நாடகவியல் – மூன்றாம் அங்கம்
(அதன்பின் தூதுவர் இருவர் நிருபத்தைக் கையிலேந்திய வண்ணம் வருகின்றனர்)
முன்னையங்கத்தின் முடிவில் வந்த
பாத்திரமாகிய அந்தணனாற் குறிப்
பிடப்பட்ட பாத்திரங்கள், அடுத்
த இவ்வங்கத் தொடக்கத்தில் வருதலான்
இஃது அங்காசியம் என்பதாம்.
முதலாமவன் — (நினைப்புடனும் வியப்புடனும்) ஓகோ! பிரதாபருத்திரனுடைய வீரத்தின் பெருமை. இவரது வெற்றிச் செலவின் பரபரப்பானே இருதிறத்து[1] ஏந்தல்களின் கடகங்களும்[2] கலக்கமெய்தின.
இரண்டாமவன் — நண்ப! கூறுவதென்னை?
காகதிக்குலவிளக்காயிலங்குமிவர், தான் றிருமாலின் அவதாரமே யாவர்; சுயம்பூதேவரது அருளும் இவர்க்கு வச்சிரகவசமாக[3] அமைகின்றது. (க)
சுயம்பூதேவரது அருள்வடிவாகிய
பீசத்தைத் தேடலான் இது கருப்
ப சந்தி.
முதலாமவன் — (வழி நடந்த அயர்வை அவிநயித்து) (எதிரே பார்த்து) தெலுங்கு நாட்டை வந்தெய்தினோம். (நகர்க்குட் புகுதலை நடித்து எல்லாப்புறத்தும் பார்த்து) ஓகோ! உருத்திரவேந்தனது வள்ளண்மை அளவு கடந்திலங்குகின்றது; ஏனெனில், இத்துயிலெடைபாடுவோர்[4] போகாவனீ முதலிய இனிய பிரபந்தங்களை நாற்புறத்துமிருந்து வல்லிசையாற் படித்து இயற்கை வனப்பையுடைய திசைகளையும் எதிரொலியாற் படிப்பிக்கின்றனர்போல காணப்படுகின்றனர்.
இரண்டாமவன் — (நன்கு பார்த்து நினைவுடனும் வியப்புடனும் மறைத்து) நண்ப! பார்க்க, பார்க்க.
அரசர்கள் மாகத[5] வேடத்தை நன்கு தாங்கித் தாம் மறைந்துளார் எனினும், கொடி நேமி முதலிய இலச்சினைகளையுடைய முன்கைகளானும், விரிவெய்திய மார்பகங்களானும், மனிதர்[6] மாத்திரையிலெய்தற்கரிய உருட்சி, உயர்ச்சி யிவற்றை யெய்திய உறுப்புக்களானும், அரசராந்தன்மையை யுணர்த்தும் இன்னோரன்ன விளக்கமாகிய பிறகுறிகளானும் இவர் அரசர் எனத் தெரிவிக்கப்படுகின்றனர். (உ)
முதலாமவன் — பிரதாபருத்திரனது போரிற் புறங்கொடுத்து வந்த இவ்வேந்தர், மார்பகத்திற் பன்றிக் குறியுடையராய் உயிரைக் காத்தற்கு இம்முறையே பற்றி காகதிப்பேரரசர்பால் அருளைப் பெறுதற்கு முயலுகின்றனர் என்று கருதுகின்றேன்.
நிகழ்ச்சிக்கேற்ப பகையரசர்
வஞ்சனைச் செயலைச் செய்த
லான் இஃது அபூதாகரணம்.
தூதுவர், அவ்வக்குறிகளான்
அரசர் என்று ஊகித்தலான்
அனுமானமும் ஆம்.
இரண்டாமவன் — ஓகோ! நகரமக்கள் போர் செலவுச் செய்தியைக் கேட்டற்கு மிக்க அவாவுறுகின்றனர்; இம்மக்கள் அச்செய்தியை அடிதொறும் வினாவியவண்னம் நம்மைப் பின்றொடருகின்றனர். ஆதலின் அன்பனே! பிரதாபருத்திரனுடைய புயங்களின் வீரச்செய்கையை வெளிப்படுத்துக.
முதலாமவன் — (சிறிது உரத்த குரலில்) ஓகோ! காகதிக் குலத்தின் புகழ்க்குக் காமதேனுவாகிய இனிய வார்த்தையைக் கேளுங்கள்.
