இரண்டாம் அங்கம்
(சேடிகளிருவர் பிரவேசிக்கின்றனர்)
முதலாமவள் – ஏடீ சங்கீதசாலையின் உண்மருங்கில் தேவி காமந்தகீ அவலோகிதையுடன் தனித்திருந்து எதனையோ ஆலோசித்துக் கொண்டிருந்தனள்; நீயவளுடன் உரையாடியதென்னை?
இரண்டாமவள் – தோழீ! மாதவனது அன்பிற்குரிய நண்பன் மகரந்தனால் காமற்பொழிலினிகழ்ந்த செய்தியாவும் காமந்திகையின்பாற் றெரிவிக்கப்பட்டன வாதலின், அத்தேவியரால் நங்கோமகள் மாலதியைக் காண்டற் கெண்ணி யவளது நிலைமையை யறிதற்பொருட்டு அவலோகிதை யனுப்பப் பட்டாள். யானும் அம்மாலதி, இலவங்கிகையுடன் தனித்திருக்கின்றாள்; என்று கூறினேன்.
முதலாமவள் – தோழீ! இலவங்கிகை மகிழ மலர்களைக் கொய்து வருவேன் என்று காமற் பொழிலிற் றங்கினளே; இப்பொழுது மீண்டும் அவள் வந்தனளா?
இரண்டாமவள் – ஆம்! இலவங்கிகை வருநிலையிலேயே அவளைக் கைப்பற்றி யுடன்வருந் தாதியரையுந் தடுத்து நங் கோமகள் கோபுரவாயிற் றிண்ணையின் மார்க்கமாக மேன்மாடத்திற்கெய்தனள்.
முதலாமவள் – இஃதுறுதியே! அப்பெருந்தகைப் பெரியோனாகும் மாதவனது செய்திகளைக் கேட்டுள மகிழ்ந்தின்புறுவள்.
இரண்டாமவள் – (நெட்டுயிர்த்து) இவட்கு உளமகிழ்ச்சி யாங்ஙனம்? இப்பொழுது அம்மாதவன் செய்தியை முற்றிலுமுணர்ந்து அவளது காமவேட்கை கரைகடந்ததாகும். அன்றியும், இற்றை வைகறைப்பொழுதிலேயே அரசன் அமாத்தியரிடம் நந்தனன் பொருட்டு மாலதியைக் கோர, அவரானும் இங்ஙனம் விடையிறுக்கப்பட்ட்து.
முதலாமவள் – என்னென்று?
இரண்டாமவள் – “தம்மைச் சார்ந்த கன்னியர்க்குத் தாமே உடைமையாளர்” என்று; ஆதலின் மாலதிக்கு அவளிறுதிகாறும் மாதவன் காதல் உண்ணச் சாவமையுமெனக் கருதுகிறேன்.
முதலாமவள் – அக்காமந்தகிப் பெரியோர் தமது பெருந்திறலை இங்ஙனம் வெளிப்படுத்துமோ?
இரண்டாமவள் – அடி மாறுபட்ட தோற்றமுடையவளே! வருக.
எனச் சென்றனர்[1]
பிரவேசகம்[2]
மாலதீ – தோழீ! மேலும்[3], மேலும்.
இலவங்கிகை – பின்னர், அப்பெருந்தகையாரால் இம்மகிழமாலை நிற்களிக்கப்பட்டது.
(என்று கொடுக்கிறாள்)
மாலதீ – (அம்மாலையைப் பெற்றுக் களிப்புடன் உற்று நோக்கி) தோழீ! இக்கோர்வை யோர்புறத்தின் மாறுதலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இலவங்கிகை – இங்ஙனஞ் சீர்மையின்மையில் நீயே குற்றவாளி.
மாலதீ – அஃதெங்ஙனம்.
இலவங்கிகை – பசும்புல்லனைய அப்பசிய மேனியன் உன்னிமித்தம்[4] அங்ஙனம், கைத்தடுமாற்றமெய்தினன்.
மாலதீ – இலவங்கிகே! நீ என்னை யெப்பொழுது மின்புருத்து மியல்பினளாகவே காணப்படுகிறாய்.
இலவங்கிகை – இன்புறுத்துந்தன்மை யென்னிடத்தென்னை? நான் கூறுவேன்; இளங்காற்றினாலசைந் தலர்ந்த மரைமலரனையவும், முன்றொடங்கிய மகிழமாலையைத் தொகுத்தலே தலைக்கீடாகத் தனது வேட்கைக் குறியை மறைத்தற்கு மிக முயலுதலின் விரிந்தனவும் ஆகிய தனது கண்களால், மிகுந்தெழு வியப்பான் அசைவற்ற நீண்டகடைவழி நிலைப்படுத்தப்பட்டு விளங்கும் புருவங்களால் உய்த்துணரக்கிடக்குங் காமவேட்கையின் அழகு பொருந்த அவன் உன்னைக் காண, அங்ஙனமே யுன்னாலும் அவன் காணப்பட்டான்.
