பி ர தா ப ரு த் தி ரீ ய ம்
நூலறிமுகம்
மகாமகோபாத்யாய முதுபெரும்புலவர் பண்டிதமணி மு.கதிரேசனார் அவர்கள் தமிழ், வடமொழி நுண்கலைஞர். தாம் கற்றின்புற்ற வடமொழி நூல்களிற் சிறந்த நூல்களை மொழிபெயர்த்து, நந்தமிழர்க்கு வழங்குதல் வேண்டும் என எண்ணினார். வடமொழி அறிவால் இருமொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பண்டிதமணி நன்றாக உணர்ந்தவர்கள். மேலைச்சிவபுரி சன்மார்க்கசபையின் ஆதரவில் இவர்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. வடமொழியில் சிறந்த நாடக நூலாகிய மிருச்சகடிகம் என்னும் நூலைத் தமிழில் மண்ணியல் சிறு தேர் என்னும் பெயரானே மொழிபெயர்த்தார்கள். மேலும் கெளடில்ய அர்த்தசாஸ்திரம், சுக்கிர நீதி, சுலோசனை, உதயணசரிதம், பிரதாபருத்திரீயம், மாலதீ மாதவம் என்னும் ஏனைய நூல்களையும் பொருள் பெயராது, மிகச்சிறந்த முறையில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள்.
நம் பண்டிதமணி அவர்களின் மொழிபெயர்ப்புப் பற்றி திரு. பொ. வே. சோமசுந்தரனார் கூறும்போது :
“வட மொழியிற் சிறந்த நாடக நூலாகிய மிருச்சகடிகம் என்னும் நூலை மண்ணியல் சிறு தேர் என்னும் பெயரானே மொழிபெயர்த்தார்கள். இந்நூல் இடையிடையே செய்யுள் விரவப்பட்ட உரைநடை நூலாக வடமொழிக்கண் உள்ளது. அவ்வடமொழிக்கண் உள்ளபடியே, தமிழில் உரையை உரையாகவும், செய்யுளைச் செய்யுளாகவும் இவர்கள் மொழிபெயர்த்துள்ளனர். ஒரு மொழியிலுள்ள செய்யுளைப் பிறிதோர் மொழியில் செய்யுளாகவே மொழிபெயர்ப்பது மிகவும் செயற்கருஞ் செயலாகும். எற்றாலெனின், செய்யுள்கள் எதுகை மோனை முதலியவற்றை உடையனவன்றோ, இவ் வெதுகைக்கேனும், மோனைக்கேனும், இன்னுஞ்சீருக்கேனும், சொற்கள் தேர்ந்தமைக்குங்கால் முதனூற் செய்யுளிலில்லாத பொருளுடைய சொற்களைச் சேர்த்தல் அல்லது முதனூற் செய்யுளிலுள்ள பொருளை நழுவவிடுதல் முதலிய செயல்கள் இன்றியமையாதனவாகிவிடும்.
நம் பண்டிதமணியவர்களோ தம்முடைய ஒப்பற்ற புலமை யாற்றலாலே முதனூற் செயுட்களிலுள்ள பொருள்கள் குறையாமலும், மிகாமலும், தமிழ்ச் செய்யுளின் எதுகை மோனை சீர் முதலிய நயங்கள் குன்றாமலும், வடநூற் செய்யுட்பகுதியைச் செந்தமிழ்ச் செய்யுளாகவே மொழிபெயர்த்துள்ளார்கள். இவ் வருமையை உணர்ந்த இருமொழிப்புலவர் பலர் நம் பண்டிதமணியவர்களைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மேலும், ராமேச்சுரம் வடமொழிக் கல்லூரித் தலைவராயிருந்த சுப்பிரமணிய ஐயர் என்னும் வடமொழிவாணர், ‘வடமொழியில் தெளிவு குன்றிக்கிடக்கும் சில இடங்களில் இத் தமிழ் மொழிபெயர்ப்பு, தெளிவு மலிந்து காணப்படுகின்றது. இவ்வாற்றால் இது முதனூலினும் மேம்பாடுடையதாகக் கருதற்பாலது’ என்று புகழ்ந்துள்ளார்கள்”.
மேற்கூறிய மொழிபெயர்ப்பு நூல்களில் பிரதாபருத்திரீயம், மாலதீ மாதவம் என்னும் இரண்டு நூல்களும் அச்சேறவில்லை. இதைத்தவிர ஏனைய நூல்கள் அச்சேறி வெளிவந்துள்ளன.
பிரதாபருத்திரீயம், மாலதீ மாதவம் இரண்டுமே நாடக நூல்கள்தான் என்றாலும் பிரதாபருத்திரீயம் அணியிலக்கணம் சார்ந்த, பிரதாபருத்திரன் என்னும் வேந்தனது கீர்த்தியை விளக்கமாகச் சொல்லும் நூல்.
14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தெலுங்கு தேசத்தவரான வித்யாநாதர் என்ற வடமொழிப்புலவர் வடமொழியில் எழுதிய பிரதாபருத்திர யாசோ பூஷனா என்கிற இந்நூல், அணியிலக்கணமாயினும் உலகுயர் குணத்தவராய பிரதாபருத்திரன் என்னும் வேந்தனைத் தலைவனாகக் கொண்டு, எடுத்துக்காட்டொவ்வொன்றினும் அவரது புகழையே விதந்து கூறியும் இத்தலைவன் பெயர்துலங்க இந்நூற்குப் பிரதாபருத்திரீயம் எனப் பெயர் ஈந்து மொழிபெயர்த்தனர்..
1924-இல் “சுலோசனை”, “உதயண சரிதம்” ஆகிய இரண்டு நூட்களும் சன்மார்க்கசபையால் வெளிவரப்பெற்றது. அதன் பிறகு 1926-இல் “சுக்கிர நீதி” யும், 1933-இல் “மண்ணியல் சிறு தேர்” என்கிற நூலும் வெளிவந்தது. 1934-இல் பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியரானார். எனவே இந்த இடைப்பட்டக் காலத்தில்தான் (1924 -1933) “பிரதாபருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” ஆகிய இரண்டு நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதிருந்த தமிழறிஞர்களும் பண்டிதமணியின் நண்பர்களும் அவ்விரண்டு நூல்களும் விரைவில் வெளிவர வேண்டுமென பண்டிதமணியை வலியுறுத்தினர். இவ்விரு நூல்களும் விரைவில் அச்சாகித் தமிழர்கள் கையில் தவழ வேண்டுமென்று அவர்களுடைய தலைமாணாக்கராகிய டாக்டர். வ. சு. ப. மாணிக்கம் அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.
ஆனால் என்ன காரணத்தாலோ இவ்விரண்டு நூல்களும் வெளிவரவில்லை. காரணமறிந்தவர்கள் யாரும் இப்பொழுது இலர். பண்டிதமணியவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஏறத்தாழ 25, 30 ஆண்டுகள் இவ்விரண்டு நூல்களும் வெளிவராமல் கையெழுத்துப்படியாகவே பண்டிதமணியின் கையிலேயே இருந்து வந்திருக்கின்றன. இவை இரண்டில் “பிரதாபருத்திரீயம்” என்னும் இந்நூல் வெளிவராததிற்குக் காரணம் ஆராய்ந்தபோது எங்களுக்குத் தோன்றிய எண்ணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
பிரதாபருத்திரீயத்தின் முதனூலாகிய “பிரதாபருத்திர யாசோ பூஷனா” வடமொழியாலானது. இந்நூலை நாம் இணைய தளத்தில் காணலாம். ஆனால் வடமொழி எழுத்திற்குப் பதில் ஆங்கில எழுத்தில் இதனை டிரான்ஸ்லிட்டரேசன் (TRANSLITERATION) செய்திருக்கிறார்கள். இம்முதநூலொடு நம் பண்டிதமணியவர்களின் மொழிபெயர்ப்பாகிய “பிரதாபருத்திரீய”த்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது முதனூலில் உள்ள ஒரு அத்தியாயம் மட்டும் மொழிபெயர்க்கப் படாமலிருப்பது தெரியவந்தது. அந்த அத்தியாயம் இசை சம்பந்தப்பட்டது. எனவே பண்டிதமணியவர்கள் இசை நுணுக்கங்களைத் தெளிந்து பிறகு மொழிபெயர்த்து வெளியிடலா மென்றிருந்திருக்கலாம். இதைத்தவிர வேறு காரணம் ஏதும் புலப்படவில்லை.
சிலப்பதிகாரத்திற்கு மிகச் சிறந்த உரை கண்ட நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் வரலாறு கூறும்போது:
“ … நாட்டாருடைய சிறிய தந்தையார் சொக்கலிங்க நாட்டார் இசைத்துறையில் புலமை வாய்ந்தவர். நாட்டார் இவரிடத்தில் இசைப் பயிற்சி பெற்றுள்ளார். இவரிடத்தில் பெற்ற இசைப் பயிற்சி பிற்காலத்தில் சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதியபோது அரங்கேற்றுக் காதையிலுள்ள இசை நுணுக்கங்களைத் தெளிந்து எழுதுவதற்குத் துணை புரிந்துள்ளது. இதனைச் சிலப்பதிகார உரை நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் காணலாம்” என்று பா. வீரமணி கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது..
எப்படியிருந்தபோதும் பண்டிதமணி அவர்களுடைய இந்நூலினை அப்படியே வெளியிடவேண்டுமென்று நினைத்தோம். எனவே இற்றைக்கு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மொழிபெயர்த்துக் கையெழுத்துப்படியாக வைத்திருந்த “பிரதாபருத்திரீயம்” என்கிற காப்பிய அணியிலக்கண நூலை அறிஞர்பெருமக்களும், தமிழன்பர்களும் படித்து மகிழும் நிமித்தம் இன்று, இணைய தளத்தில் வெளியிடவும் கூட்டுவித்த நல்லூழை நினைந்து இன்புறுகின்றோம்..
பண்டிதமணி அவர்களின் படைப்புக்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கிய தமிழக அரசுக்கு எங்கள் நன்றியறிவைப் புலப்படுத்திக் கொள்வதோடு அன்னாரின் படைப்புக்கள் அனைத்தும் இணைய தளத்தில் வெளிவரவேண்டும் என்கிற எங்களின் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவனியல்
- வித்தைகளாகும்[1] அல்லிமலர்க்கு நிலவும், சுருதி[2]முடிக்குழல்வகுப்பிற்கு நன்முத்தமணியும், கமலத்தோற்குக்காதற்கிழத்தியும், மூவுலகீன்ற அன்னையுமாகிய வாக் தெய்வத்தை வணக்கம்[3] செய்கின்றேன்; அக்கலைமகளது திருவடித்தாமரையைப்பற்றிய[4] வணக்கச் செயல்கள் நல்லோரது கலை தெரிமுறையாம்[5] விதைக்குக்கழனியும், பாநடத்திற்கோர்[6] உயிர் மருந்துமாய் அமைகின்றன.
- யான் முன்னையாசிரியர்களான “பாமகர்” முதலினோர்களை நன்மதிப்புடன் கைகூப்பித்தொழுது அணியிலக்கண[7] முழுப்பொருட் சுருக்கத்தை நன்கியம்புகின்றேன்.[8]
- “காப்பிய அணியிலக்கணச்சுருக்கம்” என்னும் இந்நூல் பிரதாபருத்திரன் என்னும் வேந்தனது கீர்த்தியை விளக்கமாகக் கூறியமையால் அது, நெடிது பயனுடைத்தாயிற்று.[9]
- சுவைச்சிறப்புறுஞ்சொற்பொருட்கள்,[10] குணம், அணி, அமைப்பு[11] இயல்பு[12]மாகிய[13] இவ்வளவினமைந்த காப்பியநடை, நூற்கு நுதலிய பொருள் ஆம்.
- முன்னையாசிரியர், தம் நூல்களில் இக்காப்பிய நடையை நன்கு விளங்கவைத்திருப்பினும் இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டைக்[14] கைக்கொள்ளவில்லை.
- தூய்மைத்தாய புகழினையுடைய பெரியோரது சரித்திரம் எடுத்துக்காடற்குரியது; அத்தகைய பெரியாரொருவரையும், முன்னையாசிரியர்கள் நூற்கு அணிகலனாக்கவில்லை.[15]
- நூற்களும், நூலாசிரியர்களும் முறையே நின்று நிலவற்கும், இசையெய்தற்கும் எடுத்துக்காட்டாகவமைந்த தலைவனது குணங்களை விதந்து கூறல், முதற்காரணமாம்.
இராமனது குணங்களை வன்னித்தல், இராமாயணத்திற்கும் வான்மீகி முனிவர்க்கும் பெரும்புகழ் விளைத்தற் கேதுவாயமைந்ததாகலின் உத்தம புருடரை வன்னித்தலானன்றே நூனிலை நலம்பயப்பதாகும்; எங்ஙனம் வேதம், சாத்திரம், புராணம் முதலியவற்றால் நன்மை நயத்தலும், தீமை திரிதலும் அமையுமோ அங்ஙனமே, உத்தமத் தலைவனை நிலைக்களனாக்கொண்ட காப்பியத்தானுமாம்.
செய்யத்தக்கனவின்ன வென்னும் அறிவு, காப்பியத்தான் எளிதிலமையும்; பிறவற்றால் அங்ஙனம் அன்று; என்னுமிவ்வளவே மாறுபாடுளது. அங்ஙனமே!
