திருச்சதகம் பகுதி_4

திருச்சதகம் 

 6.   அநுபோக சுத்தி

              அநுபோக  சுத்தி  என்பது , சிவாநுபவ  நிமித்தம்  உயிர்  தன்னைத்  தூயதாக்கிக்  கொள்ளுதல்  என்னும்  பொருள்  உடையதாகும்.  அநுபவம்  என்பது அழுந்தி  அறிதல்.  சிவாநுபவம், சிவபிரானை  அழுந்தி  அறிதல்  ஆகும் . உலகியலில்  மக்கள்  அநுபவம்   பலதிறப்படும் . கண்டு  கேட்டு  உண்டு  உயிர்த்து  உற்றறியும்  ஐம்புலன்  நுகர்ச்சிகளும்  அநுபவங்களே. அவ்  அநுபவங்கள் எல்லாம்  சிறிது பொழுது நின்று  அழியும் இயல்பினவாம் . மனம் ,  பொறிவழிச்சென்று நுகரும்  அநுபவங்கள் எல்லாம்  சடப் பொருள்களைப்  பற்றின ஆதலின் , அழியும் இயல்பு உடையனவாம் . புலன் நுகர்ச்சிக்கு மேற்பட்ட  அநுபவங்களை  உயிர் , தன் இயல்பை  அழுந்தி அறிதல் , அருளை அழுந்தி அறிதல் , சிவத்தை அழுந்தி அறிதல்  என முத்திறப் படுத்து க்  கூறுவர் . “தம்மை உணர்ந்து  தமையுடைய  தன் உணர்வார் “ என்றபடி, உயிர்கள் தம் இயல்பை முதலில் உணர்ந்து,  பின் தம்மை உடைமையாக  உடைய இறைவன்  அருளையும்  அவ் அருளோடு  வேறறக் கலந்து நிற்கும் இறைவனையும் முறையே உணர்தல் வேண்டும் . பட்டினத்து அடிகள் , உயிரின் இயல்பை அறிதற்கு முற்பட்டு , “மேவிய புன் மயிர்த்தொகையோ”என்னும் , அகவற்பாட்டில் , “இன்னதுயான் என்று அறியேன் என்னை , ஏதினும் தேடினேன் யாதினும் காணேன்”  என்று கூறிப் பின்னர் , “ஞான நாட்டம்  பெற்றபின் யானும் நின் பெருந்தன்மையுங் கண்டேன் , காண்டலும் என்னையும் கண்டேன்”  என்றனர் .  இந்நிலை உயிர் அநுபவம்  ஆகும் .

                  இதன் பின்  சார்ந்ததன் வண்ணம் ஆம் தன்மை உடைய உயிர்க்குச் சிவச்சார்பு இன்றியமையாதது எனக் கண்டு , அப் பெருமான் பக்கலில் உயிரை ஈர்த்துச் சிவக்காட்சிக்கு ஆளாகும் சிவசத்தியாகிய அருள் நிலையை அறிந்து வழிபடல் இன்றியமையாததாகும் . அருட் பதிக்கு உயிர் இலக்கு ஆனால் அன்றிச் சிவக்காட்சி நேர்படல் அரிதாகும் . மூல மல ஆற்றலைக் கெடுத்து  சிவாநுபவத்திற்கு உரிய தகுதியை அளிப்பது அருளநுபவமாகும். அதன்மேல் , பேரின்பப் பிழம்பாக உள்ள சிவம் இன்ன இயல்பிற்று என்று மெய்யுணர்வினால் உணர்ந்து , ஞனாசிரியன் உபதேசவழி  ஒழுகி , அச்சிவபரம்பொருளைத் தான் என, அவன் என வேற்றுமை இன்றி ஒட்டி நின்று பேரின்பத்தில் தலைப்படல் சிவாநுபவம் ஆகும் . உயிர் மலப்பிணிப்பு ஒழிந்து , தூய நிலை அடைந்து , சிவன் திருவடி நீழல் எய்தி இன்பம் நுகர்தலே முடிந்த பயன் ஆகும் என்பர் . “உயிர்தானும்  சிவாநுபவம் ஒன்றினுக்கே உரித்து “ என்பது சிவஞானசித்தி இத்துணைச் சிறந்த சிவாநுபவத்திற்குத் தவ முதலிய  சாதனங்கள் சிறந்த ஏதுக்கள் ஆகும் . அத் தவம்  உடலோடு கூடிய வழிச் செயற்பாலதாகும் . ஆயினும் , உடலோடு கூடிய நிலையிலே, உடல் சடப்பொருள் , உயிர் சித்துப்பொருள் என்னும் வேற்றுமை அறிந்து , உடலைக் கருவியாகக் கொண்டு  செயற்பாலதாகிய தவத்தை முடித்துக்கொள்ளல்  வேண்டுமேயன்றி , அவ்வுடல் ஓம்புதலிலே  நாட்டம் செலுத்தல்  அறிவின் பயன் ஆகாது என்பது பெரியோர் கண்டது. அந்நிலையில் , அடிகள் , அழிவுடையதும்  அருவருக்கத்தக்கதும்  ஆகிய ஊனுடல்  உளதாங்காறும்  அதன்கட்  பற்று வைத்து, அதனை ஓம்புதற்கு  வேண்டுவன செய்தலிலே நோக்கம் செல்லும்  என்னும் உண்மை உணர்ந்து , அவ்வுடற்பற்று  ஒழிப்பதற்கு உடலையே வேண்டாமல் வெறுத்து  உரைத்தலை  இப் பதிகத்தில்  பல திருப்பாட்டுக்களினும் காணலாம் . தூய  சிவானுபவத்திற்கு  உடற்கற்றுத் தடை  என்பது அடிகள் கருத்தாகலின் , அத்தடை நீக்கமே ஈண்டு சுத்தி எனப்படும்   என்க  . ஊனுடலின் அருவருப்பை நினைந்து , அதனை விடுதலில் உள்ள விருப்பமும், இடையறாது ஆண்டவனைத் தியானித்தல் முதலியன செய்தலுமே சிவானுபவ நிமித்தம் செய்யப்படும் தூய்மையாம் என்பது கருதத்தக்கது . இதன் முன்னைப் பதிகத்தில் , ஆண்டவன் செய்த அளப்பரிய  பேருதவிக்குக் கைமாறாக , அடிகள் தம்  உடல்  பொருள்  ஆவிகளைக் கொடுக்க எண்ணியும் ,அவை அவன் உடைமை எனக் கண்டு , அவற்றின்  வேறாகத் தமக்கு என ஒன்றும் இல்லாமை பற்றி  வருந்திக் கூறிய செய்தியைக் கண்டாம் . இப்பதிகத்தில் அங்ஙனம் கைம்மாறு கொடுக்க இயலாவிட்டாலும் , வலிந்து ஆட்கொண்ட அப் பெருமானைச் சார்ந்து  அநுபவிக்கவும் இவ்வூன் உடல் தடைப்படுத்துகின்றதே என்று இரங்கி , இவ்வுடற் பற்றால் உண்டாம்  அழுக்கை  ஒழித்துத் தம் உயிரைத் தூய்மைப் படுத்துக் கொள்ளுமுறையை அருளிச்செய்வார்  ஆயினர் . இதனால் பதிக இயைபு  புலனாதல்  அறிக .

அறுசீர்க்  கழிநெடிலடி  ஆசிரிய விருத்தம்

பாடல் 51.

ஈச   னேயென் எம்மானே

யெந்தை  பெருமான்  என்பிறவி

நாச  னேநான் யாதுமொன்

றல்லாப்  பொல்லா  நாயான

நீச   னேனை  யாண்டாய்க்கு

நினைக்க  மாட்டேன்   கண்டாயே

தேச    னேயம்  பலவனே

செய்வ  தொன்றும்   அறியேனே.

கருத்துரை :-  இதன் முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் இறைவன் தம்மை அறிவிலாப் பருவத்தே புகுந்து ஆட்கொண்ட பேரருள் திறத்தைப் பாராட்டிய அடிகள், இப்பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்கண், மிக இழிந்தவனாகிய  என்னை ஆட்கொண்டு அநுபவிக்கத்தந்த  நின்னை இடையறாது நினைந்து , என் உயிரைத் தூயதாக்கிக் கொள்ளாமல் இருக்கின்றேனே என்று வருந்துகின்றார் .

பதவுரை :-  ஈசனே  = யாவர்க்கும் எவைக்கும் இறைவனே ,

என் எம்மானே  = எனக்குச் சிறப்புமுறையில் உள்ள எங்கள்  தலைவனே,

எந்தை  பெருமான்  = என் தந்தையாகிய  பெரியோனே,

என் பிறவி நாசனே  =  எனக்குப்  பிறப்பை  ஒழிப்பவனே ,

தேசனே  =  ஒளி வடிவினனே ,

அம்பலவனே  = ஞான வெளியை உடையவனே,

யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான  =  உலகத்துப்பொருள் யாதேனும்  ஒன்றிற்படாத பொல்லாமை உடைய நாய் போன்ற ,

நீசனேனை ஆண்டாய்க்கு  =   இழிந்தவனாகிய என்னை ஆட்கொண்டருளிய நின்னை,

நான் நினைக்க மாட்டேன்   = யான் நினையேன் ,

செய்வது ஒன்றும் அறியேன்  =  இனிச் செய்யத்தக்கது இன்னது என்பதையும் அறிந்திலேன்  என்பது .

விளக்கவுரை :-  இறைவன் , மக்கள் முதலிய யாவர்க்கும் , நிலம் மலை கடல் முதலிய  எவைக்கும் தலவன் என்பதை , நூல் அறிவானும் அநுபவ உணர்வானும் அடிகள் அறிந்தவர் ஆதலின் , அப் பெருமானது  பொதுவான அகண்ட ஐசுவரியத் தன்மையைக் குறித்து, “ஈசனே” எனவும் , தமக்குச் சிறப்பு முறையில் தலைவன் ஆவான் என்னும் உரிமையை நினைந்து , “ஏன் எம்மானே” எனவும் கூறினர்.  பலர்க்கும் தலைவனாக உள்ளான் ஒருவனை , அப் பலருள்ளும் ஒருவன் பணிசெய்யும் முறையில் மிக நெருங்கிய  தொடர்பு உடையனாக  இருப்பின் , அத் தலைவனது பொதுமையைப் பாராட்டும் அளவில் நில்லான் என்பதும் , சிறப்பு முறையில் என் தலைவன் என்று பாராட்டி மகிழ்வன் என்பதும் உலகியலிற் காணப்படுவன . அக் குறிப்பே ஈண்டும் கருதத்தக்கது . அடிகள் பிறிதோரிடத்து , “எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா” என்று இவ்வுண்மையைப் புலப்படக்  கூறியிருத்தலும் அறிக. உலகில் ஒருவர்க்குத் தலைவன் ஆவானும் ,தந்தையாவானும் வேறு வேறு ஆவர். தலைவன் ஆட்கொண்டு பணிகொள்ளுபவன்  தந்தை , கல்வி ,முதலியன நல்கிச் சான்றோன் ஆக்குவோன் , ஒருவன் தன் தந்தையை நோக்க,, அவன் செல்வத்திற்கு உரிய உரிமை தனக்கு உண்டு எனக் கருதுதலும் , தலைவன் நோக்க, அடிமைப்பணி செய்து அடங்கி வாழ நினைத்தலும் இயல்பே . ஈண்டுத்  தம்மை ஆட்கொண்டு  பேரின்பப் பெருஞ் செல்வத்தை  அளிக்கும் தலைவனாகவும்  தந்தையாகவும்  உள்ளான் சிவபெருமானே என்பதை நன்று தெளிந்த அடிகள், “என் எம்மானே எந்தை பெருமான் “ என்று கூறினர்.  தந்தையின் பெருமைக் குணங்களில்  ஈடுபட்டு , “எந்தை “ என்ற அளவில் ஒழியாது , “எந்தை பெருமான்” என்றனர் .

          பெருமை, செயற்கரிய செய்தலால் உண்டாவது . பெருமைமிக்க  தந்தையினிடத்து  நின்றும் தாம் பெறும் பேறுகளில் முதலாவது பிறப்பறுதல் என்பது குறித்து . “ஏன் பிரவி நாசனே”ஏன்றார் . ஞானச் செல்வர்கள் விரும்புவது பிறப்பு இறப்புக்களின் ஒழிவாகும் . அங்ஙனமாகவும் , இவ்விரண்டன் ஒழிவையும் குறியாது, பிறப்பை மாத்திரம் குறித்ததில்  ஓர் உண்மை உண்டு . இறப்பு இயற்கையாகும் . எடுத்த உடல் எப்படியும் ஒழிந்தே போகும் .  ஆதலின் , உடல் ஒழிவில் அடிகளுக்குச் சிறிதும் கவலையின்று .  வினையளவு நின்று ஒழியும் இயல்பினதாகிய  உடலை விட்டு , அழிவில்  இன்பநுகர்ச்சியில் ஈடுபாடு உடைய அடிகளுக்கு , மீண்டும் பிறவாமையே வேண்டத்தக்கது. ஆதலின் , அவ் வேண்டுகோளை  நிறைவேற்றும் தலைவனைக் குறித்து , “என் பிறவி நாசனே” என்றார் . இறப்பிலும் அச்சம் இருக்குமாயின் , மரண நாசத்தையும்  குறிப்பிட்டிருப்பார் . நோயுடை ஒருவனுக்கு , நல் உணவு அளித்து  ஆதரிக்கக் கருதுவோன் , முதலில் அந் நோய்க்கு  மருந்து உதவுதல் இன்றியமையாதது  ஆதல் போல , பேரின்பப் பெருஞ் செல்வத்தை அளிக்கக் கருதும்  ஆண்டவன் , அதற்குத்  தடையாக உள்ள  பிறப்பை ஒழித்தன்றோ செய்தல் வேண்டும் .  இந் நயம் தோன்றவே , எனக்கு இன்பம் தருவோனே  என்னாது ,  “ என் பிறவி நாசனே “ என்றார் என்பது  இன்ப நுகர்ச்சிக்குத் தடையை  விலக்கியவாறு  இது.

             இனி, தமக்கு  ஞானோபதேசம்  செய்த ஆசிரிய வடிவத்தை  நினைந்து , “தேசனே” எனவும் , அங்ஙனம் எழுந்தருளியது  வெளியான இடத்தில் என்பார், “அம்பலவனே”  எனவும் கூறி யருளினர். அம்பலம் தில்லைக்கண் உள்ளதாயினும் , திருப்பெருந்துறையில்  அன்பர் பலர் சூழ ஆண்டவன் எழுந்தருளி ஆட்கொண்டான்   ஆதலின், அதுவும் உட்கோள் ஆகும் என்க . “தான் என்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவர் “  என்பதும் நோக்குக. ஞானசிரிய வடிவம் கண்கொள்ளாக் காட்சி உடைய தாகலின் , ஞானவொளி நிலையமாகவுள்ள அவ்வுருவத்தைக் குறித்து , “தேசனே”என்றார் .  தேசு – ஒளி அம்பலம் என்பது பொது இடம் . புறவெளி , பரவெளி , ஞானாகாசம்  என்னும் பொருள்களை உணர்த்துவதாகும் .  இதுகாறும்  கூறிய விளிகள் ஆறு . இவ் ஆறு விளிகளாளும்  முறையே இறைவன் பொதுவும் சிறப்புமாகவுள்ள தலைவனாதலும்  தமக்குப் பேரின்பம் நல்கும்  தந்தையாதலும் , பிறவிப்பிணி ஒழிக்கும் மருத்துவனாதலும் , ஞானோபதேசம் செய்யும் ஞானாசிரிய னாதலும், தமக்குப் போலவே பிறர்க்கும் உபகரித்தற்கு உரிய பொது வெளிக்கண் உளனாதலும்  புலப்படுக்கப்பட்டபடியாம்.

         ஆண்டவன் பெருமையை நோக்க, அப் பெருமானுக்கு ஆட்படும் தகுதி தம்பால் ஒரு சிறிதும் இன்று என்பது  தோன்ற “நீசனேனை”  எனவும்  அவ்  இழிவுக்கு எடுத்துக்காட்டாக. “நாயான “ எனவும் , அந்த நாய்ப் பிறப்பினும்  தீ வினைப்பயன்  மிக்கது என்பது தோன்ற , “பொல்லா” எனவும் கூறினர் . நாயான என்புழி, ஆதல் உவமப்பொருட்டு , என் இழிந்த நிலைக்கு எடுத்துக்காட்டாக  வேறொன்றும் புலப்படாமையால் , பொல்லாங்கு  மிக்க நாய் உவமை  கூறப்பட்டதாயினும் , உள்ளவாறு நினையுங்கால், என் பிறப்பு  உலகத்துள்ள  அந் நாய் முதலிய  இழி பிறப்புக்களுள் ஒன்றன்பாலும் படாதது  ஆகும் என்பது  தோன்ற , “யாதும் ஒன்றல்ல”  என்றார்

          ஆண்டாய்க்கு  என்புழி , நான்கன்  உருபை இரண்டன் உருபு  ஆக்குக . ஆண்டாய் , முன்னிலை வினைப்பெயர் .  ஆட்கொண்டருளிய நினக்கு வேறு கைம்மாறு  செய்யும் ஆற்றல்  இல்லேன் ஆயினும் , அப் பேருதவியை நினையும் அளவிலாவது நன்றியறிவுடையனாதல் இன்றியமையாததாகவும் , அதுவும் செய்திலேன் என்பார் , “நினைக்கு மாட்டேன் “ என்றார்,  “போதும் பொறாவிடிற் பச்சிலையுண்டு  புனலுண்டெங்கும் , ஏதும் பெறாவிடின்  நெஞ்சுண்டன்றே”  என்றபடி ,செயலளவிற் கைம்மாறு இயற்றல் அரிதாயினும், நெஞ்சத்தாலாவது  நினைதல் எளிதாகவும் , அதுவும் செய்திலேன்  என்று இரங்கிய படியாம் .  கண்டாய் : முன்னிலை அசை .  நினைக்கமாட்டேன்  என்பதற்கு , இரண்டாம் அடியில் உள்ள நான் என்பதை  எழுவாய்  ஆக்குக .  நினையும் அளவிலாவது தலைப்படாது ஒழிந்த சிறுமையேன் , மேற்செய்யத்தக்கது  இன்னது என ஒன்றையும் அறிந்திலேன் என்பார் , “செய்வதொன்றும்  அறியேன் “ என்றார் .  இதனால் பகல் பிறிது இன்று என்பது குறிப்பு .

            இதன்கண்,  “நீசனேனை  ஆண்டாய்க்கு  நினைக்கமாட்டேன் “ என்றமையால் , சிவாநுபவத்திற்கு  உரிய உயிரின் தூய்மையில் , முதலாவது செயற்பாலது ஆண்டவன் பேருதவியை நினைவு கூர்தலாம் என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி என்னும் பதிகம் நுதலிய  பொருளும் ,  “யாதுமொன்றல்லாப் பொல்லா நாயான  நீசனேனை “  என்றதனால்  வைராக்கியமும் , ஆண்டவனை நினைதல் அவசியம் என்பது  போதரலின் , பத்தியும்  தோன்றுதலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல்  அறிக.

                     *******************************************************************

பாடல் 52.

செய்வ  தறியாச்  சிறுநாயேன்

செம்பொற்  பாத  மலர்காணாப்

பொய்யர்  பெறும்பே  றத்தனையும்

பெறுதற்  குரியேன்  பொய்யிலா

மெய்யர்  வெறியார்  மலர்ப்பாத

மேவக்  கண்டுங்  கேட்டிருந்தும்

பொய்ய  னேன்நான்    உண்டுடுத்திங்

கிருப்ப  தானேன்  போரேறே.

கருத்துரை :_  இதன் முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவனை  இடயறாது நினைந்து ,  தம் உயிரைத்  தூயதாக்கிக் கொள்ளாமைக்கு இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் நினையாமல்  இருத்தலே யன்றி , இவ்வுலக  வாழ்க்கையின் நிமித்தம் உண்டும் உடுத்தும்  உடலோம்பி  இருத்தலை நினைந்து வருந்துகின்றார் .

பதவுரை :_  

போர் ஏறே  = போரில் அரியேறு  போல்பவனே,

செய்வது அறியாச் சிறு நாயேன்  =  செய்யத்தக்கது இன்னதென்று அறிந்துகொள்ள முடியாத சிறுமையை உடைய  நாய் போல்பவனும் ,

செம்பொன் பாதமலர் காணாப் பொய்யர்  =  செம்மையாகிய பொன் போன்ற  நின் திருவடிமலரைக் காணும் பேறு இல்லாத பொய்மையாளர் ,

பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்  =  பெறுதற்கு உரிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கு  பெறுதற்கு உரிமை உடையேனும்  ஆகிய ,

பொய்யனேன்  நான்  =  பொய்மையாளனாகிய  யான் ,

பொய்யிலா மெய்யர் வெறியார்  மலர்பாதம்  மேவ  = பொய்மை கலவாத மெய்யன்பர்கள்  மணம் பொருந்திய மலர் போன்ற நின் திருவடிகளைஅடைய ,

கண்டும் கேட்டு இருந்தும்  = நேரிற் கண்டும் அறிவுறுத்தக் கேட்டிருந்தும் ,

உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்  =  உணவு உண்டும்  ஆடை உடுத்தும்  இவ்வுலகத்தில்   வாழ்ந்திருக்கலானேன்  என்பது .

விளக்கவுரை :   அன்பர்களைக்  காம முதலிய  அறுபகையாகிய யானைகள் தாக்காவண்ணம் , அவற்றை அழித்து ஒழிக்கும் ஆண் சிங்கம் போல்வான் என்பது குறித்து , இறைவனைப்  “போர் ஏறே” என்றார் . அருள்வலிமிக்க ஓர் அரசன் , தனக்கென வேறு பகையின்று  எனினும் , தன் குடிகளைக்  கரவில் நலிய  முயலும்  பகைவரைத்  தன் பகைவராகக் கொண்டு , ஒறுத்து அடக்க முற்படுதல் போல, இறைவன் தனக்கென வேறு பகை இலன் எனினும் , தன் அன்பரை நலியும்  பகைகளைத் தன் பகை எனக் கொண்டு அழிக்கும் இயல்பு உடையான் என்பது கருத்து .

                உலகிற் செய்யத்தக்கன  இன்ன, தகாதன இன்ன என்று பகுத்து உணரும் அறிவாற்றல் இல்லாமையால், சிறுமையுடையேன் என்பார் , “செய்வதறியாச் சிறுநாயேன் “ என்றார் . அவ் வறியாமையே  சிறுமைக்கு ஏதுவாயிற்று  என்பது.  சிறுமை தகாதன செய்தல். என்  தகுதி மிக இழிந்ததாகலின் , அதற்கேற்ற பயனையே பெறுதற்கு  உரியேன் என்பது  தோன்ற , “பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றார். பொய்மை , நலம் பயப்பது எனவும் , தீமை பயப்பது எனவும் இருதிறப்படும் என்பர்  நக்கீரர் . வெளிப்படையில் பொய்மைபோல் காணப்பட்டு , உண்மையில் நலம் பயப்பதை  மெய்மை எனவே கொள்ளுவர்  திருவள்ளுவர் . “பொய்மையிம் வாய்மையிடத்த புரை தீர்ந்த, நன்மை பயக்குமெனின் “ என்பது திருக்குறள் .  ஆகவே ஈண்டு நலம் பயக்கும் பொய்மை விலக்கி , தீங்கு பயப்பதைப் புலப்படுத்தற்கே, “செம் பொற்பாத மலர் காணா” என்றனர் .  இறைவன் திருவடித்  தாமரையைச்  சிறிதும் நினைவு கூறாத பொய்யர் என்பதனால் , நலம் பயக்கும் பொய்மையின் நின்றும் இது விலக்கப்பட்டது  என்பது தெளியலாம் .  இறைவன் திருவடித் தாமரையை  அகத்தே காண  விரும்பாமையோடு , புறத்தேயும் காணாதவர் என்றபடி . அத்தகைய பொய்யொழுக்கம் உடையோர் பெரும்  துன்பப் பயனைப் பெறும்பேறு என்றது நகைச்சுவை தோன்றற்கு .  பொய்யொழுக்கத்தின் எல்லையில் நிற்போர்  பெறும் துன்பப் பயன்கள்  எல்லாவ ற்றையும்  ஒருங்கு பெறுதற்கு  உரிய சிறுமையே என்பால் உள்ளது என்பார்,  “அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றார் .  பிறிதோரிடத்து , “விச்சுக்  கேடு பொய்க் காகா தென்று இங்கு எனை வைத்தாய் “ என்று அடிகள் கூறுவர் . அதன் கருத்து, அடியேனை நில உலகத்தில் இருக்கச்செய்தற்குக் காரணம் , பொய்யொழுக்கம்  ஆகிய பயிர் செழித்து விளைதற்கு வித்துக்கேடு  இருக்கலாகாது என்னும்  குறிக்கோளேயாம்  என்பது.  நாயேனும்  உரியேனும்  என்புழி , எண்ணும்மைகள் செய்யும்  விகாரத்தால் தொக்கு நின்றன.

                மெய்யர் என்ற அளவிலே,  சத்திய சீலர் என்பது பெறப்படுமாயினும் , பொய்யில்லா  மெய்யர் என்றது.  பொய்மையை  உட்பொதிந்து , புறத்தே வேட முதலியவற்றால்  மெய்யொழுக்கம்  உடையவர்போலக்  காணப்படுவோரை  விலக்கற்கு என்க.  இதனால், முன்னர் கூறப்பட்டார்மெய்யிலாப் பொய்யர்என்பதும் தெளிவாம் .  மெய்யர்  –  உண்மை யொழுக்கமுடைய மெய்யன்பர் .  அடிகள் ஞானோபதேசம்  பெறும் காலத்து , ஞானாசிரியனாக  எழுந்தருளி இருந்த இறைவன் பக்கலில் தம் கண்காணச் சூழ்ந்து இருந்த பக்குவ முதிர்ந்த  மெய்யன்பர்களை உட்கொண்டே, பொய்யிலா மெய்யர் என்றார் . அன்னார் எல்லோரும் ஆண்டவன் திருவடி நிழலில்  இயைந்து இன்பநுகர்ந்து  இருத்தலை , அப்பெருமான் திருவருள்  துணைகொண்டு  மெய்ஞ்ஞானத்தால்  உணர்ந்தவர் ஆதலின் , “வெறியார் மலர்பாதம்  மேவக் கண்டும் “ என்றார்  அங்ஙனம் அம் மெய்யன்பர் எல்லோரும்  இறைவன் திருவடிக்கண் இன்பம் நுகர்ந்து  இருத்தலைத் தாம்  உண்முகமாகக் கேட்குமாறு அப் பெருமானே கூறியருளினர் என்னும் உணர்ச்சி தலைப்பட்டவர் ஆதலின் ,  “கேட்டிருந்தும்” என்றார் . காட்சியாலும்  கேள்வியாலும்  மெய்யன்பர்கள் அடைந்த சிறந்த பேறுகளை உணர்ந்திருந்தும் , இப் பேறு பெறுதற்கு உரிய தூய்மையை  அடைய முயலாமல் , அதற்குத் தடையாக உள்ள உடலை  ஓம்புதற் பொருட்டு  ஐம்புலன்களும்  ஆர  உண்டும் , ஆடை  அணிகலங்களால்  புனைந்து கொண்டும் ,இப்பொய்யுலக வாழ்க்கையை விரும்பி  இருக்கின்றேனே என்பார்,  “உண்டுடுத் திங்கிருப்பதானேன்”  என்றார்.

             செய்யத்தக்கது இன்னது என்று அறியாத  சிறுமை காரணமாகப் பொய்யொழுக்கம் உடையார் பெறும் பேறுகள் எல்லாவற்றையும்  ஒருங்கு  பெறுதற்கு உரியேன் ஆயினும் , மெய்யன்பர் எய்திய சிறந்த பேற்றைக் கண் கூடாகக்  கண்டும் , தெளியக் கேட்டும்  உள்ளேன்  ஆதலின், அன்னார் மேற்கொண்ட தவ நெறியில் ஒழுகி நலம் பெற முயலலாம் ; அங்ஙனம் முயலாமல் , உடல் ஓம்புதலிலே நாட்டம் செலுத்தல் ஆனேனே என்று இரங்கியபடியாம் .

                இதன்கண் , “பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன் “ என்பதில் , சிவாநுபவத்திற்குரிய  தூய்மை ,  உண்டு உடுத்து  இருத்தலால் ஏற்படாது என்பதும் , அவ்வுடல்  ஓம்புதலின் ஒழிவே தூய்மையாம் என்பதும் பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பொய்யர் பெறும் பேறு  அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றதனால் , தொண்டின் பணிவும் ,  “உண்டுடுத்திங் கிருப்பதானேன்” என்றதனால் , உடற் சுமையில்  வெறுப்பும்  தோன்றி நிற்றலின் , பத்தி வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                            **********************************

பாடல் 53.                                                                      

போரே  றேநின்   பொன்னகர்வாய்

நீபோந்  தருளி  யிருள்நீக்கி

வாரே  றிளமென்  முலையாளோ

டுடன்வந்  தருள  அருள்பெற்ற

சீரே  றடியார்  நின்பாதஞ்

சேரக்  கண்டுங்  கண்கெட்ட

ஊரே  றாயிங்  குழல்வேனோ

கொடியேன்  உயிர்தான்  உலவாதே.

கருத்துரை :-

முன்னைத் திருப்பாட்டில் இறைவனை நினையாமல் , உலக வாழ்க்கையின் நிமித்தம்  உண்டு  உடுத்து  உடல் ஒம்புதலையே  கடைப்பிடித்து  இருக்கின்றேன் என்று இரங்கிய அடிகள், இத் திருப்பாட்டில்  உடலை  யான்  பற்றிக்கொண்டு  இருந்தாலும் , அவ்வுடலை விட்டு உயிர் தானே கழியலாமே!  அங்ஙனமும்  கழிந்து  இலதே! என்று இரங்குகின்றார் .

பதவுரை :-   போர் ஏறே   –  ஆணவப்போர் போர் ஏறே  = ஆணவப் போரில்  அரியேறு  போல்பவனே,

நின் பொன்னகர்வாய் = நின் சிவபுரத்திருக்கோயிலினின்றும் ,

நீ போந்தருளி  =  நீ புறப்பட்டு எழுந்தருளி ,

வார் ஏறு இளமென் முலையாளோடு உடன் வந்து  =  கச்சு யாத்த இளமை மிக்க மெல்லிய முலைகளை யுடைய அம்மையோடு  கூடி இங்கு வந்து ,

இருள் நீக்கி அருள =  ஆணவமல இருளின் ஆற்றலைக் கெடுத்து அருள் புரிய ,

அருள் பெற்ற சீர் ஏறு அடியார் =  அத் திருவருளைப் பெற்ற சிறப்பு மிக்க மெய்யன்பர்கள்,

நின் பாதம் சேரக்கண்டும்  = நின் திருவடிகளை அடையக் கண்கூடாகப் பார்த்திருந்தும் ,

கொடியேன் உயிர் உலவாது = கொடியவனாகிய என் உயிர் தானே கெட்டு ஒழியாது இருக்க ,

கண் கெட்ட ஊர் ஏறாய்  இங்கு உழல்வேனோ = கண் கெட்டுக் குருடாகிய  ஊர்ப் பொலி எருதுபோல இவ்வுலகத்தில் யான் அலைந்து திரிவேனோ? என்பது .

விளக்கவுரை :-   நீ போந்தருளி உடன் வந்து இருள் நீக்கி அருள எனக் கூட்டுக. போரின் பயனாக  இருள் நீக்கம் கூறப்பட்டிருந்தலின் , ஈண்டு  ஆணவப்போர் என்பது பெற்றாம் . மெய்யன்பர்க்கு அருளுங்கால் ,அவரைப் பற்றி நிற்கும் மூல மலமாகிய  ஆணவம் என்னும் யானைகளின் வலியழித்தற்கு ஆண் சிங்கம் போன்றலின் , “போரேறே” என்றார் .  பொன்னகர்  –  சிவபுரமும் அங்குள்ள திருக்கோயிலும்  ஆம் . எங்கும் நிறை பொருளாகிய ஆண்டவனுக்கு  ஓர் ஊரும்  ஒரு திருக்கோயிலும் உள எனக் கூறுதல் பொருந்துமா எனின் , இறைவன் வியாபகம்  எங்கும் உளது எனினும் , பசுவின் உடல் முழுதும் வியாபித்து ஊறும்  பால் , அதன் முலை வழிச் சுரத்தல் போல , பக்குவமுதிர்ந்த  மெய்யன்பர் நெருங்கிய இடத்தில் சிறப்பாக வெளிப்பட்டு அருளுவன்  ஆதலிற்  பொருந்தும் என்க . இக் கருத்துப்பற்றியே , “தில்லை வாழ் கூத்தா சிவபுரத்தரசே” என்பது முதலிய பல இடங்களிலும் சிவபுரத்தரசனாக இறைவனைப் பாராட்டி அருளினர் .  வாய் : ஏழனுருபு ; ஐந்தனுருபாகக் கொள்க.. போந்தருளுதல் –  எழுந்தருளுதல் ;புறப்பாடல் , ஒரு சொன்னீர் மைத்து .

       இந் நிலவுலகத்துள்ள  மெய்யன்பரை ஆட்கொள்ள இறைவன் எழுந்தருளுங்கால் , அம்மையை  வெளிபடையாக உடன் கொண்டு வருவான்  என்பதும் , அம்மை என்றும் ஒரு கூறு பிரியாது உறையும்  பெற்றியள் எனினும் சில  நிகழ்ச்சிகளில்  அவ்வம்மையின்  உருவத்தைத்  தன்னுட் கரந்து தோன்றுதலும்  உண்டு என்பதைக் கேட்கின்றோம் ; ஆதலின் , “உடன் வந்தருள” என்றார் . உலகம் ஈன்றும் கன்னியாய் இருப்பள் என்பது குறித்து இளமைச் செவ்வி புலப்படுக்கப்பட்டது என்க..  அம்மை, தன் மக்களுள்  மெய்யன்புமிக்க  பக்குவர்க்கு  அருள் ஞானப்பால் சுரந்து அளித்து , அப்பனைக் காட்சிப்படுத்துவள் என்பது அடைமொழிக்குறிப்பு .  “அருளது சத்தியாகும் “என்றபடி , அருள் வடிவினளாகிய  தாயை வழிபட்டு , அவள் கருணையால் தந்தையைக் காணவேண்டும் ஆதலின் , அம்மையுடன் எழுந்தருளி வந்தான் என்பது.  உமையம்மையோடு  எழுந்தருளி வந்து , மெய்யன்பர்க்குக் காட்சியளித்து , முதலிற் செய்த நலம் ,  மூலமாகிய ஆணவத்தின் ஆற்றலை  ஒழித்தது என்பார், “இருள்நீக்கி” என்றார் .

                     கட்டுக்காலத்தில் , தெளிவான பளிங்கு அனைய உயிர் அறிவை மறைத்துநிற்பது , திணிந்த இருள் உருவமான ஆணவ மலமே . அம் மலப்பணிப்பு  நீங்கினால் அன்றிச் சிவக்காட்சி புலனாகாது .ஆதலின், முதலிற் பாச நீக்கமே வேண்டுவதாயிற்று . பக்குவ முதிர்ந்த உயிரைப்பற்றிநிற்கும்  ஆணவ  ஆற்றல் கெட்டு ஒழிந்ததும் , அவ்வுயிர் சிவன் அருளில் தலைப்படும் என்பது . “இருள் நீக்கியருள அருள் பெற்ற “ என்பதனால் தெளியலாம் . ஈண்டு நீக்கலும்  அருளலும் முறையே  பாச நீக்கத்தையும் சிவப்பேற்றையும் குறிப்பனவாம் . சிவஞான போதம் பத்தாம் சூத்திர அவதாரிகையில் ,  “இனி, அச் சாதனத்தானாய பயனியல்பு வகுத்துக் கூறுவானெடுத்துக்  கொண்டார் . அப் பயனாவது  , பாசவீடும் , சிவப்பேறும் என இருவகைப்படும் “ என்பர்  சிவஞான முனிவரர் . பத்தாம் சூத்திரத்தில் , “மலமாயை தன்னொடு  வல்வினையின்றே “ என்றதனால் , பாசவீடும் , பதினோராம் சூத்திரத்தில் , “அயரா அன்பின் அரன் கழல் செலுமே” என்றதனால்  சிவப்பேறும் கூறப்பட்டன . அவ்விரண்டு பயன்களையும்  ஈண்டு மெய்யன்பர் பேறுகளாக அடிகள் , “இருள் நீக்கியருள” எனவும் ,  “அருள்பெற்ற” எனவும் முறையே கூறியருளினார் . பாசவிடுதிக்கு உயிரின் சாதனம் ஏதுவாயினும் , இறையருள் முக்கியம் என்பது  தோன்ற “இருள் நீக்கி “ என இறைவன் செயலாகவும் , அந் நீக்கத்தில் சிவப்பேறு தானே கைகூடும் என்பது தோன்ற , “அருள் பெற்ற “ என உயிரின் செயலாகவும் அடிகள் அருளிச்செய்வாராயினர் . இத்தகைய  தத்துவ நுண்பொருள்கள் , உண்மை அநுபவம் உடையார் வாக்கில் எத்துணை எளிமையாக வெளிப்படுகின்றன என்பது  உணர்ந்து இன்புறத்தக்கது .

                 இங்ஙனம் பாச நீக்கமும் சிவப்பேறும் ஒருங்கு பெறும் தகுதி உடைய மெய்யன்பரையே இங்கே , “சீரேறடியார் “ என்றனர் . சீர் ஏறுதலாவது , மல   ஆற்றல் தேயத்தேய , அத்துணை மெய்ஞ்ஞான  விளக்கம் மிகுதல் . அம்மெய்ஞ்ஞான விளக்கு ஒளியால்  நின் திருவடியைக் கண்டு அடைந்தனர் என்பார், “நின் பாதஞ் சேர “ என்றனர் .  பாதஞ்சேரல் ,தாடலைபோல்  இரண்டறக்கலந்து  இன்புறல் .  இதுவே வீடு பேறு  ஆகும் . இந் நிகழ்ச்சி , தவ முதிர்ச்சியுடைய அடிகளுக்கு அன்றிப் பிறர்க்குக் காண்டல் அரிதாம் என்க  இத்தகைய சிறந்த காட்சி  காணக்கிடைப்பதே அரிதென்பது தோன்ற , “கண்டும் “ என்று கூறப்பட்டது . உம்மை அருமை  உணர்த்தி நின்றது .

                   சுவை மிக்க நுகர் பொருள் ஒன்று பொதுவாக , அதனைப்பலரும்  பொது உரிமை பற்றிக் கூட்டுண்ண ஒருவன்  மாத்திரம் அருகு இருந்து  கண்கூடாகக் கண்டு வைத்தும் , அதனைப் பெற இயலாமல்  இருப்பதற்கு  அவன் கொடுவினையே காரணம்  ஆதல்போல் , மெய்யன்பர்கள்  ஆண்டவன்  திருவடியடைந்து  இன்புறுதலைக் கண்டு வைத்தும் ,அப்பேறு பெறாமல் , ஊன் உடலை  ஓம்பித் திரிதற்குத்  தம் கொடுவினை  காரணம் என்பார் , அது குறித்துத் தம்மை , “கொடியேன் “ என்றார் . இக்கொடுமைக்கு  ஆளாகி வாழ்தலில் , உயிர் உடலினின்றும் ஒழிதல்  இனிதாகவும் , அது தானேயும் கழித்திலதே  என்று  இரங்குவார் , “உயிர்தானுலவாது” என்றார் . உலவாது  உழல்வேனோ என முடிக்க .

                     மெய்யன்பர் எய்திய பேறு தமக்கு இல்லாமைபற்றிய  இந் நிகழ்ச்சியில் , அடிகளுக்குள்ள  வருத்தத்தையும்  ஆர்வத்தையும் , “அருளாருமுதப்  பெருங்கடல்வாய் அடியாரெல்லாம்  புக்கழுந்த , இருளார் ஆக்கை  இது பொறுத்தே எய்த்துக் கிடந்தேன் எம்மானே “ என்னும் பாடற் பகுதியானும் உணரலாம் .  ஊர்  ஏறு  –  ஊர்க்குப் பொதுவாக விடப்படும் பொலி எருது  அல்லது பொலிகாளையாகும் . இது, மேய்த்து அடக்குவார் இன்றி , வயிறார  உண்ணுதலும்  காமநுகர்ச்சியில் தலைப்படுதலும் , பிறர்க்குத் துன்பம் செய்தலுமே தொழிலாகக்கொண்டு , தன் மனம் போலக் கட்டுக்கடங்காது  அங்கும் இங்கும் அலைந்து திரிவது . இத்தகைய ஊர் ஏறு கண் கெட்டது ஆயின் நெறி தவறிப் பள்ளமேடுகள் அறியாமல் வீழ்ந்து , திரிந்து , துன்புற்று  , உழலக்காணலாம் . அங்ஙனமே  யானும் நெறி பிறழ்ந்து , நன்று தீது அறியாமல் உழல்கின்றேன் ; இந்நிலைக்கு என்னை ஆளாக்கல், ஆண்டவனே , தகுமா என்பர் , “கண்கெட்ட  ஊரேறாயிங்குழல்வேனோ” என்றார் . ஊரேறாய் என்புழி , ஆக்கம் உவமப் பொருட்டு.  “கண்டும் கண்கெட்ட” என்ற முரண் அறிந்து இன்புறத்தக்கது .  இனி, ஊரேறு  என்பதற்கு,  ஊர்ப்பன்றி என்று பொருள் கூறுவாரும் உளர் ,

                 இதன்கண் , ஊரே  றாயிங் குழல்வேனோ  கொடியேனுயிர்  தானுலவாதே “ என்றதனால் , கொடுவினைக்கு நிலைக்களமாகிய  ஊனுடலினின்றும்  உயிர் கழியின் , அது தூய்மை பெறும் என்பது பெறப்படுதலின் , அநுபோகசுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,உயிர்வாழ்தலை  வெறுத்தலின் வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக .

                                                ****************************************

பாடல் 54 .

உலவாக்  காலந்  தவமெய்தி

உறுப்பும்  வெறுத்திங்  குனைக்காண்பான்

பலமா  முனிவர்  நனிவாடப்

பாவி யேனைப்   பணிகொண்டாய்

மலமாக்  குரம்பை  யிதுமாய்க்க

மாட்டேன்  மணியே  உனைக்காண்பான்

அலவா  நிற்கும்  அன்பிலேன்

என்கொண்   டெழுகேன்  எம்மானே.

கருத்துரை :-     முன்னைத் திருப்பாட்டில் உயிர் தானேயும் கழித்திலதே  என்று இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் கழியாத நிலையில் , மலமயமாக உள்ள இவ்வுடலை  ஒழிக்கவும்  ஒருப்படாமல் இருக்கின்றேன் . வேறு பற்றுக்கோடாக  எதனைக்கொண்டு  உய்யக்கடவேன் என்று இரங்குகின்றார் .

பதவுரை :-    மணியே எம்மானே  =  மாணிக்க மணிபோல்வானே  என் தலைவனே ,

இங்குப் பல மா முனிவர் =      இவ்வுலகிற்  பல பெரிய முனிவரர் எல்லாம் ,

உன்னைக்  காண்பான்  =    நின்னைக் காண்டற்  பொருட்டு ,

உலவாக்காலம் தவம் எய்தி =    எல்லையற்ற காலம் தவ புரிந்து ,

உறுப்பும் வெறுத்து   =   உடலையும் வெறுத்து ,

நனி வாட  =  மிகவும்  வாட்டம் எய்தா நிற்க.,

பாவியேனைப் பணி கொண்டாய்   =    பாவியாகிய என்னைத் தொண்டனாக ஏற்றுக்கொண்டனை ,

மலமாக் குரம்பை இது மாய்க்கமாட்டேன்  = மலமயமாகவுள்ள  இவ்வுடலை  ஒழிக்க  ஆற்றல்  இல்லேன் ,

உனைக் காண்பான்  =  நின்னைக் காண்டர் பொருட்டு ,

அலவா நிற்கும்  அன்பு இலேன்  = துன்புற்று  நிற்கும்  மெய்யன்பு இல்லேன் ,

என் கொண்டு  எழுகேன்  =  இந்நிலையில்  பற்றுக்கோடாக  எதனைக்கொண்டு   உய்வேன்  என்பது .

விளக்கவுரை :-      உலகத்துப் பொருள்களுள்  பொன்னும் மணியும் உயர்ந்தன  அவற்றுள்ளும்   மணி சிறந்தது  ஆகலானும் , அதனினும் சிறந்ததாகப்  பிறிதொன்று இல்லாமையானும் , இறைவனை , மணியே   எனவும்  , பின்னர்ப்  பணிகொண்டாய்  என்று  கூறியதற்கு ஏற்ப , ஆட்கொண்டவன் என்பது  போதர,  “எம்மானே”  எனவும்  கூறியருளினார் . 

                  செய்தற்கு அரிய கடுந்தவம் புரியும் பக்குவ முதிர்ந்த முனிவரர் பலரையும் ,இவ்வுலகத்தில் அடிகள் தம் கண் கூடாகக் கண்டவர்  ஆதலின் , “இங்குப்பல மாமுனிவர்”என்றார் . இங்கு  = இவ்வுலகத்தில் ,முனிவர்  = இறைவனையே  இடையறாது  நினைப்பவர் என்னும் பொருட்டு. இன்பத் துன்பங்களில் ஈடுபடாத  மனமும் , விருப்பு , வெருப்பு ,அச்சம்  முதலியன நீங்கிய இயல்பும் ,  உறுதியான  புத்தியும்  உடையார்  முனிவர்  எனப்படுவார். இத்தகைய  பக்குவமுள்ள முனிவரர் , ஆண்டவன் திருவடி  காண்டற்கு , நீர் நிலை , ஐந்தீ  நடு முதலிய பொறுத்தற்கு அரிய  தட்ப வெப்பங்களில்  நின்று தவம் இயற்றினர் என்பதும் , அவ்வரிய  தவத்தானும்  சில  நாட்கள் வரையோ எனின் , அன்று ; எண்ணில் அடங்காத காலம் என்பதும் தோன்ற, “உலவாக் காலம் தவம் எய்தி “  என்றார்.  “புற்றுமாய் மரமாய்ப்  புனல் காலே  உண்டியாய் அண்டவாணரும் பிறரும் , வற்றியாரும்  நின் மலரடி காண மன்ன”  என்பதும் அடிகள் திருவாக்கு ,  உறுப்பு  = ஆகு பெயராகநின்று  உடலை  உணர்த்தும் .அத்துணை  நெடுங்காலம்  தட்ப வெப்பங்களைப்  பொறுத்துத்  தவம் புரிதற்குக் கருவியாகவுள்ள  அத் தவவுடம்பையும்  வெறுத்து நின்றனர் என்பது தோன்ற , “உறுப்பும்  வெறுத்து “ என்றார் . “உறுப்பும் “ என்புழி  , உம்மை உயர்வு சிறப்புப் பொருளில்  வந்தது. இங்ஙனம் தவம் புரிந்தோர்  ஒருவர் இருவர் அல்லர் ; பலராகவும் , அப்பலர்க்கும்  திருவடி , காட்சிப்படாமையால் கவலை எய்தினர் என்பதும் , தவத்தின் கடுமையும் , கால நெடுமையும் , காண்டற்கு அருமையும்  காரணமாக , அக் கவலை பெருகிற்று  என்பதும் தோன்ற , “நனிவாட” என்றார் .

                 அடிகள் நிரம்பிய மெய்யன்புடையராயினும் , தம் பணியில்  தமக்குக்  குறையே  காணும் இயல்புடையர் ஆதலின, தம்மை , “பாவியேன்” எனவும் , பாவ கன்மம்  உடையோனாகவும் , நின் அருட்பெருக்கம்  காரணமாக ,  “என்னைப் பணி கொண்டாய் “எனவும் கூறினர் .ஒரு பொருட் கொடையில் , கொள்வோன் தகுதியும் , கொடுப்போன் தகுதியும்  விரவி நிற்பதாகும் . ஈண்டுக் கொடுப்போன் தகுதியே விஞ்சி நின்றது , என்றபடியாம் . பணிகொண்ட நிலையில் , நின் பக்கலில் அணுகி , நின்னைத் தரிசித்துத்  தொண்டு செய்தற்குத் தடையாக இருப்பது . இம் மல பாண்டமாகிய ஊனுடலே என்பார், “மலமாக் குரம்பை “ எனவும் , இதன் ஒழிவில் , சிவாநுபவத்திற்கு உரிய  தூய்மை எய்தும் ஆதலானும் , இது தானே ஒழியும் நிலையில் இல்லாமையால் , யனே  ஒழிக்க வேண்டியது ஆகலானும் , ஆங்ஙனம் ஒழித்தற்குப் பற்று உடைமையால் , ஆற்றல் இல்லாதவனாக  இருக்கின்றேன்  என்பார் . “ இது மாய்க்க மாட்டேன் “ எனவும்  கூறினர்.  “நின் திருவடிக் காட்சி வேண்டி  உலவாக்காலம்  அரிய தவம் புரிவோர்  முற்றத்துறந்த  புண்ணிய சீலராகிய முனிவரர் ; யானோ பாவி ; அம்முனிவரர் உடம்போ  தவ வுடம்பு ; என் உடம்போ மாமலக்குரம்பை . அத்தகைய தவ உடம்பையும்  அம்முனிவர்  பொருட்படுத்தாமல்  வெறுக்கின்றனர் ; என் மலக்கூடாகிய உடம்பை  ஒழித்தற்கு  யான் துணிந்திலேன் ; இவ் ஏற்றத்தாழ்வான  நிலையில் அம் முனிவரர் அருந்தவம் புரிந்தும் நின்னைக் காணப்பெறாமல்  மிகவும்  வாட்டம்  எய்தி நிற்ப , அவர்களுக்கு  அரியனாகிப்  பாவியாகிய என்னை  வலிய  வந்து  ஆம் கொண்டனை” என்று இவ்வாறு  அடிகள் கருதினர் என்பது .   இத் திருப்பாட்டில்  சொற்பொருள் அமைப்பில் காணப்படும் உண்மையாகும் . தவத்திற்குப்  பயன்படும்  முனிவரர்  உடம்பை  உறுப்பு எனவும் , அங்ஙனம் பயன் படாதது  எனக் கொண்டு  தம் உடம்பை  மலமாக்குரம்பை  எனவும்  அடிகள்  கூறியதும்  கருதத் தக்கது . இந்நயம் இலக்கியச் சுவை நுகர்வோர்க்கும் விருந்து ஆதல் அறிக.

                   அடிகளின் அன்பு முதிர்ச்சியும் சிவாநுபவ  நுகர்ச்சிக்கு உரிய  தகுதியும் மிகப்பெரியன . அவை நம்மனோர் உள்ளத்தைக் கவரும்  பெற்றியுடையன .  அங்ஙனமாகவும்,   அவர் தம்மைப் பல இடத்தும் மிக இழிவாகக்  கூறிக்  கொள்ளுதல் , அடிமை இயல்பு  தோன்றற்கு  என்க. அடிகள் தம்மை  இழிவாகக் கூறியவற்றை  எடுத்துக்  கூறற்கு  எம் உள்ளம்  மிகக்  கவலுகின்றது. . உரை விளக்க நிமித்தம்  மேற்கொள்ளும்  இக் குற்றம் இறைவன் திருவருளால்  பொறுக்கப்படும்  என்னும்  உறுதியுடைமை  அதற்கு  ஆறுதல் அளிப்பதாகும் .

                   மூன்றாம் அடியில் , “உனைக் காண்பான் “  என்பதை “ இடைநிலைத் தீவமாகக் கொண்டு  “உனைக் காண்பான் மலமாக்குரம்பை  இது மாய்க்கமாட்டேன் “  எனவும்,  “உனைக் காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் “  எனவும் இயைத்துக் கொள்க .  அலத்தல் = துன்பம் உறுதல் . நின்னைக்  காண்டற்குரிய  நெறியறியாது  துன்பம் உறுகின்றேன் என்பார், “அலவா நிற்கும் “  எனவும் , அன்பு நெறி  சிறந்தது எனக் கேட்டும் , அந் நெறி நிற்றற்கு அன்பு சிறிதும் இல்லேன்  என்பார்,  “அன்பிலேன்”  எனவுங் கூறினர். இறைவன் காட்சி பெறாமைக்கு  வருத்தமும் , நெறி நிற்றற்கு  உரிய  அன்பு இன்மையும் உடையேன் என்பது அடிகள் கருத்து.  நெறி  பலவற்றுள்ளும்  அன்புநெறி  சிறந்ததாகவும் , எளிதாக  மேற்கொள்ளத்தக்கதாகவும்   இருப்ப , அதனை  விட்டு  , எதனைப்  பற்றுக் கோடாகக்  கொண்டு உய்யக்கடவேன்  என்பார் ,  “என் கொண்டு எழுகேன் “  என்றார் .  எழுதல் = வீழ்ச்சியினின்றும்  மேலேறி  உய்தல் .

இதன்கண்,  “மலமாக் குரம்பை இது  மாய்க்க மாட்டேன்”  என்றதனால், அதன் ஒழிவே  சிவாநுபவத்தின் நிமித்தம்  உயிர் எய்தும்  தூய்மை  என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பாவியேனைப் பணி கொண்டாய்” ,  “மலமாக்குரம்பை  இது  மாய்க்க மாட்டேன்” என்பவற்றால் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                                  ***************************************************

பாடல் 55.

மானேர்  நோக்கி  உமையாள்

பங்கா  வந்திங்  காட்கொண்ட

தேனே  அமுதே  கரும்பின்

தெளிவே  சிவனே  தென்தில்லைக்

கோனே  உன்றன்  திருக்குறிப்புக்

கூடு  வார்நின்  கழல்கூட

ஊனார்  புழுக்கூ  டிதுகாத்திங்

கிருப்ப  தானேன்  உடையானே

கருத்துரை :-     முன்னைத் திருப்பாட்டில் தம் உடலை மலமாக்குரம்பை என்றும், இதனை ஒழிக்க  மாட்டாதவனாக இருக்கின்றேன் என்றும் இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் ஊனார் புழுக்கூடு என்றும் ,அப்புழுக்களுக்கு உறையுளாகவுள்ள இதனை , எனது உயிரின் உறையுளாக எண்ணிப் பாதுகாத்திருக்கின்றேனே! எவ்வாறு  உய்வேன் என்றும் இரங்குகின்றார் .

பதவுரை :-  மான் நேர் நோக்கி உமையாள் பங்கா =   மான் விழி போன்ற விழியினை யுடையாளாகிய  உமையம்மையை  ஒரு கூற்றில் உடையவனே,

இங்கு வந்து   ஆட்கொண்ட  =  இந் நில  உலகத்து வந்து  என்னை  அடிமை கொண்டு  அருளிய ,

தேனே  அமுதே  கரும்பின்  தெளிவே =  மெய்யன்பர்க்குத்  தேனும்  அமிர்தமும்  கரும்பின்  தெளிவான  சாறுமாக  விளங்குகின்றவனே ,

சிவனே  =  பேரின்ப  வடிவினனே ,

தென் தில்லைக்  கோனே =  தென்  திசைக்  கண்ணதாகிய  தில்லையில்  விளங்கும்  அரசனே,

உடையானே  =   எல்லாம்  உடையவனே,

உன் தன்  திருக்குறிப்புக்  கூடுவார்  நின்  கழல் கூட  =  நின்  திருவுள்ளக்  குறிப்புச்  சாரப்பெற்ற  மெய்யன்பர்கள்  நின்  திருவடியை  அடைய ,

ஊன்  ஆர்  புழுக்கூடு  இது  காத்து  =  யான்  ஊன்  நிறந்த  புழுக்கூடாகிய  இவ்வுடலைப்  பாதுகாத்து,

இங்கு இருப்பது ஆனேன் = இவ்வுடலில்  தங்கி  இருத்தலை  மேற்கொண்டுள்ளேன்  ( எங்ஙனம்  உய்வேன்) என்பது.

விளக்கவுரை :-    எல்லாம்  வல்ல  ஆண்டவன் ,  மெய்யன்பர்களை   ஆட்கொள்ள, உமையம்மையோடு இந்நில வுலகத்துக்கு  எழுந்தருளுங் காலத்து , அம்மை  அருள்  வடிவினள்  ஆதலின், அடிகளைப் போன்ற    உள்ளன்பு  மிக்க  தன்  மக்கள்  இறைவனாற்  புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டுமே  என்னும்  எண்ணம்  காரணமாக , அப்பெருமாட்டி  கண்களில்  மருட்சி  தோன்றிற்றோ  என்று  கருதும்படி , “மானேர் நோக்கி  யுமையாள்” என்று  கூறப்பட்டாள்  என்க.  நன் மக்களை  விரைந்து  ஆதரிப்பதில்  தாய்மை  அருள்  முற்பட்டுச்  செல்லும்  என்பதை  உலகியலிலும்   காணலாம் .  அடிகள்,  அம்மையுடனாகவே  ஆண்டவனை  நினைவு  கூறும்  இயல்பினர்  என்பதை , “உடயாளுன்றன்  நடுவிருக்கும்”  என்பது  முதலிய  திருப்பாடல்களானும் உணரலாம் . அடிகள்   தம்மைப்  பணிகோடற்கு , அம்மையுடையான   அப்பன்  வருகையே  காட்சிப்பட்டது  என்பதைப்  புலப்படுத்துவாராய்  “ உமையாள் பங்கா”  என்றார் .  ஆட்கொள்ளும்  தலைவன்   அடிமையைத்  தன்  இடத்து  வரச்செய்தே  பணிபுரியச்செய்வன்  என்பது  உலகியலிற்  கண்டது .  ஈண்டுக்  கடவுளர்  தலைவனாகிய  ஆண்டவன்  தன்  பேரருள்  திறத்தை , உலகு  அறியக்காட்டுதற்கு ,  மிக  எளியவனாகிய  என்னை  ஆட்கொள்ள,  யான்  இருக்கும்  இடம்  நோக்கி  வந்தனன்  என்பார், “இங்கு  வந்து “  என்றார் .

                   அடிமை  கொண்டால் , அவ்வடிமையைத்  துன்புறுத்துப்  பணிபுரியச்  செய்வாரும்  உளர் .  அங்ஙனம்  இன்றி , எனக்கு  மிகவும்  இனியனாகவுள்ளான் என்பார் , “தேன்”  முதலியவகக்  கூறினர் .  அமுதம்  என்பதற்குத்  தேவர்  உணவாகிய  அமிர்தம்  எனவும்,  பால்  எனவும்  பொருள்  கொள்ளலாம்.  பிற  இடங்களிலும்  அடிகள் , “தேனாய்  அமுதமுமாய்த்  தீங்கரும்பின்  கட்டியுமாய்”  எனவும் , “தேனையும்  பாலையும்  கன்னலையும்  ஒத்து “  எனவும்,  இவ்வாறே , இம்மூன்று  பொருள்களையும்  இம்முறையே  கூறியிருக்கின்றனர் .  இனிமைப்  பொருள்களாகிய  இம்  மூன்றனையும்  இம்முறையே  கூறியதில்  ஓர்  உண்மை  இருத்தல்  வேண்டும்.  மூன்றனுள்ளும்  தேன் , வடிகட்டிய  அளவில்  எடுக்கப்படுவது;  நாவிற்  பட்டதும்  மிக்க  இனிமை  செய்வது .  பால்  காய்ச்சப்பட்ட  பின்  ஓர்  அளவு  இனிமை  பயப்பது.  கருப்பஞ்சாறு  ஆலையில்  இட்டுப்  பிழிந்து  எடுக்கப்பட்டு  ,  நன்றாகக்  காய்ச்சப்பட்ட  பின்  கட்டியாகி  இனிமை  செய்வது .  இம்  மூன்றனுள்ளும் ,  தேன்,  புழுக்களின்  எச்சில்  மயமாகவும் ,  பால்,  ஊனுடலின்  சாரமாகவும்  உள்ளவை ,  பயன்  விளைப்பதில்  தேனினும்  பால்  சிறந்தது .  “பாலொடு  தேன்  கலந்தற்றே “  என்புழி , ஓடு  உருபு  உயர்  குறித்து  வந்ததும்  அறிக .  கருப்பங்கட்டி  ,  எச்சில்  ஊன்  கலப்பு  முதலிய  அக்  குற்றமும்  இலதாய் , உடலுக்கு  நலம்  பயப்பதாகும்.  இம்  முறையில்  ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால் ,  தேனைப்போல  மிக  இனியனாய்  வெளிப்பட்டு  வயப்படுத்துப்  பாலைப்போலப்  பின்  பயன்  விளைத்துக்  கருப்பங்கட்டியைப் போலத்  தூய  இன்பம்  அளித்துப்  பாதுகாப்பான்  என்பது   அறியத்தக்கது.  தேன்  சுவை  எளிமையினும் , பாற்  சுவை  அதனிற்  சற்று  அருமையினும் , கருப்பங்கட்டிச்  சுவை  அதனினும்  அருமையினும்  அறியப்படுதல்  போல,  ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால்,  முதலில்  எளியனாகவும் ,  பின்  அவன்  சொரூப நிலையை   உணர  உணர  மேன்மேலும்  பெரியனாகவும்  கானப்படுவன்  என்னும்  உண்மையையும்  பெறப்படுதல்  அறிக. “கரும்பின்  தெளிவே”  என்பது,  தெளிந்த  சாற்றினாலாகிய  கட்டியை  உணர்த்தலின்  ஆகு  பெயர்  ஆகும் . 

               இங்ஙனம்  தேன்  எனப்  பால்  எனத்   தெளிவு  என  வெளிப்பட்டு  ஆட்கொண்டு  அருளும்  ஆண்டவன் ,  முடிவில் ,  அழிவு  இல்லாத  பேரின்புறுத்தும்  இன்ப  வடிவினன்  ஆவான் என்பது  தோன்ற , “ சிவனே” எனவும் ,  இவ்வரிய  பரம்பொருள் , தம்  அளவில்  அன்றி  ,  உலகத்து  உயிர்த்  தொகுதிகளுக்கு  எல்லாம்  பொதுவான  வெளியிடத்தில்  நின்று.  ஐந்தொழில்  திருக்கூத்து இயற்றி,  எல்லோரையும்  விழிப்பித்து  அருளும்  பெற்றியன்  என்பது  தோன்ற  ,  “ தென் தில்லைக் கோனே” எனவும்  அருளிச் செய்வார் ஆயினர்.  உயிர்கள்  செய்யும்  தவ  முதலியவெல்லாம்,  இறைவன்  திருவருட்பேற்றிற்கு  ஆளாகவும்,  தட்ப வெப்பங்களைப்  பொறுத்து  இயற்றும்  கடுந்தவம்  எல்லாம்  மூலமாகிய  மெய்யன்பின்  வலியளவே  பயன்  செய்வன.  அம் மெய்யன்பு  உள்வழியே ,  ஆண்டவன்  திருவுள்ளக்  குறிப்பின்  சார்புக்கு  ஆளாகலாம் . அத்தகைய  சார்புபெற்ற  பெரியோர்  எல்லாம்,  ஆண்டவனே ,  நின்  திருவடியை  எய்தி  இன்புற்றனர்  என்பார்,  “உன்றன்  திருக்குறிப்புக்  கூடுவார்  நின்  கழல்  கூட”  என்றார்.  திருவுள்ளக்  குறிப்பிற்  கூடினார்  திருவடி  கூடினாராக,  அச்  சொல்லளவில்  ஒற்றுமையுடைய  ஒரு  கூடு  எனக்கும்  வாய்த்தது  என்பார்,  “ஊனார்  புழுக்கூடு”  என்றார் .  என்பு , நரம்பு , தசைகளால்  ஆக்கப்பட்டுப்  புழுக்களுக்கு  உறையுளாகவுள்ள  இக் கூட்டை , யான்  தங்குதற்கு  உரிய  உறையுளாக  நினைந்து , எனது  எனக்  கடைப்பிடித்து,  இதனைப்  பாதுகாத்துக்  கொண்டு  இருக்கலானேன் ;  என்  அறியாமை  இருந்தவாறு  என்னே!  என்பார்,  “ஊனார்  புழுக்கூடு  இது  காத்திங்  கிருப்பதானேன் “   என்றார் .  இதனால்  கழல்  கூடினார்,  ஊனார்  புழுக்கூட்டை  ஒழித்துக்  கூடினார்  என்பதும்  போதரும் ,  “புழுக்கூடு  இது”  என்புழிச்  சுட்டு  இழிவு  கருதிற்று.  இங்கு  =  இவ்வுடலில்   ;  இவ்வுலக வாழ்க்கையில்  எனினுமாம் . 

             இதன்கண் , “ஊனார்  புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன்”  என்றதனால் ,  அது  சிவானுபவத்திற்குத்  தடையாதலும் , அதன்  ஒழிவு,  அதற்கு  உரிய  தூய்மை  பயப்பது  என்பதும்   போதரலின் ,  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்,  தேனே  யமுதே  என்பன  முதலிய  விளிகளாலும், புழுக்கூடு  என  உடலைக்  கூட்டியதாலும்  பத்தி  வைராக்கிய  விசித்திரம்   என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                        *******************************************

பாடல் 56.

உடையா  னேநின்  தனையுள்கி

உள்ளம்  உருகும்  பெருங்காதல்

உடையார்  உடையாய்  நின்பாதஞ்

சேரக்  கண்டிங்  கூர்நாயிற்

கடையா  னேன்னெஞ்  சுருகாதேன்

கல்லா  மனத்தேன்  கசியாதேன்

முடையார்  புழுக்கூ  டிதுகாத்திங்

கிருப்ப  தாக  முடித்தாயே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ,  “ஆண்டவனே , நின்  திருவுளக்  குறிப்புச்  சார்புடையார்  நின்  திருவடி  அடைய ,  யான்  ஊனார்  புழுக்கூடு  ஆகிய   இவ்வுடலைக்  காத்திருக்கின்றேன் “  என்ற  அடிகள்  , இத்  திருப்பாட்டில்,  உள்ளம்  உருகும்  பேரன்பு  உடையார்  நின்  திருவடி  அடையக்  கண்டும்,  யான்  தீ  நாற்றம் உடைய  புழுக்கூடு  ஆகிய  இதனைக்  காத்திருக்கும்படி  செய்தனையோ?  எங்கின்றார் .  உடலைக்  காத்தல்,  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  செயலாகவும்,  இதன்கண்  ஆண்டவன்  கட்டளையாகவும்  கொண்டு  இரங்கியபடியாம் . 

பதவுரை :-  உடையானே  =  எல்லாம்  உடைய  ஆண்டவனே ,

நின்  தனை  உள்கி  =  நினைந்து  நினைந்து, 

உள்ளம்  உருகும்  பெருங்காதல்  உடையார்  = நெஞ்சம்  உருகும்  பேரன்பு  உடையார்

உடையாய் நின்  பாதம்  சேரக்  கண்டும்   =   தம்மை  உடைமையாக  உடைய  நின்  திருவடிகளை அடைந்து  இன்புறக்  கண்டு  வைத்தும் ,

நெஞ்சு  உருகாதேன்  =  உள்ளம்  கரையாதவனும் ,

கல்லா  மனத்தேன்  =  கற்று  அறியாத  மனம்  உடையவனும்  ,

கசியாதேன்  =  உள்ளக்  கனிவு  இல்லாதவனும்  ஆகிய  நான் ,

இங்கு  ஊர்  நாயின்  கடையேன்  = இவ்வுலகத்தில்  ஊர்க்குப்  பொது  நாய்  போலக்  கடைப்பட்டவனாய் ,

முடையார்  புழுக்கூடு  இது   காத்து =  தீ  நாற்றமுடைய   புழுக்கூடாகிய  இதனைப்  பாதுகாத்துக்கொண்டு,

இங்கு  இருப்பதாக  முடித்தாயே  =  இந்நில  வுலக  வாழ்க்கையிலே  இருக்கும்படி   முடிவு  செய்தனையோ?    என்பது.

விளக்கவுரை :-    ஒரு பொருளைச்  சிறப்பு  முறையில்  குறிப்பிட்டு , அதனை  உடையான்  என்னாது , பொதுவாக  உடையான்  என்றதனால் , எல்லாம்  உடையான்  என்பது  பெறப்படும்.  குறைவற   எல்லாம்  உடையான்  இறைவன்  ஒருவனே  ஆவன் .  உள்ளம்  உருகும்  பெருங்காதல், “பானலார்  கண்ணியர்க்கும்  பதைத்துருகும்  பாழ்  நெஞ்சே”  என்றபடி , காம  நிலையில்  மகளிரை  நினைந்தும்  உண்டாவதாகும் . அதனை  விலக்குதற்கே , “நின்றுனையுள்கி”  என்றார்.   இறைவனுடைய  உருவம்  , அருவம் , அருவுருவம்  என்னும்  மூவகைத்  திருமேனிகளுள் ,  முதலில்  நெஞ்சால்  நினைதற்கு  உரியது  உருவத்  திருமேனியே  .  அவ்வுருவத்  திருமேனியின்  இயல்பு  சிவா காமங்களில்  கூறப்பட்டபடியாம் . அதனை  நெஞ்சத்  தாமரை  மலர்  நடுவண்  இருத்தி  நினைவு  கூர்தல்  வேண்டும்  என்ப .  அதனையே  ஈண்டு,  “உள்கி” என்றார்.  உள்கி  யுருகுதலாவது  ,  நினைதற்குக்  கருவியாகிய  உள்ளம் .  அந் நினைவின்  முதிர்ச்சியில்  நெகிழ்ந்து  கரைதல்  ஆகும்.  உள்ளம்  முற்றும்  கரைந்த  நிலையில் ,  உயிர்  சிவ  பாவனையில்  தலைப்பட்டு ,  மலநாசமாகிய  பயன்  எய்துவதாகும் .  பலகால்  நினைந்து  நினைந்து  உள்ளம்  உருகும்  நிலையில்  உள்ள  அன்பே  பேரன்பு   ஆகும்  என்பது  குறித்து  ,  “பெருங்காதல்” என்றார் .  அப் பேரன்பு  உடையாரே  ,  “தம்மை  யுணர்ந்து  தமையுடைய  தன்னுணர்வார்  “  ஆவர்  என்பது  தோன்ற , “பெருங்காதலுடையார்  உடையாய்”  என்று  கூறப்பட்டது  என்க .  தம்மை  உணர்ந்து  தமையுடைய   தன்னுணர்வார்  என்பதற்கு  உடைமைப்பொருளாகிய  தம்  இயல்பினை  உணர்ந்து  ,  உடையான்  ஆகிய  தலைவனை  உணரும்  தத்துவ  ஞானிகள்  என்பது  பொருள் ஆகும், “பெருங் காதலுடையார்  உடையாய்  நின்பாதம்”  என்புழிப்  பேரன்புடையார்  தம்மை  உடைமைப்பொருளாக  உடையை  ஆகிய  நின்னுடைய  திருவடிகளை  என  விரித்தல்  வேண்டும் .  உடையாய்  என்னும்  குறிப்பு  வினை முற்றுப் பெயரெச்சப் பொருள் பட்டு நின்றது.  உடையாய் ஆகிய  நின்  என  விரியும் .  அத்தகைய  பேரன்பு  உடையாரே  ஆன்மாவின்  இயல்பையும் ,  ஆண்டவன்  இயல்பையும்   உணரும்  பெற்றியர்  என்பது  தோன்றற்கு  அவ்வாறு  கூறப்பட்டது  என்க.

            அத்தகைய  பரிபக்குவம்  உடைய  மெய்யன்பர்  ,  ஆண்டவனே  ,  நின்  திருவடியைச்  சார்ந்து  இன்புறக்  கண்டு  வைத்தும்  என்பார், “நின் பாதஞ் சேரக்  கண்டும்”  என்றார் .  கண்டும்  என்புழி ,  உம்மை  தொக்குநின்றது . கண்டும்  உருகாதேன்  என முடிக்க .  ஆண்டவனே,  நின்னை  நினைந்து  உள்ளம்  உருகும்  பெருங்காதலுடையார்  எய்திய  பேற்றை  அறிந்து  இருந்தும், அப்பெருங்  காதல்  கொள்ளும்  தகுதியில்லேன்  எனினும்,  அதற்கு  ஏதுவாக  உள்ள  மனம்  உருகும்  நிலையாவது எய்தினேனோ எனின் ;  அதுவும்  இன்று  என்பார் , “ நெஞ்சுருகாதேன்” என்றார் .