மாலதீ – (இலவங்கிகையைத் தழுவி[5]) ஆம்! அன்புடைத் தோழீ! சிறிது நேரம் என் முன்னே தோன்றி யென்னை வஞ்சித்த அவனது செயல்கள் இயற்கையினமைந்தனவா? அன்றேல், நீ எவ்வாறு கருதுகின்றனை?
இலவங்கிகை – (பொறாமையுடன்) நீயும் அக்கணமே யியற்கையிற்பாடலின் றியாடற்[6] புரிந்தனை.
மாலதீ – (வெட்கமுடன் நகைத்து) என்னையிது? மேலுங் கூறுக.
இலவங்கிகை – பிறகு திரும்பிவரும் விழாக் குழுவினருழம்பலின் மாதவன் மறைந்தொழிய, யான் மந்தாரிகையின் வீட்டிற்குச் சென்றேன்; விடியற்பொழுதிற் படிவத்தையும் அவன் கரத்திலிட்டேன்.
மாலதீ – எது கருதி?
இலவங்கிகை – அம்மந்தாரிகையை மாதவனது ஊழியன் கலகஞ்சன் காதலிக்கின்றான்; அவன்பால் இவள் இதனைத் தெரிவிப்பாள் என்று; அதற்கு மந்தாரிகையும் உடன்பட்டாள்;
மாலதீ – (தனக்குள் களிப்புடன்) கலகஞ்சனால் இப்படிவம் நங்காதலற்குத் தெரிவிக்கப்படும் என்பது நிச்சயம். (வெளியீடாக) தோழீ! உன் விருப்பம் யாது?
இலவங்கிகை – தானும் வருந்தி உன்னையும் வருத்தி கிடைத்தற்கரிய உன்னிடத்து விருப்பப் பிணிப்புண்டுமுழலு மனமுடைய மாதவற்குச் சிறிதளவு காமவேட்கையைத் தணிவுறுத்தும் உனது படிவ மிஃதொன்றே யெனது விருப்பம்[7].
(என ஓவியத்தைக் காட்டுகின்றாள்)
மாலதீ – (களிப்புடனும் நெட்டுயிர்ப்புடனும் நெடிது நோக்கி) அந்தோ! எனது மனம் இப்பொழுதும் இன்புறவில்லை; ஏனெனில் இப்படிவம் இன்புறுத்தற்குரிய தாயினும் என்னை வஞ்சித்தொழியுமென்றே கருதுகின்றது. என்னே! சில சொற்களும் காணப்படுகின்றனவே!
(இயலழகு பொருந்தியனவும் என்ற முதல் அங்கம் 39ஆம் சுலோகத்தின் சொற்களைப் படிக்கின்றாள்)
(களிப்புடன்) பெரியோய்! நினது செயலினும் உரையினும் இனிமை யொப்புடைத்து. காட்சியோ! அவ்வளவில் இன்புறுத்தி யஃதில்வழி மிகு துன்புறுத்துமியல்பினது. நின்னைக் காணாதவரும், கண்டுந் தம்மனத்தை யொரு நிலைப்படுத்துவாருமாகிய மடவரல்களே! நல்வினைப்பயனெய்தினராவர்.
இலவங்கிகை – எவ்வாற்றானும் நீயின்புறுவதில்லை.
மாலதீ – அதனை நீ யெங்ஙனமறிந்தனை?
இலவங்கிகை – எவனைக் குறித்து தாதவிழ்ந்த அசோகமலர் போல வாடிய மனத்தினளாய் நீ மெலிவுறும் பிச்சிமலர்போலக் காமனாலிளைப் பெய்துகின்றனையோ; அவனும் அக்காமனால் தாங்கொணா நிலையை யெய்தியுள்ளான்.
மாலதீ – தோழீ! இப்பொழுது அப்பெரியோர் சுகம் பெறுக; எற்குத் தேறுதலமைவதரிது. (கண்ணீருகுத்து வடமொழியிற் கூறுவாள்.)
(1) மிகக் கொடிய எனது மனவேட்கை, நாடிகள் யாவற்றினுமிடையறாது பரவும் விடம் போலத் துன்புறுத்துமியல்புடைத்தாய், தூமமின்றி வீசப்படுமங்கிபோல எரி தருகின்றது. ஆதலின் அது மிகுதியான வெப்பு நோய் போல ஒவ்வொரு உறுப்புக்களையும் அகத்தும்புறத்தும் வருத்துகின்றது. இந்நோயினின்று என்னை காத்தற்கு எனதிருமுதுகுரவரும்[8] நீயும் ஆற்றகில்லீர்.
