ச்சி இன்மையால் செய்யுளிடத்தின்பம் இவர்கட்குத் தோன்றாதொழிந்தது. “தொடங்குங்கால் துன்பமாய்” என்னுந்துணையும் குமரகுருபர அடிகளார் வாக்கு இவர்கட்கு நன்கு பொருந்தும். ஒருவாறு இவர்கள் தேர்விலே வென்றுவிட்டவுடன் தம் புலமை நிரம்பியதாக எண்ணிவிடுகின்றனர். இத் திறத்துப் புலவர்களே பிற்றை நாள் நாத்திகம் பேசித் திரியவும் திரிகின்றனர். இவர்கள் நாத்திகம் பேசுதல் வியப்பன்று. புலமை வாழ்க்கையின்கண் உருவெளிப்பட்டு உயிருடன் களவியல் வாழ்க்கை நடத்துபவனும், சீவன் முத்த வாழ்க்கைநிலை உயிர்த்தலைவியை வரைந்து கற்பியல் வாழ்க்கை நடத்துபவனுமாகிய எம்மிறைவன் இவ் விலங்கென்னும் வெள்ளறிவினரால் என்றென்றும் உணர்தற் கரியன் ஆதலும் இயல்புதானே!

“பயிலுந்தோறும் பயிலுந்தோறும் பண்புடையாளர் தொடர்பு எங்ஙனம் இனிமை சான்று பயன் விளைக்குமோ அங்ஙனமே மீண்டும் மீண்டும் கற்குந்தோறும் கற்குந்தோறும் உயரிய நூல்களின் நுண்பொருள் நலங்கள் நம் உள்ளத்தை ஈர்த்துத் தம்பாற்படுத்துப் பேரின்புறுத்துவனவாம்”, என்றும் “மிக விரைந்தோடும் வெள்ளப்பெருக்கினுடைய ஆற்றின் நீர்ச்செலவாற்றலை ஒருவன் அளக்க நினையின் அதன்கண் எதிரேறிச் செல்லவேண்டுவதே இன்றியமையாததாகும். அவ்வாறின்றி அந்நீர்ச் செலவோடியைந்து அதனால் ஈர்த்துச் செல்லப்படுவானாயின், அவ் வாற்றின் நிலை இற்றென உணரகில்லான். அங்ஙனமே உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களின் சொற்பொருளொழுக்கில் நம் நுண்ணறிவு எதிரேறிச் செல்லவேண்டும். அங்ஙனம் சென்று அச்சொற் பொருள்களின் வன்மை வனப்புக்களை ஆராய்ந்தளக்க முயலின், அச் செய்யுளாசிரியன் ஆழ்ந்து நினைவிற் கண்டு வைத்த அரும்பொருள் மணிகளின் இயலொளியை உண்மையாகக் கண்டு இன்புறலாம். ஆராய்ந்து தெளிவதற்கு முன் அச் சொற்பொருள்களோடு எதிர்த்து நிற்றலே நன்றாம்”, என்றும், “பொருணலத் தெளிவின்பின் அச்சொற் பொருள்களோடு நம் அறிவை இரண்டறக் கலப்பித்து அவற்றின் வண்ணமாக நின்று அசைவறும் நிலை எய்தி இன்ப வெள்ளத்துள் திலைத்தல்வேண்டும்”, என்றும், “நூலாசிரியரின் குறிக்கோள் இன்னதெனத் துணிந்தாலன்றி அவன் பலவாறு பன்னிப்பன்னி உரைக்கும் உரைப்பொருளின் உண்மைக் கருத்து அறியப்பட்டதாகாது” என்றும், “சிறந்ததொரு முடிபொருளைச் செப்பனிட்டுத் திறம்பட உரைக்க முற்படும் புலவன் பருந்தின் வீழ்ச்சிபோற் சேய்மையினின்றே முடிபொருட்குரிய சார்வுப் பொருள்களில் மெல்ல மெல்லத்தலைப்பட்டுச் செல்லுவன். அச் செலவின் நிலையை அந்நெறி நின்றே உய்த்துணர்தல் வேண்டும். செல்வழிக் கண்டனவே தீர்ந்த பொருளென எண்ணிவிடலாகாது,” என்றும், “நூலுரையாசிரியர்களின் கருத்துப் படர்ச்சியில் நம் அறிவுத் தொடர்ச்சி பின்னிடுதல் நன்றன்று,” என்றும், “அயரா உழைப்பிற்கு அகப்படாத பொருள் யாதுமின்று. தொடர்நிலைச் செய்யுட்களின் உயிரனைய சுவை நலம் விராய குறிப்புப் பொருளை உணர்தலில் நம் அவா முற்படவேண்டும்,” என்றும் நம் பண்டிதமணியவர்கள் பாட்டின்ப நுகர்ச்சியையும் அதற்குரிய நெறியையும் தமது அனுபவத்தினின்றும் எடுத்துத் தாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் எய்துகவெனக் கருதி அழகுற விளம்பியுள்ளார்கள்.

இதற்கு முன்னர் எத்தனையோ சான்றோர்கள் இலக்கியச் செல்வங்களை நுகர்ந்து அளவிலா இன்பமெய்தினர் எனினும், அவ் வின்ப நுகர்ச்சிக் குரிய வழிதுறைகளை இத்துணை நுணுக்கமாக அவருள் ஒருவரேனும் நம்மனோர்க்கு அறிவுறுத்தினாரைக் கண்டிலம். நம் பண்டிதமணியவர்கள் பாட்டின்ப நுகர்ச்சியில் தோய்ந்த தமது திருவுள்ளத்தை எஞ்சாமல் திறந்தன்றோ நமக்குக் காட்டுகின்றார்கள். அமிழ்தினும் இனிய இவ் வறிவுரைகள் இலக்கியம் நுகரும் திருவுடையார்க்கு ஒப்பற்ற வழிகாட்டியாக அமைந்துள்ளன.

மெய்யறிவு முதிர்ந்து மெய்ப்பொருளுணர்ச்சி கைவரப் பெற்ற சான்றோர்கள் சொல்லுதற் கொண்ணாத அப் பேரின்ப நிலையை நம்மனோர்க்குப் பேசப் புகுங்கால் நம் அனுபவ உணர்ச்சிக்குட்பட்ட காதலின்பத்தையே உவமையாக எடுத்துப் பேசாநிற்பர். பேரின்பம் உவமையற்றதாயினும் “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை” எனத் தொல்காப்பியனார் உவமை, பொருளினும் உயர்ந்ததாதல் வேண்டும் என விதி கூறியிருப்பினும், மெய்யுணர் வுடையோர், இவ்விதி வழி நில்லாது அழியாத பேரின்பத்திற்கு அதனிற் றாழ்ந்ததும் அழிதன்மாலைத் தாயதுமாகிய காதலின்பத்தையே உவமையாக்கிக் காட்டுகின்றனர். அங்ஙனமே ஒப்பற்ற பாட்டின்ப நுகர்ச்சிக்கும் உவமை கூறப் புகுந்த நம் பண்டிதமணியவர்களும், சிறந்த காதலனும் காதலியும் தம்முள் மனமொத்துப் புணரும் புணர்ச்சி யின்பத்தையே உவமையாகக் கூறினார்கள். “மதிவலி மிக்க முதுபுலவனிடத்தினின்றும் தோன்றிய பாடல் நங்கைக்குத் திட்பம் நுட்பம் தெளிவு விளக்கம் இனிமை முதலிய பண்புகளமைந்த சொற்பொருட் குழுவே அழகிய உடலும், சுவைநலந் துறுமும் தொனிப்பொருளே உயிருமாம். இந் நங்கைக்கு உவமை முதலிய அணிகளே அணிகலன்களாம். அழகுக்கு அழகு செய்தல்போல இவ்வணிகள் சேர்க்கப்படினும் இப்பாடன் மெல்லியற்பாவை நல்லாளின் இயற்கை வனப்புமிக்க நல்லுடலைச் சார்ந்து உவமை முதலிய அணிகளே சிறந்து அழகு பெற்றுத் திகழ்வனவாம்”,

“இங்ஙனம் இயற்கைநலம் மிக்குச் செயற்கை நலனையும் ஏற்றுத் திகழும் இத்தகைய பாடல் நங்கையைக் கூடி நுகர்தற்குரிய இளநலம் சான்ற மணமகனியல்பை இயம்பவும் வேண்டுங்கொல்? அன்னான், இலக்கிய நூலறிவானும், மதிநுட்பத்தானும் சிறந்து மலர்ந்து மணப்பருவம் வாய்க்கப்பெற்றுக் கட்டழகு வாய்ந்த பாடல் நங்கையைக் காண்டலில் காதல் மிக்குடையானாய் அப்பேறு குறித்துத் தவஞ்செய்த தனிப்பெருஞ் செல்வனாதல் வேண்டும். வேட்கை முயற்சியும் தவப்பயனாம் ஆகூழ்வலியும் ஒருங்கு கைவரப்பெற்றாலன்றி, அப்பாடல் நங்கையின் பரிசுணர்தல் அரிதாகும்.”

மெய்யுணர்வுடைய சீவன்முத்தர்கள் உயிராகிய தம்மைக் காதலியாகவும், தம்முடன் கலந்து அளவிலா இன்பத்தை நல்கும் இறைவனைத் தம் காதலனாகவும் கூறிக் களிப்பார்கள். ஈண்டுப் பண்டிதமணியவர்கள், செய்யுளைக் காதலியாகவும், அதனை நுகரும் திருவுடைய புலவனைக் காதலனாகவும் உருவகம் செய்தார்கள். தூய்நிலை அடைந்த அடியார்களை இறைவன் வலிந்து வந்து கலந்து இன்புறுகிறான்; ஈண்டுப் புலவனே காதல் வேட்கை மிக்குக் காவியப் பெருஞ் சோலையிலே செய்யுளாகிய தலைவியைத் தனிமையிற் கண்டு புணர்ந்து மகிழ்கின்றான் ஆதலின், இங்ஙனம் மாறி உருவகம் செய்தது சாலப் பொருத்தமேயாம்.

இன்ன பாடல் நங்கையை ஆகூழ்வலியாம் தவப்பயனாகப் பெற்று அந் நங்கையுடன் இரண்டறக் கலந்து இன்புற்ற தலைமகனே நம் பண்டிதமணியவர்கள். கட்பொறி முதலிய அறிவுக் கருவிகளாலே காண்டற்கியலாத நுண் பொருள்களை எல்லாம் தம் நுண்மாண் நுழைபுலனாகிய உட்கருவியாலே செய்யுளுலகத்திற் கண்டு கண்டு அளவிலா பேரின்பம் நுகர்ந்தவர்கள் நம் பண்டிதமணியவர்கள். “தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவைகண்டு ஈண்டமரர் சிறப்புக் கொண்டவர்கள் நம் பண்டிதமணியவர்கள். கற்ற கல்வியின் விழுமிய பயனைப் பெறுதற் பொருட்டே கலைமகளை வழிபட்டவர் நம் பண்டிதமணியவர்கள்”. “காணாதனவெல்லாம் கண்டு கேளாதனவெல்லாம் கேட்டு” அறிவுலகத்து நிகழும் வியத்தகும் அருஞ் செயல்களை உணர்ந்து இன்பக்கடலில் மூழ்கியவர் நம் பண்டிதமணியவர்கள். அங்ஙனமின்றி எளிய வயிறோம்பற் பொருட்டுக் கலையை ஒரு கருவியாக்கியவர்களை நோக்கி, அந்தோ! நமரங்காள்! உயரிய நோக்கங்களை நிறைவேற்றுதற்குரிய புலமையை உடலோம்பற்கு வேண்டிய பொருளளவிற் பயன்படுத்த எண்ணுகின்றீர்கள்! நுஞ்செயல் பொற் கொழுக்கொண்டு வரகுக்கு உழ வெண்ணுவோர் புன் செயலோடெக்குமன்றோ! சிறந்துயர்ந்த நோக்கங்களைக் கொண்மின்! சிறந்த கருவியைப் பெற்றிருக்கின்றீர்கள்! திருவருளுணர்ச்சியில் தலைப்பட்டுத் தேவ வாழ்க்கை புகுமின்”, எனத் தெருட்டினவர் நம் பண்டிதமணியவர்கள்.

19. சமய உணர்ச்சி

நம் பண்டிதமணியவர்கள் பிறந்த தனவணிகப் பெருங்குடி சைவ சமயத்தை மேற்கொண்டொழுகிய குடியாகும். ஆதலால் பண்டிதமணியவர்கள் சைவசமயத்தைப் பிறப்புரிமையாகப் பெற்றவர்கள். மேலும் இப்பரந்த உலகத்தே வழங்கும் சமயங்களுள், தலைசிறந்த உண்மைச் சமயங்கள் ஒருசிலவே உள்ளன. அச் சிறந்த மெய்ச்சமயங்களுள் ஒன்றாகத் திகழ்வது நம் சைவ சமயம்.

விலங்கியல் வாழ்க்கை, அமர வாழ்க்கை, கடவுள் வாழ்க்கை என முத்திறத்த வாழ்க்கையுடைமையாலே, மாந்தரும் முத்திறப்படுவர் என முன்னர் மொழிந்ததாம். அவற்றுள், இடைநின்ற புலமை வாழ்க்கையின் முதிர்வே இருதியினின்ற மெய்யுணர் வாழ்க்கையாகிய கடவுள் வாழ்க்கையாதல் வேண்டும். புலமை வாழ்க்கையிலே கலைகளிடத்தே யாம் உணரும் இன்பம் வீட்டின்பமாகிய கடவுளின்பத்தின் முழுமையாகக் கொள்ளற்கில்லை எனினும், அக்கடவுள் இன்பத்தின் ஒரு கூறே அது எனச் சான்றோர் கூறுகின்றனர். ஒரு புலவர், புலமை வாழ்க்கையைத் தமிழ் நூலாற் பேசப்படும் அகப்பொருட்கண் களவியலோடும், மெய்யுணர் வாழ்க்கையைக் கற்பியலோடும் அழகுற ஒப்பிட்டுள்ளார். காவியமாகிய பூம்பொழிலிலே, உயிர்த்தலைவியை இறைவன் களவின் வந்து மணப்பதே யாம் செய்யுளிற் காணும் இன்பம் என்பது அப்புலவர் கொள்கை.

“அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே”,

என்றும்,

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும்–மொழித்திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்”

என்றும், நம் முன்னையோர் கல்விக்கு முடிந்த பயனாவது மெய்யுணர்ந்து வீடுபேறெய்துதல் ஒன்றே எனக் கண்டுணர்த்துவாராயினர். இதனாலன்றோ நம் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்”

என்னும் அருமைத் திருக்குறளானே கல்விப்பயன் கடவுள் உணர்ச்சி பெற்று அவன் திருவடிகளை வழிபடுதல் ஒன்றே அஃதில் வழிக் கற்றதனால் யாதொரு பயனும் இல்லை என வரையறுத் தோதுவராயினர்.

மெய்ப் புலமையையும், போலிப் புலமையையும் எளிதாகக் காண்டற்கு, அப்புலவர்தம் கடவுளுணர்ச்சியுடைமையும் அஃதின்மையும் போலச் சிறந்த சான்றாவன வேறு இல்லை. மெய்ப் புலமையுடையோரில் இறையன்பிலாதார் இலர். இறையன்பிலாதாரிடத்துப் புலமை உணர்ச்சி உளதாவதும் பொய்! பொய்யே!

நம் பண்டிதமணியவர்கள், சமய உணர்ச்சியில் – கடவுளன்புடைமையில் – அறுபான்மும்மை நாயன்மார்களோடு சேர்த்தெண்ணத் தகுந்த தகுதியுடையார் என்பது மிகையன்று. அச்சமய வுணர்ச்சிதானும், சமய நுணுக்கங்களை அறியாத பொதுவுணர்ச்சியுமன்று. சமய நுணுக்கங்களை எல்லாம் தம் நுண்மாணுழைபுலனாலே நன்கு ஆராய்ந்து தெளிந்த சிறப்புணர்ச்சியுடையவர்கள். சைவமும் தமிழும் அவர்களின் இரு கண்கள்போலப் பேணப்பட்டன எனின், சைவம் அவர்தம் வலக்கண் எனலாம்; ஏனெனில் சமயத்தை நோக்க மொழி கருவியே அன்றோ!

பண்டைக் காலத்தே சமயம் வீழ்ச்சி யுற்றபோது, நாயன்மார்களும், ஆழ்வார்களும் சமயம் வளர்க்கு முகத்தானே தமிழையும் உடன் வளர்த்து வந்தார்கள். நம் பண்டிதமணியவர்களோ இக் காலத்தே தமிழே வீழ்ச்சியுற்றமையால், தமது திருத்தொண்டில் மொழி வளர்ச்சியை முன்னிறுத்தி, அதன் வாயிலாய்ச் சமயத்தையும் உடன் வளர்த்தார்கள். சமயம் வளராதவிடத்து மொழி வளர்ப்பது பயனில்செயல்; மொழிவளராத வழிச் சமயம் வளரமாட்டாது. ஆதலின், இரண்டையும் ஒருசேர வளர்ப்பதே அறிஞர் கடனாயிற்று.

திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் போன்று நம் பண்டிதமணியவர்களும் சமயவுணர்ச்சியிற் பரந்த உள்ளமுடையவர்களே. பண்டிதமணியவர்கள் சைவ சமயத்தே தலைநின்ற சான்றோர் ஆயினும், ஏனைச் சமயங்களிடத்தும் நன்கு மதிப்புடையவராகவே இருந்தார்கள். “உலகத்துள்ளாரெல்லாரும் அவரவர்க்குரிய சமய நெறியிற் சென்றே ஒழுக்க நிலையை எய்தக்கடவர், சமயச் சார்பு வேண்டாம், ஒழுக்க மாத்திரமே போதியது என வாய்ப்பறை சாற்றுவோர் அவ்வொழுக்கத்தினும் நிலைபெறமாட்டாப் புல்லர்களே” எனச் சமயவுணர்ச்சி இம்மை யொழுக்கத்திற்கும் இன்றியமையாதாதலை நுண்ணிதின் எடுத்து விளக்கினார்கள். “மறுமைத் துன்பமும், அதனைத் தரும் ஆண்டவனியல்பும், இன்னோரன்ன பிறவுமாகிய நம்பிக்கைகளே ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவனவாம் என்றும், ஆகவே, “உயிரினும் ஓம்பப் படுவதாகிய ஒழுக்கத்தை மேற்கொள்ள நினைப்போர் யாவரும் சமயநெறி நின்றே மேற்கொள்ளக் கடவர்” என்றும் இயம்பி, மக்கள் அவ்வவர் சமய நெறியினின்றே ஒழுகும்படி அறிவுறுத்தி வந்தார்கள்.

“இறைநலம் பற்றாத வாழ்க்கை பயனற்றது; அவ்வாழ்க்கைக்கு வேண்டுவன செய்தல் பாழுக்கு நீரிறைத்தலே ஆகும்” எனச் சமயநெறி நில்லாதபொழுது மக்கள் வாழ்க்கையாற் பயனொன்றும் இல்லாமையும் காட்டினார்கள்.

“நம் புலமையும் அறிவும், கவிச் சுவையில் ஈடுபடுங்கால் இன்பம் அவலம் முதலியனவாகத் தோன்றி முடிவில் அச் சுவையனைத்தும் தெய்வ நறுங்கனித் தீஞ்சாற்றில் தோய்ந்தனவாகவே புலப்படுவனவாம்” என்னும் நம் புலவர் பெருமானின் அருள் மொழிகள் செய்யுளின்பமும், கடவுளின்பத்தின் ஒரு கூறே என்பதனை வலியுறுத்துதல் அறிக.

இந்தக் காலத்திலே கல்லாதார் நிற்கக் கற்றோர் எனப் பாடுபடுவோரும், பொல்லாத குருட்டு நாத்திக நெறிபடரும் கொடுமை நோக்கி, நம் பண்டிதமணியவர்கள் பற்பல அவையிடத்தும் நம் சமய நோக்கங்களையும், அவற்றாலே நமக்குளதாம் ஒப்பற்ற நலங்களையும், சமயம் வீழ்ச்சியுற்றால் நமக்குண்டாம் கேடுகளையும், நன்கு விளக்கிக் கூறி ஒவ்வொருவரும் “நுந்தம் சமயங்களைப் போற்றுமின்! அந் நெறியே நின் மின்! என்று வற்புறுத்தி வந்தார்கள்.

“ஆ! ஆ!! ஒரு நாட்டுக்குத் தன் பண்டைச் செல்வமாகிய சமயநிலை இழக்குங் காலம் நேரின், அந்நாட்டில் எந் நலனும் குறைவுபடுமே! அதன்கண் வாழும் மக்கள் எவ்வகை இன்பமும் இலராய் விலங்கு நிலையை எய்திக் கீழ்நோக்கித் தம் பிறப்பின் பயனை வீணாக்குவரே! செய்யத்தக்கன இன்ன, தகாதன இன்ன என்னும் பகுப்புணர்வின்றி உண்டியும் காம இன்பமுமே பொருளெனக் கொண்டு, அவற்றின் பொருட்டு மனம்போன வழியிற் சென்று தம் அறவாழ்க்கைப் பயனை ஒரு சிறிதும் எய்தாராய்க் கேடுறுவரே! அந்தோ! பொருளிலார் அதனைப் பெற முயறல் உலகியற்கை; உடையார் தம்பாலுள்ள பெறலருந் திருவை வெறுத்தொதுக்கி வறியராக முயறல் யாண்டும் காணாததொன்று! பெறலருஞ் செல்வமாகிய நம் சமயத்தைப் பெற்றிருந்தும், அதனை ஏற்று நுகர்ந்து பயன் பெறமாட்டாமையோடு, அதனை அழிக்கவும் முற்படும் பேதைமையை என்னென்பேம்!” எனப் பண்டிதமணியவர்கள் இக் காலத்தினரின் நாத்திக நெறிச் செலவு நோக்கி, உளம் வருந்திக் கூறிய மொழிகள், அவர்க்குச் சமயநெறிக்கண் உளதாகிய பற்றினை நன்கு தெரியக் காட்டுவனவாம்.

பண்டிதமணியவர்கள் நந்தமிழ்நாட்டிலே சைவ சித்தாந்த சபைகள் போன்ற அவையங்களிலே, அவ்வப்போது சைவ சமய நுணுக்கங்களை மிகவும் விரிவுபட எடுத்து விளக்கி வந்தார்கள். அவைகள் பழைய சமயநூற்கொள்கைகளே யாயினும், அப் பழங் கொள்கைகளேயே இக்காலத்தார் விரும்பி மனங்கொள்ளுமாற்றால், புதிய முறையிலே விளக்கங் கூறி வந்தார்கள். “ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயக் கடவுளைச் சிறப்பு வகையானும், பிற சமயக் கடவுளைப் பொதுவகையானுமன்பு செய்யலாம்; அன்றிச் சமநிலையாக் கோடல் இறையன்பின் இலக்கணம் அன்றாம், என்றும், “தெய்வங்கள் எல்லாம் உண்மை நிலையில் முடிவில் ஒன்றே எனினும், அவ் வுண்மை தத்துவ ஞானிகளுக்கன்றி மற்றையோர்க்கு உணர்வரிதாம்,” என்றும், “சாமானியர்கள் அந் நிலையைப் பற்றிப் பேசல், பேச்சளவேயன்றி அநுபவ அளவிற்கோடல் அரிதென்றும், சிறப்பென்பது ஓரிடத்தன்றிப் பலவிடத்துச் சேறலாகாதென்றும், பலவிடத்தும் சேறல் சாமானிய பத்தியே” என்றும் அவர்கள் கூறிய அறிவுரைகள் ஆற்றவும் இனியனவாம்.

தம் சமயக் கடவுளிடத்துக் கொள்ளும் அன்பு சிறப்பன்பாகவும், பிறசமயக் கடவுளிடத்துக் கொள்ளும் அன்பு பொது அன்பாகவும் இருத்தல் வேண்டும் என இப்புலவர் பெருமான் கூறியது பண்டைக் காலத்துச் சான்றோர்கள் கூறாததொரு புதுநெறியே யாகும். இதற்கு இவர்கள் கூறும் உவமை மிக அழகானது; அது வருமாறு:- “ஒரு பெண்மகள் தன்னைக் கைப்பிடித்த காதலினிடத்துச் செய்யும் அன்பிற்கும், தன் சோதரர் சுற்றத்தாரிடத்துச் செய்யும் அன்புக்கும் வேறுபாடு உண்டன்றோ? முன்னையது சிறப்பு அன்பும், பின்னையது பொது அன்புமாம். சிறப்பன்பை வேறோரிடத்துச் செய்யின் பிறழ்ச்சிக் குற்றம் வருதலோடு சிறப்பிலக்கணமும் பிழைபடும். பொது அன்பை உரிய சோதரர் இடத்துப்போல் மற்றையோரிடத்துஞ் செய்யலாம். அதனால் வருங்குற்றம் யாதுமின்றாம் அவ்வாறே சமயக் கடவுளிடத்துச் செய்யும் பத்தி சிறப்பும், ஏனைத் தேவர்களிடத்துச் செய்யும் பத்தி பொதுவுமாம். ஆனால், அப் பெண்மகள், தன் உயிர்க் காதலனைப் பாராட்டி, ஏனைச் சோதரர் முதலியோரையும் இகழாது உபசரித்தல் போல, நாமும் நம் சமயத் தெய்வத்தைப் பாராட்டுதலோடு மற்றைத் தேவர்களையும் இகழாது அவரவர்க்கேற்றவாறு உபசரித்துப் போற்றுதல் கடனாம். இவ்வாறு தத்தம் சமயத் தெய்வங்களிடத்து வைக்கும் சிறப்பன்பே, நல்லின்பந் துய்த்தற்கு உரியதாகும். இங்ஙனம் இன்றி எல்லாம் சமம் சமமென்று கூறுவார் ஒன்றினும் நிலைபெறாது தமக்குரிய ஆன்மப்பேற்றை இழந்தவரேயாவர்”, என்பது அவர்கள் கூறிய மணிமொழிகள். இவை, அவர்களுடைய பரந்துபட்ட சமயநோக்கத்தை நன்கு விளக்குகின்றன.

இவர்கள் வைணவ சமயத்தைக் குறிப்பிடும்போது “நமது சகோதர சமயமாகிய வைணவ சமயம்” என்றே கூறுவார்கள். இது, அவர்கள் அச் சமயத்தின்பாற் கொண்ட நன்குமதிப்பைக் காட்டுகின்றது. இனி, சமண புத்த சமயம் பற்றிய நூல்களாகிய சிந்தாமணி மணிமேகலை முதலிய பண்டைப் பெருங்காப்பியங்களை இவர்கள் பயிலுங்கால், இவர்களே சிறந்த சமண அல்லது புத்த சமயப் பெரியாராகிவிடுவார்கள். கடலென விரிந்த அக்காப்பியங்களை அருளிச் செய்த பெரியோர்களின் உளக் கருத்தை அச் சமயக் கண்கொண்டே நோக்கி நுண்ணிதிற் கண்டுணர்த்துவார்கள். அவர்கள் அறிவுறுத்தபடியே தஞ் சமய நூலாகிய திருத்தொண்டர் புராணம் திருவாசகம் முதலிய நூல்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் சிறப்பன்பும், வைணவ சமய நூல்களிடத்தும் ஏனைச் சமய நூல்களிடத்தும் அவற்றின் ஆசிரியர்களிடத்தும் பொது அன்பும் உடையராய் நன்கு மதித்துப் போற்றினார்கள்.