              உள்ளம்  உருகும்  அநுபவம்  இன்று  எனினும்,  நின் பரம்பொருள்  தன்மையும்  அடிமையாகிய  என்  இயல்பும்,  கட்டாகவுள்ள  பாசத்தின்  இயல்பும்  முதலிய  சமய  உண்மைகளையாவது  கற்றுக்  கேட்டு  மனத்  தெளிவு  எய்தினேனோ  எனின்;  அதுவும்  இன்று என்பார் , “கல்லா  மனத்தேன்” என்றார்.  ஈண்டுக்  கல்லாமை , சமய  நூல்களைப்  பற்றியதாகும் . பரஞானமாகிய  அநுபவ  ஞானத்திற்கு  ஏதுவாகவுள்ள  அபரஞானம்  அதுவாகலின்  என்பது . நெஞ்சுருகுதல்  அநுபவஞானமாகிய  பரஞானம்  ஆகும் . கற்றல் , சமயநூல்  அறிவாகிய  அபரஞானம் ஆகும்.  இரண்டும்  இல்லேன்  என்றபடி . கல்லா  மனத்தேன்  என்பதற்கு  ,  கல்லைப் போன்ற  நெஞ்சம்  உடையேன்  என்று, உரைப்பாரும்  உளர்.  அது  நெஞ்சு உருகாதேன்  என்பதனாற்  பெறப்படுவதாகும்  என்க .  கசிதல்  =கனிதல்.  குழைதல்  என்னும்  பொருள் உடையது ;  உருகுதற்கு  முன்  நிகழும்  உள்ள  நிலையாகும்.  இவ்  வுண்மையை , “கற்றறியேன் கலைஞானம்  கசிந்துருகேனாயிடினும் “  என்னும்  பாடற் பகுதியானும்  அறியலாம் .  இப்பகுதியிற்  கூறப்பட்டவை  ,  நூல்  அறிவும் அநுபவ உணர்வும்  என்பது  தெள்ளிதின்  விளக்கம்  ஆதல்  அறிக.  முதல்  அடியில்  பெருங்காதல்  உடையார்  இயல்பு   கூறுங்கால் , அவர்க்கு  நூலறிவு  கூறப்படாமைக்குக்  காரணம்,  அநுபவ  உணர்வு  விஞ்சி  நிற்றல்  என்க.  சரியை  முதல்  மேற்கொண்டு,  ஞான நிலையடைந்தாரைச்  சரியையும்  உடையார் என்று  கூறுதல்  மிகையாம்  என்பது  ஈண்டு  நினைக்கத்தக்கது.

               நாய்ப்பிறப்பே  இழிவானது . அந்  நாயும்  ஒருவனுக்கு  உரியதாக  இருப்பின் ,  உணவு  கொடுத்தும் ,  இருப்பிடம்  அளித்தும்  பாதுகாக்கப் படுவதாகும் . அங்ஙனம்  இன்றி ,  ஊர்ப்பொதுவில்  உள்ள  நாய்  ஆயின்  ,  பாதுகாப்பார்  இல்லாமையான் ,  அங்கும்  இங்கும்  இடயறாமல்  ஓடி  அலைந்து,  பலரானும்  துன்புறுத்தப்பட்டு  ,  ஒரு  நிலையின்றித்  திரிவது  ஆகும்.  அத்தகைய  ஊர்ப்பொது  நாய்  போல, மனம்  ஒருநிலையின்றி  அலைவுறத்  திரியும்  இழிவுடையேன்  என்பார், “ஊர்நாயிற்  கடையானேன்”  என்றார்.  மேலே,  “ஊரேறாயிங்  குழல்வேனோ”  எனவும்,  இங்கே ,  “ஊர்நாயிற்  கடையானேன்”எனவும்  கூறினார் . ஆண்டு  உழலுதற்கும்  ,  ஈண்டுக்  கடைப்  படுதற்கும்  எடுத்துக்  காட்டியபடியாம் .  கடையானேன்  என்பது  முற்றெச்சம். 

                 முன்னைத்  திருப்பாட்டில் , “ஊனார்புழுக்கூடு” என்றார் .  அவ்வூனின்  பயன்  தீ  நாற்றம்  என்பார்,  இதன்கண்,  “முடையார்  புழுக்கூடு”  என்று  கூறினார் .  முன்னைப்பாட்டில்  ,  “இது  காத்து  இங்கு  இருப்பதானேன்”  எனத்  தன்  செயலாகக்  கூறினர் .  யான்  இத்  தீ  நாற்றம்  உடைய  புழுக்கூட்டை   அறியாமையால்  எனது  எனப்  பாதுகாத்துக்  கொண்டு  இருப்பினும் ,  பேரருள்  உடைய  ஆண்டவனாகிய  நீயாவது  உண்மை  உணர்த்தி , இதனை  ஒழித்து  விடலாமே?  நின்  கருணைத்  திருவுள்ளத்தில்  அவ்வாறு  கொண்டால் , எனக்கு  முடை  உடற்  கழிவும்  பேரின்பப்பேறும்  எளிதில்  ஆமே?  என்  தீவினை  காரணமாகத்  திருவுள்ளத்தில்  அக் குறிப்புத்  தோன்றாமல்,  இத்  தீ  யுடலைக்  காத்துக்  கொண்டு ,  இவ்வாழ்க்கையிலே  நிலைப்படுமாறு  செய்தனையோ? என  ஆண்டவன்  கட்டளையாகக்  கூறுவார்.  “இது  காத்திங்கிருப்பதாக   முடித்தாயோ”  என்றார்.  முடித்தாயே  என்புழி,  ஏகாரம்  வினாப்பொருளில்  வந்தது.

                  இதன்கண்,  நெஞ்சுருகாமை  முதலியனவும் , புழுக்கூடு  காத்திருத்தலும் , சிவாநுபவத்திற்குத்  தடை  என்பதும் ,  உருகுதலும்  , உடலின்  ஒழிவும்  ,  அதற்குரிய  தூய்மை  பயப்பன  என்பதும்  பெறப்படுதலின் ,  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , நெஞ்சுருகுதல்  வேண்டும்  என்னும்  குறிப்பினாலும் ,  முடையார்  புழுக்கூடு  என்னும்  வெறுப்பினாலும் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                                  ************************************************

பாடல்  57. 

முடித்த  வாறும்  என்றனக்கே

தக்க  தேமுன்  அடியாரைப்

பிடித்த  வாறுஞ்  சோராமற்

சோர   னேனிங்   கொருத்திவாய்

துடித்த  வாறுந்  துகிலிறையே

சோர்ந்த  வாறும்  முகங்குறுவேர்

பொடித்த  வாறும்  இவையுணர்ந்து

கேடென்  றனக்கே   சூழ்ந்தேனே

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டுக்களில் , “ஊனார்  புழுக்கூடு “  எனவும் “முடையார்  புழுக்கூடு”  எனவும்  இழித்துக்கூறப்பட்ட  உடலைப்  பாதுகாத்துப்  பொய்யுலக  வாழ்க்கையில்  இருக்க  நேர்ந்ததே  என்று  இரங்கிய  அடிகள் ,  இத்திருப்பாட்டில் , அவ்வுடற்பற்று  அளவில்  அன்றி,  அது  காரனமாக  விளையும்  காம  விளைவிற்கும்    ஆளாகி  அழிவேன்கொல்  என்று    வருந்துகின்றார்.

பதவுரை :-   என்  தனக்கு  முடிந்தவாறும்  தக்கதே  =  எனக்கு  (இவ்  வூன் உடலைக்  காத்து  இங்கு  இருக்கும்படி ) முடிவு  செய்ததும்  பொருத்தமே,

முன்  அடியாரைச்  சோராமல்  பிடித்தவாறும்  தக்கதே  =  முன்னர்  மெய் யன்பரைத்  தளரவிடாமல்  அணைத்துக் கொண்டதும்  பொருத்தமே ,

சோரனேன்  =  கள்வனாகிய  யான் ,

இங்கு  ஒருத்தி  வாய்  துடித்தவாறும்  =  இவ்விடத்து  ஒரு  மாயைப்  பெண்ணின்  வாய்  இதழ்  துடித்த  விதமும் ,

துகில்  இறையே  சோர்ந்த  வாறும்  =  ஆடை  சிறிது  நழுவிய  விதமும் ,

முகம்  குறுவேர்  பொடித்தவாறும்  =  முகத்தின்  நின்றும்   சிறு  வியர்  அரும்பிய  விதமும் , 

இவை  உணர்ந்து  என்  தனக்கே  கேடு  சூழ்ந்தேனே   =  ஆகிய  இவற்றை  அறிந்தும்  எனக்கே  யான்  கேடு  தேடிக்  கொள்ளல்  ஆயினேன்  என்பது .

விளக்கவுரை :-   பாசப்  பிணிப்புண்டு ,  பண்டை வினைப் பயன் நுகர வேண்டியதாக இருத்தலான் , முடையார் புழுக்கூடு  ஆகிய இவ்வுடலைக் காத்துக் கொண்டு  , என்னை  இங்கு  இருக்கும்படி  முடிவு  செய்ததும், வினை எச்சம்  இன்மையால் பிறவியிற்  புகுத்தாது,  மெய்யன்பர்களைத் தளர  விடாமல் திருவடி  நிழலில்  சேர்த்துக்கொண்டதும்  பொருத்தம்  என்றார் .

                     “முன்”  என்பது , அடிகளுக்கு  ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி , ஞானோபதேசஞ்  செய்த  காலத்தைக்  குறிக்கும் . அப்பொழுது  மெய்யன்பர்கள் பலர்  சூழ்ந்து இருந்தனர்  என்பதும் , இறைவன்  உருக் கரந்த ஞான்று , அவர்  எல்லோரையும் தன்  திருவடி நீழலில் சேர்த்துக்கொண்டனன்  என்பதும் , அடிகள் வரலாற்றானும் , “அருளாரமுதப்  பெருங்கடல்வய் அடியாரெல்லாம் புக்கழுந்த” என்னும்  பாடற்பகுதியானும்  உணரலாம் . மலக்கட்டுடையாரை , அது  நீங்குங்காறும்  கன்மப் பயனாகிய உடலோடு கூடியிருக்கச் செய்தலும் , அஃதில்லாத  மெய்யன்பரை அழிவில் இன்பத்திற்கு ஆளாக்கிக்கோடலும்  இறையருட்  செயல்கள் ஆகும்.  “தன் கடன் அடியேனையுந்  தாங்குதல் “ என்றபடி, பக்குவ முதிர்ந்த ஆன்மாக்களை , மீண்டும்  மல வாசனை பற்றாமல் காத்து  அருளுதல்  இறைவனுக்குரிய  பொறுப்பு  ஆகும் என்பது குறித்து , சோராமற் “பிடித்தவாறும்” என்றார், “தக்கதே” என்பதை, “முடித்தவாறும்”   “பிடித்தவாறும்” என்னும்  ஈரிடத்தும் இயைத்துக்  கொள்ளல் வேண்டும் .

                        வினை யெச்சம் காரணமாக , யான் இவ்வூன் உடலைக் காத்திருக்க  முடிவு  செய்தனை யாயினும் , அம்மட்டில்  அமையாமல் , இவ் வுடற்  பற்றுக் காரணமாக மேன்மேலும் வினை விளைவு  கிளைக்கின்றதே ! ஆண்டவனே , என் செய்வேன் ! என்று  அடிகள் வருத்த மேற்கொண்டு , அவ் வினை விளைவுகளுள் , ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவார் ஆயினர் . அந் நிகழ்ச்சி ; ஒரு பெண் , தம் முன்னிலையில் நின்று , காமச் செயல்களைக் காட்ட , அச்செயல்கள் தீங்கு பயப்பன என்று  அறிந்திருந்தும் , சிறிது மனம் சென்றதாகக்  கொண்டு  இரங்கியதாகும் . இத்தகைய நிகழ்ச்சி உலகியலில் எளிதாக நிகழ்வது உண்டு . இங்ஙனம் நிகழுங்கால் , உண்மை அறிந்து அகப்படாமல் விலகி  உய்ய வேண்டும் என்று உலகினார்க்கு அறிவுறுத்தற் பொருட்டு , அடிகள் தம் மேல்  ஏறிட்டுக் கூறுவார் ஆயினர்.  அடிகள் திருவருட் பேற்றிற்கு ஆளான பெருமை  அளவிடற்கரியது . அங்கனமாகவும் , தம்மையும் தம் செயல்களையும் மிக இழிவாகக்  கூறிய  இடங்கள் பலவாகும் . அப்படிக் கூறிய  நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிகளை  ஆளாக்கல் நம்மனோர்க்குத் தகுதியன்று.  மற்றை அடியார்களும் , பொதுவான மக்களியல்புகளை  ஓரோவிடங்களில்  தம் மேல் ஏற்றிக் கூறியிருப்பதை  அறிகின்றோம்.

             இனி, ஞானாசிரியனாக  எழுந்தருளிய  ஆண்டவன் , “இன்னும் சின்னாள் இருத்தி” என  உருக் கரந்தபின் , அடிகள் , இத் தீயுடலை ஒழித்து , ஆண்டவன்  திருவடியடைதல்  எப்பொழுது கூடுமோ என்று கவன்று  இருக்குங்கால் , அவர் உள்ளம்  உலகவாதனை எதிர்ப்பட்ட   நிலையிலும் , அதன்கண்  ஈடுபடாமல்  இருக்க , ஆண்டவன்  திருவுளங்கொண்ட  குறிப்பின் வழி ,  மாயையின்  படைப்பாக  ஒரு  பெண் அடிகள் முன்னிலையில் காமச்  செயல்களைக்  காட்டி  நடித்ததாகவும்  கொள்ளலாம்.  “மாயை  மயக்கமும்  செய்யுமன்றே “ என்பது   சிவஞான சித்தி , அந் நடிப்புக்களை   நஞ்ச நடிப்புக்கள் என்றே அடிகள் உணர்ந்தனர் என்பதை , இவை “யுணர்ந்தும் “ என்பதனால் அறியலாம் . அங்ஙனம்  அறிந்தும் , அக் காட்சியில்  சிறிது  மனஞ் சென்றது குறித்து , “கேடு என்றனக்கே  சூழ்ந்தேனே “ என்றார் என்க . அம் மாயைப் பெண்ணின் காமச்  செயல்கள்  பல  ஆயினும் , ஓரளவிற் சுருக்கிக்  கூறத் தொடங்குகின்றார் .  கரவிற்  கவர்ந்த பொருளைப்  பிறர் அறியாவாறு  அநுபவிக்கக்  கருதும்  கள்வர்  இயல்பை  ஒத்துத்  தனிமையில்  நடித்த அம்மாயப்பெண்ணின்  செயல்களைப்  பிறர்  அறியாத  நிலையில்  காண  நேர்ந்தது  பற்றித் தம்மை , “சோரனேன்” என்றார்.

              முதலில்  அப்பெண்  தோன்றி , என்னவோ  சில  காமச்செய்திகளைக் கூறத் தொடங்கினாளாக , காதல் மிகுதியால் தன் வயம் இழந்ததாக  நடித்து , பேச இயலாமல் வாய் இதழ் துடித்த அளவில்  நின்றாள் என்பார், “ஒருத்தி வாய்  துடித்த வாறும் “ எனவும் , பேச இயலாத நிலையில் , உடுத்த ஆடையின் ஒருகூறு சிறிது நெகிழ விட்டதாகக் கொண்டு , “துகில் இறையே சோர்ந்தவாறும் “ எனவும்  கூறினர். இவ் விருவகைச் செயல்களாலும் அடிகள் உள்ளம் நெகிழாமை  கண்டு  , இனி என் செய்வல் என்று வருத்தம் தோன்ற  நின்றாளாக , அத் துன்பநினைவினால்  அவள் முகத்தில் சிறு வியர்வு உண்டாயிற்றாம் . அதனையே  , “முகங்குறுவேர்  பொடித்தவாறும்”  என்றார் . நினைவின்  வெப்பத்தால்  சிறு வியர் அரும்புதல் இயல்பே . பொடித்தல் = அரும்புதல் .  மன மொழி மெய்களாகிய முக்கரணங்களும்  காம  வயப்பட்டன என்பதற்கே  இம்மூன்று செயல்களும் கூறப்பட்டன  என்க. வாய் துடித்தலால்  மொழியும் , துகில்  சோர்ந்தலால் மெய்யும் , முகம் வியர் பொடித்தலால்  மனமும்  காமவயப்பட்டன என்பது.

         இப் பாடற் கருத்தையே , துறவறச்  செல்வராகிய  சிவஞான முனிவரர் , கலைசைப்  பதிற்றுப்  பத்து  அந்தாதியில் அமைந்து , “சுரி குழன் மடவார் இளமுலைப் பணைப்பும்  துகிலிறை சோர்வதும்  நகையும் , வரிவிழித் தொழிலும்  சேயிதழ்த் துடிப்பும் மனத்திடை யெழுதி வைத்தழிவேன்” என்றார். இச் செயல்கள் தீமை விளைவிப்பன என்று அறிந்திருந்தும் என்பார், “இவை  யுணர்ந்தும்”என்றார்,உம்மைவிகாரத்தால் தொக்கது . இக் காமச்செயல்களில் தாம் அகப்படவில்லையாயினும் , இக் காட்சியில் சிறிது மனம் சென்றது குறித்து , அதனால் விளையும் கேட்டினை யானே தேடிக்கொண்டவன்  ஆயினேன் என்பார், “கேடென்றனக்கே சூழ்ந்தேனே” என்றார் . சூழ்தல் = ஆராய்ந்து தேடிக்கொள்ளுதல் .  ஆண்டவனே , ஊனுடலில் இருக்கச் செய்தல் , இத்தகைய காம முதலிய குற்றங்களுக்கு மேன் மேலும்  ஆளாக நேருமே , அங்ஙனம் நேராதபடி , இத் தீயுடலை  ஒழித்து , என்னை ஏற்று கொள்ளல்  வேண்டும் என்பதே இத் திருப்பாட்டிற்  போந்த கருத்து எனக் கொள்க.

            இதன்கண் “இவையுணர்ந்து  கேடென்றனக்கே சூழ்ந்தேனே” என்றதனால் , இத்தகைய செயல்களில்  ஈடுபடாமையே  சிவானுபவத்திற்கு  உரிய உயிரின் தூய்மை ஆகும் என்பது பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல் அறிக.

                                                ***********************************

பாடல் 58.

தேனைப்  பாலைக்  கன்னலின்

தெளிவை  யொளியைத்  தெளிந்தார்தம்

ஊனை  உருக்கும்  உடையானை

உம்ப  ரானை  வம்பனேன்

நானின்  அடியேன்  நீ யென்னை

ஆண்டா  யென்றால்  அடியேற்குத்

தானுஞ்  சிரித்தே  யருள  லாந்

தன்மை  யாமென்  தன்மையே

கருத்துரை :-    முடையார்  புழுக்கூடாகிய  ஊனுடலைப் பற்றி நிற்பதோடு  அமையாது , காமம்  முதலிய  குற்றங்களுக்கும்  ஆளாகி  அழிவேனோ  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக் கூறிய  அடிகள் , அத்தகைய  இழிதகவு  உடையேன் , யாவர்க்கு மேலாம்  அளவிலாச்  சீருடைய  நின் அடிமை என்றால் , அஃது  எள்ளி  நகையாடற்கு  உரியதாகும் . ஆதலின், ஆண்டான்  அடிமைப் பொருத்தம்  இன்மையைத்  திருவுள்ளம்  கொள்ளக்  கூடுமோஎன, இத் திருப்பாட்டில்  இரங்குகின்றார்.

பதவுரை :-   தேனைப்  பாலைக்  கன்னலின்  தெளிவை   =   

தன்னை  அடைந்தார்க்குத்  தேனும்  பாலும்  கருப்பஞ்சாற்றின்  தெளிவுமாக  உள்ளவனும்,

ஒளியை  =  பேரொளிப்  பிழம்பினனும் ,

தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை  =  தன்னைப் பரம் பொருள் எனத்  தெளிந்த மெய்யன்பர்களின் ஊன்  உடலை  உருக்கும் உடையவனும்,

உம்பரானை  =   மேலாகிய  சிவபுரத்து அரசனும் ஆகிய  ஆண்டவனை நோக்கி,

வம்பனேன்  =  வீணனாகிய  யான் ,

நான் நின் அடியேன்  நீ என்னை  ஆண்டாய் என்றால்   = யான் உனக்கு  அடிமையாவேன்  நீ எனக்கு  ஆண்டவன்  ஆவாய்  என்று  கூறினால் ,

அடியேற்குத்  தானும்  சிரித்தே  அருளலாம் தன்மை ஆம்  என் தன்மை  =

அடியேனைக் குறித்து  அப்பெருமான்  நகைத்தே   அருளலாம்  தன்மையாகும்  என்  இயல்பு   என்பது.

விளக்கவுரை :-  ஆண்டவன்  மெய்யன்பரை  ஆட்கொள்ளுங்கால்  தேனைப் போல  எளிமையில்  இனிமை  பயந்து  அவரை  வயப்படுத்தும் , பின்னர்த்  தன்னை உணர்ந்து  உணர்ந்து  நெருங்குந்தோறும் பாலைப்போலத்  தன்  அரிய  இயல்பையும்  பயனையும்  அவர்க்குப்  புலப்படுத்தும் , அதன்  மேல்  கருப்பஞ்சாற்றுத்  தெளிவினால்  ஆக்கப்பட்ட  கட்டியைப்  போல்  மிக  அரிய  தன்  இயல்பை  உணர்த்தித்  தூய  இன்பத்தை  அருளியும்  பாதுகாப்பன்  என்பது  தோன்ற , “தேனைப்  பாலைக்  கன்னலின்  தெளிவை  “  என்றார்.  தெளி= தெளிந்த  சாற்றினால்  ஆக்கப்படும்  கட்டியை  உணர்த்தலின்  ஆகுபெயர்  ஆகும்.  இம் மூன்று  பொருள்களையும்  இம் முறையிற்  கூறிய  கருத்தும்  பிறவும்  55  ஆம்  திருப்பாட்டின்  விளக்கத்திற்  காண்க.

                இங்ஙனம்  இனிமைப்  பொருளாக  உள்ள  அப் பெருமான்  , தூய  ஞானப்பிழம்பாக   வுள்ளான்  என்பது  தோன்ற, “ஒளியை”  என்றார்.  கதிரவன்  முதலிய  மண்டிலங்களுக்கு  எல்லாம்  ஒளி  உதவும்  மூல  ஒளியாக  உள்ளான்  இறைவன்  என்று  மறை  யாகமங்கள்  கூறும் . “காளத்தியுள்ளிருந்த   ஒளியே” என்பது  தமிழ்மறை .  ஞானமயமான  பொருள்களில்  தோன்றும்  இன்பம்  சிறந்தது  என்பது புலப்படுக்கத்  தேன்  முதலிய  இனிமைச்  சுவை  மிக்க  பொருள்களாகவும் ஒளிப்பொருளாகவும்  கூறியருளினார் . 

                   தெளிந்தார் =  இறைவனைப்  பேரின்ப  மயமான  ஞான  வடிவினன்  என்று  நூல்  அறிவினால்  ஐயம்  திரிபு  அற  அறிந்து,  ஞானாசிரியன்  உபதேச  முகமாக  அநுபவ  உணர்வினர்  தெளிந்த  மெய்யன்பர் , அங்ஙனம்  தெளிந்து, தன்  அருள்  அமுதத்தை  உண்ண   உண்ண , உள்  ஒளியைப்  பெருக்கி , ஊனுடலைக்  கரையச்செய்பவன்  என்பார், “ஊனையுருக்கும்  உடையானை” என்றார்.  ஞானாநுபவம்  உடையார்க்கு,  தவத்தினால்  ஊனுடல்  சுருங்கச்  சுருங்க,  உள்ளொளியாகிய  ஞானம்  மிகும்  என்பதை , “ஊனினை  யுருக்கி  யுள்ளொளி பெருக்கி “  என்னும்  அடிகள்  திருவாக்கானும்  அறியலாம்.  பிணியின்  நலிவினால்  ஊனுடல்   சுருங்குதலை  உலகத்து  மக்களிடைக்  காணலாம் . அதனால்  உண்டாம் பயன்  துன்பமே  அன்றிப்  பிறிது  இன்று.  தவச்  செயலினால்  ஊனுடல்  சுருங்குமாயின்,  உள்  ஒளி  பெருகப்  பெற்று , அதனால்  சிவானந்த அநுபவமாகிய  பயன்  எய்துவதாகும்.  ஒரு  மகனுக்கு  உடல்  இளைப்பு  , நோயினால்  இல்லாமல்  தவத்தினால்  உண்டாயின் , அது  சிறந்தது  ஆகும்  என்பதை,  “விரதம்தனில்  இளைத்த  மேனி” என்பதனால்  அறியலாம் .  ஊனுடலும்  இறைவன்  உடைமையாகும்  ஆதலின்,  அதனை  உருக்குதற்கு  உரிய  உரிமையும்  அப்பெருமானுக்கே  உண்டு   என்பதைப்  புலப்படுத்த , “உருக்கும்  உடையானை”  என்றார்.  ஊன்  உருகிய  நிலையில்,  இறைவன்  அவ்வுயிர்க்கு  ஒளிமயமாகிய   தன்னை  வழங்கும்  இயல்பினன்  என்பதையும்  குறிக்கொண்டே முன்னர்,  “ஒளியை”  என்று  கூறினர்  என்பதும்  ஒன்று. இந் நிலவுலகத்துள்ள  உயிர்த்  தொகுதிகளையும்  ,  பெளதிகப்  பொருள்களையும்  தனக்கு  அடிமையாகவும் , உடைமையாகவும்  கொண்டு  விளங்கும்  தலைவனாகிய  சிவபெருமானே , எல்லா உலகங்களுக்கும்  , தேவர்  முதலியோர்க்கும்  தலைவன்  என்பது  தோன்ற , “உம்பரானை”  என்றார்.  உம்பர்  =  மேல்  உலகமாகிய  சிவலோகமும்  சிவபுரமும்  ஆம்.  அதற்கு  அரசன்  என்றதனால்,  முழுமுதல்  தலைமை  பெறப்படுவதாகும் .  “உம்பர்கட்கரசே” என்பது  அடிகள்  திருவாக்கு. 

                 ஒரு  சிறந்த  குறிக்கோளை  மேற்கொண்டு  அதற்குரிய  தவச்  செயலில்  ஈடுபடாமல் ,  உடலை  ஓம்பி,  இவ்வுலக  வாழ்க்கையில்  பயன்  அற்ற  செயல்களை  மேற்கொண்டு  ஒழுகும்  இயல்பினன்  யான்  என்பார், தம்மை, “வம்பனேன்”  என்றார் . “தவஞ்செய்வார்  தங்கருமஞ்செய்வார்   மற்றல்லர் ,  அவஞ்செய்வார்  ஆசையுட்பட்டு”  என்னும்  பொருள்  உரைப்படி,  தவம்  அல்லாத  செயல்கள்  எல்லாம்  பயனற்ற  செயல்கள்  என்பது  தெளிவாம் என்க.  சரியை  முதலிய  தவச் செயல்கள்  உடையாரே,   ஆண்டவனுக்குச்  சிறந்த  அடியார்  ஆவார் . அச் செயல்கள்  இன்றி ,  அவச்செயல்களையுடைய  வீணன்  ஆகிய  யான்,  அடியாரைப் போலப்  பொய்மையாக  நடித்து,  உயிர்க்கு  உயிராக  நின்று,  அவரவர்  நன்று  தீதுகளை  உணரும்  எம்பெருமானை  நோக்கி ,  “நான் நின்  அடியேன்”  என்றால் ,  அது தவச்செயல்  இல்லாமையாகிய  குற்றத்தோடு  ,  பொய்மை  கூறிய  குற்றமும்  ஆம் என்பதும்,  அவ்வளவில்  அன்றி , ஆளுதற்கு  உரிய  தகுதியைப்  பகுத்து  உணரும்  ஆற்றல்  இறைவனுக்கு  இன்று  என்பது  பெறப்படுமாறு , “நீ  யென்னை யாண்டாய் “ என்றால் ,  அதனினும்  பெரும்  குற்றம்  ஆம்  என்பதும்  அடிகள்  கருத்து .  இன்னோரன்ன  குற்றங்கள்  விளையுமாறு  அடிகள்  ஆண்டவனை  நோக்கித்  தகுதியில்லாத  தம்மைக்  குறித்து, “நான் நின்  அடியேன்”  எனவும்,  தகுதி  உணராது  ஆட்கொண்ட  குறைதோன்ற  ,  “நீ  யென்னை  ஆண்டாய் “எனவும்  கூறினால் , அஃது  எள்ளி  நகையாடற்கு  உரியதாம்  என்பார்,  “சிரித்தே  யருளலாம்  தன்மை” என்றார் . தான்  என்பது  படர்க்கைப்  பெயர் ; அப்  பெருமான்  என்னும்  பொருட்டு.  உம்  –தவிர்வழி  வந்த  சாரியை  .  யான்  கூறிய  பொருந்தா உரைக்கு  என்னைக்  கடுந்தண்டத்தால் ஒறுத்து  அடக்க  வேண்டியது  இருக்க,  பேரருள்  உடைமையால் அங்ஙனம்  செய்யாமல் , தந்தையின்  முன்னிலையில்  அறியாப்  பருவத்துக்  குழந்தை  கூறிய  பொருந்தாஉரையைக்  கேட்டு  நகையாடல்  போல  ,  அப்பெருமான்  சிரித்து  அருள்வன்  என்பது அடிகள்  கருதியது  என்க.  அடியேற்கு  என்புழி , நான்கன்  உருபை  இரண்டன்  உருபாக்கல் வேண்டும் .  “சிரித்தே”  என்புழி,  ஏகாரம்  தேற்றப்பொருட்டு ,  இது நகைத்தற்கே  இடனாகும்  அன்றி , உண்மை  ஆகாது  என்பது.  என் இயல்பு ஆண்டவன் எள்ளிநகையாடற்கு  உரியதே  அன்றி  வேறு  பயன்  விளைப்பது  அன்று  என்பார் , “சிரித்தே யருளலாம்  தன்மையாம்  என்  தன்மையே” என்றார்.  அடிகள்  தம்  பொருந்தா  உரையைக்  கேட்டாவது  ஆண்டவன்  வெளிப்பட்டு  நகைத்து  அருளுவான்  ஆயின் , அவ்வளவிற்  பேறுடையேன்  ஆவேன்  என்பது  அவர்  தம்  உட்கோள்  என  இத்திருப்பாட்டில்  தெளியலாம்.  “ஒறுத்தல்  ஒன்றும்  போதுமே” என்னும்  அடிகள்  திருவாக்கு  ஈண்டு  நினைக்கத்தக்கது . 

               இதன்கண்,  “சிரித்தே  யருளலாம் தன்மையாமென் தன்மையே”  என்றதனால்,  சிவாநுபவத்திற்குரிய   தூய  தன்மை  மெய்யடிமையால்  உண்டாவது  என்பது  பெறப்படுதலின்  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக .

                                            *****************************************

பாடல்  59.

தன்மை  பிறரால்  அறியாத

தலைவா  பொல்லா  நாயான

புன்மை  யேனை  ஆண்டையா

புறமே  போக  விடுவாயோ

என்னை  நோக்கு  வார்யாரே

யென்நான்  செய்கேன்  எம்பெருமான்

பொன்னே  திகழும்  திருமேனி

யெந்தாய்  எங்குப்  புகுவேனே.

கருத்துரை :-      முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  பெருமையையும்  தம்  சிறுமையையும்  நோக்கத்  தம்மைப்  பொறுத்த அளவில் ,  ஆண்டான்  அடிமைத்  திறத்தில்   பொருத்தம்  இன்மை  திருவுள்ளம்  பற்றக்  கூடுமோ என்று  ஐயுற்று  இரங்கிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில் , யான் சிறுமையாளனாக  இருந்தாலும் , ஆட்கொண்ட  நீ  எங்ஙனம்  கைவிடக்  கூடும்?  அங்ஙனம்  கைவிட்டால், இனி,  எங்குப்  புகல்  அடைவேன் ?  என்று  இறைவனை  முன்னிலைப்படுத்து  இரங்குகின்றார் .

பதவுரை :-  தன்மை  பிறரால்  அறியாத  தலைவா   =   தன்   இயல்பு  பிறரால்  அறியப்படாத   தலைவனே ,

பொல்லா நாயான  =  தீங்கு  மிக்க  நாய்  போன்ற ,

புன்மையேனை  ஆண்டு  =  சிறுமையுடைய  என்னை  ஆட்கொண்டருளி ,

ஐயா  புறமே  போக  விடுவாயோ  =  ஐயனே  புறத்தே  செல்லவிட்டு  ஒழிப்பாயோ,

என்னை  நோக்குவார்  யாரே  =  ( அங்ஙனம்  விடுவாய்  ஆயின் )  அடியேனைக்  கடைக்கணிப்பார்  பிறர்  யாரோ? ,

எம்  பெருமான்  =  எங்கள்  ஆண்டவனே , 

நான்  என்  செய்கேன்  =   யான்  யாது  செய்ய  வல்லேன் ,

பொன்  திகழும்  திருமேனி  எந்தாய்  =  பொன்  மயமாக  விளங்கும்  திருமேனியை  உடைய  என்  தந்தையே ,

எங்குப்  புகுவேன்  =   வேறு  எவ்விடத்தைப்  புகல்  அடைவேன்  என்பது ..

விளக்கவுரை  :-    இப் பாடலின்  தொடக்கத்தில்   கடவுள்  தலைவன்  இலக்கணம்  மிகச்  சிறந்த  முறையில்  தெளிவுறுத்தப்பட்டுள்ளது.  உலகத் தலைவன்  ,  கடவுள் தலைவன்  என  இரு  திறப்படும்  தலைவருள் , உலகத்  தலைவனாகிய  அரசனை ,  உலகத்துள்ள  மற்றை  மக்கள்  எல்லோரும்  நன்கு அறிவர் ;  அத்  தலைவன்  குணஞ்செயல்களையும்  வரையறுத்து  உணர்வர்  .  அத்  தலைவன்  பிறர்  எல்லோரையும்  அறியான் , அன்னார்  குணம்  செயல்கலையும்  நன்கு  உணரான் .  கடவுள்  தலைவனாகிய  இறைவனோ , பிறர்  எல்லாரையும்  ஒருங்கு  அறிவன் ; அன்னார்  குணம்  செயல்ளையும்   “அவனன்றி  யோரணுவும்  அசையாது”  என்றபடி , உயிர்க்கு  உயிராக  நின்று  நன்கு  உணர்வன .  பிறர்க்கு  அப்பெருமான்  பெற்றி  உணர்தல்  அரிதாகும் .  இக் கருத்துக்களை   அடக்கியே , “தன்மை  பிறரால்  அறியாத  தலைவா” என்று  சிவபெருமான்  சிறப்பிலக்கணத்தை   அருளிச்செய்வாராயினர் . “பெற்றி  பிறர்க்கரிய   பெம்மான் “  என்று  அடிகள்  பிறிதோறிடத்துக்  கூறியதும்  இக்  கருத்துப்பற்றியே .  அடிகள் , தம்மை  ஆட்கொண்ட  ஆண்டவன் ,  தலைமை  இலக்கணம்  எல்லாம்  நிரம்பப்  பெற்றவன்  என்பதைக்  குறிப்பிட்டு , அப் பெருமான்  தகுதிக்கேற்றபடி  ,  அவனால்  ஆட்கொள்ளுதற்கு  உரிய  அடிமை  இலக்கணம்  தன்பால்  சிறிதும்  இன்று  என்பதைப்  புலப்படுத்துவாராய் ,  “பொல்லாத  நாயான  புன்மையேனை  “  என்றார்.  நாய் , பிறப்பினால்  இழிவும்,  நன்றியறிவினால்  உயர்வும்  உடையதாகும் .  ஈண்டு  உயர்வுக்கு  ஏதுவாகிய  நன்றியறியும்  நலத்தை  ஒழித்துப்  பிறப்பினால்  இழிவுடையது  என்பார்,  “பொல்லா  நாய் “  என்றார்.  ஆக்கம் ,  உவமப்  பொருட்டு .

            அடிமைக்குத்  தகாத  சிறு  குணங்கள்  பலவும்  உடையோன் என்பார், “புன்மையேனை” என்றார் .  என்  புன்மையை  அறிந்தும் , நின்  பேரருள்  காரணமாக  என்னை  ஆட்கொண்டனை  எனவும்  ,  அறிந்து  ஆட்கொண்டபின், என்னைப்  புறத்தே  தள்ளிவிடல்  எவ்வாறு  அமையும்  எனவும்  கூறுவார் , “ஆண்டு  புறமே  போக விடுவாயோ” என்றார் . இதனால், இறைவனால்  ஆட்கொள்ளப்பட்டவன் , “மீளாஅடிமை  யுனக்கே யாளாய்”  என்றபடி, அவ்வடிமையினின்றும்  மீட்சி  பெற்றுப்  பிறிதிடஞ்  செல்ல  நேராது  என்பதும்  போதரும்  . “புறமே  போகவிடுவாயோ”  என்றதனால், “யான்  அடிமைக்கு  உரிய  தகுதி  இல்லேன்  “ எனினும்  என்னை  அறிந்து  ஆட்கொண்ட  நின்  பெருமை  சிறந்தது  ஆகலின் , அதற்கு  இழுக்கு  நேராவண்ணம்  என்னைப்  புறம்செல்ல  விடமாட்டாய்” என்னும்  அடிகள்  உட்கோள்  புலனாதலும்  அறிக.  இவ்  வுட்கோள்  பற்றியே , ஈண்டு, ஆண்டவனை  விளக்குங்கால் , உயர்ந்தோய்  என்னும்  பொருள்  தோன்ற , “ஐயா” என்று  அருளிச்  செய்தனர் .  ஒருவாறு  என்  பொல்லாங்கு  குறித்து  நின் பெருமையையும்  கருதாமல்  என்னைப்  புறத்தே  தள்ளிவிடுவாய்  ஆயுன் , சிறந்த தலைவனால்  ஆட்கொள்ளப்பட்டும்  , விலக்கப்பட்டவன்  என்று  கருதிப்  பிறர்  யாரும்  என்னைக்  கடைக்கனிக்க  மாட்டாரே என்பார்,  “என்னை  நோக்குவார்  யாரே”  என்றார் . ஒரு  சிறந்த  தலைவனுக்கு  ஆட்பட்டான்  ஒருவன்  எக் காரணத்தை  முன்னிட்டேனும்  விலக்கப்படுவான்  ஆயின், அத்  தலைவன்  பெருமைக்கு  அஞ்சிப்  பிறர் யாரும்  அவ்  வடிமையை  ஏற்றுக்கொள்ளமுற்படார்  என்பதும், முற்படினும், சிறந்த  தலைவனுக்கு  ஆளாயபின் , அத் துணைச்  சிறப்பில்லாத  இழிந்தார்க்கும்  ஆளாதல்  மிகவும்  இழிவு  தருவதென்று  அவ் வடிமையும்  பிறிதிடம்  செல்ல  ஒருப்படான்  என்பதும்  உலகியலில்  காணப்படுவன.  இக்  குறிப்பும்  , “என்னை நோக்குவார் யாரே” என்னும்  தொடர்  மொழியால் புலப்படுதல்  அறிக .

               ஆண்டவனே, நீ என்னைக்  கை விடுவாய்  ஆயின் , ஆதரிக்கும்  பிறர்  யாரும்  இன்மையால்,  இந்நிலையில்  யான்  செய்யத்தக்கது  யாதுளது  என்பார், “என்  நான் செய்கேன்  “ என்றார் .  ஈண்டு , என்னை  ஆண்டவனாகிய  நீ இருக்க  , அடிமையாகிய  யான்  செய்யத்தக்கது  எதுவும்  இன்று  என்பதைக் குறிக்கொண்டு  ,  “எம்பெருமான் “ என்று  விளித்தனர் .

                  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அளித்த  திருக்காட்சி, கண்கொள்ளாக்காட்சியாக  அடிகள்  கண்டு  இன்புற்றவர்  ஆதலின்,  ஞானாசிரியனாகிய  அப்  பெருமான் திருவுருவத்தை  உள்ளக்கிழியில்  எழுதிக்கொண்டு , “பொன்னே  திகழும்  திருமேனி”  என்றார்.  அத்  திருமேனியைச்  சுட்டிக்  கூறக்  கருதுங்கால்  ,  அப்  பெருமான்  தன்  பேரானந்தப்  பெருஞ்செல்வத்தை  அநுபவிக்குமாறு   சிறப்பு  முறையில்  தமக்கு  உபதேசித்த  தந்தை  எனக்கொண்டு , “எந்தாய்”  என்றார்.  சிறந்த  தந்தையின்  செல்வத்தை  அநுபவிக்கப்  பிறந்த   மைந்தனாகிய  யான் , அத்  தந்தையிடத்தை  விட்டு , வேறு  எங்குச்  செல்வேன்  என்பார், “எங்குப்  புகுவேனே” என்றார் .

                    இத்  திருப்பாட்டில்  ஒவ்வோர்  அடியிலும்  குறிப்பிட்ட  கருத்துக்கு  ஏற்ப  இறைவனை  விளித்திருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .  “தலைவா”,  “ஐயா” ,  “எம்பெருமான்” , “எந்தாய்”,  என  முறையே  நான்கு  அடிகளிலும்  கூறியிருத்தல்    காண்க.  அடிகளின்  கனிந்த  உள்ளநிலையும் , அன்பின்  பெருக்கமும்,  ஆண்டவன்  இடத்துள்ள  பேரார்வமும்  இத்  திருப்பாட்டில்  நன்கு  அமைந்துள்ளன.  வஞ்சம்  அறியாக்  குழந்தை ,  தன்னைப்  பெற்ற  தாய் , தந்தையரிடத்துத்  தன்  குறையைக்  கூறுதல்  போல் ,  அடிகள்  ஆண்டவனை  நோக்கிக்  கூறியிருக்கும்  செய்திகள்  நம்மனோர்  உள்ளத்தை  உருக்கும்  தன்மை  யுடையனவாய்  இருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .

                      இதன்கண்,  அட்கொண்ட  சிறந்த  தலைவனை  அன்றி , வேறு  புகல்  இல்லையென்று  கூறியிருத்தலால் ,  அத்  தலைவனுக்குச்   செய்யும்  தொண்டே  சிவாநுபவத்திற்கு உரிய  தூய்மை  பயப்பதாகும்  என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , அடிகளின்  அன்புமொழி  பலவற்றாலும் ,  பத்தி  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                             *********************************************************

பாடல் 60.

புகுவேன்  எனதே  நின்பாதம்

போற்றும்  அடியா  ருள்நின்று

நகுவேன்  பண்டு  தோள்நோக்கி

நாணம்  இல்லா  நாயினேன்

நெகும்அன்  பில்லை  நினைக்காண

நீயாண்டருள  அடியேனுந்

தகுவ  னேயென்   தன்மையே

எந்தாய்  அந்தோ  தரியேனே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில் , ஆண்டவனை  நோக்கி , ஆட்கொண்ட  நீ  என்னைக்  கைவிட்டால் ,  யான்  வேறு  எங்குப்  புகல்  அடைவேன்  என்று  இரங்கிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில்  யான்  அன்பு  இலேன்  ஆயினும் , அருமையாக  ஏற்றுக்கொண்டமையால் , நின் திருவடி  எனக்கு  உரியது  ஆகிவிட்டது  ஆதலின்  , அதன் கண்ணே  புகல்  அடயக்  கடவேன்  என்று  தம்  துணிபு  கூறுகின்றார் .

பதவுரை :-    நாணம்  இல்லா நாயினேன்  =  பழி பாவங்களுக்கு   நாணுதல்  இல்லாத   நாயின்  தன்மையுடைய  அடியேன் ,

பண்டு  போற்றும்  அடியார்  உள்  நின்று   =  முன்னர்  நின்னை  வழிபட்டு  நின்ற  மெய்யடியார்  குழுவின்  நடுவே  நின்று ,

தோள் நோக்கி நகுவேன்  =  என்  தோள்களின்  பணைப்பைப்  பார்த்து  இறுமாந்து  களித்தேன் ,

நின்னைக்  காண  நெகும்  அன்பு  இல்லை   =  நின்  திருவுருவைக்  கண்டு   இன்புறுதற்குரிய  குழைந்த  மெய்யன்பு   என்பால்  இல்லை ,

நீ  ஆண்டு  அருள  அடியேனும்  தகுவனே   =    இந் நிலையில்  நீ  அடிமை  கொண்டு  திருவருள்  புரிதற்கு  அடிமையாகிய  யானும்  தகுதி  உடையன்  ஆவேனோ ,

எந்தாய்  தன்மை  என்  =   என்  தந்தையே  என்  இயல்பு  இருந்தவாறு  என்னே,

அந்தோ  தரியேன் :-    ஐயகோ  இவ்வுலக  வாழ்வில்  பொறுத்து  இரேன் ,

எனது நின்  பாதமே  புகுவேன்  =   எனக்குரிய  நின்  திருவடிக்கண்னே  அடைவேன்  என்பது .

விளக்கவுரை :-    இழிந்த  கருமம்   காரணமாக  நாணுதல்  நன்  மக்கள்  நாணம்  என்பதும் ,  பழி  பாவங்களுக்கு  நாணவேண்டும்  என்பதும்  அறநூல்  விதி .  “நாணாமை  நாடாமை”  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  ,  “நாணவேண்டுமவை  பழி  பாவங்கள் “  என்று  எழுதிய  உரைக்குறிப்பும்  காண்க.  ஈண்டு,  உண்மை  அன்பு  இல்லாமல்  மெய்யடியார்  குழுவில்  புகுந்ததும் ,  இறுமாந்து  களித்தும் பழிக்கத்தக்கன  ஆகவும் , அவை  குறித்து  நாணம்  கொள்ளாமையின் , அடிகள்  தம்மை  , “நாணமில்லா  நாயினேன்” என்றார் . நாண  வேண்டியதற்கு  நாணாமை  நேரின் ,  அந் நாண் கெடாமைப்பொருட்டு  உயிரை  நீத்தலும்  தக்கது  என்ப.  “நாணால்  உயிரைத் துறப்பர்  உயிர்ப்பொருட்டால் , நாண்  துறவார்  நாணாள்பவர்”  என்னும்  பொருள் உரையும் , “உயிரினுஞ்  சிறந்தன்று  நாணே”  என்னும்  சன்றோர்  கூற்றும்  ஈண்டு  நினைக்கத்தக்கன.  அங்ஙனம்  ஆகவும் , இங்கே  அடிகள்  நாணம்  இழந்தும்  செருக்கு  உற்று  வாழ்ந்திருக்கின்றேனே என்று  இரங்கிய  படியாம் .  

               “பண்டு  போற்றும்  அடியார்”  என்றது,  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அடிகளுக்கு  உபதேசித்த  காலத்து, அப் பெருமான்  பக்கலில்  சூழ்ந்து  வழிபாடு  செய்துகொண்டிருந்த மெய்யன்பரைக்  குறிக்கும் . சிறிதும்  அன்பு  இல்லாத  யான் ஒதுங்கி  நில்லாது, நாணம் இன்றி , அவ்வுண்மை  அடியார் குழுவில்  நடுவில்  நின்றேன்  என்பார்,  “போற்றும்  அடியார்  உண்ணின்று “  என்றார்.  ஆண்டவன்  எல்லோரும்  அறிய  ஆட்கொண்டனன்  ஆதலின், அஃது   அறிந்த  மெய்  யடியார்  தம்  குழுவில்  என்னை ஏற்றுக் கொண்டனர்  ஆயினும்,  அன்பு  இன்மை  அறிந்த  யான்  ஒதுங்கி  இருத்தலே  தக்கது  ஆம்  என்று  அடிகள்  கருதினர்  என்க . ஆண்டவன்  ஆட்கொண்டு  உபதேசித்த  அளவில் , சித்த  விருத்தியை அடக்கிப்  பணிசெய்தல்  ஒன்றையே  கடப்பாடாகக்  கொண்டு  ஒழுக  வேண்டியவனாகவும் ,  அங்ஙனம்  இன்றிப்பலரும்  அறிய  என்  பெருமையை  வெளிப்படுத்தி , என்  தோள்களின்  பூரிப்பை  யானே  கண்டு  இறுமாந்து  இருந்தேன்  என்பார் , “  தோள் நோக்கி  நகுவேன்”  என்றார்.  மெய்யறிவு  இல்லாத  மக்கள் ,  “இன்பத்தி  லிறுமாந்து  தோணோக்கி  யீன்றமத,  துன்பத்தில்  அழுந்துவார்  தொல்லுலகில்  அறியாதார் “  என்றபடி ,  இன்பம்  நுகரும் காலத்து  இறுமாந்து , தம்  தோள்  பணைப்பை  நோக்குதலும் ,  துன்பம்  நுகரும்  காலத்துக்  கன்றி  வாடுதலும்  இயல்பாகக்  கொள்ளுவர்  என்பது  உலகியலில்  அறியப்படுவது.  நகுதல்  = களித்தல்  .  இங்ஙனம்  கொள்ளாது  , “தோணோக்கி  நகுவேன்”  என்பதற்கு ,  ஆண்டவன்  திருத்தோள்களைக்  கண்டு  சிரிக்கும்  அவ்வளவே  உடையேன்  என்றும்  பொருள்  கூறினாரும்  உளர் .  அது பொருட்  சிறப்பு  இன்மை அறிக . 

                    யான்  உண்மை  அடியார்  குழுவில்  நடுநயகமாக  இருக்கும்  தகுதி  பெற்றேன்  என்று  இறுமாந்து  களித்தேனே  அன்றி ,  ஆண்டவனே , நின்னைக் காண்டற்கு  உரிய  குழைந்த  அன்பு  பெற்றிலேன்  என்பார் .”நெகும்  அன்பு  இல்லை  நினைக்காண “ என்றார்.  இறைவன்  அன்பர்  உள்ளம்  உருகிய  நிலையிற்  காட்சி  அளிப்பவன்  ஆவான்  என்பதை ,”நெக்கு  நெக்கு  நினைபவர்  நெஞ்சுளே,  புக்கு  நிற்கும்  பொன்னார்  சடைப்புண்ணியன்”  என்னும்  தமிழ் மறையானும்  உணரலாம் .  நின்னைக்  காண்டற்கே  என்பால்  அன்பு  இல்லையானால் , நின்  திருவடியைச்  சார்ந்து  இருத்தற்கு  யான்  எங்ஙனம்  தகுதி  உடையனாவேன் என்பது  அடிகள்  குறிப்பு  என்க .

                        அத்தகைய  மெய்யன்பு  இல்லாத  நிலையில் ,  நீ  ஆட்கொள்ளுதற்கு  உரிய  தகுதி  என்பால்  எங்ஙனம்  அமையும்  எனவும் , ஆளாந்  தகுதியே  இல்லாதபொழுது , நின்  அருள்  பெறுதற்கு  எவ்வாறு  உரிமை  உடையனாவேன்  எனவும் , அடிகள்  அறிவித்துக்  கொள்ளுவாராய் , “நீ  ஆண்டு  அருள  அடியேனும்  தகுவேனே “ என்றார் .  தகுவனே  என்புழி .  ஏகாரம்  எதிர்மறை  வினாப்பொருளில்   வந்தது. 

                         யான்  தகுதி யற்றவன்   ஆயினும் , நின்  புதல்வன்  என்பதை  மனக் கொளல்  வேண்டும்  என்பது  குறித்து  , “எந்தாய்”  எனவும்,  அன்பு  இல்லாதநிலையிலும்   ஆட்கொண்டு  அருளிய  நின்  உயர்ந்த  இயல்பை  நோக்க , என்  இழிந்த இயல்பு  இருந்தவாறு  வருந்தத்தக்கதென்பார் ,  “தன்மையென்”  எனவும்  கூறினர்.  அமரர் , முனிவரர்,  முதலியோரும்  பல்லாயிரம்  ஆண்டு  கடுந்தவம்  புரிந்தும் , காண்டற்கு  அரிய  ஆண்டவன்  எளிவந்து  காட்சி  அளிக்கவும் ,  காணப்பெறும்  பேறு  இல்லாத  நிலையில்  இவ்வுலக  வாழ்க்கை  எற்றிற்கு  என்பார்,  “அந்தோ  தரியேன்” என்றார் .  தரித்தல் = பொறுத்தல் , இவ்வுலக  வாழ்க்கையைப்  பொறேன் என்ற  அடிகள், முடிவில்   ஆண்டவனை நோக்கித்  துணிந்து  கூறியது  யாது  எனின் ,”எனது  நின் பாதமே  புகுவேன் “  என்பது.  யான்  தகுதி  இல்லாதவன்  ஆயினும் , நின்  கருணை  காரணமாக  என்னை  ஆட்கொண்டமையால் , நின்  திருவடி  எனக்கு  உரியதாகும் . உரிய  இடத்தை  அடைதற்கு  ஏதும்  தடை  இன்று  ஆதலின், அத் திருவடிக்கண்ணே  கூடுவேன்  என்பார் , “எனது  நின்  பாதமே  புகுவேன்” என்றார்.  “ஏனதே  நின்  பாதம்  “   என்புழி , ஏகாரத்தைப்  பிரித்துக்கூட்டுக .  துணிபொருளைப்  பாட்டின்  தொடக்கத்திற்   கூறியது,  உறுதி  இது  எனத்  தெளிவுறுத்தற்  பொருட்டு  என்க.  இதற்கு  முன்  உள்ள  திருப்பாட்டில்  ,  “எந்தா  யெங்குப்  புகுவேனே”  என்று  வருந்திக்  கூறியதற்கு  அமைதி  கூறியவாறு  இது.

                         இதன்கண்,  “புகுவேன்  எனதே  நின்பாதம் “  என்றதனால் , திருவடி  கூடுதலே  சிவாநுபவத்திற்கு  உரிய  தூய்மை  பயப்பது என்பது  பெறப்படுதலின் ,  அநுபோக சுத்தி  என்னும் பதிகம்  நுதலிய  பொருளும்  , “எந்தாய்  அந்தோ  தரியேனே “ என்றதனால் ,  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  தோன்றுதல்  அறிக.     

7.    காருணியத்   திரங்கல்

         காருணியத்  திரங்கல்   என்பது  ஆண்டவன்  கருணையைக்  குறித்து  இரங்குதல்  என்னும்  பொருள்  உடையதாகும்,  சிவாநுபவ  நிமித்தம்  செய்து கொள்ளப்படும்  உயிர்த்தூய்மை  முன்னைப்  பதிகத்திற்  கூறப்பட்டது . பேரின்பப்  பிழம்பாகவும்  , தூய  ஞானச்  சுடர்  ஒளியாகவும்  உள்ள  இறைவனை  அநுபவித்தற்குத்  தடையாக  உள்ள  குற்றங்களைப்  போக்கி , சிவானந்தத் தேறலை  நிரப்பிக் கொள்ளுதற்குத்  தகுதியான  கொள்கலனாக  உயிர் இயல்பு  தூயதாயபின் ,வேண்டற்பாலது  சிவபெருமான்  திருவருள்  விளக்கமேயாகும்  .  பாசநீக்கத்தின்  பின்  சிவப்பேறு  உண்டாம்  என்பது சைவ  நூற் கொள்கை .  அச்  சிவப்பேறு  ஆனந்தத்து   அழுந்தல்  முதலிய  பிவரும்  மூன்று  பதிகங்களாலும்  தெளிவு  படுத்தப்பட்டுள்ளன .  அச்  சிவப்பேற்றுக்கு  முன்னரும் , பாச  நீக்கத்தின்  பின்னரும்   வேண்டற்பாலது  இறைவன்  திருவருட்  பதிவு  ஆகும்.  அவ்  அருளே  ஈண்டுக்  காருணியம்  என்று  குறிக்கப்பட்டுள்ளது.  அவ்  அருட்பேறு  கருதியே,  அடிகள்,  காத்து  அருள்க,  வணக்கம்  என்னும்  பொருளுடைய  போற்றி  என்னும்  அன்பு மொழியைப்  பாடல்  தோறும்  பலமுறை  கூறி  இறைவனை  வேண்டி  இரங்குவார்  ஆயினர். அடிகள்  இரங்கி  வேண்டிய  குறிப்பு  மொழிகள்  ஒவ்வொரு  திருப்பாட்டிலும் ,  அமைந்து  இருத்தலை  ஆங்கு  ஆங்குக்  காணலாம் . இதனாற்  பதிக  இயைபு  புலனாதல்  அறிக. 

அறுசீர்க்கழி  நெடிலடி  ஆசிரிய  விருத்தம்

பாடல் 61.

தரிக்கிலேன்  காய  வாழ்க்கை

சங்கரா  போற்றி  வான

விருத்தனே  போற்றி  எங்கள்

விடலையே  போற்றி  ஒப்பில்

ஒருத்தனே  போற்றி  உம்பர்

தம்பிரான்  போற்றி  தில்லை

நிருத்தனே  போற்றி  எங்கள்

நின்மலா  போற்றி  போற்றி

கருத்துரை :-     முன்னைப்  பதிகத்தின்  இறுதித்  திருப்பாட்டில் ,  யான்  தகுதியற்றவன்  ஆயினும் ,  என்னை  ஆட்கொண்டமையால்  எனக்கு  உரிய  நின்  திருவடிக்கண்ணே புகுவேன்  என்று  உறுதி  கூறிய  அடிகள் ,இத்  திருப்பாட்டில் ,  அங்ஙனம்  புகுதற்கு  தடையாக  உள்ள  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைச்  சிறிதும்  பொறேன்,  இதனை  ஒழித்து இன்பம்  நல்குக  என  இரங்கி  வேண்டுகின்றார் . 

பதவுரை :-   காய  வாழ்க்கை  தரிக்கிலேன்  =  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பொறேன் ,

சங்கரா  போற்றி  =  இன்பம்  செய்பவனே  காத்து  அருள்க ,

வானவிருத்தனே  போற்றி   =  நுண்ணிய  பரவெளியில்  விளங்கும்  முதியோனே  காத்து  அருள்க,

எங்கள் விடலையே  போற்றி      =   சிறியேம்  ஆகிய  எங்கள் திண்ணியோனே  காத்து  அருள்க,

ஒப்பு  இல்   ஒருத்தனே  போற்றி   =   ஒப்பற்ற   தனி  முதல்வனே  காத்து  அருள்க,

உம்பர்  தம்பிரான்  போற்றி   =  தேவர்  தலைவனே  காத்தருள்க ,

தில்லை  நிருத்தனே  போற்றி    =  தில்லை  நகரில்  அருள்  நடம்  புரியும்  கூத்தப்பெருமானே  காத்தருள்க ,

எங்கள்  நின்மலா  போற்றி  போற்றி     =  பாசப்பிணிப்பு  உடையேமாகிய  எங்கள்  தூயோனே  காத்து  அருள்க , என்பது.

விளக்கவுரை :-   சங்கரன்  =  இன்பம்  செய்பவன்  .  இறைவனை  இன்பம்  செய்பவன்  என்று  விளித்தமையால்  ,  காய  வாழ்க்கை  துன்பம்  செய்வதாகும்    என்பது  போதரும் .  துன்பம்  செய்வதாகிய  இவ்வுடலோடு  கூடிய  வாழ்க்கையை ,  “தினைத்  துணையேனும்  பொறேன்  என்றபடி , “தரிக்கிலேன்” என்றார் .  செயப்படுபொருள்  ஆகிய  காய  வாழ்க்கையைப்  பின்னும்,  முடிக்கும்  சொல்லாகிய  தரிக்கிலேன்  என்னும்  வினையை  முன்னும்  கூறினார் ; புழுக்கூடு  ஆகிய  உடலின்  அருவருப்பைப்  பொறாது  , அதனின்  நின்றும்  வெளிப்படவேண்டும்  என்னும்  ஆர்வமும்  விரைவும் குறிக்கொண்டு  என்க.  “சங்கரா போற்றி “  என்றதனால் , அவன்  காப்புப்  பேரின்பம்  செய்வதாகும்  என்பது  கருத்து ,  “போற்றி”  என்னும்  சொல் ,  வணக்கம்  என்னும்  பொருளும்  உடையது  ஆகும் . சிலப்பதிகாரத்தில் , “பொய்தீர்  காட்சிப்  புரையோய்  போற்றி” என்புழி , “போற்றி”  என்பதன் இகரத்தை  வியங்கோட்  பொருளாகக்  கொண்டு  , “போற்றுக”  என்று  அடியார்க்கு  நல்லார்  பொருள்  கூறியதும்  காண்க.  இறைவனை  விளித்துக்கூறிய  இடங்களிலெல்லாம்  , இரண்டு  பொருளும்  பொருந்தும்  ஆயினும்  ஈண்டுக்  காத்தருள்க  என்னும்  பொருள்  சிறந்ததாகும் .  ஏனையிடங்களில்  வணக்கம்  என்னும்  பொருள்  கொள்ளலாம். 

                 வானம்,  ஈண்டு  ஞானாகாயத்தை  உணர்த்தும் .  இதனை  வட  மொழியாளர்,  தகராகாசம்  எனவும் ,  அதன்கண்ணே  சிவபெருமானைக் கண்டு   வழிபடல்  தகரவித்தை  எனவும்  கூறுவர்  நுண்ணிய  ஞானப் பெருவெளியில்  விளங்கும்  பழமைபற்றி , “‘விருத்தனே”  என்றார்  .  இறைவனது  முதுமை ,  காலதத்துவத்தைக்  கடந்தது  ஆதலின்,  அளவிட்டு  அறிதற்கு  அரிது  என்ப,  திருத்தொண்டர்  புராணத்தில் , “மொய்த்துவளர்  பேரழகு  மூத்த  வடிவையோ ,  அத்தகைய  மூப்பெனும்  அதன்  படிவமோயோ, என்று  அம்  மூப்பு  வருணிக்கப்பட்டு  இருத்தல்  காண்க. சிறியேமாகிய  எங்களுக்கு , அம்  முதிய  நிலை  காண்டற்கு  அரியது  எனக்கொண்டு , காளைப்  பருவத்தன்  ஆய்  என்பார், “விடலையே”  என்றார். விடலை  என்னும்  சொல்  பதினாறு  முதல்  முப்பது  ஆண்டு  வரை  உள்ள  ஆண்மகனை  உணர்த்தும் ; யெளவன  பருவம்  உடையவன்  என்பது  மூப்பு , விடலை  முதலிய  பருவங்கள்  இறைவனுக்கும்  உளவாயின் , மக்களினின்றும்  இறைவனுக்கு  வேறுபாடு  என்னை  எனின் ,  பாலனாகி  விடலையாகிக்   கிழவனாதல்  மக்கள்  இயல்பு ;  இதற்கு  மாறாகக்  கிழவனாகிப்  பின்  காளையாய்க்  கிஞ்சுச்  செவ்வாய்  மழலை  ஆதல்  இறைவன்  திருவிளையாட்டு  என்க.  அம் முறயில், ஈண்டு  விருத்தனாகி  விடலை ஆயினான்  என்றார்.  இவ்  வேற்றுமையால்  இறைவன்  உருக்கோடல்  நம்மனோர்  நலம்  குறித்து  என்பது  போதரும். 

                    முதுமைப்  பருவம் , காளைப்பருவம்  முதலியவை  குறித்து,இறைவனை  மக்கள்  அளவில்  எண்ணிவிடல்  ஆகாது  என்பதை  மீண்டும்  வலயுறுத்தற்கு , “ஒப்பில்  ஒருத்தனே”  என்றார்,  மக்கள் ,தேவர்  முதலியோருள்  ஒப்பு  ஆவார்  யாரும்  இல்லை  என்பதோடு , தனி  முதல்வனும்  ஆவான்  என்பது  கருத்து. முதுமைப்  பருவமும்,  விடலைப்  பருவமும்  மக்களுக்கு  உரியன  ஆதலின் , ஒப்பில்  ஒருத்தன்  என்பது,  மக்களை  நோக்கக்  கொள்ளத்தக்கது;  தேவர்களுக்கு  எத்தகையன்  எனின் , அவர்க்கும்  தலைவன்  ஆவான் என்பார், “உம்பர்  தம்பிரான் “என்றார் . “விண்ணோர்  முழுமுதல்” என்பது  காண்க. 

                     தேவர்களுக்குத்  தலைவன்  ஆயினும் , அன்னார்  காண்டற்கு  அரியனாய் , மக்களுக்கு  எளியனாய்த்  தில்லை  நகர்க்கண்  எழுந்தருளி , ஐந்தொழில்  திருக்கூத்து  இயற்றும்  அருளாளன்  என்பது தோன்ற , “தில்லை  நிருத்தனே”  எனவும் , கூத்து  இயற்றல்  தற்பயன்  கருதி  அன்று ; உயிர்த்தொகுதிகள் கண்டு  உயர்தற்  பொருட்டு , என்பது  தோன்ற , “எங்கள்  நின்மலா” எனவும்  கூறினர் .  நின்மலன்  =  தற்பயன்  கருதுதல்  ஆகிய  அழுக்கு  இல்லாதவன்  என்னும்  பொருட்டு.

                        இத்  திருப்பாட்டில்  ஏழு  முறை   விளித்து , எட்டு  முறை  காத்து  அருள்க  என்றார் . ஆண்டவனை  அழைக்கும்  அளவினும்  தமக்குக்  காப்பு  வேண்டும்  அளவில்  ஆர்வம்  விஞ்சி  நிற்றலால்  என்க.

                          இதன்கண்,  சங்கரன்  முதலிய  சொற்களால்  விளித்து , போற்றி  என்று  பலமுறை  வேண்டிக்கொண்டமையின் ,  காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “தரிக்கிலேன்  காய  வாழ்க்கை  “ என்றதனால்  வைராக்கியமும் , போற்றுக  என்றமையால்  பத்தியும்  தோன்றுதலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக . 

                                                   ***************************************

பாடல்  62.

போற்றியோ  நமச்சி  வாய

புயங்கனே  மயங்கு  கின்றேன்

போற்றியோ  நமச்சி  வாய

புகலிடம்  பிறிதொன்  றில்லை

போற்றியோ  நமச்சி  வாய

புறமெனைப்  போக்கல்  கண்டாய்

போற்றியோ   நமச்சி  வாய

சய சய  போற்றி  போற்றி .

கருத்துரை  :-      முன்னைத்  திருப்பாட்டில்   உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பெற்றேன்  என்ற  அடிகள் ,  இத்திருப்பாட்டில்   அவ்வுடலை  விட்டுச்  செல்லும்  இடம்  பிறிது  இன்று  ஆதலின் , புறத்தே  என்னைப்  போக்கல்  ஆகாது ;  நின்  திருவடிக்கண்ணே  இயைத்துக்  கொள்ளல்  வேண்டும்  என்று  இரங்கி  வேண்டுகின்றார் .

பதவுரை :-     ஓம்  நமச்சிவாய  போற்றி   = ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க,

புயங்கனே  மயங்குகின்றேன்  =   பாம்பை  அணிகலனாக  உடையவனே  மயங்குகின்றேன்

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம் நமச்சிவாயனே  காத்தருள்க,

புகலிடம்  பிறிது  ஒன்று  இல்லேன்  =  யான்  புகுதற்கு  உரிய  இடனாக  வேறு  ஒன்றும்  இல்லாதவன்  ,

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க,

என்னைப்  புறம்  போக்கல்  =  என்னைப்  புறத்தே  தள்ளிவிடலாகாது ,

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க ,

சய  சய   =  வெல்க  வெல்க

போற்றி  போற்றி   =  காத்தருள்க  காத்தருள்க   என்பது .

விளக்கவுரை :-  திருவைந்தெழுத்தை  நகாரம்  முதலாக  ஓதுதல்  மறைவழக்கும்  சிகாரம்  முதலாக  ஓதுதல்  ஆகமவழக்கும்  ஆம் . திருவாசகம், தமிழ்மறை    ஆதலின் , இதன்  தொடக்கத்திலே, “நமச்சிவாய  வாழ்க” என்று  கூறப்பட்டுள்ளது .  ஏனைய  மந்திரங்கள்  எல்லாம்  பிரணவத்தோடு  கூடியே  எண்ணப்படுவன  ஆம் . சிவபெருமானைப்பற்றிய  இத்  திருவைந்தெழுத்து  மந்திரம்,  பிரணவம்  இன்றியே  எண்ணப்படுவதாகும் ;  காரணம் , திருவைந்தெழுத்திற்கும்  பிரணவத்துக்கும்  வேறுபாடு  இன்மையாம்  என்க. பிரணவம்  ஆகிய  ஓம்  என்பதன்  விளக்கமே  திருவைந்தெழுத்து  என்பர்.  அவ்  விரண்டும்  முறையே  தொகையும்  விரியுமாகக்  கொள்ளப்படுவனவாம் .அம்  முறையே  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்டது  என்க .  “ஓம்  நமச்சிவாய  போற்றி”  என்பதற்குப்  பிரணவத்தின்  வேறுபாடு  இல்லாத  திருவைந்தெழுத்தின்  வாச்சியப்  பொருளாக  உள்ள  சிவபெருமானே  காத்தருள்க  என்பது  பொருள்  ஆகும் .  இத்  திருப்பாட்டின்  ஏனைய  மூன்று  அடிகளிலும்  உள்ள , “போற்றியோ நமச்சிவாய”  என்னும்  தொடர்கலுக்கும்  இவ்வாறே  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  அடிகள்  தம்  திருமுறையில்  நகார  முதலாகக்  கூறினும் ,  ஞானாசிரியனாக  இறைவனிடத்துப்  பெற்ற  உபதேசம்  சிகார  முதலாக  என்பது ,  “நானேயோ  தவஞ்  செய்தேன்  சிவாய  நம  வெனப்  பெற்றேன் “  என்னும்  பாடற்  பகுதியால்   உணரலாம் .  இன்னும்  திருவைந்தெழுத்தின்  தூல  சூக்கும  காரண   முதலிய  நிலைகளும்  ,  நிற்குமுறை , ஓதுமுறை , முதலிய  இயல்களும்  பிறவும்,  திருமந்திர  முதலிய  நூல்களானும் , உபதேச  முறையாலும்   அறிந்து  தெளியத்தக்கன  .

                       புயங்கம்  =  பாம்பு .  நஞ்சு  காலும்  பாம்பை  அணிகலனாக  ஏற்றுக்கொண்டிருக்கும்  நீ ,  என்னை  ஏற்றுக்கொள்ளல்  ஆகாது ; என்  தகுதி  நின்னை  அணுகுதற்குப்  போதியது  ஆகாமைக்குக்  காரணம்  அறியாமல்  கலங்குகின்றேன்  என்பார் , “புயங்கனே  மயங்குகின்றேன்”எனவும்,  இம்  மயக்கத்தின்  தெளிவாக  வேற்றிடம்  செல்லலாம்  எனின் ,  என்னை  ஏற்று  கோடற்கு  உரிய  புகலிடம்  வேறு  யாதும்  இன்று  என்பார், “புகலிடம்  பிறிதொன்றில்லேன்”  எனவும் , அத்தகைய  ஓரிடத்தை  நின்னின்  வேறாக  அமைத்து , அதன்கட்  செல்லுக  என்று  கட்டளையிடல்   ஆகாது  என்பார் , “புறம்  எனைப்  போக்கல்”  எனவும்  கூறினர் .  போக்கல்  என்புழி  ,  அல்லீறு  எதிர்மறைபொருளில்  வந்தது  .  கண்டாய் என்பது  ,  முன்னிலை  அசைச்சொல் . 

