திருச்சதகம் பகுதி_3

திருச்சதகம்  —அறிவுறுத்தல்

பாடல் : 12 .

யானேதும்  பிறப்பஞ்சேன்

இறப்பதனுக்  கென்கடவேன்

வானேயும்  பெறில் வேண்டேன்

மண்ணாள்வான்  மதித்துமிரேன்

தேனேயும்  மலர்க்கொன்றைச்

சிவனேயெம்  பெருமான் எம்

மானேயுன்  அருள்பெறுநாள்

என்றென்றே  வருந்துவனே.

கருத்துரை :-  ஆண்டவன்  அடியாரைக்  குறித்து  மேற்கொள்வது அருளும், அடியார்  அவ்வருளைப்  பெறுதற்கு  மேற்கொள்வது  அன்பும்  ஆகும்.  இவ் வுண்மையை ,”ஆருளொடும்  அன்பொடும்  வாராப்  பொருளாக்கம்  புல்லார்  புரளவிடல்” என்று  உலகியலில்  வைத்துத்  திருவள்ளுவர்  கூறியதனாலும் , “யாஅமிரப்பவை , பொருளும் பொன்னும் போகமுமல்ல , நின்பால்  அருளும்  அன்பும்  அறமூன்றும் “  என்னும்  பரிபாடலானும்,  “எமக்கு  வீடு  பயக்கும்  நின்னருளும் , அதனை  யுண்டாக்க  நின்னிடத்து  யாம்  செய்யும் அன்பும் , அவ்விரண்டானும்  வரும்  அறமும்  ஆகிய  இம்  மூன்றுமே” யென்னும்  அதனுரைப்  பகுதியானும்  உணரலாம்.  இம் முறையில்  அடிகள்  இதன்  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவனிடத்து  இடையறாத  மெய்யன்பை  வேண்டி , அதற்கு அப் பெருமான்  திருவருட்  பேறு  ஒன்றே  எனத்  துணிந்து  , அதனை  இத்  திருப்பாட்டில்  வற்புறுத்து  வேண்டுகின்றார்.

பதவுரை :-  யான்  பிறப்பு  ஏதும்  அஞ்சேன்  =  யான்  பிறப்பிற்கு  ஒரு  சிறிதும்  அஞ்சுவேன்  அல்லேன்,

இறப்பதனுக்கு என் கடவேன் = இறத்தற்கு என் செய்ய வல்லேன்,

பெறில்  வானேயும் வேண்டேன் =  எளிதிற் பெறக்கிடைப்பது விண்ணுலகமே  ஆயினும்  விரும்பேன் ,

மண் ஆள்வான் மதித்தும் இரேன்  =  நிலவுலகத்தை ஆளுதற்கு  நெஞ்சத்தால் நினைந்தும்  இரேன்,

தேன்  ஏயும்  மலர்க்கொன்றைச்  சிவனே  = தேன்  பொருந்திய  கொன்றை  மலர்மாலையையுடடைய  சிவபெருமானே ,

எம் பெருமான்  =  எங்கள்  தலைவனே,

எம்மானே  =  எங்கள்  தந்தையே ,

உன்  அருள்  பெறும்  நாள்  என்று  என்று  வருந்துவன்  =  நினது  திருவருளைப் பெறுதற்குரிய  நன்னாள்  எப்பொழுது  வாய்க்கும்  என்று  நினைந்து  வருந்துகின்றேன்  என்பதாம் .

விளக்கவுரை :-  பிறப்பு  இறப்பு  இரண்டனுள்ளும் , பிறத்தலைத்  தவ  முதலிய  சாதனங்களால் ஒழித்தல்  கூடும் , வீட்டு  நிலையிற்  பிறவி  யொழிவுண்டாம்  என்பது  அறிவியல்  நூலிற்  காணப்படுவது . ஆதலின்,  இறந்தவன் வினையெச்சமுடையனாயிற்  பிறத்தலும் , அஃதிலனாயிற்   பிறவாமையும்  உடையவனாமென்பதும்  புலனாம் . பிறந்தவன்  இறத்தல்  எவ்வாற்றானும்  தவிர்க்க  ஒண்ணாததொன்று . இவ்  வுண்மையை , “இறப்பெனு மெய்மையை  இம்மை  யாவர்க்கும் ,  மறப்பெனும்  அதனின் மேற்  கேடு  மற்றுண்டோ” என்னும் கம்பர்  கூற்றானும் , “உடலுடையார்க்கு  இறப்பு  இயற்கை” என்று  காளிதாச  மகாகவி  விளக்கியவற்றானும்  அறிக.  “பிறந்தவர்  இறத்தலும் , இறந்தவர்  பிறத்தலும்  புதுவதன்று  “  என்பது , பற்றற்று  எய்தும்  வீடுபேறு  மிக  அரிய தொன்றாகலின் , அதனை  விட்டு , வினையெச்ச முடையாரே  உலகத்து  பெரும்பாலர்  என்னும்  உண்மை  கருதி,  அன்னாரைக்  குறிக்கொண்டு கூறியதாகும்.  ஆகவே, பிறப்பு  நேரின், இறப்பும்  உறுதியாதலானும் , அவ்விருவகைத்  துன்பமும்  பிறப்பு  ஒன்றானே  யுண்டாதலானும் , அவ்  விரண்டனுள்ளும்  பிறப்பே  பெரிதும்  அஞ்சத்தக்க தென்பது  போதரும் . இறப்பில்  வினையெச்சம் முளதாயின்,  அவ் வுயிர்கள் மீண்டு  பிறத்தலும் , அஃதினதாயின்  பிறவாமையும்  உண்டாம் . ஆதலின்,  பிறப்பிற்கு  அஞ்சும்  அத்துணை  இறப்பிற்கு  அஞ்ச  வேண்டிய  தின்று  என்பது  விளக்கமாம் . இவ்வுண்மையை  உளங்கொண்டே , அடிகள்  பெரிதும்  அஞ்சத்தக்கதாகிய  பிறப்பிற்கே  அஞ்ச  மாட்டேன்  எனின் , அத்துணை  அஞ்சத்தகாதது  ஆகிய  இறப்பைப்  பற்றி  யான்  செய்யக் கடவது  யாதுளது  என்பார் . “இறப்பதனுக்கு  என்  கடவேன்” என்றார்.  இத்  தொடர், இறத்தலைக்  குறித்து  யான்  செய்யத்  தக்கது  யாதுளது?. அஃதொரு  பொருளன்று  என்னும்  பொருளதாம்.  இஃது  இப் பொருட்டாதலை , “வளையார்  பசியின்  வருந்தார்  பிணியின்  மதனன்  அம்புக்கு , இளையார்  தனங்கண்டிரங்கி  நில்லாரிப்  பிறப்பினில்  வந்து , அளையார்  நரகினுக்கு  என்  கடவார்”  என்னும்  பட்டினத்து  அடிகள்  திருவாக்கினும்  காண்க. “நரகினுக்கு  என்  கடவார்” என்பது.  நரகத்தைக்  குறித்து  அவர்  செய்யக்கடவது  யாது?  ஒன்றுமில்லை;  அது  குறித்து  அஞ்சமாட்டா  என்பதே  கருத்தாத லறிக . இங்ஙனமின்றி , “இறப்பதனுக்  கென்கடவேன்” என்பதற்கு , இறத்தற்கே  அஞ்சுகின்றேன்  என்று  பொருள்  கூறின் , அஃது  “பிறப்பினோடிறப்பு  மஞ்சேன் “  என்னும்  அடிகள்  கருத்தோடு  முரணுதலால்  பொருத்தமின்று  என்பது  உணர்க .

       “வானேயும்  பெறில்  வேண்டேன் “  என்பதில் , ஏயும்  என்பது  ஆயினும்  என்னும்  பொருட்டு;  “கணமேயுங்  காத்தலரிது “ என்புழிக்  கணப்பொழுதாயினும்   என்று  பரிமேலழகர்  எழுதிய உரையானும்  உணர்க.  இனி,  ஏயும்  என்புழி, உம்மையைப்  பிரித்து , வானே  பெறினும்  என  இயைத்துப்  பொருள் கோடலும்  பொருந்தும் .  ஈண்டு , ஏகாரம்  உயர்வு  சிறப்பையும் , உம்மை  பெறுதற்கு  அருமையையும்  உணர்த்தும். 

              இனி,  முதல்  இரண்டடிகளிலும்  உள்ள  வினைமுற்றுக்கள் நான்கு  ஆகும்.  முதலிரண்டனையும்  பின்னிரண்டனோடு  எதிர்  நிரல்  நிறையாக  இயைத்துப்  பொருள்  நயங்காண்டல்  இன்பம்  பயப்பதாகும் . “பிறப்பு  அஞ்சேன் “ என்பதனால், பிறந்து உலகாளும்  அரசுரிமை  பெற்றுப்  போகந்  துய்க்கலாம் என்னும்  வேட்கைக்  குறிக்கோள்  உண்மைக்  குறிப்பாற்  பெறப்படும்  ஆதலின், அதனை  விலக்குதற்கு , “மண்ணாள்வான்  மதித்து  மிரேசன் “  எனவும், இறப்பதற்கு  அஞ்சேன்  என்றதனால் , “ இறப்பன் இறந்தா  லிருவிசும்  பேறுவன்”  என்றபடி,  இப்பிறப்பை  யொழித்து , இறந்து  விண்ணுலகம்  எய்தி  இன்புறலாம் என்னும்  வேட்கைக்  குறிக்கோள்  குறிப்பாற்  பெறப்படுமாதலின்  , அதனை  விலக்குதற்கு , “வானேயும்  பெறில்  வேண்டேன் “  எனவும்  அருளிச்  செய்யப்பட்டன .  ஈண்டுப் பிறத்தலும்  இறத்தலும்  மனித  உடம்பைச்  சுட்டிக்  கூறப்பட்டனவாகக்  கொள்ளல்  வேண்டும்.  மனிதவுடம்பின்  ஒழிவு , தேவவுடம்பு  பெறுதலைக்  குறிக் கோளாகப்  புலப்படுத்தும்  என்க. மண்ணுலக  ஆட்சியினும்  விண்ணுல கின்பம்   சிறந்ததாகும்  ஆதலின், “வானேயும்  பெறில்  வேண்டேன்”  எனவும், “மண்ணாள்வான்  மதித்துமிரேன்”  எனவுங் கூறப்பட்டன . வேண்டாமை, விரும்பாமையையும்  மதியாமை , ஒரு  பொருளாக  நினையாமையையும் உணர்த்துதல்  ஈண்டுக்  கருதத்தக்கது

                 கொன்றைமலர்  இறைவனுக்குச்  சிறந்த  அடையாளப்  பூவாகும்  “கார்விரி  கொன்றைப் பொன்னேர்  புது  மலர்த்தாரன்  மாலையன்  மலைந்த கண்ணியன்”  என்னும்  அக  நானூற்றுக் கடவுள்  வாழ்த்துப்  பாடலானும் ,  “தார்  ஓர்  விசேடமாக  இடுவது; மாலை  அழகுக்கு  இடுவது;  கண்ணி  போர்ப்பூ”  என  வரும்  அதன்  உரைக்  குறிப்பானும்  உணர்க.  உலகத்துத்  தலைவராகிய  அரசர்க்கு  அடையாளப்பூ ,  போர்ப் பூ முதலியன  வெவ்வேராகும் .  கடவுட்டலைவனாகிய  இறைவனுக்கு  ,அவ்  வடையாளப் பூ  முதலியவெல்லாம்  திருக்கொன்றைப்  பூவேயாகும் . இவ்வுண்மை  குறித்தே , “தேனேயு  மலர்க்கொன்றைச்  சிவனே”  யெனக்  கொன்றை  மலர்  அப்பெரு மானுக்குச்  சிறப்புரிமையுடையதென்று புலப்படுத்துவாராயினர் .  சிவன்,  எம்பெருமான்,  எம்மான்  என்னும்  இம்மூன்றும்,  முறையே  அழிவில்லாத  இன்பவடிவினன் , சிறந்த  தலைவன்,  தந்தை  என்னும்  பொருலனவாம்.  இன்ப  வடிவினன்  சிறந்த  தலைவனாக  இருப்பின்  , அவ்வின்பம்  தலையான  பேரின்பமாகும்  ஆதலின்,  சிவனே  எம்பெருமான்  என்றும்,  அப்பேரின்பப்  பெருஞ்  செல்வத்தை  மக்களுக்கு  உரிமையாக்குபவன்  தந்தையாதலின், எம்மான்  என்றுங்  கூறியருளனர்.  எம்மான்  என்பது  தந்தை  என்னும்  பொருளது.  இதனை  “எம்மான்  எம்மனை  யென்றனக்  கெட்டனைச்  சார்வாகார்”  என்பதனாலும்  அறிக.  வேண்டாமையை  வேண்டும்  சிவஞானி  களால்  வேண்டப்படுவது  திருவருட்பேறு  ஒன்றேயாகும்  .  ஆதலானும் , அப்பேறும்  உடலோடு  கூடியிருக்கும்  நாளில்  வாய்க்குமாயின், அவ்வுடல்  ஒழிவில்  திருவருளில்  தோய்ந்து  இன்புறுதல்  கூடுமென்னும்  உறுதிப்பா  டுடைமையானும்,  “அருள்பெறு  நாள்  என்றென்றே  வருந்துவன்”  என்று  கூறுனர். எல்லாரானும்  அஞ்சத்தக்க  பிறப்பு  இறப்புக்களுக்கும்  அஞ்சேன்; மண்ணுலக  ஆட்சிகளுக்கும்  முயலேன் , ஆனால் , நின்  திருவருட்  பேற்றிற்குறிய  நன்னாள்  வாய்ப்பது  கருதியே  கவல்கின்றேன்  என்பார், “வருந்துவனே”  என்று  கூறினர். அருட்பேற்றிற்கு  வருந்துவன்  என்னாது , அதற்குரிய  காலங்கருதியது, எடுத்த உடம்பு  கால  வரையறைக்கு  உட்பட்டது  குறித்தாம்.

           இதன்கண், மண்ணுலக  ஆட்சியும்  விண்ணுலக  இன்பமும்  பெறுதற்கு  விரும்பும்  மனத்தின்  செயலை  வெறுத்து , அந்  நெறியிற்  செல்லேன்  என  இறைவனை  முன்னிலைப்படுத்துக்  கூறுமுகமாக,  அந் நெஞ்சிற்குக்  குறிப்பால்  அறிவுறுத்தமை புலனாதலின், அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  வைராக்கிய விசித்திரமாகிய  சதகம்  நுதலிய  பொருளும்  புலனதல்  அறிக.

                                             **********************************************

பாடல் :13 .

வருந்துவன்நின்  மலர்ப்பாதம்

அவைகாண்பான்  நாயடியேன்

இருந்துநல  மலர்புனையேன்

ஏத்தேன்நாத்  தழும்பேறப்

பொருந்தியபொற்  சிலைகுனித்தாய்

அருளமுதம்  புரியாயேல்

வருந்துவன்  அத்  தமியேன்மற்

றென்னே  நான்  ஆமாறே.

கருத்துரை :- முன்னைத்  திருப்பட்டிற்  குறிப்பிட்ட  திருவருட்  பேற்றிற்கு  உரிய  அன்புச்  செயல்கள் தம்பால்  இல்லாமை  காரணமாக  அருளமுதம்  பெறுதல் அரிதாகுமாயின் , யான்  எவ்வாறு  உய்தல்  கூடுமென  அடிகள்  இத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறுகின்றார். 

பதவுரை :-  பொருந்திய பொன் சிலை குனித்தய்  = பொருந்திய  மேருமலையை வில்லாக  வளைத்தவனே ,

நாய்  அடியேன்  =  நாய்  போன்ற  சிறுமையுடைய  அடியேன்,

நின்  மலர்ப்பாதம்  அவை  காண்பான்  =  நின்னுடைய  தாமரை  மலர்  போன்ற  திருவடிகளாகிய  அவற்றைக்  காணுதற்பொருட்டு ,

வருந்துவன்  =  வருந்தி  முயல்கின்றேன் ,

இருந்தும்  =  கை , நா  முதலிய  உடல்  உறுப்புக்கள் எல்லாவற்றோடும்  கூடியிருந்தும் ,

நல  மலர்  புனையேன்  =  நல்ல  மலர்களைத்   தொடுத்து  நினக்கு  அணியேன் ,

நாத்தழும்பு  ஏற  ஏத்தேன்  –  நாவில்  தழும்புண்டாம்படி  நின்  புகளைப்  பாராட்டேன் ,

அருளமுதம்  புரியாயேல்  =  நின்  கருணையாகிய  அமுதத்தை  அடியேனுக்கு  வழங்கவில்லையாயின் ,

அத்தமியேன்  = அத்தகைய  கதியற்றவனாகிய  யான் ,

வருந்துவன்  = மேன்மேலும்  வருத்தம் எய்துவேன் ,

நான்  ஆம்  ஆறு  என்னே  =  பின்னர்  யான்  உய்யுமாறு  எங்ஙனம் ? என்பது.

விளக்கவுரை :-  கடவுள் தன்மையின் அரிய ஆற்றல்  புலப்படுத்தற்கு  மேருவை  வில்லாக  வளைத்த புராண கதை அடிகளால் மேற்கொள்ளப் பட்டது . பொன் : ஆகு பெயர் , பொன் மலையை வில்லாக  வளைக்கும்  அரிய  செயல்  பரம்பொருளாகிய  சிவபெருமான்  ஒருவற்கே  பொருந்தியதாகும் ;  ஏனையோர்க்கு  இயலாததொன்று  என்பதைப்  புலப்படுத்துவான், “பொருந்திய பொற்சிலை  குனித்தாய் “ என்றார். மலையை  வில்லாக வளைத்தல் இயலாததொன்று என எண்ணி, “இமய வில் வாங்கிய ஈர்ஞ்சடை  யந்தணன் “ என்பதற்கு, “இமய  மலையிடத்துப்  பிறந்த  மூங்கிலாகிய வில்லை வளைத்த இறைவன் “ என்பர் நச்சினார்க்கினியர் . மக்கள்  ஆற்றலை  நோக்க , இங்ஙனம் கோடல் பொருந்துமாயினும் , எல்லாம் வல்ல  ஆண்டவன்  பேராற்றற்கு  மூங்கிலை வளைத்தல் சிறந்த செயலாகாதென்பது எளிதில் உணரத்தக்கது . “கூத்தனிவ்  வானுங் குவலயமும்  எல்லோமுங்,  காத்தும்  படைத்துங் கரந்தும் விளையாடி “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக் கூறியபடி உலகப்  படைப்பு முதலிய தொழில்களே இறைவர்க்கு  விளையாட்டாக  அமையுமாயின் ,மலயை  வில்லாக  வளைத்தல் எங்ஙனம் இயலாததாகும் ? அக் கலிப் பா விலேயே  கயிலையை  இராவணன் பெயர்த்த கதைப் பகுதியுள்ளது . அதற்கு  உரையாளர்  வேறுபடக்  கூறிற்றிலர்.

               நாய்  இழிபிறப்புடையதாயினும் நன்றி  மறவாமைக் குணத்திற் சிறந்ததாகும்; அது போலத் தம் சிறுமை நிலையினும் இறைவன் தமக் கருளிய  பேருதவியை  நினைந்துருகும்  இயல்பு  தமக்குண்டு என்பதைப் புலப்படுத்துவார் , “நாயடியேன்” என்றார் . “அண்ணல்தானுரைப்பக்  கேட்டே  யடுகளிற் றெருத்தினிட்ட  , வண்ணப்பூந்தவிசு தன்னை ஞமலிமே லிட்ட தொக்கும் “ என்புழி , “வேறோர் ஊர்தி  கூறாது  ஞமலியைக்  கூறினான் ; அவன் அயிராது தருதற்கு “  என்று நச்சினாக்கினியர்  கூறிய உரைக்குறிப்பு  ஈண்டுக்  கருதத்தக்கது . அகரம் சேய்மையிலுள்ள  பொருளைச்  சுட்டுமாதலின் , திருவடிகள் அகக் கண்ணாலும்  காணமுடியாத சேய்மையில் உளவென்பதைக்  குறிப்பிற் புலப்படுத்தலான் , அடிகள் இறைவனுடைய  திருவடிகளைக் காண வருந்துதற்குக்  குறிப்பேதுவாகவுள்ளது  அவை  யென்னுஞ்  சுட்டு.

          “வாழ்த்த வாயும்  நினைக்க மடநெஞ்சுந் , தாழ்த்தச்  சென்னியும்  “ இறைவனால்  தரப்பட்டும்  , அவற்றைக்கொண்டு  உரிய  பணிகளைச்  செய்திலேன்  என  இரங்குவார் . “இருந்து நலமலர்புனையேன் ஏத்தேன் நாத்  தழும்பேற”  என்றார். “ ஆரூராவென்றென்றே யலறாநில்லே”  என்புழி , அலறுதல் உரக்கக்  கூவியழைத்தலாதலின், அங்ஙனஞ் செய்திலேன் என்பார், “நாத்தழும்  பேற  ஏத்தேன்”  என்றார்.  மன மொழி மெய் யாகிய  மூன்றனுள் , எளிதிற் பணி செய்தற்குரிய  மொழியும்  மெய்யுமே  தம்  பணிகளைச் செய்யவில்லையாயின், அரிதிற் செயற்பாலதாகிய  உள்ளப் பணியைப்  பற்றிக்  கூறவேண்டாவெனக்  கருதி , அதுகுறித்து யாதும்  கூறிற்றிலர் .

மன மொழி மெய்கள் இறைவன்  வழிபாட்டிற்  பொருந்தாமையால் இறைவனது  அருளமுதம் பெறுதல் இயலாதொழியுமே  என்றும் , அருளமுதம் பெறவில்லையாயின் , யான்  என்ன  செய்வேன் என்றும்  வருத்தம் தோன்ற  , “அருளமுதம் புரியாயேல்  வருந்துவன்”  என்றார். இத்  திருப்பாட்டின்  முதலடியிற்  கூறிய  வருத்தம்  சாதனமாகிய  இறைவழிபாடு  செய்யவியலாமை குறித்தும், நான்காம் அடியிற்  கூறிய  வருத்தம்  சாத்தியமாகிய  அருளமுதம் பெறாமை  குறித்தும் உண்டாயின  என்பது  உய்த்துணரத்  தக்கது .  அறம் , பாவம்  என்பவற்றையும் , அவற்றின்  பயன்களாகிய  இன்ப  துன்பங்களையும் மேற்கொள்ள  நினையுங்கால், அறமாகிய  மூலத்தைவிட்டு , அதன் பயனாகிய  இன்பத்தை விழைதலும், பாவமாகிய  மூலத்தைச் செய்து, அதன்  பயனாகிய  துன்பத்தை  வெறுத்தலும்  மக்களுட்  சிறியோர்  இயல்பு  என்ப . இம் முறயே , “இருந்து நலமலர் புனையேன்  ஏத்தேனாத் தழும்பேற “ என  அறமாகிய மூலத்தை விட்டு, அருளமுதம் பெற  விளைகின்றேன் ; என் சிறுமை  யென்னேயென இரங்குவார்.,”வருந்துவன் “ என்றார்.

    “அத்தமியேன்”  என்புழிச்  சுட்டு , மலர்  புனையாமையும் , நாத்தழும்பேற ஏத்தாமையும் , ஆகிய அந் நிலைமையை  உணர்த்தும் . இறை  வழிபாட்டிற்  குரிய  உறுப்புக்களோடு  கூடியிருந்தும் அவ்வழிபாட்டில் தலைப்படா மையால், உறுதுணையின்றி வெறுவியனாய்த்தனியனாயினேன்  என்பார், “அத்தமியேன்” என்றார்.  மற்று;  அசை நிலை . உலகப்  பொருள்கள்  எத்துணையிருப்பினும் , இறைவனது அருளமுதம்  பெறவில்லையானால், உயிர்  உய்தற்கு  , வழியில்லையே  என்று  இரங்குவார். “நான்  ஆமாறு  என்னே”  என்றார். ஆமாறு  என்புழி,  ஆதல் , உய்தல் , என்னும்  பொருட்டு. 

        இதன்கண், இறைவன்  திருவடிக்கண்  மலர்  புனைதல், நாத்தழும்பேற ஏத்துதல் முதலிய  சாதனங்களில் தலைப்படாத  நெஞ்சின்  இயல்பு  குறித்து  வருந்தி  இறைவனை  முன்னிலைப்படுத்துக் கூறுமுகமாக , அந்நெஞ்சிற்குக் குறிப்பான்  அறிவுறுத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றியவாறறிக.

                                                ***********************************

பாடல் : 14 .

ஆமாறுன்  திருவடுக்கே

அகங்குழையேன்  அன்புருகேன்

பூமாலை  புனைந்தேத்தேன்

புகழ்ந்துரையேன்  புத்தேளிர்

கோமான்நின்  திருக்கோயில்

தூகேன்  மெழுகேன்  கூத்தாடேன்

சாமாறே  விரைகின்றேன்

சதுராலே  சார்வரானே .

கருத்துரை :-  திருவருட் பேற்றிற்குரிய  சாதனம்  தம்பால்  இல்லாமை  குறித்து முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறிய  அடிகள், இத் திருப்பாட்டில்  கட்டறுத்து உய்தி  பெறுதற்குரிய அச் சாதனம் மன மொழி மெய்களை இறை வழிபாட்டிற்கு உரிமையாக்குதல் ஆகவும் , அங்ஙனமின்றி, அவற்றை உண்டு  உடுத்து உறங்கும்  உலக  வாழ்விற்கு  உரிமைப்படுத்திப்   பயனின்றி  இறத்தற்கும்  விரையும்  என்  அறியாமை யிருந்தவாறு  என்னேயென  மீண்டும்  இரங்குகின்றார் .

பதவுரை :- புத்தேளிர்  கோமான்  =  கடவுளர்  தலைவனாகிய  சிவபெருமானே,

உன்  திருவடிக்கே  ஆமாறு  = நின்  திருவடிக்குத்  தொண்டனாம்  வண்ணம் ,

அகம்  குழையேன்  =நெஞ்சங்கனிந்திலேன் ,

அன்பு உருகேன்  =  அன்பினால்  உருகுவதும்  இல்லேன் ,

பூமாலை புனைந்து  ஏத்தேன்  =  மலர்  மாலையை அணிந்து  வாழ்த்திலேன் ,

புகழ்ந்து  உரையேன்   =  நின்  புகழைப்  பாராட்டிப்  பேசேன் ,

நின் திருக்கோயில்  தூகேன்  =  நின்  திருக்கோயில்களை  அலகிடேன் ,

மெழுகேன்  =  மெழுகுதல்  செய்யேன் ,

கூத்தாடேன்  =  உவகை  மிகுதியாற்  கூத்தாடுதல்  செய்யேன் ,

சதுராலே  சார்வான்  =  என் ஆற்றலாலே  நின்னை  யடைதற்கு ,

விரைகின்றேன்  = முந்துகின்றேன் ,

(ஆது)  சாமாறே  =  அங்ஙனம்  விரைகின்றது  பயனின்றிச்  சாதற் பொருட்டேயாம்  என்பது.

விளக்கவுரை :-  “யாங்கள்  எல்லோரும்  பசுக்கள் ; நீ  ஒருவனே  பசுபதி யென்று  உடன்பட்டனர்  தேவர்கள் “ என்னும்  மறைமொழிப்படி , கடவுளர்  தலைவன்  சிவபிரான் ஒருவனே  யாவன் ஆதலின்,  “புத்தேளிர்  கோமான்”  என்றார் , “திரு” என்பது செல்வத்தைக் குறிக்கும்; ஈண்டு  ஞானச்  செல்வத்தை , அடைந்தார்க்கு   அளிக்கும்  இறைவன் அடி  திருவடி யெனப்பட்டது. திருவடிக்கேயாதல் – அடித் தொண்டனாதல் . உலகத்துப்  பொருள்களுள் எதற்கும்  அடிமையாகாமல்  , இறைவன்  திருவடிக்கே  யடிமையாதல் உட்கோளாதலின் , ஏகாரம்  தேற்றப்  பொருளது . சிவத்  தொண்டில்  ஈடுபடுதற்கு  , மன மொழி மெய்கள் மூன்றும் இறைவன் வயப்படல்  வேண்டும் . உள்ளம்  இல்வழி, மொழியும்  செயலும்  பயன்  விளையா  ஆதலின்,  முதலில்  உள்ளத்தின் தூய  செயலைப்  புலப்படுத்தத் தொடங்கி  , “அகங்குழையேன்  அன்புருகேன்” என்றார் . குழைதல் – இளகுதல்; உள்ளம்  உருகுதற்கு  முதலில்  குழைதல்  வேண்டும் . அக்குழைவு, கல்லைப்  போன்ற  வன் நெஞ்சம் , இறைவனை இடையறாது  நினைவு  கூர்தலால்  நிகழ்வது. அதன்மேல் , இறைவன் ஒருவனே  பற்றுக்கோடு  என்னும்  உறுதிப்பாட்டால்  உண்டாகும்  அன்பு  காரணமாக  அவ்வுள்ளம் உருகும் . உருகிய  அவ்வுள்ளத்தில் இறைவன்  விளங்குவான்  என்பது  பெரியோர்கள் கண்ட  அநுபவம் . இதனை  “உரமென்னும்  பொருளானை  உருகில்  உள்ளுறைவானை “ என்பதனாலும் , “உள்ளம்  உள்கலந் தேத்தவல்  லார்க்கலால், கள்ளமுள்ள வழிக்கசிவானலன்” என்பதனாலும்  உணர்க. உள்ளத்தின் செயல்களாகிய  குழைதலும்  உருகுதலும்  இன்றியமையாத  சாதனங்களாகவும் , அவற்றை  அடைந்திலேன்  என்று  இரங்குவார், “அகங்  குழையேன்” , “அன்புருகேன்” என்றார்.

             ஏத்துதல்  –  வாழ்த்துதல் . ஏத்துதற்கு  முன்னர்ப்  பூமாலை  புனைதல்  இறை வழிபாட்டு  முறையாதலின் , “ பூமாலை  புனைந்தேத்தேன் “ என்றார்.  புகழ்ந்து  உரைத்தல் , இறைவன்  பெருமைகளைப்  பலவாறு  பாராட்டிக்  கூறல், வாழ்த்துதல், தம்  குறையைப் பரிகரிக்க  நினைந்து  வாழ்த்துருவத்தில்  இறைவனைத்  துதித்தல்  .  “வாழ்த்துவதும் வானவர்கள் தாம்  வாழ்வான் “   என்பதும்  கருதத்தக்கது.  புகழ்தல், இறைவனுடைய  திருவிளையாடல்களை  இனிய  பாட்டு  வடிவிலும்  உரை  வடிவிலும்  வைத்துப் பாராட்டடுதல் .  ஆகவே , வாழ்த்துதலும்  புகழ்ந்துரைத்தலும்  மொழிப்பணியாதலால் , அவற்றையும்  மேற்கொண்டிலேன்  என்பார், “ஏத்தேன் புகழ்ந்துரையேன்” என்றார்.

                 தூகல்  –  திருவலகிடுதல்.  நாடோறும்  திருக் கோயிலுக்குச்  சென்று  திருவலகிடுதல்  மெழுகுதல்  முதலியன  செய்தல்  உடற்பணிகளாம் . எளிமையிற் செய்யத்தக்க  அப்  பணிகளையும்  செய்திலேன்  எனவும் , இம் முக்கரணங்களாலும்  வழிபாடியற்றி , அதன்  பயனாக  இன்பத்தில்  திளைத்துப் பரவசமாக  நின்று  கூத்தாடலுஞ்  செய்திலேன்  எனவும்  இரங்குவார் , “ தூகேன் மெழுகேன் கூத்தாடேன் “ என்றார். முக்கரணங்களாலும்  நிகழ்வன , முறையே  இரண்டிரண்டு  செயல்களாக, அகங்குழைதல்  அன்புருகுதல் ,ஏத்தல் புகழ்ந்துரைத்தல் , தூகல்  மெழுகுதல் என்னும்  இவை கூறப்பட்டன.  இச் செயல்களின்  முதிர்ச்சியில்  நிகழ்வது  பரவசமாக  நின்று  இயற்றும்  இன்ப  ஆடலாகும். கூத்தாடல்  உடலின்  செயல்  எனினும் , இன்பக்  களிப்பின்  விளைவாதலின் , கரணங்கள்  மூன்றும்  இறை  வயப்பட்டபின்  நிகழ்வதாகுமென்பது  கருதத்தக்கது. சரியை  வழிபாடாகிய  அலகிடுதல்  மெழுகுதல்  ஆகிய  உடற்பணிகலும் , ஏத்துதல் புகழ்ந்துரைத்தல்  ஆகிய  மொழிப்பணிகளும்  , இவற்றின்  முதிர்ச்சியில்  நிகழும்  இன்பக்  கூத்தும்  , தொண்டற்கு  இன்றியமையாதன  என்பதை , “நிலை  பெறுமாறு  எண்ணுதியேல்  நெஞ்சே  நீ வா ,  நித்தலும்  எம்பிரானுடைய  கோயில் புக்குப்  புலர்வதன்முன்  அலகிட்டு  மெழுக்கும் இட்டுப்  பூமாலை  புனைந்தேத்திப்   புகழ்ந்துபாடித்  , தலையாரக்  கும்பிட்டுக்  கூத்துமாடி  “ என்னும்  அப்பர்  திருவாக்கானும்  உணர்க.

                 யாவருக்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையானாகிய  இறைவன்  முன்னிலையில் , யாவர்க்கும்  கீழாம்  அடிமையாக  நின்று  , தொண்டு  செய்து  அடைதற்பாலதாகிய  அவ்விறையருளை, அத்  தொண்டுகளை  மேற்கொள்ளாமல்  ஆன்மாத்  தன்  ஆற்றலால்  அடையலாம்  என்று  என்ணுதல் தவறுடைத்து  என்பதைப்  புலப்படுத்த  , “சதுராலே  ‘சார்வான்’ விரைகின்றேன் “  என்றார். சதுர்  – ஆற்றல்.  சார்வனே  என்பதிலுள்ள  ஏகாரம்  ஈற்றசை.  சதுராலே  என்புழி,  ஏகாரம்  தேற்றம் . இறையருளைப்  பெறுதற் குரிய  தொண்டுகளை மேற்கொள்ளாமல்  உயிர்  தன்  ஆற்றலால்  அதனைப்  பெறக்கருதல், பயனின்றிச் சாதற்கு  முந்துவதாகும்  என்பது  கருதி  ,  “சாமாறே” என்று  கூறினர் . விரைகின்றேன் என்னும்  வினைமுற்றுச்  சார்வான்  என்னும்  எச்சத்திற்கு  முடிவாகும் .

                    இனி,  உன்  திருவடிக்கே  குழையேன்,  உருகேன்  என்றதனாலும் , ஏத்தேன் , புகழ்ந்துரையேன்  என்றதனாலும்  , திருக்கோயில் தூகேன்  மெழுகேன்  கூத்தாடேன்  என்றதனாலும் முறையே  குறிப்பாற்  பெறக்கிடப்பன ,  என்  மனைவி , மக்கள்  முதலியோர்  பொருட்டு  அகங்  குழைதலும்   உருகுதலும், பொருட்பயன்  கருதித்  தகுதியில்லாத  மனிதரை  ஏத்தலும்  புகழ்ந்துரைத்தலும் ,  அநித்திய  வாழ்க்கைக்குரிய  என்  இல்லத்தை  அலகிடுதலும்  மெழுகுதலும் , இன்னோரன்ன  உலக  வாழ்க்கை  நலத்தில்   ஈடுபட்டுக்  களித்துக்  கூத்தாடலும்  செய்கின்றேன்  என்பனவாம் . அந்தோ !  இச்செயல்கள்  எல்லாம்  ஊனடைந்த  உடம்பின்  பிறவி,  தானடைந்த  உறுதியைச்  சாராமல்  பயனின்றிச்  சாதற்கு  உரியனவாமே  என்று  இரங்குவார் , “சாமாறே விரைகின்றேன்  சதுராலே  சார்வானே”  என்றார். 

                       இதன்கண், முக்கரணங்களாலும்  நிகழும்  செயல்களுக்கு  மூலமாகவுள்ளது  நெஞ்சம்  ஆதலான் , அந்  நெஞ்சம்  இறைவயப்படாமல் , அழிதன் மாலையவாய  உலகத்துப்  பொருள்களின்பால்  விரைகின்றதே என்று  வருந்தி , இறைவனை  முன்னிலைப்படுத்து , அந் நெஞ்சிற்குக் குறிப்பான் அறிவுறுத்தவாற பெறப்படுதலின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல்  அறிக .     **************** 

பாடல் : 15 .

வானாகி  மண்ணாகி

வளியாகி  ஒளியாகி

ஊனாகி  உயிராகி

உண்மையுமாய்  இன்மையுமாய்க்

கோனாகி  யானெனதென்

றவரவரைக்  கூத்தாட்டு

வானாகி  நின்றாயை

யென்சொல்லி  வாழ்த்துவனே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  மன மொழி  மெய்களை  இறைவழிபாட்டிற்  பயன்படுத்தாமைக்கு  இரங்கிய  அடிகள் , அக்  காரணம்  மூன்றனுள் , மனத்தாலும்  மொழியாலும்  இறைவன்  பெருமையை  நினைந்து  வாழ்த்துதற்கு, அப் பெருமான் , மாற்ற  மனங்கழிய  நின்ற  மறையோனாதலால் , அவற்றிற்கு  எட்டாமை  குறித்து, எவ்வாறு  நினைந்து , என்  சொல்லி  வாழ்த்துவேன்  என்று இத்  திருப்பாட்டில்  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :-  வானாகி  மண்ணாகி  வளியாகி  ஒளியாகி  =   விண் ,மண் , காற்று , தீ என்னும்  இப்  பூதங்களாகியும்  ,

ஊனாகி , உயிராகி  =  உடலும் , உயிருமாகியும் ,

உண்மையும்  ஆய்  இன்மையும்  ஆய்  = உள்பொருளாகியும்  இல்பொருளாகியும் 

கோன்  ஆகி  =  எப்பொருட்கும்  தலைவனாகியும் ,

அவரவரை  =  உலகத்துள்ள  மக்கள்  எல்லோரையும்  ,

யான்  எனது  என்று  கூத்து  ஆட்டுவான் ஆகி  = யான்  என்றும்  எனது  என்றும்  சொல்லிக்  கூத்தாடும்படி  செய்பவனாகியும் ,

நின்றாயை  =  நிற்கின்ற  நின்னைக்  குறித்து ,

என் சொல்லி  வாழ்த்துவன்  =  யாது  கூறி  வாழ்த்தக்  கடவேன் ?  என்பது.

விளக்கவுரை :-  ஐம்பெரும்  பூதங்களும்  , ஞாயிறு திங்களும் , உயிரும்  ஆகிய  எட்டும்  இறைவனுக்கு  உடல்  என்பர் . இதனை  ,”இருநிலனாய்த்  தீயாகி  நீருமாகி  இயமானனாய்  எறியுங்  காற்றுமகி ,அருநிலைய  திங்களாய்  ஞாயிறாகி  ஆகாசமாய்  அட்ட  மூர்த்தியாகி” என்னும்  நின்ற  திருத்தாண்டகத்தலும்  அறியலாம். இஃது   இவ்வெண்வகைப் பொருள்களும்  அல்லாமல்  உலகம்  என்பது  ஒன்றில்லை  யாதலின் நிற்கும்  இறைவனது  வியாபக  நிலையைக்  கூறியபடியாம் . இந் நிலையையே  அடிகள்  இத் திருப்பாட்டின்  முதற்கண்  புலப்படுத்து  வாராயினர். “வான்” என்னுஞ்சொல்  ஆகாயத்தையும்  , மேகம் என்னும்  பொருளுடையதாய்  ஆகுபெயராய் நின்று  நீரையும்  உணர்த்தும் . “ஒளி”  என்பது  தீயையும்,  ஞாயிறு  திங்களையும்  உணர்த்தும் . தீ  முதலிய  மூன்றனையும்  தனித்தனியே  கூறாமல்  ஒருங்கு  புலப்படுத்தற்கே ஒளியென்னும்  ஒரு  சொல்லாற் கூறியருளினார் ; அவையெல்லாம்  ஒளியுடைமை  பற்றி  யென்க. முதற்கண் வானாகியென்று தொடங்கியது  தோற்ற  முறைபற்றி  நீரையும்  அச்சொல்லாற்  பெறவைத்து, பிரமனுடைய  படைப்புப்பொருள்களுள் முதற்கட்  படைக்கப்பட்ட தென்னும்   சிறப்பு  நோக்கி என்க. செய்யுள் முறை நோக்கி மண்  முதலிய  பூதங்கள் பிறழ வைக்கப்பட்டன. உயிர்  உடலைப்பற்றி  நிற்கும்   நிலையிலே  “ இயமானான் “ எனப்படும்  . இவ்வுண்மை  குறித்தே , “ஊனாகி உயிராகி” என்றார். ஊன், ஆகுபெயராய்  உடலை  உணர்த்தும். ஆகவே, இறைவன் மேற்குறிப்பிட்ட  எண்வகைப்  பொருள்களையும்  தனக்கு உடலாகக் கொண்டு விளங்குபவன் என்பது புலப்படுத்தவாறாம்.

                      மெய்யன்புடையார்  அகக்  காட்சிக்குப்  புலப்படுதலின்  உள் பொருளாகவும்  அவ்  வன்பிலார்க்கு  எவாற்றானும் புலப்படாமையின்  இல்பொருளாகவும்  விளங்குவன் என்பது தோன்ற ,”உண்மையுமாய்  இன்மையுமாய் “ என்றார் . இதனைப்  பிறிதோரிடத்தும்  அடிகள் , “அன்பர்க்கு  மெய்யானை  அல்லாதார்க்கு  அல்லாத  வேதியனை  “ எனக்  கூறுவர். “சொதியனே  துன்னிருளே “என்பதும்  இக் கருத்தைப்  புலப்படுப்பதகும். இனி, பாசஞான பசுஞானங்களால் அறியப் படாமையும், பதி ஞானம்  ஒன்றானே  அறியப்படுதலும இறைவனுக்குச்  சிறப்பிலக்கணம்  என்பவாதலின், அவ்வுண்மை  தோன்ற , “உண்மையுமாய்  இன்மையுமாய் “என்றார் எனினுமாம்.  வான்  முதலிய  பூதங்களும்  உயிரும்  ஆகிய  அறிவில் பொருளும் , அறிவுடைப்  பொருளுங் கலந்த உலக உருவமாக  விளங்குவோன்  இறைவன் என்றால், அவ்வுலகத்தை  இயக்கும்  பேராற்றல்  படைத்த தனி  முதல்  வேறொரு  பொருளாக  இருக்குங்கொலோ  என்னும்  ஐயத்தை  ஒழித்து, இவ்வுலகப்  பொருட்குத்  தலைவனாக  இருப்பவனும்  அப் பெருமானே  என்பதை  வலியுறுத்தற்கு  , “கோனாகி” என்றார்.

                        யான்  என்பதை  அகங்காரம்  எனவும்,  எனது  என்பதை  மமகாரம்  எனவும்  வடநூலார்  வழங்குவர் . இவை  முறையே  அகப்பற்றும் புறப்பற்றும் ஆகும். எல்லாப் பற்றுக்களும்இவ்விரண்டனுள்  அடங்கும் . இவ் விருவகைப் பற்றுக்களும் அற்ற  நிலையே வீட்டின்ப  நிலையாகும் . இதனை , “ஆவியாக்கை யான்  எனது என்று யாதுமின்றி அறுதலே” என்னும் அடிகள் திருவாக்கானும்உணரலாம் . இவ் அகப்புறப் பற்றுக்களில்  ஈடுபட்டே உலகத்து உயிர்களெல்லாம் உழல்கின்றன என்பது  பெரியோர்  அநுபவத்திற் கண்டது. எல்லாவுயிர்களும் இப்பற்றுக்களை  யுடையன  வாயினும் , மக்கள்பாலே  விளக்கமாகக்  காணப்படுதலின் , “யான்  எனது  என்று  அவரவரை “ என்றார்.  நூற்கேள்வி  யானும்  ஞானாசிரியன்  உபதேசத்தானும்  இப்பற்றுக்களின் இயல்பை  அறிந்து , அவற்றினின்றும்  விடுதி  பெறுதற்குத்  தகுதியுடையார்  மக்கட் பிறப்பினராகலின், சிறப்பாக, “அவரவரை” என்று  உயர்திணைமேல்  வைத்துக்  கூறியது  பொருத்தமுடையதே . யான்  எனது என்னும்  இவ்விருவகைப்  பற்றுக்களாலும்  உயிர்  ஆரவாரித்துக்  களிக்கும்  இயல்புடைமை  நோக்கி , அந் நிலையைக்  கூத்தாடல்  எனவும் , இறைவன் , படைத்தல்  முதலிய ஐம்பெருந் தொழில்களுள் ஒன்றாகிய மறைத்தற் றொழிலால்  உயிர்களோடு உடனாகி  நின்று, வினைப்பயன்களை நுகர்விக்கின்றான் என்பது சைவ நூல் துணிபாகலின் “கூத்தாட்டு  வானாகி” எனவும்  கூறினர் . யானே செய்பவன்  எனக் களித்தாடும்  அகக்  கூத்தும் , எல்லாம் எனது எனக் களித்தாடும் புறக்கூத்தும்  ஆகிய  அறியாமையால் நிகழும் இருவகைக் கூத்தும் உயிருக்கு  உள்ளன  என்பதும் , அங்ஙனம்  ஆட்டுவிப்பவன்  இறைவன் என்பதும் போந்தவாறுணர்க, “ஆட்டுவித்தால்  ஆரொருவர்  ஆடாதாரே “ என்பதும் ஈண்டுக்  கருதத்தக்கது . இங்ஙனம் ஆட்டுவித்தற்குக் காரணம் உயிர்களின் வினைஒழிவு  குறித்து  இறைவனுக்கு  உண்டாகிய அருட்குணமேயாகும் .

             நின்றாய் , முன்னிலை  வினைப்பெயர் . பரம்  பொருளாகிய சிவபெருமானுக்கும் உலகத்திற்கும் உள்ள  இயைபைப்பற்றி, “எட்டுத்திசை தானாய்  வேறா  யுடன்  ஆனான்  இடம்  வீழிம்மிழலையே” எனத்  தேவாரத்  திருமறையும் , “உலகெலாமாகி  வேறாயுடனுமாய்” எனச்  சைவ  நூலும்  கூறும். முதல்வன் உலத்தோடு  கலந்திருத்தலின்  உலகெலாமாகி எனவும் , அவ்வுலகத்திற் குரிய விகாரங்கள் தன்னைப் பற்றாவாறு இருத்தலின்  வேறாய் எனவும்  ,உயிர்க்கு உயிராக  நின்று  வினைப்பயன்  நுகர்ச்சியில்  தலைப்படுதலால் உடனாகி  எனவும் கூறப்பட்டனன் .  இம்  மூன்று நிலைகளையும்  இத் திருப்பாட்டுத்  தெளிவுறுத்து நிற்றல் உய்த்துணரத்  தக்கது .

              வானாகி  என்பது  முதல்  உயிராகி  என்பதுவரை கூறப்பட்ட  செய்திகளால் , “உலகெலாமாகி “  என்பதும் ,”உண்மையுமாய்  இன்மையுமாய்க்  கோனாகி”  என்பவற்றால் , “வேறாய்” என்பதும் , “அவரவரைக்  கூத்தாட்டுவானாகி “  என்றதனால் “உடனுமாய் “ என்பதும்  புலப்படுத்தவாறு  அறிக. 

              இங்ஙனம்  வான்  முதலிய  பூதங்களாகவும் தலைவனாகவும்  விளங்குகின்ற  இறைவனுடைய  நிலைகளுள் ,  எந் நிலையை  எவ்வாறு  எடுத்துக் கூறி  வாழ்த்துவேன்  என்பார், “ என் சொல்லி  வாழ்த்துவனே” என்றார் . இறைவனுடைய  ஒரு  சில குணங்களைப் பாராட்டினால் , மற்றவை  கூறப்படாமை குன்றக் கூறல்  ஆக  முடியுமென்பதும் , எல்லாவற்றையும்  எடுத்துக்  கூறற்கு  மாற்ற மனங்கழிய  நின்றவனாகலின்  இயலாத  தொன்றாகும்  என்பதும்  கருத்து.

                  இதன்கண், வாழ்த்த வாயும் , நினைக்க  மடநெஞ்சும்  தந்த  இறைவனை  வாழ்த்துதற்கு  அவன்  குணங்கள் மாற்ற மனங்கழிய நிற்கும் இயல்பினவாகலான் , இயலாதவென  அமைதி  பெற  முயலும்  நெஞ்சத்தின் இயல்பை  வெறுத்து , இறைவனை  முன்னிலைப்படுத்துக் கூறுமுகமாக , இயன்றாங்கு  வாழ்த்துவதே  கடமை  என்பதைக் குறிப்பிற்  புலப்பட  வைத்து  நெஞ்சிற்கு அறிவுறுத்தமை பெறப்படுதலின்  , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாயவாறு  அறிக.

                                  *******************************************

பாடல் :16 .

வாழ்த்துவதும்  வானவர்கள்

தாம்வாழ்வான்  மனம் நின்பால்

தாழ்த்துவதுந்  தாம்  உயர்ந்து

தம்மையெல்லாந்   தொழவேண்டிச்

சூழ்த்துமது  கரமுரலுந்

தாரோயை  நாயடியேன்

பாழ்த்தபிறப்  பறுத்திடுவான்

யானும் உன்னைப்  பரவுவனே.

கருத்துரை :-  இறைவனுடைய  பலதிறப்பட்ட  குணங்கள் எல்லாவற்றையும்  முற்ற  எடுத்துக்  கூறி  வாழ்த்துதல்  இயலாத  தொன்றென  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறிய  அடிகள் , அங்ஙனமாயினும் , இயன்றாங்கு  வாழ்த்துதல்  கடமையென்றும், அதுவும் தேவபோக  முதலியவற்றைக்  கருதாமல் , பிறப்பறுத்தலையே  கருதியதாக  இருத்தல் வேண்டும்  என்றும் , இத் திருப்பாட்டில்  தம்  உண்மைக்  கருத்தைத்  தெரிவித்துக் கொள்ளுகின்றார் .

பதவுரை :-  மதுகரம்  சூழ்ந்து  முரலும்  தாரோயை  =  வண்டுகள் மொய்த்து  ஒலிக்கும்  கொன்றை  மாலயையுடைய  நின்னை,

வானவர்கள்  வாழ்த்துவது தாம்  வாழ்வான்  =  தேவர்கள் வாழ்த்துதல்  தாம்  நெடுங்காலம்  இன்பமாக  வாழுதற்  பொருட்டே ,

மனம்  நின்பால்  தாழ்த்துவது  =  நெஞ்சத்தை  நின்னிடத்துப்  பணிவித்தல் ,

தாம்  உயர்ந்து  எல்லாம்  தம்மைத்  தொழ வேண்டி  = தாம்  பெருமையடைய  எல்லாவுயிர்களும்  தம்மைப்  பணிய  வேண்டியே,

நாயடியேன்  யானும்   =  நாய்  போன்ற  சிறுமை உடைய  அடிமையாகிய  யானும் ,

பாழ்த்த  பிறப்பு  அறுத்திடுவான்  =  பயனற்ற  பிறப்பை  அறவே  நீக்குதற்  பொருட்டு ,

உன்னைப்  பரவுவன்  =  நின்னை  வாழ்த்துவேன்  என்பது  .

விளக்கவுரை :-   உம்மைகள்  இரண்டும்  இசை  நிறை . சூழ்த்து  என்பது  எதுகை  நோக்கி  வலித்தல்  விகாரம்  பெற்றது.  வண்டுகள் சூழ்த்து  ஆரவாரித்தல்  மலரிலுள்ள  தேனை  நுகர்ந்து  இன்புறுதற்  பொருட்டே .இக்  குறிப்பு  வானவர்  குறிக்கோளுக்கும்  இயைந்திருத்தல்  அறிக. பெரும்பாலும்  புண்ணியப்பயனையே  நுகரும்  தேவர்கள் ,  அப்பயன்  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டுப்  பிறப்பு  இறப்புத்  துன்பத்தை  மறந்து ,மேன்மேலும்  தம்  வாழ்க்கை  இன்பம்  மிகுதற்  பொருட்டே  இறை வழிபாடு  செய்யும்  இயல்பினர்  என்பதைப்  புலப்படுத்த , “வாழ்த்துவதும்  வானவர்கள்  தாம்  வாழ்வான் “ என்றார் . இறை  வழிபாடு  செய்வார்  எப்  பயன்  குறித்துச்  செய்கின்றனரோ, அப்  பயனை   அவர்க்கு  இறைவன்  அருளிச்செய்வன்  என்பது  துணிபாதலின் , தாம்  வாழ  விரும்பி  இறைவனை  வாழ்த்துதல்  தம்  வாழ்க்கை  இன்பத்தை  மிகுவிக்கும்  என்பது  தெளிவாம் .  தம்  நெஞ்சத்தைப்  பணியச்  செய்தல்  ,  எல்லா  உயிர்களும்  தம்மைப்  பணிய ,  அதனால்  தாம்  உயர்வு  அடைய  வேண்டியே  என்பது  கருத்து ; உயர  என்பது  , உயர்ந்து எனத்  திரிந்து  நின்றது .  “வானின்றுலகம்  வழங்கி  வருதலான்” என்புழி,  நிற்ப  என்பது  நின்று  எனத்  திரிந்த  நின்றது  போலக்  கொள்க.  இறைவனை  மெய்யன்போடு  வாழ்த்துவாரும்  வணங்குவாரும்  தேவர்  முதலிய  எல்லோரானும்  வாழ்த்தப்பட்டும்  வணங்கப்பட்டும்  பெருமையுடையவர்  என்பதனை , ” தொழப்படும் தேவர்  தொழப்படுவானைத்  தொழுத  பின்னை, தொழப்படுந்  தேவர்  தம்மால் தொழுவிக்கும்  தம்  தொண்டரையே” என்னும்  திருவாக்கானும்  உணர்க.

                  பிறப்பு இறப்பு அற்ற  நிலையே அழிவில்லாத  இன்பநிலை யாதலின்  அப்  பேறே  உயிர்க்கு  உண்மைப்பயனாகும்  .  அஃதல்லாதனவெல்லாம்  வினைப்  பயன்களாக நின்று  மேன்  மேலும்  வினையீட்டத்திற்கு  ஏதுவாம்  ஆதலின் , அப்  பயன்களைத்  துய்ப்பதற்குக்  கருவியாகவுள்ள  பிறப்பு  ,  பயன் அற்றதெனக்  கொண்டு ,”பாழ்த்த  பிறப்பு” என்றார். பிறப்பு அறுத்தல் – பிறவிக்கு  ஏதுவாகிய  வினையை  வேரறக்  களைதல் .  வினையெச்சம்  சிறிதிருப்பினும் , ஆலம்  வித்துப்போலப்  பிறப்பு  இறப்புக்  கிளைத்தெழும்  ஆதலின்,  இவ்வாறு  கூறப்பட்டது .  “பாசவேரறுக்கும்  பழம் பொருள் “  என்பது  அடிகள் திருவாக்கு ,  யானும்  என்புழி  உம்மை  எச்சப்பொருளது .

                    வாழ்த்துதல்  முதலிய  வழிபாட்டுச்  செயல்கள்,  பயன்  கருதிச்  செய்யப்படுவனவும் , பயன்  கருதாமல்  செய்யப்படுவனவும்  என  இரு  வகைப்படும்.  இவற்றுள் தேவர்கள் வழிபாடு  பெரும்பாலும்  போகம்  முதலிய  பயன்  கருதிச்  செய்யப்படுவனவாம் .  இவ்வுண்மையைப்  புராண  இதிகாச  முதலியவற்றிற்  பரக்கக்  காணலாம் .  அடிகள்  வழிபாடு  உலகப்  பயனைக்  குறித்தன்று ; அப்  பயனுக்குக்  கருவியாகவுள்ள  பிறப்பை  அறுத்தலையே குறித்ததாகும் .  பந்தம்  வீடு  தரும்  பரமன் “ என்றபடி,   பந்தத்திற்கு  எதுவாகிய  உலக  வாழ்க்கையையும் , வீட்டிற்கு  ஏதுவகிய  பிறப்பு  அறுத்தலையும்  தருதற்குரிய  இறைவனிடத்து  அடிகள்  பிறப்பு  அறுத்தலைக் குறித்து வேண்டியது பொருத்தமே . தேவர்களுடைய  வாழ்த்தும் வணக்கமும்  அவர்தம்  உயர்வைக்  குறித்தனவாம்  என்று  தாழ்த்துக் கூறியது  எற்றிற்கெனின், “ பாழ்த்தபிறப்  பறுத்திடுவான்  யானும்  உன்னைப்  பரவுவனே”  என்னும்  வேண்டுகோளை  ஏற்றுக்கொண்டு , மனிதப்பிறப்பை  ஒழித்துத்  தேவப்பிறப்பை  அருளி , துறக்க  இன்பத்தைத்  துய்க்கவெனக்  கட்டளையிடின், தேவ போகத்தில் மயங்கி ,மேன்மேலும் அவ்வின்பத்தையே விழைந்து , மீண்டும்  பிறப்பு  இறப்பில்  சுழலக்  கூடுமென்று  அஞ்சியே , அடிகள்  அவ் விண்ணவர்  இயல்பை  எடுத்துக்கூறி , அவ்  வாழ்க்கையில் தமக்கு  விருப்பமின்மையைக்  குறிப்பிற்  புலப்படுத்துவாராயினர் . “கொள்ளேன் புரந்தரன்  மால்  அயன்  வாழ்வு”  என்றும் , “போகம்  வேண்டி  வேண்டிலேன்  புரந்தராதி  இன்பமும்  “  என்றும்  முன்னும்  பின்னுமுள்ள  அடிகள் திருவாக்குகளும் , இதனை  வலியுறுத்துவனவாம் .

                      இதன்கண், இறைவனை  இயன்றாங்கு  வாழ்த்துங்காலும் , மேன்மேலும் போகவிழைவிற் செல்லும் தேவர்களின் இயல்பை மேற்கொளக் கருதும்  நெஞ்சத்தின் இயல்பைத்  தகாதென்று  வெறுத்து  ,இறைவனை  முன்னிலைப்  படுத்துக்  கூறுமுகமாக , அந்  நெஞ்சிற்கு  அறிவுறுத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றியவாறறிக .

                                             *************************************\

பாடல் :17 .

பரவுவார்  இமையோர்கள்

பாடுவன  நால்வேதங்

குரவுவார்  குழல்மடவாள்

கூறுடையா  ளொருபாகம்

விரவுவார்  மெய்யன்பின்

அடியார்கள்  மேன்மேலுன்

அரவுவார்  கழலிணைகள்

காண்பாரோ  அரியானே

கருத்துரை :-  இறைவனை  இயன்றாங்கு  வாழ்த்துதல்  தம்  கடமையாகும் என  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறிய  அடிகள் , அங்ஙனம்  வாழ்த்துதல்  முதலிய  செயல்களாலும், பிறப்பறுத்தற்கு  வாயிலாக  உள்ள  இறைவன்  திருவடிக்காட்சி  பெறுதற்கு  அரியதாகுங்கொலோவென  ஐயுற்று, அவ்  அருமைப்பாட்டை  நினைந்து  வியந்து இத்  திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார். 

பதவுரை :-  அரியானே   =  காண்டற்கு  அரியவனே ,

இமையோர்கள் பரவுவார்  =  தேவர்கள் முன்னிலைப்படுத்து  வாழ்த்துவர் ,

நால் வேதம்  பாடுவன  =  நான்கு  மறைகளும்  பாராட்டிப்  புகழ்வன ,

குரவுவார்  குழல்  மடவாள்  =  குராமலரை  அணிந்த  கூந்தலையுடைய  இறைவி ,

ஒரு  பாகம்  கூறு  உடையாள்  =  நின்  திருமேனியின்  ஒரு  கூற்றைத்  தனக்குக்  கூறாக  உடையள் ,

மெய்யன்பின்  அடியார்கள்  விரவுவார்  =  உண்மையான  அன்பினையுடைய  அடியவர்கள்  நின்னோடு  கலந்து  இன்புறுவர் ,

உன்  அரவுவார்  கழல்  இணைகள்  மேன்மேலும்  காண்பாரோ  = 

அவரெல்லாம்  ஒலிக்கின்ற  நெடிய  வீரக் கழல்களையுடைய   நின்  திருவடிகளை  மேன்மேலுங்காண்பார் கொலோ?  என்பது .

விளக்கவுரை :- மன மொழி  மெய்களான்  இயைந்து  இறைவனைக்  காண்டல்  ஞான  நிலையில்  பக்குவ  முதிர்ந்தோர்க்கும் ஒரொருகாற்  கூறுமேயன்றி  இடையறாது  நிகழ்தலின்று . ஆதலின்  , அத்தகையோரும்  மேன்மேலும்  இடையறாது  கண்டு  இன்புறுதற்கு  அரியன்  என்பார், “அரியானே” என்றார். “உணர்ந்தாற்கு  உணர்வரியோன் “  என்னும்  திருச்சிற்றம்பலக்  கோவைச்  செய்யுட்  பகுதியும் , அதற்கு , “ஒருகால் தன்னை  யுணர்ந்தவர்கட்குப்  பின்  உணர்தற்குக்  கருவியாகிய  சித்த விருத்தியும்  ஒருங்குதலான்  மீட்டு  உணர்வரியோன் “  என்னும்  பேராசிரியர்  உரையும்  இதனை  வலியுறுத்து  நிற்கும் . இத் திருப்பாட்டின்  திரண்ட  கருத்திற்கேற்ப , “அரியானே”  என்னும்  சொற்கு  இவ்வாறு  பொருள்  கோடல்  பொருத்தமாதல்  அறிக .

               இறைவனை  முன்னிலைப் படுத்துப் பாராட்டுதலைப்  பரவுதல்  எனவும்,  படர்க்கையில்  வைத்துப்  பாராட்டுதலைப்  புகழ்தல்  எனவும்  இயல் நூலார்  கூறுவர் . “பரவலும்  புகழ்ச்சியும்   கருதிய  பாங்கினும்  “ எனும்  தொல்காப்பியச்  சூத்திர  உரையில்  , “புகழ்தல்  படர்க்கைக் கண்ணும்  பரவல்  முன்னிலைக் கண்ணும்  வரும்” என்பர்  இளம்பூரணர் . ஆதலின் , தேவர்கள் எல்லோரும்  முன்னிலைப்படுத்து இறைவனைப்  பாராட்டுவர் என்பதைப்  புலப்படுத்த , “பரவுவார்  இமையோர்கள்”என்றார். மறைகள் எல்லாம் இனிய  பண்ணுடன்  இறைவன்  புகழைப்  படர்க்கையில்  வைத்துப்  பாராட்டும்  என்பார், “பாடுவன  நால்வேதம் “என்றார். இனிப்   புகழ்தான்  உரையும்  பாட்டுமென  இருவகைப்படும்  ஆதலின், இமையவர்கள் உரையாற்  பாராட்டுவர்  எனவும், மறைகள் பாட்டுக்களாற்  பாராட்டுவன எனவும்  பொருந்தும்.

               குரவு  –  குராமலர் : இது  பாலைக்குறியது ; அதற்குத்  தெய்வம்  கொற்றவை என்னும் சிவ சத்தியாகும் . ஆதலின்  உமையம்மையார்க்குக் குராமலர்  கூறப்பட்டது. கொற்றவை  சிவ சத்தியாதலை , “கங்கைமுடிக்கணிந்த  கண்ணுதலோன்  பாகத்து , மங்கை  யுருவாய்  மறையேத்தவே நிற்பாய் “ என்னும்  சிலப்பதிகாரத்தாலும்  அறியலாம் . குராமலர்  குறிக்கப்பட்ட  பாலைக்கு  உரிப்பொருள் பிரிதலாகும் . இது  மக்களைப் பற்றியது . கடவுளர் தலைவனாகிய  இறைவர்க்கும்  இறைவிக்கும்  மக்கள் ஒழுகலாற்றை  ஏற்றிடலாகாது  என்பது புலப்படுக்க, “கூறுடையா ளொருபாகம்”  எனப்  பாகம்  பிரியாமை  கூறப்பட்டது . இறைவனோடு  உள்ளங்கலத்தற்கு  உண்மையான  அன்பு  வேண்டும்  என்பதும் , அம் மெய்யன்பினாலே  சிவத்  தொண்டு  நிலை  பெறுவதாகும்  என்பதும்  புலப்படுக்க, “மெய்யன்பின்  அடியார் “ என்றார், “கண்ட  இவையல்லேன்  நான்  என்றகன்று  காணாக்  கழிபரமும்  நானல்லேன் எனக்  கருதிக் கசிந்த, தொண்டினொடும்  உளத்தவன்றான் நின்ற  கலப்பாலே  சோகமெனப்  பாவிக்கத்  தோன்றுவன் வேறின்றி”” என்னும்  சைவ  நூற்கருத்தும்   ஈண்டு  நோக்கத்தக்கது .  விரவுதல்  –  கலத்தல்; உள்ளங்கலத்தலைக்  குறிக்கும்  . இனி, அடியார்கள்  மெய்யன்பினால்  விரவுவார் எனக்  கொண்டு , கலத்தற்கு  மெய்யன்பை  ஏதுவாக்கலும்  ஒன்று. 

                    தேவரும் , மறைகளும் , இறைவியும்  அடியாரும்  மன மொழி மெய் மூன்றானும்  வழிபட்டு  இறைவனைக்  கண்டன  ரெனினும் , சிறப்பு  முறை பற்றி , மொழியால் இயைந்து கண்டவர் தேவராவர் ; மறைகளும்  அன்ன. திருமேனியில்  இயைந்து  கூறு கொண்டு கண்ட பெருமை இறைவிக்குரியது . உள்ளத்தாற் கலந்து கண்டவர்  மெய்யன்பின்  அடியார்கள்.  திருமேனியில்  இயைதல்  இறைவிக்கேயன்றி  அடியார்க்கு  ஓரளவில் உண்டு.  கண்ணப்ப  நாயனாரது  கண்  ஒன்று  இறைவன்  கண்ணில்  இயைந்தது  இதற்குச்  சான்றாகும் . ஆயினும் , எல்லா உறுப்புக்களாலும்  இறைவன்  திருமேனியில்  கூறு  கொண்டு  இயைந்த  சிறப்பு  அம்மைக்கே  உரியதாகும் . இது கருதியே, திருமேனி இயைபிற்குத்  தேவர் , மக்கள் முதலியோருள் யாரையும்  கூறாது, உமையம்மையாரை எடுத்துக் கூறினர். மேலும்,மக்கள்உடல் ஊனுடலாதலின்  அதன்கண் இறைவன் திருமேனி இயைதல் எல்லாவற்றானும் , பொருந்தா தொன்று . இறைவன் அவருள்  திருமேனிக்கு  ஊனுடல்  வேறென்பதும் , அது கலத்தற்கு  உரியதன்று என்பதும்  கருதியே , “ஊனார்  உடல்  புகுந்தான் உயிர்  கலந்தான் “என்று  கூறினர்  அடிகள். புகுதல், கலத்தல் என்னும்  இரண்டற்கும்  வேற்றுமை  பெரிதென்பது  அறிந்தது . ஓர்  இல்லினுட்  புகுந்தான் என்று கூறலாமே  யொழியக்  கலந்தான்  என்று  கூறுதல்  பொருந்தாதென்பது எளிதில் அறியத்  தக்கது . மேலும் கண்ணப்ப  நாயனார்  கண்ணொளி இறைவன் கண்ணொளியில்  இயைந்தது மேற்கூறியதற்கு  முரணாகாது . என்னை?  அறிவுருவம்  ஆகிய  உயிர் , இறைவன்  திருவடி நீழலில்  ஒடுங்குங்கால் , அவ்வுயுற்க்கு ஆதாரமாக  அமைந்த  உடற் கூறுகள் எல்லாம்  அவ்வம் மகாபூதங்களில்  ஒடுங்கும்  என்றும் , கண்ணொளி சூரிய  மண்டலத்தை  அடையும்  என்றும்  மறை முடிவிற்  கூறப்பட்ட உண்மைக்கு  ஏற்பக்  கண்ணப்பர்  கண்ணொளி , இறைவன் வலக்கண்ணாகிய  சூரிய  மண்டலத்தைச்  சார்ந்தது என்னும்  உண்மை புலப்பட  அமைந்தது அந் நிகழ்ச்சியாதலின்  என்க .