பற்பல நாட்டுப் பெரியார் பலரும் இந்நெறி நிற்கமாட்டாது அலமருகின்றார்கள். நம் பண்டிதமணியவர்கள் எண்ணிறந்த சமயங்கள் நின்று நிலவும் இப் பேருலகத்தே சமயப் பூசலின்றி எல்லாச் சமயத்தாரும் சகோதரர்கள் போல ஒற்றுமை கொண்டு ஒருவரை ஒருவர் அன்பொடு தழுவி வாழுதற்குரிய நெறியை நுண்ணிதின் ஆராய்ந்து கூறினார்கள்.

நம் பண்டிதமணியவர்கள் நமது தமிழுக்கியற்றிய தொண்டில் சைவசமய நெறிக்கியற்றிய தொண்டு குறைந்ததன்று. உரைநடைக்கோவை முதற்பகுதியில் அடங்கிய சமயக்கட்டுரைகள் ஐந்தும், சைவ சமயத்தவர்க்குப் புதுவதாகக் கிடைத்த பெருஞ் செல்வங்களே யாகும். ஓர் அறிஞர் இவற்றைச் சைவப்பெருமக்கள் திருவைந்தெழுத்தைப் போற்றுமாறே போற்றிக்கொள்ளல் வேண்டும் என அறிவுறுத்தியது சாலப் பொருந்துவதேயாம்.

      20. கலைப் பெருங்கோயிலும் கடவுட் காட்சியும் 

இவ்வாறு சிறந்த சமயவுணர்ச்சி மிக்கவர்களாய், யாண்டும் சமய நெறியில் மக்கள் ஒழுகுமாறு அறிவுறுத்தி வந்த நம் பண்டிதமணியவர்கள், கல்லானும் உலோகங்களானும் ஆகிய திருக்கோயில் வழிபாட்டினும், திருவுருவ வழிபாட்டினும், அவ் விறைவனைத் திருவருட் பேறுடைய சான்றோர் சொற்பொருள்கொண்டு அன்பாலே இயற்றியருளிய அழிவிலாத் திருப்பாசுரத் திருக்கோயில்களைப் பன்முறை வலம் வந்து அத் திருக்கோயில்களிலே பொருள் வடிவமாக எழுந்தருளி யிருக்கின்ற இறைவன் திருவுருவத்தை அகக்கண்ணாலே கண்டு அன்பு கெழும அடிவீழ்ந்து வணங்குதலே சாலச் சிறப்புடைய வழிபாடாம் என்று கருதி, அக் கோயில்களிலே உள் நுழைந்து கருவறை வரையில் உட்சென்று கடவுளைக் கண்டு வழிபட்டு வருவார்கள். இங்ஙனம், அவர்கள் வழிபடுதற்கெனத் தேந்தெடுத்துக்கொண்ட திருக்கோயில்களில் தேவாரம் திருவாசகம் திருத்தொண்டர் புராணம் என்னும் மூன்று கலைக் கோயில்களே முதலிடம் பெற்றன.

நம் பண்டிதமணியவர்களின் இளமைப் பருவத்திலேயே இக் கலைக்கோயில்கள் தம் சிறப்பானே இப் புலவர் பெருமானைத் தடுத்தாட்கொண்டன. இராமலிங்க அடிகளார் “ஆடையிலே எனை மணந்த மணவாளா”, என்றபடி, தெருவில் ஆடாநின்ற மழவிளம் பருவத்திலேயே இவ்வினிய நூல்கள் நம் பண்டிதமணியின் உள்ளத்தைத் தம் தெய்வ மணங் காட்டித் தம்பாலீர்த்துக் கொண்டன. அவ் விளம்பருவந் தொடங்கித் தம் ஆயுளின் இறுதிகாறும் நம் பண்டிதமணியவர்கள் இக் கலைக்கோயில் வழிபாட்டைக் கைந்நெகிழ விட்டதில்லை.

திருவாசகத்தைப் பயின்றவர்களில், இராமலிங்க அடிகளாரையே நம் பண்டிதமணியவர்கட்கு உவமை கூறலாம். திருவாசக நுகர்ச்சியின்பத்தைக் கருதி உள்ளம் விம்மிதம் கொள்ளும்போதெல்லாம் ஆராமை மிக்கு நம் பண்டிதமணியவர்களின் கலைமணம் கமழும் செந்நா, இராமலிங்க அடிகளார் இயற்றிய,

“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்னும் திருவருட்பாவை யாதல்,

“வாதவூர் அன்பர் மலர்வாய்ப் பிறந்த

திருவா சகம்இங் கொருகால் ஓதின்

கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையோர் இலரே”

எனவரும் சிவப்பிரகாச அடிகளார் திருப்பாடலையாதல் மிழற்றிக்கொண்டே இருக்கும். சிற்சில அமயங்களில் நம் பண்டிதமணியவர்கள்,

“வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்

வெண்காடு மேவிய விகிர்தனரே”

“பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்

பரந்ததோர் படரொளிப் பரப்பே”

“வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்

மெய்வேடர் பெருமானைக் கண்டுவீழ்ந்தார்”

“கற்றிலேன் கலைகள் ஞானம்கற்றவர் தங்களோடும்

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயனானேன்”

“விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்

மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்

உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”

“பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்

ஆசை மேலுமொர் ஆசை அளிப்பதோர்

தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய

ஈச னாரருள் எந்நெறிச் சென்றதோ”.

எனவரும் இன்னோரன்ன திருப்பாசுரப் பகுதிகளில் யாதானும் ஒன்றை மெல்லெனப் பன்முறை திரும்பத் திரும்ப இனிதாக ஓதிக்கொண்டே இருப்பர். அப்போது அவர்கள் நாத் தழுதழுக்கும். கடைக்கண்களில் நீர் ததும்பித் துளிக்கும். அப் பாடற் பகுதியை ஓதியாங்கே தம்மை மறந்து அப் பாடற்பொருளில் நிட்டை கூடுவர்.

பொதுவாக நம் பரத கண்டத்தினும், சிறப்பாகத் தமிழகத்தினும் இறைவழிபாட்டின் பொருட்டு எடுக்கப்பட்ட திருக்கோயில்களும் திருவுருவங்களும் எண்ணிறந்தன. பண்டைக்காலந்தொட்டு இவற்றிற்காக நம் நாடு செலவிட்டிருக்கும் பொருட்குவையும் அளவிறந்தன. விண்ணளாவி நிற்கும் நாற் பெருங் கோபுரங்களோடும், பிற வுறுப்பக்களோடும் நின்று திகழும் இத் திருக்கோயில்கள் பிற நாட்டில் இருந்து வருவோர்க்கு நம் கடவுளுணர்ச்சியின் சிறப்பை விளக்குவதோடு, அவர்களை வியப்புக் கடலுள் மூழ்கவும் செய்கின்றன. இத்தகைய திருக்கோயில்கள் உலகில் நிரம்பிக் கிடக்கும் விலங்கியல் வாழ்வுடைய மாக்களைச் சமயநெறிக்கண் அழைத்து மக்களாக்கி, மேலும் மக்கட்பிறப்பின் பயனை அவர்கள் எய்திக்கொள்ளுமாறு தூண்டுதற்குரிய ஏதுக்களாம் என்று கருதியே நம் முன்னைச் சான்றோர்கள் இவற்றிற்காம் பொருட்செலவினும், பயன் சாலவும் பெரிதென இவற்றை இங்ஙனம் போற்றி வந்தனர்.

இக்கோயில்களினும், மக்கட்கே சிறந்துரிமையுடைய திருக்கோயில்கள், திருவாசகம், தேவாரம் போன்ற கலைக்கோயில்களேயாகும். கற்கோயிலைக் கட்டியவர்களோ மலவீக்கமுடைய மன்னர்களும், செல்வர்களும், சிற்பிகளுமே ஆவர். இக் கலைக்கோயில்களைக் கட்டியவர்கள் “வினையினீங்கி விளங்கிய அறிவின் முனிவர்கள்” ஆவர். ஆதலால், கலைநலம் கைவரப்பெற்றோர் திருக்கோயில் யாத்திரைக்காக உடல் வருத்தமுறுதலும், பொருட்செலவு செய்தலும் வேண்டா! ஒருசிறு பொருட்செலவின் வாயிலாய், அவர்கள் இருக்குமிடத்திலேயே மெய்ஞ்ஞானப் பூங்கோயில்கள் பலவற்றை எளிதிற் காணலாம். தவப் பேறுடையார் அப்பூங்கோயிலகத்தே காண்டற்கரிய இறைவனையும், அன்புவழிச் சென்று அகக்கண்ணாற் கண்டு போற்றலாம்.

நம் பண்டிதமணியவர்கள், “பாடுவோர்க்கும், கேட்போர்க்கும் இறைவன் திருவடிப்பற்றை விளைவித்து அன்பு மயமாய் நின்று உள்ளுருகச் செய்யும் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம் முதலிய அருட்பாடல்கள்,” என்றும், “அடிகள் திருவருள் அமிழ்தத்தை நிறையவுண்டு, சிவானுபச் செல்வராக விளங்கிய நிலையில் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முதுமொழிப்படி தம் அருளனுபவத்தை உலகத்துளுள்ள மக்களுக்கெல்லாம் வழங்க ஆண்டவன் அருள்வழி நினைந்து திருவாசகம் என்னும் இசைப்பாடல் தொகுதியைத் திருவாய்மலர்ந்தருளினார்,” என்றும் திருவாசகப் பாடல்கள் மாணிக்கவாசக அடிகளுடைய சிவானுபவ நிறைவில் பொங்கித் ததும்பி வெளிப்பட்ட அமுதவெள்ளம் என்றும் இவற்றின் சிறப்பை விளக்கியுள்ளார்கள்.

நம் செந்தமிழ் நாட்டுத் தமிழ்க் கழகங்களினும், சைவ சித்தாந்த சபை போன்ற இடங்களினும் பண்டிதமணியவர்கள் வாயிலாய்த் திருவாசக நுண்பொருள்களை உணர்ந்த அறிஞருலகம் அத் திருவாசகத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து பயிலத் தொடங்கிற்று. திருவாசகத் திருப்பாசுரங்கட்கு நம் பண்டிதமணியவர்கள் கூறும் நுணுக்கம் போன்று வேறு யாரும் கூறிற்றிலர் என்று அறிஞர்கள் பண்டிதமணியைப் பாராட்டுவாராயினர். பழம் பனுவல்கட்குப் பொருள்காணும் தமக்கே உரிய சிறப்பு முறையில் திருவாசகப் பாசுரங்களின் நுணுக்கத்தை அவர்கள் விளக்கும் முறைக்கு எடுத்துக்காட்டாக அவர்கள் கூறியதொன்றனைக் காட்டுதும்.

“வழங்குகின் றாய்க்குன் அருளார்

அமுதத்தை வாரிக் கொண்டு

விழுங்குகின் றேன்விக்கி னேன் வினை

யேனென் விதியின்மையால்

தழங்கருந் தேனன்ன தண்ணீர்

பருகத்தந் துய்யக் கொள்ளாய்

அழுங்குகின் றேனுடை யாயடி

யேனுன் அடைக்கலமே”

என்பது திருவாசகம். இதற்கு அவர்கள் கூறும் நுண்பொருள் வருமாறு.

“இதன் அருமைப் பொருளையும் சிறிது கூறி மேற்செல்வேன். “வழங்குகின்றாய்க்கு” என்புழி குவ்வுருபு பொருட்டுப் பொருளதாம். “என்னை

யாண்டாய்க்கு” என்று, பிறாண்டும் சுவாமிகள் இதனை வெளிப்படக் கூறுவர். ஆகவே, வழங்குகின்ற நின் பொருட்டு நின் அருளாகிய ஆரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் என்பதே அத்தொடரின் பொருளாம். மாணிக்கவாசக சுவாமிகள் தம்மைச் சிவபிரான் மிக வலிந்து அடிமை கொண்டார் என்பதைக்,

“கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டென்னை

நின் கழற்கன்பனாக் கினை”

எனவும்,

“ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே”

எனவும்,

“கல்லைப் பிசைந்து கனியாக்கிக் தன்கருணை

வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனை”

எனவும்,

“இனையனா னென்றுன்னை யறிவித்தென்னை

ஆட்கொண்டெம் பிரானானாய்க்கு”

எனவும் போந்த திருவாக்குக்களான் உணர்க.”

அவ்வாறு அடிமைகொண்டு, தங்கருணை அமிழ்தத்தை எவ்வாறு ஊட்டினார் எனின், ஒன்றும் அறியாத குழவிப்பருவத்து மகவைத் தாய் அச்சமுறுத்தி உணவு ஊட்டுமாபோலும், கல்லூரிக்கட்சென்று கல்வியின் மாட்சியுணராது கற்றற்கு மலைவுறும் சிறாரை ஆசிரியன் அடித்துத் துன்புறுத்திக் கல்வியைப் புகட்டுமாபோலும் ஊட்டினார் என்க.

