உதயனசரிதமும்
சுலோசனையும்
மகாமகோபாத்தியாய முதுபெரும்புலவர்
பண்டிதமணி
மு. கதிரேசச் செட்டியார்
பண்டிதமணி நூற்றாண்டு விழா வெளியீடு
சன்மார்க்க சபை
மேலைச்சிவபுரி
1983
விழாப் பதிப்புரை
பண்டிதமணி நூற்றாண்டு விழாக் குழுவினர் இந் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாகப் பண்டிதமணியாரின் நூல்களையெல்லாம் மறுபடியும் பதிப்பித்து இவற்றைத் தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செயல் வேண்டும் எனவும் அதன் மேலும் இப்பெரும் புலவரின் நூல்களைத் தக்கோரால் திறன் செய்து அத்திற நூல்களையும் தமிழாக்கம் பெற வெளியிடல் வேண்டும் எனவும் நன்முடிவு கொண்டனர் .
அண்மைக்காலத்துப் பெருந்தமிழ்ப்புலவர் பலரின் நூற்றாண்டு விழாக்கள் சோனைமாரிபோல நாடெங்கும் கொண்டாடப் பெறுகின்றன. கொண்டாடுவது கொண்டாடத்தக்கது என்றாலும் , அவ்வளவில் ஒரு நாளை ஆர்வமாக அது கழிகின்றது . விழாச் செலவுக்கு ஏற்ற தொடர்குறியும் தமிழ்நிலையும் இல.அப்புலவர் தம் படைப்புக்களை வெளியிடுவதையும் விழா யயர்வின் ஓரு பாங்காகக் கடைப்பிடித்தல் அவர்தம் நூல்கள் வழி வழி கிடைக்கும் . முன்னும் பின்னும் அச்சாகப் படிகளும் தேடலின்றிக் கிடைக்கும். புலவர்களின் அறிவுடைமைகள் பொதுவுடைமைகள் அல்லவா?
இக்குறைபாடு பண்டிதமணியார்க்கு வாராதபடி , அவர் தம் எழுத்துடைமைகள் மறுமை பெற்றுக் காக்கப்படுகின்றன . ஆய்விற் சிறந்தோர் எழுதிய திறநூல்களும் ஆக்க நூல்களும் உடன் வருவதால் , அணைநீர் பெறும் யாறு போல இவ்விழாவினால் தமிழ் ஊட்டம் பெறுவதை அறியலாம் . இவ்வெளி யீடுகட்குப் பல்லாயிரத் தொகை நன்கொடை வழங்கும் தமிழ்ப் பாரிகட்குப் பெரிதும் நன்றியுடையோம் . வண்மையின்றித் தமிழ் வளம் பெறுவதில்லை .
பண்டிதமணியின் பனுவல்களும் திற நூல்களும் மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைக்கே உரிமைய . “ என்னை இப்புகழ் நிலைக்கு உருவாக்கியது சபையே “ என்பது பண்டிதமணியின் நன்றிச் சொல். பல பட்டங்கள் இருந்தாலும் 1925 இல் இச் சபை வழங்கிய “பண்டிதமணி” என்ற முதற்பட்டமே பெரும் பேராசிரியர் கதிரேசனார்க்கு இயற்பெயரிலும் தனிப்பெயராக வழக்குப் பெற்று விட்டது .இச்சபையை பெரும்புலவர் சோழவந்தான் அரசன் சண்முகனார் தலைமையில் 1909 இல் தோற்றி வளர்த்து இன்றும் இனியும் காக்கும் வ. பழ . சா . குடும்பத்தாரின் தமிழ்த் தொண்டு தமிழ்மக்களின் தவத் தொண்டாகும் .இச்சபை இன்னும் இரண்டாண்டுகளில் பவள விழாக் கொண்டாடும் பருவம் எய்தும் .
சுலோசனையும் (1922 ) உதயன சரிதமும் ( 1924 ) சபையின் வெளியீடுகள் : வடமொழிக் காப்பியம் தழுவிய கதைகள் : பண்டிதமணியின் முதல் மொழிபெயர்ப்புகள் . இவை ஒரு நூல் வடிவாக விழாப்பதிப்பாகின்றன. அல்லொலிகலவாமை , சொல்லாக்கம் , வடமொழிப் பெயர்களைத் தமிழுருவாக்கல் , பெருமிதத் தமிழ்நடை , புணர்ச்சித் தொடர்கள் , தொடர் நெடுமை , இலக்கிய வனப்பு என்ற நெறிகளை இந்நூலால் அறியலாம் . மொழிபெயர் கலைஞர்கட்குப் பண்டிதமணியின் மொழிபெயர் ஆக்கங்கள் பாடநூல்களாகும் என்பது தெளிவு . இந் நெறிகளைப் பண்டிதமணியம் என்று பெயரிடலாம் . பண்டிதமணியின் உரைநடைகளைப் படித்தாற் போதும் , கவிதைகளாற் பெறும் இலக்கியத் திறமை கைவந்துவிடும் .
உரைநடை நூல்களில் முடிவுப்பகுதியில் பொருள் பொதிந்த வெண்பா யாத்தல் பண்டிதமணியின் ஓர் எழுத்து மரபு. சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் பண்டே இம் மரபு தோன்றியிருப்பதைக் காண்கிறோம் . மொழிபெயர்ப்புத் தொடக்கத்திலேயே என் ஆசிரியர்க்குக் கவிதைத் தனித்திறம் இருந்தது என்பதற்கும் பின்னே மண்ணியல் சிறுதேர் போன்ற “செய்யுள் நடையாகவே நூல்கள் இயற்றும் ஆற்றலிருந்தும் வசன நடையாகவே இச்சரிதத்தை இவர்கள் இயற்றியதற்குக் காரணம் எல்லோரிடத்துமுள்ள அன்பின் மிகுதி என்றே சொல்லவேண்டும் “ என்பது பெரும் பேராசிரியர் அறிஞர் உ . வே . சாவின் மதிப்புரை .
இந் நூற்பதிப்பிற்குத் தக்க நன்கொடை வழங்குநர் தமிழ்ப் பேராசிரியர் திருமுறைச் செல்வர் க . வெள்ளைவாரணனார் . இப் பெரும் புலவர் விபுலானந்த அடிகளின் மாணாக்கர் ; பன்னிரு திருமுறை வரலாறு கண்டவர் . இலக்கியம் ,இலக்கணம் , சித்தாந்தம் , கல்வெட்டு , இசை முதலான பல்துறை வல்லுநர் . இரக்கும் புலவருலகில் ஒரு கொடைஞ்ர் . இந் நன்மகனார்க்குச் சபை நன்றியுடையது .
பண்டிதமணி நூற்றாண்டுக் குழுவுறுப்பினர்கட்கும் உடனிருந்து உறுதுணை புரிந்த தணிக்கையாளர் பெரி. தியகராசனார்க்கும் , பேராசிரியர் அறிஞர் தமிழண்ணலுக்கும் நூலச்சீட்டுக்கு முழுதும் உதவிய அறிஞர் கதிர் மகாதேவனுக்கும் வனப்புற அச்சிட்ட மலரச்சகத்தார்க்கும் உள்ளார்ந்த நன்றியம் .
தமிழ்ப்பண்பு சான்ற தமிழகவரசு பண்டிதமணி நூற்றாண்டு விழாவினைச் செம்மாந்த அவர் திருவுருவைத் திறந்து வைத்து அரசு விழாவாகக் கொண்டாடியது .தமிழவேள் மகாலிங்கனார் நிறுவிய இராமலிங்கர் பணிமன்றமும் திருவுருவக்காட்சியொடு சிறப்பு விழா எடுத்தது . தேவகோட்டை கலைக்கல்லூரி நிறுவனர் தமிழறிஞர் சேவு . அண்ணாமலையார் பெருந் தொகை வழங்கி பண்டிதமணி அறக்கட்டளையை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நிறுவினார். உலகுபுகழ் வளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கருத்தரங்கு மண்டபத்துக்குப் “பண்டிதமணியரங்கு” என்ற பெயர் வைத்துச் சிறப்பித்தது. இச்சிறப்புக் கெல்லாம் நன்றி ஒருவர் கூறினார் போதுமா? தமிழினமே கூறும் தகைத்து . அரசும் மக்களும் தக்கார்க்குத் தக்க சிறப்புச் செய்து காட்டுவது நாட்டில் தக்கார் பலரை உருவாக்கும் .
என் ஆசான் பண்டிதமணியின் தொண்டுகள் முத்திறத்தன . தமிழில் நயங்காண் துறையைக் கண்டு சொல்லாலும் எழுத்தாலும் பரப்பியவர் ; புதிய வகை நூல்களை மொழிபெயர்த்து வழங்கியவர் ; உருக்கும் திருவாசகத்திற்கு உள்ளொளி பெருக்கும் கதிர்மணி விளக்கம் கண்டவர் .
பண்டிதமணியின் திருவடிக்கு வணக்கம் .
வ சுப மாணிக்கம்
தலைவர் , பண்டிதமணி நூற்றாண்டு விழாக்குழு .
காரைக்குடி .
16-10-1982.
அபிப்பிராய பத்திரங்கள்
சென்னை மகாமகோபாத்தியாய பிரமஸ்ரீ
வே . சாமிநாதையரவர்கள்
மகிபாலன்பட்டி வித்துவான் மகா ஸ்ரீ மு . கதிரேசன் செட்டியாரவர்கள் இயற்றிய “உதயன சரிதம்” என்னும் வசன நூலை முற்றும் படித்துப்பார்த்து இன்புற்றேன் .
வடமொழியில் மிக விரிவாகப் பரந்து கிடக்கும் இச்சரிதத்தை யாவரும் எளிதிலுணரும்படி சுருக்கமாகத் தெள்ளிய இனிய நன்னடையிற் பலவகையான சுவைகளை அங்கங்கே அமைத்துப் பழைய தமிழ்ச் செய்யுட்களிலும் , பண்டை உரைகளிலும் காணப்படும் இனிய வாக்கியங்களை உரிய இடங்களிற் சேர்த்துத் தமிழர்க்கு ஒரு நல்விருந்தாக இவர்கள் இயற்றியிருத்தல் மிகப் பாராட்டற்பாலது. இதில் இடை யிடையே வாய்த்த இடங்களில் உலகத்தாரை நோக்கிப் புலப்படுத்தும் நீதிவாக்கியங்களும் , ஒவ்வொரு பகுதியின் இறுதியிற் கதையின் சாரத்தைச் சுருக்கித் தெரிவித்திருக்கும் வெண்பாக்களும் , உரிய இடங்களிற் சிவபெருமானுடைய திருவருளின் பெருமையைப் புலப்படுத்திய பகுதிகளும் அறிந்து இன்புறற்பாலன.
செய்யுள் நடையாகவே நூல்களியற்றும் ஆற்றலிருந்தும் வசன நடையாகவே இச்சரிதத்தை இவர்கள் இயற்றியதற்குக் காரணம் எல்லோரிடத்துமுள்ள அன்பின் மிகுதியென்றே சொல்லவேண்டும் .
கல்வியறி வொழுக்கங்களாற் சிறந்த இவர்கள் இது போன்ற இன்னும் பற்பலவாகிய சொற்பணிகளைச் செய்து கொண்டு பலகாலம் மிக்க புகழுடன் இந்நிலவுலகில் வாழ்ந்து விளங்கும்படிச் செய்வித்தருளும் வண்ணம் இறைவன் திருவடிகளைச் சிந்திக்கின்றேன் ,
“இதனையிதனா லிவன் முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல் “
என்னும் பெரியோர் திருவாக்கிற்கிலக்காக இவ்வரிய காரியத்தைச் செய்து நிறைவேற்றும்படித் தேர்ந்தெடுத்து இவர்களைத் தூண்டிய மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைத் தலைவர்களுடைய தமிழபிமானமும் வண்மையும் மிகப் பாராட்டற்பாலன .
தியகராஜ விலாசம், இங்ஙனம்,
திருவட்டீசுவரன் பேட்டை , வே . சாமிநாதையர்.
28 – 03 – 1924
சென்னை நியாய கலாசாலைப் பேராசிரியரும் ,
கல்கற்றா தாகூர்ச் சட்ட விரிவுரைகாரருமாகிய
Advocate திருவாளர்
கா . சுப்பிரமணிய பிள்ளையவர்கள் , M A ., M L .
தங்கள் அருமைச் சிறுநூல் கைவரப்பெற்று மகிழ்ந்தேன். அது, தமிழ்ப் பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய பெருங்கதைக்குத் தோற்றுவாயாகா அமைந்துள்ளது . ஆதலால் , தமிழ் கற்பார்க்குப் பெருநூலின் நயத்தை எளிதில் நன்கு விளங்குஞ் சீர்மை மிக்கது . வடமொழிச் சொற்றொடர்களைத் தூய செந்தமிழ் நலங்கனியும் வண்ணம் மொழிபெயர்த்துள்ள தங்கள் புலமைத்திறன் கற்போருள்ளத்தைக் கவரவல்லது . மொழிபெயர்ப்பானமைந்த உரைநடை நூல்களுள் இந்நூல் தலைநின்று விளங்குந் தகுதி யுடையது .
அரசாங்கப் பெருமை , அமைச்சர் திறமைப்பாலது என்பதையும் , கற்பின் சீர்மை மாசுபடாது போற்றற்குரியது என்பதையும் , அருளொழுக்கம் அளவில் சிறப்புடைய தென்பதையும் , அனைய பிறவுண்மைகளையும் நிலை நாட்டு முகத்தான் அறிவுக்கு நல்லுணவு தரவல்ல “உதயனன் கதை” போன்ற நூல்களே கலாசாலை மாணவர்க்குப் பெரிதும் பயன்படுத்தற்குரிய பாடங்களாக நியமிக்கற்பாலன.
சென்னை, இங்ஙனம் ,
26 – 03 – 1924 . K . சுப்பிரமணியன்
இராமநாதபுரம் சேது ஸமஸ்தான வித்துவான்
மகா- ஸ்ரீ உப . வே
ரா. இராகவையங்காரவர்கள்
மகிபாலன்பட்டி வித்துவான் கதிரேசன் செட்டியார் தமிழிற் சிறந்த புலமை வாய்ந்தவர் ; வடமொழியுணர்ச்சி மிக்கவர் ; அரிய பெரிய நூனயங்களைத் தம் மதிநுட்பத்தானன்காராய்ந்து தெளிந்து கல்விக் கழகத்துப் பலரும் வியக்க எடுத்து வழங்குஞ் சொல் வன்மையினிதுடையர் ;நகர வணிக நன்மக்களூர்கள் பலவற்றுட்டமிழ்க் கல்வி வளர்தற்குக் காரணமான கழகங்கள் , கல்லூரிகள் நிலைபெறுவித்தற்கட்டம்மினத்தாரைத் தூண்டியவர் ஆங்காங்குள்ள புலவர் பெரியாரை அழைப்பித்துத் தங்குலத் தனவாங்களைக் கொண்டு உபகாரம் புரிவித்து மகிழ்விப்பவர் ; தம்மினத்தார் அறிவினும் ஒழுக்கத்தினும் திருந்திப் புகழ் எய்தி வாழ்தற்பொருட்டுத் தம் மனமொழி மெய்யொத்து முயல்கிற்பவர். செல்வப்பொருளேயீட்டும் வணிகக்குலம் இவரைப் பெற்றுக் கல்விப் பொருளையும் ஈட்ட முயல்வது காண்டற்கினியது .
இவர் தமிழிற் சிறந்த வசனநடையாற் பொலிவு பெற்றகத்திய நூல்களில்லாத குறையைத் தீர்க்கக் கருதி “ சுலோசனை “ “ உதயன சரிதம்” என இரண்டு நூல்களை வடமொழியினின்று மொழிபெயர்த்துதவி யுள்ளனர். நிரம்பிய கல்வி யுடைய இப் பெருந்தகையாளரால் இயற்றியளிக்கப்பட்ட இந்நூல்கள் செவ்விய விழுமிய தீந்தமிழ்மொழிகள் மலிந்து குறித்த பொருளை யினிது விளக்கிச் சேறலாற் கற்பார்க்குக் கழிபேருவகை பயக்கும் பெருவிருந்தாதலொருதலை.
இந்நல்லறிவாளர் தம்மினத்தவர்க்கும் புலவர்க்கும் பிறர்க்கும் இங்ஙனமே பல்லூழிநாளும் பயனுற நின்று வாழும் வண்ணம் இறைவன் றிருவருளைச் சிந்திக்கின்றோம் .
இராமநாதபுரம் இங்ஙனம் ,
14 – 04 – 1924 . ரா . இராகவையங்கார்
சேது ஸமஸ்தான வித்துவான்
செந்தமிழ், தொகுதி உ உ . பகுதி @
…………………………………… கதை படிக்கத் தொடங்கும் சிறுவர்களும் மனம் கொள்ளற் கேற்றவாறு வாக்கியங்களைச் சிறு தொடராக வமைத்தும் , செய்யிளிலும் சிறிது பயிலுமாறு இடையிடையே சில வெண்பாக்களியற்றிச் சேர்த்தும் இருப்பது பாராட்டத்தக்கது . செட்டியாரவர்கள் கல்வித் திறமையை நோக்குங்கால் இது மிகச் சிறிய காரியமாயிருப்பினும் சிறுவர்களுக் கெல்லாம் கல்வியறிவளிக்கும் சிறப்பினை நோக்குங்கால் பெரிய காரியமேயாம் .
………………………………………….
மதுரை ஹைகோர்ட்டு வக்கீல் திருவாளர்
S S பாரதியாரவர்கள் , M A ., B L .
………………………… இந்நூலின் உரைநடை இனிமையோடு எளிதில் தெளிவுநுதலும் ஆசிரியர் கருத்தை யினிது வெளிப்படுத்துகின்றது . படிக்குங்கால் மொழிபெயர்ப்பு நூலென்னும் உணர்வெழவிடாது படிப்பவர் மனத்தை யொழுகு தெள்ளினிமையாற் களிப்பிக்குஞ் செவ்வி பாராட்டற்பாலது . அமைச்சு நல்லறமாதி நலம் பல பொதுளிச் சிறக்குமிந்நூலில் எம்மனோர் மனத்தை முழுதுங் கவர்வது கற்புயர் காதலாகும்
கணபதி துணை
முன்னுரை
*” உதயன சரிதம் “ என்னும் இது வற்ச நாட்டிலே , கெளசாம்பி நகரத்திலே , பாண்டவ குலத்திலே சகச்சிரானீகன் என்னும் வேந்தற்கு மிருகாவதிபாற் றோன்றிய உதயனனது வரலாற்றை விரித்தும் அவன்புதல்வன் நரவாகனதத்தன் வரலாற்றைச் சுருக்கியுங் கூறுவதாகும் .
இதன் சுருக்கம் வருமாறு : – “திலோத்தமை சாபத்தாற் சகச்சிரானீகன் மிருகாவதியைப் பதினான்கு யாண்டு பிரிந்திருக்க நேர்ந்துழி , மிருகாவதி இமயமலைச் சாரலிற் சமதக்கினி முனிவர் ஆச்சிரமத்தில் அம்முனிவர் காப்பிற் அருமருந்தன்ன உதயன னென்னும் புதல்வனை யீன்றாள் . முனிவரால் உதயனன் கல்விப்பயிற்சி செய்யப்பெற்று எல்லாக் கலைகளி லும் சிறந்து விளங்கினான் சாபந் தீர்ந்துழி அக்காட்டில் உதயனன் வள்ளன்மை காரணமாக “ இன்னிசை “ யென்னும் யாழைப் பெற்றுத் தந்தை யுணர்ந்துவந்தழைப்பத் தாயோடு தன் நகர மெய்தி மகிழ்ந்தான் . இவ்வுதயனன் காளைப் பருவமுற்றுழி , இவன் எழில் குணஞ் செயல்களைக் கேல்வியுற்று உச்சயினி நகரத் தரசன் சண்ட மகாசேனன் என்பான் , தன் அருமை மகள் வாசவதத்தையை இவர்க்கு மணஞ் செய்துகொடுக்கத் துணிந்து , தன் மகட்கு யாழ்பயிற்றுதலைத் தலைக்கீடாகக் கொண்டு தூதன் முகமாக உதயனனை யழைப்ப , வரவுடன்படாமை கண்டு பொறியானை
*”உதயனன் என்பது பிராகிருதத்தில் உதயணன் “ என்று வரும் . தமிழிலுள்ள பெருங் கதை முதலியவற்றுள் , பிராகிருதத்துள்ள வண்ணமே “உதயனன்” என்று கூறப்பட்டுள்ளது . இச்சரிதம் வடமொழியினின்று மொழிபெயர்க்கப் படுதலின் , வடமொழியிலுள்ளபடியே “ உதயனன்” என்று கண்டு வழங்கப்பட்டுள்ளது
ஒன்று நிருமித்துக் காட்டிற்றிரியச் செய்தான் . அதனை யுண்மையெனக் கேட்டு வேட்டை விருப்பாற் போந்த உதயனன் வஞ்சகத்தாற் கொணரப்பட்டுச் சிறைக்கண் யாழ் பயிற்றும் வினைஞனாயினான் . பின் , அமைச்சர்களுட் சிறந்த யெளகந்தராயணன் செய்த அரிய சூழ்ச்சிச் செயல்களால் ,உதயனன் நள்ளிரவில் , தன் மாட்டுக் காதற்கிழமை பூண்டுள்ள வாசவதத்தையை அழைத்துக்கொண்டு இடையூற்றைக் கடந்து தன் நகரம் புக்கு அவளை மணஞ் செய்துகொண்டான் . இவ்வாழ்க்கை நிகழ்வுழி , இவன் அரசியற் செல்வத்தைப் பெருக்கக் கருதிய யெளகந்தராயணன் , மகதராசன் மகள் பதுமாவதியை உதயனன் மனஞ் செய்து கோடற்குச் சூழ்ந்து , இலாவாணகம் என்னும் இன்ப நிலத்தில் வேந்தனை யிருத்தி வாசவதத்தையை “எரிவாய்ப் பட்டிறந்தாள்” என்னுஞ் செய்தியை வெளிப்படுத்திப் பிரித்துத் தனித்துறையுங் காலத்தும் , கற்பின் சான்றாம்வண்ணம் அவளைப் பதுமாவதி பக்கல் சேர்த்தான் . வாசவதத்தையின் பிரிவால் வருந்திய உதயனனைத் தேற்றி , மகதராசன் மகள் பதுமாவதியை மணக்க உடன்படுத்தி , அவண் மன்றலையும் முடிப்பித்தான் . மணக்காலத்திற் பதுமாவதியின்பால் வாடுதலில்லாத மலர்மாலையையும் அழகிய திலகத்தையும் உதயனன் கண்டு , அவற்றானே பதுமாவதியுடன் தன் நகரிற் போந்து ஒருபுறத்திருந்த வாசவதத்தையைக் கண்டு இன்புற்றான் . பின், இடையர்களாற் காட்டில் , வைப்பு நிதியும் , தன் முன்னோரின் அரியணையும் பெற்றுச் சிவ வழிபாடு புரிந்து , திசைவென்றி குறித்துப் புறப்பட்டு , அமைச்சன் , மாமன்மார் முதலியோர் உதவியால் நாற்றிசைக்கண்ணுள்ளாரையும் வென்று புகழோங்கப் பெற்றான் . பின்னர், புதல்வர்ப்பேறு குறித்து நாதமுனிவர் உபதேசத்தாற் சிவபிரானை வழிபட்டு அப்பெருமான் றிருவருளால் நரவாகன தத்தன் என்னும் மகனைப் பெற்று இன்புற்றான். இதன்பின் இச்சரிதத்திற் சிறப்பாகக் கருதி இன்புறற்பாலது, அமைச்சிலக்கணம் முழுதும் அமையப்பெற்ற பேரறிஞனாகிய யெளகந்தராயணது சூழ்ச்சித் திறனேயாகும் . இவன் தன்றலைவன் அரசியல் விரிவுறச் செய்த அரிய செயல்கள் மிகப் பாராட்டற்பாலன. எரிவாய்ப்பட்டிறந்தாளென்று வெளிப்படுத்திப் பிரிக்கப்பட்ட வாசவதத்தையைப் பின் அரசற்கு மனைவியாம் நிலையிலுள்ள பதுமாவதியின் பக்கல் இயைந்தது , அவ் வாசவதத்தையின் அரிய கற்பொழுக்கத்திற் பின் வேந்தன் ஐயுறாமை கருதியேயாம் . இந்நிகழ்ச்சி மிக இன்புறற்பாலது. இதன்கண் , அரசர்க்கு வேட்டை யாடன் முதலியவற்றால் வருந்தீங்கும் , அறிவிற் சிறந்த அமைச்சர் சொல்வழி நிற்றலால் வரும் நலங்களும் , சிறந்த அமைச்சனின் நுண்ணிய மதிநுட்பமும் அரிய சூழ்ச்சி முதலிய செயல்களும் , இடுக்கட்காலத்தும் மகளிர் கற்பு மாசுபடலாகா தென்பதும் , ஒருவற்கு அமைந்த இருமனைவியரின் அன்பு கெழீஇய ஒற்றுமையும் , மகளிர்க்கு வேண்டும் உயர்குணங்களும் ,அரசியல் விரிவதற்குச் செயற்பாலன வின்னவென்பதும் சிவவழிபாட்டின் பயனும் , அறம் வழாஅநிலையும் பிறவும் புலப்படுவனவாம் .
இத்தகைய நலம் பல கனிந்து திகழும் இச்சரிதம் வடமொழிக்கட் பல புலவர்களாலும் காவிய முதலிய வடிவிற் கூறப்பட்டுள்ளது ; சோமதேவர் என்னுங் கவியாற் செய்யப்பட்ட கதாசரிற்சாகரம் என்னுங் கிரந்தத்திலும் , அவர்க்குப் பிரமாணமாக முன்னுள்ள குணாட்டியராற் செய்யப்பட்ட பிருகற் கதையிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளது . காளிதாசர்க்கு முற்பட்ட “ பாசன் “ என்னும் நாடக கவி யியற்றிய “ சொப்பன வாசவதத்தம் “ “பிரதிஞ்ஞாயெள கந்தராயணம் “ என்னும் நாடகங்கள் இச்சரிதப் பகுதிகளையே நுதலுவன . தமிழிற் பண்டைக் காப்பியமாகிய “பெருங்கதை” என்பதனுள்ளும் இச்சரிதமே சில வேறுபாட்டுடன் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது . அத்தமிழ்ப் பெருங்கதை , கிடைத்தற்கரிய பண்டை நூல்களைச் செப்பனிட்டுப் பல்லாண்டுகளாக வெளிப்படுத்தித் தமிழ்த் தெய்வத்தை அலங்கரித்து வரும் பெரியோராகிய மகாமகோபாத்தியாய ஸ்ரீ வே . சாமி நாடையரவர்களால் , பற்பல ஆராய்ச்சிகளுடன் அச்சிடப்பட்டு வெளிப்படுத்தப் பட்டுளது . அதன்கண் இச்சரித இனிமையைத் தமிழ்ச் செய்யுளாகிய அமுதத்திற் கண்டு சுவைத்தின்புற்றுக் கதை நிகழ்ச்சியின் ஒழுங்கையும் உணர்ந்து கொள்ளலாம் .
பல்லாண்டுகளின் முன்னர் மதுரையினின்று திங்க டோறும் வெளிப்போந்த “ ஸஹ்ருதயா” என்னும் வடமொழிப் பத்திரிகையில் , வடமொழிப் புலமை மிக்க பண்டித ஸ்ரீ வே. அனந்தாசாரியவர்களால் இனிமை மிக்க வடமொழி வசன வடிவில் எழுதப்பட்டு வெளிவந்த இச்சரிதம் , புதுக்கோட்டை ஸமஸ்தானத்தைச் சார்ந்த மேலைச் சிவபுரிக்கண்ணுள்ள சன்மார்க்க சபையாரின் விருப்பின்படி தமிழில் மொழிபெயர்த் தெழுதப்பட்டது .
இன்னோரன்ன நற்செயல்களில் ஊக்கித் தமிழுலகுக்குப் பயன் விளைவித்து வரும் மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபையின் உதவி மிகப்பாராட்டற்பாலது இச்சபை, பற்பல மாணவர்க்குத் தமிழ்க் கல்வி பயிற்றியும், பல பண்டித மணிகளின் அரிய சொற்பொழிவுகளால் உலகத்தவரை நன்நெறிப்படுத்தியும் உதவி வருவதோடு வடமொழி களிலுள்ள அரிய நூல்களைத் தமிழில் வெளிப்படுத்தி அதனாலும் தமிழ் மக்கள் இன்புறுதற்குரிய செயலின் முற்பட்டிருப்பது போற்றற்பாலதே .
அன்பன்,
மு . கதிரேசன்
உதயன சரிதம் – பெயர் விளக்கம்
அகம்பணன் :- மந்தரதேவ னென்னும் வித்தியாதரனுடைய தந்தையான இராஜ ரிஷி ; தன் புதல்வி மந்தர தேவியை நரவாகனதத்தனுக்கு மணஞ் செய்து கொடுத்து அவனுக்கு இடபகிரியில் முடிசூட்டுக் கொண்டாட்டம் நிறை வேற்றும்படி வித்தியாதரர்களுக்குக் கட்டளை யிட்டவன் .
அங்காரகன் :- அங்காரவதியின் தந்தை ; அசுரர் தலைவன் ; தவவன்மை யால் வச்சிரப்படையாலும் பிளக்கவொண்ணாத யாக்கையைப் பெற்றவன். அரச கன்னியர் பலரைப் பணி செய்தற் பொருட்டு வஞ்சித்துக் கொணர்ந்தவன் . தன் புதல்வி அக்காரவதியினிடத்துக் காதல் கொண்ட சண்டமகாசேனனால் சிவபிரானை வழிபடுங்காற் கொல்லப்பட்டவன் .
அங்காரவதி :- சண்டமகாசேனன் மனைவி .அவனிடத்துக் கொண்ட காதலால் தன் தந்தை அங்காரகனைக் கொலை செய்தற்கு அம்மன்னன் வழி நின்றவள் . இந்திரனருளால் வாசவதத்தையை ஈன்றவள் .
அசிநாவதி :- நரவாகன தத்தனால் இருசியமுக மலையில் மணக்கப் பெற்றவள் ; தநவதியின் மகள் ; இவளைச் சார்ந்தவர்களின் துணையாலேதான் நரவாகன தத்தன் வித்தியாதர சக்கரவர்த்தியானான் .
அத்தினாபுரம் :- சாதனீகனுக்கு முன்னுள்ள பாண்டவகுல மன்னரிருந்து அரசு செய்த நகர் . கங்கைக் கரையிலுள்ளது.
அபிமன்யு :- உதயனன் மரபில் வந்த முன்னோன் ; அருச்சுனனுக்குச் சுபத்திரை வயிற்றிற் பிறந்தவன் ; பரிட்சித்துவின் தந்தை ; பரிட்சித்து உத்தரை வயிற்றிற் கருவாயிருந்தகாலையில் பாரதப் போரில் சயந்தனாற் கொல்லப்பட்டவன் .
அயோத்தி :- உதயனன் தாயாகிய மிருகாவதி பிறந்த ஊர் ; கிருதவன்மனின் தலைநகரம் .
அரிசிகன் :- உருமண்வனின் புதல்வன் ; நரவாகனதத்தனுடைய படைத்தலைவன் .
ஆசாடகன் :- வாசவதத்தையின் யானைப்பாகன் .
ஆசாடபுரம் :- மதனமஞ்சுகையைக் கவர்ந்து சென்ற மானச வேகன் என்னும் வித்தியாதரனின் நகரம் .
ஆவந்திகை :- வாசவதத்தை பார்ப்பனியாக வேடம் பூண்டு பதுமாவதியின் மருங்கு வசிக்கும் போது கொண்ட பெயர் .
இடபகிரி :- நரவாகனதத்தனுக்கு முடிசூட்டு விழா நடை பெற்ற இடம் .
இத்தியகன் :- உதயனனுடைய வாயில் காவலரில் ஒருவன் .
இரத்தினப்பிரபை :- நரவாகனதத்தன் மனைவியருள் ஒருத்தி .
இருசியமூகம் :- ஆசாடபுரத்தினின்று நரவாகனதத்தனையும் மதனமஞ்சுகையையும் வேகவதி சேர்த்த இடம் .
இலாணகம் :- உதயனனுக்குரிய நகரங்களுள் ஒன்று . பல வகை வளங்களால் இன்பம் பயக்கும் பூம் பொழில்களையுடையது ; மகத தேயத்திற்கு அணித்தாயது .
இன்னிசை :- உதயனனுடைய யாழ் ; கோடபதி யெனவும் பெயர் பெறும் ; வசு நேமியென்னும் பாம்பால் உதயனனுக்கு அளிக்கப்பட்டது . அவன் வாசவதத்தையின் அன்பைப் பெறுதற்கு ஏதுவாக இருந்தது .
உச்சயினி :- வாசவதத்தையின் தந்தையாகிய சண்டமகாசேனனின் தலைநகரம் ; அவந்தி நாட்டிலுள்ளது .
உதயனன் :- இவன் இச்சரிதத் தலைவன் ; பாண்டவர் குலத்துப் பிறந்தவன் ; சகச்சீரானீகன் புதல்வன் ; சமதக்கினி முனிவனால் உபநயனம் செய்யப்பெற்று எல்லாக் கலைகளையுங் கற்றுணர்ந்தவன் ; வள்ளன்மை மிக்கவன்; வசுனேமி என்னும் பாம்பினால் இன்னிசையென்னும் யாழினைப் பெற்றவன் . சண்டமகாசேனனால் வஞ்சிக்கப்பட்டுச் சிறைபுகுந்த பொழுது யெளகந்தராயண னென்னும் தன் முதலமைச்சன் சூழ்ச்சித்திறனால் அவ்வரசன் புதல்வி வாசவதத்தையோடு வெளிப்போந்து அவளை மணந்தவன் ;மகத தேசத்து அரசனைத் தனக்கு நட்பாக்க வேண்டி அமைச்சர் செய்த சூழ்ச்சியால் அவன் புதல்வி பதுமாவதியையும் மணந்து கொண்டவன் ; தன்முன்னோர் தம் பொருட் குழுவையும் , அரியணையையும் நல்லூழாற் பெற்றவன் ; அமச்சரின் உபாயத் திறனும் மாமன்மாரிருவர் தோள்வலியும் துணயாகக் கொண்டு திக்குவிசயஞ் செய்து தன் முன்னோர் வீற்றிருந்த அரியணைக்கணிருந்து அரசாண்டவன் ; காமவேளின் கூறான நரவாகனதத்தனை ஈன்றவன் ; தன்னை விரும்பிவந்த கலிங்கசேனையின் மணத்தால் தீங்கு நிகழுமென்று அமச்சரால் உணர்ந்து அவள்மீது வைத்த காதலை யறவே யொழித்தவன் ; சூரியோதய காலத்துப் பிறந்தது பற்றி “உதயனன்” என்னும் இப்பெயரைப் பெயற்றானென்பார் .
உருமண்வான் :- உதயனனுடைய அமைச்சருள் ஒருவன் ; சுப்பிரதீகன் என்னும் படைத்தலைவனின் புதல்வன் ; யெளகந்தராயணனை யொப்ப நுண்ணறிவும் போர்த்திறமையும் மிக்கவன் ; சண்டமகாசேனனால் வஞ்சிக்கப்பட்ட உதயனனைச் சிறை மீட்க யெளகந்தராயணன் சென்றபொழுது கெளசாம்பி நகரைக் காத்தவன் .
கருப்பூரவதி :- நரவாகனதத்தனுடைய மனைவியருள் ஒருத்தி .
கலிங்கசேனை :- கலிங்கதத்தனுடைய மகள் ; உதயனனைக் காதலித்து அவனை மணக்க எண்ணியிருக்கும் பொழுது அவ்வுதயன வேடம் பூண்டு வந்த மதனவேகனென்னும் விஞ்சையனால் மணக்கப்பெற்றவள் .
கலிங்கதத்தன் :- தக்கசிலை நகருக்குத் தலைவன் ; கலிங்கசேனையின் தந்தை.
காசி நகர் :- உதயனனுக்குப் பகைவனான பிரமதத்தனுடைய தலைநகரம் .
காஞ்சனமாலை :- வாசவதத்தையின் உயிர்த்தோழி .
காமரூபேசுவரன் :- உதயனன் திக்குவிசயஞ் செய்த பொழுது அவனைக் குடைநிழல் பெறாத தலையால் வணங்கி இறைப்பொருள் கொடுத்தவன் .
கிருதவன்மன் :- அயோத்தி அரசன் ; மிருகாவதியின் தந்தை .
குககன் :- பகைவனான பிரமதத்தனது செயலை யறிதற் பொருட்டுக் காசி நகரைக் குறித்து யெளகந்தராயணால் அனுப்பப்பட்ட ஒற்றர்களில் ஒருவன் ; இவன் ஆசிரிய வேடம் பூண்டு முக்காலமு முணர்ந்தவனாக நடித்து அப்பிரமதத்தனுடைய மறைபொருள்களை யெளகந்தராயணுக்கு ஒற்றர்முகமாக அறிவித்துவந்தவன் .
கோபாலகன் :- சண்டமகாசேனன் புதல்வரில் ஒருவன் ; தந்தையின் கட்டளைப்படி தங்கையாகிய வாசவதத்தைக்குப் பாணிக்கிரகண விழாவை நிறைவேற்றி வைத்தவன் ; உதயனன் ஆக்கங்கருதி அவன் பதுமாவதியை மணப்பதற்கு உதவி செய்தவன் ; அவனால் விதேக நாட்டிற்கு அரசனாக்கப்பட்டவன் .
கோமுகன் :- இந்தியகன் புதல்வன் ; நரவாகனதத்தன் வாயில் காவலரில் ஒருவன் .
கெளசாம்பி :- வற்ச நாட்டின் தலை நகரம் ; உதயனன் பாட்டனாகிய சதானீகனால் தலைநகரமாகச் செய்யப்பட்டது ; யமுனையின் கரையிலுள்ளது ; ஆதியிற் குசாம்பன் என்னும் அரசனால் உண்டாக்கப்பட்டதனால் இப்பெயர் பெற்றதென்பர் .
சகச்சிரானீகன் :- உதயனன் தந்தை ; விட்புலஞ் சென்று இந்திரனால் உபசரிக்கப்பெற்றவன் ; திலோத்தமையெனுந் தெய்வ மாதினால் தன் மனைவியைப் பதினான்கு யாண்டுகள் பிரிந்திருக்கும் சாபத்தைப் பெற்றவன் ; கருவுற்றிருந்த தன் மனையாள் தன்னின் நீங்கிச் சமதக்கினி முனிவன் ஆச்சிரமத்தில் பதிநான்கு யாண்டு நிறைவேறப்பட்ட புதல்வனோடு இருக்கின்றாளென்ற செய்தியைக் கேட்டு அங்குச்சென்று அவர்களோடும் அரண்மனையை யடைந்து அப்புதல்வன் மாட்டு அரசியற் சுமையை வைத்து விட்டு மனைவியுடன் தவஞ் செய்யச் சென்றவன் .
சண்டமகாசேனன் :- அவந்தி நாட்டு அரசன் ; வாசவதத்தையின் தந்தை ; “மகாசேனன்” என்னும் இயற்பெயர் பெற்றவன் ; சண்டிகைபால் வரம் பெறற் பொருட்டுத் தலையறுத்தலாகிய சண்டகன்மத்தைச் செய்தலால் இப்புகழ்ப் பெயரடைந்தான் ; அத் தேவியின் திருவருளால் வாட்படை பெற்றான்; தன்பால் காதற் கிழமை பூண்ட அங்காரவதியின் துணைகொண்டு அவள் தந்தையாகிய அக்காரகனைக் கொன்று அவளை மணந்தவன் ; தன் புதல்வி வாசவதத்தையை மணஞ் செய்விக்க எண்ணி உதயனனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறை வைக்கச் செய்தவன் .
சாதனீகன் :- உதயனனுடைய பாட்டன் ; தன் முன்னோர் வாழ்ந்து வந்த அத்தினாபுரத்தை விட்டுக் கெளசாம்பியையடைந்து வாழ்ந்தவன் ; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நிகழ்ந்த போரில் துணை செய்தற்பொருட்டு இந்திரன் வேண்டச் சென்று அசுரர்களோடு போருஞற்றி அவர்களாற் கொல்லப்பட்டவன் .
சமதக்கினி :- உதயாசலத்தில் வசித்த முனிவரிற் றலைவன் ; கருடனாற் கவரப்பட்டுத் தன்னிருக்கை புகுந்த மிருகாவதியை எதிர்காலச் செய்திகூறித்தேற்றி ஆதரித்தவன் ; அவள் புதல்வனாகிய உதயனனுக்கு உபநயனஞ் செய்து எல்லாக் கலைகளையும் கற்பித்தவன் .
சயசேனன் :- சண்டமகாசேனன் தந்தை .
சனமேசயன் :- உதயனன் முன்னோர்களில் ஒருவன் ; பரிட்சித்துவின் புதல்வன் ; சதானீகனுக்குத் தந்தை .
சாந்திகரன் :- உதயனனுடைய புரோகிதன் .
சாந்திசோமன் :- பிங்கலிகையின் புதல்வரில் ஒருவன் ; நரவாகனதத்தனுடைய புரோகிதன் .
சிங்கவன்மன் :- மகததேசத்து அரசனுடைய புதல்வன் ; பதுமாவதியின் சகோதரன் ; உதயனனால் சேதி நாட்டுக்கு அரசனாக்கப்பட்டவன் .
சிராவத்தி :- பிரசேனசித்தின் நகரம் .
சுப்பிரதீகன் :- சகச்சிரானீகனுடைய படைத்தலைவன் ; உருமண்வானின் தந்தை .
சுரபிதத்தை :- இந்திரன் சாபத்தாற் கலிங்கசேனையாகப் பிறந்த ஒரு தேவமாது .
சேதிநாடு :- உதயனனால் பதுமாவதியின் சகோதரன் சிங்கவன்மனுக்குக் கொடுக்கப்பட்டது .
சோமப்பிரபை :- மாயாசுரனுடைய மகள் ; கலிங்கசேனையின் தோழி ; அக்கலிங்கசேனை உதயனன்பால் காதற்கிழமை பூணும்படி அவன் பெருமைகளை யெடுத்துக் கூறியவள் .
செளண்டிலிய முனிவன் :- உதயனன் பாட்டனாகிய சதானீகனுடைய நண்பன் ; அம்மன்னன் புதல்வர்ப் பேறு குறித்து இரக்கபுதித்ரகாமேட்டி யென்னும் வேள்வி யியற்றினான் .
தக்கசிலை :- கலிங்கதத்தனது தலைநகர் .
தபந்தகன் :- வசந்தகனுடைய புதல்வன் ; நரவாகனதத்தனின் விளையாட்டுத் தோழன் .
தம்பகன் :- நரவாகனதத்தனுக்கு வித்தியாதரரால் தீங்கு நேரா வண்ணங் காப்பதன் பொருட்டுச் சிவபிரானால் அனுப்பப்பட்டவன் .
தநவதி :- இருசியமூகம் என்னும் மலைக்கண் வசித்த வித்தியாதரப்பெண்; தன் புதல்வியை நரவாகனதத்தனுக்குக் கொடுத்தவள்.
தாராதத்தை :- கலிங்கதத்தனின் மனைவி .
தாளபடன் :- சண்டமகாசேனனின் வாயி காவலரில் ஒருவன் ; வாசவதத்தையை வஞ்சித்துக் கவர்ந்து சென்ற உதயனனைத் தடுக்க அவனால் கொல்லப்பெற்றவன் .
திலோத்தமை :- நாடகத் தெய்வமகளிருள் ஒருத்தி ; சகச்சிரானீகனைச் சபித்தவள் .
நடைமலை :- சண்டமகாசேனனது பட்டத்து யானை .
நரவாகனதத்தன் :- உதயனனுக்குக் காமவேளின் கூறாக வாசவதத்தையின்பால் அவதரித்தவன் ; விஞ்ஞையரால் இடையூறு நேராவண்ணம் சிவபிரான் கட்டளையால் தம்பகன் என்னும் கணத்தலைவனால் பாதுகாக்கப்பெற்றவன் . கலிங்கசேனையின் புதல்வி மதனமஞ்சுகையையும் இரத்தினப்பிரபை முதலிய மாதர் பலரையும் மணந்தவன் ; தவவன்மையால் சிவபிரானிடத்து நினைத்த அளவில் எல்லா விச்சைகளும் விளங்கித்தோன்றுவதான வரமும் , விமானமும் பெற்றவன் ; வித்தியாதரர்களுக்குச் சக்கரவர்த்தியானவன் .
நளகூபரன் :- சோமப்பிரபையின் கணவன் .
நன்மசசிவன் :- சகச்சிரானீகனுடைய விளையாட்டுத் தொழிற்கும் , அந்தரங்கக் காரியங்கட்கும் உரிய நண்பன் ; வசந்தகனுடைய தந்தை ; இவனுக்கு இப்பெயர் தொழில் பற்றிய பெயர் போலும் .
பத்திராவதி :- வாசவதத்தையினது பெண்யானை ; இதன்மீதுதான் அவளை ஏற்றிக்கொண்டு உதயனன் உச்சயினியிலிருந்து சென்றான் . செல்லுங்கால் குடிநீரின் குற்றத்தாலிறந்தது ; மாயாவதி யென்னும் வித்தியாதரப் பெண் சாபவயத்தால் இப் பெண்யானையாயினாள்.
பதுமாவதி :- மகததேசத்து அரசனின் புதல்வி ; உதயனனுடைய இரண்டாம் மனைவி ; சுவைபடப் பேசும் திறமை மிக்கவள் ; சபத்தினியாகிய வாசவதத்தையின்பால் மிக்க அன்புள்ளவள்
பரிட்சித்து :- உதயனன் மரபில் முன்னோன் ; அபிமன்யுவின் புதல்வன் ; சனமேசயன் தந்தை .
பாலகன் :- சண்டமகாசேனன் புதல்வரில் ஒருவன் ; தன் உடன்பிறந்தவளாகிய வாசவதத்தையை உதயனன் கவர்ந்து செல்லுங்கால் தந்தையால் ஏவப்பட்டுத் தடை செய்தவன் .
பிங்கலிகை :- புரோகிதனுடைய சகோதரன் மனைவி ; இவள் புதல்வர் நரவாகனதத்தனுக்குப் புரோகிதராயினர் .
பிரசேனசித்து :- சிராவத்தி நகருக்குத் தலைவன் . கலிங்கசேனையை மணஞ் செய்விப்பதாக அவள் தந்தையால் கருதப்பட்டவன் .
பிரமதத்தன் :- காசி நகரை யாட்சி புரிந்த அரசன் ; உதயனன் பகைவன் ; அவனோடு பொருதற்காற்றாது கையுறைப் பொருள் பல தந்து அவன்பால் அடைக்கலம் புகுந்தவன் .
புளிந்தகன் :- விந்தியவனத்தில் வசித்த வேடர் தலைவன் ; உதயனன் நண்பன் ; அவனையும் வாசவதத்தையையும் கள்வர் துன்புறுத்தா வண்ணம் தடுத்துத் தன் நகரை யடைவித்து உபசரித்தவன் .
மகததேசம் :- பதுமாவதி தந்தையின் நாடு . இதன் தலைநகர் இராஜகிரியம் என்ப .
மகாசேனன் :- சண்டமகாசேனனின் இயற்பெயர் .
மகாமாத்திரன் :- சண்டமகாசேனனுடைய குதிரைச்சாலைத் தலைவன் .
மகேந்திரவர்மன் “- சண்டமகாசேனனுடைய பாட்டன் .
மதனமஞ்சுகை :- கலிங்கசேனைக்கு இரதிதேவியின் கூறாகப் பிரமதேவனால் கொடுக்கப்பட்ட புதல்வி ; நரவாகனதத்தனின் பட்டத்தேவி ; மானசவேகன் என்னும் வித்தியதரனால் விரும்பி எடுத்துச் செல்லப்பெற்று தன் கணவனால் மீட்கப்பட்டவள் .
மதனவேகன் :- உதயனன்பாற் காதற்கிழமை பூண்ட கலிங்கசேனையை அவனுருவந்தாங்கிச் சென்று வஞ்சித்து மணந்த வித்தியாதரன் .
மந்தரதேவன் :- இமயமலையின் வடபால் வாழ்ந்த வித்தியாதரர்களுக்குச் சக்கரவர்த்தி ; நரவாகனதத்தனொடு பொருது தன் தங்கை வேண்டுகோளின் படி அவனால் கொல்லாது விடப்பட்டவன் .
மந்தரதேவி :- மந்தரதேவனின் தங்கை ; நரவாகனதத்தனை மணந்தவள்
மருபூதி :- யெளகந்தராயணனுடைய புதல்வன் ; நரவாகனதத்தனுக்கு அமைச்சனானவன் .
மாதலி :- தேவேந்திரனுடைய சாரதி ; அவனுக்குத் துணை செய்தற் பொருட்டுச் சென்று அசுரரால் கொல்லப்பட்ட சதானீகன் உடலைக் கெளசாம்பி நகரத்திற் சேர்ப்பித்தவன் ; மிருகாவதியின் பிரிவால் வருந்திய சகச்சிரானீகனைத் திலோத்தமையின் சாபச் செய்தி கூறித் தேற்றியவன் .
மாயாசுரன் :- சோமப்பிரபையின் தந்தை .
மாயாவதி :- ஒரு வித்தியாதரப் பெண் . சாபக் குற்றத்தால் பத்திராவதி யென்னும் பெண்யானையானவள் .
மானசவேகன் :- வித்தியாதரரில் ஒருவன் ; மதனமஞ்சுகையை விரும்பிக் கவர்ந்து சென்று நரவாகனதத்தனால் வெல்லப்பட்டவன் .
மிருகாவதி :- சகச்சிரானீகனுடைய மனைவி ; அயோத்தி யரசன் கிருதவன்மனின் புதல்வி ; கருவுற்றிருந்த பொழுது செவ்வரக்கு நீர் தோய்ந்த தன்னுடலை இறைச்சிப் பிண்டமாகக் கருதித் தன்னைக் கவர்ந்து சென்ற கருடனால் உதயாசலத்தில் விடப்பட்டுச் சமதக்கினி முனிவனுடைய ஆச்சிரமத்தை யடைந்து உதயனனைப் பெற்றவள் ; அப்புதல்வன் அரசுரிமையை ஏற்றபின்னர் கணவனொடு தவஞ் செய்யக் கானகம் புக்கவள் .
யுகந்தரன் :- சகச்சிரானீகனுடைய அமைச்சரில் ஒருவன் ; யெளகந்தராயணனுடைய தந்தை .
யோககரண்டகன் :- காசி நகரத்து அரசன் பிரமதத்தனுடைய முதல் அமைச்சன் ; உதயனன் படைகள் வரும் வழிகளில் வஞ்சச் செயல்கள் பல செய்தவன் .
யோகேசுவரன் :- உச்சயினி நகர்க்கணித்தான சுடலையில் வாழும் பிரமராக்கதன் ; யெளகந்தராயணன்பால் நட்புக் கொண்டு அவனுக்கு உருவமாற்று என்னும் விஞ்சையை உபதேசித்தவன் ; கலிங்க சேனையின் ஒழுக்க நிலையை மறைந்து நின்று அறிந்து அவனுக்கு அறிவித்தவன் .
யெளகந்தராயணன் :- உதயனனுடைய முதல் அமைச்சன் ; சூழ்ச்சித் திறமையிலும் வில்வித்தை முதலிய எல்லாக் கலைகளிலும் வல்லவன் ; உதயனன் சண்டமகாசேனனால் வஞ்சித்துச்சிறைப்படுத்தப்பட்டானென்பது கேட்டு வேற்றுருக்கொண்டு உச்சயினி யடைந்து பல உபாயங்களால் சிறைச்சாலையினின்றும் அவன் வாசவதத்தையோடும் வெளிப்படும் வண்ணம் செய்தவன் ; அவனுக்கு வாசவதத்தையை மணஞ் செய்வித்ததுமின்றி மகததேசத்து அரசன் நட்பாளனாக்கக் கருதி அவன் மகளையும் வேட்பித்தவன் ; பாண்டவர் குலத்து அரசர் வைத்த நிதித் திறளையும் அரியணையையும் உதயனனை அடைவித்து அவன் அரசியற்றிருவைப் பெருகச்செய்தவன் . அவனைக் காதலித்து வந்த கலிங்கசேனையின் மனம் தீங்கு பயப்பதாகுமெனக் கருதி அது நடைபெறா வண்ணம் தடை செய்தவன் ; அவ்வுதயனன் எல்லா நலங்கட்குங் காரணம் இவன் பெருமுயற்சியே .
வசந்தகன் :- உதயனனுடைய அமைச்சரில் ஒருவன் சண்டமகாசேனனால் வஞ்சிக்கப்பட்ட உதயனனை விடுவிக்க யெளகந்தராயணன் செய்த சூழ்ச்சிகட்குத் துணை நின்ற உடலின் வேற்றுமையால் விளையாட்டுப் பொருள்போல இருந்து வாசவதத்தையின் மனத்தை யின்புறுத்தியவன் ; உதயனன் பதுமாவதியை மணப்பதற்கு யெளகந்தராயணன் செய்த உபாயத்தின்படி வாசவதத்தையோடு தானும் வேற்றுருக்கொண்டு பதுமாவதியை யடைந்து கணவற் பிரிவால் வாசவதத்தை வருந்தாவண்ணம் தேற்றியவன் ; கதை பல பொதிந்த பொருளுரைகளைச் சுவைபடப் பேசும் திறமை மிக்கவன் .