- சொற்[16] சிறப்புடைமையான் அரசரை நிகர்த்த வேதத்தின்[17] மிக முயன்று அறியப்படுமொன்றிலும், பொருட்சிறப்புடைமையான் நட்டோரை நிகர்த்த பழ நூற்கிளவியின்[18] விரும்பப்படுமொன்றிலும் காதலியொக்குங்[19] கவினுறுங்காப்பியம், அறிஞர்க்கு இன்பத்தை[20] விளைவித்து நல்லனவற்றில் விருப்பையும், அல்லனவற்றில் வெறுப்பையும் அளிக்கின்றதாகலின் அதனை விரும்புகின்றேன்.[21]
ஆதலிற் காப்பியம் காண்டற்குரிய[22]பயனையும் காண்டற்கரிய பயனையும் பயத்தலான் பெரிது பயன்படுவதாம். அங்ஙனமே காப்பியப் பிரகாசத்தினும் கூறப்பட்டுள்ளது.
“காப்பியம், புகழையும்[23] பொருளையும் அளிக்கும்;
வழக்கையறிவிக்கும்; அமங்கலத்தையழிக்கும்; சிறந்த நல்லின்பத்தை
விரைந்து நயக்கும். காதலியொப்பக் கவின்மொழிக்கூறும்” என்று.
இது, பெருநூல்களிலும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
“அதை விரித்துரைக்கிற்[24] பயன் என்னை? எந்தக் காப்பியப்பனுவல்கள், மனத்தை முற்றிலுங்கவர்கின்றனவோ அவற்றால் நல்லறிவு வளர்கின்றது; புகழ் விளைகின்றது; நற்குணங்கள் விரிந்தெழுகின்றன; பெரியோர்களது சரித்திரங்களும் கேழ்க்கப்படுகின்றன.”
பெரியோரது காதையைக் கூறாதவொரு காப்பியம், விலக்கற்பாலதே; அதனடியாகவன்றே “காப்பியப்பனுவல்களை விலக்கல் வேண்டும்” என்னும் மிருதியும் விளங்குகின்றது. இவ்வொழுங்கு, காப்பியத்திற்கு மாத்திரமேயன்றிச் சாத்திரக்குழாத்திற்குமாம்; அவைதாம், சீரிய தலைவனை யெய்தியமையான் உலக நன் மதிப்பை யெய்துகின்றன.
அங்ஙனமே வைசேடிகம் முதலியனவும் கடவுளை நிலவ நிறுத்தலான் உலகம் போற்று நிலையில் அமைகின்றன. மகாபாரதம் முதலியனவும், உத்தமபுருடரை வன்னித்தலின் வயத்தனவாகலின் யாவற்றினுந் தலைசிறந்து நிற்கின்றன. விரித்துரைக்கிலென்? வேதாந்தங்களும் பிரமத்தை விரித்துரைக்கின்றமையான் மிக்கச் சிறக்கின்றன.
“பின்னர் அறத்தையறிய விரும்பு” எனத் தொடங்குஞ் சூத்திரக்காரராகிய சைமுனி முனிவரரும், புருடரைப்பற்றியதும் குணங்களுட் சிறந்ததுமாகிய அறத்தையறிய விரும்பும் வாயிலாகச் சிறந்தோர் குணத்தைப் புனைந்துரைத்தலே நூற்கு உயிரெனத் துணிந்தனர்; இப்பெருநூல் அவ்வந்நியாயங்களை விரித்து விளக்குவதொன்றாயினும், அதற்குச் சிறந்தோர் குணத்தைப் புனைந்து கூறல், பொன்மலர்க்கு நறுமணம் போலாம்; ஆதலினன்றே!
9. பெரியீர்! பிரதாபருத்திரதேவனது குணங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்ட இவ்வணியிலக்கண நூல் உங்கள் செவிக்கு இன்பத்தை விளைக்க.
10. வித்தியாநாதனது இந்நூல், “காகதீய[25] நரேந்திரன்” என்னும் (பிரதாபருத்திரன்) அரசனது புகழை யணிப்படுத்தற்குச் செய்யப்பட, அவ்வரசனது புகழாற்றானும்[26]அணிப்படுத்தப்பட்டது.
அங்ஙனமே தண்டியாசிரியரும் கூறியுள்ளார்.
“முன்னையாசிரியர்களது[27] புகழ்ப்படிவம், (கவிகளின்) பனுவற்படிமத்தையெய்தி, அவ்வரசர்கள் அருகில் இல்லாத வழியும் தான் மறைவதில்லை; (என்னுமிவ்வுண்மையை)க் காண்க என்று”
நுதலிய பொருட்பெருமையான் நூற்பெருமை கூறப்பட்டதேயாம்; அதனை முதலாசிரியராகிய பாமகர் கூறியுள்ளார்.
“புகழ்ந்து பாடப்படுந் தலைவனது மாட்சிமையாற் காப்பியச் செல்வம் கவினுறுகின்றது” என்று.
உற்படரும் விளக்கியுள்ளார்.
“காப்பியத்தினது கீர்த்தி, (பாடப்படும்) பெரியாரது சரித்திரத்தைக் காரணமாகவுடையது” என்று.
சாகித்திய மீமாஞ்சையிலும் விளக்கப்பட்டுள்ளது.
“தலைவனது குணங்களாற்[28] றொடுக்கப்பட்ட பனுவலணியல், யாண்டும் நல்லோர்க்கணிகலனாகும்” என்று.
போசராசனாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உலகிற் சீரிய குணங்களாற் சிறந்திலங்குந் தலைவனைப் புலவனொருவன் புகழ்ந்துரைப்பானேல் அப்புலவனது காப்பியம் அற்பமெனினும், அது கற்றோர்க்குக் காதணியாவமைகின்றது.[29]
தலைவனது உயர்குடிப்பாதிய குணங்கள்
அங்ஙனம் இவை தலைவனது குணங்களாம்:-
11. உயர்குடிப்பிறப்பு, அழகுடைமை, பெரும்பேறுடைமை, வள்ளண்மை, பெருமிதம் திறனுடைமை, அறத்தாறொழுகன் முதலியன குணங்களாம்.
12. முதனூலைப் பின்பற்றியிந்தச் சில குணங்களே கூறப்பட்டுள்ளன; பிரதாபருத்திரதேவனது குணங்களோ உரைத்தற்கரியனவாம்.
இனி நிறுத்த முறையானே இவற்றின் இலக்கணமும், எடுத்துக்காட்டும் கூறப்படுகின்றன. அவற்றுள்;
“உயர்குடிப்பெறப்பென்பது சிறப்புறுங்குலத்திற் சனித்தலாம்”
எங்ஙனமெனில்:-
13. பூவுலகினது அத்தகைய நல்வளச் செல்வத்தான் இந்திரன் முதலாய வானவர், மண்ணிடைப்போந்து கூடிக்குலாவுதற்கு விரும்பினராய்ப் பிரமனை நெடிது நாள் வேண்டினர்; வேண்டவே பிரமனும் செங்கதிர்க்குலத்தினும், தண்கதிர்க்குலத்தினுஞ் சிறந்த காகதீய மரபினைப்[30] படைத்தனர். அம்மரபில் திருவின்கேள்வன், இப்பொழுது வீரருத்திரனது யாக்கையால் விளக்கமுறுகின்றான்.
இனியழகுடைமை
“வனப்புறுமேனியுடைமையை, மேலோர் அழகுடைமையென்ப”
எங்ஙனமெனில்:-
14. முரன்பகைவற்கு முந்நீர்மகள்பால் எவன் முன்னர்த்தோன்றினனோ அவனே, மீண்டும் மாதேவர்க்குத்[31] தலைவியின்பாற் சனித்தனன்.
அங்ஙனம் இவ்வுடலுடைக்காமன், பூமடந்தையின் புண்ணியச்செல்வங்களான் தான் பிரதாபருத்திரனாக விளக்கமுறுகின்றான் என்று மான்விழியாரெலாம் மனந்துணிகின்றார்.
இனிப்பெரும்பேறுடைமை
“இருநிலத்தலைமை யிறண்டறக்கோடலே பெரும்பேறுடைமை யென்மனார் பெரியோர்”
எங்ஙனமெனில்:-
15. சிற்றரசர்கள் வழிபடவணங்குங்கால், அவரது முடிவிளங்கு மணிக்கதிர்கள் ஆலத்தியாவமையப் பெற்றதும், அரசியற்றிருவின் முதற்கட்டோற்றத்திற்குரிய[32]வழியுமாகிய அரியணைமீதிவர்ந்து, செறுநர்ச்சிறப்பை விரைந்து கடப்பனவாகிய ஒப்பற்ற வெற்றிமுறைகளான்[33]குணநிலைக்களனாகிய திருவளர் வீரருத்திரநிருபன், பூவுலகைப்புரக்கின்றான்.
இனி வள்ளண்மை
“வரையாக்கொடையை இயல்பாக்கோடலே வள்ளண்மையென்ன வழுத்துவர் புலவர்”
எங்ஙனமெனில்:-
16. குணநலத்தொழுங்கின் மேன்மையால் மாதிரத் தலைவரின் கீர்த்தியைக் கெடுக்கும் வீரருத்திரன், புலவரது[34] மணிமாடமுற்றங்களை, வேழத்தினது மதநீர்மணங்களான் எப்புறமும் கமழ்வனவாகச் செய்கின்றானாகலின் இவரை நிகர்த்த வள்ளல், மும்மையாமுலகிற் பிறிதொருவரும் இல்லை.
இனிப் பெருமிதம்
“பாரகம் விளக்கும் பண்பாம் அதனைப் பேரறிவுடையார் பெருமிதம் என்ப”
எங்ஙனமெனில்:-
17. வென்றிசேரியல்புடைக் காகதி வேந்தனது விறலெனும் வெய்யவன், பகையரசருடைய மனைவியரின் குழலிருட்கருவத்தைக் கவர்ந்து எஞ்ஞான்றும் விளக்கமுறுங்கால், முதிர்ந்தடர்ந்த இருளுடையனவும், கதிரவனைக்காணாதனவும்[35] ஆகிய சக்கிரவாட மலையின் பின்புறப்பாறைகட்கு ஒளியறிவு விளைகின்றது.
இனித் திறனுடைமை
“செயற்றகு பொருளிற் சீரிய திறலைத்
திறனுடைமையென்னச் செப்புவர்”
எங்ஙனமெனில்:-
18. கலைமகளும், மலர்மகளும் ஒருவர்பாலொருவர் இயற்பகையமைந்தவர்[36] எனினும், எவன்பால் மிக்க நேர்மையெய்துகின்றனரோ அத்தகைய குணங்கட்கு நிலைக்களனாகிய திருவளர் வீரருத்திரவேந்தனது திறனுடைமையை வன்னித்தலரிதன்றோ; அன்றியும், திசையெல்லாம் வென்ற அவ்வேந்தன், பொருந்துபசாரங்களான்[37]மகிழுமிந்நிலமகளை அவ்வத்தகைய[38]மகிழ்விக்குஞ் செயல்களான் இவர்களோடு முரண்படாவண்ணம்[39]பாலிக்கின்றான்.
இனி அறத்தாறொழுகல்
“அறத்தே வழிப்படும் அகமுடைத்தாதலை அறத்தாறொழுகலென்மனார் அறவோர்”
எங்ஙனமெனில்:-
19. எள்ளற்பாட்டினும், தகுதியிற்சொல்லையும்,[40]கனவிலும் பிறன்மனைப் பேச்சையும், பகைவரிடத்தும் குறை நிறைத்தலையும் காகதிவேந்தன் பொறான்.
முதலியன வென்னுஞ்சொல் மிகுமகிமை கல்வித்திறம் முதலிய[41]குணங்களை யுணர்த்தும்.
“திகழுந்தெய்வத் திருவுருச்சேர்த்தியே
மிகுமகிமை யென்ன விளம்புவர் மேலோர்”.
எங்ஙனமெனில்:-
20. விண்டுவின் முதற்றாய் கௌசலையும், இரண்டாமன்னை தேவகியுமாவர்; பின்னர் பெருமை சேர் மும்மடாம்பிகை[42] யென்பாள், மூன்றாமீன்றாளாவள்; திரேதாயுகத்தில் இராமனும் துவாபர யுகத்திற் கண்ணனுமாய் அவதரித்த அவ்விண்டு, கலியிற் பூவுலகைப்புரத்தற்கு வீரருத்திரனாய்த் தோன்றி விளங்குகின்றான்.
உவணக்கொடியோனது[43] உருவுடைத் தன்மையான் மிதமகிமையிங்குக் கூறப்பட்டது.
இனி கல்வித்திறம்.
“எல்லாக்கலையினுமேற்றமுடைமையே
கல்வித்திறமெனக்கழறுவர் கவிஞர்”.
எங்ஙனமெனில்:-
21. திருவளர் காகதிவேந்தன் அறுகலை[44]நூல்கட்கும் எல்லையாய் அமைந்த பேரவைகளான் கலைஞர்[45]க்குழுவை மகிழ்விப்பானும், பாட்டியற்றுரையைக் காட்டலிற் சிறந்த இன்னுரைகளான் கவிவாணர்களை[46]யின்புறுத்துவானும், இசை[47]நூன் மருமங்களை வெளிப்படுக்கும் இசைக்[48]கருவிகட்குரிய முறைகளான் யாழ்ப்பாணரை யின்புறுத்துவானுமாய் அவைக்கண் நிலவுகின்றான்.
இனித் தலைவனது குணங்களைக்[49]கூறிய பின்னர்த் தலைவனிலக்கணம் கூறப்படுகின்றது.
