பிரதாபருத்திரீயம் – காப்பியவியல்

பிரதாபருத்திரீயம்

காப்பியவியல்

 

இனிக் காப்பியவிலக்கணங்[1] கூறப்படுகின்றது.

 

  1. குணம், அணியிவையமைந்து குற்ற நீங்கிய சொற்பொருள்கள் காப்பியம் ஆம்; அக்காப்பியம் சீரியலமையாச் சொற்குழுவடிவினதும், பாடல்வடிவினதும், இருவடிவினதுமாம் மூவகைத்தெனக் காப்பியமுணர்ந்தோர் கூறுவர்.

 

குற்றமற்றனவும்[2] குணம் அணியிவற்றுடன் கூடியனவுமாகிய சொற்பொருட்கள்              காப்பியம்” என்பது காப்பியத்தின் பொதுவிலக்கணமாம்.

 

  1. சொற்பொருட்கள், வடிவெனக்கூறப்பட்டுள்ளன. குறிப்பு நிறைவு உயிராம். அங்கண் உவமை முதலவணிகள் அணியலாதிய வணிகலன்போல்வனவாம்.

 

  1. அங்கண் சிலேடை முதலிய குணங்கள் வீரமாதிய போல நிற்பன. தன்னை[3] மேன்மைப்படுத்தும் இயல்புகள் சுபாவம் போல்வனவாம்.

 

  1. செயற்கையானுறும் வனப்பையெய்திய அமைப்புகள் நிலைமைபோல்வன. சொல்லடக்கு[4] முறையான் விளையும் ஓய்வெனுங் கிடக்கை படுக்கை போல்வதாம்.

 

  1. சுவைநுகர்ச்சிக்குரிய பேதங்களாகிய பாகங்கள் பக்குவம் போல அமைவன. காப்பியச்செல்வத்தின் இத்தகைய கருவிப்பொருள்கள், மக்கள் நலம்பெறற்குரிய கருவிகள்போல விளக்கமிக்கவாம்.

 

வாசகம், இலட்சகம், வியஞ்சகம் என சொற்கள் முத்திறத்தனவாம். வாச்சியம், இலட்சியம், வியங்கியம் எனப் பொருட்களும் முத்திறத்தனவாம். இதனை தாற்பரியார்த்தம் என்ப வடநூலார். கருத்துப்பொருளும் வியங்கியப் பொருளேயாம்; அது தனிப்பட்டதன்று.

 

அபிதை, இலக்கனை, வியஞ்சனை யெனச் சொல்லமைப்புகள் முத்திறத்தனவாம். கௌணவிருத்தியும் இலக்கனையின் ஒரு கூறேயாகும்; பொருளின் இயைபு[5] தடைப்படுதலை மூலமாகவுடைமையான்.

எங்ஙனமெனில்:-

அங்கிமாணவன் என்புழி நெருப்போடொப்பெய்திய மாணவன் என்னும் பொருளறிவு வேண்டற்பாலது. அங்ஙனமே கங்கையிற்சேரி யென்புழிக் கங்கைச்சார்புடைய தீரம் என்னும் பொருளறிவு வேண்டற்பாலது. இங்கட்கங்கையின் சார்பை உபலக்கணம்மாக்கொள்வேமெனின்[6], சேரிக்கணெய்துந்தூய்மை முதலாயின பெறாவாம். ஆகலின் இலக்கனை, ஒப்புநிமித்தமும் தொடர்புநிமித்தமும் என இரு திறத்ததாம். தொடர்பு நிமித்த இலக்கனை விட்ட இலக்கனை விடாத இலக்கனையென இருவகைத்தாம். ஒப்புநிமித்த இலக்கனை சாரோப இலக்கனை[7] சாத்யவசாய இலக்கனையென[8] இருதிறத்து. இங்ஙனம் இலக்கனை நான்கு திறத்தாம். அமைவை[9]யெய்தியமையாற் சுவைநிலையைத் தெரிவிக்கும் அமைப்புக்கள் கைசிகி, ஆரபடி, சாத்துவதீ, பாரதீ யென்னும் நான்குமாம். அங்ஙனமே தசரூபகத்திற் கூறப்பட்டுள்ளது.

 

“kaisikiகைசிகி, ஆரபடி, சாத்வதி, பாரதி யென்னும் இந்நான்கு அமைப்புக்களும் சுவைநிலையைத் தெரிவிப்பனவென்றுணரற்பாலனவாம்”

 

இதனாற் சொற்பொருளமைதியும் சுவையை வெளிப்படுத்துமென்பது புலனாம். சுவைக்குத் தகாத சொற்புணர்த்தல் குற்றமெனக்கூறப்பட்டது. வைதர்ப்பீ முதலியன இயல்பினது வேறுபாடுகளேயன்றி அமைப்பிற்குட்பட்டனவாகா.

 

அவற்றுள் சங்கேதப்[10]பொருளைப்பற்றிய சொற்செயல் அபிதையென்பதாம்; அவ்வபிதை உரூடி[11] யௌகிகம்[12] என இருதிறத்தவாம்.

உரூடி யெவ்வாறெனில்:-

 

  1. மக்களினது விளங்குந் தவமேம்பாடுகளானும் நிலமகளாகுந் தலைவியினது நலமிக்க வொழுக்கங்களானும் இவ்வுலகினது நிறைவுறுபாக்கியங்களானும் வீரருத்திரவேந்தன் அரசியலைத் தரிக்கின்றான்.

 

இங்கண் எல்லாச் சொற்களும் இடுகுறிச்சொற்களாம்.

 

யௌகிகம் எவ்வாறெனில்:

 

  1. வீரருத்திரன் என்னும் அரசன் எல்லாமக்களையும் இன்புறுத்துங்கால் நிலமகள், வசுமதி[13] இரத்தினகருப்பை[14] நிலை[15] யென்னுமிப்பெயர்களைக் காரணப் பெயராகக் கொண்டனள்.

 

இங்கண் வசுமதி இரத்தினகருப்பை என்னும் இவை முதலிய சொற்கள் பகுபதங்களாம்.

 

உரிய பொருள் தடைப்படுதலான் அவ்வுரியபொருளைப்பற்றியதில் ஆரோபிக்கப்படுஞ் சொற்செயல் இலக்கணையாம். அவற்றுள் விட்ட இலக்கணை யெவ்வாறெனில்:-

 

  1. வென்றிசேர் காகதிவேந்தனது படகவொலியைக் கேட்டுப் பகைநாடுகள் எல்லாப்புறத்தும் மிக்கக்கதறுகின்றன.

இங்கண் நாடுகள் கதறுகின்றன என்னும் உரிய பொருட்குப் பொருந்தாமை காண்க; அறிவில் பொருட்கு அலறுந்தன்மையின்மையான்.

விடாத இலக்கணை யெவ்வாறெனில்:-

  1. தலைவனாகிய காகதிவேந்தனது பாதபடியை மௌலிகள், விளக்கமுறு மரதனக் கதிர்க்கற்றைகளான் எப்பொழுதும் அணிப்படுத்துகின்றன.

இங்கண் மௌலிகள் என்னுஞ் சொல் அணிப்படுத்தற்பொருட்டு அம்மௌலிகளைத் தாங்கிய அரசர்களைக் குறிக்கின்றது.

சாரோப இலக்கணை யெவ்வாறெனில்:-

  1. மந்தரகிரியின் அடிக்கணுறும்பச்சைக் கற்பாறை யுராய்தலான் கரியவுருவாகிய எது திங்களஞ் செல்வன்பாற் றெரிகின்றதோ! அதனை மான் எனக் கூறுகின்றனர். இங்கண் யானோ, வீரருத்திரனது திருப்புகழாற் றோல்வியெய்திய அத்திங்கள், அவ்வரசனது கொடியாகிய வராகத்தை[16] மார்பகத்திற்றாங்கி யெழுதருகின்றான் எனக் கருதுகின்றேன்.

இங்கண் மதிக்களங்கமாகிய குரங்கத்தில் வராகமாந்தன்மை யாரோபிக்கப்படுகின்றது.

 

உவமேயத்தையும் உவமானத்தையுங்கூறி அவற்றின் வேறுபாடின்மை உய்த்துணரவைத்தல்[17] ஆரோபம் ஆம்.

உவமேயத்தைக் கூறாது உவமானத்தோடு வேறுபாடின்மையை உய்த்துணரவைத்தல் அத்யவசாயம்[18] ஆம்.

சாத்யவசாயவிலக்கணை யெவ்வாறெனில்:-

  1. காகதீய குலக்கடலின் இத்திங்களஞ்செல்வன் தோன்றினான். எழுதருமவன் குவலய[19]மலர்ச்சியைச் செய்தனன்.

 

இங்கண் வீரருத்திரன் மதியமாக அத்தியவசாயஞ் செய்யப்பட்டான். காகதீய குலக்கடல் என்புழியாரோபம் ஆம்.

இனி வியஞ்சனாவிருத்தி.

சொற்களினது பொருள்கள் பொருந்தி நிற்குங்கால், வாக்கியப்பொருளை யணிப்படுத்தற்பொருட்டு வேறுபட்ட பொருளைப்பற்றிய சொற்செயல் வியஞ்சனாவிருத்தியாம்.

அந்த வியஞ்சனாவிருத்தி சொல்லாற்றன்மூலம், பொருளாற்றன்மூலம், சொற்பொருளாற்றன்மூலம் என மூவகைத்தாம்.

அவற்றுள்

சொல்லாற்றன்மூலம் எவ்வாறெனில்:

  1. காகதிவேந்தனது வாகினிகள் எப்புறமும் சுழன்று பகைப்படைக்கடலை எழுதருகபந்தங்களான் நிரப்புகின்றன.

இங்கண் வாகினி கபந்தம் என்னுஞ் சொற்கள், இடம் பொருள் முதலியவற்றால் படை உடற்குறை யென்னும் பொருளவாயினும் சொல்லாற்றன் மூலமாக நதி, நீர் என்னும் பொருளறிவு நிகழ்தலான் அது வியஞ்சனா விருத்தியாம்.

இடம்பற்றிய பொருளின் முடிந்த அபிதாவிருத்திக்கு அவ்விடத்தைப்பற்றாத பொருளைத் தெரிவித்தற்கு ஆற்றல் இன்று. வாக்கியம் பொருளழகை எய்தற்பொருட்டுக் கூறுவார்க்கு இடத்தைப் பற்றாத பொருளினும் விருப்பமுண்மையானும் சொல்லையன்றிப் பிறவிடத்து அஃதறியப்படாமையானும் சொற்கே வியஞ்சனை யென்னும் பெயரிய பிறிதொரு செயல் கற்பிக்கப்படுகின்றது. இங்கண் இலக்கணையும் பொருந்தாது; பொருண்முடிபு தடைப்படாமையான். இங்கண் இரு செயல்களாற் பொருளைத் தெரிவிக்குங்கால் வாக்கிய பேதமும் இன்று; இலௌகிக வாக்கியங்கள் ஆக்கியோன் கருத்திற்கதீனமாகலான்.

பொருளாற்றன்மூல வியஞ்சனாவிருத்தி யெவ்வாறெனில்:-

  1. அரசர்கள், காகதிவேந்தற்கும் நிலமகட்கும் நிகழ்ந்த கைப்பிடி மங்கலத்தைச் செவியுற்றுக் கவிழ்த்த முகத்தினராய் பெருவிறலாற் பாதபடியைக் கீறினர்.

இங்கண் அரசர்கள் துயரெய்தினர் என்பது பொருளாற்றலாற் குறிப்பிடப்படுகின்றது.

