உரைநடைக் கோவை —– சமயக் கட்டுரைகள் .
அன்பு கெழுமிய ஆன்றோர்களே !
இனி வரும் கட்டுரைகள் அனைத்தும் பண்டிதமணி யவர்கள் அன்பர்களின் அவைக்களங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளும் , எழுதிய கட்டுரைகளும் ஆகும் . இவைகள் தொகுக்கப்பெற்று இரண்டு தொகுதிகளாக வெளி வந்தன . அவைகள் முறையே “உரைநடைக்கோவை சமயக்கட்டுரைகள்” என்றும் , “உரைநடைக்கோவை இலக்கியக் கட்டுரைகள் “ என்றும் பெயர் பெற்றன . அதில் , முதற் பகுதியான சமயக்கட்டுரைகளின் முதல் கட்டுரையான சன்மார்க்கம் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் . அதன் தொடற்சியாக ஏனைய கட்டுரைகள் கீழே பதிவேற்றம் செய்ய்ப்பட்டுள்ளன .
திரு. கா . சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் இந் நூலுக்கு எழுதிய சிறப்புப் பாயிரத்தில் “ ஈண்டுத் தொகுக்கப்பெற்ற ஐந்து கட்டுரைகளும் திருவைந்தெழுத்துப்போல பாராட்டத்தக்கன .அவை முறையே கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டை கூடல் முத்திப் பேறு என்பவற்றின் நுட்பங்களை விளக்குவனவா யமைந்துள்ளன இந்நூல் சைவ உண்மையை அறிய விரும்பும் தமிழ் மாணவர்களுக்கு எளிதிற் பெரும் பயன் தரும் இணையற்ற அறிவுக் கருவூலமாகப் போற்றற்பாலது “ என்று குறிப்பிடுகின்றார் .
இனி, அடுத்துப் பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரையின் பெயர் “சிவபிரான் கருணையும் சீவர்கள் கடமையும்” என்பது . இது, பண்டிதமணியவர்கள் பூவளூர்ச் சைவ சித்தாந்த சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டக்காலமாகிய 7- 03 – 1915 ல் சென்னைப் பிரஸிடென்ஸிக் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் மகாமகோபாத்தியாய ஸ்ரீ வே . சாமிநாதையரவர்கள் தலைமையிற் கூடிய பேரவையிற் செய்த சொற்பொழிவு .
2 சிவபிரான் கருணையும்
சீவர்கள் கடமையும்
தலைவரவர்களே ! அன்புமிக்க ஆன்றோர்களே !
பெரியோர்களாகிய நுங்கள் அன்புரிமை சான்ற ஆணையைக் கடக்க அஞ்சி ஒல்லும் வகையான் மேற்கொள்ள விரும்பியும் , திருவருட்டுணை கொண்டும் இப்பொழுது செயக்கடவதாகிய என் கடமையை நிறைவேற்றத் துணிகின்றேன் .
யான் மேற்கொண்ட “சிவபிரான் கருணையும் சீவர்கள் கடமையும் “ என்னும் இப்பொருளை விரித்துக் கூறற்கு இடந்தரும் தேவாரத் திருப்பாசுரம் வறுமாறு :-
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
றெங்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
றங்க டன்னடி யேனையுந் தாங்குதல்
எங்க டன்பணி செய்து கிடப்பதே .
இப் பாசுரத்தின் அருளொலியும் பொருளுமே இப் பொருளை விளக்கற் குதவியாயின வென்பதை இறுதியிற் கூறப்படுந் தொகையுரைக் கண் முடித்துக் காட்டுவேன் .
பெரியோர்களே !
மறை யாகமங்களானும் , அவற்றின் நூல்களானும் பொதுவாகவுஞ் சிறப்பாகவும் விளக்கப்பட்ட பதிப்பொருள் சிவபிரானே யென்பது அந் நூல்களைச் செவ்விதினாராயும் நுண்ணறிஞர்க்கெல்லாம் ஒத்த தொன்றாம். இப்பதிப்பொருளைக் கடவுண் முதலிய பொதுப்பெயர்களான் வேத நெறி யொழுகும் எல்லாச் சமயத்தார்களும் , சிவன் முதலிய சிறப்புப் பெயர்களாற் சமயாதீதமாகிய சைவநெறி நிற்போருங் கூறுப . கடவுள் என்னும் சொற்குப் பொருள் கடத்தலாதலின் அதுபற்றி இறைவனைக் கடந்தவரென்ப . எவற்றைக் கடந்தவரெனின் , சுட்டியறியப்படுங் காரிய வுருவப் பிரபஞ்சத்தையும் அதனாற் றத்துவ தாத்துவிகங்களையும் கடந்தவ ரென்க . இப்பொருள் ஏனைய தேவர்களுக்கு உண்மையிற் பொருந்தா தென்பது , அன்னார் சிவாகமங்களுட் கூறப்படும் முப்பத்தாறு தத்துவங்களுக் குட்பட்டவர்க ளாதலானும் , பேராற்றலுடைய சிவபிரா னியக்கத்தான் ஒவ்வோ ரதிகாரங்களைப் பற்றிநிற்பவ ராகலானுமாம் . மற் றைச் சமய நூல்கள் போலாது சைவ சமயத்திற் குறைவின்றிக் கூறப்பட்டுந் தத்துவங்கள் முப்பத்தாறாம் . அவற்றைக் கடந்து நிற்பவர் பரம்பொரு ளாகிய சிவபிரான் ஒருவரே யாவர் . இம்முப்பத்தாறு தத்துவங்களும் முப்பகுதியினவாம் . அவற்றுள் தொடக்கப்பகுதியாகிய ஆன்ம தத்துவ விரியுள் ஒவ்வொன்றே ஏனைய சமயக் கடவுளர்களின் நிலயமாகும் . ஆதலிற் கடவுண் முதலிய சொற்களும் உண்மையிற் சிவபிரானையும் உபசாரத்தான் மற்றைத் தேவர்களையுங் கூறுவனவாம் . இங்ஙனமே வட மொழிக்கட் கூறப்படும் பிரமசப்த முதலியவை உண்மையிற் சிவபிரானையும் உபசாரத்தாற் பிற தேவர்களையுங் குறிப்பிடும் பொருளுடைய வென்பது , சுவேதாசுவதரம் கேநம் முதலிய உபநிடதங்களானும் , அவற்றை விரித்து விளக்கிய வாயுசங்கிதை முதலிய புராணங்களானும் நன்குணரலாம் . இன்னும் இப்பொருள் குறித்து வேதாகமாந்தங்களை நிலைகண்டுணர்ந்த நீலகண்டவாசிரியர் , அரதத்தாசிரியர் , அப்பயதீக்கிதர் முதலிய சைவப் பெரியோர்கள் சிறிதும் ஐயமின்றி ஆராய்ந்துரைத்தருளிய அரிய வடநூல்களானுந் தெளியலாம் . பிரபஞ்ச நிகழ்ச்சியி னிமித்தம் ஒவ்வொரு தேவர்களையும் அதிட்டித்து நின்று சிவபிரான் ஒருவரே படைப்பு முதலிய அருட்டொழில்களைப் புரிவர் அதனாலன்றே , வடமொழி வாயுசங்கிதை கூறியாங்குத் தொழிலதிகார நிலயராகிய முக்கியதேவர்களின் பெயர்களெல்லாஞ் சிவபிரானுக்குப் பொருந்தின . சிவனென்னும் வாசகமோ
“சிவனெனு நாமந் தனக்கே யுடைய செம்மேனி யெம்மான் “
என்னுந் தமிழ் வேதத்தான் ஏனையோர்க்குச் செல்லாதென்பது போதரும் . இதனாற் சிவபிரானுக்குள்ள முழுமுதன்மை,வேறு தேவர்களுக்கின்றென்பது முணர்க . இங்ஙனமின்றி அழிவில் இன்ப மங்கலப் பொருளுடையதாகிய இச் சிவ என்னும் சொல்லைப் பிற சமயத்தார் தஞ்சமய தெய்வங்களுக்குக் கூறிக் கொள்ளின் , அஃது உண்மைப் பொருளைப் பற்றிய பெயராகப் பொருந்தாதென்ப துண்மை யெனினும் நம் சிவபிரான் மாட்டு அமைந்து கிடக்கும் உயர் நலங்களே அன்னாரை அவ்வாறு கூறச்செய்தன வென்றும் அதனாற் சைவ மக்களாகிய நம்மனொர்க்குப் பெருமையே யென்றும் நினைந்து மகிழ்வோமாக . இத்துணையும் ஒருவாறு சுருக்கியுரைத்த சிவபரத்துவப் பொருள் தனியான ஓரரிய சொற்பொழிவாக விளக்க வேண்டிய தொன்றாகலின் , இதனை நிறுத்தி மேல் இப்பெருமான் கருணைத் திறத்தைச் சிறிது கூறுவேன் .
- கருணையினிலக்கணம்
கருணை, தயை, இரக்கம், அருள் என்பன ஒரு பொருட் சொற்கள் . இது — பரமபதியாகிய சிவபெருமானுக்குரிய குணங்கள் எட்டனுள் முக்கியமானதொன்றாகும் . இதுவே , அப்பெருமானிடத்து அலுப்த சக்தி அல்லது பேரருளுடைமை யென்று சொல்லப்படும் . இக்கருணைக் குணத்தின் இலக்கணமாவது , ஒருவர் தமக்குரியாரை நோக்கி “இவர் எம் தந்தையார் ; இவர் எம் தாயார் ; இவர்கள் உடன் பிறப்பாளர் ; இவர்கள் எம் உறவினர் ; இவள் எம் மனைக் கிழத்தி ; இவர்கள் எம் புதல்வர்கள் “ என்றின்னோரன்ன தொடர்புபற்றி மேற் கொள்ளும் அன்புபோலாது எல்லாவுயிர்கண்மாட்டும் இயல்பாக நிகழ் கின்ற உள்ள நெகிழ்ச்சியாகும் . இவ்வுயர் குணம் நம்மனோர்க்கு ஒருசிறிது வாய்க்குமாயின் அது தொடர்புபற்றி யெழும் அன்பின் முதிர்ச்சியா னுண்டாயதென் றறிதல் வேண்டும் . இது கருதியே
“அருளென்னு மன்பீன் குழவி”
என்றார் திருவள்ளுவ தேவரும் . இவ்விடத்துத் திருத்தொண்டர் புராணத் திருப்பாட்டினியைபு ஒன்றனைப் புலப்படுத்தி மகிழாமலிருக்கக் கூடவில்லையாதலின் அதனையுஞ் சிறிது காட்டுதல் அவசியமாகின்றது . திருஞானசம்பந்த சுவாமிகளும் திருநாவுக்கரசு சுவாமிகளும் சீகாழியில் திருத்தோணியப்பரையும், அம்மையாரையுந் தரிசிப்பான் செல்லுங்கால் அவ்விருவர்களும் ஒருங்கு கூடிச் செல்லும் அழகிய காட்சியை நூலாசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள் , தம் மனத்தின்கண் , தியானமுகமாக எழுதிப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தின்புற்று , அம்மகிழ்ச்சின்பங்களை நம்மனோருஞ் சிறிது பெற்றுய்யுமாறு, தாந்துய்க்கும் இன்பம் பொங்கி வெளிபடுதல்போல ஓரருமைப் பாசுரத்தையருளியிருக்கின் றார்கள் .அப்பாசுரத்தின் கருத்து , அந்நாயன்மார்களிருவர்களது ஒன்றுபட்ட தோற்றத்துக்கு ஒப்புக்கூறுவதேயாகும் . அது வருமாறு :–
“அருட்பெருகு தனிக்கடலு முலகுக் கெல்லாம்
அன்புசெறி கடலுமா மெனவு மோங்கும்
பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற
புண்ணியக்கண் ணிரண்டெனவும் பவன முய்ய
இருட்கடுவுண் டவருளு முலக மெல்லாம்
ஈன்றாடன் றிருவருளு மெனவுங் கூடித்
தெருட்கலைஞா னக்கன்று மரசுஞ் சென்று
செஞ்சடைவா னவர்கோயில் சேர்ந்தா ரன்றே”
என்பதே.
இதன்கட் கூறப்பட்ட உவமைகளை யன்றிவேறு எத்துணை நீண்டு நினைப்பினும் “உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங்காலை” யென்னும் உவமவிலக்கணத்துக்கு மாறுபாடின்றி ஈண்டுக் கூறத்தக்கது யாதுளது? என்னே இவ்வுவமைகளின் அருமை நயங்கள்! இங்ஙனங் கூறுதலன்றே ஆன்ற அருட்கவிகளினியற்கை ! இப் பாசுரத்தின் அரும் பொருள்களை முற்றக் கூறின் ஈண்டு விரியுமாதலின் , இயைபுடைய முதலடியின் பொருளை மாத்திரஞ் சுருக்கிக் கூறுவேன் .இதனிறுதியடியில்
“தெருட்கலைஞா னக்கன்றும் அரசும்”
என்று கூறுவதால் நிரனிறையாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனங் கொள்ளுங்கால் அருட்பெருகு தனிக்கடல் திருஞானசம்பந்த சுவாமிகளும் , அன்புசெறிகடல் திருநாவுக்கரசு சுவாமிகலுமாவார் இவ்விருவரிடத்தும் அருள் அன்பு என்னும் இருகுணங்களுமுள வெனினும் அவற்றாலாம்பயனை நோக்கிச் சிறப்பாக ஆராயுங்கால் அப்பர் சுவாமிகள் , சிவபிரானும் சிவனடியார்களுமே தமக்குரியவர் களாகக் கொண்டு அன்பு செய்தமையானும் , அடிமை நெறியில் (தாச மார்க்கத்தில்) வெளிப்பட நின்று ஒழுகியமையானும் , அந் நெறியில் ஒழுகுதற்குத் தலைவன் ஒருவனை மேற்கொண்டு அன்பு செய்தலே முக்கியமாதலானும் , அவர்களிடத்துள்ள அருட் குணத்தினும் அன்பே யாவர்க்கும் வெளிப்படக் காணப்படலான் , அவர்களையன்புக்கடலென்றும் , திருஞானசம்பந்த சுவாமிகளிடத்து இவ் அன்புளதெனினும் அவர்கள் மகன்மை நெறியில்(சற்புத்திர மார்க்கம்) வெளிப்பட ஒழுகியமையானும் , இறைவன் குணம் அருளே யாதலானும், சுவாமிகளிடத்து எல்லாவுயிர்கண்மேலும் இயல்பாக எழுங்கருணையே மேலிட்டிருந்தமையானும் , திருப்பெருமண நல்லூ ரில் தந் திருமணக் கோலத்தைத் தரிசிக்க வந்திருந்த தகுதியு டையார் தகுதியில்லாராகிய எல்லோரும் அக் கணத்திலேயே மல நீக்கமும் சிவப்பேறும் எய்திக் கொள்ளைகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத் தள்ளித் தம் அருட்குணப்பயனைக் காட்டியமையானும் அவர்களை அருட்கடலென்றுந் திருவாய் மலர்ந்தருளினார் ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் .
ஈண்டு இன்புறத்தக்கதோர் இயைபென்னையெனின் , அன்பினால் அருளுண்டாவது பற்றி அன்பு அப்பனும், அருள் பிள்ளையுமாகும் . அம் முறையே அன்புக் கடலாகிய நாவரையரை அப்பரெனவும் , அருட்கடலாகிய சம்பந்தரைப் பிள்ளையாரெனவும் பெரியார் பாராட்டி வழங்குதலேயாம் . அந் நாயன்மார்பாற் கருணையின்மைக்குச் சரிதங்காட்டிப் பேசுவாருஞ் சிலருளராலோ வெனின் , அன்னார் கூற்றுச் சிவபிரான் கருணையைப் பாகுபாடு செய்து கூறுங்காற் சொல்லப்படும் தடை விடைகளாற் சிறிதும் பொருந்தாமை யிணரலாம். இவ் வளவிற் கருணையின் இலக்கணம் ஒருவாறு சுருக்கிக் கூறப்பட்டது .
2 . சிவபிரானே கருணையை முழுதும் ஆளுதற்குரியர்
இனி, இக் கருணையை முற்றும் ஆளுதற்குரியர் சிவபிரான் ஒருவரேயாவ ரென்பதைப் பற்றிக் கூறுவேன் .
“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் .
என்னுந் திருக்குறளால் அருள் உயர்ந்தோர் தம்மின் தாழ்ந்தோரிடத்தும் , அன்பு தாழ்ந்தோர் தம்மின் உயர்ந்தோரிடத்தும் செய்யுங் குணங்களா மென்பது வெளியாம் . இச் சிறப்பிலக்கணப்படி எல்லா உலகத்துமுள்ள எல்லா உயிர்களிடத்தும் ஒருங்கே கருணை செய்தல் எல்லாம் வல்லசிவபிரான் ஒருவர்க்கே கூடுமன்றிப் பிற தேவர்களுக்கின்றாம் . வேறு தேவர்களும் மக்களுட் சிறந்தார் சிலரும் இவ்வருட் குணத்தை உடையராய்க் காட்டிய சரிதங்களும் உளவேயெனின் , அம் மக்கள் தேவர்கள் யாவருக்கும் ஒவ்வோர் அமயங்களில் தம்மின் தாழ்ந்தாரிடத்துக் கருணை நிகழுமாயினும் , தமெக்கெல்லாம் உயர்ந்தாராகிய சிவபிரான் ஒருவரிருத்தலான் , அவரிடத்து அன்பேயன்றி அருள் செய்தர்கியைபின்மையானும் , சிவபிரான் எவரானும் விலக்குதற் கொண்ணாத பாற்கடற்கண் எழுந்த நஞ்சை யுண்டு யாவர்க்கும் தாம் தலைவரென்பதையும் , யாவரிடத்துங் கருணை செய்யத்தக்கவரென் பதையுங் காட்டினமையானும் கருணையின் முழுவிலக்கணமும் ஏனையோரிடத்தன்றிச் சிவபிரான் பக்கலிருப்பதை உணரலாம் .
இவ்வருட் குணத்தின் பகுதியாகிய கண்ணோட்டத்தைப் பற்றி யெழுந்த
“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் “
என்னுந் திருக்குறளிலும் சிவபிரான் நஞ்சுண்ட சரிதங் குறிப்பிடத் தக்கதொன்றாம் . சிபி , ததீசி முதலியோர் சரிதக் குறிப்புக்களைச் சில குறள்களிற் கண்டு உரைக்கட்காட்டிய ஆசிரியர் பரிமேலழகர் இதனையும் ஈண்டுக் காட்டியிருப்பின் மிக நன்றாகும் . இறைவனுக்கு எல்லாஞ்செய்யும் ஆற்றல் இயற்கை யென்றொழிந்தார் போலும் . சிவபிரான் றலைமையும் , அவர் கருணைத் திறமும் மாணிக்கவாசக சுவாமிகள் , தாம் அநுபவித்துத் திருவாய் மலர்ந்தருளிய திருவாக்குக்களிற் பரக்கக் காணலாம்.
“தன்மை பிறரா லறியாத தலைவா “
என்பது தலைமை பற்றியதாகும் . தலைவர்களை உலகத் தலைவரெனவுங், கடவுட் டலைவ ரெனவும் இருவகையாகக் கொள்ளலாம் . இவ்விருவர்களுக்கு முள்ள வேறுபாட்டை நம் அடிகளார் யாவரும் வியந்தின்புறுமாறு மிக அழகுபெறக் கூறியிருக்கின்றார்கள் . எங்ஙனமெனின் ; உலகத்தலைவர் களாகிய அரசர் முதலியோரை உலகத்துள்ள மற்றையோ ரெல்லாம் நன்கு தெரிவர் ; அத் தலைவர்களின் குணஞ் செயல்களையும் வரையறுத்துணர்வர் அத் தலைவர்கள் பிறரெல்லாரையும் அறியார் . அன்னார் குணஞ் செயல்களையும் நன்கு தெரியார் . கடவுட் டலைவராகிய சிவபிரானோ வெனின் , பிறரெல்லாரையும் அறிவர் ; அன்னார் குனஞ் செயல்களையும் “அவனன்றி ஓரணுவும் அசையாது “ என்றபடி உயிர்க்குயிராய் நின்று நன்குணர்வர் . பிறர்க்கு அப்பெருமான் பெற்றி உணர அரிதாகும் . இப்பொருணலங்களையே நம் சுவாமிகள் , மேற்காட்டிய படியும் ,
“பெற்றி பிறர்க்கரிய பொம்மான் “
எனவும் அருளிச் செய்வாராயினர் .
“குறைவிலா நிறைவே “
யென்பது , அப்பெருமான் கருணையைப் பற்றியதாகும் . சிவபிரான் , தங் கருணையைப் பிறரெறத் துணை அள்ளிக்கொண்டாலும் குறைவின்றி நிரம்பியிருப்பரென்பதாம் . இவ்விரு பொருள்களையும் ,
“தெள்ளிப் பிறரால் தெரிவரியான் தங்கருணை
அள்ளக் குறையா அரன் “
என்பதனாலும் நன்குணரலாம் . இதனால் , தங் கருணையைக் கொள்ளா விட்டாற் குறைவரே யன்றிக் கொள்ளக் குறையா ரென்பதும் வெளியாதல் உய்த்துணர்க . எவ்வுயிர்க்கும் இரங்கி, அவற்றிற்கு வரும் இடையூற்றை ஒழித்து இன்பம் அளித்தல் சிவபிரான் ஒருவர்க்கே கூடுமென்பதும் , மற்றையோர்க்கு இயன்றவரை கருணை செய்தலே கூடுமென்பதும் ஆன்றோர் துணிபாகும் . இது கருதியே அருளைப்பற்றித் திருமூலதேவர் கூறுமிடத்து ,
“ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற்
கோருயிர் போல உருகி உயக்கொள்ள
நேரி நதுமுடி யாதெனி நெஞ்சகத்
தீர முடைமை அருளி நியல்பே “
என்று மற்றையோர்க் கியன்றவாறு “முடியாதெனின் ஈரமுடைமை அருளினியல்பே “ எனக் கட்டளையிட்டருளினார் .
சிவபிரானுக்கு முடியாத தொன்றின்மையின் , அவரே கருணையை முழுவிலக்கணத்துடன் ஆளுந்தகுதியின ரென்பது வெள்ளிடை மலையென உணரத்தக்கதொன்றாம் . சகல தேவர் மக்கள் முதலிய யாவர்க்கும் எவற்றுக்கும் ஈயுந்தா தா சிவபிரானே யாவரென்பது . எஜூர் வேதத்துள்ள சமக மந்திரங்கள் , திருமால் பிரமன் முதலிய தேவர்களை அன்னத்தோடு சேர்த்து ஈயப்படும் பொருளாகக் கூறினமையானும் , சிவபிரானை அங்ஙனம் கூறாமையானும் நன்குணரலாம் . யாவருந் தம்பா லிரக்கத் தாம் வேண்டியார் வேண்டியாங் கீயும் பெருங் கொடையாளர் ஆதலின் , இப் பெருமானே , கருணை யென்னும் உயர்குணத்தின் முழுப் பாகத்தையும் உடையாரென்பது தேற்றமாம் .
3. சிவபிரான் கருணையின் சிறப்பு
இனி , நம் பெருமானுக்குரிய எண்வகைக் குணங்களுட் கருணையும் ஒன்றெனினும் , இக் குணமே , நாமெல்லாம் வழிபட் டுய்தற்குரிய திருமேனியை இறைவன் கோடற்குரியதாக இருத்தலின் மிகச் சிறந்ததாகும் சிவபிரான் உண்மைச் சொரூப இலக்கணம் .
“செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு
சத்தாய் நிற்கும் “
என்றபடி சச்சிதாநந்தப் பிழம்பே யாகும் . இந் நிலை பாசப்பிணிப்புடைய ஆன்மாக்கள் உணரவரியதாகலின் , அவ்வான்மாக்களின் பொருட்டு இறைவன் அருவம் , உருவம் , அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனியு முடைவராய் வெளிப்பட்டருளுவர் . இதுவே தடத்த நிலை யெனப்படும் . இத் திருமேனிகள் கருணையாற் கொண்டனவேயாம் . இவ்விருவகை நிலையும் இறைவனுக்குரிய வென்பதையும் , கருணையே வடிவமென்பதையும் ,
“கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி” எனவும் ,
“செப்பிய மூன்றும் நந்தங்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு தானே “
எனவும் போந்த திருவாக்குக்களான் அறிக . ஈண்டு இக் கருணையே தமது இடப்பாகம் பிரியாதுடனுறைந்து விளங்கும் உமாதேவியாகிய சிவசத்தியாகும் . இஃது ,
“அருளது சத்தியாகும் அரன்றனக்கு”
என்பதனான் அறிக . தமக்கமைந்த எண்வகைக் குணங்களுள் , இவ்வருட் குணமே நம் பிரானுக்குரிய பராசத்தியாக அமையுமாயின் , இதன் மாட்சி யை எவ்வாறு பேசுவேன் ! நம் பெருமானது இப் பேரருள் வெளிக்கண்ணே எல்லா அண்டங்களும் , அவற்றின் உட்பொருள்களுந் தோன்றி நிலைபெறுவனவாம் . இவ் வருள் வெளிக்கண் எல்லா உயிரும் நிலைபெற்றிருந்தும்
“வெள்ளத்துள் நாவற்றி யாங்குன்
னருள் பெற்றுத் துன்பத்தினின்றும் ,
விள்ளக்கி லேனை “
என்ற திருவாக்கின்படி நாம் நம் வினைப்பகுதியான் அக் கருணையினாற் பெறவேண்டிய பயனைப் பெறாது மாழ்குகின்றோம் . இக் குற்றம் நம்மதே யன்றி அக் கருணாநிதியின் பாலதன்று . தாழ்ந்த நிலம் மேட்டு நிலமென்னும் வேறுபாடு கருதாது மேகம் நிரந்தரமாகப் பெய்தும் , ,அந் நீரை மேட்டு நிலம் ஏற்காது ஒதுக்கத் தாழ்வு நிலம் ஏற்குமாபோல , சிவபிரான் பருகற்கினிய பரங் கருணைத் தடங் கடலாக இருந்தும் , நம் தீய வினையாகிய அணை குறுக்கிட்டுக் கிடத்தலான் , அக் கருணை வெள்ளம் நம்பாற் செல்லாது உண்மை அன்பர் கூட்டமாகிய நற்றடத்திற் சென்று நிறைகின்றது . சிவபிரான் ஆன்மாக்கள் உய்தற்பொருட்டுத் தங் கருணை யமுதத்தை மிகவலிந்து எத்தணையோ உபாயங்களாலும் ஊட்டுகின்றார் . இவ்வுண்மையைத் தம் அநுபவத்தால் உணர்ந்த பேரன்பாளராகிய மாணிக்கவாசக சுவாமிகள் கட்டளையிட்டருளிய பின்வரும் திருவாசகத் திருப்பாசுரத்தானும் உணரலாம் . அது பின்வருமாறு :-
“வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர்
அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன்
வினையேன் என் விதி இன்மையால்
தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர்
பருகத் தந்து உய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய்
அடியேன் உன் அடைக்கலமே”
இதன் அருமைப் பொருளையுஞ் சிறிது கூறி மேற் செல்வேன். வழங்குகின்றாய்க்கு என்புழி, குவ்வுருபு பொருட்டுப் பொருளதாம் . “என்னை யாண்டாய்க்கு” என்று பிறாண்டுஞ் சுவாமிகள் இதனை வெளிப்படக் கூறுவர் . ஆகவே ,வழங்குகின்ற நின் பொருட்டு நின் அருளாகிய ஆரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் என்பதே அத்தொடரின் பொருளாம் . மாணிக்கவாசக சுவாமிகள் தம்மைச் சிவபிரான் மிகவலிந்து அடிமை கொண்டாரென்பதைக் “கல்லை மென்கனியாக்கும் விச்சை கொண்டென்னை நின் கழற் கன்பனாக்கினை” எனவும் , “ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே “ எனவும் , “கல்லைப் பிசைந்து கனியாக்கித் தங்கருணை, வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியனை “ யெனவும் , “இனையனானென்றுன்னை யறிவித்தென்னை யாட்கொண் டெம்பிரா னானாய்க்க்கு “ எனவும் , போந்த திருவாக்குக்களானுணர்க . அவ்வாறு அடிமை கொண்டு தங் கருணை யமுதத்தை எவ்வாறு ஊட்டினா ரெனின் ; ஒன்றும் அறியாக் குழவிப் பருவத்து மகவைத் தாய் அச்சமுறுத்தி உணவூட்டுமா போலும் , கல்லூரிகட் சென்று கல்வியின் மாட்சியுணராது கற்றற்கு மலைவுறும் சிறாரை ஆசிரியன் அடித்துத் துன்புறுத்திக் கல்வியைப் புகட்டுமா போலும் ஊட்டினாரென்க .
இவ்வுண்மையையே நம் சுவாமிகள் “அடித்தடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதமறியேனே” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள் . ஆதலின் , “சருக்கரை வழங்குதல்” என்பது போலச் சிறிதும் வருந்துதலின்றி மகிழ்ச்சி மிக்கு இடையீடின்றிப் பெய்தல் கருதிக் , கொடுத்தல் தருதல் முதலிய சொற்களை விடுத்து வழங்குதற் சொல்லால் தொடுத்து , அவ்வாறு கருணை யமுதத்தைப் பெய்து உண்ணுக உண்ணுக வென்று அடித்தடித்து வற்புறுத்துகின்ற நின் பொருட்டு அஞ்சி வழங்குகின்றாய்க்கு எனவும் , தன்னையுண்டாரைச்சிற்றின்புறுத்துந் தேவரமுதம் போலாது சிவபிரான ருலமுதம் பேரின்புறுத்தவல்லதாகலின் உன் அருளாரமுதத்தையெனவும் , இயற்கையாக உண்டலின்றித் துன்புறுத்தும் நின் பொருட்டு மிக விரைந் துண்ணுகின்றேனென்பார். வாரிக்கொண்டு விழுங்குகின்றே னெனவும் , அங்ஙனம் விரைந்து விழுங்குதலான் விக்கினேனெனவும், வேண்டாத உணவை உண்டற்குத் தொடங்கு முன்னர்க் கண்டவளவிலேயே விக்கலுண்டாமாகலின் , முறையே நிகழ் காலமும் இறந்தகாலமுந் தோன்ற விழுங்குகின்றேன் விக்கினெனெவும், அவ்வாறு விக்குதற்குக் காரணம் நீயல்லை ; வினைவயப்பட்டுழலும் எனது விதியேயென்பார் வினையேனென் விதியின்மையால் எனவும் , யான் வேண்டாதிருப்பவும் , என்னைத் துன்புறுத்தி ஊட்டினையாதலின் , அதனாலுண்டான விக்கலை ஒழித்தற்குத் தண்ணீர் தந்து பிழைப்பித்தல் வேண்டுமென்பார் , தண்ணீர் பருகதத் துய்யக் கொள்ளாயெனவும் , அவ்வமுதம் நின்னருளமுதமாதலின் , அதனை உண்ணுதற்குரிய அதிகார சிவத்துவம் வேண்டுமென்பார் தண்ணிய நீர்மை சிவத்துவம் என்னும் பொருள் பொதுளத் தண்ணீரெனவும் , அத்தண்ணீரும் அவ்வமுதம் போல் விக்கல் முதலிய சலனங்களைத் தருதலின்றி எற்குகந்த இனிமைச் சுவையுடனிருத்தல் வேண்டுமென்பார், “தழங்கருந் தேனன்ன தண்ணீ “ ரெனவும் , அது பெறாமையின் மிக வருந்துகின்றேனென்பார் . அழுங்குகின்றே னெனவும் , சிவபிரான் சேதனப்பொருள்களெல்லாம் தமக்கு அடிமையாகத் தாம் ஆண்டார் எனவும் , அசேதனப் பொருள்களெல்லாம் உடைமையாகத் தாம் உடையாரெனவுங் கூறப்படுவாராதலின் , இந் நான்கு சொற்களைக் கொண்டு விளக்குதற்குரிய பொருள் முன்னிலை தன்மையாகிய இரு சொற்களினமைய உடையாய் அடியே னெனவும் , யான் சேதனனாயிருந்துஞ் சிறிதும் அன்பிலனாதலின் , என்னை யாளுதல்பற்றி வரும் ஆண்டாரென்பதினும் , அசேதனப்பொருள்களைப் பற்றிய உடையாரென்பது நினக்குப் பெருமை யாதலின் அதனையே விளிப்பலென்பார் உடையாயெனவும் , ஆண்டாரென்பது உண்மை யெனினும் என்னை நோக்கி அவ்வாறு கூறற்கு நாணமுடையேனாதலின் அப் பொருள் பிறரறிய என்னையே கூறிக் கொள்வ லென்பார் அடியேனெனவும் , நின்றனக்குரிமையுடைய பொருளினும் , அடைக்கலப் பொருளைக்காத்தல் நின் பெருந்தன்மைக்கு இயன்ற தென்பார் உன் அடைக்கலமே யெனவுந் திருவாய் மலர்ந்தருளினார் சுவாமிகள் . நண்பர்களே ! இவ்வரிய நுண்பொருளை நினையுங்கால் திருவாசக மாட்சி சிந்தித்தற்கெவ்வாறு ஒல்லும் ? இவ்வருமை நூலுக்கு உரை வரைவேனென்று முற்பட்டார் சிலர் இதன் நுண்பொருணலங்களைப் பிறரறியக் கூடாவாறு செய்தமை பெரிதும் வருந்தத்தக்கதே . இன்னும் நம் இறைவன் அன்பர்க ளை ஆட்கொள்ள மேற்கொண்ட செயல்கள் எண்ணத்தொலையா. அவர் தம் அன்பர்களுக்கு எவ்வளவு எளிய நிலையிலுள்ளா ரன்பது அச் செயல்களான றியலாம். . நம் மணிவாசகர் பொருட்டு மண் சுமந்தார் . “மண் முதற் சிவமீறாகிய முப்பத்தாறு தத்துவங்களை யுங் கடந்தவன் என்று என்னைக் கூறுவார் ; யானோ என் உண்மையன்பர் பொருட்டுக் கீழ்க் கண்ட பிருதிவி தத்துவத்தை அம் முப்பத்தாறினும் மேல் நிற்கும் என் தலைமேலேற்றுங் கடப்பாடுடையேன்” என்று அவர் தாம் அடியார்க் கெளியராம் நிலைமையை நன்கு புலப்படுத்தினார் போலும் ! அவர் பெருங்கருணை மாட்சி நினையுங்கால் உள்ளம் உருகுகிறதே !
4. அக் கருணையின் வகை
இனி, அப் பெருமான் கருணைத் திறம் இரு வகைப்படும் . அவை அறக்கருணை மறக்கருணை என்பனவாம் . ஒரு தந்தைக்குரிய மக்கள் இருவருள் , ஒருவன் , “தந்தை சொன் மிக்க மந்திரமில்லை” என்றபடி செவ்விய நன்நெறிக்கண் ஒழுகுகின்றான் . அதற்குத் தந்தை வேண்டுவன தந்து இன்புறுத்துகின்றான் . மற்றொருவன் தந்தை யுரை கடந்து தீய நெறிக் கட் செல்லுங்கால் அவனைத் தந்தை அடித்துத் துன்புறுத்தி நன் நெறிக்கட் செலுத்துகின்றான் . இம் மக்கள் இருவரிடத்துச் செய்யும் இவ்விரு செயலும் அன்பு பற்றியனவேயாகும் . இங்ஙனமே நம் பரமபதியின் செயலுமாம் . தம்மிடத்து அன்புபூண்டு ஒழுகும் அடியார்களை அவர் உவப்பன செய்து இன்புறுத்துவர் . அன்பின்றி இருப்போரை ஒறுத்து நன்நெறிக்கட் செல்லு மாறு அருள் பாலிப்பர் .
இவ்விரு செயற்கும் அவ் வான்மாக்களிடத்துத் தாம் வைத்த கருணையே காரணமாகும் . இவற்றுள் முன்னையது அறக் கருணையெனவும் , பின்னையது மறக் கருணையெனவுங் கூறப்படும் . நம் சமய நூல்களையும் உலகியலையும் அறியார் சிலர் “யாவர்க்கும் ஒப்பவிருத்தலன்றே கடவுளியல் , அவ்வாறின்றிச் சிலர்க்கு இதஞ்செய்தலும், சிலர்க்கு அகிதஞ் செய்தலும் என்னை? “ என்பர் . இவ் வுலக பரிபாலனஞ் செய்யும் அரசியலை நோக்கினும் இவ்வுண்மை மிக எளிதில் அறியத்தக்க தொன்றாகும் . இது கருதியே திருவள்ளுவ தேவரும் ,
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை “
என்று கூறினர் . இத் திருக்குறளுக்கு மறத்தை நீக்குதற்கும் என்று ஆசிரியர் பரிமேலழகர் உரை கூறினார் . இதனினுஞ் செவ்வையாக அறத்தைச் செய்தற்கு அன்பு துணையாதல் போல் ஏனை மறத்தைச் செய்தற்கும் அன்பு துணையாம் என்று கொண்டு இவ்விரண்டனுட் பின்னதை அன்பு பற்றிய மறமெனக் கோடல் சிறப்புடைத்தென்பதுணர்க. இங்ஙனமே நாயன்மார்கள் செயலுமாம் நம் வைதிக சைவசமய நெறியைஅழிப்ப முற்பட்ட சமணர்கள் , பாண்டிய அரசனால் ஒறுக்கப்பட்டுக் கழுவேறுங்கால் , அதனை விலக்காமையால் திருஞானசம்பந்த சுவாமிகள் கருணையில ரென்பர் ஒரு சிலர் . அன்னார் ஒரு குடி நலம்பெற ஒருவனையும் , ஓரூர் நலம்பெற ஒரு குடியையும் , ஒரு தேயம் நலம் பெற ஓரூரையுங் கெடுத்துக் காத்தல் அறமாமென்று அற நூல் கூறுதலையும் உணர்ந்திலர் ;
“பொறையெனப் படுவ தாடவர் தமக்குப்
பூணெனப் புகலினும் பொருந்தார்
முறையறப் புரிந்தா லக்கணத் தவர்தம்
முடித்தலை துணிப்பதே முழுப்பூண் “
என்னும் நீதியையும் உணர்ந்திலர் . இன்னும் பிரபல நியாயங்கள் உளவெனினும் , அவை ஈண்டு வேண்டற்பாலன அல்லவாதலின் , விருத்திலன் . ஆகவே , சிவபிரான் செயல்கள் ,
“எக்கிர மத்தி நாலும் இறைசெயல் அருளேயென்றும்”
என்றாங்க்குக் கருணை காரணமாக உள்ளனவேயாம் .
5 . அக் கருணையால் ஆன்மா எய்தும் பயன்
இனி, அப்பெருமான் கருணையா னுண்டாம் பயனைச் சிறிது கூறுவல். ஆன்மாக்கள் அநாதி கேவலத்தில் ஆணவ மலத்தாற் பிணிப்புண்டு இருட்ட றையிற் கிடக்கின்ற கண்ணிலாக் குழவி போல நினைவு செயற்றுக்கிடக் குங்கால் ஆற்றல் பல உடைய அவ் வாணவ மலத்தைக் கழுவுதற்பொருட் டுக் கன்ம மல மாயா மலங்களை அவ்வவற்றிற்கேற்ப பயனுறச் செய்து , சிறிது அறிவெழக்கண்டு , படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும் புரிந்து, இறுதியில் தம் திருவடி இன்பத்தை ஈதற்குக் காரணம் , தம் அளவிலாப் பெருங்கருணையே யாகும் . இவ் வுண்மையை,
“அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட்
டருளில் அழிந்தினைப் பாறி மறைந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளாலென் நத்தி அகம்புகுந் தானே “
என்னுந் திருமந்திரமும் வலியுறுத்துவதாம் . இனி, அப்பெருமானைக் காண்டற்கும் அவர் கருணையே கண்ணாதல் வேண்டும் . கேநோபநிடதத்தில் “இந்திரன் இயக்க வடிவத்துடன் வந்த பரம்பொருளாகிய சிவபிரானை ஆங்குத் தோன்றிய உமாதேவியாராகிய அருட் சக்தி காட்டலால் தெளிந்தான் “ என்று கேட்கப்படுதலானும் ,
“மெய்யருளாந்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடி”
என்று பட்டினத்தடிகள் அருளினமையானும்,
“அவனருளே கண்ணாகக் காணி னல்லால்”
எனவும் போந்த திருவாக்குக்களானும் இவ்வுண்மை நன்கு புலனாம் .
