இங்கண் உறுப்புக்களுடன் கூடிய நாடகம் எடுத்துக்காட்டப்படுகின்றது.[1]
இருமருங்கிலும் மேரு இமயம் என்னும் பருப்பதங்களும் திருமால் இந்திரன் முதலிய தேவர்களும் முன்மருங்கிற் கமலத்தோனும்,[2] பின்மருங்கில் மேனையாதிய[3] கற்பிற் சிறந்த மாதருஞ் சூழ்தர மங்கலம்[4] பொருந்திய மணவறையை யெய்தி ஒருவரையொருவர் அண்மியமர்ந்த[5] சிவை சிவன் இவரது மணவினைக்காலத்து நிகழுங் கடைக்கணித்தல்[6] உங்களைக் காப்பதாக. (க)
இந்நாந்திச் செய்யுள் இருபஃதிரு சொற்களையுடையது; இதில் மணவினைக்கு முற்பட்டிருக்கும் இறைவன் இறைவி யிவரது வன்னனையால் அரசர் யாவருஞ் சூழ் தரவிருக்கும் பிரதாபருத்திரன், காகதிவேந்தரது அரசியற்றிருவை யெய்தலாகிய நாடகத்தின் கருப்பொருள் பொருளாற்றலாற் சிறிது தெரிவிக்கப்படுகின்றது.
உலகம்புரக்கவல்லாளும், திருமாலினாகத்தொளிருமலங்கலைத் தனதில்லத் தோரணமாகக் கொண்டவளுமாகிய செங்கமலச்செல்வி, சித்தியை யளிக்க. (உ)
இந்நாந்திச் செய்யுளும், பிரதாபருத்திரற்கும் அரசியற்றிருமகட்கும் பொருந்திய மங்கலவினையாகும் பட்டாபிடேகத்தைக் குறிப்பாணுர்த்துவதாம்.
நாந்தியின் முடிவில்[7]
சூத்திரதாரன்[8]—(எல்லாப்புறமும் பார்த்து மகிழ்ச்சியுடன்[9]) ஓ! அரங்கமங்கல வினையெங்கும் செய்யப்பட்டதே; அங்ஙனமே.
முரசங்கள்[10] ஒலியினிமையை யெங்கும் வெளிப்படுத்துகின்றன. இந்த வீணகளும்[11] இசைநூன் மருமங்களைப் புலப்படுத்துகின்றன. (ங)
இஃதரங்கவழிபாடாம்[12].
(மகிழ்ச்சியுடன்)
ஏந்தல்புதல்வியும்[13] மாதேவரும்[14] எவற்குத் தாய் தந்தையரெனப் பிரசித்தமோ; அத்தேவன்[15] நரகுஞ்சரவடிவினழகுடையனாய்[16] உங்கட்கு மங்கலத்தை நல்குக. (ச)
நலமிகப்புரியுங் காலவயத்தாற் றிசைவெளிகள், மூங்கிற்குழு நீங்கியவாயின. ஏனெனில்;
தெளிவுற்ற சரற்கால நிகழ்ச்சி வேந்தனாலும்[17] அன்னப்பறவைகளானும் அழகெய்தி மித்திரமண்டலம்[18] விளங்க வானாற்றை[19]யணிப்படுத்துகின்றது. (ரு)
காப்பியக் கருப்பொருளையுணர்த்துமிரண்டு செய்யுட்களாற் பருவகாலத்தைப் புகழுமுகமாக வடமொழி பேசுமியல்புடைத் தலைப்பாத்திரங்களாற் கூறற்குரிய பாரதீவிருத்தி யிங்குக் கூறப்பட்டது.
