கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
மாணிக்க வாசக சுவாமிகள்
அருளிச் செய்த
திருவாசகம் — நீத்தல் விண்ணப்பம்
மகிபாலன்பட்டி
மகாமகோபாத்தியாய , முதுபெரும் புலவர்
பண்டிதமணி
மு கதிரேசச் செட்டியார்
இயற்றிய
கதிர் மணி விளக்கம்
என்னும் பேருரை
கணபதி துணை
பதிப்புரை
அன்பு நெறிச்சென் றருளில் திளைத்தரிய
இன்பமய மாய்த்திகழும் எம்மிறைவன் – என்புருகீ
ஞானப் பொருளா நவின்றமணி வாசகமே
ஈனமிலா வாழ்வுதரும் ஈங்கு.
தமிழ் மொழியும் சைவ சமயமும் தழைத்தினிதோங்கத் தமிழகத்தில் தோன்றியருளிய சமயகுரவர் நால்வருள் ஒருவரும் , எல்லாம்வல்ல ஆண்டவ னை அன்பு நெறி நின்று வழிப்பட்டுச் சிவானந்தமாகிய இன்பக்கடலில் திளைத்துத் தம் அரிய சிவாநுபவ உண்மைகளையெல்லாம் இனிய ஞானப் பனுவல்களால் மக்கள் உய்தற்பொருட்டு வெளியிட்டருளியவர்களும் ஆகிய திருவாதவூரடிகள் அருளிச்செய்த திருவாசகம் என்னும் தெய்வத் தமிழ் மறயின் பெருமை இவ்வுலகம் அறிந்ததொன்று . சொல்லினிமை பொருளினிமைகளிற் சிறந்து இனிய இசை நலத்திற்கு இயைந்து விளங்குவ தும் , “நவில் தொறும் நூல் நயம் போலும் “ என்ற பொருளுரைக்கு ஏற்பக் கற்பவர் ஊற்றி உணர உணரப் புதிய புதிய நுண்பொருள்களைப் புலப்ப டுப்பதும் ஆகிய திருவாசகத் திருப்பாடல்களுக்கு உரைகண்டார் பலராவர் . அவ்வுரைகளைக்கொண்டு நூலின் உண்மைப்பொருளைப்பெரும்பாலும் உள்ளவாறு அறிதற்கியலாமையால் , “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் “ என்று அடிகள் ஆணையிட்டருளியபடி ,அவனருளே கண்ணா கக் கொண்டும் ,அடிகள் திருவுருவத்தை இடையறாது நினைவு கூர்ந்தும் கூடியவரை பொருள் கான முயன்றேன் . அம் முயற்சி திருவருளால் ஓரளவிற் பயனுடையதாயிற்று .
இதற்குமுன் திருச்சதகத்திற்கு ஒரு பேருரை எழுதி வெளியிட்டேன் . அவ்வுரையை ஊன்றிப் படித்துணார்ந்த அன்பர்கள் பலர் மதிப்புரை உதவி என்னை மேன்மேலும் தொடர்ந்து உரை யெழுதி வரும்படி வற்புறுத்தினர் . சிவநேச செல்வர்களாகிய அன்பர்கள் தம் ஆணை கடத்தற்கரியதாகலின் , அன்னார் பணித்த படி, அடுத்த நீத்தல் விண்ணப்பத்திற்கு முன்னர் மேற்கொண்ட முறைப்படியே கதிர்மணி விளக்கம் என்னும் பேருரை யெழுதி முடித்தேன் .
உரை யெழுதிவருவதை அறிந்த அன்பருள் தேவகோட்டை சிவநேசச் செல்வர் , திருவாளர் பிச . அரு . அரு . அருணாசலஞ் செட்டியாரவர்கள் அதனைப் பெரிதும் பாராட்டித் திருவாசக வுரை வெளியீட்டிற்கு வேண்டிய உதவியைத் தாமும் செய்து வருவதாக ஆதரவு மொழி கூறி அப்பொழுது உடனிருந்து எழுதுவார்க்கு வேண்டும் பொருளுதவியும் ஓரளவு செய்தார்கள் . திரு . அருணாசலம் செட்டியாரவர்கள் தேவகோட்டையில் தனவணிக மரபில் செல்வப் பெருங்குடியில் தோன்றியவர்கள் ; இளம் பருவத்திலேயே தமிழ் நூல் சைவ நூல்களிற் பயிற்சியுடையவர்கள் ; சிவவழிபாட்டில் பேரார்வமும் அடக்கமும் யாவர் மாட்டும் அன்பும் நல்லொழுக்கமும் வாய்க்கப் பெற்றவர்கள் ; காய்தல் உவத்தல் அகற்றி ஒன்றை நடு நின்று ஆராய்தலும் , அங்ஙனம் ஆராய்ந்து கண்ட முடிபை எத்துணை இடையூறு நேரினும் அஞ்சாது முடிக்கும் திண்மையும் உடையவர்கள் ; கற்றவரிடத்து மதிப்பும் சிவதருமத்திற் பற்றும் உடையவர்கள் ; நாற்பது ஆண்டுகளாக அவர்கள் தம் அரிய நட்பு எனக்குண்டு . அந் நட்புத் தொடங்கிய காலந்தொட்டு நாணாலும் வளர்ந்து வருகின்றதேயன்றி எக்காரணத்தாலும் சிறிதும் இடையறவு பட்டதில்லை .
இத்துணை நற்குண நற்செயல்கள் இவர்கள்பால் அமைந்திருப்பதற்கு முக்கியமான ஒரு காரணமும் உண்டு . அது கோவிலூர் துறவு சுவாமிகள் என்னும் அருணாசல ஞானதேசிக சுவாமிகளது வழித் தோன்றலாக அமைந்த தேயாகும் . துறவு சுவாமிகள் இவர்கள் தந்தையாரின் பிதாமகராவர் . கோவிலூர் வேதாந்த மடத்தில் இரண்டாந் தலைவராக எழுந்தருளி வேதாந்த ஞானம் கைவரப் பெற்றவர்கள் ; மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள் கோவிலூர்ப் புராணத்தில் துதியாகப்பாடிய செய்யுளால் இப் பெரியவர் பெருமை புலனாகும் . இத்தகைய சிறந்த குடிப்பிறந்த என் நண்பர் திரு . அருணாசலஞ் செட்டியாரவர்கள் நீத்த்ல் விண்ணப்பவுரை வெளிவருதற்கு வேண்டிய பொருளுதவி செய்து ஆதரித்தார்கள் . இவ்வு தவியை என்றும் நினைவு கூர்தலோடு , அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து சிவதருமங்களைச் செய்யவும் , புகழொளி மேன்மேலும் ஓங்கவும் , வாழையடி வாழையெனக் குலம் விளங்கவும் இறையருளை வேண்டுகின் றேன் .
இதற்கு உரைச்சிறப்புப் பாயிரம் அன்புடன் உதவிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துச் சொற்பொழிவாளர் வித்துவான் ,திரு மு அருணாசலப் பிள்ளையவர்கட்கும் , முகவுரை வரைந்தனுப்பிய கோயம்புத்தூர் தமிழ்ப் புரவலர் Dr . Sir . r.k. சண்முகஞ் செட்டியாரவர்களும் அணிந்துரை எழுதி உதவிய திருவாளர் தெ பொ மீனாட்சி சுந்தரனார் , M A ., BL ., M.OL . அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
இவ்வுரை யெழுதிவருங்கால் என்னுடனிருந்து திருத்தமாகப் படி யெழுதி அன்புடன் உதவி செய்தவர் மகிபாலன்பட்டி மங்கள விநாயகர் வித்தியாசாலைத் தலைமை யாசிரியர் , திரு. S . சீனிவாச ஐயங்காரவர்க ளாவர் . அச்சுப்பிழை நேராமல் அவ்வப்போது திருத்தி உதவியவர் காரைக்குடி அழகப்பா கல்லூரித் தமிழ்த் தலைமைச் சொற்பொழிவாளர் , திரு. வ. சுப. மாணிக்கம் M O L ஆவர் . இவர்களுக்கும் என் நன்றியறிவைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன் .
இந் நீத்தல் விண்ணப்ப உரையைத் திருத்தமாக அச்சிட்டு உதவிய காரைக்குடி செளத் இந்தியா அச்சகத் தலைவர் , திரு. சு வீர வீரப்ப செட்டியா ரவர்கள் நன்றி பாராட்டத்தக்கது.
சிற்றறிவுடையேனாகிய என்னைச் சிறந்த இப் பணியில் ஈடுபடச் செய்து நிறைவேற்றியருளிய திருவருளையும் , திருப்பாட்டுக்களின் சொற்பொருளுணர்ச்சியில் முட்டுப்பாடு நேர்ந்துழி எல்லாம் சிறியேன் நினைவில் புலப்படுத்து அருளிய சிவாநுபூதிச் செல்வராகிய மாணிக்க வாசக அடிகளின் அருட்பெருக்கையும் நினைந்து நினைந்து இன்புறுகின்றேன் .
மகிபாலன்பட்டி மு . கதிரேசன்
1 – 7 – 1950
–
முகவுரை
கோயம்புத்தூர் , Dr . Sir . R K சண்முகம் செட்டியார்
எழுதியது
நூலாசிரியர் மாணிக்கவாசக சுவாமிகள் ; உரையாசிரியர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ; இப் பெருமை வாய்ந்த ஒரு பதிப்பிற்கு முகவுரை யெழுதுவது பொறுப்பும் பெருமையும் கொண்ட கடமையாகும் . இக்கடமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் .
திருவாசகத்தின் ஒரு பிரிவான திருச்சதகத்திற்கு , பண்டிதமணி 1947 ஆம் ஆண்டில் ஒரு அருமையான உரையைத் தமிழகத்திற்குத் தந்தார் . இப்போது திருச்சதகத்திற்கு அடுத்த பிரிவான நீத்தல் விண்ணப்பத்திற்கு உரை தந்திருக்கிறார் .
திருச்சதகமும் , நீத்தல் விண்ணப்பமும் மணிவாசகத்தில் தனிப் பெருமை வாய்ந்த இரண்டு மணிகள். ஒன்று ,இறைவன் தன்னை ஆட் கொண்டபின் மாணிக்கவாசக சுவாமிகள் ஆனந்தக் களிப்புடன் பாடிய பாட்டுக்களையுடையது . மற்றொன்று இறைவன் கட்டளைப்படி மண்ணுலக வாழ்க்கையின் பாசத்தால் இன்னும் சில நாள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே என்று சுவாமிகள் முறையிடும் பாட்டுக்களையுடையது .
மாணிக்கவாசகர் தமிழ் நாட்டில் சைவத்தையும் , தமிழையும் வளரச் செய்யும் சிறந்த தொண்டராய் விளங்க வேண்டுமென்பது இறைவன் அருளால் பிறந்த ஆணை . இந்த ஆணை நிறைவேறுவதற்குப் பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராயிருந்த மாணிக்கவாசகர் உபதேசம் பெறவேண்டுமல்லவா?
சிவபெருமானே ஞானகுருவாய் , 999 மாணவர்களுடன் திருப்பெருந்துரையில் ஒரு சோலையில் வந்து தங்கினார் . குதிரைகள் வாங்கும் பொருட்டு அவ்வூருக்கு வந்த மாணிக்கவாசகர் , குருந்த மரத்தின் நிழலில் வீற்றிருந்த ஞானகுருவைக் கண்டார் . குருவுக்கு அடிமையானார் , ஞானோபதேசம் பெற்றார் . குதிரைகள் வாங்க வந்த வேலையை மாணிக்கவாசகர் மறந்ததும் ,குதிரைகள் நரிகளாய் மாறியதும் , சிவபெருமான் கூலிக்கு மண் சுமந்ததும் , பாண்டிய மன்னன் தன் அமைச்ச ருடைய தெய்வத் தன்மையை அறிந்ததும் , இறுதியாக மாணிக்கவாசகர் உலக வாழ்க்கையை விட்டுப் பெருந்துறைக்குத் திரும்பியதும் ஆகிய இச்செய்திகளை யெல்லாம் வாதவூரார் புராணத்தில் காணலாம் .
சில நட்கள் கழிந்த பின்னர் ஞானாசிரியரான சிவபெருமான் பெருந்துறையிலிருந்து தன்னிருப்பிடமான கைலாசத்திற்குத் திரும்பினர். திரும்புமுன் 999 மாணவர்களும் இன்னும் சில நாட்களுக்கு மானிக்கவாசகருடன் தங்கியிருந்து , அவ்விடமிருந்த பொய்கையில் நெருப்புத் தோன்றுஞ் சமயத்தில் அவர்கள் அந் நெருப்பில் புகுந்து மறைய வேண்டுமென்றும் கட்டளை யிட்டார் .
தன்னையும் அதே சமயத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சுவாமிகள் வேண்ட , சிவபெருமான் , “நீ இன்னும் மண்ணுலகத்தில் சில காலம் தங்கியிருந்து தொண்டு செய்து ,சைவத்தையும் தமிழையும் மக்களிடம் பரப்பிய பின்னரே என் திருவடியைச் சேர்வாய் “ என்று ஆணை இட்டனர் . இந்த ஆணை இறைவன் உலக மக்களுக்கெல்லாம் இட்ட ஆணையென்று நாம் அறிய வேண்டும் . இறைவன் அருளைப்பெற்று அற நெறியை அறிந்த ஒவ்வொருவனும் உலக மக்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றான் . தன்னுடைய ஆன்ம லாபத்தை மட்டும் கருதி , உலகத்தை வெறுத்துத் தனியே இருப்பது மேம்பட்ட வாழ்க்கை அன்று . மக்களுக்குத் தொண்டு செய்வதே இறைவனை வழிபடும் சிறந்த மார்க்கம் . வள்ளுவர் அருளிய திருக்குறளின் அடிப்படையான உண்மையும் இதுதான் . “அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றில் , போ ஓய்ப் பெறுவது எவன் “ என்பது பொய்யில் புலவவர் பொருளுரை.
சிவபெருமானின் கட்டளைப்படி 999 மாணவர்களும் மறைந்தனர் .அச்சமயம் மாணிக்கவாசகருக்கு மனம் தளர்ந்தது . மண்ணுலகப்பற்றினால் ஏற்படும் அபாயங்களை நினைந்து மனங்கலங்கினார் . நான் இறைவன் அருளைப் பெற்றவனாயிருந்த போதிலும் , ஆசையின் சோதனைக்கு ஆளாய் விடுவேன் ; அதனால் , ஆண்டவன் என்னைக் கைவிட்டு விடுவானோ? என்று அஞ்சினர் . அந்த அச்சத்தால் சுவாமிகள் முறையிடும் பாட்டுகள் தான் நீத்தல் விண்ணப்பம் என்னும் 50 திருப்பாட்டுகள் .
திருச்சதகத்தில் பேரின்பத்தின் பெருமையைச் சொல்லி மகிழ்ந்தார் நீத்தல் விண்ணப்பத்தில் அப்பேரின்பத்தைப் பெறுவதற்குத் தடையாயுள்ள உடல் நீங்கவில்லையே என்று நினைந்து , சிற்றின்பத்தினால் விளையும் தீங்குகளை எடுத்துக்காட்டி , இச் சோதனைகளுக்கு இடையில் இறைவன் தன்னைக் கைவிடாமல் ஆதரிக்க வேண்டுமென்று புலம்புகின்றார்.
இந்த அருமையான நூலில் உள்ள ஆழந்த கருத்துகளைச் சாமான் யத் தமிழன் ஒரு துணை இல்லாமல் தெரிந்துகொள்ளுவது கடினம் . பண்டிதமணி அவர்கள் அத்துணைவராய்த் தோன்றி இருக்கிறார். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் திருவாசகத்தை ஓதுகின்றார்கள் . ஆனால் எத்தனை பேர் அதன் பொருளை அறிந்து அனுபவிக்கின்றார்கள் ? பொருள் விளங்காத பாடல் இருள் மூடியேகிடக்கும் என்பது நம் முன்னோரின் கொள்கை . இந்தக் கருத்தை அப்பர் சுவாமிகளும் ,
“சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் ,
தூங்காதார் மனத்திருளை வாங்காதானை “
என்று பாடி இருக்கின்றார் . இறைவன்பெருமையைப் பொருள் தெரிந்து பாடவும் , கேட்கவும் வல்லவர்கள் தான் பேரின்பத்தை அடைவார்கள் என்னும் கருத்தை வாதவூரடிகளும் , “சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் மேத்தப்பணிந்து “ என்பர் .
நீத்தல் விண்ணப்பத்தின் பொருளை நன்றாய் அறிந்து எல்லோரும் பேரின்பம் அடையவேண்டுமென்று , பண்டிதமணி அழகான இந்த உரையை நமக்குத் தந்துள்ளார் . உரை எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. . சொல்லின் பொருளையும் , சொல் நயத்தையும் விளக்கிக்காட்டியிருக் கின் றார் . கருத்துரை பாட்டைத் தெளிவு படுத்துகின்றது ; பதவுரை சொல்லின் பொருளை எடுத்துக் காட்டுகின்றது ; விளக்கவுரை சொல்லின் நயத்தையும் , பொருளின் நுட்பத்தையும் விளக்கிக் காட்டுகின்றது .
இதுதான் உரையாசிரியர்கள் கையாள வேண்டிய சரியான முறை . இம்முறையில் தமிழ் இலக்கிய நூல்களுக்கெல்லாம் உரைகள் வெளிவந்தால் தமிழ் மறுமலச்சியின் பயனைத் தமிழ் மக்கள் அடையலாம் . ஒரு மொழியின் பண்டைய இலக்கியங்கள் அம் மொழிக்கு உயிர் . தமிழ் இலக்கியங்களை நாம் மறந்தால் , உயிரை மறந்ததற்குச் சமானமாகும் .
தமிழ் இலக்கியங்களில் தலை சிறந்த திருவாசகத்தைத் தமிழ் மக்கள் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம் நமக்கு உதவிய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம் .
கோயம்புத்தூர்
15 – 06 – 1950 .
அணிந்துரை
திருவாளர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் .M.A., BL ., M.OL.
அவர்கள் எழுதியது .
திருவாசகம் ஒரு தித்திக்கும் தேன் விருந்து. பாட்டுலகில் எழுந்த விந்தைகளில் எல்லாம் சிறந்த விந்தை இதுவே ஆம் . பாட்டு என்றால் எண்ண அனுபவத்தில் ஆழ்ந்த ஒருவன் அந்த அனுபவத்தின் உண்மை நிலையில் பிறரையும் ஆழ்த்தி இன்புறுத்தும் மந்திர வித்தையே பாட்டாம். மாம்பழ அனுபவத்திலோ மண்ணாங்கட்டி அனுபவத்திலோ நம்மை அழுத்தி விடுவது எளிதாகலாம் . அங்கும் பாவலன் மாம்பழத்திற்கும் மண்ணாங் கட்டிக்கும் உள்ளீடாகக் குறைவிலா நிறைவாம் பேரின்பப் பொது நிலையில் நம்மை ஆழ்த்தி விடுகின்றான் என்பது உண்மையே. ஆனால் , “இருள் கடிந்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிது மற்றின்மை “ என்று பொங்கி வரும் கடவுட் காட்சி அனுபவமோ மாற்றம் மனம் கடந்த அனுபவமாம் . அந்த அனுபவத்தில் நம்மை ஆழ்த்துவது செயற்கரிய செய்யும் பெரியார் செயலாம். கடவுளாம் இன்பப் பெரு வெள்ளம் தமிழில் போல் வேறு எம் மொழியிலும் பொங்கி வழியக் காணோம் . இத் தமிழ்ப் பெரு வெள்ளத்திலும் ஆனந்த மலையாய்க் காட்சி யளிப்பது திருவாசகமே ஆம். கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் இந்த நூலை ஓதும்போது தம்மை மறந்து ஓரிமைப் போதேனும் சமாதிகூடும் தனிப்பெரும் காட்சியை இன்றும் காணலாம் . புன் புலால் யாக்கை புரை புரை கனிய என்பெலாம் உருக்கும் அனுபவமே மணிவாசகனார் பெற்ற அனுபவம் . தமிழ் என்ற மணமே வீசாத ஆங்கில நாட்டில் தமிழரை அஞ்ஞானிகள் என்று எண்ணி வந்த பெரியார் போப்பையர் இந்த நூலை ஓதவந்ததும் என்பெலாம் உருக்கும் அனுபவத்தினைத் தாமும் பெற்றது வியப்பன்றோ? எலும்பை யும் கசி வித்துருக்கும் நூல் எனத் திருவாசகத்தினை அப் பெரியார் புகழ்ந்தார் . உலகம் முழுதும் இதனை ஓதி உய்யவேண்டும் என மொழி பெயர்த் தருளினார். தம்மை இது காரணமாகத் தமிழ் மாணவன் என உலகம் போற்ற வேண்டும் என மிக மிக விரும்பினார் . இந்த வரலாறு ஒன்றே திருவாசகத்தின் பெருமைக்குச் சிறந்த சான்றாகும் .
சீவன்முத்தரது அனுபவத்தினை மணிவாசகர் போலப் பாடிவைத்தவர் மிகச் சிலரே . அத்தகைய அருமை நம் தமிழில் வெளிப்பட்டது , தமிழரது பெரும் பேறே எனலாம் . சீவன்முத்தரது நிலை முதலில் சொல்லொணாத பெரு விளக்கமாய்த் தோன்றும் . பின்னர்ப் பெருநிலையைப் பிரிந்த பேரிழவு நரகினும் கொடியதாய்ப் பேரிருளாய்ச் சூழ்ந்து வருத்தும் , அடுத்துத் தோன்றுவது பேரின்பம் . முடிவாக அனைத் தையும் ஒன்றாகக் கண்டு பெரும் பொருளோடு ஒன்றுபட்டு அமைந்து விடுகின்ற குறைவிலா நிறைவனுபவம் எழும் . இந்த நான்கு வேறு நிலைக ளில் திருச்சதகமும் நீத்தல் விண்ணப்பமும் இரண்டாம் நிலையாகிய பிரிவு நிலைத் துன்பத்தின் போக்குவீடாக எழுந்தனவாம் . துன்ப உலகில் வாழும் நமக்குத் துன்ப இயல் பாடலே மிக மிக இனிக்கும் . பாலைத்திணைப்பாடல்கள் அகநானூற்றில் செம்பாதியாக வருவது . இதனாலே அன்றோ? விப்பிரலம்பசிருங்காரம் என்று அதனைப் போற்றுவார் .
திருச்சதகத்திற்குப் பண்டிதமணியவர்கள் உரை எழுதியதனை உலகம் போற்றியுள்ளது . தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வழியே துரைத்தனப் பரிசினையும் அவ்வுரை பெற்றுள்ளது . அப் பெரியாரே நீத்தல் விண்ணப்பத்திற்கு இது போது உரை எழுதி வெளியிடுகின்றார் . திருவாசகத்தில் இலக்கியச்சுவை ததும்பும் பகுதி ஒன்று உண்டு என்றால் அது நீத்தல் விண்ணப்பமே ஆம் . தமிழ்ச் சுவையறிந்த அறிஞர் இப்பகுதிக்கு எழுதிய உரை மிக மிக இனிக்கவே செய்கின்றது .
திருவாசகத்திற்கு உரை எழுதலாகாது என்ற கொள்கை வழங்கிய நாள் உண்டு . சீவன்முத்தரது அனுபவத்தினை உரை கொண்டு தெளிவு படுத்த முடியாது . இது பற்றியே அப்பழங்கொள்கை எழுந்து நடையா டியது போலும் . ஆனால் சொற்களின் பொருளையும் நயத்தினையும் எடுத்துரைப்பது இயலாத தொன்று அன்று. தவறும் அன்று . சொல் நயம் அறியாதாருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாம் . நாலாயிரப் பிரபந்தத்திற்கு இவ்வாறு பெரியோர் உரை எழுதவில்லையா ? ஒவ்வொரு சொல்லாகச் சுவைத்து அதில் ஆழ்ந்து பாட்டின் அனுபவத்தில் குதிதுத் திளைக்க வழி காட்டிய ஈட்டின் ஆசிரியரைத் தமிழுலகம் மறக்கப்போமோ? அத்தகைய முறையில் நம் பண்டிதமணியவர்களும் இன்று திருவாசகத்திற்குக் கதிருரை ஒன்று எழுதி வருவது தமிழின் நல்லகாலமே ஆம் . திருவாசகத்தி னைப் பற்றி அவர் செய்த சொற்பொழிவுகளையும் “ இருதலைக் கொள்ளி யினுள் ளெறும்பொத்து” என்பது முதலிய பகுதிகளுக்கு அவர் கூறிய நயங்களையும் கேட்டவர்கள் “இவர் உரை ஒன்று எழுதி வெளியிட்டாரா “ என்று விரும்பிய விருப்பம் எல்லாம் இன்று நிறைவேறி வருகிறது . இது கண்டு எந்தத்தமிழன் மனந்தான் மகிழாது?
சீவன்முத்தரது அனுபவம் மாற்ற மனங்கடந்தது எனக் கண்டோம் பண்டிதமணியவர்கள் மணிவாசகர் அனுபவம் சைவசித்தாந்த அனுபவம் என விளக்குகின்றார். பிறர் பிறவகையாக விளக்குதல் கூடும்; விளக்குதலும் வேண்டும் . அதுவன்றோ அதன் பெருமை . அண்டப்பகுதியை எல்லாம் ஆண்டவனோடு விழுங்கித் தேக் கெறிந்து பாடும் பாடல் உலகக் கொள்கைகளை எல்லாம் விழுங்கிநிற்கும் பாடல் அன்றோ ! ஆதலின் , அக் கொள்கைகள் எல்லாம் அங்குத் தோன்றுவது இயல்பே.
சொற்களின் நயங்களைப் பண்டிதமணியவர்கள் இன்பஞ்சுரக்க எடுத்துக்காட்டும் பகுதிகள் நினைக்க நினைக்க இன்பப் பெரு விருந்தாக நம்மை மகிழ்விக்கின்றன . புராணக் கதைகளைப் புறக்கணிக்கும் காலம் இது . ஆனால் மணிவாசகர் புராணக்கதகளையும் திருவாசகத்தில் ஓர் இன்சுவைப் பகுதியாக வளாவியுள்ளார். இங்கும் நயம் பல காட்டுகின்றார் நம் உரையாசிரியர் . “ தழ லரவு” என்ற பகுதிக்கு புராணத்தின் வழியே சொல் நயம் காட்டும் பகுதி அவருடைய அகன்ற நூலறிவினைப் புலப்படுத்தும் . இப்புராணக் கதைகளுக்கு உரையாசிரியர் தத்துவார்த்தம் கூறும் இடங்களில் அவருடைய மெய்ந்நூலாராய்ச்சி நன்கு பலனா கின்றது . சங்கு , மந்தாரம், பிறை என்பன சிவஞானம் , பராபத்தி , உயிர் என்று விளக்குவது காண்க . “வெண்டலை முழையிற் பதியுடைவாளரப் பார்த்திறைபைத்துச் சுருங்க” “உன் கழல் கண்டும் கலந்தருள வெளி வந்திலேனை “ “ஆருளுடைச் சுடர் “ “பதமே” “ அடியார் பெயராத பெருமையனே “ முதலிய பகுதிகட்கு உரை கூறுமிடங்களில் உரையாசிரியரின் பலவகைத் திறமைகளைக் காணலாம் . சச்சை என்பது சத்தா என்பதே என்றும் , கடையவனே என்பதற்கு “கடைமைப்பட்டவனே” என்றும் பொருள் கூறி நிலை நாட்டும் முயற்சியினை ஒப்புக்கொள்ளாத வர்களும் ஆசிரியரின் சொல்லாராய்ச்சித் தறனை வியவாது இரார். உலகினைச் சுவைத்த பண்டிதமணி தம் அனுபவத்தின் வழியே திருவாசகத்தின் இன்பத்தினை விளக்கும் பகுதிகளில் “ஐம்புல இன்பமும் தருவது மலர்” என்பது போன்றவை இன்புறத்தக்கனவாம் .
இவற்றை எல்லாம் ஓதும்போது பிறபகுதிகளுக்கும் உரை விரைவில் வெளிவாராதோ என்று ஒரு பெருங்குறை யில் தோன்றும் வருத்தமே பொங்குகிறது . கதிருரை முற்றுப்பெறும் வண்ணம் கதிரேசனார் நீடூழி வாழ்க என நம் மனம் நம்மையும் அறியாது வாழ்த்தி ஆண்டவனை வணங்குகிறது .
***********************************
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர்,
வித்துவான் மு . அருணாசலம் பிள்ளையவர்கள் இயற்றிய
உரைச் சிறப்புப் பாயிரம் .
1 . திருந்து பெருந் துறைக்கண்வளர் குருந்தடியில் எழுந்தருளும்
தேவ தேவன்
பரங்கருணைத் தடங்கடலைப் பருகியுளம் நெக்குருகிப்
பாரோ ருய்யப்
பொருந்துமணி மொழிதொடுத்துப் புகழ்வாத வூரடிகள்
புனைபா மாலை
அருந்தமிழின் அமிழ்தெனலாம் அதன்சுவைநற் கதிர்மணிமா
விளக்கம் ஆமே.
2 அண்ணல்திரு வாதவூர் அடிகள் தமை ஆண்டவன்விட்
டகன்ற தற்பின்
உண்ணெகிழ்ந்து கண்கலங்கி உலகுடலா தியவெறுத்தே
யுணர்ச்சி மேலிட்
டெண்ணரிய இறைவ எனைக் கைவிடலா காதென்றென்
றரங்கி நீத்தல்
விண்ணப்பம் செய்திருப்பாட் டைம்பதும்பே ருரைபெற்று
மிளிர்வ தாலோ
3 பூங்குன்ற நன்னாட்டுத் தலைநகராம் மகிபால
புரிக்கண் வாழும்
ஓங்குபெரும் பேராசான் உலகறிந்த பண்டிதமா
மணியென் றோதும்
பாங்குநிறை கதிரேசத் திருவாளன் பகுத்துணர்ந்து
பலர்பா ராட்டத்
தீங்கரும்புந் தெவிட்டும்வண்ணம் செய்த அப்பே ருரைமாண்பு
செப்பற் பாற்றோ
4. எழுத்தெழுத்தா ஆய்ந்தெழுதும் சொற்பொருளும் இலக்கணமும்
எடுத்துக் காட்டும்
முழுத்துணரும் இறையுயிர்கட் டெனுமூன்று பொருளியல்பும்
முறையாக் கற்றுப்
பழுத்த இலக் கியச்சுவையும் பரந்தவுல கியலறிவும்
பழுதொன் றின்றி
அழுத்தமுடன் கற்பவர்தம் அகக்கண்ணிர் கண்டுவகை
யடைவர் நன்றே.
5 . தகுதியறிந் திருபொருளைப் புணர்ந்திடுவன் இறைவனெனச்
சான்றோர் சொல்வர்
முகமனன்றஃ துண்மையெனல் அறிந்தோமால் மூதறிவாற்
சிவனே யென்னப்
புகலடிகள் அருள் நூலும் கதிர்மணிமா விளக்கவுரைப்
பொலிவுஞ் சேர்ந்த
தகலுலகில் முழுமணியோ டரும்பொன்சேர்ந் தழகுசெய
லனைப் தொன்றே .
&&&&&&&&&&&&&&&&
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம்
நீத்தல் விண்ணப்பம் என்பது , அருளாரமுதப் பெருங் கடல்வாய் அடியாரெல்லாம் புக்கழுந்த அடியேனை மாத்திரம் இங்ஙனம் நீத்தல் தகுமாவென்று இறைவன்பால் முறையிட்டுக் கொள்ளல் என்னும் பொருளுடையது . தம்மை நீத்தலைக் குறித்துக் கைவிடலாகாதென்று அடிகள் செய்து கொண்ட விண்ணப்பம் என்பதாம். இக்குறிப்பு ஒவ்வொரு திருப்பாட்டிலும் “விடுதி கண்டாய்” என்று கூறியிருத்தல் கொண்டு அறியத்தக்கது. திருவாசக வுண்மையில் “மித்தையுல கினையகற்றி விடாமலெனை யாண்டருளென், றத்தரறிந் திட நீத்தல் விண்ணப்ப மறைந்துவாம்” என்று கூறியிருத்தலும் இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும் .
இஃது , இறைவன் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனாக வெழுந்தருளி உபதேசித்து அடிகளை இன்னுஞ் சின்னாள் இந்நிலவுலகத்து இருக்கவெனக் கட்டளையிட்டுத் திருவுருக்கரந்தனனாக , அப்பெருமான் திருவுள்ளக் குறிபின்படி திருவாதவூரடிகள் திருப்பெருந்துறையினின்றும் திருவுத்தரகோசமங்கைக்கு வந்து அவ் விறைவனது திருவுருக் காட்சியை மீண்டும் பெறாமல் வருந்தி உள்ளமுருகிப் பாடியருளியதாகும் என்ப. . இதனை “உத்தரகோசமங்கை யூரினிற் சென்று புக்கார்” எனவும் , “சடையர் கோயிலெய்தித் தம்மை வந்தடிமை கொண்ட , வடிவது காணாராகி மயங்கிவெய்துயிர்த்து வீழ்ந்து , விடுதிகொ லென்னை யென்று நீத்தல் விண்ணப்ப மென்னுந் , தொடை கெழு பாட லோதக் காட்டினார் தொல்லை மேனி” எனவுங் கடவுண்மாமுனிவர் கூறுதலான் அறியலாம் . இந் நீத்தல் விண்ணப்பத்தின் முதல் இருபது திருப்பாட்டுக்களிலும் நாற்பத்தெட்டாம் திருப்பாட்டிலும் “உத்தரகோச மங்கைக்கரசே” யென்று கூறியுருத்தலானும் இஃது உத்தர கோச மங்கையிலிருந்து அருளிச் செய்யப் பட்டதென்பது புலனாம். இப்பகுதி ஐம்பது திருப்பாட்டுக்களையுடையது . “கடையவனேனை “ யெனத் தொடங்கி அந்தாதித் தொடராக அருளிச் செய்யப்பட்டது .
பிரபஞ்ச வைராக்கியம்
நீத்தல் விண்ணப்பம் என்னும் இப்பகுதியின் உள்ளுறை பிரபஞ்ச வைராக்கியம் என்பதாம் . உலக வாழ்க்கையில் பற்றறுதி யென்பது இத் தொடரின் பொருளாகும் . திருச்சதகத்தில் “பத்தி வைராக்கிய விசித்திரம் “ என்று பொது முறையில் புலப்படுக்கப்பட்டதே , ஈண்டுப் பிரபஞ்ச வைராக்கியம் எனச் சிறப்பு முறையிற் கூறப்படுகின்றது . இதனால் திருச்சதகத்திற்கும் இதற்கும் உள்ள இயைபு புலனாதல் அறிக . மெய்யன்பு , பற்றறுதி யென்னும் இவ்விரண்டனுள்ளும் உலக வாழ்க்கையைப் பற்றிய பற்றறுதியை ஈண்டுச் சிறப்பு முறையிற் புலப்படச் செய்ததற்கு ஏது, ஆண்டவன் தம்மை ஆட்கொண்டருளிய பின்னும் இந் நிலவுலகத்து இருக்கவெனப் பணித்தது பொறாமையேயாம். மெய்யன்பு ஆண்டவன் திருவடி அடைதற்கும் , பற்றொழிவு அம்மெய் யன்பு வளர்ச்சிக்கும் சாதனங்களாகும் . இவ்விரண்டனுள்ளும் இப்பொய்யுலக வாழ்க்கையை ஒழித்தலிலே அடிகளுக்கு மிக்க விரைவு தோன்றிய தென்னலாம்.
ஆண்டவன் ஆட்கொண்டவுடனே தம்மை ஊனார் புழுக்கூட்டி னின்றும் வாங்கித் தன் திருவடி நீழலில் இயைத்து இன்புறுத்தும் பேறு கிடைக்குமென உறுதி மேற் கொண்டிருந்த அடிகளுக்கு , இன்னும் சில காலம் இந்நிலவுலகத் திருக்கவெனக் கட்டளையிட்டது , கடக்கமுடியாத தாயினும் தினையளவு நேரமும் இத்துயர் ஆக்கையைப் பொறேன் என்று அடிகள் கூறியிருத்தலால் மிக்க வருத்தத்தையே விளைவித்தது என்னலாம். இறைவனது அக்கட்டளை அப்போது அடிகளுக்கு வருத்தம் விளைத்த தா யினும் ,அது பொதுவாக இந்நிலவுலகமும் சிறப்பாகத் தமிழுலகமும் செய்த தவப்பயனால் நிகழ்ந்ததாகும் . ஆண்டவன் உபதேசித்தவுடனே அடிகள் வீட்டின்பத்தில் தலைப்பட்டிருப்பராயின் , அவர்கள் அநுபவத்த சிவாநுபவ உண்மைகளைத் தன்னுள் அடக்கித் திகழும் திருவாசகத்தேனை இவ்வு லகம் எங்ஙனம் பருகி மாறிலா மகிழ்ச்சியின் மலரக்கூடும் ? அன்று தொட்டு இன்று காறும் இன்னும் எத்தனையோ காலம் வரையும் அடிகள் அமுத மொழியை ஓதியுணர்ந்து உருகிப்பருகி இவ்வுலகத்துள்ள எண்ணி றந்த அன்பர்களும் எவ்வாறு இன்புற்றிறுக்க முடியும்? ஆண்டவன் கட்டளை அவ்வாறின்றேல் அடிகள் ஒருவரே அழி வில் இன்பத்தில் அப்பொழுது தோய்ந்திருப்பர் . அவ்வின்பப் பேறு அடிகளுக்கு அப்பொழுது தாழ்ப்பினும் சின்னாளில் எய்திற்று . ஆகவே, அடிகள் விருப்பம் , நிறைவேறுதற்கும் உலத்ததுள்ள அன்பர் பலரும் நலம் அடைதற்கும் திருவுளங்கொண்ட இறைவன் அவ்வாறு பணித்தருளினான் என்பது புலனாம் . அடிகள் ஆண்டவன் பிரிவால் நெஞ்சம் உருகியுருகிப் பாடியருளிய அநுபவ உண்மாய்களன்றோ இற்றைப்பொழுது சிறியேமாகிய நம்மை இன்புறுத்தி உய்விக்கும் தீந்தேனாயின .
இனி, நீத்தல் விண்ணப்பம் என்னும் இப்பகுதி பிரபஞ்ச வைராக்கியம் என்னும் இக்கருத்தை , நுதலிய பொருளாகக் கொண்டிருத்தலின் , ஒவ்வொரு திருப்பாட்டின் உரையின் இறுதியிலும் இக்குறிப்புப் புலப்படுக்கப்படுவதாகும் .
&&&&&&&&&&&&&&&&&&&
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்
பாடல் : 1 .
கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்றோல்
உடயவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேனெம் பிரானென்னைத் தாங்கிக் கொள்ளே .
கருத்துரை :- இதன் முன்னர்க் கூறப்பெற்றுள்ள திருச்சதகத்தின் இறுதித் திருப்பாட்டில் , ஊனுடலின் ஒழிவையும், வீட்டின்பப் பேற்றையும் வேண்டிய அடிகள் , இவ்வின்பப்பேற்றிற்குத் தடையாகவுள்ள உடற்சுமை நீங்காமை யால் , தமக்கு உண்டாகிய சோர்வைப் புலப்படுத்தி ஆதரவளித்தல் வேண்டுமெனவும் , கைவிடலாகாதெனவும் இத் தொடக்கத் திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி விண்ணப்பஞ் செய்துகொள்ளுகின்றார் .
பதவுரை :- கடையவனேனை = கடைப்பட்டவனாகிய என்னை ,
கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட = கருணை காரணமாக உடன் இயைந்து ஆட்கொண்டருளிய ,
விடையவனே = காளை ஊர்தியை யுடையவனே ,
விட்டிடுதி = அடியேனைக் கைவிடுவாயோ ?,
விறல் வேங்கையின் தோல் உடையவனே = வலி மிக்க புலியின் தோலை ஆடையாக உடையவனே ,
மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே = என்றும் நிலையுதலை யுடைய உத்தரகோசமங்கை யென்னும் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் இறைவனே ,
சடையவனே = சடைக் கற்றையை யுடையாய் ,
தளர்ந்தேன் = சோர்வு எய்தினேன் ,
எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள் = எம் தலைவனே அடியேனைத் தாங்கிக் காத்தருள்வாயாக என்பது .
விளக்கவுரை :- ஈடும் எடுப்பும் இல்லாத ஆண்டவன் பணி கொள்ளுதற்கு உரிய தகுதி சிறிதும் இல்லேன் என்பார் , தம்மைக் “கடையவன்” எனவும் , தலை இடை கடை யாகிய முத்திறத்துள் கடைப்பட்ட தம்மை அங்ஙனம் ஆட்கொள்ளுதற்கு ஏது , ஆண்டவன் கருணையேயன்றிப் பிறிது இன்று என்பார் , “கருணையினால்” எனவும் கூறினார் . “ஊனா யுயிரா யுணர்வா யென்னுட் கலந்து “ என்று அருளிச்செய்தபடி தம் உடல் உயிர் உணர்வு என்னும் இவ்வெல்லாவற்றிலும் உடன் இயைந்து ஆட்கொண்டனன் என்பது குறித்து , “கலந்து ஆண்டுகொண்ட “ என்றார். உயிரிற்கலந்து ஊனை யுருக்கி உணர்வைப் பெருக்கி ஆட்கொண்டனன் என்பது கருத்து . “அற்புதமான அமுத தாரைகள் , ஏற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது , உள்ளங்கொண்டோ ருருச்செய்தாங்கெனக்கு , அள்ளூறு ஆக்கை யமைத்தனன் “ என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறிய திருவாக்கால் , அவர்தம் ஊனையுருக்கி அருளமுதத்தை எலும்புத் துளைதோறும் புகுத்தி இன்புறுத்தினன் என்பது தெளியப்படும் .
விடயை ஊர்ந்து பணிகொண்டது போலத் தம்மை இறைவன் வலிந்து பணிகொண்டவன் என்பது குறிப்பிற் புலப்பட ,”ஆண்டு கொண்ட விடையவனே” யென்றார். விட்டிடுதி என்பதில் விடு பகுதியும் , இடு துணை வினையும் , இகரம் எதிர்கால விகுதியும் ,தகரம் எழுத்துப் பேறும் ஆகும் . “அவற்றுள் , முன்னிலைக் கிளவி , இ ஐ ஆ யென வருஉ மூன்றும் , ஒப்பத்தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும் “ என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் , “ இகரம் கடதற ஊர்ந்து எதிர்காலம் பற்றி வரும் “ என்னும் சேனாவரையர் உரையும் ஈண்டு விதியாதலைக் காண்க . விட்டிடுதி , விடுதி, என்னுஞ் சொற்களுக்கு விடுவாய் என்பது பொருளாகும் . விடுவாய் என்பது ஈண்டுக் காகு என்னும் ஒலி வேற்றுமையால் விட்டுவிடுவாயோ என வினாவாக நின்று கைவிடலாகாது என்னும் பொருளையுணர்த்தும் . கண்டாய் என்பது முன்னிலையசை . விட்டிடுதி கண்டாய் , விடுதி கண்டாய் என்று பின் வருவனவற்றிற்கெல்லாம் இங்ஙனமே பொருளுரைத் துக் கொள்க .
தாருக வனத்து முனிவர் கொடிய வேள்வியொன்று இயற்றி , அதனின்றும் தோன்றிய புலியை ஏவி இறைவனை அழிக்க முயன்றனராக அப்புலியை உரித்து அதன் தோலைத் தன் அரைக்கண் உடுத்தனன் என்பது புராண கதை .புலித்தோலை யுடுத்து யானைத்தோலைப் போர்த்தனன் என்ப. “புலித்தோலை யரைக்கசை” என்பது தேவாரம் . அப்புலி முனிவர் தவ வன்மையால் தோன்றியதாகலின் , “விறல் வேங்கை “ என்னப்பட்டது . உடை – ஆடை . உத்தரகோசமங்கை என்பது பாண்டி நாட்டுச் சிவதலங்களுள் ஒன்று . இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளிச் சிவாகமப் பொருள்களைப் பக்குவ முதிர்ந்த அன்பர்களுக்கு உபதேசித் தற்கு இடனாய தலமாதலின் ,அச்சிறப்புக் கருதி, “மன்னும் உத்தரகோச மங்கை “ என்னப்பட்டது .தளர்ச்சியுற்று அடைக்கலம் புகுத்த திங்கட் பிறையைத் தாங்கிப் பாதுகாத்தற்கு ஆதாரமாயது சடையாதலின் , அங்ஙனமே தளர்ந்து போந்த தம்மையும் தாங்கிக் காத்தருளல் வேண்டுமென்னும் குறிப்புத் தோன்ற ,ஈற்றடியில் “சடையவனே” என்றார். ஈண்டு அடிகளுக்கு நேர்ந்த தளர்ச்சி , ஆண்டவன் திருவடி நீழல் எய்துதற்கு விரைந்து முற்பட்ட முயற்சி தடைப்பட்டமையான் உண்டாயது என்பது. தளர்ந்த நிலையிற் பணிகோடல் பொருந்தாதெனக் கொண்டு “எம் பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே” என்றார்.
இதன்கண், “சடையவனே தளர்ந்தேன்” என்றதனால் உலக வாழ்க்கை பற்றிய உவர்ப்புப் பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**********************************
பாடல் : 2 .
கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்
விள்ளே னெனினும் விடுதிகண்டாய்நின் விழுத்தொழுப்பின்
உள்ளேன் புறல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளே னொழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் தமக்கு நேர்ந்த தளர்ச்சியைக் குறித்தும் , தாங்கிக் காத்தருளல் வேண்டுமென்றும் கூறிய அடிகள் இத் திருப்பாட்டில் அவ்விரண்டற்கும் காரணங்கூறுகின்றார்.
பதவுரை :- உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே ,
கொள் பிளவு அகலா ஏர் தடம் கொங்கையர் = கொள்ளு என்னும் கூலத்தின் பிளவு அளவு இடைவெளி இல்லாத அழகிய அடி அகன்ற கொங்கைகளையுடைய மகளிரின் ,
கொவ்வைச் செவ்வாய் விள்ளேன் எனினும் = கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாய் இதழினின்றும் நீங்கேன் ஆயினும் ,
நின் விழுத்தொழும்பின் உள்ளேன் = நினது சிறந்த தொண்டில் ஈடுபட்டு அதன் அகத்தேயுள்ளேன் ,
புறம் அல்லேன் = புறம்பானவன் அல்லேன் ,
விடுதி = ஆதலின் என்னைக் கைவிட்டு விடுவாயோ? (விடலாகாது),
கள்ளேன் ஒழியவும் = வஞ்சகனாகிய யான் நின்னை நீங்கிச் செல்லவும்,
கண்டு கொண்டு ஆண்டது எக்காரணம் = கண்டு பிடித்து ஆட்கொண்டதற்குக் காரணம் என்னையோ? என்பது .
விளக்கவுரை :- “ ஈர்க்கிடை போகா விளமுகை “ என்றாற் போல இங்கே “”கொள்ளேர் பிளவகலாஒ கொங்கை “ யென்றனர் . “கொவ்வைச் செவ்வாய்” என்றது ஐம்புலநுகர்ச்சிக்குப் பெரும்பாலும் அஃது இடனாதல் பற்றியென்க. செம்மைப் பண்பு காண்டற்கும் ,வாயிற்சொல் கேட்டற்கும் ,வாய் எயிறூறிய நீர் உண்டற்கும் ,உரியவாதலும் , ஏனை உயிர்த்தற்கும் உற்றறிதற்கும் ஓரோ வழி இடனாதலும் காண்க. விள்ளல் – நீங்குதல் . அடிகள் மகளிர் இன்பத்தில் ஈடுபட்டதாக ஈண்டும் , இத்திருவாசகத்தில் இன்னும் பல இடங்களிலும் கூறியிருக்கின்றார்..தம் தவ ஒழுக்கம் மிகப் பெரிதாயினும் அதனைப்பற்றி ஆண்டவன் முன்னிலையில் சிறிதும் கூறாமல் , தம் குற்றம் சிறிதாயினும் பெரிதாகக் கொண்டு கூறிப் பொறுத்தருள வேண்டுதல் பெரியோர் இயல்பாதலின் , அம்முறையில் பண்டை வினைத் தொடர்பு ஓரோவழித் தம்மைத் தாக்க அதன் வயப்பட்டுத் தம் மனம் சிறிதளவு நெறி பிறழ்ந்ததாகக் கண்டு ,அச் சிறு பிழையைப் பெரிதாக ஆண்டவன் முன்னிலையில் விண்ணப்பஞ் செய்து பொறுத்தருள வேண்டுவாராய் இங்ஙனம் கூறியிருக்கலாம் . அன்றி வினைக்கு ஈடாகப் பிறந்து இறந்து உழலும் மக்கட் பொதுவியல்பு நோக்கி உயிர் போகும் பொதுநெறி பொறாமல் அங்ஙனம் சேறல் தீதென்பதை உலகிற்கு அறிவுறுத்தக் கருதித் தம் மேல் ஏறிட்டுக் கூறினாரெனக் கொள்ளளுமாம் . இக்கருத்து வெளிப்படும் இடங்களுக்கெல்லாம் இவ்வாறே அமைத்துக்கொள்ளல் வேண்டும் .
தலைவர்க்குப் பயன் விளைக்கும் உலகத் தொண்டு போலாது அடிமைக்குப் பயன்விளைப்பது சிவத் தொண்டு என்பது தோன்ற ,”நின் விழுத்தொழும்பு” என்றார். “உள்ளேன் புறம் அல்லேன்” என்றது , திருத் தொண்டில் ஈடுபட்டு அவ்வெல்லை கடவாத நிலையில் உள்ளேன் அன்றிப் புறம்பானவன் அல்லேன் என்னும் பொருட்டு . ஆண்டவனே ! உலகப் பற்றினின்றும் நீங்கலேனாயினும் , நின் திருத் தொண்டினின்றும் புறம்பானவன் அல்லேன் ஆதலின் , என்னக் கைவிட்டு விடலாகாது என்று அடிகள் விண்ணப்பஞ் செய்து கொண்டபடியாம் .
நெஞ்சம் பொய்யுலக வாழ்க்கையைப்பற்றி நிற்ப , புறக்கரணங்கள் திருத்தொண்டி லீடுபட்டிருக்குமாயின் , அது வஞ்சகச் செயலன்றே; அஃதறிந்தும் எங்ஙனம் கைவிடாமலிருக்க இயலும் என்பது ஆண்டவன் திருவுள்ளம் ஆகலாம் எனக்கொண்டு அது குறித்துக் “கள்ளேன் ஒழியவுங்கண்டு கொண்டாண்ட தெக்காரணமே” என்று அருளிச்செய்தனர் . ஆட்கொள்ளுதற்கு முன் நின்னைச் சிறிதும் நினையாமல் விலகியிருந்த என்னை வலிய வந்து கண்டு பிடித்து ஆட்கொண்டதற்கு ஏது வென்னை யென்பது பொருள் . இங்ஙனம் வினவுமுகமாகக் கிடைத்த பொருள் ,ஆண்டவனது அளப்பரிய அருட் குணமே காரணம் என்பது போதரும் . அவ் வருட் குணமே அடியேனைக் கைவிடாமல் காத்தருளுதற்கும் காரணம் ஆகலாம் என்பது குறிப்பிற் பெறப்படுவதாகும் .
இதன்கண் , மகளிர் இன்பத்தைப் பற்றி நிற்கும் தம்மை அதுகுறித்துக் கைவிடாமல் காத்தருளல் வேண்டுமென்று அடிகள் விண்ணப்பஞ் செய்து கொண்டது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் தோன்றியவாறு அறிக .
**********************************
பாடல் :3 .
காருறு கண்ணியர் ஐம்புல னாற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க வென்னை வளர்ப்பவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் அடிகள் தமக்கு நேர்ந்த தளர்ச்சியை நீக்கித் தாங்கிக் காத்தற்குக் கூறிய காரணத்தையே பிறிதொரு வகையில் இத்திருப்பாட்டில் மீண்டும் கூறுகின்றார் .
பதவுரை :- விளங்கும் திருவாரூர் உறைவாய் = மிக்க புகழால் விளங்கும் திருவாரூர் என்னும் திருத்தலத்து எழுந்தருளியிருப்போய்,
உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே ,
வார் உறு பூண் முலையாள் பங்க = கச்சுப்பொருந்திய அணிகலன் விளங்கும் நகிலினையுடைய அம்மையை ஒரு கூற்றிலுடையாய் ,
என்னை வளர்ப்பவனே = அடியேனைப் பாதுகாப்பவனே ,
கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் = கருமை நிறம் பொருந்திய கண்களையுடைய மகளிரைப் பற்றிய ஐம்புலன்களாகிய ஆற்றங்கரைக்கண் மரம் போல ,
வேர் உறுவேனை = வேர் ஊன்றி இருப்பேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (கைவிடலாகாது) என்பது .
விளக்கவுரை :- இறைவன் அயிராவணம் ஏறாது ஆனேறேறி யமரர் நாடாளாதே ஆரூர் ஆண்டமையால் ,”திக்கெலா நிறைந்த புகழ்த் திருவாரூர் “ என்று அப் பதி பாராட்டப்பட்டுள்ளது . மேலும் புகழ் விளக்கம் கொடைச் சிறப்பால் உண்டாவதாகலானும் , அதற்குரிய தியாகராசப் பெருமான் எழுந்தருளியிருத்தலானும் அத்தலம் “விளங்கும் திருவாரூர்” என்று கூறப்பட்டது எனலுமாம் . அம்மையை ஒரு கூற்றில் உடையவனே என்றது , குழந்தையாகிய தம்மை வளர்த்துக் காத்தற் பொருட்டு அன்னையும் அத்தனுமாக எழுத்தருளிய நிலையைக் குறிப்பதாகும் . அடிகள் விரும்பியது உள்ளொளியாகிய உணர்வு வளர்ச்சியே யன்றி ஊனுடலின் வளர்ச்சி யன்று. “ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி “ என்பது அடிகள் திருவாக்கு . உலகத்தவர் உண்டி முதலியவற்றால் எதனைப் பெருக்க விரும்புகின்றார்களோ அவ்வுடல் உருகிச்சுருங்க வேண்டும் என்பதும் உள்ளுணர்வு அருளமுத நுகர்ச்சியால் பெருக வேண்டும் என்பதுமே அடிகள் விருப்பமாகும் . ஆதலின் , “என்னை வளர்ப்பவனே “ என்பதற்கு என் உணர்வை வளர்ப்பவனே என்பது பொருளாகும் . இங்ஙனம் இறைவன் அருள் காரணமாக அம்மையப்பனாக எழுந்தருளி வந்து என்னை வளர்க்க முற்பட்டு நிற்கவும் ,யான் பொய்யுலக வாழ்க்கையிற் பொருந்தி நிற்கலானேனே என்று இரங்குவார் , “காருறு………வேருறு வேனை “ என்றார் . மகளிர் கண்களுக்கு வெண்மை செம்மைகளினும் கருமை நிறமே ஆடவரை வயப்படுத்தற்குச் சிறந்ததென்ப .
மகளிரைப் பற்றிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐப்புல இன்பவடிவமாகிய காமம் ஆறாக உருவகஞ் செய்யப்பட்டது . அக்காமத்திற் கன்றிநின்றாரைப் பிறிதோராற்றான் உய்தி பெறாவாறு அஃது ஈர்த்துச்சேறலான் . மிக்க விரைவில் அவ்வெள்ளத்தால் வேர் பறிக்கப்பட்டு வீழ்ந்தொழியும் நிலையில் உள்ளேன் என்பார் , அக்காமவெள்ளத்தின் கரைக்கண் வேர் ஊன்றி நிற்கும் மரமாயினேன் என்றார் . இங்ஙனம் மெய்மை போலக் காட்டி வஞ்சித்துக் கெடுக்க நெருங்கியிருக்கும் இப் பொய்யுலக வாழ்க்கையைப் பற்றி அழிந் தொழியும் நிலையில் உள்ள சிறியேனைப் பாதுகாக்கும் கடப்பாடுடைய நீ இந் நிலையில் கைவிடலாகாது என்பார் , “ வேருறுவேனை விடுதி கண்டாய்” என்றார்.
இதன்கண்,” ஐம்புலனாற்றங்கரை மரமாய் வேருறுவேனை” இந் நிலையிற் கையிடாமற் காத்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தமை பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**********************************
பாடல் : 4 .
வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவு நீங்கியிருப்பால்
மிளிர்கின்ற வென்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீண்முடி யுத்தர கோசமங் கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்அன்ன தோற்றச் செழுஞ்சுடரே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் தம்மைக் காத்தருளுதற்கு அப்பெருமான் அருட்பெருக்கே காரணமெனக் கூறிய அடிகள் , அவ்வருட் கரத்தால் ஈர்த்துக் கொள்ளவும், அகப்படாமல் விலகும் தம் இயல்பு இருந்த படியே இத் திருப்பாட்டில் விண்ணப்பித்து இரங்குகின்றார் .
பதவுரை :- வெள் மதிக்கொழுந்து ஒன்று = வெள்ளிய திங்கள் இளம்பிறை ஒன்று ,
ஒளிர்கின்ற நீள் முடி = திகழுகின்ற நீண்ட சடை முடியினையுடைய ,
உத்தர கோசமங்கைக்கு அரசே = உத்தர கோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழுஞ்சுடரே =
உருக்கி ஓட வைத்துத் தெளிந்த பொன்னையும் மின்னலையும் ஒத்த காட்சியினையுடைய பேரொளிப் பிழம்பே ,
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் = மேன்மேலும் மிகுகின்ற நின் அருட்கரத்தால் வளைத்து ஈர்க்கவும் ,
நீங்கி = அதற்கு அகப்படாமல் விலகி,
இப்பால் மிளிர்கின்ற என்னை = இப் பொய்யுலக வாழ்க்கையில் இறுமாந்து களிக்கின்ற சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ?(கைவிடாமற் காத்தருளல் வேண்டும்) என்பது .
விளக்கவுரை :- மதிக்கொழுந்து – பிறை . “மதிக்கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீண் முடி” என்றது அடைக்கலம் புகுந்தாரைத் தலையால் தாங்கிக் காக்கும் அருட்குணம் உடைமையைப் புலப்படுத்துவதாகும் . தெளிகின்ற பொன் – வேற்று உலோகக் கலப்பாலாகிய மாசு நீங்கிய மாற்றுயர்ந்த பொன் . “தெளிகின்ற” என்னும் அடையை ‘மின்’ என்பதனோடும் இயைத்து , முகிற் படல முதலியவற்றால் மறைவு படாத மின்னற் கொடியெனவுங் கொள்ளல் வேண்டும் . தோற்றம் – கட் பொறியால் வரம்பிட்டுப் பற்ற இயலாத காட்சி, அத்தகைய இறைவனது பேரொளிப் பிழம்பிற்கு “உயர்ந்ததன் மேற்றேயுள்ளுங்காலை” என்னும் விதிப்படி உவமங் கூறுதல் இயலாத தொன்றாதலின் , காணப்பட்ட பொருள்களிற் சிறந்த பொன்னையும் மின்னையும் கூறுவாறாயினர் . நிறத்திற்குப் பொன்னும் ஒளிக்கு மின்னுங் கூறப்பட்டன .
அன்பர்க்கு வழங்க வழங்கக் குறையாமல் மேன்மேலும் நிறைந்திருத்தல் பற்றி “வளர்கின்ற கருணை “ என்றார் . “தன் கருணை அள்ளக் குறையா அரன்” என்பதுங்காண்க. “குறைவிலா நிறைவே” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதற்கும் இதுவே கருத்தாதல் அறிக. வாங்குதல் – வளைத்துப்பிடித்தல் . உலகத்தில் ஒருவனை வளைத்துப் பிடித்தல் துன்புறுத்தற் பொருட்டுமாம் . ஈண்டு அஃது இறைவன் திருவுள்ளம் அன்றென்பதைப் புலப்படுத்தற்கு “ கருணைக் கையில் வாங்கவும் “ என்றார் . உம்மை சிறப்புப் பொருட்டு . ஆண்டவன் அருணோக்கால் தாம் ஈர்க்கப்பட்டமையின் கருணையைக் கையாக உருவகஞ் செய்யலாயினர் . இறைவன் அருட்கு இடனாதற்குத் தவங்கிடப் பார் பலராக என்னை இன்புறுத்தற்பொருட்டுக் கருணை காரணமாக வலிந்து பற்றவும் ,என் அறியாமையால் அகப்படாமல் நீங்கலானேன் என்று இரங்குவார், “வாங்கவும் நீங்கி” என்றார் . இப்பால் – இவ்விடம் . மெய்யின்ப வாழ்வில் தலைப்படற்கு ஒருப்படாமல் – நீங்கி இப் பொய்யுலக வாழ்வில்இறுமாந்து இருக்கலானேனே என்பார் . “இப்பால் மிளிர்கின்ற என்னை “என்றார். பேரின்புறுத்தற்கு ஆண்டவன் வலிந்து பற்றவும் அகப்படாமல் நீங்கியதே பெரும் பிழையாகும் .அப் பிழைக்கு இரங்காமை யோடு இப் பொய்யுலக வாழ்க்கையிற் களித்திருத்தல் அதனினும் பெருங்குற்றமாகும் . இத் தீர்வில் பிழையைத் திருவுளங்கொண்டு சிறியேனைக் கைவிட்டு விடுவாயோ? விடலாகாது என்பது கருத்து .
இதன்கண், “நின் கருணைக்கையில் என்னை வளைந்து பற்றவும் நீங்கி, இப்பொய்யுலக வாழ்க்கையிற் களிக்கும் சிறியேனைக் கைவிடலாகா “ தென்று விண்ணப்பஞ் செய்துகொண்டமையால் பிரபஞ்ச வைராக்கியம் புலனாத லறிக.
*************************************
பாடல் :5 .
செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்
விழுகின்ற வென்னை விடுதிகண் டாய்வெறி வாயறுகால்
உழுகின்ற பூமுடி யுத்தர கோசமங் கைக்கரசே
வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் தன் கருணைக் கையில் வாங்கவும் அகப்படாமல் நீங்கிய இயல்பு குறித்து இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் அகப்படாமல் நீங்கு நிலையில் வழி மறித்து அருளமுதூட்டவும் மறுத்து விடலானேனே யென்று இரங்குகின்றார்.
பதவுரை :- வெறிவாய் அறுகால் உழுகின்ற பூமுடி = தேன் தோய்ந்த வாயினவாகிய வண்டுகள் கிண்டுகின்ற கொன்றைமலர் மாலைய னிந்த முடியினையுடைய ,
உத்தர கோசமங்கைக்கு அரசே = உத்தர கோசமங்கைக்கு அரசே ,
வழி நின்று = வழியில் மறித்துநின்று ,
நின் அருள் ஆர் அமுது ஊட்ட = நின் கருணையாகிய அரிய அமிழ்தத்தை வலிந்து ஊட்டவும் ,
மறுத்தனன் = ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தனனாய் ,
செழிகின்ற தீப்புகு விட்டிலின் = மிகுகின்ற தீயின்கண் வீழும் விட்டிற் பூச்சியைப் போல ,
சில் மொழியாரின் = சிலவாகிய சொற்களை யுடைய மகளிரிடத்து ,
பன்னாள் விழுகின்ற என்னை = பல காலம் விரும்பிக் கிடக்கின்ற சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது.
