நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் சீ ர் தி ரு த் த ம்
மு . கதிரேசச் செட்டியார்.
மகிபாலன்பட்டி
1911
அவையடக்கம்
காப்பு
வெண்பா
மன்னுந் திருவினராய் வாழ்வணிகர் சீர்திருத்தம்
பன்னுமுறை நெஞ்சிற் பதியவே —– யுன்னும்
பிரணவத்தி னுண்மை பிறங்குங் கணேசர்
சரணபற்பங் கொள்க தலை .
மாட்சிமை தங்கிய அக்கிராசனாதிபதியவர்களுக்கும் , இவ்வவைக் கட்குழீஇய அறிவுடையோர்களுக்கும் , பணிவுடன் செய்துகொள்ளும் அறிவிப்பு .
ஐயன்மீர் !
சன்மார்க்கசபையென்னு மிக்கழகம் தோன்றி யிரண்டுவருடங் களாயின .இவ்வீராண்டிற் பன்முறை கூடிய இக்கழகத்திற் பற்பல விடயங்களைப்பற்றி அறிவிற்சிறந்த பல பண்டிதர்கள் செய்த உபந்நியாசங்களும் , சிற்றறிவுடைய யான் புரிந்த உபந்நியாசங் களும் இன்னின்னவையெனச் சென்ற ஆண்டின் அறிக்கையானும் , இவ்வாண்டின் அறிக்கையானும் நன்கு தெரிந்திருப்பீர்கள். அவ்வுபந்நி யாசங்களுள் , எம் வணிகமக்களின் சீர்திருத்தவிடயமாகப் பொதுமை யினன்றிச் சிறப்பாக ஒன்றேனுமின்று .அங்ஙன மில்லாமைக்குக் காரணம் , இவ்வவையினிடத்து அவர்களது அன்புரிமை முதிர்தலை யிதுகாறும் எதிர்நோக்கி யிருந்தமையேயாகும் . ஒரு தொகுதியி னரைப்பற்றிய சீர்திருத்தத்தைப் பேசப்புகும்பொழுது, அதனைப் பயனுறச்செய்யும் அக்குழுவினர்க்கு அவ் விடயத்தைக் கேட்டலில் விருப்பம் இருத்தல் வேண்டும் . அவ் வவாவும், அன்னார் இக்கழகத்தில் நன்கு மதிப்பு வைத்த பின்னரன்றி முன்னர் நிகழ்தற்கு ஏதுவின்று . அந் நன்குமதிப்பும் இவ்வகை சின்னாளேனுஞ் செவ்வி தினடை பெற்றுத் திகழ்ந்தபின்னரன்றி வாராது . இனி , இதுவரை இக்கழகத்தைக் கண்டாரும் , இதன்கட் பேசப்படும் விடயங்களைக் கேட்டாரும் , இங்ஙனங் கண்டுங்கேட்டு மகிழ்ந்தார்பாற் கேட்டாரும் ஆகிய பல நண்பர்கள் , சேணிடத்துள்ள தத்தம் ஊர்களினின்று பன்முறை யிங்குப் போந்து ஒருங்குக்கூடி யளித்த காட்சியால் அன்னாரெல்லார்க்கும் இவ் வவையினிடத்து நன்கு மதிப்பு ஒருதலையாகவுள்ளது என்று அறிந்த இச்சபையார் , முன்னர்ப் பேசப்படாத இவ்விடயம் இப்பொழுது பேசிற் பயனுறும் என்னுந் துணிவுடையாரா யென்னை யுபந்நியாசிக்கப் பணித்தார்கள் .
தக்க நூலுணர்ச்சியுஞ் சீர்திருத்தங் கூறுதற்குரிய அநுபவ ஆற்றலும் இல்லாத யான் இதனை மேற்கோடல் தகாதெனினும் , பெரியார் பணியை மறுத்தல் பிழையுடைத்தாதலின் , அக்குற்றத்தினின்று நீங்கற்கே இதனை யேற்றுக்கொண்டேன் . இவ்வுபந்நியாசம்தான் பொதுவகையாக எல்லார்க்கும் உரியதா யினும் சிறப்பு வகையாக எம் நாட்டுக்கோட்டை நகரத்து வணிகமக்கட்குரியதாதலின் , அன்னார்பாற் சேறலையே உரிமையாக மேற்கொண்டுள்ளது .இங்ஙனம் , ஒரு சாராரைப்பற்றிய இஃது இக்கழகத்திற் படித்தற்குரியதாகுமோ எனின் : எம்மனோர் நலத்தை மேம்படுத்தலையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சபை (மேலைச்சிவபுரிச் சன்மார்க்கசபையின் இரண்டாம் ஆண்டு நிறை வேற்றவிழாவி நிமித்தம் விரோதகிருது வருடம் சித்திரத் திங்களில் கூடிய மகா சங்கத்திற் படிக்கப்பெற்றது .) யெழுந்தமையானும் , தனிக் கூட்டத்தில் இவ்வளவு பெருக்கமாக் கூடுதல் அருமையாதலானும் , இத்தகைய விடயங்கள் எம்மவர் பலர் நெஞ்சி னிலைபெறினன்றிப் பயனுடையதாதல் செல்லா தாதலானும், உரியதாகுமென்னும் துணிவுடையேன் .
****************
கணபதி துணை .
நகரத்தார்களின் சீர்திருத்தம்
*********
ஆன்புநிறைந்த எம் வணிகமக்களே !
நம்மவர் சீர்திருத்தவிடயமாகக் கருத வேண்டியவை பலவிருப்பினும் , இப்பொழுது இன்றியமையாது முதலிற்கொள்ள வேண்டிய சிலவற்றையே கூறுவான் றோடங்குகின்றேன் . எஞ்ஞான்றும் , ஒரே படித்தாக அழிவின்றி விளங்கு மறைப்பொருளை யுள்ளத்தமைத்துப் பல இருடிகளாற் செய்யப்பட்ட அறநூல்கள் அவ்வக்காலத்துக்கு ஏற்றவாறு சில மாறுதல்களோடு வெளிவந்திருக் கின்றனவாகலின் , என்னாற் கூறப்படுவனவற்றிற் சில விடயங்கள் , சில நூன் முறைகளுக்கு மாறுபாடாகத் தோன்றின் அவை யிற்றைக் காலங்கருதிப் போந்தனவாகக்கொள்ளும்வண்ணம் வேண்டுகின் றேன் .
க . க ல் வி
கல்வியே மக்கட்குரிய இன்றியமையாத பொருளாதலின் , அதனைப்பற்றி முதலிற் சில கூறுவேன் . முன்னரீட்டிய இருவினைக்கீடாக இறைவன் கருணை மேலீட்டாற் றரப்பெற்ற மக்கள் யாக்கையுடையாரெல்லாரும் , தமக்கு இயற்கையாக அமைந்துள்ளதும் , ஆணவமல மறைப்பால் வெளிப்படாததும் , எல்லாம் வல்ல சிவபெருமான் றிருவருளால் ஒவ்வோரமயம் வெளிப்பட்டு விளங்கும் இயல்பினதும் , எல்லா வுயிர்கண்மாட்டும் ஒரே படித்தாக அழிவின்றி யிருப்பதும் ஆகிய இயற்கையறிவைக் கருவியாக் கொண்டு செயற்கையறிவாகிய நூலறிவைப் பெறுதல் வேண்டுவதவசியமே . என்னை ? அச்செயற்கையறிவே நம் பிறப்பு முதலியவற்றைப்பற்றிய ஆராய்ச்சியில் நம்மை முற்படுத்தி நாம் எய்தவேண்டிய உறுதிப்பயன்களை யெய்தற்குத் துணை நின்று அழிவிலாப் பேரின்ப நுகர்ச்சியிற் றலைப்படுத்துமாகலினெங்க. நூலுணர்ச்சியின்றி யியற்கை நுண்ணறிவுடையாரும் பலருளரே அன்னார்க்குக் கல்வி யெற்றிற்கெனின் : “கல்லாதானொட்பங் கழிய நன்றாயினுங் , கொள்ளா ரறிவு டையார்”என்பது பொய்யில் புலவர் திருமொழியாகலின் , அவரெத்துணை மதிநுட்பமுடையராயினும் கற்றிலராயின் அவரறிவை நல்லறிஞர் பொருட்படுத்தாரென்க. கல்வியின் காரியமாகிய பகுப்புணர் வுள் வழியே ஐம்பொறியுணர்ச்சி யானும் , உண்டி , உறக்கம் ,பெண்விழைச்சு முதலியவற்றானும் ஒப்புடைய விலங்கினத்தினின்று மனிதர் மேம்பாடுடையராவர் . அஃதில்வழி அவ்விலங்கினத்தோடு ஒருங்கெண்ணப்படுவர் . இது கருதியன்றே “மாவு மாக்களுமை யறிவினவே , மக்கடாமே யாறறிவுயிரே “ என்று வரையறைப்படுத்துக் கூறினார் தொல் காப்பியனாரும் . இச் சூத்திரங்களு ளிரண்டாவது சூத்திரத்தான் மக்கள் எனப்படுவார் மனவுணர்வுடையரென்பதேயன்றி அவ்வுணர்வு விலங்கினிடத்துக் காணப்படின் அதுவும் மக்கட் டன்மை யுடையதாய் மக்கட் பிறப்பின்பாற் படுமென்பது போதர “பிறவுமுளவே யக்கிளைப்பிறப்பே” என்றுங் கூறினார் . ஈண்டுப் “பிறப்பென்றதனாற் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையனவெனப்படு மனவுணர்வுடையன வுளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிரா யடங்குமென்பது” என்று கூறிய நச்சினார்க்கினியார் நல்லுரையும் , “விலங்கொடு மக்களனையர்” என்னுந் திருக்குறளின் விசேடவுரை யில் “விலங்கின் மக்கட்கேற்றமாகிய வுணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணே யாகலின் கல்லாதாரும் அவரும் (கற்றாரும்) ஒத்த பிறப்பினரல்லரென்பதாம் “ என்று வரைந்த பரிமேலழகர் அருமைக் கருத்தும் கருதற்பாலன . “தக்கவின்ன தகாதன வின்னவென்றொக்க வுன்னலராயி னுயர்ந்துள மக்களும் விலங்கே மனுவின் னெறிபுக்க வேலவ் விலங்கும்புத் தேளிரே” என்னுங் கம்ப நாடர் கருத்தும் ஈண்டுக் கருதற்பாற்றாம் . இதனால் அவயவச் சிறப்பானன்றி மனவுணர்வுடைமையானே மக்கட் பிறப்புப் பயனுடையதாகு மென்பது வெளியாம். இனி , அவ்வுணர்வுதானுங் கல்வியானன்றி வாராது . என்னை ; கல்வியே செய்யத்தக்கது இன்னது தகாதது இன்னது என்று பகுத்துணர்தற்குக் கருவியாகலின் , இதனை , “இருவிழிகள் வாண்முகத்தி லிருந்தாலும் வானிரவி யெழுந்தாலன்றிக் கருதுநிலப் பல்பொருளுங் காண்டலரி தாமுலகிற் கண்போல் யார்க்கும் , பெருகிய செல்வமு மறிவும் பெற்றாலு நுலுணர்ச்சி பெறாரே யாகிற் , றிருவளர் புண்ணிய பாவ மிம்மை மறுமையும் வீடுந் தெரியா வன்றே “ என்னுஞ் செய்யுளானுமுணர்க . இக்கல்வியின் பெருமையைப்பற்றிக் கூறுங்கால் எல்லாப் பொருள்களையுநுனித்து ணர்ந்து கூறும் இயற்கையுடைய தெய்வப்புலவர் திருவள்ளுவதேவர் , “தந்தை மகற்காற்று நன்றி யவையத்து, முந்தி யிருப்பச் செயல் “ எனவும் , “மகன் றந்தைக் காற்று முதவி யிவன் றந்தை,யென் னோற்றான் கொல்லெனுஞ் சொல்” எனவுங் கூறிய அருமைத் திருக்குறள்களிரண்டே போதியன . என்னை? தந்தை மகனுக்குச் செய்யவேண்டிய வுதவியும், மகன் றந்தைக்குச் செய்யவேண்டிய வுதவியும் கல்வியும் அதன் பயனுமாகக் கருதப்பட்டமையானென்க .
இனி , தந்தையேயன்றி நற்றாயும் புதல்வினிடத்து எப்பொருள் பற்றிப் பெருமகிழ் வெய்துவாள் எனின் : அன்னாள் அப்புதல்வ னிறைந்த கல்வியுடையனாதலை நோக்கியே யென்க . இதனை ,அந் நற்றாய்தான் பன்னெடுநாட் பதல்வற் பேறுகருதி நண்ணினார் வினையொழித்து அன்னாரைப் புண்ணியவுருவாப் புரிதற்குரிய தெண்ணீர் யாறு பலதிளைத்தும் , ஆறணிசடையெம் அண்ணலை யனவரத மருச்சனையாற்றியும் , வறியாக் கீந்து மாதவர்ப் பேணியும் இன்னன பலவா முன்னருந்தவங்க்கிடந்து மிக அரிதிற்பெற்ற அற்றை ஞான்று “கவாஅனின் மகற்கண்டு தாய்மகிழ்ந்தாங்கு” என்றபடி யெய்திய வரம்பிலா மகிழ்ச்சியினும் , அப்புதல்வன் இளம்பருவத்திற் கல்வி கேள்விகளான் மேம்பாடுற்றுழி அதுகண்ட அறிஞர் அச்செய்தியைக் கூறக்கேட்டு எய்திய வுவகை மிக விழுமிதா மெனவும் , அப் பேருவுவகை தோன்றுதற்குக் காரணம் அப்புதல்வன் மாட்டு அமைந்துகிடக்குங் கல்வியறிவேயாமெனவும் நன்கு தெளிந்த நம் செந்நாப்போதார் தாம் சிற்றுருப் பாக்களாற் செய்த தமிழ்மறையுள் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச் , சான்றோ னெனக் கேட்ட தாய் “ எனத் திருவாய்மலர்ந்தருளிய இச் செய்யுளாற் றேற்றி விளக்கினர் . இங்ஙனம் தந்தை தாயார் பெருமகிழ்ச்சிக்கு மக்கள் கல்வியே யேதுவாமாயின் , அம்மக்களைப் பற்றி யுலகத்தார் மகிழ்தற்கும் அக்கல்வி காரணமாதல் சொல்லாமலே விளங்குமன்றோ ? இன்னும் இக்கற்றலின் பெருமை யைப்பற்றிக் கழறப்புகின் விரியுமாதலின் இதனுடனிறுத்தி மேல் எம்மொழியைக் கற்றல்வேண்டுமென்பதைச் சிறிது கூறுவேன் .
(உ) த மி ழ் .