“ஆங்கவ நருளாற் பத்தி நன்குண்டாம்”
என்றபடி இறைவனை அடைதற்கு மிக முக்கியமான பத்தியும் அவனருள் வழி யுண்டாமெனின் ; வேறிதன் பயனை எவ்வாறுரைப்பேன் ! அப்பெருமான் பரங்கருணையின் பயனாக முடிவில் நாம் பெறத்தக்க பொருள் அப்பெருமானே யாகும் . இதனினுஞ் சிறந்த பயன் யாதுள்ளது ? சிவ நேசர்களே ! இவ்வுலகத்தும் விரைவில் தோன்றி யழிதன் மாலையவாகிய சிற்றின்பந் தரும் பொருள்களைப் போலாது உலப்பிலா இன்ப உருவமாகிய அவ்விறைவனையே தரும் மாட்சி மிக்க அக்கருணையைப் பெறுதற்குரிய செயலையன்றி வேறு யாம் செயக் கிடப்பது யாதுளது ? மணிவாசகனாரும்,
“தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா யார்கொலோ சதுரர்
அந்தமொ ன்றிலா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன் ரென்பால் “
என்று இப் பேரானந்தப் பெருஞ்செல்வப் பேறாகிய அவர் கருணையாற் பெற்ற தம் அநுபவ உண்மையை நம்மனோரும் உய்ய வெளிப்படுத்தி யருளினார்கள் . இத் திருவாசகத்தில் ஒரு பண்டமாற்றுச் செய்தியை நாம் அறிகின்றோம் . அஃதாவது , எல்லாவறிவும் எல்லாவற்றாலும் நிறைந்த மலரகிதராகிய சிவபிரான் தம்மைக் கொடுத்துச் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய சீவனை அதற்கு மாற்றாகக் கொள்கின்றா ரென்பதே அப் பெருமானைப் பெற்றமையாற் சீவன் எய்திய பயன் அளப்பிலா ஆனந்தம். இச் சீவனால் அவ்விறைவன் பெற்றது யாதுமின்று , என்னே அவர் கருணைத் திறம் ! மனத்தான் நினைத்தற்கும் வாயாற் பேசற்கும் அளவுபடுவதின்றா கலின் , இம் மட்டிற் சிவபிரான் கருணை யென்னும் பகுதியை நிறுத்தி மேற் சீவர்களின் கடமையைப் பற்றிச் சிறிது கூறுவேன் .
6 . சீவர்களின் தன்மை
ஆன்மா எப்பொருளைச் சார்ந்ததோ அப் பொருளின் வண்ணமாந் தன்மை உடையதென்பது வேதாகம சித்தாந்தம் . வெளி இருளோடு கூடுங்கால் இருளாகவும் , ஒளியோடு கூடுங்கால் ஒளியாகவும் ஆதல்போலவும் , ஒரு பளிங்கு செந்திறத் தைச் சார்ந்துழிச் செம்மை யாகவும் , கரு நிறத்தைச் சார்ந்துழிக் கருமையாகவுந் தோன்றுதல் போலவும் , ஆன்மா , மலவிருளிற் கலந்துழி அதன் மயமாகவும் , சிவ விளக்கத்திற் பொருந்துழிச் சிவமயமாகவும் விளங்கும் . அவ்வப்பொருளைச் சாருங்காற் பிரிப்பின்றி அத்துவிதமாகவே சம்பந்தமுற்றுக் கலந்திருக்கும் . மலத்தோடு சம்பந்தமுற்றுழி அந் நிலையும் அத்துவித நிலையாமோ வெனின் , அதுவும் , ஒன்றென்றாவது வேறொன்றாவது கூறப்படாமையின் அத்துவிதமேயாம் . இதனை,
“ஆணவத்தோ டத்துவித மானபடி மெஞ்ஞானத்
தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ”
என்னுந் தாயுமானார் திருவாக்கும் வலியுறுத்தும் . ஆகவே தனக்கென ஒரு சுதந்தரமுமின்றிச் சார்ச்சிப்பொருள்களின் தன்மையே தன் தன்மையாகக் கோடல் ஆன்மாவினிலக்கணங்களுள் முக்கியமானதொன்றாம். இன்னும் இச் சீவன் சகச மலமாகிய ஆணவத்தாற் பிணிப்புண்டு அதன் நீக்கத்தின் பொருட்டு இறைவனால் தரப்பட்ட மாயாமல கன்ம மலங்களின் காரியங்களாகிய தநு கரண புவன போகங்களைப் பெற்று மாறி மாறிப் பிறக்கும் இயல்புடையதாம் . மனம் புத்தி அகங்காரம் சித்தமென்னும் அந்தக்கரணங்களாகிய கருவிகளாற் பொறிகளின் வாயிலாகப் புலன்களை நுகர்ந்து அதனால் மீண்டும் மீண்டும் வந்தேறுகின்ற கன்மங்களையுடைத்தாம் . இன்பந்தருவனவற்றில் விருப்பும் , துன்பந்தருவன வற்றுள் வெறுப்புமுடையதாகும். இன்னும் இவ்வான்மாவினிலக்கணம் , வகைவிரிகளாற் பலதிறப்படும். அவை விரிந்த சைவநூல்களிற் காண்க .
7 . கடமையின் தன்மை
இனி, கடமையாவது இன்னதெனச் சிறிது கூறுவேன் . இவ்வுலகத்து அறிவுள்ள ஒவ்வொருவரும் , நாம் செய்யவேண்டியவை இவையிவையென நூன் முகமாகவும் , பெரியார் முகமாகவும் உணர்ந்து எதிர்ப்பயனைப் பற்றிச் சிந்தியாமல் மேற்கொள்ளுங்காரியங்களுள் இன்றியமையாது செய்யத்தக்கவை எவையோ அவை கடமை யெனப்படும் . நன் மாணாக்க னொருவன் ஆசிரியன் ஒறுத்தல் கருதி வெறுப்புறாது அவனாணைவழி நின்று கற்றுவருதலும் இக் கடமையாகும் . போர் வீரனொருவன் போர் முனையிற் சென்றவுடன் தனக்கு வரும் வெற்றி கருதி முற்படலும் , தோல்வி கருதிப் பிற்படலுஞ் செய்யாது நிலை நின்று பொருதலும் அவன் கடமையாகும் . அற நூல்களில் நித்தியகருமாநுட்டானங்களைப் பற்றிக் கூறி, அவற்றைச் செய்தலால் வரும் பயனையும் விரித்துப் பின் , இப் பயன்களைப் ஆராய்ந்தறிந்தே செய்தல் வேண்டுமென்று எவரும் கருதல் கூடாதெனவும் , நாடோறும் செய்யவேண்டிய கன்மங்களைப் பயன் விசாரியாதே செய்து தீரவேண்டுமெனவும் , அங்ஙனஞ் செய்தல் ஒவ்வொருவனுக்குங் கடமையாமெனவுங் கூறுதலும் ஈண்டுக் கருதற்பாலது. அறிவுவலி படைத்தார் , பயனை விசாரித்தல் மிக நன்றே. அஃதியலாதாயின் விசாரித்தறியும்வரை கன்மங்களைச் செய்யாதொழிதல் தவறென்பதே ஈண்டுத் துணியற்பாலது பயன் , விசாரித்தலின்றிச் செய்யினும் செய்தாரைச் சார்தலொருதலை வரையாது கொடுக்கும் வள்ளன்மையு டையோர், இவற்கு இன்னது செய்தல் வேண்டும் , இதற்கு இன்னது செய்தல் வேண்டும் என்னும் நியதியின்றி நேர்ந்த நேர்ந்தபடி கொடுத்தற்குக் காரணம் அவருள்ளத்திற் பதிந்து கிடக்குங் கொடைக் கடமையேயாகும் . இது நோக்கியே , அவர் கொடைமடம் பட்டோரென்று கூறப்படுவர் . முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் வேண்டாதனவாகவும் , அப்பொருள்களின் இயற்கைத் தளர் நிலையைக் கண்டவுடன் மன நெகிழ்ந்து இரக்கமுற்று அவற்றிற்குப் பேரிடையூறு வந்ததாகக் கருதிப் பாரி முதலியோர் இயைபில்லாத் தேரும் போர்வையும் ஈந்தனரே . இவ்வீகை பயன் குறித்ததாமா? அவர் தமக்கு இயற்கையின் அமைந்துகிடக்குந் தண்ணளியோடு கூடிய கொடைக் கடமையேயன்றி வேறென் சொல்வது ? முல்லைக்கொடி படர் கொம்பின்றித் தளருமேல் , தன் ஏவலாளரைக் கொண்டு தக்கதொரு கொழு கொம்பை நிறுத்தல் கூடாதா? அக் கொழு கொம்பினும் இத் தேரினால் அக் கொடிக்குக் கிடைத்த விசேட நலம் யாதுளது ? அங்ஙனமாகவும் தேரை ஈந்ததற்குக் காரணம் , பாரிவள்ளல் தேரேறி வருங்காற் கொடியின் தளர் நிலையைக் கண்டதும் , தனது இயற்கைத் தண்ணளியால் இன்னது செயற்பாலதென்றுணரும் அத்துணையுந் தாழ்க்க மனமின்றி அக்கணமே தேரை நிறுவினார் என்பதே இதனானன்றே ,
“கொடுக்கிலா தானைப் பாரியே யென்று
கூறினுங்கொடுப் பாரிலை”
என்று நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவ் வள்ளலின் கொடைத் திறத்தைப் பாராட்டியருளினார்கள் . நம் மக்களொவ்வொருவரும் தம் தேயம் , மொழி , சமய முதலியவற்றை இயன்றவரை பேண முற்படலும் தத்தங் கடமையாகும் . இக்கடமை உலகியற் கடமை , சமயக்கடமை என இருவகைப்படும் அவற்றுள் ஈண்டுக் கூறப்பட்டன சில உலகியற் கடமைகளாம் . இன்னும் இது சம்பந்தமாகக் கூறப்புகின் மிகவிரியுமாதலின், எடுத்துக்கொண்ட பொருளுக் கியையுமாறு நம் சமயக் கடவுளராகிய சிவபிரான் மாட்டு நாம் செய்யவேண்டியவைகளை ஈங்குக் கூறுவேன் .
8 . சிவபிரானிடத்துச் செய்யவேண்டிய கடமைகள் .
சைவர்களாகிய நாமெல்லாம் நம் சமயக் கடவுளாகிய சிவபிரானை உண்மை அன்போடு வழிபடுதல் வேண்டும் . அங்ஙனம் வழிபடுங்கால் இதர தெய்வங்களைப் பழித்தல் கூடாது . நம் தெய்வத்தையே போற்றுவோமாக ஆயின் , ஒரு சாரார் எல்லாத் தெய்வங்களும் ஒன்றேயாதலின் , அத் தெய்வங்க ளெல்லாவற்றையும் சமமாகக் கருதி அன்பு செய்தல் வேண்டு மென்பார் . அன்னார் கூற்று மரபு பிழைபட்டதொன்றாதலின் , பொருந்தாமை காட்டுவதும் .ஒவ்வொருசமயத்தாருந் தத்தஞ் சமயக் கடவுளைச் சிறப்பு வகையானும் பிற சமயக் கடவுளைப் பொது வகையானும் அன்பு செய்யலாமன்றிச் சமநிலையாக் கோடல் பத்தியின் இலக்கணமன்றாம் . தெய்வங்களெல்லாம் உண்மை நிலையில் முடிவில் ஒன்றேயெனினும் அவ்வுண்மை தத்துவ ஞானிகளுக்கன்றி மற்றையோர்க்கு உணர்வரிதாம் . சாமாநியர்கள் அந் நிலையைப் பற்றிப் பேசல் பேச்சளவேயன்றி அநுபவவளவிற் கோடல் அரிது . எப் பொருளும் அநுபவத் தினன்றிப் பேச்சளவி னொழிதல் பயனின்றாம் . இன்ன இன்ன ஒழுக்கங்கள் நல்லனவென்று பேசிவிட்டு அவற்றைக் கடைப்பிடியாவிடின் , அப் பேச்சாற் பயனென்னை ?
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் “
என்பதும் ஈண்டுக் கருதற்பாலது. சிறப்பென்பென்பது ஓரிடத்தன்றிப் பல விடத்துஞ் சேறலாகாது . பல்லிடத்துஞ் சேறல் சாமாநிய பத்தியேயாகும் ஒரு பெண்மகள் தன்னைக் கைப்பிடித்தகாதலனிடத்துச் செய்யும் அன்புக்கும் தன் சோதரர் சுற்றத்தாரிடத்துச் செய்யும் அன்புக்கும் வேறுபாடு உண்டன்றோ? முன்னையது சிறப்பு அன்பும் , பின்னையது பொது அன்புமாம் . சிறப்பன்பை வேறோரிடத்துச் செய்யின் , பிறழ்ச்சிக்குற்றம் வருதலோடு சிறப்பிலக்கணமும் பிழை படும் . பொது அன்பை உரிய சோதரரிடத்துப் போல் மற்றையோரிடத்துஞ் செய்யலாம் . அதனால் வருங் குற்றம் யாதுமின்றாம் . அவ்வாறே நமது சமயக் கடவுளிடத்துச் செய்யும் பத்தி சிறப்பும் , ஏனைத் தேவர்களிடத்துச் செய்யும் பத்தி பொதுவுமாம் . ஆனால் அப் பெண்மகள் தன் உயிர்க்காதலனைப் பாராட்டி ஏனைச் சோதரர் முதலியோரையும் இகழாது உபசரித்தல் போல நாமும் நம் சமயத் தெய்வத்தைப் பாராட்டுதலோடு மற்றைத் தேவர்களையும் இகழாது அவரவர்க் கேற்றவாறு உபசரித்துப் போற்றுதல் கடனாம் . இவ்வாறு தத்தஞ்சமயத் தெய்வங்களிடத்து வைக்கும் சிறப்பன்பே நல்லின்பந் துய்ப்பதற்குரியதாகும் . இங்ஙனமின்றி எல்லாம் சமஞ் சமமென்று கூறுவார் ஒன்றினும் நிலைபெறாது தமக்குரிய ஆன்மப்பேற்றை முடிவில் இழந்தவரே யாவர் . சமய சாத்திர விசாரத்தால் தத்துவ நிலை , அதிகார நிலை முதலிய தாரதம்மியங்களைக் கண்டு கூறல் அவரவர் அன்பு நிலைப்படுதற்கு உபயோகமாதலானும் , முன்னைய சமயாசாரியர்க ளெல்லாரும் அங்ஙனங் கூறிப் போந்தமையானும் , அது நிந்தையாகாது . நிந்தையாவது துரபிமானத் தால் உள்ளதை இல்லதாகவும் , இல்லதை உள்ளதாகவும் கூறிப் பழித்தலேயாம்
“உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா
தெங்க ளுத்தமனே “
“கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகே னாயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம்”
என்னுந் திருவாக்குக்கள் நிந்தையின்றிச் சிறப்பன்பின் இலக்கணத்தை வெளிப்படுத்துதலுணர்க. ஆகவே , நாம் நம் பதியாகிய சிவபிரானிடத்து விசேட பத்தியாகிய உண்மையன்பு செய்தல் கடமையாம் . பிற தெய்வங்களையும் உரியவாறு போற்றுதலைப்பற்றி விலக்கின்மையும் உணர்தல்வேண்டும் . அஃது அவரவர் மன நிலைக்கேற்ப மேற்கொள்ளத் தக்கதொன்றாம் .
இனி, சைவர்களாகிய நாம் நம் இறைவனை முறைப்படி வழிபடுதற்கு இன்றியமையாது மேற்கொள்ளத்தக்கது தீக்கையேயாகும் . தீக்கை இல்வழி திருவைந்தெழுத்துப்பெருமறை முதலியவற்றைச் செபித்ததற்குக் கூடாமை யானும் , சரியை முதலிய நால்வகை நெறியொழுக்கம் பெறப்படாமை யானும் அஃது இன்றியமையாத தொன்றேயாம் . தீக்கையாவது ஆன்மாக்க னிடத்துள்ள சிவசத்தியை வெளிப்படவொட்டாது தடையாக மறைந்து நிற்கும் மலசத்தியைக் கெடுத்துச் சிவத்துவத்தைக் கொடுப்பதாகிய சிவசத்திக் கிரியையாகும் . இன்னும் தீக்கையினாலேயே வீடு முதலிய எல்லா நலன்களும் சித்திக்குமென்னும் உண்மையை வாயு சங்கிதை முதலிய புராணங்களானும் , விரித்துக் கூறுஞ் சிவாகமங்களானு முணர்க இத் தீக்கை பலதிறப்படும் . அவற்றின் விளக்க விசேடங்களை யெல்லாம் ஆகமங்களுள் தெளிவாக உணரலாம் . சமய தீக்கை பெற்று இறைவன் உருவத் திருமேனியைப் புறத்தொழில் மாத்திரையான் வழிபடுதலாகிய சரியையும் , விசேட தீக்கை பெற்று அருவுருவத் திருமேனியைப் புறத் தொழில் அகத்தொழில் இரண்டானும் வழிபடுதலாகிய கிரியையும் , அருவத் திருமேனியை நோக்கி அகத்தொழில் மாத்திரையான் வழிபடுதலாகிய யோகமும் , நிருவாண தீக்கை பெற்று இம் மூன்றனையுங் கடந்த உண்மை யறிவின்ப வடிவமாகிய இறைவன் சொரூபத்தை வழிபடுதலாகிய ஞான நிலையும் ஆகிய இந் நால்வகை நெறிகளுள் , தம் தகுதிக்கேற்ப இயன்றதொன்றை அநுட்டித்து வருதல் ஒவ்வோரான்மாக் களுக்கும் உரிய கடமையாகும்.
அற நூல்களிற் கூறப்பட்ட அருள் , கொல்லாமை , புலாலுண்ணாமை , கட்காம நீத்தல் முதலிய உயர்ந்த ஒழுக்கங்களெல்லாம் ஈண்டுக் கூறிய சைவ நெறிக்கண் அடங்குமாதலின் , வேறாக விரித்திலன் . வைதிக குலத்திற் பிறந்தாருள்ளுஞ் சில நவீன அறிவுடையோர் , கிரியைகள் கேவலம் மெளட்டியர்களுக்கேயன்றி , அறிவுடையார் உண்மையுணர்ந்து அந்தக்கரணங்களை மாத்திரம் திருத்திக்கோடல் போதியதெனவுங் கூறி நித்திய கன்மங்களைப் பொருட்படுத்தாது காலத்தை வறிதே கழிக்கின்றனர் ; அவரெல்லாம் , கன்மானுட் டானங்களா லன்றிச் சித்த சுத்தி யுண்டாகாதென்று அநுபவ ஞானிகளாகிய நம் பண்டையோர் கூறி அவ்வாறே யொழுகிய உண்மையை ஒரு சிறிதும் உணர்ந்திலர் .கீதையிற் கண்ணபிரான் , தத்துவஞானியுங்கன்மத்தை விடல் தவறெனவும் , மேற்கோ டல் இன்றியமையாத தொன்றெனவும் தடைவிடைகளால் அருச்சுனற் குபதேசித்ததையும் உணர்ந்திலர் . உண்மை ஞானி யொருவர் எல்லாப் பந்தங்களையும் ஒருவிச் சுத்த ஞான வொளியி லியைந் திருக்குங்காற் கன்மங்கள் அவரைத் தாக்காமல் தாமே ஒழியும் . அந் நிலையைப்பற்றி ஈண்டுச் சங்கித்தல் இயைபின்று . கன்மந் தானே ஒழியப்பெற்ற ஒரு மகா ஞானியை நோக்கி ஒருவன் “அடிகாள் , தேவரீர் சந்தியோபாசனை செய்யா திருத்த லென்னை ? “ என்று வினாவினானாக , அவர்
“அஞ்ஞானத் தாய்மரண மானாள் அஃதொன்றோ
மெய்ஞ்ஞானக் கான்முளையும் மேவினான் — இஞ்ஞானலந்
தன்னில் மரண சனன இரு சூதகத்தேன்
உன்னலெங்ஙன் சந்திசெயல் ஓர் “
என்று விடை கூறினார் . அஃதாவது : “அஞ்ஞான வுருவமாகிய தாய் இறந்தாள்; அறிவுருவமாகிய குழந்தை பிறந்தது ; இவ் விருவகை ஆசெளசத் தையும் உடையனா யிருக்குங்கால் எவ்வாறு யான் சந்தியோபாசனை செய்வல்” என்பதாம் . ஆதலிற் கண்ணப்பர் முதலிய முறுகிய அன்புடையார் செயலை விதியாகக் கொண்டு அத் தகுதி யில்லாத நாமும் இறைச்சி நிவேதனத்தை இறைவனுக்குச் செய்தல் பொருந்துமா? அவர் இறைவன் கண்ணிற் புண்ணீர் வார்தல் கண்டு வருந்தி அதற்கு மாற்றாகத் தங் கண்ணைப் பறித்து வைத்து மகிழ்ந்தாரன்றே ! அத் துணிவு நமக்கும் வரினன்றே அவர் செயலை நாமுங் கோடலமையும் .
அன்பர்களே !
இக் குதர்க்க நெறியையொழித்து நமக்கு இறைவன் அருளிய வேதாகமங்களில் விதிக்கப்பட்ட செயல்களை இயன்றவரை விடாது செய்மின்கள் ; புலாலுண்ணல் முதலியவற்றிற்கு முதிர்ந்த அன்புடைச் சிவச் செயலாளராகிய அடியார்களை உதாரணங் காட்டிப் புரைபடாதீர்கள் ; சமயாசாரமாகிய நித்திய கன்மங்களை விடாது செய்ய முந்துமின்கள் . ஒவ்வோரோழுக்கங்களையுஞ் சொல்லளவிற் சுருக்கியுஞ் செயலளவிற் பெருக்கியுங் காட்டுமின்கள் ; நம் சமயக்கடவுளைச் சிவலிங்காதி திருமேனி களிடத்தும் , சிவனடியாரிடத்து மிருப்பதாகக் கண்டு விசேட அன்பைச் செய்மின்கள் ; பிற சமயங்களும் இறைவனரு ளிருந்தவாறு ஆன்ம பக்குவ நோக்கி வெளிப்பட்டன என்னும் உண்மை யுணர்ந்து அவற்றை இகழன்மின்கள் . இளமைப் பருவம் காமாதிகளை அனுபவித்தற்கென்றே கருதிக் கழிக்காது , நம் பெருமானை வழிபட்டுய்தற்கு மிக ஏற்றதொரு பருவமென்றெண்ணுமின்கள் ; ஆலய வழிபாட்டையும் விக்கிரகாராதனத் தையும் இயன்றவரை இடைவிடாது செய்ய விரும்புமின்கள் ; உரிய கருவி நூல்களையும் , அவற்றின் பயனாகச் சமய நூல்களையும் நடுநிலையுடன் ஆராய்மின்கள் ; தாங்கொண்டதே பொருளெனக் கடைப்பிடியாது தம்மினுந் தாழ்ந்தார்வாய் உண்மை வருமாயின் அதனை மகிழ்ந்து ஏற்றுக்கொண் மின்கள் ; நூல்களிற் கண்டவை ஒழுக்கத்திற் காட்டற்கன்றிக்கலாம் விளத்தற் குபயோகமென் றெண்ணாதீர்கள் ; நம் சமயத்தையும் , மொழியையும் பிற சமயத்தார்க்கும் பிறமொழியாளர்க்கும் வருத்தமுண்டா மாறின்றிப் பேண முற்படுமின்கள்; பிறர் நம் சமயம் மொழிகளை அறியாமையான் இகழின் அவர் மனம் வருந்தாது ஐயப்பாட்டிற்கு மாத்திரந் தக்கவாறு மறுமொழி தந்து அவரைத் திருத்துமின்கள் ; பின்னுந் திருந்தாராயின் அவரறியாமைக் கிரங்கி அஃதொழிய நம்கடவுளை வேண்டுமின்கள் ; சிவபிரான் , விரும்பிக் கருணைபாலித்தற்குரியதாக அருளறம் என்னும் சிறந்த அமிழ்தத்தை முதலில் நும் நெஞ்சக்கலத்திற் கொண்மின்கள் . நண்பர்களே ! இவையெல்லாம் சீவர்களாகிய நம் கடமைகளேயாம் . இத்துணைக் கடமைகளுள் மிக முக்கியமான கடமையொன்று சிவபிரானை நோக்கச் சீவர்களுக்குண்டு. அதனையும் ஈண்டுக் கூறுவேன் .
9 . ஓரின்றியமையாக் கடமை
அஃதாவது இறைவனை நோக்க ஆன்மா ஒருவித சுதந்தரமுமின்றிப் பர தந்திரம் உடையதாகலின் , ஆணவ மலத்தாற் பிணிப்புண்டு கிடக்கும் பெத்தகாலத்தும் , தநுகரணங்களைப் பெற்றுச் சிறிது அறிவு விளக்கமுற்று உபாசனாதிகளைச் செய்யும் மத்திய காலத்தும் , மலசத்தி அறவே ஒழியப் பெற்றுச் சிவத்துவமெய்திப் பேரின்ப நுகரும் முத்திக் காலத்தும் தன்பாலிடைவிடாதமைந்து கிடக்கும் அடிமைத் தன்மையேயாம் . அடிமையாவது ,
“கண்டவிவை யல்லேனா நென்றகன்று காணாக்
கழிபரமு நானல்லே னெனக்கருதிக் கசிந்த
தொண்டு”
என்றபடி காணப்படும் பாசகாரியப் பொருள்களும் மேலாகிய பதிப் பொருளும் யானல்லே னென்று கருதியவழி முன்போல முனைத்தலின்றி ஓங்குணர்வின் உள்ளடங்கி நிற்றலாம் . இவ்வடிமையின் முக்கிய இலக்கணமாகக் கருத வேண்டியது , ஆண்டவனாகிய சிவபிரான் , ஒப்பாரு மிக்காருமின்றி யாவர்க்கு மேலாந் தலைவ ரெனவும் அடிமையாகிய யான் , என்னின் ஒப்பானதுங் கீழானதுமாகிய பொருளொன்றுமின்றி யானே மிகக் கீழானவா னெனவும் உள்ளவா றுணர்ந்தொழுகலேயாம். இது கருதியே ,
“யாவர்க்கு மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழாம் அடியேனை”
என்றார் மணிவாசகப் பெருமானும் . நம் சமயக் கொள்கை பலவற்றுள் மிக முக்கியமானதும் இதுவேயாம் . அதனாலன்றே ,
“தாழ்வெனுந் தன்மையோடு சைவமாஞ் சமயஞ்சாரும்
ஊழ்பெறலரிது”
என்று கூறும் சிவஞானசித்தியும் , இத் தொண்டு அடிமைநெறி (தாத மார்க்கம்) , தோழநெறி (சக மார்க்கம் ), மகன்மை நெறி (சற்புத்திர மார்க்கம்) உயர்நன்நெறி (சன்மார்க்கம் ) ஆகிய நால் வகை ஒழுக்கத்தினும் ஆன்மாவை விட்டு நீங்காததொன்றாம் . “எவ்விடத்தும் இறை யடியை “ எனவும் , “தொழும்பாகும் அங்கு “ எனவுங்கூறியபடி வீட்டு நிலையினும் இவ்வான்மா அடிமையே யாமெனின் , வேறிதன் மாட்சியை எங்ஙனம் கூறுவேன் ! உள்ளவாறு ஓரான்மா இறைவனுக்கு யான் என்றும் அடிமையே யென்றுணர்ந்து முனைப்பின்றியொழுகுமாயின் வீட்டின்பமாகிய பயனைச் சிவபிரான் தாமே தருவர் , வீட்டு நிலையை விரும்புதலும் அடிமை யிலக்கணத்துக்குக் குற்றமா மென்றால் , வேறு கைம்மாறு கருதல் கூடாதென்பதைப் பற்றிக் கூறுதல் மிகையே . வீடென்பது எல்லாவற்றையும் விடுதலன்றே ! அவ் வேண்டாமையை வேண்டல் அவசியமென்று நூல்கள் கூறவும் , அதனை விரும்புதலுங் குற்றமென்ப தெங்ஙனம் பொருந்துமெனின் ; ஆன்மா, தன் கடமை இன்னதென்றறிந்து மேற்கொள் ளின் , இறைவனுந் தன் கடமையைச் செய்வன் என்பது தேற்றமன்றே ! அஃதுணர்ந்தும் , சிறிதுஞ் சுதந்தர மில்லாத இவன் எற்கு இன்னது வேண்டுமென்று விரும்புதலுந் தவறேயாம் . இவ் வுண்மையை ,
“மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா என்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே “
என்னுந் திருவாக்கானும் உணர்க . அஃதாவது யான் அடிமையென்றுணர்ந் தபின் நின்னை வழிபடுதலேயன்றி இவ்வுடல் கழியுமாற்றையும் நின் திரு வடிப்பேறு பெறும் வழியையும் , யான் எண்ணுதற் குரியனோ ; அங்ஙனம் எண்ணுவேனாயின் என் அடிமை யிருந்தவாறு மிக அழகிது என்பதாம் .
“சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின்” .
என்றபடி அடிமைநெறி முதலிய மூன்று நெறிகளினும் ஒழுகுவோர் வீட்டின்பத்தில் விருப்புற்று மேன்மேற் செல்லுவர் . நான்காவதாகிய சன் மார்க்கத் தொழுகுவோர் அவ்விருப்பமின்றித் தங் கடன் இதுவென உணர்ந்து சிறிதும் முனைத்தலின்றி அடங்கிநிற்பின் சிவபிரான் , தங் கடனாகிய பேரின்பளித்தலை விரைந்து செய்வர் .
ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகளும் இவ்வுண்மை அடியாரைக் கூறுங்கால் ,
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளக்கினார் “
என்று பாராட்டியிருக்கின்றனர் . இவ் வருட் பாசுரத்தின் அருமையை என்னென்பேன் ! இத் திருத்தொண்டின் மாட்சியைப் பற்றித் தனியே ஒரு வியாச மெழுதி வெளிப்படுத்தக் கருதியுளே னாதலின் ஈண்டு விருத்திலன். முடிவாகக் கூறுமிடத்து , இவ் வடிமையே ஆன்மா பயன் குரியாது மேற்கொள்ள வேண்டுவ தொன்றென்பது இவ்வாராய்ச்சியால் விளக்கமாம் .
10 . இதன் பயன்
இனி , இவ் வின்றியமையாக் கடமையாகிய அடிமையின் பயனைப்பற்றிச் சிறிது கூறுவேன் . அதன் பயன் வீட்டின்பமே யென்பது முன்னர்ப் பெறப்பட்டதாயினும் , இடைக்கண , உண்டாம் பயன்களும் உள . ஆன்மா , எல்லாம் அவன் செயலேயன்றித் தன் செயலென் றென் றுணர்ந்து அருள் வழி நிற்பின் , அதனாற் செய்யப்படுங் கன்மங்கள் அதனைச் சாரா. கன்மங்கள் கட்டு நிலையில் நான் செய்கின்றே னென்று கருதுவதால் ஆன்மாவைத் தாக்கும் . வீட்டு நிலையில் யான் எனதென்னும் இருவகைப் பற்றுமின்றி எல்லாம் அவன் செயலேயென் றுணர்ந்து அருள்வழி நிற்றலால் அக்காலத்துச் செய்யப்படுங் கன்மங்கள் அவ்வான்மாவைத் தாக்கா . பிராரத்த வினை அநுபவித்தே தீரவேண்டு மெனினும் , அஃது உடலூழாய்க் கழியுமன்றி உயிர்க்கு இன்ப துன்பங்களைச் செய்யாதென்பதாம் . இவ் வுண்மையை ,
“நாமல்ல இந்திரிய நம்வழியி னல்லவழி
நாமல்ல நாமு மரனுடைமை — யாமென்னின்
எத்தனுவி னின்று மிறைபணியார்க் கில்லைவினை
முற்செய்வினை யுந்தருவான் முன் “
என்னும் மெய்கண்டார் திருவாக்கான் உணர்க . இதனால் எல்லாம் அவன் செயலென் றிருத்தல் மிக நலமென்று போதரலான் , தாம் செய்யுந் தீவினைகளுக்கும் இதனையே பிரமாணமாகக் காட்ட முற்படலாமா வெனின் , நன்று நன்று ! எப்பொருளையுஞ் சிவமயமாகக் கண்டு தானொரு முதலென்பதின்றி அவனே தானேயாகிய அந் நிலையில் நிற்கும் முத்தனுக்கும் , கண்ட பொருளெலாம் இன்பஞ் செய்வனவென்றும் , அவை எனக்கெனக் கென்றும் , யானே நுகரும் முதலென்றுங் கருதி மலவாய்ப்பட் டுழலும் பெத்தனுக்கும் எத்துணை வேறுபாடுள தென்பதை உற்று நோக்குவார்க்கு உண்மைபுலனாம் . இதனால் முடிவுவரை பெரும்பயனைச் செய்வது , இத் திருத்தொண்டேயென்று அதன் மாட்சி யுணர்ந்து அவ்வொ ழுக்கத்தை மேற்கொள்ளுதலே நம் கடமையாமென்பதும் , விதி விலக்கைக் கடந்து நிற்றல் நம்மனோர்க்குப் பொருந்தா தென்பதும் விளக்கமாம் .
என் அன்புள்ள சகோதரர்களே !
இத் திருத்தொண்டை இயன்றவரை செய்தலே சீவர்களின் முக்கிய கடமையென்றுணர்ந்து நம் பெருமானிடத்து எஞ்ஞான்றும் அன்புப் பணி பூண்டு ஒழுகுமின்கள் ; பயன் செய்வது அவர் கடமை யென்பதை உறுதியாக நம்புமின்கள் ; திருத்தொண்டு புரிவார் யாவரும் நம் உரிமைத் தமரென்பதை உள்ளவா றுணர்மின்கள் ; சிவபிரானாகிய பரம பிதாவினது பேரானந்தப் பெருஞ் செல்வத்தைப் பெறுதற்குரிய மக்கள் நாமேயென் றுணர்ந்து பெற்று இன்புறுமின்கள் ; என் புன்சொற்களிற் பொதுளிய பிழைகளை என் அறிவின் சிறுமை கருதிப் பொறுத்துக்கொண்மின்கள் ; இவ்வளவே யான் இப்பேரவைக்கண் இன்று செய்யவேண்டிய கடமை யென்பதை உணர்ந்து இக் கட்டுரையிற் பரந்து கிடக்கும் பொருள்களைப் பற்றிய தொகையுரைக்குப் பொறுமையுடன் சிறிது செவி சாய்மின்கள் .
11 . தொகையுரை
இத்துணையுங் கூறியவற்றாற் போந்த பொருள்கள் :-
பரமகருணாநிதியாகிய சிவபிரானே வேதாகமங்களால் , நிச்சயிக்கப்படும் பரம்பொரு ளென்பதூஉம் , அதனை முழுவிலக்கணத்தோடு ஆளுந்த லைமை , பிறர்க்கின்றாகச் சிவபிரான் ஒருவர்க்கே உரித்தென்பதூஉம், அவர் இக் கருனையையே சக்தியாகவும் திருமேனிகளாகவுங் கொண்டு வெளிப்பட்டருளுவ ரென்பதூஉம் . தம் கருணையமுதை அடியார்க்கு வலிந்து அச்சமுறுத்தியும் ஊட்டுவரென்பதூஉம் , அடியார்பொருட்டு மிக எளியராம் நிலையுடையரென்பதூஉம் , அவர் கருணை அறக்கருணை மறக்கருணை யென இரு வகைப்படு மென்பதூஉம் , அக் கருணையின் பயனாகவே ஆணவ மலத்தாற் பிணிப்புண்டு கிடக்கும் ஆன்மா மாயா கமங்களாற் சிருட்டியாதிகளையுற்று அறிவு விளங்கப்படு மென்பதூஉம் ,அதுவே, இறைவனைக் காண்டற்கும் , ஆனந்த வடிவனாகிய அப் பெருமானைப் பெறுதற்கும் கருவியாகவுள்ளதென்பதூஉம் , சீவர்களின் தன்மை இன்னவென்பதூஉம் , கடமையாவ திதுவென்பதூஉம் , உலகியற் கடமைகள் இவையென்பதூஉம் , சமய சம்பந்தமாகச் சிவபிரானிடத்துச் செய்யுங் கட மைகள் இவையென்பதூஉம் , சமயங்களின் சமரச உண்மையை இவ்வாறு கோடல் வேண்டுமென்பதூஉம் , தீக்கைபெறல் சரியை முதலிய நெறிகளின்றும் கன்மங்களை விடாமற் சிவபிரானை வழிபடன் முதலியவையெல்லாஞ் சமயக்கடமைகளாமென்பதூஉம் , அவற்றுள்,முக்கிய கடமை ஆன்மா, தான் பெத்தகாலத்தும் முத்திக்காலத்தும் மேற்கொள்ளத் தக்க அடிமைத் திறமேயாமென்பதூஉம் , அதன் தன்மை மாட்சிகள் இன்னவென்பதூஉம் , அதனால் ஆன்மா எய்தும் பயன் இன்ன வென்பதூஉம், இத் திருத்தொண்டை ஆன்மா தன் கடமையென மேற்கொள்ளின் , அதற்கு வீட்டின்பந் தருதலைச் சிவபிரான் தம் கடமையென மேற்கொள்வ ரென்பதூஉம் , பிறவுமாம் .
அறிஞர்களே !
யான் இச் சொற்பொழிவின் தொடக்கத்திற் கூறிய தேவாரப்பாசுரத்தில்,
“தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே “
என்னும் பிற்பகுதியாகிய இவ் விரண்டடிகளும் முறையே சிவபிரான் கருணையையும் , சீவர்கள் கடமையையும் புலப்படுத்தி , இச் சொற்பொழிவை இனிது நிறைவேற்றின வென்பதையும் ஈண்டு ஞாபக முறுத்துகின்றேன் . சைவ சமயமுஞ் சிவதருமமுந் தமிழ்மொழியும் நீடுவாழ்க .
***************************
3 . சைவசமய விளக்கம்
( சைவசித்தாந்த மகாசமாஜத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு வழாவின் தலைமையுரை )
அன்புமிக்க ஐயன்மீர் ! அன்னைமீர் !
எல்லாம் வல்ல பரங்கருணைத் தடங் கடலாகிய சிவபெருமான் திருவருட் பாங்கால், இன்றைக்கு இருபத்தைந்து யாண்டுகளுக்குமுன் தோன்றி , இதுகாறும் சைவ உலகிற்குப் பல்லாற்றானும் நற்பயன் விளைத்துவரும் இச் சைவசித்தாந்த மகாசமாஜத்தின் கால் நூற்றாண்டு வழா நிமித்தம் இங்குக் கூடிய இம் மாபேரவையில் , பேரறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் “தலைமை தாங்குக” என்று இச் சமாஜத்தன்பர்கள் “வண்ணப்பணித்தென்னை வாவென்ற வான் கருணைக்கு” யான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன் . இது பற்றி என் நன்றியறவையும் வணக்கத்தையும் இம் மகாசமாஜத்தார்க் குரிமைப்படுத்துகின்றேன் . சித்தவிருத்தி முதலிய கரணங்கள் யாதுமில்லாத கல்லுருவில் , தூய உள்ளமுடைய பெரியார் தெய்வபாவனையைச் செய்ய , அத்தெய்வம் அவ்வுருவிற்றங்கிப் பயன் விளைத்தலைக் கண் கூடாகக் காண்கின்றோம் . அங்ஙனமாயின் , அறிவாற்றல் நிறைந்த உங்கள் தூய எண்ணங்களெல்லாம் கருவி கரணங்களோடுங் கூடிய சிறியோற்குத் தலைவனாந் தகுதி அமைகவென நிகழுமாயின் , ஏன் அமையாது ? இவ்வுறுதி கடைப்பிடித்தே இப்பணியில் தலைப்படலானேன் .
1 . இக்காலத்துச் சமயநிலை .
அன்பர்களே ! தற்கால உலக நிகழ்ச்சி சமய நிலையிற் பெரிதும் பிறழ்ச்சி யடைந்து வருகின்றது . இந் நிலையிற் பண்டைப் பெரியோர் வகுத்த சமயவுணர் வொழுக்கங்களில் கால நிலை கருதி வேண்டுவன இன்ன , வேண்டாதன இன்னவென ஆராய்ந்து கோடல் நன்றென்று பல அறிவுடையோர் கருதுகின்றனர். அக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதெ னினும் , பழையன கழிதற்கும் புதியன புகுதற்கும் உரிய தீங்கு நலங்களை ஊன்றி நிறுத்துணர்தலாகிய பொறுப்பு , ஒவ்வோர் அறிஞர்க்கும் இன்றி யமையாத தாகும் . இப்பொறுப்பைக் காய்தல் உவத்தலின்றி நடுவு நிலைமை மேற்கொண்டும் முன்னைப் பெரியார்பால் நன்கு மதிப்பை நழுவவிடாமலும் தாங்கல் வேண்டும் . இக்கால உலகம் பழைய உண்மைகளாகிய உருவைப் புதிய ஆராய்ச்சி என்னும் எழில் மிக்க அணிக லன்களாற் புனைந்து வெளிப்படுத்துதலை எதிர்பார்த்து நிற்கின்றது . இவ்வேட்கைநிலை உணர்ந்து இச் செயல் மேற்கொள்ள முற்பட்டாருட் சிலர் தம் கற்பனையாற் காணும் அணிகலன்களுக்கு அவ் வுண்மை உரு இயையாமை கண்டு அவ் வுருவையே களைந்துவிட எண்ணுகின்றனர் . இவ் வெண்ணம் மிகத் தீங்கு பயப்பதாகும் . நம் பண்டைய உண்மைக் கொள்கைகளை மாசுபடச் செய்து அவற்றின் சிறந்த பயன்களை நாம் துய்க்கவொட்டாது இடையூறு விளைத்துவரும் களைகளைக் களைய வேண்டுமென்னும் எண்ணம் சிறந்ததே . அம் முயற்சியில் தலைப்பட்ட நம் சகோதரருட் சிலர் அக் களைகளோடு பன்னாட் பயின்ற பிழைநோக்கி நற்கதி விளைக்கும் நம்செந்நெறிப் பயிரையும் உடன் களைந் தெறிந்து விட்டு , “யாது பயனும் வேண்டாம் உண்டியும் உறக்கமுமே வேண்டுவன “ என்று மக்கள் வாழ்க்கைக்கு ஒவ்வா நிலையை மேற்கோடல் மிகவும் வருந்தத் தக்கதே .