விளக்கவுரை :– வெறி – தேன் . அறுகால் – அன்மொழித்தொகையாக நின்று ஆறு கால்களையுடைய வண்டையுணர்த்தும் . உழுதல் – தேன் மிகுதி பற்றி இதழ்களைக் கிளறுதல் . வழி – முன்னைத் திருப்பாட்டிற் கூறப்பட்டபடி இவ்வுலக வாழ்க்கையை நோக்கியடையும் நெறி . அந் நெறியிற் செல்ல விடலாகாதென்று கருணை காரணமாக ஆண்டவன் தம்மை மறித்து நின்றமை தோன்ற “நின்று” என்றார் . ஒருவனை வழி மறித்தல் அவனைத் துன்புறுத்திக் கைப்பொருளைக் கவர்தற்கன்றே நிகழ்வது ? இவ்வுலக நிகழ்ச்சிக்கு மாறாக இங்கே ஆண்டவன் என்னை வழி மறித்துத் தடுத்தது , பெறுதற்கு அரிய தன் அருளமுதத்தை எனக்கு ஊட்டுதற் பொருட்டு என்பார் , “ நின் அருளார் அமுதூட்ட “ என்றார். .ஈதல் தருதல் முதலிய சொற்களின்றி ஊட்ட என்றது, அருளமுதத்தைக் கையிற் கொடுத்தல் அதன் அருமை அறியாமல் உண்ணாது உகுத்து விடவுங்கூடு மென்று திருவுளங் கொண்டமையான் என்க. மறுத்தனன் என்பது முற்றெச்சம். அழியும் இயல்பினதாகிய இவ்வுலக வாழ்க்கையை நச்சிச் செல்லும் என்னை வழிமறித்துத் தன் அருளமுதூட்டவும் மறுத்துவிட்டுக் கேடு பயக்கும் இழிந்த காமத்தை விரும்பலானேன் என்பார் , “ விழுகின்ற என்னை “ என்றார் . மகளிருடைய சிலவாகிய மொழிகளே என்னைப் பலகாலம் வீழச் செய்கின்றன வென்பார் , “சின்மொழியாரிற் பன்னாள்” என்றார் .
காம வீழ்ச்சி கடிதில் கெடுக்கும் இயல்பின தென்பதற்குத் தீப்புகும் விட்டில் உவமம் ஆயிற்று . விட்டிற் பூச்சி நெருப்பில் சிறிது வீழ்ந்து சூடு தாங்கித் திருப்பினும் , பின்னரும் அத் தீயில் வீழ்ந்தே இறப்பதாகும் . அங்ஙனமே காமத் தோய்வு துன்புறுத்தினும் மறித்தும் அதன்கட் சென்று கெடுதல் மக்கள் இயல்பென்பது குறிப்பு . வீழ்தற்குரிய அக்காமமும் சிறிதன்று ., பெரிதென்பது , “செழிகின்ற தீ” என்னும் உவம அடையால் அறியத்தக்கது . சின்மொழி பன்னாள் என்பது முரண் அணி . விட்டிற் பூச்சி விளக்குத் தீயில் சாங்காறும் பலமுறை வீழ்ந்து ஒழிதல் போல , யானும் கெடுங்காறும் பலநாள் வீழ்கின்றேன் என்பார் , “பன்னாள் விழுகின்ற என்னை “ என்றார் . இப்பெரும் பிழையைத் திருவுளங் கொண்டு கைவிடலாகாதென்பது வேண்டுகோளாகும் .
இதன்கண் , “தீப்புகு விட்டிலிற் சின்மொழியாரிற் பன்னாள் விழுகின்ற என்னை “ அது பற்றிக் கைவிடாமற் காத்தருள வேண்டுமென்று கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாயவா றறிக .
*********************************************
பாடல்: 6 .
மறுத்தனன் யானுன் அருளறி யாமையில் என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்றொகுதி
ஒறுத்தெனை யாண்டுகொள் உத்தர கோசமங் கக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் கருணை காரணமாக வழி மறித்து அருளமுதூட்டவும் மறுத்துவிடலானேன் என்று இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் மறுத்ததற்குக் காரணங் கூறி அப்பிழையைப் பொருத்தருள வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- என் மணியே = என் மாணிக்கமணியே ,
உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தர கோசமங்கைக்கு அரசே,
யான் அறியாமையில் உன் அருள் மறுத்தனன் = யான் அறிவின்மையால் நீ ஊட்டிய அருளமுதத்தைஉண்ண மறுத்துவிட்டேன்,
என்னை நீ வெறுத்து விட்டுடுதி = அது குறித்து அடியேனை நீ வெறுத்துக் கைவிட்டு விடுவாயோ?(விடலாகாது) ,
வினையின் தொகுதி ஒறுத்து என்னை ஆண்டுகொள் = கன்மக்குழுவைக் கடிந்து அடியேனை ஆட்கொண்டு அருள்வாயாக ,
பெரியார் சிறு நாய்கள் தம் பொய்யினைப் பொறுப்பர் அன்றே = பெரியராயினார் இழிந்த நாய்களைப் போன்ற சிறியவர் பொய்மையைப் பொறுத்தருளுவாரன்றோ ? என்பது .
விளக்கவுரை :- இம்மை வாழ்க்கைக்குரிய மணி , பொன் , நெல் , முதலிய பலவகைப் பொருள்களுள்ளும் மணி சிறந்ததாகலின் , அந் நிலையில் வைத்து இறைவனை விளித்தது, அருளாரமுதத்தை மறுத்துச் சேறலாற் பெறத்தக்க இவ்வுலகப் பொருளும் ஆக அப்பெருமான் விளங்குபவன் என்னுங் குறிப்புத் தோன்றற்கென்க . உலகத்தில் அரிதிற் பெறத்தக்க ஒரு சிறந்த பொருள் எளிதிற் கிடைக்கும் இயல்பினதாக , அதனை ஒருவன் வெறுத்து விடுதற்குக் காரணம் , அப்பொருட்கண் இன்று ; பெறுவோனிடத்து அப் பொருளின் அருமை அறிதற்குரிய நல்லறிவு இன்மையே யாகும் . இவ்வுண்மை தோன்றவே “ மறுத்தனன் யான் உன் அருளறியாமையால் “ என்றார். யான் மறுத்தற்குக் காரணம் என் அறியாமையாயின், அவ்வறியா மையை வெறுத்தொழிக்க வேண்டும் அன்றி அது பற்றி என்னை வெறுத்துக் கைவிடலாமா? என்பார், “வெறுத்தென்னை நீ விட்டிடுதி” என்றார் .
அரியாமையை விளைவிப்பது ஆணவ மலம் ஆதலானும் , அவ்வாணவ உறைப்புப் பண்டை தீவினையால் வலியுற்றிருத்தலானும் , அத் தீவனை பல்வேறு வகையாகச் செய்யப்பட்டுத் தொகுதியாக அமைந்திருத்தலானும் அவ்வினைக்குழுவை ஒறுத்து அழித்து என்னை ஆட்கொண்டருளின், நின் அருளமுத நுகர்ச்சியில் தலைப்பட்டு உய்வேன் என்பார் ,”வினையின் தொகுதி ஒறுத்தெனை யாண்டுகொள்” என்றார். இனி, “ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே “ என்பதற்கு “ஆண்டுகொண்ட “ என விரித்துப் பொருள் கோடலுமாம் . அங்ஙனம் கொள்ளுங்கால் , என் அறியாமையை ஒழிக்க வேண்டியது ஆட்கொண்ட நினக்கு இன்றியமையாததாகவும் , என்னை வெறுத்து ஒழிக்கலாமா வென்று பொருள் இயைபு கொள்ளள் வேண்டும் .ஈற்றடியில் முன்னர்க் கூறிய சிறப்புப் பொருளை உறுதிப்படுத்துப் ‘பொறுப்பரன்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினை யே “ என உலகறிந்த தன்மையை யேற்றி முடித்தார் . இது வேற்றுப்பொருள் வைப்பணியாகும் . பெரியோர் இயல்பு செயற்கரிய செய்தல் என்பர் . அவ் வருஞ் செயல்களில் ஒன்று சிறியோர் செய்த பிழைகளைப் பொறுத்தலாகும் . சிறுமையின் இழிவு தோன்றச் “சிறு நாய்கள்” என்றார். பொய் – மனத்தால் வஞ்சித்து மொழியாற் பிழைக்கூறிச் செயலால் மாறுபட ஒழுகும் தீயொழுக்கம் .
இதன்கண், உன் அருளமுதத்தை என் அறியாமையால் மறுத்தேன் எனவும் , அதற்கு மூல காரணம் என் வினைக்குழு எனவும் , அவ்வினைக் குழுவை ஒறுத்து ஆட்கொள்ளல் வேண்டுமெனவும் , அது பற்றி என்னை வெறுத்துக் கைவிடலாகாதெனவும் கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**************************************
பாடல் :7 .
பொய்யவ னேனைப் பொருளென வாண்டொன்று பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று
மையவ னேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் அருளமுதை மறுத்தமைக்குக் காரணம் கூறிப் பிழை பொறுக்க வேண்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் அப்பிழையுடைமை அறிந்தும் நின் அருட்பெருக்கால் அதனை மறைத்துக் கொண்டனையாதலின் , அது குறித்துக் கைவிடல் தகுமாவென விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- விடம் உண் மிடற்று மையவனே = நஞ்சத்தை உண்ட கண்டத்தின்கண் கரிய நிறத்தையுடையவனே ,
மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே ,
செய்யவனே = சிவந்த மேனியை யுடையவனே ,
சிவனே = இன்பவடிவினனே ,
சிறியேன் பவம் தீர்ப்பவனே = சிறியவனாகிய என் பிறப்பை ஒழிப்பவனே ,
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு = பொய்யொழுக்கம் உடையவனாகிய என்னை ஒரு பொருளாக மதித்து ஆண்டருளி,
ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே = ஒப்பற்றதாகிய நின் அருட்பெருக்கால் (என் பொய்மையை) மறைத்து என்னை ஏற்றுக் கொண்ட மெய்ப்பொருளாக வுள்ளவனே ,
விட்டிடுதி = கைவிட்டுவிடுவாயோ?(விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- தேவர் முதலிய யாவரும் அஞ்சும்படி யெழுத்த தீங்கு பயக்கும் கொடிய நஞ்சைத் தான் உண்டு நன்மை பயக்கும் அமிழ்தத்தை அவர்க்கு அருளிக் காத்த பெரும் வண்மை இறைவன் பால் உள்ளதென்பது புராண கதை .”வார்ந்த நஞ்சயின்று வானோர்க்கமுதமீ வள்ளல்” என அடிகள் பிறிதோரிடத்துக் கூறியருளியதுங் காண்க. இப் பேரருட்டிறத்தை உலகம் அறிந்து உய்தற்பொருட்டு உண்ட நஞ்சை மிடற்றில் அடக்கி அடையாளமாக அம் மிடறு கரிய நிறமாகவுள்ளான் என்பார் , “விடமுண்மிடற்று மையவனே” என்றார். மை – கருமை . உயிர்த்தொகுதி களுக்கு அச்சம் நேர்ந்துழி , அவ்வச்சத்தைப் போக்கி அருள் புரிதற்கு அடையாளமாகக் கண்டம் கரியராயினரேயன்றி அக்கரு நிறம் இயற்கையன் றென்பதும் , “தீவண்ணன்”, “செம்மேனியெம்மான்” என்று தமிழ் மறை கூறியபடி அப் பெருமான் திருமேனி செந்நிறமாகுமென்பதும் தோன்றச் “செய்யவனே” என்றார் .
நோயுடை யொருவற்கு நோய் நீக்கத்திற்கு மருந்தும் , அதன் பின் உடல் நலத்திற்கு நல்ல உணவும் தரப்படுதல் போல , நஞ்சு முதலிய வற்றால் நேரும் துன்பத்தை யொழித்துத் தன் அருளமுதத்தால் இன்புறுத்துபவன் என்பது புலனாக “சிவனே” என்றார். சிவன் – இன்பஞ் செய்பவன் . அமுதம் உண்ணும் வேட்கை மிக்க தேவர்க்கு இடையூறாகத் தோன்றியது நஞ்சமாதலின் ,அதனையொழித்து அவர் வேண்டியதை அருளியது போல , நிந்திருவடி இன்பம் பெறும் அவா மிக்க எனக்குத் தடையாகவுள்ளது பிறவிப்பிணியாதலின் , அதனை யொழித்தருளும் கடமையும் , நின் பாலது என்பார் , “ சிறியேன் பவங்தீர்ப்பவனே “ என்றார் . பவம் – பிறப்பு . சிறியேன் பொய்யொழுக்கம் உடையேனாயினும் , நீ ஆட்கொண்டமையால் நினக்கு ஆளாதற்குரிய தகுதி படைத்துள்ளேன் என்பார் , “ பொய்யவனேனைப் பொருளென ஆண்டு “ என்றார் . ஒன்று – ஒப்பற்றதாகிய திருவருள் . ஒன்றால் என்புழி மூன்றாம் வேற்றுமை தொக்குநின்றது .
பொய்யொழுக்கம் உடைமையால் தகுதி இல்லாத என்னை அஃது உடையனவாகப் பொருட்படுத்து ஆட் கொள்ளுங்கால் ,புரையிருக்கப் புண் ஆற்றியது போல என் பொய்மையை அறவே போக்காமல் நின் எல்லையற்ற அருட்பெருக்கால் அதனை மறைத்து ஏற்றுக் கொண்டனை என்பார், “ஒன்று பொத்திக்கொண்ட “ என்றார். பொத்துதல் – மறைத்தல் . “என் சிறுமையை நின் பெருமையினாற் பொறுப்பவனே “ என்றாற்போ லென்க . அங்ஙனம் மறைக்கப்பட்ட வினையெச்சமே இப்பொய்யுலக வாழ்க்கையில் யான் இன்னும் இருத்தற்குக் காரணமாயிற்று என்பது குறிப்பு . மறைக்கப்பட்ட என் பொய்மை விளக்கின் முன் இருள் போல மெய்ப்பொருளாகிய நின் திருமுன் கெட்டொழியுமாதலின் என்னைக் கைவிடலாகாதென்பார், “மெய்யவனே விட்டிடுதி” என்றார் .
இனி, ஒன்று என்பதற்கு ஒப்பற்றதாகிய வீட்டு நிலையெனப் பொருள் கொண்டு , இரண்டாம் உருபை விரித்து அதனை மறைத்துக் கொண்ட மெய்யவனே என்று கோடலுமாம் . அங்ஙனங் கொள்ளுங்கால் , ஆட்கொண்டமையால் ஆளாய பயனை அடைய வேண்டியது இன்றியமை யாததாகவும் , அப்பயனாகிய வீட்டு நிலையை யான் எய்தவாறு மறைத்த னையே , எதனையும் வஞ்சியாமல் அருளும் மெய்ப்பொருளாகிய நினக்கு வீட்டு நிலையை மறைத்தல் தகுமா? என்னும் குறிப்புத் தோன்ற , “ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே “ என்றார் என்று கருத்து விரித்துக் கொள்ளல் வேண்டும் .
இதன்கண், “ஒன்று பொத்திக்கொண்ட” என்றதனால் பிரபஞ்ச வாதனை தாக்குதல் குறித்து அடிகள் வருந்தினா ரென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
***************************************
பாடல் : 8 .
தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரரு ளென்கொலென்று
வேர்க்கின்ற வென்னை விடுதிகண்டாய்விர வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை யுத்தர கோசமங் கைக்கரசே
ஈர்க்கின்ற வஞ்சொடச் சம்வினை யேனை யிருதலையே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் நின் அருட்பெருக்கால் மறைக்கப்பட்ட என் பிழையைக் கருதி என்னைக் கைவிடலாகாதென்று வேண்டிய அடிகள் ,இத்திருப்பாட்டில் அங்ஙனம் மறைப்பதற்கு ஏதுவாக வுள்ள கருணையினாலே அதனை அறவே ஒழித்தருளல் வேண்டுமெனவும் அஃது எவ்வாறு ஆம் என்று அறியாமையால் வருந்துகின்றேன் எனவும் விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை = பகைவர் அஞ்சுமாறு ஒலிக்கின்ற கிண்கிணி மாலையனிந்த காளையூர்தியை யுடைய ,
உத்தரகோசமங்ககைக்கு அரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே ,
வினையேனை இருதலை அஞ்சொடு அச்சம் ஈர்க்கின்ற = தீவினை யுடையேனாகிய என்னை இருபுறத்தும் ஐம்புலன்களோடு அச்சமும் நின்று இழுக்கின்றன ஆதலின் ,
என் பிழையை = என் குற்றங்களை ,
நின் சீர் அருள் = நினது சிறப்புமிக்க அருட் குணம் ,
தீர்க்கின்றவாறு எங்கொல் என்று வேர்க்கின்ற என்னை = ஒழிக்கின்றவிதம் எவ்வாறு என்று அஞ்சுன்கிற அடியேனை ,
விடுதி = கை விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது.
விளக்கவுரை :- விரவுதல் – கலத்தல் . அதலின் விரவார் என்பது உள்ளக்கலப்பு இல்லாத பகைவரை யுணர்த்தும் , தீவினை வயத்தால் இறைவனை எள்ளி வெறுத்து நிற்பார் , இரைவனது எருதூர்தியின் கிண்கிணிமாலை ஒலி கேட்ட துணையானே அஞ்சி நடுங்குவார் என்பது தோன்ற “விரவார் வெருவ ஆர்க்கின்ற தார்விடை” என்றார் . தார் – கிண்கிணி மாலை . இறைவனுக்கு பகையென்றும் ,நட்பென்றும் இல்லை யாயினும் , வினைவயத்தால் வெறுப்புற்றுக் கருதுவார் நிலை நோக்கி , “விரவார்” எனப்பட்டனர் . இறைவனை வீரமிக்கவன் எனவும் மகாருத்திரன் எனவும் மறை கூறும் .
ஐம்புல அவாக்களின் வயப்பட்டுத் தாம் துன்புறுதற்கு ஏது தம் பண்டைத் தீவினையெனக் கொண்டு தம்மை “வினையேனை” என்றார். இருதலை – இருபுறமும் . உம்மை தொக்கது . இருபுறமும் என்பது ஈண்டுத் தமக்கு முன்னிடத்தையும் பின்னிடத்தையும் உணர்த்தும் . ஈர்தல் – இழுத்தல் . இஃது இரண்டற்கும் ஒக்கும் . ஆதலின் அஞ்சொடு என்புழி, ஒடு உடனிகழ்ச்சிப் பொருட்டாயிற்று . அச்சத்தையும் கடக்கும் ஆற்றலுடையது . ஐம்புல இன்பமாதலின் ,”ஒரு வினையொடுச்சொல் உயர்பின் வழித்தே” என்னும் விதிப்படி “அஞ்சொடு” என ஒடு உருபு புணர்க்கப்பட்டதென்க. அஞ்சு – கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களுமாம் .
இவை முன்னர் ஈர்த்துச் செல்ல இவற்றால் விளையும் துன்பம் நோக்கிய அச்சம் பின்னர் ஈர்ப்ப இவ்விருதிறத்திற்கும் இடைப்பட்டு வருந்தலானேன் என்பார், “ இருதலை அஞ்சொடச்சம் ஈர்க்கின்ற” என்றார். ஈர்க்கின்றன என்னும் முற்று அன்சாரியை கெட்டு ஈர்க்கின்ற என்றாயிற்று. இனி, ஈர்க்கின்ற என்பது எதுகை நோக்கி ஈர்க்கின்ற என்றாயிற்று எனக் கொண்டு ஆர்வமும் அச்சமும் இருபுறத்தும் நின்று என்னை அறுக்கின்றன என்று பொருள் கோடலுமாம் . ஈர்தல் – அறுத்தல் . எல்லையற்ற ஆர்வத்தில் உள்ளம் ஈடுபடுங்கால் என்ன துன்பம் நேரிடுமோ வென்னும் அச்சம் விளைதல் இயல்பாதலின் இங்ஙனம் கூறினர் . ஆர்வமும் அச்சமும் என்னை அலைப்ப அதனால் விளையும் குற்றங்களைக் களைதற்கு நிந் திருவருளையன்றி வேறு கருவியின்மையால் அவ்வருள் என் பிழைக ளைக் களையு மாறும் , அதற்குரிய காலமும் இன்னவென அறிந்து கொள்ள இயலாமையால் நடுங்குகின்றேன் என்பார், “தீர்க்கின்றவாறென் பிழையை நின் சீரருள் என்கொலென்று ,வேர்க்கின்ற என்னை” என்றார். ஆண்டவன் திருவருள் உயிர்களின் குற்றங்களை ஒழிக்கவேண்டுமாயின் , அஃது எத்தகைய தடையுமின்றி ஒரு கணப்பொழுதில் நிகழத்தக்கதாகலின் இத்துணைத்தாழ்வைக் கருதுங்கால் வேறு எவ்வாறு தீர்க்க அவ்வருட்கு உடன்பாடோ என ஐயுறுவார், “என்கொல்” என்றார். வேர்த்தல் – அஞ்சுதல் . அது தெளிவுபெறாமையால் உண்டாய கலக்கத்தால் நிகழ்வது .
இதன்கண், “அஞ்சொடச்சம் ஈர்க்கின்றன “ எனவும் , “என்பிழையை நின் சீரருள் தீர்க்கின்ற வாறு எங்கொலோ” எனவும் கூறப்பட்டமையால் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
***********************************
பாடல் : 9
இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகிக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வல னேந்திப் பொலிபவனே.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் என் பிழையைத் திருவருள் தீர்க்குமாறு யாங்கனம் என்று அறியாமையால் வருந்துகின்றேன் என்று கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் என் பிழையை ஒழித்தற்குத் திருவருள் துணைசெய்யவில்லையானால் , வேறுபோக்கிடனின்றிக் கெட்டொழிய நேருமே என்று இரங்கிக் கூறுகின்றார் .
பதவுரை :- வியன் மூ உலகுக்கு ஒரு தலைவா = மேல் கீழ் நடு வென்னும் பெரிய மூன்று உலகநளுக்கும் ஒப்பற்ற தலவனே ,
மன்னும் உத்தர கோச மங்கைக்கரசே = மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொரு மூ இலை தலை வேல் = போர்செய்தற்குரிய மூன்று இலை வடிவினவாகிய நுனிகளையுடைய சூலப்படையை ,
வலன் ஏந்திப் பொலிபவனே = வலக்கையில் ஏந்தித் திகழ்கின்றவனே,
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து = இரு புறத்தும் நெருப்பினையுடைய ஒரு கொள்ளியின் உட்பகுதியில் அகப்பட்ட எறும்பைப் போன்று ,
நினைப்பிரிந்த விரி தலையேனை = நின்னை விட்டு அகன்ற அலங்கோல முடயேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- மூவுலகுக்கும் என்புழி, முற்றும்மை தொக்கு நின்றது . வியன் – பெருமை . உலகம் மூன்றின் ஒரு சிறு கூறும் விலக்கப்படாமல் முழுதும் என்றற்கு ‘வியன்’ என்னும் அடை புணர்க்கப்பட்டது என்க . ஈடும் எடுப்பும் இல்லாத தனித்தலைமை குறித்து “ ஒரு தலைவா “என்றார். அடுத்து “உத்தரகோசமங்கைக்கு அரசே” என்றதனால் மூன்று உலகங்களுக்கும் தனிபெரும் தலைவனா கிய இறைவன் , உத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தை இராசதானித்தலைநகரமாகக் கொண்டு எழுந்தருளினான் என்பது பெறப்படும்
பொருதல் – போர்செய்தல் . முத்தலை வேல் – சூலப்படை யாகும், இலை வடிவினவாகிய மூன்று நுனிகளையுடைமையால் ,வடமொழி மறையில் திருவுத்திரம் என்னும் பகுதியின் தொடக்கத்தில் இறைவனுடைய சூலப்படைக்கு வணக்கங்கூறப்பட்டிருத்தலால் அதன் பெருமை அறியப்படும் . வலன் ஏந்தி – வலக்கையில் தாங்கி எனவும் , வெற்றி குறித்துத் தாங்கி எனவும் பொருள்படும் . வலம் – வலன் ; வலப்பக்கமும் வெற்றியுமாம் . எல்லாவுலகங்களுக்கும் தலைவனாய் உத்தரகோசமங்கைப் பதியில் அரசாய் வீற்றிருக்கும் ஆண்டவன் சூலப்படையுடன் விளங்கு கின்றவன் என்றதனால் , தன் ஆட்சியுட்பட்ட மெய்யன்பரைக் காமம் முதலிய பகைவருக்கம் அணுகாமால் பதுகாப்பவன் என்னுங் கருத்துக் குறிப்பிற் புலப்பட வைத்தவாறு அறிக .
இருதலைக் கொள்ளி – இரண்டு பக்கமும் நெருப்புப்பற்றி யெரியும் கொள்ளிக்கட்டை , ஒரு கட்டையின் இருபக்கங்களிலும் தீப்பற்றியெரியுங்கால் அக்கட்டையின் நடுவிடத்தில் தங்கிய எறும்பு இருமருங்கும் சென்று உய்ந்து போதற்கு இயலாமல் கெட்டொழிதல் போல , இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தும் நின்னை அணுக இயலாமலும் வருந்தி உழல்கின்றேன் என்பார், “இருதலைக்கொள்ளியினுள்ளெறும் பொத்து” என்றார். கொள்ளி நடுவண் , கொள்ளிமேல் என்னாது கொள்ளியுள் என்றது ஒரு நயம் .
கொள்ளி நடுவிடத்துள்ள எறும்பு , அங்கும் இங்கும் சென்று போக்கு வழி பெறாமல் உழன்று அக்கொள்ளிக்குப் பற்றுக்கோடாக வுள்ள தொன்றைத் தானும் பற்றி ஒருவாறு உய்யவுங்கூடும் . அக்கொள்ளி நிலத்திற் கிடந்தால் அவ்வெறும்பும் நிலத்தில் இறங்கலாம் அஃது ஒன்றிற் சார்த்தப்பட்டிருந்தால் அச்சார்ச்சிப் பொருளைத் தானும் பற்றி உய்யலாம் . அக்கொள்ளி உட்டுளையுடைய மூங்கிலாக இருக்க , முன்னரே அதன் துளையுள் ஓர் எறும்பு நுழைந்திருக்குமாயின் , இருபுறமும் நெருப்பு எரியுங்கால் அதனுட்பட்ட அவ்வெறும்புக்கு எவ்வாற்றானும் உய்யும் நெறி இன்றென்பது கண்கூடாகக் காணத் தக்கது . இந் நயம் கருதியே கொள்ளி மேல் நடு என்னாது “இருதலைக்கொள்ளியின் உள் எறும்பொத்து .” என்றார் என்க . இதனால் அடிகளின் ஆராய்ச்சி நுண்கருத்துப் புலனாதல் அறிந்து இன்புறத்தக் கது . இருதலைக்கொள்ளியின் ஒருதலை இவ்வுலக வாழ்க்கையின் வெறுப்பிற்கும் ,மற்றொரு தலை ஆண்டவனது பிரிவுக்கும் உவமம் ஆயின. ஆண்டவனது பிரிவினால் உண்டாய சூடும் ஆற்றவொண் ணா தது என்பது கருத்து. விரிதலை – துன்ப நிகழ்ச்சியினால் உண்டாம் அலங்கோலத்தின் அறிகுறியாகும் . இங்ஙனம் உய்யும் நெறி யறியாமல் தவிக்கின்ற நிலையில் என்னைக் கைவிடலாகாதென்பது வேண்டுகோள் விண்ணப்பமாகும் .
இதன்கண், “இருதலைக்கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்த விரிதலையேனை “ என்றதனால் உலக வாழ்க்கையில் வெறுப்புப் பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
********************************
பாடல்:10 .
பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற் றாக்கையைப் போக்கப்பெற்று
மெலிகின்ற வென்னை விடுதிகண் டாயளி தேர்விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புர மாறுபட்டே.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் திருவருள் துணை செய்யவில் லையானால் உய்யும் நெறி பெறாமல் கெட்டொழிய நேருமே என்று இரங்கிக்கூறிய அடிகள் ,இத்திருப்பாட்டில் அவ்வருள் வடிவமாகவுள்ள திருவடிக்கட் புகல் அடைந்தும் ,பிறவிப்பயனை யெய்தப்பெறாமல் வருந்தலானேன் என்று இரங்குகின்றார்.
பதவுரை :- அளி தேர் விளரி ஒலி நின்ற பூ பொழில் = வண்டுகள் பயின்று பாடும் விளரி என்னும் இசை நிலை பெற்ற பூஞ் சோலைகளையுடைய ,
உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே ,
புரம் மாறுபட்டு = முப்புரங்களையும் பகைத்து ,
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் = வன்மை மிக்க உறுதியான மேருவாகிய வில்லினால் அழித்தவனே ,
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்றும் = விளங்குகின்ற நின் திருவடிக்கண் அடைக்கலமாக எய்தப்பெற்றும் ,
ஆக்கையைப் போக்கப்பெற்று = ஊனடைந்த உடம்பின் பிறவியை வீணாக்கி ,
மெலிகின்ற என்னை = வருந்துகின்ற சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- விளரி – எழுவகை இசைகளுள் ஒன்று . தேர்தல் – நாடோறும் பயின்று ஒலித்தல் . மலர்களில் தேன் மிகுதியாக விளைகின்றமையால் வண்டுகள் நிரம்ப வுண்டு களித்துப் பாடினவென்பது . இதனால் உத்தரகோசமங்கைப் பதியை அணுகப் பெற்ற மெய்யன்பரனைவரும் சிவானந்தத் தேனுண்டு ஆண்டவனை மனம் உருகிப் பாடி இன்புறுவர் என்னும் குறிப்புப் புலனாதலறிக . புரம் – திரிபுரம் . திரிபுரத்துள்ள அசுரர் தேவர் முதலியோர்க்குச் செய்த தீங்குகளைக் கண்டு அருள் வள்ளலாகிய இறைவன் மேருமலையை வில்லாக வளைத்து , அம்பெய்து அழித்தனர் என்பது புராணகதை . மலையை வில்லாக வளைத்த செய்தி இறைவனது பேராற்றற்கு எடுத்துக்காட்டாகும் . “வலி நின்ற திண்சிலை “ என்புழி, வலியும் திண்மையும் மலையாகிய வில்லைக் குறிக்கும் அடைமொழிகளாகும் . மாறுபடுதல் இறைவனுக்கு இயற்கையன்று; புரம் எரித்தற்காக அம்மாறுபாட்டை யேற்றுக்கொண்டான் என்பது கருத்து .
ஞானாசிரியனாக எழுந்தருளிய ஞான்று ஆண்டவனின் திருவடிக்காட்சி அடிகள் உள்ளத்தைக் கவர்ந்ததாகலின் ,”பொலிகின்ற நின்றாள்” என்றார் . நிகழ் காலத்தாற் கூறியது , திருவடி விளக்கம் இடையறாது தம் உள்ளத்தில் நிலை பெற்றிறுத்தல் குறித்தென்பது . புகுதப் பெறுதல் – அடைக்கலமாக அடையப்பெறுதல் . உம்மை விகரத்தாற் தொக்கது . ஆக்கை ஆகுபெயரால் பிறப்பை உணர்த்தும் . ஆண்டவன் திருவடியைப் புகலாகச் சார்ந்தார்க்கு ஊனடைந்த உடம்பின் பிறவியால் எய்தக்கடவ உறுதிப்பயன் எளிதாமென்று கூறுவர் பெரியார் . யான் அங்ஙனம் புகுதப்பெற்றும் , பிறவிப்பய னாகிய வீட்டின்பத்தை அடையாமல் வருந்தலானேன் என்பார் , “ ஆக்கையைப் போக்கப்பெற்று மெலிகின்ற என்னை “ என்றார் . இனி, “போக்கப்பெற்றும்” எனக்கொண்டு ஆக்கை என்பதற்கு உடலைப்பற்றி அவா எனப்பொருள்கொண்டு ,நின் திருவடியைப் புகலாகப் பெற்றும் உடம்பைப்பற்றிய அவாவை யொழித்தும் வீட்டின்பப் பேறு இல்லாமல் வருந்தலானேன் எனக் கோடலுமாம் . இங்ஙனம் ஆதரவற்ற நிலையில் வருந்தும் என்னை விட்டுவிடலாகாதென்பது விண்ணப்பமென்க .
இதன்கண், “பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப்பெற்று , மெலிகின்றேன்” என்றதனால் உலக வாழ்க்கையில் பற்றறுதி பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
***********************************
பாடல் :11 .
மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன் மணிமலர்த்தாள்
வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே
ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
நீறுபட் டேயொளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் திருவடிகட் புகலடைந்தும் அழிவில் இன்பப்பேறு எய்தப்பெறாமை குறித்து வருந்திய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் புகலடையப்பட்ட திருவடிக்கண் மாறுபட்டமைக்கு ஏதுக்கூறி காத்தருள விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- வினையேன் மனத்தே ஊறும் மட்டே = தீவினையுடையேன் ஆகிய எனது நெஞ்சத்தில் ஊறும் தேனே ,
மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே ,
நீறு பட்டு ஒளிகாட்டும் = திருநீறு பூசப்பட்டு வெண்ணிற ஒளி விளங்கும் ,
பொன்மேனி நெடுந்தகையோ = பொன் போன்ற திருமேனியினை யுடைய பெரியோனே ,
அஞ்சு மாறுபட்டு என்னை வஞ்சிப்ப = ஐம்புலன்களும் முரண்பட்டுச் சிறியேனை வஞ்சித்தமையால் ,
யான் உன் மணிமலர்த்தாள் வேறுபட்டேனை = நின் அழகிய மலர்போன்ற திருவடித் தொண்டிற்கு வேறுபட்டு ஒழுகும் சிறியேனாகிய என்னை ,
விடுதி = விட்டுவிடுவாயோ ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- மட்டு – தேன் ; இறைவன் ஆகிய தேன் ஊற்றெடுக்கும் இடம் தவத்தால் தூய்மையுடைய மெய்யன்பரது உள்ளம் ஆகும் . “உருகு மனத்து அடியவர்கட்கு ஊறுந்தேனை “ என்பது தமிழ் மறை .அங்ஙனம் வினைமாசு நீங்கிய இடத்தில் ஊறும் தீந்தேன் தீவினையுடைய என் உள்ளத்தும் ஊறுவதாகும் என்று அடிகள் கூறியது , ஆண்டவனது அளப்பரிய அருட் குணத்தைப் புலப்படுத்துவதாகும் . ஆண்டவன் ஞானாசிரியனாக எழுந்தருளிய பொழுது அடிகளுக்குக் காட்சிப்பட்ட திருமேனியின் நிறம் பொன்னிறமாகும் . ஆதலின், “பொன்மேனி” எனவும் , அத்திருமேனி திருவெண்ணீற்றுப் பூச்சினால் வெண்ணிற ஒளி திகழப் பெற்றிருந்தமை யின் , “நீறுபட்டு ஒளிகாட்டும் “ எனவும் கூறினார் .அடிகளுக்கு ஆண்டவன் சிந்தைக்கு இனியனாய்க் கண்ணுக்கும் இனிய காட்சி தந்தமையின் , “மனத்து ஊறும் மட்டு “ எனவும் ,”பொன்மேனி” எனவும் கூறியருளினார் . இதனால் , அகப்புறக் கரணங்கள் ஈடுபட்டமை குறிப்பிற் புலனாயவாறு அறிக .
நெடுந்தகை – பெரியோன் என்னும் பொருட்டு . சிறியவர் செய்த பிழைகளைப் பொறுப்பது பெரியோர் கடமையாதலின் , தம் பிழையைப் பொறுக்கவேண்டுமென்பது குறிப்பிற் புலப்பட இங்ஙனம் அழைப்பாராயினர் . அஞ்சு – ஐந்து ; ஆகுபெயரால் ஐம்புலன்களையும் குறிக்கும் . ஐம்புலன்களும் சிவாகாரமாக நிகழ்தல் நேரிதாகும் . உலகியற் பொருள்களாக நிகழ்தல் அதற்கு மாறுபாடாகும் . “மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப்புலன் ஐந்தின் வழி “ என அடிகள் பிறிதோரிடத்து கூறியதும் காண்க. சிறந்த மெய்யன்பராகிய வரகுண பாண்டியற்குச் சுவை , ஒளி, ஊறு , ஓசை , நாற்றம் என்னும் ஐம்புலநுகர்ச்சியும் சிவாகாரமாக நிகழ்ந்த செய்தி பட்டினத்து அடிகள் கூறியவற்றான் அறியத்தக்கதென முன்னர்க் கூறினாம் . அங்ஙனம் நிகழ்தலின்றி உலகியல் இன்பம் நோக்கி மகளிரைப் பொருளாகக் கொண்டு , “கண்டு கேட்டு உண்டு யிர்த்து உற்றறியும் ஐம்புலனும் , ஒண்டோடி கண்ணேயுள” எனக்கோடல் நேரிது அன்றென்பார் , “மாறுபட்டஞ்சு “ எனவும் , இவ் வைம்புலன்களும் சிவாகாரமாக நிகழ்தற்குத் தட்டு இன்றாகவும், வஞ்சித்துப் பிறழ்ந்து சேறல் பற்றி, “என்னை வஞ்சிப்ப” எனவும் கூறினர் . வஞ்சிப்ப என்னும் செயவென் எச்சம் காரணப்பொருட்டு .
ஆண்டவனே , புலன்கள் என்னை வஞ்சித்து உலக வாழ்க்கையில் ஈடுபடச் செய்தமையால் ,நின் திருவடித் தொண்டிற்கு வேறு படலானேன் என்பார் , “யான் உன் மணிமலர்த்தாள் வேறுபட்டேனை “எனவும் , அது குறித்துச் சிறியேனைக் கை விடலாகாது என்பார் , “ விடுதி கண்டாய்” எனவுங்கூறுவாராயினர். “யான் உன் மணிமலர்த் தாள் வேறுபட்டேனை “ என்புழி வேறுபட்டேனை யென்பதிலுள்ள இரண்டனுருபைப் பிரித்து ,யான் என்பதனோடு இயைத்து , உருபு நோக்கி யான் என்பது என்னென்றாக ,என்னை யெனக்கொண்டு வேறுபட்டவனாகிய என்னையென இயைத்துப் பொருள் கூறப்பட்டது .பின் வருவனவற்றிற்கும் இஃதொக்கும் .
இதன்கண் , “ மாறுபட்டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள் வேறுபட்டேன் “ என்று உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றக் கூறப்பட்டமையால் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
*****************************************
பாடல்: 12 .
நெடுந்தகை நீயென்னை ஆட்கொள்ள யான்ஐம் புலன்கள்கொண்டு
விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர வார்வெருவ
அடுந்தகை வேல்வல உத்தர கோசமங் கைக்கரசே
கடுந்தகை யேன்உண்ணும் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் திருவடித் தொண்டில் தாம் மாறுபட்டதற்கு ஏது, தம் ஐம்புலங்களின் வஞ்சகச்செயல் ஆகுமெனக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் அவ்வஞ்சகச் செயலை அறிந்தும் , அப்புலன்களைப் பற்றி நின்று ஆண்டவன் திருத்தொண்டைக் கைவிடக் கருதுகின்றேனே எவ்வாறு உய்தி பெறுவேன் என்று கவல்கின்றார் .
பதவுரை :- விரவார் வெருவ = பகைவர் அஞ்ச ,
அடும் தகை வேல் வல = அவரை அழிக்கும் தன்மையினையுடைய சூலப்படையில் வல்ல ,
உத்தரகோச மங்கைக்கு அரசே = உத்தர கோசமங்கைக்கு அரசே ,
கடும் தகையேன் உண்ணும் = கொடுந்தன்மையுடையேனாகிய யான் பருகுதற்குரிய ,
தெள்நீர் அமுதம் பெருங்கடலே = தெளிந்த தன்மையினையுடைய அமிர்தமயமான பெரிய கடலாகவுள்ளவனே ,
நெடுந்தகை நீ = பேரருட் குணமுடைய நீ,
என்னை ஆட்கொள்ள = சிறியேனை ஆளாகக் கொள்ளவும் ,
யான் ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேனை = ஐம்புல இன்பங்களைப் பொருளாகக் கொண்டு நின் சார்பைக் கைவிடும் இயல்பினன் ஆகிய என்னை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- ஐம்புலப் பகையை வேரறக் களையும் ஆற்றல் எனக்கு இல்லையாயினும் , என்னை ஆட்கொண்ட நினக்கு எத்துணை வலிய பகைகளையும் களையும் ஆற்றல் நிரம்ப உண்டு என்பார், “விரவர் வெருவ அடுந்தகை வேல் வல “ என்றார் .வேல் – முத்தலை வேல் ; சூலப்படை . இறைவன் தனக்குப் பகையென்றும் நட்பென்றும் இல்லையாயினும் , தன் அன்பர்க்கு வரும் பகை களைதற்காகவே சூலப்படையை என்றும் திருக் கையில் ஏந்தி இருப்பன் என்பது . இதனாலே சூலபாணி என்று மறைகளிற் பாராட்டப்பட்டுள்ளான் . இதனால் ,காம முதலிய பகை வருக்கம் எல்லாம் , இறைவனை அடைக்கலம் புகுந்த மெய்யன்பரை அணுகுதற்கு அஞ்சும் என்பது குறிப்பிற் புலப்படும் என்க .
கடுந்தகை என்பது கொடுங்குணம் என்று பொருள்படும் . அடிகள் தம் கொடுமைக் குணம் தணிதற்கு ஆண்டவனது அருளமுதம் இன்றியமையாத தென்பார் , “உன்ணும் அமுதப் பெருங்கடலே “என்றார். ஆண்டவனது அருள் அமுதம் ஒரு சிறிது நுகர நேரினும் , உயிரைப்பற்றி நிற்கும் தீய குணம் ஒழிவு எய்துவதாகும் “அமுதக்கடலே” என்றது தம்பால் உள்ள கொடுமைக் குணம் அளவின் மிக்கதெனவும் , அத்துணையும் ஒழிவு அடைதற்கு ஆண்டவனது அருளமுதம் அதற்குத்தகப் பெருக்கமாக இருக்கவேண்டுமெனவும் அடிகள் கருதியமையான் என்பது . அருளமுதத்தில் ஒரு சிறு துளி பெறினும் தம் தீமை ஒழிந்துபோம் என்னும் உண்மை யுணர்ந்தும் , அதனைக் கடல் அளவாகக் குறித்தது , ஆண்டவனுடைய அளப்பரிய கருணைப்பெருக்கத்தையும் ,அதனை மிகுதியாகப் பெறுவதில் தமக்குள்ள பேரார்வத்தையும் புலப்படுத்தற்கு என்க .
மழை சுருங்கிய காலத்துப் பெளதிகக் கடல் தன் வளம் குறைவு படுவதாகும் , “நெடுங்கடலுந்தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி , தான் நல்காதாகி விடின் “ என்பது பொருளுரை . ஆண்டவனது அருளமுதம் வருவாயை எதிர் பாராமலும் , அன்பர்கள் எத்துணை முகந்து கொள்ளினும் குறைபடாமலும் ,எக்காலத்தும் ஒரே படித்தாக நிரம்பி நிற்றல் பற்றி அதனை அமுதக்கடல் என்னாது “அமுதப் பெருங்கடல் “ என்றார். அருளமுதத்திற்குப் பிறிதொன்றின் சார்பு இன்றி இயற்கையிலே தெளிவும் தூய்மையும் உண்மையானும் , தன்னை உண்டாரை ஞானத் தெளிவுறுத்தும் தன்மையானும் “தெண்ணீர்” என்னும் அடை புணர்க்கப்பட்டது . இனி, ஈற்றடியில் வெம்மை மிகுதியால் நீர்வேட்கையுடையேனாகிய யான் உண்ணுதற்குக் கிடைத்த அமுதம் போன்ற தெளிந்த நீர்ப் பெருங்கடலே என்னும் ஒரு தொனிப்பொருள் தோன்றுதலும் அறிக .
நெடுந்தகை என்பது ஆகுபெயராய்ப் பெருமைக் குணம் உடையானைக் குறிக்கும் . ஈண்டுப் பெருமைக் குணமாவது ,சிறியோர் செய்த பிழைகளைப் பொறுத்து ஆட்கொள்ளும் பேரருளுடைமையாகும் . என் தகுதி இன்மை அறிந்தும் நின் பேரருள் காரணமாகச் சிறியேனை ஆட்கொண்டனை என்பார், “நெடுந்தகை நீ என்னை யாட்கொள்ள “ எனவும் அங்ஙனம் ஆட்கொள்ளவும் அவ்வருமை அறியாமல் என்னைக் கீழ்நிலைப் படுத்தும் ஐம்புல இன்பங்களைப் பொருளாகக் கடைப்பிடித்து ,நன்னிலைப் படுத்தற்குரிய நின் சார்பை விடலானேன் என்பார் . “யான் ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேனை “ எனவும் கூறினார் . யான் ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேனை என்பதை முன்னைத் திருப்பாட்டில் கூறியாங்குக் கூறி முடித்துக் கொள்க . ஆட்கொள்ளவும் என்புழி உம்மை தொக்கது . ஐம்புலன்கள் கொண்டு என்றதனால் விடுதற்குச் செயப்படு பொருள் வருவித்துரைக்கப்பட்டது . ஒருவனை ஆள்வார் இல்லாத நிலையில் அவன் வேறு போக்கின்றி மனம் போன வழியிற் சென்று கேடு அடைதலும் கூடும் . அங்ஙனம் இன்றி ஆண்டவன் தன் அருட்கு இலக்காகத் தம்மை வலிந்து ஆட்கொண்டும், தாம் ஐம்புல இன்பங்களைப்பற்றி அவ்வருட் பயனை இழக்கும் நிலையில் இருக்க நேர்ந்ததே என வருந்தி , அது காரணமாக ஆண்டவன் கை விட்டு விடுவானோ என அஞ்சி ,”விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண், “ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேன்” என்றதனால் உலக வாழ்க்கையில் உள்ள பற்றறுதி பெறப்படுதலின் ,பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
***********************************
பாடல் :13 .
கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விடல் இல்லடியார்
உடல் இல மேமன்னும் உதர கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேயமு தேயென் மதுவெள்ளமே.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் புலன்களைப்பற்றி நின்று ஆண்டவனுக்குப் பணிசெய்து ஒழுகுதலைக் கைவிடக்கருதும் தம் இயல்பு குறித்து வருந்திய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் கருதிய நிலையி லும் ஆண்டவன் தன் கருணைப் பெருக்கைக் கடல் போலப் புலப்படுத்தி னனாக அதனை ஆரப்பருகாமல் அருவருத்து வாய்வைக்கலானேனே என் செய்வேன் என இரங்கி விண்ணப்பஞ் செய்கின்றார் .
பதவுரை :- விடல் இல் அடியார் = விடுதலை இன்றிப் பற்றி நிற்கும் மெய்யடியாரது ,
உடல் இலமே மன்னும் = உடலையே திருக்கோயிலாகக் கொண்டு அதன் கண்ணே நிலைபெற்று வீற்றிறுக்கும் ,
உத்தரகோச மங்கைக்கு அரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே ,
மடலின் மட்டே = மலர் இதழில் உண்டாகும் தேனே ,
மணியே அமுதே = மாணிக்கமணியே அமிழ்தமே ,
என் மதுவெள்ளமே = எனக்குக் கிடைத்த கட்பெருக்கே ,
கடலின் உள் நாய் நக்கி யாங்கு = கடலின் கண்ணேயுள்ள நீரை நாய் நக்கி உண்பது போல ,
உன் கருணைக் கடலின் உள்ளம் விடல் அரியேனை = நினது அருட் பெருங்கடலின் கண்ணே உள்ளத்தை விரும்பிச் செல்லவிடாத சிறியேனை ,
விடுதி = கை விட்டு விடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- ஓரொருகால் விட்டும் தொட்டும் பற்றிநிற்கும் இடையாய அன்பர் போலாது , இடையறாத தியான உணர்வினால் தம் உள்ளத்தே நழுவ விடாது பற்றியொழுகும் தலையாய அன்பர் என்பார், “விடலில்லடியார் “ என்றார் . “நாயகன் சேவடி தைவரு சிந்தையும் “ என்பது திருத்தொண்டர் மாக்கதை . முறுகிய அன்பினாற் பிணிக்கப்பட்டு மெய்யன்பர் நெஞ்சத் தாமரையில் இறைவன் எழுந்தருளி இருத்தலின் , அவர் தம் நல்லுடல் இறைவனுக்கு உகந்த திருக்கோயில் ஆகும் என்பார் , “உடல் இலமே மன்னும் “ என்றார் . “வினைபடும் உடல் நீ புகுத்து நின்றமையால் விழுமிய விமான மாயினதே “ என்பது திருவிசைப்பா . “இலமே” என்புழி ஏகாரத்தைப் பிரித்து உடல் என்பதனோடு இயைத்து இரண்டனுருபை விரித்துக் கொள்க .
ஆண்டவனைப் பற்றிய அன்பு முதிரப்பெறுதல் வினைமாசு நீங்கிய நிலையில் ஆதலின் , மாசு நீங்கிய மெய்யன்பரது நல்லுடல் மிகவும் தூயதாகும் என்ப . நெஞ்சத்தைத் தூய்மைப்படுத்தும் நெறியைக் குறித்துப் பட்டணத்துப் பிள்ளையார் “ அன்புகொடு மெழுகி அருள் விளக்கேற்றித் , துன்ப இருளைத் துரந்து முன்புற ,மெய்யெனும் விதானம் விரிந்து நொய்ய , கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப் , பாழறை யுனக்குப் பள்ளியறையாக்கிச் , சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு , எந்தை நீ இருக்க இட்டனன்” என்பர் . “சிந்தையே கோயில் கொண்ட வெம் பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே , எந்தையே யீசாவுடலிடங் கொண்டாய் “ என்று அடிகள் பிறிதோரிடத்து அருளிய திருப்பாட்டில் , நெஞ்சத்தை த் திருக்கோயிலாகவும் ,உடலை அக்கோயில் அமைத்தற்கு உரிய நல்லிடனாகவும் கொண்டு கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது .
மடல் – பூ இதழ் . மட்டு – தேன். ஈக்களின் எச்சிலோடு அமைக்கப்படும் இறாலில் தொகுக்கும் தேன் போலாது , மலர் இதழில் உண்டாம் தேன் தூய்மை மிக்கதென்பது அறியத்தக்கது .தன் திருவடி நீழலில் இயைந்து நுகர்வார்க்குத் தூய்மையும் இனிமையும் உடைய வீட்டின்பம் அருளுதலின் ,” மடலின் மட்டே” எனவும் , அவ்வின்பம் அருளுதற்குத் தான் மேற்கொண்ட திருவுருவம் செம்மை மிக்க ஒளியுடைய ஞானாசிரியத் திருக்கோலம் ஆதலின் , “மணியே “ எனவும் கூறினார் . “கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க “ என்பதும் ஈண்டு நினைக்கத்தக்கது . தன்னையடைந்தாரை மரணம் இலாப் பெருவாழ்வில் இருத்தி இன்புறுத்தலின் , “அமுதே” என்றார் .அமிர்தம் என்பது ஈண்டு அழி வின்மை என்னும் பொருட்டு . “ எனை நானென் பதறியேன் பகலிரவாவதும் அறியேன் “ என்னும் நிலையில் இவ்வுலகை மறந்து சிவானந்தக் களிப்பில் தோய்ந்திருக்கச் செய்தமையின் , “என் மது வெள்ளமே “ என்றார் . உலகத்தில் “தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்” சிறிது உண்ணினும் களிப்பு மிக வுண்டாம் . இறைவனாகிய மதுச் சிறிதாக இன்றி வெள்ளமாகவும் உள்ளது ; முன்னைப் பழமைக்கும் பழமையாயது எனின் , அதன் விளைவாகிய களிப்பிற்கு எல்லையின்று என்பது அறியத்தக்கது .
நல்ல நீர் எத்துனை மிகுதியாக இருப்பினும் நாய் உண்ணுங்கால் , நக்கிச் சிறிது சிறிதாக உண்ணும் அல்லது வேண்டுமளவு விரைந்து அதனாற் பருக இயலாது . இவ்வியல்பு தூய நீர்ப் பெருக்கிலாயின் உவர்ப்புச் சுவையுள்ள கடல் நீரை வேறு போக்கின்றி உண்ண நேரின் , விடாய் மிகுதியால் நீரில் வாய் வைத்தும் , உவர்ப்பு மிகுதியால் அருவருத்தும் நக்கியுண்ணும் என்பது . இது கருதியே “கடலினுள் நாய் நக்கியாங்கு” எனத் தொழில் உவமம் கொள்ளப்பட்டது . ஆண்டவன் கருணைக்கடல் அமிழ்த மயம் ஆயினும் , தம் வினைப்பிறழ்ச்சியால் அது தமக்கு உவர்க்கடல் போல் ஆயிற்று என்பதும் , நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து என்றதற்கேற்ப வேறு போக்கின்றித் தம் உள்ளத்தைத் திருவருள் தோய்வில் சிறிது செலவிடுத்தும் , வலிய கன்மத்தடையால் அருவருத்து அங்ஙனஞ் சிறிது செல்ல முற்பட்ட உள்ளத்தை ஈர்த்துக் கோடலான் செல்லவிடாமல் நேர்ந்தது என்பதும் அடிகள் கருத்து என்க.
இக்கருத்துப் புலப்படவே “உன் கருணைக் கடலின் உள்ளம் விடலரியேனை “ என்றார். கருணைக்கடல் என்புழிக் கடல் ஈண்டு மிகுதி குறித்தது . “விடலரியேன்” என்றது சிறிது மெல்ல விடுத்தும் விடாமையைப் புலப்படுக்கும் . இங்ஙனம் கிட்டுதற்கு அரிய கருணைக் கடலின் அணிமை பெற்றும் அதன்கண் உள்ளத்தை முற்றும் செல்லவிடுவதற்குரிய தவப் பேறில்லாத சிறியேனைக் கைவிட்டு விடுவாயோ? விடலாகாது என்பது விண்ணப்பம் ஆகும் . உள்ளத்தைச் செல்லவிடாமைக்கு ஏதுவாகிய என் வினையினும் , அதனை யீர்த்துக் கோடற்கு ஏதுவாகிய நின் அருட்பெருக்கு வலியுடையது என்பது குறிப்பு .
இதன்கண் “உன் கருணைக்கடலின் உள்ளம் விடலரியேனை” என்றதனால் இறைவனது அருட்பெருங்கடலில் தம் உள்ளம் செல்லாமை குறித்து அடிகள் இரங்கியது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாயவாறு அறிக .
***************************************
பாடல் :14 .
வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும்
விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார்
உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைகரசே
கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களியெனக்கே .
கருத்துரை :- ஆண்டவன் அருட்பெருக்கில் தலைப்படக் கிடைக்கப்பெற்றும் ஆர்ப்பருகாமல் அருவருக்கலானேனே யென்று முன்னைத் திருப்பாட்டில் இரங்கிக்கூறிய அடிகள் ,இத் திருப்பாட்டில் திருவருள் வெள்ளத்தில் மூழ்கியும் உலக வாதனையாகிய துன்பத்தினின்றும் விடுதலை பெறாமல் வருந்தலானேனே யென்று இரங்குகின்றார் .
பதவுரை :- விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் = நின்னை விரும்பி அன்பு செய்யும் மெய்யடியார் நெஞ்சத்து வீற்றிருப்போய் ,
மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே ,
வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு = நல்ல நீர்ப்பெருக்கில் மூழ்கிக்கிடந்தும் ஒருவர்க்கு நாவறட்சி உண்டாயது போல ,
உன் அருள்பெற்று இன்றும் துன்பத்து விள்ளக்கிலேனை = நின் திருவருட் பேற்றிற்கு ஆளாகியும் இன்றும் உலக வாதனையாகிய துன்பத்தினின்றும் நீங்குதற்கு உரிய ஆற்றலில்லாத சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,
கள்ளத்துள்ளேற்கு எனக்கு = வஞ்சகச் செயலுடை யேனாகிய எனக்கு ,
களியாத களி அருளாய் = பொறிபுலன்களின் வாயிலாக எய்தப்பெறாத மாறிலா மகிழ்ச்சியை அருள் புரிவாயாக என்பது .
விளக்கவுரை :- முன்னைத் திருப்பாட்டில் “விடலில் அடியார் உடலிலமே மன்னும்” என்றார் . விடுதலும் பற்றுதலும் உள்ளத்தின் செயலானும், உடலுறுப்பாகிய கைகளின் செயலாகக் கொள்ளுதற்கும் தட்டின்று . அதனால் ஆண்டு அச்செயற்கு எற்ப உடல் இலமே மன்னும் என்று கூறியது பொருத்தமாகிய ஒரு நயம் என்க . இத் திருப்பாட்டில் “விரும்பும் அடியார் “ என்புழி விரும்புதல் ஆகிய செயல் உள்ளத்தைப் பற்றியதே ஆதலின் ,அதற்கு ஏற்ப, “உள்ளத்துள்ளாய் “என்று கூறினர் என்பது .”சிந்தையே கோயில் கொண்ட வெம்பெருமான்” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது .
நல்ல தண்ணீர் பெருக்கில் மூழ்கிக் கிடப்பவன் ஒருவன் நாவறட்சியால் துன்புறுவானாயின் , அதற்குக் காரணம் நீர்க்குறையன்று ; அவன் வினைக் குறையே ஆகும் . அது போல் யாண்டும் இடையறாது பெருக்கெடுத்து ஒழுகும் இறைவனது அருளில் தோயப்பெற்றும் , பொறி புலன்கள் விளையும் உலகவாதனையாகிய துன்பத்தின் நீங்க இயலாமை தம் தவக் குறையே யன்றி ஆண்டவன் குறையன்று என்பார், “வெள்ளத்துள் நாவற்றியாங்குன் அருள் பெற்றுத் துன்பத்தின்றும் விள்ளக்கிலேனை “ என்றார் . அருள் பெற்றும் என்புழி உம்மையும் ,துன்பத்து என்புழி நீங்கற் பொருளில் வந்த இன் உருவும் செய்யுள் விகாரத்தால் தொக்குநின்றன .
நல்ல நீர் வெள்ளத்துள் தோய்ந்தாற்கு நீர் வேட்கை அறவே இன்றாதலோடு , உடற் சூடு தணிந்து தட்பமும் உண்டாம் . அது போல ஆண்டவன் திருவருளில் தோயப் பெற்றார்க்குப் பொறி புலங்களால் ஆகிய துன்பம் அறவே இன்றாதலோடு , பரமசுகம் ஆகிய பேரின்பமும் உண்டாம் இவ்வுவமையிலும் பொருளிலும் ஒன்றன் நீக்கமும் ஒன்றன் விளைவும் ஆகிய இரண்டு பயன்கள் உளவாம் என்பது பெறப்பட்டது . இப் பயன்களுள் தட்பமும் பேரின்பமும் முடிவானவை . அவற்றை நோக்க விடாய் தணிதலும் துன்பம் ஒழிதலும் தொடக்கமானவை . தொடக்கப்பயனே இலதாயிற்று என்பது , “நாவற்றியாங்கு” என்னும் உவமையாலும் “துன்பத்து விள்ளக்கி லேன்” என்னும் பொருள் இயல்பாலும் தெளிவிக்கப்பட்டது என்க .
ஒளியின் தோற்றமும் இருளின் ஒளியும் ஒருகணத்து ஒருங்கு நிகழும் அன்றிக் கால இடையறவுக்கு இடன் இன்றாம் . அது போல ஆண்டவனாகிய நின் திருவருட் பேறும் உலகவாதனை ஆகிய துன்ப நீக்கமும் ஒருங்கு நிகழவேண்டுவனவாகவும் , அங்ஙனம் இன்றி என் வல்வினையின் ஏதுவால் நின் திருவருட் பேறு எய்தியும் ,இன்னும் துன்ப நீக்கம் பெற்றிலேன் என்பார், “இன்றும் விள்ளக்கிலேனை “ என்றார். விள்ளுதல் – நீங்குதல் . கில்லேன் என்பது ஆற்றல் உடையன் அல்லேன் என்னும் பொருட்டு . இதனால் “அவனருளாலே அவன்றாள் வணங்கி” என்றபடி திருவருட் பேறும் அவன் அருளால் எய்துதல் போலத் துன்ப நீக்கமும் அப்பெருமானது ஆற்றலால் ஆவதன்றித் தம் ஆற்றலால் இயல்வது அன்று என்று அடிகள் கருதினார் என்பது போதரும் . யான் துன்பத்தினின்றும் நீங்குதற்கு உரிய ஆற்றல் நின்கண்ணதாதலின் , அதனின் நீங்காமை குறித்து என்னைக் கைவிடல் தக்கது அன்று என்பார் “விடுதி கண்டாய் “ என்றார்.
இனி, கைவிடாமல் செய்யத்தக்கது யாது என்னும் வினாவிற்கு விடையாக “அருளாய் களியாத களியெனக்கு” என்றார் . களியாத களி” என்றது பொறிவாயிலாக நுகரப்படும் புலன்களினால் விளையும் அழிதன் மாலையதாகிய இன்பம் அல்லாத பேரின்பத்தை . இதுகாறும் நுகர்ந்த இன்பக்களிப்பு ஐம்பொறியளவில் நுகர்ந்த புலன்களால் ஆகிய சிறிய இன்பமாகும் . அஃது அல்லாத அழிவில் இன்பமே களியாத களி எனப்பட்டது இது மெய்யுணர்வினால் நுகரத்தக்கது . இதனை “உணர்வினேர் பெறவருஞ் சிவ போகம்” எனவும், “பூண்டவைம் புலனிற் புலப்படா இன்பம் புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க “ எனவும் சேக்கிழார் அடிகள் கூறுவர் . இத்தகைய சிறந்த இன்பத்தை “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றபடி தவத்தில் ஈடுபட்டுத் தம் நெஞ்சத் தவிசில் நின்னை வீற்றிறுக்கச் செய்யும் மெய்யன்பர்க்கு வலிந்து எளிதில் அருளுவையாதலின், அதனை வஞ்சம் உட்பொதிந்த வல்வினையாளனாகிய யானே இரந்து கோடற்கு உரியவன் என்பார் , “ கள்ளத்துளேற் கருளாய்” என்றார்.
இதன்கண், “உன் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக்கி லேனை “ என்றதனால் உலக வாதனையாகிய துன்பத்திற்கு ஆற்றாது அடிகள் இரங்கியது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
********************************************
பாடல் :15 .
களிவந்த சிந்தையொ டுங்கழல் கண்டுங் கலந்தருள
வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே
எளிவந்த எந்தைபி ரானென்னை யாளுடை யென்னப்பனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் இறைவன் அருட்கு இடனாகியும் உலகியல் துன்பத்தினின்றும் நீங்கப்பெறாமை குறித்து இரங்கிக்கூறிய அடிகள் ,இத் திருப்பாட்டில் இறைவன் திருவடிக்காட்சி பெற்றும் , அத்துவித இன்பப்பேற்றின் நிமித்தம் உலக வாதனையினின்றும் வெளிப்பட இயலாமை குறித்து இரங்குகின்றார்.
