சிவமயம்
திருவாசகம் —— திருச்சதகம்
திருவாதவூரடிகள் அருளிச்செய்த திருவாசகத் திருமறைக்கண் உள்ள திருச்சதகத்திற்குப் பாண்டிவள நாட்டில் பூங்குன்ற நாட்டுத் தலைநகராகிய மகிபாலன்பட்டி, மகாமகோபாத்தியாய முதுபெரும் புலவர் சைவசித்தாந்த வித்தகர் பண்டிதமணி மு. கதிரேசனார் இயற்றிய கதிர்மணி விளக்கம் என்னும் பேருரையில் முதல் ஐந்து பாடல்களும் அதற்கான உரையும் ஜூலை 13, 2014 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்திருந்தோம், அதன் தொடர்ச்சியாக ஏனைய பாடல்களையும் அதற்கான உரையையும் கீழே காணலாம்.
பாடல் 6
பரந்துபல் லாய்மலர் இட்டுமுட்
டாதடி யேயிறைஞ்சி
இரத்தவெல் லாமெமக் கேபெற
லாம் என்னும் அன்பருள்ளம்
கரந்துநில் லாக்கள்வ னேநின்றன்
வார்கழற் கன் பெனக்கு
நிரந்தர மாவரு ளாய்நின்னை
யேத்த முழுவதுமே.
கருத்துரை :- தவஞ் செய்தற்குரிய பிறப்பு வேண்டும் என்று முன்னைத் திருப்பாட்டில் கூறிய அடிகள், அப்பிறப்புக் கிடைப்பினும், இறைவனிடத்து இடயறாத மெய்யன்பு சிறப்பாக வேண்டும் என்பதை இத்திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார் .
பதவுரை :- பரந்து = சிவ தலங்கள் தோறும் திரிந்து,
ஆய் பல் மலர் முட்டாது இட்டு =
ஆராய்ந்தெடுக்கப்பட்ட பலவாகிய மலர்களைக் குறைவுபடாது பெய்து,
அடியிறைஞ்சி = திருவடியை வணங்கி,
இரத்த எல்லாம் எமக்குப் பெறலாம் என்னும் =
வேண்டி எல்லாம் எமக்குப் பெறுதல் கூடும் என்று கருதுகின்ற,
அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே =
மெய்யன்பர்களுடைய உள்ளத்தில் மறைந்து நில்லாத கள்வனே,
நின் வார்கழற்கு அன்பு =
நின்னுடைய நெடிய கழலணிந்த திருவடிக்கண் உண்டாம் மெய்யன்பை,
முழுவதும் நின்னை ஏத்த =
முற்றும் நின்னையே வாழ்த்தும் வண்ணம்,
நிரந்தரமா = இடையறாது நிகழுமாறு,
எனக்கு அருள்வாய் = எனக்கு அருள் புரிவாயாக என்பது
விளக்கவுரை :-. ஆராய்ந்தெடுத்தல் – விலக்கியன ஒழித்து விதித்தன தெரிந்தெடுத்தல். அடியிறைஞ்சுதற்கு ஏனைய உபகரணங்களினும் மலர் சிறந்ததாகளின் அது கூறப்பட்டது. உபலக்கணத்தாற் பிறவுங் கொள்க. கருவியும் பயனும் அடங்க, “எல்லாம்” என்றார். கருவியாவது, ஆண்டவன் திருவடி அடைதற்குரிய ஞானம், பத்தி முதலிய சாதனங்கள். பயன், திருவடி நீழலில் இயைந்து நுகரும் பேரின்பம். ஆண்டவன் திருவடியை மெய்யன்போடு வணங்கினால், யாம் இரப்பன வெல்லாம் பெறலாம் என்று கருதும் அன்பர் என்றமையால், இறைவன் வழிபாட்டில் நம்பிக்கையும் கடைப்பிடியும் இன்றியமையாதன என்பது புலனாகும். உயிர் அறிவில் ஒன்றித்து நின்றும், அவ்வறிவால் அறிதற்கு அரிய நிலையில் மறைந்திருத்தலின், இறைவனைக் கள்வன் என்றார் . “என் உள்ளங்கவர் கள்வன்,” “உள்ளத்தெ நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும், கள்ளத்தே நிற்றியம்மா எங்ஙனம் காணுமாறே” என்னும் தமிழ் மறைகளும்,
“அருந்தவர் காட்சியுள் திருந்த வொளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்
ஒளிக்கும் சோரன்.”
என்று அடிகள் பிறாண்டுக் கூருதலும் ஈண்டு நினைக்கத்தக்கன. அடியிறைஞ்சி இரத்தவெல்லாம் பெறல் கூடும் என்னும் மெய்யன்பர் உள்ளத்திற் கரந்து நில்லாமல் வெளிப்பட்டு நிற்பவன் என்றமையால், அடியிறைஞ்சாமல் எல்லாவற்றையும் பெறலாம் என்று துணியும் பொய்யன்பர் உள்ளத்தில் வெளிப்படாமல் கரந்து நிற்பவன் என்பது போதரும். கீழ் மக்கள் உள்ளம், அறம் பாவம் என்னும் மூலப் பொருள்களிலும், அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களினும் செல்லுங்கால், அறம் ஆகிய மூலத்தைவிட்டு அதன் பயனையும், துன்பம் ஆகிய பயனை விட்டு அதன் மூலத்தையும் விரும்புதல் இயல்பு. ஆதலின் அம்முறையில் அடி இறைஞ்சுதலாகிய மூலத்தை விட்டு, எல்லாம் பெறுதலாகிய பயன் எய்துதல் அரிதெனக் கருதி, மேற்கூறிய பயன் இரண்டனுள் சாத்தியமாகிய பேரின்பத்தைவிட்டுச் சாதனங்களாகிய பலவற்றுள் மெய்யன்பு ஒன்றையேனும் தரல் வேண்டும் என்பார், “நின்கழற்கு……அன்பு எனக்கு அருளாய்” எனவும், அவ் அன்புதானும் ஒருகால் தோன்றி ஒருகால் மறையும் இயல்பினதாக இன்றி, இடையறாது நிகழ்வதாக இருக்க வேண்டும் என்பார், “நிரந்தரமா” எனவும், அவ் அன்பின் ஒருகூறு உலகப் பொருள்களிடத்தும், மற்றொரு கூறு கடவுளிடத்தும் நிகழாமல், முழுவதும் கடவுளை ஏத்துதற்கே பயன்பட வேண்டும் என்பார், “நின்னை யேத்த முழுவதுமே” எனவும் அருளிச் செய்வராயினர் “கழற்கு” என ஏழாம் வேற்றுமையுருபில் நான்காவது மயங்கிற்று.
அடிகள் இறைவன் அடியிறைஞ்சுதலாகிய பேறு தமக்கு இன்றென்பதை, “தவமே புரிந்திலன் தண்மலரிட்டு முட்டாதிறைஞ்சேன்” என்றதனால் புலப்படுத்தமை யறிக. அகத்தும் புறத்தும் வழிபாட்டையன்றி வேறொன்றையும் அறியாத அடிகள் இங்ஙனம் கூறியது, உலகியலைத் தம் மேலாக்கிய பணிவு புலப்படுத்தற்கென்க. இங்ஙனம் கூறப்பட்ட பிற இடங்களிலும் இதுவே கருத்தாகக் கொள்க.
இதன்கண், “அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வன் “ என இறைநிலை இத்தகைய தென்பதும், அப் பெருமான் அருளைப் பெறுதற்கு உரிய சிறந்த சாதனம் இடையறாத மெய்யன்பு என்பதும் பெறப்படுதலின், “மெய்யுணர்தல்” என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றுதல் அறிக.
******************************
பாடல் 7.
முழுதும் கண்டவ னைப்படைத்
தான் முடி சாய்த்து முன்னாள்
செழுமலர் கொண்டெங்குந் தேடஅப்
பாலன் இப் பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம்
ஆடிக் கதியிலியாய்
உழுவையின் தோலுடுத் துன்மத்த
மேல்கொண் டுழிதருமே.
கருத்துரை :- இறைவனிடத்து மெய்யன்பு சிறப்பாக வேண்டும் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், அம் மெய்யன்பினால் அன்றி ஆற்றல் முதலிய பிற சாதனங்களால் தேவராயினும் இறைவனை அணுக இயலாது என்பதை இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.