இலவங்கிகை – பெரியோரிணக்கம், காட்சியளவையில் இன்பத்தையும் அஃதில்வழித் துன்பத்தையும் அளிக்குமியல்பினது. ஆதலின் அன்புடைத் தோழீ! சாளரத்தின் வாயிலாக எவனைக் கடைக்கணித்த அளவில் உனது சரீர நிலை, உவாமதியெழுச்சியை எரிதருமழலெனக் கொண்டு கருணையிகந்த காமன் செயலினால் ஐயுறத்தகு முயிர்த்தலையுடையதாயிற்றோ அவனை யிப்பொழுது சிறப்புறக் காண்டலின் வருந்துகின்றனை யென்பதிற் கூறுவதென்னை? ஆதலின்[9], பெருமை வாய்ந்ததும் ஒத்ததும் ஆகிய காதற்பற்றுள்ள பெருந்தகைக் காதலன் புணர்ச்சியே, உலகிற்குப் புகழத்தக்கதும் கிடைத்தற்கரியதுமாகிய விருப்பின் பயனாம் என்னு மிவ்வளவே யாமறிவோம்.
மாலதீ – அடி, மாலதியின் உயிரே பெரிதென விரும்பி யடாதுரைப்பவளே[10]! செல்லுதி; (கண்ணீருகுத்து) இன்றேல்! அவனைப் பலகாலும் பார்த்து நிலைதிரிந்து பின் நிலைப்படு முறுதிப்பாடெய்து மிதயங்காரணமாக நாணம் மிகவொழிந்து தீ நெறிப்புக்குழலும் யானே யிதிற் குறைபாடுற்றவளாகுவேன்[11]; ஆயினும் அன்புடைதோழீ! (வடமொழியில்)
(2) கலை நிறை மதியம்[12] கங்குற்பொழுதெலாம் வானிடை யெரிக; காமனும் என்னைக் கடிதே சுடுக; இவர், இறத்தலையன்றி யெற்கியற்றுமாறென்னை? சிறந்த நற்றாதையும், மறுவிலா மரபுடைத்தாயரும், பழுதிலாக் குலமுமே யெற்கு விரும்பற்பாலனவன்றி இவ்வாண்மகனு மின்னுயிருமங்ஙனமின்று.
இலவங்கிகை – (தனக்குள்) இதற்குரிய உபாயம் யாதோ?
(வேடசாலையினின்றும் சிறிது வெளிவந்து)
பிரதீகாரி – காமந்தகிப்பெரியார்[13] வந்துள்ளார்.
இருவரும் – பெருமைசேர் காமந்தகியா?
பிரதீகாரி – கோமகளைக் காண விரும்பி வந்தனர்.
இருவரும் – ஏன் தாமதிக்கவேண்டும்?
(பிரதீகாரி சென்றனள்) (மாலதீ படத்தை மறைக்கிறாள்)
இலவங்கிகை – (தனக்குள்) நலமே நிகழ்ந்தது.
(காமந்தகியும் அவலோகிதையும் வருகின்றனர்)
காமந்தகீ – நல்லது பூரிவசுவே! நல்லது. ”தனது கன்னிமார்க்குத் தாமேயுடைமையாளர்” என்னுமிருவகை யுலகங்கட்கும் முரண்படாமல்[14] விடையிறுக்கப்பட்டது. இப்பொழுது காமற்பொழிற் செய்தியால் திருவருட்பாங்குமுளதென, அறிகுவேன். மகிழமாலை, மாதவன் படிவம் இவற்றின் கொண்டு கொடுத்தலும் சொல்லொணா வியப்பையும் களிப்பையும் அளிக்கின்றது. ஒருவொர்க்கொருவர்பாலியைந்த காதற்பெருக்கமே மணவினைக்கட் சாலச் சிறந்த நலம் பயப்பதாம். இதனையே பிருகற்பதியும் “மனம் கண் இவை நிலைப்படும் ஒரோவழி எல்லா நலனுமினிதோங்கும்” என்றுங் கூறினர்.
அவலோகிதை – இவளே மாலதி.