பதவுரை :- மெய்ச்சுடருக்கெல்லாம் = மெய்மையான ஒளி மண்டிலங்களுக்கெல்லாம் ,
ஒளிவந்த பூ கழல் = ஒளி உண்டாதற்கு ஏதுவாகிய பொலிவு மிக்க திருவடியினையுடைய ,
உத்தரகோச மங்கைக்கு அரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே ,
எளிவந்த எந்தை பிரான் = எளிமையிற் காட்சி நல்கிய எந்தந்தை முதலியோர்க்கும் தலைவனே ,
என்னை ஆளுடை என் அப்பனே = சிறியேனை ஆளாகவுடைய என் தந்தையே ,
களி வந்த சிந்தையொடு = மகிழ்ச்சி மிக்க உள்ளத்தோடு ,
உன் கழல் கண்டும் = நின் திருவடியைத் தரிசித்தும் ,
கலந்து அருள வெளிவந்திலேனை = நீ என்னோடு இரண்டறக்கலந்து அருளும் வண்ணம் வெளிப்பட்டு வந்திலேனை ,
விடுதி = கைவிட்டுவிடுவாயோ ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- ஞாயிறு திங்கள் தீ முதலிய மண்டிலங்கள் எல்லாம் இயற்கையின் அமைந்த ஒளியுடையன ஆதலின் ,”மெய்ச்சுடர்” என்னப்பட்டன . அவ்வொளி மண்டிலங்களின் ஒளிக்கூறுகளே உலகத்துக் காணப்படும் பிற வொளிகளெல்லாம் ஆம் . ஆயினும் அம் மண்டிலங்களுக்கு ஒளி உதவியது ஆண்டவன் திருவடி என்பார், “ஒளி வந்த பூங்கழல் “ என்றார் . ஈண்டு வந்த என்னும் எச்சம் காரியப்பொருட்டு , காரணம் திருவடியாகலின் . “ தேயமாரொளிகளெல்லாம் , சிவனுருத்தேசது “ என்று சித்தியாரில் உலகத்துள்ள ஒளிகள் எல்லாம் இறைவனது திருமேனி ஒளியே யாகும் எனக் கூறியிருத்தல் அறிக . “ஓங்கொளியா யருண்ஞான மூர்த்தியாகி “ என்னும் பாட்டுக்கு மதுரைச் சிவப்பிரகாசர் எழுதிய விளக்கவுரையில் “வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளி வந்த பூங்கழல் ……. என்பதுங் கண்டு கொள்க “ என்று இத் திருவாசகப் பகுதியை மேற்கோளாக எடுத்துக் காட்டி யிருத்தலும் அறிந்து இன்புறத்தக்கது .
அவயவ அவயவைகளின் வேறுபாடு இன்மையைப்பற்றி உருவின் ஒளிதிருவடிமேல் ஏற்றிக் கூறப்பட்டது என்க . “அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” எனவும் , “சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன் தூமதியோடு , ஆதியும் அந்தமுமான ஐயாறன் அடித்தலமே” எனவும் போந்த தமிழ் மறைகளில் இறைவன் திருவடியையே ஒளி வடிவமாகக் கூறியிருத்தலும் அறிக . ஒளி மண்டிலங்களுக்கெல்லாம் தன் திருவடியினின்றும் ஒளி உதவும் இறைவனது வருகை அரியதின் அரியதாகவும் , கருணைகாரணமாகத் தமக்கு எளிமையிற் கிடைத்ததென்பார் . “எளிவந்த” எனவும், அங்ஙனம் எளிமையாதற்கு ஏதுவாகிய கருணை தானும் “என் குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே” என்று அடிகள் பிறிதோரிடத்து அருளிச்செய்தபடி தம் வழி முதல்வராகிய முன்னையோரை ஆட்கொண்டு வழிவழித் தலைவனாக தொடர்புடைமை பற்றியது என்பார் , “எந்தய் பிரான் “ எனவும் , பாசப்பிணிப்பில் உழலும் யான் இறைபணி புரிதற்குரிய தவம் உடையேன் அல்லேன் எனினும் ,வழி வழித் தொண்டு கொண்ட தொடர்புடைமையால் , எனக்கு உண்மைத் தந்தையாகவும் நின்று ஆட்கொண்டனன் என்பார், “என்னையாளுடையென் அப்பனே” எனவும் கூறினர் . ஒருவனை ஆட்கொள்ளுவோன் அவனுக்குத் தந்தையாக இருக்கவேண்டும் என்னும் நியமம் இன்மையால் ஆளுடையப்பன் என இயைத்துக் கூறப்பட்டது என்க.
ஒன்றைக் காணுங்கால் அக்காட்சி , விருப்பொடு காண்டல் வெறுப்பொடு காண்டல் என இருதிறப்படும் . அவ்விருவகைக் காட்சியாலும் விளையும் பயன் , முறையே இன்பமும் துன்பமும் ஆம். உலகியலிற் காண்பவன் உள்ளப் பிறழ்ச்சியால் இன்பம் விளைக்கும் காட்சியில் வெறுப்பும் , துன்பம் விளைக்கும் காட்சியில் விருப்பும் நிகழ்தலும் உண்டு . அங்ஙனம் இன்றி ஈண்டு இறைவன் திருவடிக்காட்சி அழிவில்லாத பேரின்பம் பயப்பதென்னும் உண்மையுணர்ந்து , மிக்க மகிழ்ச்சியோடு அடிகள் அதன் கண் தலப்பட்டமையை “ களி வந்த சிந்தையோடு உன்கழல் கண்டும்” என்னும் தொடரால் புலப்படுத்தரு ளினர் .
பாசப்பிணிப்பின் ஆற்றலால் சிறிதும் வெறாது , மகிழ்ச்சி மிக்க உள்ளத்தோடு திருவடிக்காட்சியில் தலைப்பட்டனர் என்பது அத் தொடரின் பொருளாகும் . இஃது இறையருளிற் கலத்தற்கு உரிய முதற் சாதனம் ஆகும். இச்சாதனத்தைத் தம் கடமையாகவும் இதன்பயனாகிய திருவருட் கலப்பை ஆண்டவன் கடமையாகவும் கொண்டு “கலந்தருள்” என்றார். காண்டல் அடிகளின் செயல் . கலந்தருளல் ஆண்டவன் செயல் . வெளிவரல் – உலகியற் பிணிப்பினின்றும் வெளிப்படல் . முன்னர்த் தன்னின் வேற்றுமையறக் கண்ட உலகத்தைத் தன்னின் வேறாகக் கண்டு அக்கட்டினின்றும் வெளிப்பட்டு இறையருளில் வேறறத் தோய்தலுமாம் .
இனி, கலந்தருள வெளிவந்திலேன் என்பதற்குக் கலத்தற்கு உரிய ஞானவெளிக்கட் போந்திலேன் எனக் கோடலுமாம் . சாதனம் பேதசாதனம் அபேத சாதனம் என இருவகைப்படும் . பேதசாதனம் இறைனனைத் தன்னுள் வேறாகக் கண்டு நினைதல் . அபேதசாதனம் வேறறக் கண்டு நினைதல் . இதனையே சிவோகம் பாவனை என்று சிவாகமம் கூறும் . இவ்விரண்டனுள் முன்னதன் முதிர்ச்சியில் பின்னது உண்டாம் . “உன் கழல் கண்டும் “ என்பது பேதசாதனமும் வெளி வருதல் அபேத சாதனமும் ஆம் என்க . வேறற நினைதலின் பயனே பாசப்பிணிப்பு ஒழிந்து பேரின்பம் நுகர்தற்கு ஏதுவாம் என்பது. “உன் கழல் கண்டும் “ என்புழி உம்மை முதற் சாதனம் பெற்றும் இரண்டாம் சாதனம் எய்தப்பெற்றிலனே என்னும் இரக்கக்குறிப்பைப் புலப்படுத்து நிற்றல் அறிக . இங்ஙனம் முடிவான பயனை விளைக்கும் அபேத சாதனப் பேறு எய்தப் பெறாத குறையைக் காரணமாகக் கொண்டு என்னைக் கைவிட்டு விடுவாயோ? (விடலாகாது) என்பார் , “ விடுதி கண்டாய் “ என்றார் .
இதன்கண் , “கலந்தருள வெளிவந்திலேனை” என்றதனால் உலக வாதனை குறித்து அடிகள் இரங்கியது பெறப்படுதலின் ,பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
*************************************
பாடல் : 16 .
என்னையப் பாவஞ்சல் என்பர் இன்றிநின் றெய்த்தலைந்தேன்
மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாயுவ மிக்கின்மெய்யே
உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
அன்னையொப் பாயெனக் கத்தனொப் பாயென் அரும்பொருளே.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் திருவடிக் காட்சி பெற்றும் உலக வாதனையினின்றும் வெளிபட இயலாமை குறித்து இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் இயலாமைக்கு ஏது தகுதியில்லாரை உடையராகக் கருதி அலைந்து இளைத்ததாகும் என்று கூறுமுகமாக ஆண்டவன் அருண்மொழியை வேண்டி விண்ணப்பம் செய்கின்றார் .
பதவுரை :- மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே ,
மின்னை ஒப்பாய் = காட்சிப்பட்ட அளவில் மின்னலை ஒப்பாய் ,
மெய்யே உவமிக்கின் = மெய்மையாகவே நினக்கு உவமை கூறப்புகின் ,
உன்னை ஒப்பாய் = நின்னையே நீ ஒப்பாய் ,
எனக்கு அன்னை ஒப்பாய் அத்தன் ஒப்பாய் = எனக்குத் தாயையும் தந்தையையும் ஒப்பாவாய்
என் அரும் பொருளே = எனக்குப் பெறல் அரும் பொருளாக உள்ளவனே ,
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி = என்னை நோக்கி ‘அப்பா அகஞ்சாதே’ என்று சொலுவார் இல்லாமல் ,
நின்று எய்த்து அலைந்தேன் = வருந்தி நின்று அலைந்து இளைத்தேன்,
விட்டிடுதி = இந் நிலையில் விட்டு விடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி அடிகளுக்குக் காட்சி தந்த பொழுது , அப்பெருமானது திருமேனி மின்னலைப் போல் ஒளிவிட்டுக் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கினமையால் , “மின்னலை ஒப்பாய் “ என்றார் . உவமேயப்பொருளினும் உவமம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும் விதி ,கடவுளுக்கு ஒப்புக்கூறப்புகுங்கால் வலியிழந்து ஒழியுமாதலின் ,அந் நிலையில் உலகியற் பொருள்களில் சிறந்தது ஒன்றை எடுத்துக்காட்டுதல் கவி மரபாகும் . அம் முறயில் மின்னல் ஈண்டுக் கூறப்பட்டது . இறைவன் திருமேனியின் நிறவொளி பற்றியும் ,அடிகளுக்குக் காட்சியளித்து உபதேசித்து விரைவில் மறைந்தருளிய தொழில் பற்றியும் வந்தமையால் , இஃது உருவும் வினையும் பற்றிய உவமம் ஆகும் .
பின்னர் , “மெய்யே உவமிக்கின்” என்றமையால் ,இவ் உவமை உபசாரமாகக் கூறியதாகும் அன்றி, உண்மை ஆகாதென்பது போதரும் .உண்மையாகவே உவமை கூறப்புகின் இறைவனுக்கு உவமம் ஆகப் பிறிதொரு பொருள் யாண்டும் இன்றாம் .இறைவனுக்கு ஒப்பாய பொருளும் இன்று ; இறைவன் ஒருபொருளுக்கு ஒப்பாதலும் இன்று. இதனை “ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமன் இல்லி” என்னும் தமிழ் மறையில் ஒப்புடையன் அல்லன் எனவும் , உவமன் இல்லி எனவும் கூறியிருத்தலால் அறிக . இந் நயம் தோன்றவே அடிகள் “மெய்யே உவமிக்கின் உன்னை யொப்பாய் ‘ என்றார் .”நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்” என்பதும் அப் பொருட்டு . ஈண்டு ஆக்கச்சொல் உவமை குறித்து .
இறைவ , நின்னை நோக்க நினக்கு ஒப்பு நீயே யாவாய் அன்றிப் பிறிதொரு பொருள் இன்று . சிறியேனாகிய என்னை நோக்கி நினக்கு உவமம் கூறப்புகின் , எனக்குத் தாயும் தந்தையும் போல்வாய் என்பார், “ அன்னை யொப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் “ என்றார். ஈண்டு எனக்கு என்றது எடுத்த உடலோடு கூடிய நிலை பற்றியாம் . ஈன்று வளர்த்தலில் தாயும் , சான்றோன் ஆக்குதலில் தந்தையும் ஒருவர்க்கு உலகியலில் இன்றியமையாத உதவியாளர் ஆவர் . ஆதலின் , அவ்வியல்பு குறித்துக் கன்மத்துக்கு ஈடாக மாயையினின்றும் உடலுதவியமையால் , அன்னை யொப்பாய் எனவும் , அறிவு உபதேசம் செய்து நன்னிலை நிறுத்தலின் , “அத்தன் ஒப்பாய்” எனவும் கூறினர் .
இம்மை மறுமை இரண்டிலும் பெறுதற்கு உரிய பொருள்களினும் அரிய பொருள் என்பது கருதி “என் அரும் பொருளே “ என்றார். இம்மைக்கு உரியது புகழும் மறுமைக்கு உரியது அறமும் ஆகும் இவ்விரண்டனையும் கடந்து வீட்டிற்குரிய மெய்ஞானத்தால் அரிதிற் பெறத்தக்க பொருளே இறைவனாதலின் இவ்வாறு கூறப்பட்டதென்க .
ஆண்டவனே , எனக்கு உண்மையான தாயும் தந்தையும் அரும்பொருளுமாக உடனிருந்து ஆதரிக்கும் அரும்துணை ஒப்புயர்வற்ற பரம்பொருளாகிய நீயே என்பதை உணராமல் ,நின்னையல்லாத பிற தேவர் மக்கள் முதலியோரை உளங்கொண்டு ,அவருள் யாரும் எனக்கு அபயம் அளிப்பர் இல்லையே என்று என் அறியாமையால் நினைந்து , அதனால் அலைந்து இளைத்து வருந்தலானேன் என்பார், “ என்னையப்பா அஞ்சல் என்பவரின்றி நின்று எய்த்தலைந்தேன் “ என்றார் . அப்பா என்பது தந்தை மகனை நோக்கிக்கூறும் செல்ல மொழியாகும் . அஞ்சல் – அஞ்சவேண்டா . துன்ப நீக்கமும் இன்பப் பேறும் ஒருவர்க்கு வேண்டுவனவாயினும் , முதலில் அச்சம் காரணமாக உண்டாம் துன்ப ஒழிவே இன்றியமையாத தாகும் . இது கருதியே “அஞ்சல் என்பவர்” என்று கூறப்பட்டது . அடிகளுக்கு இம்மை மறுமைப் பேறுகளைப் பற்றிய அச்சம் நேர்ந்திருக்குமாயின் , மக்கள் தேவருள் யாரும் அஞ்சல் என்று கூறி ஆதரித்தற்கு எளிமையிற் கிடைப்பர் .
அடிகளின் குறிக்கோள் அங்ஙனம் இன்றி வீட்டு நிலை பற்றியதாகலானும் , அதற்குத் தடையாகவுள்ள பாசப்பிணிப்பின் ஒழிவிற்கு அஞ்சல் என்று கூற அன்னார் தகுதியற்றவராதலானும் ”என்பவரின்றி” எனவும் , அறியாமையாற் கழிந்த பல பிறப்புக்களிலும் தகுதியில்லாரைக் குறிக்கொண்டு அலைந்து இளைத்தேன் என்பார் , “ எய்த் தலைந்தேன் “ எனவும் கூறினர் . எய்த்தலைந்தேன் என்பதை அலைந்து எய்த்தேன் என மாற்றிப் பொருள் கொள்ளல் வேண்டும் . அலந்து எய்த்தல் என்பது ஈண்டு அஞ்சவேண்டா என்று கூறுவாரை நாடி நினைந்து நினைந்து சலித்து இளைத்தல் . இது மனத்தின் செயல் . என் அறியாமை யால் உண்மைப்பொருளாகிய நின்னைக் குறிக்கொள்ளாமல் பிறரைக் கருதி அலைந்த பிழை காரணமாக என்னைக் கைவிடலாகாதென்பார் , “விட்டிடுதி” என்றார் . இதனால் , “அப்பா இனி அஞ்சற்க “ என்று ஆண்டவன் திருவாயால் தமக்கு ஓர் அபய மொழி கூறவேண்டும் என்பது அடிகள் திருவுள்ளம் ஆதல் குறிப்பிற் பெறப்படுவதாம் .
இதன்கண் , “என்னை யப்பா அஞ்சல் என்பவரின்றி நின்றெய்த் தலைந்தேன் “ என்றதனால் அடிகள் உலகியற் பொருள்களைக் கருதி வருந்தியமை பெறப்படுதலின் பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
*************************************
பாடல் :17 .
பொருளே தமியேன் புகலிட மேநின் புகழ்இகழ்வார்
வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்மை யார்விழுங்கும்
அருளே யணிபொழில் உத்தர கோசமங் கைக்கரசே
இருளே வெளியே யிகபர மாகி யிருந்தவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் அபய மொழி அருளுதற்குத் தகுதியில்லாரை உடையராகக் கருதி உழன்று வருந்தியதற்கு இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அம் மொழி அருளுதற்கு உரிய தகுதியுடைய உண்மைப்பொருளும் தமக்குப் புகலிடமாகவுள்ளவனும் இறைவனே எனத் தாம் தெளிந்த உண்மையை எடுத்துக் கூறி ஏற்று கொள்ள விண்ணப்பம் செய்கின்றார் .
பதவுரை :- நின் புகழ் இகழ்வார் வெருளே = நின் மெய்ப்புகழைப் பழித்துரைக்கும் பொய்மையாளர்க்கு அஞ்சத்தக்க பொருளே ,
மெய்யார் விழுங்கும் அருளே = புகழ் பாராட்டும் மெய்யாளர்க்கு உண்ணும் அருளமுதமே ,
அணி பொழில் = அழகிய சோலை சூழ்ந்த ,
உத்தரகோச மங்கைக்கு அரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே ,
இருளே = மாயாகாரியப் பொருளைப் பற்றிப் புறப்பார்வையால் நோக்குவார்க்கு மறை பொருளாக வுள்ளவனே ,
வெளியே = உலகியற் பொருள்களை மாயாகாரியமென உணர்ந்து விலக்கி அகப்பார்வையால் நோக்குவார்க்கு வெளிப்படு பொருளாக வுள்ளவனே ,
இகபரம் ஆகி இருந்தவனே = எனக்கு இம்மையும் மறுமையுமாய் இருந்து இதுகாறும் உதவி புரிந்த பெருமானே ,
பொருளே = மெய்ப்பொருளாகவுள்ளவனே ,
தமியேன் புகல் இடமே = வேறு துணையிலியாகிய எனக்குப் புகலிட மாகவுள்ளவனே ,
விட்டிடுதி = கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- இறைவனைப்பற்றிய புகழே மெய்மையானதாகும் இறைமைக் குணம் இல்லாரைப்பற்றிய புகழ் பொய்மையாய்ப் புனைந்துரையாய் முடியும் . இவ்வுண்மையை “இருள்சேர் இருவினை யுஞ் சேரா இறைவன் , பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு “ என்னும் பொருளுரையானும் , அதற்கு “இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையரெனக்கருதி அறிவில்லார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் அவை முற்றுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழ் எனப்பட்டது “ என்னும் பரிமேலழகர் உரைப்பகுதியானும் உணரலாம் . ஒரு பொருளைப் பற்றி விருப்பு நிகழ்தல் , வெறுப்பு நிகழ்தல் இரண்டும் இன்றாதல் என்னும் முத்திறத்துள் இறைவனது பொருள் சேர் புகழில் விருப்பம் நிகழ்தல் இன்றியமையாததாகவும் , அங்ஙனம் விரும்பாமையோடு விருப்பு வெறுப்பு இரண்டும் இன்றாம் . அவ்வளவிலும் நில்லாது ,வெறுத்தது இகழ்தல் கொடிது என்பார் , “நின் புகழ் இகழ்வார்” என்றார் . வெருள் – அஞ்சத்தக்கது . பின் “மெய்மையார் விழுங்கும் அருளே “ என்புழி மெய்மையார் என்றத னால் , புகழ் இகழ்வார் பொய்மையாளர் என்பதும் , விழுங்குதல் வினையால் அமுதம் என்பதும் பெறப்படுதலின் , ஈண்டு அஞ்சத்தக்க நஞ்சமே என்பதும் பெறப்படும் . மெய்மையார் – மெய்யன்பர் . இறைவன் திருப்புகழை மெய்யன்போடு பாராட்டுவோர் , பொய்மை யாளர் புகழ் இகழ்பவராதலின் , மெய்மையார் புகழ் பாராட்டுபவர் என்பது புலனாம் என்க .
இறைவன் திருவருளைக் குறித்து அருளாரமுதம் என அடிகள் கூறுவாராதலானும் , விழுங்குதல் வினையாலும் அருள் அமுதமாக ஈண்டுக் கொள்ளப்பட்டது . மாயையின் , ஆக்கப் பாடாகிய உலகத்தைப் பற்றிப் புறப்பார்வையால் நோக்கி , அதுவே பொருள் என அமைவார்க்கு இறை விளக்கம் புலப்படாமையின் , “இருளே” எனவும், அவ்வுலகியற் பொருள்களை மாயா காரியம் எனக் கண்டு “ பரமே பார்த்திருப்பார் பதார்த்தங்கள் பாரார் “ என்றபடி பரம்பொருளைப் பற்றி அகப்பார்வையால் நோக்கி உணர்வார்க்கு அப் பொருள் நன்கு புலப்படுதலின் , “வெளியே” எனவும் கூற்னர் . இவ்வுண்மையை ,
“தன்னே ரிலாஞான சம்பந்தன் தாளடைந்தார்க்
கென்னே யிருள்வெளியாம் என்பரால் – அன்னோன்
அருளாத போதுவெளி யாயிருந்த வெல்லாம்
இருளா யிருந்த வெனக்கு “
என்னும் குமரகுருபர அடிகள் அனுபவமொழியும் புலப்படுத்து வதாகும் . ஞானாசிரியன் திருவடியைச் சார்ந்தார்க்கு இருள் வெளியாகு மென்பர் ; எனக்கு அப்பெருமான் அருள் பெறாத பொழுது வெளியாகக் காணப்பட்ட மாயாகாரியப் பொருளெல்லாம் , அருட்பேறு எய்தியதும் புலப்படாமையின் , இருளாயின வென்பது இப்பாட்டிற் புலப்படவைத்தது என்க . மாயாகாரியமாகிய உலகப் பொருள்களைப் புறப்பார்வையால் நோக்குவார்க்கு இறை விளக்கம் புலப்படாது என்பதையும் ,அவற்றைக் காரணங்களுள் ஒடுக்கி அகப்பார்வையில் இறை விளக்கமாகக் காண்பார்க்கு அப் பொருள்கள் புலப்படாவென்பதையும் ,
“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார் முதற் பூதம் .
என்னும் திருமந்திரத்தானும் உணர்க .
அடிகள் தமக்கு வாய்த்த இப்பிறப்பில் இறைவனை ஞானாசிரி யனாகப் பெறும் பேறு பெற்றமையாலும் , இப்பெறலரும் பேற்றிற்கு முன்னைத்தவம் காரணம் ஆதலானும், அத்தவச் செயல்கள் இதுகாறும் கிடைத்த இம்மை மறுமை இரண்டிலும் ஈட்டப்பட்டன வாகலானும், அங்ஙனம் ஈட்டுதற்கும் அப்பெருமான் திருவருளே துணைநின்றது என்னும் குறிப்புத் தோன்ற “இகபரமாகி யிருந்தவனே” என்றார். இப்பிறப்பின் ஒழிவில் மறுமையும் அதன் ஒழிவில் இம்மையுமாக மேன்மேலும் என்னை இன்னும் இம்மை மறுமைக்கு ஆளாக்கலாகாது ; இம்மட்டில் இகபரச் சார்பை ஒழித்து இனி, வீட்டு நிலைக்கு ஆளாக்கவேண்டுமென்னும் தம் உட்கோள் உண்மை புலப்பட , “இகபரமாகியிருப்பவனே” என்னாது , “இருந்தவனே” என இறந்தகாலத்தாற் கூறியருளினர். .
இப்பிறவி காறும் தமக்கு இம்மையிலும் மறுமையிலும் உபகரித்து அருளிய பெருமானே அவ் இம்மை மறுமை இரண்டையும் கடந்த வீட்டு நிலையாகிய அழிவில் இன்பத்தை வழங்குதற்குரிய மெய்ப்பொருளும் ஆவான் என்பார், “பொருளே” என்றார். பொருள் – மெய்ப்பொருள் . “பொருளல்லவற்றைப் பொருலென்று உணரும்” என்புழிப் பொருள் என்னும் சொற்கு மெய்ப்பொருள் என்று பரிமேலழகர் கூறிய உரையானும் அறிக . பிறிதொரு சார்பும் இல்லாமல் , தனிப்பட்ட எனக்கு எப்பொருட்கும் சார்பாகிய மெய்ப்பொருளாகிய நீயே முடிவாக அடைதற்குரிய இடனாவாய் என்பார் , “தமியேன் புகலிடமே “ எனவும் , நின்னையே மெய்ப்பொருள் என உணர்ந்து புகலிடமாகக் கருதி அடைந்தேனைக் கைவிடில் , பிறிதொரு பற்றுக்கோடு இல்லாத யான் என் செய்வேன் ; என்னைக் கைவிடலாகாது என்பார் , “விட்டிடுதி கண்டாய்” எனவும் கூறினர்.
இதன்கண் , “பொருளே தமியேன் புகலிடமே” என இறைவனைச் சுட்டிக் கூறியமையால் , அவன் அல்லாத மாயாகாரியப்பொருள்கள் எல்லாம் நிலை இல் பொருள் என்பதும் , அப்பொருட் சார்பு வேண்டத்தக்க தன்று என்பதும் பெறப்படுதலின் ,பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
*************************************
பாடல் : 18 .
இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை
யென்னினல்லால்
விருந்தின னேனை விடிதிகண் டாய்மிக்க நஞ்சமுதா
அருந்தின னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் , எனக்கு இம்மை மறுமைகளில் துணை நின்று உபகரித்தும் முடிவான புகலிடமாகவும் உள்ள உண்மைப் பொருள் நீயேயென இறைவனைக் குறித்துக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் , அங்ஙனம் புகலிடமாக அமைந்த நீயே அடிமையாகிய என்னை ஆண்டு கொள்ளல் முதலியவற்றிற்கும் உரிமையுடையை ஆதலின் அம்முறையில் யாது செய்யினும் செய்க. புதியன் எனக்கொண்டு கைவிடல் மட்டும் ஆகாதென விண்ணப்பஞ் செய்துகொள்ளுகின்றார் .
பதவுரை :- மிக்க நஞ்சு அமுதா அருந்தினனே = கடலில் தோன்றிய பெருநஞ்சை அமிழ்த உணவாகக் கொண்டு உண்டருளினவனே ,
மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே ,
பிறவிப் பிணிப்பட்டு மடங்கினார்க்கு = பிறப்பு ஆகிய நோய்வாய்ப்பட்டு முடக்கம் உற்றார்க்கு,
மருந்தினனே = நோய் தீர்க்கும் மருந்தாக வுள்ளவனே ,
இருந்து = என் உள்ளத்தே எழுந்தருளியிருந்து ,
என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை = அடிமையாகிய என்னை ஆண்டு கொள்க விற்றுக்கொள்க ஒற்றிவைத்துக்கொள்க ,
என்னின் அல்லால் = என்று கூறுதலன்றிப் பிறிதொன்றும் செய்தற்கு உரிமை யில்லாத,
விருந்தினனேனை = புதியவனாகிய என்னை,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- திருப்பாற் கடல் கடைந்த பொழுது கடை கயிறாகவுள்ள வாசுகி யென்னும் பாம்பின் வாயினின்று வெளிபட்ட ஆலாலம் என்னும் கொடிய நஞ்சு என்பது தோன்ற, “மிக்க நஞ்சு “என்றார். மிகுதி அளவானும் கொடுங்குணத்தானும் ஆம் என்க . “ஓங்கும் ஒருவிடம் என்புழி , உலகம் முழுதையும் சுடும் வண்ணம் மேன்மேலும் வளர நின்றதோர் விடம் “ எனப் பேராசிரியர் உரை கூறியதுங் காண்க . இறைவன் தற்பயன் கருதாமல் உலகம் உய்தலில் உவகையுடன் என்பது புலப்பட ,” நஞ்சு அருந்தினன் “ என்றார். அமுதம் உண்ணுங்கால் உண்டாம் உவகை நஞ்சும் உண்ணுங்கால் உண்டாயிற்றென்பது கருத்து. “ மருந்து வானவருய்ய நஞ்சுண்டு உகந்திருந்தவன் “ என்பர் திருநாவுக்கரசர் , வானவர் மருந்துண்டு உய்யத் தான் உகந்து நஞ்சுண்டு இருந்தவன் என இயைத்துப் பொருள் கொள்ளல் வேண்டும் . ஈண்டு இருந்தவன் என்றது , விரைவில் அழிதற்குரிய பெருநஞ்சை யுண்டும் , அழிவின்றி இருந்தவன் என்னும் பொருட்டு . வார்ந்த நஞ்சயின்று வானோர்க் கமுதமீந்த புராண கதையைக் குறிப்பிட்டது, இறைவன் பேரருள் வண்மையைப் புலப்படுத்தற்கென்க.
உடலைப்பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல ,உயிரைப்பற்றி நின்று துன்புறுத்தலின் , பிறவியைப் பிணி என்றார் . நோய் , துன்பத்தையே விளைவிப்பதாகும்.பிறவி இடையிடையே இன்பத்தையும் விளைக்குமெனின், அவ்வின்பந்தானும் துன்பம் விரவியதாகலானும் , வீட்டின்பத்திற்குத் தடை யாயிருத்தலானும் அவ்வீட்டின்பத்தை நோக்கத் துன்பமாகவே முடியும் என்பது. மடங்குதல் – ஆற்றல் குன்றி முடக்கம் எய்துதல் . நோய்வாய்ப் பட்டார் கை,கால் முதலிய உறுப்புக்கலின் வலி குன்றிக் கிடத்தல் போலப் , பிறவிப் பிணிப்பட்டார் வீட்டை யடைதற்குரிய ஆற்றல் குன்றி யுழல்வ ரென்பது கருத்து. நோய் நீக்கத்திற்கு நன் மருந்தின் உதவி இன்றியமையா தது. அது போலப் பிறவி நோய்க்கு மருந்தாவான் இறைவன் என்பார், “மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கெ “ என்றார். மருத்துவனால் தரப்படுவதன்றே மருந்து . இங்கே மருத்துவனாகிய இறைவனையே மருந்தாகக் கூறியது எங்ஙனம் பொருந்தும் எனின் , மருந்தின் இயல்பு கூறிய வள்ளுவர் “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்று, அப்பால் நாற்கூற்றே மருந்து “ எனத் தீர்ப்பானையும் உடன் கூறியமையாற் பொருந்தும் என்க.
இருத்தல் – வேறறக் கலந்திருத்தல் . உலகத்தில் ஒருவன் தனக்கு உடைமையாகவுள்ள ஒரு பொருளை ஆளுங்கால் , ஆளப்படும் அப்பொருளும் ஆள்பவனாகிய தானும் வேறாக இருத்தலைக் காண்கிறோம் இறைவன் தன் உடைமையாகிய உயிரை ஆளுங்கால் , அவ்வுலகியற்கு மாறாக வேறறக்கலந்து நின்று ஆள்வன் என்பது போதர , “இருந்து” என்றார். ‘கடையவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட “ என்பது அடிகள் திருவாக்கு . ஒரு நிலம் உடையான் , அதனை ஆண்டனுபவித்தல் , விற்றல் , ஒற்றிவைத்தல் என்னும் இம்மூன்றுஞ் செய்தற்கு உரிமையுடைய னாதல் உலகியலிற் கண்டது . ஈண்டு அவ்வுலகியலைத் தழுவித் தம் உடல் பொருள் ஆவி மூன்றும் இறைவன் உடைமையெனக் கண்ட அடிகள் இம்மூன்றனுள் எது வேண்டுமானாலும் செய்துகொள்க என்பார், இங்ஙனம் கூறினர் .
இம்மூன்றனுள் விற்றல் , விலையாகப் பிறிதொரு பொருளைப் பெற்றுக்கொண்டு தன் பொருளைக் கொடுத்தல் ,அஃது ஊதியங் கருதிய தால் , மாற்றப்படும் அப்பிறிது பொருளின் இன்றியமையாமை கருதியதால் செய்யப்படுவதாகும் . ஒற்றிவைத்தல் தகுதியான பொருள் பெற்று நில முதலியவற்றை அடமானமாக வைத்தல் . அஃது ஒருவன் கையில் பொருள் இல்லாத காலத்தில் அப்பொருள் நிமித்தம் செய்யப்படு வதாகும் . இவ்விரண்டும் வேண்டுதல் வேண்டாமை யில்லாதவனாகிய இறைவனுக்கு அவசியம் இல்லாதனவாம் . ஆண்டு கோடல் – ஆண்டனுப வித்தல் . மக்கள் ஆட்சி ஆண்டானுக்குப் பயன் விளைப்பது. இறைவன் ஆட்சி அடிமைக்குப் பயன் விளைப்பது ,ஆண்டவன் அருள் வடிவினனா தலின் , ஆண்டு கொள்ளுதலிலே நோக்க முடையவனாவனென்பது அடிகளின் உட்கோளாகும் .
இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளித் தமக்கு உபதேசித்த பொழுதே அடிகள் தம் உடல் , பொருள் , ஆவி எல்லாம் இறைவன் உடைமையெனக் கண்டவராதலான் , அவ்வுரிமை கருதி ,” நின் உடைமையை எங்ஙனம் செய்யினும் செய்க” என்று கூறும் அவ்வளவன்றி வேறு யாதுஞ்செய்தற்கு யான் உரிமை உடையேனல்லேன் என்பார் , “ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை யென்னினல்லால் “ என்றார். “என்னினல்லால்” என்பதன்பின் , “பிறிதொன்றும் செய்தற்கு உரிமையில் லாத “ என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன” என்று பரிமேலழகர் விளக்கியிருத்தலும் ஈண்டு அறியத்தக்கது .
அடிகள் தம்மை விருந்தினன் என்று கூறியது , தம் கண் காணா மெய்யன்பர் பலர் முற்பட்டு இறையருளிற் கலந்து இன்புற்றனராக , தாம் அப்பேறு பெறாமல் பிற்பட்டிருத்தல் குறித்தென்க . இக்கருத்தை “ பன்னாளுன்னைப் பணிந்தேத்தும் பழைய வடியாரொடுங்கூடா , தென்னாயகமே பிற்பட்டிங்கிருந்தே னோய்க்கு விருந்தாயே” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலான் அறிக . இறையருளிற் கலந்தாரெல்லா ரையும் பழையவடியார் என்றதனான் எஞ்சி நின்ற தம்மை “விருந்தினன்” என்றார். பழமை புதுமை யென்பன முறையே வீட்டின்பத்திற்குரிய தவச் செயலின் நிறைவையும் குறைவையும் குறிப்பனவாம் . புதியவன் என்னும் காரணத்தை முன்னிட்டு என்னை விட்டுவிடுவாயோ? விடலாகாது என்பார் , “விட்டிடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண் ,” இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை” என்று கூறியிருத்தலால் , உயிர் மாயாகாரியமாகிய உடல் கருவி இடம் நுகர் பொருள்களாகிய இவற்றின் தொடர்பை வெறுத்துத் தான் இறைவன் உடைமை என்பதை உள்ளவாறறிதல் வேண்டுமென்பது பெறப்படுதலான் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**************************************
பாடல் : 19 .
மடங்கவென் வல்வினைக் காட்டைநின் மன்னருட் டீக்கொளுவும்
விடங்கவென் றன்னை விடுதிகண் டாயென் பிறவியைவே
ரொடுங்களைந் தாண்டுகொ ளுத்தர கோசமங் கைக்கரசே
கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் பழைய அடியாரொடுங் கூடாத புதியன் எனக் கொண்டு என்னைக் கைவிடலாகாதென விண்ணப்பஞ் செய்துகொண்ட அடிகள், இத் திருப்பாட்டில் யான் புதியனாதற்கு ஏதுவாக நின்று என்னைப் பிணித்திருக்கும் வல்வினைக்காட்டை அருட்கனலாற் பொடியாக்கும் பேராற்ற லுடையாய் நீயே யாதலின் , என் பிறவியை வேரறக் களைந்தருளல் வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- உத்தரகோசமங்கைக் கரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே,
குன்று கொடுங்கரி உரித்து = மலை போன்ற கொடிய யானையை யுரித்து ,
வஞ்சிக் கொம்பினை அஞ்சுவித்தாய் = வஞ்சிக்கொடி போன்ற உமையம்மையை அச்சமுறச் செய்தவனே ,
என் வல்வினைக்காட்டை = அடியேனது வலிய வினையாகிய காட்டினை,
மடங்க = ஒடுங்கியழியுமாறு ,
நின் மன் அருள் தீக்கொளுவும் = நின் பேரருளாகிய நெருப்பிட்டுக் கொளுத்தும் ,
விடங்க = ஆண்மை மிக்கவனே ,
என் தன்னை விடுதி = என்னை விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,
என் பிறவியைவேரொடுங்க ளைந்து ஆண்டு கொள் = அடியேனது பிறப்பை மூலத்தொடுங் களைந்தொழித்து என்னை ஆட்கொண்டருளுவாயாக என்பது .
விளக்கவுரை :- மலை போன்ற கொடிய யானை யென்றது கயாசுரனை . உருவப் பெருமையும் கொடுங்குணமும் உடைமை பற்றிக் கயாசுரன் “கொடுங்கரிக் குன்று” என்னப்பட்டான் . நல்லோர்க்குக் கேடு விளைத்த கயாசுரனைக் கொன்று அவன் தோலைச் சிவபிரான் போர்த்தனன் என்னும் புராண கதையை உட்கொண்டு இங்ஙனம் கூறப்பட்டது . “வஞ்சிக்கொம்பு “ என்புழிக் கொம்பு உவமம் ஆகுபெயராய் இறைவியை யுணர்த்தும் . வஞ்சிக்கொடி போன்ற மெல்லிய இயல்பினையுடைய உமையம்மை யென்பது பொருள் . எல்லாவுலகங்களையும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும் இறைவனது பேராற்றற்குக் கயாசுரனைக் கொன்றது ஒரு பொருளன்று ; அவ் வீரச்செயலைக் கண்டு மெல்லிய இயல்பினையுடைய அம்மை அஞ்சியதே கருதத்தக்கதென்பார் , “கொடுங்கரிக் குன்று ரித்தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே” என்றார் . அம்மையின் அச்சத்தையும் எண்ணாது கொடிய அசுரனைக் கொன்றது , தற்பயன் கருதாமல் நல்லோர்க்கு நேர்ந்த இடுக்கணைக் களைந்து அவர்க்கு நலஞ் செய்யவேண்டுமென்னும் பேரருள் காரணமாக எழுந்த குறிக்கோள் பற்றியேயாம் . இக்குறிக்கோளைத் தம் பொருட்டும் மேற்கொள்ள வேண்டுமென்பது அடிகளின் உட்கோட் குறிப்பாகும் . அக் குறிப்பின் விளக்கமே பின்வருவது .
வினையை வல்வினை மெல்வினை யென இருதிறப்படுத்துக் கூறுப . வல்வினை ஆற்றன் மிகுதியும் பயன் விளைப்பதில் விரைவும் உடையது. மெல்வினை அத்தகையதன்று . பாண்டிய அரசன் குற்றமிலனாகிய கோவலனைக் கொலை புரிவித்த குற்றத்திற்கு ஆளானது வல்வினை காரணமாக என்பது சிலப்பதிகார ஆசிரியர் கருத்து . இதனை “வல்வினை வளைத்த கோலை மன்னவன் , செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது” என்று அவ்வாசிரியர் நயம் பெறக் கூறிய வற்றான் அறிக . நீதி பிழைத்தது பொறாது அரசன் உடம்பினின்றும் வெளிப்பட்டவுயிர் வலிய வினையால் வளைக்கப்பட்ட கோலை நிமிர்த்துச் செங்கோலாக்கியது என்று கூறிய நயம் நினைந்து இன்புறத்தக்கது .
அடிகள் தம் வல்வினையின் மிகுதி புலப்பட “ வல்வினைக் காட்டை “ என்றார். பயன்படாத மரஞ் செடிகளுடைய காட்டையழித்தற்கு நெருப்புக் கருவியாதல் போலத் ,தம் வல்வினையை யழித்தற்கு இறைவனது பேரருள் கருவியாதல் வேண்டுமென்பார் , வினையைக் காடாகவும் இறை யருளைத் தீயாகவும் உருவகஞ் செய்து கூறினார் . வினை வலிதாகலின் , அதனை யழித்தற்குரிய இறையருள் மன்னருளெனப்பட்டது . இறயருட்கு ஒறுத்தலும் அளி செய்தலும் இயல்பாதலின் , ஈண்டு ஒறுத்தல் குறித்துத் தீயாக உருவகஞ் செய்யப்பட்டது . வல்வினைக் காட்டை அருட்கனலால் எரித்தற்கு ஆண்மை இன்றியமையாததாகலின் ,இறைவனை ஈண்டு “விடங்க” என்றார் .விடங்கம் – ஆண்மை . ஆண்டவனே! நின் ஒரு கூற்றினளாகிய அம்மையின் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் மன்னுயிர் நலங்குறித்துக் கரிக்குன்று உரித்த இத்தெறுதற் குணம் என் வல்வினைக் காட்டை யழித்தற் கண்ணும் முற்படத்தக்கதாகவும் , என்னைக் கைவிடல் தகுமா என்பார் , “என்றன்னை விடுதிகண்டாய்” என்றார் . கைவிடாமற் செய்யத் தக்கது யாதென்னும் வினாவிற்கு விடையாகப் போந்தது “என்பிறவியை வேரொடுங்களைந்தாண்டுகொள்” என்பது . கொல் என்பது வேண்டுகோட் பொருளில் வந்த வியங்கோள் .
பிறவிக்கு வேராவது அவாவாகும் . “அவாவென்ப வெல்லாவுயிர்க்கு மெஞ்ஞான்றும் , தவா அப் பிறப்பீனும் வித்து “ என்பது பொருளுரை . வெளிப்படும் முளைக்கு ஆக்கந்தருவது வேராதலின் ,அதன் சிறப்புத் தோன்ற ஒடு உருபு புணர்க்கப்பட்டது . வேரிருக்க முளை களையப்படு மாயின் , மீண்டும் அவ்வேரினின்றும் முளை தோன்றும் . அது போலப் பிறவிக்கு வேராக வுயிரைப்பற்றி நிற்கும் மூல கன்மம் ஒழிக்கப்படாமல் , எடுத்த அப்பிறவி மாத்திரம் நீக்கப்படுமாயின் , அம் மூல கன்மத்தினின்றும் மீண்டும் பிறவி யுண்டாம் என்னும் கருத்தினராய் “என் பிறவியை வேரொ டுங்களைந்து “ என்றார் .
கன்மம் மூலகன்மம் எனவும் கான்மிய கன்மம் எனவும் இருவகைப் படுமென்ப. “கன்மமும் மூலங்காட்டிக் கான்மியமலமாய் நிற்கும் “ என்று சிவஞான சித்தியும் , முதற்காரணமாகிய மூலவினை பதி முதலிய பொரு ளோடொப்ப அநாதியாயுண்டென்பாரும் “ என்று சிவஞானமாபாடியமும் கூறுமாறறிக . மூல கன்மம் ஈண்டு அவாவாகும் . அதன் காரியம் அறம் பாவமாகவும் , அவற்றின் பயன் இன்ப துன்பமாகவும் கூறப்படும் . அவா மூல கன்மமாதலை , “ செம்புறு களிம்பென அநாதிமல மூழ்கியிருள் சேருமலர்விழி யென்னவே , தெளிவற்ற கேவலத் தசைவற்றிருந்துமல சேட்டை யாற் குழவிகுருடர் ,தம்பிணியினாலுற்ற பால் கோலை நோக்க அவை தமையளிப்பாரென்ன நான் , சார்கன்ம மாயையை விரும்ப நீ தந்திடச்சகலனாய் “ என்று சிவஞான முனிவர் விளக்கியிருத்தலும் அறிக . வீட்டு நிலைத் தகுதியுள்ள உயிரைப்பற்றி நிற்கும் தொடர்பை யொழித் தலே ஈண்டு மூல கன்ம நாசமாகும் ஆதலின் , அதுபற்றி அக்கன்மத்தின் அநாதித் தன்மைக்கு இழுக்கின்றென்பது .
“என் பிறவியை வேரொடுங் களைத்தாண்டு கொள்” என்றாரா யினும் , என்னை ஆட்கொண்டு என் பிறவியைக் களைக என்பதே கருத்தாகக் கொள்ளல் வேண்டும் , ஆட்கொண்டபின் பிறப்பொழித்தல் முறையாதலின் .
இனி, “ஆண்டு கொளுத்தர கோசமங்கைக்கரசே” என இயைத்துப் பொருள் கோடலுமாம் . அங்ஙனம் கொள்ளுங்கால் “கொள்……….அரசே” என்பதை வினைத்தொகையாக்குக .
இதன்கண் , வல்வினைக்காட்டைக் கொளுத்திப் பிறவியை வேரொடுங் களைதல் வேண்டும் என்பது கூறப்பட்டிருத்தலின் ,பிரபஞ்ச வைராக்கியம் வெளிப்பட்டு நிற்றல் அறிக .
******************************************
பாடல் :20 .
கொம்பரில் லாக்கொடி போலல மந்தனன் கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர் நண்ணுகில்லா
வும்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
யம்பர மேநில னேயனல் காலொடப் பானவனே.
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் தம் வல்வினைக் காட்டை அருட்கனலாற் கொளுத்தி என்னை ஆட்கொள்ளவேண்டுமென்று இறைவன் பால் விண்ணப்பஞ் செய்து கொண்ட அடிகள் ,இத் திருப்பாட்டில் அவ்வி னைத் தொடர் அறாமையாற் கொழு கொம்பில்லாத கொடிபோற் சுழன்று வெதும்பலானேன் ; இந் நிலையிற் கைவிடலாகாதென வேண்டுகின்றார் .
பதவுரை :- விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய் = தேவரும் அணுகுதற்கு இயலாத மேலிடமாகிய சிவலோகத்திருப்பவனே ,
உத்தரகோசமங் கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே ,
நிலனே அம்பரமே காலொடு அனல் அப்பு ஆனவனே = மண்ணும் விண்ணும் காற்றும் நெருப்பும் நீரும் ஆனவனே ,
கொம்பர் இல்லா = கொழுக்கொம்பில்லாத,
கோமளக்கொடி போல் அலமந்தனன் = இளங்கொடி போலச் சுழன்று வெம்புகின்றேனை ; வாடுகின்ற அடியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- உம்பர் – மேலிடம் . இஃது இந்திரன் முதலிய தேவர்கள் வாழும் உலகங்களைக் குறிக்கும் ஆதலின் , அவற்றை விலக்கிச் சிவலோகத்தைப் புலப்படுத்தற்கு , “விண்ணர் நண்ணுகில்லா” என்னும் அடை புணர்க்கப்பட்டது . விண்ணுலக வாழ்க்கைவுடைய தேவர்க்கு இருப்பிடனாதலை விலக்கிய அவ்வளவன்றி , அன்னார் அணுகுதற்கும் அரியதென்பதைப் புலப்படுத்தற்கு “நண்ணுகில்லா” என்று கூறப்பட்டது . நண்ணுதல் – அணுகுதல் . சிவலோகம் விண்ணுலக முதலிய எல்லா வுலகங்களும் தன்னுள் வியாப்பிய மாக அடங்கி நிற்ப, தான் அவற்றை வியாபித்துக் கடந்து நிற்பதொன்றாகலின் , இவ்வாறு கூறப்பட்டது . திருக்கோவையில் “ வான் கழிதான் கெழுமி” என்புழி வானையுங் கடந்து நிற்பது என்னும் பொருடோன்ற , “வான்கழி சிவலோக மெனினும் அமையும் “ என்று பேராசிரியர் உரை கூறியதுங் காண்க .
புண்ணியப் பயன் துய்ப்பவராகிய தேவரும் அணுகுற்கு அரிய மேலிடத்துத் திகழும் இறைவன் , மெய்யன்பர்க்கு எளியனாய் இந் நிலவுலகத்துத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிக் காட்சியளிக்கும் இயல்பினன் என்பது தோன்ற , “ உத்தரகோசமங்கைக்கு அரசே” என்றார் . இஃது அருமையில் எளிய அழகாகும். ஈற்றடியில் கூறப்பட்ட பூதங்களின் வைப்பு முறை பொருளியையிற்கேற்ப மாற்றிக் கொள்ளப் பட்டது , நிலமே யம்பரமே “ எனவும் , “காலொடு அனல் அப்பானவனே” எனவுங்கொள்க . எல்லாப்பொருளும் தோன்றுதற்கு இடனாக இருத்தலின் நிலத்தையும் , அப்பொருள்களைத் தன் அகப்படுத்து நிற்றலின் ஆகாயத்தையும் ஒருங்கே யியைத்து , “நிலனே யம்பரமே” எனவும் ,அப்பொருள்களைச் சலிப்பித்தல் சுடுவித்தல் குளிர்வித்தல் என்னும் தொழில் இயைபு பற்றிக் காலொடு அனல் அப்பு எனவும் கூறினர் . ஏகாரமும் ஒடுவும் எண்ணுப்பொருளன. “என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ,யொன்று வழியுடைய வெண்ணினுட் பிரிந்தே” என்னும் விதியால் ஒடுவென்னும் எண்ணிடைச் சொல்லை அனலோடு அப்பொடு என இயைக்க . இங்ஙனம் ஈண்டு ஐம்பெரும் பூதங்களும் ஆனவனே என இறைவனை விளித்து , ஒரு நயம் பற்றி யென்க. அந் நயம் பின்வரும் விளக்கத்தால் அறியலாம் .
கொம்பு – இளங்கொடி படர்தற்கு ஆதரவாக அமையும் மரக்கிளை ,கோமளம் என்பதைக் கொடியோடியைத்து இளங்கொடி யெனக் கொள்ளப்பட்டது .முதிர்ந்த கொடியாயின் அலமருதலும் வெம்புதலும் எளிதிற் பற்றா . அதனால் அதனை விலக்குதற்கு இளங்கொடி யென்னப்பட்டது . கோமளம் – இளமை ; மென்மையுமாம் . கொழுகொம்பு இல்லாத இளங்கொடி சுழன்று வாடுதல் போல , இறைவனது திருவருட் சார்பு இல்லாமையால் தமக்கு ஏற்பட்ட நிலை பேறின்மையையும் வாட்டத்தையும் புலப்படுத்துவாராய் , “கொம்பரில்லாக் கொடிபோலலமந்தனன் வெம்புகின்றேனை என்றார் . அலமருதல் – சுழலுதல் . அலமந்தனன் என்னும் தன்மை யொருமை வினை முற்று . வினை யெச்சமாய் வெம்புகின்றேன் என்னும் வினையைக் கொண்டு முடிந்தது . வெம்புதலாகிய உவமேயப் பொருளின் அடையை உவமைக்கும் ஏற்றி அதற்கு ஏது வெயில் வெப்பமெனவும், உவமேயப்பொருளின் வாட்டத்திற்கு ஏது மலவெப்பமெனவும் கொள்ளல் வேண்டும் .
கொழுகொம்பில்லாமற் சுழலும் இளங்கொடி அளிக்கத்தக்க தென்பதை முல்லைக்கொடிக்குத் தேரீந்த பாரிவள்ளலின் இரக்கச் செயலான் அறியலாம் . இளங்கொடிக்குப் பற்றுக்கோடு இன்மையாற் சுழற்சியும் , வெயில் வெப்பத்தால் வாட்டமும் உளவாதல் போலத் , தமக்குத் திருவருட் சார்பின்மையால் நிலையின்மையும் மலவெப்பத் தால் வாட்டமும் உளவாயின என்பார் , இங்ஙனம் கூறினர். இங்ஙனம் தமக்கேற்பட்ட திகைப்பிற்கும் அது நீங்கித் தேறுதற்கும் இறைவனே காரணமாவான் என்னும் உண்மை, ஈற்றடியில் ஐம்பெரும் பூதங்களின் வடிவமாக இறைவனைக் கூறியமையாற் குறிப்பின் உணரப்படும் . அக்குறிப்புப் பொருள் வருமாறு :-
ஒரு கொடி தோன்றுதற்கு ஆதாரமாகவும் வெளிப்பட்டு வளர் வதற்கு இடனாகவும் உள்ளவை முறையே நிலமும் வெளியுமாகும் . அம் முறையில் தாம் பிறத்தற்கும் , உடலோடு கூடிப் போக்குவரத்துச் செய்தற்கும் இறைவன் ஆதாரமாகவும் இடனாகவும் இருத்தலின் , “ நிலமே யம்பரமே “ எனவும் அக்கொடி பற்றுக்கோடின்றிச் சுழலுதற் குக் காற்றும் , வெம்புதற்குத் தீயும் , அவ்வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறுதற்கு நீரும் காரணமாதல் போல , வினையெச்சத்தால் திருவருட் சார்பு பெறாமல் தாம் சுழலுதற்கும் , வாடுதற்கும் , அவ்வாட்டம் நீங்கப்பெற்றுத் திருவடி நீழலில் குளிர்ந்த இன்பம் பெறுதற்கும் காற்றுத் தீ நீர் என்னும் பூதங்களின் வடிவமாக இறைவன் விளங்குத லின் , “ காலொடு அனல் அப்பானவனே “ எனவும் கூறியருளினர் என்பது .
மலவெப்பத்தால் வெம்பிக்கிடக்கும் அடியேனைக் குளிர்ந்த திருவருள் வெள்ளத்தில் மூழ்குவித்து இன்புறுத்துவதே நின் இயல்பா கவும் , அங்ஙனம் செய்யாமல் கைவிடல் தகுமா என்பார் , “ வெம்புகின் றேனை விடுதிகண்டாய்” என்றார். “ கோமளமே “ என்பது அழகே எனப் பொருள்பட்டு இறைவனைக் குறிக்கும் என்று கொள்வாரும் உளர். ஈண்டு இயைபின்மையால் அஃது உரையன்மை அறிக .
இதன்கண் , கொழு கொம்பில்லாத கொடி போலச்சுழன்று பாசப்பிணிப்பால் வாடுகின்றேன் என அடிகள் உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றக் கூறியிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாயவாறறிக .
************************************
பாடல் : 21 .
ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல னாலலைப்புண்
டெனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை யேன்மனத்துத்
தேனையிம் பாலையுங் கன்ன லையுமமு தத்தைமொத்
தூனையு மென்பினை யும்முருக் காநின்ற வொண்மையனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் வினைத்தொடர் அறாமையால் கொழு கொம்பில்லாத கொடி போலத் திருவருட் சார்பு பெறாமல் சுழன்று வாடுகின்றேன் என்று கூறிய அடிகள் , இத்திருப்பாட்டில் அங்ஙனம் சுழன்று வாடுதற்கு ஏது ஐம்புலன்கலின் தாக்குதலேயாம் என்று விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- வினையேன் மனத்து = தீவினையுடையேனது உள்ளத்தில் புகுந்து ,
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து = தேன் பால் கருப்பஞ்சாறு தேவாமுதம் என்னும் இவற்றை யொத்து இனிமை பயந்து,
ஊனையும் என்பினையும் = என் உடல் இறைச்சியையும் எலும்புகளையும் ,
உருக்கா நின்ற ஒண்மையனே = உருக்கிக் கரையச் செய்கின்ற ஞானவடிவினனே ,
எந்தாய் = என் தந்தையே ,
ஆனை வெம் போரில் = யானைகளின் கொடிய போர் நிகழ்ச்சியில் அகப்பட்ட ,
குறுந்தூறு என = சிறிய செடியை யொப்ப ,
புலனால் அலைப்புண்டேனை = ஐம்புலங்களாலும் அலைக்கப்பட்ட சிறியேனை ,
விட்டிடுதி = கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- இறையருட் பேற்றிற்குரிய தூய்மையில்லாத மனம் என்பார் , “வினையேன் மனத்து” என்றார் . வினை ஈண்டுத் தீவினையை யுணர்த்தும் , புலனால் அலைப்புறுதலின் , வினைப்பயன் நுகர்ச்சிக் கேற்ப மக்கள் மனநிலை திரியும் இயல்பினதாகலின் , தீவினைப்பயனால் துன்புறும் நிலையில் தம் உள்ளம் தூய்மையில்லாததாகும் எனவும், இந் நிலையிலும் ஆண்டவன் இனியனாய்த் தம் உள்ளத்தில் புகுந்து அதனை நெகிழ்வித்ததற்குக் காரணம் , அவன் அருட்பெறுக்கே யெனவும் கருதி அடிகள் இன்புறுகின்றார் . இறையருள் இனிமைக்குத் தாம் நுகர்ந்த மக்களுணவாகிய தேன் பால் கருப்பஞ்சாறு என்னும் இவற்றின் சுவையை ஒப்புக்கூறப் புகுந்த அடிகள் , அப்பொருள்களால் அறியப்படாத சிறந்த தெய்வ நறுஞ் சுவையைத் தம் அனுபவத்தில் உணர்ந்தமையின் , தேவருண வாகிய அமுதத்தையும் உடன் புணர்த்துத் “ தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து “ என்றார் . மனத்து என்பதன் பின் புகுந்து என்னும் சொல்லும் , ஒத்து என்பதன் பின் இனிமை பயந்து என்னும் சொற்களும் அவாய் நிலையில் வருவித்துரைக்கப்பட்டன . தேன் பால் முதலியன தம்மை உண்டாருடைய ஊனையும் எலும்புகளையும் பெருகச் செய்யுமல்லது உருகச் செய்யா , இறையருள் அங்ஙனமின்றிச் சுவைத்தலின் , தேன் பால் முதலியவற்றை யொத்து ஊனையும் எலும்புகளையும் உருக்கியதென்பது அடிகள் அனுபவத்தில் கண்டது .ஊன் பெருகப் பெருக உள்ளொளி சுருங்குமென்பதும் , அன்பு நிலையில் ஊன் உருக உருக உள்ளொளி பெருகுமென்பதும் , அடிகள் அனுபவமென்பதனை, “ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி “ என்று அடிகள் பிறிதோரிடத்து அருளிச்செய்த பாடற்பகுதியும் தெளிவுறுத்தும் . மெலிய ஊன் உருகுதல் எளிது ; வலிய எலும்பு உருகுதல் அரிது . ஆண்டவன் அருள்நிலை அவ்வலிய என்பினையும் கரையச்செய்யும் என்ற இதனால் அடிகளின் உள்ளக் குழைவும் திருவருட்டோய்வுமாகிய இவற்றின் பெருமை புலனாம் . எலும்புருக்கி என்னும் நோய் வலிய என்பை எளிதில் உருக்கும் இயல்பினதேயெனின் , அவ்வுருக்கத்தின் பயன் அடங்காத துன்பமாக முடியும் . அருட்பதிவால் ஊறும் என்பு முருகுதல் வரம்பிகந்த இன்பம் பயப்பதாகும் மேலும் நோயினால் என்பும் ஊனும் கரைந்த நிலையில் உள்ளொளி உண்டாதற்குச் சிறிதும் இடனின்றென்பதும் கருதத்தக்கது .
இறைவன் தம் உள்ளத்தில் இனியனாய் நின்று ஊனையும் என்பினையுமுருக்குதல் தமக்கு மெய்யுணர்வாகிய உள்ளொளியைப் பெருக்கி நலஞ் செய்தற்பொருட்டென்பார் , அவ்வுதவிச் செயற்கேற்ப அப்பெருமானை “ஒண்மையனே” எனவும் ஞானச்செல்வத்தை மகன்மை முறையில் வைத்துத் தமக்கு வழங்க முற்பட்டவியல்பு குறித்து, “எந்தாய்” எனவும் விளிகொள்ளலானார் . ஒண்மை – ஞானம் . ஐம்புலங்களாலும் தாம் அலைக்கப்பட்டு வருந்துதற்கு உவமை கூறப்புகுந்த அடிகள் யானைப் போரிடைப்பட்ட சிறு கொடியைக் கருதலானார் . பிராணிகளுள் உருவகத்தால் மிகப்பெரிது யானை ; மதச்செருக்கு மிக்கது . அவ்யானைகள் ஒன்றனோடொன்று தாக்குங்கால் , அவற்றின் காலடியிற் பட்ட சிறுசெடி மிதிபட்டுச் சிதைந்தலைதல் போலப் , புலங்களின் தாக்குதலால் அறிவு கலங்கி நிலை பேறின்றித் தவிக்கலானேன் என்பார் , “ஆனைவெம்போரிற் குறுந்தூறெனப் புலனாலலைப்புண்டேனை “ என்றார். அப்போரிடைப்பட்ட சிறு புதர் , வேர்பறிக்கப்படாமல் அலைப்புற்றுச் சிதைவடைதல் போலப் புலங்களின் தாக்குதலால் தாம் இறவாமல் கலக்கமுற்று வருந்துதலை இங்ஙனம் குறிப்பிடுவாராயினர் . எம்பெருமா னே! இங்ஙனம் துன்புறும் நிலையில் அடியேனைக் கைவிடல் அருட்கடலாகிய நினக்குத் தகுமாவென்பார் , “ விட்டிடுதி கண்டாய் “ என்றார் .
இதன்கண்,” ஆனைவெம்போரிற் குறுந்தூறெனப் புலனாலலைப் புண்டேனை “ எனப்பொறி புலன்களாகிய துன்பத்தை வெறுத்துக் கூறியிருத்தலின் பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
***************************************
பாடல் : 22 .
ஒண்மைய னேதிரு நீற்றையுத் தூளித் தொளிமிளிரும்
வண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட்
கண்மைய னேயென்றுஞ் சேயாய் பிறர்க்கறி தற்கரிதாம்
பெண்மைய னேதொன்மை யாண்மைய னேயலிப் பெற்றியனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஐம்புலன் களின் தாக்குதலால் அலைப்புண்டு வருந்துகின்றேன் என்று கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் அத் தாக்குதலில் அகப்படாமலிருத்தற்கு இன்றியமையாத நின் அணுக்கத்தை யான் மெய்யன்பர் குழுவுட் படாமையால் பெறவியலாமல் வருந்துகின்றேன் ; காத்தருள்க என்று குறிப்பிற் புலப்பட அருளிச்செய் கின்றார் . “,மெய்யடியவர்கட் கண்மையனே” என்பது இக்குறிப்பிற்குச் சான்றாம் .