(அவைக்கு எதிர்முகமாக அருகிற் சென்று வணக்கமுடன் கைகளைக்கூப்பி)
ஓ! ஓ! இடையுலகிற்குப் பழுத்த ஆகூழும், ஏகசிலைப்பதியின் நல்வினைக்குழுவும், காகதிவேந்தர்க்குக் குலதெய்வமுமாகிய சுயம்பு தேவரது இடையறாப் பெருவிழாக்குறித்து
வந்தெய்திய பேரறிஞீர்! ‘கலாருணவம்’[20] என்னும் நாட்டியாசிரியரின் புதல்வனும் அவிநயங்கட்குக் கண்ணடியுமாகிய எனக்கு, ‘யாம் விரும்பிய காட்சிநூலை யவிநயஞ் செய்க’ என்று கட்டளையளித்து நல்லருள் புரிக. (ஆகாயத்திற் செவிகொடுத்து)
என்ன கூறுகின்றீர்கள்? சுயம்பு தேவரது விருப்பிற்கு நாளுமுரியதாய் உலகிற்கு நலந்தரும் பொருள் எந்த நாடகத்தில் உள்ளதோ; அத்தகைய நாடகம், எங்களுடைய செவிகள் நாட்டங்கள் என்னுமிவற்றின் வழிகளால் நெறி நான்கு[21] கூடுமிடமாய்த்தோற்றுக. (கா)
என்றா கூறுகின்றீர்கள்
(மகிழ்ச்சியுடன்) பிரதாபருத்திரனுடைய சரிதத்தைப் பற்றிய காட்சி நூல் அவையினரது மனத்தில் மிளிர்தருகின்றதாகலின், ஓ அநுகூலதெய்வம் யாவற்றையும் நன்கிணைத்தது; ஏனெனில்:-
அவைக்களம், சுயம்பூதேவனைச் சார்ந்தது; பிரதாபருத்திரனுடைய குணங்கள் பெருமதிப்புடையன; யானும் நாட்டிய வேதத்தின் கரையினைக் கண்டவன்; அக்கவியினுடைய பனுவல்களும் அமுதத்தைப் பெருக்குவனவாம்.[22]
இது புகழ்ந்து கூறலாற் றன்வயப்படுத்தல்[23] வடிவாகும் பாரதீவிருத்தியினுறுப்பாகிய பிரரோசனையாம்.
(ஆராய்ச்சியுடன்) இசைச்சாரிகையாம்[24] என் மனைவியேன் காலந்தாழ்க்கின்றாள்?
நபீ- (புகுந்து) (முன்னே பார்த்து) ஆசையுடன்
அவைக்களத்து நடம்பயிலும் கலைமகளின் சிலம்பொலியோ இங்குக்கேட்கப்படுகின்றது? ஆம் அறிந்தேன்; நாடகத்தொடக்கத்தில் முழங்கப்படும் முரசொலியும் இசையொலியும் கேழ்க்கப்படுகின்றன. (அ)
இது ஒப்புமையாற் பலபொருளைச் சேர்த்தலாகிய திரிகதம் என்னும் பிரத்தாவனையினுறுப்பாம்.[25]
(அணிமைக்கணெய்தி) ஐயரே! இதோ இருக்கின்றேன். செயக்கடவபணியென்னென்று கட்டளை செய்யுங்கள்.
சூத்தி — காதலீ!
இவ்வரங்க இற்கணிருந்து துருவை[26]யென்னும் பாடலைக் குயிற்குரலையொப்ப இனிமையாகப் பாடுவேன் என்றும், காண்டற்கினிய இலிலதம்[27] முதலிய உறுப்பவிநயங்களான் மகளிராடலை[28] யினிது புரிவேன் என்றும், அரங்கமங்கலச் செயலை யழகுறச் செய்வேன் என்றும் என்பால் முன்னமேயுரைத்தனை; நுண்ணறிவுடையாய்! இதுபொழுது உன்னால் அஃ தங்ஙனமே செய்யப்பட்டதன்றே.[29] (கூ)
இஃது இன்சொற்களையொத்தவன் சொற்களாற் பழித்துரைதலாகுஞ் சலம் என்பதாம்.
நபீ — (அச்சத்துடன்) கூத்துப்பொருள்களைக் குறைவறச் சேகரித்தற் பொருட்டுக் காலந்தாழ்த்துள்ளேன்; இப்பொழுது அப்பொருள்கள் சித்தஞ் செய்யப்பட்டன; எந்தக் காட்சி நூலை நடித்தற்குத் தொடங்கவேண்டும்.
சூத் — ஏடீ! இதனையே நடித்தல் வேண்டும்.
(என்று கடிதத்தைக் கொடுக்கின்றான்)
நபீ — வாங்கிப்படிக்கின்றாள்.
வீரம் அறன் என்னுமிச்சொற்களுடைய பரியாயச்[30] சொற்களுக்கு விளிவேற்றுமை யெவ்வாறாம்? ஆசிமொழியான் வரக்கடவ பயன் யாது[31]? வித்யாநாதனியற்றிய[32] நூல் யாது?(க0)
(குறுநகையுடன்) அறிஞர் கூற்று மிக்க மறைபொருளவாகத் தோற்றுகின்றதே; இவற்றிற்கு விடை யெத்தகைத்தென்று ஐயரே ஆராய்ந்து கூறவேண்டும்.
சூத் — ஏடி! இது மிக வெளிப்படை; பிரதாபருத்திரன் திருமணம் என்று தெரிகின்றதே.
மறைபொருளாதலின் இது நாளிகை யென்பதாம்.
நபீ — என்னே! இந்நாடகம் நூற்றலைவனது பெயர்ச்சேர்க்கையால் இனியவாகின்றது; ஐய! அவ்வரசனது பெயரில் பிரதாப என்னுஞ் சொல் முதற்கண் அமைதரற்கு நிமித்தம் யாதென வினாவுகின்றேன்.