                          புகலிடம்  பிறிதொன்று  இல்லேன்  எனவும், புறம்  எனைப்  போக்கல்  எனவும்  கூறியதால், “புகுவேன்  எனதே  நின்  பாதம் “  என்றபடி , எனக்குப்  புகலிடமாவது  என்னை  ஆட்கொண்ட  நின்  திருவடியே  ஆகும்  என்பதும் , அதன்  கண்ணே  புகுவேன்  என்பதும்  குறிப்பெச்சத்தாற்  கொள்ளத்   தக்கனவாம் .  “வெல்க  வெல்க ; காக்க  காக்க”  என்னும்  பொருள்  தோன்ற ,  “சய  சய  போற்றி  போற்றி  “ என்று  அடுக்காகக்  கூறப்பட்டன.  “வாழ்த்துவதும்  வானவர்கள்  தாம்  வாழ்வான்”  என்றபடி , இறைவனை  நோக்கிக்  கூறிய  வெற்றி  தமக்கு  உண்டாக  வேண்டுமென்பது  கருத்து .  ஈண்டு  அடிகள்  கருதிய  வெற்றி ,  “புகுவேன் எனதே  நின்பாதம்”  என்னும்  துணிவின்  பயன்  ஆகும் .  அடுக்கு , ஆர்வத்தால்  உண்டாய  விரைவு  தோன்ற  நின்றது . சிறந்த  தத்துவ   உண்மைகளைத்  தன்னுள்  அடக்கி  நிற்கும்   திருவைந்தெழுத்தைப்  பிரணவத்துடன்  பலமுறை  ஓதுதலால் ,  அழிவில்  இன்பப் பேறு  உண்டாம்  ஆதலின் ,  நான்கு  அடிகளினும்  நாநலம்  கனிய  ஓதுவார்  ஆயினர்.

                      இதன்கண்,  “புகலிடம்  பிறிதொன்றில்லேன்”,   “புறம்  என்னைப்  போக்கல்”  எனவும் ,  “மயங்குகின்றேன் “  எனவும்  கூறியவற்றால் , ஆண்டவன்  திருவருளை  வேண்டி  இரங்குதல்  பெறப்படுதலின் ,  காருணியத் திரங்கள்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக. 

                                       ***********************************************

பாடல் 63. 

போற்றியென்  போலும்  பொய்யர்

தம்மைஆட்  கொள்ளும்  வள்ளல்

போற்றிநின்  பாதம்  போற்றி

நாதனே  போற்றி  போற்றி

போற்றிநின்  கருணை  வெள்ளப்

புதுமதுப்  புவனம்  நீர்தீக்

காற்றிய  மானன்  வானம்

இருசுடர்க்  கடவு  ளானே .

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில் ,  வேறு  புகல்  இடம்  இல்லாமல்  வருந்துகின்ற  என்னைப்  புறத்தே  தள்ளிவிடல்  ஆகாது  என்று  ஆண்டவனை  நோக்கி  இரங்கிக்கூறிய  அடிகள் ,  இத்திருப்பாட்டில்  நின்  அகத்தே  என்னை  ஈர்த்து ,  அருள்  வெள்ளமாகிய  புதிய  தேனை  உண்பித்துப்  பாதுகாத்து  அருள  வேண்டும்  என்று  விண்ணப்பம்  செய்கிறார் .

பதவுரை  :-   என்போலும்  பொய்யர்  தம்மை  ஆட்கொள்ளும்  வள்ளல்  போற்றி=    என்னைப்  போன்ற  மெய்யன்பு  இல்லாரை  அடிமை  கொள்ளும்  வள்ளற்  பெருமானே  காத்தருள்க.

நின்  பாதம்  போற்றி  போற்றி  =   நின்  திருவடிக்கு  வணக்கம்  வணக்கம் ,

நாதனே  போற்றி  போற்றி   :-  எம்பெருமானே  காத்தருள்க  காத்தருள்க  ,

புவனம், நீர் , தீ , காற்று , வானம் இருசுடர்  இயமானன்  கடவுளானே  =

நிலம் , நீர் , நெருப்பு , காற்று , விசும்பு ,  இரண்டு  ஒளி  மண்டிலங்களாகிய  கதிரவன் , திங்கள் , உயிர் , என்னும்  எண்வகைப்  பொருள்களையும்  திருமேனியாகக்  கொண்டு  மூர்த்திமானாக  விளங்கும்  கடவுளே ,

நின்  கருணைப்  புதுமது வெள்ளம்  போற்றி  =  நினது  அருளாகிய  புதிய  தேன்  வெள்ளம்  என்னைக்  காத்தருள்வதாக  என்பது. 

விளக்கவுரை  :-    . பொய்க்கு  வித்தாக  இவ்வுலக  வாழ்க்கையில்  என்னை  வைத்தாய்  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறுவர்  ஆதலின் , தம்மைப்  பொய்மையாளர்க்கு  உவமமாகக்  குறிப்பிட்டார்.  “உயர்ந்ததன் மேற்றே  யுள்ளுங்காலை  “  என்றபடி ,  உவமேயப்  பொருளினும்  உவமம்  உயர்ந்ததாக  இருத்தல்  வேண்டும்  என்பது  விதி .  அவ்விதிப்படி,  ஏனைப்  பொய்மையாளரினும்   தம்  தகுதி  உயர்ந்தது  எனக்  கருதி, “என்  போலும்  பொய்யர்”  என்றார் .  பொய்யர்  என்றது , அகத்தே  அன்பு  இன்றிப்  புறத்தே  அன்பு  உடையராக  நடிப்போரைக்  குறிக்கும் . “நாடகத்தால்  உன்  அடியார்  போல்  நடித்து”  என்பது  அடிகள்  திருவாக்கு .  அத்தகைய  பொய்யரையும்  ஆட்கொள்ளுதலின்  , இறைவன்  வள்ளல்  எனப்பட்டான் .  கொடை  மடம்  பட்டு,  வரையாது  வழங்குவோன்  வள்ளல்  ஆவான் .  “முல்லைக்குத்  தேரும்  மயிலுக்குப்  போர்வையும்  “  வழங்கியது , வரையாது  வழங்கற்குச்  சான்றாம்  என்க . வரையாமையாவது  , தகுதி  உடையார் , தகுதி  இல்லார்  என்னும்  ஏற்றத்தாழ்வு  உணர்ந்து,  தகுதி  இல்லாரை  நீக்காமை,  மெய்யரையும்  பொய்யரையும்  ஆட்கொள்ளும்  வள்ளல்  என்பதினும்,  தகுதியில்லாரை  மாத்திரம்  குறிப்பிட்டுப்  பொய்யரை  ஆட்கொள்ளும்  வள்ளல்  என்பதே  சிறந்ததாகும் . என்னை ?  கொடை  மடம்  ஆகிய  வள்ளன்மையின்  முக்கிய  நோக்கம்  அதுவாதலின்  என்க.

                         “போற்றி  நின் பாதம்  போற்றி”  என்று  திருவடியை  நடுவண் அமைத்து ,  முன்னும்  பின்னம்  வணக்கம்  கூறியது ,  பொய்யர்க்கு  உவமமாகவுள்ள  தம்மையும்  அடிமை  கொண்டு  காட்சியளித்த  பேருதவி  கருதி  என்க.   திருவடிவாகிய  அவயவத்திற்கு  வணக்கம்  கூறி , அவயவியாகிய  இறைவனைக்  குறித்துக்  காப்பு  வேண்டுவார் ,  “நாதனே போற்றி  போற்றி “ என்றார் .  ஈண்டும்  அடுக்கு , ஆர்வம்  பற்றிய  விரைவுப்  பொருளில்  வந்தது. 

                            “புவனம்  நீர் ……இருசுடர்  “  என்பன,  செய்யுள்  இயல்பு  கருதி  முறை  பிறழ  வைக்கப்பட்டன.  ஐம்பெரும்பூதங்களும்  ,  கதிரவன்  ,  திங்கள்  என்னும்  ஒளி மண்டிலங்களும் ,  இயமானன்  எனப்படும்  உயிரும்  ஆகிய  இவ்  எண்வகைப்  பொருள்களும்  அல்லாமல் , காணப்படும்  இவ்வுலகம்  என்பது  பிறிது  இன்மையின் , இவ்வெல்லாவற்றையும்  திருமேனியாகக்  கொண்டு , இறைவன்  மூர்த்திமானாக  விளங்குவன்  என்று  மறை  ஆகமங்கள்  கூறும்.   இதனால்,  இறைவன்  எல்லாமாய்  விளங்குவன்  என்பதும் , “கடவுளானே “  என்றதனால்,  இவை  அல்லதுமாய்  உள்ளான்  என்பதும்  பெறப்படும்  என்க.

                                கடவுள்  என்பது , எல்லாவற்றையும்  கடந்து  இருப்போன்  என்னும்  பொருள்  உடையதாகும்.  இங்ஙனம்  ஆகிய  இறைவனது  அருட்குணமே  அன்பர்க்கு  இன்றியமையாத  பேரின்பப்  பயனை  விளைவிப்பதாகும்  ஆதலின் , குனிப்பொருளாகிய  இறைவனை  , அகண்ட  வடிவத்தில்  வைத்து  விளித்துக்  குணத்தை  நோக்கிக்  காப்பு  வேண்டுவார்  ஆயினர் . இறைவன்  அருட்குணத்தை, “அருளாரமுதப்  பெருங்கடல் “  என்று  பிரிதோரிடத்துக்  கூறியபடி ,  ஈண்டு  இனிமை  மிக்க  பொருள்களுள்  சிறந்த  தேனாகக்  கொண்டும் ,உலகில்  சுவைத்து   அறிந்த  தேனைப்  போள்  இல்லாமல் , என்றும்  அறியாத  புதிய  சுவையுடைய  தேனாகக்  கண்டும்  , “கருணைப்  புது  மது “  என்றார்.  உலகப்பொருள்களுள்  இனிமை  மிக்கதற்கு  வேறு  உவமம்  இல்லாமையால் . தேனெனப்பட்டது  ஆயினும்  ,  “புல்லாகிப்  பூடாய்  “  என்றபடி  ,  தாம்  எடுத்த  பிறவிகளுள்  , எப்பிறவியினும்  அறியப் படாத  சுவையுடைமை  கருதிப்  புதுமை  அடை  புணர்க்கப்பட்டது  என்க.   பிறப்பு  அறும்  நிலையில்  சுவைக்கப்படுவது  ஆதலின்,  அது  புதுமது  ஆயிற்று  என்க.  அத்தகைய  புதுமது   வெள்ளப்பெருக்குக் கரை  புரண்டு  ஓடக்கூடும்  , கொள்வார்  அரியர்  ஆயினார்  என்பதும் ,  அவ்  வருமை  நோக்கியே  தம்மைப்  போன்ற  பொய்யரையும்  ஆட்கொள்ளும்  வள்ளல் ஆகினான்  இறைவன்  என்பதும்  குறிப்பு.

                     இதன்கண்,  “போற்றி  நின்  கருணை  வெள்ளப்  புதுமது”  என்றதனால் , ஆண்டவன்  கருணைக்  குணத்தை  நோக்கிக்  காப்பு  வேண்டி  இரங்குதல்  பெறப்படுதலின் , காருணியத்திரங்கல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                           ****************************************

பாடல்  64.

கடவுளே  போற்றி  யென்னைக்

கண்டுகொண்டருளு  போற்றி

விடவுளே  உருக்கி  யென்னை

ஆண்டிட  வேண்டும்  போற்றி

உடலிது  களைந்திட்  டொல்லை

உம்பர்தந்  தருளு  போற்றி

சடயுளே  கங்கை  வைத்த

சங்கரா  போற்றி  போற்றி.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவனே ,  “நின்  கருணை  வெள்ளம்  ஆகிய  புதிய  தேனை  நுகர்வித்து  என்னைக்  காத்து  அருள வேண்டும்”   என்று  விண்ணப்பம்  செய்துகொண்ட  அடிகள், இத் திருப்பாட்டில்,அதனை  உண்டற்கு  யான்  தகுதி  உடையனாக  அருட்பார்வை  நல்கியும் ,  அகப்  புறப்பற்றை ஒழித்தும்  அருள்  புரிய வேண்டும்  எங்கின்றார்.

பதவுரை  :-.   கடவுளே  போற்றி  =  எல்லாவற்றையும்  கடந்து  நிற்கும்  இறைவனே  காத்து  அருள்க ,

என்னைக்  கண்டு  கொண்டு  அருளு  போற்றி  =  அடியேனை  அருணோக்கம்  நல்கி  ஏற்றுக்கொண்டு  அருளுக,,வணக்கம்.

விட உள் உருக்கி  என்னை  ஆண்டிட வேண்டும்  போற்றி  =  புறப்பற்று  ஒழிய  என்  உள்ளத்தை  உருக்கி  அடியேனை  ஆட்கொள்ளல்  வேண்டும்  வணக்கம் ,

உடல்  இது  களைந்திட்டு   =    உடலாகிய  இவ்  அகப்பற்றையும்  ஒழித்து  , 

ஒல்லை  உம்பர்  தந்தருளு  போற்றி  =  விரைவில்  மேலாகிய  வீட்டு  இன்பத்தைத்  தந்து  அருளுவாயாக , வணக்கம் 

சடையுளே  கங்கை  வைத்த  சங்கரா  போற்றி  போற்றி   =   சடையின்  கண்ணே  கங்கையை  வைத்து  உலகைக்காத்து   அருளிய  சங்கரனே  வணக்கம்  வனக்கம்  என்பது.

விளக்கவுரை :-   மெய்யுணர்வினாலன்றி  ,  மக்களுடைய  மன  மொழி  மெய்களுக்கு  எட்டாதவன்  என்பது  தோன்ற  , “கடவுளே”  என்றார். இதனால்,  யான்  நின்னை  அறிந்து  அணுகும்  ஆற்றல்  இல்லாதவன்  என்பது  பெறப்படுதலின்  ,  நீயே  என்னை  அருட்பார்வை  நல்கி  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்  என்பார், “கண்டுகொண்டருளு”  என்றார்.  இறைவன்  அருணோக்கமே  நயன  தீக்கை  என்ப.   “அருணோக்கில்  தீர்த்த  நீராட்டிக்கொண்டாய்  “  என்பது  தமிழ்மறை .  யாரையும்,  எவற்றையும்  கடந்து  நிற்கும்  பொருளை , ஓர்  உயிர்  அணுகி  அறிதல்  அரிது  ஆதலின்,  அவ்விறைவனே  தன்  அருட்பார்வைக்கு  இலக்கு  ஆக்கித்  தூய்மைப்படுத்து  ஏற்றுக்கொள்வன்  என்பது  கருத்து. 

                            “விட”  என்பது, புறப்பற்று  ஒழிய  என்னும்  பொருளதாம்,  பின்னர்,  அகப்பற்றாகிய  உடல்  ஒழிவு  கூறப்படுதலின்  , ஈண்டு,  ஏனைய   புலநுகர்  பொருள்கள்    ஆகிய  புறப்பற்று  என்பது  வருவித்து  உரைக்கப்பட்டது.  தான்  அல்லாத  உடம்பை  யான்  என்றும்  ,  தன்னோடு  இயைபு  இல்லாத  பொருளை  எனது  என்றும்  கருதி ,  அவற்றின்கட்  பற்றுச் செய்தல் ,  முறையே  அகப்பற்றும் , புறப்பற்றும்  ஆகும்  என்ப.  யான்  வந்தேன்;  போனேன்  என்புழி, வருதல்  போதல் உடம்பின்  செயல்களாகவும் ,  அச்  செயல்களுக்கு  வினை  முதலாக  உயிர்  யான்  எனத்  தன்னைக்  குறித்தலான் , அஃது  அகப்பற்று  ஆயிற்று ,  “பிறப்  பறுக்கல்  உற்றார்க்கு  உடம்பும்  மிகை”  என்பது  பொருளுரை,  ஐம்புல நுகர்ச்சி  நிமித்தம்  படைக்கப்பட்ட  பொருள்    எல்லாம்  தன்னோடு  இயைபு   இல்லனவாகவும் ,  எனது  எனது  என்று  கருதிப்  பற்றுச்  செய்யப்படுதலின்,  அது  புறப்பற்று  ஆகும் . புறப்பற்று  , மனம் பொறிவழிச்  சென்று  புலநுகர்ச்சியில்  ஈடுபடுதலான்  உண்டாவது.  “அடல்  வேண்டும்  ஐந்தன்  புலத்தை” என்பது  திருக்குறள். ஆகவே,  புறப்பற்று  ஒழிவிற்குப்  பொறிவழிச்  செல்லும்  மனவலி  குறைய  வேண்டும்  என்பது  போதரும்.  இது  குறித்தே  , ஈண்டு , “உள்  உருக்கி “ என்றார்.  மனம்  வலிதாக  நின்று  புலன்  நுகர்விற்  செல்லாமைப்  பொருட்டு, அதனைக்  கரைத்து , அன்பு  மயம்  ஆக்கவேண்டும்  என்பது  கருத்து.  புறப்பற்று  எல்லாம்  ஒழிய ,  எனது  என்பதற்குப்  பொருலாக  உள்ளது.   “புகுவேன்  எனதே  நின்பாதம்”  என்று  அருளியபடி ,  தம்மை  ஆட்கொள்ளுதற்கு  உரிய  இறைவன்  திருவடியே  ஆம்  என்பார்,  “என்னை  ஆண்டிடவேண்டும் “  என்றார்.

                            புலநுகர்  பொருள்களில்  உள்ள  பற்று  ஒழிந்த  அளவில் , வீட்டின்பம்  பெற  இயலாதாகலின் , யான்  என்பதற்குப்  பொருளாக  உள்ள  உடலைப் பற்றிய  அகப் பற்றும்  ஒழிய  வேண்டும் என்பார் , “உடலிது  களைந்திட்டு” என்றார்.  இது  என்பது  அகப்பற்று  என்னும்  பொருட்டு.  இதனையும்  என்று  விரித்துக்  கொள்ளல்  வேண்டும் . உடலைப்பற்றிய  பற்று  ஒழிதற்கு , உடலையே  ஒழித்தல்  வேண்டும்  என்பது  அடிகள்  கருத்து.. “பிறப்பறுக்கல்  உற்றார்க்கு   உடம்பும்  மிகை”  என்புழி.  “இவ்வுடம்புகளால்  துன்பம்  இடயறாது  வருதலை  உணர்ந்து,  இவற்றானாய  கட்டினை  இறைப்பொழுதும்  பொறாது, வீட்டின்கண்ணே  விரைதலின் ,  உடம்பு  மிகை  என்றார்”  என்று  பரிமேலழகர்  எழுதிய  உரைப்பகுதியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .  “உம்பர்”  என்பது  மேலாகிய  வீட்டின்பத்தைக்  குறிப்பதாகும்.  “தினைத்  துணையேனும்  பொறேன் “  என்பதனால், அடிகள்  புழுக்கூடாகிய  ஊனுடலை  விட்டு  ஒழிப்பதற்கு  விரைகின்றார் என்பது  அறியப் படுதலின் , ஈண்டும்,  “ஒல்லை  உம்பர்  தந்தருளு”  என்றார்.

                             இத்  திருப்பாட்டின்  முதல்  அடியில் ,  நயன  தீக்கையால்  என்  உயிரைத்  தூய்மைப்படுத்து ,  என்னை  ஏற்றுக்கொள்ளல்வேண்டும்  எனவும்,   இரண்டாம்  அடியில் ,  புறப்பற்றை  ஒழித்து, வலிய  நெஞ்சை  உருக்கி  ஆட்கொள்ளல்  வேண்டும்  எனவும் , மூன்றாம்  அடியில் , அகப்பற்றையும்  ஒழித்து , வீட்டின்பம்  நல்க  வேண்டும்  எனவும்  அடிகள் கருதிக்  கூறியபடியாம்.   “யானென  தென்னுஞ்  செருக்கறுப்பான் , வானோர்க்கு  உயர்ந்த  உலகம்  புகும்”  என்பதும்  காண்க.  திருவள்ளுவ  தேவர் ,  உயர்ந்த  உலகம்  என்று  வீட்டு  நிலையைக்  கூறியபடியே,,  இத் திருப்பாட்டில்  “உம்பர்”  என்று  அருளிச்  செய்யப்பட்டது என்க .

                                 இறைவன்  தன்னைச்  சார்ந்தாரைத் துன்பம்  ஒழித்து  இன்புறுத்தும்  இயல்பினன்  என்பது  தோன்ற , “சடையுளே  கங்கை  வைத்த  சங்கரா” என்றார் .  வான்  யாற்றின்  பெருக்கால்  உலகத்திற்குக்  கேடு  நேராவாறு, தன்  சடையின்  ஒரு  கூற்றில்  அடக்கி  இன்புறுத்தினன்  என்பது  புராண கதை.  சங்கரன்  =  இன்பம்  செய்வோன் .  அங்ஙனமே  அகப்  புறப்  பற்றுக்களால்  ஆகிய  துன்பத்தை  ஒழித்து , விரைவில்  வீட்டின்பம்  அருளி , என்னைக்  காத்து  அருளல்  வேண்டுமென்ற  இறுதி  அடியில்  உள்ள  விளியாலும்  குறிப்பிட்டு  அருளினார்  என்பது , ஈரிடத்தும்  அருளுக  என்பவற்றின்  ஈறு  தொக்கு  நின்றன.

                              இதன்கண் , “உள்  உருக்கி  யென்னை  ஆண்டிடவேண்டும்  “ எனவும் , “ஒல்லை உம்பர்  தந்து  அருளுக”  எனவும்  ஆண்டவன்  கருணையை  வேண்டி  இரங்குதலின்,  “காருணியத்திரங்கல்” என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “உடலிது  களைந்திட்டு”  என்றதனால்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாயவாறு  அறிக.

                                        *************************************************

பாடல்  65.

சங்கரா  போற்றி  மற்றோர்

சரணிலேன்  போற்றி  கோலப்

பெங்கரா  அல்குற்  செவ்வாய்

வெண்ணகைக்  கரிய  வாட்கண்

மங்கையோர்  பங்க  போற்றி

மால்விடை  யூர்தி  போற்றி

இங்கிவாழ்  வாற்ற  கில்லேன்

எம்பிரான்  இழித்திட்டேனே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  அகப் புறப் பற்றுக்களை  ஒழித்து,  விரைவில்  வீட்டின்பம்  அருளவேண்டும்  என்று  இரங்கி  வேண்டிய  அடிகள், இத்  திருப்பாட்டில் , அப் பற்றுக்கள  விளைதற்கு  உரிய  ஊனுடல்  வாழ்க்கையைப்  பெற்றேன் ; இழிவு  உடையதென  வெறுத்து  நிற்கின்றேன்  என்று  தம்  உள்ளக்  கருத்தை  வெளிப்படுத்துக்  கூறுகின்றார் .

பதவுரை :-     சங்கரா  போற்றி   = இன்பம்  செய்வோனே காத்தருள்க ,

ஓர்  சரண் மற்று  இல்லேன்  போற்றி  =  ஒரு  புகலிடம்  பிறிது  இல்லேன்  காத்தருள்க ,

பொங்கு அரா கோல  அல்குல் =  சினம்  மிக்க பாம்பின்  படம்  போன்ற  அழகிய  அல்குலையும் ,

செவ்வாய் வெள்நகை  கரியவாள்  கண்  =  சிவந்த  வாயினையும்  வெள்ளிய  பற்களையும்  கருமை  நிறம்  பொருந்திய  ஒளி  மிக்க  கண்ணினையும்  உடைய  ,

மங்கையோர்  பங்கா போற்றி  =  உமையம்மையாரை  ஒரு கூற்றில்  உடையனனே  காத்தருள்க ,

மால்விடை  ஊர்தி  போற்றி  =  திருமால்  ஆகிய  எருதினை  ஊர்தியாக  உடையவனே  காத்தருள்க ,

எம்பிரான்   =எங்கள்  தலைவனே  ,

இங்கு  இவ்  வாழ்வு  ஆற்றகில்லேன்  இழித்திட்டேன்  =  இவ்வுலகில்  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பொறுக்கமாட்டேன் ;  இகழ்ந்து  வெறுத்துளேன்  என்பது.

விளக்கவுரை :-   நின்னை  இன்பம்  செய்வோன்  என்று  அறிந்து  இருந்தும் , பிறிது  ஒரு  புகலிடம்  நாடுவேனோ?  நாடேன் ,  நாடினும்  , நின்னைப்  போல  அழிவில்லாத இன்பம்  பயக்கும்  ஒரு  தலைவனைப்  பெற  எங்ஙனம்  இயலும்? இயலாது  என்பார்  , “சங்கரா”  என  விளித்து  , “மற்றோர்  சரணிலேன்” என்றார். மற்றைத்  தேவர்  ,  முனிவர்  முதலிய  அனைவர்க்கும்  முடிவான  புகலிடமாக  உள்ளான்  சிவபெருமானே என்பதை  மறை யாகமங்கள்  ஆகிய  நூலறிவானும்  அநுபவவுணர்வானும்  அடிகள்  தெளிந்தவர்  ஆதலின்,  இங்ஙனம்  கூறினார்  என்க.

                           பொங்கல்   =  வெகுளல்  ,  பாம்பு.  சினமுற்றுச்  சீறும்  நிலையிலே  படம்  விரியும்  ஆதலின் ,  “பொங்கரா”  எனப்பட்டது.  அரா,  ஆகுபெயராக  நின்று  படத்தை  உணர்த்தும் .   “செவ்வாய்  வெண்ணகைக்  கரியவாட்கண்” என்பது  முரண் அணி  .  இதனால்  புன்முறுவல்  பூத்த  முகமும் , அருள்  ஒழுகும்  விழியும்  உடையவள்  உலக  அன்னையாகிய  உமையம்மை  என்பது  போதரும் ; தன்  மக்களாகிய  மெய்யன்பர்களை  இனிய  முகத்தோடு  வரவேற்றுக்  கருணை  பாலிப்பவள்  என்பது  கருத்து. 

                             அத்தகைய  அன்னை  உடனாய  அத்தனாக  விளங்கும்  நின்னை  அன்றி  வேறு  புகல்  இல்லேன்  என்பார் , “மங்கையோர்  பங்க”  என்றார். “மால்விடை யூர்தி “  என்றதனால் , திருமால்  முதலிய  தேவர்களும்  சிவ வழிபாடும்  சிவத்தொண்டும்  உடையவர்  ஆவர்  என்பதும் , அன்னாரையும் , சைவ  சீலம்  உடையார்  அம்  முறையில்   வெறாது  போற்றல் வேண்டும்  என்பதும்  போதரும்.

                              திருமால்  முதலிய  தேவர்களும்  தம்  பதங்களைச்  சிறந்தனவாக  எண்ணாமல்  நின்  தொண்டில்  ஈடுபடுவர்  ஆயின்,  சிறியேன்  ஆகிய  யான்  நிலையற்ற  இவ்வுலத்தில்  ஊனுடலோடு  கூடிய  இழிந்த  இவ்வாழ்க்கையை  எவ்வாறு  பொறுப்பேன்  என்பார்,  “இங்கு  இவ்வாழ்வு  ஆற்றகில்லேன்  “  எனவும்  , இவ்வாழ்க்கை  துன்பமிக்கது  என  அறிந்துளேன்  ஆதலின்,  வெறுத்து  இகழ்ந்தனன்  என்பார், “இழித்திட்டேன்  “   எனவும்  கூறினர்.  இவ் வாழ்வு  என்புழிச்  சுட்டு  இழிவு  தோன்ற  நின்றது.  இன்பம்  செய்யும்  பெருமானும்  ,  அருண்  மிக்க  பெருமாட்டியும் , என்றும்  பிரியாது, தம்  உயிர்க்குத்  தந்தையும் , தாயுமாகச்  சிறந்த  ஊர்தி  முதலிய  செல்வங்களுடன்  ஆதரிக்க  இருக்கும்  நிலையில் ,  அவர்களுடன்  கூடி வாழ்தலை  விட்டு  அழியும்  இயல்பினது  ஆகிய  இவ்வுடற்கு  உரிய  தாய் , தந்தையரோடு  எங்ஙனம்  வாழ்வேன் என்பார்,  “இங்கிவாழ்வாற்ற கில்லேன்”என்றார் எனினுமாம் .

                                 இதன்கண்,  “சங்கரா போற்றி  மற்றோர்  சரணிலேன் “   என்றதனால் ,  நீயே  புகலிடமாவாய்  என்பது  பெறப்படுதலின்  ,  காருணியத்திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  ,  “இழித்திட்டேனே” என்றதனால் ,  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                        ***************************************

பாடல் 66.

இழித்தனன்  என்னை  யானே

எம்பிரான்  போற்றி  போற்றி

பழித்திலேன்  உன்னை  என்னை

ஆளுடைப்  பாதம்  போற்றி

பிழைத்தவை  பொறுக்கை  எல்லாம்

பெரியவர்  கடமை  போற்றி

ஒழித்திடிவ்  வாழ்வு  போற்றி

உம்பர்நாட்  டெம்பி  ரானே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் , இவ் வுலகத்து ,  இவ் வாழ்க்கையை  இழித்திட்டேன்  என்ற  அடிகள் , இவ் வாழ்வும்  கன்மத்திற்கு  ஈடாக  இறைவன்  தத்தது  அன்றே ,  இதனை  இழித்தற்கு  உரிய  சுதந்திரம்  தானும்  நமக்கு  ஏது?  என்று  அஞ்சினராய் , என்னை  யானே  இழித்தனன் ;  அதனால்  நின்னைப்  பழித்திலேன்;  ஆயினும்  , அவ்வளவிற்  சிறியேன்  செய்த  பிழையைப்  பொறுத்து  அருளி,  நீயே  இவ் வாழ்க்கையை  ஒழித்திடவேண்டும்  என்று,  இத் திருப்பாட்டில்  மீண்டும்  வேண்டுகின்றார்.

பதவுரை :- எம்பிரான்  போற்றி  போற்றி   =  எம்பெருமானே  வணக்கம்  வணக்கம்

யானே  என்னை  இழித்தனன்   =  யானே  அடியவனாகிய  என்னை  இழிவுபடுத்தல்  ஆனேன்

உன்னைப்  பழித்திலேன்   =  ஆண்டவனாகிய  நின்னை  இகழ்ந்திலேன்,

என்னை  ஆளுடைப்பாதம்  போற்றி  =  என்னை  ஆட்கொண்டருளிய  நின்  திருவடிக்கு  வணக்கம்,

பிழைத்தவை  எல்லாம்  பொறுக்கை  =  செய்த  குற்றங்கள்  அனைத்தையும்  பொறுத்து  அருளல்,

பெரியார்  கடமை  போற்றி   =  பெரியார்  ஆயினார்க்குக்  கடமையாகும்  வணக்கம் ,

உம்பர்  நாட்டு  எம்பிரானே போற்றி  =  மேலாகிய  சிவலோகத்துள்ள  எங்கள்  தலைவனே  வணக்கம்.,

இவ்  வாழ்வு  ஒழித்திடு  =  இவ்வூன் உடலோடு  கூடிய  வாழ்க்கையை  ஒழித்து  அருள்வாயாக  என்பது ,

விளக்கவுரை:-  என்  அன்பு  இன்மையை  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவன்  அறிந்திருந்தும்  ,  கருணை  காரணமாக  யாவரும்  அறிய  என்னை  ஆட்கொண்டு  பெருமைப்படுத்தினன்  ஆயினும் , என் இயல்பை  யான்  அறிந்தவன்  ஆதலின் ,  என்னை  யானே  கீழ்மைப்படுத்தல்  ஆனேன்  என்பார்,  “இழித்தனன்  என்னை  யானே”  என்றார்.  அடிகள்  தம்  இயல்பு  குறித்துத்  தம்மைக்  கீழ்ப்படுத்தனர்  ஆயினும் , அவரை  ஆண்டவன்  ஆட்கொண்டதை  எல்லோரும்  அறிந்து  உளர்  ஆதலின் ,  பிறர்  எல்லாம்  மேன்மைப்படுத்து   மதிக்கலானார்  என்பது  பெறப்படும் .  அகத்து  அன்பு  இன்மை  குறித்து , என்னை  யான்  இழித்தனன்  ஆயினும் ,  யான்  நின்  உடைமையாதலின், அவ்விழிவு  நின்  உடைமையைப்  பற்றி  நிற்றலின் ,  அப்  பிழையைப்  பொறுத்து  அருளல்  வேண்டும்  என்பாராய் , “எம்பிரான்  போற்றி , போற்றி”  என  வணக்கத்தை  அடுக்கிக்  கூறினர் . 

                       என்னை  இழித்துக்  கூறுமுகமாக ,   நின்னை  ஒரு  சிறிதும்  குறைவாகக்   கருதிலேன்  என்பார்,  “பழித்திலேன்  உன்னை” எனவும் ,என்னை  யாரும்  அறிய  ஆட்கொண்ட  திருவடியை  எப்பொழுதும்  நினைவு  கூர்ந்து   வணக்கம்  செலுத்தும் கடப்பாடு  உடையேன்  என்பார்,  “என்னை  ஆளுடைப்பாதம்  போற்றி”  எனவும்  கூறினர் .

                        இறைவன், அடிகளை ஆட்கொண்டது உண்மை.  இதனை அடிகளே  உணர்ந்து  பலவிடத்தும்  கூறியிருக்கின்றனர் .  ஆட்கொண்டு  உபதேசித்த  காலை , அடிகளுடைய  உடல், பொருள்,  ஆவி  மூன்றும்  ஞானாசிரியனாகிய  அப்  பெருமானுக்கு  உரிய வாயின.  “அன்றே  யென்றன்  ஆவியும்  உடலும்  உடமையெல்லாமும் , குன்றேயனையா  யென்னை  ஆட்கொண்ட  போதே  கொண்டிலையோ” என்று  அடிகள்  கூறுமற்றானும்  அறியலாம். அங்ஙனம்  இறைவன்  உடைமையாகிய  தம்மை  அடிகள்  இழித்துக்  கூறியதற்குக்  காரணம் , “நான் தனக்கன்பின்மை  நானுந்  தானும்  அறிவோம்” என்று  கூறியபடி , தம்  அகத்து  மெய்யன்பு  இல்லாமை  என்கிறார்.   அடிகள்,  “யாவர்க்கும்  கீழாம்  அடியேனை  “  என்றபடி,  உலகியலில்  வைத்து , அடிமை  நிலை  கருதி  அங்ஙனம்  கூறினார்  ஆயினும்,  அடிகளுடைய  அன்பு  அளவிட்டு  உரைக்க  இயலாதது  ஒன்று.  அன்புருவமாகிய  அருள்  உருவம்  எய்தினவர்  என்ப.  அவர்  ஒரு  காரணம்  கருதி , உலகியலில்  வைத்துப்  பலவிடத்தும்  தம்மை  இழித்துக்  கூறினர் ஆயினும்,  பின்னர்,  ஆண்டவன்  உடைமையைப்  பழித்த  பெரும்பிழை  செய்ததாக  முடியுமே  என  அஞ்சி , அது  பொறுக்கவேண்டுவார், “பிழைத்தவை  பொறுக்கை  யெல்லாம்  பெரியவர்  கடமை”  என்றார். பொறுப்பவர்  பெரியவர்  என்றதனால் ,  பிழை  செய்தவர்  சிறியர்  என்பது  பெறப்படும் .  அடிகள்  செய்த  பிழை ,  இறைவன்  உடைமையாகிய  தம்மை  இழித்துக்  கூறியது  அன்றி ,  வேறு  இன்று  என்பது.  “செய்து  பிழையறியேன்  சேவடியே  கைதொழுதேன் “ என்பதனாலும்  அறியலாம் .

                       உம்பர்  நாடு  என்பது  மேல் உலகத்தைக்  குறிக்கும்.  எல்லா உலகங்களுக்கும்  மேலாகிய  சிவலோகம்  என்பது  பொருள் ,  எல்லாஉலகங்களுக்கும்  தலைவனாகிய பொருமானே  தமக்கும்  தலைவன்  ஆனமை  பற்றி  உண்டாகிய  உவமையால் , “உம்பர்  நாட்டு  எம்பிரானே” என்றார். இவ்வூன்  உடல்  வாழ்க்கை ,  திருவடி  இன்பத்திற்குத்  தடையாக  இருத்தலான், இதனை  ஒழித்தற்கு ,  ஆக்கிய  நீயே  அதிகாரி  ஆவை  என்பார்,  “ஒழித்திடிவ் வாழ்வு”  என்றார்.

                                 ஆண்டவனே ,  யான்  என்  இயல்பு  குறித்து  என்னை  இழித்தனன்  அன்றி ,  அதன்  மூலம்  நின்னைப்  பழித்திலேன் ; பழித்ததாக  முடியுமாயின் ,  அப்  பிழையைப்  பொறுத்து  அருளல்  வேண்டும் ; மேலும்  என்  வேண்டுகோள்  இவ்  வாழ்க்கையை  ஒழித்தல் வேண்டும்  என்பது.  இதுவே  இத்  திருப்பாட்டின்  அடிகள்  புலப்படுத்திய  கருத்து  என்க.

                                 இதன்கண்,  “பிழைத்தவை  பொறுக்கை  யெல்லாம்  பெரியவர்  கடமை”  என்றதனால் ,  காருணியத்திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  ,  “இழித்தனன்  என்னை” ,  “ஒழித்திடு  இவ்  வாழ்வு”  என்பன  வைராக்கியத்தையும் ,  “என்னை  யாளுடைப்  பாதம்  போற்றி” என்பது பத்தியையும்  புலப்படுத்தலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  தோன்றுதல்  காண்க.

                                  *************************************************

பாடல்  67.

எம்பிரான்  போற்றி  வானத்

தவரவர்  ஏறு  போற்றி

கொம்பரார்  மருங்குல்  மங்கை

கூறவெண்  நீற  போற்றி

செம்பிரான்  போற்றி  தில்லைத்

திருச்சிற்றம்  பலவ  போற்றி

உம்பரா  போற்றி  என்னை

ஆளுடை  ஒருவ  போற்றி .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இவ்  வாழ்க்கையை  ஒழித்திட  வேண்டுமென்று  வேண்டிய  அடிகள், இதன்  ஒழிவின்பின்  எய்தும்  பேறு  குறித்திலர்;  இத்  திருப்பாட்டில்  அப் பேறு  அளித்தற்குரிய  தகுதியுடைமை   பல்லாற்றானும்  நின்  கண்ணதே  என, ஆண்டவனுடைய  பெருமைக்  குணங்களை விளக்கிக்  கூறுகின்றார் . 

 பதவுரை :-   எம்பிரான்  போற்றி  =  எங்கள்  தலைவனே  காக்க ,

வானத்து  அவர்  அவர்  ஏறு  போற்றி  =  விண்ணுலகத்துள்ள  பதவிகளில்  இருக்கும்  அவ்வத்  தேவர்களுக்கும்  ஏறு  போல்பவனே  காக்க ,

கொம்பர் ஆர்  மருங்குல்  மங்கை  கூற   =  பூங்கொம்பு   போன்ற  இடயினையுடைய   உமையம்மையாரை ஒரு  கூற்றில்  உடையவனே ,

வெள்நீற  போற்றி  =  வெள்ளிய  திருநீற்றினையுடையாய்  காக்க,

செம்பிரான்  போற்றி   =  செம்மேனியையுடைய   பெருமானே  காக்க,

தில்லை  சிற்றம்பலவ  போற்றி  =   தில்லை  நகர்க்கண்  உள்ள  அழகிய  நுண்ணிய  ஞானப்பரவெளியில்  திகழ்பவனே  காக்க,

உம்பரா போற்றி  =  சிவலோகத்  தலைவனே  காக்க ,

என்னை  ஆள்  உடை  ஒருவ  போற்றி  =  சிறியேனாகிய  என்னை  ஆட்கொண்ட  தனி  முதல்வனே  காத்தருள்க  என்பது.

விளக்கவுரை  :-   அடிகள்  மக்கட்  பிறப்பினர்  ஆகலான் , அவர்  “எம்பிரான்” என்ற  அளவில் , இறைவன்  மக்களுக்குத்  தலைவன்  ஆவான் என்பது  பெறப்படும் .  அடுத்துத்  தேவர்  உலகங்களில்  உள்ள  இந்திரன் , பிரமன் ,முதலிய  பதங்களில்  உள்ளார்  எல்லோர்க்கும்  தனித்  தனியே  தலைவன்  ஆவான்  என்பது  தோன்ற , “வானத்தவரவ ரேறு”  என்றார் . ஏறு போல்வானை  ஏறு  என்றது  உபசார  வழக்கு .  மண்ணுலகும்  விண்ணுலகும்  கூறவே ,  ஏனைய  உலகும்  அடங்கும்  என்பது .  அங்ஙனம்  தலைவனாகிய  சிவபெருமான்  , “போகியாய்யிருந்துயிர்க்குப்   போகத்தை  புரிபவன்”  என்பது  தோன்ற , “மங்கை கூற “  என்றார் . கொம்பரார்  என்புழி , அர்  போலியீறு .  ஆர் உவமப்பொருட்டு  .  “வெண்ணீற”  என்று , யோகியாய்  யோகமுத்தி  உதவுதற்கு  உரிய  குறியீடு  கூறினர் . உமையொரு  கூறனாய  காலத்தும்  , திருவெண்ணீறு  பூசிய  திருமேனி உடையன்  ஆயினும்  , அதனோடு  சந்தனக்கலவை  முதலிய  மணப்பொருள்களும்  பூசப்படுவனவாம் . யோகநிலையில்  திருவெண்ணீறு  தனிச்  சிறப்பாகப்  பூசப்படுதலின் , “வெண்ணீற”  என்ற  விளி , யோக  நிலையைக்  குறிக்கும்  என்பது. 

                      மக்கள், தேவர் முதலியோர்க்குத்  தலைவனும் , போக  யோகங்களை  அளிப்பவனும்  ஆகிய   சிவபெருமான் , நம்மனோர்  பொருட்டுக்  கருணை  கூர்ந்து  திருமேனி கொள்ளுங்கால் , செந்நிறமான  திருமேனி  உடையன்  ஆவான்  என்பது  தோன்ற,  “செம்பிரான்”  என்றார்.  “சிவன்  எனும்  நாமம்  தனக்கே  உடைய    செம்மேனி  எம்மான்”  என்பது  தமிழ்மறை .  “ஈசற்கு  யான்  வைத்த” என்னும்  திருக்கோவைச்  செய்யுளில்  ,”பூசத்  திரு நீறென  வெளுத்து  “என்புழிச்  செம்மை  திருமேனியாற்  பெறப்படும்  என்று  பேராசிரியர்  கூறியதும் அறிக. 

                          அங்ஙனம்  கொண்ட  திருமேனிகளுள்,  ஆக்கல்   முதலிய ஐந்தொழிற்கும்  தலவன்  தானே  என்பதைப்  புலப்படுத்துத்  திகழ்வது  கூத்தப்  பெருமானாக  விளங்கும் நிலையே.  அத்  திருவுருவம்  தில்லைத்  திருச் சிற்றம்பலத்தில்  சிறந்து  திகழ்வது  என்பது  குறித்து , அதனையே  குறிப்பிட்டுள்ளார் .  தில்லை  –  நகர்ப்பெயர் ;  திருச்சிற்றம்பலம் –  கோயிற்  பெயர்.  இதனைச்  சிதம்பரம்  என்பர்  வடமொழியாளர் . சிதம்பரம்  என்பது      சித்  அம்பரம்  எனப்  பிரிக்கப்பட்டு , ஞானாகாசம்  , என்னும்  பொருள்  உடையதாகும் . தமிழில்  சிற்றம்பலம்  என்பதே  பண்டை  வழக்கு .  சிறுமை  அம்பலம்  என்று  பிரிக்கப்பட்டு ,  நுண்ணிய  ஞானப்பரவெளி  என்னும்  பொருள்  உடையதாகும் . வட  மொழி  மறை  முடிவில்  கேட்கப்படும்  தகராகாசம்  என்பதற்கு  நுண்ணிய  வெளி  என்பதே  பொருள்  .  “சிற்பர  வியோமம்  ஆகுந்  திருச்சிற்றம்பலம் “ என்பர்  சேக்கிழார்  அடிகள் . “அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது”  என்றபடி,   அப்  பெருமானுடைய  அசைவாகிய  திருக்கூத்தினாலே  அண்டங்கள்  எல்லாம்  சுழன்று  நிலைபெறுவன  என்பதும்,  உயிர்த்தொகுதிகள்  இயங்குகின்றன  என்பதும் ,  பிறவும் பெரியார்  கண்ட  உண்மைகள் . ஆங்குத்  திருக்கூத்து  இயற்றும்  நிகழ்ச்சியில் , இன்னும்  பல  அரிய  நுண்பொருள்கள்  உள்ளன  என்பர்  பெரியார். விரிப்பிற்  பெருகும். 

                    செம்மேனி  எம்மான் , நம்மனோர்  பொருட்டு ,  இம்  மண்ணுலகில்  இங்ஙனம்  எளிவந்து  காட்சி   அளித்தனன்  ஆயினும், அப் பெருமானுடைய  சிறப்பிடம்  எல்லா  உலகங்களுக்கும்  மேலாகிய  சிவலோகம்  அல்லது  சிவபுரம்  என்பார்,  “உம்பரா  போற்றி” என்றார். “ உம்பரான்”  என்பதில்  ஆன்  விகுதியில்  உள்ள   ன  கரஈறு   விளிப்பொருளிற்  கெட்டது.  மேற்குறிப்பிட்ட  தலைமை  முதலிய  இலக்கணம் எல்லாம்  நிரம்பிய  ஓப்பற்ற  பரம்  பொருளே என்னை  ஆளாக்கிக்  கொண்டான்  என்னும்  உவகை  தோன்ற ,  ஈற்றில்  , “என்னை  ஆளுடை யொருவ”  என்றார் . ஒருவன்,  தனக்கு  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாதவன்  என்னும்  பொருட்டு.

                       இதன்கண்,  இறைவனுடைய  பலவகைப்  பெருமைக்  குணங்களையும்  எடுத்து  விளக்கிக்  காத்தருள்க  என்று  வேண்டினமையின் , காருணியத் திரங்கல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                       **********************************************

பாடல்  68.

ஒருவனே  போற்றி  ஒப்பில்

அப்பனே  போற்றி  வானோர்

குருவனே  போற்றி  எங்கள்

கோமளக்  கொழுந்து  போற்றி

வருகவென்  றென்னை  நின்பால்

வாங்கிட  வேண்டும்  போற்றி

தருகநின்  பாதம்  போற்றி

தமியனேன்  தனிமை  தீர்த்தே .

கருத்துரை  :-    முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பர்க்குப்  பேரின்பம்  அளித்தற்கு  உரிய  தகுதி  பலவகையானும்  சிவபெருமானுக்கு  உண்டு  என்று  விளக்கிய  அடிகள்,  இவ் வூனுடலோடு  கூடிய  வாழ்க்கை  ஒழிவில்  தமக்கு  வேண்டிய  பேறு  திருவடிச்  சார்புபற்றிய  இன்பம்  ஆகும்  என்பதை  இத்  திருப்பாட்டில்  உணர்த்துகின்றார் .

பதவுரை :-    ஒருவனே  போற்றி  =  தனி  முதல்வனே  வணக்கம் ,

ஒப்பில்  அப்பனே  போற்றி  =     நிகரற்ற  என் தந்தையே  வணக்கம் ,

வானோர்  குருவனே  போற்றி   =  தேவர்களின்  ஞானாசிரியனே  வணக்கம்

எங்கள் கோமளக்கொழுந்து  போற்றி  =   அடியேங்களது  மெல்லிய  இளந்தளிரே  வணக்கம் ,

என்னை  நின்பால்  வருக  என்று  வாங்கிட  வேண்டும்  போற்றி  =  அடியேனை  நின்  பக்கலில்  வருக  என்று  கட்டளை  இட்டு  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்   வனக்கம் ,

தமியனேன்   தனிமை  தீர்த்து  =  உறுதுணையில்லாதேனைத்  தனிமை  ஒழித்து ,

நின்  பாதம்  தருக  போற்றி  =  நின்  திருவடியைத்  தந்து  அருளல்  வேண்டும்  வணக்கம் ,  என்பது. 

விளக்கவுரை  :-     இறைமை  இலக்கணம்  எல்லாவற்றினுஞ்  சிறந்தது ,  “ஒன்றே  குலமும்  ஒருவனே  தேவனும் “  என்றபடி  , ஒருவன்  ஆதலாம் .  இரண்டாம் அவனாக  மற்றொரு  தலைவனும்  உளன்  எனின்.  முழுமுதல்  தலைமை  இயல்  சிதைந்துவிடும்  என்க.   சிவனோடொக்கும்  தெய்வம்  தேடினும்  இல்லை”   என்றபடி , மறையாகமங்களின்  ஆராய்ச்சியாலும் ,  அநுபவ  ஞானிகளின்  உபதேசத்தாலும்  சிவபெருமான்  ஒருவனே  கடவுள்  இலக்கணம்  எல்லாம்  நிரம்பப்  பெற்றவன்  என்பது  தெளியப்படும்  என்க. அத்தகைய  பரம் பொருளாகிய  நீயே  என்  தந்தை  ஆயினை  என்பார் ,  “ஒப்பில்  அப்பனே  என்றார் .  “ஒப்பில்”  என்னும்  அடயை  , “ஒருவன்”  என்பதனோடும்  கூட்டுக .  நிகரற்ற  தந்தை  என்றதனால் ,  தம்  பேரின்ப  வாழ்க்கைக்கு  வேண்டும்  செல்வங்களுள்  எதற்கும்  வேறு  யாரையும்  எதிர்  பார்க்க  வேண்டுவது  இல்லை  என்பது  அடிகள்  கருத்து  என்க.   உடற்காப்புச்செய்யும்  அவ்வளவில்  ஒழியும்  உலகியல்  தந்தை  போலாது   ஞானநெறியை  உபதேசித்து  , உயிர்க்காப்புச்செய்யும்  ஞானாசிரியனும்   ஆவான்  என்பது ,  “ஒப்பில்”  என்னும்  அடைமொழியால்  உணரத்தக்கது.

                        தம்  அளவினும் , ஏனை  மெய்யன்பராகிய  மக்கள்  அளவினும்  ஞானாசிரியன்  ஆவான்  என்பது  அன்றி , பக்குவ  முதிர்ந்த  தேவர்   முதலியோர்க்கும்  ஞான  குரு  ஆவான்  என்பது  தோன்ற  , “வானோர் குருவனே” என்றார்.  மெய்யன்பு  உடைய  அடியார்  குழுவை  உளப்படுத்து , “எங்கள்” என்றார் . கோமளம்  = மென்மை , கொழுந்து  என்பது,  செடி  கொடிகளின்  நுனியில்  உள்ள  தளிர்  ஆகும்.  மெய்யடியார்  கூட்டமாகிய  பூஞ்செடிகளின்  கொழுந்தாக  இறைவனைக்  கூறியது  ,  அச்  செடி  கொடிகளின்  வேர்க்கு  ஏற்படும்  நலந்தீங்குகளால்  உண்டாம்   மலர்ச்சியும்  வாட்டமும்  முதலிற்  கொழுந்திற்கு  உளவாதல்  போல மெய்யன்பர்க்கு  ஏற்படும்  நலந்தீங்குகளை  முதலில்  இறைவன்  தன்னுடையவாக   உணர்ந்து  கோடல்பற்றி  என்க.  வேர்க்கு  ஏற்படும்  தீங்கை  முதலிற்  கொழுந்தால்  உணர்ந்து , மற்றைப்  பகுதிகளுக்கு  அத்  தீங்கு  பற்றாமுன்  விரைந்து  பரிகரிக்கப்படுதல்  போல , மெய்யடியார்க்குப்  பண்டை  வினையால்  ஓரோவழிக்  கலக்கம்  நேரத்  தொடங்குங்கால் , அஃது  அவரைப்  பற்றா முன்னரே,  ஆண்டவன்  அறிந்து  பரிகரிப்பன்  என்பது  கருத்து, இறைவனே  கொழுந்தாகக்  கூறப்பட்டமையாலும்  , அவனின்  வேறாகப்  பரிகரிப்பான் ஒருவன்  இல்லாமையானும்  , ஈண்டு  அறிபவனும்  பரிகரிப்போனும்  அவனே  என்பது  அறியத் தக்கது.  இறைவனைக்  கோமளக்கொழுந்து  என்றது  ஏகதேசவுருவகம். 

                        மாயா  காரியமாகிய  தநு கரண புவன போகங்களில்  அகப்பட்டுத்  தவிக்கும்  என்னை , அவற்றினின்றும்  விடுவித்து ,  நின்  பக்கலில்  ஏற்றுக்கொள்ள  வேண்டுமென்பார் , “என்னை  நின்பால்  வாங்கிட  வேண்டும்”  என்றார் .  அடிகள்  தமக்கு  மாயா  காரியங்களால்  ஏற்பட்ட  துன்பத்த, ஆண்டவன்  கோமளக்  கொழுந்தாக  இருந்து , அறிந்து  இருப்பான்  என்னும்  துணிவினால்,  “வருக”  என்று  இன்சொற்கூறி  அழைத்துக்கொள்ளல்  வேண்டும்  என்றார்  என்க.  துன்பத்தாற்  பற்றப்பட்டான்  ஒருவனைக்  காப்பாற்றப்  புகுவோன் ,  முதலில்  இன்சொற்  கூறிப்  பின்  செயல்   அளவில்  ஆதரித்தல்  உலகியலிற்  காணலாம் .  அவ்வாறே , ஈண்டு  “வருக” என்று  இன்சொற்  கூறிப்பின்  வாங்கிட  வேண்டும்  என்று  வேண்டுவார்  ஆயினர் .  துன்பச்  சேற்றிற்  பதிந்து  கிடப்பவனை ,  இன்சொற்  கூறிக்  கைதூக்கி  எடுத்தபின்  , அவன்  களைப்புத்தீர ,  வேண்டுவன  செய்து , நல்லிடன்  அளித்து  இன்புறுத்தல்  அருள்  வண்மையுடையார்  இயல்பு  ஆகும்  அன்றோ?  அங்ஙனமே , அடியேனைப்  பாசப்பிணிப்பினின்றும்  விடுத்தபின் , தனிமை  தீர்த்து, இன்பம்  நுகருமாறு  நின்  திருவடியை  அளித்தல்  வேண்டும்  என்பார், “தருக  நின்  பாதம்”  என்றார் .  இறைவன்  திருவடித்துணை  பெறுங்காறும்  பற்றுக்  கோடு  இல்லாதவன்  என்பார்., “தமியனேன் “எனவும் , அத்  திருவடிப்பேறு  ஒன்றே  பேரின்புறுத்துவது  அன்றித்  துணையாக  நின்று  அத்  தனிமையையும்  தீர்ப்பதாகும்  என்பார், “தனிமை  தீர்த்து”  எனவும்  அருளிச்செய்வார்  ஆயினர் .

                               இதன்கண்,  “ வருகவென்  றென்னை  நின்பால்  வாங்கிட  வேண்டும்  ,”  “தருக  நின் பாதம்”  என்பவற்றால் இறைவன்  கருணை  குறித்து  வேண்டுதல்  பெறப்படுதலின் , காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல் அறிக.

                                         ********************************************

பாடல்  69.

தீர்ந்தஅன்  பாய  அன்பர்க்

கவரினும்  அன்ப  போற்றி

பேர்ந்துமென்  பொய்மை  யாட்கொண்

டருளிடும்  பெருமை  போற்றி

வார்ந்தநஞ்  சயின்று  வானோர்க்

கமுதம்ஈ  வள்ளல்  போற்றி

ஆர்ந்தநின்  பாதம்  நாயேற்

கருளிட  வேண்டும்  போற்றி .

கருத்துரை:-     முன்னைத்  திருப்பாட்டில்  என்னை வருக  என்று  அழைத்து , நின்  திருவடியைத்  தரல்வேண்டும்  என்று  வேண்டிய  அடிகள், அங்ஙனம்  தருதற்குத்  தடையாகவுள்ள  குற்றம்  தம்பாலதாக , அதனைப்  பொறுத்து  நலம்  செய்தல்  நின்  இயல்பு   ஆம்  என  ஆண்டவனுடைய  பெருமை,  வண்மை  முதலிய  உயர்  குணங்களை இத்  திருப்பாட்டில்  வேண்டுகின்றார்.

பதவுரை:-   தீர்ந்த  அன்பாய  அன்பர்க்கு   =  முதிர்ந்த  மெய்யன்பு  வடிவமான  அடியார்க்கு ,

அவரினும்  அன்ப  போற்றி   =  அவர்  அளவினும்  மிகுதியான  அன்புடையவனே  வணக்கம்,

என்  பொய்மை  பேர்ந்தும்   =  சிறியேனது  போய்  ஒழுக்கத்தை ஒழித்தும்,

ஆட்கொண்டும்  =  என்னை  அடிமை  கொண்டும்,

அருளிடும்  பெருமை  போற்றி  =  அருள்  புரிந்த  பெருமைக்  குணம்  உடையோனே  வணக்கம் ,

வார்ந்த  நஞ்சு  அயின்று  =  பாற்  கடலில்  ஒழுகிப்  பரந்த  நஞ்சை  உண்டு

வானோர்க்கு  அமுதம்  ஈ  வள்ளல்  போற்றி   =  தேவர்க்கு  அமுதம்  கொடுத்து  அருளிய  வள்ளலே  வணக்கம் ,

ஆர்த்தநின் பாதம்  =  அழிவில்  இன்பம்  நிறைந்த  நின்  திவடியை  ,

நாயேற்கு  அருளிட  வேண்டும்  போற்றி   =  நாயின்  தன்மையுடைய   சிறியேனுக்குத்  தந்தருள  வேண்டும்  வணக்கம்  என்பது . 

விளக்கவுரை :-  தீர்ந்த  அன்பு  –  முதிர்ந்த தலையன்பு ;  கண்ணப்ப  நாயனார்  அன்பு  போல்வது.  அன்பாய  அன்பர்  என்றதனால்  அன்பைக்  குணமாகக்  கொண்டு ,  அதனை  உடைய  அன்பர்  குணிப்பொருளாக  இல்லாமல்,  முதிர்ந்த  அன்பாகிய  குணமே  உருக் கொண்டால்  ஒத்த  மெய்யடியார்  என்பது  போதரும் .  அத்தகைய  தலையன்பு  உடையார்க்கு  என  அடிகள்  படர்க்கையில்  வைத்துக்  கூறினும் , நம்மனோற்  கொள்ளற்பாலது  அதற்குத்தகும்  தகுதியுடையார்  அடிகளேயாவர்  என்பதாம் . ஆண்டவனுக்கு  மெய்யன்பர்  செய்யும்  தொண்டுகள்  வரலாற்றுமுகமாக  அறியப்படுவன . “அன்பர்க்கு  அவரினும்  அன்ப”  என்றதனால், அத்தகைய  பேரன்பாளர்க்கு  ஆண்டவன்  செய்த  பணிகளும்  பலவாகும் .  அதற்கும்  சான்றாக  அடிகள் வறலாற்று  நிகழ்ச்சிகளையே  கொள்ளலாம் .  “மண்  சுமந்து  கூலி  கொண்டு , புண்  சுமந்த  பொன்மேனி”  உடையன்  ஆனமையும் ,  பிறவும்  ஈண்டு  உணரத்தக்கன  , “பெயர்த்தும் “  என்பது  பேர்த்தும்  என்றாகி ,  எதுகை  நோக்கி  மெலிந்து  நின்றது .  என்  பொய்மையைப்  பெயர்த்தும்  என்றபடி , நாடகத்தால்  உன்  அடியார்  போல்  நடித்த  என்  பொய் ஒழுக்கத்தை  ஒழித்தும்  என்பதாம்.  நோயினாற்  பற்றப்பட்ட  உடல்  உடையானுக்கு , அந்  நோய்  நீக்கம்  செய்தலே  பேருதவியாகும் . அவ்வளவன்றி , அவன் உடல்  வன்மையுடன்  நெடுங்காலம்  இருக்கும்படி  காய  கற்பமும்  ஈதல்  மிகப்  பேருதவி  ஆகும்  அன்றே? என்  பொய்  ஒழுக்கத்தை  ஒழித்ததோடு  அமையாது , தகுதியில்லாத  என்னை  யாவரும்  காண  ஆளாகவும்  கொண்டனையே  என்று  உள்ளம்  உருகிப்  பாராட்டுவார்,  “  ஆட்கொண்டு  “ என்றார்.  ஆட்கொண்டும்  என்புழி.  எண்ணும்மை  விகாரத்தால்  தொக்கது , “பொறுப்பர் அன்றே  பெரியோர் சிறு  நாய்கள் தம்  பொய்யினையே”  என்றபடி , பொய்மை  பொறுத்தலே  பெருமையாக  மேலும்  அதனைப்  பெயர்த்தும் ,  ஆட்கொண்டும்  அருள்  புரிதல்  எத்துனைப்  பெருமையாம் என்பது  நினைக்கத்  தக்கது . பெருமைக்  குணத்தின்  இலக்கணம்  இங்ஙனம்  ஆம்  என்பது .  இக்குறிப்புத்  தோன்றவே , “அருளிடும்  பெருமை” என்றார் .  பெருமை, ஆகுபெயராக  நின்று  , குணிப்  பொருளாகிய  ஆண்டவனை  உணர்த்தும் .

      வார்தல்  =  ஒழுகுதல் .  திருப்பாற்  கடல்  கடைந்த  ஞான்று ,  அமுதம்  தோன்றுதற்கு  முன்னரே  கடைகயிறாக  மேற்கொண்ட  பாம்பின்  வாயினின்றும்  நஞ்சு  ஒழுகி  யாண்டும்  பரவியதாக , அது  கண்டு  அஞ்சிய  தேவர்களைக்  காத்தற்பொருட்டு ,  அந் நஞ்சைத்  தான்  உண்டு , பின்னர்  தோன்றிய  அமுதத்தை    தேவர்  உண்ணக்  கொடுத்தனன்  என்பது  புராணக்கதை  .  இவ்  வரலாறு  நன்றே  சிவபெருமானுடைய  பேராற்றலையும்  பேரருளையும்  புலப்படுத்துவதாகும் .  உலகத்து  வள்ளல்  ஆவார் , தமக்குக்  கிடைத்த  அரிய  பொருளைப்  பிறர்க்கு  வழங்கும்  பெற்றியர்  ஆவர்  என்ப .  அதியமான்  நெடுமான் அஞ்சி  என்னும்  தமிழ்  நாட்டு   வள்ளல் ,  ஒளவைப்  பிராட்டிக்கு  நெல்லிக்கனி  ஈந்த  வரலாறு  இதற்குச்  சான்றாம்  என்பது,  உண்டாரைப்  பல்லாண்டு  வாழச்  செய்யும்  நெல்லிக்கனி  ஒன்று  அரிதிற்  கிடைத்ததாக ,  அதனைப்  பெற்ற  அதியமான் ,  தான்  உண்டு  நெடுங்காலம்  வாழ்தலினும் ,  சிறந்த  தமிழ்ப்  புலமை  சான்ற  ஒளவைப்  பிரட்டி  உண்டு , நீடு  வாழ்தல்  உலகத்தவர்க்குப்  பெரும்  பயன்  விளைப்பதாகும்  எனக்  கண்டு ,  அதனைப்  பாதுகாத்து  வைத்திருந்து , தன்பால்  ஒளவையார்  வந்ததும் , அந்  நெல்லிக்கனியின்  அருமையையும்  , அதனால்  விளையும்  பயனையும்  வெளிப்படுத்தாமல்  தன்  உள்ளே  அடக்கிக்  கொண்டு , அப்  பிராட்டிக்குக்  கொடுத்து  உண்ணச்  செய்தானாம்.  பின்னர், அதன்  அருமையையும்  பயனையும்  அறிந்து , ஒளவையார்  அவ்  வள்ளலைப்  பாராட்டி  வாழ்த்திய  பாடல்  அறிந்து  இன்புறத்தக்கது  .  அப்  பாடலில் , “நீலமணிமிடற்  றொருவன்  போல  மன்னுக  பெரும  நீயே…………சிறியிலை  நெல்லித் தீங்கனி  குறியாது,  ஆதல் நின்னகத்தடக்கிச்   சாதனீங்க எமக்கீந்தனையே “  என்னும்  பகுதி  மிகவும்  பாராட்டத்தக்கது.  தீங்கனி  குறியாது  என்பதற்குப்  பெறுதற்கு  அரிது  என்று  கருதாமல்  எனவும் , ஆதல்  நின்னகத் தடக்கி  என்பதற்கு  அதனால்  விளையும்  பயனை  எனக்குக்  கூறாமல்  நின்னுள்ளே  அடக்கி  எனவும்  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  அருமையும்  பயனும்  உண்ணுதற்கு  முன்னரே  கூறினால் , ஒளவையார்  வாங்கி , அவ்  வள்ளல்  வாயிலே  செலுத்தி  விடுவார்  என்பது  கருத்து.  தன்  சாவைப்  பொருட்படுத்தாமல் , ஒளவை சாவாமையைக்  குறித்து  இங்ஙனம்  வழங்கிய  வள்ளலை  , அப்  பிராட்டி  வாழ்த்துங்கால் , சாதற்குக்  காரணமாகிய நஞ்சுண்டும்  இறைவன்  நிலைபெற்று  இருத்தற் போல , நீயும்  சாவாது  இருத்தல்  வேண்டும்  என்னும்  கருத்துத்  தோன்ற , “நீலமணி  மிடற் றொருவன்  போல மன்னுக பொரும”   என்றாராம் .  இந்  நிகழ்ச்சியில்  , அதியமான்  ,  நலம்  விளைப்பதை  ஒளவைக்கு  ஈந்தனன்  என்பதன்றிக்  கேடு  விளைப்ப  தொன்றைத்  தான்  உண்டான்  என்பதில்லை, இறைவன்  செய்தியில்  , ஒழுகிய  பெருநஞ்சைத்  தான்  உண்டு , தேவர்க்கு  அமுதம்  ஈந்தான்  என்பது  நினைக்கத்தக்கது .  “விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ வொருவரும், உண்ணாத  நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய் “ என்பது  சிலப்பதிகாரம் .  இத்தகைய  பெருவண்மை ,  இறைவனிடத்து  அன்றி  மக்கள்பால்  எதிர்பார்க்கத்தக்கது அன்று.  வண்மைக்  குணத்தின்  முடிந்த எல்லை  இது  எனக்கொண்டு , “நஞ்சயின்று  அமுதமீவள்ளல்”  என்றார் .ஈ  வள்ளல் , வினைத்தொகை.  “பெயக்கண்டும்  நஞ்சுண்டமைவர்   நயத்தக்க , நாகரிகம்  வேண்டுபவர் “  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  எழுதிய  உரையில் , மக்களில் இந்  நிகழ்ச்சி  காணப்படாமையானும்  சிவபெருமான்  எல்லா  ஆற்றலும்  உடையன் ஆதலின் , அவர்க்கு  இஃது  எளிது ஆகலான், அச்சரித  நிகழ்ச்சியை  எடுத்துக்காட்டுதல்  வேண்டா  வென்னும்  கருத்தானும், வரலாற்றுப்  பகுதி எடுத்துக்  காட்டாது  ஒழிந்தனர்  போலும் .

       ஆர்தல்  –  நிறைதல் ;  சார்ந்தார்  எய்துதற்கு  உரிய  அழிவு இல்லாத  பேரின்ப  நிறைவைக்  குறிக்கும் .  நஞ்சுண்டு  அமுதம்  ஈந்த  வள்ளல்  ஆதலின், சிறியேன்  பிழைகள்  எல்லாவற்றையும்  அடக்கிப்  பேரின்ப  நிறைவாகிய  திருவடிகளைத்  தந்து  அருளுவை  என்னும்  துணிவு  மேற்கொண்டு  ,  வேண்டுவன்  என்பார் , “நாயேற்கு  ஆர்ந்த  நின்  பாதம்  அருளிட வேண்டும்”  என்றார் .  இழிந்த  நிலையில்  பல  குற்றங்களுக்கும்  ஆளானவன்  என்பது  தோன்ற , “நாயேற்கு”  எனவும் , நின்  வண்மைக்  குணத்தால் , அக்  குற்றங்களைக்  கருதாமல்  எனக்கு  அருளத்தக்கது பேரின்ப  நிறைவாகிய  திருவடி  இன்பம்  என்பார்,  “ஆர்ந்த  நின்  பாதம்  “ இத்  திருப்பாட்டின்  முதல்  அடிக்  கருத்து.  இரண்டாம்  அடியிற்  கூறப்பட்டதற்கும் , மூன்றாம்  அடிக்  கருத்து ,  நான்காம்  அடியிற்  கூறப்பட்டதற்கும்  ஏதுவாக  அமைந்திருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .

                     இதன்கண், என்  பொய்மை  ஒழித்து  என்னை  ஆண்டருள வேண்டுமெனவும் , நாயேற்கு  நின்  பாதம்  அருளிட  வேண்டும்  எனவும் , இறைவனை  நோக்கி  வேண்டுதல்  காணப்படுதலின் , காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக. 

                                ****************************************************

பாடல்  70.

போற்றியிப்  புவனம்  நீர்தீக்

காலொடு  வானம்  ஆனாய்

போற்றியெவ்  வுயிர்க்குந்  தோற்றம்

ஆகிநீ  தோற்ற  மில்லாய்

போற்றியெல்  லாவு  யிர்க்கும்

ஈறாயீ  றின்மை  யானாய்

போற்றியைம்  புலன்கள்  நின்னைப்

புணர்கிலாப்  புணர்க்கை  யானே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  மெய்யன்பர்  பொருட்டு  மேற்கொண்ட  அருள் , பெருமை , வண்மை  என்னும்  உயர்  குணங்களின்  சிறப்பைப்  பாராட்டிய  அடிகள், இத்  திருப்பாட்டில்  எல்லாமாய்த்  தோற்ற  வொடுக்கமின்றிப்  புலனறிவிற்கு எட்டாமல் நிற்கும்  அவ்  இறைவனுடைய  ஒப்புயர்வற்ற  தன்மைகளை  எடுத்துக்கூறிப்  பாராட்டுகின்றார் .

பதவுரை :-  இப்  புவனம்  நீர்  தீ  காலொடு  வானம்  ஆனாய்  போற்றி  = 

இந் நிலம்  நீர்  நெருப்புக்  காற்று  விண்  என்னும்  ஐம்பெரும்  பூதங்களும்  ஆயினய்  வணக்கம் ,

எவ்  உயிர்க்கும்  தோற்றம்  ஆகி  நீ  தோற்றம்  இல்லாய்  போற்றி  = 

எல்லா  உயிர்களும்  தோன்றுதற்குக்   காரணன்  ஆகி  நீ  ஒன்றில்  தோன்றுதல்  இலன்  ஆனாய்  வணக்கம்,

எல்லா  உயிர்க்கும்  ஈறாய்  ஈறு இன்மை  ஆனாய்  போற்றி   =

எல்லா  உயிர்களும்  ஒடுங்கும்  இடனாய்  நீ  ஒன்றில்  ஒடுங்குதல்  இலன்  ஆனாய்  வணக்கம் ,

ஐம்புலன்கள்  நின்னைப்  புணர்கிலாப்  புணர்க்கையானே  போற்றி   =

மனத்தோடு  இயைந்து  ஐம்பொறிகளும்  நின்னைச்  சார்தல்  இல்லாதபடி  சார்ந்திருப்பவனே  வணக்கம்  என்பது.

விளக்கவுரை  :-    நம்மாற்  காணப்படும்  இவ்வுலகம்  மண்ணுலகம்  ஆதலின், “இப்புவனம்”  என்று  முதலிற்  சுட்டிக் கூறப்பட்டது  .  முதலில்  நிலம்  கூறப்பட்டமையால் , ஒடுக்கமுறை  பற்றி , முறையே  புவனம் , நீர் , தீ , கால் , வானம்  என்றார் .  ஐம்பெரும்  பூதங்களும்  வெளிப்படக்  கூறப்பட்டமையால்,  தீயின்  கூறு  ஆகிய  ஞாயிறு  திங்களும், இங்ஙனம்  கூறுதற்கு  வினை  முதலாகிய  உயிரும்  ஆகிய  மூன்றும்  கொள்ளப்படும் என்க.  இவ்  வெண்வகைப்  பொருள்களும்  இறைவனுக்குத்  திருமேனியாகும்  என்பது.  இதனால் , இறைவன்  உலகெலாம்  ஆவானென்பது  பெறப்படும் .