22. கீர்த்தி, விறல், இவற்றால் மேம்பாடுடையனும், அறம்பொருளின்பப் பற்றுடையனும், தாங்குமாற்றலுடையனும், குணநலனிறைந்தவனுமாகுமொருவன் தலைவன்[50] எனப்படுவன்.
கீர்த்தி, விறல் இவற்றால் மேம்பாடுடைமை எங்ஙனமெனில்:-
23. காகதிவீரருத்திரனது மிகுபுகழ் மண்டிலம், அறத்தண்டத்தில் விரிந்த வெண்குடை வனப்பை மூவுலகிற்குமெய்துகின்றது; குவளையெனக்கரிய இவ்வானவெளி, இக்குடையின் நீழலென்னக் காணப்படுகின்றது; ஆகலின் அக்குடைக்கு மேல் விறலெனும் வெய்யவன், விளக்கமுறுகின்றான்; என்னு மிவ்வுண்மை யுறுதியெனக் கருதுகின்றேன்.[51]
அறம்பொருளின்பப்பற்றுடைமை எங்ஙனமெனில்:-
24. அறம் நிறைவுறு[52]பொருள்போலும், பொருள் நிரம்பிய அறம்போலும், இன்பம் அவ்விரண்டுபோலும், அவ்விரண்டும் இன்பம் போலும், வீரருத்திரன்பால் நிலவி நின்றன.
பொறைதாங்குமாற்றலுடைமை யெங்ஙனமெனில்:
25. காகதிவீரருத்திரக்கொற்றவன், புயத்தாற் பூவுலகைத் தாங்குங்கால், ஆதிசேடன் பாடுகின்ற[53] தன்மனைவியரைச் சிரமசைத்தலாற்[54] பாராட்டுகின்றான்; கூர்மராசன் மார்பகத்தைக்[55]காண்பித்தலான் இலக்குமியை யிது பொழுது இன்புறுத்துகின்றான். மாதிர வேழங்களும், பிடிகளைப்பின்றொடர்ந்து[56] சேறலான் பிரிவான் வருந்தும் அவற்றின்றுயரை விலக்குகின்றன.
குணநலனிறைந்தமை யெங்ஙனமெனில்:
26. காகதிவீரத்தலைவனது குணங்களை அரவம்[57]ஆயிரம் முகங்களா னுரைத்தற்கும், கதிரவன் ஆயிரம் கரங்களான்[58]வரைதற்கும், இந்திரன் ஆயிரம் கண்களாற் காண்டற்கும் அமைவரேல்,[59] அவ்வமைவு பொருத்தமுடையதாம்.
இனி தலைவரது பிரிவுகள் விளக்கப்படுகின்றன.
27. “தீர” என்னுஞ் சொல்லை முதற்கட்கொண்ட உதாத்தன், உத்ததன், இலலிதன், சாந்தன் என்னுமிந்நால்வர் தலைவரென முன்னையாசிரியர் கூறியுள்ளார்.
எல்லாச் சுவைகட்கும் பொதுவாய[60]தலைவர், தீரோதாத்தன், தீரோத்ததன், தீரலலிதன், தீரசாந்தன் என நால்வர் ஆவர்.
இவரது இலக்கணமும், எடுத்துக்காட்டும் கூறப்படும்.
28. பெருமனவலிமை,[61] அருளுடைமை, அழகுடைமை, தற்புகழாமை, முயற்சிதளராமை யென்னுமிவற்றையுடையனாய் பிரதாபருத்திரன் போல அமைவுறுந்தலைவன் தீரோதாத்தன் எனப்படுவன்.
எங்ஙனமெனில்:-
29. மூவுலகைக் கடந்துலவுங்கீர்த்தியாற் கவினுறுந்திருவளர் வீரருத்திரவேந்தன், அருண்மெல்லியனாகலின்,[62]முன்னின்ற[63]பகைவரைக் கொடுவாட்படையாற் சிறுபொழுதிற்[64]கோறற்கு ஐயுறுகின்றான்; மங்கலபாடகர், வீரலட்சுமியின் சேர்த்தியைப் புகழ்ந்து கூறுங்கால் புருவந் தாழ்தர நாணுறுகின்றான்;[65] இன்பம்,[66] வெகுளி, மகிழ்ச்சியிவற்றை வெளிப்படுக்குங் குறிப்புக்களை முகத்திற் சிறிதுந்தரிக்கின்றானில்லை.[67]
30. செருக்கு, பொறாமை யிவைநிறைந்தவனும், கொடுஞ்செயற் புரியுமியல்பினனும், தற்புகழ்வோனும், வஞ்சகனும், எளிதிலெழுஞ் சினமுடையனுமாகிய தலைவன் தீரோத்ததன் என்று சொல்லப்படுவன்.
எங்ஙனமெனில்:-
31. அடா! அடா! கூர்ச்சர தேயத்தரசனே! சமரிற் சிதைவுற்றனை; இலம்பாக! ஏன் நடுக்கமுறுகின்றாய்? வங்கராசனே! வீணேதுடிக்கின்றதென்னை? கொங்கண நாட்டரசனே! தானைப்பூழியாற் குருடனாயினையன்றே! ஊணநாட்டிறைவ! உனது உயிர்க் காவலிற் பற்றுடையனாயிருத்தி; மகாராட்டிரனே! நாடிழந்தனை; இந்தயாம்,[68]போர்வீரர்; எனத்தெலுங்குதேயத்தரசருடைய[69] படைவீரர், பகைவரை யவமதிக்கின்றனர்.
இங்கட்படைவீரர்கட்குத் தீரோத்ததனாந் தன்மை யமைகின்றது.
மனங்கவலொழிந்து[70]கலைப்பற்றுடையனாய்[71]இன்பந்திளைக்குமினியன்[72]தீரலலிதன் ஆவன்.
எங்ஙனமெனில்:-
32. வெவ்வியவீரம், தடைப்படாது நிலவுகின்றது; பகையரசர் யாவரும் வணக்கஞ்செய்தனர்; இந்நிலமகள், கற்பு[73]நிலையை யெய்துகின்றாள்; தானேதோன்றுமிச்சங்கரன், வழிபடுகடவுள்; தீரனாகுமிவ்வீரருத்திரன்,[74] இளவரசராம் நிலையிலேயே பொறை[75]யாவற்றையும் தாங்குகின்றான் என்று காகதி[76]வேந்தன் எல்லாக்கலையினும்[77]இன்புறுகின்றான்.
பகுத்துணர்வானும், சமநிலையுடையானும், தெளிதருமனத்தனும் அந்தணராதியருள்[78]ஒருவனுமாகிய தலைவன் தீரசாந்தன் எனப்படுவன்.
எங்ஙனமெனில்:-
33. விளங்கு திருமகள் விளையாடற்கிடனாயமைந்து தனது மலர்ச்சியால் உலகனைத்தையும் மணங்கமழ்விப்பதும், வைகறைப்பொழுதில் விரிந்துலர்வதுமாகிய தாமரைத்தடாகம், அப்பொழுதெழுந்த கதிரவன் முன்னர்க் களிப்புற்றாங்கு, இந்த அறிஞர்க்குழு,[79]விளங்குநற்செல்வம் நிறைவுறற்கிடனாய் அமைந்து தமது செல்வப்பெருக்கத்தான் உலகினைப் பெரிதும் மகிழ்விப்பாரும், குற்றம்[80]நீங்கிய வழிக்கழிபேருவகையெய்துவாருமாய், மேன்மையுறு வீரருத்திர வேந்தனது முன்னிலையில் இன்புறுகின்றனர்.
இங்கண் மறையவர் தீரசாந்தராவர்.
உவகைத் தலைவரிலக்கணம் விளக்கப்படுகின்றது.
34. இனி அநுகூலன், தட்சிணன், திருட்டன், சடன் என்னுமிந்நால்வர், உவகைச் சுவையைப்பற்றிய தலைவர் என்ப.
இவரது இலக்கணமும் எடுத்துக்காட்டும்
“தலைவியொருவட்குட்பட்டவன் அநுகூலன் ஆவன்”,
தலைமகளொருத்தி[81]பாற் காதன் மிக்கவன் அநுகூலன் என்னும் தலைவன் ஆம்.
எங்ஙனமெனில்:-
35. தோழீ[82] “வீரருத்திரநிருபன்நிலமகள் கொழுநன்”, என யாவரும் போற்று நிலையில் அப்புவிமகள் புரிந்த தவமென்னை? அவர்க்குக் காதலியாகுமத்துணை நல்வினை யென்பால் யாண்டுளது? பெண்ணே![83] (அவரைக்காதற்படுத்துஞ் சூழ்ச்சியை) யானறிவேன்; துயரையொழிக்க; உன்னை நன்னிலையனென்னும்,[84] இரத்தினாகரமேகலையென்னும்[85] இப்பெயரைக்கொண்டு[86] அவர் முன்னர் விளக்கமாகக் கூறி உன்பால் அவரையாண்டும் காதற்பற்றுடையராகச்செய்வேன்.
இங்கண்[87] நிலை இரத்தினாகர மேகலையென்னும் புவிமகளது பெயரைக்கோடலான், தன் காதற்குணத்தை வெளிப்படுத்துகின்றாளாகலின், பிரதாபருத்திரனுக்கு நிலமகள்பாற் காதன் மிகுதியுண்டென்பது குறிப்பிடப்படுகின்றது.
“பலரிடத்தும் ஒத்த நிலையுடையனைத் தட்சிணன் என்ப”
தலைமகள் பலரிடத்தும் வேறுபாடின்றி அன்பு கொண்டு அவர்களைப் பின்பற்றுமியல்பினன் தட்சிணன் என்னுந்தலைவன் ஆவன்.
எங்ஙனமெனில்:-
36. யான் காமக்கலைக்கேளியில் ஒருதலைவியை இன்னுரையானே[88]நியமித்துள்ளேன்; கருத்தியைந்த பார்வையான்[89] உள்ளத்தையொருவட்கு வெளிப்படுத்தியுள்ளேன். பாங்கியர் கரத்தால்[90]ஒருவட்கு அலங்காரப் பொருளையனுப்பியுள்ளேன்; ஆகலின் யாண்டே செல்வேன்; என்று சிந்தித்தலானே அரசர்க்குக் கங்குற் பொழுது புலர்ந்தொழிந்தது.
அங்ஙனமே:
37. வீரருத்திரவேந்தன்,[91] வாணியை வதனத்தானும், கமலையைக்கண்களானும், புவியைப்புயத்தானும் நேசித்தலான் இவர்பால் ஒத்த நிலையையெய்துகின்றான்.
“விளக்கமான குற்றமுடையனும், அச்சமில்லாதவனுமாகுந்தலைவன்,
திருட்டன் ஆம்”.
எங்ஙனமெனில்:-
38. உமது உறுப்புக்கள்[92] யாவும், அறசியற்றிருமகளது புணர்ச்சியைப் புலப்படுத்துவனவாய்க் காணப்படுகின்றன. அங்கண் என்பாற் கொடுமையிழைத் தலையன்றி நின்பாலொழுக்கமின்மையென்பது என்னே! உன்னைப் பலர்க்குங் காதலனாக அறிவேன்; மற்றுங்கூறவேண்டுவதென்னை? நாங்கள் எளியர்; வசுமதியெனப்பெயரிய[93]அம்மங்கைபால் நீர் அன்புமிக்கவராவீர். வறிதே கூறும் வார்த்தையாற் பயன்யாது?
“மறைவிற் றீங்கிழைப்பவனைச் சடன் என்ப.”
தலைவியான் மாத்திரம் அறியத்தகுந்தீங்கிழைப்பவன் சடன் ஆவன்.
எங்ஙனமெனில்:-
39. கண்களாற் பார்க்கின்றாயன்றி அப்பார்வை, மனத்துடன் அமையவில்லை. வாயினாலின்சொற்களைக் கூறுகின்றாய்; அச்சொற்கள், காதற்குணத்துடன்[94]அமைந்தில. என் முன்னிலையில் மார்பகத்தை வெளிப்படுத்துகின்றாயன்றி உள்ளக்கிடக்கையை விளக்கவில்லை. காகதித்தலைவனே! அயலொருத்தியைக் கருதுமுனக்குப் புவிமகளே உயிர்க்காதலியென அறிந்துளேன்; என்னையார்பால் இவைபுறக்கணித்தலாகவே அமையுமாகலின், பயனற்ற வெளிப்பகட்டுக்கள் வேண்டா.
இங்கண், அவ்வத்தலைவனைப் பற்றிய முறையானே காகதித்தலைவர்களை யெடுத்துக்காட்டியிருத்தலான் அது, வீரருத்திரனையே[95]புகழ்ந்து கூறியதாகும்.
இத்தலைவர்க்குத் தலைவிமாரை வயப்படுத்தலில்[96]பீடமருத்தன், விடன், சேடன், விதூடகன் என்னும் பெயரையுடையார் துணைவராவர்.
அவரது இலக்கணம் விளக்கப்படுகிறது.
40. சிறுகுறையுடையன்[97] பீடமருத்தன்; வித்தையொன்றுடையான்[98]விடனெனப்படுவன்; சேர்க்குந்திறலோன் சேடனாவன். மிகுநகை[99]வினைப்பவன் விதூடகன் என்ப.
இவர்களது எடுத்துக்காட்டு வெளிப்படை.