2 . வாழ்க்கையின் நோக்கங்கள் .
இனி , மக்களிடம் வாழ்க்கையின் நோக்கங்கள் தாம் யாவை ? அந் நோக்கங்களை நிறைவேற்றிக் கோடற்குரிய நெறிகள் எவை ? அவற்றாலாம் பயன்கள் என்னை ? என்று இன்னோரன்ன ஆராய்ச்சியில் தலைப்படல் அறிவுடையார் யாவர்க்கும் உரிய முதற் கடமையாகும் . நம் வாழ்க்கையின் நோக்கமாக
“யோசிக்கும் வேளையிற் பசி தீர உண்பதுவும்
உறங்குவது மாக முடியும் “
என்று நம் பெரியாரொருவர் உலகஞ் செல்லும் கீழ்நிலை நோக்கி இரங்கிக் கூறிய பரிவுரையை , அக் கருத்துணராமற் கடைப்பிடிப்பேமென்பார் செயல் மிகவும் இழிந்ததொன்றாகும் . பசி தீர உண்டலும் , வேட்கை தீரக் காமவின்பம் துய்த்ததலும் நம்மினும் இழிந்த பிறப்பினவாகிய புள் விலங்கு முதலியவற்றிற்கும் குறைவறக் கிடைத்தலான் , பகுப்புணர்வினாற் சிறந்த மக்கட் பகுதியினர்க்கு அச் செயல்களால் அவற்றினும் விழுமிய பெருமை யாதுளது ? இறைவன் நமக்கு மனவுணர்வையும் நூலுணர்வையும் சிறப்பாக அமைதர உதவியதன் நோக்கந்தான் யாதோ ? அவ் வுணர்வு பெற்றதனால் நம் நோக்கம் அதற்குத் தக விழுமியதாக இருத்தல் வேண்டுமன்றோ ? அந் நோக்கந்தான் அறநிலையிற் பலதிறப்பட்டுச் சமய நிலையில் ஒன்றாகவே முடியுமென்பதை நம் பெரியார் ஒழுகலாற்றானும் , அருள் மொழிகளானும் உணரலாம் .
3 . இல்லற நோக்கம்
ஒரு மணமகளை ஓராடவன் காதற்கிழமை யொடு மணந்து நடாத்தும் இல்வாழ்க்கையைப் பெரியார் இல்லறமென்று சுட்டியதன் கருத்தை ஊன்றி நோக்கல் வேண்டும் . “இல்லின்பம்” என்னும் வழக்குப் பொருந்துவதாகவும் , “இல்லற”மென்னும் வழக்கே ஆட்சியிற் பெரிதும் காணப்படுகின்றது . அவ்விருவரும் துய்க்கு மின்பம் , அவர்தம் அன்பின் தொடர்பை வேரூன்றச் செய்து பின் அவ்வன்பு ஒருங்கியைந்த அருங்கலமாக அவர்பால் வெளிப் படூஉம் மகவு முதலியோர்மாட்டு அதனை விரிவுபடுத்திப் பின்னர்ப் படிப்படியாக உலகத்துள்ள எல்லா உயிர்களிடத்தும் அவ் வன்பைப் பரவச் செய்து அருள் என்னும் பெயரதாக்கி அதன் முகமாக அவ் வருளையே வடி வமாகவுடைய இறைவனோடு இயைவித்துப் பேரின்ப நுகர்ச்சியிற் றலைப் படுத்தும் அறமாக மாறுதலின் இல்லின்பமென்பதனினும் இல்லறமென்னும் ஆட்சி சிறந்ததெனப் பெரியார் கண்டனர் போலும் . கற்புக் கடம்பூண்ட தெய்வமெனப் பாராட்டப்பெற்ற வீரபத்தினியாகிய கண்ணகி யென்னும் பெண்மணி , இளமையும் எழிலுமிக்க தன் காதல் கொழுநனாகிய கோவலன் கணிகை யொருத்தியின் வயப்பட்டு , அவள் உடனுறைவால் தன் இளமைப் பயனைப் பிறழ்ச்சி முறையில் நுகர்ந்து , பொருளற்ற நிலையில் தன்பாற்போந்து , “பொன்னே மணியே புனைபூம் பாவாய் காதல் கெழீஇய கற்பரசியாகிய நின்னைவிட்டு வேறொருத்திபால் என் இளமையைக் கொன்னே கழித்தேன் ! என்னே நின் பொறுமை ! இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்; சிறு முதுக்குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் ; வழுவெனும் பாரேன் ; மாநகர் மருங்கீண் டெழுகென எழுந்தாய் என் செய்தனை “ என வியந்து இரங்கிக் கூறுங்கால் , தன் காதலனாம் அவன் பிரிவால் “பொறயிலா அறிவு போகப் புணர்விலா இளமை” யென இளமையின் பயனாகக் கூறப்பட்ட காமவின்பம் துய்த்தற்கு இயைந்திலதே ! பருவம் வறிதே கழிந்ததே ! என்று அவ்வின்ப மெய்தாமை குறித்து வருந்தினாளல்லள். பின்னை அவ்வறப் பெருஞ் செல்வி ,
“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர் தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கொடலும் இழந்த என்னை “
எனத் தம் இல்வாழ்க்கையின் உண்மைப் பெரு நோக்கங்களையே இனிதெ டுத்துரைத்து , அவை அவன் பிரிவாற் கைகூடப்பெறாமைபற்றி இரக்க முற்றாள் என்பதைத் தமிழ்ப் பெருங் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தா லுணர்கின்றோம் . இதனாலும் இல்லறமென்னும் பெயரும் , அதன் நோக்கமும் இத்தன்மையவென வெளிப்பட்டன . இந் நோக்கம் அறநிலை பற்றியதாகும் .
4 . சமய வாழ்க்கையின் நோக்கம்
இங்ஙனமே சமய நிலையில் நம் வாழ்க்கைச் செயல்களெல்லாம் இன்ப வடிவினனாகிய இறைவனைப் பற்றியே நிகழ்தல் வேண்டும் . நம் உட லுறுப்புக்க ளெல்லாம் அப் பெருமானை வழிபடற்கே அமைந்தன வென்பதை,
“வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை “
என்னுந் தமிழ்மறையானும் உணர்ந்துளேம். நம் நாட்டுச் செயலனைத்தும் அப் பெருமான் நினைவே முன்னிற்கச் செய்தல் வேண்டுமென்னும் ஆன்றோராசாரம் எத்துணை நலமுடையது ! நம் வாழ்க்கை மலர் தெய்வமணங் கமழுமேல் சிறந்ததாகப் பாராட்டப்படும் . அந் நன்மண மின்றேல் ,
“பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே”
யென்றருளியாங்குப் பயனற்றதாக முடியும் .
5 . மகா கவிகளின் உள்ளக்கிடக்கை
நம் புலமையும் அறிவும் கவிசுவையி லீடுபடுங்கால் , இன்பம் அவலம் முதலியனவாகத் தோன்றி , முடிவில் அச் சுவை யனைத்தும் தெய்வ நறுங்கனித் தீஞ்சாற்றில் தோய்ந்தனவாக புலப்படுவனவாம் . இவ்வுண் மையைப் பெரும்புலமை வாய்ந்த அருங்கவிகளின் எண்ணங்களே வெளிப்படுத்துவன . தெய்வமணக்கும் செய்யுள் யாக்கும் திறம் பெரிதுடைய நம் சேக்கிழார் பெருமான் , இன்பச் சுவையை இனிது விளைக்கும் செய்யுட்களினும் தம் உண்மை நோக்கமாகிய தெய்வமணங் கமழவே கூறுவர் ,
“வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நானறியேன் மறுமாற்றம்”
என்பது அநுபவ அருளுரையன்றோ ! எழில் நலமும் தெய்வ நலமும் நிரப்பப்பெற்ற பரவையாரைச் சுந்தரமூர்த்திகள் திருக்கோயிலிற் கண்ட காட்சியை எடுத்துரைக்குமுகமாகச் செந்தமிழுக்குச் சிறப்பளித்து நிற்கும் இன்பத் துறைபற்றியெழுந்த செய்யுட்களைக் காண்மின்கள் ! பரவையாரைக் குறித்துக் ,
“கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேயென் றதிசயித்தார் “
என்று சுந்தர மூர்த்திகள் திருவுள்ளக் கருத்தும் அவ்வடிகளைக் குறித்து ,
“முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ
பெருகொளியால்
தன்னேரின் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்
றுடையவனோ
என்னேயென் மனந்திரித்த இவன்யாரோ என
நினைந்தார்”
என்று பரவையார் கொண்ட திருவுள்ளக் கருத்தும் இயைந்த அழகுதான் என்னே ! என்னே !
இச் செய்யுட்களின் முடிவில் , “சிவனருளோ” எனவும் , “மின்னேர் செஞ்சடை யண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ” எனவும் போந்த இயைபு அருட்பெரும் புலவராகிய அடிகளின் புலமை நோக்கத்தைத் தெற்றெனப் புலப்படுத்தும் . ஓகாரங்களால் ஐயுற்று விலக்கப்பட்ட உவமை உவமைகளி னியைபையும் சிந்தித்துப் பார்மின்கள் ! “கற்பகத்தின் பூங்கொம்போ” என்னும் அடிகள் உரையில் கற்பகத் தருவில் இந்திரனால் வளர்க்கப்பட்ட பூங்கொம்பு போல்வாளாகிய தெய்வயானையோ என்னுங் குறிப்புத் தோன்ற , அம்மையார் “முன்னேவந் தெதிர் தோன்றும் முருகனோ” என்றாரெனவும் , அடிகள் “காமன் றன் பெருவாழ்வோ” என , அம்மையார் “தன்னேரின் மாரனோ” என்றாரெனவும் , அடிகள் “புண்ணியத்தின் புண்ணியமோ” என, அம்மையார் அதன் நுகர்ச்சி மிக்க “தார்மார்பின் விஞ்சையனோ” என்றாரெனவும் , முடிவில் அடிகள் “சிவனருளோ” என , அம்மையார் “மெய்யருள் பெற்றுடையவனோ” என்றாரெனவுங் கூறிய கருத்தியைபுகள் நம் மனத்தை மிகவுங் கனிவிக்கின்றன . பின்னர்ப் பரவையார் சற்று மறைந்த வுடன் அவர் பிரிவுபற்றி வன்றொண்டர் கூறியதாக வெளிப்பட்ட
“பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்
ஆசை மேலுமொ ராசை யளித்தெனத்
தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய
ஈச னாரருள் எந்நெறிச் சென்றதே”
என்னும் திருப்பாடலின்கட் டோன்றும் தெய்வமணம் மிகவும் சிறந்ததாகும். இதன்கண் ,
“பற்றறுப்பான் மிகும் ஆசை”
எனவும் , “ஈசனாரருள்” எனவும் போந்த கருத்துகள் சிந்தித்து இன் புறத்தக்கன .
இம்மட்டோ ! இருள் வரவுக்கும் நிலவெழுச்சிக்கும் உவமங் கூறுங்கால் ,
“ஐந்தெ ழுத்து முணரா அறிவிலோர்
நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்”
எனவும்,
“அண்ணல் வெண்ணீற்றின் பேரொளி
போன்றது நீணிலா”
எனவும் நம் சைவ சமய சாதனங்களைக் கூறியருளிய அழகு , அன்பர்கள் உள்ளத்தை மிகவும் இன்புறுத்துவதாகும் . இன்னோரன்ன சந்தர்ப்பங்களில் மற்றைக் கவிகள் இந் நினைவை மேற்கொள்ளார். அருட் கவிகளுக்கே இது வாய்ப்பதாகும் . இன்னும் இத் தெய்வச் சுவை மிக்க பகுதிகள் பல : புலவர் திலகமாகிய சிலப்பதிகார நூலாசிரியர் இன்பம் முதலிய ஒன்பான் சுவைக்கும் நிலைக்களமாகத் தாம் யாத்த அத் தீஞ்சுவைக் காப்பியத்தின் இறுதியில் ,
“தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்”
என்று கூறிய பயனுரையைச் சிந்தித்துப் பார்மின்கள் ! வடமொழி மகாகவி யாகிய காளிதாசர் இரசபுஞ்சமாக இயற்றிய சாகுந்தல நாடகத் திறுதியில் பரத வாக்கியமாகக் கூறிய ,
“ப்ரவர்த்ததாம் பிரகிருதி ஹிதாய பார்த்திவ :
ஸரஸ்வதீ கருதி மஹிதா மஹீயஸாம் !
மமாபிச க்ஷபயது நீலலோஹித :
புனர்பவம் பரிகத் சக்திராத்மபூ :
என்னும் சுலோகத்தின் பொருளை உற்று நோக்குவோமாயின் , காதல் மணங் கமழ இயற்றிய அந் நாடகத் திறுதியில் தன்னுள்ளக் கிடக்கையை அக் கவி எவ்வளவு உயரிய நோக்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளா ரென்பது புலனாம் . இப் பொருளாவது “மன்னுயிர் நலங்குறித்து மன்னவன் அரசு செய்க ; செவிப் பொறியாற் சிறப்புறூஉம் மகாகவிகளின் நூல்கள் நின்று நிலவுக . நீலச் செந்நிற முடையானும் உமையொரு கூறனும் சுயம்புவுமாகிய இறைவன் எனக்கும் புனர்ப்பவத்தைப் போக்கியருள்வானாக “ என்பதாம் . இதன்கட் சகளமாகிய உருமேனியும் , சகள நிட்களமாகிய அருவுருமேனி யும் , நிட்களமாகிய அருமேனியுமாகிய மூன்றுமுடையான் இறைவன் என்பது தோன்றும் . ஈதன்றோ புலமை வாழ்க்கையின் பொருள் முடிபு .
ஒரு வாணிகனது வாணிக வாழ்க்கையின் குறிப்பு ஊதியமே யாயினும் அதன்கண்ணும் “கொள்வதூஉ மிகை கொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது “ இயற்றவேண்டுமென்ப . இங்ஙனமே எல்லாச் செயல்களும் உயரிய நோக்கத்தை மேற்கொண்டு இறைவனோடியையும் இன்பநிலை பற்றியே நிகழ்வனவாம் . இறைநலம் பற்றாத வாழ்க்கை பயனற்ற தென்றும் அவ் வாழ்க்கைக்கு வேண்டுவன செய்தல் பாழுக்கு நீரிறைத்த லென்றும் பெரியார் கூறுப. இவ் வுயரிய கருத்துச் சமய வாழ்க்கையினின்று அவ் வுணர் வொழுக்கம் கைவரப் பெற்றார்க்கன்றி உண்டாதல் அரிதாகும்.
6 . ஒழுக்கநிலைக்குச் சமயத்தின் இன்றியமையாமை
உலகத்துள்ளா ரெல்லோரும் அவரவர்க்குரிய சமய நெறியிற் சென்றே ஒழுக்க நிலையை எய்தக்கடவர் . சமயச் சார்பு வேண்டாம் : ஒழுக்க மாத்திரமே போதியது எனச் சிலர் எண்ணக் கூடும் . அச் சார்பின்றேல் ஒழுக்கம் உரம் பெறல் அரிது . விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் அறமாமெனவும் அதனாற் பெறக் கிடப்பது இன்பமெனவும் கொண்டு , அதனைப் பெறும் அவ்வளவிலன்றிச் சமய நிலைக்கு வரக் கடவேமல்லே மென்பார் சிந்திக்க வேண்டுவன சிலவுள , அன்னாரை நோக்கி , விலக்கியன சில இம்மையில் இன்பந் தருகின்றன . ஆதலின் , அவற்றை மேற்கோடலான் வரும் ஏதம் என்னை? என்று வினவின் , அரசியற் றண்டம் நேருமென்று கூறக்கூடும் . அரசியல் வினைஞர்க்கும் அறியாத நிலைமையிற் புரியும் தீச் செயல்களால் இன்பமுண்டாமாயின் , ஏன் அவற்றைச் செய்தலாகாதெனின், மாற்றமென் பகர்வர் ? இந் நிலையில் மறுமைத் துன்பமும் அதனைத் தரும் ஆண்டவனியல்பு முதலிய சமய நம்பிக்கைகளுமே ஒழுக்கத்தை உறுதிப் படுத்துவனவாம் . ஆகவே உயிரினும் ஓம்பப்படுவதாகிய ஒழுக்கத்தை மேற் கொள்ள நினைப்போர் யாவரும் சமய நெறி நின்றே மேற்கொள்ளக் கடவர். அவ்வொழுக்கங்களுக்குப் பயன் விளைவிக்கும் இறைவன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் சமயநிலை பற்றியே உண்டாவதாகும் .
“உன்னை வந்திப்பதோர்
நெறியறியேன் நின்னையே யறியேன்”
என்ற திருவாக்கின்படி சமயநெறிக்கட் செல்லாதார்க்கு இறைவன் நிலையை அறிதல் இயலாததாகும்.
7 . சமய இலக்கணம் .
அங்ஙனமாயின் மக்கள் ஒழுகலாற்றிற்கியைந்த சமயம் யாது ? அச்சமயப் பொருள்கள் யாவை ? அவற்றை யுணர்த்தும் நூல்கள் யாவை ? அவை கூறும் நிலையில் நின்றார் யாவர் ? அவர்கள் உண்மையிற் கண்ட அநுபவங்கள் எவை ? என்றின்னோரன்ன ஆராய்ச்சியிற் றலைப்படும் அவா எழுதலியல்பே . இவற்றிற்கு விடைபெறு முகமாகப் பல உண்மைகளைத் தெளியலாம் .
“இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்கதின்றி
நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நின்றதியா தொருசமயம் அது சமயம் “
என்று மெய்ச்சமய இலக்கணம் கூறப்பட்டுள்ளது . உலகத்துள்ள பல்வகைச் சமயங்களினும் கூறப்படுந் தத்துவங்களையெல்லாம் தன்னுள் அடக்கி அவற்றோடு முரணாது தழீஇக்கொண்டு அவ்வத் தத்துவ நிலையினின்று முடிவில் தன்னைச் சார்ந்தாரை உலப்பிலாப் பேரின்ப நுகர்ச்சியில் தலைப்படுத்தும் இயல்நலம் அமைந்தது சிவநெறியாகிய சைவ சமயமே யாகும் .
8 . முப்பொருள்களின் இயல்பும் உண்மையும்
முதலாவது இச் சமய நெறிக்கட் புகுவானொருவன் தன்னை நோக்கி “நான் யார்? எனக்கு இவ்வுடல் வந்தவாறென் ? இவ்வுடற்கும் எனக்கும் உள்ள இயைபு யாது ? என்று இவ்வளவில் நின்று ஆராயத் தொடங்குவன் . இத்தொடக்கத்தில் இவ்வுடலையல்லாமற் காட்சியளவையில் வேறொன்றுங் காணப்படாமையானும் , இதற்கு ஓர் ஊறுபாடுண்டாயின் எனக்குத் துன்ப முண்டாகின்றதாகலானும் தோல் என்பு நரம்பு முதலியவற்றாலாகிய இவ் வுடலே யானாக இருக்கலாம் என்னும் நினைவு தோன்றப் , பின்னர் உயிருடன் கூடியிருக்குங்கால் உற்றதை யுணரும் இவ்வுடல் அவ்வுயிர் நீங்கிய வழித்தடிந்தெரி யூட்டினுந் தானுணராதாகலான் , உடம்பிடைப் போன தொன்றுண்டென்னும் உணர்ச்சி தோன்றும் . அங்ஙனம் உடலினின்று நீங்கியதே அறிவுருவாகிய உயிராகுமெனவும் , இவ்வுடம்பு மண் நீர் தீ வளி முதலிய பூதங்களின் சேர்க்கையாலாகிய அறிவில் பொருளாதலின் , இஃது அறிவுருவாகிய உயிராகா தெனவும் , காட்சியொன்றானே எப்பொருளையும் அறிதல் இயையாதெனவும் , கருதலளவையும் உரையலளவையும் பொருட் டுணிவிற்கு இன்றியமையாதனவெனவும் முறையே உணர்வுதிக்கும் . இவ்வுண்மையையே பட்டினத்து அடிகள் என்னும் சிவஞானச் செல்வர் ,
“மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
யூறு முதிரப் புனலோ கூறுசெய்
திடையிடை நிற்கு மெலும்போ எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்
துள்ளிடை யொழுகும் வழும்போ மெள்ளநின்
றூரும் புழுவி னொழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ வுடம்பிற்குட்
பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா
தின்னதி யானென் றறியே னென்னை
எங்குந் தேடினேன் யாதினுங் காணேன்
………………………………. …………………… ……………………
மங்கை பங்க கங்கைநா யகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலங் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் “
என்னும் செய்யுட் பகுதியில் நன்கு விளங்கக் கூறினார் .
இதனால் , இத்தத்துவ தாத்துவிகங்க ளெல்லாம் சடப்பொருளாக , இவை யானல்லேன் எனக் களைந்து ஆராயும் அறிவுடைப் பொருளொன்று நம் உடம்பின் வேறாக உண்டென்பதும் , அதுவே இறைவன் அறிவித்தால் அறியும் இயல்பினதாகிய உயிரென்பதும் போதரும் . இவ்வுயிரினிலக்கணம் பலவாயினும் , ஈது எப்பொருளைச் சார்கின்றதோ அப்பொருளின் தன்மையே தன் தன்மையாகக் கொள்ளும் இயல்பு நோக்கி இதனைச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடையதெனப் பெரியார் விதந்து கூறுப . இவ்விலக்கணம் மிக நுணுகியுணர்ந்ததொன்றாகும் .
பளிங்கொன்று தன்னை அடுத்த நிறம் யாதாயினும் அந் நிறமே தன் நிறமாகக் கொள்ளும் இயல்பினது . அதுபோலவே இவ்வுயிரும் எவ்வெப்பொருளைச் சார்கின்றதோ அவ்வப் பொருண்மயமாகவே தோன்றும் . இஃது அறிவித்தால் அறியும் இயல்பினது . இனி உலகத்துள்ள செயற்கைப் பொருள் ஒவ்வொன்றினையும் நோக்கி அதனதன் செயற்பாட்டிற்குச் செய்பவனையுங் கண்கூடாகக் கண்டு வருகின்றோம் . ஆதலின் , இந் நிலையில் அதி விசித்திரமான இவ்வுலகின் ஆக்கப்பாட் டிற்குப் பேராற்றலும் பேரறிவுமுள்ள இறைவனொருவன் வேண்டுமென்பதில் ஐயம் யாதுளது ? அப்பெருமான் அறிவிக்க அறியுமியல்பினதாகிய இவ்வுயிர், தன்னியல்பையும் பேரறிவுப் பிழப்பாகவுள்ள தலைவனியல்பையும் அறிதற்குத் தடையாகத் தன்மாட்டுள்ளது யாதென ஆராயப்புகின் , அஃது அநாதியே . தன்னைப் பற்றி நின்று தன் அறிவை மறைத்து நிற்கும் அழுக்கு ஒன்று என்பது போதரும் .
அவ்வழுக்கையே ஆணவ மலம் என்ப . இவ்வாணவ அழுக்கைக் கழுவுதற்கே உடல் , கரணம் , இடம் , நுகர்ச்சி என்பவற்றை இறைவன் நம்க்களித்துப் பிறப்புக்களிற் செலுத்துகின்றான் , உடல், கரணம் , இடம் , நுகர்பொருளாகிய இவையெல்லாம் தோன்றுதற்கு இறை , உயிர் , தளை என்னுமிவற்றின் வேறான காரணம் இருத்தல் வேண்டும் . அக் காரணங் களையே மாயா கன்மங்களென்ப .நாம் செய்யும் நல்வினை தீவினைகள் அறம் பாவமென்று கட்டுற்று இன்ப துன்பங்களாக நம் அநுபவத்துக்கு வருகின்றன . இக்கன்மப்பயன் நுகர்தற்கு மாயை என்னும் வித்தினின்று , நமக்கு உடல் முதலியவை கிடைக்கின்றன . உடல் முதலியவற்றை உயிரே படைத்துக்கொள்ளல் இயலாது ; அது சிற்றறிவும் சிறு தொழிலும் உடையதாகலான் . மாயா கன்மங்கள் அறிவில் பொருள்கலாதலின் தாமே தாரா . ஆகலின் எல்லா ஆற்றலுமுடைய இறைவனே அவற்றின் இயல் பறிந்து கூட்டுவிப்பவனாவான் . மாயா கன்மங்கள் மூலமல ஆற்றல் கழிதற்கு ஏதுவெனினும் , அதன் கழிவில் தம் காரியங்களும் ஒழிவுற , அந் நிலையில் கட்டனைத்தும் விட்டு நீங்கப்பெற்ற உயிர் , சித்தம் சிவமாகப் பெற்று இறைவனோடு இரண்டறக் கலந்து அழிவிலாப் பேரின்பத்திற் றிளைத்து நிற்கும் இவ்வுண்மைகளையே பலதிறப்படுத்துச் சைவ சித்தாந்த நூல்கள் வெளிப்படுத்துவனவாம் . இறை , உயிர் , தளை என்பவற்றை வடநூலார் பதி , பசு , பாசம் என்பர் . பாசத்தின் வகைகளை ஆணவம் , கன்மம் , மாயை என முத்திறப்படுத்தும் , மாயேயம் , திரோதானம் ,கூட்டி ஐவகைப்படுத்தும் கூறுப . “மும்மை மலம் அறுவித்து “ எனவும் , “மலங்கள் ஐந்தாற் சுழல்வன்” எனவும் மணிவாசக ஞானப் பாசுரங்கள் வெளிபடுத்தின.
9 . இறைவனை அடைதற்குரிய நெறிகள்
உயிர் கட்டறுத்து வீடு பெறுதற்கு நம் அரிய சமயத்தில் அமைந்த சாதனங்கள் மிகச் சிறந்தனவாம் . சரியை முதலிய நான்கு வழிகள் ஆன்மாக்களின் பக்குவ நோக்கி அமைந்தன . அவற்றினியல்கள் மிக்க விரி வுடையன . சரியை முதலிய நான்கு வழிகளையும் ஒன்றுக்கொன்று சாதன சாத்திய முறையில் வைத்து இறுதியிலுள்ள ஞானத்தால் வீட்டின்பம் அடை யலாமென உணர்த்தப்பட்டது . இவ்வுண்மையைச் சிவயோகியாராகிய தாயுமான அடிகள் ,
“விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே “
என்று கூறியருளினார் . ஒன்றனையொன்று இன்றியமையாமைக்கு அரும்பு மலர் காய் கனி யென எடுத்துக்காட்டிய அநுபவ உவம அழகு மிகப் பாராட்டற்பாலது . இந் நெறிகளை இன்னுஞ் சற்றுச் சுருக்கி அறிவுநெறி அன்பு நெறி யென வகுத்து விளக்கும் தெளிவு மிகச் சிறந்ததாகும் . இவற்றை ஞான மார்க்கம் , பத்திமார்க்கமென்றுங் கூறுப .
10 . அறிவு நெறி
அறிவு , நூலறிவு அநுபவ அறிவு என இரு திறப்படும் . இவற்றை அபர ஞானம் , பர ஞானம் என்றுங் கூறுப . அநுபவ அறிவைப் பயப்பதற்கு நூலறிவு சாதனமாகும் . “நானார் ? என்னுள்ளமார் ? ஞானங்களார் ? “என்னும் ஆராய்ச்சியிற் றலைப்பட்டுச் சிவஞானபோத முதலிய அறிவு நூல்களை ஆசிரியர்முகமாக உணர்ந்து உண்மைப்பொருள் தெளிதலே நூலறிவாகும் . அவ்வுண்மைகளைத் தேவாரம் திருவாசகம் முதலிய துதிவடிவிலமைந்த அருட்பாசுரங்களான் உணர்தலும் , பெரியபுராண முதலிய வரலாற்றுண்மை கூறும் சிவநெறி யிலக்கியங்களான் உணர்தலும் அதன்பாற்படும் . “பந்தமும் பிரிவுந் தெரிபொருட் பனுவற் படிவழிச் சென்று சென்றேறி “ என்பதும் இதனை வலியுறுத்தும் . இந் நூல்கள் நம் பண்டைப் பெரியார் கருணை கூர்ந்தளித்த விலை வரம்பில்லா உயர் மணிகள் நிறைந்த ஒப்பற்ற கருவூலங்களேயாம் . இந் நூல்களிற் பயின்ற முறையை அநுபவத்திற் கொண்டு செய்கையிற் பயன் படுத்தல் அநுபவ ஞானமாகும். அநுபவமென்பது அழுந்தியறிதலாகும் . பொறிகளாற் பற்றப்படும் பொருள் களை அறியுமுறையில் ஈடுபட்டு அழுந்தியறிதலே ஈண்டு அநுபவமாகும் . இச் சொற்பொருளை இங்ஙனங் கண்டு தமிழ்மொழியில் தந்த மாதவச் சிவ ஞானமுனிவர் பெருமை உலகறிந்தது .
ஒரு பழச்சாற்றைத் துய்க்குங்கால் நாப் பொறி பொதுவாக அறிதலினும் அழுந்தி அறிதலே அநுபவமாகும் . இங்ஙனமே நூல்வாயிலாகக் கண்ட சாதனங்களை அகவுணர்வில் அமைத்து அழுந்தியறிதல் சமயாநுபவ சாதனமாகும் . சிவோகம்பாவனை சிவநெறியில் முக்கிய சாதனமாகக் கூறப் பட்டுள்ளது . அதனியல்பை நூல் வாயிலாகத் தெளிதல் நூலறிவாகும். அப் பாவனையை மேற்கோடல் அநுபவ அறிவாகும் . சிவோகம் என்பதன் பொருள் “சிவன்” என்பதாம் . இதனாலேயே “நான்” என்பதற்கு வாச்சியமாகவுள்ள உயிரும் , “சிவன்” என்பதற்கு வாச்சியமாகவுள்ள இறைவனும் எனப் பொருள் இரண்டு போதரும் . உயிராகிய “நான்” எதற்காகச் சிவபாவனை செய்தல் வேண்டும் எனக் கருதுங்கால் , என்பாலு றைந்துள்ள அழுக்காகிய ஆணவத்தைப் போக்குதற்கேயாமென்பது புலனாகும் . இதனாலும் தடையாகவுள்ள பாசம் ஒரு பொருளென்பதும் வெளிப் படும் . சிவோகமென்பதனால் சிவனும் உயிரும் பொருள்வகையில் ஒன்றாகா . மல நீக்கப்பயன் கருதி அப் பாவனை விதிக்கப்பட்டுள்ளது . பாம்பு தீண்டுதலாலுண்டாகிய நச்சுத்துன்பம் ஒழிதற்கு , மாந்திரிகன் கருடோகம் எனப்பாவித்துப் பார்க்கவேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளது . ஆன்மா சார்ந்ததன் வண்ணமாந் தன்மைத்தாதலின் , அவன் கருடனுருவ பாவனையால் அம் மந்திர மூர்த்தியாகிய நஞ்சொழிவிற்குக் காரணமாகின்றான் . பொருள்வகையின் உருவு திரிந்து கருடனாவதில்லை . அது போலவே பேரொளிப் பிழம்பாகவுள்ள சிவ பாவனையில் உயிர் சிவனாவதில்லை . ஆணவ இருள் நீங்கப்பெற்று , உயிர் “ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம்” சார்கின்றது. இதனைத் திருமூலராகிய சிவாநுபவச் செல்வர் ,
“கருட நுருவங் கருதும் பொழுதிற்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவி னுருவம் குறித்தவப் பொழுதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே”
என்று வெளிப்படுத்தருளிச் செய்வாராயினர்.
இப் பாவனையில் உறைத்து நிற்றல் அநுபவ அறிவாகும் . பாவனைக்குப் பயனுண்டென்பதை நம் முன்னையோர் மிகத் தெளிவாக உணர்ந்துள் ளார்கள் . இக்காலத்து மேலைத் தேயத்து அறிஞரும் பாவனைப் பயனைத் தம் அநுபவத்திற் கண்டு நம்பி வருகின்றனர் என்ப . இச் சிவாநுபவ அறிவு கைவரப் பெற்றாரே ஐம்புல வேடர்களால் நேரும் துன்புறு நிலையை யொழித்துச் சிவானந்தத்திற் றலைப்படற் குரியவர் . இவ்வுண்மையை நம் திருநாவுக்கரசு அடிகள் ,
“புள்ளுவ ரைவர்கள்வர்
புனத்திடைப் புகுந்துநின்று
துள்ளுவர் சூறைகொள்வர்
தூநெறி விளையவொட்டார்
முள்ளுடை யவர்கள்தம்மை
முக்கணான் பாதநீழல்
உள்ளிடை மறைந்துநின்றங்
குணர்வினால் எய்யலாமே “
என்னும் அருட் பாசுரத்தால் வெளியிட்டருளினார்கள் . ஐம்புலன் களையும் வேடர்களாகிய கள்வர்களென்றனர் ; சிவார்ப்பணமாகக் கொள்ளப்படும் பொருள்களையெல்லாம் தமவாகக் கொண்டு மாறி நின்று மயக்கி ஆறலைத்துச் சூறை கோடலான் .
“மனமெனும் புனமே”
என்னும் பட்டினத்து அடிகள் கருத்துப்படி, ‘புன’ மென்பது ஈண்டு மனமாகும். அஃது அக் கள்வர்க்குகந்த இடமாகலின் ‘துள்ளுவ’ ரென்றார் . தூநெறி — செந்நெறி . அந் நெறியைத் தடைப்படுத்தலின் விளையவொட்டா ரெனவும், எதிர்த்தாரை ஊறுபடுத்துங் கொடுந்தன்மை யுடைமைபற்றி “முள்ளுடையவர்க” ளெனவும் , அஃதுடைமையால் மறைவில் நின்று அம்பெய்து வீழ்த்த வேண்டுதலின், ‘முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்துநின் ‘றெனவும், உணர்வாகிய அம்பினால் எய்யலாமெனவும் கூறியருளினார் . ஈண்டு உணர்வு அநுபவ அறிவாகிய சிவஞானமாகும். இன்னும் இவ் வநுபவத்தை உயிரநுபவம், அருளநுபவம் , சிவாநுபவம் என வகைப்படுத்துரைப்பாருமுளர் . இதனைப் ,
“பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும்
பொருள் அருளநுபவம் அதற்குப்
பத்தியம் உயிரின் அநுபவம்
இதனைப் பற்றறப் பற்றுதி”
என்பது முதலிய செய்யுட்களில் , சிவனேய மிக்க இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தியுள்ளார் . இவ்வறிவு நெறியையே மணிவாசகப் பெருமான் ,
“நெறியறியேன் நின்னையே யறியேன்
நின்னையே அறியும் அறிவு அறியேன் “
என்றருளிச்செய்வாராயினர் . நூலறிவும் அநுபவ அறிவுஞ் சிறந்த சாதனமாதலை நம் பெரியார்,
“கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர் தங்களோடும்
உற்றிலே னாதலாலே உணர்வுக்குஞ் சேய நானேன் “
எனவும் ,
“கற்றறியேன் கலைஞானங் கசிந்துருகே னாயிடினும்”
எனவும் ,
“ஞானத் தாலுனை நானும் தொழுவனே”
எனவும் மிகத் தெளிவுபடுத்தி விளக்கியுள்ளார்கள் .
நூல்களைப் பற்றியும் அநுபவம்பற்றியும் நிகழும் ஞானத்தையே அறிவுநெறியெனக் கண்டு அந் நெறிக்கட் சென்றால் இன்ப வடிவினனாகிய இறைவனை யுணர்ந்து பேரின்பத்திற் றலைப்படலாமெனும் உண்மையை நம் வாசீகப் பெருந்தகையார் , சிற்றறிவினேமும் செவ்விதிற் றெளிந்து உளங்கொளும்வண்ணம் ,
“உடம்பெனும் மனைய கத்து உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே
என்று தெளிவுபடுத்தருளினார்கள் .
இதன் பொருள் : காரிட்ட ஆணவக் கருவறையிற் கிடக்கின்ற நாம், மெய்ஞ்ஞான விளக்கை ஏற்றி அப் பேரொளிக்கண் அகக்கண்கொண்டு காண்பேமாயின் , இறைவன் கழலடி காணலா மென்பதாம் விளக்கிடுதற்கு முதலில் வீடும் , பின் அகலும் , நெய்யும் , திரியும் நெருப்பும் வேண்டும் .
“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே “
என்னும் அருளுரை இப்பயன் கருதியே எழுந்த தாகும் இவ் வுருவகங்கள் மனத்தை மிகவும் இன்புறுத்தலோடு மெய்யநுபவத்தையும் வெளிப்படுத்து கின்றன . ‘மடம்படும் உணர்நெய்’ எனவும் ‘ஞானத்தீ’ எனவும் ஈரிடத்தும் உணர்வு , ஞானமென ஒரு பொருளை நுதலிவருஞ் சொற்களே உருவகப் படுத்தப்பட்டுள்ளன . ஈண்டுப் பொருள் வேற்றுமை வேண்டும் . இன்றேல் உருவகவியல் சிதைவுறும் . ‘மடம்படும் உணர்வு’ என்பது அறியாமை கெடுதற்கேதுவாகிய நூலறி வென்பதூஉம் , ‘இடம்படும் ஞானம்’ என்பது , மூலமல விருளின் ஆற்றல் குன்ற யாண்டும் பரந்தெழூஉம் அநுபவ ஞான மென்பதுஉம் போதரும் . இஞ்ஞான விளக்கொளியிற் கான்பது ஆன்மாவா கவும் , உயிரெனுந்திரியெனக் கூறுயது எங்ஙனம் பொருந்துமெனின் , “நிலநீர் நெருப்புயி” ரென்புழி , உயிர்க்காற்றென்று பொருள்பட்டாங்கு ஈண்டுப் பிராணவாயுவெனப் பொருள் கோடல் வேண்டும் .
11. அன்பு நெறி
இங்ஙனம் நூலறிவு சாதனமாக அநுபவ அறிவு பெற்று அதன் வாயிலாக வீட்டின்பமெய்தல் ஒன்று ; மற்றொன்று நம் பெரியார் பலரும் மேற்கொண்ட கனிந்த பத்தி மார்க்கமாகிய அன்பு நெறியாகும். அன்பில் அறிவும் அறிவில் அன்பும் கலந்தனவேயாயினும் சிறப்பு நோக்கித் தனித்தனியாகக் காட்டப்பட்டன. அன்பினியல்பைக் கூறின் அது விரிந்த ஆராய்ச்சியில் முடியும் . சுருக்கிக்கூறின் , இனி யாரிடத்துக் கொள்ளுங் காதலே அன்பாகு மென்பதாம் . இனியான் ,
“கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே “
என்ற அருளுரைப்படி இறைவனேயாவான் . அவனைக் குழைந்த அன்பிலே காணலாம் .
“உரனெனும் பொருளானை
உருகில் உள் ளுறைவானை “
என்பது அருண்மொழியன்றோ ! “இன்பமே என்னுடைய அன்பே “ எனவும் , “அன்பினில் விளைந்த ஆரமுதே “ எனவும் , போந்த அருளுரைகளால் அன்பிலே தோன்றும் இன்ப வடிவினனாகிய இறைவனை அன்பெனச் சுட்டியது நோக்கத்தக்கது . “அன்பென்ப தொன்றின் தன்மை அமரரு மறிந்த தன்றே “ என உலகிய லன்பே இங்ஙனம் பாராட்டப்படுமாயின் , இறைவனைப்பற்றி நிகழும் பேரன்பின் மாட்சி எங்ஙனம் அளந்து பேசுந் தரத்ததாம் ?
