மாலதீமாதவம்
பிரகரணம்[1]
முதல் அங்கம்
(5/11/1931)
முடியின் அணிகலனாயிலங்குங் கபாலங்களி[2]னிறைந்து ஒழுகுங் கங்கை நீரையுடையனவும், மின்னலை நிகர்த்த நெற்றிக்கணங்கியின் சுவாலைகளுடன் கலந்து செவ்விய காந்தி பொருந்தியனவும், சிறிதலர்ந்த தாழைமடலோ! என ஐயுறத்தக்க இளம்பிறையமைந்தனவும், கொடிபோன்ற அரவங்களாகிற கொண்டைமாலைகளாற் கட்டப்பட்டனவுமாகிய பசுபதியினுடைய சடைகள்[3] உம்மைக் காக்கவேண்டும். (1)
சிவபெருமான் தாண்டவம் புரியுங்கால் நந்தி தேவனால் முழக்கப்பட முரசொலியால் அழைக்கப்பட்டு வரும் குமரக்கடவுளது மயிலைக்கண்டச்சத்தால், தனதுடலைச் சுருக்கிக்கொண்டு, கயமுகக் கடவுளது நாசிப்புழையில் அவருடைய அரவம் களிப்புடன்[4] நுழைய, கன்னங்களினின்றும் பறந்த வண்டினங்களின் ஒலியால் திசைமுழங்கப் பிளிறொலியுடன் கூடிய அவரது முகத்தின் அசைவுகள்[5] உங்களை என்றும் காக்கவேண்டும். (2)
பிரமனது[6] கபாலங்களிற் புகுந்து தடைப்படுதலாற் பெருக்கமடைகின்றனவும், பல்வரிசைகளுட் புகுந்து சுழலுதலாற் கலகலவென வொலிக்கின்றனவும், கண்மூக்குச் செவிகளாகுஞ் சிறுபுழைகளுட் புகுதலாற் குமிழி செய்தொலிக்கின்றனவும் கன்னத்தில் அடிபடுதலாற் சிதறிய திவலைகளையுடையனவுமாகிய ஈசனுடைய வேணியணி கங்கையின் அலைகள் உங்களைக் காத்தல் வேண்டும். (3)
எந்தக்கண்ணினுடைய இமைகளின் செம்மைக்கு, மின்னற்குழு யாவும் ஒருசிறிதளவா அமையுமோ, சிறிது திறந்திருக்கும் எந்த அழற்கண்ணில் காலனாகிற இயமானன், உலகமனைத்தையும் ஓமஞ் செய்பவனாவனோ, அத்தகைய, சுவாலைகளான் மிகவுமெரிக்கப்பட்டு சடைமதியினின்றொழுகும் அமுதப்பெறுக்காற் சிறிது “சீத்” எனவொலிக்கும் கடைவிழியுடையதும் காமனையெரித்ததுமாகிய புராரியினுடைய நுதற்கண் உங்களைக் காத்தல் வேண்டும். (4)
நாந்தி[7]யின் முடிவில்
சூத்திரதாரன்[8] – போதும், போதும். உலகமனைத்துக்கும் விளக்கனைய கதிரவன் முற்றிலும் உதயமாயினான். ஆதலின் அவனைப் புகழ்ந்து வணங்குவேன். (வணங்கி) உலகையே தனதுருவமாகக் கொண்ட தேவனே! நீர் மங்கலவொளிகளுக்கு நிலைக்களனாகிறீர். எல்லா நன்மைகளையும் பயக்கும் நற்றிருவை யென்பால் நிலைப்படுத்தியருளவேண்டும். உலகபதியான பகவனே! உன்னை வணங்கியவென் தீவினையனைத்தயும் விலக்கி, மங்கலத் தொடர்புடை மங்கலங்களைத் தந்தருள வேண்டும். (5)
வேடசாலை[9]யை எதிர்நோக்கி
மாரிட[10]! அரங்கமங்கலங்கள் சீர்பெறச் செய்யப்பட்டுள்ளன. காலப்பிரியநாதனாகிய[11] சிவபெருமான் பவனி விழாக் காரணமாக மக்கள் பலதிசையானும் வந்து குழுமியுள்ளார். பரத நூல் வல்லுனராகிய நமது நடிகர் அதனைப் பொருட்படுத்தாதிருத்தலென்னை? இதுபொழுது “நீ புதியதொரு நாடகத்தை நடித்து எங்களையின்புறுத்துக” என அறிஞரவையினாற் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆதலின் அவராற் குறிக்கப்பட்ட குணங்கள் நிறைந்த ஒரு சரிதத்தை நடித்து அவரை யின்புறுத்துவோமாக.
நடன் – (பிரவேசித்து) பாவ[12]! பல்கலையுணர்ந்த பெருமைசாலாரிய[13] மறையவர் எடுத்துக் கூறும் அக்குணங்கள் யாவை?
சூத்திர – பெரும்பாலுமறிதற்கரிய[14] இரசங்களுடைய பிரயோகங்களும் இயற்கையன்பினால் அழகு பொருந்திய செயல்களும், பெருந்தன்மையும்[15], நன்கு பொருந்திய காமசூத்திரமும்[16], வியக்கத்தக்க காதையமைப்பும்[17], சொல்திறனும், ஆகிய இவை அவர் கூறுங் குணங்களாம். (6)
நடன் – பாவ! அத்தகைய குணங்கள் நிரைந்த நாடகம் புலப்படுவதரிதாகலின் அஃது எங்ஙனமுளது?
சூத்திர – (ஆலோசித்து) நினைவு கூரப்பட்டது; தக்கண தேயத்தில் பதுமபுரமென்னும் பதியுளது. அதில் தித்திரசாகையினரும்[18], பந்திபாவனரும்[19], காசியபருடைய கோத்திரவழி வந்தாரும், ஐந்தங்கி[20]வழிபடுவாரும், சோமரசம்[21] பருகுவாரும், அநுட்டானவொழுக்கமுள்ளாரும் உதும்பரமென்னும் பெரியகுலத்தாரும் ஆன்மஞானிகளுமாகிய சில மறையவர் உளர்.
அத்தகைய சுரோத்திரியர்களான[22] அவர் ஐயமற உண்மைப்பொருள் தெளிதற்பொருட்டே எஞ்ஞான்றும் நிலைத்த கல்வியிற் கேள்விமுயலுகின்றனர். இட்டம்[23], பூர்த்தம்[24], இவற்றைச் செயற்கருதியே பொருளையும், மகவு கருதி மனையையும், தவங்கருதி ஆயுளையும் பெறவிரும்புகின்றனர். (7)
அக்குடியிற் பிறந்த பெருமைசால்பட்ட கோபாலனுடைய பேரனும், தூய புகழ் படைத்த நீலகண்டர், சாதுகருணியென்னு மிருமுது குரவர்க்குமுதித்த நற்புதல்வரும், இலக்கணம், மீமாஞ்சை, தருக்க முதலிய நூல்களையுணர்ந்தவரும், சிரீகண்டரெனு மியற்பெயரியராய்ப் பவபூதி[25]யெனப் புகழ்படைத்தவருமாகிய தனிக் கவியொருவர், முற்கூறியாங்கு குணநல நிரம்பியதாய்த் தாமியற்றிய நாடகத்தை நம் போலிய நடிகர் பாலியற்கையன்பு கொண்டு நம்பாலிட்டனர்.
எந்த நாடகத்தில் இவ்வுரை நடை மிளற்கின்றதோ!
(8) “இந்த நமது நாடகத்தையிகழ்ந்து[26] பேசுமொருசிலர் அறியும் பொருள் யாதெனவுரைத்தலரிது; ஆதலின், அவர் பொருட்டு எனது முயற்சி பொருந்தாது. இவ்விரு நிலத்தின்கண் முடிவற்ற காலத்தில், என்னை நிகர்த்த ஓரரும்பெரும்புலவர் ஒரோவிடத்துண்டாதல் கூடும்.”
ஆதலின், “அந்நாடகத்தை நடித்தற் பொருட்டு வாச்சியங்களுடன் கூடிய ஆடல்பாடல்களிலும், வேடம் பூட்டலிலும், நீவிர் ஊக்கமுறல் வேண்டும்” என இசைபாடுவோரிடம் கூறுவாயாக. ஆக்கியோன் பெருமையைத் தாமே வருமாறு கூறியுள்ளார்.
தகைமைசேர் “ஞானநிதி”[27]யென்னும் எனதாசிரியர், அவர்தம் அறிவின் றிறனால் அப்பெயர் காரணப்பெயராவமையப்பெற்றாரெனின், அவருடைய குணங்களைப் புகழ்தலால் அவரது மாணவனாகிய இவனது குணங்களும் வெளிப்படும். (9)
மேலும்; “வேதம், உபநிடதம்[28], சாங்கியம்[29], யோகம்[30] ஆகிய இவற்றின் பயிற்சியால் அறிவு நிரைந்தவன்” எனப்புகழ்ந்து கூறுவது பயனற்றதாகும்; ஏனெனில் அவையிந்நாடகவியலுக்கு யாதொரு பயனும் பயக்கமாட்டா. கொண்ட பொருளை யுணர்த்துந் திறனும், ஓசையுடைமையும்[31], ஆழமுடைமை[32]யும், சொற்களுக்கு அமையுமாயின், அவ்வமைப்பே கலைவன்மை[33]க்கும் கவிவன்மைக்குந் தோற்றுவாயாகும். (10)
நடன் – வேடவுறுப்புக்களியாவுந் தன்னடிகர்களுக்குத் தம்மால் நன்கு பயில்விக்கப்பட்டுள்ளன. புத்த மதத்தைச் சார்ந்து துறவறம் பூண்ட கிழமைப்பருவத்தளான காமந்தகியின் முதல் வேடப்பகுதியைத் தாங்களே பயின்றவர். யானுமவன்தன் மாணவியாகிய அவலோகிதையின் வேடத்தைப் பயின்றவன்.
சூத்திர – அதனால் என்னை?
நடன் – இந்நாடகத்தின் றலைவனும், மாலதியின் மணாளனுமாகிய மாதவனது வேடத்தைப் புனைதல் யாங்ஙனம் அமையுமென்பது எனது ஐயப்பாடு.