இனி உவகைத் தலைவிமார் எண்மர் கூறப்படுகின்றனர்
41. 42. “சுவாதீனபதிகை” (தன்வயத்து தலைவனையுடையாள்)
“வாசக சச்சிகை” (இல்லத்திருந்துழியெதிர்ப்பார்ப்பவள்)
“விரகோத்கண்டிதை” (காமநோய்ப்பட்டவள்)
“விப்பிரலப்பிதை” (வஞ்சிக்கப்பட்டவள்)
“கண்டிதை” (சீற்றமுடையவள்)
“கலகாந்தரிதை” (பிணிங்கியவள்)
“பிரோசிதபர்த்திருகை” (தலைவனிற்பிரிந்தவள்)
“அபிசாரிகை” (தொடர்ந்துசெல்பவள்)
என்னும் இவர்கள் அத்தலைவிகள்; முறையே இவரது இலக்கணம் கூறப்படுகின்றது.
“காதலனால் எஞ்ஞான்றும் இன்புறுத்தப்படுமவள், சுவாதீனபதிகையென்னப்படுவள்”
எங்ஙனமெனில்:-
43. பிரதாபருத்திர வேந்தன், பொறையெனப்பெயரிய காதலியை சிறப்புறுமவ்வப்பொருட்களான் இன்புறுத்தியவன் பான்மனப்பற்றுடையனாகின்றான்[100]
44. காதலன் வருந்தறுவாயில் தன்னையும், தனது கூடற் கூடத்தையும் அடிதொறும் அலங்கரிக்குமொருதலைவி[101]வாசகசச்சிகையெனப்படுவள்.[102]
எங்ஙனமெனில்:-
45. திருமகள், தனது மிகுவனப்பாற் பேரவைக்களத்தைச் செம்மைப்படுத்தி மனவெழுச்சியுடையளாய், வீரருத்திரற்கு முடி சூட்டுமமயத்தை[103]யெதிர்பார்த்தனள்.
“குற்றமற்ற தலைவன் மிக்கக்காலந்தாழ்க்குங்கால், காமநோய்பட்டுழலுமொருவள், விரகோத்கண்டிதையெனப்படுவள்”
எங்ஙனமெனில்:-
46. பிறிதொருஐயப்பாடின்று; அத்தகைய குணமணங்கமழுவீரருத்திரன்,[104]எத்தகைய குழுவினராலோ[105]காலந்தாழ்க்குங்கால், அவர், பாங்கியரழைத்து வருதற்கு எளியரல்லர்; ஆதலின் காமவேளே! காதலனையழைத்துவருதற்குச்செல்லுதி; நின்பாற்கைகூப்பியுள்ளேன்; ஏனெனில் நினதன்புடைத்தோழனாகிய மதியம், கதிர்களை யெல்லாப்புறத்தும் அள்ளியிறைக்கின்றான்.
47. “ஓரிடத்திற்கு வருவதாகக் குறிப்பைத் தெரிவித்துப் பின்னர்க்காதலனால் வஞ்சிக்கப்பட்டவளாய் காமநோய்ப்பட்டு வருந்துமவளை விப்பிரலப்பிதையென அறிஞர் கூறுவர்.
எங்ஙனமெனில்:-
48. தோழீ! முன்னே[106]செல்லுக; பெரிதும் நள்ளிரவு கிட்டியதாகலின் இனிக்காதலன் வருஞ் செய்தியேது? குறியிடமே! உன்னை விட்டகல்வேன்[107]வறிதே வழிந்தொழுகும் எனது கண்ணீராற் சேறாயினை;[108] அன்றேல், அரசியற்றிருமகட்கு அன்பனும், கலைமகட்குக் காதலனும், பூமகட்குக்கொழுநனுமாகிய வீரருத்திரன்பால் நாங்கள் காதற்பற்றுடையராய்[109]அவராற் பெரிதும் வஞ்சிக்கப்பட்டோம்.
49. உயிர்க்காதலன், பிறிதோரிடத்தில் இரவைக்கழித்து வைகறைப்பொழுதில் வந்தெய்துங்கால், பரத்தையின் கலவிக்குறிப்புக்களாற் சினமுற்ற தலைவியைக் கண்டிதை யென்ப.
எங்ஙனமெனில்:-
50. இரவு, மூன்றுயாமங்களின்[110] அளவினது; தங்கட்கு மனைவிமார் ஆயிரவர் உளர்; வழியின் அமைவால்[111]வைகறைப்பொழுதிலே[112]எனதில்லத்தையும் வந்தடைந்தீர். யான் செய்ய வேண்டுவதென்னை; கூறுக. அரசராவார் யாவரிடத்துங் கண்ணோட்டமுடையரன்றே! இங்ஙனம் தங்களை மிக்க வருத்துகின்ற[113]யான் எத்தகைய தோடங்களையெய்துவனோவெனச் சிந்திக்கின்றேன்.
51. அன்பனைச்[114]சினத்தாற் புறக்கணித்துப் பின்னர் வருந்துந் தலைவியை, கலகாந்தரிதை[115]யெனக்கலைவல்லோர் கூறுவோர்.
எங்ஙனமெனில்:-
52. மனமே! சினத்தாற் கலக்கமுற்ற நீ அவ்வம்முறை[116] பற்றியிணக்குவிக்குந் தலைவனை யரசனென்றெண்ணாது அவமதித்தனையாகலின், அவரது பிரிவான் விளைந்த வேதனையைப் பொறுத்தி.[117]
காதலன் அயல்நாடு சென்றுழித் துன்புறுவாளைப் பிரோஷிதபர்த்திகை யென்ப.
எங்ஙனமெனில்:-
53. மூவுலகிலும் பரவி விளங்கும் புகழொளியினையுடைய திருவளர் வீர்ருத்திரவேந்தனைச் சேவித்தற்பொருட்டுக் காகதிநகரிற் சிற்றரசர் காத்திருக்குங்கால் அவர்களுடைய மனைவியர், தங்காதலரின் நினைவால் நெருங்கி நிலவு புளகங்களாகுங் காமன் கணைகளையுடையராய் வாயில் வழியைப் பார்த்த வண்ணமாய்ப் பகல்களையும், புலருமெனும் நசையாலிரவுகளையும் கடத்துகின்றனர்.[118]
“காமனாற்பிணியெய்திக் காதலனைத் தொடர்ந்து சேரமுயலுந்தலைவியை, அபிசாரிகை யென்ப”.[119]
54. சிற்றறிவுடையாளே! பரபரப்பு வேண்டாம்; அரசன் அன்புடையனே ஆக; காதலனைத் தொடர்ந்து[120] செல்லுமொருவளைப் பிடியானை[121]மீதிருக்குநிலையிற் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.
தலைவனைத் தன்வயப்படுத்தலில் இவர்க்குத் துணைவர்கள்.
55. பணிப்பெண், தோழி,[122] காரு,[123] செவிலிமகள், அயல்வீட்டாள், குறியுடையாள்,[124] கைத்தொழிலுடையாள்,[125] சுற்றத்தாள்[126] என்னுமிவர் தூதியராயமைந்து தலைவிக்குத் துணைவராவர் என்ப.
இவர்களது இலக்கணமும் எடுத்துக்காட்டும் வெளிப்படையாம்.
காமநூல்களில் விளக்கமாகக் கூறப்பட்ட பத்மினீ, சித்திரிணீ முதலிய[127] வகுப்பு வேறுபாடுகளும் அறியற்பாலன.
முத்தை, மத்திமை, பிரவிடையென்னும் தலைவிமார் சுருக்கமாக முத்திறத்தவராவர்.
56. யௌவனப்பருவத்தையெய்துகின்றவளும், நாணத்தாற் காமனை வென்றவளுமாகிய தலைவியை முத்தையென்ப.
யௌவனப்பருவத்தையெய்தியவளும், நாணம், காமம் இவற்றிற்கு இடையிலிருப்பவளும் ஆகிய தலைவியை மத்திமையென்ப.
யௌவனப்பருவம் நிரம்பியவளும் காமத்தால் நாணங்குன்றியவளுமாகிய தலைவியை பிரவிடையென்ப.
முறையே எடுத்துக்காட்டுக்கள் கூறப்படுகின்றன.
முத்தையெங்ஙனமெனில்:
57. அறிவிலீ! மனத்திற்கும் மறைத்தற்குரிய யாவற்றையும் என்பாற் றெரிவிக்கின்றாய்; அங்ஙனமாக, யான் யாரேனுமொருவனோ? உனக்கு அன்புடைத் தோழியன்றே! (கூறற்குரியதை) மறைத்து ஏன் வருந்துகின்றாய்? வீரருத்திரவேந்தன்பால் உனக்குக்காதற்பற்றிருக்குமேல், அஃதெற்கும் விரும்பத்தக்கதே; அங்ஙனம் நிகழுமோ? என்று தோழியின்னுரையே கூறுங்கால் அம்மெல்லியலாள்[128] நாணத்தான் மறுமொழியளித்தனள்.
மத்திமை யெங்ஙனமெனில்:
58. காமலீலையின் விலாசங்கட்கு முன்னரங்கமாக[129] எழுச்சிதரு யௌவனப் பருவத்தையெய்தி உருக்கொடு காமக்கிளர்ச்சியாம் நடனவித்தார வனப்பை நாணத்திரையுள்[130] நடிப்பவளும், துடிக்கும் புருவங்களையுடையளுமாகிய இத்தலைவியினது சொல்லொணாச் சிங்கார நடனமுறை, காகதிவேந்தன்பாலமைந்த குறிப்பின்[131] றொடர்பான் விளக்கமிக்கவாய் மிளிர்கின்றது; பாங்கியரே! இதனைப்பார்க்க.
பிரவிடை யெங்ஙனமெனில்:
59. இயலழகமைந்த உருத்திரவேந்தனை, காதற் குறிப்புடன்[132] காணும் மான்விழியாளது இளமைப்பருவத்தில், அப்பொழுதே பலபடவெழுந்த உறுப்பு[133] மென்செயற்பெருமையாலினியதும், சுவையினெழுச்சி[134]யானொருமித்தெழும் விறலையுடையதுமாகிய[135] மலர்க்கணைவேட்செயல்[136], விளங்குகின்றது.
தலைவியின் பிற வேறுபாடுகளையுடைய[137] எடுத்துக்காட்டுக்கள், ஏற்றபெற்றி உய்த்துணர்பாலன.
60. சுவைமலிந்த காப்பியத்தில் அமைந்த குணம், அணியிவற்றின் பெருமிதம், கவினுறுஞ் சொற் பொருட்களோடியையுமேல் அஃது மிதயத்தையின்புறுதும். அச்சொற் பொருட்களின் விளக்கமும், சீரிய புகழ்படைத்த பெரியாரது சரித்திரத்தைப் பெரிதுந் தழுவி, அமுதப்பெருக்கின்[138] இனிமையன்ன சுவைநிரம்பியவாய்ச் சிறக்கின்றது.
இது தலைவனியற் சுருக்கச்சுலோகமாம்.
அழகுபடுத்தற்கு நிமித்தமாகிய குணம், அணியிவைகள், தகுதியான அணி—பெறற்குரிய பொருளமையுங்கால் பயனுளவாம்; எப்பொருள், அலங்காரங்கட்கு உறையுளோ, அப்பொருளே உலகவழக்கால் அணிபெறற்குரிய பொருளாமாகலின், குணம், அணியிவைகட்குக் காப்பியமே நிலைக்களன்; எனவே அக்காப்பியமே, அணிபெறற்குரிய பொருளென்பதாம். சுவைமுதலியன, அணிபெறற்குரிய பொருள்களெனக் கூறல், அணியல் சிலம்பு முதலிய அணிகலன்கட்குச் சரீரம்போலச் சிறப்புவகையான் அமைவதாம்.
சுவை முதலியவற்றிற்கு உயிராந்தன்மையுண்மையான் காப்பியமாந்தன்மையும் பொருந்தும். ஒரோவழிச்சுவைக்குச்சிறப்பும், ஒரோவழி அணிக்குச் சிறப்பும், ஒரோவழி விடயத்திற்குச் சிறப்பும் அமையும்;
சுவைக்குச் சிறப்பு எங்ஙனமெனில்:-
61. சிறிது முளைத்த காதற்குறிப்புக்களான் வனப்புற்றதும், உடலிற் றளிர்த்த பேரழகுடையதும், முகிழ்த்த முலைகளையுடையதுமாகிய மெல்லியலாளின் இளமைப்பருவத்தில் காமன், பூப்பையும், பழத்தையும் எய்தினன்.
இக்கூற்று ஒரு தலைமகளைக் கண்டு பிரதாபருத்திரன் விருப்புற்றுக்கூறியது.
ஈண்டு உவகைச்சுவை குறிப்பிடப்படுகின்றது.
அணிக்குச் சிறப்பு எங்ஙனமெனில்:-
62. பிரதாபருத்திரனது மிகுபுகழ், திசை வெளியில் நிலவுங்காற் சக்கிரவாடமலை வெளிகள், இடையறாது நீர்ப்பெருக்கும் மதிமணிப்பாறைகளையுடையனவாய்க் காணப்படுகின்றன.
இங்கட் சக்கிரவாடமலைவெளிகளிலிருக்கும் மதிமணிப்பாறைகள், வீரருத்திரனது மிகுபுகழில் நிலவெனும் நினைவால் நீரைப்பெருக்கின; என்னும் மயக்கவணி குறிப்பிடப்பட்டது.
விடயத்திற்குச் சிறப்பு எங்ஙனமெனில்:-
63. மூவுலகினுஞ்சிறந்த காகதிக்குலத்தில் வீரருத்திரன் அவதரிக்குங்கால், சேடசயனன் பாற்கடலை விடுத்துத் தனதில்லத்தையெய்தினன்.