வசுநேமி :- வாசுகியென்னும் பாம்பின் தமையன் ; உதயனனால் வேடனின்றும் விடுவிக்கப்பட்டு அவனுக்கு “இன்னிசை “ யென்னும் யாழொன்றைக் கொடுத்தவன் .
வற்சம் :- உதயனன் அரசாண்ட நாடு ; இதன் தலைநகரம் கெளசாம்பி .
வாசவதத்தை :- உதயனனுடைய பட்டத்தேவி ; சண்டமகாசேனனின் புதல்வி; இந்திரன் ( வாசவன் ) அருளால் உதித்தவளாதலின் இப்பெயர் பெற்றாள் ; உதயனன்பால் இசைக்கலை பயின்றவள் ; மாலை தொடுத்தல் முதலிய முதலிய கைத்தொழிலிலும் , சிற்பவேலையிலும் மிக்க திறமையுள்ளவள் . தன்பாலுள்ள காதலால் உதயனன் இராசகாரியத்தை மறந்தானென்பது கேட்டு அவனாக்கங்கருதி வேற்றுருக் கொண்டு சிலகாலம் மறைந்திருந்தவள் ; சபத்தினியாகிய பதுமாவதிபால் மிக்க அன்புள்ளவள் ; சிவபிரான் வழிபாட்டால் காமவேளின் கூறான நரவாகனதத்தன் என்னும் புதல்வனைப் பெற்றவள் .
விண்டுமதி :- சதானீகனுடைய மனைவி ; செளண்டிலிய முனிவன் ஈந்த தூயதான பாயசத்தை உண்டு கருத்தரித்துச் சகச்சிரானீகனைப் பெற்றவள்; தேவாசுரர் போரில் இந்திரனுக்குத் துணை செய்தற் பொருட்டுச் சென்று அவ்வசுரரால் கொல்லப்பட்ட தன் கணவன் பிரிவுக்காற்றாளாய் அவன் உடலோடு சிதைக்கண்ணேறி உடன் இறந்துபட்டவள் .
விதேகநாடு :- உதயனனால் வாசவத்தை சகோதரன் கோபாலகனுக்குக் கொடுக்கப்பட்டது .
விந்தியபர்வதம் :- ஒரு மலை ; அழகிய காடுகள் சூழப்பெற்றது .
வீரபாகு :- சண்டமகாசேனன் வாயில் காவலரில் ஒருவன் ; வாசவதத்தையை வஞ்சித்துக் கவர்ந்து சென்ற உதயனனைத் தடை செய்து அவனாற் கொல்லப் பெற்றவன் .
வேகவதி :- மானசவேகன் உடன்பிறந்தவள் ; மதனமஞ்சுகையின் வேடங் கொண்டு வந்து நரவாகனதத்தனை மணந்தவள் .
வசுவாநரன் :- பிங்கலிகையின் புதல்வரில் ஒருவன் ; நரவானகதத்தனுடைய புரோதன் .
கணபதி துணை
உதயன சரிதம்
முதல் வகுப்பு
( உதயனன் பிறப்பு )
திங்கண் மரபு சிறக்கப் பிறந்து நலம்
பொங்கு முதயனன்றன் பொற்சரிதம் – இங்கினிது
சொல்லு முறையின்கட் டோன்றுந் தமிழ்ப்புலவீர்
பல்லறங்க ளானும் பயன் .
வற்சம் எனப் பெயரிய நாட்டிலே கெளசாம்பி எனப் பெயரிய நகரம் ஒன்றிருந்தது . அதன்கண் , சதானீகன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான் .அவன் பாண்டவகுலத்திற் பிறந்தவன் . சனமேசயன் புதல்வன் ; பரிட்சித்துவின் பெளத்திரன் ; அபிமந்நியுவின் பிரபெளத்திரன் ( பெளத்திரன் மகன் ) அவன் இளம்பருவத்தில் விண்டுமதி என்னும் பெண்ணை மணந்தான்.
அவன் ஓர் அமயத்தில் வேட்டையாடல் குறித்து வனத்தை எய்தினான் . ஆண்டு அவர்க்குச் செளண்டிலிய முனிவனோடு பழக்கமுண்டாயிற்று . அம்முனிவனைப் புதல்வற்பேறு குறித்து இரந்தான் . அம்முனிவன் சதானீகனோடு கெளசாம்பி நகரத்தை எய்திப் புத்திரகாமேட்டி என்னும் வேள்வியைச் செய்தான் . அவ்வேள்வியினின்றும் “மந்திரங்களாற் றூயதான இப் பாயசத்தை உண்ணச்செய்” என்று அரசனுக்கு ஈந்தான் .விண்டுமதி அப்பாயசத்தை உண்டு கருத்தரித்தாள் .பத்தாந் திங்களில் ஒரு மகனைப் பெற்றாள் . அரசன் அப் புதல்வற்குச் சகச்சிரானீகன் என்று பெயரிட்டான் . பின்னர் முறையே சகச்சிரானீகன் பாலப்பருவத்தைக் கடந்து இளவரசனாயினான் .
அப்பொழுது விண்ணுலகில் , தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் உண்டாயிற்று . அப்போரில் விட்புலவேந்தன் தனக்குத் துணை செய்தற்பொருட்டுச் சதானீகனை அழைத்தான் . சதாநீகன் அரசியற் சுமையை யுகந்தரன் என்னும் பெயரினையுடைய அமைச்சன்பால் வைத்து அமரருலகு எய்தினான் . ஆண்டு , இயமதமிட்டிரன் முதலிய அரசர்கலோடு போருஞற்றி அவர்களாற் கொல்லப்பட்டான் . இந்திரனுடைய சாரதியாகிய மாதலி சதானீகன் உடலைத் தேரிலேற்றிக் கெளசாம்பி நகரத்தை அடைவித்தான் . விண்டுமதி அஞ்சத்தக்க அக் கொடுந் துன்பத்தை ஆற்றாளாய்த் தலைவனோடு சிதைக்கண் ஏறி ( சிதை – சுடலைக்கண் அடுக்கும் விறகு ) உடனிறந்தாள் . சகச்சிரானீகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை நிறைவேற்றித் தாதையினது அரியணையில் வீற்றிருந்தான் .
இதற்கிடையில் , தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நிகழ்ந்த போரில் தேவேந்திரன் வெற்றி அடைந்தான் . அதன் பின்னர்த் தன் நண்பனுடைய புதல்வனாகிய சகச்சிரானீகனை அழைத்துப் பலவாறு உபசரித்தான் . அவ்வமயம் உரையாடிக்கொண்டிருக்குங்கால்“அயோத்தியில் கிருதவன்மன் என்னும் பெயரினையுடைய அரசன் ஒருவனுளன் . அவற்கு மிருகாவதி என்னும் பெண்மணி ஒருத்தி இருக்கின்றாள் . சகச்சிரானீகன் அதனைக் கேட்டு அப்பொழுதே மிருகாவதியினிடத்து மகவும் காதற்கிழமையுடை யனாயினான் அதன் பின் விண்ணவர் இறைபால் விடைபெற்றுக் கொண்டு அவன் தேரின்கண்ணே ஏறி கெளசாம்பி நகரைக் குறித்துப் புறப்பட்டான். மிருகாவதியை நெஞ்சத்தில் இருத்திச் செல்கின்ற சகச்சிரானீகனை இடைவழியில் திலோத்தமை கண்டு , “அரச ! கணப்பொழுது நின்று எனது சொல் ஒன்றைக் கேட்டு அதன்பின் செல்வாயாக “ என்று கூறினால் . சகச்சிரானீகன் அதனைச் செவியேற்றிலன் . அதனாற் சினமுற்ற திலோதமை , சகச்சிரானீகனை நோக்கி , “ எவளிடத்துக் காதலாற் செலுத்திய நெஞ்சத்தையுடையவனாய் என் சொல்லைச் செவிக் கொள்ளாமல் விரைந்து செல்லுகின்றாயோ அவளிடத்தினின்றும் பதினான்கு யாண்டுகள் பிரிவுத் துன்பத்தை அனுபவிப்பாய் “ என்று இவ்வாறு சபித்தாள் . இச்சாபத்தையும் வேரொன்றைப் பற்றிய மனத்தினையுடைய அரசன் கேட்டிலன் , தேவேந்திர சாரதியாகிய மாதலி மாத்திரம் கேட்டான் .
சகச்சிரானீகன் , கெளசாம்பி நகரத்தை எய்தி விட்புல நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அமைச்சர்களுக்குத் தெரிவித்தான் . அதன்பின் அயோத்தியின் தலைவனாகிய கிருதவன் மன்பால் தூதனைப் போக்கினான். ( தூதர் : தலை , கடையென மூவகைப்படுவர் . இவருட் சத்திவிக்கிரகங்கட்கு வேற்று வேந்தரிடைச் செல்லுங்கால் , தானே வகுத்துக் கூறுபவன் தலையாவான் . கூறியது கூறுவோன் இடையாவான். ஓலை கொடுத்து நிற்போன் கடையாவான் . இம்முறை வடநூலுட் கூறப்படுவதாகும் . திருக்குறள் தூது என்னும் அதிகாரத்தில் ‘ கடனறிந்து ‘ என்னுந் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையையும் நோக்குக . இச்சரிதத்திற் பின்னும் தூதன் என வருமிடங்கடோறும் இவ்வாறு பகுத்துணர்க ) . கிருதவன்மன் தன் மகளாகிய மிருகாவதியின்பால் சகச்சிரானீகனுக்குள்ள காதற்கிழமை யைக் , கோப்பெருந்தேவிக்கு அறிவுறுத்தான். அவள் “தேவ ! மிருகாவதிக்கும் சகச்சிரானீகனுக்குமுள்ள மணமக்களாந் தன்மை மிகவும் பொருத்த மானதே . விரைந்து இவ்விருவருக்கும் மணம் நிகழும் . இப்பொருளையே ஓர் அமயம் ஓர் அந்தணன் கனவிற் போந்து எற்கு அறிவுறுத்தான் . “ என்று இங்ஙனம் கூறினாள் . கோப்பெருந்தேவியின் இச்சொற்களைக் கேட்டு க் கிருதவன்மன் மகிழ்ச்சியுடையனாய்த் தூதன்முகமாக “ என் புதல்வி மிருகாவதி முன்னரே நின்னைக் காதலித்தாள் . நுங்கள் இருவீரது ஒத்த காதற் கிழமையைக் கேட்டால் இப்பொழுது யான் பயனுடையனாயினேன் . ஆதலின் , காலந் தாழ்த்தலின்றி இவண் வந்து மணவினையை நிறைவேற்றல் வேண்டும் “ என்று இவ்வாறு மறுமொழி கூறி விடுத்தாள்
பின்னர் , சின்னாட் சென்று மிருகாவதி கருத்தரித்தாள் அவளுக்கு முகம் வெண்ணிறமுற்றது; இடை பருமை யெய்தியது . ஓர் அமயம் அவள் கணவன்பால் எய்தி , “நாத ! சிவந்தநீர் நிரம்பிய தடாகத்தில் நீராடுதற்கு விரும்புகின்றேன் “ என்று தன் கருப்ப கால வேட்கையை இவ்வாறு தெரிவித்தாள் . உயர்ந்த அறவோனும் , உயிர்களுக்குத் தீங்கு செய்ய விரும்பாதவனும் ஆகிய சகச்சிரானீகன் , செவ்வரக்கு முதலியவைகளாலாய நீரால் நிரம்பிய தடாகம் ஒன்றை நிருமாணித்து அவளுக்குக் காட்டினான் . அவள் அத்தடாகத்தில் நீராடினால் . நீர் மூழ்கி எழுந்த மிருகாவதியினது உடல் செவ்வரக்கு நீர் தோய்ந்தமையால் இறைச்சிப்பிண்டத்தை யொப்ப விளங்கியது . அப்பொழுது விண்ணிற் பறந்து திரியும் பருந்து அவளைப்பார்த்து இஃது இறைச்சிப்பிண்டம் என்னுங்கருத்தால் மூக்கினால் கெளவிக்கொண்டு உயரப்பறந்தது . அதனைக் கண்ணுற்ற அரசன் துன்பக்கடலுள் மூழ்கி மயக்கமுற்று வீழ்ந்தான் . அத்தகைய அவனது நிலையை யோகவன்மையால் மாதலி யுணர்ந்து , விண்ணுலகினின்றும் இறங்கி , அரசனை நோக்கி ,”அரச ! முன்னரே நீ விண்ணுலகினின்றும் நிலவுலகத்தை அடையுங்கால் திலோத்தமை நின்னைக் கண்டாள் ; நின்னோடு சிறிது அளவளாவுதற்கு விரும்பி நின்ற அவளைப் பொருட்படுத்தாமல் மிருகாவதியின்பால் வைத்த அவா நிறைந்த மனத்தினனாய் விரைந்து போந்தனை ; அதனாற் சினமுற்ற அவள் நின்னைச் சபித்தாள் ; அச்சாபத்தால் இப்பிரிவுத் துன்பம் நேர்ந்தது பதினான்கு யாண்டுகள் பிரிவுத்துன்பத்தை நுகர்ந்து அதன்மேல் மிருகாவதியோடு சேருவாய் “ என்றிவ்வாறு கூறினான் .
இங்ஙனம் மாதலியால் தேற்றப்பட்ட சகச்சிரானீகன் ,மிருகாவதியின் பிரிவை மிக அறிதிற் பொறுத்து , “உயிர் வாழ்க்கை யுளமகற்கு யாண்டு பல கடந்தும் இன்பம் உறுமால் “ என்னும் முதுமொழியை நினைவு கூர்ந்து மனத்திட்பத்தால் உயிர் தாங்கினான் .
மிருகாவதியை மூக்கினாற் கவர்ந்து உயரப் பறந்து சென்ற கலுழன் (கருடன்) உறுப்புக்களின் இயக்கத்தால் இவள் இறச்சிப்பிண்டம் அல்லள் ; உயிருடன் கூடிய மானிடப்பெண் என்று அறிந்து அவளை உதயாசலத்தின் சாரலில் விடுத்தது . பறவை மூக்கினின்றும் விடுபட்ட அம்மிருகாவதி , துணையின்றி யாரும் அடைதற்கரிய மலைப்பக்கத்தில் இருக்கும் தன்னை நோக்கி மிகவும் அச்சமுற்று வாய்திறந்து கதறினாள் . அவ்வமயம் பன்னாளாகப் பசியுற்றிருக்கும் ஒரு பெரும்பாம்பு அவளை விழுங்குதற்குத் தொடங்கிற்று . அவ்விடத்தில் எதிர்பாராது அடைந்த ஒரு மனிதன் அப் பாம்பை அம்புகளாற் கொன்று மிருகாவதியைக் காத்தனன் . அதன்பின், அவள் அத்தகைய துன்பத்தை ஆற்றாதவளாய் உயிர்விடுதலே நலமெனத் துணிந்து அவ்விடத்தில் தன் விருப்பின் வண்ணந் தடையின்றித் திரியும் ஒரு மதயானையின் முன்னிலையிற் சென்று நின்றாள் . அவ் யானை தமியளாய் நிற்கும் அபலையாகிய அப்பெண்ணை நோக்கி அருளுடைய யானை யொப்ப விளங்கி அவளைத் தன் துதிக்கை நுனியால் மெல்லிதாகத் தடவிற்று .
பின்னர் , அம்மிருகாவதி கருப்பச்சுமையால் துன்புற்று ஆங்குள்ள அருவியின்பக்கல் அடைந்து துன்பமிகுதியாற் புலம்பினாள் . ஆண்டு , அணிமைக்கண்ணுள்ள முனிவர் இருக்கையினின்றும் ஒரு தாபத குமாரன் வந்து அவளைக் கண்டான் . அவன் அவளது துன்பகாரணத்தைக் கேட்டு அநாதையாகிய அவளைக் கருனைகூர்ந்து சமதக்கினி முனிவனது இருக்கையை அடைவித்தான் . நிறைந்த கருப்பச்சுமையாற் சிரமமுற்றவளும் வேறு புகலில்லாதவளுமாகிய அம்மிருகாவதி பிரம தேசசால் அக்கினியைப்போற் றிகழ்கின்ற பெரியோனாகிய அம்முனிவன் பாதங்களில் வனங்கினாள் . அம் முனிபுங்கவன் அவளது துன்ப காரணத்தை மனவொருக்கத்தால் உணர்ந்து அவளை நோக்கி , “குழந்தாய் ! வருந்தற்க ; சின்னாள் இவ்வாச்சிரமத்திலேயே இருப்பாயாக ; எல்லா அழகும் வாய்ந்த புதல்வன் பிறப்பான் ; சமீப காலத்திலேயே தலைவன்பக்கல் அடைவாய் “ என்றிவ்வாறு தேற்றினான் .மிருகாவதி அச்சொற்களைத் தலைவணங்கியேற்று அவ் வாச்சிரமத்திலேயே தங்கினாள் . பின்னர், பேறு கால நிறைவில் சக்கரவர்த்தியின் எழில் வாய்ந்த புதல்வன் ஒருவனைப் பெற்றாள் . அவன் பிறந்த சமயத்தில் , ஆகாயத்தில் அசரீரியாக, “நங்காய்! மிருகாவதி ! உதயனன் என்னும் பெயர் வாய்ந்த நின்னுடைய இப்புதல்வன் எல்லாவுலகங்களிலும் புகழ் விளங்கப்பெற்ற சக்கரவர்த்தியாவான் “ என்னுஞ் சொற்கள் எழுந்தன . அவற்றைக் கேட்டு மிருகாவதி பெருமகிழ்ச்சியையும் வியப்பையும் அடைந்தாள் .
வெண்பா
கணவற் பிரிந்தமிரு காவதியோர் காட்டிற்
றணவின் முனியிருக்கை சார்ந்தங் — கணியிர்
றிகழு முதயனனாஞ் சேய்மணியைப் பெற்றாள்
புகழுந் திருவின் புற .
————
இரண்டாம் வகுப்பு
( உதயனன் அரசியற்றிருவெய்தல்)
பின்னர்ச் சமதக்கினி முனிவன் அப்புதல்வனுக்குச் சாதகன்மம் முதலிய எல்லாக் கிரியைகளையும் அவ்வக் காலங்களிற் செய்தான் . சிறுவனாகிய உதயனன் ஒத்த பருவமுள்ள முனிகுமாரர்களோடு கூடிச் சிறுவர்க்குரிய விளையாடல்களைச் செய்து முறையாகக் குழவிப்பருவத் தைக் கடந்தான் . அதன்பின் , அம்முனிவர் பெருமானாலேயே உபநயனம் செய்யப் பெற்று அவன்பானின்றே எல்லாக் கலையுங் கற்றுணர்ந்தான் . முறையாகப் பதினான்கு வித்தைகளிலும் வில்வித்தையிலும் கரைகண்டவ னாயினான் ; ஓர் அமயம் மிருகாவதி நிறைமதி போற் கண்களுக்கு இன்பத்தை விளைவிக்கின்ற புதல்வனைப் பார்த்து , அன்பு நிறைந்த மனத்தினளாய் சகச்சிரானீகனது பெயர் குறிக்கப்பட்டுத் தன் கையில் அணிந்திருக்கின்ற வளையலை அப்புதல்வன் கையில் இட்டாள் . அதன்பின் ஒரு நாள் , உதயனன் வேட்டையாடல் குறித்துக் காடுகளிற் றிரிந்து ஒரு பாம்பை வலிந்து இழுத்துக்கொண்டு நிற்கும் ஓர் மனிதனைப் பார்த்தான் . பாம்பினது அத்துன்ப நிலையை நோக்கி அருளுடையனாகிய அவ்வுதயனன் , வேடனைப்பார்த்து , “ஒரு குற்றமில்லாத இப்பாம்பை எதர்காகத் துன்புறுத்துகின்றாய் ? இதனை விடல் வேண்டும் ; இது தன் விருப்பின்படிச் செல்க “ என்று இங்ஙனங் கூறினான் . அவ் வேடன் , “குமாரா ! யான் வறியவன் ; இதுவே என் வாழ்க்கைத் தொழில் ; மந்திரவன்மையாலும் , பச்சிலைகளின் பெருமையாலும் இவ்விடத்திற் பாம்புகள் கிடைத்தர் கரியவாயின ; நெடு நாளாக இதனைத் தேடிப் பெற்றேன் ; ஆதலின் இதனை விட்டு எங்ஙனஞ் சீவிப்பேன் ?” என்று இங்ஙனம் மறுமொழி கூறினான் .
இதனை வள்ளற்றன்மையினையுடைய உதயனன் கேட்டுத் தாய் உதவிய காப்பைக் கையினின்றும் கழற்றி வேடனுக்குக் கொடுத்து , “இக்காப்பை வாழ்க்கைக்குரியதாக் கொண்டு இதனை விடுவாயாக “ என்று கூறினான் . அவ்வேடன் காப்பைப்பெற்று மகிழ்ச்சி யுடையவனாய்ப் பாம்பய்விட்டு அப்புதல்வனது வள்ளற் றன்மையைக் கண்டு வியந்து தன் விருப்பின் வண்ணஞ் சென்றான் .
அதன்பின் , அப்பாம்பு உதயனனை வணங்கி மக்கள் கூறுஞ் சொற்களால் “குமார ! யான் வாசுகியின் தமையனாகிய வசுனேமி என்னும் பெயரினையுடையேன் . என்பால் “இன்னிசை” என்னும் பெயரினை யுடைய யாழ் ஒன்று இருக்கின்றது . அதனைப் பெற்றுக் கொள்வாயாக “ என்று இங்ஙனம் கூறிற்று . உதயனன் “அங்ஙனமேயாக” என்று சொல்லி அவ்யாழைப் பெற்றுக்கொண்டான். வசுனேமி உதயனன்பால் விடைபெற்றுத் தன் இருப்பிடஞ் சென்றது . உதயனனும் தாயின் பக்கல் எய்தி இவ் வெல்லா நிகழ்ச்சிகளையும் தெரிவித்தான் . மிருகாவதி அவர்க்கு இளமைப்பருவத்தே இயற்கையினமைந்த வள்ளற் றன்மையை மகிழ்ந்து பாராட்டினாள் .
பின்னர் , வேடன் அக்காப்பை விற்றற் பொருட்டுக் கெளசாம்பி நகரத்தை அடைந்தான் . அவ் விடத்திற் சகச்சிரானீகனது பெயர் குறித்த அக்காப்பைக் கண்டு அரசன் காவலாளர் , அவ்வேடனை அரசன் பக்கல் கொணர்ந்தனர் .”நீ இக்காப்பை எவ்வாறு அடைந்தாய் “ என்று அரசன் கேட்க , வேடன் , நிகழ்ந்த எல்லாவற்றையும் விளங்கக் கூறினான் . அப் பொழுது அசரீரிமொழி “அரச! நின்னைப்பற்றிய சாபத்தின் ஒழிவு காலம் நெருங்கிவிட்டது . நின் கோப்பெருந்தேவியாகிய மிருகாவதி உதயாசலத்தின் பக்கத்திலுள்ள சமதக்கினி முனிவனது ஆச்சிரமத்திற் பதினான்கு யாண்டு நிறைவேறப் பெற்ற நின் அருமைப்புதல்வனோடு சுகமாகத் தங்கியிருக்கின்றாள் . “ என்று இங்ஙனம் எழுந்தது . அதனைக் கேட்டுச் சகச்சிரானீகன் முகில் ஒலி கேட்ட மயில் போல மிகப்பெரு மகிழ்ச்சியுடையனாயினன் .
பின்னர் , அப்பொழுதே படை வீரர்கள் சூழப் புறப்பட்டு அவ்வேடன் வழி காட்ட உதயாசலத்தை அடைந்தான் . ஆச்சிரமத்திற்கு இடையூறு உண்டாகாத வண்ணம் படைகளைச் சேய்மைக்கண்ணே நிறுத்தித் தான் தமியனாகவே ஆசிசிரமத்தின் உட்புகுந்து சமதக்கினி முனிவனைத் தரிசித்து வணங்கினான் . அம்முனிவன் அரசற்கு வாழ்த்துரைகூறி நலம் வினவினன் . பின்னர்ப் புதல்வனோடு மிருகாவதியை ஈந்தான் . அவளைக்கண்டு சகச்சிரானீகன் பெரிதும் இன்புற்றான் . இத்துனைக் காலம் வரையும் காணாத தன் அருமைப்புதல்வனை விரைந்திழுத்துத் தழுவி உச்சி மோந்து உடல் புளகமுற இன்பக்கடலுண் மூழ்கினவனாயினான் .பின்னர், முனிவன்பால் விடைபெற்று மிருகாவதி , உதயனன் , இவர்களோடு கெளசாம்பி நகரத்தை நோக்கிப் புறப்பட்டான் . பதினான்கு யாண்டுகளிலும் தான் அநுபவித்த நிலைகளைத் தன் காதலிக்கு அறிவுறுத்தும் , அவள் நிலையைத் தான் கேட்டும் நெடுந்தூரமான வழியைச் சிரமம் தோன்றா வண்ணங் கடந்தான் . அப்பொழுது கெளசாம்பி நகரத்தில் வாழ்கின்ற மக்கள் எல்லோரும் தோரணம் முதலியவைகளால் நகரத்தை அலங்கரித்தனர் . தெருக்கடோறும் நீர் தெளித்தனர் . சந்தனம் அகில் முதலியவற்றின் புகைகளாற் எல்லாப் பக்கங்களிலும் மணங்கமழச் செய்தனர் . இல்லங்களின் வாயில்கடோறும் நிறை குடங்களை வைத்தனர் . பலவகை வாத்தியங்களை முழக்குவித்தனர் . மங்களவாழ்த்துரைப் போராகிய அந்தணர்களை முன்னிட்டு அமச்சரனைவரும் , நகரத்து மக்கள் எல்லோரும் அவனை எதிர்கொண்டு வரவேற்றனர் .இங்ஙனம் நகரத்து மக்களால் மிக்க குதூகலத்துடன் வரவேற்க்கப்பட்ட சகச்சிரானீகன் , புதல்வனோடும் பெருந்தேவியோடும் நகரத்துட் புகுந்து தன் அரண்மனைக் கண் அடைந்தான் .அதன்பின் , முறையாக இளமைப் பருவத்தினையடைந்த உதயனன் இளவரசன் ஆயினான் . அவற்கு “யெளகந்தராயணன்” , “உருமண்வான்” , “வசந்தகன்” என்னும் மூவரும் அமைச்சராயினர் . பின்னர்த்தன் புதல்வன் உலகாட்சியில் , தகுதிவாய்ந்திருத்தலை யுணர்ந்து சகச்சிரானீகன், அப்புதல்வன் மாட்டே அரசியற் சுமை எல்லாவற்றையும் வைத்துவிட்டு மிருகவதியோடு தவஞ் செய்தற் பொருட்டு இமயமலையை எய்தினான்.
வெண்பா
மன்னுங் கலையனைத்து மாமுனிவன் பாற்பயின்றங்
கின்னிசையாம் யாழும் இனிதேற்றே — யன்னையொடு
தந்தை யுறைவிடத்தைச் சார்ந்தங் கரியணையின்
மைந்த னிவர்ந்தான் மகிழ்ந்து
மூன்றாம் வகுப்பு.
(வாசவதத்தை பிறப்பு)
உதயனன் தந்தையினது அரியணைக்கண் வீற்றிருந்து அறனெறி கடவாது குடிகளைப் புரந்தான் . குடிகளும் அவன் தந்தையிடத்துப் போல அவனிடத்தும் அன்பு பூண்டு ஒழுகினர் . இங்ஙனம் பன்னாட்கழிந்ததும் யெளகந்தராயணன் முதலிய மந்திரிகள்பால் அரசியற் சுமையை வைத்துவிட்டுச் சுகமாக இருந்தான் . வசுநேமி என்னும் பாம்பு தந்த “இன்னிசை” எனப் பெயரிய யாழை இடைவிடாது வாசித்துக்கொண்டி ருந்தான் . வனங்களிற்சென்று வேட்டை யாடுவதில் மிகவும் குதூகலமுடைய வனாயினான் . இன்னிசை என்னும் யாழின் ஒலியால் வயப்பட்ட காட்டியானைகளைக் கவர்ந்தான் . இங்ஙனம் பல்வகை விளையாடற்களாற் றன் மனத்தை இன்புறுத்தி வருகின்ற வற்சதேயத்தரசனாகிய உதயனன் ஓர் அமயம் “இத்துணைக் காலம்வரையும் எனக்கு எல்லாவகையானும் ஒத்த மனைவி வாய்த்திலள் . வாசவதத்தை என்பாளைக் குலத்தாலும் , ஒழுக்கத்தாலும் , உருவத்தாலும் பருவத்தாலும் எனக்கு ஒத்தவளாகக் கேட்கின்றேன் . அவள் என் பகைவனும் உச்சயினி நகரத்தரசனும் ஆகிய சண்டமகாசேனன் புதல்வியாவாள் , ஆதலின் அவளை எங்ஙனம் அடைவேன் “ என்று இங்ஙனம் மனத்தாற் சிந்தித்தான் . அவ்வமயத்திலேயே சண்டமகாசேனனும் “என் புதல்வியாகிய வாசவதத்தை மங்கைப்பருவம் எய்தினாள் . வற்சதேயத்தரசனே யன்றிப் பிறனொருவன் அவளுக்கு ஒத்த கணவனாகக் காணப்பட்டிலேன். அவ்வுதயனனோ என் பகைவனாவான் . எங்ஙனம் என்பான் மகட்கோடலை அங்கீகரிப்பான்? மேலும் அவன் மானத்தையே பொருளாக உடையான் ; பெரிய வீரன் ; உலோபம் முதலிய குற்றங்களால் சிறிதும் பற்றப்படாதவன் ; நகரத்து மக்களாலும் அமைச்சர்களாலும் மிகவும் அன்பு செய்யப்பட்டவன் . ஆதலின் , அவனைச் சமாதானம் முதலிய உபாயங்களால் வயப்படுத்துதற்கு இயலாது . இப்பொழுது யாது செயற்பாலது ?” என்று இங்ஙனம் மனத்தாற் சிந்தித்தான்.நெடுநேரம் சூழ்ந்து முடிவில் “வற்சதேயத்தரசன் வேட்டை யாடுதலிலேயே பற்றுடையனாய் இடைவிடாது தமியனாகவே காட்டில் திரிகின்றான் . விசேடமாகக் காட்டியானைகளைப் பிடிப்பதில் அவாவுடையனாகக் காணப்படுகின்றான் . ஆதலின் , அவனைப் பொறியான் இயன்ற யானையால் வயமாக்குவேன் . பின்னர் , அவன்பால் இசை பயிலுதற்பொருட்டு என் புதல்வியாகிய வாசவதத்தையை நியமனஞ் செய்வேன் . அவன் அவள்பாற் காதலுடையனாவான் . உதயனனை மருகனாகப் பெறுதற்கு இதனையன்றி வேறு வழியின்று” என்று இங்ஙனந் துனிந்தான் .
இவ்வாறு துணிவுற்றுச் சண்டமகாசேனன் சண்டிகையின் கோயிலை அடைந்து தேவியை வணங்கி “எனது வேண்டுகோளை நிறைவேற்றியருள்க “ என்று வேண்டினான் . அப்பொழுது அசரீரிமொழி , “அரச! நின் விருப்பம் நிறைவேறும் ; கவலுதல் ஒழிக “ என்று கேட்கப்பட்டது சண்டமகாசேனன் இதனைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து அப்பொழுதே தூதனை யழைத்து , “கெளசாம்பி நகரத்தையடைந்து வற்சராசன்பாற் சென்று , “நீ இசைத் தொழிலில் மிகவும் நிபுணன் என்பது அறிந்ததொன்றே; என் புதல்வி வாசவதத்தை நின்பால் இசைபயில விரும்புகின்றாள் ; ஆதலின், என்பால் நட்புலதேல் இங்கு வந்து வாசவதத்தையை நன்கு பயிற்றல் வேண்டும் “ என்று கட்டளையிட்டான் . தூதன் கெளசாம்பி நகரத்தை யடைந்து அங்ஙனமே தெரிவித்தான் .
உதயனன் பகைவன் விடுத்த பொருத்தமில்லாத செய்திகளைக் கேட்டு யெளகந்தராயணனை யழைத்து மறைவிடத்திலிருந்து , “அமைச்ச! எக்காரணத்தாற் சண்டமகாசேனன் இங்ஙனம் தூது விடுத்தான் . செருக்கினாலா! அன்றி வேறு கருத்தாலா ! ஆராய்தல் வேண்டும் “ என்று இங்ஙனம் கூறினான் . பேரறிஞனாகிய யெளகந்தராயணன் வற்சநாயகனது நலங்குரித்து, “வேந்தர் பெரும! நீ வேட்டையாடுதலிலும் ,இசைபயிலுதலிலும் மிகவும் பற்றுடையவன் என்பது எல்லாராலும் அறிந்ததன்றே ! சண்டமகாசேனன் தன் பெண்மணியால் நின்னை வயப்படுத்தற்கு முயல்கின்றான் . எவன் வேட்டையாடன் முதலியவைகளில் மிக்க பற்று வைத்திருக்கின்றானோ அவன் , குழியில் வீழ்த்திப் பிடிக்கப்படும் காட்டியானையைப்போலப் பிறன்கைப்பட்டுப் பெரிதும் துன்பத்தை அநுபவிப்பான் . ஆதலின் , இனி வேட்டையாடன் முதலியவைகளில் வைத்திருக்கும் அவாவை விட்டொழிப்பாயாக “ என்று இவ்வாறு மறுமொழி கூறினான் . இதனைக் கேட்ட வற்சர்தலைவன் சண்டமகாசேனனுடைய தூதனை நோக்கி , “செல்! நின் தலைவன்பால் ; ‘நின் புதல்வி இசைக்கலை பயிலுதற்கு விரும்புவாளாயின் ,அவளை ஈண்டுச் சேர்ப்பிப்பாயாக; அவளைப் பயிற்றுவேன் ‘ என்று இங்ஙனம் யான் கூறியதாகத் தெரிவிக்கவேண்டும்” என்று கட்டளை யிட்டான் . உதயனன் இங்ஙனம் மறுமொழி கூறித் தூதனபோக்கி ச் சண்டமகாசேனன்பாற் பெரிதுஞ் சினமுடையனாயினான். அப்பொழுதே அவனோடு பொருதற்கு விரும்பினான் . அவ்வமயம் யெளகந்தராயணன் “அரச! இது செய்தற்கு ஒல்லாதது ; தக்கதும் இன்று . சண்டமகாசேனனோ , நின்னோடு உறவுகோடலை விருப்புகின்றான் ; அவன் பெருமையைக் கேட்பாயாக . “உச்சயினி நகரத்தில் மகேந்திரவன்மன் என்னும் பெயரினையுடைய அரசன் ஒருவன் உளன் . அவற்கு , சயசேனன் எனப் பெயரிய புதல்வன் இருந்தான் . அவற்குப் புதல்வனாக மகாசேனன் தோன்றினான் . அவன் ஆண்மையிலும் , திண்மையிலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடி இவ்வுலகத்தைக் காவல்புரிந்தான் ; அவன் ஓர் அமயம் , ‘எனக்கு ஒத்த இல்லாளையும் வாட்படையையும் , எவ்வாறு அடைவேன்? என்று இங்ஙனம் சிந்தித்தான் . அம்மனைவியையும் வாட்படையையும் பெறுதற்பொருட்டுச் சண்டிகையின் கோயிலையடைந்து அவ்வம்மையை வணங்கி அவ்விடத்திலேயே பன்னாளாகச் செய்தற்கரிய தவத்தைச் செய்தான். தவ முடிவில் , தன்றலையை அறுத்துத் தீங்கட் பெய்தான் ; அப்பொழுது அருண்மிக்க சண்டிகை அவன் கண்ணெதிரிற் றோன்றினாள் ; அவளை மகாசேனன் தரிசித்து விரைந்தெழுந்து வணக்கம் புரிந்து கைகூப்பி நின்றான் ; சண்டிகாதேவி அவனைப் பார்த்து , “வேந்தே ! இத்தகைய அருளுடையளாயினேன் ; இவ்வாட்படையைப் பெற்றுக்கொள் வாயாக ; இதனால் , நீ பகைவர்களான் வெள்ளப்படாதவன் ஆவாய் ; இன்னும் அங்காரகன் என்னும் பெயரினை யுடைய அசுரர் தலைவன் ஒருவன் உளன்; அவற்கு அங்காரவதி யென்னும் பெயரினை யுடைய பெண்மணி ஒருத்தி இருக்கின்றாள் ; அவள் நின் மனைவியாவாள் . நீ என்பால் வரங்கோடற் பொருட்டுத் தலையறுத்தலாகிய சண்டகன்மத்தைச் செய்தமையால் , சண்டமகாசேனன் என்னும் புகழ்ப் பெயரை அடைவாயாக” என்று கூறி அவ்வம்மை மறைந்துவிட்டாள் .
சண்டமகாசேனன் , தன் அவா பயனுறப்பெற்று மிக்க மகிழ்ச்சி யடைந்தான் . அவற்கு முன்னரே ஒப்பற்றா மதயானை ஒன்றுளது . இப்பொழுது சண்டிகாதேவியின் திருவருளால் வாட்படையும் கிடைத்தது . ஆதலின் , பகைவர்களால் அச்சுறுத்தப்படாதவன் ஆயினான் .
பின்னர், ஓர் அமயம் , சண்டமகாசேனன் வேட்டை யாடல் குறித்துக் காட்டினை யடைந்தான் ; அக்காட்டில் மலையை ஒத்த உருவினையுடைய ஒரு பன்றியைக் கண்டான் ; அது மிக்க சீற்றத்தோடு அரசனை நோக்கி விரைந்து ஓடி வந்தது . அஃது அரசன் உய்த்த கூரிய பகழிகளால் உயிர் நிலை உறுப்புக்கள் அடிக்கப்பட்டும் , அத் துன்பத்தைப் பொருட்படுத்தாது , அவன் தேரைச் சிதறச்செய்து துகளாக்கியது. அதன்பின் ஒரு பிலத்தின் உட்புகுந்தது . நேர் ஒழிந்து காலாட்படையினை மாத்திரம் உடைய அரசன் ஆற்றொண்ணாச் சினத்தால் அப்பன்றியைப் பின்றொடர்ந்து பிலத்தினுட் புகுந்தான் ; பன்றியோ சிறிது தூரம் சென்று காணப்படாததாயிற்று . சண்டமகாசேனன் அங்குமிங்கும் பார்த்து அகன்ற ஒரு காட்டினை யடைந்தான் ; ஆண்டு வியப்புடையனாய்ச் சுற்றித் திரிந்து மலையையொத்த மதில்சூழ்ந்த நகரம் ஒன்றைக் கண்டான் ; அந் நகரத்தின் புறத்தே உள்ள உத்தியானவனத்தில் தெளிந்த நீர்ப் பெருக்கினையுடைய ஒரு தடாகம் இருந்தது . அதன் கறையிற் சிறிது நேரம் இருந்து வழிநடத்தலால் உண்டாகிய இளைப்பைப் போக்கினான் , அவ்வமயம் அவ்விடத்தே , மன்மதனது வெற்றித் திருவினை யொத்து விளங்கிப் பற்பல தோழிகளும் பணிப்பெண்களும் புடைசூழ வருகின்ற ஒரு நங்கையைக் கண்டான் ; அவள் , சேய்மைக்கண்ணே சண்டமகாசேனனைக் கண்டு மிக்க காதற்பெருக்கால் இமைத்தலின்றி அவனையே உற்று நோக்கினவளாய் மெல்ல மெல்ல நடந்து அவன்பக்கல் எய்தினாள். எய்தி, “நீ யார்? எங்கு வந்தனை? யாது செய்ய விரும்புகின்றனை?” என்று வினவினாள் . சண்டமகாசேனன் , தன் வரலாறு முழுவதையும், உள்ளவாறு தெரிவித்தான்அதனைக் கேட்டு அப்பெண்மணி , ஒரு காரணமுமின்றிப் போந்த துன்பமுடையாளாய்க் கண்களினின்றும் நீர் ஒழுக அழத் தொடங்கினாள் . சண்டமகாசேனன் , “நீ யார் ? எவன் மகள் ? எதற்காக அழுகின்றனை? “என்று கேட்டாள் . அவள், “பெரியோய்! கேட்பாயாக ; நின்னாற் பன்றியுருவமாகக் காணப்பட்டவன் அங்காரகன் என்னும் பெயரினையுடைய அசுரர் தலைவன் ஆவான் . யான் அவன் புதல்வி ; அங்காரவதி யென்னும் பெயரினையுடையேன் ; கண்ட அளவினானே நின்பாற் காதற் கிழமையுடையளாயினேன்; அத்தகைய என் தந்தை தவவன்மையால் வச்சிரப் படையாலும் பிளக்க வொண்ணாத உடலினைப் பெற்றான் ; பல அரசர்களுடைய உவளங்களினின்றும் பல பெண்மணிகளை எற்குப் பணிசெய்தற்பொருட்டுக் கொணர்ந்தான்; அவன் இப்பொழுது பசி தாகங்களால் வாட்டமுற்று உறங்குகின்றான். உறக்கத்தினின்றும் எழுந்து நின்னைக் காண்பானாயின் , நிச்சயமாகக் கொன்றுவிடுவான் ; விரைவில் நேரக்கூடிய நின்கேட்டைக் கண்டு மிகவும் வருந்துகின்றேன் “ என்று இங்ஙனம் கூறினான் .
இவ்வாறு கூறிய அங்காரவதியின் சொற்களைக் கேட்டுச் சண்டமகாசேனன் அவளை நோக்கி , “ நங்காய் ! அஞ்சற்க. வருவன வந்தே தீரும் ; என்பால் அன்புளதேல் என் சொல்வழி நிற்பாயாக; எப்பொழுது இவன் தூக்கம் நீங்கி விழிக்கின்றானோ அப்பொழுது நீ அவன் முன்னின்று கண்ணீர் உதிர்ந்து அழல்வேண்டும் ; அவன் அவசியம் நின் துன்ப காரணம் யாது என்று வினவுவான் ; அவனை நோக்கி “தந்தையே ! நின்னினும் வலியனாகிய ஒருவன் போந்து நின்னைக் கொன்று விடுவானாயின் அப்பொழுது யான் அநாதையாக நின்று என்செய்வல்? “ என்று மறு மொழி கூறுக : அதனைக் கேட்டு அவன் கூறும் மறுமொழியை என்பால் தெரிவித்தல் வேண்டும் ; அதன்மேல் நினக்கும் எனக்கும் நலம் உண்டாம்,” என்று , இங்ஙனம் கூறினான் . இதனைக் கேட்டு அங்காரவதி , “அங்ஙனமே செய்வல்” என்று உடன்பட்டாள்.
காமவேளின் ஏவலால் தந்தையின் கொலையிலும் பெண்கள் முயல்கின்றனர் என்னும் இந்நிகழ்ச்சியால் உலகத்தீர் ! அம் மன்மதனது கொடுமையை உணர்வீர்களாக .
அதன்பின்னர் , அவள் தன் தந்தையால் சண்டமகாசேனனுக்குக் கேடுவருங்கொலோ என்னும் ஐயமுடையவளாய் அவனை ஒரு மறைவிடத்திற் காத்து வைத்துத் தூங்குகின்ற தந்தையின் பக்கல் எய்தி ,அவன் விழிக்கும் அமயத்தை எதிர்பார்த்து நின்றாள் .
அதன்பின் சிறிது நேரம் சென்றதும் துயில் நீத்தெழுந்த அங்காரகன் கண்களை விழித்துத் தன் முன்னிலையிற் கண்ணீர் ஒழுக நிற்கின்ற அங்காரவதியைக் கண்டான் . “எதற்காக இங்ஙனம் அழுகின்றனை !” என்று கேட்ப, “ஐயா! நின்னினும் வலிய வீரன் ஒருவன் போந்து நின்னைக் கொன்று விடுவானாயின் , அப்பொழுது எற்குப் புகலிடம் யாதாம்? “ என்று கூறினாள் . அங்காரகன் அதனைக் கேட்டு நகை செய்து , “குழந்தாய்” என் உடல் முழுதும் வச்சிர மயம் என்பதை அறிந்திலாய்கொல்? மேலும் என் இடக்கையில் நுண்ணிய துளை ஒன்று உள்ளது ; அதன்கண் அடிவிழுமாயின் எனக்கு இறப்பு நேரும் . என்னையன்றி வேறொருவற்கும் இது தெரியாது .இங்ஙனமிருக்குங்கால் என்னைக்கொல்லுதற்கு யாவன் வலியுடையவன் ஆவான்’ ஆதலின் நீ துன்புறுதல் ஒழிவாயாக” என்று கூறினான் .
இவ்வாறு இவன் கூறிய மொழிகளை மறைந்து நின்ற சண்டமகாசேனன் கேட்டான் .. அதன்பின் அப்பொழுதே அங்காரகன் படுக்கையினின்றெழுந்து நீராடி முக்கண்ணனாகிய சிவபிரானுக்குப் பூசைசெய்யத் தொடங்கினான் . அவ்வமயத்தையே பார்த்துச் சண்டமகாசேனன் வில்லின்கண் அம்பைப் பூட்டி அங்காரகனைப் போர்க்கழைத்தான் . அப்பொழுது அங்காரகன் மெளனவிரதத்தை ஒழிக்க விருப்பமற்றவனாய்த் தனதிடக்கையைத் தூக்கிநீட்டி, “சிறிது தாழ்த்தலைப் பொறுத்திருத்தல் வேண்டும்” என்று குறிப்பில் தெரிவித்தான் சண்டமகாசேனன் இதுவே நல்லசமயம் என்றெண்ணி விரைந்து அக்கையில் அம்புகளைப் பொழிந்தான் .உயிர்நிலைத் தானத்தில் அடிக்கப்பட்ட அங்காரகன் உயிர்துறந்தான். அதன்பின் , சண்டமகாசேனன் அச்சமற்று அங்காரவதியை மணந்து உச்சயினி நகரத்தை நோக்கித் திரும்பினான் .சின்னாட் சென்றதும் அங்காரவதி , பாலகன் கோபாலன் என்னும் இரண்டு புதல்வர்களைப் பெற்றாள். பின் ஓர் அமயம் சண்டமகாசேனன் இந்திரனுக்குப் பெரும் விழாச் செய்தான். அதனான் மகிழ்ந்த இந்திரன் கண் எதிரில் வெளிப்பட்டுச் சண்டமகாசேனனை நோக்கி , “வேந்தே” நின்பால் மிகவும் மகிழ்ச்சியுடையனாயினேன். ஆதலின் , என் அருளால் உருவத்திலும் , குணத்திலும் ஒப்புவமையற்ற பெண் மகவை யடைவாய்” என்று கூறினான் . அங்ஙனமே அவற்கு ஒருபெண்மணி பிறந்தாள் . அப்பெண் மகவு பிறக்குங்கால் விண்ணில் அசரீரியாக “இப் பெண்மணியின் வயிற்றிற் காமவேளின் கூறாக ஒரு புதல்வன் உண்டாவான் . அவன் வித்தியாதரர்களின் சக்கரவர்த்தியாவான் “ என்னும் சொற்கள் எழுந்தன. சண்டமகாசேனன் அச்சொற்களைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி யெய்தினான் . அதன்பின் , வாசவன் அருளாற் றரப்பட்டமை யான் அவளுக்கு வாசவதத்தை என்னும் காரணப் பெயரிட்டான் . அப்பெண் முற்பக்கத்துத் திங்களஞ் செல்வன் கலைபோல முறையே உறுப்புக்கள் வளரப்பெற்றுத் தந்தையின் கண்களை இன்புறுத்தினாள் .
இங்ஙனம் மிக்க பெருமையினையுடைய சண்டமகாசேனன் எய்தற்கரிய வலிமையுடைமையால் அச்சமிலனாய் எப்பொழுதும் பிறரால் வெல்லுதற்கு அரியனாயினான் .மேலும் இவன் தன்மகளை நினக்குத் தருதற்கு விரும்புகின்றான் . ஆயினும் மானத்தால் இரத்தற் கேடு வருங்கொலோ வென்னும் “அச்சத்தால் முதலில் வேண்டிக் கோடற்கு விரும்பவில்லை . வாசவதத்தைக்கு நீயே மணவாளன் ஆவாய் என்னு மிதங்கட் சிறிதும் ஐயமின்று” என்று இங்ஙனம் கூறி யெளகந்தராயணன் ஒழிவெய்தினான். இதனைக் கேட்டு உதயனன் வாசவதத்தையையே இடைவிடாது நினைவு கூர்ந்து சில நாட்களைக் கழித்தான் .
வெண்பா
விண்ணோ ரிறையருளான் மேதினியி லுஞ்சைநகர்க்
கண்ணா ரெழிலெல்லை காட்டுதல்போ — னண்ணிய
வாசவ தத்தை வரலாற் கேட்டின்ப
மாசலதி தோய்ந்தான் மனம் .
நாங்காம் வகுப்பு
(சிறைப்படல்)
இஃது இங்ஙனமிருக்க வற்சதேயத் தரசனது தூது மொழியை ஏற்றுக்கொண்டு உச்சயினி நகரத்தை யடைந்த தூதன் , உதயனன் ஈந்த மறுமொழியைச் சண்டமகாசேனன் பக்கல் உள்ளவாறு தெரிவித்தான் . அதனைக் கேட்ட சண்டமகாசேனன் “மானமுடையாரில் தலைசிறந்தவன் உதயனன் . நம் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளான் . வாசவதத்தையை அவன்பக்கல் அனுப்புவேமாயின் , அது நம்மை மிகவும் சிறுமைப்படுத்துவ தாகும் .ஆதலின் , இப்பொழுது வேறு சூழ்ச்சிகளால் உதயனனை நம் வயப்படுத்துதலே தக்கதாகும் . “ என்று இவ்வாறு கருதினான் . இங்ஙனந் துணிந்து படைத்தலைவனையழைத்து “மிகப்பெரியதொரு எந்திரயானை யைச் செய்விப்பாயாக” என்று கட்டளையிட்டான் . அப்படைத் தலைவன் நிபுணர்களான சிற்பிகளாற் பொறிக்களிறு ஒன்றை இயற்றுவித்தான் . சண்டமகாசேனன் பொறியான் இயன்ற யானையின் உள்ளே பல போர்வீரர்களை மறைத்துவைத்து வித்தியவனத்தில் திரியச்செய்தான் . யானை பிடிப்பதில் மிக்க அவாவுடையனாகிய உதயனன்பால் வேடர்கள் வந்து “வேந்தர் பெரும! விந்தியவனத்தில் பெரிய உருவத்தினையுடைய மதயானை ஒன்று திரிகின்றது ; இத்தகைய யானை இதுகாறும் எங்களான் முன்னர்க் காணப்படாத தொன்று. பெரிய உருவத்தால் மலைபோலக் காணப்படுகின்றது . “ என்று இங்ஙனந் தெரிவித்தனர் . இதனைக் கேட்டு உதயனன் பேருவகையால் அவ்வேடவர்களுக்கு நூறு பொற்காசுகளைப் பரிசிலாக உதவினான் . பின்னர்ச் “சண்டமகாசேனனுக்கு ‘நடைமலை’ என்னும் பெரிய மதயானை ஒன்று இருக்கின்றது . அதற்கு எதிராக இவ்யானையைக் கொணர்வேன் . அதனாற் சண்டமகாசேனன் எளிதில் வெல்லுதற்கு உரியன் ஆவான் “ என்று இவ்வாறு மனத்திற் கருதினான் .
இங்ஙனம் , மனத்தின்கண் அவாவை மேற்கொண்டு பிற்றைநாட் காலையில் அமைச்சர்கள் தடுத்தும் கேளானாய் யானையைக் கவர்தற் பொருட்டு வேடர்கள் சூழ்வரச் சென்றான் . அமைச்சர்கள் கணிதம் வல்லோரை யழைத்து ,அவன் புறப்பட்ட நேரத்தின் பயனை வினவினர் . அக்கணிகன் , “சிறைக்கோட்டம் புகுந்து ஒரு பெண்ணை அடைவான் “ என்று தெரிவித்தனர் .விந்திய வனத்தை யடைந்த வற்சர் தலைவன் படைவீரர்களைக் கண்டு கலக்கமுற்று யானை ஓடிவிடும் என்னும் ஐயத்தால் அவ்வீரர்களைச் சேய்மைக்கண்ணே நிறுத்திச் சில ஏவலாளர்கள் சூழ்ந்துவரச் சுற்றினான். வசுநேமியாற் றரப்பட்ட “இன்னிசை” எனப் பெயரிய யாழைக் கேட்டற்கு இனிமை பயக்குமாறு வாசித்துக்கொண்டு உதயனன் காட்டின் இடையே உயிருள்ள யானையைப்போல மெல்ல மெல்லத் திரிகின்ற பொறியானையைக் கண்டான் .