காமந்தகீ – (கூர்ந்து நோக்கி)
(3) மிகவும் இளைத்த உறுப்புக்களை யுடையவளும் ஈரமுள்ள வாழையுண்மருங்க[15]ன்ன அழகுடையவளும், ஒரு கலை[16]யளவில் எஞ்சிய சந்திரனைப் போலக் கட்பொறிக்குக் கழிபேருவகையளிப்பவளும், காமனாம் தீயின் வெப்பினானைந்த உடனிலையுறுவாளுமாகிய இம்மங்கல மடவரல் நம்மனத்திற்கு இன்பத்தையும் துன்பத்தையும் ஒருசேரத்[17] தருகின்றாள். மேலும்
(4) மாசடைந்து வெளிறிய கபோலங்களையுடைய முகத்தையுடையவளாயினும் கவினுறும் பான்மை பெற்றனள். இயலழகு பொருந்துவாரிடத்து அழகுபெறப் பரவுங் காமனது செயலும் விளக்கமுறலியல்பே. மனத்தோற்றத் தானிகழ்ந்த காதலன் புணர்ச்சியை நுகர்கின்றனள். இஃதுண்மையே; ஏனெனில்,
(5) துகின்முடி நெகிழ்தலும், இதழ் துடிதுடித்தலும், வாகு சோர்வுறுதலும், மெய்வியர்த்தலும், கண்கள் மசிருணம்[18], முகுளம், ஆகேகரம், சினிக்குதம், முக்குதம் என்னும் பார்வையை யெய்தலும், மெய்நிலைப்படுதலும் பூமொட்டனைய தனங்களும் கச்சைக் கடந்து விம்முதலும், இடம்படுகன்னம் மயிர்க்குச்செரிதலும், மயக்கமும், இயக்கமும் ஆகிய இவற்றை இவள் எய்துகின்றாள்.
(காமந்தகி மாலதியின் அருகிற் செல்லுகின்றாள்)
(இலவங்கிகை மாலதியை அறிவுறுத்துகிறாள்.)
(இருவரும் இருக்கையினின்றெழுகின்றனர்)
மாலதீ – பெரியோய்! வணங்குகின்றேன்.
காமந்தகீ – நல்வினைப்பிறவியின் பயனைப் பெறுதற்கு நீ தகுதியாகுக.
இலவங்கிகை – பரிசுத்தமான இவ்வா தனத் தமர்க.
(எல்லவரும் அமர்கின்றனர்)
மாலதீ – தங்களுக்கு நலமோ?
காமந்தகீ – (நெட்டுயிர்த்து) நலம் போலும்.
இலவங்கிகை – (தனக்குள்) இது கபட நாடகத்திற்குத்[19] தொடக்கமாம். (வெளியீடாக) மிகுந்து வரும் கண்ணீர்பெருக்கை, மங்கலத்தைக் கருதி தடைப்படுத்தலான் அது கண்டத்துட்டடைப்பட்டு மெலிந்த ஒலியுடன் தங்கள் சொற்கள் தளர்ந்துள்ளன போலும்; அத்தளர்ச்சிக்குக் காரணம் யாதோ?
காமந்தகீ – சீரசீவரத்திற்குப்[20] பொருந்தாத இப்பழக்கமேயாகும்.
இலவங்கிகை – அஃதெங்ஙனம்?
காமந்தகீ – நீயு மிதனை யறிந்திலையா?
(6) காமனது கணைகள் வென்றிசேரியல்பின; என்றும் இயலழகினுக்கு நிலைக்களனாகும் இவளது உடலம், பொருத்தமிலா மணமகற்கு அளிக்கப்படுதலால் வருந்திய தனியலணியாவும் வறிதே கழியுமென்றும் மனந்தளர்ந்தேன்.
(மாலதி துக்கக்குறிப்பை நடிக்கின்றாள்)
இலவங்கிகை – இஃதுமுளது; அமாத்தியன் அரசன் சொற்களுக்கு உடன்பாடெய்தி, அவரால் நந்தனற்கு மாலதியளிக்கப்பட்டாள் என்று யாவரும் அவரை வெறுக்கின்றனர்.
மாலதீ – (தனக்குள்) என்னே! யான் எனது தந்தையால் அரசனுக்குப் பலியிடப்பட்டுள்ளேனா[21]?
காமந்தகீ – விந்தை!
(7) குணங்களை ஆராய்ந்தறியாமல் அமாத்தியனால் இஃதெங்ஙனம் தொடங்கப்பட்டது; அன்றேல்; தீயசூழ்ச்சியில் திறலமைந்த மனத்தருக்கு மகப்பேரன்பு யாங்ஙனம் கூடும்? அரசனது காமத்துணைவனாகிய நந்தனனுக்குத் தன் புதல்வியை மணம் புரிவித்தலான் அவன் தனக்கு நண்பனாகுவன் என்னுமிஃதொன்றே யவர் கருத்தாகும்.
மாலதீ – அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள்.
இலவங்கிகை – பெரியோய்! தாங்கள் தெரிவித்த வண்ணமே அது; அன்றேல், காளைப்பருவத்தையுங் கடந்த உருவிலியான அம்மணமகனிடத்தில் அமைச்சன் ஏன் ஒன்றனையும் ஆராய்ந்திலன்?
மாலதீ – (தனக்குள்) அந்தோ அழிவெய்தினேன். யான் பாக்கியமிழந்து நிகழ்வுறுங் கொடுமையா மிடி யேற்றினுக்கிலக்காயினேன்.
இலவங்கிகை – ஆதலின் அருளுக; பெரியோய் பிழைப்புறு மிறப்பெனும் இந்நிலையினின்றும் எனதன்புடைமைக்குரிய தோழியைப் பாலித்தருளல் வேண்டும்; இவள் தங்களுக்கும் புதல்வியேயாவள்.
காமந்தகீ – அடி ஒழுங்கியல்பினளே! என்னாற் செயற்பாலதென்னை? கன்னியர்க்கு அவர்தமூழ்வினையும் பெற்றோருமே பெரிதும் உரிமையுடையவராவர்.
காமந்தகீ – குசிகன் புதல்வியான சகுந்தலை துசியந்தனையும், உருப்பசியென்னு தெய்வமகளொருத்தி புரூரவனையும் விரும்பிப் புணர்ந்தனர். வாசவதத்தையும் தந்தையால் சஞ்சயன் என்னும் அரசனுக்கு மணம்புரிவிக்கப்படினும், தான் உதயனனுக்கே வாழ்க்கைப்பட்டனள் என்றும் சரித்திரமுணர்வார் சாற்றுவர்; எனினும் அவற்றை யுபதேசித்தல் தக்கதன்று. முற்றிலும்;
(8) அமாத்தியன், அரசனுக்கு அன்பனும்[22] நண்பனுமாகிய[23] நந்தனனுக்கு தன் புதல்வியை யளித்து இன்புறுக; இவளும், தூமகேது[24] வோடியையு மாசிலாக் கலைபோலக் கொடுந்தோற்றத்திவனுடனியைக.
மாலதீ – (தனக்குள்) அந்தோ! தந்தையே! எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையால் தோல்வியுற்றீர்.
அவலோகிதை – பெரியோய்! காலங்கடக்கின்றது; அப்பெருந்தகை மாதவன் மனப்பிணியுள்ளவன் என்பதைத் தெரிவிக்கின்றேன்.
காமந்தகீ – இக்கணமே செல்வோம்; குழந்தாய் எற்குச் செலவு கொடுப்பாயாக.
இலவங்கிகை – (மாலதியையணுகி) தோழி மாலதி! இப்பொழுது இப்பெரியாரிடத்திருந்தே அப்பெருந்தகை மாதவன் செய்தியையுமுணர்வோம்.
மாலதீ – எற்கும் பேரவாவுளது.
இலவங்கிகை – தாங்களும் இங்ஙனம் அன்பு மீக்கூர்ந்த பெருமுயற்சி யெய்துமத்தகைய மாதவன் என்பார் யாவர்.
காமந்தகீ – கூறவொண்ணாத மிகவிரிந்த பெருங்கதை.
இலவங்கிகை – ஆயினும், விரித்துரைத்தருள வேண்டும்.
காமந்தகீ – கேட்பாயாக; சிறப்புறுமாடவர்க்குழுச் சிரோமணியாய்த் திகழுறுந் தேவராதன் என்னும் விதர்ப்ப நாட்டு வேந்தற்கு, அமைச்சனொருவனுளன். உலகெலாம் பரவு மூழ்வினைப் பயனுடையவனை, “இவன் யாவன்? எத்தகைத்தவன்?” என்று உடன் கல்விபயின்றமையின் உன்றந்தையே யுணகுவர். மேலும்.
(9) வெள்ளிய புகழ்களால் விளங்குந் திசை முடிவுடையாரும், மிகச் சிறந்த நல்வினைப் பயன்கட்கும், மங்கலங்கட்கும் நிலைக்களனும், எண்ணரிய பெருமை வாய்ந்தவருமாகிய அத்தகைப் பெரியார் இவ்வுலகில், எங்ஙனமேனு முதிக்கின்றனர்.
மாலதீ – (களிப்புடன்) தோழீ! நம் பெரியாராற் புகழப்படும் திருநாமத்தைப் பெறுமவரை, நம் தந்தை பலகாலும் நினைவதுண்டு.
இலவங்கிகை – தோழீ! நம் பெரியாரோடு அவ்விருவரும் ஒரே ஆசானிடத்துக் கலைபயின்றனரென அக்காலத்தவர் கூறுகின்றனர்.
காமந்தகீ – (10) விளங்கு நற்குணங்களாகுந்[25] தேசுடையழகனும், கலைசிறக்கப்பெற்றவனும், இளம்பிறையை நிகர்த்தவனும் ஆகிய இவன், இவ்வுலகில் கண்ணுடையார்க்குக் கழிபேருவகையின் காரணமாக உதயகிரியினின்றும் மதியுதித்தன்ன உதித்தனன்.
இலவங்கிகை – (திரும்பி) இவன் ஒருகால் மாதவனாகுவனோ?
காமந்தகீ – (11) கல்வியாற் கவினுறு மிவன் வாலிபனாயினும், இப்பொழுது இங்ஙனம் வந்துள்ளான். சரற் காலத்து வாமதியனைய வதனத்திவனைப்பார்த்த அளவில் இந்நகரம், மடவரல்களுடைய காதற்பற்றுடன் கலக்கமுற்ற கடைவிழிகளால் ஆம்பல்[26] நிறைந்த சாளரங்களையுடையது போலக் காணப்படுகின்றது. இங்ஙனம் தனது வாலிப நண்பனாகிய மகரந்தனுடன் ஆன்வீட்சிகீயைப் பயிலுமவனே மாதவன்.
மாலதீ – (களிப்புடனருகில்) தோழீ இலவங்கிகையே! இப்பெருமகன் பெருங்குடிப்பிறந்தவனாம். கேட்டனையா?
இலவங்கிகை – பாரிஜாதம் பாற்கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்கும்.
காமந்தகீ – காலம் மிகவும் கடந்தது. இப்பொழுது;
(12) அச்சத்தால் நடுங்குஞ் சக்கிரவாகங்கள் புணர்ச்சியனீங்கி யிளைப்பாறுதற்பொருட்டு முதற்கண் அவைகளின் துயில்நிலையை யொழிப்பதும், அரண்மனையின் மேன்மாடங்களிற்புக்கு எதிரொலித்தலின் மிகுந்ததும், ஆகிய இம்மாலைச்சங்கின் பேரொலி முழக்கம் வானிடை யுலவுகின்றது. குழந்தாய்! சுகம் பெறுக. (என எழுகின்றாள்)
மாலதீ – (திரும்பி) என்னே எனது தந்தையால் அரசனுக்குப் பெலியிடப்பட்டுள்ளேனா? அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள். (கண்ணீர் பெருக) அந்தோ தந்தையே! எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையால் தோல்வியுற்றொழிந்தீர். (களிப்புடன்) அப்பெருமகன் பெருங்குடிப்பிறந்தவனா? பாரிஜாதம் பாற்கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்குமென்று நன்கு கூறினள் இலவங்கிகை. மீண்டும் அவரை யான் பார்க்கமாட்டுவேனா?
இலவங்கிகை – ஒன்றுக்கொன்று எதிர்முகமாயமைந்த நான்குவாயில் பொருந்து மிவ்வில்லத்தின் வாயிலாகச் செல்வோம்.
காமந்தகீ – (திரும்பி) அவலோகிதே. இப்பொழுது என்னால் நடுநிலையிலிருப்பவள் போல மாலதியைக் குறித்துச் செயற்பாலதாகிய தலைத்தூதரின் செயற்பெருமை சிறிது குறைக்கப்பட்டது ஏனெனில்.
(13) பிறிதொரு மணமகன்பாற் குற்றமும் தந்தைபால் ஐயுறவும் உண்டாக்கப்பட்டது. இதிகாசங்களையும் வெளிப்படுத்தலாற் செயன்முறையுங் கூறப்பட்டது. குலத்தானும் குணத்தானும் சிறந்திலங்கும் மாதவனது பெருந்தகைமையும் முறையே புகழ்ந்து கூறப்பட்டது. ஆதலின் இனிச் செயற்குரியது புணர்ச்சியொன்றேயாகும்
(என்று எல்லவரும் போந்தனர்)
பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் இரண்டாம் அங்கம் முற்றிற்று.
[1] எனச்சென்றனர் – மகரந்தன் காமந்தகிக்கு மாதவன் செய்தியைத் தெரிவித்தமை, இலவங்கிகையின் வருகை, மாலதி, இலவங்கிகை யிவர்கள் மேன்மாடத்திற் புகுந்தமை, மாலதியினிலை யறிதர்க்குக் காமந்திகையின் வருகை, அவளாற் றொடங்கப்படும் நந்தனன் செய்தி யென்னுமிவற்றைக் குறிப்பின் உணர்த்திச் சென்றனர்.
[2] பிரவேசகம் – இழிந்த வேடத்தவர்களான நடன், நடி முதலியோரான் அளவளாவிப் பேசப்படலேயன்றிப் பிறவிலக்கணம், விட்கம்பத்திற்குக் கூறியாங்கு ஒக்கும்.
[3] மேலும் மேலும் என இரட்டித்துக்கூறினமை, காமற்பொழிலிற் றங்கி மாதவன் மருங்கு சென்றமை, அகப்பொருட் பொருந்து மின் சொற்களான் மாலையைப் பெற்றமை, ஆகிய இவற்றைக் கூறு மிலவங்கியை மீண்டுமூக்கற் பொருட்டு என்க.