                 உலகத்  தோற்றத்திற்குக்  காரணன்  ஆதல்  பரம்பொருள்  இலக்கணங்களுட்  சிறந்ததொன்று  என  மறையாகமங்கள் கூறும் . ஆதலின்,  “எவ்வுயிர்க்கும்  தோற்றமாகிய “  என்றார் .  தோற்றம் , இலக்கணைச்  சொல்லாக  நின்று , காரணன்  ஆதலை  உணர்த்தும் , உயிர்களின்  பிறப்பிற்கு  மாயையினின்றும்  உடல்  முதலியன  கிடைப்பதால், மாயை  காரணம்  ஆகாதோ எனின் ,  மாயை  தனக்கு  ஆதாரமாக  உள்ள  சிவசத்தியின்கண் நின்று  , அச்  சத்தி  இயக்கிய  வழியே  அவ்வக்காரியங்களைப்  பயக்கும்  ஆற்றல்  உடையதாகும்  ஆதலின்,  மாயா  காரியமாகிய  உலகம்  சிவ சத்தியினின்றும் தோன்றியதேயாம் என்ப. அதனால், உலகத்  தோற்றத்திற்குக்  காரணன்  சிவபெருமானே யன்றி மாயை  உண்மைக் காரணன்  ஆகாது என்க.   இவ்வுண்மையை, “வித்துண்டா  மூல முளைத்த வாதாரகமாம்” என்னும் சிவஞான  போத  வெண்பாவின் பேருரையில் , சிவஞான  முனிவர்  விளக்கி  உரைத்தமை  யானும்  உணர்க .  உலக  ஒடுக்கத்திற்கும்  இவ்வாறே  கொள்க. “ஏல்லா உயிர்க்கும்  ஈறாய்  ஈறின்மையானாய்  “ என்றது.  எல்லா  உயிர்களும்  ஒடுங்குதற்கு  முடிவு  இடனாக வுள்ளவன்  மகாருத்திரனாகிய  பரமசிவனே என்ப.  “அந்தமதி “ என்புழி  , அந்தத்தைச்செய்யும்  மகா சங்கார காரணன் பமசிவனே என்பது  தெளிவிக்கப்பட்டமை  அறிக.  எல்லாம்  முடிவில்  தன்பால்   ஒடுங்கத்  தான்  ஒன்றினும்  ஒடுங்குதல்  இன்றி , அழிவில்  பொருளாகத்  திகழ்பவன்  சிவபெருமானே யாவான்  என்பது , “ஓதத்தொலிமடங்கி  …… வேதத்தொலி  கொண்டு  வீணைகேட்பார்  வெண்காடு  மேவிய  விகிர்தனாரே”  என்னும்  தமிழ்  மறையனும்  அறிக.  உலகம்  எல்லாம்  தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும்  காரணன்  ஆகி , தான்  தோன்றுதலும்  ஒடுங்குதலும்  இல்லாத  தனி முதல்வன்  ஆவன் என்னும்  இவ் இயல்பால், இறைவன் உலகில்  வேறு ஆவான்  என்பது  பெறப்படும் என்க.

                 புலன்கள் என்பது  ஈண்டு  வாயிலாகவுள்ள  பொறிகளை  உணர்த்தும். மனம், பொறி வழிச்சென்று நுகரும் புலன்கள் எல்லாம் சடப்பொருள்களைப்  பற்றின ஆதலானும் , ஞான  வடிவமாகிய இறைவன் மெய்யுணர்வினால்  அன்றி  அற்யப்படாதவன்  ஆதலானும், ஐம்பொறிகளுக்கும்  எட்டாத  நிலையினன்  என்பது தோன்ற , “ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலா” என்றார்.  ஐம்பொறிகளும் இறைவனைப் பற்றாவாயினும் , வினைக்கு ஈடாகப் பிறந்த உயிர்கள் எல்லாம் அவ்வினைப் பயன்களை நுகர்ந்து , வினை யொழிவு பெற்று நலம் அடைய வேண்டும் என்னும் கருணை காரணமாக, இறைவன் ,அவ்வுயுர்கள் கன்மப் பயன்களை அநுபவிக்குங்கால் , அவற்றோடு உடனாக  நின்று உதவி புரிவன் என்னும் உண்மை தோன்ற, அவ் ஐம்பொறிகளோடு சார்ந்திருப்பன் என்பார் . “புணர்க்கையானே” என்றார். ஐம்பொறிகளும் ஆண்டவனைப் பற்றா, ஆண்டவன் அவ் ஐம்பொறிகளையும் சார்ந்து நிற்பன் என்பது  கருத்து. ஐம்பொறிகளால் பற்றப்படுவான் ஆயின் , மீள முடியாத நிலை ஏற்படும் . உயிர்களுக்கு  உபகரித்தல் கருதி, இறைவன் புணர்ந்து இருப்பான் ஆயின், வினைஒழிவின்பின், தானும் அவற்றைவிட்டு , அவ்வுயிரையும் விடுவித்துத் தன் திருவடி இன்பத்தில் இயைப்பன் என்பது கருத்து. இதனால், ஆண்டவன்  உலகத்தோடு  உடனாதல் பெறப்படும் என்க. இங்ஙனம்  இறைவனுக்கும்  உலக  உயிர்களுக்கும் உள்ள  இயைபு  “எட்டுத்  திசைதானாய் வேறாயுடன் ஆனான் இடம் வீழிம் மிழாலையே” என்று தமிழ்மறையும் , “உலகெலாமாகி  வேறாயுடனுமாய் “ என்று ஆகமமுடிவும் கூறியபடி, உலகெலாம் ஆதல், வேறாதல், உடனாதல் என்னும்  முத்திறப்படுத்து உரைக்கப்படும் என்பது. இம் முத்திறமும் இத் திருப்பாட்டின் முதல்  அடியிலும் , இரண்டாம், மூன்றாம் அடிகளிலும் ,நன்காம் அடியிலும் அமைந்து  இருத்தல் அறிந்து இன்புறத்தக்கது .

                   இதன்கண், உலகெலாமாகி, வேறா யுடனுமாய் விளங்கும் இறைவனை ஐம்புலன்களாலும் பற்றப்படாதவன் என்று கூறியிருத்தலின், ஐம்புலன் அளவில் அன்றி, மேற்சொல்லாத சிறியேனைக் கருணை காட்டி ஆட்கொள்ளல் வேண்டும் என்று இரங்கிக்  கூறியது பெறப்படுதலின், காருணியத்திரங்கல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                   **************************************************

8.   ஆனந்தத் தழுந்தல்

 னந்தத்து அழுந்தல் என்பது இன்பத்தில் அழுந்தி நிற்றல் என்னும் பொருளதாம். இன்பம், ஈண்டு அழிவில் இன்பம் ஆகிய பேரின்பம் ஆகும். உடல் அளவில் உயிர் நுகரும் இன்பம் ஐம்பொறிகளின் வாயிலாக அநுபவிக்கப்படும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தும் ஆம் . பொறிவழி மனம் சென்று , ஒரு புலனை அறியுங்கால் , பொது முறையில் இல்லாமல், சிறப்பு முறையில் அறிதல் அநுபவம் ஆகும். அநுபவம் என்பது அழுந்தி அறிதல் ஆகும் என்ப. எடுத்துக்காட்டாக ஒன்றை நினையலாம் . நாவாகிய பொறியால் , ஒரு பழத்தைச் சுவைக்குங்கால், இன்ன இயல்பினது என்று அழுந்தி அறியின் அஃது அனுபவம் ஆகும்.

     பொறிவழி அநுபவிக்கப்படும் இன்பங்கள் எல்லாம் விரைவில் அழியும் இயல்பினவாம் . மேலும், அவ்வின்பங்கள் அளவில் மிகும் ஆயின், கேடு விளைவிக்கவும் கூடும் . ஈண்டு, அடிகள் இன்பம் எனக் கண்டது, பொறிகளின் வாயிலாக இன்றி, மெய்யுணர்வின் வாயிலாக நுகரத்தக்க சிவானந்தம் ஆகிய அழிவில் இன்பத்தையே யாம். “உணர்வினேர் பெற வருஞ் சிவபோகம்”என்பர் சேக்கிழார். இவ் இன்பத்தையே அடிகள் ,”உலப்பிலா ஆனந்தம் “ எனவும் , “அந்தமொன்றில்லா ஆனந்தம்” எனவும் கூறுவர் , மாயா காரியமாகிய உலகப் பொருட் காட்சி  ஒழிந்து, பேரின்ப வடிவமான சிவக் காட்சியில் தலைப்படுவோர்க்கே இவ் வின்பம் புலன் ஆம் என்பது . பாசப்பிணிப்பிற் சிக்குண்டு கிடக்கும்  உயிர் , பண்டை  நல்வினை வயத்தால் அப் பிணிப்பினின்றும் விடுதலை பெற வேண்டுமென்னும் முயற்சி மேற்கொண்டு, அதற்குரிய தவத்தில் தலைப்பட்டு, மன மொழி மெய்களைத் தூயனவாக்கிக் கொள்ளல் வேண்டும். அத் தூய்மை நெஞ்சத்தால் இறைவனை இடயறாது நினைதலானும்,மொழியால் அவன் புகழைப் பாராட்டுதலானும், காயத்தால் வழிபாடு செய்தலானும் உண்டாவதாகும். அத் தூய்மை விளக்கம் மேற்பட மேற்பட  , மல இருள் நீங்கி மெய்யுணர்வு கைகூடும் . அவ்வுணர்வு  முதிர்ச்சியிலே, பொறி புலன்களின் நுகர்வு சுருங்கிச் சிவானந்த விளைவு உண்டாம் . அவ் இன்பத்தில் சிறிது தலைப்பட நேருமாயினும் , அது கிடைத்தற்கு அரியது எனக் கண்டு , மேன்மேலும் அச்சாதனங்களையே நழுவவிடாமல் பற்றி , அவ் இன்பப் பதிவில் ஆர்வம் வைத்து ஒழுகல் வேண்டும் என்பது இப் பதிகம் நுதலிய பொருளாம் . இவ் இன்ப நுகர்வின் பொருட்டு , உயிரைத்  தூய்மைப் படுத்துக் கொண்டு, ஆண்டவன் கருணை குறித்து இரங்கிய செய்தி முன்னைப்பதிகத்திற் கூறப்பட்டது.  அக் கருணையின்  பயனாகவுள்ள சிவானந்த விளைவில் திளைத்தல் இதன்கட்  கூறப்படுதலால் , பதிக இயைபு உண்மை புலனாதல் அறிக.

எழுசீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தம்

பாடல் 71.

புணர்ப்ப  தொக்க  எந்தை  யென்னை

யாண்டு  பூண  நோக்கினாய்

புணர்ப்  பதன்றி  தென்றபோது

நின்னொ  டென்னோ  டென்னிதாம்

புணர்ப்ப  தாக  அன்றி  தாக

அன்பு  நின்க  ழற்கணே

புணர்ப்ப  தாக  அங்க  ணாள

புங்க  மான  போகமே.

கருத்துரை :-    முன்னைப்  பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில் உலகு எலாம் ஆகி , வேறாய்  உடனுமாய்  நிற்கும் இறைவனுடைய ஒப்பு உயர்வு அற்ற தன்மைகளை எடுத்துப் பாராட்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் , அப் பெருந்தகை ஆகிய நீ என்னை ஆட்கொண்டும், சாத்தியமாகிய நின் திருவடி இன்பத்தில் இயைத்துக் கொள்ளக் கால இடையறவுதடை ஆம் ஆயின் , சாதனமாகிய மெய்யன்பே வேண்டும் என்று இரக்க விண்ணப்பம் செய்கின்றார் .

பதவுரை :-  எந்தை  =  என் தந்தையே ,

புணர்ப்பது ஒக்க =  நின்  திருவருட்  பேற்றில் என்னை  இயைவிப்பதாகிய  காலம்  பொருந்துவதாக,

என்னை  ஆண்டு  பூண நோக்கினாய்  =  அடியேனை  ஆட்கொண்டு  யான் அடிமைத்தன்மையை மேற்கொள்ளுமாறு  அருள் நோக்க செய்தாய் ,

நின்னொடு  என்னொடு இது புணர்ப்பது அன்று என்ற போது =  பின்னர்  உன்னை என்னோடு இக்காலம் இயைவிப்பது அன்று என்று நீ திருவுளங்கொண்டு புறக்கணித்த பொழுது ,

இது என் ஆம்  =  இதுகுறித்து யான் செய்யத்தக்கது யாது ஆம் ?,

இது புணர்ப்பதாக அன்றாக   =  இக் காலம்  நின்னோடு என்னை  இயைவிப்பதாக  அல்லதாக,

அங்கணாள  = அழகிய  கண்ணோட்டம் உடையவனே ,

நின் கழற்கண்  அன்பே   = நின் திருவடிக்கண் உள்ள மெய்யன்பே

புங்கம் ஆன போகம் புணர்ப்பதாக =உயர்ந்ததாகிய  சிவானந்தத்தை விளைவிப்பதாக  என்பது.

விளக்கவுரை :-   இறைவனது  பேரின்பப்  பெருஞ்  செல்வத்தை அநுபவித்தற்கு  உரிய  மைந்தன் எனத்  தம்மைக் கண்டு , “எந்தையே” என்று விளித்தார் . அடிகள் திருப்பெருந்துறை சென்ற பொழுது , அவர் பாசக்கட்டினின்று  விடுதலை பெறுதற்கு உரிய கால எல்லையை எதிர்பார்த்து, இறைவன் ஞானாசிரியனாகக் குருந்த மரத்து நீழலில்  எழுந்தருளி இருந்தான் என்று கூறுவர் வரலாற்று  ஆசிரியர் .  “பந்தம் அறும் எல்லையது பார்த்தினிதிருந்தான் “ என்பது காண்க .

       பண்டைப் பிறப்புகள் பலவற்றினும் செய்து போந்த அரிய தவத்தின் பயனாக, ஞானாசிரியனாக எழுந்தருளியிருந்த அவ் விறைவன் அருட் பார்வைக்கு இலக்காகும் காலம் தமக்கு வாய்த்தது என்பார், “புணர்ப்பது ஒக்க “ என்றார்.  புணர்ப்பது –  கூட்டுவிப்பது; அது காலத்தக் குறிக்கும் . ஆண்டவன் அருட் பார்வைக்குத் தம்மை இலக்காக்கிய அரிய அந் நற்காலத்தையே கடவுள் தன்மை  வாய்ந்தது எனக்கொண்டு , இறைவனை காலதத்துவத்தில் வைத்து , “ஞாலமே விசும்பே இவை  வந்து போம், காலமே உனைஎன்று கொல் காண்பதே” என்று போற்றி இருத்தலும் அறிக. “ஒக்க” என்பதற்கு , அந் நற்காலம் வந்து பொருந்தியதாக என்பது பொருள். ஆண்டு பூண நோக்கினாய்” என்றார் ஆயினும் , அருணோக்கம் முன்னரும் , ஆட்கோடல் பின்னரும் நிகழ்வன   ஆதலின் , நோக்கியாட்கொண்டாய் என்பதே கருத்தாகக்  கொள்க. பின்னர், “அங்கணாள” என்பதற்கேற்ப , “நோக்கினாய் “ என்றார். நோக்குதல் நயன தீக்கை ஆகும் . ஆண்டவனது அருட்பார்வையே ஆன்மாக்களின் மல இருளைக் கெடுத்துத் தூய்மைப்படுத்துவதாகிய கருவியாகும் என்ப.  “கண்ணால் நோக்கிக்  கண்ணப்பர் பணியுங்கொள் கபலியாரே” என்பது தமிழ்மறை. நோக்கிய பின்னரே பணிகோடல் என்பது ஈண்டும் அறியத்தக்கது.  நயன தீக்கையால், அடிகள் நல்லுயுரைத் தூய்மைப்படுத்து , இறைவன் பணிகொண்டனன் ஆக, அப்பணியே சிறந்த அணிகலனாக அடிகள் பூண்டனர் என்பது ,”பூண”என்னும் சொல்லால் அறியலாம். “பூண நோக்கினாய்” என்புழி, பூண என்னும் செயவென் எச்சம் காரியப் பொருட்டு; அருணோக்கு ஆகிய காரணத்தால்  நிகழ்வது பணிபூணுதல் ஆதலின் என்க.

            இறைவன் அருணோக்கால் அடிகளை  ஆட்கொண்ட பின்னர், தினைத்துணைக் காலமும் காய வாழ்க்கையைப் பொறேன் என்று அடிகள் திருவடி இன்பத்தில் தலைப்பட  விரைந்தனர் ஆக, “இன்னும் சினாள் இருந்து பின்னர்த் திலையம்பதிக்கு வந்து காண்க “என்று இறைவன் கட்டளை இட்டு  உருக்கரந்தனன் என்பது வரலாறு. “நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென, ஏலவென்னை யீங்கொழித்தருளி” என்னும் அடிகள் திருவாக்கும்  ஈண்டு நினைக்கத்தக்கது .

               இரண்டாம் அடியில் , “இது” என்னும் சுட்டு, “ஈங்கு ஒழிந்தருளி” என்றபடி ஆட்கொண்டும் திருவடியில்  இயைவித்துக் கொள்ளாமல்  நிலவுலகத்து  இருத்தற்கு ஏதுவாகிய காலத்தைக் குறிப்பதாகும் . “இது நின்னொடு என்னொடு புணர்ப்பதன்று., என்பது ஆண்டவன் கட்டளை மொழியாகும்.  “நின்னொடு” என்புழி, மூன்றாவதை இரண்டாம் உருபு ஆகக் கொண்டு , நின்னை எனவும், “என்னொடு” என்பதற்கு , ஆண்டவன் தன் திருவடி நீழலோடு எனவும் கொள்ளல் வேண்டும்.  “புணர்ப்பதன்று” என்பது, இது என்னும் சுட்டால் உணர்த்தப்படும் காலம் என்னும் எழுவாய்க்குப் பயனிலை ஆகும் ; சேர்ப்பிப்பதன்று என்பது பொருள், ஆகவே, ஆண்டவன் அடிகளை நோக்கி , “நின்னை நம் திருவடி இன்பத்தில் இயைத்துக் கொள்ளுதற்கு இது   காலம் அன்று “ என்று அருளிச் செய்தனர் என்பது கருத்து அகும். அருட் பார்வையால் தூய்மைப்படுத்து ஆட்கொண்ட ஆண்டவனே இப்பொழுது திருவடியில் இயைத்துக் கொள்ள இயலாது என்றால் ,அடியேனாகிய சிறியேன் செய்யத்தக்கது  யாது  ஆகும் என்பார், “இது என்னாம்” என்றார் . இது  என்பது ஈண்டு , ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பை உணர்த்தும் .  “என் ஆம்” என்பது, யாது ஆகும் (ஒன்றும்  இன்று) என்னும் பொருள் உடையது ஆதலின் , அதற்கேற்ப , யான் செய்யத்தக்கது என்பது வருவித்து உரைக்கப்பட்டது.

                  “புணர்ப்பதாக அன்றிதாக “ என்புழி, இது என்பது திருவடியில் இயைத்துக்  கொள்ளாமைக்கு  ஏதுவாகிய காலத்தைச் சுட்டுவதாகும் . புணர்ப்பது ஆக  –  நின் திருவடியில் இயைவிப்பதாக, அல்லது அன்றாக  இயைவிப்பது  அல்லது  ஆக  என்பது.  அடிகள் ஆண்டவன் கட்டளையை  ஏற்றுக்கொண்டு, “ஆண்டவனே, நின் திருவடி அடைதற்கு இக் காலம்  பொருந்தியது  ஆயினும் , அன்றிப் பொருந்தாதது ஆயினும்  ஆகுக.  என் முடிவான வேண்டுகோள் ஒன்று  உண்டு ; அதனை மறவாமல் ஏற்று அருளுவை என்னும் துணிவுடைமைக்கு  ஆதரவு  உண்டு”  என்பார், “அங்கணாள” என்று விளித்தார் .  அங்கணாளன் என்பதற்குக்  கண்ணோட்டம் உடையவன் என்பது பொருள் . கண்ணோட்டம்  என்பதற்கு , “தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை. இஃது அவர் மேற் சென்ற வழி நிகழ்வது ஆகலின் அப் பெயர்த்தாயிற்று” என்று  பரிமேலழகர் விளக்கம்  கூறியுள்ளார் . கண்ணோட்டத்தையே  நாகரிகம் எனவும் கூறுப. “முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் தனி நாகரிகர் “ என்பதும்  காண்க.  ஈண்டு, ஆண்டவன் புற  உருக்கரந்த நிலையாயினும் , அடிகள் தம் உள்ளத்துளே உருவிழைத்து முன்னிலைப்படுத்துக் கூறுகின்றார் ஆதலின், கண்ணோட்டத்தின்  பயன் குறித்து  இவ்வாறு  விளித்தனர் என்பது.

                      இனி, அடிகள் தம் வேண்டுகோளை அருளிச்செய்கின்றார் . அது:- “காலம் உதவினும் உதவுக, உதவாது ஒழியினும் ஒழிக. சிறந்த  வீட்டின்பத்தைப்  பயக்கும்  மெய்யன்பே  வேண்டற்பாலது” என்பதாம்.  “அன்பு நின் கழற்கணே” என்புழி , ஏகாரத்தைப் பிரித்து , அன்பு என்பதனோடு இயைத்து , நின்கழற்கண்  அன்பே என இயைக்க வேண்டும் . ஏகாரம் தேற்றப் பொருட்டு , இதனையே  அடிகளும் , “பெறவே  வேண்டு  மெய்யன்பு “ எனப்  பிறிதோரிடத்துத்  தெளிவுபடுத்துக் கூறியிருத்தலும் அறிக.

              புங்கம்  –  சிறந்தது  என்னும்  பொருட்டு . சிறந்தது  என்னும்  அடைமொழியால்  போகம் ஈண்டுச்  சிவானந்த  அநுபவத்தை  உனர்த்தும் . திருவடிக்கண் உள்ள மெய்யன்பே  என்னைச் சிவானந்த நிறைவில்  இயைவித்து அருளல் வேண்டும்  என்பார், “அன்பே  புயங்கமான  போகம்  புணர்ப்பதாக “  என்றார் .  இதனால்  சிறந்த  சிவானந்தத்தை  விளைக்கும்  மெய்யன்பே  நின்  திருவடி  பற்றியதாக அருளல்  வேண்டும்  என்பது போதரும்.  அழிவில்  இன்பம்  பயப்பது மெய்யன்பு  என்பதை , “இறவாத  இன்ப  அன்பு  வேண்டிப் பின் வேண்டுகின்றார்”  என அம்மையார்  வேண்டுகோளாகச் சேக்கிழார்  கூறியதனாலும்  அறிக.  அழிவில்  இன்பப்  பேறு  ஆகிய  சாத்தியத்தைப் பயப்பது  மெய்யன்பு  ஆகிய  சாதனம்  ஆகும்.  “என் கடன் பணிசெய்து  கிடப்பதே” என்றபடி , சிறந்த  சாதனப்பேறே  சாத்தியமாகிய பயனை எளிதிற்  பயக்கும்  என்னும்  துணிவு  உடையராய்  இங்ஙனம் வேண்டுவார்  ஆயினர்  என்க.  இத்  திருப்பாட்டு , சொற்பொருட்  பின்வரும்  நிலை  என்னும்  அணியுடையதாகும் .

                 இதன்கண்,  “நின்  கழற்கண் அன்பே  புங்கமான  போகத்தைப்  புணர்ப்பதாக”  என்றதனால், ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “இது  புணர்ப்பதாக  அன்றாக “ எனக்  காலத்தை வெறுத்து மெய்யன்பே  வேண்டும் என்றமையால் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                              ******************************************

பாடல் : 72

போகம்  வேண்டி  வேண்டி  லேன்பு

ரந்த  ராதி  யின்பமும்

ஏக  நின்க ழலி  ணைய

லாதி  லேனென்   எம்பிரான்

ஆகம்  விண்டு  கம்பம்  வந்து

குஞ்சி  யஞ்ச  லிக்கணே

ஆக  என்கை  கண்கள் தாரை

யாற  தாக  ஐயனே .

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடிப்பேற்றிற்குச்  சாதனம்  ஆகிய  மெய்யன்பே  வேண்டும்  என்று  தெறிவித்துக்கொண்ட  அடிகள் , இத்  திருப்பாட்டில், அவ்வேண்டுகோளுக்குக்  காரணம்  கூறி , அம் மெய்யன்பின்  விளைவாக உள்ள  செயல்களையும்  பெற வேண்டும்  என்று  விண்ணப்பம் செய்கின்றார்.

பதவுரை :-     ஏக       =     ஒப்பற்ற  தனி முதல்வனே,

என்  எம்பிரான்  =   என்  தலைவனே ,

ஐயனே  =  ஞானாசிரியனே ,

போகம்  வேண்டி   =  உலக  போகத்தை  விரும்பி ,

புரந்தர ஆதி  இன்பமும்  வேண்டிலேன்  =  இந்திரன்  முதலிய  தேவர்  உலக  இன்பங்களையும்  விரும்புகின்றிலேன் ,

நின்  கழல்  இணை  அலாது  இலேன்  =  நின்  திருவடித்  துணையல்லாது  வேறு  பற்றுக்கோடு  இல்லேன்

ஆகம்  விண்டு  கம்பம்  வந்து  =  உடல்  வேறுபட்டு  நடுக்கம்  தோன்ற ,

என்  கை  குஞ்சி  அஞ்சலிக்கேண்ண ஆக   = என்  கைகள்  தலைமேற்  குவித்துத்  தொழுதல்  ஆகிய  செயலின்  கண்ணே  நிகழ்வனவாக ,

என்  கண்கள்  தாரை  ஆறு  அது  ஆக  =  என்னுடைய கண்களின்  நீர்  ஒழுக்கு  ஆறாகப்  பெருகுவதாக  என்பது.

விளக்கவுரை :-  தனக்கு  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாத  தனி முதல்வன்  ஆவான் என்பது  தோன்ற , ஏகன்  எனப்பட்டான் . அத்  தனிப்பெரு  முதல்வனே தமக்குத்  தலைவனாகவும்  ஞானாசிரியன்  ஆகவும் ஆயினான்  என்பார், “ என்  எம்பிரான் “, “ஐயனே”  என்று  அருளிச்  செய்தனர் . 

           இந்திரன் , பிரமன்  முதலிய  தேவர்களின்  பதங்கள்  பலவற்றுள்ளும் , போக  நுகர்ச்சிக்குச்  சிறந்தது  இந்திரன்  பதம்  ஆகும் . ஆதலின், “புரந்தராதி இன்பமும்”  என்றார் .  உம்மை , சிறப்புப்  பொருளில்  வந்தது. அத்துணைச்  சிறந்த  இன்பத்தையும் , போக நுகர்ச்சி நிமித்தம்  விரும்பேன்  என்பார், “போகம்  வேண்டி  வேண்டிலேன் “  என்றார்.  “புரந்தராதி “  என்புழி , ஆதி  என்னும்  சொல்லால்  சிவபோகம் அல்லாத ஏனையவெல்லாம்  கொள்ளல்  வேண்டும் .  “போகம்  வேண்டி வேண்டிலேன்” என்றதனால் , சிவ  வழிபாடு  செய்தற்கு  அப்  பதங்கள் வாய்ப்பு  உடையனவாக  இருக்குமாயின் , அது  குறித்துத்  திருவருளாலே அப்  பதங்களைப் பெற நேரினும் வெறுப்பேன் அல்லேன் என்று அடிகள் கருதினார்  என்பது  குறிப்பிற்  பெறப்படுவதாகும் .  “நரகம் புகினும்  எள்ளேன் திருவருளாலே  இருக்கப்பெறின்”  என்றாபடி, திருவருள்  வழியன்றி , அடிகள்  தாமாகப்  போக நிமித்தம்  அவ்வின்பங்களைச்  சிறிதும் விரும்பாத  இயல்பினர்  என்பது  கருத்து .

              அடிகளுக்குச்  சிவபெருமான்  திருவடித்துணையே  புகல்  இடம் ஆகும்,  ஆதலின், “நின்  கழலிணையலாது  இலேன்” என்புழி , இல்லேன் என்பதற்குப்  புகல்  இடம்  அல்லது  பற்றுக்கோடு என்பதை  வருவித்து இயைத்துக்  கொள்ளல்  வேண்டும். அல்லது , இல்லேன்  என்பன, அலாது  இலேன் எனச்  செய்யுள் விகாரத்தால்  தொக்கு  நின்றன . இனி, “ஏக” என்பதற்குச்  செல்ல  எனப்  பொருள்கொள்வாரும்  உளர் . ஆண்டவன்  திருவடியன்றித் தமக்குப்  புகல் இடம் பிறிதின்று என்னும் உறுதி  உடைமையால் , “எம்பிரான்” என்ற  அளவில் அன்றி ,”என்  எம்பிரான்”  என்றார்.

           இனி, வேண்டாமைக்குச் செயப்படு பொருளாகப்  புரந்தராதி  இன்பத்தைக்  கூறிய  அடிகள் , வேண்டும்  என ஆண்டவன்  இடத்து விண்ணப்பம்  செய்துகொள்ளப்  பட்டவை யாவை  எனின் , மெய்யன்பின்  காரியங்களாக உள்ள  தொழுதன்  முதலிய  நிகழ்ச்சிகளேயாம் . காரணம்  உள்வழியன்றே  காரியம்  நிகழ்வது ; அதனால்,  காரிய  நிகழ்ச்சியை  வேண்டவே , காரணம்  ஆகிய  மெய்யன்பு  வேண்டும் என்பது  கூறாமலே  அமையும்  என்பது.  அன்பு, புறத்தே தோன்றும்  மெய்ப்பாடுகளான் அன்றிப் பிழம்பு  உணர்த்திக்  காட்டற்பாலது அன்று.  உள்  நிகழும்  அன்பளவில்  அன்றி,  அதனால்  விளையும்  புறச்  செயல்களும்  வேண்டும்  என்று  அடிகள் விரும்பியதற்குக்  காரணம் , அகம்,  புறம்  எல்லாம் அன்பு  மயமாக  நிகழ  வேண்டும் என்பதே.  மேலும்  மெய்யன்பின்  விளைவு  ஆகிய  புறச்செயல்கள் இல்லையாயின் , அரசன்  முதலிய  உலகியலார் , அடிகளின்  உண்மை  இயல்பை அறியாமல் ,  அவரைத்  தம்மவர்  என்று நெருங்கி , உலகியற் செயல்களில் ஈடுபடுத்தக்கூடும்  என்பதும்  ஆம். கண்ணீர்  ஒழுகல்  முதலிய  புறச்செயல்களைக்  கண்டதும்  “இவர் இயல் வேறுபட்டது ; நம்க்கு  ஒவ்வார் “ என  அன்னார் எல்லாம்  விட்டு அகல்வர்  என்பது.  அன்பின்  விளைவாகவுள்ள  செயல்கள், “மெய்தானரும்பி “ என்னும்  திருப்பாட்டில்  முன்னரும்  கூறப்பட்டன. வேண்டாமையைக்  குறிப்பிட்டு , வேண்டுவன  கூற நேர்ந்ததால் ஈண்டும்  கூறுவார்  ஆயினர்.

                அன்பின்  முதிர்ச்சியில்  தன்னையும்   மறக்கும்  தன்மை  உண்டாம்.  அந்நிலையில், உடலில் ஒரு வகை வேறுபாடு உண்டாகும் ஆதலின், “ஆகம்  விண்டு” என்றார். விள்ளல்   = வேறுபடுதல் .  அவ் வேறுபாட்டோடு  நடுக்கமும்  நிகழ்தல் குறித்து, “கம்பம்  வந்து” என்றார் . வந்து  என்னும்  செய்தென்  எச்சத்தைச்  செயவென் எச்சமாகக்  கொள்ளல்  வேண்டும் . வந்து  –  வர; தோன்ற  என்பது, உடல் வேறுபாடும்  நடுக்கமும் அன்பின்  விளைவாக  அன்றி  அச்சத்தின் விளைவு  ஆகவும் ஏற்படும்  ஆதலின், அதனை  விலக்கி, அன்பின்  விளைவு  எனக் கோடற்கு , “என் கை குஞ்சி  யஞ்சலிக் கணேயாக” என்பது  முதலியன கூறப்பட்டன. “உச்சிக்கூப்பிய கையினர்”  என்பது முதலியன  முனிவர்களின் செயல்களாகக் கூறப்பட்டன .  ஈண்டு, அச் செயல்கள் தானே  நிகழவேண்டும்  என்பார், “அஞ்சலிகணேயாக, ஆறாத “ என  வியங்கோள்  வாய்ப்பாடாகக் கூறப்பட்டன.  கூப்பிய  கை தலைக்கண்ணதாக என்பதோடு  அமையாது, கண்ணீர்ப்பெருக்கு  ஆறதாக  என்றார்,  “அழுதால்  உன்னைப் பெறலாமே “ என்னும் குறிக்கோள் உடையர் ஆதலின், ஆறது  என்புழி,  அது  பகுதிப்பொருள் விகுதி .

                       இதன்கண், ஆண்டவன்  திருவடி இன்பத்தில் ஈடுபடுதற்கு உரிய மெய்யன்பும் , அதன்  விளைவு ஆகிய  மெய்ப்பாடுகளும்  கூறப்பட்டமையால் ஆனந்தத் தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும், புரந்தராதி இன்பமும் வேண்டிலேன் என்றமையால் வைராக்கியமும் , கை கூம்புதல் , கண்ணீர் பெருகல்  முதலியவற்றால் பத்தியும்  புலப்படுதலின் ,பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதம் நுதலிய பொருளும்   தோன்றுதல் அறிக . 

                                          **********************************************

பாடல்: 73.

ஐய  நின்ன  தல்ல  தில்லை

மற்றோர்   பற்று  வஞ்சனேன்

பொய்க  லந்த  தல்ல  தில்லை

பொய்மை  யேனென்  எம்பிரான்

மைக  லந்த  கண்ணி  பங்க

வந்து  நிங்க  ழற்கணே

மெய்க  லந்த  அன்ப  ரன்பெ

னக்கும்  ஆக  வேண்டுமே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில் மெய்யன்பையும் , அதன் விளைவு  ஆக உள்ள  செயல்களையும்  பெறவேண்டும் என்று  ஆண்டவன்  இடத்து  விண்ணப்பம்  செய்துகொண்ட  அடிகள் , அப்பேரன்பைப்  பெறுதற்கு  உரிய  தம் இயல்பையும் , அஃது யாருடைய  அன்பு  போன்றதாக  இருக்க வேண்டும்  என்பதையும்  இத்  திருப்பாட்டில்  தெரிவித்துக் கொள்ளுகிறார்

பதவுரை  :-  ஐய  என்  எம்பிரான்  =   ஐயனே  என்  தலைவனே ,

மை கலந்த கண்ணி  பங்க  = அஞ்சனம்  தோய்ந்த  கண்களை உடைய  உமையம்மையை  ஒரு  கூற்றில்  உடையவனே ,

வஞ்சனேன்  =   வஞகனாகிய  எனக்கு ,

நின்னது  அல்லது  மற்று  ஓர்  பற்று  இல்லை  =  நின்னையல்லாமல்  பிறிதொறு   பற்றுக்கோடு இல்லை , ( அங்ஙனமாகவும் ) ,

பொய்மையேன்  =  பொய்யொழுக்கம்  உடையவனாகிய  யான்,

கலந்து  பொய் அல்லது  இல்லை  =  சேரப்பெற்றது பொய்மையாகிய  அன்பே  யல்லாது  வேறு  இன்று  (ஆதலின்) ,

நின்  கழற்கண்  வந்து கலந்த  மெய் யன்பர் அன்பே  =  நின்  திருவடி  நீழலில்  வந்து  இரண்டற்ற  நிலையில்  இயைந்து இன்புறும் மெய்யன்பரது  சிறந்த  அன்பே ,

எனக்கும்  ஆக வேண்டும்  =  பொய்மையாளனாகிய  எனக்கும்  உண்டாதல்  வேண்டும்  என்பது.

விளக்கவுரை  :-  ஐயன்  என்றது  ஈண்டு,உயர்ந்தோன்  என்னும்  பொருட்டு  . ஆண்டவனை  உயர்ந்தோன்  எனத்  தெளிந்தே  பற்றுக்கோடாகக்  கொண்டமை , “ஐய”  என்று  விளித்தார்  என்பது. நினது என்பது  விரித்தல்  விகாரத்தால்  நின்னது  என்று  ஆயிற்று .  அது  என்னும் ஆறன்  உருபை  இரண்டன்  உருபு  ஆக்கி , நின்னை  எனக் கொள்க . “அல்லது  இல்லை “ என்றது துணிவு  தோன்றற் பொருட்டு .  இரண்டாம் அடியிற்  கூறியதற்கும்  ஈது  ஒக்கும். ஆண்டவனே, நின் அளவு  சிறந்த ஆதரவு  பிறிது  இல்லை ஆயினும், நின்னிற்  சிறிது  குறைந்த அளவிலாவது  ஒன்று  உளதோ எனின் , அங்ஙனம்  ஒன்றும் கண்டிலேன்  என்பார், “மற்று  ஓர்  பற்று  இல்லேன் “ஏன்றார் .

                  வஞ்சகன்  என்னும்  சொல் , நெஞ்சம் அறிந்தது  ஒன்றைச்  சொல்லினாலும், செயலினாலும்   மறைத்து  மாறுபடச் சொல்லியும் , செய்தும்  ஏமாற்றுவோன் என்னும்  பொருள்  உடையதாகும் . அம்முறையும்  அடிகள் , தம்  இயல்பு  உண்மையில்  வஞ்சிப்பதாக  இருக்குமாயின்  , அதனை  மாற்றி  உரைத்து  இருப்பர் . அங்ஙனம்  கூறாது, “வஞ்சனேன்”  என்று  தம்மை வெளிப்படக்  கூறியிருத்தலின் , அவர்  வஞ்சம் இன்மை  புலனாகும் என்பது.  அங்ஙனம்  ஆகவும் , தம்மை  இவ்வாறு  ஏன்  தாழ்த்துக் கூறவேண்டும் எனின்  பிறழ்தல்  ஆகிய  இயல்பு , ஒரு சிறிதும்  இல்லாது , நேர்மையின்  தூய்மையில்  தலை  சிறந்து  நிற்கும் கடவுளின்  முன்னிலையில்  வைத்துத்  தம்  இயல்பைக் கூறுங்கால் , யாவர்க்கும்  கீழாம்  அடியேனை  என்னும் அடிமைப் பண்பு  தோன்றற்கு  என்க.   அதற்கு  இயைய உலகியலில்  வைத்துக்  கூறியபடியாம்  என்பது. யான்  இழிகுணம்  உடையேண்  ஆயினும், நின்னை  அல்லாது  வேறு  ஒரு  பற்றுக்கோடும் இல்லாதவன்  ஆதலின் , என்னைக்  கைதூக்கி  ஆளுதல் நின்  கடன்  ஆம்  என்பது  குறிப்பிற் பெறப்படும் கருத்து  ஆகும் .  இரண்டாம்  அடியில்  பொய்மையேன் என்றதற்கும்  இதுவே  கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் . 

                       யான்  பொய்யொழுக்கம்  உடையேன் ஆதலின் , அதற்கு  ஏற்ப  என்  அன்பும்  பொய்  ஆகும்  என்பார் , “பொய்  கலந்து  அல்லது இல்லை  “  என்றார். பிறிதோரிடத்தில் , “யானே   பொய்  என் நெஞ்சம் பொய் என்   அன்பும்  பொய்” என்று  அடிகள்  தம்மைக்  கூறியிருத்தலும்  அறிக . யான்  பொய்யொழுக்கம்  உடையேனாக இருப்பினும் , என்  உயிர்க்கு  நின்று , என்  பொய்மை  அன்பை  அறிந்தும்  என்னை  ஆட்கொண்ட  தலைவன் ஆயினான் என்பார், “என்  எம்பிரான்”  என்று  சிரிப்புரிமை  தோன்ற  விளித்துக்  கூறுவார் ஆயினர் .  யான்  வஞ்சகன்  ஆயினும் , பிறிதொரு  பற்றுக்கோடு  இல்லாமையால், எனக்கு  நீயே  ஆதரவாக   அருள் செய்ய  வேண்டும்  என்று  முதல்  அடியில்  கூறியது  போலவே , ஈண்டும் என்  அன்பு  பொய்மையாயினும்,  அஃது  அறிந்தும்  ஆட்கொண்ட  தலைவனாக  இருத்தலின் , ஆட்பட்ட  என்னைப்  பாதுகாக்க  வேண்டும்  கடமை  நின்பாலதாகும்  என்பது குறிப்பிற்  பெறப்படும் கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் .

             தன்னை  அடைந்த  மெய்யன்பரைத்  தன்  திருவடி  நீழலில்  இயைத்துக்கொள்ள  முற்படுங்கால் , ஆண்டவன் , அருள்  உருவினள் ஆகிய  அம்மையுடன்  காட்சியளித்தல்  இயல்பு  ஆதலின் , அக்  கருத்துத்  தோன்ற , “மை  கலந்த  கண்ணி  பங்க” என்றார். அம்மையின்  அருட் குணம் , அவன்  திருநோக்கின்  முகமாக வெளிபடுதல்  குறித்து , “மை கழற்கணே”  என்புழி, ஏகாரத்தைப்பிரித்து , நான்காம்  அடியில் உள்ள அன்பு  என்பதனோடு  இயைத்து , “அன்பே” எனத்  தேற்றப்பொருட்டாகக்  கொள்ளல்  வேண்டும்  .வந்து  என்னும்  செய்தென்  எச்சம், “கலந்த” என்னும்  பெயெரெச்ச  வினையைக்  கொண்டு முடியும் . “மெய்” என்பதை அன்பர்க்கு அடையாகக்  கொண்டு , “கலந்த  மெய்யன்பர்  அன்பே”  என இயைத்துக்கொள்ளல்  வேண்டும் . பக்குவ  முதிர்ந்த  மெய்யன்பர், இறைவன்  திருவடி  நீழலை  அடைதற்கு  , அப் பெருமான்  அருட்குணம்  சிறந்த  ஏதுவாகும் என்பதை , “மை  கலந்த  கண்ணி  பங்க”  என்னும்  தொடரும், அம்  மெய்யன்பர் , தொடக்க  முதல்  மேற்கொண்டு  வந்த சரியை  முதலிய  தவங்களும்  அதற்குச்  சாதனம்  ஆகும்  என்பதை , “வந்து கலந்த”  என்னும்  சொற்களும் புலப்படுத்தி  நிற்றல்  அறிக.  “என்னை நினைந்து  அடிமை  கொண்டு  என்  இடர்  கெடுத்துத்  தன்னை  நினையத்  தருகின்றான் “  என்று  பெரியோர்  கண்ட  மரபும் ஈண்டு  நினைக்கத்தக்கது .  ஒரு  காரியம்  நிறைவேறுதற்கு  இறைவன்  திருவருளும், அத்  திருவருளால்  தூண்டப்பட்ட  உயிர்  முயற்சியும்  ஒத்து  இயைதல்  வேண்டும்  என்பதை  உலகியலிலும்  வைத்து  அறியலாம் .  மெய்மையான  அன்பு  இன்றி , அஃது  உடையான்  போல  நடிக்கும்  பொய்மையாளனாகிய  எனக்கு  இனி   வேண்டுவது  மெய்யன்பர்  அன்பே  யாகும் .  அஃது  இதுகாறும்  இல்லாமல் இருந்தபடியால், இனி  நின்  அருணோக்கால் உண்டாதல்  வேண்டும் என்பார், “எனக்கும்  ஆகவேண்டும் “ என்றார் . “எனக்கும்” என்புழி, உம்மை  இழிவு  சிறப்புப்  பொருட்டு  ஆம்.  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்ட  பொருள்கள்  மூன்று ; அவற்றிற்கேற்ப , விளி  நிலையும்  மூன்றாக  அமைந்து  இருத்தல்  ஆராய்ந்து  இன்புறத்தக்கது.

                  இதன்கண், “மெய் கலந்த  அன்பர்  அன்பு  எனக்கும்  ஆகவேண்டும் “ என்றது , ஆனந்தத்தில்  அழுந்துதற்குக் கருவியாதலின், ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும், “மற்றோர்  பற்று  இல்லை “, அன்பு  எனக்கும்  ஆகவேண்டும்”  என்பவற்றால் , முறையே  வைராக்கியமும்  , பத்தி  நிலையும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய  விசித்திரம் என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக. 

                                        *********************************************

பாடல் : 74.

வேண்டும்  நின்க  ழற்கண்  அன்பு

பொய்மை  தீர்த்து  மெய்மையே

ஆண்டு  கொண்டு  நாயினேனை

ஆவ வென்ற  ருளுநீ

பூண்டு  கொண்ட  டிய  னேனும்

போற்றி  போற்றி  யென்றும்  என்றும்

மாண்டு  மாண்டு  வந்து  வந்து

மன்ன  நின்வ  ணங்கவே .

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பின்  பயனாகிய  அழிவில்  இன்பத்தை  அருளுதற்கு  உரிய  ஆண்டவன்  இடத்து  அப்  பயனை  வேண்டாமல்,  அதற்குக்  கருவியாகிய  மெய்  கலந்த  அன்பர்  அன்பே  வேண்டும்  என்ற  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  வேண்டியதற்கு  ஏதுக்  கூறுகின்றார் .

பதவுரை :-   மன்ன   =   தெய்வ  அரசே

நீ  நாயினேனை  =  நீ  நாயைப்போன்ற  இழிந்தவனாகிய   என்னை,

பொய்மை  தீர்த்து  =  பொய்யொழுக்கத்தை  ஒழித்து  ,

ஆண்டு  ஆண்டு  ஆவ  என்று  அருளு =  ஆட்கொண்டு  இரக்கக்  குறிப்புத்  தோன்ற  ஆறுதல்  மொழி  கூறி அருள்  செய்வாயாக ,

அடியேனும்  =  அடிமையாகிய  யானும் ,

பூண்டு  கொண்டும்  =  அவ்  வடிமைத்  தன்மையை  மேற்கொண்டும்,

மாண்டு  மாண்டு  வந்து  வந்தும்  =  பலகால்  இறந்து  பிறந்தும் ,

போற்றி  போற்றி  என்றும்  =  வணக்கம்  வணக்கம்  என்று  கூறியும்,

என்றும்  நின்  வணங்க  =  எக்காலமும்  நின்னை  வணங்குதற்  பொருட்டு,

நின்  கழற்கண்   =  திருவடிக்  கண்ணே ,

மெய்மை  அன்பே  வேண்டும்  =  மெய்மையாகிய  அன்பே  எனக்கு  வேண்டுவதாகும்  என்பது.

விளக்கவுரை  :-   மன்னன்  என்னும்  சொல்  ஈண்டுத்  தெய்வங்களுக்கு  அரசன்  என்னும்  பொருட்டு .  ஒரு  நாட்டிற்  பிறந்தவன், அப்  பிறப்பில்  , அந்  நாட்டு  அரசனையே  அரசுரிமையில்  வைத்துப்  போற்றுவன். அவனே  இறந்து  பிறிதொரு  நாட்டில்  பிறப்பான்  ஆயின்,  முன்னை  அரசனை  விட்டு  , மீண்டு  பிறந்த  நாட்டு  அரசனையே  உரிமை  கொள்ளக்  கடவன் .  இஃது  உலகியலிற்  காணப்படுவது.  தெய்வ  அரசின்  உரிமை,  அங்ஙனம்  அன்று  ஒருவன்  எவ்  எவ்வுலகில்  எத்துணைப்  பிறவி  எடுப்பினும்  , ஆண்டெல்லாம்  தெய்வ  அரசாகத்  திகழ்வோன் ஒருவனே  யாவன்.  இவ்வுண்மை  குறித்தே , பலகால்  இறந்து பிறந்து  வரும்  நிலையினும்  நீயே  அரசாவாய்  என்பார், ஈண்டு, “மன்ன” என  விளித்து  உரைப்பார்  ஆயினர்.

            ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கல் , அவர்  தூய நிலையுணர்ந்தே  ஆட்கொள்ளுவன் . பொய்யொழுக்கம்  உள்வழிப் பணிபுரியும்  அன்பர்  ஆதல்  இயலாத தொன்று .  அங்ஙனம்  ஆகவும், என் பொய்மை  தீர்த்து ஆட்கொள்ளல்  வேண்டும்  என்று  அடிகள்  வேண்டியது, ஆண்டவன்  அளப்பரிய பேரருள் வள்ளல்  ஆதலின் , அவ்வருள் வண்மை காரணமாகத்  தம்  பொய்மை  தீர்த்தற்கு  முன்னரே  ஆட்கொள்ளுதற்கு   முற்படவுங்   கூடும்  என்னும்  கருத்தன்  என்க. நோய்வாய்ப்பட்ட  ஒரு  மகனுக்கு  மருந்து  கொடுத்து , அந்  நோயைத்  தீர்த்தற்கு  முன்னரே,  கனிந்த  அன்பு  காரணமாகத்  தாய்  இனிய  உணவு  கொடுக்க  முற்படுதலை உலகியலிலும்  காண்கிறோம் அன்றோ?ஆடிகள்  சிறந்த  மெய்யன்புடையராயினும் , அளப்பரும்  பெருமை  மிக்க ஆண்டவன்  முன்னிலையில் , தம்மைச்  சிறுமையுடையர்  ஆகவே காணும் இயல்பினர்  ஆதலின், பலவிடத்தும்  இவ்வாறே  கூறுவாராயினர் .  “ஆவ”  என்பது , இரக்கம்  பற்றிய  குறிப்பு  மொழியாகும் . அங்ஙனம்  கூறி  இரக்கங்காட்ட  வேண்டும்  என்றது , செயற் பயனினும்  இன்சொற்பயன்  விரைவின்  முற்பட்டு  ஆறுதல் அளிக்கும்  என்பது  பற்றியாம்  “அருளுக”  என்புழி , முன்னிலை வியங்கோள்  ஈறு  தொக்கு ,”அருளு”  என்று  ஆயிற்று. அடியனேனும்  என்புழி  உம்மை, “நீ என்னை  ஆண்டு  அருளுக; யானும்  அவ்வடிமைத் தன்மையைப்  பூண்டு  கொண்டு வணங்க “ என்று கொள்ளக்கிடப்பதால் எச்ச வும்மையாகும் .  பூண்டு  கோடல் = இறைவன்  பணியை  அணிகலனாக  மேற்கொள்ளல், அடிகள்  தம்மைப்  பொய்மை  தீர்த்து  ஆண்டுகொள்ள  வேண்டுங்கால், “நாயினேனை”என இழித்தும் , அவ்விறை பணியை மேற்கொள்ளக்  குறிப்பிடுங்கால் , “அடியனேன் “என  உயர்த்தும் கூறியிருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது . “பூண்டு  கொண்டும்”  என்புழி , எண்ணும்மை தொக்கு  நின்றது .

               “என்றும்  என்றும்” என்புழிப்  பின்னது  காலத்தை உணர்த்துவதாகும் .  கொண்டும், வந்தும் , என்றும்  என்றும்  நின் வணங்க  அன்பு  வேண்டும்  என  முடிக்க . இப்  பிறப்பிலே வீட்டின்பம்  எய்துதற்கு வினையெச்சம்  தடையாகுமாயின் ,  அவ்வினை  யொழிவு  பெறுங்காறும்  இறந்து  இறந்து பிறக்க  நேரும்  ஆதலின்,  அப் பிறாவிகளில்  எல்லாம் நின்  அடிமைப்  பணியை அணிகலனாக மேற்கொண்டு  வனக்கம்  வணக்கம்  என்று  நாவாரக் கூறி ,  ஆண்டவனே , நின்னை வணங்க வேண்டும் ஆதலின் , அதன்  நிமித்தம்  எனக்கு  நின்  திருவடிக்கண் மாறாத  மெய்யன்பே   தந்து  அருளல்  வேண்டும் என்பது ,இத்  திருப்பாட்டின்  முகமாக  அடிகள் கருதிக் கூறியது என்க. அழிவில்  இன்பம்  ஆகிய  முடிவான பயனையே  வேண்டும் என  இரந்தால், அது  பெறுதற்குப்  பக்குவம்  இன்று  என  ஆண்டவன்  திருவுள்ளம்  கொள்ளின், பேறு  ஒன்றும்  இன்றாய்விடும் என்னும்  ஐயத்தால், அப் பயனை  உறுதியாகப்  பயக்கும்  மெய்யன்பாகிய  சாதனத்தை  வேண்டுவார்  ஆயினர் .  இச்  சாதனப்பேறு  ஒருமுறை  ஆண்டவன்  அருளால்  கிடைத்துவிட்டால் , பிற்றைப்  பிறவிகளிலும்  தொடர்ந்து  பயன் செய்யும்  என்னும்  உறுதியுடையராய் , “மாண்டு  மாண்டு  வந்து  வந்து மன்ன நின்  வணங்க “ என்றார் .  வருதல்  = பிறத்தல் .

                  அரசனிடத்துக்  குறையிரப்பான்  ஒருவன் , முடிவான  பெரும் பயனைக்  குறிப்பிட்டு  வேண்டுதலும் , அத்துணை  பெறுதற்கு ஏதும் தடை  ஏற்படுமாயின் , அதனிற்  சிறிது  குறைந்த  அளவிலாவது  தரல்  வேண்டும்  எனத்  தெரிவித்துக்  கொள்ளுதலும்  உலகியலிற்   காண்கின்றோம் . அங்ஙனமே , முன்னர்ச்  சிறந்த  பயனாகிய  வீட்டின்பத்தை  வேண்டிய  அடிகள்  அது  பெறுதற்கு  ஒருவாறு  பக்குவம் இன்று  எனக்  கொள்ளநேரின் , அப் பயனைக்  காலந்தாழ்த்தியாவது  விளைக்கும்  மெய்யன்பே  வேண்டும்  என  நினைந்து  இரப்பார் ஆயினர் . நின்னை  வணங்க    அன்பு  வேண்டும்  என்ற  அளவே  அமைவதாக, “நின்  கழற்கண் அன்பு வேண்டும் “  என்றது , “ புழுவாய்  பிறக்கினும்  புண்ணியா  உன்  அடி  யென்மனத்தே, வழுவாதிருக்க  வரந்தரவேண்டும்”  என்றபடி. ஒருகால்  தம்  நிலை  பிறழினும் , திருவடிப் பதிவு  அதற்கு  இடம்  தராது  செம்மைப்படுத்தும் என்னும்  குறிக்கோள்  பற்றி என்க.  ஈண்டு, ஆளுடைய   அரசு , ஆண்டவன்  திருவடியைப்  பற்றிக்  கொள்ளுதற்கு  உரிய  ஆற்றல்  தம் மனத்திற்கு இல்லாமை  உணர்ந்து , “எ ன்  மனம்  உன்  அடிக்கண் வழுவாதிருக்க “  என்னாது, “உன்னடி  என்  மனத்தே  வழுவாதிருக்க” என்று  அருளிச்  செய்தமை  அறிந்து  இன்புறத்தக்கது .

       இதன்கண்,  “மன்ன  நின்  வணங்க ……….நின் கழற்கண் அன்பு  வேண்டும் “  என  வீட்டின்பத்திற்கு  ஏதுவாகிய  மெய்யன்பு  வேண்டப்பட்டிருத்தலானும் , அது  பிரவிகள்  தோறும்  தொடர்ந்து , முடிவில்  அவ்  இன்பத்தில்  இயைக்கும்  என்னும்  உறுதி  பெறப்பட வைத்தமையானும், ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக  .

                                      ***********************************************

பாடல் : 75.

வணங்கு  நின்னை  மண்ணும்  விண்ணும்

வேத  நான்கும்  ஓலமிட்

டுணங்கு  நின்னை  யெய்த  லுற்று

மற்றொ  ருண்மை  யின்மையின்

வணங்கி  யாம்வி  டேங்க  ளென்ன

வந்து  நின்ற  ருளுதற்

கிணங்கு  கொங்கை மங்கை  பங்க

எங்கொ  லோநி  னைப்பதே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில் சாதனமாகிய மெய்யன்பை  வேண்டியது, ஆண்டவன்   திருவடியை  எக் காலமும் வணங்குதற்கு  என்பது  கூறப்பட்டது .  இத்  திருப்பாட்டில் , அவ்  வணக்கத்தின்  இன்றியமையாமையும் அதனைக்  கடைப்பிடித்து  நெருங்குவோர்க்கு  ஆண்டவன்  திருவருள் பாலிக்கத்  தடையாகக்  கருதுவது யாதாக  இருக்கலாம்  என்பதும்  கூறப்படுகின்றன .

பதவுரை  :-   இணங்கு  கொங்கை  மங்கை  பங்க  =  நெருங்கிய  கொங்கைகளையுடைய  உமையம்மையை  ஒரு  பங்கில்  உடையவனே ,

மற்று  ஓர்  உண்மை  இன்மையின்  =  நின்னையன்றி  வேறாக  ஒரு  மெய்ப்பொருள்  இல்லாமையால் ,

நின்னை  மண்ணும்  விண்ணும் வணங்கும்  =  உன்னை  நிலவுலகமும்  விண்ணுலகமும் வணங்குவன ,

வேதம்  நான்கும்   நின்னை  எய்தல்  உற்று  ஓலம்  இட்டு உணங்கும்  =

நான்  மறைகளும்  உன்னை  அணுக முயன்று  (இயலாமையால்)  ஓலம் இட்டு  இளைத்து  நிற்கும்,

யாம்  வணங்கிவிடேங்கள்  என்ன  =  அடியேமாகிய  யாங்களும் நின்னை  வணங்கிடமாட்டோம் என்று   விண்ணப்பம்  செய்யவும் ,

வந்து  நின்று  அருளுதற்கு  =  வெளிப்பட்டு  நின்று  அருள்  புரிதற்கு,

நினைப்பது  என் கொல்  = தடையாகத்  திருவுள்ளம்  கொள்வது  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-   மண்,  விண்  என்பன  ஆகுபெயராக  நின்று , ஆண்டுள்ள  மக்களையும் , தேவரையும் உணர்த்தும் , உலக  மூன்றுனுள், மண்ணுலகமும்  விண்ணுலகமும்  வணங்கும்  என்றார் ; ஆண்டுள்ளார் முறையே  புண்ணிய  பாவ  கன்மங்கள்  காரணமாகவும் , மக்களாகவும் ,தேவராகவும்  பிறந்து ,இறைவனை  வழிபடுதற்கு உரிய  ஞானம் பெறும் தகுதி  வாய்ந்து  இருத்தலின், கீழ்  உலகத்தவர், பாவ  கன்மம் காரணமான  பிறப்புடையர் ஆதலின், இறைவணக்கத்திற்குரிய தகுதி  பெறல் அரிது  எனக்  கருதி  உடன்  கூறப்பட்டிலர் . மண்ணுலகத்தவர் , கலப்பு  வினைப்பயன்  நுகர்ச்சி  உடையர் ஆதலின்,  தொண்டில்  ஈடுபட்டு , உயிர்  முனைப்பு  அடங்கி  ஆண்டவனை நினைந்து  வழிபடும் இயல்பு உடையவர்  என்பதும், நல்வினைப்பயன்  ஒன்றே  நுகர்ந்து  இன்பத்தில்  இறுமாக்கும் தேவர் , ஒரே வழிக் கடவுள் நினைவையும் புறக்கனிக்கும்  இயல்புடையர்  என்பதும்  கருதி, “மண்ணும்  விண்ணும் “  என்று  முறைப்படுத்து  உரைப்பார்  ஆயினர் . இவ் விரு திற உலகத்தவரும்  முடிவான வணக்கத்திற்கு  உரிய  கடவுள் யாராக  இருக்கலாம் என  நூல்   அளவையானும் , அநுபவ உணர்வானும் நெடிது  ஆராய்ந்து , மக்கள் ,தேவர்  முதலிய  யாவரும்  ஒடுங்கிய பேரூழிக் காலத்து.  அவ்வெல்லோரையும்  எல்லாவற்றையும்  தன்னுள்  ஒடுக்கி  , அழிவு  இன்றி  நிற்பவன்  பரமசிவனே  என்னும்  உண்மை  உணர்வு  கைவரப்பெற்றவர்  என்பார், “மற்று  ஓர் உண்மையின்மையின்  மண்ணும்  விண்ணும்  வணங்கும்  “  என்றார் . “உண்மை”  இறைவனைக்  குறித்தலின்  ஆகு  பெயர் .  எல்லோரானும்  வணங்க்கப்படுபவன்  சிவபெருமானே  என்பதும் , அப்  பெருமானால் வணங்கப்படும்  தெய்வம்  பிறிது  ஒன்றும்  இல்லை  என்பதும்  மறைமுடிவுகளின்  ஆராய்ச்சியாற்  கண்ட  உண்மையாகும் .  “”செய்யானை வெண்ணீறணிந்தானைச்  சேர்ந்தறியாக், கையானை”  என்று  அடிகள்  பிறி தோரிடத்து  அருளிச்  செய்து  இருத்தல்  இதனை உறுதிப்படுத்துவதாகும் .  “மற்றோர்  உண்மையின்மையின்  “  என்பதை , மண் , விண்  , வணக்கம் , மறைகளின்  உணக்கம் , அடியார்  வணக்கம்  ஆகிய  எல்லாவற்றிற்கும்  ஏதுவாக்கிக்  கொள்ளல்  வேண்டும்.

                      ஓலம் = அபயம்  அளிக்க  வேண்டும்  என்னும்  குறிப்பு  மொழி .  மறைகள்  அணுகுதற்கு  முயன்று , இயலாமையால் ஓலம்  இட்டு  இளைத்து  நிற்கும்  என்றது,  இறைவன் பெருமையை  அளவிட்டுக்கூற  இயலாமல் , கீழ்ப்பட்ட  தெய்வங்களை  வருணித்துப்  பரம்பொருள் இது வன்று;  இதுவன்று  என்றே  கூறி  ஒழிந்தன என்பது பற்றியாம் . “ அல்லை யீதல்லை யீதென மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித்து  இளைக்கும் “  என்ற  பெளராணிகர்  உரையும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  மறைகள்  தம்  சொற்பெருக்காற்  காண்டற்கு  எத்துணை  விரிந்து  செல்லினும், இறை  இயல்  அப்பாற்பட்டு  நிற்றலின் , மேற் சேரற்கு  இயலாமையால் , அச்சமுற்று  இளைத்து  நிற்றலின் , “ஓலமிட்டு  உணங்கும் “ என்றார்.

                        சொல்லுலகும்  பொருளுலகும் ( சத்தப்  பிரபஞ்சம்  அருத்தப்  பிரபஞ்சம் ) என  இரு  கூற்றில்  அடக்குவர்  உலகம்  எல்லாவற்றையும் . ஈண்டு, “மண்ணும்  விண்ணும்  “ என்பது பொருள் உலகமாகும் . “வேதம்  நான்கும்” என்பது  சொல்  உலகம் ஆகும்.  சொல்லுலகினும்  பொருளுலகு  இறைவனை  அணுகுதற்குத்  தகுதி  சிறந்ததாகலின் , “மண்ணும்  விண்ணும்  வணங்கும்  “ எனவும், அத்துனைத் தகுதியின்மையால் , “ வேத  நான்கும்  ஓலமிட்டு ணங்கும்” எனவும் கூறப்பட்டன .

                   அடியார், பொருளுலகில்  அடங்குவர்  ஆயினும் , தகுதியின்  பொதுச்  சிறப்பு  முறை  பற்றி  வேறாகக்  கூறப்பட்டனர்  என்க.  அடியார் தகுதி , மற்றைத்  தேவர் , மக்கள் தகுதியினும்  சிறப்பு  உடையது  என்பது  கருத்து.  அதனாலே , அடிகள், மற்றை  அடியாரையும்  உளப்படுத்து ,”வணங்கியாம்  விடேங்கள்  என்ன”  என்றார். மண்ணுலகத்தவரும்  விண்ணுலகத்தவரும்  உண்மை  அறிந்து  வணங்கிய  அளவில்  நின்றனர் எனவும் ; அடியேம் ஆகிய  யாங்கள் வணக்கத்தளவில்  ஒழியாது , விடாமல்  தொடர்ந்து பற்றினேம் எனவும்  கூறியது, பொதுச்  சிறப்பு  முறையை வலியுறுத்துவதாகும் .  ஆண்டவனை  விடாமற்  பிடித்தற்கு  , அடிகள் தம்  அளவில்  ஒழியாது , மெய்யன்பர்  பலரையும்  துணையாக்கிக்கொள்வாராய் , “யாம்” என  உளப்பாட்டுப்  பன்மையிற்  கூறினர் .  மேலும்,  வணக்கம் என்ற  அளவில்  ஒழியாது , “சிக்கெனப்  பிடித்தேன் “  என்றாங்கு  , விடமாட்டோம்  என்று  கூறவும் என்றார் . இனி, “விடேங்கள்  என்ன” என்பதற்கு , “நின்  திருவடி இன்பம்  பெறுங்காறும்  எம்  கடமையாகிய  இவ்  வணக்கத்தைக்  கைவிட  மாட்டோம்  என்று  விண்ணப்பம் செய்து  கொள்ளவும் “ என்று  பொருள்  கோடலும்  அமையும்  . யாமும்,  என்னவும்,  என்புழி ,உம்மைகள் செய்யுள்  விகாரத்தால்  தொக்கு  நின்றன. விடேங்கள்  என்புழி, கள்  என்பது  விகுதி மேல்  விகுதியாகும்.

                        வந்து நின்று  அருளுதல்  = வெளிப்பட்டுத்  தோன்றி  நின்று  அருள்  புரிதல் . எங்கும்  நிறை   பொருளகிய  இறைவன் , மெய்யன்பர்  வேண்டுகோளுக்கு  இரங்கி , அவர்  நினையும்  வடிவில்  வெளிப்பட்டு  அருள்  புரிதலைத்  திருத்தொண்டர்  புரான  முதலியவற்றானும்  அறியலாம் . யாங்கள் மன  மொழி  மெய்கள் ஒன்றுபட்டு  வணங்கவும்  , ஆண்டவனே  வெளிப்பட்டு  அருளுதற்குத்  தடையாகத்  திருவுள்ளம் கொள்ளுவது  என்னையோ  என்புழி, அருள் உருவினள் ஆகிய அம்மையோடு  இயைந்த  நின்னால்  தடை நேர்ந்து  இராது ; எம்  வினையெச்சத்தால் நேர்ந்து  இருக்கலாம் என்று  அடிகள் கருதினார்  என்பது குறிப்பிற்  பெறப்படும் .  இதனை, “மங்கை  பங்க” என்ற  விளி நிலையும்  உறுதிப்படுத்துவதாகும் . திருவுள்ளத்தில்  தடையாகக்  கருதியது  இன்னது  என அறியச்  செய்யின் , திருவருட்டுணை  கொண்டு அத்  தடையை  ஒழித்தற்கு  உரிய  தவத்தில் தலைப்படலாம் என்பதும் உட்கோளாகக்கொண்டு  , “ஏன் கொலோ நினைப்பது”என்றார்  என்பது .

                            இதன்கண், “மற்றொருண்மை  இன்மையின்” ,  “வணங்கி  யாம் விடேம்” என்றமையால் , பரம் பொருள்  இன்னது என்னும் தெளிவும், அதனை  வழிபட்டு  நெருங்கிப்  பற்றும் நெறியும், அந்நெறி  நின்று  அருள் அமுதம்  நுகரலாம்  என்னும்  துணிவும்  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல்  அறிக. 

                                            ******************************************

பாடல் : 76 .

நினைப்ப  தாக  சிந்தை  செல்லும்

எல்லை  யேய  வாக்கினால்

தினைத்த   னையும்  ஆவ தில்லை

சொல்ல  லாவ  கேட்பவே

அனைத்து  லகும்  ஆய  நின்னை

ஐம்பு  லன்கள்  காண்கிலா

எனைத்தெ   னைத்த  தெப்பு  றத்த

தெந்தை  பாதம்  எய்தவே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  வணக்கம்  செய்துவிடுவேம்  அல்லேம்  என்னும்  எம்மனோர்க்கு  அருள்புரியத்  தடையாகக்  கருதுவது  என்னையோ  என்று  கூறிய  அடிகள் , அத்  தடைகள்  எம்மனோர்  மன மொழி  முதலியவற்றால்  ஆயவெனினும்  , அவற்றை ஒழித்தற்குத்  திருவருள் துணை  அன்றி  எம்மால்  செய்யத்தக்கது யாதும்  இன்று  என்னும்  உட்கோள்  புலப்பட, இத்  திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-   எந்தை  =  என்  தந்தையே ,

சிந்தை  செல்லும்  எல்லை  நினைப்பது  ஆக  = என்  மனம்  செல்லும்  அளவும்  நினைவதாக,

சொல்லல்  ஆவ  கேட்பவே  =  சொல்லுதற்கு  உரியன  எல்லாம்  கேட்கப்படுவனவே (ஆதலின்) ,

ஏய வாக்கினால்  தினைத்தனையும்  ஆவது  இல்லை  =  பொருந்திய  சொற்களால்  திணையளவும்  பயன்  விளைதல்  இன்று,

அனைத்து  உலகும்  ஆய  நின்னை  = உலகெலாம்  ஆய  நின்னை ,

ஐம் புலன்கள்  காண்கிலா  =  ஐம்பொறிகளும்  காணும்  ஆற்றல்  இல்லாதன  ஆகும் ,

பாதம்  எய்த  =  நின்  திருவடி  அடையவோ ,

அது  எனைத்து  எனைத்து  =  அத்  திருவடி  எத்துணை  எத்துணை  அளாவுஉடையதோ ,

எப்புறத்து  =  எவ்விடத்ததோ ? (அறிந்திலேன்)  என்பது.

விளக்கவுரை :-   “ எந்தை  “ என்றது  ஈண்டு  மைந்தனாகிய  சிறியேனால் செய்யப்படும்  சிறு  பணியைத்  தந்தையாகிய  நீ  மனம்  உவந்து ஏற்று  அருளல்  கடமையாம்  என்னும்  குறிப்புத்  தோன்ற நின்றது.  அடிகள்  தம் மனம்  மொழி  பொறிகளால்  இறைவனைக்  காண்டற்கு, இயலாமையைக்  குறிப்பிடத்  தொடங்கி, முதலில்  மனத்தின் இயல்பைத்  தெரிவிக்கலானார் . எல்லாக்  கருவிகளும்  மனமே  கட்டிற்கும்  வீட்டிற்கும் சிறந்த  ஏதுவாம் என்ப . மனத்தின்  இயைபு  இன்றேல், மொழிகள் வெற்றுரை  ஆகும் ; பொறிகள்  புலனுகர்ச்சியின்றி  வறியனவாம் . மனம் , பொறிவாயிலாகச்  சென்று புறப்பொருள்களை  அறிதலோடு , உண் முகமாகவும்  நின்று, கண்டவை கேட்டவைகளை நினைந்து  உணரும்  இயல்பினது ஆகும்.  சிவாகமங்களின்  வாயிலாக  இறைவன் திருவுருவங்களைக்  கேட்டும் , புறத்தேயுள்ள  திருக்கோயில்களில்  அம்முறையில்  அமைக்கப்பட்ட  திருவுருவங்களைக் கண்டும், உள்ளத்து  அமைந்து  நினைதலைச்  சகுணோபாசனை  என்பர். சகுண  உபாசனையாவது, இறைவனைத்  திருவுருவில்  வைத்து  வழிபடுதல் . இவ்  வுருவ  வழிபாடு , மன்ம்  கட்பொறிவழிச்சென்று , புற  வுருவத்தைக் காண்டலானும் , செவிப்பொறி  வழிச்சென்று  சிவாகமத்திற்  கேட்டலானும் ,பொறிவழிச் செல்லாது  ஒருங்கு  இயைந்து  நினைதலானும் நிகழ்வது, உருவ  வழிபாடு   முதிர  முதிர  , நினைதற்குக் கருவியாகிய  சித்தவிருத்தி ஒடுங்கி , முடிவில்  மனோலய  சித்தி  உண்டாம் . மனம்  இறந்தநிலையில் , இறைவனுடைய  உண்மை  இயல்பை  உயிர்  உணர்ந்து  இன்புறுவதாகும் .  அவ்வுணர்வு  நிலை  நிர்க்குணோ பாசனை  ஆகும் . நிர்க்குண  உபாசனையை  அருவ  வழிபாடு  என்ப .ஆகவே  புறத்தும்  அகத்தும் வைத்துத்  திருவுருவ  வழிபாட்டில் தலைபடும்  அவ்வளவே  மனத்தால்  இயல்வதாகும் . இவ்வுண்மை  புலப்படவே , “செல்லும் எல்லை  சிந்தை  நினைப்பதாக “  என்றார். இறைவனது  உண்மை இயல்பை  மனம்  காண்டற்கு  இயலாது  எனக் கொண்டு  , இயன்ற  அளவு  திருவுருவை  நினைதற்கும் , அதனைச்  செல்லவிடாது  இருத்தல்  பெரும்  குற்றமாம்  என்ப.  இது  கருதியே , “செல்லும்  அளவும்  செலுத்துமின்  சிந்தையை “ என்பர்  திருமூலர் .