உதயனன் மிகக் கூறிய அறிஞனாயினும் மாலைக் காலத்து இருளாற் கரிய நிறத்தினையுடைய காட்டில் அம்மாயக்களிற்றை உயிருள்ள யானையாக எண்ணி மெல்ல மெல்லச் சென்று அதன் பக்கலையடைந்தான். அப்பொறி யானையோ காதுக்கு இனிமை பயக்கும் அவ் யாழிசையால் இழுக்கப்பட்டது போல முறம் போன்ற காதுகளை மிகவும் உயர எடுத்து மீண்டும் மீண்டும் பக்கல் அணுகியும் , தூரச்சென்றும் மனிதர் இல்லாத அக்காட்டில் அரசனை நெடுந்தூரம் ஈர்த்தது .முடிவில், அப்பொறியானை யினுள்ளே யிருக்கின்ற போர்வீரர்கள் அரசன் துணையில்லா திருத்தலை யுணர்ந்து விரைந்து வெளிப்பட்டு வாட்படை ஏந்திய கையினராய் நாற்புறமுஞ் சூழ்ந்தனர் . அவர்களை வற்சர் தலைவன் பார்த்துச் சினமுற்று உறையினின் றெடுத்த வாளினால் அவ்வெல்லோரையும் வீழ்த்தினான் . இதற்கிடையில் அக்காட்டிலுள்ள புதரில் மறைந்திருந்த வேறு சில போர்வீரர்கள் விரைந்து ஓடிவந்து பிற்பக்கத்தே பிடித்துக்கொண்டனர் . ஆங்காங்கு மறைந்திருக்கின்ற பல போர்வீரர்கள் மேன்மேலும் குறிப்பான் அழைக்கப்பட்டு ஓடிவந்து அவனைப் பிணித்துச் சண்டமகாசேனன் பக்கல் சேர்த்தனர் . சண்டமகாசேனன் வற்சர்தலைவனைச் சிறப்பாகப் பெருமைப்படுத்தி அன்போடு உபசரித்தான் . பின்னர் , “ வேந்தே! நின் மனத்தில் துன்புறல் ஒழிக. நின்பால் எனக்குப் பகையின்று. என் புதல்வி வாசவதத்தை இசைக்கலை பயிலுதற்கு விருப்பமுடையவளாக இருக்கின்றாள் . அவளைப் பயிற்றுவித்தல் வேண்டும் . அதன்பின், நலம் எய்துவாய் “ என்று இங்ஙனம் கூறினான் .
உச்சயினி நகரத்திலுள்ள மக்கள் உதயனன் பாற் பெரிதும் அன்பு பூண்டு ஒழுகினர் . அதன்பின் சண்டமகாசேனன் ஒரு சமயம் உதயனனுக்கு அமங்கலத்தைச் செய்யவுங்கூடுமென்று ஐயமுற்றமனத்தினராய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர் . இங்ஙனம் நகரத்து மக்களிடைப் பெருகிவரும் ஐயப்பாட்டைச் சண்டமகாசேனன் , ஒற்றர்களால் உணர்ந்து , அவர்களையழைத்து “எனக்கு வற்சர்தலைவன்பாற் பகைமையின்று . அவனோடு நட்புரிமை கோடற்கே இவ்வுபாயம் என்னான் மேற்கொள்ளப் பட்டது . ஆதலின் , என்பால் நுங்கட்கு வேறு வகையான வேறுபாடு வேண்டா” என்று இவ்வாறு தெரிவித்தான் . பின்னர்ச் சண்டமகாசேனனால் ஏவப்பட்ட வாசவதத்தை உதயனன் பக்கல் எய்தி இசைக்கலை பயிலுதற்குத் தொடங்கினாள் . வாசவதத்தை வற்சராசன் இவ்விருவர்பாலும் முன்னரே முளைத்தெழுந்த காதற்கிழமையானது இப்பொழுது துளிர்த்தெழுந்தது .
வெண்பா
பொறியா நியன்ற புழைக்கைமா வீர்ப்ப
நெறியா ருதயனன்சீர் நீங்காச் — சிறைசேர்பு
மாசிரியுங் காதன் மடவரற்கி யாழ்பயிற்றும்
ஆசிரிய னாயினா னங்கு .
ஐந்தாம் வகுப்பு
(சிறை வீடல்)
இதற்கிடையில் , கெளசாம்பி நகரத்தில் “உதயனன், பகைவனாகிய சண்டமகாசேனன் கையில் அகப்பட்டான்” என்று பெரிய கிளர்ச்சி உண்டாயிற்று . அப்பொழுதே படைகளைச் செலுத்தி உச்சயினி நகரத்தைத் தாக்க வேண்டும் “ என்று நனாபக்கங்களிலும் நகரத்து மக்கள் பேரொலி செய்தனர் . அப்பொழுது அமைச்சர்களுள் ஒருவனாகிய உருமண்வான் எல்லோரையிம் அழைத்துச் “சண்டமகாசேனனைப் படைகளால் வெற்றிகோடல் அரிது . அவன் சண்டகாதேவியின் திருவருளால் அளவற்ற வலிமையை அடைந்துளான் .இன்னும் உச்சயினி நகரத்தை எதிர்த்துச்செல்லுவேமாயின் அவன் ஒருவாறு உதயனனுக்குக் கேடு விளைவிக்கக்கூடும் . ஆதலின் , இப்பொழுது எதிர்த்துச் சேறல் தக்கதன்று இக்காரியம் நன்கு ஆராய்ந்து நுண்ணறிவாற் சாதிக்கத்தக்கது,” என்று இங்ஙனம் கூறினான். அதன்பின் நுண்ணறிவுடைய யெளகந்தராயணன் “ஓ நகரத்தவர்களே ! நீங்கள் எல்லோரும் இவ்விடத்திலேயே இருத்தல் வேண்டும். உருமண்வான் அரசியற் காரியங்க ளெல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவான் . யானோ வசந்தகனைத் துணையாகக் கொண்டு இவ் விடத்தினின்றும் புறப்பட்டு என் அறிவின் மாட்சியால் உதயனனைப் பகைவன் கையினின்றும் விடுவித்து இங்குக்கொணர்வேன் . இதன்கட் சிறிதும் ஐயமின்று . வேண்டுங் காலத்தில் வெளிப்படுத்துதற்குரிய மறைத்துக்கோடன் முதலிய விஞ்சைகள் என்பால் இருக்கின்றன “ என்று இவ்வாறு சொல்லினான் . இங்ஙனம் சொல்லிவிட்டு யெளகந்தராயணன் எல்லோரையும் உருமண்வான் கையிற் சேர்த்து வசந்தகனோடு உச்சயினி நகரத்தை நோக்கிப் புறப்பட்டான் . விந்திய வனத்திற்குச் சென்று உதயனனுடைய அன்புமிக்க நண்பனாகிய “புளிந்தகன்” என்னும் பெயரினையுடைய வேடர் தலைவனைக் கண்டான் . அவ்வேடன் யெளகந்த ராயணனை விருந்தினர் முறையில் உபசரித்தான் . யெளகந்தராயணன், தான் செய்ய விரும்பிய காரியங்கள் எல்லாவற்றையும் அவர்க்குச் சொன்னான் . முடிவில் “வற்சர் தலைவன் மீண்டுவருங்கால் அவனை நீ காத்தல் வேண்டும் . பெரிய படைவீரர்களோடு நீ இவ்விடத்திலேயே விழிப்புடையவனாக இருத்தல் வேண்டும் . ,” என்று இங்ஙனம் வேண்டினான். புளிந்தகன் , “அங்ஙனமேயாக “ என்று உடன்பட்டான் . அதன்பின், யெளகந்தராயணன் வசந்தகனோடு புறப்பட்டு உச்சயினி நகரத்திற்கு அணிமையில் அடைந்தான் , அவ்விடத்தில் அஞ்சத்தக்க உருவினையுடைய பலவகை வேதாளங்கள் சூழ்ந்த சுடலையுட் புகுந்தான் . அங்கு “யோகேசுவரன்” என்னும் பெயரினையுடைய வேதாளம் ஒன்று யெளகந்தராயணனுக்கு நன்புடையதாயிற்று . யெளகந்தராயணன் வேண்டு கோட்கிணங்கி யோகேசுவரன் “உருவமாற்று” என்னும் பெயரினையுடைய விஞ்சையை அவற்கு உபதேசித்தது . அவ்விஞ்சையால் அப்பொழுதே வேற்றுருக்கொண்ட யெளகந்தராயணன் , யாண்டு முதிர்வும் குறுமையும் பிறழ்ச்சியுணர்வும் உடையவனாயினான். அவ்விஞ்சையாலேயே வசந்தகனையும் பருத்த வயிறும் வேறுபட்ட முகமும் உடையவனாகச் செய்தான். அவனை வாயிலின்கண் நிறுத்தி யெளகந்தராயணன் அரண்மனையினுட் புகுந்தான் . அந் நகரத்துள்ள சிறுவர் எல்லோரும் யெளகந்தராயணனை மருளன் என்று எண்ணிக் கைகொட்டிப் பேரொலி செய்து சூழ்ந்தனர் . அதற்கு ஒத்தவாறே யெளகந்தராயணனும் ஆடிப்பாடி அச்சிறார்களுக்குக் குதூகலத்தை விளைவித்தான் . இதனை வாசவதத்தை கேட்டுத் தோழியை உய்த்து யெளகந்தராயணனை உவளகத்திற் கொணர்வித்தாள் .
பித்த வேடங்கொண்ட யெளகந்தராயணன் அவ்விடத்திற் பகைவன் வயப்பட்டிருக்கின்ற உதயனனைக் கண்டு நேத்திரங்களினின்றும் மிகவும் கண்ணீர் ஒழுக்கினான் . உதயனன் , அவயவக் குறிப்புக்களால் யெளகந்தராயணனை வேற்றுருவில் மறைந்திருப்பவனாக அறிந்தான் . அதன்பின் , யெளகந்தராயணன் விரைந்து யோக வன்மையால் அவ்விடத்திலேயே மறைந்திருந்தான் . உதயனற்கு மாத்திரம் கண்ணுக்குப் புலனாமாறு இருந்தான் . அங்குள்ள எல்லோரும் “இப்பித்தன் யாண்டுச் சென்றான் “ என்று வியப்பெய்தினர் . உதயனன், யெளகந்தராயணன் தன் கட்புலனுக்கு மாத்திரம் தெரிய இருத்தலைக் கண்டு , அவனொடு அளவளாவிப் பேசுதற்கு உரிய அவகாசம் எய்துதற்கு வாசவதத்தையை நோக்கிப் “பனுவலாட்டி (சரசுவதி) பூசைக்குறிய பொருள்களைக் கொணர்க” என்று கட்டளையிட்டான் . அவள், “அங்ஙனமே” என்று தோழிகளோடு புறம் போந்தாள் .
இதற்கிடையில் யெளகந்தராயணன் ‘விலங்குமுறித்த்சல்’ “வாசவதத்தையை வசீகரித்தல்” இவை முதலிய யொக விஞ்சையின் திறமைகளை உதயனற்கு உபதேசித்து , வேற்றுருக்கொண்டு வாயிலின் கண் இருக்கின்ற வசந்தகனையும் தெரிவித்து விரைவில் வெளிச்சென்றான்.
பின்னர் , வாசவதத்தை பூசைக்குரிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு வந்தாள் . உதயனன் அவற்றைக்கொண்டு சொற்கிறைவியை அருச்சித்தற்குத் தொடங்கினான் . அப்பூசையில் , “தக்கிணைப் பொருள் பெறுதற்குரிய அந்தணன் ஒருவன் வாயிலின்கண் இருக்கின்றான் . அவனை இங்கு அழைத்து வருக “என்று கட்டளையிட்டான். வாசவதத்தை , வேற்றுருக் கொண்டு வாயிலின்கண் இருக்கின்ற வசந்தகனை உள்ளே புகுவித்தாள் . அவன் தக்கினைப் பொருளைப் பெற்றுக்கொண்டு பகைவன் வயப்பட்டி ருக்கும் அரசனைப் பார்த்து , அதனால் உண்டாய பெருந்துன்பத்தை உள்ளே அடக்குதற்கு ஆற்றாதவனாய் வாய்திறந்து அழுதான் . உதயனன் , “இவ்வசந்தகன் ஒரு சமயம் துன்பமிகுதியாற் காரியத்தை மறந்து உண்மையை வெளிபடுத்துவாங்கொல்,” என்னும் ஐயமுடையவனாய் , “ஓ அந்தண! நோயால் வேறுபட்ட உடலினையுடைய நின்னை விரைவிலேயே இயற்கை நிலையுடையவனாகச் செய்வேன். அழுதல் வேண்டா . இனி , இவ்விடத்திலேயே என் முன்னிலையில் இருப்பாயாக” என்று இவ்வாறு கூறினான். வசந்தகன் “அங்ஙனமே” என்று கூறி உடலின் வேற்றுமையால் பெண்பாலர்க்கு விளையாட்டுப் பொருள் போல இருந்து , இடைவிடாது குதூ கலமடைந்துவரும் வாசவதத்தையின் மனத்தை இன்புறுத்திக் கொண்டிருந்தான் .
இங்ஙனம் சின்னாட் சென்றதும், வாசவதத்தை வற்சர் தலைவன் பாற் காதலுடையளாயினாள் . அயக்காந்தத்தால் ஊசி இழுக்கப்படுதல் போல அவ்வுதயனது உருவ முதலிய குணங்களால் இழுக்கப்பட்ட வாசவதத்தை மனத்தால் அவனையே தனக்குக் கைப்பிடி நாயகனாக வரித்தாள் . பின்னர் , யெளகந்தராயணன் இந்நிகழ்ச்சிகளை யறிந்து பிறர் காணாதவாறு வந்து உதயனன் முன்னின்று , “வேந்தர் பெரும! சண்டமகாசேனனால் வஞ்சிக்கப்பட்ட நீ தகுதியில்லாததான பிறர் வயப்பட்ட இந்நிலையை அனுபவிக்கின்றாய் .சண்டமகாசேனன் வாசவதத்தையைக் கொடுத்து நின்னைச் சிறப்புச் செய்து சிறையினின்றும் விடுவித்தற்கு விரும்புகின்றான் . ஆதலின் , அக்காலத்தை எதிர்பார்த்து நீ இங்கிருத்தல் தக்கதன்று . இனி , வாசவதத்தையை வலிந்து பற்றி இங்கிருந்து வெளிபடுதலே நல்லதாகும் . அங்ஙனம் செய்யின் நம்மை வஞ்சித்தவர்க்கு எதிர் செய்ததாகும் . அந்நிகழ்ச்சியில் இச்சூழ்ச்சியானது என்னாற் கருதப்பட்டது . சண்டமகாசேனன் வாசவதத்தைக்குப் “பத்திரவதி” என்னும் பெயரினையுடைய பெண் யானையைக் கொடுத்திருக்கின்றான் .அது மிகவிரைவிற் செல்லுந் திறமை வாய்ந்தது . அதற்குரிய யானைப்பாகன் “ஆசடகன்” என்னும் பெயரினையுடையான் ஒருவன் உளன். அவனை யான் மிகு பொருள் கொடுத்து நம் விருப்பத்திற்கு அநுகூலமுடையவனாகச் செய்திருக்கின்றேன் . மேலும் , இவ்விடத்தில் “மகாமாத்திரன்” என்னும் பெயரினையுடைய குதிரைச்சாலைத் தலைவன் ஒருவன் இருக்கின்றான் . மிக்க திறமை வாய்ந்த அவன் களிப்பு மயக்கத்தால் அறிவு கெடும் வண்ணம் அளவின் மேம்பட்ட கள்ளினை அவற்குக்கொடுத்தல் வேண்டும் . இங்ஙனம் முன்னரே செய்யத்தக்க வைகளைச் செய்து நள்ளிரவிற் பிறராற் பார்க்கப்படாமல் வாசவதத்தையோடு யானைக்கன்றின்மேல் ஏறி , அன்புமிக்க காவலாளர் சூழ்வர , நகரத்தினின்றும் வெளிச்செல்லால் வேண்டும் . யானோ , முன்னர்ச்சென்று “புளிந்தகன்” என்னும் பெயரினையுடைய நின் நண்பனோடு கூடி , வழியிடை நேரக்கூடிய இடையூறுகளைப் போக்கி நின் வரவை எதிர்பார்த்திருப்பேன்” என்று இங்ஙனம் கூறினான் .
இவ்வாறு உதயனற்குச் செய்யத்தக்கவைகளை உபதேசித்து யெளகந்தராயணன் வெளிச்சென்றான் . உதயனன் சிறிது நேரம் நினைவு கூர்ந்து செய்யத் தக்கவைகளைப்பற்றி நன்றாக ஆராய்ந்தான். பின்னர் , வாசவதத்தை அவன் பக்கலில் வந்தாள் . அவளோடு நெடுநேரம் பலகதைகளைச் சொல்லி அவள் மனத்தைப் பலவாறு சோதித்து முடிவில் , “நம் செயற்கு இவள் துணை நிற்பவள் ஆவாள் “ என்று துணிவுற்றான் . அவள்பால் நம்பிக்கை மேற்கொண்டொழுகும் இவ்வுதயனன் அவட்குத் தான் செய்யவிரும்பிய காரியங்களைப் பற்றிக் கூறினான்.அவள், மகிழ்ச்சியோடு உதயனனைப் பின்றொடர உடன்பட்டாள் . பின்னர் , “ஆசாடகன்” என்னும் பெயரினையுடைய யானைப் பாகனை யழைத்து “பத்திரவதி” என்னும் யானையைப் பிரயாணத்திற்குச் சித்தம் செய்து இவ்விடத்திலேயே நிறுத்தி வைத்துப் பிரயாண காலத்தை எதிர் பார்த்திருத் தல் வேண்டும் “ என்று இவ்வாறு கட்டளை யிட்டாள் . அதன்பிறகு , உதயனனது விருப்பத்திற் கிணங்கிக் கடவுட் பூசையைக் காரணமாகச் செய்து குதிரைச்சாலைத் தலைவனாகிய மகாமாத்திரனுக்கும் மற்றை யானைப்பாகர்களுக்கும் அளவிகந்த கள்ளைக் கொடுப்பித்தாள் . அதனாற் களித்து மயங்கிய எல்லோரும் அறிவிழந்தவராயினர் .
பின்னர் , நள்ளிரவில் உதயனன் ‘இன்னிசை’ என்னும் யாழை எடுத்துக்கொண்டு யெளகந்தராயணன் உபதேசித்த யோக வன்மையால் விலங்கை முறித்து , அன்புமிக்க காவலாளர்கள் தன்னைச் சூழ்ந்துவர , வசந்தகனோடு “பத்திரவதி” என்னும் யானையில் இவர்ந்தான் . வாசவதத்தையும் மறைவான நிகழ்ச்சிகளையும் உள்ளே அடக்கி வைத்திருக்கும் ‘காஞ்சனமாலை’ என்னும் பெயரினையுடைய தோழியோடு அவ் யானையிலேயே ஏறினாள் . அந்நால்வர்க்கும் முன்னர் ஐந்தாவனாக யானைப்பாகனும் அதன்கண் ஏறினான் . இவ்வாறு ஐவர்களையும் ஏற்றிக்கொண்டு ‘பத்திராவதி’ என்னும் யானை மிக்க வேகத்தோடு புறப்பட்டது. .
அதன்பின், வீரபாகு , தாளபடன் என்னும் இரண்டு வாயில் காவலர்கள் வழியிற்றடுத்தனர் . உதயனன் அவ்விருவரையும் வாட்படையால் வீழ்த்தி மிக்க வேகத்தோடு நகரத்தினின்றும் வெளிப்பட்டான் . உதயனன் நெடுந்தூரம் கடந்ததும் , காவலாளர் பெருங்கிளர்ச்சி செய்தனர் . அரசனிடத்தும் அறிவித்தனர் . வேந்தன் , வாசவதத்தையைக் கைப்பற்றி ஓடுகின்ற உதயனனைப் பிடிக்குமாறு ‘பாலகன்’ என்னும் பெயரினையுடைய தன் புதல்வற்குக் கட்டளையிட்டான். அவன் பத்திரவதியின்பால் அன்புமிக்க ‘நடைமலை’ என்னும் களிற்றரசியின்மேல் இவர்ந்து பின்றொடர்ந்து ஒடினான் . உதயனன் பின்புறத்தே தொடர்ந்து வருகின்ற பாலகன்பால் அம்பு மாரிகளை இறைந்தான் . ‘நடைமலை’ என்னும் யானை அப்பத்திரவதியைக் கண்டு அவாவோடு வேகந் தணிந்து மெல்ல மெல்ல அதனைத் தொடர்ந்து சென்றது .
இதற்கிடையில் ‘கோபாலன்’ என்னும் பெயரினையுடைய சண்டமகாசேனனுடைய இரண்டாம் புதல்வன் தந்தையின் கருத்திற் கிணங்கிப் பின்புறத்தே விரைந்து போந்து பாலகனைப் போரினின்றும் திருப்பினான் . பாலகன் திரும்பியதும் வற்சர் தலைவன் அச்சமின்றிச் சென்றான் . பின்னர், விந்திய வனத்தின் நடுவண் அடைந்தான் ..இரவு விடிந்தது . அப்பொழுது நெடுந்தூரம் வழிநடத்தலால் நீர் வேட்கை மிக்க பத்திரவதி ஆங்குள்ள தடாகத்தில் நீர் உண்டது . அக்குடிநீரின் குற்றத்தால் அப்பொழுதே அவ்யானை மரணம் எய்திற்று. உதயனன் வாசவதத்தையோடு மிகவும் துன்புற்று , எதிர்பாராமல் உண்டாகிய ஆகாயச் சொல்லாகிய “அரச! யான் ‘மாயாவதி’ என்னும் பெயரினையுடைய வித்தியாரப் பெண் ஆவேன் . இதுகாறும் சாபமாகிய குற்றத்தாற் பெண்யானை ஆயினேன். நினக்கு இவ்வுதவியைச் செய்து அச்சானைபதினின்றும் விடுதி பெற்றேன் .இதற்குப் பின்னரும் நினக்குப் பிறக்கும் புதல்வனுக்கும் உதவி செவேன் “ என்னும் இதனைக் கேட்டான் .
பின்னர் , வற்சராசன் விந்தியமலையின் சாரலில் இருக்கின்ற புளிந்தகனுக்குத் தன் வரவைத் தெரிவித்தற் பொருட்டு வசந்தகனை ஏவினான் . பின்னர் அவ்விடத்திலேயே வாசவதத்தையோடு கால்களால் நடந்து செல்கின்றைவனைக் காட்டிற் றிரியும் நூற்றைந்து திருடர்கள் வளைத்தனர் . வில்லை மாத்திரம் துணையாகவுடைய உதயனன் வாசவதத்தையின் கண் முன்னரே அவர்கள் எல்லோரையுங் கொன்றான் . பின்னர் , மற்றைத்திருடர்கள் ஒருங்குகூடி அவனை எதிர்த்து ஓடிவந்தனர் . இதற்கிடையிற் புளிந்தகன் , வசந்தகன் வழி காட்ட யெளகந்தராயண னோடு அவ்விடத்தை அடைந்தான் . அவன் அக்கள்வர்களைத் தடுத்து வற்சர்தலைவனை வணங்கி வாசவதத்தையோடு தன் இருப்பிடத்தை அடைவித்தான் .உதயனன் அவ்விடத்திலேயே அவ்விரவைக் கழித்தான் . பின்னர் , பிற்றைநாட் காலையில் யெளகந்தராயணன் போக்கிய ஒற்றனால் எல்லா நிகழ்ச்சிகளையும் உணர்ந்த ‘உருமண்வான்’ என்னும் படைத்தலைவன் படைவீரர்கள் எல்லோருஞ் சூழ்ந்துவர அவ்விடத்தை எய்தினான் . உதயனன் உச்சனியின் நிகழ்ச்சிகளை அறிதற்பொருட்டு அவ் விந்தியவனத்திலேயே சிறிது காலந் தங்கினான் .
வெண்பா
சொற்றிறனார் யெளகந்த ராயணன்செய் சூழ்ச்சியினாற்
றுற்று மிருளிற் றுணைப்பிடிக்கண் — அற்புமிகு
தேவி யுடனிவர்ந்து சென்றான் சிறையொரீஇ
யாவியினு மானமுயர் வால் .
ஆறாம் வகுப்பு
(வாசவதத்தை திருமணம்)
இதனிடையில் உச்சயினியின் நிகழ்ச்சிகளை யறிதற் பொருட்டு யெளகந்தராயணன் போக்கிய வணிகன் ஒருவன் உச்சயினி நகரத்தையடைந்து எல்லாநிகழ்ச்சிகளையுமுணர்ந்து திரும்பிவந்து உதயனனை நோக்கி “வேந்தர் பெரும! சண்டமகாசேனன் நின்பால் மிகவும் அன்புடையவனாக இருக்கின்றான் . நின்னைக் குறித்து ஒரு தூதனை விடுத்தான். அத்தூதன் தூதுமொழியை மேற்கொண்டு என்னோடு புறப்பட்டான் .யானோ செய்திகளைத் தெரிவித்தற்பொருட்டு விரைந்து வந்தேன் “ என்று இவ்வாறு சொல்லினான் . இதனைக் கேட்டு வற்சர் தலைவன் ஆனந்த பரிதனாய் வாசவதத்தைக்கு உணர்த்தினான் . அவள் பேருவுகைக்கடலுண் மூழ்கினவளாய் மணத் திருநாள் எப்பொழுது நேரும் என்று மனத்தாற் சிந்தித்துக்கொண்டிருந்தாள் பின்னர்ச் சண்டமகாசேனனு டைய தூதன் வந்து உதயனனை வணங்கி , “பெரும! அரசர் பெருமானாகிய சண்டமகாசேனன் நட்போடு என் முகமாகத் தெரிவிக்கின்றான் .அஃதாவது ‘முன்னரே வாசவதத்தைக்கு நீயே ஒத்த மணவாளன் என்று எனக்கு விருப்பம் இருந்தது . அவளை நீ பெற்றுக்கொள்ளுதற்கே என்னால் இச்சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது . ஆதலின் , என் விருப்பமே நின்னால் நிறைவேற்றப்பெற்றது . என் புதல்வன் கோபாலகன் விரைவிலேயே அவ்விடத்தில் வந்து நுங்கள் இருவீர்க்கும் விதிப்படி மணவினையை நிறைவேற்றுவான் ‘ என்பதாம் “ என்றிவ்வாறு தெரிவித்தான் . உதயனன்பால் தெரிவித்துவிட்டு அத்தூதன் வாசவதத்தைக்கும் தந்தையின் தூதுமொழியை அறிய செய்தான் .
பின்னர் , வற்சர் தலவன் வாசவதத்தையோடு கெளசாம்பி நகரத்தைக் குறித்துப் புறப்பட்டான் .அத்தூதனையும் புளிந்தகனையும் நோக்கி “ நீவிர் இருவீரும் இவ்விடத்திலேயே இருந்து கோபாலகனுடைய வரவை எதிர்பார்த்தல் வேண்டும் . அவனை யழைத்துக்கொண்டு கெளசாம்பி நகரத்தை அடைவீர்களாக . என்று இவ்வாறு கட்டளையிட்டான் . கடல் அலைகளை ஒப்ப யான்முன் யான்முன் என்று புறப்பட்ட அளவிறந்த படைவீரர்கள் சூழ்வர உதயனன் இரண்டு மூன்று நாள்வரை வழி கடந்து காலப் பொழுதிற் கெளசாம்பி நகரத்தை யடைந்தான் . அப்பொழுது நகரத்து மக்களனைவரும் மிக்க குதூகலமுடையவராய் நகரத்தைத் தோரண முதலியவைகளால் அலங்கரித்து உதயனனது வரவைப் பற்றி மகிழ்ச்சி கூர்ந்தார்கள் . யாவரானும் புகழ்ந்து பாராட்டப்பெற்ற கட்டழகு வாய்ந்த வாசவதத்தையைக் காணும் அவாவினராய் அந்நகரத்து மகளிர் அனைவரும் வீட்டின் மேற்றளத்தில் ஏறிச் சாளரங்களில் வரசையாக நின்றனர் . அந்நகரத்தவரனைவராலும் சிறப்போடு நல்வரவேற்கப்பட்ட வற்சர்தலைவன் வாசவதத்தையொடு தன் அரண்மனையுட் புகுந்தான் .
பின்னர்ச் சிலநாட் சென்றதும் வாசவதத்தையின் உடன்பிறந்தானாகிய கோபாலகன் தந்தையின் கட்டளைப்படி விந்திய வனத்தை யடைந்து தூதனையும் புளிந்தகனையும் உடன் அழைத்துக் கொண்டு கெளசாம்பி நகரத்தை அடைந்தான் . பின்னர் , நன்மை மிக்க முகூர்த்தத்தில் வாசவதத்தைக்குப் பாணிக்கிரகண விழாவை நிறைவேற்றி னான் . அவ்வமயத்தில் அளவிறந்த அரதனங்களையும் உதயனற்கு ஈந்தான். மற்றை வேந்தர்களும் பல வகைக் கையுறைகளைக் கொணர்ந்தனர் . இவ்வாறு எல்லா நண்பர்களாலும் , சுற்றத்தாராலும் அன்போடு சேர்ப்பிக்கப் பட்ட பொருள்களால் அவ்வுதயனனுடைய பொருளுறை இல்லங்கள் நிறைந்தவாயின. அதனால் . அவன் குபேரனை ஒத்தான் .
பின்னர் , விதிப்படி மணவினை நிறைவேறியதும் உதயனன் கோபாலகனையும் புளிந்தகனையும் தானே நன்கு உபசரித்தான் . அங்கு வந்த மற்றை வேந்தர்களனைவரையும் உபசரித்தற்கு யெளகந்தராயணனை யும் , உருமண்வானையும் நியமனஞ் செய்தான் . அவ்விருவரும் எல்லா மன்னர்களையும் “ஒவ்வொருவரும் தாம் தாமே மற்றையோரினுஞ் சிறந்த அன்பினாற் பெருமைப் படுத்தப்பட்டடேம் “ என்று எண்ணுமாறு பெருமைப்படுத்தினர் .
பின்னர் , உதயனன் யெளகந்தராயணனையும் உருமண்வானை யும் வசந்தகனையும் ஆடை அணி முதலியவைகளாற் பலவாறு பெருமைப் படுத்தினான் . வாசவதத்தை தனக்கு ஒத்த காதலனை அடைந்து அவனோடு உம்பருலகத்தினும் பெறுதற்கரிய போகங்களை நுகர்ந்து இன்புற்றிருந்தாள்.
வெண்பா
ஐம்பொறிக்கு மின்ப மளிக்கு மமுதமென
நம்பு மடவரலை நன்றுமணந் – திம்பரிடைக்
கற்பு முறையிற் கலந்தின்ப மெய்தினான்
பொற்பு மதனிரதி போல் .
ஏழாம் வகுப்பு
(மந்திராலோசனை)
இங்ஙனம் உதயனன் வாசவதத்தையை மணந்து அவளோடு இன்புற்று யெளகந்தராயணன் என்னும் அமைச்சன்பாலும் , உருமண்வான் என்னும் படைத்தலைவன் பாலும் , அரசியற் சுமையை வைத்துவிட்டுக் கவலையற்றுப் பல நாட்களைக் கழித்தான் .
பின்னர், ஓர் அமயம் யெளகந்தராயணன், உருமண்வானை அழைத்து மறைவிடத்திருத்தி “இவ்வுதயனன் பாண்டவ குலத்திற் பிறந்தவன் . இவர்க்குக் குலமுறைப்படி அத்தினாபுரம் தலைநகராகும் . அவ்வெல்லாம் இப்பொழுது முயற்சி யற்றிருக்கும் இவனால் விடப்பட்டன .இப்பொழுது இவன் இந்நிலத்தின் ஒரு கோடியில் அரசனாக இருக்கின்றான் .இடைவிடாது இவன், மகளிர் இன்பத்திலும் வேட்டையாடுவதிலும் அவாவுடையவனாய்க் கவலையற்றிருக்கின்றான் . அரசியல் சுமை எல்லாவற்றையும் நம் தலைக்கண் ஏற்றினான் . ஆதலின், இவன் இந்நிலவுலகம் எல்லாவற்றிற்கும் சக்கரவர்த்தியாகும் வண்ணம் நாம் முயல வேண்டும் .இங்ஙனம் செய்வோமாயின் அரசன்பால் நமக்குள்ள அன்பை வெளிப்படுத்தியதாகும். இவ்விடத்தில் மகததேயத் தரசன் பகைவனாக இருக்கின்றான் அவற்குப் பதுமாவதி என்னும் பெயரினையுடைய பெண்மணி ஒருத்தியுள்ளாள் . அவள் நம் உதயனர்க்கு மனைவியாவாளாயின் மகத தேயத்தரசனும் நாம் செய்ய விரும்பிய காரியத்திற்குத் துணைநிற்பான் . அப்பதுமாவதியை முன்னர் வற்சநாயகனுக்காக யான் தூதன்முகமாகக் கேட்டதுமுண்டு . அதற்கு மகத தேயத்தரசன் “வற்சராசனுக்கு வாசவதத்தையின்பாற் பெரிதும் அன்புண்டு என்பது யாவரும் உணர்ந்ததே .ஆதலின் உயிரினுஞ் சிறந்த அன்பு மிக்க பதுமாவதியை அவ்வுதயனற்குக் கொடேன் “ என்று இவ்வாறு தூதன்முகமாக மறுமொழி விடுத்தான் . “வற்சராசனும் வாசவதத்தை இருக்குங்கால் வேறொருத்தியை மணஞ்செய்துகொள்ளான் . ஆதலின் இச்செயலில் நமது அறிவின் மாட்சியைக் காட்டல் வேண்டும். வாசவதத்தையைப் பிறர் அறியாவாறு ஓரிடத்தில் மறைத்து வைத்து அவள் உறையுளைத் தீக்கிரையாக்குதல் வேண்டும் .அதன்பின் ‘வாசவதத்தை எரிந்து நீறாயினாள்’ என்று உலகவதந்தியைச் செய்தல் வேண்டும் . இங்ஙனஞ் செய்வோமாயின் மகததேயத்தரசன் பதுமாவதியை வற்சராசற்குக் கொடுத்துவிடுவான். வற்சராசனும் மனம்புரிந்து கொள்ளுவான். அதன்பின் மகததேயத்தரசன்பாற் றுணைநிற்பாராகிய ஏனைய அரசர்கள் எலோரும் இவன்வயப்படுவார்கள் . அதனால் இவன் நிலவுலகம் எல்லாவற்றிற்கும் சக்கரவர்த்தியாவான் . என்று இவ்வாறு சூழ்ந்தான் .
அதனைக் கேட்டு உருமண்வான் “இச் சூழ்ச்சி ஒருவாறு கேடுவிளைக்கவுங் கூடுமென்று அஞ்சுகின்றேன் . காரியம் நிறைவேறாவிடின் அரசற்குக் கோபம் விளையும் . சனங்களும் நம்மைப் பரிகசிப்பார்கள் . வாசவதத்தையின் பிரிவால் அரசற்கு ஒருவாறு அமங்கலம் உண்டாகவுங்கூடும் .” என்று இங்ஙனம் கூறினான் .
அதனைக் கேட்ட யெளகந்தராயனன் பின்வருமாறு கூறுவானாயினான் . “வேந்தர்கள் , தம்வயத்தார் , அமைச்சர்வயத்தார் என இருவகைப்படுவர் . தம்வயத்தராவோர் தம் அறிவினாலேயே எல்லாச்செயல்களையும் நிறைவேற்றுவார் . நம்மன்னனோ அமைச்சர் வயத்தன் ஆவான் . இவர்குச் செய்யத்தக்கவைகளில் அமைச்சர் அறிவே புகலிடமாகும் . நாம் முயன்றிலேமாயின் இவற்கு எல்லாம் அவிந்துபோம் . இனி நாம் இப்பொழுது சூழ்ச்சியினாலேயே காரியத்தை நிறைவேற்றல் வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்யாமல் வாளாவிருப்போமாயின் அரசன் நம்மை அவமதிப்பான் . மனத்திட்பமுடைய வற்சராசன் வாசவதத்தையின் பிரிவிலும் மனவுறுதி மேற்கொண்டிருப்பான் . முற்காலத்தில் தேவர்கள் இராமனால் இராவணனைக் கொல்லுதற்குச் சீதா பிராட்டியினிடத்தினின்றும் அவனைப்பிரியும்படி செய்தார்கள் . உயிரினுஞ்சிறந்த அன்புமிக்க சீதையை நீங்கியும் இராமன் மனத்திண்மையால் உயிர்தாங்கினான் . இன்னும் இவ்விடயத்திற் பழங்கதை யொன்று கேட்பாயாக .
அது, “முற்காலத்தில் உச்சயினி நகரத்தில் ‘புண்ணியசேனன்’ எனப்பெயரிய அரசன் ஒருவன் இருந்தான் . அவனை ஓர் அமயம் வலிமைமிக்க பகைவன் எதிர்த்தான். வலிமை குறைந்த புண்ணிய சேனனைப்பார்த்து , அமைச்சர்கள் ஒருங்குகூடி ஆலோசித்து அவனை ஓரிடத்தில் மறைத்து வைத்து “நம் அரசன் இறந்து போயினான்” என்று யாவரும் உணர வெளிப்படுத்தினர் . வேறொரு பிரேதத்தை இஃது அரசன் பிரேதம் என்று வெளிப்படுத்தி அதற்கு முறைப்படி இறுதிக் கடங்களைச் செய்தனர் . பின்னர் , பகைவன்பக்கல் எய்தி “இவ்விராச்சியம் அரசனில்லாததாயிற்று . நீயே எங்களுக்கு வேந்தன் ஆதல் வேண்டும், “ என்று வேண்டினர் .அவன் இவ் வெல்லாம் உண்மையென்று நினைத்து அரசனாதற்கு உடன்பட்டான் . பின்னர்ச் சின்னாட்சென்றதும் மறைவிற் சித்தம் செய்து வைத்திருந்த படைவீரர்களால் அப்பகைவனை வேரோடு களந்து புண்ணிய சேனனை மீண்டும் அவன் இராச்சியத்தில் நிலைநிறுத்திவைத்தனர்” என்பதாம் .
ஆதலின் , “அரசநீதியாற் சூழ்ச்சிபுரிதல் இயற்கையே , இவ்விடயத்தில் ஐயுறல் வேண்டா . தெய்வம் நமக்குத் துணைநிற்கும்” என்று இவ்வாறு கூறினான் .
அதனை கேட்டு உருமண்வான் “இது துணிவாயின் வாசவதத்தையின் உடன் பிறந்தானாகிய கோபாலகனை ஈண்டழைத்து அவனோடு சூழ்ந்து இச்செயலில் இறங்கல் வேண்டும்” என்று கூறினான். யெளகந்தராயணன் “அங்ஙனமே “ என்று உடன்பட்டுக் கோபாலகன்பால் தூதனை விடுத்தான் . தூதன் விரைந்து உச்சயினி நகரத்தை அடைந்து கோபாலகனை வணங்கி “ஐய, அமைச்சர் தலைவனாகிய யெளகந்த ராயணன் நின்னைச் சிறிதும் தாழ்த்தலின்றிக் காண்டற்கு விரும்புகின்றான். என்று தெரிவித்தான் . அக்கோபாலகன் அப்பொழுதே புறப்பட்டுக் கெளசாம்பி நகரத்தையடைந்தான். யெளகந்தராயணன் அவனை மறைவிடத்தில் அழைத்துத் தான் செய்யவிரும்பிய காரியங்க்கள் எல்லாவற்றையும் உண்மையாக அவற்கு கூறினான் . கோபாலகன் , முதலில் வாசவதத்தைக்குத் துன்பம் தருவதாயினும் அரசற்கு நலத்தை வளர்விப்பதால் அச்சசொல்லை ஏற்றுக் கொண்டான் .
பின்னர் யெளகந்தராயணன் , “மகாதேயத்தின் அணிமையில் இலாவாணகம் என்னும் பெயரினையுடைய இடம் ஒன்று இருக்கின்றது . அது வேட்டையாடுதற்கு இன்பம் விளைக்கும் இடமாகும் . ஆதலின் , வாசவதத்தையையும் வற்சரசனையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்திற்கு நாம் செல்லல் வேண்டும் . எப்பொழுது வேட்டையாடல் குறித்து உதயனன் வெளிச்செல்வானோ அப்பொழுது அரண்மனையில் தீ வைப்போம் . வாசவ தத்தையை மகததேயத்தரசனது கன்னியா மாடத்தில் இருக்கின்ற பதுமாவதியின் பக்கல் உபாயத்தாற் சேர்ப்பிப்போம். பிரிவுக் காலத்திலேயும் வாசவதத்தையின் கற்பு நிலைக்குப் பதுமாவதியே சான்றா வாள் . இங்ஙனஞ் செய்யின் நாம் செய்யவிரும்பிய காரியம் சிரமமின்றி நிறைவேறிவிடும்,” என்று இங்ஙனம் கூறினான் .
இங்ஙனம் சூழ்ந்து , யெளகந்தராயணன் , உருமண்வான் , கோபாலகன் , என்னும் இம்மூவரும் , பிற்றைநாட்காலையிற் காலைக்கடன் களை முடித்துவிட்டு அரசன்பக்கல் எய்தினர் . அரசன் தகுதிக்குத் தக்கவாறு சிறப்பித்து ஈந்த இருக்கைகளில் இருந்தனர் . பின்னர் உருமண்வான் , அரசனை நோக்கி “வேந்தர் பெரும! இலாவாணகம் என்னும் இன்ப நிலம் ஒன்று இருக்கின்றது . அதனைச் சூழ்ந்து வேட்டையாடுதற் குரிய நிலங்கள் பலவுள்ளன . பக்கத்துள்ள மகததேயத் தரசன் எப்பொழுதும் அவ்விடத்தை உலைவு செய்கின்றான் . அதனைக் காத்தற்கு அவ்விடம் அடைதல் இவ்வமயம் தக்கதாகும், “ என்று இவ்வாறு தெரிவித்தான் . வேட்டையாடுதலில் விருப்பம் மிக்க உதயணன் அச்சொற்களை ஏற்றான் . புறப்படல் துணிந்ததும் கணிதம் வல்லோர் பிரயாணத்திற்குரிய நன்னாழிகையைக் கண்டு கூறினர் .
அப்பொழுது எதிர்பாராது நாரதர் ஆகாயத்தில் நின்றும் இறங்கி வெளிப்பட்டார் . வற்சராசன் அவரைக்கண்டு விரைந்தெழுந்து அருக்கியம், பாத்தியம் முதலியவைகளால் உபசரித்தான் . பின்னர் அவரை இருக்கையில் வீற்றிருக்கச்செய்து வணக்கத்தோடு கைகூப்பி நின்றான் . நாரதர் பாரிசாதமலர்களானாகிய மாலையொன்றை அரசற்குக் கொடுத்தார் பின்னர், வணங்கி நிற்கின்ற வாசவதத்தையை நோக்கி , “நங்காய்! , பகவானாகிய காமவேளின் கூறாக அவதாரஞ்செய்யும் வித்தியாதரர்களின் தலைவனை மகனாக விரைந்து பெறுவாய் “ என்னும் வாழ்த்துரையால் அருள் செய்தார் . பின்னர் அமைச்சர்களின் முன்னிலையில் உதயனனை நோக்கி “வேந்தே! தருமபுத்திரன் முதைலிய சகோதரர் ஐவரும் எனக்கு நண்பர்களாக இருந்தனர் . நீயும் அவர்கள் வழித்தோன்றினவன் . அவ்வன்பால் நினக்குச் சிறிது உபதேசிக்க யான் இங்கு வந்தேன் . நீ என் சொல்வழி நிற்றல் போல் அமைச்சர் சொல்வழியும் நிற்றல் வேண்டும் . அவர்கள் யாது யாது கூறுவார்களோ அதனை அவ்வண்ணமே மேற்கொள்ளல் வேண்டும் . அதனால் நீ மிக்க நலத்தினை அடைவாய் . சிறிது நாட்களில் நினக்குச் சிறிது துன்பம் நேரும் . அதுவும் இன்பவளர்ச்சியாகவே முடியும் . இதன்கண் நீ துன்புறல் வேண்டா . என்று இங்ஙனங் கூறினார் . இவ்வாறு சொல்லி நாரதர் அவ்விடத்திலேயே மறைந்துவிட்டார் . யெளகந்தராயணன் முதலியோர் நாரதமுனிவர் சொற்களைக் கேட்டுத் தாங்கள் செய்ய விரும்பிய காரியத்தில் தெய்வமும் துணைநிற்கின்றது என்னும் மகிழ்ச்சியால் இருமடங்கு உற்சாகம் எய்தினர்.
வெண்பா
மன்ன னரசின் வளம்பெருக்கும் வல்லமைச்சர்
இன்னன் முதற் கணிசைவித்த — பின்னரே
மன்னிறைவ நாக்கி மகிழ மதித்தனராற்
றுன்னு மதிவலியாற் சூழ்ந்து .
எட்டாம் வகுப்பு
(பதுமாவதி பரிணயம்)
பின்னர் அமைச்சர்களோடு ஆலோசித்தபடி வற்சராசன் வாசவதத்தை யோடு படைவீரர்கள் சூழப்புறப்பட்டு ‘ இலாவாணகம் ‘ என்ப்பெயரிய சிற்றூரையடைந்தான். அவ்விடத்தில் நாடோறும் பக்கத்துள்ள வனங்களிற் சுற்றித்திரிந்து வேட்டையாடலான் மனம் இன்புற்றுச் சிலநாட்களைக் கழித்தான் . ஓரமயம் உதயனன் வனத்திற் சென்றிருக்குங்கால் , யெளகந்தராயணன், உருமண்வான் , வசந்தகன் இம்மூவரும் கோபாலகனை முன்னிட்டுத் தனித்திருக்கும் வாசவதத்தையின்பாற் சென்றனர் . பின்னர் , தாம் செய்யவிரும்பிய எல்லாக்காரியங்களையும் கூறினார்கள் . முன்னரே கோபாலகன்பால் எல்லா நிகழ்ச்சிகளையுந் தெரிந்த கற்பரசியாகிய வாசவதத்தை, தனக்குத் துன்பந்தருவதாயினும் தலைவற்கு நலம்விளக்கும் என்பது பற்றி அவர்கள் செய்யவிரும்பிய காரியத்தை ஏற்றுக்கொண்டாள் .
பின்னர் , யெளகந்தராயணன் ‘உருவமாற்று’ என்னும் விஞ்சையால் வாசவதத்தையை அந்தணர் குலத்துப் பெண்ணாகவும் , வசந்தகனை ஒற்றைக்கண் மாணவனாகவுஞ் செய்தான் . யெளகந்தராயணன் தானும் யாண்டு முதிர்ந்த அந்தணவடிவமுடையனாயினான் . பின்னர் யெளகந்தரா யணன் அந்தனர் குலத்துப் பெண்வேடந்தாங்கிய வாசவதத்தையையும் ஒரு கண் கெட்ட மாணவகவேடந்தாங்கிய வசந்தகனையும் அழைத்துக் கொண்டு மகததேயத் தரசனது தலைநகரை யடைந்தான் . வாசவதத்தை தலைவனையே நெஞ்சத்தால் நினைந்து யெளகந்தராயணனைப் பின்றொ டர்ந்து சென்றாள் .
அவ்வமயத்தில் உருமண்வான் , அந்தப்புரத்தில் தீப்பெய்து “அந்தோ! அந்தோ! தேவி வாசவதத்தை நெருப்புச் சுடரால் வெந்துபோயினாள் “ என்று பேரொலி செய்தான் . பின்னர் , பரிசனங்களினது அழுகையொலி மிகவும் உண்டாயிற்று . மெல்ல மெல்ல நெருப்புத்தணிந்தது . அழுகையொலி ஒவ்வொரு கணமும் பெருகிற்று . வாசவதத்தையோடும் வசந்தகனோடும் புறப்பட்ட யெளகந்தராயணன் மலர்கள் நிறந்த உத்தியானவனத்தில் தோழிகளோடு விளையாடல் செய்து கொண்டிருக்கும் பதுமாவதியை அடைந்தான் . பதுமாவதிக்கு அந்தணர் குலத்துப் பெண்ணுருவந்தாங்கிய வாசவதத்தையின்பால், கண்ட அளவினானே பெரிதும் நட்புண்டாயிற்று.
பின்னர் , பதுமாவதி வயோதிகப் பிராமண உருவத்தையுடைய யெளகந்தராயணனை நோக்கி “பகவானே ! இப்பெண் யார் ? எதன்பொருட்டு இங்கு எய்தினை?’ என்று வினவினாள் . அவன் “நங்காய் ! ஆவந்திகை யென்னும் பெயரினையுடைய இவள் என் புதல்வியாவாள் . இவள் கணவன், இவளை விட்டு வேற்று நாடடைந்தான் . ஆதலின் இவளை நின்பக்கல் இருத்தி இவள் கணவனைத் தேடிக்கொணர்தற்கு விரும்புகின்றேன் . இச்சிறுவன் இவள் உடன்பிறந்தான் ஆவான் . இவனையும் இவண்மாட்டே விடுகின்றேன் . அதனால் இவள் தனித்திருக்கும் துன்பத்தை யடையாள் . “ என்று மறுமொழி கூறினான் . பதுமாவதி “அங்ஙனமேயாக” என்று உடன்பட்டாள் .
யெளகந்தராயணன், வாசவதத்தையையும் வசந்தகனையும் அவ்விடத்திலேயே விட்டுப் பதுமாவதியின்பால் விடை பெற்று அப்பொழுதே புறப்பட்டுத் தனது முன் உருவத்தை யடைந்து இலாவாணகத்தை எய்தினான். இதனிடையில் உதயனன் வேட்டை நிமித்தம் நெடுந்தூரம் காடுகளில் அலைந்து திரிந்து மாலைப்பொழுதில் இலாவாணகத்தை யடைந்தான் . அங்கு உவளகம் நீறாக்கப்பட்டிருத்தலைக் கண்டும் வாசவதத் தையையும் நெருப்பினால் வெந்து போயினாள் என்பதைக் கேட்டும் மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்தான் .பின்னர் ,பரிசனங்கள் செய்த உபசாரங்களாற் சிறிது பொழுதில் தெளிவெய்தி வாசவதத்தையை நினைவு கூர்ந்து துன்பமிகுதியாற் பலவாறு புலம்பினான் .
பின்னர் மனத்தின்கண் பின்வருமாறு சிந்திப்பானாயினான் “முன்னரே அசரீரிச்சொல் ‘வாசவதத்தை வித்தியாதாச் சக்கரவர்த்தியாகும் புதல்வனைப் பெறுவாள்’ என்று கேட்கப்பட்டது . தெய்வ முனிவராகிய நாரதராலும் அங்ஙனமே கூறப்பட்டது . அது பொய்மையாகாது . மேலும் சில நாள் என்னாற்றுன்பம் அனுபவிக்கப்படும் என்றும் நாரதராற் கூறப்பட்டது. வாசவதத்தையின் உடன்பிறந்தானாகிய கோபாலகனுஞ் சிறிது துன்பமு டையவனாகக் காணப்படுகின்றான் . யெளகந்தராயணன் முதலிய அமைச்சர்களுடைய முகங்களும் மலர்ச்சியுடையவைகளாகவே காணப்படு கின்றன . ஆதலின், எனக்குப் பெரிய நலத்தை யுண்டாக்குவதற்கு விரும்பி அமைச்சர்கள் செய்த சூழ்வினைச்செயலே இதுவாகும் என்று எண்ணுகின்றேன் . ஆதலின், தேவி வாசவதத்தை யாண்டாயினும் உயிருடை யவளாக இருக்கின்றாள் என்றே ஊகிக்கின்றேன் . இதனால் ஒரு சமயம் எனக்கு வாசவதத்தையோடு சேர்தல் நேரும்” என்று இவ்வாறு சிந்தித்து வற்சராசன் சிறிது தேறுதல் அடைந்தான் .
பின்னர் மகத தேயத்தரசன் , இலாவாணக நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஒற்றன் மூலமாக அறிந்தான் . பதுமாவதியை ஏற்றுக்கொள்ளச் செய்தற்கு இதுவே தக்க சமயம் என்று துணிந்து தன் கருத்தைக் கூறித் தூதன் ஒருவனை உதயனற்கு விடுத்தான். உதயனன் , யெளகந்தராயணனது உடன்பாட்டின் வண்ணம் , பதுமாவதியை மணஞ் செய்து கொள்ளுதற்கு அங்கீகரித்தான் . அப்பொழுது பதுமாவதியின் மணத்தை நிறைவேற்றுதற்கே வாசவதத்தை அமைச்சர்களால் மறைத்து வைக்கப்பட்டிருப்பாள் என்று உதயனனது மனத்தில் உறுதியான நம்பிக்கை உண்டாயிற்று .
பின்னர் , யெளகந்தராயணன் விவாகத்திற்குரிய இலக்கினத்தை நிச்சயித்து மகத தேயத்தரசற்கு “உதயனன் பதுமாவதியை மணந்துகோடற்கு உடன்படுகின்றான் ; இதற்கு ஏழாவது நாள் விவாகத்தை நிறைவேற்றுதற்கு நின் தலைநகரை யடைவான் “ என்று இவ்வாறு மறு மொழி விடுத்தான் . அதனைக் கேட்டு மகத தேயத்தரசன் மிக்க மகிழ்ச்சி யுடையனாயினான் . பின்னர்த் தன் புதல்வியின்மாட்டுள்ள அன்பிற்கும் தன் செல்வத்திற்கும் ஒத்தவாறு விவாகச் சிறப்பிற்குரிய ஏற்பாடுகளைச் செய்வித்தான் . பதுமாவதி , தான் அடைதற்கு விரும்பிய கணவனைப் பெறுதலான் மிகவும் மகிழ்வெய்தினாள் . அப்பொழுது வாசவதத்தை பதுமாவதியின் மண நிகழ்ச்சியைக் கேட்டுத் துன்பத்தால் வேறுபட்ட முகம் உடையளாயினாள் . உடனிருக்கின்ற வசந்தகன் “அன்னாய் இம் மகத நாட்டரசனை வயப்படுத்தற்கு அமைச்சர்கள் செய்த சூழ்ச்சியிதுவாகும் . வேறுபாடு கருதற்க” என்று மறைவிடத்திருந்து தேற்றினான் . பின்னர் விவாக முகூர்த்தம் அடுத்திருக்குங்கால் வாசவதத்தை வற்சராசன்பாற் கற்ற விஞ்சையால் வாடுதலில்லாத மாலையையும் விசித்திரமான திலகத்தையும் செய்து பதுமாவதிக்குக் கொடுத்தாள் . பதுமாவதி அவற்றை அணிந்து தாயின் பக்கல் எய்தினாள் .தாய் விசித்திரமான மாலையையும் திலகத்தையையும் பார்த்து மிக்க வியப்புடையவளாய் , “யாரால் இவை செய்யப்பட்டன” வென்று பதுமாவதியை வினவினாள் . அவள் “அன்னாய்! ஆவந்திகை என்னும் பெயரினையுடைய அந்தணர் குலத்துப் பெண்மகள் என்பக்கல் இருக்கின்றாள் . அவள் இவற்றைச் செய்தனள் “ என்று மறுமொழி கூறினாள் . அதனைக்கேட்ட தாய் “குழந்தாய் ! மிகப் பெரியவளாகிய இவள் எக்காரணத்தினாலோ இங்கு வந்த தெய்வ மகள் ஆவாள். ஆதலின் , இவண்மாட்டு விழிப்புடையவளாக இருப்பாயாக. . தக்க உபசாரங்களாற் பெருமைப்படுத்துக “ என்று கூறினாள் . அதுமுதல் வாசவதத்தை பதுமாவதி யினால் மிகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தாள் .