      மொழியாற் பரவிய தேவரும் , திருமேனியிற் கூறு  கொண்ட  அம்மையும்  உள்ளத்தாற் கலந்த அடியாரும் , முறையே , பரவுதல் , கூறுகோடல் , விரவுதல் என்னும்  அவ்வளவில் இயைந்து  இன்புற்றனரேயன்றி , மேன்மேலும் இடயறாது  இறைவன் திருவடிகளைக்  காணும் நிலையில் இல்லை என்பது தோன்ற  , “கழலிணைகள் காண்பாரோ” என்றார் ; உமை  மேன்மேலுங்  காணவில்லை  யென்றது , இறைவனுடன்  ஒரு கூறு  பெற்றுப்  பிறராற் காணப்படும்  நிலையில்  இருத்தலின்றித்  தான்  வேறாகநின்று  சிவத்தைக் காணும்  நிலையில்  இல்லையென்பது பற்றி  , சிவனோடு வேறறக்  கலந்திருத்தல்  பற்றிக்  “காண்பாரோ “என்றனர் . இறைவன் திருவடியைக்  கண்ட  அளவிலே , அக் காட்சி  யொழிந்து  இன்புற்று  இயைதலினும் , அக் காட்சி இடையறாது நிகழ்தல் மிக்க  இன்பம் பயப்பதாகும்  என்பது அடிகள் உட்கோளாகும் . இதனை ,

“கண்ணார்  நுதலோய்  கழலிணைகள்

கண்டேன்  கண்கள்  களிகூர

எண்ணா  திரவும்  பகலும்நான்

அவையே  யெண்ணும்  அதுவல்லால்

மண்மேல்  யாக்கை  விடுமாறும்

வந்துன்  கழற்கே  புகுமாறும்

அண்ணா எண்ணக்  கடவேனோ

அடிமை  சால  அழகுடைத்தே”

என்று  அடிகள் பிறிதோரிடத்திற் கூறிய  திருப்பாட்டு  வலியுறுத்தல் அறிக. “கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்னும்  உண்மையடியார் பெருமையும்  ஈண்டு  கருதத்தக்கது . புட்பதந்தர்  என்னும்  வட மொழிக் கவிஞர்  இடயறாத  சிவ  வழிபாட்டில்  ஈடுபட்டு  , அப்  பெருமையைப் புலப்படுக்கும்  முகமாகச்  சிவபெருமானை முன்னிலைப்          படுத்துக்  கூறிய  ஒரு  சுலோகத்தின் மொழிபெயர்ப்புப் பின்வருவது :- “முப்புரப்பகைவ, முன்னர்க்கிடைத்த எப்பிறப்பினும் ஒரு கணப்பொழுதிலும்  நின்னை  வணங்கினேன் அல்லேன் என்னும்  இவ்  உண்மை , எனது  இவ்வுடல்  தோற்றத்தால்  அனுமித்து  அறியப்பட்டது.  இப்பொழுது  யான்  வணங்கினமையின், வீடு  பெறும்  நிலையினன் ஆயினன். ஆதலால், எதிர்காலத்திலும் விடலின்மையால்  வணக்கஞ்  செய்ய  இயலாதவனாகின்றேன் ; இறைவ , சென்ற காலத்தும்  எதிர்  காலத்தும்  வணக்கம்  செய்யாமையாகிய   இக்  குற்றங்கள் இரண்டனையும்  பொறுத்து அருளல் வேண்டும்  என்பது  இதனால் , வீடு பேற்றின்பத்திலும்  அதற்குச்  சாதனமாகிய  திருவடிக்  காட்சியையே மெய்யன்பர்  வேண்டிநிற்கும்  உண்மை புலனாதல்  அறிக. இக் குறிக்கோளை உட்கொண்டே , “மேன்மேலுன் …….கழலிணைகள் காண்பாரோ” என்று அருளிச்செய்தனர் அடிகள். கழல்களுக்கு  நெடுமை  கூறியது , “பாதாளம்  ஏழினுங்கீழ்ச்  சொற்கழிவு  பாதமலர்  “ என்றபடி , திருவடிகளின் நெடுமை  குறித்து  என்க. ஒலித்தற் குறிப்பு, மடிமை  யுற்றிருப்பாரை  விழிப்பித்து  நினைவூட்டற்காம் .  காண்பாரோ  என்புழி, ஓகாரம்  ஐயப்பொருட்டு .

              இத்  திருப்பாட்டிற்குப்  பலரும்  இக்கருத்து உணராமல்  உரை  கூறியதோடு , “காண்பாரோ “என்னும்  சொல்லைக்  “காண்பு – ஆரோ  எனப்  பிரித்து  இடர்ப்படுவாராயினர்  .  அடிகள்  மனம்  குழைந்து  அமிழ்த ஒழுக்குப்  போலப்  பாடி  அருளிய  இன்னோரன்ன  திருப்பாட்டுக்களில், இங்ஙனம்  சொற்  சிதைத்துப்  பொருள்  காண்டல்  பொருந்தாதென்பது அறிக.

                 இதன்கண், இறைவனை  மன மொழி மெய்கள்  இயைந்து  இன்புறுதலினும்  , அதற்குச்  சாதனமான  திருவடிக்  காட்சி  இடையறாது  நிகழ்தல்  சிறந்ததாகும்  என்னும்  உவமை  வலியுறல்  வேண்டி, இறைவனை  முன்னிலைப்படுத்து , நெஞ்சிற்கு  அறிவுறுத்தமை  பெறப்படுதலின்  அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாயவாறு  அறிக . 

                                     ******************************************* 

பாடல் :18 .

அரியானே  யாவர்க்கும்

அம்பரவா  அம்பலத்தெம்

பெரியானே  சிறியேனை

ஆட்கொண்ட  பெய்கழற்கீழ்

விரையார்ந்த  மலர்தூவேன்

வியத்தலறேன்  நயந்துருகேன்

தரியேன்நான்  ஆமாறென்

சாவேன்நான்  சாவேனே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்காட்சி  பெறுதற்கு அரியது ஆகுங்கொலோ என  ஐயுற்று  வியந்து  கூறிய  அடிகள் , பிறர்க்கு  அரிய அத்  திருவடிச் சார்பு , தம்மை  ஆட்கொள்ளுதற்கு  எளிதாகக்  கிடைத்ததும், அத்  திருவடிக்கண் மன மொழி மெய்கள்  ஈடுபடாமை  குறித்து இத்  திருப்பாட்டில்  இரங்குகின்றார்.

பதவுரை :- யாவர்க்கும்  அரியானே  = அமரர்  முனிவர்  முதலிய  எல்லோர்க்கும் காண்டற்கு  அரியவனே ,

அம்பரவா  = நுண்ணிய  ஞானவெளியில்  விளங்குகின்றவனே,

அம்பலத்து எம்பெரியானே  = பெரு வெளியாகிய  பொதுவில்  நின்று  அருட்  கூத்தியிற்றும்   எங்கள் பெரியோனே ,

சிறியேனை  ஆட்கொண்ட  பெய்கழல்  கீழ்  = அறிவாற்றல்களால்  சிறுமையுடைய  அடியேனைத்  தொண்டனாகக்  கொண்ட  நின்  திருவடிக்கண்ணே ,

விரை ஆர்ந்த  மலர்  தூவேன் =  மணம்  நிறைந்த  மலர்களை  இட்டு  வழிபாடு  செய்யேன் ,

வியந்து அலறேன்  =  வியப்புற்று  உரத்த  குரலில்  கூவிக்  கதறேன் ,

நயந்து  உருகேன்  =  அன்பினால்  ஈடுபட்டு  உருகேன்  ,

நான்  ஆம்  ஆறு  என்  =  யாம்  உய்யுமாறு  எங்ஙனம் ? ,

தரியேன்  =  நினக்கு  ஆளாய் வழியடிமை  செய்யாமல்  இந் நிலவுலகத்தில்  தங்கி  வாழேன் ,

நான்  சாவேன்  சாவேன்  =  யான்  இறந்துபடுவேன் ,இறந்துபடுவேன்  என்பது. 

விளக்கவுரை :-  இறைவன் மெய்ஞ்ஞானத்தாலன்றித்  தேவர் , முனிவர் முதலியோரானும் காண்டற்கு அரியன் என்பார், “அரியானே யாவர்க்கும்”  என்றார் . “பாரார் விசும்புள்ளார்  பாதாளத்தார் புறத்தார்  யாராலுங் காண்டற்கரியான் எமக்கெளிய பேராளன் “என்னும்  அடிகள்  திருவாக்கும் , “சார்வருந் தவங்கள் செய்து முனிவரும்  அமரர்  தாமும் .  கார்வரை யடவி சார்ந்துங்காணுதற்கரியான் “ என்னும்  பெரியபுராணச்  செய்யுளும் இதனை வலியுறுத்தும் . அம்பரம் – ஆகாயம் . ஈண்டு, நுண்ணிய ஞானவெளியைக்  குறிக்கும். இதனைச் சிதகாசம் எனவும், தகராகாசம்  எனவும் , சூக்கும வெளியெனவுங் கூறுவர் . ஞான யோகிகள் மிக்கதூய்மையுடைய  தம்  நெஞ்சத்தாமரையை அலர்வித்து , அதன் நடுவண் உள்ள நுண்ணிய வெளியாகிய  தகராகாசத்தில் , இறைவன் விளக்கத்தை  அகக் கன்ணாற் கண்டு வழிபட்டு இன்புறுவர் என்னும்  இவ்வுண்மை மறை  முடிவிற் காணப்படுவது.  இதனைத்  தகராவித்தை என்று பெரியோர் கூறுவர் . இக் காட்சி வழிபாடு ஞானயோகத்தின் முதிர்ந்த மெய்யன்பர்க்கன்றிப்  பிறர்க்கு  அரிய தொன்றாம் . இத்  தகராகாசத்தையே , “சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம் “ என்பர்  சேக்கிழாரடிகள் , சிற்பர வியொமம் என்பது ஞானப் பரவெளி என்னும்  பொருளதாகும் . இறைவன் இந் நுண்னிய பர வெளியில்  சூக்குமமாக  விளங்கும் தன்னை, எல்லோரும்  கண்டு கும்பிட்டு உய்ய வேண்டு மென்னுங் கருணை காரணமாக , அம்பலமாகிய பொதுப் பெரு வெளியில் நின்று , மேள தாளங்களுடன் அருட்கூத்தியற்றும் இயல்பைக்  குறித்தே , “அம்பரவா அம்பலத்தெம்பெரியானே “ என்றார்,யாவர்க்கும்  காண்டற்கு  அரியநிலை சிதாகாசத்தில் விளங்குவதென்பதும் , காண்டற்கு  எளிய  நிலை அம்பலப்பொதுவில்  தோன்றுவதென்பதும்  ஈண்டுப் பகுத்து  உணரத்தக்கன.  அம்பலத்தெம் பெரியானே என்றதனால் , அம்பலம் பெரிய பொதுவெளி யென்பதும் , தகராகாசமாகிய  அம்பரம் நுண்ணிய சிறப்பு வெளியென்பதும், இறைவன் ஈரிடத்தும் முறையே தூல சூக்கும நிலையில் விளங்குவான் என்பதும் புலப்படுத்தவாறாம் . “பெரியானே” என இறைவனை  விளித்து , அதற்கு அடுத்துத்  தம்மைச்  “சிறியேனை” என்று  குறிப்பிட்டது , பெருமைக்கு  எல்லையாக இறைவனையும் , சிறுமைக்கு  எல்லையாகத் தம்மையும் குறிப்பிட்டபடியாம் . “யாவர்க்கும்  மேலாம் அளவிலாச் சீருடையன், யாவர்க்குங் கீழாம் அடியேனை “என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும் இங்கே கருதத்தக்கது. ஆட்கொள்ளல்  – ஆளாகக் கொள்ளல் . ஈண்டு ஆள்  என்பது பணி  புரியும்  அடிமை ஆளைக்  குறிக்கும் . “மீளா  அடிமை  யுமக்கேயாளாய் “ என்புழிப் போலக் கொள்க. இறைவன்  திருவடிக்குத்  தொண்டு செய்யும் பேறே மெய்யன்பர்க்கு ஆட்படுந்  தன்மையை அளிப்பதாகும் . ஆதலின் , அன்பரை ஆட்கொள்ளுதற்கு இறைவன்  திருவடியே கருவியாதலும் , ஒற்றுமை நயத்தால்  வினை முதலாதலுங்கூடும். ஈண்டு , ஒற்றுமை நயமென்றது அவயவமும் அவயவியும் வேறாகாது  இயைந்திருத்தல் பற்றியாம் . கருவியாதலை ,”கண்ணார் கழல் காட்டி நாயேனை யாட்கொண்ட  அண்ணாமலையான் “ எனவும் , “ஒப்பிலாதன உவமனிலிறந்தன ஒண்மலர்த்  திருப்பாதத்து ,அப்பன் ஆண்டு” எனவும் போந்த திருவாக்குக்களானும் ; வினை  முதலாதலை , “போற்றியாம் உய்ய வாட் கொண்டருளும் பொன் மலர்கள்” என்பதனாலும்  அறியலாம் . இறைவன்  தன் திருவடியைக் காட்டி  அன்பரை ஆட்கொள்ளுவானாயினும் , ஆட்படும் அன்பர்க்குப்  பற்றுக்கோடாக இருப்பது அத்  திருவடியே   ஆதலின் , ஈண்டு  அதனை வினை முதலாக்கி , “ஆட் கொண்ட  பெய்கழல் “என்றார். பெய்கழல்  என்றது கழல்  அணியப்பட்ட திருவடியை உணர்த்தும் . கீழ் என்பது ஏழாம் வேற்றுமை உருபாயினும் , ஈண்டுக் கீழிடத்தை உணர்த்துவதாகும் . திருவடித் தொண்டிற்கு அத் திருவடியின் கீழிடத்தைக் குறித்தது. ஆண்டவன்  பெருமையும் அடியவர் சிறுமையும் புலப்படுத்தற் கென்க.ஈண்டுச் சிறுமை  என்றது இறைவன் பெருமைகருதிப் போந்ததன்றி, உலகத்தவரைக் கருதிப் போந்தது அன்றென்பது , “யாமார்க்கும் குடியல்லோம்” என்னும் திருவாக்கும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

            மணமுள்ளன இல்லன; விதிக்கப்பட்டன விலக்கப்பட்டன வென்று பகுத்தறியாமல் , பல  மலர்களையும் மிகுதியாக வாரியிறைத்தல் , ஆடம்பர  நிமித்தம் இறைவழிபாட்டில் தலைப்படுவார் இயல்பாகும் . அங்ஙனமின்றி , நறுமண மிக்க மலர்கள் சிலவாயினும் , அவற்றை விதிமுறையின்  ஆராய்ந்தெடுத்து ,மென்மையாகத்  திருவடிக்கீழ்ப் பெய்தல் மெய்யன் புடையார் இயல்பாகும் . அவ்வியல்பை மேற்கொண்டிலேன்  என்பார், “விரையார்ந்த மலர்  தூவேன் “ என்றார் . தூவுதல் – மென்மையாகப் பெய்தல். “வியந்தலறேன்” என்புழி , வியப்புப்  புதுமை பற்றி உண்டாயது . “புதுமை  பெருமை  சிறுமையாக்கமொடு , மதிமை சாலா மருட்கை  நான்கே”  என்புழி,  மருட்கை  புதுமை பற்றித் தோன்றும் என்பர் இயனூலார்.  மருட்கை என்பதற்குப் பொருள் வியப்பாகும் .புதுமை, பண்டு ஒரு காலும் கண்டறியாத நிகழ்ச்சியாகும் .  ஈண்டு அந் நிகழ்ச்சி யாதெனின் , எத்துணையும் பெரியோன்  ஒருவன் எத்துணையும்  சிறியான் ஒருவனை ஆட்கொண்டதாகும் . இறைவன்  ஆட்கொள்ளுதற்கு அடிகள் மிகவும் தகுதி யுடையவராயினும் , அவர்  தம்மைக்  கருதியது அவ்வாறு . “எம்பெரியானே சிறியேனை யாட்கொண்ட பெய்கழல்” என்றது இவ்வுண்மையைப்  புலப்படுத்தும் . இறைவன்  ஆட்கொள்ளுதற்குத் தகுதி  மிகவுடைய மெய் யன்பராதல்  வேண்டும் . இது பண்டு தொட்டுள்ளது.  ஆதலின் , இப்பொழுது அத் தகுதி சிறிதும் இல்லாத தம்மை  ஆட்கொண்டது பண்டு  நிகழாத புதுமை  எனக் கொண்டு , அப்புதுமை பற்றி , “வியந்து அலறேன்” என்றார் . எதிர்பாராத நிலையில் ஒரு  புதுமையைக்  கண்டுழி , மெய்மறந்து ஆரவாரித்தல்  மக்கட்கு இயல்பு  ஆதலின் , அது  செய்திலேன்  என்பர். “அலறேன்” என்றார்.  “நயந்து உருகேன் “ என்புழி , நயத்தல்  அன்பு செய்தலாதலின் ,அன்பினாற் கரைந்து  நெஞ்சம் உருகப் பெற்றிலேன்  என்றார். தூவல் , அலறுதல் , உருகுதல் இம்  மூன்று செயல்களும் முறையே மெய் மொழி மனம் ஆகிய முக்கரணங்களாலும் நிகழ்வனவாம் . மொழிப்  பணியாகிய வியந்தலறுதலைச்  செய்யலாம் ;அதற்கும் இயன்றிலதேல், நெஞ்சத்தளவில் நினைந்து உருகலாம் என, அருமை, எளிமை கருதி இவ்வாறு  கூறப்பட்டன. ஆனால் , உள்ளம்  உருகுதலை நோக்க  அலறுதலும் , அதனை நோக்க மலர்  தூவுதலும் எளிய செயல்களாகவும் , இவ்வாறு  கூறுதல் என்னையெனின் , பிறிதோர் உபகரணத்தைத் தேடுதலினும் , உரத்த  குரலாற் கூவிக் கதறுதல் எளிதாதலும் , மனம் அமைதியுற்று உருகுதல் அதனினும்  எளிதாதலும் கருதியென்க.  “போதும் பொறாவிடிற் பச்சிலையுண்டு புனலுண்டெங்கும் , ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்றே “ என்னும்  பெரியோர்  உரையும் இதனை வலியுறுத்துவதாகும் .

           பிறப்பு  இறப்புக்களினின்றும்  விடுதி  பெறுதற்குரிய  சாதனங்களை  இழந்திருத்தலின் , எவ்வாறு கட்டு  அற்று  உய்தி பெறுவேன் என்பார், “நான்  ஆம்  ஆறு என் “ என்றார். ஆதல் பாச ஒழிவு பெற்றுத் தூயனாதல் . மன மொழி மெய்கள் இறை வழிபாட்டில் தலைப்பட்டு  உய்தி பெறுதலே மெய்யன்பர்க்கு  உடலோடு கூடிய வாழ்க்கையின் நோக்கமாகும். அந்  நோக்கம் நிறைவேறாத நிலையில் , அவ்வுடல்  வாழ்க்கை வெறுக்கத்தக்கதாகலின் , “தரியேன்” என்றார் . “ தரிக்கிலேன் காய வாழ்க்கை” என்பதும்  இக்கருத்துப் பற்றி  எழுந்ததே . பாசப்பிணிப்பிற்பட்டு உழன்ற தம்மை , அதனின்  நின்றும்  விடுவித்துக் கருவி கரணங்களை  நன்னிலைப் படுத்து ஆட்கொண்ட  இறைவனது பேரருளைநினைந்து வழிபாடு செய்தலே கடமையாகவும், அதனை  மேற்கொள்ளாத நிலையில் வாழ்தலினும் சாதலே நன்று என்பார், “நான் சாவேன் “ என்றார். தரியேன் என்ற  அளவிலே  சாதல் பெறப்படுமா யினும் , மீண்டும்  சாவேன் என்றது.  எதிர்மறையாலும் உடன்பாட்டாலும் கருத்து வலியுறுதற்பொருட்டாம் . “புறங்கூறிப்  பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் , அறங்கூறும் ஆக்கம்  தரும்” என்றாற்போல , இறைவழிபாட்டிற்குப் பயன்படாத உடல் ஒழித்தல் , பின்னைப் பிறப்பிலாவது  அக்குற்றம்  நீங்கி அவ் வழிபாட்டில் தலைப்படல் கூடும் என்பது கருத்து .  பிற்பிறப்பினும் அது கைகூடவில்லையாயின் , கை கூடுங்காறும் சாதலே வேண்டும்  என்பார், “சாவேன்  நான்  சாவேனே” என்று  அடுக்கிக்  கூறினர். இவ் வடுக்கு , விரைவு  பற்றியதும் அம் ; என்னை : இறைவழிபாடு இல்லாத  நிலையில் ஒரு கணப்பொழுதும் அவ்வுடல்  வாழ்க்கை இருத்தலாகாதென்பது, கருத்தாகலின்.

          இதன்கண், அடிகள் தம்  சிறுமை  அறிந்தும் , திருவடித்  தொண்டனாகிய  இறைவன் பேரருளை நினைந்து , செய்ய வேண்டிய பணிகளைச் செய்தற்கு முற்படாத நிலைக்கு இரங்கி , இறைவனை முன்னிலைப்படுத்து , இந் நிலையினும் சாதலே நன்று  என்று கூறுமுகமாக நெஞ்சிற்கு  அறிவுருத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல் எனும்  பதிகம் நுதலிய பொருள் புலனாயவாறு  அறிக .

                                               *************************************

பாடல் :19 .

வேனில்வேள்  மலர்க்கணைக்கும்

வெண்ணகைச்செவ்  வாய்க்கரிய

பானலார்  கண்ணியர்க்கும்

பதைத்துருகும்  பாழ்நெஞ்சே

ஊனெலாம்   நின்றுருகப்

புகுந்தாண்டான்  இன்றுபோய்

வானுளான்  காணாய் நீ

மாளாவாழ்  கின்றாயே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்கண்  தம் மன மொழி மெய்கள்  ஈடுபடாமைக்கு இரங்கிய  அடிகள் , அக்கரணம் மூன்றனுள்ளும் , மனமே மக்கள் எய்தும் பேறுகள் எல்லாவற்றிற்கும்  சிறந்த காரணமாதலான் , அது  வீட்டிற்கு  ஏதுவாக இறைவனை நினைந்து உருகுதலைச்  செய்யாமல் , கட்டிற்கு  ஏதுவாக மகளிரை நினைந்து உருகுதலைக்  கண்டு , அம்மனத்தை  வெறுத்துரைக்கு முகமாக , இத் திருப்பாட்டில்  இறைவனது அருமைப்பாட்டை நினைந்து இரங்குகின்றார் .

பதவுரை :- வேனில்  வேள் மலர்க்கணைக்கும்  =  காமன்  எய்யும்  மலர் அன்பிற்கும் ,

வெண்நகை  செவ்வாய்  கரிய  பானல்  ஆர்  கண்ணியர்க்கும்  = வெள்ளிய  பற்களையும்  சிவந்த  வாயையும்  கரிய  குவளை மலர்  போன்ற  கண்களையும்  உடைய  மகளிர்  பொருட்டும் ,

பதைத்து  உருகும்  பாழ்  நெஞ்சே  =  பதைப்புற்றுக்  கரையும்  பயன் அற்ற நெஞ்சமே ,

ஊன்  எல்லாம்  உருக  =  உடல்  உறுப்புக்கள்  எல்லாம்  உருகும்படி  ,

புகுந்து  நின்று  ஆண்டான்  =  உட்புகுந்து  நிலைத்து  நின்று  ஆண்ட எம்பெருமான் ,

இன்று  போய்  வான்  உள்ளான்  =  இப்பொழுது  சென்று  நுண்ணிய  பரவெளியில்  உள்ளான் ,

நீ  காணாய்  =  நீ  கண்டிலை?  (கண்டும்) ,

மாளா  வாழ்கின்றாயே   =  கெட்டொழியாமல்  இன்னும்  வாழ்கின்றனையே  என்பது.

விளக்கவுரை :- வேள்  என்பது  முருகனையும்  உணர்த்தும்  ஆதலின்  , அவனை  விலக்கி  ஈண்டுக்  காமனை  உணர்த்துதற்கு வேனில்  என்னும்  அடை  புணர்க்கப்பட்டது . காமன்  மலர்க்கணை  மிகுதியாகப்  பெறுதற்கும், அவற்றைக்கொண்டு  மக்களைக்  காமநிலையில்  தலைப்படுத்தற்கும்  உரிய  காலம்  இளவேனில்  ஆதலின்  , ஈண்டு , “வேனில்வேன்” எனப்பட்டான். வேள் கணை என்னாது மலர்க்கணை  என்றது , “வல்லவனுக்குப்  புல்லும்  ஆயுதம்” என்றபடி ,எய்பவன் ஆற்றல் புலப்படுத்தற்கு  என்க . பவழம்  போன்ற  செவ்வாயில் , முத்து  நிரைத்தனன்  வெண்பற்களைக்  குறிப்பிட்டது, புன்முறுவல்  பூத்த முகம் என்றற்காம் .

                    பானல்  – குவளை ;  ஆகுபெயரால் மலரை  யுணர்த்திற்று .  செங்குவளையும்  உண்டு  ஆதலின்  , கரிய  என்பது இனம்  விலக்கிய  அடை மொழியாகும்  .  ஆர் : உவமப்பொருட்டு.  மகளிர்  கண்களில்  வெண்மை  செம்மை  முதலிய  நிறங்களும்  உளவேனும் , கருமையே ஆடவரை  மயலூட்டுதற்குச்  சிறந்தது  ஆதலான் , “கரிய  பானலார்  கண்ணியர்  “ என்றார். “நெஞ்சமும்  நிறையும்  நீல  நெடுங்கணாற் கவர்ந்த  கள்வி “ என்புழி, ஆடவர்  உள்ளத்தைக்  கவர்தற்குக்  கருங்கண்ணே வலியுடைய தென்று  கூறியது காண்க.  மயலுறுத்தற்குப்  புன்முறுவல் பூத்த  முகமும்  , இணக்கக்  குறிப்பைப்  புலப்படுத்தற்குக் கருங் கண்ணும்  கூறப்பட்ட படியாம் . “காதன்மை கண்ணுளே  அடக்கிக் கண் எனும்  , தூதினால் துணி  பொருள் உணர்த்தி “  என்பதும்  இதனை  வலியுறுத்தும் . காமன்  அம்புகளுள் நீல  மலரும்  ஒன்றாதலின் உவமேயப்பொருளாகிய  கண்களேயன்றி  , உவமையாகிய  அம்மலரும்  ஆடவர்க்கு  மயல்  விளைக்கும் இயல்பின்  என்பது  தோன்ற  , “கருங்கண்”  என்னாது, “கரிய  பானலார்  கண்” என்று கூறப்பட்டது . வெண்மை , கருமை , செம்மை  என்பன முரண்தொடையாக நின்று  இன்புறுத்துவனவாம் .  கணைக்கும்  கண்ணியர்க்கும்  என்புழி, உம்மைகள் எண்ணுப்  பொருளன. பதைத்தலையும்  உருகுதலையும்  நிரல் நிறையாக்கி , மலர்க்கணைக்குப்  பதைத்து , கண்ணியர்க்கு  உருகும்  நெஞ்சே  எனக்  கோடல் பொருட் சிறப்புடையதாகும் . காமன்  அம்பு  பட்ட  அளவில்  துடித்தலும் ,அதன் முதிர்ச்சியில்  மகளிரை  நினைந்து உருகுதலும்  நெஞ்சிற்கு இயல்பாதலின்  , இவ்வாறு  கூறப்பட்டது . நெஞ்சிற்குப்  பதைத்தலும்  உருகுதலும் ஆண்டவனை  முன்னிட்டு  நிகழின் நன்றாம் . அந் நிலையில்  அவை  அன்புச்செயலாக  நின்று  , இறையருளிற் கலப்பித்துப் பேரின்பத்தில் தலைப்படுத்துவனவாகும் . “வேட்ட  நெஞ்சாய்ப்  பள்ளந்தாழ்  உறுபுனலிற் கீழ் மேலாகப்  பதைத்துருகும்  அவர்”  என அடிகள்  பிறிதோரிடத்துக் கூறியதும்  ஈண்டு நினைக்கத்தக்கது . இறைவன் பொருட்டு  மேற்கொள்ளத்தக்க  பதைத்தலையும்  உருகுதலையும் இழிந்த காமங்கருதி  மேற்கோடல் மிக்க தீங்கு பயக்குமாதலின் , அந்த நெறியிற்  செல்லும் நெஞ்சத்தை வெறுத்து ,”பாழ் நெஞ்சே” என்றார்.

                “  ஊனெலாம் “ என்புழி , எல்லாம் என்பதனால் என்பு, நரம்பு முதலிய வன்மை மென்மைப்  பகுதிகள் அனைத்தையும் கொள்ளல் வேண்டும் . மெய்யன்பர்க்கு உள்ளொளி பெருக , ஊன்  உருகுமென்பது அடிகள் அநுபவத்திற் கண்டது.  “ஊனினை  உருக்கி உள் ஒளி பெருக்கி “ என்னும் திருவாக்கையும் நோக்குக . ஊனுருகி உடல் மெலிதல் இழிந்த காமத்தானன்றித் தவத்தால் நிகழுமாயின் ,அது சிறந்ததொன்றாகும் . “விரதந்தனில் இளைத்த மேனி”  “என்பெழுந்து இயங்கும் யாக்கையர்” என்பனவற்றால்  இவ்வுண்மை தெளியெலாம் , புகுந்து நின்று  ஆண்டான்  என்புழி , புகுதல் ஓரிடத்தினின்றும்  பிறிதோரிடத்தில் நுழைதலாகும்.  எங்கும்  நிறைந்த பொருளாகிய  இறைவனுக்குப் புடை பெயர்ச்சி கூறுதல் எங்ஙனம் பொருந்தும் எனிற்  கூறுவேன் . சீவ போதம் முனைத்  திருக்குங்கால்  சிவபோதம்  மேற்பட்டிருக்குங்கால் சீவ போதம் விளக்கின்முன் இருள் போல ஆற்றல் கெட்டு ஒழிதலும் பெரியோர் அனுபவத்திற் கண்டவை. “என்னுளே  உழிதர் வேனை, எம்பிரான் என்னைப்  பின்னைத் தன்னுளே சுரக்கும்” எனவும், “என்னறிவை உள்ளடக்கி என்போல் வரு மெளனி தன்னறிவுக்குள்ளே  நான்  சாருநாள்  எந்நாளோ “ எனவும் போந்த அனுபவ மொழிகள் இவ்வுண்மையைத்  தெளிவிப்பனவாம் . இங்ஙனம்  உயிரறிவு  முனைத்திருக்குங்கால் , ஆண்டுப்  புலப்படாமல் இருந்த  இறைவனது வியாபக  நிலை பண்டைத்  தவத்தால் விளக்கம்  உற  அந்நிலை கருதியே இறைவன் வெளியிடத்திருந்து  உட்புகுந்ததாகக் கூறியருளினர். இவ்வுண்மையை , “என மனமே  ஒன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே “ என்னும் பெரியார் திருமொழி புலப்படுத்தி நிற்றல் அறிக.  ஈண்டு , அடிச்சுவடு தோன்றாவாறு புக்கனன் என்பது மேற்குறிப்பிட்ட கருத்தைப் புலப்படுத்துவதாகும் . “உருகப் புகுந்தாண்டான் “ என்புழி , உருக என்னும் செயவென் எச்சம் காரியப்பொருட்டு . அருவருக்கத்தக்க ஊனுடன்புள் புகுந்தாண்டான் என்றது. இறைவனது பேரருள் உடைமையைப் புலப்படுத்தற்கு என்க. உட்புகுந்த அந்நிலை , பற்றிக்கொள்ளுதற்கு எளிதாக  இருந்தும் , நெஞ்சம் அது செய்யாமல்  தவறிவிட்டது  என்பது  குறிப்பு.  அருளுடைமையால்  அன்று  எளிதிற்  புகுந்தாண்ட இறைவன் , இன்று தம்மை விட்டு , மனத்திற்கு எட்டாத நுண்ணிய பரவெளியில் மறைந்து விட்டானே என்று இரங்குவார்  “இன்று போய் வானுளான் “ என்றார்.  வான் –  சிற்பர வியோமமாகும் . “இன்று போய்  வானுளான் “ என்றது ,அடிகளை இறைவன் இன்னும்  சின்னாள் இருத்தி யென உருக்கரந்த நிலையில் இரங்கிக்  கூறியதாம் . இறைவன் உருக்கரந்ததை நீ அறிந்திலையோ (அறிந்துளாய்)  என்பார், “காணாய் நீ “ என்றார். இப்பொருட்டாதல் ஓசை வேற்றுமையாற் காண்க. இதனை வடநூலார் “காகு” என்பர்.  காணாய் என்பது முன்னிலை அசையுமாம் . மாளாமல்  என்பது , ஈறு தொக்கு மாளா என நின்றது . பேரருளுடையமையால்  ஊனுடல் உருகப்  புகுந்தாண்ட இறைவனது  பேருதவியை நினைந்து , பதைத்து உருகாமலும் ,கைவிட்டகன்று பர வெளியில் புகுந்ததைக் கண்டு வைத்து இறவாமலும் இருக்கும்  நெஞ்சத்தின்  கொடுமையை நினைந்து ,அஃது இறவாமல் இருத்தற்கு வருந்தி , “மாளா வாழ்கின்றாயே” என்றார் . மனம் மாளுதல்  வினை விளைவு இன்மைக்கு ஏதுவாம் என்பதும் இங்கே  கருதத்தக்கது . இன்னுயிர்க் கணவனை இழந்த கற்புடையாள் உடன் இருத்தல் ,அல்லது வருத்த மேற்கொண்டு கைமை நோன்பியற்றல் அன்றி ,வாழ்க்கை நலத்தை விரும்பமாட்டாள் . அது போல, இறைவனைப் பிரிந்த நிலையில் , நெஞ்சம்  கெட்டொழிதல் அல்லது வருந்தி  வாடியிருத்தல் வேண்டுமேயன்றி , வாழ்வில் தலைப்படல் கூடாததாகவும் , அதற்கு மாறாகத் தம் நெஞ்சம் வாழ்க்கை நலத்தில் சேறலை வெறுத்து, ”வாழ்கின்றாயே”  என்று  இரங்கிக்  கூறினர் .

                   இப் பதிகத்து எழு திருப்பாட்டுக்களிலும் , தம் நெஞ்சத்தின் மாறுபட்ட நிலையை வெறுத்து , இறைவனை முன்னிலைப் படுத்துக் கூறுமுகமாக , நெஞ்சிற்குப்  பலவாறு குறிப்பால் அறிவுறுத்தும்  எட்டாவது  திருப்பாட்டில் , நெஞ்சின்  கொடுமை பொறாது , “சாவேன் நான் சாவேன்” என்று இறுதியுரை கூறியும் , அது நன்னிலைப்படாமை கண்டு  வருந்தி , இத்  திருப்பாட்டில் , அந் நெஞ்சையே முன்னிலைப்படுத்து , அதன் இழிவை எடுத்துரைத்து  அறிவுறுத்தமையின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம் நுதலிய பொருள் வெளிப்பட்டு  நிற்றல் அறிக.

                                         ******************************************

பாடல் :20 .

வாழ்கின்றாய்  வாழாத

நெஞ்சமே  வல்வினைப்பட்

டாழ்கின்றாய்  ஆழாமற்

காப்பானை  ஏத்தாதே

சூழ்கின்றாய்  கேடுனக்குச்

சொல்கின்றேன்  பல்காலும்

வீழ்கின்றாய்  நீயவலக்

கடலாய  வெள்ளத்தே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவனை நினைந்து உருகமல் உலக வாழ்க்கையில்  ஈடுபட்டு உருகும் தம் மனத்தை வெறுத்து உரைத்த அடிகள், இத் திருப்பாட்டில் இறைவனது அருமைப் பாட்டையும் பேருதவியையும்  அறியாமல் துன்பக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் அந் நெஞ்சத்தை இடித்துரைக்கும்  முகமாக , அப் பெருமான் சார்பின்மையால் நேரும் தீங்கை எடுத்துக் கூறி இரங்குகின்றார்.

பதவுரை :-  வாழாத நெஞ்சமே  =  பேரின்ப வாழ்க்கையில்  தலைப்படாத   நெஞ்சமே ,

வாழ்கின்றாய்  = கெடாமல் இருக்கின்றாய் ,

வல்வினைப்பட்டு  ஆழ்கின்றாய்  =  வலிய தீவினையின் வயப்பட்டு அதனுள்ளே அழுந்துகின்றாய் ,

ஆழாமற் காப்பவனை  ஏத்தாது  =  அங்ஙனம் அழுந்தாமற் காப்பாற்றும்  பெருமானைப்  புகழ்ந்து  பாராட்டாமல் ,

உனக்குக் கேடு  சூழ்கின்றாய்  =  உனக்கு  நீயே  கேடு  தேடிக்கொள்ளக்  கருதுகின்றாய் ,

பல்காலும்  சொல்கின்றேன்  =  உனக்குப்  பலமுறையும் இடித்துக்கூறி  வருகின்றேன் , அங்ஙனம்  கூறியும்,

அவலக் கடலாய வெள்ளத்து  =  துன்பம்  ஆகிய  கடற் பெருக்கில் ,

வீழ்கின்றாய்  =  நீ  வீழ்ந்து மூழ்குகின்றாய்  என்பது .

விளக்கவுரை :-உயிர் என்றும் அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையில் தலைப்பட்டு உய்தற்கும் . விரைவில் அழிந்தொழியும் இயல்பினதாகிய சிற்றின்பத்தில் அழுந்திக் கெடுதற்கும் நெஞ்சமே கருவியாகும் .இதனை முறையே , “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே “ எனவும் , “உழுத சால்வழி  யேயுழு வான் பொருட்,டிழுதை  நெஞ்சமி தென்படுகின்றதே “ எனவும் கூறிய அனுபவவுரைகள் தெளிவிப்பனவாம். இத்தகைய நெஞ்சம் தாம் கருதும் வாழ்க்கைக்குப்  பயன்படாமை  குறித்து ,அதனை ,”வாழாத  நெஞ்சமே” என விளித்து , நம்மை செய்யாமையோடு  அமையாது , தீமை செய்தற்கும் முற்படுதல் குறித்து , நீ இறவாமல்  இருக்கின்றாயே  என்பது  தோன்ற , “வாழ்கின்றாய்” என இரங்கிக் கூறினார் .

                 நெஞ்சம்  கெட்டொழியாமல் இருத்தலாலே வலிய வினைக்காட்பட்டு  அதன்கண் அழுந்த நேர்ந்ததென்பது கருத்து. வல்வினை மெல்வினை என வினைகளை இருதிறப்படுத்துரைப்பர் .  அறம்  பாவம் என்னும் இரண்டன் கண்ணும் வன்மை மென்மை யுளவெனினும் , ஈண்டு வல்வினை யென்றது  கொடிய தீவினையை . ஆற்றன்மிக்க தீவினை பயன் செய்யுங்கால்  எதனாலும் தடைப்படுத்த இயலாததாகும் . “வல்வினை வளைத்த கோலை மன்னவன் ,நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” என்புழி, வலியவினையின்  விளைவைப் பாண்டியன் உயிர் கொடுத்துத் தடைப்படுத்தினான். என்று  இளங்கோவடிகள்  திறம்படக் கூறியதனால் , உடலினின்றும் உயிரைப்பிரிக்கும் அத்துணையாற்றல் வல்வினைக்கு உண்டென்பதை அறியலாம் . செயலில் துன்பத்திற்கு மூலமாகிய தீவினையையும் , நுகர்ச்சியில் நல்வினைப்பயனாகிய  இன்பத்தையும் விழைதல் உலகத்து  இழிந்த மக்கள் இயல்பு.  அவர்க்குக் கொடிய  தீவினையைச்  செய்வதில் விருப்பம் உண்டாதற்குக் காரணம் , அப்பொழுது பின்வரும் பயனை நினையாமல் ,அவ்வினையால் அன்னார் மனம் உவகையடைதலே யாகும். வினைவிளைவாகிய பயனை மெய்யென உணர்ந்தவர்க்கே தீவினையில்  அச்சம் உண்டாகும் . அவ்வுண்மை உணராதார்க்கு அச்சம் இன்றாதலோடு உவகையும் உண்டாமென்பது உலகியலிற் கண்டது. பயனாகிய பெருந் துன்பத்தைச் சிறிதும் கருதாமல் , மெல்வினையையும் உவர்த்து, வல்வினை யை  மேற்கொண்டு , அதன் கண்ணும் அழுந்துதல் என்ன அறியமை என்பார், “ வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் “என்றார் . பண்டைப்  பிறப்புக்களின்  தொடர் ச்சியால்  ஆற்றல் பெற்றுத் தன்னுள் அழுத்தும் அவ்வினையினின்றும்  எவ்வாறு கரையேற  இயலுமெனின் ,” இருவினைப்பாசமும்  மலக்கடல்  ஆர்த்தலின் , வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட , அருளுமெய் அஞ்செழுத்து “ என்னும்  சேக்கிழார் அருண்மொழிப்படி , ஆண்டவனை நினைவு  கூர்தல் ஆகிய  தவத்தில் தலைப்பட்டால் உய்தி பெறலாம் . அங்ஙனம் கரையேற்றி ஆளுதற்குரிய இறைவனை நினைந்து முறையிட்டிலை  என்பார் . “ஆழாமற் காப்பானை ஏத்தாது” என்றார், ஏத்தாமையை கேடு தேடிக்கொண்டதாக முடியும் என்பது கருத்து. செய்யத் தகாததைச் செய்தலும் ,செய்யத்தக்கதைச் செய்யாமல் விடுதலும் கேட்டிற்குக் காரணம் ஆகும் .  இங்கே ,”வல்வினைப்  பட்டாழ்தல் “  தகாததைச் செய்தலும் ,”காப்பானை ஏத்தாமை “ தக்கதைச் செய்யாமல் விடுதலும் ஆகும் . ஆதலின் இரண்டு வகையானும்  கேடு  தேடிக் கொண்டனை  என்பார், “சூழ்கின்றாய் கேடுனக்கு” என்றார்.

                 உனக்கு என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு ,”உனக்குச் சொல்கின்றேன்” எனக்  கூட்டுக. கொடிய தீவினைப்பயன் விளக்குங்கால்  கொடுந்துன்பமாக  முடியும்  ஆதலின், “வல்வினைக்குள் அழுந்தற்க” என்று  பலமுறை  இடித்துரைத்தும் நன்நெறிப் பட்டிலையே என்று இரங்குவார், “உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்” என்றார். “இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் , கெடுப்பாரிலானுங் கெடும் “ என்னும்  நீதி மொழியைக் கடைப்பிடித்து , இடித்துரைத்தலின்றிக் கேடு அடையவிடுதல்  அறம்  அன்றெனக்  கொண்டு ,ஒரு முறை இருமுறையின்றிப் பலமுறையுஞ் சொல்கின்றேன் என்பார், “பல்காலும்” என்றார். இடித்துரைப்பார் ஓரளவிற்  கூறியும் ,கேட்பார் அதனை யேற்றுக்கொள்ள வில்லையானால் , அவ்வளவில் விட்டு ஒழிதல் இயல்பு. அங்ஙனம் ஒழியாது இன்னும் சொல்லி வருகின்றேன் என்பது தோன்ற , “சொல்லினேன்” என்று இறந்த காலத்தாற் கூறாது ”சொல்கின்றேன்”  என நிகழ்காலத்தாற் கூறினர். அங்ஙனம் கூறியும் கேளாமல்  வல்வினைப்பட்டு  அழுந்துவதால் விளையும் பயன் இன்னவென் பதை  நான்காம் அடியிற் கூறுகின்றார்.

              வினை வலியதாகலின் , அதற்கேற்பப் பயனை அவலக்கடல் வெள்ளமாகக் கூறினார் . வல்வினை மூலமும் , அவலம் அதன் பயனும் ஆகும். கடல் பெருகிக் கரை புரண்டு  ஓடும் நிலையில்  அதனைக் கடல் வெள்ளம்  என்று  கூறலாம் . ஆழமாயினும் , நிலையான  நீரில் வீழ்வார்  ஓரோவழி  உய்தல்  கூடும் . அந் நீர் பெருக்கெடுத்து  ஓடும் நிலையில் வீழ்வார்  உய்தலரிது. இவ்வுண்மை கருதியே , வல்வினைப்பயனாகிய துன்பம் ஆற்றொணாதது எனக் கொண்டு , “அவலக் கடலாய வெள்ளம்” என்றார். “வல்வினைப்பட்டு “  என்பதற்கேற்ப , “ அவலக்  கடலாய வெள்ளத்தே” எனவும், “ ஆழ்கின்றாய் “ என்பதற்கேற்ப , “வீழ்கின்றாய் “ எனவும் கூறியது, கருதி இன்புறத்தக்கது. செயல் முன்னரும் பயன் பின்னரும் நிகழ்தல் இயல்பு. இங்கே செயல் வலியதாகலின் , அது நிகழும் பொழுதே பயனும் உடன் நிகழ்தல்  குறித்து , “வீழ்வாய்” என்னாது , “வீழ்கின்றாய் ‘என்றார் . ஒரு வினையைச்  செய்தவனிருக்க, அவனை விட்டு , அதன் பயன் மற்றொருவனை  அடையாதாதலின் , வல்வினைக்கண் அழுந்திய  நீயே அதன் பயனையும் நுகர்தற்குரியை என்பது தெளிவுறுத்தற்கு ,” வீழ்கின்றாய்” என்னும்  முன்னிலை வினையாற் பெறத்தக்க  எழுவாயை வெளிபடுத்து , “வீழ்கின்றாய் நீ” என்று  கூறியருளினர் .

            இதன்கண், நெஞ்சை நோக்கி , “பலகாலும் இடித்துரைத்தும் கேளாமல் கொடிய  தீவினைச்  செயலில்  தலைப்படுகிறாய் ; இது பெருந்துன்பக்கடலில் மூழ்குதற்கு ஏதுவாம் “ என்று  அறிவுறுத்தமை  வெளிப்படக் கிடத்தலின் , அறிவுறுத்தல் என்னும் பதிகம்  நுதலிய பொருளும் , “வல்வினைப்பட்டு  ஆழ்கின்றாய்” , “சூழ்கின்றாய் கேடுனக்கு” என்பனவற்றால் வைராக்கியமும் , ஆழாமற் காப்பானை ஏத்தல் வேண்டும் என்றதனால் பத்தியும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம்  நுதலிய  பொருளும்  புலனாயவாறு  அறிக .

                                           ********************************************

                                *******************************************************************

3 .  சுட்டறுத்தல்

     இ   த் திருச்சதகத்தின் முதற்பதிகத்தில்  பொய்ப்பொருள் கடிந்து , மெய்ப்பொருளாகிய கடவுள் உணர்ச்சியில்  தலைப்படுதலைக் குறித்தும், இரண்டாம் பதிகத்தில்  அதற்குத் துணை புரிய வேண்டிய மனம்  நன்நெறிப்படாமை  கண்டு , அதனை இடித்துரைத்து  அறிவுருத்தமை  பற்றியும் தெளிவுறுத்தப்பட்டன . இங்ஙனம் அறிவுறுத்தப்பட்ட நெஞ்சம் உள்ளுறக் கருதியும் , பொறிவாயிலாக வெளிப்பட்டும்  அறியும் சுட்டறிவினால் இறைவனைக்  காண்டற்கு முயன்றதாக , அம்முயற்சி  ஓரளவிற்குச் சாதனமாகுமேயன்றிக் கருதிய பயனைச் செய்ய  மாட்டாதெனவும்  , சுட்டறிவினால் அறியப்படும் பொருள் எல்லாம்  சுட்டுப்பொருள்களாகிய  நிலையில் பொருள்களாம்  எனவும் , எங்கும் நிறை  பொருளாகிய இறைவனை அறிதற்கு அச் சுட்டறிவு  கருவியாகாது எனவும் உணர்ந்து ,அச்சுட்டறிவை யொழித்தல் பற்றி இப் பதிகத்தில்  கூறுகின்றார். சுட்டறிவு என்பது , இது குடம் , இஃது ஆடையென்று கண்ட பொருளைப் பொறி  முதலிய கருவிகளுடன் கூடி நின்று அறியும் அளவையறிவாகும் . இதனை ஆன்ம  போதமென்றுங் கூறுவர். இவ்வறிவால் அறியப்படுவனவெல்லாம்  அழியும்  இயல்பினவாகும் . இவ்வுண்மையை , “ஈண்டு அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து” என மெய்கண்டாரும் , அதன் விளக்கமாக , “சுட்டறிவினால் அறியப்பட்ட சுட்டுப்பொருள் எல்லாம் அசத்து” என மாதவச்  சிவஞான  முனிவரரும்  கூறியவற்றால் தெளியலாம் . அகண்டப் பொருளாகிய இறைவன் , பொறி முதலிய கருவிகளோடு  கூடாத மெய்யுணர்வினால்  அறியப்படுபவன் ஆவான் . இம் மெய்யுணர்வைப்  பரஞானம் , தத்துவ ஞானம் , பதி ஞானம் , அநுபவவுணர்வு  எனப் பெரியோர்  கூறுவர். இறைவனை  அறிதல் மெய்யுணர்வினால் அன்றிச்  சுட்டறிவினால் இயலாதென்பதை , “அனைத்துலகுமாய  நின்னை ஐம்புலன்கள் காண்கிலா” என்னும்  அடிகள் திருவாக்கானும் உணரலாம்.  கருவிகளோடு கூடியறியும்  சுட்டறிவாகிய  உலகியலறிவிற்கும் , அவற்றின் நீங்கிச் சுட்டிறந்தறியும் மெய்யுணர்விற்கும் உள்ள வேறுபாடு கருதியே , திருக்குறள் ஆசிரியர் , முன்னதை , “அறிவுடைமை “ என்னும்  பெயரால் பொருட்பாலில் அரசியற்  பகுதியிலும் , பின்னதை , “மெய்யுணர்தல் “ என்னும் பெயரால் அறத்துப்பாலில்  துறவறப் பகுதியிலும் இரண்டு  அதிகாரங்களாக  அமைத்துள்ளார் . இறைவனது அகண்ட வடிவம் சுட்டறிவிற்கு அறியப்படாத தெனினும் , சாதனத் தொடக்கத்தில்  அப்பெருமானது திருவுருவைக் கண்டப் பொருளாகக் கொண்டு நினைவுறல் வேண்டும் . ஆதலின், அது பற்றி இறைவனது பெருமைக்கு இழுக்கு நேராது என்பது  கருதத்தக்கது.  நினைபவன்  தகுதி குறித்து அவ்வுருவத்திலும் இறைவன் விளக்கம் உள்ளது  என்பது பெரியோர் அநுபவத்திற் கண்டது. திருவுருவத்திற்  பதிந்த நினைவு முதிர முதிர , நினையும்  கருவியாகிய மனம் இறந்தொழியும்  என்பதையும் , அந் நிலையில் இறைவனது நிறைவு நிலை மெய்யுணர்விற்கு விளக்கமாம் என்பதையும் ,”உணர்ந்தார்க் குணர்வரியோன்” என்னும் திருக்கோவைச் செய்யுட்பகுதியும்  அதற்கு , “ஓருகால் தன்னை யுணந்தவர்கட்குப்  பின் உணர்தற்குக்  கருவியாக  சித்த விருத்தியும்  ஒடுங்குதலான் ,மீட்டு உணர்வரியோன் “என்று  கூறிய  பேராசிரியர்  உரைப்பகுதியும் தெளி வுறுத்துவனவாம் . இவ்வுண்மை குறித்தே , முதலில்  நெஞ்சை அறிவுறுத்துத்  திருவுருவில்  பதியச் செய்து , அதன் முதிர்ச்சியில்  அச் சுட்டறிவை யொழித்தல்  இப்பதிகம் நுதலிய பொருள் என வகுக்கப்பட்டதென்க .

எண்சீர்க் கழிநெடிலடி  ஆசிரிய  விருத்தம்

பாடல் : 21 .

வெள்ளந்தாழ்  விரிசடையாய்  விடையாய்  விண்ணோர்

பெருமானே  யெனக்கேட்டு  வேட்ட  நெஞ்சாய்ப்

பள்ளந்தாழ்  உறுபுனலிற்  கீழ்மேல்ஆகப்

பதைத்துருகும்  அவர்நிற்க  என்னை  யாண்டாய்க்

குள்ளந்தாள்  நின்றுச்சி  யளவும்  நெஞ்சாய்

உருகாதால்  உடம்பெல்லாங் கண்ணாய்   அண்ணா

வெள்ளந்தான்  பாயாதால் நெஞ்சங்  கல்லாம்

கண்ணிணையும்  மரமாந்தீ  வினையி  னேற்கே.

கருத்துரை :-  இரண்டாம் பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில் நெஞ்சத்தின்  மாறுபட்ட நிலையை எடுத்துக்காட்டி அறிவுறுத்த அடிகள் அது தகாத நிலையிற் சேறலைக் கண்டு வைத்தும் ,பெருங்கருணையால் இறைவன் தம்மை ஆட்கொண்ட பேருதவியைக் குறித்து , அந் நெஞ்சம் மேற்கொள்ளவேண்டிய  கடமையையும் , அதன் விளைவையும் இத்  திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :- வெள்ளம்  தாழ்  விரிசடையாய்  =  கங்கை  நீர்ப் பெருக்குத்  தங்கிய  விரிந்த  சடையினையுடையாய் ,

விடையாய்  =  ஊர்தியாகிய  எருதினையுடையாய் ,

விண்ணோர்  பெருமானே  =  அமரர்  தலைவனே,

எனக்  கேட்டு வேட்ட நெஞ்சாய்  =  என்று  கூறக்கேட்ட  அளவிலே  வேட்கை மிக்க நெஞ்சம் உடையராய் ,

பள்ளம்  தாழ்  உறுபுனலின்  =  பள்ளத்தில்  வீழும்  மிக்க  நீரைப்போல,

கீழ் மேலாகப்  பதைத்து  உருகும்  அவர் நிற்க  =  கீழ் மேலாம்படி  துடிதுடித்து உருகும்  மெய்யன்பராகிய  அவர்கள்  ஒரு புறம் நிற்க,

என்னை  ஆண்டாய்க்கு  =  சிறியேனை  ஆளாகக்கொண்ட  நின் பொருட்டு ,

உள்ளந்தாள்  நின்று  =  உள்ளங்கால்  தொடங்கி ,

உச்சி  அளவும்  =  உச்சம்  தலைவரையும்  ,

நெஞ்சாய்  உருகாது  =  மனம்  தானாய் நின்று  உருகுதலைச்  செய்திலது,

உடம்பு  எல்லாம்  =  உடல்  முற்றும் ,

கண்ணாய்  வெள்ளம்  பாயாது  =  கண்ணாகி  நீர்ப்பெருக்குப்  பாய்ந்திலது ,

அண்ணா  =  என் தந்தையே ,

தீவினையினேற்கு  =  தீவினையுடையேனாகிய  எனக்கு ,

நெஞ்சம்  கல்  ஆம்  =  அங்ஙனம்  உருகாத நெஞ்சம்  கல்லாகும் ,

கண் இணையும் மரம் ஆம்  =  அங்ஙனம் வெள்ளம் பாயாத கண்களிரண்டும்  மரம்  ஆகும் , என் செய்வேன்  என்பது .

விளக்கவுரை :- வெள்ளம்  என்பது பெருக்கு எடுத்து வழியும் கங்கை நீரைக்  குறிக்கும் . நிலம் தாங்கலாற்றாத  அளவு விரைந்து வழிந்த கங்கைப் பெருக்கை இறைவன் தன் சடையின் ஒரு கூற்றில் அடக்கி அருளினான்  என்னும்  புராணக்கதையை  உட்கொண்டு கூறியது . சடை முழுதையும்  திரட்டி  அணையாக்கித்  தடுத்தான் அல்லன் ; அதனை விரித்து ஒரு சிறு பகுதியில் அடக்கினான் என்பது தோன்ற , “வெள்ளந்தாழ்  விரிசடையாய் “ என்றார் . இஃது அப்பெருமானது பேராற்றலைப்  புலப்படுத்தும் .

             விடையை  அறத்தின் வடிவம் என்ப.  அதனை ஊர்தியாகக்  கொண்டது.  அறத்தைப் பாதுகாத்து நடத்தும் தலைவன் என்பதைப் புலப்படுக்கும் . இறைவன் உலகத்திற்கு ஆதாரமாகியும் , ஆதேயமாகியும்  நின்று பாதுகாப்பவன் என்பதை , “சடையாய் “ , “விடையாய்”  என்பன  குறிப்பாக  அறிவுறுப்பனவாம் . எங்ஙனமெனிற் கூறுவோம் . ஆதாரம்  தாங்குதலும் , ஆதேயம்  தாங்கப்படுதலும்  ஆதலின் , இறைவன் தன்  சடையில்  கங்கைப்  பெருக்கைத்  தாங்கியும் , விடையை ஊர்ந்து , அதனால் தாங்கப்பட்டும் இருத்தலின் என்க. திங்களைச் சடையிற் சூடிப் பாதுகாத்த  புராணகதையும்  இவ்வுண்மையைத்  தெளிவிப்பதாகும் . “தோடுடைய  செவியன் விடை யேறியோர் தூவெண்மதி  சூடி” என்னும்  தேவாரத்தில்  அம்மையின் திருச்செவியைக் குறித்துத் “ தோடுடைய செவியன்” என்றதனால்  படைத்தலையும் , “ விடையேறி” , மதி சூடி “  என்பவற்றால்  காத்தலையும்  , “சுடலைப்  பொடி  பூசி” என்றதனால் அழித்தலையும் ,” “உள்ளங்கவர்  கள்வன் “ என்றதனால் மறைத்தலையும் , “ அருள் செய்த “  என்றதனால் அருளையும்  குறிப்பிட்டு , இறைவன் ஐந்தொழிற்குத்  தலைவன்  என்பதைப் பெறவைத்தார்  திருஞானசம்பந்த  சுவாமிகள் . அம்முறையில், ஏனைய தொழில்களுக்கு எல்லாம் ஒவ்வொன்று கூறிக் காத்தல் தொழிற்கு , “விடையேறி”  , “ மதி சூடி” என்னும்  இரண்டு நிகழ்ச்சி  கூறியது  இவ்வுண்மை குறித்தே என்பது தெளிவாம் . இங்ஙனம் ஆதாரமாகியும்  ஆதேயமாகியும் நின்று  காப்பவன் முழுமுதலாகிய தலைவன் என்பது தோன்ற, “விண்ணோர் பெருமானே “ என்றார். அமரர் தலைவன் என்பதனாலே மக்கள் முதலியோர்க்கும்  தலைவன் என்பது எளிதிற் பெறப்படும் . “விண்ணோர் முழுமுதல்  பாதாளத்தார்  வித்து” என்று அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  காண்க.  இங்ஙனம் , சடையாய் , விடையாய் , பெருமானே  என்று மெய்யன்பர்கள்  அணிமையில் நின்று இறைவனை விளித்தனராக , அச் சொற்களைக் கேட்ட அளவிலே நெஞ்சம் வேட்கை மிக்கு , வயம் அழிந்தது என்பார், “எனக் கேட்டு  வேட்ட நெஞ்சாய்” என்றார். கற்பு மிக்க காதலி யொருத்தி , தன் தலைவன் பெயர் கேட்ட அளவில்  தன்வயம் அழிதல் தலையன்பும், கண்ட அளவில் வயம் அழிதல் இடையன்பும் , ஊற்றின்பத்தில் வயம்  அழிதல் கடையன்பும்  ஆம்  என்பர்.  அது போல , ஈண்டு இறைவன் பெயர் கேட்ட அளவில் நெஞ்சம் வேட்கை மிக்கதாயிற்று  எனத் தலையன்பு உண்மை கூறப்பட்டது . “ முன்னம்  அவனுடைய நாமங்கேட்டாள் “ என்பதும் இக்கருத்துப் பற்றியதே . “வேட்ட நெஞ்சாய் “ என்புழி , ஆக்கம் இறைவன் பெயர் கேட்டற்கு முன் உள்ள தன்மை மாறித் தன்வயம் இழந்து , வேட்கை மீதூர  நின்ற நிலையை  உணர்த்துவதாகும் . நெஞ்சு , ஈண்டு  அதனை உடையார்க்கு  ஆயிற்று .

               “பள்ளந்தாழ் உறுபுனல் “ விரைவான  செலவிற்கும் கீழ் மேலாதற்கும்  உவமையாம் . பள்ளத்தை நோக்கி  விரைந்து செல்லும் நீர்  மிகுதியாக இருக்குமானால் , வீழ்ந்த இடத்தினின்றும்  மேலே கிளம்புதல்  இயற்கை , புனல் மிகுதி தோன்ற , “உறுபுனல்” எனப்பட்டது . ஈண்டு , நீர் வீழ்ச்சியைப் போல இறைவன் பெயர் கேட்ட அளவில் நெஞ்சம் தன்வயம் இழந்து , துடித்துக்  கரைந்தது  என்பார் , “பதைத்துருகும் “என்றார் . காம நிலையில் பதைத்துருகுதலை  ஒழித்தற்கே , “எனக் கேட்டு வேட்ட நெஞ்சமாய் பதைத்துருகுமவர் “ என்றார். மெய்யன்பினால் நெஞ்சங்கரையும் உண்மை அடியார் வேண்டி  நிற்க , அப் பெரியாரைவிட்டுக்  காமன் அம்பிற்கும்  மகளிர்க்கும்  பதைத்துருகும்  சிறியேனை ஆட்கொண்டருளிய கருணையை என் என்பேன் என்பார், “என்னை யாண்டாய்க்கு “ என்றார். குவ்வுருபு  பொருட்டுப் பொருளது.

               இத்துணைப்  பேரருளுடன்  ஆட்கொண்ட நினைக் குறித்து ,உடம்பின் உட்பகுதி முழுதும் நெஞ்சம்  ஆகி உருகுதல் வேண்டும் ; அங்ஙனம் உருகப் பெற்றிலேன் என்பார், “உள்ளந்தான் நின்றுச்சியளவும்  நெஞ்சாயுருகாது “ என்றார். நினைத்தற் கருவியாகிய மனத்திற்கு நெஞ்சம் இடனாதல் பற்றி மனத்தை நெஞ்சம் என்று கூறுதல்  தமிழ் வழக்கு . அஃது உடம்பினுள் ஒரு பகுதியாகும் . இறைவனது பேரருள் உதவி குறித்து உருகுதற்கு மனம் உடம்பின் ஒரு சிறு கூற்றை இடனாகக் கொள்ளுதல் போதிய தாகாதென்று கருதியும் ,நெஞ்சிடத்தின் உட்பகுதியே மனத்திற்கு இடனாதல் குறித்தும் , “உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய் “ என்றார், மேட்டு நிலத்தில்  நின்றும் பள்ளத்திற் பாயும் நீர்போற்  கீழ் மேலாக என்றதற்கேற்ப , “உச்சியினின்றும் உள்ளந்தாள் அளவும் “ என்னாது, “உள்ளந்தாநின்றுச்சியளவும் “ என்றார். நெஞ்சம் உருகுங்கால் , புறத்தேயுள்ள கண்களினின்றும்  கண்ணீர் பெருகுவதாகும் . இதனை ,”அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் “என்பதனாலும் அறியலாம் “அழுதா லுன்னைப் பெறலாமே”  என்பதும் அடிகள் திருவாக்கு . இது கருதியே , “ அழுதடியடைந்த  அன்பன் “ என்று  பின்னுள்ளோர் அடிகளைக் குறிப்பிடுவாராயினர் . அங்ஙனம் உருகிக் கண்ணீர் வடிதற்கு முகத்திலுள்ள இரண்டு கண்கள் போதா; உடல் முழுதும் கண்களாதல் வேண்டும் என்பார், ‘உடம்பெல்லாம் கண்ணாய் வெள்ளம்  பாயாது “ என்றார் .ஆல்  இரண்டும் , அசைகள் .” உடம்பெல்லாம் “என்பதற்கு, உடம்பின்  புறம்  எல்லாம் என்று பொருள் கொள்ளல் வேண்டும் . என்னை?  நீர் ஒழுக்கும்  கண்கள் முகத்தின் உள்ளனவாதலின்.

            உருக்கத்தாற் பெருகுங் கண்ணீரில் மிகுதி தோன்ற ,”வெள்ளம்” என்றார்.  இனி, அங்ஙனம் உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாகாவிட்டாலும் , உள்ள நெஞ்சத்தானும்  சிறிதும் குழைந்திலதே  என்பது குறித்து வருந்தி ,”நெஞ்சம் கல்லாம் “என்றார்.  இரும்பு முதலிய உலோகங்களாகக்  கூறின் , தீயின் , மிகுதியான சூட்டினால் உருகக்கூடும் . ஆதலின், எவ்வாற்றானும் நெகிழாத , கல்லாகக்  கூறினர் . உடம்பெல்லாம்  கண்ணாகாவிட்டாலும் , உள்ள கண்கள் தாமும் சிறிதும் கசிந்திலவே என்பது குறித்து வருந்தி , “கண்ணிணையு மரமாம் “ என்றார் . மரத்தின் கணுக்களுக்கு  கண் என்னும் பெயருண்மையாலும் , அதற்கு ஒன்றை நினைந்து  நீர்  வடிக்கும்  அறிவின்மையானும் , அதனோடு ஒப்பித்து , “மரமாம்” என்றார். “மரக்கணேனையும்  வந்திடப்  பணியாய் “ என்று பிறி தோரிடத்து  அடிகளும் , “மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்” எனப் பிறரும்  கூறியிருத்தலும்  காண்க. நெஞ்சம்  அன்பினால் உருகாமலும் , அதன் விளைவாகக் கண்கள் நீர் கசியாமலும் இருத்தற்குக்  காரணம் என்  தீவினையே என்பார், உடம்பொடு புணர்ந்து , “தீவினையினேற்கே” என்றார்.

            இதன்கண், ஏகதேசமாகச்  சுட்டியுணர முயலும் நெஞ்சத்தை யொறுத்து, உள்ளந்தாள் நின்று  உச்சியளவும் நெஞ்சாயுருகுதல் வேண்டுமெனக்  கூறி , அதனால்  அங்ஙனம் நெஞ்சம் உருகிக்  கரைந்த நிலையிலே இறைவன் காட்சி மெய்யுணர்விற்குப் புலனாமென்பது பெறப்பட வைத்தமையான் , சுட்டறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , நெஞ்சாயுருகாதெனவும் , கண்ணாய்  வெள்ளம் பாயா தெனவும் கூறியதனால் பத்தியும் ,”நெஞ்சம் கல்லாம் கண்ணிணையு மரமாம்  தீவினையினேற்கு  “ என்றதனால்,,  வைராக்கியமும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும்  தோன்றியவாறு  அறிக .

                                           **************************************

பாடல் :22 .

வினையிலே  கிடந்தேனைப்  புகுந்து  நின்று

போதுநான்  வினைக்கேடன் என்பாய்போல

இனையன்நான்  என்றுன்னை  அறிவித்  தென்னை

ஆட்கொண்டெம்  பிரான்  ஆனாய்க் கிரும்பின்  பாவை

அனையநான்  பாடேன் நின்  றாடேன்  அந்தோ

அலறிடேன்  உலறிடேன்  ஆவி  சோரேன்

முனைவனே  முறையோநான்  ஆன  வாறு

முடிவறியேன்  முதலந்தம்  ஆயி  நானே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் நெஞ்சம் தனக்குரிய கடமையை  மேற்கொண்டு தமக்கு உதவி புரியாமைக்கு  இரங்கிய அடிகள் , அங்ஙனம்  கடமையை  மேற்கொள்ளாமையோடு  தம்வழியின்  அன்றி வினைவழிச்சென்று , தம்மையும்  ஈர்த்து , அவ்வினையிலே உழல்வித்ததாக , அந்நிலையில் வலிய  வந்து ஆட்கொண்ட  இறைவனது பேரருளை  நினைந்து  தாம்  மேற்கொள்ளவேண்டிய  கடமைகளைச்   செய்யாமை குறித்து இத்  திருப்பாட்டில்  இரங்குகின்றார்

பதவுரை :- முனைவனே  =  கடவுளே ,

முதல் அந்தம் ஆயினானே  =  தோற்றத்திற்கும்  இறுதிக்கும் காரணம்  ஆயினவனே ,

வினையிலே  கிடந்தேனை  =  வினைப்பகுதியிலே  கிடந்து  உழலும்  அடியேன்பால் ,

புகுந்து நின்று  =  புகுந்து  நிலையுதல்  பெற்று ,

போது  =  வருக ,

நான் வினைக்கேடன் என்பாய்  போல  =  யான்  வினையை ஒழிப்பவன்  என்று  கூறுவாய்  போல  ,

இனையன் நான் என்று  உன்னை  அறிவித்து  =  இத்தன்மையை உடையவன்  யான்  என்று  நின்னை  எனக்கு  அறிவித்து ,

ஆட்கொண்டு  =  என்னை  அடிமையாகக்  கொண்டு  ,

எம்பிரான்  ஆனாய்க்கு  =  எங்கள் தலைவனாகிய நின் பொருட்டு ,

இரும்பின் பாவை அனைய நான்  =  இரும்பினால்  ஆக்கப்பட்ட  பாவையை  ஒத்த  யான்,

பாடேன்  நின்று  ஆடேன்  =  பாடுதலைச்  செய்யேன் , நின்று ஆடுதலைச்  செய்யேன் ,

அந்தோ  அலறிடேன்  உலறிடேன்  ஆவிசோரேன்  =  கதறுகின்றிலேன்  வற்றுகின்றிலேன்  உயிர்ப்புச்சோர்கின்றிலேன் ,

நான்  ஆனவாறு  முறையோ  =  யான்  இங்ஙனம்  ஆகியது முறையாகுமா,

முடிவு அறியேன்  =  இஃது  எவ்வாறு  முடியும்  என்பதையும்  அறிந்திலேன்  என்பது .