பொருளாற்றன் மூலவியஞ்சனாவிருத்தியில் அனுமானசங்கை நிகழுமெனின் வியங்கியம்[20] வியஞ்சகம் இவற்றிற்கு உடனிகழ்ச்சியின்மையானும் கவிழ்ந்த[21] முகத்தினராந்தன்மையாதிய காரியத்திற்குப் பல காரணங்களுண்மையானும் அச்சங்கை நிகழாதென்பதாம். நியத காரணத்[22]தோற்றம் கூறும் விருப்பத்தாற்[23] கவரப்பட்ட சொற்களானேயாம். மேலும் ஒரோவொரு வியஞ்சகத்தான் நிகழும் அவ்வச்செயலறிவு கூறும் விருப்பிற்கேற்ப பல குறிப்புப் பொருட்களின்[24] றோற்றமுடையவாகலின் அனுமானமுறைக்கு முரண்பட்டதாம். அபிதாவிருத்தியும் இன்று. சங்கேதப்பொருளே அவ்வபிதாவிருத்திக்குப் பொருந்தியதாம். என்னும் இவ்வளவும் அறியற்பாலன.

சொற்பொருளாற்றன் மூலம் எவ்வாறெனில்:-

  1. பகைப்புரங்களை[25] வென்றவனும் வடிவிற் சருவமங்களம்[26] பொருந்தியவனும் இராசமௌளியுமாகிய[27] இவ்வீரருத்திரன், புவிக்கிறைவனாய் விளங்குகின்றான்.

 

 

இங்கண் பகைப்புரங்களை வென்றவன் என்பது பொருளாற்றன் மூலமும், சருவமங்களம் பொருந்தியவன் இராசமௌளி யென்பன சொல்லாற்றன் மூலமும் என சொற்பொருள் ஆற்றன் மூலம் ஆம். இங்கட் பிரதாபருத்திரற்கும் சங்கரற்கும் உவமையணி குறிப்பிடப்படுகின்றது.

 

இனிக் கைசிகி முதலியவற்றின் இலக்கணம் விளக்கப்படுகின்றது.

 

  1. இனிமைமிக்க சொற்களாற் பொருளமைப்பைக் கைசிகியென்ப. வன்மைமிகாச்சொற்களாற் பொருளமைப்பை ஆரபபீவிருத்தியென்ப.

 

  1. சிறிதளவு மெல்லெழுத்துக்களாற் பொருளமைப்பை, பாரதீவிருத்தியென்ப. சிறிதளவு வல்லெழுத்துக்களாற் பொருளமைப்பை, சாத்துவதீவிருத்தியென்ப.

 

அவற்றுள்

 

  1. உவகை அழுகையென்னுமிருசுவைகளும் இனிமை மிக்கவாம். வெகுளியும் இளிவரலும் வன்மைமிக்க சுவைகளாம்.

 

  1. நகை சமநிலை மருட்கை யென்னுமிவை அற்ப இனிமையவாம். பெருமிதம் அச்சமென்னுமிச்சுவைகள் அற்பவன்மையவாம்.

உவகை அழுகையென்னுமிச்சுவைகளை இனிமைமிக்க சொற்றொடரான் வன்னித்தல் கைசிகீவிருத்தியாம். வெகுளி இளிவரலிவற்றை வன்மைமிக்க சொற்றொடரான் வன்னித்தல் ஆரபபீ விருத்தியாம். இனிமைமிகா நகை சமநிலை மருட்கை யென்னுமிவற்றை அற்பமென்றொடரான் வன்னித்தல் பாரதீவிருத்தியாம். வன்மைமிகாப் பெருமிதம் அச்சம் இவற்றை வன்மைமிகாச்சொற்றொடரான் வன்னித்தல் சாத்துவதீவிருத்தியாம்.

கைசிகீவிருத்தி யெங்ஙனமெனில்:-

  1. காமனது விலாசங்களை வென்றவனும்[28] காகதிமரபிற்கு மதியமுமாகிய வேந்தனை யங்கனைகள், இமைப்பறக்காணவிரும்புங்கால், அவரது கடைவிழிகள் வானத்திற் குவளையலங்கலாற் கரிய தோரண வனப்பைச் செய்தன.

 

ஆரபபீவிருத்தி யெவ்வாறெனில்:-

 

  1. “சலமார்த்திகண்டன்”[29] என்னும் பெயரிய அரசனது வெகுளி நெருப்பு வாட்படையடியாலறுக்கப்பட்ட பகைமுடியின் வழிந்தொழுகு மரத்தச்சுடர்களானும், வன்படையுராய்தலான் மிகுந்தெழு தீப்பொறிக்குவியலானும், உதிரந்தோய்ந்த தசை என்புக்கண்டம் இவையாகும் எரிதரும் பெருந்தணல்களானும், மிக்கக் கொடுமையாக அமைகின்றது.

 

பாரதீவிருத்தியெவ்வாறெனில்:-

 

  1. மாண்புறுமுயர்வும்[30] மாட்சிமிக்க இக்காம்பீரியமும் விறல் புகழ் இவற்றினொழுங்கும் வாகுவின் கீர்த்தியும் கூறற்கரியவாய் வேறுபட்டு விளங்குகின்றனவாகலின், வீரருத்திரனைச் சார்ந்தவெல்லாம் புதியனவென்றே அறிகின்றேன். அவ்வேந்தனைப் படைத்தலிற் கருவிப்பொருள்கள், எத்துணையவாக எத்தகையவாக யாண்டே நான்முகனாலீட்டப்பட்டில.

 

சாத்துவதீவிருத்தியெவ்வாறெனில்:-

  1. பாரெலாம்[31] பரவு விறலுடை வீரருத்திரனது போர்ச்செலவின் முழங்குமுழவொலியை, பகையரசர் நெடுந்தூரத்திருந்து செவியுற்று நிறைவுறுங்காது நோயாற் கலக்கமெய்தியராய் மலைகளில் ஏறி அடர்ந்த அடவியிற் புக்கோடுங்கால், அங்கண் முண்மரங்கள் கூரிய முட்களால் அவரது கேசங்களைப் பற்றியிழுக்க தம்பகைவேந்தன் என்னும் எண்ணத்தால் “விடவேண்டும்; காத்தருளவேண்டும்” என்று அம்மரங்களை யிரந்து வேண்டுகின்றனர்.

 

  1. எல்லாச்சுவைகட்கும் பொதுவாகிய இடையாரபபீ இடைக்கைசிகி யென்னும்மிவ்விரண்டு விருத்திகளும் கூறப்பட்டுள்ளன.

 

23½ இனிய பொருளமைப்பிலும் வன்மை மிகாச் சொற்கட்டுடையது இடைக்கைசிகியாம்.

 

இனிமைமிக்க உவகை அழுகையென்னு மிச்சுவைகட்கு அற்பவன் சொற்கட்டுடைமை குற்றமாகாதென்பதாம். ஆயின் மிக்கவன் சொற்புணர்த்தல் விரும்பற்பாலதன்று; முரண்படுமெழுத்துக்களாற்[32] குற்றம் நிகழுமாகலின்.

 

  1. வன்பொருளமைப்பிலும் மென்மைமிகாச் சொற்கட்டுடையது, இடையாரபபீயென்பதாம்.

 

வன்மைமிக்க வெகுளி இளிவரல் என்னுமிச்சுவைகட்கு, அற்ப இன்சொற்கட்டுடைமை குற்றமாகாதென்பதாம்; இனிமைமிக்க சொற்கட்டுடைமையோ முரண்பட்டதாம்.

 

இடைக்கைசிகி யெவ்வாறெனில்:-

 

 

 

  1. காகதிவேந்தனே! தம்பகைவருடைய[33] மனைவியர் “மகோற்சவம் அணித்து நிகழவிருக்குங்கால் அவ்விழாவை விடுத்து இவணிருந்து[34] அயல்நாட்டை ஏன் எய்தல் வேண்டும்? நம்மைப் பிரித்துவைக்க எத்தீயூழ் விரும்புகின்றது?[35] அக்கொடிய செயலை யிகழ்தல் வேண்டும்” என்றிங்ஙனம் தங்காதலரது வழிச்செலவைக் கனவிற்றடைப்படுத்தியராய்ப் பின்னர் விழிப்பெய்தி மயக்கமெய்துகின்றனர்.[36]

 

இடையாரபபீ எவ்வாறெனில்:-

 

  1. தெலுங்குதேயத்தரசனது போர்வீரர்கள், போர்க்களத்தைச் சிதைவுற்ற மாமிசம் எலும்பு இவற்றையுடையதும் ஓடுகின்ற அரத்த நதியுடையதும் ஊனீராற் சேறுடையதுமாகச் செய்கின்றனர்.

 

இங்ஙனம் பிற சுவைகட்கும் எடுத்துக்காட்டுக்கள் உணரற்பாலன.

 

வைதர்ப்பீ முதலியவியல்புக்கள் பொருட் சிறப்பைப் பற்றாது[37] சொற்றொடரினது வன்மைமென்மைகளையே பற்றி நிற்றலான் கைசிகி முதலிய விருத்திகளின் வேறுபட்டனவாம்.

 

சொற்றொடரினது மிகுமென்மையாவது:- இயைபற்ற மெல்லெழுத்துக்களானாகிய சொற்கட்டுடைமையாம்.

 

மிகுவன்மையாவது:- வல்லெழுத்துக்களானாகிய கடுஞ்சொற்கட்டுடைமையாம்.

 

மெல்லெழுத்துக்கள் இயைந்திருக்குமேல், அற்பமென்மையுடைமையாம்.

 

வல்லெழுத்துக்கள் கடுஞ்சொற்கட்டிலவாயின் அற்பவன்மையுடைமையாம்.

 

இனி இயல்புக்களின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்.

 

இயல்பென்பது குணமியைந்த சொற்புணர்ச்சியாம்; அவ்வியல்பு, வைதர்ப்பீ கௌபீ பாஞ்சாலீயென மூவகைத்தாம்.

 

  1. வன்றொடர் கடுஞ்சொற்கள் மிக நெடுந்தொகை யென்னுமிவையற்ற இயல்பை வைதர்ப்பீ என்ப. எவ்வாறெனில்:-

 

  1. காகதிவேந்தனது நற்குணங்களை முடியணியாக்கொண்ட மாதிர மகளிர், அவ்வேந்தனது மிகு புகழாஞ் சந்தனத்தைப் பூசிக்கொள்ளுகின்றனர்.

 

  1. வள்ளண்மையான் உலகனைத்தையும் மகிழ்விப்பவனும் காகதீய மரபிற்கு மதியமுமாகிய இவ்வேந்தன் வள்ளலாக விளங்குங்கால், இவ்வந்தணர்க்குழு கற்பகத் தருவைக் கருத்திற் கோடல் காமதேனுவைக் குறித்துப்பேசுதல் ஆகிய இச்செயலில் விருப்பற்றிருந்தனர்.

 

நெடுந்தொகை கடுஞ்சொற்கள் இவற்றுடனமைந்தினியதாகு மியல்பைக் கௌபீயென்ப. எவ்வாறெனில்:-

 

  1. வலிமிக்க புயதண்டத்தாற் பகவைரைத் துணித்த தெலுங்குதேயத்தரசன், பருமைமிக்க புவிப்பொறையைத் தாங்குகின்றான்.

 

  1. தெலுங்குதேயத்தரசனது[38] கடும்போர்முகம் கைகளான் வீசிய வாட்படைகளாலறுக்கப்பட்ட பகைவரது சிரங்களில் இராகுவென்னும் மயக்கத்தான் விரைந்தோடுங் கதிரவற்கு அபயமளித்தலிற் சிறந்த தானைப்பூழியை உடையதாக அமைந்தது. அங்கண் தெய்வமகளிரது முகமதியங்கள், மதயானைகளினது மத்தகங்கள் பிளக்கப்பட்டு அவற்றிற் சிதறிய முத்தக்குவியலாகும் உடுகணங்களாற் சூழப்பட்டனவாய் விளங்கின.

 

வைதர்ப்பீ கௌபீ யென்னுமிவ்விரண்டியல்புக்களும் ஒருசேர அமையுமியல்பைப் பாஞ்சாலீயென்ப.

 

எவ்வாறெனில்;-

 

  1. வென்றிசேர் காகதிவீரருத்திர வேந்தனது போர்ச்செலவான் விளைந்த நிலப்பூழித்திரள் வானத்தில் மிக்க நிலமயக்கைச் செய்யுங்கால் ஆகாயகங்கை, இடம்படுதடங்களையுடைய புவிக்கங்கை ஆயிற்று. மிக்க மறைந்தோடும்[39] கௌதம நதி பாதாள கங்கையாக அமைகின்றது.