பின்னர் , வற்சர் தலைவன் குறிப்பிட்டவாறு அமைச்சர்களோடு புறப்பட்டு மகத தேயத்தரசனது தலைநகரை யடைந்தான் . மகதராசன் அவனை எதிர்கொண்டழைத்து மகிழ்ச்சியோடு தன்நகரையடைவித்தான் . அவ்விடத்தில் நன் முகூர்த்தத்தில் விவாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பெற்ற வற்சர் தலைவன் , மணத்தின் பொருட்டுச் சித்தமாக இருக்கின்றவர்களும் , எல்லா அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட வளும் ஆகிய பதுமாவதியைக் கண்டான் . அப்பதுமாவதியின் உடம்பில் வாசவதத்தையால் நிருமிக்கப்பட்ட மாலையினையும் திலகத்தினையுங் கண்டு “தேவியாகிய வாசவதத்தையினது கைத்திறமை இதுவாகும் . இம்மாலையும் திலகமும் இவளால் எங்கிருந்து அடையப்பட்டனவோ “ என்று மனத்தினாற் சூழ்ந்தான் . இதனை எண்ணிக்கொண்டே மணவறை வேதியை எய்தி விதிப்படி பதுமாவதியை மணந்தான் .
அவ்வமயத்தில் , மகதராசன் யெளகந்தராயணனது வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு “இனி உதயனற்குக் கனவினும் கேடுசெய்யக் கருதுவேனல்லேன்” என்று உறுதி செய்தான் . அதன்பின் உதயனற்கு விலைமதிக்கொண்ணா அளவிறந்த அரதனங்களை வழங்கினான் . மணத்திருவிழா நிறைவேறியபின் யெளகந்தராயணன் “ஒரு சமயம் உதயனன் உவளகத்திலிருக்கும் வாசவதத்தையைக் காணவுங்கூடும் “ என்னும் ஐயத்தால் அப்பொழுதே இலாவாணகத்தைக் குறித்துப் புறப்படும் வண்ணம் செய்தான் . பதுமாவதியோடு வற்சராசன் புறப்பட்டவுடன் வாசவதத்தையும் வசந்தகனோடு மறைவிற் பின்றொடர்ந்து சென்றான் . எப்பொழுதும் வாசவதத்தையையே மனத்தால் நினைந்துகொண்டிருக்கும் உதயனன் இலாவாணகத்தையெய்தித் தன் இருப்பிடத்துட் புகுந்தான். வாசவதத்தையோ தன் உடன்பிறந்தானாகிய கோபாலகனது இருப்பிடத்தை யடைந்து அங்குக் கோபாலகனைப்பார்த்துப் பிரிவுத்துன்பத்தை யுள்ளே அடக்கமுடியாதவளாய் வாய் திறந்து அழத்தொடங்கினாள் . அப்பொழுது யெளகந்தராயணன் உருமண்வானோடு அவ்விடத்தெய்தி வாசவதத்தை யைப் பலவாறு தேற்றினான் .
இதற்கிடையில் , ஏவன்மகளிர் விரைந்தோடி வந்து வற்சராசனது முன்னிலையிற் பதுமாவதியை நோக்கி “ஆவந்திகை யென்னும் அந்தணர் குலமாது எம்மைப் புறத்தே நிறுத்தி விட்டுக் கோபாலகனது இல்லத்துட்புகுந்து ஏதோ ஒரு துன்பத்தால் வாய்திறந்து அழுகின்றனள்”, என்று இவ்வாறு தெரிவித்தனர் . அது கேட்ட வற்சராசன் பதுமாவதியை நோக்கி இம்மாலையுந் திலகமும் எங்கிருந்து நின்னால டையப்பட்டன வென்று கேட்டான் . அவள் “யாண்டு முதிர்ந்த ஓர் அந்தணனால் அடைக்கலமாக வைக்கப்பட்ட ஆவந்திகை என்னும் பெயரினையுடைய அந்தணர்குலமாது என்பால் இருக்கின்றாள் . அவள் என்னால் உண்டி உடுக்கை முதலிய உபசாரங்களால் நன்கு போற்றப்பட்டவளாய் என்பாலளவிகந்த நட்புரிமை யுடையவளா யிருக்கின் றாள் . சிலநாட்களுக்கு முன்னர் எனது மண நிகழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டி ருக்குங்கால் இம்மாலையினையுந் திலகத்தினையும் நிருமித்து எனக்குதவினாள் “ என்று இவ்வாறு தெரிவித்துக்கொண்டாள் . அது கேட்ட வற்சராசன் “இஃது உண்மையாக வாசவதத்தையினது சிற்பத்திறமையையே யாகும்” என்று துணிந்து அப்பொழுதே கோபாலகனது இல்லம் எய்தினான் .அங்கு யெளகந்தராயணனால் முன்னை உருவம் எய்தப்பெற்றவளும் , தனக்கு நேர்ந்த கொடிய பிரிவு நிலையை எண்ணி மிகவும் வருந்துகின்றவளும் யெளகந்தராயணனாலும் உருமண்வானாலும் வசந்தகனாலும் பலவாறு தேற்றப்படுகின்றவளும் , பிரிவுத் துன்பத்தால் மிக மெலிந்த உடம்பினையுடையாளும் ஆகிய வாசவதத்தையைக் கண்டான் . கண்டதும் கண்ணீராற்றடுக்கப்பட்ட வாயினால் எதனையுஞ் சொல்வதற்கு ஆற்றலில்லாதவனாய்க் கண்களினின்றும் பெருகி வழிகின்ற நீர்த் தாரைக ளான் முன்னிடத்தை நனைத்துப் பேய் கோட்பட்டான் போல் நிலத்தில் வீழ்ந்தான் . அங்ஙனம் வீழ்ந்த அவனைப்பார்த்தவுடன் நடுக்கமுற்ற நெஞ்சினையுடையாளாகிய வாசவதத்தையும் அத்தகைய துன்பத்தை ஆற்றாதவளாய் நிலத்தில் வீழ்ந்தாள் . கணப்பொழுதில் தெளிவெய்தித் தலைவன் துன்பத்திற்குக் காரணமாகிய தன்னைப் பலவாறு பழித்துரைத்தாள் .
அவ்வனயத்தில் தலைவன் தலைவியாகிய இவ்விருவர்களது அத்தகைய நிலையை நோக்கி மிகவருந்துகின்ற நெஞ்சத்தையுடைய யெளகந்தராயணனும் கண்களினின்றும் நீரை யொழுக்கினான் . அங்கு நிகழ்ந்த குழப்பத்தைக்கேட்ட பதுமாவதியும் ஈதென்னை யென்று ஏதமுற்ற நெஞ்சினளாய் அவ்விடத்தை யடைந்தாள் . அப்பொழுது யெளகந்தராயாணன் வற்சராசனை நோக்கி “வேந்தர் பெரும ! நிலவுலக முழுதும் நின்வயமாக்கு தற்குரிய உபாயத்தை யாராய்ந்தேன் . அதற்கு மகத தேயத்தரசன் ஒருவனே தடையாயுள்ளான் . பதுமாவதியின் விவாகத்தையின்றி மகதராசனைத் துணையமைத்துக்கொள்ளக் கூடவில்லை ; பதுமாவதியின் மணத்தை முடித்துக் கோடற்கு என்னால் இவ்வுபாயம் மேற்கொள்ளப்பட்டது . இனி. மகதராசன் கனவிலும் நினக்கு துன்பம் செய்ய எண்ணான் . யானே நின்றுன்பத்திற்குக் காரணமாயினேன் . தேவி வாசவதத்தையும் இதன்பொருட்டு அழைக்கப்பட்ட கோபாலகனோடு ஒற்றுமைப்பட்டு மிக அரிதின் இந்நிகழ்ச்சியிற் றுணையுடையளாயினாள் . பிரிவுக்காலத்திலும் இவள் பதுமாவதியின் பக்கலிலேயே இருக்கப்பெற்றாள் . ஆதலின் பதுமாவதியே இவள் கற்புடைமையிற் சான்றாவாள் . நின்க்குத் துன்பம் விளைவித்த எனது இப்பிழையைப் பொறுத்தருள்வாயாக” என்று இவ்வாறு கூறினான் .
அதுகேட்ட பதுமாவதி “யெளகந்தராயணன் உண்மையையே கூறினான் . யான் இவ்வாசவதத்தையின் கற்புடைமையிற் சான்றாவேன் . யான் தீப்புகுதலானும் இதனை நம்பும்படி செய்வேன்” என்றிவ்வாறு கூறினாள் . பின்னர், வாசவதத்தை “யானே எனது கற்பு நிலைமையில் நம்பிக்கை கொள்ளும் வண்ணம் தீப் புகுவேன் “ என்று துணிவு நீர்கொணர்ந்து ஆசமித்துக் கிழக்குமுகமாக இருந்து “ஏ ! உலகபாலகர்களே! யான் வற்சராசனாகிய உதயனற்கு நலம் விளைப்பதில் உறுதி பூண்டுளேனென்பதும், தேவி வாசவதத்தை கற்புநிலையினின்றும் பிறழ்ந்திலள் என்பதும் உண்மையாயின் , அவ்விரண்டினையும் இப்பொழுது அறிவியுங்கள். இன்றேல் தீப்புகுந்து உயிரைப் போக்குவேன்” என்றிவ்வாறு கூறினாள். அச்சொன்முற்றியபொழுதே அசரீரியாக “ஓ வற்சராச ! நினக்கு அமச்சர் இலக்கணம் முற்றும் நிரம்பிய யெளகந்தராயணன் மந்திரியாகவும், கற்பரசியும் முற்பிறப்பில் தெய்வமுமாகிய வாசவதத்தை மனைவியாகவும் வாய்ந்தமையால் நீ மிகச் சிறந்தவனாயினாய் ஆதலின் இவள்பால் நினக்கு வேறுபாடான எண்ணம் உண்டாதல் வேண்டா” என்னும் இச்சொற்கள் உண்டாயின. அவை கேட்ட எல்லோரும் கார்காலத்து மயில்கள் போல மிக்க மகிழ்ச்சியுடையராயிருந்தனர் . பின்னர் , வற்சராசன் யெள கந்தராயணனது உபாய நிபுணத்தன்மையைப் பலவாறு பாராட்டினான் . நில முழுதும் தங்கைப்பட்டதாக எண்ணினான் .
வெண்பா
க . ஆன்ற அறிவி நமைவா சவதத்தை
யேன்ற துயரோ டியைகற்பின் — சான்றாம்
பதுமா வாயென்னும் பாவைதனை வேட்டான்
விதுநே ருதயனனாம் வேந்து .
உ . தன்றலைவற் கண்டின்பஞ் சார வயலொருத்தி
மன்றல் கொளத்தன் மனமிசைந்து — பொன்றாத
மாலை யொடுதிலக மீந்தாள் வலாரிதரு
வேலை யுருவமுதா மின் .
ஒன்பதாம் வகுப்பு
(மகதராசன் சந்தி)
அதன்பின், இரண்டு மூன்று நாட் கழிந்ததும் மகத தேயத்தரசனுடைய தூதன் வந்து வற்சராசனை நோக்கித் “தேவா !அரசர் பெருமானாகிய மகதராசன் என் முகமாகத் தங்களுக்கு இவ்வாறு அறிவிக்கின்றான் . அஃதாவது “அரச! உபாயத்திறன் வாய்ந்த நின் அமைச்சர்களால் யாம் வஞ்சிக்கப்பட்டவர்களாயினேம் . ஆதலின், யாங்கள் பதுமாவதியைக் குறித்துக் கவலைகொள்ளாதிருக்கச் செய்தல் வேண்டும் என்பதே” என்று இவ்வாறு தெரிவித்தான் . அச்சொற் கேட்ட வற்சராசன் ஒற்றற்குத் தக்கவாறு சிறப்புச்செய்தான் . பின்னர் “தந்தைக்கு வேண்டிய செய்தியைத் தருக” என்று கூறிப் பதுமாவதியின் பக்கல் அவனைப் போக்கினான்.
பதுமாவதி, தந்தையின்பானின்று வருகின்ற அத்தூதனை வியப்போடு மலர்ந்த கண்ணிணைகளாற் சேய்மைக்கண்ணே பார்த்து , அன்போடு வருக! வருக! என்று அழைத்துத் “தாயுந்தந்தையும் நலமுடையர் களாய் இருக்கின்றார்களா?” என்று வினவினாள் . தூதன் , “மன்னவன் புதல்வி! அன்னையாகிய தேவியும் வேந்தர் பெருமானும் நலமுடையரே . ஆனால் அன்னை நின்னை வஞ்சித்துக் கொணர்ந்தமை கேட்டு அவலத்தாற் கலக்குண்டு , நீராடல் , பருகல் , உண்டல் ஆகிய இவற்றிற் பற்றில்லாதவளா யிருக்கின்றாள் .அரசர் பெருமானோ நினக்கு ஒருசெய்தி தந்து என்னை உய்த்தான் . அச்செய்தி வருமாறு :- “வாசவதத்தை எரிந்து போயினாள் என்று பொய்யான அவச்சொல்லை வெளிப்படுத்தி வற்சராசன் நின்னை வஞ்சத்தாற் பெற்றுக்கொண்டான் . வாசவதத்தையோ வற்சராசற்கு உயிரினுஞ் சிறந்த காதலியாவாள் என்பது யாவராலும் உணரப்பட்ட தொன்றே . ஆதலின் , “பெண்மகப் பெறுதல் துன்பமாம்” என்பதாம்” என்று இவ்வாறு கூறினான் .
அது கேட்ட பதுமாவதி , “நல்லோய் ! வஞ்சத்தால் யான் கொணரப்பட்டேனாயினும் இங்குச் சுகமாகவே இருக்கின்றேன் . நின் மருகன் வாசவதத்தையின்பால் மிக்க அன்புடையவன் என்று யாவரானுங் கூறப்பட்டானாயினும் என் மாட்டு மிகப் பேரன்புடையவனாகவே யிருக்கின்றான் . வாசவதத்தையும் உடன் பிறந்தாளை யொப்ப என்பால் அளவில்லாத நட்புரிமை கொண்டுள்ளாள் . ஆதலின் , என்னிமித்தம் நீங்கள் கவலை மேற்கொள்ளல் வேண்டாம் என்னும் இச்செய்தியை யான் கூறியதாகத் தந்தையின்பால் நீ சொல்லவேண்டும் “ என்றிவ்வாறு கூறினாள் . வாசவதத்தையும் அத்தூதனை நன்கு பசரித்தாள் . பின்னர், பதுமாவதியினது இச்செய்தியை ஏற்றுக்கொண்டு தூதன் மகதராசன் பக்கல் எய்தினான் .
பின்னர் , பதுமாவதி தந்தையின் இல்லத்தை நினைந்து சிறிது அவாவிற்று வருந்தினான் .வாசவதத்தை வசந்தகனை யழைத்துப் “பதுமாவதிக்கு மகிழ்ச்சியொடு பொழுது போதற் பொருட்டுக் கதை சொல்லுக . என்று கூறினாள் . வசந்தகன் மனத்தை இன்புறுத்தத்தக்க கதைகளைக் கூறினான் . கதை முடிவில் வாசவதத்தையையும் பதுமாவதியையும் நோக்கி “ முற்பிறப்பில் நீவிர் இருவீரும் உடன்பிறந்த தெய்வப்பெண்களாயிருந்து ஏதோ ஒரு சாபப்பிழையால் மக்கட்பிறப்பை யடைந்தீர்கள் . ஆதலின் , உங்கள் நெஞ்சம் ஒன்றுக்கொன்று துணைசெய் வதாகவே இருக்கும் . ஒருபொழுதும் நும்மறிவு மாறுபடும் நிலையில் ஒழுகமாட்டாது” என்று இவ்வாறு கூறினான் .
அது கேட்டுப் பதுமாவதி மிக்க மகிழ்ச்சியுடையளாயினாள் . வாசவதத்தை பதுமாவதி இவ்விருவர்களின் உள்ளங்களும் பொறாமை சிறிதுமின்றி ஒன்றுக்கொன்று அனுகூலமுடையனவாய் ஓர் உள்ளம் போல் ஆயின . பின்னர் , யெளகந்தராயணன் என்னும் அமைச்சன் வற்சராசன் பக்கல் எய்தி “வேந்தர் பெரும! இனிப்பெரியதொரு முயற்சி செய்யத்தக்கதாக இருக்கின்றது . இப்பொழுதே சிறிதும் தாழ்த்தலின்றிக் கெளசாம்பி நகரத்தைக் குறித்துப் புறப்படுதல் தக்கதாகும் . மகதராசனை யாம் வஞ்சித்தேமாயினும் நமக்கு துணையில்லாதவனாகமாட்டான் . அவனோ பதுமாவதியின் விவாக காலத்தில் “ இனி யான் வற்சராசற்குக் கனவினுங் கேடு செய்யக் கருதேன் ,” என்று தீக்கடவுள் சான்றாக உறுதி செய்துளான் . அன்றி நம்மோடு பகைத்து உயிரினுஞ் சிறந்த பதுமாவதியை எங்ஙனம் புறக்கணிப்பான் ? யானும் ஒற்றர்களைப்போக்கி அவள் உள்ளத்தை நன்குணர்ந்திருக்கின்றேன் . ஆதலின், எவ்வாற்றானும் மகதராசன் நமக்குத் துணைசெய்பவனாவான் .என்பது உறுதியே .ஆதலின் இப்பொழுதே புறப்பட்டுக் கெளசாம்பியை யடைவோமாக” என்றிவ்வாரு கூறினான் .
யெளகந்தராயணன் , இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்குங்கால் மகதராசனுடைய தூதன் வந்தான் .அவன் அரசனால் அனுமதி பெற்று வணங்கி , “வேந்தர் பெரும ! பெருமானாகிய மகதராசனது செய்தியைத் தாங்கி இங்கு வந்துள்ளேன் . அப்பெருமான் , தன் அருமை மகளாகிய பதுமாவதியின் செய்தியைச் தூதன் முகமாகக்கேட்டு மிக்க மகிழ்ச்சியுடையனாய்த் தூதன் முகமாகவும், குழந்தை பதுமாவதியின் செய்தியாலும் அவ்விடத்து நிகழ்ச்சிகளை நன்றாக அறிந்துளேம் . நினக்கு ஒப்பற்ற அறிவுடையனாகிய யெளகந்தராயணன் அமைச்சனாக இருத்தலின் நீயே எவ்வாற்றானுஞ் சிறந்தவனாவாய் . பதுமாவதி வஞ்சத்தாற் கவரப்பட்டாளாயினும் நலமுடையளாயிருக்கின்றாள் என்றுகேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேம் . எதற்காக இத்தகைய ஏற்பாடுகள் தொடங்கப் பட்டனவோ அச்செயலிற் காலந்தாழ்த்தலின்றி நீ இறங்கல் வேண்டும் . யாமும் அந்நிகழ்ச்சியில் துணைசெய்வோம் “ என்றிவ்வாறு நின்பாற்றெரி வொக்கும்படி கட்டளையிட்டருளினான் . என்று கூறினான் .
அதுகேட்டு வற்சராசன் உள்ளத்திற்றோன்றிய அளவலா மகிழ்ச்சியை உள்ளடக்கிக்கொண்டு “தங்கள் துணையுடைமையால் யாம் மிக்க பெருமையுடையேமாயினேம் . குறிப்பிட்டபடிச் செய்வேமாக.” என்று மறுமொழி கூறி அத்தூதனை நன்கு உபசரித்துப் போக்கினான் . தூதன் மகதராசனது தலைநகரைக் குறித்துப் புறப்பட்டான் . அவ்வமயத்திலேயே உச்சயினி நகரத்தினின்றும் சண்டமகாசேனனால் அனுப்பப்பட்ட தூதன் வந்தான் .அவனும் வற்சராசனால் உட்புக அனுமதி பெற்றுச்சென்று வணங்கி “தேவ ! வேந்தர் பெருமானாகிய சண்டமகாசேனன் நட்புரிமையை முன்னிட்டுத் தங்களைக் குறித்துத் தெரிவித்துக்கொள்வதாவது :- “பதுமாவதி விவாகம் முதலிய பாராட்டப்படும் நின்செயல்கள் அனைத்தையும் நன்கறிந்துளேன் . யெளகந்தராயணனை அமைச்சனாகப் பெற்ற நீ எவ்வாற்றானும் பாக்கியவானாவாய் . தன் தலைவனது நலத்தையே விரும்பித் தனக்கு நேரும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் யாருமறியாதவாறு இருக்கும் தாழ்ந்த நிலையை எய்திய குழந்தை வாசவதத்தையும் மிகவும் பாக்கியசாலியாவாள் . இன்னும் வாசவதத்தை பதுமாவதி இவ்விருவர்களும் ஒருவருக்கொருவர் உண்மையன்புடையரா யிருத்தலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் . ஆதலின் நும்மால் அடையவிரும்பிய காரியத்தில் சிறிதும் தாழ்த்தலின்றி முயற்சி மேற்கொள்ளப்படல் வேண்டும் . அக்காரியத்தில் யாமும் துணைசெய்வோம்’என்பதாகும் “ என்றிவ்வாறு கூறினான் . அது கேட்ட வற்சராசன் சண்டமகாசேனற்குத் தக்கவாறு மறுமொழியீந்து தூதனைத் திருப்பி யனுப்பினான் .
அதன்பின் , யெளகந்தராயணன் கூறியவண்ணம் வாசவதத்தை பதுமாவதி இவ்விருவர்களோடு கெளசாம்பிநகரத்தைக் குறித்துப் புறப்பட்டான் . கரை கடந்து செல்லும் கடல் நீர் போல அளவிடவொண்ணாப் படைகள் அவனைப் பின்பற்றிச்சென்றன . களிற்றரசின் பிடர்க்கண் ஏறிச்செல்கின்ற உதயணன் , கீழ்க்கடன் மலையிற்றோன்றித் திகழும் கதிரவனை யொப்ப விளங்கினான் .வாசவதத்தையும் , பதுமாவதியும் பின்னாக மற்றொரு பெண்யானையின் மீதிவர்ந்து அவ்வுதயனனைப் பின்றொடர்ந்து சென்றனர் . இங்ஙனம் , வற்சராசன் வரவைக் கேட்டுக் குதூகலமிக்க நகரத்து மாந்தரெல்லோரும் கெளசாம்பி நகரத்தைக் அணி செய்தனர் . எவ்விடத்தும் கொடியாடைகளை இடைவெளியின்றி யுயர்த்தினார்கள் .இல்லங்கடோறும் அழகு வாய்ந்த பற்பல தோரண வரிசைகளைக் கட்டினார்கள் ; வீட்டு வாயில்கள் தோறும் உயர்ந்த நிறைகுடங்களையமைத்தார்கள் . இவ்வாறு நகரத்து மக்கள் அனைவராலும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்ட உதயனன் கெளசாம்பி ஆரவாரிக்கின்ற நகரத்து மக்களால் நிறையப்பெற்ற கெளசாம்பி நகரம் , திங்களஞ் செல்வன் தோன்றுங் காலத்துப் பெரிய அலைகளையுடைய கடற்கரைபோலத் திகழ்வதாயிற்று . இங்ஙனம் நகரத்திலுள்ள மாந்தர்களின் கண்களை இன்புறுத்தும் உதயனன் , வாசவதத்தை பதுமாவதி இவ்விருவர்களோடும் தன் அரண்மனையை யடைந்தான் .
வெண்பா
மாமன்மார் தன்சீர் வளர்ச்சி கருதியுய்த்த
தூய்மை நிறைதுணையாஞ் சொற்பெறீஇப் – பூமனெழில்
இன்ப நிலமா மிலாவா ணகமகன்று
நன்புலத்திற் சென்றனந் நாள் .
பத்தாம் வகுப்பு
(அரியணையடைதல்)
அதன்பின்னர், பிற்றைநாட்காலையில் வற்சராசன் காலைக்கடனை முடித்துக்கொண்டு அமைச்சர்களோடு அத்தாணி மண்டபத்தை யலங்கரித்தான் . அப்பொழுது ஓர் அந்தணன் வாயிற்புறத்தையடைந்து “அந்தோ! அந்தோ! “என்று கதறினான் . உதயனன் துன்பத்தின் காரணத்தைக் கேட்க, அவ்வந்தணன் “வேந்தே” காட்டிற் செல்கின்ற என்புதல்வன் குற்றம் யாதும் செய்யாதிருப்பவும் அவன் காலைக் கொடியவர்களாகிய இடையர்கள் வெட்டினார்கள் “ என்றிவ்வாறு கூறினான் .அது கேட்டு வற்சராசன் அந்தணனைத் தேற்றி அக்கணமே அவ்விடையர்களைக் கொண்டு வரச் செய்தான் . கொணர்வித்து “எதற்காக இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தீர்கள் ?” என்று வினவினன் . அவர்கள் “அரசர் பெரும! இடையர்களாகிய யாம் மனித சஞ்சாரமில்லாத காட்டில் விளையாடிக்கொண்டிருந்தோம் . எங்களுள் , தேவசேனன் என்னும் பெயரினையுடைய இடையன் ஒருவன் இருக்கின்றான் . அவன் காட்டின் ஒருபுறத்தே கல்லான் அமைந்ததோர் இருக்கையைக் கண்டு அதன்கண் அமர்ந்தான் .அமர்ந்த மாத்திரத்திலேயே “யான் இப்பொழுது இடையர்களுக்கு அரசனாகின்றேன் .ஆதலின் , இனி நீவிர் விழிப்புடன் எனது ஆணைவழி ஒழுகுதல் வேண்டும் “ என்று எமக்குக் கட்டளையிட்டான் .யாங்களும் அவ்வாணையை அங்ஙனமே ஏற்றுக்கொண்டோம் . அது முதல் அவன் ஆணையை யாம் கடப்பதில்லை . அவன் இங்ஙனங் காட்டில் அரசுசெலுத்திக் கொண்டிருக்குங்கால், இவ்வந்தனன் புதல்வன் அவ்வழிக்கட் சென்றுகொண்டிடுந்தான் . . எங்கள் அரசனாகிய தேவசேனனுக்கு வணக்கஞ் செய்திலன் .யான் அவன் பக்கல் அணுகி “வேந்தற்கு வணக்கஞ் செய்யாது நீ செல்லல் கூடாது “ என்று கூறினேம் .அவன் இங்ஙனம் பலவாறு வற்புறுத்து ரைக்கப்பட்டும் எம்மைப் பொருட்படுத்தாமற் சென்றான் .அதன்பின் யாம் எல்லோரும் அவனை வலிந்திழுத்து அரசன் பக்கல் சேர்ப்பித்தோம் . எங்கள் தலைவனாகிய அத்தேவசேனன் “இறுமாந்தைவனது காலை வெட்டி விடுங்கள்” என்று எமக்குக் கட்டளையிட்டருளினான் . ஆதலின் யாம் அரசனது ஆணையை மேற்கொண்டேம் . அரசனது ஆணையைக் கடத்தற்கு எங்ஙனம் ஆற்றலுடையேம் ஆவேம்?” என்ன்றிவ்வாறு தெரிவித்துக் கொண்டனர் .
இவ்வாறு இடையர்கள் கூறிய சொற்களைக் கேட்டு அறிஞனாகிய யெளகந்தராயணன், நெடு நேரம் மனத்தில் ஆராய்ந்து , வற்சராசனை மறைவிடத்திற்கழைத்து “வேந்த! அவ்விடத்தில் அளவில்லாத வைப்புப்பொருள்கள் நிச்சயமாக உள்ளன . அப்பொருண்மாட்சியால் இடையனும் அரசனை யொப்ப ஒழுகுதற்குரிய வன்மையுடையவனாயினான் .ஆதலின் இப்பொழுதே புறப்பட்டு அவ்விடத்தையடைந்து சோதித்தல் வேண்டும் “ என்று இவ்வாறு கூறினான் . வற்சராசன் அங்ஙனமேயாகவென்று உடன்பாடுற்று அக்கணத்தே புறப்பட்டு இடையற்களாற் காட்டப்பட்ட நெறியே சென்று அவ்விடத்தை யடைந்தான் . பின்னர் அவ்விடத்தை வினைஞர்களைக் கொண்டு தோண்டுவித்தான் . அவ்விடத்தினின்றும் மலையை ஒத்த உருவத்தினை யுடைய ஓர் இயக்கன் கிளம்பினான் . அவ்வியக்கன் “அரச! நின் குலத்து முன்னோர்களால் வைக்கப்பட்ட பெரிய நிதி இங்குள்ளது . அதனைக் காத்தற்கு இத்துணைக்காலம் ஈண்டிருந்தேன். அதனைப் பெற்றுக்கொள் வாயாக, செல்கின்றேன்” என்று சொன்னான் . அது கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்த வற்சராசன் இயக்கத்திற்கு அளவின்றிப் பூசை செய்தான் அப்பூசனையை ஏற்றுக்கொண்டு அவ்வியக்கன் மறைந்தான் . அதன்பின் , கல்லப்பட்ட அவ்விடத்தினின்றும் பெரிய நிதி வெளிப்பட்டது . பின்னும் அவ்விடத்தில் மிக்க விலைமதிப்புள்ள இரத்தினங்களழுத்திய அரியணையும்
காணப்பட்டது . ஆங் காலத்தில் மனிதற்கு மேன்மேலும் மங்கள வரிசைகள் தாமாகவே வந்தடைவனவாம் . ஆதலின் , வற்சராசன் இடையர்களை நோக்கி “இனி நீவிர் இன்னோரன்ன கொடுஞ்செயல்களைச் செய்தல் கூடாது “ என்று கட்டளையிட்டான் .
பின்னர் , பொருட் குழுவனைத்தையும் எடுத்துக்கொண்டு தன் நகரத்தைக் குறித்துப் புறப்பட்டான் . இரத்தினங்களிழைக்கப்பட்ட அவ்வரியணையை நன்கு பார்த்துக் கெளசாம்பி நகரத்து மக்களெல்லோரும் மிகவும் வியப்பெய்தினர் . மற்றா நாள் யெளகந்தராயணன் வற்சராசனை நோக்கி “வேந்தே! நின் முன்னோர்கள் வீற்றிருந்த இரத்தின சிங்காதனத்தில் ஏறி அலங்கரிப்பாயாக “ என்றிவ்வாறு தெரிவித்தான் . அதற்கு வற்சராசன், “எனது முன்னோர்களாகிய அரசர்கள் நிலவுலக முழுதையும் தந்தோள் வலியால் வென்று இவ்வரியணையில் ஏறி வீற்றிருந்தார்கள் . யானும் எல்லாத் திசைகளையும் வென்றபின்னரே இவ்வரியணையில் ஏறுதற்கு விரும்புகின்றேன் .ஆதலின் இப்பொழுதே நாற்புறமும் கடல்சூழ்ந்த இந் நிலவுலகத்தை வென்று கோடற்குப் புறப்படல் வேண்டும் “ என்றிவ்வாறு மறுமொழி கூறினான் .
யெளகந்தராயணன் , அச்சொற்களை மகிழ்ந்து பாராட்டினான் . பின்னர் “முதலிற் கீழ்த்திசையை நோக்கிப் புறப்படுவாயாக “ என்று கூறினான் . அது கேட்டு வற்சராசன் “வடக்கு முதலிய திசைகள் இருக்கக் கீழ்த்திசையைக் குறித்து முதலிற் செல்லல் வேண்டுமென்னும் நியமம் எதற்காகச் செய்யப்பட்டுள்ளது “ என்று வினவினான் . அதற்கு யெளகந்த ராயணன் , “வேந்த ! கேட்பாயாக .நான்கு திசைகளுள் வடதிசை எல்லாச் செல்வமும் நிறைந்ததாயினும் , மிலேச்சர்களாற் கவரப்பட்டிருத்தலின் இழிந்ததாகும் ; மேற்றிசையும் கதிரவன் சென்று மறைதற்குக் காரணமாயிருத்தலிற் சிறந்ததன்று; தென்றிசையும் இயமனால் ஆளப்படுதலின் உயர்ந்ததன்று ; கீழ்த்திசையிலோ பகவானாகிய கதிரவன் உதயமாகின்றான் ; அத்திசையிலேயே எல்லாத் தேவர்களுக்குந் தலைவனா கிய இந்திரன் வீற்றிருக்கின்றான் ; எல்லா உலகத்தையும் தூய்மை செய்யும் கங்கையும் கீழ்பாலை நோக்கி ஓடுகின்றது .; கங்கையின் சிறப்பைப் பற்றி வேறு கூறற்பாலது என்னை? எல்லா நாட்டினுள்ளும் கங்கை நீராற் றூய்மை செய்யப்படும் நாடே சிறந்ததாகப் பாராட்டப்படுவதாகும் ; பெரும்பாலும் அரசர்கள் பலர் கங்கைக் கரைகளிலுள்ள நாடுகளிலேயே வாழ்கின்றனர் ; ஆதலின் நலத்தை விரும்பும் அரசர் முதலிற் கீழ்பாலை நோக்கிச்செல்வர் ; நின்முன்னோர்களும் கீழ்பாற் றொடங்கியே எல்லாத் திசைகளையும் வென்றனர் ; கங்கைக்கரையிலுள்ள அத்தினாபுரத்திலேயே வாழ்ந்தனர் . நின்பிதாமகனாகிய சதானீகன் அத்தினாபுரத்தைவிட்டுக் கெளசாம்பியை யடைந்தான் ; அத்தினாபுரத்தினும் சிறந்த எழில் வாய்ந்ததாகுங் கெளசாம்பி நகரம் ; சதானீகன் நிலமுழுதும் ஆளுதல் ஆண்மையின் பாலதாகும் ; நாடு என் செய்யும் என்றெண்ணி முன்னோர்களாற் பெறப்பட்டதாயினும் அத்தினாபுரத்தை யொழித்து விட்டான் ; நினக்கு இப்பொழுது ஊழ் நல்லதாக இருக்கின்றது ; ஆண்மையும் நிறைந்துள்ளது ; ஆதலிற் சிறிதுந் தாழ்த்தலின்றித் திக்குவிசயத்தின் பொருட்டுப் புறப்படல் வேண்டும் “ என்றிவ்வாறு மறுமொழி கூறினான் . இங்ஙனங் கூறிய யெளகந்தராயணன் சொற்களைக் கேட்டு வற்சராசன் , “அமைச்ச! நலமதொன்றடைதற்குறு மிடையூறு நாதனே ! பலவுள” என்பது முதுமொழி. ஆதலின், இடையூறுகளைப் போக்குதற்கு முதலிற் பகவானாகிய உமாநாதனை வழிபடுதற்கு விரும்புகின்றேன் . “ என்று கூறினான் . யெளகந்தராயணனும் அங்ஙனமே செய்தல் வேண்டுமென்று ஒத்துரைத்தான் , பின்னர் மற்றை அமைச்சர்களும் தழீஇக்கூற, வற்சராசன் வாசவதத்தை, பதுமாவதி இவ்விருவர்களோடு நீராடித் தூய்மையுடையனாய் மூன்றிரவு பட்டினி இருந்து பகவானாகிய உமாகந்தனைப் பூசித்தான் . நோன்பின் இறுதியிற் சிவபெருமான் கனவிற்றோன்றி “வேந்த ! நீ குற்றமற்ற மெய்யன்போடு செய்த வழிபாட்டினான் மகிழ்ச்சி யெய்தினேம் . சிறிதும் ஐயமின்றித் திக்குவிசயங் குறித்துப் புறப்படுவாயாக . தடையில்லாத வெற்றியையடை வாய் . வித்தியாதரச் சக்கரவர்த்தியாகிய புதல்வனையும் விரைந்து பெறுவாய் “ என்றிவ்வாறு கட்டளையிட்டருளினார் . அதன்பின் கண்விழித்த வற்சராசன் பெரிதும் இன்பமுடையனாயினான் . காலைப்பொழுதில் இக்கனவின் நிகழ்ச்சியை நோன்பினாலிளைத்த மனைவிமார்க்குங் கூறினான் . பின்னர் அமைச்சர்களுக்குங் கூறினான் . அதனை எல்லோரும் கேட்டு மகிழ்ச்சியின் பேரெல்லையை அடைந்தார்கள் . பின் வற்சராசன் நோன்பை முடித்து உணவுட்கொண்டான் .
வெண்பா
முன்னோர்தம் வைப்பாம் முழுமணிப் பூண்பொருளும்
பொன்னா ரரியணையும் போற்றியெடுத் — தந்நாள்
திசைவிசயஞ் செய்தேறச் சிந்தித் தரனை
வசையொழியப் பூசித்தான் மன்.
பதினோராம் வகுப்பு
(திக்குவிசயம்)
அதன்பின் , மற்றா நாள் , யெளகந்தராயணன் , வற்சராசனை நோக்கி “தேவ! பகவானாகிய பார்வதீ காந்தன் திருவருளால் நீ பாக்கியவனாயினாய். ஆதலின் இப்பொழுதே திக்குவிசயத்தின் பொருட்டுப் புறப்படுவாயாக . தோள்வலியால் ஈட்டப்படும் அரசியற்றிருவை யடைவாயாக . அறவழியான் ஈட்டப்படுஞ் செல்வமே அழிவில்லாததாகும் . மறவழியான் ஈட்டப்படுஞ் செல்வங்கள் புன்னுனியிற் பொருந்தியிருக்கும் பனித்திவலைகளை யொப்பச் சிறிது பொழுதில் அழிந்துவிடும் . ஆதலின் அரசன் அறவழியாற் பொருளீட்டுதலில் முயற்சி செய்தல் வேண்டும் . நினக்கு இப்பொழுது எல்லாத் திசைகளும் எளிதில் வெல்லற்பாலனவாம் . நினக்கு மாமன்மார் இருவர்களுடைய இயைபாற் பல அரசர்கள் உறவினராயினர் . அவ்வெல்லோரும் திக்குவிசயங் குறித்துச் செல்லும் நின்னோடு பகைமை கொள்ளார் . துணை செய்தலையே மேற்கொள்பவராவர் . காசிநகரிற் பிரமதத்தன் என்னும் பெயரினையுடைய அரசன் ஒருவன் உளன் . அவன் ஒருவனே முதலிற் கருதற்பாலன் . அவன் நினக்கு எப்பொழுதும் பகைவனாவான் . அவனை முதலில் வென்று பின்னர்க் கீழ்த்திசை தொடங்கி எல்லாத்திசைகளையும் வெல்லுவாயாக” என்று கூறினான் .
இங்ஙனங்கூறிய யெளகந்தராயணன் சொற்களைக் கேட்டு வற்சராசன் படைத்தலைவனை யழைத்து “ இப்பொழுதே திக்குவிசயச் செலவிற்குரிய ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும் “ என்று கட்டளையிட்டான் . அப்பொழுது வாசவதத்தையின் உடன் பிறந்தவனாகிய கோபாலகனும் பதுமாவதியின் உடன் பிறந்தவனாகிய சிங்கவன்மனுந் துணை செய்தற்பொருட்டு அவனைப் பின்றொடர்ந்து சென்றனர் . வற்சராசன் கோபாலகனை விதேக நாட்டிற்கு அரசனாகச் செய்தான் . சேதி நாட்டைச் சிங்கவன்மனுக்குக் கொடுத்தான். பின்னர்த் தனக்குத் துணைசெய்தற் பொருட்டு விந்திய மென்னும் அடவியினாப்பண் இருக்கின்ற வேடர் தலைவனாகிய புளிந்தகனைப் பரிவாரங்களோடு கொண்டுவரச் செய்தான் .
இதற்கிடையில் , யெளகந்தராயணன் பிரமதத்தனது செயலை அறிதற்பொருட்டுக் காசிநகரைக் குறித்து ஒற்றர்களைப் போக்கினான் .அவர்கள் காபாலிக வேடந்தாங்கிக் காசிநகரை யடைந்தார்கள் . அவர்களுள் , குகனென்னும் பெயரினையுடைய ஒருவன் ஆசாரிய வேடம் பூண்டான் . மற்றையோர் அவர்க்கு மாணவகர் ஆயினர் . அவர்கள் ஐயமேற்றுண்ணும் அவ்வஞ்சக குருவை முக்காலமு முணர்ந்தோன் என்று புகழ்ந்து கொண்டாடினர் . காசிநகரத்து மாந்தர் அனைவரும் எதிர்காலத்து வரும் நன்று தீதுகளைக் கேட்டற்கு வணக்கத்தோடு அவன்பக்கல் சூழ்ந்தனர் . எல்லாவற்றையும் ஞானக்கண்ணாற் காண்பவன் போல் அபிநயஞ் செய்கின்ற அக்கபட குரு , இன்ன இடத்தில் நெருப்புப் பற்றும் , இன்ன இடத்திற் களவுபோம் என்று இவை முதலியவற்றுள் எதனை யெதனை அம்மாந்தர்க்குச் சொல்லுகின்றானோ அதனை யதனை அவன் மாணவர்கள் உண்மையாகவே செய்தனர் . இதனால் அவன் பெரும்புகழ் எங்கும் பரவுவதாயிற்று . அவ்வமயத்தில் வற்சராசனது திக்குவிசய யாத்திரையின் ஏற்பாட்டை ஒற்றன் முகமாக அறிந்த பிரமதத்தன் மிகவும் கலக்குண்ட நெஞ்சமுடையனாயினான் . அப்பொழுது மிக வியக்கத்தக்க மகிமைகளையுடைய இக்காபாலிகவிரதி வந்திருத்தலைக் கேட்டு அவனை வழிபடுதற்குத் தன் மகன் ஒருவனை யனுப்பினான் . அக்கபடகுரு அவ்வரச குமாரனைச் சிறந்த மாணவனாக ஏற்றுக்கொண்டான் .பின்னர் அவன்முகமாகப் பிரமதத்தனுடைய எல்லா மறைபொருள்களையும் அறிந்தான் .
வற்சராசன் , முதலிற் காசிநகரை நோக்கிப் படையெடுத்துவருவான் என்றுணர்ந்த யோககரண்டகன் என்னும் பெயர் வாய்ந்த பிரமதத்தனுடைய அமைச்சன் பல வஞ்சகச் செயல்களைச் செய்தான் . வழியிலுள்ள மரங்கள் , கொடிகள் , நீர்நிலைகள் , புற்கள் ஆகிய இவைகளை நஞ்சு பொருந்தச் சேர்த்துக் கெடுத்தான் . பொருட்பெண்டிர் உருவந்தாங்கிய நச்சுப் பெண்களை ஆங்காங்கு நிலைப்படுத்து இயங்கவைத்தான். இராக்காலங் களிற் பாசறை புகுந்து மறைவிற் படைகளைக் கொல்லுதற்குரிய கொலைத் தொழில் வல்ல மாக்களைத் திட்டஞ் செய்தான் . இங்ஙனம் பிரமதத்தனுடைய அமைச்சனாற் செய்யப்பட்ட வஞ்சகச் செயல்களை யுணர்ந்து கபடமிக்க காபாலிகன் ஒற்றன்முகமாக யெளகந்தராயணற்கு அறிவித்தான் .
பின் , வற்சராசன் கணிதம் வல்லுநரால் தெரிந்துரைக்கப்பட்ட நன்னேரத் திற் படைகளோடு புறப்பட்டான் . அப்பொழுது அவர்க்கு வெற்றியை யறிவுறுப்பனவாகிய நன்னிமித்தங்கள் பல உண்டாயின. நிலவுலக மனைத்தையும் மறைத்துக்கொண்டு கிளம்பியதும் அளவறுக்க ஒண்ணாதது மாகிய அவன்படை ஊழிக்காலத்திற் கரைகடந்தெழூஉம் கடநீர்போலக் காணப்பட்டது . மிகவுயர்ந்த களிற்றின் பிடர்க்கண் ஏறி வீற்றிருக்கும் உதயனன் காலைபொழுதில் உதயமலையின் உச்சியில் விளங்கித் தோன்றும் கதிரவனை யொப்பத் திகழ்ந்தான் . முதலிற் கிழக்குத் திசையைக் குறித்துப் புறப்பட்ட வற்சராசன் காசிநகரை நோக்கிச் சென்றான்.
முன்னரே, பிரமதத்தனுடைய அமைச்சன் யோக கரண்ட கனாற் செய்யப்பட்ட வஞ்சகங்களையறிந்த யெளகந்தராயணன் மாற்றுச் செயல்களால் அவ்வஞ்சகச் செயல்களைப் பயனில்லாதனவாம்படி செய்தான் . நஞ்சின் சேர்க்கையாற் கெடுக்கப்பட்ட புல் , நீர் முதலியவை களை எதிர்ப்பிரயோகத்தால் ஆராய்ந்து ஒழித்தான். நச்சுப்பெண்களின் றடையைப் போக்குதற்கு , முன்னர்க் காணப்படாத பெண்கள் உட்புகுதலைப் படைவீட்டிற் றடுத்தான் . மறைவிற் கொல்லுங் கொலைத் தொழிலாளரை உபாயங்களாற் றேடிக்கொன்றான் . இங்ஙனம் யெளகந்தராயணன் பகைவனுடைய வஞ்சகச் செயல்களைப் பயனில்லாதனவாக்கி வற்சராசனது வெற்றிச்செலவை இடையூறில்லாததாகச் செய்தான் . இவ்வாறு இடையூறொழித்து அளவில்லாத படைகளாற் றிசையிடங்களை நிறைத்து வந்த வற்சராசனைக் கண்டு செயற்பாலது இன்னதென்று அறியாமையாற் பாழடைந்த நெஞ்சினனாகிய பிரமதத்தன் அமைச்சர்களோடு சூழ்ந்து “வற்சராசனை வெல்லுதற்கு முடியாது “ என்று துணிந்தான் . பின்னர்ப் பல வகைக் கையுறைப்பொருள்களை ஏந்திக்கொண்டு தலையிற் கைகூப்பி வற்சராசன் பக்கல் எய்தினான் . அடைக்கலம் புகுந்தோரை அன்பு செய்யும் வற்சராசன் , அப்பிரமதத்தனை மகிழ்ச்சியாற் பெருமைப்படுத்தி விடுத்தான்.
இவ்வாறு, வற்சராசன் , வணங்கினவர்களை அன்பினாற் காத்தும் , இறுமாந்தவர்களை வேரோடு களைந்தும் ஆங்காங்கு வெற்றிக்கொடிகளை நாட்டிக் கீழ்க்கடற்கரையை யடைந்தான் . அதன்பின் மகேந்திரநாட்டின் தலைவனாகிய கலிங்கனை எதிர்த்துச் சென்றான் . அக்கலிங்கன் நீரோட்டத்தில் வளைந்து கொடுக்கும் நாணற்புல்லின் நிலையை மேற்கொண்டு மகேந்திர தேயத்திற்றோன்றிய அளவிறந்த யானைகளைக் கையுறையாகக் கொடுத்து வணங்கினான் . அதன்பின் கடற்கரை வழியாகவே தென்றிசைகளை வெல்லுதற்குப் புறப்பட்டான் . அவ்விடத்துக் காவிரியாற்றைக் கடந்து சோழராசனை வென்றான் . பின்னர் முரளையாற்றின் கரையை விரைந்தடைந்து வணங்கிய சேரர்களுக்கு அருள் செய்தான் . பின்னர் எழுவகைப் பிரிவினையுடைய கோதாவரியைக் கடந்து நருமதையாற்றின் கரையில் இரண்டு மூன்று நாட்கள் தங்கினான். பின்னர், அதனையுங் கடந்து உச்சயினி நகரத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான் . சண்டமகாசேனன் அன்போடு எதிர்சென்று நல்வரவேற்க அவ்வுச்சயினி நகரத்துட் புகுந்தான் . அவ்விடத்தில் , தன் நாட்டை மறக்கச்செய்யும் மாமன் வீட்டு வாழ்க்கை இன்பத்தை நுகர்ந்து சில நாட்களைப் போக்கினான் .
அதன்பின் மேற்றிசையைக் குறித்துப் புறப்பட்டுச்சென்று இலாடதேசத்தரசர்களை வென்றான் . பின்னர் மந்தரமலையைக் கடந்து வடதிசையை யடைந்தான் . அவ்விடத்திற் சிந்து தேயத்தரசனை இருத்தி இறுமாப்புடைய மிலேச்சர்களை ஓட்டினான் . பின்னர்ப் பாரசீகநாட்டை யடைந்து வணக்கமில்லாத பாரசீகத்தரசனது தலையைக் கூரிய அம்புகளாற் பிளந்து வீழ்த்தினான் . பின்னர் இமயமலையின் சாரலில் இருக்கின்ற ஊணர்களைப் பணியச்செய்தான் . அதன்பின், காமரூபேசுவரன் என்பான் , வற்சராசனைக் குடைநிழல் பெறாத தலையால் வணங்கி இறைப்பொருள் கொடுத்தான் .
இவ்வாறு வற்சராசன் , நிலமுழுதும் வென்று பதுமாவதியின் தந்தையாகிய மகதராசனது தலைநகரை யடைந்தான் . மகதராசன் , எல்லா நாட்டினுஞ் சென்று தடுக்கப்படாத பராக்கிரமம் வாய்க்கப்பெற்று , வாசவதத்தை , பதுமாவதி இவ்விருவர்களோடும் வருகின்ற மருமகனைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான் . முன்னர் உவளகத்தில் மறைவாக இருந்தவளும் இப்பொழுது வெளிப்படையாக வருகின்றவளுமாகிய வாசவதத்தையை உவளகத்து மகளிர் அனைவரும் வியப்புஞ் சிறப்புமுடையராய்ப் பார்த்தார்கள் . அவ்விடத்தில் மகதராசனால் . விசேட உபகாரஞ் செய்யப்பெற்ற உதடனன் அங்கிருந்து புறப்பட்டு இலாவாணகத் தை யடைந்தான் . படைகள் இளைப்பாறுதற் பொருட்டுச் சில நாள்வரை அங்க்குத் தங்கினான் . பின்னர் யாத்திரையானேர்ந்த துன்ப நீங்கிய சைனியங்களை யழைத்துக்கொண்டு கெளசாம்பியை நோக்கிச் சென்றான். வெற்றித் திருவால் விளங்குகின்ற வேந்தனை நேராகத் தரிசனஞ் செய்தற்குக் குதூகல மிக்க நகரமாந்தர்களால் தோரண முதலியவைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டதும் நாற்புறமும் உயர்த்தப்பட்ட கொடிகளையுடையதுமாகிய கெளசாம்பி நகரத்துட் புகுந்தான் . பின்னர் நகரத்து மக்களாலும் அமைச்சர்களாலும் அனுமதி பெற்று நன்முகூர்த்தத்தில் இரத்தின சிங்காதனத்திவர்ந்து வீற்றிருந்தான் . அப்பொழுது திக்குவிசயத்தினால் ஈட்டிய பொருளனைத்தையும் அந்தணர்க்கு வழங்கினான் . இவ்வாறு தன்றோள்வலியால் ஈட்டிய அரசியற் றிருவினால் விளங்குகின்ற வற்சராசன் உருமண்வானிடத்தும், யெளகந்தராயணன் பாலும் அரசியற்சுமையனைத்தையும் வைத்துவிட்டு வாசவதத்தை பதுமாவதியாகிய இவ்விருவர்களோடுங் கூடி விளையாடித் , தேவர்களும் விரும்பத்தக்க இன்பத்தை நுகர்ந்து , காலங்கழித்து வந்தான் .
வெண்பா
ஒற்ற ரமைச்ச ருரன்வலியாற் றிக்கனைத்தும்
வெற்றிகொடு மாமன்மார் மேவிடஞ்சென் – றுற்ற
நலனுகர்பு தன்னகரின் நண்ணினான் றோளின்
வலன்மிகுதார் வண்மைசெறி மன் .
முன்றோன்று செல்வத்தை முன்னச் சிறந்ததுமன்
றன்றோள் வலியாற் றருந்திருவே— யென்று
கருதி வினைமுடித்துக் காண்டகு பண்டை
யரியணைக்க ணுற்றா னரசு
பன்னிரண்டாம் வகுப்பு
( நரவாகனதத்தன் பிறப்பு )
அரசியலில் கருத்தில்லாத வற்சராசன் சிலநேரம் வசு நேமியாற்றரப் பட்ட யாழை வாசித்துக் காலங்கழிப்பான் . சில நேரம் வேட்டையாடி மனத்தை மகிழ்விப்பான் . சிலநேரம் யாழோடு ஒன்றுபட்ட கண்டவிசையாற் பாடுகின்ற வாசவதத்தையின் இசைத்தொழிற் றிறமையைக்கண்டு தலையசைத்து மகிழ்வான் . சிலநேரம் சுவைபடப் பேசுந்திறன் வாய்ந்த பதுமாவதியோடு கூடி இன்புற்று நெடுநேரத்தை ஒரு கணமெனக் கழிப்பான்.