ஒவ்வொருவரும் தத்தந் தோற்றத்திற்கு நிலைக்களனாகிய நாடு எம் மொழியை யுடையதோ அம்மொழியே முன்னர்க்கற்றல் வேண்டும் . அம்மொழியே யன்னார்க்குரிய இயற்கை மொழியாகும் . வேற்று நிலத்து மொழியைக் கற்கப்புகுவார் தொடக்கத்தில் அவ்வந்நியப் மொழிப்பொருளை யுளத்துக்கொள்ளுங்கால் அப் பொருட்குரிய வேறு சொல்லை யெம்மொழியாற் கூறித் தெளிகின்றனரோ அம்மொழியே அன்னார்க்குரிய மொழியாகும் . ஊரிளங்குழவிக்கு மழலைச் சொற்பயிலும் பருவம் வந்துழி அதன் தாய் தந்தையர் எம்மொழியாற் பயிற்றுகின்றனரோ அம்மொழியே அன்னார்க்குரிய மொழியாகும் . அவ்வரிய மொழிப்பயிற்சி சிறிது செய்தவழியன்றி அந்நியமொழி பயிறல் கூடாதென்க . இது கருதியே நமது அரசினர் தம் மொழியாகிய ஆங்கிலத்தைப் பயிற்றுங் கல்லூரி களிலெல்லாம் அவ்வத் தேயத்திற்குரிய மொழி நூல்களையும் பயிற்றி வருவாராயினர். இனி , நம் வணிக மக்கட்குரிய மொழி தமிழே யாகுமாதலின் , அதனையே நாம் கற்றற்குரியவராகின்றோம் . இறைவன் றிருவருளாலிந் நிலத்து வழங்கும் அருமைச் செந்தமிழ் மொழியானது வடமொழியொன்று நீங்கலாக மற்றைமொழிக ளெல்லாம் தனக்கு நிகரிலவாகவும் , வடமொழியொன்று மாத்திரம் ஒப்புடையதாகவு நிலவத் தன்னிடத்து இலக்கியம் , இலக்கணம் , வேதாந்தம் ,சித்தாந்தம் ,கணித முதலிய பலவகைப்பட்ட நூல்கள் குறைவின்றி நிரம்பப் பெற்றுக் கற்பார்க்கு இனிமை பயந்து நிற்றலாற் றமிழ் என்னும் பெயர்த்தாய் , பரமபதியாகிய சிவபெருமான் றிருவாக்கினின்றும் , அவரடியார்களாகிய ஸ்ரீதிருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயகுரவர் சந்தானகுரவர் முதலி யோர் திருவாக்கினின்றும் , வைணவ சமயகுரவராகிய ஸ்ரீசடகோபர் முதலியோர் திருவாக்கினின்றும் வெளிப்பட்டுப் பற்பல செயற்கரிய அற்புதச்செயல்களைச் செய்தமையான் தெய்வீகமொழியாய் , சிவபெருமானால் , எம்மை நீ யொப்பா , யென்று போற்றப்பெற்ற அகத்திய முனிவருக்கு உபதேசிக்கப்பட்டு அம்முனிவர் பெருமானால் முதலில் இலக்கணங் காணப்பெற்றதாய் , முதலிடைகடை யென்னுமுச் சங்கங் கூட்டி அவற்றிற் பல்லாயிரமாண்டு பாண்டியர் களால் வளர்க்கப்பெற்றதாய் விளங்கியுள்ளது . இஞ்ஞான்றும் மடாதிபதிகளானும் , தமிழாயர்களானும் , புலவர்களானும் தன் இயனலத்திலொரு சிறிதுங்குறைவின்றிப் போற்றப்பட்டுவருகின்றது . ஓதுதற்குக் கடிந்நியமிலதாய் இலகுவாக்கற்றற்குரியதாய் , விரைவில் இறைவனிடத்து அன்பு விளைக்கு நூல்களையும் , அறிவைப்பெருக்கு நூல்களையும் உடையதாய்த் திகழ்வது மிச்செந்தமிழ் மொழியே . இம் மொழிக்கணமைந்த நூல்களுள் திருக்குறள் என்னுந் தெய்வத்தமிழ் மறை போலெம்மொழியினிடத்துங் காண்டலறிதாமென நடுநிலை யுடைய பல பண்டிதர்கள் கூறுகின்றனர் . இத்திருக்குறள் இதுவரை நாற்பதுக்கு மேற்பட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அம்மொழியாளரால் தம் மொழி நூல்களெல்லாவற்றினுமே இலாய தென்று போற்றப்பட்டு வருதலே இதற்குத் தக்க சான்றாகும் . இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த இச் செந்தமிழ் மொழியை அருமை பாராட்டிப் பயிலவேண்டுவது அது வழங்கும் வேங்கடங்குமரி தீம்புனற் பெளவங்களாகிய இவ்வெல்லைக்குட்பட்ட நம் தமிழ் மக்க ளெல்லார்க்கும் கடமையாயினும் அவருள் வணிகமக்களாகிய நம்மனோர்க்கு அச்செந்தமிழ்த் தெய்வத்தைச் சங்க நிறுவி வளர்த்த தெய்வப்பாண்டியர் அரசுரிமை பெற்ற நாடே உறைவிடமாக இருத்தலான் நாம் பயிறல் மிகவும் இன்றியமையாததாகின்றது . நம்ம னோரின் முறையாகப் படித்த சிலரிடத்தன்றி மற்றையோரிடத்து இத் தமிழ் இயனலங்குன்றி வேறுபட்டிருக்கிறது . எம்நிலத்து மொழி தமிழேயாயினும் முறையாகச் சின்னாளேனுங் கற்கப்படாதேல் , அதன் நல்லெழில் முறையின்றிக் கற்றார் மாட்டுக்குன்றிப் பிறமொழி யறிஞர்களால் எள்ளப்பட்டு மறைந்து கிடக்குமென்பது எல்லாரு மறிந்ததே .நம் வணிக மக்கள் , தஞ்சிறார்களைத் தமிழ் பயிலத் தொடங்கி எண்சுவடி யென்னும் ஒருவகைக் கணிதச் சிறுநூல் பயின்றதும் பிறவிடத்திற் சென்று பொருளீட்டுதற்குப் போதிய அளவு அறிவு வந்ததென்று அம்மட்டில் நிறுத்திப் பொருளீட்டு முயற்சியிற் புகுத்துகின்றனர் . அச்சிறுவர்கள் அவ்வமயம் தந்தைமார் அறியாமற் கூறினும் அவர் மொழியை யேற்று நடத்தல் கடனாதலின் அங்ஙனமே செய்கின்றனர் .பின் காளைப்பருவம் வந்துழிக் கற்கலாமோ வென்றால் வெயிற்றவாமணிப்பூ ணல்லாரெனும் பெரு விடங் கொடீமை யெயிற்றுமா காமப் பாந்தன் முதலிய இடர்களானும் , பின்னர்ப் புதல்வர் முதலிய உறவினரைப் பாதுகாத்தன் முதலிய தொழில்களானும் , பின் உடற்றளர்வு, அறிவுத்தளர்வுகளானும் கற்றற்குப் போதிய வலியின்றிப் பிறப்பை யவமேயாக்குகின்றனர் . அந்தோ! நம் மக்கள் பல அறிஞர்களோடு பழகுங் காலத்து தம்மிடத்துச் சொற் சோர்வு எழுத்துப்பிழை முதலியன எங்கு வந்துவிடுமோ வென்று நாணுகின்றனரே ! அந்நாண் சிறுபொழுதேனும் முறைப்படக் கற்றிருப்பின் உண்டாமா? அறிஞரவைக்களத்துச் சென்றார் பொருட் பற்றியன்றிக் கல்விபற்றிய மதிப்புக்கிடைத்த லரிதாகின்றதே ! கற்றோராற் பெறுமதிப்புக் கல்வி யானன்றிப் பொருளானாதல் பெருமையன்றே ! அறிவுடையார் நண்பு பொருளைப்பற்றி யொரோ வழிக்கிடைத்திருப்பின் , அன்னார்க்குக் கடிதம் எழுதவேண்டுமானால் முறைப்படக்கற்ற ஒருவரைத் தேடவேண்டுவதவசியமாகின்றதே ! அங்ஙனம் தேடுதல் வேண்டா வென்று தீட்டுவரேல் அது பிழை பல பொதுளி அந்நட்டாரிடத்துத் தம் பெருமையைக் குறைக்கின்றதன்றோ? முறைப்படக்கற்காத நம் மக்களுட் பொருனிலையான் மேனிலையடைந்தார் கடிதத்தும் , இலக்கண விரோதமாகிய எழுத்துக்களும் , சொற்களும் பரம்பரை யாக உபயோகப்படுத்தப்பட்டும் வழங்கப்பட்டும் வருதலை யிஞ்ஞான்றுங் கண்கூடாகக் காணலாம் . அப்பிழைபட்ட மொழிகளுட் சில என் நினைவிலுள்ளனவெனினும் அவை யிற்றை யீண்டு விரிதற்கு என் மனம் நாணுகின்றதாகலின் , எழுதுகிற்றிலேன் . அப்பொருள் மிகுதியாக வாராதா? நம் தமிழ் நிலத்துள்ள அந்தணரிற் பெரும்பாலாரெல்லாம் நன்கு கற்றவரன்றோ ? கல்வியான் மிகுத்த பொருள் வரவுண்டென்பதை அரசு நூல் கற்று நீதிமன்றத்து நின்று வாதிப்பாரிடத்துக் காட்சியளவையிற் றெளிந்திருப்பீர்களன்றோ ? கற்றுத்துறைபோய காதலன் அறிவுமுதிர்ந்தபின்னர்ப் பொருளீட்டி யொரு காதலியை மணந்து இல்லறம் நடத்துதலினும் விழுமிய இன்பம் வேறொன்றுண்டா ? நம் வணிக மக்கட்குப் பிறர் நட்பு கோடல் பொருள் பற்றியன்றி யறிவுபற்றியாதலருமை யென்பது அவரவர் அநுபவத்தானுணரலாம் . நம்மக்களிடத்து இயற்கையறிவோ மிக நுன்ணியதாக நிரம்பியிருக்கின்றது . இவ்வருமை மதிநுட்பத் தைப் பெற்றுஞ் செவ்வைபாக்கற்றற்கு முற்படாதிருத்தல் , விளைநிலம் கருவி முதலிய பெற்றும் தொழிலில் முயன்று தொடங்காமையை யொத்திருக்கின்றதன்றோ ? ஓ என் அருமைச் சகோதரர்களே ! நம்மனோரிற் சிலர் இப்பொழுது கல்வியுடையாரும் சிலர் கற்க விரும்புவாருமாக இருக்கின்றமையின் இவ்வமயம் நம் குறையைக் கூறின் விரைவினீங்கப்பெற்று நலனுறலாமென்னு மவாவும் , தருக்கசங்கிரகத் தொடக்கத்தில் அந் நூல் கேட்டற்குரிய அதிகாரிகளை “இளையோரெனவும்” இளையோராவார் கோடலும் உள்ளத்தமைத்தலும் வல்லுநர், குழவிப் பருவத்தரல்லரென்பதாம் “ எனவுங் கூறியாங்கு நீயிர் எல்லீரும் இற்றை ஞான்று இக்குறையைக் கொண்டு களைதற்கும், கல்விவுணர்ச்சியின் முற்படுதற்கும் உரிய அறிவுமாற்றலுமுள்ளீரென்னுந் துணிவுமே யென்னை யித்துணையுங் கூற முற்படுத்தின . போதிய அளவு பொருள் படைத்திருக்கு நம்மனோர் அதற்குத் தக்க கல்வியுமுடையராயிருப்பின் , அப்பொருள் புரையறு பொன்னாற் புரிதருமெழின்மலர் விரைநனி செறிந்து விளங்குதல்போல் விளங்கிக் காலத்துக்குத்தக்க அறம்பலபுரியதற்குரி யதா மன்றோ? கல்வியறிவில்லாரெத்துணையறங்களைப் புரியினும் அவை தாஞ் செதற்குறிய பயனைச் செய்தற்கு வலி யிலவா யொழியுமென்பதை “பன்னும் பனுவற் பயன்றோரறிவிலார் , மன்னுமறங்கள் வலியிலவே நன்னுகால், காழொன்றுயர்திண் கதவு வலியுடைத்தோ, தாழொன் றிலதாயிற்றான் “ எனவரும் முன்னோர் மொழியானுமுணர்க . இன்னும் அறிவிலார் அறமுடையராயினும் , பொருளுடையராயினும் இவ்விரண்டும் ஒருங்குடையராயினும் அவற்றாற் பயனெய்தாரெனலை “அறிவுடையா ரெல்லா முடையார் அறிவிலார் , என்னுடையரேனுமிலர்” என்னும் திருக்குறளாற் றெளிக .
க லா சா லை
இனி , அறிவுக்கு இன்றியமையாச் சாதனமாகிய அக்கல்வியில் லாக் குறையை யொழித்தற்குரிய நெறிதான் என்னை யெனிற் கூறு வேன் . நம்மவர் உறைவிடமாகவுள்ள ஒவ்வொரு நகரங்களினும் , கலாசாலை நிலைபெறச்செய்து அதனில் இலக்கிய இலக்கணங் களைக் கிரமமாகக் கற்றுணர்ந்தவரையும் , போதனாமுறை தெரிந்தவராயுமுள்ள பண்டிதர்களை உபாத்தியாயராக நியமனஞ் செய்து அவர்களா லக்கல்லூரியிற் சேரும் சிறார்களுக்கு வேதனமின்றிக் கல்வி கற்பித்தல் வேண்டும் . கலாசாலை நடைபெறுதற்குரிய மூலதனம் அவ்வவ்வூராராற் றொகுக்கப்பட்டுக் கல்வி செல்வங்களான்மிக்க ஒருவர் அல்லது சிலர் பொறுப்பி லிருத்தல் வேண்டும் . பெரிய ஊராகவிருப்பின் சிறுவர்கள் மிகுதியாகச் சேருவார்களாதலின் , தலைமைப் பண்டித ரொருவரைத் தவிரச் சுருக்கமான வேதனத்தில் சில உபாத்தியாயர்களை வேண்டிய அளவு நியமித்தல் வேண்டும் . கலாசாலை நடைபெறு நகரத்திலுள்ள சிறுவர்களுக்கேயன்றி அயலூர்களிலிருந்து வருஞ் சிறுவர்கள் உண்டி, உடை முதலிய செலவு செய்தற்குப் போதிய பொருளில்லாதவராக இருப்பின் , அன்னார் எச் சாதியராயினராயினும் , அவர்களுக்குரிய அச்செலவையும் கலாசாலைப் பொதுப் பொருளிலிருந்து செய்து படிப்பித்தல் மிகுந்த புண்ணியமாகும். ஆனால் அங்ஙனம் வருபவர்களில் இத்தனை பெயர்க்குமட்டில் போஷணைச் செலவுடன் கற்பித்தல் வேண்டுமென்று மூலதனத்துக்குத் தக்கவாறு வரையறை செய்துகொள்ளலாம் . மூலதனம் தொகுக்கும்பொழுதே இவ்விடயத் தையுஞ் சிந்தித்துக் கொள்ளல் வேண்டும் . சிலர் எம்மக்கள் கல்விபயிறற்குரிய பருவமிலராதலின் , யாம் இது பொழுது எதற்காகக் கலாசாலைக்குப் பொருள் தரல் வேண்டும் , பின்னர் பார்த்துக் கொள்ளுவோமென்று கருதுவாருமுளர் . சிலர் இறைவன் எமக்கு இதுகாறும் புதல்வரைத் தந்திலராதலின் , யாம் இவ்வறச் செயலிற் றலையிடுதலெற்றிற்கு ? புதல்வற்பேறு கிடைத்த பின்னர்ச் செய்வோமென்பாரு முளர் . சிலர் நம் மக்கள் பல்லாண்டு படிப்பினும் மாத வேதனமாக உதவிவரின் , சுருக்கமான பொருள்தானே செல்லும், அங்ஙனமிருக்க ஏன் ஒரே தொகையாக மிகு பொருள் கொடுத்தல் வேண்டும் ? என்று கருதுவாருமுளர் . இங்ஙனம் “நலமதொன்று அடைதற் குறுமிடை யூறு தானே பலவுளவன்றே” என்றாங்கு இந் நற்காரியத்திற்குப் பல இடையூறுகளும் நேர்தல் இயற்கையே . ஆனால் , இங்ஙனங் கருதுவாரெல்லாம் நாம் இக்கலாசாலைக்குப் பொருளீதல் நம்வாணாளிற் செய்தற்குக் கடமைப்பட்ட அறச்செயல்கள் பலவற்றுட்சிறந்த தொன்றென்பதூஉம் , அப்பல வகைத் தருமங்களினும் இவ்வித்தியாதான தருமம் சிறந்ததென் பதூஉம் , இது நமக்கு இம்மையிற் புகழையும் மறுமையிலுரிய பயனையும் விளைக்குமொரு நற்செயலென்பதூஉம் , அதனைப் பிறர் பயனோக்கிச் செய்தலே யன்றித் தமக்குச்செய்துகோடல் சிறந்த தன்றென்பதூஉம் , ஆகிய இவ்விடயங்களை நினைவிற் கொள்ளுவரேல் பொருளீதலில் ஒரு சிறிதும் பின்வாங்கார் . வடமொழியிலுள்ள அறநூல்களாகிய மநுமிருதியிலும் ஞானம் வேள்வி இவற்றினும் தானமே சிறந்ததென்பது போதரும் . அத் தானம் பலவற்றுள்ளும் அறிவை வளர்த்தற்கு வித்தையும் , அவ்வறிவின் நிலைக்களமாகிய உயிரிருத்தற்குரிய உடலை வளர்த்தற்கு அன்னமுமுரியதாதலின் , அன்னதானமும் , வித்தியாதானமுஞ் சிறந்தனவாகும் . அவ்விரண்டனுள்ளும் பெறுவார்க்கு அன்னத்தாலாம் பயன் சிறுபொழுது நின்றொழிதலானும் , கல்வியானாம் பயன் வாணாண்முழுதுமிருத்தலோடு “ஒருமைக்கட்டான் கற்றகல்வி யொருவற் , கெழுமையு மேமாப்புடைத்து” என்று திருக்குறள் கூறியாங்கு எழுமையுந் தொடர்தலானும் மிக்க பயன் தருவது வித்தியாதானமேயாகும் . “தான மெவ்வெவற்றினுந் தக்க வித்தியா , தானமே சிறந்தது சாற்றுங்காலையே” என்னுந் தமிழ்ச்செய்யுளானு முணர்க. ஈண்டு ஏழைச் சிறுவர்களுக்கு உண்டி , உடை கொடுத்துக் கற்பித்தல் இருவகைத் தானப்பயனையுந் தருமென்பது முணர்க . இத்துணை மேம்பாடுள்ள வித்தியாதானஞ் செய்தற்குரிய பொருளோ நம்மவர் செய்துவரும் வேறு தருமங்களுக்குரிய பொருளை நோக்க மிகச் சுருக்கமாகும் .சுருங்கிய பொருளைக்கொண்டு பெரும்பயனைத் தரும் புண்ணியச்செயல் இதனையன்றி வேறு யாதுமிருப்பதாகத் தெரிந்திலேன் . ஆதலின் அவ்வவ்வூர்களில் நிலைபெறும் வித்தியா சாலைக்கு அவ்வவ்வூரார் இயன்றவளவு பொருள் கொடுத்தல் அவர் தமக்கு இன்றியமையாத கடமைகளிலொன்றாகும் . இந் நற்காரி யத்தை முடித்தற்கு ஒவ்வோரூரிலுமுள்ள செல்வமிக்க சீரியோரே முயறல் வேண்டும் . அவர் தமக்குள்ள பல வேலைகளி லீதொரு முக்கிய காரியமாகக் கொள்ளல் வேண்டும் . எவ்வளவு பொருள் படைத்து எத்துணை நாள் வாழினும் இத்தகைய நற்செயலால் வரும் இசை யிலரேல் அவர் செல்வமும் வாழ்க்கையும் என்ன பயனுடையவாம் ? நண்பர்களே ! நம் சீவியகாலத்தில் நம்மக்கள் எவ்வளவு பொருளைப் பயனின்றிச் செலவு செய்கின்றனர்? பொருட்பெண்டிர் பொய்மை முயக்கத்திற்கு எவ்வளவு போகின்றன . பொறாமை , சினம் முதலியவை காரணமாகக் கலாம் விளைந்து அதனால் எவ்வளவு செலவாகின்றன ? அந்தோ ! இவற்றால் அக்கணத்திற் றோன்றும் ஒரு சிற்றின்ப நோக்கிச் செய்கின்றனரெனினும் , தமக்கும் உணவு முதலியன தக்ககாலத்திற் செய்து கோடலின்றித் தம்மைச் சார்ந்த தாய் தந்தையர் பெண்டிர் மக்கள் வருந்த அதனையும் பொருட்படுத்தாது அறிவுள்ள தந் நண்பரைக் கண்டால் நாணம் பெரிதுகொண்டு அவரோடு பேசுதலின்றி மறைந்து சென்று எவ்வளவு பொருளைச் சூதில் போக்குகின்றனர் ? இவர் செய்கை மிகவும் வருந்தற்பாலதாகும் . இத்தகைய தீயவழிகளில் நம் பொருள் போதற்கு முன்னரே நாம் பின்னர்த்துய்க்கும் வண்ணம் வைத்தற்குரிய இடத்தில் வைக்க முந்த வேண்டாமா ? இனி , அக்கலாசாலைகளில் நமக்குரிய மொழியாகிய தமிழைப் படிப்பித்தலோடு நம்மையாளும் அரையர்க்குரிய ஆங்கில மொழியையும் பயிற்றல் வேண்டும் . ஆங்கிலம் எக்காலத்தில் எந்நிலத்தை எவ்வரசர் ஆளுகின்றனரோ அக்காலத்தில் அந்நிலத்துள்ளார் அவ்விராச மொழியைக் கற்றாலொழிய இலெளகிக உணர்வு , பொருளீட்டற்குரிய வலி , பலரானு மதிக்கப் படுதல் முதலியவை யுடையராதல் அமையாது . ஆங்கிலத்திற் சிறிது கற்றுப்பட்டம் பெற்றாரொருவரும் தமிழிற் பெரும்பட்டமுடையாரொ ருவரும் , தேய யாத்திரையாகச் செல்லுங்கால் புகைவண்டி முதலியவற்றில் முறையே அவர்களடையும் இன்பதுன்பங்களே ஆங்கில நூலுணர்வின் அவசியத்திற்கும் , அஃதின்மைக்கும் போதிய சான்றுகலாம் . அன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் இந்திய மக்கள் கண்டு தெளிந்தனவும் , நூல்வடிவாகச் செய்யப்பட்டனவும் இப்பொழுது நம்மனோரா லறிதற்கரியனவுமாகிய பெளதிக தத்துவ இயல்களையும் , எந்திரத்தொழில்களையும் மேனாட்டார் கருவி கொண்டு சோதித்து அறிந்து பலர்க்கும் உபயோக மாம்படி விளக்கமாக அவ்வாங்கில மொழியிலேயே எழுதிவருகின் றனர் . அங்க நூல்கள் பல பன்னாட் பயின்று அறிதற்குரிய ஆரிய வேதங்களின் சீரிய பொருள்களை யெல்லாம் அம்மொழியில் சிறிது கற்றாரும் எளிதிலுணர்ந்து கொள்ளும் வண்ணம் மிக இலகுவான சொன்னடையில் விளக்கி யெழுதியிருக்கின்றனர் .நம்மனோரெல் லார்க்கும் இக்காலத்துக்குரிய அரச நீதி கூறும் நூலுணர்ச்சி சிறிதேனுமிருத்தல் வேண்டும் . அந் நூல்களும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன . இவற்றையெல்லாம் அறிய வேண்டின் அம்மொழியின் பயிற்சி சிறிதேனும் பெறவேண்டுவதவசியமா கின்றது . ஆகலின் நம்மால் நிறுவப்படுங் கலாசாலைகளில் ஒரு சிறு நேரம் சிறார்களுக்கு ஆங்கிலமுங் கற்பித்து வருதன் மிக நலமாகும் .