இங்கட் சேடசயனன், பாற்கடலைவிடுத்துத் தனதில்லத்தை யெய்தினன் என்றமையான் பாற்கடலில் விண்டு இல்லையென்று குறிப்பிடப்படுகின்றது; இதனால் புருடோத்தமன், பிரதாபருத்திரனது உருவத்தைப்பூண்டு காகதீய குலத்தில் அவதரித்தான் என்னும் விடயம் குறிப்பிடப்படுகின்றது.
இங்ஙனம் குறிப்பின்சிறப்பு முத்திறத்ததாம்.
குணம், அணியிவை காப்பியத்தையெய்தி விளக்கமுறுகின்றன. அக்காப்பியம் சொல்விளக்கத்தானும், பொருள்விளக்கத்தானும், சொற்பொருள்விளக்கத்தானும் கவிஞரிதயத்தை யின்புறுத்துகின்றது.
சொல்விளக்கமென்பது, முதிர்ந்தசொற்கட்டினது பெருமையாம்.
எந்தச் சொற்கட்டின் பெருமை ஆரபடியமைப்பிற் கூறப்படுமோ அது சொல்விளக்கம்ஆம்.
எங்ஙனமெனில்:-
64. முயற்சிமிக்க வீரருத்திரவேந்தனது கழியன்ன வலிமிக்க வாகுவின் கேளிகன், புவியைப்புரத்தலிற் கண்ணோட்டமுடையனவும், பகையுலகைக் கலக்கலாற் காண்டற்கரிய வெற்றிமுறைகளையுடையனவும், அற்பச் சத்திரியர் பக்கத்தைக் கடிதலில் உயர்த்தி வீசிய வாட்படையுடையனவும், கெர்ச்சிக்குந் துர்ச்சனரின் செருக்கெனுஞ் சிலையைப் பிளக்குமசனியனையவுமாய் நிலவுகின்றன.
முற்றும் நிறைந்த பொருட்செறிவைப்
பொருள் விளக்கமென்ப.
எங்ஙனமெனில்:-
65. வென்றிசேர் பிரதாபருத்திரன் வாட்படை, செருக்களத்திற் பெருமிதமெய்துங்கால் அதிற் பகையரசரது அஞ்சலிகள் எதிருருக்கொடு விளங்க, அவற்றைக் காணும் அறிவுடையார், வெற்றித்திருவீற்றிருக்குங் கமலமென்னக் கருதுகின்றனர்; யானோ, அவ்வரசர்க்குப் போர் நிகழ்ந்துழி, மீண்டும் படைத்தற்பொருட்டுப் பகைவருயிரைக்கோடற்கு அவனெய்திய விதியினது ஆதனப் பதுமமென்னக் கருதுகின்றேன்.
சொற்பொருள் விளக்கமெங்ஙனமெனில்:
66. சலமர்த்தி கண்டமென்னும் மலைக்கரசனது போர்ச்செலவின் முயற்சியில் மலைகளின் சாரலைத் தகைவனவும், அப்பொழுதே திசைவெளிகளை நடுக்குறுத்துவனவுமாகிய களிற்றுக்கூட்டத்தின் பிளிறொலிகள், புயற்பந்தியின் ஆர்ப்பரிப்பை நிகர்க்குங்கால் அம்முயற்சி, பகைமகளிர்க்குக் காரெனும் பெருமயக்கைத் தெரிவித்து அம்மகளிரது கண்ணீரெழுச்சியாம் மிகுமழைபொழி நாளைச் செய்கின்றது.
இத்தகைய சொற்பொருள்விளக்கங்களான் காப்பியம் இனிமையுடைத்து. சொற்பொருட்களும் பெரும்புகழுடையார் சரித்திரத்தை வன்னித்தலான் கவிஞரிதயத்தை யின்புறுத்துவனவாகலின் காப்பியத்தில் தலைவற்கே சிறப்புரிமை யென்பதாம்.
67. குலம், அதன்வழியொழுக்கம், புகழ், வீரம், கல்வி, நல்லொழுக்கமாகிய இன்னோரன்ன தலைவனது குணங்களை வன்னித்தலென்னுமஃதே பல்லோர்க்கும் ஒப்பமுடிந்த உடன்பாடாம்.
68. அன்றேல் பகைவரது பலகுணங்களை வன்னித்து அப்பகைவனை வேறலாற்றலைவனது மேன்மையை வன்னித்தலும், ஒரோவழிச்சம்மதம் ஆம்.
முறையே எடுத்துக்காட்டுக்கள் கூறப்படுகின்றன.
69. எவன் உண்மைப்பொருளோ, அப்பரமபுருடன், காகதிவேந்தரது குலத்தில் எவனது அவதாரமோ; எவனது ஒழுக்கம், உலகிற்கு நலம் பயக்குந் தொடக்கத்ததோ; எவனது புகழ், கற்பதரு, காமதேனு, சிந்தாமணி யிவற்றைச் சிறுமைப்படுத்தியதோ; புவிப்பொறை தாங்கும் அத்தகைய திருவளர் வீரருத்திரவேந்தன் மேம்பாடுற்றிலங்குகின்றான்.
70. எவனது வீரம், பகையரசரது மிகுசெருக்கிருளுக்கு வெய்யிலோ; எவனது தாளனைய கைகளின்றிறல், மன்றேவி யில்லத்தின் காவலோ; அத்தகைய சேவணதேயத் தரசனும் செருக்களத்தில், பெருமானாகிய வீரருத்திர நரேந்திரனது போர் முழவொலியைக்கேட்டு, நடுக்கமெய்தி யிருக்கைவிட்டோடிக் கலக்கமெய்தினன்.
இத்தகைய புனைந்துரை, ஆக்கிய தலைவன்பால் அமைவதில்லை; அத்தலைவன், உலகில் விளக்கமுறுதற்பொருட்டு குலவழக்காதியவே, பலபட வன்னித்தற்குரியன.
இயற்றலைவன்பால் இருதிறனும் அமையும்; அவனது குலவழக்காதிய, உலகில் விளக்கமுற்றமையான் கவிகள், திறலுடைப்பகைவரை வென்று கொண்முகமாக அத்தலைவனை வன்னித்தலும் அமையும்.
இங்ஙனம் தலைவன், இயற்றலைவன் ஆக்கியதலைவன் என இருதிறத்தவன் ஆம்.
அவனிலும்;
71. வெளிப்படையான பரபரப்புடைய வெகுளிச்சுவை, தீரோத்ததன்பாலும், பலகுறிப்பு ஞற்று மூவகைச்சுவையும், தீரலலிதன்பாலும், எங்ஙனம் வன்னிக்கப்படுமோ;
72. அங்ஙனம் தீரோதாத்தன்பால் வன்னித்தலமையாது; அவனிடத்தும் சுவை நிறைவு, காரியமுகமாகப் பொருந்துமுறையுடையதாம்.
73. அங்ஙனமே தீரோதாத்துத் தலைவன்பால் நகைச்சுவை முதலிய பிறசுவைகளையும் வன்னித்தல் முயற்சியும், நடிப்பும் குன்றியவாகும்.
தீரோதாத்தன், எல்லாத் தலைவரினுஞ் சிறந்து நிற்றலாற் காப்பியங்கள் அத்தலைவனைப்பற்றியவாயமைதன் மிகுபுகழ்க்கு நிமித்தம் ஆம்.
ஸ்ரீ வித்யாநாதனியற்றிய “பிரதாபருத்திரன் புகழணி” யென்னும் அணியிலக்கணத்திற் றலைவனியல் முற்றிற்று.
– வளரும்
[1] வித்தை — நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாஞ்சை, நியாயம், புராணம், அறநூல் என்னு மிவை பதினான்கும் வித்தைகளாம்.
[2] சுருதி — இச்சொல் வடமொழி மரபுபற்றிப் பெண்பாலாகலின், அச்சுருதிமகள் தன்முடியினது குழற்பகுப்பில் அணிந்து கோடற்குரிய நன்முத்தமணியென்பதாம்; இதனால் வாக்தேவதை சுருதிமுடியாகிய உபநிடதங்களாற் புகழப்பட்ட மான்மியத்தையுடையவள் என்பது போதரும்.
[3] வணக்கம் — நூற்றொடக்கத்தில், ஆசியானாதல், வணக்கத்தானாதல், பொருட்குறிப்பானாதன் மங்கலங்கூறல் வேண்டுமென்னுந் தண்டியாசிரியரின் கொள்கையைப்பின்பற்றி, இவ்வாசிரியரும் வணக்கத்தான் மங்கலமியற்றினர் என்பதாம்; இதனால் இயற்றப்படும் நூல் இடையூறின்றியினிது நிறைவுற்று நிலவுலகில் நெடிது விளங்குமென்பது புலனாம். இங்ஙனமே “நூலினது முதலிடைகடைக்கண் மங்கலமியற்றல் வேண்டும்” என்னும் மாபாடியமும் ஈண்டு உணரற்பாலது.
[4] திருவடித்தாமரை — இதனை விரிக்குங்கால், தாமரைபோன்ற திருவடி, திருவடியாகுந்தாமரை யென முறையே உவமத்தொகையும், பண்புத்தொகையும் அமையுமெனினும், வணக்கவினைக்குத் தாமரை செயப்படுபொருளாய் அமையாதாகலின் உவமத்தொகையையே யிங்குக் கோடல்வேண்டும்.
[5] கலைதெரிமுறை — கலைகளைத்தெரிவிக்கும் முறை; அதாவது காப்பியம் நாடகம் முதலியனவாம்; இவ்விதைகளை விதைத்தற்குரிய கழனி, வணக்கமென்பதாம்; இதனால் கழனியில் விதைத்த விதை முளைத்தெழுந்து பயனளித்தல்போல, கலைமகளை வணக்கஞ்செய்தியற்றிய காப்பியங்களும் இனிது நிறைவுற்று நற்பயனளிக்குமென்பதாம்.
[6] பாநடத்திற்கோர் உயிர்மருந்து — இதனால் இயற்றும் பாடலிற் செம்மையும், கவிவழக்கு வழாமையும் திகழுமென்பதாம்.
[7] அணியிலக்கணம் — இந்நூலில் அணியின் வேறுபட்ட சுவையியன் முதலிய பல்வேறு பகுதிகள் கூறப்பட்டிருப்பினும், சத்திரிந்நியாயத்தால் இந்நூல், அணியிலக்கணம் என்னும் பெயர்த்தாயிற்று. சத்திரிந்நியாயமாவது: ஒருவன் குடைபிடித்துச் செல்லுங்கால் அவனுடன் செல்லும் பலரும் கைக்குடையரல்லாரெனினும் குடையாளர் செல்லுகின்றனர் என்று கூறல் ஆம்.
[8] நன்கியம்புகின்றேன் — இதனால் தனது நூல், சுவை முதலிய எல்லாவற்றையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலான் யாவற்றுஞ் சிறந்ததென்பது குறிப்பிடப்பட்டது.
[9] பயனுடைத்தாயிற்று — இந்நூல், அணியிலக்கணமாயினும் உலகுயர் குணத்தவராய பிரதாபருத்திரனைத் தலைவனாகக்கொண்டு, எடுத்துக்காட்டொவ்வொன்றினும் அவரது புகழையே விதந்து கூறியும், இத்தலைவன் பெயர்துலங்க இந்நூற்குப்பிரதாபருத்திரீயமென்று பெயரமைத்துமிருத்தலான் மிக்கச்சிறப்புடையதாதலின், பயனுடைத்தாயிற்றென்பதாம்.
[10] சுவை — சொற்சுவை, பொருட்சுவையென்னுமிரண்டுமாம். பொருட்குறிப்பு, அணிக்குறிப்பு, சுவைக்குறிப்பு என்னும் மும்மைத்தாய குறிப்புப்பொருட்களும் காப்பியத்திற்கு உயிரென மேற்கூறுவராயினும், சுவைக்குறிப்பொன்றே தன்னளவின் முடிந்து நிற்குஞ் சிறப்புரிமைபற்றிக் காப்பியத்திற்கின்றியமையாத உயிரென்பதாம்; முன்னிரண்டற்கோ எனின், சுவைக்குறிப்பிலடங்கு மவ்வளவிற் சிறப்பின்மையானும், அஃதன்றெனினும் வெளிப்பொருளினுஞ் சிறப்புண்மைபற்றிய தனோடொப்புண்மையானும் அவற்றிற்குயிரெனும் வழக்கையுபசரித்துக் கூறினாராகலின் முரண்பாடொன்றிலதென்பது “துவனிலோசன”த்தின் உட்கருத்து.
[11] அமைப்பு — இது, பொருளமைப்பு; இதனை வடநூலார் விருத்தியென்ப.
[12] இயல்பு — இது சொற்களின் அமைப்பு; இதனை வடநூலார், இரீதியென்ப.
[13] உம்மையால் இங்குக்கூறப்படாத கிடக்கையும், பாகமுங்கொள்ளற்பாலன.
[14] இதனால், காப்பியவிலக்கணத்தை விளங்க வைத்திருப்பினும் எடுத்துக்காட்டுக்குரிய தலைவனது புகழைக் கூறாமையின் முன்னை நூல்கள் சிறந்திலவென்பதாம்.
[15] நூற்கு அணிகலனாக்கவில்லை — இதனால் முதனூலாசிரியரும் சிறந்தலரென்பது போதரும்.