வென்றிசேர் காகதிவீரருத்திரவேந்தன், எல்லாத் திசைகளையும் வென்றனன்; அரசரும் இறைப்பொருளை யளித்தனர்; இந்நிலமும் இவரையன்றிப் பிற வீர்ரிலவாகியது; இவரது புயவலியை மலைகள், தம்பால் விரைந்தேறும் பகை மனையின் மேகலையொலி நிரம்பிய முழைமுகங்களான் விளக்கமாகக் கூறுகின்றன. (ங)
இஃது உண்மையைக் கூற
லாகும் மார்க்கம்.
இரண்டாமவன் — நண்ப! காகதியப் பேரரசர் இந்நாட்களில் புரோகிதரும் அமைச்சரும் சூழ்தர எப்பொழுதும் அரசிளங்குமரனது வெற்றியைக் கோரிய வண்ணம் பகல்களைக் கடத்துகின்றனர்.
முதலாமவன் — நண்ப! உண்மையே கூறினை.
இரண்டாமவன் — (எதிரே பார்த்து மகிழ்ச்சியுடன்) அமைச்சருடைய புதல்வன் நம்முடைய சொற்களைச் செவியுற்றுப் பேரரசர்க்குத் தெரிவித்தற் பொருட்டு மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும் அரசர் மனைக்குட் போகின்றார்கொல்; ஆதலின் யாமும் வாயில்வழியிலிருந்து காகதி வேந்தரது அமயத்தை யெதிர்பார்ப்போம்.
(என்று சுற்றி வருகின்றனர்)
ஆராய்ச்சியைக் கூறலான்
இஃது உருவம்.
(அதன்பின் அமைச்சர் புதல்வன் வருகின்றான்)
மந்திரிமகன் — (மகிழ்ச்சியுடன்) என்னே! எனது பேறுடைமை; இத்தகைய பெருவிழாவைத் தெரிவிப்பவனாயினேன்; செவிக்கினிய அமுதப் பெருக்குடைய சொற்களை யான் றெரிவிக்க, அச்சொற்களாற் காகதிவேந்தர் சுயம்பூதேவரது அருளைக் கனவிற் கண்டகாலத்தினும் மிக்க மகிழ்ச்சியை யெய்துவார்.
இது மேம்பாடுற்ற சொல்வடி
வாகும் உதாகரணம்.
(எதிரே பார்த்து)
பேரரசர், புரோகிதரும் அமைச்சரும் மற்றும் ஏவலருஞ் சூழ்தர பேரவைக் களத்திலிருக்கின்றார்.
(என்று சுற்றி வருகின்றான்)
(அதன்பின் குறித்த வண்ணம் அரசன் மந்திரிமார் புரோகிதர் வருகின்றனர்)
அரசர் — (ஆராய்ச்சியுடனும் வியப்புடனும்)(அமாத்தியரைக் குறித்து)
ஓ! நம்மை நினைந்து இவ்வமைச்சரை நம்பால் விடுத்துத் தானே வெல்லும் விருப்பினனாய்ச் சென்றான்; அதனால் குழந்தை வீரருத்திரன் இளமைப் பருவத்திலும் தக்கதே புரிந்தனன்.
மந்திரிமார் — (வெகுமதிப்புடன்) பேரரசரே! இவ்வரசிளங்குமரன் தங்கள் புதல்வரன்றே.
புரோகிதர் — வெற்றிச் செலவு தொடங்கி யிரவு பகலாக மங்கல நிமித்தங்கள் விளங்குகின்றன; அதனால் அரசிளங்குமரர், திசைகள் எல்லாவற்றையும் வென்றார்.
அரசர் — தங்களுடைய வாழ்த்துரைகளே காகதிக்குலத்திற்கு நலங்களை விளைக்கின்றன.
ஏவலன் — உலகிற்கொரு மங்கலமாய் விளங்கும் பிரதாபருத்திரர் இக்காகதிக் குலத்திலவதரித்தாராதலின், எல்லா வகைப் புண்ணியத்தானும் இக்குலம் நிறைவெய்தியதேயாம்.
அரசர் — (ஆவலுடன்) குழந்தையின் வெற்றிச் செலவைச் செவியுறலாகும் பெருவிழா ஏன் காலந்தாழ்க்கின்றது.
மந்திரிமகன் — (பணிவுடனும் பரபரப்புடனும் அணுகி வணக்கஞ் செய்து) தேவ! இடையுலகிற்கிறைவ! வெற்றிச்செலவின் செய்தியைக் கொணர்ந்த தூதுவர், இளவரசராலனுப்பப்பட்டுத் தலைவாயிற்கண் அமர்ந்திருக்கின்றனர்.