வ ட மொ ழி .
இனி , வடமொழியானது , வேதாகம புராணேதிகாச தரும சாத்திரங்களையும் , கணிதம் , தருக்கம் , வைத்திய முதலிய நூல்களையும் தன்னுட்கொண்டிருந்தாலும் , நமக்குரிய கிரியைகளில் உபயோகப் படுமந்திரங்களெல்லாந்தன்மயமாக இருத்தலானும் , பூகோளக்கோள நூல்களெல்லாந் தன்பால் விரிந்துகிடத்தலானும் அதனையும் நம் கலாசாலையிற் கற்பித்தலவசியமென்பது சொல்லா மலேயமையும் . ஆனால் , இக்காலத்திற் கற்றுணர்ந்த அந்தணர்க ளன்றி இப்பக்கத்திலுள்ள மற்றையோரெல்லாம் வடமொழி பயிறல் தங்கள் மரபினர்க்கேயன்றி யேனையோர்க்கு உரித்தன்று என்று கூறியும் , பிறர் வட சொல் ஒன்றைத் தம் முன்னர்க் கூறுவராயின் அது தம் செவிக்கு விடம்போல் வதென்று கருதியுந்திரிகின்றனர் அவரெல்லாம் பிறர் வடமொழியுணர்தற்கு அதிகாரிகளல்லர் என்பதை யெந்த நூலிற் கண்டிருக்கின்றனரோ அறியேன் . ஆராயப் புகுவாராயின் இங்ஙனம் கூறார் . வேதத்தை அந்தணர் , அரசர் , வணிகர் ஆகிய மூவரும் ஓதலாம் ; சூத்திரர் ஓதற்கு அதிகாரிகளல்லர் என்றும் , புராணங்களையும் ஆகமங்களையும் படிக்கலாமென்றும் தருமசாத்திரங்கள் கூறுகின்றன . சூத்திரர் வேதத்தை யொதுதற் கதிகாரியல்லர் என்பதற்கு வேதத்திற்குறிப்பானன்றி விளக்கமான பிரமாணம் இருப்பதாக ஒருவருங்கூறவில்லை . பிற்காலத்துச் சில பயனோக்கி அறநூலார்வரையறையப்படுத்தினர் போலும் , அவ்வற நூல் விதிப்படி வைசிய மக்களாகிய நாம் நமது பூர்வாசாரங் களினின்றும் பிறழ்தலின்றி துவிஜத்துவமுடையராயிருப்போமாயின் வேதத்தைத் தடையின்றிப் படித்தற்கதிகாரிகளாவேம் . பல வருடங்க ளுக்கு முன்னர் நம் வைசியாசாரம் பிறழ்ந்துவிட்டமையால் இப்போது சற்சூத்திர நிலையிலிருந்து அந் நிலைக்குரிய ஆசாரங்களை யநுட்டித்தற்கதிகார முடையேமா யிருக்கின்றோம் . அங்ஙனமாகவும் படித்த அந்தணருட் சிலர் புராணங்களுள்ளும் வேதோபநிடத மந்திரங்களைக் கூறும் பாகங்களாகிய சிவகீதை , பகவத்கீதை , வாயுசங்கிதை , முதலியவற்றையும் சூத்திரர் படித்தல் கூடாதென்கின்றனர் . ஈதென்னை விபரீதம் ? வேதத்திற் கூறும் விடயங்களை நேரே யறிந்துகோடற்கு அதிகாரிகளாகாத சூத்திரர் புராணமுகமாக அறிந்துகொள்ளலாமென்றும் , அதற்காகவே புராணங்களில் வேதார்த்தங்கள் விளக்கிக் கூறப் படுகின்றன வென்றுங் கூறுகின்ற தரும சாத்திரங்களைத் தங்களுக்குரியனவாக வைத்துக்கொண்டும் அவற்றை நோக்காது கையில் விளக்கேந்திக் கிணற்றில் விழுவார் செயலையொத்து மனம் போனபடி கூறுகின்றனர் . இவர் கூற்றுநம்மாலொரு பொருளாக மதித்துக் கண்டித்தற்குரிய தின்றெனினும் நம் வணிக மக்கள் சிலர் இவர் வஞ்ச மொழியை நம்பி அக்கொள்கையை யவலம்பனஞ் செய்கின்றன ராதலின் அம்மயக்க நிவிர்த்தியின் பொருட்டுச் சில கூறினேன் . இவற்றால் மேற்காட்டிய உண்மையை யறிந்தடங்குவாராக , இனிச் சிலர் வடமொழியை நாம் பயிலவேண்டுதற்குக் காரணம் நமக்குரிய செந்தமிழ் வடமொழியினின்றும் பிறந்தமையானென்பர் . அவர் கூறும் காரணம் நடுநிலையுடைய மொழிஞான விற்பன்னர்களா னிரசிக்கப் பட்டதொன்றாகும் . வடமொழியிலுள்ள துவிவசனம் தமிழில்லை . தமிழிலுள்ள திணை பாலுணர்த்தும் வினை விகுதி முதலியன வடமொழியிலில்லை . உதாரணம் பவதி யென்னும் வினைமுற்று இருக்கின்றான் , இருக்கின்றாள் , இருக்கின்றது என்று எல்லாத்திணை பாலையுங்கொண்டு முடியும் . வடமொழியிற் பிரதமா விபக்தி கூறுவர். தமிழில் , எழுவாயுருபு, திரிபில் பெயரே யென்பர் . வடமொழியில் சப்தங்களுக்கு இலிங்கம் வகுத்திருக்கின்றனர் . தமிழில் பொருட்டன்மை நோக்கி அப்பொருளையுடைய சொற்குப் பால் வகுபார். உதாரணம் தாரம் என்னும் பெண்பாற் பொருளுணர்த்துஞ்சொல் வடமொழியில் ஆண்பாற்பன்மை யென்று கூறப்படும் . தமிழில் அங்ஙனமின்று. இன்னும் வடமொழியையும் செந்தமிழையும் நன்கு ஆராயின் அவை வேறு வேறு தனிமொழிகள் என்பதற்குப்பல வேறுபாடு காணலாம் . இவ்விடயம் நம் தமிழ்ப்பண்டிதரே யன்றி ஆங்கிலேய பண்டிதர் பலரானும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது . இனி , நம்முன்னோர் வடமொழி பயிறற்கு முக்கிய காரணம் வேறியாதெனின் கூறுவேன் . வடமொழி செந்தமிழ்போலப் பரமசிவனாற் றரப்பட்டதாதலானும் , அலங்காரம் தருக்க முதலிய நூல்களைத் தன்பானின்றும் பிறமொழியாளர் கோடற்குரியதாக இருத்தலானும் தொன்றுதொட்டு நம் தமிழ்க்கும் அதற்கும் ஒற்றுமையுண்மையானும் நம்மத கிரந்தங்களெல்லாம் பெரும்பாலும் அம்மொழியிலேயே அமைந்திருத்தலானும் நாம் கற்றலவசியமாகும் . வடமொழி உலக வழக்கிலின்றி நூல் வழக்கின் மாத்திரம் பயின்று வந்தமையானும் , தமிழ் நூல் வழக்கு உலகவழக்கு ஆகிய இரண்டினும் பயின்று வந்தமையானும் , தமிழிற் பெரும் புலவராயுள்ளாரெல்லாரும் வடமொழியையுங் கற்று அதனிலுள்ள விடயங்களைத் தமிழிற் கூறுங்கால் அச்சொற்களையும் உடன் கூறி வந்தமையானும் தமிழ் மொழியிற் பல வட சொற்கள் பழங்காலத்தே வழங்கப்பட்டு வந்தனவாகும் . இவற்றையுணர்ந்து வைத்தும் நம் தமிழ்ப்புலவருட் சிலர் தமிழினும் வடமொழி தாழ்ந்ததென்றும் , தமிழர்க்கு வடமொழிப் பயிற்சி அவசியமின்றென்றும் வடமொழியைப் பலவாறு இழித்துக் கூறுகின்றனர் . இவர் கொள்கை பரவி வருதலாற்றான் நம் சமய உண்மைகளை விளக்கும் ஆகமங்கள் வடமொழியிற் பல்கோடியாக விரிந்து கிடப்பவும் அவற்றை யாராய்வாரும் பரிபாலிப்பாரும் அரியராகின்றனர், இக்கொள்கையை நம் தமிழ் மக்களறவே யொழித்து விடல் வேண்டும் . இனி , வடமொழியையும் முறையாகக் கற்கத் தொடங்கல் வேண்டும் . அங்ஙனங் கற்று நம்மனோர்க்குப் போதிக்க ஒருப்படும் அந்தணோத்தமர்களுக்கு வேண்டிய உதவி நாம்புரிதல் வேண்டும் . ஆனால் நம் வணிகமக்கள் பலர் பல இடங்களில் வடமொழிக்கலாசாலை நிறுவி நன்கு நடத்தி வருகின்ற னர் . கலாசாலை தொடங்கும்பொழுதே அந்தணர்களைத் தவிர வேறு ஒருவரும் படித்தல் கூடாதென்னும் விதியையும் ஏற்படுத்திவிடு கின்றனர் . அதற்குக் காரணமும் ஒன்றுண்டு . என்னவெனின் : ‘கதா நுகதிகோ லோக” என்னும் பொது நியாயத்தை நம்மவர் தமக்குச்சிறப்பாக அங்கீகரித்தமையேயாகும் . அக்கலாசாலைகளில் அந்தணச்சிறார்களே யன்றி மற்றவருணத்தார் படித்தல் கூடாதென்று எந்த நூல் கூறுகின்றது ? திருவனந்தபுரத்து மகாராஜா அவர்கள் அச்சமஸ்தானத்தில் நிறுவிய கலாசாலையிலும் , பண்டிதை ஸ்ரீ அனிபிசன்ட் அம்மையார் காசியில் நிறுவிய பெரிய கலாசாலை யிலும் நான்கு வருணத்தாரும் ஆரம்பக் கல்வி முதல் வியாகரணம் தருக்கம் முதலிய எல்லாக்கிரந்தங்களையுங் கற்கும்படி விதிக்கின்றனரே . அவ்விதியை நாம் ஏன் கடைப்பிடித்தல் கூடாது ; இப்பொழுது நம் குலத்துச் சிறார்களும் வேளாளர் குலத்துச் சிறுவர்களும் படிக்க விரும்பினாற் கலாசாலையிற் போதகரா யிருப்போ ருடன்படுவரா ? ஆதிசைவப் பிராமணச்சிறுவர்களைச் சேர்த்துக் கற்பித்தற்கும் உடன்படுதலருமையாயின் நம்மனோரை யெங்ஙனம் மதிப்பார் ? இவற்றிற்கெல்லாங்காரணம் நம்மவர் பாலுள்ளதேயன்றி யவர்களிடத்திலின்று . இனி , நம் நாட்டில் செந்தமிழ்க்கலாசாலைகள் பல ஆங்காங்கு நிறுவி அவற்றிலிருந்து வடமொழியை நம் தமிழ்மக்கட்குப் போதிப்பிக்கத் தொடங்குவேமேல் நம் நல்லுணர்வையும் பாஷாபிமானத்தையும் அறிஞர் மிகப்பீடுடைய னவாக எண்ணுவர் . இன்றேல் ஒருவர் சென்றவழியாச் செல்லும் நம் இயற்கை பிறர் மதித்தற்குரியதாகாது . நிறுத்துணர்ந்து எக்காரியத் தையுஞ் செய்தலே தக்கதாகும் .
ச பை க ள் .