[16] சொற்சிறப்புடைமையான் — அரசன், ஆணையொன்றானே மக்களையேவற்படுத்திக் குற்றங்கண்டுழிக்கடிதலொப்ப, வேதமும் விதிவிலக்குவடிவாகிய சொற்றொடரானே மக்களை நடத்தி, அவ்விதிவிலக்குகளைக்கடந்துழியவர்க்குத்தோடந் தருமாகலின், வேதம் அரசனை நிகர்த்ததென்பதாம்; அன்றியும், வேதத்தினது சுரம், எழுத்து இவற்றை மாறுபடக்கூறினும் தோடமுண்டெனில், மாறுபட அனுட்டித்தலானும், அனுட்டிக்காதுவிடுத்தலானுந்தோடமுண்டென்பது அருத்தாபத்தியாற் போதரும்; படிக்குமுறை, பயன்றருபொருளுணர்வை முடிவாகவுடையதாகலின்.
[17] வேதம் — காட்சியளவையைக்கடந்த நலம்பெறற்குரிய வுபாயமாகிய சோதிட்டோமம் முதலியவற்றையும், அங்ஙனமே தீயன தவிர்த்தற்குரிய வுபாயமான புலான் மறுத்தலையுந் தெரிவிப்பது வேதம்;
“காட்சி அனுமானம் இவற்றாலறிதற்கரிய வுபாயத்தை வேதமறிவித்தலான் வேதத்ததிற்கு வேதமாந் தன்மையுண்டு” என்ப பெரியாரும். புலாலைக் கனஞ்சமென்று வேதம் கூறுகின்றது; அது நஞ்சு தீற்றியபடையாலிறந்துபட்ட மிருகம், பறவை யிவற்றையுணர்த்தும். அவற்றையருந்தலாகாதென்பது அம்மறையின் கருத்தாம்.
[18] பழநூற்கிளவி — இது வேதம் போல அமையாது, முன்னவர் சரிதங்களே எடுத்துக்காட்டாக அவற்றைப் புகழ்ந்திகழ்ந்து கூறுமுகத்தான் விருப்பு வெறுப்புக்களை மக்களுக்களித்து நிற்பதால், நட்டோரை நிக்ர்த்ததாமாகலின் பொருட்சிறப்புடைமையான் என்றார்; நண்பர் வற்புறுத்தலின்றிப் பொருண்மேற் கண்ணுடையராகலின். பழநூற்கிளவி—இது புராணவசனத்தை.
[19] காதலியொக்கும் — காதலி, கடைக்கணித்தன் முதலிய விலாசங்களானே ஆடவரைத் தன்வயப்படுத்தி எற்கிது விரும்பற்பாலதொன்று; இதனைச் செய்க; இது வெறுக்கற்பாலதொன்று; இதனைச் செயலற்க; என உரையினாலுரையாது குறிப்பொன்றானே தன்விருப்பத்தை முற்றிலுங் கைக்கொள்ளுமாறுபோல, கவினுறுங் காப்பியமும் சொற்பொருளினுஞ் சீரிய குறிப்புப்பொருண் மாத்திரையிற் சிறந்தமையான், அவற்றைச் சிறப்பாகக் கொண்ட வேதபுராணங்களினும் வேறுபட்டு தெளிகுநர் மனத்தை மகிழ்விக்கும் குறிப்புப்பொருட்செயலானே “இராமன் முதலினோர்போல விருத்தல் வேண்டும்; இராவணாதியரைப்போலிருத்தலாகாது”, என்று மக்களைத் தக்கதிற்புகுத்தித் தகாததிற்றடுத்தலாற் காதலியொக்குங் கவினுறுங்காப்பியம் என்றார்.
[20] இன்பத்தை விளைவித்து — வேதம் அச்சுறுத்தியும், புராணம் தொடர்ந்துபற்றியும், மக்களை நல்வழிப்படுத்தும்; காப்பியமோ அங்ஙனம் அமையாது, எளிதில் இன்பத்தை விளைவித்து விரைவில் நல்வழிப்படுத்துகின்றதாகலின், இஃதவற்றினுஞ் சிறந்ததாமென்பது இதனாற்போதரும்.
[21] அதனை விரும்புகின்றேன் — இலக்கணங் கூறியதனை விரித்து விளக்க விரும்புகின்றேன்; என்பதாம். இதனால் காப்பியவிலக்கணமாகிய நுதலியபொருளும், அதனையுணருமறிவாகிய பயனும், நூற்கும் நுதலிய பொருட்கும் விளக்குவதும் விளக்கப்படுவதுமாகிய சம்பந்தமும் அறியவிரும்புவோனாகிய அதிகாரியும் என அனுபந்தங்கணான்கும் கூறப்பட்டனவாம்.
[22] இம்மை, மறுமை யெனுமிரண்டினுந் துய்க்க வரும் பயனை, காண்டற்குரிய பயன், காண்டற்கரிய பயன் எனக் கூறினார். இதனால் இத்துணைப் பயனளிக்கும் அக்காப்பியத்தைக் கோடல் வேண்டுமென்பதாம்.
[23] புகழ், பொருள், அமங்கலமழிதல், நல்லின்பமெய்தல் இவைநான்கும், ஆக்கியோன் அறிவோன் ஆகிய இருவேற்கும் உரியனவாம்; வழக்கறிதலும், கவின்மொழிக்கூற்றுமாகியவிரண்டும் அறிவோர்க்கே உரியனவாம்.
[24] இந்தச்சுலோகம் — பிரவரசேனனியற்றிய சேதுபந்த மகாகாவியத்திற் காணப்படுகின்றது.
[25] (காகதீயர்) காகதியென்னும் பெயர் அமைந்த காளிதேவி. இத்தேவி, ஏகசிலா நகரைப் பாலிக்கும் அரசர்களுக்கு குலதெய்வமாம்; இத்தெய்வத்தை வழிபடுகடவுளாகக் கொண்டவர், காகதீயர் என்பதாம்.
[26] இதனால் காப்பியத்தாற் றலைவற்கும், தலைவனாற் காப்பியத்திற்கும் பெருமையுண்டென்பது புலனாம்.
[27] நளன், நகுடன் முதலியோர் இல்லாதவழி அவரது புகழ்ப்படிவம், அழிவுறாது நிலைப்படற்குக் கவிகளின் பனுவற்படிமத்தை யெய்தியமையே காரணமாய் நிற்றலின், நூற்பெருமையாற் றலைவனது பெருமை சிறக்குமென்பதாம்.
[28] குணங்கள் — ஈண்டு வீரம், ஒழுக்கமுதலிய குணங்களையும், மாலையைத் தொடுத்தற்குரிய நூலையுமுணர்த்தும்.
[29] இச்சுலோகத்தினால் தலைசிறந்த குணங்களையுடைய தலைவனை வன்னித்தல், காப்பியத்திற்கின்றியமையாதது என்பது புலனாம்.
[30] காகதீயமரபினை — இதனால் இம்மரபு, மற்றையெல்லாமரபுகளினுஞ் சிறந்ததென்பதும், இக்குலத்திற் றோன்றிய முன்னையரசராவார் யாவரும், பொன்னகர்ச் செல்வனாதிய புங்கவரென்பதும், அவராற் பாலிக்கப்படும் மண்ணுலகம் விண்ணுலகினுஞ் சிறந்ததென்பதும், அக்குடிப்பிறந்த வீரருத்திரன் என்னும் இந்நூற்றலைவன், திருமாலின் திருஅவதாரம் என்பதும் உணர்த்தப்பாடனவாம்; இதனால், நற்குடிப்பிறத்தலென்னுந் தலைவனிலக்கணம் கூறப்பட்டது.
[31] மாதேவர்க்குத் தலைவியின்பாற் சனித்தனன். இதனால், பிரதாபருத்திரருடைய தந்தையார் திருநாமம் மாதேவரென்பதும், அம்மாதேவர்க்குப் பட்டத்தரசியின்பாற்றோன்றியவர் இவரென்பதும், போதரும்; அன்றியும், மாதேவர்க்கு முக்கட்கடவுளுக்கு தலைவியின்பால், இறைவியாகிய மலைமகளிடத்துச் சனித்தனன் என்னும் பொருள்பற்றி அரன்மகனாகிய முருகன் என்பதும் குறிப்பிடப்பட்டது. இங்குக் காமவேளும், கந்தவேளும் தற்குறிப்பேற்றத்தானும் குறிப்பானும் கூறப்பட்டமையான் அழகுடைமை யெடுத்துக்காட்டப்பட்டதாம். முரன்பகைவன் — திருமாலை; முந்நீர்மகள் — திருமகளை.
[32] அரசன், அரியணைக்கணமர்ந்த பின்னரே ஏனைய அரசியலுறுப்புக்களாகிய குழைதருகவரி, கொற்றவெண்குடை முதலியவற்றை யெய்துகின்றானாகலின், அரியணையமர்தலை, அரசியற்றிருவின் முதற்கட்டோற்றத்திற்குரிய வழியெனக் கூறினார்.
[33] நல்லவரைக்காத்து, அல்லவரைக்கடிந்து உலகனைத்தையும் ஒருகுடைநீழலிற் காத்தலாற் பெரும்பேறுடைமை கூறப்பட்டது.
[34] புலவரது — இத்தொடரிற் கூறியுள்ள ஏதுவால், இவ்வேந்தனை வந்தடைவார் யாவரும் வேழம் வதியும் முற்றதாராகிய வேந்தராவரெனில் இவரது வள்ளண்மையைக் கூறவும் வேண்டுமோ என்பது கருத்து; இதனால் வரையாதளிக்கும் வள்ளண்மை வெளிப்படையாம்.
[35] கதிரவனைக்காணாதனவும் — இதனால் கதிரவன் கதிர் புகாதவிடங்களையும் விறலெனும் வெய்யவன் காலவரையறையின்றி விளக்குவதால் இவ்வரசனது பெருமிதம் உலகிற் சிறந்ததொன்றாம்.
[36] கலைமகளிருந்துழிக்கமலையும், அக்கமலையிருந்துழிக்கலைமகளும் சேராள்; என்பது வழக்காதலின் இயற்கையென்று கூறினார்.
[37] பொருந்துபசாரங்கள் — அவரவர் நிலைக்குத்தக்க உபசாரங்கள் என்பதாம்; உபசாரங்களின் இலக்கணத்தைப் பாவப்பிரகாச நூலாரும், “நிலைமைக்கேற்ற உபசாரம், சிறிதெனினும் அது, மகளிர்க்கு மகிழ்ச்சியையளிக்கும்; நிலைமை மீறிய உபசாரம் பெரிதெனினும், மகிழ்ச்சியைச் சிறிதுமளிக்காது. ஆடை, பரிமளப்பூச்சு, ஆபரணம், அலங்கல், பள்ளி, ஆதனம் முதலிய இவற்றுள் எவற்றில் விருப்பம் நிகழ்கின்றதோ அவற்றைத் தேசகாலத்திற்கேற்ப அன்பு கொண்டளித்தலேயாம்” என்ப.
[38] அவ்வத்தகைய — இவ்வடைமொழி சொல்லொனா நிலைமையை யுணர்த்தும்.
[39] முரண்படாவண்ணம் — திருமகள், கலைமகள், நிலமகள் இம்மூவரும் பகையுறாவண்ணம், கொடை, புலவரவையிற் கலத்தல், மக்களையின்புற புரத்தல் முதலியவற்றால் இவரைப் பாலித்தனன் என்பதாம்; இதனால், இயற்பகையமைந்த இவர்களை ஒருவர்க்கொருவர் அன்புறச் செய்து வயப்படுத்தலாற்றிறனுடைமை கூறப்பட்டதாம்.
[40] தகுதியிற்சொல்லை — வேற்றுடைமைக்கண் விருப்பு பொய்புகறன் முதலியவற்றிற்கு நிமித்தமாய சொல்லை; இதனால் பரிகாசம் முதலியவற்றினும் தகுதியிற் செயலை வெறுத்தொதுக்கும் இவ்வேந்தனது அறத்தாறொழுகலைப் புகலவும் வேண்டுமோ? என்பது புலனாம்.
[41] முதலிய என்றமையான் வணக்கமுதலிய தசரூபகத்திற் கூறிய குணங்களையும் கொள்க.
[42] மும்மடாம்பிகை — இந்நூற்றலைவனாகிய பிரதாபருத்திரனுடைய அன்னையார்.
[43] உவணக்கொடியோன் — இது திருமாலை.
[44] அறுகலைநூற்கள் — பாணிநி, சைமினி, வியாதர், கபிலர், கணாதர், அக்கபாதர் என்னும் இவ்வறுவரானுமியற்றப்பட்ட வியாகரணம், பூருவமீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை, சாங்கியம், வைசேடிகம், நியாயம் என்னும் இந்நூல்களாம்.
[45] கலைஞர் என்பது சாத்திரவல்லுநரை.
[46] கவிவாணர் — இது கவித்திறனுடையவரை.
[47] இசைநூல் — இது சங்கீத சாத்திரத்தை.
[48] இசைக்கருவிகள் — இசைபாடுவர்க்கிவை துணைநிற்பனவாம்; அவை நரப்புக்கருவி, தோற்கருவி, துளைக்கருவி, மிடற்றுக்கருவியென்னும் நான்குமாம். இவற்றை முறையே வடநூலார் ததம், ஆநத்தம், ஸூஷிரம், கனம் என்ப. அவற்றுள் நரப்புக்கருவி, வீணைமுதலியன; தோற்கருவி—தோற்களான் மூடப்பட்ட முழவு முதலியன. துளைக்கருவி—துளைகள் பொருந்தும் குழன் முதலியன. மிடற்றுக்கருவி—வெண்கல முதலிய வலியவுலோகங்களானாக்கப்பட்ட தாளம் முதலியன. மிடல்—வலி. இவை, பாடுதற்கெளிதிற்புலனாகாத தொடரொலிச்சுரங்களாகிய இசைக்கருப்பொருள்களை யினிது விளக்குமென்பது அந்நூன் மரபு. இச்சுலோகத்தா ற்றலைவன் பலகலையும் பயின்று தேர்ச்சி பெற்றமை கூறப்பட்டமையாற் கல்வித்திறம் கூறப்பட்டதாம்.