இது சிந்திக்கப்படும் பொருள்
கிடைத்தலாகுங்கிரமம்.
(எல்லவரும் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர்.)
மந்திரிமார் — நல்லோய்! விரைவிற் புகவிடு.
மந்திரிமகன் — மந்திரிமார் கட்டளைப்படியே.
(என்று வெளிச்சென்று அவருடன் மீண்டும் வருகின்றான்)
புருடர் — (வணங்கி, அணிமைக்கணெய்தி) தேவ! உலகெலாம் வெல்லுறும் புதல்வனால் திகழ்கின்றீர்கள். இளமைப்பருவத்திலும் பிரதாபருத்திரரது வீரம் காளைப்பருவத்தினராகிய காகதிவேந்தரின் வீரத்தையும் கடந்திலங்குகின்றதாகலின், இவரது புயவலி, அளவிடப்படாத பெருமையுடையதென்பது உறுதியே.
அரசர் — (மிக்க மகிழ்ச்சியுடன் அமைச்சரைப் பார்த்து) நினைத்துழி விருப்பமே வடிவெடுத்து வந்தென இவர்க்கு பெருவிலைப் பரிசிலையளித்தி; அதனால் இருமடங்காய மகிழ்ச்சியையுடைய இத்தூதுவர் வாயிலாகக் குழந்தையினுடைய வெற்றித் திருவின் றிருமணச்செய்தியைச் செவியுறூஉம் பெருவிழாவினாற் செவிப்புலனைப் பயனுறச் செய்வேம்.
மந்திரிமார் — அரசரது கட்டளைப்படியே; (என்று பொற்பண்டாரியின் வாயிலாக அங்ஙனம் செய்கின்றனர்)
சாமம் தானம் இவற்றைச்
செய்தலாகுமிது சங்கிரகம்.
புருடர்கள் — (வணக்கஞ் செய்து பரிசிலைப் பெற்றுக் கொண்டு அதனைத் தலையில் வைத்துப் பேரரசரது அருட்கொடையைப் பாராட்டுகின்றனர்).
மந்திரிமார் — நல்லீர்! இவணெய்தி இளவரசரது வீரத்தாற் பெருமிதமெய்திய வெற்றி விளையாடல்களை வேத்தவைக்குச் செவியணியாக்குதி.
புருடர் — பேரரசர், கருத்துடன் செவியுறல் வேண்டும்.
முதலாமவன் — தேவ! தேவரீரது அருளானும், பரிநீராசனத்தாற்[7] கொழுந்து விட்டெரியும் அங்கியின் வெற்றிக் கொடையானும் இருமடங்காகி மட்டங்காவீரத்தையுடைய பிரதாபருத்திரன் புறப்படுங்கால்:-
போர்ச்செலவின் றொடக்கத்தில் ‘யான் முன்’ என முற்பட்டு வெளிப்படும் படைகளின் ஆரவாரத்தால் பொடிபடும் பூமியின் பூழித்திரன், மிக்கெழுந்து வானிடைப் பரவுகின்றன; பரவவே, வேறற்குரிய வெல்லாத் திசைகளும் தம் விபுத்தன்மையை[8] உள்ளே மறைத்துக்கொண்டு வெருவுற்று யாண்டோ சென்றாங்குப் புலனாகவேயில்லை. (ச)
பின்னும்,
செருக்கு மிக்க போர்ச்செலவான் நாற்புறமும் அதன் பொறையைத் தாங்கற்கியலாத ஆதிசேடனுடைய முடியாவும் வளைதருங்கால், மா திரத் தலைவரனைவரும் அச்செலவொலியைச் செவியுற்று, இது படைகளின் ஆரவாரம் அன்று; கரைகடந்த நாற்கடலின் கலகலவொலியாம். இது போர்ப்பறை முழக்கன்று; கண்ணுதற் கடவுள் கற்பமுடிவின் முழக்கு முடுக்கையொலியாம், என்று வியப்பையும்[9] அச்சத்தையு மெய்தினர். (ரு)
புரோகிதர் — ஓகோ! படைத்தலைவரின் தடைப்படாத வீரம்.
இரண்டாமவன் — பின்னர் இளவரசரது ஆணையால் படைகள், முதலிற் கீழ்த்திசையை நோக்கிச் சென்றன. அங்ஙனஞ் செல்லுங்கால்.
