மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்களைப் பற்றியும் அவரது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளைப்பற்றியும், படைப்புக்கள் சிலவற்றையும் இணையதளத்தில் பகிர்ந்துகொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
பண்டிதமணி அவர்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், விசு ஆண்டு புரட்டாசித் திங்கள் இரண்டாம் நாள் {16 – 10 – 1881} வெள்ளிக்கிழமையன்று பிறந்தார்.
பண்டிதமணி மிகச் சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் தாக்குண்டு அதன் காரணமாக வெளியே எங்கும் செல்ல இயலாத நிலையில் இருந்தார். கல்வி கற்கும்போது ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்கவும், மேலும் கல்வி கற்பதற்கும் அறிவிற் சிறந்த சான்றோர் அவருடைய கிராமத்தில் யாரும் இலர். வெளியூர் செல்வதற்கும் அவருடைய உடல் நிலை இடம் தரவில்லை. மேலும் அதற்குரிய வசதியும் அவரிடம் இல்லை. இருப்பினும், கல்வி கற்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் அவர் தாமே சில நூல்களை ஊன்றிப்படித்தார். இந்நிலையில் அவர் செல்வர் ஒருவரின் நட்பைப் பெற்று, அவர் உதவியுடன் ஒரு சபையை ஆரம்பித்து, அதற்குச் சன்மார்க்க சபை எனப் பெயரிட்டு, அக்காலத்தில் மிகச் சிறப்புடன் விளங்கிய தமிழ்ச் சான்றோர்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து நட்புப் பாராட்டி அவர்களைச் சொற்பொழிவாற்றச் செய்தார். இதனால் பண்டிதமணியின் புகழ் பரவியது. ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவர்க்கு மட்டுமே உரியது.
மனவுறுதியும், விடாமுயற்சியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர் நிலையை அடையமுடியும் என்பதற்குப் பண்டிதமணி கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்.
& – வளரும்
பத்தரெலாம் பாராட்டும் பண்டித மாமணி நீ
அத்தன் திருவடிக்கா ளாயினையோ – நித்தமவர்
கற்றுக் களிக்கும் கதிர்மணி நல்விளக்கம்
முற்றுப் பெறுவதன் முன்.
வையமெலாம் போற்று திரு வாசகத்தின் மெய்ப்பொருளை
ஐயமறக் கண்டின் றடைந்தனையோ – செய்யதமிழ்
மன்றத் தறிஞர் மணியாய் ஒளிவீசி
நின்ற கதிரேசா நீ.
என்று வருவான் எமனென் றெதிர்னோக்கி
நின்று தளர்கின்றேன் நித்தமுமே – மன்றில்
நடங்கண்ட ஈசன் நடராசன் பாதத்
திடங்கண்டு வைநீ எனக்கு.
செந்தமிழ்ச் செல்வம் சிறந்து வளர்ந்துவரச்
சிந்தைமகிழ் பன்னூல்கள் செய்தளித்து முத்துபுகழ்
பூண்ட கதிரேசப் புலவர் பெருமானை
யாண்டுநாம் காண்போம் இனி.
—— கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை