நாடகவியல் – ஐந்தாம் அங்கம்
(ஒளியறிவாளர் வருகின்றனர்)
ஒளியறிவாளர் — (பரபரப்புடன் சுற்றி வந்து) ஓ! ஓ! விரைவுறுக; புரோகிதர் எங்குச் சென்றனர்? அமாத்தியர் யாண்டேகினர்? அரசிளங்குமர், சுயம்பூதேவரது வழிபாட்டி லியைதரு மனத்தராய்க் காலந்தாழ்க்கின்றனர். பட்டாபிடேக நல்வேளை மிக்க அணிமைத்தாகலின் அவ்வரசிளங்குமரரை யழைத்து வருக.
பின்னங்கத்தின் கதை, முன்னங்
கத்தின் கதையைத் தொடர்ந்து
வருதலின் இஃது அங்காவதரணம் ஆம்.
(ஆராய்ச்சியுடனும் வியப்புடனும்)
ஓ! காகதிக்குலத்தின் கீர்த்தி உலகைக் கடந்து இலங்குகின்றது; ஏனெனில்:-
குலதெய்வமாகிய சுயம்பூதேவர் எதனை யுபதேசித்தருளினரோ; இவ்வேந்தரது வீரத்தாற் றோல்வியெய்திய அரசர்குழாம் எதனைச் சித்தஞ் செய்கின்றனரோ; நிலவலையம் எதனை விரும்புகின்றதோ; அத்தகைய வீரருத்திரன் வடிவையுடைய திருமாலின் பட்டாபிடேக மங்கலச் செயற்குறித்து எல்லாமக்களும் இன்புறுகின்றனர். (க)
சுயம்பூதேவரின் உபதேசமும்
அரசர் வெற்றி முதலியனவும்
பீசத்துடன் கூடிய முகசந்தி
முதலியனவும் ஆகிய இவற்
றை சிறப்புப்பயனாக அமையும்
பட்டாபிடேகத்தின் பொருட்
டாக்கிக் கூறலான் இது
நிருவகணசந்தியாம்.
(மலர்ச்சியுடன்)
உண்மையாகவே யிது பொழுது.
சிவபிரானார் வியாபகராயினும்[1] கனவிற் றெரிவிக்கப்பட்ட கட்டளையையும் அங்ஙனமே மேற்கொண்டொழுகுங் குலமணியைப் பாராட்டுமிவர்க்கு விளைந்தவா நந்தம் உள்ளடங்கிற்றில்லை. (உ)
முகசந்தியிற் சிறந்த கனவுபதேச
வடிவாகிய பீசத்தை மீண்டு மியைத்
தலான் இது சந்தியாம்.
(சிறிது உரத்த குரலில்)
ஐம்பெரும்பூதக்குழு[2] யாவும் மங்கலத்தைத் தெரிவிக்கின்றன. கடவுளர் நன்னலந்தருகின்றனர். அந்தணரின் ஆசிமொழிகள், நலந்தர நிறைந்து மிளிர்கின்றன. கோட்குழு உச்ச நிலை[3] யெய்தின. குறித்த நல் வேளையும்[4] சுபக்கோள்களாற் சிறப்புறுகின்றது. நாண்மீன்கள்[5] நன்னரே புரிகின்றன. எழுதரு பிற நிமித்தங்களும்[6] நன்மையைத் தருகின்றன. (ங)
ஆதலின் அரசிளங்குமரரை யழைத்துவருதற்கு யாமே முயல்வோம்.
நிகழ்ச்சி வினையைத் தேடலான்
இது விபோதம்.
(விரைந்து நடந்து எதிரே பார்த்து மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும்)
ஓ! பிரதாபருத்திரர் வந்துவிட்டாரே.
மங்கலப் பனுவலை[7] ஒலிதரக் கூறு மந்தணர்களும், பராக்குக்[8] கூறலிற்றலைப் பட்ட பல வேந்தரும், கவரி முதலிய கருவிகளைக் கரத்திலேந்திய மந்திரி புதல்வரும், திசைவெற்றியைப் புகழ்ந்து பாடுஞ் சிறந்த வந்திகளும், நீராசனஞ்[9] செய்ய முயலுங் குலமகளிரும் முறையே சூழ்தரவிருக்கின்றார்.
அதனால் யாமுங் கொலு மண்டபத்தற்கே சென்று வேண்டுவன செய்வோம்.
(என்று சுற்றி வருகின்றனர்).
(அதன்பின் குறித்த வண்ணம் பிரதாபருத்திரனும் மந்திரிமாரும் வருகின்றனர்)
மந்திரிமார் — (பணிவுடன் முன்னின்று) காகதிக்குலதிலகமே! இங்கண் வருக; இங்கண் வருக. அரசியற்றிருமகளின் அந்தப்புரச் சிறப்பில்லம் இஃதே. பெருமான் இதன்கட் புகுதல் வேண்டும்.
முடிசூடலாஞ் செயலை ஊக்கி
விடலான் இது கிரதனம்.
ஒளிநூலார் — (சிறிது உரத்த குரலில்) ஓ! ஓ! குல அமைச்சர்களே!
எந்த நல்வேளையில்[10] மன்னர் மன்னராகிய கணபதிப் பேரரசர் மாட்சிமிக்க மகுடாபிடேகத்தை யெய்தி எல்லாப் புரவலரும் தன் பாலடங்கப்புரந்தனரோ; அத்தகைய வெற்றி தரும் நல்வேளை, மங்களவளத்திற்குறையுளாய் வந்துற்றதாகலின், கருத்துடன் இருமின்; தக்கபொருள்களைத் தேடுமின்; தெய்வங்களை வழிபடுமின்.[11]
அநுபவித்த செய்தியை ஒளிநூலார்
வெளிப்படுத்திக் கூறலான் இது நிருணயம்.
ஏவலன் — (செவியுற்று) நல்வேலையணிமையுற்றும் பேரமைச்சர் ஏன் காலந்தாழ்க்கின்றனர்?
மந்திரிமார் — (அணிமைக்கணெய்தி) எம்பெருமானே! தந்தையாரது ஆணையை மறந்திரோ? சிற்றரசரின் விண்ணப்பத்தைச் செவியுற்கு இஃது அமயமன்று; பட்டாபிடேக மகாமண்டபத்தின் கண்ணே இவர்க்கு நல்லருள்புரிதல் தக்கதாகும்.
பிரதாப — தந்தையாரது கட்டளையைச் சிரமேற்கொண்டேன்; ஆனால், பின்னர்ச் செயற்பாலனதும்மாற் கூறப்படவில்லை.
நிகழ்ச்சிக் கேற்ப ஒருவர்க்
கொருவர் உரையாடலான்
இது பரிபாடணம்.
புரோகிதர் — (பணிவுடனும் பரபரப்புடனும் அருகெய்தி) பட்டாபிடேகத்திற்குரிய வேடமணிந்த பிரதாபருத்திரன், தமனிய வேதிகையில் ஏறல் வேண்டும்; தேவரீர்! பேரரசரது தொடர்புமுறை பற்றி நிலவலயம், தங்களது புயமுடியில் நிலவி நிற்பதாக.
பிரதாப — அங்ஙனமேயாக; (என்று வேதியில் ஏறுகின்றான்.)
அரசர்கள் — (வணக்கமுடன் மங்கலவேதியைச் சூழ்ந்து) காகதிக் குல வேந்தன் திகழ்க; திகழ்க.
இது அரசரது வழிபாடாகும்
பிரசாதம்.
ஏவலன் — (பார்த்து மகிழ்ச்சியுடனும் ஆசையுடனும்) உதயவரைப் பொற்சாரலைக்கதிரவன் போலும், மேருவரைப் பொற்றடத்தைப் புரந்தரன் போலும்; புள்ளரசரைத் திருமால் போலும் பிரதாபருத்திரன், தமனிய வேதியை யேறலுற்றான்.
மந்திரிமார் — காகதிவேந்தே! இப்பத்திராதனத்தின் கண்ணமர்க; இப்புரோகிதர்கள் பட்டாபிடேகஞ் செய்தற் பொருட்டு புனித நீர் நிரம்பிய பொற்குடங்களைக் கையிலேந்தி நிற்கின்றனர்.
பிரதாப — அங்ஙனமேயாக. (என்று சுயம்பூதேவரையும் காகதிக்குல முதியோர்களையும் வணக்கஞ் செய்து சிங்காதனத்திலமர்கின்றான்.)
புரோகிதர் — (வேதமந்திரங்களானறுமணமூட்டிய நீர் நிரம்பிய பொற்குடங்களை, அமைச்சர் கரங்களிலும் அளித்து அன்புடன்) பிரதாபருத்திர வேந்தே! காகதிக்குலத்திற்கேற்ற பெற்றி மக்களை யின்புறுத்தி மதிமீன்கணிலவுங் காறும் நிலமகளைப் புரத்தி. (சா)
இங்ஙனம் ஆசி கூறு மொலியென அமைவதூஉம், கைப்பிடி மங்கலத்தில் விரைந்து விழைவுறும் அரசியற்றிருவின் சிலம்பொலியாற் பாராட்டப்பட்டதூஉம், சுயம்பூதேவரது மகிழ்ச்சிப் பெருநகையாற் பெருமிதமெய்தியதூஉம், காகதிக்குல நலச்செய்திக்கு முரசாயதூஉம், புவிப் பொறையை நெடிதுநாட்டாங்கி வருந்திய அரவரசு முதலியோரின் உவகைப் பெருநகையை நிகர்த்ததூஉம், அறத்தாபனத்தின் மங்கலப்பறையொலியென்ன வினியதூஉம் மகாபிடேக நல்வேளையைக் கூறுவதூஉம் ஆகிய வெற்றிப் பொன்மணியொலியைச் செவியுற்ற வண்ணமாய்ப் பிரதாபருத்திரனை விரைந்து புனித நீராட்டுகின்றனர்.
விரும்பிய பொருளைப் பெறலா
குமிஃது ஆநந்தம்.
கீழ்பாற் பாடகர் — (மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் உரத்த குரலில்) ஓ! மக்களே! மங்கலச் செய்தியாகும் அமுதத்தை செவிகளாகும் அங்கைகளான் அள்ளிப்பருகுமின்; காகதிவீரருத்திரவேந்தர்க்குப் பட்டாபிடேக மகோற்சவம் நடைபெற்றது; இற்றைஞான்று கலியுகம், கிருதயுகமாக்கப்பட்டது. நிலமகள் நல்லரசெய்தினள். விண்ணவர் நிறைவுறு மவியுணவருந்தினர். இது காலை நீவிரும் நற்பேறெய்தினீர்.