[4] உன்னிமித்தம் – மாதவன் மனம் மிக்க வலிதாயினும் மாலதியின் வடிவழகினால் அது கவரப்பட்டமையின், அவன் முயன்ற செயல் குறைவுபாடெய்தற்கு இம்மாலதியே யேதுவாகலின், உன்னிமித்தம் எனக்கூறி, யிதனால் மாதவனுக்கு மாலதியிடம் காதன் மிகுந்திருத்தலுங் குறிப்பிடப்பட்டது.
[5] இலவங்கிகை, மாலதியின் உள்ளக்கிடக்கையை யறிந்துரைத்தலின் மாலதிக்கு உண்டான கழிபேருவகையே யவளைத் தழுவலினிமித்தமென்க.
[6] ஆடற்குப்பாடலுறுப்பாகலின் அதற்கு அஃது இன்றியமையாதது; பாடலின்றி யாடலாவது, உறுப்புக்கள் காமன் வயத்தனவாய்த் தஞ்செயலற்று நோயின்பாற் பட்டுலைவுறுஞ் செயலேயாம். இதனால் இவர் செயல்கள் இயற்கையினன்றிக் காமவேட்கையின்பாற் பட்டனவென்பதும், ஒருவர்பாலொருவர் காதன்மேற் கொண்டுள்ளார் என்பதும் போதரும்.
[7] மாதவன் காட்சியின்றி மாலதி உயிர்த்திருக்க வியலாதவளாய், அவள் அவனது உருவத்தை வரைந்தாதல் உயிர்த்திருக்கக் கருதியாங்கு, மாதவனும் இவளுருவத்தை வரைந்தனன்; என்னுமாற்றால் இவர்கட்குண்டான காதற் பெருக்கமே இலவங்கிகையின் விருப்பமென்பது கருத்து.
[8] இருமுதுகுரவர் – தந்தை, யென்பாலன்புமிக்காரேனும், அரசன் விருப்பிற் கடைப்பாடுடையாரும், தாய், ஆண்மகவினும் பெண்மகவிலன்புடையாரேனும், கற்பின் வழிப்பட்டுத் தந்தைவயத்தருமாதலின் காவற்றிறலற்றவர் என்பதும், பூழியாடன் முதலியவற்றால் இன்பதுன்பங்களில் ஒத்தவரும், கள்ளமற்ற உள்ளம் போன்றவருமாகிய தோழிகள் தாய்தந்தையரினுஞ் சிறந்தவர்; அவருள் நீ சாலச்சிறந்தவள் எனினும் யான் தன்வயத்தளாகாமையின் அங்ஙனம் நீயும் காத்தலரிது என்பதும், எற்காக்குங் காவலன், இறந்தவரை யெழுப்பும் மருந்தனைய மாதவனேயாவன்; அவனையான் யெய்தப்பெறாதொழியின் இறத்தலேயன்றி பிறிதொன்று மெய்தற்பாலதின்று என்பதுங் கருத்து. இச்சுலோகத்தில் விடம், அங்கி, வெப்பு நோயென்னு மும்மையாமுவமையைக் கோடல் மனவேட்கையின் கொடுமையை உவமையொன்றிற் கூறவியலாதென இதனால் அதன் பெருமிதம் குறிப்பிடப்பட்டது.
[9] இத்தொடரான் மாலதியே, தான் சேர விரும்புங் காதலனை வலிந்து பற்றுவாளாயின் அவள் இன்புறுவள்; அன்றேல் துன்புற்றொழிகுவள் என்பது குறிப்பிடப்பட்டது.
[10] அடாதுரைப்பவள் – உயிர் நசையின் கன்னியர்க்குத் தகாததும், உற்றாரானும் பெற்றாரானுங் கொள்ளத்தகாததும், மரபினை மாசுபடுத்துவதுமாகிய செய்தியைக் கூறுபவள்.
[11] குறை – குலக்கன்னியரது வரையறை யிகந்து பலகாலும் மாதவனைக் காண்டலே குறையென்பது கருத்து.
[12] இச்சுலோகத்தில் – கங்குற்பொழுதெலாம் – என்பது கிருட்டினம், சுக்கிலம் என்னும் இருபக்கத்து இரவுகளிலும் காலவரையறையை நீக்கி, கலைக்குறைவின்றி மதி விளங்குதலைக் குறிக்கும். எரிக என்பது தண்கதிர்ச் செல்வனாயினும் பிரிவெய்தினோரை வெப்புறச் செயல் இவனது இயல்பெனக் குறிக்கும். இவ்வாண்மகனும் இன்னுயிரும் என்னுமிவற்றால் கன்னியர்க்குத் தன்னொழுக்கத்தைக் காத்து நன்னெறி நடத்தலே யின்றியமையாத கடமையாம் என்பதும் குறிப்பிடப்பட்டது.
[13] உபாயம் யாதென மனத்தில் ஆலோசிக்க, காமந்தகி வந்தனள் என்னும் சொல் நேர்ந்தமையின் இதற்குபாயம் அவளேயாவள் என்னும் சுப நிமித்தமும் குறிப்பிடப்பட்டது.