சூத் — காதலீ! கேழ்க்க;
புவியிற் கதிரவன் என உதித்த அக்கட்டழகனைக் கண்ணுற்றுக் காகதிவேந்தர் பிரதாபருத்திரன் என அவற்குப் பெயரிட்டனர். (கக)
மற்றும்.
உலகிற்கொரு வீரனாகிய திருவின் கேள்வன், இவனுருக்கொடு காகதிக்குலத்தில் அவதரித்தான் எனக் கருதி வீரருத்திரன் என வழங்குகின்றனர். (கஉ)
நபீ — உலகத்து மக்கள் தம்மிரு செவிகளுஞ் செய்த நல்வினைப் பயனால் இவருடைய இரண்டு பெயர்களையுஞ் செவியுறுகின்றனர். உலகிற்கொரு மங்கலமாகிய காகதிப்புரவலன் சரிதத்தை யாம் அவிநயித்தலான் நெடுங்காலமாகக் கூத்துக்கலையைப் பயின்று வந்தமையும் பயனுடைத்தாயிற்று.
தமது கூத்துப்பயிற்சியைப் புகழ்ந்து
கூறுமுகமாக நிகழுஞ் செயலைப்பற்
றிக்கூறலான் இஃது இரண்டாம்
பேதமாகிய அவலகிதம் ஆம்.
சூத் — ஓ! ஆயுணிறைந்தவனே! உனது அறிவாற்றலான் இக்கூற்று நிகழ்ந்தது; இங்ஙனமே புலவர் பெருமக்களுடைய வினாவிடைச் சொற்பொழிவும் மிளிர்தருகின்றது; எங்ஙனமெனில்:-
உலகோர் செவிகட்குப் பாக்கியம் யாது? அடிதொறும் மங்கலச் செய்தியைக் கேட்டலேயாம்; அம்மங்கலச் செய்தியாவது யாது? வீரக்குறியுறும் வீரருத்திரனது வியப்புறுஞ் சரித்திரமேயாம். (கங)
இது வினாவிடை வடிவாகிய உற்காத்தியகம் ஆம்.
நபீ — ஐயர் கூறும் மாற்றத்தான் யாவும் பொருந்துகின்றன.
சூத் — விதர்ப்ப கவியின் கூற்றைப் பற்றிய[33] இயல்பான் நூலழகு சிறந்தன்ன எனது இந்நாட்டிய வளமும் மனைவியாகிய உன்னால் மிகு வனப்பெய்திச் சிறக்கின்றது. (கச)
இஃது ஒருவர்க்கொருவர் புகழ்ந்து கூறலாகும் பிரபஞ்சமாம்.
நபீ — இத்தகைய நற்குணங்களாற் பெருமதிப்பெய்திய பிரதாபருத்திரனது சரித்திரத்தை முயன்றியற்றிய அக்கவிக்குக் கலைமகளின் அருட்பேறு நிறைந்திலங்குகின்றது.
சூத் — காதலீ! உண்மையே! இக்கவி, கலைமகள் இவரது உரையாடல் இஃதன்றே;
எங்ஙனமெனில்:-
அன்னாய்![34] கலைமகளே! மதலாய்! என்னை? உனது அருளை வேண்டுகின்றேன்.
இப்பொழுது நிகழுஞ் செயலென்னை? காகதி வீரருத்திரவேந்தனைப் புகழ்ந்து பாடுதற்கு நா முயலுகின்றது. அறிந்தேன்; சடைமுடிக்கடவுள் மாலைப்பொழுதில் நடமிடுங்கால் அலைவுற்றுப் பெருமிதமெய்தும் முடியணிக்கங்கையை நிகர்த்த சொற்பெருக்கங்கள் நின்பால் நிலவி நின்றாடற் புரிக[35]. (கரு)
இஃது, ஒருவர்க்கொருவர் உரையாடல் வடிவாகிய வாக்கேளியாம்.
நபீ — இத்தகைய அரசனது சரிதத்தை அவிநயித்தற்குத் தக்க நாட்டியத்திறல், நம்பால் உண்டோ இன்றோ என்னும் அச்சத்தால் எனது நெஞ்சம் நடுக்கமுறுகின்றது.
சூத் — (சிறிது பொறாமையுடன்)
ஆ! யாது புகன்றனை? என்னுடைய கூத்துக் கலைக்கருவிகள் மாசுபடாவன்றோ? ஆனால், நின்பால் தக்கதாக அமையும் பாடல் எத்தகைத்து?
