உரைநடைக் கோவை
முதற் பகுதி
சமயக் கட்டுரைகள்
மகாமகோபாத்தியாய
முதுபெரும் புலவர் சைவ சித்தாந்த வித்தகர்
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
தேனினும் இனிய செந்தமிழ் மொழியின் தீஞ்சுவையில் ஈடுபட்டுப் பயின்று பல்லாண்டுகளாக யான் அறிந்துவந்த உண்மைகளை, விரும்பிய அன்பர்களின் அவைக்களங்களில் சொற்பொழிவுகளின் மூலமாகவும், கட்டுரைகளின் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளேன். அவற்றுள், மதுரைத் தமிழ்ச் சங்கம், பூவாளூர்ச் சைவ சித்தாந்த சங்கம், சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாஜம் இம் மூன்று பேரவைகளிலும் முறையே பேசிய சன்மார்க்கம், சிவபிரான் கருணையும் சீவர்கள் கடமையும், சைவசமய விளக்கம் என்னும் சொற்பொழிவுகளும், கரந்தைக் கட்டுரையில் வெளிப்படுத்திய ஞானத்தின் திருவுரு என்னுங் கட்டுரையும் புதிதாக எழுதிய அன்பின் திருவுரு என்னுங் கட்டுரையும் ஆகிய இவ்வைந்தனையும் தொகுத்து உரைநடைக் கோவை முதற்பகுதியாகவும், ஏனைய இலக்கியக் கட்டுரைகள் பலவற்றையும் தொகுத்து இரண்டாம் பகுதியாகவும் என் அன்பர்கள் விருப்பின்படி வெளியிடலானேன். …
உரிமையுரை
செந்தமி ழமிர்தத் திவலையும் உலகிற்
றிகழ்வட மொழிமணி சிலவும்
முந்துறப் பெறுதற் கறிவொளி யுதவி
முன்னுமென் சிறுபரு வத்தே
நந்தலில் புகழை நிறுவியெம் இறைவன்
நல்லடி யடைந்தவென் அரிய
தந்தையின் அருளை நினைவுறீஇ யுருகுந்
தன்மைக்கீ தறிகுறி யாமால்.
கற்றுவல்ல பெரியோர் அவைகளில் சிறியேனாகிய யானுங் கலந்து பயன் எய்துதற்குரிய நல்லறிவு பெறுதற்குக் காரணிகராகிய என் அரிய தந்தையார் அவர்களின் அருட்பெருக்கை நினைந்து நினைந்து உருகுதற்கு அறிகுறியாக இந்நூலை வெளியிட்டு அவ்வருட்கு இதனை உரிமைப் படுத்துகின்றேன்.
மகிபாலன்பட்டி
16 – 04 – 1941 மு.கதிரேசன்
உரைநடைக் கோவை
1. சன்மார்க்கம்
அன்புமிக்க ஐயன்மீர் !
பரமகருணாநிதியாகிய சிவபெருமான் திருவருளால் மிக அரிதிற் கிடைக்கப்பெற்ற மக்கள் யாக்கையுடையாரெல்லாரும் தம் பிறப்பானெய் தற்பாலனவாகிய உறுதிப்பயன்களை யெய்துதற்கு இன்றியமையாச் சாதனங்களாகவுள்ளவை மொழியறிவும், சமய ஞானமுமேயாம். இவ்விரண்டனுள் மொழியறிவு சமயஞானத்தைத் தருதற்குரியதாகலின், முதலில் மொழி வளர்ச்சி கருதி அதற்கு வேண்டுவன செய்தல் அவ்வம் மொழியாளர்க்குரிய முக்கிய கடைமையாகும். இவ்வுண்மை யுணர்ந்தே செந்தமிழ் வளங்கெழுமிய இம் மதுரை மாநகரின் கண்ணே முன்னர் முதலிடைகடை யென்னும் முச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த தெய்வப் பாண்டியர்களனைவரும் தம் எண்ணத்தின் பயனாக ஓருருக் கொண்டு தோன்றியாங்கு இராமநாதபுரத்தில் தமிழ் மக்கள் செய்த தவப்பயனாக உதித்தவர்களும், கற்றுத் துறைபோய நற்றவக் குரிசிலுமாகிய திரு.பொ.பாண்டித்துரைசாமித் தேவரவர்கள் முற் சங்கமுறை வழுவாது இச்சங்கத்தை நிறுவினார்கள்.
இனி, இச்சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவேற்றக் கொண்டாட்ட நிமித்தங்கூடிய இப் பேரவையிற் படித்தற்குரியதாக ஒரு கட்டுரை எழுதிவர வேண்டுமென்று இதன் தலைவரவர்கள், ஆணை தந்தனர். அவ்வாணை கடவாது ஈண்டுப் படித்தற்குரிய பொருள் யாதெனச் சிந்திக்கும் பொழுது, செந்தமிழ் மொழி வளர்ச்சி கருதிய கட்டுரையே யுரியதாயினும், அம்மொழியின் முதலாசிரியர் சிவபெருமானேயாதலானும், அப்பெருமானை யுணர்தற்குரிய நெறி சைவ சமயமேயாதலானும், இவ்வுண்மை தெளிந்தே இஞ்ஞான்றும் இச்சங்கத் தலைவராகிய திரு தேவரவர்கள் பல சைவப்பிரசங்கங்களால் இச்சமய வளர்ச்சியோடு மொழி வளர்ச்சியையுங் கருதி மேற்கொண்டமையானும், சைவசமயத்தைப் பற்றிய கட்டுரையொன்று எழுதிப் படித்தல் பொருத்தமாகுமென்று தோன்றியமையால் “சன்மார்க்கம்” என்னும் இப்பொருளைப்பற்றி என் சிற்றறிவிற் கெட்டியவாறு எழுதத் துணிந்தேன். இங்ஙனம் பெரியாராணை கடவாமை யொன்றே கருதிக் கூறப்படும் இப்பொருள், வேற்றுலோகக் கலப்பால் வேறுபட்ட பொன் நெருப்பைச் சார்ந்து அக்குறை யொழியப்பெற்றுத் தூய்தாதல்போல், என் அறியாமையானேர்ந்த குற்றங்களை உங்கள் அறிவொளியானொழித்து மகிழ்விக்குமென்னுந் துணிவு பெரிதுடையேன்.