இனி , தமிழ்க்கலாசாலைகளை யூர்கடோறுந் தவறாமல் நிறுவுதலோடு பத்து ஊர்களுக்கு ஒன்றாக எல்லாச் செளகரியங்களும் நிரம்பிய ஒவ்வொரு பெரிய நகரங்களினும் பல பண்டிதர்கள் தத்தங்கருத்துக்களை யுபந்நியாசித்திற்குரிய சபைகள் தாபித்தல் வேண்டும் . இக்காலத்தில் மதவகையான திருத்தங்களும் , அரசியற் றிருத்தங்களும் , சாதிமுறைத் திருத்தங்களும் பிறவுஞ் சபைவாயி லாகவே செய்யப்படுகின்றன . இவ்விந்திய தேயத்தில் பலவகையுட் சமயங்களும் ஒருவாறாகச் சில சில இடங்களிற் பரவிவர தியாசபிகள் சங்கத்தின் நோக்கங்கள் மிக்க விரைவிற் பரந்து நம் இந்திய மக்களிற் பல மேதாவிகளையும் தன் வயப்படுத்தற்கேது , இத்தகைய சபைகளேயன்றி வேறன்று . ஒருவகை நூலிற் பலர்க்கும் பலவகை யவிப்பிராய பேதங்கள் தோன்றுதலியற்கையே . அக்கருத்து வேறுபாடுகளைத் திருத்திக் கோடற்கு வாயில் இச்சபைகளேயாகும் . நம் சிறுவர்கள் கல்வி பயிலுங்காலத்தே பலர் முன்னிலையில் அஞ்சாது பேசப் பழகுதற்குரிய தானமுமிச்சபைகளேயாகும் ”இண ரூழ்த்து நாறாமலரனையர் கற்ற துணர விரித்துரையாதார்” என்னுங்குறை யையொழித்து “சொலவல்லன் சோர்விலனஞ்சான வனை, யிகல் வெல்லல் யார்க்குமரிது “என்று கூறும்படி சிறுவர்களைப் பெருமைப்படுத்தற்கு மிதுவே சிறந்த கருவியாகும் . உதாரணமாக இச்சன்மார்க்க சபையை நினைப்போம் . இது நிலைபெறுத்தப்பட்டு ஈராண்டுகளாயின. இவ்வீராண்டுகள் , பிறந்தநாட்டொடங்கி இப் பக்கங்களைக் கண்டறியாத எத்தனை பெரியோரைக் காண நேர்ந்தது? அவர் வாயிலாக எவ்வளவு நுண்ணிய பல விடயங்களைக் கேட்கநேர்ந்தது ? நன்னீர் தோய்ந்து இன்சுவை யடிசிலுண்டு மேன்மாடியிற் சாளரவாயிலாகப் போதருமிளங்காற்று வீச வெயின்முகமறியாது பயிலும் மெல்லியவுடலையுடைய அறிவிற் சிறந்த நீவிர் பல்லீரும் முள்ளுங்கல்லும் பரவிய நீணெறி கடந்து சேணிடத்துள்ளதாகிய இச்சிற்றூரையெய்தி யொருங்குகூடி யளிக்கு மிக்கண்கவர் காட்சி கிடைக்கப்பெற்றமைக்குக் காரணமிக்கழகமே யன்றோ ? இக்கழகம் சன்மார்க்கமாதலின் , இதனை நோக்கி யாம் வருதற்குரிய நெறி சன்மார்க்கமாயினும் அதனைப் பொருட் படுத்திலேமென்று பல பண்டிதர் என்னிடம் கூறியுள்ளார்கள் . ஆதிபெளத்தர் அரசமரத்தடியில் நின்று பலரையும் ஒன்றுகூட்டித் தம் மத போதனைகளைச் செய்தமையானன்றோ இக்காலத்திற் பல வகைப் பட்ட மதங்களை யவலம்பிக்கும் உலகத்து ஜனத்தொகையுள் பெளத்தக் கொள்கையினர் மூன்றிலொரு பகுதியின் மேலும் மிக்கு விளங்குகின்றனர் . நம் வணிகமக்களுரைவிடங்களாகயுள்ள நகரங்க ளிற் குறைந்த பக்கம் பத்துச்சபைகளிதுபோல் நிலைபெறுமாயின் , நம்மவர் சில ஆண்டுகளுக்குள் பிறர் கூறுங்குறைகளை யொழித்து நாகரீக நிலையில் எல்லாரினு மேம்பாடெய்துவரென்பதிலொரு சிறிதும் ஐயமின்று . அங்ஙனமாமாறு நம் உள்ளத்துளொளியாய் விளங்குஞ் சிவபெருமான் றிருவருள் புரிவரென்னுந் துணிவு பெரிதுடையேன்
ச ம ய ம்
இனி, சமயவிஷயத்தில் நம்மவர் நிலையைச் சிறிது ஆராய்வேன். நம் வணிகமக்களுக்குரிய சமயம் வேதாகமங்களில் விதந்தெடுத்து விழுமிதாகக்கூறப்பட்ட சைவசமயமேயாகும் . சைவசமயம் என்பது சிவனிடத்து இடையறாது அன்பு பூண்டு ஒழுகுவோரது கொள்கை யென்று பொருள்படும் . ஈண்டுச் சமயமென்றது இது பொருளென்று தெளிந்த அவசரம் , அல்லது பருவம் என்று பொருளாகும் . சிவபிரான் பரம்பொருளாதலை வேதம் பொதுவகையாகவும் சிவாகமம் சிறப்புவகையாகவும் தெளிவிப்பனவாம் . வேதத்துட் சிவபிரான் பிரமம் , பசுபதி , முதலிய சப்தங்களாற் பலவிடத்தும் படிக்கப்படுவன். பிரமசப்தத்தை யொவ்வொரு சமயத்தாரும் தத்தங்கடவுட்கேற்றிக் கூறுகின்றாரார்களோ எனின் , அற்றன்று . கேநோபநிடதத்தில் இந்திரன் , அக்கினி , வாயு முதலியோர் அசுரர்களைப் போரில் வெற்றிகொண்ட சயசீலர் யாம் யாம் என்று செருக்குற்றிருப்ப அதனையறிந்த பரமசிவன் , அவர்கள் முன்னிலையில் ஓரியக்க வேடந்தாங்கிச்சென்று ஒரு சிறு துரும்பை நட்டு இதனிடத்து உங்கள் வலியைக்காட்டுங்களென்று கூறினெனவும் , அக்கினியும் ,வாயுவும் தம் ஆற்றல் சிறிதும் செல்லாதிருத்தலை நோக்கி நாணி நிற்பப் பின் இந்திரன் வந்தவுடன் இயக்க வுருவினனாகிய பரமசிவன் மறைந் தருளினனெனவும் , அவ்வமயத்தில் விசும்பில் இமவான் மகளாகிய உமையம்மையார் தோன்றினாரெனவும் , அவ்வம்மையாரை நோக்கி அம்மே ! இவ்வியக்கன் யாவன் என்று இந்திரன் கேட்ப இவன் பிரமம் என்று அம்மையார் கூறியருளினாரெனவும் கேட்கப் படுதலானென்க. அவ் வுபநிடதத்தில் இயக்க வுருவமாக வந்தது பிரமம் என்று காணப்படினும் “தாயுடன் சென்று பின் றாதையைக்கூடி” என்றமுறைப்படி உமாதேவியராகிய சிவசத்தியாற் காட்டப்பட்டமை யால் அந்தப் பிரமம் பரமசிவனே யென்பதுணர்க . இக்கதையை வாயுசங்கிதை யென்னும் புராண நூலும் விரித்துக் கூறுதலையுணர்க யஜூர்வேதத்துள்ள சமக மந்திரங்கள் அரி, அயன் , இந்திரன் முதலியோரை அன்னாதிகளுடன் சேர்த்து ஈயப்படும் பொருளாகக் கூறுகின்றமையானும் “பிறராற் சாதிக்கமுடியாத முப்புரத்தை வெற்றிகொண்டு உலகங்களைக் காத்தமையான் பசுபதி நீயே , யாமெல்லாம் பசுக்கள் என்று அங்கீகரித்தனர் தேவர்கள்” என்பது முதலிய சுருதிகளுண்மையானும் பசுபதி சப்தமும் அதற்குரிய இலக்கணங்களும் சிவபிரானுக்கே யுரியனவென்பதும் தெளிக . சிவபிரான் ஏனையதேவர்கள் ஆற்றலெல்லாந் தன்னுள் வியாப்பியமா யடங்க தான் வியாபகசக்தியுடையனாதலை , சுருதி பிறதேவர்கள் பெயரெலாஞ் சிவனுக்குரியதாகக் கோடலானும் சிவனுக்குரிய சிறப்புப்பெயரைப் பிறதேவர்க்குக் கூறாமையானுமுணரலாம் . பிறதேவர்கள் நாமம் சிவனுக்குண்மையை வாயுசங்கிதை யென்னும் நூலினாலும் , சிவன் சிறப்புப்பெயர் பிறர்க்கின்மையை “சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம்மேனியெம்மான்” எனவருந் தமிழ் மறையானுமுணர்க .இங்ஙனம் அளப்பரும் பெருமை வாய்ந்த நம் சிவபெருமானைப் பரம்பொருளென வேதாகம விசாரத்தால் உண்மையாகத் தெளிந்து பக்தி செய்தல் ஒருவற்குக் கூடுமாயின் , அவன் ஒருகோடி பிறப்பிற்செய்த நல்வினையுடையானெனப் பெரியோர் நிச்சயிப்பர் . இதனை சிவகீதையென்னும் பத்ம புராணத்தாலறியலாம் . அப்பல பிறப்பினும் புறச்சமயங்கள் பலவற்றை மேற்கொண்டும் , பின்னர் அச்சமயம் எய்தியும் , மிருதி கூறும் வழிச்சென்றும் , புராண சிரவணஞ் செய்தும் , வேதமோதியும் , வேதாந்தந் தெளிந்தும் மேற்சென்றார் சைவநெறியடையலாம் இதனை “புறச்சமயநெறி நின்று மகச்சமயம்புக்கும் புகன் மிருதிவழி யுழன்றும் புகலுமாச்சிரம , வறத்துறைகளவையடைந்து மருந்தவங் கள் புரிந்து மருங்கலைகள் பல தெரிந்து மாரணங்கள் படித்துஞ் , சிறப்புடைய புராணங்களுணர்ந்தும் வேதசிரப்பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றாற் சைவத் , திறந்தடைவரிதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்திய பின் ஞானத்தாற் சிவனடியை சேர்வர்” என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா னுணர்க . இனி , இச்சைவ சமயமானது , ஏனைய சமயங்களை யெல்லாம் ஒதுக்காமல் அவை தன்னையடைதற்குச் சோபானமாக இருக்குமுண்மையைக் காட்டி , மாறுபாடின்றித் திகழ்தலாலிதனையே மெய்ச்சமயமென்று அறிஞர் கூறுவர் . மற்றைச் சமயங்களெல்லாம் ஒன்றையொன்று வெறுத் தொதுக்கு மியல்பினவாம் . இத்தகைய உண்மைநெறியை யொருவன் எய்தினால் அவற்குச் சுலப கைங்கர்யங்களாலே எவரும் அடைதற்கரிய வீட்டின்பத்தைச் சிவபெருமான் தந்தருளுவன் . இதனை அப்பையதீக்ஷிதர் பெருமான் றிருவாய் மலர்ந்தருளிய ஆத்மார்ப் பணது தியானுமுணர்க . இத்தகைய எளிய செயலால் இறைவனை மகிழ்விக்கும் இந்நெறியை யியற்கையிற் பெற்றாருட் சிலர் வேறு மார்க்கங்களைபற்றி நிற்றல் என்பயன் கருதியோ ? அங்ஙனம் பற்றி நிற்பார் செயலை , சிவகீதையும் , “பரமதக் கடலுட் டுளைகுநர் தாமும் பைப்பய வுயர்ந்துமே லில்லாவரமலி சைவ மருவுவ ரிதங்கண் மரபினாலறமுத லாற்றி விரவுவ ரிறைவன் பாததா மரையை மேவருஞ் சைவமே சார்ந்து மூரமறுபுறநூலொழுகுரமிழ்த மொரீஇ விடம்பருகுநர்புரைவார்” என்று தணிகைப்புராண நூலாசிரியருங் கூறுமாற்றாலுனர்க .
என் அருமை நண்பர்காள் !
இத்துணை யருமைச் சைவநெரியை நாம் விரும்பிப் பெறுமாறின்றி நம் குலத்திற்கே யியற்கையிலமையத் திருவருள் புரிந்த சிவபிரான் பெருங்கருணையைப் பன்முறை வழுத்துவோமாக .
நகரத்தாரும் சைவசமயமும் .
இனி , நம்முன்னோரெல்லாம் இச்சைவ நெறியையே யவலம்பித்து ஒழுகினவரென்பதை, நம் மரபினர் சரித்திரத்தானும் , சிரமாப நோதன புர மான்மியமென்னும் இளைசப்புராண முதலியவற்றானும் தெளியலாம் . நம்மவர் ஆதியில் நாக நாட்டிலே சாந்தியாபுரி யென்னு நகரத்திலிருக்கும்பொழுது கோபாதீசுவரசுவாமி தரிசனமும் , சதாசிவ குருபீடத்தில் தீக்ஷாகிரியையும் , பெற்றிருந்தமையானும் , பின்னர்க் கலியுகம் ௨௦௪ ல் தொண்டைமண்டலத்திற் காஞ்சிபுரத்தி லிருக்கும் பொழுது சத்திபுரீசுவரர் தரிசனமும் , அருணகிரி சிவசங்கராசாரியரிடத்தில் தீக்ஷாகிரியையும் மரகத விநாயகர் பூஜையும் பெற்றிருந்தமையானும் , பின்னர்க் கலியுகம் 2312 ல் சோழதேயத்தில் காவிரிப்பூம் பட்டினத்திலிருக்கும்பொழுது உருத்திர பதீசுவர தரிசனமும் , சிதம்பரத்திலுள்ள பதஞ்சலி க்ஷேத்திரத்தில் ஈசான சிவாசாரியரிடத்தில் தீக்ஷாகிரியையும் பெற்றிருந்தமை யானும் , கலியுகம் 3808 முதல் இளையாற்றங்குடி முதலிய ஒன்பது கோயில் சுவாமி தரிசனமும் பாண்டிநாட்டில் ஈசான சிவாசாரியராகிய பாண்டிநாட்டு ஆசாரியரிடத்து தீக்ஷையும் , பின் ஒரு காரணத்தால் கலாமடத்து ஆசாரியர் உத்தரவுப்படி இல்லஞ் சேரிப்பட்டணமாகிய பாதரக்குடிச் சிவாசாரியரிடத்துத் தீக்ஷையும் , பெற்றுவருகின்றமையானும் ,தொன்றுதொட்டுச் சிவாலயப்பிர திட்டை விபூதி , ருத்திராக்ஷதாரண முதலியன வுள்ளமையானும் , நம் பழமையோரும் நாமும் சைவநெறியையன்றி வேறு நெறிகளைச் சிறிதுங் கைப்பற்றினேமல்லே மென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கும் . இளைசைப் புராணத்தில் நம்மவர் சிதம்பரத்தில் அகோர சிவாசாரியரிடம் தீக்ஷைபெற்றுப் பின் அவரா ஞைப்படி பாண்டிநாட்டில் ஈசான சிவாசாரியரிடம் பெற்றுவருகின்றனரென வுள்ளது . நம் முன்னோர் வகுத்த சாதிமுறை நியாயங்கள் பலவற்றுள் “சிவமதத்திலேயே இருத்தல் வேண்டும் அந்நிய மதங்களிற் சேரக்கூடாது “ என்பதுமொன்று , இதனாற் சைவத்தினம்மவர் களுக்குள்ள அபிமானம் இவ்வளவென்பதை யூகிக்கலாம் . எல்லாப் பொருள்களையும் பற்றறத்துறந்தவரும் , படித்தாரைப் பரவசமாக்கிச் சிவானந்த வெள்ளத்து ளமிழ்த்தும் அருட்கவி கூறும் ஆன்ற நாவுடையாரும் , வரம்பிலா நிதிக்கு வையத்துரும்பென மதித்து ஒழித்தவரும் ,மகாஞானியுமாகிய பட்டினத்தடிகளும் நம் மரபில வதரித்துள்ளரெனின் , நம்குலமாட்சி யெவ்வளவு ஏற்றமுடையதாகும்? அப்பெருமான் நம் மரபினரென்பதனை , இன்றும் அவ் அடிகள் மரபினராகிய நம் வணிக மக்கட்குப் பட்டின சாமியார் என்னும் பட்டப்பெயர் வழங்கப்பட்டும் விவாக காலத்தில் எழுதப்படும் “இசைகுடிமானம்” என்னும் சாசனத்தில் வரையப்பட்டும் வருதலால் ஐயமின்றித் தெளியலாம் . இன்னும் நம்குலத்துப் பண்டையோர் மாட்சிகளை “சிவபெருமானை மேலாத்தெளிந்த நல்லுள்ள முள்ளோர்” “கொடைபொறை யடக்கம்வாய்மை குறைவிலா விரக்கமாதி, வடுவறு குணங்கள்யாவும் வாழ்வதற் குறையுளானோர் “ என்பனவாதி இளைசப்புராணச் செய்யுட்களானும் , கல்வெட்டிலும் தாமிர சாசனத்திலுமிருந்து சிலவருடங்களுக்குமுன் புத்தகவுருவமாக வெளிப்படுத்தப்பட்ட நம் வைசிய மக்கள் சரித்திரத்தானும் , விளக்கமாகக் காணலாம் . இங்ஙனம் தக்கசீரும் மிக்கசெல்வமுஞ் சிவவழிபாடும் பெற்று நல்வாழ்வெய்திய வைசியப் பெருமக்கள் மரபிற்பிறந்த நம்மனோர்நிலைமை இக்காலத்தின் மதவிஷயத்திலும் வேறுசில விஷயத்திலும் செவ்விதாகக் காணப்படவில்லை . சைவசம யத்தினின்றும் அந்நியமதப் பிரவேசஞ்செய்தல் நம் மக்களிடத்துச் சிறிது மின்றெனினும், நமக்குரிய சைவசமயா நுட்டானங்களிற் சிலவற்றைக் கைவிட்டிருக்கின்றோ மென்பது எல்லாரானும் ஒத்துக்கொள்லற்பாலதே . சைவசமயிகளுக்குரிய முக்கிய கடமைகள் விபூதி யுருத்திராக்கதாரணம் , பஞ்சாக்கரஜபம் , சிவாலய வழிபாடு செய்தன் முதலியவைகளேயாம். இவற்றுள் விபூதி யுருத்திராக்க தாரண மகிமைகள் பிருகஜ்ஜாபாலம் உருத்திராக்க ஜாபால முதலிய உபநிடதங்களிலும் சிவாகமபுராணங்களிலும் விசேடமாக் கூறப் பட்டுள்ளன . பாச ஞான , பசு ஞான நீக்கிப் பதி ஞானமாகிய சிவ ஞானத்தை யளிப்பனவும் , மகாபாதகோபபாதங்களைப் போக்கிச் சுத்திதருவனவும் இவைகளேயா மென்பதனை சிவவசனமாக் கூறப்பட்ட வடமொழி சுலோகத்தானும் , வாக்கியங்களானுமுணர்க . விபூதி ருத்திராக்ஷங்களைத் தாரணஞ் செய்த பெரியோர்களை யெவன் பரிகாசஞ் செய்கிறானோ அவன் பிறப்புக் கலப்புள்ளதென்று அறியவேண்டு மென்பதை வாசிஷ்டலைங்கத்தாலுணர்க . இத்துணைப் பெருமைவாய்ந்த இச்சிவசின்னங்களைத் தொன்றுதொட்டு நாமும் , நம் பெண்மக்களும் , நம் சிறார்களும் இடைவிடாது அணிந்துகொள்ளு வதில் தவறு ற்றிலேமென்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது . இவ்விடயத்தில் நம் மனதை நழுவவிடாதுபற்றி நிற்பச்செய்த பரமபதியைப் பன்முறை வழுத்துவோமாக .
