டாக்டர் அ. சிதம்பரநாதனார்

பண்டிதமணியின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா
நிகழ்ச்சிக்காக அறிஞர்களால் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு

டாக்டர் அ. சிதம்பரநாதனார் தம் ஆசிரியராகிய
பண்டிதமணியாரைப் பற்றி எழுதிய கட்டுரை

பண்டிதமணி கதிரேசன் செட்டியாரொடு எனக்கு ஏறத்தாழ 23 ஆண்டுகள் பழக்கம் உண்டு. அவர் 1953-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி வயது முதிர்ந்த நிலையில் மறைந்தார். அவர் 1930-இல் சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகா சமாச வெள்ளி விழாவின் போதுதான் முதன்முதலில் எனக்கு அறிமுகம் ஆயினார். அப்பொழுது பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற சமாச வெள்ளி விழாவின் கூட்டங்களுக்கு மூன்று நாட்களிலும் தலைமை தாங்கிப் பல அரும்பெறற் கருத்துக்களை அவர்கள் தெரிவித்தார்கள். நீளமான மஞ்சள் நிறக் கோட்டு அணிந்து, கழுத்தைச் சுற்றிலும் வெள்ளிய மேல் வேட்டி ஒன்றினைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, தலைப்பாகையுடன் அவர் உட்கார்ந்திருந்த காட்சி இன்னும் நினைவிற்கு வருகிறது.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் படித்தபொழுது எனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருள் ஒருவராகிய திரு. கே. எஸ். வைத்தியநாத ஐயர் அவர்களுடைய நினைவு பண்டிதமணியைக் கண்டபொழுது எனக்கு ஏற்பட்டது. காரணம் இருவரும் தூய வெள்ளாடை உடுத்தி அழகிய வெள்ளைத் தலைப்பாகை அணிந்து இருந்தார்கள் என்பது மாத்திரம் அன்றி, ஆங்கிலக் கவிதைகளை இனிமையோடு சுவைத்துப் பிறர்க்கு எடுத்து இயம்பிடும் திறன் திரு. கே. எஸ். வைத்தியநாத ஐயர் பெற்றிருந்தது போலப் பண்டிதமணியவர்கள் தமிழ்ச்செய்யுட்களைச் சுவைத்து அவற்றை எளிய தெள்ளிய நல்ல நடையில் பலர்க்கும் எடுத்து வழங்கும் ஆற்றல் படைத்திருந்தார் என்பது பச்சையப்பன் மண்டபக்கூட்டத்திற் கலந்து கொண்டவர்கள் அவர் ஆங்கிலம் அறிந்திலர் என்பதை ஊகித்திருக்கவே முடியாதபடி, அவருடைய உடையும் நடையும் சொற்பொழிவுகளும் இருந்தன. பள்ளிக்கூட வாயிலாக அல்லது கல்லூரி வாயிலாகத் தமிழ் இலக்கியம் கற்கும் வாய்ப்புப் பெற்றாரில்லையேனும் நல்லறிஞர்கள் துணைக்கொண்டு தாமே பல தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் துருவித்துருவி ஆராய்ந்து கற்ற பெருமையுடையவர் திரு. கதிரேசன் செட்டியார். ஆதலினால், அவர் இயற்றிய சொற்பெருக்குகள் அறிஞர்களையும் ஏனையோரையும் மகிழ்வித்தமை வியப்பன்று. அவர் கற்றறிந்த செய்திகள் பலவற்றையும் எழுதிக் குறிப்புப் புத்தகத்தில் வைத்துக்கொள்ளும் மரபுடையவராகக் காணப்பட்டார். மேடைகளுக்கு வரும்பொழுது அவர் கையில் இரண்டு அல்லது மூன்று குறிப்புப் புத்தகங்கள் இருக்கும். அக்குறிப்புக்களில் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, காளிதாசர் போன்ற நூல்கள் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் உண்டு. வேளை வாய்க்கும் போதெல்லம் அவ்வேடுகளைப் புரட்டிப் புரட்டித் தமது கருத்துக்களை அவர் அழகுற எடுத்தியம்பியது உண்டு. தமிழரேயன்றி ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதம் கற்றறிந்த பெரியவர்களும், மாணவர்களும் அவர்களுடைய சென்னைச் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுள் ஒருவன் நான். அப்பொழுது சென்னை அரசாங்க முஸ்லிம்கள் கல்லூரியில் நான் தமிழாசிரியனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவ்வாண்டினை ஒட்டிய ஆண்டுகளில் திரு. வி. கலியணசுந்தர முதலியார் அவர்களுடைய தொடர்பு எனக்கு ஏற்பட்டது உண்டு. அவர் இராயப்பேட்டையில் அமைத்து நடத்தி வந்த “பாலசுப்பிரமணிய பக்தசன சபை”யில் பண்டிதமணியவர்களை அழைத்துப் பெருமைப்படுத்திச் சொற்பொழிவு ஆற்றுமாறு செய்வித்தார்கள். எனவே ஜார்ஜ் டவுனிலும் இராயப்பேட்டையிலும் உள்ள தமிழ் மக்கள் சிறப்பாகப் பண்டிதமணியினுடைய அறிவுசான்ற சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார்கள்.