ஆன்றோர்களே !
அறிவின் மிகுந்த பெரியார் வகுத்த இருதிணைப் பகுதியுள் அஃறிணையொழித்து உயர்திணைப் பகுதியின்பாற் பட்ட உயிர்கள் மனவுணர்வுடைமையான் மேலாயவென்பது வெளியாம். அவ் வுயர்திணையுட்பட்டார் மக்கள், தேவர், நரகர் என மூவகையினராவர் என்ப இயனூலாசிரியர். இம்மூவருள்ளும் தேவர்கள் நல்வினைப்பயனொன்றே நுகர்ந்து அந் நுகர்ச்சியிறுதிக்கண் அத் தெய்வ சரீரமொழிய மீண்டு வினைக்கேற்ற புவனபோகதநுகரணங்களைக் கொள்வர். நரகர் தீவினைப் பயனொன்றே நுகர்ந்து அதனிறுதிக்கண் பிறவினைப்பயன்களைத் துய்த்தற்கு அவ் வினைக்கேற்ற யாக்கை முதலியவற்றைக் கொள்வர். தேவர்கள் நல்வினைப்பயனாகிய இன்பத்தைத் துய்க்குங்கால் அதற்கெதிராகிய துன்பம் இனைத்தென்றுணரப் பெறாராதலின், அவ்வின்பத்திலிறுமாந்து அதனையே நித்தியமென்று கருதி, அக்கருத்தாற் பல வினைகளையும் ஈட்டுவர். நரகர் தீவினைப்பயனாகிய துன்பத்தைத் துய்க்குங்கால் அதன் கண் வெறுப்புத்தோன்றி அதற்கெதிராகிய சிற்றின்பத்தில் அவா மிக்குடையராய் அதற்கு வேண்டிய செயல்களைச் செய்வர். இவ் விருதிறத்தினரும் “வினைப்போகமே யொரு தேகங் கண்டாய்” என்றபடி நல்வினை தீவினைகள் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தம்மைப் பிணிக்க அவற்றிற் கீடாகப் பல பிறப்புக்களையும் எய்துவரென்பதொருதலை. தேவருட் சிலர் வீடடைதற்குரியராயிருப்பினும் பெரும்பான்மை பற்றி இங்ஙனம் கூறப்பட்டது. இந்நிலவுலகத்துள்ள மக்கட்பிறப்பினராகிய நாமோ நல்வினை தீவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களைக் கலந்தனுபவிக்கும்படி இறைவனால் கட்டளை இடப்பட்டிருக்கின்றோம்.
நாம் துன்பத்தைத் துய்க்கும்பொழுது அதன்கண் வெறுப்புத் தோன்றி அதற்கெதிராகிய சிற்றின்பத்தை விழைகின்றோம். உடனே அத்துன்பநுகர்ச்சி நீங்க அவ்வின்பம் தலைக்கூடுகின்றது. அதனை மகிழ்ந்தனுபவிக்குங்கால் அதுவும் உடனே நீங்கப் பின்னருந் துன்பந் தொடர்கின்றது. அப்பொழுது, ஆ! சற்றுமுன்னரனுபவித்த இன்பம் எங்கே? நிலையிலதாயொழிந்ததே! அதனையே பொருளென்று நம்பியிருந்தோமே! அதனை நுகரும் பொழுது நம் பெண்டிர் மக்கள் சுற்றத்தார் நண்பர் நம்மிடத்து வைத்த அன்பு அது நீங்கியபொழுது வேறுபட்டிருக்கின்றதே! அவர்கள் அன்பு செய்தற்குரித்தாக நம்மிடத்து முன்னுள்ள செல்வம் யாண்டுச்சென்றது? ஈதென்னை மாயம்! நல்வினைப் பயனுந் தீவினைப் பயனும் அழிதன்மாலையின வாயின் அழியாது நுகர்தற்குரிய இன்பம் யாண்டுள்ளது? அதனைப் பெறுதற்கு முயறலேயன்றி வேறு முயற்சி இது பொழுது செய்தற்கு அவகாசமில்லையே! என்றின்னோரன்ன ஆராய்ச்சியுண்டாம். அவ்வாராய்ச்சியின் வாயிலாக நாம் எய்தவேண்டிய அழிவிலாப் பேரின்ப மயமான வீட்டை யெய்தலாம். அங்ஙனம் அடைதற்குக் கருவியாகவுள்ளது இம்மக்கட்பிறப்பேயாதலின், மற்றெல்லா யாக்கையிலும் பெறுதற்கரியது இம்மக்கள் யாக்கையே யென்பர் பெரியார்.