பதவுரை :- முன் நாள் = முன் ஒரு காலத்தில்,
முழுதுங் கண்டவனைப் படைத்தான் =
உலகமுழுதும் படைத்த பிரமனைத் தன் உந்தித் தாமரையினின்றும் தோற்றுவித்த திருமால்,
செழுமலர் கொண்டு = அலர்ந்த தாமரை மலரை யொத்த திருவடிகளைக் காணவேண்டும் என்னும் உறுதியை உள்ளத்தே கொண்டு,
முடிசாய்ந்து எங்குந் தேட =
தலையைச் சாய்த்து யாண்டுந்தேட,
அப் பாலன் எம்பிரான் =
காணப்பட்டவாறு அப்பாற்பட்டவனாகிய எங்கள் சிவபெருமான்,
இப்பால் = இவ்விடத்தில்,
தழுதொடு காட்டிடை நாடகம் ஆடி =
பேய்க்கணங்களோடு கூடிச் சுடுகாட்டிற் கூத்தாடி,
கதியிலியாய் = புகலிடம் இல்லாதவனாய்,
உழுவையின் தோலுடுத்து = புலித்தோலை ஆடையாக வுடுத்து,
உன்மத்தம் மேல் கொண்டு உழிதரும் =
மிக்க களிப்பை மேற்கொண்டு அலைந்து திரிவன் . [இஃதென்ன வியப்பு} என்பது.
விளக்கவுரை :- முழுவதுங் கண்டவன் எனப் பிரமன் பெருமை கூறியது. அவன் – தந்தையாகிய திருமால் பெருமை தோன்றற்கு காண்டல் , இலக்கணைச் சொல்லாய் நின்று ஆக்குதலை உணர்த்தும். முற்றும் ஆக்கினான் என்பதற்கேற்ப உலக முழுவதும் எனச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. செழுமலர், ஆகு பெயராய் நின்று சிவபெருமான் திருவடியை உணர்த்தும், தேடப்பட்டது அதுவாகலின், “சொற்கழிவு பாதமலர்” என்பர். பின்னும் கொண்டு – குறிக்கொண்டு, திருமால் பன்றியுருக் கொண்டு நிலங்கிளைத்துச் சிவபிரான் திருவடியைத் தேடிய வரலாறு இங்கே புலனாதலறிக. “எங்குந்தேடி” என்றது , இறைவன் திருவடி மலரைக் காண்டற்க நிலத்தை அகழ்ந்து அரிதின் முயன்றதைப் புலப்படுக்கும். “பிரமனைப் படைத்தவன்” எனத் திருமாலுக்குக் கூறிய அடையால். பிரமன் தேடியதும் பெறப்படும். பன்றி உருக்கொண்டு மருப்பினால் நிலங்கிளைத்தமை தோன்ற, “முடிசாய்த்து” என்றார். திருமால் தலை சாய்த்து அடியைத் தேடினான் என்வே, பிரமன் அன்னப் பறவையாகப் பறந்து, தலை நிமிர்ந்து சென்று இறைவன் முடியைத் தேடினான் என்பதும் பெறப்படும். பிரமன் தேடியதற்கேற்ப, “செழுமலர்” என்பதை ஆகுபெயராகக் கொண்டு, கொன்றை மாலை யணிந்த இறைவன் திருமுடி எனக் கொள்க; “போதார் புனைமுடி” என்பர். பின்னும் அடிமுடி தேடிய வரலாற்றில் செய்தியை வெளிப்படையாகக் கூறவே, “முடிதேடிய பிரமன் அடி தேடிய திருமால்” செய்தியும் குறிப்பாகப் புலப்படுத்த படியாம். தந்தையின் இயலாமையைக் கூறியதனாலே, மைந்தன் இயலாமை எளிதில் அறியத்தக்கதென்பது கருத்து. மேலும், தேடியவன் தேவரில் வலியனாகிய திருமால், அவனால் தேடப்பட்டது அன்பர்க்கு எளிய திருவடியாகும். அடி தேடல் முறைமையும் ஆகும். அங்ஙனம் தலைசாய்த்துத் தேடியும், அத் திருவடி காண்டற்கரிதாயிற்றெனின், அத் திருமாலினும் வலியில் தாழ்ந்த பிரமன் முறையின்றி, எவர்க்கும் அரிய முடியைத் தலைநிமிர்ந்து தேடியறிந்திலன் என்பது வெளிப்படக் கூறவேண்டாமையும் உணர்க. தேடிய இருவர் செயலையும் கடந்து நின்றது தோன்ற, “அப் பாலன்”” என்றார். “பாதாளம் ஏழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருண்முடிவே” என்று அடிகள் பிறாண்டுக் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது. ஈண்டு, “சொற்கழிவு, பொருள் முடிவு” என முறையே அடி முடிகளின் எல்லை கூறியது கொண்டு, சொற்கடந்து நின்ற நிலையை திருமாலால் அறிய முடியவில்லையெனின் , பொருண் முடிவாகிய நிலையை அவன் புதல்வனாகிய பிரமன் எங்ஙனம் அறியக்கூடும் என்பது எளிதில் உணரத்தக்க தொன்றாகலின், குறிப்பிற் புலப்படுத்தமை ஈண்டும் வலியுறுதல் காண்க. திருமால் முதலிய வானோர்க்கரிய மருந்தாக வுள்ளான், அன்பர் ஆகிய ஏனோர்க்கு எளிய இறைவன் ஆதலைப் புலப்படுத்த, “எம்பிரான்” என்றார்.
திருமால், பிரமன் முதலிய தேவர்க்கும் அறிவரிய பெருமான், கண்டார் நகையாடுதற்குரிய நிலையில் இவ்விடத்தில் எளியனாய்த்திரிதல் வியப்பளிப்பதாகும் எனப் பின்னிரண்டடிகளினும் மருட்கைச்சுவை தோன்றக் கூறுகின்றார் . அங்ஙனம் கூறிய சொற்களில், பழித்தல் போலப் புகழ்தற் பொருள் புலனாதல் அறிக. கழுது இழிந்த பிறப்பாகிற பேயை உணர்த்துமாயினும், ஈண்டு இறைவன் கூடியாடுதற்கேற்ப, மாயா காரியமாகிய உடல் ஒழிந்து, ஞான வடிவமாக விளங்கும் சிவகணங்களை உணர்த்துவதாகும். காரைக்காலம்மையார் இவ்வுலக வாழ்க்கையிற் பற்றொழிந்து இறைவனை வேண்டிப் பெற்றது இப் பேய் வடிவேயாம் . “ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியேனுக்குப், பாங்குற வேண்டும் என்றார்” என்னும் இதனால், இறைவன் பக்கலில் நின்று இடையறாது பாராட்டி வணங்கும் பேறு சிவகணங்களாகிய பேய்களுக்கு உண்டென்பதும் புலப்படும். இத்தனையை பேய்வடிவத்தின் பெருமையைச் சேக்கிழார், “வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய்வடிவம்” என்பார். அம்மையார் தம் திருவாக்கால், “மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய- — நற்கணத்தில் ஒன்றாய நாம்” எனவும்,”காரைக்காற்பேய் செப்பிய செந்தமிழ்” “காரைக்கால் பேய் தன் பாடல்” எனவும் தம்மைப் பேய் என்று கூறிக்கொள்வதில் பெருமை வுண்டெனக் கருதியும் ஈண்டு நினைக்கத்தக்கது. எல்லாப் பற்றுக்களையும் ஒழித்து, இறைவன் ஒருவனையே குறிக்கொண்டு, இடையறாது பணி செய்தொழுகும் பேய்களின் ஆடல் இறைவன் அருட்கூத்திற்கு இயைந்ததாகலின், “கழுதொடு ……நாடகமாடி” என்றார். “பேயோடாடி” என்னும் பெயரும் இது பற்றியதே. காடு — மகா சங்கார காலத்தில் உலகம் முதலிய எல்லாம் ஒடுங்கிய இடமாகும். எல்லாம் அழிந்தொடுங்கிய இடமாதல் பற்றி இதனைச் சுடலை என்று கூறுவர். இவ்வுண்மையை,
“கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் அழிக்குங் காலை
உடல் உயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய இடம் தன்றோ
சுடலைய தாகும் அந்தச் சுடலைகாண் அனைய சோதி
நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் தஃதே”
எனவும் ,
“அங்கது மன்றி எந்தை அகிலமும் முடித்த ஞான்றின்
எங்கும் வெள் ளிடையதாகி ஈமமாம்”
எனவும், இப் பெருஞ்சுடலையின் உண்மை நிலையைக் குறித்து, அஃதறியாத மாக்கட்கு மெய்யுணர்வுடைய ததீசி முனிவர் கூறிய விடையாலும் தெளியலாம். “நாடகம்” என்பது ஈண்டு எல்லாம் ஒடுங்கிய பேரூழிக் காலத்தில் இளைப்பாறிக் கிடக்கும் உயிர்களை மீண்டும் வினைக்கு ஒத்தவாறு படைப்பு முதலிய தொழிற்படுத்தற்குச் செய்யும் அருள் இயக்கமாகும் . இதனைச் சூக்கும ஐந்தொழில் எனவுங் கூறுப. “சூக்குமமாகிய ஐந்தொழிலாவன, சங்கரித்த பின்னர், மேற் செய்யக் கடவனவாகிய தூல ஐந்தொழிற்கு யோக்கியமாம்படி கேவலத்தின் கண் நிகழ்த்துவனவாம்”
“தோற்றந் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமா
ஊற்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு”
என்பது இவ்வுண்மையைப் புலப்படுத்துவதாகும். இனி உயிர்த்தொகுதிகளை மும்மலக் கட்டொழித்துத் தம் திருவருளில் இயைத்துப் பேரின்பத்துள் தலைப்படுத்தும் உண்மையையும், இவ்வருள் நடம் புலப்படுத்தும் என்ப. இதனை,
“மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கியருள் தனெடுத்து – நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தான் எந்தை யார்பரதந் தான்”
என்னும் இதனாலறிக. “கதியிலி” என்பது, பிறப்பில்லாதவன் என்னும் பொருளது. “பிறவா யாக்கைப் பெரியோன்” என்றார் பிறரும். புலித்தோலுடுத்தல், தமக்கு ஊறு விளைக்கக் கருதித் தாருக வனத்து முனிவரால் உய்க்கப்பட்ட புலியைக் கொன்று, அதன் தோலையுடுத்தார் என்னும் புராண கதையை உட்கொண்டு கூறியது. தம்பால் அன்பில்லாதாரை மறக்கருணையால் ஒறுத்தல் இதனாற் புலனாம். உன்மத்தம் – அளவில் மிக்க களிப்பு. இஃது இறைவன் இன்பவடிவினன் என்பதைக் குறிக்கும். உழிதரல் – யாண்டும் உளனாதல். இஃது இறைவன் வியாபக உண்மையைப் புலப்படுக்கும்.