திருவாசகத்தில் வரும் “வெள்ளந்தாழ் விரிசடையாய்” எனத் தொடங்கும் பாட்டினையும் திரு. பண்டிதமணியவர்கள் நெக்குருகி எடுத்து விளக்கிய திறமையைக் கண்டு வியந்தவர்கள் பலர்.

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெனைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்கபொற் கிண்ண மென்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்

என்ற பகுதியை எடுத்து அவர் விளக்கிய விளக்கம் இன்னும் என் உள்ளத்தினுள் பதிந்து கிடக்கின்றது. “கடவுளே நின்னை அரியவன் என்று நான் மதிக்கவில்லை. இங்கு என்னுடன் நீ எப்பொழுதும் இருக்கின்றாய் என்வே மதிக்கிறேன்” என்ற கருத்தினைத் தெரிவிக்கக் கருதிய மாணிக்கவாசகர் நல்லதோர் உவமையை எடுத்தாண்டார் என்றும், “மழக்கை இலங்கு பொற்கிண்னம்” என்ற அவ்வுவமை சிந்திக்கத்தக்கது என்றும் அவர் அடிக்கடி எடுத்துக்காட்டியதுண்டு. குழந்தையினுடைய கையில் விளங்குகின்ற பொற்கிண்ணத்தைப் போலக் கடவுள் இருக்கின்றார் என்றால், அதன் கருத்து இன்னது என்று பெரும் பேராசிரியர் கதிரேசன் செட்டியார் விளக்கிய நயம் சிந்திக்கத்தக்கது. அழுகின்ற குழந்தை அழாமல் இருப்பதற்காக அதன் கையில் பொற்கிண்ணத்தைத் தாய் கொடுத்துவிடக், குழந்தை கிண்ணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இப்படியும் அப்படியும் அசைந்து நடமாடுகின்றபொழுது பொற்கிண்ணம் கீழே விழுந்துவிட்டால் உடைந்துபோய்விடுமோ என்று அஞ்சித் தாயார் குழந்தையின் கூடவே நடந்து செல்லுகின்ற வழக்கத்தை எடுத்துக்காட்டி அவர் பொருத்தியிள்ள விதம் சிந்திக்கத்தக்கது. குழந்தை கிண்ணத்தின் பெருமையை அறியாதது போல ஆன்மாக்கள் கடவுளின் பெருமையை அறியாது இருத்தல் உண்டு என்றும், கடவுள் ஆன்மாக்களைத் திரும்பவும் பாதுகாக்கும் பொருட்டு ஆன்மா செல்லும் இடமெல்லாம் உடன் வந்து பாதுகாக்கின்றார் என்றும் அவர் அன்று காட்டிய செய்தி இன்றும் என் உள்ளத்தினின்று நீங்காது அமைந்துகிடக்கிறது. இதற்கு மாறாக மணிக்கவாசகர் தம்முடைய கையிலே உள்ள ஒரு கிண்ணத்தைப் போலத் தமது உடைமையாகக் கடவுளை மதிக்கிறார் என்று எவரேனும் அதற்குப் பொருள் செய்தால், அது பொருந்தாது என்பதைப் பண்டிதமணி அவர்கள் எடுத்துக்காட்டியதுண்டு. மழக்கை என்றபோது தம்முடைய இளைய மெல்லிய கையினை மாணிக்கவாசகர் குறித்தார் என்று கூறுவது பொருத்தமில்லை என்றும் அவர்கள் எடுத்துக்காட்டியதுண்டு.