இவ்வுண்மையை நம் சுவாமிகள்,

“அடித்தடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதம் அறியேனே”

என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள். ஆதலின் சருக்கரை வழங்குதல் என்பதுபோலச் சிறிதும் வருந்துதலின்றி மகிழ்ச்சிமிக்கு இடையீடின்றிப் பெய்தல் கருதிக் கொடுத்தல், தருதல் முதலிய சொற்களை விடுத்து, வழங்குதற் சொல்லால் தொடுத்து அவ்வாறு கருணையமுதத்தைப் பெய்து உண்ணுக! உண்ணுக! என்று அடித்தடித்து வற்புறுத்துகின்ற நின்பொருட்டு அஞ்சியென்பார் “வழங்குகின்றாய்க்கு” எனவும், தன்னை யுண்டாரைச் சிற்றின்புறுத்தும் தேவரமுதம் போலாது சிவபிரான் அருளமுதம் பேரின்புறுத்த வல்லதாகலின், “உன் அருளாரமுதத்தை” எனவும், இயற்கையாக உண்டலின்றித் துன்புறுத்தும் நின்பொருட்டு மிக விரைந்துண்ணுகின்றேன் என்பார், “வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்” எனவும், அங்ஙனம் விழுங்குதலான் “விக்கினேன்” எனவும், வேண்டாத உணவை உண்டற்குத் தொடங்குமுன்னர்க் கண்டவளவிலேயே விக்கலுண்டாமாகலின், முறையே நிகழ்காலமும், இறந்த காலமும் தோன்ற, “விழுங்குகின்றேன் விக்கினேன்” எனவும், அவ்வாறு விக்குதற்குக் காரணம் நீயல்லை; வினைவயப்பட்டுழலும் எனது விதியே என்பார் “வினையேனென் விதியின்மையால்” எனவும், யான் வேண்டாதிருப்பவும், என்னைத் துன்புறுத்தி ஊட்டினையாதலின், அதனால் உண்டான விக்கலை ஒழித்தற்குத் தண்ணீர் தந்து பிழைப்பித்தல் வேண்டுமென்பார், “தண்ணீர் பருகத்தந்து உய்யக்கொள்ளாய்” எனவும், அவ்வமுதம் நின் அருளமுதமாகலின், அதனை உண்ணுதற்குரிய அதிகாரசிவத்துவம் வேண்டுமென்பார், தண்ணிய நீர்மை—சிவத்துவம் என்னும் பொருள் பொதுளத் “தண்ணீர்” எனவும், அத்தண்ணீரும் அவ்வமுதம்போல் விக்கல் முதலிய சலனங்களைத் தருதலின்றி, எற்குகந்த இனிமைச் சுவையுடன் இருத்தல் வேண்டுமென்பார், “தழங்கருந் தேன் அன்ன தண்ணீர்” எனவும், அது பெறாமையின் மிக வருந்துகின்றேன் என்பார், “அழுங்குகின்றேன்” எனவும், சிவபிரான் சேதனப் பொருள்கள் எல்லாம் தமக்கு அடிமையாகத் தாம் ஆண்டார் எனவும், அசேதனப் பொருள்கள் எல்லாம் உடைமையாகத் தாம் உடையார் எனவும் கூறப்படுவாராதலின், இந்நான்கு சொற்களைக்கொண்டு விளக்குதற்குரிய பொருள் முன்னிலை தன்மையாகிய இருசொற்களின் அமைய, “உடையாய் அடியேன்” எனவும், யான் சேதனனாயிருந்தும், சிறிதும் அன்பிலன் ஆதலின் என்னை ஆளுதல்பற்றி வரும் ஆண்டார் என்பதினும் அசேதனப் பொருள்களைப் பற்றிய உடையார் என்பது நினக்குப் பெருமையாதலின், அதனையே விளிப்பல் என்பார், “உடையாய்” எனவும், ஆண்டார் என்பது உண்மை எனினும், என்னை நோக்கி அவ்வாறு கூறற்கு நாணமுடையேனாதலின், அப்பொருள் பிறர் அறிய என்னையே கூறிக்கொள்வன் என்பார், “அடியேன்” எனவும், நின்றனக்கு உரிமையுடைய பொருளினும் அடைக்கலப் பொருளைக் காத்தல் நின் பெருந்தன்மைக்கு இயன்றதென்பார் “உன் அடைக்கலமே” எனவும் அருளினார், என்பதாம்.

அரிதரிது! செய்யுட்கண் உள்நுழைந்து ஊடுருவிச் சென்று, சொற்றொறும் சொற்றொறும் இற்றிதன் பெற்றி என்று அச் செய்யுள் இயற்றிய சான்றோரின் திருவுள்ளத்தைத் தொட்டுகாட்ட வல்லார் கலைநல முதிர்ந்த வித்தகப் பெரியார் நம் பண்டிதமணிபோல்வாரன்றி, ஏனையோர்க்கு இவ்வருஞ்செயல் இயல்வதாகுமோ! நம் பண்டிதமணியவர்களே “உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களின் சொற்பொருள் ஒழுக்கில் நம் நுண்ணறிவு எதிரேறிச் செல்லவேண்டும். அங்ஙனம் சென்று அச் சொற்பொருள்களின் வன்மை வனப்புக்களை ஆராய்ந்தளக்க முயலின் அச் செய்யுளாசிரியன் ஆழ்ந்து நினைவிற் கண்டு வைத்த அரும்பொருள் மணிகளின் இயலொளியை உண்மையாகக் கண்டு இன்புறலாம்” என நம்மனோர்க்கு அறிவுறுத்தினர் அல்லரோ! அவ்வறிவுரைக்கு எடுத்துக்காட்டாகவே இச் செய்யுட்கு அவர்கள் கூறிய நுண்பொருளுரை அமைந்திருத்தலைக் காண்க.

இவ்வாறு திருவாசகம் என்னும் தெய்வ நூலிலே தோய்ந்து தோய்ந்து, திருவாசகம் வேறு, தாம் வேறு என்பதின்றித் திருவாசகமே தாம் தாமே திருவாசகமாக இரண்டறக் கலந்தின்புற்ற பண்டிதமணியார் அக்கலைக் கோயிலிற்றானே, தம் மன மொழி மெய்களானே வணங்குதற்குரிய கடவுளையும் கண்டு வழிபாடு செய்து வந்தார்கள். மேலும், தாம் சென்ற சென்ற இடமெல்லாம் இத்திருவாசகம் என்னுந் தேனை அன்பர்கள் செவிவாயாக உண்ண வழங்கியும் வந்தார்கள். அங்கங்கே ஒருசில பாசுரங்களின் நுணுக்கங்களைக் கேட்டு வியப்புற்ற அன்பர்கள் பலர், நம் பண்டிதமணியவர்களைத் திருவாசகம் முழுதிற்கும் உரைவரைந்தருளும்படி வேண்டுவராயினர். வேண்டியும், அச்செயலில் காலமுண்டாக இறங்கினார்களில்லை.

21. பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறு

பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தே பேராசிரியராக இருந்த பொழுது, அவர் ஏறத்தாழ அறுபதாண்டகவையை எய்தினார். இக் காலத்தே இவர்கள் புகழ் அரசியலார்க்கும் எட்டிற்று. 1941-ஆம் ஆண்டுச் சூன் திங்கள் பதினோராம் நாளாகிய மன்னர் பிறந்தநாட் கொண்டாட்ட விழாநாளில், நம் பண்டிதமணியவர்களை அரசியலார் “மகா மகோபாத்தியாயர்” என்றதொரு சிறப்புப் பெயரால் போற்றி அழைத்தனர். முன்னர் ஆங்கிலம் வல்லுநர்க்கு மட்டுமே உரியதெனக் கருதப்பட்ட பல்கலைகழகத் தமிழ்ப் பேராசிரியர்ப் பெரும்பதவியைத் தாம் ஏற்று, அப்பதவி தமிழ்வல்ல கலைவாணர்க்கும் உரித்தாம் என்பதை விளக்கினார்கள். அங்ஙனமே “மகா மகோபாத்தியாய” என்னும் இச் சிறப்புப் பெயர், பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது போன்று முன்பெல்லாம் கருதப்பட்டது. தமிழ்ப்புலவர்களிலே இச் சிறப்புப் பெயரைப் பெற்றவர்கள் உ. வே. சாமிநாதையர் அவர்கள் மட்டுமேயாவர். அவர்கள் அந்தணர்மரபினர் ஆதலால், இச் சிறப்புப் பெயர் அந்தணர் அல்லாதார்க்கும் உரியதாக அதனானும் கருத இடமில்லையன்றோ. அந்தணர் அல்லாதார்க்கும் அச் சிறப்புப்பெயர் பொருந்தும் என்பது நம் பண்டிதமணியவர்கள் அதனை ஏற்ற பின்னரே நன்கு விளங்குவதாயிற்று. செட்டி நாட்டிளவரசர் தலைமையில் நிகழ்ந்த ஒரு புலவர்குழுவில் பண்டிதமணியவர்கட்கு “முதுபெரும் புலவர்” என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டது. மேலும் அமெரிக்க நாட்டிலே உலகில் உயர்வறவுயர்ந்த பெரும் புகழாளரின் பெயர்களைத் தேடிப் பொறிக்கும் “கலைக் களஞ்சிய”ப் பெருநூலிலே இக்காலத்தே நம் பண்டிதமணியவர்கள் திருப்பெயரும் பொறிக்கப்பட்டமை உணர்தற்பாலது.

இனி நம் பண்டிதமணியவர்கள் பல்கலைக் கழகச் சட்ட திட்டங்கட்கு இழுக்கு வாராதபடி, தமக்கு அகவை முதிர்ந்தகாரணத்தால் தாமே தமிழ்ப் பேராசிரியர் பதவியினின்றும் விலகிக் கொண்டார்கள்.

மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையார்கள், நம் பண்டிதமணியவர்களாலே நிறுவப்பட்டு மேலும் மேலும் வளர்பிறை போன்று வளர்ச்சியுற்றுத் திகழ்வதும், தனவணிக நாட்டின்கண் அறிவுச் செல்வம் பரவுதற்கு வழிகாட்டியாக உள்ளதுமாகிய, தம் சன்மார்க்க சபையிடத்தே, நம் பண்டிதமணியவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு என்றென்றும் விளங்குதல் வேண்டும் என்று கருதினார்கள். அவ்வுருவப்படத் திறப்புவிழாவில், கனம் டாக்டர் ராசா சர். சா. ராம. மு. அ. அண்ணாமலைச் செட்டியார் அவர்களைத் தலைமையேற்றுப் படத்திறப்பும் செய்து தருமாறு வேண்டினார்கள். கனம். செட்டிநாட்டரசர் அவர்களும் சபையார் நோக்கத்தைப் பாராட்டி அவர்கள் வேண்டுகோட்கு விருப்பத்துடன் உடன்பட்டார்கள்.

1940-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஏழாம் நாள், சன்மார்க்க சபையில் நம் பண்டிதமணியவர்களின் திருவுருவப்படம் செட்டிநாட்டரசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தனவணிகப் பெருமக்களும், மகாவித்துவான் ரா. இராகவையங்கார், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கப் புரவலர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை முதலியோரை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும் குழுமிப் பண்டிதமணியவர்களைப் பாராட்டினார்கள்.

1940-ஆம் ஆண்டு, அக்டோபர்த்திங்கள் பன்னிரண்டாம் நாள் மகிபாலன்பட்டியில், நம் பண்டிதமணியவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நடந்தேறியது. அப் பெருவிழாவிற்கும் கனம் செட்டிநாட்டரசர் அண்ணாமலை வள்ளல் அவர்களே தலைமை ஏற்று நம் புலவர் பெருமானைப் பாராட்டினார்கள்.

“நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியடையும் காலங்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய தினம் பண்டிதமணியவர்களுக்கு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகி அறுபத்தோராவது ஆண்டு பிறக்கின்றது. நம்முடைய இனத்தாரில் ஒருவராகிய பண்டிதமணியவர்களுடைய பெருமையையும் குணங்களையும் பாஷா ஞானத்தையும் நம்மினத்தாரேயன்றி இந்தத் தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியும். இவர்களுடைய சாந்தி விழாவைச் சிறப்புடன் நடத்தி வைப்பதால் பண்டிதமணியவர்களுக்குப் பெருமையைச் செய்வதோடு நம்மையும் கௌரவித்துக் கொள்கிறோம்”. இவ்வினிய மொழிகள் செட்டிநாட்டரசர் பண்டிதமணியவர்களைப் பாராட்டியதன் ஒரு பகுதியாம்.

“அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான் மதிக்கற் பால” (நாலடி:163)

என்பர் ஆன்றோர். சான்றோரைச் சான்றோர் மதித்துப் புகழ்தலே மெய்ப்புகழாகும். புலவர் அருமையைப் புலவரே அறிந்து கூறுதல் வேண்டும். நம் பண்டிதமணியவர்களைப் புகழாத புலவர்களே இல்லை என்லாம். அவர்களுள்ளும், பண்டிதமணியவர்களோடு ஒத்த தகுதியுடைய புலவர் பெருமக்கள் சிலர், நம் பண்டிதமணியவர்களின் பண்பெல்லாம் தம் கூர்த்த அறிவாலே நன்குணர்ந்து பாராட்டியுள்ளார்கள். பண்டிதமணியவர்களின் சிறப்பை உணர்தற்கு அப் பாராட்டுரைகள் மிகச் சிறந்த ஏதுக்களாம். ஆதலின், அவையிற்றில் விரிவஞ்சி ஒருசில மட்டும் கீழே தருகின்றோம்.

“என்னுடைய அன்பரும், இயற்கையில் அமைந்த மதிநுட்பமும், வடமொழி தென்மொழி நூல்களை ஆழ்ந்து பயின்றதனால் அமைந்த பேரறிவு வாய்ந்தவர்களும், மேலைச்சிவபுரி முதலிய இடங்களில் தமிழ்க் கலாசாலைகளை நிறுவிப் பாதுகாத்துத் தமிழ்க் கல்வி பரவும்படி செய்தவர்களும், செய்யுளும் வசனமும் எழுதுவதில் ஆற்றல் மிக்கவர்களும், கேட்போர் உள்ளம் கவரும் பிரசங்கங்கள் புரிபவர்களும், அண்ணாமலைச் சர்வ கலாசாலையில் தமிழ்த் துறைத் தலைவராகவிருந்து தம் ஆராய்ச்சித் திறத்தையும் மதிவன்மையையும் வெளிப்படுத்துவர்களும் ஆகிய…………….. பண்டிதமணியவர்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திருந்து தமிழின்பம் நுகர்ந்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும் தொண்டுகள் புரிந்துகொண்டு விளங்கும்படி செய்விக்கும் வண்ணம் ஸ்ரீ ஆனந்த நடராசப் பெருமான் திருவருளைச் சிந்திக்கின்றேன்.” இப்பாராட்டு—-மகாமகோபாத்தியாய, தட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமி நாதையர் அவர்கள் கூறியதாம்.