விளக்கவுரை :-  முனைவன் என்பது  இயல்பாகவே பாசங்களின் நீங்கிய  முற்றறிவுடைய  இறைவனைக் குறிக்கும் . “வினையின்  நீங்கிவிளங்கிய  அறிவின் முனைவன் “ என்பர் தொல்காப்பியனார் . உலகத் தோற்றத்திற்கும்  ஒடுக்கத்திற்கும் காரணன் சிவபெருமான் என்று  மறைமுடிவுகள் கூறுதலின் , “முதல் அந்தம் ஆயினானே “ என்றார் . ஆதல் – காரணன்  ஆதல் . இனி, அந்தம் முதலாயினானே எனக் கொண்டு , அந்தத்தைச் செய்யும்  முதற்பொருளானவனே என்று கோடலுமாம் . உலகம்  ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற தன்னிடத்தில் நின்றே மீளத்தோன்றுதலின் , அழித்தலைச் செய்யும் மகா சங்கார காரணாகிய இறைவனே முதற்பொருள்  ஆவான் என்னும் பொருள் தோன்ற , “ஒடுங்கி  மலத்துளதாம்  அந்த மாதி “ என்று  சிவஞான போதம் கூறுதல் அறிக. வினை , ஈட்டப்படுவதும் ,சேர்க்கப்படுவதும், நுகரப்படுவதும்  என  முத்திறப்படும் . ஓர் உழவன் அத் தொழிலின் முயற்சியால் நெற்பயிரை  ஓம்பி ,விளைவித்துக் கொணர்தல் ஈட்டப்படுவதும் கொண்டுவந்த நெல்லைக் களஞ்சியத்தில் சேர்த்து வைத்தல்  சேர்க்கப்படுவதும் ,பின் அதனை உணவாக்கி உண்டல் நுகரப்படுவதும்  ஆதல்போல , வினையும் ஆம் என்பது . ஓர் உயிர் பிறவியில் தலைப்படல் தொடங்கி  வீட்டுநிலை  எய்துங்காறும் வினைத் தொடர்பிலே கிடப்பதாகும். இங்ஙனம் மாறி மாறி  ஈட்டன் முதலியவற்றைச்  செய்துகொண்டே  பிறந்து இறந்து உழலுதலின் , “வினையிலே கிடந்தேனை” என்றார் . “ அறம் பாவம்  என்னும்  அருங்கயிற்றாற் கட்டி” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதுங் காண்க .  “கிடந்தேனை” என்புழி , இரண்டாம்  உருபை  ஏழாம் வேற்றுமை  மயக்கமாகக் கொள்க.

           இத் திருப்பாட்டின் இரண்டாம் அடியில் , “என்னை யாட்கொண்டெம் பிரான்  ஆனாய் “ என்று  கூறுவதாலும் , ஆட்கொள்ளுதல் , “கட்டறுத் தெனையாண்டு “ என்றபடி வினைத் தொடரின் நின்றும் விடுவித்தே செய்யத்தக்கது ஆதலாலும் , வினையிலே கிடத்தல் ஆட்கொண்டதற்கு  முன்னுள்ள நிகழ்ச்சி எனக் கொண்டு “கிடந்தேனை “ என இறந்த காலத்தாற் கூறினர் .புகுந்து நிற்றலைப்பற்றி , “ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான், என்புழி, விளக்கிக் கூறப்பட்டு  வினையிலே பிணிப்புண்டு , அறிவு விளக்கமின்றிக் கிடந்த என்னுட் புகுந்து நின்றவன் , வினையினீங்கி  விளங்கிய  அறிவனாவான் என்பது குறிப்பிற் பெறப்படும்  ஒரு நயம் . மேலும்  “வினையிலே கிடந்தேனை” எனத் தம்மையும் , “புகுந்து நின்று” என இறைவனையும்  கூறியதில் ,கிடத்தல் பொருட்படுத்தாமல் இருந்ததையும் , நிற்றல்  பொருட்படுத்து  நின்றமையையும் புலப்படுத்தும் பிறிதொரு நயமாகும் . இவற்றானும் இறைவன் அடிகள்பால்  வைத்த பேரருளின் திறம் புலனாதல்  அறிக . புகுந்த இடம் தூயதாயின் , நிற்றல் கூடும் . ஈண்டுப்  புகுந்தது  ஊனார் உடல் ஆதலின் ,நிற்றற்குத் தகுதியில்லாததாகவும் , அதனுள் நின்று ஆண்டான் என ,இறையருட் சிறப்பை மேலும் புலப்படுத்த, ”புகுந்து நின்று “  என்றார். புகுந்து நின்ற இடம்  ஊனுடலாயினும் , தூய உடம்பினன் ஆகிய இறைவன் புகுந்தமையால் , அது சிறந்த திருக்கோயில் ஆகுமென்பது . இதனை , “வினைபடு முடல் நீ  புகுந்து நின்றமையால் விளங்கிய விமானமாயினதே “ என்னும் திருவிசைப்பாவானும் அறிக. இங்ஙனம்  இறைவன் புகுந்து நின்றதும் , வினைப்பிணிப்பால் அவனை  இன்னான்  என அறியாமல் வாய்வாளா இருந்தேனாக , அப் பெருமானே என்னை வருக என அழைத்தான் என்பார், “ போது” என்று அருளினன் எனக்  கூறினர் . ஓர் இல்லத்திற்கு  ஒரு பெரியவர் வந்தால் , அவர் முன்னர் அறியப்படாதவர்  ஆயினும் , இல்லமுடையார் அவரை வரவேற்று , “வருக”  என்று கூறி , இருக்கையளித்து உபசரித்தல் உலகியலிற் கண்டது . அதற்கு  மாறாக , உட்புகுந்த பெருமானே வாய்வாளா இருந்த தம்மை  வருக என அழைத்தான் என , அவ்விறைவன் பேரருளை ஈண்டும் புலப்படுத்தமை  அறிக .

புதியராக வந்தார் ஒருவரை ,இன்னார் என அறிமுகப்படுத்தற்கு, அறியப்பட்ட  மூன்றாமவராகப் பிறரொருவர் வேண்டும் . இஃது உலகியலிற்  கண்டது . ஈண்டு , உட்புகுந்த ஏகநாயகனை  அடிகளுக்கு  அறிமுகப்படுத்த யாரும் இல்லாமையால் , அப் பெருமானே தம்மை இன்னான் என அறிவிக்க வேண்டியதாயிற்று . “ அறிவானுந்தானே அறிவிப்பான்  தானே” என்னும் அம்மை திருவாக்கும் அறிக. அறிவித்தது எவ்வாறு எனின் , “இனையன் நான் “ என்பதாம் . இனையன் என்பதற்கு இத் தன்மையுடையேன் என்பதும் பொருள்  அத் தன்மைதான் யாதெனில் , “வினைக்கேடனாதல் “ என்பதாம் .  தன்மையின்  விளக்கம் இதுவாகும் . வினையிலே  கிடப்பவனுக்கு உபகரிப்பவன் , அப் பிணிப்பை ஒழிப்பவனாக இருக்க வேண்டும் . ஆதலின், இறைவன் தன்னை அறிவிக்குங்கால் , தன்னுடைய பலவகைப்பட்ட பெருமை களில் கன்மநாசம் பண்ணும்  ஒன்றை மாத்திரம் வெளிப்படுத்தி , “வினைக்கேடன்”  என்றானாம் . வினையிலே பிணிப்புண்டு  உழலும் என்னை விடுவித்தற்கு , என்னுட் புகுந்து நின்று , வருக என என்னை அருகில் அழைத்து, “நான் வினையை ஒழிப்பவன் “ என்று எனக்குத் தெரிவிப்பாய் போல , இத் தன்மையவன் என்று உன்னை எனக்கு அறிவித்து , என்னை ஆட்கொண்டாய்  என்பார் இங்ஙனம் கூறினர். “நான்  வினைக்கேடன் “  “நான், இனையன்” என ஈரிடத்தும் எழுவாயாகிய  நான்  என்பதை  இறைவன் வெளிப்படக்கூறியதாகக் கொண்டு கூறியது ,”எண்பொருளவாகச் செலச் சொல்லித்தான்  பிறர்வாய் , நுண்பொருள்  காண்பதறிவு. “ என்னும்  பொருளுரைப்படி மறை பாடும் வாயனாகிய இறைவன் தமக்கு விளங்க உரைக்க வேண்டுமென்னும்  கருணையினால் என்பது அடிகள் கருத்து.  உலகத்தில் ஆற்றன்மிக்கான் ஒருவன் தன் அரிய செயலைப் பயனால் வெளிப்படுத்துவானேயன்றித் தன் நாவினால் வெளிப்பட உரைப்பான் அல்லன் .  “ வாளினாற் பேசலன்றி வாயினாற் பேசல் தேற்றேன் “ என ஒரு வீரன் உரையாகச்  சிந்தாமணியாசிரியர்  கூறியதுங்  காண்க . . அம்முறையில் இறைவன் தன் பெருமையைத்  தானே கூறாது ஒழியின் , வினைப் பிணிப்பிற் கிடப்போர்  அறிதல் அருமையெனக் கருதியும் , ஓரளவிற்குக் குறிப்பாகக் கூறியே  அருள் செய்யவேண்டுமெனக் கொண்டும்  அடிகளுக்கு அவ்வமயம்  பயன்படுமுறையில்  தன் இயல்பைக் குறிப்பிற் புலப்படுத்து,  இத் தன்மையன் என்றுஅறிவித்தல் இன்றியமையாத தாயிற்றாம் . இவ்வுண்மையை அநுபவத்திற் கண்ட அடிகள் , “நான்  வினைக்கேடன் “ என்று உன்னை அறிவித்து , எம்பிரான்  ஆனாய் என்னாது வினைக்கேடன் என்பாய் போல , இனையன்  நான் என்றுன்னை யறிவித் தென்பிரான் ஆனாய்” என்று அருளிச்செய்தனர் .  “என்பாய்போல” என்றதனால் வெளிப்படக்  கூறாமல் குறிப்பிற் புலப்படுத்தான் என்பது தெளிவாம் . இத்துணையும் கூறிய அடிகள் அநுபவ நிலையும்,

வெள்ளநீர்ச்  சடைய  னார்தாம் வினவுவார் போல வந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான்புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு

வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய நாரே

என்று அருளிய அப்பர் அநுபவ நிலையும் பல்லாற்றானும் ஒன்றுபட்டிருத்தல் அறிந்து இன்புறத்தக்கது . இவ்விருவருடைய அநுபவ நிலைகளும் ஒன்றுபட்டிருக்கும் இயல்பை இத் திருப்பாட்டின்சொற்பொருளாராய்ச்சியால் ஒருவாறு தெளிவிக்கலாம் . ஆயினும் ஈண்டு விரித்தல் மிகையெனக்கருதி  மேற்கொண்டிலேம். இனி, இங்ஙனம் வினைச்சூழலிற் பட்டுழலும் என்னுட் புகுந்து நின்று ,வினையொழிவு செய்பவனைப்போல , இத் தன்மையன் என உன்னை எனக்கு அறிவித்த அளவிலாவது , நின்னை எங்கள் தலைவன் என்றறிந்து ஆட்பட வேண்டியது கடமையாகவும் , அங்ஙனம் செய்திலேனாக, அக் குற்றத்தையும் பொறுத்து, நீயே வலிய ஆளாகக் கொண்டு , எம் தலைவனாயினாய் என்பார், “என்னை யாட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு  என்றார். குவ்வுருபு பொருட்டுப் பொருளது.

              இத்தகைய பேருதவியாளானாகிய இறைவன் பொருட்டு அடிகள் தாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகளைச் செய்யாமை குறித்துப் பிவருமாறு இரங்குகின்றார் : இறைவனுக்கு  ஆட்படும் பேறு கிடைத்தற்கு அரியது ; இஃது எளிதிற் கிடைக்கப் பெற்றமை குறித்து ஆனந்த பரவசத்தால் ஆடல்  பாடல்  முதலிய செயல்களில்  தலைப்படுதல் இன்றியமையாததாகவும் , அங்ஙனம் செய்யாமைக்குக் காரணம் , யான் இரும்பினாற் செய்யப்பட்ட  பாவையை  ஒத்திருத்தல் என்பார், “ இரும்பின் பாவை யனைய நான்” என்றார். தோற்பாவை , மரப்பாவைகளாயின் பிறரால் இயக்கப்பட்டுக் கூத்தாடல் முதலிய  செய்யக் காணலாம் . “ தோற்பாவைக்கூத்தும்  தொல்லை மரப்பாவை  இயக்கமும் “ என்பது சிவஞானசித்தி . இரும்புப்பாவை  திண்ணிதாகலின் ,இயக்கப்பட்டு ஆடல்  முதலியன செய்ததாக நிகழ்ச்சியின்று . இவ்வுண்மை கருதியே தோற்பாவை மரப்பாவைகளைக் கூறாமல் ,”இரும்பின் பாவை” ஒப்புக் கூறப்பட்டது . எதிர்பாராத பேறு கிடைத்த  அளவில் , உள்ளம் உருகிப் பரவசமான நிலையில் ஒருவர்க்கு நிகழும் செயல்களுள் , முதலிற் பாடுதலும் , அதன்பின்  எழுந்து நின்று ஆடுதலும் , அதன் மேல் கதறுதலும் , அதன்பின்னர் நாப்புலர்ந்து உடல் வற்றுதலும் , அதன் முதிர்ச்சியில்  ஆவி  சோர்ந்து மூர்ச்சித்தலும் முறையே நிகழ்வனவாம் . இவ் அநுபவம் புலப்படவே , “பாடேன் நின்று  ஆடேன் அந்தோ அலறிடேன்  உலறிடேன் ஆவி சோரேன் “ என்று அருளிச்செய்தனர் . பாடுங்கால் இருந்தும் நின்றும் பாடலாம் . ஆடுங்கால்  நின்றே ஆடல் வேண்டும்  ஆதலின் , “நின்று  ஆடேன் “ என்றார் . பாடுதல் ,ஆடுதல் என்னும் இவ்விரண்டு செயல்களுக்கும் பின்னர் நிகழும் அலறுதன் முதலியன முறுகிய செயல்களாதலின் ,இடையில் ,”அந்தோ “ என இரங்கற் குறிப்புத் தோன்றக் கூறப்பட்டது. அலறுதல் – ஆடல்  பாடல்களுக்குரிய சித்த விருத்தியும் சுருங்கிய நிலையில் நிகழ்வதாகும் . உலறுதல் – உடல் வற்றுதல். “வற்றியாரும் நின் மலரடி காணா மன்ன “ என்பது அடிகள் திருவாக்கு . ஆவி சோர்தல் – மூர்ச்சித்தல் . “இங்ஙனம் என கடமையினின்றும்  வழுவுதல் முறையாகாதே ! என் செய்வல் !” என வருந்திக் கூறுவார் , “ முறையோ நான் ஆனவாறு “ என்பதற்கு யான் இங்ஙனம் என் கடமையினின்றும் வழுவுதல் என்னை ஆட்கொண்டருளிய நினக்கு முறையாகுமா? என்பது கருத்தாகக் கொள்ளலுமாம் . “ என் கடன் பணி செய்து கிடப்பதே “என்பதைப் புறக்கணித்து விட்ட இந் நிலையில் , முடிவு என்னாமோ அறிந்திலேன் என்பார், “முடிவு அறியேன்” எனவும் கூறினர் . முடிவு – கடமை யினின்றும் வழுவுதலால் விளையும் பயன் .

                 இதன்கண் ,”முனைவனே முதலந்த  மாயினானே” எனச் சுட்டறிவிற்குப் புலப்படாத இறைவன் இலக்கணம்  தோன்ற வைத்தமையானும் , முதல் இரண்டடிகளானும்  சீவபோதத்தை ஒடுக்கிச்  சிவபோதம் மேலிட்டு விளங்கிய உண்மை பெறப்பட வைத்தமையானும் , “சுட்டறுத்தல்” என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதலும் , “பாடேன் நின்றாடேன் “ என்பன முதலியவற்றால் சதகம் நுதலிய “பத்தி விசித்திரம் “ என்னும் பொருள் வெளிப்பட்டு நிற்றலும் காண்க.

                                         *************************************

பாடல் : 23 .

ஆயநான்  மறையவனும்  நீயே  யாதல்

அறிந்தியான்  யாவரினும்  கடைய  னாய

நாயினேன்  ஆதலையும்  நோக்கிக் கண்டு

நாதனே  நானுனக்கோர்  அன்பன்  என்பேன்

ஆயினேன் ஆதலால்  ஆண்டு  கொண்டாய்

அடியார்தாம்  இல்லையே  அன்றி  மற்றோர்

பேயனேன்  இதுதான்நின்  பெருமை  யன்றே

யெம்பெருமான்  என்சொல்லிப்  பேசுகேனே.

கருத்துரை :- முன்னைத்  திருப்பாட்டில்   தம்மை வலிந்து  ஆட்கொண்டு  அருளிய இறைவனது பேருதவியை நினைந்து , தம் கடமைகளைச் செய்யாமைக்கு  இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் இறைவன் வலிய  வந்து  தம்மை  ஆட்கொண்டதற்குக்  காரணம்  , அப் பெருமானது  மிகவும்  உயர்ந்த தன்மையையும் , தமது மிகவும் இழிந்த தன்மையையும்  அறிந்துவைத்தும் , “யான்  நின் அன்பன்” என்று  நாவளவிற்  சொல்லியதே  யாமெனவும்  , அத்துணை யெளிமையில் ஆட்கொண்ட  ஆண்டவன் பெருமையை  எவ்வாறு  புகழ்ந்து பாராட்டுவேன் எனவும் வியப்புறுகின்றார் .

பதவுரை :-   நாதனே  =  கடவுளே ,

நீயே ஆய  நான்மறையவன் ஆதல் (நோக்கி) அறிந்தும்  =  நீயே யாவர்க்கும் தலைவனாய  அந்தணன் ஆதலை ஆராய்ந்துஅறிந்தும் ,

யானே  யாவரினும் கடையன் ஆய  நாயினேன் ஆதலை நோக்கிக் கண்டும்   = யானே யாவர்க்கும்  கடையவனாய நாயின் தன்மையுடையேன்  ஆதலை ஆராய்ந்து கண்டு வைத்தும் ,

நான் உனக்கு  ஓர் அன்பன் என்பேன் ஆயினேன்  =  யான்  நினக்கு  ஓர் அன்பன் என்று சொல்லுவேனாயினேன் ,

ஆதலால் ஆண்டுகொண்டாய்  =  அதுவே  காரணமாகக் கொண்டு என்னை  ஆளாகக் கொண்டாய் ,

பேயனேன்  அன்றி  மற்றோர் அடியார்  தாம் இல்லையே  =  பேயின்  தன்மையுடையேனாகிய என்னை  யன்றி  நீ  ஆட்கொள்ளுதற்கு வேறு ஓர் அடியார்  இல்லையா? ,

இது நின் பெருமை அன்றே  =  இச்செயல்  நின் பெருமையைக்  குறிப்பதன்றோ ? ,

எம் பெருமான் என்  சொல்லிப்  பேசுகேன்  =  எங்கள் தலைவனாகிய நின்னை எவ்வாறு  புகழ்ந்து பாராட்டக்கடவேன் என்பது.

விளக்கவுரை :-    “ஆயன் நான்  மறையவனும் “ எனவும் பாடபேதம் உண்டென்ப; அது பொருட் சிறப்பின்று.  வட மொழியில் நாத என்னும் பகுதி , ஐசுவரியம் என்னும் பொருளதாகலின் , “நாதன் “ என்பது ஈச்சுரத்தன்மையுடைய  கடவுளை உணர்த்துவதாகும் . “நீயே” என்புழி, ஏகாரம் தேற்றப் பொருட்டு . பின்னர் , “யாவரினுங்கடையன் “ என அடிகள் தம்மைக் கூறிக்  கொண்டதற்கியைய , “ யாவர்க்கும் தலைவன்” என்னும் மறுதலைச் சொற்களை வருவித்துரைக்கப்பட்டன . “உடையார் முன்  இல்லார் போல்  ஏக்கற்றுங்  கற்றார் , கடையரே கல்லாதவர் “ என்புழிக் கற்றார் தலையாயினார்  என முடித்து , “கடைய ரென்றதனான் அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது “ என்று அதன் விளக்கமாகப் பரிமேலழகர் கூறியிருத்தலும் அறிக. “மறையவனும் “ என்புழி ,உம்மையைப் பிறித்து , அறிந்து என்பதனோடு கூட்டுக. நான் மறையவன் என்றது , நான்கு  மறைகளுக்கும் வினை முதலாகவும் , அம்மறைகளின் முடிபொருளாகவும்  உள்ளவன் என்னும் பொருட்டு . இதனாலே இறைவன் அமரருள் அந்தணன் என்று  கூறப்பட்டான் . “யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் “ என அகநானூற்றுக் கடவுள் வாழ்த்திற்  கூறியிருத்தலும் காண்க. இறைவன் யாவர்க்கும் தலைவனாய  அந்தணன் ஆதலை , மறையாகமங்களின் ஆராய்ச்சியால்  அறியலாமென்பது  தோன்ற , “நோக்கி அறிந்தும் “ என்றார் . பின்னுள்ள  நோக்கி என்னும் எச்சத்தை  ஈண்டும்  கூட்டுக. சிவபிரானின் உயர்ந்தாருமில்லை , தம்மின் இழிந்தாருமில்லை என்பது தோன்ற ,அடிகள் தம்மை “யாவரினுங்கடையன்” என்றும் , அவ் இழிவுதானும்  எத்தன்மைத்து என்பார்க்கு , “நாயினேன்” என்றும் கூறினர். நாயின் தன்மை , பல இடங்களிலும் பயனின்றி அலைந்து திரிதலால் இழிக்கப்படும்  இயல்பாகும் . இதனை அப்பர் தம் பாடல் ஒன்றில் ,”பாட்டில்  நாய் போல நின்று பற்றதாம் பாவந்தன்னை , யீட்டினேன்” என்று அருளிச்செய்தனர் . பாடு  என்பது  உழைப்பு என்னும்  பொருளதாகலின் , வறிதே உழைத்துத் திரியும் நாய் போல  என்பது கருத்து . இங்ஙனம்  நாயின் தன்மையைத்  தம் மேல் ஏறிட்டு அடிகள் பல இடத்தும் கூறுதல் அறியலாம் . ஆதலையும் என்புழி, உம்மையையும் பிரித்து , “கண்டு” என்பதனோடு கூட்டுக. தமது புன்புலால் யாக்கையை , “சீவார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் “ எனவும் , தம் அறிவும் செயலும் மிகச் சிறியன எனவும் , காட்சியளவையில்  எளிதின்  ஆராய்ந்து காணலாமென்பது தோன்ற ,”நோக்கிக் கண்டும்” என்றார். இறைவன்  தலைவனாதலை அறிவு கருவியாக அறிய வேண்டுதலின் , “அறிந்தும்” எனவும் , தாம் கடையனாதலைக் கண்கூடாகக் காணலாமென்பது தோன்ற ,”கண்டும்” எனவும்  கூறினர் .

             எல்ல வகையானும் பெரியான் ஒருவன்பால் அன்பு செய்து ,அவன் அருட்கு ஆளாதல் வேண்டுமாயின் , அப்பெரியான் விரும்பத்தக்க தகுதி ஓரளவாது இருத்தல் வேண்டும் . அது சிறிதும் இல்லாத கடையேனாகிய  யான், நின் உயர்வையும் என் இழிவையும் அறிந்து வைத்தும் , என்  அவாவினால் யான் உனக்கு அன்பனாவேன் என்று சொல்லளவிற் கூறத் தொடங்கினேன்  என்பார். “நானுனக்கோர் அன்பனென்பே னாயினேன் “ என்றார். “ என்பேனாயினேன்” என்றதனால் , அன்பனாதற்குரிய  செயல்களில் தலைப்படாமல் சொல்லளவிற் கூறியது என்பது பெறப்படும் . “சொல்லுதல் யார்க்கும் எளிய  அரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்” என்னும் பொருளுரைப்படி , எளிமைபற்றிச் சொல்லினேனாக , அச் சொல்லையே ஏதுவாகக் கொண்டு , என்னை  ஆட்கொண்டு  அருளினை யென்பார் , “ஆதலால்  ஆண்டுகொண்டாய் “ என்றார் . அடிகள் தாம் சொல்லளவிற்  கூறத்தொடங்கியதை  ஏற்று , ஆண்டவன் செயலளவிற் காட்டினான் என்னும் அருமைப் பாட்டைப் புலப்படுக்கவே , “என்பேனாயினேன் “ எனவும் , “ஆண்டுகொண்டாய்” எனவும் அருளிச் செய்தனர் . ஒருவாறு இறைவனுக்கு அடிமைப்பணி புரிதற்குத் தகுதியான  ஆள் அமையாமையால் , தாம் அன்பன் என்ற அளவில் , தகுதி யொன்றையும் ஆராயாமல்  தம்மை இறைவன் ஆட்படுத்துக்கொண்டனன் என்று அடிகள் கருதினரோ வெனின் , அங்ஙனங்  கருதினார் அல்லர் என்பதை , “பேயனேன்  அன்றி மற்றோர் அடியார்தாம் இல்லையே “ என்பதனால்  அறியலாம் . பாவகன்மத்தால்  இழிபிறப்புடைய பேயைப் பணி கொண்டால் துன்புறுத்துமேயன்றி  வேறு பயன் விளையாதென்னும் உண்மை கருதித் தம்மைப் பேயனேன் என்றார்.  “புற்றுமாய்  மரமாய்ப்  புனல்காலே யுண்டியாய்  அண்டவாணரும்  பிறரும் , வற்றியாரும் நின் மலரடி காணாமன்ன” என்றபடி , அரிய தவங்கிடந்து நினக்குப் பணிபுரியும் அன்பராதற்கு  அமரர் முனிவர்  முதலியோர் எண்ணிறந்தோர் உளராக , அன்னாருள் ஒருவரேனும்  அடியார் ஆதற்குத் தகுதியுடையார் அல்லரோ என்பார், “பேயனேன் அன்றி மற்றோர் அடியார்தாம் இல்லையே” என்றார்.  “இல்லையே”என்புழி, வினாப்பொருட்டாகிய  ஏகாரம் எதிர்மறைப் பொருளை உணர்த்தி நின்றது .

            பக்குவ முதிர்ந்த அடியார் எத்துணையோ தவங்கிடப்ப , அன்னாரை விட்டு , ஒரு சிறிதும் தகுதியில்லாத என்னை , யான் அன்பன் என்று சொல்லத் தொடங்கிய அளவில்  ஆட்கொண்டருளிய இவ்வருட் செயல்  நின் பெருமைக்குணத்தைப் புலப்படுத்தி நிற்பதென்பார் , “ இதுதான் நின் பெருமை யன்றே” என்றார். பெருமை, செயற்கரிய செய்தலாகும் . ஈண்டு , அருஞ்செயல் யாதெனின் , பேயனைய தம்மைப் பிறப்பறுக்க ஆண்டது என்பது அடிகள் கருத்துப் போலும் . இங்ஙனம் ஆட்கொண்டு பேருதவி புரிந்த எங்கள் தலைவனாகிய நின்னைக் குறித்து , மன மொழிகளுக்கு அடங்காத நின் பெருமைக் குணங்களை  எவ்வாறு புகழ்ந்து பாராட்டக் கடவேன் , “எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே” என்றார். எம்பெருமான் என்புழி, இரண்டன் உருபு செய்யுள் விகாரத்தால் தொக்கது.

         இதன்கண், இறைவன் யாவர்க்கும்  தலைவனாகிய  மறைமுதல்வன் எனக்  கூறியதும் , “என் சொல்லிப் பேசுகேன் “ என அப்பெருமான் இயல்பு , மன மொழிகளால் வரையறுக்கப்படாத தொன்று  என்றதும் , பதிகம் நுதலிய  பொருளாகிய  சுட்டறுத்தலைப் புலப்படுப்பனவாம்  .                                                   

பாடல் : 24 .

பேசிற்றாம்  ஈசனே  யெந்தா  யெந்தை

பெருமானே  யென்றென்றே  பேசிப் பேசிப்

பூசிற்றாம்   திருநீறே  நிறையப் பூசிப்

போற்றியெம்  பெருமானே  யென்று  பின்றா

நேசத்தாற்  பிறப்பிறப்பைக்  கடந்தார்  தம்மை

ஆண்டானே  அவாவெள்ளக்  கள்வ  னேனை

மாசற்ற  மணிக்குன்றே  யெந்தாய்  அந்தோ

என்னை நீ  ஆட்கொண்ட  வண்ணந்  தானே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவனை நோக்கி ,” யான்  நின் அன்பன் “ என்று  சொல்லிய  அளவில் , என்னை  ஆட்கொண்டு  அருளிய நின் பெருமை இருந்தவாறு  என்னே?  என வியந்து கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில்  உரையளவில் , “ நான் நின் அன்பன்” என்றேனே  அன்றி , உள்ளத்தளவில் வெள்ளத்தனைய  அவாப் பெருக்கையுடைய கள்வனாவேன் எனவும், அஃதறிந்தும் , என்னை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னே எனவும் கூறி , மேலும் வியப்புறுகின்றார்  .

பதவுரை :-   மாசு அற்ற  மணிக்குன்றே  =  குற்றம் அற்ற மாணிக்க  மலையே ,

எந்தாய்  =  என் தந்தையே ,

தாம் பேசின்  = தாம் பேசப்புகின் ,

ஈசனே  எந்தாய்  எந்தை பெருமானே  =  பரமேச்சுரனே ; எங்கள் தந்தையே;  எங்கள்  தந்தைக்கும்  தலைவனே ,

என்று  என்றே  பேசிப் பேசி  =   என்றே  பலகாலும்  சொல்லியும் ,

பூசின்  =  பூசப்புகின் ,

எம்பெருமானே  போற்றி என்று  =  எங்கள்  தலைவனே  காத்தருள்க  என்று  கூறி ,

திருநீறே  நிறையப் பூசி  =  திருநீற்றையே  குறைவறப்  பூசியும் ,

பின்றா  நேசத்தால்  =  பிறழாத  மெய்யன்பினால் ,

பிறப்பு  இறப்பைக்  கடந்தார்  தம்மை  ஆண்டானே  =  பிறத்தலையும்  இறத்தலையும்  ஒழித்த மெய்யன்பரை  ஆட்கொண்டருளியவனே  ,

அந்தோ  =  அந்தோ ,

அவாவெள்ளக்  கள்வனேனை  =  வெள்ளத்தனைய  அவாப் பெருக்கினை  யுடைய  கள்வனாகிய  என்னையும் ,

நீ  ஆட்கொண்டவண்ணம்  என்னை  =  நீ  ஆட்கொண்டருளிய  தன்மை  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-   மாசு  –   வேற்று ஒளியான் அன்றி விளங்காமை .உலகத்தில் இரத்தினக் குற்றங்களுள்  யாதும்  இன்றி  ஒளிமிக்க  எத்துணை உயர்ந்த மாணிக்கம்  ஆயினும் , ஞாயிற்றின்  கதிர்  முதலிய  பிற  ஒளிகளால் ஒளி காலுமேயன்றித்  தானே ஒளி செய்யாமை அறிகின்றோம் . செம்மேனி  யெம்மானாகிய  இறைவன்  திருவுருவம் பேரொளிப்  பிழம்பாக நின்று  , மற்றை ஒளி  மண்டிலங்களுக்கு ஒளி அளிப்பதன்றி , அம் மண்டிலங்களின் ஒளியைத் தான் பெறுவதன்று .  இவ்வுண்மையை ,

நாயகன் கண்ண யப்பால் நாயகி புதைப்ப வெங்கும்

பாயிரு  ளாகி  மூடப்  பரிந்துல   கினுக்கு  நெற்றித்

தூயநேத்  திரத்தி  னாலே  சுடரொளி  கொடுத்த பண்பிற்

றேயமா  ரொளிக  ளெல்லாஞ்  சிவனுருத்  தேச  தென்னார்

என்னும் சிவஞான சித்தியின் விளக்கத்தானும் அறிக. இறைவனை மணிக்குன்றாகக் கூறியதன் கருத்து. “ ஆடகச் சீர் மணிக்குன்றே “ என்புழி , விளக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்  காண்க.

          உலகத்திற்கெல்லாம் ஒளி விளக்கம் செய்யும் இறைவன் தமக்குச் செய்த பேருதவியை நினைந்து , அப் பெருமானைப் பொதுமை யினின்றும் அன்பு மேலீட்டால் சிறப்பு முறையிற் கொண்டு , “எந்தாய்” என்றார். இனி  பிறப்பு  இறப்பைக் கடந்தவர்களாகிய மெய்யன்பர்களின் இயல்பை விளக்குகின்றார். “தாம்” என்பது பிறப்பு இறப்பைக் கடந்த அடியாரைக் குறிக்கும் . அடியார்  பேசத்தொடங்கின் , “ஈசனே” என்பது முதலிய இறைவன் திருப்பெயர்களையும்  பெருமைகளையுமே  பேசுவர் அல்லது , வேறு ஒன்றையும் பேசார் என்பது உணர்ந்து , “பேசிற்றாம் ஈசனே எந்தாயெந்தை பெருமானே யென்றென்றே பேசிப் பேசி “ என்றார். “பிறந்து மொழி பயின்ற பின் எல்லாங்  காதல், சிறந்து நின் சேவடியே  சேர்ந்தேன் “ என்பது அம்மை திருவாக்கு . ஈசன் என்பது அமரர் , மக்கள் முதலிய எல்லோர்க்கும் தலைவன் என்பதை உணர்த்தும் . அங்ஙனம் பொதுவாகிய  பெருந்தலைவனே  தமக்குத் தந்தையாயினான் என்னும் உவகை மேம்பாட்டல் , “எந்தாய் “ என்று  கூறப்பட்டது .

                 உலகத்தில்  ஒருவனுக்குத் தந்தையாயினான் அவனை ஆட்கொள்ளும் தலைவனாகவும் இருக்க வேண்டும் என்னும் நியமம் இன்று, ஈண்டுத்  தமக்குத்  தந்தையாதலேயன்றி தம் தந்தைக்கும் தலைவன் ஆயினான் என்பது தோன்ற ,”எந்தை பெருமானே” என்று கூறப்பட்டது . “எந்தை பெருமானே” என்புழி , நான்கன் உருபும் எச்சவும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றன . எந்தைக்கும் தலைவனே என்றது , வழிவழி அடிமையாகக் கொண்டு ஆள்பவன்  என்பதைக்  குறிப்பதாகும் . “ மூதாதை மாதாளும் பாகத்தெந்தை “ என்பதும் இக் கருத்துப் பற்றியதே . தந்தையின்  செல்வத்திற்குப்  புதல்வன் உரிமை உடையனாதல் போல் , இறைவனது பேரானந்தப் பெருஞ் செல்வத்திற்கு அன்பர் உரிமை உடையராதல் பற்றி , இறைவன் தந்தையாகவும் , அடிமையாகக் கொண்டு பணி புரிவித்துக்கொள்ளும்  தலைவனைப் போல நன்நெறிப்படுத்துத் திருத் தொண்டில்  ஈடுபடச்செய்தலின் பெருமான்  ஆகவும் ,அரசனைப்  போலிருந்து பொதுவாட்சி  முகமாகப்  பாதுகாத்தலின் ஈசனாகவும் , மெய்யன்பர்  பேசுவாராயினர் என்பது கருத்து. “என்றென்றே பேசி” என்றதனால் ,இங்ஙனம் இறைவனைப் பற்றியே பலகாலும்  பேசுவார் என்பது பெறப்படும் . ஏகாரம் தேற்றம் . அன்பர்களின் மன மொழி மெய்கள் இறைவன்பால்  ஈடுபடு முறையில்  இது , மொழியின் ஈடுபாடாகும் .

            இனி, அன்பர்  தம்  உடலிற் பூசப்புகுவாராயின் , திருநீற்றையன்றி வேறு  எதனையும்  பூசார்  என்பது தோன்ற ,” திருநீறே “ எனப்பட்டது. ஈண்டு , ஏகாரம்  பிரிநிலைப் பொருட்டு . இதனால் திருநீறு அல்லாத நறுமணக் கலவைகள் எத்துணை உயர்ந்தவை  ஆயினும் விரும்பார் என்பது போதரும் . திருநீற்றைப்பூசுங்காலும் , விருப்பம் இன்றிச் சிறிதலவு எடுத்து இடுவாரோ எனின் , அங்ஙனம் செய்யாது , பூசுதற்குரிய உடல் உறுப்பு முழுவதிலும்  மிக்க  மகிழ்ச்சியோடு பூசுவார்  என்பது ,போதர , “நிறையப்  பூசி “ என்றார். ஈண்டுத்  திருநீறு  என்பது  இனம்  பற்றி உருத்திராக்கத்தையும்  உணர்த்துவதாகும் . ஆகவே, திருநீறும்  கண்மணியுமே , முறையே அன்பர்கள் பூசுதற்கும் , புனைதற்கும்  உரியனவாம் என்பது  தெளிவாம் .  

  மீண்டும் எம்பெருமானே காத்தருள்க என்னும் பொருள் தோன்ற , “போற்றி  யெம் பெருமானே “ என்ற மொழிப் பணியாகக் கூறியது , திருநீறு  பூசுங்கால் செய்யும் வேண்டுகோளைப் புலப்படுத்துவதாகும் .  “எம்பெருமானே போற்றி” என்பதில், போற்றி என்பது வணக்கத்தைக்  குறிப்பதாகக்  கொண்டு , “சிவாய நம” என்னும் திருவைந்தெழுத்தின் விளக்கமாகக்  கொள்ளுதலும்  பொருந்தும் . “சிவாய  நம” என்பது சிவனுக்கு வணக்கம் என்னும் பொருள் உடையதாகும் .அப் பொருளே , “எம்பெருமானே போற்றி” என்னும் தொடரிலும் புலப்படுதல் அறியலாம் . இதனால்  திருவைந்தெழுத்தை ஓதி , திறுநீறு  பூசல் வேண்டும் என்னும்  விதிமுறை புலனாதலும் உணரத்தக்கது. போற்றி யெம்பெருமானே  யென்று  நிறையப் பூசி  என முடிக்க.

    பின்றுதல்  –  பிறழ்தல் : பிற்படுதலுமாம் .  ஆகவே , உண்மைஅடியார்களின் அன்பு , பிறழ்ச்சி  அடையாத  நிலையில் உள்ளது. ; அல்லது எதற்கும் பிற்படாதது என்பதாம் . எத்துணை இடையூறு நேரினும் , இயல்பின்  மாறுதல் அவ்வன்பிற்கு இன்று  என்பதைப் புலப்படுக்க. “பின்றா நேசம் “ எனப்பட்டது. இஃது உள்ளத்தின் ஈடுபாடு  . பேசிப்  பூசிப்  பின்றாத நேசத்தால் என முடிக்க. இங்ஙனம்  மனம் , மொழி , மெய்களின்  ஈடுபாட்டால் வீட்டு நிலைக்குத்  தகுதியுடையவராயினார் என்பது தோன்ற ,” பிறப் பிறப்பைக் கடந்தார் தம்மை  ஆண்டானே” என்பது எங்ஙனம் பொருந்தும் எனின், “அரசன்  முடிசூடினான் “ என்புழிப்போலப் பொருந்துமெனக் கொள்க . முடி  சூடிய பின்னன்றே அரசன் ஆதம் வேண்டும் . அரசன் ஆகியபின் முடிசூடுதல் இன்று. இதனால் குடிப்பிறப்பு , முதலியவற்றால் அரசன்  ஆதற்குத் தகுதியுடையான்  முடிசூடினான் என்பது  கருத்தாகக் கொள்ளல் வேண்டும் . அவ்வாறே , மன மொழி மெய்களின் தூய்மையால் , பிறப்பு இறப்பைக் கடத்தற்குத் தகுதியுடையாரை  ஆட்கொண்டருளினான் என்பதே கொள்ளத்தக்கது.  இறந்தவர் பிறத்தல் என்பது வீட்டு நிலையிற் செல்லாமையானும் , பிறந்தவர் இறத்தல் என்பது உறுதியாதலானும் ,பிறப் பிறப்பை என்புழிப் பிறப்பு  முதற்கூறப்பட்டது . “ அவாவென்ப எல்லா  உயிர்க்கும் எஞ்ஞான்றும் , தவாஅப்  பிறப்பீனும்  வித்து” என்னும்  பொருளுரைப்படி  , பிறவிக்கு  வித்தாகவுள்ள அவா ,வெள்ளத்து அனையதாயின் , அதனால்  உண்டாம்  பிறப்பு எல்லையற்றதாம் என்பது தெளிவாம் . வெள்ளத்தனைய அவாப் பெருக்கினை உள்ளத்தடக்கி , அவாவற்றவனைப்போல நடிக்கின்றேன் என்பார்,  “அவா வெள்ளக் கள்வனேனை” என்றார். அவாப் பெருக்குடையனா தலே  குற்றமாம் . அத்தகைய  அவாவைக்  கரந்து  நடித்தல் அதனினும் பெரிய குற்றமாம் என்பது கருத்து.  வெள்ளத்தனைய அவாவைக் கரத்தல் , சொல்லாலும் செயலாலும் நிகழ்வது  ஆதலின் , மன மொழி மெய்களின் தூய்மையின்மை பெறப்படும் . முக்கரணங்களும் தூய்மையுடையனவாய் நிகழப்பெற்ற  தகுதியுடைய மெய்யன்பரை  ஆட்கொள்ளும் இறைவன் , அம் மூன்றும் தூய்மையில்லனவாய் நிகழப்பெற்ற  தகுதியில்லாத தம்மை ஆட்கொண்டது என்னே  எனக்  காரணம்  அறியாது வியப்புறுவார் , “கள்வனேனை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னை” என்றார்.  “அந்தோ” என்பது வியப்பிற் பிறந்த இரக்கக் குறிப்பு . தான் இரண்டும் அசைநிலைகள் . ஏகாரம்  ஈற்றசை .

               இதன்கண், “ மாசற்ற  மணிக்குன்றே” என்பதனால் எல்லா ஒளி மண்டிலங்களுக்கும்  ஒளி உதவும் இறைவன் இயல்பு மெய்யுணர்வினால்  அன்றிச் சுட்டறிவுக்குப் புலனாகாமை பெறப்படுதலின் , “சுட்டறுத்தல் “ என்னும்  பதிகம் நுதலிய  பொருளும் ,மன மொழி மெய்களின் ஈடுபாடு  குறிக்கப்பட்டமையால் , பத்தி விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலப்படுக்கப்பட்டமை  அறிக .

                                             ******************************************

பாடல் :25 .

வண்ணந்தான்  சேயதன்று  வெளிதே  யன்ற

னேகஏகன்  அணுஅணுவில்  இறந்தா யென்றங்

கெண்ணந்தான்  தடுமாறி   யிமையோர்  கூட்டம்

எய்துமா  றறியாத  எந்தாய்  உன்றன்

வண்ணந்தான்  அதுகாட்டி  வடிவு  காட்டி

மலர்க்கழல்கள்  அவைகாட்டி  வழியற்  றேனைத்

திண்ணந்தான் பிறவாமற்   காத்தாட்  கொண்டாய்

எம்பெருமான் என் சொல்லிச்  சிந்திக்  கேனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் போலி அன்பை உனர்ந்தும் , இறைவன் தம்மை ஆட்கொண்டருளிய வண்ணந்தான் என்னே என வியந்த அடிகள் , இத் திருப்பாட்டில் அப் பெருமான் தன் வண்ணம் வடிவு முதலியவற்றைப்  புண்ணியப்பயன் நுகர்ச்சியிலே தலைப்பட்டுள்ள இமையவரும்  அறியாவாறு மயங்க வைத்து , அவாப் பெருக்கில்  அமிழ்ந்திக் கிடக்கும்  தமக்குக் காட்சியளித்து ஆட்கொண்ட அருட்டிறத்தை  எவ்வாறு நினைந்து பாராட்டுவேன் எனத்  தம் ஆராமையைப் புலப்படுத்துகின்றார்.

பதவுரை :-  எம் பெருமான்  =  எங்கள் தலைவனே ,

இமையோர் கூட்டம்  =  அமரர் குழு ,

உன் வண்ணம் தான் சேயது அன்று  =  உன் நிறம் செம்மையானது அன்று,

வெளிது அன்று  =  வெண்மையானது அன்று ,

அனேகன் ஏகன் அணு அணுவில் இறந்தய்  என்று   =  நீயே  பல உயிரும் ஆவாய் தனி முதல்வன் ஆவாய் அணுருவும்  ஆவாய்  அணுவினுங்கடந்த  நுண்ணியை  யென்று இங்ஙனம் பலவாறு  கூறி ,

அங்கு எண்ணம்தான் தடுமாறி  –  ஆண்டு நினைவு மயங்கி ,

எய்தும்  ஆறு  அறியாத எந்தாய்  = நின்னையடையும்  நெறியினின்று  அறியப்படாத  என் தந்தையே ,

உன் தன் வண்ணம்  காட்டி  வடிவு  காட்டி  மலர்க் கழல்கள்                       அவை  காட்டி  =   உன்னுடைய  உண்மையான  நிறத்தையும் , திருவுருவத்தையும்  தாமரை மலர் போன்ற  திருவடிகளையும்  உள்ளவாறு யான்  காணுமாறு  அருள் செய்து ,

வழி அற்றேனை  =  நெறியறியாது  மயங்கும்  அடியேனை ,

திண்ணம்  தான்  பிறவாமல்  காத்து  ஆட்கொண்டாய்  =   உறுதியாக   இனிப்  பிறவி  நேராமல்  காப்பாற்றி  ஆளாகக்  கொண்டனை ,

என் சொல்லிச் சிந்திக்கேன்  =  அத்தகைய  நின்னை  எங்ஙனம்  பாராட்டி  நினைவு  கூரக்கடவேன்  என்பது .

விளக்கவுரை :-  பேரொளிப்  பிழம்பாகவுள்ள  இறைவன்  திருமேனியின் வண்ணம்  , ஞான  நாட்டம் பெற்றோர்க்கு அன்றி , இமையா  நாட்டம்   பெற்றோர்க்கும் காண்டற்கு அரிதாம்  என்பார்  . “இமையோர் கூட்டம் “  என்றார்.  கூட்டம்  என்றதனால்  , ஒருவர்  அறிந்தபடி  மற்றோருவர் அறியாமல்  பலரும்  பலவகையாகக்  கருதினர் என்பது புலனாம் . இறைவன்  இயல்பை  மறை முதலிய  நூல்களான்   ஆராய்ந்து  அறியப்  புகுந்த  தேவர்கள் , பருமையில் தொடங்கி நுண்மையில் செல்ல முற்பட்டு  , முதலில்  நிறம்  இன்னது  எனத்  துணியத்  தலைப்படுவாராயினர் . “சேயதன்று “ என்றதனால்  வெண்மையா  மென்பதும் ,”வெளிதன்று” என்றதனால்  செம்மையா மென்பதும்  போதரும் . “வெண்ணீறு  சண்ணித்த  மேனி” என்றபடி , திருமேனியிற்  பூசப்பட்ட  திரு வெண்ணீறு  குறித்து ,” வண்ணந்தான்  சேயதன்று  “ எனப்பட்டது . அன்மைச்  சொல்லால்  வெண்மை நிறம்  என்று  பெறப்பட  வைத்தது .  “செம்மேனி யெம்மான்” என்று  மறை  நவின்றது பற்றியாம் .  வண்ணன்  தீவண்ணன்  எம் மிறை” என்று  கேட்க்கப்பட்டமையால்   செம்மை நிறம் எனக் கருதி இருந்தார்க்கு  , நீற்றுப்  பூச்சினால்  வெண்மை  நிறம்  கூறப்படுதல்  பற்றி  , “ சேயதன்று”  எனவும் , அவ்வெண்மை  ,நீற்றுப் பூச்சாகிய   செயற்கையாற்  காணப்படுவதன்றி  , இயற்கையிற்  செம்மையாம்  எனக் கொண்டு  , “வெளிதன்று” எனவும்  கருதுவாராயினர்  என்பது.

             பின்னர் , நிறத்தைப்பற்றிய   ஆராய்ச்சியைவிட்டுத்  தத்துவ  ஆராய்ச்சியில்  தலைப்பட்டு , “அநேகன் , ஏகன் “  என்பன  முதலியவாகக்  கருதுவாராயினராம் . உயிர்கள் பலவாக  இருத்தலின் , அப் பல்லுயிர்களும்  அவனேயாம் எனக் கொண்டு , “அநேகன்” ஆவான்  என்று  கருதின ரென்பது , அங்ஙனம்  கருதுங்கால் , அப்பல்லுயிரும்  வினைப்பகுதிகளுக்கு  ஏற்பப்  பிறந்து  இறந்து  இன்பதுன்பங்களில் ஈடுபடுதலானும்  , இறைவனுக்கு  அவை இன்மையானும்  ,அநேகன்  அல்லன், ஏகனேயாம் எனக்  கருதினாராம் . ஏகன் என்றதனால் ,ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாத  தனி முதல்வன் என்பதும் , அகண்ட  வடிவினன் என்பதும் பெறப்படும் . பருப்பொருள்கள் எல்லாவற்றிற்கும்  பருப்பொருளாகவுள்ள அப் பெருமானே நுண்பொருள்கள் எல்லாவற்றிற்கும் நுண்ணியனாகவும்  உள்ளவன் என்று  மறைகள்  கூறுதலின்  , “ அணு” எனவும் , “அணுவில் இறந்தாய் “ எனவும்  கூறப்பட்டன . “பரியர் நுண்ணியர்  பார்த்தற்கரியவர் “ என்று தமிழ்  மறை  கூறுதலும்  அறிக.  அளவின் மிக்க  பருமையும்  , அளவின் மிக்க  நுண்மையும்  மக்களாற்  காண்டற்கு  அரியன என்பது பற்றி  ஈண்டு ,”பார்த்தற்கரியவர்” என்று  கூறப்பட்டது. இறைவன் பரியனாக இருக்குங்கால் , அப் பருமை  வடிவில் அடங்கிய   அப் பெருமான் உயர் குணங்கள் எல்லாம் , அணுவினுங் கடந்த அவனது நுண்ணிய  வடிவினும்  அடங்கியிருக்கும் என்பதை , “நுண்ணியை எனினும்  நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்தென் ,கண்ணிணுண் மணியிற் கரந்தனை”  என்னும் திருவிசைப்பாப்  பாடற்  பகுதியானும்  உணரலாம் .  அங்கு  –  அவ்வாராய்ச்சியில் ; மறை , ஆகமம்  முதலிய  நூல்களின் ஆராய்ச்சியிற்  பல  தலையாய  உணர்வு  ஏற்பட்டமையால் , இறைவன்  இயல்பு  துணியப்பட்டிலது  என்பார் , “எண்ணந்தடுமாறி” என்றார். மாற்ற  மனங்கழிய  நின்றவன் ஆதலால் எண்ணந்தடுமாறுதல் இயல்பே. அநுபவ  அறிவினால் அன்றி , நூலறிவு  எத்துணை  நுண்ணிதாயினும் , அதனால் அறியப்பட்டான் என்பதை , “நூலே  நுழைவரியான் “ என்று  அடிகளும் , “நூலறிவு  பேசி நுழைவிலாதார்  திரிக” என்று  அம்மையும்  கூறியவாற்றான் அறியலாம் . இமையவர்க்கு  இங்ஙனம்  உளத் தடுமாற்றம் ஏற்பட்டமையால் , இறைவனை உள்ளவாறு  அடைதற்கு  உரிய  நெறி  நின்று  அறிந்து கோடல் இயலாததாயிற்று  என்பது கருதி , “எய்தும்  ஆறறியாத  எந்தாய் “ என்றார். ஆறு  அறியாத  என்புழி , ஆற்றினின்றும் என ஐந்தனுருபை   விரித்துக்கொள்ளல்  வேண்டும்  . எய்தும் நெறியையும் , அந் நெறி  நின்று  இறைவனையும்  அறிந்தில ரென்பது கருத்து. “அறியாத  “ என்னும்  செயப்பாட்டுப் பெயரெச்சவினை , “எந்தாய்” என்னும்  செயப்படுபொருளைக்  கொண்டு  முடிந்தது. “உன்” என்பது இடைநிலை  விளக்காக  நின்று  மேலுங் கூறப்பட்டது.

            புண்ணியப் பயனையே  நுகருந்  தேவர்கள் நூலறிவு கொண்டு  நுணுகி ஆராய்ந்தும்  , திருவருட்  பேரின்மையால் நெறியறியாது மயங்கி நிற்ப , அவர்க்குக் காட்சிப்படாத வண்ண முதலியவற்றைத்  தமக்குக் காட்டியருளிய முறையைக் குறிப்பிடுவாராய் , “வண்ணம் அது காட்டி வடிவு காட்டி  மலர்க் கழல்கள் அவை காட்டி “ என்றார் . ஈண்டு அது அவை என்பன பண்டறி சுட்டாக  நின்று , நூல்களின் முகமாக  முன்னர் அறியப்பட்டமையைக் குறிப்பனவாம் . அது என்பதை வடிவோடும்  இயைக்க  . காட்டி  என்றது  , அநுபவ  அறிவிற்  புலனாம்படி  காட்சி  அளித்து என்னும் பொருட்டு . ஒருவனைச்  சேய்மையினின்று  காணுங்கால் , முதலில் அவன் வடிவும் , அணுக  அணுகப் பின்னர் அவன் உறுப்புக்களும் , நிறமும் , முறையே காணப்படுவனவாம் . இது மக்கட் காட்சி , கடவுட்  காட்சியில் இறைவன் ஒளி வடிவினன் ஆதலின் , முதலில் நிறமும் ஒளியும் , அணுக அணுகப் பின்னர்  வடிவமும் முறையே காணப்படுதல் இயல்பு  ஆதலின் , அம்முறையாற் காட்சிப்பட்டு அநுபவித்ததை , இங்ஙனம் அருளிச் செய்வாராயினர் . இறைவன் ஞானாசிரியனாகக் குருந்த  மரத்தடியில் எழுந்தருளி யிருக்குங்கால் , அடிகள் முதலிய  அப் பெருமான் திருமேனியின் நிற வொளியில்   ஈடுபட்டு  , அணுகிக்  குருவுருவத்தையும் , பின்னர் தம் வணக்கத்திற்குரிய  திருவடிகளையும் கண்டு  இன்புற்ற  அநுபவ  உண்மையை இவ்வாறு  புலப்படுத்துள்ளார் என்பது அறிக . தேவர் தாம்  வண்ண  முதலியவற்றை அநுபவவுணர்விற்  கண்டு துணிதற்கு நெறி அறியாமை தடையாயின் , அத்தடையே எனக்கும் உளதாயிற்று  என்பார் , “வழியற்றேனை “ என்றார் . அங்ஙனம் நெறியறியாத என்னை  மீண்டும்  பிறவாமல்  உறுதியாக  ஆட்கொண்டு  காப்பாற்றி அருளினை என்பார் , “திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் “ என்றார் . இறைவன் திருவடிக் காட்சி சிவ புண்ணியமாக நின்று , இந்திரன்  முதலிய  இறையவர் பதங்களை  அருளுதலும் உண்டு . அந் நிலையிற்  காத்தல் , பிறவியைக்  கொடுத்துக் காப்பாற்றியதாகும் . இன்னோரன்ன  பதங்களைப் பெற்றார்  மீண்டும்  பிறத்தல் கூடும் . அங்ஙனம்  இன்றித்  தமக்கு  எவ்வாற்றானும்  பிறவாமற் காத்தது உறுதி என்பார் , திண்ணந்தான்” என்றார்.  ஆட்கொண்டு பிறவாமற் காத்தாய் என மாற்றிக் கொள்ளுதலும்  ஆம் ; ஆட்கொண்ட பின்னரே பிறவியொழிக்கப்படுதலின்  , சிந்தித்துப்  பேசுதல் , மனம் தன் வயப்பட்டிருக்குங்கால்  நிகழ்வது. ஈண்டுத்  தகுதியில்லாத நிலையில் தம்மை  ஆட்கொண்டதாக  எண்ணி , அடிகள் உள்ளம் தன்வயம் இழத்ததாதலின் ,அந் நிலையில் அன்பு மேலீட்டால் மனத்தில் தட்டாமல் முதலிற் பேச்சு  நிகழத் தலைப்பட்டனவாக  , அப் பேச்சின் நின்றும் சிந்தனைக்குச்  செல்வராய் , “என் சொல்லிச் சிந்திக்கேனே” என்றார். தான் , ஏ  என்பன  அசைகள் .  

        இதன்கண்,  நூலாராய்ச்சியாற்  சுட்டியுணர   முற்பட்ட  தேவர்க்கு , எண்ணந் தடுமாறி , அறியப்படாத இறைவன் வண்ண  முதலியன , அடிகளின் மெய்யுணர்விற்கு அநுபவ நிலையிற் புலனாயின  என்று  கூறப்பட்டமையான்  சுட்டறுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய  பொருள்  தோன்றுதல்  காண்க.

                                                **********************************

பாடல் :26 .

சிந்தனைநின்  தனக்காக்கி  நாயினேன்றன்

கண்ணிணைநின்  திருப்பாதப்  போதுக்  காக்கி

வந்தனையும்  அம்மலர்க்கே  யாக்கி  வாக்குன்

மணிவார்த்தைக்  காக்கியைம்  புலன்கள் ஆர

வந்தனையாட்  கொண்டுள்ளே  புகுந்த விச்சை

மால்அமுதப்  பெருங்கடலே   மலையே  யுன்னைத்

தந்தனைசெந்  தாமரைக்கா  டனைய  மேனித்

தனிச்சுடரே  யிரண்டுமிலித்   தனிய  னேற்கே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவன் தன் வண்ணம் வடிவு முதலியவற்றைத்  தமக்குப்  புலனாம்படி காட்டிய அருள் திறத்தில் ஈடுபட்டுக்  கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் தம் ஐம்புலன்களும்  ஆரத்  துய்க்கும் வண்ணம் தன்னையே வழங்கிய தனிப்பெருங்கருணையை வெளிப்பட அருளிச் செய்கின்றார் .

பதவுரை :-  வந்தனை  ஆட்கொண்டு  உள்ளே புகுந்த விச்சை  =  வலிய  வந்து  அடியேனை ஆளாகக் கொண்டு என் உள்ளே புகுந்தருளிய  வித்தையினையுடைய ,

மால் அமுதப் பெருங்கடலே  =  யாவரானும்  விரும்பத்தக்க  அமிழ்தப் பெருங்கடலே ,

மலையே  =  மலை  போன்றவனே ,

செந்தாமரைக்காடு  அனைய மேனி  =  செம்மையாகிய தாமரை மலர் வனம்  போன்ற திருமேனியையுடைய  ,

தனிச்சுடரே  =  ஒப்பற்ற ஒளி விளக்கே ,

நாயினேன் தன் சிந்தனை நின் தனக்கு  ஆக்கி  =  நாயினேனுடைய  நினைவெல்லாவற்றையும்  உன் பொருட்டு  நிகழ்வித்து ,

கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி  =  என் இருகண்களையும் நின் திருவடி  மலர்களுக்கு  உரிமையாக்கி ,

வந்தனையும்  அம்மலர்க்கே  ஆக்கி  =  வணக்கத்தையும்  அத் திருவடி மலர்களுக்கே  நிகழச் செய்து ,

வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி  =  வாயை  உன்னைப்பற்றிய  மணி மொழிகளுக்கு  உரிமையாக்கி ,

இரண்டும்  இல்  இத்  தனியனேற்கு  =  நூலறியும் , அநுபவ உணர்வும் இல்லாத  துணையற்ற  இவ்  வேழையேனுக்கு  ,

ஐம்புலங்கள் ஆர  உன்னைத்  தந்தனை  =  ஐம்புலங்களும்  நுகர்ந்து இன்புற  உன்னையே  தந்து அருளினாய் ( நின் அருட் பெருக்கை என் என்பேன்)  என்பது .

விளக்கவுரை :-வந்தனை புகுந்த என்புழி , வந்தனை என்பது  எச்சம் முற்றாக நின்று திரிந்த தென்னும்  கருத்தால் “ வினையெஞ்சு  கிளவியும் வேறுபல் குறிய “ என்னும் சூத்திர விதியில் அடங்கி , முற்றுத்திரிசொல் என்பர் சேனாவரையர் ,”வினைமுற்றே வினையெச்சமாகவும் “ என்றுவிதி கூறி , முற்று எச்சமாக  நின்றது என்பர் நன்னூலார் . இறைவன் ஞானாசிரியன் உருக்கொண்டு , வலிய வந்து தம்மை  ஆட்கொண்டு அருளியதை நின்னைந்து , “வந்தனை  ஆட்கொண்டு “ என்றார். “பந்தமறும் எல்லையது பார்த்தினி திருந்தார் “ என்பது வாதவூரடிகள் புராணம் . கட்டறுத்து ஆட்கொண்ட பின்னரேஅடிகளின் உள்ளத்தே இறைவன் புகுந்தானாம் . உட்புகுந்த செய்தி , “நூலே நுழைவரியான் நுண்ணியனாய்  வந்தடியேன் , பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால்” என்பது முதலிய பல திருப்பாடல்களினும் காணலாம். புகுந்தன் உண்மை மேலே விளக்கப்பட்டது, கடலாகவும்  மலையாகவும்  காடாகவும்  ஒப்புக் கூறப்பட்ட  இறைவன்  தன் பருவுருவை  நுண்ணிதாக்கித்  தம்முட் புகுந்து, ஒரு மாய  வித்தை  என்பார், “புகுந்த  விச்சை”  என்றார். விச்சை  –  வித்தை ; வியக்கத்தக்க செயல் .

             மால் – அவா. கண்டாற்கு அச்சத்தை விளைவித்தல் . கடைந்தெடுக்கும் உழைப்பிற்குத்  தக நஞ்சத்துடன் சிறிது அமிழ்தத்தை யளித்தல் , ஊழின் இறுதியில் ஒடுங்கிச் சுருங்குதல் , இவையெல்லாம் பெளதிகக் கடலுக்கு உள்ளன. இச்செயல்களுக்கு  மாறாக , மெய்யன்பினால் கண்டாற்கு  மேன்மேலும் விருப்பத்தை விளைத்தல் , முற்றும் அமிழ்த மயமாதல் , எக் காலத்தும் சுருங்காமல் ஒரேபடியாக நிறைந்திருத்தல் என்னும் இவ்வியல்புகள் இறைவனுக்கு உள்ளமையால், “மால் அமுதப்  பெருங்கடலே” என்றார். கருணையை நீர்ப்பெருக்காகக் கொண்டு , அதற்கு இடனாதல் பற்றி, இறைவன் கடல் என்னப்பட்டான் . “பரங்கருணைத் தடங்கடலை “ என்பதும் ஈண்டு  நினைக்கத்தக்கது . கடலுக்குச் சலித்தல் உண்மையானும் ,இறைவன் சலிப்பறியாத் தன்மையன் ஆதலானும் , அவ்வியல்பை விளக்குதற்கு , “மலையே” என்று  கூறினர் . இறைவனுடைய திருமுகம் , கண் , வாய், கை , கால்  முதலிய  உறுப்புக்களுக்கெல்லாம்  செந்தாமரை  மலர் ஒப்புக்  கூறப்பட்டமையால் , “செந்தாமரை காடனைய மேனி” என்றார். கடல் நெய்தலையும்  , மலை  குறிஞ்சியையும் , தாமரை  மருதத்தையும் , காடு  முல்லையையும்  உணர்த்தலின் , காணப்படும்  நானில வடிவமும்  இறைவன் திருமேனியையே நினைவுறுத்தும் என்பது  புலப்படுக்கப்பட்டபடியாம் .

காலையே போன்றிலங்  கும் மேனி  கடும்பகலின்

வேலையே  போன்றிலங்கும்  வெண்ணீறு  –  மாலையின்

தாங்குருவே  போலுஞ்  சடைக்கற்றை  மற்றவர்க்கு

வீங்கிருளே  போலு  மிடறு “

என்புழி, கால  வகைகள் இவ்வாறு  நினைவுறுத்தும் என்ற அம்மை அருளியது  போலவெனக் கொள்க. முதல் கரு , உரி என்னும் மூவகைப்  பொருள்களுள் , முதற் பொருள் நிலமும் பொழுதும் ஆகும் . ஆகவே ஈண்டு நில உருவமாக அடிகளும் , ஆண்டுப் பொழுது வடிவமாக அம்மையும் கூறியது அறிந்து இன்புறத்தக்கது .

               பிற பொருள்களை அநுபவித்தற்கு  உதவியாதலோடு , தன்னையே  அநுபவித்தற்கும் தருதல் பற்றி , “தனிச் சுடரே” என்றார் . ஒரு விளக்குப் பிற  பொருளைக் காண்டற்கு உதவி புரியுமேயன்றித்  தன்னைத் தொட்டாற் சுடும் என்பது ஈண்டு  நினைக்கத்தக்கது . இனித் தம் மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களையும் இறைவன் தனக்குரிமை யாக்கிக்  கொண்ட செய்தியை அடிகள் அருளிச்செய்கின்றார். எண்ணம்  இல்  வழி  நிகழும்  செயலும்   மொழியும் சிறந்த பயனை விளையாவாதலின் , முதலில்  நினைவு  எல்லாம்  தன்னைப்  பற்றியே  நிகழுமாறு  உபகரித்ததைப் புலப்படுத்துவாராய்  , “சிந்தனை நின் தனக்காக்கி “ என்றார் . கண்  முதலியவற்றைக் குறித்துக் கூறுங்கால் ,திருவடி , உறுப்பு முதலியவற்றிற்கு ஆக்கி என்று  கூறியது போல் , சிந்தனையை  ஏதேசப்படுத்தாமல்  “நினக்கு” என  முழுதையும் புறித்து , இறைவன் திருவுருவத்தை  மனம் இடையறாது  தியானித்தல் வேண்டும் என்பதும் , அந் நினைவின் நின்றே  கண் முதலிய உறுப்புக்கள்  திருவடி முதலியவற்றைப் பற்றி நிற்றல் வேண்டும்  என்பதும் கருதியாம் . ஆக்குதற்கு வினை முதல் இறைவனாவான் . பின் வருவன வற்றிற்கும்  ஈது  ஒக்கும் .

            அன்பர் செய்யும் வழிபாட்டிற்கு  இரங்கி , அவர்க்கு  இறைவனே  தன்னை நினையத் தருதல் வேண்டுமென்பது  சைவ நூல்  துணிபு . “என்னை நினைந் தடிமை கொண்டேன்  இடர்கெடுத்துத் , தன்னை நினையத் தருகின்றான் “ என்னும்  சைவாசிரியர்  அநுபவ  உரையானும் அறிக. உடற்பணிகளுள் சிறந்தன கண்களால் காண்டலும் , கைகளால் தொழுது தலையால் வணங்கலுமாம் . தொழுதல் வணங்குதல் இரண்டும் வந்தனை என்னும் சொல்லற் பெறப்படும் . காண்டல் வந்தனை என்னும் இரண்டனுள் . முன்னதனைக் கருவியாற் பெற வைத்தார் ; காட்சி  “ஐம்புலங்களார “ என்பதனாலும் பெறப்படுதலின் . “ஐம்புலங்களார “ என்பதனாற் பெறப்படுவதை ஈண்டுங் கூறியது ஒரு நயம் பற்றி.  அஃது இன்னதென்பது பின்னர்  கூறப்படும் . இறைவன் திருவுருவம் முழுதும் காண்டற் குரியதாயினும் , திருத் தொண்டில் ஈடுபட்டவர்க்குத் திருவடிக்  காட்சியிலே கண்கள் ஈடுபடுதலும் ,வந்தனை அத் திருவடியைக்  குறித்தே செய்யப்படுவ தென்பதும் முறையாகும் . இம் மரபு வழாது இறைவன் உபகரித்த இயல்பை நினைந்து , “கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்காக்கி “ எனவும்,  “வந்தனையும்  அம்மலர்க்கே யாக்கி” எனவும்  கூறியருளினர் .

                    வாயில் நின்றும் பேச்சு வெளிப்படுமாயின் அப் பேச்செல்லாம் இறைவனுடைய புகழ் வடிவமாகவே  யாகும்படி  உபகரித்ததைக் கருதி ,  “வாக்குன் மணி வார்த்தைக் காக்கி “ என்றார். “ மாசில் மணியின் மணிவார்த்தை , பேசிப் பிறப்பறுத்தேன் “ என்பதும் அடிகள் திருவாக்கு . வார்த்தை ஈண்டுப்  புகழ்மொழி  என்னும் பொருட்டு , பொருள் ஒளிமிக்க புகழ் மொழியாதலின் , “மணிவார்த்தை” என்னப்பட்டது. மற்றைத் தேவர் மக்கள் முதலியோரைப்பற்றிய  புகழுரைகளெல்லாம்  பொருள் இல்லாதன என்பதும் , “இறைவன் பொருள் சேர் புகழ் “ என்னும் பொருளுரையானும் “இறைமைக் குணங்கள் இலர் ஆயினாரை உடையரெனக்  கருதி  அறிவிலார் கூறுகின்ற புகழுரைகள் பொருள்சேரா வாகலின் , அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழ் எனப்பட்டது. “ என்னும் பரிமேலழகர் உரையானும் உணரத்தக்கன . இறைவன் பொருள்சேர் புகழ் சிறந்த மாணிக்கத்தைப் போலப் பொருள் ஒளி மிக்கு, அடிகள் திருவாக்கினின்று  வாசக  வடிவமாக வெளிப்பட்டது குறித்தே , அடிகள்  “மாணிக்கவாசகர் “ என்று அழைக்கப்பட்டனர்  போலும் .