 

  1. சலமார்த்திகண்டமென்னும் பெயரிய வேந்தனே! உமது வாட்படையாகும் படநாகம், பகைவரது உயிர்க்காற்றான் நாளும் பெருமகிழ்ச்சியெய்துகின்ற தென்னுமிது சாலப்பொருத்தமே. ஆயினும், அந்நாகம் பகைவரது புகழாகும் பாலினைப் பருகியதனால் வெண்ணிறமுடையதும் மூவுலகிலும் நிறைந்ததுமாகிய உமது மிகுபுகழ்த்திருவாம் அமுதத்தை வளர்க்கின்றதென்னுமிது மிக்க வியப்பேயாம்[40].

 

இனிக்கிடக்கை

 

சொற்கள் ஒன்றற்கொன்று சிறந்த நட்புடையவாய் அமைதல் கிடக்கையென்று கூறப்படும்.

 

எவ்வாறெனில்:-

 

  1. காகதிமரபை யணிப்படுத்துமணியும் வரையாக் கொடைப்புகழாற் கற்பதரு மேன்மையை கடந்தவனும் ஆழ்தரு வீரமுடையவனுமாகிய இவ்வள்ளலது புகழ் சரற்கால நிலவொளியைத் தாங்கி ஏதிலேந்திழையாரது கதுப்பில் ஆழநிகழும் வெண்மைச்சும்மையைப்[41] பெரிதுந் தாங்கி நிற்கின்றது.

 

இங்கண் தொடரமைப்பு சொன்மாற்றத்தைப் பொறாமையான் சொற்பொருத்தங்கட்கேற்ற கிடைக்கையாம்.

 

இனி திராட்சை முதலிய பாகங்கள்.

 

  1. பொருளாழமுடைமை பாகமெனப்படும். அம்மனக்கினியபாகம், வெளிப்படையான உட்கருத்தையுடைய திராட்சைப்பாகம் நாரிகேளபாகம் என்னும் இருதிறத்து.

 

முறையே இலக்கணமும் எடுத்துக்காட்டும்.

 

உள்ளும்புறமும் சுவைவிளங்குமது திராட்சைப்பாகமென்று கூறப்படும்.

 

எவ்வாறெனில்:-

 

  1. வாமலோசனை காமத்தாற் சிறிது விரிந்தனவும் புன்முறுவலான் இனிய நறுமணங்கமழ்வனவும் அற்பநாண் மடியுடையனவும் அன்பு நீரலை நிரம்பினவும் பலவழிப்பட்டனவும்[42] ஆயிரங்காமன்மாரைப் படைப்பனவுமாகிய கடைவிழிகளை, வீரருத்திர வேந்தனைச் சுற்றிலும் இறைக்கின்றாள்.

உண்மறைந்த சுவையெழுச்சியினையுடைய அது

நாரிகேளபாகம் ஆம்.

 

  1. காமலீலையின்[43] விலாசங்கட்கு முன்னரங்கமாக எழுச்சிதருமியௌவனப் பருவத்தையெய்தி உருக்கொடு காமக்கிளர்ச்சியாம் நடனவித்தார வனப்பை நாணத்திரையுள் நடிப்பவளும் துடிக்கும் புருவங்களையுடையளுமாகிய இத்தலைவியினது சொல்லொணாச்சிங்கார நடனமுறை, காகதி வேந்தன்பாலமைந்த குறிப்பின்றொடர்பான் விளக்கமிக்கவாய் மிளர்கின்றது; பாங்கியரே! இதனைப் பார்க்க.

 

இங்கட்பொருள், விரைவிற்புலனாகவில்லை.

 

இங்ஙனம் விடயம் அணியிவற்றின் றோற்றத்திலும் இத்தகைய பாகங்கள் அறியற்பாலன.

 

தேன்பாகம் பாற்பாகம் முதலிய பாகவேறுபாடுகளும்[44] நிகழ்ச்சிக்கேற்ப உய்த்துணரற்பாலன.

 

இனிக்காப்பியப்பிரிவுகள்

 

குறிப்புப் பொருட்டுச் சிறப்புண்மை சிறப்பின்மை விளக்கமின்மையென்னுமிவற்றாற் காப்பியம் முத்திறத்து.

 

குறிப்புப் பொருட்குச் சிறப்புண்மையில்[45] தலைக்காப்பியம் ஆம். அக்காப்பியம் துவனியென வழங்கப்படும். சிறப்பின்மையில் இடைக்காப்பியம் ஆம். அதைச் சிறப்பின்றியமையு குறிப்பினையுடையதெனக் கூறுப. குறிப்புப்பொருட்கு விளக்கமின்மையில் கடைக்காப்பியம் ஆம். அதைச் சித்திரம் என்ப.

 

துவனி யெவ்வாறெனில்:-

 

  1. தலைவ! இப்பொழுது குலவரைகளை ஏன் குறுவரைகளாகச் செய்கின்றீர்? ஆழிகளை யேன் ஆழ்மிலவாகச் செய்கின்றீர்? திசைத்தலைவரை யேன் வறியராகச் செய்கின்றீர்? என்றிங்ஙனம் பாங்குறைவோர் அடிதொறும் கூறும் வார்த்தைகளனைத்தையும் புறக்கணித்த பதுமத்தோன், திருவளர் வீரருத்திரவேந்தனை அறநோக்கிக் குணநிலைக்களனாய்ப்படைத்தனர்.

 

இங்கண் பிரதாபருத்திரற்குக் குலவரைகளைக் கடந்த உயர்வும், ஆழ்கடலைக் கடந்த ஆழமும், மாதிரமன்னரை மீறிய தலைமையும், குறிப்பிடப்படுகின்றன. அங்ஙனம் காகதிவேந்தனது படைப்பின் பெருமை, குலவரை கடல் திசைக்காவலர் இவரது படைப்பு முயற்சியையும் கடந்து யாவற்றினும் வேறுபட்டதாம் என்பதும் குறிப்பிடப்படுகின்றது.

 

சிறப்பின்றியமையுங் குறிப்பையுடையது எவ்வாறெனில்:-

 

  1. புவியைப்புரக்கும் வீரருத்திரநிருபன், சிறப்பெய்திப்பரவும் வீரச்செல்வங்களாற் றிசைவெளியாவையுந் தன்வயமாக்கி அரியாதனத் தமருங்கால், கொலுக்கூடத்தையெய்திய வேந்தர் இக்காகதிவேந்தனது பார்வை அருள் நிறைவுறும் வண்ணம் அவ்வச் செயல்களை அவ்வண்ணம் வெளியிட்டனர்.

 

இங்கண் பட்டாபிஷேக மகோற்சவத்தையெய்திய பிரதாபருத்திரப் பேரரசரது முன்னிலையில் புகலிரந்து நிற்கும் அரசரது அத்தகைய இரங்கற்பனுவல், மீண்டும் மீண்டும் வணக்கம் முதலியன இவற்றின் குறிப்பு, அவ்வச்செயல்களை அவ்வண்ணம் வெளியிட்டனர் என்னுமிச் சொற்பொருளைக் கடவாதிருத்தலான் இது சிறப்பின்றியமையுங் குறிப்பையுடையதாம்.

 

சித்திரம், சொற்சித்திரம் பொருட்சித்திரம் சொற்பொருட்சித்திரம் என மூவகைத்து.

 

அவற்றுள் சொற்சித்திரம் எவ்வாறெனில்:-

 

  1. தலைவனியல், 64ஆம் சுலோகத்தைக் காண்க.

 

பொருட்சித்திரம் எவ்வாறெனில்:-

 

  1. தலைவனியல், 65ஆம் சுலோகத்தைக் காண்க.

 

சொற்பொருட்சித்திரம் எவ்வாறெனில்:-

 

  1. கல்விக்கடலும் உலகிற்கொருமங்கலமும் பகைநலம் வென்றவனும் புரத்தலில் உறக்கமிலனும் கொற்றக்குறியைக் கொண்டவனும் குணநிறைவுற்றவனுமாகிய பிரதாபருத்திரன்பால் புவிமகள் இல்லக்கிழத்தியென்ன இன்புறுகின்றாள்.

 

இந்தச்சுலோகத்தில் வழியெதுகை உவமை இவற்றாற் சித்திரம் ஆம்.

 

இனி ஒலிப்பொருட்பிரிவுகள் விளக்கப்படுகின்றன.

 

இலக்கணை மூலமாகிய பொருணோக்கா ஒலியும், அபிதைமூலமாகிய பிறிதொன்றை[46] நோக்கும் பொருளின் கட்டோன்று மொலியுமென முதலில் ஒலிப்பொருள் இருதிறத்து.

 

வேற்றுப்பொருளைப்[47] பற்றியதும் பொருளறவே யொழிந்ததுமென[48] இருதிறத்தாய பொருணோக்காஒலி சொற்றொடரையெய்தியதும் சொல்லையெய்தியதும் எனத் தனித்தனி யிறுதிறத்தாய் நால்வகைத்து.

 

piRithonRaiபிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் டோன்றுமொலி, அறியத்தகு[49] முறையொலியும் அறியத்தகாமுறையொலியுமென இருவகைத்து.

 

அவற்றுள், அறியத்தகுமுறையொலி, சொல்லாற்றன்மூலம் பொருளாற்றன்மூலம் சொற்பொருளாற்றன் மூலமென மூவகைத்து. அவற்றுள் பொருள்வடிவானும் அணிவடிவானுமிரு திறத்த சொல்லாற்றன்மூலம், சொற்றொடரையெய்தியதும், சொல்லையெய்தியதுமென நால்வகைத்தாம்.

 

பொருளாற்றன்மூலமாகிய அறியத்தகுமுறை யொலி, பொருட்கு[50] இயல்பானிகழுந் தன்மையுண்மையானும், கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறுந்தன்மையுண்மையானும், கவிகளாற் பிணைக்கப்பட்ட சொற்களாற் பெறுந்தன்மையுண்மையானும் முத்திறத்து; அம்முத்திறத்தவொலிகள், பொருள்வடிவானும் அணிவடிவானும் தனித்தனியிருதிறத்தவாய் அறுதிறத்து; அவ்வறுதிறத்த வொலிகள், குறிக்கப்படுந்தன்மையானும் குறிக்குந்தன்மையானும் தனித்தனி யிருதிறத்தவாய் பன்னிருதிறத்தவாம். அப்பன்னிருவகைத்த ஒலி, சந்தர்ப்பத்தையெய்தலானும் சொற்றொடரையெய்தலானும் சொல்லையெய்தலானும் தனித்தனி முத்திறத்தவாய் பொருளாற்றன் மூலமாகிய ஒலிப்பொருள், முப்பத்தாறு பேதங்களையெய்திய தொடரொலிப்[51] பொருள்களாம்.

 

சொற்பொருளாற்றன்மூலம் சொற்றொடரையெய்து மாற்றான் ஒருபடித்தே; இங்ஙனம் அறியத்தகுமுறையொலிப்பொருட்கு நாற்பத்தொரு வேறுபாடுகள்[52] உள்ளன.

 

அறியத்தகாமுறையொலி, சுவைமுதலவொலிப்பொருளாம். அது சந்தர்ப்பம் சொற்றொடர் சொல் சொல்லினொருகூறு அமைப்பு எழுத்து என்னுமிவற்றை யெய்து மாற்றான் அறுவகைத்து.

 

இங்ஙனம் பிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் புலனாகுமொலிப்பொருட்கு நாற்பத்தேழு வேறுபாடுகள் உள்ளன. இவற்றைப் பொருணோக்காவொலிப்பொருளின் வேறுபாடுகள் நான்குடன் கூட்ட ஒலிப்பொருட்கு முதலில் ஐம்பத்தொரு வேறுபாடுகள் கலப்பிலவாய் அமைவனவாம்.