இத் திருப்பாட்டின் இரண்டடிகளாலும், எல்லாம் ஒடுங்கிய பின் எஞ்சிநின்று, உயிர்களை மீண்டும் படைப்பு முதலிய தொழில்களுட்படுத்தல், தான் பிறவா நிலையுடையனாதல், தன்னை அடையார்க்கும் அடைந்தார்க்கும் முறையே தெறலும் அளியும் புரிதல் முதலிய அருட்செயல்களின் உண்மையியல்பு புலனாதல் அறிக.
இதன்கண், மெய்யன்பு இன்றிப் பிற ஆற்றல்களால் இறைவனைக் காண்டல் இயலாதென்பது பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றல் அறிக.
************************
பாடல் 8.
உழிதரு காலும் கனலும்
புனலொடு மண்ணும் விண்ணும்
இழிதரு காலம்எக் காலம்
வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி
யேன்செய்த வல்வினையைக்
கழிதரு காலமு மாயவை
காத்தெம்மைக் காப்பவனே.
கருத்துரை :- மெய்யன்பினால் அன்றி, ஆற்றல் முதலியவற்றால் இறைவனை எய்துதல் இயலாது என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், மெய்யன்பு வாயிலாக எய்தும் இன்பநிலை தானும் வினையொழிவில் எய்தத் தக்கதாகலின், என் வல்வினை யொழிவு எக்காலம் நேருமோ என இத் திருப்பாட்டில் இரங்கிக் கூறுகின்றார்.
பதவுரை :- உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் =
உலவுகின்ற காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்பும் ஆகிய இவ்வைம்பெரும் பூதங்களும்,
இழிதரு காலம் வந்ததற் பின்னும் =
ஒன்றனுள் ஒன்றாக முறையே ஒடுங்குகின்ற காலம் வந்த பின்னரும்,
உழிதருகால் அத்த = அருட்கூத்து இயற்றுந் திருவடிகளையுடைய தந்தையே
உன் அடியேன் செய்த வல்வினையைக் கழிதரு காலமும் ஆய் =
நின் அடிமையாகிய யான் செய்த வலிய வினைகளைக் கழிக்கின்ற கால தத்துவமும் ஆகி,
அவை காத்து = அவ் வினைகள் மீண்டும் என்னைப் பற்றாமல் தடுத்து,
எம்மைக் காப்பவனே = என்னையும் என்னைப்போன்ற ஏழை அடியாரையும் காப்பாற்றுகின்ற பெருமானே,
உழி தரு காலும்……….இழிதரு காலம் = உலவுகின்ற காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்பும் ஆகிய இவ்வைம்பெரும் பூதங்களும் ஒடுங்குகின்ற காலம்,
வருவது எக்காலம் = வருதல் எப்பொழுது? என்பது.
விளக்கவுரை :- காற்றுக்கு உழிதரல் கூறியதனால், தீ முதலியவற்றிற்கும் சுடுதல் முதலிய குணங்கள் கூறப்பட்ட படியாம் . பிரமனது முதற் படைப்பு நீர் என மறை கூறுதலின் , புனலொடு என ஈண்டு ஒடு உருபு உயர்வு குறித்து நின்றது. “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது விதி. மக்களுக்குச் சிறந்த உணவாகவும் , ஏனைய உணவுப் பொருள்களை உண்டாக்குவதாகவும் உள்ளது நீராதலின் , ஏனைய பூதங்களினும் நீர் முதற்படையாகக் கூறப்பட்ட தென்பது விளங்கும். இவ்வுண்மை கருதியே திருக்குறட் பாயிரத்திலும் கடவுள் வாழ்த்தை யடுத்து வான் சிறப்புக் கூறப்பட்டது . விண், செய்யுள் நோக்கி இறுதியிற் கூறப்பட்டதாயினும் , தோற்ற முறை பற்றி முதலிற் கொள்ள வேண்டும். “பரம் பொருளினின்றும் ஆகாயந் தோன்றி, அதனினின்றும் நிலந் தோன்றிற்று என்று வேதத்துள்ளும் கூறப்பட்டது “ என்பர் பரிமேலழகர். இங்கே வேதம் என்றது தைத்தரீய உபநிடதத்தைக் குறிக்கும் . {தைத்தரீயம் 2: க} அம்முறை முடிவிற்றோற்ற முறை பற்றிக் கூறப்பட்ட செய்தியே, தமிழ் மறையாகிய தேவாரத்தில் ,
“இருநிலனது புனலிடை மடிதர வெரியுக வெரியதுமிகு,
பெருவெளியினி லவிதர வளிகெட வியனிடை முழுவது கெட,
இருவர்களுடல் பொறையொடு திரியெழி லுருவுடை யவனின மலர்,
மருவிய அறுபதமிசை முரல் மறைவன மமர்தரு பரமனே”
{திருமறைக் காடு – 7 } என்று திருஞான சம்பந்த சுவாமிகளால் ஒடுக்கமுறை பற்றிக் கூறப்பட்டதாகும்.. தத்தம் தன் மாத்திரைகளினின்று பூதங்கள் தோன்றுமென்று சிவாகமங் கூறும். இவற்றுள் முன்னது பழந்தமிழ் நூற்கொள்கை யாகும் . இவ்விரு கொள்கைகளையும் முரண்படாமல் ஒற்றுமைப்படுத்தச் சிவஞான முனிவர் முயன்று ஆராய்ந்து எழுதிய சில குறிப்புக்கள் சிவஞானபாடியம் இரண்டாஞ் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில் உள்ளன. முனிவர் வேதக்கருத்தை இணக்கிச் சிவாகமக் கொள்கையையே உறுதிப்படுத்துள்ளார் . யாம் வடமொழி வேதம் தமிழ்மறைகளிற் கூறப்பட்ட முறைப்படி ஈண்டு கொள்ளலானோம்.