                    கன்மேந்திரியம்  ஞானேந்திரியம்  இரண்டிற்கும் இடனாகிய  நா  ஈண்டுக்  கன்மேந்திரியமாக  கொண்டு  “வாக்கு” எனப்பட்டது. சிந்தனை முதல் வாக்கு வரை கூறப்பட்ட செய்திகளில் , இறைவன் திருவுருவத்தை நினைதலும் , காண்டலும் , தொழுது வணங்கலும் , புகழ்ந்து பாராட்டலும்  முறையே நிகழும் உண்மையும் , அந் நிகழ்ச்சிகளால்  கரணங்கள் மூன்றையும் இறைவன் தன்வயமாக்கிய செய்தியும் புலனாதல் அறிக. “இரண்டும்  இல் “ என்பதற்கு , நல்வினை  தீவினை  யில்லாத எனவும், இம்மை  மறுமை  இல்லாத எனவும்  கூறுவாரும் உளர் . அவையற்றநிலை , வீடு பெறுதற்குரியதாதலின் , அத் தகுதி தமக்குள்ளதென்று  அடிகள் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் இயல்பினர் அல்லர் என்பதையும் , தகுதியில்லாத நிலையில் ஆண்டவன் தம்மை ஆட்கொண்டனன்  என்பதே  ஈண்டு அடிகள் கருத்தாதலையும்  உணரின் , அக் கருத்துப் பொருத்தமாகாதென்பது புலனாம் , ஆகவே , அடிகள் “கற்றறியேன் கலைஞானங்  கசிந்துரு கேனாயிடினும்” என்று  பல இடங்களிலும் நூலறிவும் அநுபவ வுணர்வும்  இல்லாதவன்  எனத் தம்மைக்  கூறிக்கொள்ளுவராதலின், அவற்றையே இங்கே , “இரண்டு மில் “ என்பதனாற்  குறிப்பிட்டுள்ளார்  எனக்  கோடல் பொருத்தமாதல் அறிக. நூலறிவாகிய  அபர ஞானமும் , அநுபவ உணர்வாகிய பரஞானமும் இல்லாத நிலயில்  அருள்புரிந்த ஆண்டவன் அருள்திறமே  ஈண்டு  வியக்கத்தக்கதாயிற்று என்பது .

       “தனியன்” என்பது திருவருட்பேற்றிற்குரிய சாதனத் துணையற்றவன்  என்னும்  பொருட்டு .  இறைவனது பேரின்பப் பெருஞ்செல்வத்தை நுகர்தற்கு வாயில் மெய்யுணர்வேயன்றிப் புலங்களாகா. புலன்களால்  நுகரப்படுவன வெல்லாம் சடப் பொருள்களைப் பற்றினவே.  இவ்வுண்மையை , “பூண்ட  ஐம்புலனிற் புலப்படாவின்பம்  புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க “ என்னும்  தம்பிரான் தோழர் அநுபவத்தாலும் அறியலாம் . அங்ஙனமாகவும், இங்கே, “ஐம்புலங்களாரத்  தந்தனை” யென்றது . இறைவன் தமக்கு எளிமையில்  செய்த கருணையைக்  குறித்தாம் . ஆண்டவன்  அருட்கடலில் மூழ்கினார்க்கு , மெய்யுணர்விற்கு  நேர்படும் சிவபோகம் . இடையறாத புலனுகர்ச்சிக்கு  எளிவரும் உண்மையைத் தில்லக் கூத்தன்  தரிசனத்தில்  திருஞான சம்பந்தர் அநுபவத்தானும் உணரலாம்.   அவ்வநுபவ  நிலையை , “உணர்வின் நேர்பெறவருஞ் சிவபோகத்தை  யொழிவின்றி யுருவின்கண் , அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர வருளினை யெனப் போற்றி” என்று பெரிய புராணம் தெளிவுறுத்தமை  அறிக. ஐம்புலங்களும் நுகருமுறையை, “தலையே  நீ  வணங்காய் “ என்னும் தொடக்கத்துத்  திருவரங்க மாலையில்  அப்பர்  அருளிச் செய்தமையானும் அறியலாம்.  இனி, “ஐம்புலன்களார”  என்பதற்கு  ஐம்புலன்களும் உண்முகமாக நின்று அநுபவிக்க என்று பொருள்  கூறுதலுமாம் . இறைவனை உள்ளக்கமலத்து  எழுந்தருளிவித்து  புறப்பொறி வாயிலாக அன்றி, அகமுகமாகக்  கண்டு , கேட்டு , உண்டு , உயிர்த்து , உற்றறிதல்  ஆகிய அநுபவம்  சிவயோகிகளுக்கு உண்டென்ப, அடிகளின் ஐம்பொறிகளும் நுகர , இறைவன் அருளிய பொருள் பிறிதொன்று அன்று; தன்னையே  யென்பது குறித்து , ‘ஆரத் தந்தனை” என்றார் . “தந்துன் றன்னைக்  கொண்டதென்றன்னை”  எனப் பிறிதோரிடத்துக்  கூறியதும் காண்க. ஆக்கியென்னும் செய்தென் எச்சங்கள்  நான்கும் , ஆர என்னும் செயவென் எச்சமும் , தந்தனை  யென்னும் முன்னிலை வினையைக் கொண்டு முடிந்தன .  

              இதன்கண் , மன மொழி மெய்களைத் தன் வயப்படுமாறு  செய்து , ஐம்புலன்களும் , ஆரத் தன்னையே  வழங்கினான் என்று கூறியமையால் , இறைவன் சுட்டுணர்விற்குப் புலப்படும் இயல்பு பெறப்படுமாயினும் , அம் முறையிலும் , உணர்வினேர்  பெற  வருஞ்  சிவபோக  மாதலின் , புலங்களின் முகமாக  மெய்யுணர்வை அருளியே  நுகர்வித்தமை  புலனாதலின் , சுட்டறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றுதல் அறிக.  

                                            *******************************************\

பாடல் :27 .

தனியனேன் பெரும்பிறவிப்  பெளவத்  தெய்வத்

தடந்திரையால்  எற்றுண்டு  பற்றொன்  றின்றிக்

கனியைநேர்  துவர்வாயார்  என்னுங்  காலாற்

கலக்குண்டு  காமவான்  சுறவின்  வாய்ப்பட்

டினியென்னே  யுய்யுமா  றென்றென்  றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக்  கிடக்கின்  றேனை

முனைவனே  முதல்  அந்தம்  இல்லா  மல்லற்

கரைகாட்டி  யாட்கொண்டாய்  மூர்க்கனேற்கே.

கருத்துரை :-  மெய்யுணர்வினால் நுகரத்தக்க  சிவ போகத்தைத்  தம் ஐம்பொறி  அளவின் எளிதிற் பெற அருளிய  இறைவன்  கருணைத் திறத்தை  முன்னைத் திருப்பாட்டிற்  கூறிய அடிகள் , அங்ஙனம் இறைவன் அருளுதற்குத்  தாம் மேற்கொண்ட  சாதனம்  இன்னதென்பதையும் , அதனை  மேற்கொள்ளுங்கால்  தம் இயல்பு இருந்தவாறு  இங்ஙனம்  என்பதையும்  இத் திருப்பாட்டில்  அருளிச் செய்கின்றார்.

பதவுரை  :- முனைவனே  =  கடவுளே ,

தனியனேன்  =  யான்  உதவியற்றவனாய் ,

பிறவிப் பெரும் பெளவத்து  =  பிறவிப் பெருங்கடலில் (வீழ்ந்து) ,

எவ்வம் தடம் திரையால்  எற்றுண்டு  =  துன்பமாகிய  பெரிய  அலைகளால் அலைக்கப்பட்டு  ,

பற்று ஒன்று இன்றி  =  பற்றுக்கோடு  ஒன்றும்  இல்லாமல் ,

கனியை  நேர் துவர்  வாயார் என்னும்  காலால் கலக்குண்டு  = 

கொவ்வைப் பழத்தை ஒத்த சிவந்த வாயினையுடைய  மகளிர்  என்னும்  காற்றினால்  தடுமாற்றம் எய்தி ,

காமம்  வான்  சுறாவின்  வாய்ப்பட்டு  =  காமமாகிய  பெரிய  சுறாமீன்  வாயிற்  சிக்கி ,

இனி, உய்யும்  ஆறு  என்  என்று  என்று  எண்ணி  =  இந் நிலயில்  உய்தி பெரும்  நெறி என்னாம்  என்று  பல்கால்  நினைந்து ,

அஞ்சு எழுத்தின் புணை  பிடித்துக்  கிடக்கின்றேனை  =  திருவைந்தெழுத்தாகிய  தெப்பத்தைப் பற்றிக் கிடக்கின்றவனாகிய ,

மூர்க்கனேற்கு  =  மூடனாகிய  எனக்கு ,

முதல்  அந்தம்  இல்லா  மல்லல்கரை  காட்டி  ஆட்கொண்டாய்  =  தோற்றக்  கேடு  இல்லாத  வளமிக்க  முத்திக்  காரையைக்  காட்டி   ஆட்கொண்டு  அருளினை  (நின் அருட்பெருமை யென்னே)  என்பது .

விளக்கவுரை :-  முனைவன் என்னும் சொற் பற்றி  24 ஆம்  திருப்பாட்டில் விளக்கக்குறிப்புக்  கூறப்பட்டுள்ளது. கடலில் வீழ்வான் ஒருவனுக்கு அப்பொழுது உதவி புரியத் தக்கார்  யாரேனும் அருகில் இருப்பாராயின் , எவ்வழியானும் முயன்று  கரையேற்றவும் கூடும்.  வினைக்கீடாகப்  பிறவிக் கடலில்  வீழும் தமக்குத் துணைபுரிவார் ஒருவரும் இலர் என்னும் கருத்தால், “தனியனேன்” என்றார்.  தனிமை – உதவியற்ற நிலை . உயிர்க்கு உயிராக விளங்கும் இறைவன் துணையுளதே  எனின் , வினைக்கீடாக  மாயையினின்றும்   உடல் முதலியவற்றைக் கொடுத்துப் பிறப்பிற் செலுத்துவது,சிவசத்தியாதலின் , அது  கருதத்தக்கதன்று . ஈண்டுக்  குறித்தது பிறிதொரு துணையை என்க. உயிர்களைப் பிறவியிற் செலுத்தல் இறைவன் கருணைக்கு இழுக்கு ஆகாதோ எனின்,  பாச  நீக்கஞ் செய்து  வீட்டின்பப் பேற்றிற்கு  உரிமையாக்க வேண்டுமென்பதே இறைவன் திருவுள்ளமாதலின் இழுக்காகாது என்க .”பிறவிப்  பெளவம் “என்னாது , “பிறவிப் பெரும் பெளவம்” என்றது . பெளதிகமாகிய கடலினின்றும் பிறவிக் கடலுக்குள்ள  சிறப்பு நோக்கியென்க . என்னை சிறப்பு எனின் , “பிறவிப்பெருங்கடல் “ என்புழி, “காரண காரியத் தொடச்சியாகக் கரையின்றி வருதலிற் பிறவிப் பெருங் கடல் என்றார்” என்று பரிமேலழகர்  கூறியதே  சிறப்பென்க . காரண காரியத் தொடர்ச்சி பிறவிக்கு உண்டு . முன்னைப்  பிறப்புப்   பின்னைப் பிறப்பிற்குக்  காரணமாதலும் , இங்ஙனமே தொடர்ந்து வருதலுங் காண்க . கரையின்மை – வரம்பு இல்லாமை . உயிர்  வீட்டு  நிலை எய்துங்காறும்  பிறப்பு உண்மையின் அளவிலதாதல்  வருதல் – மேன் மேலும்  வந்து கொண்டிருத்தல் , இம் மூன்றும் பெளதிகக் கடலுக்கு  இல்லை; காரண  காரியத் தொடர்ச்சி இன்மையும் , கரை உண்மையும் , ஒரே  நிலையில் நிற்றலும்  , அதன்கட்  காணப்படுதலின். இதனாலே  பிறவிப் பெருங்கடல்  என்னப்பட்டதென்பது  கருத்து . வீழ்ந்தார் உய்தி  பெற்றுக் கரையேறுதல்  அருமை  கருதிப் பிறப்புக்  கடலாகக்  கூறப்பட்டது .

               தடந் திரையால்  எற்றுண்ணப்  படுதல் , வீழ்ந்தபின்  நிகழ்வதாகலின், “வீழ்ந்து”  என்பது  வருவித்துரைக்கப்பட்டது . கடலிற்  காணப்படும்  அலைகள் பெரியனவும் சிறியனவுமாகப் பல உள்ளன . அவற்றுட்  பேரலைகள் துன்ப மயமாகவே  உள்ளன என்பார், “எவ்வத் தடத்திரை “ என்றார் . வினைக்கு  ஈடாகவுள்ள பிறப்பில்  தீவினைப்பயன் துன்பமே , நல்வினைப்பயன்  இன்பமாயினும் , சிற்றளவினதாக  நின்று , மீண்டும்  பிறத்தற்கு ஏதுவாகிப்  பேரின்பத் திற்குத்  தடையாய்  முடிதலின் , அதுவும்  துன்பமாகவே கருதப்படும். ஆகவே  பேரலைகளைப் போன்ற துன்பங்களும் , இடையிடைய  சிற்றலைகளைப் போன்ற  அழியும் இயல்பினவாகிய  இன்பங்களும்  உளவாகிப் பிறவியுட்பட்ட  உயிர்களை  அலைக்குமென்பது கருத்து . இங்ஙனம் தாக்கப்படுதலையே , “திரையால்  எற்றுண்டு”  என்றார் .கடலுள்  வீழ்ந்தானொருவன்  அலைகளால் அங்கும் இங்கும்  அலைக்கப்படுங்கால் , பற்றுக்கோடு  ஒன்று  கிடைப்பினும்  ஒரு கால் உய்தி பெறலாகும் . அதுவும் இன்று  என்பார், “பற்றொன்றின்றி “ என்றார்.  நீர்  எப்பொழுதும் சலிக்கும்  இயல்பினது . கடல் அலைக்கோ அசைவு  மிக வுண்டென்பது சொல்ல வேண்டியதின்று .  அம் மிகுதியான  அசைவுக் காற்றும் உதவி  புரியுமானால்  அலைகளின்  கடுமை  மிகப் பெரிதாகும். அப்பொழுது வீழ்ந்தவன்  படும்பாடு  பெரிதாகுமன்றோ ? அந் நிலையே  தமக்கும் ஆயிற்றென்பார், “காலாற்  கலக்குண்டு “ என்றார்.  கால் – காற்று,  மகளிர்  காற்றாக  உருவகிக்கப்பட்டனர் ; பிறப் பிற்பட்டுப்  பழவினைப் பயன் நுகர்ச்சியில் தலைப்படுங்கால் ,வந்தேறும் புதிய கன்மங்களுட் பெரும்பாலான  மகளிரைப் பற்றியே உள்ளன வாதலின் . “கனியை நேர் துவர்  வாயார்” என்றது கலக்கம் எய்துதற்கு ஏதுக்காட்டிய படியாம் . கனி, இயைபு நோக்கி ஈண்டுக்  கொவ்வைப் பழமாகக்  கொள்ளப்பட்டது.  ஆடவர்  மயங்குதற் குரிய இனிய  சொற்கள் தோன்றுதற்கும்  வாய்  இடனாதல்  பற்றி, “கனி” ஒப்புக்கூறப்பட்டதெனினும் ஆம் . ஞானேந்திரிய  கன்மேந்திரியங்கள்  இரண்டிற்கும் உரிய இடம் வாயாதலால் , அவ்விருவகைக் கருவிகளாலும்  கலக்கம்  உறுத்தலைப்  புலப்படுக்கக்  “கனியை நேர்  துவர்  வாயர் “ என்னப்பட்டனர் .

            மகளிர் காட்சியாற்  கலக்கம் எய்தினார் , காமத்தில்  சிக்கி  உழல்வரா தலின் , “காமவான் சுறவின் வாய்ப்பட்டு “ என்றார்.  வான் சுறவு  –  பெரிய சுறாமீன் . தன்வாய்ப்பட்டார்  ஊனுடலை உண்டு உயிரைப் பற்றாது விடும் கடற் சுறவு போலாது , காமச் சுறவு , தங்கட் பட்டார் உடலோடு உயிரையும் உண்ணும் என்பது தோன்ற , “வான் சுறவு “  என்னப்பட்டது . “உயிர் உருக்கிக் குடிக்குங்  கூளி………..கடிய காமம்” என்றார் பிறரும் . தீவினையாக  நின்று  , பிற்பிறப்புக்களிலும்  உயிரைத் துன்புறுத்தும் என்பது கருத்து . பழ வினைக்கு  ஈடாகப்  பிறந்தார்க்கு , நுகரப்படுவதும் , ஈட்டப்படுவதும் , சேர்க்கப்படுவது  மாகிய  முத்திற  வினைகளும் உளவென்பதை முறையே , “எவ்வத்தடந் திரையால்  எற்றுண்டு , “வாயார் என்னும் காலாற் கலக்குண்டு” , “காமவான்  சுறாவின் வாய்ப்பட்டு” என்பன குறிப்பிற் புலப்படுத்து  நிற்றல் அறிக . எவ்வம் வினைப்பயனாதலின் , பிராரத்தமாகிய  நுகரப்படுவதாதலும் , மகளிர் என்னும் காற்றால் கலக்கம்  எய்துதல் , ஆகாமியமாகிய  ஈட்டப்படுவது ஆதலும் , காமச்சுறவு வாய்ப்படுதல் ,சஞ்சிதமாகிய  சேர்க்கப்படுவதாலும்  புலனாதல்  அறிக . காமச் சுறவு வாய்ப்பட்டு என்றது , சஞ்சித கன்மம் பக்குவம்  ஆகுங்காறும்  நுண்ணியதாய்  மாயையில் அடங்கியிருக்கும்  உண்மையைக் குறிப்பிற் புலப்படுக்கும் . காமம் பொதுவாக எல்லாப் பொருள்களினும்  செல்லும்  அவாவாயினும் , சிறப்பாக மகளிரைப் பற்றி  நிகழ்வதைக் குறிப்பதாகும் . மண் , பெண் , பொன் என்னும் மூவகைப்  பொருள்கலினும் செல்லும் ஆசைகளுட் பெண்ணாசை வலியுடைத்து என்ப. “மண்ணாசை தன்னிற்  பொருளாசையின் மாய வாழ்க்கைப் பெண்ணாசை  நீங்கலொளிதோ பெரியோர் தமக்கும்”  என்பர் கச்சியப்ப சிவாச்சாரியார் . “நடுவணதெய்த  இருதலையும் எய்தும்” என்பது  ஈண்டு கருதத்தக்கது. என்னை ? பெண் விருப்பம்  காரணமாக மண் விருப்பமும்  பொன் விருப்பமும் உளவாதல் காணப்படுதலின் .

            அலையால்  மோதப்பட்டுக் காற்றால் கலக்குண்டு , சுறாவின் வாய்ப்பட்டதும் , வேறு நெறி  அறியப்படாமையின் , எவ்வாறு உய்தல் கூடுமெனப்பாம்பின் வாய்த் தேரைப்போலப் பற்பல விதமாக எண்ணலானேன் என்பார் , “இனி உய்யுமாறு என் என்று எண்ணி” என்றார். காமச்சுறா  சிறிது விழுங்கியும்  முழுதும் விழுங்காமலும் இருக்கும் நிலையில் , ஒரு தெப்பம் அடிகளுக்கு நல்லூழ் வயத்தால் அணிமையிற்  பிடிக்கக் கிடைத்ததாம் . அது திருவைந்தெழுத்தாகிய  தெப்பமாகும் . அத் தெப்பத்தைத் தொட்டதும் , காமச்சுறாவின்  ஆற்றல் குன்றிவிட்டதென்பதும் அதனால் முற்றும் விழுங்கப்படாமையும் குறிப்பிற் புலப்படும் . காம  முதலிய தீங்குகள் எல்லாம்  திருவைந்தெழுத்தால் நீங்கும் என்பதை,

விண்ணுற  அடுக்கிய  விறகின் வெவ்வழல்

உண்ணிய  புகில்  அவை  யொன்றும் இல்லையாம்

பண்ணிய  உலகினிற் பயின்ற  பாவத்தை

நண்ணிநின்  றறுப்பது  நமச்சி  வாயவே

என்னும்  தமிழ் மறையானும் அறியலாம். பிறவிக்கடலினின்றும்  கரையேறுதற்குத்  திருவைந்தெழுத்தே  சிறந்த தெப்பமாயிற்றாம் . ஆளுடைய அரசு , கல்லோடு  பிணித்துக்  கடலில்  வீழ்த்தப்பட்டஞான்று , அவரை  அஞ்செழுத்து  அருமறை  கரையேற்றிய  செய்தியைக்  கூறுங்கால்,

இருவினைப் பாசமும்  மலக்கல் ஆர்த்தலின்

வருபவக்  கடலில்வீழ்  மாக்கள்  ஏறிட

அருளுமெய்  யஞ்செழுத் தரசை  யிக்கடல்

ஒருகல்மேல்  ஏற்றிடல்  உரைக்க வேண்டுமோ

என்று  அருண்மொழித் தேவர்  பாராட்டியதும்  ஈண்டு  கருதத் தக்கது . காமச் சுறாவின் வாய்ப்பட்டதும், இறைவன் திருவருள்கூட்டுவிக்க,அஞ்செழுத்     தாகிய  தெப்பத்தைப் பற்றினேனாக , அந் நிலையில்  சுறவு வலியிழந்து ஒழிய , அப் புணையையே  துணையாகக் கொண்டு கிடக்கின்றேன் என்பார் , “புணைபிடித்துக் கிடக்கின்றேனை” என்றார் . தெப்பத்தைப்  பிடித்தும் அதனைச் செலுத்திக்  கரை சேரலாமே , ஏன் அங்ஙனம் முயலவில்லை என்பதற்கு விடையாக ,  “மூர்க்கனேற்கு”  என்றார்.  திருவருள் துணையால் பிடித்ததே  அன்றிக், கரை சேர்தற்குரிய  அறிவாற்றல் தமக்கு  இன்று  என்பது புலப்படுக்க , அடிகள் தம்மை மூர்க்கன்  என்று  குறிப்பிட்டுள்ளார் . உலகியல்  நோக்கி  இவ்வாறு தம்மைக்  கூறிக்கொண்டனர்  போலும் .  

              அடிகள் அஞ்செழுத்தை  நெஞ்சழுத்தியதும் , மூவகைக்  கன்மங்களும் அழிந்து ஒழிந்தன வென்பதும் , வீட்டு நிலைக்குத்  தகுதியாயினாரென்பதும்  குறிப்பிற்  புலப்படுக்கப்பட்டபடியாம் . அஞ்செழுத்தின்  என்புழி இன்னும் கிடக்கின்றேனை  என்புழி ஐயும் சாரியைகளாம் . புணை பிடித்தல் தம் கடனாகவும்  , கரை சேர்தல்  இறைவன் கடனாகவும்  குறிக்கொண்டு  , “கரை  காட்டி” என்றார். அக்கரை சேர்த்தல் இறைவன் கடனாகவும் குறிக்கொண்டு , “கரை காட்டி “ என்றார். அக் கரையாவது , தோற்றக் கேடுகள் இல்லாத மிக்க வளம் பொருந்திய வீட்டின்பம் என்பது தோன்ற , “முதலந்தமில்லா மல்லற் கரை” என்றார் . மல்லல் – வளன் . வீட்டுநிலை , அழிவில் இன்பம்  ஆதலின் , “முதலந்தமில்லா” என்னும் அடை புணர்க்கப்பட்டது . மல்லல்  ஆகு பெயராக நின்று  , வீட்டு இன்பத்தை உணர்த்துவதாகும் .  கடலில் அலைப்புண்டு  தத்தளித்துக்  கிடப்பவனுக்கு வளம் பொருந்திய கரை இதோ உள்ளது என்று  காட்டுதல் முதலில் ஆறுதல் அளிப்பதாகும் . ஆதலால் , அங்ஙனம் காட்டிப்பின் ஆட்கொண்டு  கரை சேர்த்தனன்  என்பது தோன்ற , “மல்லற் கரை காட்டி  ஆட்கொண்டாய்” என்று  கூறி அருளினர் .

           இதன்கண், “முதல் அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி”  என்றதனால் , வீட்டு நிலை அவன் அருளே கண்ணாகக் கொண்டு  காணத்தக்கது  அன்றிச் சுட்டறிவினால் அறியத் தக்கது அன்று  என்பது  தெளியப்படுதலின் , சுட்டறுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,எவ்வத் தடந்திரையும் , துவர்  வாயார் என்னும்  காற்றும் , காமவான் சுறாவும்  வெறுக்கத்தக்கனவாகக்  கூறப்பட்டிருத்தலின் , வைராக்கிய விசித்திரம்  என்னும்  சதம்  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக. 

                                      **************************************************

பாடல் :28 .

கேட்டாரும்  அறியாதான்  கேடொன்  றில்லான்

கிளையிலான்  கேளாதே  யெல்லாங் கேட்டான்

நாட்டார்கள்  விழித்திருப்ப   ஞாலத்துள்ளே

நாயினுக்குத்  தவிசிட்டு   நாயி னேற்கே

காட்டா  தனவெல்லாங்  காட்டிப்  பின்னுங்

கேளா தனவெல்லாங்  கேட்பித் தென்னை

மீட்டேயும்  பிறவாமற்  காத்தாட் கொண்டான்

எம்பெருமான்  செய்திட்ட விச்சை தானே.

கருத்துரை :-  வீட்டு நிலைக்குச்  சாதனமாகிய திருவைந்தெழுத்தைத் தாம் கடைப்பிடித்தமையைப்  பற்றி முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய  அடிகள் , அத் திருவைந்தெழுத்து ஓதுதலால்  தாம் பெற்ற பேற்றின் வகைகளையும் , அவற்றை இறைவன் தமக்கு அருளிச்செய்த முறையினையும்  இத் திருப்பாட்டில் விளக்கிக்  கூறுகின்றார்.

பதவுரை:-  கேட்டு  ஆரும்  அறியாதான்  =  கேள்வியளவில் யாரானும்  அறியப்படாதவனும் ,

கேடு ஒன்று இல்லான்  = கேடு சிறிதும் இல்லாதவனும் ,

கிளை இலான்  =  சுற்றத் தொடர்பு இல்லாதவனும் ,

கேளாதே  எல்லாம் கேட்டான்  =  பொறி வாயிலாகக்  கேளாமலே எல்லாவற்றையும் கேட்டவனும்  ஆகிய இறைவன் ,

நாட்டார்கள் விழித்திருப்ப  =   நாட்டில் உள்ளாரனைவரும்   சோர்தலின்றி  விழிப்புடையராக  இருப்பவும் ,

ஞாலத்து உள்ளே  =  இந் நிலவுலகத்தே ,

நாயினுக்குத் தவிசு  இட்டு  =  ஒரு நாய்க்குத் தவிசு  இட்டது   போல்,

நாயினேற்கு  =  நாய்த்தன்மையுடைய  எளியேனுக்கு ,

காட்டாதன  எல்லாம் காட்டி  =  காட்டக் கூடாதனவாகிய  எல்லாவற்றையும் காட்டியும் ,

கேளாதன  எல்லாம் கேட்பித்து  =  கேட்கப்படாதன  எல்லாவற்றையும்  கேட்க்கச் செய்தும் ,

என்னை  =  தகுதியில்லேனாகிய சிறியேனை ,

மீட்டேயும்  பிறவாமல்  காத்து  ஆட்கொண்டான்  =  மீண்டும்  பிறவியிற்   புகாமல்  காப்பாற்றி  ஆட்கொண்டு  அருளினான் ,

எம்பெருமான் செய்திட்ட   விச்சைதானே  =  இஃது எங்கள் தலைவன் செய்த  மாயவித்தையே  யாகும்  என்பது .

விளக்கவுரை :-  கேடொன்றும் விழித்திருப்பவும் , காட்டியும்,கேட்பித்தும்  என்புழி  உள்ள  உம்மைகள் செய்யும்  விகாரத்தால் தொக்கன. தவிசிட்டு  என்புழி , உவம உருபை விரித்து , இட்டாங்கு எனக்கொள்க.  மீட்டேயும்  என்புழி   ஏ, தான் , ஏ  என்பனவும் அசைகளாகும் . கேட்டல் , ஈண்டு உரை யளவைக் குறிக்கும் .உரையளவையால் இறைவன் இயல்பை ஒருவாறு அறியலாமே யன்றி  முற்றும் உணர்தல் இயலாது .  “ கேட்பான் புகில்  அளவில்லை “என்பது தமிழ் மறை . மெய்யுணர்வில்  தலைப்படாதார் , நூற்கேள்வி அளவில் எத்துணை அறிவு படைத்தவராயினும் , இறைவனது உண்மை இயல்பை அறிதற்குரிய தகுதி இலராவர்  என்பது  தோன்ற , “கேட்டு ஆரும் அறியாதான்” என்றார் . உரையளவையால் முற்றும் அறியப்படுவன அழியும் இயல்பினவாகிய  மாயா  காரியப் பொருள்களேயாகும் . இவ்வுண்மை குறித்தே , இறைவன் கேள்வியளவில் அறியப்படான்  என்பதற்கு ஏது புலப்படுக்கும் முகமாக , “ கேடொன்றும்  இல்லன்” என்றார். ஒன்றும்  என்பது சிறிது என்னும் பொருட்டு . சைவசித்தாந்தம்  கூறும்  இறை , உயிர் , கட்டு  என்னும் முப்பொருள்களும் அழி வில் பொருள்கள் ஆயினும், அவற்றுள் உயிர்க்கு ஆணவ இயைபால்  அறிவு விளக்கத்திற்கு அழிவும் , வினைக்கு  ஈடாக  மாயையிலிருந்து கிடைக்கும் உடல் முதலியவற்றின் அழிவும்  காணப்படுதலானும் , கட்டின்  வகைகளாகிய ஆணவம் ,கன்மம் ,மாயை என்னும் இவற்றிற்கு , முறையே  ஆற்றல் , விளைவு  , காரியம்  என்னும்  இவற்றின் அழிவும் காணப்படுதலானும் , இறைவன் இயைபுகளுள்  எதற்கும்  அழிவு  கேட்கப்படாமையானும் , “கேடு  சிறிது  மில்லான்” என்று  கூறப்பட்டது.

       கிளை  –  தாய் , தந்தை , முதலிய  சுற்றம் . இறைவன் பிற உயிர்களுக்குச் சுற்றமாவானே  யன்றித் தனக்குச்  சுற்றமாக யாரையும் இல்லாதவன் என்பது தோன்ற , “கிளையிலான்” என்றார் . “எந்தையாய் எம்பிரான் மற்றியாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃதிலான்” என்னும் அடிகள் திருவாக்கும் நோக்குக . “தனக்கு அஃதிலான் “ என்பது தனக்கு அச் சுற்றத் தொடர்பு  இல்லாதவன்  என்னும் பொருட்டு .

         “கேளாதே  யெல்லாங்  கேட்டான் “ என்பது , செவிப்பொறி வாயிலாக  அன்றித் தன் நிறைவியலால் எல்லாவற்றையும்  ஒரே காலத்தில் ஒருங்கு அறிபவன்  என்னும்  பொருளது . உபலக்கணத்தால்  காணாதே  கண்டான் என்பது முதலியவற்றையும் கொள்ளல் வேண்டும்  “பொறிவாயில் ஐந்தவித்தான் “ என்பது, பொறிவழியாக இல்லாத  ஐம்புலன்களையும்  அவித்தவன் என்னும் பொருள்படுதலால் ,இறைவன் அறிவு பொறிகளை வாயிலாக இல்லாதது என்பது போதரும் . இறைவனது இயல்பை விளக்கப் போந்த மறை முடிவில் ,”எல்லாவற்றையும் எப்பொழுதும் தானே  காட்சி யளவையில்  ஒருங்கு அறிகின்றான் “ என்று கூறப்பட்டுள்ளது . இதனால் உயிர்த் தொகுதிகளின் குற்ற நற்றங்களை உள்ளவாறு அறிந்தே அருள் செய்பவன்  என்பது விளக்கமாம் .

           நாடு  ஞாலத்தின் ஒரு பகுதியாகும் . அப் பகுதியில் உள்ள அன்பர்கள் பலரும் இப் பேறு நமக்கு எப்பொழுது கிடைக்குங்கொலோ என்று சோர்வின்றி விழிப்புடையராக இருப்பவும் ,அவரை விட்டு , அந் நாட்டுள் பிறந்த இழிபிறப்புடைய ஒரு நாய்க்கு அந் நாட்டில் உள்ளார் காணும் அளவில் அன்றி , அத்தகைய  நாடுகள் பலவற்றையும் தன்னுட்கொண்ட உலத்துள்ளார் யாவரும் காணும்படி தவிசிட்டுப் பொருட்படுத்தியது போல் என்பார், “நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசிட்டு” என்றார். நாய்க்குத் தவிசிடல் என்பதற்கு , நாயிருத்தற்குச் சிறந்த இருக்கையமைத்தல் என்றும் , யானையின்  மேலிடும் அழகிய  தவிசை நாயின் மேல் அமைத்தல்  என்றும் பொருள் கொள்ளலாம் . “நாய்மேல் தவிசிட்டு  நன்றாய்ப் பொருட்படுத்த , மேனியான்” என்பது அடிகள் மணி மொழி . “அடுகளிற் றொருத்தினிட்ட , வண்ணப்பூந்தவிசு தன்னை  ஞமலிமேலிட்ட  தொக்கும்” என்பர் சிந்தாமணி நூலாசிரியர் . இனி, நாட்டம் என்பது ஈறு தொக்கதாகக்  கொண்டு , வீட்டின்பத்திலே நாட்டமுடையார் பலரும் விழிப்புடையராக இருப்பவும் , அந் நாட்டம் சிறிதுமில்லாத  ஏழையேனை உலகம் அறியப் பொருட்படுத்து ஆண்டாய் என்று கூறினார் எனினும் பொருந்தும் . “நான்றனக்கு  அன்பின்மை நானுந் தானும் அறிவோம். தானென்னை ஆட்கொண்டது எல்லாருந்தாம் அறிவார்” என்னும் மணி மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது . நாயினேற்கே என்புழி ,ஏகாரம்  தேற்ற  பொருட்டு.

            உயிர்த் தொகுதிகளின் இயல்பும் , அவற்றை உடைமையாக  உடைய ஆண்டவன் இயல்பும் , கட்டறுத்து அப்பெருமான் திருவடிகளை அடையும் நெறியும் ஆகிய  இன்னோரன்னவைகளே காணாதனவும் கேளாதனவுமாம். கேட்டல் – அறிவியல் நூல்களின் வாயிலாகவும் , ஞானாசிரியன் உபதேசங்களானும்  ஆம். காண்டல் , அங்ஙனம் கேட்ட வழி அநுபவித்து உணர்தலாகும் . இவ்விரண்டனுள்ளும் , கேட்டற்குரிய தகுதியினும் காண்டற்குரிய தகுதி சிறந்த தென்பது எளிதில் அறியத்தக்கது. “ “இவ்வுண்மை குறித்தே , அடிகள் கேளாதன எனக் கேட்டற்கு வினை முதலாகத் தம்மையும் ,காட்டாதன எனக் காட்டற்கு வினை முதலாக இறைவனையும்  குறிப்பிட்டுள்ளார் .  கேளாதன கேட்பித்தலாவது , இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து , சிவ ஞான போத ஞான நூற்பொருளை  உணர்த்தித் திருவைந்தெழுத்தை  உபதேசித்ததாகும் .காட்டதன காட்டுதல் என்பது , அவ்வுணர்வு  உபதேசங்களின்படி அநுபவத்தல் ஆகும். “காட்டாதெனவெல்லாங் காட்டிச் சிவங் காட்டி “ என்னும்  மணி மொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது. “ தம்மையுணர்ந்து  தமையுடைய தன்னுணர்வார்” என்புழித் தம்மை உணர வைத்தல்  காட்டாதன காட்டுதலும் , தம்மையுடைய தன்னை உணரவைத்தல்  சிவங்காட்டுதலும் ஆம் என்பது தெளிவாம் . கேளாதன கேட்பித்த பின்னரன்றே  காட்டாதன  காட்டுதல் முறையாகும். அங்ஙன மின்றிக் காட்டுதலை முன்னும் கேட்பித்தலை பின்னும் கூறியதன் கருத்து என்னை யெனிற் கூறுவேம். ஆண்டவன் அடிகளுக்கு முதலில் ஞான நூற் பொருளையும் , திருவைந்தெழுத்தையும் உபதேசித்து , பின்னர் அந் நெறியே ஒழுகுமாறு அநுபவ நிலையையுங் காட்டினானாக ,அவன் காட்டிய  வழியே அநுபவத்தில் தலைப்படுங்கால் , மேன்மேலும் தெளிவுறுத்தற் பொருட்டுப் பின்னும் உண்ணின்று உபதேசித்து உணர்த்தினான் என்பது  கருத்தாகலின் அவ்வாறு கூறப்பட்டதென்க . இவ்வுண்மை புலப்படுக்கவே , “ பின்னுங் கேளாதன வெல்லாங் கேட்பித்து” என்றார் . பின்னும் என்ற எச்சவும்மையால்  கேட்பித்தல் முன்னும் நிகழ்ந்த தென்பது தெளிவாம் .

         இங்ஙனம்  கேட்பித்தும்  காட்டியும்  செய்த உதவிகள் எல்லாம் யான்  மீண்டும் பிறவாமைப் பொருட்டாம் என்பது தோன்ற ,”மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் “ என்றார் .இறைவன் காப்பு , பிறப்பித்துக் காத்தலும், பிறவியிற் புகாதபடி காத்தலும் என இருதிறப்படும். பிறப்பித்துக் காத்தல்  கட்டறுத்தற் பொருட்டாம் . பிறவியிற் புகாதபடி காத்தல் , அழிவில் இன்ப நுகர்ச்சிப் பொருட்டாம். இவ்விரண்டனுள்ளும் சிறந்த காப்பைத் தகுதி யில்லாத  தமக்குச் செய்தான் என இறைவன் அருட் சிறப்பை அடிகள் வியத்த வாறிது . காத்தாட்கொண்டான் என்பதை , ஆட்கொண்டு காத்தான் என முன்னர்  உரைத்தாங்கு  உரைத்துக்கொள்க . காட்டாதன காட்டுதலும்,  கேளாதன கேட்பித்தலும் , உலகத்தில் மாயவித்தையால் நிகழும் செயல்களாதலின் , “எம் பெருமான் செய்திட்ட விச்சைதானே” என்றார். விச்சை என்பது உலகியல் முறையில் மாய வித்தையைக்  குறிக்கு மாயினும்,உண்மையாக நோக்குங்கால் , ஞானம் என்னும் பொருளுடைய தாகும் . எம் பெருமான் தன்னை அறிந்து அநுபவத்தற்கு  எனக்கு அருளிய ஞானசத்தியே இத்துணைப் பேறுகள் எல்லாவற்றிற்கும் காரணமாம் என்பது  முடிந்த பொருளாகும் .

            இதன்கண், “கேட்டாரும் அறியாதான்” என்பது முதலிய இறை யிலக்கணங்களும் , காட்டாதன முதலிய அனுபவ இலக்கணங்களும்  சுட்டி உணரப்படுவனவாக இல்லாமல், மெய்யுணர்வினால்  தெளியத்தக்கன  ஆதலின் , சுட்டறுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக .

                             ****************************************************

பாடல் :29 .

விச்சைதான்  இதுவொப்ப  துண்டோ  கேட்கின்

மிகுகாதல் அடியார்தம்  அடியன்  ஆக்கி

அச்சந்தீர்த்  தாட்கொண்டான்  அமுதம் ஊறி

அகநெகவே  புகுந்தாண்டான்  அன்புகூர

அச்சன் ஆண்  பெண்அலியா  காசம்  ஆகி

ஆரழலாய்  அந்தமாய்  அப்பால் நின்ற

செச்சைமா  மலர்புரையு  மேனி  யெங்கள்

சிவபெருமான்  எம்பெருமான்  தேவர் கோவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவன் தமக்கு அருளிய பேற்றின் வகைகளையும்  முறையினையும்  கூறிய அடிகள் , அங்ஙனம்  தாம் பெற்ற பேற்றின் வகைகளுள்ஆண்டவன் தமக்குப் புறக்காப்பும்  அகக் காப்புஞ் செய்து ஆட்கொண்டு அருளியதையும் , அக் காப்புக்களால் தமக்கு விளைந்த பயன்களையும்  இத் திருப்பாட்டில்  அருளிச் செய்கின்றார்.  

பதவுரை :-  அச்சன் ஆகி  =  எனக்குத்  தந்தையாய் ,

ஆண் பெண் அலியாகி  = அவன்  அவள்  அது  வெனும் உலகத் தொகுதியாய் ,

ஆகாசம்  ஆகி  = ஞானப் பரவெளியாய் ,

ஆர் அழலாய்  =  அரிய ஒளி வடிவாய் ,

அந்தமாய்  =  முடிவு  இடனாய் ,

அப்பால் நின்ற  =  அதற்கும் அப்பாலாக  நிலையுதல்  பெற்ற ,

செச்சை  மாமலர்  புரையும்  மேனி  =  வெட்சியின் அழகிய  மலரையொத்த  செம்மேனியை யுடைய ,

எங்கள் சிவபெருமானும் , எம் பெருமான்  =  எங்கள் தலைவனும் ,

தேவர் கோ  =  தேவர்களுக்குத்  தலைவனும்  ஆகிய  ஆண்டவன் ,

மிகு காதல் அடியார்  தம்  அடியன்  ஆக்கி  = மிக்க  மெய்யன்பினையுடைய  தன் அடியவர்களுக்கு  என்னை அடியனாகச் செய்து 

அச்சம்  தீர்த்து  ஆட்கொண்டான் =  பண்டை வாதனை இன்னும்  தாக்குங்கொலோ  என்னும்  அச்சத்தை  யொழித்து ஆளாகக் கொண்டான் ,

அமுதம்  ஊறி அகம் நெக  =  அமிழ்தம்  ஊற்றெடுத்து  நெஞ்சம் உருகவும்,

அன்புகூர  =  மெய்யன்பு  மிகவும் ,

புகுந்து  ஆண்டான்  =  என் உட்புகுந்து  ஆட்கொண்டருளினான் ,

கேட்பின்  =  இங்ஙனமாய  அப் பெருமான் செயலைக்  கேட்கப் புகின்,

இது ஒப்பது விச்சைதான் உண்டோ  =  இதனை ஒத்தாகிய  வித்தை  வேறுண்டோ (இல்லை) யென்றபடி  என்பது .

விளக்கவுரை :-   தான்  ,  அசை .  ஆகி  என்பது  முன்  ஈரிடத்துங்  கூட்டப்பட்டது.  அச்சன்  – அத்தன் ; தந்தை .  தந்தையை  அச்சன்  என்பது  குடநாட்டு  வழக்கு  . பின்னர்  ஆண் , பெண் , அலி  என்றதனால்  பெறப்படும்  உலகத்திற்கும்  தமக்கும்  தந்தை என்பது தோன்ற  , “அச்சன்”  என்றார் . ஆண்  பெண்  எனச்  சுட்டி  உணரப்படும்  உலகத்தொகுதியுட்பட்ட  தந்தையாவான் , தனக்குரிய  தந்தையைக்  குறிக்குங்கால்  மகனுமாவான் . இங்ஙனம்  தந்தையாம்  தன்மையும்  மகன்மையும்  மாறிமாறி   நிகழும்  முறைபற்றிய  தந்தை  போலாது  , எல்லாஉலகங்கட்கும்  தந்தையாவான்  என்பது  , பின்  உலக  உருவினன்  என்னும்  குறிப்பால்  உணரத்தக்கது . ஆண் , பெண் , அலி யாகி என்புழி ஆண் பெண் என்பன அவன் அவள் என்னும்  பொருளினவாகிய  உயர்திணையையும்  , அலி  என்பது  , அது  என்னும்  பொருட்டாகிய   அஃறிணையையும்   உணர்த்தும் .  ஆகவே , உயதிணையும்  அஃறிணையும்  கலந்து , அவன் , அவள் , அது  வெனச்  சுட்டியறியப்படும்  உலகத் தொகுதியுமாவான் என்பது போதரும்.  மாயா  காரியமாகிய  உலகின்  இயக்கம்  , இறைவனை  இன்றியமையாமையின் , அப் பெருமானை   உலகெலாமாயினான்  என்று  கூறுவர்.  “எல்லா உலகமும்  ஆனாய் நீயே” என்பது  தமிழ் மறை . இங்ஙனம் உலக உருவமாக இறைவனைக்  கூறியது  , உலகநிகழ்ச்சி  அவனையின்றி  நடைபெறாது என்னும்  கருத்தால் எனின், அப் பெருமான் உண்மை இயல்புதான்  எவ்வாறு  அறியத்தக்கது  என்பார்க்கு  விடையாக  ,”ஆகாசமாகி”  என்பது  முதலியவாகக்  கூறினர் . ஆகாசம்  என்பது  ஈண்டுத்  தகராகாசம்  எனப்படும்  நுண்ணிய  ஞானப்  பரவெளியாகும் . பூதாகாசம்  எனின்  “ ஆண் , பெண் , அலி “ என்னும் உலகத்  தொகுதியுள்  அடங்கும்  ஆதலின் , அஃது அன்றென்பது .  “ஆரழல்  “ என்பதற்கும்    ஈதொக்கும் . நெஞ்சத் தாமரை மலரை அலர்வித்து, அதன் நடுவண்  உள்ள  தகராகாசமாகிய  நுண்ணிய  ஞானப்  பரவெளியில் ஒளிவடிவமக  இறைவனைத்  தியானித்தல்  வேண்டும்  என்பது  மறை முடிவிற்  கண்டது . இதனைத் தகரவித்தை  என்ப . இவ்வுண்மையைப்  புலப்படுக்கவே , “ ஆகாசமாகி  ஆரழலாய்” என்றார்.  ஆர்  அழல்  – சிவ யோகிகளால் அன்றிக் காண்டற்கரிய ஒளியாகும்  . அழல்  ஆகு  பெயர் .  “ஒளியே  யுன்னையல்லால்”  எனவும் ,” பொங்கிய வொளியினீழற்   பொருவிலன் புருவமானார்” எனவும்  பெரியோர்  ஒளிவடிவாகக்  கூறிய உண்மையும் அறிக. நுண்ணிய ஞானப்  பரவெளி இறைவனுக்கு  இடனாயினும் , அதற்கும் , அதனுள் ஒளி  உருவமாக  விளங்கும்  இறைவனுக்கும்  வேற்றுமை  யின்மைபற்றி “ஆகாசமாகி ஆரழலாய்”  என்றார்.

             உலக வடிவமான  பருப்பொருளாகவும்  , நுண்ணிய  பரவெளியில்  ஒளி  உருவமாக  விளங்கும்  நுண்பொருளாகவும்  உள்ள அவ் இறைவனே  பேரூழியின்  இறுதியில்  எல்லாம்  ஒடுங்குதற்குரிய  முடிவிடனாகவும்  உள்ளான்  என்பது  தோன்ற  ,”அந்தமாய்”  என்றார் . அயன்  மால்  உருத்திரன்  என்னும்  அதிகார  தேவர்  மூவருள் ஒருவனாகிய  குணிருத்திரனும் , பிரகிருதி  புவனாந்தம்  ஒடுங்குதற்கு  முடிவிடனாகவுள்ளான்  ஆதலின் , அவனின்  நீக்குதற்கு   “ அப்பால்” என்றார். பரமசிவன்  அம்  மூவருள் ஒருவன்  அல்லன் என்றும் , மூவர்  கோனாகச்  சுத்த  மாயா  புவனாந்தம் ஒடுங்குதற்கு  இடனாக  நிற்பவன் என்றும்  மறையாகமங்கள்  கூறுவன .  இந் நிலையே  எல்லாவற்றிற்கும்  இறுதியான  இடம் .  எல்லாம் ஒடுங்கிப்  பரமசாந்தமான  நிலையில்   சிவபெருமான்  ஒருவனே தனியாக  நிலையுதலுடையனாய்  நிற்பன்  என்பது  தோன்ற  , “அப்பால்  நின்ற “ என்றார்.  இவ்வுண்மையை , “ஓதத்தொலி  மடங்கி  யூருண்டேறி   யொத்துலகமெல்லாம்   ஒடுங்கியபின் , வேதத்தொலி  கொண்டு  வீணைகேட்பார்  வெண்காடு  மேவிய  விகிர்தனாரே”  என்னும்  திருநாவுக்கரசர்  தேவாரத்தானும்   உணர்க .

            இத்துணை அரிய  பொருளாகவுள்ள  இறைவன்  மெய்யன்பர்க்கு  ஞானாசிரியனாக  உருவத் திருமேனி  கொண்டு  எழுந்தருளி  வந்து , எளியனாய்க்  காட்சி  நல்கும்  இயல்பைப்  புலப்படுத்துவார், “செச்சை மாமலர்  புரையும்  மேனி  எங்கள்  சிவபெருமான் “என்றார்.  வெட்சிமலர்  செவ்வண்ணமுடையது . மெய்யன்பர்  எல்லோரையும்  உளப்படுத்து  , “எங்கள்”  என்றார்.  சிவபெருமான்  என்றது  இன்பவடிவினன்  என்னும்  பொருட்டு.  இதனால் மெய்யன்பர்க்கு  அழி வில் இன்பம்  பயப்போன்  என்பது  புலப்படுத்தவாறாம் .  அன்பர்  எல்லோரையும்  உளப்படுத்து , எங்கள் என்று  பொதுப்படக்  கூறினாராயினும்  , தம்  சிறப்புரிமையையும்  புலப்படுத்த  ,எம்பெருமான்  என்றார் . மிகச்  சிறியேனாகிய  எனக்குத்  தலைவனாதல்   அவன்  பெருமைக்கு  இழுக்கன்றோ  எனின்  அவ்வாறு  எண்ணற்க; எல்லாத்தேவர்களுக்கும்  தலைவன்  அவனே  யாவான்  என்பார், “தேவர்  கோவே “  என்றார் .

              இனி,  இறைவன்  தம்மைப்  புறத்தும்  அகத்தும்  நின்று  ஆட்கொண்டருளியதையும்  ,  அவ்வாட்சிகளால்  விளைந்த  பயன்களையும்  அடிகள் அருளிச்  செய்கின்றார்.  புறத்தே   நின்று  ஆட்கொண்டது  மெய்யன்பர்  கூட்டத்தில்  தம்மை இயைத்துப்  பணி  செய்வித்ததாகும் .  அத்தகைய   அன்பர்  பெருமையைப்  புலப்படுத்துவார்  , “மிகு  காதலடியார்”  என்றார் . மிகு  காதல்  வினைத் தொகையாதலின்  , ஒவ்வொறு  கணத்தும்  மேன்மேலும்  மிகுகின்ற  மெய்யன்பென்பது  .  அவ்வடியார்க்கு  அடியனாகச்  செய்தமையால்  விளைந்த  பயன் , பண்டைக்  கன்ம வாதனை  இன்னும்  தாக்குங்கொலோ  எனவும்  , அதனாற்  காம  வெகுளி  மயக்கங்களும்  அவற்றின்  பயனாக  மீண்டும்  பிறப்பிறப்புக்களும்  நேருங்கொலோ எனவும்  உண்டாகும்  அச்சத்தின்  ஒழிவாகும் .  மெய்யன்பராகிய  அடியார்  சூழலில்   இருப்போர்க்கு  இத்தகைய  அச்சம்  சிறிதும்  உண்டாகாதென்பது   தெளிவு. “பாசமானவை  பற்றறுத்  துயர்ந்த  தன்  பரம்பெருங்  கருணையால்  , ஆசை  தீர்ந்து  அடியரடிக்  கூட்டிய  அற்புதம்  அறியேனே”  என்னும்  மணி மொழியும்  கண்டு  நினைக்கத்  தக்கது .  இறைவனுடைய  திருக்கைகளுள்  ஒன்று  அபயக்குறிப்பும்,  மற்றொன்று  வரதக்  குறிப்பும்   உடையனவாகக்  காணப்படும்  உண்மையும்  நோக்குக .  நோயுடையயொருவற்கு  , முதலில்  அந்நோய்  தீர்க்கும்  மருந்தும்  ,  அதன்பின்  உடல்நலத்திற்கு   நல்லுணவும்  கொடுக்கப்படல்  வேண்டும் . அங்ஙனமே  பாசப்பிணிப்பிற்கு  அஞ்சி  வந்தவனுக்கு  முதலில்  அச்சத்  தீர்வும்  ,  பின்னர்  இன்ப  அன்பும்  அருளிக்  காப்பதே  முறையாகும் . உளம்  புகுந்து   செய்யும்  அக  ஆட்சியைத் தானும்,  புற  ஆட்சியைத்  தன்  அடியாரைக் கொண்டு  இறைவன்  செய்தது  உலகியற்கும்  ஒத்தது  ஆதல்  அறிக . இறைவனுக்கும்  அவன்  அடியார்க்கும்  வேற்றுமை   கருதலாகாதென்னும் உண்மையும்  இதனாற்  புலனாம் .  

                  இனி, அகத்தே  புகுந்து  ஆண்டதன்  பயனைப்  புலப்படுத்துவார், “அமுதம் ஊறி  அகம்  நெக  அன்புகூர” என்றார். திட்பமானதொரு  பொருள்  உருகினால்,  அப்பொருள்   இயல்பினின்றும்  வேறுபடாத  திரவப் பொருளாகவே   காணப்படும்  அன்றி  வேறாகாது . இங்கே  அடிகள்  உள்ளம்  குழைந்து  உருகுங்கால்   எங்ஙனம்  ஆயிற்று எனின் , அமுதம்  ஊற்றெடுப்ப  உருகிற்றாம் .  அடிகள்  தம்  உள்ளத்தை  , “இருப்பு  நெஞ்சம்  “  , “கன்நெஞ்சம்”  “நெஞ்சங்கல்லாம்”  என்று  பலவிடத்தும்  கூறியுள்ளார்  ஆதலின், அஃது  உருகுங்கால்  ,  இருப்பு  நீராகவும்    கல்நீராகவும்   காணப்பட  வேண்டும் .  அங்ஙனமின்றி ,  ஆண்டவன்  உட்புகுந்து  ஆண்டமையால்  , இருப்புத் தன்மையும் , கற்றன்மையும்  மாறி  அமிர்தமயமாக  ஆற்றெடுத்து   உருகிற்று   என்பார் , “அமுதம்  ஊறி  அகநெக  “  என்றார் .  உட்புகுந்தாண்டதன்  இயல்பு  முன்னர்  கூறப்பட்டது  காண்க .  உள்ளம்  உருகிய  நிலையில்  ,  ஆண்டு  மிக்கது  மெய்யன்பு  என்பார் .  “அன்பு  கூர” என்றர்  .  “பெறவே  வேண்டு மெய்யன்பு”  என்பது  அடிகள்  மணி மொழி.  “அன்பே  சிவமாவது  “  என்று  திருமந்திரம்  கூறியபடி  , சிவவடிவமாக  உள்ள  மெய்யன்பு  அகங்குழைந்து  உருகிய  நிலையில்  ,  ஆண்டு  வேரூன்றி  வளர்ந்ததென்பது  அடிகள்  அநுபவம் . “உரமென்னும்  பொருளானை  உருகிலுள்ளுரைவானை “  என்பது  தமிழ்  மறை  .  இங்ஙனம்  அமுதம்  ஊறி   அகம்  நெகவும் , அன்பு  கூரவும்  புகுந்து  ஆண்டான்  என,  அகவாட்சியும்  அதன்  பயன்களும்  தெளிவிக்கப்பட்டன  . இறைவனுடைய  இத்தகைய  செயலின்  அருமைப் பாட்டைக்   கேட்கப் புகின் , இதனை  ஒப்பதாகிய  வித்தைதான்  பிறிதொன்று  உண்டோ?  என  அடிகள்  பெருவியப்பு  அடைகின்றார்  .  வித்தை  அற்புத  உலகியற்  செயலாகிய  மாய  வித்தை  எனவும்  , சிவஞானம்  எனவும்  முன்னர்க் கூறப்பட்டது .  ஒன்றை உருக்கிப்  பிறிதொன்றாக்குதல்   முதலிய  அற்புதச்  செயல்களே  ஈண்டு  மாயவித்தைக்கு  எடுத்துக்காட்டாகும்  .  இனி,  ஞானமே  இறைவன்  சத்தியாதலின்  இறைவனது  பேர் ஆற்றலே  இந்  நிகழ்ச்சிகளுக்கு   எல்லாம்  கரணம்  என்பது  போதரும் . 

           இதன்கண், புறத்தே  செச்சை  மலர்  புரையும்  திருமேனியுடைய  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ஆட்கொண்டமையால் , இறைவன்  சுட்டுப்பொருளாகக்   காணப்படினும்  ,  அகத்தே  புகுந்தாண்டதும்   ஆகாசமாகி  ஆரழலாய்  அந்த  மாய  உண்மைத்  தன்மையும்  காணப்படுதலான், சுட்டறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                                **************************************

பாடல் :30 .

தேவர்கோ  அறியாத  தேவ  தேவன்

செழும்பொழில்கள்  பயந்துகாத்  தழிக்கு  மற்றை

மூவர்கோ  னாய்நின்ற  முதல்வன்  மூர்த்தி

மூதாதை  மாதாளும்  பாகத்  தெந்தை

யாவர்கோன்  என்னையும்  வந் தாண்டு  கொண்டான்

யாமார்க்கும்  குடியல்லோம்  யாதும்  அஞ்சோம்

மேவினோம்  அவனடியார்  அடியா  ரோடும்

மேல்மேலுங்  குடைந்தாடி  யாடுவோமே

கருத்துரை :-  இறைவன்  தம்மைப்  புறத்தும்  அகத்தும் ஆட்கொண்டருளி யமையால்  விளைந்த  அச்சத்தீர்வும்  அன்பு  மிகுதலுமாகிய பயன்களை  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய  அடிகள் , அப் பயன்களைத்  தாம் அநுபவித்த முறையையும்  , அங்ஙனம்  அனுபவித்தற்கு  ஏதுவாகவுள்ள இறைவனது  அளவிறந்த பெருமைகளும் இத் திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  தேவர்கோ  அறியாத  தேவ  தேவன்  =  விண்ணவர்க்கு  அரசனாகிய இந்திரனாலும்  அறியப்படாத  மகாதேவனும்  ,

செழும்  பொழில்கள்  பயந்து  காத்து  அழிக்கும்  =  வளம்  பொருந்திய உலகங்கள் அனைத்தையும்  படைத்துக்காத்து  அழித்தலைச் செய்யும் ,

மற்றை மூவர் கோனாய் நின்ற  முதல்வன்  =  அவனின் வேறாகிய  அயன்  திருமால்  உருத்திரன்  என்னும்  மூவர்க்கும்  தலைவனாக  நிலையுதல்  பெற்ற  முதற் பொருளும்,

மூர்த்தி  =  அவ் அயன் முதலியோர்  வடிவம்  எல்லாம்  தன்  வடிவாக  உள்ளவனும் ,

மூதாதை  =  பாட்டனும் ,

மாது  ஆளும் பாகத்து  எந்தை  =  உமையம்மையார்  ஆட்சிக்குரிய  ஒரு  கூற்றினையுடைய  என்  தந்தையும் ,

யாவர்  கோன்  =  எல்லோர்க்கும்  தலைவனும்  ஆகிய  சிவபெருமான்  ,

வந்து  என்னையும்  ஆண்டுகொண்டான்  =  வலிய  வந்து  மிகச்  சிறியேனாகிய  என்னையும்  ஆளாகக்கொண்டருளினான் ,

ஆதலால்  யாம்  ஆர்க்கும்  குடியல்லோம்  =  நாம்  பிறர்  எவர்க்கும்  அடிமையாக  மாட்டோம் ,

யாதும்  அஞ்சோம்  =  எதற்கும்  சிறிதும்  அஞ்சுவேம்  அல்லேம் ,

அவன்  அடியார்  அடியாரோடு  மேவினோம்  =  அப் பெருமானுடைய  அடியார்க்கு  அடியாரோடு  பொருந்தினோம் ,

மேல் மேலும்  குடைந்து  ஆடி  ஆடுவோம்  =  மேலும்  மேலும்  இன்பவெள்ளத்தில்   மூழ்கித்திளைத்து  ஆடிக்  கூத்தாடுவோமாக  என்பது .

விளக்கவுரை :-   நல்வினைப்  பயனையே  நுகரும்  தேவர்கள் , அது  காரணமாக  இறைவன்  நம்மால்  எளிதில்  அறியத்தக்கவன்  என்று  எண்ணினாராக  , அவராலும், அவர்க்கு  அரசனாக  இருத்தலால்  மிகவும்  எளிமையில்  அறியலாம்  என்று  இறுமாந்த  இந்திரனாலும்  அறியப் படாதவன்  என்பது  தோன்ற , இந்திரன்  முதலிய  தனிப் பெயர்களாற்  சுட்டாமல்  , “தேவர்க்கோ  அறியாத”  என்றார். போக  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டு  , யானே  எல்லோர்க்குந்  தலைவன்  என்று  செருக்குற்றிருந்த  இந்திரன்  அறியாமை  , கோனோபநிடதத்தில்  ஒரு  வரலாற்றில்  வைத்துப்  புலப்படுக்கப்பட்டுள்ளது . அவ் உபநிடத்தில்  பரமசிவன்  , இயக்க  உருவம்  தாங்கி  வந்து  , ஒரு சிறு  துரும்பை  நட்டு  , அதனை  அசைத்தவர்  முதற் பொருளாவார்  என்று  கூறியதாகவும்  , இந்திரன்  முதலிய  தேவர்  எல்லோரும்  மிக  முயன்றும்  , அங்ஙனம்  செய்ய  இயலாமலும்  , அவ்  இயக்கனை  இன்னான்  என்று  அறியாமலும்  மயங்கி  நிற்குங்கால் , அப் பெருமான்  மறைந்து  விட்டதாகவும் , மயங்கி  நின்ற  இந்திரனை  நோக்கி, அப்  பெருமானுடைய  சத்தியும்  இமவான்  புதல்வியும்  ஆகிய  உமையம்மையார்  , விண்ணில்  வெளிப்பட்டு  , “இவ்வியக்கன்  பிரமம்” என்று  கூறிச்  சிவபிரானது  பரம்பொருள்  தன்மையை  வெளிப்படுத்தியதாகவும்  கூறப்பட்டுள்ளன . தேவருள்  வீரிய  பலத்திற்  சிறந்தவன்  இந்திரன்  ஆதலால், அவன்  முகமாகக்  கோனோபநிடதத்தில்  இவ்வுண்மை  தெளிவிக்கப் பட்டுள்ளது . ஆதலின், ஈண்டும்  அடிகள்  ,”தேவர்கோ  அறியாத  தேவதேவன்” என்று  அருளிச் செய்தனர் .

       மக்களை  நோக்க  இந்திரனும்  அவனுக்கு  உட்பட்டாரும்  தேவராதல்  போல , அத் தேவரை  நோக்கச்  சிவபெருமான்  தேவதேவன்  ஆவான்  என்பதாம்  ; இது  பற்றியே  மகாதேவன்  என்றும்  கூறப்படுவன் . இனி, அத் தேவ தேவர் என்னும்  வரிசையில்  வைத்து, அயன்  மால்  உருத்திரன்  என்னும்  இவரும்  எண்ணப்படுதலால் , அவருள் ஓருவனாகிய  உருத்திரனைப்  பரமசிவன்  என்று  அறியாமல்  எண்ணுவார்க்கு , பரமசிவன்  அவ்  உருத்திரன்  அல்லன்; அம் மூவர்க்குந்  தலைவனாவான்  என்பது  தோன்ற  , “செழும் பொழில்கள்  பயந்து  காத்து  அழிக்கும்  மற்றை , மூவக்கோனாய்  நின்ற  முதல்வன்” என்றார் . பொழில்  என்பது  உலகம்  என்னும்  பொருட்டு  .  பல வாகலின்  ,”பொழில்கள்” எனவும்  மக்கள் தேவர்  முனிவர்  என்னும்  அறிவுடையாரையும்  தம்  அகத்துடைமையால் , “செழும்  பொழில்கள்”எனவும் கூறப்பட்டன. உலகம்  என்பது  இடத்தையும் ,அதன்கண்  வாழ்வாரையும்  உணர்த்தும் . அறிவுடைப்பொருள்  உண்மையைத்  தெளிவுறப்  புலப்படுத்தற்குச்  “ செழுமை” என்னும்  அடைபுணர்க்கப்பட்டது  என்க .  பயந்து  காத்து  அழிக்கும்  மூவர்  முறையே  அயன்  திருமால்  உருத்திரன்  என்பார்  ஆவர். மற்றை  என்பது  இந்திரன்  அல்லாத  என்னும்  பொருட்டு  , ஈண்டுக்  கூறிய  உருத்திரன்  , பிரகிருதி  புவனாந்தம்  சங்கரிக்கும்  குணிருத்திரன்  ஆவன்.  சுத்த மாயாபுவனாந்தம்  சங்கரிக்கும்  மகா  ருத்திரனே  பரமசிவனாவன் . இவ்வுண்மையை  , “நம்மவரவரே , மூவரென்றே  யெம்பிரானொடு மெண்ணி  விண்ணாண்டு  மண்மேல் , தேவரென்றே  இறுமாந்து  என்னபாவம்  திரிதவரே” என்று  அடிகளும் , “தேவரில்  ஒருவெனென்பர்  திருவுருச்  சிவனைத்  தேவர் , மூவராய் நின்ற தோரார் “ என்று  சிவஞானசித்தியும்  கூறியவற்றானும்  அறிக . சிவஞான போதம்   முதற் சூத்திரப்  பேருரைத்  தொடக்கத்தில் , மாதவச்  சிவஞான முனிவரர் இதனைத்  தடை விடைகளில்  வைத்து  விளக்கியிருத்தல் ஆண்டு  அறியத்தக்கது . அயன்  முதலிய  மூவரும்  அவ்வத் தொழில் நிலை பற்றித்  தலைவராக  எண்ணப்படினும்  , அவர்  எல்லோர்க்கும்  அத் தகுதிகளை  அளித்துத் தொழில்  புரிவிக்கும்  பெருந்தலைவன்  சிவபிரான்  ஆதலின், “மூவர்கோன்”  என்றார் . “மூவண்ணல்தன்  சந்நிதி  முத்தொழில்  செய்ய  வாளா ,  மேவண்ணல்”  என்பர்  பெளராணிகர்  . படைத்தற்றொழில்  முதலியவற்றைச்  செய்யும்  தேவரனைவரும்  பேரூழிக்  காலத்தில்  இறைவன் பால்  ஒடுங்க , அவ்விரைவன்  ஒருவனே  நிலையுடைப்  பொருளாக இருத்தலின்  , மூவர் கோன் என்ற  அளவில்  அமையாது , “நின்ற  முதல்வன் “  என்றும்  கூறினர் .  நிற்றல்  –  அழிவின்றி ஏகனாக நிலையுதல் . மூர்த்தி  –  வடிவம் . மூவர்கோன் என்றதனால் , அயன்  முதலியோர்   இறைவனின்  வேறாவர்  என்பது பெறப்படுமாயினும்  , அவரெல்லாம் மூர்த்தியாகத்  தான்  மூர்த்திமானாக, அவர் உண்ணின்று  படைத்தல்  முதலியவற்றிற்கு  ஆற்றல்  அளிப்பவன்  என்பது  தோன்ற ,”படைத்தளித்த ழிப்ப   மும்மூர்த்திகளாயினை “ என்பது  ஆளுடைய  பிள்ளையார் அருளுரை.