சூத்திர – கலகஞ்சன், மகரந்தன், இவர் பிரவேசிக்கும் அமையமே மாதவனது பிரவேசமாதலின், இங்கு அதைச் சிந்தித்தல் வேண்டாம். ஆதலின் யாவும் நன்கு அமைக்கப்பட்டுள்ளனவேயாம்.
நடன் – ஆயின், அந்நூலை நடித்து இவ்வவையினரை யின்புறுத்துவோமாக.
சூத்திர – ஆம் அங்ஙனமே செய்வோம். இதுபொழுதே யான் காமந்தியாயினேன்.
நடன் – அங்ஙனமே யானுமவலோகிதை.
என்றுரையாடிச் சென்றனர்.
பிரத்தாபனை[34]
உட்புகுதலை நடித்து காஷாயச் சீலையுடுத்திய வேடம் பூண்டு இருக்கை நிலையிற் பிரவேசிக்கின்றனர்.
காம – குழந்தாய்! அவலோகிதையே!!
அவ – பெரியோய்! கட்டளையிடல் வேண்டும்.
காம – மங்கலனிறைந்தவரும்[35], பூரிவசு[36], தேவராதன்[37] இவர்களது மக்களும் ஆகிய மாலதீ[38]மாதவற்கு விரும்பத்தக்க[39] திருமணவினை யாங்ஙனங் கூடும்.
(களிப்புடனிடக்கண் துடித்தலை நடித்து)
எனதுள்ளக் கிடக்கையினுண்மையையறிந்து எதிர்கால நலத்தை வெளியிடுவது போன்ற கண் வாமமாயினும்[40], தாட்சிண்யத்தையடைகிறது.[41] (11)
அவ – பெரியோய்! தங்களுடைய இம்மனக்கவலை மிகையே!! இது விந்தையினும் விந்தை; சீரசீவரத்தை[42] யுடுத்துமியல்புடையாரும், ஐயமேற்றுண்டு[43] வாழ்வாருமாகிய துறவுநிலையிலுள்ள தங்களையும், அமைச்சர் பூரிவசு, இத்தகைய துன்பந்தருஞ் செயல்களில் நியமனஞ் செய்கிறார். தாங்களும் இன்னிலையிடரை[44] வலிந்திருக்கும் நன்முயற்சிகளையுமிவண்பாற் படுத்துகின்றீர்கள்.
காம – இங்ஙனங் கூறலாகாது. பூரிவசு என்னுமப்பெரியார், செயற்குரிய விடயத்தில்[45] என்னை நியமித்தானென்பது; நட்பின் பயனும், அன்பின் பிழம்புமாகும். ஆதலின், நம்மித்திரன் பெறவிரும்புமது, எனதுயிரானும் அல்லது அதனிற் சிறந்த தவத்தானும், அவர்கைவரப்பெற்றிடின் அதுவே எற்குச் சிறந்த செயற்பயனாம்.[46] (12)
இதனை நீ யறிந்திலையோ! கல்விபயிலும் பொருட்டுப் பலவிடத்தும் எங்கட்குடனிருக்கை நிகழ்ந்த அக்காலம், நமது சௌதாமினியின் முன்னிலையில், பூரிவசுதேவராதன் இவர்களுக்கு “நம்மால் மக்களின் றிருமணத்தொடர்பு கட்டாயஞ் செய்யத்தக்கது” என ஓர் உறுதிப்பாட்டை யானே செய்வித்தேன். அது கருதியன்றே இப்பொழுது விதர்ப்ப நாட்டரசனது மந்திரியான தேவராதன் தன் மகன் மாதவனை யான்வீட்சிகீயைப்[47] பயிலுதற்பொருட்டு குண்டின நகரத்தினின்றும் பதுமாவதிப்பதிக்கு அநுப்பியப் பிரதிக்கினையை நிறைவேற்றினான். ஆதலின்
(13) மக்கள் மணவினைகுறித்த இவ்வுடன்பாடும் அன்பிற்சிறந்த நண்பனாகிய பூரிவசுவுக்கு நினைவுறுத்தப்பட்டதுடன், அவரையூக்கற்[48] பொருட்டும், தன்மைந்தனும் உலகில் ஒப்புயுர்வற்ற குண நலனிறைந்தவன் எனவும், வெளியாக்கப்பட்டான்.
அவ – அமாத்தியன், மாலதியை மாதவனுக்கு ஏன் தானே மணஞ் செய்வித்தல் கூடாது? எது கருதியிக்களவு மணத்திற்றங்களைத் தலைப்படுத்துகின்றார்?
காம – அரசனுடைய காமத்துணைவனாகிய நன்தனன் என்பான் அவ்வரசன் மூலமாக மாலதியை மணக்க விரும்பி யவளைக் கோறுகின்றான்; அதனை வாய்மொழியாக மறுத்திடின் அரசன் சினமுறும். ஆதலின் இவ்வுபாயம்[49] நலம் பயப்பதாகும். (14)
அவ – என்னே! என்னே!! அமாத்தியர் மாதவனது பெயரையு மறிந்திலராய் அவனிடத்து விருப்பமற்றவராகவே காணப்படுகிறார்.
காம – குழந்தாய்! அது பாசாங்கடியாகும்[50]. அங்ஙனமே, மாதவனும் மாலதியும், வாலிபராதலின்[51] வெளிப்போந்த மெய்ப்பாட்டுக் குறியினராயினும் தங்கள் மனப்பான்மையைப் பெரிதும் மறைத்தல் வேண்டும். (15)
இக்குழந்தைகளின் காதற் செய்தியை உலகமறியும்; அதனால்[52], அரசனையும் நந்தனனையும் வஞ்சித்து நாம் நலம் பெறுதலெளிதே.(16)
பார்! அறிந்த ஒருவன்[53] பிறிதொரு செயலில் முயன்றவன் போல எவ்வாற்றானுந்[54] திறலமைந்து அழகு பொருந்தப் பேசுமியல்பினனாய், பிறராலூகித்துணரத்தக்க மிக நுண்ணிய தன் செயல்களையு மவரறியாவண்ணம் மறைத்து, யாவரையுந் தந்திரத்தான் வஞ்சித்து, நடுவன் போலக் காணப்பட்டுத் தனது பொருளைச் சாதித்துக் கொள்வானும், அவண் மோன நிலையை யெய்துவானுமாவன். (17)
அவ – தங்கள் கட்டளைப்படியானும் அந்தந்த முறை[55]யாகக் கூறிப் பூரிவசு மந்திரத்தை யணித்துள்ள[56] இராச வீதியில் மாதவனை நடமாடச் செய்தேன்.
காம – மாலதியினது செவிலித் தாயின் புதல்வி[57]யான இலவங்கிகையினால் மேல்வருஞ் செய்தி யெற்குக் கூறப்பட்டது.
“அருகிலிருக்குமிராச வீதியில் அடிக்கடி நடமாட்டஞ் செய்யும் மாதவனை, மாலதி தனதில்லத்தின் மேன்மாடத்தமைத்திருக்குஞ் சாலேகத்தின் வாயிலாகப் புதிய மன்மதனை[58] நோக்கும் இரதிதேவி போல அவனைப் பலகாலும் கண்டு வேட்கைப்பெருக்குண்டு[59] அதனால் நைந்துருகும் மெல்லிய தன் அவயவங்களுடன் வருந்துகின்றாள் என்று. (18)
அவ – உண்மையே! அதுபற்றியே, காமநோயைத் தணித்தற்பொருட்டு மாலதியாலெழுதப்பட்ட மாதவனது வடிவத்தை, யிலவங்கிகை யிப்பொழுதே மந்தாரிகையினிடம் கொடுத்தனள்.
காம – (ஆலோசனை செய்து) நன்கு செய்தனள் இலவங்கிகை! மாதவனது அடிமையாகிய கலகஞ்சன் புத்தராலயத் தாதியாகிய மந்தாரிகையை மணக்க விரும்புகின்றான். ஆதலின் இங்ஙனஞ் செய்யின், மாலதியின் றிருமணமினிது நிறைவேறுதற் கேதுவாக இப்படிவம் மாதவன்பாற் சேரும்; என்பது அவள் கருத்து.
அவ – மாதவனுக்குப் பேரவா விளைவித்துக் காமவிழா நிகழும் பூந்தோட்டத்திற்கு இன்று காலைப்பொழுதிலவனை யனுப்பியுள்ளேன். அங்ஙனம் மாலதியுஞ் செல்லுவாள். ஆதலின் அங்கு ஒருவர்க்கொருவர் காட்சியும் நேரும்.
காம – நல்லது குழந்தாய்! நல்லது!! யான் விரும்பத்தக்க இப்பெருமுயற்சியால் எனது முதன் மாணவி சௌதாமினியை நினைவுறுத்துகின்றாய்.
அவ – பெரியோய்! அச்சௌதாமினி வியக்கத்தக்க பல மந்திர சித்தி பெற்றவளாய், இதுபொழுது சிரீபரூப்பதத்தில் காபாலிக விரதத்தை யநுட்டிக்கின்றாள்.
காம – இச்செய்தி யெங்ஙனம் நீயறிந்தனை?
அவ – இந்நகரத்தின் முதுகாட்டிற்கருகில் கராளை யென்னுங் காளி கோயில் உளது.
காம – ஆம் அக்காளி தேவீ உயிர் பெலியில் விருப்பமுள்ளவள் எனப் பிடிவாதிகளின் வழக்குமுளது.
அவ – அந்தச் சிரீபரூப்பதத்திலிருந்து வந்து இதற்குச் சமீபித்திருக்கும் அம்முது காட்டிற்றங்கி தலையோடுகளைத் தரித்துக் கொண்டு மந்திரசித்தி செய்யும் அகோரகண்டன் என்பவனுடைய சிறந்த மாணவியாகிய கபாலகுண்டலை யென்பாள், மாலைப்பொழுது தோரும் இங்கு வருவாள். அவள் கூற இதனை யான் அறிந்தேன்.
காம – இவையாவுஞ் சௌதாமினி யானிகழ்ந்தனவென ஊகித்துணரக்கிடக்கின்றன.
அவ – இவனைக் குறித்துப் பேசியது போதும். பெரியோய்! மாதவனைப் பிரியாது உடனிருக்கும் வாலிப நண்பனாகிய மகரந்தனும், நந்தனனுடைய சகோதரி மதயந்திகையை மணப்பானாயின்; அதுவும் மாதவனுக்கு இரண்டாவது விருப்பம் நிறைவேறியதாகும்.