மணிமலரிலே வெளிவந்த “ஆங்கிலவாணி” முடிபுரையிலே “ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியார்” எனச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைத் தொகுத்துக் கூறிய உரைத் தொடரினை நண்பர் சிலர் வேண்டுகோளுக்கியைய விரித்துரைக்க விழைவுற்று இதனை எழுதுகின்றாம்.

வேதம் ஆகமம் முதலிய எண்ணிறந்த பல்வேறு அறிவுநூற் பெருக்கங்களையுடைய வடமொழியும், தமிழ்மொழியும் ஆகிய இருபெரு மொழிக்கும் இலக்கண முடிபுகள் பல ஒன்றி வரலாலும், தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த புலனழுக்கற்ற அறிவுடையோர் பலர் வடமொழி வல்லாராய் அம் மொழிமரபு பலவற்றை எடுத்தாண்டமையாலும், தமிழிலக்கணப் புலமை நிரம்புதற்கு வடமொழியறிவும் ஒருசார் வேண்டப்படுவதன்றோ? இக் காரணங்களினாலே ஆரிய மொழியினை விரும்பிக் கற்று, அம்மொழியிலுள்ள “சுக்கிரநீதி”, “மிருச்சகடிகம்” முதலிய சிறந்த நூல்களைத் தூய தமிழில் மொழிபெயர்த்து அச்சியற்றி நல்கியதற்காகத் தமிழுலகம் பண்டிதமணியாரைப் பாராட்டுகின்றது.

“ஆரியமும் தமிழும்” என ஆரியத்தை முதலிற் கூறியது இவரது தமிழ்ப்புலமையை இரண்டாம்படியாக வைத்ததாகாதோ? எனின், ஆகாது. “தமிழ்கள் மூன்றும் கொண்டாடி இளம்பூவைக் குழாம் தலைசாய்த்து உளமுருகும்” செந்தமிழ்ப் பாண்டிநாடு இவர் நாடாகலின், தமிழ்ப்புலமை இவர்க்குப் பிறப்புரிமையாயிற்று; ஆரிய மொழிப்புலமை சிறப்புரிமையாயிற்று. சிறப்புரிமையை முதலிற்றந்துரைக்கு முகத்தான் “ஆரியமும் தமிழும்” என வைத்தது பொருத்தமேயான் என்க.

“தமிழ் வல்லார்” என்றமையின் இவர் சொலல் வல்லார், கவிபுனைதல் வல்லார், நூலியற்றல் வல்லார், மாணவர்க்குத் தமிழறிவுறுத்தல் வல்லார் என இவரது பலதிறத்து ஆற்றல்கள் ஒருங்கு கூறப்பட்டன. இனித் தமிழ் என்னுமிடத்து இயல் இசை கூத்து என நின்ற மூன்றும், எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென நின்ற ஐந்தும் “தமிழ்தழீஇய சாயலவர்” என்புழிப் போந்த இனிமையும் பெறப்படுதலின், இவர் தமிழ்த்துறை பலவினும் ஆய்ந்து கண்ட அரும்பொருண் முடிபுகளை வேட்பத்தாம் சொல்லும் மாட்சியினார் என்பது உய்த்துணரவைத்தமை காண்க.

அன்பும், அறிவும், நிரம்பி ஆண்டவன் படைத்த உயிர்களை ஏற்றத்தாழ்வாக நோக்காது, ஒருபடித்தாகக் காண்போன் பண்டிதன் எனக் கண்ணபிரான் கீதையுள்ளே கட்டளையிட்டமையின், ஆன்றோர் இவர்க்கு ஈந்த பண்டிதப்பெயர், இவர் அன்போடமைந்த அறிவுடையார் என்பதைத் தெளிவு படுத்திற்று. திருவாசகத்தினும் ஏனைய திருமுறைகளினும் இவரடைந்துள்ள புலமை வாளா அறிவு மாத்திரையோடமையாது அன்புகலந்த நீர்மையதென்பது அறிஞரது துணிபு.

பெரியோர் இவரைப் பண்டிதமணி என்றது, “பொன்னும்…… தோன்றியாங்கு”, எனக் கண்ணகனார் கூறியபடி, இடைநிலம்படச் சேய் நிலத்தினராகிய தமிழ்ப் புலவர் பலர் ஒருங்கு கூடும் அவைக்களத்திலே, அப் புலவர் பொன்னும் பவளமும் முத்தும் போன்று அழகுதர, இவர் மணிபோல் ஒளிகாலும் நீர்மையர் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று.”

ஆழகு! அழகு! நம் பண்டிதமணியவர்களின் புலமையழகினை இவ்வாறு அழகுற எடுத்துரைத்தவர், மலமாசு நீங்க நோற்று நின்ற நம் விபுலானந்த அடிகளார் ஆவார்.

இனி, நம் புலவர் பெருமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், நம் பண்டிதமணியாரைப் பாராட்டுதலைக் கேண்மின்:

“பண்டிதமணி கதிரேசச் செட்டியாரை யான் நீண்ட நாளாக அறிவேன். இற்றைக்கு ஏறக்குறைய முப்பதாண்டுக்கு முன்னர்த் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபையிலே அவரை யான் கண்டு இன்புறும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது கதிரேசனார், தேனினும் இனிய திருவாசகத்தைப் பற்றி ஓர் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர்தம் இளமைச் செழுமையும் தமிழ்ப் பொழிவின் கொழுமையும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அக் கவர்ச்சி அவர்க்கும் எனக்கும் உற்ற நட்புக்குக் கால்கொண்டது.

பண்டிதர் கூட்டங்கள் ஈண்டியிருக்கும்; அங்கே திரு கதிரேசனார் புன்முறுவலுடன் போதருவர். போந்த சிறிது நேரத்தில் அவர் வான்மணி எனத் திகழ்ந்து ஒளி கால்வர். பண்டிதருள் திரு. செட்டியார் வான்மணியாய் இலங்குவது கண்ட புலவர்கள், அவரைப் பண்டிதமணி எனப் போற்றலாயினர். பண்டிதமணிப் பண்பு திரு. செட்டியாருக்குக் கருவில் அமைந்த பண்பாகும்.

பண்டிதமணியின் புலமையில் பல சிறப்புக்கள் உள்ளன். அவைகளுள் குறிக்கத்தக்கது ஒன்று; அது “பாட்டின்ப நுகர்ச்சி”.

திரு. செட்டியார் வாழும் ஊர் அமைதியுடையது; இயற்கை அமைதியுடையது. அமைதிமிக்க ஊரில் அமைதிமிக்க தமிழ்க் கவிதையில் உறவு கொள்ளும் பேறு பண்டிதமணிக்குக் கிடைத்தது. இஃது அவர்தம் தவப்பயன் போலும்! அதனால் பண்டிதமணியின் மனம் தமிழ் வண்டாகிப் பாக்களாம் பூக்களுள் படிந்து இன்பத்தேன் நுகர்ந்து தன்னை மறக்கும் பயிற்சி பெறலாயிற்று.

திரு. செட்டியார் காவியங்களைப் பயிலுந்தோறும் பயிலுந்தோறும் பாவுள்ள இடங்களில் அவர் பாக்களுடன் இரண்டறக் கலப்பர், என்று யான் சொல்வது வழக்கம். பண்டிதமணி புலவர் சூழலிலே அமர்ந்து பாக்களிற் செறிந்து கிடக்கும் நுட்பங்களையும் வனப்புக்களையும் பிறவற்றையும் அகழ்ந்தகழ்ந்து எடுத்துக் காட்டும்போது, அவர் அவைகளில் இரண்டறக் கலக்கும் இயல்பினர் என்பது நன்கு விளங்கும்.

கதிரேசனார் காவியக்கடலில் மூழ்கிமூழ்கித் திளைத்துத் திளைத்து, இருமையற ஒன்றிஒன்றி அக்காவியக் கடலானவர் என்று கூறல் மிகையாகாது. “கதிரேசனார் காவியமானார்; காவியம் அவராயிற்று” என்று கூறல் பொருந்தும்; சாலப் பொருந்தும்!

பொதுக்கூட்டங்களிலும் சிறப்பாகப் புலவர் கூட்டங்களிலும், பண்டிதமணி தமது தமிழ்கொழிக்கும் நாவால் பாக்கொழிக்கும் திறங்களை வெளியிடும்போது அவர் தம் தோற்றம் ஒரு காவிய அருவிபோலப் புலனாகும். வண்டின் யாழும், குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், அருவியின் முழவும், இன்னபிறவும் ஒன்றி வழங்கும் இன்பத்தைச் செட்டியாரின் தமிழ் — பாத்தமிழ் – வழங்குதலைப் பாவாணர் புலன்கள் உணரும்.

கதிரேசனாரை ஒரு காவியப்பொழில் என்றுங் கூறலாம். அப்பொழிலில், தமிழ்ப்பறவைகள் புகுந்து பலதிறக் கனிகளின் சுவை நுகர்ந்து இன்புறுவதுண்டு. கதிரேசனார் கூட்டங்களில் நுழையும்போது “காவியம் வருகிறது” என்று அறிஞர் பேசுவதை யான் கேட்டுள்ளேன்.

இங்ஙனம், தாம் பேசப்புக்க பொருள் கேட்பார்க்குக் கண்கூடாகத் தோன்றும்படி எடுத்துக் கூறுவது திரு வி. க. அவர்கள் போல்வார்க்கே கைவந்த வித்தையாம்.

இனி நம் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பாராட்டுவதைக் கேளுங்கள்.

“தமிழ் அன்னையின் அருந்தவப் புதல்வராகிய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியாரவர்கள் தமிழ்ப் புலமைக்கு வரம்பாயுள்ளவர். வடமொழிப் புலமையும் ஒருங்குடையவர். வித்தகச் சொற்பொழிவாளர்; “ஆயிரத் தொன்றாம் புலவர்” எனவும், “வார்த்தை பதினாயிரத் தொருவர்” எனவும் ஒரு பழஞ்செய்யுள் கூறுகின்றது. ஆனால், நம் பண்டித மணியோ புலவர் ஆயிரவரில் ஒருவர்; வார்த்தை வல்லார் பதினாயிரவரில் ஒருவர்; ஏனோர் அறிதற்கரிய நுண்பொருள்களை எடுத்துக் காட்டியும், நகைச்சுவை முதலிய தோன்றவும் பேசும் அவரது அரிய சொற்பொழிவைச் செவிமடுத்து இன்புற்றவர்கள், அதனை ஒருபோதும் மறத்தல் இயலாது. மற்றும், செய்யுளியற்றல் உரையெழுதுதல் முதலிய புலமைக் கூறுகள் பலவும் அவர்பாற் சிறந்து விளங்குகின்றன.

பண்டிதமணியவர்கள் தமது புலமையையும் செல்வாக்கையும் பயன்படுத்தித் தமிழ்வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடற்பாலதன்று. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையைத் தோற்றுவித்து, அதன் வளர்ச்சிக்கும் அரிய தொண்டுகட்கும் பற்றுக்கோடாயிருந்து, மற்றும் பல கழகங்களும் கல்விச் சாலைகளும் அந் நாட்டிலே தோன்றுதற்கு ஏதுவாயிருந்தமையை உணர்வோர், தனவணிகர் நாட்டிலே தமிழ்க்கல்வி பரவுதற்கு விதை விதைத்தவர் பண்டிதமணியே என்று கூறத் தயங்கார். தமிழ்ப் பணியில் ஈடுபட்டுள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு அவர்கள் செய்தும், செய்வித்தும் வரும் உதவிகள் சாலச் சிறந்தன. மற்றும் நூல்கள் இயற்றியும், சொற்பொழிவாற்றியும், மாணாக்கர்கட்குக் கல்வி கற்பித்தும், பொருளுதவி செய்வித்தும் பண்டிதமணியவர்கள் புரியும் கல்விக்கொடைக்கு, பல்கலைக்கழகம் தோற்றுவித்து வளர்த்தும், பல கலைகட்கும் பாதுகாப்பாளராயிருந்தும் புரந்துவரும் செட்டி நாட்டரசர் அவர்களது மாண்பொருட்கொடையையே ஒப்புச் சொல்லலாகும் என்பதாம்.

மகாவித்துவான், பாஷா கவிசேகரர் திரு. ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் கூறிய பாராட்டுரையாவது:

“பண்டிதமணி பேராசிரியராக இருந்து செய்த காரியங்களை என்னால் என்றுமே மறக்கமுடியாது. அவர்கள் பொருளுணர்ந்து சொல்லுதற்கரிய சேனாவரையம் என்னும் தொல்காப்பியச் சொல்லதிகாரவுரையை மிக எளிதாகப் போதித்ததை அடுத்த அறையிலிருந்து கேட்கும் பாக்கியத்தைப் பெற்றவன் நான். ஆங்கிலம் படித்தவர்கள்தாம் அந்தப் பேராசிரியர் பதவியை வகிக்க வேண்டும் என்ற நியதியைப் பண்டிதமணி மாற்றிவிட்டார் என்றே கூறவேண்டும்”, என்பதாம்.