ஐந்து குணங்களையும் உடைய நிலம் மிகவும் பருப்பொருளாய் நம்மனோர்க்கு ஆதாரமாக இருத்தலின் அதனையும் , அதனோடு தோற்ற முதலாதல் பற்றி விண்ணையும் இயைத்து , “மண்ணும் விண்ணும் “ என்றார். “மண்டிணிந்த நிலனும் , நிலனேந்திய விசும்பும் , விசும்பு தைவரு வளியும் , வளித்தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கு, ஐம்பெரும் பூதத்தியற்கை” என்னும் புரநானூற்றுச் செய்யுளில் , நிலனேந்திய விசும்பென்று கூறியதும் இக்கருத்துப்பற்றி, இனி, ஒடுக்க முறையும் புலப்பட, விண்ணை இறுதியிற் கூறினர் எனினும் ஆம். இழிதரல் – இறங்குதல் ; ஒடுங்குதற் பொருட்டு . இழிதரு காலம் – எல்லாம் ஒடுங்கிய பேரூழிக்காலம். அக்காலத்தின் பின்னும் இறைவனுடைய ஐந்தொழில் திருக்கூத்து, சூக்கும நிலையில் நடைபெறும் என்பது புலப்பட , “உழிதருகால் அத்த” என்றார் .
அடிகள் தம் பிறப்பிற்கு ஏதுவாகத் தம்பால் அமைந்து கிடக்கும் வினை எளிதில் கழிக்கத் தக்கதன்றெனவும் , தாம் முயலும் தவத்தின் ஆற்றலையும் கடந்து நிற்கும் வலியுடையதெனவும் கண்டு, அதனை, “வல்வினை” என்றார் . அங்ஙனமாயினும் , அவ்வல்வினைக்கு முதலாகிய யான் நின் அடிமை என்பதைத் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்பார் , “உன் அடியேன் செய்த வல்வினை” என்றார் . கடத்தற்கரிய வல்வினை களாதலின், அவற்றை ஒழிப்பது என்னளவில் அமையாது; யான் செய்யும் தவ முயற்சி முதலிய சாதனங்கள் எல்லாம் அவ்வினையொழிவு பெறுதற்கு ஏதுவாகிய நின் அருளைப் பெறச் செய்தற்குரிய ஆற்றலுடையனவும் அல்ல; ஆதலின், எல்லாம் ஒடுங்குதற்குரிய மகாசங்கார காலமாகிய பேரூழியில் உயிர்கள் இளைப்பாறுதற் பொருட்டு நின் அருளால் காரணமாயையில் ஒடுங்கியவழி , அவ்வுயிர்த்தொகுதிகளின் எஞ்சிய வினைகளும் சூக்குமமாய்க் காரணமாயையின் ஒடுங்கக்கூடும். ஆதலின் , அந்நிலையில் என் வல்வினையும் என்னை விட்டுக் கழிய வேண்டுமெனவும், அங்ஙனம் கழிதற்கு நீயே பேரூழிக்கால தத்துவமாகவும் நின்று உதவி புரிய வேண்டுமெனவும் வேண்டுவார், “வல்வினையைக் கழிதரு காலமுமாய் “ என்றார் . ஆன்ம தத்துவம் வித்யா தத்துவம் அனைத்தையும் தன்னுள் அடக்கி நிற்பது பேரூழியாகிய கால தத்துவம் ஆதலின் , அம்முறையில் இறைவனை , “காலமுமாய்” எனக் குறிப்பிட்டார் “ஞாலமே விசும்பே யிவை வந்துபோம் காலமே”என அடிகள் பிறாண்டுக் கூறியதும் காண்க. பேரூழிக்காலத்து, உயிர்களின் எஞ்சிய வினைப்பகுதிகள் காரணமாயையின் ஒடுங்கிக்கிடப்பினும் , மீண்டும் படைப்புத் தொடங்குங்கால், அவ்வினைகளே அவ்வுயிர்களுக்குத் தநு கரண புவன போகங்களின் ஏதுவாக முளைக்கும் ஆதலின் , அம்முறையில் என் வல்வினைகளும் மீண்டும் என்னைப்பற்றிப் பிறப்பிற் செலுத்தக்கூடும் ; அக் காலத்திலாவது நின்னடிமை என்பதைத் திருவுளங் கொண்டு, அவ்வினைகள் என்னைப் பற்றாவண்ணம் அவற்றைத் தடுத்து என்னைக் காக்கும் பேரருள் உடையவன் நீயே என்பார் , “அவை காத்தெம்மைக் காப்பவனே” என்றார். ஈண்டுக் காத்து என்பது வராமல் தடுத்து என்னும் பொருட்டு ; “செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் “ என்புழிப்போல. மல வெப்பத்தால் தாம் படுந் துயரம் பெரிதெனக் கண்டு, அது மற்றை அன்பரையும் பற்றாதிருக்க வேண்டும் என்னும் கருணையால் அடிகள் என்னைக் காப்பவனே என்னாது,”எம்மைக் காப்பவனே” என்று உளப்படுத்துக் கூறினார். இத்துணையும் கூறியவை விளிகலாம்.
இனி, “உழிதருகாலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் இழிதரு காலம்” என்னும் தொடரை இரட்டித்து உரைத்துக் கொண்டு, அக்காலம் வருவது ப்பொழுது? என முடிக்கவேண்டும். ஐம்பெரும் பூதங்களும் ஒடுங்கிய பின்னும் அருட் கூத்தியற்றும் எந்தையே எனவும், நின்னடியேன் செய்த வல்வினையைக் கழிக்கின்ற கால தத்துவமாய் நின்று , அவ்வினைகள் மீண்டும் என்னைப் பற்றாமல் தடுத்துக் காப்பவனே எனவும், இறைவனை விளித்த அடிகள், தம் வல்வினை ஒழிவிற்குரிய காலம் மகா சங்கார காலம் ஆகுமாயின், அஃது அணிமையில் நேராதே; அது வருங்காறும் வல்வினை வயப்பட்டுப் பிறந்திறந்து உழல் நேருமே என்று அஞ்சியிரங்குவாராய், அப் பேரூழிக்காலம் வருவது என்று கொலோ என்பார், “இழி தருகாலம் எக்காலம் வருவது” என்றார் . வந்ததற் பின்னும் என்புழி, எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. காலதத்துவம் பிரகிருதி மாயா காரியங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய வித்தியா தத்துவங்களுள் வியாபித்து நிற்பதொன்றாகலானும், மகா பிரளய நிலையில் எல்லாப்பொருளும் , தேவர் முதலிய எல்லோரும் ஒடுங்க, எஞ்சி நிற்கும் பரமபதியாகிய சிவபிரான் அருள் நடத்திற்கு இடனாக நிற்றலானும், அக் கால தத்துவம், தம் வல்வினை ஒழிவிற்கு ஏதுவாம் என்னும் உறுதியுடைய அடிகள், வினைக் கட்டறுத்தற்குரிய முதன்மை இறைவன் பாலதாகவும், அக் காலமும் அதற்குத் துணையாதல் பற்றித் தம் வல்வினைய்க் கழித்தற்கு இறைவன் கருத்தனாதலேயன்றித் துணையாகவுள்ள காலமுமாவன் என்னுங் கருத்தால், “கழிதரு காலமுமாய்” என்றார். ஈண்டுள்ள உடம்பையும் எச்சப் பொருளதாம் .
இதன்கண் , மாபெரும் பூதங்கள் எல்லாம் ஒடுங்கிய பேரூழிக்காலத்தும், அழிவில் பொருளாக நின்று அருட் கூத்தியற்றுவோன் இறைவன் ஒருவனே யென்பதும் , உயிர்களின் வினை யொழிவிற்கு அப் பெருமானைக், கால தத்துவமாகக் கொண்டு வழிபடல் வேண்டுமென்பதும் கூறப்பட்டிருத்தலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக .
********************************************
பாடல் 9.
பவன்எம் பிரான்பனி மாமதிக்
கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்
டான் என சிறுமைகண்டும்
அவன்எம் பிரான் என்ன நானடி
யேன் என்ன இப்பரிசே
புவன்எம் பிராந்தெரி யும்பரி
சாவ தியம்புகவே.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் தம் வல்வினையொழிவு எக்காலம் நேருங்கொலோவென இரங்கிய அடிகள், அதற்குப் பரிகாரமாகத் தம் சிறுமை கண்டும், இறைவன் ஆட்கொண்ட பெருமை பாராட்டத் தக்கதென, இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.
பதவுரை :-
பவன் எம்பிரான் = உலகத் தோற்றத்திற்குக் காரணனும் எம்பெருமானும் ,
பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான் =
குளிர்ச்சியும் பெருமையும் வாய்ந்த பிறைத் திங்களை முடிமாலையாகவுடைய தேவர் முதல்வனும் ,
சிவன் எம்பிரான் = இன்பவடிவினனும் ஆகிய எங்கள் தலைவன்,
என் சிறுமை கண்டும் = எனது சிறியதன்மையை அறிந்து வைத்தும் ,
என்னை ஆண்டுகொண்டான் = என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டான்
அவன் எம்பிரான் என்ன = அத்தகைய பெரியோன் ஆண்டான் ஆகவும்,
நான் அடியேன் என்ன =சிறியேனாகிய யான் அடியேன் ஆகவும் உள்ள
இப்பரிசே = இவ்வாண்டான் அடிமைத் தொடர்பின் இயல்பே,
எம்பிரான் = அவ்வெம்பெருமான் பெருமையை,
தெரியும் பரிசாவது புவனம் இயம்புக = அறிந்து கொள்ளும் விதமாதலை இவ்வுலகம் பாராட்டிக் கூறக்கடவது என்பத.