காம – அதிலும் எனதன்பிற்குரிய தோழி புத்தரக்கிதை முன்னரே யென்னால் நியமனஞ் செய்யப்பட்டுள்ளாள்.
அவ – அறிவிற் சிற பெரியோய்! நன்கு செய்தமைத்தீர்கள்.
காம – இனி எழுக; மாதவன் செய்தியைச் சென்றறிந்து மாலதியையே காணுவம்.
(என எழுகின்றனர்)
காம – (ஆலோசித்து) மாலதியோ பிறர் அறிதற்கரிய ஆழ்ந்த கருத்துடையவள். ஆதலின் இதிற் சிறந்த தூதையமைத்து இம்முயற்சியைச் சிறப்புறச் செய்தல் வேண்டும். முற்றிலும் மங்கலனிறைந்த மாலதி நற்குடிப் பிறந்த தன் காதலனை, யாம்பலை யின்புறச் செய்யும் சரற்கால நிலவுபோல இன்புறுத்துக. காளைப்பருவ மெய்து மவனும்[60] நற்பேறு பெறுக. இருவர்க்கும் ஒத்த குணங்களைப் படைக்கும் திறலமைந்த பிரமனது சிறப்புறுஞ் செயலும் நற்பயன் பெற்று யாவரானும் புகழத்தக்கதாகுக. (19)
(எனச் சென்றனர்)
விட்கம்பம்[61]
(கலகஞ்சன் ஓவியத்தைக் கையிலேந்திக்கொண்டு பிரவேசிக்கிறான்)
கலகஞ்சன் – காமனைப் பழிக்கும் கட்டழகினால் மாலதியின் மனப்பான்மையைக் கவர்ந்த மாதவனை யெங்குக் காணலாம்; (சிறிது சென்று) வாட்டமடைந்துள் ளேனாதலின், இப்பூம்பொழிலிற் சிறிது இளைப்பாறிய பின்னர் மகரந்தன் றுணைவனாகிய மாதவனைக் காண்பேன்.
(பொழிலுட்புக்கு உட்காருகிறான்)
(மகரந்தன் பிரவேசிக்கிறான்)
மகரந்தன் – மாதவன் காமற் பொழிற்குச் சென்றனன் என்று அவலோகிதை கூறினள்; ஆகுக; யானு மங்ஙனமே செல்வேன். (நடந்து நோக்கி) நந்துணைவன் இங்ஙனமே வருகின்றான். (கூர்ந்து நோக்கி)
(20) இவனிடத்து, நடை மந்தமாகவும் கண் சூனியமாகவும்[62] யாக்கை செம்மையற்றும்[63] நெட்டுயிர்ப்பமைந்து[64] மிருத்தற்குக் காரணம் யாதாயிருத்தல் கூடும்? இஃதன்றி வேறென்னை? உலகிற் காமனாணை யுலவுகின்றது; காளைப்பருவமுங் காமக்கவலையை விளைக்கின்றது; இயற்கையழகும் மனக்கவர்ச்சியும் பொருந்திய பொருள்களும்[65] மனவலியைக் கெடுக்கின்றன.
(இங்ஙனங் குறித்த நிலையின் மாதவன் வருகிறான்)
(21) மாதவன் – மதியன்னவழகொழுகு முகத்தவளை நெடிது நோக்கி, யெனது மனம், வெட்கத்தை விடுத்து விநயத்தைத் தடுத்து, தன்வலியைக் களைந்து முதற்கட் பார்வையிலேயே, தக்கவின்ன தகாதனவின்ன, என்னும் உணர்வற்றுக் கூற வொண்ணாது மாறுபடுகின்றது.
(22) விந்தை! அவள் முன்னிலையில், எந்த எனது மனம், ஒப்புயர்வற்ற வடிவழகைக் காண்டலின் உண்டாம் மகிழ்ச்சியால் வியந்தசைவற்றதும், இதனிலும் அறிதற்குரிய பொருள் பிறிதொன்றுமில்லை யென்றே கருதுவதும், அமுதக் கடலின் மூழ்கியாங்கு, களிப்பெய்திப் பிற செயலற்றதும் ஆயினதோ! அம்மனமே, அவள் இல்லாதொழிந்துழியழற்சுட்டாங்கு வருந்துகின்றது.
மகரந்தன் – (மாதவன் பக்கலணுகி) நண்ப! மாதவ! நண்பகல் வருத்துகின்றது; ஆதலின் இவண் வருக; இப்பொழிலிற் சிறிது நேரம் அமர்வோம். (இருவரும் செல்லுகின்றனர்)
கலகஞ்சன் – மாதவனும், அவர்க்குத் துணைவரான மகரந்தனும் இப்பொழிற் கணிகலனாயிங்ஙனமே யிலங்குகின்றனரா? காமவேட்கையான் வருந்தும் மாலதியை யின்புறுத்து மிவர்படிவத்தை யிவர்க்குக் காட்டுவேன்; அன்றேல், இவரிளைப்பாறிச் சுகமுறுக; பிறகு காட்டுவேன்.
மகரந்தன் – அப்பொழுதலர்ந்த மலரிதழ்களின், துவர்த்துக்[66] குளிர்ந்த நறுமணங் கமழு மிச்சோலையிற் சாம்பேயத் தருவினடியிலமர்வோம்.
(இருவரும் அங்ஙனமே யிருக்கின்றனர்)
மகரந்தன் – அன்ப! மாதவ! நகரமகளிர் யாவரானும் நிகழ்த்தப்பட்ட விழாக்காணும் பொருட்டு அழகிய காமற்பொழிற் சென்றுவந்த வுன்னை, அயலானைப் போலவே யான் கருதினேன்; அங்குக் காமற்கணைக்கு நீ யிலக்காயினையோ?
(மாதவன் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறான்)
மகரந்தன் – (நகைத்து) செவ்விய மரைமலரனைய நினது வதனத்தை, யேன் குனித்து நிற்கின்றனை? பார்.
(23) உலகம் படைத்த பிரமனிடத்தும், சிவபெருமானிடத்தும், மயக்கமுற்றிய ஏனைய உயிர்களிடத்தும், ஒத்த செயலமைந்த அச்சித்தசன் பெருமைப் பிரசித்தமே; ஆதலின், நாணத்தாற் றன்னுள்ளக் கிடக்கையை மறைக்க முயலுதல் வேண்டாம்.
மாதவன் – அன்ப! உன்னிடங் கூறத் தகாததென்னே? கேள்; யான் அவலோகிதையால் ஆவலுற்றுக் காமற்கோயிலெய்தினேன். அங்குத் தேமணங்கமழ்தலின், வந்து கூடும் வண்டினங்களான் மொய்க்கப்பட்ட அரும்புகளையே யலங்காரமாகவுடையதும் அக்கோயிலின் வெளிப்புறத்தில் அழகுற விளங்குவதுமாகிய இளம் மகிழ்த்தருவின் பாத்தியின் பக்கத்தில் அமர்ந்தேன்; அங்கு நெருங்கி வீழ்ந்த மலர்களை இயல்பானெடுத்துத் தொடுத்தற்கு முயன்றேன். அவ்வமயம், வாலைப்பருவத்திற்குரியதாய் அழகுபடச் சிறந்திலங்கும் வேடத்தைப் பூண்டிருத்தலான், உய்த்துணரத் தகுங் குமரியாந்தன்மையுடையவளும், பெருமை சாலியல்புடையவளும் ஆகிய ஒரு மடந்தை, திறமை வாய்ந்த சேடியருடன் அக்கோயிலினின்றும் வெளிப்போந்து, மூவுலகையும் வென்ற காமதேவனது வெற்றிக்கொடியே வடிவெடுத்து வருவது போல எனதிருக்கையே நோக்கி வருவாளாயினள்.
(24) அவள், இலாவண்ணிய நிலைக்களத்திற்கு அதிகார தேவதையும், அழகின் குழுவுக்கு உறைவிடமும் ஆவள். நண்ப! அவளைப் படைத்தலிற் காமன் கருத்தாவும், சந்திரகலையுந் தாமரைத் தண்டும் நிலவும் கரணமுமாக அமைவனவாம்.
மேலும், அவளது அன்புடைமைக்குரியாரும், பூக்கொய்தற் கேளியில் விருப்பமுடையாருமாகிய சேடியரான், வேண்டப்பட்டு, அவள் அம்மகிழயே நாடிவந்தனள். நல்வினைப் பயனெய்து மொருவனைக் குறித்து நாளடைவில் வேறூன்றிய காமவேட்கையை யான் அவளிடத்துக் கண்டேன். ஏனெனில்;
(25) இம்மாலதி யினுடலம், தேம்பிய தாமரைத் தண்டென வாடியது; சூழ்தரும் பாங்கியின் பரிவுறூஉஞ் சொற்களானீராடன் முதலிய செயல்களில் இவள் வருந்தியே முற்படுகின்றாள்; அன்றிறுத்த கரிக்கோடெண்ணக் கவினுறுங்கபோலம், மறுவிலா மதியினெழினலத்தை யெய்தியது. அவயவங்கள் நீரைப் பிறிந்த தாமரைத் தண்டு போல வாடியமையும், சேடிகளது இன்சொற்களான் ஒவ்வொரு செயலையும் அவள் தளர்ந்து புரிதலும், அன்றிருத்த யானைமருப்பென வெளிறிய கபோலம் மறுவிலா[67] மதியினொளியை வீசுதலுமாகிய இவை, அவளது காமவேட்கையை அறிவுறுத்தா நிற்கும். யான், அவளைக் கண்டது முதல் அமுத மை தீட்டுந் தூலிகை போல அவள் எனது கண்களுக்கு எல்லையற்ற இன்பத்தை விளைத்து இரும்பைக் காந்தம் போல என்னுள்ளத்தைக் கவர்ந்து கொள்ளை கொண்டாள். மிகைபடக் கூறிடிற் பயன் யாது?
(26) எனது மனம், காமநோய்ப்பெருக் கெய்தியதன் பயனாக யான் உயிர் நீத்தற் பொருட்டே! காரணத்தை யாராய்ந்தறியாது, அவளைப் பின்பற்றி நிற்கின்றது; எல்லாம் வல்ல ஊழ்வினையே உயிர்களுக்கு நல்லவை, அல்லவை யிவற்றை யளித்தற்கு வலிதாகலின் யான் எய்தும் பயன் யாதோ அறியகில்லேன்.