சென்னை வித்துவான், தெ. பொ. மீனட்சிசுந்தரனார் எம். ஏ., பி. எல். எம். ஓ. எல், அவர்கள் கூறுகின்றார்கள்:

“பாட்டில் வருஞ் சொற்களைச் சுவையுலகாக மாற்றிவைக்கும் ரசமணியாவார் இவர். இவர் பேச்சைக் கேட்கும்போது கேட்போரும் ஒருமித்து அவரோடு பாட்டிற் சமாதி கூடிச் சாந்தி என்று புகழப் பெறும் மன அமைதியை அடைந்துவருதல் கண்கூடு. அந்தவகையில், இவர் ஒரு மகரிஷி; ஒரு ஆசாரியபீடம். கட பட என்றுருட்டுகின்றேன் என நினைத்தல் ஆகாது. அவ்வடசொற்கள் கருத்தைத் தெளிவாக விளக்குகின்றன. இத்தகைய சுவை வாழ்வு இவரை முழுதும் மாற்றி அமைத்துள்ளது. மெய்யுணர்வாளர்க்கு அடையாளமாகத் திருவள்ளுவர் கூறும் நகையும் உவகையும் இவரிடத்தே கூத்தாடுகின்றன. இவர் உடையிலும் அழகு; ஊணிலும் அழகு; பேச்சிலும் அழகு; மூச்சிலும் அழகு”, என்பதாம்.

நம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் பாராட்டுரை வருமாறு.

பண்டிதமணி என்றால் தமிழகம் முழுதும் அறியும்; நாடறியும்; நகரறியும்; வீடறியும்; ஏடறியும்; கடல்கடந்த நாடுகளும் அறியும்.

கலைவானில் ஒளிவிளங்கித் தோன்றும் ஞாயிறு அவர். கடல்மடை திறந்தெனத் தட்டுத் தடையின்றிப் பேசும் நாநலம் கனிந்த நாவலர் காவலர்; பாநலம் பயின்ற பண்பினர்; வடமொழிவல்ல மாண்பினர்.

கலை ஊற்று; இன்பச் சுரங்கம்; அன்பின் ஆறு; அறிவுக் கடல்; தெருளின் ஒளி; சைவ ஞாயிறு; மெய்ம்மைக்கேணி; அறத்தின் ஆணி; மறத்தின் வாள்.

பண்டிதமணி வடமொழியில் வல்லுநராயினும் “மணிப்பிரவாளம்” என்னும் கலப்புத் தமிழ்நடை அவர்கள் எழுதிய நூல்களில் விரவுவதில்லை. அவர்கள், கலப்புத் தமிழ் நடை தமிழை வளம்படுத்தாதென்னும் ஊன்றிய கருத்துடையவர்.

ஒரு நூலின் சொற்கள் சொற்றொடர்கள் நம் போன்றோர்க்கு வெறுங் கற்பனையாக—எதுகை மோனைத் தொடைக்கமைந்த சொற்களாக—சொற்றொடர்களாகத் தோன்றும். நம் கதிரேசனார்க்கு அரிய கருத்தாகக் கற்பனையாக—கலைவிளை பயனாக—அரிய காட்சியாகக் காட்சி தரும்.

எழுத்தெண்ணி எழுத்தின் திறன் அறிந்து கற்றவர் நம் பண்டிதமணி. நுனிப்புல் மேய்வார் உலகு வேறு; கதிரேசனார் உலகு வேறு. “இரு வேறு உலகத்தியற்கை” என்னும் செந்நாப் போதார் திருமொழியைக் கடந்தவர் நம் பண்டிதமணி. இத்தகைய செம்மைசான்ற நங் கதிரேசர் கலைப் பிழிவுத் தீஞ்சாற்றை மாணவர் மனத்திலே—கலைஞர் காதகத்திலே—சுவைஞர் உளத்தடத்திலே ஓடி நிரம்பிப் பெருகி நிலைத்துநின்று மகிழுமாறு ஊட்டுவார்; ஊற்றுவார், சொற்பொழிவின் இடை இடையே நகைச்சுவை தோன்றும். அது தூங்குவோரை எழச்செய்யும் துடிப்புடையது. அதனிடையில் நுண்கருத்து, அறிவு நுட்பம் மிளிரும். பின்னர்க் கருங் கொண்மூ மின்னென மறையும். பண்டிதமணி பேச்சு எல்லையற்றது; அவர் பேச்சே தனிக்கலை. அதை அவர்களுடன் தோய்ந்து பழகினார் உணர்வர். அவர் பேச்சில் வெருஞ் சொற்கள்—வேண்டா வெறுப்புத்தரும் மொழிகள் இல்லை”, என்பதாம்.

இனி இலங்கையிலுள்ள பேராசிரியர், திரு. கா. பொ. இரத்தினம், எம். ஏ. பி. ஓ. எல்., அவர்கள் யாழ்ப்பாணத்தே நம் பண்டிதமணியார் புகழ் பரவிய விதத்தைக் கூறக் கேண்மின்:

“சொல்லுக்குச் சொல் அழகேறிய பேச்சு; மொழிக்கு மொழி தித்திக்கும் வார்த்தைகள்; கேட்டார்ப் பிணிக்கும் நாவன்மை; கேளாரும் விரும்பிய நயங்கள்; என்று வருணித்தார், பண்டிதமணியின் சொற்பொழிவைக் கேட்ட என்னுடைய நண்பரொருவர்.

தமிழ்க் கல்வியில் ஈடுபட்ட என்போன்ற இளைஞர்களுடைய உள்ளத்திலே அவருடைய பேச்சு பல உணர்ச்சிகளையும் பதிவுகளையும் உண்டாக்கிற்று. அவருடைய சொல்லாட்சியும், புதுமை மிக்க நயங்களைக் கூறும் மாட்சியும் சிந்தைக்கும் செவிக்கும் இனிமை பயக்கப் பேசும் ஆற்றலும் பன்னூற் பயிற்சியும், நுண்மாணுழை புலமும், உள்ளத் தெளிவைக் காட்டும் புன்முறுவல் பூத்த முகமும் எங்களைக் கவர்ந்தன.

“மூவர்கட்கு அறியான் நிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப்

பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நன்னாடு போற்றி”

எனும் அடிகளை அன்று எடுத்துக் காட்டிப் பண்டிதமணியவர்கள் கூறிய நயங்களும், தமிழ்ப் புலவர்களின் புலமையைப் புலப்படுத்திய அருமையும் இன்றும் என் மனத்தில் நிலைத்துள்ளன.

அவருடைய வருகையால் யாழ்ப்பாணத்திற் புத்துணர்ச்சி ஏற்பட்டது; தமிழார்வம் பெருகியது. தமிழ்மக்கள் யாவருடைய பாராட்டுக்கும் வியப்புக்கும் அவர் உரியவரானார்.

அவருடைய பேச்சிலுள்ள கனிவு குழைவு இனிமை நுட்பம் முதலிய பண்புகள் யாவற்றையும் ஒருசேரப் பிறர் பேச்சிலே காணுதல் அரிது.

எழுத்தின் திறனும் இன்சொற் பொருளின் அழுத்தமும் நன்கறிந்து அழகுற எடுத்துரைக்கும் ஆற்றல் அவருக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.

அவர்களுடன் பழகியவர்கள் அவருடைய இனிய பண்புகளை நன்கறிவர். நகைச்சுவை ததும்பும்படி உரையாடி அன்பர்களை மகிழ்விப்பதில் அவருக்கு அவரே நிகராவர். சொற்பெருக் காற்றும்பொழுது மாத்திரமன்றி உரையாடும்பொழுதும் அவர் செய்யுள் நயங்களை எடுத்துக் காட்டிக் கேட்போரை இன்பமடையச் செய்வர்”, என்பதாம்.

கற்றுவல்லார் பெருமையைக் கற்றுவல்லாரே காணவும் கூறவும் வல்லுனராவார்! மேலே காட்டிய அறிஞர் பெருமக்களின் பாராட்டுரைகள் ஒருவாறு பண்டிதமணி யவர்கள்பாலமைந்த பண்புகளை நன்கு விளக்குவனவாம். நம் பண்டிதமணியவர்களை உலகிலுள்ள அறிஞர் எல்லாம் இவ்வண்ணமே புகழ்ந்துள்ளார்கள். அவற்றை ஈண்டெடுத்துக் காட்டல் மிகையாகும். நம் பண்டிதமணியவர்களைப் பாராட்டிப் புனைந்த இன்றமிழ்ச் செய்யுட்களும் பற்பல. இவ்வாறு நம் பண்டிதமணியவர்கள் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்னும் அருமைத் திருக்குறள் அடிக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள்.

22. அந்திமாலையில் ஆற்றிய பெரும்பணி

நம் பண்டிதமணியவர்கள் அறுபதாண்டைக் கடந்து முதிர்ந்த அகவையராயபொழுதும் முதுமையின் தளர்ச்சி அவர்களிடம் காணப்படவில்லை.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”

எனத் திருமூலர் உடல்போற்றி உயிர்போற்றி அறிவினை எய்துக என்று அறிவுறுத்திய மந்திரமொழியை நம் பண்டிதமணியவர்கள் பொன்னேபோற் போற்றுவார்கள். உடலை மருத்துவரின் உதவியின்றியே காலத்தின் தட்பவெப்ப மாறுபாட்டுக்கிணங்க உண்டி ஆடை உறையுள் முதலியவற்றாலேயே போற்றிக்கொள்வார்கள். விழித்தற்குரிய காலத்தே விழித்தலும், நாட்கடன்களைச் செய்யுங்காலத்தே செய்தலும், உண்ணுங்காலத்தே உண்ணலும், பணிபுரியும் போழ்திலே பணிபுரிதலும், ஓய்வுகொள்ளும் நேரத்திலே ஓய்வுகோடலும், உறங்கும் காலத்தே உறங்குதலும், மாறுபடாத உணவைத் தேர்ந்துண்ணலும் முதலிய செயல்களை உடற்குக் கேடுண்டாகாதபடி விழிப்புடன் செய்துவருவார்கள். ஆதலால், நம் பண்டிதமணியவர்களை நோய்கள் பற்றுதற்கு வழிகாணா தொழிந்தன. நாள் முழுதும் அவர்கள் சுறுசுறுப்போடே காணப்படுவார்கள். ஆதலால் அகவை முதிர்ந்த காலத்தும் உடலுரமுடையராகவும், ஊக்கமுடையவராகவும் ஒரு இருபதாட்டை இளைஞனைப்போலவே திகழ்ந்தார்கள்.

இங்ஙனம் உடல்நலத்தோடு திகழும் பண்டிதமணியவர்கள் தம் பல்கலைக் கழகத்தே பின்னுமிருப்பது பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் நலம் பயப்பதாம் என்று கருதிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் மீண்டும் தம் பல்கலைக்கழகத்தே உறவுகொண்டு பணிபுரியும்படி பண்டிதமணியவர்களை ஆர்வத்துடன் வேண்டினார்கள். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையை மேற்கொண்ட நம் பண்டிதமணியவர்களும் அவ்வேண்டுகோட்கு இசைந்தார்கள்.

1941-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழாராய்ச்சிப் பகுதியில் “அறிவுரைதருநர்” (அட்வைஸர்) என்னும் சிறந்த பதவியை ஏற்று அண்ணாமலை நகரில் இருந்து பணிபுரிந்து வந்தார்கள்.

அவ்வமயத்தே தமிழிசையியக்கம் நடைபெற்றது. அவ்வியக்கத்துக்கும் நம் பண்டிதமணியவர்கள் ஆங்குள்ள இசைக்கல்லூரியாளர்களோடு உறவுகொண்டு சிறந்த பணியாற்றிவந்தார்கள்.

வடமொழியிலே சாணக்கியர் என்னும் பேராசிரியராலே ஆக்கப்பெற்ற “கௌடலியம்” என்னும் பொருள் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள்.

இம்மொழிபெயர்ப்புப் பணியில் யானும், ஒரு வடமொழி வாணரும் நம் பண்டிதமணியார்க்கு அருகிருந்து துணை செய்யுமாறு நியமிக்கப்பட்டோம். அக்காலத்தே அவர்களுடன் நனி அணுக்கனாயிருந்து எளியேன் எய்திய நலங்கள் மிகப்பல.

மொழிபெயர்க்குங்கால், யாதானும் ஒரு வடசொல்லைத் தமிழாக்குமிடத்து, அவ்வடசொல் அம்மொழிக்கண் எந்த வேரிலிருந்து கிளைத்தது? அதனுடைய தாற்பரியப் பொருள்கிடக்க நேர்பொருள் யாது? என நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே, தமிழ்மொழிக்கண்ணும் அதே வேரிற்றோன்றி, அப்பொருளையே தன் நேர்பொருளாகவுள்ள திறனுடைய சொல்லையும் ஆராய்ந்து தெளிந்து, அவ் வடமொழிக்கேற்ற தமிழ்ச்சொல்லை அமைத்து எழுதுவார்கள்.

கௌடலியம் என்னும் அப்பொருள் நூல் பண்டைக்காலப் பரத கண்டத்தின்கண் நிகழ்ந்த அரசியல்வாழ்க்கை முதற்கொண்டு எளியோர் வாழ்க்கை இறுதியாகவுள்ள மக்களினது வாழ்வியல்புகளையும் நாட்டு நிகழ்ச்சிகளையும் இன்னோரன்ன பிறவற்றையும், காவியங்கள் புனைந்துரை வகையான் மிகைப்படுத்துக் கூறுதல்போலாது, தன்மை நவிற்சியாக உள்ளன உள்ளவாறே கூறுமொரு சிறந்த நூலாகும். பண்டைக்கால வரலாற்றையும், உலகியலையும் நேரிற் காண்பதுபோல் அந்நூலிற் காணலாகும். மேலும், இக்காலத்து அரசியலாரும் மக்களும் மேற்கொள்ளவேண்டிய அறங்களும் பிறவும் அதன்கண் உள்ளன. அதனை ஒருசிறு தவறும் நேராதபடி விழிப்புடன் நம் பண்டிதமணியவர்கள் மொழிபெயர்த்து நந்தமிழகத்திற்கு உதவியிருக்கின்றார்கள்.