நபீ — இசைநலச் சுவைக்கடல் பொங்குகின்றது; ஆதலின் ஐயர், கருத்தெனு மரக்கலத்தில்[36] ஏறவேண்டும்.
ஒருவர்க்கொருவர் மிகைபடக் கூறலான் இஃது அதிபலம் ஆம்.
சூத் — யான் மிக்கக் கருத்துடையனே; இதோ தொடங்கப்படுகின்றது துருவை.
நடியாற் பாடக்கடவது துருவையென்னும்
பாடலைப் பாடுவதாக உறுதி கூறல்,
பரபரப்பிற் கூறியதாகலின் இது கண்டம் ஆம்.
நபீ — (புன்னகையுடன்) ஐயர், துருவையைப் பாடுகின்றார்களா?
சூத் — ஆ! என்ன அரைக்கூற்றனவையிலேயே ‘ஆகும்[37] நாட்டியவித்தை’, யென்னும் எஞ்சிய சொல்லைப் பரபரப்பால் இவன் அறிந்தான் இல்லை.
இது கூறியதை மாறுபடக்கூற
லாகும் அவசியந் திதம் ஆம்.
காதலீ! துருவையைப் பாடற்கு உனது மனம் உண்மையாகவே விரும்புகின்றதாகலின், அப்பாடலைத் தொடங்குக.
நபீ (அங்ஙனமே செய்கின்றாள்)
இவ்வரசியற் றிருவும், ஓடையும், புவனவெளியை[38] வெளிறுபடுத்தி குவலய[39] வனப்பை மிகுவித்து விளக்கமிக்கவாய் வேந்தனை[40]யணிப்படுத்துகின்றன. (கசா)
சூத் — (கேட்டு இன்பச்சுவை மயக்கத்துடன்) செவிப்புலன்கட்கே அமுதமாரி பொழியும் துருவையைத் தளராதிறுகத்தழுவி, எழுத்துக்கடோறும் அமுதத்தைப் பெருகச் செய்து எல்லா உறுப்புக்களிலும் இயைத்துக் கொள்வேன். (கஎ)
சுவைவயத்தாற் பொருத்தமில் பொ
ருளைக் கூறுவதாகுமிஃது அசத்
பிரலாபம் ஆம்.
நபீ — (பரிகாசத்துடன்) மெல்லியதன்றேயிது; அருளின்றி ஐயர் வலிந்தணைப்பின் அதனையிது தாங்கற்கியலாது.
இது நகைவிளைக்குஞ் சொல்
லாகிய வியாகாரம் ஆம்.
சூத் — (நாணத்துடன்)
எந்தப் புலவர்கள், சுவை நுகர்ச்சியால் இன்புற்று மயக்கமுறுகின்றனரோ; அவர்களே உலகில் அழுந்தியறியு மாற்றலுடையாராய் இரசிகரென வழங்கப்படுகின்றனர். (கஅ)
குற்றத்தைக் குணமாகக்
கூறலான் இது மிருதவம்.
நபீ — ஐயர், மேற் செயற்பாலனவற்றைக் கூறல் வேண்டும்.
சூத் — இப்பொழுது அவைத் தலைவராகிய சுயம்பூதேவரைப் போற்றி செய்கின்றேன்.
உறுப்பெல்லாவற்றிலும் விளங்குஞ் சருவமங்களையால்[41] வனப்பெய்திய வடிவுடையனும், உலகிற்கெல்லாம் அருள் சுரந்தளிப்பவனுமாகிய உருத்திரனுடைய மகிமை விளக்கமுறுகின்றது. (ககூ)
(வேடசாலையில்)
ஓ! உண்மை; உண்மை;
இந்த உருத்திரன்[42] எல்லா உறுப்புக்களிலும் விளங்கு மங்கல குணங்களான் வனப்புறு வடிவுடையனேயாவன்; என்று.
சூத் — (மகிழ்ச்சியுடன்) திறலமைந்த இசைபாடுவோர் நமது சொற்றொடரை முன்னிட்டு நிகழ்ச்சிக்கேற்ப அதனையே தொடங்கினரே; ஏனெனில், காகதிவேந்தருடைய குணங்களைப் புகழ்ந்து கூற முயலும் வைதாளிகருடைய[43] சொற்கள் போல கூறப்படுகின்றன.
இது, கதையின் முன்னுரையும்
குணத்தை வன்னித்தலாற்
பிரவருத்தகமும் ஆம்.
(முன்னே பார்த்து) ஓ! இத்துயிலெடை பாடுவோர் இவ்வழியே நோக்கி வருகின்றனர்.
இந்த என்னுஞ் சுட்டுச் சொல்
லாற் கூறியிருத்தலான் இது
பிரயோகாதிசயம் என்னும்
பிரத்தாவனையுறுப்பாம்.