                இனி,  பிரமன் முதலிய  அதிகார  தேவர்  அனைவரும்  பேரூழிக்  காலத்துத்  தம்மின்  மேற்பட்ட  தத்துவங்களின்  முறையே  ஒடுங்க , இறுதியில்  அவ்வெல்லாவற்றையும் ஒடுக்கி  நின்ற  இறைவன், ஒடுக்கியவாறே  மீளத் தோற்றுவித்தல் பற்றி, அத் தேவார்க்கு  “மூதாதை” ஆயினான்  என்பது. அங்ஙனம்  தோற்றுவிக்குங்கால் , சத்தியும் சிவமும் ஆக  நின்று  தோற்றுவிப்பவன்  என்பது  தோன்ற , “ மாதாளும்  பாகத்து  எந்தை” என்றார் . இறைவன்  சத்தியும்  சிவமுமான தன்மையின் உண்மை யிதுவே . “மாதாளும்  பாகத்து எந்தை” என்றதில் மற்றொரு  குறிப்பும்  உண்டு . அஃது  ஒரு  குழந்தை முதலில் தாயை  அறிந்து , பின்  அவளாற்  காட்டப்பட்டுத்  தந்தையைக்  காண்டல்  போல , முதலில் உமையம்மையை  உபாசித்து , அவள்  அருளால்  இறைவனைக்  காண்டல்  முறையாதலின் , அம் முறைப்படி  அடிகளுக்கு  உதவிய  தாயுடன்  கூடிய  தந்தை  ஆயினான்  என்பது . “இறைவன்  ஆட்கொள்ளுதற்கு  உரிய  தகுதி  ஒரு  சிறிதும்  இல்லாத  என்னையும்  வலிய  வந்து  ஆட்கொண்டு  அருளினான்”  என்று  அடிகள் கூறத் தொடங்குங்கால் , தம்  சிறுமையையும்  அப் பெருமானது  அளவிடற்கரிய  பெருமையையும்  நினைந்தனராக , அந் நிலையிற்  பெரிதும்  வியப்புற்று , மீண்டும் , “யாவர்கோன்”  என்றார் , யாவர்கோனென்புழி, உருபும்  உம்மையும்  தொக்கு  நின்றன . என்னையும்  என்பது  மிசச்  சிறியேனாகிய  என்னையும்  எனவும் , “வந்து” என்பது  வலியவந்து  எனவும்  பொருள்பயந்து நிற்பன . “அடித்தடித்து  அக்கார  முன் தீற்றிய அற்புதம்” என்பது ஈண்டு  நினைக்கத்தக்கது . இறைவன் தம்மை  வலிய  வந்து  ஆட்கொண்டருளி யதைக்  குறிக்குங்கால் , என்னையும்  என ஒருமையிற் கூறிய  அடிகள் , அவ்வாட்சியின்  பயன்  நுகர்ச்சியைக்  கூறப்புகுந்து , தமக்கு  உண்டாகிய  இன்ப மிகுதியானும் , மெய்யடியார் குழுவில்  கலந்ததனால்  அவ்வடியாரை  உளப்படுத்தும் , “யாமார்க்குங்  குடியல்லோம் “ எனப்  பன்மையிற்  கூறத்  தொடங்குகின்றார். “மேவினோம் அவனடியார்  அடியாரோடும்  “ என்பது  சிங்க  நோக்காக  முன்னதற்கும்  பின்னதற்கும் ஏதுவாக  நிற்றல்  அறிக .

           முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  தம்மை  மிகு காதல்    அடியார்  தம்  அடியனாக்கினான்  என்றார் . அதற்கேற்ப , ஆண்டவன்  அருள்  வழி  நின்று, அப் பயனை  அநுபவிப்பவராய்  , இத்  திருப்பாட்டில்  ,”அவனடியார்  அடியாரோடும்  மேவினோம் “  என்றார் . அடியார்க்கு  அடியனாகச்  செய்ததன்  பயனாக  முன்னர்க்  கூறப்பட்ட  அச்சத்தீர்வைக்  குறித்து, “யாமார்க்கும்  குடியல்லோம்  யாதுமஞ்சோம் “ என்று  அடிகள் தாம்  அநுபவித்த  முறையைப்  புலப்படுத்தியருளினார்  .” நாமார்க்குங்  குடியல்லோம்  நமனையஞ்சோம்” என்பர் திருநாவுக்கரசர் . ஈண்டுக்  குடி என்றது  அடிமை  என்னும்  பொருட்டு . இறைவனும்  அவன்  அடியாரும்  அல்லாத  பிறர்  எவர்க்கும்  அடிமையாக  மாட்டோம்  என்பார் , “யாமார்க்கும்  குடியல்லோம்”  என்றார் .  தமக்கு  நேர்ந்த  சார்பு  வலி  நோக்கி  , இனி  எதற்கும்  சிறிதும்  அஞ்சோம் என்பது  தோன்ற  “யாதும் அஞ்சோம்” என்றார் . இஃது அச்சத்தீர்வின்  அநுபவம் ஆகும் . அவன்  அடியார்  அடியாரோடும்  மேவியது  இதற்கும்  ஏதுவாதல்  உணரத்தக்கது.

                 முன்னைத்  திருப்பாட்டில்  அகநெகவும்  அன்புகூரவும்  புகுந்தாண்டான்  பயனை  அடிகள் அநுபவித்த முறை , “ மேன்மேலுங்  குடைந்தாடி  ஆடுவோம் “ என்பதனாற்  புலப்படுக்கப்பட்டுள்ளது . உள்ளம்  அமுதம்  ஊறி  உருகிய  நிலையில்  மெய்யன்பு  பெருகியதாக  ,அதனால்  விளைந்த  பேரின்ப  வெள்ளத்துள்  முழுகித்  திளைத்தெழுந்து , இன்பக் கூத்து ஆடுவோம்  என்பது  அவ்  அநுபவ  விளக்கமாகும் , இன்பக்களிப்பினால்  ஆராமை  தோன்ற , “மேன்மேலுங்  குடைந்தாடி  யாடுவோமே”  என்றார். இங்ஙனம் அடிகள் தம்மை  ஆண்டவன் புறத்தும்  அகத்தும்  ஆட்கொண்டதன்  பயன்களாக  முன்னைத் திருப்பாட்டில்  கூறப்பட்டவற்றின்  அனுபவ நிலை  இத்  திருப்பாட்டில்  குறிப்பாக  புலப்படுக்கப்பட்டது  உணர்ந்து  இன்புறத்தக்கது  .

                   இதன்கண், தேவ தேவன், மூவர்கோன் , முதல்வன் , மாதாளும் பாகத்தெந்தை   என்பன  முதலியவாகக்  கூறப்பட்ட  இறைவனுடைய  உண்மை  இயல்புகள் , மெய்யுணர்விற்கு  அன்றிச்  சுட்டறிவிற்குப்  புலப்படாதன  ஆதலின், சுட்டறுத்தல்  என்னும்  பதிக  நுதலிய  பொருளும் , மேன்மேலுங் குடைந்தாடி  யாடுவோம்”  எனவும்  ,” யாமார்க்கும்  குடியல்லோம்”  எனவும்  கூறியவற்றால்   பத்தி   வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதக  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக .

                                    ****************************************

                    *******************************************************************

4 .  ஆத்தும  சுத்தி

ஆத்தும  சுத்தி  என்பதற்கு  உயிரினது  தூய்மை  என்பது பொருள் . முன்னைப்  பதிகத்தில்  உயிரினது  சுட்டறிவிற்கு  இறைவன்  உண்மைநிலை  புலப்படாதென்பதும் , மெய்யுணர்விற்கே  புலப்படும்  இயல்பினது  என்பதும், அதனால்  இறைவனைச்  சுட்டுப்பொருள்களுள்  ஒன்றாக  வைத்து  எண்ணலாகாது  என்பதும்  தெளிவிக்கப்பட்டன . அங்ஙனம்  சுட்டறுத்து  , இறை  நிலை  உணர்தற்குச்  சிறந்த  கருவியாகிய  மெய்யுணர்வு  விளக்கம்  பெறுதற்கு  ,உயிர்க்கு , தூய்மை  நிலை  இன்றியமையாதது  ஒன்று . அத்  தூய்மை  தானும்  யான்  எனது  என்னும்  அகப்புறப்  பற்றுக்களுக்கு  ஏதுவாகிய  வினைமாசு  நீங்கிய  நிலையில்  ஏற்படுவதாகும் . வினைமாசின்  நீக்கம்  இடையறாத  இறை பணியினால்  பெறத்தக்கது. இறை  பணிக்கு  மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களும்  ஈடுபடல்  வேண்டும்  . ஆதலின்  , அம் மூன்றுனுள்ளுஞ்   சிறந்ததாகிய  மனத்தை  முன்னிலைப் படுத்து , ஏனைய  கரணங்களின்  செயல்களும்  நிகழாமைக்கு   அதனையே  காரணமாகக்  கொண்டு , ஒறுத்துரைக்கு  முகமாக , உயிரின்  தூய்மைக்கு  உரிய  பணிகளை  இப்  பதிகத்து  முதல் ஐந்து   திருப்பாட்டுக்களாலும், அப் பணிகளின்  பயனாகக்  கிடைத்த  இறைவனது  அணுக்கம்  பண்டைப்  பாசத் தொடர்பினால்  ஒரே வழி  நெகிழ்ந்த நிலையில்  , அதுபற்றித்  தமக்கு  உண்டாகிய  ஆற்றாமையைப்  பின்  ஐந்து  திருப்பாட்டுக்களானும்  அடிகள்  அருளிச்செய்கின்றார் . தச  காரியத்துள்  ஒன்றாகிய  ஆன்ம  சுத்தி   இதுவெனக்  கூறுவாரும்  உளர் . அங்ஙனம்  கூறுதற்கு  ஈண்டு  இயைபின்மை  அறிக.  தச காரிய வுண்மை  இத்  திருச்சதகத்தில்  அமைந்திருத்தலைத்  தனியே  ஆராய்ந்து  , “திருவாசகத்தேன்” என்னும்  நூலில்  விளக்கிக்  கூறுவாம் .

அறுசீர்க்  கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் : 31 .

ஆடு  கின்றிலை  கூத்துடை

யான்கழற்  கன்பிலை  யென்புருகிப்

பாடு  கின்றிலை  பதைப்பதுஞ்

செய்கிலை  பணிகிலை  பாதமலர்

சூடு  கின்றிலை  சூட்டுகின்

றதுமிலை  துணையிலி  பிணநெஞ்சே

தேடு கின்றிலை   தெருவுதோ

றலறிலை   செய்வதொன்  றறியேனே .

கருத்துரை :-  இதன்  முன்னைப் பதிகத்து  இறுதித்திருப்பாட்டில்  இறைவன்  தம்மை  ஆட்கொண்டருளியமையால் விளைந்த பயன்கள்  இன்னவெனக்  கூறப்பட்டன.  அவற்றுட்  சிறந்த  அன்பினது  மேலீட்டால்  தம்  ஆன்ம சுத்திக்கு   இன்றியமையாத  இறை  பணியாகிய  கரணங்களின் செயல்கள்  போதிய  அளவு  நிகழாமை  குறித்து ,  நெஞ்சை  முன்னிலைப்படுத்து  ஒறுத்துக்  கூறுமுகமாக  அப்  பணிச்  செயல்களைப்  புலப்படுத்து  இத் திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை :-   பிண நெஞ்சே  =  பிணத்தைப்போல்  செயலற்றுக்கிடக்கும்  நெஞ்சமே  ,

கூத்து  உடையான்  கழற்கு  அன்பு  இல்லை   =  இன்பத்  திருக்கூத்துடைய  சிவபெருமான்  திருவடிக்கண்  அன்பு  செய்கின்றிலை ,

ஆடுகின்றிலை  =  அன்பு  மிகுதியால்  ஆடுகின்றாயும்  இல்லை  ,

என்பு  உருகிப்  பாடுகின்றிலை  =  எலும்பு  உருகப்  பாடு கின்றாயும்  இல்லை  ,

பதைப்பதும்  செய்கிலை  =  துடித்தலையும்  மேற்கொள்ளுகின்றாய்  இல்லை ,

பணிகிலை  =  வணங்குகின்றாயும்  இல்லை ,

பாதமலர்  சூடுகின்றிலை  =  அப் பெருமான்  திருவடி மலரை  நின் தலை மேல்  சூடுகின்றாயும்  இல்லை ,

பாதமலர்  சூட்டுகின்றதும்  இல்லை  =  அப் பெருமான்  திருவடிக்கண்  மலரைப்  பெய்து  புனைவதுஞ்  செய்கின்றிலை ,

தேடுகின்றிலை  =  அப் பெருமான்  யாண்டு  உள்ளான்  என்று  தேடுகின்றாயும்  இல்லை ,

தெருவுதோறு  அலறிலை  =  ஒவ்வொரு தெருவிலும்  சென்று  அலறுகின்றாயும்  இல்லை ,

துணையிலி  =  அதனால்  துணையில்லாயுமாயினாய்,

செய்வது  ஒன்று  அறியேனே  =  இந் நிலையில்  யான்  செய்யத்தக்கது   இன்னதென்று  ஒன்றையும்  அறியேனாயினேன்  என்பது .

விளக்கவுரை :-  ஆடல்  பாடல்  முதலிய  புறச்செயல்களும் , என்பு  உருகுதல் ,  அன்பு செய்தல் முதலிய  அகச் செயல்களும்  அற்று  உயிர்  நீங்கிய  உடல் போற்  லிடத்தலின்  , “பிண  நெஞ்சே”  என  விளித்தார் . ஆண்டவன்  இன்பத்  திருக்கூத்து  , படைத்தல் முதலிய  ஐந்தொழிற்கும்  தலைமைப்  புலப்படுப்பதாகலின்  , அச் சிறப்பு  நோக்கி  ,” கூத்துடையான் “ என்றார் . அத்  திருக்கூத்தையும்  , அது  நிகழும்  அரங்கத்தையும்  .  “அண்ணலார்  தமக்களித்த  மெய்ஞ்ஞானமேயான அம்பலமுந்  தம்  உண்ணிறைந்த ஞானத்தெழும்  ஆனந்த  ஒருபெருந் தனிக்கூத்தும்  “ என்று  சேக்கிழார்  பாராட்டியிருத்தல்  ஈண்டு  அறியத்தக்கது . அரங்கத்தை மெய்யுணர்வாகவும் திருக்கூத்தை  அம்மெய்யுணர்வில்  தோன்றும்  பேரின்பமாகவும்  புனைந்துரைத்த  இயைபு  இன்புறத்தக்கது . ஆண்டவன்  திருக்கூத்து  , ஆக்கல்  முதலிய  ஐந்தொழிற்  குறிப்பைப் புலப்படுப்பதாலும்  , அத் தொழிற்  பாட்டிற்குரியது  உலகம்  ஆதலாலும்  , அவ் வுலகம்  உடைமையாக ,இறைவன்  உடையவனாவான் ஆதலின்  ,” கூத்துடையான்” என்றார். ஆடல்  பாடல்  முதலிய  செயல்கள் எல்லாவற்றிற்கும்  மூலம்  திருவடிக்கட்  செய்யும்  மெய்யன்பாதலின் , “கழற்கு  அன்பிலை” என்றார் . அகத்தேயுள்ள அன்பின்  மிகுதியால்  நிகழும்  புறச்  செயல்களுல் முதலில்  ஆடலைக்  கூறியது, இறைவன்  கூத்துடையானாதலான் , அதனையே  அன்பரும்  மேற்கோடல்  அவன் உவப்பிற்கும்  பொருத்தமாம்  சிறப்பு  நோக்கி  என்க . இறைவனைப் பாடுங்கால் , அப் பாடற்  பயனை  அழுந்தி  அறிந்து  உள்ளம்  நெகிழப்  பாடுதலே மெய்யன்பின் விளைவாகும் ஆதலின், என்புருகிப் பாடுகின்றிலை”  என்றார் . உருகி  என்னும்  செய்தென்  எச்சத்தை, செயவென் எச்சமாகக் கொள்ளல் வேண்டும் . ஆடலும்  பாடலும்  ,மெய் மொழிகளின்  செயல்கள் ஆயினும்  , அவ்வெல்லாவற்றிற்கும்   காரணம்  நெஞ்சமாதலின்  , அதன்  செயல்களாக  உபசரித்துக் கூறப்பட்டன. பின்  வருவனவற்றிற்கும்  இஃதொக்கும். பதைத்தல்  துடித்தலாகும்  .  உள்ளம்  உருகிப்  பாடுங்கால், விரைவு  தோன்றாத அமைதியே  உள்ளத்தில்  நிலைபெறுவதாகும் . அவ்  அமைதி  இறைவன் திருவடிப்பேற்றிற்குச்  சாதனம்  ஆயினும்  , பாடற் பொருளில்  நெஞ்சம்  திளைக்குங்கால் , இறைவன் திருவடிக் காட்சி  எப்பொழுது  பெறக்கூடும்  என்னும்  விரைவு  தோன்றுமாதலின்  , அவ் விரைவு  பற்றி  நிகழும்  உள்ளப்  பதைப்பு  வேண்டற் பாலதென்னும்  குறிப்புத் தோன்ற ,”பதைப்பதும்  செய்கில்லை” என்றார்.  ஆடல் , பாடல் , பதைத்தல்  என்னும் இம்மூன்று  செயல்களும்  மெய்யன்பினால்  முறையே   மெய் ,மொழி ,மனம் என்னும்  முக்கரணங்களாலும்  நிகழ்வனவாம் .  இந் நிகழ்ச்சி  குறித்து  , ஆண்டவன்  அருள்  கூர்ந்து  தன்  திருவடியை  அகக்  காட்சிக்கு  நல்கினானாக ,  அந் நிலையிலும்  நெஞ்சம்  வணங்காமை  குறித்து  இரங்குவார் , “பணிகிலை” எனவும் , அப் பணிவின்  பயனாக அப் பெருமான் திருவடி  மலரைத்  தலையிற் சூடுதலாகிய பேறு கிடத்திருப்பவும் , செய்கிலை  என்பார் , “பாத மலர் சூடுகின்றிலை”  எனவும்  கூறினர் .  பாதமலர்  இடை நிலைவிளக்காக  நின்று ,பின்வரும் ,”சூட்டுகின்றதுமில்லை” என்பதனோடும்  இயையும்  .  சூடுகின்றதும்  இலை என்புழித்  திருவடியாகிய  மலரை எனப்  பண்புருவும்  , இரண்டாம்  வேற்றுமை  உருபும்  விரித்துக் கொள்ளல்  வேண்டும் .  

           திருவடி  மலரைச்  சூடுகின்றிலை  என்பதனால்  தலைவணக்கமாகிய பணிவு  கூறப்பட்டது . இறைவன்  திருவடியைக்  கண்ட  அளவில் “காண்டலும்  தொழுது  வீழ்ந்தவுடன்  எழுந்து “ என்றபடி  தொழுது  வணங்குதலும்  , அதன் பின் மலர் கொண்டு வழிபடுதலும் முறையாதலின்  பின்னர், “ பாத மலர்  சூட்டுகின்றதும் இலை “ என்றார். ஈண்டுத்  திருவடிக்கண் மலரை  என , ஏழாம் உருபும்  இரண்டாம்  உருபும்  விரித்துக் கொள்க .  சூட்டுதல்  –  மலர் பெய்து அலங்கரித்தல் .  தேடுதல்  – உள்ளத்தே துருவி  ஆராய்தல்.  அருட்  கடலாகிய  இறைவன் திருவடிக் காட்சி அகத்தே  திகழப்பெற்ற அடிகள் , பண்டைப் பாசத் தொடர்பால்  ஓரோவமயங்களில்  அது  புலப்படாமை   நோக்கி  இரங்குதலைப்  பலவிடத்துங்  காணலாம் . அந் நிலையில் உள்ளத்தே  புக்கவன் யாண்டு  ஒளிந்தனன் என்று முயன்று தேடுதல் அடிகள் அநுபவமாகும் .  “உள்ளுருகித்  தேடுவேன்”  என்பது  அடிகள் திருவாக்கு . அங்ஙனம்  தேடுதலால்  உண்டாம்  பயனைப்  பிறிதோரிடத்து  , “பண்டே  பயில்தொறும் இன்றே  பயில்தொறும்  ,ஒளிக்குஞ்சோரனைக் கண்டனம்”  என்று  அடிகளும்  , “தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்”  என்று  அப்பரும்  கூறியிருத்தல்  அறிக .  மீண்டும்  காட்சிப்படுதலாகிய  பயனை  நோக்கி  ,அகத்தே  தேடி உணர  முயலுதல்  இன்றியமையாதது  என்பது  கருதி , “தேடுகின்றிலை”  எனவும்  , தேடியும்  பயன்  பெறாத  நிலையில்  தன் வயம்  இழந்து  நாடவர்  பழித்துரை  பூணதுவாகக் கொண்டு  , தெருக்கள்  தோறும்  சென்று  , இறைவன்  திருப்பெயர்களைக்  கூவிக்  கதறுதலை  மேற் கொள்ளின்  , அந் நிலை  குறித்தாயினும்  இறைவன்  வெளிப்படுதல்  கூடுமே ; அதுவும்  செய்திலை  என்பார், “ தெருவு தோறலறிலை” எனவும்  கூறினர் . மேற் குறித்த  ஆடல்  பாடல்  முதலிய  அன்பின்  விளைவாகிய  செயல்களை  மேற்கொள்ளாமையால் , அழி வில்  இன்பப் பேற்றிற்குத்  துணை  செய்ய  வேண்டிய மனம் தமக்குத்  துணையாக இல்லை  என்பது  கருதி,”துணையிலி”  என்றார்.  இனி,  துணையிலி  என்னும்  சொற்கு  , நீ  துணை இழந்திருக் கின்றாய்  என நெஞ்சை  நோக்கிக்  கூறியதாகவும்  கொள்ளலாம் . நெஞ்சம்  திருவருட்  பேறு  எய்துதற்கு  இத் திருப்பாட்டில்  குறித்த  செயல்கள்  எல்லாம்  துணைக்கருவிகளாகவும்  , அத்துணையை இழந்திருக்கின்றாய் எனக்  கொள்ளுதலும்   பொருத்தமே . தம்  முயற்சிக்குப்  பெரிதும்  துணை  நிற்க வேண்டிய நெஞ்சம்  , அங்ஙனம்  நில்லாமையால்  , மேற்செய்யக்கடவது   இன்னதென்றும்   அறியேன்  என்பார் , “செய்வதொன்றறியேன்” என்றார் ,  செய்யத்தக்கது  சிறிது  அறியினும் , அந் நெறியைக் கடைப்பிடிக்கலாம் ; அத்துணை தானும் இன்று  என்பது , “ஒன்றும்” என்னும்  சொல்லாற் பெறப்படும்  . உம்மை  தொக்கு  நின்றது .

            இதன்கண்,  ஆடல்  பாடல்  முதலிய  அன்புச்செயல்களின்   இன்றியமையாமை   கூறப்பட்டிருத்தலின், பத்தி  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  , அச்செயல்கள் ஆன்மாவின்  தூய்மைக்கு  வேண்டற்பாலன  என்பதனால் , ஆத்தும சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  விளக்கமாதல்  அறிக.

                                        ****************************************

பாடல் : 32 .

அறிவி லாத  எனைப்புகுந்

தாண்டுகொண்  டறிவதை  யருளிமேல்

நெறியெ  லாம்புலம்  ஆக்கிய

எந்தையைப்  பந்தனை   யறுப்பானைப்

பிறிவி  லாத இன்  அருள்கள் பெற்

றிருந்துமா  றாடுதி  பிணநெஞ்சே

கிறியெ  லாமிகக் கீழ்ப்படுத்

தாய்கெடுத்  தாயென்னைக்  கெடுமாறே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பினால்  நிகழும்  ஆடல்  பாடல்  முதலிய  செயல்களை  மேற்கொண்டு  , தமக்குத்  துணை செய்யாமை  பற்றி  நெஞ்சத்தை  வெறுத்துக்  கூறிய  அடிகள், அந்  நிலையிலும்  இறைவன்  தன்  அருட்கு  இடனாக்கிய  பேருதவியைப்  பெற்றிருந்தும்  , அங்ஙனம்  துணை  செய்யாமையோடு  அமையாது. மாறாகவும்  நின்று  தமக்குக்  கேடு  விளைத்தலைக்  குறித்து , அந் நெஞ்சை நோக்கி  இத் திருப்பாட்டில்  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :- பிண நெஞ்சே  =  பிண  நெஞ்சே ,

அறிவு  இலாத  எனை  =  மெய்யறிவு  இல்லாத  அடியேனை ,

புகுந்து ஆண்டுகொண்டு   =  வலிய  வந்து  ஆளாகக்  கொண்டு  ,

அறிவதை  அருளி  =  தன்னை அறிதற்குக்  கருவியாகிய  ஞானத்தை  நல்கி ,

மேல்  நெறியெலாம்புலம்  ஆக்கி  எந்தையை  =  மேலாகிய  வீட்டிற்கு  உரிய  வழிகள்  எல்லாவற்றையும்  விளங்கச் செய்த  என்  தந்தையும் ,

பந்தனை அறுப்பானை   =  பாசப்பிணிப்பை  ஒழிப்பவனும்  ஆகிய  சிவபெருமானை ,

பிறிவு  இலாத  இன்  அருள்கள் பெற்றிருந்தும்  =  எஞ்ஞான்றும்  நீங்குதல்  இல்லாமைக்கு  ஏதுவாகிய  இனிய  அருள்  உதவிகளை  எளிதில்  பெற்றுக்கொண்டும் ,

மாறாடுதி  =  மாறுபட  நிற்கின்றாய் ,

கிறி  எலாம்  மிக  =  பொய்மை எல்லாம்  மேலோங்கி  நிற்க ,

என்னைக்  கீழ்ப்படுத்தாய்  கெடுமாறு  கெடுத்தாய்  =  என்னைக்  கீழ்ப்படத்  தாழ்த்துக்  கெட்டு  ஒழியுமாறு  கெடுத்தாய்  என்பது .

விளக்கவுரை :-  “பிண  நெஞ்சே” என்பதை  இருமுறை  ஓதி  , முறையே  விளியாகவும்  ஏகாரத்தை  வினாப்பொருளில்  வந்த எதிர்மறையாகக் கொண்டு  பிண நெஞ்சல்லை  எனவும்  பொருள் கொள்ளல்  வேண்டும். இங்ஙனம்  மூல பாடத்தை  இருமுறை  ஓதிப் பொருள்  வேறு  கோடலைத்  தொல்காப்பியச்  சொல்லதிகாரம்  – 77 ஆம்  சூத்திரத்திற்குச்  சேனாவரையர்  கூறிய  உரையினும்  அறிக . ஆடல்  பாடல்  முதலிய  புறச்  செயல்களும்  அன்பினால்  உருகுதல்  முதலிய  அக  உணர்ச்சியும்  அற்றுத்  துணை செய்யாமற்   பிணம்  போற் கிடந்தமை நோக்கி  , முன்னைத்  திருப்பாட்டில்  ,”பிணநெஞ்சே” என்ற  அடிகள்  ,இத்  திருப்பாட்டில்  “மாறுபட்டுக்  கேடு  செய்கின்றாய் ஆதலின் , பிணம் போற்  செயலற்ற  நெஞ்சாகவும்  இல்லையே “ என  வியந்து  இரங்குவாராய் , “பிண நெஞ்சே?” என்றார்  என்பது  .  பிணம்  நற்செயலின்றி  கிடத்தல்  போலயே  தீச் செயலும்  செய்யாமற் கிடக்கும். ஈண்டு  மாறுபட்டுக்  கேடு  விளைத்தலாகிய  தீச் செயலைச்  செய்கின்ற மையின் , பிண  நெஞ்சாகவும்  இல்லையே  என்பது  உட்கோள் .

            ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால் , அவ்வன்பர்  உயிராகிய  தம்  இயல்பையும்  , தம்மை  உடைமையாக வுள்ள உடையனாகிய  இறைவன்  இயல்பையும்  அறியும்  அறிவுடையராக  இருத்தல்  வேண்டும் . இதுவே  ஆட்கொள்ளுதற்குரிய  தகுதியாகும் . இங்ஙனமாகவும்  , அத் தகுதியில்லாத  நிலையில் இறைவன்  வலிய  வந்து  தம்மை  ஆட்கொண்டருளிய  அருட்டிறத்தைப்  பாராட்டுவாராய்  ,” அறிவில்லாத  வெனைப்  புகுந்தாண்டு  கொண்டு “ என்றார். “அறிவிலாமையன்றே  கண்ட தாண்ட நாள்” என்று  பிறிதோரிடத்தும்  அடிகள்  அருளிச்  செய்தமை  அறிக . ஆட்கொண்ட  பின்னரே, தம்மை  உணர்ந்து  தமையுடைய  தன்னுணரும்  ஞானத்தை  இறைவன்  தமக்கு  அருளினன்  என்பார், “ அறிவதையருளி”  என்றார். ஓர்  அரசன்  அமைச்சியல்  தகுதி பெறாதான் ஒருவனை  அன்புரிமை  பற்றி  அப்  பதவியில் இருத்திப்  பின்  அவனைப்  பெருமைப் படுத்தற்கும்  தகுதி யில்லாதானைத்  தெரிந்தெடுத்த  குற்றம்  தன்னச்  சாராமைப்  பொருட்டும் , அவற்கு  அத் தகுதியையும் உதவுதல்  போல , ஆட்கொள்ளுதற்குரிய    அறிவிலாத  தம்மை  , அருட் பெருக்கால்  ஆட்கொண்டு  , பின்னர்  அதற்குத்  தகுதியாகிய  ஞானத்தையும்  இறைவன்  அருளினான்  என்பது   அடிகள்  கருத்து. மெய்யுணர்வை  அருளிய  அளவில்  அமையாது , அதனால் அடையத்தக்க  வீட்டிற்குரிய  நெறிகள் பலவற்றையும்  புலப்பட  வைத்தான் என்பார், “மேல் நெறியெலாம்  அடைதற்புலமாக்கிய  “  என்றார். இந்திரன்  முதலியோர்  பதவிகளை  அடைதற்குரிய   சிறு  நெறிகளைப் போலாது  ,அழி வில்  இன்பப்  பேற்றிற்குரிய  நெறிகள்  என்பது  புலப்பட  ,”மேல்  நெறியெலாம்  “ என்று  கூறப்பட்டது . எல்லாம்  என்பது , வீட்டு  நிலை அடைதற்குரிய  அன்புநெறி  ஞானநெறி  முதலிய உயர்நெறி  பலவற்றையும்  குறிக்கும் . அவ் எல்லா  நெறிகளும்  முடிவில்  இறைவனையடைதற்குரியவாயினும் , அவற்றுள்ளும்  இடர்ப்பாடின்றி  எளிதில்  அடைதற்குரிய  நன்நெறி  ஒன்றே  வேண்டத்தக்கதாவும்  அவெல்லா  நெறிகளையும்  புலப்பட  வைத்து  , அவறின்  அருமை  எளிமைகளை  உணர்ந்து மேற்கொள்ளுதற்கேயாம் . செவ்விய  நன் நெறி யாகிய   சிவ நெறி  ஒன்றையே  புலப்படுத்து  , அந்நெறியே  ஒழுக  உபகரித்தல்  போதியதாகவும் , பன்நெறிகளையும்  புலம்  ஆக்குதல்  எற்றுக்கெனின் , ஒழுகும்  நெறி ஒன்றே; அது  சிவநெறியாகும்  . பலநெறிகளையும்  அறிய  வைத்து  , அவ்வெல்லா நெறிகளினும்   சிவநெறியின்  சிறப்புத்  தெளிதற்கென்க . இது  கருதியே , நெறியெல்லாம் புகுவித்த  என்னாது , “நெறியெலாம்  புலமாக்கிய”  என்றார் . இத்தகைய  உண்மை  நெறிவிளக்கம்  , ஞானத்தந்தை  தன் அருமைப்  புதல்வனுக்குச்  செய்யத்தக்கதாகலின்   “எந்தையே” என்றார். ஆண்டவன்  தமக்குப்  பல நெறிகளும் புலனாதற்கு   ஏதுவாகிய  அறிவொளியை உதவிய  தந்தையாதலோடு , அந்நெறிகளுட்  சிறந்ததாகிய  சிவநெறிக்கண் சேறற்குத்   தடையாகவுள்ள  பாசப்பிணிப்பை  அகற்றும்  ஞானாசிரியனும்  ஆயினான்  என்பது தோன்ற , “பந்தனை  யறுப்பானை “ என்றார் . இத்தகைய பேருதவியாளனாகிய இறைவன் , ஞான முதலிய  சாதனங்களை உதவிய அளவில் அமையாது , இடையறாது  சாத்தியமாகிய  தன்னை  அநுபவித்தற்கும்  நெஞ்சிற்கு  இன்னருள் புரிந்தானாக , அவ்வுதவியை அடைந்திருந்தும்  என்பார், “ பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்  “ என்றார்.  பிறிவில்லாமை – ஒரு கணப்பொழுதும்  நெஞ்சில்  நின்றும்  நீங்காமை . “இமைப்பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறிய  மணி மொழியும் ஈண்டு  நினைக்கத் தக்கது . இறைவன்  அன்பர்க்கு  நன்நெறி காட்டி  உபகரித்தலோடு  , அந் நெறியே   போந்து இன்பம்  நுகர்தற்குத்  தன்னையும்  வழங்கும்  பெரு வண்மையாளன்  என்பதை  , “தன்னைத்  தந்த  என்  ஆரமுதை”  என்னும்  அடிகள் மணி மொழியாலும்  ,”தன்னையே  தந்தான் என்றுந்தீபற “ என்னும்  சைவ  நூற் குறிப்பானும்  உணரலாம் . பிறிவில்லாத  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு .

           இறைவனது  கருணை  , அறக்கருணை எனவும், மறக்கருணை  எனவும்  இருதிறப்படும்  . அவற்றுள்  தன்நெஞ்சில் நின்று  நீங்காமைக்கு  ஏதுவாகச்  செய்த  கருணை என்பார் , “இன்னருள்கள்” என்றார். அருள்ஒன்றாயினும்  , அதனைப் பெற்ற  நெறி  பலவாதலின்  ,அருள்கள்  எனப்  பன்மை  கூறப்பட்டது. திருவருட் பேறு  கிடையாத பொழுது , அது குறித்து வேண்டிஇரங்குவதல்லது  மாறுபட்டு  இகழுதல் , இறைவன்  திறந்து மேற்கொள்ளத் தகாததொன்றாம் . அங்ஙனம்  ஆகவும்  , அவ்வருளோ கிடைக்கப்பெற்றுள்ளது ; ஒருவாறு அது மறக்கருணையாக  இருப்பின், அறியாமையால்  மாறுபடுதலும்  பொருந்தும் . அக் கருணையோ இன்னருள்  ஆயிற்று , அதனை  முற்றும்  அடைந்திருந்தும் , நன்றி  மறந்து மாறாகவும்  நடத்தல் என்ன  அறியாமை என்பார், “ மாறாடுதி” என்றார்.  அதனால் , கீழ்ப்பட்டுத் தேய்ந்து ஒழிய வேண்டிய  எல்லாம்  மேற்பட்டு  உயரவும்  , உயர்ச்சி  பெற்றுச்  சிறப்படைய  வேண்டிய யான் கீழ்ப்பட்டுக்  கேடு  எய்தவும் நேர்ந்தன என்பார் , “கிறியெலாம் மிகக்  கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் எனை “ என்றார். நெஞ்சம்  நன்னிலைப்பட்டுத்  தூய்மை யுடையதாக  இருக்குமாயின் , வஞ்சகம் , பொய்  முதலிய  இழி குணங்கள் எல்லாம் கீழ்ப்பட்டுத்  தேய்ந்து ஒழியும்  என்பதும் , அவ்வொழிவினால்  உயிர்  நன்னிலை  எய்தி ,இறையருட் பேற்றினால்  உயர்ச்சி பெறும்  என்பதும்  ஞானநூல்  துணிபாகும் . அம் முறைக்கு  மாறாக ஆயிற்று  என்று இரங்குவார்  “ கிறியெலாம் மிக”  எனவும் , “கீழ்ப்படுத்தாய்  கெடுத்தாய் எனை “ எனவும் கூறியருளினர் . வஞ்சகம்  பொய்  முதலிய  இழி  குணங்களை  மிகுதிப்படுத்து முகமாக  , தம்மைக்  கீழ்ப்படுத்து , நெஞ்சம்  கேடு  செய்தது என்பது  கருத்து . கெடுமாறு  கெடுத்தாய்  என  முடித்தல்  வேண்டும் .  கெடும் ஆறு  –  யான்  கெடுதற்குரிய  உபாயம் . ஆறு , உபாய மென்னும்  பொருளாதலை  “ஆற்றின்  வருந்தா  வருத்தம்”  என்னும்  குறட்பகுதிக்குப்  பரிமேலழகர்  கூறிய  உரையானும்  அறிக.  இனி, “என்னை” என்பதை  இடைநிலை  விளக்காகக்  கொண்டு  , என்னைக்  கெடுத்தாய்  என  இரண்டாம்  உருபு  பெற்று  வந்த  தன்மை  ஒருமைப்பெயராகவும் ,இனிக்  கெடுமாறு  என்னை யென  வினாக்குறிப் பாகவும் கொள்ளுதல் பொருந்தும் . இப் பொருட்குக்  ககர  ஒற்று  மிகாமைப்  பாடங்  கொள்ளல்  வேண்டும் .

                    இதன்கண்,  இறைவனது  சிறந்த  பேருதவியை  நினைவு  கூறாமல்  மாறுபடும்  நெஞ்சத்தை  வெறுத்துரைக்கும்  முகமாக  , உயிரின்  தூய்மைக்கு  உரிய  பிரிவில்லாத   இனி  திருவருட் பேற்றின்  பெருமை  கூறப்பட்டிருத்தலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “கிறியெலாமிகக்  கீழ்ப்படுத்தாய் “ என்பதனால்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                           ***********************************

பாடல் :33 .

மாறி  நின்றெனைக்  கெடக்கிடந்

தனையையெம்  மதியிலி  மடநெஞ்சே

தேறு  கின்றிலம்  இனியுனைச்

சிக்கெனச்  சிவனவன்  திரள்தோள்மேல்

நீறு  நின்றது  கண்டனை

யாயினும்  நெக்கிலை  இக்காயம்

கீறு கின்றிலை  கெடுவதுன்

பரிசிது  கேட்கவுங்  கில்லேனே .

கருத்துரை :-  தம்  நெஞ்சம்  தமக்கு  மாறக  நின்று  கேடு  விளைத்தலைக்  குறித்து  முன்னைத்  திருப்பாட்டில்  இரங்கிக்கூறிய  அடிகள் , அங்ஙனம்  மாறுபடுதற்குக்  காரணம் , அறிவுரையைக்  கேளாத  மடமை  எனக் கண்டு , அந் நிலையில்  அது  நம்புதற் குரியது  ஆகாது  என்பதையும் , அதனால்  அங்ஙனம்  மாறுபட்ட  நெஞ்சின்  வழி  நிற்றல்  இயலாததென் பதையும்  இத்  திருப்பாட்டில்  வற்புறுத்துக்  கூறுகின்றார்.

பதவுரை :-  எம் மதியிலி  மட  நெஞ்சே  =  யாம்  கூறும்  அறிவுரையை  ஏற்றுக்கொள்ளாத  அறியாமையை  உடைய  நெஞ்சமே ,

எனை மாறி நின்று  =  என்னை  மாறுபட்டு   நின்று  ,

கெடக்  கிடந்தனையை  உன்னை  =  யான்  கெடுமாறு  என்பொற் கிடந்த  நின்னை  ,

இனிச் சிக்கெனத்  தேறுகின்றிலம்  =  இனி மேல்  உறுதியாகத்  தெளியமாட்டோம் ,

சிவன்  அவன்  திறள் தோள் மேல்   =  சிவபெருமானாகிய  அவ்  இறைவனுடைய  திரண்ட  தோள்களிடத்து  ,

நீறு  நின்றது  கண்டனை   ஆயினும்  =  திருநீறு   நிலை பெற்று   விளங்குதலைக்  கண்டாய்  ஆயினும் ,

நெக்கிலை  =  உருகுகின்றாய்  இல்லை,

இக் காயம்  கீறுகின்றிலை   =  இவ் வுடலைப்  பிளவுபடச்  செய்கின்றாய்இல்லை ,

உன்  பரிசு கெடுவது  =  உன்  தன்மை  கேடு  விளைப்பதாகும்  ,

இது  கேட்கவும்  கில்லேன்   =  இதனைக்  கேட்கவும்  ஆற்றேன்  என்பது.

விளக்கவுரை :-  இத்  திருப்பாட்டில்  , “எனை”  எனவும் , “கில்லேன்” எனவும்  தம்மை  ஒருமையில்  வைத்துக்  கூறிய  அடிகள்  , “எம்மதியிலி”  எனப்  பன்மை  கூறியது , தம்  நெஞ்சு  , தாம்  கூறும்  அறிவுரையைக்  கேளாமையோடு  , மற்றை  அன்பர்  அறிவுரைகளையும்  ஏற்று  நடக்கவில்லை  என்பது  குறித்தாம் . ஒரு  குழந்தைக்குத்  தந்தை  கூறும்  அறிவுரை  விழுமிதாயினும்  , அதனை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் , அது குறித்துத்  தந்தை வெறான்  என்னும்  துணிவு  பற்றி  , அக் குழந்தை  அதனைப்  பொருட்படுத்தா மலிருத்தலும்  ஆசிரியர்  முதலிய  மற்றையோர்  கூறும்  அறிவுரையை  வெறுப்பிற்கு  அஞ்சியாவது  ஏற்றுக் கேட்டலும்  உலகியலிற்  கண்டவை .  அம்முறையில்  அடிகள்  தம்  நெஞ்சு  தாம்  கூறும் அறிவுரையை ஏற்றுக்  கொள்ளவில்லை  யானாலும்  ,மற்றை மெய்யன்பர்  கூறும்  அறிவுரைகளையாவது  ஏற்றுக்கொண்டிருக்கலாம் ; அப்படியும் இல்லையே  என வருந்துவார் ,அவ்வன்பரையும்  உளப்படுத்து  “எம்மதி” எனப் பன்மையாகக்  கூறினர். மடம் – அறியாமை. இயல்பாகவே  அறியாமையுடைய  நெஞ்சத்தைத்  தாமும்  பிற அன்பர்களும்  இடித்து ரைத்து  அறிவுறுத்தும்  திருந்தவில்லை  என்பது  தோன்ற  ,”மட  நெஞ்சே”  என்றார்.  “ஏவவுஞ் செய்கலான் தான்  தேறான்  அவ்வுயிர்  , போம்  அளவும்  ஓர் நோய்”  என்னும்  பொருளுரைப்படி  , நெஞ்சே , என்ற  அளவில்  அமையாது  , யெம் மதியிலி மட நெஞ்சம் தானாகவும் அறிந்திலது ; பெரியோர்  அறிவுரைகளையும்  கேட்டிலது  என்பது  கருத்து . நெஞ்சிற்கு  அறிவின்மை  கூறியது  .  உணர்ந்தபடி  ஒழுகுதற்கு  இடந்தராமை  குறித்து , “கை கவியாச் சென்று  கண் புதையாக்  குறுகி – தொடிக்கை  தைவரத்  தோய்ந்தன்று  கொல்லோ, குறுமகள்,  மென்றோள் பெறநசை  இச் சென்ற  என் நெஞ்சே “ என்று  அகப்பாட்டில்  நெஞ்சிற்குக்  கை  முதலிய  உறுப்புக் கூறியது  போலக்  கவிமரபும்  ஆம் , “வாழ்த்த  வாயிம்  நினைக்க  மடநெஞ்சும் , தாழ்த்தச் சென்னியும்  தந்த  தலைவன்” என்று தமிழ் மறை கூறியபடி ,இறைவனை  நினைந்து உய்தி பெறுதற்குக்  கருவியாகத்  தமக்குக்  கிடைத்த  நெஞ்சம்  , அங்ஙனம்  துணை நின்று  உபகரியாமையோடு  , பகைமையையும் மேற்கொண்டு  நின்றது  என இரங்குவார், “ எனை  மாறி  நின்று “ என்றார் . “எனை” என்புழி  ஐகாரம்  “செறலின்  உவத்தலின் “ என்பனவற்றுள்  செறுதற்  பொருள் பற்றி  வந்தது. “செறல் – வெகுளியது  காரியம்”  என்பர்  சேனாவரையர் .

                   வெளிப்பட  நிற்றலால் , அறிந்து  விலக்குதற்குரிய  புறப்பகையினும்  , மறைந்து  நின்று  கெடுக்கும்  அகப்பகை  கொடிது  என்பது  தோன்ற  , யான் “கெடக்கிடந்தனை” என்றார் . யான் கெடுமாறு  என்பாற்  கிடந்தனை என்றது , என்னைப் பற்றுக்கோடாகப்  பற்றி  நின்றே எனக்குக்  கேடு  விளைத்தலால்  , உய்தியில்லாத  நன்றி  மறத்தல் என்னும்  குற்றத்திற்கு  ஆளாயினை  என்று  அடிகள் நெஞ்சை  வெறுத்தவாறு இது.  கிடந்தனையை  என்பது  முன்னிலை வினையால ணையும்  பெயராய் , இரண்டன் உருபு  ஏற்று  நின்றதெனக்  கொள்ளலாம்  .  கிடந்தனையாகிய  உன்னைத்  தேறுகின்றிலம்   என முடிக்க  . ஐகாரம்  சாரியை  எனக் கோடலும்  உண்டு . உட்பகையாக  நின்று  கேடு  விளைக்கும்  உன்னை  நம்புவேம் அல்லேம்  என்பார் . “இனி  உனைத்  தேறுகின்றிலம்”  என்றார் .”உட்பகை அஞ்சித்  தற் காக்க உலைவிடத்து   மட் பகையின்  மாணத்  தெறும்” என்பது பொய்யில்  புலவர்  பொருளுரையாதலின், தற்காப்பின்  நிமித்தம்  தெளிகிலேன்  என்பார்  இங்ஙனம்  கூறினர் . மேலே  நெஞ்சிற்கு  அறிவுறுக்கும்  முகமாக, மற்றை மெய்யன்பரையும்  உளப்படுத்துக்  கூறியதற்கு  ஏற்ப , தெளியாமைக்கும்   அம் மெய்யன்பரை உளப்படுத்து ”தேறுகின்றிலம் “ என  ஈண்டும்  பன்மை  கூறினர் . யான்  நம்பாமை உனக்குப்  பொருள்  இல்லை  ஆயினும்  , மெய்யன்பரும்  நம்பமாட்டார் என்று  நெஞ்சை  இடித்துக் கூறியவாறு  இது .  வஞ்சத்தால் ஓரோவமயம் நல்லது  போல்  நடித்துத்  தேறற்கு  இடனாகலாம்  என்று  ஒரு சிறிதும்  கருதற்கும்  என்பது  தோன்ற  , “சிக்கெனத்  தேறுகின்றிலம்”என்றார். சிக்கென  என்பது  உறுதியாக  என்னும்  பொருட்டு .

       மறை  யாகமங்களால்  துணியப்பட்ட இன்ப  வடிவினனாகிய  அவ்  இறைவன்  என்பார், “சிவனவன்” என்றார். அவன்  என்னும் சுட்டுப்பெயர்  பண்டே  பரம்பொருள் என  அறியப்பட்டவன்  என்பதை  உணர்த்தி  நிற்பதாகும் , “திரள்  தோள்” என்றது, மனித வடிவில்  உருமேனி தரித்துக் கொண்டு  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சி  நல்கிய பொழுது  காணப்பட்ட  திருமேனியின்  உத்தம   இலக்கணத்தைக்  குறிப்பதாகும் . திரண்டதோள்  அளவில்  காணப்பட்டதாயின்  , சிறந்த   ஆடவருள் ஒருவனைப்  புலப்படுத்தும் அவ்வளவிலாம் .  ஈண்டு  உறுப்பு  நலங்களில்  ஏதும்  குறையில்லாத  ஞானாசிரியன்  என்பதை  , “திரள் தோள் மேல்  நீறு  நின்றது “ என்னும்  தொடர்  விளக்க முறுத்துவதாகும்  . நீறு  உபலக்கணத்தால்  உருத்திராக்க மணியையும்  உணர்த்தும் . “உருவுடலிற் கண்டிகை  நீறு”  என்பது  சைவாகமம் . இறைவன்  திருமுக மண்டலத்து இயற்கை ஒளியோடு இயைந்து ,திருநுதல் வெண்ணீற் றொளி விஞ்சி நிற்றலையும், அப் பேரொளியைத்  தம்  கண்ணொளியின் வரம்பிற்கு  அடக்கி  அறியத்  தம் நெஞ்சிற்கு  ஆற்றல்  இல்லாமையையும்  உணர்ந்து , “திரு நுதல் மேல் நீறு நின்றது  கண்டனை “  என்னாது,  “திரள் தோண்மேல்  நீறு  நின்றது  கண்டனை” என்றார். உலகத்த்ப்  பொருள்கள் எல்லாம்  முடிவில்  நீறாகும் ; நீறு  பிறிதொன்றாகாது . ஆதலின்  , அஃது  இறைவன் திருமேனியில்  நிலை பெற்று  நின்றதென்னும்  குறிப்பு  , உலகம்  முற்றும் தன்பால்  ஒடுங்க, இறைவன் ஒருவனே  தனி முதலாகத் திகழ்வன்  என்பதைப்  புலப்படுப்பதாகும் . “ அந்த மதாவது  நீறு” என்று தமிழ்  மறை இயம்புதலும்  தெளிக. “திரள்  தோள் மேல் நீறு  நின்றது கண்டனை” என  இறந்த காலத்திற்  கூறியதனால் , இப்பொழுது காண் கின்றாயில்லை  என்பது  போதரும் . இறைவன்  உருமேனி  தரித்துக் கொண்டு  ஞானாசிரியனாக எழுந்தருளி  வந்து , அடிகட்கு உபதேசித்து , இன்னுஞ்  சின்னாள் இருத்தி என்று  சொல்லி  உருக்கரந்த நிலையில் , அப் பிரிவாற்றாது வருந்திக்  கூறிய  குறிப்புக்கள் இப் பதிகத்தின்  பல  பகுதிகளிலும்  காணப்படுகின்றன . அக் குறிப்பே இத்  திருப்பாட்டிலும்  புலப்பட  வைத்தார் எனக்  கூறலாம் . அப் பெருமான் ஞானாசிரியன்  நிலையில்  வெளிப்பட்ட வமயம்  கண்டது  திரள் தோள் மேல்  நீறு  நின்றது . உருக்கரந்த  இந்நிலையில்  அக் காட்சியை நினைத்தாயினும் உருகுகின்றாயில்லை  என்பார், “ஆயினும்  நெக்கிலை “  என்றார் .

             தமக்குக்  குருவடிவில்  வந்து , அபரஞானமாகிய  சிவஞானபோத  நூல் அறிவையும் , அவ்வழி  ஒழுகுதலாகிய  பரஞானம் என்னும்  அநுபவ வுணர்வையும்  அருளிக்காத்த  இறைவனது  திருவுருவம்  , தம்கட் புலனுக்குத் தோன்றாத  நிலையில் , “தலைவனை  நனிகாணேன்  தீயில்  வீழ்கிலேன்” என்று  துடித்து வருந்திய  உண்மையைப்  பிவரும்  திருப்  பாட்டுக்களில்  பரக்கக்  காணலாம் . அம்முறையே  பரமபதியின் பிரிவை  ஆற்றாது  , “நெக்கிலை” என  உள் நிகழ்ச்சியையும்  , “இக் காயம் கீறு கின்றிலை” எனப்  புற  நிகழ்ச்சியையும்  மேற்கொண்டிலை என நெஞ்சை  முன்னிலைப்படுத்துக்  கூறுவாராயினர் . இக் காயம்  என்னும் சுட்டு , கிடைத்தற்கரிய   பேற்றை  இழந்து வெறுவிதாயிருக்கும்  நிலையைப்  புலப்படுத்துவதாகும் . இந் நிலையில் இவ்வுடல் எதற்கு  வேண்டும்? பயனற்ற  இவ்வுடலைச்  சிதைத்து விடுதலே  நலமாகவும், அங்ஙனம்  செய்தற்கு  ஒருப்பட்டிலை என்பார், “இக் காயம்  கீறு கின்றிலை “ என்றார். இங்ஙனம்  பிரிவு  பற்றி  , அகத்தும்  புறத்தும் இரக்கக்  குறிப்பு  மேற்கொள்ளாதிருக்கும்  நின் இயல்பு உனக்கும்  எனக்கும்  கேடு  செய்வதாகும்  என்பார், “கெடுவது  உன்  பரிசு” என்றார் கெடுவது தொழிற் பெயர் அளவாய்  நின்றது . “இது” என்றது உள் உருகுதல்  இல்லாமையும்,உடலைச்  சிதைத்தற்கு ஒருப்படாமையுமாகிய நெஞ்சத்தின்  கெட்ட  இயல்பைக்  குறிக்கும்  . செவி  வாயிலாகக்  கேட்டற்கும்   இயலாததொரு  கொடிய  தன்மையைக் கண்ணினால்  எங்ஙனம்  கண்டு  ஆற்றுவேன்  என்பார், “கேட்கவும் கில்லேனே “  என்றார்.

            இதன்கண் , ஆன்மாவின்  தூய தன்மைக்குக்  கேடு  விளைக்கும்  மாறுபட்ட  நெஞ்சத்தைக் குறித்து , “எம் மதியிலிமட நெஞ்சே”  என விளித்தும், அதன்  கொடிய  செயலைக்  கருதி , “இனி, உனைத் தேறு கின்றிலம் ; கெடுவதுன்  பரிசு ; இது கேட்கவுங்கில்லேன் “ என வெறுத்துரைத்தும்  அடிகள் இரங்குகின்றமையால் , இங்ஙனம்  கொடிய  நெறியிற்  செல்லும்  நெஞ்சத்தைச்  செந்நெறிப்  படுத்துத்  தூய்மை  பெற வேண்டும்  என்பது  பெறப்படுதலின் , ஆத்தும  சுத்தி என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றியவாறு அறிக.  

                                          **************************************

பாடல் :34 .

கிற்ற  வாமன  மேகெடு  வாயுடை

யானடி  நாயேனை

விற்றெ லாமிக  ஆள்வதற்  குரியவன்

விரைமலர்த்  திருப்பாத

முற்றி  லாஇளந்  தளிர்பிரிந்  திருதுநீ

உண்டன  எல்லாமுன்

அற்ற வாறுநின்  பெருமையும்

அளவறுக்  கில்லேனே .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்   காட்சியளித்து  உருக்கரந்த  இறைவன்  பிரிவில்  உள்ளுடைந்து  வருந்தாத  நெஞ்சின்வழி   நிற்றல்  இயலாதென்ற  அடிகள் , இத் திருப்பாட்டில்  இறைவன்  பிரிவில்  நீ பெற்ற  பேறுதான்  என்னையென ,  அந் நெஞ்சை  நோக்கி  இழித்துக்  கூறுகின்றார்.

பதவுரை :-  மனமே, உடையான்  =  உலகத்துப்  பொருள்கள் எல்லாவற்றையும்  உடைமையாகவும்  அடிமையாகவும் உடையானும்  ,

அடி நாயேனை  விற்று  எல்லாம் மிக  ஆழ்வதற்கு  உரியவன்  =  அடிமையாகிய  நாய்  போன்ற  என்னை  விற்று  எனக்கு  எல்லா  நலங்களும் மிகுமாறு  ஆண்டு  கோடற்கு  உரியவனும்  ஆகிய  சிவபெருமானுடைய  ,

விரை  மலர்த்திருப்பாதம்  முற்று இலா  இளம்  தளிர் பிரிந்திருந்து = 

மணம்  பொருந்திய தாமரை  மலர்  போன்ற  திருவடிகளாகிய  முற்றுதல் இல்லாத இளம்  தளிரில்  நின்றும்  பிரிந்திருந்து,

முன் நீ  உண்டன  எல்லாம்  அற்றவாறும்   =  முன்னர்  நீ  நுகர்ந்தன  எல்லாம்  அற்றபடியையும் ,

நின் அறிவும்  நின்  பெருமையும்  =  அதனை  அறியும்  நின் அறிவையும்  அதனாலாகிய  நின்பெருமையையும்  ,

அளவு  அறுக்கில்லேன்  =  அளவிட்டு  வரையறுக்கும்  ஆற்றலுடையேன்  அல்லன்  ஆதலால் ,

கிற்றவா  =  நீ  செய்தவாறு   என்னே ,

கெடுவாய்  =  கெடுவாயாக  என்பது.

விளக்கவுரை :-    உலகத்து  ஒழுக்கம்  தவறி  நடப்பான்  ஒருவனை  உரிமை  பற்றி   அறிவுடையார்  இடித்துரைக்கப்  புகுங்கால் , முதலில்  அத்  தவறுகளை இன்னவென்று  கூறாமல் , தம்  உள்ளத்தே  கொண்டு , சுருங்கிய  வாய்ப்பாட்டில்  குறிப்பாகக்  கழறிக்  கூறல்  இயல்பாதலின்  , அம்முறையில்  நெஞ்சத்தின்  தவற்றை அடிகள் தம்  அறிவகத்தே கொண்டு  செய்தவாறு  என்னே என்று  குறிப்பாகப்  பொருள்  தோன்ற , “கிற்றவா  மனமே” என்றார். “மனமே”  என  முதலில்  விளித்துச்  செய்தவாறு  என்னே  என்று  கூறாமல்  மாற்றிக்  கூறியது , விளியளவில்  இழிதக்க  நெஞ்சம்  தன்  பெருமையை  நினைந்து  இறுமாந்து  விடாமைப்  பொருட்டாம் . குறிப்பாக  , “கிற்றவா” என்ற  அளவிலும்  நின்றுவிடுதல்  ,அதன்  இயல்பிற்குத்  தக்கதன்று  எனக்கருதி ,இந் நிலை கேடு விளைப்பதாகும்  என்னும்  பொருள்  தோன்ற , “மனமே  கெடுவாய்” என்று  கழறிக்  கூறுவாராயினர் .

         உலகத்துள்ள  அறிவில்  பொருள்கள்  எல்லாம்  உடைமையாக  , இறைவன்  உடையான்  எனவும், அறிவுடைப் பொருள்கள் எல்லாம் அடிமையாக , ஆண்டவன்  எனவும்  கூறப்படுவன் . இவ் இரு நிலைகளும் முறையே , “ஊடையான்”  என்பதனாலும் , “ஆள்வதற்குரியவன் “ என்பதனாலும் பெறப்பட  வைத்தார் . ஒப்புடையன்  அல்லனும் , ஓர் உவமன் இல்லியுமாகிய  இறைவன் பெருமையை நோக்க , தன் சிறுமையே  முன்னிற்பது  கருதி , அடிமையாகிய  இழிவுடையேன்  என்பது  தோன்ற  , “அடி  நாயேனை “ என்றார் . ஒரு பொருளை விலை கொடுத்துக்கொண்டு  ஆளுதல்   உலகத்தில்  கண்டது . விற்று  ஆளுதல்  நிகழாத  தொன்று  . ஈண்டு  இறைவன் ஆன்மாவை  வினைக்கு  ஈடாகப்  பிறப்பித்தலே  விற்றலாகும் . அங்ஙனம் பிறப்பித்தற்கு  ஏது , உயிர் வினைய்யொழிவு  பெற்றுத் தன்  திருவடி நிழல் அடைய வேண்டும் என்னும்  அருட்பெருக்கே யாதலின் , அதுவும்  ஆட்கொண்டபடியாம் என்பது  தோன்ற , “விற்று  ஆள்வதற்குரியவன் “ என்றார்.  உண்மையாக  ஆட்கொள்ளுதல்  கட்டறுத்தபின்னர் , “தந்ததுன்றன்னைக்  கொண்ட தென்றன்னை  “ என்றபடி  இறைவன்  தன்னைத்  தந்து    உயிரைக்  கொள்ளுதலாகும். இந் நிலையில்  ஆளான  உயிர்  எய்தும்  பேறு  அந்தமொன்றில்லா  ஆனந்தமாகும்  .  இது, கொண்டு  ஆட்கொள்ளுதல் . விற்று  ஆட்கொள்ளுதலால் விளையும்  பயன்  கட்டறுத்தலாகும்  . இது  கருதியே , விற்று  ஆண்டனன்  என்னாது, “ ஆள்வதற்கு  உரியவன்  “ என்றார் . “எல்லாம்  மிக” என்றது , விற்று  ஆட்கொள்ளும்  நிலையிலும், அன்பு  தவம்  முதலிய  உயரிய  நலங்கள்  எல்லாம்  அடிமையாகிய  உயிர்க்கு  மிகும்படி  என்னும்  பொருட்டு  கொண்டு  ஆட்கொள்ளுதலின்  விளையும்  பயன்  முற் கூறியபடி  அந்தமொன்றில்லா  ஆனந்தமாகும் . ஆனால், விற்று  ஆட்படுத்தும்  நிலையிலும்  உயிர்க்கு  ஊதியம்  உண்டோவெனின் , அதற்கு விடையாக  “எல்லாம்  மிக”  என்றார்.  விற்று  ஆட்கொள்ளுதலால் உயிர்க்குச்  சாதனப்பேறும்  , கொண்டு  அட்கொள் ளுதலால்   சாத்தியப்பேறும்  உண்டாம்  என்பது  தெளிவாம் . ஆண்டான்  அடிமைத்  திறத்தில் , உலகத்தொண்டு  , கடவுள் தொண்டு  என  இரண்டு வகை  நினைக்கத்தக்கன . உலகத்  தொண்டால் விளையும்  பயன்  ஆண்டானுக்கே  சிறந்தது.; கடவுள்  தொண்டினால்  விளையும்  பயன்  அடிமைக்கே  சிறந்ததாகும் .  இது  குறித்தே அடிகள் பிறிதோரிடத்து,  ”அந்தமொன்றில்லா  ஆனந்தம்  பெற்றேன்  யாது  நீ  பெற்றதொன் றென்பால் “ என்று  அருளிச்செய்தனர்.

          இனி,  ஒரு  சில பரம்பரையினர் , தம்  நிலம்  முதலிய  பொருள்களின்  வருவாயை அநுபவிகலாமே  யொழிய , அம்மூலப் பொருளை  விற்றற்கு  உரிமையிலராதலை  உலகியலிற்  காண்கிறோம். அங்ஙனமே , உயிராகிய  உடைமையை இறைவன்  ஆட்சிபுரியலாமே யன்றி  , விற்றற்கு  உரிமையிலன் ஆவனோ என்பார்க்கு  விடையாக , விற்றல்  அநுபவித்தல்  முதலிய  எல்லாவற்றிற்கும்  இறைவன் உரிமை யுடையான்  என்பது  தோன்ற   “விற்றெலாமிக  ஆள்வதற்குரியவன் “ என்றார்  என்று  கேட்டலும்  ஒன்று .  “இருந்தென்னை  ஆண்டுகொள், விற்றுக்கொள்  ஒன்றிவை  என்னின்  அல்லால்” என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறியதும்   இக் கருத்துப்  பற்றியே . இஃது உலகிய லோடு  பொருந்தக்  கண்டது.

           அடிகள்  தமக்குச்  சிறந்த பற்றுக்கோடாகவுள்ள  இறைவன்  திரு வடிகளில்  ஈடுபட்டுப்  பாராட்டுவார் , “விரை மலர்த்  திருப்பாதமுற்றிலா  இளந்தளிர் “ என்றார்.  ஈண்டு, மலர்ப்பாதம்  என்றதில்  ,உவமை  அணியும் , பாத  இளந்தளிர்  என்றதில்  உருவக  அணியும்  அமைந்திருத் தலான் , “விரை மலர்த்  திருப்பாத  முற்றில்லா  இளந்தளிர் “ என்று  கூறியது , உவம  உருவக  அணியாகும் .  இறைவன்  திருவடிக் காட்சி   தம்  உண்முகமாகவுள்ள  ஐம்புல நுகர்ச்சிக்கும்  இனிதாதலை  விளக்குவார்  இங்ஙனம்  கூறினர் . மலரிலுள்ள  தேன்  சுவைக்கும் , மலரும்  தளிரும்  ஒளி , ஊறு என்னும்  இவற்றிற்கும்  , தேன் நுகரும்  வண்டொலி ஓசைக்கும்  , விரை  நாற்றத்திற்கும்  உரியவாதல்  அறிக. தளிர்  என்னும் , அளவிலே  முற்றுதல் இன்மை  பெறப்படும் . ஆயினும் , மரம் , செடி , கொடிகளில் உள்ள  தளிர்கள் , நாள்  செல்லச்  செல்ல  முற்றி  இலையாகவும்  சருகாகவும்  கழிதல்  கூடும் . இறைவன்  திருவடியாகிய  தளிர்கள் என்றும்  இளமையும்  அழகும்  உடையனவாய்  நிலைபெற்றிருத்தலின், “ திருப்பாத  முற்றிலா  இளந்தளிர்  “ என்றார் . பிரிந்திருத்தல்  – இறைவன்  திருவடிச் சார்பை  விட்டு  உலகியற் பொருள் களைப்பற்றி  நிற்றல் . அங்ஙனம்  நிற்பதால் விளையும்  பயன்  சிறியதும்  அழிதன் மாலையதும்  ஆம்  என்பதைப்  பின்வரும்  தொடர்  மொழிகளால் விளக்குகின்றார் .  திருவடிச்  சார்பை  விட்டு  நெஞ்சம் முன்  அநுபவித்தவை  , புறப்பொருள்களைப்  பற்றிப்  பொறி வாயிலாக  நுகரப்படும்  ஐம்புல இன்பங்களேயாம் . அவ்வின்பங்கள் எல்லாம்  துன்பத்தோடு  கலந்து  அநுபவப்படுதலையும் , மறுகணத்தில்  நிலை யுதலின்றி   அழிவு  எய்துதலையும்  இயல்பாக உடையன . இவ்வுண்மை  குறித்தே  , நெஞ்சை  நோக்கி , “ முன்  நீ  உண்டனவெல்லாம் அற்றவாறும்  “  என்றார்.  அறுதல்  –  செரித்தல் ; இல்லாமற்  போதல் . திருவடிச்  சார்பு  ஒழிந்த ஞான்று , நெஞ்சம்  நுகர்ந்தன  எல்லாம் பொய்யாய்க்  கழிந்த  முறைமையும்  ,அந் நுகர்ச்சிகளையே பொருளெனக்  கண்ட சிற்றறிவும், அச் சிற்றின்பத்தையும்  சிற்றறிவையும் உடைமையால்  நெஞ்சம்  எய்திய  பெருமையும்  , தம்மால்  அளவிட்டுரைக்க   இயலாதன  எனப்  புகழ்பவர்போற்   பழித்துரைப்பர் , “அற்றவாறும்  நின்  அறிவும்  நின்  பெருமையும்  அளவறுக்கில்லேனே “ என்றார்.  “நீ உண்டன” , “நின் அறிவு” , “நின் பெருமை “ என அடுத்தடுத்து  மூன்றிடங்களிலும்   முன்னிலைப்  பெயரைக்  கூறியது , நெஞ்சத்தின்  சிறுமை கருதிக்  குறிப்பாக  இழித்தற்பொருள்  தோன்றற்கு  என்க . அறிவு , பெருமை , ஆண்மை , என்னும்  இம் மூன்று  குணங்களும்  சிறந்த  அரசற்கு உரியன . உலகத்து  மற்றோர்  அரசனுக்கும்  கீழ்ப்படாமல்  தானே  தலைவனாக  நின்று  ஆட்சிபுரியும்  தனியரசு  போல  நெஞ்சம்  தன்னைக்  கருதிக் கொண்டு  , ஆண்டவன்  திருவடிமலர்க்கும்  கீழ்ப்படாமல் ஆட்சிபுரியத் தொடங்கியது  கண்டு  இவ்வாறு  கூறினர் . இம் மூன்று  குணங்கள்  உள்ளும் , அறிவும் பெருமையும்  வெளிப்படக்  கூறப்பட்டன .  ஆண்மை  அநுபவத்திற்குரியதாகலின்  , “ஊண்டனவெல்லாம் “  என்பதனால்  அதுபெறப்படும்  நெஞ்சம்  இம் மூன்று  குணங்களையும்  போலியாகக்  கொண்டு  , போலியாட்சியில்  ,தலைப்பட்டது  கண்டு , தாமும்போலியாகப்  புகழ்வாராய்  , “அளவறுக் கில்லேனே” என்று  இழிவு  தோன்றக்  கூறினர். அறுக்ககில்லேன்  என்றது  அறுக்கில்லேன்  என்றாயிற்று . இங்ஙனமாய  விபரீதச் செயல்களை  உட்கொண்டே தொடக்கத்திலே   நீ  செய்தவாறு  என்னே  என்று  இரங்குவாராயினர் . கிற்றவாறு  என்பதில்  ஈற்றுகரம்  தொக்கு  நின்றது .  “நுகருமா  நுகரே” என்புழிப்போல . கிற்றல்  – செய்தல் . என்னே என்பது சொல் யெச்சம்,  மாறுபட்ட  இந் நெறியில்  ஒழுகத்  தலைப்படுதல் கேட்டிற்குக்  காரணம்  என்பார், “மனமே  கெடுவாய்”  என்றார்.

         இதன்கண்,  மெய்யன்புடையாரை  ஆட்கொள்ளும்  இறைவன் , அவர்  தம் உடல் , பொருள் , ஆவி  எல்லாவற்றையும்  ஏற்றுக்கொண்டு  , தன் திருவடி  மலரை  ஒருகணப் பொழுதேனும்  பிரியாதிருக்கச் செய்தலே  அவர்க்கு  உறுதி  பயப்பதாகும்  என்று  கூறுமுகமாக  , ஆன்மாவின்  தூய்மைக்குரிய  சாதனம்  கூறப்பட்டமையால்  , “ஆத்தும சுத்தி “ என்னும்  பதிகம் நுதலிய பொருள் புலப்பட  வைத்தது அறிக .