23. கதிர்மணி விளக்கம்

சென்ற சென்ற அவைகள்தோறும் நம் பண்டிதமணியவர்கள் மணிவாசகப்பெருமானின் திருவாசகத்திற்குக் கூறிவந்த நுண்பொருள் விளக்கங்களைக் கேட்டின்புற்ற அறிஞர்கள் பண்டிதமணியவர்களைத் திருவாசகத்திற்கு உரை வரைந்து உலகிற்கு உதவும்படி வேண்டிவந்தனர் என்று முன்னர்க் கூறினோம். பண்டைக்காலத்தில் நம் நாட்டிற்றோன்றிய சிறந்த உரையாசிரியர்கள் திருவாசகத்திற்கு உரை வரைந்தாரில்லை. தேவாரங்களுக்கும் திருவாசகத்திற்கும் உரைவரைதல் கூடாது என்னும் கொள்கையும் பண்டைக்காலத்தே இருந்ததாகத் தோன்றுகின்றது. அதற்குக் காரணம் அந்நூல்களிடத்து அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பேயாகும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய சீவன்முத்தர்களாகிய அப்பெரியோர்களுடைய திருவுள்ளத்தே மலர்ந்த அவ்வருட்பாடல்களின் ஆழத்தையும் நுண்பொருளையும் இருவினையுட்பட்டுழலும் கட்டு நிலையிலுள்ள மானிடர்கள் காண்டல் இயலாது என அவர்கள் கருதினார்கள்போலும்!

மணிவாசகப் பெருமான் தில்லையில் எழுந்தருளியிருந்தபோது, ஆண்டுள்ள தில்லை மூவாயிரவர் அடிகளாரை வணங்கித் திருவாசகத்திற்குப் பொருள் அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்டினர் என்றும், அவரை அடிகளார் அம்பலவாணன் திருமுன்னர் அழைத்துச் சென்று அம்பலக்கூத்தன் திருவுருவத்தைச் சுட்டிக்காட்டி நம் திருவாசகத்தின் தெளிபொருள் இதுவே காண்மின் என்று அருளிச்செய்தார்கள் என்றும், ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு உரைவகுத்தருளிய பேராசிரியப் பெருந்தகையாராதல், சிவஞானபோதத்திற்குப் பேருரை கண்ட மாதவச் சிவஞான யோகியராதல், நம் திருவாசகத்திற்கு உரை வகுத்திருந்தார்களாயின் நம் தமிழுலகமும் சிறப்பாகச் சைவவுலகமும் சிறந்த அறிவுக் கருவூலம் ஒன்றை எய்தியிருக்கும் என்பது திண்ணம்.

திருவருள் உணர்ச்சி மேலிட்டிருந்த காலத்தே, அப்பெரியோர்கள் கொண்ட கொள்கை ஏற்புடைத்தாயினும், அவ்வுணர்ச்சி குன்றிவரும் இக்காலத்தே அத் தெய்வநூல்களின் மாட்சியையும், நுணுக்கங்களையும் எடுத்துக் காட்டுதல் இன்றியமையாததாயிற்று. மேலும் சைவசித்தாந்த நுணுக்கங்களை உணராதவர்களும், நிறைந்த கல்விப் பயிற்சி இல்லாதவரும், மதிநுட்பம் இல்லாதவருமாகிய ஒருசிலர் திருவாசகத்திற்கு உரை எழுதவும் தலைப்பட்டார்கள். இத்தகையார் புன்செயலைக் கண்டு நம் பண்டிதமணியவர்கள் வருந்தியதோடு, அச்செயல் தகாத செயல் என்பதை எடுத்துக் கூறியும் வந்தார்கள். நம் பண்டிதமணியவர்கள் ஒரு பேரவைக்கண்ணே தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றும் பொழுது இத்தகைய புல்லிய உரையாசிரியரைப் பற்றி உரைத்ததைக் கேண்மின்:

“நூலாசிரியர் உள்ளக் கிடக்கையை நுணுகி ஆராய்ந்து தெளிவுபெற எடுத்தெழுதும் வன்மையாளரே உண்மை உரையாசிரியர் ஆவார். யார் யார் எவ்வெத்திறத்து நூல்களிற் பயிற்சி மிக்குடையாரோ அவரவர் அவ்வத்திறத்து நூல்களுக்கு உரை எழுதப் புகல் வேண்டும். அங்ஙனமின்றிக் கல்லாத மேற்கொண்டொழுகல் தவறுடைத்தாம். சைவ நூலில் ஒரு சிறிதும் பயின்றறியாதார் ஒருவர், சைவத் தலைமணியாகத் திகழும் திருவாசகம் திருவிசைப்பாக்களுக்கு முற்றும் உரையெழுதித் தம் புரைநெறியை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகையார், தம் தகுதிக்கு இயலாத இவ்வுயர் நூல்களுக்கு உரைகாணப் புகுந்து உண்மைப் பொருள் காண இயலாமல் இடர்ப்பட்டதோடு, மரபுக்கு முரணாகவும் பல எழுதினர். பிழைபட்ட எல்லாவற்றையும் ஈண்டு விளக்கல் மிகையாதலின் ஒன்று காட்டுவேன்.

“நானார் என் உள்ளமார் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலி தேர் அம்பலவன்.”

என்னும் திருப்பாட்டில், “மதிமயங்கி” என்பதைப் பெயராகக் கொண்டு ஆறாம் வேற்றுமை உருபு விரித்து, மதிமயக்கமுற்ற பிரமனது தலையோட்டில் பலிதேரும் அம்பலவன் என முடித்துக் காட்ட அறியாமல், அதனை வினையெச்சமாகக் கொண்டு தம் மதிமயக்கத்தை அம்பலவர்க்கேற்றினார். இன்னோரன்ன பலவுள. ஒரு புலவன் காலக் கழிவு நோக்காது நெடிதாராய்ந்து தன் வாணாளில் ஒரு நூற்கு உண்மையுரை எழுதி முடிப்பினும் போதியதே. பிழைபடப் பல எழுதுதலினும் பிழையறச் செப்பனிட்டு ஒன்று எழுதுதல் நன்றாம்,” என்பதாம்.

அக்காலத்தே திருவாசகத்துக்கு உரைகாண வல்ல தகுதியுடையாராகிய புலவர் பெருமான் மறைமலையடிகளார், தாம் ஓருரை காணத் திருவுளங்கொண்டு, திருவாசகத்தின் முற்பகுதிகளாகிய அகவல்களுக்கு ஓர் உயரிய உரை வகுத்தார்கள். அவர்கள் செயல் கண்டு அறிஞர் உலகம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. ஆனால் அப்பெரியோர் எக் காரணத்தாலோ அகவற் பகுதிகளோடே உரைவரைதலை நிறுத்திவிட்டார்கள். எஞ்சிய பகுதிகட்கு உரைகாண நம் பண்டிதமணியவர்களைவிடத் தகுதியுடையோர் ஒருவரேனும் இலர்.

இக்காரணத்தால், மேலும் மேலும் அறிஞர் உலகம் நம் பண்டிதமணியவர்களை நெருக்கி வேண்டி வந்தது. கல்வி நிரம்பப் பெறாதார் உரைகளும் தோன்றித் திருவாசகத்தை மாசுபடுத்தியும் வந்தன. அதனால், நம் பண்டிதமணியவர்களும், அச் சிறந்த திருப்பணியைச் செய்யத் தூண்டுவது திருவருளே எனக் கொண்டு, மறைமலையடிகளார் உரை வரைந்த பகுதிகட்குப் பின்னுள்ள, திருச்சதகம் என்னும் பகுதியிலிருந்து உரைகாண முற்பட்டார்கள். இத் திருப்பணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழாராய்ச்சித் துறையிற் பதவி வகித்திருந்த பொழுது தொடங்கப்பட்டது.

இக்காலத்தே நம் பண்டிதமணியவர்களின் வாழ்க்கைத் துணைவியாராகிய திரு. மீனாட்சி ஆச்சியார் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை” என்னும் திருக்குறட் கருத்திற்கு எடுத்துக்காட்டாகத் திடீரென ஒருநாள் ஒரு பொழுதிலே மண்ணுலக வாழ்வு நீத்து இறைவன் சேவடி நீழலை எய்தினார்கள். பின்னர், நம் பண்டிதமணியவர்கள், தாம் மேற்கொண்டுள்ள திருவாசகத் திருப்பணி ஒன்றையே ஆராய்ந்து அமைதியுடன் ஆற்றக் கருதியவர்களாய்ப் பதவியினின்றும் விலகி மகிபாலன்பட்டிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

திருவாசக உரைத் திருப்பணியாற்றிய பொழுது பண்டிதமணியவர்கள் பிற பணிகளை எல்லம் இயன்றவரையில் நீத்தார்கள். பற்றற்றதொரு சீவன்முத்த நிலையிலிருந்தே அத் திருப்பணியை ஆற்றினார்கள். இறையருளாலே திருவாசகத் திருச்சதகமாகிய ஒரு நூறு திருப்பாசுரங்கட்கும் உரை வரைந்து முடிந்தவுடன் அப்பகுதியை அச்சேற்றி வெளியிட்டார்கள்.

நீண்ட காலமாகத் தாம் எதிர்பார்த்திருந்த திருவாசக உரை பண்டிதமணியவர்களால் வரையப்பட்டு வெளிவரக் கண்ட தமிழ் அறிஞர்கள் திருப்பாற்கடலை அரிதிற்கடைந்த காலத்தே அமிழ்தெழக் கண்ட அமரர்களைப் போன்று எல்லையற்ற மகிழ்ச்சி எய்தினார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பண்டிதமணியவர்கட்கும் தம் அன்பு கெழுமிய முடங்கல் வாயிலாய் உணர்த்தினார்கள்,

“வம்மின் புலவீர் மணிவா சகத்தீந்தேன்

துய்ம்மின் சுவை நலத்தில் தோய்மினோ—மெய்ம்மைக்

கதிர்மா மணிவிளக்கம் கண்காட்டி யாண்டும்

எதிரிலா இன்புறுத்தும் ஈங்கு.”

என்று, ஒரு புலவர் ஏனைப் புலவரைச் சுவைநலங் கூட்டுணக் கூவினார்.

மற்றொரு புலவர்,

“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து

இறைவற் றொழுதலே கடன்என முன்னாள்

எல்லையில் அன்பால் அடிகளார் இசைத்த

இன்றமிழ் அறிவுரைப் படியே

மல்லல்வண் டமிழாற் சுவைநலம் விளங்க

வாசகப் பொருள்உரை பகர்வோர்

இல்லைஎன் றுரைத்த இன்மையை அகற்ற

எழுந்தது கதிர்மணி விளக்கம்.”

என்று மகிழ்ந்தார்.

மற்றொரு புலவர்,

“சொல்லியற் கரையன் போலும்

தொன்மறைக் கழகன் போலும்

புல்லிய பிறவி போக்கும்

போதக்கு முனிவன் போலும்

மெல்லியற் கோவைக் கொப்ப

விரிசெய்த ஆசான் போலும்

கல்லியல் கனியுஞ் சொற்குக்

கதிரவ மணியன் என்க.”

என நம் பண்டிதமணியவர்களைப் பண்டைநாள் உரையாசிரியப் பெருந்தகையாரோடு ஒப்பிட்டு வந்தார்.

மற்றொரு புலவர்,    

“கதிரவன் ஒளியில் ஒளியெலாம் ஒடுங்கும்

காட்சிபோல் கதிர்மணி விளக்காம்

முதுபெரும் புலவர் நல்லுரைக் கண்ணே

முன்னுள உரையெலாம் ஒடுங்கும்

அதிர்கடல் உலகிற் கற்பவர்க் கினிதாய்

அரும்பொருட் செறிவின தாகி

எதிர்தனக் கிலதாய் இலகுமிவ் வுரை நூல்

என்றென்றும் வாழிய ருலகே.”

என ஓகைகொண்டு வாழ்த்தினார்.

மற்றோர் அன்பர், “தங்கள் அரும் பேருரையை என்னென்று கூறுவது! மணிவாசகப்பெருமானார் உருவெடுத்துத் தம் கருத்துரைக்க வந்துள்ளார் என்றே தங்களைக் கருதுகின்றேன். அழகு, இனிமை, ஆற்றல், ஆழம் யாவும் சேர்ந்து உரை எங்கணும் மிளிர்கின்றன. யாண்டும் நுண்மை! யாண்டும் புலமை! முதுபெரும் புலமை! யாண்டும் யாண்டும் நுகர்வு!” என இன்பத்துள் மூழ்கி ஆராமை கொண்டார்.

இவ்வாறு அவ்வுரை கண்டு மகிழ்ந்த அறிஞர் பாராட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு தனி நூலாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பின்னர் நம் பண்டிதமணியவர்கள் அத்திருப்பணியைத் தொடர்ந்து, “நீத்தல் விண்ணப்பம்”, “திருவெம்பாவை” என்னும் இரண்டு பகுதிகட்கும் உரை வரைந்தார்கள். நிலையாமையை எண்ணி ஒவ்வொரு பகுதியையும், நிறைவேறியவுடன் வெளியிட்டார்கள். நான்காவதாகத் திருவம்மானைப் பகுதியில் மூன்று பாசுரங்கட்கு உரையிட்டதனோடு நம் பண்டிதமணியவர்கள் உரைத் திருப்பணி நின்றது.

முழுதுணர் முதல்வனாகிய சிவபெருமான், இனி எதிர்காலத்தே தோன்றவிருக்கும் தன் அடியார் எஞ்சிய பகுதியை எழுதியுய்க என்னும் கருத்தாலே அவ்வளவின் நிறுத்திக்கொண்டான் போலும்.