மகரந்தன் – இயனட்பும்[68], செயனட்பும் எதிர்மறைப் பண்புகளாகலின், இவை யோரிடத்துப் பொருந்தா; பார்.
(27) அறிதற்கரிய மிக நுண்ணிய ஒரு ஏது, பொருள்களை ஒன்றுக்கொன்று சேர்த்தமைக்கின்றது. உலகில், பகலவன் றோன்ற மரைமலரலர்தலும், தண் கதிர்ச் செல்வன் விண்கணுதிக்கச் சந்திரகாந்தந்தாரை நீருகுத்தலும் இயல்பன்றோ? இனிப்பின்னுங் கூறுவாயாக.
மாதவன் – பின்னர் அவ்வமயம்,
(28) புருவனெரிதர, அவனேயிவனென்று நினைவு கூரறிவு[69]டையார் போல என்னை நோக்கியவளது காமக்கலை பயிலுந் தோழியராற் புன்முறுவலமுதொழுக ஒருவர்க்கொருவரே கடைக்கணிக்கப்பட்டனர்.
மகரந்தன் – (தனக்குள்) முன் றுய்க்கப் பெறாததொன்றில் நினைவு கூரறிவு யாங்ஙனம் அமையும்?
மாதவன் – பிறகு, அத்தோழிமார் கைகளைத் தூக்கிக் கொட்டி யார்ப்பரித்துழி, வளையலசைந்தொலிப்பவும், அச்சுறுமன்னப்பெடை நடைபயிலக் கலகலவென்னக் குலவு சிலம்பொலி கலந்திலங்கு மேகலைமணி யொலிப்பவும், இலீலையுடன்[70] றிரும்பிக் கோமகளே! நல்வினைப் பயனெய்தினராயினோம். யாவளுக்கோ! யாவனோ! ஒரு மணமகன் இங்கண் வதிந்துள்ளான்; என்று எற்குறித்து விரற்சுட்டிக் கூறினர்.
மகரந்தன் – அந்தோ! வேறூன்றிய முதற்காதலின் வெளியீடு.
கலகஞ்சன் – இவரைக் குறித்துக் கூறும் அம்மகளிருரை, பேரழகு பெரிதும் வாய்ந்துளது.
மகரந்தன் – பிறவும் கூறுவாயாக.
மாதவன் – (29) இதற்கிடையில் சொல்லொணா வியப்புடையனவும், நன்கு விளங்கும் விப்பிரமங்களை[71]யுடையனவும், மிக மலிந்த சாத்துவிகச்[72] செயல்களையுடையனவும், மனவுறுதியைக் கெடுப்பனவும், வென்றிசேரியல்புடையனவும், ஆகிய காமனையாசிரியனாகக் கொண்ட சிலகுறிகள் அவ்விசால விழியாளிடத்துக் காணப்பட்டன. மேலும்,
(30) அசைவற்று விரிந்தனவும், விளங்கும் புருவங்களை யுடையனவும், காதனிறைந்து குவிந்தனவும் கடைவிழி விரிந்தனவும், யானவளை நோக்குழிச் சிறிது கடைகுவிந்தனவும், ஆகிய அம்மடவரலின் பார்வைகளுக்கு யான் பல்வேறு பாத்திரனாக[73] ஆயினேன்.
(31) அலசம்[74], வலிதம், முத்தம், சினித்தம், நிட்பந்தம், மந்தம் என்னும் வடிவினவும், மீக்கூர்ந்[75] துள்ளெழும் வியப்பினால் விரிந்த[76] கருமணிகளையுடையனவும் மீதூர்ந்தியைந்த[77] இமைகளையுடையனவும் ஆகிய அவளது கடைவிழிகளால்[78] எனது மனம் வேறு பற்றுக்கோடற்றதாய்க்[79] கவரப்பட்டும்[80], புண்படுத்தப்பட்டும், பருகப்பட்டும், அழிக்கப்பட்டும் ஆயது.
எல்லாவற்றானும் என் மனதைக் கவர்ந்த அப்பெண்மணி மருங்கில், அவளது குணத்தைக் கண்ட யான் அவள் வயத்தனாயினும் அமைதியின்மையை மறைத்தற் கெண்ணி, முன்றொடங்கிய மகிழ மாலையினையே மீண்டும் மிக முயன்று தொடுத்தேன். பின்னர், வயது முதிர்ந்த ஆடவரடிமைகள் கையிற் பிரம்பேந்திப் புடைசூழ, அவள் பெண்யானை மீதமர்ந்து நகர் செலும் வழியிற் போந்தனள்.
(32) செல்லுங்கால் அடிதொறுங் கழுத்தைத் திருப்பிப்பார்த்தலாற், காம்பிழந்த கமலம் போன்ற முகத்தையுடைய அப்பெண்ணால், அவளது கடைவிழி, அமுதத்தினும், விடத்தினுங்[81] தோய்க்கப்பட்டு எனது இதயத்தில் வலிந்து பதிக்கப்பட்டது போல இருந்தது. அது தொடங்கி.
(33) இத்தன்மைத்தென அளவுபடுக்கத் தகாததும், எல்லாவுரைநடையானும்[82] குறிப்பிடத்தகாததும், இம்மையினுதுகாறுந் துய்த்தற்கரியதும், பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பெருமயக்களித்ததும் ஆகிய காமக் கவலை, யெனதுள்ளத்தைச் சடமாக்கித்[83] தாபத்தையும்[84] வளர்க்கின்றது.
மேலும்;
(34) புலன்கள் பொறிமுன்னிருப்பினும், இஃதின்னதென்று அளந்தறியக்கூடவில்லை. நன்கு அறியப்பட்ட தொன்றிலும் மாறுபட்ட தோற்றமும் எழுகின்றது. நளிரிருமோடையினும், குளிர்மிகுமிந்துவினும் வேட்கைத் தணியற்பாலதன்று. மனம், ஒரு நிலையற்றதாய் விரைந்தலைந்து எதனையோ சிந்தித்தொழிகின்றது.
கலகஞ்சன் – உறுதியாக இவர், யாவளாலேனுங் கவரப்பட்டவராதல் வேண்டும்; அங்ஙனமிவரைக் கவர்ந்தவள் மாலதியாயின் நலனே!.
மகரந்தன் – (தனக்குள்) அந்தோ! விதனம்! எனதன்பனை யிதினின்றும் யாங்ஙனந் தடைப்படுத்துவேன். அன்றேல்;
(35) காமன், உன்னகத்தே பிறந்து உன்னை மயக்கல் வேண்டாம்! உனது சீறிய அறிவும் மாசுறுங் காமக்கவலை வயத்ததாய்தல் வேண்டாம்! தெரியில்; இத்தகைய நன்மொழி யாவும் பயனற்றனவேயாம்[85]. ஏனெனில், காமனுங் காளைப்பருவமுமிவன்பாற் பெருமித வேட்கையைப் பயக்குமியல்பின.
(வெளியீடாக)
அன்ப! அம்மடவரலது குலமும் பெயரும் அறியப்பட்டனவா?
மாதவன் – கேள்! அவள் பிடிமீதமருமமயத்திலே அவளது தோழிக் குழுவினொருவளாகிய தாசியொருத்தி பின்றங்கிப் பூக்கொய்தன் முறை பற்றி எனதருகு வந்து, தலைமலரணிதலே தலைக்கீடாக என்னைக் கைகூப்பி வணங்கி, பெருந்தகைப் பெரியோய்! இத்தொடர் நற்குண மியைதலிற்[86] பொற்புறுகின்றது. நங்கோமகளிதிற்[87] பேரவாவெய்தினள். பூவிற் செயலதிற்[88] புத்துருவாகி விசித்திரமே யாதலின் மாலைச்[89] செயற்றிறன் மாணலமெய்துக; படைப்பினணியும்[90] பயன் பெறுக; என்றுங்குன்றா மன்றன்மாலையும்[91] இவளது கண்டத் தணியாம் பெருவிலை பெறுக; என்று கூறினள்.
மகரந்தன் – அவளது சொல்லமைப்பு மிக்க வியக்கத்தக்கதே.
மாதவன் – இவளது திருநாம மென்னை? இவள் எக்குடிப்பிறந்தவள்? என யானவளை வினவ, அவள் அமாத்திய பூரிவசுவின் புதல்வி, மாலதியென்னுந் திருநாமம் பூண்டவள் என்றும், தானும் அவளது அருளுடைமைக்குரிய செவிலித்தாயின் மகளான இலவங்கிகை யென்றுந் தெரிவித்தாள்.
கலகஞ்சன் – மாலதியென்றா தெரிவித்தாள்! ஆனந்தம்! மலர்க்கணைத் தேவனும், மகிழ்வுறும் நாமும் வெற்றி பெற்றோம்.
மகரந்தன் – (தனக்குள்) அமாத்திய பூரிவசுவின் புதல்வி யென்னுமாத்திரையில் இவள் வெகு மதித்தற்குரியளல்லள்; அன்றியும், மாலதி! மாலதி! யென்று காமந்தகியும் அவளை நாளும் புகழ்ந்து வாழ்த்துகின்றாள். அம்மாலதியை அரசன்றன் காமத்துணைவன் நந்தனன் பொருட்டுக் கோருகின்றான் என்ற உலக வதந்தியுஞ் செவிக்கேறுகின்றது.
(வெளியீடாக) பிறவுங் கூறுவாயாக.
மாதவன் – அவள் அம்மாலையினைப் பெற விரும்பி மீண்டுங் கோரினமையின், அதையென் கண்டத் தினின்றுங் கழற்றி யவள் பொருட்டுக் கொடுத்தேன். அம்மாலை, மாலதியின் வதனத்தைக் கண்ட மேற் கைநடுக்கமுற்றுத் தொடுக்கப்பட்ட சிலபாகம், சீர்மையற்றிருப்பினும், இவள் ஆழ்ந்த நோக்கத்துடன் அத்தொங்கலை மிகப்புகழ்ந்து பெருமைசால் அருட்பேறென்ன அதனை யேற்றுக்கொண்டனள். பிறகு, எஞ்சிய விழாவை நடாத்தற் பொருட்டுக் குழுமிய பட்டணத்து மக்களின் நெருக்கடியால் அவள் என்னிற் பிரிந்த பின்னர், யான் இவணெய்தினேன்.