[49] குணங்கள் — வனப்பு, விலாசம், இனிமை, ஆழமுடைமை, திறமை, வீரம், உவகைக்குறி, வள்ளண்மையாகிய இவ்வெட்டும் தலைவற்கே உரியவாய் இயல்பினமையத்தகுங் குணங்களாம். இவற்றுட் சில இங்குக் கூறப்படாவாயினும், தசரூபகத்துட் கூறியிருத்தலைக்காண்க.
[50] தலைவன் — குணங்கள் யாவு மொருங்கமைவோன் முதற்றலைவனும், சில குணங்களகன்றவன் இடைத்தலைவனும், பலகுணங்களிழிந்தவன் கடைத்தலைவனுமாம்; எனத்தலைவர் முத்திறத்தவராவர்.
[51] கருதுகின்றேன் — உலகமூன்றையுங்கடந்து விளங்கும் புகழ்க்கவிகைக்கு மேல் விறல் வெய்யவன் விளங்குகின்றான்; என்னும் தற்குறிப்பேற்றத்தால், புகழ்க்குடைக்குட்பட்டிலங்குங் கதிரவன் முதலாயவொளிகட்கு, அக்குடைக்கீழ் இழைக்கப்பட்ட மணிகள்போல விளங்குந்தன்மையுண்மையும், கீர்த்தி, விறல் இவற்றிற்கு மதியினும் கதிரினும் மேம்பாடுண்மையும் குறிப்பிடப்பட்டன.
[52] நிறைவுறுபொருள்போலும் — நிறைவெனும் பண்பைப்பற்றிய உவமை, இங்குக்கூறியுள்ள அறம் பொருள் இன்பமென்னும் மூன்றனுள் ஒன்றற்கொன்று அமையும்; இங்ஙனம் கூறுமாற்றால் அறம்பொருளின்பப்பற்றுடைமை புலனாம்.
[53] பாடுகின்ற — புவிப்பொறையைக் கையாற்றாங்கித் தந்தலைவனது தலைச்சுமையை யிறக்கினமையால் காகதிவேந்தனது புகழைப்பாடுகின்றனர் என்பதாம்.
[54] சிரமசைத்தலான் — தன்றலைச்சுமையிலதாக, மனைவியர் பாடும் இசை நலங்கேட்டுச் சிரமசைத்தான் என்பது கருத்து.
[55] மார்பகத்தைக்காண்பித்தலான் — மார்பகந் தெரியாது குப்புறக்கிடந்து உலகைத் தாங்குங்கூர்மராசன், அச்செயலொழியவே மலர்மகள் அணைந்து கோடற்குரிய அம்மார்பகத்தைக்காண்பித்தனன் என்பதாம்.
[56] பின்றொடர்ந்து சேறலான் — தம்நிலைபெயராது காவல்புரிந்த திக்கயங்கள், அக்காவற்றொழிலொழியவே தம் பிடிகளைப் பின்றொடர்ந்தன வென்பது கருத்து. ஆதிசேடன், ஆதிகூர்மம், திக்கயங்கள் என்னுமிவர்களால் தாங்கற்குரிய புவிப்பொறையை இவ்வேந்தன், ஒரு கையாற்றாங்கினன் எனக்கூறுமாற்றால் பொறைதாங்குமாற்றலுடைமை புலனாம்.
[57] அரவம் — ஈண்டு, ஆதிசேடனையுணர்த்தும்.
[58] கரங்கள் — கதிரவற்குக் கதிர்களே கரங்களாகலின், அக்கதிர்களே வரைதற்குக் கருவியாகும் கரங்களாக அமையுமென்பதாம்.
[59] அமைவரேல் — இதனால் ஆதிசேடனாதியரே இவ்வேந்தனது குணங்களைக்கூறன் முதலியவற்றிற் குரியரென்பதும், அலகிலாவருங்குணங்களென்பதும் புலனாம்.
[60] எல்லாச்சுவைகட்கும் பொதுவாய தலைவர், தீரோதாத்தன் முதலிய நால்வரும் எல்லாச் சுவைகட்கும் பொதுவியல்பினராயினும், பெருமிதம், வெகுளி, உவகை, சமநிலையென்னும்மிச்சுவைகட்கு முறையே சிறப்பியல்பினராதல் இவ்வியலினிறுதிக்கட்கூறப்படுஞ் சிறப்பிலக்கணத்தாற் போதரும். இங்ஙனம் பொதுவியல்பினராய நால்வகைத் தலைவரும், உவகைச்சுவையைப்பற்றிய வழி அனுகூலன் முதலவாய வேறுபாட்டினால் ஒரோவொருதலைவனும் நன்னான்காக, அங்ஙனமாய தலைவனும் தலை, இடை, கடையென மீண்டும் தனித்தனி மும்மூன்றாக, நாற்பத்தெட்டு வேறுபாடுகளை யெய்துகின்றான். “மகாவீரசரிதமுதலிய பெருநூல்களில் ஒரு தலைவற்கே முரண்படுபலநிலை கூறியிருத்தலான் தீரோதாத்தன் முதலிய சொற்கள், கன்று, காளை முதலிய சொற்கள்போல நிலைமையைத் தெரிவிப்பனவேயன்றி மரபினைக்கூறுவனவாகா; மரபு மாறுபடாதாகலின்” என்று தசரூபகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
[61] பெருமனவலிமை — சினம் முதலியவற்றாற் கலக்கமுறா மனநிலை; ஆழமுடைமை, மனம்மாறுபட்டுழி அதனைக் குறிப்பால் வெளிப்படுக்காமல் மறைத்துகொள்ளுந் தன்மை. சிறப்பிலக்கணம் கூறப்போந்த ஆசிரியர், முயற்சி தளறாமை முதலிய பொதுவிலக்கணத்தைக் கூறுமாறென்னையோவெனின், இத்தலைவன்பாலிவை யின்றியமையாதனவாதல் வேண்டுமென்பதை வலியுறுத்தும்.
[62] அருண்மெல்லியன் — அருளான் மனம் மெலிந்தவனேயன்றி அச்சத்தாலன்றென்பதாம்; இதனால், அருளுடைமை பெற்றாம்.
[63] முன்னின்ற — இவ்வடைமொழி, புறங்கொடுத்தோடுவாரை விடுத்தருளுவன்; எனவே அறனுடைமை புலனாம்.
[64] சிறுபொழுதில் — இங்ஙனம் ஐயுறல், பகைவர் எஞ்சி நிற்றற்குக் காரணமாய், அதுமுறையன்றாகலின், பின்னர் அப்பகைவரைக் கொன்றேதீருவன் என்பதாம்; இதனால் முயற்சி தளராமை கூறப்பட்டது.
[65] நாணுறுகின்றான் — பிறர்தன்னைப்புகழுங்காலும் நாணுறுகின்றானெனில், தற்புகழ்ச்சிக்கிடனில்லையென்பது வெளிப்படையாமாகலின் தற்புகழாடமை யினிது விளங்கும்.
[66] இன்பம் — விரும்பிய பொருணுகர்ச்சியான் — விளையும் மகிழ்ச்சியாம். வெகுளி, குற்றங்கண்டவழி அதனைப் பொறாமையாம். மகிழ்ச்சி, விரும்பியபொருளெய்திய வழி நிகழும் மனத்தெளிவாம்.
[67] தரிக்கின்றானில்லை — இதனால் ஆழமுடைமை புலனாம். இச்சுலோகத்திற் கூறப்பட்டுள்ள முயற்சி தளறாமை, அறனுடைமை, புகழுடைமை என்னுமிவை, பொதுக்குணங்களென்பதும், அருளுடைமை முதலியன சிறப்புக் குணங்களென்பதும் உணரற்பாலன.
[68] இந்தயாம் போர்வீரர் — செருக்கு, தற்புகழ்ச்சி முதலிய குணங்களமைந்திருத்தலின் இப்படைவீரர் தீரோத்ததர் ஆவர்.
[69] தெலுங்குதேயத்தரசன் — இது வீரருத்திர வேந்தனை.
[70] மனங்கவலொழிந்து — அமைச்சர், மகன், இவர்பாலரசியலையளித்து அதனால் நேரும் கவலற்றிருத்தலையுணர்த்தும்.
[71] கலை — இசை வாச்சிய முதலிய கலைகளையுணர்த்தும்.
[72] இனியன் — காண்டற்கினிய கண்கவர்வனப்புடையன்; இதனால், இத்தலைவன் உவகை சுவைக்குச் சிறந்தவன் என்பது போதரும்.
[73] கற்புநிலை — இது பெண்பாலர்க்கு இன்றியமையாத அறமாகலின், இந்நிலமகளும் அவ்வறவொழுக்கம் வழாது நின்றனள் என்பதாம்; இதனால் புணரிசூல் பூவுலகனைத்தும் இவ்வேந்தனது ஒரு தனிக்குடைக்கீழ் விளங்குகின்றதென்பது போதரும்.
[74] வீரருத்திரன் — ஈண்டுமகனையுணர்த்தும்.
[75] பொறை — யென்பது ஈண்டு அரசியற்சுமையை.
[76] காகதிவேந்தன் — ஈண்டு தந்தையையுணர்த்தும்.
[77] எல்லாக்கலையினும் — இசைமுதலிய கலைகளையுணர்த்தும். இச்சுலோகத்தால், தடைப்படா வீரம் முதலிய யாவற்றானும், திருவருட்செயலானும், இளவரசர் புவிப்பொறையைத் தாங்குமாற்றானும் மனக்கவலொழிந்து இசைமுதலிய கலைகள் யாவற்றிலுமின்பமெய்துகின்றான். ஆதலின் இத்தந்தையாகிய காகதிவேந்தன் தீரலலிதன் என்பது புலனாம்.
[78] ஆதியர் என்பதால் — வணிகர், அமாத்தியர் இவர்கள் தீரசாந்தன் என்ப.
[79] அறிஞர்க்குழு — இச்சுலோகத்தினால் அந்தணர் முதலினோர்க்கு அறிவு, அடக்கம், தெளிவு முதலியன புலனாகலின் இவர் “தீரசாந்தன்” என்னும் தலைவராம்.
[80] குற்றம் — ஈண்டு வறுமையையுணர்த்தும். அதனை நீக்கியவன் வீரருத்திரவேந்தன் ஆம்.
[81] தலைமகளொருத்தி — மனைவியர் பலரிருப்பினும், ஒருவளிடத்தே அன்புமிக்கவன் என்பது இவ்வாசிரியர் கருத்து; தசரூபகாசிரியர் முதலியரோ இங்ஙனம் கருதாது, இராமன் முதலிய தலைவரைப்போல மணமகளொருவளையே மணந்து அவள்பால் அன்பு மிக்கவனே அநுகூலன் என்ப.
[82] தோழீ — இத்தொடர் தலைவியின் கூற்று.
[83] பெண்ணே — இத்தொடர், பாங்கியின் கூற்று.
[84] நன்னிலையன் — இது சீரிய நிலையுடைய தலைவியின் குணத்தையும், நிலைப்பெனும் பண்பையுடைய பூமியையும் உணர்த்தும்.
[85] இரத்தினாகரமேகலை — இது பல அரதனங்கணிறைந்த இடையணியுடைய தலைவியையும், கடலை மேகலையாகவுடைய நிலமகளையும் உணர்த்தும்.
[86] இப்பெயரைக்கொண்டு — மாற்றவள் பெயரின் ஒப்புமைகொண்டு காதலை விளைத்தல் இழிவெனினும், அங்ஙனம் செய்தேனும் தலைவனைக் காதற்படுத்துவேன் என்பதாம்.
[87] இச்சுலோகத்தால் — அரசற்கு நிலமகளிடத்துக் காதற்பற்று மிகையென்றும், மற்றவர்கள்பால் அங்ஙனம் அமையாதென்றும் புலனாவதால் இவ்வரசன், அனுகூலநாயகன் என்பது போதரும். இதனால் நிலங்காத்தலொன்றையே கடைப்பிடித்தவன் என்பதாம்.
[88] இன்னுரையானேயென்றமையாற் கலைப்பயிற்சியும், உள்ளத்தையென்றமையான் மார்பகங்காட்டலும், கரத்தால் என்றமையான் தன்வயப்படுத்தலும் விளங்க, முறையே, கலைமகள், மலர்மகள், நிலமகள் என்னும் தலைவியர் குறிப்பிடப்படுகின்றனர். இங்கட்பொழுதுபுலருமட்டுஞ் சேரிடந்துணியப்படாமையின் சிந்தித்தொழிந்தமையான் இவர்மாட்டு ஒத்தகாதலுடைமை புலனாகலின் இவனைத் தட்சிணன் என்ப.
[89] அடிக்குறிப்பு 88க்காண்க.
[90] அடிக்குறிப்பு 88க்காண்க.
[91] இச்சுலோகத்தால், தலைவிமார் மூவர்க்கும் உறுப்புக்கள் ஒவ்வொன்றையுமளித்து அவரையின்புறுத்தலான் ஒத்தகாதலனாகுமித்தலைவன், தட்சிணன் ஆவன்.
[92] உறுப்புக்கள் யாவும் — இச்சொல், உடலுறுப்புக்களையும், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் அரசியலுறுப்புக்களையுமுணர்த்தும்.