விளக்கவுரை :-
பவன் என்பதற்கு, உலகத் தோற்றத்திற்கு நிலைக்களனாகவுள்ள காரணமானவன் என்பது பொருள்; அழிவில்லாதவன் என்பதுமாம் .உலக காரணனாதல் பரம் பொருட்குச் சிறந்த இலக்கணமாகு மென்றும், அது சிவபிரானுக்கே உள்ளதென்றும் , மறை யாகமங்கள் கூறும். யாவர்க்கு மேலாம் அளவிளாச் சீருடைய அத்தகைய பெருமான் , யாவர்க்குங் கீழாம் அடியேங்கட்கும் தலைவனாயினன் என்பது போதர, “பவன் எம்பிரான்” என்றார். சிறியேமாகிய எங்களுக்குத் தலைவனானது அவன் பெருமைக்குத் தக்கதன்றெனின் , அதற்கு மாற்றமாக மக்களுட் சிறியேமாகிய எமக்கு மாத்திரம் அன்று: தேவர் எல்லோர்க்கும் தலைவனாவன் என்பதையும் புலப்படுக்க , “விண்ணோர் பெருமான்”என்றார். இங்ஙனம் பிரித்துரைக்க வேண்டிய தென்னை? மக்கள் தேவர் அனைவருக்கும் பெருமான் என்று கூறுதலே யமையும் எனின், அரியபொருளைப் பெற்றான் ஒருவன் அஃது உண்மையிற் பொதுவாயினும் , தன் அவாமிகுதியால் தனக்குச் சிறந்ததாகும் என்று கோடல் இயல்பாதலின் , அம்முறயில் , “எம்பிரான்” என முன்னர்க் கூறிப் பின்னர் அக்கூற்றால் அப்பெருமான் பெருமைக்கு இழுக்கு நேராவண்ணம் தேவர் தலைவன் என்றுங் கூறினர்.
விண்ணோர் பெருமான் ஆதலை விளக்குதற்கு , “மதிக்கண்ணி” என்னும் அடை புணர்க்கப்பட்டது. மதிக்கு நேர்ந்த இடுக்கணை விலக்க , அதனைச் சடையில் அணிந்து காத்தருளினான் என்பது புராணக்கதை. அம்மதி , இறைவன் சடையை அடைந்தமையால் தன் இயற்கைத் தன்மையாகிய குளிர்ச்சிக் குணமும் பெருமையும் உடையதாயிற்று என்பது புலனாக , “பனி மாமதி” எனயும் , அடைக்கலமாக அடைந்தாரை ஏற்றுக் காக்கும் அருளாளன் இறைவன் என்பதை எல்லோரும் விளக்கமாக உணர்ந்து கோடற்பொருட்டு, அப்பிறைமதி அவர்க்குச் சடையில் அணிந்து கொள்ளும் மாலையாயிற்று என்பார் “மதிக் கண்ணி”எனவும் கூறினர்.
இனி, உலக காரணனாதல் ஒன்றானே யாவர்க்கும் தலைவனாகலாம் ; அத் தலைவனை அடைந்தால் எய்தும் பயன் யாதாம் என்பார்க்கு, அவன் மங்கலகரமான பேரின்பத்தை, அடைந்தார்க்கு அளிக்கும் இன்பவடிவினன் என்பது புலனாக, “சிவன் எம்பிரான்” என்றார் ஈண்டு எம்பிரான் என்றது , சிறுமை கண்டும் விலக்காமல் ஆண்டு கொண்ட பேரருள் உடைமை குறித்தாம். உலகியல் தலைவர், அடிமையின் சிறுமையை உள்ளவாறு அறிந்து கொள்ளும் ஆற்றலுடையராதல் அரிது . அறிந்துகொண்டால் , உடனே அவ்வடி மையை விலக்கவுஞ் செய்வர். கடவுட்டலைவனாகிய இப்பெருமான் , அதற்கு மாறாக , உயிர்க்குயிராக நின்று, எல்லாம் அறியும் ஆற்றல் உடையவன் ஆதலின் , அடிமையின் சிறுமையை எளிதில் அறிந்து கொள்ளும் இயல்பினன் என்பதும், அறிந்த பின்னும் விலக்காமல் ஆட்கொள்ளும் அருளுடையவன் என்பதும் புலனாக, “என் சிறுமை கண்டும் ஆண்டு கொணடான்” என்று கூறினர். “அவன்” என்பது பண்டறி சுட்டாகப் பெருமை குறித்து நின்றது. ஈண்டுப் பிரான் என்றது, ஆண்டான் என்னும் பொருட்டு. “நான்” என்றது ஈண்டு அப் பெரியோன் தகுதிக்கேற்ற அடிமையாளன் அல்லன் என்பதைக் குறிப்பிற் புலப்படுத்து நின்றது. “இப் பரிசு” என்பதிலுள்ள சுட்டு , எத்துணையும் பெரியோனாகிய அவன் , எத்துணையும் சிறியோனாகிய என்னை ஆட்கொண்ட இத் தன்மை என ஏற்றத் தாழ்வின் இயல்பைச் சுட்டி நின்றது.
“புவன் எம்பிரான்” என்புழிப் புவனம் என்பது அம்முக்கெட்டு, உலகம் என்னும் பொருளதாய், இயம்புதற்கு வினை முதலாகிய மக்களை உணர்த்தி நின்றது . அம்முக் கெடுதல், “ஞானால் மருவிடுங்கிரியை யெல்லாம்,” “பெற்றொன்றுயர்த்த பெருமான்” என்றாற்போல்வனவற்றுள்ளுங் காண்க. அவ் வெம்பெருமான் பெருங்கருணையாளன் ஆதலை உலகம் எவ்வாறு அறிந்துகொள்ள இயலும் என்பார்க்கு “இப் பரிசே எம்பிரான் தெரியும் பரிசாவது”என்றார். எம்பிரான் என்றதில் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. அடிகள் தம் சிறுமை கண்டும் , பெருமான் தம்மை ஆண்டு கொண்ட வியத்தகும் இத் தன்மையே அப் பெருமான் பெருமையை உலகம் அறிந்துகொள்ளும் விதமாம் என்று கருதினர் என்பது கருத்து. இந் நிகழ்ச்சி இங்ஙனம் அறிந்துகொண்ட அளவின் அமையாது, மக்களால் நெஞ்சார வாயாரப் பாராட்டிக் கூறும் இயல்பினது என்பார், “உலகம் இயம்புக” என்றார். இனி, “புவனெம்பிரான்” என்புழி, “புவன்”என்பது வேள்வித் தீயை உணர்த்தும் என்று எசுர் வேதம் கூறும் . ஆதலின் அங்கி வடிவாக நின்று, வேள்வியுணவை யேற்று அருள் புரிபவன் எனவும் , ஒளி வடிவினன் எனவும் பொருள் கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால் , “இயம்புக” என்பதற்கேற்ப, உலகம் என்னும் எழுவாயை வருவித் துரைத்த்ல் வேண்டும் சைவ சித்தாந்தத்தில் , ஆண்டான் அடிமைத் திறம் சிறந்து விளங்குதலும், அடிகள் அம்முறையைத் தம் திருவாக்கால் அடிக்கடி பாராட்டிக் கூறுதலும் ஈண்டு நினைக்கத்தக்கன. தம் நல்லதெனக் கண்டு கடைப்பிடித்தொழுகும் இவ் ஆண்டான் அடிமைத் திறத்தை, உலகமும் தம்மைச் சான்றாகக் கண்டு பாராட்டி, அம்முறையில் ஒழுகி நலம் பெற வேண்டும் என்பது அடிகளின் உட்கோளாகும்.
இதன்கண், எல்லாம் வல்ல இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறைமையும், அத்தகைய ஆண்டான் அடிமைத் திறமே சிவநெறியில் சிறந்து விளங்கும் என்னும் உண்மையும் பெறப்படுதலின் , மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பாடல் 10.
புகவே தகேன்உனக் கன்பருள்
யானென்பொல் லாமணியே
தகவே யெனையுனக் காட்கொண்ட
தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப்
பணித்தி அண்ணா அமுதே
நகவே தகும்எம் பிரான்என்னை
நீசெய்த நாடகமே.