செங்கதிர்ச் செல்வன், தேரூர்ந்தெதிர்ச் செல்லும் என்னை இவ்வீரருத்திரன் நோக்கிய வழி அதனைப் பொறான்; என்று கருதி படைப்பூழியில் மறைந்தொழிந்தான். (கா)
மந்திரிமார் — பின்னும் பின்னும்.
இரண்டாமவன் — பின்னர்ப் படைத் தலைவரானே கீழ்த்திசையிலிருக்கும் அற்ப அரசரை வென்று எவ்வாற்றானுந் தடைப்படாத செருக்குமிக்க அப்பெரும்படை செல்லுங்கால்:-
விளக்கமிக்க வீரத்தையுடையாரும், மதமெய்திய வேழப்படை, போர்ப்பறை யிவற்றின் ஆரவாரத்தான் மனவலியெய்தியவருமாகிய களிங்கதேயத்தரசர் போர்க்குச் சித்தமாயினார். (எ)
அவர்களோடு தெலுங்குப் படைத் தலைவர்க்கு வீரப்பொருளாகிய பெரும்போர் நிகழ்ந்தது. நிகழவே,
வீரருத்திரரது வாட்படை, இறைச்சியைப் புசித்து களிற்றின் கதுப்பிற் பெருகுமரத் தமாகிய கட்பெருக்கைப் பருகி, மூளையிற் பொருந்து மென்புக்களால் திற்றிப்பற்களைப் படைத்து செருக்குடன் அரசருடலைத் துணித்து, நரப்பு மாலையணிந்து மக்களையச்சுறுத்தி பைரவனுருக்[10] கொடு கொடிய வாய் செருக்கள மாகுங் காளிதேவியர்க்குக் களிங்கராற் பலிவினையாற்றியது.
புரோகிதர் — மாறுவேடத்தான் மறைவெய்திய காகதித் திருமாலும், தனது பெருமையைச் சிறிது வெளிப்படுத்தினர் போலும்.
மந்திரிமார் — (பெருமகிழ்ச்சியுடனும் வியப்புடனும்) ஓகோ! பிரதாபருத்திரன்பாற் பொருந்திய வீரமிகை யென்னே!
ஏவலன் — இது தக்கதே! பேரரசராகிய உருத்திரவேந்தர்க்குப் புதல்வராம் நிலையிற் செயக் கடவதும், காகதிக்குலக்குமரர்க்குத் தக்கதும் குலதெய்வமாகிய சுயம்பூதேவரது அருண்மேன்மைக்குப் பொருந்தியதும் ஆகிய செயல் யாதோ அஃதன்றே இளவரசராற் செய்யப்பட்டது.
அரசர் — (மகிழ்ச்சியான் விளைந்த சொற்றளர்ச்சியுடன்) மேலும், மேலும்
முதலாமவன் — பின்னர் சமர்வேளையில் பகைவரின் சிரங்கள் அறுபட்டு மீமிசை கிளம்புங்கால் அவற்றைக் கண்ட கதிரவன், இராகுவெனும் அச்சத்தான் வருந்தினான்; வருந்தவே அக்கதிரவற்கு அபயமளிக்கும் படைத்துகள், அச்சிரங்களை மறைத்து இருளைச் செய்தது.
அன்றியும் அதுகாலை அலைதருங்கொடியனைய வாட்படையான் மதவேழ மத்தகம் பிளவுறுங்கால் அதனின்று மேற்சிதறும் நன்முத்தங்களாகும் விண்மீன்குழு அவணெய்திய தெய்வமகளிரின் முகமதியத்தைச் சூழ்தரும். (கூ)
பின்னர் இளவரசரது ஆணையால்,
கீழ்த்திசை வெளியின் வெற்றியாற் புகழப்படும் வீரத்தையுடையவரும், குண கடற்கரைக்கண் வெற்றிக் கொடியை நாட்டியவரும் விளக்கமிக்க விறலுடையவரும் ஆகிய தெலுங்குப் படைத்தலைவர், வேந்தரது புயவலியைக் கடற்கரைக் கானனவாசிகன் புகழ்ந்து பாட அதனைச் செவியுற்றவண்ணமாய்த் தென்றிசையெய்தினர். (க0)
அங்கண்,
உலோபாமுத்திரைக்கேள்வனாகிய அகத்திய முனிவரர் அணிமைக்கணிருப்பினும்[11] இவ் யாறுகளின் நீர், மிகுந்த படைப்பூழியாற் கலக்கமெய்துகின்றது; என்றாங்கு துகிற்கொடிகள்[12] தென்றல் வீசிய சிகையுடையவாய் எள்ளாற் பாட்டுடன் விண்ணிடை யடிதொறும் மிக ஆடற்புரிகின்றன. (கக)
பின்னர் தென்னவன் முதலிய தென்றிசையரசர்கள் சரண்புக, அவர்களைக் காகதிவீரருத்திரவேந்து, தன் படைத்தலைவரையொப்ப வெகுமதித்து அவர்களுடன் மேற்றிசை நோக்கிச் சேறலானான்.