பின்னர் , அரசியல் நினைவை மறந்து வேட்டை யாடுதலிற் பற்றுடையவனாய் எப்பொழுதும் காட்டிற்றிரிவானாயினான் . அதனையறிந்த நாரத முனிவர் அங்கு வந்தார் . வற்சராசன் அந் நாரதமுனிவரைச் சேய்மைக்கண்ணே கண்டு , விரைந்து இருக்கையினின் றெழுந்து எதிர்கொண்டழைத்தான் . பின்னர்த் தன் கைகளாற் கொணர்ந்திடப்பெற்ற இருக்கையில் அவரை யிருக்கச்செய்து முறைப்படி உபசரித்தான் . வணக்கமுடையனாகிய வற்சராசனாற் செய்யப்பட்ட வழிபாட்டை ஏற்றுக்கொண்ட நாரத முனிவர் ,பின்வருமாறு கூறுவாராயினார் . “வேந்த ! நினக்கு நலமுண்டாதலை விரும்பிச் சிறிது உபதேசஞ் செய்வான் இங்குப் போந்தேன் . வேட்டையாடுதலில் உண்டாம் பேரவா அரசர்களுக்குப் பெரிதும் ஏதந்தருவதாம் . இதனாற் பல அரசர்கள் துன்பம் எய்தினர் . நின் முன்னைப் பிதாமகனாகிய பாண்டு என்னும் பெயரினையுடைய அரசன் ஒருவன் இருந்தான் . அவன் நின்னை யொப்ப வேட்டையாடுதலில் மிகப்பற்றுடையனாக இருந்தான் . வேட்டையாடிக் காட்டில் மானுருவத்தோடு திரிந்த கிந்தமன் என்னும் பெயரினையுடைய முனிவனைக் கொன்றான் . அம் முனிவன் சாபத்தாற் பாண்டு காளைப் பருவத்திலேயே மரணமெய்தினான் . ஆதலின் துன்பம் விளைவிக்கும் வேட்டை விருப்பை விடுப்பாயாக .வாசவதத்தையோடு பகவானாகிய உமாகாந்தனை வழிபடுவாயாக. அச்சிவபிரான் திருவருளாற் காமதேவன் கூறாக ஒரு புதல்வன் நினக்கு உண்டாவான் . அவன் வித்தியாதரச் சக்கரவர்த்தியுமாவான் “ என்று கூறி நாரத முனிவர் வற்சராசன்பால் விடைபெற்றுச் சென்றார் .
அதன்பின் வற்சராசன் , வாசவதத்தையோடு மூன்றிரவு பட்டினியிருந்து சிவபெருமானை ஆராதனை செய்தான் . சிவபிரான் அவ்விருவர்களுக்குங் கனவிற்றம் தரிசனங்கொடுத்துப் பின்வறுமாறு கட்டளையிட்டருளினார் . “நுங்கள் வழிபாட்டான் மகிழ்ச்சியடைந்தேம் . விரைவிலேயே காமதேவன் கூறாகவுள்ள புதல்வனை யடைவீர்கள் . ஆதலின் நோன்பை முடித்துக்கொள்வீர்களாக” என்று கூறி மகேசுரர் மறைந்தார் .
அதன்பின் , விழிப்பெய்திய வாசவதத்தையும் வற்சராசனும் பெருமகிழ்ச்சியடைந்தனர் . பின்னர் விதிப்படி நோன்பை நிறைவேற்றிக் கொண்டு உணவுட்கொண்டனர் . சிலநாட் சென்று இரவில் மிகுதுயில் மேற்கொண்ட வாசவதத்தையைச் , சடைமுடி தரித்த தேவன் ஒருவன் அடைந்து தெய்வ உலகில் உண்டாகிய ஒரு பழத்தை அவட்குக் கொடுத்து அப்பொழுதே மறைந்தான் . பகவானாகிய சிவபெருமானே பழமென்னும் பொருளாற் புதல்வனை யருளினார் என்று கருதி வற்சராசன் மிக்க மகிழ்ச்சி யடைந்தான் . வாசவதத்தை கருத்தரித்தாள் . அவள் முகம் வெண்ணிறம் எய்திற்று ; உடலும் மெலிவுற்றது . ஓர் அமயம் அவள் தன்னை விண்ணில் விமானத்தில் ஏற்றிக்கொண்டு போவதாகவும் , கேட்டற் கினிமை யுண்டாம்படி பாடுகின்ற வித்தியாதரப் பெண்கள் போற்றுவதாகவும் கனவிற் கண்டாள் . விழிப்புற்ற அவள் அந் நிகழ்ச்சிகளை நேராக அனுபவிக்க விரும்பினாள் . யெளகந்தராயணனும் தனது இந்திரசால விச்சைத் திறமையால் அவள் விருப்பத்தை நிறைவேற்றினான் . வாசவதத்தையின் வயிற்றிற் கருப்பம் முறையாக வளர்ந்தது ; அவள் இடை பருத்து ; மும்மடிப்பும் மெல்ல மெல்ல மறைந்தது . அக்கருப்பத்தை எப்பொழுதுந் துணைநின்று சூலபாணியாகிய சங்கரர் பாதுகாத்தார் .
பத்தாந் திங்களில் வாசவதத்தை பேறுகாலத்தின் அணிமையுடை யளாயினாள் . நன்நேரத்தில் மணிமயமான விளக்குக்களாலும் , மஞ்சண் முதலிய மங்கலப் பொருள்களாலும் , அணி செய்யப்பட்ட மகப்பேறும் இல்லத்துட் புகுந்தாள் . அவ்விடத்தில் திங்களஞ் செல்வனைப்போலக் கண்களுக்கு இன்பம் விளைவுக்கும் புதல்வனைப் பெற்றாள் . அப்பொழுது உவளகத்திலுள்ள தோழிமாரனைவரும் விரைந்து யான்முன் யான்முன் என்று ஒடிவந்து வற்சராசற்குப் புதல்வற்பேற்றை அறிவித்தனர் . அது கேட்டு மிகப் பெருமகிழ்ச்சி யடைந்த வற்சராசன் அத்தோழிமார்க்கு மிக்க விலை மதிப்புள்ள இரத்தினங்களை வழங்கினான் . பின்னர் விருப்பத்திற்கு மேற்பட்ட பொற் கொடைகளால் அந்தணர்களை மகிழ்வித்தான் .
அதன்பின் , அரசியற் பெருந்திருவை எய்துதற்குரிய இலக்கணங்கள் அமையப்பெற்றதும் , காலைப்பொழுதிற் றோன்றிய இளங் கதிரவனாலலர்த்தப்பட்ட தாமரைப் பூவைப் போலத் திகழ்கின்ற சிவந்த அதரங்களையுடையதும் ஆகிய தன் குழந்தையைக் கண்டான் . கண்டு உவாமதியைக்கண்ட பெருங்கடல் போலத் தன்னுள் அளவிறந்த மகிழ்ச்சியை அடைந்தான் . பின்னர் , சாந்திகரன் என்னும் பெயர் வாய்ந்த இவனுடைய புரோகிதன் புதல்வற்குச் சாதகன்மம் முதலிய கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினான் . அப்பொழுது எதிர்பாராமலே அசரீரிச்சொல் “வேந்த ! காமதேவன் கூறாக அவதரித்த நினது இப்புதல்வன் நரவாகனதத்தன் என்னும் பெயரினன் ஆவான் . இவன் சின்னாளிலே வித்தியாதரர்களுக்குச் சக்கரவர்த்தியாவான் “ என்றிவ்வாறு உண்டாயிற்று . அப்பொழுது விண்ணுலகத்தினின்றும் பூமழை பொழிந்தது . தேவதுந்துபி வாச்சியத்தின் ஒலி கேட்கப்பட்டது .
பின்னர் நகரத்து மாந்தர் அனைவரும் அரசனது புதல்வற் பேற்றுத் திருவிழாவைக் கொண்டாடினார்கள் . அவ்வமயத்திற் கெளசாம்பி நகர முழுவதும் திருவிழாப் பொலிவுடையதாயிற்று . வற்சராசன் ஆகாயவாணியாற் சொல்லப்பட்ட வண்ணம் இப்புதல்வற்கு நரவாகனதத்தன் என்று பெயரிட்டான் . நரவாகனதத்தன் முற்பக்கத்துத் திங்களஞ் செல்வன் கலை போல மெல்ல மெல்ல வளர்ச்சி யடைந்தான் . அகாரணமாகப் பற்களின்றித் தோன்றும் அவன் சிரிப்புக்கள் வற்சராசனை ஆனந்த பரவசனாகச் செய்தன . எல்லா மக்கள் கண்களுக்கும் இன்பம் விளைக்கின்ற அப்புதல்வன் முழந்தாள்களாற் றவழ்தல் சாமந்த அரசர்களுடைய உள்ளங்களையும் உவகையுறச் செய்தது . பின்னர் , தடைப்பட்டுத் ததும்பி வருகின்ற பொருள் விளக்கமில்லாத அப்புதல்வனுடைய மழலைச்சொற்களைக் கேட்டு வற்சராசன் பெரிதும் உள்ளமகிழ்பூத்தான் . இதற்கிடையில் யெளகந்தராயணன் மருபூதி என்னும் பெயரினையுடைய புதல்வனையடைந்தான் . உருமண்வான் அரிசிகன் எனப் பெயரிய மகனைப் பெற்றான் . வசந்தகனுக்குத் தபந்தகன் என்னுங் குமாரன் உண்டாயினான் . இத்தியகன் என்னும் பெயரினையுடைய வாயில்காப்போனுக்குக் கோமுகன் எனப் பெயரிய புதல்வன் உண்டாயினான் . அதன்பின் , ஓரமயம் நரவாகனதத்தற்குப் பகைவரிடத்தினின்றுந் தீங்கு விளையுங்கொலோவென்னும் ஐயத்தால் வற்சராசன் மிகவும் கவற்சியடைந்தான் . அதனையறிந்த யெளகந்தரா யணன் அவ் வுதயனனை மறைவிடத்தில் வைத்து , “தேவ ! நின் புதல்வனாகிய நரவாகனதத்தனைப் பாதுகாத்தல் குறித்துச் சிறிதுங் கவலு தல் வேண்டா . பகவானாகிய அம்மையப்பர் , இப்புதல்வன் எதிர்காலத்தில் வித்தியாதரச் சக்கரவர்த்தியாதலைத் திருவுளங்கொண்டு பிறப்பித்தார் .இப்புதல்வற்குத் தீங்கிழைப்பான் எண்ணி முயல்கின்றனர் .ஆதலின் உண்மைக் கருணாநிதியாகிய அப்பகவான் தம்பகன் எனப் பெயரிய கணத்தலைவனை இப்புதல்வன் பாதுகாப்பு நிமித்தம் விடுத்துள்ளார் . அத் தம்பகன் இப் புதல்வனைக் காத்துக்கொண்டு இவ்விடத்திலேயே பிறராற் காணப்படாமல் இருக்கின்றான் . இச் செய்தியை ஓரமயம் நாரத முனிவர் என்பால் வந்து தெரிவித்தனர் “ என்றிவ்வாறு கூறினான் . அது கேட்ட வற்சராசன் கவலுதல் ஒழிந்தான் .
இங்ஙனம் உதயனனால் வளர்க்கப்பட்டுப் பூருவபக்கத்துச் சந்திரகலைபோல மெல்ல மெல்ல வளர்ச்சி யெய்துகின்ற உறுப்புக்களையுடைய நரவாகனதத்தன் உரிய காலங்களில் செளளம் உபயநயனம் முதலிய கிரியைகள் செய்விக்கப்பெற்றுப் புனிதனாயினான் . தன்னோடு ஒத்த பருவத்தினராகிய மந்திரி குமாரர்களோடு கூடி எல்லாக் கலைகளையும் பயின்றான் . பணிவு முதலிய உயர் குணங்களால் மிகவும் பெருமையுற்று விளங்கும் நரவாகனதத்தன் முறையே எல்லாக் கலைகளிலும் திறமை யெய்தினான் . அதன்பின் பாலப் பருவங் கடந்த அந் நரவாகனதத்தற்கு மணஞ் செய்தற்குரிய காலம் வந்ததாக உதயனன் எண்ணினான் .
வெண்பா
எப்பொருளுந் தானா மிறைவன் றிருவருளா
னற்பொருளாஞ் சேய்மணியை நண்ணினான் — மெய்ப்பொருள்
கொள்ளு மறிஞனெனக் கொண்டான் பெருமகிழ்ச்சி
வள்ள லுதயனனா மன்
——————-
பதின்மூன்றாம் வகுப்பு
(கலிங்கசேனையின் வரலாறு)
விசும்பினை யளாவிய மேனில இல்லங்கள் சூழ்ந்த தக்க சிலையெனப் பெயரிய நகரம் ஒன்றிருந்தது . அந் நகரின்கண், கலிங்கதத்தன் எனப் பெயரிய அரசன் ஒருவன் இருந்தான் . அவற்குத் தாரதத்தை என்னும் பெயரினை யுடையாள் பெருந்தேவி யாயினாள் . அவ்விருவர்க்கும் நெடுங்காலம் மகப்பே றிலதாயிற்று . அதனால் மிகவும் துன்ப மெய்திய கலிங்கதத்தன் அரிதிற் காலங் கழித்துக் கொண்டிருந்தான் இதற்கிடையில் உம்ப ருலகத்தில் ஒரு பெருந் திருவழா நிகழ்ந்தது . அப்பொழுது அரமகளிர் அனைவரும் ஆடுதற் பொருட்டு ஒன்று கூடினர் . அவ் அரமகளிருள் ஒருத்தியாகிய சுரபிதத்தை மாத்திரம் அங்கு வாராமல் தன் விருப்பின் வண்ணம் நந்தவனத்தில் ஒரு வித்தியாதரனோடு கூடி இன்ப விளையாடல்களைச் செய்துகொண்டிருந்தாள் . அதனை யறிந்த தேவேந்திரன் அவளைத் “தீவினையாட்டி ! நீ மனித உலகத்தை அடைவாயாக” என்று சபித்தான் . அச் சாபத்தை யறிந்த அவள் விரைந்து வந்து தேவேந்திரனுடைய திருவடிகளில் வீழ்ந்து “தேவ ! என் குற்றத்தைப் பொருத்தருளல் வேண்டும்” என்று வேண்டினாள் . தேவேந்திரன் கருணையுடையனாய் “நீ ஒரு பெண் மகவை ஈன்றபின் மீண்டும் இவ்வுலகை யடையக் கடவாய்” என்று அருள் செய்தான் . அச் சுரபிதத்தை தாரதத்தையின் வயிற்றிற் கருவுருவாகக் புகுந்தாள் .
அதன்பின் , ஒருநாள் நள்ளிரவில் தாரதத்தை விசும்பினின்றும் வீழ்ந்த ஒளிப்பிழம்பு தன் வயிற்றுட் புகுந்ததாகக் கனவு கண்டாள் . காலைப்பொழுதில் விழித்து அக்கனவைத் தன் தலைவற்கு அறிவித்தாள் . அவன் அக்கனவைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி யெய்தினான் . அப்பொழுதே தாரதத்தை கருத்தரித்தாள் . பத்தாந் திங்களில் மின்னற் கொடியை யொத்துத் திகழும் பெண் மகவை ஈன்றாள் . கூதிர்காலத்துத் திங்கண்மண்டிலத்தைப் போல மக்கள் எல்லோருடைய கண்களுக்கும் இன்பத்தைச் செய்கின்ற அப்பெண்மகவைக் கண்டு பெரிதும் இன்புற்ற கலிங்கதத்தன் கலிங்கசேனையென்னும் பெயரையிட்டு அழைத்தான் . முற்பக்கத்துத் திங்களஞ் செல்வன் கலை போல் நாடோறும் வளர்ச்சி யெய்துகின்ற அக்கலிங்கசேனை இல்லத்தின் முற்றங்களிலும் மேனிலங்களிலும் உய்யானங்களிலும் விளையாடல் புரிந்து முறையே பாலப் பருவங் கடக்கப் பெற்றாள் .
அதன்பின் ஒரமயம் விசும்பில் தெய்வ ஊர்தியிற் போக்கு வரவு புரிகின்றவளும் மாயாசுரனுடைய மகளுமாகிய சோமப்பிரபை என்பாள் அரண்மனையின் மேனிலத்தில் தோழிகளோடு விளையாடல் புரியும் கலிங்கசேனையைக் கண்டாள் . அக்கலிங்கசேனையின் தெய்வீகத்தன்மை வாய்ந்த எழில் நலத்தை நோக்கிப் பின்வருமாறு சிந்திக்கலாயினாள் . “ஆ ! இப்பெண்மணியின் எழில் நலம் இந் நிலவுலகத்தில் எய்தற்கரியது . இவள் தெய்வமகளோ ! அன்றி நாககன்னிகையோ ! கண்ணெதிரிற் போந்த இலக்குமிதேவியோ ! ஏதோ ஒரு சாபப்பிழையால் நிலவுலகத்தையடைந்த இவள் உறுதியாக ஒரு தெய்வப்பெண்ணாக இருத்தல் வேண்டும் . இன்னும் இவளைப்பார்த்த அளவினானே என்னுள்ளம் மிகவும் இன்புறுகின்றதா கலின் இவள் முற்பிறப்பில் என் அன்பிற்குரிய தோழியாந்தன்மையையும் எய்தியிருத்தல் கூடும் . ஆதலின் இவளோடு நட்புரிமையை மேற்கொள்ளல் வேண்டும் . விரைந்து இவள் பக்கல் அணுகுவேனாயின் இவள் அச்சம் எய்துவாள் “ என்றிவ்வாறு உள்ளத்திற்கருதி அச்சோமப்பிரபை மெல்ல மெல்ல விமானத்தினின்றும் இறங்கி மனிதப் பெண்ணுருவம் தாங்கிக் கலிங்கசேனையின் பக்கல் எய்தினாள் . கலிங்கசேனையும் அச்சோமப்பிரபைக் கண்டு “ஆ ! ஈதென்னை வியப்பு ! இம்மாநுடப்பெண் இவ்விடத்தை எவ்வாறடைந்தாள்? “ என்று கூறி விரைந்தெழுந்து எதிர்சென்று வருக வருக வென்று நீட்டிய கையினை யுடையவளாய் அவளைத் தழீஇக் கொண்டாள் . பின்னர் , தானே விரைந்தோடி இருக்கை கொணர்ந்தாள் .அவளை இருக்கையிலிருத்தி அவளுடைய பெயர் இடம் முதலியவற்றை வினவினாள் . அதன்பின் அவ்விருவரும் தம்முள் உரையாடினர் . அதனால் அவ்விருவர்க்கும் நெருங்கிய நட்புரிமை யுண்டாயிற்று . சோமப்பிரபை அவ்விடத்திற் சிறிது நேரம் இருந்து “தோழீ! கலிங்கசேனே ! என் இருப்பிடம் இங்கிருந்து அறுபதுயோசனை தூரத்திற்கப்பாலுள்ளது . கதிரவனும் அத்தகிரியை யடைகின்றான் . ஆதலின் எனக்கு விடை யருள்வாயாக “ என்று கூறிவிட்டு எழுந்து விமானத்திலேறிப் போயினாள் .
சோமப்பிரபை சென்ற வழியையே இமைத்தலில்லாத கண்களாற் பார்க்கின்ற கலிங்கசேனை விமானம் தன்கட் புலன் கடந்தமை யுணர்ந்து , “ஆ ! தெய்வ மகளோடு எனக்கு நட்புரிமையுண்டாயிற்றே . ஈதென்னை வியப்பு !” என்று கூறி அவ்வியப்பினாற் பரவசமாயினாள் . அதன்பின் சோமப்பிரபையை நினைவுட் கொண்டே இரவு முழுதும் கழித்தாள் . பிற்றைநாட் காலைப்பொழுதில் மீண்டும் சோமப்பிரபை கலிங்கசேனையின் பக்கலை எய்தினாள் . எய்தி மரத்தான் ஆக்கப்பட்ட னவும் வியக்கத் தக்கனவுமாகிய பற்பல பாவைகள் நிறைந்த பேழை ஒன்றனைக் கலிங்கசேனைக்குக் கொடுத்தாள் . கலிங்கசேனை , “இப்பேழையில் யாதுள்ளது .? “ என்று கேட்டாள் . சோமப்பியை பேழையைத் திறந்து காட்டினாள் . அதன்கட் சில பாவைகள் மலர்களான் மாலை தொடுத்தன ; சில பாவைகள் பானீயங் (குடித்தற்குரிய நீர் முதலியன ) கொணர்ந்தன .; சில ஆடின ; சில பாடின ; சில வீணை வாசித்தன . இவ்வாறு பற்பல விதங்களாக அமைந்த பாவைகளைக் கண்டு கலிங்கசேனை தன் மனத்தில் அளவிடற்கரிய ஆனந்தம் எய்தினாள் . பின்னர்ச் சோமப்பிரபை கலிங்கசேனைக்குத் தெரிவித்து விட்டுத் தன் இருப்பிடத்தைக் குறித்துப் போயினாள் . இவ்வாறு சோமப்பிரபை மீண்டு மீண்டுங் கலிங்கசேனையின் பக்கல் போக்கு வரவு புரிபவளாயினாள் .
பின் ஓரமயம் கலிங்கசேனை தன்பால் எய்திய சோமப்பிரபையை நோக்கி , “தோழீ ! என்னுள்ளத்தோடொத்த நின்பால் ஒரு மறைபொருளைப் பற்றித் தெரிவித்துக் கொள்ளுதற்கு விரும்புகின்றேன் . மணஞ்செய்தற்குரிய பருவம் வாய்ந்த என்னை அரசர் பலர் விரும்புகின் றனர் . தந்தையோ என்னைச் சிராவத்தி என்னும் நாட்டின் தலைவனாகிய பிரசேனசித்து என்னும் பெயரினையுடைய அரசர்க்கு கொடுக்க விரும்புகின்றார் . இஃது என் அன்னையாற் கூறப்பட்டது ; அப்பிரசேனசித்துவை நீ முன்னர்க் கண்டதுண்டா ? அங்ஙனமாயிற் கூறுவாயாக . அவன் எத்தகையன் ? அவன் உருவம் எத்தகைத்து ?” என்றிவ்வாறு கூறினாள் . அதனைக் கேட்ட சோமப்பிரபை கைகளாற் செவியைப் பொத்திக்கொண்டு “தீவினை யொழிக ; அமங்கலம் நீங்குக “ என்று கூறிக் கண்களினின்றும் மிகவும் நீரை ஒழுக்கினாள் . கலிங்கசேனை அவளை நோக்கி , “இங்ஙனம் துன்புறுதற்குக் காரணம் என்னை?” என்று கேட்டாள் . சோமப்பிரபை கலிங்கசேனையை நோக்கி , “தோழீ ! மணமகன் இலக்கணங்களாக ஆராயப்படுவன பருவம் , குலம் , சீலம் , கல்வி ,உருவம் என்னும் இவை முதலிய பலவாம் . அவற்றுட் பருவமே சிறந்ததாகும் . சிராவத்தி நாட்டின் தலைவனாகிய பிரசேனசித்து என்பான் குலம் , சீலம் , கல்வி , உருவம் என்னும் இவைகள் நிரம்பப் பெற்றவனாயினும் யாண்டு முதிர்ந்தவனாவான் . யாண்டு முதிர்ந்தவன்பாற் குலமுதலியவற்றால் எய்தக்கடவ பயன் யாதுள்ளது .? ஆதலின் , அவன் நினக்கு ஒத்த மணமகன் ஆகான் . கெளசாம்பி என்னும் தலைநகரில் வாழ்கின்ற வற்ச தேயத்தரசனாகிய உதயனனோ நினக்கியைந்த மணமகனாவான் . அவனும் நின்னை மிக்க வனப்புடையவள் என்று கேட்டிருக்கின்றான் . ஆதலின் நின்பாற் சிறந்த காதற்கிழமை பூண்டுளான் . அங்ஙனமாயினும் அவர்க்கு வாசவதத்தை யென்னும் பெயரினையுடைய பெருந் தேவி ஒருத்தி யுள்ளாள் . அவள்பால் அவன் மிகப் பெரும் காதலும் மதிப்பும் உடையான் . அவட்கு மனக்கலக்கம் உண்டாகுமென்னும் அச்சத்தால் நின்னை வேண்டுகின்றானல்லன்” என்றிவ்வாறு கூறினாள் .
இங்ஙனங் கூறக்கேட்ட கலிங்கசேனை சோமப் பிரபையை நோக்கி, “என் அன்பிற்குரிய தோழீ ! வற்சதேயத்தரசன் என்னை மணஞ் செய்து கோடற்கரிய உபாயத்தை ஆராய்தல் வேண்டும் . அன்றி , வாணாசுரன் புதல்வியாகிய உடையின் பொருட்டு அநிருத்தனைச் சித்திரலேகை கொணர்ந்தாங்கு நீயே அவ் உதயனனை இங்குக் கொண்டுவரல் வேண்டும்” என்றிவ்வாறு கூறினாள் . பின்னர்ச் சோமப்பிரபை , “அரசுப்பெண்ணாகிய சித்திரலேகை என்பாள் தனக்கு உரியனல்லாத மற்றோராடவனை தீண்டுதன் முதலிய செயல்களைச் செய்தாள் . யான் இத்தகைய செயலை எங்ஙனம் செய்வல்? இனி ஒன்று செய்வேன் . நீ எனது இவ்விமானத்தில் ஏறிக்கொள்ளல் வேண்டும் . முதலிற் பிரசேனசித்துவை நினக்குக் காட்டி அதன்பின் வற்சதேயத்தரசன் பக்கல் நின்னைச் சேர்ப்பேன் . ஆதலின், ஆடை அணிகலன்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்படுக” என்று சொல்லினாள் . கலிங்கசேனை “அங்ஙனமேயாக” வென்றுடன்பட்டுத் தாய் தந்தையர்க்குங் கூறாமல் , குலவொழுக்கத்தையும் பொருட்படுத்தாமல் உலகங் கூறும் பழிச்சொல்லையும் புறக்கணித்து , ஆடை அணிகலன் பொருள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சோமப்பிரபையோடு விமானத்திலேறிப் புறப்பட்டாள் . காமநோய் வயப்பட்டார் வரக்கடவ நன்மையையாதல் தீமையையாதல் நோக்குவாரல்லர் . தாம் புரியுஞ்செயல் நல்லதாயினும் தீயதாயினும் அதனை ஆராயாமல் துணிந்துசெய்யும் இயல்பினரன்றே !
அதன்பின் , சோமப்பிரபை கலிங்கசேனையை விமானத்திலேற்றிக் கொண்டு சிராவத்தி நாட்டை அடைந்தாள் . அங்கே நரை திரை மிக்க உடலினையுடைய பிரசேனசித்து என்னும் அரசனைக் காட்டினாள் . அதன்பின் கெளசாம்பி நகரத்தை யடைந்து அந்நகரத்தின் புறத்தேயுள்ள பூஞ்சோலையில் விளையாடிக்கொண்டிருக்கும் காமனை யொத்த உருவம் வாய்ந்த வற்சதேயத்தரசனைக் காட்டினாள் . அவ் உதயனனையே நெடு நேரம் இமைத்தலில்லாத கண்களாற் பார்க்கின்ற கலிங்கசேனை , “தோழீ ! சோமப்பிரபே ! இப்பொழுதே என்னை இவனோடு கூட்டுவிப்பாயாக . யான் இவனை யின்றி ஒரு கணப்பொழுதேனும் உயிர் வாழேன் “ என்று கூறினாள். சோமப்பிரபை , “தோழீ ! இப்பொழுது தீநிமித்தங்கள் பிற காணப்படு கின்றன . ஆதலின் , இப் பூஞ்சோலையிலேயே பலர் அறியாவாறு சிறிது நேரம் இருப்பாயாக . யான் எனது இருப்பிடம் எய்தி விரைந்து திரும்பி வருவேன் “ என்று கூறிப் போயினாள் . வற்சதேயத்தரசன் அப் பூஞ்சோலைக் கண்ணே நெடு நேரம் விளையாடல் செய்து பின் ஏவலாளரோடு தன் இருப்பிடம் எய்தினான் . பின்னர்க் கலிங்கசேனை சகுனநிலை யுணர்ந்த சோமப்பிரபையால் தடுக்கப்பட்டும் காமவெறியின் இறுதி எல்லைக்கண் இவர்ந்து வற்சநாயகன்பால் யாண்டு முதிர்ந்த தூதன் ஒருவனை ஏவினாள். அத் தூதன் வாயில் காப்பவனால் விடப்பட்டு , உட்புகுந்து வற்சதேயத்தரசனை வணங்கி , “தேவ ! தக்கசிலை என்னும் நகரத்திலுள்ள கலிங்கதத்தன் என்னும் அரசற்குக் கலிங்கசேனை என்னும் புதல்வி ஒருத்தி யுள்ளாள் . அவள் மங்கைப் பருவமுடையளாய் அரசர் பலரால் வேண்டப்பட்டும் நின்னையே தனக்கு ஒத்த மணமகனாகத் துணிந்துளாள் . அன்னாள் இப்பொழுது சுற்றத்தார் எல்லோரையும் விட்டுத் தன் அன்புரிமைத் தோழியும் மாயாசுரன் மகளும் நளகூபரன் மனைவியுமாகிய சோமப்பிரபையோடு கூடி விமானத்திலேறி நின் உய்யான வனத்தில் வந்தி ருக்கின்றாள் . இந் நிகழ்ச்சியை யறிவித்தற் பொருட்டுத் தேவரீர் பக்கல் அவள் என்னை விடுத்தாள் . ஆதலின் அவளை ஏற்றுக்கொள்ளல் வேண்டும். திங்களும் நிலவும் போன்ற நுங்கள் இருவீரது சேர்க்கை மிகவும் சிறந்து விளங்கும் “ என்றிவ்வாறு தெரிவித்தான் . இங்ஙனங் கூறிய யாண்டு முதிர்ந்த தூதனுடைய சொற்களை வற்சதேயத்தரசன் கேட்டு மிக்க மகிழ்ச்சியுடையனாய் , “அங்ஙனமேயாக” என்று அத்தூதனுடைய மொழிகளை மகிழ்ந்தேற்று ஆடை அணிகலன் முதலிய பரிசில்களால் அவனை உவப்பித்தான் . பின்னர் அப்பொழுதே அமைச்சருள் தலைவனாகிய யெளகந்தராயணனை யழைத்து எல்லாவற்றையும் அறிவித்தான் . அவ் அமைச்சன் அரசற்கு நலத்தை விரும்புகின்றவனாய்ப் பின்வருமாறு சிறிது நேரம் சிந்திக்கலாயினான் .
“கலிங்கசேனையோ உருவச்சிறப்பாற் புகழ்வாய்ந்தவள் .மூவுலகத்திலும் அவளுக்கு ஒப்பான அழகு வாய்ந்தவள் வேறொருத்தியுமிலள் . அமரரும் அவளையடைய விரும்புகின்றனர் . நம் வற்ச தேயத்தரசன் அவள மணம் புரிந்து கொள்ளுவானாயின் , பிறவெல்லாவற்றையும் துறந்து அவளிடத்திலேயே காதலுடையனாவன் . அங்ஙனமாயின் வாசவதத்தை நெடுநாள் உயிர் தாங்கியிராள் . புதல்வனாகிய நரவாகனதத்தற்கும் தீங்கு விளையும் . பதுமாவதியின் வாழ்க்கையும் ஐயப்பாட்டிற்குரியதாகும் . சண்டமகாசேனனும் மகத தேயத் தரசனும் தம் புதல்வியர்க்கு நேருங் கேட்டினால் தம் உயிரை விடுவர் .அன்றி வற்சராசன்மாட்டுப் பகைமை மேற்கொள்வர் . ஆகவே கலிங்கசேனையின் மணத்தால் எல்லோருக்கும் அழிவு உண்டாம் . அவன் மன்றலை அறவே விலக்குதலும் பொருத்தமன்று . அங்ஙனம் விலக்கப்படின் அரசற்குக் காமவேதனை மிகும் . ஆதலின் , காலந் தாழ்த்தலே இப்பொழுது செய்யத்தக்கதாகும் “ என்றிவை முதலியவற்றைப் பலபடியாக ஆராய்ந்து யெளகந்தராயணன் வற்சராசனை நோக்கி “அரசே ! கலிங்கசேனை நின்னையடையத் தானே வேண்டுகின்றமையால் நீ பாக்கியவானா கின்றாய் . கலிங்கதத்தனும் நினக்கு நண்பனாவான் . ஆதலின் , நன் முகூர்த்தத்தில் கலிங்கசேனையின் மணம் நிறைவேற்றத்தக்கது . விவாகத்திர்குரிய சிறந்த இலக்கினத்தைச் சோதிடர்களைக் கேட்டுத் தீர்மானிப்பேன் . அக் கலிங்கசேனையின் செல்வச் சிறப்பிற்கேற்றவாறு இருப்பிடத்தையும் மிகவுயர்ந்த ஆடை அணிகலன்களையும் அளித்த்ல் வேண்டும் . அவட்குப் பணி செய்தற் பொருட்டுப் பணிப்பெண்களையும் ஏவலாளரையும் நியமித்தல் வேண்டும் “ என்றிவ்வாறு கூறினான் . வற்சராசனும் யெளகந்தராயணன் கூறியாங்குச் செய்தான் . விரைவில் தன் விருப்பம் நிறைவேறி விடுமென்று மகிழ்கூர்ந்தான் .
யெளகந்தராயணன் சோதிடர் எல்லோரையும் அழைந்து “வற்சராசனது நலத்தின் பொருட்டு நீவிர் துணை செய்தல் வேண்டும் . அவன் “கலிங்கசேனையை மணஞ் செய்து கோடற்கேற்ற நல்ல இலக்கினத்தைத் துணிவீர்களாக “ என்று நும்மை நோக்கிக் கூறுவான் . அப்பொழுது நீவிர் , “மணத்திற்கியைந்த நன்முகூர்த்தம் ஆறு திங்களுக்கிடையில் இல்லை “ என்று கூறல் வேண்டும் . இன்னோரன்ன பொய்யுரையால் தீங்கு நேருமென்றெண்ண வேண்டா. “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த, நன்மை பயக்குமெனின் “ என்பது பொய்யில் புலவர் பொருளுரையாகும் “ என்றிவ்வாறு கூறினான் . அக் கணிகளும் (சோதிடர்) அங்ஙனமேயாகவென்றுடன்பட்டனர் . அதன்பின் , பிற்றை நாளில் யெளகந்தராயணன் அரசவைக்கட் சென்று அரசனுடைய தூதர்களால் ஒளிநூல் (சோதிட நூல்) வல்லார் எல்லோரையும் அழைப்பித்தான் . அவரும் வந்தனர் . யெளகந்தராயணன் அரசன் முன்னிலையில் அவர்களை நோக்கி, “விவாக நற்செயற்கு ஏற்ற முகூர்த்தத்தை விரைவிற் பாருங்கள் “ என்றிங்ங னங் கூறினான் . அச் சோதிடர் முன்னரே செய்து கொள்ளப்பட்ட சங்கேதத்தை மனத்தில் வைத்துக்கொண்டு , “ஆறு திங்கள் சென்றபின் ஏழாம் திங்களில் நல்ல இலக்கினங் காணப்படுகின்றது .” என்றிங்ஙனங் கூறினர் .
அதுகேட்டு யெளகந்தராயணன் பொய்மையாகச் சினந்து , “அறிவிலாத இவர்க்கு ஒன்றும் தெரியாது . மற்றொரு பெரிய பண்டிதன் இருக்கின்றான் . எவன் தங்களால் அடிக்கடி பெருமைப் படுத்தப்பட்டு ளானோ அவன் இப்பொழுது இங்கு வரவில்லை “ என்றிங்ஙனஞ் சொல்லினான் . அரசனும் , “ஆங்ஙனமேயாக” வெனத் தூதர்களால் அப் பண்டிதனை அழைப்பித்தான் . அப்பண்டிதனும் யெளகந்தராயணால் முன்னரே சங்கேதஞ் செய்யப்பட்டவனாதலின் அங்ஙனமெ கூறினான் . அதன்பின் யெளகந்தராயணன் மனவருத்தமுடையவன் போலாகி , “தேவ ! இனி இதன்கட் செயற்பாலது யாது ? “ என்று கேட்டான் . அரசன் கலிங்கசேனையின் கருத்தென்னை என்று அறிதல் வேண்டும் என்று சொல்லினான் . யெளகந்தராயணன் , “அங்ஙனமேயாக” வென்று கூறி இரண்டு சோதிடர்களை யழைத்துக்கொண்டு கலிங்கசேனையின் பக்கல் அடைந்தான் . அடைந்து அவளை நோக்கி “தேவி ! வற்சராசன் நின்னை மணஞ் செய்து கோடற்குப் பரபரப்புடையனாக இருக்கின்றான் . நல்ல இலக்கினத்தைத் துணிதற்பொருட்டு இரண்டு சோதிடர்களை யழைத்து வந்தேன் . நின் பிறந்த நாளைக் (நட்சத்திரம்) கூறுவாயாக .” என்றிவ்வாறு கூறினான் . அவளுடைய ஏவன் மகளிர் பிறந்த நாளைக் கூறினர் . அவ்விரு கணிகளும் பொய்மையாகக் கணனஞ் செய்து முன் போலவே கூறினர் . அது கேட்டுக் கலிங்கசேனை கவலைக் கடலுண் மூழ்கினாள் . அப்பொழுது அவளுடைய வயோதிக தூதன் , “நல்ல இலக்கினங் காண்டல் இன்றியமையாததொன்றே . காலமே நன்மை தீமை எல்லாவற்றிற்குங் காரணமாகும் . நன்முகூர்த்தமே மணமக்களுக்கு வருங்காலத்தில் நலந்தருவதாகும் . அஃது அணிமையிலாயினுமாக ; சேய்மையிலாயினுமாக ; எவ்வாற்றானும் எதிர்பார்க்கத்தக்கதே “ என்றிங்ஙனங் கூறினான் . யெளகந்தராயணனும் , “தேவி ! விலக்கப்பட்ட நாட்களில் நற்கன்மங்கள் செய்தலாகாது . அங்ஙனஞ் செய்யப்படின் , அவை பின்னர்ப் பெருந்துன்பத்தை விளைவிப்பனவாம் . ஆதலின் , நல்லிலக்கினத்தை யாராய்ந்து காண்டலே நலம் “ என்று கூறினான் . அது கேட்டு கலிங்கசேனை, “காலம் விலக்கற் கரியது “ என்று துணிந்து , “நீவிர் எல்லீரும் எங்ஙனம் அறிகின்றீர்களோ அங்ஙனமே செய்வீர்களாக “ என்று சொல்லினாள் . யெளகந்தராயணன் வற்சராசன் பக்கல் அணுகிக் காலத்தை எதிர்பார்த்தலே கலிங்கசேனையின் கருத்தென்பதை அவற்கு எடுத்துக் கூறிவிட்டுத் தன் இல்லத்தை யடைந்தான் .
இங்ஙனம் தன் அறிவுவன்மையால் கலிங்கசேனையின் மன்றற்கு இடையூறு விளைத்து எஞ்சிய காரியத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தன் நாட்டோனாகிய யோகேசுவரன் என்னும் பெயரினையுடைய பிரமராக்கதனை நினைந்தான் . நினைந்த அளவில் நெருங்கி வந்த அவ் யோகேசுவரன் யெளகந்தராயணனது முன்னிலையில் நின்று , “என்னால் ஆகவேண்டிய காரியம் யாது ?” என்று கேட்டான் . யெளகந்தராயணன் , வற்சராசற்குக் கேடு விளைவிக்கத்தக்க கலிங்கசேனையைப் பற்றிய நிகழ்ச்சிகளெல்லாவற்றையும் அவற்கு அறிவித்து மீண்டும் , “நண்ப ! கலிங்கசேனையின் விவாக நிகழ்ச்சியில் யான் காலந்தாழ்த்தலைச் செய்தேன் . இனிக் கலிங்கசேனையின் பக்கலில் நீ மறைவாக இருத்தல் வேண்டும் . அவளது ஒழுக்கத்தையும் திறமையுடன் ஆராய்தல் வேண்டும் . அவள் மூவுலகத்திலும் எய்தற்கரிய எழில் நலத்தோடு விளங்குகின்றாள் . அவளைச் சித்தர்களும் வித்தியாதரர்களும் நிச்சயமாக விரும்புவர் . தாம் விருப்பியவாறு உருக்கொள்ளும் இயல்பினாராகிய அவர்கள் வேற்றுருக் கொண்டு அவளோடு கூடுவர் . அதனையும் நீ விழிப்புடையனாயிருந்து அறிதல் வேண்டும் . வேற்றுருக்கொள்வோர் துயிலுங்கால் தமக்குரிய இயற்கை யுருவத்தையே எய்துவர் . நீ அவளுடைய ஒழுக்கம் எல்லாவற்றையும் சோர்விலனாயிருந்து அறிதல் வேண்டும் . அதனால் வற்சராசற்கு அவள்பால் விருப்பமின்மையை விளைவித்தல் வேண்டும் “ என்றிவ்வாறு கூறினான் .
அது கேட்டுப் பிரமராக்கதன் , “இத்துணைச் சிரமம் எற்றிற்கு ? ஒழுக்க நெறியின் வழுவிய அவளை உடனே கொன்று விடுவேன் “ என்று கூறினான் . யெளகந்தராயணன் , “அங்ஙனஞ் செய்தலாகாது ; பெரும் பாவம் விளையும் “ என்று மறுத்துரைத்தான் . . யோகேசுவரன் , “அங்ஙனமேயாக” வென்று அவன் சொல்லையுடன்பட்டு மறைந்தொழுகுதற்குரிய விச்சையால் மறைந்து கலிங்கசேனையின் இல்லத்துட்புகுந்தான் , புகுந்து அவளையே இமைத்தலில்லாத கண்களாற் பார்த்துக்கொண்டிருந்தான் . இதற்கிடையில் வாசவதத்தை கலிங்கசேனையின்மாட்டு அரசன் மேற்கொண்ட காதற்கிழமையை யறிந்து, மிகவும் மனக்கலக்கமுற்றாள் . யெளகந்த ராயணன் அவ் வாசவதத்தையின்பாற் சென்று , “அரசி ! இந் நிகழ்ச்சியை முன்னிட்டுச் சிறிதும் மனக்கலக்கமுறவேண்டா . என்னுயிருள்ள காலம் வரையும் பதுமாவதியை யன்றி வேறொருத்தி நினக்குச் சபத்தினியாகாள் . இஃதுண்மை . ஆயினும் நின்னாற் செய்யத்தக்க ஒரு காரியத்தைப்பற்றிக் கூறுவேன் . அதனை அங்கீகரிப்பாயாக . அரசன் கலிங்கசேனையின்பால் தனக்குள்ள அவாவை நின்பால் தெரிவிப்பான் . அப்பொழுது அவன் விருப்பத்திற்கு இயைந்தவள் போலாகி அவன்பால் , “ஐய ! இது தக்கதே கலிங்கதத்தனது இராச்சியமும் நின் கைவயப்படும் . ஆதலின், அவசியம் கலிங்கசேனையை மணஞ்செய்துகொள்ளவேண்டும் “ என்றிங்ஙனங் கூறு வாயாக . . இங்ஙனம் கூறின் அவன் நின்பால் முன்னையிலும் மிகுதியான மதிப்பு வைத்தொழுகுவான் . தன் விருப்பத்திற்கு இடையூறு இல்லையென்று கருதிக் கலிங்கசேனையின் மன்றலில் தளர்ந்த முயற்சியுடையவனாவான் . அன்றித்தன் விருப்பம் தடைப்படுமாயின் அடையவேண்டுமென்னும் அவா மிகுதி யுடையவனாவான் . பதுமாவதிக்கும் இச் செய்தியைத் தெரிவிப்பா யாக “ என்றிவ்வாறு கூறித் தேற்றினான் . வாசவதத்தையும் , “அங்ஙனமேயாக வென்றுடன்பட்டாள் .
அதன்பின் , ஓரமயம் சோமப்பிரபை கலிங்கசேனையின் பக்கல் அடைந்தாள். அப்பொழுது தன்சொல்லைக் கடந்து வற்சராசனைக்குறித்துத் தூது போக்கியதும் , சோதிடர்களால் ஆறு திங்களின் பின் விவாகமுகூர்த் தம் துணிந்ததும் அறிந்து மிகவும் துன்பமுற்றுப் பின்வருமாறு கூறுவாள். “தோழி ! சபத்தினிகள் பொய்மையான குற்றங்களை நின்பால் ஏற்றிடுவர். விவாகமுகூர்த்தம் பல நாட்களின் பின் குறிக்கப்பட்டுள்ளது . தேவர்களும் நின்னை மனஞ் செய்து கோடற்கு விரும்புகின்றனர் . ஆதலின், எவ்வாற்றானும் தற்காப்புச் செய்துகொள்ளல் வேண்டும் . இக்காரியத்தில் நீ விழிப்புடையளாக இருத்தல் வேண்டும் . இனி யானும் கணவன் இல்லத்தில் வாழும் நின்னை அடிக்கடி வந்து காண்டற்கியலாது . இப்பொழுது என் பதியின் அநுமதியை மிக முயன்று பெற்று இங்கு வந்தேன். இங்கு என்னாலாக வேண்டியது ஒரு சிறிதும் இன்று . ஆதலின், என் காந்தன் பக்கல் எய்துவேன் . காரியங்களை முன்னிட்டு நினைப்பின் எதிர்ப்படுவேன் .எவ்வாற்றானும் நின்னைக் காத்துக்கொள்வாயாக “ என்று கூறிப்போயினாள் . அதன்பின் வற்சராசன் கலிங்கசேனையின்பாற் பதிந்த காதற் பெருக்கினையுடைய தன் மனத்திற்கு ஆறுதலாகிய மகிழ்ச்சியை யாண்டும் பெறாதவனாய் வாசவதத்தையின் இல்லத்தை யடைந்தான் . முன்னரே யெளகந்தராயணனாற் கூறப்பட்ட செய்திகளை மனத்தில் தாங்கியிருக்கும் அவ்வாசவதத்தை அரசனை முன்னையினும் மிகுதியான அன்போடு உபசரித்தாள் . அதனைக்கண்டு அரசன் இவள் கலிங்கசேனையைப் பற்றிய நிகழ்ச்சிகளை அறியாதவள் போற் காணப்படுகின்றாள் என்றெண்ணி அந் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எடுத்துக்கூறினான் .
அதுகேட்ட வாசவதத்தை முன்னையினும் மிகுதியான முகமலர்ச்சியோடு விளங்குகின்றவளாய் , “ஆ ! ஆ ! அரசர் பெருமானுக்கு எதிர்பாராமல் நேர்ந்த செல்வ வரிசைகள் என்னே ! இக் கலிங்கசேனையின் மன்றலாற் கலிங்கதத்தனும் நினக்கு நண்பனாவான் .ஆதலின், கலிங்கசேனையின் மணம் எவ்வாற்றானும் விலக்கத்தக்கதன்றாம் .” என்றிங்ஙனங் கூறினாள் . அது கேட்ட உதயனன் மிகவும் வியப்புடையனாய் மனத்திங்கட் பின்வருமாறு சிந்திக்கலாயினான் . “ஆ ! இவ் வாசவதத்தை மிகப் பெரியவள் ; பதுமாவதியை யொப்பக் கலிங்கசேனையையும் சபத்தினியாக எண்ணுகின்றாள் ; இவளுக்கு வேண்டாததொன்று எவ்வாற்றானுஞ் செய்யத் தக்கதன்று . இவளது பெருந்தன்மையை நினையுங்கால் கலிங்கசேனையின் விவாகத்தில் என் மனம் செல்லவில்லை.” என்று இவ்வாறு நினைந்து வாசவதத்தைக்கு அறிவித்துத் தன் இல்லத்தை யடைந்தான் .அதன்பின் மற்றை நாளில் பதுமாவதியின் இல்லம் எய்தினான் . அவளும் வாசவதத்தையினால் முன்னரே இன்னது செயற்பாலது என்று அறிவிக்கப்பட்டவளாதலின் அங்ஙனமே அரசனை மிக்க சிறப்போடு உபசரித்தாள் . இங்ஙனம் தேவிமார் இருவருடைய உள்ள நிகழ்ச்சிகளும் ஒன்றுபட்டிருத்தலை வற்சராசன் உணர்ந்து ஐயமேற்கொண்டு யெளகந்தராயணனை அழைத்து அவன்பால் எல்லாவற்றையும் அறிவித்தான் . பேரறிவுடைய அவ் யெளகந்தராயணன் கலிங்கசேனையின் மணமாகிய தீச்செயலினின்றும் அரசனை மீட்டற்கு இதுதான் சமயமென்றெண்னி , “தேவ ! யான் தேவிமாரின் கருத்துக்களை அறிவேன் .அவர்கள் கலிங்கசேனையின் மன்றல் நிகழுமாயின் நிச்சயமாக உயிரைத் துரும்பென மதித்து ஒழித்து விடுவர் . நேர்மையான நெஞ்சத்தையும் உயர்ந்த குணஞ் செயல்களையுமுடைய கற்புடை மகளிர் சபத்தினிகளாலாம் துன்பத்தை நெடுங்காலம் அநுபவிப்பாரல்லர் . ஆதலின் கலிங்கசேனையின் மணம் நிறைவேறுமாயின் தேவி வாசவதத்தை நிச்சயமாக உயிரைப் போக்குவாள் . பதுமாவதியும் அக்கதியையே யடைவாள் . அதன்பின் குமாரன் நரவாகனதத்தனும் எங்ஙனம் உயிர் வாழ்வான் ? மாமன்மார் மைத்துனர் முதலிய எல்லா உறவினரும் சினமுடையராவார் . ஆதலின், கலிங்கசேனையின் மன்றலால் மிகப் பெருங் கேடு உண்டாகும் . “ என்றிவ்வாறு கூறினான் . யெளகந்தராயணன் , கூறிய இச் சொற்களைக் கேட்டு வற்சராசன் மனத்தில் விவேகம் தோன்றப் பெற்றவனாய் , “அமைச்ச ! நின்னாற் கூறப்பட்டன வெல்லாம் உண்மையே . கலிங்கசேனையின் மணத்தால் எனக்கு விளையும் பயன் யாதுளது ? இந் நிகழ்ச்சியில் தெய்வவயத்தாற் சோதிடர்கள் காலத்தாழ்வு செய்தனர் . ஆதலின் சுயம்வரத்தின் பொருட்டுக் கலிங்கசேனை வந்தவளாயினும் அவளை மணஞ் செய்துகொள்ளேன் “ என்றிவ்வாறு கூறினான் . அதன்பின் யெளகந்தராயணன் தன் நீதிப் பிரயோகம் பலித்தது கண்டு மனத்தில் அளவு கடந்த உவகை மேற்கொண்டு அரசற்கு அறிவித்துத் தன் இல்லம் எய்தினான் . பின்னர் அரசன் வாசவதத்தையின் மனைக்கட் சென்றான் . அவள் இவ்வெல்லாம் யெளகந்தராயணனது சூழ்ச்சித் திறனென்று அரசற்குக் கூறினாள் . அதனைக் கேட்ட அரசன் அவ்வமைச்சனது அறிவின் திறத்தைப் பலவாறு புகழ்ந்துரைத்தான் .
இஃதிங்ஙனமாகக் கலிங்கசேனையின் உருவம் அழகு முதலியவற்றைக் கண்டு அவள்பால் வித்தியாதரர் பலர் அவாவுடையராயினர் . அவருள் , மதனவேகன் என்னும் பெயரினையுடைய வித்தியாதரன் ஒருவன் கலிங்கசேனையைப் பெறுதற்பொருட்டுத் தவம் புரிந்து பகவானாகிய உமாகாந்தனை வழிபட்டான் . அப்பெருமான் அங்ஙனமே வரங்கொடுத்தார் . அங்ஙனம் வரம் பெற்றும் அக் கலிங்கசேனை வற்சராசன்பால் மனத்தினை யுடையளாய் , அவனது நகர்ப்புறத்துப் பூஞ்சோலைக் கண்ணே தங்கி இருத்தலைக் கண்டு மிகவும் வருத்தமுடையனாயினான் ; எப்பொழுதும் அவளைப் பெறுதற்குரிய உபாயத்தையே சிந்தித்துக் கொண்டிருந்தான் . ஒரு நாள் இரவில் மதனவேகன் கலிங்கசேனை யிருக்கும் இல்லத்தின் மேற்புறத்தே சுற்றித் திரிந்தான் . அப்பொழுது பகவானாகிய உமாகாந்தன் அருளிய விச்சையினால் வற்சராசனைப் போல் உருக்கொண்டு அவ் வுருவத்தோடு கலிங்கசேனையின் இல்லத்துட் புகுந்தான் . அவனை வாயில் காப்போர் கண்டு இவன் வற்சராசன் என்றெண்ணி வணக்கஞ்செய்து கைகூப்பி நின்றனர் . கலிங்கசேனை இவனைக்கண்ட அளவில் நடுக்கமும் நாணமும் உடையளாய் எழுந்தாள் . அதன்பின் மதனவேகன் பலவகை இன்சொற்களால் அவளை நம்பிக்கையுறச் செய்து காந்தருவ முறைமையால் மணந்தான் . யோகேசுவரனும் இவன் வற்சராசனே யாவான் என்றெண்ணி யெளகந்தராயணன்பாற் சென்று அறிவித்தான் . யெளகந்தராயணன் அவ் யோகேசுவரனை நொக்கி , “வாசவதத்தையின் இல்லத்தில் உதயனன் இருக்கின்றான் என்றாதல் , இல்லை யென்றாதல் மறைந்து காணக்கடவை “ என்று கட்டளையிட்டான் . யோகேசுவரனும் அங்ஙனமே வாசவதத்தையின் இல்லத்தை யடைந்து அங்குக் கட்டிலின்கட் படுத்திருக்கின்ற வற்சராசனைக் கண்டான் . கண்டு யெளகந்தராயணற்குச் சொல்லினான் . யெளகந்தராயணன் யோகேசுவரனை நோக்கி விரைந்து “கலிங்கசேனையின் இல்லத்தை யடைக . கலிங்கசேனையை விரும்பி எய்திய அக்காமுகன் யாவன் என்பதை அவன் துயிலுங்கால் அறிவாயாக “ என்ரு கட்டளையிட்டான் . யோகேசுவரன் அங்ஙனமே கலிங்கசேனையின் இல்லத்தை யடைந்தான் .