 

அவ்வேறுபாடுகட்கு தனித்தனி ஒவ்வொன்றற்கு ஒவ்வொன்றோடு இயைபு நிகழ்ந்துழி முதல் வேறுபாட்டிற்கு ஐம்பத்தொரு வேறுபாடுகள் நிகழும். இரண்டாவதற்கு ஐம்பது வேறுபாடுகள்; மூன்றாவதற்கு நாற்பத்தொன்பது வேறுபாடுகள்; இம்முறை பற்றி மேன்மேலவற்றிற்கு ஒவ்வொரு வேறுபாடு நீங்கியவழி ஆயிரத்து முந்நூற்றிருபத்தாறு கலப்பு வேறுபாடுகள் நிகழ்வனவாம். பொருள்நோக்காவொலிப்பொருள்கள் பிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் புலனாகுமொலிப் பொருள்களோடியைந்துழிநிகழும் வேறுபாடுகள், பிறிதொன்றை நோக்கும் பொருளின்கட் புலனாகுமொலிப்பொருள்கள் பொருணோக்காவொலிப்பொருளோடியைந்துழிநிகழும் வேறுபாடுகளின் கண்ணவாய் உட்பட்டடங்குமாகலின் அவற்றின் வேறுபடா. இம்முறையேபற்றி பொருளொலிக்கு அணிஒலியினியைபு பற்றி நிகழும் வேறுபாடும், அணியொலிக்கு பொருளொலியினதியைபின் தனிப்பட்டதன்று. என்னுமிதனான் கீழ்க்கழது மேன்மேல தோடியைந்துழி ஒவ்வொறு வேறுபாட்டின் குறைவு அறியற்பாலது. அத்தகைய கலப்பொலியை மூவகைத்தாகிய[53] கலவையோடும் ஒருபடித்தாகிய சேர்வையோடும்[54] மீண்டும் தனித்தனி நால்வகைத்தாய்ப் புணர்த்தலில் ஐயாயிரத்து முன்னூற்றுநான்கு வேறுபாடுகள் நிகழ்வனவாம்.

 

“சுத்தவேறுபாடுகள் மதிக்கணைகளாம்.[55] கலப்பு வேறுபாடுகள் பருவங்கண் அங்கிமதியாம்.[56] சேர்வை கலவை யென்னுமிவற்றின் புணர்ச்சியான் நிகழ்வன கடல்வான் அங்கிவானியாம்”.[57]

 

அவற்றுள் கலப்பற்ற ஐம்பத்தொரு வேறுபாடுகளின் பெயர்கள் இங்கட் கூறப்படுகின்றன.

 

  • சொல்லையெய்தி வேற்றுப்பொருளைப்பற்றிய பொருணோக்காவொலிப்பொருள் (க)
  • சொற்றொடரையெய்தி வேற்றுப்பொருளைப் பற்றிய பொருணோக்காவொலிப்பொருள் (உ)
  • சொல்லையெய்தி யறவே ஒழிந்த பொருணோக்காவொலிப்பொருள் (ங)
  • சொற்றொடரையெய்தியறவே ஒழிந்த பொருணோக்காவொலிப்பொருள் (ச)
  • சொல்லையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறைப்பொருளொலி (ரு)
  • சொல்லையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறையணியொலி (சா)
  • சொற்றொடரையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறைப் பொருளொலி (எ)
  • சொற்றொடரையெய்திச் சொல்லாற்றலடியாக அறியத்தகுமுறையணிஒலி (அ)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (கூ)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (க0)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (கக)
  • சொல்லையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (கஉ)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (கங)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (கச)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (கரு)
  • சொற்றொடரையெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (கசா)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (கஎ)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (கஅ)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ககூ)
  • இடனெய்தி யியல்பாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (உ0)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (உக)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (உஉ)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (உங)
  • சொல்லையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (உச)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (உரு)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (உசா)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (உஎ)
  • சொற்றொடரையெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் அணியொலி (உஅ)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (உகூ)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற்பெறும் பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (ங0)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற்பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ஙக)
  • இடனெய்திக் கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (ஙஉ)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெரும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (ஙங)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளான் அணியொலி (ஙச)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ஙரு)
  • சொல்லையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (ஙசா)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (ஙஎ)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (ஙஅ)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (ஙகூ)
  • சொற்றொடரையெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும் பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (ச0)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய பொருளாற் பொருளொலி (சக)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய பொருளால் அணியொலி (சஉ)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய அணியால் அணியொலி (சங)
  • இடனெய்திக் கவிபிணைத்த சொல்லாற் பெறும்பொருளாற்றலடியாகிய அணியாற் பொருளொலி (சச)
  • இடனெய்தி அறியத்தகாமுறைக்குறிப்பாகிய சுவையாதியவொலி (சரு)
  • சொற்றொடரையெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (சசா)
  • சொல்லையெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (சஎ)
  • சொல்லின் ஒரு கூறெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (சஅ)
  • அமைப்பையெய்தி அறியத்தகா முறைக்குறிப்பாகிய சுவையாதியவொலி (சகூ)
  • எழுத்தையெய்தி அறியத்தகாமுறைக் குறிப்பாகிய சுவையாதியவொலி (ரு0)
  • சொற்றொடரையெய்தி சொற்பொருளாற்றலடியாகிய சுவையாதியவொலி (ருக)

அவற்றுள் சிலவற்றை யெடுத்துக்காட்டுவோம். வேற்றுப்பொருளை யெய்திய பொருணோக்கா ஒலிப்பொருள் எவ்வாறெனில்.

  1. எமது சிரங்களாகிய நீங்கள் உயர்வை ஏன் விரும்புகின்றீர்? என்று பிரதாபருத்திரனது பகையரசர்கள் அவ்வேந்தனை வணங்கினர்.

 

இங்கண் எமது[58] என்னுஞ் சொல் “பல்லாற்றானும் எளிமைக்கு நிலைக்களனாகிய யாம்” என்னும் பொருளினது; “இத்தகைய எங்களைச் சார்ந்தவர் நீங்கள்” என்னும் வேற்றுப்பொருளை யெய்தியமையாற் பொருணோக்காத் தன்மையாம்.

 

உரிய பொருளறவேயொழிந்த ஒலிப்பொருள் எவ்வாறெனில்:

 

  1. காகதிவேந்தனது வெண்ணிறத்த புகழ்ப்பெருக்கம், வெண்மைபூசிய விண்ணையுடையவாய் வெண்மைநிறைந்த எல்லாத்திசை முடிவுடையவாய் ஆடற்புறிகின்றது. இங்கண் வெண்மை[59] பூசிய விண்ணையுடையவாய் என்புழி அறவே பொருளொழிந்தமை காண்க; இம்முறையே பற்றி, சொற்றொடரையெய்தியமையானும் எடுத்துக்காட்டு உய்த்துணரற்பாலது.

இனி, பொருளாற்றன் மூலமாகிய பொருளாற் பொருளொலி எவ்வாறெனில்:-

 

  1. காகதிவேந்தனுடைய பகைமனைவியர், பருவங்களையின்றி வருடங்களையும் வளர்பிறைப்பக்கங்களையின்றி மாதங்களையும் இரவுகளையின்றி நாட்களையும் விரும்புகின்றனர்.

இங்கண் பருவம் முதலவற்றிற்குக் காமநோய் விளைக்குந்தன்மையுண்மையான் அவற்றின் இன்மை, பகைமனைவியரால் விரும்பப்படுகின்றதென்பது போதருகின்றது. அதனான் அவர்க்குக் காதலன் பிரிவு நிகழ்ந்ததென்னும் பொருள் குறிப்பிடப்படுகின்றது. இப்பொருளால் “பிரதாபருத்திரனுடைய எல்லாப் பகைவரும் இறந்துபட்டனர்” என்னும் ஒலிப்பொருள் உரிய பொருளினும் மேம்பாடுற்ற பொருளாம். அங்ஙனம் காதலன் பிரிவாற் கலக்கமெய்திய பகைமனைவியர் சிலவருடங்களை உயிர்த்திருக்குமெண்ணத்தால் முதலிற் பருவங்களுடைய இன்மையை விரும்புகின்றனர்; பின்னர் அவற்றையுங் கடத்தற் காற்றலராய்ச் சில மாதங்களில் உயிரைத் தரித்தற்கு முயன்று நிலவுடைப் பக்கங்களது அழிவை விரும்புகின்றனர்; பின்னர் மாதங்களையும் கழித்தற்கியலாராய்ச் சில நாட்களில் உயிர்த்திருக்கு நசையால் இரவுகளது படைப்பின்மையை விரும்புகின்றனர்; என்னும் பல பொருட்கள், காதலன் பிரிவென்னுமிப்பொருளால் ஒலிக்கின்றன.

பொருளால் அணிஒலி எவ்வாறெனில்:-

  1. காகதிவீரருத்திரனது உலகம்பரவும் மிகுபுகழைப் பார்த்து, சிவபிரான் அதிற் றங்குதற்கும் திருமகள் கொழுநன் அதிற் பள்ளிகோடற்கும் விரும்புகின்றனர்; வானுறைமுனிவரர் அதில் நீராடச் செல்லுகின்றனர்; கடல்கள் மிக்கக் கிளர்தரமுயல்கின்றன; அப்பிரமையும் நாணக்குறிப்புடன் மெள்ளெனப் பரிசித்தற்கு விரும்புகின்றது.

இங்கண் சிவபிரானார்க்குக்[60] கைலாயமயக்கமும் திருமகள் கொழுநற்குப் பாற்கடன் மயக்கமும் என்னும் மயக்கவணி ஒலிக்கின்றது. அணியாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. அமர்க்கண் பிரதாபருத்திரனது வாட்படை, அப்பொழுதே வழிந்தொழுகு மரத்தங்களாற் செந்நிறத்தவாய் காளிதேவியினது சினத்தாற் சிவந்த கடைவிழியினது பருமித்ததை யெய்தியது.

இங்கண் எய்தியதென்னும் காட்சியணியால்,[61] “எல்லாப்பகைவரும் இறைப்பொழுதிலழிவெய்தினர்” என்னும் பொருள் ஒலிக்கின்றது.

அணியாலணியொலி யெவ்வாறெனில்:-

  1. காகதீயவேந்தனது புகழ்ப்புண்டரீகம் அலர் தருங்கால், பச்சிலைத் தருவன்ன நீனிறத்தனவாம் அம்மலரில் வண்டினத்தாடலைப் புரிகின்றது.

இங்கண் புகழ் வெண்டாமரையில் வானம் வண்டினத்தாடலைப் புரிகின்றதென்னுங்காட்சியணியான் ஆதார ஆதேயங்கட்குப் பொருத்தமின்மை வடிவாகிய பெருமையணி ஒலிக்கின்றது. ஆதாரமாகும் புகழ் வெண்டாமரைக்கு இடப்பரப்பும், வானத்திற்கு வண்டினத்துவமை கூறலாற் சிறுமையும் போதுருகின்றன. இவற்றில் இயல்பானிகழும் பொருளாற்றன் மூலமுடைமையாம்.

இனி கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறும் பொருளாற்றன் மூலமாகிய பொருளாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. உலகிற் சிறப்பெய்தியதும் சாரணராலெப்பொழுதும் பாடப்பட்டதுமாகிய காகதிவேந்தனது புகழைக் கிரவுஞ்சமலை,[62] கந்தவேள் கணைபயிலுங்கால் அவ்வேளின் கணையான் விளைந்த புழையே தலைக்கீடாகுஞ் செவிப்புழை வழியால் அடிதொறுங் கேட்டு மிக்கவியப்பான் அசைவற்ற உடலையுடையவனாய் அமைகின்றது.

இங்கண் பிரதாபருத்திரனுடைய புகழ் நிலைத்திணைப் பொருள்கட்கும் வியப்பையளிக்கின்றதென்னும் பொருள் ஒலிக்கின்றது.

பொருளான் அணியொலி யெவ்வாறெனில்;_

  1. வீரருத்திரவேந்தனது போர்வீரர்கள் போரில் வெற்றித் திருவாலணைவுற அவர்களை முண்மரங்கள் கண்ணுற்று காட்டிற் பகைமனை[63]க்குழலைப் பற்றியிழுக்கின்றன.