இனி, இவ்வரிய மக்கட்பிறப்புடையாரெல்லாரும் பரம்பொருளை யெய்திப் பேரின்பம் நுகர்தற்கு வாயிலாக அவ் விறைவனாற் காட்டப்பட்ட நெறிகள், வேதாகமங்களிற் பற்பலவுள்ளன. அந் நெறிகளெல்லாம், பன்முகமாக ஒழுகிச்செல்லும் பல சிற்றாறுகளெல்லாம் ஒரு பேரியாற்றிற் கலப்ப, அஃது அவ்வெல்லாவற்றையுந் தன்னுட்கொண்டு நேரே கடலைச் சார்தல்போல, முடிவில் ஒரு பெரு நெறியைத் தலைப்பட, அந்நெறியே தன்னைச் சார்ந்தாரைப் பரம்பொருளிடத்துச் செலுத்துதற்குரியதாகும். அதுவே தன்பால் நேரிற்போந்தாரைப் பிறவழிகளிற் புகுத்தித் துன்புறுத்தாது, செல்லுந்தோறும் செல்லுந்தோறும் அளவிலா இன்பமுறுத்தி முடிவில் ஒருதலையாக வீட்டின்பத்திற்றலைப்படுத்துவதாகும். அப்பெரு நெறியே சன்மார்க்கமென்று கூறற்குரியதாகும். சன்மார்க்கமென்னும் வட சொல்லை உண்மை நெறியெனத் தமிழிற் பெயர்க்கலாம். அவ்வுண்மை நெறியிற் சென்றாரே, அழிவின்றி எஞ்ஞான்றும் ஒரே படித்தாயும், பெறுதற்குரிய அதிகார முடையார்க்கேயன்றி யேனையோரானெய்தப்படாததாயும், சார்ந்தாரைப் பிறபொருளிடத்துச் சிறிதும் பற்றின்றியிருப்பச் செய்வதாயும் பேரின்ப மயமாயுமுள்ள உண்மை நிலையை யடைதற்குரியராவர். இனி, உண்மை நிலையை அண்முதற்குரிய நெறியே உண்மை நெறியென்று தெளிந்தமையான் முதலில் உண்மைநிலையின்னதென்று ஆராய்ந்து பின் அந் நெறியிற்படர்வேன்.
இவ் வுலகத்துத் தோன்றிய ஒருவன் சிறிது திருவருள் விளக்கம் பெற்றவுடன் சில ஆராய்ச்சியிற் றலைப்படுவன். அங்ஙனம் ஆராயப்புகும் பொழுது முதலில் நான் யார்? எனக்கு இவ்வுடல் வந்தவாறென்னை? என்னோடொத்த பிறப்புடையார் பலரும் பலவிதத் தோற்றமுடையராதற் கேதுவென்னை? நான் இன்பநுகரும் பொழுது மற்றொருவன் துன்பநுகர்கின்றனனே! ஒருவன் நீண்டநாளிருக்கின்றான்; மற்றொருவன் மிக்க இளமையில் இறக்கின்றனனே! ஒருவன் மிக்க செல்வனா யிருக்கின்றான் மற்றொருவன் மிக்க வறியனாயிருக்கின்றனனே! என்றின்னோரன்ன ஆராய்ச்சி நிகழும். இவ்வாராய்ச்சியை இடைவிடாது ஒருவன் மேற்கொண்டு, கற்றுணர்ந்த பெரியோரையடுத்து அவர்முகமாக உண்மை நூல்களைக் கேட்டுத் தெளியப் புகுவனாயின், இவ்வேறுபாட்டிற்கெல்லாங் காரணம் இருவினையாமென்பதூஉம் அவ்வினைகளிப்பிறப்பிற் செய்யப்பட்டனவோவென்று ஆராயும் பொழுது இவ்வளவு நுகர்ச்சிக்கேற்ற வினைகளையொருங்கே செய்யவில்லையென்பது அநுபவத்திற் றெரியுமாதலின், இவ்வளவுஞ் செய்தற்கு முன்னொரு பிறப்பு இன்றியமையாது இருத்தல் வேண்டுமென்பதூஉம், இங்ஙனம் முற்பிறப்பிற் செய்த வினைகளே பிற்பிறப்பிற்குக் காரணமாயின், இப்பிறப்பிற் செய்யப்பட்ட வினைகள் காரணமாக இன்னும் பலபிறவிகள் நேருமென்பதூஉம், இங்ஙன முணர்ந்து வைத்தும் பின்னரும் அவ்வினையீட்டத்தி லுள்ளஞ்சேறல் எதனாலென்பதூஉம் பிறவுமாகியவுணர்ச்சிகளுண்டாம்.. அவ்வுணர்ச்சி முதிர்வின்கண் இவற்றிற்கெல்லாங் காரணமாகிய வித்தாகவுள்ளதும், ஆன்மாக்களை யநாதியே பற்றி நிற்பதும் ஆகிய மூலமலமெனப்படும் ஆணவம் ஒன்றுண்டென்னுந் தெளிவுண்டாம். ஆகவே அவ்வாணவமாகிய வித்தினிடத்துள்ள ஆற்றல் குன்றும்படி வறுத்தாலொழிய இப்பிறவிமுளை கெடாதென்பதூஉம், அம்மலம் செம்பிற் களிம்புபோல்வதொன்றென்பதூஉம் போதரும். செம்பு தன்னைச் சார்ந்த களிம்பைத் தானே போக்குதற்குரிய ஆற்றலுடையதன்று. களிம்பும் அதனைத் தானேவிட்டு நீங்கும் இயற்கையுடையதன்று. அக்களிம்பை நீக்குதற்குரிய மருந்தொன்றும், அம்மருந்தையறிந்து சேர்த்துப் பொன்னாக்கு முறை தெரிந்த அறிஞன் ஒருவனும் வேண்டும். அது போல, அநாதியே பற்றிய ஆணவமலவாற்றல் உயிரை விட்டுத் தானே நீங்குதலுமின்று. உயிரும் அதனையொழித்தற்குரிய ஆற்றலுடையதன்று. அவ்வுயிர்க்கு மாயாமலத்தினின்றும் அஃதீட்டிய வினைக்கேற்றவுடலைக் கொடுத்துக் கன்மப்பயனை நுகர்வித்து ஒழிந்த பின்னர்த் தன் திருவடி நீழலிற்சேர்த்து வீட்டின்பத்தைத் தருதற்குரிய இறைவன் ஒருவன் வேண்டும். ஆனால், முன்னுள்ள ஆணவமலவழுக்கைப் போக்கற்குப் பின்னும் இருமலங்களைக் கருவியாகக் கோடல் பொருந்துமோவெனின், வெள்ளிய ஆடையிலுள்ள அழுக்கைப் போக்குதற்கு உவருஞ்சாணியுமாகிய வேறிரண்டு பொருள்களைச் சேர்த்து எல்லாவற்றையும் ஒருங்கே கழுவுதல் வண்ணானிடத்துக் காட்சியிற் றெரிந்திருக்கின்றே மாகலின் பொருந்துமென்க.