கருத்துரை :-
தம்மை ஆட்கொண்ட இறைவனது பெருமை பாராட்டத்தக்கது என முன்னைத் திருப்பாட்டில் வியந்து கூறிய அடிகள், அப் பெருமான் பெருமைக்குத் தகாத நிலையில் தம்மை ஆட்கொண்டது குறித்து, மீண்டும் இத் திருப்பாட்டில் வியந்து இன்புறுகின்றார்.
பதவுரை:-
என் பொல்லா மணியே =
துளையிடப்படாத என் அரிய இரத்தினமே,
யான் உனக்கு அன்பருள் புகவே தகேன் =
யான் நின் அன்பர் கூட்டத்தில் புகுதற்கே தகுதியில் லாதவன்,
என்னை ஆட்கொண்ட தன்மை உனக்குத் தகவே =
அங்ஙனம் இருந்தும் சிறியேனாகிய என்னை ஆளாகக் கொண்டது நின் பெருமைக்கு தகுதியாகுமா?
எப் புன்மையரை மிக உயர்த்தி =
எத்தகைய இழிந்தோரையும் மிக உயரச் செய்கின்றாய்,
விண்ணோரைப் பணித்தி =
உயர்ந்தவர்களாகிய தேவர்களைத் தாழச் செகின்றாய்,
அண்ணா அமுதே எப்பிரான் =
தந்தையே , அமிழ்தம் போன்றவனே, எங்கள் தலைவனே,
நீ செய்த நாடகம் என்னை = நீ இங்ஙனம் இயல்பிற்கு மாறாகச் செய்த திருக்கூத்து இருந்தவாறு என்னை?
நகவே தகும் = இது நகையாடுதற்கே தக்கதாகும் என்பது.
விளக்கவுரை :-
பொள்ளல் – துளையிடல் ; பொள்ளாமணி பொல்லாமணி என மரீஇயிற்று . துளையிடப் படல், ஏனைய மணிகளிலும் கோத்தணிதற்குரிய முத்துப் பவழங்களுக்கே சிறந்ததாகும் . ஆயினும் , இனம் பற்றி மாணிக்க முதலிய மணிகளையும் கொள்ளலாம் . அங்ஙனங் கொள்ளுங்கால், ஈண்டுப் பொள்ளல் என்பது உபலக்கணத்தால் சாணை தீர்தல், கோணங் கூரிதாக்கல் முதலிய செயல்களையும் உணர்த்தும் . உலகிற் சிறந்த மணி கருவிகளால் மாசு நீங்கி, ஒளி கால்வதாகும் . பரமபதியாகிய இறைவன் அங்ஙனமின்றி பாசங்களினீங்கிப் பேரொளிப் பிழம்பாக விளங்குவோன் என்பது புலப்பட, “பொல்லா மணியே” என்றார் . இத்துணை அரிய இரத்தினம் தமக்கு எளிதிற் கிடைத்ததே என்று ஆராயாமல் , “என் பொல்லா மணியே” என்றார் உனக்கன்பர் என்புழி, நாங்கனுருபு ஏழாவதன் பொருட்டு , உனக்கு இனிய அன்பர் எனினுமாம். மெய்யன்பர் குழாத்துள் எல்லாவற்றானும் புகுதற்கு உரிய தகுதி என்பால் இன்றென்பார், “புகவே தகேன் “ என்றார் . ஏகாரம் தேற்றப் பொருட்டு. அன்பர் கூட்டத்துள் அணுகவும் தகுதியில்லாத சிறியேனை அன்பருள் ஒருவனாக ஏற்று ஆட்கொண்டது நின் பெருமைக்கும் பொருத்தமாகுமா என்பார், “தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை” என்றார்.” தகவே” என்புழி ஏகாரம் வினாப்பொருளில் வந்து, தகவன்று என்னும் எதிர்மறைப் பொருளை உணர்த்திற்று.
எப்புன்மையரையும் என்புழி, இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. “பூமேலயனொடு மாலும்புகலரி தென்று , ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க “ என்று அடிகள் பிறிதோரித்துக் கூறியபடி, சிறிதும் தகுதியில்லாத தம்மை இறைவன் ஆட்கொண்டதனையும், உயர்ந்த தேவர் முதலியோர்க்கு அறிவரிய நிலையிலுள்ளதையும் நினைந்து. எப்புன்மையரை மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி “ என்றார் . இழிந்தாரை உயர்த்தலும் , உயர்ந்தாரைத் தாழ்த்தலும் முறைமாறிய செயல் ஆதலின், இது நகையாடற்கு உரியதென்பார், “நகவே தகும்” என்றார் . “விண்ணோரை” என்பதற்கு ஏற்றப் புன்மயரை என்னாது , “எப்புன்மையரையும்” என்றது , இழிந்தார் எத்துணைக் கீழ்நிலையுடையர் ஆயினும் , அன்னாரை உயர்த்துதலே ஆண்டவன் திருவுள்ளமாம் என்பதைப் புலப்படுத்தும் . “பணித்தி” என்பதற்கேற்ப “உயர்த்தி” என்று கூறுதலே அமையும். அங்ஙனம் கூறாமல், “”மிகவே உயர்த்தி” என்றார். உயர்ந்தோரைத் தாழ்த்தும் அளவினும் இழிந்தோரை உயர்த்தும் அளவு மிகுதி என்பது கருதி.
இனி, உட்கோள் வருமாறு :- சிறியோரை உயர்த்தல் என்பது, சிவபோதமாகிய முனைப்பு ஒரு சிறிதுமின்றி, எல்லாம் ஆண்டவன் அருட்செயலெனக் கண்டு, அடங்கி ஒழுகும் அன்பர்க்கு, அருள்சுரந்து தன் திருவடி நீழல் இன்பத்தை நல்கிப் பெருமைப்படுத்தல் ஆகும். “புன்மையர்” என்பது இறைவனது அளத்தற்கரிய பெருமையை நோக்கி, அடியவர் தம் சிறுமை கருதிக் கூறியது. “விண்ணோரைப் பணித்தல் என்பது, தேவரிற் பதவி உயர்ந்தார் சிலர் தமக்குள்ள ஓரளவு அதிகாரைத்தைக் கருதாமல் தாமே எல்லாம் வல்ல தலைவராவோம் எனக் கருதிச் செருக்குற்ற நிலையில் அச் செருக்கொழிய அவரை அடக்கியாளுதலைப் புலப்படுத்தும், புன்மையர் என்றது இழிந்தோரையாதலின், அதற்கேற்ப உயர்ந்தோரென்னாது “விண்ணோர்” என்றதனால் , தாமே பரம்பொருளென்று செருக்குற்றவர் தேவரில் ஒரு சாரார் என்பது புலனாம் . இவ்வுட்கோளுக்கேற்ப, நகவே தகும் என்பதற்கு, இறைவனது இவ்வருட் செயல் நினைந்து மகிழத்தக்கது எனப் பொருள் கொள்ளல் வேண்டும். நகுதல் – மகிழ்தல், “மெய்வேல் பறியா நகும்” என்புழி இப்பொருட்டாதல் அறிக. “அண்ணா அமுதே” என்பன நிரனிறையாக நின்று, சிறியோரை உயர்த்துங்கால் இறைவன் அவர்க்குத் தந்தை நிலையினின்று தன் பேரின்பப் பெருஞ் செல்வத்தை அருளிக் காப்பவன் என்பதையும், விண்ணோரைத் தாழ்த்துங்கால் அவரை அமிழ்தம் உண்பித்துத் தான் நஞ்சுண்டு செருக்கடக்கினன் என்பதையும் குறிப்பிற் புலப்படுப்பன. இனி, “அண்ணா அமுதே” என்பதற்குப் பெறுதற்கரிய அமிழ்தம் போன்றவனே எனலுமாம். அண்ணுதல், ஈண்டு அணுகுதற் பொருட்டு. மண்ணில் வாழும் மக்களை விண்ணிற் காட்டுதலும், விண்ணில் வாழுந் தேவரை மண்ணிற் காட்டுதலும் நாடகத்தில் நிகழ்வன, ஆதலின், “நீ செய்த நாடகம் என்னை?” என்றார். “என்னை நீ செய்த நாடகமே” என்பதற்கு, என் பொருட்டு நீசெய்த கூத்து எனலுமாம்.