இங்கண் வீரருத்திரனது வெற்றித் திருவாற்றழுவிய போர்வீரரைப் பார்த்து முண்மரங்கள் காமவேட்கையெய்தியாங்கு பகைமனைக்குழல்களைப் பற்றியிழுக்கின்றன போல; என்னுந் தற்குறிப்பேற்றவணி யொலிக்கின்றது. அணியாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. மனக்கினியகாதலன் அணிமைக்கணெய்துங்கால் மனவலி சிதைந்த மடந்தையினது நாணம், தன்னையும் அத்தலைவன் பற்றுமென்னு மச்சத்தாற்போல பாங்கியருடன் விரைந்தோடியது.

இங்கண் தற்குறிப்பேற்றத்தாற் றழுவலென்னும் பொருள் ஒலிக்கின்றது. அணியால்    அணியொலி யெவ்வாறெனில்:-

  1. காகதிவேந்தனது பகைவர், அடவிபால் அடைக்கலத்தையிரப்ப அவ்வடவி, கிளைகளது அசைவால் அப்பகைவரைக்காத்தலை உடன்படவில்லை போலாம்.

இங்கண் உடன்படவில்லைபோலாம் என்னுந் தற்குறிப்பேற்றத்தால் பிரதாபருத்திரனது பகைவரைக்காத்தற்குக் காடும் அஞ்சியது போலாம் என்னுந் தற்குறிப்பேற்றம் ஒலிக்கின்றது. கவிபிணைத்த கூறுவாரது ஆழமுடைச்சொற்களாற் பெறும் பொருளாற்றன் மூலமாகிய பொருளாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. பெருமாட்டி[64] யெத்தகையளாயினும் ஆக; மக்கட்டலைவ! மதியத்தைக் காத்தருள வேண்டும்; ஏனெனில் அம்மதியத்தை மாசுபடுத்தற்பொருட்டு அப்பெருமாட்டி, கடைவிழியாகு முற்கைக்குக் கட்டளையளித்துனள்.

இங்கண் பிரிவாற்றாது வருந்திய பெருமாட்டி நிலவைப் பொறுக்கவொண்ணாது சினத்தாலெரிதருங் கடைக்கணுற்கையான் மதியத்தை மாசுபடுத்துகின்றாள்; அம்மதியம் காத்தற்குரியவன்; என்னுமிப்பொருளால், இனி அவள் உயிரைத் தரித்தற்காற்றாளாகலின் இப்பொழுதே நீவிர் அவளைக் கூடல் வேண்டும். என்னும் பொருள் ஒலிக்கின்றது.

பொருளான் அணிக்குறிப்பு எவ்வாறெனில்:-

  1. ஓ வெளிறிய[65] எல்லா உறுப்புக்களையுடையனாய் உலாவும் நீயாவன்? யான் வீரருத்திரவேந்தனது புகழ்; உனது பக்கலில் விளங்கும் இனிய உடலுடைய இவன் யாவன்? அவ்வேந்தனது வீரம்; எற்குத்துணைவனாவன்; மறைத்தல்[66] வேண்டாம்; உங்களது உருவம் அலர்தரும் ஆம்பல்களானும், பங்கயங்களானும் விளக்கப்பட்டது; தண்கதிர்ச்செல்வ! செங்கதிர்ச்செல்வ! உங்கள்வரவு நல்லதாக; எல்லை வெற்பாகிய யான் இருள் நீக்கப்பெற்றேன்.

 

இங்கண் பிரதாபருத்திரவேந்தனது புகழ், வீரம் இவற்றிற்கு மதிகதிர் இவர்களுடைய ஒப்புமைத் தோற்றத்தான் உவமையணி யொலிக்கின்றது.

அணியாலணியொலி யெவ்வாறெனில்:-

  1. பாங்கியரே! பாருங்கள் தலைவியினது நிறைவுறுமனவலி, மிகவெழுச்சியெய்தியும் அரசன் வந்துழி நிகழ்ந்த பரபரப்பான் விளைந்த அச்சத்தை யெய்தியாங்கு விரைந்தோடுகின்றது.

இங்கண் தற்குறிப்பேற்றத்தான் காதலனது கோருதலின்றியே மங்கையின் மனம், கனிவுற்றதென்னும் பிறிதாராய்ச்சியணி ஒலிக்கின்றது.[67]

அணியாற் பொருளொலி யெவ்வாறெனில்:-

  1. தலைவ! மனைவிமார் சூழ்தரவிருக்கும் உம்மைச் சேவித்தற்குரிய அமயம் கிடைக்கப்பெறாமையின், உமது கீர்த்தியைச் சேவிக்கின்றாள்போல இந்த யௌவன மடந்தை, எல்லா உறுப்புக்களும் வெளிறுபட விளங்குகின்றாள்.

இங்கண் சேவிக்கின்றாள் போல என்னுந் தற்குறிப்பேற்றத்தான் முற்றிலுங் கோடற்குரியவன் என்னும் பொருள் ஒலிக்கின்றது.

சந்தர்ப்பம் முதலியவற்றை யெய்தியமையான் எடுத்துக்காட்டுக்கள் நேர்ந்துழிக்காண்க; விரிவஞ்சியிங்குக்கூறப்பட்டில.[68]

இனிச் சொல்லாற்றன் மூலஒலிப்பொருள்; அஃதும் பொருண்மூலத்தானும் அணிமூலத்தானும் என இருதிறத்து; அங்ஙனமே கூறப்பட்டுள்ளது.

“அணியும் பொருளுமே[69] சொற்களான் விளங்குங்கால் அவை சிறப்பு வகையாற் சொல்லாற்றன் மூலத்தானிகழ்ந்தன வென்றறியற்பாலன” என்று.

அவற்றுள்

அணியொலி யெவ்வாறெனில்:-

  1. இவன் உண்மையாகவே வேந்தன்[70]; நீயோ சியாமை[71]; உங்களிருவர்க்கும் கூட்டம் நிகழ்ந்தது; அங்ஙனமாக, பிரதோட[72] நிகழ்ச்சி காணப்பட்டிலதே! இது மிக்க வியப்பாம்.

 

இங்கண் யௌவனப்பெண் அரசன் என்னும் பொருளைக் கூறும் சியாமை வேந்தன் என்னுஞ் சொற்களான் இரவு, மதி, இவற்றின் றோற்றத்தான் உவமையணி ஒலிக்கின்றது.

 

பொருளொலி யெவ்வாறெனில்:-

 

  1. காட்டில் வசித்து வருந்திய அரசர்களே! நண்பனாகிய யான் கூறுவதைக் கேளுங்கள்; இப்பொழுது புரவலன் றிருவடியில் வழிபாடு செய்யுங்கள்.

 

இங்கண் புரவலனடி வழிபாடென்னுஞ் சொல்லினது ஆற்றலான் ஈண்டுத் தலைவனாக் கொள்ளப்பட்ட பிரதாபருத்திரனது தோற்றம், சந்தர்ப்பத்தானிகழ்கின்றது. அதனால் பிரதாபருத்திரனது வழிபாடு செய்யக்கடவது; ஏன் காட்டிற்றங்கி வருந்துகின்றீர்? என்னும் பொருள் ஒலிக்கின்றது. சொற்பொருளாற்றன் மூலத்தொலி யெவ்வாறெனில்:-

 

  1. இவ்வேந்தன்[73] (* ) எழுவனைய வாகுவிற் பெருமித மெய்தும் அற்புதப்படையுடையவன்[74]. ஏந்தலீர்![75] எல்லவருந் தன்பக்கச்[76] செருக்கை விட்டொழியுங்கள்.

 

இங்கண் ஏந்தலீர், தன்பக்கச் செருக்கைவிட்டொழியுங்கள், இவ்வேந்தன், என்னுமிவற்றில் சொல்லாற்றன் மூலமாந்தன்மையும், எழுவனையவாகுவிற்கு பெருமிதமெய்தும் அற்புதப்படையவன் என்னுமிடத்துப் பொருளாற்றன் மூலமாந்தன்மையும் ஆம்.

 

அறியத்தகா முறைக்குறிப்பாகும் சுவையாதிய ஒலி. அங்ஙனமே சிருங்காரதிலகத்திற் கூறப்பட்டுள்ளது.

 

“சுவைக்குறிப்பு, அதன் ஆபாசம், குறிப்பினொழிபு,

என்னுமிவை முதலியனவும்[77], அறியத்தகாமு

றைக்குறிப்பும், அணிபெறற்குரியவாக[78]லான்

சுவையாதிய அணியின் வேறுபட்டனவாம்” என்று

 

சுவைக்குறிப்பு முதலியவற்றின் எடுத்துக்காட்டுக்கள், அவற்றின் இலக்கணத்தை விளக்கும் சுவையியற்கட் கூறப்படும்.

 

குறிப்புச் சிறப்பிலா எண் வகைக் காப்பியங்கள் விளக்கப்படுகின்றன.

 

குறிப்புச் சிறப்பிலாக் காப்பியம் இடைக்காப்பியம் ஆம்; அது எண்வகைத்து.

 

அங்ஙனமே காப்பியப் பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.

 

“குறிப்பு மறையாதது, பிறிதொன்றுக்கு உறுப்பாய் அமைவது,

பொருண்முடிவளிப்பது, விளக்கமற்றது, ஐயப்பட்டது, ஒத்த

சிறப்புடையது, ஓசைமாற்றத்தாற்றழுவியது, வனப்பற்றது” என்று.

 

மறைந்தகுறிப்பு(78அ)டைக்காப்பியமே மங்கையின் கொங்கைபோல இன்பம் விளைக்குமாகலான் குறிப்பு மறையாதது இடைக்காப்பியம் ஆம்.

 

எவ்வாறெனில்:-

 

  1. உமது உயர்வை வன்னிக்கப்புகின் மலைகள் தாழ்த்தப்பட்டனவாய்ச் சினக்கின்றன; ஆழமுடைமையைக் கூறுங்கால் கடல்கள் மேடாயினவாய்க் கலக்கமெய்துகின்றன; ஆகலின் உம்மைவன்னித்தற்கு அஞ்சுகின்றேன்; குணமணிக்குன்றமே! வீரருத்திரவேந்தே! யான் அகத்தியனாக உமது பக்கலில் இருப்பனேல்;[79]

இங்கண் யான் அகத்தியனாக இருப்பனேல் என்றதனான் மலை கடலிவற்றிற்கஞ்சேன் என்னுங்குறிப்பு மறையாததாம்.

பிறிதொன்றற்கு அங்கமாய் அமைவது.

சுவை முதலியவற்றிற்கு சுவை முதலியன உறுப்புக்களாய் அமையுமவையும், சிறப்பில் குறிப்புடையவாம்.

எவ்வாறெனில்:-

  1. காகதிவேந்தனாகுங் காமனால் நடுக்கமுற்ற[80] அரசர்கள், நாணம் மானம் இவையொழிந்தும் குறன்மாற்றம் வியர்வை யிவை தோன்றியும் மெய்நடுக்கம் பொறிமயக்கம் மனமயக்கம் இவற்றையெய்தியும் கண்ணீர்பெருக வருந்தியும் அச்சமகளிராற் றழுவப்பட்டாராய் மலைக்குகைகளில் மக்கள் நடமாட்டமற்ற ஒன்றை யெய்துகின்றனர்.

 

இங்கண் அச்சச்சுவைக்கு உவகைச்சுவை உறுப்பாய் அமைகின்றது.

 

பொருண் முடிவு எவ்வாறெனில்:-

 

  1. காகதிவேந்தனது கொடிய வாட்படைக்கருமுகில், தாரையால்[81] பகைவரது கொடிய வீரநெருப்பை யவிக்கின்றது.

 

இங்கண் நீர்ப்பெருக்கு குறிப்புப்பொருளாம்; வாட்படையாகுங் கருமுகில் என்னும் உரிய பொருளாகிய உருவக்தினது பொருண்முடிவைச் செய்த தென்னும்மிதனால் இது சிறப்பிலாக் குறிப்புப்பொருளையுடையது.