24. மம்மர்கொள் மாலை

நம் பண்டிதமணியவர்கள், இக்காலத்தே ஏறத்தாழ எழுபதாண்டகவையை எய்தினார்கள். திருவாசகக் கதிர்மணி விளக்கவுரை வரைந்த காலமெல்லாம் அவர்கள் திருவுள்ளம் அத்திருவாசகத்தின் தெளிபொருளாகிய இறைவன்பால் சென்று கலந்தவண்ணமாகவே இருந்தது. தமது அந்திப்பொழுதில் இறைவனைச் சிந்தித்துய்ய இவ்வுரைத் திருப்பணி ஓர் ஏதுவாக அமையும் என்று கருதியேபோலும் அத் திருப்பணியைத் தாழ்த்துத் தொடங்கினார்கள். எஞ்சிய பகுதியை உரைத்திருப்பணி செய்யத் தாமே மீண்டும் வருதலும் கூடும். தம் உடல்நிலை வரவர வலிகுன்றிவருதலை உணர்ந்தார்கள். சிந்தனை செய்து எழுத வேண்டிய திருவாசகத் திருப்பணியை இனி யாம் மேற்கோடல் தகுதியன்று என எண்ணி அத்திருப்பணியை நிறுத்தினார்கள். இனி, எஞ்சிய காலம் சிறிது இருக்குமாயின் அதனை எம்பெருமானை இறைஞ்சிக் கழித்தலே தகுதி என்று எண்ணி இறைபணி நிற்றலாகிய அச்செயலிலே ஈடுபட்டார்கள்.

“மக்கள் வாழ்க்கை ஒரு பெரு உயிராறுபோல இயங்குதல் வேண்டும்” என உலக மகாகவியாகிய இரவீந்திரநாத தாகூர் அவர்கள் கூறியுள்ளார்கள். உயிராறானது, உயரிய மலையுச்சியில் தோன்றி நீரின் நிலையமாகத்திகழும் கடலைநோக்கி ஓய்வின்றி விரைகின்றது. இடைஇடையே எத்தனை எத்தனை அணைகளை எடுத்து மறைப்பினும், ஆண்டெல்லாம் அவ்வணைகளைக் கடக்கும் ஒரே முயற்சியுடன் தேங்கித் தன் ஆற்றலை மிகுத்துக்கொண்டு, அவ்வணைகளையும் கடந்து கடலை எய்தவே விரைகின்றது. அந்நதியின் ஒருதலை குறிஞ்சிநிலத்தே கிடக்க, மற்றோர் தலை விரிந்து பரந்த கடலிடத்தே சென்று கலந்து தானும் கடலே ஆகி அமைதிகொள்கின்றது. ஒருதலையானே அப்பேரியாறு கடலோடு கலந்து அமைதிகொள்ளும்போதே, அதன் இடைப்பகுதியிலுள்ள நீரானது நாட்டிலே பாய்ந்து உயிர்கட்கு உணவுப்பொருள்களை விளைவித்தும், தானே உண்பொருளாகியும் சிறந்த அறத்தை நிகழ்த்துகின்றது.

இங்ஙனமே, ஒரு மனிதன் ஒருசார் உலகிற்கு உபகாரம் செய்துகொண்டே, மற்றொருசார் மெய்யுணர்ந்து எல்லாம் இறைசெயலாகக்கண்டு, அப்பரம்பொருளின் திருவருளிலே அமைதியடைதல் வேண்டும் என்பது அக்கவிஞர் பெருமான் கருத்தாகும்.

நம் பண்டிதமணியவர்கள் தம் வாழ்க்கையாலே, அத்தகைய உயிராற்றினையே ஒத்தவராவார். தமிழும் சைவமும் தழைத்தோங்கி மக்கள் பெருவாழ்வுபெற்றுத் திகழுமாறு அவர்கள் செய்த திருத்தொண்டு அளவிடற்பாலவல்ல. அத்திருத்தொண்டு செய்த காலங்களில் எல்லாம் “எல்லாம் அவனுடைய செயலே” என்னுமொரு மெய்யுணர்ச்சியோடே முனைப்பின்றியே செய்துவந்தார்கள். அப் பணிகாரணமாக இறையடியை ஒருபொழுதும் மறந்தவர்கள் அல்லர். அவர்கள் தூயவுள்ளம் எப்பொழுதும் அச்சீவநதியின் ஒருதலை கடலிற் கலந்து அமைதிகொள்வதுபோன்று, இறைவன் திருவருளிலே மூழ்கி ஆறுதல் பெற்றேவந்தது.

தம்முடலின் வலி நாளடைவிற் குறைந்துவருதலை அறிந்த நம் பெரியார், இனி எதிர்காலத்தே நிகழும் ஒவ்வொரு கணமும் தம் இறுதிக்காலமாக இருத்தல்கூடும் எனக் கருதியவர்களாய், அந்நிகழ்ச்சியை ஆர்வத்தோடே எதிர்நோக்கியே அமைதியுடன் இருந்தார்கள். ஆண்டு முதிர்வாலே ஏற்படுகின்ற தளர்ச்சியே வரவர மிக்கு வந்ததல்லாமல் குறிப்பிடத்தக்கதொரு நோய் அவர்களைத் தீண்டவில்லை. இத்தகைய அமைதிநிலையில் அவர்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகளைக் கழித்தார்கள்.

இக்காலங்களிலே, நாட்டின் பல்வேறு கழகங்களில் இருந்து நம் பண்டிதமணியவர்கட்கு அழைப்பு வந்த வண்ணமாகவே இருந்தன. அந்நண்பர்கட்கெல்லாம் தம் ஏலாமையை அன்புடன் முடங்கல்வாயிலாய் அறிவித்தே வந்தார்கள். நாளடைவில் உடலின் உள்உரம் குறைந்ததே யல்லால் புறத்தோற்றத்தில் பெரிதும் மாறுபாடு உண்டாகவில்லை.

நம் பண்டிதமணியவர்கள் இறுதிக்கணம் வரையில் படுத்தபடுக்கையிலே ஒருசில நாளேனும் கிடக்கவில்லை என்பது குறிப்பிடற்பாலது. தம் இறுதிக்காலம் அண்மையிலேயே நிகழக்கூடும் என்றுணர்ந்த நம் பெரியார், தம் மக்களுள் மூத்தவராகிய திரு. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கட்கும் திரு. கனகசபாபதிச் செட்டியார் அவர்கட்கும் தம் கருத்து ஒன்றனைச் சில திங்கள் முன்கூட்டியே குறிப்பாகத் தெரிவித்திருந்தார்கள். அஃதாவது:

தனவணிகர் மரபிலே ஆண்டான் முதிர்ந்து மாய்வார்களை அவர்கள் தங்குடும்பத்தவர்களால் மட்டுமே பொருள் புகழ் முதலிய வகைகளில் யாதேனும் ஒன்றார் சிறந்தவர் என்று கருதியவிடத்தும், தொடுகுழிப்படுத்துதலும் (சமாதி செய்தல்) அவ்விடத்தே கட்டிடம் கட்டி அருட்குறி (சிவலிங்கம்) நடுதலும் செய்யத் தவறுவதில்லை. அவ்வழக்கம் உண்மையானால், நம் பண்டிதமணியவர்கள் தம் மக்கள் கேட்குமாறு “நம்மனோர் செய்யும் அவ்வழக்கம் நஞ்சமயத்தோடு பொருந்தியதன்று. இம்மையிலே இருவினைப் பாசமற்று வீட்டின்பம் கைவந்த சீவன் முத்தர்களின் உடலம் மட்டுமே, தொடுகுழிப்படுத்தற்கு உரியதாம். அவர்கள் உடல் அடக்கம் செய்தவிடத்தே சிவலிங்கம் நட்டுப் போற்றலே முறையாம். ஏனையோர் உடலை அங்ஙனம் செய்தல் அடாது. அத்தகைய சீவன்முத்த நிலையை எய்த நம்மனோர் இன்னும் எத்தனையோ பிறவிகள் பிறத்தல் வேண்டும்”, என்பதே.

இவ்வறிவுரைகளின் குறிப்புப்பொருளை அம்மக்கள் நன்கு உணர்ந்துகொண்டனர்.

1953-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபத்து நான்காம் நாள் பொழுது விடிந்தது. நம் பண்டிதமணியவர்களின் உடல்நிலையில் புதிதாக மாறுதல் ஒன்றும் தோன்றவில்லை. இருபத்துமூன்றாம் நாளிலிருந்து மலப்போக்கு மட்டும் தடைப்பட்டிருந்தது. இங்ஙனம் மலப்போக்குத்தடை முன்னரும் சிற்சில நாட்களில் நிகழ்ந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் நீரேற்றி (எனிமா)வைத்துக் குடலைத் தூய்மை செய்துகொள்வது வழக்கம்.

அன்று அஞ்சலில் நண்பர்கள் முடங்கல்களும், தமது மேலான பார்வையின்பொருட்டுப் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டு நூல்களும் வந்திருந்தன. அவற்றுள் அன்பர் முடங்கலில் இன்றியமையாவொன்றிற்கு மறுமொழியும் வரைந்து அஞ்சலில் சேர்த்தார்கள். தம் மகனார் திரு. கனகசபாபதிச் செட்டியாரிடம், தம் பார்வையின் பொருட்டு வந்த புதிய நூல்களைக் கொடுத்து, “இவற்றை மேசைமேல் வை, மாலையிற் படிக்கவேண்டும்,” என்று கூறினார்கள்.

25. கதிரவன் மறைவு

“அற்ற தறிந்து கடைப் பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து” (குறள்: 944)

என்னுந் திருக்குறட் கருத்தை எப்பொழுதும் மறவாதே கடைப்பிடித்

தொழுகும் நம் பண்டிதமணியவர்கள், மலப்போக்குத் தடைப்பட்டமையாலே அன்று நண்பகலில் ஒருசிறிதே மெல்லுணவு அருந்தினார்கள். மாலை மூன்று மணியாயிற்று; வழக்கம் போன்று நீரேற்றிக் கருவியாலே குடலைத்தூய்மை செய்துகொள்ளக் கருதி, அக்கருவியாற் குடலில் நீரேற்றிக் கொண்டார்கள். உள்ளே செலுத்தப்பட்ட நீர் புறம் போகாது உள்ளே தங்கிற்று; மணி நான்காகியும் அந்நீர் புறப்பட்டிலது. இஃதொரு புதியமாற்றம். மேலும் நெஞ்சு மிடறு முதலிய உறுப்புக்களில், சளிக்கட்டுத் திடீரென ஏற்பட்டது. மூச்சு இயல்பாக இன்றித் திணறிற்று. இது தம்முடைய இறுதி மாலைப்பொழுது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் பொழுதெல்லாம், பண்டிதமணியவர்கள் தாம் வழக்கமாக அமரும் ஒரு விசிப்பலகையின் மேலே வீற்றிருந்தார்கள். அயலிலே இரண்டாவது மகனார் கனக சபாபதியவர்களும், ஓர் ஆசிரியருமே இருந்தார்கள். அவர்கள் மூச்சுத் திணருவது பாயலிலே படுத்துக் கொண்டால் சிறிது குறைதல் கூடும் என்று படுத்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். பலகையினின்றும் இறங்கி மெல்ல ஆண்டு விரித்துள்ள பாயலின்கண் இறுதியாகப் படுத்துக்கொண்டார்கள்.

பாயல் கொண்ட பின்னர் மூச்சு வரவர மிக்கது. அவர்கள் நாவாலே மெல்லத் திருவைந்தெழுத்தை மூச்சின் இடையிடையே ஓதினார்கள். இல்லத்துள்ளார் எல்லோரும் வந்து குழுமினர். அவர்களை நோக்கி யாதொன்றும் கூறுதற்கு அவர்கள் ஒரு சிறிதும் முயலவில்லை.

ஐந்து நிமிடங்கள் மட்டுமே திருவைந்தெழுத்தோதவும் இயன்றது; பின்னர் அச்செயல் நின்றது. பின்னர் ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே மூச்சும் இயங்கிற்று. அப்பத்து நிமிடங்கட்குப் பின்னர்க் கண்கள் முகிழ்த்தன; மூச்சு நின்றது! உடல் அமைதியுற்றது.

அந்த ஒப்பற்ற உயிர் ஒளி, “அங்கிங்கெனாதபடி எங்கும்” உளதாகிய இறவனின் அருட் பேரொளியிலே கலந்தது.

செய்தி தந்தி வாயிலாகவும் பிறவாயில்களானும் நான்கு திசைகளிலும் விரைந்தது. தனவணிக நாட்டினர் எல்லாம் செய்தி கேட்டுத் துணுக்குற்று விரைந்து மகிபாலன்பட்டியை எய்தினர்; அந்தணர் பலர் எய்தினர்; மற்றும் வரற்பாலர் எல்லோரும் வந்தனர்; மகிபாலன்பட்டி மக்கட்கடலாயிற்று.

ஆர்வமிக்க சிலர் பண்டிதமணியின் திருவுடலைச் சமாதிசெய்தல் வேண்டும் என்றும், அவ்விடத்தே பின்னர்ச் சிறந்த திருக்கோயில் எடுத்தல் வேண்டும் என்றும் விரும்பினர். அவர்கட்கெல்லாம் தம் தந்தையார் அவர்களின் கருத்தைத் திரு. சுப்பிரமணியன் செட்டியார் உணர்த்தினார். இறுதியாகச் செய்ய வேண்டிய கடன்கள் யாவும் குறைவின்றி நிகழ்த்தப்பட்டன.

இறுதியாக, நம் மகாமகோபாத்தியாய, முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் என்னும் அச்சிறந்த ஆன்மவொளி எழுபத்து மூன்றாண்டுகள் கோயில் கொண்டருளிய அச் சிறந்த திருமேனி, எம்மையாளுடைய இறைவன் திருவுருவமாகத் திகழும் பூதவொளியாகிய பொங்கழலிலே பெய்யப்பட்டது.

Leave a comment