ஆதலின் வருக; யாமும் செயக்கடவ வினைக்குச் சித்தமாவோம்.
(என்று போகின்றனர்)
எல்லா வுறுப்புக்களோடுங்
கூடிய முன்னுரை முற்றிற்று.
(காம்பிலியன் கலூதகன் என்னும் வைதாளிகர் வருகின்றனர்[44])
முதலாம் அவன் — (மகிழ்ச்சியுடன்)
மூவுலகினுஞ் சிறந்த புண்ணியப்பேற்றையுடைய காகதிக்குலத்தில் எவர் உதித்தனரோ; தேவர்க்குத்[45] தேவனாய் பகவானாய் விளங்குஞ் சுயம்பூதேவன், எல்லா நலங்களையும் எப்பொழுதும் எவர்க்கு அளிக்கின்றனரோ; எவருடைய ஆணை, எல்லா அரசர்களுடைய முடிமணிப்பந்தியுடனாடல் தர தோழியாக[46] அமைகின்றதோ; அத்தகைய வீரருத்திரவேந்தன், அரசர்க்கொரு முடியாய் குணப்பெருமகனாய் விளக்கமுறுகின்றான். (உ0)
‘சுயம்பூ தேவன் நலம் கொடுத்த’
லாகும் பீசத்தையமைத்துக்
கூறலான் இஃது உபட்சேபம்
என்னும் உறுப்பாம்.
இரண்டாமவன் — நண்ப! கூறுவதென்னை?
முந்தைநாட்[47] கைலயங்கிரியில் நாரியோர் பாகனாய் விளங்கிய உருத்திரதேவனே, இதுபொழுது காகதிவேந்தரது குலத்தில் எல்லாப்பாகமும் நாரியாய் விளக்கமுறுகின்றான்; அவ்வுருத்திரனது நேரிலாக் கண்பார்வை[48] மாத்திரையில் பகைப்புரங்கள்[49] சாம்பராயின; என்னுமிது பொருத்தம்[50]; இப்பொழுது நஞ்சு, கட்கத்திற் றாங்கப்படுகின்றதென்னுமிது வியப்பாம்[51]. (உக)
முதலாமவன் — நண்ப! நன்கு பொருந்தக் கூறினை; அன்றேல் இப்பேரரசருடைய கனவில் குலகுருவை யொத்த சுயம்பூதேவன், நலம்பயக்குமத்தகைய காரிகையை இவர்க்கு யாங்ஙனம் உபதேசித்தருளுவர்.
சுயம்பூதேவருடைய அருள்வடிவாகிய
பீசத்தைப் பரப்புதலால் இது பரிகரம் ஆம்.
இரண்டாமவன் — (ஆராய்ந்து வியப்புடன்)
நண்ப! அரசியல் இரகசியத்தை யெவ்வாறு அறிந்தாய்?
முதலாமவன் — தோழ! இச்செய்தி யார்க்குத் தெரியாதது; மகோர்ச்சவத்தைத் தெரிவிக்கும் உருத்திரதேவியாரால், குலதெய்வம் கனவில் உபதேசித்தருளிய அருள் விசேடங்கள் நகரெங்கணும் வெளியிடப்படுகின்றனவே.
குலதெய்வத்தின் அருள்வடிவாகிய பீசம்
வெளிப்படுக்கப்பட்டுச் சித்திபெறலால்
இது பரிநியாசம் ஆம்.
இரண்டாமவன் — ஓகோ! தேவன் இடையறாது அருள் புரிகின்றனர்; அதனால் காகதீயவழித்தோன்றற்கு நலங்கள் மேன்மேலும் வந்தெய்துகின்றன.
பீசம் நலமெய்துகின்றதென்
னுங்குணத்தை வெளிப்படுத்
தலால் இது விலோபனம்.
ஆதலின், பூவுலகிற்கு இந்திரனாய் விளங்கும் சலமார்த்திகண்டன் என்னும் இவ்வரசனைப் புகழ்ந்து பாடுதற்கு இப்பெருவிழாவிலேயே நல்ல அமயம் நமக்கு வாய்த்தது; வருக; அரண்மனைக்கேகுவோம்.
முதலாமவன் — அரசன், பெரியோராகிய புரோகிதர்களும், சீரிய மந்திரிமார்களும் சூழ்தர மங்கலக்கனவை யாராய்ந்த வண்ணம் உட்புறத்துச் சபா மண்டபத்தின்கண் வீற்றிருக்கின்றார். யாமும் இங்கிருந்து சென்று புகழ்ந்து பாடும் அமயத்தை எதிர்பார்ப்போம். (என்று சுற்றி வந்து சென்றனர்)
இது சுத்தவிட்கம்பம்
[1] எடுத்துக்காட்டப்படுகின்றது — பெயர்க்குறிப்பு இலக்கணம் என்னுமிவற்றைக் கூறுமாத்திரையில் காட்சி நூல்களை உள்ளவாறுணர்தற்கியலாவாகலானும், இவ்வெடுத்துக்காட்டொன்றான் மற்றைய காட்சி நூல் யாவும் எடுத்துக்காட்டியவாறாகுமாகலானுமாம்.