இனி, அம் மலவாற்றல் இறைவன் சீற்சக்தியாலொழியப்பெற்று இறைவனுடன் இரண்டறக் கலந்து சலிப்பின்றி யனுபவிக்கும் பேரின்ப நிலையே உண்மை நிலையெனப்படும். இந் நிலையிலுள்ள இறையுயிர்களின் சிறப்பு இயைபையே அத்துவித மென்ப. இங்ஙனமின்றி அத்துவிதம் என்னும் சொற்கு ஏக மென்று பொருள் கொள்ளுவாரும் உளரேயெனின், அஃது ஏகமென்னாது இரண்டற்றது என்னும் பொருள்பட அத்துவிதம் என்று உய்த்துணர வைத்தமையாற், பொருந்தாதென்க. ஒரு வண்டு தேனிறைந்த மலரில் வீழ்ந்து அம்மதுவைத் தேக்கறவுண்டு களித்து அதன்கட் டோய்ந்திருக்கும்பொழுது தான் வேறு மது வேறு என்னும் வேற்றுமையுணர்வின்றிக் கிடத்தல்போல, ஆன்மா இறைவனிடத்துப் பேரின்ப நுகர்ச்சியிற் றலைப்பட்டுத் தான் ஒரு பொருளென்னும் வேற்றுமையுணர்வின்றியொன்றுபட்டிருக்கும். அந் நிலையே அத்துவித நிலையாகும். இதனைக் கட்டு நிலையிலுள்ள நம் அனுபவத்தானு முணரலாம். எங்ஙனமெனின், இந்நிலையில் நம்மைப் பிணித்திருக்கும் ஆணவமலத்தைப் பிரித்துணரவுங் கூடவில்லை. அங்ஙனங் கூடாமைபற்றி அம் மலம் ஆன்மாவாகிய நாமாவேமெனின், ஒவ்வோரமயம் நிகழுந்திருவருள் விளக்கத்தால் அதனாற்றல் சிறிது குன்றியபொழுது நமக்கு இறைவனைப் பற்றிய அறிவாராய்ச்சி தலைப்படக் காண்கின்றேமாகலின், நாம் அம் மலமாதலும் இல்லை. இதனால், ஆன்மா வேறு தனிப் பொருளென்பதூஉம், அம் மலம் ஒரு தனிப் பொருளென்பதூஉம் தெளிந்தும், இங்ஙனம் அறியக்கூடாமலிரண்டும் ஒன்றுபட்டிருக்கும் இந் நிலையும் ஓரத்துவித நிலையாகும். இதனை
“ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோ டத்துவிதஞ் சாருநா னெந்நாளோ”
என வரும் தாயுமான அடிகள் உபதேசத்தானுமுணர்க. இங்ஙனமாகிய ஆணவவாற்றலைக் கெடுத்து இறைவனுடனியைந்து நிற்றலையே உண்மை நிலை யென்று கூறலாம். இவ்வுண்மை நிலை யெய்திய ஆன்மா மீண்டு பிறத்தற்குக் காரணமாகிய மலத்தொடர்பின்மையால் அவ்விறைப் பொருளோடு இரண்டறக்கலந்து பேரானந்தப் பெருவாழ்விலே நிலை பெற்றிருக்கும்.
இத்துணையுங் கூறியவாற்றால், உண்மை நிலை யின்ன தென்பது ஒருவாறு தெளியப்பட்டதாகலின், இனி, அந் நிலையை யடைதற்குரிய உண்மை நெறியாகிய சன்மார்க்கம் இன்னதென்பதை யாராய்வேன். உண்மை நிலை கூறுங்காற் றெளியப்பட்ட நித்தியப் பொருள்கள் மூன்றாகும். அவை, இறை யுயிர் கட்டு {பதி பசு பாசம்} என்பனவாம். அவற்றுள் கட்டு எனப்படும் பாசத்தை முற்கூறியபடி மூன்றாகவும், வேறொரு வகையா னான்காகவுங் கொள்வர். இதனை,
“ஏக னநேக னிருள்கரும மாயை யிரண்டு”
என்பதனானுமறிக. இனி, ஈண்டுக் கூறப்பட்ட பதிப்பொருள் யாது? அதனுண்மை எவ்வளவையாற் றெளியலாம்? என்னும் ஆராய்ச்சியிற் றொடங்கினால், முடிவில் அப்பொருள் சிவமும் அதனை முதலிலறிதற்குரிய அளவை கருதலளவையுமா மென்பது வெளியாம். அளவைகள் பலவற்றுள் காட்சி உவமான முதலிய அளவைகளாற் சிவபிரானை யறிதல் கூடாது. என்னை, அவர் மாற்ற மனங்கழிய நின்ற மறையவராகவும், எல்லாந்தாமாய் என்றும் அழிவின்றி நிறைந்த உண்மை யறிவின்ப வுருவினராயும் பதி ஞானத்தானன்றிப் பாசபசு ஞானங்களானறியப்படாதவராகியுமுள்ளாராதலின், இனி, உரையளவையாகிய வேதாகமங்கள் அப் பதியினாலருளப்பட்டன வாகலின் பிரமாணங்களாமேயெனின்; பதியுண்மை தெளிந்த பின்னன்றே பதிவாக்குப் பிரமாணமாகும். அங்ஙனந் தெளிதற்கு முன்னர் எங்ஙனம் பிரமாணமாமென்று வினாயினார்க்கு விடை கூறுதலிடர்ப்படுமாதலின், முதலிற்கருதலளவையானே இறைவனையறிதல் வேண்டும். எங்ஙனமெனின், அவயவப் பகுப்புடையனவாய்க் காரிய வடிவமாகவுள்ள பலவகையான இவ்வுலக அமைப்புக்களை நோக்கினால் இவை ஒருவனாலாக்கப்பட்டன வென்பது வெளியாகும்.
குட முதலிய காரியப் பொருள்கள் ஒரு கருத்தாவாற் செய்யப்பட்டன வென்பது காட்சியளவையிற் றெரிந்திருக்கின்றே மாகலின், குடத்தின் றோற்றத்திற்குக் குலாலன் நிமித்த காரணமும், மண் முதற் காரணமும், தண்டசக்கரங்கள் துணைக் காரணமுமாதல்போல: இவ் வுலகத் தோற்றத்துக்குச் சிவபெருமான் நிமித்த காரணமும், மாயை முதற்காரணமும், சிவசக்தி துணைக் காரணமுமாகும். இங்ஙனம் வழி அளவையால் துணியப்பட்ட கடவுள் பின்னர் நூலளவையால் நன்கு தெளியப்படுவர். நூல்களுள் முதனூல்களாகவுள்ளவை வேத சிவாகமங்களேயாம். இவற்றை யருளியவர் பரமசிவனே யாவர். இதனை, “சர்வவித்தைகளுக்கும் ஈசானர் கருத்தா” எனவும் “வேதம் பரம்பொருளினாற் சுவாசிக்கப்பட்டது” எனவும் வரும் சுருதிகளானும்,
“வெவ்வேறு வகையினவாகிய பதினெட்டு வித்தைகளுக்கும் சூலபாணியாகிய சிவபிரானே முதலாசிரியராவர்” என்னும் வாயுசங்கிதையானும் உணர்க. இவ் வேத சிவாகமங்களிரண்டும் முடிவில் ஒரு பொருளனவேயாம். ஒரு பொருளனவாக இருவிதநூல்களேன் செய்தல் வேண்டும்.? ஒன்றே போதாதோ வெனின், முன்னது உலகத்தின் மக்களறிவிற் கேற்றவாறு பல தேவர்களையும் பரம்பொருளென உபசாரமாகக் கூறித் தூலாருந்ததி நியாயமாகக் காட்டி அவரை நல்வழிப்படுத்தப் பொதுவாகவும், பின்னது மல பரிபாக மெய்திய பக்குவான்மாக்கள் பொருட்டுச் சிறப்பாகவும் அருளப்பட்டனவாம். வேதம், பொருள் பலபடத் தோன்றுஞ் சூத்திரம் போலவும், சிவாகமம் அதனை யங்ஙனமாக வொட்டாது தெளித்துரைக்கும் விரிவுரை போலவுஞ் சிவபெருமானாலருளப்பட்டன வென்பர் பெரியார். அவ்விரண்டனுட் சிவாகமம் வெளிப்படையாகச் சிவனே பரம்பொரு ளென்று கூறுதலின் அதனைவிட்டுப் பொதுவகையாகக் கூறும் வேதத்தின் அந்தரங்கத்தைச் சிறிதாராய்வேன்.
வேதத்திற் சிவபிரான், பிரமம், பசுபதி முதலிய பதங்களானும் சிவபதத்தானுங் கூறப்படுவர். கேநோபநிடதத்தில் இயக்கவுருவந் தாங்கி வந்த பரமசிவனை யறியாது மயங்கி இந்திரனை நோக்கி அப்பெருமானுடைய சக்தியும், இமவான் புதல்வியுமாகிய உமையம்மையார் “இவ்வியக்கன் பிரமம்” என்று கூறினமை தெளியப்படுத்தலானும் பிறவற்றானும் பிரமம் என்னுஞ் சொல் சிவபிரானை யுணர்த்தலறிக. பிரமபதம் சிவனை யுணர்த்தல் ஆண்டு வெளிப்படையாக வின்மையால் வேறு தெய்வத்தைக் குறிக்குங் கொலோ வென்று ஐயுறுவார்; அஃதுமையாற் கூறப்பட்டமையானும், இச்சரித்திரத்தைப் புராண வாயிலாக விளக்கிய வியாசமுனிவர் இயக்க வுருவந்தாங்கி வந்தவர் சிவபெருமானே யாவர் என்று தெளிவுற விளக்கமாகக் கூறுதலானும் மலைவின்றித் தெளிவாராக.
இனி, வேறு தேவர்களைப் பற்றியும் வேதத்தில் பிரமபதம் கேட்கப்படுகின்றதாலோ வெனின்: தேவர்களேயன்றி அன்ன முதலிய சடப்பொருள்களும் பிரம்மென்று கூறப்படுகின்றன வாதலானும், அவையெல்லாம் உலக வின்பத்தில் விருப்புற்ற ஆன்மாவை அது விரும்பிய தொன்றைப் பெரிதாகக் கூறி அவ்வளவிலிழுத்துப் பின் அதனை யுவர்ப்பித்து மேன்மேற் கொண்டு செலுத்தற்குப் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் செய்த உபாயமாதலானும் உபசாரமேயாமென்க.
அவை யுபசார மென்பதும் சிவனைப் பற்றிக் கூறியது உண்மை யென்பதும் எதனாற் பெறுதுமெனின்; எஜூர் வேதத்துள்ள சமக மந்திரங்கள் திருமால், பிரமன் முதலிய தேவர்களை அன்னத்தோடு சேர்த்து ஈயப்படும் பொருளாகக் கூறினமையானும், சிவபெருமான் ஈயுந் தாதாவாகலினவரை அங்ஙனங் கூறாமையானும், மும்மறைகளின் நடுவண் திருவைந்தெழுத்தும் அவற்றின் நடுவண் சிவசப்தமும் வேதங்களின் இருதயத்தானத்தில் விளங்குதலானும், பிறவற்றானும் பிரம விலக்கண முற்றுஞ் சிவபிரானுக்கே உரியனவாதல் தெளியலாம்.