மகரந்தன் – அன்ப! மாலதியின் காதற்குணமும் அறியக்கிடக்கின்றமையின் இது பொருத்தமே. கபோலம் வெளிறுபடன் முதலிய எந்தக் காதற்குணங்கள் உன்னாலறியப் பட்டனவோ! அவை யாவும் நினதடியாக நிகழ்ந்தனவென்பது வெள்ளிடைமலை. முன்னர், அம்மாலதியால் யாங்ஙனம் நீ காணப்பட்டாய் என்னு மிஃதொன்றே அறியக் கூடவில்லை. ஊழ்வினைப் பயனால் நற்பிறப்பெய்தினரும் ஒரேவிடத்து மனப்பற்றுள்ளாருமாகிய அத்தகைய மகளிர், பிறிதொருவரைக் கண்ணெடுத்தும் பாரார். மேலும்;
(36) தோழிமார் ஒருவர்க்கொருவரை கடைக்கணித்து “யாவளுக்கோ யாவனோ கணவன் இங்கு வதிந்துள்ளான்” என்னு மப்பாங்கியரறிவிப்பும், உன்னிடத்திற் பொருந்திய அம்மாலதியின் முதற் காதற்குறிப்பாகும்;
மாதவன் – மற்றும் வேறென்னை!
மகரந்தன் – செவிலித்தாயின் மகள் இலவங்கிகையின் அகப்பொருட் பொருந்தியவுரையுமாம்.
கலகஞ்சன் – (நெருங்கி) இஃதும் (என்று படிவத்தைக் காண்பிக்கின்றான்)
(இரு பேரும் பார்க்கின்றனர்)
மகரந்தன் – கலகஞ்ச! மாதவனது இப்படிவம் யாவரால் வரையப்பட்டது?
கலகஞ்சன் – இவரது மனம் யாவராற் கவரப்பட்டதோ!
மகரந்தன் – இது மாலதியினால் வரையப்பட்டதா?
கலகஞ்சன் – ஆம்.
மாதவன் – நினது ஊகம்[92] தெளிவுற்றதேயாம்.
மகரந்தன் – கலகஞ்ச! உனக்கு இப்படிவம் எங்ஙனம் கிடைத்தது?
கலகஞ்சன் – எனக்கு மந்தாரிகையிடத்திருந்தும், அவளுக்கு இலவங்கிகையிடத்திருந்தும்.
மகரந்தன் – மாதவனது ஓவியத்தை மாலதி வரைந்தமை, யாது பயன் கருதியென்று, மந்தாரிகை கூறியுள்ளாளாயின் உரைத்திடுக.
கலகஞ்சன் – காமவேட்கையைத் தணித்தற் பொருட்டென்று கூறினாள்.
மகரந்தன் – அன்ப மாதவ! தெளிக;
(37) எவள் உனது கண்களுக்கு நிலவாய் அமைந்தனளோ! அவளது உறுதியான காதற்கு நற்பிறப்பெய்திய நீயும் நிலைக்களனாக ஆகிறீர். நண்ப! அவளது புணர்ச்சியில் ஊழ்வினையும், காமனும் வலிந்து முயல்கின்றனராதலின் அதிற் சிறிது மையமில்லை. உன்னை காமக் கவலைக் குட்படுத்திய அவளது வடிவழகுங் காணத்தக்கதேயாதலின், இங்ஙனமே யவள்படிவத்தையும் வரைக.
மாதவன் – அன்பன் விரும்பியவாறே செய்வேன்.
(வரைகிறான்)
நன்ப! மகரந்த!
(38) எழுகின்ற கண்ணீர்ப்பெருக்கு எனது கண்களை அவ்வப்பொழுது மறைக்கின்றது. உடலும், அவளது உருவெளித்தோற்றத்தான் விளையுஞ் சாட்டியத் தானிலைப்படுகின்றது. எனது கரமும் யானவளைக் கருத்துட் கொள்ளுந்தொறும் வியர்த்து இடையறா நடுக்கமுற்ற விரல்களையுடைத் தாகிறது; என் செய்வேன். ஆயினும் கூர்ந்து நோக்கியே வரைவேன்.
(எனக் காலந்தாழ்த்தெழுதிக் காண்பிக்கிறான்)
மகரந்தன் – (ஓவியத்தை உற்று நோக்கி) நம்தம் நண்பனது காமவேட்கை மிகப்பொருத்தமே (ஆவலுடன்) சுருங்கிய நேரத்திலிவனாலொரு கவியும் இயற்றப்பட்டதே! (படிக்கிறான்)
(39) இயலழகு பொருந்தியனவும், பிரிந்தோரைத் தன்வயப்படுத்துவனவும், ஆகிய உவாமதி முதலிய அவ்வப் பொருள்களும், மாலதியன்றி மனங்கவரும் பிற பொருள்களும் உலகினுள்ளனவே; ஆயினும், கண்களுக்கு நிலவெனத் திகழுமிவள் எனது கட்பொறிக்குப் புலனாயினள்; என்னுமிஃதொன்றே இம்மையிலெற்குப் பெருவிழாவாகும்.
(பிரவேசித்து)
மந்தாரிகை – கலகஞ்ச! கலகஞ்ச! திருட! திருட! அடிச்சுவடிற் பிடிபட்டனை. (வெட்கி) என்னை! அப்பெரியோரும் இங்ஙனமே யுள்ளார்களா! (அவரருகிற் சென்று) வணங்குகின்றேன்.
இருவரும் – மந்தாரிகே! இவண்வருக.
மந்தாரிகை – கலகஞ்ச! ஓவியத்தைக் கொணர்க.
கலகஞ்சன் – இதனைப் பெறுக.
மந்தாரிகை – யாவரால் யாது குறித்து மாலதி யிங்கு வரையப்பட்டனள்?
கலகஞ்சன் – மாலதியால் யாவர் யாது குறித்து வரையப்பட்டனரோ; அவரால்
மந்தாரிகை – (களிப்புடன்) ஆனந்தம்! பிரமனது படைத்தற் றொழிற்றிறனும் பயனுடைத்து.[93]
மகரந்தன் – இப்படிவத்தைக் குறித்து உனது கணவன் கூறுவது உண்மையாகுமா?
மந்தாரிகை – பெரியோய்! ஆம்; அஃதுண்மையே.
மகரந்தன் – மாலதி, மாதவனை முன்னர் எவ்வழிக் கண்டனள்?
மந்தாரிகை – மேன்மாடத்திலிருந்து பார்த்தனள்; என்று இலவங்கிகை கூறுகின்றாள்.
மகரந்தன் – அமாத்தியரது இல்லத்தருகிலுள்ள தெருவிற் பலகாலும் உலாவியுள்ளோம்; ஆதலின் இது பொருந்தும்.
மந்தாரிகை – பெருந்தகைய காமதேவனது இத்திருவிளையாடலை[94] எனதன்புரிமைக்குரிய தோழி யிலவங்கிகையின்பாற் றெரிவித்தற்குத் தாங்கள் கட்டளையிடல் வேண்டும்.
மகரந்தன் – இது தக்க தருணமே; இஃதுணக்குச் செயற்குரியதேயாம்.
(மந்தாரிகை படிவத்தைப் பெற்றுச் செல்கிறாள்)
மகரந்தன் – நண்பகலும் கழிகின்றது; ஆதலின் வருக. இல்லத்திற்கே செல்வோம்.
(எழுந்து செல்கின்றனர்)
மாதவன் – இவ்வாறு யான் கருதுகிறேன்.
(40) செவ்விய நயனங்களையுடைய அம்மாலதியின் றாதியரால் காலைப்பொழுதில் அவளது கன்னங்களிற் செஞ்சாந்தினாற் றீட்டப்பட்ட அலங்காரங்கள், இப்பொழுது வியர்வைத் திவலைகளான் நனைந் தழிந்து, அவை விளக்கமற்றொழியும். மேலும்.
(41) மலர்ந்திலங்கு முகிழ் நிறைந்த குருந்தத்தினின்றிழி தரு, மரந்த மணங்கமழு மந்தமாருதமே! சிறிதியங்கு நாட்டத்தவளும், வலைந்திலங்கு மெய்யினளுமாகிய மாலதியைத் தழுவி, அங்ஙனமே எனதுறுப்புக ளொவ்வொன்றையும் தழுவுக.
மகரந்தன் – (தனக்குள்)
(42) மும்மைத்தாய தோடங்களின் மிகையான் மிகக்கொடிய கூடபாகலம்[95] என்னும் பிணியானது வேழத்தை விரைவிற் றுன்புறுத்தாங்கு, யாவரானுந் தடைப்படுத்தவியலாத காமனுஞ் சேயிளம் மேனியனாயிலங்கும் இம்மாதவனை, அந்தோ! பெரிதும் வருத்துகின்றான்.
ஆதலின் நம்மைக் காப்பவள் அப்பெருந்தகைப் பெரியாராகிய காமந்தகியே!
மாதவன் – (தனக்குள்)
(43) விரிந்தலர்ந்த சேயிதழ் பொற்கமலம் போன்றதும், என்னிற் பற்றுக்கோடுற்றுக் குறுக்கடியிற் றிரும்பு நாட்டமுள்ளதுமாகிய வதனத்தையுடைய அப்பெண்மணியை எனதருகிலும் முற்புறமும், பிற்புறமும், உட்புறமும், வெளிப்புறமும், நாற்புறமும் உருவெளித் தோற்றத்தானமைய, அவளைக் காண்கின்றேன்.
(வெளியீடாக)
அன்ப! இத்தருணம் எனது நிலைமை;
(44) என்னை வாட்டமுறச் செய்யுஞ் சொல்லணா வுடலெரிவு பரவுகின்றது. எற்குண்டாகும் மாழாத்தலும் பொறிகளின் புலனுகர்ச்சியை மறைக்கின்றது. எனது மனமும் வேட்கைப் பெருக்கெய்திக் காமக் கனலிற் கொதித்து எரிதருகின்றதாயினும், அம்மாலதியு ருவாந்தன்மை[96]யையு மெய்துகின்றது.
(என்று எல்லவரும் போந்தனர்)
பவபூதி யென்னு மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் முதல் அங்கம் முற்றிற்று.