[2] கமலத்தோன் — மணவினையைச் செய்துவைத்தற்கமைந்த புரோகிதன் ஆம்.
[3] மேனை — இவள் பனிவரையின் மனைவி; உமாதேவியாரை வளர்த்த அன்னையும் ஆவள்.
[4] மங்கலம் பொருந்திய — உலகிற்குச் சிறந்த மங்கலத்தை யளித்தலானும், விசித்திரமாயணிப்படுத்திய மேற்கட்டுக்க்களானும் பொன்மணித்தோரணங்களின் அலங்காரத்தானும் மணவரை, சிறப்பெய்தியதாகலின் இவ்வடைமொழி கூறப்பட்டது.
[5] அண்மியமர்தலாவது — மணமக்கள், தம்மிருவருடலும் உராய அமர்தல்.
[6] கடைக்கணித்தல் — மணமக்கள் ஒருவரையொருவர் கடைக் கண்ணாற் பார்த்துக் கோடல்; நாணெய்திய உமாதேவியாரைக் கடைக் கணித்த சிவபெருமான் திருத்தியெய்திலனாக, அங்கனமே உமாதேவியாரும் ஆம் என்பது கருத்து.
[7] முதற்சூத்திரதாரன் — நாந்தி கூறிச் சென்ற பின்னர் என்பது கருத்து.
[8] சூத்திரதாரன் — இவன் நடன் எனப் பெயரிய இரண்டாமவன்; அரங்கத்தில் வந்து என்னுமிச்சொல்லை இயைக்க
[9] மகிழ்ச்சியுடன் — இவனது கருத்தைக் குறிப்பான் உணர்ந்து நாடகவியன்முறை யுணர்வோர் வாச்சியவகைகளைச் சித்தஞ் செய்தனர் என்பது மகிழ்ச்சியினிமித்தம்.
[10] இக்குறியுள்ள — முரசங்கள் வீணைகள் என்பன. முறையே அவற்றையடிப்போரையும் யாழ் பாணரையும் இலக்கணையாலுணர்த்தும்.
[11] இக்குறியுள்ள — முரசங்கள் வீணைகள் என்பன. முறையே அவற்றையடிப்போரையும் யாழ் பாணரையும் இலக்கணையாலுணர்த்தும்.
[12] முன்னர்க்கூறியுள்ள மூவகையரங்க வழிபாடுகளுள் இஃது இரண்டாம் வழிபாடாகும்.
[13] ஏந்தல்புதல்வி — மலைமகளாகிய உமாதேவியாரையும் அரசன்மகளாகிய மும்மடாம்பிகையையும் உணர்த்தும்.
[14] மாதேவர் — சிவபிரானையும், இப்பெயருடைய பிரதாபருத்திரனது தந்தையாரையும் உணர்த்தும்.
[15] தேவன் — அரசனையும் கடவுளையும் உணர்த்தும்.
[16] நரகுஞ்சரவடிவென்பது — வேழமுகக்கடவுளையும் உடல்வன்மைமிக்க பிரதாபருத்திரனையுமுணர்த்தும். இங்கண் உரிய பொருள் வருமாறு:-
உமாதேவியார்க்கும் சிவபிரானார்க்கும் முதற்புதல்வரும், வேழமுகமும் மனிதவுடலும் பொருந்தியவரும் ஆகிய விநாயகக் கடவுள் மங்கலத்தையருளிடல் வேண்டுமென்பதாம்.
“சிவபிரான் மதவேழவடிவினராய் வனத்திடைச்
சுற்றிவருங்கால் அவரைக் கண்ட உமாதேவியார்,
தானும்பிடிவேழவடிவுடையளாய் மனமுவந்துகா
தலனைக் கூடினள்; கூடவே அங்கட்கரிமுகக்கடவுள்
தோன்றினார்” என்னுங் கந்தபுராணம் ஈண்டுக் கருதற்பாலது.