[93] வசுமதி — இது செல்வமிக்க தலைமகளையும், புவிமகளையும் உணர்த்தும்; இதனால் அரசர் செல்வப்பற்றுடையரேயன்றி காதற்பற்றுடையரல்லர் என்பது போதரும். இச்சுலோகத்தால் வேற்று மகளிரது புணர்ச்சி வெளிப்படுதலான் வெளிப்படையான குற்றமும், அச்சமின்மையும் தலைவற்குப்பொருந்துகின்றனவாகலின் இவன் திருட்டன் என்பது புலனாம்.
[94] இச்சுலோகத்தில் — தலைவியான் மாத்திரம் அறியத்தகும் காதற்பற்றின்மை முதலிய குணங்களைத் தலைவன்பாலேற்றிக் கூறியிருத்தலான் இவன் சடன்ஆம்.
[95] தேற்றம் — அவ்வத்தலைவரின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக, காகதிமரபிற்றோன்றிய முன்னோர்களை விதந்து கூறியிருத்தலான் “இந்நூற்கு வீரருத்திரனைத் தலைவனாக்கோடல் வேண்டும்” என்னும் இந்நூலாசிரியரின் உறுதியை வலியுறுத்தும். இதனால் இந்நூலில், காகதியென்னுஞ்சொல்லாற் கூறப்படும் அரசர் இம்மரபின் முன்னவர் என்பது போதரும்.
[96] உவகைத்தலைவராவார்க்குத் தலைவிமாரது கூட்டம் இன்றியமையாததாகலின் அவர்களை இயைவித்தலிற்றுணைவரை யிங்கட் கூறுகின்றார்.
[97] சிறுகுறையுடையன் — இவ்விலக்கணம், நூன்முதற்றலைவனிலும் குணத்திற்சிறிது குறைந்தவனாய் கதைத்தொடர்பானமைந்த தலைவனாவன் என்பதையுணர்த்தும். இங்ஙனமே தசரூபகாசிரியரும்: “நூன் முதற்றலைவனிற் பிரியாதுறைவோனும், அவன்பாலன்புடையனும், பேரறிவாளனும், அவனது குணங்களிற் சிறிது குறையுடையனும், நெடுந்தொடர்புடைய பிறிதொருதலைவனுமாய் விளங்குமவன், பீடமருத்தனாவன்; என்றும், இராமாயணத்திற்கூறிய சுக்கிரீவனும், மாலதீமாதவத்திற்கூறிய மகரந்தனும் போல்வார் என்றும்” கூறியுள்ளார்.
[98] வித்தையொன்றுடையான் — தலைவற்குத்துணை செயற்பாலனவாகிய இசைமுதலவித்தைகளுள், ஒன்றையறிந்தவன்; அவன், மாலதீமாதவத்திற்கூறியுள்ள கலகஞ்சனைப்போன்றவன்.
[99] உறுப்பு, உரை, வேடம், இவற்றின் வேறுபாடு முதலியவற்றான் மிகுநகைவிளைப்பவன்.
[100] இச்சுலோகத்தினால் — இத்தலைவன், தலைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதொன்றையே கடைப்பிடித்தவனாகலின் இத்தலைவி சுவாதீனபதிகையென்பதும், இத்தலைவன் அனுகூலன் என்பதும் விளங்கும்; இக்கருத்தேபற்றியிவ்வேந்தன் நிலவுலகைப்பாலிப்பதில் நாளும் விழிப்புடையன் என்பது புலனாம்.
[101] அடிதொறும் அலங்கரிக்கும் — அடிதொறும் என்பது தலைவனது மனத்தை யெவ்வாற்றானும் இன்புறுத்து முயற்சியையுணர்த்தும். அலங்கரிக்கும் என்பது அங்ஙனம் கலவிக்கூடத்தையணிபெறச்செய்து, தலைவனது வரவையெதிர்பார்த்து நிற்றலையுணர்த்தும்.
[102] வாசகசச்சிகை — இல்லத்திருந்துழி யெதிர்பார்த்து நிற்பவள்; வாசகம் — வாச என்னும் பெயரடியாகப் பிறந்த வடமொழிச்சொல். வசித்தற்குரிய இடம். அன்றியும், இச்சொற்கு வாசகம் — ஒருதலைவற்குப் பலதலைவிகளிருக்குங்கால், அத்தலைவனுடன் கூடியின்பந்திளைத்தற்குரிய முறைபற்றிவருநாள்; அந் நாளில் தன்னையும், தனதில்லத்தையும் அணிப்படுத்தித் தலைவனது வரவை யெதிர்பார்த்திருப்பவள் என்பதும் பொருளாம்; இப்பொருளே யிந்நூலாசிரியர் கொண்டதாம்.
[103] நூலாசிரியர் கொண்டபொருட்கேற்ப “முடிசூட்டும் அமயத்தை” யெனப்பொழிதினைக் குறிப்பிடுமுகமாக எடுத்துக்காட்டுக்கூறப்பட்டது.
[104] குணமணங்கமழும் — குணங்களான் மணம்நிறைந்தவன் என்பது கருத்து; குணங்கட்குமணமுண்மை கவிசமயத்தாற் பெற்றாம்.
[105] இது, இசைபாடுவோராதியரின் குழு என்பதையும் காலந்தாழ்த்தலில் அரசன்பாற் குற்றஞ் சிறிதுமில்லையென்பதையும் உணர்த்தும்.
[106] முன்னே! — இத்தலைவி இக்குறியிடத்திற்கு வரும்பொழுது காதற்பெருக்கான் முன்வந்ததை யொப்ப, இவ்விடத்தையகன்று செல்லுங்கால் முன் செல்லமாட்டாமை கருதி யிங்ஙனம் கூறினாள் என்க.
[107] விட்டகல்வேன் — இவ்வெதிர்கால வினை, நள்ளிரவு வந்தும் காதலன் வாராமையான், இனி அவன் வாரான் எனத் துணிந்தும், இவ்விடத்தை விட்டகலப்போதற்கு இனியுங் காதலியின் மனந்தணியவில்லை யென்பதையுணர்த்தும்.
[108] கண்ணீரால் — காதலன் கலவியின்பத்தான் மெய்வருந்தி விளைந்த வியர்வைநீர், காதலைப் பயனுறச் செய்யாது காமநோயாற் கண்ணீர் விளைந்ததாகலின், அவற்றை வறிதேவழிந்தொழுகுமென இழித்துக்கூறினான் என்க. இதனால் அவ்விடனெலாம் சேறாயினவென்பதும், வாயில் வழியை வந்துவந்து நோக்கினாளென்பதும் போதரும்.
[109] காதற்பற்றுடையராய் — இது இத்தகைய வஞ்சனைச் செயலில், தலைவன் பால் ஒரு சிறிதும் தவறில்லையென்பதையும் அத்தகைய தலைவன் வைத்த எங்களது காதற்பற்றுடைமையே அச்செயலில் நிமித்தமென்பதையும் உணர்த்தும்.
[110] மூன்று யாமங்களின் — முதல் யாமத்தின் முற் கூறும், கடையாமத்தின் பிற் கூறும், மக்களின் நடமாட்டத்திற்கிடனாகலின் அவ்விரண்டு கூறுகளையு மொழித்து எஞ்சிய மூன்று யாமங்களே இரவின் அளவாகக் கூறினர் என்க.
[111] வழியின் அமைவால் — வழியிடையில் எனதில்லம் அமைந்திருத்தலின் கண்ணோட்டங்கருதியிங்கட் புகுந்தீர்; அன்றேல், புகாதொழிவீர் என்பதாம்.
[112] வைகறைப்பொழுதிலே — இது கலவிக்குறிய காலமாகாமையான் இங்கண் வந்தீரெனச் சினத்தாற் கூறினமையையுணர்த்தும்.
[113] என்னில் வேறுபட்ட பல மனைவிமாரிடம் செல்லுதற்கு இதுபொழுது யானிடையூறாக இங் கட்டங்களைத் தடைப்படுத்தி மிக்க வருந்துகின்றமை தனக்குப் பல தோடங்களை விளைக்குமெனக் கூறுமாற்றால் தனக்கு விளைந்த சினமிகுதியை வெளிப்படுத்தினாள் என்பதாகும். இதனால் இத்தலைவி சீற்றமுடையவள் ஆம்.
[114] அன்பனை — “உண்மையுரைப்பவனும், நேர்மையான காதற்பற்றுடையனும், உதவிபுரிபவனும், இன்சொற்கூறுபவனுமாய் மனங்கனிந்து காதலியைத்தானே வலிந்தடையுமொரு தலைவனை அன்பன் எனக் கூறுப.
[115] கலகாந்தரிதை — இது பிணங்கியவளை.
[116] அவ்வம்முறை — வணக்கஞ்செய்தல், வேண்டுவன அளித்தல், இன்சொற்கூறன், முதலிய முறைகளை
[117] பொறுத்தி — தானேவந்தடைந்த தலைவனைப் புறக்கணித்துப் பின் வருந்தலவமாகலின், அப்பிரிவுத்துன்பத்தைப் பொறுத்துக்கோடலே தக்கதென இத்தபத்தையிகழ்ந்து கூறுமித்தலைவி கலகாந்தரிதையாம்.
[118] கடத்துகின்றனர் — இதனால் பிரிவாற்றாமை காரணமாக விழிப்பு, கவலை முதலியவற்றான் மனைவியர் வருந்துகின்றார்களாகலின் இவர் பிரோஷிதபர்த்திகை ஆவர்.
[119] அபிசாரிகை — தொடர்ந்து சேர்பவள்; இச்சொல், காதலனைத் தானே தொடர்ந்து சேர்பவளையும், காதலன் தன்னைத் தொடர்ந்து வர, தான் அவனுடன் சேர்பவளையும் உணர்த்தும். எனவே, இவள் காதலனைத் தான் தொடர்ந்து சேருமியல்பினளும், பாங்கியர்முகமாக அவனைத் தன்பாற் சேர்ப்பிப்பவளும் என இரு திறத்தவள் ஆவள். என தசரூபகம் கூறும்.
[120] இவ்வெடுத்துக்காட்டு, காதலனைத்தொடர்ந்து செல்லுந்தலைவிக்குஆம்; இங்ஙனமே மறுதலைக்கு முய்த்துணர்க.
[121] பிடியானை — இது தலைவனைப் பின்பற்றிச் சேருந்தலைவியின் பரபரப்பை உணர்த்தும்.
[122] தோழி — காரணமின்றித் தலைவிபால் அன்பு கொண்டவள்.
[123] காரு — வண்ணாரப்பெண் முதலியோர்.
[124] குறியுடையார் — தவவேடம் முதலிய குறியுடைய துறவிகள்.
[125] கைத்தொழிலுடையார் — ஓவியம் வரைதல் முதலிய தொழிலுடையார்.
[126] சுற்றத்தாள் — மாமன்மகள் முதலியோர்.
[127] முதலிய — என்றமையான் சங்கினீ—அத்தினீ என்னும் வகுப்புக்களும் கொள்ளற்பாலன.
[128] மெல்லியலாள் — என்றமையான் யௌவனப்பருவத் தொடக்கத்தவள் என்பதும் நாணத்தான் மறுமொழியளித்தனள் என்றமையான் காமவிகாரத்தை வெளிப்படுக்காதவள் என்பதும் புலனாகலின், இத்தலைவி முத்தையென்பது போதரும்.
[129] இது நாடகத்தொடக்கத்திற் செய்யக்கடவ மங்கலச் செயலாம்; அங்ஙனமே நாடகாசிரியரும்: “நாடகத் தொடக்கத்திற்கு முன்னர், அரங்கத்தூறு அழிவுறற்பொருட்டு இசைபாடுவோரியற்றும் மங்கலச்செயலை முன்னரங்கம் என்ப. யௌவனம், எளிதிற்றோன்றுங்காமவிலாசங்கட்கு முன்னர்த் தோன்றி, அவை ஊறுபடாதிலங்க ஏதுவாய் நிற்றலின், அதனையிங்கனம் முன்னரங்கமாகவுபசரித்துக் கூறினான் என்க.
[130] இதனால், யௌவனமாகுமரங்கத்தில் நாணத்திரைக்குள் நடித்தனள் என்றமையான் இவள் காமற்கும் நாணத்திற்கும் இடையிலமைவுறும் மத்திமையென்பது புலனாம்.
[131] குறிப்பின் — உரை, உறுப்பு, சத்துவம், அபிநயம், முகச்செம்மை யிவற்றான் உட்கருத்தை வெளிப்படுக்குஞ் செயலாம்.
[132] காதற்குறிப்பு — உள்ளடங்கிய காதலை வெளிப்படுக்கும் உள்ள நெகிழ்ச்சியான் விளைந்த மனதின் விகாரமாம்; இதனை ஹேலை யென்ப வடநூலார்.
[133] இது — காது சொறிதல், நகில் நெருடன் முதலிய மென்செயல்களாம்; இதனால் காமத்தால் நாணம் குன்றிய நிலை கூறப்பட்டதாம்.
[134] சுவை — ஈண்டு உவகைச்சுவையாம்.
[135]விறல் — கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தன் முதலிய விகாரங்களை சத்துவம் என்ப வடநூலார்.
[136] இது காமனது செயலை அதாவது தலைவியைக்காதற்படுத்துஞ் செயலாம், மலர்க்கணைவேள் — காமன்.
[137] வேறுபாடுகள் — தீரைமுதலியனவாம்.
[138] இவ்வுவமை, “காப்பியஞ் சிறப்புறு தலைவனைப்பற்றி யிருத்தல் வேண்டும்” என்பதை வலியுறுத்தும்.