             அடிகள் , சிந்தை  தம்  வயத்தது  அன்றிச்  செல்லும்  இயல்புண்மை  குறித்தே,  “செல்லும்  எல்லை  சிந்தையால் நினைப்பேன் “  என்று  சிந்தையைக்  கருவியாகக்  கொண்டு  , தம்மை  வினை  முதலாகக்   கூறாமல் , “நினைப்பதாகச்  சிந்தை “ என, நினைத்தற்கு  வினை முதலாக  மனத்தையே  கூறுவார் ஆயினர் .  மனம்  தம் வயப்படாமல்  செல்லும்  நிலையிலும்  பழம்  நழுவிப்  பாலில்  வீழ்ந்தது  போல, அதன் செலவு  இறைவனைப்  பற்றியதாக  நேர்ந்தது, திருவருளாற்  பெற்ற  உதவி  என்பது  குறிப்பு .

             நூல்கள்  முகமாகக்  கேட்க்கப்பட்ட  செய்திகளே  பேச்சுக்கு  உரியன என்பது  தோன்ற , “சொல்லலாவ  கேட்பவே “ என்றார் . இது, “வாக்கினால்  தினைத்தனையும்  ஆவதில்லை”  என்பதற்கு  ஏதுவாகும் . இறையருளின்  அநுபவம் , பேச்சு  இறந்த  நிலை  ஆதலின்  வாக்கினாற் சிறிதும்  பயன்  இன்று  என்று  கூறப்பட்டது .  தினைத்தனை  = தினையளவு .  தினை  = சிறுமை குறிக்கும்  ஓர்  அளவை . ஏயவாக்கு = அக்  கேள்வியோடு  பொருந்திய  சொல் . செவிப்பொறி  வாயிலாகக்  கேட்கப்படுவன  எல்லாம்  ஓசை  என்னும்   புலன்  ஆதலானும் , அப் புலன்  உணர்வு  ஏதுவாக  வெளிப்படும்  சொற்களால்  மெய்யுணர்விற்குப்   புலன்  ஆகும்  இறை  இயலை  உணர  இயலாது. ஆதலானும் , “ஏய  வாக்கினால்  தினைத்தனையும்  ஆவதில்லை “என்றார் . இறவன்  உலகு  எலாம்  ஆகி  வேறாய்,  உடனும்  ஆய்  நிற்கும்  இம் மூவகை  நிலைகள்  உள்ளும் , வேறு  ஆதல் , உடன்  ஆதல் ஆகிய  இரண்டும்  பொறிகளால்  அறியப்படுவன  அல்ல, உலகு  எலாம் ஆகி  நிற்கும்  நிலை  அறியப்படுவது  ஆம்  அன்றோ?  அல்  அளவிலாது  ஐம்பொறிகளாலும்  நுகர்ந்து  இன்புறலாம்  எனின் ,  அதுவும்  இயலாது  என்பார், “அனைத்துலக  மாய  நின்னை ஐம்புலன்கள்  காண்கிலா” என்றார். “உலகெலாமாகி “ என்புழி, உலகம்  என்பது  உயிரை  உணர்த்தும்  .  கலப்பினால்  உடலின்  உயிர்போல அவ்வுயிர்களேயாய்  நிற்பன்  என்பது  கருத்து , இந் நிலையை  மாயா  காரியமாகிய  புறவுலகில்  வைத்து  எங்ஙனம்  அறிய  முடியும்  என்பது.  “அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது” என்றபடி .  அனைத்து  உலகும்  அப் பெருமானால் ஆயது  எனினும் , அவற்றை  இயக்கி , அவற்றின்  உள்ளும்  புறமும்  எள்ளில்  எண்ணெய்போல  நிறைந்து  நிற்கும்  அவ் இறை  இயல்பை மெய்யுணர்வினால்  அன்றிப்  பொறிகளாற்  காண்டற்கு  இயலாது என்பார், “ஐம்புலன்கள்  காண்கிலா” என்றார் . ஈண்டுப்  புலன்  என்பது  பொறி  என்னும்  பொருட்டு , முதல்  அடியில்  , “வாக்கு”  என்றது செயற்  கருவியும் (கன்மேந்திரியம்) , ஈண்டு  ஐம்புலன்கள் என்றது , அறிவுக்கருவியும் (ஞானேந்திரியம்) ஆதலால், இவை  புறக் கருவிகளுக்கும் , மனம் அகக்  கருவிக்கும்  உபலக்கணம்  ஆகும்.  ஆகவே , உயிர்களின் அகப்  புறக் கருவிகளுக்கு இறைவன்  எட்டாதவன்  என்பது  தெளிவுறுத்தப் பட்டப்படியாம். 

                      இனி,  ஆண்டவனே  , நின்  இயல்பு  முற்றும்  அறிய  இயலாதது  ஆயினும்  , நின்  திருவடியின்  பக்கலாவது, அணுகலாம்  என்றால் , அத்  திருவடி, “பாதாளம் எழினுங்கீழ்  சொற்கழிவு  பாதமலர்”  என்றபடி , அதன்  அளவும்  முடிவு  இடனும் அளந்து அறியவொண்ணா என்பார். “பாதம்  எய்த அது  எனைத்து  எப்புறத்தது “  என்றார் . “எனைத்து  எனைத்து”  என்னும்  அடுக்கு  அடியின்  அகலத்தையும் , “எப்புறத்தது” என்பது  நீளத்தையும்  குறிப்பனவாம் .  இவ்வுண்மையை  , “அகலம் அளக்கிற்  பாரில்லா  அடி “  எனவும்,  “எழுவாயிறு  வாயிலாதன  ……… ஐயாறான்  அடித்தலமே “  எனவும்  போந்த  ஆளுடைய  அரசர்  அருண்மொழிகலானும்  உணரலாம் . “எந்தை”  என்பது  அண்மை விளி .

                         இத்  திருப்பாட்டின்  திரண்ட  கருத்து :  ஆண்டவனே, நின்  இயல்பு  ஞானேந்திரிய  கன்மேந்திரியங்களால்  அளந்து  அறிய  இயலாத  தொன்று ; மனத்தால்  நினைந்து  உணர  என்றாலோ  ஓர்  அளவில்  அன்றி  அது  செல்லாது .  நின்  திருவடியை  அணுகலாம்  என்றாலோ , அதன்  அகலமும்  நீளமும் அளப்பரியன.  ஆதலால்  நின்  திருவருள்  துணை  இன்றி  , உயிர்  முயற்சி  மாத்திரம்  பயன்  விளையாது  என்பது தெளியப்படுதலின் , நீயே  ஏழைக்கு  இரங்கி  அருளல்  வேண்டும்  என்று  அடிகள் கருதினார்  என்பது.

                           இதன்கண் , மனம் , வாக்கு , பொறி ,  புலன்கள்  யாவும்  இறைவனைக்  காண்டற்குப்  போதிய  ஆற்றல்  உடையன  அல்ல  என்றதனால், ஆண்டவன்  திருவருளே  துணையாக  நின்று , வீட்டின்பத்தில்  தலைப்  படுத்துவதாகும்  என்பது பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய   பொருள் புலனாதல்  அறிக.

                                          ********************************************

பாடல் : 77.

எய்த  லாவ  தென்று  நின்னை

யெம்பி  ரானிவ்  வஞ்சனேற்

குய்த  லாவ  துன்கண்  அன்றி

மற்றொ  ருண்மை  யின்மையின்

பைத  லாவ  தென்று  பாது

காத்தி  ரங்கு  பரவிபேயற்

கீத  லாது  நின்  கண்  ஒன்றும்

வண்ணம்  இல்லை  யீசனே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவனை  அடைதற்குத்  தம்  மனம்  மொழி  முதலியவற்றால் இயலாமை  கூறுமுகமாக, அப் பெருமானே  இரங்கி  அருளல்  வேண்டும்  என்னும்  உட்கோளைக்  குறிப்பிற்  பெற  வைத்த  அடிகள், இத்  திருப்பாட்டில் , அவ்வுட்கோள்  குறிப்பை   ஏதுக்காட்டி  வற்புறுத்து  வெளிப்பட  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  எம்பிரான்  =  எங்கள்  ஆண்டவனே ,

நின்னை  எய்தலாவது  என்று  =  (யான்)  நின்னை  அடைந்து  இன்புறுதல்  எப்பொழுது? ,

இவ் வஞ்சனேற்கு  =  இவ்  வஞ்சனாகிய  எனக்கு  ,

உன்  கண்  அன்றி  உய்தல்  ஆவது  =  நின்  பற்றுக்கோடு  அல்லாமல்  உய்தி  கூறுதற்கு  ,

மற்று  ஓர்  உண்மை  இன்மையின்  =  பிறிதொரு  மெய்யாகிய  பற்றுக்கோடு  இல்லாமையான் ,

பைதல்  ஆவது  என்று  பாதுகாத்து  இரங்கு  = (கை விடின்) துன்பம்  விளையும்  என்று  திருவுள்ளம்  கொண்டு  காப்பாற்றி  இரங்கி  அருள்வாயாக

ஈசனே   =   ஈசனே ,

ஈது  அல்லது  நின்  கண்  ஒன்றும்  வண்ணம்  இல்லை  =

 இங்ஙனம்  நீயே  இரங்கி  அருளுதல்  ஆகிய  இஃது  அல்லாமல்  நின்  திருவடி  நீழலில்  இயையும்  வகை  பிறிது  இல்லை  என்பது.

விளக்கவுரை :-   எம்மை  ஆட்கொள்ளும்  தலைவன்  என நின்னை  முன்னரே  தெளிந்துளேன்  என்பார், “எம்பிரான் “ என்றனர் .  எய்தல் –  அல்லீற்றுத்  தொழிற்  பெயர்.  ஆண்டவன்  உருக்கரந்த  நிலையில்  , அப்பிரிவு  பொறாது , அடிகள்  உள்ளம்  வருந்தி , அவ் விறைவனை  அடய  விரைதலின், “ எய்தலாவது  என்று  நின்னை”  என்றனர் .  எய்துதல்  ஆகிய  வினையையும் , என்று  எனக்  காலக்  குறிப்பையும்  செயப்படுபொருளாகிய  நின்னை  என்பதற்கு முன்னர்க் கூறியது, அடயப்படும்  பொருள் துணியப்பட்டமை  யானும் , ஏனை  இரண்டும்  அங்ஙனம்  துணியப்படாமையானும் , துணிந்த  பொருளில்  அமைதியும் , துணியப்படாதவற்றில்  விரைவும்  தோன்றியமையான்  என்க .

                     “இவ் வஞ்சனேற்கு “ என்புழிச்  சுட்டு  இழிவு  குறித்து  நின்றது .  “உன்  கண்”  என்புழி ,  கண்  –  பற்றுக்கோடு  என்னும்  பொருட்டு , “  உன்  கண்  அன்றி”  என்னும்  தொடர்க்கு, உன்  பற்றுக்கோடு  அல்லாமல்  என்பது  பொருளாயினும், பற்றுக்கோடு  உன்னையன்றி  என்பது  கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் .  உண்மை  என்பது  ஆகு  பெயராக  நின்று,  பற்றுக்கோடு  என்னும் பொருளை  உணர்த்தும் .  உலக  வாழ்க்கைக்கு  ஆதரவாகக்  கருதப்படுவன  பல  உள. அவை  எல்லாம்  எடுத்த  உடம்பு  பற்றி  உண்டானவை  ஆதலின் , அவ்வுடல்  ஒழிவில் ஒழிந்துவிடும்  இயல்பினவாம்.  “தந்தை  தாய்  தமர்தார  மகவெனுமிவை   யெலாஞ்  சந்தையிற்  கூட்டம் “  என்பர்  தாயுமானார். ஆதலின்,  உயிர்க்கு  உறுதி  பயக்கும்  உண்மையான  பற்றுக் கோடாக  வுள்ளவன்  ஆண்டவன்  ஒருவனே  என்பது  தெளிவு.  இத்  தெளிவு  கைவரப்பெற்றவர்  அடிகள்  ஆதலின் , “மற்றொருண்மையின்மையின் “ என்றார் . பாது காத்திரங்கு”  என்பதற்கு  இஃது  ஏதுவாகும் .  “பாதுகாத்திரங்கு”  என்பதை, இரங்கிப்பாதுகாத்து  அருள வேண்டும்  எனக்  கொள்ளல்  வேண்டும்.   பாதுகாத்தல்  –  பேணிக்காத்தல்.  பைதல்  –  துன்பம் .   ஆண்டவனே,  நின்னை  யன்றி  என் உயிர்க்கு  உண்மையான  பற்றுக்கோடு  பிறிது  இல்லாமையால், நீயே  என்னை  மீண்டும்  பிறவாமல்  விரைந்து  பேணிக்  காத்தருளல்  வேண்டும் .  புறக்கணிப்பாய்  ஆனால் , பிறப்பினால்  விளையும்  துன்பத்திற்கு  ஆளாவேன் .  அத்  துன்பம்  உண்டாம்  என்பது  திருவுள்ளம்  அறியுமே  என்று  அடிகள்  விண்ணப்பம்  செய்துகொள்வாராய்,  “பைதலாவதென்று  பாதுகாத்திரங்கு  “  என்றார்.  ஈண்டுப்  பாவியேன்  என்றது  துன்ப  விளைவிற்கு  ஏதுக்  காட்டியபடியாம் . 

                        உயிர்களின் முயற்சியும்  தவமும்  ஆண்டவன்  அருள்  அமுதத்தை நிறைவித்துக்  கொளுதற்குத்  தம்  உள்ளமாகிய  கொள்கலனைத்  தூய்மைப்  படுத்துக்கொள்ளும்  அவ்வளவே  பயன்  செய்வனவாம் .  வீட்டின்பப்பேற்றிற்கு  ஆண்டவன்  கருணையே  சிறந்த  காரணம்  ஆகும். இவ்வுண்மை  கருதியே, “ஈதலாது  நின்கண்  ஒன்றும்  வண்ணம்  இல்லை”  என்றார். ஈது  என்பது  இறைவன்  கருணையைச்  சுட்டும் .  ஒன்றுதல்  –  இரண்டறக்கலத்தல் ;  வீட்டு  நிலையைக்  குறிப்பதாகும்.

                        இத்  திருப்பாட்டில், எய்துதல் , உய்தல் , ஒன்றுதல் , என்னும்  மூன்று  செயல்கள்  உயிர்க்கு  வேண்டுவன  என்று  கூறப்பட்டன .  எய்துதல் –  அரிய  தவம்  கிடந்து,  இறைவன்  பக்கல்  அடைந்து  ,  சிவத்  தொண்டில்  தலைப்படுதல்.  உய்தலாவது,  இறைவன்  அகத்தும்  புறத்தும்  வைத்து  வழிபட்டுக்  கட்டறுத்துச்  சிவப்பேற்றிற்கு  உரிய  தூய்மை  பெறுதல்.  ஒன்றுதலாவது  ,  இறைவனோடு  இரண்டறக்  கலந்து   சிவானந்தத்தில்  திளைத்தல்  .  இம்  மூன்றனுள் , எய்துதற்குச்  சரியையும்  , உய்தற்குக்  கிரியை  யோகங்களும்  , ஒன்றுதற்கு  ஞானமும்  சாதனங்களாம் . எய்துதற்குக்  கலதத்துவமாகவும்  , உய்தற்குப்  பற்றுக்கோடாகவும்  , ஒன்றுதற்கு  அருள்  உருவம்  ஆகவும்  நின்று  ஆண்டவன்  உபகரிப்பன்  என்பதும்  இத்  திருப்பாட்டிற்  பெறப்பட்டவாறு  அறிக. 

                         இதன்கண்,  எய்தல் , உய்தல் , ஒன்றுதல் ஆகிய  செயல்கள்  படிமுறையிற்  கூறப்பட்டு  இருந்தாலும் , முடிவாகக்  கூறப்பட்ட  ஒன்றுதலால்  இன்பத் தோய்வு  உண்டாம் என்பது  பெறப்படுதலானும்,  ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றுதல் அறிக. 

                      &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாடல் :78.

ஈச  னேநீ  யல்ல  தில்லை

யிங்கும்  அங்கும்  என்பதும்

பேசி  னேனோர்  பேதம்  இன்மை

பேதை  யேனென்  எம்பிரான்

நீச  னேனை  யாண்டு  கொண்ட

நின்ம  லாவொர்  நின்னலால்

தேச  னேயோர்  தேவ  ருண்மை

சிந்தி  யாது  சிந்தையே.

கருத்துரை  :-    முன்னைத்  திருப்பாட்டில்   இறைவன்  திருவடிக்கண்  இயைந்து  இன்புறுதற்கு அப் பெருமான்  திருவருள்  துணைபுரியின்  அல்லது  உயிர்  முயற்சியளவில்  இயலாது  என்பது  கூறப்பட்டது. அங்ஙனமாயின் , உயிர்  முயற்சியாக  , “வாழ்த்தவாயும்  நினைக்க  மட  நெஞ்சும்  “  தந்த  இறைவனைக்  குறித்து , உயிர்  செய்யத்தக்க  கடமைகள் வேண்டாவோ  எனின்  , “ என் கடன் பணி செய்து கிடப்பதே”  என்றபடி  . உயிர்  தூய்மை  எய்துதற்கு மன மொழி மெய்கள் இடையறாது  இறை  பணியில்  தலைப்பட  வேண்டும்  என்பது  இத் திருப்பாட்டில்  கூறப்படுகின்றது .

பதவுரை :-   ஈசனே  இங்கும்  அங்கும்  நீ  அல்லது  இல்லை  யென்பதும்  =  ஈசனே, இம்மை உலகத்தும்  மறுமை  உலகத்தும்  தலைமைப்  பொருள்  நீ  அல்லாமற்  பிறிதொன்று  இல்லை  என்பதையும் ,

பேதம்  இன்மை  =  உயிர்  வேறுபாடற்கு  ஒன்றும்  வீட்டு  நிலையையும் ,

ஓர்  பேதையேன் பேசினேன்  =  ஓர்  அறிவிலியாகிய  யான்  பாராட்டிப்  பேசியது  உண்டு,

என்  எம்பிரான்  =  எனக்குச்  சிறப்புரிமை  உடைய  எங்கள்  தலைவனே ,

நீசனேனை  ஆண்டுகொண்ட  நின்மலா  =  இழிந்தவனாகிய  என்னை  ஆளாகக்கொண்ட  தூயோனே ,

தேசனே   =   பேரோளிப்  பிழம்பாக  வுள்ளவனே  ,

ஓர்  நின்  அல்லால்  =  ஒப்பற்ற  நின்னையல்லாமல் ,

ஓர்  தேவர்  உண்மை  =  அறிதற்கு  உரிய  தெய்வம்  பிறிதொன்றன்  உண்மையே  ,

சிந்தை  சிந்தியாது  =  என்  மனம்  நினையாது  என்பது.

விளக்கவுரை :-    “நீ  அல்லது  இல்லை”  என்புழி , இல்லை  என்னும்  முற்றிற்கு  வினை  முதலாக  ,  ஈசத்துவம்  உடைய  பிறிதொரு  பொருள் என்று  கோடற்கு, “ஈசனே”  என்று  அழைக்கலாயினர். நீயே  உள்ளாய் என்று  கூறுதலினும் , “ஆல்லது  இல்லை “ என்றது, தெளிவின்  துணிவை  வலியுறுத்துவதாகும் .  இம்மை , மறுமை ,வீடு  என்னும்  மூன்றனுள், முன்னைய  இரண்டும்  உலக நிலையாகக்  கொள்ளப்படுதலின்,  ஆண்டு  உள்ள  உயிர்த்தொகுதிகளை  ஆளும்  தலைமைத்  தன்மை  சிவபெருமானுக்கே  உள்ளது  என்பது , “நீ  யல்லது  இல்லை” என்பதனால்  தெளிவுறுத்தப்பட்டபடியாம் . இம்மை  மறுமை  என்னும்  இரண்டையும்  கடந்த  வீட்டு  நிலையை , “பேதம்  இன்மை” என்னும் தொடராற்  புலப்படுத்துள்ளார் . பேதம்  –  வேறுபாடு ;  இறை , உயிர் என்னும்  இரண்டையும்  பற்றியது , உயிர் , கட்டொழிந்த, திருவருள்  சார்பாக  இறையடி  நீழலில்   இரண்டறக்கலந்து  இயைதலையே , “பேதம்  இன்மை “ என்னும்  தொடர்  குறிப்பதாகும் . ஆகவே, இம்மை மறுமைகளை, “ இங்கும்  அங்கும்  “  என்னும்  சொற்களாலும் , வீட்டு  நிலையை , “ பேதம்  இன்மை” என்னும் தொடராலும்  புலப்படுத்து  அருளினார்  என்பது .

              வீட்டு  நிலையைக்  கூறிய இடத்து, மெய்யன்பர்  எல்லோர்க்கும்  தலைவனாயினும் , தமக்குச்  சிறப்புரிமை  தோன்ற , “என்  எம்பிரான் “  என்று  அடிகள்  முறிப்பிட்டது , இம்மை  மறுமைப்  பிறவி  ஒழித்து,  வீட்டு  நிலை  எய்தும்  விருப்பம்  தமக்கு  விஞ்சி  நிற்றலான் என்க. “ பேதம்  இன்மையும்”  என்புழி ,  எண்ணும்மை  தொக்கு  நின்றது. அடிகளுக்கு  இம்மைப்பயனாகிய  புகழினும் , மறுமை  இன்பம்  ஆகிய  இந்திரன்  முதலியோர்  பதங்களினும்  விருப்பம்  இல்லை  என்பதை  , “வேண்டேன்  புகழ்”  என்பதனாலும், “கொள்ளேன்  புரந்தரன்  மாலயன்  வாழ்வு”  என்றமையானும்  நன்கு  உணரலாம் . “நன்றறிவாரிற்  கயவர்  திருவுடையர்  “  என்புழி , நன்று  என்பதற்கு  , “இம்மை ,மறுமை , வீடுகட்கு  உரியவாய  புகழ் , அற ஞானங்கள்” என்று  பரிமேலழகர்  கூறிய  உரை  நயம்  ஈண்டுக்  கருதற்பாலது. புகழை  வேண்டாமையால்,  இம்மை  விருப்பம்  இன்று  என்பதும் , அறத்தை  மறுமை  நோக்கு  இன்றிச்  சிவ  புண்ணிய  நோக்காக  மேற்கொண்டமையின் , மறுமை  விருப்பமும்  இன்று  என்பதும்  போதரும் .  யான்  ஓர்  அறிவிலி  ஆயினும்  , இம்மை , மறுமை , வீடுகளைப்பற்றிய  செய்திகளையும் , அம் மும்மைக்கும்  உரிய  தலைவன்  நீயே  என்பதையும் , மறை  ஆகமங்களின் வாயிலாக  அறிந்து  பேசுதலாகிய  மொழிப்பணியை  மேற்கொண்டுள்ளேன்  என்பார், “ஓர்  பேதையேன் பேசினேன்” என்றார் .  “பற்பல பொருளாய்  உள்ள  பாசமும்  அதனை  மேவி , உற்பவ பேதமான  உடம்புயிரொடுங்குமாறும் , அற்புத  புத்தி முத்தியளித்தருளாலே  மேலாந் , தற்பரனடாத்து  மாறும்  உணர்ந்தனர்  சைவ  நூலில்”  என்று  அடிகள்  வரலாறு  கூறுதலும்  ஈண்டுக்  கருதற்பாலது .  அடிகள், மெய்யன்பு  நிறைவும் , ஆண்டவன்  அருள் பெறுதற்கு  உரிய  பக்குவ  முதிர்ச்சியும்  நன்கு  உடையவரே  யாயினும் . அவர்  தம்மை  ஆண்டவன்  முன்னிலையில்  யாவர்க்கும்  கீழாம்  அடிமை  இயல்பு  தோன்ற , “நீசனேனை” என்றார்.  அவர்  அங்ஙனம்  கூறியது  கொண்டு , நாமும்  அங்ஙனம்  கருதல்  ஆகாது, ஆண்டவன்  முன்னிலையில்  ஓர்  அடிமை  எப்படிப்  பேச  வேண்டும்  என்பதை , அம்முறையில்  வைத்து  அறிந்து  கொள்வதே  அறிவுடைமை  ஆகும்  என்க.  ஆண்டுகொண்ட  என்பதற்கு , ஆளாக  ஏற்றுப்  பணிகொண்ட  என்பது  பொருள்  ஆகும் . நோயுடை  ஒருவனுக்கு , அந்  நோய்  நீக்க  நோய்த்தொடர்பு  இல்லாத மருத்துவனே  வேண்டும் . மற்றொருவன்  கண்ணுக்கு  அறுவை  மருத்துவம்  செயப்புகுவோன் , தன்  கண்ணிலும்  படல  நோய்  உடையனாயின் , எங்ஙனம்   செய்யக்  கூடும் .  அங்ஙனமே  ,  பாசப்பிணிப்பு  ஒரு  சிறிதும்  இல்லாத ஆண்டவனே  , அப்  பிணிபுடைய  என்னை  ஆட்கொண்டான்  என்பார் , இறைவனை , “நின்மலன் “  என்றும்  ,  தம்மை  , “நீசன்”  என்றும்  கூறுவாராயினர் . நின்மலன்  –  அழுக்கற்றவன் ;  இயல்பாகவே  பாசங்களினீங்கினவன்  என்றும்  பொருட்டு.  நீசன்  –  பாசப்பிணிப்பால்  இழிந்தவன்  .  “ஆண்டு கொண்ட”  என்றதனால் , தொண்டு  மெய்தலாகிய  செயப்பணி  உடைமையும்  பெறப்படுவதாகும்.  இனி,  உள்ளப்  பணியைக்  குறிப்பிடுவாராய் , “ஓர்  நின்  அல்லால் ……….. ஓர்  தேவர்  உண்மை  சிந்தியாது  சிந்தை “  என்றார் . ஓர்  இரண்டனுள்  ,  முன்னது  ஒப்பற்ற  என்னும்  பொருள்  உடையது. , பின்னது  ஓர்தல்  என்னும்  தொழிற்  பெயரின்  விகுதி  குன்றி, “ஓர்  தேவர்”   என  வினைத் தொகையாக  நின்றது.  ஓர்  தேவர்  உண்மை  என்பது,  நூலறிவானும் , அநுபவ உணர்வானும்  அறிதற்கு  உரிய  தெய்வம்  பிறிதொன்று  உள்ளதாக  என்னும்  பொருளது . மனம்  பிறிதொன்றைச்  சிந்தியாது  என்றாதனால் , உள்ளப்பணி  புலப்படுக்கப்பட்டவாறாம் .  நின்னையல்லாமல்  என்றவிடத்து , “தேசனே”  என்ற  விளி  கொள்ளப்பட்டது. தேசன்  –  ஒளி  வடிவினன் .  மற்றைத்  தேவரும்  ஒளியுடம்பினர்  ஆதலின் , அவ்  வொற்றுமையால்  அன்னாரையும்  பரம் பொருள் எனக்  கருதுவாரும்  உளர் எனக்  கொண்டு , என்  உள்ளம்  பேரொளிப்  பிழம்பாக  உள்ள  நின்னை  அன்றி  வேறு  கருதாது  என்னும்  குறிப்புத் தோன்ற  நின்றது, “தேசன்”  என்னும்  அவ்  விளிச்  சொல்  என்க .

                இத்  திருப்பாட்டில் , அடிகள்  தம்  மன  மொழி  மெய்கள்  இறைபணியில்   தலைப்பட்டிருத்தலைக்  குறிப்பிட்டிருப்பதால்,   உயிர்  முயற்சியிற்  குறைவின்று  என்பதும்,  இனி,  ஆண்டவன்  திருவருட்  பதிவுதான்  வேண்டுவது  என்பதும்  குறிப்பெச்சமாகக்   கொள்ளக்  கிடப்பனவாம் .

                 இதன்கண், ஆண்டவனைக்  குறித்து ,  என்  அகப்  புறக்  காரணங்கள் நின்னையே  பற்றி  நிற்பன  என்று  அடிகள்  கூறி  இருத்தலின், உயிர்  தூய்மை  நிலை  எய்தியதும்  , திருவருட்பேற்றை  எதிர்பார்த்து  இருத்தலும் , அப் பேறு  காரணமாக  வீட்டின்பத்தில்  தலைப்படலாம் என்னும்  துணிவும்  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக . 

                                               *****************************************

பாடல் :79 .

சிந்தை  செய்கை  கேள்வி  வாக்குச்

சீரில்  ஐம்பு  லங்களால்

முந்தை  யான  காலம்  நின்னை

யெய்தி  டாத  மூர்க்கனேன்

வெந்தை  யாவி  ழுந்திலேன்  என்

உள்ளம்  வெள்கி  விண்டிலேன்

எந்தை  யாய  நின்னை  யின்னம்

எய்த  லுற்றி  ருப்பனே  .

கருத்துரை :-   உயிர்  எய்தும்  தூய்மைக்கு  , மன  மொழி  முதலிய  அகப்புறக்  கரணங்கள்  எல்லாம்  இறைபணியில்  தலைப்படவேண்டும்  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  கூறிய  அடிகள் , அக்கரணங்கள்  அவ்வாறு  பண்டைப்பிறப்பில்  தலைப்படாமையால்  , அத்  தூய்மையும்  திருவருட்  பதிவும்  பெறாமல் , இப்பிறப்பிலும்  வீட்டின்பப் பேறு  குறித்து  உயிர்வாழ்ந்து  இருக்கலானேன்  என்று  இரங்குகின்றார் . 

பதவுரை :-    சிந்தை  செய்கை  கேள்வி  வாக்கு  சீர்  இல்  ஐம்புலன்களால்= 

மனம்  செயல்  கேள்வி  மொழி என்னும்  இவற்றாலும்  சிறப்பில்லாத  ஐம்பொறிகளாலும்  ,

முந்தையான  காலம்  =  பழமையான  காலத்தில் ,

நின்னை  எய்திடாத  மூர்க்கனேன்  =  நின்னை  அடையப்பெறாத  அறிவிலியாகிய  யான் ,

வெந்து  விழுந்திலேன்  =  தீயில்  வீழ்ந்து  வெந்திலேன்,

என்  உள்ளம்  வெள்கி  விண்டிலேன்  =  என்  மனம்  நாணி  உடையப்பெற்றேன்  இல்லை ,

எந்தை  ஆய  நின்னை  =  என்  தந்தையாகிய  நின்னை  ,

இன்னம்  எய்தல்  உற்று  இருப்பேனே  =  இன்னமும்  அடைதற்கு  விருப்பமுற்று  வாழ்ந்து  இருக்கலானேன்   என்பது . 

விளக்கவுரை :-  இறைவன்  திருவருட்பேறு  குறித்து, உயிர்கள்  மேற்கொள்ளும்  தவங்கள், சிந்தை  முதலியவாக  இங்கே  கூறப்பட்ட  அகப்புறக்  கரணங்களால்  நிகழ்வனவாம் .  இக் கருவிகள் எல்லாவற்றுள்ளும்  மனமே  சிறந்ததாகும் .  மனம்  இல்வழி  , நிகழும்  செயல்  முதலியவெல்லாம்  பயன்  விளைப்பன  ஆகா, மன  மொழி  மெய்களாகிய  முக்கரணங்களுள்  , மொழிப்பணி    ஒருவற்குப்  பிறர்கூறக்   கேட்டலும்  , தான்  கூறலும்  என  இருதிறப்படும்  ஆதலின்,  “கேள்வி  வாக்கு”  என்றார்.  ஐம்புலங்களால்  என்புழி  ஆல்  என்னும்  மூன்றனுருபைச்  சிந்தை  முதலியவற்றோடும்  இயைந்து , எண்ணும்மைகளை  விரித்துரைத்துக்  கொள்ளல்  வேண்டும்.  சிந்தையால்  ஆண்டவன்  திருவுருவை  நினைவு  கூர்தலும், உடற்செயல்களால்  தொழுதல் , வணங்குதல்  முதலியன  செய்தலும் , இறைவன்  புகழ்  மொழிகளைப்  பிறர்   கூறக்  கேட்டலும் , அவற்றை நாவாரப் பாராட்டிக்  கூறலும்  ஆகிய  இவை  முக்கரணங்களாலும்  நிகழும்  தவச் செயல்களாகும் .  இத்  தவ  முயற்சி  உடையார்க்கு  , ஐம்பொறிகளின்  வாயிலாக நுகரப்படும்  புலன்கள்  எல்லாம்  சிவமயமாகவே  நிகழும்  என்பது   பெரியார்  அநுபவத்திற்  கண்டது .  இந் நிகழ்ச்சி  சித்தம்  சிவமாகப்  பெற்றோர்க்கு  அன்றி , மற்றையோர்க்கு  இயல்வது  அன்று,  ஐம்பொறிகளின்  வாயிலாக  உலகியற்  புலன்களை  நுகர்தற்கே   மனம்  செல்லும்  இயல்பினதாகும்.   அவ் வியல்பை , அறிவினால்  தடைப்படுத்துத்  தன்வயம்  ஆக்கல்  வேண்டும் . அஃது  அரிதிற்  செயர்பாலதாகும் . 

                   உலகியற்  பொருள்களைப்  பற்றிக்  கண்டு , கேட்டு , உண்டு , உயிர்த்து , உற்ற.றியும்  ஐம்புலங்களின்  இயல்பு  குறித்தே, “ சீரில்  ஐம்புலன்கள்” என்று  கூறப்பட்டன .  இவ்  ஐம்புலன்களையும்  சிவமயமாகக்  கண்ட   பெரிய  அன்பின்  வரகுண  தேவர்  வரலாறு  ஈண்டுக்  கருதத்தக்கது .  உதிர்ந்து  கிடந்த  வேப்பங்கனிகளைச்  சிவலிங்க  வடிவமாகக்  கண்டதும் , நீர்  நிலையில்  உள்ள  தவளைகளின்  ஒலியை  ஈசனைப்  பாடினதாகக்  கேட்டதும்  முதலிய  சிவாகாரமான   புலன்  நுகர்ச்சிகளைத்  திருவிடைமருதூர்  மும்மணிக் கோவையில்  ,   “காம்பவிழ்ந்  துதிர்ந்த   கனியுருக்  கண்டு , வேம்புகட் கெல்லாம்  விதானம்  அமைத்தும்  , குவளைப்  புனலிற்றவளை  யாற்ற , ஈசன்றன்னை  யேத்தினவென்று , காசும்   பொன்னும்  கலந்து  தூவியும்”  என்பன  முதலியவாகப்  பட்டினத்து  அடிகள்  கூறியவற்றான்  உணரலாம். இங்ஙனம்  வரகுண  தேவர்  சிவாகாரமாகப்  புலன்களை  நுகர்ந்ததோடு  அமையாது , உலகியற்  பொருள்  மூலமாக  நுகரப்படும்  ஐம்புலன்களையும்  தமக்கு  எனக்  கொள்ளாமல் , சிவார்ப்பணம்  செய்தனர்  என்பதும் ,” விரும்பின  கொடுக்கை  பரம்பரற் கென்று , புரிகுழல்  தேவியைப்  பரிவுடன்  கொடுத்த , பெரிய  அன்பின்  வரகுண தேவரும்” என்னும்  அப்பாடற்பகுதியான்  அறியலாம் .  ஒரு  சிவஞானி, உலகியலில்  நுகரப்படும்  ஐம்புல  இன்பங்களைச்  சிவார்ப்பணம்  செய்யவேண்டும்  என்பது , சிகார  முதலாக  வைது  ஓதப்படும்  திருவைந்தெழுத்தின்  பொருளாக, அப்பைய  தீக்கிதர் , சிவார்ச்சனா  சந்திரிகையில்  விளக்கி  இருந்தலாலும்  அறியத்தக்கது. சிவாய  நம ;  என்பதற்கு  ,  நுகர்  பொருள்  எல்லாம்  சிவனுக்கே ; எனக்கு  இல்லை என்பது  அவர்  விளக்கிய  பொருள்களில்  ஒன்று.  இங்ஙனம்  உலகியல் பற்றிய  ஐம் புலன்களையும்  இறைவனுக்குச்  சமர்ப்பித்து  விட்டுச்  சிவமயமாக  அப்புலன்களை  மாற்றிக் கொள்ளுதலே  ஐம்புலன்களால்  இறைவனை  அடைதல்  ஆகும்  என்பது .

                 முந்தையான  காலம்  — பண்டைப்  பிறப்புக்களைக்  குறிப்பதாகும்  . பழம்  பிறப்புகளிற்  சிந்தை  முதலிய  கரணங்களால்  இறைவனைப் பற்றியிருந்தால், இப்  பிறப்பில்  திருவடி  இன்பம்  எளிதில்  கிடைத்திருக்கும்  என்பதும் , அங்ஙனம்  பற்றி  ஒழுகாமையால்  இப்  பிறப்பில்  அரிதாகின்றது  என்பதும்  அடிகள்  கருத்து. பண்டைப்  பிறப்புகளில்  உண்மைப்பொருள்  இன்னது  எனத்  தெளிந்து  , சாதனங்களை  மேற்கொள்ளுதற்கு  உரிய  அறிவு  கைவரப்  பெற்றிலேன்  என்பார்,  தம்மை  “மூர்க்கனேன்”  என்றார்.

                    “வெந்து  விழுந்திலேன்”  என்பதை, விழுந்து  வெந்திலேன்  என  மாற்றிக் கொள்ளல் வேண்டும் .  வெந்திலேன்  என்றமையால் , வீழ்தற்கு   இடன்  தீ  ஆயிற்று  என்க . எல்லாக்  கரணங்களுக்கும்  மூலமாக  வுள்ள  மனம் , இறைவனைத்  தானும்  பற்றி, மற்றைக்  கரணங்களையும்  செலுத்த  வேண்டிய  கடமை  உள்ளதாகவும் , அக்  கடமை  செய்யாமை  பற்றி  நாணம்  எய்த  வேண்டும்  என்பதும், அக்  கடமைக்கு  மாறாக , உலகியலில்  தானும்  சென்று, மற்றைக்கரணங்களையும் செலுத்திக்  கேடு  விளைத்தலின் , உடைந்து  அழிதல்  வேண்டும் என்பதும்  கருத்து.  அங்ஙனம்  மனம்  நாணமுற்று  அழியாமல்  இருக்கப்பெற்றேன் என்று  இரங்குவார் , “என்  உள்ளம்  வெள்கி  விண்டிலேன்” என்றார்.  உடலை  நெருப்பில்  வீழ்த்தற்கு , உற்பணியாகிய  தொழுதல்  , வணங்குதல் முதலியன  செய்யாமையும் , உள்ளம்  வெள்கி  விள்ளுதற்கு , நினைவு கூர்தலாகிய  உள்ளப்  பணி  புரியாமையும்  ஏதுக்களாம். உடல் வீழ்ச்சியையும் , விள்ளுதலையும்  பற்றி  இங்ஙனம்  கூறியது .  புறக்கரணமும்  அகக்கரணமும்  உரிய  கடமைகளுக்குப்  பயன்படாமை  குறித்துச்  செய்யப்படும்  கழுவாயாம்  என்பது .

                    “எந்தையாய நின்னை” என்றதனால், ஒரு குழந்தை தன்  தந்தையை அணுகுதற்கு  இத்துணை  இடர்ப்பாடு  நேரலாமா என்பது குறிப்பு. ஆண்டவனே , நின்னை  இன்னமும்  அடையலாம் என்னும்  ஒரே  குறிக்கோள்பற்றிய   அவாக்  காரணமாகவே  இவுடலைத்  தீயில்  வீழ்த்து  இறவாமல் உயிர்  வாழ்ந்து இருக்கலானேன்  என்பார், “நின்னையின்னம்  எய்தலுற்றிருப்பனே “  என்றார்.

                    இதன்கண், மன முதலிய  கரணங்களால் பண்டு  நின்னை  அடைந்திலேன் என்று  அடிகள் இரங்கிக்  கூறியிருத்தலின்  ,  பல  பிறப்புகளில்  இறை  பணியில்  தலைப்பட்டு  ஒழுகுதலே  அழிவில்  இன்பம்  நுகர்தற்குச்  சாதனம் ஆகும்  என்பது  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “எந்தையாய  நின்னை  இன்னம்  எய்தலுற்றிருப்பன் “  என்றதனால்  பத்தியும் , “வெந்தையா  விழுந்திலேன்” என்றதனால் , வைராக்கியமும்  அறியப்படுதலின்  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                           **************************************************

பாடல் : 80 .

இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை

ஆண்டு  கொண்ட  நின்னதாட்

கருப்பு  மட்டு  வாய்ம  டுத்தெ

னைக்க  லந்து  போகவும்

நெருப்பும்  உண்டு  யானும்  உண்டி

ருந்த  துண்ட  தாயினும்

விருப்பம்  உண்டு  நின்கண்  என்கண்

என்ப  தென்ன  விச்சையே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் பண்டைப்  பிறப்பில்  தம்  கரணங்கள்  இறை  பணியில்  தலைப்படாமையால்  திருவருட்  பதிவு  பெறாமைக்கு  இரங்கிய  அடிகள், இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  முன்னைத்  தவம்  இல்லாத  நிலையிலும், ஆண்டவன்  கருணை  கூர்ந்து  ஆட்கொண்டு , இன்ப  நிலையில்  இயல்பு  உணர்த்தினமையை அறிந்தும் , அப் பெருமான்  பிரிவைப் பொறுத்து, உயிர்  வாழ்ந்து  இருக்கலானேனே  என்று  இரங்குகின்றார் .

பதவுரை :–  இரும்பு  நெஞ்ச வஞ்சனேனை  =  இரும்பு  போன்ற  வலிய  நெஞ்சத்தை  உடைய  வஞ்சனாகிய  என்னை ,

ஆண்டு  கொண்ட  நின்னதாள்   =  ஆட்கொண்டு  அருளிய  நின்னுடைய  திருவடிகள்,

கரும்பு  மட்டு  வாய்மடுத்து =  கருப்பஞ்சாறு   போன்ற  அருள்  அமுதத்தை  உண்பித்து,

எனைக்  கலந்து  போகவும்  =  என்  உயிரிற்  கலந்து  பிரிந்து  செல்லவும்,

நெருப்பும்  உண்டு  =  தீயும்  உள்ளது ,

யானும்  இருந்தது  உண்டு  =  சிறியேனும்  உயிருடன்  இருந்தது  உண்டு ,

உண்டது  உண்டு  =  நல்ல  உணவுகளை  வயிறார  உண்டதும்  உண்டு ,

ஆயினும்  =  அங்ஙனம்  உண்டு  உயிருடன்  இருந்தும்  ,

நின்கண்  என்கண்  விருப்பும்  உண்டு  என்பது  =  நின்னிடத்து  எனக்கு  அன்பும்  உளது  என்று  கூறுதல் ,

என்ன  விச்சை  =  என்ன  மாய  வித்தையோ?  என்பது .

விளக்கவுரை  :-  அன்பினாற்  குழைந்து, இறைவனை  நினையாமையால் , “இருப்பு  நெஞ்சம்”  எனப்பட்டது. இரும்பு  கரும்பு  என்பன  எதுகை  நோக்கி  வலித்தல்  விகாரம்  பெற்றன .  நெஞ்சம்  குழையாமையால் , அதனாற்  பெறும்  பயன்  இழக்கப்பட்டதாகும்  அன்றித்  தீங்கு  விளைதற்கு  இடன்  இன்றாம் .  “நல்லது  செய்தல்  ஆற்றீராயினும் , அல்லது  செய்தல் ஒப்புமின் “  என்றபடி , இருப்பு  நெஞ்சம்  படைத்த  அவ்வளவில்  நல்லதே ; அம்மட்டில்  அமையாது , வஞ்சித்தலாகிய  தீமை  பயக்கும்  குணமும்  உடையனாயினேன்  என்பார். “இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை”  என்றார் .  நெஞ்சத்திற்  குழைவு  இன்மையால், நன்மையின்மையும் , வஞ்சம்  கலந்தமையால்  , தீமை  உண்மையும்  பெறப்படும்  என்க . அத்தகைய  தீயவன்  என  அடிகள்  தம்மைக்  கூறிக் கொண்டமையாலும்  , அஃது  உணர்ந்தும் , இறைவன் , கருணை  காரணமாகத்  தம்மை  ஆட்கொண்டு  அருளினன்  என்றமையாலும் , ஆண்டான்  அடிமைத்திறத்தில் அடிமை  இயல்பு  பிழைபட்டது  என்றும், ஆண்டான்  இயல்பு  மிகச்  சிறந்தது  என்றும்  குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் .  “நின”  என்புழி.  அகரம்  ஆறாம் வேற்றுமைப்பன்மை  உருபு  ஆகும் ; விரித்தல்  விகாரத்தால்   “நின்ன”  என்று  ஆயிற்று  .தாள் , கலந்து போதற்கு வினை முதலாகும்.

                         மட்டு  –  சாறு.  கருப்பு  மட்டு , அடையடுத்த  உவம  ஆகுபெயராக, நின்று  , அது  போன்ற  இனிமைச் சுவைமிக்க  திருவருள்  அமுதத்தை  உணர்த்துவதாகும்.  உவமம்  உயர்ந்ததாக  இருக்க  வேண்டும்  என்னும்  விதி  பிழைபடுகின்றதே எனின்,  உலகியற்  பொருள்களுள்  இனிமைச்  சுவையிற்  சிறந்தது  ஆதலானும் ,  ஈடும்  எடுப்பும்  இல்லாத  தெய்விகப்  பொருளுக்கு  எடுத்துக்காட்டப்  பிறிதொன்று  இல்லாமையானும் , ஓர்  அளவு  சுவை  இனிமை  ஒப்பு  நோக்கிக்  “கருப்பு  மட்டு” என்றார் . வாய்  மடுத்தல்  –  வாயுட்  கொள்ளல் ; உண்டல் . வாய்  மடுப்பித்து  என்பது , பிறவினை  விகுதி  குன்றி  வாய்மடுத்து  என்று  ஆயிற்று.  நின்தாள்  மடுப்பித்து,  என்னைக்  கலந்து  போகவும்  என்று  ஆம் .  நின்  –  திருவடி  அருள்  அமுதத்தை  உண்ணச்செய்து , என்னைக்  கலந்து  பிரிந்து  செல்லவும்  என்பது  பொருள் . இறைவன்  தாளை  அருட்சத்தி  என்று  ஆகமங்கள்  கூறும் . தாள்  கலத்தலாவது , உயிரிற்  சிவசத்தியாகிய  ஞான  ஒளி விரவுதல்  ஆகும்.  இறைவன் , யான்  தகுதியற்றவன்  என்பதை உணர்ந்தும் , தன்  அருட்குணமாக  என்னை  வலிய  ஆட்கொண்டு  , தன்  அருள்  அமுதத்தைத்  துய்ப்பித்து , தன்  அருள் ஒளியை  என்  உயிரில்  விரவச்  செய்து  நெடிது  நில்லாது  பிரிந்து  செல்லவும் , யான்  உடலைப்  பேணிப்  பொறுத்து  இருக்கின்றேனே  என்பார்  இங்ஙனம்  கூறினர். 

                      இறைவன்  திருவருட்  கலப்பு  ஒருகால்  நேரினும் , பிரியும்  இயல்பினது  அன்று.  அங்ஙனம்  ஆகவும் , பிரிந்து  செல்லவும்  என்றது  என்னை  எனின்  , அடிகளை  ஆட்கொண்டபின் , அவர்  தித்திக்கும்  மணி  வார்த்தைகளை  உலகத்துள்ள  மக்கள்  அறிந்து  இன்புறவேண்டும்  என்று  இறைவன்  திருவுளம்  கொண்டு, அடிகளை  இந்நிலவுலகத்து   இருத்திப்  பிரிந்தனன்  என்பது  வரலாறு  ஆதலின் , அவ்வாறு  கூறியது  என்க .

                      திருவருள்  தோய்வு , அடிகள்  உயிரிற்  கலந்து  பிரிந்திலது   எனினும் , உடனே  ஊனார்  புழுக்கூட்டை  நீத்துத்  தம்  உயிர்  , வீட்டின்பத்தில்  தலைப்படாமல்  இன்னும்  சின்னாள்  அவ்வுடலோடு  கூடியிருக்க  நேர்ந்தது  பற்றிப் பிரிவு  நேர்ந்ததாகக்  கூறிக்கொண்டு  “எனைக்கலந்து  போகவும் “  என்று  கூறுவார்  ஆயினர் .  அரிதிற்  கிடைத்த  திருவடிப்பேறு  பிரிவுற்றது  அறிந்தும், அத்  திருவடிக்கண்   இயைந்து  இன்பம்  நுகரவேண்டிய  தம்  உயிர் , இம் முடையார்  புழுக்கூட்டில்  அகப்பட்டு  வருந்துவதாயிற்றே  என  இரங்கி, அங்ஙனம்  வருந்துதற்கு  ஏதுவக  உள்ள  உடலைத்  தீவாய்ப்படுத்துச்  சுட்டு  ஒழிக்க  வேண்டுவது  யாததாகவும், அங்ஙனம்  செய்யத்  துணிவு  பிறவாமைபற்றிப்  பின் வருமாறு  கூறுகின்றார் : உடலைச்  சுட்டு  ஒழித்தற்கு, “நெருப்பும்  உண்டு”  என்றார்.  நெருப்பிற்பட்டு  விரைவில்  அழிந்து  சாம்பர்  ஆதல்  போல  ஆகாது  என்று  கருதி , நீர்  மூழ்குதல்  முதலியவற்றைக்  கூறார்  ஆயினர் .  எரிப்பதற்கு  நெருப்பு  உளதாதல்  அன்றி , எரிக்கப்படு  பொருளாக  யானும்  உயிர்  வாழ்ந்திருக்கின்றேன்  என்பார், “யானும்  இருந்ததுண்டு” என்றார். தீயில்  வீழ்தற்கு  மனம்  ஒருப்படா விட்டாலும் , உணவு  கோடலை  நிறுத்தி, உடம்பை  உலர்த்தலாமே  எனின் , அதுவும்  செய்திலேன்  என்பார் ,  “உண்டது  உண்டு”  என்றார்.  “யானும் உண்டிருந்தது  “  என்னும்  தொடரை ,  “யானும்  இருந்தது உண்டு  “ எனவும் ,  ஆண்டுள்ள  “உண்டு”  என்னும்  குறிப்பு வினை  முற்றை ,  “உண்டது” என்பதன்  பின்னும்  கூட்டி, “உண்டதுண்டு”  எனவும்  கொள்க.  எரிக்கும்  கருவியும் ,  எரிக்கப்படு  பொருளும்  யாரும்  தடைப்படுத்தாத  நிலையில்  எளியனவாக  இருந்தும் , மனம்  துணியாமையோடு ,  கருவியாகிய  நெருப்பை  உணவு  ஆக்குதற்குச்  சாதனமாகவும்  கொண்டு, நல்ல  உணவுகளை  ஆக்கி,  எரிக்கப்படு பொருளாகிய  உடலை  ஓம்புதற்கு  வயிறார  உண்டேன்  என்பார்,  “உண்டது முண்டு” என்றார் .  “உண்டதும்  “  என்புழி , உம்மை  தொக்கு  நின்றது. 

                    இங்ஙனம் பிரிவு பொறாத நிலையில் , உடலைத்  தீயில்  வீழ்த்தாமலும் ,  உணவினால்  வளர்த்துக்கொண்டு  இருந்தும் , நின்பால்  எனக்கு  அன்பு  உண்டு  என்று  யான்  கூறுதல்  என்ன  வித்தையோ  என்பார், “விருப்பும்  உண்டு  நின்கண்  என்கண் என்பதென்ன  விச்சையோ” என்றார்.  என்கண்  என்புழி , ஏழாம்  வேற்றுமை  உருபை  எனக்கு  என  நான்காவது  ஆக்குக . “நின்கண்  விருப்பும்  உண்டு” என்புழி ,  என்  உடம்பின்  அன்பு  உளதாதலே  யன்றி , நின் கண்ணும்   அன்பு  உண்டு  என்றும்  பொருள்  தரலால்  உம்மை  எச்சப்பொருட்டாம் .  என்பது – என்று  கூறுதல்  .  இதனால் , பேச்சு  அளவில்   அன்றி  , உள்ளத்தில்  மெய்யாக  அன்பு  இல்லை  என்பது  போதரும். உண்மையில்  இல்லாமல் , பேச்சளவில்  உண்டு  என்று  கூறுதல்  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவனை  ஏமாற்ற  முயன்றது  ஆகும்  எனக்கொண்டு, “என்ன  விச்சையே” என்றார்.  விச்சை  –  மாய  வித்தை  ; இல்லதை  உள்ளதாகவும்  ,  உள்ளதை  இல்லதாகவும்  காட்டுதல் .  இவ்விரு திறத்துள், இஃது இல்லதை உள்ளதாகக்  கொண்டு  கூறியதாகும் . என்  அவிச்சை  எனப்  பிரித்துப்  பொருள்  கூறுவாரும்  உளர் .  பாட்டின்  பொருட்  கிடக்கையை நோக்க  ,  அப் பொருள் சிறப்பின்றாதல்  அறிக. 

                     இதன்கண், “நின்ன  தாள்  கருப்புமட்டு  வாய்மடுத்தெனைக்  கலந்து  போகவும் “  என்றதனால், ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை   யாண்டு  கொண்ட  நின்னதாள்” என்றதனால்  பத்தியும் , “நெருப்பும்  உண்டு  யானும்  உண்டு”  என்றதனால்  உடல்  ஒழிவு  முகமாக  வைராக்கியமும் பெறப்படுதலின்  ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக .                                     

                                       ************************************************

9 .   ஆனந்த   பரவசம்

           னந்தம்   என்பது   மெய்யுணர்வின்  வாயிலாக  இறை  அருளைப்  பற்றி  நின்று,  பக்குவமுதிர்ந்த  உயிர்  நுகரும்  பேரின்பம்  ஆகும் . இதன்  இயல்பு , இதன்  முன்னைப்  பதிகம்  நுதலிய  பொருளாகிய  ஆனந்தத்  தழுந்தல்  என்பதற்கு  எழுதிய  குறிப்பில்  விளக்கப்பட்டுள்ளது .  பொறி  வாயிலாக  நுகரப்படும்  புலன்கள்  ஆகிய  உலகியல்  இன்பத்தை  உவர்ந்து  , மெய்யுணர்வு   கருவியாக  அநுபவிக்கப்படும்  சிவானந்தத்தில்  தோயும்  படி  உயிர்க்கு  ஒரு சிறிது  இடங்கிடைப்பினும்  நழுவவிடாமல்  பற்றிக்கோடற்கு  ஆண்டவனை  வேண்டுதல்  முன்னைப்  பதிகம்  நுதலிய  பொருளாகும்  .  அங்ஙனம்  ஆனந்தத்து   அழுந்தல்  ஆகிய  அநுபவத்தில்  தலைப்படக்  கிடைத்ததும் , அதன்கண்  மேன் மேலும்  ஈடுபட்டுத்  தன்வசம்  அழிதல்  ஆனந்த  பரவசம்  ஆகும் .  பரவசம்  என்பதற்குப்  பிறர்  வயப்படல்  என்பது  பொருள்  ஆயினும்,  ஈண்டுத்  தன்  வசம்  அழிதலே  கருத்து  ஆகும் .  நுகரப்படும்  அழிவில்  இன்பத்திற்கு  நம்  அறிவு  கருவியாகும்  என்று  எண்ணும்  மன  நிலையின்  ஒழிவே  தன்வசம்  அழிதல்  ஆகும் .  அங்ஙனம்  இன்றித்  தன்  அறிவுக்கு  முதன்மை  நினைய  நேருமாயின் ,  யான்  என்னும்  உயிர்  முனைப்பு  முற்பட்டு , இன்பத்  தோய்விற்குப்  புறம்பாக  நேரும்  திருவருளால்  நிகழ்தலை  மறந்து , கருவிகளைக்கொண்டு  நான்  செய்கின்றேன்  என்று  எண்ணும்  உயிர்  முனைப்பு  அறவே  ஒழிதல்  வேண்டும்.  நன்றாக  உறங்குகின்றவன்  ஒருவன்  அவ்வுறக்கநிலையில் , தன்  மெய்யை  மறத்தல் , ஆண்டுத்  தன்  வயம்  இழத்தல்  ஆகும் .  இஃது  அஞ்ஞான  நிலையில்  நிகழ்வது  .  சிவானந்தத்தில்   தன்  வயம்  இழத்தல்  ஞான  நிலையில்  நிகழ்வது.  “தூங்காமல்  தூங்கிச்  சுகப்பெருமான்  நின்  நிறைவில் , நீங்காமல்  நிற்கும்  நிலை  பெறவுங்  காண்பேனோ” என்னும்  அநுபவ  மொழி  ஈண்டு  நினைக்கத்தக்கது.   உலகத்தில்  மக்கள்  பகல்முழுதும்   வேலை  செய்து  உழைத்து , அவ்வுழைப்பினால்  ஏற்படும்  இளைப்பை  ஒழித்தற்கு , இரவில்  கருவி  கரணங்கள்  எல்லாம்  அறிவு இன்றி  ஒடுங்கிய  நிலையில்  தூங்கி, அதனால்  உடலுக்கு  உறுதி  பெறுவர்  . இவ்வுலகியலைக்கடந்து , திருவருளில்  தலைப்படுவோர்  பற்பல  பிறப்புகளிலும்  ஏற்பட்ட  இளைப்பு  ஒழியப்  பெற்றுக்  கருவி  கரணங்கள்  எல்லாம்  அறிவோடு  ஒடுங்கிய  நிலையில்  அமைதி  பெற்றுப்  பேரின்பத்தில்  தலைப்பட்டுத்  தம்  உயிர்க்கு   உறுதி  பெறுவர் .  உலகியலில் மக்கள் , உறக்கம்  நீங்கி  விழிப்பு  ஏற்பட்டதும் , வினையெச்சம்  இருத்தலான் , மீண்டும்  உண்டு , உடுத்து , வாழ்தற்கு  உரிய  வேலையில்  தலைப்படுவர்  .  திருவருளில்  தோயப்  பெறுவோர் , வினையெச்சம்  இன்மையால், மீண்டு  பிறத்தலன்றி  , உலப்பிலா  இன்ப நுகர்ச்சியுடையராய்  அழிவில்லாத  வாழ்க்கையில்  தலைப்படுவர் . இதுவே  தூங்காமல்  தூங்கி  எய்தும்  சுகப்பேறு   ஆகும்  என்க .  இந்நிலையில்  “சிந்தனை  போய்  நான்  எனல்  போய்த்  தேக்க  இன்ப  மாமழையை , வந்து  பொழிந்தனை” என்றபடி , உயிர் , கருவி , கரணங்களின்  சார்பு  உண்மை  குறியாது . அவ்வின்பத்தில்  தன்  வசம்  இழந்து  தோய்தல்  வேண்டும்  என்பதும்,  எக்காரணத்தாலும் அந்நிலையினின்றும்  நழுவுதல்  கூடாது  என்பதும்  இப்பதிகம்  நுதலிய  பொருள்  ஆகும் . ஆனந்தத்  தழுந்தலின் பின்  உண்டாவது   பரவச  நிலையாதலின் , இஃது  அதன்பின்  வைக்கப்பட்டது .  இதனால் , பதிக  இயைபு  உண்மை  புலன்  ஆதலும்  அறிக .

கலிநிலைத்துறை

பாடல் :  81 .

விச்சுக்  கேடுபொய்க்  காக  தென்றிங்

கெனைவைத்தாய்

இச்சைக்  கானார்  எல்லாரும்  வந்துன்

தாள்சேர்ந்தார்

அச்சத்  தாலே  ஆழ்ந்திடு  கின்றேன்

ஆரூரெம்

பிச்சைத்  தேவா  என்னான்  செய்கேன்

பேசாயே.

கருத்துரை :-    முன்னைப் பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில்  ஆண்டவன்  கருணை  கூர்ந்து  ஆட்கொண்ட உதவியை  அறிந்தும் அப்பெருமான்  பிரிவைப்  பொறுத்து  உயிர் வாழ்ந்திருக்கலானேன் என்று  இரங்கிய  அடிகள்,  அங்ஙனம்  உயிர்  வாழ்ந்திருந்தாலும்  ஆண்டவன்  திருவுள்ளக்  குறிப்பின்  வழியென்பதும் , அதற்குக்  காரணமாகத்  தாம்  கருதியதும்  இத்  திருப்பாட்டில் அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-   ஆரூர்  எம்  பிச்சைத்  தேவா   =   திருவாரூரில்  எழுந்தருளி  இருக்கும்  ஐயம்  ஏற்கும்  திருவுருக்  கொண்ட  எங்கள்  தெய்வமே ,

பொய்க்கு  விச்சுக் கேடு  ஆகாது என்று  இங்கு  என்னை  வைத்தாய்  = பொய்மைக்கு  வித்து  அழிவு   நேர்தல்  கூடாது  என்று  இவ்வுலகவாழ்க்கையில்  அடியேனை  இருத்தினாய் ,

இச்சைக்கு  ஆனார்  எல்லோரும்  =  அன்புடன்  செய்யும்  தொண்டிற்கு  உரியராயினார்  அனைவரும்,

வந்து  உன்தாள்  சேர்ந்தார்  =  நின்பால்  வந்து  நின்  திருவடி  நிழலை  எய்தினர் ,

அச்சத்தால்  ஆழ்ந்திடுகின்றேன்  –  பிறப்புப்பற்றிய  அச்சம்  காரணமாக  வருந்துகின்றேன் ,

நான்  என்  செய்கேன்  =  யான்  என்ன  செய்வேன்? 

பேசாய்  =  சொல்லி  அருள்வாயாக என்பது.

விளக்கவுர  :-  திருவாரூர்த்  திருத்  தலம் , நில மடந்தையின்  நெஞ்சத்தாமரை   மலர்  ஆகும்.  “மேதினிக்  காதன்மங்கையிதய  கமலமாம் , மாதொர்  பாகனார்  ஆரூர்  மலர்ந்ததால்”  என்பர்  சேக்கிழார் .  அண்டத்தில்  உள்ளபடியே  பிண்டத்திலும்  ஆம்  என்பராதலின் , இஃது  உயிர்களின்  இதய  கமலத்தையும்  குறிப்பின்  உணர்த்துவது  ஆகும். ஆண்டுத்  திருக்கோயில்  கொண்டு  எழுந்தருளியிருக்கும்  இறைவன்  திருப்பெயர்  தியாகராசன்  என்பதாம் . புறத்தே  திருவாரூர்த்  திருக்கோயிலின்  கண்ணும் ,  அகத்தே  உயிர்களின்  நெஞ்சத்தின்  கண்ணும்  வீற்றிருந்து  உயிர்களுக்கு  வேண்டுவன  வழங்கும்  பெரு  வள்ளல்  ஆவான் என்பதை  அத்  திருநாமம்  உணர்த்தும் . தன்  இடத்தில்  இரப்போர்க்கு  எல்லாம்  தன்  அருள்  அமுதைக்  குறைவற  வழங்கும்  அவ்வள்ளற்   பெருமானை , “பிச்சைத் தேவா”  என்றார் ; அருட் கொடையால்  அன்பரை  இன்புறுத்தல்  போல, அவர்  அன்பை  ஏற்றும்  இன்புறுதல்  பற்றி , உலகியலில்  ஓர்  அரசன்  குடி  மக்களுக்குப்  பாதுகாப்பு  அளித்து , அவர்  இடத்தினின்றும்  இறைபொருள்  பெறுதல் போல , ஆண்டவனும்  தன்  அருள்  அமுதை  மெய்யன்பர்க்கு  வழங்கி , அவர்  அன்பை  ஏற்றுக்கொள்ளும்  இயல்பு  உடையவனாவன்.ஆனால்,அரசன் இறைப்பொருள் பெறுதல்  தன்  நலங்குறித்தாம் .  இறைவன், அன்பர்  அன்பைப்  பெறுதல்  அவர்  நலங்குறித்தாம் . இதனால், ஈதலும் ஏற்றலும்  இறைவனுக்கு  உள்ளன  என்பது அறியப்படும் . ஆரூர்  என்றமையால் , தியாகராசனாக  ஈதலும் , பிச்சைத் தேவா   என்றமையால் ஏற்றலும்  பெறப்பட்டவாறு   அறிக. உலகத்தில்  ஒரு  பயிர்  தோன்றி  வளர்தற்கு  நல்ல  வித்தை  ஆராய்ந்து , அதனை  பதுகாத்துப் பேணி  வைப்பது போல, பொய்மையாகிய  பயிர்  தோன்றிச்  செழித்துப்  பயன்  செய்தற்கு  வித்தாக  ஊன் உடம்பில்  என்னை  இருத்தி  வைத்தாய்  என்பார் , “விச்சுக் கேடு பொய்க்காக தென்றிங்கெனை  வைத்தாய்”  என்றார் . ஆகவே  உலகத்துள்ள  பொய்மை  எல்லாவற்றிற்கும்  மூலம் தாமே என்றபடியாம் . ஆண்டவன், மற்றை  அன்பர்கள்  எல்லோர்க்கும்  தன் திருவடிச் சார்பை  நல்கி, அடிகளை  ஊன்  உடலில் இருக்கச்செய்தற்கு , அடிகள்  கருதிய  காரணம்  இதுவாம் என்க . இச்சை  என்பது ஆகுபெயராக நின்று, அன்புடன் செய்யும்  தொண்டை உணர்த்துவது ஆகும்.  “எனை நினைந்தாட் கொண்டாய்க்கு என்னினியான் செயும்  இச்சைகளே “ என்பது தமிழ்மறை . ஆதல் – உரியர் ஆதல்.;  அத்தொண்டிற்குரிய  மெய்யன்பர் என்பது கருத்து. இங்ஙனம்  அன்றி, இச்சைக்கானார்  என்பதற்கு , ஆண்டவன்  விருப்பத்திற்கு  உரியர்  என்று பொருள் கொள்ளுவாரும் உளர் . மற்றை அடியார்கள் எல்லோரும் ஆண்டவனை அடைதற்குத்  தகுதி  உடையர்  ஆயினார் என்பதும் , தமக்கு அத்தகுதி இலதாயிற்று  என்பதுமே  அடிகள்  கருத்து ஆதலானும், இப்பதிகத்து  மூன்றாம்  திருப்பாட்டில் , இங்ஙனமே , “ஆடியாரானார் எல்லாரும் வந்துன்தாள்  சேர்ந்தார் “ என்று  தொண்டு  பற்றியே கூறியிருந்தலானும் , அவ்வுரை  பொருந்தாது என்க.

                   இறைவன்  ஞானாசிரியனாக எழுந்தருளி  இருக்குங்கால் , அவன்  அருகிற்  சூழ்ந்து இருந்த  அடியார்  அனைவரும் அப் பெருமானோடு  மறைந்து  அருளினமையை  நேரிற்  கண்டவர்  ஆதலின் , “இச்சைக்கானாரெல்லாரும்  வந்துன்  தாள் சேர்ந்தார் “  என்றார் . வந்து சேர்தல்  –  இறைவனோடு  வெளிப்பட்டு  வந்து  அடைதல் .  தொண்டராகக்  காணப்பட்டமையால் , “இச்சைக்கானார்” எனவும் , வெளிப்பட்டு வந்தமையால், “வந்து” எனவும் , கண்கூடாக  மறைந்தமையால் , “உன்றாள்  சேர்ந்தார்” எனவும்  கூறியருளினர். “தொண்டர் எல்லாம்”நின்  திருவடி இன்பம் எய்த , ஆண்டவனே , என்னை மாத்திரம் ஈங்கு இருக்கப்பணித்தது , பொய்க்கு  வித்துக்கேடு  உண்டாதல் ஆகாது என்பது திருவுள்ளம் ஆயின் , யான் என் செய்வேன் ? பொய்மை நீங்கி  மெய்யன்பு  உடையனாகி  நின் அருட்கு இடனாகும் காலம் என்றோ?  அக்காலம் வரை , பிறந்து , இறந்து துன்பம் உறுவேங்கொல்” என்று அடிகள் நினைந்து, பிறவித்துன்பத்திற்கு அஞ்சுவாராய் , “அச்சத்தாலே யாழ்ந்திடுகின்றேன் “ என்றார் .  ஆழ்தல்  –  வருந்துதல்; அழுந்துதலும் ஆம்.  அச்சம் காரணமாக  வருந்துகின்றேன் எனவும் , அச்சத்தில் அழுந்துகின்றேன் எனவும் கூறலாம். பின்னதற்கு மூன்றனுருபை  ஏழாவதாகக் கொள்ளல் வேண்டும் . இத் துன்பநிலையில் யான் செய்யத்தக்கது இன்னது என்று எனக்குத்  தோன்றவில்லை ; நீயே  திருவுளம் பற்றி அருளல் வேண்டும் என்பார், “என் நான் செய்கேன் பேசாயே” என்றார். கருவிகளை  இயக்குவோனும் , பயன்  விளைப்பவனும்  இறைவன்  ஆதலின் , வீட்டின்பப்பேறு  குறித்து மேற்கொள்ளவேண்டிய  சாதனங்கள் இன்னவெனத்  தெரிந்து கொள்வதற்கும் இறைவனையே  வினவுவார் ஆயினர்.

                     இதன்கண், “மெய்த்தொண்டர் எல்லாம் நின் திருவடி சார்ந்து  ஆனந்த பரவச நிலை எய்தினாராக , என்னைப் பொய்மைக்கு மூலமாக ஈங்கு இருத்தினாய்; என் செய்வல்” என்று அடிகள் கூறியிருத்தலான்,அப் பரவச நிலை  தமக்கும் எய்த வேண்டும் என்பது  பெறப்படுதலின், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பிச்சைத் தேவா என்னான்  செய்கேன் “ என்றதனாற்  பத்தியும் ,பொய்க்கு மூலமாக வைக்கப்பட்டேன் என்றதனால் வைராக்கியமும்  பெறப்படுதலின் ,பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல்  அறிக.

                                         *******************************************

பாடல் : 82.

பேசப்பட்டேன்  நின்னடி  யாரில்

திருநீறே

பூசப்பட்டேன்  பூதல  ரால்  உன்

அடியானென்

றேசப்பட்டென்  இனிப்படு  கின்ற

தமையாதல்

ஆசைப்பட்டேன்  ஆட்பட்  டேன்உன்

அடியேனே.