இதன்கண், “என் பொல்லா மணியே” என்றதனால் பத்தியும், “புகவே தகேனக் கன்பருள் யான்” என்றதனால், புகுதற்குரிய தகுதி பொறாமைக்கு ஏதுவாக உள்ளது பொய்யுலக வாழ்க்கைப்பற்று என்பது பெறப்படுதலின், வைராக்கியமும் குறிக்கப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், இழிந்தார் உயர்தற்கும், உயர்ந்தார் இழிதற்கும் முறையே இறையருளின் உண்மை இன்மைகள் ஏதுவாம் என்னும் மெய்மை பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் புலனாயவாறு அறிக.
**********************************************
திருச்சதகம் —- 2. அறிவுறுத்தல்
உடல் முதலிய மாயா காரியப் பொருள்களின் நிலையாமை உணர்ந்து, அவற்றினின்றும் நீங்கி, என்றும் நிலையுதலுடைய மெய்ப் பொருள் உணர்ச்சியில் தலைப்பட்ட அடிகள், அவ் வுணர்ச்சி வாயிலாக ஆண்டவன் திருவருளை வேண்டி, அதற்குரிய சாதனங்களை மேற்கோடற்குத் துணைபுரிய வேண்டிய மனம், அச் சாதனங்களை விட்டு, அவற்றிற்கு எதிர்மறையான உலகியற் செயல்களிற் சேரலைக் கண்டு, அந் நெஞ்சிற்கு அறிவுறுத்துவான் தொடங்குகின்றார். ஓர் இல்லறத்தான் தான் மேற்கொண்ட அறத்திற்குத் துணை நின்று உதவி புரியவேண்டிய தன் மனைவி, உரிய உதவியைச் செய்யாமையோடு மாறாகவும் நடப்பாளாயின், அவளைக் குறிப்பால் அறிவுறுத்துமுகமாகத் தக்கார் ஒருவரை முன்னிலைப் படுத்துத் தான் பெறவேண்டிய பேறுகளை இழந்திருப்பதற்கு இரங்கிக் கூறுதலும் , அவ்விரக்கக் குறிப்புணர்ந்தும், அவள் நன்னிலைப்பட்டிலள் ஆயின் , அவளை முன்னிலைப்படுத்து இடித்துக் கூறுதலும் உலகியலிற் கண்டனவாதலின் , அம்முறையில் அடிகள் திருவருட் பேற்றிற்குத் துணை நின்று உதவி புரியவேண்டிய தம் மனம், அவ் உதவியைச் செய்யாமையோடு தடையாகவும் சேரலைக் குறித்து வருந்தி , அம் மனம் உணருமாறு ஆண்டவனை முன்னிலைப்படுத்து , அப் பேற்றின் இன்றியமை யாமையாமையையும், அது பெறுதற்குரிய சாதனங்களைப் பெறாமை பற்றியும் இப்பதிகத்தின் முதல் திருப்பாட்டுக்களில் இரங்கிக்கூறி , அக் குறிப்புணர்ந்தும் நன்னிலைப்படாத அம் மனத்தை , பின்னர் முன்னிலைப் , படுத்து ஒன்பது பத்தாம் திருப்பாட்டுக்களில் இடித்துரைத்துள்ளார் , இச் சொற்களால் குறிப்பிற் புலப்படக் கூறுதலை விரித்தும் . கடுஞ் சொற்களால் வெளிப்படக் கூறுதலைச் சுருக்கியும் கூறுதல் பெரியோர் இயல்பு ஆதலின், அம் முறையில் அவற்றை முறையே எட்டுத் திருப்பாட்டுக்களாலும் , இரண்டு திருப்பாட்டுக்களாலும் வெளிப்படுத்துள்ளார் .
பாடல் 11.
நாடகத்தால் உன்னடியார்
போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே
இடயறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத்
தந்தருள்எம் உடையானே.
கருத்துரை :- இதன் முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் ஆண்டவன் பெருமைக்குத் தகாத நிலையில் தம்மை ஆட்கொண்டமை குறித்து வியந்து கூரிய அடிகள், யான் மெய்யன்பின்றி அன்புடையவனைப் போல நடித்து, உண்மையான வீட்டின்பத்தை அடைய முந்துகின்றேன் ; அதற்குக் காரணம் என்பால் தகுதியின்மை கண்டும் என்னை ஆட்கொண்டமையே, ஆதலின் போலி அன்பை மெய்யன்பாக்கித் தந்தருளல் வேண்டுமென்று இப் பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டில் வேண்டுகின்றார் .
பதவுரை :- ஆடகச்சீர் மணிக்குன்றே = பொன்நிலத்தில் சிறந்து திகழும் மாணிக்க மலையே,
எம் உடையானே = எம்மை அடிமையாகவுடைய பெருமானே,
நாடகத்தால் உன் அடியார் போல் நான் நடித்து =
கூத்தில் நின் அடியவர் உருக்கொண்டு நடிப்பவரைப் போல யான் இவ்வுலகத்தில் நடித்து,
நடுவே வீடு அகத்துப் புகுந்திடுவான் = இடையே வீட்டுநிலையிற் புகுதற்கு
மிகப் பெரிதும் விரைகின்றேன் = அளவின் மிக்க விரைவுடன் முந்துகின்றேன் ,
உனக்கு இடையறா அன்பு = நின்னிடத்தில் இடையறவில்லாமல் நிகழும் மெய்யன்பு ,
என் அகத்து ஊடு நின்று உருக = என் உள்ளத்தின் நடுவே நிலைபெற்று அவ்வுள்ளம் உருகும்படி ,
தந்தருள் = அடியேனுக்கு உதவியருள்வாயாக என்பதாம்
விளக்கவுரை :- ஆடகச்சீர் மணிக்குன்று. இல்பொருள் உவமை. இறைவன் ஐம்பெரும் பூதங்களும் தத்தம் நிலையழிந்து சலிக்கும் பேரூழிக்காலத்தும் , அதனால் சலிப்பறியாத் தன்மையன் ஆதலான், அப் பெருமானை மலைபோல் வான் எனக் கூறுதன் மரபு. அத் தன்மையோடு செம்மை சான்ற பேரொளிப் பிழம்பாகவும் உள்ளான் என்பது தோன்ற , “மணிக்குன்றே” என்றார். “மாசற்ற மணிகுன்றே” என்பர் பின்னும் , மணி – மாணிக்கம் . “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமாகடலை , மற்றவர் அறியா மாணிக்க மலையை” என்பர் திருவிசைப்பா ஆசிரியர் . கற்றவர் விழுங்குதற்குரிய சிற்றுருவமுள்ள, கற்பகப் பொற்கனியாக விளங்கும் பெருமான் கருணைக்கடலாதலின், கல்லாதவர் மாட்டுப் பேரருளுடையனாய் மாணிக்க மலையாகவும் உள்ளானென்றும் , அந்நிலையிலும் அவர் அறிந்திலரென்று கூறிய நயம் ஈண்டு நினைக்கத்தக்கது . பொன்னிலம் ஆதாரமாக இருத்தல் , மணிக்குன்றின் ஒளி சிறந்து விளங்குதற்கு ஏதுவாகலான் , “ஆடகச் சீர் மணிக்குன்றே” என்றார் மெய்யுணர்வுடையார் உள்ளக்கமலம் பொன்னிறமாகவும் , அதன்கட் பேரொளிப் பிழம்பாக விளங்கும் இறைவன் நிலை மாணிக்க மலையாகவும் கருதியது உட்கோளென்க . தூய வுணர்வுடையார் உள்ளத்து விளங்கும் அளக்கலாகா அளவும் பெருமையும் உடைய அப் பெருமான் கருணையால் என்னை போன்ற சிறியோரையும் ஆட்கொள்ளும் இயல்பினன் என்பது தோன்ற , “எம் உடையானே” என்று அருளினார்
சிவனடியார் வேடம் பூண்டு , கூத்தில் அபிநயிக்கின்றவனைப்
போல் உண்மையன்பின்றி , வேடமாத்திரம் உடையேன் என்பார், “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து” என்றார் . “நாடகத்தின்கண்” என ஏழாவதில் மூன்றாவது மயங்கிற்று . “நான் தனக்கன்பின்மை நானுந் தானுமறிவோம்” என்று அடிகள் பிறாண்டுக் கூறியதும் காண்க. அன்புருவமாகிய அடிகள் இங்ஙனம் கூறியது, உலகியலைத் தம்மாட்டு ஏறிட்டெனக் கொள்க. பல இடங்களிலும் இங்ஙனம் கூறுதற்கும் இதுவே கருத்தென்க. நாடகத்தில் இந்திரனாக நடிக்கும் ஒருவன், நடிக்கின்ற தன் திறமைக்குரிய பயனை விரும்புவானேயன்றி , இந்திரனுக்குரிய போகங்களை விரும்புதலில்லை ; விரும்பினாலும் அப்பயனை எய்தான் .இஃது உல்கியலிற் கண்டது. ஈண்டு அடிகள் இவ்வுலகியலை உட்கொண்டு ,ஆண்டவனே , யான் மெய்யன்புடைய சிவனடியார் உருக்கொண்டு உலகை வஞ்சிக்க நடிக்கின்றேன் ; அந் நடிப்புத்திறமைக்கு மக்களிடத்தினின்றும் பெறத்தக்க பயனை விரும்பாமல் , மெய்யன்பர் பெறத்தக்க வீட்டின்பத்தில் தலைப்பட முற்படுகின்றேன் என்பார், “வீடகத்தே புகுந்திடுவான் ……. விரைகின்றேன்” என்றார். வேடம் பூண்டு நடிப்பவனும் , நடித்தல் தொழில் முற்றுப் பெற்றபின், பயனைப்பெற விரும்புதல் முறை . அங்ஙனமின்றி , யான் மேற்கொண்ட நடிப்பும் முற்றுப்பெறாமல், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடையிலே, அதனாற் பெற இயலாத வீட்டு நிலையைப் பெற விழைகின்றேன் என்பார் , “நடுவே” என்றார். இனி, “வீடகத்து நடு” எனக்கொண்டு ஒரு வீட்டினுள் ஒதுக்கிடமும் பெறுதற்கு உரிமையில்லாத ஒருவன் அதன் நடு இடத்தில் இருக்க விழைதல் போல, உரிமை படைத்த எல்லா வுயிர்களும் வேற்றுமை இன்றிக் கலந்து இன்புருதற்குரிய முத்திநிலையிலும், சிறிதும் தகுதியில்லாத நான் அறியாமையாற் சிறப்பிடம் பெற விரும்புகின்றேன் எனக் கோடலுமாம் .