நீத்தல் விண்ணப்பத்தில் வரும் “இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதி கண்டாய்” என்ற இடத்தில் வரும் “இருதலைக் கொள்ளி எறும்பு” என்பதற்குப் பண்டிதமணி அவர்கள் தந்த விளக்கம் நினைவுகூர்ந்து பாராட்டத்தக்கது. இரண்டு பக்கத்திலும் நெருப்பு இருக்கின்ற கொள்ளிக்கட்டையில் தாவுகின்ற எறும்பு போல ஆன்மா இருக்கிறது என்று பொதுவாகக் கூறுவது பொருந்தாது என்றும் உள்ளே புழையினையுடைய ஒரு தீக்கோலின் இரண்டு பக்கங்களிலும் தீப்பற்றிக்கொண்டு இருக்கிற பொழுது, ஓர் எறும்பு உள்ளே அகப்பட்டால் எவ்வாறு வாடி வருத்தப்படுகிறது எனக் கூறுதல் வேண்டுமென்றும் அவர் கூறிவந்தவை நினைவிற்கு வருகின்றன. இரண்டு பக்கங்களிலும் நெருப்பு உள்ள குச்சி ஒன்றின் மீது எறும்பு இருந்தால், இரண்டு பக்கத்திலும் போகமுடியாமல் தவிக்கும் என்றாலும், இரண்டு மூலைக்கும் போகாமல் நடுவிடத்தின் ஓரத்திலிருந்து எவ்வாறாவது குதித்துத் தப்பித்துக்கொள்ளுதல் முடியும், ஆனதால் இதனை விளக்கவே “கொள்ளியின் உள் எறும்பு” என மாணிக்கவாசகர் கூறினார் என அழகுபட அவர் எடுத்துக்காட்டியதை ஆராய்ச்சியாளர்கள் பலர் 1930-31 ஆம் ஆண்டுகளில் மகிழ்ந்து பாராட்டிய பாராட்டுக்கள் இன்றும் என் நினைவில் உள்ளது.

பண்டிதமணி கதிரேசன் செட்டியாரைப் பிறகு 1934–ஆம் ஆண்டில் என்னுடைய நேர்முக ஆசிரியராகப் பெறக்கூடிய வாய்ப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கிட்டிற்று. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் பேராசிரியராக இருந்த பொழுது, நான் 1933 முதல் 1935 வரை அப்பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. பட்டப்படிப்பிற்காகப் படித்துக்கொண்டிருந்த அன்று பண்டிதமணி அவர்கள் எனக்குச் சிலப்பதிகாரத்தையும், அகநானூற்றையும் சிறப்பாகக் கற்பித்தார்கள். அப்பொழுது பாடமாக இருந்த சிலப்பதிகாரப் பகுதி அடியார்க்கு நல்லார் உரையில்லாத வஞ்சிக்காண்டமேயாகும். அதற்கு அரும்பத உரையாசிரியர் உரை மாத்திரம் உள்ளது. அரிய சொற்கள் சிலவற்றின் விளக்கம் மாத்திரம் அவ்வுரையில் உண்டு. ஆனால் புகார்க்காண்டத்திற்கும் மதுரைக் காண்டத்திற்கும் உள்ள உரைகள் இரண்டு. ஒன்று அடியார்க்கு நல்லாருடைய விளக்கமான உரை, மற்றொன்று பழைய உரையாசிரியராகிய அரும்பதவுரை ஆசிரியர் உரை. அடியார்க்கு நல்லார் உரை வஞ்சிக்காண்டத்திற்குக் கிடைக்கப் பெற்றிருந்தால், எத்துணை மகிழ்ச்சியுற்றிருப்போமோ அத்துணை மகிழ்ச்சி உண்டாகும்படி பண்டிதமணி அவர்கள் வஞ்சிக்காண்டத்திற்கு உரை தந்து படிப்பித்தார்கள்.

கற்றீண்டி வந்த புதப்புனன் மற்றையார்
உற்றாடி னோந்தோழி நெஞ்சன்றே

எனவுள்ள குன்றக்குரவை அடிகளுக்கு உரைகாண இடர்ப்பட்ட அறிஞர்கள் நிரம்பியகாலத்தில், திரு. கதிரேசன் செட்டியார் அவர்கள் தக்கதோர் உரை கண்டார்கள். தோழி ஒருத்தி “தலைவனுடைய நாடு அல்லாத நாடு ஒன்றனுள் உள்ள மலையைத் தீண்டித் தண்ணீர் வந்த போது, அதனுள் நம் உறவினர் அல்லாதார் பொருத்தி நீராடினால் நம் நெஞ்சம் நடுங்கும் அன்றோ தோழி” என்றவாறு பொருத்திப் பொருள் கண்ட பெருமை பண்டிதமணியாரைச் சாரும். சிலர் மற்றையார் உற்றாடினோம் தோழி நெஞ்சன்றே என்றவாறு பிரித்துப் பொருள் கொள்ளமாட்டாது இடர்ப்பட்ட நிலையில், பண்டிதமணி அவர்கள் “உற்றாடின் நோம் தோழி நெஞ்சு” என்றவாறு பிரித்த அரும்பத உரைகாரர் உரையொடும் நூலாசிரியர் கருத்தொடும் பொருந்துமாறு பொருள் செய்தார்கள் என்பதை என் போன்ற மாணவர் சிலர் இன்றும் மீண்டும் மீண்டும் கூறி மகிழ்வது உண்டு.

செங்குட்டுவன் வடநாட்டு மன்னருடைய காவா நாவினை அடக்குவதற்காகப் போரொடு சென்ற பொழுது, அவன் முன்னரே சிவபிரானை வணங்கியுள்ள காரணத்தால் திருமால் கோயிற் சேடங்களைத் தோளில் தாங்கிச் சென்றான் என்று வருகின்ற இடத்தில், சிவனுக்குப் பெருமை கொடுத்திருப்பது காரணமாக அப்பகுதியைச் சுவைத்துச் சுவைத்துக் கற்பிக்கின்ற மரபு உடையவராகப் பெரும் பேராசிரியர் இருந்தார். அவரால் இயன்ற பொழுதெல்லாம் தேர்வுகளில் அப்பகுதியில் வினா அமைத்துவிடுவது அவருடைய மரபாக இருந்து வந்தது. வாழ்த்துக் காதையில் தேவந்தி சொல்வதாகவும் தோழி சொல்வதாகவும் வருகின்ற பகுதிகளை அவர்கள் உளம் உருகிப்படிப்பித்த நிலை என் போன்றவரால் இன்றும் உன்னத்தக்கதாக உள்ளது. இக்காதையில் ஈற்றில் வரும்:

நீணில மன்னர் நெடுவிற் பொறையன்நற்
றாடொழார் வாழ்த்தல் தமக்கரிது – சூழொளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடூழி
செங்குட் டுவன்வாழ்க வென்று

என்ற செய்யுட்கு மிகவும் பொருத்தமான உரை பண்டிதமணி அவர்கள் ஒருவராலேயே கூறப்பட்டது என்று சொல்வது புனைந்துரையாகமாட்டாது. உலகில் உள்ள ஏனைய மன்னர்கள் செங்குட்டுவனுடைய நற்றாளைத் தொழாமல் அவனை வாழ்த்துதல் அரிதென்றும், கண்ணகி ஒருத்தி மட்டும் அவ்வாறு அவன் தாளைத் தொழாமல் “வாழ்க”என்று அவனை வாழ்த்தினாள் என்றும் அவர்கள் எடுத்துக்காட்டினார்கள்.