பஞ்சாக்கரப் பெருமை
இனி , இவற்றிற்கெல்லாம் உயிராகவுள்ள பஞ்சாக்கர உபதேசத்தை நம்மவரிற் சிலர் சிலநாளாகப் பெறக்கூடாமலிருப்பது மிகவும் வருந்தத்தக்கதே . வேதத்தில் மந்திர அரசாக விளங்குவதும் , பிரணவப்பொருளாகவுள்ளதும், பதி பாசங்களி நியல்களைக்காட்டு வதும் , தன்னை நினைப்பார்க்கு வீட்டின்பத்தைத் தருவதும் இப்பஞ்சாக்கரமேயாகும் . இதனை ,
“ஓது மந்திரங்கட்கெல்லா முயர்ந்திடு முயர்ந்துநின்ற
தீதினான் மறையின்சார மாகுமாற் சிவன்ற னன்பர்
ஏதமின் முத்திவீட்டை யெய்திடக் கொடுக்குமென்று
மாதியா யுறையுமீச னுருவமா யமருமன்றே”
என்னும் வாயுசங்கிதையானுந் தெளிக .
இன்னும் இம்மந்திரம் வேதங்களின் மத்தியிலவைகளுக்கு உயிர் நிலையாக விளங்குதலைக் காட்டுவேன் . வேதங்கள் இருக்கு , எஜூர் , சாமம் என மூவகைப்படும் .அவற்றி நடுவிலுள்ளது எஜூர் வேதம் ; அஃது ஏழு காண்டங்களையுடைத்து . அவற்றுள் நடுக்காண்டமாகிய நாலாவதுகாண்டம் ஏழு சங்கிதைகளையுடைத்து ; அவ்வேழுள் முன்பின் ஆறு சங்கிதைகளை யொழித்து மத்திய சங்கிதையின் மத்தியிலுள்ளது இப்பஞ்சாக்கர மந்திரம் . வேத புருடனுக்கு ஸ்ரீ ருத்திரம் கண்ணும் பஞ்சாக்கரம் அக்கண்மணியும் “சிவ” என்பது கட்பார்வையுமாமென்ப . இது , நகாராதியாகவும் சிகாராதியாகவும் ஓதப்படும் . சிகாராதியாக ஓதலே சிறந்ததாகும் . இதனை ஓதுந்தோறு மனசை யுருக்குந் திருவாசக ஆசிரியராகிய ஸ்ரீமந். மாணிக்க வாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் குருமூர்த்தியாக எழுந்தருளி யுபதேசஞ் செய்யும்பொழுது நிகழ்ந்த செய்தி கூறும் திருவாதவூரர் புராணம் ,
“எவர்க்கு மெய்ஞ்ஞானமாஞ்செழுத்தை யுமுணர்த்த வேண்டி
யவத்தொழி லகற்றியாளுஞ் சிவத்தை முன்னாக மாறித்
தவப்பெரு வடிவங்கொண்டார் தண்டமிழ் பாடுமன்பர்
செவிப்புலன் வழியே சிந்தை யுறத்திரு வாய்மலர்ந்தார்”
என்று கூறுதலானும் அங்ஙனம் உபதேசிக்கப்பெற்ற நம் மணி வாசகனார் “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்” என்று திருவாய் மலர்ந்தருளியமையானுந் தேறுக . ஸ்ரீ பஞ்சாக்கரத்திற் சிகாரம் சிவமும் , வகாரம் அருளும் , யகாரம் ஆன்மாவும் , நகாரம் திரொதையும் , மகார மலமுமாக அறிதல் வேண்டும் . இவற்றுள் , முன் இரண்டெழுத்துக்கள் பதியும் பின்னிரண்டெழுத்துக்கள் பாசமும் நடுகின்ற எழுத்தொன்று பசுவுமாகும் . பதிக்கும் பாசத்துக்கு மிடைப்பட்டதாய்ப் பதியோடு சேர்ந்து பதியாகியும் பாசத்தோடு சேர்ந்து பாசமாகியும் அப்பாசமும் பதியுமாகமற் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடையது பசுவென்னு முன்மையு மிதனானிலைபெறும் . பதியோடு கூடிய சம்பந்தத்தை ஞானநடனமெனவும் , பாசத்தோடு கூடிய சம்பந்தத்தை யூனநடன மெனவும் கூறுவர் பெரியோர் . ஊன நடனமொழிந்து ஞான நடனந்தானே கோடற்பாலதென வேதாகமங்கள் முழங்கலான் நகர மகாரங்களாகிய மலங்களைப் பின்றள்ளி யகாரமாகிய ஆன்மா வகாரமாகிய அருள் கூட்டச் சிகாரமாகிய சிவத்தில் ஐக்கியமாகும் . சிதம்பரத்திலே ஞானமயமாகிய சிவகாமியம்மையார் காண ஆன்மாக்களுய்தற்பொருட்டு ஆனந்த தாண்டவஞ் செய்தருளும் சபாநாயகர் வடிவம் ஸ்ரீ பஞ்சாக்கர ரூபமென்பதை உண்மை விளக்க முதலிய சித்தாந்த சாத்திரங்களானுணர்க . இனி , அருமருந்தன்ன இப் பெருமந்திரத்தை யெல்லா இலக்கணங்களு நிரம்பிய ஞானா சிரியரை யடுத்து அவரால் சிவாகமத்திற் கூறிய சைவதீக்ஷை செய்யப்பெற்று உபதேசமுகமாக் கொள்ளல்வேண்டும் .
தீக்ஷாமகிமை .
தீக்ஷையாவது, ஆன்மாக்களிடத்துள்ள சிவசக்தியை வெளிப் படவொட்டாது தடையாக மறைத்துநிற்கு மலசக்தியைக் கெடுத்துச் சிவதத்துவத்தைக் கொடுப்பதாகிய சிவசக்திக் கிரியையாகும் . இன்னும் இச்சிவ தீக்ஷையினாலேயே மோக்ஷ முதலிய எல்லா நலன்களும் சித்திக்கும் என்னுமுண்மையை “சைவநூலிற் கூறப்பட்டதும் பாசமூன்றையுந் தவிர்ப்பதும் மேலானது மாகிய தீக்ஷையைத்தவிர வேரோரு ஆசிரமும் இவ்வுலகத்திலே மனிதருக்கு மேன்மையன்று . ஆதலால் தீக்ஷையிற்றான் மோக்ஷம் . ஆசிரமங் களினாலுமற்றைக் கருமங்களினாலும் மோக்ஷமில்லை . அத்துவ சுத்தியின்றி முத்தியை விரும்பு மனிதர் கோலின்றி நடக்கத் தொடங்கிய குருடர் போல்வர் . தோணியின்றிக் கடலைக்கடக்க விரும்பினவர் போல்வர்” எனவரும் வாயு சங்கிதை முதலிய பிரமாணங்களானும் விரித்துக் கூறும் சிவாகமப் பிரமாணத்தானும் ஐயமின்றித் தெளிக, இனி, அத் தீக்ஷையானது ஒளத்திரி தீக்ஷையெனவும் , மானசதீக்ஷை , சாத்திர தீக்ஷை , யோகதீக்ஷை யெனவும் பலதிறப்படும் . இவற்றுள் ஒளத்திரி தீக்ஷையானது ஞானவதி , கிரியாவதியென இரண்டு வகைப்படும் அவ்விரண்டும் தனித்தனி சமயம் , விசேடம் , நிருவாணம் என மூன்றுவகைப்படும் . இவற்றுள் ஒளத்திரி தீக்ஷை பெறுதற்குப் பிரமக்ஷத்திரிய வசிய சூத்திரர்களாகிய நால்வருணத்தாரும் . யோக்கியராவர். இன்னும் இதன்விரிவும் முறையும் சிவாகமபத்ததிகளிற் செவ்வையாக் காணலாம் .
என் இனிய நண்பர்களே ! சிவவழிபாட்டிற்குரிய யோக்கியதை யைப் பறப்பிக்கும் இத் தீக்ஷா கிரியையை நம் வணிக மக்கள் சென்ற பதினைந்து வருடங்களாக பாதரக்குடி ஆசாரிய பரம்பரையிலுள்ள கருத்தரின் வியவகாரத்தால் இழந்து அருமையாகப் பெற்ற பிறப்பின் பயனைப் பெறாதிருக்கின்றனர் . பதினைந்து வருடங்களுக்கு முன்னரே தீக்ஷை பெறத்தக்க பருவமுள்ளவர்களெல்லாரும் தீக்ஷையுடையரா யிருக்கின்றனரோ வெனின் ; அதுவுமில்லை . அதற்குக் காரணம் , விவாகமுடிந்தபின்னர் தீக்ஷை செய்து கொள்ளல் என்னும் வழக்கமும் , பன்னூற்றுவர் ஒன்றுகூடியே செய்துகொள்ளவேண்டுமென்னும் வழக்கமுமேயாகும் . இவ்வழக்கங்கள் சில செளகரியங்களைக் கருதி யாசகரிக்கப் பட்டவை களேயன்றி நூல்களால் ஏற்படவில்லை யென்பது யாவரு முணர்வர் . தீக்ஷை விவாக காலத்திற்கு முன்னரே ஏழாம் ஆண்டிலாவது ஒன்பதாம் ஆண்டிலாவது பெறவேண்டுமென்று ஆகமம் கூறுதலை நோக்காது புத்திர பெள த்திரர்களையெல்லாங் கண்டுகளித்தபின்னர் அவரெல்லாம் பக்கத்திற் சூழ்ந்துமகிழத் தீக்ஷை செய்துகொள்ளும்படி யெவ் வாகமம் விதிக்கின்றதோ ? அறிந்திலேன் . அஃதொன்றோ , ஒருமுறையிற் குண்டமண்டலமிட்டு ஆகுதி முதலியன செய்து ஒருங்கே சிலர்க்கு தீக்ஷை செய்யவேண்டுமாயின் தனித்தனியும் சில சம்ஸ்காரங்கள் செய்தல்வேண்டுமென ஆகமங்கள் கூறியிருப்ப . அதனை நோக்காது பன்னூற்றுவ ரொருங்குகூடி ஒருவரை யொருவர் சரீரபலத்தாலும் பொருள் வலியாலும் பிற்படுத்தி மிக்க சிரமத்தோடு முந்துதல் எப்பயன் கருதியோ ? இனியேனும் , இத்தகைய இல்லாத விதிகளை வழக்கமென்று கொள்ளாமல் முற்குறிப்பிட்டபருவம் வந்தவுடனே ஆசாரியனிருக்கு மிடத்திலாவது அன்றி ஆலயங்களிலாவது விதிப்படி தீக்ஷைபெறும் முறையை நம் பழக்கத்திற் கொண்டு வரவேண்டியது அவசியமென்று தெரிவித்துக்கொள்கின்றேன் . அநுட்டானம் ஜபமுதலியன சிறு பொழுது முதல் ஆசரித்துவந்தால் மனம் அவற்றிற் பதிந்து நிற்பப் பயனுறுவேமேயன்றி , சிவகீதையிற் கூறியபடி கூற்றுவனார் இருப்புப் பாசத்தானும் , சுற்றத்தார் உறவுக் கயிற்றானும் இழுத்தற்குரிய பருவம் நெருங்கி வரும்பொழுது நாம் செய்யக்கடவது யாதுள்ளது .
ஆசாரிய இலக்கணம் .