மேல்பான் மங்கல பாடகர் — சிறப்புறு வீரருத்திர வேந்தர் ஆணை செலுத்தற்குச் சிங்காதனத்தேறி யிருக்குங்கால், அவரது ஆணை சிற்றரசரது மௌலிகளை விரும்பியாங்கு ஏறுகின்றது. புகழும் வீரமும் வரம்பிலவாய் உலக மூன்றினையும் விரைந்தடைகின்றன. பகையரசர்களும் விந்தியமலைத் தடங்களை விரைந்தேறுகின்றனர். (அ)
தென்பால் மங்கலபாடகர் — காகதிவீரருத்திரக் கொற்றவன், புயத்தாற் பூவலயத்தைப் புறந்தருங்கால், ஆதிசேடன், பாடுகின்ற தன் மனைவியரைச் சிரமசைத்துப் பாராட்டுகின்றான். கூர்மராசன், மார்பகத்தைக் காண்பித்தலான் இலக்குமியை இதுபொழுது இன்புறுத்துகின்றான். மாதிர வேழங்களும் பிடிகளைப் பின்றொடர்ந்து சேரலான் பிரிவான்வருந்து மவற்றின் றுயரை விலக்குகின்றன. (கூ)
வடபால் மங்கலபாடகர் — குலவரைகளின் பிரத்தங்களினும்[12], திசையானைகளின் பெருத்த மத்தகங்களினும், அரவரசின் ஆயிரம் முடிகளினும் கூர்மராசனது கருப்பரத்தினும்[13] உயர்வலியெய்தியதும், உலகிற் சிறப்புற்றதுமாகிய வீரருத்திரன் வாகுவில், இதுகாலை நிலமாது நன்னிலையெய்தினள். (க0)
எல்லோருடைய துயரை
நீத்தலான் இது சமயம்.
மந்திரிமார் — ஓகோ! காகதிக்குலத்தின் பெருமை என்னே! இதுபொழுது,
பிரதாபருத்திரனுடைய பட்டாபிடேக நீர்த்துளிகள், வணக்கஞ் செய்தற்குக் குனிதருமரசரின் சிரங்களில் வீழ்தர, அவற்றான் அவ்வரசர்க்குத் தந்தந் நிலையிற்[14] பட்டாபிடேகஞ் செய்யப்பட்டவாறாம். (கக)
புரோகிதர் — காகதிக் குலச் செம்மலே! அரசியற்றிருமகளின் மணமாலை யொப்ப இதனைத் தலையணியாக் கொள்க; (என்று பட்டத்தைக்[15] கட்டுகின்றனர்).
எல்லவரும் — (மிக்க மகிழ்ச்சியுடன்) எங்களுக்கு விருப்பமே! எங்களுக்கு விருப்பமே!
நிகழுஞ் செயலை யுறுதிப்
படுத்தலான் இது கிருதி.
மந்திரிமார் — (எல்லாப்புறமும் பார்த்து) ஓ! யார், யார் இங்கே; கொற்ற வெண்குடையையும் இரண்டு கவரிகளையும் கொணர்க.
(தலைவாயில் காவலன் வந்து)
வாயில் காவலன் — பேரமைச்சரின் கட்டளைப்படியே. (என்று சென்று அவற்றைக் கொணர்கின்றான்)
(பக்கலிற் சூழ்தருமரசர்கள் அணிமைக்கணெய்தி அவற்றை விருப்புடன் வாங்கித் தக்கன செய்கின்றனர்.)
புரோகிதர் — (மிக்க மகிழ்ச்சியுடன்) பேரரசர் பலர்[16], செவிப்புலனாகின்றனர்; இத்தகைய வீரச்செயலற்ற அவர்களாற் பயன் யாது? எல்லா மக்களும் இன்புறற்குரிய இத்தகைய வீரப்பெருமையுடைய ஓரரசன், நிலவுலகில் யாவனுளன்? திருவளர் வீரருத்திரவேந்தரோ இளமை[17] விளையாட்டே போற்றிசை வெற்றியுடையாரும், மூவுலகிற்கும் இன்பந்தருமியல்புடையாரும், புரவலர் யாரும் ஏவலராகப்[18] பெற்றவரும் ஆவர். (கஉ)
எல்லாவற்றானும் மேம்பாடுடைமை
யைக் கூறுமுகமாக நிகழுஞ்செ
யலைப் பாராட்டலான் இஃது ஆபாடணம்.
எந்தக் குடை அரசியல் விளக்கத்திற்கு அடையாளமோ; எதன் நிழலான் இத்தரை, தாபத்தைத் தவிர்த்ததோ; அத்தகைய குடையால் வீரருத்திரன் வனப்பெய்துங்கால் நண்பர் முத்தக் குடையுடையாரும்[19], நட்பிலார், அஃதில்லருமாயினர். (கங)
அரசியலையெய்தற் கேதுவாகிய
சிவிகை தாங்கி நிற்றலாகுஞ் செயலைத்
தெரிவித்தலான் இது பூருவபாவம்.
மந்திரிமார் — (பணிவுடன் அருகெய்தி) பெரும! காகதித் திருவின் கேள்வ! நின்னால் நற்றலைவனையெய்திய மக்கள் எல்லவரும் நல்லரசராகிய தங்களைக் காணவிரும்புகின்றனர்; ஆதலின் தேவரீர் இது பொழுது பேரவைக் களத்தை யணிப்படுத்தல் வேண்டும்.
புரோகிதர் — பட்டாபிடேகத்திற்குப் பின்னர் குடிகளின் இல்லச் செய்தியை ஆராய்தல், காகதிக்குல வேந்தர்க்கியல்பே.