கருத்துரை :-    ஆண்டவன் பிரிந்த நிலையில், அப் பிரிவைப் பொறுத்துத்  தாம் உடலோடு கூடி வாழ்ந்திருத்தற்குக்  காரணம் . பொய்க்கு  வித்துக்கேடு உண்டாகாமைப் பொருட்டு, அப் பெருமான்  தம்மை  வைத்ததாகும் என்று  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள்,அங்ஙனம்  பொய்க்கு  மூலமாக வைக்கப்பட்டேனாயினும் , அடியாராலும் உலகத்தவராலும் சிவனடியாருள்  ஒருவனாக எண்ணப்பட்டமையால் , அவ் எண்ணத்தின்  பயனாக வீட்டின்பத்தில் தலைப்பட விரும்பலானேன் என்று  இத்  திருப்பாட்டில் அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  நின்  அடியாரில்  பேசப்பட்டேன்  =  உன்  மெய்யடியாருள் ஒருவனாக  வைத்து மெய்யன்பராற் பாராட்டிப் பேசப்பட்டேன் ,

திருநீறு  பூசப்பட்டேன்  = ஞானாசிரியனாக  எழுந்தருளிய நின்னால் திருநீறு  பூசப்பட்டேன் ,

பூதலரால் உன்  அடியான்  என்று  ஏசப்பட்டேன் =  உலகத்தவரால்  உன்  அடியவன்  என்று  இகழப்பட்டேன் ,

இனிப்படுகின்றது  அமையாது  = இனித்  துன்பப்படுதல்  பொருந்தாது ,

ஆசைப்பட்டேன்  =  வீட்டின்பப்பேறு  குறித்து அவாவுடையேன் ,

உன் அடியேன்  ஆட்பட்டேன்  =  உன்  அடியவனாக  ஆளாயினேன்  என்பது.

விளக்கவுரை :-   பேசப்படுதல்  –  பராட்டிப்பேசப்படுதல் , பின்னர்ப்  பூதலரால்  என்றதனால் , ஈண்டு  மெய்யன்பரால் என்பதும் , ஏசப்பட்டேன்  என்றதனால் , பாராட்டப்பட்டேன்  என்பதும் பெறப்படும். இம்மை  மறுமைகட்கு  உரிய  புகழ், பொருள், அற முதலியவற்றால்  பெரியார்  எனப் பிறர்  பாராட்டுதல் அடிகளுக்கு உவந்தது அன்று என்பதும், சிவனடியாருள் ஒருவர் என்று பேசப்படுதலும் , அப் பேச்சும் உலகத்து உள்ள அரசர் , செல்வர் முதலியோரால் அன்றி, மெய்யன்பராற்  கூறப்படுதலுமே அடிகளுக்கு உவப்பு  ஆவன என்பதும் குறிப்பிற் பெறப்படுவனவாம் . விருப்பு  வெறுப்பு அற்ற  நிலையில் , ஒன்றை  உவத்தலும் , ஒன்றை  வெறுத்தலும் பொருந்துமோ , எனின் , உலகியற் பொருள்களுள்  நல்லன  தீயன குறித்து, உண்டாம் விருப்பு வெறுப்புகளைப் பற்றியது அதுவாகலின் , ஈண்டு  கருதத்தக்கதன்று . ஆண்டவன் அருட்கு இடன் ஆதலின் அடிகளுக்கு உண்டாம் மகிழ்ச்சியை ,  “பூமேலயனொடு  மாலும் புகலரிதென் றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க” என்பது முதலியவற்றான் அறியலாம்.

                      ஆண்டவன் குருந்த மரத்து நீழலில்  ஞானாசிரியனாக  எழுந்தருளி அடிகளை ஆட்கொள்ளுங்கால் , திருநீற்றால் அவர் உடலையும் , அருள் நோக்கால் அவர் உயிரையும் , பாசப் பிணிப்பு  ஒழித்துத்  தூய்மைப்படுத்தினன்  ஆதலின், “திருநீறே பூசப்பட்டேன் “ என்றார் . திருநீற்றுப் பூச்சை அங்கியிற் குளித்தல் என்று சிவாகமங்கள்  கூறும் .

                        பூதலர்  என்பது, ஈண்டு  நில வுலகத்துள்ள  திருவருட் பண்பு அறியாதாரைக் குறிக்கும் . அடிகள் அரசியலில் அமைச்சராக இருந்து ,சிறப்பு  எய்தியதை விட்டுச் சிவனடியாராய் ஒடுங்கி இருத்தலைக் கண்டு, அவர் எள்ளி நகையாடியதை அடிகள் காட்சியளவையிற் கண்டவர் ஆதலின் , “பூதலராலுன்  அடியானென்று  ஏசப்பட்டேன் “என்றார். இறைவனை முன்னிலைப்படுத்து , “உன் அடியான் என்று ஏசப்பட்டேன் “ என்றது.  தம்மைப்  பாதுகாக்கும்  உரிமைப் பொறுப்பு அவ் விரைவனுக்கு  மிகுதற்பொருட்டாம் என்க. இங்ஙனம் சிவனுக்கு அடியேன் ஆயினான் என்று பிறர் இகழ்ந்து உரைத்தது,அடிகளுக்கு அப் பெருமானது அரிய சார்பை வலியுறச்செய்து மகிழ்வித்தது என்பதை, “நாடவர் பழித்துரை பூணதுவாக “ என்னும் அடிகள் திருவாக்கானும் உணரலாம் . உலகத்தவர் இகழ்ந்து உரைத்ததை வெளிப்படக்கூறி , மெய்யன்பர் பாராட்டுரையைக் குறிப்பிற் பெறவைத்தது, அடிகளின் பெருமையைப் புலப்படுத்துவதாகும் . மேலும் இக்கருத்தானே , “ஏசப்பட்டேன்”  என்பதற்கு வினை முதலாகப்  “பூதலரால்” என்று வெளிப்படக் கூறியபடி , “பேசப்பட்டேன்” என்பதற்கும் , “பூசப்பட்டேன்”  என்பதற்கும் முறையே வினை முதல்களாகிய  “மெய்யன்பரால்” என்பதும் , “நின்னால்” என்பதும் வெளிப்படக் கூறாது ஒழிந்தமையும் கண்டு நினைக்கத்தக்கது . திருவருள் நாட்டம் உடைய பெரியார் , தம்மைப் பிறர் கூறும் பாராட்டுரைகளைத் தம் நாவினால் அநுபவதித்துக்  கூற ஒருப்பட்டார் என்பதும், தம்மைப் பிறர் பழித்து உரைத்தலை அணிகலனாக  ஏற்றுக் கொள்வர்  என்பதும் , தம்மைப் பிறரிடம் அறிவிக்க நேர்ந்த இடத்துச்  சிறுமை தோன்றக்  கூறுவர் என்பதும், திருத்தொண்டர் புராண முதலிய மெய்யன்பர் வரலாற்று நிகழ்ச்சிகளில் வைத்து அறியப்படுவனவாம் .

                        இத் திருப்பாட்டில், அடிகள் தாம் பெற்ற பேறுகளாகக் குறிப்பிட்டவை மூன்று.  திருநீற்றினால் தூய்மை பெற்றதும் , மெய்யன்பரால் சிவனடியாருள்  ஒருவராகப்  பேசப்பட்டதும் , உலகத்தாரால் சிவனடியான் என  ஏசப்பட்டதும்  ஆம். இவற்றுள் , உலகத்தவர் வெறுப்பு இன்றேல் , ஒரோவழி உலகப் பற்றிற்கு  ஆளாகவும்  நேரலாம் . ஆதலின் , அதுவும் அடிகளுக்கு உவப்புச் செய்யும் பேறுகளில்  ஒன்று ஆயிற்று என்க. படுகின்றது என்பது  தொழிற்பெயர் அளவில் நின்றது. படுதல் – துன்பப்படுதல் , ஆண்டவனாலும் அவன் அடியாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு , உலகத்தவரால் வெறுக்கப் பட்டபடியால் , இனிப் பிறப்பு இறப்புக்களிற்பட்டுத்  துன்பம் உறுதல் பொருந்தாது என்பார், “இனிப்படுகின்ற தமையாது”என்றும், மேற்குறிப்பிட்ட ஆதரவுகளைக் கருவியாகக் கொண்டு வீடு பெற விரும்புகின்றேன்  என்பார், “ஆசைப்பட்டேன்”  என்றும் கூறியருளினர்.

                    முடிவாக , ஆண்டவனே , பொய்க்கு  மூலமாக என்னை இருத்தினாய் ஆயினும் , வேறு புகல் இல்லாமையால் , நின்னையே  புகலிடமாக அடைந்து , மீளா அடிமையாக உனக்கே ஆளாயினேன் ; என்னை  நின் கருணை காரணமாக  ஏற்றுக்  காத்து  அருள வேண்டும்  என்பார், “உன் அடியேன் ஆட்பட்டேன் “ என்றார் . இனி, “ஆட்பட்டேன் உன்னடியேனே” என்பதற்கு , ஆளாயினேன் ; எவ்வாற்றானும் உன் அடியவனே , வேற அல்லேன் என்று கூறுதலுமாம் . இப்பொருட்கு  ஏகாரத்தைத் தேற்றப் பொருளாகக் கொள்ளல் வேண்டும் .

                        இதன்கண், “ஆசைப்பட்டேன்” என்று இன்ப நிலையில் தன் வயம் இழந்து கூறியதால், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பேசப்பட்டேன்” , “பூசப்பட்டேன்” என்றமையால் பத்தியும் , “ஏசப்பட்டேன்” என்றமையால் , வைராக்கியமும் பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                       *******************************************

பாடல் :83

அடியேன்  அல்லேன்  கொல்லோ  தானெனை

ஆட்கொண்  டிலை கொல்லோ

அடியார்  ஆனார் எல்லாரும்

வந்துன் தாள்சேர்ந்தார்

செடிசேர் உடலம்  இது நீக்க

மாட்டேன் எங்கள்  சிவலோகா

கடியேன்  உன்னைக்  கண்ணாரக்

காணுமாறு  காணேனே .

கருத்துரை :-  ஆண்டவனை  நோக்கி வீட்டின்பத்திற்கு ஆசைப்படலானேன் என்று  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள் ,இத் திருப்பாட்டில் அடியார் எல்லாரும் நின் திருவடி அடைய என் அவா நிறைவேறாமல் இருந்ததற்குக் காரணம் என் அடிமைப் பிழைப்பா?  அன்றி  நீ ஆட்கொள்ளவில்லைய என்றும், நின்னைக் கண்குளிர  மீண்டுங் காணும் நெறி அறியாமல் இருக்கின்றேனே என்றும் இரங்குகின்றார்.

பதவுரை :-  எங்கள் சிவலோகா  =  எங்கள்  சிவலோகநாதனே ,

அடியார்  ஆனார்  எல்லாரும்  வந்து  உன்  தாள் சேர்ந்தார்  = 

மெய்யடியார் ஆயினார் அனைவரும்  நின்னை அணுகி நின் திருவடி நிழலை அடந்தனர் ,

கடியேன்  =  கடியவனாகிய  யான் ,

செடி சேர் உடலம் இது நீக்கமாட்டேன்  =  துன்பம் தரும் ஊனிடலாகிய  இதனை ஒழிக்கவு மாட்டேன் ,

உன்னைக் கண் ஆரக் காணும் ஆறும் காணேன்  =  இன்பம் தரும் நின்னைக் கண் நிறையக் காணும் நெறியையும் அறிந்திலேன் , ( இந் நிகழ்ச்சியை நினையுங்கால்)  யான்  தான்  அடியேன் அல்லேனோ ,

தான் எனை ஆட்கொண்டிலை கொல்லோ  =  நீ தான்  என்னை  ஆட்கொண்டதில்லையோ ? (இன்னதன்று அறிந்திலேன்)  என்பது.

விளக்கவுரை :-  மெய்யன்பரின் அழிவில் வாழ்க்கைப் பொருட்டு ஆண்டவன் சிவலோக ஆட்சியைக் சிறப்புரிமையாகக் கொண்டவன் என்பார், “ எங்கள் சிவலோகா” என்றார் . பின்னர், வந்துன்றாள் சேர்ந்தார்” என்புழி, வருவதற்குச் சிவலோகம் இடனாதல் பற்றியுமாம். என்க . அடியாரானார் என்புழி , ஆக்கச் சொல் , சரியை  முதலிய தவங்களால் ஆண்டவன் அருள் பெறுதற்கு உரிய தகுதி படைத்தவர் என்பதைக் குறிக்கும் . எல்லாரும் என்றதனால் , தம்மைப் போலத் தனிமைப்பட்டார் பிறர் யாரும் இலர் என்பதைப் புலப்படுத்தவாறாம். வந்து சேர்ந்தார் என்பதில் , வருதல் சாலோக முதலிய பத முத்திகளையும் , சேர்தல் இரண்டறக்கலத்தலையும்  புலப்படுப்பனவாம் .

                             கடியேன் – கடுமையான இயல்புடையேன் ; நெஞ்சம் குழையாதவன் என்னும் பொருட்டு . “கள்வன் கடியன் கலதி” என்று பிறிதோரிடத்தும் அடிகள் தம்மை இங்ஙனம் கூறியிருத்தல் அறிக.

செடி – பாவமும் அதன் பயனாகிய துன்பமுமாம் .  இது என்பது ,இறைவன் திருவடிப் பேற்றிற்குத் தடையாகவுள்ளது என்னும் பொருட்டு. தடையாக  உள்ள பாவயாக்கையை ஒழித்தற்கு உரிய உபாயமும் அறிந்திலேன் என்பது கருத்து. யாக்கையை ஒழித்தற்குத் துணிந்திலேன் ஆயினும் , அதனோடு  கூடிய நிலையில் முன் ஞானாசிரியனாக எழுந்தருளிக் காட்சியளித்த திருக்கோலத்தை மீண்டும்  கண் நிறையக் காண்டற்கு உரிய நெறியையும்  அறிந்திலேன் என்பார் , “உன்னைக் கண்ணாரக் காணும் ஆறு காணேன்”

 என்றார் .   ஆர்தல்  –  நிறைதல் , நீக்கவும் காணுமாறும்  என்னும்  இடங்களில் , உம்மைகள் தொக்கு நின்றன . இனி, “ கண்ணாரக் காணுமாறு  உன்னைக் காணேன் “ எனக் கொண்டு , ஆண்டவனே , நின் அருள் நிறைந்த திருவிழிகளால் அடியேனைக்  கடைக்கணிக்குமாறு  யான் தரிசித்திலேன் எனக்  கோடலுமாம். “தொண்டனேன் நினையுமா நினையே” என்றபடி , மெய்யன்பர் காண்டற்கு இறையருள்நோக்கம் முதற்கண் நிகழவேண்டும் என்பதும், அவ்வருள் நோக்கம் பெறுதற்கு உரிய தவத்தை உயிர்கள் மேற்கொள்ளவேண்டும் என்பதும் கருத்து. நீ என்னைக் காணும்படி யான் உன்னைக் காணேன் என்றது, நின் அருட் பார்வைக்கு இலக்காதற்கூரிய தவஞ் செய்திலேன் என்பது பற்றியாம் . இக் கருத்திற்கு ஏற்ப , அத்தொடற்குப் பொருள் கொள்ளுங்கால் , கண்  ஆர  என்பதற்குக் கண்ணோட்டம் பொருந்த எனவும்,  காணுமாறு என்பதற்கு , நீ என்னைக் காணும்படி எனவும் பொருள் கொள்ளல் வேண்டும் .

                       இத் திருப்பாட்டின்  திரண்ட கருத்தாவது  : ஆண்டவனே நின் அடியாராகிய மெய்யன்பர் அனைவரும் நின்னுடன் சிவலோகம் வந்து , நின் திருவடியில் இயைந்து இன்புறுகின்றனர் . கொடியவனாகிய யான் அங்ஙனம் வந்து எய்தும் பேறு இல்லாமையோடு , பாவப்பயனாகிய துன்பம் தரும்  இவ்வுடற்  சுமையையும் ஒழிக்கமாட்டேன் ஆயினேன் . மேலும்  இவ்வுடலைப் பற்றி நின்ற  நிலையிலாவது  நின்னைக்  கண்கள் குளிரக் காணும் பேறாவது பெற்றேனோ  எனின் , அதுவும் இன்று . இந் நிகழ்ச்சிகளையெல்லாம் நன்கு சூழ்ந்து நோக்குங்கால் , யான் தான் நினக்கு அடியனாயது உண்மையில்லையோ ? அன்றி நீதான் என்னை ஆட்கொண்டிலையோ ? இன்னது என்று துணிந்திலேன் , என் செய்வேன் என்பதாம் . இக்குறிப்பு தோன்றவே ,

கனவில் வருங் காட்சி யெனக் கருணை மூர்த்தி

காட்டி மறைத்தலும் அன்பர் கலக்கத் தாழ்ந்து

நனவு  கொல்லோ கனவு கொல்லோ

என்று அடிகள் எண்ணுவாராயினர் என்பர் பரஞ்சோதி  முனிவர் , உலகியலில் ஒரு செல்வனை நோக்கிப் பரிசு பெறாத  புலவன் வருந்திப் பாடுங்கால் , “யான் பரிசு பெறாமைக்குக் காரணம்  என்பால் புலமைத் தகுதி யில்லாமையோ? அன்றி நின்பால் என்னை ஆதரிக்கும் தகுதி இல்லாமையோ? என்று கூறலாம் . ஆண்டவனை நோக்கி , அருள் பெறாத நிலயில் , ஓர் அன்பன் அங்ஙனம் பாடுங்கால் , நின் அருள் பெறாமைக்குக் காரணம் என்பால் தொண்டன் ஆம் தன்மை இல்லாமையா  என்று கூறலாம் . நின்பால் என்னை ஆட்கொள்ளும் தகுதி இல்லையா என்று கூறுதல் கடவுட் பெருமைக்குப்  பொருந்துவது அன்று. அதனாலே, அடிகள் யான் உண்மை அடியேன் அல்லேனோ ? அன்றி நீ என்னை ஆட்கொண்டிலையோ? என்று இறைவன் பெருமைக்குச் சிறிதும் குறை நேராவாறு  கூறியருளிய நயம் நினைந்து இன்புறத்தக்கது .

            இதன்கண், “அடியாரானாரெல்லாரும் வந்துன்றாள் சேர்ந்தார்” என்றதனால் , அவர் எய்திய ஆனந்தம்  எனக்கு இலையே என்று கூறப்புகுந்த அடிகள், தம்மை  “ஆடியேனல்லேன் கொல்லோ” எனவும், இறைவனை நோக்கி, “ஆட்கொண்டிலை கொல்லோ “ எனவும் தன்வயம் இழந்து கூறியிருத்தலின் , ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                                       *******************************

பாடல்: 84 .

காணு  மாறு  காணேன்  உன்னை

அந்நாட்  கண்டேனும்

பாணே  பேசி யென்றன்னைப்

படுத்ததென்ன  பரஞ்சோதி

ஆணே  பெண்ணே ஆரமுதே

அத்தாசெத்தே   போயினேன்

ஏணாண்  இல்லா  நாயினேன்

என்கொண்  டெழுகேன் எம்மானே.

கருத்துரை :-    முன்னைத் திருப்பாட்டில் , மற்றை அடியாரைப் போல ஆண்டவன்  திருவடியை அடையப் பெறாமைக்குக்  காரணம் ,யான் தான் உண்மை அடியேன் அல்லேனோ , அன்றி நீதான் ஆட்கொள்ளவில்லையோ என்று கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் ,நீ என்னை அடிமை கொண்டது  உண்மையாயினும் , அந்நாளில் யான் நின்னைப் புகழ்ந்து பாராட்டியவெல்லாம் இச்சகப்பேச்சாக  முடிந்து , பயன் விளைவிக்கவில்லை போலும் ; அங்ஙனமாயின் எங்ஙனம் உய்வேன் என்று இரங்குகின்றார் .

பதவுரை :-   பரம் சோதி  ஆணே  பெண்ணெ  ஆர் அமுதே  அத்தா  எம்மானே  =  மேலான ஒளிப்பிழம்பாக  வுள்ளவனே  ஆணாகவும் பெண்ணாகவும்  நிறைந்த  அமுதமாகவும்  உள்ளவனே,  தந்தையே  எங்கள் தலைவனே ,

காணும் ஆறு  காணேன்  =  இப்பொழுது உன்னைக் காணும்  நெறியறியாதவனாகிய  யான் ,

உன்னை அந்நாள்  கண்டெனும்  =  நின்னை அக்காலத்திற்  கண்டு  வைத்தும் ,

பாணே  பேசி  என்  தன்னைப் படுத்தது என்ன  =  இச் சகமே பேசி எனக்கு யான் , செய்து கொண்ட நலம் யாது ,

ஏண்  நாண் இல்லா நாயினேன் =  ஆற்றலும்  நாணமும் இல்லாத  நாயனையேன் ,

செத்தே போயினேன்  =  பயனின்றி இறந்துபோம் நிலயிலுள்ளேன் ,

என் கொண்டு எழுகேன்  =  இனி, எதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு உய்யக் கடவேன் ?  என்பது.

விளக்கவுரை :-  இத் திருப்பாட்டில் இறவனைப்பற்றி  விளியேற்ற   பெயர்கள் ஆறு  ஆகும் . இறைவன் எங்கும் நிறை பொருளாகவுள்ள  இயல்பை குறிக்கொண்டு , “பரஞ்சோதி “ என்றார் . அவயப்பகுப்பு  இல்லாத அருவ நிலையில்  ஒளிப்பிழம்பாகப் பொரியோர் கூறுவர் . “ஒளி வளர் விளக்கே உலப்பிலா வொன்றே “ எனத்  திருவிசைப்பாவும் , “கற்பனை கடந்த சோதி கருணையே  யுருவமாகி “ எனத் திருத்தொண்டர் புராணமும் கூறுதல் அறிக. பூதங்களுள் ஒன்றாகிய தீயின்  ஒளியை விலக்குதற்குப் “பரம்” என்ற அடை புணர்க்கப்பட்ட தென்க.

                         எப்பொருட்கும்  அப்பாலாய்த்  தத்துவங் கடந்த நிலையில்  அருவமாகவுள்ள பரம்பொருளாகிய இறைவன் உயிர்களின் நலங்குறித்துத்  திருவுருக் கொண்டு வெளிப்படுங்கால் , ஆண் வுருவாகப்  பெண்ணுருவாக அவ்விரண்டும் இயைந்த உருவாகக் காட்சியளிப்பன் என்பது குறித்து ,”ஆணே பெண்ணே “ என்றார். ஆணும் பெண்ணும்  இயைந்த வடிவமாகிய உமையொரு கூறன் என்பதை , “ஆணே  பெண்ணே “ என்பதனை இரட்டித்துக் கூறுமுகமாக  அமைத்துக் கொள்ளல் வேண்டும் . இங்ஙனம்  காட்சியளித்து  ஆட்கொள்ளப்பட்ட  மெய்யன்பர்க்கு உலப்பிலா இன்பம்  அளிக்கும் இயல்பு பற்றி , “ஆரமுதே” என்றார்.

                          இறைவனுடைய அருவம் , உருவம் , அருவுருவம் என்னும்  மூன்று  நிலைகளும் , முறையே , “பரஞ்சோதி”  , “ஆணே  பெண்ணே “ , “ ஆரமுதே” என்பவற்றாற்  புலனாதலும் அறிக. அமுதம் , கை கால்  முதலிய  உருப்புக்களின்மையால்  அருவத்  தன்மையும் பொறிகளால் நுகரப்படும் இயல்புடைமையால்  உருவத் தன்மையும் உடையதாய் , அருவுருவ நிலையில் எண்ணப்பட்டதென்க . அருவ நிலைக்குக்கூறிய  சோதியும் கட்புலனால் பற்றப்படும் இயல்பினதே  யெனின் , பூதவொளியன்று என முன்னரே கூறப்பட்டமையால்  அத் தடைக்கு இடன் இன்று என்க.ச்

                             இத்துணைப்பெருமைகளும் உடைய அப்பெருமான் , தமக்குச் சிறப்பு முறையில் ஞானாசிரியனாகவும் , தந்தையாகவும் உள்ளான் என்பது தோன்ற, “அத்தா” எனவும் , அடிமை கொண்டமையால் தமக்கும் மற்றை மெய்யன்பர்க்கும் தலைவனாதல் பற்றி ,” எம்மானே” எனவும் கூறுவாராயினர்.

                             “காணுமாறு  காணேன் “ என்பதற்கு , முன்னைத் திருப்பாட்டில் உரைத்தாங்குப் பிறிதொரு பொருளும் உரைத்துக் கொள்க . “காணேன்” என்பதை  வினையாலணையும்  பெயராகவும் , “கண்டேன்” என்பதை முற்றெச்சமாகவும்  கொள்ளல் வேண்டும் . காணேனாகிய யான் , கண்டும் பேசி யென்னைப்படுத்த  தென்ன என முடிக்க . “அந்நாள்” என்பது  குருந்த மர நீழலில் இறைவன் ஞானாசிரியனாக  எழுந்தருளிய காலத்தைக் குறிக்கும் .

                     நேரில் நின் திருக்கோலத்தைத்  தரிசித்தும் , யான் புகழ்ந்து பாராட்டிய எல்லாம் உள்ளன்போடு  நிகழாமல் இச்சக மொழி ஆயின என்பார், “பாணே பேசி” என்றார் .  பாண் – இச்சகம் ; முகமன் . என் தன்னை என்புழித் தன் அசைச் சொல் . இரண்டனுருபை  நான் காவதாக்கி , எனக்குச் செய்துகொண்ட நலம் தான் என்னவோ என்பார், “படுத்ததென்ன” என்றார் . படுத்தல்  – செய்தல் . என்ன  என்னும்  வினா மொழியால் , படுத்தது நலம் எனக் கொள்ளப்பட்டது . அடிகள் ஆண்டவனைப் பண்டு  கண்டது போல்  மீண்டும்  கானப்பெறாமையால் , கண்ட காலத்துப் பாரட்டிப் பேசியவெல்லாம் பயன் விளைக்கவில்லை எனக் கொண்டு , அவ்வுரைகள் உண்மையக இல்லாமல் உபசாரமாயினவோ என ஐயுறுவர்  ஆயினர் என்பது கருத்து.

                       திருவருட் பேற்றிற்கு உரிய தவ வன்மையும் , காண்டற்கு அரிய பொருளைக் கண்டும் , பயன் பெறாமல் அடியார் குழுவில் எண்ணப்பட்டமை  குறித்து  நாணமும்  மேற்கொள்ள  வேண்டியனவாகவும் ,கொள்ளாமையால் , “ஏண்  நாண் இல்லா  நாயினேன்” என்றார் .  ஏண்  – வலிமை . இனிப் பிறவாமைக்கு உரிய திருவருட்பதிவு  இல்லாமையால் இவ்வுடல் பயன் இன்றி இறந்து ஒழியும் நிலைமையில் உள்ளது என்பார். தெளிவு பற்றி இறந்தகால  வாய்பாட்டல் , “செத்தே போயினேன் “ என்றார் .

                          “ ஆண்டவனே   நின்னைக் காணும் நெறியும் அறிந்திலேன். முன் கண்ட காலத்துப்  பாராட்டியதும் முகமனாகப்  பயன்  செய்திலது ; தவ  வன்மையும் இல்லாதவனாய் வறிதே இறந்து போம் நிலையில் உள்ளேன் .  இந்நிலையில்  எனக்கு  ஆதரவாக மேற்கொள்ளத்தக்கது  யாதுளது? இனி எவ்வாறு உய்வேன் “ என்று அடிகள் இரங்குவாராய் , முடிவில் ,”என் கொண்டெழுகேன்”  என்றார் .

                             இதன்கண், இறைவனை , “ஆரமுதே” என விளித்து , “உன்னைக் காணுமாறு காணேன் “ என்றமையால் , அமிர்த வடிவாகவுள்ள இறைவனை , நெறி அறிந்து இயைதலே இன்பம் என்பது தெளிந்தும் , அதனைப் பெறாமையில் வைத்து , “பாணே பேசிப் படுத்ததென்ன” என்று  தன்  வயம்  இழந்து  கூறியமையால் , ஆனந்த  பரவசம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                              *******************************************

பாடல் : 85 .

மானேர்  நோக்கி  யுடையாள்பங்கா

மறையீறறியா   மறையோனே

தேனே  அமுதே  சிந்தைக்கரியாய்

சிறியேன்  பிழைபொறுக்குங்

கோனே  சிறிதே  கொடுமைபறைந்தேன்

சிவமா  நகர்குறுகப்

போனார் அடியார்  யானும் பொய்யும்

புறமே  போந்தோமே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில் , “ஆண்டவனே , அந்  நாளில்  நின்னைக் கண்டு பாராட்டியதால்  யான் பெற்ற பயன் என்னவோ எனக் கூறிய  அடிகள், அங்ஙனம்  கூறியது நின் அருள் வண்மைக்குத்  தகாத கடுஞ்சொல்லாகும்;  யான் புறம்பானது பற்றி அவ்வாறு கூறலானேன் ; பிழை பொறுக்கும் பெருமை நின் கண்ணதே “ என இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-   மான்  நேர்  நோக்கி  உடையாள்  பங்கா  = மான்  விழி  போன்ற விழிகளையுடையாளாகிய  எம்மையுடைய  அம்மையை  ஒரு  கூற்றிலுடையவனே ,

மறை ஈறு அறியா  மறையோனே  =  மறைகளும்  மறை  முடிவுகளும்  உணர  முடியாத  மறை  பொருளாகவுள்ளவனே ,

தேனே  அமுதே   =  தேனே  அமுதே ,

சிந்தைக்கு அரியாய்  =  மனத்திற்கு  எட்டாதவனே ,

சிறியேன்  பிழை  பொறுக்கும் கோனே  =  சிறுமையுடையேனாகிய  என்  குற்றங்களைப்  பொறுத்தருளும்  பெரியோனே ,

அடியார்  சிவமாநகர்  குறுகப்  போனார்  = அடியார்  எல்லாரும்  பெருமை  மிக்க  நின்  சிவபுரம் அணுகப்  போயினர் ,

யானும்  பொய்யும்  புறமே  போந்தோம்  =  யானும்  என்  பொய்யும்  புறம்பாகச்  சென்றோம் ,

சிறிது  கொடுமை  பறைந்தேன்  =  அதனாற்  சிறிது  கடுஞ்சொற்  கூறலாயினேன் (ஆதலாற்  பொறுத்தருள  வேண்டும் )  என்பது .

விளக்கவுரை :-    “மான்நேர்  நோக்கி”   என்றதனால்  தெய்வ  இள  நலமும் , “உடையாள்”  என்றதனால் தாய்மையும்  பெறப்படும் .  உடையாள்  –  உலகம் எல்லாம் தனக்கு உடைமையாகப் பெற்றவள். இறைவனையும்  இறைவியையும் உடையான்  எனவும்  உடையாள் எனவும்  அடிகள் கூறுவர். அருள்  வடிவினள் ஆகிய  அன்னையை ஒரு  கூற்றிலுடையவன்  என்றது , அருளாளனாய் அன்பர்  காட்சிக்கு எளியனானவன் என்பது குறித்தாம் . மறை  யீறு  என்பது உம்மைத் தொகை . மறை , கன்மப்  பகுதியையும், அதன்  யீறு  ஞானப்  பகுதியையும்  விளக்குவனவாம் . மறைகளும்  அதன் முடிவுகளாலும்  அறியப்படாமையால் ,  மறை பொருள்  ஆயினான் என்பது .  “நூலுணர்  வுணரா  நுண்ணியோன் “ என்பதும்  அடிகள் அருண் மொழி  .  நுண்ணியன் என்பது  பற்றியே ஈண்டு  மறையோன்  என்றனர் . கன்மயோகம்  ஞானயோகங்களால் இறைவன்  அறியப்படுவனாகவும் , அவற்றை  உணர்த்தும்  மறை  யீறுகளால்  அறியப்படாதவன்  என்று  ஈண்டுக் கூறியது  எங்ஙனம்  பொருந்தும்  எனின் , மறையும்  அதன்  யீறும்  முறையே  கன்மஞானங்களை  உணர்த்துவனவேனும், அவை நூல்  உணர்வாகிய  அபரஞானமாக முடிதலின் , அவற்றால்  அறியப்படாதவன்  என்பது  தெளிவாம் என்க.  “மறைத்திறம்  நோக்கி  வருந்தினர்க்  கொளித்தும் “ என்பதும்  காண்க.

                  தன்னை அடைந்தார்க்கு  இனிமைச் சுவை  பயந்து  நிற்றலின்  இறைவனை, “தேனே  அமுதே “ என்றனர் .  அமுதம்  –  தேவர்  உணவு . இவ்விரண்டனுள்  ஒன்று கூறிய அளவில் அமையுமே  எனின், பெறுதற்கு எளிமையும் அருமையும் பற்றி   இரண்டு  கூறப்பட்டன என்க.  அம்மையப்பனாக  மெய்யடியார்க்கு  எளி வந்து  இன்புறுத்தலின் ,”தேனே” எனவும் , மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு  நுண்ணியனாய், அரிய பொருளாக  இருத்தலின், “அமுதே”  எனவும்  கூறினர் . நூலுணர்வுக்கு  அரியன்  ஆயினும் , அவ்வுணர்வு , அநுபவ நிலைக்கு  ஆகுங்கால் , பேரின்புறுத்த  வல்லன்  என்பது  குறித்து , “அமுதே” என்றது பொருத்தமே .  “மாற்றம்  மனங்கழிய  நின்ற  மறையோன் “  என்னும்  இறை இலக்கணத்துள், மாற்றங்கழிய நின்றமை , “மறையீறறியா மறையோனே”  என்பதனாலும் , மனங்கழிய  நின்றமை , “சிந்தைக்  கரியாய்” என்பதனாலும்  பெறப்பட்டவாறு  அறிக.

                    சிறுமை , பெருமை ஆகிய  இரண்டு  குணங்களும்  முறையே குற்றஞ்  செய்தற்கும், அதனைப் பொறுத்தற்கும்  ஏதுவாகும்  ஆதலின் , சிறியேனாகிய  எனக்குப்  பிழை  செய்தலும் , பெரியோனாகிய  நினக்கு  அதனைப் பொறுத்தலும் இயல்பாம்  என்பார், “சிறியேன்  பிழை  பொறுக்குங்  கோனே “  என்றார்.  கோன்  –  பெருமைக்குணமுடையோன் .  “வெறுப்பனவே  செய்யும்  என்  சிறுமையை  நின்  பெருமையினாற்  பொறுப்பவனே “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதுங்  காண்க. “பிழையுளன  பொறுத்திடுவ  ரென்றடியேன்  பிழைத்தக்கால், பழியதனைப்  பாராதே  படலம்  என்கண்  மறைப்பித்தாய் “ என்று  தம்பிரான் தோழர்  கூறியதும் ஈண்டு  நினைக்கத்தக்கது

                     இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளித்  தமக்கு  உபதேசித்து  மறைந்தபின் , அப்பெருமான் கட்டளைப்படி , திருப்பெருந்துறையில் உள்ள  ஒரு  பொய்கையில்  ஒளிப்பிழம்பாக  காணப்பட்டதாக , அதன்கண்  அடியார்  பலர்  மூழ்கி  இறை  யருளிற்  கலந்த  நிகழ்ச்சியை  அடிகள்  கண்கூடாகக்  கண்டவராதலின், “சிவமாநகர் குறுகப் போனாரடியார்” எனவும், ஆண்டவன்  உலகத்தவர்  நலம்  குறித்து அடிகளைச்  சிலகாலம்  நிலவுலகத்திருக்கப்  பணித்தமையால், “யானும்  பொய்யும்  புறமே  போந்தோமே” எனவும்  கூறினார் .  அடிகளை இருக்கப்  பணித்தது ஆண்டவன்  கட்டளையாயினும், “அருளாரமுதப்  பெருங்கடல்வாய் அடியார்  எல்லாம்  புக்கழுந்த , இருளார்  ஆக்கையிது  பொறுத்தே யெய்த்துக்  கிடந்தேன் “  என்றபடி , மெய்யடியார்க்குக்  கிடைத்த  பேறு தமக்கு  அப்பொழுதே  கிடையாமையால்  உண்டாகிய  வருத்தம்  பொறாது , தம்மைப் பொய்யோடு  சேர்த்துப்  புறம்பானோம் என்று  கூறினர்.  சிவமாநகர்  மெய்மையின்  இருப்பிடம்  ஆகும்.  ஆதலின், பொய்மைக்கு  அங்கு  இடனின்று .  பொய்க்கு  வித்தாக ஆண்டவன் தம்மை  வைத்ததாக  அடிகள்  கூறியுள்ளார்  ஆதலின் , பொய் , சிவமாநகருக்குப்  புறம்பாகுங்கால் ,  அதனோடு  பிணைக்கப்பட்டுத்  தாமும்  புறம்பானதாகக்  கூறியுள்ளார் .

                   இங்ஙனம்  அடியாரெல்லாம்  சிவமாநகர்  அணுகப்போய்  இன்புறவும் , தாம்  பொய்யோடு  பிணைக்கப்பட்டுப்  புறம்பாகித்  துன்புறவும், நேர்ந்தமை  பற்றி   உண்டாகிய  வருத்தம் பொறாது , தம்மைப்  பாசப்பிணிப்பு  ஒழித்து  ஆட்கொண்டருளிய  அருள்  வள்ளலாகிய  ஆண்டவன்  பேருதவியையும் எண்ணாமல் , அப்பெருமான் முன்னிலையில் , “பாணே  பேசி  யென்றன்னைப்  படுத்ததென்ன.” என்பது முதலிய  கடுஞ்சொற்களைப்  பேச  நேர்ந்ததென்று  தெரிவித்துப்  பொறுக்க வேண்டுவாராய் , “சிறிதே கொடுமை  பறைந்தேன் “ என்றார்.  கொடுமை  –  கடுஞ்சொல் ,  பறைதல்  –  பேசுதல். “கேள்வியினும்  வினையினும்  கடியவாய  சொல்லைக்  கடுஞ்சொல் “  என்பர்  பரிமேலழகர்  .  ஈண்டு  அடிகள்  கூறியதாகக்  குறித்த  கடுஞ்சொல் , கேள்வியளவில்  கடுமை  யுடையதேயன்றிச்  செயற்கடுமை  இன்று .  இது  கருதியே , “சிறிதே கொடுமை பறைந்தேன் “  என்று  குறிப்பிடுவாராயினர் . ஆதலிற் பொறுத்தருள வேண்டுமென்பது குறிப்பெச்சமாக  வருவித்துரைத்துக்  கொள்ளல்  வேண்டும் . அடிகள், ஆண்டவன்  முன்னிலையில்  ஒரோவமயம்  இங்ஙனம் சொல்லளவில் வெறுப்புத் தோன்றக் கூறுதல் , தந்தையின் முன்னிலையில்  அறியாப்  பருவத்து  இளங்குழவி  பேசுதல் போல்வதாகும் என்க. அடிகள் அருளிச்செய்த திருப்பாட்டுக்களில் , முன்னும்  பின்னும்  இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லம்  இஃதொக்கும் .

                      இதன்கண், “தேனே  யமுதே”  என்றதனால், இறைவன் ஆனந்தவடிவினன்  என்பதும் ,  “சிவமாநகர்  குறுகப்  போனாரடியார்” என்றதனால் ,அதுவே  பெறத்தக்கது  என்பதும் அப்பேறின்மை  குறித்து, “சிறிதே கொடுமை பறைந்தேன் “ஏன்றதனால் , தன்வயம் இழந்த நிலையும் பெறப்படுதலின், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                    ***********************************************

பாடல் : 86 .

புறமே  போந்தோம்  பொய்யும்  யானும்

மெய்யன்பு

பெறவே  வல்லேன்  அல்லா  வண்ணம்

பெற்றேன்யான்

அறவே  நின்னைச்  சேர்ந்த அடியார்மற்றொன்

றறியாதார்

சிறவே  செய்து  வழிவந்து  சிவனேநின்றாள்

சேர்ந்தாரே .

கருத்துரை :-    அடிகள்  ஆண்டவன்  பெருமைக்குப்  பொருந்தாத முறையிற்  சிறிது  பிழை  செய்ய நேர்ந்ததற்கு  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறப்பட்ட  ஏதுவை , மீண்டும்  இத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :-  சிவனே  =  சிவனே ,

நின்னையே  அறச்சேர்ந்த  அடியார்  =  உன்னையே  முழுதும்  உரிமையாகச்  சார்ந்த  அடியார் ,

மற்று ஒன்று  அறியாதார் =  பிறிதொன்றனையும்  அறியாதவராய் ,

சிறவு  செய்து  வழி  வந்து நின் தாள்  சேர்ந்தார்  =  சிறந்த செயல்களைச்  செய்து  செந்நெறிக்கட்  போந்து  நின் திருவடிக்கண் இயைந்தனர் ,

யானும்  பொய்யும்  புறமே  போந்தோம்  =  யானும்  பொய்மையும்  புறம்பானோம்

யான்  = அவ்வளவினன்றி  யானோ ,

மெய்யன்பு  பெறவே  வல்லேன் அல்லா  வண்ணம்  பெற்றேன்  = 

மெய்மையாகிய  அன்பைப்  பெறுதற்கே  வன்மையுடையேன்  அல்லாத  தன்மையையும்  பெற்றுளேன் (ஏன் செயல் ! காத்தருள்க) என்பது.

விளக்கவுரை :-    சார்ந்தாரை  இன்புறுத்தும் மங்கல வுருவினன் என்னும்  பொருள் தோன்ற, :சிவனே” என்றனர் . அறவே  என்புழி , ஏகாரத்தைப்  பிரித்து, நின்னை என்பதனோடு  இயைத்துத்  தேற்றப்  பொருட்டாகக்  கொள்க,  அறவென்னுஞ் சொல் , முழுதும் என்னும்  பொருளுடையதாகும் . தம்  உடல் பொருள்  , ஆவி  எல்லாம்  ஆண்டவனுக்கே  உரிமையாக்கிய  அடியவர்  என்பார் , “அறவே நின்னைச் சேர்ந்த அடியார் “  என்றார் . நின்னைச் சேர்ந்த  என்றதனால்,  பண்டைக்குலம் ஒழிந்து , தொண்டர்க்குலம்  உடையராயினர் என்பது  போதரும் .

              உலகத்தில் தாக்கான்  ஒருவன்  ஆதரவைப்  பற்றி நிற்கும் மற்றொருவன், அந் நிலையிலே,  அவ்வாதரவினுஞ்  சிறந்த பயன் பெறுதற்குரிய பிறிதோர்  ஆதரவை  நாடுதலும்  இயல்பாம் .  அம் முறையில்  இறைவனையே  எல்லா வகையிலும் உரிமையாகப்பெற்ற அடியார், அன்நிலையில் பிறிதொன்றைப்  பற்றுக்கோடாக எண்ணும் இயபினரோ என்பார்க்கு  விடையாக, “மற்றொன் றறியாதார்” என்றார் . உலகியலில்  ஒன்றை நோக்கப்  பிறிதொன்று  உயர்வாக அன்றித்  தாழ்வாகக்  காணப்படலாம். எல்லாம் வல்ல  ஆண்டவனை நோக்கப் பிறிதொரு  பொருள் சிறந்ததாக  இல்லாமையாலும் , அப்பெருமானையே முற்றிலும்  உரிமையான  பற்றுக் கோடாகப் பெற்றமையாலும் , மற்றொன்று  அறியாதார் ஆயினர்  என்பது.

                சிறவு  –  சிறப்பு . பிறப்பு  இறப்புக்களை, பிறவு  இறவு என்றாற்போலச்  சிறப்பைச்  சிற வென்றார் . “பிறவினோ டிறவுமானான்” என்பது  தமிழ்மறை . சிறந்த செயல்களாவன, சரியை  முதலிய  தவங்கள்  ஆகும். வழி, ஞான நெறியும் அன்பு நெறியுமாகிய  செந் நெறிகளாம் . ஞானத்தால்  தெளிதலும் , மெய்யன்பினால் இறைவனோடு  கலத்தலும் உளவா மென்பது பெரியார் அநுபவமாகும் .     சரியை , கிரியை  யோக  மூன்றும் ஞானத்தைப் பெறுதற்குச்  சாதனமாகிய தவங்கள் ஆம் என்பதும், ஞானம் , இறைவனைத்  தெளிதற்கு ஏதுவாகிய செந்நெறி என்பதும், மெய்யன்பு , இரைவனோடு  கலத்தற்கு உரிய நன்னெறி என்பதும் நுண்ணிதின் ஆராய்வார்க்குப்  புலனாம் . ஆகவே அந்னெறிக்கட்  சென்றால், சேரும் இடன் இறைவன் திருவடியாம் என்பார், “நின்றாள் சேர்ந்தார் “ என்றார்.

                 மெய்யடியார் அங்ஙனம் திருவடிக்கண் இயைந்தனராக , யானும்  என் பொய்யும்  சிறிதும்  அணுகப்  பெறாமல்  புறம்பாயினோம்  என்றார் . பொய்மைக் குணப் பொருளாகவும் , அதனையுடைய  தம்மைக்  குணிப்பொருளாகவும்  கொண்டு , “பொய்யும்  யானும் “ என்றார். குண  குணிகள்  என்பன , பண்பும், பண்புடைப்  பொருளாகிய  பண்பியுமாம் . பண்பும்  பண்பியும் பிரிக்கப்படாதனவாயினும் , பண்புக்கு  ஆற்றல் மிக்க இடத்து , அதனுடைய  பண்பியைப்  பண்பாகத்  தனிபடுத்துக் கூறுதல் கவி  மரபு . எடுத்துக்காட்டாக ஒன்று கூறுதும் . அன்பு  குணமாக , அதனுடைய  அன்பன் குணிப்பொருள்  ஆவன் . அவ்வன்பனிடத்துள்ள  அன்பாகிய  குணம் சிறந்திருக்கு மாயின் , என் அன்பே என்று அழைத்தல் உண்டு . “நாணனும் அன்புமுன்பு  நளிர்வரை  யேற “ என்று  சேக்கிழார்  கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  இவ்வுண்மை கருதியே , அடிகள்  குணிப்பொருளாகிய தம்மினும்  , தம்மிடத்துள்ள  குணமாகிய பொய்மை வலியுடையது  எனக் கொண்டு , “ பொய்யும்  யானும் “ என்று  பிரித்துக் கூறுவாராயினர் .

                  “மெய்யன்பு  பெறவே” என்புழி , ஏகாரம்  சாதன சாத்தியப்  பேறுகள் இரண்டனுள் , சாதனப் பேறு  பிரித்துக் கூறப்பட்டமையின் , பிரிநிலைப் பொருட்டாதல் அறிக.  வல்லேன் அல்லா வண்ணம் –  வல்லுனன்  அல்லாத தன்மை . வண்ணமும்  என்புழி , உம்மை  தொக்கு நின்றது . பொய்யும்  யானும்  புறம் போந்ததன்றிக்  குண  குணிகளாகிய அவ் விரண்டனுள் குணியாகிய யானோ , சாத்தியமாகிய  திருவடி இயைபேயன்றிச்  சாதனமாகிய  மெய்யன்பைப்  பெறுதற்கே தவ  வன்மையில்லாத  தன்மையையும்  பெற்றுள்ளேன் . எங்ஙனம் உய்வேன் என்பார், “மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம்  பெற்றேன் யான் “ என்று  கூறினார்.  வண்ணம்  – ஒரு  குணம் ஆகும்  .  பொய்மையாகிய  குணமேயன்றித் தவ வன்மைக்கு உரியதல்லாத  தன்மையையும் பெற்றேன் என்பது  கருத்து. என் செய்வல் , காத்தருள்க என்பன குறிப்பெச்சமாக  வருவித்துரைக்கப்பட்டன .

                  இத்  திருப்பாட்டின்  திரண்ட  கருத்தாவது :- ஆண்டவனே  நின்னை  முழுதும்  உரிமையாகப்  பெற்ற  மெய்யடியார் , பிறிது ஒன்றையும் எண்ணாதவராய்ச்   சரியை  முதலிய  தவச்  செயல்களைச் செய்து , நெறி  நின்று நின் திருவடி  யடைந்தனராக , யானோ பொய்யொடு புறம்பானதன்றிச் சாதனமாகிய  மெய்யன்பைப் பெறுதற்கு உரிய  தகுதியும்  பெறாத  நிலையில் உள்ளேன் . எங்ஙனம்  உய்வேன் ? காத்தருளல் வேண்டும்  என்பதாம் .

                   இதன்கண், “அடியார்  மற்றொன் றறியாதார் , சிறவே  செய்து வழி வந்து நின் தாள் சேர்ந்தார் “ என்றதனால் , இம் முறைப்படி  அடைதலே  அழிவில் இன்பம் என்பதும் , அது  பொறாமையோடு  சாதனமாகிய  மெய்யன்பையும்  பெற்றிலேன் என்றதனால், அது குறித்துத்  தன்வயம் இழத்தலும்  பெறப்படுதலின் , ஆனந்த  பரவசம் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல் அறிக.  

                                             ************************************

பாடல் : 87 .

தாராய்  உடையாய்  அடியேற்  குன்தாள்

இணையன்பு

பேரா  வுலகம்  புக்கார்  அடியார்  புறமே

போந்தேன்யான்

ஊரா  மிலைக்கக்  குருட்டா  மிலைத்தாங்குன்தாள்

இணயன்புக்

காரா  அடியேன்  அயலே  மயல்கொண்

டழுகேனே .

கருத்துரை :-   தம்  பிழைக்கு  ஏதுவாகவுள்ளவற்றை முன்னைத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறிப் பொறுத்தருள  வேண்டிய  அடிகள், அப் பிழை  பொறுத்தலோடு  தமக்கு  இன்றியமையாது வேண்டிய  சாதனத்தை அருளுமாறு  இத் திருப்பட்டில் குறிப்பிட்டு வேண்டுகிறார்

பதவுரை  :-   உடையாய்  =  ஆண்டவனே ,

அடியார்  பேரா  உலகம்  புக்கார்  =  மெய்யடியார்கள்  மீளா  வுலகமாகிய  வீட்டு  நிலையை எய்தினர் ,

யான்  புறமே   போந்தேன்  =  யானோ  அதற்குப்  புறம்பாகிய  இடத்தையே  அடைந்தேன் ,

ஊர்  ஆ  மிலைக்கக்  குருடு  ஆ  மிலத்து ஆங்கு  = ஊர்ப்பசுக்கள்  கனைக்க  குருட்டுப் பசுவும்  கனைத்தது போல ,

உன்  தாள்  இணை அன்புக்கு ஆரா  அடியேன்  =  நின் திருவடித் துணைக்கட்  செலுத்தும்  அன்பு  குறித்து அநுபவம்  பெறாத  அடியேன் ,

அயலே  மயல்கொண்டு அழுகேன்  =  மெய்யடியார்க்குப்  புறம்பாக இருந்து  ஆசைப்பட்டு  அழா நின்றேன் ,

அடியேற்கு  உன்தாள் இணை  அன்பு  தாராய்  =  ஆதலின், அடியவனாகிய  எனக்கு  நின்  திருவடித்  துணை பற்றிய  மெய்யன்பைத்  தந்தருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-   “உடையாய்” என்றது, அடிமை உடைமைகளைப்  பாதுகாக்கும் பொறுப்பு  நின்பாலது என்னும் குறிப்புத் தோன்ற நின்றது . பின்னர் , “அன்புக்கு  ஆரா அடியேன் “ என்று  தம்மைக் குறிப்பிட்டமையால் , ஈண்டு அடியர் என்றது , அன்பு அநுபவம் மிக்க  மெய்யடியார் எனப் புலப்படுக்கப்பட்டபடியாம் . பெயர்தல்  – பேர்தல் .   மீளா உலகம்  – அடைந்தார்  திரும்பாமைக்கு ஏதுவாகிய  வீட்டு  நிலை . வீட்டு  நிலையை உலகம் என்றது உபசார  வழக்கு . “மீண்டு  வாரா வழி”  “ மறிவறியாச் செல்வம்” என்பனவும்  அது. புறம் போந்தோர் ஒரோவமயம் உட்புகுதலும்  உண்டு. யானோஉட்புகுதற்கு வழியற்றுப் புறத்தே செல்லல் ஆனேன்  என்பார், “புறமே போந்தேன் “என்றார் . புறமே  என்புழி , ஏகாரம்  தேற்றப் பொருட்டு , மெய்யடியார்  திரும்பா  நிலையில்  உட்புக்கார்  எனவும் , யான்  உட்புகா நிலையில் புறம் போந்தேன் எனவும்  அடிகள் கருதியபடியாம் .

                     “ஊர் ஆ “என்பது  , ஓர்  ஊரில்  உள்ள பசுக்கூட்டங்களை  உணர்த்தும். மிலைத்தல்  –  கனைத்தல் . கன்றைக் கண்டதும்  தாய்ப்பசு கனைத்து ஒலித்தல் இயல்பு . கண் தெரியாத பசு , மற்றைப் பசுக்கள் கனைத்துக்  ஒலித்தலைக் கேட்டுத்  தானும் ஆங்குக் கன்றைக்  கண்டதாகக்  கனைத்தல் போல என்பதாம். “மிலைத்திங்கு” என்னும் பாடம் , எச்சத்திற்கு முடிபின்மையால் சிறந்ததன்று . இவ்வுவமை , மெய்யன்பு மிக்க  அடியார் பேராவுலகம் புக்கார் எனக் கொண்டு , அத்தகைய அன்பில்லாத யானும் அங்ஙனம் புகுதற்கு ஆசைப்பட்டுப் புறம்பாய் நின்று  அழா நின்றேன் என்னும்  உவமேயப் பொருளைத் தெளிவுறுத்துவதாகும்.  “கோவுடனே கூடியதோர் குருட்டாவும் ஊர் புகுதும்” என்று உமாபதி சிவாசாரியார் கூறியதும் கண்டு நினைக்கத்தக்கது.

                    நின்  திருவடிக்கட் செலுத்தும் மெய்யன்பு  பெறுதற் பொருட்டு மேற்கொள்ளப்படும்  சரியை  முதலிய தவ ஒழுக்கமாகிய அநுபவம் இல்லாமற் பெயரளவில் அடியவன்  ஆகிய  யான் என்பார், “உன் தாளினை அன்புக்கு ஆராவடியேன்” என்றார். ஆர்தல்  –  அநுபவித்தல் . இனி, “ஆராயடியேன்” எனப் பாடங்கொண்டு , ஆராய் என்பதற்கு , எத்தன்மையுடையேனாய் எனவும் பொருள் கூறுவாரும்  உளர் .

                       அயல்  – வேற்றிடம் . மெய்யடியார்  பேரா வுலகம் புகுதற்கு அடியிட்ட செந்நெறிக்குப் புறம்பான இடம் என்பதாம் . மயல்  – அவா. மெய்யன்பர் எய்திய வீட்டு  நிலையை அடைதற்குத் தகுதி பெறாத நிலயில் , அவாக்  கொண்டு முயன்றமையால், கருதியது பெறாமல் வருந்தலானேன் என்பார் , “மயல் கொண்டழுகேன் “என்றார். இந்நிலையில்  யான் வேண்டுவது மெய்யடியார் புக்க பேராவுலகம் புகுதலையன்று., அதற்குச் சாதனமாகிய  மெய்யன்பேயாம் என்பார் , “உன்றாளிணையன்பு” என்றார் . சாதன சாத்தியமாகிய மெய்யன்பு ,வீட்டு நிலை என்னும் இரண்டனுள், வீட்டு நிலை  பெறுதற்குத் தகுதியில்லேனாயினும் , அதற்கு  ஏதுவாகிய மெய்யன்பு பெறுதற்கு அன்று  ஆட்கொண்ட முறையில் அடியவன் ஆயினேன் ஆதலின் ,அதனைத்  தந்தருள  வேண்டுமென்பார் ,, “அடியேற்கு “ எனவும்,”தாராய்” எனவும் கூறியருளினர். “தாராய்” முன்னிலை உடன்பாட்டு வினை.

                           இத்  திருப்பாட்டில் , “பேரவுலகம் “ என்பதை , மோனை நோக்கிப் “போராவுலகம் “ எனப் பாடங்கொண்டு , சொல்லுதற்கரிய  எனப்  பொருத்தமில் பொருள் கூறியும் , “மிலைக” என்னும் சொற்கு , மேய்ந்திட எனவும் , போர் செய்ய எனவும் இல்லாத  பொருள்களை  இயைபின்றிக்  கூறியும் ,”அழுகேனே”   என்பதை , “எழுகேனே “ என அந்தாதித் தொடை சிதையப்  பாடங்கொண்டும் , திருப்பாட்டின் அமைப்பையும் , சொற்பொருள் ஆற்றலையும் , கருத்து நயத்தையும் ஆராயாமற் பொருள் கூறி இடர்ப்படுவாரும் உளர் . அவையெல்லாம் பொருந்தாமை யறிக.

                              இதன்கண்,  “பேராவுலகம் புக்காரடியார்” என்றதனால், அழிவில் இன்ப நிலை அதுவென்பதும் , “ஊராமிலைக்கக்  குருட்டா மிலைத்தாங்கு”  என ஒப்புமை காட்டி, “அயலே மயல் கொண்டழுகேனே” என்றதனால் அவ்வின்பம் பற்றித் தன்வயம் அழிதலும் பெறப்படுதலின் , ஆனந்த  பரவசம் என்னும்  பதிகம்   நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        *******************************************

பாடல் : 88 .

அழுகேன்  நின்பால்  அன்பாம்  மனமாய்

அழல்சேர்ந்த

மெழுகே  யன்னார்  மின்னார்

கழல்கண்டு

தொழுதே  யுன்னைத்  தொடர்ந்தா  ரோடுந்

தொடராதே

பழுதே  பிறந்தேன் என்கொண்  டுன்னைப்

பணிகேனே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன்  திருவடி  அடைதற்கு  இன்றியமையாத சாதனம்  மெய்யன்பு  எனக்  கண்டு , அதனைத்  தந்தருள வேண்டுமென வேண்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில் அஃதன்றி வேறு எதனைப் பற்றுக்கோடாக  மேற்கொள்ளக்  கடவேன் என்று மீண்டும் வற்புறுத்து  இரக்க விண்ணப்பம் செய்கின்றார் .

பதவுரை :-  நின்பால்  அன்பு  ஆம்  மனமாம்  =  நின்னிடத்து அன்புமயமான  உள்ளம்  உடையராய் ,

மின் ஆர்  பொன் ஆர்  கழல் கண்டு  =  ஒளிபொருந்திய நின் பொன்போன்ற திருவடிகளைத்  தரிசித்து ,

அழல்  சேர்ந்த  மெழுகு அன்னார்  =  தீயிடைப்பட்ட  மெழுகை  ஒத்தவராய்

தொழுதே  உன்னை  தொடர்ந்தாரோடும் தொடராது  =  வணங்கிய  நிலையிலே  நின்னைப்  பற்றித்  தொடர்ந்து  அடைந்த  மெய்யன்பரோடும்  தொடர்ந்து  வாராமல் ,

அழுகேன்  = தனிப்பட்டு  அழுவேனாயினேன் ,

பழுது  பிறந்தேன்  =  ஆதலிற்  பயைன்றிப்  பிறந்தவனாகிய  யான் ,

என்  கொண்டு  உன்னைப்  பணிகேன்  =   எதனைப்  பற்றுக்கோடகக்  கொண்டு  நின்னை  வழிபடுவேன்  என்பது.

விளக்கவுரை  :-    ஆண்டவனைத் தொடர்ந்து அடைந்த மெய்யன்பர்களின் பக்குவ முதிச்சியை அடிகள் கண்கூடாகக் கண்டவராதலின் , இத் திருப்பாட்டில் சற்று  விளக்கமாகக் கூறத்தொடங்குகின்றார் . அம் மெய்யடியார் உள்ளமெல்லாம்  குழந்தை அன்பு மயமாயின என்பார், “அன்பாம்  மனமாய்” எனவும் , அத்தகைய அன்பும் உலக வாழ்க்கையில் மனை மக்கள் முதலியோரைப்  பற்றியதன்று ; அழிவில் பொருளாகிய நின்னைப் பற்றியது என்பார், “நின்பால்” எனவும்  கூறினர் . மனம்  ஆகு  பெயராக நின்று , அதனை யுடையாரை உணர்த்தும் .

                     அங்ஙனம்  குழைந்த அன்புருவமான உள்ளம் உடைமைக்குப் பயன் கூறுவார், “மின்னார் பொன்னார் கழல் கண்டு “என்றார். ஆண்டவன்  திருவடியைச் சிவஞானம் என ஆகமங்கள் கூறும்.  ஆதலானும், ஞானத்தை ஒளியாகக் கூறுதன் மரபு  ஆகலானும், “மின்னார்” எனவும், உலகப் பொருள்களில் வைத்துப் போற்றத்தக்க பொருளாக உவமை  கூறுதற்குப் பிறிது இன்மையின் ,”பொன்னார்” எனவும் கூறினர் , “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” என்பது தமிழ் மறை .  உள்ளம் அன்பு  மயமாகக்  குழைந்த நிலையில் உண்டாம் பயன் , ஆண்டவன் திருவடிக் காட்சி என்பது போதர , “கழல் கண்டு “ என்றார். பெறுதற்கு அரிய அக் காட்சியின் பின்னர் , அம் மெய்யன்பரின் உள்ளம் எவ்வாறு ஆயிற்று  என்பதற்கு விடையாக , ‘அழல் சேர்ந்த மெழுகேயன்னார் “ என்றார். தீயிடைப்படுதற்கு  முற்பட்ட நிலையில் குழைவுடைய மெழுகு போல , ஆண்டவன்  திருவடிக் காட்சிக்கு முற்பட்ட நிலையில் அவ் விறைவனை நினைந்த துணையானே குழைவுடைய மெய்யன்பர் உள்ளம் , அக் காட்சியின் பின்னர்த் தீயிடைப்பட்ட மெழுகு உருகி வடிதல் போல உருகிக் கரையும் என்பது கருத்து.

                       அங்ஙனம் உள்ளம் உருகப்பெற்ற மெய்யன்பர், அவ் அன்பிலே விளைந்த ஆரமிர்தமாகிய இறைவன் அருட் பார்வையாற் கவரப்பட்டு , அப் பெருமான் அருள் நிறைவில் தோய்ந்து இன்புற்றனர் என்பது புலப்பட, ”தொடர்ந்தார் “ என்றார் . தொடர்தல் – விரைந்து செல்வாரைப் பின்பற்றிச் சேறல் . எங்கும் நிறை பொருளாகிய  இறைவனுக்குப் புடைபெயர்ச்சி யின்மையால் , பக்குவமுள்ள உயிர் ,உலகப் பார்வை ஒழிந்து , இறைவன் அருள் இயல்பு அறிந்து இயைதலையே அங்ஙனம்  கூறினார் என்பது . “யானுனைத் தொடர்ந்து   சிக்கெனப் பிடித்தேன்” என்று அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  இக் கருத்துப் பற்றியே . அங்ஙனம்  தொடருங்கால் , வணக்க நிலையிலே உள்ளார் என்பது தோன்ற , “தொழுதே யுன்னைத் தொடர்ந்தார் “ என்றார். தொழுதலும் தொடர்தலும் ஒருங்கு நிகழ்ந்தன என்பது அறியத்தக்கது . அக் கருத்துத் தோன்றவே ,”கொழுநற் றொழு தெழுவாள்”என்பதற்குப் பரிமேலழகர் , “தொழாநின்று என்பது தொழுதெனத் திரிந்து நின்றது” என்று உரைக் குறிப்பு எழுதலானார் .

                           இதுகாறுங் கூறிய மெய்யன்பர் இயல்பிற் புலனாகும் பிறிதோர் உண்மையும் ஈண்டு அறிந்து இன்புறத்தக்கது . அஃதாவது இத் திருப்பாட்டில் மெய்யடியாரின் அறிவு , இச்சை , செயல்கள்  இறைவனைப் பற்றி நின்றன என்பதாம் . “கழல் கண்டு “ என்றதனால் அறிவும் , “அன்பாம் மனமாய் “ என்றதனால் இச்சையும் ,”தொழுதே தொடர்ந்தார்” என்பதனால்  செயலும் பற்றி நின்றமை புலனாயவாறு  அறிக. “அயரா அன்பின் அரன் கழல் செலுமே” என்னும் சிவஞான போத நூற்பாப் பகுதியும் , அதற்கு மாதவச் சிவஞான முனிவரர் , “அறிவிச்சை செயல்களின் நிகழ்ச்சியாகிய  அயராமையும் அன்பும்  செலவும் முறையே காரண காரியங்களாய் அவ்வொரு பொருள்மேல் ஒழுங்கு நிகழும் என்பார் . “அயராவன்பின் அரன் கழல் செலுமே என்றார். “ என்று நுண்ணிதின் ஆராய்ந்து எழுதிய உரைக் குறிப்பும் ஈண்டு  உணரத்தக்கன .

                       இத்தகைய மெய்யன்பரோடு  தொடர்ந்து வரும் தவ வலி  இன்மையால் , தனிப்பட்டு வருந்தலானேன் என்பார் , “ தொடராதே அழுகேன்” என்றார். திருவருட்  பேற்றிற்கு உரிய தவம் புரிதற்கு இவ்வுடல் பயன் படாமையால் , “பழுதே பிறந்தேன் “ என்றார் . “பிறந்தேன் “என்பது வினையாலணையும் பெயராய்ப் பணிகேனே என்னும் பயனிலைக்கு எழுவாயாயிற்று . உன்னைத்  தொடர்ந்தாரோடும்  தொடர்தற்கு உரிய மெய்யன்பாகிய சாதனத்தை விட்டு ,வேறு பற்றுக்கோடாக எதனைக் கொண்டு நின்னை வழிபடுவேன் என்பார், “என்  கொண்டு உன்னைப் பணிகேனே “ என்றார்.

                            இதன்கண், மெய்யன்பரின் அறிவு , இச்சை , செயல்கள் எல்லாம் ஆண்டவனைப் பற்றி நிகழ்ந்தன என்றமையால் , அங்ஙனம் நிகழ நுகரும் இன்பமே ஆனந்தம் என்பதும் , அது பெறாமையால் ,”அழுகேன்”  “பழுதே பிறந்தேன்” என்றமையால் தன் வயம் அழிதலும் பெறப்பட்டமையால் , ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        **********************************************

பாடல் : 89 .

பணிவார்  பிணிதீர்த்  தருளிப்

பழைய  அடியார்க்குன்

அணியார்  பாதங்கொடுத்தி

அதுவும் அரிதென்றால்

திணியார்  மூங்கில்  அனையேன்

வினையைப்  பொடியாக்கித்

தணியார்  பாதம்  வந்தொல்லை

தாராய்பொய்தீர்  மெய்யானே.

கருத்துரை :-  இறைவன்  திருவடி வணக்கத்திற்கு அன்பு நெறியல்லாது  வேறு எதனைத் துணைக்கொள்ளக்  கடவேன் என்று முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள் , அச் செந்நெறிச்  செலவிற்குத் தடையாகவுள்ளது தம் பண்டை வினை என்றும் , அதனை அறவே  ஒழித்து விரைந்து திருவடிப் பேறு அளித்தல் வேண்டும்  என்றும் இத் திருப்பாட்டில் வேண்டுகின்றார் .

பதவுரை :-  பொய் தீர் மெய்யனே  =  பொய்மையின் நீக்கத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

பணிவார்  பழைய  அடியார்க்குப்  பிணி தீர்த்து அருளி  =  வழிபடுவோராகிய  பண்டை  அடியார்க்குப்  பிறவி நோயை ஒழித்தருளி ,

உன் அணியார் பாதம் கொடுத்தி  =  நின் அழகு  மிக்க  திருவடியைக்  கொடுக்கின்றாய் ,

அது அரிது  என்றாலும்  =அங்ஙனம் தருதல் எனக்கு அரியது  ஆம்  என்றாலும் ,

திணி  ஆர்  மூங்கில் அனையேன்   =   திட்பம்  பொருந்திய மூங்கிலை  ஒத்தவனாகிய  எனது ,

வினையைப்  பொடியாக்கி  =  கன்மத்தை  நீறாக்கி ,

ஒல்லை வந்துதணி  ஆர்  பாதம்  தாராய்  = விரைந்து  வந்து  குளிர்ச்சி  பொருந்திய  நின்  திருவடியைத்  தந்தருள்வாயாக.  என்பது.

விளக்கவுரை :-  “பொய் தீர் மெய்யான்” என்புழி,  தீர் மெய்யான் என்பது வினைத்தொகை . அழியும் இயல்பினவாகிய மாயாகாரியப்  பொருள்கள் எல்லாம் பொய்ப் பொருள்களாம் , அப்பொருள்களை  வைத்துஆய்ந்து ஆழ்ந்து செல்லுங்கால் , அவ்வெல்லாம்  சென்று சென்று ,அணு அனூவாய் தேய்ந்து ஒழிய , அவற்றின் நீக்கத்தில் அவ்வெல்லாவற்றையும் கடந்து  நிற்கும் அழிவில் பொருளாகிய மெய்ப்பொருள் உண்மை பெறப்படும் . இக் கருத்துப்பற்றியே , “பொய் தீர் மெய்யானே” என்றார். “பொய் தீர் “  என்னாது , “மெய்யானே”என்ற  அளவில் இக் கருத்து அமையாதோ எனின் ,மக்கள்  ஆராய்ச்சி  காணப்படும் நிலையுதல் இல்லாத பொருளைப்பற்றியே முதலில் நிகழும் இயல்பினது ஆகலின் அமையாது  என்க. “காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் , உலகின் மேல் வைத்துக் கூறினார்” என்னும் பரிமேலழகர் உரைக்கருத்தும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . பிணி தீர்த்தற்கும்  வினையைப் பொடியாக்குதற்கும் உரிய தகுதி இறைவனிடத்து உண்மை குறித்து இங்ஙனம் கூறப்பட்டது என்பது குறிப்பிற் பெறப்படுவதாகும் .

                       பழைய அடியார் என்றதனால் , அவர்  வணக்கமும் தொன்று தொட்டு  ஏற்பட்டது என்பது போதரும். ஆகவே, பற்பல பிறப்புகளிலும் ஆண்டவனை  வழிபட்டு வழிபட்டுத் திருவருளால் தூய்மை  எய்தி ஆட்பட்ட  மெய்யன்பர்களே  பழைய அடியார் எனப்படுவார் என்பதாம் . அங்ஙனம் தொன்று தொட்டு வழிபாட்டை விடாமல் மேற்கொண்டுவரும் பழைய மெய்யன்பர்க்கு , அநாதியே பற்றிய  பாசப்பிணிப்பை எளிதின் ஒழித்துத்  தன் திருவடிகளை , ஞானவொளி மிக்க பேரெழில் வாய்ந்த நிலையிற் காட்சிப் படச்செய்து இன்புறுத்துகின்றாய்  என்பார்.  “பணிவார் பழைய அடியார்க்குப் பிணி  தீர்த்து உன் அணியார் பாதம் கொடுத்தி “ என்றார். இதனால் , பழைய மெய்யன்பர்க்குப்  பாச நீக்கமும்  சிவத்துவப் பேறும் அருளிய உண்மை புலனாம் என்பது . “பிணி தீர்த்து “ என்றதனாற்  பாச நீக்கமும் , “”அணியார் பாதம் கொடுத்தி” என்றதனாற் சிவத்துவப் பேறு அளித்தலும்  பெறப்பட்டவாறு அறிக. நோயுடை ஒருவனுக்கு முதலில் நோய் நீக்கத்திற்கு மருந்தும் , பின்னர் உடல் வன்மைக்கு உரிய உணவும் கொடுக்கப்படுதல் உலகியலிற் காண்கின்றோம் . அங்ஙனமே , பிணி தீர்த்தல் முதற்கண்ணும் , திருவடி கொடுத்தல் பின்னரும் கூறப்பட்டன . அணியார் பாதம்  என்றது , ஈண்டு இறைவனை அறிதற்கு உரிய சிவ ஞானத்தைக் குறிக்கும் .

    “அதுவும்” என்புழி , உம்மையைப் பிரித்து , “அரிதென்றால்” என்பதனோடும் இயைத்து , அது அரிது என்றாலும் எனக் கொண்டு பொருள் கூறப்பட்டது . அங்ஙனமின்றிச் சொற்கிடந்தபடியே பொருள் கூறின் , “மெய்யன்பர்க்குப் பிணி தீர்த்து அணியார் பாதம்கொடுத்து அரிதன்று”என்று அடிகள் கருதினார் என்பது பெறப்படும் . பாச நீக்க முகமாக உண்டாம் சிவத்துவப் பேறாகிய அதுவன்றி முடிந்த பயன் பிறிதொன்று இன்மையின் , அடிகள் அங்ஙனம் எளிதாகக் கருதினார் எனக் கொள்ளுதல் பொருந்தாது என்பது.  அப்பேறு தமக்கு அரிதாம் என்பதை உடன்பட்டு ,அத்துணைப் பெறுதற்குத் தமக்குத் தகுதியின்றாயினும் என்பார், “அது அரிது என்றாலும் “ என்றார். அத்துணை அரிதாகிய முடிந்த பயனைப் பெறுதற்குத் தகுதியில்லேன் ஆயினும், இப்பொழுது இன்றியமையாது வேண்டப்படும் கன்ம நாசத்தை விரைந்து அருளல் வேண்டும் என்பது பற்றிப் பின்வருமாறு  வேண்டுகின்றார்.