 

விளக்கமில் குறிப்பு எவ்வாறெனில்:-

 

  1. வீரருத்திரனது எந்தவாட்படை, பகைவரது அரத்த நதியைப்பருகி புகழ்க் கங்கையைப் படைக்கின்றதோ அத்தகைய வாட்படையின் பெருமை தடைப்படுத்தவியலாது சொல்லணாவண்ணம் நிகழ்கின்றது.

 

இங்கண் வாட்படைக்குச் சன்னுமுனிவரினும்[82] மேம்பாடு கூறியிருத்தலான் மிக்க விளக்கமில்லா வேற்றுமையணி குறிப்பிற் போதரும். ஐயப்பட்ட தெவ்வாறெனில்:

 

  1. காகதிவேந்தனது காதல் நிரம்பிய பார்வை, காதலியினது பருத்த இரண்டு தனங்களிலும் செங்குவளை மாலையென்னச் சேர்ந்தது.

 

இங்கண் இச்சொற்றொடரின் பொருண்முடிவு தழுவலின் விருப்பத்திலேயோ அல்லது தனங்களைப் பார்க்கு மவ்வளவிலேயோ என்பது ஐயம் ஆம்.

 

ஒத்தச் சிறப்புடைமை யெவ்வாறெனில்:-

 

  1. அரசர்களே! பிரதாபருத்திரனுடைய திருவடித் தாமரைகளைச் சேவியுங்கள்; இன்றேல், இவரது தெளிந்த அத்தகைய மனம் கலக்கமெய்தும்.

 

பிரதாபருத்திரனுடைய பாதசேவையைச் செய்யாதிருப்பின் அப்பொழுது நகரில் வசித்தலரிதென்னுங் குறிப்புப் பொருட்கும், வாச்சியப்பொருட்கும் சிறப்புடைமை சமம் ஆம்.

வனப்பிலாமை யெவ்வாறெனில்:-

 

  1. வேந்தனது காட்சியால் ஏக சிலைநகர மடந்தையர்க்கு விளைந்த மகிழ்ச்சியைக் கேட்டு இருமுதுகுரவர்க்கடங்கிய கன்னியின் முகம் கருத்தது.

 

இங்கண் அரசனது காட்சியான் விளைந்த மகிழ்ச்சியை உய்த்துணருமொருவளுடைய முகம் கருத்தது என்னும் உரிய பொருட்கே வனப்புடைமையாம். பெற்றோர்க்கடங்கிய யான் அரசனைப் பார்க்கச் செல்லவில்லையே! என்னும் குறிப்புப் பொருட்கு வனப்பின்மையாம்.

ஓசை மாற்றத்தால் விளையும் பொருள் வேறுபாடும் சிறப்பிலாக் குறிப்பினையுடையதே. எவ்வாறெனில்:-

  1. அன்புடைத்தோழீ! கூறுக; குணங்களின் மேன்மையை உணர்ந்த அவ்வரசன், எந்த என்னை யின்புறுத்துகின்றாரோ; அந்த என்னிலும் நிலமகள் திருமகள் நாமகள் என்னும் இவர் சிறந்தவரோ?

இங்கண் நிலமகள் என்னிற் சிறந்தவளா? என்னும் ஓசைமாற்றத்தைக் கற்பித்தலான் என்னிற் சிறந்தவன் இல்லையென்னும் பொருள் குறிப்பிற் புலனாகின்றது.

சித்திரகாப்பியம், சொல்லணி பொருளணி இவற்றின் சித்திரங்களால் பலதிறப்பட்டது; அவ்வணிகளின் விளக்கம், அணியியலின்கட் கூறப்படும்.

பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இவற்றின் விளக்கம்.

இனி பெருங்காப்பியம் முதலிய நூல்கள் கூறப்படுகின்றன.

68, 69, 70. நகர் கடல் மலை பருவகாலம் மதியெழுச்சி கதிரெழுச்சி பொழில்விளையாட்டு நீர்விளையாட்டு மதுவுண்டல் கூடல் பிரிவு மணம் மக்கட்பேறு மந்திராலோசனை சூதாடல் போர்ச்செலவு போர்புரிதல் தலைவனது வெற்றி யென்னு மிவை யெங்கண் வன்னிக்கப்படுகின்றனவோ; அது பெருங்காப்பியம் என்று கூறப்படும். இப்பதினெட்டுப்பொருள்களுட் சில குறைந்திருப்பினும், பெருங்காப்பியமென்றே கொள்ளப்படும்.

ஆக காப்பியம், கத்தியகாப்பியம் பத்தியகாப்பியம் உபயகாப்பியம் என முத்திறத்து.[83]

சீரியலற்ற சொற்குழு கத்தியம் ஆம்.[84]

70½.  நான்கு அடிகளுடன் கூடியது பத்தியம் ஆம்.

கத்தியகாப்பியம் காதம்பரீ முதலியன.

பத்தியகாப்பியம், இரகுவம்சம் முதலியன.

  1. சருக்கப்பிணிப்பற்றது, உபகாப்பியம் என்று கூறப்படும்.

சருக்கப்பிணிப்பற்றது, சூரியசதக முதலியன.

  1. கத்தியம், பத்தியம் என்னுமிவையிரண்டும் அமைந்த காப்பியத்தைச் சம்பூ எனக் கூறுப. வத்திரம் அபரவத்திரம் என்னும் விருத்தங்களும் உச்சுவாசம் எனப்பெயரிய சருக்கபேதங்களும் எங்கட் கூறப்படுகின்றனவோ; அதனை ஆக்கியாயிகை என்ப.

 

வத்திரம் அபரவத்திரம் என்னும் பெயரிய விருத்தங்கள் அமைந்தும் உச்சுவாசத்தாற் பிரிக்கப்பட்டும் உள்ள நூல்கள், ஆக்கியாயிகைகளாம்; அவை ஹருஷசரிதம் முதலியன.

சிறுபிரபந்தங்களின் விளக்கம்.

இனிச் சிறுபிரபந்தங்கள் விளக்கப்படுகின்றன.

73, 74. யாதாமொருதாளத்துடனும், கத்தியம் பத்தியம் இவற்றுடனும் கூடியதும், ஜய எனத்தொடங்கபெறுவதும், மாலினீ முதலிய விருத்தங்களானும் எதுகைகளானும் வனப்புற்றதும், எட்டு வேற்றுமைகளும் அமைந்ததுமாகிய நூல், உதாகரணம் எனப்பெயரிதாம்.

எந்த நூலில் முதற்கண் “ஜய” எனத்தொடங்கி மாலீனீ முதலிய வனப்புறும் பத்தியம் இயற்றப்படுகின்றதோ; பின்னர், தாளமுடனும் எதுகைகளுடனும் “மேலும்” எனத் தொடங்கி யொவ்வொரு வேற்றுமையில் எட்டு வாக்கியங்களும், பின்னர் வேற்றுமை யாபாசங்களும் கூறப்படுகின்றனவோ; அந்நூல் உதாகரணம் என்பதாம்.

  1. விளிவேற்றுமை நிறைந்ததும், முதற்கட்பத்தியம் அமைந்ததும், சொற்கள் அந்தாதிமுறையிலமையப்பெற்றதுமாகிய நூல் “சக்கிரவாளம்” என்பதாம்.

76, 77. எட்டுவாக்கியங்களானாதல், நான்குவாக்கியங்களானாதல் கந்தமென்னும்[85] பெயரிய கதைப்பகுதிகளமைந்தும், கந்தந்தொறும் தனித்தனி வாகியத்தினமைப்பையுடையதும், கடவுள் அரசன் இவர்களைப் பற்றியதும் எங்கணும் “தேவ” என்னுஞ் சொற்றொடக்கத்ததும், ஆகிய நூல் “போகாவளீ”[86] என்பதாம்.

  1. தலைவனது வெற்றிக்கொடி அவனது குலத்தின் வெற்றிக்குறி யிவற்றை வன்னித்தலான் விளக்கமிக்கதும், ஆரவாரமிக்க சொற்றொடரையெய்தியதுமாகிய நூலைப் “பிருதாவளீ”[87] யென்ப.

 

78½. விண்மீனது எண்ணால் அமையுஞ் சுலோகங்களுடன் கூடிய நூலைத் “தாராவளீ”[88] என்ப.

இங்ஙனம் கவிகளது சீரிய சொற்களானமையும் சிறுபிரபந்தங்கள், அமைவிற்கேற்ப உய்த்துணரற்பாலன. இனி, இவற்றின் எடுத்துக்காட்டுக்கள், விரிவஞ்சியிங்குக் கூறப்பட்டில.

 

ஸ்ரீ வித்யாநாதனியற்றிய பிரதாபருத்திரன் புகழணி யென்னும் அணியிலக்கணத்தில் காப்பியவியல் முற்றிற்று.

 

[1] காப்பியத்திற்குச் சிறப்பளிப்பவன் றலைவனாகலின் அத்தலைவனியலை முன்னர்க்கூறி, அவனாற் சிறப்புறுமியைபுபற்றிக் காப்பியவியலை அதன் பின்வைத்தான் என்க.

[2] குற்றமற்ற — காப்பியவிலக்கணங்கூறுஞ் சுலோகத்திற் கூறப்படாத “குற்றமற்ற” என்னுஞ்சொல்லை அவ்விலக்கணத்தின் பொருள் விரிக்குங்கால் முன்னர்க்கோடலென்னையோவெனின், மறந்தேனுஞ் சிறுபிழையும் நிகழலாகாதென்பதை அறிவுறுத்தற்பொருட்டு. அங்ஙனமே தண்டியாசிரியரும் கூறியுள்ளார்.

“காப்பியத்தில் நிகழுங்குறை சிறிதெனினும் அதனை மதியாதிருத்தலடாது. உடலம் மிகுவனப்புற்றதெனினும் ஒருவெண்குட்டத்தான் அதன் மாண்பு கெடுமன்றே” என்று. அங்ஙனம் கூறியிருப்பினும், “மதிக்கதிர்களில் மறுவென்ன அற்பக்குற்றம் அமிழ்ந்துபோம்” என்னுங் கூற்றோ காப்பியத்தியலன்றிப் பிறவழிக்கொள்ளற்பாலது. இவ்விலக்கணம் மம்மடாசிரியராற் கூறப்பட்டது. சாகித்திய தருப்பணமும் இரசகங்காதரமும் முறையே “சுவைநிரம்பிய சொற்றடர் காப்பியம்” “வியப்பு மகிழ்ச்சியிவற்றை விளைக்கும் பொருளை வெளிப்படுக்குஞ்சொல் காப்பியம்” என்று கூறும்.

[3] தன்னையென்பது காப்பியத்தை. சுபாவம் மக்களை மேன்மைப்படுத்துமென்பது போல இயல்பும் காப்பியத்தை மேன்மைப்படுத்துமென்பது கருத்து.

[4] சொல்லடுக்குமுறை — இது அடுக்கியமைக்கப்படுஞ் சொற்களில் ஒன்றையேனும் மாற்றியமைக்கப்பொறாத நிலையையுணர்த்தும்.

[5] பொருளின் இயைபு — ஈண்டு உரிய பொருளின் இயைபை.

[6] உபலக்கணம் — இக்கரை கடலினதின்று; கங்கையினது என்னும் தொடர்புப் பொண் மாத்திரையில் அமைவதாம்.

[7] சாரோபம், சாத்யவசாயம் இவற்றின் இலக்கணம்  நூற்கட்பின்னர் விளக்கப்படும்.

[8] சாரோபம், சாத்யவசாயம் இவற்றின் இலக்கணம்  நூற்கட்பின்னர் விளக்கப்படும்.

[9] அமைவு — சொல்லமைவு பொருளமைவு என்னுமிவற்றை; இவை சுவை நிலையைத் தெரிவிப்பனவாம்.

[10] சங்கேதப்பொருள் — இது இன்னசொற்கு இன்னபொருள் எனத்துணியப்பட்டபொருளை.

[11] உரூடி — பகுதிவிகுதிகளின் சேர்க்கையின்றி பொருளைத்தரும் ஓர்வகைச்சொல். அதனை இடுகுறியென்ப.