பதவுரை :- மெய்யடியவர்கட்கு என்றும் அண்மையனே = மெய்யொழுக்கமுள்ள தொண்டர்க்கு எஞ்ஞான்ற்ம் அணிமையில் உள்ளவனே ,
பிறர்க்கு என்றும் சேயாய் = தொண்டரல்லாத பொய்யொழுக்கமுடை
யார்க்கு எக்காலமும் சேய்மையில் உள்ளவனே ,
அறிதற்கு அரிதாம் தொன்மை பெண்மையனே = காட்சி முதலிய அளவைகளால் அறிதற்கு அரிதாகிய பழைய பெண்டன்மையுடை யவனே ,
ஆண்மையனே = அத்தகைய ஆண்டன்மையுடையவனே ,
அலிப்பெற்றியனே = அலித்தன்மை யுடையவனே ,
ஒண்மையனே = ஒளிப்பிழம்பாகவுள்ளவனே ,
திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளிரும் வெண்மையனே = திருநீற்றை நிறையப்பூசி அந் நீற்றொளியால் விளங்கும் வெண்னிற முடைய வனே ,
விட்டிடுதி = என்னைக் கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- மெய்யடியவராவர் தவ வேடத்தில் மறைந்தொழுகு தலின்றி அகமும் புறமும் ஒத்த தூய்மையுடையவராய் , இறைவனிடத்துத் தொண்டு பூண்டொழுகுவோர் . யாண்டும் நீக்கமற நிறைந்திருக்கும் இயல்புடைய இறைவன் , ஒரு சாரார்க்குச் சேயனாதலும் , மற்றொரு சாரர்க்கு, அணியனாதலும் எவ்வாறு பொருந்துமெனின் , இடையீடின்றிப் பெய்கின்ற மழை நீரைப் பள்ள நிலம் ஏற்றுக் கொண்டிருத்தலும் , மேட்டு நிலம் ஏற்றுக்கொள்ளாமல் வழிந்து போக விடுதலும் கண்கூடன்றே? அவ்வாறே இறைவனது நிறையருளைத் தவத்தால் தூய்மை எய்தினர் உள்ளம் பற்றிக் கோடலும் , ஏனையோர் உள்ளம் பற்றாமல் விடுதலும் உண்மையின் , “மெய்யடியவர்கட் , கண்மையானே யென்றும் சேயாய் பிறர்க்கு “ என்றாராதலின் , அது பொருந்துமென்க . “என்றும்” என்னும் சொல் இடைநிலை விளக்காக நின்று ஈரிடத்தும் இயையும் .
மெய்யடியவரை முற்பட வைத்து அவர்க்கு அண்மையனே என்றமையால் , இறைவன் மெய்யன்பரை நாடித் தானே யடைபவன் என்பதும் , சேயாய் என விலக்கத்தை முற்படக்கூறிப் “பிறர்க்கு” என பிற்பட வைத்தமையால் மெய்யன்பரல்லாதார்க்கு இறைவனது விலக்கம் முற்படும் என்பதும் குறிப்பிற் புலனாயவாறறிக . நல்லோரைக் கூறுங்கால் அவர் பெருமை வெளிப்படக்கூறுதலும் , தீயோரைக் கூறுங்கால் அவர் தீமை வெளிபடாவாறு வேறொருபடியாகக் கூறுதலும் உலகத்து உயர்ந்தோர் வழக்கு . ஒருவருடைய நல்லனவுந் தீயனவுமாகிய குணங் களைக் கூறுங்காலும் , “சீரெலாந்தூற்றிச் சிறுமை புறங்காத்துக் “ கூறவேண்டு மென்னும் நீதியும் ஈண்டு நினைக்கத்தக்கது . அம்முறையே மெய்யன்பரை மெய்யடியவரென்றும் , மெய்யன்பில்லாதாரைப் பிறர் என்றும் கூறிய நயம் இன்புறத்தக்கது .
இறைவனைப் பெண் ஆண் அலித்தன்மைகளை யுடையவனாகக் கூறியது, வழிபாடு செய்வார் தகுதி நோக்கியென்க . சத்தியும் சிவனுமாக விளங்குதலால் பெண்மையும் ஆண்மையுமுடைமை அறியலாம் . பிரமம் என்னும் சொல்லால் குறிக்குங்கால் அலித்தன்மை புலப்படும் . சத்தி பெண்பாலும், சிவன் ஆண்பாலும், பிரமம் ஆணும் பெண்ணும் அல்லாத ஒன்றன் பாலுமாம் . பிரமம் என்னும் சொல்லாற் குறிக்கும் அந் நிலையே ஈண்டு அலியெனப் படும் . வடநூலார் பிரமம், என்னுஞ் சொல்லை நபுஞ்சகலிங்கம் என்ப . வடமொழிக் கவிஞரொருவர் தம் நெஞ்சை முன்னிலைப் படுத்திப் , பிரமப்பொருளைப் பற்றுமாறு சாதுரிய முறையில் கூறிய ஒரு சுலோகக் கருத்து ஈண்டு நினைந்து இன்புறத்தக்கது .
அது வருமாறு :- நெஞ்சமே! நினக்கு வேலை யாண்டு? சாரக்கடவ நெறியைக் குறித்து அடிக்கடி அலைகின்றாய் ; ஆண் பெண் இருபாலார் பக்கலிலும் அணுகுதல் தகுதியன்று ; அடிக்கடி மக்கட் குழுவில் செல்லக் கருதுதல் நகைப்பிற்கிடனாகும் ; ஆதலின், அங்ஙனம் செல்லற்க நின்னொடு ஒத்த இனமும் பேரின்பம் பயப்பதுமாகிய பிரம்மத்தைப் பற்றிச் சார்ந்து நலனெய்துக “வென்பது . இதன்கண் நெஞ்சமும் பரமமும் ஒத்த இனமென்றது, இரண்டும் நபுஞ்சகலிங்கம் ஆதல் பற்றி . மக்கட் குழுவிற் செல்லுதல் நகைப்பிற்கிடனாமென்றது , நெஞ்சம் நபுஞ்சகப் பாலாதலின், ஆணும் பெண்ணுமாகிய மக்கட்குழு ஏற்றுக் கொள்ளமாட்டா தென்பது குறித்தாம் .
உலகத்து மக்களுடைய ஆண்மை பெண்மை களும் அலித்தன்மையும் காட்சி முதலிய அளவைகளால் அளந்தறிதற்கு எளியன வென்பதும், கன்மத்திற் கீடாகப் புதிது புதிதாகப் படைக்கப்பட்டன வென்பதும் , இறைவனுடைய அத்தன்மைகள் அவ்வளவைகளால் அளந்தறிதற்கு அரியனவென்பதும் ,வழிபடுவார் தகுதிக் கேற்பத் தானே படைத்துக்கொள்ளப்பட்ட பழமையுடையன வென்பதும் புலப்பட , “அறிதற்கரிதாம் “ எனவும், “தொன்மை” எனவும் கூறப்பட்டன . “அறிதற்கரிதாம் “ என்பதையும் “தொன்மை” என்பதையும் பெண்மை ஆண்மை அலிப்பொறி என்பவற்றோடு தனித்தனி இயைத்துக்கொள்ளல் வேண்டும் . பெற்றி – தன்மை . இறைவனுடைய தன்மைகள் பிறரால் அறியப்படாதென வென்பதை “தன்மை பிறரால் அறியாத தலைவா” எனப் பிறிதோரிடத்து அடிகளும் , “இன்ன தன்மையன் என்றறியொண்ணா எம்மானை “ எனச்சுந்தரமூர்த்திகளும் கூறியவற்றான் அறியலாம் .
இறைவன் அடிகளுக்கு உபதேசித்த ஞான்று ஞானாசிரியனாக எழுந்தருளி அளித்த கண் கொள்ளாக்காட்சி, அடிகள் அகத்தே நின்று இன்புறுத்தலின் , அத் திருமேனியின் செந் நிறப் பேரொளியில் ஈடுபட்டு , “ஒண்மையனே” எனவும் , அச்செம் மேனியின் மேல் பூசப்பட்ட திருநீற்றொ ளியால் திகழும் வெண்ணிறப் பேரொளியை நினைவு கூர்ந்து , “திருநீற்றை உத்தூளித் தொளிமிளிரும் வெண்மை யானே” எனவுங்கூறினர். உத்தூளித்தல் – நீரிற் குழையாமல் நிறையப் பூசுதல் . ஆண்டவனது ஞானாசிரியத் திருக்கோலத்தை ஈண்டுக் குறிப்பிட்டமையால் ,”யார்க்கும் அறிவரிய திருமேனிக்காட்சி அடியேற்கு எளிவர அருளுதற்கு ஏதுவாகிய கருணை உளது என்னும் உறுதி கடைப்பிடித்தேனை எங்ஙனம் கைவிடல் கூடும் “ என்னும் உட்கோளுடையார் அடிகள் என்பதும் , அவ்வுட்கோட் பயனை வெளிப்படுத்துக் கூறுவாராய் , “விட்டிடுதி கண்டாய்” என்றார் என்பதும் புலனாம் .
இதன்கண், அடிகள் இறைவனது ஞானாசிரியத் திருக்கோலதில் ஈடுபட்டு உலகியலை வெறுத்து நின்றமை பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் தோன்றுதல் அறிக .
**************************************
பாடல் :23 .
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன் பின்
வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி லோகெடுவேன்
மற்றடி யேன்றன்னைத் தாங்குந ரில்லையென் வாழ்முதலே
யுற்றடி யேன்மிகத் தேறிநின் றேனெனக் குள்ளவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் மெய்யன்பர் குழுவுட் படாமையால் நின் அணுக்கத்தைப் பெற இயலாமல் வருந்துகின்றேன் என்று குறிப்பிற் புலப்படக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் , அங்ஙனம் மெய்யன்பர் சார்பு பெறாமைக்குத் தம் மனமொழி மெய்கள் செந்நெறிப்படாமையே ஏதுவாகு மென்பதை வெளிப்படக்கூறி விண்ணப்பம் செய்து கொள்ளு கின்றார் .
பதவுரை :- என் வாழ் முதலே = என் வாழ்க்கைக்கு மூலகாரண மானவனே ,
பெற்றது கொண்டு = நீ தரப் பெற்றவனாகிய மனமொழிமெய்களைக் கருவியாகக் கொண்டு ,
பிழையே பெருக்கி = தீங்குகளையே மிகைபடச் செய்து ,
சுருக்கும் அன்பின் வெறுமை அடியேனை = அன்பினைச் சுருங்கச் செய்கின்ற போலித்தொண்டனாகிய என்னை ,
விடுதி = கைவிட்டுவிடுவாயோ? ,
விடில்கெடுவேன் = அங்ஙனம் கைவிடுவாயாயின் கெட்டொழிவேன் ,
எனக்கு உள்ளவன் = எனக்கு உள்ளத்தில் விளங்கும் ஆதரவாளனாக ,
அடியேன் உற்று மிகத் தேறி நின்றேன் = அடியேன் ஆராய்ந்து நின்னைப் பெரிதும் தெளிந்துள்ளேன் ,
அடியேனைத் தாங்குநர் மற்று இல்லை = இந் நிலையில் அடியேனைக் காப்பவராக வேறு யாருமில்லை (நீயே காத்தருளல் வேண்டும் ) என்பது .
விளக்கவுரை :- இறைவன் எல்லாவுயிர்களுக்கும் மாயையினின்று கன்மத்திற் கீடாக உடல் முதலியன உதவும் நிமித்த காரணனாயுனும், ஈண்டு அடிகள் “என் வாழ்முதலே” என்று சிறப்பு முறையில் குறிப்பிட்டு விளித்தது , பின்னர்க் கூறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுத் தம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு அப்பெருமான் பாலதாம் என்பதைப் புலப்படுத்தற் கென்க . முதல் – காரணம். பெற்றது என்பது ஈறு தோன்றிய சாதியோரு மையாக நின்று மன மொழி மெய்களையுணர்த்தும் , அம்மூன்றும் காரணம் என்னும் ஓரின மாதலின் . “அஞ்சுவ தஞ்சாமை பேதமை “ என்னும் குறட்பாப் பகுதியும் , அதற்குப் “ பாவமும் பழியுங் கேடும் முதலாக அஞ்சப்படுவன பல வாயினும் சாதி பற்றி அஞ்சவது என்றார். என்று பரிமேலழகர் கூறிய உரையும் ஈண்டு நினைக்கத்தக்கன .
“வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் , தாழ்த்தச்சென்னியும் தந்த தலைவன்” என்று தமிழ் மறை கூறியபடி மன மொழி மெய்களாகிய முக்கரணங்களும் , இறைவனை வழிபட்டுய்தற் பொருட்டுத் தமக்கு அப் பெருமானால் தரப்பட்டனவாம் என்னும் உண்மையுணர்ந்து , அப்பேருப காரத்தைப் புலப்படுத்துவாராய் , “பெற்றது கொண்டு”என்றார் . அக்கார ணங்களால் வழிபாடு செய்து, அன்பைப் பெருக்கி இறையருளைப் பெற வேண்டியது கடமையாக, அக்கடமையை மறந்தும் ,இறைவன் திரருவுளக் குறிப்புக்கு மாறாகவும் தீங்குகளையே மிகுதியாகச் செய்யலானேன் என்பார் , “ பிழையை பெருக்கி” என்றார் . உலகத்து மக்கள் செயல்கள் நல்லனவும் தீயனவுமாகவே பெரும்பாலும் நிகழ்வன; என் செயலோ நல்லது சிறிதும் கலவாத தீங்காகவே முடிந்தது என்பார் ., “ பிழையே” எனத்தேற்றே காரம் இயைத்தும் அப்பிழையும் ஓரளவிலன்றி மிகுதியாயிற்றென்பார் , “பெருக்கி” எனவுங் கூறினர்.
பிழைகளாவன – மன மொழி மெய்களால் முறையே தீயன நினைதலும் பேசுதலும் செய்தலுமாம் . பிழை பெருகப் பெருக அத்துணை அன்பு தேய்ந்த தென்பார் , “ சுருங்கும் அன்பு “ என்றார் . அன்பு அகத்ததா யினும் , நன்மொழியும் நற்செயலும் அன்பினால் நிகழ்வனவாதலின், அவை யும் அன்பென்ற அளவில் அடங்கும் என்பது . சுருங்கும் அன்பின ….அடியேன்” என்பதனை, “சென்று சேக்கல்லாப்புள்ள…..குளம்” என்பது போலக் கொள்க . பிழையைச் சுருக்கி அன்பைப் பெருக்குதல் மெய்யடியார் இயல்பாகும் .அவ் வியல்புக்கு மாறாகத் தம் செயல் நிகழ்தலின் , தம்மை “வெற்றடியேன்” என்றார் . என் அடிமை பயனற்றது எனக்கொண்டு என்னைக் கைவிடுவா யாயின் , யான் கெட்டொழிய நேருமே என்பார், “விடிலோகெடுவேன் “ என்றார். ஓகாரம் அசை நிலை.
இனி, அடிகள் தம்மைக் கைவிடலாகா தென்பதற்குக் காரணங் கூற முற்படுகின்றார் . “உள்ளவன் “ என்பது உள்ளத்தில் நின்று தாங்கிக் காப்பவன் என்னும் பொருட்டு. பின்னர்த் “தாங்குநரில்லை” என்றதனால் ஈண்டுத் தாங்குபவன் எனக்கொண்டும் , ஆகவென்பதை வருவித் தியைத்தும் உரைக்கப்பட்டன . உறுதல் – அழுந்தி ஆராய்தல் . தேறுதல் – தெளிதல் . அத்தெளிவு நூலறிவானும் அநுபவ வுணர்வானும் நன்கு ஆராய்ந்து மேற் கொள்ளப்பட்டது என்பது புலப்பட “மிக” எனவும், அது முன்னரே துணியப் பட்டது என்பது தோன்ற , இறந்த காலத்தால் “தேறிநின்றேன்” எனவுங் கூறினர் . தேறுதற்குச் செயப்படு பொருளாக நின்னை யென்பது அவாய் நிலையான் வருவித்துரைக்கப்பட்டது .
ஆண்டவனே!
“என்னில் யாரும் எனக்கினி யாரிலை
என்னி லும் இனி யானொரு வன்உளன்
என்னு ளேயுயிர்ப் பாய்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே “
என்றபடி , என் உள்ளும் புறமும் நின்று, என்னைப் பாதுகாப்பவன் நீயே யென ஆராய்ந்து தெளிந்துளேனாதலின் ,இந்நிலையில் என் வாழ்முதலா கவும் , என்னால் தெளியப்பட்ட வனாகவுமுள்ள நின்னையன்றி , அடியேனை ஆதரித்துக் காப்பாற்றுவார் வேறு யாருமில்லை யென்பார் , “ மற்றடியேன்றன்னைத் தாங்குநரில்லை “ என்றார். தாங்குநர் – மெய்யன் பின்றிப் பிழையைப் பெருக்கி அதனாற் கீழ்வீழும் நிலையில் வீழாவாறு எடுத்துக் காப்போர் . இறுதியில் நீயே காத்தருள வேண்டும் என்பது இசையெச்சமாகும் .
இதன்கண் , பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்புடைய வாழ்க்கை வெறுக்கத்தக்கது என்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக.
************************************
பாடல் : 24 .
உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுழனி
வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட் போதலொட்டா
மெள்ளன வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை யெறும்பெனவே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் தம் மன மொழி மெய்கள்செந் நெறிப்படாமையால் நேர்ந்த இடையூற்றை விண்ணப்பித்துக் கொண்ட அடிகள் , இத்திருப்பாட்டில் அக்கரணங்களுள் மனம் பொறி வழிச்சென்று கொணரும் புலன்களால் விளயும் தடையை யெடுத்துக்காட்டி இரங்குகின்றார் .
பதவுரை :- மா தடக்கை பொள்ளல் நல் வேழத்து வியன் உரியாய் =
மிகப்பெரிய துதிக்கையில் துளையினையுடைய நல்ல யானையின் அகன்ற தோலையுடையவனே ,
நின் கண் போதல் ஒட்டா = நெஞ்சம் நின்பாற் சாரவொட்டாதபடி ,
நெய்க்குடம் தன்னை எறும்பு என = நெய் நிறைந்த குடத்தை எறும்பு மொய்த்துத் தடை செய்தல் போல ,
புலன் மெள்ளன மொய்க்கும் = புலன்கள் மெல்ல நெருங்கிச் சூழ்ந்து தடை செய்வன ,
உள்ளன நிற்க = அதனால் தகுதியுள்ளன நிற்ப ,
இல்லனவே செய்யும் = தகுதியில்லாதனவற்றையே செய்யும் ,
மையல் துழனி வெள்ளன் அலேனை = மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடைய தூயோனல்லாதவனாகிய சிறியேனை ,
விடுதி = கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- பொள்ளல் – துளை . நல் வேழம் என்றது , எல்லாம் வல்ல இறைவன் திருமேனிக்கு அதன் தோல் போர்வையாகப் பயன்படும் பேறு குறித்தாம் . வியன் என்பதை உரியோடு இயைத்து அடையாக்குக. யானையை உரித்துப் போர்த்த புராண கதைக் குறிப்பை ஈண்டுக் குறிப்பிட்டதில் ஒரு பொருணயம் புலனாம் . எறும்பு கடை யானை தலையென்னும் உலக வழக்குப்படி பிராணிகளுள் மிகப்பெரிய உருவமு டையது யானை ; மிகச்சிறிய உருவமுடையது எறும்பு . அத்தகைய யானையைக் கொன்று அடக்கிய ஆற்றல் படைத்த இறைவனுக்குப் புலங்களாகிய எறும்புகளை யொழித்தல் அரிதன்று என்பது அந் நயம் என்க.
“நின்கட் போத லொட்டா” என்புழிச் “செல்லுமளவுஞ்செலுத்து மின் சிந்தையை” என்னும் பெரியோர் உபதேசப்படி இறைவ னிடத்துச் சேரற்குரியதும் , புலன்களால் தடைப்படுத்தப்படுவதும் நெஞ்சம் ஆதலின் , போதற்கு வினை முதலாக அது வருவித் துரைக்கப்பட்டது . நெஞ்சம் இறைவன் பக்கல் அணுகவொட்டாமல் அதனைத் தடை செய்வன உலகியற் பொருள் நுகர்ச்சியாகிய புலன்களாம் .அங்ஙனம் தடை செய்தற்குப் பொருத்தமான ஓர் உவமையை அடிகள் எடுத்தாளுகின்றார் .
மட்குடத்தில் உள்ள நறுமணம் மிக்க நெய் , உணவிற்குப் பயன் படாவாறு மணமும் சுவையும் அறிந்து எறும்புகள் பல அக்குடத்தின் வாயில் வழியைத் தடை செய்து மொய்த்தல் போல, அகக் கருவியாகிய மனம் இறைவழிபாட்டிற் பயன்படாவாறு , அம்மனத்தின் இயல்பிற் கேற்பக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களும் உணர்வு நெறியைத் தடை செய்கின்றன வென்பார், “ புலனின்கட் போதலொட்டா மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடந்தன்னை யெறும்பெனவே” என்றார் . நெய்யிற் றோய்ந்த எறும்பு விலக்கற்கரிதால் போல , நெஞ்சத்தைப் பற்றிய புலன்களும் விலக்கற் கரிதாமென்பது . மெள்ளன மொய்க்கும் என்றது . சிறிது சிறிதாகச் சென்று நெருங்கிச் சூழுமென்பது குறித்தாம் . குடத்து நெய் உடற்கணுள்ள நெஞ்சிற்கும் , எறும்புகள் புலன்களுக்கும் உவமை களாம் . குடத்தின் வாயில் வழியில் மொய்த்திருக்கும் எறும்புகள் தடையாதல் , நெய் தூய நிலையில் நல்லுணவாகாமை பற்றியாம் .
அதுபோல் உடலின் கண் உள்ள பொறி வாயில்களைப் பற்றிய புலன்கள் தடைப்படுத்துமாயின் , மனம் தூயநிலையில் இறைவனைப் பற்றாதென்பதாம் . மனம் உயர்வு வழிச்சென்று இறையருளைப் பற்ற வேண்டுமன்றிப் பொறிகளின் வாயிலாகச் சென்று புலனுகர்ச்சியில் ஈடுபடலாகாதெனவும் , அங்ஙனம் ஈடுபட்டமையால் செய்யத்தக்கன இன்ன தகாதன இன்னவெனப் பகுத்துணர இயலாமல் மயங்கலானேன் எனவும் பிவரும் குறிப்புக்களால் அடிகள் புலப்படுத்துகின்றார் .
உள்ளன – தகுதியுள்ளன . இல்லன – தகுதியில்லாதன . இறை வழி பாட்டிற்குச் செய்யத் தக்கனவாகிய நற்செயல்கள் பல இருக்க, அவற்றுள் ஒரு சிறிதும் மேற்கொள்ளாமல், தகாதனவற்றையே செய்ய லானேன் என்பார் , “ உள்ளனவே நிற்க இல்லன செய்யும் “ என்றார் . உள்ளனவே என்புழி ஏகாரத்தைப் பிரித்து இல்லன என்பதனோடு இயைக்க தக்கன தகாதென வென்னும் இருதிறத்துள் , ஒரு கூறு பிரிக்கப்பட் டமை யால் ஏகாரம் பிரி நிலைப் பொருளது ; தேற்றமுமாம் , சரியை முதலிய தவச் செயல்கள் ஆண்டவன் திருவருட் பேறாகிய நற்பயனை விளைத்தலால் அவற்றை உள்ளன வென்றும் , அவற்றிற்கு மறுதலையாக உடலோம்புதற் பொருட்டுச் செய்யப்படும் அவச் செயல்கள் பிறப்பிறப்புக்களிற் புகுத்தித் துன்பமாகிய தீய பயனை விளைத்தலால் அவற்றை இல்லன வென்றும் கூறினர் .
உலகத்து மக்கள் செயல்கள் தக்கனவும் தகாதனவுமாக விரவியிருக்கும் ; என் செயலோ , அங்ஙனமாகவும் இல்லாமல் தகுதியில்லாத னவாகவே நிகழ்ந்தன வென்பார் , “ இல்லனவே செய்யும் “ என்றார் . மையல் – காமமுதலியன பற்றிய மயக்கம் . இஃது அகத்தின்கண் நிகழும் குற்றம் . துழனி – ஒலி .; ஆரவாரம் . அகக் குற்றத்தை மறைத்தற்கு மேற்கொள்ளப்படும் ஆடம்பரச் செயல் . இது புறக்குற்றமாகும் . “வெள்ளன் அலேன்” என்பது கள்ளமுடையேன் என்னும் பொருட்டு . “கள்ளரோ புகுந்தீரென்னக் கலந்து தானோக்கி நக்கு ,வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே “ என்னும் தமிழ் மறையில் வெள்ளர் கபடமற்றவர் என்னும் பொருளில் வந்திருத்தல் அறிக . கபடமற்றவன் அல்லேன் என்பதனால் கபடமுடையவன் என்பது பெறப்படும் .
இங்ஙனம் பெறப்பட வைத்தது , புறத்தேயுள்ள ஆரவாரச் செயல்களால் தூய்மையுடைமை காட்டி அகத்தே வஞ்ச வொழுக்கம் பொதிந்திருத்தல் தோன்றற்கென்க . “முகத்தினினிய நகாஅ வகத்தினா வஞ்சர் “ என்று பொய்யில் புலவர் கூறிய வஞ்சகரிலக்கணம் ஈண்டு நினைக்கத்தக்கது . வஞ்ச வொழுக்கம் மேற்கொண்டு நடிக்குஞ் சிறியேனை அக்குற்றம் கருதிக் கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாயது) என்பார் . “ “மையல் துழனி வெள்ளனலேனை விடுதி கண்டாய் “ என்றார் .
இனி, மையல் துழனி வெள் அனலேனை எனக்கொண்டு மயக்கமாகிய ஆரவாரித்து ஒளி செய்யும் நெருப்பினையுடையேனாகிய எனப் பதப்பொருள் கூறலும் பொருந்தும் . இவ்வுரைக்கு விளக்கம் வருமாறு:- தக்கன இன்ன தகாதன இன்ன வென்று பகுத்துணர்தற்குத் தடையாயது உலகியல் இன்பமாகிய காமம் முதலியனபற்றிய மயக்கமாகு மெனவும், அம்மயக்கமும் நெருப்பைப் போலச் சுட்டெரிக்கின்ற தெனவும் , இந் நிலையுற் சிறியேனைக் கைவிடல் தகுமாவெனவும் விண்ணப்பித்துக் கொள்வாராய் , “மையற்றுழனி வெள்ளனலேனை விடுதி கண்டாய் “ என்றார் . மையல் அனலேன் என இயைக்க . மையல் – காம முதலியன பற்றிய மயக்கம் . துழானி – ஒலி . வெள் – ஒளி .ஒலியும் ஒளியும் நெருப்பிற்கு இயற்கை யடையாகும் . “தீயின் குணங்கள் வெப்பப்பரிசமும் , எரிதலைத் தெரிவிப்பதாகிய தம தம ஒலியும், ஒளி நிறமாகிய உருவ குணமும் என மூன்றென்ப . காமத்தைத் தீயாக உருவகிப்பதை , “ உள்ளினுஞ் சுட்டிடும் உணருங் கேள்வியிற் , கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத் , தள்ளினுஞ் சுட்டிடும் தன்மை யீதினாற் , கள்ளினுங் கொடியது காமத்தீயதே “ என்று கந்தபுராண நூலாசிரியரும் , “நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற்றன் ணெனும் , தீயாண்டுப் பெற்றாளிவள் “ எனப் பொய்யில் புலவரும் கூறியவற்றான் அறியலாம் .
இதன்கண் , உலகியற் பொருள் பற்றிய புலன்கள் திருவருட் பேற்றிற்குத் தடையாமெனவும் , அத்தடையால் செய்யத்தகாதன செய்யலானேன் எனவும் கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
*********************************************
பாடல் :25 .
எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர்
பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் புலன்களால் உண்டாம் தடையை ஓர் உவமை முகத்தால் எடுத்துக்காட்டியிரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அப்புலன்களால் உண்டாம் துன்பத்தையும் , அத் துன்ப நீக்கத்திற்குத் துணை புரிவாரில்லாமையால் தமக்கேற்பட்ட தனிமையை யும் எடுத்துக் கூறி இரங்குகின்றார் .
பதவுரை :- வெய்ய கூற்று ஒடுங்க = கொடிய கூற்றுவன் வலி குன்றும்படி ,
உறும் கடிப்போது அவையே உணர்வுற்றவர் = அவனுடலிற் பொருந்திய மணமிக்க திருவடி மலர்களாகிய அவற்றையே பற்றுக்கோடாக அறிந்தவர்களாகிய சரியையாளரும் ,
உம்பர் உம்பர் = அவரின் மேம்பட்ட கிரியையாளரும் அவரின் மேம்பட்ட யோகநிலையினரும் ஆகிய இவர்கள் ,
பெறும் பதமே = பெறுதற்குரிய (சாலோக முதலிய) பத முத்திகளாக விளங்குகின்றவனே ,
அடியார் பெயராத பெருமையனே = அம் மூவரினும் மேம்பட்ட மெய்யன்பராகிய சிவஞானிகள் மீண்டு வாராமைக்கு ஏதுவாகவுள்ள (சாச்சிய முத்தி நிலையாக விளங்கும் ) பெருமையுடையானே ,
எறும்பு இடை நாங்கூழ் என = பல எறும்புகளின் இடைப்பட்ட நாங்கூழ்ப் புழுவைப் போல ,
புலனால் அரிப்புண்டு அலந்த = ஐம்புலன்களாலும் தின்னப்பட்டு வருந்திய ,
வெறும் தமியேனை விடுதி = பயனற்ற தமியனாகிய என்னை விட்டு விடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :-இறைவன் கட்டளைப்படி தன் கடமையைப் புரியும் தருமனை “ வெய்ய கூற்று “ என்றது , கட்டளையிட்ட அப்பெருமான் திருஉள்ளக் குறிப்பிற்கு மாறுபடத் தவ முதல்வராகிய மார்கண்டேயரை உயிர் கவர முற்பட்ட தீச்செயல் பற்றியென்க . கடமையை மேற்கொண்டது எங்ஙனம் தீச்செயலாகும் எனின் “ இறைவ நிற்கு உவந்தது அற மெனப்படு மற்றேனைய மறமெனப்படுமால் “ என்னும் சமய உண்மைப்படி விதி விலக்குச் செயல்களெல்லாம் ஆண்டவன் முன்னிலையில் மாறுதல் எய்துமாதலின் , ஆகுமென்க . கண்ணப்பர் இட்ட உணவு விலக்கப்பட்ட தெனக் கொண்டு வெறுத்த சிவ கோசரியார்க்கு “அவனுகந்திட்ட விறைச்சி யெனக்கு நன்மாதவர் இட்ட நெய் பாலவியே “ என்று இறைவன் உணர்த்திய செய்தியால் , விலக்கு விதியாயது போலக் , கூற்றுவன் கடமையாகிய விதி ஈண்டு இறைவற்கு உவந்ததாக இல்லாமையால் , விலக்காயிற்றென்பது .
மக்கள் தேவர் முதலிய எல்லோரையும் ஒடுக்கும் ஆற்றல் படைத்த கூற்றுவனது ஒடுக்கத்தைக் குறிப்பிட்டது , சிவபெருமானது முடிவிலாற்ற லுடைமையைப் புலப்படுத்தற் கென்க . கடிப்போது – மணமிக்க மலர் ; ஆகு பெயராய்த் திருவடியை யுணர்த்தும் , மலர் போன்ற இறைவனுடைய திருவடி மெத்தெனத் தாக்கிய அளவில் , மிக்க வலிபடைத்த கூற்றுவனது திறல் ஒடுங்கிவிட்ட தென்பது போதா., “உறுங்கடிப்போது” என்றார். “அவை” யென்பது பண்டறிசுட்டு ; தம்மை யடைந்தாரது இடையூற்றைப் போக்கி அழிவிலின்பத்தில் தலைப்படுத்தும் இயல்பினவாகிய அத் திருவடிகளையே என்பது கருத்து . ஏகாரம் தேற்றப்பொருட்டு . “புறச் சமயநெறி நின்று …….. சிவனடியைச் சேர்வர் “என்று சைவ நூலிற் கூறியபடி பல பிறவகளினும் சோபான முறையால் மேற் சென்று சென்று அரிய சித்தாந்த சைவத்தை யடைந்தவர்கள் , சரியை முதலிய நால் வகை நெறிகளையும் மேற்கொண்டு முடிவில் இறையடி நீழலில் இயைந்து பேரின்பெய்துவர் என்பது உண்மை யாதலின் , அம்முறையில் சரியையிற்றலைப்படக்கிடைக்கப்பெற்றார் .
அந்நெறி நின்று இறைவன் திருவடியையே பற்றுக்கோடாக உணர்ந்து வழிபாடு செய்யும் இயல்பினராவர் என்பது தோன்ற ,”அவையே யுணர் வுற்றவர்” என்றார் . பாசப்பிணிப்பாற் பிறப்பிறப்புக்களிற்பட்டு நெடுங்காலம் வருந்துவோர் அத்துன்ப ஒழிவிற்குரிய சாதனத்தையே முதலில் நாடுதல் இயல்பாதலின் ,மிருகண்டு புதல்வர் பொருட்டுக் கூற்று உதைத்த செய்தியைக் குறிப்பிடுவாராயினர் . இத்துணையும் சரியை வழியொழுகுவோர் என்பது பெறப்பட்டமையான் மேல் “உம்பர் உம்பர் “ என்பன கிரியையாளரையும் , யோக நிலையினரையும் உணர்த்துவனவாம் .உம்பர் – மேல்நிலை ; ஆகு பெயராய் அந் நிலையில் ஒழுகுவோரைக் குறிக்கும் . பின்னதற்கும் இஃதொக்கும்.
சரியையாளர்க்கு மேற்பட்ட கிரியையாளரும் அவர்க்கு மேற்பட்ட யோக நிலையினரும் என்றபடி ஈண்டு எண்ணும்மைகள் செய்யுள் விகாரத்தால் தொக்கன . ஆகவே சரியை கிரியை யோகம் என்னும் மூன்று நெறிகளினும் ஒழுகுவோர் , முறையே சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் பதமுத்திகளைப் பெறுவறாதலின் ,அன்னார்க்கு அப்பதங்களையருளும் இறைவனைக் குறித்து , “உணர்வுற்றவர் உம்பரும்பர் பெறும் பதமே” என்றார். இன்பத்தை வழங்கும் இறைவனை வேற்றுமையின்மைபற்றி “இன்பமே” என்று விளித்தமை போலப் பதமுத்தியருளும் நிலையில் இறைவனைப் “பதமே” என்று விளிகொள்ளலானார் .
அடியார் என்றது ஈண்டு மெய்யன்பராகிய சிவஞானச் செல்வரை . அவர்கள் ஞான நெறியின் ஒழுகு வேராதலின் அன்னார் பெறும் பேறு முடிவாகிய சாயுச்சிய முத்தி நிலையாகும் . “முன்மார்க்க ஞானத்தா லெய்து முத்தி வென்பர் மூன்றினுக்கு முத்திபதம் என்பர் “ என்பது ஞானநூல் . சாலோக முதலிய பத முத்திகளைப் பெற்றார்க்கு அந் நிலையிற் பெயர்ச்சியுண்டு . சாயுச்சிய நிலையினர்க்குப் பெயர்ச்சியில்லா மையால் , “அடியார் பெயராத பெருமையனே “ என்றார் . “பெயராத” என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் பெருமையன் என்னும் காரணப்பெயர் கொண்டு முடிந்தது. “ஏதுப்பொருள் கருவிக்கணடங்கும்” என்பர் சேனாவரையர் .
மெய்யடியாராகிய சிவஞானச் செல்வர் எய்தும் சாயுச்சிய நிலை மீண்டு பெயராத நிலையாகும் . இதனையே பிறிதோரிடத்து அடிகள் “மறிவறியாச் செல்வம்” என்பர் . சாயுச்சியமாகிய பரமுத்தி யெய்திய வுயிர், மீண்டு பொறவாமைக்கு ஏதுவாகவுள்ள பெருமை சிவபெருமான் கண்ணதாகலின் ,”பெயராத பெருமையனே “ என்றார் .பெருமை – ஞான நெறி யொழுகித் தன்னையடைந்த வுயிரை மீண்டு பிறவியிற் செலுத்தாமல் அழிவில் இன்பந் துய்க்கத் தன்னை வழங்குதலாகிய செயற்கருஞ் செயல் .
இவ்வாறு இறைவனை விளித்துப் புலன்களால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை ஒருவமையில் வைத்து அடிகள் புலப்படுத்துகின்றார் . நாங்கூழ் – ஈரமுள்ள மண்ணில் தோன்றும் ஒருவகைப்புழு . இதனை நாக்குப்பூச்சி எனவும் நாகப்பூச்சி யெனவுங் கூறுவர் . இப்புழு எறும்பினும் எத்தனையோ மடங்கு உருவத்தாற் பெரியதாகும் . இதனைப் பல எறும்புகள் கூடிச் சல்லடைக்கண்களாக அரித்து ஈர்த்துச் செல்லுதலைக் கண்கூடாகக் காணலாம் . நாங்கூழ் உருவத்தால் பெரிதாக இருந்தும் , சிற்றெறும்புகளை அடக்கும் ஆற்றலின்றி அவற்றால் துன்புறுதல் போல , யான் பருத்த வுருவமுடையனாக இருந்தும் ,நுண்ணிய நிலையில் என்னுட் புகுந்து என்னையரித்து வருத்தும் புலன்களைக் கடக்கும் ஆற்றலின்றி வருந்து கின்றேன் என்பார், “ எறும்பிடை நாங்கூழெனப் புலனாலரிப்புப்புண்டலந்த” என்றார் . பூச்சி தின்னுதலை அரித்தல் என்ப . “காழ்சேர் முது சுவர்க் கணச்சிதலரித்த” என்புழிக் காண்க. ஒரு பொருள் எவ்வாற்றானாவது பயன்படும் நிலையிலுள்ளதாயின் , அதற்குக் கேடு நேர்ந்துழி அப்பயன் கருதி அக்கேட்டையொழிக்க ஒருவர் முற்படுதல் உலகியலிற் காணப்படுவது .
நாங்கூழ் பயன்படாமையால் எறும்பரிக்கக் காண்பார் விளையாட்டுக் காட்சியாகக் காண்பதல்லது , துணை செய்ய முற்படாமை போலப் புலன்களால் அரிப்புண்டு துன்புறும் யான் யார்க்கும் பயன்படாமையால் , இத்துன்பத்தினின்றும் விலக்கித் துணைபுரிவார் யாரையும் இலனாயினேன் என்பார் ,”வெறுந்தமியேனை” என்றார் . வெறுமை – பயனின்மை . தமியேன் – துணையில்லாது தனிப்பட்டவன் , உலகியற்றுணை சிறிதுமின்றித் தனிப்பட்டவனாகிய சிறியேற்குத் தோன்றாத் துணையாக வுள்ளவன் நீயே யாதலின் , இந் நிலையில் என்னைக் கைவிடல் தகுமா என்பார் , “ விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண், உலகியற் பொருள்பற்றிய புலன்களாலாம் துன்பம் பொறுக்கலாற்றாதது என்று கூறப்பட்டிருத்தலின் பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**********************************
பாடல் : 26
பெருநீ ரறச்சிறு மீன்றுவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுண் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் புலன்களால் விளையும் துன்பத்தையும் தம் தனிமையையும் எடுத்துக்கூறி இரங்கிய அடிகள், இத் திருப்பாட்டில் அங்ஙனம் துன்புறுதற்கு ஏது உயிர்த்துணையாகிய நின்னைப் பிரிந்திருக்க நேர்ந்ததாகும் என்று கூறி அப்பிழை பொறுக்க வேண்டுகின்றார் .
பதவுரை :- வியன் கங்கை = பெரிய கங்கையாறாகிய ,
பொங்கி வரும் நீர் மடுவுள் = மிக்கு வழியும் நீர்ப் பெருக்கையுடைய நீர் நிலையில் ,
மலைச் சிறு தோணி வடிவின் = பொருகின்ற சிறிய தோணியின் உருவத்தைப் போன்ற ,
வெள்ளை குரு நீர் மதி பொதியும் சடை = வெண்ணிறமுடைய குளிர்ந்த பிறை அடங்கப்பெற்ற சடையினையுடைய ,
வானக் கொழுமணியே = ஞானவெளியில் திகழும் செழிப்புள்ள மாணிக்கமே ,
பெரும் நீர் அற = பெரிய நீர் நீங்க ,
சிறு மீன் துவண்டாங்கு = சிறிய மீன் துடித்தாற் போல ,
நினைப் பிரிந்த = ஆதரவாகிய நின்னைப் பிரிந்தமையால் ,
வெரும் நீர்மையேனை = அஞ்சும் தன்மையுடைய சிறியேனை ,
விடுதி = விட்டு விடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- பகீரதன் தவத்தால் விண்ணில் நின்றும் தடுத்தற்கரிய விரைவோடு வெளிப்பட்ட தெய்வயாறு என்பார் , “ வியன் கங்கை” எனவும் , அங்ஙனம் மிக்க விரைவாகப்பொங்கி வழியும் நிலையில் அவ் யாற்றை மீண்டும் பகீரதன் வேண்டுகோட்கு இரங்கி, இறைவன் தன் சடையின் ஒரு கூற்றில் அடங்கிய அளவில் அஃது ஒரு சிறிய நீர்நிலை போலக் காண்ப் பட்டது என்பார், “பொங்கிவரு நீர் மடு” எனவும் கூறினர் . பொங்கி வரு நீர் என்றது குறைவற நீர் நிறைந்த மடுவின் இயல்பைக் குறிப்பதாகும் . மலைத்தல் – அலைகளால் அங்கும் இங்கும் தாக்கப்படுதல் ; அசைதல் . இறைவன் சடையிற் சூடிய பிறை ஒரு கலையுடைய தென்று கந்தபுராண ஆசிரியரும் ,இரு கலையுடையது என்று அடியார்க்கு நல்லாரும் கூறுவர் . இறைவன் சடையில் கங்கையின் அருகில் அணியப்பட்ட பிறை , ஒரு நீர் நிலையில் அசைந்து விளங்கும் வெண்ணிறமுடைய சிறிய தோணியைப் போற் காணப்படுகின்றது என்று அடிகள் கூறிய வருணனை ஓர் உண்மை யைக் குறிப்பிற் புலப்படுவதாகும் . திருவாசகத்தில் இத்தகைய வருண னைப் பகுதி மிகவும் சுருக்கமாகவே காணப்படும் .
பிறவிக்கடலுள் மூழ்கிப் பற்றுக்கோடு இன்றி வருந்தும் உயிர்களுக்கு இக்காட்சி ஓராற்றான் ஆறுதலளிக்கும் இயல்பினது . “இனியென்னே யுய்யுமா றென்றென்றெண்ணி ஐந்தெழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை “ என்று திருச்சதகத்தில் கூறியபடி அப்பிறவிக் கடலைக் கடத்தற்கு உரிய தோணியாக அப்பிறை அடிகளுக்குக் காட்சியளித்த தென்பது . மேலும் திங்களஞ் செல்வர்க்கு நேர்ந்த சிறுமையைப் போக்கிப் பாதுகாத்த இறையருளை நினைவுகூர்ந்ததுமாம் .
வானம் – ஞானப் பரவெளி . கொழுமை – செழுமை; ஒளி மிகுதியைக் குறிக்கும் . நாண் மீன் , கோள் முதலியன இல்லாத ஞானாகாயத்தில் செந்நிற வொளிமிக்க மாணிக்க மணிபோலத் திகழும் இயல்பினது இறைவன் திருவுருவம் என்பார் “ வானக் கொழுமணியே” என்றார் . குருந்தமரத்து நீழலில் இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி யளித்த காட்சி இதுவாகும் . இதனைத் தம் கண்குளிரக் கண்ட அடிகள் தம்மை இறைவன் பிரிந்த நிலையில் “இன்று போய் வானுளான் காணாய்” என்று நெஞ்சிற்கு அறிவித்துள்ளாராதலின் , அந்நிலயில் ஞான வெளியில் அப்பெருமான் திருவுருவத்தை வைத்து நினைவு கூர்ந்து இவ்வாறு கூறினர் என்பது .
இனி,நேறிற் காட்சியளித்த பெருமான் பிரிவில் தாம் எய்திய துன்பத்தை ஒருவமையில் வைத்துக் கூறுகின்றார். பறவைக்குக் கூடும், ஆடு,மாடு முதலிய விலங்குகளுக்குக் கொட்டிலும் அவ்வப்பிராணிகளின் உடலளவிற்குத் தக்கவாறிருத்தல் போதியதாகும் . சிறியவுருவமுள்ள மீனுக்குச் சிறிய அளவுள்ள நீர் போதியதாகாது. மீன் வடிவாற் சிறியதா யினும் வாழ்தற்குப் பெரு நீரே வேண்டியதாகும் . இஃது உலகியலிற் கண்டது .மகரம் முதலிய மீன்கள் பெரிய வுருவ முள்ளனவே யெனின், அவற்றிற்குத் தக அவை வாழ்தற்குக் கடல் அமைந்திருத்தல் கருதத்தக்கது . அக்கடற் பெருமையை நோக்க அம்மீன்கள் சிறியன என்பது கண்கூடு
ஆகவே மீன் அளவிற்கு அது வாழும் நீரளவு மிகுதியாக இருக்கவேண்டும் மென்பது புலனாகும்.
இவ்வுண்மை குறித்தே “பெரு நீறரச் சிறு மீன் துவண்டாங்கு” எனப் பெருமை சிறுமைகளாகிய அடைகள் முறையே புணர்க்கப்பட்டன . நீர்ப்பெருக்கில் வாழும் மீன் அந் நீரற்ற விடத்துத் துடித்து வருந்துதல் போல, பரங்கருணைத் தடங்கடலாகிய நின் அருள் நிறைவிலீடுபட்டு இன்புற்றிருந்த யான் , நின் பிரிவில் அஞ்சி வருந்தலானேன் என்பார், “நின்னைப்பிரிந்த வெரு நீர்மையேனை” என்றார் . பிரிந்த என்னும் பெயரெச்சம் உண்ட இளைப்பு என்பது போலக் காரணப்பொருளில் வந்தது. நீரற்ற நிலையில் மீனுக்கு உணவும் புறக்காப்பும் இலவாதல் போல , இறைவன் பிரிவால் அடிகளுக்கு உள்ளுணர் வின்பமும் புறத்துணையும் இலவாயின வென்பதும் ஈண்டு கருதத்தக்கது .
எங்கும் நிறைபொருளாகிய இறைவன் பிரிதல் எவ்வாறு பொருந்தும் எனின் , ஞானாசிரியனாக எழுந்தருளிக் காட்சியளித்துப் பின் உருக்கரந்த நிலை பற்றிக் கூறியதகாலின் பொருந்துமென்க . மீன் சிறியதா யினும் , அதன் வாழ்க்கைக்குப் பெரு நீரன்றிச் சிறு நீர் ஆதரவாகாமை போலச் சிறியேனாகிய எனக்கு , அருட்கடலாகிய நின்னையல்லாத பிறர் ஆதரவாகார் என்று அடிகள் விண்ணப்பித்துக் கொண்டபடியாம் . நின் பிரிவால் என் செய்வல் என அச்சமுற்றிருக்கும் இந் நிலையில் , அபயமளிக் கும் இயல்புடைய நீ என்னைக் கைவிடல் தகுமாவென்பார் , “வெரு நீர்மை யேனை விடுதி” என்றார் . வெரு நீர்மையேன் என்றது அபயம் அளித்தற்கு இடன் குறிப்பிட்டபடியாம் .
இதன்கண், இறைவனது பிரிவில் பிரபஞ்ச வாதனையால் தாக்குண்டு அஞ்சி வருந்திய செய்தி கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**********************************
பாடல் : 27 .
கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்று – குன்றி
விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம் முழுதுங்கம்பித்
தழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னை
கழுமணி யேயின்னுங் காட்டுகண் டாய்நின் புலன் கழலே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் புலன்களால் விளையும் துன்பத்திற்கு ஏது இறைவனைப் பிரிந்திருக்க நேர்ந்ததாகுமென்று கூறிய அடிகள் , இத்திருப்பாட்டில் அப்பிரிவு நேராமைப்பொருட்டு மெய்யன்ப ரோடு தம்மை இயைத்து வைத்து , மீண்டும் ஞானமய மான திருவடிக் காட்சியளித்தல் வேண்டுமென விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- என்னைக் கழும் மணியே = அடியேனைத் தூய்மைப்படுத்துகின்ற மாணிக்கமணியே ,
கொழுமணி ஏர்நகையர் = செழிப்புள்ள முத்தை யொத்த அழகிய பற்களை யுடைய மகளிரின் ,
கொங்கைக் குன்று இடைச்சென்று = கொங்கைகளாகிய மலைகளில் ஏறிச்சென்று ,
குன்றி விழும் அடியேனை = அறிவு குறைந்து இடறி விழுகின்ற அடியேனை ,
விடுதி = கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,
மெய்முழுதும் கம்பித்து அழும் அடியார் இடை = அன்பு முதிர்ச்சியால் உடல் முழுதும் நடுங்கி அழுகின்ற மெய்யடியார் பக்கல் ,
என்னை ஆர்த்து வைத்து = அடியேனைப் பிணித்து வைத்து ,
ஆட்கொண்டருளி = ஆளாக ஏற்றுக்கொண்டு அருள்புரிந்து ,
நின் புலன் கழல் காட்டு = நின் ஞானமயமான திருவடியைக் காட்டியருளல் வேண்டும் என்பது .
விளக்கவுரை :- கழுவுதல் – தூய்மை செய்தல் . கழுவுமணி என்பது கழுமணி யென்றாயிற்று . உலகத்து மணிகள் பிற கருவிகளால் தூய்மை செய்யப்படுவனவாம் . கடவுன்மணி தன்னையடுத்த பொருள்களை அழுக்கறத் தான் தூய்மை செய்யும் இயல்பினதாம் . இவ்வுண்மை புலப்படவே , “ என்னைக் கழுமணியே “ என்றார் . உயிரைத் தூய்மைப்படுத்தல் பாசவழுக்கைப் போக்கி ஞானமயமாக்குதல் . ஆதலின், அத்தகுதி இறைவனுக் குண்மை குறித்து இவ்வாறு கூறப்பட்டது . கொழுமணி – குற்றம் நீங்கிய ஒளிமிக்க முத்து . முத்து நிரைத்தன்ன வெண்பல்லர் என்றது , இளமைச் செவ்வி புலப்பட நின்றது . காமம் கடியத்தக்க தென்னும் அறிவின்றி மகளிர் முயக்கிடை மயங்கி வீழும் இயல்பினன் என்பார் ,”கொங்கைக் குன்றிடைச் சென்று விழுமடியேனை “ சமநிலத்து நடந்து சேறலினும் , மலையேறி நடத்தலால் உடல் வலி குறைந்து கால் இடறி வீழ்தல் கூடுமென்னும் உலகியற் செய்தியும் ஈண்டுக் குறிப்பிற் புலப்பட்டவாறு அறிக .
வீழ்ச்சியுடையானைக் கைதூக்குதலே அருளாளன் செய்யத்தக்கதா கலின் , “விழும் அடியேனை விடுதி” என்றார் . வீழவிடாமற் செய்யத்தக்கன யாதென்னும் வினாக்களுக்கு விடையாகப் பின்வருவன கூறப்படுகின்றன . முறுகிய பேரன்புடைய மெய்யடியார்க்கு உடல் புளகமுற்று நடுக்கம் எய்துதலும் , நெஞ்சுருகி அழுதலும் நிகழ்வனவாதலின் . “மெய்முழுதுங் கம்பித்தழுமடியார்” என்னப்பட்டார் . ஆண்டவனைக் குறித்து “அழுதாலுன்னைப் பெறலாமே” என்று அடிகளும் , அடிகளைக் குறித்து “அழுதயடிடைந்த அன்பன்” எனப் பரஞ்சோதி முனிவரும் கூறியிருத்தல் அறிக .
கம்பித்தல் – நடுங்குதல் . நடுக்கமும் அழுகையும் மெய்யன்பர்க்கு அன்பு மேலீட்டால் தன்வயம் இழந்த நிலையில் உளவாம் என்பதை , “அழலது கண்ட மெழுகதுபோலத், தொழுதுளமுருகி யழுதுடல் கம்பித்து” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலானும் அறிக . “உருகுவது, உள்ளங் கொண்டோருருச் செய்தாங்கெனக் , கள்ளூறாக்கையமைத்தனன் “ என்றதற் கேற்ப , இவ் அன்பு நடுக்கம் உடலுறுப்புக்களின் ஓரோவிடத்தன்றி உறுப்புக்கள் முழுவதையும் பற்றியதென்பார் ,”மெய் முழுதும்” என்றார் .
அடிகள் தம்மை “கொங்கைக் குன்றிடைச் சென்று குன்ற விழுமடியேன்” எனவும் , மெய்யன்பரை “மெய்ம் முழுதுங் கம்பித்தழுமடியார்” எனவுங் கூறியமையால் தம் அடிமை நாடகத்தில் நடிப்பது போன்ற போலி யடிமையாகுமென்பதும் , மெய்யன்பர் அடிமையே உண்மையடிமை யென்பதும் புலப்படவைத்தபடியாம். “என்னை” யென்பது இடை நிலை விளக்காக நின்று ஈரிடத்தும் இயையும் .நிலையின்றிக் குன்றிடை யேறியும் வீழ்ந்தும் அலந்து திரியும் என்னை ஒரு நிலைப்படுத்தற்கு மெய்யன்பர் கூட்டத்தில் பிணித்து வைத்தல் வேண்டுமென்பார், “அடியாரிடை யார்த்து வைத்து “ என்றார் .
அறிவுரை கூறியும் அதற்கு அடங்காமல் அங்கும் இங்கும் திரியும் ஒருவனை ஓரிடத்துக் கட்டிவைத்து நல்லாற்றுப்படுத்தல் அறிஞர் செயலா தல் உலகியலிற் காணப்படுவதன்றோ? அக்குறிப்பும் ஈண்டுப் புலனாதல் அறிக . அறிவு திருத்துதற்கன்றே ஆர்த்து வைத்தற்கு இடன் அடியார் பக்கலாயிற்று . மெய்யடியார் பக்கலில் இயைத்து வைத்தல் ஆட்கொள்ளு தற்கு ஏதுவாம் என்பார் , “ஆர்த்துவைத்தாட்கொண்டருளி” என்றார் . ஆர்த்து வைத்து என்னும் எச்சம் ஏதுப்பொருட்டு .
இறைவனுடைய திருவடியையே ஞானமயமாகச் சைவ நூல் கூறும் . ஆதலின் “புலன் கழல் “ என்னப்பட்டது. திருவடி ஞானத்தை முன்னர்க் குருந்த நீழலில் ஞானாசிரியனாக எழுந்தருளி உபதேசித்த ஞான்று “தாட்டாமரை காட்டி “ என்றபடி காட்டியருளியவாறே இன்னமும் காட்டியருளல் வேண்டும் என்பார், “இன்னுங் காட்டு கண்டாய்” என்றார். கண்டாய் முன்னிலையசை . இறைவன் திருவடி காண்டலில் இடையறாது நிகழும் அவா மிகுதியால் அடிகள் இவ்வாறு வேண்டுவாராயினர் .
இதன்கண், “கொழுமணியேர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழுமடியேனை” என்றதனால் அந் நிலை வெறுக்கத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
***********************************
பாடல் : 28 .
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும் மண்ணுமெல்லாம்
கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனே
துலங்குகின் றேனடி யேனுடை யாயென் தொழுகுலமே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் மெய்யன்பர் பக்கல் தம்மை இயைத்து வைத்து மீண்டும் திருவடிக்காட்சியளித்தல் வேண்டுமென விண்ணப்பஞ் செய்துகொண்ட அடிகள் இத்திருப்பாட்டில் அக்காட்சி இல்வழியுண்டாம் தீங்குகளைக் கூறப்புகுந்து ,முதலில் புலன்களால் திகைப்புண்டு நெறிபிழைத்துச் சேறலைக் கூறுகின்றார் .
பதவுரை :- விண்ணும் மண்ணும் எல்லாம் கலங்க = விண்ணுலகமும் நிலவுலகமும் ஆகிய எல்லாம் கலக்கமுறுதலைக் கண்டு ,
முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் = கடலில் தோன்றிய நஞ்சத்தை உண்டு காத்தருளியவனே ,
கருணாகரனே = அருட்குணத்திற்கு இருப்பிடமானவனே ,
துலங்குகின்றேன் அடியேன் உடையார் = நிலை கலங்குகின்ற அடியேனை அடிமையாக உடையவனே ,
என் தொழுகுலமே = என் குலதெய்வமே ,
புலன்கள் திகைப்பிக்க = ஐம்புலன்களும் மயக்கமுற ,
யான் திகைத்து இங்கு ஓர் பொய் நெறிக்கே விலங்குகின்றேனை = மயங்கி இவ்வுலகத்து நிலையற்ற ஒரு தீய நெறிக்கண்ணே விலகிச்செல்கின்ற சிறியேனாகிய என்னை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- அமுதத்தை விரும்பிக் கடல் கடைந்த பொழுது , அக்கடலில் கொடிய பெருநஞ்சு தோன்றிற்றாக , அது கண்டு நமக்கு என்ன கேடு நேருமோ வென முதலில் நடுக்கம் எய்தினர் தேவராதலானும் ,அப்பெருநஞ் சின் கொடிய வேகத்தை கண்டு பின் கலக்கமுற்றவர் மக்களாதலானும் அம் முறைக் குறிப்புத் தோன்ற , “ விண்ணும் மண்ணும் “ என்றார் . விண் மண் பாதாலமென்னும் முத்திறவுலகங்களும் நடுங்கினவாகச் சிறப்புப் பற்றி முதலிரண்டுங் கூறப்பட்டன . “நஞ்ச மஞ்சி ஆவ வெந்தா யென்ற விதாவிடும் “ தேவர் நிலையைக் கண்டு இறைவன் இரக்க முற்றனனாதலின், அதற்கேற்ப “கலங்க” என்னும் எச்சத்தின் பின் “கண்டு” என்னும் வினை யெச்சம் வருவித்துரைக்கப்பட்டது .
முந்நீர் – கடல் . ஆற்று நீர் , ஊற்று நீர் , மழை நீர் என்னும் மூன்றும் உடையதெனவும் , நிலத்தை ஆக்கல் , அளித்தல், அழித்தல் ஆகிய மூன்று தன்மைகளை யுமுடைய தெனவும் கூறுப . சில உணவுப்பொருள்களிலும் நஞ்சுண்டு . அஃது உண்டவர்க்குச் சிறிது சிறிதாக நாளடைவிற் கேடு விளப்பதாகும் . பாம்பு முதலிய பிராணிகளிடத்தும் நஞ்சுண்டு . அது தீண்டப் பட்டவர்க்கு மாத்திரம் தீங்கு விளைக்கும் . அங்ஙனமின்றி உண்ணாத நிலையில் கணப்பொழுதில் எல்லா உலகங்களுக்கும் கேடு விளைக்கும் கொடுநஞ்சென்பார் , “முந்நீர் நஞ்சு” என்றார் . நஞ்சின் கொடுமையைத் தணிக்கப் புகுவார் , மணி மந்திர மருந்துகளைக் கருவியாகக் கொள்ளுவர் .இப் பெரு நஞ்சை யழிக்கப் புகுந்த இறைவன் , அதனையே உணவாகக் கொண்டனன் என்பார் , “அமுது செய்தாய்” என்றார் . இறைவன் நஞ்சுண்ட வரலாறு அப் பெருமானது பேரருட்டிறத் துக்கு எடுத்துக்காட்டாகுமென்பது தோன்ற அடுத்துக் “கருணாகரனே” என்று அருளிச்செய்தார் .
பெருநஞ்சின் எழுச்சி கண்டு கலங்கிய உலகங்களையே காப்பாற்றி யருளிய பேரருட் குணமுடைய நினக்குப் , பிறப்பிறப்புத் துன்பங்களுக்கு அஞ்சிக்கலங்கும் சிறியேனைக் காத்தல் பெரிதன்று என்பது தோன்றத், “துலங்குகின்றேன்” எனவும் , அங்ஙனம் கலங்குகின்ற யானோ நின் அடியேனாவனெனவும் , எனக்குத் தலைவனும் என் குலதெய்வமும் நீயே எனவும் புலப்படுப்பார் , “அடியேனுடை யாயென் தொழுகுலமே “ என்றார் . துலங்குதல் – துளங்குதல் ; கலங்குதல் . “அம்பலத்தா னருளில்லவர் போல், துலங்கலைச் சென்றிதென்னோ வள்ளலுள்ளந் துயர்கின்றதே “ என்புழித் துலங்கும் அப்பொருட்டாதலறிக . அடியேனுடையாய் என்புழி இரண்டனு ருபு விரித்துக் கொள்க .
தொழுகுலம் என்பது வணங்குதற்குரிய தெய்வத் திருக்கோயில் என்னும் பொருளிடையதாய்க் குல தெய்வத்தை யுணர்த்தும் . நிலைவுத லில்லாத மாயாகாரியப் பொருள்களைப் பற்றி நிகழும் சுவையொழி யூறோசை நாற்றமென்னும் ஐம்புலங்களும் , முதலில் இன்பம் போல்தோன்றி முடிவில் துன்பமாக மாறுதலானும், அம்மாற்றத்தை அறியாவாறு அறிவை மயக்குதலானும் ,”புலன்கள் திகைப்பிக்க” என்றார் , “மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலன்” என்று அடிகள் பிறிதோரி டத்துக் கூறியதும் அறிக . திகைப்பித்தல் – மயக்க முறுத்தல் . “திகைத்தாற்றேற்ற வேண்டாவோ” என்ற இடத்தும் அப்பொருட்டாதல் அறிக . “யானும் திகைத்து “ என்புழி உம்மை அசை நிலை “காமக்கடன் மன்னும் “ என்ற இடத்துப்போல . “யானுந் திகைத்திங்கொர் பொய்ந் நெறிக்கே , விலங்குகின்றேனை “ என்பதை முன் உரைத்தாங்குரைத்து முடித்துக் கொள்க .
புலன்களின் மயக்கத்தால் அழிவில்லாப் பேரின்பம் பயக்கும் சிவநெறிக்கட் சேறல் ஒழிந்து அழியும் இயல்பினதாய இவ்வுலக இன்பத்தில் தலைப்படுத்தும் அவநெறிக்கட் செல்லலானேன் என்பார் , “இங்கோர் பொய் நெறிக்கே விலங்குகின்றேனை “ என்றார் .”இங்கு” என்றது இவ்வுலக இன்பம் என்னும் பொருட்டு . ஓர் பொய் நெறி – தீமை செய்வதில் ஒப்பற்ற பிழை நெறி . செந்நெறிச் செலவே அறிவுடையார்க்கு இயல்பாதலின் , அவ்வியல்பின் மாறிச்செல்லுதலால் அச்செலவு விலகிச் சேறலாயிற்று . ஒரு நெறியினின்றும் விலகிப் பிறிதொரு நெறிக்கட் செல்ல நேர்ந்துழி , அஃது ஒரோவமயம் மற்றொரு நன்னெறியாகவும் வாய்ப்பதுண்டு .
அடியேற்கு அங்ஙன மின்றித் தீயதாகவே வாய்த்ததென்று இரங்குவார் , “தீநெறிக்கே” என்றார் . ஈண்டு ஏகாரம் தேற்றப் பொருட்டு செல்லும் நெறி தீயதாயின் , அதனை விட்டு விலகி நன்நெறிக்கட் சேறல் நன்றாம் . அங்ஙனமின்றி நன்நெறிக்கட் செல்லும் நிலையில் அதனை விட்டு விலகித் தீநெறிக்கட் சேறலானேன் என்று அடிகள் இரங்கிக் கூறியபடியாம் . இறைவ! புலன்களின் தாக்குதலால் மயக்கமுற்றுத் , தீநெறிக்கட் செல்லும் சிறியேனைத் தெளிவித்து , அருட் கிடனாக்குதலே நின் பெருந்தன்மைக்கு ஏற்றதாகவும் , இந்நிலையில் கைவிடல் தகுமா என்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கட் புலன்களால் திகைப்புண்டு நிலையுதலில்லாத உலக இன்பத்தை விரும்பிச் செந்நெறிச் செலவைக் கைவிட்டுப் பொய் நெறிக்கட் சேறல் , வெறுக்கத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
*****************************************
பாடல் : 29 .