பொதுவாக, அவர் பாடம் சொல்லும் மரபு ஆசிரியர் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதொன்றாகும். தாம் கற்பிக்க எடுத்துக் கொண்டிருக்கும் பாடப்பகுதியைக் கவனமாக வீட்டில் ஒருமுறைக்கு நான்கு முறை அவர் படித்து, ஐயம் திரிபுகள் அற அறிந்து கொண்டுதான் வகுப்பிற்கு வருவது வழக்கம். மாணவர்களுக்கு உண்டாகக் கூடிய ஐயங்கள் எவை என முன்கூட்டியே எதிர்பார்த்து, அவ்வையங்களைக் களைதற்குச் செம்மைப்படுத்திக்கொண்டு வருவது அவரது வழக்கம். அன்றியும், அவரால் எதிர்பார்க்கப்படாத பல ஐயங்களை மாணவர்கள் திடும் என எழுப்பினால் அவற்றிற்கு விடை கூறுவதில் அவர் தயங்கவே மாட்டர். எனினும் ஒரு செய்யுட்பகுதிக்குப் பொருள் கூறும் பொழுது, அதற்குரிய நேர்பொருளை உடனே தெரிவித்துவிடாமல், மற்றவர்கள் கருதக்கூடிய பொருள்களைச் சொல்லி அவை எவ்வாறு கொள்ளத்தக்கவை அல்ல என்று குறிப்பிட்டுத் தக்கவுரை காணவேண்டும் என்பதன் கண்ணே மாணவர்களுக்கு ஆர்வத்தை எழுப்பிவிட்டுப் பிறகு தக்க பொருளைத் தம் மதி நலத்தாற் கண்டு கூறும் பெற்றியுடையவர் என் ஆசிரியர் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

அவருடைய மற்றோர் இயல்பு பல சங்கச் செய்யுட்களிலிருந்து ஒத்த மேற்கோள்கள் தருதல் என்பதும், இலக்கண நயம் எடுத்துரைத்தல் என்பதும் இன்முகத்தோடு தாம் கூறக்கருதும் கருத்துக்களைக் கூறுதல் என்பதுமாம். ஒருமுறை, எங்கள் வகுப்பிற்கு வந்தபொழுது, “இவ்வகுப்பிற்கு வருதல் என்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. அதற்கு முக்கிய காரணம் திரு. அ. சிதம்பரநாதன் போன்றவர்களுடைய நுண்மாண் நுழைபுலமும் உள்ளக்கிளர்ச்சியும், மன எழுச்சியும் ஆகும்” என்று குறிப்பிட்டார்கள்.

தமிழ்ச் சிறப்பு வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் பண்டிதமணி அவர்கள் அக்காலத்தில் பேராசிரியர் நிலையில் இல்லை யெனினும், விரிவுரையாளராகத்தான் இருந்தார் எனினும், அவர்களிடத்து மிக்க பெருமதிப்பு வைத்திருந்தோம். அதற்குச் சிறந்த காரணம் ஆற்றின் ஊற்றலிலிருந்து நீர் சுரப்பது போல அவருடைய உள்ளத்திலிருந்து ஊறி ஊறி வந்த இன்னுரைகள். அவ்வமிழ்தத்தை மாந்துதற்குக் காத்திருந்த சிறப்பு வகுப்பு மாணவர்கள் பலர் இன்று கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப்பேராசிரியர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மாணவர்களோடு ஆசிரியர் என்ற முறையிலே மட்டும் பழகாமல், மாணவர்களுள் ஒருவரைப் போலத் தம்மைச் சிலவேளைகளில் அமைத்துக்கொண்டு அளவளாவுதல் உண்டு. இது மேல் நாட்டு மேலைமொழி ஆசிரியர்களின் கைவந்த திறம் என்பார்கள். அது அவ்வாசிரியர்மாட்டுக் காணப்பட்டமையின் மாணவர்களுடைய உள்ளங்கள் எல்லாம் அவர்பால் வலிய இழுக்கப்பட்டன. அக்காரணத்தால் மாணவர்களுடைய பேரன்பிற்குப் பண்டிதமணியார் உரியவர் ஆகி, மாணவர்களிடத்திலும் பேரன்பு காட்டுவாராயினர். பல் இல்லாத வாயினால் அவர்கள் சிரித்தாலும்கூட, அச்சிரிப்பிலே ஓர் அழகும் பொலிவும் இருத்தல்கண்டு மாணவர்கள் மகிழ்வது உண்டு. அவரிடம் மாணவராய் இருந்த எவரும் வாழ்க்கையில் தாமாகப் பிறகு இலக்கியச்சுவை பெற முயலாமல் இருத்தல் அரியதொன்று என்றே கூறுதல் வேண்டும்.