[12] யௌகிகம் — பகுதிவிகுதிகளின் சேர்க்கையாற் பொருளைத்தருஞ்சொல்; அதனைப் பகுபதம் என்ப.

[13] வசுமதி — பொன்னைத் தன்னகத்துடைமையான் இது பூமிக்குக் காரணப்பெயராயிற்று. வசு—பொன்.

[14] இரத்தினகருப்பை — அரதனங்களைத் தன்னுள்ளுடைமையான் இது காரணப்பெயராயிற்று.

[15] நிலை — நிலைத்திருத்தலின் இஃதும் காரணப்பெயராம். 13, 14, 15 இம்மூன்று சொற்களினது பொருட்களும் நிலமகள் பால் அமைதலின் இச்சொற்கள் அந்நிலமகட்கே காரணப்பெயர்களாய் அமைவனவாம்.

[16] வராகம் — பன்றி; அதனைக் கொடியாகவுடையவன் வீரருத்திரன் என்பதாம். உலகில் வீரனொருவனாற் றோல்வியெய்திய ஒருவன், வென்ற வீரனது அடையாளத்தைத் தாங்கி நிற்றல் மரபாகலின் இங்ஙனங் கூறினான் என்க.

[17] ஆரோபம் — ஒரு பொருளை வேறொன்றாயறிதல்.

[18] அத்தியவசாயம் — ஒருபொருட்கணியல்பாய் நிகழுந்தன்மையையொழித்துத் தான் கொண்டபொருண் மேலேற்றிக்கூறல்.

[19] குவலயம். ஈண்டு குவளை மலரையும் பூமியையும் உணர்த்தும்.

[20] அனுமானத்தில் புகைக்கும் நெருப்புக்கும் உடனிகழ்ச்சியமைவதையொப்ப வியஞ்சனாவிருத்தியில் வியங்கியம் வியஞ்சகம் இவற்றிற்கு உடனிகழ்ச்சியின்மையான் வியாத்தியின்மை யென்பதாம்.

[21] கவிழ்ந்த முகத்தினராந்தன்மை — இத்தன்மைக்கு குருவணக்கம் முதலிய பல காரணங்களுண்மையான் வியாத்தியின்மையென்பது கருத்து. புகைக்கு நெருப்பையின்றி வேறுகாரணமின்மையின் “யாண்டு புகை, ஆண்டு நெருப்பு” என்னும் வியாத்தி நிகழும்.

[22] நியத காரணம் — துணியப்பட்ட காரணம். ஈண்டு மனவருத்தத்தாற் றலை வணங்கினர் என்பது கருத்து.

[23] கூறும் விருப்பம் — இது சொல்வடிவை வெளிப்படுக்கக்கூறும் விருப்பம், சொல்லாற் பொருளை வெளிப்படுக்கக் கூறும் விருப்பம் என இருவகைத்து; இங்கண் சொல்லாற் பொருளை வெளிப்படுக்கக் கூறும் விருப்பம்ஆம். அதனாற் கவரப்பட்ட வியஞ்சகச் சொல்லான் மனவருத்தமென்னுங் காரணப் பொருள் துணியப்பட்டதாம்.

[24] பல குறிப்புப் பொருட்களின் றோற்றம்:- “அருக்கன் அத்தகிரி யெய்துகின்றான்” என்னும் வாக்கியத்தில் மாலைக்கடன் முடித்தல் விலைப்பொருளைச் சுருக்கிக்கோடல் தலைவிபாற் சேறல் என்னும் இன்னோரன்ன பல பொருள்கள் முறையே அந்தணர் வணிகர் காமுகர் முதலினோர்க்கு நிகழ்கின்றன. அங்ஙனம் “மலைநெருப்புடைத்து; புகையுடைமையான்” என்னும் அனுமானத்திற் பல பொருட்டோற்றம் நிகழ்வதில்லையாகலின் வியங்கியம் அனுமேயம் இவற்றிற்கு வேறுபாடுளது. அதனால் வியஞ்சனத்திற்கு அனுமானமாந்தன்மை முரண்பட்டதாம்.

[25] பகைப்புரங்களை வென்றவன் — ஈண்டு, திரிபுரங்களை யெரித்த முக்கட்கடவுளையும் பகைவரது நாடுகளை வென்ற வீரருத்திரனையும் உணர்த்தும் இங்கட் சொல் வேறுபாடின்மையால் இது பொருளாற்றன் மூலம் ஆம்.

[26] வடிவிற் சருவமங்களம் பொருந்தியவன் — ஈண்டு மாதிடப்பாகனாகிய சிவபெருமானையும் எல்லா நலங்களையுமெய்தும் வேந்தனையுமுணர்த்தும். சருவமங்களை — உமாதேவியார் — எல்லா நலங்கள்.

[27] இராசமௌளி — ஈண்டு அன்மொழித்தொகையான் மதிமுடிக்கடவுளையும், வேற்றுமைத்தொகையான் அரசர்கட்குத் தலைவனாகிய வீரருத்திரவேந்தனையுமுணர்த்தும். இராசா — சந்திரன். அரசன். 26, 27. இச்சொற்கள் வேறுபாட்டுப்பொருளைத் தரலாற் சொல்லாற்றன் மூலம். 25. இச்சொல் வேறுபடாது பொருளைத் தரலாற் பொருளாற்றன் மூலம். ஓரிடத்திலிவ்விரண்டையுங் கூறியமையாற் சொற்பொருளாற்றன் மூலமெனக் கூறினான் என்க.

[28] காமனை வென்றவன் என்றதனால் உலகிற் சிறந்த வடிவழகு யௌவனம் முதலிய உத்தீபனவிபாவங்களானும், “வேந்தன் அங்கனைகள்” என்றதனால் ஆலம்பன விபாவங்களாகிற சுவைப்பொருள்களானும், “இமைப்பறக்காணவிரும்புங்கால்” என்றதனால் காமவேட்கை முதலிய குறிப்புக்களானும், “கடைவிழிகள்” என்றதனால் அனுபாவங்களானும், “காகதீயமரபிற்குமதியம்” என்றதனால் உயர்குடிப்பிறப்பு முதலிய நற்குணங்கள் வாய்ந்த தலைவனைப்பற்றிய உவகைச் சுவைதோன்ற மென்சொற்றொடராலமைந்திருத்தலின் இது கைசிகீவிருத்தியாம்.

[29] சலமார்த்திகண்டன்—இது இவ்வேந்தனது வீரத்தைத் தெரிவிக்கும் பட்டப்பேர். வாட்படை முதலிய சொற்களான் வெகுளிச்சுவையும், அரத்தம் தசை முதலிய சொற்களான் இளிவரற் சுவையும் தோன்ற இச்சுலோகம் வன்றொடரானமைந்திருத்தலான் இது ஆரபபீவிருத்தியாம்.

[30] இச்சுலோகம் மருட்கைச் சுவை தோன்ற அமைந்திருத்தலான் இது பாரதீவிருத்தியாம்.

[31] பாரெலாம் — இந்தச்சுலோகம், அச்சச்சுவை தோன்ற அமைந்திருத்தலான் இது சாத்துவதீவிருத்தியாம்.

[32] முரண்படுமெழுத்துக்கள் — ஈண்டு வல்லெழுத்துக்களை; அவ்வெழுதுக்களானாய தொடர், அச்சுவைகட்கு விரும்பற்பாலதன்றென்பது கருத்து.

[33] தம் — இச்சொல், பிரதாபருத்திரற்கஞ்சிய பகைவர், காதலியையும் கருதாது ஓடியமையால் அவ்வேந்தனது வீரத்தையுணர்த்தும்.

[34] இவண் — இது எல்லாச் செல்வங்களும் நிறைந்துறும் அப்பகைவரது இல்லத்தையுணர்த்தும்.

[35] எத்தீயூழ் — காதலர், காதலியைப் பிரிய மனமிலராயினும் அவரைத் தீயூழ் பிரித்ததேயென்னும் துன்பமிகுதியை யுணர்த்தும்.

[36] மயக்கமெய்துகின்றனர் — இங்கண் வன்மைமிகாச் சொற்கட்டால் உவகைச் சுவை விரவிய அழுகைச்சுவை கூறப்பட்டதாம்.

[37] பொருட்சிறப்பைப் பற்றாது வைதர்ப்பீ முதலிய வியல்புக்கள், சொல்லினிமையாதியவற்றை பற்றிய அவ்வளவின் முடிந்து நிற்பன. கைசிகி முதலிய விருத்திகளோ உவகை முதலிய சுவைகளை வெளிப்படுக்குந்தன்மையவாம் என்னும் வேறுபாடென்பதாம்.

[38] இந்தச்சுலோகத்தில் தெய்வமகளிரது முகங்களை மதியமாகவும், நன்முத்தங்களை உடுகணங்களாகவும் கூறியிருத்தலான் போர்முகத்திற்குக் கங்குற் பொழுதாந் தன்மை அறியக்கிடக்கின்றது. இது வன்றொடரானும் நெடுந்தொகையானும் கௌபீரீதியாம்.

[39] மறைந்தோடும் — பூழியாகும் நிலத்தின் கீழ் மறைந்தோடுகின்ற கௌதம நதியென்பது கருத்து.

[40] வியப்பு — கரிய கொடிய விடத்தை வளர்த்தல் பாலுண்ட நாகத்திற்கியல்பாகலின் அந்நாகம் அமுதத்தை வளர்க்கின்றதென்பது வியப்பினிமித்தம்.

[41] காகதிவேந்தற்கஞ்சிய பகையரசர், புறங்கொடுத்தோடினராகலின், அவரது மனைவியர் பிரிவாற்றாமையான் வருந்துங்கால் காமவேட்கையால் அவரது கதுப்புக்கள் வெளிறுபட்டனவென்பதாம். வென்ற வீரனது புகழை, அவ்வெண்ணிறத்தவாக வன்னித்தல் கவிமரபு.

[42] பலவழிப்பட்டனவும் — தலைவன் றலைவியை நோக்கியவழி கடைவிழியைப் பிறவழிச் செலுத்தலும், நோக்காத வழி அவனையே நோக்குவதும் எனப் பலவழிப்பட்டனவும் என்றான்.

[43] இச்சுலோகத்தின் குறிப்பைத் தலைவனியல் 58வது சுலோகத்திற் காண்க. உரையின்றிப் பொருள் புலனாகாமையின் இது நாரிகேளபாகம் ஆம்.

[44] திராட்சைப்பாகம் நாரிகேளபாகம் இவைமுறையே, பொருள் எளிதிற் புலனாகுமிடத்தும், தாழ்த்துப்புலனாகுமிடத்தும் அமைவனவாகலின் இவற்றையன்றி இடைக்கட்பொருள் புலனாகுமிடத்துப் பாகங்கள் பலவாகலின் அவற்றிற்கேற்றபெற்றி கதளீபாகம் முதலியனவும் உய்த்துணரற்பாலன.

[45] உலகில் ஒருவன் ஒருபொருளைக் காண்டற்பொருட்டு விளக்கு முதலியவற்றைக் கோடற்கு முயலுதல்போல புலவரும், குறிப்புப் பொருட்கே சொற்பொருளை வனப்புற அமைத்தற்கு முயறலானும், அக்குறிப்புப்பொருளும் இடைக்கண் ஒழிவெய்தாது கவிஞருள்ளைத்தை வலிந்து பற்றித் தன்வயமாக்கலானும் குறிப்புப்பொருள் சிறப்புடையதென்பதாம்.

[46] பிறிதொன்றை யென்பது வியங்கியப் பொருளை; அரசனருளைப் பெறுங்கருத்தால் அவ்வரசனுடைய பணியாளரைச் சேவிக்குந்தன்மை போல, வியங்கியப் பொருளைக் கருதியே கூறும் பொருள் என்பதாம்.

[47] வேற்றுப்பற்றிய பொருனோக்காஒலி எனக்கூட்டுக; இங்கட் பொருள் தடைப்படாது பொருந்துமாயினும் அவ்வளவிற்படாமையான் இது விடாத இலக்கணையடியாகப் பிறந்த ஒலிப்பொருளாம்.