மந்திரிமார் — பாண்டிய மன்னர் அமர்க்குமுன்னரே அரசரது அடியிணைக்கணெய்தி, தன்னலங் கருதித் தக்கதே செய்தனர். மேலும்; மேலும்.
இரண்டாமவன் — அங்கணும்,
மேனாட்டரசர்களைச் சார்ந்தனவும், பொறைமிகையான் நடுக்கமுறுந் தண்டங்களையுடையனவுமாகிய கொடிமரங்களில், கழுகுக்குழு தன் சிறைகளை வீசியடித்து, வலிய அலகினால் அக்கொடிகளின் துகில்களைப் பற்றிச் சிதைத்து அவற்றில் அமர்ந்தனவென்னு மிஃதே வெற்றியை விரும்பும் ஆந்திரப் படை வீரர்க்கு கலுழன்படையாய் அமைந்தது; பிறிதொரு போரெனில் தமது வலியுறும் புயத்தின் தினவு கழிக்குமோர் செயலாம். (கஉ)
பின்னர்:-
வீரருத்திரன் இவ்வண்னம் மேற்றிசையை வென்று பகை மனைவியரின் கண்ணீரான் நிறைவுற்ற நருமதையாற்றைக் கயங்களை யணையாக் கொண்டு கடந்து, வடதிசையை வேறற்குச் சென்றனன். (கங)
அங்கண், அங்கம் வங்கம் கலிங்கம் மாலவம் என்னுமிவை முதலிய தேயத்தரசர் யாவருங் குழுமி, போர்க்கு ஆயத்தராய் முன்னர் வந்து தோன்றினர்.
மந்திரிமார் — ஓகோ! வடநாட்டரசர்க்கு என்னே! தன்னிலையறியாமை; பிரதாபருத்திரற்கும் பகைவருளரோ?
அரசன் — மேலும், மேலும்;
முதலாமவன் — பின்னர், படைகளுடன் வரும் அரசர்குழாத்தை நோக்கி நம் படைத்தலைவர், செருக்குடன் பின்வருமாறு கூறினர்.
அடே! அடே! கூர்ச்சர தேயத்தரசனே! சமரிற் சிதைவுற்றனை; இலம்பாக ஏன் நடுக்கமுறுகின்றனை? வங்கமன்னனே! வீணே துடிக்கின்றதென்னை? கொங்கண நாட்டரசனே! தாணைப்பூழியாற் குருடனாயிணையன்றே; ஊண நாட்டிறைவ! உனதுயிர்க்காவலிற் பற்றுடையனாயிருத்தி; மகாராட்டிரனே! நாடிழந்தனை; இந்த யாம் போர் வீரர்; என்று தெலுங்குதேயத்தரசருடைய படைவீரர், பகைவரை யெள்ளி யிகழ்கின்றனர்.
இது சினமுற்றுக் கூறலாகுந்
தோடகம்.
ஏவலன் — நன்று; நன்று; படைத்தலைவரின் சொன்னடை; இவ்வண்ணம் கூறி மீண்டும் அவர் என் செயத் தொடங்கினர்.
முதலாமவன் — கூறுவதென்னை? படைத்தலைவரின் வீரம் ஒப்பற்றது.
தெலுங்கு வீரரது சுழல் தருவாட்படையின் தாரைநீரில்[13] மூழ்கிப் பொன்னகரெய்தும் புரவலரை யணிமைக்கணோக்கிய சுரநதி, மக்கள், தெய்வத்தன்மையெய்தற்குக் காரணம் யான், என்னும் தன் செருக்கை[14]யறவே யொழித்ததாகலின், அத்தெய்வ நதியே அங்கணிகழ்ந்த போர்ச் செய்தியை முற்றிலும் அறியும். (கரு)
பின்னரும் அங்கண் மறைந்தொழிந்து பகையரசரைத் தேடவிரும்பிய படைவீரர், அவ்வந்நாட்டிற்குரிய வேடம்பாடை முதலியவற்றை வெளிப்படுத்தி யெப்புறத்துஞ் சுற்றித் திரிந்தனர்; திரிந்து அவர்களை உயிருடன்[15] பிடித்து இளவரசரது பக்கலை யடைவித்தனர்.
மந்திரிமார் — படைவீரரின் முயற்சி சாலச் சிறந்ததே.
நிகழ்ச்சிக்கேற்ற பெற்றி
வஞ்சித்தலான் இஃது அதிபலம்.
அரசன் — மேலும், மேலும்;
இரண்டாமவன் — பின்னர், ஏனைய அரசரும் தன் பணியாளரிடத்து[16] நம்பிக்கையிலராய், பிரதாபருத்திரருடைய இணையடிகளையே சரணெய்தினர்.
ஏவலன் — ஓகோ! அரசர், போர்க்கஞ்சியவாறென்னே!
அச்சத்தை[17] வெளிப்படுத்த
லான் இஃது உத்துவேகம்
முதலாமவன் — அச்சமென்று கூறுமவ்வளவிலமையுமோ?
சோழர் புறங்கொடுத்தோடிக் கலக்கமெய்தினர்; காச்சுமீரர், வீரச் செயலற்றனர்; தூணர், செல்வமிழந்தனர்; இலம்பாகர், அச்சத்தால் உடல் நடுக்கமெய்தினர்; வங்கதேயத்தவர் உறுப்பிலராயினர்; நேபாளர், அரசியற்றலில் விதனமெய்தினர்; சிங்கரும் விரைவு தணிவெய்தினர். (கசா)
மேலும்,
காம்போசர், காசினியாசை யெழிந்தனர்; சேவணர் விரணமெய்தினர். கௌடர், உடற்பீடையெய்தினர்; கொங்கணர், குலவரைக் குகையெய்தினர்; இலாடர், உடல் முறிவெய்தினர்; சிங்களர் அஞ்சிக் கலங்கினர்; கருணாடர், மெய்ந் நடுக்கமெய்தினர்; மாளவர் மடியாளராயினர். (கஎ)
மேலும்,
போசர், பயனில் படையுடையராயினர்; கேரளர், மனையிற் பிரிந்தார்; பாண்டியர், விறலொழிந்தனர்; கூர்ச்சரர், நாணத்தான் மனமாழ்கினர்; பாஞ்சாலர், வணங்கி அச்சக்குறிப்பை வெளியிட்டனர். கீகடர், இன்னுரையியம்பினர்[18]; காம்பிலியர், சிற்றூர் எய்தினர்; கலிங்கரும் புகழ் ஒழிந்தனர். (கஅ)
(எல்லவரும் பெருமகிழ்ச்சியை
அவிநயம் செய்கின்றனர்.)
ஏவலன் — (வியப்புடன்) ஓகோ! பிரதாபருத்திரனுடைய வீரச் செயல்கள், மூவுலகையும் கடந்திலங்குகின்றன.
அரசன் — (மகிழ்ச்சியுடன்) உலகிற்கொரு வீரனாகிய குழந்தை, காகதிக்குலத்திற்கு மிகு புகழை விளைவித்தான்.
புரோகிதர் — காகதிக்குல தெய்வங்களின் அருட்பேறு அடிமுதலிறுதிகாறும் பயனெய்தியது.
அரசன் — மேலும், மேலும்;
முதலாமவன் — பின்னர், எல்லாத் திசைகளையும் வென்றமையான், விளக்கமிக்க விறலுடையவரும், உலகிற்கொரு வீரருமாகிய வீரருத்திர வேந்தர், எல்லா அரசருடைய அவ்வவ் விறைப்பொருளைப் பெற்றும், நிறைவுறு படைகளுடன் வந்துடன்படும் அரசர்குழு, தம்படையிற் சேர்தர அதனால் கடலெனத் திகழும் படையுடன் திரும்பியுள்ளார்.
மந்திரிமார் — (மகிழ்ச்சியுடன்) அரசிளங்குமரர் இது காலை யாண்டுள்ளார்?
இரண்டாமவன் — இது காலை காகதிவீரன், அரசர்குழு ஏவலராய் அமைய, படைத் தலைவரிற் பலரையும் நகர்க்குப் போக்கிச் சில படைகளே சூழ்தர, வேட்டையிலவாவுடையராய், கோதாவிரியின் மருங்கடவிக்கண் விரும்பியாங்கு ஆடற்புரிகின்றார்.