குலங்களைந் தாய்களைந் தாயென்னைக் குற்றங்கொற் றச்சிலையாம்
விலங்கலெந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னுகொன்றை
யலங்கலந் தாமரை மேனியப் பாவொப்பி லாதவனே
மலங்களைந் தாற்சுழல் வன்றயி ரிற்பொரு மத்துறவே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் இறைவன் திருவடிக்காட்சி இல்வழி உண்டாம் தீங்குகளுள் ,புலன்களால் மயக்கமுற்று நெறி தவறிச் சேறலைக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் ஆணவ முதலிய மலங்களாற் பிணிக்கப்பட்டு வருந்துதலை ஓர் உவமை முகமாக எடுத்து இயம்புகின்றார்.
பதவுரை :- பொன்னின் மின்னுகொன்றை அலங்கல் = பொன்னைப்போல ஒளி விடுகின்ற திருக்கொன்றை மலர் மாலையையுடைய ,
அம் தாமரை மேனி அப்பா = அழகிய தாமரை மலர் போன்ற திருமேனியையுடைய என் தந்தையே ,
ஒப்பு இல்லாதவனே = ஒப்பற்ற பரம்பொருளே ,
மத்து உற பொரும் தயிரின் = மத்தினால் வலிந்து கடையப்பட்டுச் சுழலும் தயிரைப் போல ,
மலங்கள் ஐந்தாற் சுழல்வன் = ஐந்து மலங்களாலும் தாக்கப்பட்டுச் சுழல்கின்றேன் , இந் நிலையில் (குற்றம்)
குலம் களைந்தாய் = காம முதலிய குற்றக் கூட்டங்களைக் களைந்தனையாயின் ,
என்னைக் குற்றம் களைந்தாய் = அடியேனுடைய அம்மலக் குற்றங்களையும் களைந்தனையாவாய் ,
விலங்கல் ஆம் கொற்றைச்சிலை எந்தாய் = மேருமலையாகிய வெற்றி தரும் வில்லையுடைய என் தந்தையே ,
விட்டிடுதி = கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- பொன் , கொன்றை மலரின் நிறத்திற்கும் ஒளி செய்தற்கும் உவமையாயிற்று . மக்கட்டலைவராகிய அரசர்க்கு அடையாளப்பூவும் , அழகுக்கு அணியும் பூவும் , போர்ப் பூவும் தனித்தனி வெவ்வேறாகும், இறைவர்க்கு இம் முத்திறப்பூவும் கொன்றாய்மலரேயாம் . இவ்வுண்மை யைக் “ கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்ந்த , தாரன் மாலயன் மலைந்த கண்ணியன் “ என்பதனால் அறிக . தார் விசேடமாக இடுவது; அடையாளப் பூ . மாலை – அழகுக்கு இடுவது . கன்ணி – போர்ப் பூ . இறைவன் நீறு அணிந்த செம்மேனியன் ஆதலின் , நீற்று நிறவொளிக்கு வெண்டாமரை மலரும் , திருமேனி நிற வொளிக்குச் செந்தாமரை மலரும் ஒப்பானவாம் . இவ்விரண்டு உவமையும் ஈண்டுப் பெறப்படுவதற்கே வெண்டாமரை செந்தாமரை யென்னாது ,அந்தாமரையென உவமங் கூறப்பட்டது . அழகு ஈண்டு நிறமும் ஒளியும் செவ்வி குலையாமை. ஞானா சிரியனாக எழுந்தருளி ஆட்கொண்ட நிலையிற் கண்ட திருவுருவக் காட்சியே இவ்வனுபவத்திற்கு ஏதுவாகும் . ஞானத்தந்தையாக எழுந்தருளி உபதேசித் தமையால் , “அப்பா” எனவும், அப்பெருமான் தம்பொருட்டு மக்களுருவில் வெளிப்படினும் , எல்லா ஆற்றலும் படைத்தகடவுட்டலை வனாவான் என்னும் உண்மையுணச்சியால் “ஒப்பில்லாதவனே எனவும் கூறியருளினார் .
இனி, அடிகள் தாம் ஆணவ முதலிய மலங்களால் சுழன்று துன்புறுதற்கு மத்திட்டுக் கடையப்படும் தயிரை உவமையாக எடுத்துக் காட்டுகின்றார் . மத்திட்டு மெத்தெனக் கடையப்படின் , தயிரின் சுழற்சி மெல்ல நிகழ்வதாகும் . அந் நிலையை விலக்கிச் சுழற்சி மிகுதி தோன்ற , “மத்து உறப்பொரும்” என்றார் . உறப்பொருதல் – மிகுதியாகத் தாக்குதல் . வலிந்து கடையுங்கால் தயிர் முன்னும் பின்னுமாக விரைந்து சுழல்வதாகும். அதுபோல உயிர் மலங்களால் தாக்கப்பட்டு , கன்மத்தீற்கீடாக உடல் கரணங்களைப் பெற்று , பற்பல புவனங்களுக்கு மாறி மாறிச்சென்று , பற்பல நுகர்ச்சிகளையும் எய்திப் பிறப்பிறப்புக்களிற் சுழலுமாதலின் அந் நிகழ்ச்சியைத் தம் மேலேறிட்டு , “மலங்களைந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்துறவே” என்றார் . மலங்கள் ஐந்தாவன – ஆணவம் , கன்மம் , மாயை , மாயேயம் , திரோதாயி என்பன .
ஆணவம் என்பது , உயிரறிவைச் சிறுமைப்படுத்தும் மூலமாகும் . கன்மம் , நல்வினை தீவினையாகிய செயல்வடிவில் நிகழ்ந்து பக்குவ முற்றுப் பின் இன்பதுன்பங்களை விளைப்பதாகும் . மாயை – கன்மத்திற் கீடாக உயிர்க்கு உடல்,கரணம் ,இடம் நுகர் பொருள்களைப் பயப்பதாகும் . திரோதாயி – உயிரோடு மறைந்து நின்று ஏனை மலங்களத் தொழிற்படுத் துப் பாகம் வருவிக்கும் மறைப்புச் சத்தி . குற்றம் என்னும் சொல்லை , குற்றக்குலங்களைந்தாயெனவும், , என்னைக் குற்றம் களைந்தாயெனவும் ஈரிடத்தும் இயைத்துப்பொருள் கொள்ளல்வேண்டும் . குற்றக்குலம் – காம வெகுளி மயக்கம் ஆகிய குற்றக்கூட்டம். . இவற்றை அவிச்சை ,அகங்காரம் , அவா , ஆசை , வெகுளி என ஐந்தாகவும் கூறுப .
காரணமாகிய இக்குற்றங்கள் களையப்படுமாயின் , காரியமாகிய வினைகள் நிகழாமையின் , அவற்றால்கூட வரக்கடவ துன்பங்களும் இலவாம் . மெய்யுணர்வின் பயனும் கைகூடும் . ஆகவே இக்குற்றங்கள் நிகழாமற் செய்யு முகமாக மலநாசம் பண்ணவேண்டுமென்னும் கருத்து டையராய் , “குலங்களைந்தாய் களைந்தாயென்னைக் குற்றம் “ என்றார் . முன்வரும் களைந்தாயென்பதன் பின் , “ஆயின்” என்னும் சொல்லையும் பின் வரும் “களைந்தாய்” என்பதன்பின் , “ஆவாய்” என்னும் சொல்லையும் அவாய் நிலையான் வருவித்துரைத்து க் கொள்ளல்வேண்டும் . இனிக், குலங்களைந்தாய் என்பதற்கு , சாதி குடிப்பிறப்பு முதலியவற்றால் உயர்வுடையோமென்னும் செருக்கை யொழித்தனையாயின் என்று பொருள் கோடலும் ஒன்று . “ சாதி குல பிறப்பென்னும் சுழிக்கப்பட்டுத் தடுமாறும், ஆதமிலி நாயேனை” என அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது .
என்னை நலியும் மலங்களும் காம முதலிய குற்றங்களுமாகிய பகைகளைக் கடிந்தொறுத்து என்னை நன்நிலைப்படுத்தல் , மேருமலையை வில்லாக வளைக்கும் ஆற்றலும் , அதனால் யாண்டும் வெற்றியே பெறும் இயபுமுடைய உண்மைத் தந்தையாகிய நினக்குக் கடமையாகுமென்பார், “கொற்றைச்சிலையாம் விலங்கலெந்தாய் “ என்றார் . எந்தாய் என்றதனால் அடிகள் இறைவனுடைய புதல்வராவார் என்பதும் ,மைந்தன் பகையைத் தன் பகையெனக்கொண்டு களைய வேண்டியது தந்தையின் கடமை யென்பதும் பெறப்படும் .இதனையுட்கொண்டே இந்நிலையில் அடியேனைக் கைவிடலாகாதென்பார் , “விட்டிடுதி கண்டாய்” எனக் கூறியருளினர் .
இதன்கண், “மலங்க ளைந்தாற் சுழல்வன் தயிரிற் பொருமத்துறவே “ என்றதனால் , உலக வாழ்க்கை ஆணவ முதலிய பாசப்பிணிப்பால் நிகழ்வதென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**********************************
பாடல் : 30 .
மத்துறு தண்டயி ரிற்புலன் றீக்கது வக்கலங்கி
வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாந்தணி சச்சையனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆணவ முதலிய மலங்களால் தாம் எய்தும் கலக்கத்திற்கு , மத்தினாற் கடையப்படும் தயிரின் சுழற்சியை உவமையாகக் கூறிய அடிகள் , இத்திருப்பாட்டில் மத்தினாற் கடையப் படுங்கால் , தயிர் தன் குளிர்ந்த இயல்புக்கு கேடில்லாதபடி கலக்கப்படுதல் போல ,உயிர்க்குணமாகிய அறிவு நிலைக்குக் கேடில்லாதவாறு என் உயிர் நிலை கலக்கப்பட்டும் அவ்வளவின்றி , அறிவும் வெதும்பிக் கெடுமாறு புலன் தீப்பற்ற அக்கலக்கத்தில் ஆழலானேன் என்று வருந்திக் கூறுகின்றார் .
பதவுரை :- வெண் (மை) தலை மிலைச்சி = வெண்மை நிறமுடைய தலையைச் சடையிற் சூடி ,
கொத்து உறு போது மிலைத்து = பூந்துணரிற் பொருந்திய கொன்றை மலர் மாலையை யணிந்து ,
குடர்நெடு மாலை சுற்றி = குடராகிய நெடிய மாலையைக் கழுத்திற் சுற்றிப்புனைந்து ,
தத்து உறு நீறுடன் = பரந்துபட்ட திருநீற்றுடன் ,
ஆரம் செஞ்சாந்து அணி சச்சையனே = சந்தனத்தினது செம்மையான கலவையை யணிந்து திகழும் மெய்ப்பொருளாகவுள்ளவனே ,
மத்து உறு தண்தயிரின் = மத்தினால் கடையப்படும் குளிர்ந்த தயிரைப் போல ,
புலன் தீக் கதுவக் கலங்கி = புலன்களாகிய தீ ப்பற்றி வெதுப்பக் கலக்கமுற்று ,
வித்து உறுவேனை = அக்கலக்கத்தில் ஆழ்ந்து வித்தாம் தன்மை யெய்திய அடியேனை ,
விடுதி = கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- தாருக வனத்து முனிவர்கள் வெகுளி காரணமாக இறைவனைக் கொலைபுரியக் கொடி வேள்வியொன்றியற்றி அதனின்றும் தோன்றிய வெண்டலை யொன்றை யேவினராக, அதனை இறைவன் கையினாற் பற்றித் தன் சடையிற் சூடினனென்பது புராண கதை . மிலைத்தல் – சூடுதல் . வெண்டலை மிக்க கொடுஞ் செயலுடைய தாகலின் அதனால் உலகங் கேடு அடையாமைப் பொருட்டு அதனைச் சூடினனென்ப. இவ்வுண்மையை “அகிலமதிறவா வண்ணம், முக்கணனருள் செய்தந்த முண்ட முண்டகக் கைபற்றிச் , செக்கரஞ் சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதியென்றார் “ என்பதனான் அறிக . இதனால் எத்துணைக் கொடிய இடையூறும் ஆண்டவன் சார்பில் அணுகாதென்னும் உண்மை புலப்படுக்கப் பட்டபடியாம் .
கொத்து – பூங்குலை . குலையினின்றும் கழன்ற பூ , புதுமைச் செவ்வி குலைந்திருக்கு மாதலின் , அக்குலைவின்மை குறித்தற் பொருட்டு , “கொத்துறு போது” என்று கூறப்பட்டது . இனிக் குலையினின்றும் கொய்யப் படாமல் அக்குலையோடு சூடப்பட்டது என்று கோடலும் ஒன்று . பிரமன் முதலியோர் அழிவில் அவர் தம் என்பு தலை முதலியவற்றை மாலையாகக் கோத்தணிந்தனன் இறைவன் என்று கந்தபுராணம் கூறுமாதலின் ,அவற்றின் இனமாக அத் தேவர் தம் குடர்களையும் மாலையாக அணிந்தனன் என்பார் “குடர்நெடு மாலை சுற்றி” என்றார் . என்பு மாலை முதலியவற்றை யணிந்தத னாற் போதரும் உண்மைப் பொருளைக் கந்தபுராணத்துட் காண்க. “நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் , ஆறு கோடி நாராயணரங்ஙனே , யேறு கங்கை மணலெண்ணி லிந்திரர், ஈறிலாதவன் ஈசனொருவனே” என்று அப்பர் அருளிய தேவாரத்தானும் இவ்வுண்மை புலனாகும் .
மேலும் மக்கள் முதலியோரால் விரும்பத்தக்கதும் வெறுக்கத்தக்கது மாகிய போதினையும் குடரையும் ஒப்பப் புனைந்தமையால், இறைவன் ஒன்றை விழைதலும் ஒன்றை வெறுத்தலும் இல்லாதவன் என்னும் உண்மையும் பெறப்படும் என்க . { கொடி நெடுமாலை என்று பாட வேறுபாடு இருப்பின் , தாமரை முதலிய கொடியோடு கூடிய மாலையெனப் பொருள் கோடலும் பொருந்தும் . அப்பாட வேறுபாடு படிகளிற் காணப்படாமையாற் கொண்டிலம்} தத்தல் – பரத்தல் . “தத்தரி நெடுங்கண்” என்புழி , அப்பொருட்டாதலறிக . இது , திருநீற்றை நீரிற் குழையாமல் வரியின்றிப் பூசுதலைக் குறிக்கும் . இதனை உத்தூலனம் என்ப . ஆரச் செஞ்சாந்து – செஞ்சந்தனக் குழம்பு . திருநீறும் சந்தனக் குழம்பும் முறையே வெப்பமும் தட்பமும் செய்வனவாதலின் ,ஒன்றொற்கொன்று மாறுபட்ட குணங்களெல் லாம் இறைவனைச் சார்ந்து ஒத்த நிலை பெறும் என்னும் உண்மையை அது குறிப்பிற் புலப்படுத்தும் என்க .
இனித்திருநீறும் செஞ்சாந்தும் கூறியது , “ பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் “ என்றபடி உமை யொரு கூறனாம் நிலையைக் குறிப்பிற் புலப்படுத்து மெனக் கோடலும் ஒன்று. இக்குறிப்புப் புலன்களால் வெதும்பும் தம்மைக் கைவிடாமல் அளிசெய்து காத்தற்கு அம்மையுடனாக அப்பனை அடிகள் நினைவுட் கொண்டன ரென்பதைப் புலப்படுத்துவதாகும் .என்றும் உள் பொருளைச் சத்து என்று வட நூலார் கூறுவர் .சத்தின் தன்மை சத்தா வென்றாகும் . ஆகார வீறு தமிழில் ஐகாரமாகும் . ஆதலின் சத்தை என்றாகி , வித்தை விச்சை யென்றாதல் போலச் , சத்தை சச்சை யென்றாயிற்று . ஆகவே சச்சையன் என்பது , சத்தாந் தன்மை யுடையவன் என்னும் பொருளதாம் .
பின் வரும் திருப்பாட்டின் முதன் மொழிக்கும் இதுவே பொருளென்க . மேற் போந்த வெண்டலை , போது , குடர்நெடுமாலை , நீறு என்பவற்றை அணிந்தது பற்றிய புராண கதைகளெல்லாம் என்றும் உள் பொருளாக வுள்ளவன் சிவபெருமானே யென்பதை வலியுறுத்தற்கு எழுந்தனவென்க. இவ்வுண்மை குறித்தே அவ்வரலாறுகளை முதலில் விளக்கி இறுதியில் முடி பொருளாகச் “சச்சையனே” என அருளிச் செவாராயினர் .
இனி, இரங்கத்தக்க தம் நிலைமையை உவமையால் விளக்கிக் கூறுகின்றார் . மத்தினாற் கடையப்படும் தயிர் போல ஐம்புலன்களானும் என் உயிர் கலக்கமுறுகின்றது என முன்னைத்திருப்பாட்டில் கூறப்பட்டத னையே ஈண்டும் வழிமொழிதலாகக் கூறினரெனினும் ,ஒரு வேற்றுமை யீண்டுண்டு . எத்துணை கலக்கப்படினும் தயிரின் தட்பம் நீங்காமை போல உயிர் கலக்கமுறினும் உயிர்க்குணமாகிய அறிவு நிலை கலங்காதென்பது முன்னைத் திருப்பாட்டிற் போதரும் . அதனை விலக்கற்கே , “தண்டயிர்” என ஈண்டுத் தன்மை யடை புணர்க்கப்பட்டும் , அத்தன்மை புலன்களின் வெம்மையில் ஒழிந்ததென்னும் குறிப்புத் தோன்ற , “புலன் தீக்கதுவ” என்றும் கூறுவாராயினர் .
இங்ஙனம் கூறியதனால் உயிர்நிலை கலங்கியதோடு அறிவு கலங்க முற்றுளதென்பது புலனாகும் . புலன்களாகிய தீயினால் அறிவு நிலை திரிந்து வெப்பமுற்றுக் கலங்கிய நிலையில் ,அக்கலக்கத்தினின்றும் விடுதலைபெற வியலாது , ஆழ்ந்து பாடலானேன் என்பார் , “வித்துறுவேனை” என்றார் .வித்தாம் தன்மையடைதல் – வேரூன்றியழுந்துதல் . என் உயிர் நிலையும் அறிவு நிலையும் கலங்கி வெதும்பி ஆழ்ந்து கிடக்கும் இத்துயர் நிலையில் , பேரருளாளனாகிய நீ சிறியேனைக் கைவிடல் தகுமாவென் பார் , “விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண், “புலன் தீக்கதுவக் கலங்கி வித்துறுவேனை “ என்றதனால் , உலக வாழ்க்கையில் உயிர் நிலையும் அறிவு நிலையும் கலக்கமுறுதல் பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக
**************************************
பாடல் : 31 .
சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால் நிலநெருப்பாம்
விச்சைய னேவிட்டிடுதிகண் டாய்வெளி யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய னே யொண் படவரவக்
கச்சைய னேகடந் தாய்தடந் தாள வடற்கரியே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் தம் உயிர் நிலையும் அறிவும் கலக்கமுற்று வெதும்புமாறு புலன்களாகிய தீயிடைப்பட்டு வருந்துகின்றேன் எனக்கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் அத் தீமுதலிய ஐம்பெரும் பூதங்களாகவும் திகழ்கின்றவன் நீயேயாதலின் , வெம்மை யைத் தணிக்கும் தண்புனலாக நின்று அவ்வெப்பத்தைப் போக்கியருள வேண்டுமென்பதைக் குறிப்பிற் புலப்படுத்துகின்றார் .
பதவுரை :- வெளியாய் கரியாய் பச்சையனே செய்யமேனியனே =
வெண்மை கருமை பசுமை செம்மையாகிய நிறங்களையுடைய திருமேனியையுடையாய் ,
ஒண்பட அரவக் கச்சையனே = ஒளி பொருந்திய படத்தினையுடைய பாம்பாகிய அரைப்பட்டிகையை யுடையவனே ,
தடம்தாள அடல் கரி கடந்தாய் = அகன்ற அடிகளையும் கொல்லும் தொழிலையுமுடைய யானையைக் கொன்றவனே ,
சச்சையனே = மெய்ப்பொருளாகவுள்ளவனே ,
மிக்க தண்புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம் விச்சையனே =
மிக்கதாகிய குளிர்ந்த நீர் விசும்பு காற்று நிலம் தீ ஆகிய ஐம்பெரும் பூதங்களாகவும் விளங்கும் வித்தயை யுடையவனே ,
விட்டிடுதி = கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- சிவபெருமானுக்கு ஈசான முதலிய முகங்கள் ஐந்துள்ளன வென்றும் , அவை தனித்தனி வெண்மை முதலிய நிறங்களுடையன வென்றும் சிவாகமங்கள் கூறும் . இத்திருப்பாட்டில் கூறப்பட்ட நான்கு நிறங்களோடு , கூறப்படாத பிறிதொன்றையும் இனம் பற்றி இயைத்து ஐந்து நிறங்களாகக் கொள்ளல் வேண்டும் .”நிறங்களோரைந்துடையாய் “ என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும் அறிக . இந் நிற வேற்றுமை , நினைவு கூறும் அன்பர் நலங்குறித்து இறைவன் மேற்கொண்டபடியாம் .
இனி, வெளியாய் கரியாய் என்பன முறையே பதிஞானமாகிய ஞானநாட்டத்திற்கு வெளிப்பட்டும் ,பசு பாச ஞானங்களாகிய ஊன நாட்டத்திற்கு வெளிப்படாமலும் இருக்கும் இறையியல்பைக் குறிப்பன வெனவும் , பச்சையனே செய்ய மேனியனே என்பன ,அருள்வடிவினளாகிய இறைவியோடு இயைந்து அன்பர்க்குக் காட்சி நல்கி அருள்புரியும் நிலையைக் குறிப்பனவெனவும் கோடலுமாம் . இவ்வுண்மைகளை “ஊனக் கண் பாச முணராப் பதியை , ஞானக்கண்ணினிற் சிந்தைநாடி “என்னும் சிவஞானபோத நூற்பாவானும் , “குறையுணர்வாகிய பசுவறிவானும் பாசவறிவானும் உணரப்படாத முதல்வனை அவனது திருவடி ஞானத்தாற்றன்னறிவின் கண்ணே யாராய்ந்தறிக “ என்னும் அதனுரை யானும் , “கரியரேயிடந்தான் செய்யரேயொரு பால் “ என்னும் திருவிசைப் பாவானும் முறையே அறிக .
வெண்மை முதலியன இறைவற் குண்மையாயினும் , “செய்ய மேனியனே” என ஈண்டுத் திருமேனியைச் செம்மை யோடியைத்துக் கூறியது , ஞானாசிரியனாக எழுந்தருளி யளித்த காட்சியிலீடுபட்டமை பற்றியென்க . மற்றை மெய்யடியார் அநுபவத்திலும் இறைவன் திருமேனி செம்மை நிறமுடையதாகக் காட்சிப்பட்ட தென்னும் உண்மையும் ஈண்டு நினைக்கத்தக்கது . . “தீ வண்ணன் “ “செம்மேனி யெம்மான் “ என்பன காண்க. யானைத்தோல் அகன்றதாகலின் அது போர்த்தற்கும் , புலித்தோல் அதனிற் சிறிதாகலின் , அஃது உடுத்தற்கும் இயைபுடை யன வாயினாற்போலப் பாம்பு அரைக்கச்சாக அமைந்தது பொருத்தமே .
இறைவன் யானையையும் புலியையும் கொன்று உரித்துப் போர்த்து உடுத்து போலன்றிப் பாம்பை உயிருடன் அரைப்பட்டிகையாகக் கொண்டனனாதலின் “ஒண்படவரம் “ என்னப்பட்டது . ஒளியுடன் கூடிய படம் உயிருள்ளதற்கே இயல்பிற் பொருந்துவதாகும் . பாம்பைக் கச்சாகக் கொண்டது குண்டலினி என்னும் சுத்தமாயையை இறைவன் தனுள்ளடக்கி யிருத்தலாகிய உண்மைப்பொருளைக் குறிப்பதாகும் . “தடந்தாள அடற்கரி”என்றது , கொடிய கயமுகா சுரனாகிய யானையை . கடத்தல் – அழித்தல் . கடந்தாய் என்பது முன்னிலை வினைப்பெயர் விளியேற்று நின்றது . கொடிய அசுரனை யழித்த மிக்க வீரச்செயலைப்புலப்படுத்தியது . புலப்பகையால் உண்டாம் தீக்கை யொழித்தல் எளிதென்றற்கு . “சச்சையனே” என்பதன் விளக்கம் முன்னைத் திருப்பாட்டிற் கூறப்பட்டது .
“மிக்க தண்புனல்” என்புழி மிகுதி உருவப் பருமையையும் , தண்மை குணத்தையும் புலப்படுக்கும் . புனலுக்கு இவ்வாறு கூறவே ஏனைய பூதங்க ளும் காரியப்பாட்டின் பருமையாகிய பொதுக் குணமும் , அவ்வப் பூதங்க ளுக்குரிய சிறப்புக் குணங்களும் பெறப்படும் . சத்துப்பொருளாகவும் பெருமை சிறுமை தண்மை வெம்மை முதலிய குணங்களில்லாதவனாக வுமுள்ள இறைவன் “இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி , யியமானனா யெறியுங் காற்றுமாகி , அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி யாகாச மாயட்ட மூர்த்தியாகி “ என்றபடி .
அசத்துப்பொருளாகவுள்ள ஐம்பெரும் பூதங்களாகவும் , குணங் களை யுடையவனாகவும் வெளிபடாமல் , மாயவித்தை யென்பார், “சச்சையனே மிக்கதண்புனல் விண்கானில நெருப்பாம் விச்சையனே” என்றார் . நிலையுடைப் பொருளாகவுள்ளவன் நிலையில் பொருளாகவும் வெளிப்படுதலின் அது வித்தையாயிற்று என்பது .
இதன் முன்னைத் திருப்பாட்டில் ஐம்புலன்களும் தீயாகக் கூறப்பட்டமையால் , அத்தீயின் ஆற்றலை யொழித்தற்கு இறைவனை இத் திருப்பாட்டில் ஐம்பெரும் பூதங்களுள் வைத்து , முதற்கட் புனலாகக் கூறி யருளினர் . நீரும் நெருப்பும் இயைந்துழி மிக்க தன் கண் ஏனையது ஒடுங்கி யொழியும் ஆதலின், நெருப்புக்கு ஏதும் அடையின்றி “புலன் தீக்கதுவ” என்று முன்னைத் திருப்பாட்டிற் கூறி, இத்திருப்பாட்டில் “மிக்கதண்புனல்” என்றார். வெம்மையை யொழித்தற்குத் தண்மையும் சுருக்கத்திற்கு மிகுதியும் கூறிய நயம் நினைந்து இன்புறத்தக்கது .
இறைவ, நிலையுடைப் பொருளாகிய நீ , நிலையில் பொருளா கிய பூதங்களாகவும் வெளிப்பட்டருளும் வித்தை யுடையையாதலின் , அவ் வித்தை முகமாகவும் அடியேனைப்பற்றி நிற்கும் புலப்பகையை ஒழிக்கும் ஆற்றல் நின்பாலதாகும் . அங்ஙனமாகவும் அப்புலன்களாகிய தீயினால் கலக்கமுற்றிருக்கும் இந்நிலையில் , ஏழையேனைக் கைவிடல் தகுமா? கைவிடாமற் காத்தருள வேண்டுமென்று அடிகள் விண்ணப்பஞ் செய்து கொண்டபடியாம் .
இதன்கண், நிலையுடைப்பொருளாகவுள்ள இறைவன் , நிலையில் பொருள்களாகிய பூதங்களாகவும் வெளிப்படுதல் , நிலையுதலில்லா உலக வாழ்க்கையில் உயிர்களுக்கு நேரும் புலப்பகைகளை யொழித்தற் பொருட்டாமென்பது பெறப்படுதலின் பிரபஞ்ச வைராக்கியம் குறிப்பிற் புலனாதல் அறிக .
************************************
பாடல்:32 .
அடற்கரி போலைம் புலன்களுக் கஞ்சியழிந்த வென்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழக்
கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஐம்பெரும் பூதங்களாக விளங்கும் நிலையில் , மிக்க தண்புனலாக நின்று புலன்களாகிய தீயின் வெம்மை யைக் போக்கியருளவேண்டுமென்று இறைவனை வேண்டிய அடிகள் , இத்திருப்பாட்டில் அப்புலன்களுக்கு அஞ்சிக் கலங்கும் நிலையிற் சிறியேனைக் கைவிடாமற் காக்கும் கடப்பாடு, என்னிற் பிரியாதிருக்கும் நின்பாலதேயென விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார்
பதவுரை :- விழு தொண்டற்கு அல்லால் தொடற்கு அரியாய் = சிறந்த மெய்யடியார்க்கு அன்றிப்பிறர்க்குத் தீண்டுதற்கு அருமையாகவுள்ளவனே ,
சுடர் மாமணியே = ஒளி விளங்கும் பெரிய மாணிக்க மணியே ,
சுடு தீ சுழல = சுடும் இயல்பினையுடைய தீக் கொழுந்து சுழலும்படி ,
கடல் கரிதாயெழும் = திருப்பாற்கடலின் கண்ணே கருமை நிறத்தோடு தோன்றிய ,
நஞ்சு அமுதாக்கும் கறைக் கண்டனே = நஞ்சத்தை உணவாகக்கொண்ட கரிய கழுத்தையுடையவனே ,
என்னை விடற்கு அரியாய் = அடியேனை எக்காலத்தும் விட்டு நீங்காதவனே ,
அடல் கரிபோல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை = வலிமிக்க யானையைப்போன்ற ஐம்புலன்களுக்கும் அஞ்சி நிலை கலங்கிய சிறியேனை ,
விட்டிடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- சிறந்த தொண்டின் இலக்கணத்தை “கண்ட விலையல்லேன் நானென்றகன்று காணக்கழிபரமும் நானல்லே னெனக் கருதிக் கசிந்த தொண்டு” என்று சைவ நூல் கூறும் . உலகத்தொண்டு கடவுட் டொண்டு என்னும் இரண்டனுள் , முன்னது அழியும் இயல்பினவாகிய உலக இன்பங்களை விரும்பி முனைத்து நின்று செய்யப்படுவது . அவ்வின்பங்கள் தாமும் அடிமைக்குக் குறைந்தும் , ஆண்டவனுக்கு மிக்கும் உண்டாவனவாம் பின்னதாகிய கடவுட்டொண்டு , அழிவில் இன்பத்தை விரும்பி முனைப்பற நின்று செய்யப்படுவது ; அப்பேரின்பந்தானும் ஆண்டவனுக்கின்றி அடிமைக்கே உரியதாகும் . இவ்வுண்மை யுணர்ந்து ,”நாமார்க்குங் குடியல்லோம் “ என்றபடி உலகத்தொண்டில் தலப்படாமல் கடவுட்டொண்டில் ஈடுபட்டு ஒழுகும் மெய்யடியாரையே “விழுத்தொண்டர்” என்று இங்கே குறிப்பிடுவாராயினர் .
மேற்குறிப்பிட்ட சிவஞான சித்தியில் “கசிந்த தொண்டு “ என்பதற்கு “முனைத்து நின்று செய்யும் உலகத்தொண்டின் நீக்குதற்குக் கசிந்த தொண்டென விசேடித்தார்” என்று சிவஞான முனிவர் கூறிய குறிப்பும் ஈண்டு நினைக்கத்தக்கது . “விழுத்தொண்டர்க் கல்லால்” என்றதனால் பிறர்க்கென்பது பெறப்படும் . பிறராவர் வேடநெறி நில்லாமல் வேடம் பூண்டிருப்போரும், நெறி நில்லாமையோடு அவ்வேடத்தானும் இல்லோரும் எனப் பலதிறப்படுவர் . தொடுதல் – தீண்டுதல் . விழுத்தொண்டரல்லாதார் தீண்டுதற்கு அரியனென்றதனால் ,விழுத்தொண்டர்க்கு எளியனென்பது பெறப்படும் . கல்வி , செல்வ முதலியவற்றால் பெரியராயினும் , கசிந்த தொண்டு உடையரல்லரேல், இறைவன் பக்கல் சிறிதும் அணுக இயலாதென்பது தெளிவு .
இறைவன் மெய்யன்பராகிய தொண்டர் தன்னைத் தீண்டுதற்கு எளியனாதலேயன்றி , அவர்தம் உள்ளத்தையே உறைவிடமாகக் கொண்டு வீற்றிருப்பன் என்பதும் , மெய்யன்பரல்லாதார் தீண்டற்கு அரியனாதலே யன்றி அவர் தம் காட்சிக்கே அரியனாவன் என்பதும் குறிப்பிற் புலப்படுத்த வாறாம் . இவ்வுண்மையை “உள்ளுறும் அன்பர் மனத்தார் தாமே ……..பிறர்க் கென்றும் காட்சியார்தாமே” என்னும் அப்பர் அருண்மொழியானும் உணர்க . “தொடற்கரியாய்” என்றதனால் இறைவன் தொட்டாற் சுடும் பரிசமுடைய தீவடிவினனோ எனின் , பேரொளிப் பிழம்பாக வுள்ளமையால் விழுத்தொண் டரல்லாதார்க்கு அணுகுதற்கு அரிய நெருப்பாகவும் ,மெய்யன்பர்க்கு அணிந்து கோடற்குரிய ஒளிமிக்க மாணிக்க மணியாகவும் விளங்கும் இயல்பினன் என்பார் , “ தொடற்கரியாய்” என்பதனையடுத்துச் “சுடர் மா மணியே “ என்றார் .
கண்ணுவர் ஆச்சிரமத்தில் கண்ட சகுந்தலையைத் துஷ்யந்த மன்னன் முதலில் அந்தணர் குலக்கன்னி என்று ஐயுற்றுப் ,பின்னர் அரசர் குலப்பாவை யென்று தெளிந்ததும் தன் நெஞ்சத்தை நோக்கி,”நெஞ்சமே! இப்பொழுது ஐயம் நீங்கித் துணிவுண்டாயிற்று ;ஆதலின் விருப்பமுடையை யாகலாம் . எப்பொருளை நெருப்பென்று ஐயுற்றனையோ , அஃது அணிந்து கோடற்குரிய இரத்தினமாகும் “ என்று கூறியதாகச் சகுந்தலா நாடகத்தில் காளிதாச மகாகவி கூறியுள்ளார் . நெருப்புத்துண்டும் மாணிக்கமணியும் நிறத்தாலொக்குமாயினும் , முன்னது சுடும் இயல்பினது ; பின்னது அணிந்து கோடற்குரியது என்பது உவம விளக்கமாகும்.
ஈண்டு அடிகள் இறைவனைப்பற்றிக் கூறிய பகுதியும் , காளிதாச மகாகவி உலகியலில் வைத்துக் கூறிய பகுதியும் இலக்கிய நயத்தால் ஒற்றுமைப்பட்டு அறிஞர்க்கு இன்பஞ் செய்வனவாகும் . அடிகள் “அருளுடைச் சுடரே “ என்று பிறிதோரிடத்துக் கூறியதன் பொருள் நயமும் ஈண்டு நினைந்தின்புறத்தக்கது . ஒரு விளக்குப் பிறிதொரு பொருளைக் காண்டற்கு உதவியாகுமன்றித் தன்னைத் தொடிற் சுடுவதாகும் . இறைவன் உயிர்க்குக் காட்டும் உபகாரத்தோடு தன்னை யனுபவிக்கவும் தருதலால், “அருளுடைச் சுடர்” என்னப் பட்டானென்பது , அத்திருவாக்கின் தெளி பொருளாகும் .
இனி, தன்னைப் புகலடைந்தார்க்கு எவராலும் விலக்கற்கரிய இடுக்கண் நேரினும் , அதனை யொழித்துப் பாதுகாக்கும் ஆற்றலும் அருளுமுடையான் சிவபிரான் ஒருவனேயாவன் என்பதற்கு ,நஞ்சுண்ட வரலாற்றை அடிகள் குறிப்பிடுகின்றார் . நஞ்செழுந்தது திருப்பாற் கடலிலென்ப . விண் மண் முதலிய உலகங்களையே அழிக்கும் கொடுமை யுடையதாக அந்நஞ்சின் வேகத்தில் தீக்கொழுந்து சூழ்ந்து எழுந்ததென்பார் “சுடுதீச் சுழல” என்றார் . நீர்ப்பெருக்காகிய கடலில் எழுந்தும் வேகந்தணி யாமை குறித்துச் “சுடுதீ” யென இயற்கையடையோடு கூறப்பட்டது . சுழலுதல் – சூழ்தல் . “சுழலுமிசை வேண்டி” என்புழி அப்பொருட்டாதல் அறிக . சுழலவென்னும் செயவென் எச்சம் எழும் என்னும் வினைகொண்டு முடியும்.
இனி, சுடுதீயை வடவையெனக் கொண்டு அதுவும் சோர்வடைய வென்று பொருள் கொள்ளுவாரும் உளர் . தீக்கொழுந்து சூழவெழுந்த நஞ்சு தீ நிறமுடையதன்று ; கருநிறமுடையதே யென்பார் , “கடற்கரிதாய்” என்றார். அழிக்குந்தொழில் பற்றித் தீக்கொழுந்து கூறப்பட்ட தன்பது . கடற்கு அரிதாய் எனப்பலரும் பதப் பிரிவு கொண்டனர் . அதனால் பொருட் சிறப்பின் றென்க . அமுதாக்கல் – உணவாகக்கொள்ளுதல் . அதனை அறவே யொழிக்கும் பேராற்றலிருந்தும் , உண்டு அடங்கியது எத்தகைய கொடிய பொருளும் தன்னை நலியாது என்பதை எஞ்ஞான்றும் யாவரும் உணர்ந்து , தன்னைச் சார்ந்து நலம் எய்துதற்பொருட்டாம் . அமுதாகக் கொண்டதற்குச் சான்று நீலகண்டமென்பார், “கறைக்கண்டேனே” என்றார் .
“விடற்கரியாய்” என்றது , கட்டு வீடு என்னும் எந்நிலையிலும் உயிரோடு ஒற்றித்து நிற்கும் இறையியல்பு குறித்தாம் . இறை விளக்கம் கட்டு நிலையில் அரிதாதலையும் , சாதன நிலையில் அதனிற் சற்று எளிதாதலையும் , வீட்டு நிலையில் முற்றும் எளிதாதலையும் உணர்ந்து கண்ட அப்பர் “விறகிற்றீயினன் பாலிற்படு நெய்போல், மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்” என்று அருளியிருத்தல் இங்கே நினைந்து இன்புறத் தக்கது . வலிமிக்க யானை மதச் செருக்கால் பாகன் தோட்டியை நீக்குமாறு போல , ஐம்புலங்களும் நுகர்பொருள்களைப்பற்றிநிகழும் ஆற்றலால் ,தம் அறிவைக் கடந்து சேறலின் , “அடற்கரிபோல் ஐம்புலன்கள்” என்றார் .
ஒருவன் கொடிய பொருளொன்றால் தனக்கு தீங்கு நேரும் என்று அறிந்து விலக்கமுயன்றும் பயன்படாத நிலையிலே அசமும் கலக்கமும் எய்துவான் ; அறியாத நிலையில் அஞ்சமாட்டான் .இஃது உலகியலிற் கண்டது .இம் முறையில் யானையைப் போலத் தம்மைத் தாக்க முற்படும் புலப்பகையைக் கடக்கத் தம் அறிவு வலியால் முயன்றும் பயன்படாமையால் , “அடற்கரிபோல் ஐம்புலன்களுக்கஞ்சி யழிந்த வென்னை” என்றார் .
அச்சத்தின் முடிவே கலக்கமாதலின் , அஞ்சுதற்குப்பின் அழிதல் கூறப்பட்டது . “என்னை” என்பதை “விடற்கரியாய்” “விட்டிடுதி” என்னும் ஈரிடத்தும் இயைத்துக்கொள்க . புலப்பகைக்கு அஞ்சியழிந்த யான், எக்காலத்தும் என்னிற் பிரியாதுறையும் நின் இயல்பையுணர்ந்து நின்னைப்பற்றி நிற்கின்றேனாதலின் , இந்நிலையில் சிறியேனைக் கை விடாமல் காத்தருளும் பொறுப்புக் கரியுரி போர்த்த கறை மிடற்ற ண்ண லாகிய நின்பாலதே யாகுமென்பார் , “விட்டிடுதி கண்டாய் “ என்றார் .
இதன்கண், “அடற்கரிபோல் ஐம்புலன்களுகஞ்சி யழிந்த வென்னை “என்றதனால் , உலக வாழ்க்கையில் புலப்பகை மிக்க வலியுடையதன்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
*****************************************
பாடல் : 33 .
கண்டது செய்து கருணைமட் டுப்பரு கிக்களித்து
மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின் விரைமலர்த்தாள்
பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக்
கொண்டேனெந் தாய்களை யாய்களை யாய குதுகுதுப்பே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் புலன்களின் தாக்குதற்கு அஞ்சி வருந்தும் என்னைக் காக்கும் பொறுப்பு , என்னிற் பிரியாதிருக்கும் நின்பாலதாம் என்று இறைவனை நோக்கிக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் என்னிற் பிரியாதிருக்கும் நிலையில் நினருட்பேற்றிற் குரியனாக்கியும் , புலப்பகையை வென்று ,அப்பேற்றின் பயனை எய்தாமல் உயிர் முனைப்பால் அதற்கு மாறாகச் செருக்குற்று மனஞ்சென்றவாறு ஒழுகலானேன் ;இந் நிலையில் மீண்டும் சிறியேனைப் பணிபுரிவித்துக் குற்றங்களைந்து ஆட்கொண்டருளல் வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- என் எந்தாய் = எனக்குச் சிறப்புரிமை வாய்ந்த என் தந்தையே ,
கருணைமட்டுப் பருகி = நின் அருளாகிய தேனை நிறையக்குடித்தும் ,
களித்து = களிப்பு மிகப்பெற்று ,
கண்டது செய்து மிண்டுகின்றேனை – மனத்தில் தோன்றியபடி செய்து செருக்கிப் பேசித் திரிகின்ற சிறியேனை ,
விடுதி = கைவிட்டுவிடுவாயோ ? (விடலாகாது) ,
நின் விரை மலர்த்தாள் = நின் மணமிக்க தாமரை மலர் போன்ற திருவடிகளை ,
பண்டு தந்தாற் போற் பணித்து = முன்னர்த் தந்தது போலக் கொடுத்து ,
பணி செயக் கூவித்து = தொண்டு செய்யக் கூவியழைத்து ,
என்னைக் கொண்டு = அடியேனை ஆளாகக் கொண்டு ,
களையாய குதுகுதுப்பு களையாய் = இடையூறாகிய ஆசையைக் களைந்தருள்வாயாக என்பது .
விளக்கவுரை :- அடங்காப் பிள்ளையாயினும் , உணவூட்டிப் பிணி களைவித்து அறிவு கொடுத்தல் தாய் தந்தையர் கடமையாதலின், அம்முறையில் அடிகள் களித்துச் செருக்கித் திரியும் தமக்குக் கருணைத் தேன் ஊட்டி , உலகப்பற்றாகிய நோயைக் களைவித்துத் , திருவடிக் காட்சியாகிய ஞானத்தை அருளிப் பாதுகாக்கும் அம்மையப்பனைக் குறித்துச் சிறப்புரிமை தோன்ற , “என் எந்தாய் “ என்றார் . மட்டு – தேன். இறையருளை மற்றொரு பொருளாக உருவகஞ் செய்யாமல் தேனாகக் கூறியது , மெய்யன்பர்க்கு எளிமையில் அறியத்தக்க இனிப்புச்சுவையும் குடித்தற்குரிய நெகிழ்ச்சியும் உடைமையானென்க. “என்னிற் கருணைவான் றேன்கலக்க” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதுங் காண்க . இனிமை யும் நெகிழ்ச்சியுமுடைய உணவே குழந்தைகள் விரும்பி யுண்டற்குரிய தென்பதை உலகியலிலுங் காணலாம் . உண்டல் தின்றல் நக்கல் பருகல் ஆகிய நால்வகை உணவுகள் ,தேன் சுருங்கிய அளவு நக்குதற்கும் , மிக்க அளவு பருகுதற்கும் உரியதாகும் . இங்கே இறைவன் அருளிய அருளாகிய தேனின் மிகுதி குறித்தும் ,நீரைப் போல அதனை வேண்டுமளவும் தாம் குடித்தது குறித்தும் “கருணை மட்டுப் பருகி” என்றார் . செய்யுள் விகாரத் தால் தொக்க உம்மையை விரித்துப் பருகியும் என்று கொள்ளல் வேண்டும் .
திருவருளாகிய தேனை நிறையக் குடித்தும் , அவ்வருட்பயனை யடையாமல் , என் அறியாமையால் அதனைக் கள் எனக் கொண்டு களிக் கின்றேன் என்பார் , “களித்து” என்றார் . மட்டு என்னும் சொல் கள்ளையும் உணர்த்தும் என்பது ஈண்டு நினைக்கத்தக்கது . களித்தல் கட்குடியா லுண்டாம் மகிழ்ச்சி . அக்களிப்பால் செய்வன இன்ன தவிர்வன இன்ன வென்றுணராமல் ,மனத்தில் தோன்றியதைச் செய்யலானேன் என்பார் , “கண்டது செய்து “எனவும், அந்நிலையில் “ஓருவரை மதியாதுறாமைகள் பேசி” என்றபடி யாரையும் மதியாமல் செருக்கிப் பேசித் திரிகின்றேன் என்பார் , “மிண்டுகின்றேனை” எனவும் கூறினார் .மிண்டுதல் – செருக்கிப் பேசுதல் . “பிண்டியர்கள் மிண்டு மொழி “ எனவும் “வானோர் தானவர் துற்று மிண்டுகள் பேசி” எனவும் போந்த இடங்களில் அஃது அப்பொருட்டாதல் அறிக. “களித்து” என்றதனால் உள்ளமும் “ கண்டது செய்து “ என்றதனால் செயலும் “மிண்டுகின்றேன்” என்றதனால் மொழியும் ஆகிய முக்கரணங்களும் மாறுபட்டமை புலப்பட வைத்தாறாம் .
இத்துணையும் கூறியவற்றால் , இறைவன் தமக்கருளிய அருளாகிய தேனின் அருமை அறியாது எளிய கள்ளின் இயல்பில் வைத்துப் பயனைத் திரியக் கொள்ளலானேன் என்று அடிகள் இரங்கியபடியாம் . இங்ஙனம் இரங்குதலை “மையிலங்கு நற்கண்ணி பங்கனே வந்தெனைப் பணி கொண்ட பின் மழக், கையிலங்கு பொற்கிண்ண மென்றலாலரியை யென்றுனைக் கருதுகின்றிலேன்”” எனவும்,, “என்னாலறியாப் பதந் தந்தாய் யானறியாதே கெட்டேன்” எனவும் கூறிப்போந்த திருவாக்குக்களானும் அறிக. இங்ஙனம் அருட் பயனை மாறுபடக் கொண்ட பிழை கருதிச் சிறியெனைக் கைவிடலாகாதென்பார் “விடுதி கண்டாய் “ என்றார் . கை விடாமற் செய்யத்தக்கன என்னை யென்னும் வினாவிற்கு விடையாகப் பின் வருவன கூறப்படுகின்றன .
முன்னர் இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளித் தமக்கு உபதேசித்த நிலையில் , “சென்னியின் மிசை மேவிய பாதந்திருந்து கண்ணினை சேர்த் திருக்கரத்தால் ,உன்னல் செய்திடு மிதய மேலனைவித்து வுகை கூர்ந்து மெய்யுணர்ச்சியினெழுந்தார் “என்றபடி அப்பெருமான் பொன்னடிகளை அடிகள் உற்றுக்கண்டு உயிர்த்து அநுபவத்தவராதலின் , அந் நினைவு தோன்ற “நின் விரை மலர்த்தாள்” என்றார் . தாமரை மலர் மெல்லிய ஊறும் ,செந்நிறவொளியும் , நறுமணமும் உடையதாய் விளங்கி இன்பஞ் செய்தல் போலத் திருவடிகளும் தம் அநுபவத்திற்கு இன்பஞ் செய்தன வென்பது உவமைக்குறிப்பாற் போதரும் கருத்தாம் .
இறைவன் பலகோடி ஞாயிற்று மண்டிலங்களின் ஒளியினும் மேம்பட்ட தன் இயற்கை ஒளிப்பிழம்போடு வெளிப்பட்டுக் காட்சியளிப்பின் , அக்காட்சி தம் கண்களாற் காண்டற்கரியதாகும் எனக்கொண்டு , அந் நிலை யை வேண்டாது, முன் மக்கள் வடிவில் ஞானாசிரியனாக எழுந்தருளித் திருவடி நல்கிய நிலையையே வேண்டுவாராய் , “பண்டு தந்தாற் போற் பணித்து” என்றார் . பணித்தல் – கொடுத்தல் . “திருவிரல் நெகிழ்த்து வாள் பணித்தான் “ என்புழி அப்பொருட்டாதலறிக .
பாசண்டச்சாத்தன் என்பான் மக்கள் வடிவில் வெளிப்பட்டுத் தன் மனைவி தேவந்திகை யென்பாட்குத் தன் இளமையுருவத்தைக் காட்டுங்கால் அவ்வுருவின் ஒளியை அவள் கண்கள் பொறாவென்று கருதிப் பொறுப்பன வாக என்று நிருமித்துக் கொண்டு காட்டினன் என்று சிலப்பதிகாரம் கூறும் .”தேவந்தியென்பாண் மனைவியவளுக்குப் , பூவந்தவுண்கண் பொறுக் கென்று மேவித்தன் , மூவாவிள நலங்காட்டி “என்பது அப்பகுதி . தெய்வக்கூறு ஒரு சிறிது பெற்ற சாத்தன் வடிவொளியே இங்ஙனமாயின் , பேரொளிப் பிழம்பாகவுள்ள இறைவன் இயலொளி மக்கள் கண்களுக்கு எங்ஙனம் அடங்கும் என்பது .
கூவுவித்து என்பதிலுள்ள பிறவனை விகுதி தொக்கு நின்றது .ஆண்டவன் இறைமைக்கு ஏற்பக் கூவி யென்னாது கூவுவித்து என்றார் . கூவி யெனப் பிற இடங்களில் அடிகள் அருளியிருத்தல் , இறைவன் திருவாக்காலும் தம்மை அழைத்தலில் உள்ள அவா மிகுதியான் அமையுமென்க. அடிகள் தம்மை யழைத்தற்கு ஏதுவாக வீட்டின்பத்தைக் கூறினாரல்லர் ; பணி செய்தலையே கூறினார் ,கூடுமன்பினிற் கும்பிடலே யன்றி , வீடும் வேண்டா விறலின் விளங்கும் மெய்த்தொண்டராதலின் . என்னைக் கொண்டு என்பது பணி செய்தற்குரிய ஆளாக ஏற்றுக்கொண்டு என்னும் பொருட்டு . இறைபணி நிற்றற்கு இடயூறாகவுள்ளது உலக வாழ்க் கையிலுள்ள அவாவாகும் . ஆதலின் , அவ் ஆசையை அறவே களைதல் வேண்டுமென்பார் , “களையாய் களையாய குதுகுதுப்பே” யென்றார் . குதுகுதுப்பு – ஆசை . “நாற்றங் குதுகுதுப்ப “ என்புழி அப்பொருட்டாதலறிக .
“களையாய்” என வினையை முன்னர்க் கூறியது இடையூறு களைதலில் உள்ள ஆதுராதிசயத்தானென்க . பணித்துக் கூவுவித்துக் கொண்டு களையாய் என்று முடிக்கப்படுமாயினும் , என்னைப் பணியாளாக ஏற்றுக்கொண்டு , பணி செய்யக் கூவுவித்துக் ,களையாய குது குதுப்பைக் களைந்து , திருவடி மலர்களைப் பண்டுதந்தாற்போற் பணித்தருளல் வேண்டுமென்பதே கருத்தாகக்கொள்க . திருவடிக்காட்சி நல்குதற்கு உலக அவாவாகிய களையைக் களைதல் ஏதுவாம் என்பது கருத்து . . இனிப் ‘பணிசெய” என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு பணி செயக் கூவுவித்துப் பணிசெயத் தாள் தந்து என ஈரிடத்தும் இயைத்துக் கோடலும் ஒன்று .
இதன்கண், திருவருட்பேற்றின் அருமையறியாமல் களித்துக் கண்டது செய்து செருக்கித் திரிதல் , வெறுக்கத்தக்கதென்பது பெறப் படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
*************************************
பாடல் :34 .
குதுகுதுப் பின்றி நின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் , நின் அருட்பேற்றின் பயனை மாறாகக்கொண்டு செருக்குற்று மனஞ்சென்றவாறு ஒழுகலானேன் என்று இரங்கிக்கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் ஒழுகுதற்கு ஏது நின் திருவுள்ளக் குறிப்பை யறிந்து நடக்க விரும்பாமல் , என் உள்ளக் கருத்திற் கியைந்தபடியே செய்தலாகும் எனவும் , அது பற்றி அடியேனைக் கைவிடலாகாதெனவும் இறைவனை நோக்கி விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- கயிலைப் பரம்பரனே = வெள்ளியங்கிரியில் எழுந்தருளியிருக்கும் மேலாகிய பரம்பொருளே ,
என் குறிப்பே செய்து நின்று = என் உள்ளக் கருத்துக்கு இயைந்தபடியே ஒழுகி நின்று ,
நின் குறிப்பில் குதுகுதுப்பின்றி = நின் திருவுள்ளக் கருத்திற்கு இயைய நடப்பதில் ஆசைப்படாமல் ,
விது விதுப்பேனை = (பயன் பெற) மிக விரைகின்ற சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,
வாழைப்பழத்தின் என்னை மனம் கனிவித்து = வாழைப்பழத்தைப்போல அடியேன் மனத்தைக் குழையப்பண்ணி ,
விரை ஆர்த்து இனிய மது மதுப்போன்று = மணம் நிறைந்து இனிமை மிக்க பூந் துகளோடு கூடிய தேனைப்போல ,
எதிர்வது எப்போது = எனக்குக் காட்சியளித்தல் எப்பொழுது ?
பயில்வி = விரைவில் அழைப்பித்துக்கொள்வாயாக என்பது .
விளக்கவுரை :- சிவபெருமான் உயிர்களுய்தற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுள் , கைலை மலை மிகச் சிறந்த தென்பது , மறையாகமங்களிற் கண்ட வுண்மையாகும் “புண்ணியந்திரண் டுள்ளது போல்வது “ எனவும் , “நிலவு மெண்ணிறங்களும் நீடொளி , யிலகு தண்டளிராக வெழுந்ததோர் ,உலகமென்னும் ஒளிமணிவல்லிமேல் , மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை “ எனவும் சேக்கிழார் பாராட்டியிருத்த லறிக . ஈண்டு உலகமாகிய மாணிக்கக் கொடியில் எண்ணிறந்த தலங்களெல்லாம் தளிராக , கைலை மலை அதன் உச்சியில் மலர்ந்த வெண்மலர் போல்வதாகும் என்று கூறிய நயம் இன்புறத்தக்கது .
பசுவின் உடல் முழுதும் பரவிய பால் அதன் முலை வழிச் சுரந்து வெளிப்பட்டுப் பயன் செய்தல் போல எங்கும் நிறைந்த இறைவன் , தூய புண்ணிய தலங்கள் எல்லாவற்றினும் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அன்பர்க்கு இன்பளிப்பனாயினும் ,அடிகளுக்கு மக்களுருவில் ஞானாசிரிய னாக வெளிப்பட்டு அருளுங்கால் , “சித்தி தரு தேசிக சிறந்த வடிவங் கொண்டுத் தம் நெடுங்கயிலை யோங்கலது நீங்கித் “திருப்பெருந்துறையில் எழுந்தருளினன் என்று புராணங் கூறியபடி , முதலிடச் சிறப்பை நினைவு கூர்ந்து “ கைலைப் பரம்பரனே” என்றார்.
குறிப்பு – உள்ளக்கருத்து . குதுகுதுப்பு – ஆசைப்படுதல் பின்னர் “என் குறிப்பேசெய்து” என்றமையால் இங்கே நின் குறிப்பில் செய்ய எனக் கொண்டு , நின்குறிப்பின் வழியொழுக எனப் பொருள்கொள்ளல் வேண்டும் ஆண்டவனே!அடியேனை ஆட்கொண்ட பொழுதே என் உடல் பொருள் ஆவி யெல்லாம் நின்னுடைய வாயினவாதலின் , எனக்கென ஒன்று மின்றி, நின் திருவுள்ளத்திற்கு இயைந்தபடியறிந்து ஒழுகுதலே கடமையாகவும், அதன்கண் விருப்பமும் இன்றி யிருக்கின்றேனே யென்பார், “நின் குறிப்பில் குதுகுதுப்பின்றி “ என்றார் . என் குறிப்பே செய்து என்புழி ஏகாரம் தேற்றப் பொருட்டு . செய்தல் – ஒழுகுதல் . ஆன்றோர் கூற்றும் அறிவு நூலுரையும் தம் கருத்தின்படி நடத்தலாகிய செயலுக்கு இடந்தர வில்லையாயினும் , அது பற்றித் தம் மனம் சலித்திலதென்பார், “நின்று” என்றார் . உயிர் முனைப் பின்படி செய்தலாகாதென்பதை யறிந்தும் , என் எண்ணத்திற் றோன்றிய படியே செயலின் மேற்கொண்டு நின்று , நின் திருவுள்ளக் குறிப்பிற்கு இயைய ஒழுகுதலாகிய செயலை அறவே கைவிட்டதோடு அதன்கண் விருப்பமும் இன்றி இருக்கின்றேனே யென்று அடிகள் இரங்கியபடியாம் .
நல்லதெனக் கண்ட தொன்றைச் செய்தல் வேண்டும் . எவ்வாற்றானும் செய்தற்கு இயையாதவழி அச்செயலில் விருப்பமாவது இருத்தல் வேண்டுமென்பது அற நூற்கொள்கை . “அறத்தைச்செய்” என்று கூறிய வடமொழி மறையினும் சிறக்க “அறஞ்செய விரும்பு “ என்னும் சிறு சொற்றொடறில் தெளிவு படுத்திய ஒளவை முதுமொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது . ஆண்டவன் திருவுள்ளத்திற்கு இயைய ஒழுகுதலில் விருப்பந்தானுமின்றி , என் கருத்துப்படி ஒழுகலானேன் என்று அடிகள் கூறிய கருத்தும் ,”ஒருவன் அறனென்று சொல்லுவதுஞ் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும் “ என்னும் பொருள் தோன்ற , “அறங் கூறானல்ல செயினும்” என்று கூறிய வள்ளுவர் பொருளுரையும் ஒப்பு நோக்கி யின்புறத்தக்கன . விதுப்பு என்னும் சொல் விரைதற் பொருட்டாதலின் , விது விதுப்பு என்னும் இரட்டைக்கிளவி விரைவின் மிகுதியைக் குறிப்பதாகும் .
இறைவ! நின் திருவுள்ளத்திற்கு இயையஒழுகுதல் இன்றியமையா ததாகவும் , அதன்கண் விருப்பந்தானும் இல்லாமல், உயிர்முனைப்பால் யான் நினைந்தபடியே நடந்து நின் குறிப்பின்படி ஒழுகுதலின் உண்டாம் பயனைப் பெற விரைகின்றேன் ;என் அறியாமை யிருந்தவாறு என்னே யென்பார், “ என் குறிப்பே செய்து விது விதுப்பேனை “ என்றார் .என் குறிப்பே செய்து என்றமையால் , விது விதுப்பின் பின் பயனைப்பெற என்பது அவாய் நிலையான் வருவித்துரைக்கப்பட்டது . உலகத்து மக்கள் இயல்பில் வைத்து ,
“அறத்தை விரும்பா ததன்பயனைப் பேணல்
மறத்தை முயன்றுசெயல் மற்றம் – மறத்தின்
பயனை வெறுத்தலிப் பாரிலுள்ள மக்கட்
கியல்பென்ப வென்று மிவை “
என்று கூறிய உயிர்போகு பொது நெறியும் இங்கே கருதத்தக்கது . செயலை உயிர் முனைப்பாற் செய்து , அதற்குப்பொருந்தாத விழுமிய பயனைப் பெறவிரையும் இக்குற்றங்கருதிச் சிறியேனைக் கைவிட்டு விடுவாயோ? விடலாகாது என்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .
இனி, அடிகள் தமக்கு வேண்டிய பேற்றையும் அதற்குரிய காலத்தை யும் பற்றி இறைவனிடத்து விண்ணப்பித்து வினவுகின்றார் . வலிய மனம் கனிந்தாலன்றி இறையருளைப் பெறலரிதாதலின் , வாழைப்பழத்தை உவமையாகக் கூறினர் .வாழை மா பலா இம்மூன்றும் சிறந்த சுவையுடை மையால் , அவற்றை ஓரினமாகக் கொண்டு , முக்கனியென்று வழங்குவர் முன்னோர் . இக்காலத்து இவற்றினும் சிறந்த சுவையுடைய பழங்களிருப் பினும் , பண்டைக்காலத்து நம் நாட்டுக் கனிகளுள் , இவைகளே சிறப்புடையனவாக வழங்கின வென்பது , “முக்கனிகளுட் சுவை முதிர்ச்சி பெற்றுளதெக் கனி “ என்பது முதலிய வழக்காற்றான் அறியலாம்
இம்மூன்றனுள்ளும் மாவும் பலாவும் அகத்தே கொட்டையுடையன வாதலின் , அவற்றை விடுத்துக் கொட்டையின்றி முற்றுங்கனிதற்கு ஏற்ற மென்மைத்தன்மையுடைமையால் ,”வாழைப்பழத்தின் மனங்கனிவித்து “ என்றார் . அகத்தே கொட்டையுடைய பழங்கள் உவமை கூறின் , கனிவித்தல் ஓரளவிலன்றி முற்றும் அமையாமை யறியத்தக்கது . வெள்ளரிப் பழம் போன்ற சுவை இல்லாப் பழத்தைக் கூறாமல் இனிப்புச்சுவை மிக்க வாழைக்கனியைக் கூறியது , தம் நெஞ்சம் தமக்கு இனியதாய் இறைவன் பக்கலில் இயைவித்து இன்புறுதற் பொருட்டு என்க . “கல்லை மென்கனி யாக்கும் விச்சை கொண்டென்னை நின் கழற்கு அன்பனாக்கி னாய்” என்று பிறிதோரிடத்து அடிகள் கூறியதும் உணர்க . என்னை மனத்தைக் கனிவித்து என்புழி . “பசுவினைப் பாலினைக் கறந்தான் “ என்புழிப்போலச் செயப்படு பொருள் ஈருருபிணைதலாய் வந்தது .
இங்ஙனம் மனம் கனிந்த நிலையில் , அதன்கண் இறைவன் காட்சிப் படுதலைக் கனிந்த வாழைப்பழத்தில் சிறந்த தேன் இயைந்தது போல எனப் பிறிதோருவமையால் விளக்கியுள்ளார் . வாழைப்பழத்தைத் தம் மனத்துக்கு உவமை யாக்கியதால் அடைமொழி யின்றியும் , தேனை இறைவனுக்கு உவமையாக்கியதால் “விரையார்ந்தினிய மதுமது “ வென்று சிறந்த பல அடைமொழி புணர்த்தும் கூறினர் . விரை – மணம் . மது இரண்டனுள் முன்னது மகரந்தத் துகளையுணர்த்தும் . ஆகவே, இயற்கையான இனிமை யொடு நறுமணமும் மகரந்தமும் கூறியதால் , இத்தேன் ஈக்களின் எச்சில் புழு முதலியன கலவாத தூய மலர்களின் தோன்றியபடியிள்ள தென்பது புலனாகும் . “மதுப்போன்று எதிர்வது “ என இயைக்க . எதிர்வது – எதிர்தல் ; தொழிற் பெயர் ; காட்சிப்படுதல் என்னும் பொருட்டு .