[48] பொருளறவேயொழிந்த பொருணோக்காஒலியென்று கூட்டுக; இதிற் பொருள் பொருந்தாமற் றடைப்படுதலான் இதுவிட்ட இலக்கணையினடியாகப் பிறந்த ஒலிப்பொருளாம் என்னுமிப்பாகுபாடு உணரற்பாலது.

[49] அறியத்தகு முறையொலி — வியங்கியம், வியஞ்சகம் என்னுமிவற்றின் முறைகள் நன்குணரத்தகும் ஒலி என்பது பொருள்; அங்ஙனம் அறியத்தகாதது அறியத்தகாமுறையொலி யென்பதாம்.

[50] பொருட்கு — ஒலிப்பொருட்கு மூலமாகிய வியஞ்சகப்பொருட்கு என்பது பொருள். இப்பொருளுக்கு இயல்பானிகழுந்தன்மையாவது பாடல் மாத்திரையில் அமையாது உலகவழக்கிலும் பொருந்தியமையும் தன்மையாம். கவிகளது சீரிய சொல்லமைவாற் பெறுந்தன்மையாவது:- உலகவழக்கிலமையாப் பொருளையும் கவிகள் மதிவலியாலுய்த்துணர்ந்து கூறுந்தன்மையாம். கவிகளாற் பிணைக்கப்பட்ட சொற்களாற் பெறுந்தன்மையாவது – கவிகளெடுத்துக்கொண்ட பாத்திர வாயிலாகக் கூறுஞ்சொற்களாற் பெறுந்தன்மையாம்.

[51] தொடரொலி — மணியையடிக்குங்கால் முதற்கணெழுமொலிக்குப்பின், தொடர்ந்து நிகழுமொலி; அதனையொப்ப பொருளாற்றன் மூலமாகிய அறியத்தகு முறையொலியில் முதல் மூன்றே முப்பத்தாறு வகையவாய் வேறுபடுதலின் இவை தொடரொலிகள் என்பதாம்.

[52] அறியத்தகுமுறையொலியில் — சொல்லாற்றன்மூல வேறுபாடுகணான்கும் பொருளாற்றன்மூல வேறுபாடுகள் முப்பத்தாறும் சொற்பொருளாற்றன்மூல வேறுபாடு ஒன்றும் என நாற்பத்தொரு வேறுபாடுகளாம்.

[53] மூவகைத்தாகிய கலவை — ஐயத்திற்கிடனாந்தன்மையானும் உறுப்பு உறுப்பியென்னுமியைபானும் ஒருவியஞ்சகச் சொல்லினது சேர்க்கையானும் கலவை நிகழுமாகலின் அது முத்திறத்து. பாலும்நீரும் சேர்ந்தாற்போல விளங்காத வேறுபாடுகளையுடைய பல ஒலிப்பொருள்களது கலப்பாம்; இதனை வட நூலார் சங்கரம் என்ப.

[54] சேர்வை — எள்ளும் அரிசியும் சேர்ந்தாற்போல விளங்குகின்ற வேறுபாடுகளையுடைய பலஒலிப்பொருள்களது சேர்க்கையாம். இதற்குப் பிறிதொன்றைப் பற்றுந் தன்மையின்மையான் ஒருபடித்தெனக்கூறினான் என்க; இதனை வடநூலார் சம்சிருட்டி என்ப.

[55] மதிக்கணைகள் — ஐம்பத்தொன்று.

[56] பருவம் கண் அங்கிமதி — ஆயிரத்து முந்நூற்றிருபத்தாறு.

[57] கடல் வான் அங்கிவானி — ஐயாயிரத்து முன்னூற்று நான்கு. இவ்வெண்களை வடநூலார் “பூதசங்கியை” என்ப.

[58] எமது — இந்தச்சொல் உரிய பொருண் மாத்திரையில் இங்கண் பயன்படாமையால் எளிமைக்கு நிலைக்களனாகும் யாம் என்னும் பொருளவாய் வேற்றுப்பொருளைப்பற்றியது.

[59] வெண்மைபூசிய விண்ணையுடையவாய் — வடிவுடைப்பொருட்கட்பொருந்தும் பூச்சுவினை, வடிவிற்பொருளாகிய வான்கட்பொருந்தாதாகலின் அறவே பொருளொழிந்த நிலையில் இவ்வேந்தனது புகழால் வானவெளி விளங்கியதென்பது ஒலிக்கின்றது.

[60] சிவபிரான் முதலியோர்க்குக் கீர்த்தியில் வசிக்க விருப்பம் முதலியன நிகழ்ந்தனவென்னும் பொருளாற் கைலாயம், பாற்கடல், தேவகங்கை, மதியம், ஐராவதம் என்னும் மயக்கவடிவாய மயக்கவணி ஒலிக்கின்றது.

[61] இங்கண் வாட்படை, காளிதேவியினது கடைவிழிப் பருமிதத்தை யெய்தல் பொருந்தாமையான் பருமிதம் போன்ற பருமிதத்தை யெய்தியதென்னும் உவமையை வலிந்துபற்றிப் பொருந்தாப்பொருளைப் பொருந்தக்கூறும் காட்சியணியால் எல்லாப் பகைவரும் இறைப்பொழுதிலழிவெய்தினர் என்னும் பொருள் ஒலிக்கின்றது.

[62] கிரவுஞ்சமலையென்னுமிப்பொருளான் வேந்தனது புகழ் நிலைத்திணைபொருள்கட்கும் வியப்பையளிக்கின்றது, என்னும் பொருள் ஒலிக்கின்றது.

[63] பகைமனைவியர் அச்சத்தால் வனத்துட்புக்கோடுகின்றனர் என்னும் பொருளால் தற்குறிப்பேற்ற அணி ஒலிக்கின்றது.

[64] இந்தச்சுலோகம் — தலைவியைக் கூட வரக் காலந்தாழ்க்கும் தலைவனைக்குறித்து மதிநுட்பம் வாய்ந்த பாங்கியின் கூற்று. உற்கை — தீக்கொள்ளி.

[65] இது எல்லை வெற்பினுக்கும் புகழினுக்கும் வினாவிடை.

[66] இது எல்லை வெற்பினது தனிமையுரை.

[67] மங்கையின் மனங்கனிவுறற்குக் காதலன் கோருதல் காரணம்: அஃதின்றி மனங்கனிவுற்றதெனக் கூறியமையால் இது பிறிதாராய்ச்சியணியாம்; இதனை வடநூலார் விபாவனையென்ப.

[68] இம்மட்டிற் கூறப்பட்ட உதாகரணங்களை நன்கு உணர்ந்தார்க்குப் பிற உதாகரணங்களையறிதல் எளிதாகலின் மீண்டும் அவற்றையெடுத்துக் காட்டலான் நூல்பெருகுமன்றிப் பிறிதொரு பயனில்லையென்பதாம்.

[69] அணியும் பொருளேயாமாயினும் அணி விசித்திரப்பொருள், மற்றது சுத்தப்பொருள் என விளக்குவதற்கே இத்தேற்றம் இங்குக் கூறப்பட்டதாம்.

[70] வேந்தன் — ஈண்டு அரசனையும் சந்திரனையும் உணர்த்தும்.

[71] சியாமை — ஈண்டு யௌவனப் பெண்னையும் இரவையும் உணர்த்தும்.

[72] பிரதோடம் — ஈண்டு தோடமிகுதியையும் மாலைப்பொழுதையும் உணர்த்தும்.

[73] வேந்தன். ஈண்டு, இந்திரனையும் அரசனையும் உணர்த்தும்.

[74] ஈண்டு வாட்படையையும் வச்சிரப்படையையும் உணர்த்தும்.

[75] ஈண்டு பகையரசரையும் மலைகளையும் உணர்த்தும்.

[76] ஈண்டு சேனைகளையும் சிறைகளையும் உணர்த்தும்.

[77] முதலியன — இதனால் குறிப்பெழுச்சி, குறிப்பியைபு, குறிப்புக்கலவை யென்னுமிவை கொள்ளற்பாலன.

[78] அணிபெறற்குரியவாகலான் — இவ்வேது சுவைமுதலியன உறுப்பியாங்கால் ஒலிப்பொருண்மையையும், உறுப்பாங்கால் அணியாந்தன்மையையும் எய்துமென்னும் பொருளையுணர்த்தும்.

78அ மறைந்தகுறிப்பு — குறிப்புவிரைவிற்புலனாயின் அதற்கு மறையாத் தன்மையும், தாழ்விற்புலனாயின் விளங்காமையும், இடையிற் புலனாயின் மறைவுறுந்தன்மையும் ஆம். அவற்றுள் முதலிரண்டும் பொருந்துமேல் இடைக்காப்பியமும், கடையொன்று பொருந்துமேற் றலைக்காப்பியமும் ஆம் என்பதாம்.

[79] ஆவனேல் — அஞ்சேல் என்று முடிக்க.

[80] நடுக்கமுற்ற அரசர் மலைக்குகையை யெய்தினர். இதனால் இங்கண் அச்சச்சுவை உறுப்பியென்பதும், வியர்வை, மெய்நடுக்கம் கண்ணீரரும்பலாதிய குறிப்புக்களை அச்சமகளினது தழுவற்குக் காரணமாகக் கூறியிருத்தலான் உவகைச்சுவை, அச்சச்சுவைக்கு உறுப்பென்பதும் விளங்கும்.

[81] தாரை — ஈண்டு நீர்ப்பெருக்கத்தையும் வாணுதியையும் உணர்த்தும்; இச்சொல் அவித்தலென்னும் வினைக்குக் கருவியாய் நின்று உருவக அணியை நிலைப்படுத்திப் பொருளை முடிவுறச் செய்கின்றது; இன்றேல் இங்கண் உருவகமோ உவமையோ என்னும் ஐயம் நிகழ்ந்து பொருண்முடிவு பொருந்தாதென்பதாம்.

[82] சன்னுமுனிவரினும் — இவர் முதலிற் பருகிய கங்கையையே மீண்டும் படைத்தார்; இவ்வேந்தனது வாட்படையோ அங்ஙனமின்றி ஒன்றைப் பருகிப் பிறிதொன்றைப் படைத்ததென்னுமிதனால் “உவமானத்தினும் உவமேயம் மேம்பாடுடையதெ”ன்னு மிலக்கணமுள்ள வேற்றுமையணிதாழ்விற் புலனாகலின் இது விளக்கமில் குறிப்புடையதாம்; இவ்வணியை வடநூலாற் வியதிரேகம் என்ப.

[83] இங்கட்கூறப்பட்ட இலக்கணம் சருக்கப்பிணிப்பு நாற்பயன் தீரோதாத்தலைவன் இவற்றையுடைமைசூம் உபலக்கணம் ஆம்.

[84] சீரியலற்ற சொற்குழு — சீரிலக்கணம் பொருந்திலதெனினும் வழியெதுகை யமைந்த சொற்சுவை, பெரிதும் அமைவதே அதன் இலக்கணம் ஆம். சீர் — இதனை வடநூலார் கணம் என்ப.

[85] கந்தம் — நூலின் ஓர் பகுதி; அது கதைப் பகுதிகளின் முடிபையுணர்த்தும்.

[86] இந்நூலிற் கலவிக்குரியவாய் அமையும் உய்யானம் இளவேனில் தலைவனது குணங்கள் முதலியவற்றைப் பெரிதும் வன்னித்தல் வேண்டும்.

[87] பிருதாவளீ — இந்நூற்கு, இங்கட் கூறப்பட்ட இலக்கணத்தையன்றி போகாவளிக்குக் கூறப்பட்ட இலக்கணமும் அமைதல் வேண்டுமென்றுணர்க.

[88] தாராவளீ — தாரைகள், அசுபதி முதலாக இருபத்தேழாகலின் இருபத்தேழு பாடல்களானாக்கப்பட்ட நூல் தாராவளீ என்னும் பெயர்த்தாயிற்று. தாரை — விண்மீன்.

Leave a comment