[1] தலைவன், தலைவி, காதையமைப்பு, இவற்றை நூலாசிரியற் றன் கருத்திற்கியைய அமைத்து நூதனமாகச் செய்யப்படு நூல்; அதிற்றலைவன், அறம்பொருளின்பப்பற்றும் உபாய அறிவும் பொருந்தி, “தீரப்பிரசாந்தனு”டைய இலக்கண அமைதியில் மந்திரி, அந்தணர், வைசியர் இவருள் ஒருவனுமாதல் வேண்டும் எனப்பரத நூல் கூறும்.
[2] கபாலங்கள் – தலையோடுகள்; ஈண்டுப்பிரளயகாலங்களில் இறந்துபட்ட பிரமனாதியருடைய தலையோடுகளைக் குறிக்கும்.
[3] பசுபதியினுடைய சடைகள் பசுபதியை எழுவாயாகக் கோடாது ஆறனுருபமைத்து விசேடணமாக்கிச் சடைகளை எழுவாயாக்கினமையின் தலைவன் தான் பெற விரும்பும் பொருளைத் தன் செயலாற் பெறவியலாமையும், பிறருதவியாற் பெறலும் உணர்த்தப்பட்டது. சடைகள் எனப் பன்மையாகக் கூறினமையான் தலைவன் றலைவியொருவரே யன்றி பிறருமுளர் என்பதும், இதிற் சடைமுடி தரித்தவீசனைப் புகழ்ந்திருத்தலின் சாந்திரசம் தோற்றுவதால் இந்நூலிற்குத் தலைவனாவான் தீரப்பிரசாந்தன் என்பதும் போதரும்.
[4] களிப்புடன் – அவ்வரவம் நுழைதற்கு அங்கு புழையொன்று மின்மையின் நாசிப்புழையே எளிதிற் கிட்டியதாகலின்.
[5] விநாயகர் இடையூறுகளுக்கு இறைவனாகலின் அவர் செயல்களான அசைவுகளும் ஊறுகளைந்து பேறுவிளைக்கும் என்பது கருத்து.
[6] இது முதல் இரண்டு சுலோகங்கள் முன் உரையாசிரியராற் பொருள் கூறப்படாமையின் இவை இடையிற்ச் செறிந்தனவெனச் சிலர் கருத்து.
[7] நாந்தி – புகழ்ந்து பாடுங் கவி; இது நாடகம் இடியூறின்றியினிது நிறைவேறுதற் பொருட்டு அத்தொடக்கத்தில் இசைபாடுவோராற் பாடத்தக்கது; இது ஆசியாதல், வணக்கமாதல் அமைய வேண்டுமென்றும் எட்டுச் சொற்களாலாதல், பன்னிரண்டு சொற்களாலாதல் அமைக்க வேண்டுமென்றும், மங்கலச் சொற்களான சங்கு, சக்கிரம், சந்திரன், தாமரை, ஆம்பல், சக்கிரவாகம் முதலிய சொற்களுடன் அமைந்திருத்தல் வேண்டுமென்றும் கூறுவர். ஒருசாராசிரியர் பத நியமம் வேண்டாமென்ப; இது நந்தி தேவர்க்குப் பிரீதியாகும்.
[8] சூத்திரதாரன் – நாடகத்திற்கு இன்றியமையாத பொருள்களை மேற்கொண்டு, அதனை நடத்துபவன். சூத்திரம் – ஈண்டு நடித்தற்குரிய சரித்திரப்பொருள்.
[9] வேடசாலை – நாடகம் நடிக்குமிடம்; அஃது அவைக்களத்திற்குப்பின் திரைகளான் மறைக்கப்பட்டு வேடம் பூட்டற்குரியதாய் இசைபாடுவோரிருக்குமிடம்.
[10] மாரிடன் – தாங்குந்திறலமைந்தவன்; அவன் சூத்திரதாரனாலிடப்படுங் கட்டளையை மேற்கொண்டொழுகுதற்குரிய நடன்; இச்சொல் சூத்திரதாரனால் அவனையழைக்கப்படும் மரியாதைப் பெயருமாம்.
[11] காலப்பிரியநாதன் – மகாகாளமென்னுஞ் சேத்திரத்திற்குப் பதி; இதனால் இந்நாடகம் நிகழுமிடம் மகாகாளம் எனக் குறிப்பிடப்பட்டது.
[12] பாவ! – நடிகர்கள் சூத்திரதாரனை அழைக்கும் மரியாதைச் சொல்.
[13] ஆரியர் – பெரியோர்; குலம், ஒழுக்கம், அருளுடைமை, கொடை, அறம், வாய்மை, நன்றியறிதல், கேடு விளையாமை யென்னுமிவை பொருந்தியவர் ஆரியரெனப் பரதமுனி கூறுவர்.
[14] அறிதற்கரிய ரசங்களுடைய பிரயோகங்கள் – அங்கம், அங்கி, யென்னுமுறைபற்றி நிகழும் சிருங்காரம் முதலிய இரசங்களுடைய அபிநயங்களைக் கூரிய அறிஞரேயன்றி மற்றையோராலறிதற்கரியது;
“பத அறிவு பொருளறிவு, இம்மாத்திரையில் இரசத்தை யறிதலமையாது; நூற்பொருளுண்மை தெளிகுனர் அதனையறிவார்” எனத் துவனி நூலார் கூறுவர்.
இதனால் இந்நூல் இத்தகைய இரசங்கள் நிரைந்துள்ளதென்பது விளங்கும்.
[15] பெருந்தன்மை – ஈண்டுத்தலைவன் சிருங்கார ரசத்தைப்பற்றியவனாயினும் பிற இரசங்களையும் பற்றுதல்; இது மாகாமாமிசத்தை விலைப்படுத்தலிலும் அகோரகண்டனுடன் பேசுமிடத்தலிலும், பீபற்சம், ரௌத்திரம், இவற்றை மேற்கொண்டு, முக்கியமான சிருங்கார ரசத்தையனுபவித்தற்குரிய மாலதியைப் பெறுதல் நூலில் விளங்கும்.
[16] காமசூத்திரம் – இடையறாக்காதல்; இது வத்திரத்திற்கு நூல் முதற்காரணமாதல்போல தலைவன், தலைவி இவருடைய வேறுபாடற்ற மனவொற்றுமைக்கு இக்காதல் முதற்காரணமாதலாற் காமசூத்திரம் என்ப.
[17] வியக்கத்தக்க காதையமைப்பு – மதிவன்மையாற் புதிதாகத் தொகுத்தமைக்கப்பட்ட காதையமைப்பு.
[18] தித்திரசாகை – தித்திரியென்னுமிருடி, சிச்சிலிக்குருவியுருவெடுத்துக் கூறிய வேதமாகிய சுர்வேதம்.
[19] பந்திபாவனன் – யசுர்வேதம், சாமவேதம் இவற்றை முற்றுங்கற்ற ஒருவன் அதருவ சிரசு என்னும் வேதத்தையும் பயிலுவானாயின் அவனைப் பந்திவானன் என்ப.
[20] ஐந்தங்கி – தக்கணம், காருகபத்தியம், ஆகவநீயம், சப்பியம், ஆவசத்தியம் என ஐவகையாகும்; இவை சுவர்க்கமேதம் முதலிய வேள்விகளிற் பயன்படுவனவாம்.
[21] சோமரசம் – சோமம் – ஓர்பூடு; அதனை இன்றியமையாத கருவியாக் கொண்ட வேள்வியில் அதன் சாற்றைப்பருகல் அவ்வேள்வியின் மரபு.
[22] சுரோத்திரியர் – அங்கங்களுடன் மறைபயின்று அப்பொருளறிவும், அதற்குத் தக நல்லொழுக்கமும் உள்ளாராய் உயர்குடிப்பிறந்தோராவர்
[23] இட்டம் – தேவர்களைக் குறித்துச் செய்யும் வேள்வி முதலியன.
[24] பூர்த்தம் – பசுக்களைக் குறித்துச் செய்யப்படும் தடாக முதலிய தருமம்.
[25] பவபூதி – இவர்க்குத் தந்தையராலிடப்பட்ட பெயர் சிரீகண்டர் என்பதாம்; இவர் “தன்கணவன் றவசினிலையை யெய்தினன்; என்று முறுவல் செயுமுகத்தினையுடையபோல (பவபூதிசிதாநநௌ) ஈசனது திருநீற்றினால் வெள்ளிய முலைக் கண்களையுடைய கௌரியின் இரு கொங்கைகளை வணக்கஞ் செய்கிறேன்” என்னுஞ் சுலோகத்தை யியற்றிய பின்னரே இவர்க்கு இப்பெயர் பட்டப் பெயராயமைந்ததெனப் பலருங் கூறுவர்.
[26] இந்தச் சுலோகத்திற்கு இது உட்கருத்து:- உலகில், மனிதர் அறிவிலர், காப்பிய இரசத்திற் பற்றிலாத ஆன்மஞானிகள், காப்பியச்சுவையிற்றலைசிறந்த அறிவுடைய பெரியோர், என முத்திறத்தவராவர்; முதற்கூறியவிரு திறத்தினரும் முறையே காப்பியச் சுவையறியச் செயலற்றவரும், இதனையறிந்தும் பயன் பெறாதவருமாவராதலின், அவரிதனை யிகழ்தலியற்கையே; அவர் பொருட்டிம் முயற்சி பயன்பெறாது. மூன்றாம் திறத்தினராகிய எம்போலியோர் பொருட்டே இஃதமையுமென்பதாம்.
[27] ஞானநிதி – அறிவுக்கு நிலைக்களன் என்னும் பொருள் பற்றியிது காரணப்பெயராகும்.
[28] உபநிடதம் – வேதத்தின் உட்கருத்து.
[29] சாங்கியம் – பிரகிருதி, புருடன் முதலிய இருபத்தைந்து தத்துவங்களின் இயல்புகளை விரித்து விளக்குவது; இதனாசிரியர் கபிலராவர்.
[30] யோகம் – இயமம், நியமமுதலிய எண்வகை யோகவுறுப்புக்களை விளக்குவது; இதனாசிரியர் பதஞ்சலியாவர்.
[31] ஓசையுடைமை – மென்சொற்களாலாந்தன்மை; அது செவி, நா இவற்றிற்கு இனிமைபயப்பது.
[32] ஆழமுடைமை – வியங்கியமாக உணரத்தக்க பொருளுடைமை; வியங்கியம் – குறிப்பு.
[33] கலைவன்மை – கவிவன்மை – இவற்றை முறையே வடநூலார் பாண்டித்தியம், வைதக்தியம் என்று கூறுவர்.