அடியார் ப;லரும் ஞானநிலை யெய்திப் பின் அன்பு நெறியையே மேற் கொண்டுள்ளாரென்பதும் , அவருட் சமயகுரவர் அருளிச்செய்த அருட் பாசுரங்களெல்லாம் அன்பெனுந் தெவிட்டா அமிழ்த மழையாக வெளிப்பட்டன வென்பதும் உணரத்தக்கன . அக்குரவர்களின் மன மொழி மெய்கள் சிவ வுருவத்தில் திளைத்து நிற்பச் சிவ கரணமாக மாறிய தம் உள்ளக் கிழியில் இறைவன் திருவுருவை யெழுதி ,
“எனை நாளென்ப தறியேன்பகல்
இரவாவதும் அறியேன்”
என்றபடி , சீவபோத மிழந்து அனலிற்பட்ட மெழுகுபோல் நெஞ்சம் நெக்குருகி நிற்க , அந் நிலையில் அப் பாசுரங்கள் அப் பெருமக்கள் வாயிலாகத் தங்கு தடையின்றி யொழுகும் தேனொழுக்குப்போல வெளிப் பட்டன என்பதைப் பெரியபுராண படனமுடையார் யாவரும் இனிதுணர்வர், அவர்கள் மெய்யநுபவத்தை அப்பாசுரங்களிற் காணுந்தோறும் காணுந்தோறும் அறியாமை வயப்பட்டுழலுஞ் சிறியேங்கள் மனமுங் கரை யுமாயின் , அதன் பெருமையை என்னென்பேம் ! என்னென்பேம் ! சிவநேயர் களே ! அவ்வருட்பாசுரங்களில் திளைத்தின்புறுதலொன்றே நம் அறிவு வாழ்க்கையாலெய்தும் முடிந்த பெறும் பேறாகக் கொள்ளினும் அது மிகையாகாது . ஆ ! ஆ ! நினையுங்கால் நெஞ்சம் உருகுகின்றது ! கூறுங்கால் என்றுங் காணாத இனிமை மிக, நா அள்ளூறித் தித்திக்கின்றது ! கேட்குங்காற் செவிகள் குளிர்கின்றன ! உடல் தன் வயமிழக்கின்றது ! பளிங்கனைய ஆன்மா அவ்வருட் பாசுர மயமாக மாறுகின்றது ! சொல்லும் பொருளும் இசையும் சிவமணங் கமழ்கின்றன ! பொறி புலன்களெல்லாம் சிவமயமாகிறன !
இங்ஙனந் தித்திக்கும் மணி வார்த்தைகளைத் திருச்செவியி லருந்தவே பாட்டுக்குருகும் பனிமலைவல்லி பாகன் செழியர் மருமகனாய்த் தென்றமிழ் நாட்டில் தெய்வச் செங்கோல் செலுத்தும் அரசனாயினான் . அவ்வருட் பாசுரங்களை அருளிய பெரியார் திருவுருவை உள்ளத்தெழுதிய சேக்கிழாரென்னும் புலவர் பெருமான் , அன்பு வயப்பட்டருளிய திருத் தொண்டர் புராணத்துள்ள பின்வருஞ் செய்யுட்களில் அவ்வுண்மையநுபவத் தைப் பரக்கக் காணலாம் .
“வார்த்து சொரிந்த கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்த்த மேனிப் புறம்பலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச்
சேர்ந்த நயனப் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தி லுறவைத்து
நீடும் பதிகம் பாடுவார் “
“தூய வெண்ணீறு துதைந்த பொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவரு
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வது போலன்பு நீர்பொழி
கண்ணும் பதிகச் செஞ்சொன்
மேயசெவ் வாயு முடையார்
புகுந்தனர் வீதியுள்ளே “
என்றிங்ஙனம் இறைவனைப் பாடினாரைப் பாடிய செய்யுட்களே நம்மைப் பரவசப்படுத்துகின்றன .இப்பாசுரங்களின் முகமாக வெளிப்பட்ட அன்பு நெறியை மாசற மேற்கொண்ட கண்ணப்பர் வரலாற்றுச் செயல்களெல்லாம் அன்பின் முழு இலக்கணங்களுக்கும் இலக்கியமாக நின்றொளிர்வனவாம்
“அன்புபிழம் பாயினா
ரவர் கருத்தி னளவினரோ?”
என்றபடி அன்புருவமே அவர் வடிவம் . இவ்வுண்மையை உள்ளவாறு உணர்ந்தவர்கள் சமயகுரவர்கள் .
அவர்கள் கலைகளிலே பாராட்டப் பெற்றமையா னன்றே கண்ணப்பர் “கலை மலிந்த சீர் நம்பி “யாயினார் .திருநெறித் தமிழ் விரகராகிய ஞானசம்பந்தர் திருக்காளத்தி சென்று முதலில் இறைவனையும் , பின் கண்ணப்பரையும் வணங்கியமுறையை எடுத்துக் கூறுந் தொண்டர் புராணப் பகுதி யாவ ருள்ளத்தையுங் கனிவிப்பதாகும் .
“வீழ்ந்தெழுவார் கும்பிட்ட
பயங்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக்
கண்டு வீழ்ந்தார் “
என்பர் . ஞானசம்பந்தர்க்குச் சிவதரிசனப் பயனாக வேடர் பெருமான் தரிசனங் கிடைத்ததாம் . காரணம் சிலை வடிவத்தில் இறைவனைக் காண்பதினும் அன்புப் பிழம்பாகவுள்ள கண்ணப்பர் வடிவத்திற் காண்டல் சிறந்ததென்பது போலும் விதி நெறியிற் கடியப்பட்ட எச்சில் ஊன் முதலியன அன்பு வயப்பட்டு இறைவற்கு உவப்பாயின . விதிநெறியிற் போற்றப்பட்ட மலர் , நறு நீர் அன்னம் முதலியனவும் , கண்ணப்பர் அன்பு நெறியிற் கடியப்பட்டன . ஆயினும் அப்பொருள்களும் விதிநெறி பற்றி யொழுகும் சிவகோசரியாரது அன்பின் அளைந்தனவாதலின் பெரியோர் களாற் போற்றப்பட்டன . இவ் வுண்மையை ,
“ஊனோ டுண்டல் நன்றென ஊனோ டுண்டல் தீதெனா
ஆன தொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான் “
என்னுந் தமிழ்மறை நன்கு விளங்கும் . சித்தம் சிவமாகப் பெற்றால் அன்பு மேற்பட்டாற் செய்வனவெல்லாம் தவமேயா மென்பதை இவ் வரலாற்றுப் பகுதி தெளிவுறுத்துருகின்றது .
சித்தஞ் சிவமாகப் பெற்றோர்க்கு விடய வாதனைகளால் யாதும் ஏதம் விளையாது . அங்ஙனம் புலனுகர்ச்சியும் அவர்தம் நெஞ்சத்தைக் கலக்கும் . இவ்வுண்மையை ,
“எழிலையாழ் செய்கைப் பசுங்கலான் விசும்பி
நின்றுளி படநனைந் துருகி,
அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங்கு”
என்னுந் திருவிசைப்பாவிற் காணலாம் . இதன் பொருள் சிறு நீர்த்துளிக்குங் கரையும் பசு மட்குடத்தை நெருப்பிற் சுடப்பட்டபின் பெரும் புனலிலிடினும் அஃது உருச்சிதையாவாறு போலத் திருவருட் பதிவு பெற்ற மனம் எத்தகைய புலனுகர்வாலுஞ் சிதைவுறா தென்பதாம் . ( இப் பாசுரப் பகுதிக்குப் பொருள் வரைந்தவரோருவர் அழலை யாழ்பு — உருவம் — எனப் பதப்பிரிவு கொள்ளாமல்,“அழலையாழ்–புருவம்”எனப்பிரித்துப்“பொருள்வெளிப்படை “ யென்று குறித்துள்ளார் . அவர் செய்த பதப்பிரிவே அவர் அப்பொருள் அறியாரென்பதைப் புலப்படுத்துவதாகும் ) ஈண்டறிந்த அறிவுநெறி அன்பு நெறியாகிய இரண்டும் சிவ நலம் பெறுதற்குரிய வென்பது முடிந்த பொருளாம் . இவ் விருவகைச் சிறந்த சாதனங்களை நம் பெரியார் அருள் சுரந்து நமக்கு வெளியிட்டனர் .
“விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”
என்னும் அப்பர் அருண்மொழியில் “உறவுகோ” லெனவும் , ‘உணர்வுகயி’ றெனவுங் கூறியது முறையே அன்பு நெறியையும் அறிவுநெறியையுமேயாம். இவற்றுள் , கடைதற்குக் கயிற்றினுங்கோல் மிக நெருங்கிய சாதனமாதலை உய்த்துணரின் , ஞானத்தினும் அன்பு விழுமிய தென்பது போதரும் . பாசநீக்கத்திற் றோன்றும் அறிவினும் ஆண்டான் நிலை நோக்கி யுண்டாம் அன்பு பிறப்பிடத்தானுஞ் சிறந்துளதென்று கூறுவாருமுளர் .
12 . ஆண்டானடிமைத் திறம்
இன்னும் நம் சைவ சித்தாந்தச் செந்நெறியில் ஆண்டா னடிமைத் திறம் மிகத் தெளிவாக வலியுறுத் துரைக்கப்பட்டுள்ளது . கட்டு நிலையினும் வீட்டு நிலையினும் உயிரை விட்டு நீங்காதது இத் தொண்டாந் தன்மை யொன்றே.
“கண்டவிவை யல்லேனா னென்றகன்று காணாக்
கழிபரமு நானல்லேன் எனக்கருதிக் கசிந்த
தொண்டு “
என்பதனால் இத் தொண்டினிலக்கணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . இறை வற்குப் பசுக்கள் அடிமையும் பாசங்கள் உடைமையாகும் .
“எல்லாம் உன் அடிமையே
எல்லாம் உன் உடைமையே “
என்பதும் இக் கருத்துப் பற்றி யெழுந்ததாகும் . அடிமைத் தன்மையில் ஒரு சிறிதாவது முனைப்பிருத்தலாகாது . சிறிது முனைப்புளதேனும் அடிமை யிலக்கணம் பிழைபடும் இது பற்றியே “தாழ்வெனுந் தன்மையோடு சைவமாஞ் சமயஞ் சார்தல்” வேண்டு மென்பர் . பெரியாரொருவரை யொருவர் சந்திக்குங்கால் , ஒருவர் மற்றொருவரை நோக்கித் ‘தாங்கள் யாவர்’? என வினவுங்கால் , வினவப்பட்டவர் தம்மையறிவிக்க ,வேறொருவர் இல்லாதவழித் தாமே தம்மைக் கூற நேரின் , தம்மைக் கண்டுகொள்ளக் கூடிய நிலையில் எளிய நிலையை எடுத்துரைப்ப ரென்பதை நாவரையரும் அப்பூதி அடிகளும் சந்தித்த பொழு துண்டாகிய வினா விடைகளால் அறியலாம் .
அப்பூதடிகள் , “ எங்குரைவீர் நீர்தாம் யார்” என்று வினவ , வாகீசர்,
“பிறதுறையின் நின்றேற
அருளுபெருஞ் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துய்த்த
தெருளும் உணர் வில்லாத சிறுமையேன் யான் “
என்றார் . உண்மையான தொண்டக் குலத்தைச் சார்ந்தார்க்குப் பண்டைக் குலமாகிய சாதி பற்றிய வேறுபாடின்றாம் . இவ் வுண்மையையும் இவ்வரலாறு நன்று தெளிவிக்கும் . “குலந்தரும் செல்வந்தந்திடும் ……….நாரா யணா என்னு நாமம்” என்புழி “ குலந்தருமென்பதற்கு உயர்குலப் பிறப்பைத் தருமெனப் பொருள் கொள்ளின் , இயல்பாக உயர்குலப் பிறப்புடையார்க்கு இப் பயன் வேண்டாததாக முடியுமாகலான் , இங்குக் கூறிய குலம் பண்டைக் குலமன்று ; தொண்டக் குலமேயாமென்பர் அப் பாசுர உரையாசிரியர் பண் டைக் குலவொழுக்கிறந்து இத் தொண்டக் குலத்துச் சிறந்த அப்பூதியடிகள் வரலாற்றைக் கூறத்தொடங்கிய நம் அருட்பெருங் கவிஞர் , இன்னவூரில் இன்ன குலத்தில் இன்னாருளர் எனக் கூறு முறையை விடுத்து , “தாண்டவம் புரிய வல்ல தம்பிரா னாருக்கன்பர் “ என அவர்தம் தொண்டர்க்குலச் சிறப்பையே சுட்டிக் கூறியருளினார் . புகழை ஒரு சிறிதும் வேண்டாத அடிகளை “ஈண்டிய புகழின் பாலா” ரென்றது , அடிகள் வேண்டாத நிலையில் புகழ் தானே நெருங்கி வருதல் பற்றியாகும் .
இவ் வாண்டா னடிமைத் திறத்தை நம் சகோதர மதமாகிய வைணவ சமயம் சேஷ சேஷி பாவமாக வைத்து விளக்கிக் கூறும் . அடிமையி னியல்பைப் பற்றி அச் சமயத்தார் கொண்ட கருத்தை ஓரெடுத்துக்காட்டால் விளக்குவேன் . இராம காதையில் ஓரிடத்தொருவர் இலக்குமணனை நோக்கி, ““ராமனுக்கும் உனக்கும் என்ன இயைபு “ என்று வினவ “அஹமஸ் யாவரோப்ராதா குணைர்தாஸ்யம் உபாகத ,” என்று இலக்குமணன் விடை கூறியதாக மதுரகவியாகிய வான்மீகியார் வெளியிட்டுள்ளார் . இதன் பொருள் யான் இவர்க்குத் தம்பியும் அடிமையுமாகவே னென்பதாம் . இங்கே திருவாய்மொழியி னுரையாசிரியர் அடிமைத் தன்மையிற் சகோதர பாவம் ஏறிட்டது முரணுறுவதா மென ஆசங்கித்து “அவனொருபடி நினைப்பன் , யான் ஒருபடி நினைப்பன் “ என்பது இலக்குமணர் கருத்தாகக் கொண்டு காட்டி அம் முரண்பாட்டைக் களைந்து அடிமை யிலக்கணம் பிழைபடாமையை எடுத்துக் காட்டினர் . இராமன் பின்னே செல்கென இலக்குமணர்க்குச் சுமித்திரையார் விடை தருங்கால் ,
“பின்னும் பகர்வாள் மகனே யிவன்பின் செல் தம்பி
யென்னும் படியன் றடியாரினேவல் செய்தி”
என்று இட்ட கட்டளையால் அடிமைத் தன்மைக்குச் சோதரபாவ முரண் படுவதாகு மென்பது வெளியாகின்றது . மேலே காட்டப்பட்ட அவ்வரைச் சுலோகத்தின் முதற்பகுதி இராமபிரான் கருத்தாகவும் , பிற்பகுதி தன் கருத்தாகவும் இலக்குமணன் கூறியதாகக் காட்டியது மிகவும் பாராட்டற்பாலது . இவற்கு யான் தம்பியாவேனென்றது , “இவனை வினவினால் என்னைத் தம்பி யென்பன் ; என் கருத்து அஃதன்று ; யான் அடிமையே என்றானாம் . இப்பணிவு நிலை மிகவும் போற்றத்தக்கதொன்று.
இறைவனை நோக்கி அடியார் தம் கடமை யாகிய “கூடுமன் தனிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விற” லுடைய அடிமையியலிற் பிழையாததாகும். அவ்வடியார் வீடெய்தற்குத் தடையாகவுள்ள தளைகளைக் களைதற்கு இறைவன் திருவடி நாட்டத்தில் ஈடுபடுதலே கடன் . அதற்குப் பயன் விளைத்தல் இறைவன் கடமையாகும் . அதனையும் வேண்டி நிற்றல் அடிமைத்தன்மைக்கு ஒவ்வாத தொன்றாம்.
“மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே”
என்னும் அருண்மொழி இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும் . இவ்வடிமைத்தன்மை கட்டு நிலையிற்போல வீட்டு நிலையினும் ஆன்மாவிற்குரியதென்பதை ,
“அதனி னீறலா வொன்று பலவாறே
தொழும்பாகு மங்கு”
என்பதனாலும் ,
“சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட”
என்பதனாலும் தெளியலாம் . ‘அங்கு’ என்பது வீட்டு நிலையி லென்று பொருளாதலையும் , சிவமாக்கிய பின்னும் ஆட்சி கூறப்படுதலையும் உற்றுணர்க .
13 . வீட்டு நிலை
இனி , நம் சமயத்தின் வீட்டு நிலையைப் பற்றி விளக்கும் பகுதியும் அதற்கு எடுத்துக் காட்டாகவுள்ள உவமங்களும் அளவை நூன் முறையிற் சிறிதும் பிறழ்தலின்றி அமைந்துள்ளன . கட்டறுத்து வீடுபெறும் ஆன்மா இறைவனோ டிரண்டறக் கலந்து சிவாநுபவ நுகர்ச்சியிற் றலைப்படுங்கால் பொருள் வகையா லிரண்டாயினும் அநுபவ நிலையில் அவனெனத் தானென வேற்றுமை யின்றி அத்துவித சம்பந்தம் பெற்று நித்திய வின்பத்திற் றிளைத்து நிற்கும் . அத்துவிதச் சொல்லாராய்ச்சி மிக விரிவுடைய தாகலின் ஈண்டு விளக்க முற்பட்டிலன் . வீட்டு நிலையினும் இறை , உயிர் , தளை என்னும் முப்பொருளுண்மையை இச் சமயம் தெளிவு றுத்திநிற்கின்றது . நித்தியப் பொருள்களுக்கு யாண்டாவது ஓரிடத்து அழிவு கேட்கப்படுமாயின் நித்தியத்துவம் நிலைபெறாது .
முத்தி நிலையில் இன்ப வடிவினனாகிய இறைவனும் அவனோ டிரண்டறக்கலந்து அவ்வின்ப நுகர்ச்சியி லழிந்தி நிற்கும் ஆன்மாவுமாகிய இருபொருளுண்மை பெறப்படுமாயினும் , கட்டு நிலையில் தடையாக இருந்து சிவ சாதனங்களாலொழிந்த மலத்துக்கு ஆண்டு அவகாசம் இல்லை யாதலின் , அதன் நித்தியத்துவம் எங்ஙனம் நிலைபெறுமெனின் ; முத்தி நிலையில் அவ் வான்மாவைப் பாதித்திருந்த மலத்தின் ஆற்றல் அறவே யொழிந்ததன்றி மலம் என்னும் பொருட்டுக் கேடின்றெங்க. முத்தியிற் றலைப்படாத மற்றை உயிர்களிடத்து அம் மலவாற்றல் காணப்படுதலின் அப் பொருட்டுக் கேடு யாண்டு மின்றாம் . அங்ஙனமாயின் மல ஆற்றல் ஒழியப்பெற்ற வீட்டு நிலையில் வைத்து ,
“முத்திதனின் மூன்று முதலு மொழியங்கேள்
சுத்தவநு போகத்தைத் துய்த்தலணு– மெத்தவே
இன்பங் கொடுத்தலிறை இத்தைவிளை வித்தல்மலம்
அன்புடனே கண்டுகொள் அப்பா “
என்பது எங்ஙனம் பொருந்துமெனின் , நெடிது நேரம் பனியால் நடுங்குற்றான் ஒருவன் . தீயின் பக்கல் சார்ந்துழி ஓரின்பம் எய்துகின்றான்; அவ் வின்பத்திற்குக் காரணம் தீயின் சூடும் பனியின் நீகமுமேயாம் . பனியாற்பற்றப்படாத நிலையில் தீயை யணுகின் இன்பந் தோன்றாமை யின் ஆண்டும் பனி நீக்கமும் இன்பத்திற்குக் காரணமாகும் . இத்தை விளைவித்தல் பனியென்புழிப் பனியின் நீக்கமெனக் கொள்ளல் வேண்டும். பனியாற் பற்றப்பட்டு நடுக்கமுற்ற நிலையில் தீயின் சூட்டினால் அது நீங்குங்கால் இன்பம் எய்தும் . அதுபோலக் கரையற்ற காலம் ஆணவ மலவெதுப்பாற் பற்றப்பட்டுத் துபுற்று நின்ற ஆன்மா தண்ணிழலாம் பதியோடு இணந்த பொழுது அம்மல நீக்கமும் அவ்வின்பத் தோற்றத்திற்குக் காரணமாதலின் , ‘இத்தை விளைவித்தல் மல’ மென்றார். ஆகவே நித்தப் பொருள்களுக்குக் கேடில்லாத நிலையில் வைத்தே வீட்டு நிலை நம் சமயப் பெரியொர்களால் தெளிவுறுத்தப்பட்டுள்ளதெங்க.
14 . நம் கடமைகள்
இன்னும் ஆன்மாக்கள் நன்னிலைப்படுதற்குரிய இன்னோரன்ன சிறந்த உண்மைகள் பல நன்கு அமையப்பெற்ற நம் சைவ சமயத்தின் மாட்சி அளவிடுந் தரத்தன்று . இதனைப் போதிக்கும் நூல்களோ தமிழ் வளம் பழுத்த கவிச்சுவை பொதுள அநுபவ அருட்புலவர் பெருமக்களால் அருளிச் செய்யப்பட்டன வாகும் . சாத்திர வடிவிலுந் தோத்திர வடிவிலும் முறையே அமைந்த சிவஞானபோத முதலியனவும் தேவாரம் முதலியனவும் நம் சமய வுண்மைகளாகிய மூலப்பொருள்கள் நிரம்பிய சிறந்த கருவூலங்களாக அமைந்திருக்குங்கால் நமக்கு யாது குறையுளது ? அக் கருவூலப் பொருள்களை அறிந்து அனுபவிக்க வேண்டியதே நம் கடமையாகும் .
அன்பர்களே ! இவ் வரிய சமய மூல தனத்தை நமக்குக் கருணையுடன் நம் பெரியார் அருளியிருப்பவும்,அந் நன்றியை மறந்து நம்மவரிற் சிலர் அன்னாரைக் குறை கூறியும் , சமய வுண்மைகளை இகழ்ந்தும் , அந் நூல்களை வெறுத்துப் பேசியும் நெறிபிறழ்ந்து சைவ வுலகுக்குத் தீங்கு புரிந்து வருகின்றனர் . தாமே தம்மைக் கெடுத்துக்கொள்ளும் அவ்வளவி லமையாது உண்மை அறிவாற்றலில் தலைபடும் பருவத்தினராகிய சைவ இளைஞர்களையும் கெடுக்க முற்படுகின்றனர் . அறவே நம் சமயத்தைத் தொலைத்துவிட வேண்டுமென்பார் ஒருபுறமிருப்ப , சைவ வேடந்தாங்கி நின்று புதிய முறையிற் சைவத்தை விளக்குவதாக மேற்கொண்டு நம் சமய நெறிக்கு ஒவ்வாத பல கொள்கைகளைப் பரப்ப முற்படுவாரும் ஒருபுறந் தாக்குகின்றனர் . ஆ ! ஆ ! ஒரு நாட்டுக்குத் தன் பண்டைச் செல்வமாகிய சமய நிலையை இழக்குங் காலம் நேரின் , அந் நாட்டின் எந் நலனுங் குறைவுபடுமே ! அதன்கண் வாழும் மக்கள் எவ்வகை யின்பமும் இல்லாராய் விலங்கு நிலையை யெய்திக் கீழ் நோக்கித் தம் பிறப்பின் பயனை வீணாக்குவரே ! செய்யத்தக்கன இன்ன , தகாதன இன்னவெனும் பகுப்புணர்வின்றி உண்டியுங் காம இன்பமுமே பொருளெனக் கொண்டு அவற்றின் பொருட்டு மனம் போன வழியிற் சென்று தம் அறவாழ்க்கைப் பயனை ஒரு சிறிதும் எய்தாராய்க் கேடுறுவரே ! அந்தோ ! பொருளில்லாதார் அதனைப் பெற முயறல் உலகியற்கை உடையார் தம் பாலுள்ள பெறலருந் திருவை வெறுத்தொதுக்கி வறியராக முயறல் யாண்டுங் காணாததொன்று .”காட்சியளவையிற் கொள்ளப்படுவனவற்றை யே கொள்வோம் ; மற்றைக் கருதலளவை உரையலளவைகளை ஏற்றுக் கொள்ளோம் “ என்று சாதிப்பார்க்கு , அவர் தம் தாய் தந்தையரை எப் பிரமா ணத்தாற் காட்டக்கூடு “ மென்று கேட்போமாயின் , யாது விடை பகர்வர் ?
காட்சி யளவை யொன்றனையே கொண்டு மற்றவற்றை ஏற்றுக்கொள்ளாத பூதவாதி யொருவனை மணிமேகலை யென்னும் அறிவுடை மகள் தேற்றுமுகமாகக் கூறியதொன்று ஞாபகத்துக்கு வருகின்றது . அது ,
“தந்தை தாயாரை யநுமானத் தாலலது
இந்த ஞாலத் தெவ்வகை யரிவாய் “
என்பதாகும் . ஈண்டு அவன் தன் கொல்கையைக் கடைப்பிடித்துத் தந்தை தாயாரை விலக்குதல் தக்கதா ? அல்லது தந்தை தாயரை ஏற்றுக்கொள்ளுமுகமாகத் தன் கொள்கையை விட்டு அநுமானத்தை ஏற்றுக்கொள்ளல் தக்கதா? அன்பர்களே ! சிந்தித்துப்பார்மின்கள் . இங்ஙனங் காட்சி யனுமானங்களை ஏற்றுக்கொள்ளுங்கால் இவற்றை விளக்குதற் குரிய உரையளவையை எங்ஙனம் விலக்க முடியும் ?
உரையளவையாகிய நூற் பிரமாணங்கொண்டே மக்கள் தம் அறிவைப் பெருக்கிப் பற்பல நுண்ணிய அரிய பொருள்களையெல்லாம் அறிந்தின்புறற்பாலர் . ஆகவே நூலளவையையும் , கருதலளவையையும் ஏற்றுக்கொண்டே எப்பொருளையும் அறிவுடையார் ஆராய்தல் வேண்டும் . “இந் நியாய நெறியில் யாம் செல்லோம்; எம் உளஞ் சென்றவாறே செல்வோம் “ என்று வரம்பிகந்து பேசுவார்க்கு யாம் தரும் மாற்றம் யாதுளது?
“நிற்பார் நிற்க நில்லா வுலகி
னில்லோம் இனிநாம் செல்வோமே “
என்னும் அருண்மொழிப்படி அவரவ்வளவின் மகிழ்க என்றமைந்து ,
“நெறியி னீங்கியோர் நீரல கூறின்
அறியா மையென் றறியல் வேண்டும்”
என்பதைக் கடைப்பிடித்து இறைவனை நோக்கி , “கடவுளே ! நன்நெறி யிகந்து இருளதர் செல்லும் சோதரர்க்கு நீக்கரும் நிலையின் நிற்கும் நீ அறிவு விளக்கை யளித்துக் காத்தருளல் வேண்டும் . “ என்று வேண்டுதலே யன்றி வேறென் செயக்கடவோம்! நம் சமய அடையாளங்களாகிய திருநீறு கண்டிகை யணிதலும் , ஆலயவழிபாடு செய்தலும் , உண்மைப் பத்தியை விளைவிக்கும் புராண கதைகளைக் கேட்டலும் இன்றியமையாதனவாக , இவற்றையெல்லாம் பயனற்ற செயலெனக் கூறித் திரியும் சிறு நெறியாளர் கெடுமதியை என்னென்பேன் ! என்னென்பேன் ! !
புராணக் கதைகள் அவை தோன்றிய காலத்து மக்கள் ஒழுகலாறு நோக்கி எழுந்தன வாதலின் அவருட் சில இற்றைநாள் மக்கள் நாகரிகத்துக்கு ஒவ்வாதனவாகவும் இருத்தல் கூடும் . அங்ஙனம் இயையாதன இன்னவென்று தெளிந்தால் அவற்றை விட்டுக் கொள்வன கொள்ளுதலன்றோ முறை ! எல்லாம் பொய்யெனக் கூறுதல் எப் பிரமாணம் பற்றி ? புராண காவியங்கள் நிகழ்ந்தனவும் , நிகழாதனவும் , இரண்டுங் கலந்தனவும் எனப் பலதிறப்படும் .
நிகழாதனவற்றிலும் நீதி அறம் கடவுட் பத்தி முதலிய நலமிருப்பின் ஏற்றுக்கொள்ளலாம் . நிகழ்ந்தனவற்றிலும் மக்களுக்குத் தீங்கு விளைப்பன உளவேல் அவற்றையறிந்து ஒதுக்கிவிடலாம் . பொய் மெய்களின் உண்மை இலக்கணத்தை யறிந்தார் இம் முறையைக் கோடல் ஒருதலை .
“வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்”
எனவும் ,
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின் “
எனவும் போந்த பொய்யில் புலவர் பொருண்மொழிகள் எத்துணை ஆழ்ந்த சிந்தனையின் மேல் வெளிப்பட்டன . உற்று நோக்குமின்கள் ! நிகழாதது பற்றிப் பொய்யெனவும் நிகழ்ந்தது பற்றி வாய்மை எனவுங் கொள்ளப்பட வில்லை . தீமை பயத்தல் நன்மை பயத்தல்களையே பொய்மை வாய்மைகளுக்குப் பொருளாகக் கொண்ட சிறப்பும் நம் முன்னையோர் பெருமையைப் புலப்படுத்துகின்றது .
வடமொழி யியைபை அறவே தொலைத்து விட வேண்டு மென்னுங் கொள்கையும் நம் சமயப் பாதுகாப்புக்கு ஊறு செய்வதாகும் . அம் மொழிக்கண்ணுள்ள வேதாகம புராணேதிகாசங்களுக்குள் நம் சமய வுண்மைகளை விளக்கும் பகுதிகள் நமக்குப் பிரமாணங்க ளென்றே நம் பெரியார் கொண்டு போற்றினர் . வட மொழிக்கண் உள்ள நூற் பரப்புக்கள் அறிவுடையுலகத்தாற் பாராட்டப்படுகின்றன . ஒரு சிலர் அம்மொழியைத் தமக்கே யுரியதென அறியாமையாற் கொண்டு நம்மை வெறுப்பாராயின் , அவரை வெறுத்தொதுக்குதலே முறையாகுமன்றி அவர் புரியுந் தீங்கு குறித்து அம் மொழிக்கணுள்ள சுவை நிரம்பிய காவியப்பகுதிகளையும் அறிவுநூற் பகுதிகளையும் அறிந்து இன்புறும் பேற்றை யாமேன் இழக்கவேண்டும் ? உண்மைப்பொருள் எம் மொழிக்க ணிருப்பினும் அறி வுடையார் கொள்ள விரும்புத லியல்பே . நம் செந்தமிழறிவு நூல்களெல் லாம் வடமொழிக் குறியீடுகளையே பெரிதுந் தழீஇ நிற்கின்றன . அவற்றைப் பொருட் பிறழ்ச்சி நேராமல் தமிழ்மொழியில் ஆக்கிக்கோடல் நன்றாயினும் அதுபற்றி வடமொழியை வெறுத்தொதுக்க வேண்டுமென் பதில்லையே ! தமிழிலுள்ள தலபுராணங்களிற் பல அம் மொழிபெயர்ப்பா யினும் சிறந்த காவிய முறைகளில் அமைந்தனவாகும் . வடமொழியிற் புராண நடை வேறு ; காவிய நடை வேறு . தமிழிலுள்ள தலபுராணங்கள் பெரும்பாலும் காப்பியச்சுவை நலங் கனிந்தொழுகும் முறையில் அமைந்தனவே . நிகழாத வரலாறுகளைப் பற்றி எழுந்தவற்றையும் கவிச்சுவை , அறநிலை முதலிய நல நோக்கி ஏன் அவற்றைப் படித்தலாகாது? அம் முறையில் அவைகளும் பயன் விளைவிப்பனவேயாம் . கவியின் கற்பனா லங்காரங் கருதிக் கூறப்பட்டவைகளைப் பொய்யெனக் கூறி இகழ்தல் நூல் நலம் பெற விழையும் மதிபடைத்தாற்குப் பொருந்துவதன்றாம் . எவற்றினும் நல்லன இருப்பிற் கொள்ளல் வேண்டும். காலத்தால் முற்பட்டது பற்றிக் கேட்டலும் பிற்பட்டது பற்றி விலக்குதலும் முறையல்ல . நன்று தீதாய்ந்து நல்லன கொள்ளுதலே அறிவுடையார் கடமை.
“தொன்மையவா மெனுமெவையும் நன்றாகா இன்று
தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா”
என்பது உமாபதிசிவாசாரியர் உயர் மொழியாகும் .
15 . வேண்டுகோள்
சைவ சீலர்களே ! உண்மைகளைப் பிறழ்வித்து உறுதிப் பயங்களைக் கெடுக்க எழுந்த சுழல்காற்றுக் கஞ்சாதீர்கள் . “வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் ……………………..ஒருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே “ என்னும் நம் அப்பருண்மொழியைக் கடைப்பிடித்துச் சமய நிலையிற் கொண்ட உறுதியைத் தவறவிடாதீர்கள் . யாண்டும் சைவ சித்தாந்த உண்மைகளைப் பரப்புமின்கள் . சித்தாந்த நூல்களை நம் இளைஞர்கள் செவ்வனம் படித்தறிதற்கேற்ற நிலையங்களை நிலைப்படுத்துமின்கள் . தமிழிலுள்ள சைவ சித்தாந்த நூல்களும் அவற்றின் உரைகளும் கவிச்சுவை நிரம்பியுள்ளன வாதலின் அவற்றை அம் முறையிற் படிப்பித்தல் நன்று . தேவார திருவாசக முதலிய திருமுறை இலக்கியங்களைப் பொரு ளாராய்ச் சியுடன் தெளிவு பெறக் கற்பிக்கும் அற நிலையங்கள் வேண்டும் . இக்காலத் திளைஞர்கள் கல்விப்பயிற்சி செய்தற்கு முன்னரே “எங்கொள்கை ஈது நுங்கொள்கை ஈது” எனத் தெளிவு கைவரப் பெறாமல், அடிப்படையிலே கொள்கை பற்றித் தடுமாறுகின்றனர் . அன்னார் சற்றுப் பொறுமையுடன் முறையாகக் கற்றுச் சமயநூற் போதம் பெறுவாராயின் , உண்மை தெளிந்து பிற்கால உலகுக்கு மிகவும் பயன்படுவர் . ஆதலின் அவர்களை அறிவு நூற்பயிற்சி யுடையராக்கி நன்நெறிப்படுத்த முயலவேண்டும் .
சமயநூ லாராய்ச்சி சமய ஒழுக்கத்தோடு செயற்பாலதாகும் . நூலறிவும் ஒழுக்கமும் ஒருங்கியைந்தே வளர்ச்சியடையும்படி தக்க சாதனங்களைச் சைவ சீலர்களாகிய செல்வர்கள் செய்யமுந்தவேண்டும் . செல்வம் படைத்தார் இச் சிறந்த அறிவறத்தையன்றி வேறென் செயக் கடவர் ! கால நிலையோ விபரீதமாக மாற்ற மடைந்து வருகின்றது . இவ் வமயம் அறிவுந் திருவும் வாய்க்கப்பெற்றோரும் அறிவுச் செல்வ மாத்திர முடையோரு மாகிய சைவ சீலர்கள் மன மொழி மெய்களாலும் மற்றைப் பொருள் முதலிய உபகரணங்களாலும் செல்லும்வா யெல்லாம் ஒல்லும் வகையான் சிவநெறி பேணுஞ் செவ்விய அறங்களைத் தாழாது புரிய முன்வரல் வேண்டும் .
இன்னோரன்ன சைவ மகா சங்கங்களைத் தமிழ்நா டெங்கணும் நிலைபெறச் செய்து அறிவொழுக்கங்களிற் சிறந்த பெரியாரைக் கொண்டு சமய வுண்மைகளை யாவரும் உளங்கொள வெளிப்படுத்தல் வேண்டும் . சைவ மடாதிபதிகளை அடுத்து அன்னார் கடமைகளைக் கால நோக்கித் தாழாது புரியும்படி வேண்டிக்கொள்ள வேண்டும் . அன்னார் அயர்வு காட்டினும் , அவர்களை வெறாது , அவர்தம் உளங்கொள வேண்டுவன எடுத்துரைத்துச் சைவப் பயிர் தழைய அன்னா ரருண்மழையைப் பெய்விக்க வேண்டும் . இன்னோரன்ன உண்மை முயற்சிகளில் நாம் தலைப்பட்டுத் திருவருட் டுணைகொண்டு சைவ நலம் பேண முற்படுவேமாயின் , வேண்டுவார் வேண்டுவன ஈயும் பெருங்கருணைத் தடங்கடலாகிய சிவ பெருமான் நம் முயற்சியைப் பயனுறச் செய்து நமது சமய வாழ்க்கையைப் புனிதமுறத் தந்து இன்புறுத்திக் காத்தருள்வா ரென்ப தொருதலை .
பெரியோர்களே !
“கூறுமின் ஈசனைச் செய்ம்மின்
குற்றேவல் குளிர்மின் கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின் செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவை நெறியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமைய வர்க்கே “
என்னும் பெரியார் அருளுபதேசத்தை எடுத்துக்காட்டி இம் மட்டி லமைகின்றேன் .
சிவநெறிச் செல்வர்களே ! இத்துணைக்காலம் என் சிற்றுரைக்குச் செவி தந்து பொறுமை கொண்டிருந்த உங்களுக்கு என் உளம் இயைந்த வணக்கம் உரியதாகுக .
சைவத் திறமுந் தெய்வத் தமிழும் தழைத்தினிது ஓங்குக !
*************************************************
4 . ஞா ன த் தி ன் தி ரு வு ரு
(கரந்தைக் கட்டுரையில் வெளிவந்தது )
உலகத்துப் பொருள்கள் உண்மை மாத்திரை உணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதனவும் , உண்மையும் பிழம்பும் உணர்த்தப்படுவனவும் என இருவகைப் படுமென்று கூறுவர் களவியல் உரையாசிரியர் . உண்மையுணர்த்தல் அநுமான அளவையானும் , பிழம்புணர்த்தல் காட்சியளவையானும் பெறப்படுவனவாம் . பிழம்பு வடிவாதலின் , அன்பு அருள் அறிவு முதலிய பண்புகளெல்லாம் உண்மை மாத்திரையான் உணர்த்தப்ப்டுமல்லது பிழம்பு உணர்த்தப்படாதனவாம் . ஆகவே பிழம்பு ணர்த்தப்படாது , உண்மை மாத்திரை உணர்த்தப்படும் , ஞானம் முதலிய குணங்களுக்கு அழகிய வடிவு கூறுதல் அரிதாம் என்பது யாவரும் உணர்வர். அவ்வருஞ் செயலிற் றலைப்பட்டு நிறுவும் ஆற்றல் , செயற்கரிய செய்யும் புலவர் பெருமக்கள்பால் அமைந்துள தென்பதை அப் பெரும் புலவர்களால் ஆக்கப்பட்ட பொருள் நிரம்பிய பாடல்களிற் காணலாம் . திருவருட்பேறு பெற்ற பெரியோர்கள் அருளிய தெய்வ மணங் கமழும் பாசுரங்களினும் , உலகியலை நுனித்துணர்ந்தும் , தெய்விக நிலையை அழுந்தி யறிந்தும் , கற்பாருள்ளம் அவ்வெண்ணமாமாறு பெரும்புலவர் களாற் பாடப்பெற்ற பெருங்காப்பியங்களினும் , குணிப்பொருளாகிய தெய்வங்களையும் மக்களையும் உயர்ந்த நிலையில் வைத்துப் புனைந்து ரைக்குங்கால் , எக்குணத்தால் யாவர் சிறந்து விளங்குகின்றனரோ அன்னாரை அக் குணவடிவாகவே வருணித்தல் மரபென்பதை அவர்தம் மொழி களால் நன்குணரலாம் . தன்னை அணைந்தார்க்கு அருள் புரிந்து பேரின்பமளிக்கும் இறைவனை அவ்வருட் குணத்தினும் இன்பப் பண்பினும் சிறந்து விளங்குதல் பற்றியும் , உண்மை அன்பர் பத்தி வலையிற் படுதல் பற்றியும் முறையே , “கருணையே வடிவ மாகி” எனவும் , “இன்பமே என்னுடைய அன்பே” எனவும் ஆன்றோர் பாடி இன்புறுவர் . “அன்பே சிவமாவது” என்னும் திருமூலர் அநுபவ மொழியும் ஈண்டு எண்ணத்தக்கது. புலவர் பெருமக்கள் பாடல்களில் , உவமை கூறுங்கால் , உவமிக்கப்படு வோர் இயல்பை நன்குணர்ந்து குணியைக் குணமாகக் கூறுதல் மரபென்பதற்கு ஒரு சில எடுத்துக் காட்டுதல் ஈண்டுப் பொருந்துவதாகும் .