இனி , இத்தீக்ஷாகாரியஞ் செய்தற்குத் தக்க ஆசாரியராவார் யாவரெனின் ; சமயவிசேட நிருவாண தீக்ஷையுடையராய் , ஆசாரியாபிக்ஷேகம் பெற்றவராய் இலக்கிய இலக்கண தருக்க நூல்களைக் கற்றுணர்ந்தவராய் , வேதாகமங்களை யோதித் தெளிந்தவராய் ,சித்தாந்த சாத்திர ஆராய்ச்சியுடையரா யுள்ளவரே யாவர் . நான்கு வருணத்தாரும் ஆசாரியராதற்குத் தக்கவரேயாவர் . இதற்குப் பிரமானம் வடமொழியில் வரும் சைவபுராணத்தானும் ஆகமங்களானுமுணர்க . இந் நான் கு வருணத்தாருள்ளும் பிராமணர் தம் வருணத்தாருக்கு , மற்ற மூன்று வருணத்தாருக்கும் க்ஷத்திரியர் தம்மவர்க்கும் மற்ற இரண்டு வருணத்தாருக்கும் வைசியர் தம்மவர்க்கும் சூத்திரர்க்கும் , சூத்திரர் தஞ்சாதியினர்க்கும் ஆசாரியராகலாம் . இவருள் முதன் மூவர் வேதாகமங்களை யோதுதற் கும் பின்னவர் ஆகமங்களை யோதுதற்கும் அதிகாரிகளாவர் .. ஆகமங்களை யோதுதற்கு நால் வருணத்தாரும் சிவ தீக்ஷை பெற்றா லொழிய அதிகாரிகளாகார் . பிரமசரியாசிரமம் , கிருகத்தாசிரம மாகிய இந் நிலையுடையாரே ஆசாரியராதற்கு யோக்கியராவர் . வானப்பிரத்தம் சந்நியாசம் ஆகிய இந் நிலையுடையார் ஆசாரியாரா தற்கு அருகரல்லர் . இதற்குப்பிரமாணம் “பிரமசரிகிருகி யென்னவே பேசு, மிருவருமேதேசிகரென்றெண்” சந்யாசி பாரியுட னேவனத்திற் றங்குமவ , னென்னுமிவர் தேசிகரன்றே , எனவரும் சைவசமய நெறி வெண்பாக்களாலுணர்க . சைவாகமத்தில் ஞானகாண்டம் கிரியா காண்டமாகிய இவைகளில் ஓரிலக்கங்கிந்தமேனும் ஓதினவரே ஆசாரியாரெனவும் , ஐம்பதினாயிரம் அல்லது இருபத்தையாயிரங் கிரந்தமேனும் ஓதினவராக இருத்தல் வேண்டுமெனவு நூல்கள் கூறுகின்றன . இவ்வளவும் வடமொழியில் தெரிந்தவராக இருப்பினும், இது தமிழ் நிலமாதலின் தம்மையடைந்த மாணாக்கர்கள் நல்வழிப்படப் போதித்தற்கு அம்மாணாக்கரெல்லாம் வடமொழிப் பயிற்சி பெற்றிருத்தல் கூடாமையால் தமிழிலுள்ள இலக்கிய இலக்கண சித்தாந்த சாத்திரங்களையும் தேவார திருவாசக முதலிய அருட்பாக்களையும் ஓதித் தெளிந்தவராகவும் இருத்த்ல்வேண்டும் . ஜீவகாருண்ணியம் , கடவுட்பக்தி , நடு நிலை , சொல்வன்மை , பிறர்மனைநயவாமை , வரவின் மகளிர்ச் சேராமை முதலிய உயர்குணங்கள் வாய்ந்தவராகவு மிருத்தல் வேண்டும் . தம்மைச் சார்ந்த சுற்றத்தாரைப் பேணுதலினும் வேறு பல உலக விடயங்களினும் , பொருட்சேர்த்தலினுமே முக்கிய நோக்கமுடை யாரை ஆசாரியராகக் கொள்ளல் கூடாது . அவர் ஆசாரியராயின் தம்மையடைந்த மாணாக்கர்களைப் பொருட்பற்றிக் கருதுவாரே யன்றிஅன்னார் நன்மையெய்தலைக் கருதமாட்டார் . கருத்துவகை யங்ஙனமாயின் அவரிடத்துப் பெறுந்தீக்கை யுபதேசங்கள் உரிய பயன்களைச் செய்யா . இனி , எல்லா இலக்கணங்களு நிரம்பிய ஆசா ரியரிடத்து மாணாக்கர்கள் நடந்துகொள்ள வேண்டியவை பலவுல . வடமொழிப் பிரமாணப்படி மாணாக்கன் உடல் பொருள் ஆவி மூன்றும் ஆசாரியர்பொருட்டுத் தத்தஞ் செய்தற் குரியவனாகின்றா னெனின் ; வேறு விரிப்பதெற்றிற்கு ? இனி, நம் வணிக மக்கட்கு இற்றைஞான்று ஆசாரியத் தானங்களாகவுள்ளவை கலாமடத்துள்ள பரம்பரையும் , பாதரக்குடிப் பரம்பரையுமேயாம் . இவை ஈசான சிவாசாரிய பரம்பரையென்று நமது சரித்திரமும் இளைசைப் புராணமுங் கூறுகின்றன . சில வருடங்களாக பாதரக்குடியாரும் நாமும் ஆசாரிய மாணவக முறைக்கு விரோதமான செய்கைகளிற் றலைப்பட்டுப் பொருளையுங் காலத்தையும் வீணாக்கினோம் . அவ்வாசாரியர் நம்மிடத்துச் செய்யவேண்டியவைகளிற்றவறுறினும் , நாம் அவரிடத்து நடந்துகொள்ளவேண்டியவைகளிற் பிழை படினும் ஆசாரிய சிஷ்ய முறையை நோக்கிப்பொறுத்துக்கொண்டு நடக்க வேண்டியவைகளைச் சீர்பெறச் செய்தலை விட்டு இங்ஙனம் கலாம் விளைத்தல் நம்மவர்க்கும் அவ்வாசாரியர்க்கும் தக்கதொரு காரிய மன்றாகும் . கூடிய விரைவில் எவ்வித நெறியானும் அவ்வாதீன பரம்பரயைச் செவ்விதாக்கிச் சிவாக மோக்தசைவா நுட்டானத்தைப் பெறவேண்டுவது நமது கடமையாகும் . தற்போது கலாமடத்திலும் சமீபகாலத்திற் சிவபதமெய்திய ஆசாரியர்க்குப்பின்னர் இன்னாரை யத்தானத்தில் உரியவராச் செய்தல் என்னும் நிச்சயம் உண்டாகாமல் அவ்வாதீன சீடர்களாகிய நம்மவரும் தீக்ஷையின்றி யிருக்கின்றனர் . கூடிய விரைவில் அவ்வாசாரியமூர்த்திகளின் சுற்றத்தாருள் சிறுவராக இருப்பினும் உரிய குணங்களும் பிற இலக்கணங்களும் , அமைந் திருப்பின் அத்தானத்திலமரச்செய்து பின்னர்க் கல்வி விடயத்தில் நாம் அஜாக்கிருதையாக இராமல் ஒவ்வொரு நாளும் நங் கவனத்தைச் செலுத்தி முன் குறிப்பிட்ட இலக்கணங்களெல்லாம் அவரிடத்து நிரம்பும்படி செய்தல்வேண்டும் . இவ்விடயத்தி லிப்பொழுதே நம் கவனஞ் செல்லுதலின்றெனில் பின்னர் மாறுபாடு பல விளையு மென்பதை நீங்களே யறிந்துகொள்வீர்கள் . ஆசாரியர் தக்க கல்வியும் ஒழுக்கமும் நிரம்பினராக இருத்தல் நமது கல்வியொழுக்கங்களின் விருத்திக்கேதுவாகும் . இவ்விடயத்தில் தக்கபடி காலத்திற் கேற்றவாறு திருத்திக்கோடற்குரிய அறிவும் ஆற்றலு நிரம்பிய உங்களுக்கு யான் கூறவேண்டுவது யாதுளது ? முடிவாக் கூறுமிடத்து நாம் மத விடயமாகத் திருந்தவேண்டியவைகளிலிது முக்கியமான தொன்றாகும் . எவ்வாற்றானும் இவ்விரண்டு ஆதீனங்களையும் கூடிய சீக்கிரம் சீர்படுத்திக் கோடல் நம் கடமையே .
ஜீவகாருண்ணியம் .
இனி , எல்லா மதத்தினரு மேற்கொள்ளத் தக்கதும் , நம் சமயத்திற்குச் சிறப்பாக வுள்ளதுமாகிய ஒழுக்கம் ஒன்றுள்ளது . அதுதான் ஜீவகாருண்ணியமாகும் . இவ்வொழுக்கம் எல்லாவற்றினுந் தலைசிறந்த தென்பது பல நூல்களின் கருத்து . இதனை மேற்கொள்ளு வோர் இன்றியமையாது மேற்கொள்ளவேண்டியது புலால்வுணவை நீக்குதலேயாம் ஒருவன் இவ்வுணவைக் கொள்ளினுஞ் சீவர்களிடத்துக் கருணையுடையனாதல் கூடும் எனக்கருதுவாருமுளர் .அவர் , “பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி , யாங்கில்லை யூன் றின்பவர்க்கு “ என்னுந் திருக்குறளையும் , அதன் விசேடவுரையில் “ஊன்றின்றாராயினும் உயிர்கட்கொரு தீங்கு நினையாதார்க்கு அருளாடற்கிழுக்கில்லை யென்பாரை மறுத்து அஃதுண்டென்பது ….. கூறப்பட்டது “ என்று கூறிய பரிமேலழகர் கருத்தையுஞ் சிந்திப்பாராக வேதங்களில் வேள்வி நிமித்தம் கோறலும் ஊனுகர்தலும் துறக்க வின்பங்களை விளைக்குமென்றும் பாவச்செயலாகா வென்றும் விதித்திருப்பவும் , ஒவ்வோரொழுக்கத்தையுஞ் செவ்விதுணர்ந் திருவள்ளுவதேவர் “அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்றன் , உயிர் செகுத்துண்ணாமை நன்று” என அவ்வேள்விகளான் வரும்பயனினும் இக்கொல்லா விரதத்தான் வரும் பயனே பெரிதாமென்று கூறினார் . இவ்விழுமிய அருளொழுக்கத்தை நம்மவரிற் சிலர் கைநழுவ விட்டிருக்கின்றனர் . நம் பழஞ் சரிதத்தில் வகுத்த சாதி முறை நியாயங்கள் பலவற்றுள் “ஜீவவதையான வியாபாரங்கள் செய்கிற தில்லை” என்பது மொன்று. இதனால் வியாபார நிஷேதந்தானே யன்றி உண்ணல்கூடாதென்பதின்றேயெனின்நம்மவரிடத்துப் புலாலு ண்ணல் அக்காலத்தின்மையானும் , சமயாசாரம் இடந்தராமையான் அதனை யெதிர்காலத்திற் கொள்ளற்கு ஒருப்படாரெனுந் துணிவானும், வியாபார நிமித்தங் கோடல் ஒரு சமயம் நேரவுங்கூடும் ; அதனை விலக்கலே யவசியமாகுமென்னுங் கருத்தானும் அங்ஙனம் எழுதினா ரென்க . முன் இல்லாத இப்புலாலுணவை நம்மவரிற் சிலர் பின் விரும்புதற்கேது என்னை யெனின் ; இந்நாட்டில் நம்மவர் குடியேறிய பின்னர் இடையே சிலகாலம் புலானுண்ணன் முதலிய நிஷேதாசார முடைய அநாகரிக மாக்கள் பழக்கத்தில் விருப்புடையரா யிருக்க நேர்ந்தமையான் அவர் வழக்கங்கள் நம்மவரையும் பற்றி யிருக்கலாம் அதனாலே தான் பரமபதியாகிய சிவ பெருமானை யன்றி வேறு தெய்வங்களை வழிபடுதலில்லாத நம் மக்களிற் சிலர் பிற்காலத்தில் அற்பபிரயோஜனங்களைத் தரக்கூடிய காளி, கருப்பன் முதலிய சிறு தெய்வ வழிபாட்டையுங் கைப்பற்றினர்போலும் .”யாதொரு தெய்வங் கொண்டீரத் தெய்வமாகி யாங்கே , மாதொருபாகனார் தாம் வருவர்” என்றபடி. அப்பரமபதி நாம் விரும்பிய உருவத்தைக் கொள்ளினும் பலனளிப்பதில் அவ்வவ்வுருவங்களுக்குத் தக்கபடி கொடுக்குமியல் பினராதலானும், நிரதிசய இன்பமாகிய மோக்ஷத்தைத் தரத்தக்க அவரது உண்மையுருவத்தை வழிபாடு செய்தற்கு யோக்கியதையுடை யோர் அதனை யொழித்து அற்பப் பிரயோஜனத்தைத் தரத்தக்க வேற்றுருவங்களைவழிபடுதல் தக்கதன்றாதலானும் , சைவர்களாகிய நமக்கு அவ்வழிபாடு அவசிய மின்றென்க . அரச சக்தியொன்று அரசன் முதல் சிறு சேவகன் வரைய மைந்திருப்பினும் அரசனிடத்துப் பெறு நன்மை கீழதிகாரிகளிடத்துப் பெறுதற்குக் கூடாதவாறு போல பரமேசுவரனுடைய சக்தி யெல்லா வுருவங்களினு நிறைந்திருப்பினும் சிவலிங்க முதலிய வழிபாட்டினாற் பெறும்பயன் வேற்றுருவங்களின் வழிபாட்டாற் பெறுதல் கூடாதென்க . இது கருதியே ஸ்ரீ சங்கராச் சாரிய சுவாமிகளும் தமது சிவானந்தலகரியிற் கூறியருளினார் . இவ் விசாரத்தால் நம்மவரிற் சிலர் இடைக்காலத்தில் மேற்கொண்ட புலாலுணவையும் சிறு தெய்வ வழிபாட்டையும் ஒழித்த்ல் வேண்டு மென்பது போதரும் . ஒருவன் குழவிப்பருவத்தே தன் அவயங்களில் மறைத்தற்குரியவைகளை மறையாமையும் , அறிவு முதிர்ந்த பின்னர் மறைத்துக்கோடலும் இயல்பாதலின் இதுவரை மேற்கொண்ட அவை யிற்றை யினி யொழித்தல் தகுமென்க.
பெண் கல்வி.
இனி , நம் பெண் மக்கள் விஷயமாகக் கவனிக்க வேண்டியவை களுஞ் சிலவுள . எல்லாக்கற்பிலக்கணங்களு நிரம்பப்பெற்ற நம் பெண்மக்களுட் சிலர் நம் சமயாசாரப்படி கிருகத்திற் செய்ய வேண்டிய நித்தியகாரியங்களைச் செவ்வையாகச் செய்தலிற் சிறிது அசிரத்தை கொள்ளுகின்றனர் . அதனையும் , குணவகைகளின் மாறுபட்டிருப்பின் அவற்றையும் திருத்தலும் நித்திய ஒழுக்கங்களைக் கற்பித்து அவ்வழி நிறுத்தலும் அவரவர் புருடர்களுக்குரிய கடனாகும். இவற்றிற்கெல்லாம் நம் பெண்மக்களுங் கல்வியுடையராயிருப்பின் மிக நலமாகும் . பண்டைக்காலத்தில் ஒளவையார் பூதப்பாண்டியன் றேவியார் , வரதுங்கராமபாண்டியன் தேவி முதலிய பெண் மக்கள் இலக்கிய இலக்கண வரம்பு கண்ட பெரும் பண்டிதைகளாக விளங்கிரென்பது அன்னாரியற்றிய அருமை நூல்களானுஞ் செய்யுட்களானும் விளங்குகின்றது . பெண்மக்கள் கல்வியுடையவரா யிருப்பின் நிலைபிறழ்ந்து கெடுவர் என்று கூறுவாருஞ் சிலருளர் . கல்வி யில்லாத பெண்கள் சிலர் முறைபிறழ்ந்து கெடுதற்கு அவர் கூறுங் காரணமென்னையோ? கல்வியுடையவராயிருப்பின் கூடியவரை தம் மதிப்பைப் பேணிக் கொள்வதிலவர் கருத்துச்செல்லு மென்பதிலையமின்று . இப்பெண்கல்வி விடயமாக இக்காலத்து நாகரிகமக்கள் பலர் பல பத்திரிக்கைவாயிலாகவும் புத்தகவாயி லாகவும் வெளியிட்டு வருகின்றனராதலின் , யானிதுவிஷயமாக விரிக்காது ஒன்று கூறி முடிக்கின்றேன் . அஃதாவது நம் பெண் மக்களைச் சிறுபருவத்தில் தந்தைமார்களும் பின் அவரவர் புருடர்கலும் கல்வியானும் பழக்கத்தானும் சமயாசார நியமத்திற் சிரத்தையுடையராகச் செய்வதேயாம் .
விவாகமுறை
இனி ,நம்மவர் விவாக முறையைப்பற்றிச் சில ஆராயவேண்டுத வசியமாகின்றது . விவாகமாவது , பிரமசரியம் , வானப்பிரத்தம் , சன்னியாசம் என்னு மூவகை நிலையிலுள்ளாரும் அவரவரொழுக்க நெறிகளின் முடியச்செல்லுமளவும் அச்செலவிற்குப் பசி நோய் குளிர் முதலியவற்றான் வரும் இடயூறுவராமல் உண்டியு மருந்தும் உறையுளு முதலியவுதவி அவ்வந்நெறியில் வழுவாமற் செலுத்தற்கும் பாதுகாப் பின்றித் துன்புறுவோர்க்கும் வறுமையாளர்க்கும் தென்புலத்தார்க்கும் , முறையே களைகணாதற்கும் உணவு முதலிய கொடுத்தற்கும் , நீர்க்கடன் முதலிய செய்தற்கும் உரித்தான இல்லறத்தை நடாத்தற்கு ஒரு தலைவனும் தலைவியுங் கூடுங் கூட்டமாகும் . இம்மணம் எட்டுவகைப்படுமென்று நூல்கள் கூறுகின்றன . இவற்றுள் , சில மணம் உயர்ந்த வருணத்தாரானும் சில மணம் இழிந்தவர்களானுங் கோடற் பாலனவாம் . இவற்றுட்பிராசாபத்தியம் என்னு மணமே மகட்கொள்ளு வோரிடத்து கொடுப்போர் பரிசம் வாங்கலாமென்று விதிக்கின்றது . மற்றவை இங்ஙனம் விதித்தில . இனி , அப்பிராசாபத்திய விவாக விதியிற் கூறியாங்குப் பரிசம் வாங்குவதானால் எவ்வளவு வாங்கலாம் ? அங்ஙனம் வாங்கியவற்றை யென்செய்யலாமெனின் : வாங்கும் பரிசத்துக்கிரட்டி சேர்த்து தம் மகட்குக் கொடுத்துவிடல் வேண்டுமென்று அவ்விவாக விதி கூறுகின்றது . இதனை “அரிமதருண் கணாயிழை யெய்துதற்குரியவன் கொடுத்த வொண் பொருளிரட்டி , திரிவின்றந்தை திண்ணிதிற் சேர்த்தி , யரியதங்கிளையோடமைவரக் கொடுத்தல் , பிரிதலில்லாப் பிராசாபத்தியம் .” என்னுஞ் சான்றோர் கூற்றானுமுணர்க . ஆனால் , இதனினின்றும் நாம் ஊகிக்கவேண்டியது பெண்ணுக்குரிய சீர் முதலியவை கொடுத்தற்குப் போதிய பொருளில் லாதானொருவன் , அதற்கு வேண்டிய அளவுமுழுதும் வரனைச் சேர்ந்தாரிடத்து வாங்கிக்கொடுப்பினுங் குற்றமின்றென்பதேயாம் . இங்ஙனமின்றி மிகுதியாகப்பொருளை வாங்கிக்கொண்டு பெண் கொடுத்தலும் , அப்பொருளாற்றம் சீவனகாரியம் நடைபெற விரும்புதலும் மிக்க பாவச்செயலாகுமென்று அற நூல்கள் கூறுகின்றன . இதனை மநுஸ்மிடுதியானும் , “பொருள்விழைந்த ணங்கைக் கொடுத்தவன்றனக்கும் புகன்ற முற்குற்றமேயடுக்கும் “ எனவரும் தமிழ்ச் செய்யுளானு முணர்க . இவ்விலக்குச் செயல் நம்மவரிற் சிலரிடத்து சற்றுப் பெருகிவரத் தலைப்படுகின்றது. அறிவுடையோர் கூடியவரை இதனைச் சிந்தித்து நூன்முறையையுங் குலப்பெருமையையும் போற்றுவாராக . இனி , நம்மவரிற் றக்க பொரு ளுடையாரிடது இச்செயலின்றெனினும் வேறொன்று அவர்கள் சிந்திக்கவேண்டியதுளது . என்னெனில் : ஓரிளைஞனுக்கு அவன் வயசினுமேற்பட்ட வயசையுடைய பெண்ணை மணம் புணர்த்துகின்றனர் . இவ்விவாகம் மேற்கூறிய எண்வகை மணத்துள் விலக்கியவற்றின் பாற்படும் . ஓரிளைஞன் தன்வயசின் மேற்பட்ட பெண்ணோடு கூடுவானாயின் அவற்குப் பல தீங்குகள் நேரிடுமென்று நூல்கள் கூறுகின்றன . இம்மட்டோ அவர்களுக்கு தேக திடம் குறையுமென்றும் அற்ப ஆயுளையுடைய சந்ததி யுண்டாமென்றும் ஆயுர்வேதங் கூறுகின்றது . வதூவரர்களின் வயசினி யமத்தைப்பற்றிய பண்டைக்கால வழக்கை நோக்கினாலிப்போது நமக்குச் சிறிதும் பொருத்தமாகத் தோற்றாது .ஆயினும் நான்கு வருடங்களாவது பெண்மகட்குப் புருடன் மூத்தவனாக இருத்தல் வேண்டும் . இதனால் வரு நன்மையையும் மணமக்களின் மிக்க சிறியபருவத்திற் செய்யப்படும் விவாகத்தினால் வருந் தீமைகளை யும் நன்கு ஆராய்ச்சிசெய்த பரோடாதேயத்தரசரும் திருவனந்தபுரத்து அரசரும் இது விஷயமாகச் சிலவிதிகளை யேற்படுத்தி அவை தந்தேயங்களிற் பரவச்செய்திருக்கின்றனர் . மிக்க இளம்பருவத்தில் விவாகஞ் செய்தலே பல பெண்மக்கள் “மக்களிழந்த விடும்பையினு மனையாளிழந்தவிடும்பையினும் ,மிக்கவிடும்பையோவாதவி தவையி டும்பை” என்று கூறியபடி வைதவ்வியம் அடைந்து துன்புறற் கேதுவாகுமென்பதும் , தக்கபருவம் வந்துழிச்செய்தல் இவ்விடர் பெரும்பாலு நேராதென்பதும் அவர்கள் கருத்தாகும் . இவ்விஷயங் களை நம்மனோருஞ் சிந்தித்தலவசியமாகும் .