அரசன்— அறந்தெரிவார் கட்டளைப்படியே! (என்று எழுகின்றான்)
காகதிக்குலக்கிழவோர் — (பரபரப்புடன் உரத்த குரலில்) விளக்கமுறு வீரமாகும் விளக்காற்றிசை வெளிகட்கு ஆலத்தி செய்து பிரதாபருத்திரற்கு, அரசர்கள் தம் முடி மணி விளக்காற் செய்த நீராசனத்தை தாமரை விழித்தையலார் செய்க. (கச)
அரசர்கள் — (சிறத்திற்கரங்குவித்து) ஓகோ! யாம் கண்படைத்தமை, பயனுடைத்தாயிற்று; அதனாலன்றே, இத்தகைய இன்பத்தையனுபவிக்கின்றோம்.
ஏனெனில்,
மதிமுகம்படைத்த[20] இரவுகள், விளங்கு முடுகணங்களாற் கோத்திரத்தரசாகிய[21] மேருவைப்போல, தெலுங்கு நகரணங்குகள் விளக்கொளிகளான் வீரருத்திரனை ஆலத்தி செய்கின்றனர்.
(எல்லவரும் வாழ்த்துரை கூறுகின்றனர்)
மந்திரிமார் — பேரரசரே! காகதிவேந்தே! சிங்காதனம்[22] சித்தஞ் செய்யப்பட்டுள்ளது; எப்புறத்து மணிப்படுத்திய இக்கொலுக்கூடத்தை உரிமையாட்சி புரிதல் வேண்டும்.
வாயில்காவலன் — (பரபரப்புடன் முன்னின்று) இங்கண் வருக; இங்கண் வருக;
(அரசர் பெருமையுடன் சுற்றி வந்து கொலுக்கூடத்திலிருக்கும் அரியணைக்கண் அமர்கின்றார்)
வாயில் காவலன் — (அமயத்திற்கேற்பச் சுற்றி வந்து வணங்கும் அரசர்களைப் பொற்பிரம்பினாற் சுட்டி) கலிங்க நாட்டரச! இங்கண் இரு. கொங்கணத் தலைவ! விலகி நில். அங்கவேந்தனே! மருங்கெய்துக. மாலவ மன்னனே! தன் இறைப் பொருளை மெல்லன அளிக்க. பாண்டிய வேந்தே! முன்னிருத்தி. சேவணக்கொற்றவ! பின்னிருத்தி. இது பொழுது பெருமானாகிய காகதிவீரருத்திரவேந்தர் உங்கள் எல்லவரையும் முறையே காட்சி கொடுத்தருள்வார்.
(அரசர் வணங்கித் தக்கவாறு அமர்கின்றனர்.)
புரோகிதர் — காகதிக்குலத்தவதரித்த மாட்சிமிக்க உவணக்கொடியோனாகிய தங்களுக்கு மங்கலமுண்டாக; நற்புதல்வனைப் பெற்ற காகதிக்குலத்தினால் இதுகாலை யுலகமூன்றும் நற்றலைவனையெய்தின.
மக்கட்டலைவ! தீயவரையொறுத்தருளுந் தாங்கள் புறந்தருங்கால் இந் நிலவுலகிற்கு நெடிதமைந்த நடு நிலைமை[23] பொருளுடைமையை யெய்தியது.(கஎ)
அரசன் — (பணிவுடன்) காகதி வேந்தர்க்கு வீரம் வளர்கின்றதென்பது, சுயம்பூதேவரது அருட்குத் துணை நிற்கும் தம்மாசிமொழிகளின் பயனேயாம்.
மந்திரிமார் — பிரதாபருத்திரவேந்தனே! காகதிக்குலவேந்தரிரல்லவருடைய ஆகூழ்வளங்கள், அக்குலத்துதித்த தங்கள் வடிவினவாய்ப் பரிணமிக்கின்றன. (கஅ)
புரோகிதர் — காகதிவேந்தரின் புண்ணிய பரிபாக மாத்திரையிலன்றி, அஃதெல்லா மக்களுடையதும் ஆம்; என்பதும் அமையும்.
(வாயில் காவலன் வந்து)
வாயில் காவலன் — தேவரீர்! எல்லாமக்களும் சாதிப் பெரியாரை முன்னிட்டு, தலைவாயிலிற் காத்திருக்கின்றனர்.
மந்திரிமார் — விரைவிற் புகவிடு.
வாயில் காவலன் — அமைச்சரின் கட்டளைப்படியே. (என்று வெளிச்சென்று அவர்களுடன் மீண்டு வருகின்றான்) (அதன்பின் சாதிப்பெரியார் வருகின்றனர்).
சாதிப்பெரியார் (மகிழ்ச்சியுடன் அரசனைப் பார்த்து) இப்பிரதாபருத்திரன் மணமகன்; இந்நிலமகள் மணமகள்; இம்மணமக்களை யியைத்தவர் சுயம்பூ தேவராகலின், இவ்வியைபு தக்க மாண்புடையதேயாம். (ககூ)
இது, சுயம்பூதேவர் தாமேயியைப்
பவராக அமைய, அதனால் வியப்
பெய்தலான் உபகூகனம்.
(பணிவுடன் அணுகி)
எம்பெருமானே! நிலமகள் கேள்வ! பிரதாபருத்திரனே!