இங்கட் சொல்லாற்றலாற் போதரும் கருப்பொருட்குறிப்பு வருமாறு:- நூற்றலைவனாகிய பிரதாபருத்திரற்கு ஏந்தல் புதல்வி அன்னை; மாதேவர் தந்தையென்றமையான் இவ்விரண்டு சொற்களின் ஆற்றலான் மும்மடாம்பிகை தாயர் என்பதும், தந்தையார் மாதேவரெனும் பெயருடையாரென்பதும் புலனாம்; நரகுஞ்சரவடிவினழகுடையனாய் — குஞ்சாரமென்ற சொல் மேன்மைப்பொருளையுணர்த்த, அதனால் மக்களுட் சிறந்த பேரழகு வாய்ந்த வடிவுடையன் இத்தலைவன் என்பதும் நளன் நகுடன் திலீபன் இவரை யொத்தவன் என்பதும் விளங்கும். தேவன் என்னுஞ் சொல்லும், இவ்வரசனையே உணர்த்தும். அத்தகைய அரசன் தலைவனாக அவன், மக்கள் எல்லோர்க்கும் நன்மையே நாடிச் செய்வன் என்பது கருப்பொருளாம்.
[17] வேந்தன் — ஈண்டு சந்திரனையும் அரசனையுமுணர்த்தும்.
[18] மித்திரமண்டலம் — ஈண்டு சூரியன் மண்டலத்தையும் நட்டோர் குழுவையும் உணர்த்தும்.
[19] வானாறு — ஆகாய மார்க்கத்தையும் நல்லொழுக்கத்தையும் உணர்த்தும் வான் பெருமை யெய்திய. ஆறு — ஒழுக்கம்.
[20] கலாருணவம் — கலைக்கடல் என்னும் பொருள்பற்றி நாட்டியாசிரியர் ஒருவர்க்கு அமைந்த காரணப்பெயர்.
[21] நெறி நான்கு கூடுமிடம் — செவிகளாற் கேட்டதற்குரிய வாசிகாபி நயமாகிய நூல் நயமும் இசைநயமும், கண்களாற் காண்டதற்குரிய பிற மூன்று அபிநயங்களாகிய வேடம் ஆடல் முதலியனவும் நிறைந்ததென்பதாம்; இதனால் இந்நாடகம் செவிப்புலனையும் கட்புலனையும் ஒருங்கே யின்புறுத்துமென்பது பற்றி நெறி நான்கு கூடுமிடம் என்றான் என்க.
[22] இச்சுலோகம்வரை சூத்திரதாரன் மகிழ்ச்சியுடன் கூறிய சொற்கள்; அறியுந்திறலமைந்த அவையும், அந்த அவைக்களத்தை அவிநயத்து இன்புறுத்தற்குரிய கதையும், அக்கதையை நடித்தற்குரிய திறலமைந்த நடனும், அந்நடற்கேற்ற கவியின் இனிய பனுவல்களும் ஆகிய இவற்றை யெல்லாம் ஒருங்கே சேர்த்தமைத்த நல்லூழ்வினைப்பயனே மகிழ்ச்சியில் நிமித்தமாம்.
[23] தன்வயப்படுத்தல் — இது அவையினரை; காப்பியத்தையும், அவையோரையும், தன்னையும் சூத்திரதாரன் புகழ்ந்து கூறல் அவையினரைத் தன்வயப்படுத்தலினிமித்தம்.
[24] இசைச்சாரிகை — இசைக்குச் சாரிகையென விரியும் நாகணவாய்ப்புள்ளனைய இனிய குரலமைந்தவள் என்பதாம்.
[25] பிரத்தாவனையினுறுப்பாம் என்றமையான் இது முன்னரங்கத்தின் உறுப்பன்றென்பது போதரும்.
[26] துருவை — கீத உறுப்புக்களுளொன்று.
[27] இலலிதம் — உறுப்பவிநயங்களுள் ஒன்று;
[28] மகளிராடல் — இதனை யிலாசியம் என்ப.
[29] தேற்றம் — இது கூறிய வண்ணஞ் செய்யாத நடியைப் பழித்துரைத்தவாறு.
[30] ஒரு பொருளைக் குறிக்கும் மறுசொல்; வீரத்தின் பரியாய விளி பிரதாப என்பதும் அறன்றன் பிரியாய விளி உருத்திர, என்பதும் ஆம்.
[31] பயன்யாது — திருமணம்
[32] இயற்றியது — பிரதாபருத்திரன் புகழணியென்னுங் காட்சிநூல்.
[33] விதர்ப்பகவியின் கூற்றைப் பற்றிய — இவ்வடைமொழி, வைதர்ப்பீ இரீதியை யுணர்த்தும். இது விதர்ப்ப கவியால் விரும்பப்பட்டதொன்றாகலின் இப்பெயர்த்தாயிற்று.
[34] அன்னாய்! மதலாய்! என்னுமிவ்விரண்டு விளிகளானும், இக்கவிக்கு நாமகளிடத்துப் பொருந்திய மெய்ப்பத்திமிகையும், அந்நாமகட்கு இக்கவியாற் பொருந்திய அருண்மிகு நோக்கமும் குறிப்பிற் புலப்படுத்தவாறு.