         திணியார் மூங்கில்  –  வன்மை மிக்க மூங்கில் ; அதனைக் கெட்டி மூங்கில் என்பர். மூங்கில் உள்ளும் புறமும் கசிவு இல்லாது ஆகும் . மேலும் குழாய் மூங்கிலினின்றும் வேறு ஆகிய திணியார் மூங்கில் ஆனதால் பிறர் வளைத்தால்  அன்றி வளையாததுமாம் . அது போல், உள்ளும் புறமும் முறையே குழைந்த அன்பும் , அது பற்றி யுண்டம் மெய்ப்பாடும்  பணிவும் இல்லாதேன் என்பார், “திணியார் மூங்கில் அனையேன்” என்று  மூங்கிலைத் தமக்கு உவமம் கூறுவார் ஆயினர் . ‘மூங்கில் அனையேன் வினையை “ என்புழி, ஆறாம் வேற்றுமை தொக்கதாகக் கொண்டு , “ஆனையேனது “ என விரித்துக் கொள்ளல் வேண்டும் . இதனால், மெய்யன்பர் உள்ளே குழைத்த அன்பும் , புறத்தே அதன் விளைவு ஆகிய செயலும் பணிவும் உடையார் என்பது பெறப்படும். மேலும் , அடிமைக்குப் பழமை கூறியமையால் , அன்புண்மையும், பணிவார் என்றதனால் வணக்கம் உண்மையும் உணரத்தக்கன . அடிகள் , தம்பால் உள்ளன்பும் வணக்கமும் இல்லாமைக்கு ஏதுவாக உள்ளது பண்டை வினையெச்சம் எனக் கண்டு , முதலில் அதனை முளைத்தல் இல்லாவாறு ஞானத் தீயால் சுட்டு எரித்தல் வேண்டும் என்பார்.,”வினையைப் பொடியாக்கி”என்றார்.  பொடியாக்குதல் – நீறாக்கல். “வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகாதென் செய்கேன்” என்னும் அடிகள் அருண்மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது .

            வினையைச் சுட்டு எரிக்குங்கால் , அவ்வினையிலே கிடக்கின்ற தம் உயிர்க்கும் அவ் வெப்பம் தாக்கும் ஆதலின் , அவ்வெம்மையின் தணிவு நிமித்தம் நின் திருவடியைக் குளிர்ந்த நிலையில் தரல் வேண்டும் என்பார் .  “தணியார்பாதம்” எனவும் ,அது தருதற்குக் காலம் தாழ்ப்பின் பொறேன் ஆதலின், விரைவில் தரவேண்டும் என்பார், “ஒல்லை” எனவும், யான் அவ் வெம்மையைத்  தாங்கி நின்பால் அணுகுதற்கு ஆற்றல் இல்லேன் ஆதலின் , நீயே என்பால் அருள் கூர்ந்து வரல் வேண்டும் என்பார், “வந்து” எனவும் கூறியருளினர் . தணி – தண்மை ; குளிர்ச்சி . “தணி புனலாடுந் தகைமிகு போர்க் கண்” என்புழி, அப்பொருட்டாதல் அறிக. வினையெச்சம் இல்லாமையால் மெய்யன்பர்க்குத் திருவடியை எழில்மிக்க ஞான நிலையில் கொடுத்து இன்புறுத்துகின்றாய் எனவும், யான் அங்ஙனம் பெறுதற்குத் தகுதி இல்லாமல் வினையோடு பிணிப்புண்டு இருத்தலின் , அதனை எரித்து ஒழித்து, அவ்வெம்மை  தாக்காமல் எனக்குத் திருவடியை விரைவில் குளிர்ந்த நிலையில் அருளிக் காக்கவேண்டும் எனவும் அடிகள் வேண்டியவாறாம் .

                 இதன்கண், “பணிவார் பிணி தீர்த்தருளிப் பழைய  அடியார்க்குன் அணியார் பாதம் கொடுத்தி” என்றதனால் , அழி வில் இன்ப நிலை இவ்வியல்பிற்று என்பதும் , அது பொறாமையால் , “திணியார் மூங்கில னையேன்” எனத் தன்வயம் அழிதலும் பெறப்படுதலின் ,ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றுதல் அறிக.

                                          ****************************************

பாடல் :90 .

யானே  பொய்யென்  நெஞ்சும்  பொய்யென்

அன்பும் பொய்

ஆனால்  வினையேன்  அழுதால்  உன்னைப்

பெறலாமே

தேனே  அமுதே  கரும்பின்  தெளிவே

தித்திக்கும்

மானே  அருளாய் அடியேன் உனைவந்

துறுமாறே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் வீட்டின்பப் பேற்றிற்குத் தடையாகவுள்ள வினையை நீறாக்கித் திருவடி நீழலை அருள வேண்டும் என்று  கூறிய அடிகள் , அப்பேறு குறித்துத் தம் கருவி கரணங்களையும் ஈடுபடுத்தற்கு  அவை நேர்மையுடையனவாக இல்லாமையானும், வேறு  பற்றுக்கோடு காணப்படாமையானும் ,தாயின் உதவி குறித்துக் குழந்த மேற்கொள்ளும் செயலைக் கடைப்பிடிக்கலாமா என்று இத்திருப்பாட்டில் குறிப்பிடுகின்றார்.

பதவுரை :-  தேனே  அமுதே  கரும்பின் தெளிவே  =  தேனும்  அமிழ்தமும்  கரும்பின் தெளிந்த சாறுமாக  உள்ளவனே ,

தித்திக்கும்  மானே =  இனிப்புச் சுவை மிக்க பெரியோனே ,

யானே  பொய் =  யான் பொய்யனே ,

என்  நெஞ்சும் பொய்  =  என் உள்ளமும் வஞ்சமுடையது ,

என் அன்பும் பொய்  = என் அன்பும் போலியாகவுள்ளது ,

ஆனால்  =  அங்ஙனமாயின் ,

வினையேன்  =  கன்மத்தையுடையேனாகிய  யான்,

அழுதால்  உன்னைப்  பெறலாமே  =  வருந்தி  அழுதால்  நின்னை அடையலாமா?

அடியேன்  உனைவந்து உறும் ஆறு அருளாய்  = அடியேன்  நின்னை வந்து எய்துமாறு  அருள்  புரிவாயாக என்பது.

விளக்கவுரை :- தேனே , அமுதே , கரும்பின் தெளிவே  என்று இறைவனை இனிமைச் சுவை மிக்க பொருள்களாக இம் முறையில் விளித்தலைப் பற்றித் திருச்சதகம் 55 ஆம்  திருப்பாட்டு உரையில் விளக்கம் கூறப்பட்டுள்ளது . ஆண்டுக் காண்க. பேரின்பப் பிழம்பாகவுள்ள  இறைவன் ,சார்ந்தார்க்கு இனிமை பயந்து நிற்கும் இயல்பு கருதி , உலகப்பொருள்களில் இனிமைச் சுவை மிக்க தேன் முதலியவாகக் கூறப்பட்ட அளவில் அமையாமை கண்டு , மீண்டும் ,”தித்திக்கும் மானே” என்றார் . மான்  – மகான் ; வட சொற்றிரிபு . மனம் , பொறிவழிப் புறத்தே சென்று நுகரும் பொருல்களுள் , தேன் முதலியன  போல அகத்தே நினையுந்தோறும் இனித்தல் குறித்து , “தித்திக்கும் “எனவும் , மக்களாற் சுவைக்கப்படும் உலகியற் பொருள்கள் எல்லாம் சுவைப்போனில் தாழ்ந்தனவாக அன்றி ,ஒத்தனவாக உள்ளன ஆதலின், அவற்றின் வேறாக , ஆண்டவன் மிக்கோன் ஆவான் என்பது தோன்ற , “மானே” எனவுங் கூறுவாராயினர் . “கனியினுங் கட்டிப்பட்ட கரும்பினும் … இனியன்” என்னும் தமிழ் மறையும் ஈண்டு நினைக்கத்தக்கது .

                    அடிகள் ஆண்டவன் திருவடிப்பேறு எய்த இயலாமையின் , தம் ஒழுக்கம் புரைபட்டது எனக் கொண்டு ,”யானே பொய்” என்றார். ஏகாரம் தேற்றப்பொருளது . தம்மைப் பொய்யன் என்ற  அளவிலே , தம் நெஞ்சும் அன்பும் பொய்மையுடையன என்பது பெறப்படுமாயினும் , ஆண்டவனை அடைதற்கு உரிய கருவி கரணங்களுள் நெஞ்சம் சிறந்தது ஆகலானும் , அன்பு இன்றியமையாதது ஆகலானும், அவ்விரண்டனையும் வேறாகப் பிரித்து ஓதினர். இங்ஙனம் கூறுதல் ஆன்றோர் வழக்கு என்பதை, “நாணனும் அன்பு முன்பு நளிர் வரை யேற “ எனவும் ,”செம்பொற்றாளே சார்வான திருமணமும் …………தாமுமாகி” எனவும் சேக்கிழார் அடிகள் கூறுமாற்றான் அறிக. மன மொழி மெய்கள் மூண்றனுள் , நெஞ்சம் பிரித்து ஓதப்பட்டமையால் , ஏனைய மொழி மெய்களின் பொய்மை, “யானே பொய் “ என்றதனாற் பெறவைத்தார்  என்பதாம். பேச்சளவில் நிகழும் போலிப் பாராட்டும், உடலளவில் நிகழும் போலி வணக்கமும் பொய்மையுடையன என்பது கருத்து. அவ்விரண்டற்கும் மூலமாக உள்ளது நெஞ்சம்  ஆதலின் , அதன் வஞ்சகம் , கேடு பயப்பதில் அவற்றினும் சிறந்தது எனக்கொண்டு ,தனித்து எடுத்து ,”என் நெஞ்சம் பொய் “ என்றார் . அன்பு என்னும் உயிர்க்குணம் முதிர்ந்த நிலையில் ஆண்டவனை அடைதற்கு  உரிய சிறந்த நெறியாக முடிதலின் , அஃது இன்றியமையாதது ஆகவும் ,அதுவும் போலியாயிற்று என்பார், “என் அன்பும் பொய் “ என்றார். “என் நெஞ்சும் பொய் ,என் அன்பும் பொய்” என ஈரிடத்தும் “என்”என்பதை இயைத்துக் கூறியது , உலகத்தில் என் அளவில் இப்படிப் போலி ஆயினவே என அடிகள் இரங்கியமை புலப்படுத்தற்கு என்க.

                  இங்ஙனம் தம் மனம் மொழி மெய்களும் அன்பும் பொய்மை உடையன ஆதற்கு ஏது , தம் தீவினை என்பார், “வினையேன் “ என உடம்பொடு  புணர்த்து ஓதினர் . உடம்பொடு புணர்த்தலாவது, சொல்லப்பட்ட இலக்கியத்திலே  சொல்ல வேண்டியது ஒன்றை உய்த்துணர வைத்தலாகும் . இதனை, “சுவையொளி  யூறோசை நாற்றமென்றைந்தின் , வகை தெரிவான் கட்டே யுலகு “ என்னுங் குறளில் , “வகை தெரிவான் கட்டென உடம்பொடு புணர்த்ததனால் , தெரிகின்ற புருடனும் , அவன் தெரிதற் கருவியாகியமான்  அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம் “  என்று  பரிமேலழகர் எழுதிய உரையானும் உணர்க . ஈண்டு , யான் எனக் கூற வேண்டிய இடத்தில் வினையேன் என்றதனால் , வினை ஏதுவாமென்பது உய்த்துணர வைக்கப்பட்டவாறு  அறிக.  என் நெஞ்சும்  அன்பும் பொய்பட்டமையால் , அந் நெஞ்சத்தின் துணை பற்றி , அன்பு நெறியாக ஆண்டவன் திருவருளைப் பெறுதற்கு இயலாமையானும் , பிறிதோர் ஆறின்மையானும் , “அழுதால் உன்னைப் பெறலாமே “என்றார். உலகத்தில் எத்துணை ஆற்றல் படைத்தாரும் ஒன்றைப் பெறுதற்கு விரும்புங்கால் , தம் கருவி கரணங்கள் வலியிழந்து பயன்படாத நிலையில் மேற்கொள்ளப்படுவது அவலித்து அழுதலே யாகும்.  “பெறலாமே” என்புழி, ஏகாரம் வினாப்பொருளில் வந்தது . என் அன்பும் பொய்யானால் , அழுகையும் பொய்யாகும் ஆதலின், பொய்யாக அழுதால் உன்னைப் பெறலாமோ எனப் பொருள் கோடலுமாம் .

                     அடிகள், தம் அன்பு பொய்மையானதால் , வேறு புகல் இன்றி , “அழுதாலுன்னைப் பெறலாமே” என்றார். ஆயினும், அவர் அழுகை , பால் நினைந்தூட்டும் தாயை நினைந்து மழவிளங்குழவி  அழுதல் போல் அன்பினால் நிகழ்வதாகும் ; மற்றை அடியார்களும் இறைவன் திருவருளை வேண்டி , அன்பினால் உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்து அழுதமை , அன்னார் வரலாற்றான் அறியப்படும் . “புனித வாய் மலர்ந்தழுத” என ஆளுடைப் பிள்ளையாரையும் , “நைந்துருகிப் பாய்வது போலன்பு  நீர்பொழிகண்ணும் “ என்று ஆளுடை அரசையும் பற்றிச் சேக்கிழார் கூறியிருத்தல் ஈண்டு நினைக்கத் தக்கது .

                     “அழுதால் உன்னைப் பெறலாமா” எனக் கேட்ட அடிகள் , ஒருவாறு அங்ஙனம் அழுதலும்  நின்னைப் பெறுதற்கு வாயில்  ஆகாது எனின், நின்னை வந்து அடைதற்கு உரிய சிறந்த நெறி பிறிது ஒன்று இன்னது என்று காட்டியருளல் வேண்டும் என்பார், “அடியேன் உன்னை வந்து உறும் ஆறு  அருளாய் “ என்றார் . ஈண்டு அடியேன் என்றது , ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்னும் குறிப்புத் தோன்ற நின்றது . “அவனருளாலே யவன்றாள் வணங்கி “ என்றபடி , அப்பெருமானை அறிந்து  வழிபடுதற்கு உரிய நெறியைக் காண்டற்கும் அவன் அருளே துணை புரியவேண்டும் ஆதலின் இங்ஙனம் கூறினார் என்க.

     இதன்கண், “தேனே யமுதே கரும்பின் தெளிவே  தித்திக்கும் மானே” என்றதனால் பரவசமாதலும் பெறப்படுதலின், ஆனந்த பரவசம்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “மானே யருளாயடியேன் உனை வந்துறுமாறு என்றதனால் பத்தியும் ,”யானே பொய், என் நெஞ்சும் பொய் ,என் அன்பும் பொய் “ என்றதனால் வைராக்கியமும் பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                         *********************************************

10 .   ஆனந்தாதீதம்

                          ஆனந்தாதீதம் என்னும் வட சொற்றொடர் ஆனந்தத்தின்  அதீத நிலை என விரியும் . ஆனந்தம் , மெய்யுணர்வினால் அநுபவிக்கப்படும் அழி வில் இன்பம் என்பது  8, 9 ஆம் பதிகங்களின் வைத்து விளக்கிக்கூறப்பட்டது . அதீதம் என்னும் சொல் கடந்தது என்னும்  பொருள் உடையதாகும். ஆகவே , அத் தொடர் , அப் பேரின்பத்தின் கடந்த நிலையாகிய முடிந்த எல்லையைக் குறிக்கும் என்பது தெளிக. சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடைய உயிர் , இடையறாத சிவபாவனையால் , பாசச் சார்பை ஒழித்துச் சிவச்சார்பை யடைந்ததும் ,அப்பாச நீக்கத்தில் உண்டாம் அருள் விளக்கத்தில் தலைப்பட்டு , அது வாயிலாக ஆனந்த விளக்கம் நிகழப்பெறுவதாம் என்ப.  பாசம் நீங்கிய வழி உண்டாவது அருள் விளக்கமாகும் . அஃது இருள் நீக்கத்தின் உண்டாம் ஒளி விளக்கம் போல்வதாம். அதன்மேல் , ஆண்டவன் கருணையால் நிகழ்வது ஆனந்த விளக்கமாகும் . அவ் ஆனந்தத்தில் ஞானநிலையோடு உயிர் தோய்தல்  ஆனந்தத் தழுந்தல் என்று 8-ஆம் பதிகத்தும் ,அத் தோய்வு முதிர முதிர , அவ்வுயிர் தன்வயம் அழிதல் ஆனந்த பரவசம் என்று 9-ஆம் பதிகத்தும் கூறப்பட்டன . அங்ஙனம் தன்வயம் அழிந்த நிலையின் மேம்பட்ட நிலையே அதீத நிலை ஆகும் . இந்நிலையில் , காண்பவன் , காட்சி, காணப்படுபொருள் என்னும் வேறுபாடு இன்றாம் , தன்வயம் அழிந்த நிலையில் , ஒரோவழிப் பண்டை பாசத் தொடர்பால் யான் நுகர்கின்றேன் என்று உயிர் நினைவு முற்படுதலுங் கூடும் . அதீதமாகிய கடந்த நிலையில் ,அந் நினைவு சிறிதும் நிகழாது என்பதாம். இந் நிலையின் இயல்பை ,அடிகள் , “எனை நானென்பதறியேன் பகலிரவாவதும் அறியேன்”என்று கூறியருளிய அநுபவ உண்மையான் உணரலாம்.

            உலகியலில் ஓர் அழகிய உருவத்தைக் காணுங்கால் ,அதனை அழுந்திப் பார்ப்பவன் காண்பவன் ஆவான் ; அங்ஙனம் பார்க்கப்படும் உருவம் காணப்படு பொருள் ஆகும் காண்பவன் அறிவு காட்சியாகும் . இவ் வேறுபாடு உள் வழி ,அஃது அதீத நிலை ஆகாது . இவ்வேற்றுமையின்றி , இன்பமயமாக நிகழும் அநுபவம் ஆனந்தாதீதம் என்ப. இதனையே ,”ஆதீத நிலைக்கண்ணதாகிய சிவத்துவ விளக்கம் எனப்படும் பரமசுகம் “ என்று சிவஞான முனிவர் கூறுவர் . பரம சுகம்  – மேலான இன்பம் . இவ்வதீத நிலையில் அனுபவிக்கும் உயிர்க்குத் தன்னைக் குறித்து யான் எனது என்றலும் ,அநுபவப் பொருளாகிய இறைவனைக் குறித்து முன்னிலைப்படுத்து , நீ நினது என்றலும் ஆகிய வேற்றுமையுணர்ச்சி சிறிதும் நிகழாது என்பதாம் . இவ்வுண்மையைத் தாயுமான அடிகள் , “எனதென்பதும் போய் ,யானெனல் போய் ,எல்லாம் இறந்த இடங்காட்டும் நினதென்பதும் போய் ,நீயெனல் போய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் “ என்று கூறுவர் .( இப் பாடலில் உள்ள  போய் என்னும் நான்கனையும்  பதிப்பிட்டார் , உரை எழுதினார் எல்லோரும் , பொய்  எனப்  பாடங்கொண்டு  வெளியிட்டனர் . இறைவனை நோக்கி ,” நீ யெனல் பொய் “ என்று கூறுதல் சைவ சித்தாந்த மரபிற்கு முரணுதலானும் , பொருட் சிறப்பின்மையானும் , சிறந்த பாடம் அன்று) எனது , யான் , நினது , நீ  என்னும் வேறுபாடு ஒழிந்து நிற்கும் நிலை என்பது பொருள் . இதுவே அதீத நிலையாகும் . இந் நிலையில் , உயிர் நுகரும் பேரின்பம் , கருவி கரணங்களைக் கடந்தது ஆகலின் , இதன் இயல்பு இத்தன்மைத்து எனக் கூற ஒண்ணாதது என்று திருமூலர் பிவருமாறு கூறுவர்; “மகட்குத்  தாய் தன் மணாளனோடாடிய , சுகத்தைச் சொல்லெனிற் சொல்லுமாறெங்கனே “ என்பது. இவ்வதீதமாகிய  பேரின்ப நிலை , தன்வயம் அழிந்து நுகர்தலாகிய  ஆனந்த பரவசத்தின் பின் நிகழ்வதாகலின் , இஃது அதன்பின் வைக்கப்பட்டது என்க . இதனால் பதிக இயைபுண்மை புலனாயவாறு அறிக .

எண்சீர்க்  கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 பாடல் : 91 .

மாறி  லாதமாக்  கருணை  வெள்ளமே

வந்து முந்திநின்  மலர்கொள்  தாளிணை

வேறி  லாப்பதப்  பரிசு  பெற்றநின்

மெய்மை  அன்பருன் மெய்மை  மேவினார்

ஈறி  லாதநீ  யெளியை  யாகிவந்

தொளிசெய்  மானுட  மாக  நோக்கியுங்

கீறி  லாதநெஞ்  சுடைய  நாயினேன்

கடையன்  ஆயினேன்  பட்ட  கீழ்மையே.

கருத்துரை :-    ஆண்டவன் திருவடியின்பப் பேற்றிற்கு உரிய சாதனங்களை மேற்கொள்ளத் தம் கருவி கரணங்கள் செம்மையுடையனவாக இல்லாமையால் , அழுதால் உண்ணைப் பெறலாமே என்று முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் கூறிய அடிகள், அங்ஙனம் இறைவன் அரிதிற் பெறுதற்கு இன்றி எளிமையில் மக்கள் வடிவில் ஞானாசிரியனாக எழுந்தருளி அருள் நோக்கம் நல்கியும் , இன்பப் பேற்றிற்குப் புறம்பாகிய நெஞ்சத்தோடு கூடிப் பொறுத்திருக்கலானேனே என்று ,இப் பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்கண் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  மாறு  இலாத  மா  கருணை  வெள்ளமே  =  வேறுபாடு  இல்லாத  பேரருட் பெருக்கே,

நின் மலர்கொள்  தாளிணை  =  உன்னுடைய  தாமரை மலர்  போன்ற  திருவடித்துணைக்கண்  ,

வேறு  இலாப்  பதப்  பரிசு பெற்ற நின் மெய்மை அன்பர்  =  வேற்றுமையின்றிக்  கலத்தற்குரிய  பக்குவத்தன்மை யடைந்த நின் மெய்யன்பர் ,

முந்தி  வந்து  =  முற்பட்டு  வந்து ,

உன்  மெய்மை  மேவினார்  =  நின் திருவடி  இன்பம்  எய்தினர்,

ஈறு  இலாத  நீ  =  அழிவில்லாத நீ ,

எளியை  ஆகி  ஒளி  செய் மானுடம்  ஆக  வந்து  நோக்கியும்  = 

எளிமையுடைமை  ஆகி  ஒளிபொருந்திய  மக்கள்  வடிவில்  ஞானாசிரியனாக  எழுத்தருளி  வந்து  அருட்பார்வை  நல்கியும்  ,

கீறு  இலாத  நெஞ்சு உடைய  நாயினேன்  =  பிளவு படாத  வலிய  நெஞ்சத்தையுடைய  நாய் போன்றவனாகிய  யான் ,

பட்ட  கீழ்மை  =  எய்திய  இவ்விழிவால் ,

கடையன்  ஆயினேன்  =  கடைப்பட்டவன்  ஆயினேன் என்பது.

விளக்கவுரை :-   இறைவனுடைய  எண்குணங்களுள் பேரருள்  உடைமை ஒன்று. அது, “மாக்கருணை” என்னப்பட்டது . அளப்பரிய அவ்வருளை மழையாகவும் கடலாகவும் கூறுதல் போல , ஈண்டு  வெள்ளமாகக்  கூறினர் . கற்பனை கடந்த சோதியாகவுள்ள ஆண்டவன் , கருணையே வடிவமாக  வுடையான் ஆதலின், இங்ஙனம் கூறினர் . கருணையை நிராகக் கொண்டு , அவ் வருண்மயமாகவுள்ள இறைவனை வெள்ளம் என்றார். உலகத்தில்  நீர்ப்பெருக்காகிய  வெள்ளம்  பெருகுதல் , சுருங்குதல் , வற்றுதல் ஆகிய வேறுபாடுகளை யுடையதாகும் . இறைவனாகிய அருள் வெள்ளம் அவ்  வேறுபாடுகள் இன்றி , எக்காலத்தும்  ஒரே படித்தாக நிறைந்து இருத்தலின் , “மாறிலாத மாக்கருணை  வெள்ளமே” என்றார் . “குறை விலா  நிறைவே “என்றதும் இக்கருத்துப் பற்றியே .

                       சார்ந்தாரை  இனிமை யுறுத்தும்பேரின்பத் தேன் நிறைந்த மலரின் தன்மையைக் கொண்டன என்பார் , “மலர்கொள்”என்றார். வேறு இலாமை  – பக்குவத்தன்மை ; ஈண்டு இருவினை யொப்பு , மலபரிபாகம் முதலிய இயல்புகளைக் குறிக்கும் ; இறைவனோடு இரண்டறக் கலத்தற்குரிய  தகுதி யென்பது கருத்து. இத் தகுதியால் ,பாசப் பிணிப்பு  ஒழிந்து , மெய்யுணர்வு பெற்றுத் தூயராயினர்  என்பதும், “மெய்மையன்பர் “ என்றதனால் , உண்மையாகிய அன்பு நெறியில் ஒழுகினார் என்பதும் பெறப்படும் . இச் செந்நெறிச் செலவினராகிய  மெய்யன்பர் , இப் பொய்யுலக வாழ்க்கையினின்றும் விடுதி பெற்று , விரைவில் முற்பட்டு எய்தினர் என்பார், “முந்தி வந்து “ என்றார். மெய்மை – ஆகு பெயரால் என்றும் நிலையுதலை யுடைய வீட்டு நிலையைக் குறிப்பதாகும்.. “நின் தாளிணை “ , “நின் மெய்யன்பர்” , “உன் மெய்மை “  எனச் சாதனம், நெறி, பயன் என்னும் மூன்றும் கூறப்பட்டபடியாம்.  இம் மூன்றிலும் சிவசம்பந்தத்தின் இன்றி யமையாமையில்  ஈடுபட்டு , “நின், உன் “ என விடாது கூறினர் .

                       “ஆதியும்  அந்தமும்  இல்லா அரும்பெருஞ்சோதி “ என்றபடி , “ஈறிலாத நீ “ என்றார். ஈறின்மை கூறவே , தோற்றம் இன்மையும் பெறப்படும் . மெய்யன்பர்க்குக்  காட்சிப்பட்டு அருள் நல்கும்  இறைவனுக்குத் தோற்றம் இன்மை கூறுதலினும் , ஈறின்மை கூறுதலே சிறந்ததாகும் . “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்னும் தமிழ் மறையும் நோக்குக . இதனால், காட்சி முதலியவற்றிற்கு  அரிய பொருள் ஆவான் ஈறிலாத  ஈசன்  ஒருவனே  என்பது தெளியப்படும் . அடிகள் பிறிதோரிடத்து , “அரியதில் அரி அரியோன் காண்க” என்று கூறியருளியதும் காண்க. இத்துணை அரிய பொருளாகவுள்ள இறைவன் ,கருணை காரணமாகத்  தமக்கு எளிமையிற்  காட்சியளித்தான் என்பது குறித்து , “எளியையாகி “ என்றார். ஈறிலாமையான் ஆகிய  அருமை  இறைவர்கு இயல்பு ஆதலையும் , மெய்யன்பர்க்கு வெளிப்படும் எளிமை  அருள் காரணமாக  நிகழ்தலையும் ,”எளியை யாகி” என்புழியுள்ள ஆக்கச் சொல் புலப்படுப்பதாகும் ,தமக்கு எளிமையாயது ,திருப்பெருந்துறையிற் குருந்த மரத்து நீழலில் ஆண்டவன் மக்கள் வடிவில் ஞானாசிரியனாக எழுந்தருளியது என்பார், “மாநுடமாக “எனவும் ,மனித வடிவில் எழுந்தருளினான் ஆயினும் ,தெய்வீக ஒளி அவ்வுருவில் திகழ்ந்தது. என்பார், “ஓளிசெய் மாநுடம்” எனவும் கூறியருளினர். இறைவனைப் பேரொளிப் பிழம்பாக முது நூல்கள் கூறும் . அந் நிலையில் காட்சியளிப்பின் , மக்கட் பிறப்பினராகிய  அடிகள் கட் புலனுக்கு அடங்காது எனக்கொண்டு ,அவ் வொளியைத் தன்னுள் அடக்கி நிற்கும் மாநுட வடிவம் ஆயினான் என்பது .  தெய்வத்தன்மையின் ஒரு சிறு கூறுடைய சாத்தன் என்பான் மக்கள் வடிவில் தோன்றி , மணந்த தேவந்தி என்பாளுக்குத் தன் இள நலத்தைக் காட்டுங்கால் , அவள் கண்கள் தன் ஒளி வடிவத்தைக் காண இயலா எனக் கண்டு ,தன் ஆற்றலால் பொறுப்பித்தான் என்று சிலப்பதிகாரம் கூறும்.  “தேவந்தி யென்பான் மனைவி யவளுக்குப் பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன் , மூவா விளநலங்காட்டி “ என்னும் பகுதியும் , அதற்கு , “மக்கள் கண்ணிற்குத் தெய்வயாக்கை காணப்பொறாதாகலின் இவள்கட்குப்  பொறுக்கக் கடவதென்று நிருமித்துக் கொண்டான்” என்று அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும்  ஈண்டு அறியத்தக்கன. இங்ஙனம் கடவுட் கூறு சிறிது அமைந்த சாத்தன்  ஒளியே மக்கள் கட்புலனாற் பற்றப்படாதது ஆகுமாயின் , இறை இலக்கணம் முற்றும் அமைந்த சிவபெருமான் ஒளிவடிவம் எங்ஙனம் கட்புலனுக்கு அடங்கும் என்பது உணரத்தக்கது .  இனி, “ஒளிசெய் மாநுடம் “ என்பதற்கு , ஞான ஒளியை அடிகளுக்கு அருளும் ஞானாசிரிய வடிவம் என்று பொருள் கோடலும் பொருந்தும் . ஒளி   –  ஞானம் . மல இருளை யொழித்து விளங்குதலின் , ஞானம் ஒளி எனப்பட்டது  என்க .

                 முதல் அடியில் மெய்யன்பர் தாமே இறைவனை அணுகினார் என்பது தோன்ற , அவர் செயலாக , “முந்தி வந்து “ எனவும் , மூன்றாம் அடியில்   அடிகள்பால் உள்ள அருள் காரணமாக இறைவன் நிலவுலகத்து  எளி வந்தனன் என்பது தோன்ற , இறை செயலாக ,”மாநுடமாக வந்து “ எனவும் கூறிய நயம் உணர்ந்து இன்புறத்தக்கது. அங்ஙனம் தானே வந்து காட்சி அளித்த அளவில் அமையாது , தம் உயிரைத் தூய்மைப் படுத்தற்கு உரிய  அருள் நோக்கம்  ஆகிய நயன தீக்கையும் செய்தனர் என்பார்,  “நோக்கியும்” என்றார்.  “அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்த” என்று  திருத் தொண்டர் புராணம் கூறியதும்  நயன தீக்கையே என்க . நோக்கியும் என்புழி ,உம்மை சிறப்புப் பொருளில் வந்தது .

         இங்ஙனம் ஈறிலாத அரிய பொருளாகிய இறைவன் , தம் பொருட்டு எளியனாதல் , ஒளிசெய் மாநுடமாதல் , வலிய வருதல் , நோக்குதல் ஆகிய குணஞ் செயல்களாற் கருணை காட்டிப் பேருதவி புரிந்தும் , இந் நன்றியைச்  சிறிதும் நினையாத வன் நெஞ்சு  பிளக்கப்பட்டிலது என்பார், “கீறிலாத நெஞ்சு”ஏன்றார். நாய் இழிந்த பிறப்புடையதாயினும் , நன்றி மறவாமையில்  சிறந்ததாகும் . யான் நன்றி மறக்கும் நாயின் தன்மை யுடையேன் என்னும் குறிப்புத் தோன்ற , “கீறிலாத நெஞ்சுடை நாயினேன்” என்றார். “கீறிலாத நெஞ்சுடையன் ஆயினேன் “எனப் பாடம் கொண்டு முடித்தலுமாம். .

           “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்  உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு “ என்றபடி , உய்தியில் குற்றமாகிய நன்றி மறத்தலால் , இழிவு எய்திற்று என்பார் , “பட்ட கீழ்மை “ எனவும் , அது காரணமாக உயிர்த் தொகுதியில் கடைப்பட்டவன்  ஆயினேன் என்புழி , மூன்றான் உருபு தொக்கு நின்றது .

              இதன்கண் , “வேறிலாப் பதப் பரிசு பெற்ற நின் மெய்மையன்பருன் மெய்மை மேவினார் “ஏன்றதனால் , அவர் எய்தியது அதீதமாகிய ஆனந்தம் என்பது பெறப்படுதலின் , ஆனந்தா தீதம் என்னும் பதிகம் நுதலிய பொருளும், “மாறிலாத மாக்கருணை பாராட்டியமையால் பத்தியும் , “கீறிலாத நெஞ்சுடையேன் “ஏன்றதனால் வைராக்கியமும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாயாவாறு அறிக.

                                      ******************************************

பாடல் :92 .

மையி  லங்குநற்  கண்ணி  பங்கனே

வந்தெ  னைப்பணி    கொண்ட  பின்மழக்

கையி  லங்குபொற்  கிண்ணம்  என்றலால்

அரியை  என்றுனைக்  கருதுகின்றிலேன்

மெய்யி  லங்குவெண்  ணீற்று  மேனியாய்

மெய்மை  அன்பருன்   மெய்மை  மேவினார்

பொய்யில் அங்கெனைப்  புகுத  விட்டுநீ

போவ  தோசொல்லாய்  பொருத்தமாவதே.

கருத்துரை :-  அரிய பொருளாகிய இறைவன் , தம் பொருட்டு மாநுட வடிவில் எளியனாய் வந்து அருட் பார்வை நல்கியும்  நன்றி மறந்தவனாயினேன் என்று முன்னைத் திருப்பாட்டில் இரங்கிக்கூறிய அடிகள் , அங்ஙனம்  நன்றி மறத்தலே  யன்றி , ஆட்கொண்டருளிய அப் பெருமானது அருமைப் பாட்டையும் நினையாமல் , மிக எளிய  பொருளாகவும்  கருதலானேனே என்று இத் திருப்பாட்டில் மீண்டும் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  மை இலங்கு நல் கண்ணி பங்கனே  =  அஞ்சனம் விளங்குதற்கு ஏதுவாகிய அருள் விழிகளையுடைய அம்மையை ஒரு கூற்றிலுடையவனே,

மெய் இலங்கு  வெள் நீற்று மேனியாய்  =  திருமேனியில்  விளங்குகின்ற திரு வெண்ணீற்றினால் வெண்ணிறமுடையாய் ,

வந்து  என்னைப் பணி கொண்டபின்  =  நீ  ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து அடியேனை ஆட்கொண்டருளிய  பின்னர் ,

மல கை இலங்கு  பொன் கிண்ணம் என்று அலால்  =  சிறு குழந்தை தன் கையிலுள்ள ஒளி செய்கின்ற பொற்கிண்ணத்தை எளிமையாக எண்ணுதல் போல  எளிமையாக எண்ணினேன் அல்லாமல் ,

அரியை யென்று உன்னை கருதுகின்றிலேன்  = கிடைத்தற்கு அரிய பொருள் ஆவாய் என்று நின்னை நினைத்தேன் அல்லேன்,

மெய்மை அன்பர் உன் மெய்மை மேவினார்  =மெய்யன்பர் நின் வீட்டின்பமாகிய அழி வில் வாழ்க்கையை அடைந்தனர் ,

என்னைப்  பொய்யில் புகுதவிட்டு  = சிறியேனைப் பொய்மை வாழ்க்கையில் புகும்படி விட்டு ,

நீ அங்குப் போவது பொருத்தம் ஆவதே   =  நீ சிவபுரத்திற்கு எழுந்தருளுதல் பொருத்தம் ஆகுமா ?,

சொலாய்  = கூறியருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  அஞ்சனம் அம்மையின் திரு விழிகளில் தோய்ந்து விளக்கம் பெற்றது என்பர் , “மை இலங்கு “ என்றார் . இலங்கும் கண் என்புழி , எச்சம் காரியப்பொருட்டு . அருட்குணமே சிவசத்தியின் வடிவம் ஆகும் . அவ் அருட்பண்பைத் திருவிழிகள் மூலம் புலப்படுத்தி ,உயிர்த் தொகுதிகளை உய்யக் கோடலின் , அம்மையின் கண்களை , “ நற்கண்” என்றார். நன்மை – அருட்குணத்தால் ஆகிய சிறப்பு .   அஞ்சனத்திற்கு  விளக்கமும் , ஆருயிர்த் தொகுதிக்கு  அருளும் நல்கும்  கண்களை  உடையவள்  என்றமையால் , அம்மை, தன்னைச் சார்ந்த பொருள் யாதாயினும் , அதனை விளக்க முறுத்தும்,சாரக்கடவ பொருள்களில் கருணை  காட்டியும் ஆதரிக்கும் இயல்புடையாள்  என்பது பெறப்படும் .

                     ஆண்டவன்  வலிய வந்து தம்மை ஆட்கொண்டதற்கு ஏது ,தம் தவம் அன்றி என்பதும் , அப் பெருமானிடத்து இயல்பின் அமைந்துள்ள கருணையேயாம் என்பது  புலப்படுத்துவார் , அருள் உருவினளாகிய “கண்ணி பங்கனே” என்றார், ஆண்டவன் ஞானாசிரியனாக எழுந்தருளிய ஞான்று காட்சிப்பட்ட திருக்கோலம் , அடிகள் உள்ளக்கிழியின் உருவெழுதியாங்கு , அக் கண்ணிற்குப் புலப்பட்டமையின் , “மெய்யிலங்கு வெண்ணீற்று மேனியாய் “ என்றார்.  மெய் –  ஆண்டவன் திருமேனி , மேனி – நிறம் , ஆண்டவன் செம்மேனி யெம்மானாதலின் , திருநீற்றினால் வெண்ணிறம் காணப்பட்டதென்க, ஆண்டவன் போகியா யிருந்துயிர்க்குப்  போகத்தைப் புரிதலும் , யோகியாய்  யோகமுத்தி  யுதவுதலும் உடையனாதலின் , அவ்விரண்டு தன்மைகளும் புலப்பட , முறையே , “மையிலங்கு நற் கண்ணி பங்கனே” எனவும் , “வெண்ணீற்று மேனியாய் “  எனவும்  கூறுவாராயினர் , வெண்ணீறு –  ஞான யோகத்தின் இலச்சினையாகும்.

                 ஆண்டவன், தம்மை ஆட்கொள்ளுதற்கு முன்,  அப் பெருமானுடைய  பெருமைகளை நூலுணர்ச்சி முகமாக ஆராய்ந்து, அருமை உடையன எனத் தெளிந்து போற்றியதாம் , அவ் விறைவன் வலிய வந்து பணி கொண்ட பின் , எளிமையாகக் கருத நேர்ந்ததே என இரங்குவார் , “வந்தெனைப் பணிகொண்ட பின் “ என்றார். நூலறிவு பேசிய அளவில் இறைவன் பெருமைகளை உணர்தலினும் , இறைவன் காட்சி நல்கி ஆட்கொண்டபின் உணர்தலே சிறந்ததாகும் . உலகியல் இதற்கு மாறாகும் . மக்களுள் ஒரு தலைவனைப்  புனைந்துரைப்பார் வாயிலாகக் கேட்பதினும் , நேரிற் காண்டலிற் குறைவே காணப்படும். எல்லாம் வல்ல கடவுளின் பெருமை அங்ஙனமன்று . கேள்வியளவினும் , அநுபவக் காட்சி எத்துணையோ சிறந்ததாகும் . அதற்கு மாறாக ,நூலறிவிற் கேட்கப்பட்ட அருமையை , அநுபவ உணர்வில் எளிமையாகக் கோடற்கு ஏது , என் அறியாமையே என்று இரங்குவாராயினர் . “பணி கொண்ட பின்” என்றதனால் ,நுண்ணிய இக் கருத்துகளைப்  புலப்பட வைத்தார் என்பது.

                 அடிகள், தம்மை ஆட்கொண்டபின் ஆண்டவனது அருமை  அறியாமைக்குக் காட்டிய எடுத்துக் காட்டு  நினைந்து நினைந்து இன்புறத்தக்கது . மழ என்பது குழந்தையை உணர்த்தும் . “வானுந்து மாமதி வேண்டியழு மழப்போலும்” என்னும் திருக்கோவையிலும்  இப் பொருட்டாதல் காண்க. அறியாப்பருவத்துக் குழந்தையின் கையில் , அதன் மகிழ்ச்சி கருதிப் பொன்னால் ஆக்கப்பட்ட  விலையுயர்ந்த  ஒரு கிண்ணம் கொடுக்கப்பட்டால் , அதன் அருமையை அக் குழந்தை அறியாவாறு போல என்பார், “மழக் கை இலங்கு  பொற்கிண்ணம் என்றலால் “ என்றார். இவ் எடுத்துக் காட்டிற் பிறிதோர் உண்மையும் புலனாம். அது, பொற்கிண்ணத்தின் அருமை அறியாத அம்மழவிளங் குழந்தை , அதனைக் கை நழுவவிட்டால் , அது வீழ்ந்து சிதைந்து விடுமே  என்னும் கவலை , தாய் தந்தையர்க்கு ஏற்பட்டு ,அங்ஙனம் வீழா வாறு அக் குழந்தை செல்லும் இடன் எல்லாம் தாமும் சென்று , நழுவ விடாமல் தாங்கித் துணை நின்று பாதுகாத்தல் போல ,ஆண்டவன் தன்னைத் தமக்குத் தந்த அளவில் அமையாமல் , பேணிக்கோடற் பொருட்டுத் தாம் செல்லுழி யெல்லாம் புறம் போந்து பாதுகாக்கும் கடப்பாடும் உடையனாவன் என்பதாம். இது கருதியே பிறிதோரிடத்து அடிகள் , “தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே” என்று அருளிச் செய்வாராயினர் . ஆண்டவன் ,தம் புறம்  புறம் திரிதற்கு ஏது, அடிகளுக்குத் தான் அருளிய அருளமுதத்தை அடிகள் நழுவவிடாமல் துய்த்து இன்புறுதற் பொருட்டு என்பது.  மழக்கை என்பதற்கு இங்ஙனம் பொருள் கொள்ளாது , அடிகளது மென்மையான கை என்று கூறுவாறும் உளர். அடிகள் தம் கையை அங்ஙனம் கருதி யிருப்பாராயின் , அது எடுத்துக் காட்டாதல்  அமையாமையின் ,அது பொருள் அன்மைஅறிக.

            “அரியை யென்றுனைக் கருதுகின்றிலேன் “ என்று பின்னர்க் கூறப்பட்டிருத்தலின் , “என்று அல்லால்”  என்பது  என்று எளிமையாகக் கருதியதன்றி என்னும் பொருட்டாம்.  அரியை பெறுதற்கரியை . “மெய்மை அன்பர் உன் மெய்மை மேவினார்” என்பதற்கு , முன் உரைத் தாங்கு உரைத்துக் கொள்க . மெய்யன்பர் பொய்மையாகிய வீட்டிபத்தை எய்தினாராக ,அன்னார் குழுவுட்பட்ட அடியேனைப் பொய்மையாக்கிய இவ்வுலக வாழ்க்கையில் இருத்திக் கைவிட்டுச் சேறல் நின் அருட்குணத்திற்குப் பொருந்துமா என்பார், “பொய்யில் புகுதவிட்டுப் போவது பொருத்தமாவதே” என்றார். அங்குப் போவதென இயைக்க ,  அங்கு –  சிவபுரமாகிய அவ்விடத்து. போவது – போதல் ; தொழிற் பெயர் . பொருத்தமாவதே என்புழி , ஏகாரம் வினாப்பொருட்டு. என்னை விட்டு நீ போவதோ என்றதனால் , நிங்காட்சியில் ஈடுபட்டிருக்கப்பெறின் , இவ்வுலக வாழ்க்கையும் எனக்கு இனிதாகும் என்று அடிகள் கருதினாரென்பது குறிப்பிற் கொள்ளத்தக்கது, “நரகம் புகினும் எள்ளேன் திருவருளாளே யிருக்கப்பெறின்” என்பதும் அடிகள் அருண்மொழி , “பொருத்தமாவதே” என வினா வடிவில் கேட்ட அடிகள் , பொருத்தமாகாது என்று ஆண்டவன் திருவுள்ளக் குறிப்புணராமல்  தாமே தீர்மானித்தல் தக்கதென்றெனக் கொண்டு, அவ் வினாவிற்கு உரிய விடையை ஆண்டவனே அருளல் வேண்டுமென்பார். “சொல்லாய்” என்றார் . சொல்லாய், முன்னிலை ஏவல் வினைமுற்று.

                இதன்கண்,  “மழக்கை யிலங்கு பொற்கிண்ணம் “ என்ற எடுத்துக்காட்டினால் ஆண்டவன் பெறுதற்கரியன்  என்பதும் , “ மெய்மை யன்பருன் மெய்மை மேவினார் “ என்றதனால்,  அதீதமாகிய ஆனந்தத்தின் இயல்பும் பெறப்படுதலின் , ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருளும், “பொய்யிற் புகுதவிட்டு “ என்றதனால் , வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.  

                                             &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 பாடல் :93 .

பொருத்தம்  இன்மையேன்  பொய்மை  யுண்மையேன்

போத  வென்றெனைப்  புரிந்து  நோக்கவும்

வருத்தம்  இன்மையேன்  வஞ்சம்  உண்மையேன்

மாண்டி  லேன்மலர்க்  கமல பாதனே

அரத்த  மேனியாய் அருள்செய்  அன்பரும்

நீயும்  அங்கெழுந்  தருளி  இங்கெனை

இருத்தி   னாய்முறை  யோஎன்  எம்பிரான்

வம்ப   னேன்வினைக்  கிறுதி  யில்லையே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் அருமைப்பாட்டை உணராமையோடு , மிக எளிய பொருளாகவும் நினையலானேன் என்று இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் என் அறியாமையால் நினைந்ததை உணர்த்தும் , என்னை வருக என்று விரும்பி , அருள் நோக்கம் செய்யவும் , அப் பெருமானை அணுகுதற்கு முயலாமல் வஞ்சனைக் கொள்கலனாக வாழ்ந்திருக்கலானேனே  என்று தம் வினை வலியை நினைந்து துன்புறுகின்றார் .

பதவுரை :-   கமல மலர்ப் பாதனே  =  செந்தாமரை மலர் போன்ற திருவடிகளையுடையாய் ,

அரத்த மேனியாய்  = செந்நிறமான திருமேனியை யுடையாய் ,

என் எம்பிரான்  = எனக்குச் சிறப்புரிமையுடைய எங்கள் தலைவனே ,

பொருத்தம் இன்மையேன்  = திருவருட் பேற்றிற்கு உரிய தகுதி இல்லாதேன் ,

பொய்மை உண்மையேன்  = பொய் யொழுக்கத்தையும் உடையேன் ,

என்னைப் போதா என்று புரிந்து நோக்கவும்  =  அத்தகைய சிறியேனாகிய என்னை வருக என்று விரும்பி அருள் நோக்கம் நல்கவும் ,

வருத்தம் இன்மையேன்  =  வருதற்கு முயற்சி இல்லாதேன் ,

வஞ்சம் உண்மையேன்  =  ஏமாற்றும் குணமுடையேன் ,

மாண்டிலேன்  =  அதனால் இறந்து ஒழிந்தேனும் அல்லேன் ,

அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி  = நின்னால் அருள் செய்யப்பட்ட மெய் அன்பரும்  நீயும்  சிவபுரத்திற்கு எழுந்தருளிச் சென்று,

இங்கு என்னை இருத்தினாய்  – இப் பொய்யுலக வாழ்வில் சிறியேனை இருக்கப் பணித்தாய் ,

முறையோ =  இது நியாயமாகுமா ?

வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே  =  பயனிலியாகிய என் வினைக்கு அழிவு கிடையாதா? என்பது.

விளக்கவுரை :-  ஆண்டவன் ஞானாசிரியனாக எழுந்தருளிய பொழுது, அடிகள் விரைந்து திருவடிக்கண் வீழ்ந்து வணங்கினமையின் , முதலில்  திருவடிக்காட்சியும், பின்னர் எழுந்து நின்று கண்குளிரத்  தரிசித்தமையின், அடுத்து அப் பெருமானது திருமேனிப் பொலிவும் , தம் உள்ளத்தில் விளக்கம் உற்றனவாக முறையே , “மலர்க்கமல பாதனே” எனவும்,  “அரத்த மேனியாய்” எனவும் கூறியருளினார் . மேலும் காட்சி அளவில்  திருமேனியில்  ஈடுபட்டமையான் , கட் பொறிக்குப் புலனாய் நிற வொளியைக் குறித்து , “அரத்த மேனியாய்” எனவும் , திருவடிக்கண் தம் தலை தோய வீழ்ந்து வணங்கியமையான் கட்புலனும் , மெய்ப்பொறியும் முறையே , உருவத்தினும் ஊற்றின்பத்தினும் ஈடுபட்டமை குறித்து ,”மலர்க் கமல பாத்னே “ எனவும் கூறினர் என்பதுமாம். கமல மலரை ஒப்புக் கூறினமையால் மென்மைத் தன்மையாகிய ஊறும் ,நிறவொளியாகிய உருவமும் கொள்ளப்பட்டன .

                பொருத்தம் –  தகுதி . ஆண்டவன் அருட் பேற்றிற்கு உரிய தகுதியாவது , சரியை முதலிய உண்மைத் தவ ஒழுக்கமும்  ஆகும் . அஃது இல்லாமை , அப்பொழுது அருட்பேற்றிற்கு ஆளாக்காது ஆயினும், அதனால் ஒருகா மேற்கொண்டு உய்தி பெறுதற்குத் தட்டின்றாம், அம்மட்டில் அன்றி, அத் தவ ஒழுக்கத்திற்கு மாறாகப் பொய் ஒழுக்கத்தையும் உடையவன் ஆயினேன் ; எவ்வாறு உய்வேன் என்பார், “பொருத்தம் இன்மையேன் ,பொய்மை உண்மையேன்” என்றார். “பொய்மை உண்மையேன் “ என்புழி, எச்சவும்மை தொக்கு நின்றது.  “நல்லது செய்தல் ஆற்றீராயினும் , அல்லது செய்தல்  ஒப்புமின் “ என்றபடி, நல்லது செய்யவில்லையானால் , அதனால் விளையும் இன்பப் பேறு இழந்ததாக முடியும் ; பின் ஒருகால் நல்லது செய்தற்கும் தட்டின்றாம் . அம்மட்டில் அன்றி , அல்லதும் செய்யின் , துன்பநுகர்ச்சியோடு , பிறிதொருகால் உய்தி பெறுதற்கும் வழியின்றாய் முடியும் என்பது குறிப்பு

                 தகுதியின்மையோடு  பொய்யொழுக்கமும் உடையனாக இருத்தலை  உயிர்க்கு உயிராக நின்று உணர்ந்து வைத்தும் , கருணைகாரணமாக  அருட் குரவனாக எழுந்தருளி வண்ணப் பணித்தென்னை வருக என்று விரும்பி அழைத்து , அருள் நோக்கம் நல்கினாய் என்பார், “போதவென்றெனைப் புரிந்து நோக்கவும்” என்றார்.  அறநோக்கமும் மறநோக்கமும் என இருதிறத்து நோக்கங்களுள், எனக்கு நல்கியது அறநோக்கம் என்பார், “புரிந்து நோக்கவும் “ என்றார் . புரிதல் –  விரும்புதல். உலகியலில் ஒரு தலைவன் தன் கீழ்ப்பட்ட ஒருவனை வாவென அழைத்தற்கும் பார்த்தற்கும் ஏது , அருளும் ஆகலாம் வெகுளியும் ஆகலாம் , அவ்வேது இன்னதென அத்தலைவன் முகக் குறிப்பால் அறிதல் கூடும் ; அடுத்தது காட்டும் பளிங்கு போல முகம் காட்டும் ஆதலின் , வெகுளி காரணம் என்பது உணர்ந்தால் ,என்ன தீங்கு நேருமோ என ஐயுற்று , அத் தலைவனை அவன் அணுகுதற்கு மனம் ஒருப்படான் . அருள் காரணம் என்பது புலப்பட்டால், சிறிதும் தாழாது நெருங்க முயல்வான் . இம்முறையில் ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பு , அருள் காரணமாக நிகழ்ந்தது என்பதை,,”புரிந்து நோக்கவும்” என்பதனால் உணர்ந்த அடிகள் ,சிறிதும் தாழாது , இறைவனை அணுகிப் பணிபுரியும் கட்டுப்பாடுடையராகவும்,   அக்கடமை குறித்து முயலாமை பற்றி இரங்குவாராய், “வருத்தமின்மையேன்” என்றார். வருத்தம் – முயற்சி . “ஆற்றின் வருந்தா வருத்தம்” என்புழி,அப் பொருட்டாதல் அறிக. அங்ஙனம் முயற்சி மேற்கொள்ளாமல் இருத்தல் மடிமைக் குற்றத்தளவில் அமையும் . அம்மட்டில் இல்லாமல் உண்மையை மறைத்துக்காட்டி ஏமாற்றும் வஞ்சகச் செயலும் உடையன் ஆயினேன் என்பார், “வஞ்சமுண்மையேன்” எனவும் கூறினர் .

                    இனி, திருவருட் பேற்றிற்கு உரிய தகுதியில்லேனாயினும் , தகுதி பெற முயலலாம் . அம் முயற்சியும் இல்லேனாயினேன் என்பார் , “பொருத்தமின்மையேன் வருத்தமின்மையேன் “எனவும் பொயொழுக்கம்  உடையேன் ஆயினும், அதனை உயிர்க்கு உயிராக விளங்கும் ஆண்டவன் அறியக்கூடுமே என அஞ்சிப் பிழை யொறுக்க  வேண்டலாம் ; அங்ஙனம் வேண்டாமல் அவ்வொழுக்கத்தையும் மறைத்து ஏமாற்ற நினைக்கின்றேன் என்பார், “பொய்மை யுண்மையேன்  வஞ்சமுண்மையேன் “ எனவும் அடிகள் கருதினார் எனக் கொண்டு , நிரனிறைப் பொருள்கோளாகக் கோடலுமாம்.

                       எவ்வாற்றானும் உய்தி பெறுதற்கு உரிய நெறி காணாமைக்கு ஏதுவாகிய தீவினைப் பயனாகிய இவ் வூனுடலாதலின் , இதனை ஒழித்துவிட்டால், பிற்றைப் பிறப்பிலாவது திருவருட் பேற்றிற்கு இலக்காகலாமே என்பார் , “மாண்டிலேன் “ என்றார்.

                       உலகத்தில் ஈகை இரப்போன் தகுதி குறித்தே நிகழும் என்பது இன்று ஈவோன் தகுதி குறித்தும் நிகழ்தல் உண்டு . சேர அரசனிடத்து ஒளவை சுரப்பாடு கேட்க , அவன் பொன்னாடு கொடுத்தான் என்பர் . “இரப்பவர் என் பெறினும் கொள்வர் . தாமுணர்வர் தங்கொடையின் சீர் “  இம்முறையில் அடிகள் , திருவருட் பேற்றிற்குஉரிய தகுதி தம்பால் இல்லை  என்பதைத் தெளிந்து தம் நிலைக்கு இரங்கினார் ; ஆயினும் தம்மை வலிந்து ஆட்கொண்டு அடியரிற் கூட்டிய ஆண்டவனது அளவில்லாத பெருமைக்கு ஏற்ப , அப் பெருமானே தம் வினை மாசு ஒழித்து அழைத்துக்கொள்ளல்முறையாகவும் அங்ஙனம் செய்யாமை குறித்துப் பின்வருமாறு  இரங்குவார் ஆயினர்.

              “அருள் செய் அன்பர்” என்றதனால் , நின்னால் ஆட்கொள்ளப்படுங்கால் , யான் மாத்திரம் நின் அருட்கு இடனாயது இல்லையோ என்பது அடிகள் குறிப்பு . ஒன்று அடியார் சூழலில் என்னை இருத்தலாம் ; அல்லது அவரையெல்லாம் சிவபுரத்திற்கு உய்த்து , நீ சிறிது தாழ்ந்து , ஆட்கொள்ளப்பட்ட என்னைத் தகுதிப்படுத்துப் பின் அழைத்துச் செல்லலாம் , அங்ஙனம் ஏதும் செய்யாது , யான் காண அம்மெய் யன்பரோடு  நீயும் எழுந்தருளிச் சென்றனையே என்பார், “அன்பரும் நீயும்  அங்கெழுந்தருளி”என்றார். “நீயும் அங்கெழுந்தருளி “ என்றாது குழந்தை யன்பிற் கூறிய மொழியாகும் . ஓர் இன்பநிலையத்திற்குச் செல்லும் தாய் தந்தையர் ,தம் மக்கள் அனைவரையும் உடன் அழைத்துச் செல்லுங்கால் , ஒரு மகனை விட்டுச் சேறல் தகாது. எக் காரணத்தாலாவது அங்ஙனம் விட நேர்ந்தால்  “ நீ பின்னர் வருக” என்று கூறலாம் . அப்படிக் கூறுதல் , அம்மகனுக்குச் சிறிது ஆறுதலாக இருக்கும் ; அதுவும் இன்றி , “நீ இங்கு இருக்க” என்று இருத்திச் சேறல் , இருமுதுகுரவர் அன்பிற்கு மாறாம் அன்றோ ? அங்ஙனமே , ஈண்டு அடிகள் தம்மை விட்டு , ஏனை அன்பருடன் ஆண்டவன் சிவபுரத்திற்கு எழுந்தருளினாலும் , “பின்வருக” என்று பணியாமல் ,” இங்கு இருக்க “ என்று கட்டளையிட்டுச் சென்றது, தமக்கு வருத்தம் விளைத்ததாகக் கொண்டு , “இங்கெனை இருத்தினாய் முறையோ” என்றார். ஈண்டு “ என் எம்பிரான் “  என்றது , ஏனையடியார்க்குத் தலைவனாதலே யன்றி  எனக்குச் சிறப்புரிமைத் தலைவன் அன்றோ? அங்ஙனமாகவும் , இங்ஙனஞ் செய்தல் முறையாகுமோ  என்னும் குறிப்புத்தோன்ற நின்றது . இவ்வுலக வாழ்க்கையை உவர்த்தும் , இறையடி நீழல் பெறாமலும்  பயனின்றி இருத்தல் பற்றி அடிகள் , தம்மை “வம்பனேன்” என்றார். ஒருவாறு என் வினையெச்சம் இப்பேற்றிற்குத்  தடையாகுமாயின் , நின் அருள்  நோக்கிற்பட்டும் , அவ் வினைக்கு அழிவு இல்லையேல் , இனி, அதற்குத்தான் முடிவு இல்லையோ என்பார், “வினைக்கு இறுதி யில்லையே” என்றார் . இல்லையே என்புழி, ஏகாரம் வினாப்பொருட்டு .

இதன்கண், “அருள் செய் அன்பரும்  நீயும் அங்கெழுந்தருளி “ என்றதனால் குறிக்கப்பட்ட வீட்டின்பம் அதீத நிலையினதாதலின் , அதுவே பெறத்தக்கது என்பது பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        *****************************************

பாடல் :94 .

இல்லை  நின்கழற்  கன்ப  தென்கணே

ஏலம்  ஏலும்நற்  குழலி  பங்கனே

கல்லை  மென்கனி  ஆக்கும்  விச்சைகொண்

டென்னை  நின்கழற்  கன்ப  னாக்கினாய்

எல்லை  இல்லைநின்  கருணை  எம்பிரான்

ஏது கொண்டு  நான் ஏது  செய்யினும்

வல்லை  யேஎனக்  கின்னும்  உன்கழல்

காட்டி  மீட்கவும்  மறுவில்  வானனே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் அருள் நோக்கம் நல்கியும் முயாலாமல் பொய்யும் வஞ்சகமும் உடையவனாய் வாழ்ந்திருக்கலானேனே என்று வருந்திக் கூறிய அடிகள் , இத்  திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி,,என்னை அரிதின் முயன்று அன்பனாக்கினாய் ஆதலானும் , நின் கருணைக்கு  எல்லையில்லை யாதலானும் , என் பணி யாதாயினும் , அதனை யேற்று நின் திருவடிகளை மீட்டும் காட்சிப்பட அளித்துக் காத்தருளல் வேண்டும் என வேண்டுகின்றார்.

பதவுரை :-  மறு இல் வானனே  =  குற்றமற்ற நுண்ணிய பரவெளியில் உள்ளவனே,

ஏலம் ஏலும் நல் குழவி பங்கனே =  மயிர்ச் சாந்து அணிந்த அழகிய கூந்தலையுடைய  அம்மையை  ஒருபால் உடையவனே,

எம்பிரான்  = எம் பெருமானே ,

நின் கழற்கு அன்பு என் கண் இல்லை = நின் திருவடிக்கண் மெய்யன்பு என்பால் இன்று,

கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு  = வலிய கல்லைக் கனிந்த பழம் ஆக்கும் வித்தையிற் பயின்று ,

என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்  =  அடியேனை நின் திருவடிக்கு அன்புடையனாகச் செய்தனை ,

நான் ஏது கொண்டு ஏது செய்யினும்  = யான் எதனைக் கருவியாகக் கொண்டு எச் செயலைச் செய்யினும் ,

நின் கருணை எல்லை இல்லை  =  நின் பேரருளுக்கு வரம்பு கிடையாது ஆதலின் ,

எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் வல்லையே  =

சிறியவனாகிய எனக்கு மீண்டும் நின் திருவடிக் காட்சியளித்து இவ்வுலக வாழ்க்கையினின்று திருப்பவும் ஆற்றல் உடையை ஆவாய் அன்றோ? என்பது.

விளக்கவுரை :-  மறுவில் வான் –  நுண்ணிய ஞானப் பரவெளி. பருப்பொருளாகிய வானின் வேறு என்றற்கு , “மறுவில்” என்னும் அடை புணர்க்கப்பட்டது . கோள் , நாள் முதலிய மண்டலங்கள் இல்லாமல் , தூய ஞான மயமாக வுண்மையின் மறுவிலதாயிற்று  என்க. அதனையே ஈண்டு, “மறுவில்  வான்” எனவும் , ஆங்கு விளங்கும் இறைவனைக்குறித்து , “மறுவில் வானன்” எனவும் கூறியருளினார் . இஃது இறைவனது சிறப்பு இலக்கணம் கருதிக் கூறியபடியாம் . இறைவனுக்கு ஆகமங்களிற் கூறப்பட்ட சிறப்பு,பொது என்னும் இருவகை இலக்கணங்களுள் சிறப்பாவது , குணம் குறி இன்றி  எல்லாவற்றையும் கடந்த நிலையாகும் . பொதுவாவது , சத்தியுடன் கூடி ஐந்தொழில்களையும் செய்யும் நிலையாகும் . “ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே “ என்றது பொது இலக்கணங் கருதிக் கூறியபடியாம் .

                 “அன்பது” என்புழி, அது, பண்டறி சுட்டாக நின்று , வீட்டின் பத்திற்கு ஏதுவாகிய மெய்யன்பை உணர்த்தும் . அன்பு என்பது ஒருவருக்குத் தொடர்புடையாரிடத்து உண்டாகும் காதலாகும். இஃது உலகியலில் தாய் தந்தை , மனைவி மக்கள் முதலியோரைப் பற்றிஉண்டாகி வளர்ந்து , அன்னாரெல்லாரும் உண்மையில் தொடர்பு இலராய்  ஒழிய , முடிவில் , என்றும் நிலையான தொடர்புடைய ஆண்டவனைப் பற்றி நிலை பெறுவதாகும் . இந் நிலையில் இது மெய்யன்பாகும் . ஆகவே , அன்பு நிகழ்வதென்றால்  அதற்கு இடனும் வினைமுதலும் இன்றியமையாதன . ஈண்டு , இடன் தாம் முடிவாகக் கண்ட இறையடியாதலின் , “நின் கழற்கு” எனவும், வினை முதலாகத் தம்மைக் குறித்து , “என்கணே” எனவும் கூறினர். பொருளுடைப் பெரியோன் ஒருவன் தன்பாற் பொருளுண்டு என்று கூற நேர்ந்தால் ,அக்கருத்துக் குறிப்பிற் புலப்படக் கூறுவன் . அன்றி , என்பாற் பொருளுண்டு என்று வெளிப்படக் கூற நாணுவன் . பொருளின்மை  கூற நேர்ந்தால் ,”யான் பொருள் உடையேனல்லேன் “ஏன வெளிப்படக் கூறுவன் . இது, “பணியுமா மென்றும் பெருமை” என்றபடி , பெருமைக் குணத்தின் பயனாகும் . இம்முறை பற்றியே ,தம்பால் அன்பு இன்மை கூறத்துணிந்த அடிகள் , வெளிப்படையாக ,”இல்லை நின்கழற் கன்பதென்கணே” என்று கூறுவாராயினர் .

                    ஆண்டவனே , நின் திருவடிக்கண் உண்மை அன்பில்லேனாகிய என்னை , அன்பன் ஆக்க வேண்டுமானால் , கல்லினும் வலிய என் நெஞ்சத்தைக் குழைவித்தன்றோ செய்தல் வேண்டும் . செயற்கரிய இச்செயலைச் செய்தற்குப் பொதுவாக எல்லா ஆற்றலும் உடைய நீயும் ஓர் அரிய வித்தையிற் சிறப்பு முறையில் பயின்ற பின்னரே, அதன் முதிர்ச்சியினால் தலைப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன் என்பார், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு” என்றார். வன்மையோடு முதிரும் பழங்களின் நீக்குதற்கு , “மென்கனி’ என்றார். “மென்கனி”என்றதனால் , வலிய கல் என்பது பெறப்படும் . கல்லினும் மென்மைத் தன்மையுடைய வகையுமுண்டு . விச்சை – வித்தை . ஆண்டவன் ,பொதுவாக எல்லா ஆற்றலும் உடையனாயினும் ,அன்பர்க்கு உபகரித்தற் பொருட்டு  மேற்கொள்ளும் இன்னோரன்ன அரிய செயற்கும், சிறப்பு முறையில்  இனமாகிய வித்தையில் திறமை படைத்தமையால் அதிகாரி ஆயினான் என்பது. கல்லைக் கனியாக்கிய வரலாறு இல்லையாயினும் , மலையை வில்லாக வளைத்த வரலாறு உண்மையின், கனியாக்கும் திறமையும் படைத்திருக்கலாம் என்பது குறிப்பு.  அடிகள், திருக்கோவையில் , “தெவ்வரை மெய்யெரிகாய் சிலையாண்டு என்னை யாண்டு கொண்ட , செவ்வரை மேனியன்” என்று அருளிச் செய்திருத்தலும் , அதற்கு, “வலியனவற்றை வயமாக்கிப் பயின்று , பின் என்னை ஆண்டான் என்பது போதர, “காய்சிலையாண்டு என்னையாண்டு கொண்ட” வென்றார் ; என்னைத்தனக்கு அடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக் கல்லை வளைத்தான் ; என் நெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கு ஒரு பகை யுண்டாய்ச் செய்ததன்று போலும் என்பது கருத்து ; “கல்லை மென் கனியாக்கும்  விச்சை கொண்டென்னை நின் கழற்கன்பனாக்கினாய்” என்பதும்  “அது  “ என்று பேராசிரியர் எழுதிய உரைக்குறிப்பும் காண்க. கல்லை வளைத்த புராண கதை யுண்மையால் , ஆண்டு , “சிலையாண்டு” எனச் செயற்றிறமையால்  வைத்தும் , கல்லைக் கனியாக்கிய  கதை இன்மையால் , “கல்லை மெங்கனியாக்கும் விச்சை கொண்டு” என,  ஈண்டு வித்தைத் திறமையில் வைத்தும் கூறியருளினார் என்பது .

             யான் அன்பும் செய்தற்கு ஆற்றல் இல்லேனாயினும் , நின் ஆற்றலினால் என்னை அன்பன் ஆக்கினாய் என்பார், நின் கழற் கன்பனாக்கினாய் “ என்றார். நின்னால் ஆக்கப்பட்ட  அன்பனாகிய யான் இனி, மன மொழி மெய்களுள்  எதனைக் கருவியாகக் கொண்டு  யாது செய்யினும், எல்லையில்லாத நின் கருணைக் குணத்தால், அதனையே நின்னை அடைதற்கு உரிய தவமாக ஏற்றருளும் கடமையுடையை என்பார், “ஏது கொண்டு நான் ஏது செய்யினும் நின் கருணை எல்லையில்லை என்றார். ஏது செய்யினும் என்பது, மன மொழி மெய்களால்  ஆம் பணிகளுள் எச் சிறு பணி செய்தாலும் என்னும் பொருட்டு , ஆண்டவன் கருணை இத்துணைப் பணி செய்தால்தான் ஏற்றருளும்  என்பது இன்றி , எல்லையற்ற நிலையில்  உண்மையால் , மிகச் சிறு பணியையும்  மிகப் பெரும் பணியாகக் கொண்டு பயன் அளிக்கவல்லது  என்பது கருத்து.

              ஆண்டவன் , முன்னர்க் குருந்தமரத்து நிழலில் எழுந்தருளித்  திருவடிக் காட்சி அளித்த அளவில் மறைந்துவிட்டமையால் , அப் பெருமான் திருவடிப் பேற்றிற்குத் தம் தவச்செயல் தக்கதாக இல்லை எனக் கண்ட அடிகள் , “இறைவ  அரிதின் முயன்று என்னை அன்பன் ஆக்கி விட்டமையாலும் , நின் கருணைக்கு  எல்லையில்லை யாதலாலும் , இனி, யான் எது கொண்டு ஏது செய்யினும் , அதனையே,”இயன்றதோர்  பொழுதின் இட்டது மலராச் , சொன்னது மந்திரமாக என்னையும் இடர்ப் பிறப் பிறப்பெனும் இரண்டின் கடற்படாவகை காத்தல் நின் கடனே “ என்று கூறியபடி , நின்னைஅடைதற்கு உரிய தவச் செயலாகக் கொண்டு, மீட்டும் நின் திருவடிக் காட்சியளித்து , இவ்வுலக வாழ்க்கையினின்றும்  மீட்டருளல் வேண்டும் ; இச் செயல் நினக்கு அரிது என்பார், “வல்லையே எனக்கின்னுமுன்கழல்  காட்டி மீட்கவும் “ என்றார்.  “வல்லையே” என்புழி , ஏகாரம் தேற்றம் , “இன்னும்” என்றதனால் முன்னரும் என்பது பெறப்படும்,

                 இதன்கண், “கல்லை மென்கனி  ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின்கழற் கன்பனாக்கினாய் “ என்றதனால் , அதீதமாகிய வீட்டின்பத்திற்கு அதிகாரியாதலும் , “எல்லையில்லை நின் கருணை” என்றதனால் , அப் பேற்றிற்குச் சிறந்த சாதனம் ஆண்டவனது அளப்பரிய கருணையே என்பதும் பெறப்படுதலின் , ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதல் அறிக.