அவர் தண்டு ஊன்றிய கையினராய்த் தளர்ந்த நடையினராய் வகுப்பினுள் நுழைதற்குச் சிறிது நேரம் ஆகும் எனினும், மாணவர்கள் அனைவரும் அவர் வருதலைச் சாளரத்தின் வழியே அறிந்துகொண்டு முன்னரே தாமாக எழுந்து நின்று அவரை வகுப்புகளில் வரவேற்பது வழக்கம். இத்தகைய மதிப்பு மாணவரை மருட்டி உருட்டி அவரால் வாங்கிக்கொள்ளப்பட்டதொரு மதிப்பன்று; மாணவர்கள் தாமே விருப்பத்தோடு அவர் அறிவிற்கும் அன்பிற்கும் தந்த மதிப்பு என்று கூறாதிருத்தல் இயலாது. அவரிடம் பன்னிரண்டு மாதங்கள்தான் நான் படிக்கக்கூடிய வாய்ப்புப்பெற்றிருந்தேனாயினும் என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவரை என் உள்ளம் கவர்ந்த ஆசிரியராக மதிப்பேன் என்பது உறுதி.

1935-இல் நான் எம். ஏ. பட்டம் பெற்றுப் பிற்பாடு அப்பல்கலைக் கழகத்திலேயே பேரசிரியர்-நாவலர்–சோமசுந்தர பாரதியாரொடும், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரொடும் உடனுறைந்த தமிழ்த்துறையில் அவருக்கு உதவியாளனாக இருந்து பணியாற்றக்கூடிய பேறு எய்தினேன். 1946–இல் நான் அப்பல்கலைக் கழகத்துப் பேராசிரியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றத் தொடங்கிய பிற்பாடு ஓரிரண்டு மாதங்கள் பண்டிதமணி அவர்கள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக விலகிக்கொண்டார். விலகிக்கொள்வதற்கு முன்னால் என் அறைக்கு வந்து என்னிடம் அரைமணி நேரம் உரையாடி உறவுகாட்டிப் பிரியா விடைகொண்டு சென்றார். அதனை நினைக்குந்தோறும் இன்னும் என் உள்ளம் உருகுகின்றது. 1948–இல் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துணைவேந்தராகச் சில மாதங்கள் பணியாற்றுமாறு ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது பண்டிதமணியவர்கள் என்னைப் பாராட்டி வாழ்த்தியருளினார்கள். ஒரு முறை, கொப்பனாபட்டி மகளிர் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவில் தலைமை தாங்குவதற்கு நான் சென்ற காலை, அவர்களுடைய ஊராகிய மகிபாலன்பட்டியில் பண்டிதமணி அவர்களை அவர்களுடைய இல்லத்தின்கண்ணே கண்டு என் வணக்கத்தைத் தெரிவித்து வருவதற்கு வாய்ப்புப் பெற்றேன். அன்றும் பண்டேபோல என்பால் அன்பு காட்டி உருகிய அவர்களுடைய உள்ளமும் என் உள்ளமும் ஒன்று கலந்தன. இவ்வாறு ஆசிரியர் மாணவரிடத்துத் தொடர்பு உண்டாகுமேயானால், மாணவரும் ஆசிரியரும் உறையும் பல்கலைக்கழகங்களால் விளையவேண்டிய நற்பயன் விளைந்ததாகுமன்றோ என்று சில வேளைகளில் நான் எண்ணுவதுண்டு.