சுந்தரமூர்த்திகளைத் தடுத்தாட்கொள்ளப் போந்த அந்தணரின் மூத்த வடிவத்தைப் புனைந்துரைக்கப் புக்க தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் ,
“மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனும் அதன்படிவ மேயோ”
என்று கூறினார் . முதியராகிய அந்தணர்க்கமைந்த அழகிய உருவத்தை , “அழகின் மூத்த வடிவையோ” எனவும் , ‘அம் மூப்பெனும் அதன் படிவமேயோ’ எனவும் அழகு முதுமை என்னும் குணங்களாகக் கூறினர் , மூப்பின் முடிந்த எல்லையையும் , அழகின் முடிந்த எல்லையையும் அவர் வடிவம் உடையதாய் இருத்தல் குறித்து இங்ஙனம் எழில் பெறப் புனைந்துரைத்தார் . கல்வியிற் பெரிய கம்ப நாடர் இங்ஙனம் குணிப்பொருள்களைக் குணங்களாக உருவகஞ் செய்தலினும் , உவமை கூறுதலினும் மிகத் திறமையும் ஆர்வமுமுடையவர் என்பது அவர் பாடல்களால் நன்கறிவதொன்று . சீதாப்பிராட்டியைத் தேடச்சென்ற சொல்லின் செல்வனாகிய அநுமன் இலங்கை புக்குச் சிறையிருந்த செல்வியைக் கண்கூடாகக் கண்டு திரும்பிவந்து , அவன் ‘வாயுடையது’ என்னுடைய வாழ்’ வென்று எதிர்பார்த்திருந்த இராமபிரானுக்கு அந் நற்செய்தியைத் தெரிவிக்குமுகமாகக் கம்பர் பாடிய பாடல்களுல் ஒன்று ஈண்டு நினைந்து இன்புறத்தக்கது , அப் பாடல் ,
“விற்பெருந் தடந்தோள் வீர
வீங்குநீ ரிலங்கை வெற்பின்
நற்பெருந் தவத்த ளாய
நங்கையைக் கண்டேனல்லேன்
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றுங்
களிநடம் புரியக் கண்டேன் “
என்பதாம் . இது பிராட்டியார் அநுமன் காட்ச்சிக்குக் கற்புடை மகளிர்க்குச் சிறந்த அணிகலன் களாகவுள்ள உயர்ந்த குணங்களின் வடிவமாகக் காணப்பட்டாளன்றிக் குணிப்பொருளாகக் காணப்பட்டிலள் என்பதைப் புலப்படுத்துவதாகும் . ஒரு குணிப்பொருளில் அதற்குரிய குணங்கள் மிகவும் சிறந்து காணப்படுமாயின் , அக் குணிப்பொருளைக் காணும் அறிஞன் உள்ளம் குணநிறைவில் ஈடுபடுமென்பது இயல்பே . அந் நிலையிற் சிறந்த அறிஞனாகிய அநுமன் உள்ளத்தைப் பிராட்டியின் நற்குண நற்செயல்கள் மிகவும் ஈடுபடுத்தினவாதலின் , அவள் திருவுருவைக் குணிப் பொருளாகக் கண்டிலேன் என்பான் “நங்கையைக் கண்டேனல்லேன்” என்றான் . பின்னை அவன் காட்சிக்குப் பொருளாக ஆங்குக் காணப்பட்டன யாவையெனின் , இற்பிறப்பும் , இரும்பொறையும் , கற்பும் என்னும் சிறந்த குணங்களேயாம் . இவை ஒருங்கு கூடித் தமக்கமைந்த பற்றுக்கோட்டின் சிறப்பால் தம்மியல்பில் ஒரு சிறிதும் குறையாது நிரம்பி விளங்கின என்பதைப் புலப்படுத்தவே “களி நடம் புரியக் கண்டேன்” என்று கூறினன். பிராட்டியை உயிருடனிருக்கக் கண்டேன் என்று அநுமன் கூறுதலினும் , அவர் பிறந்த குலம் , புக்க குலங்களின் பெருமைக்கேற்பக் கற்பரசியாக விளங்கிய நிலையை எடுத்துக் கூறுதலே இராமபிரானுக்கே உவப்பாகும் என்பது கண்ட அநுமன் இங்ஙனம் கூறினன் . இவ்வுண்மையைக் “கண்டனன் கற்பினுக் கணியை” என்னும் அநுமானது முன்மொழியாலும் நன்கறியலாம் . பிராட்டியின்பால் சனக குலமாகிய உயர்குடிப் பிறப்பிற்கேற்ற அறிவொழுக்கங்களும் , உயர்ந்த கற்பும் , ‘அறையிருங் கழலவற் காணு மாசையான் ‘ மேற்கொண்ட பொறையும் சிறந்து காணப் பட்டமையால் அநுமான் குணிப் பொருளாகிய ‘நங்கையைக் கண்டிலேன்’ எனவும் , இன்ன குணங்கள் ஒருங்கு கூடிச் செழித்து விளங்குதலைக் கண்டேன் எனவும் கூறினன் . இங்ஙனமே , இராமன் பிரிவிற் பரதன் எய்திய துயர் நிலையை வருணிக்கப் புக்க கம்பர் , ‘அவலம் ஈதென எழுதிய படிவ மொத்து’ இராமபிரான் கட்புலனுக்குக் காணப்பட்டான் என்பர் . இராமபிரானும் பிராட்டியும் இளயபெருமாளும் ஒருங்கு செல்லும் காட்சி நிலை முறையே வாய்மையும் சீலமும் பத்தியும் உருக்கொண்டு நடப்பன போலாமென்று வடமொழி நாடக ஆசிரியராகிய பாசகவி கூறியதும் ஈண்டு நினைந்தின்புறத்தக்கது .
இங்ஙனம் குணிப் பொருளைக் குணங்களாகிய வருணிக்குஞ் சிறந்த கவிமரபு , செய்யுளெல்லாம் தெய்வமணங் கமழத் திருத்தொண்டர் புராணத்தை ஆக்கியருளிய சேக்கிழார் பெருமான் பாற் சிறந்து அமைந்துளதென்பதை , அத் தொண்டர் புராணத்தைப் பயின்றார் எல்லாரும் நன்குணர்வர் . அவர் அடியார்களை உவமை முகமாகவும் , உருவக முகமாகவும் இந் நிலையில் வைத்துப் புனைந்துரைப்பதைப் பல இடங்களிற் காணலாம் . அடியாருட் கண்ணப்ப நாயனார் அன்பெனும் குனத்தாற் றலைசிறந்தவராவர் . இது ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்’ என்று அன்பெனும் ஆறு கரை புரளப் பெற்ற மணிவாசகனார் அருளிய திருவாசகத்திலுங் கண்டது . இவ்வுண்மையை அவர் வரலாற்றான் நன்குணர்ந்த சேக்கிழார் அவரை எங்ஙனம் பாடுவர் என்பது சொல்லாமலே விளங்கும் . கண்ணப்பர் காளத்தி மலையில் ஏறுங்கால் , நாணன் என்பான் வழிகாட்டிச்சென்றான் . ஆணையாஞ் சிவத்தைச் சார அணையும் ஐயர் அவன் பின் சென்றார் என்று கூறுதலில் உள்ளம் ஒருப்படாத சேக்கிழார் , நாணன் வழிகாட்டி மலையிற் செல்லக் கண்ணப்பர் உடல் பின் சென்றதெனினும் , அவர் அன்புமுன் நடந்ததென்று முதிர்ந்த அவ்வன்பின் விரைவைக் குறிக்க ,
“நாணனும் அன்பும் முன்பு
நளிர்வரை யேறத் தாமும்
பேனுதத் துவங்க ளென்னும்
பெருகுசோ பானம்
ஏறினார் என்றும் , மலையுச்சிக்கட் சென்றவுடன் அங்கணராகிய இறைவன் கருணை நோக்கமாகிய நயனத்தீக்கை பெற்ற அளவிற் பிறவிக்குரிய சார்புகளையெல்லாம் ஒழித்துச் சிவபிரான் திருவடி நீழலில் அன்புருக்கொண்டு விளங்கினார் என்பது தோன்றப்
“பொங்கிய வொளியினீழற் !
பொருவிலன் புருவமானார்”
என்றும் அருளிச் செய்வாராயினர் . இங்கே இறைவனை “ஒளி” என்னும் குண வடிவாகவும் , கண்ணப்பரை ‘ஒப்பற்ற அன்பு’ என்னும் குணவடிவாகவும் கூறியது அறிந்து இன்புறத்தக்கது . யாண்டும் விளங்கித் திகழ்தல் பற்றி இறைவன் ஒளியாகவும் , அவ்விறைநிலை ஒன்றே பற்றுக்கோடாகக் கொண்டு , குழைந்து உருகுதலின் கண்ணப்பர் அன்புருவாகவும் கூறப்பட்டன ரென்க . கண்ணப்பரது முறுகிய அன்பின் நிகழ்ச்சியை நாணன்முகமாகக் கேட்ட அவர் தந்தை நாகனென்பான் , மலைக்கட் சென்று அவரை மீட்கப் பல்லாற்றானும் முயன்றும் இயலாமையாற் கைவிட்டுத் திரும்பினான் என்று கூறுமிடத்து அங்ஙனம் மீளாமைக்குரிய உண்மையை உணர்ந்த சேக்கிழார் .
“முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற
அன்பிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ”
என்று பாராட்டிக் கூறியுள்ளார் . விதி நெறி நின்று இறை வழிபாடு செய்த சிவகோசரியார, கண்ணப்பரின் அன்புநெறி வழிபாட்டிற் கண்ட இறைச்சி முதலியவற்றை அநுசிதம் என்று வெறுத்தாராக அவர் கனவில் இறைவன் எழுந்தருளிக் கண்ணப்பரின் குணம் செயல்களெல்லாம் நமக்கு உவப்பானவாம் என்று திருவாய் மலர்ந்தருளுங்கால் ,
“அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு”
என்று அருளிய உண்மையும் ஈண்டுக் கருதத்தக்கது . கண்ணப்பர் சிவகோசரியார் ஆகிய இப்பேரன்பர்கள் இருவருடைய வழிபாட்டுண் மையை நன்குணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமான் இவ்விருவர் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண் பட்டனபோலக் காணப்படினும் இவற்றிற்கு மூலகாரணமாக உள்ளது உண்மை அன்பெனக் கண்டு தாம் பாடிய தேவாரத்தில்,
“ஊனொடுண்டல் நன்றென ஊனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினாற் பேசநின்ற தன்மையான் “
என்று அருளிச்செய்வாராயினர் . “ஊனொடுண்டல் நன்றென “ என்பது கண்ணப்பர் கொள்கையாகவும் , “ ஊனொடுண்டல் தீதென “ என்பது சிவகோசரியார் கொள்கையாகவும் குறிப்பிடப்பட்டனவாம் . அன்பு காரணமாக நிகழ்ந்தவளவில் இவ்விருவர் செயல்களும் ஒக்குமாயினும் , கண்ணப்பர் இறைவனை “ஆர்வமுன் பொங்க ஆரா அன்பினிற் கண்டுகொண்டு “ பிறிதொன்றனையுங் காணாமையானும் , தமக்கெனப் பொறிகள் புது நுகர்ச்சியிற் றலைப்படாமையானும் , கண்ணிடத்தப்பிய எண்ணருஞ் செயலானும் , ஈண்டு அவர் அன்பு சிறந்துள தென்பது குறித்தே அவர் அன்புருவமாகப் பாராட்டப்பட்டனர் என்பது தெளிவாம் . இத்துணையுங் கூறியவற்றால் உயர்ந்த குணங்களின் முடிந்த எல்லையிற் நிற்பாரைச் சிறந்த கவிகள் குணவடிவாக வருணித்துரைப்பர் என்னும் கவிமரபின் உண்மை ஒறுவாறு புலப்படுத்தப்பட்டவாறாம் .
இனி , இங்கே எடுத்துக்கொண்ட ஞானத்தின் திருவுருவைப் பற்றி ஆராய்வோம் . இப் பொன்மொழி , சிவனடியார் பெருமையைச் செப்பமுறத் தெளிந்துரைக்கும் தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் திருவாய் மலர்ந்தருளியதாகும் , பாண்டி நாடும் அரசனும் சமண் சமயம் புக்குச் சமயநெறியில் முறை பிறழ்ந்திருக்குங்கால் அச் சைவச் செங்கோலைத் தாங்கி நின்ற பாண்டிமா தேவியராகிய மங்கையர்க்கரசியாரும் , அமைச்சர் பெருமானாகிய குலச்சிறையாரும் அமணிருளோட்டிச் சைவக் கதிர் பரப்ப எண்ணி ஞான இள ஞாயிறாக விளங்கிய திருஞானசம்பந்தப் பெருமானை மதுரைக்கு எழுந்தருளுவித்தனர் . அதுகாலை , அப் பெருமான் அமர்ந்த திருமடத்தில் அமண்கையர் கொளுவிய தீயின் வெம்மை , திருவருட்பாக்கல் , இக்கொடுஞ் செயற்கு உடன்பட்ட அரசன் உடலைப்பற்றி வெதுப்பியது . அது தீர்க்கும் வாயிலறியாது சமணர் இடர்பாட் டுழல்பொழுது தேவியாரும் அமைச்சரும் அரசனையணுகித் தீய இப்பிணியே யன்றிப் பிறவியும் தீர்த்தற்குரிய ஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரத்தை அம்மன்னவன் செவியில் ஓதினாராக , அம்மந்திர வன்மையால் அரசன் உணர்வுற்று ,
“மன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவ ரருளா லென்னோய் அகலுமேல் அழையும் “
என்று கூறினன் . அப்பணியை மேற்கொண்டு அரசியாரும் அமைச்சரும் விரைந்து சென்று திருமடத்தைச் சார்ந்து , ஆங்கு இள ஞாயிறு போல ஞான ஒளிபரப்பி விளங்கும் திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்களிப்பக் கண்டனர் . இவ்வமயத்தில் அன்னார் காட்சிக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் எங்ஙனம் காணப்பட்டனர் என்பதைச் சேக்கிழார்பெருமான் தம் உள்ளக்கிழியின் உருவெழுதிக் கண்டு தெரிவிக்கப் புக்குத் தம் அசக் காட்சிக்குப் புலனாகிய அத்திருவுருவை அன்பு நலங் கனிந்தொழுகும் ஓர் அருண்மொழிப் பாடலால் விளக்கியருளினார் . அத் திருப்பாட்டின் தலைப்பில் இப்பொன்மொழி விளக்கமுற்றுத் திகழ்கின்றது . அப் பாடலை ஈண்டுக் காண்பாம் :
“ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேன்நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள் “
இப்பாசுரத்தில் காண்டற்குரிய செயப்படுபொருள்களைப் புலப்படுத்தும் இரண்டாம் வேற்றுமை யுருபையுடைய சொற்கள் நான்குள்ளன. அவை முறையே “திருவுருவை” “தனித்துணையை” “மதிக்கொழுந்தை” “கானத்தின் எழுபிறப்பை” என்பனவாம் . இந் நான்கும் தனித்தனியே ‘கண்களிப்பக் கண்டார்கள்’ என்புழிக் காண்டல் வினையைக் கொண்டு முடிந்தன .இரண்டாம் வேற்றுமைக்கு “வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்றும்” எனவும் ‘நோக்கலின்’ எனவும் கூறிய தொல்காப்பிய விதிக்கிணங்கக் ‘கண்டார்கள்’ என்னும் தெரி நிலை வினைமுற்று முடிக்குஞ் சொல்லாயிற்று . இன் நான்கும் திருஞானசம்பந்தப் பெருமானைக் குறிப்பனவாம் . கனிந்த பேரன்புடைய மங்கையர்க்கரசி யாரும் குலச்சிறையாரும் சம்பந்தப் பெருமானை ஆர்வமிகக் காணுங்கால், அவர்கள் கட்புலனுக்கு அப் பெருமானுடைய உள்ளமும் மெய்யும் மொழியுமாகிய மூன்று கரணங்களும் இங்ஙனம் புலப்பட்டனவென்று சேக்கிழார் பெருமான் தெளிந்து , ஒரு வரையறையைத் தம் உள்ளத்த மைத்து உளங்குளிரப் பாடவாராயினார் . உட்கருவியாகிய தூய உள்ளத்தின் இயல்பைக் குறித்து, ‘ஞானத்தின் திருவுருவை’ ‘நான்மறையின் தனித்துணையை’ என்னும் இரண்டு தொடர்மொழிகளானும், மழவிளங்குழவிப் பருவத்ததாகிய தூய உடலினியல்பைக் குறித்து, ‘வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை’ என்னும் தொடர் மொழியானும் , சிவ பரம்பொருளைப் பற்றியே நிகழும் இசைத் தமிழ் பயிலும் திருவாயி னின்றும் வெளிப்படும் தூய மொழி இயல்பைக் குறித்துச் ‘செஞ்சுடையார் சீர் தொடுக்குங்கானத்தின் எழுபிறப்பை’ என்னும் தொடர் மொழியானும் புலப்படுத்தார் என்பது உய்த்துணர்வார்க்கு நன்கு புலனாம் , சம்பந்தப் பெருமான் சித்தம் சிவமாகப் பெற்ற செவ்வியராதலின் அவருள்ளத்தின் தூய நிலை நோக்கி ‘ஞானத்தின் திருவுருவை’ என்றார் . அன்பின் முடிந்த எல்லையினின்ற கண்ணப்ப நாயனாரை ‘அன்பு பிழம்பாயினார்’ பொருவிலன் புருவமானார்’ என்று கூறியது போலவே , மெய்யுணர்வின் முடிந்த எல்லையிற் றிகழும் ஞானசம்பந்தப்பெருமானை ‘ஞானத்தின் திருவுரு’ என்றது மிகவும் பொருந்தியதொன்றாம் . இறைவனை அடைதற்குரிய நெறிகள் பலவற்றுள் அன்பு நெறியும் அறிவு நெறியுமே சிறந்தனவா மென்பது பெரியார் கண்ட முடிபு அன்பும் ஞானமுமாகிய இவ்விரு குணங்களும் கண்ணப்பர் ஞானசம்பந்தராகிய இருவரிடத்தும் ஒருங்குள்ளன . வெனினும் , வெளிப்பட்டு விளங்கிய சிறப்புப்பற்றி அவ்விருவரையும் முறையே அன்புருவம் எனவும் , ஞானத்தின் திருவுரு எனவுங் கூறினர் . சம்பந்தப்பெருமான் இறைவியின் திருமுலைப்பாலுண்டு , அந் நிலையில் ஞானம் எய்தினார் . என்பதைச் சேக்கிழார் பெருமான் ,
“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில் “
என்னும் திருவிருத்தத்தால் விளக்கினார் . இப்பாடலிற் குறிக்கப்பட்ட ஞானம் , சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாக் கலைஞானமும் , பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞாமாகிய உணர்வரிய மெய்ஞ் ஞானமும் என இரண்டாகும் ஆகவே , நூலறிவும் அநுபவ உணர்வுமாகிய அபரஞான பரஞானங்களை ஒருங்கெய்தினார் என்பதே முடிந்த பொருளாகும் . இறைவன் றிருவருட் சத்தியாற் பெற்ற ஞானமே சம்பந்தப்பெருமானுக்கு உள்ளத்தின் தூய இயல்பாகத் திகழ்தலை நோக்கி , “ஞானத்தின் றிருவுரு” என்றார் . பண்பாகிய ஞானம் பண்பியாகிய ஒரு வடிவைக் கொள்ளப்புகின் இதுபோலுஞ் சிறந்த பிழம்பு அதற்கரிதென்பார் ‘ஞானத்தின் உரு,’ என்னாது ‘திருவுரு’ என்றார் . ஈண்டு மனமொழி மெய்களாகிய மூன்றனுள் மெய்யின் தூய்மையையும் , மொழியின் தூய்மையையும் புலப்படுத்துவார் , முறையே “மதிக்கொழுந்தை” எனவும் , ‘கானத்தின் எழுபிறப்பை’ எனவும் ஒவ்வொன் றே கூறிய ஆசிரியர் உளத் தூய்மைக்குத் ‘திருவுருவை’ ‘தனித்துணையை’ என்று இரண்டு பொருள் கூறியதன் கருத்தை ஆராய்தல் வேண்டும் .
“ஞானமாவது வீடு பயக்கும் உணர்வு “
என்பர் பரிமேலழகர் .
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு “
என்பது உலகியலறிவின் இலக்கணமாகவும் ,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு “
என்பது வீடு பயக்கும் உணர்வாகிய மெய்யுணர்வின் இலக்கணமாகவும் பொய்யில் புலவர் பொருளுரையிற் காணப்படுகின்றன . பொருளிரண்டனுள் முன்னது சொல்லா லறியப்படுவது ; பின்னது இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய உலகத்தைக் குறிப்பது . இவ்வுண்மை கருதியே , முறையே “யார் யார் வாய்க் கேட்பினும்”எனவும் , “எத்தன்மைத் தாயினும்” எனவும் கூறுவாராயினர் . முன்னது ஒருவர்குக் கல்வி கேள்விகளானாகிய செயற்கை அறிவுக்குக் காரணமாகிய மதிநுட்பம் என்னும் இயற்கை அறிவென்பதும் , அஃது உயர்ந்தார் , இழிந்தார் நட்டார் , பகைவர் யாவராயினும் அவர் வாய்க்கேட்கப்படுஞ் சொல்லைப் பொருளின் பயனோக்கிக் கொள்ளுதற்கும் , தள்ளுதற்கும் உரிய கருவியாம் என்பதும் அறிகின்றோம் . பின்னது, இயங்கு திணையும் நிலைத்திணையுமாகிய உலகத்துப் பொருள்களின் கற்பனைகளைப் போக்கி , நில முதலிய தத்துவங்களின் தொகுதியென அறிதற்கும் , அவற்றைத் தத்தம் காரணங்களுளொடுக்கிக்கொண்டு சென்று முடிவிற் காரண காரிய மிரண்டுமின்றி நிற்பதாகிய பரம்பொருளை உணர்தற்கும் உரிய கருவியாமென்பது புலனாம் . இவ்வுண்மை யறிந்தே முன்னது பொருட்பாலில் அரசியற் பகுதியினும் பின்னது அறத்துப்பாலில் துறவறப் பகுதியினும் அமைத்துக் கூறப்பட்டனவாம் . இவ்வுண்மையையே சமய நூலார் ஞானம் அபரம் பரமென இருதிறப்படுமென்று வகுத்துக் கூறுப . அவ்வகை முன்னருங் கூறப்பட்டது .அபரஞான மென்பது மறை ஆகமம் முதலிய நூல்களின் வாயிலாக உண்டாவது ; பரஞான மென்பது அநுபவ வாயிலாக நிகழ்வது ; அபரஞானமாகிய நூலறிவே பரஞானமாகிய அநுபவ வுணர்வைப் பயக்குமாதலான் அவ்விரண்டும் அழிவி லின்ப மெய்தும் ஆர்வமுடைய உயிர்க்கு இன்றியமையாதனவாம் . இவ்வுண்மையைப் புலப்படுத்தற்கே , திருநாவுக்கரசு நாயனார் ,
“உடம்பெனும் மனைய கத்து ளுள்ளமே தகழி யாக
மடம்படு முணர்நெய் அட்டி உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே “
என்னும் தேவாரத் திருப்பாசுரத்தில் , “மடம்படும் உணர்நெய்” எனவும் , “இடம்படு ஞானத்தீ” எனவும் ஞானத்தை உருவகவுறுப்பு இரண்டாகக் கொண்டு திருவாய்மலர்ந்தருளினார் . ஈண்டு , “மடம்படும் உண்ர்வு” என்பது அறியாமை கெடுதற் கேதுவாகிய அபரஞான மெனவும் , “இடம்படு ஞானத்தீ” என்பது அநுபவ உணர்வாகிய பரஞான மெனவும் பொருள் கொள்ளல் வேண்டும் . முன்னது நெய்யாகவும் , பின்னது தீயாகவும் உருவகஞ் செய்யப்பட்ட இயைபு ஈண்டுக் கருதத்தக்கது ,
“கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகே னாயிடினும்”
என்று மணிவாசகனார் கூறியருளியதும் இவ்வுண்மையை நிலைப்படுத்துவதாகும் . அபர ஞானத்தைப் பாசஞான பசுஞானங்களாகவும், பரஞானத்தைப் பதிஞானமாகவும் சைவநூல் கூறும் . பதி ஞானம் , சிவ ஞானம் , மெய்யுணர்வு , அநுபவ வுணர்வு என்பன ஒரு பொருளனவாம் . சிவ ஞானமே சிவாநுபவத்திற்கு நேர் வாயிலாகும் . “ஞானத்தால் வீடு” எனவும் ,
“பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே
நேசமொடு முள்ளத்தே நாடி”
எனவும் சைவ சித்தாந்தம் புலப்படுக்கும் . வீட்டின்பத்திற்குச் சிவ ஞானம் நேர்வாயிலாதலைத் திருநாவுக்கரசு நாயனாரின் முத்தி நிலையை விளக்க வந்த ஆசிரியர் ,
“நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டவர செய்தினார்”
என்று கூறினார் . “ஞான வடிவேயாகிய” என்பது ஈண்டு கருதத்தக்கது . காமம் முதலிய குற்றங்களையெல்லாம் ஒழித்தற்கும் இச் சிவ ஞானமொன்றே கருவியாமென்பது ஆன்றோர் அநுபவம் . சேக்கிழார் பெருமான் இவ் வநுபவ வுணர்ச்சியிற் பெரிதும் தலைப்பட்டவர் என்பதை உலகியல் நிகழ்ச்சிக்கு உவமை கூறுமிடத்தும் , அவர் திருவாக்கில் இவ் வுண்மை வெளிப்படுதல் கொண்டு தெளியலாம் . ஏனாதிநாயனார் அதிசூரன் என்பவனோடு செய்த வாட்போரில் அதி சூரனுடைய படைவீரருட் பலர் இறந்தனராக , எஞ்சி நின்றா ரெல்லாரும் போர்க்களத்தை விட்டுப் புற முதுகிட்டோடினர் என்பதை உவமிக்கப் போந்த ஆசிரியர் ,
“தலைப்பட்டா ரெல்லாரும் தனிவீரர் வாளிற்
கொலைப்பட்டார் முட்டாதார் கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதற் குற்றம்போ லாயினார் “
என்று கூறியருளினர் . மெய்யுணர்வின் முன்னர்க் காம வெகுளி மயக்கங்கள் நில்லா என்னும் உண்மையையே ஈண்டு உவமையாக்கிய நயம் பாராட்டத்தக்கது . இன்பச் சுவையை வருணிக்குங்காலும் தெய்வமணங் கமழப் பாடும் இப்புலவர் பெருமான் பாடல்களில் இத்தகைய உவமை முதலியன அமைதல் இயல்பேயாம் . ஆதலின் சிவ ஞானச் செல்வர்களாகிய மங்கையர்க்கரசியார்க்கும் , குலச்சிறையார்க்கும் திரு ஞானசம்பந்தப் பெருமான் காட்சியில் உளத்தூய்மை பற்றி அப்பெருமான் றிருவுரு மெய்யுணர்வின் வடிவாகப் புலப்பட்டதென்பதைத் தெய்வக் கவிஞர் திருவுள்ளம் உணர்ந்தமையால் , “ஞானத்தின் றிருவுரு “ என்று முதற்கட் கூறினர் . அத்தகைய ஞானம் பரமாகவும் அபரமாகவும் இரு வகைப்படுமென்பதை யுட்கொண்டும் அவ் விருவகை ஞானத்தையும் அம்மையா ரருளாற் சம்பந்தப் பெருமான் ஒருங்கெய்தின ரென்னும் உண்மையை உணர்ந்தும் , உளத்தூய்மைபற்றிப் பர ஞான வடிவமாக விளங்குதலைக் குறித்து “ஞானத்தின் றிருவுருவை” என்றருளிய ஆசிரியர் அபர ஞானமும் அவர்க்கு எளிதிற் கைவந்த தென்பதைப் புலப்படுத்தவே , “நான் மறையின் தனித்துணையை “ யென்றுங் கூறினர் . பர ஞானமாகிய மெய்யுணர்வின் வடிவாக விளங்கும் சம்பந்தப்பெருமான் அதனின் தாழ்ந்த அபர ஞானமாகிய நூலுணர்வின் வடிவாகவும் விளங்கினாரென்று கூறுதல் அப்பெருமான் பெருமைக்கு ஏலாததொன்றென்பது கருதியும் , அந் நான்மறை யறிவாகிய அபர ஞானம் பேரின்பமெய்த முயலும் உயிர்களின் பொருட்டு என்றும் அழியாத நிலை பெற்றிருக்க வேண்டும் என்பது அப்பெருமான் திருவுள்ளமாதலை யுணர்ந்தும் அவ் வபர ஞானத்திற்கு அவர் அருட்பாசுரங்களாற் பெரிதும் துணை நின்றவர் என்பதைப் புலப்படுத்தவே “நான்மறையின் தனித் துணையை” யென்றுங் கூறியருளினார். சம்பந்தப் பெருமான் முதலிய சமய குரவரருளிய தேவாரத் திருப்பாசுரங்கள் தமிழ் மறையாக விளங்குகின்றன வாதலால் , அபர ஞானத்திற்கு ஒப்பற்ற துணையாகவுள்ளா ரென்று அப்பெருமானைக் குறிப்பிட்டது பெரிதும் போற்றத்தக்கதே . பர ஞானமாகிய மெய்யுணர்வின் வடிவாகவும் , அபர ஞானமாகிய நூலறிவிற்குச் சிறந்த துணையாகவும் அப் பெருமான் காணப்பட்டாரென்று மரபு பிறழாது வரையறைப்படுத்துரைத்த நயம் அறிஞருள்ளத்தை மிகவும் இன்புறுத்துவதாகும் . இங்ஙனமே இப் பெருமானைத் தோணிபுரத்தவர் தாம் எதிர்கொண்டு துதிக்குங்கால் , “கலைஞானத் தாழிய கடலே” எனவும் , “வளர் ஞானப் பொறையணி முகிலே” எனவும் இருதிறத்து ஞான வடிவமாகக் கொண்டு பாராட்டினர் என்று பிறிதோரிடத்தும் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார் . இங்ஙனம் சம்பந்தப் பெருமான் இவ்விரு ஞானங்கட்கும் எல்லையாக விளங்குதலைத் தெளிவுறுத்தற்கே மெய் மொழிகளின் தூய்மைபற்றித் தனித்தனியே செயப்படுபொருள் ஒரோவொன்றாகவும் , உள்ளத்தின் தூயவியல்புபற்றி அதற்கு மாத்திரம் செயப்படுபொருள் இரண்டாகவும் வகைபடுத்து ரைத்தனர் . ஈண்டு ஆசிரியரது நுண்மாணுழைபுலம் அறிஞருள்ளத்தைப் பெரிதும் இன்புறுத்துவதாகும் .
இனி , சம்பந்தப் பெருமான் றிருமேனியின் ஒளியும் மழவிளங் குழவிப் பருவமும் பொலிந்து திகழ்தலைப் புலப்படுத்தற்கே , “வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை “ என்றார் . இஃதோரணி யாகும் . மதி வானத்தினூர்ந்தியங்குவது இஞ் ஞானமதி மண்ணுலகிற் றிகழ்தின்புறுத்துவது ஈண்டு வளர்மதியென வினைத்தொகையாகக் கூறியதன் நுண்பொருள் ஆராயத்தக்கது . வளர்மதிக்குப் பதினாறு கலைகள் நிரம்பியதும் மேல் வளர்ச்சியின்று . அதுபோலச் சம்பந்தப் பெருமான் றிருவுடல் பதினாறியாண்டு வளர்ச்சியுற்றுப் பின் பேரொளிப் பிழம்பாகிய இறை வடிவில் மறைந்தது ; இவ் வுண்மை புலப்படுத்தற்கே “வளர்மதி” யென்று கூறினார் போலும் . இங்ஙனமே , கண்ணப்ப நாயனார் புராணத்திலும் ,
“பான்பதி உவரி யீன்றா லெனமகப் பயந்தபோது”
என்று அவர் அவதாரத் தொடக்கத்தில் அன்புருவாகிய கண்ணப்பரைப் பான்மதியாகவும் , அவர் தோன்றிய வேடர் குலத்தை உவர்க் கடலாகவும் உவமித்துக் கூறினர் . அதற்கேற்ப அந் நாயனார்க்கு வீட்டு நிலை யெய்தும் தருணத்திற் பதினாறாண்டு நிறைவுற்றது எனக் குறிப்பிடப் புக்க ஆசிரியர்,
“கலைவளர் திங்களே போல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி யெய்தினார் “
என்று தெளிவுறுத்தருளினர் . இத்தகைய இயைபையே திரு ஞானசம்பந்தப் பெருமான் வரலாற்றினும் புலப்படுத்தாரெனக் கோடல் பொருந்துவதாகும் .
“கண்ணிறை கதிரே , கலைவளர் மதியே”
எனப் பிரிதோரிடத்துக் குறிப்பிடுதலும் அறியத்தக்கது . ஒளி தீயினும் மணியினும் காணப்படினும் தீயொளி சுடுவதாக , மணியொளி குளிர்ந்திருத்தலையும் , அங்ஙனமே ஞாயிற்றினொளி வெய்யதாக , திங்களொளி தண்ணிதாக இருத்தலையும் உணர்கின்றோம் . சம்பந்தப் பெருமான் திருமேனியில் திகழும் ஒளி தண்ணிதாதலையும் , அவ்வொளியின் செழுமையும் மென்மையும் கொழுந்துபோற் காணப்படுதலையும் புலப்படுத்தற்கே “மதிக்கொழுந்தை” என்று கூறினர் .
இனி , சம்பந்தப் பெருமான் மொழியின் தூயவியல்பு பற்றிக் “கானத்தின் எழுபிறப்பை” என்றார் . அவர் அவதாரப் பயன் கூறுமிடத்தும் , பிறிதோரிடத்தும் முறையே
“இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக “
எனவும் , “பண்ணியல் கதியே” எனவும் கூறியருளினார் . அப் பெருமான் தம் மெய்யுணர்விற் கண்டநுபவித்த பொருள்களை யெல்லாம் செழுந்தமிழ் மொழியில் தேனினும் இனிய இசைப்பாடலில் இயைந்து உளங் குளிர்ந்து பாடி , வண்டமிழ் செய் தவம் நிரம்பச் செய்தவராதலானும் , அத் திருப்பாசுரப் பொருளெல்லாம் சிவபரம் பொருளையே பற்றினவாதலானும், “தேனக்கமலர்க் கொன்றைச் செஞ்சுடையார் சீர்தொடுக்குங்கானத்தின் அழுபிறப்பை “ யென்றார் . அப்பெருமானை, “நாளும் இன்னிசையால் தமிழ்ப் பரப்பும் ஞானசம்பந்தன் “ எனத் திருநாவலூரர் கூறிய அடை மொழிகளாலும் , அவர் தமிழிசையிற் சிவபரம் பொருளைப் பாடுதலில் மிக்க விருப்பமுடையவ ரென்பதை உணரலாம் . கானத்தின் எழுபிறப்பாவது, இசைக்குரிய குரல் துத்தம் முதலியனவாம் . இவற்றைச் “ச ரி க ம ப த நி “ என்று கூறுவர் வட நூலார் . பிறப்பு அழுவகைத்தாதலின் இசைக்கும் எழுபிறப்புக் கூறியது பொருத்தமே . இவ் வெழுவகைப் பிறப்பையுடைய இசை வடிவமாகவும் , அப்பெருமான் காணப்படுதலால் , “கானத்தின் எழுபிறப்பை “ யென்றார் . அக் கானமும் உலகியற் பொருள் பற்றி நிகழுமாயின் சிறந்ததாகா தென்னுங் கருத்தால் , “செஞ்சுடையார் சீர்தொடுக்கும் கான” மென விசேடித் துரைக்கப்பட்டது இறைவன் “ஏழிசையாய் இசைப்பயனாய் “ விளங்கு மியல்பினராதலின் அப் புரமெரித்தார் திருமகனாராகிய சம்பந்தப்பெருமானுக்கும் அது பொருந்துவதாகும் .
இனி , மன மொழி மெய்களின் தூயநிலை பற்றி இங்ஙனம் கூறிய பொருள்களிற் பிறிதோரியையும் நம்முள்ளத்தை இன்புறுத்துவதாகும் . அஃதாவது , மன மொழி மெய்களாகிய மூன்றன் தூய்மைக்கும் ஞானமே வெளிப்படையாகவும் , குறிப்பாகவும் இயைந்து விளங்குதலாம் . உளத்தூய்மை பற்றி , “ஞாத்தின் திருவுருவை நான்மறையின் தனித் துணையை “ என வெளிபடை யாகக் கூறினார் . உடற்றூய்மை பற்றி ‘மதிக்கொழுந்தை’ யெனக் குறிப்பிற் பெற வைத்தார் . மதி கலைகளை யுடயதென்பதனாலும் , கல்விக்கு உவமை கூறுங்கால் “திங்களன்ன கல்வியும்” என இதனையே ஆன்றோர் எடுத்தாளுதலானும் குறிப்பிற் பெறப்பட்டதாம் .”கலை வளர் மதியே” யென முன்னர் எடுத்துக்காட்டியதும் ஈண்டு இயைபுடைத்தாம் . சீவகன் , “கோள்மின்னு மீன்போற் குளிர்மாமதித் தோற்றம்” ஒத்திருந்தான் என்று கூறிய சீவகசிந்தாமணிப்பாடற் குறிப்பில் , “ஞாயிறு போல்வானைக் கலையைத் தோற்றுவிப்பதாக இருத்தலின் ஈண்டு மதியை உவமை கூறினார்” என்று நச்சினார்க்கினியர் கூறியதனாலும் இவ்வுண்மை புலனாம் . மூன்றாவதாகிய மொழித்தூய்மை பற்றிக் கூறிய இடத்தில் கானத்திற்குச் “செஞ்சுடையார் சீர்தொடுக்கும்” என்று அடைபுனர்த்ததால் ஆண்டும் ஞானம் புலனாதல் நோக்கத்தக்கது .
இனி , இப் பாசுரத்தில் இரண்டாம் வேற்றுமைக்கு முடிக்குஞ் சொல்லாகவுள்ள “கண்களிப்பக் கண்டார்கள்” என்பது வியப்பின் பாலாதாகிய இன்பத்தை அளிப்பதாகும் . இங்கே கூறப்பட்டனவெல்லாம் கண்களிப்பக் காண்டற்கியலாதனவாம் . “ஞானத்தின் திருவுருவம் நான்மறையின் தனித் துணையும் “ பொறிகளா லறியப்படாத குணங்களாதலானும் , மதி கட்புலனறியத்தக்க தாயினும் , மண்ணில் வளர் மதிக்கொழுந்து இல் பொருளாக நின்று காணப்படாத தொன்றாகலானும் , “கானத்தின் எழுபிறப்பு” செவியுணர்விற்கன்றிக் கட்பொறிக்குப் புலனாவ தொன்றன்மையானும் , இம் மூன்றும் கண்ணாற் காணப்படாதனவாகவும் , அவற்றைக் “கண்களிப்பக் கண்டார்கள்” என்றது வியப்பின்பாலதாகும் . காண்டற் கியலாப் பொருள்களைக் “கண்களிப்பக் கண்டார்கள்”என்று கூறுதல் எவ்வாறு பொருந்துமெனின் , கண்ட அதிகாரிகளின் ஞானமும் பத்தியும் இங்ஙனம் காண்டற்குக் கருவிக ளாயினமையிற் பொருந்து மென்க. இஃது இவ்வியப்பின் பாலதாய் நின்று இன்பம் விளைவிப்பதாகும் . புறக்காட்சிக்குப் புலனாகாத பொருள்கள் , காணும் அதிகாரிகளின் சிறப்பியல்பாகிய அகக் காட்சிக்குப் புலனாமென்னும் உண்மையைக் கண்ணப்ப நாயனார் புராணத்திலுங் காணலாம் . ஞானத்தின் திருவுருவா கிய சம்பந்தப் பெருமான் அன்பின் திருவுருவாகிய கண்ணப்ப நாயனாரின் திருவுருவத்தைத் தரிசித்த முறையைக் கூறுங்கால் , மரபு பிறழாமல் அழகுற இவ்வுண்மையை புலப்படுத்தப்பட்டுள்ளது . சம்பந்தப் பெருமான் முதலில் இறைவன் திருவுருவத்தை வணங்கிப் பின்னர் , கண்ணப்பர் திருவுருவத்தை வணங்கினாரென்று கூறும்பொழுது கண்ணப்பர் வணக்கம் இறை வணக்கத்தின் பின் நிகழ்ந்ததெனினும் ,
“வீழ்ந்தெழுவார் கும்பிட்டபயன் காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்”
என்று அதனை இறை வணக்கத்தின் பயனாகக் கூறியது உணர்வார் உள்ளத்தைப் பெரிதும் கனிவிப்பதாகும் . ஆண்டுக் கண்ணப்பர் வணக்கம் இறைவணக்கத்தின் பயனாதற்குக் காரணம் என்னாங்கொல் என்று ஐயுறுவாரைத் தெளிவிக்கும் முகமாக ,
“உள்ளத்திற் றெளிகின்ற அன்பின் மெய்மை
உருவினையும் அவ்வன்பின் உள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையு முடன்கண்ட விருப்பம் பொங்கி
……………………………………………………………………………… வணங்குகின்றார் “
என்று கூறியருளினர் . கண்ணப்பர் வடிவத்தை அன்பின் மெய்மை யுருவாகவும் , “அன்பிலே விளைந்த ஆரமுதே “ என்று மணிவாசகனார் திருவாய்மலர்ந்தருளியபடி , அவ் அன்புருவத்தில் இறைவன் விளங்கு தலையுங் கண்டார் என்றார் . இலிங்க உருவத்தினும் அன்புருவத்திற் காணப் படும் இறைவன் விளக்கம் சிறந்ததாகலின் இங்ஙனம் கூறப்பட்டது . கண்ணப்பர் வடிவத்தை அன்புருவமாகவும் , அவ் வன்பிலே இறைவன் விளங்குதலையுங் உள்ளுணர்வாற் காண்டற்குரிய தகுதி ஞானத்தின் திருவுருவமாகிய சம்பந்தப் பெருமான்பால் உள்ளதென்பது இந் நிகழ்ச்சி யாற் புலனாம் . இங்ஙனமே , ஞானசம்பந்தப் பெருமானுடைய உள்ளம் உடல் மொழிகளின் தூய இயல்பு பற்றி அவரை ஞானத்தின் திருவுரு முதலியவாகக் காண்டற்குரிய தகுதி , பங்கயச்செல்வியாகிய பாண்டிமா தேவியார்க்கும் , அடியவர்தங்களைக் கண்டால் குணங்கொடு பணியும் குலச்சிறையார்க்கும் உளதாயிற்று என்பது போதரும் .
இத்துணை “ஞானத்தின் திருவுரு “ என்பது பற்றி ஆராயு முகமாக அப் பொன்மொழியை முதற்கணுடையதாக அருண்மொழித் தேவரருளிய திருவிருத்தத்திற்கு ஒறுவாறு நுண்பொருள் விளக்கம் கூறியதாகும் .
இதுகாறும் கூறியவற்றாற் போந்த தொகைபொருள் வருமாறு :-
உலகத்துப் பொருள்களுள் ஞான முதலிய குணங்கள் உண்மை மாத்திரை உணர்த்திப் பிழம்புணர்த்தப்படாதன என்பதூஉம் , தெய் வங்களுள்லும் , மக்களுள்லும் சிறந்த குணங்களான் மேம்பட்டாரை அக் குணவடிவாக வருணித்தல் பெரும்புலவர் இயல்பென்பதூஉம் , அந் நெறியினின்று வளம்பெறப் பாடிய சேக்கிழார் , கம்பர் பாடல்களில் அப் பொருள் இன்னின்ன படியாகப் புலனாமென்பதூஉம் , கண்ணப்ப நாயனார் முடிந்த அன்பின் எல்லைக்கு இலக்காக விளங்குதல் நோக்கி , அவர் பலவிடத்தும் அன்பின் திருவுருவாக வருணிக்கப்பட்டுள்ளார் என்பதூஉம் , திரு ஞானசம்பந்தப் பெருமானை மங்கையர்க்கரசியாரும் , குலச்சிறை நாயனாரும் தரிசிக்குங்கால் , அன்னார் கட்புலனுக்குச் சம்பந்தர் ஞானத்தின் திருவுரு முதலியவாகக் காணப்பட்டார் என்பதூஉம் , அப் பொன் மொழியைச் சேக்கிழார் முதற்கண் அமைத்துப்பாடிய திருவிருத் தத்தில் அப் பெருமானுடைய மனம் , மெய் , மொழிகளின் தூய இயல்புபற்றி மூன்றுபடியாக வருணித்துரைத்தனர் என்பதூஉம் , முதலாவாதாகிய உளத்தூய்மை பற்றி , “ஞானத்தின் திருவுரு” எனவும் , “நான்மறையின் தனித் துணை” எனவும் கூறினாரென்பதூஉம் , அதற் கிரண்டு பொருள் கூறியது பர ஞான , அபர ஞான வகை பற்றி யென்பதூஉம் , இரண்டாவதாகிய மெய்யின் மழவிளம் பருவங் குறித்து , “மண்ணில் வளர் மதிக்கொழுந்து” என்று கூறினாரென்பதூஉம் , மூன்றாவதாகிய மொழியின் தூயவியல்புபற்றிக் “கானத்தின் எழு பிறப்பு “ என்று கூறினாரென்பதூஉம் , இம்மூன்றன் கண்ணும் ஞான விளக்கமே வெளிப்படையினும் , குறிப்பினும் பெறப்பட்ட தென்பதூஉம் பிறவுமாம் .
******************************************
5 . அ ன் பி ன் தி ரு வு ரு
1 . தோற்றுவாய்
மக்கள் இறைவனை அடைதற்குரிய நெறிகளுட் சிறந்தன அன்பு நெறியும் ஞான நெறியுமாகும் . இவ் விரண்டனையுமே “உறவு கோல் நட்டு உணர்வுகயிற்றினால் முறுகவாங்கிக்கடைய முன்னிற்குமே” என்பர் ஆளுடைய அரசர் . இங்கே உறவு அன்பும் உணர்வு ஞானமுமாம் . இவ் விரண்டனுள்ளும் அன்பு நெறி சிறந்த தென்ப . “முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்து” என்பதூஉம் இதனை வலியுறுத்தும் .வேறெதுவும் கலவாத தூய மெய்யன்பினால் இறைவனை வழிபட்டுப் பேரின்பம் எய்திய பெரியார் கண்ணப்ப நாயனார் என்பது யாவரும் உணர்ந்ததொன்று . கண்ணப்பரை நினைப்பா ரெல்லோரும் அவரைக் குணிப்பொருளாகிய அன்பர் என்று கருதுவதினும் அவர்பால் விஞ்சிநின்ற அருங்குணமாகிய மெய்யன்பு பற்றி அன்புவடிவமாக நினைப்பதே சிறந்ததாகும் . இது கருதியே சேக்கிழார் பெருமானும் “பொங்கிய ஒளியின் நீழற்பொருவில்அன் புருவமானார் “ என்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் . ஆதலின் , இங்கே சேக்கிழார் காட்டிய அன்பின் திருவுரு என்னுந் தொடர்மொழியால் கண்ணப்ப நாயனாரைக் குறிக்கலானேன் . இக் கட்டுரையில் கண்ணப்பர் வரலாற்றுச் சுருக்கத்தை முதற்கண் கூறிப் பின்னர் அவ் வரலாற்றைச் சேக்கிழார் பாடிய முறையிற் காணப்படும் நயங்களை வகுத்துக்காட்டி , முடிவில் அவ்வரலாற்றால் உணரத்தக்க நுண்பொருள்களையும் ஒருவாற்றான் விளக்கத் துணிகின்றேன் . திருவருள் துணை செய்வதாக .
2 . வரலாற்றுச் சுருக்கம்
வளம்பல மிக்க பொத்தப்பி நாட்டிலே மலப்பக்கத்தே உள்ள உடுப்பூர் என்னும் நகரிலே , வேடர் குலத் தலைவனாகிய நாகன் என்பான் தத்தை எனப் பெயரிய மனைவியுடன் இயைந்து இல்வாழ்க்கையை நடாத்தினான் . அவர்க்கு மகப் பேறு இன்றாக அது குறித்துத் தம் குலதெய்வமாகிய முருகப்பெருமானுக்குப் பெருவிழா எடுத்துச் சிறப்புச் செய்தனர் . அத்தவத்தின் பயனாக முருகன் திருவருட்பாங்கால் அவர்க்கு ஓர் அரும்பெறற் புதல்வன் தோன்றினான் . அக்குழந்தையைக் கையில் எடுத்தபோது திண்ணென்றிருந்தமையால் அம்மகனுக்குத் திண்ணனார் என்று பெயரிட்டனர் . திண்ணனார் பிள்ளைமைத் தொழிலாகிய விளையாட்டினால் தம் இருமுதுகுரவரும் உறவினர் அனைவரும் மனம் மகிழ்வெய்தச் செய்து வளர்ந்து வருவாராயினர் . பின்னர் , அம் மரபிற் படைக்கலத் தொழிற் பயிற்சியில் மேம்பட்டார் சிலரிடம் விதி முறை வழாது விற்றொழில் முதலியவற்றைப் பயின்று வல்லராயினர் . அவர்க்கு யாண்டு பதினாறு நிகழுங்கால் ஆங்குள்ள வேடர்கள் விலங்குகளின் தீங்கு குறித்துத் தம் தலைவனாகிய நாகன்பாற் சென்று வேட்டையாடலை வேண்டி நின்றனர் . நாகன் தன் மூப்பின் நிலையையும் அருமை மகன் இளமை நிலையையும் தெரிவித்துத் தேவராட்டியின் வாழ்த்துடன் பொருப்பாட்சி உரிமையும் தின்னனார்க்கு வழங்கி வேட்டையாடப் பணித்தனன் .
திண்ணனார் தந்தையின் கட்டளைப்படி வேட்டையாடுதற்குரிய கோலத்தைக்கொண்டு தேவராட்டியின் வாழ்த்துப்பெற்று அச்செயலின் முற் பட்டனர் . பன்றி , யானை , புலி , கரடி , மான் முதலிய விலங்குகளை வேட்டையாடி வரும் இடையில் , ஒரு காட்டுப்பன்றி மிக்க வன்மை யுடையதாய்ப் பிறரால் அகப்படுத்தப்படாமல் வலை முதையவற்றைச் சிதைத்து மலைச்சாரலில் ஓடியது கண்டு , திண்ணனார் பின் தொடர்ந்து உடைவாளால் அதனைப் பிளத்தனர் . அந் நிலையில் பொன்முகலியாற்றின் கரையில் அப் பன்றி இறைச்சியை நெருப்பிற் காய்ச்சிப் பக்குவப் படுத்தும்படி உடன் வந்த காடனைப் பணித்து , நாணன் என்பவனால் தெரிவிக்கப்பட்டபடி திருக்காளத்தி மலைமிசை எழுந்தருளியிருக்கும் குடுமித் தேவரைக் காண்டால் விருப்பு மிகலால் அவனுடன் அம்மலையை ஏறிச்சென்றனர் . ஆங்கு ஒளிவடிவமாய்த் திகழும் அப் பெருமான் அருட்பார்வை பெற்றுத் தம் பிறப்பின் தொடர்பு நீங்க அவர் திரு முன் அன்புருவமாயினர் . பின்னர் , திண்ணனார் தம் செயலற்று மெய்யன்பின் வயப்பட்டுத் திருக்காளத்தி யப்பரைத் தழுவியும் மோந்தும் அன்புரைகள் பல பகர்ந்தும் அனலிற்பட்ட மெழுகுபோல் உருகி நின்றனர் .
அப்பொழுது , சிவகோசரியார் விதிப்படி செய்த வழிபாட்டின் இயல்பை நாணன் கூற அம்முறையைக் கடைப்பிடித்து , அப்பெருமானை உண்பிப் பான் வேண்டி அரிதிற் பிரிந்து பொன் முகலி ஆற்றின் கரையை அண்மினார் . காலந் தாழ்த்ததன் காரணத்தை வினவிய காடன் முதலிய வேடர்களுக்கு நாணன் நங்குலத் தலைமை விட்டான் . நலப்பட்டான் தேவர்க் கென்று கூறினன் . வேடர்கள் கூறிய சொற்களைச் செவிகொள்ளாராய்ப் பன்றி யிறைச்சியை நெருப்பில் வேகவைத்துத் தம் நாவினால் சுவைத்துச் சுவையில்லானவற்றை உமிழ்ந்தொழித்து நல்லனவற்றை இறைவன் பொருட்டு இலைக் கலத்து அமைத்துக் கொண்டிருந்தனர் . இஃதுணர்ந்த வேடர்கள் தேவுமால் கொண்ட இத் திண்ணனார் மயக்கத்தைத் தீர்க்கத் தேவராட்டியையும் நாகனையும் அழைத்துவருவோமென்று எண்ணி அகன்றனர் . திண்ணனார் இலைக்கலத்து இறைச்சியை ஒரு கையிலும் வில்லையும் அம்பையும் மற்றொரு கையிலும் தாங்கிக்கொண்டும் , திருமஞ்சன நிமித்தம் பொன் முகலி நீரை வாயிற்கொண்டும் , மலர் மாலையைத் தலையிற் கொண்டும் திருக்காளத்தி யப்பரை அடைந்தனர் . அப் பெருமான் திருமுடியுலுள்ள பழ மலரைத் தம் காற் செருப்பால் மாற்றி வாய்க் கலசத்து நீரை உமிழ்ந்து ஆட்டித் தலைமிசைக் கொணர்ந்த மாலையைச் சாத்திக் கல்லையிலுள்ள இறைச்சியை எதிரே வைத்து இன்னுரை கூறி அமுது செய்வித்தனர் . இந் நிலையிற் கதிரவன் மறைந்தனன் . அன்றிரவு விடியுமளவும் விலங்கு முதலியவற்றால் ஊறுபாடு நேருங்கொலோ என்னும் எண்ணத்தால் உறங்காது புறங்காத்து நின்றனர் . வைகறைப் பொழுதில் இறைவர்க்கு மீண்டும் இறைச்சி கொணர்தற் பொருட்டுக் காடு நோக்கிச் சென்றார் .
காலையில் சிவகோசரியார் என்னும் முனிவர் திருக்காளத்தி நாதர் திருமுன் வந்து இறைச்சி எலும்பு முதலியன கண்டு அருவருத்து வருந்தி , அவற்றைத் திருவலகால் மாற்றி நீராடி வந்து சிவாகம முறைப்படி இறைவனுக்குத் திருமஞ்சன முதலியன செய்து தவ வனத்தை அடைந்தார். வேட்டை குறித்துச் சென்ற திண்ணனார் பன்றி முதலிய விலங்குகளின் இறைச்சிகளைத் தீயிற் பக்குவப்படுத்தித் தேன் கலந்து கல்லையிலெடுத்து முன்பு போலத் திரு மஞ்சள் நீரும் மாமையுங் கொண்டு காளத்தி நாதரை அடைந்து , சிவகோசரியார் செய்த வழிபாட்டுப் பொருளை அகற்றித் தம் வழிபாட்டுச் செயலை நிறைவேற்றினர் . இங்ஙனம் இராப்பொழுதில் உறங்காமலும் பகலில் வேட்டையாடியும் வழிபட்டு வருவாராயினர் .
இச் செய்தியை நாணனும் காடனும் தெரிவிக்கக் கேட்டு நாகனும் தேவராட்டியும் வந்து திண்ணனாரைப் பலவாறு போதித்தும் , தம் வழியின் வாராத அவர் உளத்திண்மையை அறிந்து கைவிட்டகன்றனர் . திண்ணனார் வழிபாட்டுச் செயலை ஒழிக்கவேண்டிய சிவகோசரியார் கனவில் , இறைவன் எழுந்தருளித் திண்ணனாருடைய சிறந்த மெய்யன்புச் செயல்களை எடுத்துரைத்து அச் செயலெல்லாம் தமக்கு உவப்பாவன என்று அருளிச் செய்தனர் . அதுகேட்டுச் சிவகோசரியார் திண்ணனுடைய மெய்யன்புச் செயல்களைக் காண மறைந்து நின்றார் .
ஆறாம் நாட் காலையில் திண்ணனார் முன்பு போல ஊன முதலியன கொண்டு வருங்கால தீய நிமித்தங்களைக் கண்டு உளம் பதைத்துக் காளத்தியப்பரை அடைந்தார் . அவ் விறைவன் வலக் கண்ணில் புண்ணீர் ஒழுகுதலைக் கண்டு துடிதுடித்து வேடர்கள் இத் தீங்கு செய்தனரோ விலங்குகள் செய்தனவோ என்று வருந்திப் , பலவகை மருந்து கொணர்ந்து கண்ணிற் பிழிந்தனர் . அவற்றாற் புண்ணீரொழுக்கு நில்லாமை கண்டு , “ஊனுக்கு ஊனிடல்” என்னும் பழமொழிக் கேள்வி நினைவில் தோன்ற மகிழ்ந்து , அம்பினால் தம் வலக் கண்ணை இடந்து இறைவன் கண்ணில் அப்பினார் . குருதி நின்றது கண்டு பேருஉவகை எய்தினர் . பின்னர் இறைவன் இடக்கண்ணலும் புண்ணீர் ஒழுகியது கண்டு தமது மற்றைக் கண்ணையும் இடந்து அப்ப நினைந்து , இடந் தெரிதற் பொருட்டுத் தம் இடக்காலை இறைவன் இடக்கண்ணிற் சேர்த்து ஓர் அம்பைத் தம் கண்ணில் ஊன்றினார் . இச்செயற்கருஞ்செயலைக் கண்டு பொறாது இறைவன் தன் திருக்கையால் திண்ணனார் கையைப் பிடித்துக் கொண்டு “நில்லு கண்ணப்ப ! நில்லு கண்ணப்ப ! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப !” என்று மூன்று முறை கூறி , “ஓப்பற்ற பேரன்ப! என் வலப்பக்கத்தே நிற்க ! “ என்று அருளிச்செய்தனர் . இவ்வற்புதச் செயலைச் சிவகோசரியார் நேரிற் கண்டு வியப்புற்றனர் . தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர் .
- . பிறப்பின் பெருமை
“தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம் “ என்று பாராட்டப்பெற்ற திருத்தொண்டர் புராணத்தை ஆக்கியருளிய அருட்கவியாகிய சேக்கிழார் என்னும் புலவர் பெருமான் பாடல் வளத்தை அறுதியிட்டுரைக்க எம்மனோரால் எங்ஙனம் இயலும் ? பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவராகிய அவர் பாடல் இனிமையையும் நுண்பொருட் பொலிவையும் இயன்றவளவில் தனிக் கட்டுறையாக எழுதி வெளியிட எண்ணியுள்ளேன் . ஆதலின் , ஈண்டுக் கண்ணப்ப நாயனார் புராணப் பகுதியில் என் சிற்றறிவிற்குத் தோன்றிய ஒரு சில நயங்களை மட்டில் குறிப்பிடத் துணிகின்றேன் .
கண்ணப்பர் பிறப்பால் அவர் பிறந்த ஊரும் அவ்வூரையுடைய நாடும் சிறந்தன என்னும் பொருள் தோன்ற , “கண்ணப்பர் திரு நாடென்ப . ………………..பொத்தப்பி நாடு” எனவும் , “ஈவர் திருப்பதி யாதென்னில் …………. முதுபதி உடுப்பூராகும்” எனவும் தலைமையை இவர்பாலதாக்கி நாட்டையும் ஊரையும் பின்னர்க்கூறினர் . வரலாறு கூறுவார் பெரும்பாலும் இன்ன நாட்டிலே இன்ன வூரிலே என்று கூறுதல் மரபு . ஆயினும் செயற்கருஞ் செயல்புரிந்த பெரியார் தோன்றியதனாலேயே அவர் ஊரும் நாடும் பெருமை பெற்று விளங்குமாதலின் , அம்முறை பற்றி இங்ஙனங் கூறப்பட்டது .
“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே “
என்னும் புறப்பாட்டும் (187) இக்கருத்துப்பற்றி எழுந்ததொன்று . தீய நிலனேயாயினும் நல்லோர் உறையின் நன்றெனவும் நல்ல நிலனேயாயினும் தீயோர் உறையின் தீதெனவும் தன்னிடத்து வாழ்வோர் இயல்பல்லது , நிலம் தனக்கென ஓரியல்பு உடையதன்று என்பது இதன் கருத்தாகும் .
கண்ணப்பர் பிறந்த ஊர் உடுப்பூராகவும் , நம் புலவர் பெருமான் “திருக்காளத்திக் கண்ணப்ப” ரென முதற் செய்யுளிலேயே குறியிட்டாளத் தொடங்கினர் . மாயா காரியமாகிய அவருடல் தோன்றிய இடத்தினும் ஞான வடிவமாகிய அவருயிர் பேரின்ப நிலை எய்திய இடம் சிறந்ததாகலானும் , தந்தையாரிட்ட திண்ணனார் என்னும் பெயரினும் இறைவன் இட்ட கண்ணப்பர் என்னும் பெயர் சிறப்புடையதாகலானும் உடுப்பூர்த் திண்ணனார் என்னாது , திருக்காளத்திக் கண்ணப்பர் என்று கூறுவாராயினர் .
இவர் தந்தை தாயாரைப்பற்றிக் கூறுங்கால் , முறையே “வெஞ்சின மடங்கல் போல்வான்” எனவும் , “சூரரிப் பிணவு போல்வாள்” எனவும் உவமை குறித்தனர் . வீரர் குடிக்குத் தலைவனாகிய நாகனைச் சிங்கவேறு போல்வான் என்றதற்கேற்ப , அவன் மனைவி தத்தையைப் பெண் சிங்கம் போல்வாள் என்று கூறியது பொருத்தமே . அன்புருவமாம் அரும்பெறற் புதல்வனைப் பெற்ற இருமுது குரவர்க்கு ஒப்புக் கூறுங்கால் அவ் வுமையினும் பிறழ்ச்சி வரலாகாது என்பது ஆசிரியர் கருத்தாகும் . இங்ஙனம் இவ் விருவரையும் சிங்கம் போல்வார் எனக் கூறியதற்கேற்பக் கண்ணப்பரைச் சிங்கக் குட்டியாகக் கொண்டு ‘ செங்கண் வயக்கோளரி யேறன்ன திண்மைத் திண்ணனார் “ எனவும் , “கற்றன ரென்னை யாளும் கானவர்க்கரிய சிங்கம் “ எனவும் கூறுவர் . ஈண்டுக் ‘கானவர்க்கு அரிய சிங்கம்’ என்று குறிப்பிட்டதால் இருமுது குரவரும் கானவர்க்கு எளியர் என்பதும் , இவர் இறைவனுக்கு உரியர் என்பதும் புலனாம் . பிறிதொரிடத்துக் “கருங்கதிர் விரிக்கு மேனிக் காமரு குழவி தானும் , இரும்புலிப் பறழி நோங்கி” என்று குறிப்பிட்டுள்ளார் . இங்கே புலிக்குட்டியைக் கண்ணப்பருக்கு உவமை கூறியது அவர் குழவிப் பருவத்தில் தந்தை தாயாரை விட்டகலாமல் அருகிலிருந்து பாதுகாப்புடன் வளர்ந்தது நோக்கிப் போலும் வீர விலங்குகளுள் பிறிதொன்றனால் இடையூறு வாராமல் புலியால் பாதுகாக்கப்படுதல் அதன் குட்டிக்கு உள்ளது என்பது கருதி , இங்ஙனம் கூறினா ரென்றல் பொருத்தமாகும் .”புலிதானே புறத்தாகக் குட்டிகோட் படாது “ என்னுங் கம்ப ராமாயணச் செய்யுளும் இதனை வலியுறுத்தும் .
நாகனும் தத்தையும் மகப் பேற்றிற் சூரியகாலங் கடந்தமையால் தம் குல தெய்வமாகிய முருகப்பெருமானை வழிபட்டுத் தவங் கிடந்து கண்ணப்பரைப் பெற்றனரென்று ஆசிரியர் கூறியுள்ளார் . உலகில் ஞானத்தாலும் பத்தி முதலியவற்றாலும் உயர்ந்த பெரியோர்களின் பிறப்புக்களை ஆராயின் , அவர்களை ஈன்றவர்கள் அரிய தவஞ் செய்து பெற்றனர் என்பது பெரும்பாலுங் காணப்படுவதொன்று . திருஞான சம்பந்தரைப் பெறுதற்கு அவர் தாய் தந்தையர் அருந்தவம் புரிந்த செய்தியைப்பற்றி ,
“நினைவுறமுன் பரசமய நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம்புரிந்தார்”
என்று கூறியது இங்கு நினைக்கத்தக்கது . காதலிருவர் கருத்தொருமித்து இல்லற நெறி யொழுகுங்கால் காமங் காரணமாகக் கூடுங்கூட்டத்திற் பிறக்கும் மகவினும் , அக்காம வேட்கை ஒருவாறு தணியப் பெற்றுத் தெய்வ நினைவுடையராய்ப் புதல்வர்ப்பேறு குறித்துக் கூடும் கூட்டத்திற் பிறக்கும் மகவு இருமுது குரவர் உளத் தூய்மைக் கேற்ப அறிவு முதலியவற்றாற் சிறந்து விளங்கும் என்னும் உண்மையும் ஈண்டு கருதத்தக்கது .
வேடர் குடியில் தோன்றிய தத்தை கண்ணப்பரை ஈன்ற செய்தியை ஆசிரியர் “அளவில் செய் தவத்தி னாலே பான்மதி உவரி யீன்றாலென மகப் பயந்தபோது” என்று உவமித்தனர் , தூய்மை மிக்க திங்கட்கொழுந்தை உவர்க்கடல் பெற்றது போல என்று இங்கே கூறியது பொருத்தமே . குற்றமே முணமாகக் கொள்வாரும் கொடுமையே தலை நின்றுள்ளாருமாகிய வேடரது குடிக்கு உவர்க்கடலையும் மெய்யன்பின் வடிவினராகிய கண்ணப்பருக்குத் தூய திங்கட்குழவியையும் உவமையாகக் குறித்தது நினைந்து இன்புறத்தக்கது . இனி , பான்மதி என்பதற்குப் பால் பகுதியெனக் கொண்டு பதினாறு கலைகளில் ஒரு கூறாகிய பிறை யெனக்கோடலும் பொருந்தும் . மதி யென்பது கலைகள் முற்றும் நிரம்பப்பெற்ற திங்களை யன்றோ குறிக்கும் எனின் ; “தூய வெண்மதி சூடி” என்புழி, கலை குறைந்த பிறையையும் சுட்டுதலால் ஈண்டும் அவ்வாறே கொள்ளலாம் .ஆகவே , உவர்க் கடல் ஒரு கலைப் பிறையை ஈன்றது போலத் தத்தை அன்புருவக் குழவியை ஈன்றாள் என்பது போதரும் . இதற்கேற்பக் கண்ணப்பருக்கு பதினாறு யாண்டுகள் நிரம்பினவென்று கூறுமிடத்து ,
“கண்ணகன் சாயல் பொங்கக்
கலைவளர் திங்க ளேபோல் ,
எண்ணிரன் டாண்டின் செவ்வி யெய்தினார் “ என்று குறிப்பிட்டருளினார் . இங்கே கலைவளர் திங்கள் என்றது நிறைமதியாகும் .திங்களுக்குப் பதினாறு கலைகளுக்கு மேல் வளர்ச்சி யின்று . அது போலக் கண்ணப்பருக்குப் பதினாறு யாண்டு களுக்கு மேல் உடல் வளர்ச்சி கிடையாது . வீட்டு நிலை யெய்தின ராதலின் , இப்பொருள் நலம் தோன்றவே கண்ணப்பர் பிறந்த நிலையில் “ஒரு கலை மதியும் வீட்டு நிலை யெய்திய பதினாறாட்டைப் பருவம் நிரம்பிய நிலையில் பதினாறு கலைகளும் நிரம்பிய திங்களும் உவமையாக எடுத்தாளப்பட்டன .
4 . பிள்ளைமைப் பருவம்
கண்ணப்பருடைய பிள்ளைமைப் பருவத்தைச் சேக்கிழார் பெருமான் நினைந்து நினைந்து உளங்குளிர்ந்து பாடியுள்ளார் . குழந்தைக்கு அணியக் கூடிய தம் மரபிற்கேற்ற அணிகலன்களைத் தாய் தந்தையர் என்பதைப்
“புண்ணியப் பொருளா யுள்ள
பொருவில்சீர் உருவி நானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள்
கலன்பல அனிந்தா ரன்றே .”
என்று அழகுறக்கூறினர் . கண்ணப்பர் திருவுருவம் சிவ புண்ணியத் திரட்சியாலாகிய அன்புருவமாகும் . அன்புநிலை என்னும் தலைப்பில் இது பற்றிய சில உண்மைகள் விளக்கப்படும் . இத்தகைய மெய்யன்பின் வடிவத்தை வேடர்கள் உணருந் தகுதியுடைய ரல்லராதலின் , அவர்கள் தம் கண்களுக்கு அழகு பயக்குமாறு புறவுடலில் தம் மரபினருக்கு உரிய அணிகல்ன்கள் பலவற்றை அணிந்து அம்மட்டில் கண்டு மகிழ்ந்து இன்புறுவாராயினர் .
கண்ணப்பர் மழலை மொழியுங்கால் அவ்வினிய சொற்களை ஆசிரியர் ,
“புண்ணியக் கங்கை நீரிற் புனிதமாம் திருவாய் நீரில்
உண்ணனைந்து அமுத மூறி ஒழுகிய மழலைத் தீஞ்சொல்”
என்று பாராட்டி யுள்ளார் . அவர் காளத்தியப்பரைத் தம் திருவாயிற் கொணர்ந்த நீரை உமிழ்ந்து அன்புத் திருமஞ்சனம் ஆட்டினர் என்பதை உட்கொண்டு கங்கை நீரினும் தூய்மை மிக்கது திருவாய்நீர் என்றும் , அந் நீரிற்றோய்ந்து வெளிப்பட்டமையான் இனிமை மிக்கு ஒழுகியது மழலைத் தீஞ்சொல் என்றும் கூறப்பட்டுள்ளன .
விளையாடுங்கால் பார்வை விலங்காகவுள்ள புலியின் வாயில் கண்ணப்பர் தம் கையை நீட்டியது கண்டு தந்தை தழைகொண்டோச்சி விலக்கினன் என்றும் , அது பொறாது கண்ணப்பர் அழவே தாய் முத்தமிட்டு மாற்றினள் என்றும் ஆசிரியர் கூறுங்கால் , நீர் மல்கிய அவர் கண்களை “இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர்கண்” என்று பாராட்டினர் . இரு சுடர் கதிரவனும் திங்களுமாம் . அவ்விரண்டும் இறைவர்க்கு இரு கண்களாகும் . அக் கண்களிற் புண்ணீர் ஒழுகக் கண்டு தம் கண்களை இடந்து மாற்றினர் என்பது கருதி இங்ஙனம் கூறியருளினார் .
“தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தா யடிப்பின்
பிடித்தொரு தந்தை அணைப்பன்”
என்று உலகியல் கருதிக் கூறிய இராமலிங்க அடிகளின் பாடற் பொருள் இங்கே நினைக்கத்தக்கது .
5 . தொழிலுரிமை கோடல்
கண்ணப்பர் விற்றொழிற் பயிற்சியை மேற்கொள்ளுதற்கு வேடர்கள் நல்ல நாளில் அவர் வில்லுக்குக் காப்புக்கட்டினரென்று கூறுங்கால் , முன் மேருவாகிய வில் திருப்பாற் கடலினின்றும் நஞ்சாகிய உணவை ஆக்கி இறைவர்க்கு அளித்தது . அங்ஙனமின்றி , இஃது ஊனை அமுதமாக்கி அளிப்பதாகும் என்னும் பொருள் தோன்றச் “செம்பொன் மேரு ஆனது கடலி நஞ்ச மாக்கிட அவர்க்கே பின்னும் , கானவூ னமுதமாக்குஞ் சிலை” என்று பாராட்டப்பட்டுள்ளது . விலங்குகளால் நேர்ந்த ஊறுபாடு நீங்கத் தந்தை சொல் வழி நின்று வேட்டைத்தொழிலில் முற்பட்டு நிகழ்த்திய செயல்களை ஆசிரியர் பற்பல நயந்தோன்றப் பாடியுள்ளார் . ஓரிடத்துப் புறத்தே வலைத்தொழிலும் சிலைத்தொழிலும் நடைபெற அகத்தேயுள்ள பாசமாகிய வலைப்பிணிப்பை அறுக்கச் செல்லும் ஐயர் என்று பாராட்டினர் .
மேலும் கண்ணப்பர் முன் பல பார்வை விலங்குகளைக் கொண்டு வேடர் சென்றனர் என்பதைக் ,
“கொன்றை தங்குவேணி யார்தமைக்
கண்னில்நீடு பார்வை ஒன்று
கொண்டுகாணும் அன்பர்முன்
எண்ணில்பார்வை கொண்டுவேடர்
எம்மருங்கும் ஏகினார் “
என்னுஞ் செய்யுளால் குறிப்பிட்டுள்ளார் . இறைவன் வலக் கண்ணில் ஊறுபாடு கண்டு தம் வலக் கண்ணை இடந்து அப்பிய பின் இடக்கட்பார்வை ஒன்று கொண்டு இறைவனைக் கண்டு இன்புறு நிலையினர் முன் , வேடர் பல பார்வை விலங்குகளைக் கொண்டு சென்றனர் என்னும் இந் நிகழ்ச்சியில் வேற்றுப்பார்வை யின்றி ஒரு பொருளையே அகப் பார்வையால் ஆரா அன்பினிற் கண்டுகொண் டிருப்பவர் கண்ணப்பர் என்பதும் , புறப்பார்வை பலவுடையர் வேடர்கள் என்பதும் தோன்றக் கூறிய நயம் அறிந்து இன்புறத்தக்கது .
கண்ணப்பர் வேட்டைச் செயல் அறநிலை பிறழாதது என்பதை ஆசிரியர் “துடியடியென ………………. மறவோர் “ என்னும் பாடலால் தெளிவுறுத்தினார் . சிறிய யானைக் கன்றுகளையும் , மற்றைய விலங்குக் குட்டிகளையும் , சூல் முதிர்ச்சியால் அடி தளர்ந்து செல்லும் மான்பேடு முதலியவற்றையும் கொலை புரியாது விட்டனர் என்பது இதன் பொருளாகும் . இந் நீதி போர்ச்செயலிலும் மேற்கொள்ளப்பட்டது என்பதை,
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட நிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்”
என்னும் புறப்பாடலால் உணரலாம் . நாட்டிற்கு நலிவு செய்யும் தீயவர்களை ஒறுத்தல் அரசர்க்கு உரிய கடமையாதல் போல , விளை பொருள்களுக்கு ஊறு செய்யும் விலங்கினங்களை அழித்தல் வேடர் தலைவர்க்குரிய கடமையாயினும் , சூல் முதிர்ந்த பிணைமான் முதலியவற்றைக் கொல்லாது விடுதல் நீதியென்பது உணர்ந்து அவ்வாறு செய்தனர் . இஃதுணர்ந்தே பிறரொருவர் ,
“பொருப்படியிற் கண்ணப்பர் அருள்வேட்டம்
புரிகால்பொன் னடியிற் பூண்ட
செருப்படியிற் சிறுமணலாய்க் கிடவாத
தீவினைக்கென் செய்குவேனே”
என்னும் பாடலில் கண்ணப்பர் வேட்டையை ‘அருள் வேட்டம்’ என்று கூறினர் இங்கே ,செருப்படியிற் சிறு மணல் என்று கூறியது பாராட்டத்தக்கது . செருப்படியிற் பெரு மணலாயிருந்தால் நடக்குங்கால் உதிர்ந்துபோம் , சிறு மணலாயின் , உட்செறிந்திருந்து பின் இறைவன் திருமுடியிலுள்ள மலரை அச் செருப்பால் மாற்றுங்கால் அம் முடியைத் தானும் உறுதல் பெற்று இன்புறலாம் என்னுங் கருத்து அவ் அன்பர்க்கு உளதாதல் போற்றத்தக்க தொன்று . ஈண்டுக் கண்ணப்பர் செருப்படியிற் படிந்திருத்தல் சாதனமும் , இறைவன் திருமுடியிற் பொருந்துதல் பயனுமாத லறிக .
6 . பழம் பிறப்புத் தொடர்ச்சி
இனி , கண்ணப்பரது பண்டைப் பிறப்பைப் பற்றிய செய்தி ஒருவகையில் உய்த்துணரப்படுதலை இங்கே குறிப்பிடுவேன் . வேட்டைத்தொழில் முடிவில் பொன் முகலி நதிக்குச் செல்லுங்கால் , திருக்காளத்தி மலையில் “கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம்” என்று நாணன் கூறியவுடன் கண்ணப்பர் அம்மலையை நெருங்குந்தோறும் தம் உடற் சுமை குறைந்து தோன்றுவதாகவும் , உள்ளம் என்றுமில்லாத வேறோர் விருப்ப மிக விரைவதாகவும் அநுபவத்திற் கண்டு கூறினர் . இங்ஙனம் தம்மை யறியாமல் அவர்க்கு இந் நிகழ்ச்சிகள் நேர்ந்தமைக்குக் காரணம் அவர் பண்டைப்பிறப்பிற் செய்த அரிய தவத்தின் பயனாம் என்பதைச் சேக்கிழார் ,
“முன்புசெய் தவத்தி னீட்டம் முடிவிலா இன்பமான
அன்பினை எடுத்துக்காட்ட”
என்னும் பாடலாற் புலப்படுத்தியுள்ளார் .
இங்ஙனங் கூறியது கொண்டும் , காளத்திப் புராணத்திற் கூறிய வரலாற்றி லிருந்தும் , கண்ணப்பர் பண்டைப்பிறப்பில் அருச்சுனனாகப் பிறந்து கைலை சென்று சிவ வழிபாடாகிய தவம் பண்ணியவர் என்று கொள்ளுவர் ஒரு சிலர் . அருச்சுனன் தவச்செயற்கு இடையூறாக மூகாசுரன் என்பான் பன்றி உருவெடுத்து வர , அப் பன்றியைக் கொல்லச் செல்லுங்கால், சிவபெருமான் வேடுவராகத் தோன்றி அவனோடு பொருது முடிவில் தம் உண்மை உருக் காட்டி , வீடு பெற வேண்டி நின்ற அவ் வருச்சுனற்குப் பிற்றைப் பிறப்பில் வேடுவனாகப் பிறந்து அன்பு வழிபாடு செய்து பெறுவை என்றனராம் . இந் நிகழ்ச்சிக்கு ஏற்பக் கண்ணப்பர் புராணத்தில் “பன்றியும் புலியும்” , “ஏனமொடு மானினங்கள்” , “ஏறுகாற் பன்றியோடும்” , “”பெரும் பன்றி புனமேய்ந்து “ என்றிங்ஙனம் பற்பல இடங்களில் பன்றியின் செய்திகளே கூறப்பட்டமையும் , வேட்டையின் முடிவில் ஒரு பன்றியைக் கொன்று அதனிறைச்சியையே திருவுணவாகப் படைத்தனர் என்று கூறியதும் எடுத்துக்காட்டத்தக்கனவாம் .
“முன்புசெய் தவத்தினீட்டம்” என்று சேக்கிழார் பொதுவாகக் கூறினாரன்றி , அருச்சுனன் செய்தியைக் குறிப்பிட்டிலர் . அதனால் , இப்பிறப்பில் கல்வியறிவு முதலியவற்றுள் ஏதுமின்றிச் சிறந்துயர்ந்த அன்பு வடிவாக நின்று வழிபட்டு மிக்க விரைவில் வீட்டினைத் தலைப்படுதற்கு இவர் பண்டைப் பிறப்பிற் செயற்கருந் தவம் செய்திருக்க வேண்டுமெனவும், ஏனை விலங்குகளுடைய இறைச்சிகளினும் பன்றி இறைச்சி மிக்க சுவையுடையதெனக் கொண்டு தமக்கு உவப்பாகவுள்ள அதனை இறைவற்குப் படைத்தனர் எனவுங் கோடலும் பொருந்துவனவாம் .
7 . அ ன் பு நி லை
இனி , கண்ணப்பரது சிறந்த அன்பு நிலையைக் கூறுவதென்றால் அது மாற்றம் மனங் கழிய நின்றதொன்று . நாணன் வழி காட்டி முன் செல்ல அவர் அவன் பின்னே காளத்தி மலையில் ஏறி நடந்தனர் என்பதைக் கூறப்புகுந்த ஆசிரியர் , முறுகிய பேரன்பராகிய கண்ணப்பரை அன்ன தகுதி ஏதுமில்லாத நாணன்பின்னே நடப்பிப்பது தக்கதன்று என்று கருதிக் , கண்ணப்பர் உடல் பின்னே சென்றதாயினும் அவர் அன்பு நாணனுடன் முன் சென்றது என்னுங் குறிப்புத் தோன்ற “நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை யேற” என்று திருவாய் மலர்ந்தருளினர் . காளத்தி மலையை அடைந்து இறைவன் திருவுருவத்தைக் கண்டதும் , அவர் தம்வயம் இழந்து இறைவன் வயப்பட்டு வடிவெல்லாம் புளகம் பொங்க மலர்க்கண்ணீர் அருவி பாயக் கைச்சிலை விழுந்ததை அறியாராய்ப் போதுவர் ; மீண்டு செல்வர் ; புல்லுவர்; மீளப் போவர் ; காதலின் நோக்கி நிற்பர்; கன்றகல் புனிற்றாய்போ லாயினர் , இங்ஙனம் இவர் நின்ற நிலையைக் கண்ட நாணன் காலந் தாழ்த்தது குறித்து வினவிய காடனை நோக்கி , “வங்கினைப்பற்றிப் போதா வல்லுடும்பு என்ன நீங்கான்” என்று கூறினன் . உடும்ம்புப்பிடி மிக்க வன்மையுடைய தென்பதைச் சீவகசிந்தாமணி நூலாசிரியரும் ,
“தணக்கிறப்பறித்த போதும் தானளை விடுத்தல் செல்லா
நினைப்புடை உடும்பன் னாரை யாதினால் நீக்க லாமே “
என்று கூறுவர் . வேடன் வாய்க் கூறும் உவமையை அவன் மரபிற்குரிய தொழிலிற் கண்ட காட்சிக்கு ஏற்ற முறையிற் கூறியது சேக்கிழாரின் உலகியலறிவைப் புலப்படுத்துவதாகும் .
மெய்யன்பு நிலையினராகிய கண்ணப்பர் உலகியல்களையும் தமரையும் தன்மையும் மறந்து இறை நிலையில் இயைதலாகிய இயல்பு ஒன்றையே உடையராயினர் . “பரமே பார்த்திருப்பார் பதார்த்தங்கள் பாரார்.” என்பதற்கு இவர் எடுத்துக்காட்டாயினார் . இவர் சுவைத்த ஊன் இறைவர்க்குத் தேவரமிழ்தினுஞ் சிறந்த திருவமுது ஆயிற்று ; இவர் வாயிற் கொண்டு உமிழ்ந்த நீர் புண்ணியக் கங்கைப் புனலினும் சிறந்த திருமஞ்சன நீராயிற்று ; செருப்படி அவ்விளம்பருவச் சேயாகிய முருகன் திருவடியைப் போற் சிறந்ததாயிற்று . இப் பேரன்புச் செயல்கலைச் சங்கராச்சாரியார் வியந்து தாம் பாடிய சிவானந்தலகரியில் ,
“மார்க்கா வர்த்தித பாதுகா பசுபதேரங்யகஸ்கூர்ச் சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புரரிபோர் திவ்யாபிஷேகாயதே !
கிஞ்சித் பக்ஷிதமாம்ஸசே ஷகவளம் நவ்யோப ஹாரயதே
பக்தி; கிம் நகரோதியஹொ வளசர : பக்தாவதம் ஸாயதே!!
என்று மனமுருகிப் பாடியுள்ளார் . இச் சுலோகப் பொருள்:-
“வழி நடத்தற்குரிய செருப்புப் பசுபதியின் திருமேனியைத் தூய்தாக்கும் கூர்ச்சமாயிற்று , எச்சில் நீர் புறப் பகைவற்குச் சிறந்த திருமஞ் சனமாயிற்று . சிறிது சுவைத்த இறைச்சி புதிய நிவேதனமாயிற்று . பத்தி யாது செய்யாது ? ஆ ! வேடன் பத்தருள் தலைமணியாயினான்” என்பதாம் . இவர் இராப்பொழுது விடியுமளவும் இறைவன் திருமேனிக்கு விலங்கு முதலியவற்றால் ஊறுபாடு நேராமைப்பொருட்டுக் கண்னிமை மூடாமல் உள்ளத்தில் மெய்யன்பையும் கையிற் சிலையையும் தாங்கிப் பாதுகாத்து நின்றனர் . இக் காட்சியைச் சேக்கிழார் தம் உள்ளத்தில் எழுதிக் கனிந்து பாடிய பாடல் ,
“சார்வருந் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார் நீளிருள் நீங்க நின்றார் “
என்பதாகும் . தேவர் முனிவர் முதலியோரும் அருந்தவம் புரிந்தும் காணுதற்கரிய பெருமானைத் தம் மெய்யன்பிற் கண்டு கொண்டு நீளிருள் நீங்க நின்றார் என்பது இதன் கருத்து .இங்கே ‘நீளிருள்’ என்றது , மிக்க விரைவில் ஒழியவேண்டுமென்று கருதிய கண்ணப்பருக்கு அவ்விராப்பொழுது நீண்டதாகக் காணப்பட்டது பற்றிப் புறவிருளையும் , பிறப்புத் தொடங்க முதல் வீட்டு நிலை யெய்துமளவும் ஒழியாது பற்றி நின்ற ஆணவமலம் என்னும் அகவிருளையும் குறிப்பதாகும் , கண்ணப்பரது சிவானுபவ நிலையால் அம் மலையில் இராப்பொழுதென்பது சிறிதும் இன்றாயிற்றாம் . இது ,
“செந்தழல் ஒளியிற் பொங்கும் தீபமா மரங்க ளாலும்
மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிகளாலும்
ஐந்துமா றடங்கி யுள்ளா ரரும்பெருஞ் சோதி யாலும்
எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன்றில்லை”
என்னும் பாடலால் தெளிவுறுத்தப்பட்டது . புறவிருள் , அகப்புறவிருள் , அகவிருள் என இருளை முத்திறப்படுத்து வெளியை மூடியிருக்கும் இருளைப் புறவிருளாகவும் , இல்லம் முதலிய உள்ளிடங்களிலுள்ள இருளை அகப் புற விருளாகவும் , மக்கள் உள்ளத்திற் படிந்துள்ள மயக்க விருளை அகவிருளாகவும் கூறலாம் . இம் முத்திறத்து இருளையும் ஒழித்தற்கு உரிய ஒளிக் கருவிகளாக முறையே , அம் மலையிலுள்ள ஒளி மரங்களையும் , மலை முழைகளில் பெண் குரங்கு முதலியன கொணர்ந்து வைத்த மணிகளையும் , மாறுபட்ட ஐம்புலன்களின் ஆற்றலை அடக்கி இறை நிலையிற் பதிந்துநின்ற கண்ணப்பரது உள்ளுணர்வையும் குறிப்பிட்டுள் ளனர் . “ஐந்துமா றடக்கியுள்ளார் “ அம் மலையில் தவம் பண்ணும் முனிவரர் எனவும் கூறுவர் . இங்கே கண்ணப்பருடைய அருஞ் செயல்களைக் குறிக்கொண்டு கூறுதலானும் , மாறி நின்று மயக்கும் வஞ்சப் புலங்களின் வழி அவருள்ளம் செல்லாமையானும் அக் கண்ணப்பரைக் கூறுதல் பொருந்துவதாகும் . ஒளிக்கருவிகளை முத்திறப்படுத்துக் கூறிய முறையில் கதிரவனும் திங்களும் அங்கியுமாகிய ஒளிப்பொருள்கள் மூன்றும் தொனியளவில் புலப்படுக்கப்பட்ட உண்மையும் உணரத்தக்கது .
இனி, சிவகோசரியாருக்குக் கண்ணப்பரது பேரன்பின் திறத்தைக் காட்டற் பொருட்டு இறைவன் முதலில் தம் வலக்கண்ணில் புண்ணீர் ஒழுக்கினாராக , அது கண்டதும் கண்ணப்பர் துடிதுடித்துப் பற்பல மருந்து களைப் பறித்துக்கொண்டு ,விரைவில் வந்து பிழிந்தனர் என்ப . இந் நிலையில் அவரது விரைந்த வருகைக்கு ஒப்பாக வாயுவேகம் எங்கும் படிந்து செல்லுதலாற் பொருந்தாதென்று விடுத்துத் தாவிச் செல்லும் மனோ வேகத்தைக் குறிப்பிடலானார் . அதுவும் ஊக்கமில்லாதார் மனமாக இருப்பின் , ஒவ்வாதென்று கருதிப் “பூதநா யகன் பால் வைத்த மனத்தினுங் கடிது வந்து “ என்றார் , “இறைவன்பால் வைத்த தம் மனம்போல்” என்று கூறுவதே பொருந்துவதாகவும் , அதனினுஞ் சிறந்த ஒப்புக் கூறவியலாமையால் “மனத்தினுங் கடிது” என உறழ்ச்சி உவமமாகக் கூறினர் .
இதனால் , உவமையும் ஈண்டு மேற்கொண்ட பொருட்குச் சிறந்து நின்று பயன் விளைத்தமையும் உணரத்தக்கது. உவமேயமாகிய பொருளே புலவன் கூற மேற்கொண்ட செய்திக்குச் சிறந்ததாகும் . உவமை அதற்கு ஒப்புத்தன்மையைப் பயந்து அவ்வளவில் ஒழிவதாகும் . இது மற்றைப் புலவர்களின் புலமை நெறியாகும் . அருட்கவியாகிய சேக்கிழார் பெருமான் உவமையும் பொருளுமாகிய இரண்டும் தாம் மேற்கொண்ட வரலாற்றிற்குச் சிறந்தன வாகக் கூறும் இயல்பினராவர் . இதற்கு ஈண்டுக் கூறியதொன் றன்றிச் “செம்பியன் செங்கோலென்னத் தென்னன் கூன் நிமிர்ந்த தன்றே” என்பது முதலியனவும் சான்றாகும் . பாண்டியன் கூன் நிமிர்ந்ததற்குச் சோழமன்னனது செங்கோலை உவமையாகக் கூறினர் . அப்பொழுது சைவத்தை நிலை பெறச் செய்தற்கு மங்கையர்க்கரசியார் முன் நின்றாராத லானும் , அவர் புக்ககத்துப் பெருமையினும் சைவ முறை வழுவாத பிறந்தகத்துப் பெருமை அவ்வமயம் விஞ்சிநின்றதாகலானும் இவ்வாறு கூறி யருளினர் .
இனி , கண்ணப்பரது உருவம் அன்பின் திருவுருவாம் என்பது முன்னர்க் கூறப்பட்டுள்லது . ஒரு குணிப்பொருளைப் புணைந்துரைக்குங் கால் அப்பொருள்களின்கண் விஞ்சி நிற்கும் குண வடிவமாகக் கூறுதல் பெரும்புலவர் மரபென்பதும் , இது கடைப் பிடித்தே திரு ஞானசம்பந்தப் பெருமானை ஞானத்தின் திருவுருவாகவும் , கண்ணப்ப நாயனாரை அன்பின் திருவுருவாகவும் தெளிந்து கூறினர் சேக்கிழார் என்பதும் ‘ஞானத்தின் திருவுரு’ என்னுங் கட்டுரையில் விரித்துரைக்கப்பட்டன , “அன்பு பிழம்பாய்த் திரிவார்” “பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்புருவமானார்” “படியிலாப் பரிவுதானோர் படிவமாம் பரிசு தோன்ற “ என்று ஆங்காங்குப் புலப்படுத்துச் செல்லுங் குறிப்புக்களும் , திரு ஞானசம்பந்தர் கண்ணப்பரது திருவுருவத்தை வணங்குங்கால் “உல்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்மை , உருவினையும் “ என்று தெளிவுறுத்திய உண்மையும் , ஊன் முதலியன கண்டு வருந்திய சிவகோசரியார் கனவில் இறைவன் எழுந்தருளி “அவனுடைய வடிவெல்லாம் நம் பக்கல் அன்பு “ என்பது முதலியவாகக் கூறிய செய்திகளும் கண்ணப்பர் அன்பின் திருவுருவாவர் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்துவனவாம் .
அன்பின் பேரெல்லைக்குக் கண்ணப்பரே எடுத்துக்காட்டாவார் . இதனை அன்பு மயமாக உருகி இறைவன் திருவடி யடைந்த மாணிக்கவா சகப் பெருமான் “கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்ட பின் “ என்றருளிய பாசுரத்தானும் உணரலாம் . ஈண்டுக் ‘கண்ணப்பனொப்பதோர் அன்பின்மை’ என்பதற்குக் ‘ கண்ணப்பரது அன்போடு ஒத்த அன்பு என்பால் இல்லாமை கண்டு” என்று பொருள் கூறின் , அவ்வன்பிற்குச் சற்றுக் குறைந்த அன்பு உண்மை பெறப்படும் . அங்ஙனமாயின் , அக் கருத்து “நான் தனக் கன்பின்மை நானுந்தானு மறிவொம்” என்பதனோடு முரண் படுவதாகும் . அதனால் இதனை மறுதலை உவமையாகக் கொண்டு , கண்ணப்பர் அன்பு எத்துணை உயர்ந்ததோ அத்துணைத் தாழ்ந்தது என் அன்பு என்று பொருள் கோடல் சிறந்ததாகும் . கண்ணப்பர் பேரன்பிற்கு எடுத்துக் காட்டாதல்போல , யான் அன்பின்மைக்கு எடுத்துக்காட்டாவேன் என்பது கருத்து .
இன்னும் இவர் பேரன்பின் இயலைப் பதினோராம் திருமுறையிலுள்ள நக்கீர தேவனார் பாடிய திருக் கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் நூலில் நன்கு கானலாம் . சிவகோசரியார் கனவில் இறைவன் எழுந்தருளிக் கூறிய செய்தி யடங்கிய இந் நூற்பகுதி படித்து இன்புறத்தக்கது . அது வருமாறு :-
“குனிசிலை வேடன் குணமவை யாவன
உரிமையிற் சிறந்தநன் மாதவ னென்றுணர் அவனுகந்து,
இயங்கிய இடம்முனி வனமது வேயவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழிலவன் வாயது தூயபொற் குடமே
அதனின் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி யவனிரைப் பல்லே
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழு துஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினு நம்மடிக் கினிதே
அவன்றலை ,
தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தலரே அவனுகந்து
இட்ட விறைச்சி யெனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே “
என்பதாம் . இதன்கண் அவர் வாய் திருமஞ்சனப் பொற்குடம் எனவும் , அதன் கண்ணுள்ள அவர் எச்சில் கலந்த நீர் கங்கைப் புனலெனவும் , அவருடைய பற்களும் நாவும் முறையே திருமஞ்சன நீரில் இடப்படும் இரத்தினங்களும் மலருமாம் எனவும் , அவர் அப்புனலை உமிழுங்கால் உராய்ந்த அவர் மீசை மயிர் தூய தருப்பைப் புற்களாம் எனவும் கூறிய செய்திகள் அறிஞர் உள்ளத்தை இன்புறுத்துவன . இவரன்பை அந்தமில் இன்பமாகிய அழிவில் வீடு பயக்கும் மெய்யன்பு என்பது தோன்ற “முடிவிலா இன்பமான அன்பு” என்று ஆசிரியர் கூறுவர் . இத்தகையதே காரைக்காலம்மையார் வேண்டிய இறவாத இன்ப அன்புமாம் . சிவகோசரியார் அன்பு ஆகமநெறி ஒழுகி மேற்கண்ட விதிமுகமான அன்பாகும் . இவரன்பு விதி விலக்குகளைக் கடந்து நின்ற தொன்றாகும் . “எத்தவப் பிரியம் ததிஹ புண்யம்” என்றபடி இறைவனுக்கு உவப்பாக வுள்ள இவர் செயல்களெல்லாம் சிவ புண்ணியச் செயல்களாயின. இவர்க்கும் சிவ கோசரியார்க்கும் உள்ள செயல்களில் வேறுபாடுள்ளனவன்றி, அச் செயல்களுக்கு மூலமாகவுள்ள அன்பு ஒன்றெனவே கொள்ளத் தகும் . இவ் வுண்மையைத் திருஞான சம்பந்தப்பெருமான் ,
“ஊனொ டுண்டல் நன்றென ஊனொ டுண்டல் தீதென
ஆன தொண்ட ரன்பினால் பேச நின்ற தன்மையான”
என்று தாம் திருவாய்மலர்ந்தருளிய தமிழ் மறையிற் புலப்படுத்தருளினார்,
8 . க லை ம லி ந் த சீ ர்
சுந்தரமூர்த்திகள் தாம் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகையில் கண்ணப்பரைக் “கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்” என்று கூறினர் . இத் தொடர்க்கு நூலறிவாகிய அபர ஞானம் நிரம்பப் பெற்ற சிறப்பினையுடைய நம்பி எனப் பொருள் கொள்ளலாம் . இப் பிறப்பில் கல்விப் பயிற்சி சிறிதுமில்லாத இவரை இங்ஙனம் கூறலமோ எனின் , கல்வி யில்லாமையைக் குறைவாக ஒரு சிலர் கருதுவர் . என்பது குறித்தே இவ்வாறு கூறினர் . இங்ஙனமே சிவனடியார் திறத்துக் குறையெனக் கருதத் தக்க இடங்களிலெல்லாம் நினைவு கூர்ந்து அக் குறையைப் பரிகரித்துச் செல்லுதல், நம் அருட்பெரும் புலவராகிய நாவலூரார் இயல்பாம் . பிறவியிலேயே புறக் கண்ணிழந்த தண்டியடிகளை “நாட்டமிகு தண்டி “ எனவும் , முத்தி நாதன் வாட்படையால் உடல் நீத்த மெய்ப்பொருள் நாயனாரை “வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருள்” எனவுங் கூறிய செய்திகள் இங்கே கருதத்தக்கன . இவ்வடியார்களை இவ்வாறு கூறுதற்குத் தக்க ஆதாரமும் உண்டு . கண்ணப்பர் பண்டைப்பிறப்பிற் கலையறிவு முற்றுப்பெற்றதனாலேயே இப்பிறப்பில் அந் நூலறிவின் பயனாகிய அனுபவ வுணர்ச்சி விரைவிற் கைவரப்பெற்று மெய்ப்பொருளை உணர்ந்தனர் என்பதும் , தண்டியடிகள் அகக் கண்ணாலேயே இறைவனை வழிபட்டுப் பின்னர்ப் பறக்கண்ணும் பெற்றனர் .என்பதும் , மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் திருமடத்தையே மெய்ப்பொருளெனக் கொண்டவராதலின் , தம் உடற்குப் பகைவனால் ஊறு நேர்ந்த பொழுதும் தாம் மேற்கொண்ட உறுதியைக் கடைப்பிடித்து வெற்றியடைந்தனர் என்பதும் ஈண்டு ஆதாரங்களாகக் கருதத்தக்கன .
இனி , கலைமலிந்த சீர் என்பதற்குப் பலவகைக் கலைகளிலும் மிக்க விளங்கும் புகழ் எனப் பொருள் கோடலும் பொருந்தும் . தமிழ் மறைகளாகிய தேவார முதலியன தென்றமிழ்க் கலைகளாகும் . அவற்றையருளிய திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் மாணிக்க வாசகரும் கண்ணப்பருடைய பேரன்பின் திறத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளனர் . நக்கீர தேவர் , கல்லாடர் , பட்டினத்து அடிகள் முதலிய புலவர்களும் பிற்காலத்துப் புலவர்களும் தத்தம் பாடல்களில் இங்ஙனமே சிறப்பித்துப் பாடியுள்ளார்கள் . தென் கலயேயன்றி வட கலையிலும் இவர் பெருமை பாராட்டப்பட்ட செய்தியை முன் காட்டிய சங்கராச்சாரியருடைய சிவானந்தலகரிச் சுலோகத்தாலும் அறியலாம் .
இவர் திருவுருவத்தைத் திருஞானசம்பந்தர் முதலிய பெரியோரெல் லோரும் வணங்கி இன்புற்றனர் என்ப . அவ்வணக்கப் பயனைப்பற்றிக் கூறிய செய்திகளுள் , திரு ஞானசம்பந்தர் வணக்கத்தைப்பற்றி “வீழ்ந்தெழுவார் குறிப்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக்கண்டு வீழ்ந்தார் “ என்று கூறியது சிறப்பாக நினைக்கத் தக்கது . முன்னர் இறைவன் திருவுருவையும் பின்னர்க் கண்ணப்பர் திருவுருவத்தையும் திரு ஞானசம்பந்தர் வனங்கிய முறையில் கண்ணப்பர் திருவுருவ வணக்கம் பின்னதாக நிகழினும் , அது முன்னர்ச் செய்த சிவ வணக்கத்தின் பயனைக் கைவரப்பெற்றது போலிருந்தது என்று குறிப்பிட்டது அறிஞர்கள் உள்ளத்தைப் பெரிதும் இன்புறுத்துவதொன்று .
9 . அருஞ்செயல்களும் இன்பப் பேறும்
கண்ணப்பர் ஆறு நாட்கள் இரவு பகல் உணவையும் உறக்கத்தையும் அறவே யொழித்தார் . அருட்குறியாகிய சிவலிங்கத்தைச் சிவபெருமானின் வேறாகக் கருதினாரல்லர் . இரவெல்லாம் வேடராலும் விலங்குகளாலும் ஊறுபாடு நேரா வண்ணம் பாதுகாத்தலிலும் , பகலெல்லாம் இறைவனுக்கு உணவு தேடிக் கொணர்தலிலும் இவர் கருத்துச் சென்றது . தாய் தந்தை சுற்றம் நட்பு முதலிய பிறப்புத்தொடர்புகளை யெல்லாம் அறவே மறந்தனர். யாவர் எது செய்யினும் எது பேசினும் இவர்க்கு இறையருள் நாட்டமே யன்றிப் பிறிதொன்றில்லை .கரண மெல்லாம் பசுத்துவம் நீங்கிப் பதி கரணமாகத் திகழ்ந்தமையால் இவர் செயலனைத்தும் சிவச் செயலாயின . இவர் சித்தம் சிவமானபடியால் செய்தனவெல்லாம் தவமாயின. இவரது கரை கடந்த பேரன்பைச் சிவ கோசரியார்க்கும் உலகினர்க்கும் காட்ட இறைவர் தம் வலக்கண்ணிற் புண்ணீர் ஒழுக்கினராக , அது கண்டதும் இவரெய்திய துயரம் அளவில் அடங்காததாயிற்று . மருந்து பிழிந்து பார்த்தார்; நோய் தீர்ந்திலது . ஊனுக்கு ஊனிடல் என்னும் பழமொழியைக் கேட்டவராதலின் இறைவன் கண்ணிலுள்ள ஊறுபாடு ஒழித்தற்கு வழிகண்டு பெரிதும் உளம் மகிழ்ந்து தம் கண்ணை அம்பினார் பெயர்த்து இறைவன் கண்ணில் அப்பினார் . புண்ணீர் ஒழுக்கு நின்றது . அது கண்டு உவகைக் கடலுள் மூழ்கி உன்மத்தர் போல் ஆயினர் .
“கண்ணிற் சிறந்த உறுப்பில்லை “ என்றதனால் மக்கள் உறுப்புக்களுள் கண்ணே மிகச் சிறந்ததாகும் . அதன்கண் சிறு துகள் படிந்தாலும் துன்பமுண்டாம் . இந் நிலையில் , தம் கை அம்பினால் தம் கண்ணைப் பெயர்த்து எடுத்தனர் என்றால் இச் செயற்கரும் செயலை எங்ஙனம் அளவிட்டுரைக்க முடியும் ! மீண்டும் இறைவன் இடக்கண்ணிலும் புண்ணீர் ஒழுகக் கண்டு சிறிது வருந்திப் பின் தேறித் தம் இடக்கண்ணையும் அவ்வாறு பெயர்க்கத் தொடங்கினார் .இவ் வருஞ் செயலைத் தாங்காது இறைவன் தம் திருக்கையால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு “கண்ணப்ப நிற்க ! நிற்க ! நிற்க ! என மும்முறை கூறித் தடுத்து , ‘ஒப்புயர்வற்ற மெய்யன்ப ! என் வலத்தே நிற்க “ வெனத் திருவருள் புரிந்தனர் . அருளாளரொருவர் மற்றோரன்பர்க்கு உதவிபுரிய முற்படுங்கால் அதனைப் பெறுபவர் ஓரளவிற் போதியதென்று தடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாது மேலும் செய்தலை உலகியலிற் காண்கின்றோம் . அங்ஙனமே , இங்கே நிற்க வென்று இறைவன் ஒருமுறை கூறியொழியின் அன்பின் மிகுதியால் தம் ஆணையையுங் கடந்து மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பர் என்னுங் கருத்தால் மும்முறை கூறியருளினர் . அவ்வருண்மொழிப்படி இறைவன் திருவடி நீழலில் இரண்டற்ற நிலை யெய்திப் பேரின்பம் துய்ப்பாராயினார் .
10 . வ ர லா ற் று நு ண் பொ ரு ள்
அ . முப்பொறுள் உண்மை .
இனி , கண்ணப்ப நாயனார் வரலாற்றிற் காணப்படும் மக்களைச் சைவ சித்தாந்த நூல் முறைப்படி அமைந்த தத்துவப் பொருள்களாகக் கொண்டு ஒருவாற்றால் ஆராய முற்படுகின்றேன் .
சைவ சித்தாந்தத்திற் கூறப்படும் நித்தியப்பொருள்கள் இறை , உயிர்,கட்டு என்னும் மூன்றுமாம் . இவற்றைப் பதி பசு பாசம் எனக் கூறுப . இவற்றுள் பதிப்பொருளாகிய இறை திருக்காளத்தி யப்பரென்பது கூறவேண்டியதொன்றன்று . உயிர்க்குச் சார்ந்ததன் வண்ணமாத் தமையுடைமை இலக்கணமாகும் . அவ்விலக்கணம் அமைந்த உயிராக , வீட்டு நிலை எய்துதற்குரிய பக்குவம் அமைந்த கண்ணப்ப நாயனாரைக் கூறுதல் பொருந்தும் . கண்ணப்பர் பிறப்பின் சார்பால் குற்றமே குணமாகக் கொள்ளும் இயல்பினரென்பதை அவர் தம் மரபினர்க்குரிய வேட்டைத் தொழிலை மேற்கொண்டமையானும் பல விலங்குகளைக் கொன்றமையானும் , காடன் நாணன் முதலிய வேடரொடு கூடி அவர் தன்மையராய் ஒழுகினமையானும் உணரலாம் . முடிவில் வேடர்களாகிய பாசங்களை ஒருவிச் சிவதரிசனம் பெற்ற மாத்திரத்தில் உலகியலை மறந்து இறை நிலையில் தோய்ந்து நின்றதும் அவ்விலக்கண முடைமையைத் தெளிவுறுத்துவதாகும் . கட்டாகிய பாசங்களை ஆணவம் மாயை கன்மம் என மூன்றாகவும் , அவற்றோடு மாயேயம் திரோதாயி என்பன கூட்டி ஐந்தாகவுங் கூறுவர் . “இம்மலம் மூன்றினோடும் இருமலம் இசைப்பன் பின்னும்” “ஆய்வர் இம்மலங்களைந்தும் “ என்று சிவஞான சித்தியார் கூறும். மெய்கண்டாருக்குப் பல்லாண்டுகளுக்கு முற்பட்ட மாணிக்க வாசகர் “மும்மலப் பழ வல்வினை” “மலங்கள் ஐந்தாற் சுழல்வன்” என்று கூறியதும் நோக்கத்தக்கது .
ஆ . ஆணவம்
இவற்றுள் , ஆணவம் மூலமலம் எனப்படும் . இஃது ஒன்றாய் எண்ணிறந்த ஆற்றல்களை யுடையதாய் அநாதியே . செம்பிற் களிம்பு போல உயிர்கள் தோறும் விரவி நிற்பதாய் உயிரறிவை மறைத்து நிற்கும் இருளாய்த் தன்னாற் பற்றப்பட்ட உயிர் ஒளிப்பிழம்பாகவுள்ள இறைவன் திருமுன் எய்திய அளவில் உயிரை விட்டு நீங்கும் இயல்பினதாய் உள்ளதாகும் , இந் நிலையில் கண்ணப்ப நாயனாருடைய தந்தையாகிய நாகனை மூலமலமாகிய ஆணவம் என்று குறிப்பிடலாம் . “மகனறிவு தந்தை யறிவு” என்பதனால் தந்தையின் தொடர்பு மகனை விட்டு நீங்காத தொன்றாம் . கண்ணப்பரைக் குழவிப் பருவத்துத் தந்தை எடுத்துத் தன்னின் வேறன்மை தோன்றத் தழீஇனான் என்பதைக் ,
“கருவரை காள மேகம் ஏந்திய தென்னத் தாதை
பொருவளரத் தோள்க ளாரப் புதல்வனை எடுத்துக்கொண்டான்”
என்பதனால் ஆசிரியர் புலப்படுத்துள்ளார் . இச் செயல் “ஆணவத்தோ டத்துவித மானபடி” என்று தாயுமானவர் கூறிய உண்மையைக் குறிப்பதாகும் . உயிர் ஆணவமலத்தாற் பிணிப்புண்டு பொய்யுலக வாழ்க்கையே மெய்யெனக்கொண்டு அறிவு விளக்கம் பெறாத நிலையைக் கண்ணப்பர் , தந்தையாகிய நாகன் வயப்பட்டு அவன் கட்டளப்படி பொருப்பாட்சி யுரிமை யேற்று வேட்டைத் தொழில் முதலியவற்றில் முற்பட்ட செய்தி புலப்படுத்துவதாகும் . பக்குவான்மா ஒளி வடிவமாகிய இறைவன் திருமுன் எய்தியவுடன் ஆணவ மலம் , அவ் வான்மாவைப் பற்றி நின்ற தன் ஆற்றல் கெடப் பெற்று ஒழியும் என்பதை , நாணனும் காடனும் கண்ணப்பரியல்பைக் கூறக் கேட்ட நாகன் கண்ணப்பரை அணுகித் தன் வயப்படுத்தப் பலவாறு வேறுபடுத்திப் பார்த்தும் தன் வழி வாராமையால் கைவிட்டகன்றான் என்னும் செய்தி புலப்படுத்துவதாகும் . இதனை , “நாணனோடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின் ……………… பேணு மகனார் தம்பால் வந்தெல்லாம் போதித்து …………….. தங்கள் குறி வாராமற் கைவிட்டார்” என்னும் பாடலால் அறியலாம் . உயிர் வீட்டு நிலையில் தலைப்பட்ட அளவில் அவ்வுயிரைப் பற்றி நின்ற ஆணவ மலத்தின் ஆற்றல் கெடுமன்றி அம் மலத்திற்குக் கேடின்றென்பதை நாகன் முயற்சி பயன் பெறா தொழிய அவன் மீண்டு தன்னில்லஞ் சேர்ந்திருந்தனன் என்னும் செய்தியால் அறியலாம் . இங்ஙனம் பல்லாற்றானும் ஆணவ நிலையில் நாகனைக் குறித்தல் பொருந்துவதாகும் .
இ . மாயை
இனி , மாயை யென்னும் பாச நிலையில் கண்ணப்பருடைய நற்றாயாகிய தத்தையைக் குறிக்கலாம் . மாயை உலகத் தோற்றத்திற்கு முதற் காரணமாகும் . குடமாகிய காரியத்திற்கு மண்ணும் திரிகையும் முறையே முதல் துணைக் காரணங்களாகக் , குயவன் நிமித்த காரணமாவான் . இங்ஙனமே உலக காரியத்திற்கு மாயையும் சிவ சக்தியும் முதற் காரணமும் துணைக் காரணமுமாக இறைவன் நிமித்த காரணமாவான் . கன்மங்களுக்கு ஈடாக உயிர் கொள்ளும் தனு கரண புவன போகங்கள் எல்லாம் மாயையினின்றுங் கிடைப்பனவாம் . ஐம்பூதங்களின் சேர்க்கையாலுண் டாகிய உடலும் , மன முதலிய கரணங்களும் , உடல் தோன்றுதற்குரிய இடமும் , நுகர் பொருள்களும் மாயையின் காரியங்களாகும் . இம் முறையிற் கண்ணப்பருடைய உடல் தத்தையினிடத்தினின்றும் தோன்றியதாலும் , அவ்வுடலை நுகர் பொருள்களாகிய பால் முதலிய உணவூட்டி வளர்த்தவளும் அவளாதலாலும் அவளை மாயை நிலையிற் குறிப்பது பொருத்தமாகும் . “மாயா தனு விளக்கா மற்றுள்ளங் காணாதேல் , ஆயாதா மொன்றை” என்னும் சிவ ஞான போதப்படி உயிர் மாயா காரியமாகிய உடம்பு தனக்குக் காட்டாகக் கொண்டு காணாதாயின் ஒரு விடத்தையும் அறிவதில்லையாம் . ஆதலால் காட்டாய் நின்று விடயங்களை அறியும் வண்ணம் உயிர்க்கு அறிவை விளக்குதலும் மாயையின் செய்தியாகு மென்பது போதரும் . இங்கே தந்தை உதவிய உடலைக் கொண்டே கண்ணப்பர் மெய்யுணர்வு பெற்றனராதலின் அம் முறையாலும் தத்தையை மாயை நிலையிர் குறிப்பிடுதலில் தட்டின்றாம் . மாயா காரியமாகிய உடம்பைக் கொண்டே உயிர் ஞான மெய்தி நலம் பெறல் வேண்டு மென்பதை ,
“உடம்பா ரழியின் உயிரா ரழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்”
என்னுந் திருமந்திரத்தானும் உணரலாம் .
ஈ . கன்மம்
இனி , கன்மமலம் அறம் பாவ மென்னும் இருவகைத்தாய்ச் , செயப்படு பொருளாகிய தனக்கு மூல கன்ம முண்டென்பது காட்டி , நன்மை தீமையாகிய காரண ஏதுவானும் இன்ப துன்பமாகிய காரிய ஏதுவானும் அநுமித்தறியுமாறு நிற்பதொன்று . இஃது ஒன்றாயினும் காரியப்பாட்டால் அறம் பாவ மென்னும் இரு திறத்ததாகும் . இக் கமத் தொடர்புள்ள உயிர் இறை நிலையில் இயையுங்கால் முதலிற் பாவப்பகுதி யொழியப் புண்ணியப்பகுதி எஞ்சி நின்று தன்னைப் பற்றிய அவ்வுயிர் இறைநிலை யடைதற்கு உதவிபுரிந்து முடிவில் தானும் ஒழிவெய்துவதாகும் .
“பண்ணிய தழல்காய் பாலனா நீர்போற்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென்று அறிவினுக் கறியப் புகுந்தது “
என்னும் ஆன்றோர் மொழியும் இவ்வுண்மையைப் புலப்படுப்பதாகும் . பாலும் நீருங் கலந்த நிலை புண்ணியமும் பாவமுங் கலந்த கன்மத்தையும், தழல் இங்கே சிவஞானத்தையும் உணர்த்துவனவாம் . பாலும் நீருங் கலந்த கலவை தழலின் கட் பட்டுழி முதலில் நீர்ப்பகுதி அறும் . பின்னர் எஞ்சி நின்ற பாற்கூறு பொங்கி அத் தழலின்கட் பட்டுத் தானும் ஒழிந்துவிடும் . இங்ஙனமே பக்குவான்மாவைப் பற்றி நிற்கும் கன்மப் பகுதியில் பாவக் கூறு முதலிற் கெட்டுப் பின் எஞ்சிய புண்ணியக்கூறும் அவ் வுயிர் சிவஞானம் எய்திய அளவில் அதனெதிர்ப்பட்டு நீங்குவதாகும் .
இந் நிலையில் , காடனைக் கன்ம மலமாகக் குறிக்கலாம் . கண்ணப்பருடைய கன்மக் கூற்றில் பாவப்பகுதி முற்பிறப்பிலேயே ஒழிந்திருக்கலாம் . எஞ்சிய புண்ணியக்கூறே இப்பிறப்பிற்குக் காரணமாகும் இதனை , “புண்ணியப்பொருளாயுள்ள பொருவில்சீர் உருவி னானை” என்பத னா லறியலாம் . இங்கே காடன் அவர் வேட்டைத் தொழிலுக்கு உதவியாகச் சென்றதும் , இறுதியில் அவர் ஒரு பன்றியைக் கொன்று தர அவ்விறைச்சி யைப் பக்குவப்படுத்துதற்குரிய தீயைக் கடைந்து வைத்ததும் அப்பன்றியின் உறுப்புக்களை வகுத்தெடுத்து அவர்க்குக் காட்டியதும் , “என்செய்தாய் திண்ணா நீதான் என்னமால் கொண்டா யெங்கள் , முன்பெரு முதலி யல்லையோ” என்று கூறியதும் ஆகிய இவ்வெல்லாம் கண்ணப்பர்பால் எஞ்சி நின்ற புண்ணிய கன்ம வியல்பைக் குறிப்பனவாம். காடன் கடைந்து வைத்த நெருப்பே நிவேதனம் ஆக்குதற்குரிய கருவியாயிற்று . நிவேதனப்பொருளாகிய இறைச்சியைச் செவ்வை செய்து கொடுத்தவனும் அவனே . இச் செயல்கள் சிவ புண்ணியம் தன்னைப் பற்றி நின்ற ஆன்மா இறைபணி செய்தற்குதவியாம் என்னுங்குறிப்பைப் புலப்படுத்துவனவாம் . “எங்கள் முன் பெரு முதலி யல்லையோ “ என்றது கண்ணப்பர் முதிர்ந்த சிவபுண்ணியத்தலைவர் என்பதைக் குறிக்கும் . முடிவில் , “தேவுமால் கொண்டா நிந்தத் திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல், ஆவதொன்றறியோம் “ என்று அவரை விட்டு அகன்றனன் . இது புண்ணிய கன்மமும் பொன் விலங்கு போல வீட்டு நிலைக்குத் தடையாகுமாதலின் அதுவும் ஒழிந்ததென்னுங் குறிப்பைப் புலப்படுப்பதாகும் .
உ . மாயேயம்
இனி , மாயேயம் என்பது “மாயையின் காரியத்தை மாயேய மலம தென்று” என்று சித்தியார் கூறியபடி மாயா காரியமாகும் . இது , மாயையில் அடங்குமெனில் , ஆன்மாவின் அறி விச்சை செயல்களை ஏகதேசப்படுத்திப் பத்தித்தற்கட்படும் வேற்றுமை பற்றி வேறு வைத்தெண்ணப்பட்ட தென்ப . மாயா மலம் பந்தஞ் செய்தலும் மாயேயமலம் ஆன்ம அறிவை ஏகதேசப்படுத்தலும் தம்முள் வேற்றுமையாம் . சிவஞான சித்தியாரில் மாயா காரிய மென்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது . சார்பு நூலாகிய சிவப்பிரகாசத்தில் “தேகமுறு கரணமொடு புவன போகச் செயலாரும் மாமாயைத் திரட்சி யொன்று” என்று இன்னும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது . இங்கே “மாமாயைத் திரட்சி” என்றது சுத்த மாயா காரியமாகிய சுத்தவித்தை , ஈசுவரம் , சாதாக்கியம் , சத்தி , சிவம் என்னும் சுத்த தத்துவங்கள் ஐந்தனையுமாம் . இவற்றையே மாயேய மலமென்ப . . உயிர்க்குத் தனுகரண புவன போகங்களை அசுத்த மாயா காரணத்திலே நின்று சிவ சத்திகள் தோற்றுவிக்கும் . அமயம் அவற்றோடும் பொருந்தி நடத்தும் இயல்பு நோக்கிச் சுத்த மாயையின் திரட்சியாகிய சுத்த தத்துவங்களும் மலமென்று உபசரிக்கப்பட்டன . பாவைக் கூத்தில் மரப்பாவையும் கயிறும்போல் நம் உடல் கரணங்களுக்கு ஆன்ம தத்துவமும் வித்தியா தத்துவமும் முறையே அமைவனவாக , ஆட்டுபவனைப் போல நின்று இயங்குவது சிவ தத்துவமாகும் . இதனாலே இது “பிரேரக காண்ட” மென்றுங் கூறப்படும் .
இங்ஙனம் பிரேரக தத்துவமாகிய இம்மாயேய மலத்தின் நிலையில் நாணனைக் குறிப்பிடலாம் . முதலில் “காண நீபோதின் நல்ல காட்சியே காணும் ……………. கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் “ என்று கூறியவன் நாணனே . சுத்த தத்துவங்களாகிய சிவதத்துவங்கள் சிவபரம் பொருட்கு நெருங்கிய இயைபுடையனவாகலின் குடுமித்தேவர் பக்கல் கண்ணப்பருடன் நாணனும் சென்றான் . ஆன்ம தத்துவங்களையும் வித்தியா தத்துவங்களையும் கடந்தன சிவ தத்துவமாதலின் கண்ணப்பர் அத் தத்துவ சோபானங்களில் ஏறிச் செல்பவர் போல மலையை யடையுங்கால் நாணனும் உடனேறிச் சென்றான் . “நாணனு மன்பு முன்பு நளிர்வரையேற “ என்பதனால் இஃது அறியப்படும் . மலமென்று உபசரிக்கப்பட்ட மாயேயம் தன்னால் பாதிக்கப்பட்ட உயிரைக் கடவுள் பக்க லியைக்கும் பிரேரக தத்துவ மாகலின் , அந் நிலையில் காளத்தி யப்பருக்குச் செய்யத்தக்கது யாதோவென நினைக்கும்போது சிவகோசரி யார் வழிபாட்டு முறையைக் கூறிக் கண்ணப்பர் அந் நெறியைக் கடைப்பிடித் தொழுகுமாறு குறிப்பிட்டவனும் நாணனே யாவன் . முடிவில் உயிர் திருவருட் பேற்றுக்கு உரியதாகுங்கால் இம் மாயேய மலமும் ஒழிய வேண்டுமாதலின் அக்குறிப்பைத் ‘தேவுமால் கொண்டானிந்தத் திண்ணன் மற்றிதனைத் தீர்க்கல் ஆவதொன்ற றியோம் “ என்று கூறி நாணனுங் கைவிட்டகன்ற செய்தி புலப்படுப்பதாகும் .
ஊ . திரோதாயி
இனி , திரோதாயி என்னு மலத்தி னியல்பை “ஏயுமும் மலங்கள் தத்தம் தொழிலினை யியற்ற ஏவும் , தூயவன் தனதொர் சத்தி திரோதன கரியது” என்று சிவஞான சித்தியும் , “முயங்கி நின்று பாகமிக வுதவி திரோதாயி யொன்று” என்று சிவப்பிரகாசமுங் கூறும் . அவ்வம் மலங்களை அவ்வத் தொழிலிற் படுத்திப் பாகம் வருவிக்கும் சிவசத்தியே திரோதாயியாகும் . அங்ஙனமாயின் இது பராசத்தியில் அடங்குமெனின் , தொழில் வேற்றுமைபற்றி உபசாரத்தால் திரோதாயியென வேறுவைத் தெண்ணப் பட்டது .கண்ணிலுள்ள படலத்தை நீக்குதற்குரிய மருந்தானது கண்ணோடு கூடி நின்று துன்புறுத்தி அப்படலத்தை யொழித்துத் தெளிவுறுத்துவது போலச் , சிவபிரானுடைய திருவருட் சத்தி , ஆன்மாவை மறைத்திருக்கும் மலத்தைப் பாகமுறச் செய்து அம் மல நீக்கத்தில் ஞானமாக விளங்கி இன்புறுத்துவதாகும் .