[35] இதனால் இக்கவியினுடைய சொற்பெருக்கங்கள், தடைப்படுத்தற்கரிய கங்கையாற் றொழுக்கென்னத் தெளிவுற்று ஆழமுடையவாய்த் திகழும் என்பது கருத்து.
[36] இசைநலச்சுவையைக் கடலெனக் கூறியமையால், கருத்தை அதனைக் கடக்கும் கருவியாகிய மரக்கலமாகக் கூறினார்; இதனால் தன் இசைநலத்தைக் கருத்தோடு கேட்டாலன்றி அது விளங்குவதரிதெனத் தற்பெருமையை நபீ, புலப்படுத்தவாறு.
[37] தொடங்கப்படுகின்றது துருவையாகும் நாட்டியவித்தையெனக் கூட்டிக் கொள்க.
[38] புவனம் — ஈண்டு உலகங்களையும் தண்ணீரையும் உணர்த்தும்.
[39] குவலயம் — ஈண்டு பூமியையும் கருங்குவளை மலரையும் உணர்த்தும்.
[40] வேந்தன் — ஈண்டு அரசனையும் சந்திரனையும் உணர்த்தும். இதனால் இந்நாடகம் நிறுவிய காலம் சரற்காலமென்பது புலனாம்.
[41] இச்சுலோகத்திற் கூறிய, சருவமங்களை உருத்திரன் என்னுஞ் சொற்களால், வீரருத்திர வேந்தன், எல்லா மங்கலங்களும் நிறைந்தவன் என்னும் பொருள் குறிப்பிற் புலனாகின்றது.
[42] இது, பிரதாபருத்திரனை.
[43] வைதாளிகர் — துயிலெடை பாடுவோர். இவரிலக்கணம் பாவப்பிரகாசத்தில் அந்தந்த யாமங்கட்கேற்ற இராகங்களானும் அவ்வக்காலத்திற்குரிய பாடல்களானும் தாளமின்றித் துரித கதியிற் பாடுவோன்; விதானம் — தாளமின்மை; அங்ஙனம் தாளமின்றிப் பாடுவோன், வைதாளிகன் ஆம்.
[44] நடந்தனவும் நடப்பனவுமாகிய கதைகளைத் தெரிவித்தற் பொருட்டு இடைப்பாத்திரத்தானிகழுஞ் சுத்தவிட்கம்பத்தை அமைக்கின்றார்; இங்கண், சுயம்பூதேவன் கனவில் உபதேசித்தருளியவரை நடந்த கதையாம்.
[45] இச்சொற்றடாற் கூறப்படும் பொருள் பீசம் ஆம்.
[46] இதனால் எல்லா அரசரும் இவ்வேந்தனது ஆணையைச் சிரமேற்கொள்ளுகின்றனர் என்பது கருத்து.
[47] “முன்னொரு காலத்தில், கணபதியென்னும் பெயர் படைத்த அரசனொருவன், காகதிகுலத்திலவதரித்தான்; அவ்வேந்தன், ஆண்மகவின்றிப் பெண்மகவே யெய்தப்பெற்றவன்; அவன் ஒருகாற் றெய்வச்செயலான் மேலுலகெய்த, அவனது மனைவியாகிய உருத்திரதேவியென்பாள் அற நெறி வழா அது பல ஆண்டுகள் செங்கோலோச்சிக் கிழமையெய்தினள்; எய்தவே, அவள் பிரதாபருத்திரன் என்னும் மகன்மகற்கு, இவ்வரசை முடி சூட்டினாள்” என்னுமிச் சரிதத்தைக் கருத்துட் கொண்டு இச்செய்யுள் கூறப்பட்டதாம்.
[48] நேரிலாக் கண்பார்வை — இது நுதற்கண் பார்வையையும், சினத்தாற் கொடிய பார்வையையும் உணர்த்தும்.
[49] பகைப்புரங்கள் — பகைவராகிய முப்புரங்களையும் பகையரசருடைய நகரங்களையும் உணர்த்தும்.
[50] பொருத்தம் — அவதார வேறுபாட்டினால் வடிவம் வேறுபட்டிருப்பினும் அவ்வுருத்திரன்பால் ஆண்மை வேறுபடாமை வியப்பன்று என்பதாம்.
[51] வியப்பு — கைலயங்கிரியிலிருக்கும் உருத்திரற்கு நஞ்சு கண்டத்திலும், காகதிகுல உருத்திரற்கு நஞ்சு கட்கத்திலுமாக அமைகின்றதென்னுமிஃதொன்றே மிக்க வியப்பென்பது கருத்து.