1941–இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பண்டிதமணி அவர்கள் விலகிக்கொண்டு ஊருக்குப் போதற்குமுன்னால் ஆசிரியர்கள் கூட்டம் ஒன்றில் அவர்கள் சொல்லிய சொற்களின் நயம் இன்றும் தோற்றுகிறது. “இப்பல்கலைக்கழகத்தில் நான் மூன்று துணைவேந்தர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் முறையே சர். எஸ். ஈ. அரங்கநாதன், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார், சர். கே. வி. ரெட்டி ஆகியவர். இவ்மூவரும் என்னைப் பொறுத்தவரையில் மும்மூர்த்திகள். முதலாமவர் என்னை ஆக்கினார்; இரண்டாமவர் என்னை அளித்தார்; மூன்றாமவர் காலத்தில் இப்பல்கலைக்கழகத்திலிருந்து நீங்கிப்போகிறேன்” என்றார். அன்று தம்மைச் சங்காரமூர்த்தி ஆக்கிவிட்டாரே என்று சர். கே. வி. ரெட்டியார் அவர்கள் நினைந்து நினைந்து உருகி, மீண்டும் வேலைக்கு அவரை வரவழைத்துக்கொள்ளுதற்கு முயன்றார். அம்முயற்சியின் பயனாகப் பண்டிதமணி பல்கலைக்கழக வேலைக்கு ஓராண்டு கழித்து அழைக்கப்பட்டார். அப்பொழுதுதான் அவர் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவராக இருந்தபோது கௌடிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

பண்டிதமணி அவர்கள் தமிழில் புலமையுற்றிருந்த அளவு வடமொழியிலும் சிறந்த புலமை எய்தி இருந்தமையால், அவரால் பற்பல வடமொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்டன. அவற்றுள் தலையாயதும், நல்ல தமிழ்மணம் உடையதும், மொழிபெயர்ப்பெனத் தோன்றாததும் ஆகிய “மண்ணியல் சிறுதேர்” என்னும் நாடகம் ஒன்று. மிருச்சகடிகா என்ற வடமொழி நாடகத்தைத் தமிழ்ப்படுத்தி, அரிய முகவுறையோடு அதனைத் தமிழகத்திற்கு அளித்த பெருமை பண்டிதமணியாருக்கு உரியது. சிலப்பதிகாரத்திற்கும் மண்ணியல் சிறுதேருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டுவது உண்டு. அம்மொழிபெயர்ப்பினைப் பற்றி நான் 1936–இல் “தமிழ்ப்பொழி”லில் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி மதிப்புரையைப் படித்து சுவைத்து மகழ்ந்து, என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார்கள்.

பண்டிதமணி நகைச்சுவை தோன்றப்பேசும் இயல்பினர். ஒரு நாள் ஒருவர் வீட்டில் அவர்க்குக் குடிப்பதற்குப் பால் கொடுத்தார்கள் என்றும், அதனுள் ஓர் எறும்பு விழுந்து கிடந்தது என்றும், எறும்பு கிடக்கிறது என்று கூறுவதற்குப் பதிலாகத் தாம் “பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொள்ளுகிறன்” என்று கூறினதுண்டு என்றும் அவர் என் போன்றவரிடம் சொல்லியுள்ளார்கள். ஒருநாள், பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் தலைமை தாங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் மகளிர் தங்களுக்குள்ளே ஏதேதோ பேசி ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். அதனைத் தாங்கமாட்டாத பண்டிதமணி “அவர்கள் பெண்மணிகள் அல்லவா! மணிகள் ஒலித்துக்கொண்டு தானே இருக்கும்!” என்று குறும்பாகக் கூறினார். அதனைக் கேட்டவுடன் மகளிர் பேசாமல் அடங்கிவிட்டனர்.