மந்திரிமார் — (ஆராய்ச்சியுடன்) பேரரசரே! தாமே நிலவுலகைப் புரக்க, அரசிளங் குமரர் தான் இளவரசையே உடன்படுகின்றார்.
இது பிராத்திநசை.
திசைவெற்றியால் அரசர்கதை
நெடிது தொடர்ந்தமையாற் பதா
கை விளக்கப்பட்டது.
அரசர் — ஆனால், தாங்களே குழந்தையைத் தாழ்வின்றியழைத்து வந்து அவனைப் பட்டாபிடேகத்திற்கு ஒருப்படுத்தல் வேண்டும்.
மந்திரிமார் — அரசர் கட்டளைப்படியே. (என்று போகின்றனர்) (வேடசாலையில் பரபரப்புடன்) ஓ! ஓ! நகரமக்களே விரைவில் அகல விலகுங்கள்.
கதுப்பினின்றொழுகு மதநீர்ப்பெருக்கையுடைய பட்டத்து யானை[19], மிக விரைந்து வலத்தாற்றறியை முறித்து சங்கிலியை அறுத்து, பாகன் அங்குசத்தான் வெட்டியும் அதனை மதியாது உதறி அப்பாகனையும் விரைந்து வீழ்த்தி, ஆவணத்தையலைத்து, பிறகரிபரிகளையோட்டி மக்கட் குழாத்தை வெருட்டி நகரைப் பலபுரத்தும் இங்ஙனம் கலக்குகின்றது. (கசா)
இது ஐயம் அச்சம் இவற்
றின் வடிவாகிய சம்பிரமம்.
அரசன் — (செவியுற்று முறுவலுடன்) பட்டத்து யானை நகரைக் கலக்குகின்றதா?
புருடன் — பேரரசரே! இது காலை வீரருத்திரவேந்தர், இறைப்பொருளாகப் பெற்ற வேழங்கள் நகர்க்குட் புகுங்கால் அவற்றின் மதநீர்க்காற்றை நுகர்ந்த பட்டத்து யானை, கனன்று கட்டுத்தறியை முறித்தது.
புரோகிதர் — கயமுகக்கடவுள், தந்தையராகிய சுயம்பூதேவரால் உபதேசம் செய்யப்பட்ட பிரதாபருத்திரனது பட்டாபிடேகத்தை இடையூறின்றி யினிது நிறைவுறுத்தற்கு பட்டத்து யானையின் உருக்கொடு வருகின்றார்.
கருப்பசந்தியில் பீசத்தை
வெளிப்படுத்தலான் இஃது ஆட்சேபம்.[20]
அரசர் — (மகிழ்ச்சியுடன்) ஆனால் யாமும் உய்யான வாயிலாக மேன்மாடத்தையெய்திப் பட்டத்துக் களிற்றைக் காண்பேம். (என்று எழுந்து சுற்றி வந்து எல்லவரும் சென்றனர்)
நாடகவியலில் ‘வீரருத்திரன் வெற்றி’ யென்னும் மூன்றாம் அங்கம் முற்றிற்று.
[1] இருதிறத்து ஏந்தல் — ஈண்டு அரசர்களையும் மலைகளையும் உணர்த்தும்.
[2] கடகங்கள் — ஈண்டு நாட்டையும் மலைப்பக்கத்தையும் உணர்த்தும்.
[3] வச்சிரகவசம் — வச்சிரத்தானியன்ற சட்டையென்பது பொருள்; வச்சிரம் வலிய பொருளாதலின் உடற்குச் சிறிதும் தீமைவாராதென்பது கருத்து.
[4] இத்தொடரால் இவ்வரசன் சிறந்த வள்ளலென்பதும் இத்தகைய வள்ளலே பாட்டுடைத் தலைவராவர் என்பதும் புலனாம்.
[5] மாகதர் — அரசரைச் சார்ந்து அவரது புகழைப் பாடும் ஓர் வகுப்பினர்.
[6] மனிதராம் நிலையளவிலெய்தற்கரிய என்றமையான் இவற்றை யரசர்களே யெய்தற்குரியர் என்பது கருத்து.