எஜூர் வேதத்தில் “அந்நியர்களாற் சாதிக்கமுடியாத திரிபுரத்தை வெற்றிகொண்டு உலகத்தைக் காத்தமையாற் பசுபதி நீயே; யாமெல்லாம் பசுக்கள் என்று அங்கீகரித்தனர் தேவர்கள்” என்பது கேட்கப்படுதலானும், “உமாபதிக்கு வணக்கம், பசுபதிக்கு வணக்கம்” என்னுஞ் சுருதியுண்மையானும், ஏனைய தேவர்களெல்லாம் பசுக்களென்பதும், சிவபிரானொருவரே பசுபதியென்பதும் வெள்ளிடைமலைபோல் விளங்குவனவாம். இங்ஙனம் வேதாகமங்களால் துணியப்பட்ட பரம்பொருளாகிய சிவபெருமானை அநுமான வளவையானுணர்தலும், அப்பதிப்பொருளோடு பசு பாசங்களி னுண்மையைத் தெளிதலும், அத்துவித சப்தத்திலுள்ள அகரத்திற்கு இன்மை மருதலைப் பொருள்களை யொழித்து அன்மைப் பொருள் கோடலும் பிறவுஞ் சைவ சித்தாந்தத்திலுள்ள தெளிபொருள்களாகக் காணப்படலான், சைவ சமயமே சன்மார்க்கமென்னுஞ் சொல்லாற் கூறுதற் குரிமை யுடையதாகும். வீடு என்பது எல்லாப் பொருட் பற்றுக்களையும் விடுதலே யாதலானும், அங்ஙனம் விட்டபின் மீண்டு பிறத்தலின்மை யானும், அப்பிறப்பின்மையை ஆன்மாக்களுக்குதவும் பதிக்குப் பிறப்பிறப்பின்மை இன்றியமையாதென்பது யாவரானும் அங்கீகரிக்கற்பாலதே. இவ்விலக்கணம் “எல்லார் பிறப்பு மிறப்புமியர் பாவலர்தஞ், சொல்லாலறிந்தேநஞ், சொணேசர் – இல்லிற்பிறந்த கதையுங்கேளேம், பேருலகில் வாழ்ந்துண், டிறந்தகதையுங் கேட்டிலேம்” என்னும் பிரமாணப்படி சிவபிரானிடத்தன்றிப் பிற தேவரிடத்தின்மையானும், அவரெல்லாம் பிறந்து வாழ்ந்திறந்தகதை புராணங்களிற் கேட்கப்படுதலானும், “எப்பொழுது ஆகாயத்தைத் தோலாகவுரித்து உடுக்கின்றனரோ அப்பொழுது சிவத்தையறியாது பிறவித்துன்பத்தின் முடிபெய்துவர்” என்னுஞ் சுருதியாற் சிவபிரானைச் சார்ந்தாலொழியத் துன்புஒழிவுபெற முடியாதென்று தேறப்படுதலானும் அப்பெருமானே மீண்டு வாராவழி அருள்பவனென்பது ஐயமின்றியுணரலாம்.
இனி, அச் சிவபரஞ்சுடரைப் பரம்பொருளெனத் தேற்றி, அவரைச் சார விரும்பித் தன்னையடுத்தாரை நேரே கொண்டு செலுத்தும் உண்மை நெறி சைவ சமயமே யாதலின், அதுவே சன்மார்க்கமென்பதில் ஒரு சிறிதும் ஐயமின்று. முனிவர், சித்தர், இந்திராதிதேவர் முதலிய யாவருக்கும் இச் சைவ சித்தாந்த சன்மார்க்கமே தாயகமாக வுள்ளதாகும். இவ் வுண்மைகளை நன்கு தெளிந்த தாயுமான சுவாமிகளும்,
“அந்தோவீ ததிசயமிச் சமயம் போலின்
றறிஞரெலா நடுவறிய வணிமா வாதி
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
வைத்திருந்த மாதவர்க்கு மற்று மற்றும்
இந்திராதி போகநலம் பெற்ற பேர்க்கு
மிதுவன்றித் தாயகம்வேறில்லை யில்லை
சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத்
தக்கநெறி யிந்நெறியே தான்சன் மார்க்கம்”.
என்று தம் அநுபவ ஞானத்தா னாராய்ந்து கூறினர். இன்னும், இம் மார்க்கமானது பிறநெறிகளை யெல்லாந் தனக்குச் சோபானமாக ஏற்று அந் நெறிப்பட்டாரை முடிவில் தன்பாற் சேர்த்துக்கோடலானும், பிற நெறிகள் இங்ஙனமின்றி ஒன்றையொன்று வெறுத்தொதுக்குதலானும், இச் சைவ சித்தாந்த நன்மார்க்கமே சன்மார்க்கமா மென்பது கருதலாமலகமாகும். இன்னும், இச்சமயமானது பிருதிவி தத்துவமுதற் சிவதத்துவ மீறாகத் தத்துவங்கள் முப்பத்தாறெனவும், இவைகளைக் கடந்து நிற்றலாற் சிவபிரான் தத்துவாதீதராவரெனவுங் கூறுதலானும், பிறசமயங்களெல்லாம் பெரும்பாலும் இம் முப்பத்தாறனுள் ஆன்ம தத்துவம் இருபத்து நாலிலடங்கி அத் தத்துவப் பொருள்களையே பரம்பொருளெனக் கோடலானும், அவையெல்லாம் இதனுள் வியாப்பியமாயடங்க இது வியாபகமா யொன்றினும் அடங்காமல் அவற்றையெல்லாங் கடந்து நிற்றலான் இதனையே இதீத சமயமெனவும், இந்நெறிச்சென்று பெறும் பொருளே பழம்பொருளா மெனவுந் தெளிந்த தாயுமான சுவாமிகள்,
“சைவ சமயமே சமயஞ்
சமயா தீதப் பழம்பொருளைக்
கைவந் திடவே மன்றுள்வெளி
காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி
புகுத வேண்டா முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச்
சேர வாருஞ் செகத்தீரே”.
என்று திருவாய் மலர்ந்தருளினர்.
இனிச் சன்மார்க்க மென்பதற்கு நல்லொழுக்கமெனப் பொருள் கொண்டு அற நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன வொழித்தலுமா மென்பது மொன்று. கடவுட் பக்தி, அடியார் பக்தி, அருள், அன்பு, பரோபகாரம், நடு நிலை, வாய்மை, கொல்லாமை, கள்ளுண்ணாமை முதலியவாகப் பலவாறு விரித்துக் கூறப்பட்ட ஒழுக்க வகைகளெல்லாம் சைவர்களின்றியமையாது மேற்கொள்ள வேண்டுமென்று சித்தாந்த நூல்கள் வற்புறுத்திக் கூறுதலானும், இவ்வொழுக்கங்களில் தவறுறுவோர்க்கு மிகுதியான தண்டங் கூறுதலானும், இவை முற்றும் இச் சமயத்து ளடங்குதலானும் இந்நெறி சன்மார்க்க மென்பதிலோர் இடர்ப்பாடு மின்று.
இனி, சன்மார்க்க மென்னுஞ் சொற்குச் சத்தையறிதற்குரிய மார்க்க மென்று பொருள் கோடலுமொன்று. சத்து என்னுஞ் சொற்குப் பொருள் சிவமென்று கூறலாம். இது, சிவமென்னும் பொருளை யெங்ஙனமுணர்த்துமெனின், “செளமிய ! இரண்டாவதற்றதாய் ஏகமாகிய சத்தே முதற்க ணிருந்தது” என்று சாந்தோக்கிய உபநிடதமும், அதனைச் சமந்வயப்படுத்தி விளக்கமாக “நான் ஒருவனே முதற்கண் இருந்தனன்” என்று அதர்வசிரசில் உருத்திர வசனமும், “உருத்திரனாகிய சத்து” என்று தெளிவாக மகோபநிடதமும் விளக்குகின்றமையானும், இச்சுருதிகளை யாராய்ந்து சிவனுஞ் சிவனருளுஞ் சத்தாகுமென்று தெளிந்து கூறுதலானும், சைவ சித்தாந்த முதனூலாகிய சிவஞானபோதம் ஆறாஞ் சூத்திரத்தில் “இருதிற னல்லது சிவசத்தாமென” என்று கேட்கப்படுதலானும், அதற்குச் சித்தாந்த பரமாசிரியராகிய மெய்கண்ட தேவர் திருவாய் மலர்ந்தருளிய வார்த்திக வுரையில் “இனி இவ்விரண்டு தன்மையுமின்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவமென்றுணர்தற்பாற்று” என்று காணப்படுதலானும், இவற்றிற்குச் சித்தாந்த ஞானபாநுவாகிய மாதவச்சிவ ஞானமுனிவர், “சிவசத்து என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன்முடிவு” என்று பண்புத்தொகையாகக் கொண்டு பலவாறு விரித்து விளக்கிய மாபாடிய வசனங்களானும் சத்து என்னுஞ்சொல் சிவபெருமானையே உணர்த்துமென்பது ஐயமின்றித் தெளியலாம். இத் தெளிவினாற் சத்தென்பது சிவனை உணர்த்தலானும், சிவனைக் காட்டுமார்க்கஞ் சைவமாதலானும் சைவசமயமே சன்மார்க்கமென்பது தடையின்றித் துணியப்பட்ட தொன்றாகும்.
இனி, இச் சமயம் சன்மார்க்கமாகும் உண்மை கருதியன்றே சைவசித்தாந்த நூல்களில் வகுக்கப்பட்ட நால்வகை மார்க்கங்களுண் முடிவாகிய ஞான மார்க்கத்தைச் சன்மார்க்கமென்று கூறியதூஉமென்க. அந்நால்வகை நெறியுள், புறத் தொழின் மாத்திரையானே சிவபிரான் உருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகிய சரியை தாதமார்க்க மெனவும், புறத் தொழி லகத் தொழிலென்னும் இரண்டானும் அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகிய கிரியை சற்புத்திரமார்க்கமெனவும், அகத்தொழின் மாத்திரையானே அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகிய யோகஞ் சகமார்க்கமெனவும், புறத்தொழிலகத்தொழில் இரண்டுமின்றி அறிவுத்தொழின் மாத்திரையானே அம் மூன்று திருமேனிக்கு மேலாய் யாண்டும் அழிவின்றி உண்மையறிவின்பவுருவாய் நிறைந்து நிற்கின்ற சிவபிரானிடத்துச் செய்யும் வழிபாடாகிய ஞானம் சன்மார்க்கமெனவும், இந் நெறிகளினின்றோர்க்கு முறையே சாலோக சாமீப சாருபங்க ளாகிய அபரமுக்தியும், சாயுச்சியமாகிய பரமுக்தியுஞ் சித்திக்குமெனவுங் கூறுப சித்தாந்தப் பெரியார். இந்நால்வகை நெறிகளுள் நான்காவதாகிய சன்மார்க்கமென்னும் ஞானத்தை யெய்தியே ஒருவன் வீடு பெற வேண்டுமாயினும், அந் நெறியிற் பரம்பரையாகக் கொண்டு செலுத்தற்குக் கீழுள்ள மூன்றுஞ் சாதனமாக இருத்தலான் அவை யெல்லாம் வீட்டு நெறிகளென்றே கூறப்படுவனவாம். விழுச் சுடர்ச் செம்பொன் மேரு மால்வரையைத் தலைப்படலுறுவாராய் நாவலந்தீவிற் பாரத வருடத்தினை யெய்தி, ஆண்டு நின்று நெறி