அவர் இன்னொரு செய்தி எங்களிடம் சொல்லுவதுண்டு. அதை ஒரு கதை போலவும், தாம் காண்பது கனவுபோலவும் கூறுவது வழக்கம். அஃதாவது, அவர் கடவுளை நோக்கி ஏதோ ஒரு வரம் வேண்டி உறங்கிக்கொண்டிருந்ததாகவும், அப்பொழுது கடவுள் அவருடைய கனவில் தோன்றி “உமக்குத் தந்தம் போம்” என்று கூறியதாகவும், மறு நாள் பார்த்தால் இருந்த பல் கூடப் போய்விட்டதாகவும் பலரும் நகைக்கும்படி கூறுவது உண்டு. தாம் பற்கள் இழந்துள்ள நிலையை வைத்து, அதை ஒரு பெருங்குறையாக மதிக்காமல், அது காரணமாகவே பிறரை மகிழ்விக்கும் பெற்றியாளராயிருந்தார் பண்டிதமணி என்பதை உற்று நோக்கினால், எவ்வளவு சிறந்த உவகையர் அவர் என்பது புலப்படும். தொல்காப்பியர் “உவகையெல்லாம் அல்லல் நீத்தனவாக இருக்க வேண்டும்” என்றார். அவர் கூறியது பிறர்க்குத் துயரம் தருவதாக இருக்கும் உவகை, தக்க உவகை என மதிக்கும் தன்மையதன்று என்பது. பண்டிதமணி பிறர்க்கு அல்லல் வாராமல், தமக்குச் சிறிது அல்லல் வந்தாலும் குற்றம் இல்லை என்று கருதி இவ்வாறு பன்முறை உடன் இருந்தவர்களுக்கு உவகை ஊட்டியது உண்டு.

திருவள்ளுவர் கூறிய ஓர் அருமையான திருக்குறளுக்கு முற்றிலும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள், “நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும், பண்புடையாளர் தொடர்பு” என்றார் திருவள்ளுவர். அவர் காலத்தில் நூல்களின் நயத்தை அறிந்து அறிந்து துய்த்தவர்கள் பலர் போலும். அதனால் அதனை உவமையில் வைத்துப் பயில்தொறும் பண்புடையாளர் நட்புப் பெருகும் என்றார். நவிலுந்தொறும் நவிலுந்தொறும் நூல், நயம் பல பயக்கும் என்பது பண்டிதமணி அவர்கள் எடுத்துக்காட்டிய நயங்களிலிருந்து விளங்கிற்று, பயிலுந்தொறும் பயிலுந்தொறும் பண்புடையாளர் தொடர்பு இனிக்கும் என்பது அவர்களுடைய தொடர்பினால் என் போன்றோர்க்கு நன்கு விளங்கிற்று. பிறர் உவக்கும்படி பிறரொடு கூடி, இவ்வறிஞர் நம்மிடமிருந்து பிரிந்து போகின்றாரே எனப் பிறர் கருதி உளம் நையும்படி பிரிந்து செல்லும் இயல்பினராகப் பண்டிதமணி அவர்கள் இருந்தார்கள். அதனால்,

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

என்ற திருக்குறளிற்கு இலக்கியமாக விளங்கியவர் அம் முதுபெரும் புலவர் என்பது விளங்கும்.

அப்பெரியாரொடு தொடர்புகொண்ட மாணவர்களும் அறிஞர்களும், பிறரும் களங்கமில் மகிழ்ச்சி கொள்ளுதற்கு உரியவராக வாழ்ந்த பெருமை பண்டிதமணி அவர்களுடையது. அவர்களது நினைவு நாட்டில் நெடுங்காலம் நிலைத்திருப்பதாகுக!

– வளரும்

Leave a comment