                                              ****************************

பாடல்  : 35.

அளவ  றுப்பதற்  கரியவன்

இமையவர்க்  கடியவர்க்  கெளியான்நம்

களவ றுத்துநின்  றாண்டமை

கருதினுட்  கசிந்துணர்ந்  திருந்தேயும்

உளக   றுத்துனை  நினைந்துளம்

பெருங்களன்  செய்ததும்  இலைநெஞ்சே

பளக  றுத்துடை  யான்   கழல்

பணிந்திலை  பரகதி  புகுவானே .

கருத்துரை :-   இறைவன் திருவடிச் சார்பை   விட்டுப்  போலியாட்சியில்  தலைப்படும்  நெஞ்சை  நோக்கி  முன்னைத்  திருப்பாட்டில்  இழித்துக் கூறிய  அடிகள் , அவ் இழிவையும் பொருட்படுத்தாத நிலையில்  , அந்தோ உண்மையாக  ஆட்கொண்ட  இறைவன்  இயல்பை  உணர்ந்தும்  , அவ்  இறை  பணியில்  தலைப்பட்டு  நலம்  பெற  முயலாமை  என்னே! என  மீண்டும்  இரங்கிக்  கூறுகின்றார்.

பதவுரை :-  நெஞ்சே  =  நெஞ்சே ,

அளவறுப்பதற்கு   இமையவர்க்கு  அரியவன்  =  தன்  இயல்பை  வரையறுத்து    உணர்தற்கு  அமரர்க்கு  அரியவனும் ,

அடியவர்க்கு  எளியான்  =  மெய்யன்பர்க்கு  எளியவனும்  ஆகிய  இறைவன் ,

நம்  களவு  அறுத்து ஆண்டு  நின்றமை  = நம்  வஞ்சத்தை  யொழித்து ஆட்கொண்டு  நிலை  பெற்ற  தன்மையை ,

கருத்தின்  உள் உணர்ந்து  கசிந்து இருந்தேயும்  =   உள்ளத்தில்  கொண்டு  உணர்ந்து  ஈடுபட்டு  உருகியிருந்தும் ,

பரகதி புகுவான்  =  வீட்டு  நிலையை  அடைதற் பொருட்டு  ,

உளகறுத்து  உனை  நினைந்து  =  பொறி  நுகர்ச்சிகளாக  உள்ளனவற்றை  வெறுத்து  நின்  இயல்பை  நினைந்து ,

உளம்  பெருங்களன்  செய்ததும்  இலை  =  உள்ளத்தை  இறைவன்  தங்குதற்குரிய  பெரிய  இடமாகச்   செய்ததும்  இல்லை ,

பளகு  அறுத்து  உடையான்  கழல்  பணிந்திலை  =  தடையாகிய  குற்றத்தை  ஒழித்து  ஆண்டவன்  திருவடியை  வணங்கினாயும்  இல்லை; நின் இயல்பு  இருந்தவாறு  என்னே  என்பது .

விளக்கவுரை  :-  அளவு  –  தன்மை . அறுத்தல்  –  வரையறுத்து  உணர்தல்  . அளவறுப்பதற்கு   என்பதை  ஈரிடத்துங்  கூட்டி , இமையவர்க்கு  அளவறுப்பதற்கு  அரியவன்  எனவும்  , அடியார்க்கு  அளவறுப்பதற்கு  எளியவன்  எனவும்   இயைத்துப்  பொருள்  கொள்ளல்  வேண்டும் . இறைவன்  இயல்பைத்  தேவர்  அறியாமைக்குக்  காரணம்  , புண்ணியப்  பயனாகிய  இன்பம்  ஒன்றிலே  ஈடுபட்டு  , அவ் விறைவனைத்  தம்மவருள்  ஒரு  தலைவன் என்ற  அளவில்  நினைந்து  இறுமாந்திருந்தலாகும்.  மெய்யன்பர்  தம்  எளிமையை நினைந்து , இறை பணியில்  ஈடுபட்டு  , அவ் இறைவன்  திருவருளையே பற்றுக்கோடாகக்  கொண்டு  ஒழுகுதலின்  அவர்க்கு  இறைவன்  தன்மை அறிதற்கு  எளிதாயிற்று  என்பது . “தன்மை பிறரா  லறியாத தலைவா” என்ற  இடத்தும்  , பிறர் என்றது  மெய்யன்பர்  அல்லாதார்  என்னும்  பொறுட்டு  . “வானோர்க்கரிய  மருந்தே “ எனவும், “ஏனோர்க்கெளிய   இறைவா”  எனவும்  போந்த  திருவாக்குக்களையும்  நோக்குக .  இனி , “அளவு அறுப்பதற்கு  அரியவன்” என்பதற்கு  , அளவைகளால்  வரையறுத்து  உணர்தற்கு  அரியவன்  என்றும்  , அதனால் , மெய்யுணர்விற்கு  எளியவன்  என்றும்  கொண்டு , மெய்யுணர்வில்  தலைப்படாதார்  தேவராயினும், அவர்க்கு  அரியனாவான்  எனவும் , மெய்யன்புள்ள  அடியாராயின்,  அளவை களில்  தலைப்பட்டிலர்  எனினும்  எளியவனாவான்  எனக்  கோடலும்  ஒன்று.  அளவு  –  காட்சி  முதலிய  அளவைகளை  விளக்கும்  நூல் காட்சி  , கருதல் , உரையெனவும்  வேறு  சில  வகைகளாகவும்  ஆராயப்படுவது  , அவ் வளவைகளைக் கொண்டு  இறைவன்  இயல்பை  ஒருவாறு  துணியலாமே யன்றி , முற்றும்  உணர்தல்  அரிது. மெய்யுணர்வாகிய  அநுபவ  ஞானமே   இறைவனை  உணர்தற்கு  உரிய  நன்நெறியாகும்  . “ஏதுக்களாலும்  எடுத்த மொழியாலும்  வைத்துச், சோதிக்க வேண்டா  சுடர்  விட்டுளன்  எங்கள் சோதி”  என்பது பெரியார்  திருவாக்கு  . இப்  பாசுரப் பகுதியில், ஏதுக்கள்  என்பது  அனுமான  அளவையையும் , எடுத்த  மொழி  என்பது  உரை அளவையையும்  உணர்த்துவன. இவற்றால்  ஏனைய  அளவைகளையும்  கூறிய படியாம் . இவ்வளவைகளில்  வைத்து  ஆராய்வது  பயனில்  செயல்  என்பதை  , “சோதிக்க  வேண்டா”  என்பதனாலும்  , மெய்யுணர்விற்குக்   காட்சிப்படுவன்  என்பதை , “சுடர்  விட்டுளன்  எங்கள் சோதி “ என்பதனாலும்  தெளியலாம் .

                 நல்வினைப் பயனையே  மிகுதியாக  அனுபவிக்கும்  தேவராயினும், அநுபவ  உணர்வில்  தலைபட்டிலரேல், அவர்  காட்சிக்கு  அரிய பொருளாக வுள்ள  இறைவன் , இருவினைப் பயனையும்  கலந்து   அநுபவிக்கும்  மக்கட்  பிறப்பினராயினும்  ,மெய்யன்பராயின்  , அவர் அநுபவத்திற்கு  எளியனவான் என்பது  தோன்ற  , “அடியவர்க் கெளியான் “  என்றார். தேவர்  அறிதற்கே அரியனாகிய  இறைவன் , அன்பர் அநுபவத்திற்கு  எளியனாவான்  என்று  குறிப்பாற்  புலப்படக்  கூறியது  இன்புறத்தக்கது .

            இங்ஙனம் அருமைக்கும்  எளிமைக்கும்  இறைவன்  இடனாதலை  உணர்ந்தே  , “அருமையில் எளிய  அழகே  போற்றி” என்று  அடிகள்  பிறிதோரிடத்தும்   அருளிச்  செய்வாராயினர் . களவு – வஞ்சம் முதலிய கரவொழுக்கம் ; வேட நெறி நில்லார்  வேடம்  பூணுதலும்  அது . “தவமறைந்தொழுகும்  தன்மையிலாளர் “ என்பர்  சிலப்பதிகார ஆசிரியர் . தவ வேடத்தைக்  கண்டு , அறியாத  உலகம்  மயங்கும் . அவ் வேட நெறிக்குப் பொருந்தாத   தீயொழுக்கத்தை  , உயிர்க்குயிராகிய  இறைவன்  அறிவன்  ஆதலின், அவ் வஞ்ச  ஒழுக்கத்தைக்  கொண்டு  இறைவனை  ஏமாற்ற  இயலாது .  அங்ஙனமாகவும் , நம்  வஞ்ச  ஒழுக்கத்தை  அறிந்தும்  நம்மை  ஆட்கொண்டது  , அப் பெருமான்  நம்பால்  கொண்டுள்ள  அருட் பெருக்கமாகும் ; வேறு  காரணம்  இன்று  என்று  நெஞ்சிற்கு  உணர்த்துவார், “நம் களவறுத்து நின்று  ஆண்டமை “ என்றார் . ஆட்கொண்டு  கருதிய பயன்  நிறைவேறியதும்  கைவிடும்  உலத்துத்  தலைவர்  போலாது , என்றும்  நீங்காது நம் உள்ளே உறுதுணையாக  நிலை பெற்று  நின்றான்  என்பது  தோன்ற  , “நின்று  ஆண்டமை “ என்று அருளிச் செய்தனர் .

              இறைவன்  நம்பால்  கொண்டுள்ள  அருட்பெருக்கால்  கட்டறுத்து , நம்மை  ஆட்கொண்டு  நின்றமையை நாம் உணராதிருந்தேம்  அல்லேம் . நன்றாக  உள்ளத்தால் உணர்ந்திருந்தும்  , அவ்வுணர்ச்சி  வாயிலாக  ஈடுபட்டிருந்தும்  என்பார், “ கருத்தினுட்  கசிந்துணர்ந்திருந்தேயும்  “ என்றார். இறைவன்  ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து  தமக்கு  மறை மொழி  கூறித்  தம்மை  ஆட்கொண்டதை  உலகம்  நன்கு  அறியும் . அங்ஙனம்  புறக் காட்சியால் உலகம்  அறிந்த  அளவில்  போதியதென  அமைதி அடையாமல்  , தம் அகக் காட்சியாலும்  அறிந்து  அநுபவித்த  உண்மையை  அடிகள் இங்ஙனம்  புலப்படுத்து  அருளினார் . முன்னிலைப்  படுத்த  நெஞ்சை  உளப்படுத்து .  “நம்  கருத்தினுள் “ என்று  நெஞ்சிற்கும்  நெஞ்சு  உளதாகக்  கூறினர். இங்ஙனம்  கூறுதல்  செய்யுள் மரபு . இதனை , “உறுப்புடையது போல், உணர்வுடையது போல்  நெஞ்சொடு  புணர்த்தும் “ என்னும்  விதியாலும்  , “வருந்தினை  வாழிய  நெஞ்சே ……. ஒழியச்  சூழ்ந்தனையாயின்  தவிராது , செல் இனிச்  சிறக்க நின் உள்ளம்”  என்னும்  அகப்பாட்டானும்  அறிக.  இவ்வாறு  பின்வரும்  இடங்களுக்கெல்லாம்  இலக்கணம்  எடுத்துக் காட்டுகளை  இங்ஙனமே கொள்க. உலத்தில்  ஒருவன்  செய்த நன்றியை  அறியாமலிருத்தலே  நன்று  அன்றாம் . “நன்றி  மறப்பது  நன்றன்று “ என்பது பொருளுரை .அறியாமல்  இருத்தலே  நன்றன்றாயின்  , அறிந்தும்  ஈடுபட்டும்  அந்  நன்றியைப்  பொருட்படுத்தாமல்  இருத்தல்  எத்துணைக்  குற்றமாம்  என்பது நினைக்கத்தக்கது . அம்முறையில்  அடிகள் ஆண்டவன்  அருட்  செயலைத்  தம்  நெஞ்சம்  உணர்ந்தும்  , ஈடுபட்டிருந்தும்  , அது  குறித்து  மேற்கொள்ளவேண்டியவைகளைச்  செய்யாமல்  இருத்தல் குறித்து இரங்கிச்  செய்ய  வேண்டிய  கடமைகள் இன்னவென   விளக்கிக்  கூறமுற்படு வாரா யினர் . கடமைகளைக்   கூறுதற்குப்  பயன்  இன்றியமையாததாதலின், “பரகதி புகுவான்” என்றார்.

            “ உள” என்பது உண்மையடியாகப்  பிறந்த  பன்மைப்பெயர் , அது பொறிவாயிலாக  நுகரப்படும்  சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம்  என்னும்  புலன்களை  உணர்த்தும் . கட்டு , வீடு  என்னும்  இரண்டற்கும் மனமே காரணம்  என்பர் . இறைவன்  உட்கோள் , “வாழ்த்த  வாயும்  நினைக்க  மட நெஞ்சும்  “ என்றபடி  , தன்னை  நினைந்து  , கட்டறுத்து , நலம்  பெறுதற்கே  நெஞ்சம்  வேண்டும்  என்பது. ஆகவே, இறைவன்  திருவுள்ளப்பாங்கின்படி  , பொறிவாயிலாக  நுகரப்படும்  பொருள்களை  வேண்டாமல்  என்பார் , “ உள  கறுத்து” என்றார்.  கறுத்தல்  –  வெறுத்தல்  . உனை  நினைந்து  என்பது.  நெஞ்சை  நோக்கி  , இறைவனை  நினைந்து  பணி  செய்தலாகிய   உன்  இயல்பைக்  கருதி   என்றபடியாம் . நின் இயல்பை  நினைந்த  அளவில் , நின் உள்ளத்தை  இறைவன்  எழுந்தருளுதற்கு  உரிய  பெரிய  இடமாக  அமைத்தலே  செய்யத்தக்கதென்பது  துணிவாகும்  என்றும் , நெஞ்சிற்கு   அறிவுறுத்துவாராய்  , “ உளம்  பெருங்களன்   செய்ததும்  இலை  நெஞ்சே “ என்றார். ஆண்டவன்  தங்குதற்கு  அன்பர்  நெஞ்சம்  இடனாதலை  , “நெஞ்சம்  உமக்கே  இடனாக  வைத்தேன் “ என்னும்  தமிழ்  மறையானும்  உணர்க.  “உனை  நினைந்துளம்  பெருங்களன்  செய்ததுமிலை “ என்பதற்கு  இவ்வாறு  பொருள்  கொள்ளாது , “உனை  நினைந்துளம்  “ என்பதை  முற்றாகக்  கொண்டும் , “பெருங்களன்” என்பதற்குப்  பெரிய  வஞ்சம்  என்றும்   பெரிய  நட்பு  என்றும்  பலவாறு  கூறுவாருமுளர். அவ்வுரையெல்லாம்   பொருட்  பொருத்தம்  இன்மையால்  பொருந்தாமை  உணர்க . பளகு  – குற்றம்  ; ஆண்டவன்  திருவடியை  அடைதற்குத்  தடை  , அத்  தடையைச்  சிவபாவனையால்  ஒழித்து, அப் பெருமான்  திருவடியை வணங்கினாயும்   இல்லை   என்பார் , “ பளகறுத்  துடையான்  கழல்  பணிந்திலை” என்றார் . உடையான்  என்றது , நெஞ்சத்தை உடைமையாக  உடையான் என்னும்  பொருளதாம் . “உளம் பெருங்களன்  செய்ததுமிலை” என்றதனால் , அகவழிபாடு  இன்மையும்  , “உடையான்  கழல்  பணிந்திலை “ என்றதனால்  புறவழிபாடு  இன்மையும்  கூறியபடியாம் . இறுதியில்  நின் இயல்பு  இருந்தவாறு  என்னே  என்பது  குறிப்பெச்சம் .  

            இதன்கண் , பொறிவாயிலாக  நுகரப்படும்  பலன்களை  ஒழித்து , நெஞ்சத்தைத்  தூய்மைப்படுத்து  , இறைவன்  தங்குதற்குரிய  நல் இடனாக  அமைத்தல்  வேண்டும்  என்னும்  அகவழிபாடும்  , கழல்  பணிதல்  ஆகிய  புறவழிபாடும்  , உயிர்  தூய  நிலையடைதற்கு  இன்றியமையாதன  வென்று  கூறப்பட்டிருத்தலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக .

                                **********************************************

பாடல் :36 .

புகுவ  தாவதும்  போதர

வில்லதும் பொன்னகர்  புகப்போதற்

குகுவ  தாவதும்  எந்தையெம்

பிரானென்னை  யாண்டவன்  கழற்கன்பு

நெகு வதாவது  நித்தலும்

அமுதொடு  தேனொடு  பால்கட்டி

மிகுவ  தாவதும்  இன்றெனின்

மற்றிதற்  கென்செய்கேன் வினையேனே.

கருத்துரை :-   இதுகாறும்  தம் நெஞ்சின்  மாறுபட்ட  நிலையை நோக்கி  இரங்கிக்  கூறிய  அடிகள் , இனி, வீட்டு  நிலையை அடைதற்குத்   தடையாக  வுள்ள  கட்டு  அறுதி பெறுமாறும்  , அன்பு  நெறிச் சென்று  பேரின்ப  நிலையில்   ஈடுபட்டு  அவ் இன்ப  நுகர்ச்சியில்  தலைப்படுமாறும்  கிடைக்கப் பெறாமை குறித்து , அதற்குத்  தம்  பழவினை ஏதுவாதலை  அறிந்து இத் திருப்பாட்டில்  வருந்திக்  கூறுகின்றார்  

பதவுரை :-   புகுவது ஆவதும்  =  அடைதற்கு  உரியதும்  ,

போதரவு இல்லதும்  =  அடைந்தால்  மீண்டு  வருதற்குரிய நெறியில்லாததும்  ஆகிய ,

பொன்னகர்  புகப் போதற்கு   =  சிவ நகருள் புகுதற்பொருட்டுச் செல்லுதற்கு  ,

உகுவது  ஆவதும்  =  தடையாக வுள்ள  அகப்புறப்பற்றுக்கள் நீங்கி ஒழி வெய்துதலும் ,

எந்தைஎம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவது ஆவதும் =

என்  தந்தையும்  எங்கள் தலைவனும்  என்னை  ஆட்கொண்டருளிய  பெருமானும்  ஆகிய  இறைவனுடைய  திருவடிகளுக்கு  அன்பு  செய்து  உருகுதலும் ,

நித்தலும் அமுதொடு தேனொடு  பால்கட்டி மிகுவது  ஆவதும்  =

இடையறாது அமிழ்தத்தோடும் தேணொடும் கலந்து பாலும்  கருப்புக்கட்டியும் ஆகிய  இவற்றின் சுவையினும் மிக்கதாகிய  இனிய சுவை உண்டாதலும் ,

இன்று  எனின்  =  இல்லையாயின் ,

இதற்கு  வினையேன் என் செய்வேன்  =  இந் நிலைக்குத்  தீவினையுடையேன்  யாது  செய்ய  வல்லேன்  என்பது.

விளக்கவுரை :-   ஒரு  வீட்டின்  உட்புகுதற்கு அமைந்த வாயில் வழியே, திரும்பி  வெளிப்படுதற்கும்  வாயிலாக அமைந்திருத்தலைக் கண்கூடாகக்  காண்கின்றோம் . அல்லது உட்புகுதற்கு ஒருவாயிலும்  ,வெளிப்படுதற்கு ஒரு  வாயிலும்  ஆக  அமைத்தலும்  உண்டு . இஃது  இல்லங்களுக்கேயன்றி  நகரங்களுக்கும்  பொருந்துவதாகும் , முத்தி  நிலையை  வீடாகவும் , நகரமாகவும்  , உலகமாகவும்  கூறுதல் உண்டு. எல்லாப் பற்றுக்களையும்  விட்ட  நிலையே வீடாகும் .  நகரமாகவும் , உலகமாகவும்  கூறுதல்  உபசார  வழக்கு . “சிவ நகர் புகப்  போகன்”, “சிவமாநகர்  குறுகப்  போனார்  “ ,   “வாராஉலகருள  வல்லான் “ என்று அடிகளும்  மற்றைப்  பெரியோரும்  கூறியிருத்தல்  அறிக . அம் முறையில் ஈண்டு  வீட்டு  நிலையைப் பொன்னகர்  என்றனர் . பொன்னகர்  என்பது பொன் போலப் போற்றத்தக்க  முத்தி நகரம் என்று  பொருள்படும் . உலகத்தில் பொன்னில்  பற்றுடையார் , அப் பற்று அற்ற  நிலையில்  அதனைப் போல்  விரும்பத்தக்கது வீட்டு  நிலை  ஆதலின் , பொன்னகர் என்றார் . உலகத்துள்ள  அழகிய நகரங்களில்  நின்றும்  வீட்டு நிலையாகிய பொன்னகரின்  இலக்கணம்  வேறுபட்டது என்பதைப்  புலப்படுத்தற்கே . “புகுவதாவதும்  போதரவில்லதும்” என்றார். உட்புகுதற்கு வழி  அமைந்தது  போலத் திரும்பி  வருதற்கு வழியில்லாதது என்பது பொருள். “மீண்டு வாரா வழியருள்  புரிபவன்”  என்பது அடிகள் திருவாக்கு .  போதரவு  –  திரும்புதல் ; ஆகு  பெயரால் வழியை  உணர்த்தும் .

         புகப்போதல்  –  உட்புகச் செல்லல் . வீட்டு  நிலையை அடைதற்குத் தடையாக  உள்ள  யான்  எனது  என்னும்  அகப் புறப்பற்றுக்கள்  ஒழிய வேண்டும்  என்பார்,  “உகுவதாவதும்” என்றார். உகுதல் – தேய்ந்து ஒழிதல் , சிறந்த  ஓரிடத்தை அடைதற்குச் செந் நெறி  காண்டலும் ,அச்செந்நெறிச்  சேறற்குத்  தடையாகவுள்ள பொருள்களைக்  களைந்து ஒழித்தலும்  வேண்டும் . ஈண்டு , வீட்டு நிலையை அடைதற்கு உரிய செந்நெறியாக அடிகள் கண்டது அன்பு நெறியே   ஆகும் . அந் நெறிச் சேறற்குத்  தடையாக  உள்ள அகப்புறப் பற்றுக்களைத்  திருவைந்தெழுத்து  ஓதுதல்  முதலிய   சாதனங்களால் ஒழித்தல் வேண்டும் . அத் தடை ஒழிந்த பின்னர்ச்  செந் நெறியாகிய  அன்பு  நெறியைக்  காண்டல்  வேண்டும் . அவ்  அன்பு  , உலகத்து மனை மக்கள் முதலிய  பற்று விளைக்கும்  பொருள்களை முன்னிட்டு  உண்டானதாக  இருப்பின், அஃது அச் செலவிற்குத் தடையாகு மாதலின், அவ்வாறு  இல்லாமல்  ஆண்டவன்  திருவடியை முன்னிட்டுத்  தோன்றியதாக  இருத்தல் வேண்டும்   என்பார்,  “எந்தை எம்பிரான் என்னை  ஆண்டவன் கழற்கு அன்பு” எண்றார் . எந்தை  முதலிய  சொற்கலின்  பொருள்  நலங்கள் முன்னைத் திருப்பாட்டுக்களில்  ஆராயப்பட்டன .

                     நெகுதல்  –  உருகுதல் . இறைவன் திருவடிக்கு  அன்பு  செய்து நெஞ்சம்  உருகுதலே அன்பு நெறியாகும் . அந் நெறிச் சென்று  எய்தும்  சிறந்த பேறு எத்தன்மையத்து என்று  அறியலுறுவார்க்கு, “நித்தலும் அமுதொடு”  என்பவை  முதலிய  சொற்களால்  விளக்கமுறுத்துவாராயினர் . இறைவன்  திருவடியில் இயைந்து நுகரும்  பேரின்பம்  அமிழ்தம்  முதலியவற்றின் நுகர்ச்சியால் உண்டாம்  இன்பம்  போல  உலப்புடையது  ஆகாது என்பார் , “நித்தலும்” என்றார்.  நித்தலும்  என்பது  எந்நாளும்  என்னும்  பொருட்டு  .   அமுதம் – தேவர்  உணவு.  தேன்,  பால், கட்டி  இம்மூன்றும்  மக்கள்  உணவு . “தேனாய்  அமுதமுமாய்த்  தீங்கரும்பின்  கட்டியுமாய் “ என்பது அடிகள் திரு வாக்கு  . இப் பாடற் பகுதியில் அமுதம்  என்றது  பாலை  உணர்த்தும் .  தேவர்  உணவு , மக்கள்  உணவு  என்னும்  வேறுபாட்டைப் புலப்படுத்தற்கே  ஒடு  உருபு  ஈரிடத்தும் போந்தது . அமரர்  உணவாகிய  அமுதத்தோடு  மக்கள்  உணவாகிய   பால், தேன், கருப்புக்கட்டி என்னும்  இவற்றையும் கலந்து  உண்டால் எத்துணை  இனிமைச்சுவை தோன்றுமோ , அத்துணைச்  சுவையினும் இறைவன்  திருவடி  இன்பம்  மேம்பட்டது  என்பார், “அமுதொடு , தேனொடு , பால்  கட்டி  மிகுவது” என்றார் . ஒப்பதும்  மிக்கதும்  இல்லாததா கிய  இறைவன்  திருவடி இன்பத்திற்கு  வேறு  எடுத்துக்  காட்டு  இல்லாமையால் , கேட்கப்பட்ட  தேவர்  உணவிலும்  , நுகரப்பட்ட  மக்கள் உணவிலும் இனிமை  மிக்கச்  சில  பொருள்களை எடுத்துக்காட்டினர் . இங்ஙனம்  கூறுதல் ஆன்றோர் கொள்கை . இறைவன்  கருணைக்குப்  பால்  நினைந்தூட்டும்  தாயின்  அன்பை  எடுத்துக் காட்டியதும்  இதனை  வலியுறுத்தும் . அமுதம் முதலிய  சுவைப்  பொருள்களை எடுத்துக் காட்டி , அவற்றினும்  மிகுவது  எனவும் , எஞ்ஞான்றும் நிலையுதல்  உடையது எனவும்  வீட்டின்பம்  குறிக்கப்பட்டது  அறிக .

          மிகுவது – மிக்கதாகிய  சுவை .  ஆவது – ஆதல் . இன்று  என்பது ,உகுவது, நெகுவது , மிகுவது  என்னும் இவற்றோடு தனித்தனி இயையும் . “கடு மொழியும்  கையிகந்த  தண்டமும்  வேந்தன் ,அடுமுதரண் தேய்க்கும்  அரம் “ என்பது தனித்தனி  இயைதல் அறிக. இவ்வாறு  முடிப்பதனை  , “பிரத்யேக பந்த அன்வயம் “ என்பர்  வடநூலார் . மற்று; அசை . , இத் திருப்பாட்டில் வீட்டு  நிலையின்  இயல்பை  விளக்கி  , அதனைச்  சார்தற்கு உரிய  செந்நெறிச் செலவும் , அதற்குத்  தடையாகவுள்ள  அகப்புறப் பற்றுக்களின் ஒழிவும் , அவற்றின் ஒழிவில் அச்செந்நெறியாகிய  அன்பு  நெறிப்   படர்தலும் , அந் நெறிச்  சென்று  எய்தும் பேரின்பப் பேறும் ஆகிய  இவற்றை முறையே  கூறி ,இவற்றுள்  ஒன்றேனும்  அடையப்  பெற்றிலேன் எனின் , இது  குறித்து யான்  செய்யத்தக்கது என்று  இரங்குவார், “ இதற்கு  என் செய்வேன்” எனவும்  , இங்ஙனம்  அடையப் பெறாமைக்கு  ஏது , என்  தீவினையே என்பார் . உடம்பொடு  புணர்ந்து , “வினையேனே” எனவும்  கூறினர் .

                  இதன்கண், பொன்னகர்  புகப் போதற்குத்  தடையாகவுள்ளன  உகுதலும் , ஆண்டவன்  கழற்கு  அன்பு  நெகுதலும்   அமுதொடு  தேனொடு  பால்கட்டி  மிகுதலும்  ஆகிய  இவை உயிரின்  தூய்மைக்கு  இன்றியமை யாதனவென்று  கூறப்பட்டிருத்தலின் , ஆத்தும சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  விளக்கமாதல்  அறிக .

                                       *****************************************

பாடல்: 37.

வினையென்  போல் உடை  யார்பிறர்

ஆர் உடை  யான் அடி  நாயேனைத்

தினையின்  பாகமும்  பிரிவது

திருக்குறிப்  பன் றுமற்  றதனாலே

முனைவன்  பாதநன்  மலர்பிரிந்

திருந்துநான்  முட்டிலேன்  தலைகீறேன்

இனையன்  பாவனை  யிரும்புகல்

மனஞ்செவி  யின்னதென்  றறியேனே.

கருத்துரை :-   கட்டறுதி பொறாமை முதலியவற்றிற்கு ஏதுவாகவுள்ள தம்  பழ  வினையை நோக்கி  முன்னைத்  திருப்பாட்டில் வருந்திக் கூறிய  அடிகள், அவ்  வினை தம்  அளவில்  மிக்க  வலி  படைத்திருத்தலை அநுபவத்திற் கண்டு  , அதனால் நேர்ந்த  இறைவன் திருவடிப் பிரிவிற்கு வருந்தித் தம் வலிய இயல்பை  இத்  திருப்பாட்டில்  வெளிப்படுத்துக்  கூறி  மேலும்  இரங்குகின்றார் .

பதவுரை :-  என்போல்  வினை  உடையார்  பிறர்  ஆர்  =   என்னைப்போலத்  தீவினையுடையார்  பிறர்  யாவர் (ஓருவரும்  இல்லை என்றபடி) ,

அடி  நாயேனை  =  அடிமையாகிய  நாய்  போன்ற  என்னை ,

தினையின்  பாகமும்  பிரிவது  –  தினையளவு  போதும்  பிரிந்திருத்தல்  ,

உடையான் திருக்குறிப்பு  அன்று  =  இறைவனுக்குத்  திருவுள்ளக்கருத்து  அன்று ,

அதனாலே – முனைவன் பாதம் நல் மலர் பிரிந்திருந்தும்  =  ஆண்டவனுடைய  திருவடிகளாகிய நல்ல  மலர்களைச்  சாராது  பிரிவுற்றிறுந்தும் ,

நான்  முட்டிலேன்  தலைகீறேன்  =  யான்  தலையை  வலிய  பொருளோடு  மோதுதல்  செய்கிலேன் , பிளத்தலும்  செய்கிலேன் ,

இனையன்  பாவனை  இரும்பு  =  இத்தகைய  எனது  நினைவு  இரும்பாகும் ,

மனம்  கல்  =  நெஞ்சம்  கல்லாகும் ,

செவி இன்னது  என்று  அறியேன்  =  செவியை  இன்ன  பொருள்  என்று  சொல்ல  அறிந்திலேன்  என்பது.

விளக்கவுரை :-  வினை  ஈண்டு  தீவினையை  உணர்த்தும் . ஆண்டவன் திருவுள்ளம் தினைத்துணைப்  போதும் தம்மை  விட்டுப்  பிரியாதிருப்ப தாகவும் , தாமே  பிரிந்து தனிப்பட்டு வருந்துதற்கு ஏதுவாகிய தீவினைப்பயன் நுகர்ச்சியில் தம்மைப் போல்  பிறர்  யாரும் உலகில்  இருக்க மாட்டார் என்னும்  கருத்தால் , “வினையென் போலுடையார் பிறரார்” என்றார். இத்தகைய  வலிய  வினைக்கு  ஆளாயினர் என்னைப்  போல் பிறர்  இருக்கமாட்டார்  என்பதை  யான்  அறிவேன் ; என்  சிற்றறிவுக்கு  அறியப் படாமல்  வேறு  யாரும்  இருப்பாராயின்  , அவ் வுண்மை உணர்ந்தாயினும் ஓராற்றான் ஆறுதல் அடையலாமே என்னும்  கருத்தால் , அடிகள் ,”பிறர்  ஆர்” என்ற  வினா வாய்ப்பாட்டால்  கூறுவாராயினர் . உடையான்  என்பது வலிய தீவினையுடைய என்னையும்  அடிமையாக  உடையான் என்னும்  பொருட்டு  , மிகவும் இழிந்தவன் என்று  என்னை  அறிந்திருந்தும்  என்னைப் பிரியாதிருக் கும்  திருவுள்ளம்   உடையான்  என்பார் , “ஆடி நாயேனை”  என்றார் .  

            தினையின்  பாகம் –  தினையளவு  கூறு. இக்கூறு  , கால அளவின்  மிக்க  சிறுமையை  உணர்த்தும் ,” இமைப்பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் “ என்னும்  அடிகள்  மணிமொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . இனி, என் அறிவில்  முழுதும்  கலந்துள்ளானே யன்றித்  தினையளவு  ஒரு  சிறு  கூறும்  விலகியிருக்கும்  குறிபுடையான் அல்லன்  என்றார் எனினுமாம் . ஆகவே, தினையின்  பாகமென்பது  ,காலத்திற்கும்  இடத்திற்கும்  பொருந்துமாறறிக  .  குறிப்பு  இறைவனாதலின் , திருக்குறிப்பு  என்னப்பட்டது .  மற்று , அசை.  அதனாலே  என்னும்  ஏது , முனைவன் பாத  நன்மலர்  பிரியாதிருத்தலே கடமையென்றற்கு ஆம் . அடியேனைத் தினையின்  பாகமும்  பிரிவது  உடையானுக்குத்  திருக்குறிப்பு  அன்று . ஆயின்  அக் குறிப்பு  உணர்ந்து ,அப் பெருமான்  திருவடி  மலர்களைப்  பிரியாது  இறுகப் பற்றிக் கோடல்  என்  கடமையாகவும்  , வலிய  தீவினையின் தடையால் பிரிந்திருக்க  நேர்ந்தது  என்று  இரங்குவார், “ முனைவன்  பாதநன்மலர்  பிரிந்திருந்தும் “ என்றார் . இங்ஙனம்  இறைவன்  திருவடிக்  காட்சியின்  பிரிவு  அடிகளுக்கு  நேர்ந்ததற்குக்  காரணம்  , இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  வந்து உபதேசித்துச் சைவச்  செந் நெறியாகிய  அன்பு  நெறியை இனிய  பாடல்களின்  மூலமாக  உலகத்தவருக்கு  விளக்கி  உபகரித்தற் பொருட்டு , “இன்னும்  சின்னாள் இருத்தி” என  இட்ட  கட்டளையே  யாகும் . இறைவன்  கட்டளை  அதுவாயினும் , அளப்பரிய  இன்பத்திற்கு  ஏதுவாக  இருந்த  திருவடிக் காட்சி  , விரைவில்  கரந்தது பொறாமல்  துடித்து  வருந்தும் நிலையினர்  ஆயினர்  என்பது  ஞானாசிரியனாக  எழுந்தருளிய  இறைவன்  திருவுருக்கரந்த  நிலையில் , அப் பிரிவாற்றாது வருந்திப்  பாடிய  பின்வரும்  பாடற் பகுதிகட்கெல்லாம் இங்ஙனமே கருத்துக்  கொள்க.  “முட்டிலேன்” , “தலை  கீறேன் “ என்புழி, தலையை ஈரிடத்துங்கொண்டு  , தலையைக் கல்  முதலிய  வலிய  பொருளோடும்   மோதுகின்றிலேன் , பிளக்கின்றிலேன்  என்று  கொள்ளல்  வேண்டும் . ஏனைய  உறுப்புக்களை  விட்டுத்  தலையை  மாத்திரம்  இங்ஙனம்  கூறியது , காட்சியில்  திளைத்தற்குரிய  கண்  முதலிய  பொறிகள் எல்லாவற்றையும்  உடைமையானும்  , இறைவன்  திருவடி மலரைச்  சூடுதற்கு  உரிமை  இருந்தும்  , அங்ஙனம்  சூடிக்கொள்ளா மையானும்  ஆம்  என்பது  சிறிதும்  தம்மைப்  பிரியாதிருத்தலே  இறைவன்  திருவுள்ளமாகவும், அதற்கு  மாறாகப்  பிரிந்திருக்க  நேர்ந்தது பற்றி  உண்டாகிய  துன்பத்தால் , “ முட்டிலேன்  தலை கீறேன் “ என்று  தம்  உடலையே மாய்த்துக் கொள்ளாத  தம் வன்கண்மையை   இவ்வாறு  புலப்படுத்தருளினர் . இனையன்  என்பது  , இத்தகைய  வன்கண்மை  உடையேன்  என்னும்  பொருட்டு .   

            இறைவன் திருவுருவைப்  பாவித்தற்கு நெஞ்சத்தின்  குழைவு  வேண்டும்  . குழைவு  இன்றேல், உள்ளம்  கடவுள்  வடிவில்   ஈடுபட்டுப்  பாவித்தற்கு  இயலாது  என்பது பெரியார்  அநுபவம் , “நெக்கு நெக்கு  நினைபவர்  நெஞ்சுளே, புக்கு  நிற்கும்  பொன்னார்  சடைப்  புண்ணியன்” என்பது  தமிழ் மறை  .ஈண்டு  அடிகள் இறைவன்  திருவுருவைப்  பாவித்தற்கு    உள்ளக் குழைவு  இன்மையால் ,”இனையன்  பாவனை  இரும்பு “ எனவும்  , பாவித்தற்கு  உரிய  குழைவு  இல்லாத  மனம்  கல்லைப்  போன்றிருத்தலின் , “கல் மனம் “ எனவும் கூறினர். இரும்பு , நெருப்பு முதலிய  சாதனங்களால் உருகும்  இயல்பினது .  அது  போலத்  தவ  ஆற்றலால் பாவனைக்குறிய  குழைவைப்  பெறக்  கூடுமாயினும் , அதற்கு  மூலமாகவுள்ள  மனம்  எதற்கும்  உருகாத  கல்லாயிற்று  என்பது  கருத்து.  மனம்  கல்லாகிய  நிலையில்  , அக முகமாக இறைவனைப்  பாவித்தல் இல்லாமையோடு  , பொறிகளின்  வழி யே சென்று , புலநுகர்விலும்  இறைவனை  அனுபவித்தற்கு  இயலாததாகும் என்னும்  குறிப்பை  , “பாவனை  இரும்பு  கல்மனம் “ எனவும் ,செவி  இன்ன தென்றறியேன்  எனவும்  கூறியவாற்றான் அறிக. பொறிகளுக்கு உபலக்கண மாக  ஈண்டு  செவி  கூறப்பட்டது . காட்சி ஒழிவில்  கேள்வி  அளவிலாவது  இறைவன்  திருப்புகழ்  அமிர்தத்தைப் பருகற்கும்  இயலவில்லையே  என்பது  குறிப்பு .  

          இதன்கண், “தினையின்  பாகமும்  பிறிவது திருக்குறிப்பு  அன்று “” என்றதனாலும் , “முனைவன் பாத  நன்மலர்  பிரிந்திருந்தும் “ என்றதனாலும்  , இடையறாது இறைவன் திருவடிக் காட்சியில்  ஈடிபட்டிருத்தல் உயிரின்  தூய  நிலைக்கு  ஏதுவாம்  என்பது போதரலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனால்  அறிக .

                                                  *****************************************

பாடல் : 38 .

ஏனை  யாவரும்  எய்திட

லுற்றுமற்  றின்னதென்  றறியாத

தேனை  ஆனெயைக்  கரும்பினின்

தேறலைச் சிவனையென்  சிவலோகக்

கோனை  மானன நோக்கிதன்

கூறனைக்  குறுகிலேன்  நெடுங்காலம்

ஊனை   யானிருந்  தோம்புகின்

றேன்கெடு   வேனுயிர்  ஓயாதே.

கருத்துரை :-  ஆண்டவன்  திருவடிப்  பிரிவிற்கு வருந்தித் தம்  அகப்புறக்  காரணங்களின்  வலிய  இயல்பைக்  குறித்து  முன்னைத் திருப்பாட்டில்  இரங்கிக்  கூறிய  அடிகள், மீண்டும் இறைவனை அணுகப் பெறாத நிலையில்  உடலோம்புதலின் மிகையையும்  உயிர்  ஒழிவு  பெறாமையையும் நினைந்து வருந்துகின்றார் .

பதவுரை :-   ஏனை யாவரும்  எய்திடல்  உற்றும்  =  மெய்யன்பர்  அல்லாத  மற்றைத்  தேவர்   மக்கள் முதலிய  எல்லோரும்  அடைதற்கு  முயன்றும் ,

இன்னது என்று  அறியாத  =  இத்தமை  உடையது என்று  அறியப்படாத ,

என் தேனை  ஆன்  நெய்யை  கரும்பின் இன் தேறலை =  எனக்குத் தேனும்   பசுவின்  நெய்யும்  கரும்பினது  இனிய  சாற்றின்  தெளிவும்  ஆயவனை ,

சிவனை சிவலோகக்  கோனை  மான்  அன்ன  நோக்கி தன்  கூறனை  = 

இன்பவடிவினனும்  சிவலோகனாதனும்  மான்  விழி போன்ற  கண்களையுடைய  அம்மையைத்  தன்  ஒரு  கூற்றில்  உடையவனும்  ஆகிய  இறைவனை  ,

நெடுங்காலம்  குறுகிலேன்   =   நீண்ட  காலமாக  அணுகப்பெற்றிலேன் ,

கெடுவேன்  யான்  இருந்து  ஊனை  நெடுங்காலம்  ஓம்புகின்றேன்  = 

இந் நிலையில் கேடு  அடையத்தக்க  யான்  இவ்வுலகில்  வாழ்ந்திருந்து உடலை  நீண்ட காலமாகப்  பாதுகாக்கின்றேன்,

உயிர்  ஓயாதே  =  என் உயிர் கெட்டு  ஒழியாதா?  என்பது .

விளக்கவுரை :-   ஏனை  யாவரும்  என்றதனால் , மக்கள்  தேவர்  முதலிய குழுவினருள் ஒரு சிலர் அல்லாத  மற்றைய  எல்லோரையும் கொள்ளல் வேண்டும் . அச் சிலர்தாம் யாவர்  எனின் , வினை  மாசு  நீங்கிய மெய்யன்பராவர்  என்பது . மற்று ; அசை . இறைவனை அடைதற்கு உரிய செந் நெறியாகிய அன்பு  நெறியான் அன்றி , வேற்று நெறிச் செல்வார் , எத்துணை ஆற்றலும் முயற்சியும்  உடையராயினும் , இறைவன் இயல்பை இத் தன்மைத்து என்று  அறியும்  வலியிலராவர்  என்பது தோன்ற, “ இன்னதென்று  அறியாத “ என்றார்.  அறியாத  என்னும்  பெயெரெச்சம்  ,தேன்  முதலிய  சொற்களாற்  குறிக்கப்படும்  “இறைவன்” என்னும்  பெயரைக் கொண்டு முடியும் .

               “என்” என்னும்  சொல்லைத்  தேன்  முதலிய ஆறு  இடங்களிலும் கூட்டி , எனக்குத்  தேன்  முதலியனவாக  உள்ளானை  எனக்  கொள்ளல் வேண்டும் .ஏனையோரால் இன்ன  தன்மையன்  என்று  அறியப்படாத இறைவனைத் தேன்  முதலியனவாக  அடிகள் தாம் அறிந்து கூறுதல் எங்ஙனம்  பொருந்தும்  எனின் ,  “அடித்தடித்து  அக்கார முன் தீற்றிய அற்புதம்” என்றபடி , ஆண்டவன்  வலிய  வந்து , தன் இயல்பை  அறிவித்து , அருளமுதத்தை  ஊட்டி  ஆட்கொண்டதை அடிகள் பலவிடத்தும்  குறிப்பிடுகின்றார்  ஆதலின், அம் முறையிற் பொருந்தும் என்க. அடிகள் தம்முடைய  முதிர்ந்த அன்பினால் ,”அன்பினில்  விளைந்த ஆரமுதே” என்றபடி , ஆண்டவனை  மிக இனிய பொருளாகக் கொண்டு  அனுபவித்தவர் என்பதை அறிகின்றோம் . அங்ஙனமாகவும் , அடிகள் தம் அடிமை இயல்பையும் , ஆண்டவன் அருட்  பெருக்கத்தையும்  வெளிப் படுத்தும் கருத்தினராய்த் தம்மை இழித்தும் , திருவருளை  உயர்த்துங்  கூறுதலைப்  பலவிடத்தும் காணலாம் .தேன்  பால்  கன்னல்  இம்  மூன்றனையும்  இனிமையிற் சிறந்த பொருள்களாகக் கொண்டு  , இறைவனுக்கு  ஒப்பிட்டுப் பெரும்பாலும்  இம்  முறையிற் கூறுதலைப்  பலவிடங்களிலும்  காணலாம் .  “தேனையும்  பாலையும்  கன்னலையும் ஒத்தினிய கோன்”என்பது முதலிய இடங்களிற் காண்க . இறைவன்,” அருமையில் எளிய அழகே” என்று  கூறியபடி  , தேவர்  முனிவர்  முதலியோரும் அரிய தவம் செய்தும்  காணுதற்கரிய  பொருளாகவும் , தூய  அன்பு  நெறியில்  ஒழுகும் அடியவர்க்கு  எளி பொருளாகவும் உள்ளான் என அறிகின்றோம் . அடியவர் , “பெறவே வேண்டும்  மெய்யன்பு  “  என்றபடி ,ஆண்டவனிடத்து அன்பைப்  பெருக்கிக்  கொள் வராயின் , இறைவன் அன்புவலையில்  தானே  வந்து படுவன்  ஆவன் . அங்ஙனம்  வலிய  வந்து முதலில்  எளியனாய்த்  தன் கருணைத் தேன்  காட்டி, அவ்  அடியவரைத்  தன் வயப்படுத்துத்   தன் அரிய  தன்மையைப்  படிப்படியாக உயர்த்துக்  காட்டி  தன் இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்வன் என்பது பெரியார் கண்ட உண்மை அனுபவம் .ஒரு குழந் தைக்கு இனிமைமிக்க  எளிய பொருளை முதலில்  காட்டி நுகர்வித்து , அதன்மேல் சிறிது சிறிதாக உயர்ந்த பொருள்களை உண்பித்து உடலுக்கு  நலம்  செய்வார் போல , மெய்யன்பர்க்கு  , ஆண்டவன் முதலில்  எளியனாய்க்  காட்சி யளித்துப்  படிப்படியாகத்  தன் அரிய நிலையையும் உணர வைத்து , முடிவில் இன்பத்துள் திளைப்பித்து ,அவர் தம் உயிர்க்கு  நலம்  செய்பவன்  ஆவான் என்க. இம்முறையில்  அடிகளுக்கு  ஆண்டவன்  தன்   இயல்பை  முதலில்  எளிமையில்  காட்டி  ,ஈர்த்துப் படிப்படியாக  அருமை  நிலையை உணர்த்தி ஆட்கொண்டதைப்  புலப்படுத்துவாராய் , “தேனை ஆனெயை” எனத் தொடங்கி , முறையே  கூறுவாராயினர் தேனைப்  பெற்றவுடன் , அடுதன் முதலிய செயற்படுத்தாமல்  இனிமை தோன்ற எளிதில் உண்ணலாம் . “ஆனெயை”என்றமையால் பசுவினிடத்தினின்றும்  நெய்  பெறவேண்டுமானால்  பாலை  அடுதற் செயற்படுத்துத்  தயிராக்கிப் பெறல் வேண்டும் . கரும்பின் இன் தேறல்  என்புழி , தேறல் ஆகுபெயராய்க் கட்டியை உணர்த்தும் . கரும்பின் தேறல்  பெற வேண்டுமானால் , கரும்பை  ஆலையில்  இட்டுத்  தெளிந்த  சாறு  எடுத்து ,அடுதற் செயலாற்  கட்டியாக்கிப்  பெறவேண்டும் . ஈண்டுக்  கூறிய  தேன்  நெய்  கருப்புக்கட்டி இம் மூன்றும்  இனிமைச்  சுவையில்  ஒன்றுபட்டிருந்தாலும் , முன்னதை நோக்கப் பின்னது அரிதிற் பெறத்தக் கதாக  இருத்தல்  அறியத்தக்கது . தேனை  என  அடைமொழி  இன்றியும் , ஆனையை , கரும்பின் இந்தேறலை  என  மற்றைய இரண்டிற்கும் அடைமொழி  புணர்த்தும்  கூறியது  தேனை ஆக்குஞ் செயல்  ஈக்களுக்கே அன்றி மக்களுக்கு  இன்றென்பதும் ,நெய்யும்  கருப்புக் கட்டியும்  ஆக்குஞ் செயல் மக்களுக்குரியன  என்பதும் புலப்படுத்தற் கென்க . தேன்  முதலிய  மூன்றையும்  ஆண்டவன்  இயல்பிற்கு ஒப்புமை பற்றிக்  கூறிப்  பின்னர்ப் பொருள் இயல்பு  பற்றிச் சிவன்  முதலிய  சொற்களால்  விளக்கத்  தொடங்குகின்றார்.

        சிவன்  என்பது  இன்பவடிவினன் என்னும்  பொருட்டு  , தேன் முதலியன புலன் உணவிற்கு இன்பம் செய்தல் போலப் புலன்களுக்கு  எட்டாத மெய்யுணற்விற்கு இன்பம் செய்பவன்  இறைவன்  என்பது  தெளிவித்தற்கே முதலில்  “சிவனை” என்றார். சிவபெருமான் இன்ப வடிவினன் ஆதலோடு  , அவன்  ஆட்சிக்கு  உட்பட்ட  உலகமும் இன்ப மயமான தென்பதும் , அவ் உலகத்தில் இன்பத்  தனியரசாக  விளங்கு பவன் என்பதும் புலப்படுத்தற்கு ,” சிவலோகக் கோனை” என்றார். போகியாய்  இருந்து உயிர்க்குப் போகத்தை புரிதற்கும் ,உயிர்த் தொகுதிகள் அருள் உருவினளாகிய  அன்னையை  வழிபட்டு ,அவள்  காட்டக் கண்டு  அப்பனை அடைதல் முறையாதலின் , அம் முறயில் அவ் உயிர்களுக்கு  அருளுதற் பொருட்டும் , இறைவன் உமையொரு கூறனாய் விளங்குகின்றான் என்னும்  உண்மையைப்  புலப்படுத்தற்கு , “மானன  நோக்கி தன் கூறனை” என்றார். அம்மைக்கு  நோக்கச் சிறப்புக்  கூறியது, தன் மக்களாகிய  உயிர்த் தொகுதிகளின்பால் வைத்த அருட்குணம்  அதன்முகமாக வெளிப்படுதல் பற்றி என்க.  சிவன், சிவலோகக் கோன், உமையொரு கூறன் என்னும்  இம் மூன்று  பெயர்களும் ,பொருளியல்பின் ஒன்றாயினும் , அடையும்  முறயில் , முன்னதை நோக்கப் பின்னது அருமை உடையதாதலை உய்த்துணரல் வேண்டும் . ஆண்டவன் , மெய்யன்பர்க்கு  , முதலில் தன்னை இன்பவடிவினனாகவும் , பின்னர் இன்ப உலகத் தனியரசாகவும் ,அதன்பின் உமையொரு கூறனாகவும்  காட்சியளித்து இன்புறுத்தும் உண்மை புல்னாதலறிக . அருமையில் எளிய அழகு இருந்தவாறு இது . “நெடுங்காலம்”என்பதை  இடைநிலை யாகக் கொண்டு , “குறுகிலேன்” என்பதனோடும்  கூட்டுக. குறுகுதல் – அணுகுதல்.நெடுங்காலம் குறுகிலேன் என்றது பண்டைப் பிறப்புக்களிற் சென்ற காலத்தைக் குறித்து என்க. இப்பிறப்பைக் குறித்து கூறியதாகக்  கொள்ளின் , ஆண்டவனை  அணுகாத காலம் சிறிதாயினும் , பிரிவு நிலையில் பெரிதாகத் தோன்றும் ஆதலின், அது பற்றி  நெடுங்காலம்  என்று  கூறினர் எனக் கொள்ளல் வேண்டும் .கெடுவேன்  யான்  என்பது , இந் நிலையில் கேடு அடையத்தக்க  யான் என்னும் பொருட்டு . “யான் இருந்து ஊனை ஓம்புகின்றேன்” என்றது , இப்பிறப்பில் ஆண்டவனை அணுகாத  நிலையில் உடலை மாய்த்துக் கொள்ளாமல் உயிருடன்  கூடி  வாழ்ந்து , இவ்வுடலை நீண்ட  காலமாகப்  பாதுகாக்கின்றேன் ; இஃது என்ன  அறியாமை என்பது குறித்து என்க. என் அறியாமையால் பொய்யுடலை மெய்யெனக் கொண்டு யான் ஓம்புகின்றேன் ஆயினும், ஆண்டவன் அணுக்கம் பெறாத நிலையில் , உயிராவது தானே உடலை விட்டுக் கழியலாமே ; அதுவும்  இல்லையே  என்பார், “உயிர்  ஓயாதே”  என்றார்.  ஓயாதே என்புழி , ஏகாரம் எதிர்மறைப் பொருளது. “தானேயும் கழியா  தாவி” என்னும் பெளராணிகர் உரையும் இக் குறிப்புப் பற்றிய தென்க.

       இதன்கண், ஊன் ஓம்புதலைப் பொருட்படுத்தாமல் ,இனிய பொருளாகிய  ஆண்டவனை விரைந்து அணுகுதல் உயிரின்  தூய நிலைக்கு இன்றியமையாதது என்னும் பொருள் புலப்பட்டு  நிற்றலின், ஆத்தும சுத்தி என்னும்  பதிகம் நுதலிய  பொருள் புலனாதல் அறிக.  

                                          ************************************

பாடல் : 39.

ஓய்வி  லாதன  வுவமனில்

இறந்தன  ஒண்மலர்த்  தாள்தந்து

நாயில்  ஆகிய  குலத்தினுங்

கடைப்படும்  என்னை நன்  னெறிகாட்டித்

தாயில்  ஆகிய இன்னருள்

புரிந்த  என்  தலைவனை  நனி காணேன்

தீயில்  வீழ்கிலேன்  திண்வரை

யுருள்கிலேன் செழுங்கடல்  புகுவேனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் பக்கல் அணுகப்பெறாத நிலையில் உடல் ஓம்புதலின் மிகையை நினைந்து இரங்கிக் கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் தமக்கு நன்நெறி காட்டி  இன்னருள் புரிந்த ஆண்டவனைக்  காணாமல் காலம்  மிகக் கழிதலைப்  பொறாராய்த்  தீ  முதலியவற்றால் தாம்  அழியாமல்  இருப்பது  குறித்து வருந்துகின்றார் .

பதவுரை :- ஒய்வு இலாதன  =  அழிந்தொழிதல் இல்லாதனவும் ,

உவமனில்  இறந்தன  =  உவமங்களைக்  கடந்தனவும் ஆகிய ,

ஒண்மலர் தாள்  தந்து  =  ஞான ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை  அளித்து ,

நாயில்  ஆகிய  குலத்தினுங்  கடைப்படும்  என்னை  =  இழிந்த  நாய்ப்பிறப்பினும்  கடைப்பட்ட  எனக்கு,

நல்நெறி  காட்டி   =  வீடு  அடைதற்குரிய  சிறந்த  வழியாகிய  அன்பு நெறியை அறிவுறுத்தருளி ,

தாயில்  ஆகிய  இன்னருள்  புரிந்த   =  தாயிடத்து உண்டாகிய  இனிய  அருளினும்  சிறந்த  அருளைச்  செய்த ,

என் தலைவனை நனி காணேன்  =  என் ஆண்டவனை  மிகவும்  கண்டிலேன் , (இந் நிலையில்)

தீயில்  வீழ்கிலேன்  =  நெருப்பில்  வீழ்ந்து  இறந்திலேன் ,

திண் வரை  உருள்கிலேன்  =  திண்ணிய  மலைமேலிருந்து  உருண்டிலேன் ,

செழும்  கடல்  புகுவேனே  =  நீர்ப்  பெருக்கினையுடைய  கடலினும்  சென்று  வீழ்வேனா?  ( அதுவும்  செய்யேன்  என்றபடி)   என்பது .

விளக்கவுரை :-  இறைவன் உயிர்களுக்கு  அருளும்  மெய்ஞ்ஞானத்தை இறைவன் திருவடி எனக்  கூறுதல் மரபு . அழிந்து ஒழியாதன என்னும்  பொருள் தோன்ற ,”ஓய்விலாதன”என அத் திருவடிகளின் இயல்பு கூறப்பட்டது . இங்ஙனம் கூறியது அனுமான அளவை பற்றி என்க . அனுமான அளவையின் உறுப்புக்கள் ஐந்தனுள் ,மேற்கோள் , ஏது, எடுத்துக்காட்டு  என்னும்  மூன்றும் சிறந்தனவாம் . இண்டு  மேற்கோள்  இறைவன் திருவடிகள் அழிந்தொழியாத  இயல்புடையன என்பது. அதற்கு ஏது , அத் திருவடிக்கு உரிய  முதல்வன் என்றும்  அழிவில்லாத வனாக   இருத்தலின் என்பது . இதற்கு  எடுத்துக்காட்டு  வேண்டும் . அழிவின்மையும்  எங்கும்  நிறைந்திருத்தலும்  ஆகிய  குணங்களை யுடைய  கடவுளைப்பற்றி செய்திக்கு  , அப் பொருளின் நிறைவுக்கு  உட்படாத பொருல் பிறிதொன்று  இன்மையால் , எடுத்துக்காட்டுக்  காண்டல்  அரிது. எடுத்துக்காட்டு  இல்லாமல் இருப்பின்  ,அளவை இலக்கணம்   பிழைபடும் . இத்தகைய  இடங்களில் உடன்பாட்டு  முகமாக  எடுத்துக்காட்ட  இயலாமையின் , எதிர்மறைமுகமாக   எடுத்துக்காட்டு தலை  மேற்கொள்வர்  அளவை  நூலார் . இவற்றை  முறையே அந்வய திருட்டாந்தம் , வெதிரேக திருட்டாந்தம்  என்பர்  வடநூலார் . இங்கே  ஆண்டவனுடைய  திருவடி ஞானத்திற்கு  உடன்பாட்டு  முகமாக  எடுத்துக் காட்டுதற்குப் பொருல் இல்லாமையால் ,எதிர்மறை முகமாகக் கொண்டு,  “உவமனில்  இறந்தன” என்றார்.

                ஒண்மை – ஞானம் ; இறைவன்  திருவடியைச்  சிவஞான வடிவமாகச்  சைவ  நூல்  கூறும்  . அத்தகைய  உயர்ந்த  திருவடிஞானப் பேற்றிற்கு உரிய  தகுதி ஒரு சிறிதும் இல்லாத  கடையேன்  என்பார், “நாயில்  ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை” என்றார். நாய்ப் பிறப்பினும்  இழிந்த பிறப்புடையேன்  என்று  அடிக்கடி  அடிகள் தம்மைக்  கூறிக்கொள்ளுதலின்  கருத்து  இன்னது  என்பது முன்னைத் திருப்பாட்டு களில்  விளக்கப்பட்டது . நன்மை  எல்லாவற்றினும்  சிறந்தது  வீடு  ஆதலின்  , அதற்குரிய  நெறியை  நன்நெறி  என்றார். அஃது அன்பு  நெறியாகும் . அறிவு நெறி  முதலிய  வேறு  பல நெறிகளும்  உளவேனும்  , அடிகள் சிறப்பாகக்  கண்டது , பத்தி நெறியாகிய  அன்பு நெறியேயாம் . அந்நெறியைக் காட்டுதலாவது ,அக முகமாக நின்று உணர்த்தி அவ்வழிப்  படுத்தலாம் .ஆண்டவன் அன்பர்பால் வைக்கும் அருளுக்கு, “உயர்ந்ததன்  மேற்றே  உள்ளுங்காலை “  என்னும் விதிப்படி உவமை கூறுதல் இயலாத தொன்று ஆதலின்  , அதற்கு  உலக நிகழ்ச்சியுள்  சிறந்தது ஒன்றை எடுத்துக் காட்டுதல்  பெரியோர்  கொள்கை. அவ் எடுத்துக்காட்டாவது  , அறியாப் பருவத்து  மழவிளங்குழவிபால்  தாய்  வைத்துள்ள  அருட் குணமே  யாம் . அங்ஙனம்  எடுத்துக் காட்டுங்கால் , உறழ் பொருவும் , உவமப் பொருவும்  என்னும் இருவகையுள் , உறழ் பொருவு  பற்றியே  கூறத்தக்கதாகும் . காக்கையிற்  கரிது  களம்பழம்  என்புழிக்  காக்கை யினும்  கரிது என்பது உறழ்பொருவுக்கும் , காக்கைபோலக்  கரிது என்பது உவமப் பொருவுக்கும்  உதாரணங்களாம் . ஈண்டுத்  தாய்  அருள்  போன்ற  அருள்  என்பதை  உறழ்பொருவாகக்  கொண்டு, தாய்  அருளினும்  சிறந்த  அருள் எனக்  கொள்ளுதலே  பொருத்தம்  உடைத்தாம்.  

      அறக்கருணை , மறக்கருணை  என்னும் இருவகையுள் , இறைவன்  தமக்குச் செய்தது  அறக் கருணை யென்பார்,  “இன்னருள்  “ என்றார் . ஞானாசிரியனாக  எழுந்தருளி  வந்து திருவடிக் காட்சி  அளித்துத்  தமக்கு  நன்நெறி காட்டி  இன்னருள் புரிந்த  பெருமான்  உருக்கரந்த  நிலையில்  , அப் பிரிவு  சிறு பொழுதாயினும் , அதனைப் பொறாத அடிகள் , அச் சிறு  பொழுதைப்  பெரும்  பொழுதாக நினைந்து, இத் துணைநெடுங்காலம்  கடந்தும்  காணப் பெற்றிலேனே  என்று  இரங்குவார்., “ஏன் தலைவனை நனி காணேன் “ என்றார். நனி என்னும்  உரிச்சொல் காணாமைக்கு ஏதுவாகிய  காலமிகுதியைக்  குறிக்கும் . அருமருந்தன்ன ஆண்டவன் திருவடிக் காட்சி  மறைந்த நிலையில் உயிர்  வாழ்தல் தகாது எனக் கண்ட அடிகள், தம் உடம்பை மாய்த்துக் கொள்ளாமல் இருத்தல்  பற்றிப் பெரிதும்  கவல்கின்றார். துன்பம்  பொறாத  நிலையில்  சாதற்குத்  துணிவார் , தீப் பாய்தல் ,வரையின்  நின்றும்  உருளல் , நீரில்  வீழ்தல்  முதலிய  உடற்கு  அழிவுச்  செயல்களை  மேற்கொள்ளுதல் உண்டு . இங்கே கூறப்பட்ட  மூன்றனுள் , நீரில்  வீழ்தற் குரிய  மனவலியினும் , வரையினின்றும் உருளுதற்குரிய  மன வலி சற்று மிகுதியாகவும்  , தீப் பாய்தற்குரிய  மன வலி  அதனினும் சற்று  மிகுதி யாகவும்  வேண்டும் என்பது ஊன்றி  உணர்வார்க்குப்  புலனாம் . அம் முறயில்  தலைவன்  பிறிவாற்றாமை  பற்றித்  தீப்  பாய்ந்து இறத்தலே தக்கதாகவும்  , அச் செயலின்  கடுமை நினைந்து அவ்வாறு செய்திலேன் ஆயினும் , மலையினின்றும் உருண்டு  வீழ்த்து இறத்தல் வேண்டும் ; அதற்கும்  துணிவு  தோன்ற  வில்லை  யாயினும் , கடலில் ஆயினும் முழுகி இறத்தல்  வேண்டும் ; அதுவும் செய்திலேன் என்பார் , “தீயில்  வீழ்கிலேன்  திண்வரை  உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே” என்றார். புகுவேனே  என்புழி  , ஏகாரம்  எதிர்மறைப்பொருட்டு  , நீரில்  மூழ்குதற்கு   நீர்ப் பெருக்கினையுடைய  கடலைக்  கூறினார் ; மூழ்கினார் உய்தி பெறாமைப்  பொருட்டு  , செழுங்கடல் என்புழிச்  செழுமை  , நீர்ப்பெருக்கு.

                   37 ஆம்  திருப்பாட்டில் , “பாத  நன்மலர் பிரிந்திருந்தும் “ என்றார்,  பிரிந்த அணிமை  தோன்ற  38 ஆம்  திருப்பாட்டில்  பிரிந்த பின்னர் அணுகுதல் கூடுமே ; நெடுங்காலமாகியும்  அணுகப்பெற்றி லேனே என்னும்  கருத்தால் , “குறுகிலேன்  நெடுங்காலம்  “ எனவும் , இத் திருப்பாட்டில் காலம்  மிக  நெடிதாகியும்   காணப்பெற்றிலேனே என்று இரங்குவார் ., “தலைவனை நனி காணேன் “ எனவும்  கூறினர் .  இம் முறை நினைந்து  இன்புறத்தக்கது .

                  இதன்கண், அடிகள்  தமக்கு  நன்நெறி  காட்டி  இன்னருள்  புரிந்த தலைவனது  காட்சி  இடையறாது  நிகழ வேண்டும்  என்று  கருதுகின்றார்  என்பது விளக்கமாதலின் , அங்ஙனம்  இடையறாத  திருவடிக் காட்சியே உயிரின்  தூய்மைக்கு  இன்றியமையாதது  எனப்  பதிக  நுதலிய  ஆத்தும சுத்தி என்னும்  பொருளும் , தீப் பாய்தல் , முதலியன  கூறியிருத்தலின்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதக  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக .  

                                    *****************************************

பாடல் :40 .

வேனில் வேள்கணை  கிழித்திட

மதிசுடும்  அதுதனை  நினையாதே

மானி  லாவிய  நோக்கியர்

படிறிடை  மத்திடு  தயிராகித்

தேனி  லாவிய   திருவருள்

புரிந்த என்  சிவனகர்  புகப்போகேன்

ஊனில்  ஆவியை ஓம்புதற்

பொருட்டினும்  உண்டுடுத்  திருந்தேனே.

கருத்துரை :-   ஆண்டவன்  பிரிவில்  தாம் அழியாமல்  உயிர்  வாழ்தல்  குறித்து முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் காமம்  முதலிய  பகை வருக்கங்களால்  இடுக்கட்பட்டு  உழலும்  ஊனுடலைப்  பேணுதற் பொருட்டுச்   சிவனகர்  புகுதற்கு  உரிய செந் நெறிச்  செலவைக்  கைவிட்டிருக்கின்றேனே  என்று மீண்டும்  வருந்துகின்றார் .

பதவுரை :-  தேன் நிலாவிய  திருவருள்  புரிந்த என் சிவன்  = 

தேன் போன்ற இனிய சுவையினையுடைய  திருவருளை  உதவியருளிய   என்  ஆண்டவனாகிய  சிவபெருமானது ,

நகர்  புகப்போகேன்  =  பொன்னகருட்  புகுதற்குச்  செல்லேனாய்  ,

வேனில்  வேள்  கணை கிழித்திட  மதி சுடும்  அதனை  நினையாது  = 

இளவேனிற்  கிழவனாகிய  காமனுடைய  மலரம்பு   என் நெஞ்சைப்  பிளந்திட   அப் புண்ணில்  திங்கட் செல்வன்சுடுகின்ற  மாறுபட்ட  அத் துன்ப  நிலையையும் கருதாமல் ,

மான்  நிலாவிய  நோக்கியர்  படிறு  இடை  =  மான் விழிபோன்ற  விழிகளையுடைய  மகளிரின் வஞ்சகச்  செயலின்  கண்ணே ,

மத்து இடு தயிர்  ஆகி  =  மத்திட்டுக்  கடையப்படும்  தயிரைப்போற்  கலக்குண்டு,

ஊனில்  ஆவியை  இன்னும்  ஓம்புதற்பொருட்டு   =  ஊனுடலின் கண்ணே  உயிரை  நிறுத்தி இன்னமும்  பாதுகாத்தற் பொருட்டு ,

உண்டு உடுத்து இருந்தேன்  =  நல்ல  உணவுகளை  உண்டும் , நல்ல  ஆடைகளை  உடுத்தும் ,இதுகாறும்  வாழ்ந்திருந்தேன் (என்  அறியாமை  இருந்தவாறு  என்னே) என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  திருவருட் பேறு , தகுதியுடையார்க்கு  அன்றி , அடைதற்கும் அனுபவித்தற்கும் அரியது . அங்ஙனம் அரிய  அருளமுதை  எளிமையும்  இனிமையும்  உடையதாக்கி , வலிய  வந்து இறைவன்  தம்மை  ஊட்டினான்  என்பதே அடிகள் அநுபவத்திற் கண்டது . எளிமையில்  இனிமைச் சுவை மிகப் பெற்றது குறித்தே ,”தேனிலாவிய  திருவருள்” என்றார். தேனின் எளிமை, ஆன் நெய் ,கருப்புக்கட்டி  என்பவற்றோடு எண்னப்பட்டுக்  கிடந்த  முன்னைத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறப்பட்டுள்ளது  காண்க . புரிந்த  என்னும் சொல் , விரும்பிச் செய்த என்னும் பொருட்டு , தம்மை  அடிமையாகக் கொள்ளுதற்கு வலிய  வந்து திருவருள்  பாலித்த  உரிமை தோன்ற , “என் சிவன்” என்றார். விரும்பி அளித்த திருவருள் தேனைப்போல் இனிமை சுரந்து  இன்பது பயந்து நிற்றலின் , அதற்கேற்ப  , முதல்வனை இன்பம்  செய்பவன் என்னும் பொருள் உடையதாகிய  சிவன் என்னும் பெயரால் குறிப்பிட்டனர் .சிவன் நகர்  என்பது அழி வில்  இன்பம் துய்த்தற்கு  உரிய  வீட்டு நிலையைக் குறிக்கும் . புகப்போதல்  –  உட்புகுதற்கு உரிய செந்நெறிச் செலவை மேற்கோடல் . போகேன் என்பது  முற்றெச்சம் ; செல்லாமல்  என்னும் பொருட்டு , அஃது  ஈற்றடியில்  உள்ள இருந்தேன்  என்னும் வினையைக் கொண்டு முடியும் , பொன்னகர் புகப் போகாமல்  இருந்தேன் என்புழி , இருத்தற்கு  இடம் இம் மண்ணுலகம் என்பது போதரும் .