விவாக முதலிய சடங்கு – விதிகள்
இனி, இவ்விவாக காலத்திற் செய்யப்படுங் கிரியைகளும் கிராத்தம் சஷ்டியப்த சாந்தி முதலிய கிரியைகளும் விதிப்படி நடைபெறுவதாகத் தெரியவில்லை . விதியாவது வைசிய தர்மத்திற்குரிய வைதிக விதியை யன்று . அத்தருமாசரணை சிலகால முன்னர்க் கைவிடப்பட்டிருப்பதால் சற்சூத்திரர்க்குள்ள சிவாகம விதியையே நாம் கொள்ளவேண்டுமென்பது என் கருத்து . நாம் இப்பொழுது செய்யுஞ் சிராத்தக்கிரியை வைதிகமுறையுமின்றி ஆகமமுறையுமின்றிச் செய்விக்கும் புரோகிதர்களின் மணமுறை யைப் பொறுத்திருப்பதாகத் தெரிகின்றது . அது விஷயமாகச் சேகரிக்கும் பதார்த்தங்களும் செலவுசெய்யும் பொருள்களும் அளவிற்கு மேற்பட்டவைகளே . எவ்வளவு கொடுப்பினும் புண்ணியமுண்டென்பதில் ஐயமின்று . அங்ஙனங் கொடுக்கப்படு வனவற்றைக் கிரியையை யொழுங்குற நடத்திக்கொடுத்தால் மிக்கநன்றாகும் . சஷ்டியப்த சாந்தியில் மிக்கப்பொருளைச் செலவு செய்கின்றோம் . அச்சாந்திக்குரிய சிவாகம பத்ததிகளிற் கூறப்படும் விதிகளைக்கவனித்தல் சிறிதுமின்று . அந்தணர்களெல்லாம் பதினைந்து கலசம் வைத்துக் கிரியை நடத்துகின்றனர் . . நம்மவர் சாந்தியில் அறுபதுக்குமேற் கலசங்கள் பரப்பப்படுகின்றன. அங்ஙனம் பரப்பும்படி விதித்த நூல் யாதெனவும் , அந்நூலிற் கூறப்பட்ட அச்சாந்திக்குரிய பிறகிரியைகள் யாவெனவும் விசாரித்துச் செய்தல் எனலாம் . இவ்வாராய்ச்சி நம்மனோரைப் பொறுத்ததே யன்றிப் புரோகிதர்களைப் பொறுத்ததன்று . ஒழுங்காகத் தெரிந்து செய்யவேண்டுமென்று புரோகிதர்களைத் தூண்டுவேமா யின் அவர்கள் கவனிப்பார்கள் . இச்செயல்களை நம் சமய சாத்திர விதிப்படி திருத்திச் செய்துகோடல் நம்மவர் கடமையாகுமென்பதை ஞாபகப்படுத்துதற்கே யீண்டுச் சில கூறினேன் .
வி யா பா ர ம் .
இனி , வியாபார விஷயமாகக் கவனிக்கவேண்டியவைகளுஞ் சிலவுள. முற்காலத்திற் பெரும்பாலும் பண்டமாற்ருதலானுஞ் சிறுபான்மை வட்டி வாங்குதலானும் நம்மவர் பொருளீட்டியதாகத் தெரிகின்றது . தற்காலத்திற் பெரும்பாலும் வட்டித் தொழிலே செய்தலும் தத்தமக்குள்ள முதலளவிற்கு எவ்வளவோ மடங்கு அதிகமாகக் கடன் வாங்குதலும் மேற்கொண்டிருக்கின்றனர் . கடன் மிகுதியாக வாங்குத லான் நம்மவருட் சிலர்க்குச் சமீபகாலத்தினேர்ந்த துன்பத்தை நிதரிசனமாகத் தெரிந்திருக்கின்றோம் . அறநூல்கள் வட்டித் தொழிலை முற்றிலுங்கூடாதென்று விலக்கவில்லை . ஆனால் , சில நியமங்களைக் கூறுகின்றன . அவற்றைக் கைக்கொண்டு ஒழுகுதலினும் பண்டமாற்றுத் தொழிற் சாலைகளாற் பொருளீட்டல் தரும முறையாகவும் பொருட் பெருக்கத்திற் கேதுவாகவு மிருக்கும் . இவ்விஷயங்களை நன்றாய்ந்து வியாபார நடத்து மேனாட்டார் நம்மினும் மிக்க பொருள் படைத்திருத்தலைக் காட்சியிற் றெரிந்திருக்கின்றோம் . தொழிற்சாலை முதலியவற்றால் நமக்கு வட்டியினுமிக்க பொருள் வருவாயும் பல ஏழைமக்கட்கு உய்யும் வழியும் உண்டாகின்றன . உலகத்துள்ளா ரொவ்வொருவரும் தாம் செய்யும் , ஒவ்வொரு காரியத்தினும் தம்பயனைக் கருதுதலோடு பிறர் பயனையுங் கருதவேண்டியது முக்கியமாகுமென்று முது நூல்கள் கூறு கின்றன . ஆதலின் இவ்விஷயத்தை ஆலோசித்து நடத்தன் மிக நலமாகும் .
த ரு ம ங் க ள்
இனி , நம்மனோர் தருமங்களைப்பற்றிச் சில கூறுவேன் .நம் வணிக மக்கள் செய்துவரும் தருமங்களுள் முக்கியமானவை , சிவாலயத்திருப்பணி , அன்னசத்திரம் , வேதபாடசாலை , வடமொழி வித்யாசாலை யென்பவைகளேயாம் . இவற்றுள் வடமொழிக் கலாசாலைபற்றி முன்னர்க் கூறியுள்ளேன் . மற்றவைகளைச் சிறிதா ராய்வேன் . சிவாலயத் திருப்பணி , பதி புண்ணியமாதலானும் , நம் சமயத்தைப் பாதுகாத்தற்கும் உலகத்துள்ளார் பக்திநெறிப்படுதற்கும், உரியதாகலானும் நாம் செய்யவேண்டிய தருமங்களுள் மிகமேலான தருமமென்பதில் ஐயமின்று . ஆனால் அவ்வாலய தருமஞ் செய்தற் குரிய இடத்தை நோக்கி யளவோடு செய்தலே போதியதாகும் . அங்ஙனமின்றி வணங்குவார் சிலரிருக்கும் ஊர்களில் இலக்ஷக்கணக் கான திரவியங்களைச் செலவிட்டுச் செய்தன் மிகைச் செயலேயாகும். பேரூர்க்குத் தக்கவாறு பெரும்பொருள் செலவிடல் கூடுமாயினும் சிற்றூர்க்குத் தக்கவாறு சுருக்கமான பொருளால் நீண்டநாள் நிலை பெறச் சுருக்க அளவிற் றிருக்கோயில் அமைத்தல் போதாதோ? இதுவரை நம் வணிகமக்கள் செய்துவந்த இச்சிவாலய நிருமித்தல், திரு நந்தனம் வைத்தல் , பசுமடம் தாபித்தன் முதலிய எல்லாத் தருமங்களும் சைவசமயத்தில் நமக்கு இருக்கும் அன்பைக்காட்டும் அறிகுறிகளேயாகும் . இனி , இக்காலத்திற்கேற்ற அறங்களையும் புதியமுறையிற் றோடங்கன் மிகநலமாம் .அவற்றுள் நம்மவர் வசிக்கும் இந் நாட்டில் பலரும் நடத்தற்குரிய வழிகளைச் செவ்வைசெய்தல் மிக முக்கியமானதொன்றாகும் . ஆனால் இப்புண்ணியம் பசு புண்ணியமாதலின் பதி புண்ணியத்திற் றாழ்ந்தது தானே யெனின் ; அப்பதி புண்ணியத்தைப் பயப்பித்தற்கு இது சாதனமாகலானும் , திருக்குறளில் “ஒப்புரவறிதல்” என்னும் அதிகாரத்தில் இது முதலிய அறங்கள் மேலானவை யென்றும் செல்வமுடையா ரொவ்வொருவரு மேற்கொள்ளவேண்டுமென்றுங் கூறுதலானும் இக்காலத்து மேம்பட்டதாகத் தோன்றுதலானும் சிறப்புடைத்தென்க .
இனிச் சத்திர தருமம் நம் நாட்டினும் பிற இடங்களினும் நம்மவரால் நன்கு நடைபெறுகின்றது . அது மிகமேலான தருமமாயினும் அந்தணர்களுக்கேயன்றி மற்றைச் சாதியார்க்கு அன்னமுதவல் கூடதென்னும் விதி பொருத்தமானதன்று . துறவிகள் , தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியில்லாதவர்கள் , வயோதிகர் சிறுவர்களாகிய இவர்கள் எச்சாதியாராயினும் அன்னம் உதவற்கும் வழிப்போக்கர் தங்குதற்கும் உரிய இடமன்றோ சத்திரம் ; இவ்வியல்களைவிட்டுப் பிராமணருள்ளே யொழுக்கந் தவரினவரா யினும் செல்வராயினும் அவர்களுக்கு அன்னம் உதவலும் , பிற வருணத்தா ரொழுக்கமுடையராயினும் , வறியராயினும் , அவர்களுக்கு உதவுதலின்மையும் பெரியதோர் குற்றமாம் . வறியார்க்கொன் றீவதே யீகை யென சாதியைக் குறியாது பொதுப்படக் கூறலு மீண்டு கருதற்பாலது . பலவாறு கூறுவதென்னை ? இக்காலத்திற் சத்திர மதிகரிக்க அந்தணருள்ளே சிலர் தொழில்களை விட்டும் கருமா நுட்டானங்களை யிழந்தும் சோம்பராகின்றனர் . ஆதலின் , அதனை நடாத்துவார் , மேற்கூறியபடி யெல்லார்க்கும் இதம்பயக்கும் வண்ணம் ஆராய்ந்துசெய்வாராக .
இனி , நம்மவரிற் பெரும்பாலார் ஒருவர் ஒரு தருமத்தைச் செய்தற்குத் தொடங்கினால் மற்றவர்களும் பயனை நோக்காது அதனையே தொடங்கக் கருதுவதல்லது காலநிலைக்கும் ஜன சௌகரி யத்துக்குந் தக்கபடி வேறோரறத்தைச் செய்தற்குக் கருதுவதில்லை . அதனாலேதான் மனிதற்கு இன்றியமையாத மருத்துவச்சாலை இந்நாட்டில் நம்மவரா நிலைபெற்றதாக ஒன்றேனுமின்று . நம் வணிக மக்கள் வசிக்கும் நகரங்களுட் சற்றுப்பெரிய ஊர்களிளெல்லாம் நோயாளிகளுக்குப் பணம் வாங்குவதன்றி வைத்தியஞ் செய்யும்படி வைத்தியசாலை தாபித்தல் , பிணிநிலை தெரியாது மருத்துவஞ் செய்யக்கிளம்பும் போலி வைத்தியர் மிகுந்த இக்காலத்தில் பெரியதோரறமாகும் . இத் தருமத்தின் மேனாட்டார் மிக்க விருப்பமுள்ளவரென்பது பல சரித்திரங்களானும் அநுபவத்தானும் அறிந்திருக்கின்றோம் . “நோயிலா வாழ்வினால் வாழ வேண்டும் “ என்று ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள் கூறியபடி இந்நாட்டு ஏழைச் சகோதரர்கள் நோயிலா வாழ்க்கை பெறுதற்கு இவ்வைத்தியசாலை நம் நகரங்களிலடுத்தடுத்து இருப்பின் , எவ்வளவு உபகாரமாகும் ! இதுவரை இத்தருமத்தில் நம்மக்கள் கவனஞ் சிறிதுஞ் செல்லாமலிருந்தது வியப்பே ! எவ்வகை யறங்களையுந் தவறாமற் செய்யும் எண்ணமுடைய நம்மவர்கள் இத்தருமகாரியத்தை யேன் பிறருக்கு விடல் வேண்டும் ? இப்பக்கத்துள்ள மற்றையோரினும் வணிகமக்கள் விசேடமான தருமசிந்தையுடையராயிருப்பவும் , இக்குறைகளை ஏன் நம்மிடத்துக் கூறவேண்டுமெனின்? “ஊருணிநீர் நிறைந்தற்றேயுலகவாம் , பேரறிவாளன் றிரு “ என்று திருக்குறள் கூறியபடி எல்லார்க்கும் இதம்பயக்கும் எல்லா நல்லறங்களையும் இடைவிடாது செய்தற்கேற்ற பெருங்குணமும் பெருஞ்செல்வமுடைய நம்மவரா லித்திருத்தங் கேட்கப்படின் பயனாமேயன்றி நீரின்மையும் இறங்குதுறையு மில்லாத வெறுங்கிணறு போன்ற பிறர் கேட்டமையானும் கேளாமையானும் வருவதோர் பயனின்றென்க.