அவ் வில்லத்தின்கண் நள்ளிரவில் நன்றாக உறங்கும் கலிங்கசேனையோடு துயில்கின்றவனும் , தன் இயற்கை யுருவம் பொருந்தப் பெற்றவனுமாகிய மதனவேகனைக் கண்டான் .பின்னர் உடனே யெளகந்தராயணன்பாற் சென்று , “அமைச்சர் பெரும ! ஆ ! நின் நுண்ணறிவின் மாட்சி என்னே ! எம்மனோராற் காண்டற்கரிய பொருளையும் நீ எளிதிற் காண்கின்றாய் . நின்னை அமைச்சனாகப் பெற்றமையால் வற்சராசன் எவ்வாற்றானும் பாக்கியவானாகின்றான் . நின்னால் யாது எவ்வாறு எண்ணப்பட்டதோ அஃது அத்தகையதே . மதனவேகன் என்னும் பெயரினையுடைய வித்தியாதரன் வற்சராசனது உருவத்தைத் தாங்கிக் கலிங்கசேனையோடு கூடி இன்புறுகின்றான் “ என்றிவ்வாறு தெரிவித்தான் . இங்ஙனம் கூறிய யோகேசுவரற்கு அவன் விரும்பிய இடத்தை எய்தும்படி யெளகந்தராயணன் கட்டளை யிட்டான் . அவனும் யெளகந்தராயணனை வணங்கிப் போயினான் .
அதன்பின் , காலப்பொழுதில் யெளகந்தராயணன் வற்சராசனைக் காண்டற்குச் சென்றான் . அங்கு உரையாடிக்கொண்டிருக்குங்கால் , “அரசர் பெரும ! இக்கலிங்கசேனை அன்னிய புருடனோடு சேர்க்கையை மேற்கொண்டமையால் நின் கையால் தீண்டுதற்குரியளாகாள் . என்று கூறினான் . அதுகேட்டு அரசன் , “குலமகள் இங்ஙனந் தகாத செயலை எவ்வாறு செய்வள் “ என்றான் . யெளகந்தராயணன் , “ இன்றிரவிலேயே காட்சியளவில் வைத்து நினக்கு இதனைக் காட்டுவேன் “ என்று மறுமொழி கூறினான் . வியப்பு மிக்க மனத்தினையுடைய வற்சராசன் அன்றிரவிலேயே யெளகந்தராயணனோடு கலிங்கசேனையின் இல்லம் எய்தினான் . அவ்வில்லத்தினுட் புகுந்து கலிங்கசேனையோடு இன்புறத் துயிலும் மதனவேகனைக் கண்டான் . பெரிதும் சினமுற்று அவனைக் கொல்லுதற்கு முயலுங்கால் மதனவேகன் விரைந்து விழித்துக்கொண்டு விசும்பை நோக்கி எழுந்து சென்றான் .
அதன்பின் , கலிங்கசேனையும் விழித்தெழுந்தாள் . எழுந்து தன் படுக்கையில் யாரும் இல்லாதிருத்தலைக் கண்டு , “ஆ ! துன்பம் . முன்னரே விழித்தெழுந்த வற்சராசன் என்னைத் தனியளாக ஒழித்துவிட்டு எவ்விடத்தோ சென்று விட்டான் “ என்று அழுதாள் . அப்பொழுது யெளகந்தராயணன் அரசனோடு அவள் பக்கல் அணுகிக் , “கலிங்கசேனே ! எவனோ ஒரு வித்தியாதரன் எங்கள் அரசனது வேடந்தாங்கி நின்னை வஞ்சித்து மணந்தான் . ஆதலின் , நீ வற்சராசன் மனைவியாதற்குத் தகுதியுடையை அல்லை . என்று கூறினான் .
அது கேட்ட கலிங்கசேனை கோடரியால் தாக்கப்பட்டவள் போலவும் பேய்கோட்பட்டாள் போலவும் மிகவும் துன்பத்தாற் கலக்குண்டு நீர் ஒழுகுங் கண்களையுடையளாயினாள் . அதன்பின் அரசனும் அமைச்சனும் தத்தம் இல்லம் எய்தினர் . பின்னர்க் கலிங்கசேனை இனத்தினின்றும் பிரிந்த மான் பேடு போல மிகவும் கலக்குண்ட நெஞ்சமுடையளாய் இல்லத்தினின்றும் புறம்போந்து ஆகாயத்தை நோக்கி, “யாவன் வற்சராசன் வேடந்தாங்கி என்னை மணந்துளானோ அவன் என் மாட்டு அருள் கூர்ந்து தன் இயற்கை உருவத்தோடு வெளிப்படுக . அவனையே யான் மணவாளனாக வரிப்பேன் “ என்றிங்ஙனங் கூறினாள் . அதன்பின் மதனவேகன் ஆர கேயூர (தோளணி) முதலிய சிறந்த அணிகலன்களை யணிந்துகொண்டு விண்ணினின்றும் இறங்கி அக்கலிங்கசேனையின் பக்கல் எய்திப் பின்வருமாறு கூறுவானாயினான் . “காதலீ ! கலிங்கசேனே ! என்னை மதனவேகன் என்னும் பெயரினையுடைய வித்தியாதரனென்று அறிவாயாக. யானே வற்சராச வேடந்தாங்கி நின்னை மணந்துளேன் . முன்னொரு காலத்தில் தந்தையின் இல்லத்திலிருந்த நின்னை யான் கண்டு அவா மேற்கொண்டு நின்னைப்பெறுதற்பொருட்டுச் சிவபிரானைக் குறித்து வழிபாடு செய்தேன் . நின்னைப் பெறுதலாகிய வரத்தையும் அப்பெருமான் எனக்கு அருளிச் செய்தார் . அதன்பின் நீ உதயனன் மாட்டு மிக்க காதற்கிழமை மேற்கொண்டமை யறிந்து இதுவே குற்றமற்ற உபாயம் என்றெண்ணி வேற்றுருக்கொண்டு நின்னை மணந்தேன் . இனி நீ இவ்விடத்திலேயே இருத்தல் வேண்டும் . மாநுடப் பெண்ணாகிய நின்னோடு எம்மரபினர் கூடி வாழ்தல் தக்கதன்று” என்றிங்ஙனங் கூறி மிகுதியான பொன்களை அவட்குக் கொடுத்துவிட்டு விசும்பிற் சென்றான் . இந் நிகழ்ச்சிகளை யறிந்த வற்சராசனும் அவளை அவ்விடத்திலேயே இருக்கும்படி அநுமதி செய்தான் . வித்தியாதரனை மணாளனாக எய்தப்பெற்று உளமகிழ்ந்த கலிங்கசேனை கணவன் கட்டளை இட்டவாறு அந் நகர்ப்புறப் பூஞ்சோலைக் கண்ணே இன்புற்றிருந்தாள் .
வெண்பா
கற்பு நலநிறைந்த காதலியர் தாங்கவல
அற்பொ டியலறத்தி னாறொரீஇத் — தற்பயனா
மன்றல் கொளலிறைக்கு மாண்பன் றெனமறுத்தான்
துன்று மதியமைச்சன் சூழ்ந்து .
விச்சா தரன்மதன வேக னுதயனன்பால்
நச்சுங் கலிங்கதத்த னன்மகளை — யிச்சையினால்
நாடி நலநுகர்ந்தா னாதன் சிவனருளைக்
கூடினார்க் குண்டோ குறை .
பதினாங்காம் வகுப்பு
( மதன மஞ்சுகை மன்றல் )
நாள் பல சென்றபின் கலிங்கசேனை கருவுற்றாள் . அதன்பின் மதனவேகன் அவளையடைந்து பின்வருமாறு கூறுவான் .”கலிங்கசேனே ! கருப்பமுண்டானபின் தேவர்கள் மாநுடப்பெண்களோடு சேற்கையை விரும்புவதில்லை. . இது தேவர்களது கொள்கை . முன்னொருகாலத்தில் மேனகை சகுந்தலையைப் பெற்றபின் விசுமாத்திர முனிவரை விலக்கி விட்டுச் சென்றாள் என்பது புராண கதை . ஆதலின் யான் செல்கின்றேன். அமயம் நேர்ந்துழி நினைப்பாயின் எதிர்ப்படுவேன் “ என்று சொல்லி மதனவேகன் போயினான் .
பகவானாகிய மகேசுவரரால் மன்மதன் உடல் நீறாக்கப்பட்ட பொழுது இரதிதேவி உடலோடுங் கூடிய கணவனை யடைதற் பொருட்டுத் தவம் புரிந்தாள் . அத்தவங்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் இரதியை நோக்கித் , “தானே மேற்கொண்ட இறுமாப்புக் காரணமாக என்னால் நீறாக்கப்பட்டு அழிந்த உடலினையுடைய நின் கணவன் கெளசாம்பி நகரத்தில் உதயனன் என்னும் அரசற்கு நரவாகனதத்தனென்னும் பெயரினையுடைய மகனாகப் பிறந்திருக்கின்றான் . நீயும் நிலவுலகத்தில் யோனிவாய்ப்பட்டுப் பிறவாமற் பெண்ணாகி அந் நரவாகனதத்தனோடு சேரக்கடவை “ என்றிங்ஙனங் கட்டளையிட்டார் . மேலும் பிரமனை நோக்கி , “நிலவுலகத்திலுள்ள கெளசாம்பி நகரத்தில் வற்சராசனது நகர்ப்புறத்துப் பூஞ்சோலைக்கண் இருக்கும் கலிங்கசேனை சிறந்த புதல்வனைப் பெறுவாள் . அப்புதல்வனை மாயையினாற் கவர்ந்து இவ் ரதியை யோனிவாய்ப்பட்டுப் பிறவாத கன்னிகையாக நிருமித்து அப்புதல்வன் கிடந்த இல்லத்தில் வைப்பாயாக” என்றிவ்வாறு கட்டளையிட்டார் . கலிங்கசேனை எப்பொழுது சிறந்த புதல்வனைப் பெற்றாளோ அப்பொழுதே பிரமன் பரமசிவனது கட்டளையை நிறைவேற்றினான் . அது காலை யாவரும் மின்னற்கொடி போல் ஒளி விளங்கும் பெண்மணியைப் பெற்றதாகக் கண்டனர் . வியக்கத்தக்க எழில் வாய்ந்த அப் பெண்மகளைக் கண்டு கலிங்கசேனை புதல்வர்ப் பேற்றினும் மிகுதியாக மகிழ்ந்து விழாக் கொண்டாடினாள் .
வற்சராசன் கலிங்கசேனைக்குப் பெண்மகவு பிறந்த செய்தியைக் கேட்டு யெளகந்தராயணனோடு வாசவதத்தையின்பாற் சென்று , “கலிங்கசேனை தேவர்களாலும் விரும்பத்தக்க உருவம் வாய்ந்த ஒரு பெண்குழந்தையைப் பெற்றாள் . அப்பெண் நம் அருமைமகன் நரவாகனதத்தற்கு மனைவியாம் தகுதியுடையவள்” என்றிவ்வாறு கூறினான். அது கேட்டு வாசவதத்தை அரசனை நோக்கி , “தேவ ! ஈதென்னை இவ்வாறு கூறுகின்றனை? இரண்டு குலமும் தூய்மையாகப் பெற்ற நின் புதல்வன் நரவாகனதத்தன் எங்கே ! கற்புநிலை பிறழ்ந்த கலிங்கசேனையின் கருப்பத்திற் றோன்றிய அப்பெண் எங்கே ! கலிங்கசேனையோ முதற்கட் பிரசேனசித்துவையும் அதன்பின் நின்னையும் அதன்பின் மதனவேகனையும் காதலித்துக் கற்பிழந்தவளாயினாள் . ஆதலின் எங்ஙனம் நம்மோடு சம்பந்தத்திற்குரிய ளாவாள் “ என்றிவ்வாறு மொழிந்தாள் .
அது கேட்டு வற்சராசன் , “இக் கலிங்கசேனை ஏதோ ஒரு சாபப் பிழையால் இந் நிலவுலகத்திற் போந்த தெய்வப்பெண்ணென்று கூறுவர் . இவள் பாற் பிறந்த கன்னிகையும் கடவுட் கூறுடையளாகத் தோன்றினவள் என்றே எண்ணுகின்றேன் .மேலும் நலனிறைந்த கன்னியர்க்குச் சாதி நன்மை தீமையில்லை’ என்பதன்றே அறநூலின் கட்டளை யாகும் . இஃது என் ஒருவன் அபிப்பிராய மாத்திரமன்று . விட்புலச் சொல்லும் இங்ஙனமே எழுந்ததுண்டு .” என்றிவ்வாறு மறுமொழி கூறினான் . அதன்பின் யெளகந்தராயணன் , “தேவி ! அரசனாற் கூறப்பட்ட இஃதுண்மையே . என் நண்பனாகிய யோகேசுவரன் என்னும் பிரமராக்கதன் என்பால் வந்து கலிங்கசேனையின் புதல்வியைப்பற்றிக் கூறியதாவது , “கலிங்கசேனை முற்பிறப்பில் பெண்ணாகி ஒரு சாபப் பிழையால் இந் நிலவுலகத்திற் போந்து கற்புநிலை பிறழ்ந்தவள் என்னும் அபவாதத்தை யடந்தாள் . இவளுக்கு யோனிவாய்ப்பட்டுப் பிறவாத கன்னிகையை இரதியின் கூறாகப் பிரமன் ஈந்தான் . இப்பெண்மணியே உதயனன் புதல்வனாகிய நரவாகனதத்தற்கு மனைவியாவாள் “ என்பதாம் , என்றிவ்வாறு கூறினான் . அது கேட்டு வாசவதத்தை “அங்ஙனமேயாக” வென்றுடன்பட்டாள் . அதன்பின் கலிங்கசேனை தன் மகட்கு மதனமஞ்சுகை என்று பெயரிட்டாள் . அக்கன்னிகை நாடோறும் பூருவபக்கத்துத் திங்களஞ் செல்வன் கலை போல மக்கள் எல்லோருடைய கண்களுக்கும் ஆனந்தம் விளைப்பவளாய் வளர்ச்சி யெய்தினாள் . கலிங்கசேனையும் வற்சராசனோடு செய்துகொள்ள விரும்பிய சம்பந்தம் வாய்த்ததைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தாள் . பின்னர் முறையே யெளவனப் பருவம் வாய்க்கப்பெற்ற நரவாகனதத்தன் தன் தந்தையால் இளவரசாக நியமனம் பெற்றான் . அந் நரவாகனதத்தற்கு யெளகந்தராயணன் புத்ல்வனாகிய மருபூதி என்பான் அமைச்சனாயினான் . உருமண்வான் புதல்வனாகிய அரிசிகன் என்பான் படைத்தலைவனாயினான் . வசந்தகன் புதல்வனாகிய தபந்தகன் என்பான் நன்மசசிவனாயினான் . இந்தியகன் மகன் கோமுகன் என்பான் வாயில் காப்போனாயினான் . பிங்கலிகை என்னும் பெயரினையுடைய பிராமணியின் குமாரர்களாகிய வைசுவானரன் , சாந்திசோமன் என்னும் இருவரும் புரோகிதராயினர் . நரவாகனதத்தன் இளவரசாம் நிலையெய்திய பின் வறுமையும் நோயும் களவும் இந் நிலப் பரப்பைவிட்டு ஒழிந்தன .
பின்னர் ஓரமயம் கலிங்கசேனை தன் அன்புரிமைத் தோழியாகிய சொமப்பிரபையை நினைந்தாள் . நினைந்த அப்பொழுதே அச் சோமப்பிரபை தன்றலைவன் அநுமதி பெற்று இரவிற் கலிங்கசேனையின் பக்கல் அடைந்து இனி நிகழவிருப்பதாகிய உதயனனோடுள்ள சம்பந்தத்தைத் தன் கணவன் முகமாகக் கேட்டதாகத் தெரிவித்தாள் . மேலும் மதனமஞ்சுகையின் பொருட்டுத் தெய்விகத் தன்மை வாய்ந்த ஓர் உய்யானத்தையும் இயற்றினாள் . அதன்கண் பொன்மயமான வேதிகைகளும் , அரதனம் இழைக்கப்பட்ட திண்ணைகளும் , பொன்மயமான மதிற் சுவர்களும் , பவழமயமான தூண்களும் , முத்துக்களாகிய மணல்களுமாகிய இவ்வெல்லாம் மக்களாற் செய்தற்கரியனவாகவும் பெரிதும் வியக்கத்தக்கனவாகவும் விளங்கின . இத்தகைய உய்யானத்தை மதனமஞ்சுகைக்கு ஈந்து சோமப்பிரபை கலிங்கசேனையின்பால் தெரிவித்துவிட்டுத் தன் இருப்பிடம் எய்தினாள் .
பிற்றை நாட்காலையில் கெளசாம்பி நகரத்துள்ளார் அனைவரும் தெய்விகத் தன்மை வாய்ந்த அவ் உய்யானத்தைக் கண்டு வியப்பெய்தினர். உதயனன் யெளகந்தராயணன் முதலியோர் , “இவ் உய்யானம் எவ்வாறு அடையப்பட்டது ?” என்று கலிங்கசேனையைக் கேட்டனர் . அவள் தனக்குச் சோமப்பிரபையோடுண்டாகிய நட்புரிமையும் , அவளால் உய்யானம் இயற்றப்பட்டதும் ஆகிய இவை முதலிய எல்லாவற்றையும் விளங்க உரைத்தாள் . பின்னர் ஓரமயம் உதயனன் தேவாலயத்தை யடைந்தான் . அங்குத் தெய்வத்தன்மை வாய்ந்த கன்னியர் பலரைக் கண்டு , “நீவிர் யார்?” என்று கேட்டான் . அப் பெண்கள் “அரச ! யாம் அறுபத்து நான்கு கலைகள் ஆவேம் ; பகவானாகிய உமாகாந்தன் கட்டளையால் நின் புதல்வனாகிய நவராகனதத்தனை யடைந்து பணி செய்தற்கு வந்தோம் “ என்றிவ்வாறு கூரினர் .
அது கேட்டு மிக்க மகிழ்ச்சி யெய்திய உதயனன் மதனமஞ்சு கையையும் எல்லாக் கலைகளிலும் பயிற்சி செய்வித்தான் . அங்ஙனம் எல்லாக்கலைகளிலும் மிக்க தறமையைப் புலப்படுத்திவரும் மதனமஞ்சுகையைக் கண்டு நரவாகனதத்தன் அவள்பால் அளவிகந்த காதற்கிழமை யுடையவனாயினான் . அவளும் அவன்மாட்டுப் பேரன்புடையளாயினாள் . இங்ஙனம் ஒவ்வொரு கணமும் வளர்ச்சி யெய்துகின்ற காதற் பெருக்கினையுடைய அவ் விருவரும் கணப்பொழுதேனும் தம்முள் ஒருவரையொருவர் காணாமலிருக்க ஆற்றாராயினர் . இவ்விருவர்க்குமுள்ள மிக்க காதற் கிழமையைக் கண்டு உதயனன் காலந்தாழ்த்தலின்றி இவ்விருவக்கும் திருமணப்பெரு விழாவை நிறைவேற்றல் வேண்டுமென்று துணிவுற்றான் . பின்னர் , கற்புநிலை பிறழ்ந்தவள் என்னும் அபவாதத்தை யடைந்த கலிங்கசேனையின் சம்பந்தத்தைக் குறித்து உலகம் யாது கூறுமோவென்னும் ஐயப்பாட்டால் முயற்சியின்றியிருந்தான் .
அப்பொழுது விசும்பினின்றும் அசரீரிச்சொல் :- இந் நரவாகனதத்தன் காமன் கூறாகப் பிறந்தவன் . காமன் காதலியாகிய இரதியே மதனமஞ்சுகை உருவத்தோடு அவதரித்தாள் . ஆதலின் இவ்விருவரது மணமக்களாந் தன்மை மிகவும் பொருத்தமுடையதே . நரவா கனதத்தன் பகைவர் எல்லோரையும் வென்று வித்தியாதரர் எல்லோர்க்கும் வேந்தனாகவும் விளங்குவான்”. என்றிவ்வாறு எழுந்தது . இவ்விட் புலமொழியைக் கேட்டு உதயனன் ஒரு சிறிதும் ஐயமின்றி மணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான் .
அதன்பின் சோதிடர்களைக் கொண்டு சிறந்த நன்முகூர்த்தத்தைத் துணிந்தான் . வைசுவானரன் , சாந்திசோமன் என்னும் புரோகிதர் இருவரும் நரவாகனதத்தற்கு கெளதுக (மங்கலகாரியத் தொடக்கத்திற் கையிற் கட்டப்படும் நூல் ) முதலிய மங்கல காரியங்களை யியற்றினர் . விவாக முகூர்த்தம் வந்ததும் நரவாகனதத்தன் சிறந்த அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் மதனமஞ்சுகையைக் கைப்பிடித்தான் . அத்திருமணப் பெருவிழாக்காலத்தில் இந் நிலவுலகத்தன்றி உம்பருலகத்தும் பெரிய மகிழ்ச்சிக் கொண்டாட்டம் நிகழ்ந்தது . மூன்றுலகமும் திருவிழாப்பொலிவுடையன போலாயின . இங்ஙனம் குணம் செயல் பருவம் முதலியவற்றால் தனக்கு ஒத்து விளங்கும் மதனமஞ்சுகையை மணந்து நரவாகனதத்தன் மிகவும் இன்புற்றான் . அவனைக் கண்டு வாசவதத்தை , வற்சராசன் ஆகிய இருவரும் பெரிதும் உவகை பூத்தனர் .
அதன்பின் நரவாகனதத்தன் இரத்தினப்பிரபை , கருப்பூரவதி, அலங்காரவதி என்னும் இவர் முதலிய தெய்வ கன்னிகைகளையும் மணந்து அவர்களோடு கூடிக்கலந்து இன்புற்றான் .
பின்னர் ஓரமயம் நல்லிரவில் மதனமஞ்சுகை சட்டெனக் காணப்படாத நிலையை யடைந்தாள் . அவளைத் தேடுதற்பொருட்டு முயன்ற உவளகத்து ஏவன் மகளிர் மிகவும் ஆரவாரஞ் செய்தனர் . நரவாகனதத்தன் மதமஞ்சுகை சட்டென மறைந்தாள் என்பதை யறிந்து மன மொழிகளைக் கடந்த தாபத்தை யநுபவித்தான் . கலிங்கசேனையும் தன் அருமை மகள் காணப்படாமையைக் கேட்டுப் பேய் கோட்பட்டாள் போல அறிவிழந்தவளாயினாள் .. இந் நிகழ்ச்சிகளை யரிந்து கெளசாம்பி நகரத்துள்ளாரனைவரும் கலக்கம் எய்தினர் . அப்பொழுது உவளகத்துள்ள ஒரு கிழவி வந்து “பல நாட்களின் முன்னர் மானசவேகன் எனப் பெயரிய வித்தியாதரன் ஒருவன் இங்கு வந்தான் . அப்பொழுது மதனமஞ்சுகை மணஞ்செய்யப்படாதவளாக இருந்தாள் . அவள்பாற் காமமிக்க நெஞ்சினனாகிய மானசவேகன் கலிங்கசேனையை யடைந்து அவளை வேண்டினான் . கலிங்கசேனையோ “இக்கன்னிகை முன்னரே நரவாகனதத்தற்கு உரியளாக நிச்சயிக்கப்பட்டாள்” என்று கூறி அவன் வேண்டுகோளை மறுத்துவிட்டாள் . அதனால் மனம் வருந்திய மானசவேகன் வந்த வழியே திரும்பினான் . அவனாலேயே இப்பொழுது மதனமஞ்சுகை கவரப் பட்டிருத்தல் வேண்டும்” என்றிவ்வாறு கூறினாள் .
அது கேட்டு நரவாகனதத்தன் பித்தனைப் போலாகிப் பரிசனங்களுக்குக் காணப்படாமல் தனியனாய்ப் புறப்பட்டு மதனமஞ்சுகையைத் தேடிக் காட்டில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தான் . அக் காட்டில் மானசவேகன் உடன்பிறந்தாளாகிய வேகவதியென்னும் பெயரினையுடையாள் மதனமஞ்சுகையின் உருக்கொண்டு நரவாகனதத் தன் பக்கல் எய்தினாள் . அவளைக் கண்டு நரவாகனதத்தன் விரைந்தோடி , “பிரியே ! காரணமின்றி என்னை விட்டொழிந்த நீ என் செய்தனை “ என்று கூறி இறுகுறத் தழீஇக் கொண்டான் .
அதன்பின் அவள், “எனக்கு மணம் நிகழ்ந்த அந் நாளில் இயக்கர்க்குப் பூசை செய்வதாகப் பிரதிஞ்னஞ செய்து கொண்டேன் . அவ் வண்ணம் அதனைச் செய்திலேன் . அது பற்றிச் சினமுற்ற இயக்கர்கள் என்னைக் கவர்ந்து சென்றனர் . ஆதலின் இப்பொழுது அவ் இயக்கர்க்குப் பூசை செய்தற்பொருட்டு மீண்டும் மணவிழா நடத்தல் வேண்டும் “ என்றிவ்வாறு கூறினாள் . நரவாகனதத்தன் அவள் கூறியவண்ணம் எல்லாவற்றையும் அங்ஙனமே நிறைவேற்றினான் . அதன்பின் நடுநிசியில் துயிலுங்கால் தன் இயற்கை உருவத்தோடு படுத்திருக்கும் வேகவதியைக் கண்டு ஐயமுற்ற நரவாகனதத்தன் விழிப்புற்ற அவளை நோக்கி , “நீ யார் ? உன்மை கூறுக “ என்று வினவினான் . அவள் பின்வருமாறு கூறுவாளாயினாள். “ஆசாடபுரம் எனப் பெயரிய வித்தியாதர பட்டினம் ஒன்றுளது . அதங்கண் மானசவேகன் எனப் பெயரிய வித்தியாதரன் ஒருவன் உளன் . யான் அவன் தங்கையாவேன் . வேகவதி என்பது என் பெயர் . என் தமையன் மானசவேகன் என்பான் நின் மனைவியாகிய மதனமஞ்சுகை யின் பாற் காதல் கொண்டு மாயையால் அவளைக் கவர்ந்தான் . கவர்ந்தும் இராவணனைப் போற் சாபம் எய்தப்பெற்றவனாதலின் அவளை வலிந்துசேர ஆற்றலில்லாதவனாயினான் . மதனமஞ்சுகை அவனாற் பலவாறு வேண்டப்பட்டும் அவனைத் துரும்பென மதித்துத் தள்ளி நின்பாலே பிணிக்கப்பட்ட உள்ளமுடையவளாய்த் துன்புறுகின்றாள் . இஃதிங்ஙன மிருக்குங்கால் ஒருவரோடு ஒருவர் உரையாடுதலால் மதனமஞ்சுகையோடு எனக்கு நட்புண்டாயிற்று . அவள் முகமாக நின் உருவம் குணம் முதலியவற்றைக் கேட்டுக் காமுற்று நின் பக்கல் யானே வந்தடைந்தேன் . மதனமஞ்சுகையின் பிரிவால் பாழடைந்த நெஞ்சினனாகிய நின்னைக் கண்டு மணஞ் செய்து கொள்ளுதற் பொருட்டு இவ்வுபாயத்தை மேற்கொண்டேன் “ என்றிங்ஙனங் கூறி அவ் வேகவதி விச்சையின் திறமையால் நரவாகனதத்தனைத் தூக்கிக்கொண்டு விசும்பின் வழியாக ஆசாடபுரத்தை யடைந்தாள் . திடீரென்று நரவாகனதத்தன் காணப்படாமையால் வற்சராசன் முதலிய கெளசாம்பி நகரத்துள்ளார் அனைவரும் துன்ப நிலையின் பேரெல்லையை யடைந்தனர் . அப்பொழுது நாரத மகாமுனிவர் விண்ணினின்றும் இறங்கி , “நரவாகனதத்தன் நல முடையவனாக இருக்கின்றான் ; நலமுடையளாகிய மதனமஞ்சுகையோடு விரைவில் இங்குப் போதருவான் . கவலுதல் வேண்டா “ என்றுகூறி ஆறுதல் அளித்தார் . அதனால் அவர்கள் தைரியத்தை கடைப்பிடித்திருந்தனர் .
ஆசாடபுரத்தில் வேகவதியால் கொண்டுவரப்பட்ட நரவாகனதத்தனைக் கண்டு பொறாமை மேற்கொண்ட மானசவேகன் அவனைக் கொல்லுதற்கு முயன்றான் . அம் மானசவேகன் தாய் தந்தையர் நரவாகனதத்தனை வேகவதியின் கணவெனன்றறிந்து கோறன் முயற்சியினின்றும் அவனைத் தடைப்படுத்தினர் . அதன்பின் வேகவதி நரவாகனதத்தனை மதனமஞ்சுகையோடு இருசியமூகம் எனப்பெயரிய மலக்கண் அடைவித்தாள் . அங்குத் தனவதி என்னும் பெயரினையுடைய வித்தியாதரப் பெண் தன் மகள் அசிநாவதி எனப் பெயரிய நங்கையை நரவாகனதத்தற்குக் கொடுத்தாள் . அவளையும் மணந்து நரவாகனதத்தன் தனவதியால் அடைவிக்கப்பட்டுக் கெளசாம்பி நகரத்தைக் குறித்துத் திரும்பி வந்தான் . விம்மிதத்தன் மலர்ந்த கண்களையுடைய உதயனன் முதலியோர் அவனைக் கண்டு பெரிதும் இன்ப மெய்தினர
வெண்பா
காணுங் குணம்பருவங் காதலுரு வொத்தமையான்
மாணுற் றொளிர்மதன மஞ்சுகையைக் — காணூஉ
நரவா கனதத்த நன்றுமணந் தின்பப்
பெருவா ரிதிதோய்ந்தான் பெட்டு .
பதினைந்தாம் வகுப்பு
( திருமஞ்சனம் பெறுதல் )
வித்தியாதரராகிய சுற்றத்தார ரனைவரும் நரவாகனதத்தன் பக்கல் வந்து, “மானசவேகன் முதலிய வித்தியாதரர் பலர் நினக்குப் பகைவரா யுள்ளார் . அவர்களை வென்று நீயே வித்தியாதர சக்கரவர்த்தியாதல் வேண்டும் . விச்சைகள் சித்தியெய்தற் பொருட்டு நீ இங்கு நின்றும் புறப்பட்டுக் கைலாயத்தை யடைந்து தவமியற்றல் வேண்டும் “ என்றிவ்வாறு கூறினர் .
“அங்ஙனமேயாக” வென்றுடன்பட்டு நரவாகனதத்தன் பகவானாகிய மலைமகன் மணாளன் வீற்றிருக்கப் பெற்றதும் , எல்லா நலன்களும் சித்தியாதற்குரிய நல்லிடமுமாகிய கைலாயத்தை யெய்திச் செயற்கரிய தவத்தைச் செய்தான் . அத் தவத்தால் வழிபடப்பெற்ற உமாநாதன் காட்சியளவையில் வெளிப்பட்டு , “எல்லா விச்சைகளும் நினைத்த அளவில் நினக்கு விளங்கித் தோன்றும் “ என்று அருளினார் . தாமரைப் பூவை யொத்த வடிமைந்த ஒரு விமானத்தையும் அருளினார் . அவற்றைப் பெற்ற பின்னர் நரவாகனதத்தன் வித்தியதரராகிய சுற்றக் குழிவினர் துணைசெய்யப் படைகளோடு புறப்பட்டு இமயமலையின் தென்பால் வாழ்கின்ற மானசேவகன் முதலிய வித்தியாதர வேந்தர்களைப் பொருது வென்றான் .
இமையமலையின் வடபால் வாழ்கின்ற மந்தரதேவன் எனப் பெயரிய வித்தியதரச்சக்கரவர்த்தி தென்பாலுள்ள வித்தியாதரர் தோல்வியுற்றனர் எனக் கேட்டுச் சினமுடையனாய் நரவாகனதத்தனோடு போர் செய்யச் சித்தனாயினான் . நரவாகனதத்தன் ஒற்றர்முகமாக அதனையறிந்து பகவானாகிய பார்வதீ மணாளன் அநுக்கிரகத்தையே சிறந்த பலமாகக் கடைப்பிடித்து மந்தரதேவனைப் படைகளோடு வளைத்தான் . அப்பொழுது வடபாலில் மந்தரதேவர்க்கும் நரவாகனதத்தற்கும் பெரும் போர் நிகழ்ந்தது . அப்போரில் விசும்பிடமுழுதும் கதை வாள் வளைதடி ஈட்டி சூலம் முதலிய ஆயுதங்கள் நிறந்தன . நிலவுலக முழுதும் படைக்கலங்களால் அறுக்கப்பட்ட தலைகள் நிரம்பின. புண்ணீர் வெள்ளம் கார்காலத்தில் மலயினின்றும் வீழும் அருவி வெள்ளம் போற் பன்முகமாகப் பெருகிற்று . வெட்டு குத்து கொல் என்னும் இவை முதலிய கொடுஞ் சொற்கள் கேட்கப்பட்டன .
மிக்க அச்சத்தை விளைவிக்கும் இத்தகைய போரில் நரவாகனதத்தன் மந்தரதேவனை நிலத்தில் வீழ்த்திக் கால்களால் அவன் மார்பிடத்தை மிதித்து அதிவிரைவில் எடுக்கப்பட்ட வாட்படையால் அவன் தலையை வெட்டுதற்கு முயன்றான் . அப்பொழுது மந்தர தேவன் தங்கையாகிய மந்தரதேவியென்பாள் விரைந்து ஓடிவந்து நரவாகனதத்தன் கால்களில் வீழ்ந்து , “ஐய ! கேடெய்தினாற்பால் இரக்கம் வைக்கும் நின்னைப் புகலடந்தவளாயினேன் . என் தமையனுக்கு அபயம் அருள்வாயாக . “ என்று வேண்டினாள் . அதனால் அருள்கூர்ந்த நெஞ்சினனாகிய நரவாகனதத்தன் அவனைக் கொல்லுதலினின்றும் ஒழிவடைந்தான் . பின்னர் மந்தரதேவன் நரவாகனதத்தனை வணங்கி , “என் குற்றத்தைப் பொறுத்தருள்க . வித்தியாதர இராச்சிய முழுதையும் நீயே ஆள்க “ என்று கூறித் தவஞ் செய்தற்பொருட்டு வனத்தை யடைந்தான் . இங்ஙனம் பகைவர் எல்லோரையும் வென்று பகையற விளங்கும் அரசியற்றிருவை யடைந்து திகழும் நரவாகனதத்தனைக் கண்டு மருபூதி முதலிய தலையாய அமைச்சர்கள் அளவிலாப் பெருமகிழ்வெய்தினர் .
நரவாகனதத்தன் மானசவேகன் முதலியோரை அவரவர் இராச்சியத்தில் நிலைப்படுத்தினான் . இங்ஙனம் சுற்றத்தார் நண்பர் நொதுமர் ஆகிய இவ் எல்லோரிடத்தும் அன்புவைத்தொழுகும் நரவாகனதத்தன் அவ்வப்பொழுது ஆகாயவாணியால் வெளிப்படுத்தப்படும் பிரபாவ முண்மையாலும் , பகவானாகிய சிவபெருமானிடத்தினின்றும் அடைந்த பெறற்கரிய செல்வங்களை யுடைமையாலும் , பல வித்தியாதரப் பெண்கள் தாமே வர மணஞ்செய்துகொண்டமையாலும் , “இவன் மனிதனல்லன் ; வித்தியாதர குமாரனேயாவான் “ என்று துணிந்து வித்தியாதரர் எல்லோரும் நட்பும் மதிப்பு முடையராய் மகிழ்ந்து கொண்டாட விளங்கினான் .
அதன்பின் நாரத முனிவர் வந்து நரவாகனதத்தனை நோக்கி , “அகம்பனன் என்னும் பெயரினையுடைய வித்தியாதரராச இருடி ஒருவன் உள்ளான் ; அவன் மந்தரதேவனுடைய தந்தையாவான் ; இப்பொழுது காட்டில் தவஞ் செய்கின்றான் ; அவனை யடைந்து வணங்குக . அவன் நினக்கு வித்தியாதர இராச்சியாபிடேகத்துக்குரிய ஏற்பாடுகளைச் செய்வான் “ என்றிவ்வாறு கூறினார் .
அதுகேட்டு நரவாகனதத்தன் , “அங்ஙனமேயாக” வென்றுடன்பட்டு அப்பொழுதே புறப்பட்டுத் தபோவனத்தில் தவஞ் செய்கின்ற அகம்பனன் என்னும் இராச இருடியின் பக்கல் எய்தித் தன் பெயரை எடுத்துக்கூறி வணங்கினான் . அவ் இருடி ஞானக் கண்ணால் எல்லாவற்றையு முணர்ந்து தன் மகள் மந்தரதேவி எனப் பெயரிய கன்னிகையை நரவாகனதத்தற்குச் சமர்ப்பித்து அவ்விருவர்க்கும் மண வினையை விதிப்படி நிறைவேற்றினான் . பின்னர் , “இடப கிரியில் முடிசூட்டுக் கொண்டாட்டம் நிறைவேற்றற்பாலது . “ என்று வித்தியாதரர்களுக்குக் கட்டளையிட்டான் . வித்தியாதரர் எல்லோரும் தத்தம் செல்வ நிலைக்கியைந்த ஏற்பாடுகளைச் செய்தனர் . நரவாகனதத்தன் சுற்றத்தார் நண்பர் எல்லோரும் புடைசூழ மனைவிமார் அமைச்சர் வித்தியாதரக் குழுவினர் ஆகிய இவர்களோடு புறப்பட்டு இடபகிரியைச் சார்ந்தான் . அவ்விடத்தில் வைசுவானரன் சாந்திசோமன் என்னும் புரோகிதர் இருவரும் அணுத்துணைக் குற்றமில்லாத மிகச் சிறந்த நன்முகூர்த்தத்தை நிச்சயித்தனர் .
பின்னர், நரவாகனதத்தனுடைய மனைவிமார் பலருள் , “யாவள் கோப்பெருந் தேவியாம் நிலைக்குத் தகுதியுடையளாவாள்? “ என்னும் ஆராய்ச்சியுண்டாயிற்று . அப்பொழுது , “இரதி தேவியின் கூறாக அவதரித்த மதனமஞ்சுகையே கோப்பெருந்தேவியாம் நிலையில் அபிடேகம் பெறுவதற் குரியளாவாள் “ என்று அசரீரி சொல் வெளிப்பட்டது . அதுகேட்டு எல்லோரும் வியப்பெய்தினர் . பின்னர் முடிசூட்டு விழாவிற்குரிய முகூர்த்தம் வந்ததும் வித்தியாதரர் மங்கல வாச்சியங்களை வாசித்தனர் . தெய்வ மகளிர் புகழ்ச்சிப்பாடலாகிய இனிய மங்கல கீதங்களைப் பாடினர் . அந்தணர் “நலம் வளர்க” என்று வாழ்த்துரை கூரினர் . கற்பக தருக்கள் மலர் மழை பெய்தன . வித்தியாதரப் பெரியார் மங்கல வாழ்த்துக் கூறினர் . இன்னோரன்ன மங்கலகரமான ஆரவாரங்களுக்கிடையே சுருசுருப்பு மிக்க புரோகிதர் இருவரும் பெரிய இருடிகள் பலரோடுங் கூடி மதனமஞ்சுகையோடு நரவாகனதத்தனை இரத்தினமயமான அரியணைக் கண் வீற்றிருக்கச் செய்தனர் .
அதன்பின் மாட்சிமிக்க முனிவரர் பலர் எல்லாத் தீர்த்தங்க ளினின்றும் கொணரப்பட்டுப் பொற்கலசங்களில் நிறைவிக்கப்பெற்றதும் , தூய்மை மிக்கதும் , நறுமணம் நிறைந்ததும் ஆகிய நன்னீரால் நரவாகனதத்தற்கு திருமஞ்சனம் செய்தனர் . அவன் பக்கலில் வீற்றிருக்கும் மதனமஞ்சுகை தேவேந்திரன் அருகில் வீற்றிருக்கும் இந்திராணிபோல் விளங்கினாள் . இங்ஙனம் பகவானாகிய மகேசுவரரது திருவருட் பாங்கால் எல்லா வித்தியாதரர்களுக்கும் அதிபதியாம் தன்மையைப் பொதுவற வடைந்து நிலவுலகத்திற் பெறுதற்கரிய போகங்களை யநுபவிக்கின்ற நரவாகனதத்தனைக் கண்டு வாசவதத்தையும் வற்சராசனும் மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தனர் .
வெண்பா
அண்ணல் சிவனருளா லன்ற மதிகுலத்துப்
புண்ணியன் றெவ்வர் புரைகடந்து — நண்ணியசீர்
விண்ணவரும் போற்றவுயர் விச்சா தரவரசாய்
மண்ணின்மிசை வாழ்ந்தான் மகிழ்ந்து .
அன்ப ருளத்தி னகலாப் பரனருளால்
இன்ப மிருமையினு மெய்தலா —- மென்பதே
வற்சநாட் டேந்தன் மகனிவர்தம் வாழ்க்கைதிகழ்
பொற்சரிதங் காட்டும் பொருள் .
முற்றிற்று .
அரும்பதவுரை
அகாரணம் —- காரணமில்லாமை
அசரீரி —— ஆகாயவாணி .
அச்சுறுத்தப்படாதவன் —– பயப்படுத்தப்படாதவன் .
அடவி —– காடு .
அணிகலம் —– ஆபரணம் .
அணி —– அழகு .
அணிமை —– சமீபம் .
அதரம் —– உதடு .
அத்தகிரி —– சூரியன் மறைவதற்கு இடமாய் நிற்கும் மலை .
அத்தாணி மண்டபம் —– அரசிருக்கை மண்டபம் .
அநாதை —– பாதுகாப்போரில்லாதவன் .
அந்தோ —– இரக்கத்தையுணர்த்தும் குறிப்புமொழி .
அபயம் —– பயமில்லாமை .
அபலை —– வன்மையில்லாதவள் , எளியள் .
அமங்கலம் —– கேடு .
அமயம் —– சமயம் .
அமைச்சன் —– மந்திரி
அயக்காந்தம் —– இரும்பையிழுப்பது .
அரசவை —– அரசனுடைய சபை .
அரதனம் —– இரத்தினம் .
அரமகளிர் —– தேவமாதர் .
அரியணை —– சிங்காதனம் .
அருக்கியம் —– பெரியோர்க்கு நீரால் செய்யப்படும் வழிபாடு .
அவகாசம் —– இயைந்த காலம் .
அவதரித்தல் —– பிறத்தல் .
அவம் —– வீண் .
அவலம் —– துன்பம்.
அவா —– விருப்பம் .
அறிவுறுத்தான் —– அறிவித்தான் .
அற்பு —– அன்பு .
ஆகாயவாணி —– ஆகாயத்திலிருந்து உண்டாகும் சொல் (வாணி — சொல்)
ஆஅங்காலம் —– அநுகூலமான காலம் .
ஆசமித்தல் —– ( வலக்குடங்கையால் மந்திரப்பூர்வமாக நீரை மூன்று
–முறை ) உட்கொள்ளல் .
ஆச்சிரமம் —– முனிவர் இருப்பிடம் .
ஆணை —– ஆஞ்னஞ , கட்டளை .
ஆரம் —– மாலை .
ஆரவாரம் —– ஒலி .
ஆராதனை —– வழிபாடு .
ஆற்றல் —– வலி .
ஆனந்த பரிதன் —– மகிழ்ச்சி மிக்கவன் .
ஆன்ற —– நிறைந்த .
இகத்தல் —– கடத்தல் .
இடையூறு —– துன்பம் .
இந்திரசாலம் —– மாயவித்தை .
இனம் —– கூட்டம் .
இம்பர் —– இவ்வுலகம் .
இயக்கம் —– அசைவு.
இயைபு —– பொருத்தம் , சேர்க்கை .
இரிதல் —– கெடுதல் .
இருக்கை —– இருப்பிடம் , ஆஸனம் .
இருமை —– இம்மை , மறுமை .
இவர்தல் —– ஏறுதல் .
இறுதிக்கடன் —– அந்திய கருமம் . மரணத்தின்பின் செய்யும் பிரேத கிரியை
இறுதியெல்லை —– முடிந்த அளவு .
இறைச்சிப்பிண்டம் —– தசைத்தொகுதி .
இறைப்பொருள் —– கப்பம் .
இன்னல் —– துன்பம் .
ஈர்த்தல் —– இழுத்தல் .
உஞற்றல் —– செய்தல் .
உடுக்கை —– ஆடை .
உடை —– உஷை, அநிருத்தன் மனைவி , வாணாசுரன் மகள் .
உதயாசலம் —– சூரியன் உதித்தற்கு இடமாய் நிற்கும் மலை .
உத்தியானவனம் —– பூஞ்சோலை .
உபாயம் —– தந்திரம் .
உம்பர் —– தேவர் .
உயிர் நிலைத்தானம் —– உயிர் நிலை நிற்குமிடம் .
உயிர்நிலை யுறுப்புக்கள் —– உயிர் நிற்கும் விசேட அங்கங்கள் .
உய்த்தல் —– செலுத்துதல் .
உய்யானம் —– பூஞ்சோலை .
உரன் —– அறிவு .
உரு —– வடிவு .
உருவமாற்று —– ஓருருவை வேறு உருவமாக மாற்றும் மந்திரம் .
உலக பாலர்கள் —– திக்குப் பாலகர்கள் .
உலைவு —– கெடுதல் .
உவளகம் —– அந்தப்புரம் . அரச மகளிர் உறைவிடம் .
உவா மதி —– பூரண சந்திரன் .
உறவு கோடல் —– நட்புக்கொள்ளல் .
உறையுள் —– வசிக்குமிடம் .
ஊர்தி —– வாகனம் .
ஊழிக்காலம் —– உலகம் அழியவரும் யுகம் முடிவுக்காலம் .
எடுத்துக்காட்டு —– உதாரணம் .
எழில் —– அழகு .
எழூஉம் —– எழுகின்ற .
ஏதம் —– துன்பம் .
ஒரீஇ —– நீங்கி .
ஒல்லாதது —– முடியாதது .
ஒளிநூல் —– சோதிடநூல் .
ஒற்றன் —– பிறர்பால் நிகழ்வனவற்றை மறைந்து நின்று ஆராய்ந்தறிபவன்
கடவாது —– நீங்காது .
கட்டழகு —– மிக்க அழகு .
கட்புலன் —– கண்ணாகிய இந்திரியம் .
கணனம் செய்து —– கணக்குச் செய்து .
கணித நூல் —– ஜோதிட நூல் .
கண்டம் —– கழுத்து .
கதிரவன் —– சூரியன் .
கதை —– தண்டாயுதம் .
கபடம் —– வஞ்சகம் .
காத்தல் —– மறைத்தல் .
கலுழன் —– கருடன் .
கவலல் —– வருந்தல் .
கவற்சி —– வருத்தம் .
களிறு —– ஆண்யானை .
கன்னிமாடம் —– மணஞ்செய்யப்பெறாத பெண்கள் தனித்து வசிக்குமிடம்
காட்சியளவை —– பிரத்தியஷப் பிரமாணம் .
காணூஉ —– கண்டு .
காதற்கிழமை —– அன்புரிமை .
கந்தருவம் —– ஒருவனும் ஒருத்தியும் கொடுப்போரின்றி அன்பினால் தாமே
மணந்து கொள்ளும் மணம்
காந்தன் —– கணவன் .
காபாலிகவேடம் —– கையில் ஓடு தாங்கிப் பிச்சையேற்றுண்ணும்
சந்நியாச வேடம் .
காமவேள் , காமன் —– மன்மதன் .
காமுற்று —– விரும்பி .
காமுகன் —– மிக்க காமமுள்ளவன் .
காலத்தாழ்வு —– காலதாமதம் .
கிரகணம் —– பற்றுதல் , பிடித்தல் .
கிரியை —– சடங்கு .
கழமை —– உரிமை .
கீழ்கடல் மலை —– கீழ்கடலின் பாங்கருள்ள உதயகிரி .
குதூகலம் —– பெருமகிழ்ச்சி.
குறுமை —– குறுகிய வடிவம் .
கூதிர்காலம் —– குளிர்காலம் . ஐப்பசி கார்த்திகை மாதங்கள் .
கூறு —– அமிசம் .
கேயூரம் —– தோளணி.
கையுரை —– காணிக்கைப் பொருள் .
கோப்பெருந்தேவி —– பட்டத்தேவி .
கோறள் —– கொல்லுதல்.
கெளதுகம் —– மங்கல காரியத்தின் தொடக்கத்தில் கையிற் கட்டப்படும்
நூல் . (ரக்ஷாபந்தனம் ) .
சங்கேதம் —– ஏற்பாடு .
சண்டகன்மம் —– கடுந் தொழில் .
சண்டிகை —– காளி , துர்க்கை .
சந்தி —– பொருந்துதல் .
சபந்தினி —– கணவனுடைய மற்றொரு மனைவி .
சமர்ப்பித்தல் —– கொடுத்தல் .
சலதி —– கடல் .
சாதகன்மம் —– பிறந்த காலத்தில் குழந்தைகளுக்குச் செய்யும் சடங்கு.
( சாதம் — பிறப்பு )
சாதிக்கத்தக்கது —– முடிக்கத்தக்கது ..
சாமந்த அரசர் —– சிற்றரசர் .
சாமம் —– இன் சொற் சொல்லுதல்.
சாளரம் —– சன்னல் .
சான்ற —– சாக்ஷி.
சிதை —– சுடலைக்கண் அடுக்கும் விறகு .
சித்தம் செய்தல் —– முன்னேற்பாடு செய்தல் .
சித்தி யெய்தல் —– பயனடைதல் .
சிறைவீடல் —– சிறையினின்றும் விடுதலை செய்தல் .
சினந்து —– கோபித்து .
சீலம் —– ஒழுக்கம் .
சுடலை —– சுடுகாடு .
சுயம்வரம் —– தானே கணவனை நிச்சயத்தல் .
சுற்றக்குழுவினர் —– உறவினராகிய கூட்டத்தார் .
சூலபாணி —– சிவபிரான் .
சூழ்ச்சி —– ஆராய்ந்து செய்யும் உபாயம் .
சூழ்ச்சி வினைச்செயல் —– ஆராய்ந்து செய்யப்படும் செய்கை .
செய்வல் —– செய்வேன் .
சேய் —– மகன் .
சேய்மை —– தூரம் .
சேர்பு —– அடைந்து .
சைனியம் —– சேனைத் தொகுதி .
சொற்கிறைவி —– சரசுவதி .
சோதித்தல் —– ஆராய்ந்தறிதல் .
சோர்விலன் —– செயலில் தளர்வில்லாதவன் .
செளளம் —– குடுமி வைக்கும் சடங்கு .
தமியள் —– தனித்தவள் .
தலையாய —– முதன்மை வாய்ந்த .
தழீஇ —– தழுவி .
தற்காப்பு —– ( கற்பின் வழுவாமல் ) தன்னைப்பாதுகாத்துக்கொள்ளல் .
தாதை —– தந்தை .
தாபதகுமாரன் —– முனி புத்திரன் .
தாபதன் —– மினிவன் .
தாபம் —– துக்கம் .
தானம் —– கொடுத்தல் .
திக்குவிசயம் —– திசையிலுள்ள அரசரை வெற்றி கொள்ளுதல் .
திண்மை —– மனவுறுதி .
திருமஞ்சனம் —– அரசர்க்கு முடி சூட்டுமுன் செய்யப்படும் அபிடேகம் .
திவலை —– துளி .
தீக்கடவுள் —– அக்கினிதேவன் .
தீநிமித்தம் —– தீயசகுனம் .
துற்றும் —– நெருங்கிய .
தூதர் —– தலை , இடை , கடை யெனமூவகைப்படுவர் இவருள் சந்தி விக்கிரகங்களுக்கு வேற்று வேந்தரிடைச் செல்லுங்கால் தானே வகுத்துக் கூறுபவன் தலையாவான் ; கூறியது கூறுவோன் இடையாவான் ; ஓலை கொடுத்து நிற்போன் கடையாவான் .இம்முறை வட நூலுட் கூறப்படுவதாகும் திருக்குறள் தூது என்னும் அதிகாரத்தில் “கடனறிந்து” என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையையும் நோக்குக . இந்நூலில் “தூதன்” என வருமிடங்கள் தோறும் இவ்வாறு பகுத்துணர்க , இவன் ஒற்றனின் வேறு பட்டவன் .
தூய்மை —– பரிசுத்தம் .
தெய்வ ஊர்தி —– தேவ விமானம் .
தெய்வகன்னிகை —– தேவ மாது .
தேசசு —– ஒளி .
தேயம் —– நாடு .
நச்சுப்பெண்கள் —– நம்மைச் சார்ந்தாரை நஞ்சூட்டிக் கொல்லும் பெண்கள்
நட்டோன் —– நண்பன் .
நம்பல் —– விருப்பம் .
நள்ளிரவு —– இராப் பொழுதின் நடுக்கூறு .