வாழைப்பழத்தைக் கனிவித்து அதன்கண் தேன் தோய்ந்தது போல என்னுள்ளத்தைக் குழைத்து அதன்கண் எழுந்தருளல் வேண்டுமென்றார் . பசு கரணத்தைப் பதி கரணமாக்கி இறைவன் விளங்குவன் என்னும் சைவநூற் தோன்ற . “காணுங்கரணங்களெல்லாம் பேரின்பமெனப், பேணு மடியார் “ என்னும் அநுபவ மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது . கனிந்த வாழைப்பழத்தின் சுவையிலும் தூய தேனின் சுவையிலும் முறையே குறைவு மிகுதி காணப்படினும் இனிமை யொன்றாதல் போலப் , பக்குவ முள்ள உயிரியல்பிலும் இறையியல்பிலும் முறையே சிறுமை பெருமை காணப்படினும் , இரண்டும் அறிவுடைப் பொருள் என்னும் சாதி யொற்று மையும் இங்கே யுணரத்தக்கது . என் நெஞ்சத்தைப் பக்குவப்படுத்தி அதன் கண் எழுந்தருளிக் காட்சியளித்தலே என்னால் வேண்டத்தக்கது . அதுதானும் காலத் தாழ்வின்றி நிகழ்தல் வேண்டுமேயென்பார், “எதிர்வதெப் போது” என்றார் .
இறைவா! மனத்தூய்மை பெற்று யானே நின்னை அணுகுதற்கு என் முயற்சி ஆற்றலுடையதன்று . ஆதலின், சிறியேனாகிய என்னை நலப்படுத் தற்கு அருள் கூர்ந்து நீயே அழைப்பித்துக்கொள்ளல் வேண்டுமென்பார் , “பயில்வி” என்றார் . பயிலுதல் – அழைத்தல் , “பயில்வி” யெனப் பிறவினை விகுதியொடு புணர்த்துக் கூறியது ஆண்டவன் பெருமையும் அடிமையாகிய தம் சிறுமையும் தோன்றற்கென்க .
இதன்கண் , ஆண்டவன் திருவுள்ளக் கருத்தின்வழி யொழுகுதலே இன்றியமையாததாகவும் , அதன்கண் விருப்பமின்றி உயிர் முனைப்பாற் கருதியபடி யொழுகுதல் நலம் பயப்பதன்று என்பது கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல் அறிக .
**********************************
பாடல் :35 .
பரம்பர னேநின் பழவடி யாரொடு மென்படி று
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும்பெரு மான்வினை யேன்மன மஞ்சிப் பொதும்புறவே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் நின் திருக்குறிப்பிற்கு இயைந்தபடி நடக்க விரும்பாமல் என் கருத்திற்கு இயைந்தவாறு ஒழுகலானேன் ; இதனைப் பொறுத்தருள வேண்டுமென்று இறைவனை வேண்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் நெறி தவறி நடத்தற்குக் காரணம் , நன்னிலைக்கட் சார்தற்குரிய என் உள்ளம் நடுங்கி யொடுங்குமாறு பிறப்பாகிய ஐந்தலை ப்பாம்பு பொருதலாகும் . ஆதலின் , அப்பிழையைப் பொருத்தருள வேண்டுமென விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- முயற்கறையின் மெல் அரும்பு = திங்களின் கூறாகிய மெல்லிய பிறையை ,
அர நேர் வைத்து அணிந்தாய் = பாம்புடன் ஒக்க வைத்துச் சடையில் அணிந்தவனே ,
பெருமான் = எம்பெருமானே ,
ஐவாய் பிறவி யரவம் = ஐந்து வாய்களையுடைய பிறவியாகிய பாம்பு ,
வினையேன் மனம் அஞ்சிப் பொதும்பு உறப்பொரும் = தீவினையுடையேன் உள்ளம் நடுங்கி ஒடுக்கவிடத்தைச் சாரும்படி தாக்குகின்றது ,
பரம்பரனே = மேலாகிய பரம்பொருளே ,
நின் பழ அடியாரொடு என் படிறும் விரும்பு அரனே = நின் பழைய மெய்யடியாருடைய தூய ஒழுக்கத்தொடு ஒப்பச் சிறியேனது வஞ்சவொழுக்கத்தையும் விரும்பி யேற்றுக்கொண்ட சங்காரகாரணனே ,
விடுதி = விட்டுவிடுவாயோ ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- முயற்கறை – அன்மொழித்தொகையாய் முயல் உருவம் போன்ற களங்கத்தையுடைய திங்களையுணர்த்தும் . மெல்லிய அரும்பு என்றது அத்திங்களின் சிறு கூறாகிய மெல்லிய பிறையைக் குறிக்கும் . அர – அரா . “குறியதனிறுதிச் சினை கெடவுகரம் , அறியவருதல் செய்யுளுள் உரித்தே “ என்பது விதி . திங்களையும் பாம்பையும் சடையில் அணிந்தது அழகுக்கு அன்று ; யாண்டுச் சேரினும் தடைபடுத்த முடியாத பகை வலியால் அவற்றிற்குக் கேடு விளையாமைப் பொருட்டென்ப . மேலும் ஒன்றனோடு இன்று இகலும் இயல்பினவாகிய திங்களும் பாம்பும் இறைவன் பக்கலில் பகைமைக் குணம் நீங்கி வாழ்கின்றன வென்னும் உண்மை புலப்படுத்தற்குமாம் .
நேர் வைத்தல் – இரண்டையும் ஒக்க வைத்தல் . ஒன்றனை யொன்று காணுமாறு அணிமையில் எதிராக வைத்தலுமாம் . இதனால் இறைவன் ,தன்னைப் புகலடைந்தாரை எத்துணையிடையூறும் நலியா வண்ணம் காக்கும் அருட்குணமும் ,தன் அணிமையில் பகைப் பொருள்கள் பகை நீக்கப் பெற்று வாழும் வண்ணம் செய்யும் ஆற்றலும் உடையான் என்பது புலனாம் . “கங்கையு மதியும் பாம்பும் கடுக்கையு முடிமேல் வைத்த அங்கணர்” என்று சேக்கிழார் கூறியதும் இங்கே நினைக்கத்தக்கது . இவ்வாறு அடிகள் இறைவனை விளித்தது இங்ஙனம் தமக்கு நேரும் துன்பத்தினின்றும் விடுதலை பெறுதற் பொருட்டாம் . அக்குறிப்புப் பின் வரும் விளக்கத்தாலறிக .
பிறப்பு என்பது , உயிர் வினைப்பயனுகர்தற் பொருட்டு மாயையின் காரியமான உடலைக்கொண்டு வெளிபடுதலாகும் . ஆகவே உடற்றோற்றமே பிறப்பு என்பது தெளிவாம் .அவ்வுடலோடு கூடிய உயிர் , வினைப்பயனை எவ்வாற்றான் நுகரும் எனின் , அவ்வுடற்கணுள்ள மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகள் வாயிலாக , முறையே ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை யென்னும் புலன் வடிவில் நுகருமென்பது . பொறிவழி யுள்ளஞ் சென்று புலனுகர்ச்சியிற் றலைப்படுங்காறும் பிறவியினால் நேரும் துன்பம் நீங்காமையின் , அப்பிறவியைப் “பிறவியை வாயரவம் “ என்று உருவகஞ் செய்யலானார் .
இக்கருத்தையே சீவகசிந்தாமணி யாசிரியர் “பொறியெனும் பெயரவைவாய்ப் பொங்கழரவின் கண்ணே, வெறிபுலன் கன்றி நின்றார் வேதனைக் கடலுணின்றார் “ என்று தெளிவுபடுத்துரைத்தார் . பிறப்பாகிய ஐவாயரவத்தின் தாக்குதலைக் குறிப்பிடத் தொடங்கும் பொழுதே அடிகள் நடுக்கமுற்றுப் , புகலிடம் பெற விரைந்து ,”பொரும் பெருமான்” என்று துன்பச்செயலைக் குறிப்பிட்டு இறைவனைக் கூவியழைபாராயினர் , ஐவாயரவத்தைக் குறித்துத் தாம் அஞ்சுதற்குக் காரணத்தை உடம்பொடு புணர்த்துத் தம்மை “வினையேன்” என்றார் .வினையெச்சமே பிறப்பிற்கு ஏதுவாகலின் அவ்வாறு கூறினர் . “வினையேன் மனமஞ்சி” யென்பது “அம்முக் கிளவியும் சினைவினை தோன்றின் , சினையோடு முடியா முதலோடு முடியினும் , வினையோரனையை வென்மனார் புலவர் “ என்பதனான் அமையுமென்க . சினையாகிய மனத்தின் செயல் அஞ்சுதல் .அது முதற் பொருளாகிய வினையேன் என்பதனோடும் இயைதலறிக .
பொதும்பு – மரப்பொந்து ; இஃது ஈண்டுப் பொந்து போன்ற ஒடுக்க இடத்திற்காயிற்று . பொதுப்புறப் பொரும் என முடிக்க .இனி, “வினையேன் மனம் “ என்பதற்கு வினையேனது மனம் என்றும் பொருள் கொள்ளலாம் . அங்ஙனம் கொள்ளங்கால் , பாம்பின் தாக்குதற்கு அஞ்சி மனம் மறைத்தற் குரிய இடமென்பது போதரும் . உடம்பிலுள்ள பொறிகளும் காரணங்களும் ஒடுங்குங்கால் , இன்ன இன்ன இடங்களில் ஒடுங்கும் என்று கூறிய மறை முடிவில் , மனம் சந்திரமண்டலத்தில் ஒடுங்கும் என்பது காணப்படுகின்றது .
இதனால் மனத்திற்குச் சந்திர சம்பந்தம் உண்டென்பது புலனாம் . ஆகவே மனமாகிய சந்திரன் பிறவியாகிய பாம்பு தாக்குதற்குரிய பகைப் பொருளாயிற்றென்பது குறிப்பிற் புலப்பட வைத்தவாறாம் . பாம்பும் திங்களும் பகைக்குணம் ஒழியப்பெறும் இடம் இறைவன் பக்கலாதலின் , அவ்விறைவனே பிறவிப்பகையை யொழித்துப் பாதுகாக்கத்தக்கவன் என்பதை யுட்கொண்டு , அடிகள் , “மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத்து அணிந்தாய்” என்று முன்னர் விளி கொள்ளலானார் என்பது உய்த்துணரத்தக்கது .
பரம் என்னும் வட சொல் மேலானது என்று பொருள் படுமாதலின் , பரம்பரம் என்பது மிகமேலான வீட்டு நிலையை யுணர்த்துவதாகும் . அதனால் மெய்மையான வீட்டு நிலையை யருளும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் பரம்பரன் என்னப்பட்டான் . ஈச்சுவரன் பரம்பரன் முதலிய சொற்களெல்லாம் மற்றைத் தேவர்களை உபசாரமாகவும் , இறைவனை உண்மையாகவும் குறிக்கும் என்பதை மறையாகம ஆராய்ச்சி நூல்கள் தெளிவுறுத்துக் கூறுவன .
உண்மையான வீட்டு நிலை , நெடுங்காலம் அருந்தவம் இயற்றிப் பெறத்தக்கதாகலின் , அத் தவ முயற்சி மேற்கொண்டொழுகும் மெய்யடியாரே பழவடியாரவர் . “பன்னாளுன்னைப் பணிந்தேத்தும் பழையவடியார்” என்னும் அடிகள் திருவாக்கும் இதனை வலியுறுத்து வதாகும் . சிவபிரான் பரம்பரனாதலும் , அவனடியார் பழவடியாராதலும் இயல்பே . இறைமைக்குணம் இல்லாரைக் கடவுளர் எனக்கொண்டு அவரால் மெய்மையான வீட்டு நிலையையடையலாம் என்று நம்பி முயல் வோரெல்லாம் சின்னாளில் உண்மையுணர்ந்து அம்முயற்சி யினின்றும் மீள்வராதலின் , அவர் பழவடியாராதல் சாலாதென்க .
பின்னர் “என்படிறு” என்று கூறியதால் பழவடியார் என்பது அவர் தம் மெய்யொழுக்கத்தைக் குறிப்பதாகும் . “பழவடியாரொடும்” என்புழி உடனிகழ்ச்சிப் பொருளில் வந்த ஒடுவுருபின் பின்னுள்ள உம்மையைப் பிரித்துப் படிறு என்பதனோடு இயைத்துக் கொள்ளல் வேண்டும் . படிறும் என்புழி உம்மை இழிவு சிறப்புப் பொருளது . ஆகவே , பன்னெடுங்காலம் அரிய தவ நிலையில் தலைப்பட்டிருக்கும் பழைய மெய்யடியாரது தூய வொழுக்கத்தோடு ஒப்பப் , புதியனவாகவும் தவநிலையில் தலைப்படாத வனாகவும் உள்ள அடியேனது பொய்யொழுக்கத்தையும் என்மாட்டுள்ள பேரருள் காரணமாக விரும்பியேற்று ஆட்கொண்டனையென்பார் , “நின் பழவடியாரொடு மென்படிறு விரும்பரனே” என்றார் .
பழவடியா ரென்றதனால் தாம் புதியவரென்பதும் ,தம் ஒழுக்கத் தைப் படிறு என்றதனால் பழவடியார் ஒழுக்கம் தூயது என்பதும் போதரும் . அடிகள் தம்மைப் புதியெரென்றும் தம் ஒழுக்கத்தைப் படிறுடைத்து என்றும் கூறியது, ஆண்டவன் முன்னிலையில் அடிமையாகிய அவர்தம் பணிவு தோன்ற நின்றது . பெரியோர்களின் பணிமொழியீதென அமைதலன்றி , நாம் அடிகளை அன்னாரெனக் கனவிலுங் கருதலாகாது . சென்ற பல பிறப்புக்களிலெல்லாம் இறைவனை வழிபட்டு இப்பிறப்பில் தவச்செல்வரா யினராதலின் , புதியரல்லர்; பழவடியாரே யென்பதும் , இறைவன் ஞானாசிரி யனாக எழுந்தருளி வலிந்து ஈர்ந்து உபதேசிக்கப் பெற்றவராதலின் , அடிகளின் ஒழுக்கம் மிக்க தூய்மையுடையதன்றிப் படிறுடைத்தன் றென்பதும் தெளியப்பட்ட வுண்மைகளாம் .
அடிகள் தம்மை விரும்பி இறைவன் அடிமை கொண்டான் என்பதை “வேண்டும் வேண்டு மெய்யடியாருள்ளே விரும்பி யெனையருளால் ஆண்டாய் “ என்பது முதலிய திருப்பாட்டுக்களில் வெளிப்படக் கூறியிருத்தலறிக . அரன் என்பது அழிப்பவன் என்னும் பொருளுடையதாகும் . அதனை அடிகள் ஈண்டுக் கூறி விளித்தது , பேரருள் காரணமாகத் தம்மை ஆட்கொண்டமையால் , தம்மாட்டுள்ள படிற்றொழுக் கத்தைப் போக்கியருள்வன் என்னுந் துணிவு தோன்ற நின்றது . படிறுடை யேனாயினும் நீ அரனாதலின், அதனைப்போக்கித் தூய்மைப்படுத்து நலம் புரிதலன்றிக் கைவிடல் தகுமாவென்பார் , “விட்டிடுதி” என்றார் .
இதன்கட் பிறப்பை ஐவாயரவமாகக் கூறியதால் , அப்பிறப்பினால் உண்டாம் உலக வாழ்க்கை வெறுக்கத் தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
**********************************
பாடல் :36 .
பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன் றீக்கதுவ
வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை யார்நறவந்
ததும்புமந் தாரத்திற் றாரம் பயின்றுமந் தம்முரல்வண்
டதுபுங் கொழுந்தே னவிர்சடை வானத் தடலரைசே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் என் மனம் அஞ்சி ஒடுங்குமாறு பிறப்பாகிய ஐந்தலைப் பாம்பு பொருதலால் , நின் திருக்குறிப்பின் வழியொழுக இயலாதாயிற்று என்று இறைவனை நோக்கிக் குறிப்பிட்ட அடிகள் ,இத் திருப்பாட்டில் அவ் வைவா யரவத்தாலாம் புலத் தீத் துன்பத்திற் குத் தம் ஆற்றாமையை மீண்டும் விளக்கிக் கூறுகின்றார் .
பதவுரை :- விரை ஆர் நறவம் ததும்பும் மந்தாரத்தில் = நறுமணம் பொருந்திய தேன் நிறைந்த மந்தார மலரில்,
தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு = எடுத்தலிசை பாடிப் பின் படுத்தலிசை ஒலிக்கும் வண்டுகள் ,
அதும்பும் கொழும் தேன் அவிர் சடை = அமிழ்தற்கு ஏதுவாகிய செழித்த தேன் விளங்கும் சடையினையுடைய ,
வானத்து அடல் அரைசே = சிதாகாயத்தில் வீற்றிருக்கும் வெற்றிமிக்க வேந்தர் பெருமானே ,
பொதும்பு உறு தீப் போல் புகைந்து எரி = மரப்பொந்திற் பொருந்திய நெருப்பைப் போலப் புகைந்து எரிகின்ற ,
அப்புலன் தீக்கதுவ வெதும்புறுவேனை = அப்புலன்களாகிய நெருப்புப் பற்ற அதனால் வெதும்புதலையுடைய சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- மந்தாரம் என்பது கற்பக முதலிய தேவதருக்கள் ஐந்தனுள் ஒன்று ; அஃது ஆகு பெயராய் நின்று மலரையுணர்த்திற்று . அம் மலர் இறைவன் சடையில் விளங்கும் நிலையை , அடிகள் அகக் கண்ணாற் கண்டு , தம் நெஞ்சக் கிழியில் ஓவியமாகத் தீட்டிக்கொண்டு , பாடல் வடிவில் நம்மனோரையும் நினைவு கூர அருளிச்செய்கின்றார் . மலர்களில் உள்ளவை நாற்றமும் தோற்றமும் நறவமும் ஆம் . ஈண்டு விரையார் என்றதனால் நாற்றமும் , மந்தாரம் என்றதனால் ஆகு பெயர் கொள்ளப்பட்ட மலரின் தோற்றமும் , நறவந்ததும்பும் என்றதனால் நறவமும் கூறியபடி யாம் . மலரின் வண்ணமும் வடிவும் தோற்றத்தின் பாற்படும் .
இத்தகைய தெய்விகப் பூவாகிய மந்தார மலரை இறைவன் சடையில் அணிந்திருக்குங்கால் , அதன்கண் உள்ள தேன் பெருக்கில் இசைபாடிச் சாரும் வண்டுகளின் அரிய செயல்களை , அடிகள் அழகு பொருந்தப் புனைந்து கூறுகின்றார் . ஆண்டு வண்டு பாடிய இசை மந்தோச்ச சமம் என்னும் மூன்றனுள் , உச்சமும் மந்தமுமாம். தாரத்தை உச்ச சுர மெனவும் எடுத்தலிசை எனவும் , மந்தத்தைப் படுத்தலிசை எனவும் இசை நூலார் கூறுவர் . இங்கே வண்டுகள் மந்தார மலரையடுத்தும் , புறத்தே சூழ்ந்து எடுத்தலிசை பாடிப் ,பின் அகத்தே யணு கவணுகப் – படுத்தலிசை பாடின வென்பதும் , ஆங்குச் செழித்துப் பெருகிய தேனிற் றோய்ந்தும் இசை பாடுதலை ஒழித்து , அத் தேனையுண்டு களித்து மவுன நிலையடைந் தன வென்பதும் புலப்பட , “மந்தாரத்திற் றாரம் பயின்று மந்தம் முரல் வண்டு, அதும்புங் கொழுந்தேன் “ என்றார் .
ஈண்டுப் பயிலுதல் பழகுதல் என்னும் பொருளுடைய தாகலின் , அஃது உரத்த குரலில் அடுத்தடுத்துப் பாடுதலையும் , முரலுதல் அதனிற் றாழ மெல்லிதாக ஒலித்தலையும் குறிப்பனவாம் . அதும்புதல் – அமிழ்தல் தேன் பெருக்கில் அமிழ்ந்ததும் ஒலித்தலின்றென்பது போதரும் . “அதுவும் கொழுந்தேன் “ என்புழி அதும்பும் என்பது செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சமாகும் ; காரியப்பொருளில் வந்தது .இவ் வருணையில் இதனை உவமையாகக் கொண்டு அறியத்தக்க பிறிதொரு பொருளும் , குறிப்பில் வைத்து உணரத்தக்க சிறந்த சைவ சித்தாந்த நுண்பொருளும் அமைந்திருத் தல் அறிந்துணர்ந்து இன்புறத்தக்கன . அவை முறையே வருமாறு : மலரிலுள்ள தேனை உண்ண வந்த வண்டு , அதனை யுண்ணாமல் புறத்தே சுற்றுங்கால் ஒலி செய்தும் ,அகத்தே படிந்துண்டதும் ஒலியடங்கப் பெற்றும் இருத்தல் இயல்பு ; இக்குறிப்பு கற்றறிந்த பெரியோன் ஒருவன் இறைவனை யணுகப்பெறாத நிலையில் தருக்கவாத முதலியன செய்வன் என்பதையும் , இறையருளில் படிந்ததும் அவ்வாதம் ஒழிந்து மவுன நிலையடைவான் என்பதையும் புலப்படுத்தும் என்ப . இக்கருத்தை ,
“வண்டு மலர்ப்புறத்தே மன்மதுவுண் ணாதொலிக்கும்
உண்டுண் மகிழ வொலியடங்கும் – அண்டான்
தருக்கவா தம்பகர்வான் சார்மனத்தை யீசற்
கொருக்கமகிழ் வான்மவுன முற்று “
என்னும் வெண்பாவால் அறியலாம் . இரண்டாவதாகக் கூறப்பட்ட சைவசித்தாந்த நுண்பொருள் வருமாறு : மந்தார மலரிலுள்ள வண்ணம் சத்தையும் , நறுமணம் சித்தையும் , தேன் ஆனந்தத்தையும் குறிப்பின் உணர்த்த , இம் மூன்றனையும் உடைய அம்மலர் சச்சிதானந்தன் என்னும் உண்மையறிவின்ப வடிவினனாகிய இறைவனையும் , தேணுண்ண வந்த வண்டு அவ்விறைவனை யடைதற்குறிய பக்குவான்மாவாகிய உயிரையும் குறிப்பனவாம் , உயிர்க்குப் பக்குவ முதிதற்கு முன் பாசஞான பசு ஞானங்களாகிய அபர ஞானமும் , பக்குவ முதிர்ந்த பின் பதி ஞானமாகிய அநுபவ வுணர்வும் உண்டாம் என்ப .
இக் குறிப்பை வண்டு தாரம் பயின்று மந்தம் முரன்று கொழுந் தேனில் அமிழ்தலாகிய நிகழ்ச்சிகள் புலப்படுப்பனவாம் .எடுத்தலிசை பாச ஞானத்தையும் , படுத்தலிசை பசு ஞானத்தையும் ,கொழுந்தேன் சிவானந் தத்தையும் , வண்டு அவ்விசை யொழிந்து தேன் பெருக்கில் அமிழ்தல் , பக்குவான்மா பாச பசு ஞானங்களை விட்டுச் சிவானந்தத்தில் தோய்ந்து இன்புறுதலையும் குறிப்பனவாம் . “பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடு முள்ளத்தே நாடி “ என்றபடி பாச பசு ஞானங்களாகிய அபரஞானத்தால் அறியப்படாத இறைவனைப் பதிஞானமாகிய பரஞானத்தால் உணர்ந்து சிவானந்தத் தழுந்தியின்புறலே வீட்டு நிலையென்ப .
இரண்டற்ற நிலையாகிய வீட்டின்ப நுகர்ச்சிக்குத் தேனிற் படிந்த வண்டினையே சைவ நூல் எடுத்துக் காட்டு மென்பதையும் ஈண்டு நினைவுறல் வேண்டும் . இத்துணையும் இறைவன் சடையில் விளங்கும் மந்தார மலரைக் கொண்டு ,அடிகள் சிற்றறிவினேமாகிய நம்மனோர் உய்தற் பொருட்டுக் குறிப்பிற் புலப்படுத்த உண்மைகளாகும் . வானம் – ஞானப்பரவெளி . அதன்கண் விளங்கும் இறைவனை வெற்றிவேந்தன் என்னும் பொருடோன்ற , “அடலரசு” என்றார் , “வானவூர் கொள்வோநாம் மாயப்படைவாராமே “ என்றபடி மாயப்படைகளை வென்று அருளாட்சி புரிதல் பற்றியென்க .
இனி, மதுப்பெருக்கில் மூழ்கியின்புறும் வண்டு போலச் , சிவானந்தத்தில் திளைத்து இன்புறும் வேட்கை மிக்க சிறியேனை , அப்பேறெய்தாவண்ணம் தடைப்படுத்துப் பிறவியாகிய ஐவாயரவம் புலன்களாகிய நச்சுத் தீயால் வெதுப்புகின்றதேயென அடிகள் முறயிட்டு ஆறுதல் வேண்டுகின்றார் .
பொதும்பு – மரப்பொந்து . இதனைக் காட்டிலுள்ளதென்று கொள்ளல் வேண்டும் . ஒரு மரத்தின் பொந்திற்பட்ட தீ புகைந்து சிறிது சிறிதாகப் பெருகி முடிவில் அப்பொந்திருந்த மரத்தையும் எரித்தல் போல , உடம்பின் பொறிவாயிலில் பற்றிய புலனாகிய நெருப்புச் சிறிது சிறிதாகப் பெருகி , உடம்பொடு வேற்றுமையற்று நிற்கும் என் உயிரையும் சுடுகின்ற தென்பார் , “பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ , வெதும்புறுவேனை “ யென்றார் . ஒரு வீட்டிற் பற்றிய தீயினால் அதனைய ணைக்கப் பலர் விரைந்து முற்படுவர் ஆதலின், அதனை விளக்கற்குக் காட்டிலுள்ள மரப் பொந்திற் பற்றிய தீயை உவமையாக்கினர் .வீட்டருகி லுள்ள மரப்பொந்து என்று கொள்ளலாகாதோ எனின், அது பொந்துபடின் , அதன்கண் தீங்கு செய்யும் நச்சுயிர்கள் வாழும் எனக்கருதிப் , பொந்து படுங்காறும் அதனை வீட்டிலுள்ளார் வைத்திருக்கமாட்டார் ஆதலின் ஆகாதென்க .
காட்டிலுள்ள மரப்பொந்திற் பற்றிய தீ மழையானன்றித் தணியாமை போல , என்னைப்பற்றிச் சுடும் இப்புலனாகிய தீயை யணைத்தற்கு , ஆண்டவனே , நின் அருண்மழையல்லது வேறு கருவி காண்டலருமையாதலின் , நீயே முற்பட்டு உதவி புரிதல் வேண்டுமென்று அடிகள் குறிப்பிற் புலப்படுத்தவாறாம் . “அப்புலன்” என்புழிச் சுட்டு . முன்னைத் திருப்பாட்டுக்களிற் கூறப்பட்டபடி பற்பல துன்பங்களை விளைத்த தென்பதைச் சுட்டி நின்றது .இறைவ! நின்னாலன்றித் தணிக்க இயலாத புலனாகிய நெருப்பினால் சுடப்பட்டு வருந்தும் இந் நிலையில் என்னைக் கைவிடல் தகுமா வென்பார் ,”விடுதி கண்டாய் “ என்றார் .
இதன்கண் , “பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ , வெதும்புறுவேனை “ என்றதனால் , உலக வாழ்க்கை புலன்களின் கொடுமையால் துன்புறத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
******************************************
பாடல் :- 37 .
அரைசே யறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக்கருங்கட்
டிரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந் தடர்வனவே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஐம்பொறிவாயிலாகப் போதரும் கொடிய புலனாகிய நெருப்பிற்குத் தம் ஆற்றாமையைக் குறிப்பிட்டு ஆறுதல் வேண்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் அப்புலப்பகை வல்வினையின் விளைவாதலின் , அவ்வினைக்குக் காரணமாய என் அறியாமையால் நேர்ந்த பிழையைப் போக்கி எனக்கு அபயம் அளித்தல் வேண்டுமென்று இறைவன்பால் விண்ணப்பஞ் செய்துகொள்ளுகின்றார் .
பதவுரை :- வெள் நகை கருங்கண் திரைசேர் மடந்தை = வெள்ளிய பற்களையும் கரிய கண்களாகிய கடலினையும் உடைய உமையமையை,
மணந்த புயங்க = ஒரு கூற்றிலுடைய இறைவனே ,
திரு பொன்பதப் புயங்கா = வீட்டுத் திருவினையருளும் அழகிய திருவடிகளுடைய பாம்பணிந்த பெருமானே ,
வரை சேர்ந்து அடர்ந்தென்ன = பல மலைகள் ஒருங்கு திரண்டு வந்து நெருங்கினாற் போல ,
வல்வினை வந்து அடர்வன = வலிய தீவினைகள்திரண்டு வந்து நெருங்குகின்றன ,
அரைசே = தலைவனே ,
விரைசேர் முடியாய் = நறுமணம் பொருந்திய சடை முடியினை யுடையாய் ,
அறியாச்சிறியேன் பிழக்கு அஞ்சல் என்னின் அல்லால் =
அறிவில்லாச் சிறியவனாகிய எனது பிழையின் நீக்கத்திற்கு அஞ்சற்க என்று கூறினல்லது வேறு கருவியின்று ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது
விளக்கவுரை :- அம்மையப்பனாகிய இறைவன் திருவடிச்சார்பைத் தன் மூலம் அடைய விரும்பித் தன்னை வழிபடும் மக்களுக்கு உலகன்னையாகிய இறைவி காட்சிதருங்கால் , புன்னகை பூத்த முகமும் அருளொழுகு விழியும் உடயளாய் வெளிப்படுவள் என்னும் உண்மை புலப்பட , “வெண்ணைக் கருங்கட்டிரைசேர் மடந்தை “என்றார் . “வெண்ணகைக் கருங்கண்” என்றது முரணணி . தன்னையடைந்தாரை வரவேற்று மகிழ்வுறுத்தற்கு முறுவன் முகமும், அவர் விரும்பியது நல்குதற்கு அருள் விழியும் இன்றியமையாதன வென்பது உலகிய லிலும் காணத்தக்கது . திரை – அலை . ஆகுபெயராய்க் கடலை யுணர்த்தும் . அம்மையின் கருணை அள்ள அள்ளக் குறையாதாதலின் , அருட் பெருக்கினையுடைய அவள் கண்களை , நீர்ப்பெருக்கினை யுடைய கடலாக வுருவகஞ் செய்தனர் . “மடந்தை மணந்த” என்புழி இரண்டனுருபை விரித்துக் கொள்க . புயங்கன் என்பது ஈண்டும் இயைந்து இறைவன் என்னும் அளவில் நின்று மணந்த என்னும் எச்சத்திற்கு முடிபாய் விளியேற்று நின்றது . திரு என்பது வீட்டுத் திருவினையுணர்த்தும் . வடமொழியாளர் மோஷ லஷ்மி யென்பர் . அவ்வீட்டிபத்தைத் தருவது மெய்ஞானமாகும் .
இறைவன் திருவடியை ஞானவடிவம் என்று மறையாகமங்கள் கூறுமாதலின் , “திருப்பொற் பதம் “ என்னப்பட்டது . உலக வாழ்க்கைக்குப் பொன் இன்றியமையாமை போல, வீட்டுலக வாழ்க்கைக்குச் சிவபதம் இன்றியமையாதது ஆதலின் , பொற்பதமாயிற்றென்க . ஆகவே “ மடந்தை மணந்த புயங்கா” “திருப்பொற்பதப் புயங்க” என்னும் இரண்டு தொடர்க ளும் முறையே இறைவன் உயிர்களுக்குப் போகத்தையும் வீட்டையும் அருள்பவன் என்னும் உண்மையைப் புலப்படுத்து நின்றன . “பொன்னும் மெய்ப்பொருளுந் தருவானைப் போகமுந் திருவும் புணர்ப்பானை “ என்னும் ஆரூரர் அருண்மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது .
இத்தேவாரப் பகுதியில் பொன்னைத் தந்து போகத்தைப் புணர்ப்ப வன் எனவும் , மெய்ப்பொருளைத் தந்து வீட்டின்பத்தை யருள்பவன் எனவும் நிரனிறைப் பொருள் கோளமைந்து , இறைவன் போகியாயிருந்துயிர்க்குப் போகத்தைப் புரிபவன் என்பதையும் , யோகியாய் யோக முத்தியுதவுபவன் என்பதையும் புலப்படுத்து விளங்கும் நயம் உணர்ச்சிக்கு இன்ப விருந்தாகும் . “திரைசேர் மடந்தை “ என்பதற்கு கங்காதேவி யெனவும் , திருமகள் எனவும் பொருள் கூறுவாறும் உளர் , அவ்வுரையில் இயைபும் நயமும் இன்மையுணர்க .
அடிகள் தம்மை நலியும் வினையை “வல்வினை” யென்றார் . விலக்க இயலாதது என்பது தோன்ற, வல்வினை மெல்வினை யென வினை இருதிறப்படு மென்ப. வல்வினை ஈண்டுத் தீவினையின் மேலது . பயன் விளைக்குங்கால் துன்பத்தின் மிகுதி குறைவுகளால் வன்மை மென்மை யுணரப்படுவன . கணவனை யிழந்து போந்த கண்ணகி ,குறப் பெண்களுக்குத் தன்னியல்பு கூறுங்கால் ,”மணமதுரையோடரசு கேடுறவல் வினை வந்துறுத்தகாலைக் கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யான்” என்று கூறினாள் எனச் சிலப்பதிகார ஆசிரியர் கூறுவர் .
இங்கே கணவனை யிழத்தற்கு வல்வினை காரணமாயிற்றென் பது தெளிவு . மீண்டும் கண்ணகி தன்னைக் “கடுவினையேன் “ என உடம்பொடு புணர்த்துக் கூறியது , கணவனை இழந்த துன்பம் பொறாது இறத்தல் அறமாகவும் , இறவாமல் உயிர் தாங்கி வந்தது குறித்தாம் .சிலப்பதிகாரத்துப் பிறிதோரிடத்து , “வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது “ என்று கூறியிருத்தலும் அறியத்தக்கது . வளையாத செங்கோல் வளைந்ததற்குக் காரணம் வல்வினையாயிற்றென்பது .
அசைக்கலாகா நிலையினையுடையது மலை . அம்மலை பல ஒருங்கு சேர்ந்து வந்து தாக்கினாற் போல , வலிய வினைகள் பல ஒருங்கு திரண்டு வந்து தாக்குகின்றன வென்பார் , “வரை சேர்ந்தடர்ந்தென்ன வல் வினைதான் வந்தடர்வன” என்றார் . சேர்ந்து, அடர்வன என்னும் சொற்களால் முறையே மலையும் வினையும் பலவென்பது பெறப்படும் . சேர்ந்து என்னும் உவம வினையைப் பொருளொடும் , வந்து என்னும் பொருள்வினையை உவமத்தோடும் இயைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும் . ஒரு மலையின் ஒரு சிறு கூறு உருண்டு வீழின் , அதனாற்றாக்கப்பட்டார் உய்தலரிதாம் . பல மலைகள் திரண்டு தாக்கின , தாக்கப்பட்டார் எங்ஙனம் உய்வர் என்பது கூறவேண்டாத தொன்று. விலக்க இயலாமையும் உய்தலரு மையும் தோன்ற இவ்வாறு கூறினார் . வரை சேர்ந்தடர்தல் இல் பொருளு வமை . இங்ஙனம் தாக்கும் வினைபகையை அறவே களைதற் குரிய ஆற்ற லுடைய வினைக்கேடனாகிய வேந்தர் பெருமான் நீயே யென்பார் .
ஈண்டு “அரைசே” எனவும் , மாயாகாரியமாகிய நிலையிலாவுலகத்தை நிலையெனக்கொண்டு மணி முடி பூண்டு மருளாட்சி புரியும் அரசர் போலாது , மாயையினீங்கி யென்றும் நிலையு தலுடைய இன்பமயமாக விளங்கும் பேராவுலகத்து ,நறுமணமிக்க சடைமுடி பூண்டு அருளாட்சி புரியும் அரசர் பெருமான் என்பது புலப்பட , “விரை சேர்முடியாய்” எனவுங்கூறி விளித்தனர் . விரை – சடை முடியிற் சூடிய கொன்றைமலரிலுள்ள நறு மணம் . மலை திரண்டு வந்தாற் போல வலிய வினைகள் திரண்டு வருதற்குக் காரணம் சிறியேன் குற்றமே யென்பார். “சிறியேன் பிழைக்கு” எனவும் , ஆண்டிற் சிறியனாயினான் ஒருவன் அறிவிற் பெரியனாயிருந்தால் உலகத்தில் காணப்படுகின்றமை யின் , என் சிறுமைதானும் அத்தகையதோ எனின் , அங்ஙனம் அன்று ; அறிவிலாமையானாகிய சிறுமையே யென்பார் , “அறியாச் சிறியேன்” எனவுங் கூறினர்.
ஈண்டுச் சிறுமை குணஞ் செயல்களானாய தென்பது கருத்து . பிழைக்கு என்பதைப் பிழையின் நீக்கத்திற்கு எனக்கொள்ளல் வேண்டும் , “துன்பத்திற்கியாரே துணையாவார் “ என்புழிப்போல . சிறியேனது பிழையின் நீக்கத்திற்கு அஞ்சற்க என்று நீ கூறும் அபயமொழியல்லது வேறு கருவியின்றென்று அடிகள் குறிப்பிட்டபடியாம் . பிழை – மன மொழி மெய்களால் நிகழும் அனைத்துமாம் . தம் முக்கரணங்களாலும் நிகழும் பிழயெல்லாம் இறைவன் திருமொழி யொன்றானே நெருப்பிடைப்பட்ட பஞ்சுத்துய்ப் போல நீங்கு மென்று அடிகள் துணிந்தபடியாம் . “பிழையெ லாந் தவிரப் பணிப்பானை” என்னும் அருன்மொழியும் இக்கருத்துப் பற்றி யெழுந்ததே . பணித்தல் – அபயமொழியருளல் . “என்னினல்லால்” என்பதன் பின் அவாய் நிலையான் “வேறு கருவியின்று “ எனபது வருவித்துரைக்கப் பட்டது . வேறு புகலில்லாத சிறியேன் , அறிவின்மையாற் செய்த பிழைகளைக் களைந்து காப்பாற்றுதல் நின் கடமையாகவும் என்னைக் கைவிடல் தகுமா வென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண், “வரை சேர்ந்தடர்ந்தென்ன வல்வினைதான் வந்தடர்வன” என்றமையால் உலக வாழ்க்கை வெறுக்கத்தக்க தென்பது பெறப்படுதலின், பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
**************************************
பாடல் :38.
அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேயெரியுஞ்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாய்தமி யேந்தனி நீக்குந் தனித்துணையே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் தம் வல்வினைக்குக் காரணமாய் அரியாமையால் நேர்ந்த பிழையைப் போக்கி அபயமளித்தல் வேண்டு மென்று விண்ணப்பஞ் செய்து கொண்ட அடிகள் , இத் திருப்பாட்டில் அவ் வல்வினையின் விளைவாகவுள்ள எல்லாப் புலநுகர்ச்சிகளுக்கும் நிலைக் களனாகிய மகளிர் சார்பினாலுண்டாம் தீங்கு குறித்து இரங்குகின்றார் .
பதவுரை :- விரிந்து எரியும் சுடர் அனையாய் = எங்கும் பரவி யொளிரும் தீப்பிழம்பை யொத்துத் திகழ்பவனே ,
சுடுகாட்டு அரசே = எல்லாம் ஒடுங்கும் இடமாகிய பெருஞ் சுடலைக்கு அரசனே ,
தொழும்பர்க்கு அமுதே = மெய்யடியார்க்கு அமுதம் போன்றவனே ,
தொடர்வு அரியாய் = யாரானுந் தொடர்ந்து பற்றுதற்கு அரியவனே ,
தமியேன் தனிநீக்கும் தனித் துணையே = புகலற்றவனாகிய அடியேனது தனிமையை நீக்கியருளும் ஒப்பற்ற துணையாக வுள்ளவனே ,
அடர் புலனால் அஞ்சி நின் பிரிந்து = என்னைத் தாக்குகின்ற புலன்களுக்கு அஞ்சி நின்னைப்பிரிந்து ,
அம் சொல் நல்லார் அவர்தம் விடர் விடலேனை = அழகிய சொற்களையுடைய மகளிருடைய முழை போன்ற இடங்களை விடாமற் பற்றி நிற்கின்ற சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- உலகெலாமாகி வேறாயுடனுமாய் விளங்கும் இறைவனது திருவுருவை ஞானயோகத்தின் முதிர்ந்த பெரியார் முதலிற் பேரொளிப் பிழம்பாகக் கண்டு வழிபட்டனரென்பது மறையாகமங்களிற் கண்ட வுண்மையாகும் . “சோதியாய்த் தோன்று முருவமே “ என்பது அடிகள் திருவாக்கு . ஐம்பெரும் பூதங்களும் , ஞாயிறு திங்களும் உயிருமாகிய எட்டுப் பொருள்களும் இறைவனுக்குத் திருமேனியென்ப . இவ்வெண் வகையுள் , ஞாயிறு திங்கள் நெருப்பு இம்மூன்றும் ஒளி மண்டிலங்களாகும் . இம்மூன்றும் , புறவிருளைப்போக்கி மாயாகாரியமாகிய உலகப் பொருள்க ளைக் காண்டற்குத் துணை செய்தல் போல , ஞானமயமாக விளங்கும் இறைவன் எக்கருவியானும் போக்கவியலாத உயிர்களின் அறியாமையாகிய அகவிருளைப் போக்கி , மாயையினீங்கிய தன்னியல்பை அவ்வுயிர்களு ணர்ந்து இன்புறுதற்குத் துணை செய்தலின் ,எங்கும் நிறைந்த அவ்விறை யியல்பை ஒளி மண்டிலங்களில் வைத்து வழிபடுவாராயினர் .
நெருப்பு எரியுங்கால் மேனோக்குதல் இயல்பு . பிழப்பாகிய இறைவனியல்பு “நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்” நிறைந்து விளங்குதல் பற்றி ,”விரிந்தே எரியும் சுடர் அனையாய் “ என்றார் . “பார்பதமண்டமனைத்துமாய் முளைத்துப் படர்ந்ததோர் படொரொளிப் பரப்பே “ என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலும் அறிக . “படரொளிப் பரப்பு” என்பது இங்கே நினைக்கத்தக்கது . இறவனது ஞானமயமான திருவுருவின் இயல்பைக் கூறிப்பின் அப்பெருமானது தலமைத் தன்மையைப் புலப்படுத்துவாராய் , “சுடுகாட்டரசே” என்றனர் . இங்கே சுடுகாடு என்பது பேரூழிக்காலத்தில் மக்கள் தேவர் முதலிய யாரும் யாவும் ஒடுங்க்கிய இடமாகும் . அக்காலத்து அவ்விடத்துத் தலைவனாக விளங்கும் தகுதி , கண்ணுதற் பெருங்கடவுட்கன்றிப் பிற ரெவர்க்கும் இன்றென்பது துணி பொருளாதலின் , அவ்வாறு கூறினர் . மாயா காரியமாகிய உலக நிகழ்ச்சியில் , அரசராய் விளங்கும் மக்கள் தேவர் முதலியோர் , தம்மால் ஆளப்படுவோர் இறந்தொழிதல் போலத் தாமும் இறந்தொழிதலின் , அன்னார் அரசு நிலயுதலில்லா அரசென்பதும் யாரும் யாவையும் ஒடுங்கிய பேரூழிக் காலத்து “ஈறிலாதவ நீசனொரு வனே “ என்றபடி தானொருவனே அழிவின்றி நின்று மீண்டும் படைப்பு முதலிய செயல்களுக்குத் தனித்தலைமை மேற்கோடலின் , சுடுகாட்டரசு நிலையுதலுடைய தென்பதும் குறிப்பிற் புலப்படுத்தவாறறிக .
இங்ஙனம் யாண்டும் பரவிய ஒளிப்பிழம்பாகவும் ,பேரூழியிறுதியில் பேரரசாகவும் விளங்கும் இறைவனைச் சார்தல் சிறியேமாகிய நமக்கு எங்ஙனம் கூடும்? இயலாத செயலிற்றலைப்படல் பயனின்று எனக்கருதி மெய்த்தொண்டில் ஈடுபடாமலிருக்கலாமே யெனின், அங்ஙன மிருத்தலா காது ; அப்பெருமான் மெய்த்தொண்டி லீடுபட்டு ஒழுகும் மெய்யன்பர்க்கே இனியனாய் எளிவந்தருளும் இயல்புடையனாவ னென்பதைப் புலப்படுக்க ” தொழும்பர்க்கமுதே “ எனவும், இங்ஙனம் மெய்யன்பர்க்கு எளிவரும் இயல்பு நோக்கி மெய்த் தொண்டிற்றலைப்படாமல் அவ்விறைவனை உயிர் முயற்சியால் வலிந்து பற்றிக் கொள்ளலாமெனக் கருதுவார்க்கு அவன் அரியன் என்பதை தெளிவுறுத்தத் , “தொடர்வரியாய்” எனவும் இறைவனை விளி கொள்ளலானார் .
பத்தி வலையில் எளிதிற் படுபவனாகிய இறைவனை அவன் அருட்டுணையின்றி உயிர் முயற்சியான் மாத்திரம் தொடர்ந்து பற்ற இயலாதென்பதைச் சுந்தரமூர்த்திகள் வரலாறு கூறுங்கால் சேக்கிழா ரடிகள் ,
“ஆவணன் பறிக்கச் சென்ற அளவினி லந்தணாளன்
காவணத் திடையே யோடக் கடிதுபின் றொடர்ந்து நம்பி
பூவணத் தவரையுற்றா ரவரலாற் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையினாரை யார்தொடர்ந் தெட்டவல்லார் “
என்னுந் திருவிருத்தத்தால் தெளிவுறுத்தருளினார் .தம்பிரான்றோழர் திருமணத்தில் இறைவன் ஓர் அந்தணனாகப் போந்து , “நீ யெனடிமை , பணி செய்தல் வேண்டும் ; ஆவணமுளது “ எனக்கூறிய அளவில் , அதனைப் பறிக்கச் சென்ற சுந்தர மூர்த்திகள் ,விரைந்தோடிய இறைவனைத் தொடர்ந்து பிடித்தனர் என்பதும் , அத்தவமுதல்வரன்றி இறைவனைத் தொடர்ந்து பற்ற வல்லார் யாருளர் என்பதும் இச்செய்யுளால் அறியப்படுவன . “தொடர்வரியாய்” , “தொழும்பர்க்கமுதே” யென்பன முறையே இறவனுடைய அருமையையும் எளிமையையும் வெளிப்படுத்து நிற்றலின் , அருமையிலெளிய அழகுடைய னாதல் ஈண்டும் புலனாதலறிக .
சுடரனையாய் என்பது முதலாக இத்துணையுங்கூறிய நான்கு விளி களாலும் , முறையே எங்கும் நிறை பொருளாகிய இறைவன் மெய்யன்பர்க்குக் காட்சி யளிக்குங்கால் பேரொளிப்பிழம்பாக விளங்குபவ னென்பதும் , அப்பெருமானே யாரும் யாவும் ஒடுங்கிய பேரூழிக் காலத்தும் அழிவின்றி நிலைத்திருக்கும் தலைமைத் தன்மையுடையான் என்பதும் , மெய்த்தொண்டர்குப் பத்தி வலையிற்படும் எளிய னென்பதும் , ,அல்லா தார்க்கு அணுகுதற்கரிய னென்பதும் ஆகிய இறையியல்பைத் தெளிவுறுத்து, இறுதியில் தமக்குச் சிறப்பு முறையில் அவ்விறைவன் செய்தற்குரிய பேருதவியைக் குறிப்பிட்டு அடிகள் பாராட்டி விளிப்பாரா யினர் . தமியேன் என்பது வேறுபுகல் இல்லாதவன் என்னும் பொருட்டு . “தந்தையார் தாயார் உடன் பிறந்தார் தாரமார் புத்திரரார் தாந்தாமாரே, வந்தவாறெங்ஙனே போமாறேதோ மாயமாமிதற்கேது மகிழ வேண்டா” என்று அப்பர் உபதேசித்தபடி இவ்வுல்லக வாழ்க்கையில் ஒருவர்க்கு இறைவன்னல்லாத யாரும் துணையாகாரென்னும் உண்மை பற்றி இவ்வாறு கூறப்பட்டது .
அழியும் இயல்பினதாகிய உலகியலைக் கண்டு தம் தனிமை யை யுணர்ந்த அடிகள் , அத்தனிமையை நீக்கித் தமக்கினிய துணையாகத் தம்முள்ளே விளங்கும் தனி முதல் சிவபெருமானே யெனத் தெளிந்தமை யால் , “தமியேன் தனி நீக்குந் தனி முதலே “ யென்றனர். உயிர் பாசத்தாற் பிணிப் புண்டிருக்கும் பொழுதும் ,இறவன் அப்பிணிப்பிற் படாமல் அவ்வுயிரிற் கலந்திருத்தலின் ,அவ்வுயிர்க்குத் தனிமை யென்பது யாண்டும் பெறப்படாதெனின் , அங்ஙனமன்று ; உயிர்க்குத் தன் முனைப்பு மேலிட்டிருக்குங்கால் , இறைவனது கலப்புண்மை யுணரப்படாமை யால் துணையிலதெனக் கொண்டு தன்னைத் தனியனாகக் கருதுதலும் , தன் முனைப்பு அற்று இறை விளக்கம் மேலிடப்பெற்ற நிலையில் , அக்கலப்புண்மை யுணரப்பட்டமையால் , துணையுள தெனக் கொண்டு தனிமை நீக்க முணர்தலும் உளவாதலின் , இம்முறையில் தனிமையும் அஃதின்மையும் பெறப்படுமென்பதும் , தனி முதலென்றது தனக்குப் பிரிதொரு பொருள் ஒப்பாதலும் ,பிறிதொரு பொருட்குத் தானொப்பாதலும் இல்லாதவன் என்னும் பொருட்டு . இவ் வுண்மையை , “ஒப்புடையனல்ல னொருவனல்லன் ஓரூரனல்ல னோருவமனில்லி “ என்னும் தமிழ் மறையில் “ஒப்புடையனல்லன் ஒருவமனில்லி “ யென்னுந் தொடர்களில் அப்பர் தெளிவுறுத்தருளியிருத்தலறிக .
பொறிவாயிலாகப் போதரும் புலனுகர்ச்சியில் உள்ளத்தைப் போக்காமல் தடைப்படுத்த முயன்றும் , அப்புலன்வலி விஞ்சிப் பொருகின்ற தென்பார் , “அடர்புலன்” என்றார் . புலனால் என்புழிப் புலனுக்கு என மூன்றனுருபை நான்காவதாக்குக . அப்புலப்பகையின் தாக்குதற்கு அஞ்சிச் சாருமிடம் , அது செல்லாத நின் திருவடியாகவும் , இறைவ ! அச்சார்பை விட்டுக் , கொடிய விலங்கிற்கு அஞ்சி மறைய முயல்வானொருவன் புலி கிடந்த தூற்றை யடுத்தது போல, அப்புலப்பகைக்கு ஆக்கந்தரும் மகளிர் சார்பைப் பற்றலானேன் என்பார் , “நிற்பிரிந்து அஞ்சொனல்லாரவர் தம் விடர் விடலேனை “ என்றார் . அஞ்சொல் என்றது விரும்பிப் பற்றுதற்குக் கருவி கூறியபடியாம் . நல்லாரவர் என்புழி அவர் என்றது , பண்டறி சுட்டாய்ப் புலப் பகைக்குச் சார்பிடனாக வுள்ளவர் என்பதைக் குறிக்கும் . விடர் – மலைக்குகை .“பெருமலை விடரகத்து”என்புழி அப்பொருட்டாதலறிக அஃது ஆகு பெயராய்க் குகை போன்ற சிற்றிடத்தை யுணர்த்தும் . “நிற்பிரிந்து” என்பதற்கேற்ப விடரைப் பற்றினேன் என்னாது , விடலேனை யென எதிர்மறையாற் பெற வைத்தது . நற்சார்பை விடுதலினும் தீச்சார்பைப் பற்றுதலின் அவாமிகுதியுண்மை புலப்படற் கென்க .
ஆண்டவனே ! அறியாமையால் இவ் விடர்ப்பாட்டில் பிணிப்புண்டுழலும் சிறியேனைப் பேரருளாளனாகிய நீயே முன் வந்து நின் திருவடிச் சார்பை நல்கிக் காத்தருளல் வேண்டுமல்லது இந்நிலையிற் கைவிடல் தகுமா வென்பார் . “விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண், “அடர்புலனால்நிற் பிரிந்தஞ்சியஞ் சொல் நல்லாரவர் தம் விடர் விடலேனை “ என்றமையால் உலக வாழ்க்கை புலப் பகையால் நலியப்பட்டு வருந்தத்தக்கது என்பது பெறப்படுதலின், பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
************************************
பாடல் :39 .
தனித்துணை நீநிற்க யான்றருக் கித்தலை யானடந்த
வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை யேனுடைய
மனத்துணை யேயென்றன் வாழ்முத லேயெனக் கெய்ப்பில் வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன்றுய ராக்கையின் திண்வலையே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் எல்லாப் புலனுகர்ச்சிகளுக்கும் இடனாகிய மகளிர் சார்பினாலுண்டாம் தீங்கு குறித்து வருந்திய அடிகள் , இத் திருப்பாட்டில் மெய்த்துணையாகப் பற்றுதற்குரிய நின்னை விட்டு மகளிரைப் பற்றியதோடு அமையாது , அதனாற் செருக்குற்றுத் தலை கீழாகவும் நடக்கலானேன் ; என் வினை யிருந்தபடி யென்னே என இரங்குகின்றார் .
பதவுரை :- வினையேன் உடைய மனத் துணையே = தீவினையுடையேனது உள்ளத்திற்குத் துணையாக வுள்ளவனே ,
என் வாழ்முதலே = எனது வாழ்க்கைக்கு ஆதாராமாகிய முடற்பொருளே ,
எனக்கு எய்ப்பில் வைப்பே = எனக்கு இளைப்பு நேர்ந்தவிடத்துப் பயன்படும் சேமப்பொருள் போல்பவனே ,
தனித்துணை நீ நிற்க = நிகரற்ற துணையாக நீயிருக்க ,
யான் தருக்கித் தலையால் நடந்த வினைத்துணையேனை = யான் எனச் செருக்குற்று அதனால் தலை கீழாக நடந்த வினையைத் துணையாகவுடைய சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,
ஆக்கை திண்வலை துயர் = உடலாகிய திண்ணிய வலையிற்பட்டு எய்தும் துன்பத்தை ,
திணைத்துணையேனும் பொறேன் = தினையளவு நேரமேனும் பொறுக்கலாற்றேன் என்பது .
விளக்கவுரை :- அடிகள் ஆண்டவன் முன்னிலையில் , தம்மை அடியேன் , சிறியேன் , நாயேன் என்னுஞ் சொற்களால் குறிப்பிடுதலைப் பலவிடத்துங் காணலாம் . அங்ஙனம் குறிப்பிடல் , யாவர்க்கு மேலாம் அளவிலாச் சீருடைய அப்பெருமான் பெருமையும் தம் சிறுமையும் புலப்படற்கென்பது அடிகள் கருத்தாம் . இறைவன் ஆண்டான் என்பது தோன்றத் தம்மை யடியேன் எனவும் ,பெரியோன் என்பது தோன்றச் சிறியேன் எனவும் , பிறப்பிலான் என்பது தோன்றப் பிறப்பாலிழிந்த நாயேன் எனவும் கூறுவாராயினர் . அங்ஙனமே ஈண்டு இறைவன் வினையினீங்கிய தூயன் என்பது தோன்றத் தம்மை “வினையேன்” என்றனர் . ஒருயிர் பிறவி தொடங்கிவிட்டு நிலை யெய்துங்காறும் வினையொழிவு பெறாமையால் அதற்கு மற்றைக் குறியீடுகளினும் வினையுடைமை பற்றிய குறியீடே சிறப்பிற் பொருந்துவதாகும் , வினை விளைவிற்கும் அதன் பயனுகர்ச்சிக்கும் மனமே சிறந்த காரணமாகும் .
மனமில்வழி நிகழும் செயலை அபுத்திபூர்வக மெனவும் , அஃதுள் வழி நிகழும் செயலைப் புத்திபூர்வகமெனவும் , கூறபவாதாலின் , மனைவியோடு நிகழும் மொழியும் செயலுமே பயன்விளைப்பனவாம் . ஆகவே மனமொன்று தூய்மை பெறின் ,முக்கரணங்களும் தூய்மையுடைய னவாம் என்பது தெளிவாம் . அத்தூய்மைதானும் , அது பொறிவழிச் சேறலை யொழித்துத் தன்னைப் பற்றுமாறு இறைவன் அம்மனத்திற்குத் துணைபுரி தலால் உண்டாம் ஆதலின் , அவ்வுதவி குறித்து , “வினையேனுடையே மனத் துணையே “ என்றனர் . இங்ஙனம் மனத்தூய்மையை யடிப்படையாகக் கொண்டு வாழும் இம்மை வாழ்க்கைக்கும் , அவ் வாழ்க்கையில் மேற் கொள்ளப்படும் தவம் காரணமாக எய்தப்பெறும் மறுமை வாழ்க்கைக்கும் ,அத் தவத்தால் உண்டாம் ஞானத்தாலடையப்படும் வீட்டின்ப வாழ்க்கைக் கும் , ஆதாரமாகவுள்ள முதற் பொருள் இறைவனாதலின் , “என் வாழ் முதலே” என்றனர் .
வாழ்க்கை இம்மை மறுமை வீடு மூன்றையும் குறிக்குமா யினும் , ஈண்டு முடிவான வீட்டின்பம் பற்றியதாகவே கொள்ளல் வேண்டும் ; என்னை , “தினைத்துணையேனும் பொறேன் றுயராக்கையின்றிண் வலையே “ என இம்மை வாழ்வு வேண்டாமையே இத் திருப்பாட்டிலே கூறி யிருத்தலானும் ,”கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” என்பது முதலிய வற்றால் மறுமை வாழ்வு வேண்டாமையை வெளிபடுத்தமையானு மென்பது .
உலக வாழ்க்கையில் ஒருவற்குப் பொருட்குறை நேர்ந்தவிடத்துப் பயன்படுதற் பொருட்டுத் தொகுத்து வைக்கப்படும் மூலப்பொருளை வைப்புப் பொருளென்ப . அப்பொருள் போல வீட்டின்பம் துய்த்தற்கு இளைப்பு நேர்ந்துழி , அதனை யொழித்து தன்னை வழங்குதலாகிய பெரும்பயன் விளைத்தற்கு இறைவனுளன் என்னுந் துணிவு தோன்ற அப்பெருமானை , “எனக்கு எய்ப்பில் வைப்பே “ யென்றனர் . இம்மூன்று விளிகளாலும் முறையே மனத்தூய்மையாகிய சாதனத்திற்குத் துணையா வானும் , அச்சாதனப்பயனாகிய வீட்டின்ப வாழ்விற்கு முதலாவானும் அவ்வின்பப் பேற்றிற்குத் தடை நேர்ந்துழி யுதவி புரிவானும் சிவ பெருமானே யென்பது புலப்படுக்கப்பட்டபடியாம் .
இவ்வாறு இறைவனை விளித்துத் தம் குறையை விண்ணப்பித்துக் கொள்ளுகின்றார் . உயிர்கட்குக் கட்டு நிலையினும் வீட்டு நிலையினும் நீங்காத மெய்த் துணையாகவுள்ளவன் இறைவனொருவனே , பிறவிதோறும் அப்பிறப்புப் பற்றியுண்டாம் துணையெல்லாம் அப்பிறப்பு ஒழிவில் தாமும் இழிந்து போமியல்பினவாம் . அப்பிறவியினும் இடையறாது நிலை நின்று பயன் செய்வனவு மாகா; இடையிடையே மாறி நிகழும் இயல்புடையனவாம் எப்பிறப்பினும் எந்நிலையினும் விட்டு நீங்காமல் உடனுறைந்து நிலை நின்று உயிர்க்கு உறுதுணையாகவுள்ளவன் இறைவனாதலின், “தனித்துணை” யென்றார் .
கட்டு நிலையிலும் இறைவன் துணை யுளதாயின் , உயிர் இன்பத்தோடு துன்பமும் நுகர்தல் எங்ஙனம் பொருந்துமெனின் , வினைப் பயனை நுகர்வித்துக் கழித்து உயிர்க்கு நலம் புரிதலே இறைவன் திருவுள்ளமாதலின் , அப்பெருமானுடைய அறக்கருணையோடு மறக்கருணையுங் காரணமாக உயிரநுபவம் நிகழ்தலிற் பொருந்துமென்க . உலக நிகழ்ச்சியில் தாய் தந்தையர் தம் சொல்வழி நில்லாத மக்களை அடித்தொறுத்து நல்லாற்றுப் படுத்தற்குக் காரணம்,அம் மக்கண்மாட்டுள்ள அன்பேயாதலை யறிகின்றோமாதலின் ,அம்முறையின் எவ்வுயிர்க்கும் தாயுந் தந்தையுமாகவுள்ள இறைவன் செயலுமாமென்க . இதனை ,
“நிக்கிர கங்க டானும் நேசத்தா லீசன் செய்வ
தக்கிர மத்தாற் குற்ற மடித்துத் தீர்த் தச்சம் பண்ணி
யிக்கிர மத்தினாலே யீண்டற மியற்றி டென்பன்
எக்கிர மத்தினாலும் இறைசெய லருளே யென்றும் “
என்னும் சிவநெறிப் பனுவலானும் தெளிக . இங்ஙனம் தற்பயன் கருதாமல் உதவிபுரியும் ஒப்பற்ற துணையாகிய நீ என்னிற் பிரியாதிருக்க வென்பார் “தனித்துணை நீ நிற்க “ என்றார் . நிற்க என்றது , உற்றுழியுதவுதலில் விரைந்து முற்படல் தோன்றா நின்றது .இறைவ , எனக்கு உற்றவிடத்தும் அரிய பெரிய துணையாக என்னுள்ளே நீ முற்பட்டிருக்கவும் , நின்னை மதியாமல் உயிர் முனைப்பால் யானே தலைவன் எனக்கருதிச் செருக் குற்று நெறிமுறை பிறழ்ந்து நடக்கலானேன் என்பார் .
“யான் தருக்கித் தலையால் நடந்த” என்றார் . “யான் தருக்கி” என்புழி இடையே “என” வென்னும் இடைச்சொல்லை அவாய் நிலையாற் கொண்டு யான் எனத் தருக்கி யெனவுரைத்துக் கொள்ளல் வேண்டும் . யான் என்றதனால் , இனம் பற்றி எனது என்பதையுங் கொண்டு , யான் எனது என்னும் அகப்புறப் பற்றுக்களால் மயங்கி எனக் கொள்ளுதல் பொருந்தும் . இனி, “யான்றருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேனை “ என்பதற்கு , தருக்கி நடந்த வினைத்துணை யேனாகிய என்னை எனப் பொருள் கோடலுமாம் .அங்ஙனம் கொள்ளுங்கால் , “யான் தருக்கித் தலையானடந்த வினைத் துணையேனை “ என்பதைப் பதினோ ராந் திருப்பாட்டிற் கூறியாங்குக் கூறி முடித்துக்கொள்க . இது தன்மை பற்றி வந்தது .