[7] பரிநீராசனம் — நீராசனம் என்பது நாட்டு நலங்குறித்துச் சரற்காலத்திற் செய்யக் கடவ சாந்திகருமங்களில் ஒன்று; அது கரிகளை முன்னிட்டுச் செய்வதூஉம், பரிகளை முன்னிட்டுச் செய்வதூஉம் என இரு வகைத்து; அங்ஙனமே சௌனகரானுங் கூறப்பட்டுள்ளது;
‘அரசன் ஐப்பிசியிலாதல் கார்த்திகையிலாதல் பூருவ பக்க நவமி திதியில் நலங்குறித்து கரி நீராசனத்தைச் செய்தல் வேண்டும்; அங்ஙனமே ஐப்பசித் திங்களில் பரிநலங்குறித்துப் பரிநீராசனஞ் செய்தல் வேண்டும்’ என்று.
[8] விபுத்தன்மை — ஈண்டு வியாபகத்தன்மையையும் அரசராந்தன்மையையும் உணர்த்தும்.
[9] நாற்கடலின் பேரொலியையும் உடுக்கையொலியையும் நிகர்த்தவொலியைக் கேட்டவரில்லை யாதலின் வியப்பும் அச்சமும் உண்டாயிற்றென்பதாம். இதனால் திசைத் தலைவரே அஞ்சினர் என்றால் ஏனைய அரசர்களைப்பற்றிக் கூற வேண்டா என்பது கருத்தாபத்தியாற் புலனாம்.
[10] பைரவசமயத்தவர், கட்குடித்தன் முதலிய செயற்புரிந்து காளிதேவிக்கு நரபலி கொடுத்தல் அவர் மரபாகலின், அங்ஙனமே இவ்வாட்படையாகும் பைரவசமயியும் சமர்க்களத் தேவிக்கு களிங்க தேயத்தரசரை பலியளித்ததென்பது கருத்து.
[11] உம்மை, அகத்திய நாள் உதயமெய்துங்கால் ஆற்று நீர் தெளி தரல் இயல்பு; அங்ஙனம் ஈண்டு அம்முனி அணிமைக்கணிருப்பினும் அது தெளியவில்லை யென்னும் எதிர்மறைப் பொருளையுணர்த்தும்.
[12] இத்தொடர் — உலகிலொருவன், வல்லானொருவனை வெல்லுறில், அவன் மேனிலத்திருந்து எள்ளி நகைத்து தலைவிரித்தாடல் இயல்பென்பதையுணர்த்தும்; இக்கருத்தை சிகை, எள்ளல், விண் என்னுஞ் சொற்கள் புலப்படுத்தும்.
[13] தாரை — ஈண்டு வாணுதியையும், நீர்ப்பெருக்கத்தையும் உணர்த்தும்; கங்கையாற்றி லுடனீத்தவர் தெய்வத்தன்மையுறுவர், என்பது நூல் வழக்கு.
[14] தன் செருக்கையறவேயொழித்த தாகலின், இதனால், அப்பெருஞ் செருவிடைப் பலர் உடனீத்து வீரச்சுவர்க்கம் எய்தினர் என்பது போதரும்..
[15] உயிருடன் — இதனால் அஞ்சிய பகைவரை வதை புரியவில்லை யென்பது பெற்றாம். “இருக்கை யெய்தியவன், பேடி, கும்பிட்டுவணங்குபவன், அஞ்சியவன், புறங்கொடுத்தோடியவன் என்னுமிவர்களை அறத்தாறு கருதுமொருவீரன் கோறலாகாது” என்னும் மனுநூல் இங்கண் உணரற்பாலது.
[16] தன் பணியாளரிடத்தும் நம்பிக்கையின்மை, மாறுவேடம் பூண்ட படைவீரர், பல அரசரைக் கைப்பற்றியமையானாம்.
[17] அச்சத்தை — இது பகைவர்க்கு விளைந்த அச்சத்தை.
[18] இன்னுரையியம்பலாவது — ஈண்டு ‘யான் எளியன்; என்னைக் காத்தருளல் வேண்டும்’ என்னும் இன்னோரன்ன எளிய சொற்களைக் கூறல்.
[19] பட்டத்து யானை — இந்த யானை கணபதியென்னும் பெயரியதாம்.
[20] பீசப்பொருளாகிய பட்டாபிடேகத்திற்கு இடையூறின்றி யென்றமையான், கயமுகக்கடவுளின் அருள்வடிவாகும் உபாயத்தைச் சிந்தித்தலான் இஃது ஆட்சேபம் என்னும் கருப்பசந்தியினுறுப்பாம்.