நன்புலம் —– நல்லிடம் .
நன்னிமித்தம் —– நல்ல சகுனம் .
நன்று —– நன்மை .
நாப்பண் —– நாடு .
நாள் —– நக்ஷத்திரம் .
நிசி —– இரவு .
நிபுணன் —– திறமையுடையவன் .
நிமித்தம் —– சகுனம் , காரணம் .
நியமம் —– நிச்சயம் , முறை .
நியமனம் —– ஏற்பாடு .
நிருமாணித்தல், நிருமித்தல் —– உண்டாக்குதல் .
நிறைகுடம் —– பூரணகும்பம் .
நிறைமதி —– பூரணசந்திரன் .
நிதிப்பிரயோகம் —– நியாயமுறையில் மேற்கொண்ட முயற்சி .
நீறு —– சாம்பல் .
நுகர்தல் —– அநுபவித்தல் .
நுதல் —– நெற்றி .
நேரம் —– காலம் .
நேர்ந்துழி —– வாய்த்தவிடத்து .
நொதுமலர் —– பகையும் நட்புமில்லாதவர் , அயலார் .
நோன்பு —– விரதம் .
பகழி —– அம்பு .
படைக்கலம் —– ஆயுதம்.
பணி —– ஏவல் , வேலை .
பணிப்பெண்கள் —– வேலைக்காரிகள் .
பண்டு —– முன் .
பதி —– தலைவன் .
பரபரப்பு —– மிக்க விரைவு .
பரவசம் —– தன்வசமில்லாமை .
பராக்கிரமம் —– வீரம் .
பரிசனங்கள் —– ஏவலாளர் .
பரிசில் —–வெகுமதி .
பரிணயம் —– கலியாணம் .
பருவம் —– வயது , காலம் .
பலபடி —– பலவிதம் .
பற்று —– விருப்பம் .
பனுவலாட்டி —– சரசுவதி.
பாசறை —– பகைமேற் சென்றோர் தங்குமிடம் .
பாணி —– கை
பாணிக் கிரகணம் —– கைப் பிடித்தல் .
பாத்தியம் —– பெரியோருக்குப் பாதம் அலம்பக் கொடுக்கும் நீர் .
பானீயம் —– குடித்தற்குரிய நீர் முதலியன .
பிடி —– பெண்யானை .
பிணித்து —– கட்டி .
பிதாமகன் —– பாட்டன் .
பிரபாவம் —– புகழ் , பெருமை .
பிரபெளத்திரன் —– பேரன் புதல்வன் .
பிரமதேஜசு —– தவ வலியால் முனிவர்க்கு உண்டாகும் ஒளி .
பிலம் —– குகை .
பிழம்பு —– திரட்சி.
பிறந்த நாள் —– ஜன்ம நட்சத்திரம் .
பிறழ்ச்சியுணர்வு —– வேறுபட்ட அறிவு .
பிற்றை நாள் —– மற்றாநாள் .
புகலிடம் —– அடைக்கலமாகப் புகுமிடம் .
புங்கவன் —– உயர்ந்தவன் .
புடை —– பக்கம் .
புண்ணீர் —– இரத்தம் .
புதல்வற்பேற்றுத் திருவிழா —– புதல்வன் பிறந்தமைக்காகச் செய்யும் உவகைக் கொண்டாட்டம் .
புத்திர காமேட்டி —– புதல்வற் பேறு குறித்துச் செய்யும் யாகம் .
புரத்தல் —–காத்தல் .
புரை —– குற்றம் .
புரோகிதன் —– வருங் காரியஞ் சொல்வோனும் , சடங்கு செய்விப்போனும் ஆகிய பார்ப்பன் .
புலம் —– இடம் .
புலனாதல் —– வெளிப்படுதல் .
புழைக்கைமா —– யானை ( புழை —–துவாரம் )
புளகம் —– மயிர் சிலிர்த்தல் .
புறக்கணித்தல் —– அசட்டையாய் வேறொன்றைக் கருதியிருத்தல் .
பெட்டல் —– விரும்புதல் .
பெயரிய —– பெயரையுடைய .
பெருந்தேவி —– பட்டத்தேவி .
பெறீஇ —– பெற்று .
பேரவா —– பெரு விருப்பம் .
பேருவகை —– மிக்க மகிழ்ச்சி .
பேழை —– பெட்டி .
பேறுகாலம் —– பிரசவ காலம் .
பொருட்குழு —– நிதித்திரள் .
பொருட்படுத்தல் —– மதித்தல் .
பொருட்பெண்டிர் —– வேசையர் .
பொருதல் —– போர் செய்தல் .
பொருளுரை —– பயன் நிறைந்த மொழி .
பொருளுரையில்லம் —– பொக்கிச சாலை .
பொலிவு —– அழகு .
பொறி —– இயந்திரம் .
பொறிக்களிறு —– இயந்திரத்தாற் செய்யப்பட்ட யானை .
பொற்கொடை —– பொன்னை வழங்குதல் .
பொற்பு —– அழகு .
பொன்னாத —– கெடாத.
போக்கு வரவு —– போதல் வருதல் .
போதரல் வருதல் .
போந்து —– வந்து .
பெளத்திரன் —– புதல்வன் மகன் .
மகப்பெறும் இல்லம் —– பிரசவ வீடு .
மகவு —– குழந்தை .
மகிமை —– பெருமை .
மடவரல் —– பெண் .
மணவறைவேதி —– விவாகம் செய்யும் இடத்திலுள்ள மேடை .
மணவிழா —– விவாகச் சிறப்பு .
மணவினை —– விவாகச்செயல் .
மதி —– சந்திரன் .
மந்திராலோசனை —– அரசியற் சூழ்ச்சி .
மரபு —– குலம் .
மருளன் —– பித்தன் .
மலைமகள் மணாளன் —– சிவபிரான் .
மழலைச் சொல் —– குழந்தைகளின் பொருள் நிரம்பாத மென்சொல் .
மறவழி —– பாவமார்க்கம் .
மறை —– இரகசியம் .
மனத்திட்பம் —– மனவுறுதி .
மன்றல் —– கலியாணம் .
மன்னிறைவன் —– சக்கரவர்த்தி .
மாசு —– குற்றம் .
மாந்தர் —– மக்கள் .
மானம் —– தன்னிலையில் தாழாமையாகிய பெருமை .
முகில் —– மேகம் .
முதுமொழி —– பழமொழி .
முற்பக்கம் —– சுக்கிலபக்ஷம் .
முன்னுதல் —– நினைத்தல் .
முன்னைப் பிதாமகன் —– முதற் பாட்டன் .
மேதினி —– பூமி .
மேம்பாடு —– சிறப்பு .
மேனில இல்லம் —– மேல்மாடம் .
யாண்டு —– வருடம் .
யாண்டு முதிர்வு —– வயோதிகம் .
வசீகரித்தல் —– வசமாக்குதல் .
வண்மை —– கொடை .
வரித்தாள் —– கணவனாக நிச்சயத்தாள் .
வலாரி —– இந்திரன் .
வள்ளல் தன்மை —– கொடைத் தன்மை .
வனப்பு —– அழகு .
வாசவன் —– இந்திரன் .
வாச்சியம் —– வாத்தியம் .
வாட்படைய் —– வாளாயுதம் .
வாரிதி —– கடல் .
வாளா —– சும்மா .
விசும்பு —– ஆகாயம் .
விச்சை , விஞ்சை —– வித்தை .
விட்புலச்சொல் —– ஆகாயவாணி .
விட்புலம் —– ஆகாயம் , தேவருலகம் .
விட்புல வேந்தன் , விண்ணவர் இறை —– இந்திரன் .
விது —– சந்திரன் .
விம்மிதம் —– ஆச்சரியம் .
விரதி —– விரதமுடையான் .
விழிப்பு —– கவனம் .
வினைஞர் —– தொழிலாளர் .
வெல்லற்பாலன —– வெற்றி கொள்ளத்தக்கன .
வென்றிச் செலவு —– வெற்றி கொள்ளுதற்குச் செல்லும் பிரயாணம் .
வேட்கை —– விருப்பம் .
வேட்டல் —– மணம் செய்தல் .
வேதி —– திண்ணை , மேடை .
வேதிகை —– குறடு .
வேலை —– கடல் .
வேள்வி —– யாகம் .
வைப்பு —– புதையல் .
முற்றும் .
| | சுலோசனை | |
கணபதி துணை
அறிவித்தல்
அறிஞர்காள் !
சுலோசனை யென்னும் இச் சிறுகதை இராமாயண சம்பந்தமுடைத்தென்பது யாவரும் அறிவர் . இராம காதையை வடமொழிக்கட் பெரியார் பலர் பற்பல வேறுபாட்டுடன் செய்திருக்கின்றனர் அவற்றுள் , இஃது ஏதாவதொன்றில் அடங்குமென்று ஊகஞ்செய்யத்தக்க நிலையிலுள்ளது . இது கருதியே , “அறிஞர் வாயிலாகக் கேட்கப்படுகின்றது” என்று இதன் றொடக்கத்திற் கூறியதுபோலும் . எங்ஙனமாயினும் கதை நிகழ்ச்சி மிக்க சுவையிள்ளதே . அவலச்சுவையே இதன்கட் சிறப்பாக நிலவுகின்றது .சுலோசனையின் அருங்கற்பும் , பெருங் குனங்களும் , அறிவுடைமையும், தலைவற்பிரிவாற் றுன்புறு நிகழ்ச்சிகளும் படிப்பார்க்கு வியப்பும் உருக்கமும் தோன்ற இன்புறுத்துவனவாம் . உண்மைக் கற்பினிலை யிற்றென்று இதனாற் றெள்ளிதி லுணரலாம் . அறுபட்டனவாகிய கையும் தலையும் , எழுதியதும் பேசியதும் கற்பின் ஆற்றலைப் புலப்படுத்துவனவாம் .இப்பிறப்பிற் பயிலப்படாதாரைக் கண்டவிடத்து ஒரோவழியுண்டாம் அந் நிகழ்ச்சிகளுக்கு முற்பிறப்பின் றொடர்பே காரணமென்பதும் இதன்கட் காணலாம் .
இது , மதுரையின்கணுள்ள இராமேசுவர தேவஸ்தான வடமொழிக் கலாசாலைத் தலைமையாசிரியர் வித்தியாநிதி ஸ்ரீ ர . கிருஷ்ணமாசாரியர் அவர்களாற் சென்னையினின்று திங்கடோறும் பிரசுரிக்கப்பட்டுவரும் “ஸகிருதயா” என்னும் வடமொழிப் பத்திரிக்கையிற் பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியாயது . இப்பொழுது புதுக்கோட்டை ஸமஸ்தானத்தைச் சார்ந்த மேலைச்சிவபுரியின்கணுள்ள சன்மார்க்க சபையார் விருப்பின் வண்ணம் தமிழறிஞர்களும் படித்தின்புறற்பொருட்டு மொழிபெயர்க்கப் பட்டது .
மகிபாலன்பட்டி இங்ஙனம் ,
துன்மதி—வருடம் மு. கதிரேசன்.
மார்கழி – மீ கசு உ
சுலோசனை
முதற்காப்பியமாகிய இராமாயணப் பயிற்சியில் மிக்க பற்றுடையார்க்குங் கேட்ட வளவினானே நிகரிலா வியப்பைத் தருகின்ற இச் சுலோசனையென்னும் பழஞ்சரிதம் அறிஞர் வாயிலாகக் கேட்கப்படு கின்றது . “இராம” என்னும் அழகிய வுடலோடு நிலவுலகத்தி லவதரித்துத் தந்தையார் திருமொழியோம்பல் வேண்டுமென்னும் உறுதியால் அரசுதுறந்த திருமகள் கொழுநனது மூவுலகத்தையும் மயக்குறுத்தும் பேரெழிலனனைச் சூர்ப்பநகை கண்டு காமமயக்க முடையவளாய் , அவ்விராமபிரானை அப்பொழுதே தனக்கு மணவாளனாக வேண்டி , அது காரணமாக இலக்குமணனாற் றனக்கு நேர்ந்த மானக்கேட்டைக் கரதூடணர்களுக்கு அறிவுறுத்து , அவ் விராக்கதர்களும் கூறிய இராமபாணத்தா லுயிர் துறப்பக் கண்டு கரைகடைந்தெழூஉந் துன்பக்கடலுண்மூழ்கி மிகுவிரைவில் ஓடித் தனது மானக்கேட்டிற்கு ஏதுவாக நிகழ்ந்த செய்திகளனைத்தையும் இலங்கைக்கிறைவனாகிய இராவணனுக்குணர்த்தினாள் . அவ் விராவணன் அச் செய்திகளைக் கேட்டுக் கூற்றுவன்போல் மிக்கசினத்தாற் கொதித்துப் பொன்மானா லிராமபிரானை வஞ்சித்துச் சானகியைக் கவர்ந்தான் .கொடியவனாகிய அவ்வரக்கர் தலைவன் இழைத்த கொடுஞ்செயலை யறிந்த இராமபிரான் சுக்கிரீவன் முதலிய குரக்குத்தலைவர்களோடு சென்று இலங்கையை வலைத்தான் .பின்னர் நிகழ்ந்த பெரும் போரில் இராமபிரான் வில்லினின்றும் வெளிப்போந்த கொடிய விடப்பாம்புகள் போன்ற அம்புகளால் , கும்ப நிகும்ப அதிகாய மகாகாயர் முதலிய இராக்கதரெல்லாம் நீறுபட்டழிந்தவுடன் சிறிது அச்சமுற்ற இராவணன் , நெடுநேரஞ்சூழ்ந்து இந்திரசித்து ஆகிய தனது குமாரனையழைத்துப் போர்புரிதற் கேவினான் . உலகபாலரிடத்து வெற்றிகொண்ட அவ் விந்திரசித்து ,பல்லாயிரவராகிய அரக்கர்கள் புடை சூழப் பகைவரைப் பொருதான் . அவ் விராவணகுமாரன் நெடுநேரம் போருஞற்றியும் ஓரிடத்தில் ஒவ்வொருகணத்திலுங் குரக்கினங்களாற் கோறல் செய்யப்படுந் தனது படைகளையும் , மற்றோரிடத்தில் இலக்குமணன் விடுத்த பகழியினுறைப் பாற் சிதறுண்ட தன்னையுஞ் சீர்படுத்தற்கு வலியிலனாய் வெற்றியின் அவாவற்றுப் போர்க்களத்தினின்றும் வெளிப்போந்து இலங்கையை யெய்தி இராமலக்குமணர்களுடைய தெய்விகவன்மையையும் , தனக்கு நேர்ந்த மானக்கேட்டையுந் தந்தைபாலுணர்த்தினான் .
அது கேட்ட இராவணன் அஞ்சத்தக்க சினமுடையனாய்ப் பற்களை நெறுநெறெனக்கடித்து “ஏட ! இழிதகவ ! விட் புல வேந்தன் முதலிய உலகபாலகர்களையும் வென்றும் , மிகவும் இழிந்த மக்களிடத்திற் றோல்வி யுற்று நாணமின்றி எங்ஙனம் ஈண்டுற்றாய்? செல் ! செல் ! என்முன்னிருத்தற்குத் தகுதியில்லாதவனாகின்றாய்” என்று பேரொலியாற் பழித்துரைத்தான் .
இதனைக் கேட்ட இந்திரசித்து , பின்னரும் , “இராமலக்குமணர்கள் உண்மையில் மக்களல்லர் ! அவருள், இராமன், மூன்றுலகங்களுக்கும் இன்னல்புரியும் நின்னை அடியோடொழித்தற்கு நிலவுலகத்தில் அவதாரஞ்செய்த திருமகள்கொழுநனென் றறிவாயாக . இன்றே சானகியை அவன்பக்கல் சேர்த்திலையேல் நங்குலத்தில் ஒரு சிறுதுகளும் காண்டல் அரிது . “ என்று கூறினான் . இராவணன் மிக்கசினத்தாற் கிளர்ந்து அவ்வெகுளித்தீயால் நீறாக்கமுயல்பவன் போலத் தன் புதல்வனைப் பின்னருங் கடுஞ்சொற்களாற் பழித்துரைத்தான் .
இவ்வமயத்தில் அவற்கு இனிய நண்பனாகிய வித்தியுச் சிகுவன் என்னும் அமைச்சன் இலங்கநாயகனைச் சிறிது தேற்றி , நிகும்பிலையில் , விரும்பியவைகளைத் தரும் ஒரு வேள்வியைச் செய்துமுடித்தற்கு இந்திரசித்துவைப் போக்கினான் .இராவணகுமாரன் அங்ஙனமே செய்வலென்று கூறிப் புறப்பட்டுப் பன்னாட்குமுன்னர்கண்ட தன் அன்பிற்கருங்கலமாகிய மனைவியைக் காணவிரும்பி அவளுறையும் இல்லத்தை யெய்தினான் .
எய்திய அவ்விந்திரசித்து , பிரிவானெய்திய பசப்பானெழின்மிக்க கதுப்புகளைக் கைத்தலத்தனைத்து அளவின் மிக்க மூச்சுக்காற்றுக்களால் உள்ளத்துள்ள பிரிவுத்தீயை விசிறுகின்றவளும் , எப்பொழுதும் பெருகி யிடையறாதொழுகுங் கண்ணீர்த்திரளால் நனைந்த மேலாடையுடையாளும், “என்னையொத்த துன்பமிக்கபெண் இவ்வுலகத்தில் வேறு ஒருத்தியுமில்லை” என்று பலவிதமாகத் தன்னைப் பழிக்கின்றவளும் , தோழிமார்கள் , “தோழி தேறுவாயாக .நின் பிராணபதி அவசியம் விரைவில் வருவான் . தாபத்தையும் போக்குவான் . ஆதலின் , இவ்வவலத்தை யொழிப்பாயாக” என்று அடிக்கடி தேற்ற , அவர்களை நோக்கிப் “பேறிலளாகிய யான் என் செய்வல் ! எனது அன்புரிமைத் தலைவனது அழகியமுக கமலத்தை யான் என்றுதான் எங்ஙனங் காண்பேன்” என்று அழுங்கலிற் றடுமாறுகின்ற சொற்கலான் மெல்லமெல்லப் பேசுகின்றவளும் , சில அணிகலன்களையுடையவளும் , இளமை மிக்காளும் , தாமரையினி ளந்தண்டு போன்ற மெல்லிய உடலை யுடையவளும் , நினைந்து நினைந்து புலம்புகின்றவளும் , அழகிய எயிறுகளையுடையாளும் ,கற்பரசியும் ஆகிய சுலோசனை என்னும் பெயரையுடைய தன் காதலியைக் கண்டான் .
விரகவிதனமே உருவெடுத்தாற்போல அங்ஙனமிருக்கின்ற காதலியைக் கண்ட அவ் விந்திரசித்து , மகாவீரனாயினுந்திண்மையை அறவே ஒழிப்பது உம், நெஞ்சைப்பிளப்பதூஉமாகிய சோகாக்கினியினால் எரிக்கப்படுகின்ற மனத்தையுடையனாய்த் தோழிகள் விரைந்தெடுத்திட்ட பொன்மயமான வேத்திரவிருக்கையில் இருந்தான் .
சுலோசனையும் , தான் பன்னாளாக விரும்பிய தலைவனை உண்ணாநோன்புடையனபோல விளங்குங் கண்களாற் பருகி, அவசரமுற்று, வியப்பெய்திச் சிலவெழுத்துங் கூறுதற்கு வலியிழந்து காந்தனது திருவடிகளை வணங்கி , மிகமுயன்றுங் கன்ணீர்ப்பெருக்கைத் தடுத்தற்கு ஆற்றலின்றிச் சிறிது நேரம் இன்னது செயற்பாலதென்றறியாளாய் ஓவியத் துற்றாள்போன்று அசைவற்றுத் தன்வயமிழந்து நெடுநேரம் வாய்வாளாதிருந்தாள் .
இன்னல்மிகுதி சிறிது தணிவெய்தியபின், இந்திரசித்து மிக்கொழுகுகின்ற நீர்த்திவலைகணிரம்பிய சுலோசனையின் கண்களைத் தனதுகைத்தலத்தான் மீண்டுமீண்டுத் துடைத்து , அவளை நோக்கி “ஏ காதலி அலர்ந்த தாமரையினிதழ்களை யொத்த அழகியவிழிகளினின்று இந் நீர்ப்பெருக்கு ஆறுபோல் வழிகின்ற தென்னை? இளம்பருவத் தணங்கரசே ! பெருங்காற்றான் அலைப்புறூஉம் இளங்காதலிபோல் மிகமெல்லிய நினது இவ்வுடற்கொடி நடுங்குதல் எற்றிற்கு ? அன்பே ! அணிசெய்துகொள்ளாமை யென்? மிகக்கடியதாய புன்கணாநிரம்பிய யோசையின்றியழுதல் எக்காரணம்பற்றி? யான் சிறிதெனுங் கேடுசெய்ததாகக் கூர்ந்தாராய்ந்து பார்த்தும் புலப்பட்டிலதே ! அங்கனாய் ? நினது வருத்தத்திற்குக் காரணமின்னதெனக் கூறுவாயாக . இப்பொழுதே நின் துக்ககாரணத்தைப் போக்குதற்கு அடியேன் சித்தனாக இருக்கின்றேன் . “ என்று கூறினான் .
சுலோசனையும் , சிறிதுசிவந்த உள்ளிடத்தையுடையகண்களை முன்றானையால் நீவித் தழுதழுத்தகுரலுடன் “நாத ! அநாதையைப் போல என்னை விடுத்து இத்துணைக்காலமாக வாராதிருந்த நின் வன் நெஞ்சைப் பேறிலளாகிய யான் என்னென்று கூறுவேன் ? இப்பேதை செய்த குற்றம் யாது ? இப்பொழுது அவசியம் வருவாய் , மாலை வருவாய் , இரவில் வருவாய், நாளை வருவாய் அதன்பின்னால் வருவாயென நினைந்து எத்தனையோ கற்பம் போன்ற நாட்களைப் போக்கினேன் . இன்றுதான் என் விருப்பம் பயனாயிற்று . என்மாட்டு அருளுண்டாதற்கு இத்துணை நாட் சென்றது .” என்னுஞ் சொற்களைப் புகன்றாள் .
இந்திரசித்து அவள் சொற்களைக் கேட்டு , “மருள்விழியாய் ! நிகழ்ந்த செய்திகளனைத்தும் உணர்ந்திருந்தும் இங்ஙனங் கேட்டலென்னை? பன்னாள் வளர்க்கப்பட்டதும் , மிக இனியதுமாகிய நமது காதற்கொடியை யான் என்றும் மறவேன் . நின்பால் எது பற்றியும் எனக்குக் கோபமின்று . காலத்தின் மாறுபாட்டை அறிந்திருக்கிறாயன்றோ . என் தந்தை சானகியைக் கவர்ந்தமையாற் பெரியகேடுகளின்றொடர்ச்சி யுண்டாயது . தத்தமுள்நேர்ந்த பகையினையுடைய இராம இராவண சைன் யங்களின் மிக அஞ்சத்தக்க போர்க்களத்தில் அதிகாயன் முதலிய பெரிய வீரர்களும் இறந்தனர் . மூவுலகத்தினும் புகழ் பெற்ற பராக்கிரமத்தையுடைய எனது சிறியதந்தையாகிய கும்பகன்னனுஞ் சரிதத்தான் எஞ்சிய விக்கிரமனாயினான் . யானும் அரக்கர்கள் சூழ்வரச்சென்று நெடுநேரம் பொருது , இலக்குமணன்விடுத்த கணைகளாற் பிளக்கப்பட்ட மார்பினையுடையனாய் , மிகவுந்துன்புற்றுத் தந்தையின் பக்கலெய்தி இவ்வெல்லாவற்றையுந் தெரிவித்தேன் . இராமலக்குமணர் களுடைய ஆண்மையை அறியாதவனாகவே அவ்விராவணனும் மூவுலகத்தினும் வெற்றியைத் தரும் ஒரு வேள்வியை நிகும்பிலையிற் செய்தற்கு இன்று என்னை ஏவினான் . நின்னைக்காண்டலிலவாவும் மனத்தினையுடைய யான் வழியிடையே ஈண்டுப் போதரலானேன் . ஆதலின் , எனக்கு விடைதருவாயாக . கவலையை ஒழிக்க . மிகவிரைந்து திரும்புவேன் .” என்று இவ்வாறு கூறினான் .
அது கேட்ட சுலோசனை சிறிது நீர் ததும்ப நிலநோக்கிய கண்களையுடையளாய் , “உயிர்த்தலைவ ! இப்பொழுதே இங்குப்போந்த நினது பிரிவை மீண்டும் பொறுத்தற்கு எங்ஙனம் ஆற்றலுடையேன் ? நிகும்பிலையில் வேள்வியை முடித்துப் பின்னரும் போர் கருதியன்றே செல்ல விரும்புகிறாய் .அந்தோ ! அளவில்லாத அம்புகளின் வீழ்ச்சியாற் புண் பற்றிய நினது இவ்வுடலைக் காண்டற்கு என்நெஞ்சந் துணிந்திலது . நிற்க , இவ்விடயத்திற் சிறிது கூறுதற்கு என்னுள்ளந் துணிகின்றது .மனித இயல்பைக் கடந்த தோள் வலிமிக்க வீரனாகிய இராமன் எங்கே ? நினது தந்தை எங்கே? கடவுட் கூறனாகிய இராமனைப் போர்முனையில் வெல்லுதற்கு மனித இயல்பினால் எங்ஙனம் கூடும் ? நீ இவ்வெல்லாவற்றையும் உனர்ந்தும் போர் கருதிப் புறப்படமுயலல் என்னை? இனி இப்பயனற்ற செயல் அமைக . இம்முயற்சியினின்றும் ஒழிவெய்துக . என் மாமன் செல்கின்ற இல்வழி நல்லோரால் விரும்பத்தக்கதன்று . அவனோ கற்பினுக்கணியாகிய சீதாபிராட்டியைக் கொணர்ந்து எரிகின்ற நெருப்பைப் புதர்நடுவண் இட்டாங்கு நகரிக்கண்வைத்தான் . தலைவர் பிரிந்த துன்பத்தினையுடைய அச் சீதையின் சோகாக்கினியானது காட்டுத் தீப்போல எல்லாவற்றையும் விழுங்குகின்றது ; இங்ஙனம் போர் முகத்தே மகாவீரர்களாகிய நினது சிறியதந்தை முதலியோர்களையுஞ் சரிதத்தின் எஞ்சியவர்களாகச்செய்தது . இத்தீயே எல்லாப்படைகளையுமுடைய நினது தந்தையையும் அழித்தல் உறுதி . ஆதலின், கேட்டினை விளைக்கின்ற இப்பயனற்ற செயலினின்றும் ஒழிக ; ஒழிக . அதனால் ஒருசிறிதுங் குற்றமின்று . தான்செய்ததீவினைப்பயனைத் தானே அநுபவித்தல் என்பது நிச்சயம் . நினது சிறியதந்தையாகிய விபீடணனைப் பார்க்க . அறவோனாகிய அவ் விபீடணன் தன்முன்னோனைத் தீநெறிக்கண்ணின்றும் மீட்டற்கு ஆற்றலிலனாய் இராமனையே புகலிடமாக அடைந்தான் . அவனே பெறலரும் பேறுடையான்” என்று இன்னோரன்ன அழகியசொற்றொகுதிக ளால் வணக்கமும் , நலமும், பிரியமும்பொருந்த உபதேசித்தாள் .
இந்திரசித்து , தன்காதலியின் உபதேசம் அழகியதெனினும் அதனைப் பொருட்படுத்தாமற் சிறிதுசினமுடையனாய்ச் “சிறியவளே ! இது , நினது இளமைக்கு ஏற்றதே ; அரசியின் முறைமைகளைச் சூழ்ந்து தெரியாமலும் சமயத்திற்செயத்தக்கதின்னதென்று உணராமலும் நின்னால் மிக்கசதுரப்பாட்டுடன் தொடங்கப்பட்டது . பெரும்போர் நேர்ந்திருக்கின்றது . பகைவர்களாற் பெரிய வீரர்களும் மாண்டனர் . யான் சுதந்திரமில்லாதவன் . தந்தையின் கட்டளை பெரிதன்றே. தெய்வசம்பந்தமான ஊழ் நலமெனினுந் தீதெனினுஞ் செய்க . தந்தை சொல்மிக்க மந்திரமில்லையன்றே .அதன்போருட்டன்றே நமது பகைவனாகிய இராமன் “அரசுதஞ்சமேயென்று அருங்கானடைந்தான் ? விரித்தலிற் பயனென்? காலங்கடக்கின்றது . இனிக் கணப்பொழுதேனும் ஈண்டிருத்தற்கு என்னாற் கூடாது . போகின்றேன் . தெய்வம் அருள்செய்யின் மீள்வேன் .” என்று சொல்லிக்கொண்டே நீர் நிறைந்த கண்களையுடைய சுலோசனையைக் கணப்பொழுதில் விட்டுப்புறப்பட்டான் .
அவன்சென்றவுடன், சுலோசனை தன்தலைவனுக்குவரற்பாலதாகிய தீமையின்றிரளை ஐயுற்று உள்ளத்தா லொன்றைக் கருதி நெடிதாகவும் வெப்பமாகவும் பெருமூச்செறிந்து அசைவறு நிலையை யண்மினாள் . அதன்பின் சேடியர்கள் தேற்ற அரிதிற்றொளிவெய்தி நீர்பொழிவிழிகளை யுடைய முக கமலத்தை இடதுகையிற்றாங்கி ஒன்றுமுரையாது கீழ்நோக்கியமுகமுடையளா யிருந்தாள் .
இங்ஙனந் துன்புறுமயத்தில் எருவை( கழுகு ) யிறகா னணிசெய்யப் பட்டதும் பொற்பிடியான் ஒளிசெய்கின்றதும் இருப்பினானாக்கப்பட்ட தும், வாயுவேகத்தால் அச்சத்தை விளைக்கும் ஒலியினையுடையதும் , பார்த்த அளவினானே மயக்கத்தைப்புரிவதூஉம் , உருவத்தொடுங்கூடிய கூற்றுவன் சினம்போன்றதூஉம், வாளின்றன்மையெய்தப்பெற்ற கரும் பாம்புபோன்ற தூஉம் ஆகிய பெரியவாளாயுதத்தோடுங்கூடிப்பொன்னானாய தோளணி யாற் கவின்று செஞ்சந்தனச்சேற்றாலணிசெய்யப்பட்ட ஒரு கைத்துண்டு (துணிக்கப்பட்ட கை) , மரகதமணியுருவாகிய ஒரு தூணின்றோற்றத்தைச் செய்வதாய் ஆழிப்படைபோற் கழன்று அச் சுலோசனையுன் முன்னிலையில் வீழ்ந்தது .
“ஆ ! ஆ ! ஈதியாது” என்று துன்புறுமுள்ளத்தாராகிய தோழிகளினது கலகலவொளியால் நன்குவிழித்த கண்களையுடைய அப்பெண்மணி , தனது விழித்துணையால் முன்னர் வீழ்ந்துகிடக்குங் கைத்துண்டினைப்பார்த்துச் சிறிது ஆலோசனையுடையளாய்ப் பொற்கோடுகளான் வரையப்பட்ட தன் நாயகனது பெயரெழுத்துக்களை அக்கொடிபோன்ற வாளினிடத்து எதிர்பாராது நோக்கி யப்பொழுதே கூந்தல் சரிந்து நிலத்திற் பரவத் திடீரென்று வீழ்ந்தாள் .
விரைவில் நிலத்தினின்ரும் எழுந்து அக் கைத்துண்டினைத் தனது கைக்கொடிகளாற் றழீஇப் பெருகுகின்ற கண்ணீர்த்துளிகள் விண்மீனையொத்துநிலவும் முலைகளையும் , மிகவும் நெட்டுயிர்த்தலையும் உடைய சுலோசனை , “ஆ ! கொல்லப்பட்டேன் ! ஆ ! சுடப்பட்டேன் ! ஆ ! கவரப்பட்டேன் ஆ ! வஞ்சிக்கப்பட்டேன் ! ஆ ! எய்திய இத்துன்பம் என்னை? நோய்கோட்பட்டேன் ! பகலிடமில்லேன் ! துன்புறுகின்றேன் ! ஆ ! முப்பெருப்புவியுனும் ஒப்பிலா அழக ! எவனாற் கொல்லப்பட்டாய் ? ஆ ! சுலோசனையாகிய உயிரை யுடையாய் ! என்னைத் தலைவனையிழந்த வளாகவும் தையளாகவும் விட்டு எவ்வாறு சென்றாய் ? அம்ம ! உயிரைப் பொறுத்தற்கு ஆற்றலில்லேன் . தலைவ ! இப்பொழுது நின்னையில்லா எனக்கு இவ்வுலகம் பாழ்ங்காடு ; பிறப்புப் பயனற்றது ; உடல் உலர்ந்த விறகின் றன்மையது . ஏ ! பகைவனாகிய கூற்றுவனே ! இப்பொழுதே எனது உயிரைக் கொள்வாயாக . ஆ ! சுலோசனையின் கண்களாகிய சகோரப்புட்களுக்குரிய திங்களஞ்செல்வ ! புலோமசை கேள்வனை விளையாட்டாக வென்று “இந்திரசித்து” என்னும் பெயரினை எங்கணும் நிறுவிய பெருமையினையுடைய நினது அவ்வலி யாண்டுச் சென்றது?பிறரிடத்துக் காண்டற்கரிய நினது நன்று தீது ஆராயும் அறிவு எவ்விடத்துப்போயது ? “கேட்டை விளைக்கும் இம்முயற்சியுனின்றும் ஒழிக ஒழிக “ என்று பன்முறை பகர்ந்தேனே . ஏழையாகிய என்னை விரும்பாது சென்ற நீ எவ்வாற்றானும் இன்புறுகின்றாய். நீ யாண்டுள்ளாயோ ஆண்டே என்னையுஞ் சேர்க்க . காலத்தினது மாறுபாட்டுத் தன்மை என்னே ! அகாலத்தில் எய்திய வெதுப்பினாலே எனது உள்ளுறையுயிர் சூடுற்றதுபோலும் ! உடலுறுப்புக்கள் வெந்தனபோலும் ! பிராணவாயுக்கள் வெளிச்சென்றன .போலும் ! ஆ ! என்செய்வேன் ! இன்னுயிர்த்தலைவனைப் பின்னரும் எங்ஙனங்காண்பேன் ? இந் நிகழ்ச்சியின் பின்னர் , வாழ்க்கையில் எனக்கு ஒரு பற்றுமின்று . இப்பொழுதே சேர்ந்தாரைக் கொல்லியைச் சேர்வேன் . இன்றேல் , இப் பயனற்ற வுடலைக் கரையிலா ஆழியில் எறிவேன். அதாஅன்று , வெதும்பிய உயிரினையுடைய எனது யாக்கையைக் கோறற் றொழிலையுடைய விலங்கினங்களுக்குப் புலவுணவாக்குவேன் .” என்று இன்னோரன்ன பன்மொழிகூறிப் புன்கணுற்றுப் புலம்புகின்ற சுலோசனை அவ்வமயம் எளிதான இயக்கமின் மயக்கத்தான் மூடப்பட்டாள் .
பின்னர் , அணிமையிலுள்ள தோழிகளுள் ஒருத்தி சுலோசனையைத் தாக்கினாள் . மற்றொருத்தி பொற்கலசத்தில் நீர் கொணர்ந்து அவள் செந்தாமரையனைய திருமுகத்தையும் , விழித்துணையையும் கழீஇயினாள் வேறொருத்தி, சுறுசுறுப்போடு பனிநீரிற்றோய்ந்த விசிறியினால் மெல்லமெல்ல வீசி இளங்காற்றைப் பரவச்செய்தாள் .வேறு சில அறிவு மிக்க பெண்கள் “தோழீ ! சுலோசனே ! தெளிக . தெளிக “ என்று அடிக்கடி தேற்றினார்கள் .
அறுக்கப்பட்டு நிலத்தில் வீழ்ந்த கற்பகவல்லிபொன்றவளும் , மேகத்தினின்று பெருங்காற்றாற் பிடுங்கி வீழ்த்தப்பட்டு நிலத்திற்கிடக்கின்ற மின்னற்கொடிபோன்றவளும் , சேற்றால் நிரம்பிய தாமரைத்தண்டுபோலப் புழுதியினால் நிரம்பிய திருமேனியையுடையாளும் நிலைபெயர்ந்த தாமரைக்கொடி போலத் தலைவற்பிரிந்த துன்பத்தாற் கவலுகின்ற உடலையுடையாளும் ஆகிய அம்மெல்லியலைப் பார்த்தற்கு ஆற்றாதவர்களான தோழிமார்கள் , “ஆ ! எய்தின இத்துன்பம் என்னை ? என்று கதறிக்கொண்டு நிலத்தில் வீழ்ந்தார்கள் .
இங்ஙனம் ஒவ்வொருகணமும் உட்புகுந்த சோகாக்கினியாற் சுடப்பட்ட உள்ளத்தையுடைய சேடியர்களது மிகக் கொதிக்கின்ற கன்ணீர் வெள்ளத்தால் நனைக்கப்பட்ட சரீரத்தையுடைய சுலோசனை அரிதிற்போந்த அறிவையடைந்து அக்கணத்தே இறத்தலையே புகலிடமாக நினைத்து மிகவும் புலம்பித் தலைவற்கெய்திய சொல்லொணாநிலையை நினைத்து “ஆ ! காமசுந்தர ! பாவியாகிய இவள் நின்னையின்றி எங்ஙனம் உயிரைத்தாங்குவாள் ? ஏ ! இன்னுயிர்த்தலைவ ! நின்னுயிர் நீங்கியும் என்னுயிர் இக்கணத்தே வெளிச்செல்லாதிருத்தல் என்னை? ஐய ! இப்பொழுது அருள்செய்வாயாக . நின் வாசத்தானத்தில் என்னையுஞ் சேர்க்க . ஆ ! தோழிகளே ! மரணத்தினும் மிக்க இத் துன்பத்தை யநுபவிக்கின்ற யான் பிரியபதியின்றியும் நாணில்லாதவளாக எப்பயன் குறித்துச் சீவிக்கின்றேன் ? எவனுடைய அன்புமிக்க அழகிய பன்மொழிகளால் அளவளாவிக் காலத்தைப் போக்குவேன் . எனது புன்கணையார்பாற் றெரிவிப்பேன் ? சந்திரிகை சந்திரனையும் , மின்னல் முகிலையுஞ் சார்தல்போல் , எல்லாத்துன்பங்களும் ஒழிதற்பொருட்டு யான் எனது உள்ளுறை தலைவனைச் சார்கின்றேன் . விறகுகளைக்கொணர்ந்து சிதையை அடுக்குங்கள் . நெருப்பை எழுப்புமிங்கள் . என்னை இறுதியான தழுவுதலாற் பெருமைப் படுத்துமின்கள் “ என்று சகிகளோடுங்கூடிப் புலம்பிப் பின்னரும் இயக்கமின்மயக்கம் எய்தினாள் . அதன்பின் முகூர்த்தப்போழ்திற் றெளிவை யடைந்து சிறிதுபொழுது “ ஆ ! நாத ! “ என்று மார்பில் அடித்துக்கொண்டு புலம்பினாள் . சிறிது பொழுது நெடிதுங் கொடியதுமான பெருமூச்செறிந்தாள் . சிறிது போழ்து “நின்னையே புகலிடமாகவுடைய இவளைத் திடீரென்று ஒழித்து நினைவுமாத்திரையான கதியை யடைந்தனையே . இவ்வொழுக்கந் தக்கதன்று “ என்று வாய்திறந்து கதறினாள் .
இத்தகைய துன்பநிலையை அநுபவிக்கின்ற அழகிய கண்களையுடைய அச்சுலோசனையைத் தோழி ஒருத்தி , வணக்கத்துடன் துன்பமும் அநுதாபமும் தோன்ற , “ஏடி ! சுலோசனே ! ஊழ்வலியால் நேர்ந்த இந் நிகழ்ச்சியில் யாது செயற்பாலது ? வாடுதலில்லாத சண்பகமலர்போன்ற அழகிய உடலில் மேகமின்றியே இடியைவீழ்த்திய பாதகமிக்க கொடிய ஊழ் நன்று செய்திலது . ஊழ்வலியை விலக்குதற்கு உலகத்தில் எவன் வலியுள்ளான் ? முற்பிறப்பிற் செய்யப்பட்டதும் , கழுவாயின்றி ( பரிகாரம் ) இன்றியமையாது நுகரத்தக்கதுமாகிய கொடிய தீவினையின்பயனே இஃதென்று நினைக்கின்றேன் . பேறிலளாகிய ( பேறு — நல்லூழ்ப்பயன் ) நீ மீண்டும் நின் அன்புக்குரிய நாயகனைக் காண்டற்கு வலியற்றவளா கின்றாய் . தலைவற்பிரிவானுண்டாய துன்பம் உண்மையிற் பொறுக்கத் தகாததே ; ஆனால் , இவ் விஞ்ஞான உலகம் கழித்ததற்கு இரங்குந்தன்மைத்து . அறிவறிந்த நின்முன்னிலையிற் பேதையாகிய யான் இங்ஙனங் கூறுதற்கு நாணம் எய்துகின்றேன் . ஆயினும் பன்னாட் பழக்கத்தாற் காரணமின்றியுண்டாய அன்புரிமையே என்னை இங்ஙனஞ் சொல்விக்கின்றது . இக்கவற்சி நீங்குக . தேறுதல் எய்துவாயாக” என்று தேற்றினாள் .
பின்னர்ச் சுலோசனை உடனிறத்தற்குத் துணிந்து ஈம விறகு அடுக்குதற்குத் தோழிமார்களை அடுத்தடுத்து வற்புறுத்தினாள் . தோழிமார் களெல்லோருந் துன்பத்தால் வாய் வாளாதிருந்துழி , ஒருத்தி சுலோசனையின் பக்கல் மெல்லமெல்ல எய்தி வணக்கத்துடன் , “ஏழாய் ! முன் நிகழ்ந்தவற்றை யறியாமலும் , இறந்த தலைவனது முகத்தைக் காணாமலும் , காதலர்க்குநேர்ந்ததை உண்மையாகத் துணியாமலும் , இக்கைத்துண்டு யாருடையதென்று ஆராயமலும் , யாரான் எதற்காக ஈண்டு எரியப்பட்டதென்று எண்ணாமலும் இடுக்கனான் அலந்த நெஞ்சத்தினையுடைய நீ , உடனிறத்தலையே துணிவுற்று ஆராயாது செய்கின்ற நின் எண்ணத்தைத் தடுக்கின்றாயில்லை” என்று இங்ஙனம் அறிவுறுத்தினாள் . அம்மொழி கேட்ட மாது “நன்குபதேசிக்கப்பட்டது” என்று பெருமைப்படுத்தி , “நிகும்பிலையில் வேள்வி முடித்தற்கன்றே இங்கிருந்து என் நாதன் புறப்பட்டான் . ஏழையாகிய யான் , அவன்செயலை எவ்வாறு உணர்வேன் ? யாரை வினவுவேன் ? என் தலைவனது செய்தியை அறிவிப்பவர் யார் ? யாண்டுச் செல்வேன் ? பேறிலளாகிய யான் காதலனது செய்திகளை எம்முறையான் எங்ஙனம் நுணுகி ஆராய்ந்து எவ்வழியான் உணர்வேன் .? என்று துன்பத்துடன் கூறிச் சிதறுகின்ற தூய முத்துக் கூட்டங்களைப்போற் கண்ணீர்த்திவலைகளை யுதிர்த்துத் துன்பமிகுதியாற் பொறி கலங்கித் திங்கண்மண்டிலங் கூதிர்காலத்து முகிலான் மறைக்கப்பட்டது போற் பாம்புரியன்ன மெல்லிய வெள்ளிய ஆடையான் முகத்தை மறைத்து “தேறுதலடைவாயாக “ என்று அணிமையுலுள்ள தோழிகளால் அடுத்தடுத்துக் கையினாற் றைவரப்பட்டு, ஒவ்வொருகணமு மெலிவெய்தி , அவ்வமயஞ் செய்யத்தக்கதின்னதென்று அறியாளாய்ச் சிறிது நேரம் பாழடைந்தமனத்தினளாயினாள் .
பின்னர் , மிகச் சிரமமுற்று மனத்தையடக்கித் தலைவனது செய்தியையறியும் விருப்பமுடையளாய்த் “தீயூழின் கேடுபயக்குஞ்செயல் அந்தோ ! மிகக்கொடியது . நாயகனது இக் கைத்துண்டினை நோக்கியே அன்னான்செய்திகள் எல்லாவற்றையும் பற்றிக் கேட்கிறேன் . “ என்று துணிவுற்று , வாட்படையேந்திய அக்கையினை மும்முறை வலம் வந்து நெற்றி நிலத்திற்றோயப் பணிந்து ,தலையிற் கூப்பியகையுடன் “எல்லாப் பகைவர்களையுங் கொல்லுதலாற் றன்வலிமையை வெளிப்படுத்துகின் றதும் , வாட்படையால் அணிசெய்யப்பட்டதும் , விண்ணவர்தலைவனைத் தன்புகழ் பாடுபவனாகப் பெற்றதுமாகிய என் நாயகனதுகைத்துண்டிற்கு நலமுண்டாக.ஒவ்வொருகணமும் வளர்கின்ற நாயகவியோகமாகிய அக்கினியின் எரிகொழுந்தால் எரிக்கப்படுகின்ற உறுப்புக்களையுடை யவளும், மிகவுங்கொடிய தீயூழாற் பன்னாட்பழகிய அன்பின்சுவைக்கு நிலயமாகிய காதலனது உடனுறைவினின்றும் எதிர்பாராது வேறுபடுக்கப்பட்டவளும், இறப்பினும் மிக்க துன்பத்தைத் தருந்தலைவனது பிரிவை யாற்றாதவளும், செவியைவெதுப்புகின்ற கணவனது மரண சரிதத்தைக் கேட்ட அளவிலேயே உடனிறப்பதிற் றுணிவுற்றவளும் , தாமரை மலர் போன்ற அவன்முகத்தைக் காணாமல் உடனிறப்பநினைப்பது தகுதியின் றெனவெண்ணுகின்றவளும் , அவன் முகத்தைக் காண்டற்குத் தக்க நெறி யின்னதென்றறியாதவளும் , வேறு புகலிடமில்லாதவளும் , நின்னையே புகலாக அடைந்தவளுமாகிய இத்தகைய இவள் கண்ணீரொழுகக் கைகூப்பி வணங்கிப் பெருமை தோன்ற நின்னை இரக்கின்றாள் . அருள்செய்து சொல்வாயாக . ஓ ! என் தலைவனது வலக்கையே ! உலகத்திற் சிறந்த வீரனும் அடுத்தடுத்துநேர்ந்த மிக அஞ்சத்தக்க போர்முனையில் விண்ணவர்களை மிகக்கூறிய பகழிகளாற் சிதறாடித்தவனுமாகிய என்காதலன் எவனாற்கொல்லப்பட்டான் ? பேறிலனா கிய யான் அவன் முகத்தைக் காண்டற்கு யாதுசெய்தல் வேண்டும்? எவ்விடத்து அடைதல்வேண்டும் ? என்று வணக்கத்துடன் தெரிவித்தாள் .
ஒவ்வொருகணமும் மறுமொழியை யெதிர்பார்த்தும் ஒன்றுங் கேட்கப்படாமையால் இருமடங்கதிகமான துன்பமெய்தி “ஏ ! வலக்கையே ! எவ்வாற்றானுங் கொடியையாகின்றாய் ! கண்ணோட்டமேற்கொண்டிலை . என்றலைவனதுகையென்பதும் , பேறிலளாகிய என்னிடத்து எனது பிராணபதிக்கு இயற்கையிற்றோன்றிய அன்புண்டென்பதும் உண்மையா யின் எனக்கு மறுமொழி தருவாயாக “ எனக் கூறினாள் .
அக்கைத்துண்டு , அமங்கலமான சொல்லை அவள் கேட்பதற்கு பிரியமில்லாததுபோலப் பின்னரும் மோனமுற்றிருக்குங்கால் ஆற்றொணாத் துன்பமும் சினமுமேற்கொண்டு , சிறிது கண்சிவந்து , தளிர்போன்ற அதரங்கள் துடிக்க , எல்லா உறுப்புக்களையும்பற்றிய வெதுப்பத்தால் உடல்நடுங்கி , மீண்டும் எழுந்து , தலைவனை நெஞ்சால் தியானித்து , “என்னாற் பன்முறை வேண்டப்பெற்றும் இக் கைத்துண்டு எனக்கு மறுமொழி தந்திலது . ஆ ! காலத்தின் மாறுபாட்டுத்தன்மை யென்னே ! நிற்க; மீண்டும் வஞ்சினத்துடன் கேட்கின்றேன் . ஏ ! கைத்துண்டே ! கைப்பிடித்தவன்றுதொட்டு இன்றுவரை இன்பத்திலுந் துன்பத்திலும் எனது பிராணகாந்தனையன்றி வேறொன்றையுங் கருதிலேன் என்பதூஉம், ஒருபொழுதும் எனது கணவனையன்றி வேறொருவனை நெஞ்சத்தாலும் நினைந்திலேன் என்பதூஉம் உண்மையாயின் எனக்கு மறுமொழி தருவாயாக “ எனக்கூறி ஒழிவெய்தினாள் .
பின்னர் , நொடிப்பொழுதில் , மானமிக்கோரிற் சிறந்த இந்திரசித்துவின் கைத்துண்டு , கற்பரசிகளுட்சிறந்த சுலோசனையினது மிகக்கடியதும் முன்கேட்கப்படாததும் , கேட்டவளவினானே சல்லியபாணம் போல நெஞ்சத்தை வருத்திப்பிளப்பதூஉமாகிய அச்சொல்லைக் கேட்டு , அதிவிரைவில் நிலத்தினின்றுமெழுந்து , மின்னர்குழுவாற் செய்யப்பட்டது போல ஒளிசெய்கின்ற அவ்வாட்படையைக் கீழ்முகமாகத் திருப்பி மிகக்கூறிய அதன் நுனியால் “ஏடி ! சுலோசனே ! முதலில் நின்கண்களைத் துடைத்துக்கொள்க . என்செய்திகளைப் படிப்பாயாக. இதோ எழுதுகின்றேன் அன்புரையாடுங் காதலீ ! அறிவுமிக்க நின்னால் “இக் கேட்டை விளைக்குஞ் செயலினின்றும் ஒழிகஒழிக “ என்று உரைக்கப்பட்டதன்றோ! நலத்தை விரும்புகின்ற நின் உபதேசங்களைச் சேய்மையின் ஒதுக்கிப் போர்த்தொழிலையே மேற்கொண்டு நிகும்பிலையில் ஆபிசாரவிதியினாற் செய்யப்பட்ட வேள்வித்தீயினின்றும் விடுபடை கைப்படை முதலிய ஆயுதக் கூட்டங்களானிறைந்து மாயையான் ஆக்கப்பட்ட தேரைப்பெற்றுப் போர்செய்ய விரும்பிய யான் அவ்விடத்தையடைந்து நெருப்பை விரைவிற் கிளர்வித்துப் பொரி , எள்ளு , சமித்து , தருப்பை , நெய் முதலியவைகளால் ஓமஞ்செய்து இறுதியிற் பெரிய ஆட்டின் கொழுப்பினாற் பூரணாகுதியைக் கொடுத்தற்கு முயன்று கொண்டிருக்குமிடையில் , எனது சிறியதந்தை யிடமாக எல்லா நிகழ்ச்சிகளையுமுணர்ந்த இராமனால் ஏவப்பட்டு என்னைக் கொல்லவந்த இலக்குமணன் அங்கு விரைந்து போந்து மிகக்கடிய கன்மழையினு மிகுதியாகப் பாம்புகளின் நஞ்சாகிய தீயைக் கக்குகின்ற அம்புமாரியை என்பாற் பொழிந்தான் .