[34] பிரத்தாபனை – வெளிப்படுத்தல்; நடீ, நடன், விதூடகன், பாரிபாருசுவகன், இவர்களில் ஒருவன் சூத்திரதாரனுடன் நடிக்கப்புகும் நாடகத்தைப் பற்றிய சிலவற்றைப் புகழ்ந்து பேசி யப்பொருள்களை வெளிப்படுத்தல் பிரத்தாபனையென்ப.
[35] வயது, உருவம், நல்வினை, அழகு, குலம், ஒழுக்கம் முதலிய மங்கல குணங்கள், ஒருவர்க்கொருவர் ஒப்ப நிறைந்தவர்.
[36] பூரிவசு – மிகுந்த செல்வப்பெருக்குள்ளவன்; அவற்கு உரிய மணமகனைத் தேடிக் கோடலியல்பு.
[37] தேவராதன் – தேவன் போலக் கொடுக்குமியல்புள்ளவன்; இவ்விருவர் பெயெர்க்குறிப்பும் சம்பந்தப் பொருத்தத்தை யுணர்த்தும்.
[38] மாலதீ – முல்லை; மாதவன் – வைகாசி மாதம்; இம்மலர், இம்மாதத்தில் மலர்தலான் இஃது இம்மாதத்திற்குரியதாதல் கருதி யிப்பெயரமைக்கப்பட்டது. இதனால் மாதவனுக்குரிய மனைவி மாலதியென்றும், அவளுக்குரிய கணவன் மாதவன் என்றும் யிடையருக் காதலமைந்தவரென்றும் பெறப்பட்டது.
[39] திருமணம் – பெற்றோர், சுற்றத்தார், ஏனைய பெரியோர், இவர்களுக்கு விரும்பத்தக்கதாதல் வேண்டுமென்பது கருத்து.
[40] வாமம் – ஈண்டு இடப்பக்கத்தையும், விரோதத்தையுமுணர்த்தும்.
[41] தாட்சிண்யம் – வலப்பக்கத்தையும், விரோதமின்மையையும், காரியசித்தியையுமுணர்த்தும்.
[42] சீரம் – தெருக்களிற் சிதைந்து கிடக்குங் கந்தைத்துணி. சீவரம் – நீலவண்ணப்புடவை.
[43] ஐயம் – பிச்சை; அது கலத்திலாதல், கையிலாதல், வாயிலாதல் – அளிக்கப்படும் அன்னக் கவளத்தைச் சுவைக்காது மருந்து போலுண்டு பசிப்பிணியைத் தீர்த்தலையுணர்த்தும்.
[44] இல் – நிலை – இல்லறம்; அஃதாகிய இடர் என விரியும்.
[45] பூரிவசு, தன் குமாரி மாலதியை, வாலிப நண்பனாகுந் தேவராதனுடைய புதல்வன் மாதவனுக்கு மணம்புரிவிக்க விருப்பமுடையனாய், அதற்கிடையூறாக அரசன் தங்காமத் துணைவனாகிய நந்தனன் பொருட்டுக்கோருனிலையை யோர்ந்து, அவர்க்கஞ்சி வெளிப்படையாக மணவினையாற்றவியலாது, அதை மறைவிற் செயலே செயற்குரிய விடயமாகும்; அதிற் காமந்தகியை நியமித்தான் என்பது மேல்விளங்கும்.
[46] செயற்பயன் – தவங்களானெய்தற்பாலதாகிய வீட்டின்பத்தினும், இஃதொன்றே சிறந்ததெனக் கருத்து.
[47] ஆன்வீட்சிகீ – பொருளுண்மைகளை யாராய்தற்குரிய வேதுக்களை யெடுத்துக் கூறுனூல்.
[48] ஊக்கற்பொருட்டு – ஊக்கல் – எழுப்புதல்; மாதவனது குண நலன்களைக்கண்டு, அவன் மணவினையில் பூரிவசுவுக்கு உற்சாகத்தையுண்டாக்கற் பொருட்டும், காதலி, காதலன் ஆகுமிவர்க்கும் காதற்குணத்தை யெழுப்புதற் பொருட்டுமாம்.
[49] இவ்வுபாயம் – களவு மணமாகுமுபாயம்; நண்பனது தொடர்பாகும் விருப்பமெய்துவதற்கும், அரசனது பகைமையாகும் வெறுப்பு விலகுவதற்கும் ஏதுவாகலின் நலம் பயப்பதென்றார்.
[50] பாசாங்கடி – இல்லதை உள்ளதாய்க் காட்டலும், உள்ளதை யில்லதாய்க் காட்டலுமாகிய பாவனை.
[51] வாலிபர் – ஈண்டுக் காளைப் பருவத் தொடக்கத்திலுள்ளாரையுணர்த்தும்; அப்பருவத்தினியல்புகள்:- ஒழுங்கு. ஒழுங்கின்மை, அடக்கம், இவற்றினறியாமை, காமன் ஆணைக்கு வயப்படுதல், பெரியோரையுங் கடந்து தன் விருப்பைப் பெற முற்படல் ஆகிய இவையாகலின், வெளிப்போந்த மெய்ப்பாட்டுக் குறியினர் எனக் கூறப்பட்டது. மெய்ப்பாடு – குறிப்பை வெளிப்படுக்குந் தோற்றம்.
[52] அதனால் – உலகமறிந்தமையால்; இக்களவுமணம் நிகழ்ந்த மேல், இஃது இக்கொடிய பிட்சுகியான் முடிந்ததென நந்தனனும் அரசுனுஞ் சினமுற்றாலும், “காதற்பற்றுக் காரணமாகத்தாமே வலிந்து புணர்ந்தனர்; இதனை யுலகமறியும்” எனக் கூறுமாற்றால் அவரை வஞ்சித்தலான் குற்றம் உண்டாகாதென்பது கருத்து.
[53] அறிந்த ஒருவன் – தனக்குரிய காரியங்களைப் பெறற்குத்தக்க வுபாயங்களை யறிந்தவன்.
[54] எவ்வாற்றானும் – நடையுடையுரை முதலியவற்றானும்.
[55] அந்தந்த முறை – எந்த முறையானும் மாதவனைக் கண்டு பிறர் ஐயுராதமுறை.
[56] அணித்துள்ள – என்றதனால் மாலதியின் காட்சி தெள்ளிதிற் கூடும் என்பது கருத்து.
[57] செவிலித் தாயின் புதல்வி – யென்றதனால், முலையுண்டல், புழுதியாடன் முதலியவற்றான் மிகக் கூடிப் பழகினமையின் மாலதியின் உள்ளக்கிடக்கை யாவையும் இவள் நன்குணர்ந்தவள் என்பது போதரும்.
[58] புதிய மன்மதன் – கண்ணுதற்கடவுளானெரிக்கப்பட்டு அவனருளான் மறுபிறப்பெய்தியனமையையுணர்த்தும்; அது நோக்கத்தின் ஆர்வத்தை வலியுறுத்தும்.
[59] வேட்கைப்பெருக்கு. வேட்கை – காமநோய்; இதனை உத்கண்டையென்று வடநூலார் கூறுவர். பெண்ணொருவளால் தன் பொறிகள் யாவும் இவனாலின்புறு மெனக்கருதப்படுமொருவனை யெவ்வாற்றானுந் தானடைந்தே தீருவதெனும் விருப்பமே உத்கண்டையாம்; மனத்துட் புணர்ச்சி, அத்திசை நோக்கம், அவயவவாட்டம், மனநெகிழ்ச்சி, மனோராச்சியம், முழந்தாள் கை இவற்றில் முகத்தையணைத்தல், முகம் செம்மையுறல், வியர்த்தல், சொல்தளர்ச்சி இவை யாவும் அவ்வேட்கையின் செயல்களாமென்றும் பாவப்பிரகாசிகை கூறும்.
[60] உம்மை – மாலதியும் நற்பேறு பெறலையுணர்த்தும்.
[61] விட்கம்பம் – விரிவுபடுத்தல்; இதனிலக்கணம் நடந்தனவும் நடப்பனவும் ஆகிய சரித்திர பாகங்களை விரித்து விளக்குவது என்று கூறப்படும்.
[62] கண்சூனியமாதல் – ஈண்டுத் தன்புலனைப் பற்றாதொழிதல்; இதனிலக்கணம், கருவிழி இமைகள் இவையசைவற்றும், ஒரு பொருளை முயன்று சிந்தித்தலான் புலனுகர்ச்சி யற்றும், கருமை நிறம் பெற்றும் அமைவதேயாம்.
[63] யாக்கையின் செம்மையற்ற நிலை – உறுப்புக்கள் தத்தம் தொழிலைச் செய்யத் திறலற்ற நிலை.
[64] நெட்டுயிர்ப்பு – பெருமூச்செரிதல் ; இது யாக்கை மெலுவு, துக்கம், மயக்கம் இவற்றையுணர்த்தும்; குறிப்பிட்ட இம்மூன்றும் மூன்றாங்காமாவத்தையான அநுமிருதியைக் குறிப்பனவாம். இதனிலக்கணம், நெட்டுயிர்ப்பும், மனத்துட் பல தோற்றமும், வேற்றுச் செயல் வெறுப்புமாகிய இவையாம்.
[65] பொருள்கள் – ஈண்டுக் காமவேட்கையை மிகைப்படுத்தற்குரிய பொழின்மதி முதலியன.
[66] துவர்த்தல், குளிர்தல் இவை இரசத்தின் பண்பாயினும் ஈண்டு இரசத்துடன் மணத்தையும் ஒருபொருட் படுத்தி, இவற்றை மணக்குணமாக வுபசரித்தார்.
[67] மறுவிலா மதி – முதலிரண்டடியினுங் கூறியுள்ள சரீரத் தளர்ச்சியும், செயல்களில் ஊக்கமின்மையும், காமவேட்கையானன்றிப் பிறவற்றானும் நிகழ்வுறுமாதலின் அவற்றையொழித்து மறுவிலாமதியென்னு மிவ்வுவமையான், இத்தகைய வெளிறுபடுந் தன்மை யதற்குப் பொதுவறப் பொருந்துமியல்பெனக் குறிப்பிடப்பட்டது; இதிற் சிருங்கார ரசத்தின் இன்றியமையாத முதற்பகுதிகளான அங்கத்தளர்வு முதலியனவே கூறப்பட்டிருப்பினும் இவற்றைப் பிரியாது நிகழ்வனவும், அவற்றை விரிவுபடுத்துவனவும் ஆகிய விருப்பு, வெறுப்பு முதலிய வியபிசாரி பாவங்களும், அதனைத் தூண்டுதற்குரிய காமற்பொழின் முதலிய உத்தீபன விபாவங்களும், நல்வினைப் பயன் எய்துமொருவனைப் பற்றுக்கோடாகவுடைய ஆலம்பன விபாவங்களும் ஆகிய இவற்றாற் சிறந் திலங்கு மிரதியென்று உள்ள நெகிழ்ச்சி பொருந்தும் விப்பிரலம்ப சிருங்கார ரஸம் இங்குத் துவனிக்கின்றது.
[68] ந ட்பு – காரணமின்றி யுண்டாகும் நட்பு இயனட்பு என்றும், அதைப்பற்றி நிகழ்வது செயனட்பு எனவும் இருவகைத்தாம்; இவற்றுண் முறையே உயிருள்ளனவும் நிலைப்பதும், காரணமறைந்தொழிய தன் காரியமாகிய இதுவும் நிலையாது போம் என்றும் பாவப்பிரகாச நூல் கூறும்.
[69] நினைவு கூரறிவு – எதிரிலிருக்குமொரு பொருளைப் பார்த்துழி முன்னர்க் கண்ட பொருளினது நினைவுண்டாதலேயாம்.
[70] இலீலை – கடைக்கணித்தலான் விரும்பிய பொருளைப் பற்றுதல். அதாவது அன்பின் ஊக்கப்பட்ட மனம், இன்சொல், உறுப்பியக்கம் இவற்றால் விரும்பிய பொருளைப் பற்றுதல்; இஃதிருபாலருக்கும் பொதுவாம்.
[71] விப்பிரமம் – காதலியக்கம்; அது விரும்பிய பொருளைக் கண்டுழி உரை, செயல், மனம் இவற்றின் வேறுபாடும், அணிகலன் அணிதற்குரிய உறுப்புக்களின் வேறுபாடுமாம்; இவை, அங்க பரபரப்பினிகழ்வனவாம்.
[72] சாத்துவிகச் செயல் – அசைவற்றிருத்தல், வியர்த்தல், மயிர்சிலிர்த்தல், ஓசை மாறுதல், நடுங்குதல், நிறமாறுதல், கண்ணீருகுத்தல், மூர்ச்சித்த லென்னு மிவ்வெட்டுமாம்.
[73] பல்வேறு பாத்திரம் – பார்வை அச்சம், நாணம், வியப்பு முதலியவைகளுடன் கூடியிருத்தலின், அவ்வவற்றிற்குத்தக தனித்தனியே பல்வேறு பாத்திரமெனக் கூறினர். பாத்திரம் – தகுதி.
[74] அலசம் முதலிய ஆறும், காமவேட்கையினியைந்த பார்வையினது பேதங்களாம்; அவற்றின் இலக்கணம் பின்வருமாறு காண்க:-
அலசம் – விரும்பிய பொருளிற் பார்வையை நிலைப்படுத்திப் பின் நாணத்தாலதனைத் திருப்பிக் கோடல்.
வலிதம் – அங்ஙனந் திருப்பிய பார்வையை மீண்டுங் குறுக்காகச் செலுத்தல்.
முத்தம் – இயல்பினழகு பெற்ற அப்பார்வையாற் றனது உள்ளக்கிடக்கையைக் குறிப்பினுணர்த்தல்.
சினித்தம் – அன்புருக்கொடு காதற்பெருக்கிலியைந்திருத்தல்.
நிட்பந்தம் – விரும்பிய பொருளினன்றி, அதனுவமைப் பொருளொன்றினுங் கூடாது, அஃதொன்றிலே சலனமின்றி நிலைப்படுதல்.
மந்தம் – விரும்பிய பொருளினும் கூர்மையின்றி நிலவுதல். இவை காரிய காரணத்தான் இயைய நிறுத்த முறையானே தொகுக்கப்பட்டுள்ளன; அவ்வியைபினை விரிக்கிற் பெருதூஉம் ஆதலின் அதனை யறிஞர் உய்த்துணர்க.
[75] மீக் கூர்தல் – மிகுதல்
[76] வியப்பினால் விரிந்த விழி – வியப்பின் வயப்பட்டு, இமைப்பின்றி விரிந்திருத்தல்; இதனை விம்மித திருட்டி என்ப வடநூலார்.
[77] மீதூர்தல் – நெருங்குதல்.
[78] கடைவிழி – கண்களின் கடைப்புறத்திற் கருவிழிகளையமைத்தல்; இஃது ஈண்டு அதன் செயலாகிய பார்வையை யுணர்த்தும்.
[79] பற்றுக்கோடற்றதாய் – மனம், கடைக்கணித்தலின் வயத்ததாகலின், தற்செயற்கூடாமையானும், காத்தற்குரிய காவலன் இவளையன்றிப் பிறரின்மையானும், பிறராற்க் காக்க வியலாமையானும் இங்ஙனங் கூறினர்.
[80] கவரப்பட்டும் – கூரிய அம்பை நிகர்த்த கடைவிழி, மாதவனது மனத்தை வலிந்து பற்றிப் புண்படுத்தி, அதனால் நெக்குருகிய அம்மனத்தைப் பருகினமையும் அழித்தமையும், மாலதிப்பொருட்டு மாதவனது மனமழிந்து நிற்கு நிலையை உயர்வு நவிர்ச்சியான் உணர்த்தும்.
[81] அமுதத்தினும் விடத்தினும் – கடைக்கண் சென்றுழி, எல்லையற்ற இன்பத்தைத் தருதலானும், நாளும் உயிர்த்தற்கு ஏதுவாகலானும், அமுதத்தினும் என்றும், பிரிவாற்றாமையா னுண்டாகுந் தாங்கொணாத் துன்பத்திற்கு ஏதுவாகலான் விடத்தினும் என்று கூறினர்.
[82] எல்லாவுரை – என்பது பெயர்ச்சொல். இலக்கணைச்சொல் முதலியவற்றை யுணர்த்தும்.
[83] சடமாக்கி – இது சாட்டியமென்னுங் காமநோயின் நிலையையுணர்த்தும். இதனிலக்கணம்:- எப்பொழுது மெச்செயலினும் அறிவின்மை, விருப்பு வெறுப்புக்களையும் இன்பதுன்பங்களையுமறியாமை, வினாவிற்கு விடைகொடாமை, ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் புலனுகர்ச்சியின்மை. ஓலமிடல், காரணமிலாது உறுமுதல், உறுப்புக்கள் வாடுதல், இளைத்தல், நிறமாறுதல், நெட்டுயிர்த்தல் முதலியன நிகழ்தல் சாயதயமென்னுங் காமநோயினிலக்கணமாம்.
[84] தாபத்தையும் – இது வெப்பின் மிகுந்த சுவரம் என்னுங் காம நோயையுணர்த்தும்; இதன் இலக்கணம் அழல் நதியுழத்தலன்னத் தாங்கொணாத் தாங்கலெய்து நிலையாம்.
[85] பயனற்றனவே – கள்வராற் கவரப்பட்டுப் பொருட் சிறிதுமில்லானைக் குறித்து, இவ்வுழிக்கள்வருளர் ஆதலின் இவ்வழிச்சேறலடாத்து; என்று கூறற்போல, நீ காமற்கணைக்கிலக்காகாதொழிக; என மாதவனைக் குறித்துக் கூறலுமாம்.
[86] இத்தொடர் நற்குணமியைதலென்பது – மாலை, மெல்லிய நூல் கொண்டு தொகுக்கப்பட்டிருத்தலையும், தலைவன், தலைவி யிவர்கள் தொடர்பும், இவரது காதல் ஒழுக்க முதலிய நற்குணங்களை யமையப் பெற்றிருத்தலையு முணர்த்தும்.
[87] இதில் – என்பது இம்மாலையிலும் மாதவனை மணத்தலிலும் பேரவாவையுணர்த்தும்.
[88] பூவிற்செயல் – என்பது பூக்களானாகிய மாலையின் செயலையும், மலர்களை வில்லாகவுடைய காமனது செயலையு முணர்த்தும்; இதனால் மாலதிக்குப் பலவிதமான காமநோய்கள் நிகழ்ந்தன வென்றும் குறிப்பிடப்பட்டது.
[89] மாலைச் செயற்றிறன் – தொங்கலைச் செய்யுந் திறனையும் மாலதிக்கு மயக்கைச் செய்யுந் திறனையுமுணர்த்தும்.
[90] படைப்பின் அணி – இம்மாலையின் றொகுத் தலழகையும், பொருத்தமான மணமக்களின் சிருட்டியழகையு முணர்த்தும்.
[91] குன்றாமன்றன்மாலையென்பது – என்றுங் குன்றா நறுமணங்கமழும் மகிழமலர்களானாகிய மாலையையும், மணவினைக்குரிய மாலையையுமுணர்த்தும்; மன்றல் – நறுமணம், திருமணம்.
[92] ஊகம் – மாதவனிடத்து மாலதி காதற் பற்றுள்ளவள் என்னுமூகம்.
[93] இவ்விருவரையும் அழகுறப் படைத்தமைத்தமை, அவர் ஒருவர்க்கொருவர் காதற்பற்றை யெய்தினமையின் பயனுடைத்தாயிற்று.
[94] திருவிளையாடல் – என்பது மாதவன் மாலதியின் படிவத்தை வரைந்தமையும், இங்கு நிகழ்ந்த செய்திகளையும் உணர்த்தும்.
[95] கூடபாகலம் – வேழத்திற்கு நிகழ்கின்ற ஒருவகை நோய்; இது, வேடன், மறைவிற் சென்று விரைவின் விலங்குகளைக் கோறற்போல, பாகன் முதலியோர் அறியாவண்ணம் சென்றடைந்து யானையை விரைவிற் கொல்லுவதாம்.
[96] மாலதியு ருவாந்தன்மை – இதனால் மாதவன் மிகக் கொடிய காமவேட்கைகளுக் காட்பட்டு ழல்வானாயினும், அவன் மனம், அருமருந்தனைய மாலதியு ருவாந்தன்மை யெய்தி, யின்புற்று அவன் உயிர்த்தற் கேதுவாய தென்பது குறிப்பிடப்பட்டது.