          இனி, இம் மண்ணுலக வாழ்க்கையின்  பயனைப் புலப்படுத்தத் தொடங்குகின்றார் . வேள்  இருவராதலின் , செவ்வேளாகிய  முருகனின் வேறுபட்டவன்  என்பது தோன்றக் காமனை “வேனில் வேள் “ என்றார்.  – காமன்  கணையோ  மெல்லிய  மலர்களாகும் . அம் மலர் அம்பினால் நெஞ்சம்  பிளவு படும் என்றது, இவ்வுலக  இன்பநுகர்ச்சிக்கு  உரிய  கருவிகளின்  வலியின்மையைப் புலப்படுத்தற்கு என்க. மலர் அம்பு கிழித்த புண்ணில் ஆம்  பெரும் புழைக்கட்  கனல் நுழைந்தாற் போல் “ ஆயிற்று  என்றபடி , மலரம்பு நெஞ்சத்தைப் பிளத்தலும் , திங்கட் கதிர்  சுடுதலும் இயற்கைக்கு  மாறுபட்ட செய்திகளாம் . உலக  வாழ்க்கையின் நொய்ம்மை  இத் தன்மைத்து என இந் நிகழ்ச்சிகளில் வைத்து நினைக்க வேண்டியது  கடமையாகவும் , அதனை  நினையாமல்  இருந்தேன் என்பார் , “ அது தனை நினையாது “ என்றார் . மலர் அம்பினால் ஊறுண்டு , திங்கட் கதிரினால்  சூடுண்டு , ஆற்றாமை  மிக்கு மகளிரைத் தஞ்சம் அடைந்தேனாக , அந் நிலையில் அவர்தம் வஞ்சகச் செயலில்  ஈடுபட்டு , மத்தினால் கடையப்பட்ட  தயிர் போலக் கலக்குண்டேன் என்பார், “மானிலாவிய  நோக்கியர்  படிறிடை  மத்திடுதயிராகி” என்றார் . மான் நிலவிய  நோக்கியர் என்றது , ஆடவர்  நெஞ்சத்தையும்  நிறையையும் கவரும் கருவியாகிய  நோக்குடையார் என்னும் பொருட்டு . “நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி” என்னும் சிந்தாமணி நூலுடையார் கருத்தும் ஈண்டு  நினைக்கத் தக்கது . ஊறுபாடும்  சூடும் பொறாது புகலடைந்த நிலையில் மதி மயங்கி  மகளிர் இட்டதே சட்டமாக அவர் தம் மாயச் செயலிற் சிக்கி, உய்தி பெற முடியாத  நிலையில்  கலக்குண்ட செய்தியை , “மத்திடு தயிராகி “ என்பதனாற்  புலப்படுத்தார் .  

     இத்துணைத்  துன்ப நிலையிலும் இன்பம் உண்டெனக் கருதி , அழியும்  இயல்பினதாகிய  ஊனுடம்பின் கண்ணே , அழிவு  இலதாகிய  உயிரை வைத்துப் பாதுகாக்கக் கருதினேனே என்பார்., “ஊனிலாவியை ஓம்புதற் பொருட்டு “ என்றார் . அறிவு வடிவம் ஆகிய உயிரை ஓம்பல்  வேண்டுமாயின், முற்றறிவினனாகிய  இறைவன் திருவடி நீழலில் இயைதற்கு முயலல் வேண்டும் . உயிர்க்கு உண்மைப் பாதுகாப்பு அதுவே யாகும் . அதனை விட்டு, ஊனில் ஆவியை வைத்து ஓம்ப  நினைப்பது , பசு மட்குடத்தைப் பற்றி , நீர் கடக்க  முயல்வது போலாம் என்பது , ஆண்டவன் திருவருட் பதிவு  ஒரு சிறிதும் இல்லாத நிலையில் , ஊனில் ஆவியை ஓம்புதல் ஓராற்றாற்  பொருந்துவதாகும் . தேனிலாவிய திருவருள் புரிந்த பின்னரும் அங்ஙனம் ஓம்ப நினைக்கின்றேனே  என்பார் , “இன்னும்  ஓம்புதற் பொருட்டு “ என்றார் .உண்ணலும் உடுதலுமே இவ்வுலக வாழ்க்கையிற் கண்டனவெனக் கொண்டு, “உண்டுடுத்திருந்தேனே”என்று கழித்தற்கு இரங்கினார்:இனியாவது சிவனகர் புகப்போதற்கு உரிய தவச் செயலில் தலைப்படுதற்கு உரிய நல்லூழ் வாய்க்க மாட்டாதா என்னும்  குறிப்புத் தோன்ற , சிவன்  நகர் புகப் போகாமல் , அதுதனை நினையாமல் , மத்திடு  தயிராகி  இன்னும்  ஓம்புதற் பொருட்டு  உண்டுடுத்திருந்தேனே  என முடிக்க .

              இதன்கண், சிவன் நகர் புகப்போதற்கு உரிய  தவத்தை  விடுதலும் , ஊனுடல் ஓம்புதல் பொருட்டு  உயிர் வாழ்ந்திருத்தலும்  தகாத செயல்களாம் என்று கூறியிருத்தலால் , சிவநகர் புகுதற்கு உரிய தவச் செயலை உயிரின்  தூய்மைக்கு வேண்டற்பாலது என்பதும் ,மத்திடு  தயிர் போலக் கலக்குண்டு  ஊனில் ஆவியை ஓம்புதல் வெறுக்கத்தக்கது என்பதும் பெறப்படுதலின் , முறையே  ஆத்தும  சுத்தி  என்னும் பதிகம் நுதலிய  பொருளும் ,வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதக  நுதலிய பொருளும் புலனாதல் அறிக .

                                                   ******************************

                                   *******************************************************  

5 .  கைம்மாறு  கொடுத்தல்

     கைம்மாறு   கொடுத்தல்  என்பது  ஓர்  உதவி  செய்தார்க்குப்  பிரதியாக உதவுதல்  என்னும்  பொருளதாம் . முன்னைப்  பதிகத்தில்  உயிரினது  தூய்மைக்கு வேண்டுவன  கூறப்பட்டன . மன மொழி மெய்களாகிய முக்  கரணங்களும்  இறைபணியில்  ஈடுபடவேண்டும் என்பதும் , அவற்றுள்ளும் உள்ளப்பணி மிக இன்றியமையாதது என்பதும் கூறப்பட்டன .அங்ஙனம்  இறை  பணியினால் வினை  மாசு  நீங்கித்  தூய்மை  எய்திய  தமக்கு  , ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுத்தருளி , வெளிப்பட்டு  , ஞானத்தை உணர்த்தி , இன்பமயமாகிய  தன்  அருளமுதத்தைத் துய்ப்பித்தனனாக ,  அப் பெருமான்  திருவடிக் காட்சியில்  ஈடுபட்டு மாறிலா  மகிழ்ச்சியின் மலர்ந்திருந்த  நிலையில் , பண்டை வினைத் தொடர்பால் ஓரோவமயம்  அவ் இன்பக் காட்சி மறைந்தும் , வெளிப்பட்டும் நிகழாநிற்ப, மறைந்த  நிலையில், அப் பிரிவாற்றாது , தம் உடலையே வெறுத்து வருந்திக் கூறிய செய்தியும் , முன்னைப் பதிகத்திற் கண்டாம் . பின்னர் , வரம்  பிகந்த இனிய  அருள்  அமுதையூட்டிய  வள்ளற் பெருமானுக்குத்  தாம்  செய்யும்  கைம்மாறு  யாதென ஆராய்ந்து கொடுக்கக்  கருதினாராக , பேரின்ப  வள்ளலாகிய இறைவன்,அவ் வின்பமயமாகிய தன்னையே அடிகளுக்கு வழங்கினனானால்  அதற்குக்  கைம்மாறாக  அடிகளால் வழங்கத்தக்கது யாதுள்ளது.? அடிகளுடைய  உடல் , பொருள் , ஆவி , மூன்றும்  ஆண்டவன்  உடைமைகளே , கைம்மாறு  கொடுத்தல் என்றால் , கொடுக்கப்படுவது  கொடுப்பவனுடைய  உடைமையாகவன்றோ  இருத்தல் வேண்டும் ? கொடுப்பவராகிய  அடிகளுக்கு  என ஏதும் இல்லாத நிலையில், கைம்மாறு  கொடுக்க வேண்டும்  என்று  அடிகள் கருதுதற்குக்  காரணம் என்னையெனின் , திருவடிக் காட்சி யினின்றும் பிரிவு  நேர்ந்த பொழுது , அப் பெருமான் உதவிக்கு  ஈடாக ஏதும் செய்யாமல்  இருக்கலாமா?  செய்யவேண்டியது  கடமையென , அன்பு மேலீட்டால்  சிறிது உயிர் முனைப்புப்  பற்றி  எழுந்த எண்ணமேயாம்  என்க. பின்னர் , மீண்டும்  காட்சியில்  ஈடுபட்டு , அம்முனைப்பும்  ஒடுங்கிய   நிலையில் , தம்  உடல் , பொருள் , ஆவியெல்லாம்  அவனுடைமை என்னும்  உண்மையை உணர்ந்து , “தந்ததுன்றன்னைக்  கொண்ட  தென்றன்னைச்  சங்கரா யார்  கொலோ சதுரர் “  என்று  அருளியபடி  , கைம்மாறாக  ஏதும் கொடுக்க  இயலாதென்னும்  உண்மை அநுபவம் கைவரப் பெறுவர் . இவ் உண்மை அநுபவ நிலையிலே ,தாயுமான அடிகளும் , “சிந்தை மயக்கமறச்  சின்மயமாய் நின்றவுன்னைத்  , தந்தவுனக் கென்னயு நான் தந்தேன் பராபரமே “ என்று  அருளிச்செய்வாராயினர்  இவ்வுண்மை அநுபவத்திற்குச்  சிறிது  முற்பட்ட  நிலையே  கைம்மாறு  கொடுத்தற்கு  உரியதாகும் . இறைவனது இன்ப  அருள் அமுதை  ஓரோவழி  யுண்டு  , பிரிவு  நேர்ந்த  பொழுது  இங்ஙனம்  கருதுதல்  அன்பு  மேலீட்டால்  ஆவதாகும் . பிரிவு  நேர்தற்கு அடிகளுடைய  பண்டை வினைத்  தொடர்பு  ஓரளவு காரணமாயினும் , இறைவன் தன் அருளமுதின் நுகர்ச்சியில் அடிகளுக்கு  மேன்மேலும்  ஆர்வம்  விளைவிக்க  வேண்டு மென்னும் திருவுள்ளக் குறிப்பே  சிறந்த  காரணம்  ஆகும்  என்பது .

பாடல்: 41 .

இருகை  யானையை  யொத்திருந்  தென்னுளக்

கருவை  யான் கண்டி  லேன்கண்ட  தெய்வமே

வருக  என்று  பணித்தனை  வானுளோர்க்

கொருவ  னேகிற்றி  லேங்கிற்பன்  உண்ணவே .

கருத்துரை :- இதன் முன்னைப் பதிகத்து  இறுதித்  திருப்பாட்டில்  ஆண்டவன் பிரிவில் ஊனுடலைப்  பேணுதலையும்  , செந் நெறிச்  செலவைக்  கைவிட்டி ருக்கின்றமையையும்   கருதி வருந்திய  அடிகள் , அந் நிலையில் முன்னர்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ,  உண்மைப்  பொருளை  உபதேசித்துத் திருவடிக் காட்சி  யளித்து  இன்புறுத்திய  இறைவனது பெறற்கரிய  பேருதவியை  நினைந்தும் , அதற்குக்  கைம்மாறாக  எதனைக் கொடுக்கலாம்  என்று  ஆராய்ந்தும் , அப் பேருதவிக்குத் தகுதியான  கைம்மாறு  கொடுத்தற் குரிய  ஆற்றல் தமக்கு இல்லாமையை எண்ணியும், உண்முகமாக  முன்னிலைப் படுத்து  இப்பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்   கண்  அருளிச்  செய்கின்றார் .

பதவுரை :-  வான்  உள்ளோர்க்கு  ஒருவனே  =  வானுலகத்துள்ள  அமரர்க்கு  ஒப்பற்ற  முழு முதலே ,

யான் இருகை யானையை  ஒத்து இருந்து  =  நான் இரண்டு  கைகளையுடைய  யானையை  ஒத்து உயிர்  வாழ்ந்திருந்து ,

என் உள்ளக்  கருவைக் கண்டிலேன்  =  என் உள்ளத்தின்  உள்ளே  விளங்கும்  மூலப் பொருளாகிய  நின்னை நோக்கி உணர்ந்திலேன் ,

கண்டது எவ்வமே  =  யான்  கண்டது  துன்பத்தையே  ,

வருக  என்று  பணித்தனை  =  அங்ஙனமாகவும்  திருவடிக்காட்சி  நல்கி  வருக என்று  கட்டளை  இட்டனை ,

கிற்றிலேன்   =  அக் கட்டளைப் படி வருதற்கும்  அது குறித்துக்  கைம்மாறு  கொடுத்தற்கும்  ஆற்றல்  இல்லாதவனாயினேன்  ,

உண்ணக்கிற்பன்  =  மீண்டும்  பொறிவழி ப் புலனுகர்ச்சியின் தலைப்படுதற்கு   ஆற்றல்  உடையவனாகின்றேன்  என்பது .

விளக்கவுரை :-   இறைவன் , விண்  மண்  பாதாலம் என்னும்  மூன்றிடத்துள்ளார்க்கும் ஒத்த தலைவனே  யாயினும் , அம் மூவிடத்தும் உள்ளார்  முறையே  புண்ணியப்பயனையும்  , புண்ணிய  பாவப்  பயனையும், பாவப் பயனையும் நுகரும் இயல்பினராதலின் ,அன்னார் தகுதிக்கேற்பத் தன் இயல்பைப்  புலப்படுத்து விளங்குவன்  என்பது பெரியார் அநுபவத்திற்  கண்டது . இவ் வுண்மையை , “விண்ணோர் முழுமுதல் , பாதாளத்தார்  வித்து , மண்ணோர் மருந்து “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலும்  அறிக.  அமரர்  தொகுதியுள் தன்னையும்  ஒரு  தலைவனாகக்  காட்டி , அன்னார்  புண்ணியப்  பயனுக்குக்  காட்சி  யளித்து விளங்குதல் பற்றி , “வானுளோர்க்கு  ஒருவனே  “ என்றார்., “ விண்ணோர்  முழுமுதல் “ என்றதும்  இக் கருத்துப்  பற்றியே , புண்ணியப் பயனுக்கு  அணுக்கங்காட்டிய அருட் குறிப்பை  உணராத நிலையில் , அவ்வமரர்க்கும்  அறியப்படாதவன்  ஆவான் என்பதை , “தேவர் கோவறியாத  தேவதேவன்  “  என்னும்  பாடற்  பகுதியால்  விளக்கியிருத்தலும்  அறிக .

          இருகை யானை  –  இல்  பொருளுவமை  . ஒரு  கையினால்  மிகுதியான  உணவை  வாரி  வாரி  விழுங்கி ,உலகத்தில்  உள்ள  எல்லாப் பிராணிகளிலும் மிகுதியாக  பருத்திருப்பது யானை , ஒருகையிடைய  அவ் யானையினும் சிறக்க , உடற்கு  வேண்டிய  உணவுப் பொருள்களை ஈட்டி  , உண்டு , செருக்குற்று  இருக்கின்றமையால் , யான் இரண்டு  கைகளையுடைய  யானையை ஒப்பாவேன் என்பது தோன்ற  ,”இருகை  யானையை  ஒத்திருந்து”ஏன்றார். அத்துணை உடற் பருமைக்கு  வேண்டும் உணவு  முதலியவற்றை நல்கித் தன்னைப் பாதுகாக்கும்  பாகனது நன்றியை ஒரு சிறிதும் நினையாமல் ,யானை  அப்பாகனுக்கே கேடு  விளைக்கும்  இயல்பினதாகும் . “ யானை யனையவர்  நட்பொரீஇ  நாயனையார். கேண்மை  கெழீஇக் கொளல்  வேண்டும்  – யானை, அறிந்திருந்தும்  பாகனையே  கொல்லும் “ என்பது நீதி நூல் . ஆண்டவன்  , தன்னை வழிபடுதற்கு உதவிய  உடலை  , அந் நெறியிற்  பயன்படுத்தாமலும்  , அப் பெருமானது நன்றியை  மறந்தும் ,ஆக்கைக்கே  இரை தேடி  அலமந்திருத் தலின்  , இருகை யானைக்குத்  தம்மை  ஒப்பிட்டுக்  கூறியருளினர் . இனி, யானையை  ஒத்திருந்து கண்டிலேன்  எனக்  கூட்டி  , யானை  தன்  உடலை  அறியாததுபோல் ,யான்  உள்ளக் கருவைக்  கண்டிலேன்  என்பது  கருத்து  எனக்  கூறுவாரும்  உளர் . வாழ்க்கையின்  சிறந்த  குறிக்கோளாகிய  கடவுட்  காட்சியைப் பெறாது , வறிதே  உடலோம்பி யிருக்கின்றேன்  என்பார். “இருந்து” என்றார். “ உள்ளக் கரு  “ என்றது , உயிர்க்கு  உயிராக  விளங்கும்  முதல்வனைக் குறிக்கும் . கரு – காரணம் .  உலகிற்கு இறைவன் நிமித்த  காரணன் ஆதலின் , “கரு” என்னும்  சொல்லால்  குறிக்கப்பட்டான் . நிமித்த காரணனாய் , உயிர்க்கு  உயிராக  நின்று  பாசகக்  கட்டை  ஒழித்துப்  பேரின்பம்  நுகர்விக்கும்  முதல்வனது  பேருதுவியை நினைந்து வழிபடுதலே  உயிராற்  செய்யத் தக்கது , அங்ஙனம்  செய்யாது , ,புலன்களின்  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டு  , உடல்  ஓம்புதலையே   குறிக்கோளாகக்  கொண்டேன் என்பார் , “ என்னுள்ளக்  கருவை  யான் கண்டிலேன்  கண்டது எவ்வமே “ என்றார். “கண்டிலேன்  என்றது ,உதவியை  நினைவு  கூர்ந்திலேன் என்னும்  பொருட்டு . “எவ்வம்” என்றது , இன்பம் போற் காட்டித்  துன்பமாக  முடியும் புலன் நுகர்ச்சிகளை , அவ் எவ்வத்தைக் காண்பதாவது , அந் நுகர்ச்சிக ளையே   பொருளென மதித்து  மேற்கொள்ளுதல் . யானை தன்னை நன்நெறிப்  படுத்தும்  பாகன்  உதவியை  நினைவு  கூறாது  , அவனைத் துன்புறுத்தி மதச் செருக்கால் புலன் நுகர்ச்சிகளில்  தலைப்படுதல்  போல, தனக்கு  மூல  காரணனாக நின்று  பேருதவி  புரியும்  இறைவன்  அருள் திறத்தை நினைவு கூறாது , அவனுக்கு  இடனாக உள்ளத்தைப்  பொறிவழிப்  போக்கி , இன்பமெனக்  காட்டித்  துன்பமாக  முடியும்  புலன்களில்  தலைப் படலானேன் என்பது இவ்விரண்டு அடிகளானும் பெறப்படும் கருத்தாம் என்க.  தம்  உள்ளத்தைப்  பற்றி நிற்கும்  இறையருளை  நினையாமல்  , அவ்வுள்ளத்தைத்  தீய  வழிகளில்  செலுத்தும் கொடியவன் என்று  தம் இயல்பை அறிந்தும் , வேறாது ,இன்பமயமாகவுள்ள  தன் பக்கலை அணுகுமாறு ஞானாசிரியன்  வடிவமாக எழுந்தருளிக்  கட்டலையிட்ட  பெருமையைப்  புலப்படுப்பார் , “வருக என்று பணித்தனை “ என்றார் . “வன்ணப் பணித்தென்னை  வா வென்ற  வான் கருணை “ என்று  பிறிதோரி டத்து   அடிகள் அருளிச் செய்ததும் அறிக .  பணித்தல் – கட்டளையிடுதல் . “வருக” என்னும் வியங்கோட்  சிறப்பால் , இறைவன்  மெய்யன்பர்  மாட்டு   வைத்திருக்கும் பெருங் கருணைத்திறம்  புலனாம் .

            “கிற்றிலேன்”  என்னும்  சொல் , ஆற்றலை உணர்த்தும்  கில்  என்னும்  இடைச்  சொல் அடியாகப் பிறந்த எதிர்மறை வினை முற்று ,”கிற்பன்”  அங்ஙனமாய உடன்பாட்டு  எதிர் கால  வினை முற்று .ஒருவன் தனக்கு  நலம்  செய்வான்  ஒருவனை  வெறுத்துத்  தீங்கு செய்பவனை அறியாமையாற்  பின் பற்றி  , அலைந்து திரிந்து பயன் ஒன்றும்  காணாமல்  துன்புற்று  , மீண்டும்  அந் நலம் புரிவோனை அணுகுதற்கு  நாணி ஒதுங்கிச்  சேறல்  உலகியலிற்  கண்டது . அங்ஙனம் ஒதுங்கிச் செல்வோனை , அந்நல்லோன் கண்டுழித்  தன் கருணையால் தான் அவனுக்குச்  செய்யத்தக்க  உதவியைக்  குறிக்கொண்டு, “வருக” என்று  அழைத்தல் போல , தன்னை  நினையாதிருந்த  என்னை  நலஞ் செய்வான் திருவுளங்  கொண்டு இறைவன் அழைத்தனன் என்பது . “வருக” என்னும்  சொல்லால் பெறப்படுவதாகும் . அங்ஙனம் பேரானந்தப் பெருஞ்  செல்வத்தை அருளுதற் பொருட்டு வலிந்து ,”வருக” என்று  பணித்த  பேருதவிக்குக்   கைம்மாறு  யாது  செய்ய  வல்லேன்; ஏதும் செய்தற்கு ஆற்றல் இல்லாதவனாக  உள்ளேன் என்பார் , “ கிற்றிலேன்” என்றார். இனி, அங்ஙனம்  வலிந்து அழைத்தும் , அப் பேரானந்தப் பெருஞ் செல்வத்தை அடைதற்கு  அணுக ஒருப்பட்டிலேன்  என்பார் , “கிற்றிலேன்” என்றார். எனினுமாம் , கிற்றிலேன்  என்பது, ஆற்றல்  இல்லேன்  என்னும் பொருள் பயக்குமாயினும், ஈண்டு  இலக்கணச் சொல்லாக நின்று  , வருதற்கு  உடன்  பட்டிலேன்  என்னும்  பொருள் பயந்து நிற்பதாகும் .  இறைவன்  திருவருள் அமுதத்தை உண்ணுதற்கு ஒருப்படாமல் , உடலோம்பி , இழிந்த பொறி இன்பங்களை  நுகர்தற்கு  ஆற்றல்  உடையேனாக  இருக்கின்றேன்  என்பார், “உண்ணவே கிற்பன் “என்றார். ஏகாரம்  தேற்றப் பொருட்டு . ஈண்டு  உண்டல்  , இழிந்த  போகங்களை நுகர்தல் . உள்ளக்கருவைக் கண்டு ,அக் கருவின் வழி நின்று , அழி வில்  இன்பம்  நுகராமல் துன்பம்  நுகரும் பொருள்களில் தலப்பட்டு , அழியும் இயல்பினவாகிய  இன்பங்களை நுகரத் தலைப்படுகின்றேன் ; என் அறியாமை இருந்தவாறு என்னே !  என்பது  கருத்து .

           இதன்கண், “என்னுளக்  கருவையான்  கண்டிலேன் “ என  இறைவனைத்  தாம் நினையாதிருந்த  நிலையிலும்  ,”வருக” என்று  பணித்த  பேருதவிக்குக்  கைம்மாறு  செய்யும்  கடப்பாடு  உடையனாக  இருந்தும் , அதற்கு  ஆற்றல்  இல்லாதவன்  ஆயினேன்   என்பதனால் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  , “என்னுளக்  கருவை” ,  “ வானுளோர்க்கு  ஒருவனே  என்பவற்றால்  பத்தி விசித்திரமாகிய  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக . 

                                            **************************************

பாடல் : 42 .

உண்டோர்  ஒண்பொருள்  என்றுணர்   வார்க்கெலாம்

பெண்டிற்  ஆண்  அலி  என்றறி   யொண்கிலை

தொண்ட னேற்குள்ள  வாவந்து   தோன்றினாய்

கண்டுங்  கண்டிலேன்  என்னகண்  மாயமே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவனை நினையாதிருந்தும் , வருக என்று  பணித்த அருள்திறத்தைப்  பாராட்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அவ் இறைவன்  தன்  கட்டளைப்படி  வாராதிருந்த  என்பால்  தானே  வந்து , பிறர்க்கெல்லாம்  இப்படியன்  என்று  உணர  வொண்ணாத  தன் உண்மைத்தன்மை இயல்பு காட்டிக்  காட்சியளித்த  பேருதவியைப் பாராட்டுகின்றார். முன்னைத்  திருப்பாட்டில்  , “வருக என்று பணித்தனை” என்பதும் , அக் கட்டளைப்படி  வாராமையால்  , இத் திருப்பாட்டில்  தானே வந்து தோன்றினான்  என்பதும் ஆகிய  இயைபு  கருதத்தக்கது.  

பதவுரை :-  ஓர்  ஒண்பொருள் உண்டு  என்று  உணர்வார்க்கு  எல்லாம்  = 

ஒரு சிறந்த  முதற்பொருள்  அழிவிலதாக  உள்ளது  என்று  பொது வகையில்  உணரும் அன்பர்களுக்கெல்லாம் ,

பெண்டிற் ஆண் அலி என்று அறிய ஒண்கிலை  =  அப் பொருள் பெண்ணென்றாதல்  ஆணென்றாதல்  அலியென்றாதல்  இன்னது  எனத்  துணிந்து  அறியமுடியாத  நிலையில்  உள்ளாய் ,

தொண்டனேற்கு   =  அடிமையாகிய  எனக்கு  ,

உள்ளவா  வந்து  தோன்றினாய்  =  உண்மைத் தன்மை இருந்தபடி எழுந்தருளி  வந்து காட்சிதந்து  அருளினாய் ,

கண்டும்  கண்டிலேன்  =  அங்ஙனம்  அருளிய  உண்மை இயல்பைக்  கண்டு வைத்தும்  காணாதவன்   ஆயினேன்  ,

என்ன கண் மாயம்  =  இதென்ன  கண் மயக்கமோ?  என்பது .

விளக்கவுரை :- “ஓர் ஒண் பொருள்”  என்புழி, ஓர் குறுகி  நின்றது .  தனக்கு  ஒப்பதும் , மிக்கதும் , பிறிதொன்று  இல்லாத  பரம் பொருள் என்பது தோன்ற , “ஓர் ஒண்பொருள்” என்றார். ஒருமை  தனிச்சிறப்பையும்  ,ஒண்மை இயற்கை உணர்வினன்  ஆதல்  முதலிய   எண் குணங்களையும்  குறிப்பனவாம் . இவ்விரண்டு  அடை மொழிகளும்  முதற்பொருளின்  சிறப்பியல்புகளை  நன்கு  புலப்படுத்து நிற்றல் அறிக . ஓர் உயிர் இழிந்த பல பிறவிகளினின்றும்  நல்வினைப் பயன் காரணமாக , மேன்மேற்  சென்று  அரிதின் அடைந்த  மக்கட்  பிறப்பில்  , “தெய்வம்” என்பதோர்  சித்தம்  உண்டாகப் பெறுதல் அரிது  . இது குறித்தே, “தெய்வம் தெளிமின்” என்பது சிலப்பதிகார  முடிவுரை. மக்கள் முதலிய  உயிர்த் தொகுதிகளின்  ஆற்றளினும்  எத்துணையோ சிறந்த ஆற்றலின்  விளைவைக்  காணுங்கால் , இது  கடவுள் தன்மை என்னும்  முடிவுக்கு  வருகின்றோம் . அந் நிலையில் அக் கடவுள் இயல்பை  நூல்  வாயிலாக  அறிந்து , அநுபவ வாயிலாக  உணரத் தலைப்படுவார்க்கு , அக் கடவுட் பொருள் ஒன்றாகவும் , இயற்கை உணர்வு முதலிய அருட்குணங்களு டையதாகவும்  தெளியப்படும் . தெளிந்த பின்னர் ,அப் பரம்பொருளின் உண்மைத் தன்மை , அகக்  காட்சிக்கும் , புறக்காட்சிக்கும்  ஒத்த  நிலையில்  எங்ஙனம் அறியப்படும்  எனின் , அது மாற்ற  மனங்கழிய நின்ற  நிலையாதலின்  , மெய்யுணர்விற்கு  நேர்படுவதல்லது வேறு வகையான் உணர்தற்பால தன்று .

            பின்னர் ,”பெண்டிர்   ஆண்   அலி “  என்று  அறியமுடியாதது என்றதற்கு  ஏற்ப ,”பொருள்” என்னப்பட்டது . இங்ஙனம்  முதற்பொருள் ஒன்று உண்டு என்று தெளிந்தார் சிலராக , அன்னாரும்  அத்தகைய  காட்சிப்படும்  நிலையில் பெண்ணென்றாதல் , ஆணென்றாதல் அலியென்று ஆதல் அறிய வொண்ணாத  தன்மை உடையையாய்  உள்ளாய்  என்பார், “ பெண்டிற் ஆணலி  யென்றறி யொண்கிலை “என்றார் . இறையருள் பெற  முயல்வார்க் கெல்லாம் , அருள் வடிவினளாகிய  அம்மையை முதலில்  வழிபட்டு , அவள் காட்ட, அப்பனைக் காண்டல்  முறையாகும்  . கோநோபநிடதத்தில் , இயக்க உருவம் தாங்கி  வந்த இறைவனை அக்கினி முதலாக இந்திரன் இறுதியாக வுள்ளார்  அறியாமல்  மயங்கி நிற்புழி , உமையம்மையார் தோன்றி , அது பரம்பொருள் என்று தெளிவுறுத்திய செய்தியும் இதனை வலியுறுத்துவதாகும் “அவனருளாலே  யவன் தாள் வணங்கி “ என்பதும்  அது. இங்ஙனம் , இன்ன  தன்மையன் என்று அறிய முயல்வார்க்கு , முதற் குறிப்பு அம்மையைப்  பற்றி  நிகழும்  ஆதலின் முதலிற் “பெண்டிர்”  எனவும், அடுத்து , “ஆண்”  எனவும் , கூறப்பட்டன. உலகம் , அவன் , அவள் , அது  எனும் முக்கூற்ற தென்ப. உயர்திணை  ஆணும்  பெண்ணும் அல்லாத  அஃறிணைப் பொருளை ,”அது” என்பது புலப்படுக்கும் . அவ்வுலகெலாம் ஆகி நிற்கும் இறைவன் , அம் முக்கூற்றுள் யாதன்பாற் படுவன்  என்று ஆராய்வார்க்கு  , அவற்றுள் ஒன்றன் பாற் படுபவன் அல்லன் ; அவ்வெள்ளமாய்  , அல்லதுமாய்  விளங்குபவன்  என்னும்  உண்மை  பெறப்படும் . அம் முக்கூற்றுள்  அஃறிணைக்குத்  தனியே  ஒன்றை எடுத்துக்காட்டாமல் , அலியைக்  கூறியது ஒரு  நயம்  கருதி என்க. அலி , ஆண் தன்மையும்  பெண் தன்மையும் திரிந்த உருவமாகும் .இதனைத் தன்மை திரிபொருள்   எனக் கொண்டு  , பொருள் வகையான் உயர்திணைக் கண்ணும் , சொன்முடிவால்  அஃறிணையுள்ளும்  அடக்கிக்  கூறுவர் . “தொல்காப்பியனார் , இதனால் அலி உயர்திணையாகவும்  அஃதல்லாத தாகவும் நிற்கும்  என்பது பெறப்படும் . இங்ஙனமே எல்லாமாய்   அல்லதுமாய் நிற்கும் இறை இயல்புமாம் என்பது  புலப்படும்  என்க.  இது கருதியே, ”பெண்ணாகி ஆணாய் அலியாய் “ எனப்  பலவிடத்தும்  அலியை  இயைத்தே  அடிகள் கூறியருளினர்  என்க.  இம்முறை  பிறழ்ந்தும்  ஓரோவழிக்  கூறுவர் ; கருத்து வேறுபாடு  கண்டு .

            ஓர் ஒண் பொருள்  உண்டு என்று  அறியும் அறிவு கைவரப் பெறுதலே அரிது . அங்ஙனம் பெற்றார்க்கும் நின் உண்மைத் தன்மை இன்னது என வரையறுத்துத்  தெளிதற்கு உரிய நிலையில்  காட்சிப்படுவாய்  அல்லை என்பார் , “என்று அறியொண்கிலை “ என்றார். அறிய  என்னும்  செயவென்  வாய்ப்பாட்டு  வினையெச்சத்து ஈறு தொக்கு, “ஆறியொண்கிலை” என்றாயிற்று . இங்ஙனம்  முற்றறிவு  முதலிய  குணங்களும் , தனிமைச் சிறப்பும்  உடைய கடவுட் பொருள் ஒன்று  உண்டு  என்று அறியும்  தத்துவ   ஞானிகளுக்கும் , பெண்  ஆண் அலி யென்னும்  இக் கூறுகளில் வைத்து இன்னதென்று  அறியவொண்ணாத நீ, சிற்றறிவுடைய தொண்டனாகிய எனக்கு நின் உண்மைத் தன்மை  இன்னதென உள்ளவாறு  காட்டி  வெளிப்பட்டு அருளினை என்பார், “தொண்டனேற் குள்ளவா வந்து தோன்றினாய்” என்றார்.

           முன்னைத் திருப்பாட்டில் குறிப்பிட்டபடி ,” வருக” என்று  அருளா  நிற்கவும் , அக் கட்டளைப்படி செல்லாதிருந்த அக் குற்றத்தையும் பொறுத்து, ஆண்டவன் தானே தமக்கு வலிய வந்து காட்சியளித்தனன் என்பார் , “ வந்து தோன்றினை “ என்றார். இஃது அருமையில்  எளிய  அழகுகளில் ஒன்றாகும் என்பது கருத்து. அடிகள்  தம்மைக் குறிப்பிடுங்கால்  , “ஆடியேன் “ , “தொண்டன்”  என்று  கூறிக்கொள்வதிலே பெரிதும்  விருப்பம் உடையவர் என்பது வெளிப்படும் . ஆண்டவன்  கட்டளைவழி நிற்பதல்லது , அடிமைக்கு என  யாதும்  இன்மையாலும், “ நன்றே செய்வாய்  பிழை செய்வாய்  நானோ  இதற்கு பொறுப்புக்களையும்  வீட்டுச்  சுவை நீங்கி , இறையருள் வழி நின்று  அமைதி பெறுதற்கு அவ்வடிமையே சிறந்ததொன்று ஆகலானும், திருத் தொண்டில்  உறைந்து நிற்பாராயினர் , “மறைத்திற  நோக்கி  வருந்தினர்க் கொளித்தும் ,இத் தந்திரத்திற் காணடுமென்றிருந்தோர்க்கு , அத் தந்திரத்தின் அவ்வயின்  ஒளித்தும்” என்றபடி , மறை ஆகமங்கொண்டு  காணமுயல் வார்க்கு , இறைவன் தன் இயல்பைப் புலப்படுத்தாமல் இருக்கலாம் . அன்னார் நூலறிவிற் செருக்குற்று இருக்கின்றமையின் ,மெய்த் தொண் டர்க்கு உண்மைத் தன்மை மறைக்கப்படுமாயின்  அந் நிலையிற்  காட்சிப் படுவதையே  ஆராயாமற் கடைப்பிடிப்பர்  ஆதலானும் , அஃது இறையருள் இயல்பிற்குக்  குறையாகும்  ஆதலானும், உள்ளபடி காட்சிப்படுதலே அருள் உருவினர்க்கு  முறையாகும் ஆதலானும் , அவ்வாறு  தமக்குக்  காட்சிதந்து  வெளிப்பட்ட  பேருதவியை  நினைந்து ,”தொண்டனேற்கு  உள்ளவா  வந்து  தோன்றினாய் “ என்றார். உள்ளவாறு  தோன்றுதல் – எல்லாமாய்  அல்லதுமாய் யிருக்கும் தன் உண்மைத் தன்மை புலப்பட ஞானாசிரியனாக  வெளிப்பட்டு  அருளுதல் . அங்ஙனம் காட்சி அளித்து ஞானோபதேசம் செய்த பரமபதி , ஆண்டே மறைந்து நிற்ப  , அது கண்டு வருந்திய அடிகள் , “கண்டுங் கண்டிலேன் “ என்றார். கண்ணிழந்தவன் முன்னைத் தவத்தால் தனைப் பெற்று  மீண்டும் இழத்தது  போல ,பண்டை நல்வினைப் பயனாக ஞானாசிரி யனாக  இறைவன் வெளிப்பட்டு அருளப்பெற்ற  அடிகள் , அக்காட்சி  கரந்த பொழுது துடிதுடித்துக் கதறியழுதார்  என்பது , “என் தலைவனை நனி காணேன் ,தீயில்  வீழ்கிலேன்  திண்வரையுருள்கிலேன்  செழுங்கடல் புகுவேனே” என்பது  முதலிய  பாடற் பகுதிகளால் அறியலாம் . அரிய பொருளைப் பெறாத நிலையில் ஏற்படும் வருத்தத்தைவிடப்  பெற்று  இழந்த நிலையில் ஏற்படும் துன்பம் பெரிதாகுமாதலின் , “கண்டுங் கண்டிலேன் “ என்று   தம் துன்ப மிகுதியைப் புலப்படுத்தார் என்க .

       இறைவன்  காட்சியில்  ஈடுபட்டுத் திளைத்துக் கொண்டிருக்கும் பொழுதே  அது கரந்ததாகலின் , “என்ன கண்மாயமே” என்றார். கண் மாயம் – கண் கட்டு வித்தை . இல்லாத ஒரு பொருளை இருப்பதாகக்  காட்டியும் , கண்ட பொருளைக் காணாவாறு செய்வதும்  கண் கட்டு வித்தை என்பர் . அங்ஙனமே , காண்டற்கு அரிய பொருள் காட்சிப்படக்கிடைத்தும் , கிடைத்தது உடனே மறைந்தும் ஆகிய அந் நிகழ்ச்சியைக்  குறித்து ,  “என்ன கண்மாயமே” என்றது பொருத்தமே . அன்றிக் கண்மாயம்  என்பதற்குக் கண் மயக்கம் எனக் கொண்டு என் கண் மயக்கம் இருந்தவாறு என்னே  யென்றலுமாம் . ஈண்டு , இறைவன் அழிவில்லாத  பொருளாதலால் , அவன்  காட்சி  மறைத்தற்குத்  தம் அகப் புறக்  கண்களின் குற்றமே காரணமாகலாம்  என்பது கருத்து.

          இதன்கண், “தொண்டனேற்கு  உள்ளவா  வந்து தோன்றினாய்”  என்றதனால்  இப் பேருதவிக்கு யான்  செய்யுங் கைம்மாறு  காணேன் என்பது பெறப்படுதலின் , கைம்மாறு  கொடுத்தல் என்னும்  பதிக நுதலிய பொருள்  புலனாதல்  அறிக.

                                              *************************************

பாடல் : 43 .

மேலை  வானவ  ரும் அறி  யாததோர்

கோல  மேயெனை  யாட்கொண்ட  கூத்தனே

ஞால  மேவிசும்  பேயிவை  வந்து  போங்

கால  மேயுனை  யென்றுகொல்  காண்பதே .

கருத்துரை :-   இப் பதிகத்தின்  முதல்  திருப்பாட்டில்  இறைவன்  “வருக” என்று  பணித்தனனாக , அக் கட்டளையின்  அருமைப்பாட்டை பொருட் படுத்தா திருந்தேற்குத் தன் உண்மைத் தன்மை இயல்பு காட்டித் தானே வந்து எளிமையில் வெளிப்பட்டருளினன் எனக்  கூறிய  அடிகள் , அவ்வளவின்  அமையாது , பாசப்பிணிப்பையும் அறுத்து , அறிவு தந்து ஆட்கொண்ட  அப்பெருமான் அருள்திறத்தில்  ஈடுபட்டுத்  தேடுகின்றார்.

பதவுரை :- மேலை வானரும்  =  மிக உயர்ந்த பதங்களில்  உள்ள  தேவர்களும் ,

அறியாத  ஓர்  கோலமே  =  அறியப்படாதது  ஆகிய  ஒப்பற்ற  திருவுருவமே ,

என்னை  ஆட்கொண்ட  கூத்தனே  =  எளியேன்  ஆகிய  என்னையும்  அடிமை கொண்ட  கூத்தப்பெருமானே ,

ஞாலமே  விசும்பே  இவை  வந்து போம் காலமே  =  மண்ணும்  விண்ணும்  தோன்றி  ஒடுங்குதற்குக்  காரணமான  காலவடிவமான  பெருமானே ,

உனைக்  காண்பது என்று =  அரிய  பொருளாகிய  நின்னைக்  காண்டல்  எப்பொழுதோ?  என்பது .

விளக்கவுரை :-  வானவர்  என்ற  அளவிலே , தேவர்  என்பது  பெறப்படுவதாக, ஈண்டு மேலை வானவரென்றது , இந்திர  பதத்திற்கு  மேற்பட்ட  பிரமபத முதலியவற்றில்  உள்ள  தேவர்களைக் குறிக்கும் . அன்னார்  இறைவனுடைய   அதிகாரநிலையங்களில்  தலைவராக  இருக்கின்றமையின் , அவ் வணுக்கம்  பற்றி  அவர்களுக்கு  அறிதற்கு எளியனோ என்று  கருதுவார்க்கு , அவர்க்கும்  தன்  உண்மைத் தன்மை இயல்பு அறிய வொண்ணாத  நிலையில் உள்ளான் என்பதைப்  புலப்பட வைத்தற்கு , “மேலை வானவரும் அறியாதது” என்றார். “வானோர்க்கரிய  மருந்தே” என்பது அடிகள் திருவாக்கு . வானவரும் என்புழி , உம்மை சிறப்புப் பொருளில்  வந்தது, பிரம பத முதலிய அதிகார  நிலையத் தலைவர்களாலும் , இறைவன்  இயல்பு அறிய வொண்ணாதது என்பதை “பங்கயத் தயனுமால் அறியா நீதியே “ என்பது முதலிய புராண கதையை யுட்கொண்டு  கூறிய  அடிகள்  திருப்பாடற் பகுதிகளாலும்  அறிக.  தகுதி வாய்ந்த பெரிய  அமரர் தலைவராலும்  காண்டற்கரியது என்றதனால் , இஃது இன்மைப் பொருளைப் பற்றிய  செய்தியாகுங்கொலோவென்று  ஐயுறல் ஆகாது  என்பார்,“ஓர் கோலமே” என்றார். அக் கோலம்  யாண்டுங் கண்டறியப் படாதது  ஆகிய  ஞானாசிரிய வடிவமாகும் . “கோலம்”  அழகு  என்னும் பொருள் தரும் . ஆதலின், அருமையில் எளிய அழகுக்கு எல்லையாக  விளங்கிய  அவ்வுருவத்தில்  தாம்  ஈடுபட்டதை  அடிகள் மனம் உருகிப்  பாராட்டியுள்ளார் . “கோலங்காட்டி யாண்டானை” என்பர்  பின்னும் , பேரழகு  வாய்ந்த  இறைவனது ஞானாசிரியத் திருக் கோலத்தில்  ஈடுபட்டு அணுகி யதும் , இறைவன் ஞானோபதேசம்  செய்து ஆட்கொண்டான் என்பது தோன்ற “என்னை  ஆட்கொண்ட  கூத்தனே “ என்றார். உயர்ந்த  தேவராலும்  அறியப்படாத திருக்கோலமுடைய  பரமசிவன் , அத் தேவர்  முதலிய  யாவரும்  யாவும்  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்து , அவ் எல்லோரையும்  எல்லாவற்றையும்  ஒடுக்கிக்கொண்டு  , தான் ஒருவனே  அழிவிலாப்  பொருளாக  நின்று  , படைத்தல் முதலிய  ஐந்தொழிற்கும் தானே தலைவன்  என்பது புலப்பட  , அருட் கூத்து இயற்றும்  பெற்றியன்  என்பது தோன்ற  , “ஆட்கொண்ட  கூத்தனே” என்றார்.  ஐந்தொழில்  திருக்கூத்து  இயற்றும் ஆண்டவன் திருவுருவைக் காண்டலினும், ஞானாசிரியனாக  எழுந்தருளிக் காட்சி தரும் நிலை காண்டற்கு  அரியது என்பது தோன்ற  , ஆட்கொண்ட  கூத்தனே எனக்  குணிப் பொருளாகவும்  “அறியாததோர்  கோலமே “ என  குணப்பொருளாகவும்  கூறியருளினர் . கூத்தன்  என்பதிற்  கூத்து , ஆடலாகிய  வினையை உணர்த்தும் . ஆதலின் , கூத்தன்  என்பது அவ்வினைப்பண்பை உடையான் என்று  குணிப்பொருளாகவும்  , “ கோலம்” என்பது அழகு . உருவம் என உடைமை அளவில் நிற்பதால் , குணப்பொருளாகவும் அறிதல் வேண்டும்   அறிதற்கு அருமை , கோலத்திற்குக் கூறப்பட்டமையால் , கூத்தனாம் நிலை அதனிற்  சற்று எளிமை உடைத்து  என்பது பொதரும் .  படைப்பு  முதலிய எல்லாவற்றையும் குறிக்கும் கூத்தாடல் , யாவரும் காண, “ஐயர் தாம் வெளியே  ஆடுகின்றாரை” என்றபடி , பொது வெளியில் நிகழ்வதாகும் . ஞானாசிரியனாக எழுந்தருளிப் பக்குவம் உடையார்க்கு உபதேசித்தல்  தனிமையில் நிகழ்வதாகும் . இவ் வுண்மையும்  மேற் காட்டியதற்குச் சான்று  ஆதல் அறிக.  

          “ஞாலம் விசும்பே” என்புழி, ஏகாரம்  எண்ணுப்பொருளில் வந்தன. இவற்றை இறைவனைக் குறிக்கும் விளியாகக் கொண்டு பொருள் கூறுவர் சிலர் . பின், இவை என்னும் அஃறிணைப் பன்மைச்  சுட்டு  உண்மையால், மண்ணும் விண்ணும் ஆகிய  பூதங்களை உணர்த்துவனவாகக் கோடலே பொருந்தும் என்க .பூதங்களுள்  முதலும் இறுதியும் கூறியது கொண்டு , நடுவண் உள்ள நீர்  தீக்  காற்று என்னும் இவற்றையும் கொள்ளல் வேண்டும். ஐம்பெரும் பூதங்களும் உபலக்கணமாக  நின்று , ஆன்ம  தத்துவங்கள் எல்லா வற்றையும் புலப்படுக்கும் . எல்லாத் தத்துவங்களும்  காரியப்பட்டுத் தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும் காரணமாக உள்ளது  கால தத்துவம் என்ப. வந்து போதல் – தோன்றி ஒடுங்குதல் . கால தத்துவம் , ஆன்மாக்களுக்குத் தொழில் , அறிவு , இச்சைகளை முறையே விளக்கி உபகரிக்கும்  கலை , வித்தை ,அராகம் என்னும் வித்தியா தத்துவங்களையும் தன்னுள் அடக்கி  மேல்நிற்பதாகலானும் , பேரூழிக் காலத்து எல்லாம் ஒடுங்கிய ஞான்று , இறைவன் ஒருவனே அக்காலத்தின் இறுதியில் விளங்குபவன் ஆதலானும், அக் காலத்தோடு ஒற்றுமைப்படுத்து , “காலமே” என்று  விளிக்கப்பட்டுள்ளான்  உண்மையில் , காலத்தையும் கடந்த தனிப்பொருளாக நிற்றலின் ,இறைவன் கால காலன் ஆவான் . ஆன்மதத்துவங்களுக்குக் காலம் இறுதியாக உள்ளது ஆகலின் , அத் தத்துவங்களானாய  உடம்போடு கூடிய உயிர்களின் இயல்பு நோக்கி , இறைவனைக் “காலமே”  என்றார் . மேல், “கழிதரு  காலமுமாய்  அவை  காத்தெம்மைக் காப்பவனே” என்று கூறியதன்கண்ணும்  இவ் வுண்மை காண்க.  இனி, அசுத்தமாயா தத்துவம் ஆகிய காலம் காரணம் ஆகலானும் , அது சிவதத்துவங்களின் அணிமையில் உண்மையானும் , அது பற்றிக்  “காலமே” என்றார் எனினும் ஆம் .

          “என்றுகொல் காண்பதே “ என்புழி , என்று என்பது காலத்தைப் பற்றிய வினாவாகும் , கால தத்துவத்தின் எல்லையே  பெரிதாக ,அதனையும் கடந்து  கால காலனாக நிற்கும் நின்னை, இவ் வுடம்பு முகந்து நின்ற மிகச் சிறுகால எல்லையுள் வைத்து எங்ஙனம் காண்பேன் என்பார், “என்றுகொல் காண்பதே” என்றார்.  காண்பது , தொழில் அளவில் நின்றது  . கொல்  – அசை .

           இதன்கண், மேலை  வானவரும்  அறியாதோர் அரிய திருக்கோலத்தைக் காட்டி ஞானோபதேசம் பண்ணி ஆட்கொண்டு அருளியக்  கூத்தப்பெரு மானே  என்றதனால் , அப் பெருமானது பேருதவிக்குக் கைம்மாறு  கொடுத்தல்  ஆற்றேன்  என்பது. பெறப்படுதலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய பொருளும் , “ஊனையென்று கொல் காண்பதே “ என்றதனால் , சதகம் நுதலிய பத்தி விசித்திரப் பொருளும் புலனாதல்  அறிக .

                                                  ************************************

பாடல் : 44 .

காண  லாம்பர  மேகட்  கிறந்ததோர்

வாணி  லாப்பொரு  ளேயிங்கொர்  பார்ப்பெனப்

பாண  னேன்படிற்  றாக்கையை  விட்டுனைப்

பூணு  மாற்றி  யேன்புலன்  போற்றியே.

கருத்துரை :-  மேலை வானவரும் அறியாத ஓர் கோலம் என்றும் , அதனை என்றுகொல்  காண்பது என்றும்  முன்னைத் திருப்பாட்டில்  கூறிய அடிகள் , அக்கோலம்  காண்டற்கு உரியதோ  காணொணாததோ  என்று நினைவார்க்கு  விடையையும் அடைதற்கு அதனைத் தாம் விரைதலையும்  இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.  

பதவுரை :-  காணல்  ஆம்  பரமே  =  சிவ ஞானத்தாற்  காண்டற்கு உரியதாகிய  பரம்பொருளே ,

கட்கு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே  =  கட்புலனாற்  பற்றப்படாவாறு கடந்து நிற்பதாகிய  ஒப்பற்ற ஒளிப்பழம்பாக வுள்ள பொருளே ,

இங்கு  ஓர்   பார்ப்பு  என  = இவ்விடத்து ஒரு பறவைக் குஞ்சு  (கூடு  அல்லது முட்டை தனித்து வறிதே கிடப்ப  அதனின்றும் பறந்து சேறல் ) போல,

பாணனேன்  =  வீனன்  ஆகிய யான் ,

புலன் போற்றி  =  சுவை  ஒளி ஊறு  ஓசை நாற்றம் ஆகிய  ஐம்புல இன்பங்களையும் பரிகரித்து ,

படிறு  ஆக்கையை  விட்டு  உன்னைப் பூணுமாறு  அறியேன் = பொய்யாகிய இவ்வுடலை விட்டு வெளிப்பட்டு  மெய்யாகிய நின்னைப் பொருந்தும் நெறியை அறியாதவன் ஆகின்றேன் என்பது.  

விளக்கவுரை :-  இறைவனது பரம் பொருள் தன்மை , மன  மொழிகளைக் கடந்த தொன்று  ஆகலின் , கட்புலனாற் காணத்தக்கது அன்றாம் . அப் பெருமானது ஒளிமிக்க உருவம் ஒருவாற்றால் கட்புலனாற் காணத்தக்கது ஆகும் . அங்ஙனமாகவும் , பரம் பொருள் தன்மை காணத்தக்கது எனவும் , ஒளிஉருவம்  கட்புலனாற் காணத்தக்கது எனவும் கூறியதன் கருத்து ஆராயத்தக்கது . இறைவன் , பசு ஞானங்களால் காணப்படாதவன் எனவும் , பதி ஞானம்  ஆகிய சிவஞானம் ஒன்றாலே  காணத்தக்கவன்  எனவும் சைவ  நூல்கள் கூறும்  , “ஊனக்கண் பாசமுணராப் பதியை , ஞானக் கண்ணினிற் சிந்தை  நாடி”  என்னும்  சிவஞானபோத  சூத்திரத்தாலும் , அதன் விளக்கம்  ஆகிய  “பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய  பரம்பரனைப் பதி ஞானத்தாலே,நேசமொடும் உள்ளத்தே  நாடி” என்னும் சிவஞான சித்தியானும்  அறியலாம் . நூல்கள் முகமாக நிகழ்வது பாச ஞானம் எனவும் , நான் பிரமம் என்று  மதிக்க வருவது  பசுஞானம் எனவும்  கூறுவர். இவ்வுண்மையை ,” வேதசாத்திர மிருதி புராண கலைஞானம் ….. நாத முடிவான வெலாம்  பாசஞானம் “ எனவும் , “காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம்  கருது பசு ஞானம் “ எனவும் கூறிப்போந்த  பிரமாணங்களால் அறிக. அவன் அருளே கண்ணாகக்  காண்டல்  பதிஞானம் ஆகும் . இம் முத்திற ஞானங்களுள் , இறைவனது பரம் பொருள் தன்மை அறிதற்கு உரியது மெய்ஞ்ஞானம்  ஆகிய  பதிஞானம் ஆகும். அப்பதி ஞானத்தால் உணரத்தக்கவன்  என்பது  போதர ,  “காணலாம் பரமே”  எனவும் , பாசஞான , பசு ஞானங்களால்  அப் பெருமானது ஒளி உருவமே  முற்றும் காண்டற்கு  இயலாததொன்று என்பார் , “ கட்கிறந்த தோர் வாணிலாப்  பொருளே “ எனவும் கூறினர்.  இறைவனுடைய  அருவம்  அருவுருவம்   உருவம்  என்னும்  மூவகை நிலையுள் ,முன்னைய  இரண்டும்  மெய்யுணர்வாகிய சிவஞானத்தானும் , பின்னையது அப் பெருமான் அருணோக்கால்  ஆன்மைத்  தூய்மை பெற்ற  நிலையிலும் அறியத்தக்கன .  சிவலிங்காதி உருவங்கள் எல்லோரானும் அறியத்தக்க நிலையில்  உள்ளனவே எனின், ஈண்டுக் கூறியது அவற்றுள் ஒன்றை அன்று .; ஒளி மிக்க  ஞானாசிரிய  வடிவமே ஆகும் . அவ் வடிவத்தை  அப்பெருமான்  அருள்நோக்கால்  அறிந்தனர் ஆயினும் , அக்காட்சி நெடிது நில்லாமையானும் நின்ற  அளவிலும்  தம் கட் புலனால்  அளவிட்டு  உணரும் அளவில் இல்லாத  பேரொளிப்பிழம்பாக  உள்ளமையானும்  ,”கட்கு  இறந்ததோர்  வாணிலாப் பொருளே” என்றார். பரம்பொருள் ஆம் நிலையில் காண  இயலாது  என்பாரை நோக்கிச்  சிவஞானத்தால்  காணத்தக்கவன் என்பது  போதர , “காணலாம்  பரமே” எனவும் ,உருமேனிகள் எல்லாம் கண்ணால்  பார்க்கத்தக்கன  என்பாரை  நோக்கி ,ஞானாசிரிய வடிவ முதலியவற்றில் உள்ள ஒளி மிகுதி கட்புலனால்  முற்றும்  காண்டற்கு  இயலாதது  என்பது  போதர  , “கட்கு இறந்ததோர்  வாணிலாப் பொருளே  “ எனவும் கூறினார் என்க.

           இங்கு  –  இவ்வுலக வாழ்க்கையில்  ஒரு பறவைக் குஞ்சு உவமையை ,” குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே , யுடம்போடுயிரிடை  நட்பு “ என்னும்  திருக்குறளில் உள்ளபடி ஈண்டும்  அமைத்துக் கொள்ளல் வேண்டும் . அடிகள் தம் உயிர்க்குப் பற்றுக்கோடாக  உள்ள  ஊனார்  உடலை ஒழித்து , இறைவன் திருவடி நிழலை அடைவதில் விரைவும் விருப்பமும்  உடையார்  என்பதைத்  திருவாசகத்தில் பல இடங்களிலும் காணலாம் . வினைவயத்தால்  கிடைத்த உடலை விரைவில் விட்டுப்பின் அதனைப்பற்றிய நினைவின்றிச் சேறற்குப் பறவைக் குஞ்சு உவமை  கூறப்பட்டது . இக் கருத்திற்குப்  பரிமேலழகர் கண்டபடி , குடம்பையை முட்டை என்று பொருள் கோடல் சிறந்ததாகும் . “பார்ப்பென “ என்புழி ,உபமேயமாகிய  உயிரின் தொழிலாகிய  விட்டுச் சேறல்  என்னும் வினை , அவ் உவமைக்கண்ணும்  இயைத்துக்  கொள்ளப்பட்டது . கூடு  அல்லது  முட்டையினின்றும்  பறவைக் குஞ்சு  பருவம்  வந்ததும் பறந்து  வெளிப்படல் போல , வினைக்கு  ஈடாக  எடுத்த உடம்பினின்றும்  வினை ஒழிவு பெற்று , விரைவில் அதனைவிட்டு  நின்னைக் கூடவேண்டியவனாகவும் , அங்ஙனம்  கூடுமாறு  அறிந்திலேன் என்பார், “படிற்றாக்கையை  விட்டு உன்னைக்  கூடுமாறறிந்திலேன் “ என்றார். பார்ப்பென விட்டு  என  இயையும் . இனி, பார்ப்பு  என்பதற்குப்  பறந்து செல்லும் ஆற்றல்  படைத்த இளங்குஞ்சு  எனக் கொண்டு  , பார்ப்பென  அறியேன் என இயைத்துப் பொருள் கோடலுமாம் . பார்ப்பைப் போலப்  படிற்றாக்கையை விட்டுச்  செல்ல  அறியாதவன்  ஆயினேன்  என்பது இதற்குக்  கருத்தாகக்  கொள்க.

           அங்ஙனம் அறியாமைக்குக்  காரணமாகத்  தமக்கு  ஒரு பெயரை இட்டுக் கொண்டார் . . “பாணன் “ என்று.  பாழ் நன் –பாணன்  என்றாயிற்று ; பயன் இன்மையை உடையேன் ;  சிறந்த உறுதிப் பயனைப் பெற முயலாது  வறிதே இருக்கின்றவன் என்பது கருத்து.  ஆக்கையை , “வஞ்சினைக் கொள்கலம் “ என்பர் . அதனாலும் , மெய் எனப் பெயர் பெற்றுப் பொய்யாகக் கழிதலானும் , “படிற்றாக்கையை” என்றார் . படிறு – வஞ்சம் , பொய் . ஆக்கை என்றதனால்  வினைக்கு ஈடாக , என்பு , நரம்பு ,  முதலியவற்றால்  ஆக்கிக் காட்டப்பட்டது  என்பது பொதரும் .

            பூணுதல் – திருவடியைத் தலைமேல்  கோடல் ; தள்ளவேண்டியதும்  கொள்ள வேண்டியது,ம் கூறியபடியாம் . தள்ள வேண்டியது என்பினை  நரம்பிற் பின்னி இயைந்தது ஆகிய ஆக்கையை ; கொள்ளவேண்டியது அழி வில் இன்ப வடிவினன் ஆகிய ஆண்டவன்  திருவடியை .  உன்னைப் பூணுமாறு  என்பதற்கு , நின்னைப் பொருந்துமாறு  என்பது பொருள் . பொருந்துதல்  – திருவடியைத் தம் தலைக்கண் இயைத்தல் . அன்றி , உன்னை என்பதற்கே உன் திருவடியை என்று பொருள் கோடலும் பொருந்தும் .  ஈண்டு அவயவ  அவயவைகளின்  வேற்றுமை இன்மை கருதத் தக்கது . அறியேன் என்பதனை  படிற்றாக்கையை விடுதற்கும் . உன்னைப் பூணுதற்கும்  எனக் கொள்ளல் வேண்டும் .  

        புலன் போற்றி என்புழி, போற்றுதல் , பரிகரித்தல்  என்னும் பொருட்டு , “புறஞ் சொற் போற்றுமின் “ என்னும் இடத்து , இப் பொருளில்  வந்தது காண்க. ஐம்புல இன்பங்களைத் துய்ப்பதில்  உள்ள வேட்கை நீங்கவில்லையானால் , ஆக்கையை விடுமாறும்  திருவடியை அடையுமாறும் கூடா.  ஆதலால் , ஆக்கையை விடுதற்கும் ,திருவடியைக்  கூடுதற்கும்  புலனுகர்ச்சியின்  ஒழிவே காரணம் ஆம்  என்பது விளங்கும் புலன்களைப்  பரிகரித்துப்  பூணுமாறு  என இயையும் . இனிப் புலன் போற்றி என்பதற்கு, ஐம்புல  இன்பங்களைப் பேணி எனப் பொருள் கொண்டு  , அறியேன்  என  இயைத்துப் பேணுதல் ஆகிய  காரணத்தால்  அறியாதவன்  ஆயினேன் எனக் கோடலும் ஒன்று.  ஈண்டுப் பேணி என்னும் எச்சம் காரணப் பொருள் உடையதாகும் .

          இதன்கண், “புலன்போற்றிப்  படிற்றாக்கையைக் கைவிட்டுப் பூணுமாறறியேன் “ என்றதனால் , அத்தகைய இழிந்த நிலையில்  உள்ள என்னையும் ஆட்கொண்டருளிய பேருதவிக்கு  யாது கைம்மாறு  செய்ய வல்லேன் என்பது குறிப்பெச்சமாகக் கொள்ளக் கிடத்தலால் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,”பாணனேன்  படிற்றாக்கை யை விட்டு”  என்றதனால் , உடற்சுமையில்  வெறுப்புற்றது  தோன்றுதலின் , வைராக்கிய  விசித்திரம் என்னும் சதக நுதலிய  பொருளும் புலனாதல் அறிக.

                                         ****************************************

பாடல் :45 .

போற்றி  யென்றும்  புரண்டும்  புகழ்ந்து நின்

றாற்றல்   மிக்க அன்  பால்அழைக்  கின்றிலேன்

ஏற்று  வந்தெதிர்  தாமரைத்   தாளுறுங்

கூற்றம்  அன்னதோர்  கொள்கையென்  கொள்கையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  சிவஞானத்தால் அறியத் தக்க இறைவன் இயல்பை உணர்ந்து , புலனுகர்ச்சியில் பற்றற்று , ஆக்கையை  விட்டு,  அப்பெருமானை  அடையும்  நெறியைச்  சார்தற்கு  விரைதலை  மேற்கொண்ட அடிகள் , அதற்கு  ஏதுவாக  இத் திருப்பாட்டில் முதலில்  மன மொழி மெய்கள் இறை பணியினால் தூயனவாகப் பெற்று ,ஆற்றல்  மிக்க  அன்பு  நெறியில் தலைப்பட  வேண்டியதிருக்க  , அதற்கு  மாறாகச் செல்லும் கொள்கை உடையேன் ஆயினேன் ; ஆயினும் அந் நிலையிலும் என்னை ஏற்று அருளல் வேண்டும்  என்று  வேண்டுகின்றார் .

பதவுரை :- போற்றி  யென்று   =   நெஞ்சத்தாற் காத்தருள்க  என்று  நினைந்து ,

புரண்டும்  =  உடலால்  புரண்டு  வலம்  வந்தும் ,

புகழ்ந்தும்  =  நாவினால் புகழ்ந்து பாராட்டியும் ,

நின்று  =  அன்பு நெறியில்  நிலையுதல் பெற்று ,

ஆற்றல்  மிக்க  அன்பால்  அழைக்கின்றிலேன்  =  உறுதியான  மெய்யன்பினால்  கூவி  அழைக்காமல் இருக்கின்றேன் ,

என்  கொள்கை  =  இத்தகைய என் கொள்கை ,

எதிர் ஏற்று  வந்து  =  எதிராகப் பொர வந்து ,

தாமரைத் தாள்  உறும்  =  நின் தாமரை மலர் போன்ற திருவடியில்  பொருந்தப் பெற்ற  ,

கூற்றம் அன்னது ஓர் கொள்கை  =  கூற்றுவனது  கொள்கையை  ஒரு வகைக்  கொள்கையேயாம்  என்பது .

விளக்கவுரை :-  சிறந்த  அன்பின்  விளைவிற்கு  மன மொழி மெய்கள் தூயன  ஆதல் வேண்டும் . இம் மூன்று  காரணங்களாலும் முறையே  இறைவனை  நினைதலும் , புகழ்ந்து பாராட்டுதலும் , பணி செய்தலும்  ஆகிய  செயல்கள்  நிகழற்பாலன.  இந் நிகழ்ச்சிகளாலே  அவை  தூய்மை உடையன ஆம் .  நினைதல்  –  இறைவன்  பெருமையை நினைதலும் , தமக்கு  வேண்டியவற்றை  அவன்பால்  வேண்டிக்கொள்ளு முகமாக  நினைதலும்  என்று  இருவகைப்படும் . அவற்றுள் , இறைவன் பெருமையை  இடையறாது நினைதல் அன்றி , வேறு ஒன்றையும் நினையாமல்  , “நன்றே  செய்வாய்  பிழை  செய்வாய்   நானோ  இதற்கு  நாயகமே “  என்று  இருக்கும்  அடிகள் , இடையிடையே  தம்மை  உலக வாழ்க்கையினின்றும்  விடுவித்துத்  திருவடி இன்பம் நல்கிக்  காத்து  அருளல்  வேண்டும்  என்று வேண்டிக் கொள்ளுதல்  உண்டு . அம் முறையில்  ஈண்டுக்  காத்து  அருள்க  என்று  வேண்டுவார் , “போற்றி  யென்றும்” என்றார். பின்னர்ப்  “புகழ்ந்தும் “ என்று  வந்தமையால்  ,இஃது  எண்ணத்தின்பாற்படும் . நெஞ்சம்  இல்  வழி  நிகழும்  செயல்கள்  சிறந்தன  ஆகா  ஆதலின் , முதலில்  நினைவு  கூறப்பட்டது  . அந் நினைவுக்கு  ஏற்ப  , மெய்யின்  செயலும்   நாவின்  செயலும்  பின்னர்  நிகழ்ந்தன . உடல்  உறுப்புக்கள்  அனைத்தும் இறை பணியில்   ஈடுபடுதலைப்  புலப்படுக்கவே, தொழுதல் , வணங்குதல் என்னும்  செயல்களைக்  குறிப்பிடாமல்  , “புரண்டும்” என்றார்.  புரளுங்கால் , உடல் உறுப்புக்கள்  அனைத்தும்  நிலத்திற்  படியும் உண்மை அறிக. மன  மொழி  மெய்கள் ஓரோவமயம்  இங்ஙனம்  இறை பணியில்  தலைப்படுதலும் , மற்றைக்  காலங்களில்  புலனுகர்ச்சிகளில்  ஈடு படுதலும்  உண்டு . அடிகள் அங்ஙனம் ஆதலை  விரும்பாராய் , என்றும்  ஒரே படித்தாக  முக்கரணங்களும்  இறைபணியில்  நிலைப்படுதலை விரும்பும்  இயல்பினர்  ஆதலின்  , “நின்று “ என்றார்.  