வினாயினார்க்கு அஃதறிந்துள்ளார் ஆண்டுக்காட்டிய நெறியே சென்னெறியாயினும், அந்நெறி இமயத்தை யிடையிட்டுக் கிம்புருட வருடத்திற் செலுத்த, அஃது ஏமகூடத்தை யிடையிட்டு அரிவருடத்திற் கொண்டு செலுத்த, அது நிடதத்தை யிடையிட்டு இளாவிருத வருடத்திற் கொண்டு செலுத்த, இவ்வாறு நாற்றிசையுள் யாண்டு நின்றெய்தினும் நாவலந்தீவினைத் தலைப்பட்டு இளாவிருத வருடத்திற் கொண்டு செலுத்தலும், அஃது இடையீடின்றி மேருமால்வரைக்கே கொண்டுசெலுத்துதலும் போலப் புறச் சமய அகச் சமயங்களினின்றும் மேற்சென்று சென்றேறிச் சைவத்தை யெய்தப்பெற்றோர், ஆசிரியன் காட்டுஞ் சைவாகம நெறியிற் சமயதீக்கையுற்றுச் சரியை நெறியைத் தலைப்பட்டு அது முற்றிய பின்னர் விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியைத் தலைப்பட்டு யோகநூல் கேட்டு யோகநெறியைத் தலைப்பட்டு இம்மூன்று முறையான் முற்றிய பின்னர் நிருவாணதீக்கை பெற்று ஞான நெறியைத் தலைப்பட்டு வீடுபேறடைவர். கீழுள்ள மூன்றும் ஞானத்திற்கு நிமித்தமாதலான் அவை ஒவ்வொருவரானும் இன்றியமையாது அநுட்டிக்கற்பாலனவாமென்று தெளிந்த நம் தாயுமானவடிகள்
“விரும்புஞ் சரியைமுதன் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புமலர் காய் கனிபோ லன்றோ பராபரமே”
என்று கட்டளையிட்டருளினார்.
ஈண்டு கூறிய சன்மார்க்கத்தையே சைவபரமாசிரிய ராகிய மெய்கண்டதேவர் “நன்னெறியாகிய ஞானம்” என் வார்த்திகத்திற் கூற, அதற்கு மாபாடியம் வகுத்த மாதவச் சிவஞான யோகிகள் “நன்னெறி, சன்மார்க்கமென்பன ஒரு பொருட்கிளவி” எனவும், “நன்மையெனப்படுவன வெல்லாவற்றுள்ளுஞ் சிறந்த நன்மையெனப்படுவது வீடுபேறென்ப; அதனைத் தலைப்படுத்தற்கு ஏதுவாய்ச் சிறந்த நெறி யாகலின் ஞானம் நன்னெறி யெனப்பட்டது” எனவுங் கூறியருளினர். இதனார் சைவ சமயத்தின் அங்கங்களாக வகுத்த நால்வகை நெறியுட் சன்மார்க்கமென்பதொன்றாயினும், அச் சமயத்தைச் சார்ந்தார் எய்தற்பாலதாகிய வீட்டின்பத்தைத் தருவது அதுவேயாதலானும், அதனிடத்துச் செலுத்தற்குரிய சோபான மார்க்கங்களாக மற்ற மூன்று மிருத்தலானும் அந் நான்கனையுந் தன்னுட் பெற்ற சைவ சமயத்தைச் சன்மார்க்கமென்று கூறுதன் மிகவும் பொருத்தமாதலுணர்க. இவ்வுண்மை மேற்காட்டிய தாயுமானவடிகள் திருப்பாடலானுந் தெளியப்படும்.
தன்னைச் சார்ந்தாரைப் பசுத்துவ நீக்கிப் பதித்துவமீந்து சிவபிரானோ டிரண்டறக் கலப்பித்து அசைவறு நிலையாகிய பேரானந்தப் பெருவாழ்விற் றலைப்படுத்துவது இச் சன்மார்க்கமேயாமென்பதை,
“பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்து
ஒசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே”
என்று திருமூலத்தேவர் திருவாய்மலர்ந்தருளிய திருமந்திரத்தா னுணர்க.
இதுகாறுங் கூறியவாற்றால், பல பிறப்பினும் மக்கட்பிறப்பே மேலாய தென்பதூஉம், அரிதிற் கிடைக்கப் பெற்ற அப் பிறப்புடையார் முடிவில் எய்தற்பாலதாகிய வீட்டின்பம் இத்தகைத் தென்பதூஉம், அதுவே உண்மை நிலையாமென்பதூஉம், அந் நிலையை யெய்தற்குரிய நெறியே சன்மார்க்கம் அல்லது உண்மைநெறி யெனப்படுமென்பதூஉம், அந்நெறியின் றன்மைகள் இன்னவென்பதூஉம், அவைமுற்றுஞ் சைவசமயத்தி லடங்கியுள்ளனவாதலின் சைவ சமயமே சன்மார்க்கமாமென்பதூஉம், சன்மார்க்க மென்பதற்கு நல்லொழுக்கமென்று பொருள் கொள்ளினுஞ் சைவ சமயத்தை யுணர்த்துதலிற் றட்டின்றென்பதூஉம், சத்தையறிதற்குரிய மார்க்கஞ் சன்மார்க்க மென்று கொண்டு சத்துச் சிவமும் அதனையறிதற்குரிய நெறி சைவமுமாதலின், அவ் வகையானுஞ் சைவ சமயமே சன்மார்க்கமா மென்பதூஉம், இவ்வுண்மை தெளிந்தே சைவ சித்தாந்த ஆசிரியர்கள் வீட்டு நெறிகள் நான்கனுள் முடிவாகிய ஞான நெறியைச் சன்மார்க்க மென்று கூறினரென்பதூஉம், இந் நெறியே எந்நெறியினும் விழுமியதொரு நன் னெறியா மென்பதூஉம், பிறவும் விளக்கப்பட்ட பொருளாகும்.
********************************************************