இந்நிலையில் தேவராட்டியைத் திரோதமலமென்று குறிப்பிடலாம் . திரோதாயி , மூலமலமாகிய ஆணவத்தோடு கூடி நின்று தொழிற்படுத்து மென்பதைத் தேவராட்டி நாகனோடு கூடி நின்று வேட்டைத் தொழிலிற் கண்ணப்பரை யேவிய செய்தி புலப்படுத்தும் . அங்ஙனம் ஏவுவதற்கு முன் நாகனை நோக்கி ,
“எற்றையினுங் குறிகள்மிக நல்ல வான
இதனாலே யுன்மைந்தன் திண்ண னான
வெற்றிவரிச் சிலையோன்நின் னளவி லன்றி
மேம்படுகின்றான் “
என்று கூறி வாழ்த்தியுள்ளாள் . இவ் வாழ்த்தில் ‘நின் அளவினன்றி மேம்படுகின்றான்’ என்றது, எதிர்காலத்தில் கண்ணப்பருக்கு நேரும் பேரின்பப் பேற்றைப் புலப்படுத்தும் அருட் குறிப்பாகும் . அங்ஙனம் வாழ்த்தப்பட்ட பின் கண்ணப்பர் வேட்டைக்குப் புறப்படுங்கால் , மீண்டும் தேவராட்டி வந்து அட்சதை சாத்தி வாழ்த்துக் கூறினள் என்னும் செய்தியை ஆசிரியர் ,
“நின்றெங்கு மொய்க்குஞ் சினவேடர்கள் நீங்கப்புக்குச்
சென்றங்கு வள்ளல் திருநெற்றியிற் சேடைசாத்தி
உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மைகள் உள்ளவல்ல
நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றிதென்றாள் . “
என்று கண்ணப்பர் பெருமை புலப்படப் பாடியுள்ளார் . தெய்வ மேறப் பெற்றவர்களை மக்கள் பலர் நெருங்கிச் சூழ்ந்து நின்று , வாழ்த்து நலம்பெற முந்துதல் உலகியலிற் கண்டதொன்று . இங்க்கே வாழ்த்துப் பெறுபவராகிய கண்ணப்பர் நின்ற இடத்திற்குத் தேவராட்டி பிற வேடர்களை விலக்கிக் கொண்டு சென்று அவர் நெற்றியிற் சேடை சாத்தியதும் , அவரை நோக்கி “உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ளவல்ல” என்றதும் , “மிகப் பெரிய நின்வெற்றி நம்மளவன்று” என்றதும் திரோதமலம் பின் அருட்சத்தியாக மாறி நின்று இன்புறுத்தும் என்னும் இயல்பைப் புலப்படுப் பனவாகும் . முடிவில் மலமாம் நிலையில் இதுவும் ஒழியவேண்டுமாகலின் , இதனைக் கண்ணப்பர் காளத்தியப்பரைப் பற்றிவிடாது நின்ற நிலையில் நாகனுடன் தேவராட்டியும் அங்கே சென்று , நாகனுக்கு அனுகூலமானவள் போல் தன்னைக் காட்டிக் கண்ணப்பரைச் சிவனுக்கு உரிமையாக்கி மீண்ட செய்தி புலப்படுத்துவதாகும் . தேவராட்டியின் வாழ்த்துரைகள் வேட்டையில் நன்மை விளையுமென்பது புறப்பொருளாகவும் , திருவரு ளின்பம் விளையு மென்பது உட்பொருளாகவும் கோடற்கு இடனாதலை உய்த்துணரின் , தேவராட்டியைத் திரோதாயி யென்னும் பாச நிலையிற் குறிப்பிடல் பொருந்துவதாகும் .
எ . தத்துவ நிலை
இனி , இவ் வைவகைப் பாசங்களையும் ஒருவி வீட்டு நிலை யெய்திய ஆன்மா கண்ணப்பரென்பது தெளிவாம் . ஓருயிர் சரியை கிரியை யோகங்களைச் செய்து ஞான மெய்திய பின்னரே வீட்டு நிலையில் தலைப்படுமென்பது சைவ நூற்கொள்கை . “இவ் வான்மாக்களுக்கு முற்செய்தவத்தால் ஞானம் நிகழும் “என்பது மெய்கண்டார் நல்லுரையாகும் இங்கே ‘முற்செய்தவம் ‘ என்றது சரியை முதலிய மூன்றையும் உனர்த்தும் . கண்ணப்பர் முற்பிறப்பில் சரியை முதலிய தவம் நிறைவேறப் பெற்று ஞான நெறியில் ஒழுகி அழிவில் இன்பத்திற்கு ஏதுவாகிய அன்பு நெறியில் தலப்பட்டவரென்பதை , “முன்புசெய் தவத்தி னீட்டம் முடிவிலா இன்பமான , அன்பினை எடுத்துக்காட்ட என்பதினாலும் , நாணன் திருக்காளத்திமலை மிசைக் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாமென்று கூறக்கேட்ட அளவில் உடற்சுமை குறையப் பெற்றவராய்த் தம்வயம் அழிந்து என்றும் நிகழாத புதிய விருப்ப மிக இறைவனைக் காண விரைந்தமை யானும் அறியலாம் . வீட்டு நிலைக்குரிய உயிர் முதலில் தன் இயல்பையும் பின் தன்னுள்ளே விளங்கும் தலைவனியல்பையும் அறிந்து தலைவனைத் தலைப்படும் . தன் இயல்பை அறிதலாவது மண்முதற் சிவம் ஈறாகிய தத்துவங்களை ஒவ்வொன்றாக இது நானன்று நானன்று என்று அறிந்து கடந்து மேற்சேறலாம் . இங்ஙனம் ஆன்ம தத்துவங்களைக் கடந்து தன்னியல் பையும் , அவற்றோடு வித்தியா தத்துவம் சிவதத்துவங்களையும் கடந்து இறைவன் இயல்பையும் அறிதல் வேண்டும் . இக் குறிப்பை ,
“நாணனு மன்பு முன்பு நளிர்வரை யேறத் தாமும்
பேணுதத் துவங்க னென்னும் பெருகுசோ பான மேறி
ஆணையாஞ் சிவத்தைச் சாரா அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை யேறி நேர்படச் செல்லும் போதில்”
என்னுந் திருவிருத்தம் தெளிவுறுத்துவதாகும் . இவ் வருமைப் பாடலே கண்ணப்பர் வரலாற்றில் தத்துவ நுண்பொரு ளாராய்தற்கு வழி காட்டியதாகும் . இங்கே திருக்காளத்தி மலையையேறிச் சென்றது தத்துவங்களைக் கடந்து சென்ற இயல்பைக் குறிப்பதாகும் . அம் மலையுச்சியிலிருப்பவர் தத்துவாதீதராகிய சிவபரம் பொருளாவர் . அவரைச் சார்ந்த முறையை , “ஆணையாஞ் சிவத்தைச் சார அணைபவர் போல” என்றார் . இங்கே ஆணை யென்றது சிவசத்தியைக் குறிக்கும் . இறைவனை அடைதற்கு இறைவியின் சார்பே முதலிற் பெறவேண்டு மென்பது “அவனருளாலே அவன் றாள் வணங்கி” எனவும் , அவனருளே கண்ணாகக் காணி னல்லால் “ எனவும் கூறிய அருளுரைகளால் தெளியப் படுவதொன்று . மெய்யருளாந் தாயுடன் சென்று அவள் காட்டத் தந்தையை யடைவதே முறையென்பது பெரியோர் கண்டது . ஆணையாகிய சிவம் என்றது இறைவியொடு உடனாய் இறைவனை உணர்த்தும் .
ஏ . சி வ தீ க் கை
இனி , தீக்கையாலே உயிர் மல அழுக்கைப் போக்கித் தூய்மையுடை யதாகு மென்ப . . தீக்கை குண்ட மண்டலங்களிட்டுத் தீ வளர்த்துச் செய்யப்படுங் கிரியாவதியும் , ஞானாசிரியர் தம் அருட்பார்வை முதலியவற்றால் செய்யப்படும் ஞானவதியுமென இரு வகைப்படும் . பின்னது அதி தீவிர பக்குவ ஆன்மாக்களுக்கு உரியது . ஞானவதியாகிய அருள் நோக்கத்தை “நயன தீக்கை” என்ப . இங்கே கண்ணப்பர் அதி தீவிர பக்குவான்மா வாதலின் , இறைவனே ஞானாசிரியராக எழுந்தருளித் தம் அருள் நோக்கமாகிய நயன தீக்கையைச் செய்து அவரைச் சிவ குமார ராக்கினார் என்பதை,
“திங்கள்சேர் சடையார்தம்மைச் சென்றவர் காணாமுன்னே
அங்கணர் கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கமெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய வொளியி னீழற் பொருவிலன்புருவ மானார் “
என்னும் பாடலால் அறியலாம் . அருள்திரு நோக்கமே நயன தீக்கையாகும் . ஒளியென்பது காளத்தியப்பரைக் குறிப்பதாகும் . “காளத்தியுண்ணின்ற வொளியே” என்பது சுந்தரமூர்த்திகள் திருவாக்கு . “கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலியாரே “ என்னும் அப்பர் தேவாரத்தா னும் நயன தீக்கைப் பேறு வலியுறுவதாகும் . இங்ஙனம் அருள் நோக்கமாகிய தீக்கையால் கண்ணப்பரைப் பற்றி நின்ற பாசங்களெல்லாம் ஒருங்கு அழிய அவர் தூயராய் அருள் உருவினராகிய இறைவனுக்கு உரிய அன்புருவக் குழந்தையாயினா ரென்பதைச் சேக்கிழார் பிறிதோரிடத்தில் மிகத் தெளிவாகக் கூறியருளினர் . அப் பாடல் ,
“முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தி னளவினரோ”
என்பதாம் . வேதகம் என்பது இரும்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்குவது . அதனால் இரும்பு முதலியன கறை யொழிந்து பொன்னாதல் போல இறைவன் அருள் நோக்கால் கண்ணப்பர் தம்மைப் பற்றி நின்ற பாசங்களெல்லாம் ஒழியப்பெற்றுத் தூய ராயினார் என்பது புலனாம் .
இங்கே , ‘வினையிரண்டும் சாருமல மூன்றும் அற’ என்றார் . மும்மலங்களுள் வினையும் ஒன்றாகவும் வினையிரண்டுமென மீண்டும் அதனை வேறாகக் கூறியது என்னையெனின் , “கன்மமும் மூலங் காட்டிக் கான்மிய மலமாய் நிற்கும் “ என்னும் சித்தியார் கருத்துப்படி கன்மத்தை விருப்பு வெறுப்பாம் நிலயில் மூலகன்மமென ஒன்றாகவும் , செயல் வேறுபாட்டால் அறம் பவமென இரண்டாகவும் கொள்ளல் வேண்டும் . இக் கொள்கையைச் சேக்கிழார் “இருவினைப் பாசமும் மலக்கல் லார்த்தலின்” எனப் பிறிதோரிடத்தும் புலப்படுத்துள்லார் . இங்கே இருவினையைக் கயிறாகவும் , மும்மலங்களைக் கல்லாகவும் உருவகப்படுத்திய செய்தி நினைக்கத்த்கக்கது . கண்ணப்பருக்கு நேர்ந்த இருவினை யொப்பு மல பரிபாகம் முதலிய வெல்லாம் இங்கே புலப்படுக்கப்பட்டன .
இங்ஙனம் தூயராகிய கண்ணப்பர் இறையன்பில் தலைபட்டு ஆறாம் நாளில் வீட்டின்பம் எய்தினர் என்ப . சைவ சித்தாந்தத்தில் கலை , தத்துவம் புவனம், வன்னம் , பதம் , மந்திரம் என்னும் ஆறு அத்துவாக்கள் கூறப்பட்டுள்ளன . அத்துவா என்பது வழி என்னும் பொருளதாகும் . “இவை ஒரோவொன்றாகக் கழித்துக் கொண்டு சிவபதத்தில் சேற்ற்கு வழி போறலின் அத்துவா எனப்பட்டன .” என்பர் சிவ ஞான முனிவர் . இதுபற்றியே தீக்கையில் அத்துவ சோதனை கூறப்பட்டுள்ளது . இங்ஙனம் சிவபதம் எய்துதற்கு வழிபோலவுள்ள ஆறு அத்துவாக்களையும் கடந்து சென்றனர் கண்ணப்பரென்பதை “வருமுறை ஆறாம் நாளில் வருமிர வொழித்த காலை” ஆறு சேர் சடையார் தம்மை அணுக வந்து அடையாநின்றார் .என்னும் செய்திகள் புலப்படுத்துவன .
க . ப ரு வு ட லொ டு க் க ம்
இனி , இறைவன் தம் வலக்கன்ணில் ஊறுபாடு காட்டினாராகக் கண்ணப்பர் தம் வலக்கண்ணைப்பெயர்த்து அப்பினர் என்னும் இதன் கண் ஒரு சிறந்த நுண்பொருள் புலப்படுவதாகும் , ஒரு பக்குவான்மா வீட்டு நிலையில் தலைப்படுங்கால் , கன்மங் காரணமாக அதற்கமைந்த ஐம்பூதக் கலவையாகிய உடலிலுள்ள அவ்வப்பூதக் கூறுகள் அவ்வம் மாபூதங்களில் ஒடுங்குமெனவும் , அந்தக்கரணங்களும் அவ்வாறே அவ்வம் முதலில் ஒடுங்குமெனவும் , அறிவுருவாகிய உயிர் பேரறிவுப் பிழம்பாகிய இறையடி நீழலை எய்துமெனவும் மரையாகமங்கள் கூறும் . இந் நிலையில் கண்ணப்பருடைய கட்பொறி தேயுவின் கூறாகும் . அஃது யாண்டு ஒடுங்குமெனின் ,”சக்ஷீ ரசதித்யம்” (கண் ஆதித்தனை யடையும்) என்னும் மறைமொழிப்படி அது சூரியனை அடைய வேண்டும் . இறைவனது வலக்கண் சூரியனாகும் , ஆதலால் தேயுவின் கூறாகிய கண்ணப்பரது கட்பொறி இறைவனது வலக்கண்ணாகிய சூரியனை அடைந்தது
.
பின்னர் , இறைவனது இடக்கண்ணிலும் ஊறுபாடு உண்டாகக் கண்ணப்பர் தம் இடக்கண்ணைப் பெயர்த்துவைக்க நினைந்து முயன்றார் . அச் செயலை இறைவன் தடுத்துவிட்டனர் . ஏன் அதனையும் ஏற்றுக் கொள்ளலாகாதென்று கருதுங்கால் , ஆண்டும் ஒரு நுண்பொருள் புலப்படுவதாகும் .
“சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராஅபரமே “
என்றபடி வீட்டு நிலையில் தலைப்படும் ஆன்மாவுக்கு மன முதலிய கரணங்களின் செயல்களும் ஒழியவேண்டும் . மனம் நினைவு வடிவமாகும் . ஆகவே கண்ணப்பர் தம் இடக்கண்ணைப் பெயர்க்க நினைந்தார் . அவ்வளவில் அஃது ஒழிக்கப்பட்டது . அந் நினைவு யாண்டுச் சென்றதெனின், “மனஸ் சந்திரே நிலீயதே” ( மனம் சந்திரனிடத்தே இலயமாகும் ) என்னும் மறை மொழிப்படி சந்திர மண்டலத்தை அடைந்ததென்னலாம் . எங்ஙனமெனின் , இறைவனது இடக்கண் சந்திரமண்டலமாகும் . அக் கன்ணில் தோன்றிய ஊறுபாட்டை ஒழிக்கவே கண்ணப்பரது இறுதி நினைவு சென்றது . ஆகவே அக்கண்ணைப் பெயர்த்து அப்புதலாகிய செயல் தடுக்கப்பட்டு அவ்வளவில் நினைவு வடிவமாகிய மனமும் சந்திரனில் ஒடுங்கியதாகும் , இங்கே வலக்கண் சூரியனை அடந்ததென்பது ஏனைப் பூதக் கூறுகளும் பொறிகளும் அவ்வவற்றிற்குரிய மாபூதங்களை எய்தின என்பதற்கும் ,இடக்கண்ணைப் பெயர்க்க நினைந்த நினைவு சந்திரனை அடைந்ததென்பது , ஏனைய அகக்கரணங்கள் அவ்வவற்றிற்குரிய இடங்களை அடைந்தன என்பதற்கும் உபலக்கணமாகும் . உபலக்கணம் என்பது ஒரு பொருள் , ஒழிந்த தன் இனத்தையும் குறிப்பது . இங்கே கூறிய கருத்துகள் தோன்றவே “இருசுடர்க் குறுகண் தீர்க்கும் எழில் வளர்கண் “ என்று கண்ணப்பருடைய கண்கள் குறிக்கப்பட்டன . இவ்வரலாற்றுப் பகுதியின் பருப்பொருள் பற்றி இன்றும் இறைவனது வலக்கண் கண்ணப்பருடையதாகு மெனக் கொண்டு ,
“முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிவார்கள்
அக்கண்ணாற் குள்ள தரைக்கண்ணே —— மிக்க
உமையாள்கண் ணோன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்
றமையுமித னாலென் றறி”
என்று ஒரு புலவர் சாதுரிய நயந்தோன்றப் பாடியுள்ளார் .
10 . பே ரி ன் ப நி லை
இனி , இறைவன் கண்ணப்பரது கையைப் பிடித்துக் கொண்டு என் வலத்தில் மாறிலாய் நிற்க என்று பேரருள் புரிந்தனர் என்னும் இந் நிகழ்ச்சியால் , கண்ணப்பரைத் தம் புதல்வராகக் கொண்டு பரிச தீக்கை செய்து தம் பேரானந்தப் பெருஞ் செல்வத்தை அவர்க்கு அருளினர் என்னும் நுண்பொருள் புலனாகும் . முன்னர் அருள் நோக்காகிய நயன தீக்கையால் மலர்ப்பிணிப்பை ஒழித்து இறுதியில் தம் திருக்கரத்தால் அவர் கையைப் பிடித்தலாகிய பரிசதீக்கை செய்து சிவ குமாரனாக்கிப் பேரின்பம் அளித்தனர் . இடப்பக்கம் அம்மையின் கூறுதலானும் , அம்மை அருள் வடிவினளாதலானும் அருள் வழிச் சென்று சிவபதம் எய்தினர் என்பது புலனாக வலத்தே நிற்க என்றனர் . இறைவன் அருள் நிறைவில் அடங்கி இன்புறலே வீட்டு நிலையாகவும் வலம் என்று ஒரு பகுதியைக் குறிப்பிட்டது, அருள் வழிச் சென்று சிவபதம் எய்திய உண்மையைப் புலப்படுத்து முகமாகப் பிற்காலத்தே வழிபடும் அன்பர் கண்ணப்பர் திருவுருவை நிலைப்படுத்தற்குரிய இடம் காட்டியபடியுமாம் .
இனி , இறைவனை அடைதற்குரிய சாதனமும் அதனாற் பெறப்படும் பயனும் இன்னவெனக் கூறுமுகமாக , “உயிர் தான் முன்னே செய்துகொள்ளப்பட்ட புண்ணிய விசேடத்தால் தனக்கு அந்தரியாமியாய் இதுகாறும் உண்ணின்றுணர்த்தி வந்த பரம்பொருளே இப்பொழுது குருவடிவமும் கொண்டு எழுந்தருளி வந்து சிவதீக்கை செய்து மன்னவ குமாரனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடருட்பட்டு வளர்ந்து நின் பெருந்தகைமை அறியாது மயங்கி இடர்ப்பட்டாய் : நின் பெருந்தகைமை யாவது , இவ்வியல்பிற்றென்று அறிவுறுப்ப அறிந்த மாத்திரையே அவ் வேடரை விட்டு நீங்கி அன்னிய மின்றி அநன்னியமாந் தன்மையின் நிலைபெற்று அம் முதற்வன் திருவடிகளை அணையும் .” என்னும் பொருள் தோன்ற எழுந்தது சிவஞானபோதத்தின் எட்டாம் சூத்திரம் . அது ,
“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரங்கழல் செலுமே “
என்பதாம் , இச் சூத்திரக் கருத்துப்படி , ஐம்புல வேடர்களின் சூழலிற் பட்டு வளர்ந்த திண்ணனாரை அவர் முன்பு செய் தவத்தி நீட்டத்தால் சிவபெருமானே ஞானாசிரியனாக எழுந்தருளி ஞானத்தீக்கை செய்து உண்மை உணர்த்திக் கண்ணப்பராக்கித் தம் திருவடி நிழலில் இருந்திப் பேரின்பம் அருளினாரென்று இவ் வரலாற்றிற்கு மற்றொரு வகையால் நுண்பொருள் கோடலும் பொருந்தும் .
இனி , கண்ணப்பர் வரலாற்றிற் கூறப்பட்ட அவர் தந்தை தாயார் அப் பேரன்பாளரைப் பெற்ற நல்வினைப் பேற்றாலும் , நாணன் முதலியோர் அப்பெரியாருடன் பழகிய சிறப்பாலும் அவரெல்லோரும் நற்கதி அடைந்திருப்பர் என்பது திண்ணமே . அங்ஙனமாகவும் அந் நல்லோரைப் பாசங்களாகவும் ஐம்புலவேடராகவும் குறித்தல் எங்ஙனம் பொருந்து மெனின் , கண்ணப்பராகிய தூயவுயிரைச் சார்ந்த அம்மாந்தர் செயல்களையெல்லாம் அப் பாசங்களி னியல்பிற் புலப்படுத்திச் சைவ சித்தாந்த தத்துவ நுண்பொருள் பல வுணர்தற்கு நிலைக்களனாக இவ் வரலாறு அமைந்திருப்பதால் ,இங்ஙனம் குறிப்பிற்கோடல் பொருந்து மென்க இங்ஙனம் தத்துவப்பொருள் கொண்டமையால் அன்னார் நல்வினைப் பேற்றிற்குச் சிறிதும் இழுக்கின்று என்பது தெளிவாம் .
இதுகாறும் கூறியவற்றாற் போந்த தொகைப் பொருள் :- கண்ணப்ப நாயனாரை அன்பின் திருவுரு என்றால் பொருந்து மென்பதூஉம் , அவர் வரலாற்றுச் சுருக்கம் இன்ன தென்பதூஉம் , அவர் பிறப்பின் பெருமையும் தாய் தந்தையர் சிறப்பும் இன்ன வென்பதூஉம் , அவர் பிள்ளைமைப்பருவம் பற்றிய நிகழ்ச்சியில் அறியக்கிடக்கும் பொருள் நயங்களும் பொறுப்புரிமையேற்று வேட்டைத் தொழிலில் தலைப்பட்டு நடாத்திய செயல்களும் பழம் பிறப்புத் தொடர்ச்சியைப் புலப்படுத்தும் அடையாளங்களும் இன்னவென்பதூஉம் , அவர் மெய்யன்பின் சிறப்பியல்பும் அவ் வன்பின் சிறப்பை இறைவன் வெளிப்படுத்திய அருமையும் அதன் விளைவுகளாகிய கண்ணிடத்து அப்புதல் முதலிய செயற்கருஞ்செயல்களும் இன்ன வென்பதூஉம் , அவர் வரலாற்றிற் சைவ சித்தாந்த தத்துவ நுண்பொருள்கள் புலப்படுமாறிங்ஙனம் என்பதூஉம் , இறை , உயிர் , கட்டு என்னும் முப்பொருள்களுள் காளத்தியப்பருங் கண்ணப்பரும் இறையும் பக்குவ முதிர்ந்த உயிருமா மென்பதூஉம் , கட்டாகிய ஆணவம் , மாயை , கன்மம் , மாயேயம் , திரோதாயி என்னும் ஐவகைப்படும் பாசங்களின் இயல்புகளை முறையே நாகன் , தத்தை , காடன், நாணன் , தேவராட்டி என்னும் இவர்கள் செயல்கள் புலப்படுத்துவன வென்பதூஉம் , திருக்காளத்தி மலைமிசை யேறியது தத்துவங் கடத்தலைப் புலப்படுத்தூஉம் என்பதூஉம் , குடுமித்தேவர் ஞானாசிரியராக நின்று ஞானாவதியாகிய நயனதீக்கையால் கண்ணப்பரது மலத்தொடர் பொழிந்தன ரென்பதூஉம் , இறைவன் தமது வலக்கண்ணில் ஊறுபாடு காட்டி இவர் வலக்கண்ணை யேற்றுக்கொண்டதும் , இடக்கண்ணை யேற்றுக்கொள்ளாமல் கையைப்பிடித்து வலத்தெ நிற்கவென்றதும் , கண்ணப்பர் ஆறாம் நாளில் வீட்டு நிலை யெய்தியதும் ஆகிய இவையெல்லாம் இன்னின்ன நுண்பொருள்களைப் புலப்படுத்துவன வென்பதூஉம் , “ஆய்ம்புல வேடரின் “ என்னும் சிவஞானபோதச் சூத்திரக் கருத்துக்கும் இவர் வரலாற்றுக்குறிப்பு ஒத்ததாகு மென்பதூஉம் , தாய் தந்தை முதலியோர் செயல்களைக்கொண்டு பாசங்களின் இயல்புகளைக் குறிப்பிட்டமையால் அன்னார் பெருமைக்கு ஏதுங் குறைவு வாராதென்பதூஉம் பிறவுமாம் .
வாளா பொழுது கழிக்கின்றார் மாநுடவர்
கேளரர்கொ லந்தோ கிறிபட்டார் —- கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுண்ணின்ற
கண்ணப்ப ராவார் கதை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
குறிப்புரை
இன்றியமையாமை = அவசியம்
சாதனம் = கருவி .
கெழுமிய = பொருந்திய
குரிசில் = உயர்ந்தோன்
நிமித்தம் = காரணம்
இயனூலாசிரியர் = இலக்கண மியற்றிய ஆசிரியர்
புவனம் = உடல் தோன்றுதற்குரிய இடம்
போகம் = நுகர்பொருள்
தது = உடல்
கரணம் = மன முதலியன
துய்த்தல் = நுகர்தல்
இறுமாந்து = செருக்கி
ஈடாக = பேறாக
ஒருதலை = துணிவு
தலைக்கூடல் = உண்டாதல்
அழிதன் மாலையின = அழியும் இயல்புள்ளன .
அவகாசம் = காலம்
தலைப்படல் = அடைதல்
அண்முதல் = அணுகுதல்
வினையீட்டம் = இருவினைகளயும் தேடிக்கொள்ளல்
கன்மப்பயன் = இருவினைகளான் எய்தும் இன்ப துன்பங்கள்
உவர் = உப்பு மண்
சிற் சக்தி = ஞான சக்தி
அத்துவிதம் = இரண்டற்ற நிலை ,
உய்த்துணர வைத்தல் = ஆராய்ந்தறிய வைத்தல் .
தேக்கற = தெவிட்டுதல் ஒழிய
கட்டுநிலை = பாசத்தோடு கூடிய நிலை
( பாட்டு ) தாணு = இறைவன்
அளவை = பிரமாணம்
கருதலளவை = அநுமானப் பிரமாணம்
காட்சியளவை = பிரத்தியட்சப் பிரமாணம்
உரையளவை = ஆகமப் பிரமானம்
பதிஞானம் = சிவஞானம்
பாசஞானம் = சொற்பொருட் பிரபஞ்சம் பற்றி நிகழும் ஏகதேச ஞானம்
பசுஞானம் = மன முதலியவற்றைக் கொண்டறியும் ஆன்ம சொரூப ஞானம்
குலாலன் = குயவன்
தூலாருந்ததி நியாயம் = பெரிய நாண்மீனைக் காட்டி அதற்கடுத்த நுண்ணிய அருந்ததி யுருவத்தைக் குறித்தல் போலப் பலப்பொருள் காட்டி நுண்பொருள் விளக்கும் ஒரு நெறி .
மலபரிபாகம் = பாசம் தன் ஆற்றல் ஒழிதற்குரிய பக்குவம் அடைதல் .
சடப்பொருள் = அசேதனப்பொருள் .
உவர்ப்பித்தல் = வெறுப்பித்தல்
சமக மந்திரம் = ஒரு ருத்திர மந்திரம் .
சப்தம் = சொல்
சோபானம் = படி
கரதலாமலகம் = உள்ளங்கை நெல்லிக்கனி
பிருதிவி = மண் ,
தத்துவாதீதர் = தத்துவங்களைக் கடந்தவர்
வியாப்பியம் = ஒன்றினொன்று அடங்கிய நிறைவு
வியாபகம் = எங்கும் நிறைதல்
பரியாயம் = ஒரு பொருளைக் குறித்து வழங்கும் வேறு பெயர்
அருவுரு = சகளநிட்களத் திருமேனி
பரமுக்தி = இரண்டறக் கலந்த நிலை
விழுச்சுடர் = சிறந்த ஒளி
சென்நெறி = செல்லுதற்கேற்ற வழி
தட்டின்று = தடையிலது
விழுமியது = சிறந்தது
ஒல்லுதல் = இயலுதல்
பிரபஞ்சம் = உலகப்பொருள்
தாத்துவிகம் = தத்துவங்களாலாயது
அதிட்டித்தல் = பற்றி நிற்றல்
அலுப்த சக்தி = பேரருளுடைமை
(பாட்டு) இருட்கடு = கரிய நஞ்சம்
மகன்மை நெறி = சர்புத்திர மார்க்கம்
(பாட்டு) பெய = பெய்ய
நாகரிகம் = கண்ணோட்டம்
பிழம்பு = வடிவம்
தடத்த நிலை = இறைவன் அரு உரு அருவுரு என்னும் மூவகைத் திருமேனி கொண்டு வெளிப்படும் நிலை
மாழ்குதல் = மயங்குதல்
(பாட்டு) அழுங்குதல் = வருந்துதல்
பிறாண்டு = பிறவிடத்து
விச்சை = வித்தை
ஈர்த்து = இழுத்து
மலைவுறல் = மயங்குதல்
அக்காரம் = சருக்கரை
தீற்றுதல் = உண்பித்தல்
சலனம் = அசைவு
சேதனப்பொருள் = அறிவுடைப் பொருள்
அசேதனப் பொருள் = அறிவிலாப் பொருள்
விளிப்பல் = அழைப்பேன்
ஒறுத்தல் = தண்டித்தல்
இதம் = நன்மை
அகிதம் = தீமை
(பாட்டு) பூண் = அணிகலன்
கிரமம் = முறை
உவப்பு = கெடுதல்
மலரகிதர் = மலமில்லாதவர்
சகசமலம் = ஆணவம்
நியதி = வரையறை
விசாரம் = ஆராய்ச்சி
மெளட்டியார் = அறிவில்லாதவர்
சங்கித்தல் = ஐயுறுதல்
(பாட்டு) கான்முளை = புதல்வன்
சனனம் = பிறப்பு
சூதகம் = தீட்டு
ஆசெளசம் = தீட்டு
வார்தல் = ஒழுகல்
புண்ணீர் = இரத்தம்
குதர்க்கநெறி = விதண்டாவாத முறை
புரை = குற்றம்
கலாம் = கலகம்
நெஞ்சக்கலம் = மனமாகிய பாத்திரம்
பரதந்திரம் = தன் வயமின்றி இருத்தல்
பெத்தகாலம் = பாசத்தோடு கூடிய நிலை
முனைத்தல் = செருக்கல்
தொழும்பு = அடிமை
(பாட்டு) சால = மிக
(பாட்டு) விறல் = வலிமை
முத்தன் = பாச விடுதி பெற்றவன்
பெத்தன் = பாசப்பிணிப்புடையவன்
காய்தல் = வெறுப்பு
எழில் = அழகு
பரிவுரை = அன்புமொழி
ஒழுகலாறு = ஒழுகுநெறி
காதற் கிழமை = அன்புரிமை
கடம்பூண்ட = கடமையாக மேற்கொண்ட
கொன் = பயனின்மை
இருமுதுகுரவர் = தாய் தந்தையர்
சிறு முதுக் குறைவி = இளமையிற் பேரறிவு படைத்தவள் .
(பாட்டு) சென்னி = தலை
மடம் = அறியாமை
அவலம் = துன்பம்
(பாட்டு) பொற்பு = அழகு
விரை = மணம்
தெற்றென = தெளிவாக
வன்றோண்டர் = சுந்தரமூர்த்திகள்
இரசபுஞ்சம் = சுவைத் திரட்சி
சுயம்பி = தானே தோன்றியது .
புனர்ப்பவம் = மறுபிறப்பு
சகளம் = உருவம்
நிட்களம் = அருவம்
ஊதியம் = இலாபம்
உரம்பெறல் = வலியுறுதல்
ஏதம் = துன்பம்
மாற்றம் = சொல்
(பாட்டு) வந்திப்பது = வணங்குவது
(பாட்டு) பிணக்கு = மாறுபாடு
தடிதல் = வெட்டுதல்
வளி = காற்று
(பாட்டு) பாவிய = பரவிய
உதிரப்புனல் = இரத்தம்
முடை = புலால் நாற்றம்
இழுது = நிணம்
குவை = திரட்சி
சாதனம் = அடைதற்கருவி
சாத்தியம் = அடையும் பேறு
அபரஞானம் = நூலறிவு
பரஞானம் = அநுபவறிவு
பனுவல் = நூல்
கூர் = மிகுதி
கருவூலம் = நிதியறை.
அநுபவம் = அழுந்தி யறிதல்
வாச்சியம் = பொருள்
கருடோகம் = கருடன்
(பாட்டு) திரிமலம் = மும்மலம்
(பாட்டு) புள்ளுவர் = வேட்டுவர்
புனம் = காடு
குறைகொளல் = கொள்ளை யிடுதல்
தூநெறி = சன்மார்க்கம்
சிவார்ப்பனம் = சிவனுக்கென்று ஒப்பித்தல்
தம = தம்முடைய
(பாட்டு)பொத்திய = மூடிய
(பாட்டு) கட்டி = சருக்கரை
பனி = குளிர்ச்சி
உரன் = திண்மை
சிவகரணம் = சிவத்துவம் பெற்ற உள்ளம்
சீவ போதம் = உயிரறிவு
படனம் = பாராயணம்
பனிமலைவல்லி = பார்வதி
(பாட்டு) புளகம் = மயிர் சிலிர்த்தல்
கடிதல் = விலக்குதல்
அளைந்தன = கலந்தன
விடயவாதனை = புலனுகர்வுத் தொடர்ச்சி
(பாட்டு) தெருளுதல் = தெளிதல்
அளவை நூல் = தருக்க நூல்
பந்தித்தல் = பிணித்தல்
பூதவாதி = மண் முதலிய பூதங்களையே பொருளெனக் கொள்பவன்
(பாட்டு) நீரல = நெறி பிறழ்ந்த சொற்கள்
அதர் = வழி
ஊறு = துன்பம்
தழீஇ = தழுவி
(பாட்டு) துளங்கல் = அசைதல்
கம்பம் = நடுக்கம்
செவ்வனம் = நன்றாக
அயர்வு = சோர்வு
(பாட்டு) செற்றம் = கோபம்
நுனித்துணர்தல் = நுணிகி ஆராய்தல்
குணிப்பொருள் = குணத்தையுடைய பொருள்
(பாட்டு) படிவம் = வடிவம்
ஆர்வம் = விருப்பம்
பற்றுக்கோடு = ஆதரவு
வாய்மை = உண்மை
சீலம் = ஒழுக்கம்
ஒருப்படாத = பொருந்தாத
(பாட்டு) நளிர் = குளிர்
அங்கணர் = இறைவர்
(பாட்டு) பொருவு = ஒப்பு
பரிசு = தன்மை
அநுசிதம் = தக்கதல்லாதது
இடத்தல் = பெயர்த்தல்
அமண் = சமன் சமயம்
கையர் = கீழ்மக்கள்
கொளுவுதல் = மூட்டுதல்
மழவிளங்குழவி = மிக்க இளமைப்பருவமுள்ள குழந்தை .
(பாட்டு) பாவம் = பிறப்பு
பாங்கு = இயல்பு
இயங்குதிணை = சரப்பொருள்
நிலைத்திணை = அசரப்பொருள்
(பாட்டு) நேர்படுதல் = உண்டாதல்
ஆர்வமுதற் குற்றம் = காமம் முதலிய தீங்குகள்
தோணிபுரம் = சீகாழி
ஆழிய = ஆழ்ந்த
முகில் = மேகம்
செவ்வி = காலம்
தண்ணிது = குளிர்ச்சியுடையது
திருநாவலூரர் = சுந்தரர்
கோள் = கிரகம்
மீன் = நட்சத்திரம்
(பாட்டு) விமலர் = குற்றமில்லாதவர்
இலக்கு = அடையாளம்
அருண்மொழித்தேவர் = சேக்கிழார்
விஞ்சுதல் = மிகுதல்
தேவராட்டி = தெய்வம் ஏறப் பெற்றவள் ; தெய்வவழிபாடு செய்பவள்
குடுமித்தேவர் = மலையுச்சியிலிருக்கும் இறைவர் .
இலைக்கலம் = இலையாலமைக்கப்பெற்ற பாத்திரம் , தொன்னை
தேவுமால் = தெய்வ மயக்கம்
திருமஞ்சனம் = நீராட்டு
கலசம் = குடம்
கல்லை = தொன்னை
ஊறுபாடு = துன்பமுண்டாதல்
வைகறைப்பொழுது = விடியற்காலம்
பேதித்தல் = வேறுபடுத்தல்
குருதி = இரத்தம்
அறுதியிட்டுரைத்தல் = வரையறுத்துக் கூறல்
(பாட்டு) அவல் = பள்ளம்
மிசை = மேடு
மடங்கல் = சிங்கம்
சூர் = அச்சம்
அரிப்பிணவு = பெண்சிங்கம்
வயம் = வலிமை
அரியேறு = ஆண் சிங்கம்
காமரு = அழகு
பறழ் = குட்டி
கோட்படாமை = கொள்ளப்படாமை
மல்கிய = பெருகிய
உறுகண் = துன்பம்
சிலை = வில்
(பாட்டு) வேணி = சடை
சூல் = கருப்பம்
மான் பேடு = பெண் மான்
(பாட்டு) தென்புல வாழ்நர் = பிதிரர்
இறுத்தல் = கொடுத்தல்
பிணைமான் = பெண்மான்
(பாட்டு) பொருப்பு = மலை
ஈட்டம் = தொகுதி
ஏனம் = பன்றி
புனம் = காடு
போதுவர் = வருவர்
புல்லுவர் = தழுவுவர்
புளிற்றா = ஈற்றணிமையையுடைய பசு
வங்கு = மரப்பொந்து
(பாட்டு) தணக்கு = வால்
அளை = பொந்து
பதார்த்தம் = உலகியற்பொருள்
கூர்ச்சம் = தருப்பை
(பாட்டு) அடவி = காடு
(பாட்டு) தீபமரம் = சோதி விருட்சம்
மந்தி = பெண் குரங்கு
முழை = மலைக்குகை
அங்கி = நெருப்பு
பூத நாயகன் = சிவபெருமான்
செம்பியன் = சோழ மன்னன்
படி = ஒப்பு
எடுத்துக்காட்டு = உதாரணம்
(பாட்டு) குனிசிலை = வளைந்தவில்
மாதவன் = முனிவன்
(பாட்டு) குசை = தருப்பை
அங்குலி = பவித்திர மோதிரம்
அவி = தேவருணவு
துகள் = தூசி
ஒருவி = நீங்கி
(பாட்டு) கருவரை = கரியமலை
காளமேகம் = கரியமேகம்
காட்டு = விளக்குவது
அநுமித்தறிதல் = அநுமானப் பிரமாணத்தாலறிதல் , காரியப்பாடு செயற்படுதல்
(பாட்டு) பாலளாநீர் = பால் கலந்த நீர் , பறைதல் = நீங்கல்
(பாட்டு) முதலி = தலைவன்
மாமாயை = சுத்த மாயை
வித்தியாதத்துவம் = காலமுதலியஏழு,
ஆன்மதத்துவம் = மண் முதல் சித்தம் இறுதியாகவுள்ள இருபத்து நான்கு
சிவதத்துவம் = சுத்ததத்துவம் , சிவமுதல் ஐந்து
பிரோகதத்துவம் = இயக்குந் தத்துவங்கள் .
(பாட்டு) எற்றையினும் = எந்த நாளினும்
வரிச்சிலை = கட்டமைத்த வில்
அருட்குறி = சகுனம்
அட்சதை = மஞ்சள் கலந்த அரிசி .
(பாட்டு) சேடை = அட்சதை
குண்டமண்டலங்கள் = ஓமத் தீ வளர்த்தற்கு முக்கோணம் வட்டம் முதலிய வடிவாக அமைக்கப்படும் இடங்கள்
கறை = களங்கம்
கான்மியமலம் = மூலகன்மங் காரணமாகத் தோன்றும் செயல்கள்
அத்துவா = வழி
பருவுடல் = தூலவுடம்பு
தேயு = நெருப்பு
நயனதீக்கை = ஆசிரியன் பார்வையாற் செய்வது
பரிசதீக்கை = ஆசிரியன் தழுவிக்கொண்டு செய்வது
அந்தரியாமி = உள்ளே கலந்து விளங்குபவன்
அன்னியம் = வேறுபாடு
குழல் = கூட்டம்
***********************************