ஆசிப்பயன் யாவும் விரிந்துறையுமோர் உறையுளாகிய தங்களுக்கு எம்முடைய ஆசிகளாற் பெறக்கடவ பயன் யாது? அன்றேல், உலகிறைவனாகிய சுயம்பூதேவன்பால் யாங்கூறும் ஆசிமொழிகளென்ன அமையுமென்பதில் வியப்பென்னை? அக்கணபதிப்பேரரசரும் தாங்களும் ஒத்தவர்கள். மலைமகள் மணாளனும் திருமகள் செல்வனும், இப்பொறையினையும் புகழினைப்புரக்குந் தங்களையும் மதிகதிர்வதியுங் காறுங் காத்தருளல் வேண்டும். (உ0)
மந்திரிமார் — எம்பெருமானே! இவர்கள் சுயம்பூதேவரின் அடியார்கள்.
(அரசன் அன்புடன் வணக்கஞ் செய்கின்றான்).
மற்றையோர்[24] — (மிக்க மக்ழ்ச்சியுடன் முன்னின்று) பேரரசரே! காகதிவேந்தரே! வியக்கத்தக்க[25] அவ்வச்செயல்களானும் தன்றிறல்களானும் எவர், குலதெய்வமும் உலகைப் பாலிப்பவரும் ஆகிய சுயம்பூதேவர்க்கு இரண்டாமவராய்[26] விளக்கமுற்றனரோ; அத்தகைய தேவராகிய கணபேச்சுரன்[27], குலமணியும் பேரப்பிள்ளையுமாகிய[28] தங்களுடைய அரசியற்றிருவை, அருண்மிக்குடையராய் அடிதொறும் பெரிதும் வளம்பெற நிறுவுக. (உக)
புரோகிதர் — அரசரே! இவர்கள் கணபதீச்சுரரின் பண்டிதர்கள்.
அரசன் — (அன்புடன் வணக்கஞ் செய்கின்றான்)
ஏனையோர் — (பணிவுடனும் மகிழ்ச்சியுடனும்) எம்பெருமானே! திரிலிங்கதேய வேந்தனே! எந்த மூன்று சிவலிங்கங்களான் இத்தேயம் திரிலிங்கம் என்னும் பெயராற் பெரும்புகழெய்துகின்றதோ; எந்த விலங்கங்களுக்கு காகதிவேந்தரது புகழ்வளங்கள் கைலயங்கிரியாக அமைகின்றனவோ; அத்தகைய சீரிசைலம்[29], காளேச்சுரம், திராட்சாராமம் என்னும் மூவிடங்களிலும் மிளிர்தரும் அத்தேவர்கள் அருள்பெருக்குமினியராய்த் தங்கள் நலத்திற்கே நாடோறும் விழிப்புற்றிருப்பாராக. (உஉ)
புரோகிதர் — (மலர்ச்சியுடன்) அரசரே! இவர்கள் ஏகசிலைபதியில் வாழுஞ் சீரிய மறையோராவர்.
(அரசன் முறையே வணக்கஞ் செய்கின்றான்)
மந்திரிமார் — ஆசிமொழி புகலுமுறை நல்லதே! (என்று எல்லவரையும் அமரச் செய்கின்றனர்)
புரோகிதர் — (மலர்ச்சியுடன்) வேந்தே! ஏகசிலைக்கிழவோய்! செங்கதிரைச் சார்ந்ததும், தண் கதிரைச் சார்ந்ததுமாக நிருமிக்கப்பட்ட இருகுலங்களும், காகதிக்குலம் குண நலன்களான் விளக்கமுறுங்கால், சிறப்பிலவாயின; தங்கள் வீரமும் புகழும் கதிர் மதியென்னத் திகழ, தங்களது அருட்பேறெய்திய அக்குலத்தரசர் நிலைபேறுற்றுழி அக்குலங்கள், மீண்டும் நன்னிலையவாயின.(உங)
(அரசன் எல்லவரையும் பார்க்கின்றான்)
(புரோகிதர் முறையே எல்லோரையும் அமரச் செய்கின்றனர்)
குடிகள் — பிரதாபருத்திரப்பேரரசர், வெற்றிபெருக; வெற்றிபெருக.
அரசர் பலர் இருக்க; குணநிறைவற்ற அவராற் பயன் யாது? கதிரவன் குலத்தணிகலனாயிலங்குமிராமனைப்பற்றிப் பலகாலுஞ் செவியுறுகின்றேமாயினும் அவரை யாம், கண்டிலேம்; அதனானே வருந்திய யாங்கள், வீரருத்திர வேந்தே! அவ்விராமபிரானாரது பிறிதொரு அவதாரமாக விளங்கும் தங்களைப் பார்த்து அவ்வருத்தம் நீங்கியராய் இங்ஙனம் சீரிய நற்பேறு பெறுகின்றோம். (உச)
மந்திரிமார் — பெருமானே! இதுபொழுது நகரத்து மக்கட்டொகுதியை தக்கவாறு நன்கொடையளித்து இன்புறுத்தல் வேண்டும்.
அரசன் — (மகிழ்ச்சிமிக்க வண்மையுடன்) ஆணைப்பயன்களுக்கோர்[30] இருப்பிடமாகிய அரசன் என்னுமிச் சொல்லே என்பாலதாக; அவ்வரசியல் வளங்களான் விளையும் பயனுகர்ச்சியோ, நம்மெல்லோர்க்கும் பொதுவாயதன்றே. (உரு)
எல்லவரும் — (மகிழ்ச்சியுடன்) காகதிக்குல திலகமாய் விளங்குந் தங்களுக்கு இங்ஙனம் அருணிகழ்ச்சி தக்கதே!
அரசன் — பகவானாகிய[31] சுயம்பூதேவர் அருள்புரிக.;
(என்று புரோகிதரால் வார்க்கப்படும் பொற்குட நீர்த்தாரையை முன்னிட்டு, அன்புடனும் நன்மதிப்புடனும்[32] மருத நிலத்தூர்களை எல்லாப் போகங்களுடனும் மறையவர்க்களிக்கின்றான்).
(பிறநகர் மக்களுக்கும் உரிய வெகுமதியளிக்கின்றான்.)
அரசர்கள் — (விரும்பிய பெறும் விருப்புடனெழுந்து பெருவிலையுள்ள கயம் துரகம் தேர் அணிகலன் முதலிய சீரிய இறைப்பொருளை யிடத்திற்கேற்ப முன்வைத்துக் கூப்பிய கையினராய்) பெருமானே! காகதிப்பேரரசே!
உலகம் புரத்தலை விரதமொன்றாக்கொண்ட தங்கள்பால், “காத்தருளல்வேண்டும்” எனல் கூறியது கூறலேயாம். உலகிற்கொரு தலைவனாகிய தங்கள்பால், “யாம் அடிமைகள்” என்று கூறல், கொண்டது கோடலேயாம். அலகிலாவுலகை யணிவயிற்றடக்கிய அரியினவதாரமாகிய தம்பால், “தம் வயிற்றிலிருக்கை யெய்தினேம்”, என்று கூறலும் வெள்ளைப்[33] பொருளதேயாம்; ஆதலின், தக்கதோர் விண்ணப்பத்தைத் தம்பால் யாங்கனந் தெரிவிப்போம். (உகா)
(அரசன் அருளுடன் அமைச்சரைப் பார்க்கின்றான்)
மந்திரிமார் — பெருமானே! இவர்கள், மதி கதிர் மரபினைச் சார்ந்த அரசர்கள்; இவர்கள் சீரிய வெகுமதியினை யெய்தற்குரியாராவர்; ஆதலின், இவர்களைத் தத்தம் நிலையில் நிறுவி ஆண்டுச் செல்வித்தல் வேண்டும்.
அரசன் — அங்ஙனமே; (என்று அரசர்களை முறையே வெகுமதித்து நாட்டையெய்தற்குக் கட்டளையிடுகின்றனர்.)
(அரசர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வணக்கஞ் செய்து காகதிவேந்தரது அருணோக்கத்தானே பிரயாணமங்கலத்தைச் செய்து திசைமுடிவுகாறுஞ் செல்லுமவராணையைத் துணைக்கொண்டு சென்றார்கள்).
குடிகள் — பேரரசர், காகதிக்குலவேந்தர்கள் புறந்தருமுறையைப் பெரிதும் பின்பற்றியொழுகல் வேண்டும். (என்று சென்றனர்)
புரோகிதர் — (வியப்புடனும் நினைவுடனும்) இவருடைய மலரடிகளின் குறியீடுகள், அரசர் வந்தடிவணங்கு நிலையை யறிவிக்கின்றன; வரையாக அமைந்த தனுவச்சிரம் இவற்றுடன் கூடிய கரங்கள், நிலமகளின் கைப்பிடி மங்கலத்தைப் புகல்கின்றன. சரற்காலத்துக் கமலமென்ன அழகிய கண்கள், திருமாலின் அவதாரத்தைத் தெற்றென வுரைக்கின்றன. ஆதலான் இதுபொழுது, முன்னர்க்கூறிய சித்தபுருடரது கூற்றைக் கண்கூடாகக் காண்கின்றேம். (உஎ)
அரசன் — (பணிவுடனும் நாணத்துடனும்) சுயம்பூதேவரின் உறுப்புக்களுள் ஒரு கூறாகும் மறையவராகிய தங்களருளாற் பெறற்கரியது யாது?
புரோகிதர் — (அன்புடன்) காகதிக்குலத்தின் றொடர்பினால் தூய்மையாகிய தங்கள் வழிபாட்டினால், சுயம்பூநாதர் அருள்பலபுரியச் சித்தராய் மிக்க மகிழ்வெய்தியுள்ளார்; அவர் மீண்டும் நின்பால் எதனையருளிடல் வேண்டும்.
இது சொற்றொடர்ப் பொருளை
முடித்து வைப்பதாகும் சங்காரம்.
அரசன் — (வணக்கத்துடனும் அன்புடனும்) காகதிக்குலத்தவரின் அரசியற் பொறையில் சுயம்பூதேவர் கருத்துடையரே. ஆயினும் இஃதிருக்க.
நிலவலயம், நிறைவுறு பைங்கூழ் உடையதாக. அந்தணர்கள், நிறைவுறு விருப்புடையராக. அரசர்கள், அறத்தாறொழுகுமுளத்தினராக. எல்லா மக்களும் எவ்வ நீங்கி இன்புற்று வாழ்க. (உஅ)
இது மங்கலம் கூறலாகும்
பிரசத்தி.
(என்று எல்லவரும் சென்றனர்)
நாடகவியலில் “பிரதாபருத்திரன் பட்டாபிடேகம்” என்னும் ஐந்தாம் அங்கம் முற்றிற்று.
இங்ஙனம் உறுப்புக்களுடன் கூடிய நாடகம் எடுத்துக்காட்டப்பட்டது.
வித்தியாநாதனியற்றிய
“பிரதாபருத்திரன் புகழணி”
என்னும் அணியிலக்கணத்
தில் நாடகவியல்
முற்றிற்று.
[1] வியாபகர் — சிவபிரானார், எல்லாவுலகங்களையும் தன்னுள்ளடக்கி சிறப்புற்று நிற்பவர்; எனினும் இது காலை யவர்க்கு விளைந்த உள்ள மகிழ்ச்சி அவர் பாலும் அடங்கிற்றில்லையென அம்மகிழ்ச்சியின் பெருமிதம் உயர்வு நவிற்சியாற் கூறப்பட்டது.
[2] ஐம்பெரும்பூதம் — நிலம் முதலியன; அவற்றினியல்பு மாறுபடாமையே உலகிற்கு நலந்தரும் என்ப.
[3] உச்சநிலை — மேடம், இடபம் மகரம் கன்னி கர்க்கடகம் மீனம் துலாம் என்னுமிந்த விராசிகள் சூரியன் முதலாக் கோள்களுக்கு முறையே உச்ச வீடுகளாம்.
[4] நல்வேளை — நல்வேளைக்குரிய இலக்கினத்திற்கு ஏற்படும் இராசி, ஹோரை திரேகாணம் நவாமிசம் துவாதசாமிசம் திரிம்சாமிசம் என்னுமிந்த சட்வருக்கத்திலும் சுபக்கோள்களின் இயைபு இருப்பின் அந் நல்வேளை, சுபக்கோள்களாற் சிறப்புற்று நற்பயனளிக்கும் என்பதாம்; இதனை யொளி நூலார் முகூர்த்தம் என்ப.
[5] நாண்மீன்கள் — அச்சுவினி முதலிய இருபத்தேழு நாட்களை.
[6] பிறநிமித்தங்கள் — திசை தெளிவுறல், வேள்வித்தீ வலம் வருதன் முதலியன.
[7] மங்கலப்பனுவல் — இது மறையின் ஓர் பகுதி; இதனைப் படிப்போர்க்கும் படிப்பிப்போர்க்கும் இது மங்கலத்தையளிப்பது; இதனை மறையவர் மாங்கலிய சூக்தமென்ப.
[8] பராக்கு — அரசர் முன்னிலையிற் கூறும் மரியாதைச் சொல்; இதனைக் கூறுவார் வந்திகள் ஆவர்; அத்தகைய வந்தியாம் நிலையில் பிற அரசர் ஆயினர் எனக் கூறுமாற்றாற் பிரதாபருத்திரனது மேன்மை புலப்படுத்தவாறு.
[9] நீராசனம் — கண்ணூறு வாராது கழிக்கும் ஓர் வகைச் சடங்கு; இது முன்னர் விரித்துக் கூறப்பட்டுள்ளது.
[10] எந்த நல்வேளையில் — இதனால், இத்தகைய நல்வேளை நலம்பயக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தற்கு முன்னையநுபவத்தை யெடுத்துக் காட்டினான் என்க.
[11] தெய்வங்களை வழிபடுமின் — ஈண்டு தெய்வவழிபாடு தென்புலத்தார் முதலியோரது வழிபாட்டிற்கும் உவலக்கணம். அங்ஙனம் விருத்தவ சிட்டரும்
ஆசிமொழியுரைப்பித்த பின்னர், தெய்வம், தென்புலத்தார், படைக்கலம் சிங்காதனம் அந்தணர் என்னும் இவர்களைச் சந்தணம் முதலியவற்றா லருச்சித்தல் வேண்டும்; என்று கூறுவர்.
[12] பிரத்தம் — மலைமேல் அகன்ற இடம்.
[13] கருப்பரம் — தலையோடு — ஈண்டு அதை நிகர்த்த ஆமை முதுகையுணர்த்தும்.
[14] இதனால், சரணெய்திய அரசர்கள் இப்பட்டாபிடேக மகோற்சவத்தில் தத்தம் அரசியலை யெய்தினர் என்பது கருத்து.
[15] பட்டம் — அரசர், மக்கள் இவர்களின் நலத்திற்கும், நாட்டு வளத்திற்கும் பொன்னாலியன்ற மங்கலப்பட்டம், ஒன்பதங்குல நீட்சியும் இடையில் எட்டங்குலமும் இருமருங்கிலும் நான்கங்குலமும் உள்ள அகற்சியும் அமைந்து ஐந்நுதியுடையவாய் ஆக்கப்படல் வேண்டுமென்பது இதன் இலக்கணம் ஆம்; அத்தகைய பட்டத்தை, “வெளியதுடீஇ வெண்பூச்சூடிச் சிங்காதனத்திற் கிழக்கு முகமாயமர்ந்த அரசனது சிரத்திற் சூட்டவேண்டும்” என்று சிட்டமிருதி கூறும்.
[16] பேரரசர் பலர் — இது நளன் நகுடன் முதலியோரை.
[17] இன்பந்தருமியல்புடையார் — “போரிற் புறங்கொடாமையும், மக்களையின்புறப்புரத்தலும், அந்தணரை வழிபடலும், அரசர்க்கு மிக்க நலம் பயப்பனவாம்” என்றும் மனுவின் கூற்று ஈண்டு கருதற்பாலது.
[18] ஏவலராகப் பெற்றவரும் — இதனால் இவ்வேந்தன் தண்டோபாயமின்றிப் பிறவுபாயங்களாற் பகையரசரை வென்றான் என்பதும்,
“இங்கணம் வெல்லுறுமரசர்க்குப் பகைவராவாரனைவரையும், அவ்வரசன் சாமம் முதலிய உபாயச் செயலானே வயப்படுத்தல் வேண்டும்” என்னும் மனுநீதிவழா அதவன் என்பதும் புலப்படும்.