அவ்வமயத்திலும் , எங்ஙனமாயினும் வேள்வியை முடித்து இவனோடு போர்செய்தல் வேண்டுமென்னும் உறுதியையும் , வேள்விவினையிலேயே பற்றிய மனத்தினையுமுடைய யான் பெருகுகின்ற நெய்யொழுக்கத்துடன்கூடிய பெரிய ஆட்டின் கொழுப்பைக் கையினால் உயரவெடுத்தேன் . இவ் வாபிசார வேள்வி நறைவேறுமாயின் என்னை என்றுங் கொல்லமுடியாதன்பதை உணர்ந்த அவ்விலக்குமணன் விரைவில்வந்து மிக்கவிரைவுடன் தூக்கியகாலுதையால் அவ்வவியை என் கைத்தலத்தினின்றுஞ் சேய்மைக்கண்ணெறிந்தான். அப்பொழுதே கிளர்ந் தெழும் சினத்தினையுடைய யான் மீண்டும் வேள்வியின்முயலல் அறியாமையின் பாலதாம் என்று துணிவுற்று “என் சினமாகிய நெருப்பில் நின்னை ஓமஞ்செய்வே “ னென்று அவனோடு போர்புரியத்தொடங்கினேன் . அப்போர்த்தொடக்கத்திற் கிளர்கின்ற கோபத்தையுடைய எம்மிருவர்க்கும் அம்புகளாலும் , தண்டங்களாலும் , கைகலத்தலாலும் நெடுநேரம் யுத்தம் நடைபெற்றது . மிக்க மாயாவியும் மூவுலகத்தினுஞ் சிறந்த வீரனுமாகிய என்னைக் கொல்லுதற்கு வலியற்றவனாகிய இலக்குமணன் ஊழித்தீயினையொத்த ஒரம்பை வில்லிற்பூட்டி “ஏ ! பகழியே !தசரத குமாரனாகிய இராமன் , அறவோனும் , உண்மையாளனும், ஆண்மையில் நிகரற்றவனும் ஆவன் என்பது உண்மையாயின் இவ் விராவணகுமாரனைக் கொல்வாயாக . என்று வஞ்சினங் கூறி என்பால் விடுத்தான் . வில்லினின்றும் வெளிப்பட்ட அவ்விராமபாணம் அச்சத்தைவிளைக்கும் ஒலியினையுடைய தாய்ப் பாம்பின் நெஞ்சையொத்த தீத்திரளைக் கக்கிக்கொண்டு இடிவீழ்ந்தால்போலென்பால் வீழ்ந்து , என் தலயைத் துணித்து , அதனை இராமபிரானது திருவடித்தாமரைகளிலும் , இவ்வலக்கையைத் துணித்து நின்பக்கலிலும் வீழ்த்தியது . அவ்வம்பாற்றுணிக்கப்பட்ட என்றலை ,அரக்கர்குலத்துத் தூமகேதுவும் , கதிரவன் குலத்துத் தலைமணியுமாகிய இராமபிரானது திருவடித்தாமரைகளை யடுத்தலால் வருமின்பத்தை நுகர்ந்து அளவிலாப் பேரின்பத்தை யடைகின்றது . நங்காய் ! நீயும் விரைந்து வருவாயாக. இராமபிரானது திருவடிகளை யெய்தலால்வரும் இன்பத்தை நுகர்வாயாக . பிறப்பைப் பயன்படுத்துக .மணம் நிகழ்ந்த ஞான்று அன்புடன்பற்றிய எனது இவ்வலக்கையை யெடுத்துக்கொண்டு விரைந்து வருவாயாக “ என நிலத்தில்வரைந்து மீண்டுஞ் சுலொசனையின் முன்னிலையிற் பூமியில் வீழ்ந்தது . அங்ஙனமெழுதப்பட்ட தன் றலைவனது செய்தியை அன்பு பெருகப் படித்துக் குப்பாயம் போர்த்ததுபோல் மயிர்ப் புளகமுற்றவுடலையும் , இடைவிடாது அழுதலாற் பருத்த கண்களை யுமுடைய அச்சுலோசனை , பாழடைந்தாள்போலும் , மயக்கமுற்றாள் போலும் , ஓவியத்துற்றாள்போலும் , அசைவறுநிலையை யண்மினாள் போலும் , நெடுநேரம் எல்லாப் பொறிகளின் தொழில்களும் ஒடுங்கப்பெற்று இருந்தாள் .அவள் தோழிமார்களெல்லாம் மிக்க வியப்பைத் தருகின்றதும் முன்னிகழாததுமாய இந் நிகழ்ச்சியைப் பார்த்துக் கற்பரசியாகிய அச்சுலோசனையினது பிறரிடத்துக் காண்டற்கரிய கற்பின் மேம்பாட்டைப் பாராட்டினார்கள் .
பின்னர் , இவள் முகூர்த்தப்பொழுதிற் கண்களை விழித்து “இனிக் காலந்தாழ்த்தல் கூடாது ; கட்டளையிட்டவாறு நடத்தல்வேண்டும் ; இப்பொழுது என் மாமன்பக்கலெய்தி இறந்த என் கணவனது சிரசைக் கொணரும்படி வேண்டிக்கொள்வேன் .ஆதலிற் சிவிகையைக் கொணருங்கள். இக்கைத்துண்டினை யேற்றுங்கள் . என் மாமன் யாண்டுள்ளானோ ஆண்டு விரைந்துசெல்வோமாக . “ என்று சொல்லிக்கொண்டு பல்லக்குக் கொணர் தற்பொருட்டுத் தோழிகளுக்குக் கட்டளையிட்டாள் .
அக்கணத்திலே கொண்டுவரப்பட்ட இரத்தினசிவிகையில் அக்கைத்துண்டினைச் சிறப்புடனேற்றி அப்பல்லக்கை நான்கு வேலைக்காரி களாற் றூக்குவித்துத் தோழிகள் சூழ அடிவரையும் குப்பாயத்தான் (சட்டை) மறைக்கப்பட்டவுடலையும் , மூச்சுக்காற்றின் வெம்மையால் நிறம் வேறுபட்ட அதரங்களையும் , தடையின்றிப் பெருகுகின்ற கண்ணீர்வெள்ளத்தானனைக் கப்பட்ட மேலாடையையும் , யமுனையாற்றுவெள்ளம் போற் கறுத்துத் தோட்பக்கங்களிற் றுவண்டு சிதறுண்டுகிடக்கின்ற கூந்தலையும் , பன்முறை மார்பின்கண் அடித்துக் கொள்ளுதலாற் றளிர்போற் சிவந்த கைகளையும் , நெல்லிக்கனிபோற் பருத்த முத்துக்களானாய மாலையாகிய அணிகலனையுமுடையவளும் , “ஆ !நாத ! “ என்று பன்முறை புலம்பி , முககமலத்தைக் கைத்தலத்தான் மறைத்து , ஒருத்தி தாமரை யிலையில் நீர் தாங்கிவர , ஒருத்தி ஈரமுள்ள வாழையிலையானாகிய விசிரியைத் தாங்கிவர , ஒருத்தி மேலே விழுகின்ற கடுங்கதிர்க்கிரணத்தைத் தடுக்கவிரும்பித் தூக்கப்பட்டதும் , அத் துன்பநிலைக்குரியதுமாகிய கறுப்புக்குடையைத் தாங்கிவர , வேறுசிலர் சோகத்தால் வேறுபட்டு வாய்வாளாது நெருக்கமின்றிச் சூழ்ந்துவர வரம் பிகந்த தனது துன்பத்தால் எல்லோருடைய மனத்தயும் வருத்துகின்றவளும் , இரக்கத்திற்கு அதிட்டானதேவதை போற் கட்புலனுக்குத் தோன்றுகின்றவளும் , கற்புருக்கொண்டாற்போல நாயகற் பிரிவானேர்ந்த துன்பத்தாற் கலக்க முறுகின்றவளும் , ஒவ்வொரு கணத்திலும் மூங்கைபோலவும் அறிவிலாள் போலவும் , மயக்கமுற்றாள் போலவும் , பேய்கோட்பட்டாள் போலவும் , பாழடைந்த மனத்தினள் போலவும், கவலைக்கடலுண் மூழ்கினாள் போலவும் தடுமாறுகின்றவளும் , யாவனாயினும் ஒருவன் தன்றலைவனது சரிதத்தைத் தெரிவிப்பான் என்று புதிய கருங்குவளைமலர்போல் அழகிய அகன்ற விழிகளை நாற்புறமும் பரப்புகின்றவளும் , “இன்னும் எத்துணைத் தூரத்தில் என் மாமனது அரசிருக்கை மண்டபம் உள்ளது “ என்று ஒவ்வொரு கணத்திலும் தோழிகளை நோக்கி வினவுகின்றவளும் , சிறிதுபொழுது இரக்கத்துடன் கதறுகின்றவளும் , சிறிதுபொழுது நெட்டுயிர்ப்பெறி கின்றவளும் ஆகிய சுலோசனை தோழிகளான் மிக்கச்சிரமத்துடன் தாங்கப்பட்டு இராக்கதசக்கிரவர்த்தியாகிய இலங்கைநாயகனது அத்தாணி மண்டபத்தின் பக்கலை யடைந்தாள் .
ஆண்டுள்ள ஒளிர்கின்ற பொன்னாலியற்றப்பட்ட அத்தாணிமண்ட பத்தின் நடுவண் நவமணிகள் அழுத்திய அரியணையில் வீற்றிருக்கும் இராவணனை , மிக அணிமைக்கண்ணுள்ள ஓர் இருக்கையில் வீற்றிருக் கின்ற பதிவிரதாசிரோமணியாகிய மந்தோதரி , இயற்கை வனப்பு வாய்ந்து வணக்கத்துடன் கூடிய பற்பல உபதேசமொழிகளாற் றடுத்தும் அவன் சானகியின்பால்வைத்த பற்றுள்ளமுடையனாய், “ஏடி ! அறிவிழந்த மந்தோதரி நீ இங்ஙனங்கூறுதலென்னை? உயிர்விடினும் ஒருபொழுதும் சானகியை விடேன் . வீரர்களுட்சிறந்த நம் புதல்வன் நிகும்பிலையில் விதிப்படி செய்யப்பட்ட வேள்வித் தீ யினின்றும் எய்திய தெய்வத்தன்மை வாய்ந்த தேரையுடையோனாய்ப் போர்க்களத்தில் இராமலக்குமணர்களை நிச்சயமாக கொல்லுவான் .பின்னர் வேறு புகலில்லாது இறத்தற்கு அஞ்சுகின்ற அப்பெண்மணியாகிய சானகி , தானே போந்து என்னை யின்புறுத்துவாள் . என் அவாவையும் நிறைவேற்றுவாள் “ என்று கூறினான் .
செவியை வெதுப்புகின்ற அம்மொழியைக்கேட்ட மந்தோதரி , “நாத ! சிவபிரானை மகிழ்வுறுத்திய தோள்வலியினையுடைய நினக்கு இஃதறமன்று . சனகன்புதல்வி , கற்புமிக்க நங்கையருள் தலைமணியன்றே! கற்புக் காட்டுத்தீபோன்றதன்றே ! கற்பரசிகளின் சரிதம் மிக்க வியப்பினையும் சிறப்பினையும் உடையதன்றே ! நூற்றுக்கணக்கான வீரர்கள் போர்க்களத்தில் இறந்ததை நோக்குவாயாக . தசரதன் புதல்வர்கள் மக்கட்டன்மையினர்களாகவும் , சனககுலத்தை மகிழ்விக்கும் சீதை சாமானியமான ஒரு பெண்ணாகவும் இருப்பார்களாயின் , இவையெல்லாம் எங்ஙனம் நிகழும்? ஆதலின் உலகத்திற்கு இன்பம் பயக்கும் இராமனை எல்லாவுயிர்களுக்கும் இதஞ்செய்யும் விருப்பத்தால் நிலத்தில் அவதரித்த திருமாளாகவும் , சானகியைப் பூவுலகத்திற்குத் தாயாகிய பாற்கடற்பிறந்த இலக்குமியாகவும் அறிவாயாக . உருவமே மனிதவியல்பைக் கடந்ததென்று அறிவிக்கும் சீதையை இராமபிரானிடம் வணக்கத்துடன் சேர்ப்பிப்பாயாக . தனது கற்பினானாகிய புகழினாற் பத்துத்திக்குக்களையும் வெள்ளியவாகச் செய்த விதேககுலத்துக்கு மங்கல விளக்காகிய சீதையின்பால் இவ்வாறு ஐயுறுதற்கு நின்மனம் முயல்கின்றதென்னை ? இத்தகைய நின்னறிவு நலமுடையதன்று . ஒரு பொழுதும் இன்பந்தருவதுமன்று . நலன்றருஞ்செய லைத் தொடங்குகின்ற ஆடவன் எச்செயல்களினும் நேரத்தக்க நன்று தீதுகளை நுனித்துணர்கின்றானன்றே ! இந் நிகழ்ச்சியில் ஈது எடுத்துக்காட்டாகும் . மிக்க வன்மை வாய்ந்த எத்தனையோ வீரர்கள் போர்முகத்தின் மாண்டனர் . ஆற்றொணாத் திண்மையினையுடைய நினது உடன்பிறந்தானாகிய கும்பகன்னன் , நால்வகைப் படைகளுடன் சென்று தக்கவாறு போர்புரிந்தும் ,விலங்கினங்களைத் துணையாகப்பெற்ற இராமனாற் போர்க்களத்தில் இறந்தான் . குமாரனாகிய மேகநாதன் முதலில் மிக்க மானக்கேட்டை யடைந்து , சானகியை விடுதற்பொருட்டு நின்னைப் பல்லாற்றானும் வேண்டியும் ,நீ மறுத்துரைத்த கடுஞ்சொற்களை யாற்றதவனாய் ,உயிரையுந் துரும்பாகக் கருதிப்போர்செதற்பொருட்டு மீண்டும் ஓடினான் . மீண்டும் அவனை வாழ்நாளுடையனாகக் காண்பேனோ?காண்கிலேனோ ? அறியேன் . இன்னுந் தீ நெறிக்கட்செல்லும் அறிவைத் திருப்புதற்கு ஆற்றலில்லாயாயின் நம்குலம் வேறோடு கேடுறுமென்பதுறுதியே . ஆதலின் , இக்கேட்டை விளைக்குஞ் செலவினின்றும் நீக்குவாயாக. மிக்க எழில்வாய்ந்த இவ்விராச்சியம் விரிவு டையது ; நிரம்பிய இச்செல்வமும் பிறர்க்கு அமையாதது .; வணக்கமிக்க ஏவலாளர் பலருளர் ; ஆணயும் விட்புலவேந்தன் முடிமணியில் விளங்குவது ; புகழ் எல்லாத் திசைகளிலும் நின்று நிலவுகின்றது ; வரலாறு மக்களனை வரையும் வியப்புறச்செய்வது . அனைத்தையும் ஓரமயத்திலேயே பயனற்றன வாகச்செய்யற்க . விரைந்து சானகியைச் சமர்பணஞ் செய்வாயாக . தசரதன் புதல்வர்களிடத்து நட்பைக் கொள்வாயாக . நீண்டகாலம் இவ்வரசுரிமைத் திருவை நுகர்வாயாக “ என்று அன்புடன் கூறினாள்.
இராவணன் தனது செயல் பொருத்தமற்றதென்றறிந்தும், காலமாறுபாட்டால் , அன்புடன் கூறப்பட்டனவாயினும் மந்தோதரியின் மொழிகளை வெறுத்துத் தள்ளினான் .
ஆ ! ஆ ! நமது அத்தாணிமண்டபத்தின் அணிமைக்கண் எய்திய சுலோசனையை மறந்து மிகவுங் காலங்கடந்து விட்டோம் . ஆண்டு அக்கற்பரசி எத்துணைக் காலமிருப்பள் . ஆதலின் அவள் உள்ளே புகுக. பின்னர் யாதுநேருமென்று அறிவதற்கு நாமும் அவாவுடன் முற்படுவோமாக .
சூர்கொண்ட புதிய மேகம் போன்ற கரியகுழற்கற்றையாலும் , கார்காலத்து நிறைமதி போன்ற அழகிய முகத்தானும் , இளம்பிறைபோல் எழின்மிக்க நெற்றியானும் , விற்கொடியோவென்று ஐயுறுத்தும் புருவங்களானும் , அசைகின்ற கருங்குவளையிதழ்போல் வனப்பு மிக்க கண் களானும் , சண்பகத்தினரும்புகொலோவென்னும் ஐயத்தை விளக்கும் மூக்கானும் , கண்ணாடியொத்த கதுப்புகளானும், பவளக்கொடிபோன்ற அழகிய அதரங்களானும் , சங்கத்தையொத்த கழுத்தானும் , பந்துபோற்றிரண்ட பயோதரங்களானும் ,கொடிகளையொத்த கைகளானும், மும்மடிப்பான் அழகு செய்யும் இடையானும் , புளினதலத்தையொத்த நிதம்பத்தானும் ,வாழைத்தண்டு போலாகிய தொடைகளானும் , தாமரப்பூ போன்ற அடிகளானும் விளங்குகின்றவளும் , நடையால் அன்னத்தையும் , இன்சொற்களாற் குயிலையும் , தலைவனிடத்துள்ள அன்பால் அன்றிற் பேட்டையும் , யாவரையும் தன் வயமீர்த்தலால் மந்திரசித்தியையும் ஒத்துத் திகழ்கின்றவளும் , அழகிய உருவச்சிறப்பினாலும் , ஒப்பற்ற எழிலானும், இயற்கையின் வாய்ந்த நல்லொழுக்கத்தானும் , மாட்சிமிக்க கற்பினானும் – பலவாறு கூறுவதென்னை? எல்லா வகையானும் சானகியை யொத்துவிளங்குகின்றவளுமாகிய சுலோசனை , அத்தாணிமண்டபத்தின் வாயிலை மெல்ல எய்தி இராவணனது அவைக்களத்திற் புகுந்தாள்
இரங்குதற்குரிய அச்சுலோசனையைப் பார்த்த இராவணன் மந்தோதரியை நொக்கி “ஏடி ! மதியற்ற மந்தோதரி ! நீ சிறிதும் அறிந்திலை. தக்கதின்ன தகாதன வின்னவென்று ஆராய்ந்திலை . இந்திரசித்துவின் வலிமையை உண்மையிலுணர்ந்திலை . பார்க்க ! பார்க்க ! வீரருட்சிறந்த நம்புதல்வனாற் போரில் இராமலக்குமணர்கள் இறந்தமை கேட்டு , என்பால் அருள்பெறற்பொருட்டுச் சானகி ஈண்டே வருகின்றாள் . இப்பொழுதே எனது அவா பயனுடையதாயிற்று . இப்பொழுதே செயதக்க செய்தவனைப்போல என்னைப் பார்க்கின்றேன் “ என்று மொழிந்தான் . அங்ஙனம் வருகின்ற நங்கையை நோக்கி மந்தோதரியும் , சானகியென்று சிறிது மயங்கினாள் . அப்பொழுதும் , இராவணன் அவளைச் சானகியென்றே துணிவுற்றான் . மந்தோதரி , அம்மாதை நன்றாகப்பார்த்துத் தன் மருகி யென்றுணர்ந்து , “புலத்தியகுலத்தரசே ! இம்மங்கையை நீ நன்றாக அறிந்திலை, இவள் சானகியல்லள் . நம் புதல்வன் மேகநாதனது அன்புமிக்க காதலியாகிய நமது மருகி ; தன்னெழில் நலத்தாற் சானகியையொப்பாள் . கதிரவன் கானார்களன்றே இராசபத்தினிகள் . உவளகத்தில்வெயிருந்து(அந்தப்புரம்) எங்ஙனம் ஈண்டு வருகின்றாள்? நன்றாக ஆராய்ந்து நோக்கின் , துன்பத்தால் வாடியமனத்தினள்போலக் காணப்படுகின்றாள் .இந் நங்கை உடலை யணிந்து கொள்வதில் விருப்பமற்றவளாகத் தோன்றுகின்றாள். ஆதலானன்றே , நெற்றியிற் றிலகங் காணப்படவில்லை ; குழல் பின்னப்பட்டிலது ; முககமலம் வாட்டமுற்றிருக்கின்றது ; கண்கள் நீர்ப்பெருக்கான் மலர்ச்சி குன்றின .உடற்கொம்பு துன்பத்தால் வாட்டமுற்றுள்ளது ; நேர்ந்த இடையூறு யாதோ வறிகிலேன் . எக்காலத்தும் இவள் உவளகத்தினின்றும் வெளிப்போந்திலள் .இத்தகைய வேடத்துடன் இங்கெய்திய இவளைப் பார்த்தமையான் , போர் குறித்துச்சென்ற புதல்வனைப்பற்றி அன்புவயப்பட்ட என் நெஞ்சம் அமங்கலத்தை யையுறுகின்றது . ஆ ! என்செய்வல் ! இவ்வாட்டமிக்க பெண்மணி எத்தகைய செய்தியைத் தெரிவிப்பாளோ? என்று பகர்ந்தனள் .
இங்ஙனஞ் சொல்லியவுடனே சுலோசனை ஆண்டடைந்து துன்பத்தான் மூடப்பட்ட தன்னிலையை அரிதிற்றகைந்து , பல்லக்கிற்றாங்கி வந்த அக் கைத்துண்டினை , இராவணன்முன்னிலையில் வைத்து , மாமன் மாமி யிருவர்களையும் வணங்கிச் சிறிது தூரத்தினின்று அடித்தலநோக்கிய கண்களையுடையளாய்த் தழுதழுத்தகுரலுடன் , “அரசர் பெரும!பேரிலளாகிய நினது மருகி சுலோசனையென்னும் பெயரினையுடைய யான் இங்குப் போந்தேன் ; எக்காரணத்தை முன்னிட்டும் இது காறும் உவளகத்தினின்றும் வெளிச்செல்லும் நிலைமைய ளல்லேன் ; இப்பொழுதோ ஆற்றோணாத் துன்பத்தால் வருந்தி , நாணத்தைச் சேய்மைக்கணொழித்து , வணக்கமாகிய செல்வத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நற்குலத்துதித்த பெண்பாலரின் இயல்பை முற்றும் ஒழித்து , என்னிலையை மிகவும் அடக்கித் தன்வயத்தினள் போலவும் , அறிவிலாள் போலவும், நினது திருமுன் எய்தினேன் ; தெரிவித்துக்கொள்ளவேண்டிய தொன்றுளது . அளியால் நனைந்த மனத்தான் அருள்க. நினைவுகூர்தலாகிய வன்மையால் என்னை அநுக்கிரகிக்க . என் சொற்களைக் கேட்டல் வேண்டும் . அவாவை நிறைவேற்றவேண்டும் . போர்க்களத்தில் இராமலக்குமணர்களை வெற்றி கோடற்பொருட்டு நிகும்பிலையில் ஆபிசாரவேள்விசெய்தற்குப் புறப்பட்ட என் காதலன் வழியிடையே என் இல்லத்தை அடைந்தான் . என் உபதேசமொழிகள் எல்லாவற்றையும் வெறுத்தொதிக்கி நிகும்பிலையை அடைந்த இந்திரசித்து , சுமித்திரை புதல்வனாற் கொல்லப்பட்டான் .ஈதன்றே மூவுலகத்தினுஞ் சிறந்த வீரனாகிய நின் புதல்வனது கைத்துண்டு . யான், அவனது மரண நிகழ்ச்சி முழுதும் எழுதிய பத்திரிகை இதுவாகும் .இவ்வெல்லா நிகழ்ச்சிகளும் இக்கைத்துண்டினாலேயே தன்கையிற்றாங்கிய கூரியவான்முனையால் ,நிலத்தில் நன்றாக எழுதப்பட் டனவாகும் . யானோ என்தலைவனது தலையைக்கண்டு அப்பொழுதே அவனுடன் இறத்தலை விரும்புகின்றேன் . ஆதலின் , அருள் செய்க. என் தலைவனது தலையைக் கொணர்தற்பொருட்டு விரைந்து கட்டளையிடுங்கள்” என்று கூறித் தன் கைத்தலத்துள்ள பத்திரிக்கை யொன்றை அவன் முன்னிலையில் வைத்தாள் . இந்திரசித்துவின் மரண நிகழ்ச்சிகேட்ட அளவினானே மந்தோதரியின் இதயம் இரு கூறாகப் பிளக்கப்பட்டது .அப்பொழுதே அறிவை மயக்கங்கவர்ந்தது . “ஆ ! புதல்வ ! மேகநாத ! “ என்று கதறிப் பெருங்காற்றான அலைப்புண்ட வாழைபோல நிலத்தில் வீழ்ந்தாள் .
இராவணனுந் தானே அப்பத்திரத்தைப் படித்து உலகம் புகழுந் திண்மை மிக்க தன் புதல்வனது இறப்பு நிகழ்ச்சியை முதலில் நம்பாமல் பத்திரிக்கையில் வரைந்த பொருளையும் வெறுத்துத்தள்ளிச் சிறிது நினைவு கூர்ந்து , தன் மகனது நாமவிலச்சினையுடைய கொடிபோன்ற வாளால் அணிசெய்யப்பட்ட கைத்துண்டினையும் பார்த்து , அசைவறு நிலையன் போலவும் , ஓவியத்துற்றான்போலவும் , இடியாற் கெடுக்கப்பட்டவன் போலவும் அசைவற்றிருந்து , ‘ ஆ ! கேடு விளைக்கும் அவாவினையுடைய யான் கெடுகின்றேன் ‘ என்று பத்து முகங்களாலும் உரக்கக் கதறினான் . “ ஆ ! குழந்தாய் ! மேகநாதா ! யான் உயிருடையனாயிருக்கும் பொழுதே நீ நினைவுறும் நிலையைஎய்தினாய் ; பேரிலனாகிய எனது தீவினைப் பயன் வெறுக்கத்தக்கது ; நின்பெயர் கேட்டவளவிலே தேவாசுரர்களையுடைய எல்லா உலகங்களும் அச்சத்தால் நடுக்கமுறும் ; அத்தகைய நீ, கரடி குரங்கு இவைகளின் முன்னிலையில் மனிதரில் இழிந்த ஒருவனால் எங்ஙனம் கொல்லப்பட்டாய் ? ஆ ! அஞ்சத்தக்க திண்ணிய நினது கொடிய மரணத்தைக்கேட்டு என் மனம் மிகவுங் கலக்கமுறுகின்றது . பிறரால் ஆற்றோணா வலிமை மிக்க நீ போரில் அவ் விராசகுமாரர்களை விளையாட்டாகத் தோல்வியுறச் செய்து மகிழ்ச்சியுடையனாய் வந்து என்னை யின்புறுத்துவாய் ; அரசியலின் பத்தையும் நுகர்வாய் என்று உவகையுற்றிருந்த கெடு நினைவி னனாகிய எனது பேரவாவென்னும் பெருமரம் வேருடன் களையப்பட்டது “ என்று இங்ஙனம் நெடுநேரம் புலம்பினான் .
பின்னர்ச் சிறிது நேரஞ் சென்றதும் , சுலோசனை மீண்டும் தன்றலைவனது தலையைக் கொணர்தற்கு இரந்தாள் . அவள் சொற்களைக் கேட்டுப் புத்திரசோகத்தாற் கலக்குண்ட எளியனாகிய இராவணன் , சினத்தாற் கிளர்ந்தெழுந்து , “ஏடி ! ஒழுங்கிழந்தவளே ! போர்க்களத்தி னின்றும் அவன்றலையைக் கொணர்தலைப்பற்றி இரக்கின்ற நினது கடுஞ் சொற்களைக் கேட்டலால் எத்துணைத்துன்பம் விளைகின்றதோ, அத்துணைத் துன்பம் வீரகுல சூடாமணியாகிய என்புதல்வனிறந்தான் என்னும் இதனால் விளைந்திலது . அமயத்திற் குரியசெயலைச் சிறிதும் ஆராயாது இங்கெய்தி இங்ஙனம் கூறுதற்குரிய நெஞ்சுறுதியை எவ்வாறு கடைப்பிடித்தாய் ? அறிவிலாய் ! என் பக்கலினின்றும் அப்புறம் செல்க “ என்று அவளை அச்சுறுத்தினான் .
சுலோசனையும் , நெஞ்சுறுதியைக்கைப்பிடித்து , “அரசர் பெரும ! யான் கூறுகின்றதனைச் சிறிது நினைவுற்றுக் கேட்பாயக. சினத்திற்கும் , பிரிவிரக்கத்திற்கும் ஈது அமயமன்று . ஊழினாலூட்டப்படும் வினைப்பயன் இன்றியமையாது நுகரத்தக்கதே . இவ்வமயத்திற் சினத்தாற் செய்யத்தக்கது யாதுளது ? போரில் இராமலக்குமணர்களை வெல்லுதற்கு யாவன் வலியான்? இராமன் பொருட்டுச் சானகியை வேண்டுதலின்றியே சேர்ப்பிப்பாயாக . அறிவுமிக்க அமைச்சருள் ஒருவனையும் இராமன் பக்கல் விடுப்பாயாக . என்றலைவனது தலையைக் கொணர்விப்பாயாக . இப்பொழுது யான் அத்தலையை அவசியம் காண்டல் வேண்டும் . உடனிறத்தலையும் நிறைவேற்றல் வேண்டும் . நற்குடிக்கட்டோன்றிய அரச குலத்து நங்கையரது குலவொழுக்கமாகிய ஆசாரம் ஈதன்றே. அரசர்பெருமகனாகிய நீ , என் வேண்டுகோளை முறைமையில்லாதது போல் வெறுத்தொதுக்கிச் சினத்தாற் கண்சிவத்தல் என்னை? நற்செயல்களிற் பற்றில்லாத அரசர்பெருமானாகிய நீ , முதலிற் குற்றத்தை நன்றுகண்டிலை. மிக்க அறிவுபடைத்த அரசன் பிறன்மனைவியைத் தடுத்தற்கு எவ்வாறு தகுதியுளனாவன்? இராமலக்குமணர்களால் விடப்பட்ட ஊழித்தீயினை யொத்த பகழிகளின் முன்னிற்றற்குத் தேவதானவர்களுள்ளும் யாவன் ஆற்றலுடையான் ? சனத்தானத்தின் கேட்டையுணர்ந்தும் , வாலியின் இறப்பைக்கேட்டும் , அரசர்பெருமானின் நெஞ்சம் நடுக்கமுறாமை என்னை? ஆதலின், இராமச்சந்திரன்பொருட்டுச் சானகியைத் திருப்பிக்கொடுத்து விடுவாயாக . நலமற்ற இச்செயல் இனி அமைக “ என்று இவைமுதலிய பிற அறிவுபதேசங்களையுஞ் சொல்லிச் சுலோசனை ஒழிவெய்தினாள் .
புதல்வற்பிரிவால் வெதும்புகின்றவனும் , இயற்கையானே சினமிக்கவனுமாகிய இராவணன் , கற்பரசியாகிய அச் சுலோசனையின் மொழிகளைக்கேட்டுச் சினத்தீக் கிளர்ந்தெழ , ஒளிர்கின்ற விளக்கங்களை யொத்த கண்களினின்றும் நெருப்புப் பொரிகளை யிறைத்துப் பற்களால் உதடுகளைக்கடித்துத் தன் மருகியை எரிக்கின்றவன்போல நோக்கி , “ஆ ! மதியற்றவளே ! இலங்கேசுவரன் மாட்சி யின்னதென் றுணராதவளே ! பல்லாற்றானும் உபதேசித்தனை . நீயே எனக்குக் கட்டளையிடுபவளா கின்றாய் ; என்பக்கல் எய்தித் தடையின்றி இவ்வாறு புலம்புதற்குப் பேதையாகிய நீ எங்ஙனம் உரியை ? இப்பொழுதே எனது சந்திரகாசன் நினது நாவை அறுப்பான் . அறிவிலியாகிய நீ மிகவும் வெறுக்கத்தக்கவள் .உண்மையாகவே நீ தலைவற்பிரிவால்நேர்ந்த துன்பத்தால் வருந்தினை யாயின் இத்துணைக்காலம் உயிரைத்தாங்கியிருத்தல் என்னை? விரைவிற் செல்க ! இக்கணமே கிளர்கின்ற நெருப்பின்கட் சேர்வாயாக . வீரனாக நினைக்கத்தக்க எவன்றான், பகைவன்பக்கலெய்திப் போரிலிறந்தவனது தலையை வேண்டுதற்குத் துணிவான் ? மீண்டும் இங்ஙனம் புலம்புவாயேல் இக்கணத்தே யானே நின்னை இமயனில்லத்தின்கண் அடைவிப்பேன் .என் அருகில்லாது செல்க ! செல்க ! தீக்கண் வீழ்ந்து நின்றலைவன் செல்லுழிச் செல்க” என்று கூறினான் .
சுலோசனை , கண்ணீரானனைந்த தன் முகத்தைத் துடைத்து , மெல்லத் தழுதழுத்தகுரலுடன் “மரணமெய்திய என்றலைவனது முகத்தைக் காணாமல் , தீக்கட்புகுதற்கு யாங்ஙனந் துணிவேன் ? நினக்கு இராமன்பக்கலெய்தி என் றலைவனது தலையை வேண்டுதலில் விருப்பமின்றேல் எனக்கு விடைதருவாயாக . யானே அவன்சந்நிதியடைந்து என் நாதனது சிரத்தை வேண்டுவேன் “ என்று தெரிவித்தாள் .
இராவணன் , “ஏடி ! நாணமற்றவளே ! விலங்கினங்களின் துணை யைப் பெற்றிருக்கும் இராமன் மக்களுட் டாழ்ந்தவன் . மூவுலகத்திற்கும் அரசனாகவும் , இராக்கதசக்கிரவர்த்தியாகவும் உள்ள யான் , அவன் மனைவியைக் கவர்ந்தேன் . அஞ்சத்தக்க திண்ணியனாகிய நின்நாயகனை, அவன்தம்பி போரிற் கொன்றான் . அங்ஙனம் கொல்லப்பட்ட இந்திரசித்துவின் மனைவியும் என்மருகியும் , சானகியை ஒத்த அழகுவாய்ந்தவளும் , இளமையுடையாளும் ஆகிய நீ , நின் றலைவனை இழந்திருக்குங்கால் , நம் பகைவனும் , காதலின்பிரிவாற் றுன்புறுகின்ற வனும் , எழின்மிக்கானுமாகிய இராமனது பக்கலை யெய்துதலென்னும் இஃது எங்ஙனம் பொருத்தமுடையதாகும் ? “புதல்வனிறத்தலாலச்சமுற்ற இராவணன் பகைவர்களை உடன்படுத்தற்பொருட்டுத் தன் மருகியை ஏவினான் . ‘ என்றன்றே உலகம் பழித்துரைக்கும் . அப்பாதகனாகிய இராமன் முன் என் றங்கையை விகாரப்படுத்தியது போல நின்னையும் செய்வான் .ஆதலின் , அறிவிலியாகிய நீ அவன்பக்கலிற் சேருதல் தகுதியன்று . எவ்வாற்றானும் நின் சொல்லை ஏற்பேனல்லேன் . என்முன்னில்லாது விரைந்து செல்வாயாக” என்று உரத்த குரலுடன் அவளைப் பழித்துரைத்தான் .
செவியைவெதுப்புகின்ற அவனது கடுஞ் சொற்களைக் கேட்டுப் பிரிவிரக்கமுஞ் சினமும் மிக்க அக் கற்பிற்சிறந்த பெண்மணி , “பொருத்தமின்றி இங்ஙனம் எதற்காகப்புலம்புகின்றாய் ? நெறிபிறழ்ந்த ஒருவன் உலகமனைத்தையுந் தன்னைப் போற் காண்கின்றான் . பிறர்மனை நயத்தலிற் பற்றுடையனாகிய நீ வாய்மையிற் சிறந்த இராமனை ஏன் இவ்வாறு பழித்துரைக்கின்றாய் ?இப்பொழுதே நின் நாவானது நிலத்தில் அடியோடு வீழும் . எல்லாவுலகங்களுக்கும் புகலிடமாயுள்ள பெரியோ னாகிய இராகவனது அணிமைக்கண் தலைவனது தலையை வேண்டுதற்கு அடைகின்ற என்னை உலகம் நிச்சயமாகப் பெருமைப்படுத்தும் .பாவியாகிய நினது நெஞ்சத்தின்கண்ணே அத்தகைய கொடுஞ்சூழ்ச்சி தோன்றியது . விரைந்து தீவினையின் பயனை நுகர்வாய் . எஞ்ஞான்றும் தீத் தொழிலையே புரிகின்ற நீ கொடிய நரகத்தில் வீழ்தல் உறுதியே . நினக்கு அத்தகைய ஊழ் உளது . வீரியச்செருக்கினாலேயே தற்புகழ்ச்சி செய்யற்க. காட்டுத்தீயினையொத்ததும் , இராமபிரானது வில்லினின்றும் வெளிப்படு வதுமாகிய , பகழியாகிய நெருப்பு விரைந்து போந்து நினது தலைக்காட்டை நீறாக்கும் . குலத்துக்குக் கேடு விளைக்குஞ் சிறுமையாளனாகிய நீ மிகவும் வெறுக்கத்தக்கவன்” என்று சொல்லிவிட்டு இராமனையே புகலிடமாகக் கருதி எல்லாத்தோழிமார்களையும் ஒழித்து இராவணனது சபா மண்டபத்தி னின்றும் வெளிப்பட்டாள் . இராமன் வானரவீரர்கள் சூழ, வீற்றிருக்கும் அகன்ற ஆடையான் அமைந்த இல்லத்தை நோக்கிச் சென்றாள் . இவ்வமயத்தில் இராமபிரான் வன்மையாளருட்சிறந்த மாயாவியான இந்திரசித்துவைக் கொன்று , புண்ணீர்தோய்ந்த உடலுடன் வந்த இலக்குமணனைத் தன் மடித்தலத்திலிருத்தி இறுகுறத்தழீஇ அன்புடன் உச்சிமோந்து , “குழந்தாய் ! இலக்குமணா ! செயற்கரிய செய்கின்ற நீ நல்லன செய்தனை . கெடுமதியாளனாகிய , அவ்விராவணனது வலக்கையாகிய இந்திரசித்துவின் இறப்பைக்கேட்டு இராவணனே இறந்தானென்று எண்ணுகின்றேன் .இன்றுதான் பகைமையில்லாதவனா யினேன் . இப்பொழுது இராவணன் , தானே போர்குறித்து வெளிப்படுவான் . அக்கொடியவனை விரைவிலேயே அழித்துவிடுவேன் . வீரர்களுக்குரிய கடமையையும் நிறைவேற்றுவேன் . தோன்றால் ! வீரருட் சிறந்த இந்திரசித்துவின் அன்பின்றொகுதியை நீ எங்ஙனம் ஆற்றினாய் ! மிகக்கடிய அம்பினாற் றுளைக்கப்பட்டு ஒழுகும் புதிய செந்நீராற் பூசப்பட்ட நினது இவ்வுடலை நோக்கும் பொழுது என் நெஞ்சம் வெதும்புகின்றது . இந்திரசித்து பெரிய வீரனன்றே ! நின்னையன்றி இவனைக் கோறற்கு ஒருவனும் வலியுடையானல்லன் . அச்சிறுமையாளன் தொலைந்தான் “ என்று சொல்லிச் சுசேனனை அழைத்து , “சுசேனா ! உடன்பிறந்தாரிடத்து அன்புமிக்க இலக்குமணனுடம்பிற்றைத்த அம்புகளைப் போக்கி மிகவும் சுகமுற்றிருக்குமாறு உரியமருந்துகளாற் சிகிற்சை செய்வாயாக .” என்று கட்டளையிட்டான் .
அக் காழகவில்லத்தின் ( ஆடையானமைந்த வீடு ) வாயில்காத்தற்குக் கட்டளையிடப்பட்ட அநுமானும் , விபீடணனும் தம்முட் பின்வறுமாறு உரையாடினார்கள் :-
“ ஓ ! விபீடணா ! போரில் இலக்குமணனாற் றன்புதல்வன் இறந்த செய்தியைக்கேட்டு இராவணன் அஞ்சிச் சானகியை விடுவானென்று எண்ணுகின்றேன் .”
“ ஓ ! அறிஞருட்சிறந்தோய் ! ஒருபொழுதும் அக் கெடுமதியாளன் இங்ஙனஞ் செய்யான் . தன்னுயிரையே விடுவான் “
“ஓ ! விபீடண ! சிறிதுதூரத்தே பார்க்க . புதல்வன் இறந்தமையால் அஞ்சிய இராவணனால் விடப்பட்டுச் சானகி தானே ஈண்டுப் போதருகின்றாள்”
“ ஆம் . அநுமானே ! ஆச்சரியம் ! ஈது எங்ஙனம் நிகழ்ந்தது ? இவளைப்பற்றி எனக்கு ஐயம் நிகழுகின்றது . நிற்க . பார்ப்போமாக .”
இங்ஙனம் உரையாடிக்கொண்டிருந்த அவ்விருவர்களும் அணிமைக் கண் எய்திய அவளது வருந்தத்தக்க வேடத்தானும் , மதிக்கத்தக்க உருவச்சிறப்பானும் , வஞ்சிக்கப்பட்டவர்களாய்ச் சிறிது அசைவற்றிருந் தார்கள் . அப்பெண்மணியுந் தடையின்றி உள்ளே புகுந்தாள் . இராமபிரானையும் பார்த்தாள் . இதனிடையில் தம் நிலையெய்திய அநுமானும் விபீடணனும் அம்மங்கையைக் காணாமையான் வியப்புடன் உட்புகுந்தனர் .
அங்ஙனம் வந்த பெண்மணி இராமன் றிருவடிகளில் வணங்கித் தலையிற் கூப்பிய கையினையுடையாளாய் , “அடைக்கலம்புகுந்தார்க்கு அருள்செய்யும் வள்ளல் ! இராமபத்திர ! யான் , நிகும்பிலையில் இலக்குமண னார் கொல்லப்பட்ட இந்திரசித்துவின் மனைவி . பேறிலளாகிய என்னைச் “சுலோசனை” என்னும் பெயரால் அழைப்பார்கள் . என் தலைவனது அறுக்கப்பட்ட கைத்துண்டினால் , ‘தலை இராமபிரான் றிருவடித் தாமரை களை யடைந்து இன்பம் நுகர்கின்றது . ‘ என்று எழுதப்பட்டது .பகவானே ! அருள்க . என் றலைவன் தலயைக் கொடுப்பாயாக . அதனைக்கண்ட பின்னரே என் பிராணபதியைத் தீப்புகுந்து பின்றொடர்வேன் . “ என்று வேண்டினாள் .
அதனைக் கேட்டுச் சில வானரங்கள் , “அறுபட்ட தலையின் நிகழ்ச்சிகளை அறுபட்டகை யெழுதியது “ என்னுமிது மிக்க வியப்பே ! என்று சொல்லிச் சிரித்தன . வேறு சில வானரங்கள் , “இராவணனால் விடப்பட்டுச் சானகியையொப்ப உருக்கொண்டுபோந்த ஓர் அரக்கியாகிய இவள் நம்மை வஞ்சித்தற்கு ஈண்டுற்றாள் . இப்பொழுதே இவளைக் கொல்வோம் “ என்று சினந்து கூறின .
“போர்க்களத்தே இறந்த வீரர்களின் தலை எங்ஙனம் இங்குக் கொணரப்படும் ? நீ இந்திரசித்துவின் மனைவியாயின் நின் தலைவனது அறுபட்ட தலையைக் காண்டற்குரிய நிகும்பிலையை அடைவாயாக “ என்று கூறினன் அநுமன் .
சுலோசனையை முதற்கட்பார்த்தவளவினானே இலக்குமணன் மிகவும் கலக்கமுற்று மனத்தாற் பலபல நினைந்து , நீர் நிறைந்த கண்களையுடையனாய்த் தன்னையுஞ் சிறிது மறந்து, இன்னதென்று கூறொணாத மன நோயால் வருந்தி , நெடுநேரம் வாய்வாளாதிருந்தான் .
பின்னர் , இராகவன் , வானரங்களினது ஆரவாரங்களை நிறுத்திப் புன்னகை செய்து , “அநுமானே ! ஏன் இங்ஙனங் கூறுகின்றாய் ? உலகத்தில், இயங்கியற்பொருள்களின் நினைக்கப்படாதெய்துவனவாகிய பற்பல நிகழ்ச்சிகள் தோன்றுகின்றன . இக்கற்பரசி மேகநாதன் மனைவியென்ப துண்மையாயின் , எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து துணிவோமாக . “அறுபட்டதலையின் செய்தியை அறுபட்ட கை யெழுதியது “என்னும் இஃது இப்பெண்மணியாற் கூறப்பட்டது . அதன் உண்மையை வெளிப்படுத்து வோமாக “ என்று கூறிச் சுலோசனையை நோக்கிக் “கற்புடைமாதராய் ! இவர்கள் நின் சொல்லை நம்புகின்றார்களில்லை . நின் தலைவனது அறுபட்ட தலை கொணரப்படுமாயின் அது நின் வினாக்களுக்கு விடைகூறுங்கொலோ ? என்று வினவினான் .
எங்ஙனமேனுந் தலையைக் காண்டலிற் பேரவாவினையுடைய அச்சுலோசனை , “யான் , உண்மையாகவே இந்திரசித்துவின் மனைவியாயின் அறுபட்டதாகிய என் நாதன் தலையும் என்னாற் கேட்கப்படும் வினாக்களுக்கு இன்றியமையாது விடைகூறும் “ என்று சொன்னாள் . பின்னர் , இராமபிரான் கட்டளையிட்டவாறு மாருதி விரைந்து சென்று , அறுபட்ட இந்திரசித்துவின் றலையை ஆண்டுக்கொணர்ந்து அவை நடுவண் மிகவுயர்ந்த ஒரு பிரப்பிருக்கையில் வைத்தான் . நாயகனது தலையைக் கண்ட அப்பொழுதே சுலோசனை மிக அவலமுற்றுப் புலம்பினாள் . பின்னர்த் தன்னிலையைமிகமுயன்றடக்கி , எழுந்து, வலஞ்சுற்றிவந்து , தலைப்பாகினையும் , ஒளிர்கின்ற குழைகளையுமுடைய அத் தலையைக் கைகூப்பிய சிரத்தான்வணங்கி , “நாத ! கட்டளையின் வண்ணம் ஈண்டெய்திய என்சொல்லில் யாரும் நம்பிக்கைவைத்திலர் . நினது கைத்துண்டினால் எழுதியெற்கறிவித்த நிகழ்ச்சியனைத்தும் அறிந்தும் , ‘அறுபட்ட கை யெழுதியது’ என்று என்னை இழித்துரைக்கின் றார்கள் . ஆதலின் , இவர்கள் நம்புதற்பொருட்டு நின்னையே புகலிடமாகவுள்ள என்னை மலர்ந்த முகத்துடன் சிறிது நோக்கி , என்னுடன் சிறிது உரையாடல் வேண்டும் . அருள்க “ என்று சொல்லினாள் . அசைவற்றிருந்த அத்தலையைப்பார்த்து , “இறந்தவனது தலை இவளோடு எங்ஙனம் பேசும் ? நிலை பிறழ்ந்த இவள் நம்மெல்லோரையும் ஏமாற்றுதற்பொருட்டுப் பற்பல சூழ்ச்சிகளைச் செய்கின்றாள் “ என்று எல்லாவானரவீரர்களும் பேசினார்கள் . இருமுறை மும்முறை வேண்டப்பட்டும் , அவ் விந்திரசித்துவின்றலை மெளனத்தைவிட்டிலது. அதுகண்டு துன்பமிக்க அப்பெண்மணி , “தலைவ இவர்கள்முன்னிலையில் எதற்காக என்னை ஈர்த்துவந்து அவமானப்படுத்துகின்றாய் .? இலக்குமணனோடு போர் நிகழுங்கால் நினக்குத் துணைசெய்தற் பொருட்டு என் தந்தையை யான் அழைத்துவந்திலனென்றோ என்னைச் சினக்கின்றாய்?” என்று கூறினாள் . அவள் மொழிந்த அச் சொல்லைக் கேட்டுச் சினத்தாற் கவரப்பட்டதுபோலவும் , நாணத்தாற் பற்றப்பட்டது போலவும் அத்தலை பரபரப்புடன் ஒருமுறை நகைத்து ,”ஏடி ! என்பிரியே ! சுலோசனே ! என்னை நன்றாகப்பழிக்கின்றாய். இப்பொழுது இவ்வெல் லோரும் எந்தன்புரிமைக் காதலியாக நின்னையே நம்புகின்றார்கள் . என்று மேகமுழக்கம் போன்ற பேரொலியாற் கூறி யொழிவுற்றது .
எல்லோரும் அதனைக் கேட்டு வியப்புமிக்கமனத்தினராய்ச் சுலோசனையின் கற்பு நிலையைப் பாராட்டினார்கள் . அநுமான் , சுலோசனையை நிலத்தில் வீழ்ந்து வணங்கி “யான் செய்த எல்லாப் பிழைகளையும் பொறுத்தருள்க .! “ என்று வேண்டினான் .பின்னர்ச் சுலோசனை இராமலக்குமணர்களை அன்புடன் வணங்கி வாயுபுத்திரனைத் துணையாகப்பெற்றுத் தன்காரியத்தை நிறைவேற்றுதற்குப் புறப்பட்டாள் .
அநுமான் , முகூர்த்தப்பொழுது கடந்தபின்னர் “ஆ ! கற்பரசியாகிய சுலோசனை , தன்காதலன் சென்றுழிச் சென்றாள் “ என்று தழுதழுத்த குரலுடன் மொழிந்துகொண்டு , மிக விரைந்து அவ்விடத்துப் போந்தான் . சாலவு மிரங்கத்தக்க அச் சுலோசனையின் நிகழ்ச்சியால் எல்லாருஞ் சிறிது நேரந் துன்பக்கடலுண் மூழ்கினார்கள் . அறிவுடையாரிற் சிறந்த வாயுகுமாரன் இராமன் பக்கலெய்திப் “போர் நிகழுங்கால் நினக்குத் துணைசெய்தற்பொருட்டு என் தந்தையை யான் அழைத்துவந்திலேன் . “ என்று அக்கற்பரசி சொல்லிய அதன் உண்மையை என்மனம் அறியவிரும்புகின்றது . ஐய ! தெரிவித்தல் வேண்டும் . எங்கள் வேட்கையை அகற்றல் வேண்டும் .பகவானே ! அருள்செய்க . “ என்று வேண்டினான் .
இராகவனும் , “மிக்க மறைபொருளாகிய நிகழ்ச்சியையன்றே கேட்கின்றாய் . அதனை வெளிப்படுத்தற்கு என் மனம் விரும்பவில்லை . என்னையெனின் , அச்சொல் யாவனாயினும் ஒருவனது உள்ளத்தை மிகவும் வருத்துமாதலின் “ என்று கூறிப் புன்னகை செய்தான் .
அது கேட்ட சுமித்திரைபுதல்வன் நெடுநேரம் மறைந்து கிடந்த பிரிவி ரக்கமாகிய தீயால் வெதும்பி “ஐய ! அவ்விளம் பெண் எப்பொழுது எங்கண்ணுக்குப் புலனாயினாளோ , அது முதலே எனக்குப் பெரிய கவற்சியுண்டாயது . நெஞ்சம் நிலையின்றிச் சுழல்கின்றது . அவள் என்பாற் பழக்கமுள்ளவள் போற் காணப்படுகின்றாள் . இந் நிகழ்ச்சிக்குக் காரணம் இன்னதென்றுணர்ந்திலேன் . ஆதலின் , அவள் வரலாற்றை அவசியம் தெரிவித்தல் வேண்டும் “ என்று புகன்றான் .
இராகவனுஞ் சிறிது நினைவு கூர்ந்து , இலக்குமணனது மார்பில் , தன்கைத்தலத்தாற் றைவந்தான் . அப்பொழுதே இலக்குமணன் “ ஆ ! கெட்டேன் ! ஆ ! குழந்தாய் ! சுலோசனே ! தீவினையாளனாகிய யானே யெனது மருகனைக் கொன்றேன் . கொடியவனாகிய யானே நின்மரணத்திற்கும் காரணமாயுனேன் .” என்று வாய் திறந்து அழுதற்குத் தொடங்கினான் . மீண்டும் , இராமபிரான் இலக்குமணனைத் தேற்றுகின்றவ வன் போலத் தன்கைத்தலத்தால் அவனைத்தடவினான் . தன் இயற்கை நிலையையெய்திய இலக்குமணன் , எல்லாத் துன்பங்களையும் மறந்து , விகாரமற்றவனாய் வாய்வாளாதிருந்தான் . அந் நிகழ்ச்சியைக் கண்டு வியப்புற்றவர்களாய் எல்லோரும் , “ஈதென்னை !” என்று பரபரப்புடன் இராகவனைக்கேட்டனர் . அவனும் , “சுலோசனையோ, நாககுலத்துக்குத் தலைமணியான ஆதிசேடனது புதல்வியாவாள் . திக்குவிசய யாத்திரை நிமித்தம் நாகருலகத்தையெய்திய இந்திரசித்துவிக்குக் கொடுக்கப்பட்டாள். இலக்குமணனை இந் நிலவுலகத்தில் அவதரித்த ஆதிசேடனென்று உணர்மின்கள் . ஆதலின் அவ் விலக்குவனுக்கு உள்ளேயுள்ள தொடர்பால் அத்தகைய மனக்கலக்கம் உண்டாயிர்று . கற்புடையாருட் சிறந்தவளென்றே சுலோசனை . ஆ ! அச் சுலோசனையுனது கற்பின் மாட்சியைக் காண்மின்கள் ! “ என்று கூறினான் .
வெண்பா
கற்பிற் சிறந்த கனங்குழையார் தம்முள்ளே
சொற்புகழின் மிக்காள் சுலோசனையே —- பொற்பிற்
றிகழுடலைத் தீப்பெய்து சென்றனளா லன்பன்
புகுமிடத்தைச் சார்ந்தின் புற .
சுபம் ! சுபம் !
Thank you for sending the recent publications.Please keep it up.It is a great service to the Tamil savant by his grand kids.anpudanK.Nachimuthu Prof.Krishnaswamy Nachimuthu Home :Vagai,11/80 Kalidas Nagar,VadavalliCoimbatore641041,TamilnaduWork :École française d’Extrême-OrientCentre de Pondichéry16 & 19, Dumas StreetPuducherry – 605001tel: 91-413-2334539/ 2225689/ 2332504Formerly Professor Department of Tamil,Coordinator,Department of Tamil and LinguisticsCentral University of Tamilnadu,Central University of Tamilnadu P.O.Thiruvarur-610 005(Tamil Nadu) Professor of Tamil & Chairperson, Centre of Indian Languages, School of Language, Literature and Culture Studies Jawaharlal Nehru University, New Delhi-110 067 Professor and Head ,Dept.of Tamil, Dean,Oriental Faculty University of Kerala, Thiruvananthapuram, Kerala Phone:0422-2427249,Mobile 09486117259
அன்புடையீர் ! வணக்கம் .
தாங்கள் இத்திங்கள் ஐந்தாம் நாளன்று அனுப்பிய மின்னஞ்சல் கண்டு களிப்புற்றோம் .
பண்டிதமணி ஐயா அவர்களின் படைப்புகள் எல்லாவற்றையும் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யவேண்டுமென்பது எங்களின் அவா.
தங்களைப் போன்ற தமிழறிஞர்கள் ஊக்குவிப்பதால் எங்களின் இம் முய ற்சி இனிதே
நிறைவேறுமென நம்புகின்றோம் .