வேதாகம பாடசாலைகள்
இனி , வேத பாடசாலையைப்பற்றிச் சிறிது நினைப்போம் . இத் தென்னாட்டில் நம் சமயம் விருத்தியாதற்கு “வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” என்று அருண்மொழித் தேவரருளியாங்கு வேதங்களையுஞ் சிவாகமங்களையும் விருத்தி செய்தனங்கடமையே . வேதமுஞ் சிவாகமும் ஒரு பொருளனவே . சிவபெருமான் பெருமையும், சீவர்களினியலும் , அப்பெருமானை அவ் வான்மாக்க லடைதற்குத் தடை யாகவுள்ள மலங்களின்றன்மையும் , ஆன்மாக்கள் அம்மல சக்தியைக் கெடுத்துப் பரமசிவனை யடைதற்குரிய உபாயங்களும் அப்பரமபதியோடு இரண்டறக்கலந்து அநுபவிக்கும் பேரின்ப நிலையும் பிறவும் வேதத்திற் பொதுவகையாகவுஞ் சிவாகமத்திற் சிறப்பு வகையாகவும் விளங்க அவ்விரு முதனூல்களையும் பரமசிவனே யருளிச்செய்தனர் . வேதம் பொருள் பலபடத் தோன்றுஞ் சூத்திரமும் சிவாகமம் அதனையங்ஙனமாக வொட்டாது தெளிந்துரைக்கும் பாடியமும் போலச் சிவபிரானாலருளிச் செய்யப் பட்டன வென்பார் பெரியோர் . இவ்வேத சிவாகமங்களுக்குப் பேதமின்மையை வேதாந்த சூத்திர மெய்ப்பொருள்கண்ட ஸ்ரீ நீலகண்ட சிவாசாரியரும் ,
“வேதமொடாகம மெய்யாமிறைவனூல்,
ஓதும் பொதுவுஞ் சிறப்புமென்றுன்னுக
நாதனுரையிவை நாடிலிரண்டந் தம்
பேதம தென்பர் பெரியோர்க்கபேதமே”
என்று திருமூல தேவருந் திருவாய் மலர்ந்தருளியமையாலுணர்க . இங்ஙனம் அபேதார்த்த முதனூல்களான வேத சிவாகமங்க ளிரண்டனையும் பரிபாலித்தனங் கடமையாயிருப்ப வேற பாடசாலைகளை யொவ்வோரூரிலும் இரண்டு மூன்று நிலைபெற செய்தறகும் . ஆகம பாடசலை யிரண்டிற்கு மேல் நம் தமிழ் நாட்டிலில்லாமற் செய்தற்கும் , என்ன நியாயமுளதோ? “ஆகமமாகி நின்றண்ணிப்பான்றாள் வாழ்க “ என்று ஸ்ரீமத் , மாணிக்கவாசக சுவாமிகள் கட்டளையிட்டருளியவாறு சிவபிரான் சிவாகம வுருவாகவுள்ளாராதலின் அவ்வாகம பரிபாலனம் சிவபூஜைப் பயனைத் தருமென்பதி லென்னை கொலையம் ! வேதபாடசாலை நம் நாட்டிலெவ்வளவுள்ளனவோ அவ்வளவு ஆகம பாடசாலை யிருந்தா லன்றோ நம் சமயம் விருத்தியடையும் . வேதபாடசாலைகளை நியமித்தற்கு நம்மவரை யன்றிப் பிறரும் பலருளர் . ஆகமங்களப் பேணுவார் நம்மையன்றிச் சிலரேனும் இருப்பாரென்பது சந்தேகமே . சமீப காலத்தில் தேவி கோட்டையுலுள்ள சிவதரும பரிபாலகராகிய நம் வைசிய மக்கள் சிலர் சிவாகம பரிபாலன நிமித்தம் பொருள் தொகுத்து வைத்திருக்குஞ் செய்தி , சைவமக்கட்கெல்லாம் பெரு மகிழ்ச்சி விளைவிப்பதாகும் . ஆனால் அவ்வாகமங்களை யெல்லாம் ஒன்று சேர்த்துப் பூஜிக்கவேண்டுமென்பது அவர்கள் கருத்து . அது மிக நல்லதாயினும் சிறிது சிறிதாக அச்சிட்டு வெளிப்படுத்தி வருதலே பரிபாலனஞ் செய்ததாகும் . சிவாகமம் பரிபக்குவர்க்கன்றி யளித்தல் தகாதெனின் , வேதங்களும் உபநிடதங்களும் சித்தாந்த சாத்திரங்க ளும் பிறவும் அச்சின் வாயிலாக வெளிப்பட்ட இக்காலத்தில் அது பொருந்தாதென்க .பரிபக்குவரல்லாதார் குருவின் முகமாகப் பெறுதலே கூடாது . அச்சுப்புத்தக வாயிலாகப்பார்த்தல் குற்றமின் றென்பது பல அறிஞர் துணிவு .
தே வா ர பா ட சா லை
இனித் தமிழ் மறையாகிய தேவராதி யருட்பாக்களை யோ துவதற்குரிய தேவார பாடசாலைகள் தாபித்தலும் அவசியமாகும் . தேவார திருவாசகங்களாற் சமயாசாரியர் செய்தருளிய அற்புத அருட்செயல்களும் பிறவும் பெரிய புராண வாயிலாக நன்குணர்ந்த உங்களுக்கு யான் கூறவேண்டிய தென்னை? வேதாரணிய க்ஷேத்திரத் தில் ஆரிய வேதங்களான் மூடப்பட்ட கதவு தேவாரத்தாற் றிறக்கப்படு மாயின் தேவாரங்கள் தமிழ் மறையென்பதில் ஐயம் யாதுளது ? “வேதநெறி தழைத்தோங்க” என்பதிற்கிலக்காக இத்தமிழ் மறைகளை யும் ஓம்பல் நமது கடனே .
ஒ ற் று மை
என்னருமைச் சகோதரமணிகளே ! யான் இத்தனையுங் கூறி வந்த எல்லாவற்றையுஞ் சீர் செய்து கோடற்கு ஒரு காரிய முக்கியமாக வுள்ளது . அது கைவரப்பெற்றாலெல்லாஞ் செவ்வையாகும் . அதுதான் யாதெனின் ஒ ற் று மை யென்பதே. சிறியேனாகிய யான் கூறிவந்த சீர் திருத்தங்களுள் ஒவ்வாதன சிலவுளவாயின் அவற்றைத் திருத்தித்தர யான் கேட்டலும் , அதற்கு நீயிர் அன்புடன் உடன்பட்டு அங்ஙனமே செய்தலும் ஒற்றுமைக்கு அங்கங்களாகும் , இங்ஙனமின்றி யான் எழுதியவற்றையே சாதிக்கவெண்ணுதலும் நீயிர் இவனோரு சிறுவன் கூறுதலையா மேன் அங்கிகிரிக்க வேண்டுமென்று கலாம் விளைக்கக் கருதலும் , ஒற்றுமை யின்மைக்கு அங்கங்களாகும் . இவை போலவே யெவ்விக்ஷயத்திலுங் கொள்க . இவ்வருமையாகிய ஒற்றுமை மணியை யெந்தத்தேயம் பெற்றிருக்கின்றதோ, அதுவே திகந்தம்வரை தன் இசையொளியைப் பரப்பும். நாமெல்லாம் விகற்பமின்றிச் செய்யவேண்டியவைகளை விடாது தொடங்குவே மாயின், கூடியவிரைவில் நம் எண்ணம் திருவருளால் நிறைவேறு மென்பதில் ஐயமின்று . “எண்ணியவெண்ணியாங்கெய்துப வெண்ணி யார் , திண்ணியராகப்பெரின் “ என்னும் பொதுமறையையுஞ் சிந்தித்து நோக்குக .
இவ்வியாசத்துட் கூறியவைகளையும் இன்னும் நம்மவர்க்கின்றி யமையாத பிறவற்றையும் நாம் எல்லாரும் மொருங்கு கூடிச்சூழ்ந்து செய்தற்குரித்தாக ஒரு காரியம் செய்யவேண்டுமென்னும் எண்ணம் என் உள்ளத்திற் பலநாளாகக் குடிகொண்டுள்ளது . அதனை வெளியிடுவதற்கு இதுவே தக்க சமயமென்றெண்ணுகின்றேன் .
ம கா ச பை
என்னை யெனின் , குன்றக்குடி , கானாடுகாத்தான் , தேவிகோட்டை, காரைக்குடி ஆகிய இப்பெருநகரங்களுள் ஒன்றில் நம் வணிக மக்கட்கெல்லாம் பொதுவாக “வைசிகமகாசபை” என்னும் பெயரால் ஒரு சபை தாபித்தல்வேண்டுமென்பதூஉம் , அச்சபையின் அங்கங்களாக வித்தியாசாலை , புத்தகசாலை முதலியன நிறுவுதல் வேண்டுமென்பதூஉம் , அவ்வித்தியாசாலையில் தமிழ் வடமொழி ஆங்கிலம் இப்பாக்ஷைகளை வரு மாணாக்கர்களுக்கு உண்டி உடை கொடுத்துக் கற்பித்தல் வேண்டுமென்பதூஉம் , நாவன்மை மிக்க உபந்நியாசகர் சிலரை மாத வேதனமுதவி உபந்நியாசராக நியமணஞ் செய்து அவர்களைக்கொண்டு அச்சபையிலும் , ஜனக்கூட்டத்திற்கு ஏதுவான உற்சவம் முதலிய விசேடமுள்ள நம் நகரங்களிலும் , கடவுட்பக்தி ,கல்வி , சமயாசார முதலிய பல விஷயங்களை யுபந்நியாசிக்கச் செய்யவேண்டுமென்பதூஉம் , அக்கழகத்தைத் தலைமையாக்கொண்டு வேறு நம் நகரங்களிலுள்ள கலாசாலைக ளையும் சபைகளையும் கிளைகளாக அமைத்து அக்கிளைக் கலாசாலைகளிற் கற்கு மாணவர்களை ஆண்டுகடோறும் பரீக்ஷித்துப் பரிசு கொடுத்தல் வேண்டுமென்பதூஉம் , கிளைச்சபையார் விரும்பும் பொழுது மகாசபியினின்றும் உபந்நியாசர்களையனுப்பி யுபந்நி யாசஞ் செய்வித்தல் வேண்டுமென்பதூஉம் , பிறவுமாம் . இவற்றிற்கெல்லா மூலதன மிகுதியாக வேண்டும் . சிவாகமங்களை வெளிப்படுத்தற்குரிய வேலைகளும் அம்மகாசபையிலே செய்யலாம் கூடுமாயின் பத்திரிக்கையொன்று அச்சபையினின்று வெளிப்படுத் தலாம் . இன்னும் அப்போதப்போது பயனுடையவாக்கருதப்படுங் காரியங்களையுஞ் செய்யலாம் . இவ்விஷயமாக நம் நண்பர்க ளுள்ளத்திற் சிவபெருமான் விருப்பத்தை யுண்டாக்குவாராயின் , அவர்கள் செய்யும் பணியை இயன்றவரை செய்தற்கு யானுங் கடமைப்பட்டிருக்கின்றேனென்பதையுந் தெரிவித்துக்கொள்கின்றேன் எல்லாம் வல்ல சிவபெருமான் விரைவிற் றிருவருள் புரிவாராக .
மு டி வு ரை
இதுகாறுங் கூறியவற்றால் , வனிக மக்களாகிய நம்மவர் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களுண் முதலில் , எல்லாவற்றிற்குந் துணைக்கருவியான கல்வியை முறையாகக் கற்றல் வேண்டுமென்பதூஉம் , அங்ஙனங் கல்லாமையான் வரும் ஏதங்களின்னவை யென்பதூஉம் , முறையாகச் சிலநாட் கற்பினும் அதனானலம்பலவுண்டாமென்பதூஉம் , அங்ஙனங் கற்கப்படு மொழிக ளுண் முதலினமக்குரிய இயற்கைமொழியாகிய தமிழையே கற்றல் வேண்டுமென்பதூஉம் , அவ்வந்நிலத்து மக்கட்குரிய இயற்கைமொழி களின் இலக்கணங்களின்னவா மென்பதூஉம் , நம்மனோர்க்குரிய செந்தமிழ் மொழியின் பெருமைகளைப் பரியவா மென்பதூஉம் , அதனை யிளமையிற் கற்றலவசிய மென்பதூஉம் , நம்மவர் கல்வி நிலை சிறிது குறைவுடையதாகக் காணப்படுதலான் விரைவிலக் குறையை யொழித்தல் வேண்டுமென்பதூஉம் , அதற்குபாயம் நம் நகரங்களிலெல்லாங் கல்விச்சாலை நிறுவுதலேயாமென்பதூஉம் , அக்கலாசாலைகளை யின்னவாறு நடத்தல் வேண்டுமென்பதூஉம் , அதற்குப்பொருள் கொடுப்போர் பெறும் புண்ணியம் பெரிதாமென் பதூஉம் , அக்கலாசாலைகளில் ஆங்கிலமொழி வடமொழிகளையுங் கற்பித்தலவசிய மென்பதூஉம் , அவற்றால் விளையு நன்மை களின்னவை யென்பதூஉம் , வடமொழியை நாங்கற்பதற்கு ஏதுஇன்னதென்பதூஉம் , நம்மவர் நிறுவிய வடமொழிக் கலாசா லைகளை யின்னவிதம் நடத்தல் வேண்டுமென்பதூஉம், கலாசாலைகளோடு நம் ஊர்களுட் சிற்சில முக்கிய நகரங்களிற் சபை தாபித்தலவசிய மென்பதூஉம் , நம் சமயமாகிய சைவத்தின் மாட்சிகளின்னவென்பதூஉம் , நம் முன்னோரெல்லாம் இச்சைவசமய ஒழுக்கத்தையே பற்றி நின்றவரென்பதூஉம், சைவர்களுக்குரிய இலக்கணங்களுள் உயிர் போன்றது பஞ்சாக்கர ஜபமென்பதூஉம் , மிக்க மகிமையுடைய அப்பஞ்சாக்கரத்தை ஜபித்தற்குரிய அதிகாரிகள் சிவதீக்ஷை யுடையாரென்பதூஉம் , அத்தீக்ஷையின் மகிமைகள் இலக்கணங்களின்னவென்பதூஉம் , அதனைச்செய்தற்குரிய ஆசிரிய ரின்ன இலக்கணமுடையவராயிருத்தல் வேண்டுமென்பதூஉம் , அதனை ஒவ்வொருவரும் இன்ன காலத்தில் இன்னவிதமாகச் செய்துகோடல் வேண்டுமென்பதூஉம் , இவ்விஷயத்தில் நம் கவனமிகவிரைவிற் செலுத்தப்படல் வேண்டுமென்பதூஉம் , நம் சமயா சாரத்திற்குரித்தல்லாத புலாலுணவைச் சிலர் இடையே கைப்பற்றியதற்குக் காரணம் இன்னதென்பதூஉம் , சிவவழி பாடேயன்றிச் சிறு தெய்வ வணக்கம் அவசியமின்றென்பதூஉம் , நம்மவர் விவாக முறையிற் றிருந்த வேண்டியவை யின்னவென்பதூஉம் , விவாகம் , சிராத்தம் , சஷ்டியப்த சாந்தி முதலிய வற்றின் கிரியைகள் செவ்வையாக நடைபெறவில்லை யென்பதூஉம் , அவற்றைத் திருத்திக்கோடலவசியமென்பதூஉம் , வியாபார விஷயத் திற் கவனிக்கவேண்டியவை இன்னவென்பதூஉம் , நம்மவரிதுவரை செய்து வந்த தருமகாரியங்களிற் சிலவற்றைக் காலத்துக்கு ஏற்றவாறு திருத்தி நடத்தவேண்டுமென்பதூஉம் ; வைத்தியசாலை தாபித்தல் , நடத்தற்குரிய நெறிகளைச் சீர்படுத்தன் முதலிய அறங்கள் இந் நாட்டிலிப்பொழுது செய்யத்தக்கவைகளாமென்பதூஉம் , நம்மவர் நிறுவிய வேதபாடசாலைகளெவ்வளவோ அவ்வளவு சிவகாமபாட சாலைகள் நிலைபெறச் செயவேண்டுமென்பதூஉம் , சிவாகமப் பெருமை செப்பற்கரியதென்பதூஉம் , தமிழ் மறையாகிய தேவார பாடசாலைகளின்னுந் தாபித்தல் வேண்டுமென்பதூஉம் , இத்துணைக் காரியங்களையும் செய்தற்குரிய சிறந்த சாதனமாகிய ஒற்றுமைக் குணத்தை நாமெல்லாருமுடையராயிருத்தல் வேண்டுமென்பதூஉம் , நம் வணிகமக்கட்கெல்லாம் பொதுவாக ஒரு மகாசபை தலை நகரினிலைபெறச்செய்தன் மிக நலமென்பதூஉம் , பிறவும் ஒருவாறாக விளக்கப்பட்ட பொருள்களாம் .
“எல்லா நூல்களும் பழைமைபற்றிக் கொள்ளத்தக்கனவாதலும், இன்று ; புதுமைபற்றித் தள்ளத்தக்கனவாதலும் இன்று ; அறிவுடையார் குணங்குற்றங்களை யாராய்ந்து நல்லவை கொள்வர் ; அறிவில்லார் தாம் ஒன்றையும் ஆராயாது பிறர் கூற்றைக் கடைப்பிடிப்பர் “ என்று கவிகுல திலகராகிய காளிதாசர் கூறியபடி இவ்வியாசத்துள் உங்கள் நற்கருத்தைச் செலுத்திக் கொள்வன கொள்ள வேண்டுகின்றேன் .
வாழ்த்து
அருளுடைச் சிவனா ரன்பிவ் வணிநிலத் துள்ள மக்கள்
இருளறப் பொலிக வீச நிணையடி மறவா வாழ்வே
பொருளெனப் போற்று மன்பர் புகழ்நனி யோங்க வுண்மைத்
தெருடரு நெறியாஞ் சைவஞ் சிறந்துமீக் கிளர்ந்து வாழ்க.
உமிழொளிப் பாநு போற்றன் உயரிசை பரவ வோங்கித்
தமிழ்மொழி வாழ்க வெல்லா அறங்களுந் தழைத்து வாழ்க
அமிழ்துறழ் மொழியாள் பாக நருளினால் வணிக மக்கள்
இமிழ்திரை ஞாலத் தெல்லா இன்பமும் பெற்ரு வாழ்க .
நகரத்தாரின் சீர்திருத்தம் முற்றிற்று .