இங்ஙனமே நாற்பத்தைந்தாம் திருப்பாட்டில் “நீ யொளித்தாய்க்கு” என முன்னிலைப்பற்றி வந்த தொடர்க்கும் கொள்க. இவ்வாறு வருதலை, “கருதாத வரக்கன் பெருந்தோள்கணாலைந்து மீரைந்து முடியுமுடையானை” என்னுஞ் சுந்தரர் தேவாரத்திலுங் காண்க . இது படர்க்கை பற்றி வந்தது. தருக்குதலின் பயனாகத் “தலையானடந்த” என்றார் . தலையானடத்தல் என்பது நெறிமுறை தவறி யொழுகுதலைக் குறிக்கும் . என்றும் அழியாத அறிவுருவாகிய நின்னைத் துணையாகக் கோடலை விட்டு , நுகர்ச்சி யாலழிவெய்துவதும் அறிவில்லாததுமாகிய வினையைத் துணையாகக் கொள்ளலானேன் ; என் அறியாமை இருந்தவாறிது என இரங்குவார், “வினைத்துணையேனை “யென்றார் .
முன்னர் ஆண்டவன் அருட்குரவனா யெழுந்தருளித் தமக்கு உபதேசித்து மறைந்தவுடன் ,”இனவடியாருடன் கூட்டாதே கினாயோ என்னையுமென் வினையையு மிங்கிருத்தி யெந்தாய்” என்று அடிகள் இரங்கிக் கூறியதாகப் பரஞ்சோதியார் கூறியதும் இங்கே நினைக்கத் தக்கது இறைவன் பிரிவில் தமக்குச் சார்பாக நின்றது வினையென அடிகள் கண்டனரென்பது . இனி, “வினைத்துணையேனை” யென்புழித் துணையென்னுஞ் சொற்கு இரண்டெனப் பொருள் கொண்டு , இருவினைக் கட்டுடையேனை எனக் கோடலு மொன்று . . இறைவ! , என் அறியாமையால் மெய்த்துணையாகிய நின்னை விட்டு , பொய்த்துணையாகிய வினையைக் கொள்ளலானேன் ; இந் நிலையில் என்னைக் கைவிடலாகாதென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .
இனி , அடிகள் வினைத்துணைமையால் தமக்கேற்பட்ட துயரத்தை ஒரு சிறு பொழுதேனும் பொறேன் என்று ஈற்றடியிற் குறிப்பிடுவாராயினர் . “ஆக்கையின் திண்வலை” யென்புழி இன் அல்வழிச்சாரியையாகும் , “தன் பூங்கழலின் றுணர்ப்போது “ என்புழிப்போல . ஒரு வலையுட்பட்ட பிராணி யின் வன்மையால் அவ்வலையறுதலுமுண்டு . யாக்கையுட்பட்ட வுயுர் வினையொழிவு பெற்று வீட்டு நிலை யெய்துங்காறும் யாக்கை தொலை யாமையின் யாக்கையைத் “திண்வலை” யென்றார் .யாக்கையாகிய வலிய வலையிலகப்பட்டு எய்தும் துயரத்தை ஒரு கணப்பொழுதேனும் பொறேன் என்பார் , “ தினைத்துணையேனும் பொறேன் துயராக்கையின்றிண்வலயே” யென்றார். திணை – சிறுமையைக் குறிக்கும் ஓரளவு . தினைத்துணை நன்றி செயினும்” என்புழியும் அப்பொருட்டாதலறிக . ஈண்டுக் காலத்தைப் பற்றி நின்றது .
“எத்தனுவினின்று மிறை பணியர்க்கில்லை வினை” என்றபடி மெய்யடியாராகிய அடிகள் எவ்வினைகளைச் செய்யினும் அவர்க்கு அவை பந்தமாகாவாயினும் , இறை பணி நிற்கும் அன்னார்க்கும் ஒரோவழிப் பயிற்சி வயத்தால் பிராரத்த வினை மெலிதாக வந்து தாக்குதலும் உண்டென்ப . இவ்வுண்மையை “இங்குளி வாங்கும் கலம் போல ஞானிபால் , முன்செய் வினைமாயை மூண்டிடினும் “ என்னும் திருவெண்பாவானும் , “இறை பணி நிற்பார்க்குப் பிராரத்த வினை தாக்குதலுண்டென்பதற்குத் “தினைத்துணையேனும் பொறேன் றுயராக்கையின்றிண் வலையே “ என்றற் றொடக்கத்தான் அவர் கூருந் திருவாக்குகளே சான்றாதலின் “ என்னும் சிவஞான முனிவர் கூற்றானும் உணரலாம் . இத் திருப்பாட்டின் ஈற்றடி சிறந்த சிவநெறியுண்மையைப் புலப்படுத்து நிற்றல் உணர்ந்தின் புறத்தக்கது . இஃது ஆண்டவன் தம்மைக் கைவிடாமற் காத்தற்கு ஏதுக் கூறியபடியாம் .
இதன்கண், “தினைத்துணையேனும் பொறேன் றுயராக்கையின் றிண்வலையே” என்றதனால் உடலோடு கூடிய உலக வாழ்க்கை வெறுக்கத் தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
***************************************
பாடல் : 40 .
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
மிலைத்லைந் தேனை விடுதிகண் டாய்வெண் மதியினொற்றைக்
கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி லாய மென்னும்
மலைத்தலை வாமலை யாண்மண வாளவென் வாழ் முதலே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் மெய்த்துணையாகிய நின்னை விட்டு மகளிரைப் பற்றியதோடமையாது அதனால் செருக்கி நெறி பிறழ்ந்தும் நடக்கலானேன் என்று இறைவனை நோக்கிக்கூறிய அடிகள் , இத்திருப்பாட்டில் அங்ஙனம் நடத்தற்கு ஏதுவாகிய மகளிர் சார்பில் தம்மைப்படுத்த கருவியின் வலிமையைக் கூறுகின்றார் .
பதவுரை :- வெள்மதியின் ஒற்றைக்கலைத் தலையாய் = வெள்ளிய திங்களின் ஒரு கலைப் பிறையைத் தலைக்கணுடையவனே ,
கருணாகரனே – அருட்கு இருப்பிடனாக வுள்ளவனே ,
கயிலாயம் என்னும் மலைத்தலைவா = கயிலை என்று சொல்லப்படும் மலயில் எழுந்தருளியிருக்கும் தலைவனே ,
மலையாள் மனவாளா = மலை மடந்தையாகிய உமா தேவியின் கணவனே ,
என் வாழ் முதலே = எனது வாழ்க்கைக்கு மூலகாரணமானவனே ,
வலைத்தலை மான் அன்ன நோக்கியர் = வலையிடைப்பட்ட மானின் கண்களைப் போன்ற கண்களையுடைய மகளிரது ,
நோக்கு வலையிற்பட்டு = பார்வையாகிய வலையில் அகப்பட்டு ,
மிலைத்து அலைந்தேனை = மயங்கித் திரிந்த சிறியேனை ,
விடுதி = விட்டு விடுவாயோ ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- வெண்மதி என்றது இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயராகும் . ஆயுனும் கந்தபுராண வரலாற்றை நோக்குமிடத்து , ஒருண்மை குறிக்கொள்ளத்தக்கது . பதினாறு கலைகளையுடைய திங்கட் செல்வன் தக்கன் சாபத்தால் பதினைந்து கலைகள் தேய்ந்தொழியப் பெற்று , ஒரு கலை எஞ்சியிருக்குங்கால் , இறைவனைப் புகலடைந்து குறையிரப்ப , இறைவன் அஞ்சற்கவெனக் கூறித் தன் திருக்கைகளாற் பற்றித் தலையிற் சூடினானாக , அச்சாபம் ஆங்கு அணுகாமையோடு மேலும் நாடோறும் ஒவ்வொன்றாகக் கலைகள் வளர்தலும் பின் தேய்தலுமாக நிகழப்பெற் றான் என்ப . இவ்வரலாற்றிடையே , பதினைந்து கலைகளொழிய எஞ்சிய ஒரு கலையோடு மதி இறைவனை யணூகிய பொழுது ஒளியிழந்து “மங்குலினிறங்கொடு வடிவம் வேறதாம் , திங்கணின் றெம்பிராற் கினைய செப்புவான் “ என்றபடி கரிய மதியாயினனெனவும் ,அந் நிலையில் இறை யருட்கு இடனாகிக் கலைகள் வளரப்பெற்றுப் பழைய வெண்மை நிறத்தை யடைந்தானெனவும் கூறுபவாகலின், அக்குறிப்புத் தோன்ற , “வெண்மதி “ என்றார் என ஈண்டைக்கியைபுடைமை நோக்கிக் கோடலுமாம் .
கந்தபுராணத்துக் கூறியபடி இறைவன் தலையிற் சூடிய கலை யொன்றென ஈண்டுங் கூறப்பட்டது . சிலப்பதிகார வுரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இரண்டு கலையென்பார் ,”சூடினபிறை இரண்டு கலையாதலின் “ என்பது அவ்வுரைப்பகுதி . காண்பார் கட்புலனுக்குஇரண்டு கலைகளே புலனாமென்பது கருதி அவ்வாறு கூறினார் போலும் . திங்கட் கலையைப் பாதுகாத்தற்குத் தலையை இடனாக்கியது , புகலடைந்தாரைப் புரத்திலுள்ள பேரருட் குணத்தைப் புலப்படுத்துமென்க . இஃது ஆதாரக்காப்பாகும் .
இச்செயல் நிகழ்ச்சிக்கு ஏதுக் கூறுவாராய் அடுத்துக் “கருணாகரனே” என்றனர் . அருட்கிடனானவனே என்னும் இதனால் இறைவன் குணமும் , ஒற்றைக் கலையைத் தலைக்கணுடையாய் என்றதனால் அக்குணத்தின் பயனாகிய செயலும் கூறப்பட்டபடியாம் . பயனாகிய செயலை முன்னரும் அதற்கு ஏதுவாகிய குணத்தைப் பின்னரும் கூறியது , செயலைக் கொண்டு குணவுண்மை தெளியச்செய்யும் இறைவனது அளப்பரும் பெருமை புலப்படற்கென்பது .
கைலாயமென்பது அம்மையப்பரின் திருவிளையாடற்குரிய பேரின்ப நிலையம் என்னும் பொருளுடையதாகும் .அவ்வாறு கூறுவன மறையாகமங்களென்பதும் , பிறர் அதனை ஒரு மலையெனக் கருதுவர் என்பதும் , அப்பேரின்ப நிலையமாகிய சிவராசதானிக்குப் பேரரசாக விளங்குவோன் சிவபெருமானே யென்பதும் தோன்றக் “கைலாயமென்னும் மலைத்தலைவா “ என்றனர் . “என்னும்” என்னும் சொல்லாற்றல் ஈண்டு கருதத்தக்கது . . “ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாகலின் …….. புண்ணியந் திரண்டுள்ளது போல்வது “ என்பர் சேக்கிழார் . மலயரசாகவுள்ள இறைவன் பிறிதொரு மலையரசன் மகளையே மணந்து போக மூர்த்தியாகவும் விளங்குகின்றான் என்பது புலப்பட , “மலையாண் மணவாள “ என்றனர் .பின்னர் “என் வாழ் முதலே” என்று அடிகள் கூறினாராயினும் , எல்லா வுயிர்த் தொகுதிகளுக்கும் வாழ்வின் மூலகாரணமாக விளங்குவோன் இறைவனேயாவான் என்பது தெளிவு . அது கைவரப் பெறாதார் இருக்கத் தம் தெளிவு ஈதெனக் கூறியபடியாம் .
இங்ஙனங் கூறிய விளிச்சொற்களாற் பெறப்படுவன ;- முறையே அடைக்கலம் புகுந்தாரை யாதரித்துக் காக்குஞ் செயலுடைமையும் , அச்செயற்கு ஏதுவாகிய அருட்குணமுடைமையும் , அக்குணஞ் செயல்களுக் கேற்ற தலைமைத்தன்மையுடைமையும் , அத்தன்மைக்குரிய சத்தியுடை மையும் , உயிர்ப்பன்மைகளின் வாழ்க்கைக்கு மூலகாரணமாத லுடைமை யுமாம் . அடிகள் என் வாழ் முதலே யெனச் சிறப்பு முறையில் விளித்துத் தம் குறையை யெடுத்துக் கூறிப் பாதுகாப்பு வேண்டுகின்றார் .
மகளிர் கண்களுக்கு மருட்சியுடைமை பற்றி மான் விழிகளை உவமை கூறுப . மான் அன்ன என்புழி மான் ஆகுபெயராய் விழியை யுணர்த்தும் . அமைதியான நிலையிலே மான் விழி மருட்சியுடைய தாகும் . அம்மான் வேடரிட்ட வலையிலகப்பட்ட பொழுது விழி அச்சத்தால் மிகவும் மருண்டதாகுமாதலின் , “வலைத்தலை மானன்ன நோக்கியார் “ என்றார் . இவ்விழி மருட்சி பிறிதொரு பொருள் கண்டு கலங்கிய நிலையிலும் , பிறிதொரு பொருளைக் கலக்க முறுத்தும் நிலையிலும் உண்டாவதாகும் .இங்கே மகளிர் கண்கள் , ஆடவராகிய பிறரைத் தம் வயப்படுத்துக் கலக்க முறுத்தற்கு மேற்கொண்டனவென்க. . நோக்கு – பார்வை . நோக்கின் வலை யென்புழி இன் அல்வழிச் சாரியை . மகளிர் கண்களின் நோக்கை நோய் செய்யும் நோக்கெனவும் , அதற்கு மருந்தாய நோக்கெனவும் இருதிறப்படுத் துக் கூறுப . “இருநோக்கிவளுண்க ணுள்ள தொரு நோக்கு, நோய் நோக்கு மகளிர் மனத்தினாய காமக் குறிப்பினை வெளிப்படுப்பதாகும் . மருந்தாய நோக்கு அந் நோய் தீர்தற்கு வாயிலாகிய காதற்குறிப்பைப் புலப்படுப்ப தாகும் .
இவ்விருதிறமும் ஆடவரை வயப்படுத்தும் இயல்பு கருதி “நோக்குவலை” என்னப்பட்டது . அவ்வலையிற் சிக்குண்டு கடக்க வியலாமையால் மயங்கி அப்பிணிப்போடு அங்கு மிங்கும் அலையலா னேன் என்பார் , “ மிலைத்தலைந்தேனை “ யென்றார். ஒரு தீய செயலைச் செய்தவன் அதனை நினைந்து இரங்குதல் , பின் அச்செயலில் தலைப்படா மைக்கு ஏதுவாகும் . ஆதலின் , அம்முறையில் கழிந்ததற்கு இரங்கலாக “மிலைத்தலைந்தேன்” என இறந்த காலத்தாற் கூறினர். அங்ஙனம் கழிந்ததற்கு இரங்கினாராயினும் ,அத்தீவினைப்பயன் காரணமாக இறை யருட்கிடனாகாமல் , அப்பெருமானாற் கைவிடப்படுவேன் கொல் என அஞ்சி “ விடுதி கண்டா” யென்றார் . இறைவ, சிறியேன் செய்த பிழையை யறிந்து நின்னைப் புகலடைந்தேன் ; இந் நிலையில் நின் பேரருள் காரணமாக என்னைக் கைவிடாமற் காத்தருள வேண்டுமென்று அடிகள்விண்ணப்பித்துக் கொண்டவாறாம் .
இதன்கண், “வலைத்தலை மானன்ன நோக்கியார் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந்தேன் “ என்றதனால் உலக வாழ்க்கை துன்புறுதற்கு ஏதுவாமென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
**************************************
பாடல்:41 .
முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கி
விதலைச்செவ் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ
திதலைச்செய் பூண் முலை மங்கைபங் காவென் சிவகதியே
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் மகளிர் சார்பில் தம்மைப்படுத்த கருவியின் வலிமை கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் , அக்கருவியால் பற்றப்பட்டுத் தாம் எய்திய வீழ்ச்சி நிலையையும் , அதனால் நோய்த் தொடர்புடைய ஊனுடலைப் பொறாமையையும் புலப்படுத்து இரங்குகின் றார் .
பதவுரை :- திதலை செய் பூண் முலை மங்கை பங்கா = தேமல் படர்ந்த அணிகளன் விளங்கும் நிகில்களையுடைய உமையம்மையை யொரு கூற்றிலுடையவனே ,
என் சிவகதியே = எனக்கு வீடு பேறாக வுள்ளவனே ,
வேட்கை வெந்நீரில் மூழ்கி = காமமாகிய வெந்நீரில் முழுகி ,
செவ்வாய்ச்சியர் முதலை கடிப்ப = சிவந்த வாயினையுடைய மகளிராகிய முதலை கடிப்ப ,
விதலை செய்வேனை விடுதி = அதனால் நடுக்கம் எய்துகின்ற சிறியேனைக் கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,
விடக்கு ஊன்மிடைந்த = புலால் நாற்றமிக்க இறைச்சி செறிந்த ,
சிதலை செய் காயம் பொறேன் = நோய் விளைக்கும் உடலைத் தாங்கலாற்றேன் ,
சிவனே முறையோ முறையோ = சிவபெருமானே (இவ்வுடல் வாழ்க்கையில் என்னையிருத்தல்) முறையாகுமா? முறையாகுமா? என்பது .
விளக்கவுரை :- உமையம்மையார்க்குக் கூறிய அடைமொழி உலகெலா மீண்றுங் கன்னியாயிருக்கும் இயல்பையும் , அணிகலன் என்றும் அழியாத மங்கலத் தன்மையுடைமையையும் குறிப்பனவாம் . “மங்கை பங்கா” வென்பதனையடுத்து “என் சிவகதியே “ என்றனர் ; போகியாயிருந்துயுர்க்குப் போகத்தைப் புரிந்து , யோகியாய் யோகமூர்த்தியுதவும் இறையியல்பு, புலப்படற் கென்பது . மேலும் அருளுருவினளாகிய அம்மையை வழிபட்டு அவள் மூலம் அப்பனையடைதல் வேண்டுமென்னும் உண்மையும் பெறப்படவைத்தவாறாம் . “அவனருளாலே யவன்றாள் வணங்கி” என்பதும் அது . சிவகதி – வீடுபேறு . இச்சொல்லை இப்பொருளில் பிற சமயத்தாரும் எடுத்தாளுவர் . “சினவரன் றேவன் சிவகதி நாயகன் “ என்பது சிலப்பதிகாரம் . இது பொதுவாகப் பிற சமயத்து வீட்டு நெறியையுங் குறிக்குமாயினும் , சிறப்பாகச் சிவநெறி யின்பத்தையே புலப்படுத்து மென்பது சொல்லாற்றலாற் கண்ட தெளிவாகும் . இவ்வுண்மை குறிக் கொண்டே பொது நீக்கிச் சிவபெருமானைப் பற்றிய அடிகள் , “என் சிவகதியே” எனத் தம் உரிமை தோன்றக் கூறினர் .
வேட்கை மகளிரைப்பற்றியதாகலின் காமத்தைக்குறிக்கும் . விரும்பிச்சார்ந்தாரை நோய் முதலியவற்றால் துன்புறுத்துச் சுடுதலாற் காமத்தை வெந்நீரென்றார் . உள்ளினுஞ் சுட்டிடு முணருங் கேள்வியிற் , கொள்ளினுஞ் சுட்டிடும் “ என்பர் கச்சியப்ப சிவாசாரியர் . மூழ்குதல் – அமிழ்தல் . மூழ்குதற்குப் பெருக்கமாகிய நீர் நிலையிலுள்ள தண்ணீரே ஏற்றதென்பது , உலகியலிற் கண்டது . அதற்கு மாறாக ஈண்டு அடிகள் தாம் மூழ்குதற்குரியது காமப் பெருக்கமாகிய வெந்நீராயிற்றென்றார். மூழ்குதலால் உண்டாம் துன்பத்தோடு சுடுதற் றுன்பமுஞ் செய்தல் பற்றி . இங்ஙனம் மூழ்குதலானும் வெப்பத்தானும் துன்புறும் நிலையில் முதலையாற் கடிக்கப்படுதலும் நேருமாயின் , அப்பொழுதுண்டாம் ஏதத்திற்கு அளவின்றென்பது கருத்து . செவ்வாய்ச்சியர் என்றது .
இனிய பேச்சினாலும் சுவையினாலும் ஆடவர் செவிக்கும் நாவிற்கும் இன்பஞ் செய்து தம் வயப்படுத்தும் மகளிர் கருவிச் சிறப்புத் தோன்றற்கு என்க . “நெடும் புனலுள் வெல்லு முதலை” என்றபடி நீர்ப் பெருக்கில் எல்லாப் பிராணிகளையும் வெல்லும் ஆற்றல் முதலைக்கு உளதாதல் போலக் காமவயப்பட்டார் யாவராயினும் அவரைத் துன்புறுத் தும் இயல்பு மகளிர்க்கு உளதாம் என்பது தோன்ற , அவர் முதலையாக உருவகஞ் செய்யப்பட்டனர் மூழ்கிய நீர் வெந்நீராதலானும் ,ஆங்கு முதலையாற் கடிக்கப் பட்டமையானும் நடுக்கம் பெரிதாயிற்றென்பார் , “விதலைச் செய்வேனை” என்றார் . இத் திருப்பாட்டின் முதலடிக்குச் செங்கிடை போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரைப்பற்றிய காமமாகிய விரும்பத்தக்க நீரில் மூழ்கி எனப் பதப்பொருள் கோடலுமாம் . இங்ஙனம் கொள்ளுங்கால் , முதலை யென்னும் சொற்குச் செந்நெட்டி யெனவும் , கடிப்ப என்பதற்குக் கடியென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைச் சொல்லாகக் கொண்டு அச்சந் தோன்ற எனவும் பொருள் கொள்ளல் வேண்டும் .
இறைவ! காமக்கடலுள் மூழ்கிக் கடுந்துயரெய்தும் இந்நிலையிற் சிறியேனைக் கைவிடலாகாதென்பார் , “ “விடுதி கண்டாய்” என்றார் . இவ்வாறு விண்ணப்பஞ் செய்து கொண்டு தம் ஆற்றாமையை இறைவன் பாற் கூறி முறையிடுதல் பின்வருவது . முடையார் புழுக்கூடு , ஊனார் புழுக்கூடு என்று உடலை முன்னர்க் கூறினர் . ஈண்டு இவ்வுடல் முடை நாற்றமுள்ள இறைச்சிச் செறிவளவில் இருப்பின் அருவருக்கத்தக்க நிலையிலாவது இருந்தொழியும் . அங்ஙனமுமின்றி நோய்க்கு இடனாகவும் அமைந்திருத்தலால் , அருவருப்போடு துன்பமும் விளைத்துப் பொறுக்கலாகா நிலையிலிருக்கின்றதே ! என் செய்வல் என்பார் ., “விடக்கூன் மிடைந்த சிதலைச் செய்காயம் பொறேன் “ என்றார் . காயத்திற்குள்ள அடைமொழிகள் அதனைப் பொறுக்க இயலாமைக்கு ஏதுக்களாம் . அவ்வேதுக்களுள் ஒன்றாகிய நோய்த்தொடர்பிற்கு , முதலடியிற் கூறிய காம வீழ்ச்சி காரணமென்பதுங் கருதத்தக்கது . நோய்க்கு நிலைக்களனாய் அருவருப்பு விளைக்கும் உடற்பொறையைத் தாங்கலாற்றாமையான் உண்டாய அவலத்தான் இறைவனைக் கூவிய ழைத்து முறையிடுவாராய்ச் , “சிவனே முறையோ முறையோ “ என்றனர் .
சிவம் என்னுஞ் சொல் தூய பேரின்பத்தைக் குறிக்குமாதலின் , தமக்கு ஏற்பட்ட துன்ப நீக்கத்தோடு இன்பப் பேறும் வேண்டி அப்பெயரால் கூவி முறையிடுவாராயினர் . உலகியலில் முறையீடாவது , ஒருவன் தனக்குப் பகை முதலியவற்றால் கடக்க முடியாத நலிவு நேர்ந்தவிடத்து , அரசனை யடுத்து நீதி வழங்க வேண்டுதலாகும் . அங்ஙனமே அழியும் இயல்பினதாகிய உடலோடு கூடி வாழ்தலில் நோய் முதலிய வற்றால் நேரும் துன்பத்தை யாற்றாமல் , அதனொழிவோடு அழிவிலின்பப் பேறும் வேண்டிக் கடவுட் பேரரசாகிய இறைவனிடத்து அருணீதி குறித்துச் செய்த முறையீடாகுமென்பது .
இத்திருப்பாட்டின் முதலடியிற் கூறியபடி செய்த காம வீழ்ச்சியாகிய தவறு உணரப்பட்டதென்பதும் , அவ்வுணச்சியின் பயனாக இரண்டு மூன்றாம் அடிகளிற் கூறப்பட்டபடி காயம் பொறாமையாகிய முறையீடு செய்யப்பட்ட தென்பதும் அடிகள் கருத்தென உய்த்துணரத்தக்கன .
இதன்கண், “விடக்கூன் மிடைய்ந்த சிதலைச் செய் காயம் பொறேன் “ என்றதனால் , உலக வாழ்க்கை வெறுக்கத்தக்கதென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
**************************************
பாடல் : 42 .
கதியடி யேற்குன் கழல்தந் தருளவும் ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்கவஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் காம வீழ்ச்சியால் நோய்த் தொடர்புடைய ஊனுடல் பொறாமையை நினைந்து இரங்கிக்கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் இவ்வூனுடல் கழிதற்கு ஏதுவாக நின் திருவடிச்சார்பை வழங்கியும் , என் வல்வினைப் பயனாகிய ஊழ் தடைப்படுத்து கின்றதே யென இரங்குகின்றார் .
பதவுரை :- வெண் தலை முழயில் பதியுடை வாள் அர = வெண்மை நிறத்தாகிய தலையின் துளையில் தங்குதலையுடைய ஒளி பொருந்திய பாம்பு ,
பார்த்து இறை பைத்து அஞ்சிச் சுருங்க = அருகிலுள்ள திங்களைப் பார்த்துச் சிறிது படம் விரித்துப் பின் அஞ்சிச் சுருக்கிக்கொள்ள ,
மதி பார்த்து அஞ்சி நெடுநீரில் குளித்து ஒளிக்கு சடை = அதனைத் திங்கள் கண்டு அஞ்சிக் கங்கை நீரில் முழுகி மறையும் சடையினையுடைய ,
மன்னவனே = மன்னவனே
அடியேற்கு உன் கழல் கதி தந்தருளவும் = அடியேனாகிய எனக்கு நின் திருவடி புகலிடம் வழங்கியருளவும் ,
ஊன் கழியா = இவ்வூனுடலைப் போக்காமைக்கு ஏதுவாகிய ,
விதி அடியேனை விடுதி = ஊழ் வலியினை யுடைய அடியேனை விட்டு விடுவாயோ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- வெண்டலையின் வரலாற்றை இப்பதிகத்து முப்பதாம் திருப்பாட்டிற் காண்க . முழை – குகை ; வெண்டலை யிலுள்ள குகை போன்ற சிறிய துளையிடத்தைக் குறிக்கும் . பதிதல் – தங்குதல் . அர – அரா; பாம்பு . “குறியதனிறுதிச் சினைகெடவுகரம், அறிய வருதல் செய்யுளுளுரித்தே “ என்பது விதி . கலுழனுக்கு அஞ்சித் தன்பால் அடைக்கலம் புக்கதும், தாருகா வனத்து முனிவர் வேள்வியிற்றோன்றித் தனக்குத் தீங்கிழைக்க வந்ததும் என இருதிறத்துப் பாம்புகளையும் இறைவன் அணிந்தனன் என்பர் பெளராணிகர் . தன்னையடைக்கலம் புக்கார் கொடுஞ்செயலுடையராயினும் அவரையும் , தனக்குத் தீங்கி ழைக்க ஏவப்பட்டு வந்த கொடியவரையும் பாதுகாக்கும் அருட்குணமுடைய வன் இறைவன் என்பதை இந் நிகழ்ச்சி புலப்படுத்துமென்பது .
பாம்புக்குத் தலை முழையும் திங்கட்கு நீர் நிலையும் தங்குதற்கு இடனாக்கியது , காப்பு முறையின் சிறப்பைக் குறிப்பதாகும் . தக்க இடத்தைச் சார்ந்து கவலையற்றிருந்ததென்பார், “வாளர” வென்றார். ஒளியுடைமை உடல் நலத்தைப் புலப்படுப்பதாகும் . திங்கட் பிறையும் பாம்பும் அணிமையில் ஒன்றற்கொன்று எதிராக இருக்குப்படி வைத்து , இறைவன் சடைக்கண் அணிந்தனன் என்பதை “மென்முயற் கறையின், அரும்பர நேர்வைத் தணிந்தாய் “ என்னுந் திருப்பாட்டில் அடிகள் கூறி யிருத்தலான் அறிக . அங்ஙனம் அணிமையிலுள்ள நிலையில் பாம்பு தலை முழையினின்றும் வெளிப்பட்டுத் திங்களைப்பார்த்து இயல்பாகவுள்ள பகைக் குணத்தால் சிறிது படம் விரித்ததென்பதும் , பின்னர் சார்பு நிலை நோக்கித் தலைவற்கு அஞ்சிச் சுருக்கிக்கொண்ட தென்பதும் போதர , “வெண்டலை முழையிற் பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க” என்றார் . பார்த்தற்குச் செயப்படுபொருளாக மதி கொள்ளப்பட்டது .
அரவின் செயலாகிய பார்த்தலை மதிக்கும் , அஞ்சி யென்பதைச் சுருங்கற்கும் ஒளித்தற்கும் ஏதுவாக ஈரிடத்தும் இயைத்துக் கொள்ளல் வேண்டும் . இங்ஙனம் அரவு படம் விரித்தலைக்கண்டு , நேரிலுள்ள மதிப்பிறை அது தன்னை விழுங்கி விடுமோவென அஞ்சித் தனக்கு ஆதரவாக அருகிலுள்ள கங்கைப்பெருக்கில் முழுகி மறையும் என்பார் , “அஞ்சி மதி நெடு நீரிற் குளித்தொளிக்கும் “ என்றார் . மெலியவன் தன்னின் வலிய பகைக்கு அஞ்சுவன் என்பதும் , வலியவன் மெலியவனை நலிய முற்படுங்கால் அரசியர்க்கு அஞ்சுவனென்பதும் உலகியலிற் காணப்படு வன . அம்முறையில் மதி அரவிற்கு அஞ்சிற்றென்பதும் , அரவு இறைவர்க்கு அஞ்சியது என்பதும் பொருத்தமே . அரவு தங்குதற்குரிய வெண்டலைக்கும் , மதி குளித் தொளித்தற்குரிய நெடு நீர்க்கும் சடையை யிடனாக வுதவிப் பகைப்பொருள்கள் தம்மிற் பகைமை யொழித்து வாழும் வண்ணம் அருளாட்சி புரியும் கடவுட் பேரரசாவான் இறைவனே என்பார், “ சடை மன்னவனே” என்றார் . சடை மன்னனென்றது , முடிமன்னரின்மிக்க சிறப்புத் தோன்ற நின்றது . சிறந்த செங்கோலாட்சியிற் பசுவும் புலியும் ஒரு துறையில் நீருண்ணும் என்னும் உலகியற் செய்தியும் ஈண்டு நினைக்கத் தக்கது .”பாம்பு மதியும் பகை தீர்த்துடன் கொளீஇ, நீங்கல் கொடானே நெடுந்தகையானே “ என்பர் திருமூலர் .
இனி, பாம்பு மாயையையும் , மதி யமிர்தத்தையும் குறிக்குமென்பது நுண்பொருளாகும் .இதனால் இறைவன் உயிர்களுக்கு மாயையினின்று உடல் கரணம் இடம் நுகர்வென்னும் இவற்றைக் கொடுத்துப் பாச நீக்கஞ் செய்து , தூய்மைப்படுத்து முடிவில் அமிர்தமயமான அழிவிலின்பத்தில் தலைப்படுத்துவன் என்னும் குறிப்புப் புலனாமென்பது . இறைவனையும் மயங்காதோவெனின், மயங்காதென்ப . இதனை “விரவுமாயை யெம்மிடை மை யாற்றாயினும் விடந்தான் , அரவை யென் செயும் – குரவமாலையாயெ மக்கது கொடாதுகாண் மயக்கம்” என்று உமையம்மைக்கு இறைவன் அருளிச்செய்த ஞானோபதேசத்தானும் அறியலாம் . கதி – புகலிடம் ; வீடு . அதனைத் தருதற்கு வினை முதலாக இறைவன் திருவடி குறிப்பிடப்பட்டது ; அது ஞானமயமாதலின் ,” ஞானத்தால் வீடென்றே நான் மறைகள் புராணம் நல்லவாகமஞ் சொல்லவல்லவாம்” என்பது சிவஞானசித்தி .
இனி, தருதற்கு வினை முதலாக இறைவனைக் கொண்டு, கதியாக உன் கழல் தந்தருளவும் எனக் கோடலும் ஒன்று . “ திருவடியே செல் கதியது செப்பிற், றிருவடி யேதஞ்ச முட்டெளிவார்க்கே” என்னும் திருமந்திரத்தில் இரண்டற்கும் வேற்றுமை யின்மை கூறியிருத்தலினென்பது , கதி தந்தருளிய திருவடிக்குத் தொண்டு பூண்டொழுகுதலின், அடியேன் என்று தம்மைக் கூறிக்கொண்டது ஈண்டு இயைபுடைத் தென்க. . கதி ஈண்டுச் சீவன் முத்தி நிலையைக் குறிக்குமாதலின் , அவ்வுயரிய நிலையை இறைவன் திருவடி தமக்கு எளிதாக அளித்திருப்பவும் , அந் நிலையினின்றும் மறிவறியாச் செல்வம் பெற்று இன்புற வேண்டியதே கடமையாக , அதனை விட்டு அப் பேற்றிற்குத் தடையாகவுள்ள இவ்வூனார் புழுக்கூட்டை விடாமல் தாங்கி யிருக்கும் விதியுடையனாயினேனேயென்றிரங்குவார், “கதியடியேற்குன் கழறத் தருளவு மீங்கழியா விதியடியேன்” என்றார் .
ஊன் கழியா விதி – உடலைக் கழியாமைக்கு ஏதுவாகிய வூழ் . இஃது “இங்குளி வாங்குங் கலம் போல ஞானியன் , முன் செய்வினை மாயை மூண்டிடினும் “ என்னும் ஞானப் பனுவலின்படி மெலிதாக வந்து தாக்கும் பிராரத்த வினை வாசனையா மென்பது . ஊன் கழியா விதியுடையேனாகிய இந் நிலையிலும் நின் அடியனாவேனென்பதை மறந்திலேன் என்பார் , விதியுடையே னென்னாது “விதியடியே” னென்றார் . இது தம்மைக் கைவிடாமற் காத்தற்குரிய ஏது குறிப்பிற் புலப்படுத்தவாறாம் . விதியைக் கடக்கும் ஆற்றலில்லேனாகிய யான் ஊனுடலைக் கைவிட்டிலேனாயினும் விதித் தொடர்பு சிறிதுமில்லாத பேரருளாளனாகிய நீ யென்னைக் கைவிடலாகாதென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண், “ஊன் கழியா விதியடியேன்” என்றதனால் உடலோடு கூடிய உலக வாழ்க்கை நற்கதிக்குத் தடையாமென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
*****************************************
பாடல் : 43 .
மன்னவ னேயொன்று மாறறி யாச்சிறி யேன்மகிழ்ச்சி
மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க வேதமெய்ந் நூல்
சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி யாத்தொழும்பர்
முன்னவ னேபின்னு மானவ னேயிம் முழுதையுமே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் இறைவ , நின் திருவடிச் சார்பு பெற்றும் ஊழ் வலியால் இவ்வூனுடலைக் கழிக்க இயலாதவனாயினேன் என்று இரங்கிக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் நின்னோடு கலக்கும் நெறியறிந்தன்றோ இவ்வுடலைக் கழித்தல் வேண்டும் . அந்நெறியையே அறியாத சிறியவனாகவுள்ளேனே ! என் செய்வல் ! என்று வருந்துகின்றார் .
பதவுரை :- மிக்க வேதம் மெய்ந்நூல் சொன்னவனே = சொற்பொருண்மிக்க மறைகளையும் மெய்மையான சிவாகமங்களையும் சொல்லி யருளியவனே ,
சொல் கழிந்தவனே = சொற்களுக்கு எட்டாமல் அப்பாற்பட்டவனே ,
கழியாத்தொழும்பர் முன்னவனே = என்றும் நீங்காத தொண்டினையுடைய மெய்யன்பர்க்கு முன் நிற்பவனே ,
பின்னும் இம் முழுதும் ஆனவனே = அவர்க்கு ஆதரவாகப் பின்னிற்பவனும் இவ்வெல்லாமும் ஆனவனே ,
மன்னவனே = நிலை பேறுடையவனே ,
ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் = நின்னோடு கலக்கும் நெறியறியாத சிறியவனாகிய எனக்கு ,
மகிழ்ச்சி மின்னவனே = ஆனந்த விளக்கமாகத் திகழ்பவனே ,
விட்டிடுதி = கைவிட்டுவிடுவாயோ (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- சிவநெறிக்கு மறை பொதுநூலும் , சிவாகமம் சிறப்பு நூலும் ஆகும் . “ வேதமோடாகமம் மெய்யாம் இறைவனூல் , ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக “ என்பது திருமந்திரம் . வேதத்துள் உபசாரமாக இந்திரன் முதலிய தேவர்களுக்கும் தலைமை கூறப்படும் . சிவாகமங்க ளுள் பரமபதியாகிய சிவபிரான் ஒருவனுக்கே தலைமை கூறப்படும் . வேதம் பல தேவர்களையும் தலைவரெனக் கூறிச் சேறலின் , பொருட்டெளிவு துணிவார்க்குக் கலக்கஞ் செய்யும் இயல்பினதாய்ச் சொற்பொருட் பெருக்க முடையதாகும் . சிவாகமம் மெய்ப்பொருள் விளக்கித் தெளிவிப் பதில் சிறந்து விளங்குவதாகும் . இக்குறிப்புத் தோன்றவே , “மிக்க வேதம்” எனவும் ,” மெய்ந்நூல்” எனவும் முறையே கூறப்பட்டன .
சனகர் முதலிய முனிவர்கள் பல ஆண்டுகளாக வேதத்தைப் பயின்றும் , மெய்யுணர்வு கைவரப் பெறாமையால் , இறைவனை யணுகிக் குறையிரப்ப , இறைவன் சிவாகமங்களை அவர்க்கு உபதேசித்து மெய்ப்பொருளுண்மை தெளிவித்தனன் என்று கந்தபுராணங்கூறும் . இவ்வுண்மையை “பொருட் பெருங் கடலாம் வேதம் புடைதொறு மலையப்ப விந்நாள் “ , எனவும் “முந்துறை சனகனாதி முனிவரர் தொழுது கேட்ப , அந்தமி லாகமத்தின்னரும்பத மூன்றுங்கூறப் , புந்திய தொடுங்கு ஞானபோதகம் “ எனவும் போந்த செய்யுட் பகுதிகளால் அறிக . இங்ஙனம் பொதுவுஞ் சிறப்புமாகிய மறையாகமங்களை அருளிச்செய்தவன் சிவபிரானே என்பவாதலின், “மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே” என்றார் .
சொல் என்பது நூல் அளவையைக் குறிக்கும் . நூல்களின் வாயிலாக இறைவனியல்பை ஓராற்றான் அறியலாமேயன்றி ,ஒன்றியுணர்தலாகிய அநுபவம் எய்தலரிதென்ப . “நூலுணர்வுணரா நுண்ணியோன் “ என அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலும் அறிக . இனி , வாக்கு மனம் இரண்டனை யும் முறையே பாச ஞானம் பசு ஞானமென்று சிவஞான போதங் கூறுமாத லின் , பாச ஞான பசு ஞானங்கட்கு எட்டாதவன் என்பதும் பெறப்பட்ட வா றாம் . “ஊனக் கண்பாசம் உணராப்பதியே” என்னும் சூத்திரப் பகுதியானும் “அவன் வாக்கு மானதீத கோசரமாய் நிற்றலாம் “ என்னும் அதன் உரைப் பகுதியானும் உணர்க . “ வாக்கு நாதமுடிவான பாசஞானமும் , மனம் பசு ஞான முமாம் “ என்பர் சிவஞான முனிவர் . “மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே” என்னும் அடிகள் திருவாக்கும் இவ்வுண்மையைப் புலப்ப டுத்தும் .மறையாகமங்களை யருளிய இறைவன் திறாவுள்ளம், மக்கள் அவற்றை யோதியுணர்ந்து அநுபவ முறையில் ஒழுகி நலனடைய வேண்டு மென்பதே யாதலின் , அநுபவத்தில் தலைப்படாமல் ஓதிய அளவில் நின்று விடுவாராயின் , இறையருட்கு அணுக்கராதல் அரிதென்பது தோன்ற “சொன்னவனே சொற்கழிந்தவனே” யென்றார் . கழியாமையைத் தொழுப்பிற் கேற்றுக என்றும் இடையறாத சிவத்தொண்டென்பது . “ஈறலாவொன்று பல, வாறே தொழும்பாகுமங்கு “ என்பதனாலும் , “சேதனப் பிரபஞ்சம் வீடுபேற்றின் கண்ணும் பலவாற்றானும் பரம்பொருளுக்கு அடிமையாமென்க .” என்னும் அதனுரையானும் உயிர்க்கு கட்டு வீடு என்னும் எக்காலத்தும் தொழும்பு நீங்காமையுணர்க .
மெய்யன்பர் கடமை இறைபணி செய்தலும் , இறையருட் கடமை அவரைப் பாதுகாத்து இன்புறுத்தலுமாமென்ப . “என் கடன் பணி செய்து கிடப்பதே “ தன் கடன் அடியேனையுந் தாங்குதல் “ என்பது தமிழ் மறை . இவ்வுண்மை தோன்றவே , “கழியாத் தொழும்பர் “ என மெய்யன்பரையும் அவரைப் பாதுகாக்கும் அருட்கடமை யுண்மை குறித்து அவர்க்கு முன்னும் பின்னும் ஆனவனே யென இறைவனையும் குறிப்பிடுவாராயினர் . செந் நெறிச் செலவுடைய மெய்யன்பர்க்குச் சரியை முதலிய நெறிகள் சோபான முறையாக அமந்தன வென்று சிவநெறிப்பனுவல் கூறும் . சோபானம் என்பது ஒன்றன் மேலொன்றாக அமைக்கப்படும் படிக்கட்டுக்களை யுணர்த்தும் .
ஆகவே அடுக்காகவுள்ள படிக்கட்டிலேறி மேனிலை யடையச் செல்வார்க்குக் கவர் வழி நேர்ந்துழிச் , செந்நெறிகாட்டும் வழிகாட்டியாக முன்னரொருவரும் , படிக்கட்டில் கால் நழுவி வீழாவாறு பின்னரொருவரும் தவறி வீழாதபடி பக்கங்களிற் சிலரும் நின்று ஆதரவளித்தல் போல , வீட்டு நிலையை அடையச் சரியை முதலிய நெறிச் செல்வார்க்கு ஆதரவாக முன்னும் பின்னும் பக்கங்களும் ஆகிய இவ்வெல்லாவிடத்தும் நின்று பாதுகாப்பவன் இறைவன் ஒருவனேயாதலின் , “முன்னவனே பின்னுமானவனேயிம் முழுதையுமே “ என்றனர் . முழுதையும் என்புழி ஐகாரம் சாரியையாகும் . இம்முலுதையும் என்புழிச் சுட்டு முன் பின் என்பவற்றோடு பக்கங்களையும் குறிப்பதாகும் .
மன்னவன் என்பது ஈண்டு நிலைபேறுடையவன் என்னும் பொருட்டு, மன்னுதல் – நிலைபெறுதல் . யாண்டும் நிறை பொருளாக நிலையுறுதல் பெற்று விளங்கும் இறை நிறைவுள் இருந்தும் , கலந்து இன்பம் நுகர்தற்கு ரிய நெறியறியாத சிறுமையுடையேன் என்பார் . “மன்னவனே யொன்று மாறறியாச் சிறியேன் “ என்றார் . ஒன்றுதல் – கலத்தல் . சீவன் முத்தி நிலையுலுள்ள அடிகள் பரமுத்தியடைய விரைகின்றனராதலின் , அதற்குரிய நெறியறியாமை பற்றி இரங்குவாராயினர் .மகிழ்ச்சி மின்னவன் என்பது ஆனந்த விளக்கமாக வுள்ளவன் என்னும் பொருட்டு . சாதன முற்றுப் பெற்றவழி ஓருயிர்க்குப் பாச நீக்கமும் சிவப்பேறும் உண்டாமென்ப . இருள் நீக்கத்தாற் கண்ணுக்குப்பொருள் விளங்க முண்டாதலும் அதன்பின் அப் பொருளை யழுந்தியறிதலும் நிகழுமாறு போலப், பாச நீக்கத்தால் அருள் விளக்கமும் அதன்பின் சிவப்பேறாகிய ஆனந்த விளக்கமும் உண்டாவனவாம் .
அருள் விளக்கத்தில் உயிர்க்கு அறிவு செயல் இரண்டுந் தொழிற் படுதலும் , ஆனந்த விளக்கத்தில் அறிவிச்சை செயல் மூன்றுந் தொழிற் படுதலும் வேறுபாடென்ப . ஆனந்த விளக்கமே பேரின்ப நுகர்ச்சிக்கு உரியதாகும் . அப் பேறு இறைவனோடு ஒன்றுபட்ட வழியுண்டாவது . ஈண்டு அடிகள் , ஒன்று மாறறியாச் சிறுமையுடைய தமக்கு இந் நிலையிலும் பெறுதற்கரிய ஆனந்த விளக்கமாக நின்று இன்புறுத்தும் இறைவனது பேரருட் குணத்திலீடுபட்டு இவ்வாறு விளிகொள்ளலானார் என்பது .
இங்ஙனம் ஒன்றுபட்டு எய்தற்குரிய ஆனந்த விளக்கம் ஒன்றுபடாத நிலையிலும் எளிவரப்பெறும் உண்மையை ,”உணர்வினேர் பெரவருஞ் சிவபோகத்தை யொழிவின்றி யுருவின்கண் , அணையுமைம் பொறியளவினு மெளிவர வருளினை யெனப் போற்றி “ என்று திருஞான சம்பந்த மூர்த்திகள் அநுபவ நிலையில் வைத்துச் சேக்கிழார் கூறியவற்றா னும் அறிக .ஒன்றும் நெறியறியாத சிறியவன் என்பதை யுணர்ந்தும் பெறு தற்கரிய ஆனந்த விளக்கமாகக் காட்சி நல்கிய இந் நிலையில் என்னைக் கைவிடல் தகுமாவென்பார் , “விட்டிடுதி கண்டாய்” என்றார் . இனி, ஒன்றும் அறியாத எனப் பொருள் கோடலுமாம் .
இதன்கண், ஒன்றுமாற றியாச் சிறுமைக்கு ஏது உலகப்பற்றென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
**************************************
பாடல் : 44 .
முழுதயில் வேற்கண் ணியரென்னு மூரித் தழன்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனை விடேலுடை யாயுன்னைப் பாடுவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் சிவப்பேற்றிற் கேதுவாக இரைவனோடு கலத்தற்குரிய நெறியறியாமைக்கு இரங்கிக்கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் பேரின்ப வடிவினனாகிய இறைவனோடு கலக்கும் நெறியறியாமையோடு , துன்பத்தை விளைக்கும் காமங் காரணமாக மகளிரோடு கலக்கும் சிறுமையும் உடையனாயினேனே யென இரங்கி , இந் நிலையிற் கைவிடலாகாதென விண்ணப்பஞ் செது கொள்ளுகின்றார் .
பதவுரை :- எம்பிரான் = எங்கள் ஆண்டவனே ,
அயில் வேல் கண்ணியர் என்னும் = கூர்மையுடைய வேற்படை போன்ற கண்களையுடைய மகளிராகிய ,
மூரி தழல் முழுது முழுகும் விழுது அனையேனை = பெரிய நெருப்பில் முற்றும் அமிழ்ந்து போம் வெண்ணெய் போன்ற சிறியேனை ,
விடுதி = விட்டுவிடுவாயோ ? ,
உடையாய் = என்னை உடையாய் ,
உன்னய்ப் பாடுவனே = நின்னைக் குறித்துப் பாடுவேனோ? (அது செய்திலேன்) ,
பழுது செய்வேனை விடேல் = குற்றமே புரிகின்ற என்னைக் கைவிடலாகாது ,
சோத்து = வணக்கம் ,
நின் வெறி மலர் தாள் = தேன் நிறைந்த தாமரை மலர் போன்ற நின்திருவடிகளை ,
தொழுது வானம் செல் தொழும்பரில் கூட்டிடு = வணங்கிச் சிற்பரவெளி நோக்கிச் செல்லுகின்ற தொண்டரோடு சேர்ப்பிப்பாயாக என்பது .
விளக்கவுரை :- அறிவுடையுலகம் அடிமையாக ஆண்டானெனவும் , அறிவுலகம் உடைமையாக உடையானெனவும் இறைவன் கூறப்படுதலில் , “எம்பிரான்” , “ உடையாய் “ என விளி கொள்ளலானார். அயில் – கூர்மை . உவமமாகிய வேற்படைக்குக் கூர்மை கூறியது , கடைக்கண் ஆற்றல் புலப்படற்காம் . மகளிர் கடைக்கண்ணால் ஆடவர் நெஞ்சைக் கொள்ளை கொள்வர் என்பது குறிப்பு . “கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் “ என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறி யிருத்தலும் அறிக . நாற்பத்தொன் றாம் திருப்பாட்டில் மகளிர் முதலையாக உருவகஞ் செய்யப்பட்டனர் . முதலை கிடக்கும் நீர் நிலையில் மூழ்கினவன் முதலையாற் கடிக்கப்படா மல் ஒரோவழித் தப்புதலுங்கூடும் . நெருப்பில் அமிழ்ந்த வெண்ணெய் எவ்வாற்றானும் உருகியழிந்தே விடும் .
இக்கருத்துப் புலப்படவே ஈண்டு மகளிர் நெருப்பாக உருவகிக்கப் பட்டனர் . முழுகும் பொருள் சிறிதாகவும் அதற்கு இடனாய பொருள் பெரிதாகவும் இருத்தல் இயல்பாதலின் ,”மூரித்தழல்” என்றார் . மூரி – பெருமை ; வலிமையுமாம், விழுது – வெண்ணெய் . முழுது எஞ்சாமைப் பொருட்டு . முழுது முழுகும் என்றது , தீயின் பெருக்கத்துள் அடங்கிச் சிறிதும் எஞ்சாமல் முற்றும் அமிழ்ந்து அழியும் என்னும் குறிப்புத் தோன்ற நின்றது . இங்ஙனம் காம முதலியவற்றால் கரைந்தழியும் நிலைமையில் என்னைக் கைவிட்டு விடுவாயோ என்பார் , “விடுதி கண்டாய் “ என்றனர் .
பாடுவனே என்புழி ஏகாரம் எதிர்மறை குறித்து நின்ற வினாப் பொருட்டு . மன மொழி மெய் மூன்றனுட் சிறந்தது மனம் . அது மகளிர் பாலதாக மொழியளவிலேனும் நின்னைக் குறித்துப் பணி செய்திலேனே யென்பார் . “பாடுவனே” எனவும் , நினைத்தலும் பாடுதலும் செய்யாமல் மனத்தாலும் மொழியாலும் யான் செய்வது தீமையே யென்பார், “பழுது செய்வேனை “ யெனவும் கூறினர் . பழுது – குற்றம் . இது மூரித்தழன் முழுகு தலானும் , இறைவனைப் பாடுதலின்மையானும் முறையே மனத்தையும் மொழியையும் பற்றியதாகும் . முக்கரணங்களுள் மனமும் மொழியும் பிழைபட்டனவாக உடலளவில் யான் செய்யும் வணக்கத்தை யேனும் ஏற்றுச் சிறியேனைக் கைவிடலாகாதென்பார், “விடேல் “எனவும் , “சேர்த்து” எனவும் கூறினர் . சோத்து – சோத்தம் ; இழிந்தார் செய்யும் வணக்கம் . இழிவு மனமொழி மெய்கள் வேறுபடப் பெற்றது . வணக்கம் என்று நாவளவிற் கூறி அது செய்யாமையை உலகியலிலும் காண்கின்றோம் . அக்குறிப்பும் தோன்ற நின்றதென்க .
உலகியலில் ஈடுபட்டார்க்குக் புறத்தே நிகழும் ஐம்புல நுகர்ச்சிக்கு உலகம் பற்றுக்கோடாதல் போல , உலகியற் பற்றோழித்த மெய்யுணர்வுடை யார்க்கு அகத்தே சிவாகாரமாக நிகழும் அநுபவத்திற்கு இறைவன் திருவடி பற்றுக்கோடாம் என்னும் உண்மை தோன்ற ,“நின்நெறிமார்த்தாள்” என இறைவன் திருவடி விசேடிக்கப்பட்டது . தேன் நிறைந்த மலர் என்றதனால் ஐம்புலநுகர்ச்சி நுண்ணிதிற் பெறப்படுவதாகும் . தேனாற் சுவையும் , வண்ணத்தால் ஒளியும் ,மென்மைத்தன்மையால் ஊறும் , தேனுகரும் வண்டின் ஒலியால் ஓசையும் , நறுமணத்தால் நாற்றமும் உடைமையால் , மலர் ஐம்புல நுகர்ச்சிக்கும் நிலைக்களனாதல் அறியத்தக்கது . ஆகவே ஈண்டுப் புறத்தே நிகழும் ஐம்புலநுகர்ச்சிக்கும் மலர் பற்றுக் கோடாயது போல , இறைவனுடைய மலர் போன்ற திருவடி அகத்தே நிகழும் சிவாநுபவ நுகர்ச்சிக்குப் பற்றுக்கோடாகுமென்பது . ஐம்புல நுகர்வை உண்முகமாக வைத்து உணர்தல் மெய்ஞ் ஞானிகள் இயல்பென்பதை “அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட்டு, அஞ்சு மடக்கா அறிவறிந்தேனே” என்னும் திருமந்திரத்தானு முணரலாம் .அகத்தே இறைவன் திருவடியைப் பற்றிய இன்பநுகர்ச்சியிலீடுபட்ட அப்பரடிகள் இவ்வுண்மைப் புலப்பட ,
“மாசில் வீணையு மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
யீச நெந்தை யிணையடி நீழலே “
என்றருளிச் செய்திருத்தலும் இங்கே நினைவு கூறத்தக்கது , வீணையால் ஓசையும் , மதியத்தால் ஒளியும் தென்றலால் ஊறும் ,இளவேனிலால் நாற்றமும் , பொய்கையால் சுவையும் பெறப்பட்டவாறறிக . வீணை முதலிய ஐந்தனையும் போன்றது ஈசனெந்தை இணையடி நீழல் என்றது அப்பர் அநுபவமாகும் .
பேரின்ப விளைவாகிய இறைவனடியைப் பற்றித் தொண்டு பூண்டு ஒழுகும் மெய்யன்பர் அத் தொண்டினால் நுண்ணிய ஞானப் பரவெளியை நோக்கிச் செல்லும் செந்நெறிச் செலவுடையராவராதலின் , தொழுது என்னும் வினையெச்சம் காரணப் பொருட்டாகும் . இச் செந்நெறிச் செலவு டைய மெய்த்தொண்டரோடு தம்மைச் சேர்ப்பிக்க வேண்டுமென்று அடிகள் வேண்டியது , நெறி பிறழந்து ஒழுகுதற்கு இடனின்றி அச்செலவு தம்மை நலப்படுத்து மென்பது கருதி யென்க . மேயச் செல்லும் நல்ல ஆனினத்தோடு கண் கெட்ட ஒரு பசுவையும் சேர்த்துவிட்டால் ,அவ்வினத்தோடு சேர்ந்து அதுவும் புன் மேய்ந்து நீருண்டு நலமுடன் திரும்புமென்பது உலகியலிற் கண்டது . இதனைக் “கோவுடனே கூடிய வோர் குருட்டாவும் ஊர் புகுதும் “ என்பதனாலும் அறியலாம் .
பெரியார் குழுவில் கலந்த ஒருவன், அவரால் வெறுக்கப்படுதற் கஞ்சியாவது நெறிபிறழத் துணியான் என்பது அறிந்தது . இவ்வுண்மை குறித்தே “தொழுது செல்வானத் தொழும்பரிற் கூட்டிடு “ என்றார் . “அன்பர் பணி செய்யவெனை யாளாக்கி விட்டு விட்டால் , இன்பநிலைதானே வந்தெய்தும் பராபரமே “ என்னும் தாயுமான அடிகள் வேண்டுகோளும் ஈண்டு நினைக்கத்தக்கது . .
இதன்கண், மகளிர் இன்பத்திலீடுபடுவதால் சிவலோக யாத்திரைக் குத் தடையென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாத லறிக .
*********************************************
பாடல் : 45 .
பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித் தாய்க்குப்பச்சூன்
வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந் தாங்கலறித்
தேடிற்றி லேன்சிவ னெவ்விடத் தானெவர் கண்டனரென்
றோடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேனின் றுழைத்தனனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் காமங்காரணமாக மகளிர்பால் ஈடுபட்டுருகும் சிறுமையுடைய னாயினேனே யென இரங்கிக்கூறிய அடிகள், இத் திருப்பாட்டில் அச் சிறுமையின் தடையால் ஆண்டவனே ! நின்னைக் குறித்து மன மொழி மெய்களாற் செய்யவேண்டிய அன்புப்பணிகளைச் செய்யாமல் வீணாக உழைக்கலானேன் ; என் செய்வல் என இரங்குகின்றார்.
பதவுரை :- மணி = மாணிக்க மணி போன்றவனே ,
பாடிற்றிலேன் பணியேன் = நின்னைப் பாடினேலல்லேன் , வணங்கினேனல்லேன் ,
நீ ஒழிந்தாய்க்கு = காட்சியளிது மறைந்த நின் பொருட்டு
பசுமை ஊன் வீடிற்றிலேனை விடுதி = பச்சிறைச்சிப் பிண்டமாகிய இவ்வுடலை யொழித்தி லேனாகிய என்னைக் கைவிட்டு விடுவாயோ? ,
ஆங்கு வியந்து சிவன் எவ்விடத்தான் என்று அலறித் தேடிற்றிலேன் =
அப்பொழுதே வியப்புற்றுச் சிவபெருமான் எவ்விடத்துள்ளான் என்று கதறித் தேடினேனல்லேன் ,
எவர் கண்டனர் என்று ஒடிற்றிலேன் = அப்பெருமானை யாவர் பார்த்தனர் என்று சொல்லிக் கொண்டு ஓடினேன் அல்லேன் ,
கிடந்து உள்ளுருகேன் = ஓய்ந்து கிடந்து உள்ளம் உருகினேன் அல்லேன்
நின்று உழைத்தனனே = வீணாக வுயிர் நிலைபெற்று உலக வாழ்க்கை குறித்து உழைக்கலானேன் என் செய்வல் ? என்பது
விளக்கவுரை :- இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளிக் காட்சியளித்த பொழுது , அவனது ஒளி மயமான திருமேனியிலீடுபட்ட அநுபவம் அடிகளுக்குப் புலனாதலின் , “மணி” யென்றார் . இனி, கண்மணியனையான் எனக் கோடலுமாம் . “ கண்ணே கண்ணிற் கருமணியே “ என்பது அப்பர் அநுபவ மொழி . மன மொழி மெய் ஆகிய மூன்றனாலும் இறைவனைக் குறித்து முறையே மெய்யன்போடு நினைத்தாலும் பாராட்டுதலும் பணிதலும் நிகழ்தற்பாலன . திருவுருக் காட்சிப்படாத பொழுது இம் மூன்ற னுள்ளஞ் சிறந்தது நினைத்தலேயாகும் . அங்ஙனம் மெய்யன்போடு நினைத்தலாகிய உள்ளப் பணி செய்யாத நிலையிலும் , அருளுருவினனா கிய இறைவன் ஞானாசிரியனாகத் தமக்குக் காட்சியளித்தனனாக , அக்காட்சியி லீடுபட்டாவது பாடுதல் பணிதல் ஆகிய மொழிப்பணி உடற்பணிகளை யேனுஞ் செய்திலேன் என்பார் , “பாடிற்றிலேன் பணியேன்” என்றார் . இஃது ஒளிமயமான திருவுருக் காட்சி தோன்றிய பின்னும் மறைதற்கு முன்னுமுள்ள நிலை பற்றியதென்க .
அடிகள் ஆண்டவன் திருவுருவத்தைக் கண்டவுடன் மனமுருகிப் பாடிப் பணிந்தன ரென்பது வரலாற்றுண்மையாயினும் , தம் அன்பு அத்துணைச் சிறந்ததன்றென்பது அவர் கருத்தாகும் . “நான் தனக்கன் பின்மை நானுந்தானு மறிவொம் “ என்னும் அடிகள் திருவாக்கு இதனை வலியுறுத்துவதாகும் . இனி, கிடத்தற்கரிய அக்காட்சி மறைந்தவுடன் அப் பிரிவாற்றாது தாம் மேற்கொள்ள வேண்டிய செயல்களைப்பற்றிக் கூறி அவை நிகழாமைக்கு இரங்குகின்றார் .
ஆண்டவனே , பெறுதற்கு அரிய மணி போலத் தோன்றி மறைந்த நிலையில் நின் பிரிவாற்றாது என் ஊனுடலை யொழித்துவிட வேண்டியது இன்றியமையாததாகவும் , அது செய்திலனே யென்பார், “ மணி நீ யொழித் தாய்க்குப் பச்சூன் வீடிற்றிலேனை “ யென்றார் . “நீ யொளித்தாய்க்கு” என்னுந் தொடர் உருபு பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது . இது பற்றிய விளக்கம் முன்னர்க் கூறினாம் காண்க . இங்கே ஆண்டவன் திருமேனி ஒளிமயமான தென்னும் உயர்வு தோன்ற , “மணி” யெனவும் , தம் உடம்பு பச்சிறைச்சியாலாய தென்னும் இழிவு தோன்ற , “பச்சூன்” எனவும் கூறியிருத்தல் உணரத்தக்கது .
ஒளிமயமான திருமேனியைப் பறிகொடுத்து ஊன் மயமான உடலைப் பேணலானேனே யென்பது இரக்கக்குறிப்பு . உடலின் இழிவு தோன்றப் “பச்சூன்” எனப்பட்டது . இழிவு நரி நாய் கழுகுகளால் விரும்பத் தக்க நிலை . இதனை “நிழலோடு கதிக்கு நிணம் புரி முதுநரி, பச்சூன் கொள்ளை மாந்தி” என்பதனாலும் அறிக . இறைவ , நின் திருவுருக் கரந்த நிலையில் என் பருவுடலை யொழித்திருக்க வேண்டும் . அங்ஙனம் செய்யாமல் இவ்வுடற் சுமையைத் தாங்கியிருத்தலே தகாத செயலாகும் இவ்வுடற் பற்றினால் இதனை யொழிக்க ஒருப்பட்டிலேனாயினும் , அரிய பொருளாகிய நின் பிரிவில் செய்யக்கடவ செயல்களையும் செய்திலேனே யென்று இரங்குகின்றார் .