             ஒரு பொருளைப் பற்றிப் பற்பல  பிறவிகளிலும்  பிறழ்ச்சி  இன்றித்  தொடர்ந்து வேர்   ஊன்றிய  அன்பே  ஆற்றல்  மிக்க  அன்பாகும் . முறிந்த  நிலையில்  இது மெய்யன்பு  ஆகும்  . இதனையே  அடிகள் “பெறவே  வேண்டும்  மெய்யன்பு  “ஏன்பார் . இத்தகைய  சிறந்த  அன்பு  விளைதற்கு  மன  மொழி  மெய்கள்  தூயன  ஆதல் வேண்டும் ஆதலின் ,  அத் தூய்மையே  முதல் அடியிற்  பெறப்பட்டது  என்க.  கரணங்கள்  தூய னவாகப்  பெற்று , முறுகிய  தலையன்பினால்   இறைவனைக்  கூவி அழைத்தல்  இன்றியமையாததாகவும் , அவ்வாறு  செய்திலேன்  என்பார், “ ஆற்றல்  மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் “ என்றார்.  அன்பினால்  அழைத்து  அடையும் பேறு  எனக்கு  இல்லை  ஆயினும்  அன்பினால்  கூற்றுவன் எதிர்பட்டுத்  திருவடிப் பேறு  கிடைக்கப் பெற்றது  போன்ற  ஒரு  கொள்கையிலாவது  தலைப்படமாட்டேனா  என்பது., பின் இரண்டு அடிகளின்  கருத்தாகும் . “அஞ்சியாயினும்  அன்பு பட்டாயினும் , நெஞ்சம்  வாழி  நினை நின்றியூரனை “ என்னும் தமிழ் மறையில் , அன்பு  காரணமாக  இறைவனை நினைதற்கு  இயலாதார் , அச்சம்  காரணமாக  நினைய  நேர்ந்தாலும் , அந் நினைவும் ஓரளவு நலம் பயக்கும்  என்று  கூறியபடி  , ஆற்றல்  மிக்க  அன்பினால்  அழைக்க இயலாவிட்டாலும்  மாறுபட்ட  கொள்கையை மேற்கொண்டாவது  இறைவன் சினத்திற்கு இடனாகி , அவன்பொன்னடிகளைக் காணும் பேறுபெறலாமே  என்று  கருதுகின்றார் அடிகள் .  இக்குறிப்பை , “உடையாய்  கூவிப் பணிகொள் ளாது ஒறுத்தல் ஒன்றும் போதுமே “  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியது கொண்டு  தெளியலாம் . அரசன் அவைக்களத்தில்  சென்று  , அவனால் மதிக்கப்பெற்று , அவன் திருவோலக்கத்தைக்  காண்டற்கு இயலாத ஓர் எளியவன் , அரசனுக்கு  மாறுபட்ட  செயலில்  தலைப்பட்டுக்  குற்றவாளியாகி , அரசவைக்கு  கொண்டுவரப்பட்ட நிலையில் , அவனைக்  காண்டலை ஒரு பேறாகக் கருதுதல் போல் அடிகள் கருதுகின் றார் என்பது , “ஒறுத்தல் ஒன்றும் போதுமே “ என்றதனாற் புலப்படும் . கூற்றுவன் ,மார்க்கண்டேயர்  பொருட்டு   இறைவன் திருவுள்ளக் குறிப் போடு  முரண்பட்டு  எதிர்த்துச் சென்றான்  ஆயினும் , அப்பெருமான் திருவடிப் பரிசப்பேறு  எய்தினான்  என்பதைப் பின்வரும் அப்பர் அருள் மொழியாலும் அறிக .  

மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடத்து

மாலும்  அறிந்திலன் மாலுற்ற  தேவழி  பாடு செய்யும்

பாலன் மிசைச்சென்று  பாசம்  விசிறி  மறிந்த  சிந்தைக்

காலன்  அறிந்தான்  அறிதற் கரியான் கழலடியே “

என்பது .

                “ஏற்று வந்தெதிர் “ என்பதை , எதிர் ஏற்று  வந்து  என மாற்றி உரைத்துக் கொள்க ; நேராக எதிர்த்துவந்து என்பது பொருள் , ஒருவன், தன்னினும் வலிமிகப் படைத்தவனோடு  போர் செய்ய நேர்ந்த பொழுது , மறைத்து நின்று அம்பு எய்தலைக் கேட்டிருக்கின்றோம் . கூற்றுவன் இறைவனது பேர் ஆற்றலை  அறிந்திருந்தும் , மறைந்து ஒழுக நினைந்தான் அல்லன் என்பது தோன்ற , “ஏதிரேற்று “ என்றார். ஒருவன் தன்னின்  மெலியவனோடு  போர் செய்ய   நேர்ந்துழிச்  சந்திவிக்கிரக முதலிய  அறு வகைக் குணங்களுள்  ஒன்றாகிய போர் குறித்து மேற்சேறலை  மேற் கொண்டு , அம்மெலிய பகைவன்  இருந்த இடம் நோக்கிச்  சேறல் இயல்பு . அதற்கு  மாறாகத்  தன்னின் எத்துணையோ  மிக்க  வலிபடைத்த இறைவனை  நோக்கிக்  கூற்றுவன் மேற் சென்றான்  என்பது தோன்ற  , “எதிரேற்று வந்து” என்றார்.  இங்ஙனம்  அஞ்சாமல் கூற்றுவன்  எதிர்த்து வந்ததற்குக்  காரணம் , இறைவன் அவனுக்கு இட்ட பொதுவான  கட்டளையை நிறைவேற்றுவதில்  உள்ள கடமையும் ,அதன் நிமித்தம் பிரமாதி  தேவராலும் காண்டதற்கு  அரிய  இறைவன் திருவடியைக் கண்டு  இன்புறலாம்  என்னும் ஆர்வ உட்கோளும் ஆகலாம் என்பது குறிப்பின்  அறியத்தக்கது . அக் குறிப்பின்  பயனாக , இறைவனது  தாமரை மலர் போன்ற திருவடிப் பரிசப் பேறு கிடக்கப்பெற்றான் என்பது தோன்ற , “தாமரைத்  தாளுறும் “ என்றார். உறுதல்  –  பொருந்தப் பெறுதல் . திருவடிக் காட்சியே  அருமை. பரிசிக்கப் பெறுதல்  அதனினும்  அரிது.  திருவடி அழுந்தப் பெறுதல்  கிடைத்தற்கு  அரிய பேறு  அன்றோ?  இப் பேறு ,  வன்பு நிலையில்  நிகழாது  அன்பு நிலையில்  நிகழும்   ஆயின் , அந் நிலையே  வீட்டு  இன்பமாகும் .

            “ கூற்றம் அன்னது ‘ “என்பதற்குக் கூற்றுவன் கொள்கை போன்றது என்பது பொருள் , கொள்கை போன்றதாகிய  ஒரு கொள்கை என் கொள்கை யாகும் .என முடிக்க . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்க இயலாத நிலையில்  அமைதி அடைவேனோ  எனின் , அங்ஙனம் இரேன் , இறைவன் திருவுள்ளக்குறிப்பிற்கு வெறுப்பு விளைக்கத்தக்க நிலையில் மாறுபட்டாவது  அப் பெருமான் திருவடிப்பேற்றிற்கு  ஆளாவேன் என்பது அடிகளின் பத்தி விசித்திரமாகும் .  

               இதன்கண், மன மொழி மெய்களின் தூய்மையால் உண்டாம் மெய்யன்பினால்  நின்னை  அடைய இயலாத நிலையிலும் , நின் திருவடிப் பேற்றிற்கு என்னை  ஆளாக்கப் பிறிதொரு கொள்கையை நினைவுறுத்திய  பேருதவிக்குக்  கைம்மாறு  கண்டிலேன்  என்பது போதரலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , நேறிய அன்பு நெறியில் வழிபடும் ஆற்றல் இல்லேன்  ஆயினும் , மாறுபட்ட வன்பு நெறியிலாவது நின் திருவடியைப் பெறாமல் ஒழியேன் என்று கூறுதலின் , பத்தி விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் தோன்றுதல் காண்க. 

                                          **************************************

பாடல் : 46 .

கொள்ளுங்  கில்லெனை  யன்பரிற்  கூய்ப்பணி

கள்ளும்  வண்டும்  அறாமலர்க்  கொன்றையான்

நள்ளுங்  கீழுளும்  மேலுளும்  யாவுளும்

எள்ளும்  எண்ணையும்  போல்நின்ற  எந்தையே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் முக்கரணங்களும் தூயனவாகப் பெற்று முறுகிய பேரன்பினால்  ஆண்டவனைக் கூவி அழைக்கப் பெறாமை பற்றி இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் யான் அழையாத நிலையிலும் இறைவன்  தானே  என்னைக் கூவி அழைத்துப் பணிசெய் வித்துக்  கொள்ளுவானோ  என்று எண்ணி  வருந்துகின்றார் .

பதவுரை :- யாவுளும்  நள்ளும்  கீழ் உளும் மேல் உளும்  =  எல்லாப்பொருள்களிடத்தும்  நடுவணும்  கீழும்  மேலும்  ஆகிய  எவ்விடத்தும் ,

எள்ளும்  எண்ணெயும் போல் நின்ற  எந்தை  =  எள்ளும்  அதன்கண்   யாண்டும்  நிறைந்திருக்கும் எண்ணெயும் போல் நிறைந்து நிலைபெற்று  இருக்கும் என் தந்தையாகிய ,

கள்ளும்  வண்டும்  அறாமலர்க்  கொன்றையான்  =  தேனும்  அதனை நுகரும்  வண்டும்  நீங்காத  கொன்றைமலர் மாலையை உடைய ஆண்டவன் ,

கில்லேனை  =  பேரன்பினால்  அழைக்கும் ஆற்றல்  இல்லாத  என்னை  ,

அன்பரிற் கூய்ப்பணி கொள்ளும் =   மெய்யன்பரைக் கூவி அழைத்துப் பணி கொள்ளுதல்  போலக்  கூவி அழைத்து  அடிமை கொள்ளுவானோ?  என்பது.

விளக்கவுரை :- இறைவன்  என்னும்  சொல் பரமசிவனுக்கே வழங்கப்பட்டிருத்தலைப்  பண்டைப் பனுவல்களில்   பரக்கக்  கானலாம் . அச் சொல்லின்பொருள்  எங்கும் நிறைந்தவன் என்பது. இறுத்தல் – தங்குதல் ; யாண்டும் தங்குதல் . இவ்வியாபகம் , கண்டப் பொருள்களில்  தனித்தனியேயும் ,அகண்டப்பொருளில்  முழுதும் உள்ளதாகும் . எடுத்துக்காட்டாக  எள்ளில் எண்ணெயைக் காணலாம் . அது  கண்டப் பொருள் வியாபகம்  ஆகும் . கருப்பங்கழியில்  சாறும் அன்னதே .அகண்டப் பொருளின்  வியாபகம் அங்ஙனம் அன்று .  இயங்குதிணை , நிலைத்திணை  ஆகிய  எல்லாப்  பொருள்களிடத்தும்  ஏகமாக  நிறைந் திருத்தலாகும் . இந் நிலையை அடிகள் இத் திருப்பாட்டின்  பின் இரண்டு  அடிகளிலும் தெளிவாக விளக்கியுள்ளார் .

        ஒரு பொருளைப் பகுத்து வரையறை செய்யுங்கால் , முதல் இறுதி  நடு என முக்கூறுபடுத்து வழங்குவர் . அம் முக் கூறுகளில் ஒரு பகுதி அளவில் இறைவன் வியாபகம்  உள்ளதோ  என்பாரை  நோக்கி , அங்ஙனம் அன்று ; யாண்டும் உளது என்பார் , “நள்ளும் கீழுளும்  மேலுளும் “ என்றார். கீழ் மேல்  என்பவற்றில்  உள் என்பன இடப்பொரு ளிலும் ,உம்மைகள் எண்ணுப்பொருளிலும் வந்தன.  கீழும்  மேலும்  முடிந்த இடங்களாக , நடுப் பகுதி முடிவு காணப்படுவது  அன்று  ஆகலின் இறைவனது  நிறைவு எல்லை  காணப்படாதது ஒன்று  என்பதைப் புலப்படுத்த , முதலில் நள்ளும் என்றார். பின்னர் , ஆதார  ஆதேய  முறை பற்றிக் கீழும் மேலும் கூறப்பட்டன.  ஆதாரம்  தாங்குவது . ஆதேயம்  தாங்கப்படுவது . ஒரு பொருளின் அடிப்பாகம் தாங்குவதும் , நுனிப் பாகம்   தாங்கப்படுவதும் ஆதல் அறிக. நடு  கீழ் மேல்  என்னும் மூவிடத்தும் என்று கூறிய அளவில் , வியாபகம்  யாண்டும் என்பது பெறப்படுவதாகப் பின் , “யாவுளும்” என்று  கூறியது எற்றிற்கு  எனின் ,  நடு  கீழ்  மேல்  என்னும் இடங்கள் கண்டப் பொருள்களில் காணப்படுவன  ஆதலின் , இறைவன்  வியாபகம்  உலத்துள்ள  கண்டப்பொருள்களின்  அளவிற்றானோ என மயங்குவார்க்கு ,அம் மயக்கநீக்கம்  கருதி “யாவுளும் “ என்று  கூறப்பட்டது என்க.  “யாவுளும் “ என்பதற்கு எல்லாப்  பொருள்களிடத்தும் என்பது பொருள் . இயங்குதிணை , நிலத்திணை  ஆகிய  எல்லாப் பொருள்களிடத்தும் , முதல் , இறுதி , நடு  என்னும்  யாண்டும்  இறைவனது நிறைவுளது  என முழு வியாபகம் கூறியபடியாம்

       இங்ஙனம்  அகண்டமான  வியாபக  நிலையைச்  சிற்றறிவுடைய மக்கள் மனத்தால்  வரையறைப்படுத்துத் தெளிதல் அரிதாகலின் , தெளிவுறுத்தற்  பொருட்டுக்  கண்டப் பொருளில்  விளங்கத்தக்கது  ஒன்றை எடுத்துக்காட்டுவாராய் , “எள்ளும் எண்ணெயும் போல்” என்றார். கண்டப் பொருள்களுள்  ஒன்றில் ஒன்று நிறைந்து இருத்தற்கு ,எள்ளும் அதன் கண் உள்ள எண்ணெயும்போலப்  பிறிதொன்றைக் காண்டல் அரிது.  ஆமணக்கு முதலிய  வித்துக்களிலும் நெய்ப்பகுதி உள்ளதே எனின் , அப் பகுதி தோயாத  கொட்டைத் தோடு வலிதாக  உள்ளது என்பது அறியத்தக்கது . மெல்லிய தோல் உள்ள கனியையும் சாற்றையும் கூறல்  ஆகாதோ எனின் , அக்கனியில் அத் தோலோடு வித்துக்களும் இடையறவாக  உளவாகலின்  ஆகாது என்க. எள்ளில்  தோல் இருப்பினும்  மிக மெல்லியதாகும் . மேலும் , அதனைவிட  மெல்லிதாகிய  தோல்  பிறிதொன்றில்  காண்டல்  அரிது . ஆதலின், இறைவனது அகண்ட வியா பகத்திற்குக்   கண்டப்  பொருள்களுள்  எடுத்துக் காட்டத்தக்கது அதுவே  ஆதலின், “எள்ளும்  எண்ணெயும்போல் “ என்று  எடுத்துக் காட்டுவார் ஆயினர்.” திலேஷூ தைலம் “ என்று மறை முடிவு கூறுதலும்  ஈண்டு  அறியத்தக்கது .இவ்வுமையில் காணப்படும் குற்றம்  ஒன்றைப் பரிகரித்தற் பொருட்டு , “நின்ற” என்றார். நிற்றல் , காலத்தாலும்  இடத்தாலும் பிறிதொரு பொருளாலும் கேடு இன்றியும்  பிரிக்க முடியாதபடியும் நிலைத்திருத்தல் . எள்ளில் உள்ள எண்ணெய் , காலம் இடங்களால் கேடு அடைதலும் , செக்கு முதலிய  கருவிகளால்  வேறுபடுத்தப் படுதலும் காண்கின்றோம் . இறைவன் நிறைவு அன்னது அன்று என்பது புலப்படுக்க  “ எள்ளும் எண்ணெயும் போன்ற” என்னாது, “போல் நின்ற “ என்றார். “போல்” என்ற அளவில் ஒப்புப்  பெறப்பட்டது ; “நின்ற “ என்பது நிறைவு யாண்டும் ஒரே படித்தாக நிலைத்து இருத்தல்  என்னும் பொருட்டு.  

     “ எந்தையாகிய  கொன்றையான்”  என இயைக்க , கொன்றை மாலை பரமசிவனுக்குப் பலவகையானும்  சிறந்தது என்பது முன்னர்க் கூறப்பட்டது . அம் மலர் , தெய்வத்தைச் சார்ந்தது ஆகலின் என்றும் வாடாமல் புதிய செழுமை உடையது என்பது போதர , “கள்ளும் , வண்டும்  அறாமலர்க் கொன்றை “எனப்பட்டது . வண்டு விரும்பாத நிலையில்  கள் நிறைந்த மலரும் உளது ஆதலின் , அதனை நீக்குதற்கு “கள்ளும் வண்டும்  அறாமலர் “ எனப்பட்டது. இவ் அடை மொழிகள்  இறைவனிடத்து உலப்பு  இலா இனிமை மிக்க அருள்  அமுதம் உளது என்பதையும் , அதனைப் பக்குவமுதிர்ந்த  ஆன்மாக்கள்  பருகி இன்புறற் பொருட்டு  என்றும் நீங்காது செறிந்து  இருப்பன என்பதையும்  குறிப்பில் புலப்படுத்து நிற்றல் அறிக .  

         “கில்லேனை” என்பது “கில்லெனை” எனக் குறுகி நின்றது.; ஆற்றல்  இல்லாத என்னை என்னும் பொருட்டு . இதன் முன்னைத் திருப்பாட்டில் , “ஆற்றன்  மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்” என்று  கூறியதை வழி மொழிந்து , அத்தகைய அன்பு ஆற்றல்  இல்லாத என்னை என்பது பொருள் . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கும் பேறு இல்லாத என்னையும் இறைவன் சிறந்த மெய்யன்பரை வலிய அழைத்துப்  பணி கொள்ளுதல்  போலக்  கூவி அழைத்துப் பணி கொள்ளுவானோ  என்பது கருத்து . “பணி கொள்ளும்” என்பதில் கொள்ளும் என்பது காகு என்னும் ஓசை வேறுபாட்டால் , எங்ஙனம் கொள்ளுவான் என்று ஐயுறுதல் புலனாகநின்றது .காகு என்பது ஒருசொல்லில் பிறிதொறு பொருள் தோன்றுதற்கு  உரிய ஓசை வேறுபாடு என்பர் வடநூலார் . இதற்கு இவ்வாறு  பொருள்  கூறாது , கொள்ளுங்கில்  எனக்கொண்டு , கொள்ளும் ஆற்றல் உடையான் எனப் பொருள் கூறுவாரும் உளர் . சொல் அமைப்பு அங்ஙனம் பொருள் கோடற்கு இடம் தராது என்பது உய்த்து உணர்வார்க்குப்  புலனாம் . எங்கும் நிறைந்த இறைவன் , அன்பர்க்கு இன்பமயமான அருள் அமுதை ஊட்டும் குறிப்புத் தோன்றுமாறு அடையாள மாலைஅணிந்து இருத்தலின்  , யான் ஆற்றன்மிக்க அன்பால் அழையாத நிலையிலும் , மெய்யன்பு உடையாரைக் கூவி அழைத்துப் பணி கொள்ளுதல் போல , என்னையும் பணி கொள்ளுவானோ என்பது இத் திருப்பாட்டின் திரண்ட கருத்து  என்க .

          இதன்கண், ஆண்டவன் மெய்யன்பரை அழைத்துப் பணி கொள்ளுமாறு போல , ஆற்றல் மிக்க அன்பு இல்லாத என்னையும் பணி கொள்ளுவானோ  என்று அடிகள் ஐயுறுதல்  கூறப்பட்டு  இருத்தலானும் , அவ் ஐயத்தின் துணிவாக , “இரும்புதரு மனத் தேனை ஈர்த்து  ஈர்த்து “ என்றபடி , வலிந்து ஆட் கொள்ளவும்  கூடும் என்பது பின்னர்ப்  பெறப்படுதலானும் , ஆங்ஙனம் ஆட்கொண்டால் அதற்குக் கைம்மாறு  யாது செய்வது  என்று கருதுமுகமாகக்  கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக, பதிகப் பொருளைப் பாட்டின் குறிப்புப் பொருளில் தோன்ற வைத்தல்  உயர்ந்த கவிமரபு என்பதும் தெளிக .

                                    ******************************************** 

பாடல் :47 .

எந்தை  யாயெம் பிரான்மற்றும்  யாவர்க்குந்

தந்தை  தாய்தம்  பிரான்தனக்  கஃதிலான்

முந்தி  யென்னுள்  புகுந்தனன்  யாவருஞ்

சிந்தை  யாலும்  அறிவருஞ்  செல்வனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் மெய்யன்பரைக் கூவி யழைத்துப் பணி செய்வித்துக் கொள்ளுதல் போலத் தம்மையும்  பணி கொள்ளுவானோ என்று  ஐயுற்று  வருந்திய  அடிகள் ,இத் திருப்பாட்டில்   தாம் அடிமையாதற்கு  முன்னரே ,தம்முட்  புகுந்து ஆட்கொள்ளத் தொடங்கிய பேருதவியை நினைந்து ஆறுதல் அடைகின்றார் .

பதவுரை :-  எந்தை ஆய் எம்பிரான்   =   எனக்குத் தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆயவன் , 

மற்றும்  யாவர்க்கும்  தந்தை  தாய்  தம்பிரான்  =  மற்றைத் தேவர் மக்கள் முதலிய எல்லோர்க்கும் தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆவான் ,

தனக்கு  அஃதில்லான்  =  தனக்குத்  தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆகிய  அம் முறை உரிமை  இல்லாதவன் ,

யாவரும்  சிந்தையாலும் அறிவு அறும் செல்வன்  =  அமரர்  முதலிய  எல்லோரும்  மொழிகளால் அன்றி  மனத்தாலும் அறிதற்கு  அரிய  ஞான  ஐசுவரியம்  உடைய  பெருமான் ,

முந்தி யென்னுட்  புகுந்தனன்  =  யான்  அடிமை யாதற்கு  முன்னரே  என்னுட்  புகுந்து ஆட்கொள்ளத் தொடங்கினன்  என்பது.

விளக்கவுரை :-  மக்களுக்கு இம்மை வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு உடையார் ,  தந்தையும்  தாயும்  தலைவனும் ஆவர். தந்தை வித்தும் , தாய்  நிலமுமாகத் தோன்றி   கான்முளை  ஆதலின் ,ஒரு மகனுக்கு  அவ் இருவரும்  இன்றியமையாத  தொடர்புடையர்  ஆவர் . பின்னர்த் தலைவன் தொடர்பு  வேண்டற்பாலது . ஒருவர்க்குத் தலைவன் , குடித்தலைவன் , கல்வித் தலைவன் தொழில்  தலைவன் ,தேயத் தலைவன் ,ஞானோபதேசத் தலைவன்  எனப்  பலவகைப்படுவன்  .  அத் தலைமைகளுட்  சிலவும் பலவும் தந்தையால் அமைதலும் உண்டு. வளர்த்தற்குத்  தாயும் , அறிவு  கொடுத்தற்குத்  தந்தையும் , நன்நெறி  நிறுத்தற்குத் தலைவனும்  ஒரு மகனுக்கு  இன்றியமை யாதவர் ஆவர். உடலைப் பற்றிய  இம் முத்திறத் தொடர்பு  உடையாரும் பிறவிதோறும்  வேறு வேறு ஆவர். உயிரைப்பற்றிய  தொடர்பை  நினையுங் கால் , அங்ஙனம்  வேறுபடாமல் , என்றும்  ஒரே நிலையில் உள்ள உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும்  சிவபெருமான்  ஒருவனே  ஆவன். அடிகள் “புல்லாகிப்  பூடாய்ப் புழுவாய் மரமாகி “ என்றபடி , தம் உயிர்க்குக் கீழ்ப்பிற விகளில் நின்றும்  இத்துணை  உயர்ந்த மக்கட்  பிறவியை  அளித்து , அறிவு நல்கி , நன்நெறிப்படுத்திய  பேருதவியை நினைந்து , உடல் உரிமையை விட்டு, உயிர் உரிமை கருதித் தமக்கு  உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும்  அப் பெருமானே  என்னும்  தெளிவு  கைவரப்பெற்றவராய் , “எந்தையாய் எம்பிரான் “ என்றார் . தம் அளவில்  சிறப்புரிமையில் முதலில் கண்டார் . பின்னர்  , மற்றையோர்க்கும்  தந்தை முதலியோராக இருத்தலை ஆராய்ந்து , அன்னார்க்கும் உயிர்த் தொடர்பை  நோக்க , உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும் அப் பரமபதியே என்பதைத் தெளிந்து , “யாவர்க்கும்  தந்த  தாய்  தம்பிரான்” என்றார்.  ஆர்வ மிகுதியால்  முதலில் தம் அளவிற்  கண்டார் . பின்னர் , எண்ணி எண்ணி முடிவாகக்  கண்டது . மற்றும் யாவர்க்கும் தந்தையும்  தாயும்  தலைவனும்  அப் பெருமானே  என்பது .

             ஒருவன், மகனை நோக்கத் தான்  அவன் தந்தை ஆதல் போல , அத் தந்தையை  மகனாகக்  கருதுங்கால் , அவற்கு உரிய தந்தையும்  தாயும்  தலைவனும்  இன்னாரென்பது  வெளியாகும் அன்றோ?  அந் நிலையில் ,தமக்கும் மற்ற எல்லோர்க்கும்  தந்தை  தாய்  தலைவனாக  உள்ள அப் பெருமானுக்கும் ,தந்தை முதலியோர் யாராக இருக்கலாம்  என்று நினைந்து கூறுகின்றார் , “தனக்கு  அஃதிலான்” என்று . “அஃது”  அஃறிணை  ஒருமைச் சுட்டு , அச்சுட்டு , தந்தை முதலிய முறை உரிமையின் மேல் நின்றது . இறைவன் தனக்கு ஒரு தந்தை  தாய்  தலைவனை  ஏன் பெறாமல் இருக்கின் றான்  எனின் , அமரர் , முனிவரர்  எல்லோர்க்கும்  பிறப்பு  இறப்புக்கள்  கேட் கப்பட்டன . பரமசிவன் ஓரிடத்துப் பிறந்தான்  இறந்தான்  என்பது கேட்கப் படாதது  ஒன்றாதலால் , பிறப்பு இல்லாதவனுக்குத் தந்தை  தாய்  என்னும் முறை உரிமை இல்லை என்பது  வெளிப்படை  அன்றோ ? தலைமை இலக்கணம்  முற்றும் அமைந்தவன்  சிவபெருமானே என்பது திருவாசகத் திருப்பாடல்கள் பலவற்றால்  அறியப்படுவதொன்று . அதனால் தனக்குத்   தலைவன் ஆம்  முறை உரிமையும் இல்லாதவன் என்பது தெளிவு ஆம் .  தந்தை  தாய்  தம்பிரான்  என்னும்  மூவரும் உயர் திணைப் பொருள் ஆகலான் , அதற்கேற்ப , “அவர் இலான் “ என்று  கூறியிருக்கலாம் . அங்ஙனம்  கூறாது  பெற்றோரே அன்றி , வளர்ப்பு  முதலியவற்றால் தந்தை முதலிய  முறை உரிமைக்கும் சிறிதும் இடம் இன்று  என்பது போதர , முறை உரிமையின்பால்  வைத்து ,அஃறிணையாக , “அஃதிலான்” என்றார் என்பது . “யாவரும் “ என்றது பிரமபதம்  அதிகார  நிலையங்களில்  அணுக்கராக  இருக்கும்  அமரர்  முதலியோரையும் , புற்றுமாய்  , மரமாய்ப்  புனல் காலே  உண்டியாக  உடைய முனிவரர்  முதலியோரையும் குறிக்கும் , அன்னார்  எல்லோரும்  கண்களால்  காண்டற்கும் , ஏதுக்களாலும்  எடுத்த  மொழிகளா லும் அளந்து அறிதற்கும் அரியன்  ஆதலே  அன்றி , மனத்தால் நினைந்து அறிதற்கும் அரியன் ஆயினான்  என்பது தோன்ற  ,”சிந்தையாலும் அறிவருஞ் செல்வன் “ என்றார். “சிந்தையாலும்” என்புழி, உம்மை  இறந்தது  தழீ இய  எச்சவும்மை . காண்டல்  அளவைக்கும் , உரை அளவைக்கும் எட்டாத  பொருளைக்  கருதல்  அளவையால் துணியலாம்  ஆயினும் , இறைவன் அங்ஙனமும் துணிதற்கு உரியவன் அல்லன் என்பது குறிப்பு . மனத்தாலும்  சிந்திக்கமுடியாத  ஒரு பொருள் , யாண்டும் இல்லாத இன்மைப் பொருளாக   அன்றோ முடியும்?  என்பார்க்கு , அங்ஙனம் அன்று ;  அறி வில் பொருள்களை  அறியும் கருவிகளைக் கொண்டு , அறிவுடைப் பொருளை அறியத் துணிதல்  இயலாத தொன்று என்பதே  ஈண்டுக் கருத்தாகும். அன்றி , மெய்யுணர்வி னால்  அறியத்தக்க இறைவன் , என்றும் உள் பொருளாக  மாத்திரம் இருத்தலே  அன்றித் தன்னை  அடைந்தார்க்கு  வழங்குதற் பொருட்டு  ஞான ஐசுவரியப் பேரானந்தப்  பெரும் செல்வமும்  உடையன் என்பது தோன்ற , “செல்வன்” என்றார்.

   இறைவன் தம் உள்ளத்தே  புகுந்து ஆட்கொண்டது , அப் பெருமான்  தங்குதற்கு உரிய தம் உள்ளத்தில் ஞானவிளக்கம் இல்லாத பொழுது என்பார், “முந்தியென்னுள் புகுந்தனன் “என்றார், “அறிவிலாமை யன்றே கண்டதாண்ட நாள் “ என்பது அடிகள் திருவாக்கு . இனி, மேற்பதங்களில்  உள்ள  பிரமன்  முதலிய அமரர்களும் , தவச் செல்வர்களாகிய முனிவரரும்  இறைவனை அறிந்து  கொள்ளுதற் பொருட்டுத் தம் சிந்தைகளை  அவன்பால் ஏவினாராக , அவற்றிற்கு எட்டாத அப்பெருமான் , அன்னார் சிந்தனைகள்  சென்று அணுகுதற்கு இல்லாத  ஓர்  ஒதுக்கிடத்தில் ஒளித்தல் கருதியே  , தம் சிந்தையுட்  புகுந்தனன் என்பார் , “முந்தியென்னுட்  புகுந்தனன் “ என்றார் என்பதுமாம்.  ஈண்டு , “முந்தி” என்பது , அமரர் முனிவரர்  சிந்தனைகள்  இறைவனைத் தொடர்ந்து பற்றுதற்கு  முன்னரே என்னும் பொருள் உடையதாகும் . உயர்  பதங்களில்  உள்ள அமரர் , முனிவரர் முதலியோர்  இறைவனை  ஆராயப் புகுங்கால்  மறைத்திறங்களை   நோக்கியும்  , தம்மின் மேலான  பதங்களில் உள்ளவர்களின்  சார்பு  பற்றியும்  முற்படுவாரே அன்றி ,  தம்மில்  கீழ்  நிலையில் உள்ளார்க்கு   இறைவன் காட்சி நேராது என்னும்  துணிபு உடையராய் , அன்னாரைக் கருதுவது இல்லை . உலகத்தில்  மிகுவிலை யுள்ள   மணியொன்றைப்  பெற விரும்புவோன் , பொருள் மிகுப்படைத்த  வாணிகர்  இடத்து அன்றிச்  சுருங்கிய  பொருளினை உடைய எளியவரைப்  பொருட்படுத்தி அடையான் என்பது அனுபவத்தில் கண்டது . அமரர், முனிவரர் சிந்தனைகள்  எல்லாம்  இறைவனை  அறிதற்குத் தொடர்ந்து செல்ல , அவர் சிந்தனை செல்லப்பெறாத இடம் என்று தம் சிந்தனையைக்  கண்டு  அவர் காணாவாறு விரைந்து மறைந்தனன்  என்னும்  குறிப்புத் தோன்ற  , “முந்தி” எனவும்  “புகுந்தனன் “ எனவும்  அருளிச் செய்தனர் . “முந்தி” என்பது ஈண்டு  விரைந்து என்னும் பொருள் பயந்து நிற்பதாகும் . தம் நெஞ்சு  இறைவன் புகுதற்கு ஊன் ஆர்  உடற் கண்ணதாயினும் , மற்றையோர் சிந்தனைக்கு  எட்டாமல்  ஒளிந்து கொள்ளும்  குறிக்கோள்  ஒன்றே   பற்றித் தமக்கு அகப்பட்டனன்  என்று  அடிகள்  கருதினார்  என்பது , “புகுந்தனன்” என்னும்  சொல் ஆற்றலால்  பெறப்படுவதாகும் .  

              இதன்கண், யாவரும்  சிந்தையாலும்  அறிவரும்  செல்வன் , முத்தி யென்னுட் புகுந்தனன் என்று கூறியதனால், அங்ஙனம்  வலிந்து புகுந்து  ஆட்கொண்ட  பேருதவிக்கு  யாது கைம்மாறு  செய்யவல்லேன்  என்பது தோன்றி நிற்றலின் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய  பொருளும் , “எந்தையா யெம்பிரான் “ என்றதனால் , பத்தி விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும் புலனாதல் அறிக .

                                         ********************************************

பாடல் :48 .

செல்வம்  நல்குர  வின்றிவிண்  ணோர்புழுப்

புல்வரம்  பின்றி  யார்க்கும்   அரும்பொருள்

எல்லை  யில்கழல்  கண்டும்  பிரிந்தனன்

கல்வ   கை மனத்  தேன்பட்ட  கட்டமே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் தாம் ஆண்டவனை அறிந்து அடிமைப்பணி செய்தற்கு முன்னரே தம் முட் புகுந்து அருளிய அருமைப்பாட்டை  வியந்து கூறிய  அடிகள் , அங்ஙனம்  வலிய  வந்து  புகுந்த  அப் பெருமானுடைய  திருவடிக் காட்சி கரந்த நிலையில் தாம் எய்திய  துன்பம் பெரிது என இத் திருப்பாட்டில் இரங்கிக் கூறுகின்றார் .   

பதவுரை :-  செல்வம்  நல்குரவு இன்றி  =  நல்வினைப்பயனாகிய  செல்வம்  உடையார் , தீவினைப்  பயனாகிய  வறுமை உடையார்  என்னும் ஏற்றத்  தாழ்வு இன்றியும் ,

விண்ணோர்  புழுப்  புல்  வரம்புஇன்றி  =  நல்வினைப்பயனே  நுகரும்  தேவர்    தீவினைப்பயனே  நுகரும்  புழுப் புல் என்னும்  வரையறை  இன்றியும் ,

யார்க்கும்  அரும்பொருள்  =  இயங்குதிணை  நிலைத்திணைகளாகிய எவர்க்கும் எவைக்கும் அடைதற்கு அரிய  பரம்பொருளினுடைய  ,

எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன்  =  அளவுட் படாத திருவடிகளைத் தரிசிக்கும்  பேறு பெற்றும் நீங்கினேன் (இப்பிரிவு) ,

கல்வகை மனத்தேன் பட்ட  கட்டமே  =   கல்லின்  வகைகளுள் ஒன்று எனக்  கருதப்படும் வலிய நெஞ்சத்தை உடையேன்  எய்திய  துன்பம் ஆகும் என்பது .

விளக்கவுரை :-   யார்க்கும் அரும்பொருள் என்பது, உபலக்கணத்தால்  எவைக்கும்  அரும்பொருள் என்பதையும்  புலப்படுத்தும் . யாரும்  எவையும் என்பன , முறையே  உயர்திணைப் பொருள்களையும் ,அஃறினைப் பொருள்க ளையும்   உணர்த்தி  நிற்றலால் . இயங்குதிணை ,  நிலைத்திணையாகிய உலகம்  எல்லாவற்றையும் குறிக்கும் . நல்வினைப்பயனே  நுகர்வனவும் ,  தீவினைப்பயனே  நுகர்வனவும் , இரண்டனையும் கலந்து நுகர்வனவும்  என  உயிர்கள் முத்திறப்படும்  . அவற்றுள்  நல்வினை , தீவினை  இரண்டையும்  கலந்து நுகரும்  மக்கள் உயிர்களைக் கருதி , “செல்வம்  நல்குரவு “ என்றனர் .  புண்ணியம்  விஞ்சப் பெற்றார்  செல்வரும் , பாவம்  விஞ்சப்  பெற்றார் வறியரும்  என மக்கட் பிறப்பினர் இருதிறப்படுவர் . ஆகவே, “செல்வம்  நல்குரவு”  என்பன  ஆகு பெயராக  நின்று  , அவற்றை உடையாரை  உணர்த்தி  நின்றன.  

            இதன் முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் , “அறிவருஞ் செல்வன் “ என்று  கூறப்பட்டான் . உலகத்தில் ஒரு செல்வனைக்  காண்டல் மற்றொரு  செல்வர்க்கு  எளிது அன்றோ ? ஆதலின் , இறைவனாகிய  செல்வனை , நல்வினைப் பயன் காரணமாக உள்ள செல்வன் காண்டல்  எளிதாமே  எனின்  இறைவன்  அருட் செல்வன் ; மக்கள் பொருட் செல்வர் ; ஆதலிற் காண்டல்  எளிது அன்று என்பதைப் புலப்படுத்தவே  , இப் பாட்டில் செல்வம் என்று தொடங்கப்பட்டது . இறைவனைக் காண்டற்குப் புண்ணியப் பயனாகிய  செல்வமும் ,பாவப் பயனாகிய நல்குரவும்  காரணம் ஆகா;  மெய்யுணர்விற்கு  உரிய தவமே காரணம்  ஆகும் . ஆதலின்  , அத் தவம் இலராகிய  செல்வராற் காண்டற்கு  எளிமையும் ஏற்படலாம்  என்பது போதர , “செல்வம் நல்குரவின்றி “  என்றனர் .

                இனிப்  புண்ணியப் பயனே  நுகரும் உயிரைக் குறிக்க  , “விண்ணோர் “ எனவும் , பாவப்பயனை  நுகரும்  உயிர்களைக் குறிக்க “புழு” எனவும் கூறி அருளினர்  விலங்கின் பிறப்பை  நரக கதியாகக் கூறும் மரபு உண்மையின் , புழு என்பது நரகரைக் குறிக்கும் . இத்துணையும்  முத்திற உயிர்களுள்  இயங்கு திணைப்பாற்  பட்டவை  கூறப்பட்டன. “நிலைத் திணைக்குப்  “  “புல்”  என்றனர் . அஃது உபலக்கணத்தால் , மரம் செடி முதலிய ஏனைய பொருள்களையும் உணர்த்தும் , தேவர்கள் நல்வினை மிக்கார் ஆயினும் , இன்பமே நுகர்தலில் செருக்குற்றுநிற்றலின்  அவர்க்கும் , ஓர் அறிவு உயிர்களாகிய புழுப் புல் முதலியன மிகவும் கீழ்ப்பிறவிகள் ஆதலின் ,அவை  அபுத்தி பூர்வமாகச்  செய்யும் நல்வினை காரணமாக  , மேன்மேல் சென்று  நற் பிறப்பு  எய்தவேண்டும்  ஆதலின் ,அவற்றிற்கும் இறைவன் அடைதற்கு அரிய பொருள் ஆவான் என்பது தெளிக . நல் வினைப்பயனால்  நலம் பெற்று வாழும்விண்ணோர்க்கு இறைவன் காட்சி எளிது எனவும் ,தீவினைப்பயனால்  துன்புறும் புழு முதலியவற்றிற்கு அக் காட்சி அரிது எனவும் கொள்ளல் ஆகாது இறை அருட்பார்வைக்கு இலக்கு ஆகும் தூய்மை பெற்ற உயிர் யாது ஆயினும்  அதற்கு எளிது ஆகலாம்  என்பது புலப்படுக்க , “விண்ணோர் புழுப் புல் வரம்பின்றி” என்றார் .ஆகவே இத் திருப்பாட்டின் முதலடியில் புண்ணிய பாவப்  பயன்களைக் கலந்து நுகரும் மக்களைக் குறித்தற்கு , “செல்வம் நல்குரவு” எனவும் , புண்ணியப்பயனே நுகரும் தேவர்களைக் குறித்தற்கு  “விண்ணோர் “ எனவும் பாவப்பயனே நுகரும்  உயிர்களைக் குறித்தற்கு , “புழு” எனவும்  இம்முத்திறமும் திணைகளாக ,  நிலைத்திணையைக்  குறித்தற்கு , “புல்” எனவும் , இவ்வரையறை  தோன்றக் கூறப்பட்டன எனக் கொள்க.

              “பாதாளம் ஏழினுங் கீழ்ச் சொற்கழிவு பாதமலர் “ என்றது பற்றி , இறைவன் திருவடி , “எல்லையில் கழல்” என்று  கூறப்பட்டது . வரம்புட் பட்ட  பொருளைக் காணும் தம் கண்களுக்கு , வரம்புட் படாத இறைவன் திருவடிக் காட்சி எளிது அன்று ஆகவும் , அப் பெருமான் அருட்பார்வைக்கு இலக்காண பேறு காரணமாக  எளிதாகக் காணப்ப்பெற்றேன் என்பார், “எல்லை இல் கழல் கண்டும்” என்றார் . இனி, திருவடியை மெய்ஞ்ஞானம் எனவும் , இறைவனது அருட்சத்தி எனவும்  சிவாகமங்கள் கூறும் . ஆதலின் ”எல்லையில்  கழல்” என்பதற்கு , மாசற்ற மனங்கழிய  நின்ற  இறைவனது  திருவருள் எனக் கோடலும் ஒன்று. கண்டும் என்புழி, உம்மை , காண்டலின் அருமையைப்  புலப்படுத்து நின்றது .  பெறல் அரும் பொருளைத் தேடி  அலைவான் ஒருவன் , அப் பொருள் காணப்படாத இடங்களைக் கண்டு கண்டு நீங்கிச் சேறலும் , தன்  கருதிய பொருளை அரிதிற்  காணபெற்றான் ஆயின் , அதனைவிட்டு நீங்காமல் இருத்தலும் உலகியலில் கண்டன. ஈண்டு ,அடிகள் அரிய தவம் கிடந்தும் ,காண்டற்கு அரிய இறைவனுடைய எல்லை யில் கழல்களை  எளிதிற்  காணப்பெற்றும் பிரிய நேர்ந்ததே  என்று  அடங்காத  வருத்த மேற்கொண்டு , “கண்டும் பிரிந்தனன்” என்றார். கண்ணிலான் பெற்று இழந்த  கதை ஆயிற்று என்பது குறிப்பு .

           அரியதொரு  பொருளைப் பெறாத நிலையில் உண்டாம்  துன்பத்தினும், பெற்று இழந்த காலை உண்டாம் துன்பம் பெரிது அன்றோ? இங்ஙனம் எல்லை யில்  கழல் கண்டும் , பிரிந்த இந் நிலையே  தமக்குப் பெரும் துன்பமாக முடிந்தது என்பார் , “பட்ட கட்டம் “ என்றார். . இன்ன துன்ப நிலை ஆற்றொணாதது  என்பதை “என் தலைவனை நனி காணேன் , தீயில்  வீழ்கிலேன்  திண்வரை உருள்கிலேன்  செழுங்கடல் புகுவேனே “ என்று அடிகள் பிறிதோரிடத்து  அவலித்துக் கூறிய  செய்தியானும் அறிக.  மனம் சடப்பொருள் ஆயினும் , உருவம் உடையது அன்று .; உருவம் இல்லாது இருந்தும் , குழைவு சிறிதும் இன்மையால் , உருவம் உடையதாய்  உலகிற்  காணப்படும்  கல் வகைகளுள் ஒன்று ஆயிற்று என்பார் , “கல்வகை மனத்தேன்”  என்றார் . “கல்லை மென்கனியாக்கும்  விச்சை கொண்டு  என்னை  நின் கழற்கு அன்பன்  ஆக்கினாய் “ அன்பது அடிகள் திருவாக்கு  “கல் வகை மனத்தேன் பட்ட கட்டம் “  என்பதில் , இரங்கிக் குழையும் இயல்பு சிறிதும்  இல்லாத வன்நெஞ்சம்  உடைய தமக்கு  இத் துன்பம் நேர்தல் பொருத்தமே என்று அவலத்தில் ஆறுதல் தோன்றி  நின்ற குறிப்புண்மையும்  அறிக .  கட்டம் என்னும் பெயர்ப் பயனிலைக்கு  எழுவாய் , பிரிந்தனன் என்னும் வினை முற்றில்  தோன்றிய அப் பிரிவு என்பது ஆகும் . அப் பிரிவு எனக்குப் பெரும் துன்பம் ஆயிற்று என்பது கருத்து .  

               இதன்கண், யார்க்கும் அரும் பொருளின் எல்லையில் கழல் கண்டு  பிரிந்தனன்  என்புழி ,  அக் காட்சி அரியதாகவும் , எளி வந்த  கருணைக்கு ஈடுபட்டு வேறு கைம்மாறு செய்திலேன் ஆயினும் , அதனினின்றும்  பிரியா மையே   என்னால் ஆகிய கைம்மாறாகவும் ,  அது தானும் செய்ய இயலாத வன் ஆயினேன் என்னும் அடிகள் இரக்கக் குறிப்புத் தோன்றி நிற்றலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம்  நுதலிய  பொருள் புலனாயவாறு அறிக .

                                                ***********************************

பாடல் :49.

கட்ட  றுத்தெனை  யாண்டுகண்  ணாரநீ

றிட்ட  அன்பரொ  டியாவருங்  காணவே

பட்டி  மண்டபம் ஏற்றினை  ஏற்றினை

எட்டி  நோடிரண்  டும்அறி   யேனையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்காட்சி  பெற்றும்  பிரிய  நேர்ந்த துன்பத்திற்கு வருந்திய அடிகள் ,இத் திருப்பாட்டில்  உண்மை அடியார்கள் கண் கூடாகக்  காணும்படி  தம்மை வித்தியா மண்டபத்தில் ஏற்றி , அறிஞரோடு  இருந்து , சமய உண்மைகளை  ஆராய்ச்சி செய்ய  உதவிப்  பெருமைப்படுத்திய நிகழ்ச்சியை நினைந்து , திருவருளைப்  பாராட்டி ஆறுதல்  அடைகின்றார்.  

பதவுரை :-  ஏற்றினை   =   ஊர்தியாகப் பெற்ற  எருதினையுடையாய் ,

எட்டினோடு  இரண்டும்  அறியேனை ,என்னை  =  எட்டும் அதனோடு   இரண்டும் சேர்த்து எண்ண அறியாத சிறியேனாகிய என்னை ,

கட்டு  அறுத்து  ஆண்டு  =  பாசப்பிணிப்பை அகற்றி  அடிமை கொண்டு  ,

நீறு  இட்ட  அன்பரொடு   யாவருங்  கண்ணாரக் காண  =   திருநீறு  அணிந்த  மெய்யடியாரொடு  மற்றை அன்பர்களும் கண் கூடாகக்  காணும்படி ,

பட்டி மண்டபம்  ஏற்றினை  =   சமய  வாதம்  புரிதற்குரிய  வித்தியா மண்டபத்தில்  ஏறி வீற்றிருக்கச் செய்தனை,

இதற்கு யான் செய்யத்தக்க  கைம்மாறு  யாது உளது?  என்பது .

விளக்கவுரை :- ஏற்றினை என்பது முன்னிலைப் பெயர் . இடப ஏறு அறத்தின் வடிவம் என்றும் , அதனை நடாத்துபவன் இறைவன் என்றும் சிவாகமங்கள் கூறும் .மேலும் , ஆதார ஆதேயப்  பாதுகாப்பிற்கு அடையாளமாக  உணரப்பட்டதும் , எடுக்கப்பட்டதும்  அவ் ஏறே  என்பார், “ஊர்திவால் வெள்ளேறே  சிறந்த , சீர் கெழு  கொடியும் அவ் ஏறு என்ப” என்பது காண்க. 

             உலகியலில் அறிவு இல்லாதவன் ஒருவனைக் குறித்து ,”எட்டும் இரண்டும் எவ்வளவு ? என்று கேட்டால் , சொல்ல அறியாதவன் என்று  இழித்து உரைத்தலைக் கேட்கின்றோம் . அதனையே அடிகள் தம்பால் ஏறிட்டு , “ எட்டினோடிரண்டும்  அறியேனை “என்று கூறினர். இனி, எட்டினோடு என்பதற்கு , அகரத்தோடு  எனவும் , இரண்டும் என்பதற்கு உகர மகரங்கள் எனவும் பொருள் கொண்டு , அகர உகர மகரங்களின் இயைபு  ஆகிய பிரணவ மந்திரம் எனக் கோடலும் ஒன்று .  தமிழில் உள்ள எண்ணைக் குறிக்கும் வடிவங்களில் , எட்டு அகர வடிவமாகவும் ,இரண்டு உகர வடிவமா கவும் , “இரண்டும்” என்புழி , இறுதி மகரவொற்றாகவும்  இருத்தல் அறிக . ஏனைய தேவர்களைக் குறிக்கும் மந்திரங்கள் பிரணவத்தோடு  எண்ணப் பட்டே , எட்டு எழுத்து முதலிய பெயர்பெறும் . சிவமந்திரமாகிய திரு ஐந்தெழுத்துப் பிரணவத்தின் விரிவே ஆதலின் , பிரணவம் இன்றியும் ஐந்தெழுத்தாக நிலைபெறுவதாகும் . ஆதலின் , பிரணவத்தின் இயல்பு அறியாதவன் என்பதற்குச் சிவமந்திரமாகிய திருவைந்தெழுத்தின்  இயல்பு  அறியாதவன் என்பது பொருள் ஆகும் என்க . இவ் வுண்மையை ,”எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் , எட்டும் இரண்டும்  அறியாத ஏழையர் , எட்டும் இரண்டும்  இரு மூன்று நான்கு  எனப்பட்டது  சித்தாந்த சன்மார்க்க பாதமே “ என்று, விளக்கிக் கூறுவர் திருமூலர் .  ஈண்டு , எட்டும் இரண்டும் பிரணவம் என்று அறியாத ஏழையர்  இரு மூன்று நான்கு என்பர் என இழித்துக் கூறியதும் அறிக .

            பட்டி மண்டபம்  –  சமய உண்மைகளைத் தடை விடைகளின் வைத்து  ஆராய்தற்கு உரிய வித்தியா மண்டபம் ஆகும் . “பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் “  என்று  சிலப்பதிகாரமும் ,”ஓட்டிய சமயத் துறு பொருள் வாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு  அறிந்து ஏறுமின் “ என்று  மணிமேகலை யும்  கூறுமாறு  அறிக . இதற்கு இவ்வாறு பொருள் கூறாது , பட்டி – நாய் ; நாயை மண்டபத்து ஏற்றியது போல  என்று  வேறுபடக் கூறுவாரும் உளர் . அக் கருத்துப் பொருந்தாது என்க. . “ எட்டினோடு   இரண்டும் அறியாத சிறியேனைச் சமய உண்மைகளை ஆராய்ந்து தெளிதற்கு உரிய சமயவா திகள்  கூடும் பட்டி மண்டபத்தில்  வீற்றிருக்கச் செய்தனை “ என்று இறைவன் அருட் பெருக்கை  வியப்பாராய் , “பட்டி மண்டபம்  ஏற்றினை “ என்றார்.  அம் மண்டபத்தில் வீற்றிருக்கும் தகுதிப் பேறு குறித்து , “கட்டறுத்தெனை யாண்டு”   என்றார்.  அறியாமைக்கு ஏதுவாகவுள்ள பாசப்பிணிப்பை ஒழித்து , ஆளாகக் கொண்டு  என்பது அத் தொடரின் பொருள். அறியாமைக்கு ஏதுவாக வுள்ள  பாச நீக்கத்தால் , சமய நூல் அறிவு முதலிய ஞான விளக்கமும் , ஆட்கொண்டமையால் அநுபவ உணர்வும்  உண்டாதல் தெளிக . எல்லாவகை யாலும்  மேம்பாடு எய்தி விளங்கும் பெரியவன் ஒருவன் , மிகவும் சிறியவன் ஒருவனைத் தனிமையில் பலபடப் பாராட்டிப் பேசி , பலர் கூடிய அவைக் களத்தில்  புறக்கணிப்பது  மிகவும் கொடிய செயல்  என்பர் . “எனைத்  துங்குறுதல் ஓம்பன் மனைக் கெழீஇ  , மன்றிற் பழிப்பார் தொடர்பு”  என்று  நீதி நூல் அத்தகைய கொடியவர்களின் தொடர்பு வெறுக்கத்தக்கது  என்று கூறுதலும்  அறிக. அங்ஙனம் அன்றிக் குற்றம் உளதேல் , தனிமையில் வைத்து  ஒறுத்துரைத்தும் , மன்றில் குணம் பாராட்டியும் பெருமைப்படுத்தலே உண்மைப் பெரியார் இயல்பு ஆகும் .  அம் முறையில் பலரும் அறியத் தம்மைப் பட்டி மண்டபம் ஏற்றியது  பெருமைப்படுத்தியது  என்பார் , ““யாவருங்காண” என்றார் . காண்பார் பலராயினும் , தகுதியுடையார் அல்லர் ஆயின் , அன்னார் காண்டலால் வரும் சிறப்பு யாதும் இன்றாம் .காண்பவர் பெருமைப் படுத்தப்படுவாரின் உள்ளம் மகிழத்தக்க தகுதி உடைய ராய் இருத்தல் வேண்டும் . உள்ளம் ஒத்தவர் மதிப்பையே தூய சிந்தை உடையார் விரும்புவர் என்பதற்குத் தம்பிரான் தோழர் காட்சியில்  ஈடுபட்ட பரவையார் இயல்பே சான்று ஆகும் .  சுந்தர மூர்த்திகளைத்  திருக்கோயிலிற்  கண்டு , காதல் அரும்பப் பெற்ற பரவையார் , தம் இல்லத்திலிருந்து  விரக தாபத்தால் வாடி , அருகு இருந்த தோழியை நோக்கி , “திருக்கோயிலிற்  காணப்பட்டவர்  யார்?  என்று கேட்டலும் , அத் தோழி , “சைவ முதற் றிருத்தொண்டர்  தம்பிரான் தோழனார் நம்பி” என்றாளாம் .இவ்வுரை கேட்ட அளவில்  பரவையார்க்கு  வன்றொண்டர்பால்  வைத்த மனக் காதல்  அளவின்றி  வளர்ந்து பொங்கிற்றாம் . இந் நிகழ்ச்சியில் ஓர் உண்மை காணப்படும் . ஒரு மணப்பெண்ணுக்குக் கனவன் இயல்பைக் கூறுவோர் , கட்டழகும்  இளமையும்  செல்வமும் உடையன் என்பராயின் , அப் பெண்ணிற்கு உளம் பூரித்துக் காதல் வரும் .அங்ஙனம் அன்றி , மணமகன் சிவபத்தன் ; திருநீறு  கண்மணி புனைவோன்  என்று கூறக்கேட்பின் ,காதல் வளர்ச்சிக்கு இடன் உண்டாமா?  இஃது உலகியற் செய்தியாகும் . இங்கே பரவையார் உள்ளமும் சுந்தரமூர்த்திகள் உள்ளமும் உலகியலைக் கடந்து, சிவபெருமானிடத்து அன்பு பூண்டு தூய்மை அடைந்தன ஆதலின் , ஒத்த இயல்பின ஆகும் .  அதனாலே , சிவனடியார் என்றலும்  காதல் வளர்ந்து பொங்கிற்று என்றார். வேறு எவ்வகையாகச்  சுந்தரர் வருணிக்கப்படினும் , அம்மையார்க்குக்  காதல் ஊன்றாது. என்க . அங்ஙனமே , ஈண்டு அடிகளின் உள்ளம் மகிழத் தக்கவர்  நல் அன்பர்  ஆதலின் , “அன்பரொடு  யாவருங்  காண” என்றார் . “ஓடு” உருபு உயர்ந்த பொருளைச் சார்ந்து  வரும்  என்ற  விதிப்படி ,”யாவரும்”  என்னும் சொல்லாற் குறிக்கப் பட்டாரினும் , அன்பர்  சிறந்தவர்  என்பது ஈண்டுக் கருதத்தக்கது .

         இனி, அன்பர் என்பது , உலகியலில் தாய் தந்தை மனைவி மக்கள்  நண்பர்  முதலியோரிடத்து அன்பு உடையாரையும் குறிக்கும் .  ஆதலின் அத்தகைய அன்பர்  காண ,அடிகள் பெருமைப்படுத்தப்பட்டார்  என்பதனால், அடிகளுக்கு வரும்  உவகை  யாதும் இன்றாம் . அடிகள் சிவனடியவரைச் சிவன் என மதிக்கும் பெற்றி வாய்ந்த பெரியார் ஆதலின் , சிவன் இடத்து அன்பு உடையாரையே பெரியார் என அவர் உள்ளம் விழையும் என்பது தெளிவு ஆம் .  அம்  முறையில்  , “நீறிட்ட அன்பர்கள்” என்று அருளிச் செய்யப் பட்டது  என்க. “ நீறிட்ட  அன்பர்கள்” என்புழி நீறிட்டமையால்  புறம் தூய்மை யும் , அன்புடைமையால்  அகம் தூய்மையும் பெற்றாம் . ஆகவே , புறமும்  அகமும்  தூய்மையுடைய  சிவனடியாரையே  ஈண்டுக் குறிப்பது  என்க . அத்தகைய சிவனடியார் , தம்மை இறைவன் பட்டி மண்டபம்  ஏற்றுங்கால்  எங்ஙனம் கண்டனர் எனின் , அவர்தம்  கண்குளிர  நேரிற்  கண்டனர் என்பார், “ கண்ணார” என்றார் . ஆகவே, தனி நிலையில் தம்மை ஒறுத்து , நன்நெறிப்படுத்து , வெளிப்புடையில்  உண்மைச் சிவனடியார்  பலருடன் மற்றையோரும்  கண்ணாரக் காணும்படி வித்தியா மண்டபத்தில்  வீற்றிருக் கச் செய்த  பேருதவிக்கு யான் செய்யக் கடவ கைம்மாறு  யாது உளது என்பது அடிகள் கருத்து என்க .

                  இதன்கண் , “எட்டினோடு இரண்டும் அறியேனைப் பட்டி மண்டபம்  ஏற்றினை “  என்று  கூறப்பட்டதால் , அப் பேருதவிக்கு  யான்  யாது கைம்மாறு  செய்ய வல்லேன்  என்பது போதரலின் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் வெளிபட்டு நிற்றல்  அறிக .

                                          *************************************************

பாடல் : 50 .

அறிவ   னேயமு  தேஅடி நாயினேன்

அறிவ னாகக்கொண்  டோஎனை  ஆண்டது

அறிவி  லாமையன்  றேகண்ட  தாண்டநாள்

அறிவ  னோவல்ல  னோஅரு  ளீசனே..

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  , “கட்டறுத்தெனையண்டு”  என்றார். அங்ஙனம் ஆட்கொள்ளுங்கால் , ஞானவடிவினன் ஆகிய இறைவன் , ஐம்புல வேடரின் அயர்ந்து கிடந்த  ஆன்மாவை , “நீ வேடர் மகன் அல்லை; என் மகன் ஆவாய்”   என அறிவுறுத்து  அவ் அறிவுநிலை  எய்தப்பெற்ற பின்னரே  ஆட் கோடல் மரபு. ஈண்டு  , என்பால் உள்ள பேர் அருள் காரணமாக , அம் மரபிற் பிறழ  என் அறிவிலாப் பருவத்தே  புகுந்து என்னை ஆண்டனையோ  என்று அடிகள்  இறைவன்  திருவருள்  திறத்தைப் பாராட்டி  இன்புறுகின்றார்.

பதவுரை :-அறிவனே  =  ஞான வடிவு உடையவனே ,

அமுதே  =  இனிய அமிழ்த மயம் ஆனவனே ,

அடி நாயினேன்  எனை  =  அடிமையாகிய  நாயின் தன்மை உடைய என்னை ,

அறிவன் ஆகக் கொண்டோ ஆண்டது  =   அறிவுடையவனாகத்  திருவுளம்  கொண்டோ  ஆட்கொண்டது ,

ஆண்டநாள் கண்டது  அறிவிலாமையன்றோ ? =   அடியேனை ஆட்கொண்டகாலத்தில் என்பாற் கண்டது  அறிவிலாமை அன்றோ? ,

அறிவனோ  அல்லனோ  ஈசனே  அருள்  =  யான் இந் நிலையில்  அறுவுடையவனோ  அறிவி இல்லாதவனோ  எம் பெருமானே இதனைத் தெளிவித்து அருள் புரிவாயாக  என்பது .

விளக்கவுரை :-முற்றும் உணர்தல் , இயற்கை உணர்வினன் ஆதல் முதலிய அருட் குணங்கள் உடைமைபற்றி , இறைவனை , “அறிவனே” என்றார். இறைவனை ஞான வடிவினன் என்று முது நூல் கூறும் . வரம்பின் இன்பம்  உடைமை பற்றி , “அமுதே” என்றார் . “அறிவனே” என்றதனால் ஆண்டவனது அளத்தற்கு அரிய பெருமையும் , “அமுதே” என்றதனால் , அவன் தன் அன்பர்க்கு இனியனாதலும் புலப்படுக்கப் பட்டபடியாம் . ஆண்டவன்  யாராலும் அணுகுதற்கு அரிய ஞான வடிவினன் என்றதனால் , அவன் அருமையும் , அமுதம் போல அடைந்தார்க்கு இனியன்   ஆவன் என்றதனால்  அவன் எளிமையும் கூறிய படியும் ஆம் .  அறிவன் ஆதலின் ஆண்டவன் ஆகவும்  , அமுதமயமாக  உள்ளபடியால்  அடியவரை  அடிமை கொள்பவனா கவும்  உள்ளான் என்பதும் குறிப்பிற் போதரும் .  

              “அடி நாயினேன் எனை” என இயைக்க . நாயின் தன்மை போன்ற இயல்பு உடையன் ஆயினும் , நின் அடியைப் பற்றுக்கோடாக உடையேன்  ஆதலின் , விலக்கத்தக்கவன் அல்லன் என்னும் குறிப்புத் தோன்ற , “அடிநாயினேன்”  என்றார். “என்னை” என்றது , நினக்கு ஆளாதற்குச் சிறிதும் தகுதி இல்லாத என்னை என்னும் பொருள் பயந்து நிற்பதாகும் . சிறந்த தலைவன்  , மற்றொருவனைப் பணி கொள்ளுங்கால் , தன் தகுதிக்கு ஏற்றவாறு குறிப்பு அறிந்து ஒழுகும் அறிவு உடையானை  அன்றோ ஏற்றுக் கொள்ளுவான்? உலகியலிற் காணப்படுவதே இங்ஙனம் ஆயின் , ஆண்டவன் தொண்டிற்கு  உரியார் எத்துணைத் தகுதி உடையராய் இருத்தல் வேண்டும்  என்பது கூறவேண்டா. ஆட்கொண்ட பின்னும் தம்மை அறிவிலன் என்று அடிகள் கூற அஞ்சுகின்றார். ; “ அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் , குன்றே  யானையாய் என்னை ஆட்கொண்ட போதே  கொண்டி லையோ “  என்றபடி ஆட்கொண்ட காலத்தே உடல் பொருள் ஆவி எல்லாம் இறைவன் உடைமை  ஆயினபடியாலும் , அவ் இறைவன் உடைமைக்குக் குறை  கூறியதாக முடியும் ஆதலானும் என்க. இது பற்றியே “ஆண்டவன்” என்னாது ,உடனிகழ்ச்சியாக , “ ஆண்ட நாள் “ என்றார்.  ஆட்கொண்ட  நாளில் என்பாற்  கண்டது , அறிவு இலாமை அன்றோ என்ற இடத்துக் காண்டற்கு  வினைமுதல்  இன்னார் எனத் தெளிதல் வேண்டும் .  கண்டது இறைவன் எனின் இறைவன் காட்சிக்கு அஞ்ஞானம்  எப்படிப் புலன் ஆகும்?  ஞானாசிரியன் பக்குவம் உள்ள மாணவனுக்கு ஞானோபதேசம்  செய்தபின் , அவனை நோக்கி , ஆணவ மலத்தின் இயல்பை அறிவுறுத்த நிலையில் , அம் மாணவன் ,”சுடரால் இருள் தேடச்செல்லார்கள்  எந்தாய் , சுடரால் இருள் தேடச் சொன்னாய் “ என்றானாம் . விளக்கைக் கொண்டு இருளைத் தேடச்  சொல்லியபடி  என்பது கருத்து .  விளக்கின் முன் இருள்நில்லாமை போல மெய்யுணர்வின்முன் அஞ்ஞானம்  நிலைபெறாமையாற்  புலப்படாது என்பது ஞான நிலை எய்திய மாணவனுக்கே  இவ் அநுபவம் ஆயின் , மெய்ஞ்ஞான வடிவமாக வுள்ள இறைவன் காட்சிக்கு உயிரின் அறியாமை  எப்படிப் புலன்  ஆகும்  என்பது  . ஈண்டு , ஆண்டவனே  , நீஎன்னை  ஆட்கொண்ட நாளில் யான் கண்டது என்பால் அறிவு இலாமை   அன்றோ?  என்பது அடிகள் கருத்து எனக் கொள்ளல் வேண்டும் . “ஆண்ட நாள்” என்றதனால் , ஆட்கொள்ளத் தொடங்கிய   காலம்  என்பது போதரும் . அதன் பின்னர் , நினக்கு  ஆட்பட்ட மையால்  யான் அறிவுடையனாக  இருக்கலாம் . ஆனால் , ஆட்பட்டும்  பிரிய நேர்ந்த நிகழ்ச்சியை நினையுங்கால் , அறிவுடையன்  அல்லனாகவும் இருக்க லாம்  என்று அடிகள் ஐயுற்று , அவ் ஐயுறவு  தோன்ற ,”அறிவனோ அல்லனோ” என்றார். அடிகள் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளுங்கால் , “நான்தனக்  “ கன்பின்மை நானும்  தானுமறிவோம் “ என்றபடி , அடிமைப் பணிவு தோன்றக்  குறைத்துக் கூறுதலிலே  கருத்து உடையார் என்பது  காணப்படும் . ஆதலானும் , அம் முறையே  தம்மை ஈண்டும்  அறிவிலான்  என்று கூறின்  , ஆண்டவன் பெருமைக்கு இழுக்குச் செய்த குற்றம் உளதாம் என்னும் அச்சத்தானும்  ஐயுறவு  தோன்றக்  கூறினார் என்க. இத்தகைய ஐயுறவிற்குத் தெளிவு வேண்டுமாயின் , அதனைச் செய்தற்கு  ஞான ஐசுவரியச் செல்வனா கிய   இறைவனே   தலைவன்  ஆதல்  வேண்டும்  என்பார் . ஈண்டு, “ஈசனே” என்று விளித்துக் கொண்டார் என்க . விளித்து , இந் நிலையில் யான் அறிவனோ  அல்லனோ என்பதைத் தெளிவித்து  அருள்க என்பார் , “அருள்” என்றார் என்க .என்னை  ஆட்கொண்ட நாளில்  என்பால் யான் கண்டது அறிவு இலாமை  ஆகவும் , அந் நிலையில்  அறிவனாகத்  திருவுளங்கொண்டோ என்னை  ஆட் கொண்டது ?  நின் காட்சி கரந்ததாதலின் ,,இற்றை ஞான்று  யான் அறிவனோ அல்லனோ ? இதனைத் தெளிவித்து அருளல் வேண்டும் என்பதே இத் திருப்பாட்டில் அடிகள் கருதிக் கூறியது  என்க.

         இதன்கண், அடிகள் தம்மை அறிவிலாத நிலையில்  ஆட்கொண்டதாகக்  கூறி  இருத்தலின் , இதற்கு யாது கைம்மாறு  செய்யவல்லேன்  என்பது பெறப்படுதலால் , கைம்மாறு கொடுத்தல்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “அறிவனே  யமுதே “ என்றதனாலும் , “அறிவிலாமையன்றே கண்டது “ என்றதனாலும்  பத்தி வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம்  நுதலிய பொருளும்  தோன்றுதல் அறிக . “அறிவனே அமுதே”  என்றதற்குப் பத்தியும் ,  “அறிவிலாமை யன்றே கண்டது”  என்றதற்கு வைராக்கியமும் ஏதுவாதல் அறிக .

                                          *****************************************

 

Leave a comment