[14] இருவகை யுலகங்கட்கு முரண்படாமை – எனது குடியே தமக்கு அடிமையாகலின் தங்கருத்திற்கியைவன செய்க; என்னும் பொருள்படும் விடையினால் இன்பந் துய்த்தற்குரிய மண்ணுலகிற்கு முரண்படாமையும், தங்கன்னியர்க்கே யன்றிப் பிறர் கன்னியர்க்குத் தாம் உடைமையானரல்லர் என்னும் எதிர்மறைப் பொருள்படுதலான் அகந்தூய்மையமையும் வாய்மையானும், முன்னர்ச் செய்யப்பட்ட நட்புறுதிப்பாட்டின் முறிவாகுந் தோடமின்மையானும், விண்ணுலகிற்கு முரண்படாமையும் ஆம்.
[15] வாழையுண்மருங்கு – இவ்வுவமையால் மென்மை, செம்மை, வெண்மை முதலியன குறிக்கப்படுகின்றன.
[16] ஒருகலை மதி – என்பது கதிரவன் கலையில் முற்றும் கலந்து ஒளியிழந்து தோன்றாதொழியு நிலையில் இருக்கும் சுமையின் முதனாட்பிறையினை யுணர்த்தும்.
[17] தன் செயற்குக் கருவியான காமவேட்கையில் இவள் நிலைப்படுதலால் இன்பத்தையும், இத்தகைய காமநோயின் வயத்தளாய் ஒருகால் இறந்துபடுமோ என்னுமச்சத்தால் துன்பத்தையும் இவள் ஒருசேரத் தருகின்றனள் என்பது கருத்து.
[18] மசுருணம் முதல் ஐந்தும், புணர்ச்சியினிகழுங்கட்பொறிச் செயல்களது குறியீடுகளாம்; அவற்றுள், மசுருணம் – காதலினிடத்துக் காதன்மிகையால் கண் செம்மையுற்றுக் கலக்கமுறப் பார்த்தல்; முகுளம் – இன்ப நுகர்ச்சியில் இமையைக் குவித்து கருவிழியைச் சிறிது அலர்த்திப் பார்த்தல்; ஆகேகரம் – சிறிது கடைகுவிந்து குறிப்புடன் பொருந்தும் இமைத்தலுடன் கருவிழியை மிகச் சுழற்றிப் பார்த்தல்.
சினிக்குதம், முக்குதம் இவற்றின் இலக்கணம் முதலங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இச்சுலோகத்தினால் இன்ப நுகர்ச்சியையுணர்த்து முகத்தான் சம்போக சிருங்கார ரசம் குறிப்பிடப்பட்டது.
[19] கபடநாடகம் – தகுதியற்ற ஒருவனுக்கு வாழ்க்கைப் படுதலைக் கூறுமுகத்தான் அச்சத்தை விளைவித்து மாலதியின் மனத்தைக் களவு மணத்தில் முயல்வித்தலாகும் செயலாம்; அதன் றொடக்கமாவது நெட்டுயிர்த்து நலம்போலும் என்று கூறிய சொல்.
[20] சீரசீவரம் – முதலங்கத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது.
[21] ஒருவன் துர்க்கை முதலிய தெய்வங்களுக்கு ஆடுகோழி முதலியவைகளைப் பலிகொடுத்து தன் கோருதலை நிறைவேற்றிக் கொள்ளுதல் போல அமாத்தியன் செயலுமாம்.
[22] அன்பன் – உண்மையுரைப்பவனும், நேர்மையான மனப்பான்மையுள்ளவனும், உதவிபுரிபவனும், இனியவை கூறுபவனும், ஆகித் தானுமின்புறு மொருவன் அன்பன் என்றும்,
[23] நண்பன் – துக்கம், ஆபத்து, மயக்கம், செயற்குரிய காலம் கெடுதல், இவற்றில் நன்மையே நாடிச் செய்யு மொருவன் நண்பனாகும், என்றும் பரதநூல் கூறும்.
[24] தூமகேது – உற்பாதம்; இதனைக் கண்ட அளவில் தீங்கு நேருவது போல மாலதிக்குத் தீங்கு நேரும் என்றும் மதியை உவமித்தலான் அத்தீங்குங் கடிதில் நீங்கியவள் இன்புறுவாள் என்றும் குறிப்பிடப்பட்டது.
[25] இந்தச் சுலோகத்திற் கூறப்பட்ட அடைமொழிகள் மாதவனுக்கும் சந்திரனுக்கும் ஒக்கும்.
[26] ஆம்பல் – மாதவன் மதியை நிகர்த்தவன் ஆதலின் அவனைக் கண்டு மகளிரது கடைவிழியாகும் ஆம்பலும் அலர்தரலியல்பு.