சாதனங்களை முறையே மேற்கொண்டாற்கு, இறை யருளால் வீட்டுநிலை தானே எய்தும் இயல்பினதாகவும், யான் பொய்மையாக நடித்து, அதனை வலிந்து பெற முயல்கின்றேன் என்பார், “புகுந்திடுவான்” எனவும் , சிறந்ததொரு பயனைப் பெறுதற்குத் தகுதியில்லாததோடு, எதிர்மறையாகவுமுள்ள நடிப்பை மேற்கொண்டமையால், காலந்தாழ்ப்பின், அந்நடிப்பின் பொய்மை வெளிப்பட்டு விடும் என்னும் கருத்தால், “விரைகின்றேன்” எனவும், அவ்விரைவும் அளவிகந்த நிலையில் உளதென்பது தோன்ற, “மிகப் பெரிதும்” எனவும் கூறினார்.
அடிகள் கடைப்பிடித்தொழுகிய நெறி, அன்பு நெறியாதலின் , அழிவில் இன்பப் பேற்றிற்கு வாயிலாகவுள்ள அம்மெய்யன்பையே யாண்டும் இறைவன்பால் வேண்டுவார் , உரிய சாதனத்தை மேற்கோடலே நம் கடமை; அதற்குப் பயன் செய்தல் ஆண்டவன் திருவுள்ளத்தைப் பொறுத்தது என்னும் உண்மையைக் கடைப்பிடித்து , ஈண்டும் அம்மெய்யன்பையே வேண்டினர். அதுவும் இடையறவு படாமலும், எக்காரணத்தாலும் பிறிதொன்றைப் பற்றாமல் நின்னையே குறிக்கொண்டும், சலிப்பின்றி நிலை பெற்று நிகழ வேண்டும் என்பார், “இடையறா அன்புனக் கென்னூடகத்தே நின்று” என்றார். உன்கண் என ஏழாவதில் உனக்கு என நான்காவது மயங்கிற்று. அவ்வன்பினால் பெறத்தக்க முடிந்த பயன் வீட்டின்பம் ஆயினும் , அடிகள், “கூடுமன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறல்” உடையராதலின், அவ்வின்பத்தை வேண்டாது, கல்லினும் வலிய நெஞ்சம் உருகுதற்கு வேண்டுமென்பார், “நின்றுருகத் தந்தருள்” என்றார் . ஒரு சாதனத்தால் பிறிதொரு சாதனத்தையே பெறவிளைதல் அடிமைத்திறத்தின் இயல்பாகும், ஆதலின் உள்ளம் உருகுதலையே அன்பின் பயனாகப் புலப்படுத்தார். “அன்பு நின்றுருக” என்புழி, உருகுதல் நெஞ்சத்தின் செயலாயினும் , உள்ளமும் அன்பும், முறையே இடமும் இடத்து நிகழ்பொருளுமாகிய ஒற்றுமை உடைமையால் அன்பின் செயலாகக் கூறப்பட்டது. “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” என்பதற்குச் சேனாவரையர் கொள்கைப்படி, செய்தென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் வினை முதல் வினைகொள்ளாது,, பிறிதின் வினை கொண்டதெனினுமாம். அன்றி, நிற்ப என்பது நின்றெனத் திரிந்து நின்ற தெனினும் அமையும்.
இனிப் பொய் வேடத்தால் நடிப்போரை மெய்யன்பர் உணர்ந்து, இறையருளை வேண்டிப் பொய்மை மெய்மையாக வேண்டுமென நினைவாராயின், அன்னார் நினைவாற்றல் அங்ஙனமே செய்விக்கும் என்பது முன்னை வரலாறுகளிற் காணப்படுவதொன்று. மாசு நீங்கிய தூய உள்ளமுடைய பெரியார் பாவனை, போலியை மெய்மையாக்கும் என்னும் உண்மை, அறிவியல் நூல்களிலும் தெளிவுறுத்தப் படுவதாகும். பிரமோத்தர காண்டத்தில், சீமந்தனி என்னும் சைவ செல்வியார் பாவனையால், மணமக்களாகப் போலி வேடம் பூண்டு சென்ற உடன் பிறந்த ஆண்மக்கள் இருவரும் உண்மையான மணமக்களானதும், வீர சைவ அடியார் குழுவில் சேர்ந்துண்ணும் நிமித்தம், கள்ள வேடம் புனைந்து சென்ற கள்வரெல்லாம் வசவண்ணர் நினைவு வலிமையால் களங்கமறும் உள்ளமோடு மெய்யடியாராகியதும் இதற்குச் சான்றாவனவாம். இம் முறையில் அடிகள், நாடகத்தால் சிவனடியார் போல நடித்தமையை மெய்யன்பர் கண்டு, அவர் நினைவாற்றலால் அந் நடிப்பை மெய்மையாக்கவும் கூடுமே; அங்ஙனம் மெய்மையாக்குதற்குரிய மெய்யன்பர் நினைவாற்றல் தம் மாட்டுப் பதிந்து பயன் விளைக்கும் அளவும் பெறாது, இடைக்காலத்தே வீட்டு நிலைபெறுதற்கு விளைகின்றேன் என்பார் , “நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் விரைகின்றேன் “ என்றார் எனினுமாம் . ஈண்டு “நடு” என்பது காலத்தையும் முற்கூறிய கருத்திற்கு , “நடு”என்பது இடத்தையும் குறிக்கும்.
“ஆடகச்சீர் மணிக்குன்றே” என்பதற்குப் பொன்னோடியைந்த அழகிய மாணிக்க மலையே என்று கோடலுமாம் . இனி, மணியை நீலமணி எனக் கொண்டு, நீலமணியை ஒரு பாலுடைய ஆடகக் குன்று போல்வாய் என விரித்து, உமையொரு கூறனே என்று கோடலுமாம் . ஈண்டு இறைவனை அம்மையப்பனாக விளித்தது மெய்யன்பு அருளுதற்குரிய கருணையாளன் என்பதைப் புலப்படுத்தற்கு என்க.
இதன்கண், மெய்யன்புப் பேற்றிற்கு உறுதுணையாக நிற்க வேண்டிய மனம், அங்ஙனம் நில்லாமையோடு, பொய்மையாக நடிப்பதற்கும் தூண்டுதல் குறித்து வருந்து முகமாக இறைவனை முன்னிலைப்படுத்து , அந் நெஞ்சிற்குக் குறிப்பால் அறிவுறுத்தமை புலனாதலின் , அறிவுறுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,”இடையறா அன்புனக்கென் னூடகத்தே நின்ருகத் தந்தருள்” என்னும் தொடரால் பத்தி பெறப்படுதலின் ,பத்தி , விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் தோன்றியவாறறிக .
**********************************