                                 *******************************************

பாடல் :95 ,

வான  நாடரும்  அரியொ  ணாதநீ

மறையில்  ஈறுமுன்  தொடரொ  ணாதநீ

ஏனை  நாடருந்  தெரியொ  ணாதநீ

என்னை  யின்னிதாய்  ஆண்டு  கொண்டவா

ஊனை  நாடகம்  ஆடு  வித்தவா

உருகி  நானுனைப்  பருக  வைத்தவா

ஞான நாடகம்  ஆடு  வித்தவா

நைய  வையகத்  துடைய  விச்சையே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி எல்லையற்ற கருனையுடையை ஆதலின் , என் பணி யாதாயினும், அதனை ஏற்று  மீட்டும் காட்சியளித்துக் காத்தருள வேண்டும் என்று வேண்டிய அடிகள், அதற்கு ஏதுக்கூறு  முகமாக , காண்டற்கு அரிய பொருளாகிய  நீ எளியேனை முன்னர் ஆட்கொண்டு உபதேசித்ததும் , உலகப்பற்று ஒழிந்து நன்னிலை பெறுதற் பொருட்டு அன்றோ என இத் திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  வான நாடரும் அறிய ஒண்ணாத நீ  = விண்ணுலகத்தவரும்  அறிய  இயலாத நீ ,

முன் மறையில் ஈறும் தொடர ஒண்ணாத  நீ  =  பண்டை மறைகலின் முடிவாகிய ஞானக் கூறும் தொடர்ந்து பற்ற இயலாத நீ,

ஏனை நாடரும் தெரிய ஒண்ணாத  நீ  = மற்றைய உலகத்தவரும் தெரிய இயலாத  நீ ,

என்னை ஊனை நாடகம் ஆடுவித்தவா = சிறியேனை ஊனுடலைக் கொண்டு கூத்தாடும் படி  செய்தவாறும் ,

இன்னிதாய் ஆண்டு கொண்டவா =  பின் இனிமையுற  ஆட்கொண்டருளியவாறும் ,

நான் உருகி உன்னைப் பருக வைத்தவா =  யான் உள்ளம் உருகி நின் அருளமுதத்தை உண்ணும்படி  செய்தவாறும் ,

ஞான நாடகம் ஆடுவித்தவா  = அதனால் ஞானக்கூத்து ஆடும்படி செதவாறும் ,

வையகத்து உடைய இச்சை நையவே  = இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான அவா ஒழிதற் பொருட்டாம் அன்றோ ?  என்பது

விளக்கவுரை :-   ஆண்டவனது அரிய தன்மையைக் கூறப்புகுந்த அடிகள் தேவருள் ஒருவன் என்று கூறும் உபசார மொழியை உண்மை எனக் கொண்டு, தமக்கு எளியன் என்று இறுமாக்கும் அவ்விண்ணவர் காட்சிக்கு அரியன் என்பார், “வான நாடரும் அறியொணாத நீ “ என்றார். நாடரும் என்புழி , உம்மை சிறப்புப் பொருட்டு  , “ஈறும் ,நாடரும்” என்று பின் வருவனவற்றிற்கும்  இஃது ஒக்கும் .  “ஆறிய ஒண்ணாத “ என்புழி, அறிய என்னும் வினையெச்சத்தீறு தொக்கும் . ஒண்ணாத என்பது இடைக் குறையாகவும்  நின்றன. பின்வருவன வற்றிற்கும்  ஈதொக்கும் . அறிதல்  –  காட்சியளவையிற்  காண்டல்.

                மறை நூல் , கன்மக் கூறு , ஞானக் கூறு என இருதிறப்படும் . பின்னது சிறந்தது என்ப . அதனையே, “மறையிலீரும் “ என்றார். அது கூறவே, முன்னதற்கும் ஆம் என்பது , மறை முடிவாகிய ஞானக்கூற்றில் இறைவனுடைய  பண்புகள் பல திறமாகப் பாராட்டப்பட்டும் , கடை போக அளவிட்டு உரைக்க இயலாமையால் ஒழிவடைந்தன என்பார், “மறையிலீற முன் தொடரொணாத நீ “ என்றார். தொடர்தல்  –  பன்னிப் பன்னி மேற்சேறல் . இனி, “ஈறு முன் “ என்பதை , இறுதியும் முதலும் எனக் கொண்டு , மறையின் முடிவும் முதலும் ஆகிய ஞானக் கூறு கன்மக்கூறுகளுக்கு ஆக்குதலுமாம் .

                  ஏனை நாடர்  –  வான நாடர்  அல்லாத மண்ணுலகத்தவரும்  கீழுலகத்தவருமாம் . தெரிதல்  – நூலுணர்வாற்  காண்டல் . தேவர் , இறைவனைத் தமக்கு அணியனாகக் கருதி , நூலுணர்வைப் பொருட்படுத்தாமல் , காட்சியிற் காணும் தகுதியுடையேம் என்று இறுமாந்து இருத்தலின் , அவர்க்கு அறியொணாதவன்  எனவும் , மக்கள் முதலியோர் , மறை ஆகமங்களால் ஆராய்ந்து தெளியலாம் என்னும் கருத்துடையராதலின் , அவர்க்குத் தெரியொணாதவன் எனவும் ,மறைகள்  இறைவன் குணங்களைக் கூறி முடிவு காண முயறலின் ,அவற்றால் தொடரொணாதவன் எனவும் கூறப்பட்டன. இங்ஙனம் யாவர்க்கும்  எவைக்கும் அரியனாகிய பரம்பொருளாவான் , கருணை காரணமாகத் தமக்கு எளியனாக வந்து செய்த பேருதவிகளை நெஞ்சார நினைந்து  நாவாரப் புகழ்ந்து பாராட்டத் தொடங்குகின்றார் .

                    யான் பண்டு செய்த வினைக்கு ஈடாக, மாயையினின்றும்  ஊனுடலை உதவி , அதன் தொடர்பாகத் தந்தை , தாய், தமர், தாரம் , மகவு எனும் பரிவாரங்கள் சூழ , இவ்வுலகமாகிய அரங்கில் நிலையுதல் இல்லாத வாழ்க்கைக்கூத்து ஆடும்படி புரிவித்தவாரும் என்பார், “ஊனை நாடகம் ஆடுவித்தவா”என்றார். ஊன் ஆகு பெயராக நின்று உடம்பை உணர்த்தும் . “கொண்டு” என்னும் ஒரு சொல் வருவித்துரைத்தல் வேண்டும் . “ஆடுவித்தவா” என்புழி, ஆறும் என்பதன் ஈறும் எண்ணும்மையும் தொக்குநின்றன . பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும் ; உலக வாழ்க்கையில் ஈடுபடச் செய்தவாறும் என்பது கருத்து. இறைவன் உயிர்க்குச் செய்யும் உதவிகளுள்  இதுவே முதலில் எண்ணத்தக்கது. “”காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்  போல் “ மருட் கேவல நிலையில் உள்ள உயிர்க்கு அறிவு விளக்கம் பெறுதற்பொருட்டுக் கன்மத்துக்கு ஈடாக ,உடல் முதலியவற்றை உதவித் தவச் செயல்களுக்கு ஆளாக்கி , உய்விக்கத் தொடங்கும் முதல் உபகாரம் இதுவாம் என்பது கருத்து. அடுத்துச் சரியை முதலிய தவங்களால் தூய்மை யெய்திய உயிரின் பக்குவங் கண்டு , இறைவன் ஆட்கொள்ளுதல் நிகழ்வதாகும் .அந் நிலையில் அடிகள், ஆண்டவன் ஞானாசிரியனாக எளிமையில் எழுந்தருளி , ஞானோபதேசஞ் செய்து தம்மை ஆட்கொண்டருளிய அருமையை வியந்து ,” என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா” என்றார். , “இனிது” என விரித்தால் விகாரம் பெற்றது . “இன்னிதாய்”என்புழிச் செய்தென் எச்சத்தை செயவென் எச்சமாகத் திரித்துக் கொள்ளல் வேண்டும் . இனிது என்பது மாநுட வடிவில் ஞானகுருவான எளிமையில் எழுந்தருளிக் காட்சியளித்ததைக்  குறிக்கும் .

              காட்சியளித்து உபதேசித்த அந் நிலையில் , அடிகள் நெஞ்சம் உருகி , ஆண்டவனை அமுத வடிவிற் பருகி இன்புற்றனராக , அந் நிலையும் அப் பெருமான் அருளாற் கிடைத்த பேறு ஆதலின் ,”உருகி நான் உனைப் பருகவைத்தவா” என்றார் . பருகுதற்கு உருகுதல் ஏதுவாம் என்க. உள்ளம் உருகி  உணர்வு பெருகினால் அருளமுதைப் பருகலாம் என்பது அடிகள் கருத்து . “உருகிப் பெருகியுளங் குளிர முகந்து கொண்டு , பருகற்கினிய பரங்கருணைத்  தடங்கலை” என்றும்  பிறிதோரிடத்துக் கூறிய அடிகள் அருண்மொழியும் , “உரமென்னும் பொருளானை உருகிலுள்ளுறை  வானை” என்னும் தமிழ் மறையும்  ஈண்டு நினைக்கத்தக்கன .

               உள்ளம் உருகி அருளமுதைப் பருகிய நிலையில் உலகியலை மறந்து , தம் வயம் இழந்து , எல்லாம் சிவமயமாகக் கண்டு , அக் காட்சியால்  ஆனந்தக் கூத்து  ஆடும்படி இறைவன் அருளிய பேருதவியை நினைந்து , “ஞான நாடகம் ஆடுவித்தவா” என்றார் . “நாடவர் நந்தம்மை யார்ப்ப  ஆர்ப்ப , நாமும் அவர் தம்மை யார்ப்ப ஆர்ப்ப” என்று ஆரவாரித்து ஆடியது அக் கூத்து என்க. ஊனை நாடகம் கட்டுநிலையும், ஞான நாடகம்  வீட்டு நிலையுமாம் . ஆண்டு கொண்டதும்  பருக வைத்ததும் சாதன நிலயின்பாற் படும்.

                 ஆண்டவன் , அளப்பரிய இப் பேருதவிகளைத் தமக்குச் செய்ததெல்லாம் , இவ் வுலக வாழ்க்கையில் உள்ள பற்றை  அறவே ஒழித்தற் பொருட்டு என்பார் , “நைய வையகத்துடைய  விச்சையே” என்றார். “இச்சையே”என்புழி, ஏகாரத்தைப் பிரித்து நையவே எனக்கூட்டுக. ஏகாரம் தேற்றப் பொருட்டு.  நைதல் – அறவே யொழிதல் . இறுதியில் , “ஆம்” என்னும் ஒரு சொல்லை வருவித்து முடித்தல் வேண்டும் . உலக வாழ்க்கை ஒழிதற் பொருட்டு , இப் பேறுதவிகளைச் செய்த பின்னரும் , என்னை ஈண்டு இருத்தியது என்னையோ என்பது குறிப்பெச்சமாகும். .

                     இதன்கண், ஊனை நாடகம்  ஆடுவித்ததும் , ஆண்டு கொண்டதும் , பருக வைத்ததும் , ஞான நாடகம் ஆடுவித்ததும் அதீதமாகிய சிவானந்த அநுபவத்திற்கு உரிய பேருதவிகளாகவும் , அப் பேறு பெறாமல் வருந்தலானேனே என்னும் அடிகளது இரக்கக் குறிப்புப் புலப்படுதலின் , ஆனந்தாதீதம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                      *********************************

பாடல் : 96 .

விச்ச  தின்றியே  விளைவு  செய்குவாய்

விண்ணு  மண்ணக  முழுதும்  யாவையும்

வைச்சு  வாங்குவாய்  வஞ்ச  கப்பெரும்

புலைய  நேனையுன்  கோயில்  வாயிலில்

பிச்சன்  ஆக்கினாய்  பெரிய  அன்பருக்

குரியன்  ஆக்கினாய்  தாம்வ  ளர்த்ததோர்

நச்சு  மாமரம் ஆயி  நுங்கொலார்

நானும்  அங்ஙனே  உடைய  நாதனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் , அரிய பொருளாகிய நீ எளிவந்து ஆட்கொண்டது யான் நலம் பெறற் பொருட்டன்றோ எனக் கூறிய அடிகள் , அவ் வரிய தன்மையோடு , எல்லா ஆற்றலும் நிரம்பப்பெற்ற நின்னைப்பற்றி நிற்பேனை எங்ஙனம் கைவிடல் அமையும் என இத் திருப்பாட்டில் தெரிவித்துக் கொள்ளுகின்றார்.

பதவுரை :- விச்சு  அது  இன்றியே  விளைவு செய்குவாய்  =  வித்து ஆகிய  அக் காரணம் இல்லாமலே விளைவிப்பாய் ,

விண்ணும்  மண்ணகம் யாவையும்  முழுதும் வைச்சு வாங்குவாய்  = 

விண்ணுலகம்  மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களையும் குறைவற நிலைபெறச் செய்து அழிப்பாய்,

வஞ்சகப்  பெரும்  புலையனேனை  =  (அத்தகைய நீ ) வஞ்சகனாகிய  மிக்க இழிதகவுடைய  என்னை  ,

உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்  = நின் திருக்கோயில் வாயில்  முன்னே வைத்துப் பித்தனாகச் செய்தாய்,

பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்  = பேரன்பராகிய மெய்யடியார்க்கு  உரியனாகவும்  செய்தாய் ,

தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொல்வார்  =  உலகத்தவர்  தம்மால் வளர்க்கப்பட்டது ஒரு முதிய நச்சு மரம் ஆயினும் தாமே வெட்டி அழிக்கமாட்டார் ,

உடைய  நாதனே  =  சிறியேனை அடிமையாகவுடைய  என் தலைவனே ,

நானும் அங்ஙனே =  யானும் அப்படியே ஆவேன் என்பது.

விளக்கவுரை :-  படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் முத்தொழிற்கும் இறைவன் தலைவனாயினும் , படைத்தல் தொழிலில் ஓர் உண்மை ஆராயத்தக்கது . வினைக்கு ஈடாக மாயை என்னும் வித்தினின்றும் உயிர்க்கு உடல் முதலியன இறைவனால் தரப்படுகின்றன என்பது சைவநூற் கொள்கை. அங்ஙனமாயின் , மருட் கேவல நிலையில் உள்ள உயிர்க்கு வினைத் தொடர்பு இன்மையால் , முதல் தோற்றத்திற்கு ஏது என்னாம் என்பது வினாவாகும் . அதற்கு விடையுளதாயினும் , அஃது அரிதின் ஆராய்ந்து  கொள்ளத்தக்கதாகும். இவ்வருமை நோக்கியே சிவஞானபோதம்  இரண்டாம் சூத்திரத்திற்கு நுதலிய பொருள் கூறப்புகுந்த மெய்கண்ட ஆசிரியர் , “புனருற்பவம்  வருமாறுணர்தல்  நுதலிற்று” என்று கூறினார் . புனருற்பவம் – மீண்டு பிறத்தல் . அஃதாவது அழித்தற்குக் காரணனாக வுள்ள  இறைவன்  இடத்தினின்றும் வினைக்கு ஈடாக உயிர் மீண்டும் தோன்றுதல் என்பது கருத்து. ஈண்டுப் பேருரை வகுத்த மாதவச் சிவஞான முனிவரர் , “அஃது அங்ஙனமாக, முதலுற்பவம் வருமாறுணர்த்தாது , புனருற்பவம் வருமாறுணர்த்துவது என்னையெனின் , பிரபஞ்சம்  அநாதியாகலின் , அம்முதற்கோடி நம்மனோரான்  அரியவராமை யானும் , ஒடுங்கியபின்  மீளவுளதாமாறே……கூறினார் என்பது “ என்று கூறிப் பின்னர், “அற்றாயினும் , முதலுற்பவம்  ஆமாறு இவ்வியல்பிற்று என்பது” எனத் தொடங்கி ,”விச்ச தின்றியே விளைவு செய்குவாய்” எனவும், “விண்ணு மண்ணக முழுதும் யாவையும்  வைச்சு வாங்குவாய் “ எனவும் ஓதிய திருவாக்கானும் இவ் இரு வேறு வகையும் கண்டு கொள்க” என்றுரைத்தார் . இரு வேறு வகையான , முதலுற்பவமும்  புனருற்பவமும் ஆம் என்பது.

           பாலையும் கோலையும் நோக்கும் குழவிக்கும் குருடர்க்கும் , அந் நோக்கம் உணர்ந்து கொடுப்பார் போல , மருட் கேவல நிலையில் மூல மலத்தாற் பிணிப்புண்டு , அசைவற்றுக்கிடக்கும் உயிர்க்கு ,இறைவன் அருளால் நுண்ணிய நிலையில் விருப்பு வெறுப்பு நிகழ , அவற்றை இறைவன் உணர்ந்து , கன்ம மாயைகளைக் கொடுத்துப் பிறப்புட் படுத்துவன் என்று முதலுற்பவத்தின்  இயல்பு கூறப்படுதலும் உண்டு. இது, நுண்ணிய நிலையில் நிகழ்வதால் , பருமை நோக்கில் ,”விச்சதின்றியே விளைவு செய்குவாய்” என்று கூறப்பட்டது  என்க. “விச்சது” என்புழி, “அது” பண்டறிந்ததாகிய காரணம் என்னும் பொருள் மேலதாம். “விச்சின்றி நாறு செய்வானும்” என்னும் தமிழ் மறைக்கும் இதுவே கருத்து என்க. இனி, அத்தொடர் , வித்தின்றி விளைவாய் எனப் பொருள்பட்டு , இறைவன் மாயையின்றியே திருமேனி கொள்ளு முறையை உணர்த்திய துமாம் எனவும் ,காலத்தானும் இடத்தானும் வேற நிற்பனவாகிய உலகத்திற் காணப்படும் வித்துப் போல் அல்லாமல் , தன்னையே  தாரகமாகக் கொண்டு , வேறின்றி உடனாய் நிற்பதாகிய மாயையினின்றும் விளைவு செய்குவாய் என, உலகத்து  வித்திற்கும்  மாயைக்கும் வேற்றுமை தோன்றக் கூறுதலே அத் திருப்பாட்டின் கருத்து ஆகலாம்  எனவும், மாதவச் சிவஞான முனிவரர்  சிவஞானபோதப் பேருரையில்  2 ஆம் சூத்திரம் , 2 ஆம் அதிகரணத்தில் தடை விடையில் வைத்து விளக்கி யிருத்தலும்  அறிக.

                விண்ணுலகம் , மண்ணுலகம் முதலிய எல்லா வுலகங்களிலும்  உள்ள உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் முற்றும் படைத்து , அளித்து , அழிக்கும் தலைமை குறித்து , “முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்” என்றார் . வைச்சல்  – வைத்தல் ; படைத்துக் காத்தல் . வாங்குதல் –  ஒடுக்குதல் . இதனால் உலகத் தோற்றத்திற்குக் காரணன் ஆம் தன்மை முற்றும் பரமசிவனுக்கே உரியது என்பது புலப்படுக்கப்பட்டபடியாம் . உலக காரணமாந்தன்மை பரம்பொருள் இலக்கணம் என்ப.

                  வஞ்ச ஒழுக்கமும் , அதனால் மிக்க இழிதகவும் உடையேன் என்பார், “வஞ்சகப் பெரும் புலயனேனை” என்றார். பிறப்பான் அன்றி , வஞ்சகமாகிய செயலால் எய்திய இழிதகவு என்பது குறித்துப் பெருமை அடை புணர்க்கப்பட்டது. செயலால் இழிந்தவனாகிய என்னை நின் திருமுன் வைத்து, இவ்வுலகியலில்  மாறுபடச் செய்து பித்தனாக்கினாய் என்பார், உன் கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் “ என்றார் . பிச்சன்  – பித்தன்; பைத்தியம் பிடித்தவன் , “மத்த மனத்தொடு மாலிவன் என்ன மனநினைவில்  ஒத்தன வொத்தன சொல்லிட” என்று முன்னர்க் கூறியது , பிச்சனாக்கிய தன் பயனாகும் .

                      பெரிய அன்பர்  – அழிவுடைப் பொருள்களின் இயல்பு அறிந்து  நீங்கி , அழி வில் பொருளாகிய ஆண்டவன் இடத்து இறவாத இன்ப அன்புடைய மெய்யடியார் . ஆண்டவன், தனக்கு அன்பனாக்கியபின் ,தன் அடியவர் குழுவுள் இருக்கும் பேற்றைத் தமக்கு அளித்தனன் என்பார், “பெரிய அன்பருக்கு உரியனாக்கினாய் “ என்றார். உரியனும் என்புழி, எச்சவும்மை தொக்கு நின்றது . அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே” என்றபடி ,அடிகள் வியந்து மகிழ்ந்தது ,மெய்யன்பர் குழுவில் தம்மை இருக்க வைத்தது கருதியே யாம் .

                 ஆண்டவனால் வயப்படுத்தப்பட்டு,  அவன் அடியார் குழுவுள் இருக்கும்  உரிமையும்  பெற்றபின், தமக்கென ஒன்றுமின்றி , “நன்றே செய்வாய்  பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்று இருக்கும் அடிகள், அப் பெருமானை நோக்கி ,”யான் மெய்யன்பு இல்லேனாயினும், நீ அடிமையாக ஏற்றுக் கொண்டமையால் என்னைக் கைவிடலாகாது என்பதற்கு, உலகியலில் வைத்து ஒரு நீதி எடுத்துக் காட்டுகின்றார், உலகத்தவர் தம்மால் வித்திட்டு வளர்க்கப்பட்ட மரம், எட்டி அல்லது அதனைப் போன்ற பிறிதொரு நச்சு மரம் ஆயினும், அதனை வளர்த்த தாமே வெட்டி யழிக்கத்  துணியார் . அது போல, மெய்யன்பில்லேன் ஆயினும் நின்னைச் சார்ந்தவனாதலின், என்னை வெறுத்து ஒதுக்கலாகாது என்பார், “தாம் வளர்த்ததோர் நச்சு மாமர மாயினுங் கொலார் நானும் அங்ஙனே “ என்றார். தாம் வளர்த்தது, நச்சு மரத்துள்ளும் முதுமையடைந்ததாயினும் என்றற்கு, “மா” என்னும் அடை புணர்க்கப்பட்டது . இக் கருத்துக் குமார சம்பவம் என்னும் வட நூலில் இரண்டாம் சருக்கத்தில் ஐம்பத்தைந்தாம்  சுலோகத்தில் மகா கவி காளிதாசராற் புலப்படுக்கப்பட்டிருத்தலும்  அறிந்து இன்புறத்தக்கது.  “உடைய நாதனே” என்னும் விளி, என்னை ஆதரிக்க வேண்டிய கடமை நின்பாலது என்று எடுத்துக்காட்டினால்  விளக்கப்பட்ட, “நானும் அங்ஙனே ‘ என்பதை வலியுறுத்து நிற்பதாகும்.

                   இதன்கண், ஆண்டவன் அடிகளைத் தன் திருக்கோயில் வாயிலிற் பிச்சனாக்கியதும், பெரிய அன்பருக்கு உரியனாக்கியதும், அதீதமாகிய சிவானந்த நுகர்ச்சிப் பொருட்டு  என்பது பெறப்படுதலின், ஆனந்தாதீதம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                          *******************************************

பாடல் : 97 .

உடைய  நாதனே  போற்றி  நின்னலால்

பற்று  மற்றெனக்  காவ  தொன்றினி

உடைய  னோபணி  போற்றி  உம்பரார்

தம்ப ராபரா  போற்றி  யாரினுங்

கடையன்  ஆயினேன் போற்றி  என்பெருங்

கருணை  யாளனே  போற்றி  என்னைநின்

அடியன்  ஆக்கினாய்  போற்றி  ஆதியும்

அந்தம்  ஆயினாய்  போற்றி  அப்பனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் பெறலரும் பொருளாகிய நின்னைச் சார்ந்தவனாகிய என்னை எங்ஙனம் கை விடல் அமையும் என்று ஆண்டவனை நோக்கிக் கூறிய அடிகள், நீ கைவிடத் திருவுளங்கொள்ளின், நின்னை அல்லாமல் பிறிதொரு பற்றுக்கோடு எனக்கு யாதுலது?  கூறியருள்க என்று இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-  ஆதியும் அந்தமும் ஆயினாய் போற்றி  =  முதலும் இறுதியும்  ஆக விளங்குகின்றவனே  வணக்கம் ,

உம்பரார் தம் பராபரா போற்றி  = மேல் உலகத்தவர்க்கு மேலான பரம் பொருளே வணக்கம் ,

யாரினும் கடையன் ஆயினேன் போற்றி  =  யான் எவரினும்  கடைப்பட்டவன் ஆயினேன் வணக்கம் ,

என் பெரும் கருணையாளனே போற்றி  = என்பால் பேரருளாளனே  வணக்கம் ,

என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி  = சிறியேனை நினக்கு அடிமையாகச் செய்தனை வணக்கம் ,

உடைய நாதனே அப்பனே  போற்றி  = என்னை ஆளாக உடைய தலைவனே என் தந்தயே   வணக்கம்,

எனக்கு ஆவது பற்று =  அடியேனுக்கு ஆதரவாக  வுள்ளதாகிய  பற்றுக்கோடு,

இனி நின் அல்லால் மற்று ஒன்று உடையனோ = இப்பொழுது நின்னையல்லாமற் பிறிதொரு பொருளை யான் உடையனோ,

பணி  =  கூறியருள்வாயாக ,

போற்றி  =  வணக்கம்  என்பது.

விளக்கவுரை :-  இத் திருப்பாட்டில்  விளியுருபு ஏற்று நிற்கும் சொற்றோறும் வணக்கப் பொருள் குறித்துப் “போற்றி” பல கூறப்பட்டன, ஆண்டவன் இடத்துள்ள அளப்பரிய ஆர்வத்தல் என்க.

                  அந்தமும் என்புழி, எண்ணும்மை  தொக்கு நின்றது . எல்லாப் பொருள்களும் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் காரணன் ஆதல் பற்றி . இறைவனை, “ஆதியும் அந்தமும் ஆயினாய்”ஏன்றார்.  “ஈறாய் முதல் ஒன்றாய்” என்பது தமிழ் மறை.

மாயையை அழி வில் பொருள்களில் ஒன்றாகக் கொண்டு , அதனிடத்தினின்றும் உலகம் தோன்றி, அதனிடத்தே ஒடுங்கும் என்று சைவ நூல் கூறும் . அங்ஙனம் மாயையில் தோன்றி ஒடுங்கும் உலகங்களை, இறைவன் இடத்துத் தோன்றி ஒடுங்கின என்றல் எங்ஙனம் பொருந்தும் எனின், மாயையும் உலகமும் வித்தும் முளையும் போலும் ஆதலின், வித்துக்கு ஆதாரமாகிய நிலம் குளிர்ந்த வழி, அதன்கண்  வித்துள்ளதாக, அதனினின்றும் முளை தோன்றியவாறு  போல, மாயை, தனக்கு ஆதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சக்தியின் கண் உள்ளதாய் நிற்றலால், அச்சத்தி சங்கற்பித்த வழி. வினைக்கு ஈடாகத் தோற்றுவிக்கும் என்பவாதலிற் பொருந்தும் என்க. இது, கிழங்கினின்றும்   தோன்றிய தாமரையைச் சேற்றினின்றும் தோன்றியது என்னும் பொருள்படப் பங்கயம் என்று கூறுதலானும் அறியலாம். இக் கருத்துப் பற்றியே “உலகவனுருவிற்றோன்றி யொடுங்கிடும் “ என்று சிவஞான சித்தி கூறியதூம் என்க. இது பரப்பொருள் இலக்கணங்களுட்  சிறந்தது .

            இவ்வியல்பிற்றாகிய பரம்பொருளைத் தேவரின் ஒருவன் என்று அறியாதார் கூறுப. அது பொருந்தது என்பதைத் தெளிவுறுத்தற்பொருட்டு, “உம்பரார் தம் பராபரா” என்றார். “தேவரினொருவனென்பர் திருவுருச் சிவனைத் தேவர் , மூவராய் நின்றதோரார்” என்று ஞான நூல் தெளிவுறுத்ததூம்  அறிக. பராபரன்  –  மேலானவனும் தனக்கு மேல் பற்றொரு பொருள் இல்லாதவனுமாம் என்னும் பொருட்டு. “யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் “என்று இறைவனையும் , “யாவர்க்கும்  கீழாம் அடியேன் “ என்று தம்மையும் அடிகள் கூறுவாராதலின் , அக்கருத்துத் தோன்ற, அடுத்து , “யாரினுங்கடைய னாயினேன் “ எனவும் , அத்துணை உயர்ந்தோன் , இத்துணை இழிந்த தம்மைப்  பணிகோடற்குக் காரணம்  அளப்பரிய கருணையே என்பார், “என்பெருங்கருணையாளனே “ எனவும் கூறினர் . கருணை செய்தற்கு உரிய தகுதி தம்பால் இல்லை எனக் கொண்டு, அங்ஙனம் இல்லாத தம்பால் நிகழ்ந்தமையால் ,அக்கருணை பெரிதாம் என்பார், “பெருங்கருணை “ என்றார். பெருங் கருணையாளனாக இருந்தமையா னன்றே, சிறியேனாகிய என்னை நினக்குத் தொண்டனாக்கிப் பணி கொண்டாய் என்பார்,” என்னை நின் அடியானாக்கினாய் “ என்றார்.

             இனி, முடிவாகத் தாம் விண்ணப்பம் செய்து கொள்ளும் செய்திக்கு ஏற்ப, ஆண்டவனை விளி கொள்ள முற்பட்டு ,”உடைய நாதனே அப்பனே” என்றார். ஆண்டவன் , தன்னை அடியன் ஆக்கியபடியால், என்னை ஆளாகவுடைய தலைவனே எனவும், அப் பெருமானது பேரானந்தப் பெருஞ் செல்வ நுகர்ச்சிக்கு மகன்மை முறையில் உரிமை தமக்கு உண்டு எனக் கொண்டு , “அப்பனே”எனவும் கூறுவார் ஆயினர்.

              இதன் முன்னைத் திருப்பாட்டில் “நச்சுமாமர மாயினுங் கொலார்  நானும் அங்ஙனே “ என்றதனால், தம்மைக் கைவிடல் ஆகாது என்று விண்ணப்பம் செய்து கொண்டவர், எக்காரணத்தாலாவது ஒருகால் என்னை நீ ஒதுக்கத் திருவுளங்கொண்டாலும், பற்றிய நின்னை யான் எவ்வாறு விடுவேன்  விட்டால் , வேறு பற்றுக் கோடு  நின்னையன்றி யாதுளது ? அங்ஙனம் ஆதரவாகவுள்ள  பற்றுக்கோடு பிறிது ஒன்று இருக்குமாயின், அஃது இன்னது என எனக்கு அறிவிக்கவேண்டிய பொறுப்பும் நின்பாலதே” என்பார், “நின்னலாற் பற்று  மற்றெனக் காவதொன்றினி யுடையனோ பணி “ என்றார். ஆவது – ஆதரவாக நின்று பயன் விளைப்பது . “இனி,’ என்றது ,என்னை அடிமை கொள்ளுதற்கு முன்னர்ப் பொய்யுலக  வாழ்க்கையில்  ஈடுபட்டு, அதனையே ஆதரவாகக்  கடைப்பிடித்தேன் ஆயினும் , அடியனாக ஆட்பட்ட இப்பொழுது என்னும் பொருள் தோன்ற  நின்றது . பணி யென்றதனால், யான் கடைப்பித்தேன் ஆயினும், அடியனாக ஆட்பட்ட இப்பொழுது என்னும் பொருள் தோன்ற நின்றது. பணி யென்றதனால், யான் கடைப்பிடித்தற்குரிய  நெறி பிறிதொன்று  உண்டெனினும் , அதனைக் காட்டுதற்கும் நீயே தலைவனாய் என்பது  போதரும் . “காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே” என்று தமிழ் மறை தெளிவுறுத் தருளியதூங் காண்க .

                இத் திருப்பாட்டில்  அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் இறைவனது முழு முதல் தன்மையும் , அதனினின்றும்  படிப்படியாக உயிர்த்தொகுதிகளுக்கு  நலம்  புரிதற்பொருட்டு எளிவரும் பேரருள் திறமும் தோன்ற, முன்னிலைப்படுத்து அழைத்திருத்தல்  அறிந்து இன்புறத்தக்கது . முதலில் ஆதியும் அந்தமும் ஆயினாய் என, உலகத் தோற்ற  ஒடுக்கங்களுக்கு காரணன் ஆதலாகிய முதன்மையும் , அடுத்து,” உம்பரார்தம் பராபரா “ எனத் தேவர்க்கு அணியனாம் பரம்பொருள் தன்மையும், பின்னர், “என் பெருங் கருணையாளனே” என, மக்கட் பிறப்பினரிடத்து  அருளுடையனாந் தன்மையும் ,அதன்பின் , உடய நாதனே “ என, அன்பர் பணி கொள்ள எழுந்தருளும் எளிமைத்தன்மையும் , முடிவில் ,”அப்பனே”எனத் தன் பேரின்பப் பெருஞ் செல்வத்திற்கு மகன்மை முறையில் உரிமையளிக்கும் தன்மையும்  புலப்பட  அருளியவாறு அறிக. செய்யுளாதலின் இம்முறை பிறழ்ந்து வந்தது .

                 இதன்கண், “ஆதியும் அந்தமு மாயினாய்” என்பது முதலிய விளியேற்று நிற்கும் சொற்களால் , உயிர்க்கு அதீதமாகிய ஆனந்தம் அருளும் வன்மையுடையான் சிவபெருமான் என்பதும் , “நின்னலார் பற்று மற்றினி யுடையனே” என்றதனால், அவனையன்றி , அப் பேறு பிறிதோர் ஆற்றல் பெற இயலாது என்பதும் பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதல் அறிக .

                                           ******************************************

பாடல் : 98 .

அப்ப  னேயெனக்  கமுத  னேஆ

னந்த  னேயகம்  நெகஅள்  ளூறுதேன்

ஒப்ப  னேயுனக்  குரிய  அன்பரில்

உரிய  னாயுனைப்  பருக  நின்றதோர்

துப்ப  னேசுடர்  முடிய  னேதுணை

யாள  னேதொழும்   பாளர்  எய்ப்பினில்

வைப்ப  னேயெனை  வைப்ப  தோசொலாய்

நைய  வையகத்  தெங்கள்  மன்னனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி  என்னைக் கைவிடின் நின்னையல்லாமல் பிறிதொறு  பற்றுக் கோடு  உடையனாக எங்ஙனம்  ஆவேன்  எனக்  கூறிய  அடிகள், அங்ஙனம்  ஆதரவற்ற  நிலையில் உள்ளவனாகிய அடியேனைப் பல்லாற்றானும் பாதுகாக்கும் உரிமையுடைய நீ,  இப் பொய்யுலக வாழ்க்கையில் நைய வைப்பது  முறையாகுமா என, இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-  எனக்கு அப்பனே  =  எனக்கு  அப்பனே,

எனக்கு அமுதனே =  எனக்குச் சாவா மருந்தாக வுள்ளவனே,

ஆனந்தனே  =  பேரின்ப மயமானவனே,

அகம் நெக அள் ஊறு  தேன்  ஒப்பனே  = உள்ளம் உருக  வாயூறுதற்கு ஏதுவாகவுள்ள  தேனைப்  போன்றவனே,

உனக்கு உரிய அன்பரில் உரியனாய் =  நினக்கு உரிமையுடைய  மெய்யன்பரைப்போல  யானும்  உரிமையுடையனாகி ,

உன்னைப் பருக நின்றது ஓர் துப்பனே  =  நின்னை நுகரும்படி எனக்குக் கிடைத்து நிற்பதாகிய ஒப்பற்ற  உணவாக  வுள்ளவனே,

சுடர் முடியனே  =  ஒளி விளங்கும் திருமுடியை யுடையவனே,

எங்கள் மன்னனே  =  அடியேமாகிய  எங்கள் அரசே,

தொழும்பாளர்  துணையாளனே  =  மெய்யடியார்க்கு  உண்மைத்  துணையாக   வுள்ளவனே ,

தொழும்பாளர் எய்ப்பினில்  வைப்பவனே  =  தொண்டர்க்குத்  தளர்ந்த நிலையில்  சேமநிதியாக  வுள்ளவனே,

வையகத்து  என்னை  நைய  வைப்பதோ  =  இப் பொய்யுலக வாழ்க்கையில்  அடியேனைத்  துன்புறும்படி வைத்தல்  முறையாகுமா? ,

சொல்லாய்  =  கூறியருள்வாயாக என்பது.

விளக்கவுரை :- இத் திருப்பாட்டில் அடிகள் ஆண்டவனைத் தமக்குச் சிறப்புரிமையில் தொடங்கி , அப்பெருமானுக்கும் தம்மை உள்ளிட்ட அடியார்க்கும் உள்ள இயைபுகளை மேன்மேலும் விளக்கி விளித்தல் முகமாகக் கூறித் தம் நாவையும் நெஞ்சத்தையும்  அருளமுதில் நனைத்து இன்புறுகின்றார் . “எனக்கு” என்பதை முன்னும் பின்னுங் கூட்டுக. அதுவென் வேற்றுமை  யுயர்தினைத் தொகைவயின் அது வெனுருபு  கெடக் குகரம் வருமே “ என்னும் விதிப்படி, “எனக்கு அப்பனே”என்னப்பட்டது. தந்தை , தன் குடிப்பொருளாகிய உடைமைக்கு உரியவனேயன்றி உடைமையாகான் . மெய்யன்பர்க்கு ,ஆண்டவன் நுகர் பொருளாகிய உடைமையும் அதற்கு உடையானும் ஆவன்  ஆதலின் , அடுத்து , “எனக்கு அமுதனே” என்றார்.  அமுதம் – நுகர் பொருளாகும் . ஆகவே, உடையானும் உடைமையும் அப் பெருமானே என்பது பெறப்பட்டவாறு அறிக.

          அமிர்தம் என்னும் சொல் , சாவைத் தவிர்ப்பது  என்னும் பொருளதாகலின், சாவா மருந்து எனப்பட்டது; சாதற்கு ஏதுவாகிய பிணி, மூப்பு முதலியவற்றைப் போக்குமே யொழிய , உண்மையில் சாதலைத் தவிர்ப்பதன்று . “விண்ணொரமுதுண்டும்  சாவ” என்று சிலப்பதிகாரம் கூறும் . இதனால் , இங்ஙனம் கூறியது உபசாரமே யன்றி உண்மையன்று  ஆதலின் , அமுதம் ஒரு கால எல்லைவரை பயன்செய்தலானும், இறைவன், என்றும் உலப்பிலா இன்பமயமாக வுள்ளான் ஆதலானும் , அதன்மேல் ,”ஆனந்தனே” என்றார்.

             சிவானந்தத்திற்கு, உலகப் பொருள்களில்  நெகிழ்ச்சியும் , மிக்க இனிமையும் உடைய தேனை ஒப்புக் கூறுதல் உண்டு . “உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து” என்பதும் அடிகள் அருண் மொழியாகும். அம் முறையில் ,”தேன் ஒப்பனே” என்றார்.  அள்ளூறல் – வாயூறல் . “அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் “ என்புழியும் அப் பொருட்டாதல் அறிக. நினைக்குங்கால் நெஞ்சம் உருகுதற்கும் ,வாயில் அமிழ்தம் ஊறுதற்கும் ஏதுவாகவுள்ளது என்பார், “அகநெக அள்ளூறு தேன் “ என்றார். “நினைத்தொறும்  காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் , அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும் “ என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறிய அருண் மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது.

               இனி, “அள்”என்பது செறிவு என்னும் பொருளாதலின், “அள்ளூறுதேன்”என்பதற்கு நெருங்கிச் சுரக்கும் தேன் எனப் பொருள் கோடலும்  ஆம்.  நெருங்கிச் சுரத்தலாவது, இடையறாது  ஒழுகுதல் . இங்ஙனம் நெஞ்சம் உருக , வாயூறலுண்டாக, அத் தேன் இடையறாது ஒழுகுவதாயினும், அதனைப் பருகும் தகுதியும் இருந்தாலன்றி அதனாற் பயன்பெற  இயலாது ஆதலின் , அதற்கு உரிய தகுதியை  ஆண்டவன் தமக்கு உதவிய முறையைப் பின்வறுமாறு புலப்படுத்துவாராயினர் .

              ஆண்டவனது பேரானந்தப் பெருஞ் செல்வத்தை அநுபவித்தற்கு , உரிய உரிமையுடைய மெய்யன்பர் யென்பார் , “உனக்குரிய அன்பர்”என்றார். இல் என்னும் ஐந்தனுருபு , உவமப்பொருட்டு . ஆண்டவனே,நின்னை நுகர்தற்கு உரிய  மெய்யன்பரைப்போல என்னையும் உரிமையுடையனாக்கினாய் ஆதலின் , ஆயினேன் என்பார் , “அன்பரிலுரியனாய்”எனவும் , அவ் வுரிமை கொண்டு யான் நுகர்தற்கு உரிய சிறந்த உணவுப்பொருள்  ஆயினை என்பார், “உனைப் பருக நின்றதோர் துப்பனே” எனவும் கூறினர். பருக நின்றது  – உண்ணுதற்குச் செயப்படு பொருளாக நின்றது . நின்றதென்பது  துப்பன் என்பதன் பகுதியாகிய துப்பு என்பதனோடு இயையும் , பருகுதல் – குடித்தல், நுகர்தல்  என்னும் பொருளை உணர்த்தும் . “பருகுவன் பைதனோ யெல்லாங் கெட “ஏன்னும் குறளில் நுகர்தற் பொருட்டாதல் அறிக. துப்பு – உணவுப்பொருள் . “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி”  என்புழி அப் பொருட்டாதல் அறிக.

                “பின்னர் எங்கள் மன்னனே” என்றதற்கு ஏற்ப அரசுரிமை அடையாளங்களாகிய முடி , குடை , கோல்  என்பவற்றுட்  சிறந்த முடியை உடையான் என்பார், “சுடர் முடியனே” என்றார். இம் முடி,தெய்வ அரசுக்கு உரியதாகலின் , சுடர் என்னும் அடை மொழி புணர்க்கப்பட்டது . உலகில் முடியுடை அரசனைப் பேரரசன் என்பர் . ஈண்டுக் கடவுட் பேரரசைக் குறிப்பிட்டபடியாம் . “சுடர் முடியனே” என்பதை அடுத்து , “எங்கள் மன்னனே” என்பதை இயைத்துக் கொள்ளல் வேண்டும் . எங்கள் என்றது உலக நிலைக்கு உரிய பொருட் செல்வமன்றி , வீட்டு நிலைக்கு உரிய அருட் செல்வத்தை உடைய மெய்யன்பரை  உளப்படுத்துக் கூறியதாகும் . துணை புரிதற்கும், எய்ப்பில் வைப்பாக நின்று பாதுகாத்தற்கும்  முடியுடைத் தெய்விகப் பேரரசனாக அமைதல் அரிதாகலின், இறைவனை இங்ஙனம் கூறலாயினர்.

                  உயிர்த் தொகுதிக்கு , உலகத்திற் காணப்படும் சுற்றம் , துணை எல்லாம், அவ்வுயிர், வினைக்கு ஈடாக எடுத்த உடலைப் பற்றி உண்டானவை யாதலின் , அவ்வுடல் ஒழி வில் அவை எல்லாம்  ஒழிந்துபோம் . அதனால், அத்துணை உடற்றுணை  யாகுமன்றி  உயிர்த்துணை ஆகாது. உயிர்க்கு உண்மைத்துணை பரம்பொருளாகிய இறைவனே ஆவான் . இவ் வுண்மையை உள்ளவாறு அறிவார் மெய்யடியார் ஆதலின் , “தொழும்பாளர் துணையாளனே” என்றார். தொழும்பாளர் என்பதை முன் கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும். மெய்த் தொண்டர்க்குச் சிறப்பு முறையில் துணையாளனாக இருத்தலோடு , அவர்க்குத் தளர்ச்சி நேர்ந்த இடத்து வைப்பு நிதி  போலவும் உதவும் இயல்பினன் என்பது குறித்து . “தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே”என்றார். இன்றியமையாமை  நேர்ந்தவிடத்து  எடுத்துப் பயன் படுத்தற்பொருட்டு  வைக்கப்பட்ட நிதியை வைப்பு நிதி என்ப. உலகப்பொருள் எல்லாம் அழியும் இயல்பினவாதலின் , என்றும் அழியாப் பொருளாக நின்று பயன்செய்வோன் இறைவன் என்பது குறிக்கொண்டு இவ்வாறு கூறினர்.  இங்ஙனம் சிறந்த துணையாதலையும். எய்ப்பில் வைப்பதாலையும்  வேறொரு படியாக ,” அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை” என்று ஆளுடை அரசர் அருளிச் செய்தமையாலும் அறிக. ஈண்டு அடியார் என்பதை முன்னரும் இயைத்து, அடியார்க்கு அருந்துணையே , அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை எனக் கொள்ளல் வேண்டும்.

                இத்துணையும் ஆண்டவன் பெருமைக் குணங்களையும், தமக்கும் அப் பெருமானுக்கும் உள்ள இயைபுகளையும் குறிப்பிட்டு முன்னிலைப் படுத்து, இறுதியில், தம் வேண்டுகோளை வெளிப்படையில் கூற முற்படுகின்றார் .இத்துணைப் பேரருளாளனாகிய நீ என்னை ஆட்கொண்ட பின்னரும், இப்பொய்யுலக வாழ்க்கையில்  இருத்தி, யான் துன்பம் உறச்செய்தல் முறையாகுமா என்பார், “எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து “ என்றார். வைப்பது என்பதன்பின் , முறை என்னும் சொலை வருவித்து உரைத்தல் வேண்டும் . ஓகாரம் வினாப் பொருட்டு ,வையக வாழ்க்கை , இன்பனும் துன்பமும் விரவிய தாகலானும் , அதுவும் நிலையுடையதன்று ஆகலானும் , அதுபற்றி  வருந்துவேன் அல்லேன் ; இவ்வுலக வாழ்க்கையினும் சிறந்த வீட்டிப வாழ்க்கை ஒன்று உண்டு எனக் காட்டி ,  அதன்கண்  தலைப்படச் செய்யாமல் விட்டு மறைந்தது , பசியாற் களைத்து உறங்கும் ஒருவனை எழுப்பி, உணவு இல்லை என்று கைவிட்டு அகறலை ஒக்கும் ஆதலின் , அது குறித்து வருந்தலானேன் என்பார், “வையகத்து நைய வைப்பது” என்றார். வீட்டின்ப நோக்கு உடையார்க்கு இவ்வுலகியல் துன்பமேயன்றி , இன்பமும் துன்பமுமாம். ஆதலின் இவ்வாறு கூறலாயினர்.

                    இதன்கண்,  “ஆனந்தனே”  , “அகம் நெக அள்ளூறு  தேன்  ஒப்பனே “ , “உன்னைப் பருக  நின்றதோர்  துப்பனே “ என்னும் சொல்லானும்  சொற்றொடர்களானும்  ஆண்டவன் அதீதமாகிய ஆனந்த வடிவினன் என்பதும் , அதுவே தமக்குச் சிறந்த பேறாம் என்பதும் பெறப்படுதலின்  ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றுதல் அறிக.

                                         **************************************

பாடல் : 99 .

மன்ன  எம்பிரான்  வருக  என்னெனை

மாலும்  நான்முகத்  தொருவன்  யாரினும்

முன்ன  எம்பிரான்  வருக  என்னெனை

முழுதும்  யாவையும்  இறுதி  யுற்றநாட்

பின்ன  எம்பிரான்  வருக  என்னெனைப்

பெய்க  ழற்கண் அன்  பாயென்  நாவினால்

பன்ன  எம்பிரான்  வருக  என்னெனைப்

பாவ  நாசநின்  சீர்கள்  பாடவே.

கருத்துரை :-   அடியேனைப்  பாதுகாக்கும்  உரிமையுடைய  எம் பெருமானே , இவ்வுலக  வாழ்க்கையில்  வருந்தும்படி  என்னை  வருத்தலாகாது  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  தெரிவித்துக்  கொண்ட  அடிகள் , இனி, இவ் வாழ்க்கையினின்றும்  விடுவித்து ,நினக்கு  அணுக்கனாய் , அன்பு  பூண்டு , நின்  புகழ்களைப்  பாடி  இன்புறுதற்  பொருட்டு , அடியேனை  வருக  என்று  பணித்தருளல்  வேண்டும்  என்று  இத்  திருப்பாட்டில்  விண்ணப்பஞ்  செய்து  கொள்ளுகின்றார்.

பதவுரை :-   மன்ன  எம்பிரான்  எனை  வருக  என்  =  என்றும்  நிலை  பேறுடையவனாகிய  எங்கள்  தலைவனே  அடியேனை  வருக  என்று  கட்டளையிட்டருள்வாயாக,

மாலும்  நான்  முகத்து  ஒருவன்  யாரினும்  முன்ன  எம்பிரான்  = 

திருமாலும்  பிரமனும்  முதலிய  மற்றைத்  தேவர்  எவரினும்  முன்னவனாகிய  எங்கள்  தலைவனே ,

எனை  வருக  என்  =  எனை  வருக  என்று ,

யாவையும்  முழுதும்  இறுதி  உற்ற  நாள்  =  எல்லா  உலகங்களும் முற்றும்  அழிவு  எய்திய  பேரூழிக்  காலத்தின்  ,

பின்ன  எம்பிரான்  =  பின்னும்  அழிவு இன்றி  இருப்பவனாகிய  எங்கள்  தலைவனே ,

எனை  வருக  என்  =  என்னை  வருக  என்று ,

பாவநாச  எம்பிரான்  =  பாவத்தை  ஒழிப்பவனாகிய  எங்கள்  தலைவனே,

பெய்  கழற்கண்  அன்பு  ஆய்  பன்ன  =  கழல்  அணிந்த  நின்  திருவடிக்கண்  மெய்யன்பு  உடையனாய்ப்  புகழ்  பாராட்டவும் ,

நின்  சீர்கள் பாட  =  நின்  சிறப்புக்களை  இசையுடன்   பாடவும் ,

எனை  வருக  என்  =  அடியேனை  வருக  என்று  கட்டளை  யிட்டருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  சிவபெருமானது  பரம் பொருள்  தன்மையை , உலகத்தோற்றத்திற்கு  முன்னும்  பின்னும்  என்றும்  உள்ளான் என்று  கூறுமுகமாகத்  தெளிவுறுத்  துரைத்து , முன்னிலைப்படுத்து , அடியேனை  நின்  பக்கல்  அணுகக்  கட்டளையிடல்  வேண்டுமென்று  கூறுவாராய் ,முதலில்  என்றும்  நிலைபேறுடைமையைக்  குறித்து , “ மன்ன  வெம்பிரான்  வருக  வென்னெனை  “ என்றார். மன்னுதல் – நிலைபெறுதல் . மன்னன்  எனும்  சொல்  விளியுறுபு  ஏற்று , மன்ன என்றாயிற்று . இனி, மன்ன  என்பதற்கு  அரசே  எனப்  பொருள்  கோடலுமாம்.

                என்றும் நிலையுதலையுடைய  கடவுள்  முதல்வனாகிய அவ்  விறைவனே  எங்கள்  தலைவனாயினன்  என்று  அப்பெருமானது  சார்புண்மை  பற்றிய  மகிழ்ச்சியால்  அடுத்து, “எம்பிரான்” என்றார். பின்வருவனவற்றிற்கும்  இஃதொக்கும்.  “என்னை வருக என் “என்புழி,  என்பாய்  என்பது , விகுதியும்  இடைநிலையும்  புணர்ந்து  கெட்டு , “ என்”  என்றாயிற்று .  ஆகவே,  என்று  கட்டளையிடுவாய்  என்பது  பொருளாகும் .  பின்வருவனவற்றையும்  இவ்வாறே  கொள்க. 

                  இறைவன் என்றும்  நிலையுதல் உடையவன் என்பதை விளக்கிக்  கூறுமுகமாக , ‘” மாலும்  நான்முகத்  தொருவன் யாரினும்  முன்ன”என்றார்.  தேவர், மக்கள் முதலிய  எல்லா  உயிர்த்  தொகுதிகளுக்கும் முன்னோன்  ஆவான்  என்பதை , ஆக்கல் , அளித்தல் , ஆகிய  தொழில்  தலைவரைக்  குறிப்பிட்டு , அன்னாரையும்  ஆக்கி  யளிக்கும்  தலைவனாய்  முற்பட்டவனாவான்  என்றார்.  நான்முகத்தொருவனும்  என்புழி,  எண்ணும்மை தொக்கு  நின்றது.  யாரினும்  என்றது  ,அன்னாரை  யுள்ளிட்ட மற்றை  இந்திரன்  முதலிய  தேவரையும்  மக்கள்  முதலியோரையும்  குறித்து  என்க.  உயிர்களின்  தோற்றத்திற்குக்  காரணிகனாய்  முற்பட்டவன் என்பது  கருத்து .

                    உலகம்  எல்லாம்  சிறிதும்  எஞ்சுதல்  இன்றி  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்தென்பார், “முழுதும்  யாவையும்  இறுதி உற்ற  நாள்  “  என்றார். எல்லாம்  ஒடுங்கிய  மகா  சங்காரத்தின்    பின் , இறைவன் ஒருவனே  அழிவின்றி  நிற்பனாதலின் , பின்ன”  என்றார். பின்ன  என்பது  பின்னாக  எஞ்சி நிற்பவனே  என்று  பொருள்படும் . “ஓதத்தொலிமடங்கி  யூருண்டேறி  யொத்  துலக மெல்லாம்  ஒடுங்கிய பின் வேதத்  தொலிகொண்டு  வீணை  கேட்பார். வெண்காடு  மேவிய  விகிர்த்தனாரே  “  என்பதும்  இக்கருத்துப்  பற்றியதாகும். விண்ணுலக  முதலிய  எல்லா  உலகங்களும் , அறிவுடைப்பொருளும் , அறி வில்  பொருளும்  ஆகிய  இரு  கூறும்  கலந்தன  ஆதலின் ,அவ் வெல்லாவற்றிற்கும்   முன்னாவானும்  பின்னாக  நிற்பவனும்  இறைவனே  என்பதைப் புலப்படுக்கக்  கருதிய  அடிகள் , படைப்போன்  முதலியோரைப்  படைத்தலின்  முன்னவனாதலைத்  திருமால் ,நான்முகன்  முதலிய  அறிவுடைப் பொருள்களைப்  பற்றியும் , வித்தாகிய  மாயையும்  தன்  சக்தியின்கண்  ஒடுங்குதலின் பின்னவனாதலை, யாவையும்  முழுதும்  என  அறிவில்  பொருள்களைப்  பற்றியும்  குறிப்பிடுவார்  ஆயினர் . “ முன்னவன்காண்  பின்னவன் காண் மூவா  மேனி  முதல்வன் காண் “  என்னும்  அப்பர்  அருண் மொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.

                     இறைவனது  யாண்டும்  உண்மையைக் கூறிப் பின்  அப் பெருமானால்  உயிர்க்கு  உண்டாம்  பயனைப்  புலப்படுத்துவாராய் , “பாச  நாச “ என்றார். வீட்டின்பத்திற்குப்  பாவத்தைப்  போலவே  புண்ணியமும்  தடையாம்  என்ப.  அங்ஙனமாகவும் , இரண்டையும்  ஒழிப்பவனே  என்னாது , பாவத்தை  மாத்திரம்  ஒழிப்பவனே  என்றது  என்னை  யெனின் , புண்ணியமும், பாவமும்   பாலும்  நீரும்  போலும் என்பதும், சிவஞானமாகிய நெருப்பிடைக்  காய்ச்சப்படுங்கால் , பாலோடு  கலந்த  நீர்  முதலிற்  சுவறுதல் போலப்  பாவம்  முதலில்  தேய்ந்து  ஒழியும்  என்பதும்  பின்னர்  பால்  சுவறி  நெய்யாகிப்  பயன்  விளைத்தல்  போலப்  புண்ணியம்  உலகியலினின்றும்   வேறுபட்டுச்  சிவ புண்ணியமாக  நின்று  , சிவக்  காட்சியைப்  பயப்பிக்கும்  என்பதும்  ஆன்றோர்  அநுபவத்திற்  கண்ட  உண்மைகளாம் . “பண்ணிய  தழல்  காய்  பாலளா  நீர்  போற்  பாவமுன்  பறைந்து  பாலனைய , புண்ணியம்  பின் சென்ற  றிவினுக்  கறிய”  என்னும்  திருவிசைப்பாவானும்  இவ்வுண்மை  புலனாதல்  அறியலாம் . ஆகவே,  பாவ  நாசன்  என்று  கூறுதலே  அமைவுடைத்து  என்பது.

        அங்ஙனமாயின் , அவ்விரண்டற்கும்  பொதுவாகப்  பிற  இடங்களில்  , “கன்ம  நாசன்” என்று  கூறுதல்  எங்ஙனம்  அமையும் எனின்  , அக் கன்மத்துள்  அடங்கிய  நல்வினை , “இருள்  சேரிரு வினை” யின்பாற்  படுமாதலின்  பொருந்தும் என்க. உயிர்  தற்பயன்  கருதாத  நிலையில் ,அது  சிவ  புண்ணியமாகும் .  ஆதலின்  , கன்ம நாசன்  என்னும்  இடத்துச்  சிவ  புண்ணியம்  அடங்காது  என்பது  கருத்து .

            இனி,  அடிகள் இறைவனை  நோக்கி  ,”வருகவென் எனை” என்று பல முறை  கூறியதன்  பயனை  வெளிபடுத்துக்  கூற  முற்படுகின்றார் . முதலில்  ஆண்டவன்  திருவடிக்கண்  மெய்யன்பு  உடைமையும் , அதனால் , அப்பெருமானுடைய  புகழ்  மொழிகளைத்  தம்  நாவினாற்  பாராட்டுதலும் , அப்  பாராட்டு  முதிர்ச்சியில்  உள்ளம்  உருகி  அவன்  சிறப்புக்களை இசையுடன்  கலந்து  பாடுதலும்  ஆகிய  இவற்றையே  ஈண்டுப் பயனாக  விண்ணப்பித்துள்ளார் . ஆண்டவன்  திருவடி  இன்பமே  தமக்கு  முடிந்த  பயனாயினும்  , அதனைக் குறிப்பிடாமல் , “என்  கடன்  பணி  செய்து  கிடப்பதே” என்றபடி , அதற்கு  உரிய  சாதனங்களாகிய  தம்  கடமைகளையே  குறிப்பிட்டனர் . அவ்வீட்டின்பம்  ,”தன் கடன்  அடியேனையுந்  தாங்குதல் “  என்றபடி , அப்பெருமானது  கடமையாக  அருளத்  தக்கது  என்று  ஈண்டுக்  கூறாதொழிந்தார்  என்பது.  சாதனங்களுள்  பன்னுதலும் , பாடுதலும் , முறையே  அருச்சித்து  வழிபடுதலையும்   துதிபாடலையும்  குறிக்கும் என்பதுமாம் . “பன்னவும், பாடவும்  “  என்புழி, எண்ணும்மைகள் தொக்கு  நின்றன .

                 இதன்கண், முதலும்  ஈறுமாக  விளங்கும்  ஆண்டவன்  திருவடிக்கண்  மெய்யன்பு  வைத்து  வழிபட்டு  ஒழுகுதற்கு  அவனால்  அழைக்கப்படல்  வேண்டுமென்பதும் , அவ்  அருளழைப்பே   அதீதமாகிய  இன்பப்பேற்றிற்கு  ஏதுவாகும்  என்பதும்  பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                            ********************************************

பாடல் : 100 .

பாட  வேண்டுநான்  போற்றி

பாடி  நைந்துநைந்   துருகி  நெக்குநெக்

காட  வேண்டுநான்  போற்றி  அம்பலத்

தாடு  நின்கழற்  போது  நாயினேன்

கூட  வேண்டுநான்  போற்றி   இப்புழுக்

கூடு  நீக்கெனைப்  போற்றி  பொய்யெலாம்

வீட வேண்டுநான்  போற்றி  வீடுதந்

தருளு  போற்றிநின்  மெய்யர்  மெய்யனே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இவ்வுலக  வாழ்க்கை யினின்றும்  என்னை  விடுவித்து , நின் பக்கலில் வரக்  கட்டளையிட்டருளல்  வேண்டுமென்று  இறைவனை நோக்கி விண்ணப்பம்  செய்துகொண்ட அடிகள் , அணுக்கனாயபின் , தாம்  எய்த  வேண்டிய முடிவான  பேறுகளை   அளித்தல்  ஆண்டவன்  கடமையாயினும் , வீட்டின்பத்தை  விரைவிற்  பெறும்  ஆர்வமிகுதியால்  இத்  திருப்பட்டில் தாமும்  வெளிப்படக்  கூறி  வேண்டுகின்றார்.

 பதவுரை :- நின்  மெய்யர்  மெய்யனே  =  நின்பால்  மெய்யன்புள்ள  அடியார்க்கு  மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

போற்றி  =  வணக்கம் ,

நின்னையே  நான்  பாடவேண்டும்  =  உன்னைப் பற்றியே  நான்  பாடவேண்டும் ,

நெக்கு  நெக்கு  உருகி  பாடி  நைந்து  நைந்து  நான்  ஆடவேண்டும்  = 

உள்ளம்  நெகிழ்ந்து நெகிழ்ந்து  உருகிப்  பாடிக்  கொண்டு  அவசமுற்று  யான்  கூத்து  ஆடல்  வேண்டும்

போற்றி  =  போற்றி,

அம்பலத்து  ஆடும்  நின் கழல்  போது நாயினேன்  நான்  கூட  வேண்டும் =

தில்லச் சிற்றம்பலத்தில்  திருக் கூத்தாடும்  நின்  திருவடி  மலரை  நாய்த்  தன்மையுடய  சிறியேன்  அடைதல்  வேண்டும் ,

போற்றி  = போற்றி,

என்னை  இப் புழுக்கூடு  நீக்கு  =  அது  குறித்து  அடியேனைப்  புழுக்களுக்கு  இடனாகிய  இவ்வுடலினின்றும்  விடுத்தருளல்  வேண்டும்,

போற்றி  =  போற்றி ,

நான்  பொய்யெலாம்  வீட  வேண்டும்  =  யான்  இப்பொய்யுலக  வாழ்க்கையைப்  பற்றிய  எல்லாவற்றையும்  விட்டொழிக்கச்  செய்தல்  வேண்டும் ,

போற்றி    =   போற்றி , 

வீடு  தந்து  அருளு  போற்றி  =  அழிவில்  இன்பமாகிய  வீட்டு  நிலையைத்  தந்து  அருளுவாயாக  வணக்கம்  என்பது.     

விளக்கவுரை :-    மெய்மையாகிய  அன்பும்  ஒழுக்கமும்  உடையார்  மெய்யர்  ஆயினும் , அம்  மெய்மை , சிவபெருமானைப்  பற்றியதாக  நிகழ்தல்  வேண்டும்  என்பது  குறித்து , “நின்  மெய்யர்”  என்றார். மெய்யர்க்கு  மெய்யனாதல் , ஆண்டவன்  உளன்  என  உணர்ந்து  நம்புவார்க்கு  உளனாய்  நின்று , அவர்  வேண்டுவன  அளித்துக்  காப்போனாதல் நின்னையே  என்புழி,  ஏகாரம்  தேற்றப் பொருட்டு , “நின்னையே  நான்  பாடவேண்டும்”  என்றதனால், பிற  தேவரையாதல் , மக்கள் முதலியோரையாதல் மறந்தும்  பாடலாகாது என்பதும், அதற்கும் நீயே  உதவி  புரிதல்  வேண்டும்  என்பதும்  போதரும்.  “பொய்மையாளரைப்  பாடாதே  யெந்தை  புகலூர்  பாடுமின்  புலவிர்காள் “ என்பர்  தம்பிரான்  தோழர்.  இது  மொழிப்  பணி.

        “நெக்கு  நெக்கு  உருகி” என்றதனால் , கல்லினும் வலிய நெஞ்சம் , ஆண்டவனை  நினைந்து நினைந்து , கரைந்து  உருகுதல்  வேண்டும் என்பது  போதரும் , “உருகு  மனத்தடியவர்கட்கு   ஊறுந்தேனை  “ என்பது  அப்பர்  அருண் மொழி . உள்ளம்  உருகிய  நிலையிலே  , இறைவன்  விளக்கம் உண்டாம்  என்பது  கருத்து.  நைதல் – தன்வயம்  அழிதல் . வலிய  நெஞ்சம்   இறைவனை  நினைந்து  முதலிற்  குழைதலும்  , பின்னர்  உருகுதலும் , முடிவில்  தன்வயம்  அழிதலும்  ஆகிய  மூன்று  நிலைகளையும்  எய்தும்  என்பது .  விரிந்த  நினைவுகள், குழைவு  தோன்றிய  நிலையில்  சுருங்குதலும் , சுருங்கி  எஞ்சிய  எண்ணங்கள் , உருகிய  நிலையில்  ஒடுங்குதலும்  , எண்ணங்களின்  ஒடுக்கத்தில் தன் நிலை அழிதலும்  உளவாம் என்க.  இஃது  உள்ளப்பணி.

            உருகி, நைந்து என்னும்  செய்தென்  எச்சங்கள், “சினை  வினை சினையொடு  முதலொடுஞ்  செறியும் “ என்னும்  விதிப்படி  முதலோடு  முடிந்தன.  தன் வயம்  அழிந்த  நிலையில்  ஆனந்தக்  கூத்து  நிகழும்  ஆதலின், “பாடி  நைந்து  நைந்து உருகி நெக்கு  நெக்கு  ஆடவேண்டும்  நான்” என்றார். ஆடல்  இன்றியும்  நிகழும்  பாடல்  பற்றி , முதலில்  நின்னையே  பாடவேண்டும்  எனவும்  , பாடலுடன்  நிகழும்  ஆடல்  பற்றி  , அடுத்துப்  பாடி  ஆடவேண்டும்  எனவும்  கூறப்பட்டன. இது  மெய்ப்  பணி  .

             இங்ஙனம்  முக்கரணங்களும்  ஆண்டவன்  பணியில்  ஈடுபட்டு  நிகழ்தல்  அப் பெருமான்  திருவடி  நீழலில்  இயைதற்  பொருட்டாம்  என்பார், “அம்பலத்தாடும்  நின்  கழல்  கூட  வேண்டும்”  என்றார் . ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  உபதேசித்து  மறைந்த  பொழுது, “நாயினேனை  நலமலி  தில்லையுட் கோலமார்தரு  பொதுவினில்  வருகெனக்”கட்டளையிட்டனன்  எனக் கூறுவார்  ஆதலின்,  ஆங்கு  வரப்பணித்த  குறிப்பினை  உணர்ந்த  அடிகள், ஈண்டு  தில்லையம்பலத்துத்  திருக் கூத்தாடும்  நின்  திருவடி  அடைதல்  வேண்டும்  என்று  கூறுவாராயினர்

                 கழற்போது – திருவடி மலர்.. தூய  மலரிற்  கூடுதற்குத்  தடையாக, இவ்வூனார்  புழுக்கூட்டில் இருக்கலாமா? இதனை  விரைவிற்  கழித்தருளல்  வேண்டும்  என்பார், “இப் புழுக்கூடு  நீக்கு  எனை” என்றார்.  சுட்டு, இழிவு  கருதிற்று  .  ஆண்டவன்  திருவடி  மலர் , சிவஞான  மணத்திற்கும் , பேரின்பத் தேனுக்கும்  இருப்பிடனாகும்.  உடல் , முடை நாற்றத்திற்கும்  புழுக்களுக்கும்  உறைவிடனாகும் .  ஆதலின் , முதலில்  இழிந்த  இப் புழுக் கூட்டினின்றும்  நீக்கி  யருளல்  வேண்டும்  என்றார்  என்பது.

                    பொய்யெலாம்  என்பது,  அழியும்  இயல்பினவாகிய  இவ்வுலக  வாழ்க்கைக்கு  உரிய  பொருள்களைப்  பற்றி  உண்டாம் பல  திறத்து அவாக்களையும்  குறிப்பதாகும். “ அவாவென்ப  எல்லா  உயிர்க்கும்  எஞ்ஞான்றும், தவா அப்  பிறப்பீனும்  வித்து”  என்ப  ஆதலின்,  அவ் அவா  என்னைச்  சாராதபடி  , அவற்றை  ஒழித்து  அருளல் வேண்டும் என்றார். அவாவை  ஒழித்தலே  பிறவாமைக்கு  ஏதுவாம் ஆதலின், அதன் ஒழிவில்  , என்றும்  அழிவு  இல்லாத  பேரின்பப்  பெருவாழ்வு  ஆகிய  வீட்டு  நிலையை  அளித்து  அருளல்  வேண்டும்  என்பார், “”வீடு தந்தருளு “ என்று  முடிவாக  வேண்டுவார்  ஆயினர் .

                       வீட்டின்பப்  பேற்றிற்குச்  சாதனமாகிய  மெய்யன்பு, மன  மொழி மெய்கள்  தூயனவாய்,  இறைபணியில்  தலைப்படலால்  உண்டாம் என்பதும் , அம் மெய்யன்பினால்  எய்தப்படும்  இறைவன்  திருவடி  இயைபிற்குத்  தடையாகவுள்ளது  உடற்சுமை   யாதலின்,  அதுவும் , அதுபற்றி  உண்டாய  அவாவும்  ஒழிக்கப்படல் வேண்டும்  என்பதும்  , அவ்வொழிவில்  சாத்தியமான  வீட்டின்பம்  எய்தலாம்  என்பதும் ,அடிகள்   வேண்டுகோள்  முகமாகக்  கூறிய  இத் திருப்பாட்டால்  நன்கு அறியத்தக்கனவாம்.

                           இத்  திருச்சதகத்  திருப்பாட்டுக்கள்  எல்லாவற்றிலும்  பரந்து கிடந்த பொருள்  அனைத்தையும்  இவ்விருதித்  திருப்பாட்டில்  சுருங்கச்  சொல்லி  விளங்க  வைத்திருக்கும்  அருமை  உணர்ந்து  இன்புறத்தக்கது . இறுதியில் , “மெய்யர்  மெய்யனே  “ என்றது , இத் திருச்சதகத்தின்  முதல் திருப்பாட்டாகிய  , “மெய்தான்  அரும்பி”  என்பதன்  முதலொடு  இயைந்து , அந்தாதித்  தொடையாயினமை  அறிக . இங்ஙனம்  “மெய்” யென்னும்  சொற்றொடர்  நிலையே  அன்றி,  முக்கரணங்களும் இறைவன்  வயப்படல்  வேண்டும்  என்னும்  இத் திருச்சதகத்தின் முதல்  திருப்பாட்டின்  கருத்தாகிய  பொருள்தொடர்  நிலையும்  இத் திருப்பாட்டில்  அமைந்திருத்தல்   உணர்ந்து  இன்புறத்தக்கது .

                            இதன்கண் ,”பாட வேண்டும்” , “நைந்து  நைந்துருகி  ஆடவேண்டும்”  என்பனவற்றால் பத்தியின்  இயல்பும்  “இப்புழுக்கூடு நீக்கு “, பொய்யெலாம்  வீட வேண்டும் “  என்பனவற்றால்  வைராக்கியத்தின்  இயல்பும்  பெறப்படுதலின் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும் , அவா  வொழித்து , வீடுதந்து  அருளல்  வேண்டும் என்றதனால் ,  அதீதமாகிய  இன்பநிலை  பெறப்படுதலின்,  ஆனந்தாதீதம்   என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் புலனாதல்  அறிக.

                     திருவாதவூர்  அடிகள்  அருளிச்  செய்த  திருவாசகத்  திருமறைக்கண்  உள்ள  திருச்சதகத்திற்குப்  பாண்டி வள நாட்டில்  , பூங்குன்ற  நாட்டுத்  தலை நகராகிய  மகிபாலன் பட்டி , மகாமகோபாத்தியாய  முது பெரும்  புலவர்  , பன்டிதமணி  மு .  கதிரேசச்  செட்டியார்  இயற்றிய  கதிர்  மணி   விளக்கம்  என்னும்  பேருரை  முற்றுப் பெற்றது .

                                                        திருச்சிற்றம்பலம்

                                                **********************************

Leave a comment