ஆங்கு – காலத்தை யுணர்த்தும் ; திருவுருக் கரந்த அப்பொழுதே என்பது . வியப்பு – புதுமை பற்றியது . என்னை புதுமையெனின், ஓர் உரு மறைவதாயின் , அது காண்பார் கண் காணாவாறு பிறிதிடஞ் சென்று கரத்தலியல்பு . ஈண்டு இறையுரு அடிகளுக்குக் காட்சியளித்த இடத்தே அவர் கண் முன் கரந்ததே புதுமையாயிற் றென்பது . எதிர்பாராத நிலையில் நின் திருவுருக் கரந்ததாக , அது குறித்து அப்பொழுதே வியப்புற்றுப் பிரிவு பொறாது , கதறி நின்னைத் தேடவண்டியது கடமை யாகவும் , அது செய்திலேன் என்பார் , “ வியந்தாங் கலறித் தேடிற்றிலேன் “ என்றார் . சிவன் எவ்விடத்தான் “ என்பது தேடப்படும் பொருளைப்பற்றிப் பிறர் அறியக் கூறியபடியாம் .
எங்கும் நிறை பொருளாகிய இறைவனுக்கு “எவ்விடத்தான் “ என ஓரிடம் குறித்து வினாயது , திருவுருக் கரந்த நிலையில் பிரிவாற்றாமை யாலுண்டாய துன்பம் பற்றியென்க . பின்னுள்ள என்று என்பதை எவ்விடத்தான் என்பதனோடும் இயைத்துக் கொள்க . ஓர் இளமகவைப் பிரிந்த தாய் அம்மகவைத் தேடுங்கால் “என் குழந்தையை யாருங் கண்டதுண்டா? என்று சொல்லிக்கொண்டு , ஓரிடத்து நில்லாமலும் மெல்ல நடவாமலும் அங்கும் இங்கும் விறைந்தோடி அலைதலை உலகியலிற் காணலாம் . அவ்வாறே அடிகள் “ எம்பெருமானை யாருங் கண்டதுண்டா?” என்று சொல்லிக்கொண்டே பல இடங்களுக்கும் விரைந்து ஓடித் திரிதல் தம் கடமையாகவும் அதுவும் செய்திலேன் என்பார் , “ எவர் கண்டனரென்று ஓடிற்றிலேன் “ என்றார் . அன்பிற் கருங்கலனாகிய பொருளைப் பிரிந்தவர் அலறித் தேடி ஓடியும் காணாவிடத்து உடல் தளர்ந்து ஓரிடத்துக் கிடக்க நேரின் , அக்கிடக்கையில் பிரிவாற்றாமை மிகப் பெற்று அப்பொருளையே நினைந்து நினைந்து உள்ள முருகி வருந்துதல் இயல்பாதலின் , இங்கே கூறப்பட்ட அன்புரிமைச் செயல்களில் ஒன்றையும் மேற்கொள்ளாமல் , உயிர் வாழ்தற் பொருட்டு இவ்வுலக வாழ்வை நச்சி உடலைத் தாங்கி யுழைக்கலானேன் என்பார் , “நின்றுழைத்தனனே” எனவுங் கூறினர் .
நிற்றல் – உடலில் உயிர் நிலையுறப் பெறுதல் . உழைத்தல் – வருந்தி முயறல் . இவ்வருமைத் திருப்பாட்டில் இறைவன் திருவுருக் காட்சியளித்து மறைந்த நிலையில் அடிகள் மேற்கொண்ட அளப்பரும் அன்புரிமைச் செயல்களே குறிக்கப்பட்டன . அச் செயல்கள் தம்பால் நிகழவில்லையென அடிகள் கூறியது , இறைவன் தமக்குச் செய்த பேரருட் டிறத்திற்குத் தம் தொண்டு ஈடாகாதென்னும் கருத்தாலென்க . அன்புருவமாகிய அடிகள் “என் அன்பும் பொய் “ என்று ஓரிடத்துக் கூறியிருத்தலும் ஈண்டு நினைக் கத்தக்கது . இத் திருப்பாட்டுக் கன்னெஞ்சத்தையுங் கரைக்க வல்ல தென்பது ஓதியுணர்வார்க்குப் புலனாம் .
இதன்கண், இறைவனைப் பற்றிய அன்புச் செயல்களை மேற்கொள்ளாமல் , உலக வாழ்க்கையிலீடுபடுதல் வருந்தத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
***********************************
பாடல் : 46 .
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன் பழிப்பினையே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனுக்குச் செய்யவேண்டிய அன்புப் பணிகளைச் செய்யாமல் வீணாக உயிர் நிலை பெற்று உலக வாழ்க்கைக்கு உழைக்கலானேன் என்று கூறி இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அவ்வழைப்பு இன்னதென அதன் இழிவை யெடுத்துக் கூறி வருந்துகின்றார் .
பதவுரை:- உழை தரு நோக்கியர் கொங்கை = மான் பார்வை பொன்ற பார்வையினராகிய மகளிருடைய கொங்கையை ,
பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழைதருவேனை = பலாப்பழத்தின் கண் மொய்க்கும் ஈயினை யொத்து விரும்புகின்ற சிறியேனை ,
விடிதி = விட்டு விடுவாயோ?
விடின் = கைவிடுவாயின் ,
வேலை நஞ்சு உண் மழைதரு கண்டன் என்றும் = கடலிற் றோன்றிய நஞ்சையுண்ட நீலமேகம் போன்ற கழுத்தையுடையவன் என்றும் ,
குணம் இலியென்றும் = குணமில்லாதவன் என்றும் ,
மானிடன் என்றும் = மக்கட்டன்மையுடையவன் என்றும் ,
தேய் மதியன் என்றும் = குறைந்த அறிவினையுடையவன் என்றும் ,
பழை தரு மாபரன் என்றும் = பழைய பெரிய பரதேசி யென்றும் ,
என்றும் பழிப்பினை அறைவன் = எப்பொழுதும் நின் பழியைக் கூறுவேன் என்பது .
விளக்கவுரை :- உழை – மான் . மான் பார்வைக்கு ஆயிற்று .தரு – உவமைச் சொல் . மழைதரு என்புழியும் ஈதொக்கும் .மான் பார்வை இயற்கையில் மருட்சியுடையதாயினும் , ஈண்டு உவமேயப் பொருளாகிய மகளிர் கண் மருட்சி , ஆடவரை மயக்குறுத்துங்குறிப்பின் மேலதாகலின், செயற்கையின்பாற் படுவதாகும் . ஆடவரைத் தம் வயப்படுத்தும் மகளிர் உறுப்புக்களுள் கண்ணே சிறந்தது . காமநோயை விளைப்பதும் அந் நோய்க்கு மருந்தாவதும் கண் நோக்கே என்னும் பொருள் தோன்ற , “இருநோக் கிவளுண் கணுள்ள தொரு நோக்கு , நோய் நோக்கொன்றந் நோய் மருந்து” என்பர் திருவள்ளுவர் .
“காதன்மை கண்ணுளே மறைத்துக் கண்ணெனுந் , தூதினாற் றுணிபொருளுணர்த்தி” யென்னும் சிந்தாமணி ஆசிரியர் கருத்தும் இங்கே நினைக்கத்தக்கது . . முதலிற் கண்ணினால் கவரப்பட்ட ஆடவர் பின் கொங்கையிலீடு படுவரென்னுங் குறிப்புத் தோன்ற “உழைதரு நோக்கியர் கொங்கை” யென்றனர் . கொங்கையைப் பற்றி நிகழும் பேரவாவுடைய தமக்குப் பலாப்பழத்தில் விரும்பி மொய்க்கும் ஈக்களை உவமையாகக் கூறினர் . ஒப்பாய் என்பது ஒத்து என்றபடி . ஈயின் என்புழி இன், உருபு நோக்கி வந்த சாரியை. இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது .
முப்பழங்களுள் மணமிக்கது பலாப்பழம் . ஈக்கள் மணத்தால் கவரப்பட்டுச் சார்ந்ததும் , பழச்சுவையிலீடுபடும் இயல்பின . ஓசை யொழிந்த நான்குவகைப் புலனுகர்ச்சியுடைய ஈக்கள் , பலா பழத்தைச் சார்தல் , மணமும் சுவையுமாகிய இரண்டு புலன்களுக்கும் இடனாதல் பற்றி . அங்ஙனமே ஆடவர் மனம் மகளிர் நகிலைச் சார்தல் , உருவமும் ஊறுமாகிய இரண்டு புலன்களும் இடனாதல் பற்றி யென்பது . முதலிற் காட்சியால் நகிலின் உருவத்தைப்பற்றிப் பின் ஊற்றின்பத்திலீடுபடுதலி யல்பு . உவமையிலும் பொருளிலும் ,நுகரும் புலன்கள் வெவ்வேறாயினும் , சேய்மையிலும் அணிமை யிலும் நிகழ்வன ஈண்டு என்பது ஒப்புமைபற்றிக் கருதத்தக்கது . .உவமையாகிய ஈக்களுக்குப் பலாப்பழத்தின் மணம் சேய்மையிலும் , சுவை அணிமையிலும் நுகரப்படு வனவாம் . உவமேயாகிய ஆடவர்க்கு மகளிரின் கொங்கையுருவம் சேய்மையினும் ,ஊற்றின்பம் அணிமையினும் நுகரப்படுவனவா மென்பது . புலன்களிரண்டன் மேலும் நிகழும் வேட்கை ஒத்ததென்பது காண்க . உலக வாழ்க்கையின் உழைப்பு , இங்ஙனம் அழியும் இயல்பினதாகிய புலநுகர்ச் சியளவில் முடிவெய்வததாகவும் , அதனையே விரும்பும் சிறியேனை அது பற்றிக் கைவிட்டு விடுவாயோ? என்பார் , “ விழைதருவேனை விடுதி கண்டாய் “ என்றார் .
சிறியேனது பிழையைப் பொறுத்து நலம் புரிதல் பேரருளாளனாகிய நினக்குக் கடமையாகவும் ; அங்ஙனம் செய்யாமல் என்னைக் கைவிடுவா யாயின் , என் சிறுமைக்கு ஏற்றபடி நின்னைப்பற்றிய பழி மொழிகளை யெடுத்துக் கூறுவேன் என்று தொடங்கு வாராய், “விடின்” என்றார் . இவ்வாறு விடுதி கண்டாய் என்பதன் பின், “விடின்” என்று தொடங்குதல் இப்பதிகத்துள் இருபத்துமூன்று , நாற்பத்தாறு , நாற்பத்தெட்டு , நாற்பத் தொன்பது ஆகிய நான்கு திருப்பாட்டுக்களின் மாத்திரம் உள்ளது . இவற்றுள் இருபத்துமூன்றாம் திருப்பாட்டில் “விடிலோ கெடுவேன் “ என நீ கைவிடின் , அதனால் கெட்டொழிவேன் எனத் தமக்கு நேரும் கேட்டினை எடுத்துக் கூறி இரங்குவாராயினர் . ஏனைய மூன்று திருப்பாட்டுக்களிலும் என்னைக் கைவிடின் என் சிறுமைக் கேற்ப நின்னைப் பழித்துரைப்பேன் என்று கூறுகின்றார் .
ஈண்டு பழித்துரைத்தலாவது ,பழிப்பது போலப் புகழ்தற் பொருடொன்றக் கூறுதல் ஆதாலின் ,” அறைவன் பழிப்பினையே “ என்றது சொல்லளவிலன்றி யின்று . அடிகள் நினைவில் ஆண்டவன் பால் இயல்பின் அமைந்த பெருமையே முன்னிற்பதாகும் . உண்மையில் இறைவன் பால் பழித்தற்கு ஏதுவாக யாதுமின்று ; உள்ளதை மாறுபடக் கருத்து இயல்பு அடிகளுக்கும் இன்று . தந்தையன்பிற்குரிய குழந்தை , தன் தகுதிக்கு மேற்பட்ட பொருளை அவன்பாற் பெற முயலுங்கால் , தகுதி நோக்கிக் காலந்தாழ்த்த விடத்து , அக்குழந்தை தன் தந்தைபாற் கண்ட அரிய குணஞ் செயல்களையே பழிப்புரையாக வழங்கி அவனை மகிழ்விப்பது போல , அடிகள் ஆண்டவனைப் பற்றித் தம் அநுபவத்திற் கண்ட அரிய குணஞ் செயல்களையே பழிப்புரை வடிவிலெடுத்துக் கூறி அப்பெருமானை மகிழ் வுறுத்துவாராயினர் . இவ்வுண்மையே பின்வரும் நாற்பத்தெட்டு நாற்பத் தொன்பதாம் திருப்பாட்டுக்களுக்கும் கருத்தாகக் கொள்க .
இனிப் பழிபன போற் கூறப்பட்ட சொற்களில் உள்ள புகழ் பொருள் வருமாறு : – திருப்பாற் கடலிற்றோன்றிய நஞ்சை யுண்ட செய்தி , சிவபெருமானுடைய பேரருளுடைமையையும் முடிவிலாற்றலுடைமையை யும் புலப்படுப்பதாகும் . பிறிதொரு நஞ்சாயின் உண்பார் ஒரோவழி யுய்தலுங் கூடும் . தன்னை யுண்டாரைத் தான் உண்டேநீரும் இயல்புடை யது ஆலாலமென்னும் கொடுநஞ்சு . அதனைப் பிற தேவருய்தல் குறித்து இறைவன் உண்டு கண்டத்தடக்கிய அருமை தோன்ற , “வேலை நஞ்சுண்மழை தருகண்டன்” என்றார் . “குணமிலி” என்பது முக்குணங்களையுங் கடந்தவன் என்னும் பொருட்டு . சாத்துவிக முதலிய குணங்கள் மூன்றுங் குணதத்துவ மென்று கூறப்படும் .
குணதத்துவம் மூலப்பகுதியின் விருத்தியாகும் . மூலப்பகுதியைப் பிரகிருதி மாயையென்றுங் கூறுப . ஆதலின் சாத்துவிக முதலிய அம் மூன்றும் உயிர்களின் கன்மத்திற்கு ஈடாக உடல் முதலியன தருதற்கு அமைந்த பிரகிருதி மாயையினின்றுந் தோன்றி , உயிர்களின் சுக துக்க மோகங்கட்கு ஏதுவாவனவாம் என்ப . இதனால் மாயாசனகமாகிய அக்குணங்களாற் பற்றப்படாமல் அப்பாற்பட்டவன் இறைவன் என்பது தெளிவாம் . “ முக்குணங்களின் மூவரைத் தோற்றி மூவருக்கு முத்தொழில் வகுத்தருளி , அக்குணங்களுக்க தீதமாய் நிறைவாயத்து வாக்களைக் கடந்தவன் “ என்று சிவஞான முனிவர் கூறுதலும் அறிக . “மானிடன் “ என்றது மானை இடக்கையில் ஏந்தியவன் என்னும் பொருட்டு . தாருக வனத்து முனிவர் இறைவனைத் துன்புறுத்தக் கருதிக் கொடிய வேள்வியொன்று இயற்றி அதனினின்றுந் தோன்றிய ஒரு மானை இறைவன்பாற் போக்கினராக , அதன் ஆரவாரத்தைக் கண்ட இறைவன் அதனை “வாமப் ,பொற்றடங்கையிற் பற்றிப் பொருக்கென வேந்தி நின்றான் “ என்று கந்தபுராணங் கூறுதலறிக .
“தேய்மதியன்” என்றது , கலை குறைந்த சந்திரனை முடியிற் சூடினன் என்னும் பொருட்டு. தக்கன் சாபத்தாற் கலை குறைந்த திங்கட் செல்வனைப் பாதுகாத்தற் பொருட்டுத் தன் சடையில் தாங்கினனாதலின், இவ்வாறு கூறினர் . “பழைதருமாபரன் “ என்பது பழைய பெரிய பரம் பொருள் என்னும் பொருட்டு . இறைவனைப் “பழையோன்” எனவும் , “சொற்பதங் கடந்த தொல்லோன் “ எனவும், “கருணையின் பெருமை “ எனவும் அடிகள் பிற இடங்களில் கூறியிறுத்தல் ஈண்டு நினைக்கத்தக்கது . “என்று என்று “ என்னும் இரண்டனுள் முன்னதை “மழைதரு கண்டன்” என்பது முதலியவற்றோடு இயைத்து எண்ணும்மையை விரித்துரைத்துக் கொள்ளல் வேண்டும் . பின்னுள்ளதில் முற்றும்மை தொக்கது . “ என்றும் அறைவேன்” என்றது என்னைக் கைவிடினும் யான் இடையறாது நின் புகழையே கூறி இன்புறுவேன் என்றபடியாம் . இஃது உட்கோள் . “ஈடர்களையாரேனும் , எமக்கிரங்காரேனும் படரும் நெறி பணியாரேனும் …அன்பறா தென்னெஞ்சவர்க்கு “ என்னும் அம்மையாரருள் மொழியும் இங்கே நினைவு கூறத்தக்கது . .
பழைபனபோற் கூறப்பட்ட புகழ்மொழிகளுள் “மழைதரு கண்டன்” என்பது இறைவனுடைய பேரருட் பண்பையும் ,”குணமிலி” என்பது தத்துவாதீதத் தன்மையையும் , “மானிடன்” “தேய்மதியன்” என்பன முறையே நிக்கிரக அநுக்கிரகச் செயல் களையும் , “மாபரன்” என்பது முழுமுதற் கடவுட் டன்மையையும் புலப்படுத்து நீற்றல் உய்த்துணரத் தக்கது .
இதன்கண், “ஈயினொப்பாய் விழைதருவேன்” என்றதனால் உலக வாழ்க்கை திருவருட் பேற்றிற்குத் தடையாதல் பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
***********************************************************
பாடல் :47 .
பழிப்பினின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலங்
கொழித்துமந் தாரமந் தாகினி நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனுக்கு அன்புப்பணி செய்யாமல் வீணாக மேற்கொண்ட உழைப்பின் இழிவை யெடுத்துக் கூறி இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் இழிந்த உழைப்பில் தலையிடுதற்கு ஏது , இறைபணியினின்றும் வழுவியதாகு மென்றுணர்ந்து, மீண்டும் அப்பணியில் தலைப்படுதற்கு உபாயம் அறியாமல் திகைப்புற்றிருத்தலை விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- வெண்மணி பணிலம் கொழித்து = முத்துக்களையுடைய சங்குகளைக் கொழித்து ,
பந்தப் பெருமை தழீஇ = சடையாகிய அணையின் பெருமையைச் சார்ந்து ,
மந்தாரம் நுந்தும் = மந்தார மலர்களை யொதுக்குகின்ற ,
மந்தாகினி சிறை நீரில் = கங்கையாகிய வரம்புட்பட்ட நீர் நிலையில்
பிறைக்கலம் சேர்தரு தாரவனே = பிறை மதியாகிய தோணி பொருந்தப்பெற்ற மாலையையுடையவனே ,
பழிப்பில் நின்பாதம் பழந்தொழும்பு எய்தி = பழிக்கத்தகாத நின் திருவடிக்கண்ணே பழமையாகிய தொண்டு மேற்கொண்டு ,
விழப்பழித்து விழித்திருந்தேனை = பின் அத் தொண்டு நழுவுதலால் அத் திருவடியைப் பழித்து விழித்துக்கொண்டிருக்கின்ற சிறியேனை ,
விடுதி = கைவிட்டு விடுவாயோ ? (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- வெண்மணி – முத்து . சங்குகள் நீர் வாழும் உயிர்ப்பகுதியைச் சார்ந்தனவாகலின் , அவற்றைக் கொழித்தல் நீர்க்கு இயற்கையெனவும் , மந்தார மலர்கள் இறைவன் சடையிலணியப்பட்டன வாகலின் , அவற்றை நுந்தல் செயற்கையெனவும் கொள்ளல் வேண்டும் . இறைவன் சடக்கண்ணுள்ள கங்கை வெள்ளம் தூய வெண்ணற முடையதாகலின் , அஃது அப்பெருமானுடைய பேரருட் பெருக்கையும் , அவ்வெள்ளத்தின் அருகில் காணப்படும் சங்கு இறையியல்பை யுணர்தற் குரிய தூய சிவஞானத்தையும் , மந்தார மலர் இறைவனைச் சார்தற்குரிய சிறந்த பத்தியையும் , பிறை மதி ஞானம் பத்தி இரண்டனையும் துணைக் கொண்டு இறைவனது பேரருட் பெருக்கில் தோய்ந்து இன்புறும் பக்குவ முள்ள உயிரையும் குறிப்பிற் புலப்படுப்பனவாம் .
முத்துக்களையுடய சங்கு என்றது , சிவப்பேறாகிய பயனைத் தன்னுட் கொண்ட சிவஞான மென்றற்கு . மந்தார மலர் அன்பு வழிபாட்டிற்குச் சாதனமாகலானும் , இறைவன் சடைக்கணிருந்து கங்கையில் தோய்ந் ததாகலானும் பராபத்தியைப் புலப்படுக்கு மென்பது . ஞானம் பாச நீக்கத்தில் தோன்றுவதாகலின் , அதன் தோற்றத்திற்கு இடனாயது பக்குவமுள்ள உயிரென்பதும் ,பராபத்தி ஆண்டவனை முன்னிட்டு வெளிப்படுவதாகலின் , அதன் தோற்றத்திற்கு இடனாயது இறையருளென் பதும் உய்த்துணரத் தக்கன . இவ்வுண்மை குறித்தே பாச நீக்கத்திற் றோன்றும் ஞானத்தினும் இறையருளிற் றோன்றும் பத்தி சிறந்ததென்ப . ஈண்டுக் கூறிய பத்தி கடவுட் பேரன்பாகிய பராபத்தியாகும் . “ஆங்கவனருளாற் பத்தி நன் குண்டாம் பத்தியாலவனருளுண்டாம்” என்பது சைவ நூலுண்மையாகும் .
பந்தம் – அணை . கங்கை நீர்ப்பெருக்கு , இறைவன் சடைக்கட் டாகிய அணைப் பெருமையை நோக்க மிகச் சிறிய நீர் நிலை போற் காணப்பட்டெத்தென்பார் , “பந்தப்பெருமை தழீஇ “ எனவும் , “சிறை நீர்” எனவும் கூறினர் . சிறைநீர் என்றது சிறியநீர் நிலை என்னுங்குறிப்புத் தோன்ற நின்றது . முதலில் சரியை முதலிய தவத்தாலுண்டாம் ஞானம் இறைவனையுணர்தற்குக் கருவியாம் என்பது புலப்பட , “வெண்மணிப் பணிலங் கொழித்து “ எனவும் , ஞானம் கருவியாக இறையியல்புணர்ந்து பின்னர் அவனருளில் திளைப்பிப்பது பராபத்தி என்பது புலப்பட “மந்தாரம் நுந்தும் “ எனவும் கூறப்பட்டன வென்க. அணையின் பெருமை நீர் நிலைக்கு எத்துணையோ மடங்கு மிக்கதென்பது போதர , “பந்தப் பெருமை” யென்றார் , “தழீஇ “ யென்னும் வினையெச்சம் பர்றி வந்த அளபெடை விகாரத்தாற் றொக்கது . இனி தழிச்சு இறைநீர் எனக் கொண்டு தழுவிய சிறிய நீர் நிலை யெனக் கோடலுமாம் .தழிச்சுதல் – தழுவுதல் திங்கட்பிறை தனக்குற்ற இடையூறொழிந்து கலை வளரப் பெற்றது இறைவன் திருவருட்டுணையாலென்பர் பெளராணிகர் . அச் செய்தி ஈண்டுப் பாசப்பிணிப்பில் துன்புற்ற உயிர் , ஞானம் பத்தியென்னும் நெறிகளால் திருவருட் பேற்றிற் குரியதாகும் என்னும் குறிப்பைப் புலப்படுத்து நின்றதென்க.
பிறையின் நடுச் சிறிது அகன்றும் அதனிரு கோடுகளும் அந்நடுவினும் சிறியனவாய்ச் சிறிது வளைந்தும் தோணிபோற் காணப்படுதலின் , “பிறைக்கலம்” என்றார் . மந்தாகினிச்சிறை நீரிற் பிறைக்கலம் என்றது ,அழகிய ஓர் உருவக அணியாகும் . இலக்கிய நயந் தோன்றக் கூறிய இவ் வருணையில் , பாசப்பிணிப்பில் பட்டுழலும் ஓருயிர், ஞானத்தால் இறையியல்புணர்ந்து , அப்பிணிப்பு ஒழிந்து பத்தியால் தூய்மை பெற்றுத் , திருவருளில் தோய்ந்து பேரின்பத்தில் திளைக்கும் உண்மையை அகக்காட்சியிலுணர்ந்த அடிகள் குறிப்பிற் புலப்பட வைத்தாரென்பது உணர்ந்து இன்புறத்தக்கது .
திருவாசகத் திருப்பாட்டுக்களில் அநுபவ வுண்மைகளேயன்றி வருணனை மிகக் குறைவாகவே காணப்படும் . அங்ஙனம் சுருக்கமாகக் காணப்படும் வருணனை களிலும் இன்னோரன்ன சைவவுண்மைகள் குறிப்பிற் புலப்பட வைத்தல் அடிகள் அநுபவ இயல்பென்பது உணரத்தக்கது. “தாரவன்” என்பது பெயரளவாய் நின்று “சேர்தரு” என்னும் எச்சத்திற்கு முடிவாகும் . “பிறைக்கலஞ் சேர்தரு தாரவன்” என்பது பிறையை முடிமாலையாயியைத்துச் சூடினவன் என்னும் பொருட்டு . “மாதர்ப்பிறைக் கண்ணியானை” யென்பது தமிழ் மறை .
“ஓதிய ஞானமு ஞானப் பொருளும் ஒலி சிறந்த , வேதியர் வேதமும் வேள்வியுமான “ என்று புகழப்படுதலல்லது , சிறிதும் பழித்தற்கு இடனில்லாதன இறைவன் திருவடியென்பார் , “ பழிப்பினின் பாதம்” என்றார் . அன்புடையார் தன்னைப் புகழ்தலினும் தன் திருவடியைப் புகழ்தலில் ஆண்டவனுக்கு உவப்புண்டு என்பதை “ நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை “ யென்று பிறிதோரிடத்து அடிகள் கூறி யிருத்தலானறியலாம் . அங்ஙனம் புகழ்ந்து போற்றத்தக்க திருவடிக் கண்ணே மேற்கொண்ட தொண்டு வாழையடி வாழையாக வந்த தம் மரபுக்குரிய தென்பார் , “பழந்தொழும்பு” எனவும் , பண்டு செய் தவத்தால் அத் தொண்டில் தலைப்படக் கிடைத்தும் திருவருட் சார்பு இன்மையால் அது நழுவலாயிற் றென்பார் , “ விழ” எனவுங்கூறினர் .
வீழ்தல் – நழுவுதல் . விழ என்பது காரணப்பொருட்டு . திருத்தொண்டி லீடுபட்டவுள்ளம் சோர்வுற்றமையால் பழிக்கத்தகாத திருவடியைப் பழிக்கலானேன் என்பார் , “ விழப் பழித்து “ எனவும் , பழிக்கப்பட்ட அத்திருவடிப் பெருமையுணர்ந்து மீண்டும் அதன் கண் தொண்டு பூண்டொழுகுதற்கு உபாயம் அறியாமல் மயங்கலானேன் என்பார் , “விழித்திருந்தேனை “ யெனவுங் கூறினர் . வழித்திருத்தல் இதற்கு என் செயலாமென்று மருண்டு திகைப் புற்றிருத்தல் . திருவடித் தொண்டி லுறைத்து நிற்கும் அடிகளுக்கு இடையிடையே பிரிதலுங் கூடலுமாகிய இன்னோரன்ன நிகழ்ச்சிகள் இன்பவுணர்ச்சிக் கேதுவாக நிகழ்தலின் , இவ்வாறு கூறியருளினர் .
இவ்வநுபவத்தைக் “காணுமதொழிந்தேன் நின் திருப்பாதங் கண்டு கண் களி கூரப் பேணுமதொழிந்தேன் பிதற்றும் தொழிந்தேன் …… நீயினி வரினுங் காணவு நாணுவனே” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலானும் உணரலாம் .பழிக்கப்படாத திருவடியைத் தொண்டு நழுவதலாற் பழித்துப் பின் என் செயலாமென்று திகைப்புற்றிருக்கும் இந் நிலையில் எளிமைக்கு இரங்கும் பேரருளாளனாகிய நீ சிறியேனைக் கைவிடல் தகுமா வென்பார், “ விடுதி கண்டாய்” என்றார் .
இதன்கண் , “பழிப்பினின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந்தேனை”என்றதனால் அங்ஙனம் இருத்தற்கு ஏது , உலகியற் பற்றென்பது போதரலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக.
பாடல் : 48 .
தாரகை போலுந் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
வீரவென் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார்
ஆரடி யானென்னின் உத்தர கோசமங் கைக்கரசின்
சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் நழுவி விடப்பட்ட இறை பணியில் மீண்டும் தலைப்படுதற்கு உபாயம் அறியாமல் திகைப்புற்றிருத்தலை திகைப்புற இரங்கி அடிகள் , இத் திருப்பாட்டில் திகைபுற்ற நிலையில் தேற்றுதற்குத் திகைப்பறியாத் தெய்விக வீரனாகிய நின்னைப்பற்றி வேறு யாருமிலர் ஆதலின், சிறியேனைக் கைவிடாமற் பாதுகாக்கும் பொறுப்பு நின்பாலதாகு மென்பதைக் குறிப்பிற் புலப்படுத்து விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் . “தேறும் வகையென் சிவலோகா திகைத்தாற் றேற்ற வேண்டாவோ” என்னும் அடிகள் திருவாக்கும் ஈண்டுக் கருதியுணரத்தக்கது.
பதவுரை :- தலை தாரகை போலும் தலைமாலை = தலைக்கண்ணே விண்மீன்கலைப் போன்ற தலைமாலையும் ,
தழல் அரப் பூண் = நகஞ்சு மிக்க பாம்புகளாகிய அணிகளங்களையுமுடைய ,
வீர = தெய்விக வீரனே ,
என்னை விடுதி = சிறியேனைகைவிட்டுவிடுவாயோ? (விடலாலாது) ,
விடில் = கைவிடுவாயின் ,
மிக்கார் என்னை ஆர் அடியான் என்னின் = அறிவொழுக்கமிக்க பெரியோர் என்னை நோக்கி , “நீ யாருக்கு அடியவன் “ என்று வினவுவாயின் ,
உத்தரகோசமங்கைக்கு அரசின் சீர் அடியார் என்று = திருவுத்தரகோசமங்கையில் வீற்றிறுக்கும் தெய்விக அரசாகிய சிவபெருமானுடைய சிறப்புப் பொருந்திய அடியவர்க்கு அடியவன் என்று சொல்லி ,
நின்னைச் சிரிப்பிப்பன் = நின்னைக் குறித்துச் சிரிக்கச் செய்வேன் என்பது .
விளக்கவுரை :- உலகெலாம் ஒடுங்கிய பேரூழிக் காலத்துப் படைப்போன் முதலியோரும் ஒடுங்கினராக , அன்னார் தலைகளை யெல்லாம் மாலையாகத் தொடுத்து இறைவன் தன் தலைக்கண் அணிவன் என்று புராணங் கூறும் . அணிதற்குக் காரணம் அத் தேவரெல்லோரும் ஊழி யிறுதியில் தன்பால் லொடுங்கத் தான் ஒருவனே யாண்டும் ஒடுங்காத முழுமுதற் பொருளென்பதைப், பின்னர்த் தோன்றும் உலகம் உணர்ந்து தன்னை யடைந்து உய்யவேண்டு மென்பதேயாம்
இவ்வுண்மையை “நூறு கோடி பிரமர்கணொந்தினார் , ஆறு கொடி நாரயணரங்ஙனே, ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் , ஈறிலாதவன் ஈசனொருவனே “ என்னுந் தமிழ் மறையானும் .” அப்பெரி யோர் , சிரமெலாந் தொடுத் தணியலா வணிந்ததிடும் “ எனவும் ”ஆதலாற்றனை வியப்பதற் கன்றவையணிதல் ,ஈதலாதொரு திறமுளதியாவரு மெவர்க்கும் , நாதனே யிவனென்று தன் பாங்கரே நண்ணித், தீதெலா மொரீஇ முத்தி பெற்றுந்திடுஞ் செயலே “எனவும் கந்தபுராணங் கூறுமாற்றானும் அறிக .
அத்தலை யோடுகள் வெண்ணிற வொளி யுடையனவாகக் காணப்படுதலின் , “தாரகை போலும் “ என்று உவமிக்கப்பட்டவை .இவ்வரலாற்றுக் குறிப்புச் சிவபெருமான் விண்ணோர் முழுமுதலென்பதைப் புலப் படுப்பதாம் . “தலை மாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருத் தலைவன் “ என்று தமிழ் மறை கூறுதலும் உணர்க . தழல் – ஈண்டு நஞ்சென்னும் பொருட்டு , தழலுமிழரவம் “ என்புழி அப்பொருட்டாதல் அறிக . இறைவன் அணிகலனாக அணிந்த பாம்புகள் இருவகைய ; திருமாலூர் தியாகிய கருடனுக்கு அஞ்சி இறைவனைப் புகலடைந்தன ஒரு வகை , மற்றொரு வகை தாருக வனத்து முனிவர் இயற்றிய கொடிய வேள்வியினின்றுந் தோன்றி இறைவனுக்குத் தீங்கிழைக்க வந்தனவாம் .இவ்விருவகையும் , ஈண்டுக் குறிக்கப்பட்டன. வேள்வித் தீயினின்றுந் தோன்றின வென்பது , “தழலர ; வெனவிசேடிக்கப் பட்டமையானாம் . கருடனுக்கு அஞ்சிப் புகலடைந்தவை கொடுந்தன்மை யொழித்து சாந்தமெய்தின வென்பதும் , மற்றவை “வேள்வி யெரியழற் கிடையே யெண்ணில், பாந்தளங் கெழுந்து தீயோர் பணியனாற் சீற்றத்தோடும் போந்தன “ என்றதனால் நஞ்சைக் கான்று வந்தன வென்பதும் ஈண்டுக் கருதத்தக்கன .
தலையோடு மலர் போலத் தொடுத்தணியத் தக்கனவாகலின் , அவற்றை மாலையாகவும் , பாந்தள் முத்தார போலப் பூணத்தக்கன வாகலின் , அப்பாம்புகளைப் பூணாகக் கொண்ட இந் நிகழ்ச்சி பகை வலியைக் கடக்கும் இறைவனது வீரத்தன்மையைப் புலப்படுத்தற்கு எடுத்துக்காட்டாகுமென்பது .
இங்ஙனம் கடவுட் டலைமைத் தன்மையும் வீரச்செயலும் உடைமையால் , “வீர” எனவும் , யாது செய்வல் எனத் திகைப் புற்றிருக் கும் இந் நிலையிற் சிறியேனைத் தேற்றி யேன்று கொள்ள வேண்டியது வீரானாகிய நினக்குக் கடமையாகவும் , கைவிடல் தகுமானென்பார் , “ என்றன்னை விடுதி கண்டாய்” எனவும் கூறினர் . யாவர்க்கு மேலாளவிலாச் சீருடைய நீ , யாவர்க்குங் கீழாம் அடியேனைக் கைவிடின் , என் எளிமையை நோக்கி வினவுவார்க்கு , வாழையடி வாழையாக வந்த என் அடிமையியல் பின் உண்மையை யான் கூற நேருதெனவும் , அதனால், இவ்வேழைக்கு யாதுங்குறை நேராதெனவும், நின் அளப்பரும் பெருமைக்கே குறை நேருமெனவும் குறிப்பிற் புலப்பட நகைச்சுவை தோன்றக் கூறுகின்றார் .
நின்னாற் கைவிடப்பட்ட நிலையில் அறிவொழுக்கங்களிற் சிறந்த பெரியார் என் எளிமையைக் கண்டு “ஏன் இப்படித் துணையின் றித் துன்புறுகின்றாய்? அடிமைத்தன்மையும் உளதே ; நீயார்க்கு அடியவன் “ என்று என்னை வினவுவராயின் என்பார் , “ என்னை மிக்கார் ஆரடியானென்னின் “ என்றார் . மிகுதி ஞான சீலங்களின் மேற்று . உலகத்தில் மெலிந்து நல் கூர்ந்தானொருவனைக் காண்பார் வினவ நேரின் , நீ எக்குடும்பத்தவன் என்று குடும்ப இயல்பு பற்றிக் கேட்பதியல்பு .
ஈண்டு அடிகளுக்குத் தந்தை தாய் குரவனாசான் சங்கரனிராசை பெண்டிற் , மைந்தர் பல்லுயிருஞ்சுற்ற மாசிலா வீசனென்பர் ஆதலின், “என்னை மிக்கார் ஆரடியானெனின் “ என அடிமையியல்பு பற்றி வினவுவாரென அடிகள் கருதினாரென்பது . இனி, அவ்வினாவிற்கு விடையாக என்னாற் கூறத்தக்கது இன்னதெனக் குறிப்பிடுகின்றார் . முதலில் தம்மை அடிமைகொண்ட பரம்பரைக்கு இடன் இன்னதெனவும் , அப் பரம்பரை முதல்வன் இன்னானெனவும் கூறுவாராய் , “ உதர கோச மங்கைக் கரசு “ என்றார் . அரசு என்றதனால் உத்தரகோச மங்கை சிவராசதானி யென்பது பெறப்படும் .
தெய்வ அரசுக்குரிய திருத்த சாங்கத்தில் ஊர் கூறுகின்றுழி , “பத்தரெலாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடும் , உத்தரகோச மங்கையூர் “ என்று அடிகள் பிறிதொரிடத்துக் கூறியிருத்த லும் ஈண்டு நோக்கத்தக்கது . அப்பேரூரிலுள்ள தெய்வ அரசாக விளங்குபவன் சிவபெருமானெனவும் , அப்பெருமானுக்கு அணுக்கராய்த் தொண்டு பூண்டு ஒழுகும் மெய்யன்பரே சிறப்பு மிக்க மெய்யடியாராவரெனவும் மரபின் பெருமை புலப்படுத்து , இப்பொழுது அம்மரபின் முதல்வனாகிய நின்னால் புறக்கணிக்கப்பட்டு ஒடுங்கிக் கிடக்கும் யான் அவ்வுயரிய மரபில் வந்த அடியார்க்கு அடியனாவேனென்று வெளிபடக் கூறி நின்னைப் பரிகசிக்கச் செவேன் என்பார் , “அரசின் சீரடியாரடியானென்று நின்னைச் சிரிப்பிப்பனே” யென்றார் .
சிரித்தல் – பரிகசித்தல் . “சகம் பேயென்று தம்மைச் சிரிப்ப” என்புழியுங் அப்பொருட்டாதலறிக . ஓர் உயர்ந்த மரபின் முதல்வர் சீர்மையுடையவராக வாழ்ந்திருப்ப , அம் மரபிற் றோன்றிய ஒருவன் ஆதரவற்று எளியனாயிருப்பின் , அந் நிலையைக் கண்டார் அம்மரபு முதல்வரை யெள்ளி நகையாடல் உலகியலிற் காணப்படுவ தொன்றாதலின் , அம்முறை பற்றி இவ்வாறு கூறினர் . இது மழவிளங் குழவி இருமுதுகுரவரை அன்பினாற் கூறுங் குறை போல்வதொன்று .
இதன்கண் , யான் அரசன் சீரடியாரடியனாக இருந்தும் புறக்கணிக்கப்படுதற்கு ஏதுவாக உலகியற் பற்றுடையவனாக உழல்கின்றேன் என்று அடிகள் கருதினாரென்பது பெறப்படுதலின், பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
***********************************
பாடல் : 49 .
சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையு மீசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சனஞ் சூண்பிச்ச னூர்ச்சுடுகாட்
டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சனென் றேசுவனே
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் சிறியேன் திகைப்புற்ற நிலையில் தேற்றுதற்குரிய தகுதி , முழுமுதற்றலைவனும் தெய்வீக வீரனுமாகிய நின்பாலதாமென்பதைக் குறிப்பிற் புலப்படக்கூறிய அடிகள் , இத்திருப் பாட்டில் அத்தகைய நின்னாற் றேற்றப்படின் ,என் உலக வாழ்க்கையை யெள்ளி வெறுத்து , நின் உடனுரை வாழ்க்கை யாகிய திருத்தொண்டின் பெருமையை விரித்து விளக்கிப்பாராட்டி மகிழ்வேன் என்று விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- சீறும் பிழைப்பைச் சிரிப்பிப்பன் = வெறுக்கத்தக்க என் உலக வாழ்க்கையை எள்ளி நகையாடச் செய்வேன் ,
தொழும்பை ஈசற்கு என்று விரிப்பிப்பன் = தொண்டு பூண்டு ஒழுகுதலை இறைவனுக்கே யென்று யாண்டும் பரவும்படி செய்வேன் ,
என்னை விடுதி = இத்தகைய அடியேனைக் கைவிட்டு விடுவாயோ? , விடின் = கை விடுவாயின் ,
வெம்கரியின் உரிப்பிச்சன் = கொடிய யானைத் தோலைப் போர்த்த பித்தன் ,
தோலுடைப் பிச்சன் = புலித்தோலை யுடுத்த பித்தன் ,
நஞ்சு ஊண் பிச்சன் = நஞ்சை யுணவாகக் கொண்ட பித்தன் ,
ஊர்ச் சுடுகாட்டு எரிப்பிச்சன் = ஊர்க்குப் பொதுவாகிய சுடலைத் தீயில் ஆடும் பித்தன் ,
என்னையும் ஆகுடைப்பிச்சன் = தகுதியற்றவனாகிய என்னையும் ஆட்கொண்ட பித்தன் ,
என்று ஏசுவன் = என்று இவ்வாறு கூறி இகழ்ந்துரைபேன் என்பது .
விளக்கவுரை :- நரை திரை மூப்புப் பிணி சாக்காடு என்னும் இவற்றிற்கு இடனாகிய ஊனுடம்பைப் பெற்ற பொழுதே அதனைக் கடவுட் பணியாகிய தவத்திற்கு உரியதாக்கல் வேண்டும் . அங்ஙனம் செய்யாமல் உண்டுடுத்துறங்கும் அளவில் அமையுமாயின் ,அவ்வுடலோடு கூடிய உயிர் வாழ்க்கை வெறுக்கத்தக்கதாக முடியுமாதலின் ,அதனைச் “சீறும் பிழைப்பு” என்றார் . சீறுதல் – வெகுளல் . வெறுத்தல் . இங்ஙனம் வெறுக்கத்தக்க வாழ்க்கையை விரும்பத்தக்க தெனக் கொள்ளாமல் யான் எள்ளியொழிப்பதொடு பிறரும் இவ்வுண்மையையுணர்ந்து எள்ளி நகை யாடற்கு ஏற்பச்செவேன் என்பார் , “சிரிப்பிப்பன்” என்றார் . இனி, இவ்வுடல் கொண்டு மன மொழி மெய்களால் நினைந்தும் வாழ்த்தியும் வணங்கியும் செய்யப்படும் தொண்டு , எல்லாம் வல்ல இறைவனைக் குறித்தே செய்யத் தக்கதென எப்பொழுதும் எவ்விடத்தும் யான் முக்கரணங்களாலும் இயன்ற வரை பரப்புவேனென்பார் , “தொழும்பை யீசற்கென்று விரிப்பிப்பன் “ என்றார் .
ஈசற்கே என்புழித் தேற்றேகாரம் விகாரத்தாற்றோக்கது .தொழும் பையும் என்புழி உம்மை இசை நிறை . ஈசன் என்னும் சொல் சிறப்பு முறையில் சிவபெருமானையே யுணர்த்துமென்பது மறை யாகமங்களிற் கண்டவுண்மை. மனம் பொறி புலங்களுக்கும் , மண் , பெண் , பொன் முதலியவற்றிற்கும் , செல்வர் முதலியோர்க்கும் அடிமைபட்டு வாழ்தல் ஆகிய உலகத் தொண்டு சீறும் பிழைப்பின்பாற் படுமாதலின் , அதனை விலக்கி ஊனடைந்த வுடம்பின் பிறவியே , தானடைந்த வுறுதியைச் சார் தற்குரிய கடவுட்டொண்டே சிறந்த தாகு மென்பார் , “ஈசற்கே” யென வலியுறுத்துக் கூறினர் . நலம் தொன்றடைதற்கு விலக்கத்தக்கதும் மேற் கொள்ளத்தக்கதும் இன்னவெனவுணர்ந்து , முதலில் விலக்கத்தக்கதை விலக்கியபின் கொள்ளத்தக்கதைக் கொள்ளல் வேண்டுமாதலின் அம்முறையில் அழிவிலின்பப் பேற்றிற்குத் தடையாகவுள்ள உலகத்தொண்டை யொழித்துப் பின் அப்பேற்றிற்கு இன்றியமையாச் சாதன மாகிய சிவத்தொண்டைக் கொள்ளல்வேண்டுமென்பது புலப்பட அம்முறையில் வைத்து ஊதினாரென்க .
“சீறும் பிழைப்பைச் சிரிப்பன்” எனவும் ,”தொழும்பை யீசற்கென்று விரிப்பன் “ எனவும் தம்மளவிற் கூறாது , “சிரிப்பிபன் “ விரிப்பிப்பன்” எனப் பிறரையும் அவ்வாறு செய்யச் செய்வன் என்று கூறியது , “நான் பெற்ற வின்பம் பெற்க விவ்வையகம் “என்னும் உட்கோள் பற்றியென்பது . அரிய தவத்தால் அடையத்தக்க வீட்டின்ப நுகர்ச்சிக்கும் பிறரை அறைகூவியழைக்கும் பெருமை நம் சைவப்பெரியார்பால் உளதென்பதை யாவரேயறியார்? நாம் இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே” என்னும் தாயுமானவர் உரையும் , கொள்ளை கொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத் தள்ளிய திருஞான சம்பந்தர் செயலும் இவ்வுண்மையை வலியுறுத்து நிற்றலறிக .
இங்ஙனம் உலக வாழ்க்கையை யானும் வெறுப்பேன் ; பிறர் எள்ளி நகையாடுதற் கேற்றதையும் செய்வேன் எனவும் , தொண்டு இறைவனாகிய நின் பொருட்டே செய்யத்தக்க தென்பதை யானும் உணர்வேன் ; பிறர் உணரவும் விரித்து விளக்குவேன் எனவும் , இந் நீத்தல் விண்ணப்பத்தின் இறுதிப் பகுதியில் அடிகள் தம் முள்ளத்திற் கண்ட மெய்களைத் தந்தையிடத்துக் குழந்தை கூறுதல் போலக்கூறி, இந் நிலையிலுள்ள என்னைக் கைவிடல் தகுமாவென்பார் ., “ என்னை விடுதி கண்டாய் “ என்றார் .
இவ்வுண்மையை விண்ணப்பஞ் செய்யக் கேட்டும் என்னைக் கைவிடுவாயாயின் , என் உள்ளத்தில் நின்னைப்பற்றியறிந்த சில செய்திகளை யெடுத்துக் கூறி நின்னை ஏசுவன் எங்கின்றார் . இறைவனை வாழ்த்துதற்குரிய அருஞ் செயல்களையே அடிகள் வைதற்குரியனவாகக் கொண்டு கூறின ரென்பது பின் வருவனவற்றால் விளங்கும் .
ஊண் உடை உறையுள் மூன்றையும் மாறுபடக் கோடல் பித்தர் செயல்களாகும் . யானைத் தோலைப் போர்வையாகவும் ,புலித்தோலை யுடையாகவும் கொண்ட பித்தன் என்றதனால் உடையின் மாறுபாடும் , நஞ்சுண்ட பித்தன் என்றதனால் உறையுளின் மாறுபாடும் புலனாதல் அறிக . இம் மூன்றனாலும் முறையே இறைவனுடைய முடிவிலாற்றலும் , பேரருளுடைமையும் முழு முதற்றன்மையும் ஆகிய பெருமையே வெளிப்பட்டு நிற்றல் அறியத்தக்கது . சுடுகாடு இன்னதென்பதையும் அதன்கண், இறைவன் நடமாடுதலின் உண்மையையும் திருச்சதகம் ஏழாம் திருப்பாட்டின் விளக்கவுரையிற் காண்க . ஏசுதற்குரிய இறை செயல்களாக இங்கே கூறப்பட்ட மூன்றன் மேலும் சிறந்ததாக ஒன்று கூறுகின்றார் .
அஃது ஆட்கொள்ளுதற்குரிய தகுதி ஒரு சிறிது மில்லாத சிறியேனையும் ஆளாகக்கொள்ளும் பித்தன் என்பது . என்னையும் என்புழி உம்மை இழிவு சிறப்புப் பொருட்டு . அன்பரைக் குற்றங்களைந்து ஆட்கொள்ளுதல் இறைவனுக்கு இயல்பினமைந்த பேரருளுடைமை யானாகும் . ஆதலின் , இதுவும் அப்பெருமானுடைய அளப்பரும் பெருமையையே புலப்படுத்து மென்பதுணர்க . இங்ஙனம் வாழ்த்தினும் வையினும் இறைவன் மாண்பே அடிகள் நெஞ்சினும் நாவினும் நின்று வெளிபடு மென்பது நினைந்து இன்புறத்தக்கது .
இதன்கண், “சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை “ யென்றதனால் , உலக வாழ்க்கை வெறுத்து யெள்ளி நகையாடற்குரிய தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
********************************************
பாடல் : 50 .
ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பிற்
றேசுடை யாயென்னை யாளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின வாலமுண் டாயமு துண்ணக் கடையவனே .
கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் உலக வாழ்க்கையை எள்ளி நின் உடனுறை வாழ்க்கையாகிய திருத்தொண்டை விளக்கிப் பாராட்டி மகிழ்வேன் என்று கூறிய அடிகள் , இத்திருப்பாட்டில் அப்பாராட்டு வைதல் வாழ்த்துதலாகிய இருதிறத்தானும் முறையே குறிப்பினும் வெளிபடை யினும் நிகழுமாதலின் , அவ்வீரிடத்தும் உண்டாம் என் குற்றத்திற்கு வருந்துகின்றேன் ; பொறுத்தருள வேண்டுமென்று வின்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .
பதவுரை :- செம்பவள வெற்பின் தேசு உடையாய் = செந்நிறமுடைய பவள மலைபோல் ஒளி விளங்கும் திருமேனியை யுடையவனே ,
என்னை ஆளுடையாய் = சிறியேனை ஆளாகக் கொண்டவனே ,
அமுது உண்ணக் கடையவன் = அமிழ்தம் உண்ண உரிமையுடையனாக இருந்தும் ,
சிறுமை உயிர்க்கு இரங்கி = சிறிய உயிர்த்தொகுதிகளுக்கு நேருந் துன்பத்திற்கு இரக்கமுற்று ,
காய் சினம் ஆலம் உண்டாய் = கொதித்தெழும் கொடுமை மிக்க ஆலாலமென்னும் நஞ்சையுண்டருளியவனே
யான் உன்னை ஏசினும் ஏத்தினும் = அடியேன் ஆண்டவனாகிய நின்னைக் குறித்துப் பழித்துரைப்பினும் புகழ்ந்துரைப்பினும் உண்டாம்
என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை = என் குற்றத்தையே கருதி உள்ளமுருகி வருந்துவேனை ,
விடுதி = கைவிட்டு விடுவாயோ (விடலாகாது) என்பது .
விளக்கவுரை :- இறைவன் அருளுருக் கொள்ளுங்கால், ”நிறங்களோரைந்து டையாய்” என்றபடி அவ்வருட்டிரு மேனிக்குப் பல நிறங்கள் சிவாகமங்களிற் கூறப்பட்டிருப்பினும் , ஞானாசிரியனாக எழுந்தருளி அன்பர்க்குக் காட்சியளிக்குங்கால் மேற்கொள்வது ,செந் நிற வொளி மிக்க திருமேனி யாகும் . இவ்வுண்மையைச் “ செம்மேனி யெம்மான்” “தழல் வண்ணன்” “பவளமே திருவுடம்பு “ என்பன முதலிய ஞானப் பனுவல்களானறியலாம் . பவள வெற்பு – இல் பொருளுவமை . எந் நிறத்தினும் ஒளியுடைமையே அழகு செய்வதாகும் . நிறம் ஒளி என்னும் இரண்டனியைபும் உடலுயிர்களின் இயைபு போற் கொள்ளத்தக்க தென்க .
அவ்விரண்டனுள்ளும் ஒளி சிறந்த தாகலானும், நிறம் செம்மை யென்னும் உவமையடையாற் பெறப்பட்டமையானும் “செம்பவள வெற்பின் நிறமுடையாய்” என்னாது , “தேசுடையாய் “ என்றார் . தேசு – ஒளி . இங்ஙனம் விளித்தது ஞானாசிரியத் திருவுருவைக் குறிக்கொண்டென்க. அடுத்து “என்னை யாளுடையாய் “ என்றதனாலும் இது வலியுறுவதாகும் . “வெற்பிற் றேசுடையாய்” என்றதனால் இறைவனது அளப்பரும் பெருமையும் , “என்னையாளுடையாய்” என்றதனால் அப்பெருமானது பேரருளுடைமையும் புலப்படுக்கப்பட்டபடியாம் .
இவ்வளவில் அடிகள் தம் பொருட்டு இறைவன் செய்த பேருத வியைப் புலப்படுத்து, மேல் மக்கள் தேவர் முதலிய எல்லோர்க்கும் அப்பெருமான் செய்த பேரருட் செயலைக் கூறுகின்றார் , இவை முறையே சிறப்பும் பொதுவுமாகும் . உலகியலறம் வகுத்த திருவள்ளுவர் , ஒருவன் மற்றொருவனுக்கு உற்றுழி யுதவுதலாகிய சிறப்பறத்தை ஈகையெனவும் , பலருக்கும் பயன்பட உதவுதலாகிய பொதுவறத்தை ஒப்புரவு எனவும் வகைப்படுத்துக் கூறியிருத்தலும் ஈண்டு நினைக்கத்தக்கது .
“அமுதுண்ணக் கடையவன் “ என்புழிக் கடையவன் என்பது கடமையுடையவன் என்னும் பொருட்டு . கடமை ஈண்டு உரிமைப் பொருண்மேலதாம் . கடமை என்பதில் “மை” விகுதி கெட்டு இடை அகரம் ஐகாரமாகி விகுதியேற்றுக் கடையன் கடையவன் என்றாயிற்று , பழமைப் பகுதியினின்றும் பழையன் பழையவன் என்றாயது போல வென்க . அமுதும் நஞ்சும் உண்டார்க்கு முறையே சாவாமையை சாதலையும் பயக்குமென்ப . அவற்றுள் , அமுது கடவுளர்க்குரிய வுயர்ந்த வுணவாதலின் , அதனையுண்டாற்கு உரிமை கடவுளர் தலைவனாகிய நினக்கே யுளதாகவும் , சிறிய வுயிர்கள் பால் வைத்த கருணை காரணமாகச் சாவாமையைப் பயப்பதாகிய அவ்வமுதவுணவை யொழித்துச் , சாதலைப் பயப்பதாகிய நஞ்சையுண்டருளினாய் என்பது கருத்து .
கடையவன் என்பதன் பின் சில சொற்கள் அவாய் நிலையான் வருவித்துரைக்கப்பட்டன . இனிக் கடையவன் என்பதற்குக் கடைந்த அவன், திருமால் எனப்பொருள் கொண்டு திருமால் அமுதுண்ண நஞ்சமுண்டவ னே யெனக் கூறுவாருமுளர் . கடைந்தவனும் அமுதுண்டவனும் திருமால் ஒருவன் மாத்திரம் அல்லன் ; தேவரெல்லோரு மாவ ராதலானும் , இறைவன் நஞ்சுண்டற்கு ஏது “சிற்றுயிர்க் கிரங்கி” என்பதனாற் பெறப்பட்டமையானும் அவ்வுரை பொருட் சிறப்புடைய தன்றென்க .
சிற்றுயிர் என்றது கன்மத்திற் கீடாகப் பிறப்புக்களிற் பட்டுழலும் சிறுமையுடைய மக்கள் தேவர் முதலியவுயிர்த் தொகுதிகளை அமுதமுண்டு அமர வாழ்வு பெற முயன்றார்க்கு முதலிற் றோன்றியது ஆலால மென்னுங் கொடிய நஞ்சாக , அது கண்டு பெரிதுங் கலக்கமுற்ற அவ்வுயிர்த் தொகுதிகளின் பொருட்டு மேற்கொண்ட இரக்கங்காரணமாக வென்பார் , “சிற்றுயுர்க்கிரங்கி “ என்றார் . இறைவன் தன் ஆற்றலைப் பிறர் அறிய வைத்தற்கு இக்கொடிய நஞ்சை யுண்டானல்லன் என்பது புலப்பட “இரங்கி”யென அருட் குணத்தைக் காரணமாகக் குறிப்பிட்டார் என்க . காய் சினம் – வினைத்தொகை . காய்தல் – சுடுதல் . சினம் – வெகுளி ., கொடுமை .
இறைவன் உண்ட நஞ்சு வலியிழந்ததால் மணிமந்திர மருந்துகளால் ஒழிக்கத்தக்கதாதல் அன்றென்பார் , “காய்ச்சின வாலம் “ என்றார் . அடிகள் “என்னையாளுடையாய் “ என்றதனால் தமக்குச் சிறப்பு வகையிற் செய்த பேருதவியையும் , “சிற்றுயிர்க்கிரங்கிக் காய்சின வாலமுண்டாய்” என்றதனால் பிறவுயிர்த் தொகுதிகளின் பொருட்டுப் பொது வகையிற் செய்த பேருதவியையும் குறிப்பிட்டபடியாம் .
இனி, இறைவனைத் தாம் இகழ்தல்போற் புகழ்ந்தும் , வெளிப்படையாய்ப் புகழ்ந்தும் கூறியவற்றில் நேரும் பிழைகளுக்கு வருந்திப் பொறுத்தருள வேண்டுகின்றார் . , ஏசுதல் ஈண்டு மழைதருகண் டன் குணமிலி மானிடன் தேய்மதியன் நஞ்சுண்பிச்சன் முதலாக ஒருவாற்றாற் சொல்லளவிற் பழித்துரைத்தலாகும் . இத் தொடர் மொழி களில் இறைவன் பெருமையே புலப்படுக்கப்பட்டு ப் புகழ்தலாக முடியுமாயினும் , கேட்பார் ஓரளவு பழித்தலாகவும் கருதுதற்கு இடந்தருத லின், அவ்வளவிற் பிழை செய்தாகுமென்பது .
ஏத்துதல் – உயர்த்துக் கூறிப்புகழ்தல் . இறைவன் பெருமை மாற்ற மனங்கழிய நின்றதாகலின் , “அவன் பூங்கழல் யாம்பேசத் திருவார்த்தையிற் பெருநீளம்” என்றபடி விரித்துரைக்கப் புகின் , ஓரள விலடங்காமல் பெருகிச் செல்லுதலாலும், தொகுத்துரைக்கப் புகின் , முற்றுங்கூறப்பட்டதாக முடியாமையாலும் குறையாகவே கூறியதாக முடிதலின், அதுவும் பிழை செய்ததாகுமென்பது .. எங்கும் நிறைபொருளாக வுள்ளவனை ஓரிடத்து ஒரு திருக்கோயிலுள்ளான் எனவும் ,எச்செயலும் , வல்லானைச் சிற்சில செயல்களைக் குறிப்பிட்டு அவற்றில் வல்லானெ னவும் கூறுதல் போல்வன புகழ்தலாயினும் , குறையாகக் கருதுதற்கு இடந்தருதலின் , பிழை செய்ததாக முடியுமென்பது கருத்து. இவ்விருதிறத் தானுமன்றிப் பேச்சு நிகழ்தற்கு இடனின்று.
ஆதலின், இவ்வீரிடத்தும் நிகழும் பிழைகளை நினைந்து வேறு போக்கிடனில்லாமையால் உள்ள முருகி வருந்துகின்றேன் என்பார் . “ஏசினும் யானுன்னை யேத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை” என்றார் .
ஆண்டவனே ! குற்ற நற்றம் இரண்டும் மக்களியல் பாயினும் , நின்னைக் குறித்து , யான் பேசுவனவெல்லாம் குற்றமாகவே முடிதலின் அதற்கே வருந்தலானேன் என்று அடிகள் கருதினாரென்பது பெறப்படுதலின் , “என் பிழக்கே “ என்புழி ஏகாரம் பிரிதலைப் பொருளதாகும் . வேசறுதல் – வருந்துதல் . சிற்றறிவுடைய வுயிர்கள் பிழை செய்தல் இயல்பாயினும் , பின் அது பிழையென வுணர்ந்து வருந்திப்பிழை பொறுக்க வேண்டின் , பொறுத்துப் பாதுகாத்தல் பேரருளாளனாகிய நினக்குக் கடனாதலின் , சிறியேன் பிழை கருதிக் கைவிடாமற் காத்தருள வேண்டுமென்பார் , “வேசறு வேனை விடுதி கண்டாய்” என்றார் .
இனி, “ஏசினும் …………விடுதி” என்பதற்கு , யான் உன்னை வைதாலும் வாழ்த்தினாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் , என் பிழை குறித்து வருந்து கின்றேனாதலின் , அதுபற்றியேனும் என்னைக் கைவிடலாகாது என்று பொருள் கூறலுமாம் . இத் திருப்பாட்டு நீத்தல் விண்ணப்பத்தின் இறுதியா தலின் , ஈற்றடி யீற்றிலுள்ள “கடையவனே” யென்பது தொடக்கத் திருப் பாட்டின் முதலோடியைந்து அந்தாதித் தொடயாயினமை அறிக .
இதன்கண் ,”ஏசினும் யானுன்னை யேத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை” யென்றதனால் , உலக வாழ்க்கையைப் பற்றி நிற்பார் செயல் எவ்வாற்றானும் பிழைபடுமென்பதும் ,அதற்குக் காரணமா கிய உலக வாழ்க்கை வெறுக்கத்தக்கதென்பதும் பெறப்படுதலின் பிரபஞ்ச வைராக்கியம் புலனாதலறிக .
திருவாதவூரடிகள் அருளிச்செய்த திருவாசகத் திருமறைக் கண்ணுள்ள நீத்தல் விண்ணப்பத்திற்குப் பாண்டி வளநாட்டில் பூங்குன்றநாட்டுத் தலைநகராகிய மகிபாலன்பட்டி மகாமகோபாத்தியாய முதுபெரும் புலவர் , பண்டிதமணி மு . கதிரேசச் செட்டியார் இயற்றிய கதிர்மணி விளக்கம் என்னும் பேருரை முற்றுப்பெற்றது .
திருச்சிற்றம்பலம்
முற்றும்
*****
‘
அருமை.நன்றி,கி.நாச்சிமுத்து Prof.Krishnaswamy Nachimuthu Home :Vagai,11/80 Kalidas Nagar,VadavalliCoimbatore641041,TamilnaduWork :École française d’Extrême-OrientCentre de Pondichéry16 & 19, Dumas StreetPuducherry – 605001tel: 91-413-2334539/ 2225689/ 2332504Formerly Professor Department of Tamil,Coordinator,Department of Tamil and LinguisticsCentral University of Tamilnadu,Central University of Tamilnadu P.O.Thiruvarur-610 005(Tamil Nadu) Professor of Tamil & Chairperson, Centre of Indian Languages, School of Language, Literature and Culture Studies Jawaharlal Nehru University, New Delhi-110 067 Professor and Head ,Dept.of Tamil, Dean,Oriental Faculty University of Kerala, Thiruvananthapuram, Kerala Phone:0422-2427249,Mobile 09486117259