[19] முத்தக் குடை — நல்முத்துக்களாற் செய்யப்பட்ட குடையையும் குடையின் நீங்கிய நிலைமையையும் உணர்த்தும்.
[20] மதிமுகம் படைத்த தெலுங்கு நகரணங்குகளெனவும் இயைக்க.
[21] கோத்திரத்தரசு — இது வீரருத்திரற்கும் பொருந்தும். கோத்திரம் — ஈண்டு குலவரையையும் குலத்தையும் உணர்த்தும்.
[22] சிங்காதனம் — இதனிலக்கணம் மானசோல்லாசத்திற் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது; சீரிய செம்பொன்னால் அரதனங்களிலங்கச் செய்யப்பட்டதும், மேற்புறத்திற் படிகச் சிங்கங்களெட்டும், அடிப்புறத்திற் கனகவேதிகள் மூன்றும் அமைக்கப்பட்டுள்ளதுமாய்க் கொலுக்கூடத்தின்கண் வைத்திருக்கும் ஆதனத்தை அரசர்கட்குரிய சீரிய சிங்காதனம் என்ப.
[23] நடு நிலைமை — மேலுலகிற்கும் கீழுலகிற்கும் இடைக்கணிருத்தலான் இது காறும் நடு நிலைமையெய்திய நிலவுலகம், இதுகாலை ஒருதலைச் சார்பின்றி யமைதலான் அந்நடுநிலைமை இக்கருத்தே பற்றிப் பொருளுடைத்தாயிற்றென்பதாம்.
[24] மற்றையோர் — பிரதாபருத்திரற்குப் பாட்டனாராகிய கணபதிப் பேரரசர், தன் பெயரையொப்ப சிவபிரானார்க்கும் கணபேச்சுவரன் எனப் பெயரிட்டுப் பிரதிட்டை செய்து குலதெய்வமாகிய சுயம்பூதேவர்க்குப் போல இச்சிவபிரானுக்கும் ஆலயப்பணி முதலியன செய்து அங்கட் பல பண்டிதரையும் நிலைப் படுத்தினார். இங்கட் கூறப்பட்ட மற்றையோர் என்பார் அப்பண்டிதரேயாவர்.
[25] வியக்கத்தக்க அவ்வச்செயல் — இது அடியவர் விருப்பங்களை யவர் விரும்பியாங்கு நிறைவேற்றலை.
[26] இரண்டாமவராய் — ஈண்டு இஃது ஒப்புப்பொருளது.
[27] கணபேச்சுரன் — ஈண்டு கணபதிப் பேரரசரையும் அவரால் பிரதிட்டை செய்யப்பட்ட சிவபிரானையுமுணர்த்தும்.
[28] பேரப்பிள்ளை — சிவபிரானுக்கும் அரசர்க்கும் அபேதத் தன்மையை யுபசரித்துக் கூறியிருத்தலான் அவ்விருபேர்க்கும் பேரப்பிள்ளையென்பது தோன்ற இங்ஙனங் கூறினான் என்க.
[29] சீரிசைலம் முதலிய மூன்றும் தெலுங்கு தேயத்தில் உள்ள சிறந்த சிவத்தலங்கள்; அவற்றுள் திராட்சாராமம் என்பது “தக்கனுக்கு உய்யானமாக அமைந்தமையான் திராட்சாராமம் எனக் கூறப்படும்” என்று கந்தபுராணம் வீமேச்சுரகண்டம் கூறுகின்றது. ஆராமம் — உய்யானம்.
[30] ஆணை — இது பிரபுசத்தியை உணர்த்தும்; ஒறுத்தற்கும் அருளற்கும் உரியவாற்றலாம். அத்தகையவாணையின் பயன்களாகிய அருளன் முதலியவற்றிற்கு அரசன் நிலைக்களன் என்பது கருத்து. அங்ஙனமே மானசோல்லாசத்திலும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“அருளல் ஒறுத்தல் கொடுத்தல் பெறுதல் முயறல் ஒழிதல் பிடித்தல் விடுதல் என்னுமிச்செயல்களில் தானே வலியனாகுமவன் அரசனாவான்; அவனது ஆணையும் தடைப்படாவாம்”
ஆணை மாத்திரையிற் சிறப்புரிமையும் பயனுகர்ச்சியிற் பொது உரிமையும் இவ்வரசன்பாலமையும் என்பதாம்.
[31] இத்தொடர் — “சிவபிரான் பிரீதியின் பொருட்டு பத்தி நிறைந்த உள்ளத்தோடு அந்தணர்பால் அளிக்கப் படுந் தானம் மங்கலந் தரும் விமலம் என்னும் பெயரியதாம்” என்னும் வியாதமிருதியை நினைவுறுத்தும்.
[32] அன்புடனும் நன்மதிப்புடனும் — இத்தானம் சாத்துவிக தானம் என்பதாம். அங்ஙனமே;
“நல்லிடத்தில் நல்லதோரமயத்தில் நல்லோரிடத்தில், கொடையைக் கடைமையெனக் கருதி கைம்மாறு கருதாது செய்யப்படுந் தானம் சாத்துவிகமெனக் கூறப்படும்” என்று வியாதமிருதி கூறும்.
[33] வெள்ளைப் பொருளது — ஆழமான கருத்தில் பொருளையுடையது; ஒளிமிகுமிடத்தில் நடுவணிருக்குங் குடத்தை, நன்குணர்ந்தார் மாட்டு “இது குடம்” எனக் கூறல் போல்வதாம்.